நீதி வெண்பா

தேவையான நூலின்
மேல் சொடுக்கவும்

1.ஆத்திசூடி
2.கொன்றைவேந்தன்
3.மூதுரை(வாக்குண்டாம்)
4. நல்வழி
5.வெற்றி வேற்கை
6.உலக நீதி
7.நீதிநெறி விளக்கம்
8.அறநெறிச்சாரம்
9.நீதி நூல்
10.நன்னெறி
11.நீதி சூடாமணி
12.சோமேசர் முதுமொழி வெண்பா
13.விவேக சிந்தாமணி
14.ஆத்திசூடி வெண்பா
15.நீதி வெண்பா
16.நன்மதி வெண்பா
17.அருங்கலச்செப்பு
18.முதுமொழிமேல் வைப்பு
19.புதிய ஆத்திசூடி
20.இளையார் ஆத்திசூடி
21.திருக்குறள் குமரேச வெண்பா


@0 காப்பு

#1
மூதுணர்ந்தோர் ஓது சில மூதுரையைப் பேதையேன்
நீதிவெண்பா ஆக நிகழ்த்துவேன் ஆதி பரன்
வாமான் கருணை மணி உதரம் பூத்த முதல்
கோமான் பெரும் கருணை கொண்டு

@1 நூல்

#1
தாமரை பொன் முத்து சவரம் கோரோசனை பால்
பூ மரு தேன் பட்டுப் புனுகு சவ்வாது ஆம் அழல் மற்று
எங்கே பிறந்தாலும் எள்ளாரே நல்லோர்கள்
எங்கே பிறந்தாலும் என்

#2
அரி மந்திரம் புகுந்தால் ஆனை மருப்பும்
பெருகு ஒளி சேர் முத்தும் பெறலாம் நரி நுழையில்
வாலும் சிறிய மயிர் எலும்பும் கர்த்தபத்தின்
தோலும் அல்லால் வேறும் உண்டோ சொல்

#3
அறிவன் பகையேனும் அன்பு சேர் நட்பு ஆம்
சிறுவன் பகை ஆம் செறிந்த அறிவு உடைய
வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான் முன்
கொன்றது ஒரு வேந்தைக் குரங்கு

#4
மென் மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின
வன்மொழியினால் இகழும் மண்ணுலகம் நல் மொழியை
ஓது குயில் ஏது அங்கு உதவியது கர்த்தபம்தான்
ஏது அபராதம் செய்தது இன்று

#5
பகை சேரும் எண்_நான்கு பல் கொண்டே நல் நா
வகை சேர் சுவை அருந்துமா போல் தொகை சேர்
பகைவரிடம் மெய் அன்பு பாவித்து அவரால்
சுகமுறுதல் நல்லோர் தொழில்

#6
காந்தன் இல்லாத கனம் குழலாள் பொற்பு அவமாம்
சாந்தகுணம் இல்லார் தவம் அவமாம் ஏந்து_இழையே
அன்னை இல்லாப் பிள்ளை இருப்பது அவம் அவமே
துன் எயிறு இல்லார் ஊண் சுவை

#7
வருத்த வளை வேய் அரசர் மா முடியின் மேல் ஆம்
வருத்த வளையாத மூங்கில் தரித்திரமாய்
வேழம்பர் கைப் புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
தாழும் அவர்-தம் அடிக் கீழ்த் தான்

#8
நொய்தாம் திரணத்தின் நொய்து ஆகும் வெண் பஞ்சின்
நொய்தாம் இரப்போன் நுவலுங்கால் நொய்ய சிறு
பஞ்சுதனின் நொய்யானைப் பற்றாதோ காற்று அணுக
அஞ்சும் அவன் கேட்பது அறிந்து

#9
ஒரு போது யோகியே ஒண் தளிர்க் கை மாதே
இரு போது போகியே என்ப திரி போது
ரோகியே நான்கு போது உண்பான் உடல்விட்டுப்
போகியே என்று புகல்

#10
கண் இரண்டே யாவர்க்கும் கற்றோர்க்கு மூன்று விழி
எண்ணு விழி ஏழு ஆகும் ஈவோர்க்கு நண்ணும்
அநந்தம் தவத்தால் அருள் ஞானம் பெற்றோர்க்கு
அநந்தம் விழி என்று அறி

#11
உற்ற பெரும் சுற்றம் உற நல் மனைவியுடன்
பற்றி மிக வாழ்க பசுவின் வால் பற்றி
நதி கடத்தல் அன்றியே நாயின் வால் பற்றி
நதி கடத்தல் உண்டோ நவில்

#12
ஆசைக்கு அடியான் அகில லோகத்தினுக்கும்
ஆசு அற்ற நல் அடியான் ஆவானே ஆசை-
தனை அடிமைகொண்டவனே தப்பாது உலகம்-
தனை அடிமைகொண்டவனே தான்

#13
ஆன் அந்தணர் மகளிர் அன்பாம் குழந்தை வதை
மானம் தரும் பிசி வார்த்தை இவை மேல் நிரையே
கூற வரு பாவம் குறையாது ஒவ்வொன்றுக்கும்
நூறு அதிகம் என்றே நுவல்

#14
பெற்று அமையும் என்னாப் பெரியோரும் பெற்ற பொருள்
மற்று அமையும் என்றே மகிழ் வேந்தும் முற்றிய நல்
மானம் இலா இல்லாளும் மானமுறும் வேசியரும்
ஈனம் உறுவார் இவர்

#15
கற்றோர் கனம் அறிவர் கற்றாரே கற்று அறியா
மற்றோர் அறியார் வருத்தமுறப் பெற்று அறியா
வந்தி பரிவாய் மகவைப் பெறும் துயரம்
நொந்து அறிகுவாளோ நுவல்

#16
செய்யும் ஒரு கருமம் தேர்ந்து புரிவது அன்றிச்
செய்யின் மனத்தாபம் சேருமே செய்ய ஒரு
நல் குடியைக் காத்த நகுலனை முன் கொன்ற மறைப்
பொன்_கொடியைச் சேர் துயரம் போல்

#17
நாவின் நுனியில் நயம் இருக்கில் பூமாதும்
நா இனிய நல்லோரும் நண்ணுவார் நாவின் நுனி
ஆம் கடினம் ஆகில் அத் திருவும் சேரான் முன்
ஆங்கே வரும் மரணமாம்

#18
ஈக்கு விடம் தலையில் எய்தும் இரும் தேளுக்கு
வாய்த்த விடம்கொடுக்கில் வாழுமே நோக்கு அரிய
பைம் கண் அரவுக்கு விடம் பல் அளவே துற்சனருக்கு
அங்கம் முழுதும் விடமே ஆம்

#19
துர்ச்சனரும் பாம்பும் துலை ஒக்கினும் பாம்பு
துர்ச்சனரை ஒக்குமோ தோகையே துர்ச்சனர்தாம்
எந்த விதத்தாலும் இணங்காரே பாம்பு மணி
மந்திரத்தால் ஆமே வசம்

#20
கொம்பு உளதற்கு ஐந்து குதிரைக்குப் பத்து முழம்
வெம்பு கரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே வம்பு செறி
தீங்கினர்-தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி

#21
அவ்விய நெஞ்சத்து அறிவு இல்லாத் துர்ச்சனரைச்
செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ திவ்விய நல்
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது
கந்தம் கெடுமோ கரை

#22
துன்னும் இருமலும் துர்ச்சனரும் ஒக்குமே
மன்னும் இனிமையான் மாறாகிப் பன்னும்
கடுவும் கடு நேர் கடுமொழியும் கண்டால்
கடுக வசம் ஆகையால்

#23
செங்கமலப் போது அலர்ந்த செவ்வி போலும் வதனம்
தங்கு மொழி சந்தனம் போலும் பங்கி எறி
கத்திரியைப் போலும் இளம் காரிகையே வஞ்ச மனம்
குத்திரர்-பால் மூன்று குணம்

#24
நீசனே நீசன் நினையுங்கால் சொல் தவறும்
நீசனே நீசன் அவனையே நீசப்
புலையனாம் என்று உரைக்கும் புல்லியனே மேலாம்
புலையனாம் என்றே புகல்

#25
ஞானம் ஆசாரம் நயவாரிடைப் புகழும்
ஏனை நால் வேதம் இருக்கும் நெறி தான் மொழியின்
பாவம் நிறை சண்டாளர் பாண்டத்துக் கங்கை நீர்
மேவும் நெறி என்றே விடு

#26
குணம் நன்கு உணராக் கொடியோரிடத்தில்
குணம் நன்கு உடையார் குறுகார் குணமுடைமை
நண்ணாச் சமண நகரத்தில் தூசு ஒலிக்கும்
வண்ணானுக்கு உண்டோ வழக்கு

#27
ஆனை மருப்பும் அரும் கவரிமான் மயிரும்
கான வரி உகிரும் கற்றோரும் மானே
பிறந்த இடத்து அன்றிப் பிறிதொரு தேசத்தே
செறிந்த இடத்து அன்றோ சிறப்பு

#28
தலைமயிரும் கூர் உகிரும் வெண் பல்லும் தத்தம்
நிலை உடைய மானவரும் நிற்கும் நிலை தவறாத்
தானத்தில் பூச்சியமே சாரும் நிலை தவறும்
தானத்தில் பூச்சியமோ தான்

#29
வென்றி வரி உகிரும் வெண் கவரிமான் மயிரும்
துன்று மத யானைச் சுடர் மருப்பும் நின்ற நிலை
வேறுபடினும் சிறப்பாம் மெய்ஞ்ஞானி நின்ற நிலை
வேறுபடினும் சிறப்பாமே

#30
அன்னை தயையும் அடியாள் பணியும் மலர்ப்
பொன்னின் அழகும் புவிப் பொறையும் வன்ன முலை
வேசி துயிலும் விறல் மந்திரி மதியும்
பேசில் இவை உடையாள் பெண்

#31
பெண் ஒருத்தி பேசில் பெரும் பூமி தான் அதிரும்
பெண் இருவர் பேசில் விழும் வான்மீன்கள் பெண் மூவர்
பேசில் அலை சுவறும் பேதையே பெண் பலர் தாம்
பேசில் உலகு என் ஆமோ பின்

#32
என்னே கிரேதத்து இரேணுகையே கூற்றுவனாம்
தன் நேர் திரேதத்தில் சானகியே பின் யுகத்தில்
கூடும் திரௌபதையே கூற்றாம் கலியுகத்தில்
வீடு-தொறும் கூற்றுவனாமே

#33
கர்ப்பூரம் போலக் கடல் உப்பு இருந்தாலும்
கர்ப்பூரம் ஆமோ கடல் உப்பு பொற்பு ஊரும்
புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம்
புண்ணியர் ஆவாரோ புகல்

#34
சீலமில்லான் ஏதேனும் செப்பிடினும் தான் அந்தக்
காலம் இடம் அறிந்து கட்டுரைத்தே ஏலவே
செப்புமவனும் தானே சிந்தை நோகாது அகன்று
தப்புமவன் உத்தமனேதான்

#35
சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்று அமைந்த
முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே வெற்றி பெரும்
வெண்கலத்தின் ஓசை மிகுமே விரி பசும்பொன்
ஒண் கலத்தின் உண்டோ ஒலி

#36
உள்ள பொழுது ஏதும் உவந்து அளிப்பது அல்லால் ஓர்
எள்ளளவும் ஈய இசையுமோ தெள்ளு தமிழ்ச்
சீர் அளித்தோன் உண்ட நாள் சேர் மேகத்துக்கு அருந்த
நீர் அளித்ததோ முந்நீர் நின்று

#37
பேதையரைக் கண்டால் பெரியோர் வழி விலகி
நீதியொடு போதல் நெறி அன்றோ காதும் மத
மா கரத்த யானை வழி விலகல் புன் மலம் தின்
சூகரத்துக்கு அஞ்சியோ சொல்

#38
மந்திரமும் தேவும் மருந்தும் குரு அருளும்
தந்திரமும் ஞானம் தரு முறையும் யந்திரமும்
மெய் எனில் மெய்யாய் விளங்குமே மேதினியில்
பொய் எனில் பொய் ஆகிப்போம்

#39
ஈசன் எதிர் நின்றாலும் ஈசன் அருள் பெற்று உயர்ந்த
நேசர் எதிர் நிற்பது அரிதாமே தேசு வளர்
செங்கதிர் முன் நின்றாலும் செங்கதிரவன் கிரணம்
தங்கும் மணல் நிற்க அரிதே தான்

#40
முற்றும் இறை செயலே முற்றிடினும் தன் அருளைப்
பெற்றவர்-தம்பாலே பெரிது ஆகும் பற்று பெரும்
தாபத்திடத்தே தழன்றிடினும் நல் சோதி
தீபத்திடத்தே சிறப்பு

#41
கன்னியரைப் பொன்_நாண் கழிந்தோரை மற்று அயலார்
பன்னியரை மாயப் பரத்தையரை முன்ன அரிய
தாதியரை நல்லோர் தழுவ நினையார் நரகத்
தீது வரும் என்றே தெரிந்து

#42
தன்னை அளித்தாள் தமையன் மனை குருவின்
பன்னி அரசன் பயில் தேவி தன் மனையைப்
பெற்றாள் இவர் ஐவர் பேசில் எவருக்கும்
நல் தாயர் என்றே நவில்

#43
வாவி உறை நீரும் வட நிழலும் பாவு அகமும்
ஏ அனைய கண்ணார் இள முலையும் ஓவியமே
மென் சீத காலத்து வெம்மை தரும் வெம்மை-தனில்
இன்பு ஆரும் சீதளமாமே

#44
உற்ற தொழில் செய்வோர்க்கு உறு பஞ்சம் இல்லையாம்
பற்று செபத்தோர்க்கு இல்லை பாவங்கள் முற்றும்
மவுனத்தோர்க்கு இல்லை வரு கலகம் துஞ்சாப்
பவனத்தோர்க்கு இல்லை பயம்

#45
ஆபத்து வந்தால் அரும் பொருள்தான் வேண்டுமே
ஆபத்து ஏன் பூமாது அருகு இருந்தால் ஆபத்து
வந்தால் அவளும் மருவாமல் எப்பொருளும்
அந்தோ உடன்போம் அறி

#46
இன்னல் தரும் பொருளை ஈட்டுதலும் துன்பமே
பின் அதனைப் பேணுதலும் துன்பமே அன்னது
அழித்தலும் துன்பமே அந்தோ பிறர்-பால்
இழத்தலும் துன்பமே ஆம்

#47
தானே புரி வினையால் சாரும் இரு பயனும்
தானே அனுபவித்தல் தப்பாது தான் நூறு
கோடி கற்பம் சென்றாலும் கோதையே செய்த வினை
நாடி நிற்கும் என்றார் நயந்து

#48
தூய அறிவினர் முன் சூழ் துன்பம் இல்லையாம்
காயும் விடம் கருடற்கு இல்லையாம் ஆயுங்கால்
பன் முகம் சேர் தீ முன் பயில் சீதம் இல்லையாம்
துன்முகனுக்கு உண்டோ சுகம்

#49
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்று இவரோடு
இன்புறத் தான் உண்டல் இனிதாமே அன்புறவே
தக்கவரை இன்றித் தனித்து உண்டல் தான் கவர் மீன்
கொக்கு அருந்தல் என்றே குறி

#50
இந்து இரவி நீள் கிரணம் எங்கும் நிறைந்தாலும்
இந்து இரவி காந்தத்து இலகுமே இந்து இரவி
நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும் நித்தன் அருள்
நேத்திரத்தோர்-பாலே நிறைவு

#51
தாமோதரன் முதலோர் சாதல் நூல் சாற்றுவதும்
பூமேலோர் பொன்றுவதும் கண்டோமே நாம் உடலை
நேசிப்பது என்னோ நிலையாகும் சங்கரனைப்
பூசிப்பது என்றே புகல்

#52
அரசின் இலையதனின் அக்கிரத்தின்-நின்று
விரைய விழு துளியே போலும் புரை உடைய
ஆக்கை விடா முன்னம் அரன் பாதம் பூசித்தல்
நோக்கல் நன்று என்றே நுவல்

#53
சத்தியத்தை வெல்லாது அசத்தியம்தான் நீள் பொறையை
மெத்திய கோபமது வெல்லாது பத்தி மிகு
புண்ணியத்தைப் பாவமது வெல்லாது போர் அரக்கர்
கண்ணனைத்தான் வெல்லுவரோ காண்

#54
பொற்பு அறிவு இல்லாத பல புத்திரரைப் பேறலின் ஓர்
நல் புதல்வனைப் பெறுதல் நன்றாமே பொன்_கொடியே
பன்றி பல குட்டி பயந்ததனால் ஏது பயன்
ஒன்று அமையாதோ கரிக் கன்று ஓது

#55
அத்தி மலரும் அரும் காக்கை வெண் நிறமும்
கத்து புனல் மீன் பதமும் கண்டாலும் பித்தரே
கான் ஆர் தெரியல் கடவுளரும் காண்பரோ
மான் ஆர் விழியார் மனம்

#56
காள விடப் பாந்தள் கருடனையும் கட்டுமோ
வாள் எரியைக் கட்டுமோ வன் கயிறு நீளும்
பவம் அருளும் பாசம் வெம் பஞ்சேந்திரியம்
சிவயோகியைப் பிணியாவே

#57
புத்தியொடு முத்தி தரும் புண்ணியத்தால் அன்றியே
மத்தம் மிகு பாவத்தால் வாழ்வு ஆமோ வித்து பயிர்
தாயாகியே வளர்க்கும் தண் புனலால் அல்லாது
தீயால் வளருமோ செப்பு

#58
சிவனே சிவனே சிவனே என்பார் பின்
சிவன் உமையாளோடும் திரிவன் சிவன் அருளால்
பெற்ற இளங் கன்றைப் பிரியாமல் பின் ஓடிச்
சுற்று பசுப் போல் தொடர்ந்து

#59
தாமும் கொடார் கொடுப்போர்-தம்மையும் ஈயாத வகை
சேமம் செய்வாரும் சிலர் உண்டே ஏம நிழல்
இட்டு மலர் காய் கனிகள் ஈந்து உதவும் நல் மரத்தைக்
கட்டும் உடைமுள் எனவே காண்

#60
ஆயும் மலர்த் தேன் வண்டு அருந்துவது போல் இரப்போர்
ஈயுமவர் வருந்தாது ஏற்றல் அறம் தூய இளம்
பச்சிலையைக் கீடம் அறப் பற்றி அரிப்பது போல்
அச்சமுற வாங்கல் அகம்

#61
மாதா மரிக்கின் மகன் நாவின் நல் சுவை போம்
தாதா எனில் கல்விதான் அகலும் ஓதின் உடன்
வந்தோன் மரித்துவிடில் வாகுவலி போம் மனையேல்
அந்தோ இவை யாவும் போம்

#62
ஓது பொருள் கண்டோர்க்கு உறும் ஆசை நீதி இலாப்
பாதகரைக் கண்டோர்க்குப் பாவம் ஆம் சீத மலர்
கண்டோர்க்கு உறும் வாசம் கற்று அமைந்த நற்றவரைக்
கண்டோர்க்கு உடன் ஆம் கதி

#63
பாவி தனம் தண்டிப்போர்-பால் ஆகும் அல்லது அருள்
மேவு சிவன் அன்பர்-பால் மேவாதே ஓவியமே
நாயின் பால் அத்தனையும் நாய்-தனக்கு ஆம் அன்றியே
தூயவருக்கு ஆகுமோ சொல்

#64
பொன்னும் கரும்பும் புகழ் பாலும் சந்தனமும்
சின்னம்பட வருத்தம் செய்தாலும் முன் இருந்த
நற்குணமே தோன்றும் நலிந்தாலும் உத்தமர்-பால்
நற்குணமே தோன்றும் நயந்து

#65
வேசியரும் நாயும் விதிநூல் வயித்தியரும்
பூசுரரும் கோழிகளும் பொன்_அனையாய் பேசில் ஒரு
காரணம்தான் இன்றியே கண்ட உடனே பகை ஆம்
காரணம்தான் அப் பிறப்பே காண்

#66
அன்னம்_அனையாய் குயிலுக்கான அழகு இன் இசையே
கன்னல் மொழியார்க்கு அழகு கற்பாமே மன்னு கலை
கற்றோர்க்கு அழகு கருணையே ஆசை மயக்கு
அற்றோர்க்கு அழகு பொறையாம்

#67
இதம் அகித வார்த்தை எவர்க்கேனும் மேலாம்
இதம் எனவே கூறல் இதம் அன்றே இதம் உரைத்த
வாக்கினால் ஏரண்ட மா முனியும் சோழனொடு
தேக்கு நீர் வீழ்ந்து ஒழிந்தான் சேர்ந்து

#68
இத் தரையோர்-தம்மில் இருவரே மேலானோர்
சித்து இரசவாதி சிவயோகி முத்து_அனையாய்
நல்குரவும் உற்பவமும் நாசம் புரிவரே
அல்லவர் வீரியக் கீடம்

#69
அற்ற சிவயோகிக்கு அரும் சின்னம் மூன்று உண்டு
பற்று அலகை உன்மத்தர் பாலர் இயல் முற்று ரச
வாதிக்குச் சின்னம் மூன்று உண்டே மகிழ் போகம்
ஈதல் இரவாமை என்று

#70
வல்லவர்-பால் கல்வி மதம் ஆணவம் போக்கும்
அல்லவர்-பால் கல்வி அவை ஆக்கும் நல்லிடத்தில்
யோகம் பயில்வார் உயர்ந்தோர் இழிந்தோர்கள்
போகம் பயில்வார் புரிந்து

#71
தீயவர்-பால் கல்வி சிறந்தாலும் மற்று அவரைத்
தூயவர் என்று எண்ணியே துன்னற்க சே_இழையே
தண் ஒளிய மாணிக்கம் சர்ப்பம் தரித்தாலும்
நண்ணுவரோ மற்று அதனை நாடு

#72
ஊர் ஊர் எனும் வனத்தே ஒள் வாள் கண் மாதர் எனும்
கூர் ஊர் விட முள் குழாம் உண்டே சீர் ஊர்
விரத்தி வைராக்கிய விவேகத் தொடுதோல்
உரத்து அணியத் தையா என்று ஓது

#73
போற்று குரு கிளைஞர் பொன் ஆசையோர்க்கு இல்லை
தோற்று பசிக்கு இல்லை சுவை பாகம் தேற்று கல்வி
நேசர்க்கு இலை சுகமும் நித்திரையும் காமுகர்-தம்
ஆசைக்கு இலை பயம் மானம்

#74
நன்று அறியாத் தீயோர்க்கு இடங்கொடுத்த நல்லோர்க்கும்
துன்று கிளைக்கும் துயர் சேரும் குன்றிடத்தில்
பின்னிரவில் வந்த கரும்பிள்ளைக்கு இடம் கொடுத்த
அன்னம் முதல் பட்டது போல் ஆம்

#75
மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு
வினை வேறுபட்டவர்-பால் மேவும் அனமே
மனம் ஒன்று சொல் ஒன்று வான் பொருளும் ஒன்றே
கனம் ஒன்று மேலவர்-தம்கண்

#76
கண்ணுக்கு இனிய சபைக்கு மணி கற்றோனே
விண்ணுக்கு இனிய மணி வெய்யோனே வண்ண நறும்
சந்த முலையாள் சயனத்து இனிய மணி
மைந்தன் மனைக்கு மணி

#77
பாலின் நீர் தீ அணுகப் பால் வெகுண்டு தீப் புகுந்து
மேலும் நீர் கண்டு அமையும் மேன்மை போல் நூலின் நெறி
உற்றோர் இடுக்கண் உயிர் கொடுத்தும் மாற்றுவரே
மற்றோர் புகல மதித்து

#78
அந்தோ புரம் எரித்த அண்ணல் அடியார் பொருள்கள்
செம் தீயினும் கொடிய தீ கண்டாய் செம் தீயை
நீங்கில் சுடாதே நெடும் தூரம் போனாலும்
ஏங்கச் சுடுமே இது

#79
நிந்தை இலாத் தூயவரும் நிந்தையரைச் சேரில் அவர்
நிந்தையது தம்மிடத்தே நிற்குமே நிந்தை மிகு
தால நிழல் கீழ் இருந்து ஆன்-தன் பால் அருந்திடினும்
பால் அது எனச் சொல்லுவரோ பார்

#80
கன்மமே பூரித்த காயத்தோர்-தம் செவியில்
தன்மநூல் புக்காலும் தங்காதே சன்மம் எலும்பு
உண்டு சமிக்கும் நாய் ஊண் ஆவின் நெய்யதனை
உண்டு சமிக்குமோ ஓது

#81
பெண் உதவும் காலை பிதா விரும்பும் வித்தையே
எண்ணில் தனம் விரும்பும் ஈன்ற தாய் நண் இடையில்
கூறிய நல் சுற்றம் குலம் விரும்பும் காந்தனது
பேரழகுதான் விரும்பும் பெண்

#82
காந்தும் நறும் புண்ணைக் கலந்து ஈ விரும்புமே
வேந்தர் தனமே விரும்புவார் சாந்தநூல்
கல்லார் பகை சேர் கலகம் விரும்புவார்
நல்லார் விரும்புவார் நட்பு

#83
கற்றைக் குழலார் கவின் எல்லாம் ஓர் மகவைப்
பெற்றக் கணமே பிரியுமே கற்று அருளை
வேட்ட பெரியோர் பெருமை எல்லாம் வேறு ஒன்றைக்
கேட்ட பொழுதே கெடும்

#84
சீலம் குலம் அடியாள் தீண்டில் கெடும் கணிகை
ஆலிங்கனம் தனம் நாசம் ஆகும் நூல் இழந்த
வல்லி தழுவக் குறையும் வாழ்நாள் பிறர் தாரம்
புல்லினர்க்கு எல்லா நலமும் போம்

#85
சத்தியம் எக்காலும் சன விருத்தம் ஆகுமே
எத்திய பொய் யார்க்கும் இதம் ஆகும் நத்திய பால்
வீடு-தொறும் சென்று விலை ஆம் மது இருந்த
வீடு-தனிலே விலை ஆமே

#86
நல் ஒழுக்கம் இல்லார் இடம் சேர்ந்த நல்லோர்க்கும்
நல் ஒழுக்கம் இல்லாச் சொல் நண்ணுமே கொல்லும் விடப்
பாம்பு என உன்னாரோ பழுதையே ஆனாலும்
தூம்பு அமரும் புற்று அடுத்தால் சொல்

#87
வாக்கு நயத்தால் அன்றிக் கற்றவரை மற்றவரை
ஆக்கை நயத்தால் அறியல் ஆகாதே காக்கையொடு
நீலச் சிறு குயிலை நீடு இசையால் அன்றியே
கோலத்து அறிவருமோ கூறு

#88
ஆசை எனும் பாசத்தால் ஆடவர்-தம் சிந்தை-தனை
வீசு மனையாம் தறியில் வீழ்த்தியே மாசு புரி
மாயா மனைவியரா மக்கள் மகவு என்னும்
நாயால் கடிப்பித்தல் நாடு

#89
தான் அறிந்தோருக்கு உதவி தன்னால் அமையும் எனில்
தான் உவந்து ஈதல் தலையாமே ஆனதனால்
சொன்னால் புரிதல் இடை சொல்லியும் பல் நாள் மறுத்துப்
பின் நாள் புரிவதுவே பின்

#90
உற்ற மறை அகத்தின் உய்க்குவன் உத்தமனே
மற்று மறை பகர்வோன் மத்திமனே முற்று_இழையே
அத்தமுறலால் புகல்வான் அதமன் என
வித்தகநூல் ஓதும் விரித்து

#91
உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்கு பனை போல்வரே
மத்திமர்தாம் தெங்கு-தனை மானுவரே முத்து அலரும்
ஆம் கமுகு போல்வார் அதமர் அவர்களே
தேம் கதலியும் போல்வார் தேர்ந்து

#92
எல்லோர்-தமக்கும் இனிது உதவல் அன்றியே
நல்லோர் தமக்கு உதவி நாடாரே வல்ல தரு
நாம நிதி மேகம் நயந்து உதவல் அன்றியே
தாம் உதவி நாடுமோ சாற்று

#93
வெய்யோன் கிரணம் மிகச் சுடுமே வெய்யவனின்
செய்யோன் கிரணம் மிகத் தீதாமே வெய்ய கதிர்
எல்லோன் கிரணத்து எரியினிலும் எண்ணமில்லார்
சொல்லே மிகவும் சுடும்

#94
திங்கள் அமிர்த கிரணம் மிகச் சீதளமே
திங்களினும் சந்தனமே சீதளமாம் இங்கு இவற்றின்
அன்பு அறிவு சாந்தம் அருளுடையார் நல் வசனம்
இன்பம் மிகும் சீதளம் ஆமே

#95
சீர் ஆம் வெண் நீற்றுத் திரிபுண்டரம் விடுத்தே
பேரான முத்தி பெற விரும்பல் ஆர் அமிர்த
சஞ்சீவியை விடுத்தே சாகாது இருப்பதற்கு
நஞ்சே புசித்தது போல் நாடு

#96
செந்தாமரை இரவி சேர் உதயம் பார்க்குமே
சந்திரோதயம் பார்க்கும் தண் குமுதம் கந்தம் மிகும்
பூ அலரப் பார்க்கும் பொறி வண்டு அரன் அன்பர்
தே வரவைப் பார்ப்பர் தெளிந்து

#97
வில்லம் அறுகுக்கு ஒவ்வா மென் மலர்கள் நால்வர் எனும்
நல்ல அன்பர் சொற்கு ஒவ்வா நான்மறைகள் மெல்லி நல்லாய்
ஆம் மந்திரம் எவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே
சோமசுந்தரற்கு என்றே சொல்

#98
கல்லார் பலர் கூடிக் காதலித்து வாழினும் நூல்
வல்லான் ஒருவனையே மானுவரோ அல் ஆரும்
எண் இலா வான்மீன் இலகிடினும் வானகத்து ஓர்
வெண்ணிலா ஆமோ விளம்பு

#99
சந்தனத்தைச் சேர் தருவும் தக்க மணம் கமழும்
சந்தனத்தைச் சார் வேய் தழல் பற்ற அந்த வனம்-
தானும் அச் சந்தனமும் தன் இனமும் மாள்வது அன்றித்
தானும் கெடச் சுடுமேதான்

#100
கங்கைநதி பாவம் சசி தாபம் கற்பகம்தான்
மங்கலுறும் வறுமை மாற்றுமே துங்கம் மிகும்
இக் குணம் ஓர் மூன்றும் பெரியோரிடம் சேரில்
அக்கணமே போம் என்று அறி
** நீதி வெண்பா முற்றிற்று