நன்மதி வெண்பா — எம்ஆர் ஸ்ரீநிவாசய்யங்கார்

தேவையான நூலின்
மேல் சொடுக்கவும்

1.ஆத்திசூடி
2.கொன்றைவேந்தன்
3.மூதுரை(வாக்குண்டாம்)
4. நல்வழி
5.வெற்றி வேற்கை
6.உலக நீதி
7.நீதிநெறி விளக்கம்
8.அறநெறிச்சாரம்
9.நீதி நூல்
10.நன்னெறி
11.நீதி சூடாமணி
12.சோமேசர் முதுமொழி வெண்பா
13.விவேக சிந்தாமணி
14.ஆத்திசூடி வெண்பா
15.நீதி வெண்பா
16.நன்மதி வெண்பா
17.அருங்கலச்செப்பு
18.முதுமொழிமேல் வைப்பு
19.புதிய ஆத்திசூடி
20.இளையார் ஆத்திசூடி
21.திருக்குறள் குமரேச வெண்பா

** சுமதி சதகம்

@1

#1
** காப்பு
நீர் கொண்ட கொண்டல் நிகர் மாறன் தண்ணளியால்
சீர் கொண்ட வெண்பாவில் செப்புவாம் பேர் கொண்ட
சொல் மதுரம் வாய்ந்த சுமதி சதகத்தை
நன்மதியே நாடி நயந்து

#2
** நூல்
தருணம் உதவாக் கேளிர் தாள் வணங்குவோர்க்கு
வரம் அருளாத் தெய்வம் மன வாஞ்சை பெரிதுற மேல்
ஊர்ந்தவுடன் ஓடா உழைப் புரவி நன்மதியே
ஓர்ந்து அவர் அகற்றுவர் என்று ஓது

#3
நாடுங்கால் வேதனத்தை நல்காப் புரவலன்-தன்
மாடு இருந்து தொண்டு இயற்றி வாழ்வதினும் ஈடு பெறு
சீர் அணியான் ஏறு கொண்டு செய் நிலத்தை நன்மதியே
ஏரின் உழல் மேலாம் என்று எண்

#4
மிக்கு அவாக் கொண்டு பணி மேவேல் கோயில் மணியம்
தக்கது எனக் கொள்ளேல் தகவில்லார் பக்கல்
வரும் நட்பாற்றேன் நன்மதியே நீ செல்லேல்
அரிய வனத்து ஒன்றியாய்

#5
வாய் திறந்து ஓர் இன்சொல் வழங்காது மௌனியாய்
வாய் மகிபன் தன்மை வழுத்துங்கால் நோய்கொள்
செவி கேளான் கண் விழியான் தேர் நன்மதியே
சவம் அவன் என்றே துணிந்து சாற்று

#6
கடன்கொண்டு இடம்பம் மிகக் காட்டல் உறு மூப்பின்
இடை நல் பருவ மனை எய்தல் மடமை மிகும்
தீயர் தவம் குற்றமதைத் தேரான் அரசாட்சி
தீய என நன்மதியே செப்பு

#7
கடனளிப்பான் ஆயுள்நூல் கற்றவன் எஞ்ஞான்றும்
இடை வறத்தல் இல்லாத யாறு கடவுள் மறை
தேர்ந்து உணர்ந்த அந்தணர்கள் சேர் நகரில் நன்மதியே
சார்ந்திருக்கும் வாழ்வே தகும்

#8
மருகன்-தன் நல்லியல்பு மங்கையரின் வாய்மை
மருள் மதி ஆயன் கவி சொல் மாட்சி வரி கொள் உமி-
தன்னைக் குத்திக் கொள்ளும் தண்டுலம் வெண்காக இனம்
இன்ன இல நன்மதியே எண்

#9
அரிய பசிக்கு ஆம் சோறமுது வருத்தாமல்
தருபவனே வள்ளல் தனைச் சாரும் ஒரு துயரம்
தாங்க வல்லான் ஆண்டகையாம் தைரியவான் நன்மதியே
ஓங்கு குல மணி என்று ஓது

#10
வருத்து பசி நீக்கா ஊண் மக்கட்பேறு இல்லா
ஒருத்தியுடன் வாழ்ந்து உழலும் திருத்தம் இலா
வாழ்வு அசத்தின் கறவை மாசுறு கிணற்றுநீர்
தாழ்வு என்று நன்மதியே சாற்று

#11
வழங்க இயன்றதே வான் கல்வி தெவ்வர்
முழங்கு அமர்க்கு அஞ்சாமையே மொய்ம்பு செழும் கவி சொல்
பாவலரை மெச்சுதலே பாண்டித்தியம் குதர்க்கம்
மேவல் இடர் நன்மதியே விள்

#12
நல் நசையாய் விச்சை நவிலா வாய் அன்னையைக் கூஉய்
அன்னம் எனக் கேளாத அன்ன வாய் பின்னோர்த்
தயவுடன் கூவாத வாய்தாம் நன்மதியே
குயவன் மண் தொட்ட குழி

#13
தொத்து ஆர் வல் உடும்பு சொல் வருடம் நூறு இருக்கும்
பத்து_நூறு ஆண்டு பெரும் பாம்பு இருக்கும் தத்தும்
திரை மடுவில் பல் காலம் சேர்ந்திருக்கும் கொக்கு
புருடார்த்தம் நன்மதியே போற்று

#14
பித்தளை காநதங்கி உலைப் பெய்து உருக்கி வாத்திடினும்
நத்து பசும்பொன் இயல்பை நண்ணுமோ சித்தம்
மயர்வுறு கீழோர் நன்மதியே மேதக்க
இயல்புளார் ஆதல் இலர்

#15
புனல் அருந்து வாம் பரியைப் பொங்கு மதத்தால்
அனல் உகுக்கும் கண் களிற்றை ஆவின் நினைவொடு செல்
புங்கவத்தைக் கல்லாத புன்மதியை நன்மதியே
சங்கை இன்றி நண்ணல் தவிர்

#16
நன்று இயற்றினார் மகிழ நன்று ஆற்றல் விந்தை இன்றால்
கொன்று அன்ன இன்னா குறித்து இயற்றும் வன்தொழிலோர்
துன்புறுத்தும் காலத்தும் தூயவர்கள் நன்மதியே
இன்புறுத்துவார் என்று இசை

#17
தூரில் கரும்பு இனிதாய்த் தோன்றி மேல் வன்மை மிக்க
சீர் இலாக் கண்கள்-தொறும் தீயதாய்ப் பாரில்
முடிவில் உவர்ப்புறல் போல் முற்றும் கயவர்
தொடர்பு என்று நன்மதியே சொல்

#18
எத்தருணத்து எம்மொழிகள் ஏற்குமோ அ மொழிகள்
அத் தருணத்தில் புகன்றும் அந்நியர்-தம் சித்தமது
நோதல் இன்றித் தாம் நோவா நோன்மை அன்றோ நன்மதியே
ஏதம் இலாச் சான்றோர் இயல்

#19
குற்றமே நாடும் குணமிலி-பால் தொண்டுசெய
உற்று உழலல் ஆலம் உகு பகு வாய்ப் புற்று அரவப்
பை அடியில் தேரை படுத்தல் என நன்மதியே
ஐயம் இன்றித் தெள்ள அறை

#20
ஏரி நிறை நீரால் எழிலுறும் காலத் தடத்தில்
ஆரும் தவளை அயுதமாம் தாரணியில்
பொன் திரளால் மேன்மை பொருந்துங்கால் நன்மதியே
பற்றுடையேம் என்பார் பலர்

#21
பக்குவம்_இல் காய் பறியேல் பந்துக்களைப் பழியேல்
தக்க படை மண்டும் சமரின் மனம் நெக்கு வெரி
னிட்டு அகலேல் நன்மதியே இங்கிதம் கூறும் குரவர்
கட்டளை மீறேல் நீ கடந்து

#22
ஒரு நகரிற்கு ஓர் கணக்கன் ஓர் வழக்குத் தீர்ப்போன்
ஒருவனே ஆகாமல் ஊரின் வரு வழக்கம்
பல் முறையும் மாறில் பருவரலுற்று அ நகரம்
நன்மதியே வீயும் என நாட்டு

#23
உடன்பாடு இலா மனையாள் ஒப்புரவு_இல் மன்னன்
தொடர்பு உறுதிகொள்ளாத தோழன் விட உரியார்
என்று அறியாதானே இடையன் இடையன் இடை
அன்று என்று நன்மதியே ஆய்

#24
பாவு கலம் மேல் சகடம் பண்டியின் மேல் அ நாவாய்
மேவுதலும் உண்டு இதனை விள்ளுங்கால் வீவு_இல்
கலை ஆர்ந்த நன்மதியே கைத்து உடைமை இன்மை
நிலையா என்று இன்றே நினை

#25
வெம் திறல் மிக்கோனேனும் மென் மனையை அன்னவள்-தன்
தந்தை மனையில் பல நாள் தங்கவிடல் சந்தைக்
கடையில் விலைகூறி அந்தக் காரிகையை விற்று
விடல் என்று நன்மதியே விள்

#26
தேசு அவிரும் செம்பொன் மணிச் சிங்காதனத்து மிசை
ஏச வரு நாயதனை ஏற்றியே நேச முடி
சூட்டுகினும் அந்தச் சுணங்கன் குணம் கெடுமோ
தேட்டமுறு நன்மதியே செப்பு

#27
தவளைக்கு கால் இறுதல் சர்ப்பமதற்கு
நவை ஆர் மிகு பிணிதான் நண்ணல் இவரும்
மனை தீயாள் ஆதல் வறுமையுறல் மூப்பில்
இன இனலேயாம் நன்மதியே

#28
முளரி புனல் நீங்கின் முளரி மலர்க் கேள்வன்
ஒளிர் கரத்தால் தீய்ந்து இறுதல் ஒப்பத் தளர்வு அணுகித்
தம்தம் நிலை மாறில் தமராலும் துன்புறலில்
விந்தை என்னோ நன்மதியே விள்

#29
நாட்டு கணக்கன் கணக்கன் நம்பின் இறப்பு அனைய
கேட்டை உறுவான் அதனால் கேண்மையுடன் தேட்டமுறும்
தன் மருமம் ஓர் கணக்கன் சாரா வண்ணம் கணக்கன்
நன்மதியே வாழ்ந்திடுதல் நன்று

#30
மா கணக்கன்-தன்னை மகிழ்விக்காது உண்ட ஊண்
தேகம் சேராது இருசில் தேய்க்கும் எண்ணெய்ப் பாகம் இன்றேல்
ஈசன் சகடும் இறையும் நகராது என வீண்
பாசம் இலா நன்மதியே பன்

#31
சாந்தகுணம் கணக்கன் சார்ந்தாலும் வன் தந்தப்
பாந்தள் தீண்டாதேனும் பல் புகர் மா வாய்ந்த கடாம்
விட்டாலும் தேள் கொட்டாவிட்டாலும் நன்மதியே
கிட்டார்கள் மேதினியோர் கேள்

#32
மேல் இயல் தேரும் பருவம் மேவும் முனம் மக்கட்குப்
பாலியவிவாகமதைப் பாலிப்பர் காலமுற்று
முற்றாத காய் துவர்ப்பு மொய்க்கும் அன்றித் தீம் சுவையைப்
பற்றாது நன்மதியே பார்

#33
செய்ய தமிழ்த் தேர்ச்சி மிகச் சேராதான் சொல் செய்யுள்
செய்யும் இங்கிதம்-தன்னைத் தேரான்-பால் செய்யும் நட்பு
மேவி அகல் ஏனம் எய்யான் வில்லாண்மை நன்மதியே
பாவிக்கில் இன்னன வீண் பார்

#34
கொள்ளேல் கொடியோர்-தம் கூட்டுறவு கொண்ட புகழ்
தள்ளேல் கடன் அளித்துச் சஞ்சலத்துக்கு உள்ளாகேல்
என்பு உருக்கும் மென் குதலை ஏந்து_இழையார் நன்மதியே
அன்பு உளர் என்று உன்னேல் அகத்து

#35
காதலொடு இல் வாழக் கருதா மதியிலியாம்
மாதுடன் இல்வாழ்க்கையுற வாஞ்சித்தல் மாதுரியச்
சாரம் ஒழி கருப்பஞ்சக்கையினை நன்மதியே
ஊர் எறும்பு மொய்த்திடல் ஒக்கும்

#36
காரணம் இல்லா நகையும் காதலன்-பால் அன்பு இல்லா
நேர்_இழையும் பூரணம்_இல் நெய் படு நல் பூரிகளும்
பல்லியம் இல்லா மணமும் பாரினில் வீணாம் எனவே
தொல் இயல்பு ஆர் நன்மதியே சொல்

#37
நல்கும் இன்ப இல்லாள் நவியப் புரை நாடிப்
பல் கலாம் செய்யேல் அப் பண்_மொழியாள் மல்கு கண்ணீர்
வாரும் போது அம்போச மாது உன் மனையை விட்டுப்
பேரும் என்று நன்மதியே பேசு

#38
அன்பு குன்றா நாளில் அரும் குறை சற்றேனும் எண்ணாது
அன்பு குன்றத் தொடங்கும் அற்றை முதல் இன்புடன் செய்
நல் தொழிலிலும் தீய நாடுதல் காண் நன்மதியே
குற்றம் உறும் கீழோர் குணம்

#39
சீர்த்த இயல் மேலோர் சிறியோரைத் தம்மொடு உறச்
சேர்த்தலால் நீக்க அரிய தீங்கு உறுவர் போர்த்து உடல் ஊன்
மேயலுறு வன் முகடு மேவுதலால் நன்மதியே
பாயல் மிக மொத்துப்படும்

#40
மெய் அழகில் ஐங்கணை கொள் வேள் எனினும் ஆன்றோர் சொல்
செய்ய முதுநூல் அனைத்தும் தேர்ந்தாலும் மை அணி கண்
வேசை அணுகாமல் கைவிட்டு அகல்வாள் நன்மதியே
காசை அளியானைக் கடிந்து

#41
தகை சால் பண்பு இல்லாத் தனயனைப் பெற்றோன் தன்
அகில குணமும் கெட்டு அழியும் நகு தரளம்
கக்கு மிக்கு முற்றிக் கதிர் ஈனில் நன்மதியே
அக் கரும்பின் இன் சாறு அறும்

#42
கன்னியர் உள்ளன்பும் கடுக் கட்செவி நட்பும்
அந்நிய இல்லக்கிழத்தி ஆசையும் துன் அரையன்
நம்ப மனம்கொளலும் நன்மதியே இன் இரத
நிம்பமும் பொய் என்றே நினை

#43
மகி புகழும் ஆண்டகையை வாழ் மனையாள் கண்டால்
அகன் அமர்ந்து இன்சொல்லான் அழைக்கும் புகழ் வாய்
நடைப் பெருமையில்லானை நன்மதியே நோக்கின்
நடைப்பிணம் என்று எள்ளி நகும்

#44
கடந்த நினைந்து உருகேல் காரிகையார் அன்பு
மிடைந்தவர் என்று எண்ணேல் மிலைந்த வடம் திகழ் தோள்
பூ அலர் அந்தப்புரத்துப் பூவையரை நன்மதியே
மேவ மனம்கொள்ளேல் விழைந்து

#45
எறும்பு ஆர்ந்து இயற்றும் இரும் புற்றுப் பிண்ணா
உறும் பாந்தள் ஆர்வு ஆதல் ஒப்ப வறும் பாழ்
மதிகேடன் பொன்னன் மதியே பார் ஆள் பூ
பதி செயிர்த்து வவ்வப்படும்

#46
உறவினர் அல்லாரும் உறவுடையேம் என்று
செறிவொடு உறச் சூழ்வு ஆங்ஙன் சேரின் பெற அரிதாய்த்
தேடும் அரும் செல்வம் சிதறுண்டு நன்மதியே
ஓடும் என்று நெஞ்சில் உணர்

#47
செம் கைக்கு அணி ஈகை தேர் வேந்தர்க்கு அம்பு அணியாம்
பங்கம் அறப் பொய்யாமை பத்தினியாம் மங்கைக்கு
மானம் உயர் இழையாம் மன் நீதி நன்மதியே
மானவர்க்குப் பூணா மதி

#48
ஆய்ந்து ஓய்ந்து செய்யாது அவசரத்தின் ஆற்றுதலால்
வாய்ந்த கருமம் சிதைந்து மாயுமே ஆய்ந்து ஓய்ந்து
செய்யின் சிதைந்ததும் நல் சீர்த்தியுற்று நன்மதியே
கையில் உறும் என்றே கருது

#49
தன்னுள் அடங்காச் சினமே சத்துருவாம் தன் பொறையே
தன் அரணாம் தன் தயையே சார் கிளையாம் தன் உடைமை
நன்று என்று வந்திடலே நன்மதியே வான் துறக்கம்
கன்றும் மனமே வல் நரகம்

#50
தன் நகர் ஆர் வான் தவனைத் தன் புதல்வன் வால் அறிவைத்
தன் அரிவைப் பேரழகைத் தன் முன்றில் துன்ன அரிய
ஓடதியை உள்ளத்து உவகையொடு நன்மதியே
நாட மனம்கொள்ளார் நரர்

#51
தான் அரும் செல்வம் துய்த்தல் தக்க மக வான் பதவி
தான் இழி மிடிக் கடலில் தாழ்தல் புவி ஈனமுறல்
தன் மரணம் ஊழி தனக்கு இனியாள் விண் அரம்பை
நன்மதியே ஈது உண்மை நம்பு

#52
தமர் இல்லாத் தானத்தும் தம் அன்பர் இல்லா
அமையத்தும் ஏதிலர் சேர் ஆங்கும் சுமை இன்றிச்
சங்கைகொளும் அவ்விடத்தும் தாம் சேறல் நன்மதியே
இங்கிதம் தேர்ந்தோர்க்கு அமைதி இன்று

#53
வெள்ளிலை உண்ணா வாயும் மென் மணம்செய் நாதனுடன்
உள்ளம் இணங்காதாளுடன் வாழ்வும் கள் ஒழுகும்
அம் கமலம் விண்டு அலரா வாவியுடன் நன்மதியே
திங்கள் இலகா இரவும் தீது

#54
வாள் உரகத்திற்கு வலிய தலையில் கடுவாம்
தேளிற்கு வாலில் விடம் சேருமே கோளர்களாம்
தீ உரு ஆர் கீழ்கட்குத் தேகம் எலாம் வெம் காளம்
ஏயும் என நன்மதியே எண்

#55
தலை மறையப் பொன் குவையைத் தந்தாலும் அன்பு
நிலைபெறாதாம் கணிகை நெஞ்சில் விலைமாது
மத்தகத்தது அடித்து ஆணைவைத்தாலும் நன்மதியே
சித்தம் அகளங்கம் இலை தேர்

#56
சிரம் ஆர்ந்த குஞ்சி மிகச் சிக்குற்று நாறி
உர ஆகம் போர்க்கும் உடுக்கை பெரும் மாசு
கொண்டு சீர் குன்றில் குலமாதும் நன்மதியே
கொண்டவன் பழிக்கும் எனக் கூறு

#57
கான் ஈண்ட சோலையில் பல் கந்த மலர்ச் சாறு எடுத்துத்
தேனீச் செய் தேன் பிறரைச் சேரலைப் போல் தான் ஈதல்
உண்ணல் இன்றிக் கூட்டும் பொன் ஓடும் காண் நன்மதியே
மண்ணில் மன் கையில் வறிது

#58
வன் புறங்கூற்றால் உய்யும் வஞ்சகர் சொல் கேட்டு அரசன்
மன்பதைக்கு இன்னா இயற்றல் வண்மையொடு பொன் பொழிந்து
மட்டு அலரும் கற்பகத்தை வன்னியில் தீய்க்கும் கரிக்கா
வெட்டல் என நன்மதியே விள்

#59
பாழி நிதிகட்குப் பதியாம் குபேரன்-தன்
தோழன் என இருந்தும் சோமேசன் ஏழமையாய்
அம் பலி இரந்து உண்டான் ஆதலால் நன்மதியே
தம் பொருள் தமக்கு உதவி சாற்று

#60
தீரர்க்கு இயற்று உதவி தெங்கு இளநீருள் நிறையும்
சாரமதற்குச் சமம் ஆகும் பாரில்
பெருமை மிகப் பிறங்கப் பேச அரிய இன்பம்
தரும் என்று நன்மதியே சாற்று

#61
அரிய வழிச் செல்லேல் ஆய்ந்த துணை இன்றி
அரி அகத்தில் அன்னம் அருந்தேல் உரிமை பிறர்க்கு
உள்ள பொருள் கொள்ளேல் ஒன்னாரும் நன்மதியே
துள்ள வன்சொல் கூறேல் துணிந்து

#62
ஆயம்கொள்வானை அரும் கவறு ஆடு ஆகுலனை
மாயம்செய் தட்டானை வாணிபனைத் தீய
நடக்கை விலைமாதை நன்மதியே நம்பேல்
இடக்கரனை நீ என்றுமே

#63
இன்மொழியால் தீம் பால் எவரும் அருந்தார் சினத்து
வன்மொழியால் வெவ் விடமும் வாய்க்கொள்வார் இன்மொழிதான்
ஐயோ பயன் இலதாம் ஆதலால் நன்மதியே
வெய்யோர்க்கு வன்சொல் விளம்பு

#64
மெய்ம்மை நெறி நிருபன் மீறி ஒழுகுதல் வெம்
கைம்மைப் பெண் வீட்டில் அதிகாரமுறல் பொய்ம்மை ஒன்றே
மேய கணக்கன் சுகுணம் மேவல் இவை நன்மதியே
தீய பயக்கும் எனச் செப்பு

#65
செறி பொருள் சேர் அம் பனுவல் தீம் சுவை ஆர் கீதம்
அறிவிலிக்கு இசைக்க அணுகல் உறும் ஒலி கொள்
காதில் செவிடன்-பால் போய்க் கம்பு எடுத்துப் பம்பம் என்று
ஊதல் என நன்மதியே ஓது

#66
நகையேல் தாய் தந்தை நரபதி-பால் வீணே
நகையேல் பிறன்மனையை நண்ணி நகையேல்
அவையில் நவையேல் மறை தேர் அந்தணரை இன்ன
நவை இலா நன்மதியே நன்று

#67
புனல் உயிர்க்கு ஆதாரமாம் பொற்பு ஆர் ஆதாரம்
வன மதுர மென் மொழிக்கு வாயாம் மனிதர்க்கு
மானை விழியார் மணியாம் மாந்தர்க்கு நன்மதியே
தானை அணி எனவே சாற்று

#68
இகல் ஆகாது யாவரொடும் இன்னலுற்ற பின்னர்
அகம் அலைதல் ஆகாது அவையில் பகச் சொல்லல்
தக்கது அன்று தன் நெஞ்சைத் தையலர்-பால் நன்மதியே
சிக்கவிடல் ஆகாது தேர்

#69
கொண்ட மனையாளிடத்தும் கொற்றவன்-தன்பாலும்
அண்டர் தொழும் தேவிடத்தும் ஆன்மாவைக் கண்ட
குருவிடத்தும் நன்மதியே கொஞ்சும் மகார்-பாலும்
தரு கையுறையோடு அணுகல் சால்பு

#70
தொண்டு இயற்றலில் பணிப்பெண் தூய உருவத்து அரம்பை
பண்டை மந்திரத்து அமைச்சு பற்றுடனே உண்டி
உதவலில் தாய் ஆனவளே ஒண் மனையாள் என்றே
இதமாக நன்மதியே எண்

#71
பிறன்மனைக்குக் கூடப் பிறந்தாரை ஒப்பப்
பிறர் பொருள் வவ்வாதவரைப் பேணிப் பிறர் தம்மைப்
போற்ற நடந்து ஒன்னார் புழுங்கினால் நன்மதியே
சீற்றமுறுவார் ஆன்றோர் தேர்ந்து

#72
பிறர்க்குரியாள் நாடேல் பிறர் பொருளை வவ்வேல்
பிறர் உதவி நோக்கிப் பிழையேல் செறி செல்வம்
போய பின் சுற்றத்து அகத்தில் புக்கு உழலேல் நன்மதியே
தீய குழுச் சேரேல் தெளிந்து

#73
வீட்டுமனும் நல் பருவ மெல்_இயலார்-பால் இருப்பின்
நாட்டு புகழ் குன்றி நவையுறுவன் கோட்டம் இலா
நங்கை அருந்ததியும் நன்மதியே ஆடவர்கள்
அம் குழுப் புக்கால் சீர் அறும்

#74
பிறனை உன்னும் பேதை ஒரீஇப் பீதி இலாக் கையாள்
அற நீக்கி மாற்றம் எதிராடும் அறிவில்லாக்
கான்முளை கடிந்து பலகால் மனையைச் சாராத
நோன்மை நன்று நன்மதியே நோக்கு

#75
பிறர்க்கு உன் நசை விள்ளேல் பிறர் இல்லத்து என்றும்
வறிது உறேல் அந்நியன் மேல் வாஞ்சையுறு மனையைச்
சேர உன்னேல் நன்மதியே தீய விடக்காம் புரவி
ஊர மனம்கொள்ளேல் உணர்ந்து

#76
பருவ வேளாண்மை விடேல் பார்த்திபர்கள் நேசம்
திரம் என உள் பூரியேல் சேர்ந்த அரிவை மிகத்
தர்ப்பமுறுமாறு விடேல் தங்க அரிய தானத்தே
நிற்ப உன்னேல் நன்மதியே நீ

#77
பல் துலக்கிப் பின் அருந்தும் பாகிலை நல்லெண்ணெய் மூழ்கு
அற்றை நாள் கண் துயிலல் ஐயம் அறக் கற்ற
புலமை மிகு நன்மதியே போதம் மிகுவாரோடு
இலகல் விலை அரிது என்று எண்

#78
பாடு அறியாதான்-பால் பணிசெய்தலும் விரும்பி
நாடல் இலா நட்பதனை நாடலும் நீடு
நிதிக்காகச் செய் நட்பு நீள் நன்மதியே
நதிக்கு எதிர்த்து நீந்தல் என நாட்டு

#79
பால் ஆர்ந்த நல் நீர் அப் பால் போல் இருப்பினும் பால்
மேல் ஆம் குணம் போம் விதம் போல மால் ஆர்ந்த
துன்மதியின் கூட்டுறவு துன்புறுத்தும் வாய்மையினை
நன்மதியே ஓர்ந்து நவில்

#80
கயவர்க்கு நேர் துன்பம் காதலித்துத் தீர்ப்போர்
துயருறுவர் என்றல் துணிபாம் உயர் அனலில்
பட்டு வருந்தும் தேளைப் பாலிப்போர்-தம்மை அது
கொட்டும் என்று நன்மதியே கூறு

#81
செய்ய ஏவாக் கருமம் செய்யல் உள்ளம் ஒவ்வாத
தையல் மணம் அரசன் தான் அறியாச் செய்ய பணி
வேண்டி அழையா வதுவை வீடு உறல் ஒவ்வாக் கேண்மை
ஈண்டு இவை ஆகா நன்மதியே

#82
அளவு_இல் திருவிற்கு உயிர் ஓர் ஆய்_இழை பேரூர்க்கு
வள வணிகன் இன் உயிராம் வாய்த்த களமத்தின்
ஆருயிர் நீர் உம்பற்கு அரும் துதிக்கை சீவனா
வாரும் என நன்மதியே ஆய்

#83
வலிய புலிப்பால் கொணர்ந்து வைத்தாலும் ஈரல்
உலைய அரிந்து அங்கை உதவித் தலை உயரம்
நல் பொன் திரள் குவித்து நல்கிடினும் நன்மதியே
அற்பொன்றாள் வேசையவள்

#84
விதிப்பயன் நன்று ஆம் காலம் வெம் கான் அடைந்தும்
மதிப்புடைய பல் பொருளும் வாய்க்கும் விதிப்பயன்தான்
தீதுறுங்கால் செம்பொன் திடர் உறினும் நன்மதியே
ஏதும் உறல் அரிது என்று எண்

#85
பாங்கர்ப் பகைஞன் உறின் பண்டு இராயசம் பார்த்தோன்
ஓங்கு அதிகாரத்து வரின் ஊர்க் குடிகள் தீங்கு இயற்றும்
வெம் குறளை கூறுவரேல் மிக்க துயர் நன்மதியே
அம் கணக்கன் சாரும் எனலாம்

#86
பொன் கொதுவை வைத்திடுதல் போர்முகத்து நில்லாது
பின்கொடுத்தல் ஆவணத்தில் பேதமையாய் மின்கனகம்
வீண்செலவு செய்தல் வெறுக்கை இல்லா வறியன்
கேண்மைகொளல் நன்மதியே கேடு

#87
மா வெம் திறலுள்ளேம் மண்டலத்து யாம் என்றே
ஏவருடனும் இகல்கொள்ளேல் தீ விடம் கால்
புற்று அரவு நன்மதியே பூவுலகில் பொன்றும் பல்
சிற்றெறும்பு மொய்க்கச் சிதைந்து

#88
விரி திசை சூழ் பார் ஆளும் வேந்தன் அருகில்
பிரதானி இன்மை பெரியோர் கருதித்
துதிக்கை பெறு நன்மதியே துன்னு மத வேழம்
துதிக்கை இன்றி நிற்றல் எனச் சொல்

#89
நல்ல அமைச்சு ஆர் அரசு நானிலத்தில் மேன்மையுறும்
நல் அமைச்சு இல்லா நாடு நன்மதியே வல்ல
இயந்திரம் கீல் கழல இற்று உகுதல் போல
பயனற்று அழியும் எனப் பன்

#90
சொல்லிய மாற்றத்து உயிராம் தூய்மை பெறு வாய்மை
மெல்_இயற்குச் சீவன் மிகு மானம் அல்லல் இலாக்
கூட்டுறவு ஆர் நன்மதியே கோட்டைக்கு உயிர் வீரர்
சீட்டிற்கு எழுத்து எனவே செப்பு

#91
பெரு மானி ஊக்கம் அற்றுப் பேதைமையார் கீழின்
அருகு இருந்து உய்ய அணுகிச் சிரமமுறல்
நாழி புனலுக்குள் நன்மதியே கைம்மாவின்
பாழி மெய் மறைத்தல் எனப் பன்னு

#92
அம் முகமன் கூறா அரசனிடம் தொண்டுசெயின்
இம்மை அம்மை இல்லை எங்ஙன் என்னிலோ கம்மும்
இருள் நிறையும் இல்லில் இரு கைத் தடவித்
திரியல் என நன்மதியே தேர்

#93
மெய் உறுதி காட்டியதன் மேல் பொய்த்திட முயலேல்
செய்ய ஆதாரமாய்ச் சேர் கிளைஞர் நைய வசை
சொல்லேல் சின வாசல் தொண்டு இயற்றேல் பாதகர் ஊர்
செல்லேல் நீ நன்மதியே தேர்ந்து

#94
உருவில் பெரியனினும் ஒண் நயம் கைசோரா
நரனே பெரியன் என்பர் நல்லோர் பெருமை மிகு
மா கன்மலை நிகரும் மத்த கயம் நன்மதியே
பாகற்கு அடங்கும் இது பார்

#95
சேதகம் ஆர் மண் உழவு செய்யேல் தீ வற்கடத்தில்
ஓதும் உறவினர் இல் உற்று அழுங்கேல் ஏதிலர்க்கு உன்
உள் மருமம் விள்ளேல் உயர் படையை நன்மதியே
திண்மை இலார்க்கு ஈயேல் தெளிந்து

#96
சாலி விளையா ஊரும் தார் வேந்து இல்லா ஊரும்
கோல் அரசன் வாழாத கோவிலும் மேலாம்
துணை இன்றிச் செல் நெறியும் தூ நன்மதியே
பிணம் எரியும் ஈமம் எனப் பேசு

#97
ஓகையொடு நாதன்-பால் உள்ளன்பில்லாளோடு
தாகமுடன் கணவன் தான் வாழ்தல் மோகமுடன்
வாய்த்த கல் சாணையினில் வாரி இன்றிச் சந்தின் முறி
தேய்த்தல் என நன்மதியே செப்பு

#98
ஆர் உரையும் கேட்டல் ஆம் அவ்வாறு கேட்டவற்றைத்
தீர ஆராய்ந்து தெளிந்திடல் ஆம் நேருற்றுக்
கண்டும் அறியா நிருபன் காசினியில் நன்மதியே
துண்டரிக்கவாயன் எனச் சொல்

#99
பாகிலை உண்ணா வாயும் பண்பார் முன் நூல் அனைத்தும்
மா குரவர்-பால் ஓதா வாயும் இசை மோகமுறத்
தேம்பல் இன்றிப் பாடா வாய் சீர்மை பெறும் நன்மதியே
சாம்பல் இடும் முழையாய்ச் சாற்று

#100
பல்லார் செல் பாதையில் புல் பற்றாது பற்றிடினும்
புல் ஆர்ந்திடாது இறுதல் போலவே வில் ஆர்
நுதல் விலைமாது அன்புகொள்ளாள் கொண்டாலும் நொய்தாய்ச்
சிதையும் என நன்மதியே செப்பு

#101
விலைமாது இடும் ஆணை வேளாளன் நட்பு
பல பணி செய் தட்டான் பழக்கம் மலை வாய்க்
கனவினில் காண் செல்வம் பல் காலம் உறும் என்று
மனம் நம்பல் நன்மதியே வம்பு

#102
நன்மையுறாக் கல்வி நவை_இல் அபிநயத்தின்
தன்மை இசை இரதம்தான் செறியாப் புன்மை மிகு
பாடல் மனக்கிளர்ச்சி பற்றாப் பழக்கம் அவை
தேடலில் சொல் நன்மதியே தீது

#103
அதிக சரசம் அருவருப்புக்கு ஏது
அதிக இன்பம் துன்பமே ஆக்கும் மிதம் இன்றி
ஓங்கி வளரல் ஒடிதற்காம் தாழ்மையுறல்
ஓங்கல் என நன்மதியே ஓது

#104
மேல் அணுகாப் புன் நெஞ்சு ஆர் வீணனைப் பஞ்சமனை
ஞாலமதில் தட்டானை நாவிதனைச் சீல
முறு மிதராக் கொள் மகிபன் ஓங்குதலில் செங்கோல்
இறும் என்று நன்மதியே எண்

#105
மங்கையர்-பால் வாதாடேல் மாண்ட வியன் குணங்கள்
பங்கமுறக் கைவிடேல் பாலருடன் சங்கை இன்றித்
தொந்தமுற நட்டவர்-பால் சொல் பழகேல் ஆளிறையை
நிந்தைசெய்யேல் நன்மதியே நீ

#106
திரு உறு நற்காலம் உறில் தெங்கின் இளநீர் உண்
மருவு புனல் போன்று வருமால் திரு அறுங்கால்
வீயும் காண் நன்மதியே வெம் கண் மதமாவின்
வாயுறு விளங்கனியின் மாய்ந்து

#107
மதி ஒருவன் மேல் வைத்த மங்கையின் மேல் அன்பாய்
மதியிலி ஓர் தூர்த்தன் வறிதே நிதம் அணுகும்
பூசைப் பகு வாய்ப் புகும் கிள்ளை பஞ்சரத்தில்
பேசல் உண்டோ நன்மதியே பேசு

#108
மைந்தன் தனக்கு உதித்த வாய்மை செவியுற்ற அ நாள்
தந்தை உறு மகிழ்ச்சிதான் சிறிதாம் மைந்தன் உலகு
எங்கும் புகழ்படைத்தான் என்னும் மொழி கேட்டு உவகை
பொங்கும் என நன்மதியே போற்று

#109
ஈனமுறு சாதி எனினும் கால்காசுக்கும்
தான் உதவானாம் வீணன்தான் எனினும் மானம் இலா
வேசை மகன் எனினும் மேதினியில் நன்மதியே
காசுடையானே பெரியன் காண்
** நன்மதி வெண்பா முற்றிற்று
**