நீதி நூல் – முனிசீப் வேதநாயகம் பிள்ளை

உட்தலைப்புகள்

0 காப்பு

1 அவையடக்கம்

2 அதி. 1 – தெய்வமுண்டெனல்

3 அதி. 2 – தெய்வத்தன்மையும் வாழ்த்தும்

4 அதி. 3 – அரசியல்பு

5 அதி. 4 – குடிகளியல்பு

6 அதி. 5 – ஞானாசிரியன் பெருமை

7 அதி. 6 – பொய்க்குருவின் தன்மை

8 அதி. 7 – தாய் தந்தையரை வணங்கல்

9 அதி. 8 – மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும்

10 அதி. 9 – மாதரைப் படிப்பித்தல்

11 அதி. 10 – உடன் பிறந்தாரியல்பு

12 அதி. 11 – கணவ மனைவியரியல்பு

13 அதி. 12 – பரத்தமை (கற்பு நிறை அழிவு)

14 அதி. 13 – உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல்

15 அதி.14 – தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல்

16 அதி. 15 – பொய்

17 அதி. 16 – களவு

18 அதி. 17 – கொலை

19 அதி. 18 – மது

20 அதி.19 – சூது

21 அதி. 20 – கைக்கூலி

22 அதி. 21 – புறங்கூறல்

23 அதி. 22 – பெரியோரைத் தூறல்

24 அதி. 23 – கடும்பற்று

25 அதி. 24 – சோம்பல்

26 அதி. 25 – சினம்

27 அதி. 26 – பொறாமை

28 அதி. 27 – கல்விச் செருக்கு

29 அதி. 28 – அழகாற் செருக்கல்

30 அதி. 29 – செல்வச் செருக்கு

31 அதி. 30 – தீயரைச் சேராமை

32 அதி. 31 – பிழை பொறுத்தல்

33 அதி. 32 – இனியசொற் கூறல்

34 அதி. 33 – பிறர்க்குத் தீங்கு செய்யாமை

35 அதி. 34 – நெடுந்துயில்

36 அதி. 35 – பேருண்டி

37 அதி. 36 – தற்புகழ்

38 அதி. 37 – புகழும் இகழும் மதியாமை

39 அதி.38 – கைம்மாறு கருதா உதவி

40 அதி. 39 – பொருளாசை யொழித்தல்

41 அதி. 40 – யாக்கை நிலையாமை

42 அதி. 41 – துன்பம்

43 அதி. 42 – அறஞ்செயல்

44 அதி. 43 – கணிகையரியல்பு

45 அதி. 44 – விலங்கினத்துக் கிடர் செய்யாமை

46 அதி. 45 – பன்னெறி

47 இணைப்பு

தேவையான நூலின்
மேல் சொடுக்கவும்

1.ஆத்திசூடி
2.கொன்றைவேந்தன்
3.மூதுரை(வாக்குண்டாம்)
4. நல்வழி
5.வெற்றி வேற்கை
6.உலக நீதி
7.நீதிநெறி விளக்கம்
8.அறநெறிச்சாரம்
9.நீதி நூல்
10.நன்னெறி
11.நீதி சூடாமணி
12.சோமேசர் முதுமொழி வெண்பா
13.விவேக சிந்தாமணி
14.ஆத்திசூடி வெண்பா
15.நீதி வெண்பா
16.நன்மதி வெண்பா
17.அருங்கலச்செப்பு
18.முதுமொழிமேல் வைப்பு
19.புதிய ஆத்திசூடி
20.இளையார் ஆத்திசூடி
21.திருக்குறள் குமரேச வெண்பா


@0 காப்பு

#1
** படைத்துக் காக்கும் பண்பினன் பரமன்
ஆதிநூல் ஒன்றும் அரும் பயன் யாரும் தெளிவான்
நீதிநூல் ஒன்று நிகழ்த்தவே மாதிரமோ
இத் தரை அனைத்தையும் இயற்றி இனிதில் திதிசெய்
கத்தன் மலர் ஒத்த கழல் காப்பு

#2
** ஆதிக் கடவுள் அடியிணை போற்றி
மாதிரம்-தனில் வாழ்பவர் யாவரும்
தீது இகந்து அறச் செய்கை முயலுவான்
நீதிநூலை நிகழ்த்த நிகர் இலா
ஆதி தேவன் அடி இணை ஏத்துவாம்

@1 அவையடக்கம்

#1
** வெயிலுக்கு இடும்விளக்குப் போலும்யான் நீதிநூல் கூறல்
வெயிலினைச் சோதிசெய்வான் விளக்கிடல் போலும் காகம்
குயிலினுக்கு இசை உணர்த்தும் கொள்கையே போலும் நட்டம்
மயிலினுக்கு உணர்த்தும் கானவாரணம் எனவும் யாவும்
பயில் உலகிற்கு நீதி பகர யான் துணிவுற்றேனால்

#2
** ஆன்றோர் அறிவித்தவற்றையே அவர் முன் கூறுவேன்
பானுவின் கதிரை உண்ட பளிங்கு ஒளிசெய்தல் போலும்
வான் உலாம் கொண்டல் பெய்யும் மழையினைத் தழையில் தாங்கித்
தானும் பெய் தருவைப் போலும் தமிழ் ஒரு மூன்றும் ஆராய்ந்து
ஆனுவார் கவி சொல்வோர் முன் அறிவிலேன் பாடலுற்றேன்

#3
** ஊமையர் பாடலை ஒக்கும் என் பாட்டும்
முடவரே ஆட அந்தர் முன் நின்று பார்த்து உவக்கத்
திடமொடு மூகர் பாடச் செவிடர் கேட்டு அதிசயிக்கக்
கடல் உலகினில் கண்டு என்னக் கனவினும் கலையைத் தேரா
மடமையேன் உலகநீதி வகுத்திடத் துணிந்தேன்-மன்னோ

#4
** பசுவை நோக்காது பாலைக் கொள்வதுபோல்
** பாட்டை நோக்காது பயனைக் கொள்க
பயன்கொள்வோர் அதனை நல்கும் பசு உரு இலது என்று ஓரார்
வியன் சினை வளைவு நோக்கார் விளைந்த தீம் கனி பறிப்போர்
கயம் கொள் சேறு அகற்றித் தெள் நீர் கைக் கொள்வார் என்ன நூலின்
நயன் கொள்வது அன்றிப் பாவின் நவையை நோக்கார் மேலோரே

#5
** கடலுக்கு நீர் தரும் மழைபோல் கற்பித்தாரிடத்தே
** ஒப்புவித்தேன்
வேலை-வாய் உண்ட நீரை மேகம் சிந்தினுமே சிந்தும்
காலிடைக் கொண்ட நீரைக் கழனி அக் காற்கு நல்கும்
பாலர் கற்றவை ஆசான்-பால் பகர்வர் யான் நால் உணர்ந்த
சீலர்-பால் கற்றது அன்னோர் செவியுற நவின்றேன் அம்மா

#6
** முறையைப் பழிப்பதாம் என் பாட்டைப் பழிப்பது
கோவிலைப் பழிக்கின் ஓர் எண்_குணனையும் பழித்தது ஒப்பாம்
காவினைப் பழிக்கின் ஆண்டு ஆர் கடி மலர்ப் பழித்தது ஒப்பாம்
வாவியைப் பழிக்கின் கொண்ட வண் புனல் பழித்ததாம் என்
பாவினைப் பழிக்கின் நீதிப் பயனையும் பழித்தது ஆமே

@2 அதிகாரம் 1 – தெய்வமுண்டெனல்

#7
** ஏதுக்களால் தெய்வம் உண்டென இசைத்தல்
மண்டபமாதி கண்டோர் மயன் உளன் என்னல் போலும்
குண்டலம் முதல் கண்டோர் பொற்கொல்லன் உண்டு என்னல் போலும்
ஒண் துகில் கண்டோர் நெய்தோன் ஒருவன் உண்டு என்னல் போலும்
அண்டம் மற்று அகண்டம் செய்தோன் உளன் என அறிவாய் நெஞ்சே

#8
தீட்டுவோன் இன்றி ஆமோ சித்திரம் திகழ் பொன் பாவை
ஆட்டுவோன் இன்றித் தானே ஆடுமோ திவவி யாழின்
மீட்டுவோன் இன்றிக் கீதம் விளையுமோ சராசரங்கள்
நாட்டுவோன் ஒருவன் இன்றி நன்கு அமைந்து ஒழுகும்-கொல்லோ

#9
மரம் முதல் அசைதலால் கால் உளது என மதிப்பார் எங்கும்
பரவிய புகையால் செம் தீ உளது எனப் பகர்வார் சுற்றும்
விரவிய மணத்தால் பாங்கர் வீ உளது என்று தேர்வார்
பரன் உளன் எனும் உண்மைக்குப் பார் எலாம் சான்று மன்னோ

#10
நாதன் இல்லாத வீடு நாளுமே நடவாது என்னில்
வேதநாயகன் இலானேல் விரி கதிர் மீன் உதித்தல்
சீத நீர் பெயல் தருக்கள் சீவராசிகள் கதித்தல்
பூத பௌதீகம் எல்லாம் புரை அற ஒழுகற்பாற்றோ

#11
பூதம் யாவுக்கும் ஏணாய்ப் பொருந்திய விசும்பைக் காற்றை
வேதநூலதனை மண்ணோர் மெய் உறை உயிரை நெஞ்சை
ஏதம்_இல் அறத்தைக் கண்ணால் பார்த்திலோம் எனினும் உண்டு என்று
ஓதல் போல் தெய்வம்தான் ஒன்று உளது எனல் தேற்றம் அம்மா

#12
வாசம் மூக்கு அறியுமன்றி வாய் செவி விழி மெய் தேரா
பேச வாய் அறியுமன்றிப் பின்னை ஓர் புலன் தேராது
நேசம் ஆர் தொண்டர் ஞான நேத்திரம் கொண்டு காணும்
ஈசனை முகத்தின் கண்ணால் இகத்தில் யார் காண வல்லார்

#13
வான் இன்றி மழையும் இல்லை வயல் இன்றி விளைவும் இல்லை
ஆன் இன்றிக் கன்றும் இல்லை அரி இன்றி ஒளியும் இல்லை
கோன் இன்றிக் காவல் இல்லை குமரர் தாய் இன்றி இல்லை
மேல் நின்ற கடவுள் இன்றி மேதினி இல்லை மாதோ

#14
கதிரவற்கு ஒளி இன்று என்னக் கண்ணிலார் கழறல் போலும்
வதிரர் பேராழி ஓசை மாறியது என்னல் போலும்
எதிருறு பொருளைக் காணாது இடருறு பித்தர் போலும்
மதியிலார் தேவு இன்று என்ன மருளொடும் இயம்புவாரே

#15
அத்தன் தாய் முன்னோர்-தம்மை அறிகிலான் இலர் என்பானோ
சத்தம் இன்சுவை கந்தத்தைத் தரிசியான் இலன் என்பானோ
நித்தனைக் கண்ணில் காணா நீர்மையால் இலன் என்று ஓதும்
பித்தரில் பித்தர் பாரில் பேசிட உளரோ அம்மா

#16
தேவனே இலனேல் மோக்கம் தீ நரகு இல்லை வேதம்
பாவ புண்ணியங்கள் இல்லை பரன் இலை என்போன் இல்லின்
மேவலர் தீயிட்டு அன்னான் விபவம் எல்லாம் சிதைத்துச்
சீவனை வதைசெய்தால் என் செய்குவன் சிதடன்தானே

@3 அதி. 2 – தெய்வத்தன்மையும் வாழ்த்தும்

#17
**பிறப்பு இறப்பு இல்லாப் பெரியோனை வாழ்த்து
ஆதி ஈறு இல்லான் தன்னை அமைத்த காரணம் ஒன்று இல்லான்
கோது இலான் கணத்துள் அண்டம் கோடி செய்து அழிக்க வல்லான்
ஓதிடும் ஒப்பு ஒன்று இல்லான் உரு இலான் இரு விண் தங்கும்
சோதி தன் நிழலாக் கொண்ட சோதியைத் துதியாய் நெஞ்சே
** காணரும் வடிவினன் கடவுள்

#18
ஆண் அலன் பெண்ணும் அல்லன் அஃறிணை அலன் பார் அல்லன்
சேண் அலன் புனல் கால் அல்லன் தீ அலன் ஐம்புலத்தால்
காணரும் வடிவன் நித்தன் கத்தனம் மத்தன் சுத்தன்
மாண் அறம் உருக்கொண்டு அன்ன மாட்சியான் கடவுள் நெஞ்சே
** எப்பொருளினும் நீக்கமின்றி நிற்போன் இறைவன்

#19
தரை எலாம் உளன் துரும்பு-தன்னினும் உளன் அண்டாண்ட
நிரை எலாம் உளன் மெய் ஆவி நெஞ்சுளும் உளன் இயம்பும்
உரை எலாம் உளன் தான் மேவி உறை பொருள் கெடக் கெடாதான்
புரை தபு தன்னைத் தானே பொருவுவோன் ஒருவன் அன்றே
** உலகியல் விதித்தோன் கடவுள்

#20
உடுக் கணம் யாவும் வெவ்வேறு உதயனாம் ஒவ்வொன்றிற்கும்
நடுக்கண் பூவலயம் சோம நபமொடும் வரம்பு_இல் கோடி
அடுக்கடுக்காச் செய்து எல்லாம் அந்தரத்து அமைந்து நிற்க
இடுக்கண் ஒன்று இன்றிக் காக்கும் எம்பிரான் பெரியன் அன்றோ
** முட்டியுல கழியாது முடிப்பவன் கடவுள்

#21
பண்ணிய புவனம் எல்லாம் படர் கையில் பரிக்கும் ஏகன்
நண்ணிய கரம் சற்று ஓயின் நழீஇ ஒன்றோடொன்று மோதித்
திண்ணிய அகில கோடி சிதைந்து உகும் என அறிந்தும்
புண்ணிய மனுவால் தேவைப் போற்றிடாவாறு என் நெஞ்சே
** அடிமுடி எவர்க்கும் அறியொணான் கடவுள்

#22
இதயம் தன் வேகத்தோடும் எண்_இல் அவ்வியத்த காலம்
கதமொடு மீச்சென்றாலும் கடவுள் மெய் நடுவை அன்றி
இதர அங்கத்தைக் காணாது எனின் முடி எவண் பொன் ஒக்கும்
பதம் எவண் அகண்டாகாரப் பராபரற்கு உரையீர் பாரீர்
** ஆராலும் வாழ்த்தற் கரியவன் கடவுள்

#23
விலக அரும் அருளின் மீக்கூர் விமலனை வாழ்த்த வேண்டின்
அலகு_இல் கற்பங்களே நம் ஆயுளாய் மும்மைத்தாய
உலகம் ஓர் உடம்பாய் அந்த உடம்பு எலாம் வாயாய் நித்தம்
பல கவி மாலை சூட்டிப் பரவினும் முடியும்-கொல்லோ
** உடலூண் உணர்வெலாம் உதவுவோன் கடவுள்

#24
உரு_இல் சூனியமாய் யாதும் உணர்வு இலாது இருந்த நம்மைத்
திரு உடலோடு ஞானச் சீவனாகப் படைத்துச்
சருவ நன்மையுமே தந்து தன்னையும் தந்த நாதன்
மரு மலர் அடிக்கு நம்மை வழங்குதல் பெரிதோ நெஞ்சே
** எல்லாம் அருளும் இறைக்கொப்பின்று

#25
பூமி நம் இல்லாம் மற்றைப் பூதங்கள் பணிசெய்வோராம்
சோமன் மீன் கதிர் விளக்காம் சூழ் மரம் பயிர் ஆகாரச்
சேம வைப்பாம் நமக்கு இத் திரவியம் யாவும் நல்கும்
சாமியை உவமித்து ஏத்தச் சாமியம் யாது நெஞ்சே
** தெய்வப் புணையிலார் சேரிட மில்லார்

#26
தோன்று அகலிடமது என்னும் துன்ப சாகரத்தில் அத்தன்
தேன் தரு மலர்த் தாள் தெப்பம் சேர்கிலாது அகன்று நிற்போர்
வான்-தனைப் பிரிந்த புள்ளும் வாழும் நீர் நீத்த மீனும்
கான்-தனை அகல் விலங்கும் காவல் தீர் நகரும் ஒப்பார்
** இறையருள் உண்டேல் அச்சம் இன்று

#27
பார் எலாம் பகைசெய்தாலும் பராபரன் கருணை உண்டேல்
சாரும் ஓர் துயரும் உண்டோ தாயினும் இனிய ஐயன்
சீர் அருள் இன்றேல் எண்_இல் தேர் கரி பரி பதாதிப்
பேரணி உடையமேனும் பிழைக்குமாறு எவன்-கொல் நெஞ்சே
** கடவுளை அறியாது காலங் கழித்தனை

#28
இருநிதி பெற்ற தீனர் எண்ணிடாது இகழ்ந்தது ஒப்ப
அருவமாய் உருவமாய் நம் ஆருயிர்க்கு உயிராய் அண்டம்
பெரு நிலம் எங்கும் இன்பம் பெருக்கெடுத்து ஓங்கிநிற்கும்
கருணை அம் கடல் ஆடாது கழித்தனை வாழ்நாள் நெஞ்சே
** கடவுளை நினைக்க நினைக்க நேரும்பே ரின்பம்

#29
முன்னவன்-தனை உளத்து முன்னமுன்னத் தெவிட்டாக்
கன்னலோ அமுதோ பாகோ கற்கண்டோ எனத் தித்திக்கும்
இன்னல் மேவாது அவன்தான் எங்கணும் நிறைந்திருந்தும்
அன்னையை நீத்த சேய் போல் ஐயனை நீத்தாய் நெஞ்சே
** கடவுளைத் தொழாது காலம் கழித்தல் நன்றன்று

#30
ஆயுள்நாள் சில வெம் காமம் அனந்தர் நோய் சோம்பு கொண்ட
காயமே வளர்க்க என்னில் கருமங்கள் செயல் இவ்வாறே
தேயும் நாள் கழிய நிற்கும் சேடநாள் அற்பம் ஆகும்
தூய நாதனைத் தொழாமல் தொலைக்கின்றாய் அழியும் நெஞ்சே
** கடவுளை அகத்தில் காண்பதே காட்சி

#31
பொங்கு அலை ஆழி தாண்டிப் பொருப்புகள் கடந்து ஓயாமல்
அங்குமிங்கும் திரிந்தே அழிந்துபோம் உடலைக் காப்பாய்
எங்கணும் உள்ளோன் தாள் உன் இருக்கையின் இருந்து போற்றிப்
பங்கம்_இல் சுகம் பெற்று உய்யப் பாரம் என் பகராய் நெஞ்சே
** கடவுளைத் தொழுவோர் காண்பர்பே ரின்பே

#32
மாசறு கடவுள் பாத மலரினைத் தினமும் போற்றிப்
பாசம்_இல் சுகம் பெறாமல் பவஞ்சத்தூடு உழலல் பைம்பொன்
ஆசனம்-தன்னில் ஏறி அரசுசெய் தகைமை நீத்துக்
காசனக் கழுவில் ஏறும் கயமையே கடுக்கும் மாதோ
** கடவுளைத் தொழா உறுப்புக் கல்மண்தீ யாமே

#33
போதநாயகனை உன்னாப் புந்தியே வெம் தீ ஒப்பாம்
தாது அலர் அடி வணங்காத் தலை குலை சிலையாம் சீர் சால்
மாதலத்தவனை வாழ்த்தா வாயது தூயது அன்று
காதல் அன்பொடு நீர் தூவாக் கண்களே புண்கள் ஆமால்
** எல்லாம் இன்பெய்தக் கடவுளை ஏத்தும்

#34
கதிரவன் கிரணக் கையால் கடவுளைத் தொழுவான் புட்கள்
சுதியொடும் ஆடிப் பாடித் துதிசெயும் தருக்கள் எல்லாம்
பொதி அலர் தூவிப் போற்றும் பூதம் தம் தொழில் செய்து ஏத்தும்
அதிர் கடல் ஒலியால் வாழ்த்தும் அகமே நீ வாழ்த்தாது என்னே
** எல்லாம் காக்கும் இறையே மேலாம்

#35
அறிவிலார் அரசர் என்றற்கு அமைச்சரே சான்றாம் அன்னோர்
செறி பெரும் தானையான் மெய்த் திறலிலார் என அறிந்தோம்
வறியர் என்று இறை இரக்கும் வாய்மையால் அறிந்தோம் என்றும்
நெறி வழாது உலகம் தாங்கும் நிருபனைத் துதியாய் நெஞ்சே
** எங்குந் தங்கி இயற்றுவோன் கடவுள்

#36
இரவினும் மற்றோர் பாரா இடையினும் பாவம் செய்வாய்
கரதலாமலகம் போல் முக்காலமும் உணர்வோன் எங்கும்
தரமொடு வீற்றிருக்கும் தன்மை எள்ளளவும் ஓராய்
பரன் இலா இடம் ஒன்று உண்டேல் பவம் அவண் செய் நீ நெஞ்சே

@4 அதி. 3 – அரசியல்பு
** துன்பம் நீக்கி இன்பம் ஆக்குவோன் மன்னன்

#37
எந்த வேளையினும் நொந்தவர் துயர் கேட்டு இடர் இழைப்பவன் தனது ஏக
மைந்தனே எனினும் வதைத்திட ஒல்கான் மாக்களின் சுக நலம் அன்றிச்
சிந்தனை மற்று ஓர் பொருளினில் செலுத்தான் தீமொழி கனவிலும் புகலான்
தந்தை போல் தாய் போல் எவரையும் ஓம்பும் தன்மையனே இறை அன்றோ
** மன்னுயிர் எல்லாம் தன்னுயிரா மதிப்போன் மன்னன்

#38
மன் உயிர் அனைத்தும் தன் உயிர் என்ன மகிழ்வொடு தாங்கி யாரேனும்
இன்னலுற்று அயர்ந்தோம் எனக் கலுழ்ந்திடில் தன் இரு விழி நீரினை உகுப்பான்
அன்ன வெம் துயரை நீக்கும் முன் தான் ஒன்று அயின்றிடான் துயின்றிடான் எவரும்
நல் நகர் எங்கும் உளன் எனப் பகர நாள்-தொறும் இயங்குவோன் கோனே
** நல்லோரால் அரசு நடத்துவோன் மன்னன்

#39
தாய் அறியாத சேய் இருந்தாலும் தான் அறியாதவர் இல்லை
ஆய தன்மையினால் அறவழி நிற்கும் அறிஞரை அறிந்து அவர்க்கு உரிய
தேய ஆதிக்கம்தந்து நல் நீதிசெலுத்தி எங்கணும் மருந்தினுக்கும்
தீயவர் இலர் என்று இசையுற அடக்கும் திறலுளோன் பூதல வேந்தே
** தானும் குடிகளும் சமனென்போன் வேந்தன்

#40
தன் புகழ் கருதி மருவலரோடும் சமர்புரிந்து உயிர்களை மாய்த்துத்
துன்பமே செய்ய இயைந்திடான் முற்போர் தொடுத்திடான் தன் உயிர் அனைய
மன்பதைக்கு இடுக்கண் யாவரே செயினும் வாள் அமர் இயற்றி நீக்கிடுவான்
இன்பதுன்பங்கள் தனக்கும் மற்றவர்க்கும் ஏகம் என்று எண்ணுவோன் வேந்தே
** நெறிமுறை நடந்து நடத்துவோன் நீள்மன்னன்

#41
தான் இனிது இயற்றும் மனுநெறிப்படி முன் தான் நடந்து அறவழி காட்டி
ஞான நற்குணத்தின் மேன்மையால் எவர்க்கும் நாயகன் தான் எனத் தெரிந்துத்
தானமும் தயையும் மெய்ம்மையும் தவமும் தற்பரன் வணக்கமும் பொறையும்
மானமும் மிகுத்து நரர் எலாம் செழிக்க மகிழ் அரசு அளிப்பவன் மன்னே
** வாய்ப்பெல்லாம் இயற்றி ஆள்வோன் மன்னன்

#42
சத்திரம் சோலை சாலைகள் குளங்கள் தண் நதி மதகொடு ஆலயங்கள்
வித்தியாசாலை மாடகூடங்கள் வேறுவேறு அமைத்து வேளாண்மை
சத்தியம் அகலா வாணிகமாதி சகல நல் தொழில் அவரவர்கள்
நித்தியம் உயல்வித்து இசை புரக்கும் நிருபனே நிருபனாம் அன்றோ
** கடவுளை பன்முறை கேட்டு முறைசெயல் பண்பு

#43
காது இறைவனுக்குக் கண் எனலான் மெய் காண்குறான் எனும் மொழி மாற்றி
வாதிகள் சாட்சி சாதகம் எல்லாம் வகைவகை இனிது கேட்டு அமைந்த
மேதினிக் கிழமை நீங்கிடும் தன்மை விளையினும் நடுவின் நீங்காது
பாதியா அணுவும் பகுந்து தீர்ப்பதுவே பார்த்திபன் கடமையாம் அன்றோ
** செங்கோல் ஒன்றே சேர்க்கும் வலியினை

#44
மன்னவன் வலி செங்கோலினால் அன்றி வாளினால் சேனையால் இல்லை
நன்னெறி வழுவா மன்னவன்-தனக்கு நாடு எலாம் பேர் அரண் உலகின்
மன் உயிர் எல்லாம் அவன் படை அன்னோர் மனம் எலாம் அவன் உறை பீடம்
இன்ன தன்மையனா அரசு அளிப்பவனை இகல்செயும் தெறுநரும் உளரோ
** தன்னைத் தொண்டனாத் தருவோன் மன்னன்

#45
கைப்புரை ஏற்றுப் பொய்ப்புகழ் ஏலாக் காதினன் அருள் பொழி கண்ணன்
தப்புரை வழங்கா நாவினன் புவியோர் தாசன் தான் என உணர் மனத்தன்
செப்பு அயல் மடவார் காணரும் உரத்தன் திருந்தலர் காணரும் புறத்தன்
எப்பொழுதினும் சென்று யாரும் காண் முகத்தன் ஈசன் அன்புடையவன் இறையே
** கொடுங்கோ லரசன் அடுந்தன் உயிரும்

#46
கொடிய மன்னவர்க்குக் குடிகளே ஒன்னார் கோட்டையே அமர்க்களம் அவர்-தம்
அடிகள் தோய் நிலம் எங்கணும் படுகுழியாம் அயின்றிடும் அன்னமும் விடமாம்
நெடிய ஆசனமே காசன மேடை நிமிர் உழையோர் நமன் தூதர்
கடி மனை மயானக் காடு எனில் கொடுங்கோல் காரணர் உய்யுமாறு உளதோ

@5 அதி. 4 – குடிகளியல்பு
** அரசின்றேல் உலக ஒழுக்கம் அழியும்

#47
வேந்தனே இல்லாவிடின் உலகத்து மேலது கீழதா மணம்செய்
காந்தனுக்கு அடங்கிக் களத்திரம் நடவாள் காதலர் தந்தை சொல் கேளார்
மாந்தர் வேளாண்மை முதல் தமக்கு உரிய வளமை கூர் தொழில்களின் முயலார்
சாந்தரும் தீயர் ஆவரேல் தீயர் தன்மையைச் சாற்றுமாறு எவனோ
** மன்னன் இன்றேல் குடிகள் மனைசெல்வம் இன்றி மாள்வர்

#48
நம் மனை மைந்தர் கிரகவாழ்வு எல்லாம் நரபதியால் அவன் இலனேல்
அ மனை தீயர் கைவசம் ஆவள் அரு நிதி கொள்ளையாம் நாளும்
வெம்மையோடு ஒருவர் ஒருவரை உண்பார் மேலவர் அசடரால் மெலிவர்
அம்ம ஈது எல்லாம் உணர்ந்து அரசு ஆணைக்கு அமைதல் நற்குடிகளின் இயல்பே
** அடங்காக் குடிகள் வளங்குன்றி அழியும்

#49
நதியினும் உயர் பணை நந்தும் கார் உலாம்
கதியினும் உயர் வரைத் தருக்கள் காயுமால்
பதியினும் உயர் தடம் காப் பைஞ்ஞீலங்கள்
விதி செயல் சிதைந்து அகம் மெலிந்து நையுமே
** உடலுக்குத் தலை போலும் உலகினுக் கரசன்

#50
தரை எனும் உடற்கு ஒரு தலைவனே தலை
நரர் பல உறுப்புகள் நலம்கொள் மெய்யது
சிரமுறும் பொறி வழிச் செல்லும் தன்மை போல்
உர அரசனுக்கு அமைந்து ஒழுகும் வையமே
** நயம்செய் மன்னவன் ஞாயிறு போல்வன்

#51
பானு வெப்புடையவன் எனினும் பானுவே
வான் நிலவான் எனில் வையம் உய்யுமோ
கோன் அரும் கொடியனே எனினும் கோன் இன்றி
மானவர் உய்ய ஓர் வழியும் இல்லையே
** வரிகொளல் மக்களை வாழ்வித் தற்கே

#52
படியின் மன் உயிர்க்கு எலாம் பாதுசெய்கின்ற
நெடிய மா சேனையை நெறிசெய் மாந்தரைக்
கடியொடும் தாங்க ஊர்க் காரியம் செயக்
குடி இறை இறையவன் கொள்ளும் கொள்கையே
** மன்னனைக் குடிகள் உழைப்பால் காப்பர்

#53
கோ அரிய சீவன் குடிகள் உடல் ஆவார்
சீவன் சும்மா இருக்கத் தேகம் உழைத்து ஓம்புதல் போல்
பூவலயம் மீதினில் தம் பூட்சிகளினால் உழைத்துக்
காவலனைக் காக்கக் கடனாம் குடிகளுக்கே

@6 அதி. 5 – ஞானாசிரியன் பெருமை
** இறைவனை உணர்த்தி இன்பருள்வோன் ஆசான்

#54
அக இருள் அகல ஞான விளக்கினை அருளின் ஏற்றிச்
சகலமும் நல்கும் கேள்வித் தனத்தினை நல்கி ஆதிப்
பகவன்-தன் சொரூபம் காட்டிப் பவம் அறம் இரண்டும் காட்டிச்
சுக நிலை காட்டும் தியாகத் தோன்றலை மறவாய் நெஞ்சே
** அழியா ஞான உடம்பளித்தோன் ஆசான்

#55
கானல் எனப்படு காயம் இது அப்பன்
தான் அவமே புவி தங்க அளித்தான்
ஈனம்_இல் ஆரியன் என்றும் ஒருங்கா
ஞான உடம்பினை நல்கினன் அன்றோ
** ஆசானா லன்றி அறியொணா நூற்பயன்

#56
நாட்டம் இன்றி ஒளி எப் பயனை நல்கும் மனையில்
பூட்டு பொன் திறவுகோலினை அலாது புகுமோ
வேட்டகத்து அரிய நூல்கள் உளவேனும் இனிதாக்
காட்டு அருள் குரவன் இன்றி எவர் காண்பர் பயனே
** ஆசானா லன்றி யார்க்கும் பிறப்ப றாது

#57
ஞான சூரியன் எனும் குரவன் இன்றி நரர் தம்
ஈன வெம் பவ இராவை அகலார் எவருமே
கானம் வாழ் மிருகம் ஆவர் கதி வாயில் பொதியும்
மானவர்க்கு உறையுளாய் நிரயம் வாய்விரியுமே
** தெய்வநூல் ஓதுவோன் சிறந்தமெய் ஆசான்

#58
மண் இறைக்கு அடியராய் உயிர் வளர்ப்பர் பலரும்
விண் இறைக்கு அடியராய் எவரும் வீடு பெறவே
புண்ணியத் திருமறைப் பொருளை ஓது புனிதர்
எண்ணிடற்கு அரிய பெற்றியை இயம்பல் எளிதே
** ஆசான் அரும்புகழ் அளவிடற் கரிதே

#59
ஐம்புலக் கதவு அடைத்து மன மாவை அறிவாம்
கம்பம் வீக்கி அஞரும் சுகம் எனக் கருதியே
செம்பொனைத் திரணமா மதித்திடத் தகுதியோர்
தம் பெரும் புகழ் இயம்புதற்கும் தரமதோ
** மெய்யுணர்ந்தார் துன்புறினும் விலகார் பெருந்தகைமை

#60
தலைகீழுறச் செய்யினும் தீபம் விண்-தன்னை நோக்கும்
கலை தேயினும் தண் கதிர் வீசும் அக் கங்குல் திங்கள்
விலை மா மணியைப் பொடிசெய்யினும் மின் அறாது
நிலை நீங்குவரோ துயர் மேவினும் நீர்மையோரே
** இன்மொழியா லறமுரைத்து ஈடேற்றுவன் ஆசான்

#61
கைத்திட்ட மருந்தில் அக்காரம் கலந்து கூட்டி
மத்தித்து அருள் பண்டிதர் போல் மற நோய் தவிர்ப்பான்
எத்திக்கினும் கேட்பவர் காது உளம் இன்பம் மேவித்
தித்தித்திட ஆரியர் நன்மறை செப்புவாரே
** பலர்க்கும் விளங்கப் பகுத்துரைப்போன் ஆசான்

#62
சிறு வாய்க் கலத்துள் துளியாகச் செலுத்தும் நீர் போல்
அறியாச் சிறுவர்க்கும் உணர்ந்து அறியாதவர்க்கும்
வறியார்க்கும் விளங்கிடவே தெளிவா வகுத்து
நெறியைத் தெரிவிப்பர் நல் நூல் நெறி நின்ற மேலோர்
** இயைந்தெல் லார்க்கும் இன்புறுத்துவோன் ஆசான்

#63
வைவார்-தமை வாழ்த்தியும் நெஞ்சில் வருத்தமுற்று
நைவாருடன் நைந்து அழுதும் தமை நண்ணித் துன்பம்
செய்வார் உறு பீழை நினைத்தும் சிந்தை நொந்து
மெய் மா மறையின் பயன் ஓதுவர் மேன்மையோரே
** கீழோர்க்குப் போதிக்கினும் மெய்யுணர்ந்தார் கேடுறார்

#64
பரிதியின் கிரணம் அங்கணமதில் படியினும்
அரிதின் மாசு அணுகுறாது அகலல் போல் இனிய நல்
சரிதம் இல்லவர் குழாம் சார்ந்து போதிக்கினும்
துரித வெம் பவம் உறார் தொல் மறைக் கிழவரே

@7 அதி. 6 – பொய்க்குருவின் தன்மை
** அருளில் நெஞ்சத்தான் ஆசான் ஆகான்

#65
திருடன் பொருள் காவலன் ஆதலும் செல் வழிக்குக்
குருடன் குருடன்-தனையே துணைக்கொள்ளல் போலும்
இருள் தங்கு உள மாந்தரை வான் கதி ஏற்ற என்னா
அருள் தங்கிய நெஞ்சமிலான் குரு ஆயவாறே
** குற்றமிலான் உரையையே கொள்வர் உலகோர்

#66
பெரு வெம் பிணியாளன் மற்றோர் பிணி பேரும் வண்ணம்
திருமந்திரம் சொல்வன் என்று ஓதிடின் திண்மை ஆமோ
தருமம்-தனை நாட்ட வந்தோன் குறை தான் உளானேல்
இரு மண்டலம் மீது அவன் சொல் எவர் ஏற்பர் மாதோ
** பேராசை ஆசானைப் பேருலகோர் கொள்ளார்

#67
பாவச் சலதிக்குள் உறா வகை பாருளோர்க்குக்
காவல் துணையாம் குரவன் குணம் கல்வி இன்றி
ஆவல் தளை பூண்டவனே எனில் ஆரும் கொள்ளார்
ஏவத் தெரியான் திமில் மீது எவர் ஏறுவாரே
** அடக்க மிலாதவர் ஆசிரியர் ஆகார்

#68
பழி தீர் கலை யாவும் உணர்ந்தும் பலர்க்கு உரைத்தும்
இழிவே உறத் தாம் அடங்கா மதியீனர் ஆர்க்கும்
வழி காட்டிட நாட்டு மரத்தையும் வையம் ஏச
விழியற்றவன் கையினில் வைத்த விளக்கும் நேர்வார்
** பொருளாசை யுள்ளான் அருளாசான் ஆகான்

#69
சொன்னத் திருடன் சிறு கள்வனைத் தூரி ஏசல்
என்னப் பொருளாசையுளான் பிறர் இச்சை தீர்ந்து
மன்னத் திருஞானம் உரைத்தல் மற்றோர் துறக்கும்
பொன்னைக் கவரச் செயும் வஞ்சனை போலும் மாதோ
** சிறுவரும் தன்உளமும் சிரிக்கும் கொடியனை

#70
வாயில் தேனும் தன் வாலில் கொடுக்கும் சேர்
ஈயின் வாயினில் இங்கிதச் சொல்லொடும்
தீயசெய்கையுளானைத் தினம் சிறு
சேயும் எள்ளும் தன் சிந்தையும் எள்ளுமே
** இம்மைப்பற் றில்லானே ஆசானுக் கேற்றவன்

#71
இகத்தின் வாழ்வினில் இச்சையறான்-தனை
சகத்தினில் குருசாமி என்று ஓதுதல்
சுகத்தை நீங்கித் துயரம் செறி நரர்
அகத்தை வீடு என்று அறைதல் சிவணுமே
** உணர்ந்து நெறிபிழைத்தோர் உய்யார் ஒருநாளும்

#72
ஆதி தேவன் அறிவில்லவர் செயும்
கோதினைக் கமை கொண்டு பொறுக்கினும்
நீதிநூலை உணர்ந்து நெறி தவிர்
வேதியர்க்கு விமோசனம் இல்லையே
** அறிவில் ஆசான் ஆட்டுத்தோல் புலியே

#73
ஒருமையாய்த் தன் உதரம் நிமித்தமே
தரும வேடம் தரிக்குதல் வெம் புலி
புருவை-தன்னைப் புசிக்கப் புருவையின்
சருமம் பூண்டு அங்குச் சார்தல் நிகர்க்குமே

@8 அதி. 7 – தாய் தந்தையரை வணங்கல்
** தாய் தந்தைக்கு ஈடெங்கும் இல்லை

#74
சின்ன ஓர் பொருள் தந்தோரைச் சீவன் உள்ளளவும் உள்ளத்து
உன்னவே வேண்டும் என்ன உரைத்தனர் பெரியோர் தேகம்-
தன்னை ஆருயிரைச் சீர் ஆர் தரணியின் வாழ்வைத் தந்த
அன்னை தந்தைக்குச் செய்யும் அரும் கைம்மாறு உளதோ அம்மா
** ஈன்று புறந்தந்த தாயினை ஏத்து

#75
கடவுளை வருந்திச் சூலாய்க் கைப்பு உறை உண்டு அனந்தம்
இடர்களுற்று உதரம்-தன்னில் ஈர்_ஐந்து திங்கள் தாங்கிப்
புடவியில் ஈன்று பல் நாள் பொன் தனப் பாலை ஊட்டித்
திடமுற வளர்த்துவிட்ட செல்வியை வணங்காய் நெஞ்சே
** கண்காண் தந்தைதாய்க் கொப்பிலை கண்டீர்

#76
எப்புவிகளும் புரக்கும் ஈசனைத் துதிக்கவேண்டின்
அப்பனே தாயே என்போம் அவரையே துதிக்கவேண்டின்
ஒப்பனை உளதோ வேலை உலகில் கட்புலனில் தோன்றும்
செப்ப அரும் தெய்வம்_அன்னார் சேவடி போற்றாய் நெஞ்சே
** தாய் தந்தையரைப் போற்றாரைத் தண்டிப்பான் ஆண்டவன்

#77
வைத்தவர் உளம் உவப்ப மலர் நிழல் கனி ஈயாத
அத் தருத்-தன்னை வெட்டி அழலிடுமா போல் ஈன்று
கைத்தலத்து ஏந்திக் காத்த காதல் தாய் பிதாவை ஓம்பாப்
பித்தரை அத்தன் கொன்று பெரு நரகு அழல் சேர்ப்பானே
** ஈன்றார் வன்சொல் இனியநற் பாகே

#78
ஈன்றவர் நம்மால் உற்ற எண்ணரும் இடர்கட்கு ஆன்ற
மூன்று உலகமும் ஒப்பு ஆமோ மூப்பினால் இளைப்பால் அன்னார்
கான்ற வன்சொற்கள் கன்னல் கான்றவன் பாகு எனக் கொண்டு
ஊன்றுகோல் என்னத் தாங்கி ஊழியம்செய்யாய் நெஞ்சே
** எதிர்நோக்கா அன்புதவி ஈன்றாரே செய்வர்

#79
ஈங்கு எதிருதவி வெஃகாது எவரும் ஓர் உதவிசெய்யார்
ஓங்கும் சேய் வாழும் வீயும் உடல் எய்க்கும் பொழுது தம்மைத்
தாங்கிடும் தாங்காது என்னும் தன்மை நோக்காது பெற்றோர்
பாங்குடன் வளர்க்கும் அன்பு பரவலாம் தகைமைத்து அன்றே
** ஈன்றார்க்கு நினைவுசெயல் எய்தும் மகப்பொருட்டு

#80
மண்ணினில் அன்னை தந்தை மறம் அறம் செயினும் நோன்பு
பண்ணினும் உடல் வருந்தப் பணிபுரியினும் மருந்து ஒன்று
உண்ணினும் களிக்கினும் துன்புற்று அயரினும் மனத்து ஒன்று
எண்ணினும் தம்-பொருட்டு அன்று ஈன் சுதர்-பொருட்டால் அன்றோ
** எல்லாம் பழக்கிவளர் ஈன்றார்க்கு ஒப்பாரியார்

#81
ஐய மெய் அம்மணத்தோடு அழுவதை அன்றிப் பேசச்
செய்ய ஒன்று அறியா நொய்ய சிற்றுடல் சேய் வளர்ந்து இங்கு
உய்ய வேண்டுவன செய்து ஆருயிரினும் இனிதாக் காக்கும்
பொய்_இல் அன்புடைத் தாய் தந்தை போல்பவர் உளரோ நெஞ்சே
** எல்லாம் பெறலாம் ஈன்றார்ப் பெறலரிது

#82
மனையவள் வீயின் வேறு ஓர் மனைவியைக் கொளலாம் பெற்ற
தனையர் ஆதியர் இறப்பில் தனித்தனி பெறலாம் பின்னும்
புனை பொருள் நீங்கின் மற்று ஓர் பொருளையும் பெறலாம் அத்தன்
அனை இறந்திடின் வேறு அத்தன் அனை வருவாரோ நெஞ்சே
** தாங்கொணாத் துன்பினும் தந்தைதாயைக் காக்க

#83
ஒருத்தி பஞ்சகாலத்தில் தாதைக்குத் தன் முலைப்பால் ஊட்டிக் காத்தாள்
எருத்தம் மிசைத் தந்தையினைச் சுமந்து ஓடி ஒருவன் ஒன்னார் இடரைத் தீர்த்தான்
ஒருத்தன் தன் தந்தைக்கே உயிர் கொடுத்தான் எனப் பலவா உரோமை நாட்டின்
சரித்திரம் சொல்வதை அறிவாய் நெஞ்சமே ஈன்றோரைத் தாங்குவாயே

@9 அதி. 8 – மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும்
** சேயர்க்குத் தீயவர் சேர்க்கை விலக்குக

#84
அயல் பொருள் நிறம் கவர் ஆதனங்கள் போல்
செயப் பிறிது அறிகிலாச் சேயர் சுற்றுளோர்
கயப்புறும் தீச்செயல் கற்கையால் அவர்
நயப்புறும் சேர்க்கையை விலக்கல் நன்று அரோ
** நலமெலாம் பாலர்க்கு நண்ணும் இளமையில்

#85
வளை இளமரம்-தனை நிமிர்த்தல் வாய்க்கும் பொன்
இளகிய பொழுது அணி இயற்றல் ஆகுதல்
வளமுறு கேள்வி நூல் மாண்பு நற்குணம்
இளமையில் அன்றி மூப்பு எய்தின் எய்துமோ
** கல்லா மக்கள் காலனை ஒப்பர்

#86
மாலினால் இருவரும் மருவி மாசிலாப்
பாலனைப் பயந்த பின் படிப்பியாது உயர்
தாலம் மேல் செல்வமா வளர்த்தல் தங்கட்கு ஓர்
காலனை வளர்க்கின்ற காட்சி போலுமே
** சேயர்முன் தீமைசெய் பெற்றோர் தீப்பகை

#87
தீது நன்று அறிகிலாச் சேயர் என் செய்வார்
கோது_அற அவரை நன்னெறியில் கூட்டிடாது
ஏதங்கள் அவர் முன் செய்து இழிவைக் கற்பிக்கும்
தாதை தாய் புதல்வர்க்குச் சத்துருக்களே
** படிப்பே பிள்ளைகட்குப் பயன்பெரி தளிக்கும்

#88
சுகமுறு வாழ்வு இல எனினும் தோன்றற்குச்
சகம் மகிழ் கலை அறம்-தனைப் பயிற்றுதல்
அகம் நினைந்தது தரும் அரதனம்-தனை
இகபரம் இரண்டினை ஈதல் ஒக்கும்
** கல்வியில் செல்வம் பிள்ளையுயிர்க் காலன்

#89
கலை பயிற்றாது காதலர்க்கு மா நிதி
நிலை என அளிக்குதல் நெறி_இல் பித்தர்க்குக்
கொலை செய் வாள் ஈவதும் குழவி-தன்னை மா
மலையின் ஓரத்து வைப்பதுவும் மானுமே
** தந்தைதாய் துன்பத்தைத் தகையும் பிள்ளைகள்

#90
பயிர் களையெடுத்திடப் பலன் அளித்தல் போல்
செயிரினைக் கடிந்து நற்செயல் வியந்தரும்
தயையொடும் சேயினை வளர்க்கும் தந்தை தாய்
துயருறா வண்ணம் அத் தோன்றல் காக்குமே
** கல்வியே முறையுயர் வீடு காட்டுமால்

#91
நிதி செலவாய்க் கெடும் நீசர் வவ்வுவர்
மதியினை மயக்கி வெம் மறம் விளைத்திடும்
கொதி அழல் நரகு இடும் குணமும் கல்வியும்
விதி தரும் பதி தரும் வீடும் நல்குமே
** கல்லாமை கடிவாளமில் குதிரைஏறல் ஒக்கும்

#92
புவிநடை கடவுள் மெய்ப் போதம் அன்பு அறம்
செவியின் ஓதாது ஒரு சேயைப் பார் விடல்
அவி என ஊருமாறு அறிகிலான்-தனைக்
கவியம்_இல் புரவி வைத்து ஓட்டும் காட்சியே
** பிள்ளைகட்காம் இன்பதுன்பம் பெற்றோர் நடத்துவதால்

#93
தீயராய் வறியராய்ச் சிலர் வருந்தலும்
தூயராய்ச் சிலர் புவி துதிக்க வாழ்தலும்
தாயினால் தந்தையால் சமைந்த தன்மையால்
சேயரை நன்னெறிச் செலுத்தல் மேன்மையே

@10 அதி. 9 – மாதரைப் படிப்பித்தல்
** பெண்கட்கும் கல்வியே பெருந்துணை யாகும்

#94
கல்வியே அறவழி காட்டும் ஆண்மகன்
செல் வழி அறிந்திடான் வித்தை தேறும் முன்
அல் வளர் கூந்தலார் அரிய நூல் இன்றி
நல்வழி உணர்ந்து அதில் நடக்கற்பாலரோ
** கண்பறித்தலாம் பெண்பால் கல்வி கொடாமை

#95
பெண்மகள் கெடுவள் என்று அஞ்சிப் பெற்றவன்
உண்மை நூல் அவட்கு உணர்த்தாமை தன் மனைக்
கண் மறு புருடரைக் காணும் என்று அதை
எண்மையாய்த் தவன் பறித்து எறிதல் ஒக்குமே
** நூலுணர்ந்தார் அயலானை நோக்கவும் அஞ்சார்

#96
காவலன் பயத்தினால் கற்பைக் காக்கின்ற
பாவையர் அரிய நூல் பயன் தெரிந்திடில்
பாவ புண்ணிய நெறி அறியும் பண்பினால்
சீவன் நீங்கினும் அயலாரைச் சேர்வரோ
** மருந்துபோல் கல்வி பெண் மாண்பு தந்திடும்

#97
பொருந்தும் நல் கலை தெரி பூவை கற்பது
திருந்தியே மிகும் அலால் தேய்ந்து போம் எனல்
வருந்திடாது உயிர் தரும் மருந்தை மானிடர்
அருந்திடில் சாவர் என்று அறைதல் ஒக்குமே
** கல்லாப்பெண் நன்னெறி காணகில் லாளே

#98
முடவரே நடக்கினும் மூங்கை பேசினும்
திடமொடு அந்தகர் வழி தெரிந்து செல்லினும்
மட மயில்_அனையர் நூல் வாசியார் எனில்
அடம்_இல் நன்னெறி தெரிந்து அமையற்பாலரோ
** விளக்கை மறைப்பதாம் பெண்கல்வி விளக்காமை

#99
அரிவையர் நேசமும் ஆர அல்லினில்
விரி சுடர் விளக்கு என விளங்குவார் அவர்க்கு
உரிய நல் நூல் உணர்த்தாமை கூடையால்
எரி ஒளி விளக்கினை மறைத்தல் ஒக்குமே
** படிப்பிலாப் பெண்ணேல் பாதியுடற் கழகிலை

#100
நீதி நூல் மைந்தர்க்கு நிகழ்த்தி மென் மலர்
ஓதியர்க்கு ஓதிடாது ஒழித்தல் மெய்யினில்
பாதியையே அலங்கரித்துப் பாதி மெய்
மீதினில் அணி இன்றி விடுத்தல் ஒக்குமே
** கண்போற் பெண்களும் காணிற் சமமே

#101
இக்கு இனை நகும் மொழி எழில் மின்னாரின் ஆண்
மக்கள் மிக்கோர் எனல் மடமையாம் இரண்டு
அக்கமும் ஒக்குமே அன்றி நல்ல கண்
எக் கண் மற்று எக் கணே இழிவுடைக் கணே
** கல்லாப்பெண் குடும்பழுத்தல் நீந்தறியான் கடலழுத்தல்

#102
கலை உணர்ந்து அறியாத ஓர் கன்னியை
உலை உறும் சமுசாரத்தின் உய்க்குதல்
நிலை உணர்ந்து அறல் நீந்து அறியான்-தனை
அலை கடல்-கண் அமிழ்த்தலை ஒக்குமே
** கல்லாப் பெண் உயிர் இல்லா உடலே

#103
நல்லறிவே அணி நன்னுதலார்க்கு அஃது
இல்லவரோடும் இயைந்து கலத்தல்
புல் உயிர் நீங்கு புழுக் கொள் சவத்தைக்
கல் உருவைப் புணர் காமம் நிகர்த்தே

@11 அதி. 10 – உடன் பிறந்தாரியல்பு
** உடன்பிறந்தார்க்குத் தந்தைதாய் வீடொன்றே

#104
தந்தை தாய் ஒருவர் தம்மைத் தாங்கிய உதரம் ஒன்று
முந்த இன் பால் அருந்தும் முலை ஒன்று வளரும் இல் ஒன்று
இந்தவாறு எல்லாம் ஒன்றாய் இயைந்த சோதரர் அன்புற்றுச்
சிந்தையும் ஒன்றிப் பாலும் தேனும் போல் விளங்கல் நன்றே
** எல்லோரும் உடன்பிறப்பேல் இயைந்தாருக் களவெவன்

#105
ஆ தரை மிசை நரராய யாவரும்
சோதரர் என மிகத் துன்னல் நன்று என
வேதமே ஓதுமால் விளக்கும் சோதரர்
மீது அமை நட்பினை விளம்பல் வேண்டுமோ
** குடும்பம் பேணாரைக் கொள்ளார் உயர்ந்தோர்

#106
பயந்தவர் சோதரர் தமரைப் பண்பொடு
வியந்து பேணாதவன் வேறுளோர்களை
இயைந்து பேணான் என எண்ணி நீக்குவர்
உயர்ந்தவர் அவனொடும் உறவு-தன்னையே
** ஒற்றுமைசேர் உடன்பிறப்பை ஒருவரும் வெல்லார்

#107
ஒற்றை ஒண் சுடரினை ஒழிக்கும் மெல் வளி
கற்றையாப் பல சுடர் கலப்பின் மா வளி
சற்றும் வெல்லாது சூழ் தமர் சகோதரர்
பற்றொடு மருவிடின் படருறார்களே
** அமைஉடன் பிறப்பை வெல்லார் அனைவரும்

#108
ஓர் இழை அறுத்திடல் எளிது ஒன்றாகவே
சேர் இழை பல உறத் திரித்த தாம்பினை
யாருமே சிதைத்திடார் அமை சகோதரர்
சீரொடு பொருந்திடில் திறல்கொள்வார் அரோ

@12 அதி. 11 – கணவ மனைவியரியல்பு
** உடலுயிர்ச் சண்டையாம் காதலர் பிணக்கம்

#109
ஆவி இன்றி உடல் இல்லை உடல் இன்றி ஆவி இலை அதுபோல் பத்தா
தேவி எனும் இருவர் சேர்ந்து ஓர் உருவாம் செழு மலரும் தேனும் போல
மேவி அவர் இருவருமே நள்ளாது முரண்செய்யில் விளங்கு மெய்யும்
சீவனும் ஒன்றோடொன்று போராடி அழிந்தது ஒக்கும் செப்புங்காலே
** காதலர் ஒற்றுமை கணக்கிலாப் பெரும்பொருள்

#110
மணியும் ஒளியும் போல் ஆண்மகனும் மனைவியும் பொருந்தி வாழுவாரேல்
பிணியுறும் ஆதுலர் எனினும் பெரும் செல்வர் நகுலமும் வெம் பெரும் பாம்பும் போல்
தணியாத பகையுற்று நள்ளாரேல் உயிர் அற்ற சவத்தின் மீது
பணிகள் மிகப் பூட்டி அலங்கரித்தல் ஒக்கும் அவர் செல்வப் பயன்தான் அம்மா
** பெண்களுந் தொழுதெய்வம் பெருங்கற் புடையாள்

#111
தந்தை தாய் சோதரர் உற்றாரை எலாம் கைவிடுத்துத் தன்னைச் சார்ந்த
பைம்_தொடியை அனையவர் போல் ஆதரிக்கக் கணவனுக்கே பரமாம் ஆதி
அந்தமிலான் முதல் தெய்வம் பதி இரண்டாம் தெய்வம் என அன்பினோடு
சிந்தை-தனில் நினைந்து உருகும் சே_இழை பூவையர்க்கு எல்லாம் தெய்வம் ஆமால்
** மணத்தின்பின் குணங்குற்றம் மனங்கொளாது வாழ்க

#112
தவன் ஆட்டி இருவரில் நற்குணமுளார் இலர் என்னும் தன்மை நோக்கல்
நவமணம் செய் முன் அன்றிப் பின் உன்னில் பயன் உளதோ நாவாய்-தன்னை
உவர் ஆழி நடுவில் நன்றன்று எனக் கைவிடத் தகுமோ உடல் பல் நோய் சேர்ந்து
அவயவங்கள் குறைந்தாலும் அதை ஓம்பாது எறிவாரோ அவனி மீதே
** ஒருவரையொருவர் இன்சொலால் நல்வழி உய்க்க

#113
கொழுநன் ஆயினும் மனை ஆயினும் இயல்பில்லார் என்னில் கூறு இன்சொல்லால்
செழுமை நெறியினில் திருப்ப வேண்டும் இதத்தால் வசமாம் சின விலங்கும்
அழல்வதினால் துன்பம் மிகும் அல்லாது பயன் உளதோ அரும் நோயுற்ற
விழி மிசை நல் மருந்து இடாது அழல் பிழம்பை விடில் அ நோய் விலகும்-கொல்லோ
** எல்லாரினும் சிறந்த கணவனோ டிகலல்பழி

#114
தந்தை தாய் சோதரரை நீங்கி மின்னார் ஒருவன் கை-தன்னைப் பற்றிப்
பந்தமுறலால் அவர் எல்லாரினும் மிக்கு உரிமையுளான் பத்தா அன்றோ
இந்த நிலை உணராமல் அவனை இகல்செயும் ஏழை இகபரத்தை
நிந்தையுற அழித்தலால் தன்னைத்தான் கொலைசெய்தல் நிகர்க்கும் மாதோ
** செம்மையிலாக் காதலரைச் செம்பொருள் காயும்

#115
பொய்யான நாடகத்தில் பதி மனை போல் வேடமுற்றோர் பூண்ட கன்மம்
செய்யாரேல் நகைக்கிடமாம் உலகு அறிய மணவாளன் தேவி என்ன
மெய்யா உற்றோர் தம்முள் நட்பிலரேல் பிரபஞ்ச விநோதக் கூத்தைக்
கையால் கொண்டு ஆட்டுவிக்கும் பரன் அவரை அழல் புகுத்திக் காய்வான் அம்மா
** மனங்கலவாக் காதலரை வலவன் வருத்தும்

#116
பரவு சமுசாரம் எனும் பண்டியில் வாழ்வு எனும் பொருளைப் பரப்பிப் பூண்ட
புரவிகள் போல் காந்தனும் காந்தையும் அமைந்தார் மனம் ஒத்து ஓர் போக்கை நாடி
விரைவொடும் ஏகார் என்னின் ஊர்தியொடு அப் பொருள் விளியும் விண் புரக்கும்
பரமன் எனும் சாரதி அப் பரிகள் மேல் சினமுற்றுப் படர் செய்வானே
** சிற்றுயிரைப் பார்த்தேனும் ஒற்றுமையன் புறல் சிறப்பு

#117
உறவினர் எல்லாம் கூடி மணவிழாச் செய்து உரியோன் உரிமை என்னப்
பெறலரும் பேர் பெற்றும் ஒருவரையொருவர் பேணாரேல் பெருமை என்னோ
அறம் அறிவு இலா எனினும் விடா நகைப்புற்று ஆண் பெண்ணும் அமைந்து வாழும்
பறவை மிருகங்களைப் பார்த்தாயினும் நல் நேயம் அன்னோர் பயிலல் நன்றே
** கற்பிலாள் தாலி கழுத்துறு சுருக்கே

#118
தாங்கு பொருள் சுட்டு அழித்துத் தானும் அழியும் கனல் போல் தலைவன் நெஞ்சைத்
தீங்குகளால் சுடும் மனைவி தன் வாழ்வைக் கெடுத்தலால் செழும் கண்டத்தில்
தூங்கு திருநாணினால் என்ன பயன் அதைக் கழுத்தில் சுருக்கிக்கொண்டு
தேங்கும் உயிர்ப் பொறை நீக்கில் பூமகள்-தன் பெரும் பொறையும் தீரும் அன்றே
** உழைப்பால் தளர்மனையை ஓம்பல் பெருங்கடன்

#119
அனை தந்தை இல்லத்தும் சுகம் இல்லை நமக்கு உரியள் ஆன பின்னர்
மனை தாங்கல் சூதகம் சூல் சேய் பெறுதல் வளர்த்தலொடு மாமன் மாமி
இனையவரை உபசரித்தல் விருந்தோம்பல் நம் பணிகள் இயற்றல் என்னும்
வினைகளினால் அயர் மனையைப் பரிவுடன் ஆதரவுசெய்ய வேண்டும் நெஞ்சே
** பின்தூங்கி முன்னுணரும் பெண்ணே பெரும்பொருள்

#120
தம் துணைவர் வடிவு இலா முடவர் எனினும் திருவின் தனையன் ஒப்பார்
அந்தமுளார் அயல் குமரர் எனினும் விடம் அனையராம் அரு மணாளர்
வந்து அமுது உண்டு உறங்கிய பின் தாம் உண்டு துயின்று முனம் வல் எழுந்து
பந்தமுறும் கருமம் எலாம் முடிப்பர் கற்பின் அணி பூண்ட படைக் கண்ணாரே
** எப்பணிசெய் தாலுமில்லாள் எழிற்கணவன் நினைப்பொழியாள்

#121
வினைப்பகை தீர் பெரியர் இல்வாழ்வினில் கலந்துநின்றாலும் வேதநாதன்-
தனைப் பரவி நினைத்தல் என்றும் ஒழியார் போல் கற்பின் மிக்க தையலார் தம்
மனைப் பணிகள் செய்தாலும் துயின்றாலும் கனவினும் தம் மணாளர்-மாட்டு
நினைப்பு ஒழியார் கணவருடன் அவர் மனம் ஒன்றாய்க் கலந்துநிற்கும் மாதோ
** இணைபிரியா திருக்கநல்கும் இடம்பொருள் பேரின்பே

#122
ஏந்தலாம் தந்தையைத் தாய் சகியர் கோயிலை விட்டு ஓர் எளியர் சிற்றில்
சார்ந்தனன் என்று இகழும் இன்னே சிற்றில்லால் அவர் அருகே தங்கப்பெற்றேன்
சேர்ந்த மிடியால் அவர்-தம் பணி யாவும் என் கையால் செய்யப்பெற்றேன்
பாம் தவம் ஈது அன்றி எந்தை அன்னையை வேறாக்கும் நிதி பாழ்த்தது அன்றோ
** துணைவனுடன் வாழ்வதே சொல்லொணாப் பேரின்பம்

#123
முதல்வி இவள் துணைவனே தெய்வம் என்றாள் அவன் சிற்றில் மோக்கம் என்றாள்
அதில் அவனோடு உறைதல் சாலோக சாமீபம் என்றாள் அவன் கை தீண்டி
மதமொடுமே அடித்தல் சாரூப சாயுச்சியம் என்றாள் மயல் பேய் கொண்டாள்
பதவி எலாம் ஈன்றோர்-பால் இருக்க நண்பனொடு மெலிந்தாள் பசி நோயுற்றே
** காரிகைசெய் அழகெலாம் கணவன் கண்டுவக்க

#124
உண்ணல் பூச்சூடல் நெஞ்சு உவத்தல் ஒப்பனை
பண்ணல் எல்லாம் அவர் பார்க்கவே அன்றோ
அண்ணல்-தன் பிரிவினை அறிந்தும் தோழி நீ
மண்ண வந்தனை இது மடமை ஆகுமே
** மனைமுகத் தாமரை மலரும் கணவனால்

#125
கதிரவன் அனைய தம் கணவர் ஏர் முகம்
எதிர் உற மலரும் மற்று ஏதிலார் முக
மதியம் நோக்கிட இதழ் வாடிக் கூம்புமால்
சதியர் வாள் முகம் எனும் சலசப்பூ அரோ
** அரசும் அரசுறுப்பும் ஆம்நற் கணவனே

#126
மிடியுளார் கேள்வர் என்று உரைத்த மின்_அனாய்
கடி நகர் சிறு குடில் காந்தர் வேந்தராம்
அடியளே குடி அவர் அன்பு எண் செல்வமாம்
குடி இறை என் நிறை குறை உண்டோ சொலாய்
** கணவனுறை நெஞ்சில்வேறு கருத இடம் ஏது

#127
தோழி கேள் உனக்கும் ஓர் துணைவன் உண்டு அவன்
வாழ் இதயத்தினான் மற்ற மைந்தரைப்
பாழ் இனி நினைக்கின்றாய் பாவி நெஞ்சு உனக்கு
ஆழி சூழ் உலகினில் அனந்தமே சொலாய்
** பொருள்தேடப் போங்கணவனுடன் போம் நெஞ்சுயிர்

#128
இங்கு இரு பொருள்-வயின் ஏகுவேன் என்றீர்
தங்குவது உடல் ஒன்றே தளர் நெஞ்சோடு உயிர்
அங்கு உறும் நாசம் மேய பல மெய் இதன்
பங்கதாம் அழிவு நும் பங்கது ஆகுமே
** கணவனை அகலாக் கற்பினள் எதற்கும் கலங்காள்

#129
விரி உலகு அழியினும் மிறைகள் சூழினும்
சுரி குழல் கற்பினார் துணைவன் நேயமும்
பிரிவு இலா வாழ்க்கையும் பெறுவரேல் அவர்
பரிவு எலாம் இரவி முன் பனியின் நீங்குமே
** தலைவன் பின் தூதாய்த் தலைவியுயிர் சாரும்

#130
தினம் வினை செய அகல் செல்வ முன்னம் தூது
அனம் வரும் அதினொடும் அடைகிலாய் எனின்
மனம் வரும் உயிர் வரும் வராத மெய் விலங்கு
இனம் உறு வனம் உறும் இனம் வருந்தவே
** மணமகன் உடலுயிர் மனைவியின் உடைமை

#131
இந்த உடல் உளம் ஐம்பொறி இன்னுயிர் யாவும் மணஞ்செயும்
அந்த நல் நாளினில் இல்லவட்கு அன்பொடு அளித்தனன் யான் பொதுப்
பைம்_தொடியே உனைச் சேர்ந்திடப் பாரில் எனக்கு உடல் வேறு இலை
சிந்தை புலன்களும் வேறு இலை சீவனும் வேறு இலை செல்வையே
** நெடுவழித் துன்பெலாம் நீங்கலவர் புன்னகையால்

#132
அந்த நாள் நடந்திலாத யான் அகன்ற நெடு வழி
எந்தவாறு சென்றது என்ன எனை வினவு சிலதி கேள்
பந்த ஊர்தி ஏறியே படர்ந்தனன் படர்ந்த நாள்
வந்த பீழை யாவும் அன்பர் மந்தகாசம் தீர்த்ததே
** அருவொப்புக் கழுதவள் உருவப்பேர்க் குயிர்விடும்

#133
திரு_அனாய் எனப் புகழ்ந்து தேவியை விளிக்க மா
மரு மலர் துறந்து நெஞ்சின் வாழ்ந்தது என் என்று அழுதனள்
அருவ மாதை ஒப்பு உரைக்க அழுது வாடும் நங்கை யாம்
உருவ மாதர் பெயர் உரைக்கின் உயிர் துறப்பள் நெஞ்சமே
** கணவனல்லா ஆண்களைக் காணக்கண் ணிலாள்மனை

#134
பூண் அலங்கல் மார்பினாரை அன்றி வேறு புருடனைக்
காண நோக்கிலேன் நினைந்து கழற நெஞ்சு வாய் இலேன்
பாண வேறு பொறி இலேனை நடனம் பார்க்க வா எனா
நாணம் இன்றியே உரைத்த நண்பர் வம்பரே-கொலாம்
** சீரிய கற்பால் சித்திரமும் பாரார்

#135
ஓவியர் நீள் சுவர் எழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்
தேவியை யாம் அழைத்திட ஆண் சித்திரமேல் நான் பாரேன்
பாவையர்-தம் உரு எனின் நீர் பார்க்க மனம் பொறேன் என்றாள்
காவி விழி மங்கை இவள் கற்பு வெற்பின் வற்பு உளதால்
** அன்பர்பொருட் ககலுதலால் அக்காளென் பதுதகும்

#136
திரு என்ன எனை நினையார் சீர்கேடி என நினைந்து
பொருள்-வயின் ஏகிடச் சீவன் போல்வாரே உன்னுதலால்
ஒரு தரமோ பல தரம் நீ ஓ அக்காள் அக்காள் என்று
இருவினையேன்-தனை அழைத்தல் இழுக்கு அன்று பைங்கிளியே
** கணவனே மனைவியின் காப்புயிர் ஆகும்

#137
நள்ளிரவில் தமயந்தி நளன்-தனையே பிரிந்த பின்னும்
தெள் உயிர் நீங்கிலள் என்னச் சேடி நீ பொய் உரைத்தாய்
உள் உயிரே பத்தாவா உடைய கற்பினார்க்கு அவன்தான்
தள்ளி அகன்றால் வேறு தனி உயிர் ஏது உரையாயே
** கற்புடையார் மன்னன்கை வாளுக்கும் அஞ்சார்

#138
நரபதி நீ ஆனாலும் நண்பரின் பாதத் துகட்கு உன்
சிர மகுடம் நிகர் ஆமோ சேர்கிலையேல் கொல்வன் எனக்
கர வாளை உருவி நின்றாய் கற்பினுக்கு ஓர் குறைவு இன்றித்
தரமா நீ எனைக் கொல்லின் தந்தை தாய் குரு நீயே
** இன்ப துன்பம் இருவருக்கும் ஒன்றே

#139
அன்பர் உண்ணில் என் பசி போம் அவர் களிக்க யான் களிப்பேன்
துன்பம் அவர் உறில் யானும் துன்புறுவேன் ஆதலினால்
என் படல் வேறு எனினும் எமக்கு இன்னுயிர் ஒன்று என அறிந்தேன்
பின்பு அவர்தாம் என்னை விட்டுப் பிரிவது எவ்வாறு உரை சகியே
** நாற்குணமே நல்லணியாம் நாதன் மகிழ்வே நகையாம்

#140
பொன் நகை இலாய் எனச் சொல் பொன்_தொடியே பரத்தையர்க்கே
அ நகைகள் உரியவையாம் அச்சம் நாண் மடம் பயிர்ப்பும்
இன்னகையாம் கற்பினர்க்கு மேதினியுள் நீ சொலும் அப்
புன் நகையும் நண்பரின் ஓர் புன்னகைக்கு நிகர் ஆமோ
** கணவரை நீங்கில் கற்புடையார் வாழார்

#141
செழும் முளரி புனல் நீங்கில் செழிக்குமோ படர் கொடிகள்
கொழு கொம்பை பிரியின் வளங்கொண்டு உய்யுமோ கணவர்
அழுது அயர வைதாலும் அரந்தை பல இயற்றிடினும்
தொழுதகு கற்புடையார் தன் துணைவரை விட்டு அகல்வாரோ
** காதலர் நெஞ்சுயிர் மாறிக் கலந்தன

#142
பேதைமதி உற்றனை என்று எனை இகழும் பெருந்தகை என்
காதலியைப் பிரிந்தது இந்தக் காயம் ஒன்றே உயிரும் நெஞ்சும்
மாது அவள்-பால் உறையும் அன்னாள் மனம் உயிர் என்-பால் உறையும்
ஆதலின் நான் பேதைமதி ஆயினன் என்பது நிசமால்
** தலைவி தலையசைப்பால் தலைவற்காம் பெருமிதம்

#143
உரனொடு மா மதுகையினை உலகம் எலாம் துதித்தாலும்
பெருமிதம்கொள்ளேம் அறியாப் பேதை எனும் நம் துணைவி
ஒரு சிரக் கம்பிதம் செய்யின் உடல் எலாம் பரவசமாம்
பருவமதில் சிறியாள் இவ் வசியம் எவண் படித்தனளால்
** படம்வேண்டாள் என்றென்றும் பக்கமுறைவே வேண்டும்

#144
என் உருவைப் படத்து எழுதி இது நானே பேதம் இலை
நல்_நுதலே இதைக் கோடி நல்கு எனக்கு விடை என்ன
அன்னது நீரே ஆயின் பொருளீட்ட அது செல்க
மன்னி இவண் உறை-மின் என்றாள் மறுசெயல் யாது அறியேமால்
** அன்புடையர் பொருள்சுற்றம் அவரேபோல் காக்க

#145
வேதனன்பர் அவற்கு உரிய விமானம் முதல் யாவையும் மிக்கு
ஆதரமோடு ஓம்புவரால் ஆர்வலன்-பால் அன்புடைய
மாதர் அவன் அனை தந்தை தமர்-மாட்டும் அன்புறுவார்
காதலியின் தமரிடத்துக் கணவனும் அத் தன்மையனால்
** பயிலுமிடம் நோக்கிப் பரிவாள் தலைவி

#146
போனவர்தாம் இருக்குமிடம் புசிக்குமிடம் துயிலுமிடம்
மான்_அனையாள் நோக்குபு நோக்குபு வருந்தும் வல் ஏகு என்று
ஈனம்_இல் நாளைத் தொழும் மன் ஏகும் வழி பார்த்து அழுமால்
மானவர் சென்று ஒருதினமே மறுதினம் போம் வகை எவனால்
** உடலுயிர்க்காம் இருதலைவர்* எவர்க்குமுளர் உண்மையே

#147
கேள்வர் இலாவிடத்து ஒர் பிழைசெயின் அறியார் எனக் கிளக்கும்
வாள்_விழி என் அகத்து உறையும் மகிழ்நர் இருவரில் ஒருவர்
மூள்வினையால் பிரியினும் மற்றொருவர் சகம் முழுதும் நிறை
கோள்வினையார் அவர் அறியாச் செயல் உளதோ கூறுவையே
** உயிர்த்தலைவர் படைத்தளிக்கும் ஒப்பில் முழுமுதல்வர்

#148
இரு துணைவர் தனக்கு உளர் என்று இறைவி சொல ஐயமுற்று இங்கு
ஒரு துணை யான் அறிகுவன் மற்றொரு துணை யார் என வினவப்
பெருமகனை உன்னை என்னைப் பேரண்டங்களை அமைத்தான்
தருமநிலை மூர்த்தி என்றாள் சதி இவட்கு ஓர் குறை உளதோ
** மனையவள் நகைப்பஞ்சிவாள் வெல்லலே வலிமை

#149
வினையில் வென்றி இலாது இங்கு மீண்டதற்கு
இனன் முனிந்திடும் என்று அஞ்சிலேம் வசை-
தனையும் எண்ணிலம் தாரம் திறல் இலேம்
என நகின் செய்வது என் சொல் இதயமே
** எப்பெருந் துன்பும் ஏகும் மனைநோக்கால்

#150
இரிஞரால் உறும் எவ்வமும் தேகம் ஆர்
பெரிய புண்களும் பேசரும் துன்பமும்
உரிமை வாள்_முகம் நோக்க ஒழிதலால்
பிரியை நோக்கம் பெரு மருந்தாம் அரோ
** இல்லவள் முகத்துக்கு ஈடின்று திங்களும்

#151
எழிலிலாள் இல்லவள் எனும் வேசி தேன்_
மொழி முகத்தை மதியை முன் நான்முகன்
சுழி தராசினில் தூக்கத் தட்டோடு உம்பர்
எழும் நிசாபதி இன்னும் இங்கு எய்திலான்
** தலைவியோடு உறையின் தருங்கேடு இன்று

#152
ஓவி யாரும் ஒழிக உறுவல்கள்
மேவி நாளும் விளைக நம் செல்வியை
ஆவியை அமுதத்தை அனத்தினைத்
தேவியைப் பிரியோம் சிதைவு என் நெஞ்சே
** தலைவற்குக் கால்கண்ணாம் தலைவிமிகு பேறுடையாள்

#153
ஏலும் கால் கண்ணிலார் கொண்கர் என்னும் வேல்
போலும் கண்ணி புனிதரைத் தாங்கிடக்
காலும் நான் இரு கண்களும் நான் எனில்
மேலும் எற்கு இனிப் பாக்கியம் வேண்டுமோ
** அகமென்மை மாதரை அருளொடும் காக்க

#154
மென்மையாகும் விழி முதல் யாவையும்
நன்மையா இடர் இன்றி நன்கு ஓம்பல் போல்
வன்மை_இல் மட மாதர்கள்-பால் கொடும்
தன்மை இன்றித் தயையுற வேண்டுமால்
** காதலர்க்கெம் மெலிவினைக் கதிர்க்காற்றே யுரைமின்

#155
ஈண்டு இவண் வருவல் எனும் இறை வருகிலர் அவரைத்
தீண்டிய கிரணமதால் தீண்டுதி எனை வெயிலே
தாண்டிய வளி அவர் மெய் தடவி என் உடல் படர்வாய்
மீண்டிலரிடம் எனது மெலிவினை உரை முகிலே
** இல்வாழ்வார் இருவரும் இயற்கையில் ஒருவரே

#156
ஒரு தரு மற்றொரு தருவின் உதவி இன்றிக் காய்க்கும்
உயர் ஆண் பெண் சேர்க்கை இன்றி ஒரு மகவு உண்டாமோ
இருமை இன்றி இருவருமே நம் மனை நம் பொருள் நம்
இகுளை நம் சேய் எனப் பொதுவின் இயம்பு உரிமையாலும்
உருவம் ஒன்றால் ஆண் பெண்ணை அமைத்தனன் முன் பரன் என்று
உயர்ந்தோர் சொல்வது நிசமாம் உரியோன் இல் என்னும்
இருவர்கள் தம் நயம் துயரம் ஏகம் எனக் கருதி
இட்டமொடு பெட்டு அமரின் கட்டம் அவர்க்கு உளதோ

@13 அதி. 12 – பரத்தமை (கற்பு நிறை அழிவு)
** முறைகடந்து புணர்வோரைத் தண்டிக்கும் முழுமுதல்

#157
பண்டு ஓர் ஆண் பெண் அமைத்து அவ் இருவருக்கும் மணம் இயற்றிப் பரன் இரக்கம்
கொண்டு அளித்த முறை கடந்து கள்ளவழிப் புணர்ச்சிசெயும் கொடியோர்-தம்மை
மண்டலமே வாய் பிளந்து விழுங்காயோ அவர் தலை மேல் வான் உலாவும்
கொண்டலே பேரிடியை வீழ்த்தாயோ இது செய்யில் குற்றம் உண்டோ
** கண்மூடும் பூனையொக்கும் கரவயலா னைக்கூடல்

#158
ஒருவரும் அறிகிலார் என ஓர் ஒள்_நுதல்
கரவு அயல் குமரரைக் கலத்தல் பூசை தன்
இரு விழி மூடி மற்று எவர்கள் பார்வையும்
தெரிகிலாது எனப் பயன் திருடல் ஒக்குமே
** கள்வர் சொல் ஒக்கும் கற்பிலார் சொல்லும்

#159
அன்னியர் எம் இயைபு அன்றிச் சேர்ந்தனர்
என்ன மின்_இடையவர் இயம்பல் சோரர்கள்
பொன்னை யாம் வவ்விலேம் பொருள் வந்து எங்களை
முன்னை வவ்வியது என மொழிதல் ஒக்குமே
** அயலான் அன்புரையால் அழியுங் கற்பு

#160
மன மகிழ்வாய் அயல் மைந்தர்-தம்மொடும்
தினம் உரையாடிடும் தெரிவை கற்பது
புனல் உறும் உப்பினைப் போலும் மென் மெழுகு
அனல் உறல் என்னவும் அழிவது உண்மையே
** ஆடவன் செயலெலாம் ஆற்றல் பெண் பழிப்பாம்

#161
வலதுகை துணைவனாம் மற்றொர் கை மனை
தலைவன் செய் தொழில் எலாம் தாரம் ஆற்றுதல்
தொலைவு இலா வலக்கையின் தொழில் இடக்கரம்
நிலம் மிசைச் செய்து என நிந்தை மேவுமே
** பரத்தையர் பெருநஞ்சு பாம்பினுங் கொடிதே

#162
உண்டவர்-தமைக் கொலும் ஓத வெவ் விடம்
அண்டினோர்-தமைக் கொலும் ஆளி கையினால்
தண்டினோர்-தமைக் கொலும் சற்பம் தையலார்
கண்டவர் நினைப்பவர்-தமைக் கொல் காலமே
** சிற்றின்பால் செய்பாவம் வீட்டில் தீயிடலாம்

#163
நிலை_இல் சிற்றின்பத்தின் நேயத்தால் தினம்
அலைவுசெய் பவம்-தனை ஆற்றல் கொள்ளியால்
தலையினைச் சொறிதலும் தகிக்கும் தீயினை
எலியினுக்கு அஞ்சி இல் இடலும் ஏய்க்குமே
** காமத்தீக்குச் சுள்ளி பரத்தையைக் காண்டல்

#164
மின் எரி மூட்டிடு விறகு போல் சுவைக்
கன்னலைப் பழித்த சொல்லாரைக் காணலும்
துன்னலும் உன்னலும் சுடு வெம் காமத்தீ-
தன்னையே மூட்டிடும் சமிதை போலுமே
** பிறர்மனை சேர்வோர் பெருங்கே டுறுவர்

#165
உணர்வு அறும் செல்வமும் உயர்வுமே அறும்
குணம் அறும் குலம் அறும் கொடிய நோய் எலாம்
அணவுறும் நரகு உறும் ஆயுள் தேயுமால்
கணம் அறு மாதர் தோள் கலக்கும் தூர்த்தர்க்கே
** கற்பிலார்க் காத்தல் களவின்பின் காத்தலாம்

#166
உவந்து தன் உளத்து ஓங்கிய கற்பு இலாச்
சிவந்த வாயுடைச் சே_இழையைப் பதி
இவர்ந்து சேமம்செய்து எய்க்குதல் பட்டிகள்
கவர்ந்த பின் பொருள் காவலை ஒக்குமே
** கற்பிலார்க் கெதிராமை கடன்சேர் வெற்றி

#167
ஓயப் பாரில் உறும் தெவ்வர்-தம்மொடும்
ஏயப் போரில் எதிர்ந்திட வென்றியாம்
மாயப் போர் செய் மடந்தையர்க்குப் புற
மா அப்பால் செல வென்றி அமையுமே
** பிறனைச் சேர்வாள் பெரும்பழி சேர்வாள்

#168
கொழுநன் அறியில் உயிர்க் கொலையாம் கோவாக்கினையாம் பெரும் பழியாம்
அழல் போல் நெஞ்சைச் சுடும் பயத்தோடு அயல் ஆடவரை ஒரு பேதை
தழுவி இன்பமுறல் மதமா தான் உண்டு அகல் வாயிடை ஒழுகும்
கழையின் சாற்றை விழைந்து அதன்-பால் கடுகி நக்கல் ஏய்க்குமால்
** பிறனைச்சேர் மாது பேரிருள் அடைவள்

#169
மற்றொருவனைச் சேர் மாது இறந்தாலும் வசை நிற்கும் உலகம் உள்ளளவும்
சுற்றமும் வாழ்வும் துணையுமே நீங்கும் சோரநாயகனுமே மதியான்
பெற்ற சந்ததியும் இழிவுறும் மாண்ட பின் அவியா எரி நரகாம்
சற்றுநேரம் கொள் சுகத்தினால் விளையும் தன்மை ஈது அரிவையீர் உணர்வீர்
** கணவன் நிறையழியின் மனைவியுங் கற்பழிபவள்

#170
ஓர் பிழை குருவே செய்யின் ஒன்பது பிழைகள் செய்ய
நேர் சிறு சீடர் என்ன நிதம் பதி பல மின்னார் தோள்
சேர்வது காணும் இல்லாள் தினம் பல புருடர்ச் சேர்தல்
சீர் என உன்னி அன்னான் செலவு பார்த்திருப்பள் மாதோ
** அயலான் மனையன்னை அரும்பிறப் பாவாள்

#171
தன்னைப் போல் பிறரை எண்ணல் தகுதியாம் தான் மணந்த
மின்னைப் போல் இடையினாளை விழியினால் நோக்குவோரைத்
தின்னல் போல் முனிவு கொள்வோர் அயலவன் தேவி-தன்னை
அன்னை சோதரி போல் எண்ணாது அணைந்திட விரும்பல் என்னே
** பரத்தைமைச் செயல்கள் பலவாம் என்ப

#172
விதவையைக் கன்னி-தன்னை வேசையைப் பிறன் இல்லாளை
இதமொடு சேர்தல் சேர இச்சித்தல் ஆண் புணர்ச்சி
மதனநூலாதி கேட்டல் வாசித்தல் தகாத செய்கை
விதவிதம் தானே செய்தல் விபசார வினைகளாமே
** பரத்தையர் அழகுண்டார் பதங்கம்போல் மாள்வர்

#173
விட்ட மின்னோடு ஆங்கு எய்தும் வெடி எனத் தீமை செய்யும்
கட்டழகினை அவாவிக் காம சாகரத்தின் ஆழ்வோர்
கிட்ட அரும் சுடரை மேவிக் கேடுறும் பதங்கம் போலும்
தொட்ட கொப்பத்து வீழ் மா என்னவும் துயர் சார்வாரால்

@14 அதி. 13 – உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல்
** தொழிலாள ரின்றேல் தொல் உலகு அழிவுறும்

#174
வாழ் அகமும் புனை தூசு அணியும் பல வாகனம் மஞ்சமொடும்
சூழ் பொருளும் சுவை சேர் அமுதும் கமழ் சோலையும் மா சுகமும்
கீழவரால் அவர்தாம் இலரேல் மிகு கேவலமாய் உலகம்
பாழதுவாம் அதனால் அருள்தான் அவர்-பால் உறுவாய் மனனே
** ஆண்டவன் தருபொருள் அனைத்துயிர்க்கும் பொதுவே

#175
நாதனே உயர்வாம் தந்தை நரர் எலாம் அன்னான் சேயர்
பூதலப் பொருள்கள் யார்க்கும் பொதுமை அல்லாது சொந்தச்
சாதனப் பொருள் போல் செப்புச் சாசனம் பெற்றோர் இல்லை
ஆதலில் தாழ்ந்தோர்-தம்மை அரும் செல்வர் தாங்கல் மாண்பே
** முறைநலம் கல்வியுளோர் மூத்தோ ராவர்

#176
நயம் அறம் கல்வி இன்றி நனி நிதியால் குலத்தால்
வயதினால் பெரியர் என்னல் மைந்தர் தந்தையின் தோள் ஏறி
இயலித் தாம் பெரியோர் என்ன இயம்பலும் காலை மாலை
உயர் நிழல் உள்ளோர் தம்மை உயர்ந்தவர் எனலும் ஒப்பே
** செல்வமும் வறுமையும் மறி மாறிச் செல்லும்

#177
ஏல் இராட்டின ஊசல்-கண் ஏறியே சுற்றுங்காலை
மேலவர் கீழும் கீழோர் மேலுமாய்ச் சுழலல் போல
ஞாலம் மீது இன்று உயர்ந்தோர் நாளையே வறியர் ஆவர்
சீல நெஞ்சினர் கீழோரைச் சினந்து இகழார்கள் மாதோ
** எல்லோரும் உடன்பிறப்பே இயலு கருமுறையால்

#178
மக்கள் யாவரும் ஓர் அன்னை வயிற்றிடை உதித்ததால் இச்
சக்கரம்-தனில் எல்லாரும் சகோதரர் ஆவர் சீரின்
மிக்கவர் தாழ்ந்தோர் என்னல் வெறும் பொய்யாம் மேன்மை என்பது
ஒக்கவே பிறப்பு இறப்பில் உறும்-கொலோ உரையாய் நெஞ்சே
** ஏவலரை இகழ்வோர் எய்தார் இறையடி

#179
சிலதரும் நரரே அங்கம் சீவன் நெஞ்சு அவர்க்கும் உண்டாம்
நலம் நவை இன்ப துன்பம் நானிலத்து உள அவர்க்கும்
நிலம் மிசை அவரைச் செய்தோன் நித்தனே அவரை ஏதும்
புலன் இலாப் பொருள் போல் எள்ளும் புல்லர் வீடு இல்லர் மாதோ
** எல்லாரும் உழைத்து வாழ்வதே இயல்பு

#180
கொற்றவர் நரர்க்கு உழைத்துக் கூலியாம் இறையைக் கொள்வர்
மற்றவர் எவரும் தம் மெய் வருந்தவே உழைப்பர் செல்வம்
பெற்றவர்களும் உழைப்பர் பின்னவர்க்கு உழைப்பர் சேடர்
உற்ற இத் தன்மை உன்னின் உழையர் ஆர் தலைவர் ஆரே
** எல்லோர்க்கும் ஈயவே இறைசெல்வம் அருளினன்

#181
உடல் உறுப்புகள் மேல் கீழ் என்று உன்னிடாது ஓம்பல் போலும்
தட மலை கொண்ட நீரைத் தாழ் தரைக்கு அளித்தல் போலும்
தொடர்புறு மேலோர் தம் கைத் தோய் நிதி யாவும் தாழ்ந்தோர்க்கு
இட எனக் கடவுள் ஈந்தது என நினைந்திடுவர் மாதோ
** உழையரை வருத்துவோர் உயர்ந்தோர் ஆகார்

#182
என்றும் மெய் வருந்த வேலை இயற்றுவோர்க்கு உயர்ந்தோர் அற்பப்
பொன்-தனை ஈவர் செட்டுப்புரிகின்ற வணிகர் என்ன
ஒன்று கொண்டு ஒன்றை ஈவோர் உழையரில் தாம் உயர்ந்தோர்
என்று கொள் எண்ணம் திண்ணம் என்னல் எவ்வண்ணம் அம்மா
** உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று உரைப்பது மயக்கே

#183
ஒளி முடியொடும் பிறந்தே உலகம் ஆண்டவரும் இல்லை
எளியராய் ஓடு ஒன்று ஏந்தி இங்கு உதித்தவரும் இல்லை
குளிர் கடல் உடுத்த பாரில் குறைந்தவர் மேலோர் என்னல்
வெளி மயக்கு அன்றிச் சற்றும் மெய் அல உணர்வாய் நெஞ்சே
** அறவோரைத் தக்கோர் அனைவருந் தாங்குவர்

#184
அமலனே எவர்க்கும் கத்தன் அவற்கு அரசரும் இல்லாரும்
சமம் அலால் பேதம் இல்லை தரித்திரர் அறத்தோர் ஆயின்
அமரர் ஆகுவர் அன்னார் தாள் பொடியையும் அரசர் ஒவ்வார்
தமர் எனத் தாழ்ந்தோர்-தம்மைத் தகையினர் தாங்குவாரால்
** பகலவன்போற் செல்வர் பலர்க்கும் பயனாவர்

#185
சுடரவன் விளங்கில் பூமி சோதியாம் விளங்கிலானேல்
புடவியும் இருளாம் அன்னவாறு போல் திருவோர் செல்லும்
நடவையின் தாழ்ந்தோர் மேவி நடத்தலால் வரை மேல் ஏற்றும்
அடர் சுடர் விளக்கின் செல்வர் அறத்தராய்ச் சிறத்தல் நன்றே
** வறியவர்போல் துன்பெலாம் வருமே செல்வர்க்கும்

#186
தாழ்ந்தவர் எனச் செல்வர்க்கும் சாப் பிணி மடமை அச்சம்
சூழ்ந்த பேரிடர்கள் பாவம் துஞ்சி மண்ணாதல் அள்ளல்
வீழ்ந்து அவலித்தல் ஆதி மிகை எலாம் எய்தும் இவ்வாறு
ஆழ்ந்த அவ் இருதிறத்தார்க்கு ஆகும் வேற்றுமை யாது அம்மா
** சிறந்தோர் தாழ்ந்தோரைப் பேணுதல் செல்வம்

#187
பதி முதல் அதிகாரத்தோர் பண்ணவர் உழவர் மேலோர்
மதியுறு பரதர் நூலோர் மருத்துவர் முதலோர் தத்தம்
விதி வழி ஒழுகித் தம்மை மேவுறு தாழ்ந்தோர்-தம்மை
அதி தயையொடு நன்கு ஓம்பி ஆண்டிடக் கடனாம் மாதோ

@15 அதி.14 – தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல்
** படைப்பெலாம் பார்க்கில் பெரிதும் சிறிதுமாம்

#188
விரி சுடர்க் கதிரோன் மதி தாரகை விலங்கு பக்கி மரம் மலை யாவினும்
பெரிது சின்னது என்று ஆகிய தன்மை போல் பிழை இலான் வகுத்திட்ட உலகியல்
திரிதல் இன்றி நடப்பதற்காகவே சிறியர் மேலவர் என்ன இங்கு ஆயினார்
உரிய இ முறையின்படி தாழ்ந்தவர் உயர்ந்தவர்க்குள் அடங்கல் ஒழுக்கமே
** காப்போர் சொல்லுக்கு அடங்கல் கடமை

#189
குடிகள் சீடர் குடிப்பணி செய்குவோர் கொல்லர் தச்சர் நாவிதர் காழியர்
அடியரே முதல் பல் தொழிலாளர்கள் அனைவரும் தமை ஆதரித்து ஆளுபாக்கு
ஒடிவு_இல் கங்கணம் பூண்டுகொள் மேலவர் உரைக்கு அமைந்து தம் மாது தொழில் எலாம்
குடிலம் இன்றி இயற்றிடில் இம்மையும் கோது_இல் அம்பரமும் பெறுவார் அரோ
** உணவு தருவோர்க்கே உடம்பு பொருளாம்

#190
ஐயனது அருளால் மெய்மை அனை தந்தை ஈந்தார் அ மெய்
உய்ய ஊண் யசமானன் தான் உதவலால் அவற்கே தம் மெய்
ஐயம்_இல் பொருள் என்று உன்னி அன்பொடும் ஏவலாளர்
மை அறு பணிகள் யாவும் மகிழ்வொடும் புரிவர் மாதோ
** இணங்காத் தலைவனைவிட் டேகல் நன்று

#191
தலைவன் தீயவனேல் அன்னான்-தனை விடுத்து ஏகல் நன்றாம்
விலை தரும் அவன்-பால் வைகி விரவுறுங்காறும் சேடர்
உலைவு_இல் தம் வாழ்நாள் அன்னாற்கு உரியது என்று உனி அவன் சொல்
நிலையுறப் பணிகள் செய்து நெறி வழி நிற்றல் சீரே
** எல்லா நலமும் இயைந்தவர் ஏவலர்

#192
அறநெறி அலாத செய்கை ஆண்டகை சொல்லின் கேளார்
புறமுற அவன் குற்றத்தைப் புகன்றிடார் பொய் கரத்தல்
மறம் இலார் அவனை அன்னை தந்தை போல் மதிக்கும் நீரார்
இறவு இலாக் கடவுள் வாழும் இதயத்தார் சேடர் அம்மா
** தலைவன் பகைநண்பு தமக்கும் பகைநண்பே

#193
அண்ணல்-தன் தமரை அண்ணல் என்னவும் அவன் ஒன்னாரை
நண்ணலர் எனவும் அன்னான் நண்பரை இனியர் என்றும்
எண் அற அன்னோன் கொண்ட பொருள் எலாம் சீவன் என்றும்
திண்ணமா எண்ணிப் போற்றும் சேடர் விண்_நாடர் ஆவார்
** குறிப்பின்வழி யியற்றுங் குணமிக்கான் ஏவலன்

#194
நா இயல் உணவில் ஏனை நல்வினைகளில் நம்பிக்கு
மேவிய விருப்பினோடும் வெறுப்பின் நல் குறிப்பு அறிந்து
தா இயலாது தக்க ததியில் யாவும் செய் சேடர்
ஆவியோ விழியோ எய்தற்கு அரும் பொனோ மணியோ யாதோ

@16 அதி. 15 – பொய்
** மெய்யே உரைக்கின் மேவா இடர்கள்

#195
முன்னம் ஓர் பொய் உரைக்க அப் பொய் வெளியாகாமல் மூடும் வண்ணம்
பின்னும் ஓர் பொய் உரைக்க அதையும் நிலைநிறுத்த ஓர் பெரும் பொய் சொல்ல
இன்ன வகை கைதவம் ஒன்று இருநூறு கைதவத்துக்கு இடமாம் வாய்மை-
தன்னையே முன் பகரில் சங்கடம் ஒன்று இலை அதுவே தகைமை நெஞ்சே
** பொல்லாங்கு எவைக்கும் பொய்யே பிறப்பிடம்

#196
இழுதை சொல்லி மறைக்கலாம் எனும் திடத்தால் பாதகங்கள் எல்லாம் தீயர்
பொழுதெலாம் புரிதலால் குற்றங்கள் யாவுக்கும் பொய் பிதாவாம்
வழுது ஒன்றை நீக்கிடில் தீவினைகள் எலாம் நீங்கிடும் நல் வாய்மை ஒன்றே
முழுதும் உணர் அறிஞர்க்குத் தோழனாம் அவர்க்கு அதனால் மோசம் உண்டோ
** பொய்யர் மறந்துமெய் புகலினும் மதியார்

#197
அங்கதமே பொருள் என்னக் கைக்கொண்டோர் மறந்து ஒரு மெய் அறைந்திட்டாலும்
இங்கு அதனை எவரும் நம்பார் துணைவியர்புத்திரர் தமரும் இகழ்ச்சிசெய்வார்
அம் கண் உலகு எங்கணுமே வசை ஆகும் நரர் எலாம் அகிதர் ஆவார்
பங்கமுறும் பொய்யரைப் பொய்யரும் சேரார் தம் உளமும் பழிக்கும் அன்றோ
** அரும்பொய் வெளிப்படும் அழியும் அடைபயன்

#198
ஏதேனும் பயன் வேண்டிப் பொய் சொல்லின் அப் பொய்தான் எவ்விதத்தும்
மா தரையில் வெளியாகும் அப்பொழுது அப் பயன் அழியும் வளரும் துன்பம்
சாதலின்மை வேண்டி விடம் உண்ணல் ஒக்கும் பயன் கருதி சலம் உரைத்தல்
ஆதலினால் உண்மை-தனைத் துணைக்கொள்ளின் எப்பயனும் அடைவோம் நெஞ்சே
** பொய்யரை நம்பார் செல்லாப் பொருளுங்கொடார்

#199
மெய்யர் எனப் பெயர் பூண்டார் வறிஞரே எனினும் நிதி மிகவும் அன்னார்
கை-அதனில் கொடுத்துவைக்க எவரும் அஞ்சார் பொய்யர் எனக் கவ்வை பூண்டார்
செய்ய பொருள் மிக உளார் எனினும் அவர் கையில் ஒரு செல்லாக்காசும்
ஐயம் இன்றி ஒருவர் கொடார் எனில் படிறின் தன்மை-தனை அறைவது என்னே
** பேச்சால் உயர்மக்கள் பேசுபொய் யாற்கடையர்

#200
விலங்கு பறவையினும் நரர் வாக்கு ஒன்றால் சிறப்புடையர் விளங்கும் திண்மை
இலங்கு வாயால் உரையாது அவத்தம் உரைப்போர் உலகம் இகழ் விலங்கின்
குலங்களினும் கடையராம் சாணமதை அமுது வைக்கும் கோலச் செம்பொன்
கலங்களின் வைத்தலை ஒக்கும் மெய்க்கு உரிய வாயால் பொய் கழறல் அன்றே
** பொய்யர்க்கு இடுக்கு வழியே பொருந்தும்

#201
பழியிலார் ஒருவர்க்கும் அஞ்சாது நேர்வழியே படர்வார் வவ்வும்
தொழிலுளார் பகற்கு அஞ்சும் துரிஞ்சில் போல் இட்டிகையில் தொடர்ந்து செல்வார்
இழிவுளார் என்பதற்குப் பொய்த்தலே சான்று ஆகும் ஏசு_இல் தூய
வழியுளார் என்பதற்குச் சரதமே சாட்சியாம் மகியின்-கண்ணே
** புரையிலா நன்மைக்காம் பொய்மையும் வாய்மையே

#202
அயலார் செய் குற்றங்கள் கூறாமல் மறைத்தலே அறமாம் அன்னார்
துயருறா வண்ணம் நாம் பொய்த்தாலும் பிழை அன்று சொந்தமாவோர்
பயன் வேண்டிச் சிறியது ஓர் பொய் சொலினும் பெரும் பழியாம் பார் மேல் கீழாய்
அயர்வாகப் புரண்டாலும் பிறர்க்கு இன்னா தரும் பொய்யை அறையல் நெஞ்சே
** பழியும் பாவமும் பயப்பன பொய்யே

#203
பாரினில் பொய்த்திடல் பொய்க்க உன்னுதல் பொய்யினைப் பிறர்க்குப் பயிற்றல் யாதோர்
காரியம் செய்வேன் என்னச் சொலித் தவிர்தல் தனக்கு ஏலாக் கருமம்-தன்னை
வீரியமாய்ச் செய்வன் எனல் அற்பரையே துதித்தல் பொய்யை வியந்து கொள்ளல்
சீரியரை இகழ்தல் பிறர் மீது ஒருவன் சொலும் பழியைச் செவியில் கோடல்
** உலகோர் ஒவ்வா துஞற்றுவ பொய்யே

#204
தற்புகழ்தல் புறங்கூறல் மிக இருணம் வாங்குதல் பொய்ச்சான்று உரைத்தல்
பற்பலவாக் கண்சாடை சிர கர கம்பிதம் செய்து பசுமை பொய் போல்
பின் பயன் தோன்றிடச்செய்தல் மெய் உரைக்க அஞ்சி வாய் பேசிடாமல்
சற்பனையாய் இருத்தல் பொய்க்கதை கூறல் கேட்டல் எலாம் சலங்கள் ஆமே
** ஆண்டவனுக்குக் கஞ்சாரே அறைவர் முழுப்பொய்

#205
வியன் உலகு எங்கணும் வீற்றிருக்கும் ஓர்
வயம் உளான் முனிவிற்கு அஞ்சாது மாக்கட்குப்
பயமொடும் அநுத்தமே பகர்தல் தேவினும்
கயவுளார் நரர் எனக் கருதல் போலுமே

@17 அதி. 16 – களவு
** நினைத்தல் செய்தல் நிறையிற் குறைவுங் களவே

#206
களவு செய்குதல் மனத்தினில் நினைக்குதல் கவர் என்று
உளம் மகிழ்ந்து உபதேசித்தல் உதவிசெய்து ஒழுகல்
வளம் இலாப் பொருள் மாறுதல் மிகு விலை வாங்கல்
அளவினும் நிறை-தனினும் வஞ்சித்து அபகரித்தல்
** பேராசை கூலி குறைத்தல் பெருங் களவே

#207
கண்டெடுத்த ஓர் பொருள் அனுபவித்தலும் களவின்
பண்டம் வாங்கலும் வாங்கிய கடன் கொடாப் பழியும்
மண்டும் வண் பொருளாசையால் பொய்வழக்கிடலும்
தொண்டு செய்பவர் கூலியைக் குறைக்கின்ற தொழிலும்
** கொடுவட்டி சூதுபொருள் இழப்பித்தல் களவே

#208
நட்டமே பிறர்க்கு எய்திடச்செய்தலும் நம்பி
இட்டர் வைத்த நல் பொருள் அபகரித்தலும் இறப்ப
வட்டம் வட்டிகள் வாங்கலும் சூதில் பொன் பெறலும்
இட்ட வேலை செய்யாது கைக்கூலி கொள் இயல்பும்
** கன்னம் பொய்காசு கைக்கூலி களவே

#209
கன்னம் வைத்தல் செல்லாப்பணம் வழங்குதல் கள்ளம்
மன்னு சீட்டை உண்டாக்குதல் கை லஞ்சம் வாங்கல்
என்னும் யாவுமே களவதாம் இத் தொழிற்கு இயைவோர்
மன்னர் ஆக்கினை வசை நரகு அடைந்து வாடுவரால்
** களவால் விலங்கு சிறை காதற் பிரிவுண்டாம்

#210
திலக வாள் நுதல் தேவியைச் சேயரைப் பிரிந்து
கலகல் என்னவே ஒலிசெய் மா விலங்கு கால் பூண்டு இவ்
உலகம் ஏசிடச் சிறையகத்து உற்று மண் சுமந்து
சிலுகு எலாம் உறல் சிறிது பொன் திருடலால் அன்றோ
** பழிகுலத் தாழ்வினும் களவுபே ரிழிவே

#211
தள்ள அரும் பெரும் பழியுளார் என்னினும் தரையில்
எள்ளல் சோழி குலத்தரே என்னினும் ஏசிக்
கள்ளர் என்று அவர்ப் பழித்திடப் பொறார் எனில் களவிற்கு
உள்ள பேர் அவமானத்தை உரைப்பது என் உளமே
** அச்சமெலாங் கள்வர் உள்ளத் தமர்ந்தன

#212
அரி முழை நுழைதல் போல அயலகம் புகும் போது அச்சம்
பொருள் திருடும் போது அச்சம் புறப்பட்டு ஏகுங்கால் அச்சம்
தெருவினில் எவர்க்கும் அச்சம் கவர்ந்தன திளைக்க அச்சம்
உரும் உருக் கொண்டு கள்வர் உளம் குடிகொண்ட போலும்
** எத்துன்பம் வந்தாலும் களவுசெய இசையேல்

#213
நிரந்தரம் பல நோயுற்று நெடிது அயரினும் கையேந்தி
இரந்து உணப் பெரும் நிரப்பே எய்தினும் பகர ஒண்ணா
அரந்தை சூழினும் பொன் வவ்வும் அத் தொழிற்கு இயையா வண்ணம்
வரம் தர வேண்டும் என்னக் கடவுளை வழுத்தாய் நெஞ்சே

@18 அதி. 17 – கொலை
** கொல்ல நினைத்தலும் கொடுமொழியும் கொலையே

#214
உயிரினை வதைத்திடல் வதைக்க உன்னுதல்
அயில் எனக் கொடிய சொல் அறைதல் எற்றல் வெண்
தயிர் உடை மத்து எனத் தாபம் பல் புரிந்து
அயலவர் ஆயுள்நாட்கு அழிவு உண்டாக்குதல்
** கருவழித்தல் துன்பம் களையாமை கொலையே

#215
கருவினை அழிக்குதல் கயம் இங்கு ஏனையார்
மருவிட விரும்புதல் மற்று அன்னோர் இடர்
ஒருவிட வகைசெயாது ஒழிதல் வெவ் விடம்
சருவினில் இடல் கொடும் சமர்க்கு உடன்படல்
** செருக்கு கள் காமம் தீ தற்கொலை கொலையே

#216
முனைவு கள் காமம் வெம் முரண் முதல் கொலை
வினையினுக்கு ஏதுவாம் வினைக்கு அமைந்திடல்
மனையினில் தீயிடல் மண்ணில் தற்கொலல்
இனைய யாவும் கொலை என்னும் வேதமே
** கொலைஞர்க்கு உலகெலாம் கூறும் இயமனாம்

#217
பெறல் அரும் உயிர் தரும் பிறப்பு இலான் அதை
அற ஒரு வழி செய ஆண்மை பூண்டனன்
பறவையை நரர் விலங்கினைப் படுக்கும் ஓர்
மறவனுக்கு உலகு எலாம் மறலி என்பவே
** கொலையொறுப்புச் செய்யுரிமை மன்னற்கே கொள்வர்

#218
கொலைபுரிவோரையும் குடி வருந்தவே
அலைவு செய்பவரையும் ஆவி நீக்கிடத்
தலை முடி தரித்தவர் தமக்கு நீதியாம்
இலை கொலை செயும் முறை இதரர் ஆர்க்குமே
** குருதிக் கறையாடை கூறும் கொலைஞனை

#219
சுதமுறு முகத்தொடு சொல்லும் மாற்றமும்
பதமுறு கறைக் கறை படிந்த ஆடையும்
வதனையே காட்டலால் வதை மறைக்குதல்
உதயனைக் கரத்தினால் மறைத்தல் ஒக்குமே
** அரியது நிகழினும் கொலைஞன் உயர்தலரிது

#220
பவம் அறம் ஆயினும் பவர்க்கம் முத்தியாய்ச்
சிவம் உறப் பொலியினும் சிதைந்து அழிந்த ஓர்
சவம் உயிர் மேவினும் தகை_இல் காதகர்
அவனியில் உயர்ந்திடல் அரிது நெஞ்சமே
** குடும்பம் முற்றுங் கோறலாம் தலைவற் கோறல்

#221
பத்தினி சேயரும் பரிசனங்களும்
தத்தம நிலைகெடத் தலைவனைச் சமன்
ஒத்து அவனியில் கொலல் ஒருவன்-தன்னை அன்று
அத்தனை பேரையும் அடுதல் போலுமே
** கொலைஞனை விருப்பாய்க் கூடுவான் எமன்

#222
தீயிடை மூழ்கினோன் சிங்கி உண்டவன்
மாய்வு இலாது உய்யினும் வதன் உய்யான் நமன்
ஆய தன் தொழில்புரிவோனை அன்பொடு
மேய தன் உலகினுக்கு ஈண்டு அழைக்குமே
** கொலையே பெரும்பாவம் விழுங்கும் கொடுநரகம்

#223
சீவனை வதைசெயல் சிறந்தது ஆயுங்கால்
பாவம் ஓர் ஐந்தினும் கொலைசெய் பாவியைப்
பூவலயம் பொறாது எரியும் பூதிதான்
ஆ என வாய் திறந்து அவனை நுங்குமே
** யார்க்கும் கொலைசெயும் உரிமை யின்று

#224
அகம்-தனை உடையவன் அழித்தல் நீதி எண்
இகந்த பல் உயிர் எலாம் இயற்றினோற்கு அன்றிச்
சகம்-தனில் அவைகளைத் தம்மைக் கொன்றிட
உகந்த பேர் உரிமை ஈங்கு ஒருவர்க்கு இல்லையால்
** தடுக்க முடியாவிடில் தானுங் கொல்லுக

#225
தனை எனினும் பிறர்-தம்மை என்னினும்
முனையொடு கொல வரும் முசுண்டன்-தன் உயி
ரினை வதைசெயல் அலால் உபாயம் வேறு இன்றேல்
அனையனைக் கொல்க நல் தீர்வும் ஆற்றுக

@19 அதி. 18 – மது
** அறியாமை நோய் மறதி கட்குடியால் ஆம்

#226
ஞானம் மெய்ச்சுகம் புகழ் நலம் பெறத் தனம்
தானமே செய்குவர் தகுதியோர் அறிவு
ஈனம் மெய்மறதி நோய் இழிவு உறப் பொருள்
வான் என வழங்குவர் மது உண்போர்களே
** நஞ்சனைய கள்ளுண்பார் நாடுமனை மகவிழந்தார்

#227
மருந்தம் நேர் மது உண்போர் மாண்ட பான்மையால்
அரும் தவப் பாலருக்கு அப்பன் இல்லையால்
பொருந்திய மனையவள் பூண்ட நாண் களத்து
இருந்ததே என்னினும் இழந்தது ஒக்குமே
** அறிவிழப்புச் சாவால் கள் நஞ்சினுங் கொடிதாம்

#228
சித்தமும் அவசமாம் செயல் விகற்பமாம்
நித்தமும் மரணமாம் நெடிய துன்பமாம்
அத்தமும் நாசமாம் அவிழ்தம் இன்மையால்
பித்தினும் நஞ்சினும் பெரிது கள் அரோ
** கள்ளுண்போர் கழிவுண்ணும் ஈயினை ஒப்போர்

#229
பாலினைத் தேனை இன்பாகை நீத்து வெண்
மாலியை மாந்துவோர் மலர்க் கள் நீத்து மெய்த்
தோல் இரணம்-தனைச் சூதகம்-தனைக்
கோலி உண்டு உவக்கும் மீக்கூட்டம் ஒப்பரே
** யாரையும் மருவச்செய் கள் மிக இழிவே

#230
சீ என இகழ்தரு தேன் உண்போர்களை
நாய் எனக் கோகு என ஆக்கும் நாள்-தொறும்
ஆயினை மகளை இல் ஆக்கும் தான் கொண்ட
சே_இழையையும் விலைசெய்யச் செய்யுமால்
** தீமையை நன்மையெனத் திரிப்பது கள்ளே

#231
மலம்-தனை அமுது என மாந்தச்செய்திடும்
மலர்ந்த பூ என அனல் அள்ளச்செய்யும் வெம்
சலம் தரும் பகைவர் கை தனக்கு உள்ளாக்கும் நல்
நலம்-தனை அழித்திடும் நறவு நெஞ்சமே
** கள்ளுண்பார்க் குலகம் கடுநர காகும்

#232
அலர் உற ஈ எறும்பு அரவு தேளொடும்
பல விலங்கு அணுகுறப் படுத்த பாயலின்
மல சல வாந்தியும் மயக்கும் கோடலால்
நிலமது நரகமாம் நிதம் கள் உண்பார்க்கே
** கள்ளில் பிறப்பன கடுவினை பேராசை

#233
கொஞ்சமும் சுவை இலை குளத்தைக் கோணியே
நஞ்சு என நுகர்வர் மெய் நலிய மூப்புற
விஞ்சிய ஆவல் தீவினைகள் யாவுமே
குஞ்சுகள் கள் எனும் கொடிய பக்கிக்கே
** களவு மயக்கம் காமம் தருங் கள்

#234
வறுமையால் களவுசெய்வர் மையலால் காமத்து ஆழ்வர்
குறுமை சேர் பகையினால் வெம் கொலைசெய்வர் வசையினோடும்
சிறுமை தந்து உயிர் இருந்தும் செத்தவர் ஆக்கி இம்மை
மறுமையை அழிக்கும் கள்ளை மாந்தல் எப்பயன் வேட்டு அம்மா
** வழிநடைப் பிணமாகும் வரும் இழிவு கள்ளால்

#235
நரி நாய் பறவை சூழ வழி நடுவில் கிடந்த சவமதனை
உரியார் இலர் என்று இடுகாட்டுக்கு உடன் கொண்டு ஏகிக் கட்டையில் வைத்து
எரியாநின்றேன் பிணம் விழித்து இஃது இன்தேன் மயக்கு என்று இயம்பி மெய் கொள்
அரியை அவிக்கும் முன்னம் எழுந்து அயல் கள் கடையுள் புகுந்ததுவே
** மயக்கும் பொருளால் விரைவில் மாளுவர்

#236
அரக்கும் அரக்கும் மது கஞ்சம் ஆதியாக அறியாமை
சுரக்கும் சரக்கைச் செய்தல் விற்றல் துணிந்து கொள்ளல் நுகர்தல் எலாம்
பரக்கும் பழியைப் பாவத்தைப் பயக்கும் அத் தீத்தொழிற்கு இசைவோர்க்கு
இரக்கும் தொழிலும் ஆயுள் குறைந்து இறக்கும் தொழிலும் எய்துமால்

@20 அதி.19 – சூது
** சித்திரப் பெண்போல் செல்வம் சேரா சூதில்

#237
வித்தமே மிகும் என வெஃகிச் சூதினில்
அத்தம் ஆர் அத்தமும் அழித்தல் தீட்டிய
சித்திர மாது எழில் நம்பிச் சேர்ந்த தன்
பத்தினி-தனை அகல் பான்மை ஒக்குமே
** கல்லாது சூதினிற் காலம் போக்கல் இழிவே

#238
வையம் மேல் மானிடர் வாழும் நாள் சில
ஐயம்_இல் கேள்விதான் அளவு இல ஆருயிர்
உய்ய நல்வினைகளை உஞற்றிடாது நாள்
பொய் அமர் சூதினில் போக்கல் புன்மையே
** புண்ணியமிலாதார் சூதால் போது போக்குவர்

#239
ஓத அரு விசையொடும் ஓடும் நாள் என
மேதையர் தம் தொழில் விடாது செய்குவர்
போது நீட்டித்து எனப் பொறி இலார் அதைச்
சூது எனும் வாள் கொடு துணிக்க நேர்வரே
** அளவிலாத் தீமையை ஆற்றும் சூது

#240
வளம் மலி நிடதநாடு அளிக்கும் மாண்பு சேர்
நளனையும் அலைவுசெய் நாசச் சூதுதான்
களவு பொய் சினம் பகை காமம் யாவையும்
அளவு அறப் பயிற்றிடும் ஐயன் போலுமே
** மனைவி மாளினும் சூதன் மனமகிழ்ந்தாடுவான்

#241
கவறினை ஆடுவோன் காந்தை வீயினும்
சவமது இவ் வழி செலும் என்று தான் எழான்
அவள் புனை தாலி பந்தயத்துக்கு ஆம் என
உவகைபூத்து ஆடுவான் உயர்வுறான் அரோ
** அளவில் ஆசையாற் பொருளெலாம் சூதிலிழப்பர்

#242
வட்ட மா நிலம் மீது மன்னார் விடம்
இட்ட பாலை இனிது அளித்தால் எனக்
கட்டம் மேவும் கழகத்தில் வென்று கொள்
ஒட்டம் கையினில் ஒட்டம் அளிக்குமால்
** கவலை தரலால் சூதுக்கு கவறெனும் பேர் காரணப்பேர்

#243
இவறலே தந்து இழிவையும் தந்து பின்
தவறு யாவையும் தந்து நெஞ்சம்-தனைக்
கவறு என் ஏவிக் கலக்கம் கொடுத்தலால்
கவறு எனும் பெயர் காரணம் நாமமே
** போர்க்கும் பழிக்கும் புகலிடம் சூதே

#244
பந்தயம்-தனைப் பற்றி வெம் சூதினோடு
எந்த ஆடற்கு எனினும் இயைபவர்
வந்த சீர் நலம் மாறி வயாவுக்கும்
நிந்தனைக்கும் நிலையமது ஆவரால்

@21 அதி. 20 – கைக்கூலி
** கைக்கூலி வாங்குவோர் காணார் நடுநிலை

#245
வலியினால் இலஞ்சம் கொள் மாந்தர்-பால் சென்று
மெலியவர் வழக்கினை விளம்பல் வாடிய
எலிகள் மார்ச்சாலத்தினிடத்தும் மாக்கள் வெம்
புலியிடத்தினும் சரண்புகுதல் ஒக்குமே
** கைக்கூலி வாங்குவோரைக் கொன்றாலும் போதாது

#246
அல்லினில் களவுசெய்பவரை வெம் சிறை
யில் இடும் பண்பினுக்கு இயைந்த மாக்களே
எல்லினில் எவரையும் ஏய்த்து வவ்வலால்
கொல்லினும் போதுமோ கொடியர்-தம்மையே
** உலகிய லழிப்பர்பால் உறும்பழி பாவம்

#247
கொலைஞரும் சோரரும் கொடிய வஞ்சரும்
நிலைபெற அவர் கையில் நிதியைக் கொண்டு தண்
அலை கடல் உலகியல் அழிக்கும் தீயர்-பால்
மலை எனப் பாவமும் பழியும் மண்டுமே
** கனலுறும் வெண்ணெய்போல் கைக்கூலி அழியும்

#248
பயிரினை வேலிதான் மேய்ந்த பான்மை போல்
செயிருற நீதியைச் சிதைத்து ஓர் தீயன் சாண்
வயிறினை வளர்த்திட வாங்கும் மா நிதி
வெயிலுறு வெண்ணெய் போல் விளியும் உண்மையே
** கைக்கூலி வாங்குவோன் கயவரின் அடிமை

#249
ஆசையால் வாங்கிடும் அவனை ஈந்தவர்
கேசமா மதிப்பர் அக் கீழ்நன் சென்னி தம்
ஆசனம் ஆக்குவர் அடிமை நான் எனச்
சாசனம் அவர்க்கு அவன் தந்தது என்னவே
** கடையனாம் வேசையினும் கைக்கூலி பெறுவோன்

#250
காசு அதிகம்-தனைக் கருதி வாதம் தீர்த்து
ஏசு அற ஏழைகட்கு இடர்செய்வோன் தனம்
மீசரம் குறைவு பாராது மேவிடும்
தாசியரினும் இழிதகவுளான் அன்றோ
** வழக்கிடாது மனமொத்துப் பங்கிடல் மாண்பு

#251
எனது உனது என ஒரு பொருட்கு இரண்டு பேர்
சினமொடு வாதித்தோர் தீயன்-பால் செலின்
தனது என அப் பொருள்-தனைக் கொள்வான் அவர்
மனது ஒருமித்து அதை வகிர்தல் மாண்பு அரோ
** கைக்கூலிப் பழிசொலக் காணா வோர்வாய்

#252
பசியினால் எளியன் ஓர் பகல் இரப்பினும்
அசியுறும் எங்கணும் ஆக்கம் உள்ளவர்
நிசி பகல் பலரிடம் நிதமும் ஏற்கின்ற
வசையினைச் சொல்ல ஓர் வாயும் போதுமோ
** ஈந்தோர்க்கெலாம் கைக்கூலி ஏற்போன் பிள்ளை

#253
பெற்றவன் கைப்பொருள் பிள்ளைக்கே அலால்
மற்றவர்க்கு இலை எனல் மனுவின் நீதியாம்
குற்றம் மேவிட நிதி கோடி பேர் கையில்
பற்றுவோன் அவர்க்கு எலாம் பாலன் போலுமே
** மானமழியாது தொண்டுசெய்து வாழ்வதே மதிப்பு

#254
மண்டலீகன்-தன் தண்டனை நரகு அவமானம்
கண்டபேர்க்கு எலாம் பயம் பெரும் பகையொடும் கவ்வை
பண்டம் இவ் வகை ஈட்டலின் அனுதினம் பலரை
அண்டி மானமாத் தொண்டுசெய்து உயிர் உயல் அழகே
** இருகையும் கைக்கூலி ஏற்றல் முழுக்கொள்ளை

#255
இருவரிடத்தும் விவாத நிதிக்கு இரட்டி கொள்வர் தகாது என்னின்
அருமை சயம் என்பார் தோல்வியடைந்தோன் தந்த நிதி கேட்பின்
வெருவ அவன் மேல் பொய்வழக்கை மெய் போல் கற்பித்து இடர் இழைத்துச்
சருவ கொள்ளை அடிப்பர் பரிதானம் வாங்கும் பாதகரே
** கைக்கூலியால் முறைசெயல் களவுப்பொருள் விலையொக்கும்

#256
பொய்வாதியர்-பால் பொருள் கொண்டு வழக்கைப் புரட்டல் அநீதி பொருள்
மெய்வாதியர்-பால் கொண்டு அவர்க்கு விவாதம் தீர்க்கும் நிலை எற்றேல்
உய்வார் பொருளைக் கவர்ந்து அதற்கு விலை கொண்டு உவர்க்கு உஃது இடல் போலும்
பெய் வான் மழைக்கு வரி வாங்கிப் பிழைக்கும் கொடுங்கோன் போலுமால்
** நன்றாய் வின்மையும் நண்ணுங்கைக் கூலிபால்

#257
வரும் வாதியரோடு உறவு பற்றுவரவு முதல் செய்குதல் விரைவில்
கருவி விவாதம் தீர்க்காது காலங்கழித்தல் சோம்பலினால்
உருவ வழக்கின் நிலையினை நன்கு உணராத் தன்மை பொது நீங்கல்
பொரு_இல் இவை ஆதிய புரைகள் இலஞ்சமதனைப் பொருவுமால்
** மேல்கீழ் மிகுபொருள் எண்ணல் கைக்கூலியே

#258
நேயர் பற்சர் தீனர் நிதியோர் எனச் சொல் பேதமதையே நினைத்து அநீதிபுரிதல்
மாயமுற்ற பேர்கள் சொலையே மதித்து அடாத பக்க வாதம் உற்று நீதி தவிர்தல்
தீய அத்தம் ஆதியோடு லோக ரத்ந ராசி பல தேயம் முற்றும் ஆர் பொருள் எலாம்
தேய முற்றி ஏலல் அவை காதலித்தல் ஆதி பரிதானம் ஒத்த தீதுகள் அரோ

@22 அதி. 21 – புறங்கூறல்
** பழியஞ்சும் பண்பினர் பகரார் புறங்கூறல்

#259
சாம் பிணம் இடுவனம் சாரும் துன்மணம்
பூம் பொழில் பரிமளம் பொருந்தி நாறிடும்
தாம் பழியுளர் அலால் தகுதியோர் பிறர்
நோம்படி அவர் குறை நுவலுவார்களோ
** புறங்கூறுவோன் குலநலம் பொருந்தாப் புன்மையன்

#260
நலத்தின் மிக்கார் சொலார் நயம்_இல் சொல்லையே
சொலத் தகாப் பழி பிறர் மீது சொல்லுவோன்
குலத்தினும் நலத்தினும் குறையுளான் எனத்
தலத்தவன் வாய்மொழி சாட்சி ஆகுமே
** புறங்கூற லாலுள்ளப் புன்மை வெளியாம்

#261
உள்ள அங்கணம் கசிந்து ஓடல் போல் ஒரு
கள்ள நெஞ்சினன் புறங்கழறல் அன்னவன்
உள்ளம் ஆர் புரை எலாம் ஒழுகி வாய் வழி
வெள்ளமாய் வழிகின்ற விதத்தை மானுமே
** மெய்யே புறங்கூறினும் வேண்டாப்பொய் ஆகும்

#262
இன்னலே ஏதிலார்க்கு இழைக்கும் அச் சொலே
முன்ன மெய் என்னினும் முழுப்பொய் போலுமாம்
அன்னவர் குறையினை அறிந்தும் இன்று எனப்
பன்னு பொய் மெய்யினும் பாடு உடைத்து அரோ
** சான்றினில் குற்றம் கூறுதல் தகுமால்

#263
ஆட்சியாம் உலகு அரசன் முன்
சாட்சிசொல் சமையத்து அலால்
மாட்சியோர் பிறர் மறுவினை
நீட்சியா நிகழ்த்தார்களே
** புறங்கூறார் கடமை பொன்றாப் புலவர்

#264
மதி இலார் செய் வடு அவர்
எதிரில் நின்று இயம்பினும்
முதுகில் நின்று மொழிவரோ
விதி உணர்ந்த விபுதரே
** புறங்கூறுவோனைப் புறத்தாக்கல் கோன்முறை

#265
ஒருவன் ஒருவன் குறையை உரைத்திடவே அதனைக் கேட்டோர்கள்
பெருகு அபத்தம் கலந்து பல பேருக்கு உரைக்க இவ்வாறே
மருவி எங்கும் பரவுதலால் மண்ணின் முன்னம் தூற்றும் அவன்
குருநோய் ஒப்பான் அவனைக் கோன் ஊர்விட்டு அகற்றல் நன்றேயாம்
** புறங்கூற்றாளர் பொல்லாப் பகைஞர்

#266
வாள்படை வாங்குவர் இலரேல் மாறுவர் ஆர் புறங்கூற்றைக்
கேட்பவர்தாம் இலர் என்னில் கிளப்பவர் ஆர் பிறன் பழியை
வேட்பொடு சொல்வோர் அவற்கு மேவலர் என்று உனி அதனைக்
கோட்புறல் இலாது சினம் கொண்டு அகற்றல் நெறியாமே

@23 அதி. 22 – பெரியோரைத் தூறல்
** பெரியோர் புகழை மாசுறப் பேசல் பெரும்பிழை

#267
அரிய குணம் சேர் பெரியர்-தமக்கு அமையக் கடல் சூழ் புவனம் எங்கும்
விரியும் இசை மாசுற அவர் மேல் விளம்பும் பொய்ச்சொல் அண்டம் மிசைத்
திரியும் பானுக் கிரணமதைத் திரட்டிப் பற்றி அதன் மீது
கரியைப் பூச வேண்டும் எனக் கருதும் தன்மை பொருவுமால்
** பெரியோரைப் பழிப்போன்மேல் பெய்யும் அப்பழி

#268
காற்றின் எதிரே நின்று ஒருவன் காறி உமிழும் உச்சிட்டம்
மாற்றி அவன் மேல் வந்து விழும் வாய்மை போல் இத் தாரணியில்
தோற்றி ஒழியும் வாழ்வதனைத் துறந்த மேலோர் மீது ஒருவன்
தூற்றிக் கூறும் வசைச்சொற்கள் சொன்னோன் மீதே தோயுமால்
** ஆன்றோர்மேல் சொல்பழியை அறிவுடையார் கொள்ளார்

#269
கடல் அனலுற்று எரிந்தது என்றும் கதிர் குளிர்நோய் உற்றது என்றும்
தட வரையே சாய்ந்தது என்றும் சாற்றும் மொழி நம்புவர் ஆர்
திடமுடைய சான்றோர் மேல் செப்பும் அவதூறதனைப்
புடவி மிசை வாழ் அறிஞர் பொய் எனவே தள்ளுவரால்
** தீயோர் தூயோரைத் தேறுவர் தம்போல்

#270
வாய் கைக்கும் நோயினர்க்கே மா மதுவும் கைப்பு ஆகும்
காய் வெயிலும் மஞ்சள் நிறம் காமாலைக் கண்ணருக்கே
சாய் நிழலும் சுடு வெயிலாம் தாபச் சுரத்தினர்க்கே
தீயவர்க்குத் தூயவரும் தீயவர் போல் தோன்றுவரே
** கீழோர் தம்பழியைப் பிறர்மேல் சாற்றுவர்

#271
கஞ்சனத்தில் தம் முகமே காணுவது போல் கயவர்
தம் செயிரைப் பிறர் செயிர் போல் தாம் எண்ணித் தூறுவர் ஓர்
வஞ்சகனை நம்பி ஒரு மாசிலான் இன்னலொடும்
எஞ்சலுறா வண்ணம் அவன் இழிவுரைத்தல் முறையாமே

@24 அதி. 23 – கடும்பற்று
** பொன்னைப் புதைத்துப் புல்லன் மண்கொள்வான்

#272
பொன்னினைப் புதைத்திடப் புவியைத் தோண்டுவோன்
தன்னிடம் தொட்ட மண்-தனை இழுத்தலான்
உன்னுடையது நிதி உலகமே இ மண்
என்னுடையது என இயம்பல் ஒக்குமே
** பொன்னைப் புதைப்பார் வாயில் மண்ணே புதையும்

#273
பொன்னை மா நிலத்தில் யான் புதைக்கும் ஏல்வையின்
அன்னையே அனைய பார் அருளின் நோக்கி நல்
சொன்னம் என் வாயிடைச் சொரியும் உன்றன் வாய்க்கு
என்னையே இடுவன் என்று இசைத்திட்டாள் அரோ
** பாத்துண்டலும் பலர்க்கீதலும் இல்லான்பொன் பாழே

#274
பொலி வளம் தங்கிய புவியில் தான் உண்டும்
பலி பிறர்க்கு இட்டுமே பயன் துவ்வான் பொருள்
வலி இலாப் பேடி கை வாள்-கொல் ஆண் என
அலியினை மேவிய அரம்பையே-கொலோ
** பயன்பெறாச் செல்வன் பாரந்தாங்கியும் கழுதையுமொப்பான்

#275
நித்தியம் அனுபவியாது நீள் நிதி
பத்திரம்செய்குவோன் பாரம் தாங்க ஊர்
மத்தியில் புதைத்த கல் மாசில் தூசர்க்கு
வத்திரம் சுமக்கும் வாலேயம் ஒப்பனே
** புதைக்கும் புல்லரை பொருள் குடி கெடுக்கும்

#276
செல்ல ஓர் போக்கு இன்றிச் செறிந்த நீர் கனல்
இல்லமே அழித்து எழுந்து ஏகல் போல் செலவு
இல்லை என்று அடைத்த பொன் எழுந்து தன்னைக் கொள்
புல்லரைக் குடிகெடுத்து அகன்று போகுமே
** செல்வச் சுமையினர் இரங்கார் சிறிதும்

#277
வேம்பு தேன் ஈயுமோ வெயில் தண் ஆகுமோ
பாம்பு அமுது அளிக்குமோ பரிவு_இல் பூரியர்
தாம் பொதியாள் எனத் தாங்கும் பொன்னினைத்
தேம்பும் ஆதுலர்க்கு உளம் சிறந்து அளிப்பரோ
** ஈயாச் செல்வன் சாவையே எவரும் விரும்புவர்

#278
ஈகை இல்லாது பொன் ஈட்டுவோன் கொண்ட
தோகையும் மைந்தரும் தொலைகிலான் என
ஓகையாய் அரு விடம் உணவில் இட்டு அவன்
சாகையே கருதி மா தவம் செய்வார்களே
** நன்றியில் செல்வக்காப்பு நச்சுமரக் காப்பாம்

#279
அனுபவம் ஒன்றே பொன்னால் ஆய நல் பயன் அஃது இன்றேல்
புனல் இலாத் தடத்தைப் பெய்யாப் புயலினைப் பொருவும் அப் பொன்
தினமுமே நுகர்தல் இன்றித் தீனர்க்கும் வழங்கல் இன்றித்
தனமதைக் காத்தல் நச்சுத் தருவினைக் காத்தல் போலாம்
** எல்லாரும் தமதென்பர் இவறியான் பொருளை

#280
தமது என உலோபர் ஈட்டும் தனத்தினைக் கொடுங்கோல் மன்னர்
எமது என இருப்பர் கள்வர் எமது என்பர் கிளைஞர் எல்லாம்
உமது எமது என வாதிப்பர் உலகு எனது என்னும் யாமும்
நமது என்போம் பாரம் தாங்கி நலிவது என் பிசினர் அம்மா
** ஏழைக்கு இடாமல் செல்வர்க்கு வழங்குதல் இழிவு

#281
மெலியும் ஏழைக்கு இடாமல் விளை பொன்னை
மலியும் செல்வர்க்கு வாரி வழங்குதல்
நலி இலார்க்கு அருள் நல் மருந்தும் பெருகு
ஒலி கடல் பெய் உறையையும் ஒக்குமே
** ஈயாக் கயமை இனம்விழை விலங்கினும் இழிவு

#282
வனவிலங்கும் விண் வாழ் பக்கியும் தம்தம்
இனமோடு அன்றி எடா இரை ஏழைகட்கு
அனம் இடாது தம் ஆகமது ஒன்றையே
மனம் உவந்து வளர்ப்பர் கயவரே
** பழம் உதிரா மரம்போல் பறிபடுவர் கயவர்

#283
தான் நல் கனி சிந்தாது உயர் தருவைச் சிலை கழியால்
ஊனப்பட மோதிப் பழம் உதிர்ப்பார் என உலகில்
தீனர்க்கு வழங்காது உறை தீயன் பசியுளரால்
மானத்தை இழந்தே பொருள் வவ்வப்படுவானே
**கொடாக் கண்டனுயிர் கொள்வரப் பணத்தால்

#284
சாம்காலை ஓர் பிசினன் பொருள் தானம்செய உன்னித்
தேம் கான் மொழி மனை மைந்தரை விளித்தான் அவர் தெரிந்தே
ஆங்கு ஆயவன் உரையா விதம் அவன் மேல் விழுந்து அழுதார்
தாங்காதவன் உயிர் தீர்ந்தனன் தனம் போல் பகை உளதோ

@25 அதி. 24 – சோம்பல்
** மடியராய் உழையாதார் மரம் சவம் ஆவரே

#285
சிற்றெறும்பு ஆதியாச் சீவகோடிகள்
முற்றும் மெய் உழைத்து உயிர் முறையில் காக்குமால்
சற்றும் மெய் அசைவு இலாச் சழக்கர் ஆருயிர்
அற்ற ஓர் சவம்-கொல் மற்று அசரமே-கொலோ
** உழையாது சோம்புவோர் ஒரு பெருந் தீயரே

#286
விடக்கு உறும் சடம் பல வேலை செய்தற்கா
நடக்கவும் ஓடவும் நனி உறுப்புகள்
மடக்கவும் நீட்டவும் வாய்ந்ததால் சும்மா
கிடக்கும் மெய்ச் சோம்புளோர் கேடுளார்களே
** குடும்பம் பேணுவோர் சோம்பலை கொள்ளார்

#287
தெளிவுற நூல் பல தினமும் வாசித்து
மிளிர் உடல் வருந்தியும் வெறுக்கை ஈட்டி நல்
கிளி மொழி மனைவியைக் கிளைஞரைப் பல
எளியரைத் தாங்குவோர்க்கு இல்லை மந்தமே
** வறுமை பாவம் துன்பம் சோம்பலால் வரும்

#288
மடி சேருமவர்க்கு ஒரு நாளும் மறல்
விடியாது அவர் நெஞ்சிடை வெம் துயரே
குடியாகும் மறம் தொடர் குற்றம் எலாம்
நெடிதாக வளர்ந்திடும் நிச்சயமே
** கொடுமையும் களவும் கொள்வர் சோம்பரே

#289
பார் எல்லாம் ஆள் வேந்தரும் நூல் தேர் பண்போரும்
சீர் எல்லாம் சூழ் செல்வரும் மந்தம் சேராரே
நேர் இல்லா மா பாதகர் தீனர் நெடும் சோரம்
ஊர் எல்லாம் செய்து உய்பவர் மா சோம்புடையாரால்
** உழையாச் சோம்பர் பெருவசை உறுவர்

#290
எய்யா அம்பே வல் விசை மாறி இறும் என்று
மொய்யா விரதம் ஆழியொடும் கெட்டு ஒழியும் தம்
மெய்யானதுவே வியர்வையுறப் பல் வினை கையால்
செய்யாதவரே நோய் பல உற்றுத் தேய்வாரே
** உடல் அசையார் உறுவர் பெரும்வசைப்

#291
அசையும் வளி புவி அசையும் அனல் சலம் அசையும் மரம் விளை பயிர் எலாம்
விசையினொடும் அவை அசைவது இலை எனில் விளியும் எனல் நிசம் நரர்கள் தம்
தசை கொள் உடல் நிதம் அசைய வினை பல தரணி மிசை புரிகிலர் எனில்
இசையும் வலி கெடும் நலிகள் அடுமுறும் இசையின் மிசையொடு வசையுமே

@26 அதி. 25 – சினம்
** மெலியரைச் சினப்போர் ஆழ்வர் மீளாநரகில்

#292
வலியரைச் சினப்போர் வரையினில் மோதும் மண்கலம் என உடைந்து அழிவார்
பொலிவுறத் தமை ஒப்பவர்களைச் சினப்போர் புலி இரண்டு ஒன்றையொன்று அடித்து
மெலிவொடு இரண்டும் கெடுவ போல் கெடுவார் மெலியரை வெகுளுவோர் வேங்கை
எலியினை எதிர்த்த தன்மை போல் இழிவுற்று எரி நரகிடை அமிழ்ந்துவரே
** மெலியர்பால் சினம் வேண்டுமென்றே கொள்வர்

#293
எம்மையும் தெரியாமல் இச் சினம் வந்தது என்பீர்
உம்மை நோய்செயும் வலியரை வெகுண்டிடாது ஒளிப்பீர்
இம்மை வாழ்வு இலா எளியர்-பால் தினம் உமக்கு எய்தும்
வெம்மை நீர் அறிந்தோ அறியாமலோ விளம்பீர்
** சினங்கொள்வார் நெஞ்சுடற் சேருந் துன்பம்

#294
கண் சிவந்திட மெய் எலாம் நடுங்கிடக் காலால்
மண் சிதைந்திட உதைத்து நாக் கடித்து இதழ் மடக்கி
எண் சிதைந்திடச் சினம்கொள்வீர் நும் மெயோடு இதயம்
புண் சுமந்தது அலால் பிறர்க்கு என் குறை புகல்வீர்
** தன்னுருவம் தான்தேறாத் தகைசினத் தால்வரும்

#295
கோட வாள் முகம் சுழித்து இதழ் மடித்து எழில் குலையச்
சேடன் மீது யான் சினமுற்ற பொழுது எதிர் திகழும்
ஆடி நோக்க யான் யான்-கொல் மற்றார்-கொல் என்று அயிர்த்துத்
தேடி நோக்க ஓர் குரூபமே கண்டு உளம் திகைத்தேன்
** சினமுளோன் இறக்கின் சேர்ந்தாரும் மகிழ்வர்

#296
சினமுளோன் மனை மைந்தர்கள் அவன் வெளிச்செல்லும்
தினம் எலாம் திருவிழவு கொண்டாடுவர் செல்லாது
இனையன் தங்கும் நாள் இழவுகொண்டாடுவர் இறப்பின்
மனையில் ஓர் பெரு மணவிழா வந்து என மகிழ்வார்
** சினமுளார் நச்சுயிர்சேர் துன்புறுவர்

#297
நாளும் நாம் கொளும் துயர்க்கு எலாம் காரணம் நாடின்
மூளும் சீற்றத்தின் விளைவு அதாம் முனிவு அகம் உடையோர்
தேளும் பாம்பும் வெம் சின விலங்கினங்களும் நனி வாழ்ந்து
ஆளும் கானில் வாழ்பவர் எனத் தினம் அஞர் அடைவார்
** அறிவிலா வேலையாளைச் சினப்பது அறமன்று

#298
தழையும் செல்வத்துள் பிறந்து நல்லோர் அவை சார்ந்து
பிழை_இல் நூல் எலாம் உணர்ந்து நீ வைகலும் பிழைத்தாய்
இழையும் தீனராய்ப் பிறந்து கற்றிட வகை இல்லா
உழையர் செய் பிழைக்கா முனிந்தனை இது என் உளமே
** கடுஞ்சினம் கோடல் கல்அம்பைக் கடிதலாம்

#299
பைதலே எய்தல் ஆதிப் பரன் செயலாம் அப் பைதல்
செய்தவர்-தமைச் சினத்தல் சினவரா தன் மேல் கல்லைப்
பெய்தவன்-தனை விட்டு அக் கல் பிளந்திடப் பொரலும் கையால்
எய்தவன்-தனை விட்டு அம்பை முனிதலும் ஏய்க்குமாலோ
** விலங்கோ டறிவில் சிறார்பித்தர் கிழவர் வெகுள்வர்

#300
தெருள் அறு விலங்கினுக்கும் தெளிவு அறியாச் சிறார்க்கும்
மருளுறு பித்தருக்கும் மட விருத்தருக்கும் கோபம்
பொருள் அலால் அயலோர்க்கு இல்லை புகன்ற இ நால்வரேயோ
அருள் அறு சினம் மீக்கொள்வார் அனையருள் ஒருவரேயோ
** சினத்தால் வெற்றி பகைக்கே சேரும்

#301
பெற்ற தன் நாட்டை ஆளான் பிறர் நாட்டை ஆள்வான்-கொல்லோ
உற்ற தன் சீற்றம் மாற்றி உரத்தொடு தனைத்தான் வெல்லக்
கற்று அறியான் ஒன்னாராம் கனலிக்கு ஓர் வையே ஆவன்
கொற்றம் அவ் ஒல்லார் கொள்வார் கோபம் போல் தாபம் உண்டோ
** செய்வோரைத் திருத்தவே செய்கையிற் சினமுறல்

#302
உருமினை அஞ்சி யாரும் இகழுவர் அன்றி ஆய ஒலி தருகின்ற காரை முனிவரோ
தரு உறைகின்ற தீய முயிறுகள் அன்றி ஆய தருவை வெகுண்டு சீறல் தகுதியோ
அரு மறம் மீது பகைசெயல் அன்றி நாளும் அவை புரிகின்ற தீய அசடர்-பால்
பெரும் முனை கொண்டு காய்தல் அழகு அல என்று கோது_இல் பெரியவர் என்றும் ஆள்வர் கலரையே

@27 அதி. 26 – பொறாமை
** பேராசை யுள்ளோர் பெருங்கே டெய்துவர்

#303
மாங்கனி வாயில் கவ்வி மரத்திடை இருக்கும் மந்தி
பாங்கர் நீர் நிழலை வேறு ஓர் பழம் உணும் குரங்கு என்று எண்ணித்
தாங்க அரும் அவாவில் தாவிச் சலத்திடை இறந்தது ஒப்ப
நீங்க அரும் பொறாமையுள்ளோர் நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே
** பொய்இன்ப துன்பைப் பொறாமையான் கொள்வன்

#304
தாரணியில் எவரேனும் துயருறின் தன் தலையின் முடி தரித்தது ஒப்பாம்
சீர் அணியும் செல்வம் அவர் படைத்திடில் தன் தாய் மனை சேய் செத்தது ஒப்பாம்
காரணமே ஒன்றும் இன்றிச் சுகதுக்கம் தன் வலியால் கணத்துக்குள்ளே
பூரணமா ஆக்கிடுவோன் பொறாமையுளோன் அன்றி எவர் புவியின்-கண்ணே
** பொறாமையால் பயன்வாரா பொருந்தும் பெரும்பாவம்

#305
வவ்விடலே முதலாய வினையால் ஒவ்வோர் பயன் கைவந்து கூடும்
அவ் வினைகள் இயற்ற வெவ்வேறு இடம் கருவி சமையமும் வந்து அமைய வேண்டும்
எவ்விடத்தும் எப்பொழுதும் ஒழியாமல் எரி என்ன இதயம்-தன்னைக்
கவ்வி உண்ணும் அவ்வியத்தால் கடுகளவு பயன் உளதோ கருதுங்காலே
** பொறாமைத் துன்பத்தால் பொருந்திடா தப்பொருள்

#306
ஆண்டு எலாம் பிறர் ஆக்கம் நோக்கியே
மீண்டும்மீண்டும் நெட்டுயிர்ப்பு வீங்கினும்
தாண்டி அவர் தனம் தாழ்ந்து உன் கை மிசை
ஈண்டுச் சேருமோ இதயமே சொலாய்
** பொறாமைத் துன்பம் போகா தொருநாளும்

#307
மக்கள் பலர் உளார் மகி விசாலமாம்
பக்கம் அவர் தினம் படைப்பர் ஓர் நலம்
ஒக்க அது பொறாது உள்ளம் நைந்திடில்
துக்கம் ஓயுமோ சொல் என் நெஞ்சமே
** அவ்வியம் கொள்ளார் அறிவு மாண்புடையார்

#308
நிறையும் நீர்க்கு அசைவு இல்லை நீள் நிலத்து
அறையும் கல்வியில் அறிவின் மேன்மையில்
குறையுளார்க்கு அலால் கோது_இல் மாண்பினார்க்கு
இறையும் அவ்வியம் இல்லை இல்லையே
** தீமைக்கு வருந்துவோர்ச் சேரும் பெருந்துன்பம்

#309
அறம் உளார்கள் போல் அறிஞர் போல் புகழ்
பெற வருந்துதல் பெருமை ஆயினும்
புறம் உளார்கள் போல் பொருள் இலேம் என
உறும் அவ் உறுகணே உறுகண் ஈயுமே
** கொள்ளும் பொறாமையால் கூடும் புதுத்துன்பம்

#310
பூட்டும் அரிகண்டம் புனைந்து அழுங்குவார் போலும்
தோட்டியினைத் தானே சுமந்து கெடும் கயம் போலும்
வாட்டும் துயர்கள் பல வையம் மிசை இருக்கக்
கோட்டமுளோர் வேறு ஆகுலம் தமக்கு உண்டாக்குவரே

@28 அதி. 27 – கல்விச் செருக்கு
** கல்வியால் செருக்குறக் காரணம் இல்லை

#311
என்ன நீ வருந்திக் கவி பாடினும் எடுத்த கற்பனை முன்னோர்
சொன்னதே அலால் நூதனம் ஒன்று இலைத் தொன்மை நூல் பல ஆகும்
முன் அ நூல் எலாம் தந்தவன் நீ இலை முற்று உணர்ந்தனை அல்லை
உன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால் உள்ளமே செருக்கு என்னே
** எல்லாம் உணர்ந்தோம் என்று இறுமாத்தல் தீது

#312
தருக்கநூல் அறிவோர் வியாகரணநூல் தகவு அறியார் தேர்ந்தோர்
இருக்கு இலக்கியம் முதல் அறியார் பலர் இன் கவி செயக் கல்லார்
சுருக்கமாக ஓர் நூலினில் சிறிது அலால் துகள் அற எந்நூலும்
பெருக்கமா உணர்ந்தோர் இலைத் தருக்குறல் பேதைமை நீர் நெஞ்சே
** யார்க்கும் முழுதுணர இயலா; செருக்கலென்

#313
அத்திரங்கள் செய்வோர் தாம் எய்தல் தேரார்
ஆய்ந்து எய்ய அறிந்தோர் அம்பு இயற்றல் தேரார்
சித்திரங்கள் பொறிப்பவர் தாம் கருவி செய்யார்
திகழ் கருவி செய்பவர் சித்திரித்தல் கல்லார்
வத்திரங்கள் பூண்போர் நெய்து அறியார் இன்ன
வாய்மை போல் ஒன்று அறிவோர் ஒன்று கல்லார்
சத்தியமாச் சகலமும் நன்கு உணர்ந்தோர் போலத்
தருக்குற்றார் பெருக்கற்றார் திருக்குற்றாரே
** நூல்கற்றுச் செய்யுள் நுவல்வதால் செருக்கலென்

#314
பருத்தி விதைத்து எடுத்து நூல் ஆக்கி ஆடை
பண்ணி அளித்தால் உடுத்தல் பாரம் ஆமோ
திருத்தி மண்ணில் செந்நெல் விதைத்து அரிசி ஆக்கித்
தீம் சோறு அட்டு ஊட்டில் உண்ணச் செவ் வாய் நோமோ
அருத்தமொடும் இலக்கணங்கள் இலக்கியங்கள்
அரிய நூல் பல முன்னோர் அளித்ததாலே
கருத்தே அ நூல்கள் சில கற்று உணர்ந்து
கவி சொல்லல் வியப்பு அன்று கர்வம் என்னே
** வெயில்முன் கல்லார் விளக்குமின் மினியே

#315
இயலொடு தமிழ் மூன்றும் எள்ளளவும் தேராய்
அயர்வு அறு கலை ஞானம் அறுபதினோடு நான்கும்
பயனொடு தேர்வாரே பலர் உளர் அவர் முன் நீ
வெயிலின் முன் இடு தீபம் மின்மினியாம் நெஞ்சே
** உண்மை யுணராது செருக்கல் ஒவ்வாது

#316
எறும்பு தன் பிலத்தைத் தன்னை யாவும் என்று உனல் போல் அண்டத்து
உறும் புவனங்கள் எண்ணில் உவை முன்னம் நரரும் பாரும்
இறும்பு முன் அணுவோ வாழி எதிர் ஒரு துளியோ நில்லாது
அரும் படிவத்தின் மாக்கள் அகம் அகம் மிகல் தகாதால்

@29 அதி. 28 – அழகாற் செருக்கல்
** ஆடையணி நீக்கின் அழகொன்றும் இன்று

#317
எழில் உளேம் எனச் செருக்குறு நெஞ்சமே இழை துகில் நீத்து அங்கம்
கழுவிடாது உற நோக்குதி முகம்-தனைக் கஞ்சம்-தனில் நோக்கின்
எழு நிலத்திடை உன்னின் மிக்கார் உளர் என அறிவாய் ஈமத்து
அழியும் வெண்டலை உன் தலை போல் இருந்து அவண் உற்றது அறிவாயே
** உறுப்புடல் அழகெலாம் எலும்புமாய் ஒழியும்

#318
தோல் வாசம் துறந்து இறந்துகிடந்த அழகியைக் காணச் சுடலை சென்றோம்
கோல் போன்ற வெள் என்பின் குவை ஒன்றே கண்டனம் செம் குமுத வாயும்
நூல் போன்ற இடையும் அன நடையும் அணி தனமும் மதி நுதலும் வாய்ந்த
சேல் போன்ற விழியும் பால் மொழியும் காணாமல் உளம் திகைத்தோம் அன்னோ
** நாறுட லழகால் செருக்குறார் நல்லோர்

#319
நோக்கதனில் பீளை இரு செவிகளிலும் குறும்பி அனம் நுகர் வாய் எச்சில்
மூக்கதனில் சளி தலையில் பேன் வெயர்வை மலசலங்கள் மூளும் நாற்றம்
போக்க ஒரு நாள் கழுவாவிடில் அழுக்கு மிகத் திரண்டு புழுத்து நாறும்
ஆக்கம் இலாத் தேகம் இதை அழகு என்னச் செருக்கல் அறியாமையாமே
** உடலுள் அழுக்கை உன்னில் செருக்குறார்

#320
கட்புலன்-தனையே கவர்ந்திடு கவின் உளேம் என அனுதினம்
பெட்புறப் புவியில் செருக்குதல் பெருமை அன்று ஒளிர் பேர் உடல்
உட்புறத்தினையே திருப்பிடில் ஓங்கலாம் மலக் காடு சூழ்
மண் புறச் சுவர் தீட்டு சித்திரம் மானும் நம் எழில் நெஞ்சமே
** நயனிலான் உடலழகை நல்லோர் நயவார்

#321
மண்ணில் செய் பாவை மீது வயங்கு பொன் பூச்சோ தண் பூம்
கண்ணியை மாற்றில் சூடும் காட்சியோ பழம் பாண்டத்தில்
பண்ணிய கோலமோ நற்பண்பொடு ஞானம் கல்வி
புண்ணியம் ஏதும் இல்லான் பூண்ட பேர் எழில் உடம்பே

@30 அதி. 29 – செல்வச் செருக்கு
** அழுக்கோ டழிபொருளால் அகங்கொளல் வீணே

#322
மணிகள் பல வகைக் கல்லாம் பொன் முதல் உலோகம் மின்னும் மண்ணாங்கட்டி
துணி பட்டாடைகள் பருத்திநூல் பூச்சிக் குடர் நாயின் தோல் உரோமம்
அணி புழுகு கத்தூரி முதலிய பூனையின் மலம் பால் ஆ இரத்தம்
தணிவு_இல் தேன் வண்டு எச்சில் இவை செல்வம் எனச் செருக்கல் தகுமோ நெஞ்சே
** தேரின் மணியுங்கல் செருக்குறல் வீணே

#323
செம் கல் வெண் கல் கரும் கல்லை நவமணிகள் எனச் செல்வர் சேர்ப்பார் யாமும்
செங்கல் வெண்கல் கருங்கல்லைச் சேர்த்திட்டோம் இருவர் கல்லும் சீர்தூக்குங்கால்
நம் கல்லே இடை அதிகம் எங்கணும் உண்டு எதிர்ப்போரை நாசம் செய்யும்
பங்கமுறச் செல்வர் நம்மின் மிக்கோர் என்று அகங்கரிக்கும் பான்மை என்னே
** சுமை எருதுபோல் செல்வச் செருக்குறல் துரிசே

#324
இடையில் கோவணமும் இன்றி இங்கு உதித்தோம் அவ்வாறே
கடையில் வெறுங்கையோடும் கழிகுவம் நடுவில் சேரும்
உடைமையால் பெருமை என்னோ ஊர்க்கு எலாம் பொதி சுமக்கும்
விடை தருக்குற்றது என்ன வீண் செருக்குற்றாய் நெஞ்சே
** மாறிவரும் செல்வத்தால் செருக்குறல் வசையே

#325
சுழல் சகடக் கால் போலும் தோன்றியே அழி மின் போலும்
அழல் மன வேசை போலும் அரு நிதி மேவி நீங்கும்
பழமை போல் அதனை நம்பிப் பழியுறச் செருக்கல் மேக
நிழலினை நம்பிக் கைக் கொள் நெடும் குடை நீத்தல் ஒப்பே
** செல்லும்பேர்ச் செல்வத்தால் செருக்குறல் நெறியன்று

#326
தரித்திரம் தரித்திரம் என்னும் தாரணி
சிரித்திடச் செல்வமே செல்வம் என்னும் இச்
சரித்திரம் உணர்ந்துமே தரையில் பொன் எமக்கு
உரித்து எனச் செருக்குதல் உரன் அன்று உள்ளமே
** செருக்குவருங்கால் செல்வம் அழியும்

#327
நாசமாம் காலமே நண்ணும் முன் இறகு
ஈசலுக்கு எய்தலும் இரியும் முன்னமே
தேசது மிகுத்து ஒளிர் தீபம் போலவும்
நீசர்-தம் செருக்கினால் நிதி இழப்பரே
** செல்வம் அகன்றபின் செருக்கினர் நிலையென்

#328
செழித்திடும் நாளினில் செருக்குற்றாய்
கழித்து உனை மா நிதி கைநீங்கில்
பழித்திடும் உலகின் முன் பரிவு இன்றி
விழித்திடல் எப்படி வினை நெஞ்சே

@31 அதி. 30 – தீயரைச் சேராமை
** தீயவர் பலரும் தீயரைச் சேர்வர்

#329
செழு மலரிடை மது சிறை அளி நுகரும்
முழு விடமது பெறும் முனிவுடை அரவம்
பழுது அறும் அறநிலை பயிலுவர் சிலரே
வழு அயலவரிடம் மருவுவர் பலரே
** சாரினும் கீழ்கள் தம்நிலை மாறா

#330
கரி நிறம் உறும் வெளிறு உடை கரி அணுகின்
சொரி கரி கலை உறு சுசியினை உறுமோ
பெரியவர் குணநிலை பெறல் அரிது அறமே
இரி கலரொடு கலவுற உறும் இழிபே
** சேரிடத்தில் சிறப்பிழிபு யாரையும் சேரும்

#331
மனிதர் கோள் மருவுநர்-தமைக் கொண்டு ஓதுவர்
புனிதம்_இல் இடையின் வீழ் பொரு_இல் வாசத் தீம்
கனியையும் தள்ளுவர் கயவர்-தம்மைச் சேர்
இனிய நற்குணத்தரும் இகழ்ச்சி கொள்வரே
**இழிந்தாரைச் சேரின் இழிவென்றும் நீங்கா

#332
மண மனை சேர் மண மாலை மாண்புறும்
பிணவனத்து ஆர் இழிவு எய்தும் பெற்றியார்
கணமதில் சேர்ந்தவர் கனம் கொண்டு ஓங்குவர்
குணமிலார் இனம் உறல் குறை உண்டாக்குமே
** தாழ்ந்தோர் உயர்ந்தோர் எனும்பேர் சார்பாலுண்டாம்

#333
மண் இயல்பால் குணம் மாறும் தண் புனல்
கண்ணிய பொருள் மணம் கலந்து வீசுங்கால்
புண்ணியர் ஆதலும் புல்லர் ஆதலும்
நண்ணு இனத்து இயல்பு என நவிலல் உண்மையே
** நல்லார் பொல்லார் எனும்பேர் சார்பால் நண்ணும்

#334
பாரினில் பிறந்த போது எவரும் பண்பினார்
பூரியர் எனப் பெயர் பூண்டது இல்லையால்
சீரியர் என்னலும் தீயர் என்னலும்
சேர் இனத்து இயல்பினால் சேர்ந்த நாமமே
** கயவரைச் சார்வதால் கணக்கிலாத் தீமையாம்

#335
கயவரைச் சேர்ந்தவன் கலந்த போது அவர்
செயலினை எண்ணுவன் தினம் செலச்செல
மயல் மிகுந்து அவர் செயல் மகிழ்ந்து அனுட்டிப்பன்
இயவரைச் சேர்தல் போல் இல்லைத் தீமையே

@32 அதி. 31 – பிழை பொறுத்தல்
** நின்போற் பிறர் செய்யிற் சினப்பது நெறியோ

#336
எப் பிழைக்கா நீ பிறரைச் சினந்து அவர்க்கு இன்னா இயற்ற எண்ணினாயோ
அப் பிழை நீ செய்திலையோ உன்னைப் போல் அவர் பிழைக்கலாகாதோ மா
வெப்பம் உற நாண் இலையோ நீ ஒருவன் பிழை புரிய விண் வேந்தன் கை
யொப்பமுடன் அதிகாரம் பெற்றனையோ மனமே நீ உரைசெய்வாயே
** ஒப்பில்லாக் கடவுள் ஒருவனே பிழையிலான்

#337
பிழை இலான் கடவுள் அன்றி மக்களில் தப்பு இல்லாதார் பிறரும் உண்டோ
மழையினுமே அசனி உண்டு மதிக்கும் ஓர் மறு உண்டு மலர்க்கு முள்ளாம்
கழையினுமே சக்கை உண்டு கனியினும் தோல் கொட்டை உண்டு கதிக்கும் காம
விழைவினால் மறம் புரிதல் நரர்க்கு இயல்பு ஆதலின் அவரை வெறுக்கொண்ணாதே
** குற்றத்தைப் பொறுத்தல் அறிவோர் குணமே

#338
நாவையே கடித்தது எனப் பல் தகர்க்கும் பேர் உளரோ நடக்கும் வேளை
பூவையே பொருவு கழல் சருக்கியது என்று அதைக் களைவோர் புவியில் உண்டோ
காவை ஆர் உலகம் எனும் பேர் உடலின் அவயவம் போல் கலந்த சீவர்
தாவையே செய்யினும் மிக்கு அறிவுடையோர் கமைசெய்தல் தகுதியாமால்
** இகழ்ந்தார் தமக்கும் இனியவே இயற்றுக

#339
உனை ஒருவர் இகழ்ந்தனரேல் ஏதுக்கா இகழ்ந்தனர் என்று உன்னி உன்-பால்
தினை அளவு தப்பு உளதேல் அதை நீக்காய் தப்பு இன்றேல் சினமுறாதே
கனை கழையை வேம்பு என்னில் கழைக்கும் ஓர் குறை உண்டோ கல்லில் மோதித்
தனை உடைப்போர்க்கு உணவு தரும் தேங்காய் போல் எவர்க்கும் நன்மை-தனைச் செய் நெஞ்சே
** தீங்கு செய்வோர்க்கும் நன்மையே செய்க

#340
தீது ஒருவர் செய்தனர் என்று அதற்கு எதிராய் நீ அவர்க்கு ஓர் தீங்கு செய்யின்
சாது நீ அவர் தீயர் என்பதற்குக் கரி என்ன சக்கு இலாதார்
ஓத விடம் உண்ணின் விழியுடையாரும் உண்ணுவரோ உலப்பு_இல் செந்நெல்
சேதமுற அவைத்திடுவோர்க்கு உணவு ஆதல் போல் நலமே செய்வாய் நெஞ்சே
** தெய்வம் இரங்கல் நோக்கித் தீயவர்க்கு இரங்குக

#341
நல்லவர் தீயவர் என்னாது எவரையுமே புவி தாங்கும் நனி நீர் நல்கும்
செல் அருணன் ஒளி பரப்பும் கால் வீசும் அந்தரமும் சேரும் ஒப்பு ஒன்று
இல்லாதான் தீயவர்க்கா இரங்கி மனுவேடம் உற்றான் எனில் அன்னார்-பால்
செல்லாது உன் சினம் மனமே பொறுமையே பெருமை அன்றோ செப்புங்காலே
** பிழைபொறார் பிழையைப் பெருமானும் பொறான்

#342
இன்னல் எமக்கு இழைத்ததனால் வீடு இழந்து நரகு ஆழ்வார் என நினைந்து
பன்ன அரிய பெரியர் பிழை பொறுப்பர் பொறார்-தம் பிழையைப் பரமன் ஆற்றான்
முன் ஒருவன் செய்தனன் என்று அவற்கு இறப்பச் செயும் இடர் அ முறை இலான் சேய்
பன்னி தமரையும் சேரும் அவர் நமக்கு எப் பிழைசெய்தார் பகராய் நெஞ்சே
** அறிவுக்குறைவால் நல்லோர் அல்லோர்போல் தோன்றுவர்

#343
வெருட்சியுளோர்க்கு எங்கணும் பேய் உருத் தோன்றும் எழில் முகத்தை விகற்பம் ஆக்கித்
தெருட்சி_இல் கண்ணடி காட்டும் அவை போல் தீது இயற்றாரும் தீயர் போலப்
பொருள் சிதைவால் தோன்றுவர் தீது என அறமும் தோன்றும் அவர் புரி பிழைக்கு
மருட்சியில் பல் காரணங்கள் உளவாம் என்று உனிப் பொறுப்பர் மாண்பினாரே

@33 அதி. 32 – இனியசொற் கூறல்
** இசைநன்மை நண்பெலாம் தருவது இன்சொல்

#344
வட்ட உலகு எட்டும் இசை மட்டு அற நிரப்பும்
வெட்ட வரு துட்டரை விலக்கி வசமாக்கும்
நட்டம் இலை எள்தனையும் நட்டு நரர் எல்லாம்
இட்டமுறு கட்டு உதவும் இன்மொழியது அன்றோ
** எல்லாக் கேட்டையும் தருவ திழிசொல்

#345
இக் குவலயக்-கண் இழிவுக்கு இடமதாகும்
பக்கரொடு மக்கள் பகை புக்க வழிபண்ணும்
துக்கமும் விளைக்கும் ஒரு துக்கமும் விளைக்கும்
குக்கனை நிகர்க்கும் அவர் கக்கும் இழிகூற்றே
**நலம்பொலம் அவரவர் வாய்மொழி நவிலும்

#346
சந்தம் நிறை செப்பு இறைவை சாணம் உளது என்னக்
கந்தமது எவர்க்கும் நனி காட்டிவிடல் போலும்
நிந்தனை உளார் இனிய நீர்மையினர் என்ன
முந்து அவவர் வாய்மொழி மொழிந்துவிடும் அன்றோ
** இல்லாப் பெயரையும் இயற்றும் வாய்ச்சொல்

#347
நன்மை புரியார்களும் நயம் தவிர் கொடுஞ்சொல்
இன்மை எனின் அல்லவர் எனப் புகழ் படைப்பார்
தின்மை புரியார்களும் வழங்கும் உரை தீதேல்
புன்மையுறு தீயர் என எள்ளும் உயர் பூவே
** கடுஞ்சொற் கூறுவோர் கயவரே யாவர்

#348
வன்மொழி உரைக்கின் எதிர் வன்மொழி கிடைக்கும்
இன்மொழி உரைக்கின் வரும் இன்மொழி எமக்கும்
நன்மொழிகளே பல இருக்க நவிலாமல்
புன்மொழி உரைப்பவர்கள் பூரியர்கள் அன்றோ
** அறிவிற் பெரியோர் அனைவரையும் பணிவர்

#349
தே மலி சுவைக் கனி பல செறிந்து உயர்
கா மரம் வளைதல் போல் கலை உணர்ந்திடு
தூ மன மாட்சியோர் தொழுவர் யாரையும்
பாமரர் எவரையும் பணிந்திடார்களே
** இருக்கை இன்சொல் வரவேற்பால் எய்துவது அன்பு

#350
எதிர்சென்று முகமன் கூறி இருக்கையும் நல்கி உண்டே
அதிசயம் என வினாவி அன்பொடு முகம் மலர்ந்து
துதி புரிந்து உபசரிக்கும் தொழிலினால் செலவு ஒன்று இல்லை
அதிர் கடல் உலகுளோர் தம் அன்பு எலாம் வரவாம் மாதோ
** துன்பொழித் தின்பம் சுரக்கும் இன்சொல்

#351
உருமை மின்னினைத் தன்-பால் கொண்டு உதகம் மன் உயிர்க்கு நல்கும்
கரு முகில் எனக் கண்ணால் என் காணினும் கேட்பினும் சூழ்
பருவரல் ஏதிலார்க்குப் பயக்கும் வன்சொல்லை நீத்து
மருவிய நலம் கலந்த வசனமே பகர்வர் நல்லோர்
** உற்றிடத்து நல்லன உரைப்ப தின்சொல்

#352
நதி முதல் புகுவது எல்லாம் நன்கு அகட்டிடை அடக்கும்
அதிர் கடல் எனவும் ஈயார் அருத்த மஞ்சிகையே போலும்
வதி செவி நுழைவது எல்லாம் மனத்தினுள் அடக்கித் தக்க
ததி அறிந்து உரைப்பது அன்றிச் சகலர்க்கும் உரையார் மிக்கோர்

@34 அதி. 33 – பிறர்க்குத் தீங்கு செய்யாமை
** துன்புசெய்வானையே துன்பம் முதற்கொலும்

#353
விடதரம் பற்றி வேறொருவன் மேல் இடும்
அடலுளோன்-தன்னை முன் அது கடித்தல் போல்
இடர் பிறர்க்கு இழைத்திடும் இயவன்-தன்னை முன்
மிடலொடும் அவ் இடர் மேவிச் சாடுமே
** நற்பண்பு உள்ளாரையே மக்களென நவில்வர்

#354
படியின் மானிடர் மிகு பண்புளோர் அலால்
கொடியரை நரர் எனக் கூறல் பார் எலாம்
இடி எனக் கொலைத் தொழில் இயற்றும் தீ வெடிப்
பொடியினை மருந்து எனப் புகலல் ஒக்குமே
** இடர்செய்வான் துன்ப இடையினில் நைவன்

#355
உரவு நீர்க் கரும் கடல் உடுத்த பார் மிசைப்
பரர் வருந்திட இடர்பண்ணுவோன்-தனை
நரர் எலாம் பகைசெய்வர் நண்ணும் ஆயிரம்
அரவு சூழ்கின்ற ஓர் தேரை ஆவனே
** கெடுவான் கேடு நினைப்பான்

#356
கயலில் பாய் சிரல் கால் சிக்கிக்கொண்டு எழ
வயம் இலாது உயிர் மாய்கின்ற தன்மை போல்
அயலவர்க்கு அழிவாக ஓர் அந்தரம்
செய நினைத்தவர்க்கே வந்து சேருமே
** தீங்கு செய்வாரைக் காட்டிற்குச் செலுத்துதல் சிறப்பு

#357
புயகமதைத் தேள் புலியைப் பொல்லாத விலங்கை எலாம்
அயர்வாக அடித்து ஓட்டல் அவைகள் குணத்தால் அன்றோ
இயல்பு இன்றி எந்நாளும் ஏதிலார்க்கு இடர் இழைக்கும்
கயவனையே வைது அடித்துக் கான் ஓட்டல் நன்றாமே

@35 அதி. 34 – நெடுந்துயில்
** சிற்றுயிர் உணர்த்தியும் துயிலெழார் சிறப்பென்

#358
விடியலில் பறவை மிருகம் யாவும் முன் விரைந்து எழுந்து பல வினை செயும்
கடி மலர்ப் பொழில் கண்மலரும் ஆர்வமொடு கடல் எழுந்து கரை தாவிடும்
படியின் மன் உயிர் எலாம் எழுந்து தொழில் பல இயற்றிட எழாமலே
தடி எனத் துயிலுவோன் நரன்-கொல் ஒரு தாவரம்-கொல் அறியேம் அரோ
** பகலும் தூங்குவர் படிப்பிலா மூடர்

#359
தம் கருமங்கள் செய்யத் தனிப் பகல் போதாது என்ன
இங்கு அறிவுடையோர் தூங்கார் இரவினும் மூடர் துஞ்சக்
கங்குலும் போதாது என்னப் பகலும் கண்படுவர் யாவும்
புங்கமாத் தேர்ந்து வேறோர் புரை இலார் போலும் மாதோ
** கதிரவன் கணக்கால் காலன் வருவான்

#360
வான் உலாம் அருணன் என்னும் மக்கள் ஆயுளின் கணக்கன்
தான் எழு முன் எழாரைச் சகத்திரக் கரத்தால் தட்டும்
ஏன் என எழார் வாழ்நாளை எண் குறைத்து எழுதிக்கொள்வான்
ஆனது கண்டு காலன் அவரிடம் அணுகுவானே
** சிறு துயிலற்றுப் பெருந்துயில் ஏற்பதே சாவு

#361
உறங்குவது போலும் சாக்காடு என்ன உரைத்தார்
இறங்கல்_இல் சீர் வள்ளுவனார் போலும் எனல் மிகையே
நிறம் குலவு சிறுதுயில் அற்றேல் நெடிய துயிலை
மறம் குலவு மரணமே எனக் கூறல் வழக்கே

@36 அதி. 35 – பேருண்டி
** பேருண்டி நோய்பிணி பெருக்குந் தூதன்

#362
நனி நிழல் புனல் கொள் பைங்கூழ் நாசமாம் மிகவே உண்ணும்
இனிய மா மருந்தும் நஞ்சாம் இன்பமும் மிகில் துன்பு ஆகும்
பனி பிணி மடமை மந்தம் பழி எலாம் வம்-மின் என்னக்
கனிவொடும் அழைக்கும் தூதாம் கழிய பேருண்டி மாதோ
** அளவிலா உண்டியால் ஆற்ற லழியும்

#363
கொள் அரு நீரைக் கொண்ட குளம் கரைபுரண்டு முன்னம்
உள்ள நீரையும் இழக்கும் உண்மை போல் பேர் அகட்டின்
பள்ளம் மேடாக உண்ணும் பதம் உடல் வளத்தைப் போக்கும்
எள்ளல்_இல் சிற்றுணா வற்று உடல் எங்கும் இயங்குமாலோ
** பயன் மிகுந்தது பட்டினி யிருத்தல்

#364
பாரணம் இன்றிச் சில் நாள் பசித்திருந்தாலும் நன்றாம்
சீரணம் இன்றி உண்ணும் தீனி நோய் செயும் அதற்கு ஓர்
சூரணம் இலை மெய்த் தன்மைது உணாத் தன்மை ஏனைக்
காரண காரியங்கள் கண்டு உண்பார் அறிஞர் அம்மா
** பொருந்தும் உணவால் திருந்தும் அகமும்

#365
தக உணும் அனம் உண்டோனைத் தாங்குமால் வயிறு கீள
மிக உணும் அனத்தை உண்டோன் விறலொடு தாங்க வேண்டும்
அகம் உறும் அவனைப் பல்லோர் அனுதினம் சுமக்க வேண்டும்
இகம் உறும் அவனைப் பூமாது எவ்வணம் சுமப்பாள் அம்மா
** அற்றதறிந்து அளவூண் கொள்ளுதல் ஆக்கம்

#366
மாந்த அனம் அழிந்து தக்க மலசலம் கழிந்து ஊண் ஆவல்
சார்ந்த பின் உணும் சிற்றுண்டி சபலமாம் மீதூண் உண்டு
சோர்ந்திட அதைத் தான் தாங்கிச் சுமக்குதல் தன்னைத் தூக்க
நேர்ந்த மாவினைத் தான் தூக்கி நெஞ்சம் புண்ணாதல் போலும்
** அகட்டில் பல்லுணவு அடைப்போன் அழிவன்

#367
புட்களும் விலங்கும் ஒவ்வோர் இரையையே புசிக்கும் மாந்தர்
உட்கல் இலாது யாவும் உண்பர் அன்றியும் சற்றேனும்
வெட்கம் இல்லாத கட்டின் மிகமிக அடைப்பர் உப்பு ஆர்
மண்கலம் என அன்னார் மெய் மட்கலாம் வட்கலாமால்

@37 அதி. 36 – தற்புகழ்
** பிறரால் புகழப் பெறுவதே பெருமை

#368
தன் துதி பிற சொலத் தகும் அன்னோர் புகழ்
இன்றியே தன்னைத்தான் ஏத்தல் ஊர்தியில்
ஒன்றும் மா பூட்டிடாது ஒருவன் உள்ளுறூஉம்
மன்றவே நடத்துவான் வலித்தல் மானுமே
** நேரில் புகழ்வது நினைக்கில் வைவாம்

#369
ஒருவன் காணாவிடத்து உவனை மெச்சலே
தருமமாம் முகத்துதி சாற்றல் வைதலாம்
பெரும் முறை ஈது எனில் பிறர் முன் தன்னைத்தான்
பொருள் என மெச்சல் போல் புன்மை வேறு உண்டோ
** பல்லக்கைத் தான் சுமக்கும் பண்பே தற்புகழ்தல்

#370
தன் துதி பிறர் சொலத் தகும் தன் வாயினால்
ஒன்று உறத் தன் துதி ஓதல் ஊர்ந்து தான்
சென்றிடும் ஊர்தியைச் சிவிகையார் இன்றித்
துன்று தன் தோளினால் சுமத்தல் போலுமே
** மழைப்பயிர் வளம்போல் மன்னும் நற்புகழ்

#371
நீரினால் பயிர் வளம் நிலைத்தல் போல் குணச்
சீரினால் புகழ்ப் பயிர் செழிக்க வேண்டும் நல்
பேர் இலான் தற்புகழ் பிடித்து இழுத்து அரு
மாரி_இல் பயிரினை வளர்த்தல் மானுமே
** நல்லொ ழுக்கமே நற்புகழ் பெறும்வழி

#372
தற்புகழ்வோன்-தனைப் பழிக்கும் தாரணி
சொல் புகழ் விரும்பிடான் தனைத் துதித்திடும்
நற்புகழ் பெறு வழி நல் நடக்கையோடு
அற்பமும் தற்புகழாமை ஆகுமே
** தன்னை நெடிதாக்கத் தான் தூக்கல் தற்புகழ்தல்

#373
துதி பெற ஆதரம் மிகலாலே தூயவர் ஆகுவர் கலை தேறி
மதியினர் ஆகுவர் அரி போல வலியினர் ஆகுவரேயேனும்
அதி துதி பிறர் சொலின் அழகு ஆகும் அமைவொடு தன் துதி தான் கூறல்
கதி தனது உடல் உயர்வுறவே தன் கைகொடு தூக்கிட உனல் போலும்
** தன்னைத்தான் புகழில் இகழ்வே சாரும்

#374
சடமதைக் கழுவ உன்னிச் சகதியில் தோய்தல் போலும்
சுடரினைத் தூண்ட வேண்டி ஊதியே தொலைத்தல் போலும்
மடமையால் தன்னைத்தானே புகழுவோன் வசைகள் எல்லாம்
புடவியே எடுத்துரைக்கப் பூணுவன் நிந்தை அம்மா
** தற்புகழ்வோர் துரும்புபோல் தாந்திரிந் துழல்வர்

#375
குல மணி வெளியுறாது ஆழ் குரவையூடு ஒளித்திருக்கும்
சலம் மிசை எவரும் காணச் சஞ்சரித்திடும் துரும்பு
கலம் என மானம் பூண்ட கலைவலோர் அடங்கி நிற்பர்
புலன்_இல் சீத்தையர் தமைத்தாம் புகழ்ந்து எங்கும் திரிவர் மாதோ

@38 அதி. 37 – புகழும் இகழும் மதியாமை
** உலகோர் புகழிகழ் உள்ளவா றாகா

#376
தன் துணை இலானே உள்ளத் தன்மையை அறிவான் பூமி
இன்று ஒருவனைத் துதிக்கும் ஏசிடும் அவனைப் பின்னும்
நன்றினைத் தீது என்று உன்னும் தீதை நன்று என்ன உன்னும்
பொன்றும் மானிடர் புகழ்ச்சி புனலின் மேல் எழுத்துக்கு ஒப்பே
** பிறர் சொலால் துன்புறுத்தும் நெஞ்சம் நஞ்சொக்கும்

#377
வசையும் மீக்கூற்றும் மற்றோர் வாய் வரு வாயு அல்லால்
பசை உளதோ அக் காற்றைப் பாரில் ஓர் பொருள் என்று எண்ணி
இசையினால் மகிழ்வும் பேசும் இகழ்வினால் துயரும் உற்று
நசையினால் கொல்லும் நெஞ்சம் நஞ்சமே ஒக்கும் மாதோ
** நாய்கழுதை புள்ளொலிபோல் நாடிடுக கொடுஞ்சொல்லை

#378
சுணங்கன் ஓர்பால் குரைக்கும் சூழ் கரம் கத்தும் ஓர்பால்
பிணங்கியே புள் ஒலிக்கும் பெரும் பறை ஓர்பால் ஆர்க்கும்
இணங்கி இவ் ஒலிகள் எல்லாம் ஏற்கின்ற செவி ஓர் தீயன்
குணம் கெடக் கூறும் வன்சொல் கொண்டிடில் குறை என் நெஞ்சே
** தொழும் அருள் இலார்புகழ் துன்பமேற் பூச்சே

#379
பகவனது அருளும் நெஞ்சும் பழிச்சலும் நிலையாம் தன்னை
அகம் முனிந்து அனல் போல் தீக்க அறம் என்பது ஒருபால் சீறச்
சகம் எலாம் புகழ்தல் மெய் மேல் சைத்திய உபசாரங்கள்
சுகம் இலாக் கொடிய தாபச் சுரத்தினார்க்கு இயற்றல் போலும்
** குணங்கொள்ளிற் குறைவிலாப் புகழ்கை கூடும்

#380
மங்கல்_இல் சீர்த்தி வேட்டாய் மடம் சினம் உலோபம் மோகம்
அங்கதம் முதல் யாவிற்கும் விடைகொடுத்து அறிவு அன்பு ஈகை
பங்கம்_இல் குணங்கள் யாவும் வாழும் ஓர் பதி நீ ஆயின்
சிங்கல்_இல் புகழ் கொள்வாய் உன் சிரத்தின் மேல் ஆணை நெஞ்சே
** உள்ளும் புறமும் ஒவ்வாச்சொல் உண்மையன்று

#381
அத்தி சூழ் உலகில் சில்லோர் அகத்து ஒன்றும் வாக்கில் ஒன்றும்
வைத்து இதம் சொல்லால் யாவும் வனச் செவி ஏற்பது அன்றிச்
சத்தியம் எனக் கொண்டு ஏகல் சக்கினை மூடி நீண்ட
பித்திகை ஏறிச் செல்லும் பேதைமை நிகர்க்கும் மாதோ
** பகைவர்சொல் ஆய்வால் பயன்பெரி துண்டாம்

#382
தன்னைத் தன் குணத் தன்மையைத் தேரவே
உன்னுகின்றவன் ஓங்கிய நட்பினோர்
நல் நயச் சொல் நம்பாமல் நள்ளார் தினம்
பன்னும் மாற்றங்கள் நம்பில் பயன் அரோ

@39 அதி.38 – கைம்மாறு கருதா உதவி
** ஊண்மனை மருந் தின்பம் உறவாதல் உதவி

#383
அனமிலார்க்கு அனமாய் வாழ அகமிலார்க்கு அகமாய்த் துன்ப
மனமுளார்க்கு உவப்பாய் நோயின் வருந்துவோர்க்கு அரு மருந்தாய்த்
தனமிலார்க்கு அரும் பொன்னாய் நற்றாய் தந்தையிலார்க்கு அன்னாராய்
இனமிலார்க்கு இனமாய் யார்க்கும் யாவுமாய் இசைதல் அன்பே
** ஏழைகட்கு உதவாது இருப்பது இழுக்கு

#384
அருந்தவே கூழும் பூண ஆடையும் வீடும் இன்றி
வருந்துவோர் எண்ணிலார் நம் மருங்குளார் என அறிந்தும்
விருந்திடாய் மணி மாடத்து மேவி நீ ஒருவன் வாழப்
பொருந்தினாய் மனமே மக்கள்போலி நீ விலங்கு ஆனாயே
** ஊண் உடையின் மிச்சமெலாம் உதவுவோர் வீடடைவர்

#385
ஏவல்செய்வோர்க்குக் கூலி இடைத் துகில் உணவாம் யாம் ஓர்
காவலன் எனினும் சோறு கலை அன்றி ஒன்றும் காணோம்
ஆவலாய்ப் பொருளை ஈட்டி அயலவர்க்காச் சுமந்தோம்
ஈவதை மேற்கொண்டேமேல் இணை_இல் வீடு அடைவோம் நெஞ்சே
** கையேந்தும் ஏழைபோல் கடவுளும் வருவன்

#386
சாந்தம் ஆர் வறியர் போலத் தற்பரன் வருவான் தா என்று
ஏந்து கை வீடு கொள் என்று ஏந்து கையாம் அக் கையில்
ஈந்த பொன் விலை போல் வீட்டுக்கு இட்ட பொன் ஆம் அன்னாரைக்
காய்ந்து இலை என்போர் வேண்டோம் கதி என்பார் போலும் மாதோ
** ஈவோர்க் கின்பும் ஈயார்க்குத்துன்பும் ஈவர் இரப்போர்

#387
இரவலர்-தம்மை எள்ளும் ஏழைகாள் இயம்பக் கேளீர்
நரகை மோக்கத்தை விற்க நண்ணிய வணிகர் அன்னார்
பரகதி அவரைத் தாங்கும் பண்பினார்க்கு ஈவர் அள்ளல்
கரவுளார்க்கு ஈவர் என்னின் அவர் கதை கழறல் என்னே
** புகழும் நாடாது செய்வதே புண்ணியம்

#388
பிறர் புகழினைக் கைம்மாற்றைப் பேணியே உதவிசெய்வோர்
அறமுளார் அல்லர் நித்தன் அருட்குமே அருகர் அல்லர்
திற வலக்கரம் செய் நன்றைத் திகழ் இடக்கரம் காணாமல்
வறியர் பாத்திரம் அறிந்து வழங்குவோர் மாட்சியோரே
** உற்றிடத் துதவி உலகினும் பெரிது

#389
மக்கள்-தம் பொறையைத் தாங்கும் மகிக்கும் அன்னாரைக் காக்க
மிக்க நீர் பொழியாநின்ற விண் முகிலினுக்கும் செய்யத்
தக்க ஓர் எதிர்நன்று உண்டோ சமயத்து ஓர் பயனும் வேண்டாது
ஒக்கவே செய்த நன்றி உலகினும் பெரிதாம் மாதோ
** உயிரும் ஈந்து பிறர்க்கு உதவுவர் நல்லோர்

#390
மன்னிய கனி காய் நீழல் மற்று எலாம் உதவிப் பின்னும்
தன்னையும் உதவாநின்ற தரு எனத் தம் கை ஆர்ந்த
பொன் எலாம் உதவிப் பின்னும் பூட்சியால் உழைத்திட்டேனும்
இன் உயிர் உதவியேனும் இடுக்கண் தீர்ப்பார் நல்லோரே
** பகைவர்க்குச் செய்யும் உதவிக்குப் பேரின்பம் பயன்

#391
நள்ளுநர்-தமக்கும் என்றும் நன்று எமக்கு இயற்றுவோர்க்கும்
உள் உவந்து இயற்றுகின்ற உதவிதான் அரியது அன்று
புள்ளுவம் இழைக்காநின்ற பொருந்தலர்க்கு ஆற்றும் நன்றி
விள்ளும் வீட்டு இன்பம்-தன்னை விளைக்கின்ற வித்தாம் நெஞ்சே
** அளவிலார் உதவியால் ஆவி வாழும்

#392
ஊட்டி நீர் கறி உடை பணி விறகு இல் உரிய யாவையும் நாம் பெறுவான் பல்
நாட்டில் காட்டில் பொன் சுரங்கத்தில் கடலின் அகத்தில் எண்ணிறந்தவர் நமக்கு உழைப்பார்
சூட்டி வைகலும் ஆயிரம் பேர்-தம் துணை இலாது உயிர் உயல் நமக்கு அரிதாம்
ஆட்டி இத்தனை பேர் பணிகொளும் நாம் அன்பு இலாது இருப்பது தகாது உளமே
** பிறர்க்குள்ளன நமக்கென்று உதவுவோர் பேரன்பர்

#393
சீவ அன்பு சுகுணங்களின் முதலாம் தீது_இல் அன்பையுடையோர் பிறர் துயர் தமது
ஆவது என்ன அயர்வார் பிறர் சுகமும் தம்மது என்ன மகிழ்வார் தினம் வணிகர்
மேவலோடு கொளுவோர் வரவு உன்னும் விதம் எனத் தம சகாயமது உறவே
யாவர் சார்வர் என ஆசையின் நோக்கி ஏன்றமட்டும் நலமே புரிவாரால்
** அன்பின்றேல் பேரின்பம் அடையார் யாரும்

#394
எவ் வருணர் எச் சமயர் எப் பதியர் எத் தொழிலர் எனினும் நாணோடு
அவ்வவர்கள் எவ்வம் உரையா முனம் உணர்ந்து உதவல் அன்பின் நிலையாம்
இவ் அரிய அன்புடைமை இன்றி நிருவாணம் உற எண்ணி விழைதல்
பௌவ உலகத்து உருள்_இல் தேரினை நடாத்த உனு பான்மை நிகரால்
** துன்பந் துடைப்போர் கலைதேர் தூயோராவர்

#395
கலை தேர் கழகமோடு அனம் நீர் தரும் மனை கயம் மா மதகுகள் வழி சாலை
நிலை ஆலயம் நலியினர் வாழிடம் முதல் நிருமாணமது உற நெறி மேவி
உலைவால் வருபவர் துயரே கெட அவர் உளமானது மகிழ்வொடு தேறக்
கலை ஊண் அகம் முதல் இனிது ஈகுவர் வளர் கலையோர் நிலையுறு தலையோரே
** ஆண்டவன் அருள் பொருள் அனைவர்க்கும் பொதுவே

#396
எல்லோரும் கொளவே பரமன் எண்_இல் பொருள் ஈந்தான்
சில்லோர் யாவும் வவ்வி ஒளிக்குபு தீமைகள் செய்தலினால்
பல்லோர் இல்லோராய்ப் பசிப்பிணி பாய்ந்து உளம் நைவார்கள்
சொல்லோர் நல்லோர் தாம் இல்லோரைக் கைதூக்கி அளிப்பாரால்
** உளமுவந் தீபவை உயிர்க்குறுதி யாகும்

#397
துய்க்கும் பொருள்களுமே நமது அல துய்த்தல் இல்லாது சும்மா
வைக்கும் பொருள்களுமே நமது அல மாண்ட பின் கூட வரா
எய்க்கும் வறுமையினார்க்கு அனுதினம் ஈயும் பொருள் நமது
கைக்குள் உறு பொருளாம் இதனைக் கண்டு உணராய் மனமே
** பெருந்துன்புற்றும் பெரியோர் பிறர்நோய் ஒழிப்பார்

#398
நூல் நுழைந்த நுவல் அரும் சீலர் தம்-
பால் நுழைந்த படர் மதியார் பிறர்
கால் நுழைந்த கடுவும் தம் கண்ணில் வை
வேல் நுழைந்து என முன்னி மிறைப்பரே
** பிறர்துயர் போக்கிப் பேணுக புகழுடல்

#399
புறம் வருந்திடப் பூத உடம்பினை
மற உடம்பை வளர்ப்பர் அறிவிலார்
உற இடும்பை உறா வண்ணம் ஈந்து நல்
அற உடம்பை வளர்ப்பர் அறிஞரே
** தேடிநல் உதவிசெய்வோர் பெரியோர்

#400
ஓடி எங்கும் உலரும் பைங்கூழ்களை
நாடி மை முகில் நல் மழை பெய்தல் போல்
வாடி நையும் வறிஞர் இருக்கையைத்
தேடி மேலவர் செய்வர் உதவியே
** இரந்தும் ஏழைகளுக்கு ஈவர் நல்லோர்

#401
காரிடத்து இரந்தேனும் கயம் நதி
நீரினைப் பணை எங்கும் நிறைத்தல் போல்
யாரிடத்து இரந்தேனும் அறமுளார்
பாரிடத்துப் பகுப்பர் வறிஞர்க்கே
** ஆல்போல் பிறர்க்கு நன்மை ஆற்றுவர் நல்லோர்

#402
சாடு வெம் கோடையைத் தலையில் தாங்கியும்
மாடுளோர்க்கு அரு நிழல் வழங்கும் ஆல் எனக்
கேடு தம்-பால் மிகக் கிளைக்கினும் குணப்
பீடுளோர் நன்மையே பிறர்க்குச் செய்வரால்
** பிறர்க்குதவி இன்பம் பெறுவர் மேலோர்

#403
இதம் இலா உலோபர் தம் பொருளை எண்ணியே
மதமொடு நாள்-தொறும் மகிழ்வர் மேலவர்
பதவி தீர் மிடியர்க்குப் பரிவின் தாம் செயும்
உதவியை உனும்-தொறும் உளம் களிப்பரே
** பிறர்க்குதவி செய்வோர் பேரின்பம் பெறுவர்

#404
காமமே இன்பங்கள் கணத்தில் நீங்கிப் பின்
தீமையே விளைத்திடும் பிறர்க்குச் செய்கின்ற
சேம நல் உதவியால் சேரும் இன்பம்தான்
நேம வீட்டு இன்பு என நிகரும் மற்று அதே

@40 அதி. 39 – பொருளாசை யொழித்தல்
** தன்பெயர் எழுதாப்பொருள் தனதெனல் எங்ஙனம்

#405
என் பொருள் என் பொருள் என்று சீவன்விடும் மனமே ஒன்று இயம்பக் கேளாய்
உன் பொருளானால் அதன் மேல் உன் நாமம் வரைந்துளதோ உன்றனோடு
முன் பிறந்து வளர்ந்தது-கொல் இனி உனை விட்டு அகலாதோ முதிர்ந்து நீ தான்
பின்பு இறக்கும் போது அதுவும் கூட இறந்திடும்-கொல்லோ பேசுவாயே
** துன்பெலாம் பெருக்குபொருள் தூயபொருள் ஆகா

#406
ஒப்பு அரு நற்குணத்தவர்க்கும் கொலை காமம் கள் களவை உபதேசிக்கும்
அப்பனாய் நட்பினர்க்குள் பகை விளைக்கும் சத்துருவாய் அகிலத்து உற்ற
செப்ப அரிய துயர்க்கு எல்லாம் மாதாவாய்த் தீவினைக்கு ஓர் செவிலி ஆய
இப் பொருளை நற்பொருள் என்று எப்படி நீ ஒப்புகின்றாய் ஏழை நெஞ்சே
** உடற்பயனை ஒழிக்கும் பொருள் உயர்பொருளாகா

#407
நோக்கு இருந்தும் அந்தகராக் காது இருந்தும் செவிடரா நோய் இல்லாத
வாக்கு இருந்தும் மூகையரா மதி இருந்தும் இல்லாரா வளரும் கை கால்
போக்கு இருந்தும் முடவரா உயிர் இருந்தும் இல்லாத பூட்சியாரா
ஆக்கும் இந்தத் தனமதனை ஆக்கம் என நினைத்தனை நீ அகக்குரங்கே
** செல்வர்பால் கூற்றுவன் சேர்வது இன்றோ

#408
நிறை செல்வம் உடையாரை நோய் துன்பு அணுகாவோ நினைத்தது எல்லாம்
குறை இன்றிப் பெறுவரோ புவிக்கு அரசு செலுத்துவரோ குறித்த ஆயுள்
பிறை என்ன வளருமோ இயமன் வர அஞ்சுவனோ பேரின்பத்துக்கு
உறையுளோ அவர் கிரகம் இவை எலாம் மனமே நீ உன்னுவாயே
** களவுங் கூத்தும்போல் அழியும் வாழ்வு

#409
கனவதனில் கண்ட பொருள் செலவுக்கு ஆமோ குனிக்கும் கங்குல் கூத்தில்
இனர் அமைச்சர் என வேடம் புனைந்தவர்-தம் ஆணை எங்கும் ஏகுமோ விண்
கனம் மின் போல் ஒழியும் அந்தப் புவி வாழ்வு நிலை என்னக் கருதிக் கோடி
நினைவுற்றாய் உடல் வீழின் என் செய்வாய் அறிவு இல்லா நெஞ்சக் கல்லே
** வெள்ளி பொன் பொருளெலாம் வெறுமண் குவியலே

#410
பஞ்சபூதங்களை விண் தாரகையைத் தண் மதியைப் பானுத்-தன்னைக்
கொஞ்சமும் நம் பொருள் என உன்னாமல் வெள்ளி பொன் எனும் மண் குப்பை-தன்னைத்
தஞ்சமாம் பொருள்கள் என நினைத்து அதன் மேல் ஆசையுற்றுத் தயங்குகின்றாய்
நெஞ்சமே உனைப் போலும் அறிவீனர் தேடினும் இ நிலத்தில் உண்டோ
** எல்லா மக்களும் சுற்றம் இவ்வுலகம் வீடே

#411
பூதலம் நம் இல்லம் வான் மேல் பந்தர் சசி கதிர் மீன் பொன் தீபங்கள்
சீத நீர்க் கடல் விருட்சாதி கணம் பூம் பொழில் உலகின் செல்வம் எல்லாம்
வீதமா நமது மக்கள் யாவரும் நம் சுற்றம் என வியந்து உன்னாமல்
பேதம்செய்து உழல்கின்றாய் நெஞ்சமே உனைப் போலும் பித்தர் உண்டோ
** செல்வம் ஐம்பூதம் ஆண்டான் திருத்தந்தை

#412
பூதமதின் ஒன்று நமைத் தாங்கும் அன்னை ஒன்று நாம் புசிக்கும் உண்டி
மா தரையில் ஒன்று உரிய சமையலாள் ஒன்று நம் மெய் வளச் சாந்தாற்றி
பேதம் இன்றி மற்றொன்று நாம் ஊரும் வாகனமாம் பின்னும் ஆதி
நாதனே தந்தை எனில் செல்வம் இது போலும் உண்டோ நவிலாய் நெஞ்சே
** ஊண் உடைமேல் உள்ளபொருள் ஒல்லாச் சுமை மயக்கே

#413
மண்டு பெரும் தனம் இருந்தும் கண்டு மகிழுவது அல்லால் மயல் போல் முற்றும்
உண்டுவிட ஒண்ணுமோ நினைவிற்கும் பஞ்சமோ உலகம்-தன்னில்
கண்ட பொருள் அத்தனையும் எமது செல்வர் அப் பொருளைக் காத்து எமக்குத்
தொண்டுசெய்வோர் என உன்னி மகிழ்வுற்றால் தலை போமோ சொல்லாய் நெஞ்சே
** நம்மைவிட் டகல்பொருளை நல்லார்க்குக் கொடுத்தல் நலம்

#414
எத்தனை பேர் கையில் முன்னம் இப் பொருள்தான் இருந்தது அவர் எல்லாம் தத்தம்
அத்தம் என நம்பினார் அவர்களை விட்டு அகன்று உன் கை அமர்ந்தது இன்னும்
சத்தம் இன்றி உனை மோசம்செய்து அனந்தம் பேர் கரத்தில் சாரும் சொன்னேன்
சித்தமே அது செல்லும் முன் நீ சற்பாத்திரத்தில் செலவிடாயே
** செல்வமெனப் பெயரிடலால் சிலர் வறுமைப் பேர்பெற்றார்

#415
கதிரவனால் ஒளியுறும் பல் வகைக் கல்லை மணி என்றும் காமர் மண்ணை
நிதி வெள்ளி உலோகம் என்றும் பெயரிட்டும் விலையிட்டும் நிகழ் அ மண்ணால்
சதியான காசு பணம் எனச் செய்தும் தரையின் மிடி-தனை அமைத்தோர்
மதி இலா நரர் அன்றிக் கடவுளோ சொல்லுவாய் மருள் சேர் நெஞ்சே
** தேவைக்குமேல் செல்வமெலாம் சேர்ப்ப தெதன்பொருட்டு

#416
தரை எலாம் நமது எனினும் இருப்பிடம் ஓர் முழமே நல் தானியங்கள்
வரை என்னக் குவிந்துகிடந்தாலும் உண்பது அரை நாழி வளர் அவாவால்
திரை கடல் எலாம் பருக உன்னும் நாய் என நமக்குத் தேவையில்லாக்
கரை_இல் நிதி காணி தானியங்கள் நீ வேட்டது என்ன கருத்தே சொல்லாய்
** மிகுபொருள் படைத்தோர்க்குத் துன்பம் மிகுமே

#417
பொலம் மிக உள்ளார்க்கு உணவின் சுவை இன்று பசி இன்று புசிக்கும் அன்னம்
அலமாய் அறாது ஓயாக் கவலை பிணி பிடகர் பலர் அருகில் வேண்டும்
பலர் உடலைத் தாங்கினுமோ சுமக்க அரிது ஊர்ப் பகை பயம் இப் பையுள் எல்லாம்
இலர் உறுகணாளர் எனில் செல்வர் எவர் மிடியர் எவர் இயம்பாய் நெஞ்சே
** பெற்றவை கொண்டு மனநிறைதல் பேரின்பம்

#418
பறவையும் விலங்கும் தீனி பசித்த பின் தேடும் நாளைக்
குறை எனுங் கவலை இல்லை உணவு இன்றி இறந்தது இல்லை
வறியர் எம்மில் பல்லோர் இவ் வையகத்து உளர் தேவு ஈந்த
சிறிதுமே பெரிது என்று எண்ணிச் சிந்தையே மகிழ்ந்துகொள்ளே

@41 அதி. 40 – யாக்கை நிலையாமை
** பொழுதுநாள் ஆண்டெனப் போகும் வாழ்நாள்

#419
நெருநலோ அகன்றது இன்று விடிந்து பகல் ஆயிற்று நிமிடம்-தன்னில்
அருணனே அத்தமிப்பன் நிசி வரும் பின்போ மறுநாளாம் இவ் வண்ணம்
ஒரு நாளாப் பல நாளாத் திங்களா ஆண்டுகளா உருவுகொண்டு இங்கு
அரு நாளாம் ஆயுள் நாள் கழிவதனை உணராயோ அவல நெஞ்சே
** மறைந்த கூற்றை மனங்கொண்டு வாழ்க

#420
வையால் செய் புணை நம்பி அனல் ஆழி கடக்க உன்னும் மதி இலார் போல்
பொய்யால் செய் மெய் நம்பி ஏதேதோ நினைவுற்றாய் புரை சேர் நெஞ்சே
பைய ஓர் புள் பிடிக்கக் ககனம் மிசை வட்டமிடும் பருந்து போல
ஐயோ கூற்று உனைப் பிடிக்க அற்றம் பார்த்து ஒளித்துநின்றது அறிகிலாயோ
** மலமிகும் உடலை மதிப்பது மயக்கே

#421
தினமும் விரேசனம் கொளினும் ஓயாமல் மலமாரி திரளாப் பெய்யும்
கனம் போலும் தேகம் இதைப் பிரித்து நோக்கிடின் மலம் நீர் கசியும் செந்நீர்
இன மாலை தோல் என்பு தசை நரம்பு குடர் அன்றி இனி வேறு உண்டோ
மனமே நீ இதையும் ஒரு பொருள் என்ன உன்ன என்ன மருளுற்றாயே
** உயிர்நீங்கின் மக்களுடல் ஒன்றுக்கும் பயனாகா

#422
மாடு ஆடு விலங்கு இறப்பின் தசை மயிர் தோல் கொம்பு உதவும் மண்கலம்தான்
ஓடாக உடையின் ஒன்றுக்கு உதவும் வீழ் மரம் கல்லும் உபயோகம்தான்
வீடானது இடியின் மேல் பொருள் உதவும் காடு அழியின் விறகாம் மாயக்
கூடாகும் தேகம் இது வீழின் எதற்கு உதவும் நீ கூறாய் நெஞ்சே
** மரஞ்செடிக்குச் சொல்காலம் மக்களுடற் கின்றாம்

#423
காடு சேர் மரம் செடி பார்த்து இத்தனை நாள் நிற்கும் எனக் கணிக்கலாம் சீர்
நாடு நீர்த்தடம் நோக்கி இத்தனை நாள் புனல் என்ன நவிலலாம் ஓர்
வீடுதான் இத்தனை நாள் நிற்கும் என விளம்பலாம் மெய் என்னும் பொய்க்
கூடுதான் இத்தனை நாள் நிற்கும் எனப் புவியில் எவர் கூறற்பாலார்
** நம்முயிர் கொள்ளக் காலம் நாடிடான் நமனே

#424
நெல் அறுக்க ஓர் காலம் மலர் கொய்ய ஓர் காலம் நெடிய பாரக்
கல் அறுக்க ஓர் காலம் மரம் அறுக்க ஓர் காலக் கணிதம் உண்டு
வல் அரக்கன் அனைய நமன் நினைத்த போது எல்லாம் நம் வாழ்நாள் என்னும்
புல் அறுக்க வருவன் எனில் நெஞ்சமே மற்று இனி யாம் புகல்வது என்னே
** யாக்கை இறப்பதற்கு எல்லையில்லை

#425
முற்றிய பின் கனி உதிரும் பழுப்புற்றுத் தழை உதிரும் முழுதுமே நெய்
வற்றிய பின் விளக்கு அவியும் என்ன ஓர் திடம் உண்டு மக்கள் காயம்
பற்றிய அக் கருப்பத்தோ பிறக்கும் போதோ பாலப் பருவத்தோ மூப்
புற்ற பின்போ வீழ்வது என நிலை இன்றேல் இதன் பெருமை உரைப்பது என்னே
** இறப்பகற்ற அறியார்செய் வியப்பால் என்பயன்

#426
புகைவண்டி ஊர்ந்து உலகை நொடிக்குள்ளே சுற்றுவோம் புகைக்கூண்டு ஏறிக்
ககனம் மிசைப் பறவை எனப் பறப்போம் ஓர் புகைக்கலத்தால் கடல் கடப்போம்
வகையாய் மின்னஞ்சலினால் எத்திசை உள்ளாரோடும் வார்த்தை சொல்வோம்
மிகையான புதுமை செய்வோம் மரணமதை விலக்க அறியோம் வியப்பு ஈது அன்றோ
** ஆக்கை மாளுநாட் கடையாள மறியோம்

#427
அண்டாண்டங்களின் தூர நிலை அளவு கூறுவோம் அருக்கன் திங்கட்கு
உண்டாகும் கிராணமதை முன்சொலுவோம் கடிகாரத்து உதவிகொண்டு
தண்டாத காலமதை அளவிடுவோம் இன்னும் மிகு சமர்த்தும் செய்வோம்
கொண்டாடும் தேகம் இது வீழ் காலம் அறிவதற்கு ஓர் குறிப்பு இன்று அம்மா
** உலகியற் பொருளெலாம் கூற்றுவன் உறுபசை

#428
மண்டலத்தார் உயிர்வாங்க நமன் கொண்ட ஆயுதத்தின் வகுப்பை நோக்கில்
கொண்டல் இடி மின் நீர் கால் அனல் மரம் கல் மண் நோய் மீன் கொடிய புட்கள்
உண்டி விலங்கு இன்பதுன்பம் பகை அச்சம் ஊர்வன பேய் உலகில் இன்னும்
கண்டது எல்லாம் அவன் கை ஆயுதம் என்னில் தப்பும் வகை காணோம் நெஞ்சே
** இறப்போர்க் கண்டும் மெய் எண்ணாய் நெஞ்சே

#429
விரி ஆழி நுண்மணலைத் தாரகையை எண்ணிடினும் வீந்தோர்-தம்மைச்
சரியா எண்ணிடத் தகுமோ இன்னமும் நம் கண் முன்னம் சாவோர்-தம்மைத்
தெரியாது போல் தினமும் வீண்காலம் கழிக்கின்றாய் திடமாய் என்று
மரியாமை உற்றனையோ அறியாமை பெற்றனையோ வழுத்தாய் நெஞ்சே
** நீளச் சுமக்குமுடல் நீர்க்குமிழிபோற் கெடும்

#430
அனம் மிகிலோ வாயு குறையில் சூடு உண்ணாவிடில் இன் ஆவி நீங்கும்
கனமான வெய்யில் மழை பனி உதவாது அவை இன்றேல் கணம் நில்லாது
தினமும் ஆயிரம் கண்டம் இமைப்போதாகிலும் அதன் மேல் சிந்தை இன்றேல்
புனல் மொக்குள் என அழியும் நெஞ்சமே நாம் சுமக்கும் பூட்சிதானே
** உறுதியற்ற வாழ்நாட்கு உள்ளமே செய்வதென்

#431
பொன்றும் நாள் இன்னது என நிலை உண்டேல் ஆழி சூழ் புவியோர் ஆயுள்
ஒன்றிரண்டு நாள் எனினும் போதும் நூறாண்டு என்று ஓர் உரை உண்டேனும்
இன்றோ இக் கணமோ பின் உறும் கணமோ மாலையோ இரவோ சாவது
என்றோ என்று ஓர் உறுதி இல்லாத ஆயுள் இதற்கு என் செய்வோமே
** ஆடு மாடு நெல்லால் ஆமுடற்கு அப்பெயர்

#432
தொல் உலகில் புல் இலை உண் ஆடு முதல் உயிர்களை நல் சுரபிப் பாலை
நெல்லுடன் பல் தானியத்தைக் காய் கனியைக் கிழங்கு இலையை நிதமும் உண்டு
மல்லுறவே வளரும் இந்தக் காயத்தை மரம் என்றும் மாடு ஆடு என்றும்
புல் என்றும் நெல் என்றும் செடி என்றும் கொடி என்றும் புகலலாமே
** உணவின் வழியே உருக்கொண்ட துடம்பு

#433
ஆதியில் புல் இலை கனி காய்த் தானியமாய் மீன் பறவை ஆடு மாடாய்
மேதினியில் இருந்து தாய் தந்தை உடல் சேர்ந்து ஒருநாள் வெளியே வந்து அங்கு
ஓதிய பண்டங்கள் தின்று பெருத்து இறந்து பல செந்துக்கு உணவாய்ப் பஞ்ச
பூதியமாய் நாசமாய்ப் போம் நெஞ்சே நாம் சுமக்கும் பூட்சிதானே
** உடல் பிணமாயின் நெருங்கார் ஒருவரும்

#434
எமது எனும் மெய் பிறக்கும் முன் எங்கு இருந்தது இன்னம் சில காலத்து எங்கே செல்லும்
அமர் உயிர் நீங்கிய பின் ஓர் கணமும் அனை சேயர் இதன் அருகே நில்லார்
தமர் சவம் என்று எடுத்து எறிவார் பறவை விலங்கினம் கூடித் தத்திக் கொத்தி
அமர்செய்து புசிக்கும் அப்போது என் என்று கேட்பவர் ஆர் அறிவு_இல் நெஞ்சே

@42 அதி. 41 – துன்பம்
** கொடுந்துயர்க் கஞ்சல்மீன் குளிர்க்கஞ் சுதலாம்

#435
பாரில் யார்க்கும் பழங்கண் சகசமாம்
வீரியம் கெட வெம் துயர்க்கு அஞ்சுதல்
போரில் நேர்ந்தவன் பொன்றலுக்கு அஞ்சலும்
நீரில் மீன் குளிர்க்கு அஞ்சலும் நேருமே
** இறக்கும் வரை உள்ள துன்பம் எண்ணி மகவு அழும்

#436
பிறந்த சேய் உடனே அழும் பீழைதான்
சிறந்த மா நிலம் சேர்ந்து பின் ஆருயிர்
இறந்துபோம் அளவும் துயர் என்பதை
அறிந்து நீர் விட்டு அனுங்கலை ஒக்குமே
** நிலைத்த இன்பம் நீளுலகில் இன்று

#437
கோடி பொன் உடையவர் எனினும் கோ முடி
சூடிய வேந்தரே எனினும் துன்பொடும்
கூடிய வாழ்க்கையர் அன்றிக் கூறுங்கால்
நீடிய சுகம் உளோர் நிலத்தின் இல்லையே
** பொருளிழப்பால் கீழோர் பொறாது பொன்றுவர்

#438
பாக்கிய நிலை எனும் பதகர் ஓர் துயர்
தாக்கிடல் பொறாது உயிர்-தன்னைப் போக்குவர்
ஆக்கிய ஆக்கமும் அஞரும் ஒன்று என
நோக்கிய சீலரை நோய் என் செய்யுமே
** இன்பமும் துன்பமும் ஏற்பர் இயைந்தே

#439
ஒளியினோடு இருள் நிழலொடு வெயில் பொழி உதகத்
துளியினோடு மின் அசனி மா மலையையும் சுழற்றும்
வளியினோடு இளம் தென்றலும் வருதல் போல் மாக்கள்
களியினோடு அரும் துயரமும் கொள்ளுவர் கலந்தே
** அழுது வருந்தினாரே அடைவர் பேரின்பம்

#440
உழுது பண்செயப் புன்செயும் நன்செயாம் உயர் பொன்
முழுதும் தீயினில் சுடச்சுட ஒளிருமால் மொழியும்
பழுது_இல் மா மணி தேய்பட ஒளி மிகும் படர்கொண்டு
அழுது நொந்தவர்க்கு அன்றி மற்றவர்க்கு அறம் அரிதே
** உழைப்பூணுறக்கம் கூடக் குறைய நோயுறும்

#441
ஓங்கு காமத்தால் சோம்பினால் உணவினால் ஊங்கு
தூங்கலால் துயில் இன்மையால் சினத்தினால் துவக்கு
தாங்கொணாத் தொழில் செயல் முதல் ஏதுவால் சடம் நோய்
ஆங்கு உறும் சடம் செய்தவன் கைப்பிழை அன்றால்
** உலக அழிவும் உய்வுக்கே வருமால்

#442
பலர் உய்வான் சிலர்ப் படுத்திடும் பதி எனப் பரன் பார்ச்
சலனம் தீவரை இடி பெரும் கால் முதல் தாபம்
கலவுறச் செயும் காரணம் யாதெனில் கணக்கு_இல்
உலக கோடி சம்பந்தத்தால் என உணர் உளமே
** பத்தரை ஆளவே பரன்துன் பருள்வன்

#443
பத்தர் அன்பினைச் சோதனைபண்ணவும் பார் மேல்
வைத்த வாஞ்சையை மாற்றவும் பேரின்ப வாழ்வில்
சித்தம் எய்தவும் அன்னரைத் துயர்செயும் தெய்வம்
அத்தன் சேயரை அடித்து அறிவுறுத்தல் போல் அம்மா
** வழியாம் உலகுறு மின்பத் துன்பம் மனங்கொளார்

#444
அயல் ஒர் ஒண் பதிக்கு ஏகுவார் வழித் துயர்க்கு அஞ்சார்
வயவை-தன்னில் காண் பொருளையும் வாஞ்சியார் வசுதை
உயர் பெரும் கதிக்கு ஏகுமாறு என்னலால் உலகின்
துயரை இன்பினை மதித்திடார் துகள் அறு நீரார்
** தந்தவன் கொண்டானென்று தாளிணை தொழுவர் நல்லோர்

#445
மனைவி சேய் தமர் தம் முனம் மாளினும் மகியில்
புனையும் சீர் எலாம் ஒழியினும் துன்பம் என்பு உகினும்
அனைய சீர் எலாம் அளித்தவன் கொண்டனன் என்ன
வினையமோடு இனி அவன் அடி பரசுவர் மேலோர்
** ஓட்டைக் குடநீர்போல் உடலுயிர் உறல் வியப்பு

#446
பல் துளைக் கடம் பாணியைத் தாங்குவது அரிதே
எஃகு பல் துளைச் சடத்து உயிர் இருக்கையும் இயை சீர்
அஃகிப் பல் படர் அணுகுறாமையும் அதிசயமாம்
இஃது உனார் துயர்க்கு இடைந்து உறுவார் இறும்பூதே
** வேண்டுவார்க்கு வேண்டுவ தருள்வோன் மெய்ப்பொருள்

#447
நில்லாத செல்வம் அறவோர் வெறுக்கும் நிலையாலும் வான்கதியை அவ்
வல்லார் விரும்பும் வகையாலும் அற்ப மகி வாழ்வு அவர்க்கு இறை தரான்
வில் ஆரும் முத்தி விழையாதவர்க்கு விழல் அன்ன வாழ்வை அருள்வான்
ஒல்லார் விரும்பு பொருள் தந்து வெல்லும் ஒரு நீதி வேந்தன் அனையான்
** துன்பிடைத் தூய்மை சுடர்விடும் பொன்போல்

#448
அறம் என்பதற்கும் அறிவுக்கும் மூலம் அஞர் ஆகும் உலகு இன்பமே
மறம் என்பதற்கும் மடமைக்கும் வித்து மக இச்சை ஆறொழுகல் கண்டு
இறையும் தகப்பன் முனியாமை சீற்ற ஏற்றத்தின் நீர்மை எனல் போல்
உறு புன்கண் இன்றி ஒருவன் சுகங்கள் உறல் ஈசன் முனிவு ஆகுமால்

@43 அதி. 42 – அறஞ்செயல்
** சாங்காலத் தறம் செய்தல் யார்க்குமே சாலாது

#449
பசி மிகுந்த பின் நெல்லை விதைப்பது போல் வீட்டில் தீப் பற்றிக்கொண்டு
நசியும் போது அதை அவிக்க ஆறு வெட்டல் போலும் போர் நடக்குங்காலை
விசிகநூல் கற்க முயல்வது போலும் கபம் மிஞ்சி விக்கிச் சிக்கி
இசிவு கொண்டு சாங்காலத்து எப்படி நீ அறம் புரிவாய் இதயப் பேயே
** முற்பழக்கம் இன்றேல் முடியாது எதுவும்

#450
எத்தொழிலும் முற்பழக்கம் இன்றி எய்தாது அறம் என்னும் இணை ஒன்று இல்லா
அத் தொழில் முற்பழக்கம் இன்றிச் சாங்காலத்து அமையுமோ வரும் மன்றற்கு
வத்திரம் வேண்டின் பருத்தி விதைத்து முன்னம் நெய்யாமல் மணம்செய் காலத்து
ஒத்த துகில் வேண்டும் என எத்தனை பேர் முயன்றாலும் உறுமோ நெஞ்சே
** படித்துப் பழகியபின் கைக்கொளல் எளிதாம்

#451
சிற்பநூல் இலக்கணநூல் வைத்தியநூல் மரக்கலநூல் செருநூல் இன்னம்
பற்பல நூல் உணர்வதினும் புண்ணியநூல் அரிதாமோ பகர் அ நூல்கள்
கற்பதன் முன் அரிது எனினும் பின் எளிதாம் அது போல் நற்கருமம் என்னும்
அற்புதநூல் முயலுவோர்க்கு எளிதாகும் அதை அடைவாய் அறிவின் நெஞ்சே
** நாள் செல வென்பது நம்முயிர்ச் செலவே

#452
தினங்கள் செலச்செல ஏதோ பெற்றது போல் மகிழும் நெஞ்சே தினங்களோடும்
கனம்கொளும் உன் ஆயுள்நாள் கழிவது உணராய் உயிர் தீர் காயம் சேரும்
வனம் கடுகி வா என்ன விளித்து உன்-பால் தினம் நெருங்கும் வன்மை உன்னி
முனம் கொள் அறியாமையை நீ இனங்கொள்ளாது அறம் செய்ய முயலுவாயே
** எல்லையறியா வாழ்நாளதனால் இயற்றுக விரைந்தறம்

#453
இன்று அருணோதயம் கண்டோம் உயர் ககன முகட்டின் மிசை இந்தப் பானு
சென்றடைய நாம் காண்பது ஐயம் அதைக் காண்கினும் மேற்றிசை இருக்கும்
குன்று அடையும் அளவும் நாம் உயிர் வாழ்வது அரிது அதன் முன் குறுகும் கூற்றம்
என்று அச்சத்துடன் மனமே மறவாமல் அறவழியின் ஏகுவாயே
** இறைநினைப் போடறம் இயற்றுதற்கு வருத்தமென்

#454
சிற்று உதர போசணைக்கா மலை ஏறிக் கடல் கடந்து தேயம் எல்லாம்
சுற்றி அனுதினம் அலைவாய் நித்திய பேரின்ப சுகம் தோய வேண்டிச்
சற்றும் உடல் வருந்தல் இன்றி அலைதல் இன்றி ஓரிடத்தே தங்கி மூளும்
பற்றினையே துறந்து சும்மா இருந்து அறம் செய்வதில் என்ன பாரம் நெஞ்சே
** தோற்றத்தே தீமையைத் தொலைத்தல் செம்மை

#455
கலம் ஊறும் சிறு நீரை விரைவின் இறையாவிடின் அக் கலம்தான் மிக்க
சலம் ஊறி அழுந்தும் அது போல் பவத்தை விரைவுற்றுத் தள்ளிடாமல்
நிலம் மீதில் யாம் வாளா இருப்போமேல் பாவங்கள் நிறைந்து மோக்க
நலம் நீங்கி நரகம் எனும் பேராழியிடை வீழ்ந்து நலிவோம் நெஞ்சே
** உடனொழிக் காவிடிற் பாவம் ஒழியாது

#456
பெரு வெள்ளம் சேர்ந்த பின்னர் அதைத் திருப்ப ஒண்ணுமோ பெருத்து நீண்ட
தருவின் கோணலை நிமிர்க்கத் தகுமோ பாவங்களை நீ தள்ளி மேலாம்
கருமமதில் முயல் என்றால் பின்னை ஆகட்டும் என்றாய் கசடு விஞ்சி
ஒரு மலை போல் ஆன பின் எவ்வாறு அதை நீ சாம் பருவத்து ஒழிப்பாய் நெஞ்சே
** தீ நினைப்பால் தீ நோக்கால் பெரும்பாவம் சேரும்

#457
ஏதிலார் பொருள் நோக்கி இச்சையுறல் கவர்ந்தது ஒப்பாம் எழில் மின்னாரைக்
காதலாய் நோக்குதலே கலந்தது ஒப்பாம் பிறர் கேட்டைக் கருதல் அன்னார்
வேதையுறக் கொன்றது ஒப்பாம் இவ்வாறு ஓர் பயன் இன்றி மேவும் பாவம்
ஆதலின் ஐம்பொறி வழியே மனம் செலாது அடக்குவார் அறிவுளோரே
** உயிர்க்கறஞ் செய்யாமல் உடலோம்பல் வீணாம்

#458
பரியூர்வோன்-தனை மறந்து பரிக்கு உபசாரங்கள் மிகப் பண்ணல் போலும்
பெரிய கடவுளைப் பணியாது ஆலயத்தை அலங்கரிக்கும் பித்தர் போலும்
அரிய பொருள் வெளியிட்டுச் செப்பினைக் காத்திடல் போலும் ஆன்மாவுக்கே
உரிய அறம் புரியாமல் உடலினை நீ ஓம்புகின்றாய் உள்ளப் பேயே
** இறந்தவர்க்காய் யாரும் இறந்திடல் செய்யார்

#459
ஓர் உயிர் ஈர் உடல் என்ன நட்ட மைந்தர் மாதர் நமது உயிர் நீங்கில் தம்
ஆருயிரைத் துறப்பரோ அழுவதும் தம் உணவு வைக்க அமைந்த பாண்டம்
பேருலகில் உடைந்தது என அழுவது அன்றி நமக்கு இரங்கும் பேர் இங்கு உண்டோ
சாரும் இவர் நேயமதால் பவம் செய்து வீடு இழத்தல் தகுமோ நெஞ்சே
** ஆண்டவன் அன்போ டுயிர்காத்தல் பேரறம்

#460
முந்தை இறைக்கு அன்பு பின்பு தன் உயிர் போல் மன் உயிரை முறையின் ஓம்பல்
இந்த இரு விதிகளினுள் வேதம் எலாம் அடங்கும் மனம் இன்பம் மேவ
வந்த இகபரம் அளிக்கும் அறம் ஒன்றே அரும் திருவாம் அதன் முன் ஆயின்
சிந்தனை சிந்தனையுறச் செய் புவித் திரு ஏட்டிடை வரைந்த திரு ஒப்பாமால்
** நஞ்சனைய பாவம் நவின்றியற்றல் வருத்தம்

#461
உளது இலை என்ன உரைப்பதே வருத்தம் உண்மை கூறிடல் எளிதாகும்
களவு கள் காமம் கொலைசெயல் வருத்தம் காவலன் தண்டம் ஊர்ப் பகை ஆம்
உளமதை வருத்தும் இகபரம் கெடுக்கும் உண்மையா இவை எலாம் உன்னில்
களம் நிகர் பாவம் செய்தலே கட்டம் கருது அறம் செயல் எளிது அன்றோ
** அறமுடை யாரை அனைவரும் புகழ்வர்

#462
ஒருவனைப் புதிதாக் காணினும் அவனோடு உறவுசெய்யினும் பணிகொளினும்
பெருமையோன் தீயன் என அறியா முன் பேசிடார் தீயனேல் பெயர்வார்
தரும நற்குணத்தைக் தீயரும் புகழ்வார் சழக்கினைச் சழக்கரும் இகழ்வார்
இருமை தீர் அறத்தின் பெருமையும் மறத்தின் இழிவும் ஈது உன்னுவாய் மனனே
** பாவத்தால் நரகுறல் பகரொணாத் துன்பே

#463
பலர் கழல் வருட மாதர்கள் ஆடிப் பாடுவோர் பகல் எலாம் அனிச்ச
மலரணை கிடத்தல் வருத்தமாம் அன்றோ வார்த்த வெந்நீர் பொறா உடலம்
அலகு அறு காலம் நரக வெம் தழல் ஆழ்ந்து அயர்வுற ஒண்ணுமோ அவியாப்
புலவையே விளைக்கும் பவத்தை வேரறுத்துப் புண்ணியம் புரிந்திடாய் மனனே
** துன்புக் கஞ்சில் துணையறம் கிட்டா

#464
சூல் துயர்க்கு அஞ்சுவாட்குச் சுதர் இலைப் பயன் ஒன்று இல்லைக்
காற்றினுக்கு அஞ்சாநின்ற கலத்தினுக்கு அவிழ்தம் கைப்பு என்று
ஏற்றிட அஞ்சின் ஆரோக்கியம் இலை இன்னற்கு அஞ்சின்
சாற்ற அரும் அறமும் இல்லைத் தனிப் பரகதியும் இன்றே
** நயந்தறஞ் செய்யார் நாய்த்தொழில் செய்வார்

#465
இந்து மீன் பருதி பக்கி இன விலங்குகள் மரங்கள்
ஐந்து பூதங்கள் ஏனை யாவும் ஓவாது எஞ்ஞான்றும்
தம் தொழில் செய்து வாழும் தனி அறம் புரிதல் என்னும்
நம் தொழில் புரிகிலேம் யாம் நாய்த் தொழில் உடைய நெஞ்சே
** அறமே நல்லோர்க்கு அழியா வாழ்வு

#466
இன் அமுதத்தின் முன் வேறு இனிமையும் உளதோ பானு
முன்னம் ஓர் சுடரும் உண்டோ மோக்கத்தின் சுகம் வேறு உண்டோ
துன் அறமே நல்லோர்க்குத் துகள் அறு செல்வம் ஆகும்
அன்னதை அன்றி வேறோர் ஆக்கமும் வேண்டும்-கொல்லோ
** அறஞ்செய்வார்க்கே ஆண்டவன் இன்புண்டு

#467
மன் உளனேல் உண்டு ஆணை மகிழகம் சிறையும் உண்டாம்
முன்னு தேவு உளனேல் பாவம் புண்ணியம் மோக்கம் அள்ளல்
என்னும் யாவையும் உண்டு ஒப்பு_இல் ஏண் உளான் கோபம் தாங்கி
மன்னுவோர் யாவர் நெஞ்சே மறம் ஒழித்து அறஞ் செய்வாயே
** எல்லா வாழ்வும் இயைப்ப தறமே

#468
அணி இலார்க்கு அணியாம் வாய்ந்த அழகு இலார்க்கு அழகாம் நீண்ட
பிணியினார்க்கு எக்களிப்பாம் பேறு இலார்க்கு அன்னதாம் உள்
துணிவு இலார்க்கு உணர்வு எல்லாமாம் துப்பு இலார்க்கு ஒப்பு_இல் துப்பாம்
தணிவு_இல் பாக்கியங்கள் எல்லாம் தருமம் அல்லது வேறு உண்டோ
** எல்லாரும் வணங்கும் ஏற்றம் அறம் தரும்

#469
நாம் பணிவோர்கள் எல்லாம் நமைத் தொழச்செய்யும் தேவர்
ஆம் பணி நல்கும் விண்ணும் அகிலமும் வணங்கச்செய்யும்
சாம் பணி இல்லா ஈசன் தாள் இணை மருவச்செய்யும்
தேம் பணி தருமம் அல்லால் செல்வம் வேறு உளதோ நெஞ்சே
** கடல்நீர் வற்றினும் கடவுள் நிலை அழியாது

#470
சூழ் பல உகங்கட்கு ஒவ்வோர் துளிதுளியாக் கழிந்து ஈங்கு
ஆழ் கடல் முழுதும் வற்றி அழியினும் பழியினார் வீழ்
பாழ் நரகினுக்கு ஈறு இல்லைப் பரகதி நிலையும் அற்றால்
தாழ் நரகு அற வீடு எய்தத் தருமத்தைத் துணைக்கொள் நெஞ்சே
** அறவழியிற் செல்வார் விரும்பார் அழிபொருள்

#471
தாகமே உடையார் வேலைச் சலம் அருந்தினும் பொன் மீது
மோகமே உடையார் மண் கல் முதல் கரம்கொளினும் தேவ
போகமே புரிந்து இல்லாமை பூண்ட புண்ணியர் வானத்து ஊர்
மேகம் ஆர் மின்னின் நில்லா விருத்தி மேல் அருத்திகொள்ளார்
** பிறவாப் பெருஞ்சாவால் பெரும்பொருள் உருத்தோன்றும்

#472
அறப் பெரும் கடல்_அன்னான்-தன் அடி மலர் காணா வண்ணம்
மறைப்பதே உடல் படாமாம் மரணத்தால் அதனைப் பாரில்
துறப்பவர்க்கு உடனே அத்தன் சொரூபமே தோன்றலால் இங்கு
இறப்பது பிறப்பினும்தான் இனிது அறவர்க்கு மாதோ
** தக்கோன் அடக்கம் சால்பற மாகும்

#473
விறலி கற்பதுவே கற்பு கூன் உடல் விருத்தை கற்பு அரிது அன்று கலை எலாம்
அற உணர்ந்த தக்கோர் நொறிலே நொறில் அஞ்ஞை கொண்ட அடக்கம் கதழ்வு அன்று
திறலினார் பொறையே பொறை அற்பமும் திறல் இலார்-தம் பொறுமை தலை அன்று
மறலுளார் கொடையே கொடை சீர் எலாம் வாய்த்த செல்வர் கொடை பெரிது அன்று அரோ

@44 அதி. 43 – கணிகையரியல்பு
** பொருளற்ற விடத்துப் பொய்ப்போக்குரைப்பர் பொதுமாதர்

#474
பூவை இவட்கு அளித்த நிதி கணக்கிலை ஓர் கடன்காரன் புலி போல் நம்மைச்
சாவடிக்கே இழுக்க மயிலே இடர் தீர் என்று இவள்-தன் தாளில் வீழ்ந்தேம்
பூவில் வைத்த நிதியை ஓர் கிழப் பூதம் காத்து இனிய பூபா உன்னைச்
சீவபலியிடின் ஈவேன் என்றது என்றாள் என் செய்வாள் தெரிவைதானே
** உடன்சாவேன் என்றவள் உடைகோவணம் வேண்டல்

#475
நேர்_இழை நம்முடன் இறப்பன் என முன்னம் உரைசெய்தாள் நிருபன் நம்மை
ஈர எனக் கொலைக்களத்திற்கு இழுக்க அடி பற்றிப் பின் இரங்கி வந்த
காரிகையை நோக்கினோம் மிஞ்சிய ஓர் கோவணத்தைக் கருதி வந்தேன்
ஓர் உயிர் நம் இருவர்க்கும் நீர் வீயின் நான் இறந்தது ஒக்கும் என்றாள்
** பொட்டணிந் துணர்த்தினாள் போற்றுமெய் அறிவு

#476
மனை தாலி முதல் வேசைக்கு ஈந்து வேறொன்றும் இன்றி மயங்கும் வேளை
புனைய ஓர் அணி இலாது இருந்த இல்லாள் கழுத்தினில் ஓர் பொட்டைக் கண்டு
மனம் மகிழ்வுற்று ஏது என்றேன் பரத்தையர் போல் எனக்கும் அருள் வாய்க்க வேண்டி
இனமாப் பொட்டு அணிந்துகொண்டு தாசி ஆயினன் என்ன இயம்பினாளே
** பொதுமகளுக்கு ஆண்பஞ்சம் புகல்வது வீணே

#477
ஆவி_அனையாளை ஓர்பொழுது பிரிந்து அவள் இல்லம் அணுகுங்காலை
மேவு பாங்கியைக் கண்டு ஆண் துணை இன்றி வருந்தினளோ மின்னாள் என்றேன்
நாவிதனுக்கு உண்டோ காண் மயிர்ப் பஞ்சம் மலப் பஞ்சம் நாய்க்கும் உண்டோ
தேவி-தனக்கு உண்டோ ஆண் பஞ்சம் என்றாள் அதன் பொருளைத் தெரிகிலேனே
** பொருளிழந்து மூதேவியைப் பொருந்தவரும் வெறுப்பு

#478
செவ்வையுறு பொருள் கவர்ந்த பின்னர் எனைக் கைவிட்ட தேனை நோக்கிக்
கொவ்வை வாய் மயிலே இச் சினம் ஏது என்றேன் வனசக் கோயில் மேவும்
அவ்வையை முன் சேர்ந்த பிழை பொறுத்து அவளை என் அகத்துக்கு அழைத்தேன் அன்னாள்
தவ்வையையும் மருவினீர் இனிப் பொறேன் என் ஊடிச் சலம்கொண்டாளே
** பொதுமகட்குப் பொன்னீயில் போடுவாள் வாய்மண்

#479
உண்ணாமல் இரவலர்க்கும் ஈயாமல் பூமி-தனில் ஒளித்த பொன்னைக்
கண்ணானாள்-தனக்கு ஈய வேண்டி அதைத் தோண்டுகின்ற காலம்-தன்னில்
மண்ணானாள் எனை நோக்கி எனக்கு ஈந்த பொருளை இனி வாங்காநின்ற
பெண்ணானாள் எனை உன் வாய் கொட்டுவள் என்றே நகைத்துப் பேசினாளே
** ஈயாதானை ஏசியடித்து உதைத்துமிழ்வள் பொதுமகள்

#480
முனங்காலை வருடும் அவள் கரம் கோல் போல் முதுகின் மேல் மோதப் பூ மேல்
அனம் கான மயில் என்ன நடம்செய்த கழல் நம் மேல் ஆடித் தாக்கத்
தினம் கானரசம் உதவு வாய் ஏசி உமிழ இந்தச் செய்கை கண்டும்
இனம் காதலாய் அவள் இல் ஏகுதியோ நிற்றியோ இயம்பாய் நெஞ்சே
** ஆடவரை ஆண்கோலம் என்றறைவள் கிழவி

#481
ஆவலால் அவகாலத்து அவள் இல் நான் புகச் சிலபேர் அங்கிருந்து
மேவி ஓடினர் சினமுற்று இவர் ஆர் என்றேன் மாமி விரைவாய் வந்து
பூவை இவள் நின் பிரிவு ஆற்றாது அழப் பாங்கியர்க்கு உனைப் போல் புருடவேடம்
தா அறவே தரித்து அவட்குக் காட்டினன் வேறு அன்று என்று சாதித்தாளே
** செல்வப் பொருளீந்தார்க்குச் சேர்ப்பள் பல அல்லல்

#482
பொருள் ஒன்று நாம் தந்தது இவட்கு அதற்கு இல்லாமை பிணி பொய் புரட்டு
மருள் ஒன்றும் கள் காமம் கொலை களவு சூது வசை மரணத்தோடும்
இருள் ஒன்றும் நரகம் இன்னும் இவள்-பால் நாம் கொண்டதற்கு ஓர் இலக்கம் உண்டோ
தெருள் ஒன்றும் பாரில் நம் போல் சமர்த்தாக் கொண்டு எவர் வணிகம் செய்ய வல்லார்
** கணவன் நிறைகெடின் மனைவியும் கற்பழிவள்

#483
இரதி_அனையார்-பால் போய் நாம் வரும் முன் எங்குச் சென்றாய் என இல்லாளைப்
பொருதி வினவிட இரதி புருடன்_அனையார்-பால் போய்ப் புணர்ந்தேன் என்றாள்
விரதம் உள்ளாய் எங்கு இதை நீ கற்றது என்றோம் உம்மிடத்தும் விருப்பாய் உம்மைச்
சுரதம்செய்பவரிடத்தும் கற்றது என்றாள் வேறு இனி நாம் சொல்வது என்னே
** பொதுமகட் சேர்வோர் பொல்லா விலங்கொப்பர்

#484
சுவை உணவுதான் இருக்க மலம் தேடி ஓடுகின்ற சுணங்கன் போலும்
குவை-அதனில் கிடந்து உறும் நல் இடம் நீங்கித் திரிகின்ற கோகு போலும்
நவை தீர் தண் நதித் தூ நீர் அருந்தாது அங்கண நீரை நாடல் போலும்
சிவை அனைய காந்தையரை வெறுத்து அசடர் வேசையரைச் சேர்வார் மாதோ
** கள்ளூன் களவாடாவிடில் கயிறுகொண்டு தூக்கிடுக

#485
கோடும் உடல் மாமி எனை மதுவுடன் புலால் திருடிக் கொணர்தி என்றாள்
பாடுபெறும் பார்ப்பான் நான் என்றேன் மற்று அவை உண்ணப் பவம் போம் என்றாள்
நாடும் வசை உயிர் உய்யேன் என்றேன் நீ மாய்ந்திடின் முன் நான் கொடுத்த
ஓடு மற்ற மருகர்க்கு ஆம் நான்றுகொள் நீ எனக் கயிறு ஒன்று உதவினாளே
** பசிமண் ஓடு பற்றலால் முத்தேவர் பாங்கானோம்

#486
பசை அற எம் ஆவி_அன்னாள் கைப்பொருள் எலாம் பறிக்கப் பசியால் நான்கு
திசை முகமும் நோக்கலால் திசைமுகன் ஆனோம் வாயில் தீயாள் இட்ட
வசையான மண் உண்டு மாயன் ஆனோம் கையில் வாங்கும் ஓட்டால்
இசை மேவும் ஈசன் ஆனோம் புவியில் நமை ஒப்பார் எவர்தாம் அம்மா
** பொதுமக ளிடஞ்செயல் பொன்றுவித்தால் புகழ்வம்

#487
விடம்_உண்டான் கூற்று_உதைத்தான் அலகை_வென்றான் புரம்_எரித்தான் விடையோன் என்னக்
கடல் உலகில் சைவர் அவன் புகழ் விரிப்பார் கணிகையர் கண் கடுவை உண்டு
குட முலையாம் கூற்று உதைத்துத் தாய்க்கிழவி எனும் பேயைக் கொன்று அன்னார் வாழ்
இடம் என்னும் புரம் எரித்தான் எனில் யாமும் அவன் புகழை இயம்புவோமே
** என்றும் பொதுமகள்வீட் டிருப்பர் பலர்மறைவாய்

#488
கொடியாள் அன்பற்ற பின்னர் பலர் நம்-பால் வந்து உன்னைக் கூடிக்கொண்ட
மிடி என்றும் வாழ்க என்றார் ஏன் என்றேம் உயிர்க்கு இனியாள் வீட்டில் நீ வந்து
அடிவைத்த போது எல்லாம் கூடை உறி பரண் கட்டிலடி அடுக்கு
நெடிய சிறை இருந்தோம் அச் சிறையை உன்றன் வறுமை வந்து நீக்கிற்று என்றார்
** மாண்டார் காலில் புரிகட்டி இழுக்க வுரைப்பள்

#489
தெரிவையின் நட்பு அறிவான் மாண்டு எனக் கிடந்தேம் மாமி வந்த சிலரை நோக்கி
உரிய பாடையில் இவனை எடும் என்றாள் வீண்செலவு ஏன் உலைந்தோன் காலில்
புரி வீக்கி இழும் என்று அன்னம் பணித்தாள் அது செய்யப் புகுந்தோர்-தம்மைத்
தெரியாமல் உயிர்தப்பி ஓடிவந்தோம் அங்கு உறில் எம் சீவன் போமே
** பொதுமகள் புகழ்வது பொன்பெறற் பொருட்டே

#490
சாமி உனைப் பிரியேன் என்று உரைத்துப் பின் அகன்ற மின்னாள்-தன்னை நோக்கித்
தோம் இலா நின் மாற்றம் திறம்பியது ஏது என்றேன் நீ தொகுப்பால் தந்த
சாமியை நீங்கேன் என்றேன் உனைச் சொன்னது அன்று நீ சாமி ஆனால்
பூமியில் உன் மாற்று என்ன எடை என்ன விலை என்ன புகல்வாய் என்றாள்
** அழுக்கே உருவாம் பொதுமகளை அடைவார் யாரே

#491
ஒருவன் உண்ட கலத்து உண்ண ஒருவன் உடையினை உடுக்க ஒருவன் தூங்கும்
திரு அமளி துயில மனம் பொருந்தாது பலர் எச்சம் சேர் படிக்கம்
பொருவு வேசியர் வாய் எச்சிலை உண்ணப் பலபேரைப் புணர்ந்து அசுத்தம்
உருவுகொண்டதனை அவர் தோள் சேரவே எவர்க்கும் மனம் ஒன்றும்-கொல்லோ
** எல்லாம் பறித்துப் பிச்சை எடுக்கவைப்பாள் பொதுமகள்

#492
பொருளின் சேடத்தை இவட்கு அளித்தோம் வாய்ச் சேடம் எனும் பொருள் அளித்தாள்
தருமம் எனத் தனம் அளித்தோம் எமக்கு இவளும் தருமம் எனத் தனம் அளித்தாள்
அருமையாம் பலி அளித்தோம் இவள் எமக்குப் பலி அளித்தாள் ஆழி சூழ்ந்த
இரு நிலத்தின் ஈது அன்றி இன்னும் இவள் என் செய்வாள் எமக்குத்தானே
** கொலைபுலையின் மிக்ககுற்றம் புரிபவள் பொதுமகள்

#493
கொலைஞர்-தமைக் கொலைசெய்து கள்வரை வெம் சிறையிலிட்டுக் குற்றம் செய்யும்
புலைஞரைத் தண்டித்து அடக்கும் நம் இங்கிலீசு மன்னர் புருடர் ஆவிக்கு
உலைவைக்கும் தன்மையளாய்ப் பாதகம் எலாம் திரண்டு ஓர் உருவாய் வந்த
விலைமாதைக் கொல்லாமல் உலகம் மிசை யாது செய விடுத்தார் அம்மா
** பூங்கணைக் கஞ்சாள் பொன்கணைக் கஞ்சுவள்

#494
பணயமே திரணம் அன்பு பெரிது என்ற பாவை பொருள் பறித்த பின்னர்
அணையேன் என்றாள் அனங்கன் உனக்கு இலையோ என்றேம் அவ் அறிவிலான் பூம்
கணைகளையே விடுத்தான் நான் அஞ்சுவனோ காணம் எனும் கதிரம் கொண்டு என்
இணை முலை மேல் தெறித்திடின் வெல்வான் என்றாள் இவள் மனம் வல் இரும்போ அம்மா
** பொல்லாங் குருவே பொதுமகள் உருவம்

#495
வடிவு மிகு கொழுநர்-தமை வேசியர் வவ்விட வருந்தும் வாள் கண் நல்லீர்
கடின மனம் கணக்கிலா ஆடவர் சம்போகம் உயிர் கவர்தல் வஞ்சம்
குடிகெடுக்கும் தொழில் உங்கட்கு இல்லை என வெறுத்தனர் அக் குணங்கள் எல்லாம்
படியில் உமக்கு அமையுமேல் கணவர் திருவருள் உமக்கும் பலிக்கும் அன்றே
** விற்றதை மீட்டும் விலைமாதர் விற்பர்

#496
பகரும் வங்கம் பலசரக்குத் தரகு செலவு ஆள்கள் முதல் பணம் கூட்டு இன்றி
அகல் நிதம்பச் சரக்கு ஒன்றைப் பலருக்கும் தினந்தினம் விற்று அரும் பொன் வாங்கிப்
புகலும் இந்தச் சரக்கும் கை நீங்காது வணிகம்செய் பொது மின்னார் போல்
சகம்-அதனில் பேரறிவினோடு வாணிபம்செய்யும் சமர்த்தர் உண்டோ
** இருமனத்தால் பிணமாதல் இயையும் பொதுமகட்கே

#497
கலவிசெய்த மாது என்னை விலை கேட்டாள் உடன் ஒக்கக் கலந்து காம
நலம் உண்ட உனக்கு விலை ஏது என்றேன் சவம் அனைய நான் சுகிக்க
இலை என்றாள் பொய் என்றேன் வள்ளுவர் கூறிய குறளாம் இனிய நூலில்
விலைமாதைச் சேர்தல் பிணம் தழுவியதை ஒக்கும் என்றார் வீணோ என்றாள்
** தந்தையைக் கொல்லவும் பொதுமகள் சாற்றுவள்

#498
தையல் இல்லம் புகும் போது என் சுதன் குரலைக் கேட்டு ஒதுங்கித் தாழ்வாரத்தில்
பைய ஒன்றிச் செவிகொடுத்தேன் பாலனைப் பார்த்து அக் கோதை பணம் ஈ என்றாள்
ஐயன் இறந்திடில் எல்லாம் உனது என்றான் அவன் தூங்கும் சமையம் பார்த்து ஓர்
சையம் எடுத்து அவன் தலை மேல் போடுவாய் போடும் முன் நான் தழுவேன் என்றாள்
** பலர்க்கிணங்கும் பொதுமகள் பார்க்கிலினத் தலைமணியே

#499
ஒரு மாது தன் துணைவன் சீடனை மற்றொரு மாது அவ் உம்பர்_கோனை
ஒரு மாது சோதரர் ஐவரைச் சேர்ந்து கன்னியர் என்று உயர் பேர் கொண்டார்
அருமையா எமைச் சேயர் சோதரர் சீடரை இம்பர்க்கு அரசைச் சேரும்
பொருள்மாது அக் கன்னியர்க்கு எலாம் சிரோமணி என்னப் புகலலாமே
** பொதுமகட்குக் கடவுள் பொன்னவனே யாவன்

#500
விதி முதல் மூவரில் எவர் உன் கடவுள் எனச் சிற்றிடையை வினவப் பூ வாழ்
எதிர்_இல் தமனியன் என்றாள் அரன் கோயில் தாசி உனக்கு இயல்போ என்றேன்
நிதியுடன் மைந்தரைப் படைத்து அன்னார் அதை என் காலில் வைத்து நிதமும் வீழ
மதி படைத்துத் தமனியப் பேர் தான் படைத்த விதிக்கு இணை யார் மகிப என்றாள்
** பொதுமகள் புணர்வு பொன்னால் ஆகும்

#501
அந்தமுளாள் உரிமையா அத்தமுளார் வாலியா அவன் பின் தோன்றி
வந்தவன் நான் ஆயினேன் மூவரில் ஓர் அரி அரியின் மகனை அன்னாள்
பந்தமுறச் செய்தனன் நம் இருவரை யார் சேர்த்துவைப்பார் பாவாய் என்றேன்
ஐந்து உலோகங்களுள் ஓர் அரி நமை ஓர் அரி சேர்க்கும் அறி நீ என்றாள்
** அத்தை சொக்குத்தூள் அடிக்குப் பொன் தூளாம்

#502
இனியாளை நோக்கி அத்தை சக்கிரிக்குச் சொக்குத்தூள் இடுவாய் என்ற
தொனி கேட்டுச் சினந்து நான் குயவனோ எனை மயக்கத் தூளோ என்றேன்
தனி அரசாம் சக்கிரி நீ ஆகையின் நின் அடி மலர் தோய் தானம் எல்லாம்
நனியே சொக்கு எனும் கனகப் பொடி இறை என்றேன் முனிதல் நன்றோ என்றாள்
** இருதிங்களில் மகப்பெறுதல் இயற்றிய தவப்பயன்

#503
எனை அன்றி மற்றோரைச் சேர்ந்து அறியேன் என்ற கன்னி இரு திங்கட்குள்
தனையன் ஈன்றாள் புதுமை என் என்றேன் நினை உம்மை தழுவி இச் சேய்
சினையாய் எண் மதியில் இறந்தேன் இகத்தும் உனைப் புணரச் செய்த நோன்பால்
முனை அல்கும் இரு மாதம் நிறைந்து உடன் இ மகவு ஈன்றேன் முதல்வ என்றாள்
** தாய்க்கிழவிப் பேய்தடுத்தாள் தன் மகளும் ஆங்கிலளே

#504
சிலர் மயில் வீடு உற்றனர் என்று அறிந்து உண்மை அறிய அங்குச் செல்லுங்காலை
புலன் இழந்து நூறாண்டும் கடந்த கூனுடன் மாமி பூபா மாரன்
மலர் வாளி விடுத்தனன் சேர் எனை என்ன நெருங்கி வழிமறித்தாள் அப் பேய்
கலவி-தனக்கு அஞ்சி மீண்டு ஓடினேன் அவள் சுதையைக் கண்டிலேனே
** பொருளீவோர் ஈயார்மேல் கீழ்ச்சாதி பொதுமகட்கு

#505
கைத்தனம் நாம் இழந்த பின் கூன் முடவர் அந்தகர் நோயர் கடைக்குலத்தர்
நித்தம் மருவிட உள்ளம் உவந்த மின்னை நோக்கி இது நெறியோ என்றேம்
அத்தமதில் குருடு ஊனம் சாதி இழிவு உளதோ அஃது அளிப்போர் மேலோர்
இத் தரையில் எனக்கு ஈயார் கீழ்க்குலத்தர் சாதி இவை இரண்டு என்றாளே
** அளவிலா நோயை அளிப்பள் பொதுமகள்

#506
கனை கடல் மணலை எணினும் வேசியர் சேர் ஆடவர்க்கு ஓர் கணிதம் உண்டோ
அனைய நீர் அளவிடினும் அவர் உட்கொள் சுக்கிலத்துக்கு அளவு உண்டோ அவ்
வினையவர் மெய் உரோமத்தை எண்ணினும் நோய்த் திரள் எண்ண விதானம் உண்டோ
இனையவரைச் சேர்தல் பெரும் தீயினிடை மூழ்குதலை ஏய்க்கும் மாதோ
** தாள்வெட்டல் பயனின்று தலைவெட்டென்பாள் பொதுமகள்

#507
விலைமகட்கென்று அயலகத்தில் கன்னமிட்டுத் துளை வழி உள் விட்ட தாளைக்
கொலை வாளால் தறித்தனர் கூகூ என்றேன் வேசை என்-பால் குறுகி உக்கக்
கலை சோதித்து ஒன்றும் இலாச் சினத்தால் அவ் அகத்தாரைக் கதறிக் கள்வன்
தலை துமியும் தாள் துமித்து என் பலன் என்றாள் வெருவி உடல் சாண் ஆனேனே
** உமிழ்ந்து திட்டி உதைத்தகற்றுவள் பொதுமகள்

#508
திரு எலாம் கொள்ளைகொண்டாள்-தனை நோக்கிச் செவ் அதரத் தேன் ஈ என்றேன்
பெரு வாய் எச்சிலை உமிழ்ந்தாள் பேசு என்றேன் கொடும் சொற்கள் பேசலுற்றாள்
மருவு என்றேன் உதைக்குபு கையால் இடித்துக் கடித்து இனிய மதனநூலாம்
இரு பாத தாடனம் ஆலிங்கனம் மெல் இதழ் சுவைத்தல் என்றாள் அம்மா
** பொதுமகட்குக் குலதெய்வம் பொன்னளிப் போரே

#509
தரணியின் மிக்க எழில் மாதை உனது குலதெய்வம் எது சாற்றாய் என்றேன்
இரணியன் என் தெய்வம் என்றாள் விட்டுணு ஓர் நரசிம்மம் எனவே வந்தான்
முரணுற ஒண்ணாது என்றேன் இரணியாசுரன் அன்று முராரி மெய் மேல்
கிரண உடை எனைப் புனைந்த இரணியன் என் தெய்வம் என்றாள் கிளி_அன்னாளே
** பொதுமகட்காகக் களவுசெய்யப் போயினவே இருகையும்

#510
பொய் ஏந்து மன வேசைக்காத் திருடிக் கை இரண்டும் போக்கிக்கொண்டே
மை ஏந்து விழி மனையாட்கு இடை ஏந்தும் துகில் இன்றி மானம்-தன்னைக்
கை ஏந்தும் இரக்கவோ கை இலாள் ஆனாள் எக் கையை ஏந்திச்
செய் ஏந்தும் உலகத்தில் பலி ஏந்தி உண்ணுவம் யாம் செப்பாய் நெஞ்சே
** வேடிக்கைக் குரல்விலங்காய் மெய்ப்பண்பாய் மாறினரே

#511
சே_இழையின் சேடியர் முன் எமக்கு இதம்செய்வான் புலி வெம் சின மா கோகு
நாய் ஓரி கரடி எனக் கத்தி மகிழ்விப்பர்கள் நாம் நலிந்த பின் அத்
தீய விலங்கினச் செய்கை நம்-கண்ணே செயத் தொடுத்தார் திருவை ஒப்பாள்
ஆய மிருகங்கட்கு ஓர் அரசு ஆனாள் அவட்கு இரை நாம் ஆயினோமே
** கன்னத்தில் கண்டவுரு நின்உருவே கள்வனன்று

#512
வண்ண மலர் அமளியின் மேல் இருக்கையில் ஓர் பரபுருடன் வரவு நோக்கிப்
பண் அமரும் மொழி மின்னாள் விளையாடல் போல் தன் கைப் பதுமத்தால் என்
கண்ணதனை மூடிவிட்டேன் என நகைத்தாள் வேற்றாளார் கள்ளீ என்றேன்
கண்ணடி போல் திகழும் என்றன் கபோலமதில் உன் உருவைக் கண்டாய் என்றாள்
** கரவில்வந்தான் தனைக்கொன்றேன் கண்டேன் என்மகன் என்றே

#513
இரவினில் என்னுடன் துயின்ற கோதை அடிக்கடி வெளியே ஏகி மீண்டாள்
கரவு அறிவான் பின்தொடர்ந்தேன் கொல்லையிலே காளையொடும் கலந்துநின்றாள்
அரவம் எனச் சீறி அவ் ஆள் மேல் வீழ்ந்து தாக்க உயிரற்று வீழ்ந்த
உருவை உற்றுப்பார்க்க என்றன் ஒரு சேய் என்று அறிந்து நெஞ்சம் உருகினேனே

@45 அதி. 44 – விலங்கினத்துக் கிடர் செய்யாமை
** உயிரும் உணர்வும் உள்ளமும் விலங்கிற்கும் உண்டு

#514
விலங்கினங்கட்கு வாக்கும் வினை உணர் ஞானத்தோடு
நலங்களும் இலை என்றாலும் நரரைப் போல் சீவன் மெய் ஐம்
புலன்களும் இன்ப துன்பப் புணர்ப்பு அறி நெஞ்சினோடும்
துலங்கிடும் விலங்கை வாட்டித் துயர்செய்வோர் நரகத்து ஆழ்வார்
** வாய்பேசா விலங்கைக் கொல்வோன் வன்பேயாவன்

#515
மானிடர் துயரைச் சொல்வர் மற்றுளோர் அதனைத் தீர்ப்பர்
ஆனவர் உறு நோய் நீக்க அனந்தமாம் பரிகாரங்கள்
மோனமாய் இடுக்கண் தாங்கி முறையிட அறியாது அல்லல்
தான் உறு விலங்கைக் கொல்வோன் தருமனோ பேயோ அம்மா
** ஊன்உண் பழக்கத்தால் உண்பர் மக்களையும்

#516
கொடிய வெவ் விலங்கை எல்லாம் கோறலே முறை என்றாலும்
அடிமை போல் நரர்க்கு உழைத்து ஈண்டு அயர் விலங்கினை மாசில்லாக்
குடிஞையை அடித்து உதைத்துக் கொன்று உண்போர் சமயம் வாய்க்கில்
படியின் மக்களையும் உண்பர் பழக்கம் போல் தீயது உண்டோ
** விலங்கினை வாட்டுவோர் மக்களையும் வாட்டுவர்

#517
ஊமரைப் பித்துளாரை உணர்வு_இல் சேயரை மின்னாரைப்
பாமரர்-தம்மை மிக்க பரிவொடும் காத்தல் போல
நாம் அற விலங்கைக் காப்பர் நல்லவர் அதை வருத்தும்
தீ மனம் உடையோர் துன்பம்செய்வர் மானிடர்க்கும் அம்மா
** புலாலுண்போர் தெய்வத் தண்டனை அடைவர்

#518
காய் இலை கிழங்கே தக்க கறியதாம் அதனை உண்போர்
ஆயுள்நாள் வளரும் ஊழ்த்தல் அருந்துவோர் உயிர்கட்கு எல்லாம்
தாய் எனும் ஒரு கருத்தன் சாபத்தைப் பரிப்பார் என்னில்
பேயினும் கொடிய அன்னார் பிழைக்குமாறு எவன்-கொல் அம்மா
** இரக்கமிலாது விலங்குக்கு இடர்விளைப்போன் நெஞ்சம் இரும்புகல்

#519
பற்றி நோய்செயப் பின்பற்றும் பதகரை வெரீஇ விலங்கு
சுற்றியே ஓடும் கத்தும் துன்புறும் வயிற்றைக் காலால்
எற்றி வீழ்ந்து எழும் மயங்கும் என் செயும் இவ் விலங்கை
முற்றிய சினத்தில் பற்றும் மூர்க்கர் நெஞ்சு இரும்போ கல்லோ
** ஊனுண்போர் தமைப்புலி உண்ண ஒப்புவரோ

#520
எமக்கு உண விலங்கைப் புள்ளை இறை செய்தான் எனக் கொன்று அட்டுச்
சுமக்க அரிதாக உண்டு பாழ்ங்குழி தூர்க்காநின்றீர்
தமக்கு உண நும்மை ஈசன் சமைத்தனன் எனப் புல் சீயம்
அமர்க்கு அரி ஆதி உம்மை அடித்து உணின் என் செய்வீரால்

@46 அதி. 45 – பன்னெறி
** வேதாந்தம்
** கற்பனை பத்தும் கைக்கொள்வோர் கடவுளைச் சார்வர்

#521
ஈசனையே துதித்தல் அவன் திருநாமத்தொடு திருநாளினைக் கொண்டாடல்
நேசம் ஆர் அனை தந்தை வணங்கல் கொலை செய்யாமை நிதம் காமத்தை
நாசமாக்குதல் களவு பொய் நீக்கல் பிறன் இல் மது நயந்திடாமை
மாசறும் இவ் விதி பத்தும் வேதாந்தம் எனக் கடவுள் வகுத்திட்டானால்
** எல்லா நெறியினும் சிறந்தது இறைநினைவே

#522
முன்னவன் பொன் பதம் முன்னம் உன்னலும்
தன் உயிர் எனப் பல உயிரைத் தாங்கலும்
பன்னெறி யாவினும் பளகு இலா அரு
நல் நெறியாம் என நவிலும் வேதமே
** வாழி

#523
ஆதிநூல் என்றும் வாழ்க அநுதினம் தருமம் வாழ்க
வேதியர் நாளும் வாழ்க மெய்யடியார்கள் வாழ்க
தீது_இல் ஆங்கிலேய மன்னர் செங்கோல் எஞ்ஞான்றும் வாழ்க
நீதிநூல் படிப்போர் கேட்போர் நித்தமும் வாழ்க மாதோ

@47 இணைப்பு
** பின்கிடைத்த வேறு படிகளில் காணப்பெறும் பாடல்கள்
** பாயிரம்
** பாட்டறு நூறும் பகர்ந்தேன் எனக்கே

#524
தனக்குத்தான் ஒருவன் போதம் சாற்றிடில் குறை பிறர்க்கு என்
எனக்கு அவிர் நீதி நூல் நாற்பத்துநான்கு அதிகாரங்கள்
இனக் கவி அறுநூறு ஆய இனைய நூல் அயலார்க்கு அன்று என்
மனக்கு யான் உணர்த்துகின்றேன் மற்று எனை முனிவர் யாரே

#525
மண் கவி மாந்தர் யாரும் மறைவு இன்றி உணரும் வண்ணம்
வெண்கவி புனைந்தேன் என்னை வெகுளுதல் இருளை வேட்டு
விண் கவி மதியைப் பாலை வெள்ளியை வெண் படாத்தைக்
கண் கவி வயிர முத்தைக் கவுரம் என்று உடற்றல் போலும்
** மாசகற்றி மாண்புறுத்தல் மதியுடையார் மாண்பே

#526
வழு ஒழித்து ஆளல் மேலோர் வழக்கு எனலால் இ நூலைத்
தழுவு-மின் என அன்னோரைத் தாழ்ந்திடல் மிகை கீழோரைத்
தொழுது இரப்பினும் மாசு ஒன்றே தூற்றுவர் அவரை வாளா
அழுது இரத்தலின் பேறு இல்லை ஆதலின் மௌனம் நன்றால்
** நூற்பொருள் வைப்பால் விழுப்பொருள் நுகர்வர்

#527
தான் கண்ட நிட்சேபத்தைத் தமர்க்கு எலாம் அறிவிப்பான் போல்
வான் கண்ட இங்கிலீயம் மருவு பல் நூல் பூமிக்குள்
யான் கண்ட நிட்சேபத்தை யாவரும் தெரிவான் செய்தேன்
தேன் கண்ட இ நூல் ஈட்டல் செய்குவார் உய்குவாரே
** அதி 1 – தெய்வமுண்டெனல்
** கற்றார் உற்றுரை கைக்கொளல் கடமை

#528
நீள் வியன் உலகம் எங்கும் நிகழ்வன பலவும் பாரார்
கேள்வியின் அறிவார் கற்ற கேள்வியும் கேள்வி அன்றோ
ஆள் வினை உடையான் உண்டு என்று அரு மதம் யாவும் கூறும்
கோள் வினை கோளுறாரைக் கோள் வினை கோளுறும் காண்
** கடவுளில் லென்போர் இல்லா ராகியே கழிவர்

#529
இவரிய தருவைக் கைவிட்டு இகழ்ந்து கீழ் வீழ்வார் போலும்
இவவுறத் தம் தாய் வந்தி என்பவர் போலும் பைங்கூழ்
அவனியை நீத்தல் போலும் அகிலம் ஆள் கோவைத் தேவைத்
தவ நிதியினை இன்று என்போர் தாமுமே இலர் ஆவாரே
** அதி 2 – தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
** கண்முதல் உறுப்பெலாம் தந்தவன் கடவுள்

#530
அண்ட பேரண்டம் எல்லாம் அளந்து அறி விழியும் கந்தம்
கொண்டு அறி மூக்கும் ஓசை கொழும் சுவை பரிசம் எல்லாம்
கண்டு அறி செவி நா மெய்யும் கழறும் ஐம்புலன்கட்கு ஏன்ற
பண்டம் என்பன அனைத்தும் பண்ணியோன் திண்ணியோனே
** உலகுடல் உறுப்புழைப்பு உதவினோன் கடவுள்

#531
மன் உயிர்க்கு இசைந்த பூத வகைகளும் அவைக்கு இசைந்த
கொன் உடலமும் அவ் அங்கம் குனிந்திட நிமிரச் செல்லத்
துன்னுபு தங்க ஓடத் தொழில் பல இயற்றத் தக்க
தென் உறுப்புகளும் செய்தோன் தேவனோ யாவனேயோ
** என்றும் புதிதாய் உலகியற்றினோன் கடவுள்

#532
என்றுமே பழைமை எய்தாது இலகு உலகமும் யாவுள்ளும்
துன்றிய தழலும் யாங்கண் தோண்டினும் ஊறும் நீரும்
ஒன்றினை அசைக்கின் மேவும் உலவையும் குலவி எங்கும்
நின்ற அந்தரமும் தந்த நிராமயற்கு எவன் கைம்மாறே
** உயிர்கனி காய்காலம் உதவினோன் கடவுள்

#533
வேறுவேறான சீவ விகற்பமும் நிறம் பல் வாய்ந்து
நாறு பூ இலை காய் ஆர்ந்த நளிர் தரு இனமும் குன்றும்
ஊறு நீர்த் தொகையும் சீவர் உய்ந்திடக் கார் முன்னாக
மாறு காலப் பகுப்பும் வகுப்பவன் சகப் பிரானால்
** ஒன்பான் துளையுடலில் உயிர்நிறுத்தோன் கடவுள்

#534
காற்றினைப் பல துவாரக் கடத்தினுள் அடைத்தல் போல
ஏற்றிடும் நவ துவாரம் எண்ணிலா மயிர்த் துவாரம்
தோற்றிய சடக் கடத்துள் துன் உயிர்க் காற்று அடைத்து
நால் திசை மிசைப் பல் ஆண்டு நடத்துவோன் திடத்தினானே
** என்பு இறைச்சி குருதியுடல் இயற்றினோன் கடவுள்

#535
கொன் புலால் சுவரை நீராம் குருதி தோய்த்து எழீஇச் சுவேத
என்பு எனும் கழி பரப்பி இரச்சமாம் நரம்பால் வீக்கி
ஒன்பது வாயில் விட்டு இங்கு உரி எனும் கூரை வேய்ந்து
மன் பெற வீடு ஒன்றால் மா மன் பெற இசைத்தான் மன்னோ
** கருவின்றி உலகாக்கிக் காப்போன் கடவுள்

#536
மணல் ஒன்றால் மலை செய்வோனை நோக்கிடின் மா வியப்பாம்
அணு ஒன்றும் இல்லாது அண்டம் அனைத்தும் செய்து இரும் தேகங்கள்
துணை_இல் சுக்கிலவு இரத்தச் சிறு துளியான் அமைத்துப்
புணர் சிறு வித்தால் பார மரம் எலாம் புரிந்தோன் தேவே
** ஞாயிற்றை நடுநிலையில் நாட்டினோன் கடவுள்

#537
பகல் புவியினும் பல் கோடி பங்கு மிக்கதுவாம் பூமிக்கு
இகல் அணித்தாயின் யாவும் எரிந்துபோம் சேணாயின் பார்
தக ஒளி பெறாது என்று உன்னித் தக்க கண் நிறுவிச் சுற்றும்
நிகழ் புவனங்கள் காந்தியுறச் செய்தோன் நிகரி.லானால்
** திங்களைத் திகழ்வுறச் செய்தோன் கடவுள்

#538
மதி புவி என ஓர் கோள வடிவமாம் அஃது காந்தி
கதிரிடம் பெறும் அச் சோமன் புவியைச் சுற்றுங்கால் என்றூழ்க்கு
எதிர் உறாது ஒளித்தலாலே இருளுறும் மீண்டும் சோதி
பதிவுறும் இனைய திங்கள் பண்ணினோன் விண்ணின்_கோனே
** உலகுருண்டு சுற்றக் காலம் உறுவித்தோன் கடவுள்

#539
பார் இரு புறத்தும் சோதி பட அப் பார் தினம் புரண்டு
சூரியற்கு எதிராய்ப் பின்னும் சுழன்று விண் சென்று ஓர் ஆண்டில்
பேர் இரவியையே சுற்றக் கால பேதங்களாம் இச்
சார் இயல் பார் செய்தோன் தாள் தலையுறார் நிலையுறாரே
** வளப்பமொடு மென்மை வன்மை நிலம் வகுத்தோன் கடவுள்

#540
தருவின் வேர் பயிர் வேர் உள் சென்று உலாவ மென்மையதாய்த் தங்கும்
இரு மலை சீவர் இல்லம் யாவும் உள் அழுந்தா வண்ணம்
ஒருவு_இல் வன்மையதாய் எண்_இல் ஆண்டு ஒழியினும் வளப்பம்
மருவுபு பலன் அளிக்கும் வையம் ஐயன் செய்தானால்
** கரைதாங்க லின்றிமழை கடல்தந்தோன் கடவுள்

#541
நீரினைக் கலங்கள் இன்றி நிறுத்தல் போல் நீர் திரண்ட
காரினைக் கீழ் விழாது ககனத்தில் நிறுவி நொய்ய
மாரியே பெய்யச்செய்து மறித்திடு கரை ஒன்று இன்றி
வாரியை நிறுத்தும் இன்ப_வாரியைச் சாராய் நெஞ்சே
** உயிர்வாழ் காற்றிங் குதவினோன் கடவுள்

#542
மா தலம் சுழலலாலும் மா மதி சுழலலாலும்
ஆதவன் கிரணத்தாலும் அந்தரம் அசைவுற்றாகும்
ஊதல் அஃது இன்றேல் சீவர் உய்ந்திடார் பெரும் கால் மாகம்
மீது அமர் விடத்தை நீக்கும் வியந்து இக் கால் தந்தோன் யாரே
** இடிமின்னால் நஞ்சகற்றி மழையீந்தோன் கடவுள்

#543
அகல் இடத்திருந்து பல் நீராவியைப் பானு கையால்
ககனம் மீது ஈர்க்கக் காராம் கடினத்தால் இடியாம் பல் கார்
இகலொடு பொருத மின்னாம் இடித்தல் வான் விடம் அகற்றும்
சகலமும் உய்யப் பெய்யும் சலதரம் ஈந்தோன் யாரே
** தீயும் காற்றும் சீர்பெற அமைத்தோன் தேவன்

#544
வாயு வல் விசையோடு எய்தின் மகியினோடு உயிர்கள் யாவும்
வீயும் என்று அக் கால் மெல்ல வீசச்செய்து உலகு எங்கும் சார்
தேயு மேல் எழுந்து நிற்கின் செகம் உய்யாது என அத் தீயை
வேயும் பல் பொருட்குள் வைத்து வேட்டவாறு அளிப்போன் யாரோ
** மனத்துக்கு வரம்பில் வலி வகுத்தோன் கடவுள்

#545
ககனம் மண் சராசரங்கள் கலைகள் உன்னுள் அடக்கிப்
பகர் ஒரு நொடிக்குள் அண்டப் பரப்பு எலாம் உலாவித் துன்பம்
சுகம் அறம் மறம் ஓர்ந்து ஆவி தூங்கினும் தூங்காது ஓங்கி
அகலுறும் உன்னைச் செய்தோன் அவன்-கொல் மற்று எவன்-கொல் நெஞ்சே
** மயிர்தோல் வலுவாய் வகுத்தோன் கடவுள்

#546
அறிவு இலா விலங்கு போர்வை அகம் செய அறியாது என்னச்
செறி மயிர் பெரும் தோல் செய்து சீத உட்டண நோய் தீர்த்தான்
மறி கவசங்கள் இல்லம் வனைந்திட அறிந்த மாக்கள்
பொறி உடல்களை மென் தோலால் போர்த்தினோன் சீர்த்தியோனே
** உறுப்பினில் படைவலி உறுத்தினோன் கடவுள்

#547
ஆயுதம் செய அறிந்த நரர் மெய்யில் ஆயுதங்கள்
தோய்தரச் செய்யான் அன்ன தொழில் இலா விலங்கின் பல்லில்
சாய்தரும் உகிரில் மூக்கில் தலையினில் காலில் வாலில்
ஏய்தரு படைக்கலங்கள் இயற்றினோன் வயத்தினோனே
** சிற்றுயிர்க்கும் செய்தொழில் சேர்த்தோன் கடவுள்

#548
உயிர் உயத் தகும் உபாயம் ஒருவரையொருவர் பார்த்துப்
பயிலுவோம் இயற்கையாப் புள் பல விலங்கு உரிய ஊண் கண்டு
அயிலல் வாழ் உறையுள் செய்தல் அணைந்து இனம் பல்கல் மற்றைச்
செயிர் அறு தொழில்கள் எல்லாம் செயப் படிப்பித்தோன் யாரே
** எட்டா வெளியாய் இன்பமாய் இலங்குவோன் கடவுள்

#549
முத்தர் பேரின்ப வாழ்வை மொழி மனக்கு அகோசரத்தைப்
பத்தர் பாக்கியத்தைப் பாவப் பகையினைத் தகையின் வைப்பை
வித்தக ஒளியை இன்ப விளைவினை அருள்_பௌவத்தை
உத்தம குணாகரத்தை உளம்கொளார் வளம் கொளாரால்
** அகலா அறுகுணம் அமைந்தோன் கடவுள்

#550
தனவயத்து ஆதல் மூலம்தான் இன்மை சடலம் இன்மை
இன நலம் எல்லாம் கோடல் எங்கணும் நிறைந்திருத்தல்
வனமுறு பொருள் யாவிற்கும் வாய்ந்த காரணனே ஆதல்
என அறு_குணத்தோன் எங்கும் இயல் அருள் மணத்தோன் நெஞ்சே
** பெண்ணும் பொன்னும்போற் கடவுளைப் பேணாதது என்னே

#551
மாதரை விழைந்தோன் என்றும் மாதரை நினைப்பன் பொன் மீது
ஆதரம் உளோன் அப் பொன்னை அனுதினம் ஓர்வன் ஈசன்
பாதம் மீது அன்பு உளேமேல் பகல் இரவினும் ஓவாது
நாதனை உன்னேம் கொன்னே நாள் கழித்திடல் என் நெஞ்சே
** துன்பந் தருதல் தூய்மைக் கென்ப

#552
நலன்கள் யா உறினும் தந்த நாதனைத் துதிமோ நோய் நாம்
கலங்கவே உறினும் தந்தை காதலர்ச் சினவல் போல் பின்
பலன்கள் நாம் பெற அத் துன்பம் பணித்தனன் இறை என்று உன்னி
விலங்கிடாது அவன் தாள் நெஞ்சே விரைவில் நீ பரவி உய்யே
** உடம்பகப் பொறியை உய்ப்போன் கடவுள்

#553
நாம் அறியாது உயிர்ப்பு கணம்-தொறும் நடக்க மெய்யுள்
தோம் அறும் இயந்திரங்கள் தொழில் பல இயற்ற உண்ணும்
சேம ஊண் சீரணித்துத் தேகம் எங்கணும் உலாவக்
காமர் ஆருயிரைக் காக்கும் கடவுள்-பால் நடவாய் நெஞ்சே
** ஈந்தானை மறந்து பொருள் எண்ணல் இழிவாம்

#554
தனம் தந்தான்-தனை இகழ்ந்து தனத்தினைத் தொழில் போல் ஈசன்
அனம் தந்தான் வாழ்வு தந்தான் ஆவியும் உடலும் தந்தான்
இனம் தந்தான் இன்பம் தந்தான் யாவும் தந்தானை நீங்கி
முனம் தந்த பொருள் அவாவும் மூடர் உன் சீடர் நெஞ்சே
** கருவியின்றியே கடவுள் காண்பன்

#555
கண் இணை செவிகள் ஈந்தோன் காணான்-கொல் கேளான்-கொல் நெஞ்சு
எண்ணிய ஈந்தோன் அத் தீது எண்ணான்-கொல் செங்கோல் ஓச்சும்
திண்ணியன் தண்டியான்-கொல் தீதிலான் தீதைச் சீறாது
அண்ணிடுவான்-கொல் நெஞ்சே அவன் அடி வழிபடாயே
** அன்பொன்றே நாடி ஆண்டானைத் தொழு

#556
தடியடிக்கு அஞ்சி ஈவோன் தருமனோ கற்பைக் காந்தன்
கொடியன் என்று அஞ்சிக் காப்பாள் சதி-கொலோ ஈசன்-மாட்டுப்
படிறு அறும் அன்பே அன்பாம் பயத்தினால் நயத்த ஆவான்
முடிவிலான்-பால் கொள் பத்தி முத்தியில் உய்த்திடாதால்
** எல்லாப் பொழுதினும் இறையை எண்ணுக

#557
உண்ணும் வேலையினும் அல்லின் உறங்கும் வேலையினும் வேலை
பண்ணும் வேலையினும் துன்பம் படரும் வேலையினும் இன்பம்
நண்ணும் வேலையினும் பாரில் நடக்கும் வேலையினும் ஒன்றைக்
கண்ணும் வேலையினும் தேவைக் கண்ணும் வேலையைச் செய் நெஞ்சே
** எல்லாம் அறியும் இயல்பினன் கடவுள்

#558
தினையினும் புகுந்து நிற்கும் தெய்வநாயகன்தான் யாவர்
நினைவையும் அறிவான் யாங்கண் நிகழ்வதும் அறிவான் செய்யும்
வினையையும் அறிவான் பேசும் விதங்களும் அறிவான் அன்பு ஆர்
அனை அனையனை அலாது ஓர் அணுவுமே அசையும்-கொல்லோ
** சிற்றுயிரும் ஓம்பலிறை சிறந்த திருத்தொண்டு

#559
தன் பணி செயற்கு வாய்ந்த மக்கள்-தம் பணி இயற்ற
மின் பணி சுடர்கள் பூத விரிவு எலாம் விமலன் ஈந்தான்
நன் பணி அவைகள் நாளும் நம் பணி ஆற்றும் ஐயன்
நன் பணி இயற்றுகில்லேம் நன் பணி அனையம் நெஞ்சே
** ஆண்டவன் வேண்டும் அறம்புரிந்து வாழ்க

#560
நரன் அருள் புரிந்தோர் அன்னோன் மனோரதம் நாடிச் செல்வர்
பரன் அருள் பெற அவன் சொல் மறை வழி பற்றி அன்னான்
திரமுறப் பகைக்கும் பாவச் சிக்கு அறுத்து அவன் விரும்பும்
தரம் அறு தருமம்-தன்னைச் சார்ந்து இடர் தீர்ந்து உய் நெஞ்சே
** சிற்றுயிர்க் கன்பிலார் செம்பொருட்கும் அன்பிலார்

#561
கண்ட மன் உயிரைப் பேணான் காண் ஒணாப் பரன்-பால் நேசம்
கொண்டனன் எனல் பொய்யாம் செங்கோல் வழி நிலார் கோன் சேயர்க்கு
அண்டலர் கோனுக்கு அன்பர் ஆவரோ நற்குணங்கள்
விண்டவர் பிறர்க்கு அன்பு இல்லார் விமலர்க்கும் அன்பு இலாரால்
** பகரொணா இன்பவளம் பத்தர்க்கு அருள்வன்

#562
நலம் இலா நரர்க்குத் தேவன் நல்கிய சராசரங்கள்
பல வளம் உளவேல் அன்னான் பத்தர்கள் பெறும் பேரின்பத்
தல வளம் எற்றோ பாவச் சலதியுள் மூழ்குவோர் சார்
புலவின் நோய் எத்தன்மைத்தோ புந்தியே சிந்தி நீயே
** நல்லாரை நீக்கின் நண்ணும் பழியே

#563
ஆலயம் தன்-பால் வாழும் அரசு ஒரீஇ அவற்கு ஒன்னாரைச்
சாலவே ஏற்றல் போலத் தனக்கு உனைப் பீடமாச் செய்
மூலகாரணனை நீத்து இங்கு அகங்காரம் முதல் பாவங்கள்
ஏல நீ உன்-கண் ஏற்றாய் இதயமே சிதைவை நீயே
** வளர்த்தோர்க்குதவும் மாமரம்போல் வகுத்தானை வணங்கு

#564
விருகமும் தனை வளர்த்தோர் வியப்புற வேலை செய்யும்
தருவொடு பயிர் வைத்தோர்க்குத் தனிப் பயன் நல்கும் நம்மை
ஒரு பொருள் எனச் சிருட்டித்து உலகமும் மற்ற யாவும்
தரும் ஒரு முதலைப் போற்றாத் தன்மையோர் புன்மையோரே
** கடவுளை எய்தார் கடவார் பிறப்பு

#565
கரும்பு உணக் கூலி கேட்கும் கருமம் போல் வறுமையாளர்க்கு
அரும் பொருளினைத் துன்புற்றோர்க்கு ஆனந்த சாகரத்தை
வரும் பிணிக்கு ஒரு மருந்தை மனத்தின்-கண் ஒளிர் தீபத்தை
விரும்புவோர் மனோகரத்தை மேவுறார் கோ உறாரே
** பரமனை வணங்குநாள் பயனுடைத் திருநாள்

#566
எவ் அஞர் உறினும் ஞாங்கர் இறை உளன் என்னத் தேறின்
அவ் அஞர் வருத்தும்-கொல்லோ ஐயனை உன்னிப் போற்றிச்
செவ்வழி நிற்கும் நாளே சீவன் உய்கின்ற நாளாம்
ஒவ்வரும் இறைவன் போற்றாது ஒழியும் வாழ் நாள் பாழ் நாளே
** அடியரை இகழ்தல் ஆண்டானை இகழ்தலே

#567
தெய்வ நாத்திகம் அத் தெய்வம் யாவினும் சிறந்தது என்ன
உய் வகை பத்திசெய்யாது ஒழிதல் நல்லொழுக்கம் இன்மை
பொய் வளர் தெய்வம் போற்றல் புனிதரைத் தளியை எள்ளல்
மெய் வளர் வேத நிந்தை விமல தூடணங்கள் ஆமால்
** எல்லாமாம் இறைவனை இடைவிடாது ஏத்து

#568
குரு இறை சீடன் நாம் நம் கோன் அவன் குடி நாம் அன்னான்
ஒரு பிதா நாம் சேய் ஆண்டான் உவன் வழித்தொண்டன் நாம் அவ்
உரு இலான் உடையானாமே உடைமையன் அவனே தாதா
மருவு இரவலன் நாம் என்ன மதி மதி மதி_இல் நெஞ்சே
** ஆண்டான் அடிபோற்ற ஆகும் பெருமகிழ்வு

#569
கற்பினார் கணவர்-தம்மைக் காண்-தொறும் களித்தல் போலும்
பொற்புறு சிறார் தாய் கையில் பொருந்துபு மகிழல் போலும்
அற்புத உவகையோடும் அடிகளை அடிகள் போற்றாது
உற்பவ உவர்ப்போடு ஏத்தும் உள்ளத்தார் கள்ளத்தாரே
** தாயினும் பிழைபொறுத்துத் தாங்குவோன் கடவுள்

#570
புகர் சில இயற்றில் தாயும் பொறுப்பள்-கொல் மனத்தால் வாக்கால்
இகழுறு செயலால் நாம் செய் ஏதம் எண்_இல என்றாலும்
சகம் மிசைத் தண்டியாது சாம்தனையும் பொறுத்துச்
சுகம் எலாம் ஈயும் தேவைத் துதித்து உன்-பால் பதித்து உய் நெஞ்சே
** அடியிணை பிடித்தென்றும் அகலாமை அன்பு

#571
உற்ற சஞ்சீவினியை உண்ணாது ஒழியும் மதி
யற்றவர் போல் மாதாவாய் அப்பனாய் ஆருயிராய்ச்
சுற்றமாய் வாழ்வாய்த் துணையாய் நம்-பால் உறையும்
கொற்றவனைப் போற்றிக் குறையிரந்து பல் வரமும்
உற்ற நல்காயாயின் விடேன் என்று முறை கால் பூண்டு எவ்
அற்றமும் ஏத்தோம் இனி வேறு ஆர் உதவி சொல் மனமே
** ஆண்டான் அடிநினைத்து ஆடாய் நீபாடாய்

#572
வீடாத முத்தொழிலோன் விண்ணவர்கோன் மண்ணவர்கோன்
கோடாத செங்கோலான் குற்றம் இல்லான் நித்தம் உனை
வீடாகக் கொண்டு உறையும் மேன்மையுற்றாய் இவ் அருளை
நாடாய் அளி நீடாய் நாத் தழும்பப் போற்றி நிதம்
பாடாய் உருகாய் பரவசம் மீக்கூர்ந்து நனி
ஆடாய் கொண்டாடாய் வேறு ஆர் உதவி சொல் மனமே
** பொருள்சேர் புகழ் புகன்று போற்றுதல் கடனே

#573
சிந்தாகுலம் தீர்க்கும் செல்வமே நல் வளமே
நந்தா அற விளக்கே நாயகமே தாயகமே
எந்தாயே கண்ணே இனிய உயிரே நலங்கள்
தந்து ஆளும் கற்பகமே தற்பரமே அற்புதமே
கந்தாம் மணியே கதிநிலையே ஆரமுதே
அம் தாயே என்று ஏத்தாய் ஆர் உதவி சொல் மனமே
** பெரியானைச் சிறியானைப் பிரியானைப் பேசு

#574
அடர்ந்த மணல் எனக் கணக்கு_இல் அண்ட பகிரண்டம் எலாம்
கடந்து நின்ற பெரியானைக் கடுகில் நுழை சிறியானைத்
தொடர்ந்த அன்பர்க்கு உரியானைத் துகள் உடையோர்க்கு அரியானைப்
படர்ந்தவர் உள் பிரியானைப் பழிச்சாயோ நாவே
பரமசுகோதய நிலையைப் பழிச்சாயோ நாவே
** தொண்டர்க்கு எல்லாமாம் துணைவனைத் தொழு

#575
தொண்டர் எனும் பயிர் தழையச் சொரி முகிலை அவர் இதய
முண்டகங்கள் நெகிழ்த்து ஒளியை மும்மலம் வேரற வீசும்
சண்டவளியினைப் பாவத் தழல் அவிக்கும் தண் புனலைக்
கண்டவர்-தம் சுகநிலையைக் கருதாயோ மனமே
காண் அரிய பரஞ்சுடரைக் கருதாயோ மனமே
** அறிவாற்றல் அன்பாம் ஆண்டவனைத் தொழு

#576
ஒன்று ஆகி மூன்று ஆகி உயிர்த்துணையாய் ஒப்பு_இலதாய்
நன்று ஆகி நின்ற தனிநாயகனைத் துதி மனமே
நாயகனைத் துதிபுரியில் நன்மை உறும் தின்மை அறும்
தீயகம் போம் மெய் துறும் காண் தேவர் பெறும் பேறே
** சீலத்தார் சிவனடியைச் சென்றுசேர்ந் தின்புறுவர்

#577
தீயர்-தமைச் சுடும் தழலைச் சீலர்-தமக்கு ஒரு நிழலை
ஆய அரிய பரம்பொருளை ஆவலின் ஏத்தாய் மனமே
ஆவலின் நீ ஏத்துவையேல் அல்லல் கரையேறி
மேவரும் பேரானந்த வெள்ளமதில் தோய்வாயே
** மேலோனை நூலோனைத் தொழுதலே விழுப்பயன்

#578
ஐம்புலனும் தானாய் அவை நுகரும் இன்பமுமாய்
வெம் புல நோய் மா மருந்தாம் மேலோனை நூலோனை
நம்புமவர்க்கு அடைக்கலத்தை நாடீர் நமரங்காள்
** அதி. 4 – குடிகளியல்பு
** இறைப்பணத்தால் குடிகளே இன்பம் எய்துவர்

#579
வேர் உறு நீர் மரம் எங்கும் விரவும் உதரம் கொள் சுவை
ஆர் உணவு தேகம் எலாம் மண்ணுறும் கோன் கொள்ளும் இறை
பார் உயிர்க்கு எலாம் பின்பு பயன்படலால் தகும் பருவத்து
ஏர் உறவே தக்க இறை இனிது ஈவர் குடிகள் அரோ
** உயிராம் வேந்தை உள்ளன்புடன் காப்பர்

#580
தருவினொடு கிளைகளும் சார் வல்லியும் சாய்ந்து அழிதல் எனப்
பெருமகன் ஓர் இடர் எய்தின் பிழைக்கும் வகை பிறர்க்கு உண்டோ
மருவலரால் மற்றொன்றால் மகிபன் அயர்வு எய்தாமல்
ஒருமையொடு மன்னானை உயர் குடிகள் ஓம்புவரால்
** மன்னன் செயலை மதித்தே நடப்பர்

#581
அல் ஆரும் மழை எவர்க்கும் அமுது எனினும் காலம் உணர்ந்து
எல்லாரும் நலம் பெறச்செய்திடும்-கொல்லோ ஒரு நிருபன்
பல்லாரும் மகிழ்வுறவே பண்ணல் அசாத்தியம் எனலால்
நல்லார் அன்னோன் செயலை நயம் எனக் கொண்டு ஒழுகுவரால்
** அதி. 5 – ஞானாசிரியன் தன்மை
** மேலோர் நடப்பதே ஏனோர்க்கும் விதியாம்

#582
மகவின் கரம் பற்றி முன் தான் நடந்து வளம் மேவும் நடை காட்டி மகிழ் அன்னை போலும்
தக முன்பு தாம் ஆடி நடனம் பயிற்றும் தகையோர்கள் போலும் சகத்தோர் செவிக்-கண்
புகவே நல்வழி ஓது புரை அற்ற புனிதர் பொறை சீலம் அன்பு ஈகை புகழ் வாய்மை விரதம்
பகர்கின்ற சுகுணங்கள் யாவிற்கும் அவர் ஓர் பதி ஆகி விதி ஆகி மதி ஓதுவாரால்
** எல்லார்க்கும் இனியராய் இயல்பவர் மேலோர்

#583
அயலார் மதத்தைக் குணத்தைப் பழிக்கார் அறம் ஈது மறம் ஈது எனச் சொல்வர் பொதுவாச்
சுயவூதியம்-தன்னை நட்டத்தை மதியார் சூழ்ந்தோர்கள் ஈடேறுமாறு என்றும் முயல்வார்
இயல் செல்வர் மிடியாளர் நல்லார்கள் அல்லார் என் பேதம் ஓரார் யாவர்க்கும் இனியார்
பயன் ஒன்று விழைவோரை மறை-தன்னில் ஏலார் பழி அற்ற மொழி பெற்ற வழி உற்ற மேலோர்
** அதி. 6 – பொய்க்குருவின் தன்மை
** இழிகுரவர் எந்நாளும் இயல்நெறி ஒழுகார்

#584
ஒளியை வால்புறம் போக்கி ஓர் செவ்வுரு
நளி இருட்டில் நகருதல் போல் கற்ற
தெளிவு எலாம் ஒருபாங்கர் எறீஇச் செல்வர்
இளி கொள் தீ நெறி ஈனக் குரவரே
** ஓதியவழி நில்லார் ஊதியம் எய்தார்

#585
உணர்ந்தும் தாம் பிறர்க்கு ஓதியும் நல்வழி
தணர்ந்துளோர் சுடர் தாங்கித் தன் மேல் இருள்
புணர்ந்த தம்பம்-கொல் புத்தகம் தாங்கிய
கொணர்ந்த சட்டம்-கொல் பால் கொள்கலம்-கொலோ
** அதி. 7 – தாய்தந்தையரை வணங்கல்
** ஈன்றார் கடுஞ்சொல் ஏற்றலே கடனாம்

#586
தளர்வுறு மூப்பால் ஈன்றோர் சாற்றும் வன்மொழி பொறாது
கிளர்வு அறு சினம் மீக்கொள்ளும் பாவி கேள் அவர் உன்னால் உன்
இளமையில் உறும் துன்பங்கட்கு இடைந்து சற்று உனை ஓம்பாரேல்
வளருவாய்-கொல் நீ இன்னே வாழ்வை-கொல் முனிவை-கொல்லோ
** ஈன்றார் உடன்பிறந்தார் இவர்ப்பேணல் எழிலாம்

#587
உரியவர் யாவரினும் அனை தந்தை உறவே முன்னாம் உவர்தாம் நம்மில்
பெரியவராய் நம் பயன் ஒன்றே கருதும் பெற்றியினால் பெட்பின் அன்னார்
பிரியம் வெறுப்பினை உணர்ந்து அவ்வாறு ஒழுகி அவரோடும் பிறந்த மைந்தர்
அரிவையர் அவ் அனை தந்தை அனையர் என நினைத்து ஓம்பல் அழகாம் நெஞ்சே
** அதி. 8 – மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும்
** ஈன்ற மகவோம்பார்க் கிருதிணையும் இன்றாம்

#588
படு தொழில் விலங்கும் தன் பறழ் வளர்ந்து உடல்
நெடுமையாம்காறும் நன்கு ஓம்பி நிற்குமால்
தொடும் உயர்திணை மரீஇச் சுதர்க்-கண் அன்பு இலாக்
கொடுமையோர்க்கு ஒரு திணை கூற இன்று அரோ
** திருந்தா மக்களைத் தெய்வமும் ஒறுக்கும்

#589
முறை_இல் சேயரைத் தன்னம் முனிய அஞ்சுவீர்
கறை மிகும் அவரைப் பார் காக்கும் வேந்தனும்
இறைவனும் தண்டனை இயற்றுவார் இனித்
தரையில் எவ்வாறு அதைச் சகித்து உய்வீர்களே
** தொழுதுணர்த்தி மக்களைத் தொழுதுழைக்கச் செய்க

#590
முத்தொழில் பரன் தொழும் முறையும் மன்னவன்
கைத்தொழில் பொருள் இலக்கணமும் தத்தமக்கு
எத் தொழில் எவ் ஒழுக்கு இயைந்த ஆகுமோ
அத் தொழில் வண்மையும் அறைக பாலர்க்கே
** கல்லாதார் செய்குற்றம் ஈன்றாரைக் கட்டுறுத்தும்

#591
பச்சைமண் கொடு நினைத்தபடி பல கலம் செய்வார் போல்
விச்சையும் அறமும் மூப்பு மேவும் முன் தம் மகார்க்குப்
பிச்சைகொண்டெனினும் ஓதல் பெற்றவர் கடனாம் அன்றேல்
இச்சை சேர் பழி பாவங்கள் ஈன்றவர்க்கு எய்துமாலோ
** அதி. 9 – மாதரைப் படிப்பித்தல்
** அறிவாற்றல் பெருமைகளால் ஆண்பெண் ஒப்பே

#592
நூல் எலாம் மைந்தரே நுவன்றதால் அவர்
வேல் எனும் விழியர்க்கு ஓர் விகற்பம் கூறுவர்
பால் எனும் வேற்றுமை அன்றிப் பங்கம் என்
மால் எனும் மைந்தர்க்கும் மடந்தையர்க்குமே
** மங்கையர்க்கு நன்குணர்த்தல் ஈன்றோர் மாண்பு

#593
தீது அறத் தன்மையும் தெய்வ நேயமும்
ஓது அரிதான இல்லற ஒழுக்கமும்
காதலர் வளர்த்தலும் காந்தர்ப் பேணலும்
மாதருக்கு உணர்த்தல் ஈன்றோர்க்கு மாண்பு அரோ
** பெண்பாலார் கல்வியெலாம் ஆண்பாற்குப் பெரும்பொருளாம்

#594
வாணி உமை கமலை ஔவை முதலியவர் மாதர் அன்றோ மைந்தர் நாவைக்
காணிகொள்வாள் தனைப் போன்ற மடந்தையர் நாச் சேராளோ கதிரோன் இல் பார்
சேண் நிகரும் கல்வி இலா மாதர் அகம் படித்து உணரத் தீட்டப் பாடப்
பூண் இழையார் அறிகுவரேல் நிதியமது போலும் உண்டோ புருடர்க்கு அம்மா
** அதி. 10 – உடன்பிறந்தாரியல்பு
** முன்பின் பிறந்தார் தந்தைதாய் மக்களாமுன்

#595
முன்னவன் சிறுபிதா முன்னை அன்னையாம்
பின்னவன் நேயனாம் பின்னை புத்திரி
பன்ன அரும் சோதரர் பன்னிமார்கள் ஈங்கு
உன்ன அரும் சோதரம் போலும் உள்ளமே
** கிளைஇலைபோல் உடன்பிறந்தார் கெழுமுதல் பண்பே

#596
கொம்பர் உள் உலர்ந்திடக் கூட வாடும் இலைகளும்
பம்பியக் கொம்பு ஓங்கிடப் பன்னமும் செழிக்குமால்
தம்பி அண்ணன் என்னவே சார்ந்துளோர்-தம் இன்பமும்
வெம்பு துன்பும் ஒன்று என மேவி வாழ்தல் மேன்மையால்
** உடைமையிற்பங் கில்பிறப்பை ஓம்பல்பிறப் பாண்கடனே

#597
உடன்பிறந்த சோதரிக்கு ஒத்த பாகம் இலை பிறப்
பிடம் துறந்து நாளை ஓர் ஏழை இல்கிழத்தியாய்த்
தொடர்ந்து செல்வள் ஆதலால் தொடர்புறும் சகோதரர்
அடர்ந்த அன்போடு அவளை நன்கு ஆதரிக்க வேண்டுமால்
** எல்லார்க்கும் அன்புசெய ஈந்தான் இவ்வுடல்

#598
நாடு வேறு குலமொடு நலமும் வேறு உளாரையும்
நீடு நாரொடு ஓம்புதல் நீதி என்னின் ஒருவயிற்று
ஊடு போந்த சோதரர் ஒத்து வாழ்கிலார் எனின்
வீடு மூடும் வாய் நலம் வீடும் கேடும் கூடுமே
** தந்தை தாயின் உடன்பிறப்புச் சார்மக்கள் பேணலறம்

#599
தந்தையோடு தாயொடு தாம் பிறந்த சோதரர்
மைந்தரானும் தந்தை கொள் மறுமனை வயிற்றிடை
வந்த பேர்கள் ஆயினும் மற்று உளோர்கள் ஆயினும்
முந்து காதலோடும் நட்பு உவந்து வாழ்தல் நன்று அரோ
** தெய்வநிலை அண்டங்கள் தெரிக்கும கல்லில்

#600
சிறுவரைப் போது ஓர் கல்லைச் சேணிடை நிறுவுவோனை
அறு_குணன் என்போம் பார் மேல் அன்னதன் கீழ் எப்பாலும்
துறுவிய அண்ட கோளத் தொகைகள் எண்ணிறந்த வானின்
நிறுவுவோன்-தன்னை இன்னே நெஞ்சமே உன்னாது என்னே
** நீதிநூல் முற்றிற்று