முதுமொழிமேல் வைப்பு — கமலை வெள்ளியம்பலவாண முனிவர்

தேவையான நூலின்
மேல் சொடுக்கவும்

1.ஆத்திசூடி
2.கொன்றைவேந்தன்
3.மூதுரை(வாக்குண்டாம்)
4. நல்வழி
5.வெற்றி வேற்கை
6.உலக நீதி
7.நீதிநெறி விளக்கம்
8.அறநெறிச்சாரம்
9.நீதி நூல்
10.நன்னெறி
11.நீதி சூடாமணி
12.சோமேசர் முதுமொழி வெண்பா
13.விவேக சிந்தாமணி
14.ஆத்திசூடி வெண்பா
15.நீதி வெண்பா
16.நன்மதி வெண்பா
17.அருங்கலச்செப்பு
18.முதுமொழிமேல் வைப்பு
19.புதிய ஆத்திசூடி
20.இளையார் ஆத்திசூடி
21.திருக்குறள் குமரேச வெண்பா


@0 முன்னுரை
** சிறப்புப் பாயிரம்

#1
பதி கதையால் நால் ஒழி வெண்பாட்டு இருநூறாக
முதுமொழிமேல்வைப்பு மொழிந்தான் மது மலர்க் கா
உம்பர் உலகு அளவும் ஓங்கு கமலை வெள்ளி
அம்பலவாண முனிவன்

#2
** காப்பு
சதுமுகன் மால் காணாத் தலைவர் புகழ் சொல்லும்
முதுமொழிமேல்வைப்பு மொழிய மதுரத்
தவள மத ஆரணமே தாய் என நின்று ஏத்தும்
கவள மத வாரணமே காப்பு

@1 நூல்
** அறத்துப்பால்
** பாயிரம்
** கடவுள் வாழ்த்து

#1
எங்கும் உளன் இறைவன் என்று இரண்டாய் ஏத்து தமிழ்ச்
சிங்கம் நடந்த வழிச் சித்தாந்தம் என்றது
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

#2
புத்தர் பிறர் சொல்லும் பொருள் மறுத்து வள்ளுவர்தாம்
அத்தர் மறை ஆகமங்களாம் என்று வைத்தது
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார்-மாட்டு

#3
வைதிகம் மேற்கொண்டு சொலும் மற்றவர்க்குப் பக்குவர்க்காம்
சைவம் அவர் கொண்ட சமயம் எனும் செய்தி சொலும்
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
தாளை வணங்காத் தலை

#4
பெற்றது அவர் சைவத்துப் பேத சமாதி அன்றி
மற்று ஞானாந்தம் என வந்தது இது முற்றும்
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

#5
அப்பர் முதல் சித்தாந்திகள் வீடு அடைதலுமே
வைத்த புவனத்து இருந்தார் மற்றையவர் ஒக்கும்
பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

#6
** வான்சிறப்பு
அழித்து உலகை ஆக்குதலால் அந்தமே ஆதி
அழித்து ஒன்றை ஆக்குவதும் உண்டோ எனில் கொள்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

#7
அடியவரை நீத்து அரனுக்கு அன்புசெய்ய மாறன்
மழை மறுத்துப் பல் உயிரும் வாடும் படியில்
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது

#8
** நீத்தார் பெருமை
ஆர் பெரியர் நீத்தும் அரன் அறிய நின்ற திரு
நீலகண்டர் போல் அரிதில் நீத்திலரால் சாலச்
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கு அரிய செய்கலா தார்

#9
புறம் அகம் என்று யாவும் புகல்வனவும் காணத்
திறம் நுவல்கின்ற சிவநூல் நெறியில்
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்-கட்டே உலகு

#10
** அறன் வலியுறுத்தல்
தண்டிக்கு அருள் புரிந்து தக்கன் சிரம் அறுக்கும்
அண்டர் பெருமான் அருளும் ஆகமத்தில் கண்ட
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு

#11
காணலாம் ஈசன் கழல் பணிந்து நல் அறங்கள்
பேணுவார் நாளும் பெறும் பயனைப் பேணும்
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தானிடை

#12
தருமர் பிறர் நெறியால் சார்ந்தது விண் ஈசன்
அருள் நெறியால் ஈனரும் மேல் ஆனார் அருநூல்
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல

#13
** இல்லறவியல் – இல்வாழ்க்கை
இல் வாழ் மருத்தர் போல் ஈசன் அடிக்கு அன்புசெய
வல்லாரேல் நோற்க வருவானேன் எல்லாரும்
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

#14
** வாழ்க்கைத் துணை நலம்
முளையால் அமுது அமைத்த முக்கணர்-பால் அன்பன்
இளையான் குடிமாறன் இல் வாழ் துணை போல்
மனைத் தக்க மாண்பு உடையள் ஆகித் தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை

#15
உலகு உண்டு உறங்கும் ஒருத்தி ஒருத்தி
சில கொண்டு அரன் உவப்பச் செய்யும் அறன் என்றால்
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
இல்லவள் மாணாக் கடை

#16
அறவோன் அகத்திருந்தாள் அன்பு கண்டேம் கண்டேம்
இறையோடு இறந்தாள் இயல்பும் முறையுள்
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை

#17
** புதல்வரைப் பெறுதல்
வேணுபுரநாதர் அருள் மேவுதலும் சம்பந்தர்
தாதையினும் ஏனோரும் தாம் மகிழக் காணுதலால்
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது

#18
பெண் பெறினும் என்ன பிழையோ தடாதகை போல்
எண் பொருளும் ஈசனும் வந்து எய்துமே கொண்ட
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்காப்
பண்பு உடை மக்கள் பெறின்

#19
** அன்புடைமை
கண்_நுதலோன் கண் நோவு கண்ட அளவில் கண்ணப்பன்
கண்ணில் நீர் சோரக் கதறுமால் உள் நெகிழும்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும்

#20
** விருந்தோம்பல்
ஈசன் அடியார் விருந்து என்று இட்டு உலவாக் கோட்டை பெற்ற
நேசர் குறைவு இன்றி நிற்றலால் நாடி
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

#21
**இனியவை கூறல்
முதுகிரியான் அன்பர் முனிந்து அருள வந்த
தகுதியுடையான் சரிதம் சொலுமே
பணிவு உடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்றுப் பிற

#22
** செய்ந்நன்றி யறிதல்
எள் அளவு காணாது எலி செய்த நன்றிக்கா
வள்ளல் உலகு ஆளவைத்து அருளும் நல்லாய்
தினைத் துணை நன்றி செயினும் பனைத் துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்

#23
அன்று குணன் உய்ந்தான் அந்தணனைக் கொன்றும் அரன்
நன்றி கொலும் அசுரர் நாடு அறியப் பொன்றுதலால்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

#24
** நடுவு நிலைமை
ஈசன் உமையாள் இடைப்பட்டு வாரமாய்ப்
பேசலும் மாயோன் பெரும் பாம்பு ஆம் ஆசில்
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவு ஒரீஇ அல்ல செயின்

#25
பிள்ளையினும் கைத்தொண்டு பேணுதலால் அப்பருக்கு
நல்ல படிக்காசு நல்குமால் எல்லாம்
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி

#26
** அடக்க முடைமை
ஆனை இழிந்தும் அரசு இறைஞ்சும் போலியைக் கண்டு
ஏனையர் அரன் அன்பர் என்றால் என்படுமோ மாநிலத்துள்
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

#27
சோதி திறம் அறிந்து சொல்ல அறியாது சொல்லி
வேதநிலைகண்டானும் மெய் மறந்தான் ஆதலால்
யா காவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு

#28
** ஒழுக்க முடைமை
தில்லை மறையோர் சிவசமயம் சார்ந்து ஒழுகி
இம்மையே சாரூபம் எய்தினார் நல்ல
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்

#29
** பிறனில் விழையாமை
எந்தை பலிக்கென்று இயங்கு நாள் பின்தொடர்ந்த
மென்_தொடியார் தேத்தும் விழைந்திலார் என்ப
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு

#30
** பொறை யுடைமை
பித்தன் எனத் தமக்குப் பேர்படைத்தும் எந்தைபிரான்
வைத்தவனைத் தோழன் என வாழ்வித்தார் நித்தம்
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

#31
கல் எறியும் பொறுத்துக் கண்_நுதலார் தாம் மறந்து
நல்ல பதம் அவர்க்கு நல்கினார் வல்லி
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று

#32
** அழுக்காறாமை
புத்தன் இறந்தான் பொறாமைசெய்து செய்யார்க்கு
நித்தர் அருள் உண்டாய் நிறைந்த புகழ் மெத்த
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
ஒழுக்கத்தில் தீர்ந்தாரும் இல்

#33
** வெஃகாமை
இரந்து உண்டு வாழ்ந்தும் இறைவர் புலவர்
இரந்த பொருள் கவர்ந்தது ஈந்தார் மறந்தும்
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
புன்மை_இல் காட்சியவர்

#34
** புறங்கூறாமை
சங்கு அறுக்கும் சாதி சொலும் சங்கரனை நக்கீரன்
அன்று பழி சொன்னது போல் ஆர் சொல்வார் என்றும்
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும்

#35
** பயனில சொல்லாமை
இறைவர் மதலை எதிர் இசைவு கூறும்
வெறும் உரையால் சென்று கழுவேறும் பிறர் போல்
பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப்படும்

#36
** தீவினை அச்சம்
தையலார் கற்பு அழியச் சார்வானை மா மதுரைத்
தெய்வமே சென்று ஒறுக்கும் செய்தியால் நொய்தின்
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு

#37
** ஒப்புர வறிதல்
தருவும் வரிசை பெறும் சங்கரனுக்கு அன்பர்
ஒருவர் திரு உடையராகத் தெரு நடுவே
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
பேரறிவாளன் திரு

#38
** ஈகை
தொல்லை மணி மன்று உடையார் தொண்டர்க்குப் பெண்டிரையும்
இல்லை எனாது ஈந்தார் இயற்பகையார் வல்லி
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையான்-கண்ணே உள

#39
** புகழ்
தோன்றி அரன் அருளால் தொண்டர் வென்றார் தோற்று அமணர்
ஏன் பிறந்தேம் என்றே இடர் உழன்றார் ஆய்ந்து அறிஞர்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
**இல்லறவியல் முற்றும்

#40
** துறவற வியல் – அருளுடைமை
அருளால் பிரம்பின் அடியுண்டார்க்கு இல்லை
துயர்தான் உலகு அனைத்தும் சொல்லும் ஒருநாளும்
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி

#41
** புலான் மறுத்தல்
புத்தன் நான் அன்று சிவபோதன் எனும் சைவன் என
வைத்த திருவள்ளுவர் வாய்மொழிதான் நித்தம்
தினல் பொருட்டால் கொள்ளாது உலகு எனின் யாரும்
விலைப் பொருட்டால் ஊன் தருவார் இல்

#42
நாரை புலால் உண்ணாது நல் அறம் மேற்கொண்டு ஒழுகி
ஈசன் உலகு ஏறி இருத்தலால்
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

#43
வேதியர்கள் விண் அடைந்தார் வேட்டு உயிரைக் கொன்று தின்னா
ஆதிசைவர் மேல் என்றதனை மறுத்து ஓதும்
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று

#44
** தவம்
தமிழ் மணக்கப் பாடி அரன் தண்ணளி சேர் மைந்தன்
அமண் அழிக்கும் தென்னவனை ஆக்கும் இமையளவில்
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணில் தவத்தால் வரும்

#45
** கூடா வொழுக்கம்
என்றும் இறைவன் அடியார் பொருள் என்று
நின்று ஒழுகும் மெய்ப்பொருளின் நேரான் போய் அன்று
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்து அற்று

#46
** கள்ளாமை
ஈசனுக்குப் பெண்டு என்று இருந்தாரும் நெய் திருடி
ஆயர் மனைப் பட்ட பாடு ஆர் படுவார் சீசீ என்று
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு

#47
** வாய்மை
ஆதி முடி தேடி அறியான் அறிந்தேன் என்று
ஓதி மனம் நொந்தே உழல்கின்றான் வேதன் என்றால்
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்

#48
நந்தி அருள் காசி மயானத்து இருந்து சீவித்தும்
அந்த மொழி தவறாது ஆற்றும் அரிச்சந்திரன் போல்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்

#49
** வெகுளாமை
பெற்றம் உவந்தார் பெருமை மதியாது தக்கன்
செற்றம் மேற்கொண்டு சிரம் இழந்தான் முற்றும்
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று

#50
** இன்னா செய்யாமை
கண்_நுதலார் தம்மைக் கடை காக்க வைத்தானை
விண்ணவரும் தாழ்ந்து இறைஞ்ச மேல் வைத்தார் எண்ணி
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்

#51
இரணியனைக் கொன்று இருக்க எண்ணினவர் கேடும்
அரன் வெகுளப் பின் நிகழும் ஆற்றால் ஒருவர்
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்

#52
** கொல்லாமை
கூடல் இறை அன்று கொடிய மறையோன் சுமத்தும்
வேடன் பழி அஞ்சி விடுவிக்கும் தேட வரும்
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி

#53
** நிலையாமை
அரனை அருச்சித்த விபசித்திற்கும் வேள்வி
புரியும் நகுடனுக்கும் போல வருவதூஉம்
கூத்தாட்டு அவைக் குழாத்து அற்றே பெரும் செல்வம்
போக்கும் அது விளிந்து அற்று

#54
முனை நாள் இருந்த கண்ணன் முக்கணற்கு ஆட்பட்ட
வனசரனால் மாயும் மறு நாள் எனலால்
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இவ் உலகு

#55
** துறவு
குலன் ஒழுக்கம் நல்ல குணம் உண்டோ என்னும்
அரன் அருளும் உய்யவந்தார்க்கு அன்றே துறவு முதிர்ந்து
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

#56
பட்டினத்துப்பிள்ளை பரனை அடைந்தார் துறந்து
விட்டுவிடா இந்திர கிலார் கிட்டித்
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர்
** இரண்டாம் அடி சிதைந்துள்ளது

#57
எங்கும் இறை தோய்ந்தாலும் தோய்வு இலன் என்று ஓது தமிழ்ச்
சிங்கம் நடந்த வழிச் சித்தாந்தம் அங்கு அது கேள்
பற்றுக பற்று அற்றான் பற்றினை அப் பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

#58
** மெய்யுணர்தல்
மதி இருளை நீங்கின் மல இருளும் நீங்கும்
பதி அருளாம் என்று சைவர் பார்த்து மொழிவது
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசு அறு காட்சியவர்க்கு

#59
இருள் பலவாக் கோடல் இறைநூலுக்கு அன்றி
அருகர் பிறர்க்கு ஆகாது என்னும் உரை கேள்
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசு அறு காட்சியவர்க்கு

#60
அரன் அருளாம் இன்பம் அனுபவிப்பார் வேறு என்று
இருமை பரிந்து ஒன்றை இகழ்வான் உரைசெயும்
கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி

#61
பற்று ஒழிந்தும் என்ன பிறர் பண்டு அரனைத் தூதுவிடக்
கற்றவர் போல் மெய்ப்பொருளைக் கண்டார்-கொல் உற்றது கேள்
ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே
மெய் உணர்வு இல்லாதவர்க்கு

#62
** அவாவறுத்தல்
பிறவி அறார் மற்றையவர் பிஞ்ஞகர் காண்பித்த
பல பொருளும் வேண்டாத பண்பினவர் அன்றி
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையவர்
அற்றாக அற்றது இலர்

#63
** ஊழ்
வரருசி உள்ளிட்டார் மயங்கினார் என்றால்
அவரவருக்கு ஈசன் அமைத்த திறன் அன்றி
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும்
** துறவறவியல் முற்றும்
** அறத்துப்பால் முற்றும்
** பொருட் பால்
** அரசியல் இறைமாட்சி

#64
இறை எளிநின்று யார்க்கும் இனிய சொல்லலாலே
மதுரை மதுரை என்பார் மாந்தர் அதுவன்றோ
காட்சிக்கு எளியன் கடும்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

#65
** கல்வி
அருகர் கழுவேறுதலால் அல்நெறி விட்டு ஈசர்
திருவருளால் வாதவூர் சேரும் குரு நெறியில்
கற்க கசடு அறக் கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக

#66
நாதர் அருள் சேரனொடு நம்பி ஆரூரரும் முன்
பேதம் அறக் கூடிப் பிரிவது போல் தீது இன்று
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

#67
கற்றவர் சங்கத்திருந்தார் கண்_நுதலோடு ஏனையவர்
சற்றும் இரார் என்று தலை ஆயார் முற்றும்
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர்

#68
சிவகீதை முன் கேட்டார் சென்றுசென்று சென்மித்து
அவர் பார்த்தனுக்கு அருளும் ஆற்றால் புவனத்து
ஒருமைக்-கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து

#69
இறைவரும் கைவிடார் ஏடு அவர்-பால் சென்ற
பிறரும் அறிந்து இன்பம் பெறலால் அறி-தொறூஉம்
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்

#70
** கல்லாமை
ஒருவர் சிறிது உமையாற்கு
அருள்வதன் முன்பு அறிந்து குரு முகத்தால்
கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்
** முதல் இரண்டு அடிகள் சிதைந்துள்ளன

#71
ஈசரிடத்து அன்பர் என்பவர்-பால் புத்தர் எலாம்
பேசுமிடத்து ஊமை ஆம் பெற்றிமையால் ஆகமத்தைக்
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வுபடும்

#72
** கேள்வி
ஆலடியார்பாற்பட்ட அந்தணர் போல் உய்வதற்குச்
சீலமுடை யார்-பால் செவி தாழ்க்க சால
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கமுடையார் வாய்ச் சொல்

#73
** அறிவுடைமை
பிறர்க்கு உண்டோ இல்லை அவர் பேராண்மை குன்ற
மதிக்-கண் நுழை மதனை மாய்த்தார்-தமக்கே
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கலாகா அரண்

#74
ஈசன் நெறி தொண்டர் இயம்புதலும் மெய்ந்நெறி என்று
ஆசு இன்று தேவர் அடைந்ததூஉம் நீதி அன்றோ
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப் பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு

#75
பண்டு களிற்றுப்படி மருங்கு வைத்த செழும்
தண் தமிழை அம்பலவர் தாம் மகிழ்ந்து கொண்டமையால்
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப் பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு

#76
** குற்றங் கடிதல்
தோன்றி இறை அருளும் தொண்டர் எனும் மூர்த்திக்கு
மூன்று மறைச் செல்வம் உதிரும் அஞ்ஞான்று
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

#77
** பெரியாரைத் துணைக்கோடல்
பகை சிறிதும் இன்றிப் பறவைகளும் அஞ்ச
இறைவர் துணை வலியான் எய்தும் முறைமையால்
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

#78
சிந்தாமணி கிடைத்து என் தென்னர்க்கு இறை அருளால்
வந்தாரைப் போல எது வாழவைக்கும் அந்தோ
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

#79
** சிற்றினஞ் சேராமை
குண்டரால் தென்னன் குறைபட்டுக் கண்_நுதலார்
தொண்டரான் மிக்குயர்ந்து தோன்றலால் எண் திசையும்
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல்

#80
** தெரிந்து செயல்வகை
ஆய்_தொடியார் கண்_நுதல்-பால் அன்பின் உமிழ்தலுமே
வாய்மை அறியாது ஒழுகும் மற்றவர் போல் தூய்மையொடு
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக் கடை

#81
** வலியறியதல்
கண்_நுதல்-பால் சென்றது காமனுக்கு வென்றியோ
எண்ணமிலான் போலும் எதிர்ந்து இறந்தான் நண்ணி
நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும்

#82
** கால மறிதல்
எல்லாம் இமைப்பில் அழிப்பாரும் நீட்டித்தார்
வல்லார் புரம் எரிக்க வந்துழியும் ஒல்லாரைப்
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள் வேர்ப்பர் ஒள்ளியவர்

#83
** இடனறிதல்
இறை அருள் தென்னனிடத்து இந்திரன் வந்து அன்று
வளையால் எறிபட்ட ஆற்றால் இளையாச்
சிறு படையான் செல்லிடம் சேரின் உறு படையான்
ஊக்கம் அழிந்து விடும்

#84
** தெரிந்து தெளிதல்
இறைவர் நிலை காணார் இருவர் என்று கண்டால்
பெருமை சிறுமை இனிப் பேசேம் இறையாம்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக்கல்

#85
** தெரிந்து வினையாடல்
ஈசன் குண்டோதர போ என்று அருளும் குன்று புரை
சோறு கறி உண்டு தொலைப்பதற்கு நாடி
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்-கண் விடல்

#86
** சுற்றம் தழால்
அத்தர் திருவருளால் அன்று படிக்காசு பெற்றார்
பத்தர் கணம் சூழப் பரிந்திட்டார் இத் தலத்துச்
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்

#87
** பொச்சாவாமை
மறந்துமறந்து ஈசன் மலர் அடியைப் பேணாது
இறந்துஇறந்து மாலும் இடர் எய்தும் அறிந்துஅறிந்து
முன்னுறக் காவாது இழுக்கியான் தன் பிழை
பின் ஊறு இரங்கிவிடும்

#88
** செங்கோன்மை
இறை மகிழ வேந்தன் இளங்கன்றிற்காக
மகவினையும் தேர் ஊரும் ஆற்றால் அகல் இடத்தில்
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை

#89
அந்தி_வண்ணன் நூலால் அருகர் பிறர் கோள் சிதைய
வந்த திருவள்ளுவர்-தம் வாய்மொழி கேள் இந்த நிலத்து
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்

#90
** கொடுங்கோன்மை
மாமன் என்றும் பாணன் என்றும் வந்தானைப் பொன் மதுரைச்
சேவகன்தான் என்றும் திரியாத சூரன் என்றும்
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்-தொறும் நாடு கெடும்

#91
** வெருவந்த செய்யாமை
இசை பயின்றார் வாதத்து இறை வரும் ஒன்றேனும்
இசைவு அன்றி இயற்றான் இசைவு ஒன்றத்
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து
** இப்பாடலின் இரண்டாம் அடி சிதைவுற்றுள்ளது

#92
** கண்ணோட்டம்
வாணன் இரு கரமும் வைத்துப் பணி கருதி
நாதன் அறுப்பித்து அருளும் நன்னயத்தைப் போலக்
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இவ் உலகு

#93
** ஒற்றாடல்
சீர் படைத்த முக்கண் சிவன் அன்பன் என்று எழுதும்
பேர்படைத்த சேரர் பெருமான் போல் பார் மிசையின்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்

#94
** ஊக்க முடைமை
பார்த்த குரவர் பணி முயன்றார் கண்_நுதலார்
தீர்த்தத்து இயலும் திறம் நின்றார் நீர்த் தடத்து
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
உள்ளத்து அனையது உயர்வு

#95
மேல் நிகழ்வது ஏதெனினும் வென்றி எனத் தென் மதுரை
ஈசனொடு வாதத்து எதிர்நின்ற கீரனைப் போல்
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

#96
** மடியின்மை
கஞ்சுகநாதன் கோயில் கால் எலிக்கு மாட்டாதே
வஞ்சனை செய்தானை இவண் வைத்துப் பார் துஞ்சு
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

#97
மாறன் இறை அருளால் வந்து வெல்லத் தோற்ற அளவில்
போர் விண்ட இந்திரனைப் போலவே சால
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
மாண்ட உஞற்று இலவர்

#98
** ஆள்வினை யுடைமை
பாலன் ஒருவன் பணிந்து கடவூரானைக்
காலன் கடந்திருக்கக் கண்டோமே ஞாலத்தின்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்
தாழாது உஞற்றுபவர்

#99
** இடுக்கண் அழியாமை
நக்கர் சிறிது நகைத்தலுமே முப்புரமும்
அக்கணமே வெந்து விழும் ஆதலால் மிக்க
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்
** அரசியல் முற்றும்

#100
** அங்கவியல் – அமைச்சு
தென்னன் இறைவர் அருள் சேர்ந்து செங்கோல்செலுத்த
மன்னு குலச்சிறையே மந்திரியாம் என்னை
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான் தேர்ச்சித் துணை

#101
** சொல்வன்மை
சிவன் அடி என்னும் அயன் சீர் பெறும் முன் பின்னர்ச்
சிவ சமதை சொல்லலும் சீர் போம் எவரும் தம்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு

#102
பரமன் அருள் வேண்டிப் பகர்ந்த சுரரான
கரதூடணன் முதலோர் காதை வரவு அறிவீர்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு

#103
எவற்றினும் மேல் என்ன இறைவர் சொன்னது எல்லாம்
சிவப்பிரகாசத்து அடங்கச் செப்பும் தவத்தினர் போல்
சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச் சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து

#104
** வினைத் தூய்மை
சூரன் இழந்தான் இழந்தான் சோதி அருளும் தாய
னார் இழந்த எல்லாம் அடையுமே தேரின்
அழக் கொண்ட எல்லாம் அழப் போம் இழப்பினும்
பின் பயக்கும் நற்பாலவை

#105
** வினைத் திட்பம்
தோழன் என்று சொன்ன அடித்தொண்டர்க்கு இறைவர் தூ
தாக நடந்தது அரிதரிது காதலி-பால்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

#106
குறுமுனியும் ஈசன் அருள் கொண்டு கடல் அங்கை
வரை அடிக் கீழ் அடக்கும் ஆற்றால் சிறிதும்
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சாணி_அன்னார் உடைத்து

#107
** வினைசெயல் வகை
இறை அருளால் செவ்வேள் இமையோரைக் காக்கும்
திறன் நாடிச் சூர் தடிந்த செய்கையது போல்
முடிவும் இடையூறும் முற்றிய ஆங்கு எய்தும்
படு பயனும் பார்த்துச் செயல்

#108
இறைவர்க்குத் தொண்டாய் இடர் தீர்ந்தது அன்றிப்
பெறுபயனும் வாகீசர் பெற்றார் அறிஞர்
வினையால் வினை ஆக்கிக் கோடல் நனை கவுள்
யானையால் யானை யாத்து அற்று

#109
கண்_நுதல்-பால் ஆழி பெறக் கண் சாத்தித் தாள் காணா
வண்ணம் மொழிந்த நெடுமாலே போல் எண்ணி
வினையால் வினை ஆக்கிக் கோடல் நனை கவுள்
யானையால் யானை யாத்து அற்று

#110
** தூது
பேதையரும் நாவலரும் பேதம் இன்றியே பொருந்தத்
தூதுசென்ற கொன்றைத் தொடையலார் போலவே
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று

#111
** மன்னரைச் சேர்ந்தொழுகல்
ஐயன் அருள் புரிந்த அன்று சம்பந்தர்-தமைத்
தெய்வம் எனத் தந்தையரும் தேறினார் நொய்தின்
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப்படும்

#112
** குறிப்பறிதல்
உண்ணப் பொதிசோறும் ஊர் சிவிகையும் பிறவும்
எண்ணம் அறிந்து அடியார்க்கு ஈந்து அருளும் கண்_நுதல் போல்
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறா நீர் வையக்கு அணி

#113
** அவை யறிதல்
பொல்லார் முன் எல்லாம் புகன்று சிவஞானம்
அல்லார் முன் நல்லார் அடங்குதலால் வல்லார்
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
வான் சுதை வண்ணம் கொளல்

#114
இறைநூல் உரையாடார் இன்புற்றார் சால
அறிவு சால் உரை கேட்ட அன்றே நெறி நின்று
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அறச்
சொல் தெரிதல் வல்லார் அகத்து

#115
** அவையஞ்சாமை
சங்கத்தார் வாக்கும் தமிழ் உணர்தலால் சொக்க
லிங்கம் தமிழ்ப் புலவர் எல்லார்க்கும் சிங்கம் அன்றோ
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்
கற்ற செலச் சொல்லுவார்

#116
** நாடு
இறை சாரும் தென்னாடே நாடு ஏனை நாடு
பிற உடையவேனும் பெறா காண் உறையுமவர்க்கு
ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே
வேந்து அமைவு இல்லாத நாடு

#117
** அரண்
குன்றவில்லி காத்து அருளும் கூடல் அரணே அன்றி
நின்ற உள எனினும் நிற்குமோ என்றும்
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
இல்லார்-கண் இல்லது அரண்

#118
** பொருள் செயல் வகை
தந்தை-பொருட்டு எந்தை பிரான் சம்பந்தர்க்கு ஈந்த கிழி
நந்திப் பயன் அனைத்தும் நல்கிற்றே முந்தும்
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள்

#119
திகம்பரர்க்கு நஞ்சைத் திருமகளைப் பீதாம்
பரதரர்க்கு ஈயும் பயோதி நிரந்தரமும்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

#120
** படைமாட்சி
எத்திறத்த நூலும் இலங்கு சிவஞான
சித்தி ஒன்று காணச் சிதையுமே மெத்த
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலிப் பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்

#121
ஆலம் உகந்தானை மணந்தாள் படையே வெல் படையாம்
காலனையும் தோற்று ஓடக் காணுதலால் ஞாலத்துக்
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றலதுவே படை

#122
** படைச் செருக்கு
இறையோடு எதிர்ந்து இறந்தது என்றாலும் என்ன
குறையோ பிறரை அடும் கூற்று முறையே காண்
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது

#123
** நட்பு
பிள்ளை இறைவர் அருள் பெறலும் கேட்டிருந்த
கள் அவிழ் பூம் கோதையார் காதலால் சொல்லும்
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பு ஆம் கிழமை தரும்

#124
நல் நிழலில் நீர் வைத்து நம்பர் நடுப் படையில்
தென்னர் அழியாது அருளும் செய்தியால் முன்னர்
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

#125
** நட்பாராய்தல்
மாறனது கேட்டில் உறுதி என மாணிக்கம்
கூறி விலையாக் கொடுக்கும் இறை ஆதலால்
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பது ஓர் கோல்

#126
** பழமை
வழுவு செய்தும் மால் அயர்க்கு வந்து அரனே பின்னும்
பழமை கருதி அருள்பண்ணும் முழுதும்
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்
வழிவந்த கேண்மையவர்

#127
** தீ நட்பு
தக்கன் உறவு எனினும் சங்கரன்-தன் நட்பிற்குத்
தக்கவன் அன்று என்று ஒறுத்தல் சாலுமே மிக்க
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது

#128
** கூடா நட்பு
ஆரூரர்க்கு ஆரூரர் போன்று ஒற்றியூரர் செயும்
கூடா நட்பாலே குறை வரலால் ஓரும்
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும்

#129
** பேதைமை
அரன் அன்பர் வாகீசர் அன்று அமணை நீங்கப்
பெரிது இன்பம் அன்றி உண்டோ பீழை தெரியின்
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல்

#130
** புல்லறிவாண்மை
ஈசன்_அடியார் இசையாதேயும் இசைந்து அமணர்
தாமே கழுவேறும் தன்மையால் ஞாலத்து
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது

#131
ஆதிமொழியை அறியான் அறிந்தேன் என்று
ஓதியது மீளப் போய் ஓதியதும் ஏதமாம்
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும்

#132
எறும்பு கடை யானை தலை ஈசனைப் பூசித்துப்
பெறும் கதி கண்டும் தேறார் பேய்கள் அறிந்த
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும்

#133
** இகல்
ஆம்கால் இறைவர் அடி தொழுவார் செல்வம் எல்லாம்
போம்கால் அசுரர் பொர வருவார் நீங்கா
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு

#134
** பகைமாட்சி
கண்ணன் கடை இருந்த கண்_நுதலின் தாள் வணங்கி
உள் நின்ற வாணனொடு பொருதான் எண்ணி
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை

#135
** பகைத்திறந் தெரிதல்
விளையாடிக் கீரனொடு வெல்வதற்குச் செல்லும்
இறையோனும் பின் வெகுளும் என்றால் குறையாம்
பகை எனினும் பண்பு இலதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று

#136
** உட்பகை
நாரதர் மால் உட்பகையாய் நம்பர் அடி பேணாத
வாறு சொல்லி முப்புரமும் மாய்வித்தார் ஆதலினால்
உள் பகை அஞ்சித் தன் காக்க உலைவிடத்து
மண் பகையின் மாணத் தெறும்

#137
** பெரியாரைப் பிழையாமை
மன்று உடையார் குன்றை மதியாது எடுத்து அரக்கன்
அன்று படும் துயரம் ஆர் படுவார் என்றும்
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்

#138
** பெண் வழிச் சேறல்
திசை_வென்றவள் பதியும் செல்லாது அவள் பின்
அசைவு இன்றித் தான் உலகம் ஆளும் இசை ஒன்ற
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல்

#139
** வரைவின் மகளிர்
புனிதர் அழல் மூழ்குதலும் போய் அழலின் மூழ்கும்
பனி மலர் மென் கோதை எழில் பாவை ஒழியப்
பொருள்_பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று

#140
** கள்ளுண்ணாமை
அண்ணல் பழமலையை அண்ணா முன் கள் உண்ண
எண்_இல் பெரும் துயரம் எய்துதலான் மண்ணுலகத்து
உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார்

#141
** சூது
அரன் அடியார் நித்தம் அமுதுசெயவேண்டிக்
கவறு உருட்டிக் கைவந்தார் அன்றிப் பிறர் எல்லாம்
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று

#142
** மருந்து
மண்ணுண்டவன் அறியா மண்ணுண்டை ஒன்று கொடுத்து
தெண்ணரு நோய் தீர்க்கும் எழில் வேளூர்க் கண்_நுதல் போல்
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்
** அங்கவியல் முற்றும்

#143
** ஒழிபியல் – குடிமை
மன்னும் அரன் புலியூர் வாய்மை மதியானை
அன்னை-வயின் குறை என்று ஐயுற்றார் என்னை
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனைக்
குலத்தின்-கண் ஐயப்படும்

#144
** மானம்
இறை அருள் சேர் தென்னவன் அன்று இந்திரன்-பால் சென்றும்
குறையிரவான் போயிருந்தான் கூட முறை அன்றோ
இன்றியமையாச் சிறப்பினவாயினும்
குன்ற வருப விடல்

#145
** பெருமை
சங்கரன் போய் நின்ற அளவில் சங்கப்பலகையின் மேல்
அங்கு இருந்தான் நக்கீரனாயினும் என் எங்கணும் போய்
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர்

#146
** சான்றாண்மை
உலகர்க்குத் தந்தை ஒருத்திக்குத் தாயாய்ப்
பலவும் உபகரித்த பண்பின் புலவர்
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள்பவற்கு

#147
பன்றிக் குருளைக்குப் பன்றியாய்க் கண்_நுதலும்
சென்று முலைகொடுக்கும் செய்தியால் என்றும்
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு

#148
இறை அருள் சேர் தென்னன் இரும் கடலும் ஆழி
பிறழ நிலைநிறுத்தும் பெயரால் கடல் பிறழ
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார்

#149
** பண்புடைமை
முப்புரங்கள் கொன்றும் அரன் மூவர்க்கு அருளியதை
இப்பொழுது தானும் உலகு ஏத்துமே செப்பின்
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும் உலகு

#150
** நன்றியில் செல்வம்
எங்கள் இறை அன்பருக்கு ஒன்று ஈயாமையால் பிறந்து
பங்கப்படத் துணிந்த பாவி திருத்தங்கி எனும்
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று

#151
கல் வில் உடையார் கருணை பெறமாட்டாது
வல்வினையில் பட்டு அழுந்தும் வாதாவி வில்வலன் போல்
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்
நச்சு மரம் பழுத்து அற்று

#152
** நாணுடைமை
இறை அருளும் தென்னவன்-பால் இந்திரன் வந்து அன்று
குறைபடலும் நாணியது கூறின் முறை அன்றோ
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
நாண் உடைமை மாந்தர் சிறப்பு

#153
** குடிசெயல் வகை
பாணன் குடி உயரப் பண்டு அரனும் கூடல் வரு
பாணன் எனச் சாதாரி பாடுதலால் நாளும்
குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடி தற்றுத் தான் முந்துறும்

#154
** உழவு
தென்னாட்டு உழவர் இறைகொண்டு கண்_நுதலும்
அ நாட்டிடு இருந்து உலகம் ஆளுதலால் தன் நேர்
பல குடை நீழலும் தம் குடைக் கீழ்க் காண்பர்
அலகு உடை நீழலவர்

#155
** நல்குரவு
மூல லிங்க பூசை முயன்ற பயன் வரும் முன்னே
சீலம் உடைய விபசித்து எனவே ஞாலத்தில்
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று

#156
** இரவு
ஈசர் இரந்தாலும் ஈந்தாரோடு ஒத்து உயர்ந்தார்
நேசரிடத்து இரந்து நிற்றலால் பேசின்
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவினும் தேற்றாதார்-மாட்டு

#157
** இரவச்சம்
என்று இயம்பினார் மொழியால் போலும் இறையாயும்
சென்று இரந்து நிற்கும் சிவன்தானும் அன்றே
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்

#158
ஒருவர் செய வேண்டா உலகு இயல்பாம் என்னும்
அருகர் பிறர் கோள் சிதைக்கும் ஆற்றால் வருவது
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்

#159
** கயமை
மணல் அமுது ஆம் ஆறு மனையாட்குக் கூறிப்
பரன் அருள் தீர் மாமறையோன் பண்பின் நுவலும்
அறை பறை_அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான்
** ஒழிபியல் முற்றும்
** பொருட்பால் முற்றும்
** காமத்துப்பால்
** களவியல்

#160
** தகையணங் குறுத்தல்
ஆரூரன் கண்ட அளவில் ஆரூரன் கோயிலிடை
ஆரூரிற்கு என்று அமைந்த ஆய்_இழையைத் தேரும்
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு

#161
இறைவர் அருள் கதிர் வேல் எந்தை குறவர்
மட_மகளைக் கண்டு வருந்திப் புகலும்
கடாஅக் களிற்றின் மேல் கண்படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில்

#162
** குறிப் பறிதல்
அரன் அருள் சேய் மான்_மகள் என்று ஆங்கு இருவர் தங்கள்
இயல்பும் அறிந்த இகுளை கருதுவது
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல

#163
** புணர்ச்சியின் மகிழ்தல்
அரன் அடியார் அல்லார் அடை பதம்தானும்
இரு நிலவு இன்பத்து இழிவாம் என்று வருவது இது
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு

#164
அல் ஒளி சேர் கண்டத்து அரன் அருள் சேய் மான் ஈன்ற
வல்லி இரு கொங்கை மணந்ததன் பின் சொல்லியது
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி கண்ணே உள

#165
** நலம்புனைந்துரைத்தல்
மின்னு சடை வேந்தர் அருள் வேலன் ஒரு மான் ஈன்ற
பொன்னை மகிழ்ந்து புனைந்து உரைக்கும் இ நிலத்து
நல் நீரை வாழி அனிச்சமே நின்னினும்
மெல் நீரள் யாம் வீழ்பவள்

#166
** காதற் சிறப்புரைத்தல்
நாதர் பரமகுருநாதர் குறமகள்-பால்
காதல் மிகுதி சொலக் கண்டோமே தீய செழும்
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
வால் எயிறு ஊறிய நீர்

#167
** நாணுத்துற வுரைத்தல்
ஆதி அருள் சேய் நாண் அகன்று மட மான் மகட்குத்
தோழி எதிர்நின்று சொல்லியது கூறிய
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடல் அல்லது இல்லை வலி

#168
** அலரறி வுறுத்தல்
பரன் அருள் சேய் கேட்கப் பசும்பொன் மான் ஈன்ற
குறமகட்குத் தோழி நின்று கூறும் திறன் நுவலின்
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
கௌவை எடுக்கும் இவ் ஊர்
** களவியல் முற்றும்

#169
** கற்பியல்
** பிரிவாற்றாமை
சூளுறவு செய்து இறைவர் தோழர் பிரிவு அறிந்த
கோல்_வளையார் கூறுவது தோழிக்குச் சால
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியாக்கு உண்டோ தவறு

#170
** படர்மெலிந்திரங்கல்
அரன்-தனக்குத் தோழன் எனும் ஆரூரன் சேணில்
பிரிந்த வழி பரவை பேசும் இரங்கி
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை

#171
** கண் விதுப்பழிதல்
நந்தி அருள் சேர் பரவை நம்பியைக் காணக் கிடையா
வெம் துயரால் ஆற்றுவித்த மெல்_இழைக்கு வந்து சொலல்
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது

#172
** பசப்புறுபருவரல்
பரன் அன்பர் நீங்கப் பரவை-தனை ஆற்றும்
புரி குழல் பாங்கி புகலும் பெரிதும்
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர் என்பார் இல்

#173
** தனிப்படர் மிகுதி
கண்_நுதலார் தோழன் கருத்தை அறிந்து ஆற்றினாய்
என்னப் பரவை இகுளைக்குப் பன்னுவது
நாம் காதல்கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
தாம் காதல்கொள்ளாக் கடை

#174
** நினைந்தவர் புலம்பல்
நம்பி-தனை நினைந்து நம்பர் அருள் சேர் பரவை
துன்பமுற்றுத் தோழிக்குச் சொல்லியது சென்றிருந்து
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல்

#175
** கனவு நிலை யுரைத்தல்
தம்பிரான் தோழர்-தமை இகழ்ந்த தோழிக்கு
மங்கை பரவை மறுத்து உரைக்கும் எங்கிருந்தும்
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து

#176
** பொழுதுகண்டிரங்கல்
ஆற்றுவித்த தோழிக்கு அரன் அன்பரைப் பிரிந்த
கோல் தொடி ஆரூர் மடந்தை கூறுவது மேற்சென்று
காலைக்குச் செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான்
மாலைக்குச் செய்த பகை

#177
** உறுப்பு நலனழிதல்
அரன் அன்பர் நீங்குதலும் ஆற்றாமை கண்டு
பரவைக்குத் தோழி பகரும் தலைவர்
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்த நாள் வீங்கிய தோள்

#178
** நெஞ்சொடு கிளத்தல்
அரன் அருள் சேர் நம்பி பிரிவு ஆற்றாமல் ஆரூர்ப்
பரவை தனி நின்று பதைத்துக் கருதும்
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து

#179
** நிறை யழிதல்
வேடர்க்கு அருளும் விமலர் துணை பிரிவு
நீடப் பரவை நிறை அழிந்து கூறியது
காமக் கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
நாணுத் தாழ் வீழ்த்த கதவு

#180
** அவர்வயின் விதும்பல்
இறைவர் அருள் சேர் பரவை ஏந்தல் பிரிவு ஆற்றிப்
பகரும் இகுளைக்குப் பகரும் எதிர்நின்று
காண்க-மன் கொண்கனைக் கண் ஆரக் கண்ட பின்
நீங்கும் என் மென் தோள் பசப்பு

#181
** குறிப்பறிவுறுத்தல்
இறைவர் துணை நீங்கி எழில் பரவையோடும்
உறையும் நாள் பாங்கிக்கு உணர்த்தும் செறியும்
மணியில் திகழ்தரும் நூல் போல் மடந்தை
அணியில் திகழ்வது ஒன்று உண்டு

#182
** புணர்ச்சி விதும்பல்
ஈசன் அன்பரோடும் இயைந்த பரவை-தனைப்
பேசிய தோழிக்கு அவளும் பேசியது கூறின்
எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து

#183
** நெஞ்சொடு புலத்தல்
தம்பிரான் தோழர் தவறு கண்டும் கூடுவதற்கு
அன்புசெயும் பரவையார் மொழிவார் என்றும்
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது

#184
** புலவி
அரன் வாயிலாகச் சென்று ஆரூரரோடு
பரவையார் ஊடல் உணர் பண்பின் உரைசெய்யும்
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது
மிக்கு அற்றால் நீள விடல்

#185
** புலவி நுணுக்கம்
எல்லாரும் உய்வதற்கா ஈசன் உலாப் போதுதலும்
புல்லாது உமையாள் புலந்த அளவில் சொல்லாடும்
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு

#186
** ஊடலுவகை
தண்டி உணர்த்தத் தலைவி புலவி தீர்ந்து
அண்டிப் பெருமான் அணைந்த அளவில் கண்டு அருளும்
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
கூடி முயங்கப்பெறின்
** கற்பியல் முற்றும்
** காமத்துப் பால் முற்றும்

#187
** வீட்டின் பால்
** பதிமுதுநிலை
வள்ளுவரும் தாமும் மதித்த பொருள் ஒன்று என்றே
தெள்ளு தமிழ் விரகாய்ச் செப்பியது சொல்லின்
அகர உயிர் போல் அறிவாகி எங்கும்
நிகர்_இல் இறை நிற்கும் நிறைந்து

#188
** உயிரவை நிலை
பொன்னர் பிறர் காணார் அப் புண்ணியனைப் புண்ணியனும்
அன்னவர் முன் தோன்றலர் ஆதலினால் சொன்னது கேள்
ஊமன் கண் போல ஒளியும் மிக இருளே
யாம் மன் கண் காணாதவை

#189
** இருண் மல நிலை
அருணகிரி அறியார் அண்ணல் எனத் தத்தம்
கருவி உபகரிக்கக் கண்டும் இருவர்க்கும்
அன்று அளவி உள் ஒளியோடு ஆவியிடை அடங்கி
இன்றளவும் நின்றது இருள்

#190
** அருளது நிலை
இறைவர் எதிர்ப்பட்டும் இவர் அருள் வேண்டாமல்
பிற அசுரர் எல்லாம் பெறுதல் அறையில்
பரப்பு அமைந்த கேள்-மின் இது பால் கலன் மேல் பூஞை
கரப்பு அருந்த நாடும் கடன்

#191
** அருளுருநிலை
வாதவூரர்க்கு ஆள் போல வந்த பரசிவனை
யார் அவன் என்று எண்ணி அறிந்தார்-கொல் பேரருளால்
பார்வை என மாக்களை முன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வை எனக் காணார் புவி

#192
** அறியும் நெறி
நீற்றறையின் மற்றிடத்து நின்று இறைவன் அன்பருக்குத்
தோற்றுவது இன்றித் துணையாய்த் துன்பமுறாது ஆற்றுதலால்
ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே ஊனொடு உயிர்
தான் உணர்வோடு ஒன்றாம் தரம்

#193
** உயிர் விளக்கம்
துறை பிழைத்துச் சென்று சுமந்தாலும் ஈசன்
உணர்வோடு ஒன்றாகும் தரம் பார் தரையில்
கிடைக்கத் தகுமே நல் கேண்மையார்க்கு எல்லாம்
எடுத்துச் சுமப்பானை இன்று

#194
** இன்புறு நிலை
வாதவூரன் பிறர் போல் வந்தவர் ஆனந்தமுறும்
போது இனியதாகப் புணரும் மறை ஆதலினால்
இன்பதனை எய்துவார்க்கு ஈயுமவர்க்கு உருவம்
இன்ப கனம் ஆதலினால் இல்

#195
** ஐந்தெழுத்தருணிலை
உண்டு இலை என்று ஆகமங்கள் ஓதி மதபேதத்தால்
கொண்ட நெறியும் கதியும் கூறுவது என் அண்டர் பிரான்
எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று
நில்லா வகையை நினைந்து

#196
** அடைந்தோர் தன்மை
சிதம்பரம் சிந்தித்தார் சிவலோகம் அன்றி
விதந்து அறியார் ஒன்றும் விரும்பிப் பயம் தவிர
எல்லாம் அறியும் அறிவு உறினும் ஈங்கு இவர் ஒன்று
அல்லால் அறியார் அற
** வீட்டின் பால் முற்றும்
** முதுமொழிமேல் வைப்பு முற்றும்