ஆத்திசூடி வெண்பா – இராம பாரதியார்

தேவையான நூலின்
மேல் சொடுக்கவும்

1.ஆத்திசூடி
2.கொன்றைவேந்தன்
3.மூதுரை(வாக்குண்டாம்)
4. நல்வழி
5.வெற்றி வேற்கை
6.உலக நீதி
7.நீதிநெறி விளக்கம்
8.அறநெறிச்சாரம்
9.நீதி நூல்
10.நன்னெறி
11.நீதி சூடாமணி
12.சோமேசர் முதுமொழி வெண்பா
13.விவேக சிந்தாமணி
14.ஆத்திசூடி வெண்பா
15.நீதி வெண்பா
16.நன்மதி வெண்பா
17.அருங்கலச்செப்பு
18.முதுமொழிமேல் வைப்பு
19.புதிய ஆத்திசூடி
20.இளையார் ஆத்திசூடி
21.திருக்குறள் குமரேச வெண்பா


@0 தெய்வ வணக்கம் விநாயகர் துதி

#1
உலகம் புகழ் பாகை ஓங்கு தொண்டைநாட்டின்
திலகன் கணபதி மால் செல்வன் நலம் மிகுந்த
வாழ்வாகும் புன்னைவனநாதன் நல் தமிழ்க்குச்
சூழ் ஆத்திசூடி துணை
* ஆத்திசூடி விநாயகர்

@1 நூல்

#1
** அறஞ்செய விரும்பு கபிலை கதை
அருள் ஆர் கபிலை அறமே சயம் என்று
இருள் அகல வேங்கைக்கு இயம்பும் பெருமையினால்
மா வளரும் புன்னைவன நாதா மெய்த் துணையா
மேவி அறஞ் செய்ய விரும்பு

#2
** ஆறுவது சினம் சடபரதர் கதை
ஆதி சவ்வீரன் சிவிகைக்கு ஆளாய்ச் சடபரதர்
தீது பொறுத்துச் சிறப்புற்றார் சோதிப்
புய மா வளர்கின்ற புன்னைவன நாதா
செயம் ஆறுவது சினம்

#3
** இயல்வது கரவேல் அரிச்சந்திரன் கதை
இந்துமதி விற்றும் அலைந்து ஈனனுக்கு ஆள் ஆகி அரிச்
சந்திரனே தன் நிலைமை தப்பாதான் அந்த
மனுநெறி தேர் புன்னைவன நாதா பூமி
யினில் இயல்வது கரவேல்
* இந்துமதி சந்திரமதி

#4
** ஈவது விலக்கேல் சுக்கிரன் கதை
மாவலியை மாலுக்கு மண் உதவாமல் தடுத்த
காவலினால் சுக்கிரனும் கண் இழந்தான் ஆவதனால்
நல் நீதி புன்னைவன நாத மகிபா உலகத்
தின் ஈவது விலக்கேல்

#5
** உடையது விளம்பேல் சடாயுவின் கதை
உள்ளபடி தன் சிறகில் உண்டு பலம் என்று ஒரு சொல்
விள்ளும் சடாயு முனம் வீழ்ந்தது பார் வள்ளல்
தனபதியே புன்னைவனத் தாடாளா ஒன்னார்க்கு
இனது உடையது விளம்பேல்

#6
** ஊக்கமது கைவிடேல் பகாசூரன் கதை
ஊரின் நரபலிக்கா ஊர் சகடம் மேல் வீமன்
தீரன் பகாசூரன் தீது அடக்கும் காரணம் பார்
தேக்கு புகழ் புன்னைவன தீரனே யா உறினும்
ஊக்கமது கைவிடேல்

#7
** எண்எழுத்து இகழேல் துருவன் கதை
எண் அரிய கோள் உடுக்கள் எல்லாம் ஒருமையதாத்
திண்ணத் துருவர் கையில் சேர்ந்ததனால் மண் உலகில்
போற்றும் தமிழ்ப் பாகை புன்னைவன பூபா கேள்
ஏற்று எண் எழுத்து இகழேல்
* உடுக்கள் நக்ஷத்திரங்கள்

#8
** ஏற்பது இகழ்ச்சி திருமால் சரித்திரம்
மாவலி-பால் மண் இரக்க மாதவனே வாம உரு
ஆம் என்றான் மற்றவர்க்கு அஃது ஆகுமோ மூவுலகில்
பேர் பரவும் புன்னைவனப் பேரரசே எவ்வகையால்
சீர் பெறினும் ஏற்பது இகழ்ச்சி

#9
** ஐயம் இட்டுண் பிரமராக்ஷதன் கதை
வன் பிரமராக்கதன்தான் மங்கிலியப் பிச்சை அருள்
என்பவளுக்கே கொடுத்து ஈடேறினான் அன்பதனால்
வள்ளல் எனும் புன்னை வனநாதா வஞ்சம் இலாது
உள்ளத்திலே ஐயம் இட்டு உண்

#10
** ஒப்புற வொழுகு தாரணியின் தன்மை
தாரணி போல் எவ்வுயிரும் தாங்கும் தகைமையதாச்
சீர் அணிந்து நாளும் சிறந்து ஓங்க ஆரம்
தழைந்த புகழ்ப் புன்னைவனத் தாடாளா யார்க்கும்
குழைந்து ஒப்புறவு ஒழுகு

#11
** ஓதுவது ஒழியேல் வேதவியாசர் கதை
மச்சகந்தி-தன் வயிற்றில் வந்து உதித்தும் ஓதலினால்
விச்சை பெற்ற வேத வியாசனைப் பார் நிச்சயமே
பன்னு தமிழ்ப் புன்னைவன பார்த்திபா உண்மை நூ
லின் ஓதுவது ஒழியேல்
* பார்த்திபன் – அரசன்

#12
** ஔவியம் பேசேல் உத்தரன் கதை
மாதர் முன்னே உத்தரனும் மா பலவான் போல் உரைத்து
காது அமரில் அர்ச்சுனனால் கட்டுண்டான் ஆதலினால்
வண்மை பெறு புன்னைவன நாதா சீர் உடைய
திண்மை உன்னி ஔவியம் பேசேல்
* ஔவியம் – பொறாமை

#13
** அக்கஞ் சுருக்கேல் சிட்டுக் கதை
மைக் கடல் கொள் முட்டை-தனை வாங்குவோம் என்று சிட்டு
புக்கு அதனை வென்றது தன் புத்தியினால் அக் கதை போல்
வேளாளர் புன்னைவன மேகமே உண்மை எனக்
கேளாய் அக்கம் சுருக்கேல்
* மை – நீர்

#14
** கண்டொன்று சொல்லேல் சத்தியவிரதன் கதை
கள்ளம் இன்றி முன்னே கன சத்தியவிரதன்
உள்ளது சொல்லிக் கலந்தான் ஓர் வழியைத் தெள்ளிமையோய்
மா தனதா புன்னைவன வள்ளலே மேல் எண்ணா
ஏதும் கண்டு ஒன்று சொல்லேல்

#15
** ஙப்போல் வளை காக்கைகளின் இயல்பு
தீது_இல் அரிட்டங்கள் செய்ய உணவைக் கொள்ள
மேதினியில் தம் இனத்தை மேவுதலால் நீதிநெறி
போற்று புகழ்ப் புன்னைவன பூபால உற்றாரை
மால் திரு மெய் ஙப் போல் வளை

#16
** சனி நீராடு
ஞாயிறு உயிர்க்கு ஈறு திங்கள் நம்பர் அருள் செய்கிலர் செவ்
வாய் பிணி துக்கம் குருநாள் வாழ்வு போம் தூய வெள்ளி
போடு இவைகள் புன்னைவன பூபாலா மிக்க புத
னோடு சனி நீராடு

#17
** ஞயம்பட உரை பட்டினத்துப்பிள்ளை இயல்பு
தொட்டு அடித்தோன் நன்றி செய்த தூயோன் இருவருக்கும்
பட்டினத்துப்பிள்ளை பகர்ந்தது பார் மட்டு உலவும்
தென் பாகை புன்னைவன தீரனே யாரிடத்தும்
அன்பாய் ஞயம்பட உரை
* மட்டு தேன்

#18
** இடம்பட வீடிடேல்
நித்தியமாம் வீட்டு நெறியில் இடம் பாடு அல்லால்
பொய்த்த இன்ப வீட்டில் பொருள் அடையாது அத்தம்
நடை அறியும் புன்னைவன நாதனே பூமி
யிடை இடம்பட வீடு இடேல்

#19
** இணக்கம் அறிந்து இணங்கு விக்கிரமாதித்தன் கதை
செய்ய புகழ் விக்கிரமாதித்தன் ஒரு தட்டாரப்
பையல் உறவு பற்றிப் பட்டதனால் வையம்
மணக்கும் சீர்ப் புன்னைவன நாதா நீயும்
இணக்கம் அறிந்து இணங்கு

#20
** தந்தைதாய்ப் பேண் கருடன், அந்தணன் ஆகியவர்களின் கதை
அனை இடர் தீர்த்தான் கருடன் அந்தணன் செங்கந்தை-
தனை எடுத்துச் சாவு தவிர்த்தான் இனையவர் போல்
சீர் ஆரும் புன்னைவன தீரனே நாள்-தோறும்
பேர் ஆரும் தந்தை தாய்ப் பேண்

#21
** நன்றி மறவேல்
உன் நாட்டார் நன்றால் உயிர் காத்துக் கோத்திரத்தில்
எந்நாளும் வாழ்ந்தே இருப்பதனால் பல் நாளும்
பூதலத்தில் மேன்மை பெறு புன்னைவன நாதனே
ஏதம் அற நன்றி மறவேல்

#22
** பருவத்தே பயிர்செய் வேளாளர் கதை
உன் நாட்டில் பொற்களந்தை ஊரர் நல் நாள் செய்த பயிர்
பொன்னே விளையப் புகழ் பெற்றார் ஒன்னார்
பயந்திடு வேல் புன்னைவன பார்த்திபா நீயும்
செய்யும் பருவத்தே பயிர்செய்

#23
** மண்பறித்து உண்ணேல் கூதைசகடன் கதை
கூற வழக்கு எண்ணாத கூதைசகடற்கு வண்டில்
ஏற முன் போல் வாராதிருந்ததனால் தேறி என்றும்
மா திலகா புன்னைவன மன்னா கேள் பூமியதில்
ஏதிலன் மண் பறித்து உண்ணேல்
* ஏதிலன் அயலான்

#24
** இயங்கித் திரியேல்
மன்னவனுக்கு உன் நாட்டார் வந்து முடிசூட்ட
முன் அனலில் மூழ்கி முதன்மை பெற்றார் அன்னவர் போல்
நன்று அறியும் புன்னைவன நாதனே வையகத்தில்
என்றும் இயங்கித் திரியேல்

#25
** அரவம் ஆட்டேல் பரிசித்து கதை
இருடி மேல் செத்தபாம்பு ஏற்றிப் பரிச்சித்து
அரவினால் பட்டது அறிந்தே திரைக் கடல் சூழ்
மண்ணுலகில் புன்னைவன மன்னவா பாவம் இது என்று
எண்ணி அரவம் ஆட்டேல்
* அரவம் பாம்பு

#26
** இலவம்பஞ்சியில் துயில்
அன்னத்தின் தூவி பொங்கர் ஆகும் அரசற்குப்
பன்னும் பருத்திதான் பாங்கு அலவே அன்னதனால்
மன்னன் எனும் புன்னைவன நாதா மை இரவில்
துன் இலவம் பஞ்சில் துயில்
* தூவி இறகு

#27
** வஞ்சகம் பேசேல் தூருவாசர் கதை
மாயனார்-தம் மக்கள் மா முனியைக் கேட்ட கெற்பம்
ஏய் அவரைக் கொல்லும் இருப்புலக்கை ஆயதனால்
மாரன் எனும் புன்னைவன நாதா வையத்தில்
சீருறா வஞ்சகம் பேசேல்
* மாரன் மன்மதன்

#28
** அழகலாதன செயேல் வாணாசுரன் கதை
வாணன் சிவனை வணங்கி வசம்செய்து உலகோர்
காண நின்று தன் வாயில் காக்கவைத்துப் பாணி எலாம்
போனதனால் புன்னைவன பூபாலா யாரிடத்தும்
தான் அழகு அலாதன செய்யேல்

#29
** இளமையில் கல் காளிதாசன் கதை
கல்வி இளமைக்குள் இலாக் காளிதாசன் மனையாள்
வல் வசையால் பொல்லா மரணமுற்றுச் செல்லலுற்றாள்
நல் தாமா புன்னைவன நாதா இதை அறிந்து
கற்றால் இளமையில் கல்

#30
** அறனை மறவேல் பத்திரகிரியார், சனகன், விதுரன்
** ஆகியவர்களின் இயல்பு
பத்திரகிரிராசன் பகர் சனகன் மெய் விதுரன்
சித்த பரிசுத்தம் செலுத்தியதால் இத் தரையில்
மன்னன் எனும் புன்னைவன நாதா யா உறினும்
இன்பாம் அறனை மறவேல்

#31
** அனந்தல் ஆடேல்
காலை துயில் சீலம் போம் கண்ட பகல் ஆக்கம் போம்
மாலை துயில் நோயாம் வகையறிந்து ஞாலமதில்
புண்ணியம் எலாம் தெரிந்த புன்னைவன நாதா
எண்ணி அனந்தல் ஆடேல்
* அனந்தல் தூக்கம்

#32
** கடிவது மற இரணியன் கதை
இரணியனும் ஆங்காரத்து எண்ணாது உரைத்து
நரஹரியால் இற்றான் முன் நாளில் சுரதருவைப்
போலே கொடுக்கின்ற புன்னைவன நாதா
மாலே கடிவது மற
* நரஹரி – நரசிங்கம்
* சுரதரு – கற்பகம்

#33
** காப்பது விரதம் சிலாதன் கதை
துய்ய சிலாதன் செய் துங்க விரதங்கள் எலாம்
செய்ய நந்தியாகச் சிறப்புற்றான் பொய் அலவே
தேன் கால் சொல் புன்னைவன தீரனே ஐம்புலனைத்
தான் காப்பது விரதம்

#34
** கிழமை படவாழ் தொண்டைமண்டலத்தார் கதை
தண் தமிழ்க்காக் கம்பருக்குத் தாம் அடிமை என்று தொண்டை
மண்டலத்தார் ஏட்டில் வரைந்தது போல் எண் திசைக்கும்
பொன்னான புன்னைவன பூபாலா தென் பாகை
மன்னா கிழமைபட வாழ்
* கிழமை உரிமை

#35
** கீழ்மை அகற்று
பெண்கேட்ட வேந்தனுக்குப் பெண் நாயைப் பந்தரிலே
கண் காண நின் குலத்தார் கட்டிவைத்த பண்பது பார்
நன் பாகை புன்னைவன நாதனே அப்படிப் போல்
துன்பான கீழ்மை அகற்று

#36
** குணமது கைவிடல்
நீர் கலந்த பாலை அன்னம் நீர் பிரித்துக் கொள்வது போல்
சீர் கலந்தார் நற்குணமே தேர்ந்து கொள்வார் ஏர் கொள்
புகழாளா புன்னைவன பூபாலனே மிக்
க குணமது கைவிடேல்

#37
** கூடிப் பிரியேல் அருச்சுனன் கதை
அர்ச்சுனன் மால் சார்பு இழந்த அன்றே கருதலர்த் துன்
கைச் சிலை வெற்பாக் கனத்துக் கை தளர்ந்தான் நிச்சயமே
மன்றல் சூழ் புன்னைவன நாதா தக்கோரை
என்றும் கூடிப் பிரியேல்

#38
** கெடுப்பது ஒழி இராமன் கதை
வாலி கெட ராமன் ஒரு வாளி தொட்ட வெம் பழிக்கா
மேல் ஒரு சன்மத்தில் அன்னோன் மீண்டு கொன்றான் ஞாலமதில்
வல்லவனே புன்னைவன நாதா யாரெனினும்
ஒல்லை கெடுப்பது ஒழி

#39
** கேள்வி முயல் பகவத்கீதை மான்மியம்
முன் பகவற்கீதை முனி உரைக்கக் கன்னிமரம்
தன்படியே கேட்டு உலகில் தார்வேந்தா அன்புறல் போல்
மாதவனே புன்னைவன நாதா நன்மையுற
மூதறிவோர்க் கேள்வி முயல்

#40
** கைவினை கரவேல் இந்திரன் கதை
இந்திரன் வாள் வைக்க எடுத்து முன்னே மா தவத்தோர்
தம் தருமம் விட்டுத் தவம் அழிந்தார் சந்ததமும்
பாகையில் வாழ் புன்னைவன பார்த்திபா ஆகையினா
லே கைவினை கரவேல்

#41
** கொள்ளை விரும்பேல் துரியோதனன் கதை
கொட்டமிட்டே உத்தரத்தில் கோக் கொள்ளையாட வந்து
துட்டன் அரவக்_கொடியோன் தோற்று இடுக்கண்பட்டதனால்
நீதிபரா புன்னைவன நேயனே ஏதெனினும்
பேதைமையாக் கொள்ளை விரும்பேல்

#42
** கோதாட்டொழி செம்பியன் கதை
நம்பனுக்கு ஆம் செவ்வந்தி நல் மலர் வேசிக்கு அளித்த
செம்பியனும் மண்மழையால் சீர் அழிந்தான் அம் புவியில்
எவ்வாறும் புன்னைவனத்து ஏந்தலே நீ நீதிக்கு
ஒவ்வாத கோதாட்டு ஒழி
* கோதாட்டு குற்றமான செய்கை

#43
** சக்கரநெறி நில் தண்டன் கதை
மண்டலத்தில் செங்கோல் வழியில் செலுத்தாமல்
தண்டகன் என்னும் ஒருவன் தான் மடியக் கண்டதனால்
வேள் புரையும் புன்னைவன வித்தகா எந்நாளும்
நீள் சக்கர நெறி நில்
* வேள் மன்மதன்

#44
** சான்றோர் இனத்திரு அகத்தியர் கதை
ஈசன் உமை மணத்திலே வட திக்கு ஆழ்ந்தது எனக்
காசினி சீராகக் கலசமுனி வாசமதால்
செய்தது பார் புன்னைவன தீரனே அப்படிச் சீர்
எய்திடச் சான்றோர் இனத்து இரு
* கலசமுனி அகஸ்தியர்

#45
** சித்திரம் பேசேல் சூர்ப்பநகி கதை
சீதை பண்பு இராவணற்குச் செப்பிக் குலம் கெடுத்த
பாதகி மூக்கு அன்று இழந்த பங்கம் பார் ஆதலினால்
தாரணிக்குள் புன்னைவனத் தாடாளா தன்னை எண்ணாச்
சேரலர்க்குச் சித்திரம் பேசேல்

#46
** சீர்மை மறவேல் கங்கைகோத்திரன் கதை
உற்ற தொடைப்புண்ணுக்கு உடை கீறிக் கட்டி நின்றான்
கொற்றவன் முன் உன் கங்கை_கோத்திரத்தான் வெற்றி புனை
மன்னான புன்னைவன வள்ளலே ஆதலினால்
எந்நாளும் சீர்மை மறவேல்

#47
** சுளிக்கச் சொல்லேல் சகுனி கதை
சகுனி துரியோதனற்குச் சற்பனையாக் கேடு
மிக உரைத்துத் தன் உயிரும் ஈந்த தகை பார்
மனுநெறி தேர் புன்னைவன நாதா யாவர்
எனினும் சுளிக்கச் சொல்லேல்

#48
** சூது விரும்பேல் பாண்டவர் கதை
தோராத நூற்றுவரும் தோற்ற பஞ்சபாண்டவரும்
பாரே அகன்று பட்ட பாரதம் பார் பேராண்மை
வற்றாத புன்னைவன மா கடலே மிக்க செல்வம்
பெற்றாலும் சூது விரும்பேல்

#49
** செய்வினை திருந்தச் செய் தக்கன் கதை
வேள்விக்கு மூவருமே வேண்டும் என்று எண்ணாமல்
தாழ்வு செய்து தக்கன் தலை இழந்தான் ஏழுலகும்
வீசு புகழ்ப் புன்னைவன வித்தகா செய்கை அறிந்
தே செய் வினை திருந்தச் செய்

#50
** சேர்விடம் அறிந்து சேர் மார்க்கண்டன் கதை
இருமைக்கும் மெய்த் துணை ஆம் என்று மார்க்கண்டன்
அரன் அடியைச் சேர்ந்தான் அவன் போல் அருள் பெருகும்
பூசாபலா பாகை புன்னைவனமே மனம் ஒத்
தே சேர்விடம் அறிந்து சேர்
* பூசாபலம் தேவபூசையின் பலன்

#51
** சையெனத் திரியேல் மாரீசன் கதை
தூய ரகுராமன்-பால் சோரம் உனி மாரீசன்
மாயமானாய்த் திரிந்து மாய்ந்தது பார் ஞாயம் அன்று
வீசு புகழ் புன்னைவன மேகமே இத் தலத்தி
லே சையெனத் திரியேல்
* சையென சீ என்று அருவருக்கும்படி

#52
** சொற்சோர்வு படேல் கும்பகர்ணன் கதை
நித்தியத்தைக் கேட்கப் போய் நித்திரை என்றே குளறிப்
புத்தி அற்ற கும்பகர்ணன் பொன்றினன் பார் மத்த மத
குன்றம் போல் புன்னைவனக் கொற்றவா பாகை மன்னா
என்றும் சொல் சோர்வுபடேல்

#53
** சோம்பித் திரியேல் நளன் கதை
நளன் இருதுபன்னன் தேர் நாள் ஒன்றில் வீமன்
வள நகரில் சேர்த்து மனையாள் உளம் மகிழ
நின்றது பார் புன்னைவன நேயனே தன் முயற்சி
என்றும் சோம்பித் திரியேல்

#54
** தக்கோனெனத் திரி திருஞானசம்பந்தர் கதை
சைவ சமயத்தைத் தலையாகச் சம்பந்தர்
செய்ததனால் யாண்டும் சிறப்புற்றார் வையகத்தில்
பொங்கு புகழ்ப் புன்னைவன பூபாலா பாகை மன்னா
எங்கும் தக்கோன் எனத் திரி

#55
** தானமது விரும்பு கன்னன் கதை
முன் செய் அறத்தை முகுந்தற்கு அளித்த கன்னன்
பின் செயலும் ஈதலுறப் பேறு பெற்றான் தன் செயல் பொன்
தாதாவாம் புன்னைவனத் தாடாளா பூமியின் மே
லே தானமது விரும்பு
* முகுந்தன் கிருஷ்ணமூர்த்தி

#56
** திருமாலுக்கு அடிமைசெய்
அண்டர் முனிவர்க்கா அவதாரம் பத்து எடுத்து
மிண்டரை வெட்டித் தருமமே புரக்கக் கண்டதனால்
மந்தரனே புன்னைவன வள்ளலே எந்நாளும்
செந்திரு மாலுக்கு அடிமை செய்
* மிண்டர் இராக்கதர்

#57
** தீவினை அகற்று தானவர் இயல்பு
ஈசன் வரமும் சிதைந்தே எய்திய பேர் ஆக்கமும் போய்த்
தேசு அழிந்து தானவர்கள் தேய்ந்ததனால் காசினியில்
வாழ் பாகை புன்னைவன மன்னவா நன்மை அன்றிச்
சூழ் தீவினை அகற்று
* ஆக்கம் செல்வம்
* தேசு அழகு

#58
** துன்பத்திற்கு இடங்கொடேல் இந்திரன் கதை
தூய ராமன் பகையால் துன்பமுற்றுத் தஞ்சம் என்ற
சேயினையும் தேவேந்திரன் இகழ்ந்த ஞாயம் பார்
மா துங்கா புன்னைவன மன்னவா அஃது அறிந்
தே துன்பத்திற்கு இடம்கொடேல்
* சேய் புத்திரன்

#59
** தூக்கி வினைசெய் வாலி கதை
எதிரி பலம் பாதி கொள்வான் என்று அறிந்து வாலி
வதைபுரிய ராமன் மறைந்து துதி பெறல் பார்
பார் அளந்த புன்னைவன பார்த்திபா அப்படிப் போல்
சீர் அறிந்து தூக்கி வினை செய்

#60
** தெய்வம் இகழேல் திரிபுரவாசிகள் கதை
தாரகத்தார் மூவரையும் தாழ்வுசெய்து தங்கள்தங்கள்
காரியத்தால் வேறு கதி அளித்தார் தாரணிக்குள்
மா தவனே புன்னைவன நாதா மீது இடுக்கண்
ஏதுறினும் தெய்வம் இகழேல்
* தாரகத்தார் சிவபெருமான்
* தாரணி பூமி

#61
** தேசத்தோடு ஒத்துவாழ்
எல்லா மதத்திற்கும் எவ்வுயிருக்கும் நீர் நிழல் போல்
நல் ஆதரவே நயந்து அருளி வல்லாண்மை
சூழ் தேக புன்னைவனத் தோன்றலே நீயும் என்றும்
வாழ் தேசத்தோடு ஒத்து வாழ்

#62
** தையல்சொற் கேளேல் சித்திராங்கி கதை
மாது சித்திராங்கி சொல்லால் மைந்தனைக் கை கால் களைந்து
ஏது பெற்றான் ஓர் மன்னன் இப் புவியில் நீதிநெறி
மா தவனே புன்னைவன நாதா பாகை மன்னா
ஏதெனினும் தையல் சொல் கேளேல்

#63
** தொன்மை மறவேல் பாஞ்சாலன் கதை
பண்டு துரோணன் பழமை எண்ணாப் பாஞ்சாலன்
மிண்டு அமரில் அர்ச்சுனனால் வீறு அழிந்தான் கண்டது அன்றோ
பொன் ஆளும் புன்னைவன பூபாலா தன்னை அறிந்து
எந்நாளும் தொன்மை மறவேல்
* பண்டு பண்டைக்காலம்

#64
** தோற்பன தொடங்கேல் மகிடாசூரன் கதை
சண்டனொடு மிண்டன்-தனை வென்ற சங்கரி-பால்
மிண்டு மகிடன் பொருது வெட்டுண்டான் புண்டரிக
மாது ஆரும் புன்னைவன நாதா நீள் நிலத்தி
லே தோற்பன தொடங்கேல்
* மிண்டு நெருங்கி

#65
** நன்மை கடைப்பிடி அரசின் கதை
அரசமரம் தொல் கடல் நீந்து அந்தணனைக் கால
புர வழியில் காத்த புகழின் பெருமையைப் பார்
மன்றல் அம் தார் புன்னைவன வள்ளலே யாவர்க்கும்
என்றும் நன்மை கடைப்பிடி
* மன்றல் வாசனை
* காலபுரம் எமபுரம்

#66
** நாடொப்பன செய் தருமர் கதை
நாடு ஓடும் போது நடு ஓட வேண்டும் என்று
தேடும் தருமர் சொன்ன சீரதனால் நீடு
பொருந்து புகழ் புன்னைவன பூபாலா நன்றாத்
தெரிந்து நாடு ஒப்பன செய்

#67
** நிலையிற் பிரியேல் மலைகளின் கதை
சஞ்சரித்துநின்ற சயிலங்களை எல்லாம்
வெம் சினத்தால் இந்திரன் முன் வெட்டினதால் செம் சரணால்
மண் அளந்த புன்னைவன நாதா என்றும் நன்மை
எண்ணி நிலையில் பிரியேல்

#68
** நீர் விளையாடேல் கண்ணன் மக்கள் கதை
கண்ணன் அருள் மைந்தர் கரும் கடலில் நீராடி
எண் அரும் வாட்கோரையினால் இற்றனரால் புண்ணியத்தின்
கண்ணான புன்னைவனக் காராளா மேல் வரும் கேடு
எண்ணா நீ நீர் விளையாடேல்

#69
** நுண்மை நுகரேல் கௌசிகன் மாணாக்கர் கதை
கோசிகன் மாணாக்கர் கூறு அரிய நாய் நிணத்தைப்
போசனம்செய்தே புலையாய்ப் போயினரால் வீசு புகழ்த்
தென் பாகை புன்னைவன தீரனே எள்ளளவும்
இன்பாக நுண்மை நுகரேல்

#70
** நூல் பல கல் கவி வீரராகவ முதலியார் கதை
கற்றதனால் உங்கள் கவிவீரராகவ மால்
வெற்றி பரராசசிங்கம் மேன்மைசெயப் பெற்றதனால்
ஞாலமதில் புன்னைவன நாதனே நல் பருவ
காலமதில் நூல் பல கல்

#71
** நெற்பயிர் விளை
அண்டர் முதலோர்க்கு அமிர்தமயமா வடிவு
கொண்டு அறமே முத்திக்கும் கொள் கருவாக் கண்டதனால்
தக்க புகழ் புன்னைவனத் தாடாளா எப் பயிர்க்கும்
மிக்க குண நெற்பயிர் விளை
* கரு வித்து

#72
** நேர்கோனெறி நில் வேளாளர் இயல்பு
வேத நெறி நின்ற வேதியர் போல் நின் மரபோர்
ஆதி முதலாப் புகழை ஆண்டது பார் ஆதுலர்க்குத்
தாயான புன்னைவனத் தாடாளா பாகை மன்னா
நீயும் நேர் கோன் நெறி நில்
* ஆதுலர் யாசகர்

#73
** நைவினை நணுகேல் இராமர் கதை
செய் தவமும் பாராமல் சீராமன் சம்புகனை
நைதல் இன்றிச் சென்னி கொண்ட ஞாயம் பார் உய் தரும
வானே நல் புன்னைவன நாதா மிக்க துஷ்ட
ரேனும் நைவினை நணுகேல்
* நைதல் வருந்துதல்
* உய்தல் பிழைத்தல்

#74
** நொய்ய வுரையேல் அருச்சுனன் கதை
கந்தருவன் தஞ்சம் என்ற காலையில் மாயோன் பகையைச்
சிந்தையில்வைத்து எண்ணினனோ தேர் விசயன் பைந்தமிழோர்
போற்று புகழ்ப் புன்னைவன பூபாலா யாரெனினும்
ஏற்றதன் பின் நொய்ய உரையேல்

#75
** நோய்க்கு இடங்கொடேல் இலக்குமணன் கதை
பசி நோய் இலக்குமணன் பார் வனத்தில் முன்னே
நசியாமல் நீக்கி நலமா இசைபெற்றான்
பொன் ஆளும் புன்னைவன பூபாலா அப்படிப் போல்
எந்நாளும் நோய்க்கு இடம்கொடேல்
* நசியாமல் தான்கெடாமல்

#76
** பழிப்பன பகரேல் கைகேசி கதை
சூடும் முடி ராகவனார் சூடாமல் கைகேசி
கேடு சொல்ல நிந்தை கிடைத்தது பார் நீடு புகழ்க்
காராளா புன்னைவனக் கற்பகமே யாரிடத்தும்
ஏராப் பழிப்பன சொல்லேல்
* ஏர் அழகு

#77
** பாம்பொடு பழகேல் வாசுகி கதை
வாசுகி முன் நாள் பழகும் வானோர்க்கு அமுது எழும் முன்
மோசமுற நஞ்சு உமிழ்ந்த மூர்க்கம் பார் காசினியில்
நன்று அறியும் புன்னைவன நாதா இதை அறிந்தே
என்றும் பாம்போடு பழகேல்

#78
** பிழைபடச் சொல்லேல் சாபாலி கதை
சாபாலி ராமன் சபையில் ஓர் சொல் பிழைத்துக்
கோபாலன் அம் சுடர் மெய் குன்றியே சோபமுற்றான்
ஆதலினால் புன்னைவன ஐயனே எவ்விடத்தும்
ஏதும் பிழைபடச் சொல்லேல்
* சோபம் வருத்தம்

#79
** பீடுபெற நில் வேளாளர் இயல்பு
நீலி பழியைக் களைந்து நின் மரபில் வேளாளர்
சூலி முதுகில் சுடவே சோறிட்ட மேலான
ஞாயம் பார் புன்னைவன நாதனே அப்படிப் போல்
நீயும் மிகப் பீடு பெற நில்

#80
** புகழ்பட வாழ் இந்திரத்துய்ம்மன் கதை
விழும் இந்திரத்துய்ம்மன் மிக்க புகழ் சொல்லிக்
கழறும் முன் மால் நல் கழல் சேர் காதை பழமை அன்றோ
செய்ய புகழ்ப் புன்னைவன தீரனே நீயும் இந்த
வையம் புகழ் பட வாழ்

#81
** பூமி விரும்பு
தலம் தீர்த்தம் தானம் தவம் சேர் சந்தானம்
நலம் பெறலால் தேவர் எலாம் நாடி நிலம் துதிப்பார்
மந்திரியே புன்னை வனநாதா ஆதலினால்
புந்தியில் நீ பூமி விரும்பு

#82
** பெரியாரைத் துணைக்கொள் பிரகலாதன் கதை
தந்தை இரணியனைத் தள்ளி அவன் மைந்தன் முன்னே
சிந்தையில் மாயோன் துணையே தேடி உய்ந்தான் சந்ததமும்
நட்பு அறியும் புன்னைவன நாத மகிபா உலகிற்
குள் பெரியாரைத் துணைக் கொள்

#83
** பேதைமை அகற்று திலீபன் கதை
கோ வதைசெய்யப் பிடித்த கோளரிக்குத் தன் உடலை
ஈவன் என்றானே திலிபன் என்னும் மன்னன் ஆவதனால்
நட்பாளும் புன்னைவன நாத மன்னா எப்போதும்
உள் பேதைமை அகற்று

#84
** பைதலோ டிணங்கேல் கட்டியங்காரன் கதை
சச்சந்தனை முன் சதி கட்டியங்காரன்
நிச்சயமாச் செய்த நிறை பிழை பார் பொன் சிகர
தீபம் எனும் புன்னைவன தீரனே ஆனது கண்
டே பைதலோடு இணங்கேல்
* பைதல் சிறுபிள்ளைத்தனம்

#85
** பொருள்தனைப் போற்றிவாழ் நவநிதி பெற்ற ஒருவன் கதை
நவநிதி பெற்றும் தன் நம்பர் அருள் இல்லார்க்கு
அவிழும் நல்கான் காப்பான் அவன் போல் புவி தழையத்
தேன் பொழி சொல் புன்னைவன தீரனே நீ என்றும்
வான் பொருள்-தனைப் போற்றி வாழ்
* அவிழ் சோறு

#86
** போற்றடிப் பிரியேல் பிருங்கிமகரிஷி கதை
சங்கரனை அன்றி உமை-தன்னை வலம்செய்யாமல்
பிருங்கிரிஷி மூன்று கால் பெற்றதனால் துங்க
மனம் தளராப் புன்னைவன நாதா தொண்டர்
இனம் போற்று அடிப் பிரியேல்

#87
** மனந்தடுமாறேல் கஞ்சனூர் ஆழ்வார் கதை
கஞ்சனூர் ஆழ்வார் கலங்காது அறம் செய்தே
எஞ்சாப் பரமபதம் எய்தினர் பார் தஞ்சம் என்பார்
புண்ணிய மா மெய்த் துணையாம் புன்னைவன பூபதியே
எண்ணி மனம் தடுமாறேல்

#88
** மாற்றானுக்கு இடங்கொடேல் காகத்தின் கதை
காகம் வருந்தி வரக் கார் இருளில் நன்மை செய்த
கூகை பகல் பட்ட கொடுமையினால் வாகு
புனை தாமா புன்னைவன பூபாலா மோசம்
என மாற்றானுக்கு இடம்கொடேல்

#89
** மிகைப்படச் சொல்லேல் சங்கராசாரியார் கதை
சங்கராசாரியனார் தாயை இகழ் குலத்தார்
தங்கள் மனையே சுடலைதான் ஆகப் பங்கமுற்றார்
ஆதலினால் புன்னைவன ஐயனே யாரிடத்தும்
ஏதும் மிகைபடச் சொல்லேல்

#90
** மீதூண் விரும்பேல்
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
கழி பேர் இரையான்-கண் நோய் என்று உள முதுநூல்
வாக்கியத்தால் புன்னைவன நாதா முன் அயிறல்
போக்கி மீதூண் விரும்பேல்

#91
** முனைமுகத்து நில்லேல் நரியின் கதை
ஆட்டுக்கடாப் போரில் அன்று உதிரம் வேட்டு நரி
மாட்டிக்கொண்டே உயிர் போய் மாண்டது பார் தோட்டு மலர்
மா மருவும் புன்னைவன நாதா வீணாகவே
முனைமுகத்து நில்லேல்

#92
** மூர்க்கரோடு இணங்கேல் விடதாரி கதை
வேங்கை வரிப் புலிக்குத் தீர்த்த விடதாரி என
ஓங்கும் ஔவை சொல் மூதுரைப் பொருள் பார் பாங்குடைய
காம் ஆற்றும் புன்னைவனக் காராளா வையகத்தி
லே மூர்க்கரோடு இணங்கேல்

#93
** மெல்லினல்லாள் தோள்சேர்
போதவே நற்குணங்கள் போந்தும் தனை மூத்த
மாதர் இன்பம் தீதே மனுநெறி பார் ஆதலினால்
துய்ய புகழ்ப் புன்னைவனச் சோமா இளையாளாம்
செய்ய மெல் இல் நல்லாள் தோள் சேர்
* போத முழுதும்

#94
** மேன்மக்கள் சொற்கேள் தசரதன் கதை
ஆசிரியன் சொல் கேட்ட அன்றே தசரதனார்
கோசிகன்-பால் ராகவனைக் கூட்டியதால் தேசு பெற்றார்
நாள் கமலைப் புன்னைவன நாத மகிபா தருமம்
கேட்கின் மேன்மக்கள் சொல் கேள்

#95
** மைவிழியார் மனையகல் விப்பிரநாராயணர் கதை
விப்பிரநாராயணன் முன் வேசி-தன் மேல் ஆசையினால்
இப் புவியில் கட்டுண்டு இழுக்குற்றான் தப்பு அலவே
சைவநெறிப் புன்னைவனத் தாடாளா எந்நாளும்
மை_விழியார் மனை அகல்

#96
** மொழிவது அறமொழி புருஷாதி மிருகத்தின் கதை
வீமன் உடலில் பாதி மெய் வழக்கில் தேர்ந்து புருடாமிருகத்தின்
பங்கு என்றார் தருமர் ஆம் அவர் போல்
பூமி எலாம் கொண்டாடும் பொய்யாத புன்னைவன
மே மொழிவது அற மொழி

#97
** மோகத்தை முனி
தேவர் முனிவர் மண்ணோர் தென்புலத்தார்க்கும் மோகம்
பாவ வித்து என்று ஓதும் பழ மறைகள் ஆவதனால்
வேளாள புன்னைவன வித்தகா இத் தரையில்
மூளும் மோகத்தை முனி

#98
** வல்லமை பேசேல் பூதனை கதை
குழந்தை என்று மாயனைப் பேய் கொல்ல முலைப்பால் ஈந்து
இழந்தது உயிர் என்பது உலகு எங்கும் முழங்குதலால்
வீறாளா புன்னைவன மேகமே யாரிடத்தும்
மாறான வல்லமை பேசேல்
* மாயன் கிருஷ்ணன்

#99
** வாதுமுற் கூறேல் விசுவாமித்திரன் கதை
இந்திரன் முன் கோசிகன் வதிட்டருடன் வாதில் அரிச்
சந்திரனைப் பொய்யன் என்ற தப்பிதத்தால் வந்தது பார்
மா தவனே புன்னைவன நாதா வாய் இடும்பால்
ஏதெனினும் வாது முன் கூறேல்

#100
** வித்தை விரும்பு திருவள்ளுவர் கதை
வள்ளுவரைக் கல்வி அன்றோ வண் தமிழ்ச் சங்கம் செயிக்கத்
தெள்ளு தமிழ் நூல் உதவிசெய்தது எல்லாம் உள்ளது அன்றோ
சந்திரனே புன்னைவனத் தாடாளா பேரறிவாம்
புந்தியினில் வித்தை விரும்பு

#101
** வீடுபெற நில் ஜனகன் கதை
நிலையா உடல் பொருள் நீரில் நிறை கஞ்ச
மலர் இலை போல் எத்தனை நாள் வாழ்ந்தும் இலகு பொருள்
பத்தி ஒன்றும் புன்னைவனப் பண்பா சனகனைப் போல்
நித்தியமாம் வீடு பெற நில்

#102
** உத்தமனா யிரு வியாசர், விதுரர், வதிஷ்டர் ஆகியவரின் கதைகள்
வேத வியாசன் விதுரன் உருப்பசி-தன்
காதல் மைந்தனான கன வதிட்டன் நீதியைப் பார்
நேயத்தால் புன்னைவன நீதிபரா தாரணியி
லே உத்தமனாய் இரு

#103
** ஊருடன் கூடிவாழ்
ஊரும் தாயும் சரியே ஊரை அன்றியே தனி வாழ்ந்
தாரும் தாயைத் தனி வாழ்ந்தாரும் ஒப்பார் பாரின்-பால்
பொன் ஊரும் புன்னைவன பூபாலா நீ இது எண்ணி
மன் ஊருடன் கூடி வாழ்

#104
** வெட்டெனப் பேசேல் சிசுபாலன் கதை
தருமர் உயர் வேள்வி-தனில் சிசுபாலன் பார்த்து
அரியை நிந்தை சொல்லி அழிந்தான் தெரிவது அன்றோ
பார் புகழும் புன்னைவனப் பார்த்திபா மேலோரைச்
சீர்மை தப்பி வெட்டெனப் பேசேல்

#105
** வேண்டுவினை செய் இடைக்காடர் கதை
ஆடு அரசா வேந்து ஆடா ஆம் குடிசை வாசமதாத்
தேடும் இடைக்காடர் முன்பு செய்தது பார் நீடு அழகு
சார்ந்த புகழ்ப் புன்னைவனத் தாடாளா நன்றாகத்
தேர்ந்துகொண்டு வேண்டு வினை செய்
* நீடு மிகுந்த

#106
** வைகறைத் துயிலெழு
செய்ய முகம் வாய் கை கால் தேக சுத்திசெய்து மெய்யில்
துய்ய வெண் நீறு இட்டு அரனைத் தோத்திரம்செய்து உய்யும் வகை
மா எய்தும் புன்னைவன மன்னவா மை இரவிலே
வைகறைத் துயில் எழு

#107
** ஒன்னாரைத் தேறேல்
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து என்று எழு சொலைப் பார்
தூய புகழ்ப் புன்னைவனத் தோன்றலே சொப்பனத்தி
லேயும் ஒன்னாரைத் தேறேல்

#108
** ஓதுவது வேதம்
அந்தணர்கள் வாழி அறம் வாழி கீர்த்தி நிலை
தந்தவர்கள் வாழி தவம் வாழி சந்ததமும்
மானபரா புன்னைவன நாதா இவ் வகையே
தான் ஓதுவது வேதம்
** ஆத்திசூடி வெண்பா முற்றும்
**