பாரதியார் கவிதைகள் – தோத்திரப்பாடல்கள்

1.தேசீய கீதங்கள் 2.தோத்திரப் பாடல்கள்(பக்திப் பாடல்கள்) 3.வேதாந்தப் பாடல்கள் (ஞானப் பாடல்கள்) 4.பல்வகைப் பாடல்கள் 5.தனிப் பாடல்கள்
6.சுயசரிதை 7.கண்ணன் பாட்டு 8.பாஞ்சாலி சபதம் 9.குயில் பாட்டு 10.வசன கவிதை
11.பிற்சேர்க்கை(புதிய பாடல்கள்) பாடல் தேடல் - பாடல் முதல் அடி - அகர வரிசையில்

உள் தலைப்புகள்

1. விநாயகர் நான்மணிமாலை
2. முருகன் பாட்டு
3. வேலன் பாட்டு
4. கிளி விடு தூது
5. முருகன் பாட்டு
6. எமக்கு வேலை
7. வள்ளிப் பாட்டு – 1
8. வள்ளிப் பாட்டு – 2
9. இறைவா இறைவா
10. போற்றி அகவல்
11. சிவசக்தி
12. காணி நிலம் வேண்டும்
13. நல்லதோர் வீணை
14. மஹாசக்திக்கு விண்ணப்பம்
15. அன்னையை வேண்டுதல்
16. பூலோக குமாரி
17. மஹா சக்தி வெண்பா
18. ஓம் சக்தி
19. பராசக்தி
20. சக்திக் கூத்து
21. சக்தி
22. வையம் முழுதும்
23. சக்தி விளக்கம்
24. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்
25. சக்தி திருப்புகழ்
26. சிவசக்தி புகழ்
27. பேதை நெஞ்சே
28. மஹாசக்தி
29. நவராத்திரிப் பாட்டு
30. காளிப் பாட்டு
31. காளி ஸ்தோத்திரம்
32. யோக சக்தி
33. மஹாசக்தி பஞ்சகம்
34. மஹாசக்தி வாழ்த்து
35. ஊழிக்கூத்து
36. காளிக்குச் சமர்ப்பணம்
37. ஹே காளீ
38. மஹா காளியின் புகழ்
39. வெற்றி
40. முத்துமாரி
41. தேச முத்துமாரி
42. கோமதி மஹிமை
43. சாகா வரம்
44. கோவிந்தன் பாட்டு
45. கண்ணனை வேண்டுதல்
46. வருவாய் கண்ணா
47. கண்ண பெருமானே
48. நந்த லாலா
49. கண்ணன் பிறந்தான்
50. கண்ணன் திருவடி
51. வேய்ங்குழல்
52. கண்ணம்மாவின் காதல்
53. கண்ணம்மாவின் நினைப்பு
54. மனப் பீடம்
55. கண்ணம்மாவின் எழில்
56. திருக்காதல்
57. திருவேட்கை
58. திருமகள் துதி
59. திருமகளைச் சரண்புகுதல்
60. ராதைப் பாட்டு
61. கலைமகளை வேண்டுதல்
62. வெள்ளைத் தாமரை
63. நவராத்திரிப் பாட்டு
64. மூன்று காதல்
65. ஆறு துணை
66. விடுதலை வெண்பா
67. ஜயம் உண்டு
68. ஆரிய தரிசனம்
69. சூரிய தரிசனம்
70. ஞாயிறு வணக்கம்
71. ஞான பாநு
72. சோமதேவன் புகழ்
73. வெண்ணிலாவே
74. தீ வளர்த்திடுவோம்
75. வேள்வித் தீ
76. கிளிப்பாட்டு
77. யேசு கிறிஸ்து
78. அல்லா


@1 விநாயகர் நான்மணிமாலை
**வெண்பா

#1
சக்தி பெறும் பாவாணர் சாற்று பொருள் யாதெனினும்
சித்திபெறச் செய் வாக்கு வல்லமைக்கா அத்தனே
நின்றனுக்குக் காப்பு உரைப்பார் நின் மீது செய்யும் நூல்
இன்று இதற்கும் காப்பு நீயே
**கலித்துறை

#2
நீயே சரணம் நினது அருளே சரணம் சரணம்
நாயேன் பல பிழைசெய்து களைத்து உனை நாடி வந்தேன்
வாயே திறவாத மௌனத்து இருந்து உன் மலரடிக்குத்
தீயே நிகர்த்து ஒளிவீசும் தமிழ்க் கவி செய்குவனே
**விருத்தம்

#3
செய்யும் தொழிலுடன் தொழிலே காண்
சீர்பெற்றிட நீ அருள்செய்வாய்
வையம்தனையும் வெளியினையும்
வானத்தையும் முன் படைத்தவனே
ஐயா நான்முகப் பிரமா
யானைமுகனே வாணிதனைக்
கையால் அணைத்துக் காப்பவனே
கமலாசனத்துக் கற்பகமே
**அகவல்

#4
கற்பக விநாயகக் கடவுளே போற்றி
சிற்பர மோனத் தேவன் வாழ்க
வாரணமுகத்தான் மலர்த் தாள் வெல்க
ஆரணமுகத்தான் அருள் பதம் வெல்க
படைப்புக்கு இறையவன் பண்ணவர் நாயகன் 5
இந்திரகுரு எனது இதயத்து ஒளிர்வான்
சந்திரமவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்
குணமதில் பலவாம் கூறக் கேளீர்
உள் செவி திறக்கும் அகக்கண் ஒளிதரும் 10
அக்கினி தோன்றும் ஆண்மை வலியுறும்
திக்கு எல்லாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்
கட்செவிதன்னைக் கையிலே எடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம் பகையதனையும்
துச்சமென்று எண்ணித் துயர் இலாது இங்கு 15
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம்
அச்சம் தீரும் அமுதம் விளையும்
வித்தை வளரும் வேள்வி ஓங்கும்
அமரத்தன்மையும் எய்தவும்
இங்கு நாம் பெறலாம் இஃது உணர்வீரே 20
**வெண்பா

#5
உணர்வீர் உணர்வீர் உலகத்தீர் இங்குப்
புணர்வீர் அமரர் உறும் போகம் கணபதியைப்
போத வடிவாகப் போற்றிப் பணிந்திடு-மின்
காதலுடன் கஞ்ச மலர்க் கால்
**கலித்துறை

#6
காலைப் பிடித்தேன் கணபதி நின் பதம் கண்ணில் ஒற்றி
நூலைப் பலபலவாகச் சமைத்து நொடிப்பொழுதும்
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன்
கோலை மனம் எனும் நாட்டின் நிறுத்தல் குறி எனக்கே
**விருத்தம்

#7
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி
மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும்பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும்
கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே
**அகவல்

#8
கடமையாவன தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்
விநாயக தேவனாய் வேல் உடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச் சடைமுடியனாய்
பிற நாட்டு இருப்போர் பெயர் பல கூறி 5
அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி
உமை எனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகு எங்கும் காக்கும் ஒருவனைப் போற்றுதல்
இ நான்கே இப் பூமியில் எவர்க்கும் 10
கடமை எனப்படும் பயன் இதில் நான்காம்
அறம் பொருள் இன்பம் வீடு எனும் முறையே
தன்னை ஆளும் சமர்த்து எனக்கு அருள்வாய்
மணக்குள விநாயகா வான் மறைத் தலைவா
தனைத்தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில் 15
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்
அசையா நெஞ்சம் அருள்வாய் உயிர் எலாம்
இன்புற்றிருக்க வேண்டி நின் இரு தாள்
பணிவதே தொழில் எனக் கொண்டு
கணபதி தேவா வாழ்வேன் களித்தே 20
**வெண்பா

#9
களியுற்று நின்று கடவுளே இங்குப்
பழியற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய் ஒளி பெற்றுக்
கல்வி பல தேர்ந்து கடமை எலாம் நன்கு ஆற்றித்
தொல்வினைக் கட்டு எல்லாம் துறந்து
**கலித்துறை

#10
துறந்தார் திறமை பெரிது அதினும் பெரிதாகும் இங்குக்
குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவு ஈந்து குலமகளும்
அறம் தாங்கு மக்களும் நீடூழி வாழ்க என அண்டம் எலாம்
சிறந்து ஆளும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செயும் தவமே
**விருத்தம்

#11
தவமே புரியும் வகை அறியேன் சலியாது உற நெஞ்சு அறியாது
சிவமே நாடிப் பொழுது அனைத்தும் தியங்கித்தியங்கி நிற்பேனை
நவ மா மணிகள் புனைந்த முடி நாதா கருணாலயனே தத்து
வமாகியதோர் பிரணவமே அஞ்சேல் என்று சொல்லுதியே
**அகவல்

#12
சொல்லினுக்கு அரியனாய்ச் சூழ்ச்சிக்கு அரியனாய்
பல் உருவாகிப் படர்ந்த வான் பொருளை
உள் உயிர் ஆகி உலகம் காக்கும்
சக்தியே தானாம் தனிச் சுடர்ப் பொருளை
சக்தி குமாரனைச் சந்திரமவுலியைப் 5
பணிந்தவன் உருவிலே பாவனை நாட்டி
ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்தி
சக்தியைக் காக்கும் தந்திரம் பயின்று
யார்க்கும் எளியனாய் யார்க்கும் வலியனாய்
யார்க்கும் அன்பனாய் யார்க்கும் இனியனாய் 10
வாழ்ந்திட விரும்பினேன் மனமே நீ இதை
ஆழ்ந்து கருதி ஆய்ந்தாய்ந்து பல முறை
சூழ்ந்து தெளிந்து பின் சூழ்ந்தார்க்கு எல்லாம்
கூறிக்கூறிக் குறைவறத் தேர்ந்து
தேறித்தேறி நான் சித்திபெற்றிடவே 15
நின்னால் இயன்ற துணைபுரிவாயேல்
பொன்னால் உனக்கு ஒரு கோயில் புனைவேன்
மனமே எனை நீ வாழ்த்திடுவாய்
வீணே உழலுதல் வேண்டா
சக்திகுமாரன் சரண் புகழ்வாயே 20
**வெண்பா

#13
புகழ்வோம் கணபதி நின் பொன் கழலை நாளும்
திகழ்வோம் பெரும் கீர்த்தி சேர்ந்தே இகழ்வோமே
புல் அரக்கப் பாதகரின் பொய்யை எலாம் ஈங்கு இது காண்
வல்லபை கோன் தந்த வரம்
**கலித்துறை

#14
வரமே நமக்கு இது கண்டீர் கவலையும் வஞ்சனையும்
கரவும் புலமை விருப்பமும் ஐயமும் காய்ந்து எறிந்து
சிரம் மீது நங்கள் கணபதி தாள் மலர் சேர்த்து எமக்குத்
தரமே-கொல் வானவர் என்று உளத்தே களி சார்ந்ததுவே
**விருத்தம்

#15
சார்ந்து நிற்பாய் எனது உளமே சலமும் கரவும் சஞ்சலமும்
பேர்ந்து பரமசிவானந்தர் பேற்றை நாடி நாள்தோறும்
ஆர்த்த வேதப் பொருள் காட்டும் ஐயன் சக்தி தலைப்பிள்ளை
கூர்த்த இடர்கள் போக்கிடும் நம் கோமான் பாதக் குளிர் நிழலே
**அகவல்

#16
நிழலினும் வெயிலினும் நேர்ந்த நல் துணையாய்த்
தழலினும் புனலினும் அபாயம் தவிர்த்து
மண்ணினும் காற்றினும் வானினும் எனக்குப்
பகைமை ஒன்று இன்றிப் பயம் தவிர்த்து ஆள்வான்
உள்ளத்து ஓங்க நோக்குறும் விழியும் 5
மௌன வாயும் வரம் தரு கையும்
உடைய நம் பெருமான் உணர்விலே நிற்பான்
ஓம் எனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்
வேதமுனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருஹஸ்பதியும் பிரமனும் யாவும் 10
தானே ஆகிய தனி முதல் கடவுள்
யான் எனது அற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்து ஆவான்
ஸத் எனத் தத் எனச் சதுர்மறையாளர்
நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள் 15
ஏழையர்க்கு எல்லாம் இரங்கும் பிள்ளை
வாழும் பிள்ளை மணக்குளப் பிள்ளை
வெள்ளாடை தரித்த விட்டுணு என்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழுது ஏத்திப் பணிவது முறையே 20
**வெண்பா

#17
முறையே நடப்பாய் முழு மூட நெஞ்சே
இறையேனும் வாடாய் இனிமேல் கறையுண்ட
கண்டன் மகன் வேதகாரணன் சக்தி மகன்
தொண்டருக்கு உண்டு துணை
**கலித்துறை

#18
துணையே எனது உயிர் உள்ளே இருந்து சுடர் விடுக்கும்
மணியே எனது உயிர் மன்னவனே என்றன் வாழ்வினுக்கு ஓர்
அணியே என் உள்ளத்தில் ஆரமுதே எனது அற்புதமே
இணை ஏது உனக்கு உரைப்பேன் கடை வானில் எழும் சுடரே
**விருத்தம்

#19
சுடரே போற்றி கணத்தேவர்
துரையே போற்றி எனக்கு என்றும்
இடரே இன்றிக் காத்திடுவாய்
எண்ணாயிரம் கால் முறையிட்டேன்
படர் வான் வெளியில் பல கோடி
கோடி கோடிப் பல் கோடி
இடராது ஓடும் மண்டலங்கள்
இசைத்தாய் வாழி இறைவனே
**அகவல்

#20
இறைவி இறையவன் இரண்டும் ஒன்றாகித்
தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய்
உள் ஒளி ஆகி உலகு எலாம் திகழும்
பரம்பொருளேயோ பரம்பொருளேயோ
ஆதிமூலமே அனைத்தையும் காக்கும் 5
தேவ தேவா சிவனே கண்ணா
வேலா சாத்தா விநாயகா மாடா
இருளா சூரியா இந்துவே சக்தியே
வாணீ காளீ மா மகளேயோ
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ளது 10
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே
வேதச் சுடரே மெய்யாம் கடவுளே
அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்
நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன்
அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன் 15
உடைமை வேண்டேன் உன் துணை வேண்டினேன்
வேண்டாது அனைத்தையும் நீக்கி
வேண்டியது அனைத்தும் அருள்வது உன் கடனே
**வெண்பா

#21
கடமைதான் ஏது கரிமுகனே வையத்
திடம் நீ அருள்செய்தாய் எங்கள் உடைமைகளும்
இன்பங்களும் எல்லாம் ஈந்தாய் நீ யாங்கள் உனக்கு
என் புரிவோம் கைம்மாறு இயம்பு
**கலித்துறை

#22
இயம்பு மொழிகள் புகழ் மறை ஆகும் எடுத்த வினை
பயன்படும் தேவர் இருபோதும் வந்து பதம் தருவார்
அயன் பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
வியன் புகழ் பாடிப் பணிவார் தமக்கு உறு மேன்மைகளே
**விருத்தம்

#23
மேன்மைப்படுவாய் மனமே கேள்
விண்ணின் இடி முன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே
பயத்தால் ஏதும் பயன் இல்லை
யான் முன் உரைத்தேன் கோடி முறை
இன்னும் கோடி முறை சொல்வேன்
ஆன்மாவான கணபதியின்
அருள் உண்டு அச்சம் இல்லையே
**அகவல்

#24
அச்சம் இல்லை அமுங்குதல் இல்லை
நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை
பாவம் இல்லை பதுங்குதல் இல்லை
ஏது நேரினும் இடர்ப்படமாட்டோம்
அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம் 5
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்
வானம் உண்டு மாரி உண்டு
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும் 10
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்
கேட்கப் பாட்டும் காண நல் உலகும்
களித்து உரைசெய்யக் கணபதி பெயரும் 15
என்றும் இங்கு உளவாம் சலித்திடாய் ஏழை
நெஞ்சே வாழி நேர்மையுடன் வாழி
வஞ்சகக் கவலைக்கு இடங்கொடேல் மன்னோ
தஞ்சம் உண்டு சொன்னேன்
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே 20
**வெண்பா

#25
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராது இருத்தல் உமைக்கு இனிய
மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்
சிந்தையே இ மூன்றும் செய்
**கலித்துறை

#26
செய்யும் கவிதை பராசக்தியாலே செயப்படும் காண்
வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி வண்மை எலாம்
ஐயத்திலும் துரிதத்திலும் சிந்தி அழிவது என்னே
பையத் தொழில் புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே
**விருத்தம்

#27
பக்தியுடையார் காரியத்தில்
பதறார் மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மை போல்
மெல்லச் செய்து பயன் அடைவார்
சக்தி தொழிலே அனைத்தும் எனில்
சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்
வித்தைக்கு இறைவா கணநாதா
மேன்மைத் தொழிலில் பணி எனையே
**அகவல்

#28
எனை நீ காப்பாய் யாவுமாம் தெய்வமே
பொறுத்தார் அன்றே பூமி ஆள்வார்
யாவும் நீ ஆயின் அனைத்தையும் ஒறுத்தல்
செவ்விய நெறி அதில் சிவநிலை பெறலாம்
பொங்குதல் போக்கிப் பொறை எனக்கு ஈவாய் 5
மங்கள குணபதி மணக்குளக் கணபதி
நெஞ்சக் கமலத்து நிறைந்து அருள்புரிவாய்
அகல் விழி உமையாள் ஆசை மகனே
நாட்டினைத் துயர் இன்றி நன்கு அமைத்திடுவதும்
உள்ளம் எனும் நாட்டை ஒரு பிழை இன்றி 10
ஆள்வதும் பேரொளி ஞாயிறே அனைய
சுடர் தரு மதியொடு துயர் இன்றி வாழ்தலும்
நோக்கமாக் கொண்டு நின் பதம் நோக்கினேன்
காத்து அருள்புரிக கற்பக விநாயகா
காத்து அருள்புரிக கடவுளே உலகு எலாம் 15
கோத்து அருள்புரிக குறிப்பு அரும் பொருளே
அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய்
எம் குல தேவா போற்றி
சங்கரன் மகனே தாள் இணை போற்றி
**வெண்பா

#29
போற்றி கலியாணி புதல்வனே பாட்டினிலே
ஆற்றல் அருளி அடியேனைத் தேற்றமுடன்
வாணி பதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணி அருள்
வீணை ஒலி என் நாவில் விண்டு
**கலித்துறை

#30
விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே
தொண்டு உனது அன்னை பராசக்திக்கு என்றும் தொடர்ந்திடுவேன்
பண்டைச் சிறுமைகள் போக்கி என் நாவில் பழுத்த சுவைத்
தெண் தமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே
**விருத்தம்

#31
செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி செந்தாமரையில் சேர்ந்திருப்பாள்
கையாள் என நின்று அடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து
செய்வாள் புகழ் சேர் வாணியும் என்னுள்ளே நின்று தீம் கவிதை
பெய்வாள் சக்தி துணைபுரிவாள் பிள்ளாய் நின்னைப் பேசிடிலே
**அகவல்

#32
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீது உள்ள மக்கள் பறவைகள்
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே 5
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் தேவ தேவா
ஞானாகாசத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக துன்பமும் மிடிமையும் நோவும் 10
சாவும் நீக்கிச் சார்ந்த பல் உயிர் எலாம்
இன்புற்று வாழ்க என்பேன் இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி
அங்ஙனே ஆகுக என்பாய் ஐயனே
இ நாள் இப்பொழுது எனக்கு இவ் வரத்தினை 15
அருள்வாய் ஆதி மூலமே அநந்த
சக்தி குமாரனே சந்திரமவுலீ
நித்தியப் பொருளே சரணம்
சரணம் சரணம் சரணம் இங்கு உனக்கே
**வெண்பா

#33
உனக்கே என் ஆவியும் உள்ளமும் தந்தேன்
மனக் கேதம் யாவினையும் மாற்றி எனக்கே
நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து
**கலித்துறை

#34
விரைந்து உன் திருவுளம் என் மீது இரங்கிட வேண்டும் ஐயா
குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக் கொளுத்தியவன்
அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகா
வரங்கள் பொழியும் முகிலே என் உள்ளத்து வாழ்பவனே
**விருத்தம்

#35
வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணி மலரே
ஆழ்க உள்ளம் சலனம் இலாது அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க துயர்கள் தொலைந்திடுக தொலையா இன்பம் விளைந்திடுக
வீழ்க கலியின் வலி எல்லாம் கிருதயுகம்தான் மேவுகவே
**அகவல்

#36
மேவி மேவித் துயரில் வீழ்வாய்
எத்தனை கூறியும் விடுதலைக்கு இசையாய்
பாவி நெஞ்சே பார் மிசை நின்னை
இன்புறச்செய்வேன் எதற்கும் இனி அஞ்சேல்
ஐயன் பிள்ளையார் அருளால் உனக்கு நான் 5
அபயம் இங்கு அளித்தேன் நெஞ்சே
நினக்கு நான் உரைத்தன நிலைநிறுத்திடவே
தீயிடைக் குதிப்பேன் கடலுள் வீழ்வேன்
வெவ் விடம் உண்பேன் மேதினி அழிப்பேன்
ஏதும் செய்து உனை இடர் இன்றி காப்பேன் 10
மூட நெஞ்சே முப்பது கோடி
முறை உனக்கு உரைத்தேன் இன்னும் மொழிவேன்
தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே
ஏது நிகழினும் நமக்கு ஏன் என்று இரு
பராசக்தி உளத்தின்படி உலகம் நிகழும் 15
நமக்கு ஏன் பொறுப்பு நான் என்று ஓர் தனிப்பொருள்
இல்லை நான் எனும் எண்ணமே வெறும் பொய்
என்றான் புத்தன் இறைஞ்சுவோம் அவன் பதம்
இனி எப்பொழுதும் உரைத்திடேன் இதை நீ
மறவாதிருப்பாய் மடமை நெஞ்சே 20
கவலைப்படுதலே கருநரகு அம்மா
கவலையற்று இருத்தலே முக்தி
சிவன் ஒரு மகன் இதை நினக்கு அருள்செய்கவே
**வெண்பா

#37
செய்க தவம் செய்க தவம் நெஞ்சே தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம் வையகத்தில்
அன்பில் சிறந்த தவம் இல்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு
**கலித்துறை

#38
இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்
செயல் இங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும் சீர் மிகவே
பயிலும் நல் அன்பை இயல்பு எனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்
முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே
**விருத்தம்

#39
மொய்க்கும் கவலைப் பகை போக்கி முன்னோன் அருளைத் துணையாக்கி
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி உடலை இருப்புக்கு இணையாக்கிப்
பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண் முன்னே
மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதி இஃதே
**அகவல்

#40
விதியே வாழி விநாயகா வாழி
பதியே வாழி பரமா வாழி
சிதைவினை நீக்கும் தெய்வமே போற்றி
புது வினை காட்டும் புண்ணியா போற்றி
மதியினை வளர்க்கும் மன்னே போற்றி 5
இச்சையும் கிரியையும் ஞானமும் என்று ஆக்கு
மூல சக்தியின் முதல்வா போற்றி
பிறைமதி சூடிய பெருமாள் வாழி
நிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி
காலம் மூன்றையும் கடந்தான் வாழி 10
சக்தி தேவி சரணம் வாழி
வெற்றி வாழி வீரம் வாழி
பக்தி வாழி பலபல காலமும்
உண்மை வாழி ஊக்கம் வாழி
நல்ல குணங்களே நம்மிடை அமரர் 15
பதங்களாம் கண்டீர் பாரிடை மக்களே
கிருத யுகத்தினைக் கேடு இன்றி நிறுத்த
விரதம் நான் கொண்டனன் வெற்றி
தரும் சுடர் விநாயகன் தாள் இணை வாழியே
** விநாயகர் நான்மணிமாலை முற்றும்

@2 முருகன் பாட்டு
**ராகம் நாட்டைக் குறிஞ்சி தாளம் ஆதி
**பல்லவி

#0
முருகா முருகா முருகா
**சரணங்கள்

#1
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்

#2
அடியார் பலர் இங்கு உளரே
அவரை விடுவித்து அருள்வாய்
முடியா மறையின் முடிவே அசுரர்
முடிவே கருதும் வடிவேலவனே

#3
சுருதிப் பொருளே வருக
துணிவே கனலே வருக
சுருதிக் கருதிக் கவலைப்படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல்

#4
அமராவதி வாழ்வுறவே
அருள்வாய் சரணம் சரணம்
குமரா பிணி யாவையுமே சிதறக்
குமுறும் சுடர் வேலவனே சரணம்

#5
அறிவாகிய கோயிலிலே
அருளாகியதாய் மடி மேல்
பொறி வேலுடனே வளர்வாய் அடியார்
புது வாழ்வுறவே புவி மீது அருள்வாய்

#6
குருவே பரமன் மகனே
குகையில் வளரும் கனலே
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமராதிபனே சரணம் சரணம்

@3 வேலன் பாட்டு
**ராகம் புன்னாகவராளி தாளம் திஸ்ர ஏகம்

#1
வில்லினை ஒத்த புருவம் வளர்த்தனை வேலவா அங்கு ஓர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது வேலவா
சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியைக் கண்டு
சொக்கி மரம் என நின்றனை தென்மலைக் காட்டிலே
கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன்
கண் இரண்டாயிரம் காக்கைக்கு இரையிட்ட வேலவா
பல்லினைக் காட்டி வெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை ஒரு
பார்ப்பனக் கோலம் தரித்துக் கரம் தொட்ட வேலவா

#2
வெள் அலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை உடல்
வெம்பி மறுகிக் கருகிப் புகைய வெருட்டினாய்
கிள்ளை மொழிச் சிறு வள்ளி எனும் பெயர்ச் செல்வத்தை என்றும்
கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய்
கொள்ளைகொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் பானு
கோபன் தலை பத்துக் கோடி துணுக்குறக் கோபித்தாய்
துள்ளிக் குலாவித் திரியும் சிறுவன் மானைப் போல் தினைத்
தோட்டத்திலே ஒரு பெண்ணை மணம்கொண்ட வேலவா

#3
ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே கையில்
அஞ்சல் எனும் குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே
நீறுபடக் கொடும் பாவம் பிணி பசி யாவையும் இங்கு
நீங்கி அடியரை நித்தமும் காத்திடும் வேலவா
கூறுபடப் பல கோடி அவுணரின் கூட்டத்தைக் கண்டு
கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய்
மாறுபடப் பல வேறு வடிவொடு தோன்றுவாள் எங்கள்
வைரவி பெற்ற பெரும் கனலே வடிவேலவா

@4 கிளி விடு தூது
**பல்லவி

#0
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ
**அனுபல்லவி
வல்ல வேல் முருகன்தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவு என்று
**சரணங்கள்

#1
தில்லை அம்பலத்தே நடனம்
செய்யும் அமரர் பிரான் அவன்
செல்வத் திருமகனை இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடுவாய் என்று

#2
அல்லிக் குளத்து அருகே ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே அங்கு ஓர்
முல்லைச் செடியதன்பால் செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றது என்னே என்று

#3
பாலைவனத்திடையே தனைக் கைப்
பற்றி நடக்கையிலே தன் கை
வேலின் மிசை ஆணை வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய்வாய் என்று

@5 முருகன் பாட்டு

#1
வீரத் திருவிழிப் பார்வையும் வெற்றி
வேலும் மயிலும் என் முன் நின்றே எந்த
நேரத்திலும் என்னைக் காக்குமே அனை
நீலி பராசக்தி தண் அருள் கரை
ஓரத்திலே புணை கூடுதே கந்தன்
ஊக்கத்தை என் உளம் நாடுதே மலை
வாரத்திலே விளையாடுவான் என்றும்
வானவர் துன்பத்தைச் சாடுவான்

#2
வேடர் கனியை விரும்பியே தவ
வேடம் புனைந்து திரிகுவான் தமிழ்
நாடு பெரும் புகழ் சேரவே முனி
நாதனுக்கு இ மொழி கூறுவான் சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட இருள்
பார மலைகளைச் சீறுவான் மறை
ஏடு தரித்த முதல்வனும் குரு
என்றிட மெய்ப் புகழ் ஏறுவான்

#3
தேவர் மகளை மணந்திடத் தெற்குத்
தீவில் அசுரனை மாய்த்திட்டான் மக்கள்
யாவருக்கும் தலை ஆயினான் மறை
அர்த்தம் உணர்த்தும் நல் வாயினான் தமிழ்ப்
பாவலர்க்கு இன் அருள்செய்குவான் இந்தப்
பாரில் அறமழை பெய்குவான் நெஞ்சின்
ஆவல் அறிந்து அருள் கூட்டுவான் நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்

#4
தீ வளர்த்தே பழவேதியர் நின்றன்
சேவகத்தின் புகழ் காட்டினார் ஒளி
மீ வளரும் செம்பொன் நாட்டினார்
நின்றன் மேன்மையினால் அறம் நாட்டினார் ஐய
நீ வளரும் குரு வெற்பிலே வந்து
நின்று நின் சேவகம் பாடுவோம் வரம்
ஈவள் பராசக்தி அன்னைதான் உங்கள்
இன் அருளே என்று நாடுவோம் நின்றன்

@6 எமக்கு வேலை

#1
தோகை மேல் உலவும் கந்தன் சுடர்க் கரத்து இருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வேலை

@7 வள்ளிப் பாட்டு – 1
**பல்லவி

#0
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குற வள்ளீ சிறு கள்ளீ
**சரணங்கள்

#1
நேரத்திலே மலை வாரத்திலே நதி
ஓரத்திலே உனைக் கூடி நின்றன்
வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்திலே மனம்
மிக்க மகிழ்ச்சி கொண்டாடி குழல்
பாரத்திலே இதழ் ஈரத்திலே முலை
ஓரத்திலே அன்பு சூடி நெஞ்சம்
ஆரத் தழுவி அமர நிலை பெற்ற
தன் பயனை இன்று காண்பேன்

#2
வெள்ளை நிலா இங்கு வானத்தை மூடி
விரிந்து மொழிவது கண்டாய் ஒளிக்
கொள்ளையிலே உனைக் கூடி முயங்கிக்
குறிப்பினிலே ஒன்றுபட்டு நின்றன்
பிள்ளைக் கிளி மென் குதலையிலே மனம்
பின்னம் அறச் செல்லவிட்டு அடி
தெள்ளிய ஞானப் பெரும் செல்வமே நினைச்
சேர விரும்பினன் கண்டாய்

#3
வட்டங்களிட்டும் குளம் அகலாத
மணிப் பெரும் தெப்பத்தைப் போல நினை
விட்டுவிட்டுப் பல லீலைகள் செய்து நின்
மேனிதனை விடல் இன்றி அடி
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடும் காலை
இரவியைப் போன்ற முகத்தாய் முத்த
மிட்டுப் பல முத்தமிட்டுப் பல முத்த
மிட்டு உனைச் சேர்ந்திட வந்தேன்

@8 வள்ளிப் பாட்டு – 2
**ராகம் கரஹரப்ரியை தாளம்ஆதி
**பல்லவி

#0
உனையே மயல்கொண்டேன் வள்ளீ
உவமையில் அரியாய் உயிரினும் இனியாய்
**சரணம்

#1
எனை ஆள்வாய் வள்ளீ வள்ளீ
இளமயிலே என் இதய மலர் வாழ்வே
கனியே சுவையுறு தேனே
கலவியிலே அமுது அனையாய்
தனியே ஞான விழியாய் நிலவினில்
நினை மருவி வள்ளீ வள்ளீ
நீயாகிடவே வந்தேன்

@9 இறைவா இறைவா
**பல்லவி

#0
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள்
இறைவா இறைவா இறைவா
**சரணங்கள்

#1
சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு
சேரும் ஐம்பூதத்து வியன் உலகு அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபல நல் அழகுகள் சமைத்தாய்

#2
முக்தி என்று ஒரு நிலை சமைத்தாய் அங்கு
முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய்
பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய் எங்கள்
பரமா பரமா பரமா

@10 போற்றி அகவல்

#1
போற்றி உலகு ஒரு மூன்றையும் புணர்ப்பாய்
மாற்றுவாய் துடைப்பாய் வளர்ப்பாய் காப்பாய்
கனியிலே சுவையும் காற்றிலே இயக்கமும்
கலந்தால் போல நீ அனைத்திலும் கலந்தாய்
உலகு எலாம் தானாய் ஒளிர்வாய் போற்றி 5
அன்னை போற்றி அமுதமே போற்றி
புதியதில் புதுமையாய் முதியதில் முதுமையாய்
உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய்
உண்டு எனும் பொருளில் உண்மையாய் என் உளே
நான் எனும் பொருளாய் நானையே பெருக்கித் 10
தான் என மாற்றும் சாகாச் சுடராய்
கவலை நோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்
பிணி இருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்
யான் எனது இன்றி இருக்கும் நல் யோகியர்
ஞான மா மகுட நடுத் திகழ் மணியாய் 15
செய்கையாய் ஊக்கமாய் சித்தமாய் அறிவாய்
நின்றிடும் தாயே நித்தமும் போற்றி
இன்பம் கேட்டேன் ஈவாய் போற்றி
துன்பம் வேண்டேன் துடைப்பாய் போற்றி
அமுதம் கேட்டேன் அளிப்பாய் போற்றி 20
சக்தி போற்றி தாயே போற்றி
முக்தி போற்றி மோனமே போற்றி
சாவினை வேண்டேன் தவிர்ப்பாய் போற்றி

@11 சிவசக்தி

#1
இயற்கை என்று உரைப்பார் சிலர்
இணங்கும் ஐம்பூதங்கள் என்று இசைப்பார்
செயற்கையின் சக்தி என்பார் உயிர்த்
தீ என்பர் அறிவு என்பர் ஈசன் என்பர்
வியப்புறு தாய் நினக்கே இங்கு
வேள்விசெய்திடும் எங்கள் ஓம் என்னும்
நயப்படு மது உண்டே சிவ
நாட்டியம் காட்டி நல் அருள்புரிவாய்

#2
அன்புறு சோதி என்பார் சிலர்
ஆரிருள் காளி என்று உனைப் புகழ்வார்
இன்பம் என்று உரைத்திடுவார் சிலர்
எண்ணரும் துன்பம் என்று உனை இசைப்பார்
புன் பலி கொண்டுவந்தோம் அருள்
பூண்டு எமைத் தேவர்தம் குலத்து இடுவாய்
மின்படு சிவசக்தி எங்கள்
வீரை நின் திருவடி சரண்புகுந்தோம்

#3
உண்மையில் அமுது ஆவாய் புண்கள்
ஒழித்திடுவாய் களி உதவிடுவாய்
வண்மை கொள் உயிர்ச் சுடராய் இங்கு
வளர்ந்திடுவாய் என்றும் மாய்வதிலாய்
ஒண்மையும் ஊக்கமும்தான் என்றும்
ஊறிடும் திருவருள் சுனை ஆவாய்
அண்மையில் என்றும் நின்றே எம்மை
ஆதரித்து அருள்செய்யும் விரதமுற்றாய்

#4
தெளிவுறும் அறிவினை நாம் கொண்டு
சேர்த்தனம் நினக்கு அது சோமரசம்
ஒளியுறும் உயிர்ச் செடியில் இதை
ஓங்கிடும் அதி வலிதனில் பிழிந்தோம்
களியுறக் குடித்திடுவாய் நின்றன்
களிநடம் காண்பதற்கு உளம் கனிந்தோம்
குளிர் சுவைப் பாட்டு இசைத்தே சுரர்
குலத்தினில் சேர்ந்திடல் விரும்புகின்றோம்

#5
அச்சமும் துயரும் என்றே இரண்டு
அசுரர் வந்து எமை இங்கு சூழ்ந்து நின்றார்
துச்சம் இங்கு இவர் படைகள் பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்
இச்சையுற்று இவர் அடைந்தார் எங்கள்
இன் அமுதைக் கவர்ந்து ஏகிடவே
பிச்சை இங்கு எமக்கு அளித்தாய் ஒரு
பெருநகர் உடல் எனும் பெயரினதாம்

#6
கோடி மண்டபம் திகழும் திறல்
கோட்டை இங்கு இதை அவர் பொழுது அனைத்தும்
நாடி நின்று இடர் புரிவார் உயிர்
நதியினைத் தடுத்து எமை நலித்திடுவார்
சாடு பல் குண்டுகளால் ஒளி
சார் மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்
பாடி நின்று உனைப் புகழ்வோம் எங்கள்
பகைவரை அழித்து எமைக் காத்திடுவாய்

#7
நின் அருள் வேண்டுகின்றோம் எங்கள்
நீதியும் தர்மமும் நிலைப்பதற்கே
பொன் அவிர் கோயில்களும் எங்கள்
பொற்பு உடை மாதரும் மதலையரும்
அன்ன நல் அணி வயல்கள் எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும்
இன்னவை காத்திடவே அன்னை
இணை மலர்த் திருவடி துணைபுகுந்தோம்

#8
எம் உயிர் ஆசைகளும் எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும்
செம்மையுற்றிட அருள்வாய் நின்றன்
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்
மும்மையின் உடைமைகளும் திரு
முன்னர் இட்டு அஞ்சலி செய்து நிற்போம்
அம்மை நல் சிவசக்தி எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்

@12 காணி நிலம் வேண்டும்

#1
காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும் அங்கு
தூணில் அழகியதாய் நன் மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தர வேண்டும் அங்கு
கேணி அருகினிலே தென்னை மரம்
கீற்றும் இளநீரும்

#2
பத்துப் பன்னிரண்டு தென்னை மரம்
பக்கத்திலே வேணும் நல்ல
முத்துச் சுடர் போலே நிலாவொளி
முன்பு வர வேணும் அங்கு
கத்தும் குயில் ஓசை சற்றே வந்து
காதில் பட வேணும் என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம்
தென்றல் வர வேணும்

#3
பாட்டுக் கலந்திடவே அங்கே ஒரு
பத்தினிப் பெண் வேணும் எங்கள்
கூட்டுக் களியினிலே கவிதைகள்
கொண்டு தர வேணும் அந்தக்
காட்டு வெளியினிலே அம்மா நின்றன்
காவலுற வேணும் என்றன்
பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப்
பாலித்திட வேணும்

@13 நல்லதோர் வீணை

#1
நல்லதோர் வீணை செய்தே அதை
நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி எனைச்
சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி நிலச்
சுமை என வாழ்ந்திடப் புரிகுவையோ

#2
விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்
நசை அறு மனம் கேட்டேன் நித்தம்
நவம் எனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீ சுடினும் சிவ
சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்
அசைவறு மதி கேட்டேன் இவை
அருள்வதில் உனக்கு எதும் தடை உளதோ

@14 மஹாசக்திக்கு விண்ணப்பம்

#1
மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு அல்லால் அதில்
சிந்தனை மாய்த்துவிடு
யோகத்து இருத்திவிடு அல்லால் என்றன்
ஊனைச் சிதைத்துவிடு
ஏகத்து இருந்து உலகம் இங்கு உள்ள
யாவையும் செய்பவளே

#2
பந்தத்தை நீக்கிவிடு அல்லால் உயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு அல்லால் இதைச்
செத்த உடலாக்கு
இந்தப் பதர்களையே நெல்லாம் என
எண்ணி இருப்பேனோ
எந்தப் பொருளிலுமே உள்ளே நின்று
இயங்கி இருப்பவளே

#3
உள்ளம் குளிராதோ பொய் ஆணவ
ஊனம் ஒழியாதோ
கள்ளம் உருகாதோ அம்மா பக்திக்
கண்ணீர் பெருகாதோ
வெள்ளக் கருணையிலே இ நாய் சிறு
வேட்கை தவிராதோ
விள்ளற்கு அரியவளே அனைத்திலும்
மேவி இருப்பவளே

@15 அன்னையை வேண்டுதல்

#1
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போலே
நண்ணிய நின் முன் இங்கு நசித்திட வேண்டும் அன்னாய்

@16 பூலோக குமாரி
**பல்லவி

#0
பூலோக குமாரி ஹே அம்ருத நாரி
**அனுபல்லவி
ஆலோக ஸ்ருங்காரி அம்ருத கலச குச பாரே
கால பய குடாரி காம வாரி கன லதா ரூப கர்வ திமிராரே
**சரணம்

#1
பாலே ரஸ ஜாலே பகவதி ப்ரஸீத காலே
நீல ரத்ன மய நேத்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே
லீலா ஜ்வாலா நிர்மிதவாணீ நிரந்தரே நிகில லோகேசாநி
நிருபம ஸுந்தரி நித்யகல்யாணி நிஜம் மாம் குரு ஹே மன்மத ராணி

@17 மஹா சக்தி வெண்பா

#1
தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதம் காக்கும் மஹாசக்தி அன்னை
அவளே துணை என்று அனவரதம் நெஞ்சம்
துவளாது இருத்தல் சுகம்

#2
நெஞ்சில் கவலை நிதமும் பயிராக்கி
அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை தஞ்சம் என்றே
வையம் எலாம் காக்கும் மஹாசக்தி நல் அருளை
ஐயம் அறப் பற்றல் அறிவு

#3
வையகத்துக்கு இல்லை மனமே நினக்கு நலம்
செய்யக் கருதி இவை செப்புவேன் பொய் இல்லை
எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும் என்ற
சொல்லால் அழியும் துயர்

#4
எண்ணிற்கு அடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணில் சுடர்கின்ற மீனை எல்லாம் பண்ணியதோர்
சக்தியே நம்மை சமைத்தது காண் நூறாண்டு
பக்தியுடன் வாழும்படிக்கு

@18 ஓம் சக்தி

#1
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணிப் பூண்
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ
வஞ்சனை இன்றிப் பகை இன்றிச் சூது இன்றி வையக மாந்தர் எல்லாம்
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

#2
நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கு இழைப்பாள்
அல்லது நீங்கும் என்றே உலகு ஏழும் அறைந்திடுவாய் முரசே
சொல்லத் தகுந்த பொருள் அன்று காண் இங்கு சொல்லும் அவர்தமையே
அல்லல் கெடுத்து அமரர்க்கு இணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

#3
நம்புவதே வழி என்ற மறைதன்னை நாம் இன்று நம்பிவிட்டோம்
கும்பிட்டு எந்நேரமும் சக்தி என்றால் உனைக் கும்பிடுவேன் மனமே
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சம் இல்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

#4
பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு போற்றி உனக்கு இசைத்தோம்
அன்னை பராசக்தி என்று உரைத்தோம் தளை அத்தனையும் களைந்தோம்
சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறு இல்லை காண்
இன்னும் அதே உரைப்போம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

#5
வெள்ளை மலர் மிசை வேதக் கருப்பொருளாக விளங்கிடுவாய்
தெள்ளு கலைத் தமிழ் வாணி நினக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன்
எள்ளத்தனை பொழுதும் பயன் இன்றி இராது என்றன் நாவினிலே
வெள்ளம் எனப் பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல்

@19 பராசக்தி

#1
கதைகள் சொல்லிக் கவிதை எழுது என்பார் காவியம் பல நீண்டன கட்டு என்பார்
விதவிதப்படு மக்களின் சித்திரம் மேவி நாடகச் செய்யுளை வேவு என்பார்
இதயமோ எனில் காலையும் மாலையும் எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்
எதையும் வேண்டிலது அன்னை பராசக்தி இன்பம் ஒன்றினைப் பாடுதல் அன்றியே

#2
நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நையப் பாடு என்று ஒரு தெய்வம் கூறுமே
கூட்டி மானுடச் சாதியை ஒன்று எனக் கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டிலே அறம் காட்டு எனும் ஓர் தெய்வம் பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும்
ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன் கவி ஓது எனும் வேறு ஒன்றே

#3
நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேல் நிலை எய்தவும்
பாட்டிலே தனி இன்பத்தை நாட்டவும் பண்ணிலே களி கூட்டவும் வேண்டி நான்
மூட்டும் அன்புக் கனலொடு வாணியை முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல்
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்

#4
மழை பொழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான் வான் இருண்டு கரும் புயல் கூடியே
இழையும் மின்னல் சரேலென்று பாயவும் ஈர வாடை இரைந்து ஒலி செய்யவும்
உழை எலாம் இடையின்றி இவ் வான நீர் ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண் வாழ்க தாய் என்று பாடும் என் வாணியே

#5
சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள் சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள்
அல்லினுக்குள் பெரும் சுடர் காண்பவர் அன்னை சக்தியின் மேனி நலம் கண்டார்
கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால் கால வெள்ளத்திலே நிலை காணுங்கால்
புல்லினில் வயிரப் படை காணுங்கால் பூதலத்தில் பராசக்தி தோன்றுமே

@20 சக்திக் கூத்து
**ராகம் பியாக்
**பல்லவி

#0
தகத் தகத் தகத் தகதக என்று ஆடோமோ சிவ
சக்தி சக்தி சக்தி சக்தி என்று பாடோமோ
**சரணங்கள்

#1
அகத்து அகத்து அகத்தினிலே உள் நின்றாள் அவள்
அம்மை அம்மை எம்மை நாடு பொய் வென்றாள்
தகத்தக நமக்கு அருள்புரிவாள் தாள் ஒன்றே
சரணம் என்று வாழ்த்திடுவோம் நாம் என்றே

#2
புகப்புகப் புக இன்பமடா போது எல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூது எல்லாம்
குகைக்குள் அங்கே இருக்குதடா தீ போலே அது
குழந்தையதன் தாய் அடிக் கீழ் சேய் போலே

#3
மிகத் தகைப்படு களியினிலே மெய் சோர உன்
வீரம் வந்து சோர்வை வென்று கைதேர
சகத்தினில் உள்ள மனிதர் எல்லாம் நன்றுநன்று என நாம்
சதிருடனே தாளம் இசை இரண்டும் ஒன்று என

#4
இந்திரனார் உலகினிலே நல் இன்பம்
இருக்குது என்பார் அதனை இங்கே கொண்டு எய்தி
மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம் நல்ல
மதமுறவே அமுத நிலை கண்டு எய்தி

@21 சக்தி

#1
துன்பம் இலாத நிலையே சக்தி தூக்கம் இலாக் கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்பம் முதிர்ந்த முதிர்வே சக்தி எண்ணத்து இருக்கும் எரியே சக்தி
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி முக்தி நிலையின் முடிவே சக்தி

#2
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி சொல்லில் விளங்கும் சுடரே சக்தி
தீம் பழம்தன்னில் சுவையே சக்தி தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி
பாம்பை அடிக்கும் படையே சக்தி பாட்டினில் வந்த களியே சக்தி
சாம்பரைப் பூசி மலை மிசை வாழும் சங்கரன் அன்புத் தழலே சக்தி

#3
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மாநிலம் காக்கும் மதியே சக்தி
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி விண்ணை அளக்கும் விரிவே சக்தி
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத்து ஒளிரும் உயர்வே சக்தி

@22 வையம் முழுதும்
**கண்ணிகள்

#1
வையம் முழுதும் படைத்து அளிக்கின்ற மஹாசக்திதன் புகழ் வாழ்த்துகின்றோம்
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி சேர்ந்திட நல் அருள்செய்க என்றே

#2
பூதங்கள் ஐந்தில் இருந்து எங்கும் கண்ணில் புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம்
வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை மேன்மையுறச் செய்தல் வேண்டும் என்றே

#3
வேகம் கவர்ச்சி முதலிய பல் வினை மேவிடும் சக்தியை மேவுகின்றோம்
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை யாங்கள் அறிந்திட வேண்டும் என்றே

#4
உயிர் எனத் தோன்றி உணவு கொண்டே வளர்ந்து ஓங்கிடும் சக்தியை ஓதுகின்றோம்
பயிரினைக் காக்கும் மழை என எங்களைப் பாலித்து நித்தம் வளர்க்க என்றே

#5
சித்தத்திலே நின்று சேர்வது உணரும் சிவசக்திதன் புகழ் செப்புகின்றோம்
இத் தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்குத் தெரிந்திடல் வேண்டும் என்றே

#6
மாறுதல் இன்றிப் பராசக்திதன் புகழ் வையம் மிசை நித்தம் பாடுகின்றோம்
நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டும் என்றே

#7
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்று உரைசெய்திடுவோம்
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார் சுடர் ஒண்மை கொண்டார் உயிர் வண்மை கொண்டார்

@23 சக்தி விளக்கம்

#1
ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் அதை அன்னை எனப் பணிதல் ஆக்கம்
சூது இல்லை காணும் இந்த நாட்டீர் மற்றத் தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம்

#2
மூலப் பழம்பொருளின் நாட்டம் இந்த மூன்று புவியும் அதன் ஆட்டம்
காலப் பெரும் களத்தின் மீதே எங்கள் காளி நடம் உலகக் கூட்டம்

#3
காலை இளவெயிலின் காட்சி அவள் கண் ஒளி காட்டுகின்ற மாட்சி
நீல விசும்பினிடை இரவில் சுடர் நேமி அனைத்தும் அவள் ஆட்சி

#4
நாரணன் என்று பழவேதம் சொல்லும் நாயகன் சக்தி திருப்பாதம்
சேரத் தவம் புரிந்து பெறுவார் இங்கு செல்வம் அறிவு சிவபோதம்

#5
ஆதி சிவனுடைய சக்தி எங்கள் அன்னை அருள் பெறுதல் முக்தி
மீதி உயிர் இருக்கும்போதே அதை வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி

#6
பண்டை விதியுடைய தேவி வெள்ளைப் பாரதி அன்னை அருள் மேவி
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் பல கற்றல் இல்லாதவன் ஓர் பாவி

#7
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று அந்த மூலப் பொருள் ஒளியின் குன்று
நேர்த்தி திகழும் அந்த ஒளியை எந்த நேரமும் போற்று சக்தி என்று

@24 சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்
**ராகம் பூபாளம் தாளம் சதுஸ்ர ஏகம்

#1
கையைச்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சாதனைகள் யாவினையும் கூடும் கையைச்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தியுற்றுக் கல்லினையும் சாடும்

#2
கண்ணைச்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி வழியதனைக் காணும் கண்ணைச்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சத்தியமும் நல் அருளும் பூணும்

#3
செவி
சக்திதனக்கே கருவியாக்கு சிவ
சக்தி சொலும் மொழியது கேட்கும் செவி
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி திருப்பாடலினை வேட்கும்

#4
வாய்
சக்திதனக்கே கருவியாக்கு சிவ
சக்தி புகழினை அது முழங்கும் வாய்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி நெறி யாவினையும் வழங்கும்

#5
சிவ
சக்திதனை நாசி நித்தம் முகரும் அதைச்
சக்திதனக்கே கருவியாக்கு சிவ
சக்தி திருச்சுவையினை நுகரும் சிவ
சக்திதனக்கே எமது நாக்கு

#6
மெய்யைச்
சக்திதனக்கே கருவியாக்கு சிவ
சக்தி தரும் திறன் அதில் ஏறும் மெய்யைச்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சாதல் அற்ற வழியினைத் தேறும்

#7
கண்டம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சந்ததமும் நல் அமுதைப் பாடும் கண்டம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தியுடன் என்றும் உறவாடும்

#8
தோள்
சக்திதனக்கே கருவியாக்கு அது
தாரணியும் மேலுலகும் தாங்கும் தோள்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி பெற்று மேரு என ஓங்கும்

#9
நெஞ்சம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தியுற நித்தம் விரிவாகும் நெஞ்சம்
சக்திதனக்கே கருவியாக்கு அதைத்
தாக்க வரும் வாள் ஒதுங்கிப் போகும்

#10
சிவ
சக்திதனக்கே எமது வயிறு அது
சாம்பரையும் நல்ல உணவாக்கும் சிவ
சக்திதனக்கே எமது வயிறு அது
சக்தி பெற உடலினைக் காக்கும்

#11
இடை
சக்திதனக்கே கருவியாக்கு நல்ல
சக்தி உள்ள சந்ததிகள் தோன்றும் இடை
சக்திதனக்கே கருவியாக்கு நின்றன்
சாதி முற்றும் நல் அறத்தில் ஊன்றும்

#12
கால்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சாடி எழு கடலையும் தாவும் கால்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சஞ்சலம் இல்லாமல் எங்கும் மேவும்

#13
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சஞ்சலங்கள் தீர்ந்து ஒருமை கூடும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அதில்
சாத்துவிகத் தன்மையினைச் சூடும்

#14
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி அற்ற சிந்தனைகள் தீரும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அதில்
சாரும் நல்ல உறுதியும் சீரும்

#15
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி சக்தி சக்தி என்று பேசும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அதில்
சார்ந்திருக்கும் நல்லுறவும் தேசும்

#16
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி நுட்பம் யாவினையும் நாடும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி சக்தி என்று குதித்து ஆடும்

#17
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தியினை எத் திசையும் சேர்க்கும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
தான் விரும்பில் மா மலையைப் பேர்க்கும்

#18
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சந்தமும் சக்திதனைச் சூழும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அதில்
சாவு பெறும் தீவினையும் ஊழும்

#19
மனம்
சக்திதனக்கே உரிமையாக்கு எதைத்
தான் விரும்பினாலும் வந்து சாரும் மனம்
சக்திதனக்கே உரிமையாக்கு உடல்
தன்னில் உயர் சக்தி வந்து சேரும்

#20
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு இந்தத்
தாரணியில் நூறு வயது ஆகும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு உன்னைச்
சார வந்த நோய் அழிந்துபோகும்

#21
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு தோள்
சக்தி பெற்று நல்ல தொழில் செய்யும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு எங்கும்
சக்தி அருள் மாரி வந்து பெய்யும்

#22
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு சிவ
சக்தி நடை யாவும் நன்கு பழகும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு முகம்
சார்ந்து இருக்கும் நல் அருளும் அழகும்

#23
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு உயர்
சாத்திரங்கள் யாவும் நன்கு தெரியும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு நல்ல
சத்திய விளக்கு நித்தம் எரியும்

#24
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு நல்ல
தாள வகை சந்த வகை காட்டும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அதில்
சாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும்

#25
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அறு
சக்தியை எல்லோர்க்கும் உணர்வுறுத்தும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு
சக்தி புகழ் திக்கு அனைக்கும் நிறுத்தும்

#26
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி சக்தி என்று குழல் ஊதும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அதில்
சார்வது இல்லை அச்சமுடன் சூதும்

#27
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி என்று வீணைதனில் பேசும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி பரிமளம் இங்கு வீசும்

#28
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி என்று தாளமிட்டு முழக்கும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும்

#29
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி வந்து கோட்டைகட்டி வாழும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி அருள் சித்திரத்தில் ஆழும்

#30
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சங்கடங்கள் யாவினையும் உடைக்கும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அங்கு
சத்தியமும் நல் அறமும் கிடைக்கும்

#31
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சார வரும் தீமைகளை விலக்கும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும்

#32
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சக்தி உறைவிடங்களை நாடும்

#33
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தர்க்கம் எனும் காட்டில் அச்சம் நீக்கும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
தள்ளிவிடும் பொய் நெறியும் தீங்கும்

#34
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
சஞ்சலத்தின் தீய இருள் விலகும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
சக்தி ஒளி நித்தமும் நின்று இலகும்

#35
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
சார்வதில்லை ஐயம் எனும் பாம்பு மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
தான் முளைக்கும் முக்தி விதைக் காம்பு

#36
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தாரணியில் அன்பு நிலைநாட்டும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சர்வ சிவசக்தியினைக் காட்டும்

#37
மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது
சக்தி திருவருளினைச் சேர்க்கும் மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது
தாமதப் பொய்த் தீமைகளைப் போக்கும்

#38
மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது
சத்தியத்தின் வெல் கொடியை நாட்டும் மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது
தாக்க வரும் பொய்ப் புலியை ஓட்டும்

#39
மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது
சத்திய நல் இரவியைக் காட்டும் மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அதில்
சார வரும் புயல்களை வாட்டும்

#40
மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது
சக்தி விரதத்தை என்றும் பூணும் மதி
சக்தி விரதத்தை என்றும் காத்தால் சிவ
சக்தி தரும் இன்பமும் நல் ஊணும்

#41
மதி
சக்திதனக்கே அடிமையாக்கு தெளி
தந்து அமுதப் பொய்கை என ஒளிரும் மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது
சந்ததமும் இன்பமுற மிளிரும்

#42
அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தன்னை ஒரு சக்தி என்று தேரும் அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தாமதமும் ஆணவமும் தீரும்

#43
அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தன்னை அவள் கோயில் என்று காணும் அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தன்னை எண்ணித் துன்பமுற நாணும்

#44
அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சக்தி எனும் கடலில் ஓர் திவலை அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு சிவ
சக்தி உண்டு நமக்கு இல்லை கவலை

#45
அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
சக்தி சிவநாதம் நித்தம் ஒலிக்கும் அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சக்தி திருமேனி ஒளி ஜ்வலிக்கும்

#46
சிவ
சக்தி என்றும் வாழி என்று பாடு சிவ
சக்தி சக்தி என்று குதித்து ஆடு சிவ
சக்தி என்றும் வாழி என்று பாடு சிவ
சக்தி சக்தி என்று விளையாடு

@25 சக்தி திருப்புகழ்

#1
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்று ஓது
சக்தி சக்தி சக்தீ என்பார் சாகார் என்றே நின்று ஓது

#2
சக்தி சக்தி என்றே வாழ்தல் சால்பாம் நம்மைச் சார்ந்தீரே
சக்தி சக்தி என்றீராகில் சாகா உண்மை சேர்ந்தீரே

#3
சக்தி சக்தி என்றால் சக்தி தானே சேரும் கண்டீரே
சக்தி சக்தி என்றால் வெற்றி தானே நேரும் கண்டீரே

#4
சக்தி சக்தி என்றே செய்தால் தானே செய்கை நேராகும்
சக்தி சக்தி என்றால் அஃது தானே முத்தி வேர் ஆகும்

#5
சக்தி சக்தி சக்தீ சக்தீ என்றே ஆடோமோ
சக்தி சக்தி சக்தீ என்றே தாளம் கொட்டிப் பாடோமோ

#6
சக்தி சக்தி என்றால் துன்பம் தானே தீரும் கண்டீரே
சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும் கண்டீரே

#7
சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும் கண்டீரோ
சக்தி சக்தி என்றால் கல்வி தானே தேறும் கண்டீரோ

#8
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ

#9
சக்தி சக்தி வாழீ என்றால் சம்பத்து எல்லாம் நேராகும்
சக்தி சக்தி என்றால் சக்திதாசன் என்றே பேர் ஆகும்

@26 சிவசக்தி புகழ்
**ராகம் தன்யாசி தாளம் சதுஸ்ர ஏகம்

#1
ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு

#2
ஓம் சக்தி மிசை பாடல் பல பாடு ஓம்
சக்தி சக்தி என்று தாளம் போடு
சக்தி தரும் செய்கை நிலம்தனிலே சிவ
சக்தி வெறிகொண்டு களித்து ஆடு

#3
ஓம் சக்திதனையே சரணம்கொள்ளு என்றும்
சாவினுக்கு ஓர் அச்சம் இல்லை தள்ளு
சக்தி புகழாம் அமுதை அள்ளு மது
தன்னில் இனிப்பு ஆகும் அந்தக் கள்ளு

#4
ஓம் சக்தி செய்யும் புதுமைகள் பேசு நல்ல
சக்தி அற்ற பேடிகளை ஏசு
சக்தி திருக்கோயில் உள்ளம் ஆக்கி அவள்
தந்திடும் நல் குங்குமத்தைப் பூசு

#5
ஓம் சக்தியினைச் சேர்ந்தது இந்தச் செய்கை இதைச்
சார்ந்து நிற்பதே நமக்கு ஒர் உய்கை
சக்தி எனும் இன்பம் உள்ள பொய்கை அதில்
தன் அமுத மாரி நித்தம் பெய்கை

#6
ஓம் சக்தி சக்தி சக்தி என்று நாட்டு சிவ
சக்தி அருள் பூமிதனில் காட்டு
சக்தி பெற்ற நல்ல நிலை நிற்பார் புவிச்
சாதிகள் எல்லாம் அதனைக் கேட்டு

#7
ஓம் சக்தி சக்தி சக்தி என்று முழங்கு அவள்
தந்திரம் எல்லாம் உலகில் வழங்கு
சக்தி அருள் கூடிவிடுமாயின் உயிர்
சந்ததமும் வாழும் நல்ல கிழங்கு

#8
ஓம் சக்தி செய்யும் தொழில்களை எண்ணு நித்தம்
சக்தி உள்ள தொழில் பல பண்ணு
சக்திகளையே இழந்துவிட்டால் இங்கு
சாவினையும் நோவினையும் உண்ணு

#9
ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு
சக்தி சில சோதனைகள் செய்தால் அவள்
தண் அருள் என்றே மனது தேறு

#10
ஓம் சக்தி துணை என்று நம்பி வாழ்த்து சிவ
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து
சக்தியும் சிறப்பும் மிகப் பெறுவாய் சிவ
சக்தி அருள் வாழ்க என்று வாழ்த்து

@27 பேதை நெஞ்சே

#1
இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே
எதற்கும் இனி உளைவதிலே பயன் ஒன்று இல்லை
முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை
முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை
மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே
வையகத்தில் பொருள் எல்லாம் சலித்தல் கண்டாய்
பின்னை ஒரு கவலையும் இங்கு இல்லை நாளும்
பிரியாதே விடுதலையைப் பிடித்துக்கொள்வாய்

#2
நினையாத விளைவு எல்லாம் விளைந்து கூடி
நினைத்த பயன் காண்பது அவள் செய்கை அன்றோ
மனமார உண்மையினைப் புரட்டலாமோ
மஹாசக்தி செய்த நன்றி மறக்கலாமோ
எனை ஆளும் மா தேவி வீரர் தேவி
இமையவரும் தொழும் தேவி எல்லைத் தேவி
மனை வாழ்வு பொருள் எல்லாம் வகுக்கும் தேவி
மலரடியே துணை என்று வாழ்த்தாய் நெஞ்சே

#3
சக்தி என்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்
சங்கரன் என்று உரைத்திடுவோம் கண்ணன் என்போம்
நித்தியம் இங்கு அவள் சரணே நிலை என்று எண்ணி
நினக்கு உள்ள குறைகள் எல்லாம் தீர்க்கச் சொல்லி
பக்தியினால் பெருமை எல்லாம் கொடுக்கச் சொல்லி
பசி பிணிகள் இல்லாமல் காக்கச் சொல்லி
உத்தம நல் நெறிகளிலே சேர்க்கச் சொல்லி
உலகளந்தநாயகி தாள் உரைப்பாய் நெஞ்சே

#4
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்
சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்
கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்
தொல்லை தரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்
துணை என்று நின் அருளைத் தொடரச் செய்தே
நல்ல வழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்
நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே

#5
பாட்டினிலே சொல்வதும் அவள் சொல் ஆகும் பயன்
இன்றி உரைப்பாளோ பாராய் நெஞ்சே
கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயம் இல்லை
கேடு இல்லை தெய்வம் உண்டு வெற்றி உண்டு
மீட்டும் உனக்கு உரைத்திடுவேன் ஆதி சக்தி
வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி
நாட்டினிலே சனகனைப் போல் நமையும் செய்தாள்
நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே

@28 மஹாசக்தி

#1
சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன்
சரணம் என்று புகுந்துகொண்டேன்
இந்திரியங்களை வென்றுவிட்டேன்
எனது என் ஆசையைக் கொன்றுவிட்டேன்

#2
பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னாள்
பக்திசெய்து பிழைக்கச் சொன்னாள்
துயர் இலாது எனைச் செய்துவிட்டாள்
துன்பம் என்பதைக் கொய்துவிட்டாள்

#3
மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்
வான்கண் உள்ள வெளியைச் செய்தாள்
வாழி நெஞ்சில் களியைச் செய்தாள்

@29 நவராத்திரிப் பாட்டு
**(உஜ்ஜயினி)

#1
உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

#2
உஜ்ஜய காரண சங்கர தேவீ
உமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா

#3
வாழி புனைந்து மஹேசுவர தேவன்
தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம்

#4
சத்ய யுகத்தை அகத்தில் இருத்தி
திறத்தை நமக்கு அருளிச் செய்யும் உத்தமி

@30 காளிப் பாட்டு

#1
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் காளி தெய்வ லீலை அன்றோ
பூதம் ஐந்தும் ஆனாய் காளி பொறிகள் ஐந்தும் ஆனாய்
போதம் ஆகி நின்றாய் காளி பொறியை விஞ்சி நின்றாய்

#2
இன்பம் ஆகிவிட்டாய் காளி என் உளே புகுந்தாய்
பின்பு நின்னை அல்லால் காளி பிறிது நானும் உண்டோ
அன்பு அளித்துவிட்டாய் காளி ஆண்மை தந்துவிட்டாய்
துன்பம் நீக்கிவிட்டாய் காளி தொல்லை போக்கிவிட்டாய்

@31 காளி ஸ்தோத்திரம்

#1
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்கள் அன்றி இல்லை
போதும் இங்கு மாந்தர் வாழும் பொய்ம்மை வாழ்க்கை எல்லாம்
ஆதி சக்தி தாயே என் மீது அருள்புரிந்து காப்பாய்

#2
எந்த நாளும் நின் மேல் தாயே இசைகள் பாடி வாழ்வேன்
கந்தனைப் பயந்தாய் தாயே கருணை வெள்ளம் ஆனாய்
மந்தமாருதத்தில் வானில் மலையின் உச்சி மீதில்
சிந்தை எங்கு செல்லும் அங்கு உன் செம்மை தோன்றும் அன்றே

#3
கர்மயோகம் என்றே உலகில் காக்கும் என்னும் வேதம்
தர்ம நீதி சிறிதும் இங்கே தவறல் என்பது இன்றி
மர்மமான பொருளாம் நின்றன் மலரடிக்கண் நெஞ்சம்
செம்மையுற்று நாளும் சேர்ந்தே தேசு கூட வேண்டும்

#4
என்றன் உள்ள வெளியில் ஞானத்து இரவி ஏற வேண்டும்
குன்றம் ஒத்த தோளும் மேருக் கோலம் ஒத்த வடிவும்
நன்றை நாடும் மனமும் நீ எந்நாளும் ஈதல் வேண்டும்
ஒன்றை விட்டு மற்று ஓர் துயரில் உழலும் நெஞ்சம் வேண்டா

#5
வானகத்தின் ஒளியைக் கண்டே மனமகிழ்ச்சி பொங்கி
யான் எதற்கும் அஞ்சேன் ஆகி எந்த நாளும் வாழ்வேன்
ஞானம் ஒத்தது அம்மா உவமை நான் உரைக்கொணாதாம்
வானகத்தின் ஒளியின் அழகை வாழ்த்துமாறு யாதோ

#6
ஞாயிறு என்ற கோளம் தரும் ஓர் நல்ல பேரொளிக்கே
தேயம் ஈது ஓர் உவமை எவரே தேடி ஓத வல்லார்
வாய் இனிக்கும் அம்மா அழகாம் மதியின் இன்ப ஒளியை
நேயமோடு உரைத்தால் அங்கே நெஞ்சு இளக்கம் எய்தும்

#7
காளி மீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும்
வேளை ஒத்த விறலும் பாரில் வேந்தர் ஏத்து புகழும்
யாளி ஒத்த வலியும் என்றும் இன்பம் நிற்கும் மனமும்
வாழி ஈதல் வேண்டும் அன்னாய் வாழ்க நின்றன் அருளே

@32 யோக சக்தி
**வரங் கேட்டல்

#1
விண்ணும் மண்ணும் தனி ஆளும் எங்கள் வீரை சக்தி நினது அருளே என்றன்
கண்ணும் கருத்தும் எனக் கொண்டு அன்பு கசிந்து கசிந்து கசிந்துருகி நான்
பண்ணும் பூசனைகள் எல்லாம் வெறும் பாலைவனத்தில் இட்ட நீரோ உனக்கு
எண்ணும் சிந்தை ஒன்று இலையோ அறிவில்லாது அகிலம் அளிப்பாயோ

#2
நீயே சரணம் என்று கூவி என்றன் நெஞ்சில் பேர் உறுதிகொண்டு அடி
தாயே எனக்கு மிக நிதியும் அறம்தன்னைக் காக்கும் ஒரு திறனும் தரு
வாயே என்று பணிந்து ஏத்திப் பலவாறா நினது புகழ் பாடி வாய்
ஓயேன் ஆவது உணராயோ நினது உண்மை தவறுவதோ அழகோ

#3
காளீ வலிய சாமுண்டி ஓங்காரத் தலைவி என் இராணி பல
நாள் இங்கு எனை அலைக்கலாமோ உள்ளம் நாடும் பொருள் அடைதற்கு அன்றோ மலர்த்
தாளில் விழுந்து அபயம் கேட்டேன் அது தாராயெனில் உயிரைத் தீராய் துன்பம்
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கருநீலி என் இயல்பு அறியாயோ

#4
தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பம் மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரை எனப் பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ

#5
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் அவை நேரே இன்று எனக்குத் தருவாய் என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் இன்னும் மூளாது அழிந்திடுதல் வேண்டும் இனி
என்னைப் புதிய உயிர் ஆக்கி எனக்கு ஏதும் கவலை அறச் செய்து மதி
தன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டு இருக்கச் செய்வாய்

#6
தோளை வலியுடையது ஆக்கி உடல் சோர்வும் பிணி பலவும் போக்கி அரி
வாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடலுறுதி தந்து சுடர்
நாளைக் கண்டதோர் மலர் போல் ஒளி நண்ணித் திகழும் முகம் தந்து மத
வேளை வெல்லும் முறை கூறித் தவ மேன்மை கொடுத்து அருளல் வேண்டும்

#7
எண்ணும் காரியங்கள் எல்லாம் வெற்றி ஏறப் புரிந்து அருளல் வேண்டும் தொழில்
பண்ணப் பெரு நிதியம் வேண்டும் அதில் பல்லோர் துணைபுரிதல் வேண்டும் சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் மிக நன்றா உளத்து அழுந்தல் வேண்டும் பல
பண்ணில் கோடி வகை இன்பம் நான் பாடத் திறனடைதல் வேண்டும்

#8
கல்லை வயிரமணி ஆக்கல் செம்பைக் கட்டித் தங்கம் எனச் செய்தல் வெறும்
புல்லை நெல் எனப் புரிதல் பன்றிப் போத்தைச் சிங்க ஏறு ஆக்கல் மண்ணை
வெல்லத்து இனிப்பு வரச்செய்தல் என விந்தை தோன்றிட இ நாட்டை நான்
தொல்லை தீர்த்து உயர்வு கல்வி வெற்றி சூழும் வீரம் அறிவு ஆண்மை

#9
கூடும் திரவியத்தின் குவைகள் திறல்கொள்ளும் கோடி வகைத் தொழில்கள் இவை
நாடும்படிக்கு வினை செய்து இந்த நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்கக் கலி
சாடும் திறன் எனக்குத் தருவாய் அடி தாயே உனக்கு அரியது உண்டோ மதி
மூடும் பொய்மை இருள் எல்லாம் எனை முற்றும் விட்டு அகல வேண்டும்

#10
ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும் பல
பையச் சொல்லுவது இங்கு என்னே முன்னைப் பார்த்தன் கண்ணன் இவர் நேரா எனை
உய்யக்கொண்டு அருள வேண்டும் அடி உன்னைக் கோடி முறை தொழுதேன் இனி
வையத் தலைமை எனக்கு அருள்வாய் அன்னை வாழி நின்னது அருள் வாழி

#11
ஓம் காளி வலிய சாமுண்டீ
ஓங்காரத் தலைவி என் இராணி

@33 மஹாசக்தி பஞ்சகம்

#1
கரணமும் தனுவும் நினக்கெனத் தந்தேன் காளி நீ காத்து அருள்செய்யே
மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன் மார வெம் பேயினை அஞ்சேன்
இரணமும் சுகமும் பழியும் நல் புகழும் யாவும் ஓர் பொருள் எனக் கொள்ளேன்
சரணம் என்று உனது பதமலர் பணிந்தேன் தாய் எனைக் காத்தல் உன் கடனே

#2
எண்ணிலாப் பொருளும் எல்லையில் வெளியும் யாவுமாம் நின்றனைப் போற்றி
மண்ணில் ஆர் வந்து வாழ்த்தினும் செறினும் மயங்கிலேன் மனம் எனும் பெயர் கொள்
கண் இலாப் பேயை எள்ளுவேன் இனி எக்காலுமே அமைதியில் இருப்பேன்
தண் நிலா முடியில் புனைந்து நின்று இலகும் தாய் உனைச் சரண்புகுந்தேனால்

#3
நீசருக்கு இனிதாம் தனத்தினும் மாதர் நினைப்பினும் நெறியிலா மாக்கள்
மாசுறு பொய் நட்பதனினும் பன்னாள் மயங்கினேன் அவை இனி மதியேன்
தேசுறு நீல நிறத்தினாள் அறிவாய்ச் சிந்தையில் குலவிடு திறத்தாள்
வீசுறும் காற்றில் நெருப்பினில் வெளியில் விளங்குவாள்தனைச் சரண்புகுந்தேன்

#4
ஐயமும் திகைப்பும் தொலைந்தன ஆங்கே அச்சமும் தொலைந்தது சினமும்
பொய்யும் என்று இனைய புன்மைகள் எல்லாம் போயின உறுதி நான் கண்டேன்
வையம் இங்கு அனைத்தும் ஆக்கியும் காத்தும் மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்ய வெண்ணிறத்தாள்தனைக் கரியவளைத் துணை எனத் தொடர்ந்து கொண்டே

#5
தவத்தினை எளிதாப் புரிந்தனள் போகத் தனிநிலை ஒளி எனப் புரிந்தாள்
சிவத்தினை இனிதாப் புரிந்தனள் மூடச் சித்தமும் தெளிவுறச் செய்தாள்
பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம் பான்மை கொன்றவள் மயம் புரிந்தாள்
அவத்தினைக் களைந்தாள் அறிவு என விளைந்தாள் அநந்தமா வாழ்க இங்கு அவளே

@34 மஹா சக்தி வாழ்த்து

#1
விண்டு உரைக்க அறிய அரியதாய் விரிந்த வான் வெளி என நின்றனை
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
மண்டலத்தை அணுவணுவாக்கினால் வருவது எத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே நினைக் காளி என்று ஏத்துவேன்

#2
நாடு காக்கும் அரசன்தனை அந்த நாட்டுளோர் அரசு என்று அறிவார் எனில்
பாடு தண்டைக் குழந்தை தனக்கு இதம் பண்ணும் அப்பன் இவன் என்று அறிந்திடும்
கோடி அண்டம் இயக்கி அளிக்கும் நின் கோலம் ஏழை குறித்திடல் ஆகுமோ
நாடி இச் சிறு பூமியில் காணும் நின் நலங்கள் ஏத்திட நல் அருள்செய்கவே

#3
பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை பரவும் வெய்ய கதிர் எனக் காய்ந்தனை
கரிய மேகத் திரள் எனச் செல்லுவை காலும் மின் என வந்து உயிர் கொல்லுவை
சொரியும் நீர் எனப் பல் உயிர் போற்றுவை சூழும் வெள்ளம் என உயிர் மாற்றுவை
விரியும் நீள் கடல் என்ன நிறைந்தனை வெல்க காளி எனது அம்மை வெல்கவே

#4
வாயு ஆகி வெளியை அளந்தனை வாழ்வு எதற்கும் உயிர்நிலை ஆயினை
தேயு ஆகி ஒளி அருள்செய்குவை செத்தவற்றைக் கருப்பொருள் ஆக்குவை
பாயும் ஆயிரம் சக்திகள் ஆகியே பாரில் உள்ள தொழில்கள் இயற்றுவை
சாயும் பல் உயிர் கொல்லுவை நிற்பனதம்மைக் காத்துச் சுகம் பல நல்குவை

#5
நிலத்தின் கீழ் பல் உலோகங்கள் ஆயினை நீரின் கீழ் எண்ணிலா நிதி வைத்தனை
தலத்தின் மீது மலையும் நதிகளும் சாரும் காடும் சுனைகளும் ஆயினை
குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம் கூட்டி வைத்துப் பல நலம் துய்த்தனை
புலத்தை இட்டு இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே போற்றி போற்றி நினது அருள் போற்றியே

#6
சித்த சாகரம் செய்தனை ஆங்கு அதில் செய்த கர்மபயன் எனப் பல்கினை
தத்துகின்ற திரையும் சுழிகளும் தாக்கி எற்றிடும் காற்றும் உள்ளோட்டமும்
சுத்த மோனப் பகுதியும் வெண்பனி சூழ்ந்த பாகமும் சுட்ட வெந்நீரும் என்று
ஒத்த நீர்க் கடல் போலப் பல வகை உள்ளம் என்னும் கடலில் அமைந்தனை

@35 ஊழிக்கூத்து

#1
வெடிபடும் அண்டத்து இடி பல தாளம்போட வெறும்
வெளியில் இரத்தக் களியொடு பூதம் பாடப் பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடும் ஒலியில் கூடக் களித்து
ஆடும் காளீ சாமுண்டீ கங்காளீ
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை

#2
ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாகப் பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப்போக அங்கே
முந்துறும் ஒளியில் சிந்தை நழுவும் வேகத்தோடே
முடியா நடனம் புரிவாய் அடு தீ சொரிவாய்
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை

#3
பாழாய் வெளியும் பதறிப்போய் மெய் குலையச் சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோஹோ என்று அலைய வெறித்து
உறுமித் திரிவாய் செரு வெம் கூத்தே புரிவாய்
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை

#4
சக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் சட்டச்
சடசட சட்டென்று உடைபடு தாளம் கொட்டி அங்கே
எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டித் தானே
எரியும் கோலம் கண்டே சாகும் காலம்
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை

#5
காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும் அங்கே
கடவுள் மோனத்து ஒளியே தனியாய் இலகும் சிவன்
கோலம் கண்டு உன் கனல்செய் சினமும் விலகும் கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக் கூத்திடுவாய்
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை

@36 காளிக்குச் சமர்ப்பணம்

#1
இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத்தேழு வருடங்கள் காத்தனன்
வந்தனம் அடி பேரருள் அன்னாய் வைரவீ திறல் சாமுண்டி காளி
சிந்தனை தெளிந்தேன் இனி உன்றன் திருவருட்கு எனை அர்ப்பணம்செய்தேன்
வந்திருந்து பல பயன் ஆகும் வகை தெரிந்துகொள் வாழியடி நீ

@37 ஹே காளீ

#1
எண்ணிலாத பொருள்குவைதானும் ஏற்றமும் புவி ஆட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும் வெம்மையும் பெரும் திண்மையும் அறிவும்
தண் நிலாவின் அமைதியும் அருளும் தருவள் இன்று எனது அன்னை என் காளி
மண்ணில் ஆர்க்கும் துயர் இன்றிச் செய்வேன் வறுமை என்பதை மண் மிசை மாய்ப்பேன்

#2
தானம் வேள்வி தவம் கல்வி யாவும் தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்
வானம் மூன்று மழை தரச் செய்வேன் மாறிலாத வளங்கள் கொடுப்பேன்
மானம் வீரியம் ஆண்மை நல் நேர்மை வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்
ஞானம் ஓங்கி வளர்ந்திடச் செய்வேன் நான் விரும்பிய காளி தருவாள்

@38 மஹா காளியின் புகழ்
**காவடிச் சிந்து : ராகம் – ஆனந்த பைரவி : தாளம் – ஆதி

#1
காலமாம் வனத்தில் அண்டக் கோல மா மரத்தின் மீது
காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல்
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும்
கால்கள் ஆறு உடையது எனக் கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி
விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ
வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த
வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம்

#2
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள்
ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள்
ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன்
அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள்
இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில்
எண்ணியே ஓம் சக்தி எனும் புண்ணிய முனிவர் நித்தம்
எய்துவார் மெய்ஞ்ஞானம் எனும் தீயை எரித்து எற்றுவார் இ நான் எனும் பொய்ப் பேயை

#3
ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான்
அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை
ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும்
நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர்
நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த
நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத
நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது

@39 வெற்றி

#1
எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி மற்று ஆங்கே
விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி வேண்டினேனுக்கு அருளினன் காளி
தடுத்து நிற்பது தெய்வதமேனும் சாரும் மானுடமாயினும் அஃதைப்
படுத்து மாய்ப்பள் அருள் பெரும் காளி பாரில் வெற்றி எனக்கு உறுமாறே

#2
எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி எங்கும் வெற்றி எதனினும் வெற்றி
கண்ணும் ஆருயிரும் என நின்றாள் காளித் தாய் இங்கு எனக்கு அருள்செய்தாள்
மண்ணும் காற்றும் புனலும் அனலும் வானும் வந்து வணங்கி நில்லாவோ
விண்ணுளோர் பணிந்து ஏவல் செய்யாரோ வெல்க காளி பதங்கள் என்பார்க்கே

@40 முத்துமாரி

#1
உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
உன் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
கலகத்து அரக்கர் பலர் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்து மாரி
கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
பல கற்றும் பல கேட்டும் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
பயன் ஒன்றும் இல்லையடி எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
நிலை எங்கும் காணவில்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
நின் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி

#2
துணி வெளுக்க மண் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
தோல் வெளுக்கச் சாம்பர் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
மணி வெளுக்கச் சாணை உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
மனம் வெளுக்க வழி இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
பிணிகளுக்கு மாற்று உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
பேதைமைக்கு மாற்று இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
அணிகளுக்கு ஒர் எல்லை இல்லாய் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
அடைக்கலம் இங்கு உனைப் புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி

@41 தேச முத்துமாரி

#1
தேடி உனைச் சரணடைந்தேன் தேச முத்துமாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்

#2
பாடி உனைச் சரணடைந்தேன் பாசம் எல்லாம் களைவாய்
கோடி நலம் செய்திடுவாய் குறைகள் எல்லாம் தீர்ப்பாய்

#3
எப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி
ஒப்பி உனது ஏவல் செய்வேன் உனது அருளால் வாழ்வேன்

#4
சக்தி என்று நேரம் எல்லாம் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயம் அனைத்தும் தீரும்

#5
ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம்

#6
துன்பமே இயற்கை எனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்

#7
நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம்

@42 கோமதி மஹிமை

#1
தாருக வனத்திலே சிவன் சரண நல் மலரிடை உளம் பதித்துச்
சீருறத் தவம் புரிவார் பரசிவன் புகழ் அமுதினை அருந்திடுவார்
பேர் உயர் முனிவர் முன்னே கல்விப் பெரும் கடல் பருகிய சூதன் என்பான்
தேரும் மெய்ஞ்ஞானத்தினால் உயர் சிவன் நிகர் முனிவரன் செப்புகின்றான்

#2
வாழிய முனிவர்களே புகழ் வளர்த்திடும் சங்கரன் கோயிலிலே
ஊழியைச் சமைத்த பிரான் இந்த உலகம் எலாம் உருக்கொண்ட பிரான்
ஏழிரு புவனத்திலும் என்றும் இயல் பெரும் உயிர்களுக்கு உயிர் ஆவான்
ஆழும் நல் அறிவு ஆவான் ஒளி அறிவினைக் கடந்த மெய்ப்பொருள் ஆவான்

#3
தேவர்க்கெலாம் தேவன் உயர் சிவபெருமான் பண்டு ஒர் காலத்திலே
காவலின் உலகு அளிக்கும் அந்தக் கண்ணனும் தானும் இங்கு ஓர் உருவாய்
ஆவலொடு அரும் தவர்கள் பல ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேவி நின்று அருள்புரிந்தான் அந்த வியப்புறு சரிதையை விளம்புகின்றேன்

#4
கேளீர் முனிவர்களே இந்தக் கீர்த்தி கொள் சரிதையைக் கேட்டவர்க்கே
வேள்விகள் கோடி செய்தால் சதுர்வேதங்கள் ஆயிரம் முறை படித்தால்
மூளும் நல் புண்ணியம்தான் வந்து மொய்த்திடும் சிவன் இயல் விளங்கிநிற்கும்
நாளும் நல் செல்வங்கள் பல நணுகிடும் சரத மெய் வாழ்வு உண்டாம்

#5
இக் கதை உரைத்திடுவேன் உளம் இன்புறக் கேட்பீர் முனிவர்களே
நக்கபிரான் அருளால் இங்கு நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்
தொக்கன அண்டங்கள் வளர் தொகை பல கோடி பல் கோடிகளாம்
இக் கணக்கு எவர் அறிவார் புவி எத்தனை உளது என்பது யார் அறிவார்

#6
நக்கபிரான் அறிவான் மற்றும் நான் அறியேன் பிற நரர் அறியார்
தொக்க பேர் அண்டங்கள் கொண்ட தொகைக்கு இல்லை இல்லை என்று சொல்லுகின்ற
தக்க பல் சாத்திரங்கள் ஒளி தருகின்ற வானம் ஓர் கடல் போலாம்
அக் கடலதனுக்கே எங்கும் அக்கரை இக்கரை ஒன்று இல்லையாம்

#7
இக் கடலதன் அகத்தே அங்கங்கு இடையிடைத் தோன்றும் புன் குமிழிகள் போல்
தொக்கன உலகங்கள் திசைத் தூ வெளியதனிடை விரைந்து ஓடும்
மிக்கதொர் வியப்பு உடைத்தாம் இந்த வியன் பெரு வையத்தின் காட்சி கண்டீர்
மெய்க் கலை முனிவர்களே இதன் மெய்ப்பொருள் பரசிவன் சக்தி கண்டீர்

#8
எல்லை உண்டோ இலையோ இங்கு யாவர் கண்டார் திசை வெளியினுக்கே
சொல்லும் ஒர் வரம்பிட்டால் அதை
**(இது முற்றுப் பெறவில்லை)

@43 சாகா வரம்
**பல்லவி

#0
சாகா வரம் அருள்வாய் ராமா
சதுர்மறை நாதா சரோஜ பாதா
**சரணங்கள்

#1
ஆகாசம் தீ கால் நீர் மண் அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்
ஏகாமிர்தம் ஆகிய நின் தாள் இணை சரண் என்றால் இது முடியாதா

#2
வாகு ஆர் தோள் வீரா தீரா மன்மத ரூபா வானவர் பூபா
பாகு ஆர் மொழி சீதையின் மென் தோள் பழகிய மார்பா பதமலர் சார்பா

#3
நித்யா நிர்மலா ராமா நிஷ்களங்கா சர்வா சர்வாதாரா
சத்யா சநாதநா ராமா சரணம் சரணம் சரணம் உதாரா

@44 கோவிந்தன் பாட்டு

#1
கண் இரண்டும் இமையாமல் செம் நிறத்து மெல் இதழ்ப் பூம் கமலத் தெய்வப்
பெண் இரண்டு விழிகளையும் நோக்கிடுவாய் கோவிந்தா பேணினோர்க்கு
நண்ணு இரண்டு பொன் பாதம் அளித்து அருள்வாய் சராசரத்து நாதா நாளும்
எண் இரண்டு கோடியினும் மிகப் பலவாம் வீண் கவலை எளியனேற்கே

#2
எளியனேன் யான் எனலை எப்போது போக்கிடுவாய் இறைவனே இவ்
வளியிலே பறவையிலே மரத்தினிலே முகிலினிலே வரம்பில் வான
வெளியிலே கடலிடையே மண்ணகத்தே வீதியிலே வீட்டில் எல்லாம்
களியிலே கோவிந்தா நினைக் கண்டு நின்னொடு நான் கலப்பது என்றோ

#3
என் கண்ணை மறந்து உன் இரு கண்களையே என் அகத்தில் இசைத்துக்கொண்டு
நின் கண்ணால் புவி எல்லாம் நீ எனவே நான் கண்டு நிறைவு கொண்டு
வன்கண்மை மறதியுடன் சோம்பர் முதல் பாவம் எலாம் மடிந்து நெஞ்சில்
புன்கண் போய் வாழ்ந்திடவே கோவிந்தா எனக்கு அமுதம் புகட்டுவாயே

@45 கண்ணனை வேண்டுதல்

#1
வேத வானில் விளங்கி அறம் செய்-மின்
சாதல் நேரினும் சத்தியம் பூணு-மின்
தீது அகற்று-மின் என்று திசை எலாம்
மோத நித்தம் இடித்து முழங்கியே

#2
உண்ணும் சாதிக்கு உறக்கமும் சாவுமே
நண்ணுறாவணம் நன்கு புரந்திடும்
எண்ணரும் புகழ்க் கீதை எனச் சொலும்
பண் அமிழ்தத்து அருள் மழை பாலித்தே

#3
எங்கள் ஆரிய பூமி எனும் பயிர்
மங்களம் பெற நித்தலும் வாழ்விக்கும்
துங்கமுற்ற துணை முகிலே மலர்ச்
செங்கணாய் நின் பதமலர் சிந்திப்பாம்

#4
வீரர் தெய்வதம் கர்ம விளக்கு நல்
பாரதர் செய் தவத்தின் பயன் எனும்
தார் அவிர்ந்த தடம் புயப் பார்த்தன் ஓர்
காரணம் எனக் கொண்டு கடவுள் நீ

#5
நின்னை நம்பி நிலத்திடை என்றுமே
மன்னு பாரத மாண் குலம் யாவிற்கும்
உன்னுங்காலை உயர் துணையாகவே
சொன்ன சொல்லை உயிரிடைச் சூடுவோம்

#6
ஐய கேள் இனி ஓர் சொல் அடியர் யாம்
உய்ய நின் மொழி பற்றி ஒழுகியே
மையறும் புகழ் வாழ்க்கை பெறற்கு எனச்
செய்யும் செய்கையின் நின் அருள் சேர்ப்பையால்

#7
ஒப்பு இலாத உயர்வொடு கல்வியும்
எய்ப்பில் வீரமும் இப் புவி ஆட்சியும்
தப்பு இலாத தருமமும் கொண்டு யாம்
அப்பனே நின் அடி பணிந்து உய்வமால்

#8
மற்றும் நீ இந்த வாழ்வு மறுப்பையேல்
சற்று நேரத்துள் எம் உயிர் சாய்த்து அருள்
கொற்றவா நின் குவலயம் மீதினில்
வெற்றுவாழ்க்கை விரும்பி அழிகிலேம்

#9
நின்றன் மா மரபில் வந்து நீசராய்ப்
பொன்றல் வேண்டிலம் பொன் கழல் ஆணை காண்
இன்று இங்கு எம்மை அதம் புரி இல்லையேல்
வென்றியும் புகழும் தரல் வேண்டுமே

@46 வருவாய் கண்ணா
**பல்லவி

#0
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா
வருவாய் வருவாய் வருவாய்
**சரணங்கள்

#1
உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா உயிரின் அமுதாய்ப் பொழிவாய் கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா கமலத் திருவோடு இணைவாய் கண்ணா

#2
இணைவாய் எனது ஆவியிலே கண்ணா இதயத்தினிலே அமர்வாய் கண்ணா
கணைவாய் அசுரர் தலைகள் சிதறக் கடையூழியிலே படையோடு எழுவாய்

#3
எழுவாய் கடல் மீதினிலே எழும் ஓர் இரவிக்கு இணையா உளம் மீதினிலே
தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா துணையே அமரர் தொழு வானவனே

@47 கண்ண பெருமானே

#1
காயிலே புளிப்பதென்னே கண்ணபெருமானே நீ
கனியிலே இனிப்பதென்னே கண்ணபெருமானே நீ
நோயிலே படுப்பதென்னே கண்ணபெருமானே நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே கண்ணபெருமானே நீ

#2
காற்றிலே குளிர்ந்ததென்னே கண்ணபெருமானே நீ
கனலிலே சுடுவதென்னே கண்ணபெருமானே நீ
சேற்றிலே குழம்பலென்னே கண்ணபெருமானே நீ
திக்கிலே தெளிந்ததென்னே கண்ணபெருமானே நீ

#3
ஏற்றி நின்னைத் தொழுவதென்னே கண்ணபெருமானே நீ
எளியர்தம்மைக் காப்பதென்னே கண்ணபெருமானே நீ
போற்றினாரைக் காப்பதென்னே கண்ணபெருமானே நீ
பொய்யர்தம்மை மாய்ப்பதென்னே கண்ணபெருமானே நீ
**வேறு

#4
போற்றி போற்றி போற்றி போற்றி கண்ணபெருமானே நின்
பொன் அடி போற்றி நின்றேன் கண்ணபெருமானே

@48 நந்த லாலா
**ராகம் – யதுகுல காம்போதி : தாளம் – ஆதி

#1
காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

#2
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

#3
கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

#4
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

@49 கண்ணன் பிறந்தான்

#1
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் இந்தக்
காற்று அதை எட்டுத் திசையிலும் கூறிடும்
திண்ணமுடையான் மணி வண்ணமுடையான் உயிர்
தேவர் தலைவன் புவி மிசைத் தோன்றினன்
பண்ணை இசைப்பீர் நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர் இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை
எண்ணிடைக் கொள்வீர் நன்கு கண்ணை விழிப்பீர் இனி
ஏதும் குறைவில்லை வேதம் துணை உண்டு

#2
அக்கினி வந்தான் அவன் திக்கை வளைத்தான் புவி
ஆர் இருள் பொய்மைக் கலியை மடித்தனன்
துக்கம் கெடுத்தான் சுரர் ஒக்கலும் வந்தார் சுடர்ச்
சூரியன் இந்திரன் வாயு மருத்துக்கள்
மிக்க திரளாய் சுரர் இக்கணம்தன்னில் இங்கு
மேவி நிறைந்தனர் பாவி அசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார் உயிர் கக்கி முடித்தார் கடல்
போல ஒலிக்குது வேதம் புவி மிசை

#3
சங்கரன் வந்தான் இங்கு மங்கலம் என்றான் நல்ல
சந்திரன் வந்து இன் அமுதைப் பொழிந்தனன்
பங்கம் ஒன்று இல்லை ஒளி மங்குவது இல்லை இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று
கங்கையும் வந்தாள் கலை மங்கையும் வந்தாள் இன்பக்
காளி பராசக்தி அன்புடன் எய்தினள்
செங்கமலத்தாள் எழில் பொங்கும் முகத்தாள் திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்

@50 கண்ணன் திருவடி

#1
கண்ணன் திருவடி எண்ணுக மனமே
திண்ணம் அழியா வண்ணம் தருமே

#2
தருமே நிதியும் பெருமை புகழும்
கரு மா மேனிப் பெருமான் இங்கே

#3
இங்கே அமரர் சங்கம் தோன்றும்
மங்கும் தீமை பொங்கும் நலமே

#4
நலமே நாடில் புலவீர் பாடீர்
நில மா மகளின் தலைவன் புகழே

#5
புகழ்வீர் கண்ணன் தகை சேர் அமரர்
தொகையோடு அசுரப் பகை தீர்ப்பதையே

#6
தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியை
ஆர்ப்பார் அமரர் பார்ப்பார் தவமே

#7
தவறாது உணர்வீர் புவியீர் மாலும்
சிவனும் வானோர் எவரும் ஒன்றே

#8
ஒன்றே பலவாய் நின்று ஓர் சக்தி
என்றும் திகழும் குன்றா ஒளியே

@51 வேய்ங்குழல்
**ராகம் – ஹிந்துஸ்தான் தோடி
**தாளம் – ஏகதாளம்
எங்கிருந்து வருகுவதோ ஒலி
யாவர் செய்குவதோ அடி தோழி

#1
குன்றினின்றும் வருகுவதோ மரக்கொம்பினின்றும் வருகுவதோ வெளி
மன்றினின்று வருகுவதோ என்றன் மதி மருண்டிடச் செய்குதடி இஃது

#2
அலை ஒலித்திடும் தெய்வ யமுனை யாற்றினின்றும் ஒலிப்பதுவோ அன்றி
இலை ஒலிக்கும் பொழிலிடை நின்றும் எழுவதோ இஃது இன் அமுதைப் போல்

#3
காட்டினின்றும் வருகுவதோ நிலாக் காற்றைக் கொண்டு தருகுவதோ வெளி
நாட்டினின்றும் இத் தென்றல் கொணர்வதோ நாதம் இஃது என் உயிரை உருக்குதே

#4
பறவை ஏதும் ஒன்று உள்ளதுவோ இங்ஙன் பாடுமோ அமுதக் கனல் பாட்டு
மறைவினின்றும் கின்னரர் ஆதியர் வாத்தியத்தின் இசை இதுவோ அடி

#5
கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல் தானடீ காதிலே அமுது உள்ளத்தில் நஞ்சு
பண் நன்றாமடி பாவையர் வாடப் பாடி எய்திடும் அம்படி தோழி

@52 கண்ணம்மாவின் காதல்

#1
காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு ஊறித் ததும்பும் விழிகளும் பத்து
மாற்றுப் பொன் ஒத்த நின் மேனியும் இந்த வையத்தில் யான் உள்ள மட்டிலும் எனை
வேற்று நினைவு இன்றித் தேற்றியே இங்கு ஓர் விண்ணவனாகப் புரியுமே இந்தக்

#2
நீ எனது இன் உயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் துயர்
போயின போயின துன்பங்கள் நினைப் பொன் எனக் கொண்ட பொழுதிலே என்றன்
வாயினிலே அமுது ஊறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே உயிர்த்
தீயினிலே வளர் சோதியே என்றன் சிந்தனையே என்றன் சித்தமே இந்தக்

@53 கண்ணம்மாவின் நினைப்பு
**பல்லவி

#0
நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சசி என்று சரணம் எய்தினேன்
**சரணங்கள்

#1
பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா

#2
மாரன் அம்புகள் என் மீது வாரிவாரி வீச நீ கண்
பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா

#3
யாவுமே சுக முனிக்கு ஒர் ஈசனாம் எனக்கு உன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா

@54 மனப் பீடம்
**பல்லவி

#0
பீடத்தில் ஏறிக்கொண்டாள் மனப்
பீடத்தில் ஏறிக்கொண்டான்

#1
நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்
கேடற்றது என்று கண்டு கூடக் கருதும் ஒளி
மாடத்தில் ஏறி ஞானக் கூடத்தில் விளையாடி
ஓடத் திரிந்து கன்னி வேடத்தி ரதியைப் போல்
ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்
மூடிக் கிடக்கும் நெஞ்சின் ஊடுற்றதை அமரர்
தேடித் தவிக்கும் இன்ப வீடு ஒத்து இனிமை செய்து
வேடத்தி சிறு வள்ளி வித்தை என் கண்ணம்மா

#2
கண்ணன் திருமார்பில் கலந்த கமலை என்கோ
விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்காதனத்தே
நண்ணிச் சிவன் உடலை நாடும் அவள் என்கோ
எண்ணத் திதிக்குதடா இவள் பொன் உடல் அமுதம்
பெண்ணில் அரசி இவள் பெரிய எழிலுடையாள்
கண்ணுள் மணி எனக்குக் காதலி ரதி இவள்
பண்ணில் இனிய சுவை பரந்த மொழியினாள்
உண்ணும் இதழ் அமுத ஊற்றினள் கண்ணம்மா

@55 கண்ணம்மாவின் எழில்
**ராகம் – செஞ்சுருட்டி : தாளம் – ரூபகம்
**பல்லவி

#0
எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ
எங்கள் கண்ணம்மா முகம் செந்தாமரைப்பூ
எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன்
**சரணங்கள்

#1
எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்
திங்களை மூடிய பாம்பினைப் போலே
செறி குழல் இவள் நாசி எள்பூ

#2
மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று
மதுர வாய் அமிர்தம் இதழ் அமிர்தம்
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை
சாய வரம்பை சதுர் அயிராணி

#3
இங்கித நாத நிலையம் இரு செவி
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்
மங்களக் கைகள் மஹாசக்தி வாசம்
வயிறு ஆலிலை இடை அமிர்த வீடு

#4
சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்
தாமரை இருந்தாள் லக்ஷ்மீ பீடம்
பொங்கித் ததும்பித் திசை எங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த் திருக்கோலம்

@56 திருக்காதல்

#1
திருவே நினைக் காதல் கொண்டேனே நினது திரு
உருவே மறவாது இருந்தேனே பல திசையில்
தேடித் திரிந்து இளைத்தேனே நினக்கு மனம்
வாடித் தினம் களைத்தேனே அடி நினது
பருவம் பொறுத்திருந்தேனே மிகவும் நம்பிக் 5
கருவம் படைத்திருந்தேனே இடை நடுவில்
பையச் சதிகள்செய்தாயே அதனிலும் என்
மையல் வளர்தல் கண்டாயே அமுத மழை
பெய்யக் கடைக்கண் நல்காயே நினது அருளில்
உய்யக் கருணைசெய்வாயே பெருமை கொண்டு 10
வையம் தழைக்கவைப்பேனே அமர யுகம்
செய்யத் துணிந்து நிற்பேனே அடி எனது
தேனே எனது இரு கண்ணே எனை உகந்து
தானே வரும் திருப்பெண்ணே

@57 திருவேட்கை
**ராகம் நாட்டை தாளம் சதுஸ்ர ஏகம்

#1
மலரின் மேவு திருவே உன் மேல் மையல் பொங்கி நின்றேன்
நிலவு செய்யும் முகமும் காண்பார் நினைவு அழிக்கும் விழியும்
கலகலென்ற மொழியும் தெய்வக் களி துலங்கு நகையும்
இலகு செல்வ வடிவும் கண்டு உன் இன்பம் வேண்டுகின்றேன்

#2
கமலம் மேவும் திருவே நின் மேல் காதலாகி நின்றேன்
குமரி நினை இங்கே பெற்றோர் கோடி இன்பம் உற்றார்
அமரர் போல வாழ்வேன் என் மேல் அன்பு கொள்வையாயின்
இமய வெற்பின் மோத நின் மேல் இசைகள் பாடி வாழ்வேன்

#3
வாணிதன்னை என்றும் நினது வரிசை பாடவைப்பேன்
நாணி ஏகலாமோ என்னை நன்கு அறிந்திலாயோ
பேணி வையம் எல்லாம் நன்மை பெருகவைக்கும் விரதம்
பூணும் மைந்தர் எல்லாம் கண்ணன் பொறிகள் ஆவர் அன்றோ

#4
பொன்னும் நல்ல மணியும் சுடர்செய் பூண்கள் ஏந்தி வந்தாய்
மின்னும் நின்றன் வடிவில் பணிகள் மேவி நிற்கும் அழகை
என் உரைப்பனேடீ திருவே என் உயிர்க்கு ஒர் அமுதே
நின்னை மார்பு சேரத் தழுவி நிகர் இலாது வாழ்வேன்

#5
செல்வம் எட்டும் எய்தி நின்னால் செம்மை ஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்
முல்லை போன்ற முறுவல் காட்டி மோக வாதை நீக்கி
எல்லையற்ற சுவையே எனை நீ என்றும் வாழவைப்பாய்

@58 திருமகள் துதி
**ராகம் சக்ரவாகம் தாளம் திஸ்ர ஏகம்

#1
நித்தம் உனை வேண்டி மனம் நினைப்பது எல்லாம் நீயாய்ப்
பித்தனைப் போல் வாழ்வதிலே பெருமை உண்டோ திருவே
சித்த உறுதி கொண்டிருந்தார் செய்கை எல்லாம் வெற்றி கொண்டே
உத்தம நிலை சேர்வர் என்றே உயர்ந்த வேதம் உரைப்பது எல்லாம்
சுத்த வெறும் பொய்யோடீ சுடர் மணியே திருவே
மெத்த மையல் கொண்டு விட்டேன் மேவிடுவாய் திருவே

#2
உன்னை அன்றி இன்பம் உண்டோ உலக மிசை வேறே
பொன்னை வடிவென்று உடையாய் புத்தமுதே திருவே
மின் ஒளி தரும் நன் மணிகள் மேடை உயர்ந்த மாளிகைகள்
வண்ணம் உடைய தாமரைப்பூ மணிக் குளம் உள்ள சோலைகளும்
அன்னம் நறு நெய் பாலும் அதிசயமாத் தருவாய்
நின் அருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன் திருவே

#3
ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும்
வீடுகளும் நெடு நிலமும் விரைவினிலே தருவாய்
ஈடு நினக்கு ஓர் தெய்வம் உண்டோ எனக்கு உனை அன்றிச் சரணும் உண்டோ
வாடு நிலத்தைக் கண்டு இரங்கா மழையினைப் போல் உள்ளம் உண்டோ
நாடும் மணிச் செல்வம் எல்லாம் நன்கு அருள்வாய் திருவே
பீடு உடைய வான் பொருளே பெரும் களியே திருவே

@59 திருமகளைச் சரண்புகுதல்

#1
மாதவன் சக்தியினைச் செய்ய மலர் வளர் மணியினை வாழ்த்திடுவோம்
போதும் இவ் வறுமை எலாம் எந்தப் போதிலும் சிறுமையின் புகைதனிலே
வேதனைப்படு மனமும் உயர் வேதமும் வெறுப்புறச் சோர் மதியும்
வாதனை பொறுக்கவில்லை அன்னை மா மகள் அடி இணை சரண்புகுவோம்

#2
கீழ்களின் அவமதிப்பும் தொழில் கெட்டவர் இணக்கமும் கிணற்றின் உள்ளே
மூழ்கிய விளக்கினைப் போல் செய்யும் முயற்சி எல்லாம் கெட்டு முடிவதுவும்
ஏழ் கடல் ஓடியும் ஓர் பயன் எய்திட வழி இன்றி இருப்பதுவும்
வீழ்க இக் கொடு நோய்தான் வையம் மீதினில் வறுமை ஓர் கொடுமை அன்றோ

#3
பாற்கடலிடைப் பிறந்தாள் அது பயந்த நல் அமுதத்தின் பான்மை கொண்டாள்
ஏற்கும் ஓர் தாமரைப்பூ அதில் இணை மலர்த் திருவடி இசைந்திருப்பாள்
நால் கரம் தான் உடையாள் அந்த நான்கினும் பல வகைத் திரு உடையாள்
வேல் கரு விழி உடையாள் செய்ய மேனியள் பசுமையை விரும்பிடுவாள்

#4
நாரணன் மார்பினிலே அன்பு நலம் உற நித்தமும் இணைந்திருப்பாள்
தோரணப் பந்தரிலும் பசுத் தொழுவிலும் சுடர் மணி மாடத்திலும்
வீரர்தம் தோளினிலும் உடல் வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் ஒளி பரவிட வீற்றிருந்து அருள்புரிவாள்

#5
பொன்னிலும் மணிகளிலும் நறும் பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் செழும் காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்
முன்னிய துணிவினிலும் மன்னர் முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னி நல் புகழ் பாடி அவள் பத மலர் வாழ்த்தி நல் பதம் பெறுவோம்

#6
மண்ணினுள் கனிகளிலும் மலை வாய்ப்பிலும் வார் கடல் ஆழத்திலும்
புண்ணிய வேள்வியிலும் உயர் புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணும் நல் பாவையிலும் நல்ல பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை எங்கள் நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்

#7
வெற்றிகொள் படையினிலும் பல விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்
நல் தவ நடையினிலும் நல்ல நாவலர் தேமொழித் தொடரினிலும்
உற்ற செந்திருத் தாயை நித்தம் உவகையில் போற்றி இங்கு உயர்ந்திடுவோம்
கற்ற பல் கலைகள் எல்லாம் அவள் கருணை நல் ஒளி பெறக் கலி தவிர்ப்போம்

@60 ராதைப் பாட்டு
**ராகம் கமாஸ் தாளம் ஆதி
**பல்லவி

#0
தேகி முதம் தேகி ஸ்ரீ ராதே ராதே
**சரணங்கள்

#1
ராக ஸமுத்ரஜாம்ருதே ராதே ராதே
ராஜ்ஸ்ரீ மண்டல ரத்ந ராதே ராதே
போக ரதி கோடி துல்யே ராதே ராதே
பூதேவி தப பல ராதே ராதே

#2
வேத மஹா மந்த்ர ரஸ ராதே ராதே
வேத வித்யா விலாஸினி ஸ்ரீ ராதே ராதே
ஆதிபராசக்தி ரூப ராதே ராதே
அத்யத்புத சிருங்காரமய ராதே ராதே
**தமிழ்க்கண்ணிகள்

#3
காதலெனுந் தீவினிலே ராதே ராதே அன்று
கண்டெடுத்த பெண்மணியே ராதே ராதே

#4
காதலெனுஞ் சோலையிலே ராதே ராதே நின்ற
கற்பகமாம் பூம் தருவே ராதே ராதே

#5
மாதரசே செல்வப் பெண்ணே ராதே ராதே உயர்
வானவர்கள் இன்ப வாழ்வே ராதே ராதே

@61 கலைமகளை வேண்டுதல்
**நொண்டிச் சிந்து

#1
எங்ஙனம் சென்றிருந்தீர் எனது இன் உயிரே என்றன் இசை அமுதே
திங்களைக் கண்டவுடன் கடல் திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்
கங்குலைப் பார்த்தவுடன் இங்கு காலையில் இரவியைத் தொழுதவுடன்
பொங்குவீர் அமிழ்து எனவே அந்தப் புதுமையிலே துயர் மறந்திருப்பேன்

#2
மாதம் ஒர் நான்கா நீர் அன்பு வறுமையிலே எனை வீழ்த்திவிட்டீர்
பாதங்கள் போற்றுகின்றேன் என்றன் பாவம் எலாம் கெட்டு ஞான கங்கை
நாதமொடு எப்பொழுதும் என்றன் நாவினிலே பொழிந்திட வேண்டும்
வேதங்கள் ஆக்கிடுவீர் அந்த விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்

#3
கண்மணி போன்றவரே இங்குக் காலையும் மாலையும் திருமகளாம்
பெண்மணி இன்பத்தையும் சக்திப் பெரு மகள் திருவடிப் பெருமையையும்
வண்மையில் ஓதிடுவீர் என்றன் வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்
அண்மையில் இருந்திடுவீர் இனி அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ

#4
தான் எனும் பேய் கெடவே பல சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே
வான் எனும் ஒளி பெறவே நல வாய்மையிலே மதி நிலைத்திடவே
தேன் எனப் பொழிந்திடுவீர் அந்தத் திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்
ஊனங்கள் போக்கிடுவீர் நல்ல ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்

#5
தீயினை நிறுத்திடுவீர் நல்ல தீரமும் தெளிவும் இங்கு அருள்புரிவீர்
மாயையில் அறிவிழந்தே உம்மை மதிப்பது மறந்தனன் பிழைகள் எல்லாம்
தாய் என உமைப் பணிந்தேன் பொறை சார்த்தி நல் அருள்செய வேண்டுகின்றேன்
வாயினில் சபதமிட்டேன் இனி மறக்ககிலேன் எனை மறக்ககிலீர்

@62 வெள்ளைத் தாமரை
**ராகம் ஆனந்த பைரவி தாளம் சாப்பு

#1
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்

#2
மாதர் தீம் குரல் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோது அகன்ற தொழில் உடைத்தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈது அனைத்தின் எழிலிடை உற்றாள் இன்பமே வடிவாகிடப் பெற்றாள்

#3
வஞ்சமற்ற தொழில் புரிந்து உண்டு வாழும் மாந்தர் குலதெய்வம் ஆவாள்
வெம் சமர்க்கு உயிர் ஆகிய கொல்லர் வித்தை ஓர்ந்திடு சிற்பியர் தச்சர்
மிஞ்ச நல் பொருள் வாணிகம் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்சம் என்று வணங்கிடும் தெய்வம் தரணி மீது அறிவாகிய தெய்வம்

#4
தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமை காட்டி விலக்கிடும் தெய்வம்
உய்வம் என்ற கருத்துடையோர்கள் உயிரினுக்கு உயிர் ஆகிய தெய்வம்
செய்வம் என்று ஒரு செய்கை எடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கை வருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம்

#5
செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் சேர்ந்து இத் தேவை வணங்குவம் வாரீர்
வந்தனம் இவட்கே செய்வது என்றால் வாழி அஃது இங்கு எளிது என்று கண்டீர்
மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை வரிசையாக அடுக்கி அதன் மேல்
சந்தனத்தை மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனை அன்றாம்

#6
வீடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பலபல பள்ளி
தேடு கல்வி இலாதது ஒர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதம் என் அன்னை கேண்மை கொள்ள வழி இவை கண்டீர்

#7
ஊணர் தேசம் யவனர்தம் தேசம் உதய ஞாயிற்று ஒளி பெறு நாடு
சேண் அகன்றதோர் சிற்றடிச் சீனம் செல்வப் பாரசிகப் பழம் தேசம்
தோள் நலத்த துருக்கம் மிசிரம் சூழ் கடற்கு அப்புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை எல்லாம் கல்வித் தேவியின் ஒளி மிகுந்து ஓங்க

#8
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டிடை வந்தீர்
ஊனம் இன்று பெரிது இழைக்கின்றீர் ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்
மானமற்று விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வு எனலாமோ
போனதற்கு வருந்துதல் வேண்டா புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்

#9
இன் நறும் கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த் தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னர் உள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு ஓர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல்

#10
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர் ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
மதுரத் தேமொழி மாதர்கள் எல்லாம் வாணி பூசைக்கு உரியன பேசீர்
எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும் இப் பெரும் தொழில் நாட்டுவம் வாரீர்

@63 நவராத்திரிப் பாட்டு
**(மாதா பராசக்தி)
**பராசக்தி
**(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)

#1
மாதா பராசக்தி வையம் எலாம் நீ நிறைந்தாய்
ஆதாரம் உன்னை அல்லால் ஆர் எமக்குப் பாரினிலே
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமது உயிரே
வேதாவின் தாயே மிகப் பணிந்து வாழ்வோமே
**வாணி

#2
வாணி கலைத் தெய்வம் மணி வாக்கு உதவிடுவாள்
ஆணிமுத்தைப் போல அறிவு முத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பது எலாம் காட்டுவதாய்
மாண் உயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே
**ஸ்ரீதேவி

#3
பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி
மின்னு நவரத்தினம் போல் மேனி அழகுடையாள்
அன்னை அவள் வையம் எலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன் இரு பொன் தாளே சரண்புகுந்து வாழ்வோமே
**பார்வதி

#4
மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே ஊதி உலகக் கனல் வளர்ப்பாள்
நிலையில் உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம்
தலையிலே தாங்கித் தரணி மிசை வாழ்வோமே

@64 மூன்று காதல்
**முதலாவது சரஸ்வதி காதல்
**ராகம் – ஸரஸ்வதி மனோஹரி : தாளம் – திஸ்ர ஏகம்

#1
பிள்ளைப் பிராயத்திலே அவள் பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேன் அங்கு
பள்ளிப் படிப்பினிலே மதி பற்றிடவில்லை எனிலும் தனிப்பட
வெள்ளை மலரணை மேல் அவள் வீணையும் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருள் அமுதம் கண்டேன் வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா

#2
ஆடி வருகையிலே அவள் அங்கு ஒரு வீதி முனையில் நிற்பாள் கையில்
ஏடு தரித்திருப்பாள் அதில் இங்கிதமாகப் பதம் படிப்பாள் அதை
நாடி அருகணைந்தால் பல ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் இன்று
கூடி மகிழ்வம் என்றால் விழிக் கோணத்திலே நகை காட்டிச் செல்வாள் அம்மா

#3
ஆற்றங்கரைதனிலே தனியானதோர் மண்டபம் மீதினிலே தென்றல்
காற்றை நுகர்ந்திருந்தேன் அங்கு கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள் அதை
ஏற்று மனம் மகிழ்ந்தே அடி என்னோடு இணங்கி மணம்புரிவாய் என்று
போற்றிய போதினிலே இளம் புன்னகை பூத்து மறைந்துவிட்டாள் அம்மா

#4
சித்தம் தளர்ந்ததுண்டோ கலைத் தேவியின் மீது விருப்பம் வளர்ந்து ஒரு
பித்துப்பிடித்தது போல் பகல் பேச்சும் இரவில் கனவும் அவளிடை
வைத்த நினைவை அல்லால் பிற வாஞ்சை உண்டோ வயது அங்ஙனமே இரு
பத்திரண்டாம் அளவும் வெள்ளைப் பண்மகள் காதலைப் பற்றி நின்றேன் அம்மா
**இரண்டாவது லக்ஷ்மி காதல்
**ராகம் ஸ்ரீராகம் தாளம் திஸ்ர ஏகம்

#5
இந்த நிலையினிலே அங்கு ஒர் இன்பப் பொழிலினிடையினில் வேறு ஒரு
சுந்தரி வந்து நின்றாள் அவள் சோதி முகத்தின் அழகினைக் கண்டு என்றன்
சிந்தை திறைகொடுத்தேன் அவள் செந்திரு என்று பெயர் சொல்லினாள் மற்றும்
அந்தத் தினம் முதலா நெஞ்சம் ஆரத் தழுவிட வேண்டுகின்றேன் அம்மா

#6
புன்னகை செய்திடுவாள் அற்றைப் போது முழுதும் மகிழ்ந்திருப்பேன் சற்று என்
முன் நின்று பார்த்திடுவாள் அந்த மோகத்திலே தலைசுற்றிடும் காண் பின்னர்
என்ன பிழைகள் கண்டோ அவள் என்னைப் புறக்கணித்து ஏகிடுவாள் அங்கு
சின்னமும் பின்னமுமா மனம் சிந்தி உளம் மிக நொந்திடுவேன் அம்மா

#7
காட்டு வழிகளிலே மலைக் காட்சியிலே புனல் வீழ்ச்சியிலே பல
நாட்டுப்புறங்களிலே நகர் நண்ணு சில சுடர் மாடத்திலே சில
வேட்டுவர் சார்பினிலே சில வீரரிடத்திலும் வேந்தரிடத்திலும்
மீட்டும் அவள் வருவாள் கண்ட விந்தையிலே இன்பம் மேற்கொண்டு போம் அம்மா
**மூன்றாவது காளி காதல்
**ராகம் புன்னாகவராளி தாளம் திஸ்ர ஏகம்

#8
பின் ஒர் இராவினிலே கரும் பெண்மை அழகு ஒன்று வந்தது கண் முன்பு
கன்னி வடிவம் என்றே களி கண்டு சற்றே அருகில் சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா இவள் ஆதிபராசக்தி தேவியடா இவள்
இன் அருள் வேண்டுமடா பின்னர் யாவும் உலகில் வசப்பட்டுப்போமடா

#9
செல்வங்கள் பொங்கி வரும் நல்ல தெள் அறிவு எய்தி நலம் பல சார்ந்திடும்
அல்லும்பகலும் இங்கே இவை அத்தனை கோடிப் பொருளின் உள்ளே நின்று
வில்லை அசைப்பவளை இந்த வேலை அனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை நித்தம் தோத்திரம் பாடித் தொழுதிடுவோமடா

@65 ஆறு துணை
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

#1
கணபதிராயன் அவன் இரு காலைப் பிடித்திடுவோம்
குணம் உயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே

#2
சொல்லுக்கு அடங்காவே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம்
வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழி என்றே துதிப்போம்

#3
வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்

#4
தாமரைப் பூவினிலே சுருதியைத் தனி இருந்து உரைப்பாள்
பூ மணித் தாளினையே கண்ணில் ஒற்றிப் புண்ணியம் எய்திடுவோம்

#5
பாம்புத் தலை மேலே நடம்செயும் பாதத்தினைப் புகழ்வோம்
மாம்பழ வாயினிலே குழல் இசை வண்மை புகழ்ந்திடுவோம்

#6
செல்வத் திருமகளைத் திடங்கொண்டு சிந்தனைசெய்திடுவோம்
செல்வம் எல்லாம் தருவாள் நமது ஒளி திக்கு அனைத்தும் பரவும்

@66 விடுதலை வெண்பா

#1
சக்தி பதமே சரண் என்று நாம் புகுந்து
பக்தியினால் பாடிப் பலகாலும் முக்தி நிலை
காண்போம் அதனால் கவலைப் பிணி தீர்ந்து
பூண்போம் அமரப் பொறி

#2
பொறி சிந்தும் வெம் கனல் போல் பொய் தீர்ந்து தெய்வ
வெறி கொண்டால் ஆங்கு அதுவே வீடாம் நெறி கொண்ட
வையம் எலாம் தெய்வ வலி அன்றி வேறு இல்லை
ஐயம் எலாம் தீர்ந்தது அறிவு

#3
அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் குறி கண்டு
செல்வம் எலாம் பெற்றுச் சிறப்புறவே சக்தி தரும்
வெல் வயிரச் சீர் மிகுந்த வேல்

#4
வேலைப் பணிந்தால் விடுதலையாம் வேல்முருகன்
காலைப் பணிந்தால் கவலை போம் மேல் அறிவு
தன்னாலே தான் பெற்று சக்தி சக்தி சக்தி என்று
சொன்னால் அதுவே சுகம்

#5
சுகத்தினை நான் வேண்டித் தொழுதேன் எப்போதும்
அகத்தினிலே துன்புற்று அழுதேன் யுகத்தினில் ஓர்
மாறுதலைக் காட்டி வலிமை நெறி காட்டி
ஆறுதலைத் தந்தாள் அவள்

@67 ஜயம் உண்டு
**ராகம் – காமாஸ் : தாளம் – ஆதி
**பல்லவி

#0
ஜயம் உண்டு பயம் இல்லை மனமே இந்த
ஜன்மத்திலே விடுதலை உண்டு நிலை உண்டு
**அனுபல்லவி
பயன் உண்டு பக்தியினாலே நெஞ்சில்
பதிவுற்ற குல சக்தி சரண் உண்டு பகை இல்லை
**சரணங்கள்

#1
புயம் உண்டு குன்றத்தைப் போலே சக்தி
பொன் பாதம் உண்டு அதன் மேலே
நியமம் எல்லாம் சக்தி நினைவு அன்றிப் பிறிது இல்லை
நெறி உண்டு குறி உண்டு குல சக்தி வெறி உண்டு

#2
மதி உண்டு செல்வங்கள் சேர்க்கும் தெய்வ
வலி உண்டு தீமையைப் பேர்க்கும்
விதி உண்டு தொழிலுக்கு விளைவு உண்டு குறைவு இல்லை
விசனப் பொய்க் கடலுக்குக் குமரன் கைக் கணை உண்டு

#3
அலைபட்ட கடலுக்கு மேலே சக்தி
அருள் என்னும் தோணியினாலே
தொலை ஒட்டிக் கரையுற்றுத் துயர் அற்று விடுபட்டுத்
துணிவுற்ற குல சக்தி சரணத்தில் முடிதொட்டு

@68 ஆரிய தரிசனம்
**ஓர் கனவு
**ராகம் – ஸ்ரீராகம் : தாளம் – ஆதி

#0
கனவென்ன கனவே என்றன்
கண் துயிலாது நனவினிலே உற்ற

#1
கானகம் கண்டேன் அடர்
கானகம் கண்டேன் உச்சி
வானகத்தே வட்ட மதி ஒளி கண்டேன்

#2
பொன் திருக்குன்றம் அங்கு ஒர்
பொன் திருக்குன்றம் அதைச்
சுற்றி இருக்கும் சுனைகளும் பொய்கையும்
**புத்த தரிசனம்

#3
குன்றத்தின் மீதே அந்தக்
குன்றத்தின் மீதே தனி
நின்றதோர் ஆல நெடு மரம் கண்டேன்

#4
பொன் மரத்தின் கீழ் அந்தப்
பொன் மரத்தின் கீழ் வெறும்
சின்மயமானதோர் தேவன் இருந்தனன்

#5
புத்த பகவன் எங்கள்
புத்த பகவன் அவன்
சுத்த மெய்ஞ்ஞானச் சுடர் முகம் கண்டேன்

#6
காந்தியைப் பார்த்தேன் அவன்
காந்தியைப் பார்த்தேன் உப
சாந்தியில் மூழ்கத் ததும்பிக் குளித்தனன்

#7
ஈது நல் விந்தை என்னை
ஈது நல் விந்தை புத்தன்
சோதி மறைந்து இருள் துன்னிடக் கண்டனன்

#8
பாய்ந்தது அங்கு ஒளியே பின்னும்
பாய்ந்தது அங்கு ஒளியே அருள்
தேய்ந்தது என் மேனி சிலிர்த்திடக் கண்டேன்
**கிருஷ்ணார்ஜுன தரிசனம்

#9
குன்றத்தின் மீதே அந்தக்
குன்றத்தின் மீதே தனி
நின்ற பொன் தேரும் பரிகளும் கண்டேன்

#10
தேரின் முன் பாகன் மணித்
தேரின் முன் பாகன் அவன்
சீரினைக் கண்டு திகைத்து நின்றேன் இந்தக்

#11
ஓம் என்ற மொழியும் அவன்
ஓம் என்ற மொழியும் நீலக்
காமன்றன் உருவும் அ வீமன்றன் திறலும்

#12
அருள் பொங்கும் விழியும் தெய்வ
அருள் பொங்கும் விழியும் காணில்
இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்கும் திகிரியும்

#13
கண்ணனைக் கண்டேன் எங்கள்
கண்ணனைக் கண்டேன் மணி
வண்ணனை ஞான மலையினைக் கண்டேன்

#14
சேனைகள் தோன்றும் வெள்ளச்
சேனைகள் தோன்றும் பரி
யானையும் தேரும் அளவில் தோன்றும்

#15
கண்ணன் நல் தேரில் நீலக்
கண்ணன் நல் தேரில் மிக
எண் அயர்ந்தான் ஒர் இளைஞனைக் கண்டேன்

#16
விசையன்-கொல் இவனே விறல்
விசையன்-கொல் இவனே நனி
இசையும் நன்கு இசையும் இங்கு இவனுக்கு இ நாமம்

#17
வீரிய வடிவம் என்ன
வீரிய வடிவம் இந்த
ஆரியன் நெஞ்சம் அயர்ந்தது என் விந்தை

#18
பெற்றதன் பேறே செவி
பெற்றதன் பேறே அந்தக்
கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன்

#19
வெற்றியை வேண்டேன் ஜய
வெற்றியை வேண்டேன் உயிர்
அற்றிடுமேனும் அவர்தமைத் தீண்டேன்

#20
சுற்றம் கொல்வேனோ என்றன்
சுற்றம் கொல்வேனோ கிளை
அற்ற பின் செய்யும் அரசும் ஓர் அரசோ

#21
மிஞ்சிய அருளால் மித
மிஞ்சிய அருளால் அந்த
வெம் சிலை வீரன் பல சொல் விரித்தான்

#22
இ மொழி கேட்டான் கண்ணன்
இ மொழி கேட்டான் ஐயன்
செம்மலர் வதனத்தில் சிறுநகை பூத்தான்

#23
வில்லினை எடடா கையில்
வில்லினை எடடா அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய்திடடா

#24
வாடி நில்லாதே மனம்
வாடி நில்லாதே வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே

#25
ஒன்று உளது உண்மை என்றும்
ஒன்று உளது உண்மை அதைக்
கொன்றிடொணாது குறைத்தலொண்ணாது

#26
துன்பமும் இல்லை கொடும்
துன்பமும் இல்லை அதில்
இன்பமும் இல்லை பிறப் பிறப்பு இல்லை

#27
படைகளும் தீண்டா அதைப்
படைகளும் தீண்டா அனல்
சுடவுமொண்ணாது புனல் நனையாது

#28
செய்தல் உன் கடனே அறம்
செய்தல் உன் கடனே அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே

@69 சூரிய தரிசனம்
**ராகம் பூபாளம்

#1
சுருதியின்கண் முனிவரும் பின்னே தூ மொழிப் புலவோர் பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமை என்று ஏத்தும் பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன்
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே பானுவே பொன் செய் பேரொளித் திரளே
கருதி நின்னை வணங்கிட வந்தேன் கதிர் கொள் வாள் முகம் காட்டுதி சற்றே

#2
வேதம் பாடிய சோதியைக் கண்டு வேள்விப் பாடல்கள் பாடுதற்குற்றேன்
நாத வார் கடலின் ஒலியோடு நல் தமிழ்ச் சொல் இசையையும் சேர்ப்பேன்
காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே கடுகி ஓடும் கதிர் இனம் பாடி
ஆதவா நினை வாழ்த்திட வந்தேன் அணி கொள் வாள் முகம் காட்டுதி சற்றே

@70 ஞாயிறு வணக்கம்

#1
கடலின் மீது கதிர்களை வீசிக் கடுகி வான் மிசை ஏறுதி ஐயா
படரும் வான் ஒளி இன்பத்தைக் கண்டு பாட்டுப் பாடி மகிழ்வன புட்கள்
உடல் பரந்த கடலும் தன்னுள்ளே ஒவ்வொரு நுண் துளியும் வழியாகச்
சுடரும் நின்றன் வடிவை உட்கொண்டே சுருதி பாடிப் புகழ்கின்றது இங்கே

#2
என்றன் உள்ளம் கடலினைப் போலே எந்த நேரமும் நின் அடிக் கீழே
நின்று தன் அகத்து ஒவ்வோர் அணுவும் நின்றன் ஜோதி நிறைந்தது ஆகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா ஞாயிற்றின்கண் ஒளி தரும் தேவா
மன்று வானிடைக் கொண்டு உலகு எல்லாம் வாழ நோக்கிடும் வள்ளிய தேவா

#3
காதல் கொண்டனை போலும் மண் மீதே கண் பிறழ்வு இன்றி நோக்குகின்றாயே
மாதர்ப் பூமியும் நின் மிசைக் காதல் மண்டினாள் இதில் ஐயம் ஒன்று இல்லை
சோதி கண்டு முகத்தில் இவட்கே தோன்றுகின்ற புது நகை என்னே
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே ஆயிரம் தரம் அஞ்சலிசெய்வேன்

@71 ஞான பாநு

#1
திரு வளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல் அறிவு வீரம்
மருவு பல் கலையின் சோதி வல்லமை என்ப எல்லாம்
வருவது ஞானத்தாலே வையகம் முழுவதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு

#2
கவலைகள் சிறுமை நோவு கைதவம் வறுமைத் துன்பம்
அவலமாம் அனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை அச்சம்
இவை எலாம் அறிவிலாமை என்பதோர் இருளில் பேயாம்
நவமுறு ஞானபாநு நண்ணுக தொலைக பேய்கள்

#3
அனைத்தையும் தேவர்க்கு ஆக்கி அறத் தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்புத் தெய்வம்
தினத்து ஒளி ஞானம் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதர் என்று இசைக்கும் வேதம்

#4
பண்ணிய முயற்சி எல்லாம் பயனுற ஓங்கும் ஆங்கே
எண்ணிய எண்ணம் எல்லாம் எளிதிலே வெற்றி எய்தும்
திண்ணிய கருத்தினோடும் சிரித்திடும் முகத்தினோடும்
நண்ணிடும் ஞானபாநு அதனை நாம் நன்கு போற்றின்

@72 சோமதேவன் புகழ்

#0
ஜய சோம ஜய சோம ஜய சோம தேவா
ஜய ஜய
**சரணம்

#1
நயம் உடைய இந்திரனை நாயகத்து இட்டாய்
வயம் மிக்க அசுரரின் மாயையைச் சுட்டாய்
வியன் உலகில் ஆநந்த விண் நிலவு பெய்தாய்
துயர் நீங்கி என் உளம் சுடர்கொளச் செய்தாய்
மயல் கொண்ட காதலரை மண் மிசைக் காப்பாய்
உய வேண்டி இருவர் உளம் ஒன்றுறக் கோப்பாய்
புயல் இருண்டே குமுறி இருள் வீசி வரல் போல்
பொய்த் திரள் வருவதைப் புன்னகையில் மாய்ப்பாய்

@73 வெண்ணிலாவே

#1
எல்லையில்லாததோர் வானக் கடலிடை வெண்ணிலாவே விழிக்கு
இன்பம் அளிப்பதோர் தீ என்று இலகுவை வெண்ணிலாவே
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து இங்கு வெண்ணிலாவே நின்றன்
சோதி மயக்கும் வகையதுதான் என் சொல் வெண்ணிலாவே
நல்ல ஒளியின் வகை பல கண்டிலன் வெண்ணிலாவே இந்த
நனவை மறந்திடச்செய்வது கண்டிலன் வெண்ணிலாவே
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து
கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே

#2
மாதர் முகத்தை நினக்கு இணை கூறுவர் வெண்ணிலாவே அஃது
வயதின் கவலையின் நோவின் கெடுவது வெண்ணிலாவே
காதல் ஒருத்தி இளையபிராயத்தள் வெண்ணிலாவே அந்தக்
காமன்றன் வில்லை இணைத்த புருவத்தள் வெண்ணிலாவே
மீது எழும் அன்பின் விலை புன்னகையினள் வெண்ணிலாவே முத்தம்
வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில் இங்கு வெண்ணிலாவே
சாதல் அழிதல் இலாது நிரந்தரம் வெண்ணிலாவே நின்
தண் முகம்தன்னில் விளங்குவது என்னை-கொல் வெண்ணிலாவே

#3
நின் ஒளியாகிய பாற்கடல் மீது இங்கு வெண்ணிலாவே நன்கு
நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் வெண்ணிலாவே
மன்னு பொருள்கள் அனைத்திலும் நிற்பவன் வெண்ணிலாவே அந்த
மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன் வெண்ணிலாவே
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி வெண்ணிலாவே இங்கு
தோன்றும் உலகவளே என்று கூறுவர் வெண்ணிலாவே
பின்னிய மேகச் சடை மிசைக் கங்கையும் வெண்ணிலாவே நல்ல
பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் வெண்ணிலாவே

#4
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ என்பர் வெண்ணிலாவே நினைக்
காதல் செய்வார் நெஞ்சிற்கு இன் அமுது ஆகுவை வெண்ணிலாவே
சீத மணி நெடு வானக் குளத்திடை வெண்ணிலாவே நீ
தேசு மிகுந்த வெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே
மோத வரும் கரு மேகத் திரளினை வெண்ணிலாவே நீ
முத்தின் ஒளி தந்து அழகுறச் செய்குவை வெண்ணிலாவே
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே நலம்
செய்து ஒளி நல்குவர் மேலவராம் அன்றோ வெண்ணிலாவே

#5
மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே உன்றன்
மேனி அழகு மிகைபடக் காணுது வெண்ணிலாவே
நல்லியலார் யவனத்தியர் மேனியை வெண்ணிலாவே மூடு
நல் திரை மேனி நயம் மிகக் காட்டிடும் வெண்ணிலாவே
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும் வெண்ணிலாவே நின்
சோதி வதனம் முழுதும் மறைத்தனை வெண்ணிலாவே
புல்லியன் செய்த பிழை பொறுத்தே அருள் வெண்ணிலாவே இருள்
போகிடச் செய்து நினது எழில் காட்டுதி வெண்ணிலாவே

@74 தீ வளர்த்திடுவோம்
**யாகப் பாட்டு
**ராகம் – புன்னாகவராளி
**பல்லவி

#0
தீ வளர்த்திடுவோம் பெரும்
தீ வளர்த்திடுவோம்
**சரணங்கள்

#1
ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம் விண்ணின்
ஆசை வளர்த்திடுவோம் களி ஆவல் வளர்த்திடுவோம் ஒரு
தேவி மகனைத் திறமைக் கடவுளைச் செங்கதிர் வானவனை விண்ணோர்தமைத்
தேனுக்கு அழைப்பவனைப் பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர்

#2
சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத் தீமை அழிப்பவனை நன்மை
சேர்த்துக் கொடுப்பவனை பல சீர்களுடையவனைப் புவி
அத்தனையும் சுடர் ஏறத் திகழ்ந்திடும் ஆரியர் நாயகனை உருத்திரன்
அன்புத் திருமகனை பெரும் திரள் ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்

#3
கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடும் கண்மணி போன்றவனை எம்மைக்
காவல்புரிபவனைத் தொல்லைக் காட்டை அழிப்பவனைத் திசை
எட்டும் புகழ் வளர்ந்து ஓங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே புவி மிசை
இன்பம் பெருகிடவே பெரும் திரள் எய்திப் பணிந்திடுவோம் வாரீர்

#4
நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கிக் கொடுப்பவனை உயிர்
நீளத் தருபவனை ஒளிர் நேர்மைப் பெரும் கனலை நித்தம்
அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனைப் பல் வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனைப் பெரும் திரள் ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்

#5
அச்சத்தைச் சுட்டு அங்கு சாம்பரும் இன்றி அழித்திடும் வானவனைச் செய்கை
ஆற்றும் மதிச் சுடரைத் தடையற்ற பெரும் திறலை எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி
ஏறும் தவக் கனலைப் பெரும் திரள் எய்திப் பணிந்திடுவோம் வாரீர்

#6
வானகத்தைச் சென்று தீண்டுவன் இங்கு என்று மண்டி எழும் தழலைக் கவி
வாணர்க்கு நல் அமுதைத் தொழில் வண்ணம் தெரிந்தவனை நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு
தேக்கிக் களிப்பவனைப் பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர்

#7
சித்திர மாளிகை பொன் ஒளிர் மாடங்கள் தேவத் திருமகளிர் இன்பம்
தேக்கிடும் தேன் இசைகள் சுவை தேறிடும் நல் இளமை நல்ல
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழுக் குடம் பற்பலவும் இங்கே தர
முற்பட்டு நிற்பவனைப் பெரும் திரள் மொய்த்துப் பணிந்திடுவோம் வாரீர்

@75 வேள்வித் தீ
**ராகம் – நாதநாமக்கிரியை : தாளம் – சதுஸ்ர ஏகம்

#1
**ரிஷிகள்
எங்கள் வேள்விக் கூடம் மீதில் ஏறுதே தீ தீ இ நேரம்
பங்கமுற்றே பேய்கள் ஓடப் பாயுதே தீ தீ இ நேரம்

#2
**அசுரர்
தோழரே நம் ஆவி வேகச் சூழுதே தீ தீ ஐயோ நாம்
வாழ வந்த காடு வேக வந்ததே தீ தீ அம்மாவோ

#3
**ரிஷிகள்
பொன்னை ஒத்து ஓர் வண்ணமுற்றான் போந்துவிட்டானே இ நேரம்
சின்னமாகிப் பொய் அரக்கர் சிந்தி வீழ்வாரே இ நேரம்

#4
**அசுரர்
இந்திராதி தேவர்தம்மை ஏசி வாழ்ந்தோமே ஐயோ நாம்
வெந்துபோக மானிடர்க்கு ஓர் வேதம் உண்டாமோ அம்மாவோ

#5
**ரிஷிகள்
வானை நோக்கிக் கைகள் தூக்கி வளருதே தீ தீ இ நேரம்
ஞான மேனி உதய கன்னி நண்ணிவிட்டாளே இ நேரம்

#6
**அசுரர்
கோடி நாளாய் இவ் வனத்தில் கூடி வாழ்ந்தோமே ஐயோ நாம்
பாடி வேள்வி மாந்தர் செய்யப் பண்பு இழந்தோமே அம்மாவோ

#7
**ரிஷிகள்
காட்டில் மேயும் காளை போன்றான் காணுவீர் தீ தீ இ நேரம்
ஓட்டியோட்டிப் பகையை எல்லாம் வாட்டுகின்றானே இ நேரம்

#8
**அசுரர்
வலியிலாதார் மாந்தர் என்று மகிழ்ந்து வாழ்ந்தோமே ஐயோ நாம்
கலியை வென்றோர் வேத உண்மை கண்டுகொண்டாரே அம்மாவோ

#9
**ரிஷிகள்
வலிமை மைந்தன் வேள்வி முன்னோன் வாய் திறந்தானே இ நேரம்
மலியும் நெய்யும் தேனும் உண்டு மகிழ வந்தானே இ நேரம்

#10
**அசுரர்
உயிரை விட்டும் உணர்வை விட்டும் ஓடி வந்தோமே ஐயோ நாம்
துயில் உடம்பின் மீதிலும் தீ தோன்றிவிட்டானே அம்மாவோ

#11
**ரிஷிகள்
அமரர் தூதன் சமர நாதன் ஆர்த்து எழுந்தானே இ நேரம்
குமரி மைந்தன் எமது வாழ்வில் கோயில்கொண்டானே இ நேரம்

#12
**அசுரர்
வருணன் மித்ரன் அர்யமானும் மதுவை உண்பாரே ஐயோ நாம்
பெருகு தீயின் புகையும் வெப்பும் பின்னி மாய்வோமே அம்மாவோ

#13
**ரிஷிகள்
அமரர் எல்லாம் வந்து நம் முன் அவிகள் கொண்டாரே இ நேரம்
நமனும் இல்லை பகையும் இல்லை நன்மை கண்டோமே இ நேரம்

#14
**அசுரர்
பகனும் இங்கே இன்பம் எய்திப் பாடுகின்றானே ஐயோ நாம்
புகையில் வீழ இந்திரன் சீர் பொங்கல் கண்டீரோ அம்மாவோ

#15
**ரிஷிகள்
இளையும் வந்தாள் கவிதை தந்தாள் இரவி வந்தானே இ நேரம்
விளையும் எங்கள் தீயினாலே மேன்மையுற்றோமே இ நேரம்

#16
**ரிஷிகள்
அன்னம் உண்பீர் பாலும் நெய்யும் அமுதும் உண்பீரே இ நேரம்
மின்னி நின்றீர் தேவர் எங்கள் வேள்வி கொள்வீரே இ நேரம்

#17
**ரிஷிகள்
சோமம் உண்டு தேர்வு நல்கும் ஜோதி பெற்றோமே இ நேரம்
தீமை தீர்ந்தே வாழி இன்பம் சேர்ந்துவிட்டோமே இ நேரம்

#18
**ரிஷிகள்
உடல் உயிர் மேல் உணர்விலும் தீ ஓங்கிவிட்டானே இ நேரம்
கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி கைகொடுத்தாரே இ நேரம்

#19
**ரிஷிகள்
எங்கும் வேள்வி அமரர் எங்கும் யாங்கணும் தீ தீ இ நேரம்
தங்கும் இன்பம் அமர வாழ்க்கை சார்ந்து நின்றோமே இ நேரம்

#20
**ரிஷிகள்
வாழ்க தேவர் வாழ்க வேள்வி மாந்தர் வாழ்வாரே இ நேரம்
வாழ்க வையம் வாழ்க வேதம் வாழ்க தீ தீ தீ இ நேரம்

@76 கிளிப்பாட்டு

#1
திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில்புரிந்து
வருக வருவது என்றே கிளியே மகிழ்வுற்று இருப்போமடி

#2
வெற்றி செயலுக்கு உண்டு விதியின் நியமம் என்று
கற்றுத் தெளிந்த பின்னும் கிளியே கவலைப்படலாகுமோ

#3
துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம்
அன்பில் அழியுமடீ கிளியே அன்புக்கு அழிவு இல்லை காண்

#4
ஞாயிற்றை எண்ணி என்றும் நடுமை நிலை பயின்று
ஆயிரம் ஆண்டு உலகில் கிளியே அழிவு இன்றி வாழ்வோமடீ

#5
தூய பெரும் கனலைச் சுப்பிரமண்ணியனை
நேயத்துடன் பணிந்தால் கிளியே நெருங்கித் துயர் வருமோ

@77 யேசு கிறிஸ்து

#1
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
நேச மா மரியா’ மக்தலேநா நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்
தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர் தேவர் வந்து நமக்குள் புகுந்தே
நாசம் இன்றி நமை நித்தம் காப்பார் நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால்

#2
அன்பு காண் மரியா மக்தலேநா ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால் மூன்று நாளினில் நல் உயிர் தோன்றும்
பொன் பொலிந்த முகத்தினில் கண்டே போற்றுவாள் அந்த நல் உயிர்தன்னை
அன்பு எனும் மரியா மக்தலேநா ஆஹ சாலப் பெரும் களி இஃதே

#3
உண்மை என்ற சிலுவையில் கட்டி உணர்வை ஆணித் தவம் கொண்டு அடித்தால்
வண்மைப் பேர் உயிர் யேசு கிறிஸ்து வான மேனியில் அங்கு விளங்கும்
பெண்மை காண் மரியா மக்தலேநா பேணும் நல் அறம் யேசு கிறிஸ்து
நுண்மை கொண்ட பொருள் இது கண்டீர் நொடியில் இஃது பயின்றிடலாகும்

@78 அல்லா
**பல்லவி

#0
அல்லா அல்லா அல்லா
**சரணங்கள்

#1
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்
எல்லாத் திசையிலும் ஓர் எல்லையில்லா வெளி வானிலே
நில்லாது சுழன்று ஓட நியமம்செய்து அருள் நாயகன்
சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெரும் சோதி
கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவராயினும்
பொல்லாதவராயினும் தவம் இல்லாதவராயினும்
நல்லார் உரை நீதியின்படி நில்லாதவராயினும்
எல்லோரும் வந்து ஏத்தும் அளவில் யம பயம் கெடச் செய்பவன்
*