பாரதியார் கவிதைகள் – தனிப் பாடல்கள்

1.தேசீய கீதங்கள் 2.தோத்திரப் பாடல்கள்(பக்திப் பாடல்கள்) 3.வேதாந்தப் பாடல்கள் (ஞானப் பாடல்கள்) 4.பல்வகைப் பாடல்கள் 5.தனிப் பாடல்கள்
6.சுயசரிதை 7.கண்ணன் பாட்டு 8.பாஞ்சாலி சபதம் 9.குயில் பாட்டு 10.வசன கவிதை
11.பிற்சேர்க்கை(புதிய பாடல்கள்) பாடல் தேடல் - பாடல் முதல் அடி - அகர வரிசையில்

உள் தலைப்புகள்

1. காலைப் பொழுது
2. அந்திப் பொழுது
3. நிலாவும் வான்மீனும் காற்றும்
4. மழை
5. புயற் காற்று
6. பிழைத்த தென்னந்தோப்பு
7. அக்கினிக் குஞ்சு
8. சாதாரண வருஷத்துத் தூமகேது
9. அழகுத் தெய்வம்
10. ஒளியும் இருளும்
11. சொல்
12. கவிதைத் தலைவி
13. கவிதைக் காதலி
14. மது
15. சந்திரமதி
16. தாயுமானவர் வாழ்த்து
17. நிவேதிதா
18. அபேதாநந்தா
19. ஓவியர் மணி இரவிவர்மா
20. சுப்பராம தீட்சிதர்
21. மகாமகோபாத்தியாயர்
22. வெங்கடேசு ரெட்டப்ப பூபதி
23. ஹிந்து மதாபிமான சங்கத்தார்
24. வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு


@1 காலைப் பொழுது

#1
காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர் வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே

#2
கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான்
பார்த்த வெளி எல்லாம் பகல் ஒளியாய் மின்னிற்றே

#3
தென்னைமரத்தின் கிளையிடையே தென்றல் போய்
மன்னப் பருந்தினுக்கு மாலையிட்டுச் சென்றதுவே

#4
தென்னைமரக் கிளை மேல் சிந்தனையோடு ஓர் காகம்
வன்னமுற வீற்றிருந்து வானை முத்தமிட்டதுவே

#5
தென்னைப் பசுங்கீற்றைக் கொத்திச் சிறு காக்கை
மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே

#6
வன்னச் சுடர் மிகுந்த வானகத்தே தென்திசையில்
கன்னங்கரும் காகக் கூட்டம் வரக் கண்டது அங்கே

#7
கூட்டத்தைக் கண்டு அஃது கும்பிட்டே தன் அருகு ஓர்
பாட்டுக் குருவிதனைப் பார்த்து நகைத்ததுவே

#8
சின்னக் குருவி சிரிப்புடனே வந்து ஆங்கு
கன்னங்கரும் காக்கை கண் எதிரே ஓர் கிளை மேல்

#9
வீற்றிருந்தே கிக்கிக்கீ காக்காய் நீ விண்ணிடையே
போற்றி எதை நோக்குகிறாய் கூட்டம் அங்குப் போவது என்னே

#10
என்றவுடனே காக்கை என் தோழா நீ கேளாய்
மன்றுதனைக் கண்டே மனம் மகிழ்ந்து போற்றுகிறேன்

#11
என்று சொல்லிக் காக்கை இருக்கையிலே ஆங்கண் ஓர்
மின் திகழும் பச்சைக்கிளி வந்து வீற்றிருந்தே

#12
நட்புக் குருவியே ஞாயிற்று இளவெயிலில்
கட்புலனுக்கு எல்லாம் களியாகத் தோன்றுகையில்

#13
நும்மை மகிழ்ச்சிடன் நோக்கி இங்கு வந்திட்டேன்
அம்மவோ காகப் பெரும் கூட்டம் அஃது என்னே

#14
என்று வினவக் குருவிதான் இஃது உரைக்கும்
நன்று நீ கேட்டாய் பசுங்கிளியே நானும் இங்கு

#15
மற்று அதனை ஓர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன்
கற்றறிந்த காக்காய் கழறுக நீ என்றதுவே

#16
அப்போது காக்கை அருமையுள்ள தோழர்களே
செப்புவேன் கேளீர் சில நாளாக் காக்கையுள்ளே

#17
நேர்ந்த புதுமைகளை நீர் கேட்டு அறியீரோ
சார்ந்து நின்ற கூட்டம் அங்கு சாலையின் மேல் கண்டீரே

#18
மற்று அந்தக் கூட்டத்து மன்னவனைக் காணீரே
கற்றறிந்த ஞானி கடவுளையே நேர் ஆவான்

#19
ஏழு நாள் முன்னே இறை மகுடம் தான் புனைந்தான்
வாழி அவன் எங்கள் வருத்தம் எல்லாம் போக்கிவிட்டான்

#20
சோற்றுக்குப் பஞ்சம் இல்லை போர் இல்லை துன்பம் இல்லை
போற்றற்குரியான் புது மன்னன் காணீரோ

#21
என்று உரைத்துக் காக்கை இருக்கையிலே அன்னம் ஒன்று
தென்திசையினின்று சிரிப்புடனே வந்தது அங்கே

#22
அன்னம் அந்தத் தென்னை அருகினில் ஓர் மாடம் மிசை
வன்னமுற வீற்றிருந்து வாழ்க துணைவரே

#23
காலை இளவெயிலில் காண்பது எலாம் இன்பம் அன்றோ
சால நுமைக் கண்டு களித்தேன் சருவி நீர்

#24
ஏதுரைகள் பேசி இருக்கின்றீர் என்றிடவே
போதமுள்ள காக்கை புகன்றது அந்தச் செய்தி எல்லாம்

#25
அன்னம் இது கேட்டு மகிழ்ந்து உரைக்கும் ஆம் காணும்
மன்னர் அறம்புரிந்தால் வையம் எல்லாம் மாண்புபெறும்

#26
ஒற்றுமையால் மேன்மை உண்டாம் ஒன்றையொன்று துன்பிழைத்தல்
குற்றம் என்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே

#27
என்று சொல்லி அன்னம் பறந்து ஆங்கே ஏகிற்றால்
மன்று கலைந்து மறைந்தன அப் புட்கள் எல்லாம்

#28
காலைப் பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்கள் இதை
ஞாலம் அறிந்திடவே நாங்கள் இதைப் பாட்டிசைத்தோம்

@2 அந்திப் பொழுது

#1
காவென்று கத்திடும் காக்கை என்றன் கண்ணுக்கு இனிய கரு நிறக் காக்கை
மேவிப் பல கிளை மீதில் இங்கு விண்ணிடை அந்திப் பொழுதினைக் கண்டே
கூவித் திரியும் சிலவே சில கூட்டங்கள் கூடித் திசைதொறும் போகும்
தேவி பராசக்தி அன்னை விண்ணில் செவ்வொளி காட்டிப் பிறை தலைக் கொண்டாள்

#2
தென்னைமரக் கிளை மீதில் அங்கு ஓர் செல்வப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்
சின்னஞ்சிறிய குருவி அது ஜிவ்வென்று விண்ணிடை ஊசலிட்டு ஏகும்
மன்னப் பருந்து ஒர் இரண்டு மெல்ல வட்டமிட்டுப் பின் நெடுந்தொலை போகும்
பின்னர் தெருவில் ஓர் சேவல் அதன் பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும்

#3
செவ்வொளி வானில் மறைந்தே இளம் தேநிலவு எங்கும் பொழிந்தது கண்டீர்
இவ்வளவான பொழுதில் அவள் ஏறி வந்தே உச்சி மாடத்தின் மீது
கொவ்வை இதழ் நகை வீச விழிக் கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தான்
செவ்விது செவ்விது பெண்மை ஆ செவ்விது செவ்விது செவ்விது காதல்

#4
காதலினால் உயிர் தோன்றும் இங்கு காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவு எய்தும் இங்கு காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலினால் அவள் கையைப் பற்றி அற்புதம் என்று இரு கண்ணிடை ஒற்றி
வேதனை இன்றி இருந்தேன் அவள் வீணைக் குரலில் ஓர் பாட்டு இசைத்திட்டாள்

#5
**காதலியின் பாட்டு
கோலமிட்டு விளக்கினை ஏற்றிக் கூடி நின்று பராசக்தி முன்னே
ஓலமிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார் உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்
ஞாலம் முற்றும் பராசக்தி தோற்றம் ஞானம் என்ற விளக்கினை ஏற்றிக்
காலம் முற்றும் தொழுதிடல் வேண்டும் காதல் என்பதொர் கோயிலின்கண்ணே

@3 நிலாவும் வான்மீனும் காற்றும்
** மனத்தை வாழ்த்துதல்

#1
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்து ஆங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்து ஒரு கோல வெறி படைத்தோம்
உலாவும் மனச் சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம்
பலாவின் கனிச் சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ

#2
தாரகை என்ற மணித் திரள் யாவையும் சார்ந்திடப் போ மனமே
ஈரச் சுவையதில் ஊறி வரும் அதில் இன்புறுவாய் மனமே
சீர இரும் சுடர் மீனொடு வானத்துத் திங்களையும் சமைத்தே
ஓர் அழகாக விழுங்கிடும் உள்ளத்தை ஒப்பது ஒர் செல்வம் உண்டோ

#3
பன்றியைப் போல் இங்கு மண்ணிடைச் சேற்றில் படுத்துப் புரளாதே
வென்றியை நாடி இவ் வானத்தில் ஓட விரும்பி விரைந்திடுமே
முன்றிலில் ஓடும் ஒர் வண்டியைப் போல் அன்று மூன்று உலகும் சூழ்ந்தே
நன்று திரியும் விமானத்தைப் போல் ஒரு நல்ல மனம் படைத்தோம்

#4
தென்னையின் கீற்றுச் சலசலச என்றிடச்செய்து வரும் காற்றே
உன்னைக் குதிரைகொண்டு ஏறித் திரியும் ஓர் உள்ளம் படைத்துவிட்டோம்
சின்னப் பறவையின் மெல் ஒலி கொண்டு இங்கு சேர்ந்திடு நல் காற்றே
மின்னல் விளக்கிற்கு வானகம் கொட்டும் இவ் வெட்டொலி ஏன் கொணர்ந்தாய்

#5
மண்ணுலகத்து நல் ஓசைகள் காற்று எனும் வானவன் கொண்டுவந்தான்
பண்ணி இசைத்த அவ் ஒலிகள் அனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம்
நண்ணி வரும் மணியோசையும் பின் அங்கு நாய்கள் குலைப்பதுவும்
எண்ணும் முன்னே அன்னக்காவடிப் பிச்சை என்று ஏங்கிடுவான் குரலும்

#6
வீதிக் கதவை அடைப்பதும் கீழ்த்திசை விம்மிடும் சங்கொலியும்
வாதுகள் பேசிடும் மாந்தர் குரலும் மதலை அழும் குரலும்
ஏதெது கொண்டு வருகுது காற்று இவை எண்ணில் அகப்படுமோ
சீதக் கதிர் மதி மேல் சென்று பாய்ந்து அங்கு தேன் உண்ணுவாய் மனமே

@4 மழை

#1
திக்குக்கள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம் சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு
தக்கை அடிக்குது காற்று தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

#2
வெட்டி அடிக்குது மின்னல் கடல் வீரத் திரை கொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம் கூகூ என்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா

#3
அண்டம் குலுங்குது தம்பி தலை ஆயிரம் தூக்கிய சேடனும் பேய் போல்
மிண்டிக் குதித்திடுகின்றான் திசை வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடுகின்றார் என்ன தெய்விகக் காட்சியை கண் முன்பு கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம் இந்தக் காலத்தின் கூத்தினைக் கண் முன்பு கண்டோம்

@5 புயற் காற்று
**நள வருடம் காத்திகை மாதம் 8ம் தேதி புதன் இரவு
**ஒரு கணவனும் மனைவியும்

#1
**மனைவி
காற்று அடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகமே
தூற்றல் கதவு சாளரம் எல்லாம் தொளைத்து அடிக்குது பள்ளியிலே

#2
**கணவன்
வானம் சினந்தது வையம் நடுங்குது வாழி பராசக்தி காத்திடவே
தீனக் குழந்தைகள் துன்பப்படாது இங்கு தேவி அருள்செய்ய வேண்டுகிறோம்

#3
**மனைவி
நேற்று இருந்தோம் அந்த வீட்டினிலே இந்த நேரம் இருந்தால் என் படுவோம்
காற்று என வந்தது கூற்றம் இங்கே நம்மைக் காத்தது தெய்வ வலிமை அன்றோ

@6 பிழைத்த தென்னந்தோப்பு

#1
வயலிடையினிலே செழு நீர் மடுக் கரையினிலே
அயல் எவரும் இல்லை தனியே ஆறுதல்கொள்ள வந்தேன்

#2
காற்று அடித்ததிலே மரங்கள் கணக்கிடத் தகுமோ
நாற்றினைப் போலே சிதறி நாடு எங்கும் வீழ்ந்தனவே

#3
சிறிய திட்டையிலே உளதோர் தென்னம் சிறு தோப்பு
வறியவன் உடைமை அதனை வாயு பொடிக்கவில்லை

#4
வீழ்ந்தன சிலவாம் மரங்கள் மீந்தன பலவாம்
வாழ்ந்திருக்க என்றே அதனை வாயு பொறுத்துவிட்டான்

#5
தனிமை கண்டதுண்டு அதில் சாரம் இருக்குது அம்மா
பனி தொலைக்கும் வெயில் அது தேம் பாகு மதுரம் அன்றோ

#6
இரவி நின்றது காண் விண்ணிலே இன்ப ஒளித் திரளாய்
பரவி எங்கணுமே கதிர்கள் பாடிக் களித்தனவே

#7
நின்ற மரத்திடையே சிறிது ஓர் நிழலினில் இருந்தேன்
என்றும் கவிதையிலே நிலையாம் இன்பம் அறிந்துகொண்டேன்

#8
வாழ்க பராசக்தி நினையே வாழ்த்திடுவோர் வாழ்வார்
வாழ்க பராசக்தி இதை என் வாக்கு மறவாதே

@7 அக்கினிக் குஞ்சு

#1
அக்கினிக் குஞ்சு ஒன்று கண்டேன் அதை
அங்கு ஒரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல்
வீரத்தில் குஞ்சு என்றும் மூப்பு என்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

@8 சாதாரண வருஷத்துத் தூமகேது

#1
தினையின் மீது பனை நின்றாங்கு
மணிச் சிறு மீன் மிசை வளர்வால் ஒளிதரக்
கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண்டு இலகும்
தூமகேதுச் சுடரே வாராய்

#2
எண்ணில் பல கோடி யோசனை எல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்த நின் நெடு வால் போவது என்கின்றார்

#3
மண்ணகத்தினையும் வால் கொடு தீண்டி
ஏழையர்க்கு ஏதும் இடர்செயாதே நீ
போதி என்கின்றார் புதுமைகள் ஆயிரம்
நினைக்குறித்து அறிஞர் நிகழ்த்துகின்றனரால்

#4
பாரதநாட்டில் பரவிய எம்மனோர்
நூல் கணம் மறந்து பல் நூறு ஆண்டு ஆயின
உனது இயல் அன்னியர் உரைத்திடக் கேட்டே
தெரிந்தனம் எம்முளே தெளிந்தவர் ஈங்கு இலை

#5
வாராய் சுடரே வார்த்தை சில கேட்பேன்
தீயர்க்கு எல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல் புவியதனைத் துயர்க் கடல் ஆழ்த்தி நீ
போவை என்கின்றார் பொய்யோ மெய்யோ

#6
ஆதித் தலைவி ஆணையின்படி நீ
சலித்திடும் தன்மையால் தண்டம் நீ செய்வது
புவியினைப் புனிதமாப் புனைதற்கே என
விளம்புகின்றனர் அது மெய்யோ பொய்யோ

#7
ஆண்டு ஓர் எழுபத்தைந்தினில் ஒரு முறை
மண்ணை நீ அணுகும் வழக்கினையாயினும்
இ முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையும் என்கின்றார் மெய்யோ பொய்யோ

#8
சித்திகள் பலவும் சிறந்திடு ஞானமும்
மீட்டும் எம்மிடை நின் வரவினால் விளைவதாப்
புகலுகின்றனர் அது பொய்யோ மெய்யோ

@9 அழகுத் தெய்வம்

#1
மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்
வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம்
துங்க மணி மின் போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே எழுந்து என்னைப் பார் என்று சொன்னாள்
அங்கதனில் கண் விழித்தேன் அடடா ஓ அடடா
அழகு என்னும் தெய்வம்தான் அது என்றே அறிந்தேன்

#2
யோகம்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன்
யோகமே தவம் தவமே யோகம் என உரைத்தாள்
ஏகமோ பொருள் அன்றி இரண்டாமோ என்றேன்
இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள்
தாகம் அறிந்து ஈயும் அருள் வான் மழைக்கே உண்டோ
தாகத்தின் துயர் மழைதான் அறிந்திடுமோ என்றேன்
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவது வேறாமோ என்றாள்

#3
காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கு ஓர் கருவியாம் என்றாள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்
ஏலத்தில் விடுவது உண்டோ எண்ணத்தை என்றேன்
எண்ணினால் எண்ணியது நண்ணும் காண் என்றாள்
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன்
முகத்தில் அருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்

@10 ஒளியும் இருளும்

#1
வானம் எங்கும் பரிதியின் சோதி மலைகள் மீதும் பரிதியின் சோதி
தானை நீர்க் கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின் கரைகள் மீதும் பரிதியின் சோதி
மானவன்தன் உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருள் இது என்னே

#2
சோதி என்னும் கரையற்ற வெள்ளம் தோன்றி எங்கும் திரைகொண்டு பாய
சோதி என்னும் பெரும் கடல் சோதிச் சூறை மாசறு சோதி அனந்தம்
சோதி என்னும் நிறைவு இஃது உலகைச் சூழ்ந்து நிற்ப ஒரு தனி நெஞ்சம்
கோது இயன்றதொர் சிற்றிருள் சேரக் குமைந்து சோரும் கொடுமை இது என்னே

#3
தேமலர்க்கு ஒர் அமுது அன்ன சோதி சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி
காமமுற்று நிலத்தொடு நீரும் காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாம் மயங்கி நல் இன்புறும் சோதி தரணி முற்றும் ததும்பியிருப்ப
தீமை கொண்ட புலை இருள் சேர்ந்தோர் சிறிய நெஞ்சம் தியங்குவது என்னே

#4
நீர்ச் சுனைக் கணம் மின்னுற்று இலக நெடிய குன்றம் நகைத்து எழில்கொள்ள
கார்ச் சடைக் கரு மேகங்கள் எல்லாம் கனகம் ஒத்துச் சுடர் கொண்டு உலாவ
தேர்ச்சிகொண்டு பல் சாத்திரம் கற்றும் தெவிட்டொணாத நல் இன்பக் கருவாம்
வேர்ச் சுடர் பர மாண் பொருள் கேட்டும் மெலிவு ஒர் நெஞ்சிடை மேவுதல் என்னே

@11 சொல்

#0
சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திகளை
நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்

#1
தேவர் வருக என்று சொல்வதோ ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்
ஆவல் அறிந்து வருவீர்-கொலோ உம்மை
யன்றி ஒரு புகலும் இல்லையே

#2
ஓம் என்று உரைத்துவிடின் போதுமோ அதில் உண்மைப் பொருள் அறியலாகுமோ
தீமை அனைத்தும் இறந்து ஏகுமோ என்றன் சித்தம் தெளிவு நிலை கூடுமோ

#3
உண்மை ஒளிர்க என்று பாடவோ அதில் உங்கள் அருள் பொருந்தக்கூடுமோ
வண்மையுடையதொரு சொல்லினால் உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம்

#4
தீயை அகத்தினிடை மூட்டுவோம் என்று செப்பும் மொழி வலியதாகுமோ
ஈயைக் கருடநிலை ஏற்றுவீர் எம்மை என்றும் துயரம் இன்றி வாழ்த்துவீர்

#5
வான மழை பொழிதல் போலவே நித்தம் வந்து பொழியும் இன்பம் கூட்டுவீர்
கானை அழித்து மனை கட்டுவீர் துன்பக் கட்டுச் சிதறி விழ வெட்டுவீர்

#6
விரியும் அறிவுநிலை காட்டுவீர் அங்கு வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்
தெரியும் ஒளி விழியை நாட்டுவீர் நல்ல தீரப் பெரும் தொழிலில் பூட்டுவீர்

#7
மின்னல் அனைய திறல் ஓங்குமே உயிர் வெள்ளம் கரை அடங்கிப் பாயுமே
தின்னும் பொருள் அமுதம் ஆகுமே இங்குச் செய்கையதனில் வெற்றி ஏறுமே

#8
தெய்வக் கனல் விளைந்து காக்குமே நம்மைச் சேரும் இருள் அழியத் தாக்குமே
கைவைத்தது பசும்பொன் ஆகுமே பின்பு காலன் பயம் ஒழிந்து போகுமே

#9
வலிமை வலிமை என்று பாடுவோம் என்றும் வாழும் சுடர்க் குலத்தை நாடுவோம்
கலியைப் பிளந்திடக் கை ஓங்கினோம் நெஞ்சில் கவலை இருள் அனைத்தும் நீங்கினோம்

#10
அமிழ்தம் அமிழ்தம்” என்று கூறுவோம் நித்தம் அனலைப் பணிந்து மலர் தூவுவோம்
தமிழில் பழமறையைப் பாடுவோம் என்றும் தலைமை பெருமை புகழ் கூடுவோம்

@12 கவிதைத் தலைவி

#1
வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி
தினமும் இவ் உலகில் சிதறியே நிகழும்
பலபல பொருளிலாப் பாழ்படு செய்தியை
வாழ்க்கைப் பாலையில் வளர் பல முட்கள் போல்
பேதை உலகைப் பேதைமைப்படுத்தும் 5
வெறும் கதைத் திரளை வெள்ளறிவு உடைய
மாயாசக்தியின் மகளே மனைக்கண்
வாழ்வினை வகுப்பாய் வருடம் பலவினும்
ஓர் நாள் போல மற்றோர் நாள் தோன்றாது
பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ 10
நடத்திடும் சக்தி நிலையமே நல் மனைத்
தலைவீ ஆங்கு அத் தனிப் பதர்ச் செய்திகள்
அனைத்தையும் பயன்நிறை அனுபவம் ஆக்கி
உயிரிலாச் செய்திகட்கு உயிர் மிகக் கொடுத்து
ஒளியிலாச் செய்திகட்கு ஒளி அருள்புரிந்து 15
வானசாத்திரம் மகமது வீழ்ச்சி
சின்னப் பையல் சேவகத் திறமை
என வரும் நிகழ்ச்சி யாவேயாயினும்
அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து
இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும் 20
பேதை மா சத்தியின் பெண்ணே வாழ்க
காளியின் குமாரி அறம் காத்திடுக
வாழ்க மனையகத் தலைவி வாழ்க

@13 கவிதைக் காதலி

#1
வாராய் கவிதையாம் மணிப் பெயர்க் காதலி
பல் நாள் பல் மதி ஆண்டு பல கழிந்தன
நின் அருள் வதனம் நான் நேருறக் கண்டே
அந்த நாள் நீ எனை அடிமையாக் கொள யாம்
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனி இருந்து 5
எண்ணிலா இன்பத்து இரும் கடல் திளைத்தோம்
கலந்து யாம் பொழிலிடைக் களித்த அ நாட்களில்
பூம் பொழில் குயில்களின் இன் குரல் போன்ற
தீம் குரலுடைத்து ஓர் புள்ளினைத் தெரிந்திலேன்
மலரினத்து உன்றன் வாள் விழி ஒப்ப 10
நிலவியது ஒன்றினை நேர்ந்திலேன் குளிர் புனல்
சுனைகளில் உன் மணிச் சொற்கள் போல் தண்ணிய
நீர் உடைத்து அறிகிலேன் நின்னொடு தமியனாய்
நீயே உயிர் எனத் தெய்வமும் நீ என
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன் 15
வானகத்து அமுதம் மடுத்திடும் போழ்து
மற்று அதனிடை ஓர் வஞ்சகத்தொடு முள்
வீழ்ந்து இடைத் தொண்டையில் வேதனை செய்தன
நின்னொடு களித்து நினைவிழந்து இருந்த
எனைத் துயர்ப்படுத்த வந்து எய்தியது உலகில் 20
கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை
அடிநா முள்ளினை அயல் சிறிது ஏகிக்
களைந்து பின் வந்து காண் பொழுது ஐயகோ
மறைந்தது தெய்வ மருந்துடைப் பொன் குடம்
மிடிமை நோய் தீர்ப்பான் வீணர்தம் உலகப் 25
புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பாள்
தென்திசைக்கண் ஒரு சிற்றூர்க்கு இறைவனாம்
திருந்திய ஒருவனைத் துணை எனப் புகுந்து அவன்
பணிசெய இசைந்தேன் பதகி நீ என்னைப்
பிரிந்து மற்று அகன்றனை பேசொணா நின் அருள் 30
இன்பம் அத்தனையும் இழந்து நான் உழன்றேன்
சின்னாள் கழிந்த பின் யாது எனச் செப்புகேன்
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது
கதையில் ஓர் முனிவன் கடியதாம் சாப
விளைவினால் பன்றியா வீழ்ந்திடும் முன்னர்த் 35
தன் மகனிடை என் தனய நீ யான் புலைப்
பன்றி ஆம் போது பார்த்து நில்லாதே
விரைவில் ஓர் வாள் கொடு வெறுப்புடை அவ் உடல்
துணித்து எனைக் கொன்று தொலைத்தல் உன் கடனாம்
பாவம் இங்கு இல்லை என் பணிப்பு இஃது ஆகலின் 40
தாதை சொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான்
முனிவனும் பன்றியா முடிந்த பின் மைந்தன்
முன்னவன் கூறிய மொழியினை நினைந்தும்
இரும் புகழ் முனிவனுக்கு இழியதாம் இவ் உடல்
அமைந்தது கண்டு நெஞ்சு அழன்றிடல் கொண்டும் 45
வாள் கொடு பன்றியை மாய்த்திடலுற்றனன்
ஆயிடை மற்று அவ் அரும் தவப் பன்றி
இனையது கூறும் ஏடா நிற்க
நிற்க நிற்க முன்னர் யாம் நினைந்தவாறு
அத்துணைத் துன்புடைத்தன்று இவ் வாழ்க்கை 50
காற்றும் புனலும் கடிப் புல் கிழங்கும்
இனைய பல் இன்பம் இதன்கணே உளவாம்
ஆறேழ் திங்கள் அகன்ற பின் வருதியேல்
பின் எனைக் கோறலாம் பீழையோடு இவ் உரை
செவியுறீஇ முடி சாய்த்து இளையவன் சென்றனன் 55
திங்கள் பல போன பின் முனிமகன் சென்ற
தாதைப் பன்றி ஓர் தடத்திடைப் பெடையொடும்
போத்து இனம் பலவொடும் அன்பினில் பொருத்தி
ஆடல் கண்டு அயிர்த்தனன் ஆற்றொணாது அருகு சென்று
எந்தாய் எந்தாய் யாது அரோ மற்று இது 60
வேதநூல் அறிந்த மேதகு முனிவரர்
போற்றிட வாழ்ந்த நின் புகழ்க்கு இது சாலுமோ
எனப் பல கூறி இரங்கினன் பின்னர்
வாள் கொடு பன்றியை மாய்த்திடல் விழைந்தான்
ஆயிடை முனிவன் அகம் பதைத்து உரைக்கும் 65
செல்லடா செல்க தீக்குணத்து இழிஞ
எனக்கு இவ் வாழ்க்கை இன்புடைத்தேயாம்
நினக்கு இதில் துன்பம் நிகழுமேல் சென்று அவ்
வாளின் நின் நெஞ்சை வகுத்து நீ மடிக
என்று இது கூறி இருந்த அப் பன்றி தன் 70
இனத்தொடும் ஓடி இன் உயிர் காத்தது
இன்னது கண்ட இளையவன் கருதும்
ஆ ஆ மானிடர் அருமையின் வீழ்ந்து
புல் நிலை எய்திய போழ்து அதில் நெடுங்கால்
தெருமருகின்றிலர் சில பகல் கழிந்த பின் 75
புதியதா நீசப் பொய்மை கொள் வாழ்வில்
விருப்புடையவராய் வேறு தாம் என்றும்
அறிந்திலரே போன்று அதில் களிக்கின்றார்
என் சொல்கேன் மாயையின் எண்ணரும் வஞ்சம்
திமிங்கில உடலும் சிறிய புன்மதியும் 80
ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்
தன் பணிக்கு இசைந்து என் தருக்கு எலாம் அழிந்து
வாழ்ந்தனன் கதையின் முனி போல் வாழ்க்கை

@ 14 மது

#1
**போகி
பச்சை முந்திரித் தேம்பழம் கொன்று பாட்டுப் பாடி நல் சாறு பிழிந்தே
இச்சை தீர மது வடித்து உண்போம் இஃது தீது என்று இடையர்கள் சொல்லும்
கொச்சைப் பேச்சில் கைகொட்டி நகைப்போம் கொஞ்சு மாதரும் கூட்டுணும் கள்ளும்
இச் சகத்தினில் இன்பங்கள் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறொன்றும் உண்டோ

#2
**யோகி
பச்சை முந்திரி அன்னது உலகம் பாட்டுப் பாடல் சிவக்களி எய்தல்
இச்சை தீர உலகினைக் கொல்வோம் இனிய சாறு சிவமதை உண்போம்
கொச்சை மக்களுக்கு இஃது எளிதாமோ கொஞ்சும் மாது ஒரு குண்டலி சக்தி
இச் சகத்தில் இவை இன்பம் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறு உளதாமோ

#3
**போகி
வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி வேந்தர்தம்முள் பெரும் புகழ் எய்தி
ஒற்றை வெள்ளைக் கவிதை உயர்த்தே உலகம் அஞ்சிப் பணிந்திட வாழ்வோம்
சுற்று தேம் கமழ் மென் மலர் மாலை தோளின் மீது உருப் பெண்கள் குலாவச்
சற்றும் நெஞ்சம் கவலுதல் இன்றித் தரணி மீதில் மது உண்டு வாழ்வோம்

#4
**யோகி
வெற்றி ஐந்து புலன் மிசைக் கொள்வோம் வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும்
ஒற்றை வெள்ளைக் கவிதை மெய்ஞ்ஞானம் உண்மை வேந்தர் சிவநிலை கண்டார்
மற்றவர்தம்முள் சீர்பெற வாழ்வோம் வண் மலர் நறு மாலை தெளிவாம்
சுற்றி மார்பில் அருள் மது உண்டே தோகை சக்தியொடு இன்புற்று வாழ்வோம்

#5
**போகி
நல்ல கீதத் தொழில் உணர் பாணர் நடனம் வல்ல நகை முக மாதர்
அல்லல் போக இவருடன் கூடி ஆடியாடிக் களித்து இன்பம்கொள்வோம்
சொல்ல நாவு கனியுதடா நல் சுதியில் ஒத்துத் துணையொடும் பாடி
புல்லும் மார்பினோடு ஆடிக் குதிக்கும் போகம் போல் ஒரு போகம் இங்கு உண்டோ

#6
**யோகி
நல்ல கீதம் சிவத் தனி நாதம் நடன ஞானியர் சிற்சபை ஆட்டம்
அல்லல் போக இவருடன் சேர்ந்தே ஆடியாடிப் பெரும் களி கொள்வோம்
சொல்ல நாவில் இனிக்குதடா வான் சுழலும் அண்டத் திரளின் சுதியில்
செல்லும் பண்ணொடு சிற்சபை ஆடும் செல்வம் போல் ஒரு செல்வம் இங்கு உண்டோ

#7
**ஞானி
மாதரோடு மயங்கிக் களித்தும் மதுர நல் இசை பாடிக் குதித்தும்
காதல்செய்தும் பெறும் பல இன்பம் கள்ளில் இன்பம் கலைகளில் இன்பம்
பூதலத்தினை ஆள்வதில் இன்பம் பொய்மை அல்ல இவ் இன்பங்கள் எல்லாம்
யாதும் சக்தி இயல்பு எனக் கண்டோம் இனையது உய்ப்பம் இதயம் மகிழ்ந்தே

#8
இன்பம் துன்பம் அனைத்தும் கலந்தே இச் சகத்தின் இயல் வலி ஆகி
முன்பு பின் பலது ஆகி எந்நாளும் மூண்டு செல்லும் பராசக்தியோடே
அன்பில் ஒன்றிப் பெரும் சிவயோகத்து அறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார்
துன்பு நேரினும் இன்பு எனக் கொள்வார் துய்ப்பர் இன்பம் மிகச் சுவை கொண்டே

#9
இச் சகத்தோர் பொருளையும் தீரர் இல்லை என்று வருந்துவதில்லை
நச்சிநச்சி உளத் தொண்டு கொண்டு நானிலத்து இன்பம் நாடுவதில்லை
பிச்சை கேட்பதும் இல்லை இன்பத்தில் பித்துக் கொண்டு மயங்குவதில்லை
துச்சமென்று சுகங்களைக் கொள்ளச் சொல்லும் மூடர் சொல் கேட்பதும் இல்லை

#10
தீது நேர்ந்திடின் அஞ்சுவதில்லை தேறு நெஞ்சினொடே சிவம் கண்டோர்
மாதர் இன்பம் முதலிய எல்லாம் வையகத்துச் சிவன் வைத்த என்றே
ஆதரித்து அவை முற்றிலும் கொள்வார் அங்கும் இங்கும் ஒன்றாம் எனத் தேர்வார்
யாதும் எங்கள் சிவன் திருக்கேளி இன்பம் யாவும் அவனுடை இன்பம்

#11
வேத மந்திர நாதம் ஒருபால் வேயின் இன் குழல் மெல் ஒலி ஓர்பால்
காதல் மாதரொடு ஆடல் ஒருபால் கள வெம் போரிடை வென்றிடல் ஓர்பால்
போத நல் வெறி துய்த்திடல் ஓர்பால் பொலியும் கள் வெறி துய்த்தல் மற்று ஓர்பால்
ஏதெலாம் நமக்கு இன்புற நிற்கும் எங்கள் தாய் அருள் பால் அது அன்றே

#12
**சங்கீர்த்தனம்
**மூவரும் சேர்ந்து பாடுதல்
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண் எலாம்
மதுரம் மிக்க ஹரி நமக்கு மது எனக் கதித்தலால்
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன்
மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம்
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம்
மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை
மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும்
மதுரம் மிக்க சிவம் நமக்கு மது எனக் கதித்தலால்

@ 15 சந்திரமதி
** ராகம் ஆனந்த பைரவி தாளம் ஆதி

#1
பச்சைக்குழந்தையடி கண்ணில் பாவையடி சந்திரமதி
இச்சைக்கு இனிய மது என்றன் இரு விழிக்குத் தேநிலவு
நச்சுத் தலைப் பாம்புக்குள்ளே நல்ல நாகமணி உள்ளது என்பார்
துச்சப்படு நெஞ்சிலே நின்றன் சோதி வளருதடீ

#2
பேச்சுக்கு இடம் ஏதடி நீ பெண் குலத்தின் வெற்றியடி
ஆச்சர்ய மாயையடி என்றன் ஆசைக் குமாரியடி
நீச்சு நிலை கடந்த வெள்ள நீருக்குள்ளே வீழ்ந்தவர் போல்
தீச் சுடரை வென்ற ஒளிகொண்ட தேவி நினைவிழந்தேனடி

#3
நீலக் கடலினிலே நின்றன் நீண்ட குழல் தோன்றுதடி
கோல மதியினிலே நின்றன் குளிர்ந்த முகம் காணுதடி
ஞால வெளியினிலே நின்றன் ஞான ஒளி வீசுதடி
கால நடையினிலே நின்றன் காதல் விளங்குதடி

@16 தாயுமானவர் வாழ்த்து

#1
என்றும் இருக்க உளம்கொண்டாய் இன்பத் தமிழுக்கு இலக்கியமாய்
இன்றும் இருத்தல் செய்கின்றாய் இறவாய் தமிழோடு இருப்பாய் நீ
ஒன்று பொருள் அஃது இன்பம் என உணர்ந்தாய் தாயுமானவனே
நின்ற பரத்து மாத்திரமோ நில்லா இகத்தும் நிற்பாய் நீ

@17 நிவேதிதா

#1
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கு ஓர் கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமது உயர் நாடாம் பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும் பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்

@18 அபேதாநந்தா

#1
சுருதியும் அரிய உபநிடதத்தின் தொகுதியும் பழுதற உணர்ந்தோன்
கருதிடற்கரிய பிரம நல் நிலையைக் கண்டு பேரொளியிடைக் களித்தோன்
அரிதினில் காணும் இயல்பொடு புவியின் அப்புறத்து இருந்து நண்பகலில்
பரிதியின் ஒளியும் சென்றிடா நாட்டில் மெய்யொளி பரப்பிடச் சென்றோன்
**வேறு

#2
ஒன்றே மெய்ப்பொருளாகும் உயிர்கள் எலாம் அதன் வடிவாம் ஓருங்காலை
என் தேவன் உன் தேவன் என்று உலகர் பகைப்பது எலாம் இழிவாம் என்று
நன்றே இங்கு அறிவுறுத்தும் பரமகுரு ஞானம் எனும் பயிரை நச்சித்
தின்றே பாழாக்கிடும் ஐம்புலன்கள் எனும் விலங்கினத்தைச் செகுத்த வீரன்
**வேறு

#3
வானம் தம் புகழ் மேவி விளங்கிய மாசில் ஆதி குரவன் அச் சங்கரன்
ஞானம் தங்கும் இ நாட்டினைப் பின்னரும் நண்ணினான் எனத் தேசுறும் அவ் விவே
கானந்தம் பெரும் சோதி மறைந்த பின் அவன் இழைத்த பெரும் தொழில் ஆற்றியே
ஊனம் தங்கிய மானிடர் தீது எலாம் ஒழிக்குமாறு பிறந்த பெரும் தவன்
**வேறு

#4
தூய அபேதாநந்தன் எனும் பெயர்கொண்டு ஒளிர் தருமிச் சுத்த ஞானி
நேயமுடன் இ நகரில் திருப்பாதம் சாத்தி அருள் நெஞ்சில் கொண்டு
மாயம் எலாம் நீங்கி இனிது எம்மவர் நன்னெறி சாரும் வண்ணம் ஞானம்
தோய நனி பொழிந்திடும் ஓர் முகில் போன்றான் இவன் பதங்கள் துதிக்கின்றோமே

@19 ஓவியர் மணி இரவிவர்மா

#1
சந்திரன் ஒளியை ஈசன் சமைத்து அது பருகவென்றே
வந்திடு சாதகப்புள் வகுத்தனன் அமுது உண்டாக்கிப்
பந்தியில் பருகவென்றே படைத்தனன் அமரர்தம்மை
இந்திரன் மாண்புக்கு என்ன இயற்றினன் வெளிய யானை

#2
மலரினில் நீல வானில் மாதரார் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான் சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவிவர்மன்
அலகிலா அறிவுக்கண்ணால் அனைத்தையும் நுகருமாறே

#3
மன்னர் மாளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்
உன்னரும் தேசு வீசி உளத்தினைக் களிக்கச்செய்வான்
நன்னர் ஓவியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள்
பொன் அணி உலகு சென்றான் புவிப் புகழ் போதும் என்பான்

#4
அரம்பை ஊர்வசி போல் உள்ள அமர மெல்லியலார் செவ்வி
திறம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பிய-கொல்லாம் இன்று விண்ணுலகு அடைந்துவிட்டாய்
அரம்பையர் நின் கைச்செய்கைக்கு அழிதல் அங்கு அறிவை திண்ணம்

#5
காலவான் போக்கில் என்றும் கழிகிலாப் பெருமைகொண்ட
கோல வான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர்தாமும்
சீல வாழ்வு அகற்றி ஓர் நாள் செத்திடல் உறுதியாயின்
ஞால வாழ்வினது மாயம் நவின்றிடற்கு அரியது அன்றோ

@20 சுப்பராம தீட்சிதர்
**அகவல்

#1
கவிதையும் அரும் சுவைக் கான நூலும்
புவியினர் வியக்கும் ஓவியப் பொற்பும்
மற்று உள பெரும் தொழில் வகைகளில் பலவும்
வெற்றிகொண்டு இலங்கிய மேன்மையார் பரத
நாட்டினில் இந்நாள் அன்னியர் நலிப்ப 5
ஈட்டிய செல்வம் இறந்தமையானும்
ஆண்டகையொடு புகழ் அழிந்தமையானும்
மாண்டன பழம் பெரு மாட்சியார் தொழில் எலாம்
தேவர்கள் வாழ்ந்த சீர் வளர் பூமியில்
மேவிய அரக்கர் விளங்குதல் போல 10
நேரிலாப் பெரியோர் நிலவிய நாட்டில்
சீரிலாப் புல்லர் செறிந்து நிற்கின்றார்
இவரிடை
சுரத்திடை இன் நீர்ச் சுனையது போன்றும்
அரக்கர்தம் குலத்திடை வீடணனாகவும் 15
சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும்
போற்றுதற்குரிய புனித வான் குலத்தில்
நாரதமுனிவன் நமர் மிசை அருளால்
பாரதநாட்டில் பழம் மாண்பு உறுக என
மீட்டும் ஓர் முறை இவன் மேவினன் என்ன 20
நாட்டும் நல் சீர்த்தி நலன் உயர் பெருமான்
தோமறு சுப்பராமன் நல் பெயரோன்
நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான்
இன்னான் தானும் எமை அகன்று ஏகினன்
என்னே நம்மவர் இயற்றிய பாவம் 25
இனி இவன் அனையாரை எந்நாள் காண்போம்
கனி அறு மரம் எனக் கடைநிலை உற்றோம்
அந்தோ மறலி நம் அமுதினைக் கவர்ந்தான்
நொந்தோ பயனிலை நுவல யாது உளதே
**விருத்தம்

#2
கன்னனொடு கொடை போயிற்று உயர் கம்பநாடனுடன் கவிதை போயிற்று
உன்னரிய புகழ்ப் பார்த்தனொடு வீரம் அகன்றது என உரைப்பர் ஆன்றோர்
என் அகம்நின்று அகலாதோன் அருள் சுப்பராமன் எனும் இணையிலா விற்
பன்னனொடு சுவை மிகுந்த பண் வளனும் அகன்றது எனப் பகரலாமே

#3
கலை விளக்கே இளசை எனும் சிற்றூரில் பெரும் சோதி கதிக்கத் தோன்றும்
மலை விளக்கே எம் அனையர் மன இருளை மாற்றுதற்கு வந்த ஞான
நிலை விளக்கே நினைப் பிரிந்த இசைத்தேவி நெய் அகல நின்ற தட்டின்
உலை விளக்கே எனத் தளரும் அந்தோ நீ அகன்ற துயர் உரைக்கற்பாற்றோ

#4
மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்தங்களையும் வணங்கலாதேன்
தன் அனைய புகழுடையாய் நினைக் கண்ட பொழுது தலை தாழ்ந்து வந்தேன்
உன் அருமைச் சொற்களையே தெய்விகமாம் எனக் கருதி வந்தேன் அந்தோ
இன்னம் ஒருகால் இளசைக்கு ஏகிடின் இவ் எளியன் மனம் என் படாதோ

@21 மகாமகோபாத்தியாயர்

#1
செம்பரிதி ஒளிபெற்றான் பைம் நறவு சுவைபெற்றுத் திகழ்ந்தது ஆங்கண்
உம்பர் எலாம் இறவாமை பெற்றனர் என்று எவரே-கொல் உவத்தல்செய்வார்
கும்பமுனி எனத் தோன்றும் சாமிநாதப் புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல் இதற்கு என்-கொல் பேருவகை படைக்கின்றீரே

#2
அன்னியர்கள் தமிழ்ச் செவ்வி அறியாதார் இன்று எம்மை ஆள்வோரேனும்
பன்னிய சீர் மகாமகோபாத்தியாயப் பதவி பரிவின் ஈந்து
பொன் நிலவு குடந்தைநகர்ச் சாமிநாதன்றனக்குப் புகழ்செய்வாரேல்
முன் இவன் அப் பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழியலாமோ

#3
நிதி அறியோம் இவ் உலகத்து ஒரு கோடி இன்ப வகை நித்தம் துய்க்கும்
கதி அறியோம் என்று மனம் வருந்தற்க குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வு அறியும் காலம் எலாம் புலவோர் வாயில்
துதி அறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்து அறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே

@22 வெங்கடேசு ரெட்டப்ப பூபதி
** ஸ்ரீ எட்டயபுரம் ராஜ ராஜேந்த்ர மாகராஜ
** வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு
** கவிராஜ ஸ்ரீ சி சுப்பிரமணிய பாரதி எழுதும்
** சீட்டுக் கவிகள்

#1
பாரி வாழ்ந்திருந்த சீர்த்திப் பழம் தமிழ்நாட்டின்கண்ணே
ஆரிய நீ இந்நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால்
காரியம் கருதி நின்னைக் கவிஞர் தாம் காணவேண்டின்
நேரில் அப்போதே எய்தி வழிபட நினைகிலேயோ

#2
விண்ணளவு உயர்ந்த கீர்த்தி வெங்கடேசுரெட்ட மன்னா
பண்ணளவு உயர்ந்தது என் பணி பா அளவு உயர்ந்தது என் பா
எண்ணளவு உயர்ந்த எண்ணில் இரும் புகழ்க் கவிஞர் வந்தால்
அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ

#3
கல்வியே தொழிலாக் கொண்டாய் கவிதையே தெய்வமாக
அல்லும் நன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய்
சொல்லிலே நிகரிலாத புலவர் நின் சூழல் உற்றால்
எல்லினைக் காணப் பாயும் இடபம் போல் முற்படாயோ
**எட்டயபுரம்
**1919ம் வருடம் மே மாதம் 2 உ சுப்பிரமணிய பாரதி
**ஸ்ரீ எட்டயபுரம் மகாராஜ ராஜேந்த்ர
**ஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி
**அவர்கள் சமூகத்துக்கு
**கவிராஜ ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதி எழுதும் ஓலைத் தூக்கு

#4
ராஜ மகாராஜேந்த்ர ராஜ குலசேகரன் ஸ்ரீ ராஜராஜன்
தேசம் எலாம் புகழ் விளங்கும் இளசை வெங்கடேசுரெட்ட சிங்கன் காண்க
வாசம் மிகு துழாய்த் தாரான் கண்ணன் அடி மறவாத மனத்தான் சக்தி
தாசன் எனப் புகழ் வளரும் சுப்ரமண்யபாரதி தான் சமைத்த தூக்கு

#5
மன்னவனே தமிழ்நாட்டில் தமிழ் அறிந்த மன்னர் இலை என்று மாந்தர்
இன்னலுறப் புகன்ற வசை நீ மகுடம் புனைந்த பொழுது இரிந்தது அன்றே
சொல் நலமும் பொருள் நலமும் சுவைகண்டு சுவைகண்டு துய்த்துத்துய்த்துக்
கன்னலிலே சுவை அறியும் குழந்தைகள் போல் தமிழ்ச் சுவை நீ களித்தாய் அன்றே

#6
புவி அனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்துத் தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லை எனும் வசை என்னால் கழிந்தது அன்றே
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது சோதி மிக்க
நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை என்று நன்கு

#7
பிரான்ஸ் என்னும் சிறந்த புகழ் நாட்டில் உயர் புலவோரும் பிறரும் ஆங்கே
விராவு புகழ் ஆங்கிலத் தீம் கவியரசர்தாமும் மிக வியந்து கூறிப்
பராவி என்றன் தமிழ்க் கவியை மொழிபெயர்த்துப் போற்றுகின்றார் பாரோர் ஏத்தும்
தராதிபனே இளசை வெங்கடேசுரெட்டா நின்பால் அத் தமிழ் கொணர்ந்தேன்
**வேறு

#8
வியப்பு மிகும் புத்திசையில் வியத்தகும் என் கவிதையினை வேந்தனே நின்
நயப்படு சந்நிதிதனிலே நான் பாட நீ கேட்டு நன்கு போற்றி
ஜயப் பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள் பொற்பைகள் ஜதி பல்லக்கு
வயப் பரிவாரங்கள் முதல் பரிசளித்துப் பல்லூழி வாழ்க நீயே
**எட்டயபுரம்
** 1919ம் வருடம் மே மாதம் 2 உ சுப்பிரமணிய பாரதி

@23 ஹிந்து மதாபிமான சங்கத்தார்

#1
மண்ணுலகின் மீதினிலே எக்காலும் அமரரைப் போல் மடிவில்லாமல்
திண்ணமுற வாழ்ந்திடலாம் அதற்கு உரிய உபாயம் இங்கு செப்பக் கேளீர்
நண்ணி எலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச் செய்கை எலாம் நடத்தும் வீறாய்த்
திண்ணிய நல் அறிவொளியாய்த் திகழும் ஒரு பரம்பொருளை அகத்தில் சேர்த்து

#2
செய்கை எலாம் அதன் செய்கை நினைவு எல்லாம் அதன் நினைவு தெய்வமே நாம்
உய்கையுற நாம் ஆகி நமக்குள்ளே ஒளிர்வது என உறுதிகொண்டு
பொய் கயமை சினம் சோம்பர் கவலை மயல் வீண்விருப்பம் புழுக்கம் அச்சம்
ஐயம் எனும் பேயை எலாம் ஞானம் எனும் வாளாலே அறுத்துத்தள்ளி

#3
எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில் வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர்
தப்பாதே இவ் உலகில் அமரநிலை பெற்றிடுவார் சதுர்வேதங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனும் இவற்றால் இவ் உண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமதம் எனப் புவியோர் சொல்லுவாரே

#4
அருமையுறு பொருளில் எலாம் மிக அரிதாய்த் தனைச் சாரும் அன்பர்க்கு இங்கு
பெருமையுறு வாழ்வு அளிக்கும் நல் துணையாம் ஹிந்துமதப் பெற்றிதன்னைக்
கருதி அதன் சொற்படி இங்கு ஒழுகாத மக்கள் எலாம் கவலை என்னும்
ஒரு நரகக்குழியதனில் வீழ்ந்து தவித்து அழிகின்றார் ஓய்விலாமே

#5
இத்தகைய துயர் நீக்கிக் கிருதயுகந்தனை உலகில் இசைக்க வல்ல
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப் பார் அறியப் புகட்டும் வண்ணம்
தத்து புகழ் வளப் பாண்டிநாட்டினில் காரைக்குடி ஊர்தனிலே சால
உத்தமராம் தனவணிகர் குலத்து உதித்த இளைஞர் பலர் ஊக்கம் மிக்கார்

#6
உண்மையே தாரகம் என்று உணர்ந்திட்டார் அன்பு ஒன்றே உறுதி என்பார்
வண்மையே குலதர்மம் எனக் கொண்டார் தொண்டு ஒன்றே வழியாக் கண்டார்
ஒண்மை உயர் கடவுளிடத்து அன்புடையார் அவ் அன்பின் ஊற்றத்தாலே
திண்மையுறும் ஹிந்துமத அபிமான சங்கம் ஒன்று சேர்த்திட்டாரே

#7
பல நூல்கள் பதிப்பித்தும் பல பெரியோர் பிரசங்கம் பண்ணுவித்தும்
நலமுடைய கலாசாலை புத்தகசாலை பலவும் நாட்டியும் தம்
குலம் உயர நகர் உயர நாடு உயர உழைக்கின்றார் கோடி மேன்மை
நிலவுற இச் சங்கத்தார் பல்லூழி வாழ்ந்து ஒளிர்க நிலத்தின் மீதே

@24 வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு
** ஆசிரியப்பா

#1
வருக செல்வ வாழ்க மன் நீயே
வடமேற்றிசைக்கண் மாபெரும் தொலையின் ஓர்
பொன் சிறு தீவகப் புரவலன் பயந்த
நல் தவப் புதல்வ நல்வரவு உனதே
மேதக நீயும் நின் காதல் அம் கிளியும் 5
என்றனைக் காணுமாறு இத்தனை காதம்
வந்தனிர் வாழ்திர் என் மனம் மகிழ்ந்ததுவே
செல்வ கேள் என் அரும் சேய்களை நின்னுடை
முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்
நெஞ்சு எலாம் புண்ணாய் நின்றனன் யாஅன் 10
ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்
ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில
போனதை எண்ணிப் புலம்பி இங்கு என் பயன்
மற்று உன் நாட்டினோர் வந்ததன் பின்னர்
அகத்தினில் சில புண் ஆறுதல் எய்தின 15
போர்த் தொகை அடங்கி என் ஏழைப் புத்திரர்
அமைதிபெற்று உய்வராயினர் எனவே
பாரததேவி பழமை போல் திருவருள்
பொழிகரலுற்றனள் பொருள் செயற்கு உரிய
தொழில் கணம் பலப்பல தோன்றின பின்னும் 20
கொடு மதப் பாவிகள் குறும்பு எலாம் அகன்றன
யாற்றினில் பெண்களை எறிவதூஉம் இரதத்து
உருளையில் பாலரை உயிருடன் மாய்த்தலும்
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்
எனப் பல தீமைகள் இறந்துபட்டனவால் 25
மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான
ஒண் பெரும் கதிரின் ஓர் இரு கிரணம் என்
பாலரின் மீது படுதலுற்றனவே
ஆயினும் என்னை ஆயிரம் கோடி
தொல்லைகள் இன்னும் தொலைந்தனவில்லை 30
நல்குரவு ஆதி நவமாம் தொல்லைகள்
ஆயிரம் எனை வந்து அடைந்துள நுமரால்
எனினும் இங்கு இவை எலாம் இறைவன் அருளால்
நீங்குவ அன்றி நிலைப்பன அல்ல
நோய் எலாம் தவிர்ப்பான் நுமரே எனக்கு 35
மருத்துவராக வந்தனர் என்பதூஉம்
பொய்யிலை ஆதலில் புகழ்பெறும் ஆங்கில
நாட்டினர் என்றும் நலமுற வாழ்கவே
என் அரும் சேய்களும் இவரும் நட்பு எய்தி
இருபான்மையர்க்கும் இன்னல் ஒன்று இன்றி 40
ஒருவரையொருவர் ஒறுத்திடல் இலாது
செவ்விதின் வாழ்க அச் சீர் மிகு சாதியின்
இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க
வாழ்க நீ வாழ்க நின் மனம் எனும் இனிய
வேரி மென் மலர் வாழ் மேரி நல் அன்னம் 45
மற்று என் சேய்கள் வாழிய வாழிய
*