பாடல் தேடல் – பாடல் முதல் அடி – அகர வரிசையில்

1.தேசீய கீதங்கள் 2.தோத்திரப் பாடல்கள்(பக்திப் பாடல்கள்) 3.வேதாந்தப் பாடல்கள் (ஞானப் பாடல்கள்) 4.பல்வகைப் பாடல்கள் 5.தனிப் பாடல்கள்
6.சுயசரிதை 7.கண்ணன் பாட்டு 8.பாஞ்சாலி சபதம் 9.குயில் பாட்டு 10.வசன கவிதை
11.பிற்சேர்க்கை(புதிய பாடல்கள்) பாடல் தேடல் - பாடல் முதல் அடி - அகர வரிசையில்

உள் தலைப்புகள்

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அங்கமே தளர்வு எய்திய
அச்சமில்லை அச்சமில்லை
அருவி போலக் கவி பொழிய
அருளுக்கு நிவேதனமாய்
அல்லா அல்லா அல்லா
அறத்தினால் வீழ்ந்துவிட்டாய்
அன்பிற்கினிய இந்தியா
அன்னாய் இங்கு உனைக் கூறப்
அன்னியர்தமக்கு அடிமை அல்லவே
அன்னை நல் நாட்டின் மக்காள்
ஆங்கு ஒரு கல்லை வாயிலில்
ஆசை முகம் மறந்து போச்சே
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்னை
ஆதிப் பரம்பொருளின் ஊக்கம்
ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறு
ஆயிரம் கோடி அறிஞர்கள்
ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
ஆரியம் என்ற பெரும் பெயர்
இடியேறு சார்பிலுற
இதம் தரு மனையின் நீங்கி
இந்த மெய்யும் கரணமும் பொறியும்
இந்தத் தெய்வம் நமக்கு
இந்தப் புவிதனில் வாழும்
இயற்கை என்று உரைப்பார் சிலர்
இரும்பைக் காய்ச்சி
இவ்வுரை கேட்ட துச்சாதனன்
இவ்வுலகம் இனியது
இன்னும் ஒரு முறை சொல்வேன்
இனி ஒரு தொல்லையும் இல்லை
இனிய நீர்ப் பெருக்கினை
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
உண்ணஉண்ணத் தெவிட்டாத
உண்மை அறிந்தவர் உன்னைக்
உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி
உலகைத் துறந்தீர்
உள்ளும் புறமுமாய் உள்ளது
உனையே மயல்கொண்டேன் வள்ளீ
உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ
எங்கள் கண்ணம்மா
எங்கள் வேள்விக் கூடம் மீதில்
எங்கிருந்து வருகுவதோ ஒலி
எங்கோ வாழ்
எங்ஙனம் சென்றிருந்தீர்

எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எண்ணிய முடிதல் வேண்டும்

எண்ணிலாத பொருள் குவைதானும்
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
எல்லாம் ஆகிக் கலந்து
எல்லையில்லாததோர் வானக்
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்
என்றும் இருக்க உளங்கொண்டாய்
எனக்கு முன்னே சித்தர் பலர்
எனப் பல பேசி இறைஞ்சிடப்படுவதாய்
ஒரு வீட்டு மேடையிலே
ஒளி தருவது யாது
ஓடி விளையாடு பாப்பா
ஓம் எனப் பெரியோர்கள் என்றும்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு
ஓய் திலகரே நம்ம ஜாதிக் கடுக்குமோ
கடமை புரிவார் இன்புறுவார்
கடலின் மீது கதிர்களை வீசி
கடலே காற்றைப் பரப்புகின்றது
கண் இரண்டும் இமையால்
கண்டதொரு காட்சி
கண்ணன் திருவடி எண்ணுக
கண்ணன் பிறந்தான்
கண்ணன் மனநிலையைத் தங்கமே
கண்ணில் தெரியும் பொருளினைக்
கண்ணிலான் காலில்
கதைகள் சொல்லிக் கவிதை எழுது
கரணமும் தனுவும் நினக்கெனத்
கரும்புத் தோட்டத்திலே
கவிதையும் அரும் சுவை
களக்கமுறும் மார்லி நடம்
கற்பனையூர் என்ற நகர்
கனவென்ன கனவே
கனிகள் கொண்டுதரும் கண்ணன்
காக்கைச் சிறகினிலே நந்தலாலா
காட்டு வழிதனிலே அண்ணே
காணி நிலம் வேண்டும் பராசக்தி
காதல் காதல் காதல்
காயிலே புளிப்பதென்னே
காலமாம் வனத்தில் அண்டக் கோல
காலா உனை நான் சிறு புல் என
காலை இளம்பரிதி வீசும்
காலைத் துயிலெழுந்து
காலைப் பொழுதினிலே
காவென்று கத்திடும் காக்கை
காற்றடிக்குது கடல் குமுறுது
காற்று வெளியிடைக் கண்ணம்மா
குடுகுடு குடுகுடு குடுகுடு
கும்மியடி தமிழ்நாடு முழுதும்
குயிலனாய் நின்னொடு குலவி
கூலி மிகக் கேட்பார்
கையைச் சக்தி தனக்கே கருவியாக்கு
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தி சக்தி
சக்தி பதமே சரண்
சக்தி பெறும் பாவாணர் சாற்று பொருள்
சக்தி வெள்ளத்திலே ஞாயிறு
சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன்
சந்திரன் ஒளியை ஈசன் சமைத்து
சாகா வரம் அருள்வாய்
சாத்திரங்கள் பல தேடினேன்
சித்தாந்தச் சாமி திருக்கோயில்
சிறந்து நின்ற சிந்தையோடு
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
சுருதியின்கண் முனிவரும்
சுருதியும் அரிய உபநிடதத்தின்
செத்த பிறகு சிவலோகம்
செந்தண்மை பூண்டு ஒழுகும்
செந்தமிழ்நாடெனும் போதினிலே
செம்பரிதி ஒளிபெற்றான்
செல்வத்துள் பிறந்தனமா
சென்றது இனி மீளாது
சொல் ஒன்று வேண்டும்
சொல்ல வல்லாயோ கிளியே
சொந்த நாட்டில் பரர்க்கு அடிமைசெய்தே
ஜய சோம ஜய சோம ஜய சோம தேவா
ஜய பேரிகை கொட்டடா
ஜய ஜய பவானி ஜய ஜய பாரதம்
ஜயம் உண்டு பயம் இல்லை மனமே
தகத் தகத் தகத் தகதக என்று ஆடோமோ
தஞ்சம் உலகினில் எங்கணும் இன்றி
தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா
தன்னை மறந்து சகல உலகினையும்
தாதையர் குருதியின் சாய்ந்து
தாயின் மணிக்கொடி பாரீர்
தாருக வனத்தினிலே
திக்குக்கள் எட்டும் சிதறி
திக்குத் தெரியாத காட்டில்
திரு வளர் வாழ்க்கை கீர்த்தி
திருவே நினைக் காதல் கொண்டேனே
திருவைப் பணிந்து நித்தம்
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி
தினையின் மீது பனை
தீ வளர்த்திடுவோம்
தீர்த்தக் கரையினிலே
தீராத விளையாட்டுப் பிள்ளை
துன்பம் இலாத நிலையே சக்தி
தூண்டில் புழுவினைப் போல்
தெளிவுறவே அறிந்திடல்
தேகி முதம் தேகி
தேடி உனைச் சரணடைந்தேன்
தேவனே என் அருமை
தேவி நம் பாரதபூமி
தொண்டு செய்யும் அடிமை
தொன்று நிகழ்ந்தது அனைத்தும்
தோகை மேல் உலவும் கந்தன்
தோதகம் எத்தெனை அத்தனை
நல்லதோர் வீணை செய்தே
நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும்
நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை
நாடு இழந்து மக்களையும்
நாம் என்ன செய்வோம் துணைவரே
நாமகட்குப் பெரும் தொண்டு இயற்றிப்
நான்காம் நாள் என்னை
நித்தம் உனை வேண்டி
நித்தர் எனும் தென் இளசை

நிலாவையும் வானத்து மீனையும்
நிற்பதுவே நடப்பதுவே
நின்னைச் சரணடைந்தேன்
நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி
நெஞ்சில் உரமும் இன்றி
நெஞ்சு பொறுக்குதிலையே
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நேரம் மிகுந்தது இன்னும்
பக்தியினாலே
பகைமை முற்றி முதிர்ந்திடும்
பகைவனுக்கு அருள்வாய்
பச்சை மணிக் கிளியே
பச்சை முந்திரித் தேம்பழம்
பச்சைக்குழந்தையடி
பச்சைத் திருமயில் வீரன்
பந்தைத் தெறு முலை
பல்லாண்டு வாழ்ந்து ஒளிர்க
பாபேந்திரியம் செறுத்த எங்கள்
பாயும் ஒளி நீ எனக்கு
பாரதசமுதாயம் வாழ்கவே
பாரததேசம் என்று பெயர் சொல்லுவார்
பாரி வாழ்ந்திருந்த சீர்த்திப்
பாருக்குள்ளே நல்ல நாடு
பாவியர் சபைதனிலே
பிள்ளைப் பிராயத்திலே
பீடத்தில் ஏறிக்கொண்டாள்
புன்னகையும் இன்னிசையும்
பூட்டைத் திறப்பது கையாலே

பூமிக்கு எனை அனுப்பினான்

பூலோக குமாரி
பெண்கள் விடுதலை பெற்ற
பெண்மை வாழ்க என்று
பெற்ற தாயும்
பேயவள் காண் எங்கள் அன்னை
பேயாய் உழலும் சிறுமனமே
பேரருள் கடவுள் திருவடி ஆணை
பொழுது புலர்ந்தது யாம் செய்த
பொன் அவிர் மேனிச் சுபத்திரை
போற்றி உலகு ஒரு மூன்றையும்
போற்றி போற்றி ஓர் ஆயிரம்
மங்கியதோர் நிலவினிலே
மண் வெட்டிக் கூலி

மண்ணுலகத்து மக்களே
மண்ணுலகின் மீதினிலே எக்காலும்
மல் ஆர் திண் தோள் பாஞ்சாலன்
மலரின் மேவு திருவே

மற்றை நாள் கண்ட மரத்தே
மன்னர் குலத்தினிடைப்
மன்னும் இமயமலை எங்கள் மலையே
மனதில் உறுதி வேண்டும்
மனம் எனும் பெண்ணே வாழி
மாகாளி பராசக்தி உருசியநாட்டினில்
மாதவன் சக்தியினைச் செய்ய
மாதா பராசக்தி வையம் எலாம்
மாலைப் பொழுதில் ஒரு மேடை
முருகா முருகா முருகா
முன் நாளில் இராமபிரான்
முன்னை இலங்கை அரக்கர்
மோகத்தைக் கொன்றுவிடு
மோகனப் பாட்டு முடிவு பெற
யாணர்க் குறையுளாம் இந்து
யாதுமாகி நின்றாய் காளி
யாதுமாகி நின்றாய் காளி
யாம் அறிந்த மொழிகளிலே
யானேயாகி என்னலால் பிறவாய்
வந்தேமாதரம் என்போம்
வந்தேமாதரம் ஜய வந்தேமாதரம்
வயலிடையினிலே செழு நீர்
வருக செல்வ வாழ்க மன் நீயே
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா
வலிமையற்ற தோளினாய் போ
வாராய் கவிதையாம் மணிப் பெயர்க்
வாராய் நிலவே வையத் திருவே
வாழ்க திலகன் நாமம்
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழ்க நீ எம்மான்
வாழ்க மனைவியாம் கவிதைத்
வாழ்வு முற்றும் கனவு எனக் கூறிய
வாழிய செந்தமிழ் வாழ்க நல் தமிழர்
வான நடுவிலே மாட்சியுற

வானம் எங்கும் பரிதியின் சோதி
வானில் பறக்கின்ற புள் எலாம்
விட்டு விடுதலையாகி நிற்பாய்
விடுதலை விடுதலை விடுதலை
விடுதலைக்கு மகளிர் எல்லோரும்
விண்டுரைக்க அறிய அரியதாய்
விண்ணகத்தே இரவிதனை
விண்ணும் மண்ணும் தனி ஆளும்
வில்லினை ஒத்த புருவ/ம் வளர்த்தனை
விளக்கிலே திரி நன்கு

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்
வீரத் திருவிழிப் பார்வையும்
வீரர் முப்பத்திரண்டு கோடி விளைவித்த
வெடிபடு மண்டத்து இடி பல தாளம்போட
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வெள்ளைத் திரையாய்
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக்

வேண்டுமடி எப்போதும் விடுதலை
வேத வானில் விளங்கி
வேய் இனிக்க இசைத்திடும்
வேளாளன் சிறைபுகுந்தான்

வையகத்தே சடவஸ்து இல்லை
வையம் முழுதும் படைத்து அளிக்கின்ற

&1 தேசீய கீதங்கள்
** பாரத நாடு

@1 வந்தேமாதரம்
**ராகம் – நாதநாமக்கிரியை : தாளம் – ஆதி
**பல்லவி

#0
வந்தேமாதரம் என்போம் எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்
**சரணங்கள்

#1
ஜாதி மதங்களைப் பாரோம் உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே அன்றி
வேறு குலத்தினராயினும் ஒன்றே

#2
ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்து இங்கு இருப்பவர் அன்றோ
சீனத்தர் ஆய்விடுவாரோ பிற
தேசத்தர் போல் பல தீங்கு இழைப்பாரோ

#3
ஆயிரம் உண்டு இங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ

#4
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த
ஞானம் வந்தால் பின் நமக்கு எது வேண்டும்

#5
எப்பதம் வாய்த்திடுமேனும் நம்மில்
யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

#6
புல் அடிமைத் தொழில் பேணிப் பண்டு
போயின நாட்களுக்கு இனி மனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி

@2 ஜய வந்தே மாதரம்
**ராகம் – ஹிந்துஸ்தானி பியாக் : தாளம் – ஆதி
**பல்லவி

#0
வந்தேமாதரம் ஜய
வந்தேமாதரம்
**சரணங்கள்

#1
ஜய ஜய பாரத ஜய ஜய பாரத
ஜய ஜய பாரத ஜய ஜய ஜய ஜய

#2
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொலும் வீரிய வாசகம்

#3
நொந்தேபோயினும் வெந்தே மாயினும்
நம் தேசத்தர் உவந்தே சொல்வது

#4
ஒன்றாய் நின்று இனி வென்றாயினும் உயிர்
சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்

@3 நாட்டு வணக்கம்
**ராகம் – காம்போதி : தாளம் – ஆதி

#1
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இ நாடே அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இ நாடே அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இ நாடே இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ

#2
இன் உயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இ நாடே எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இ நாடே அவர்
கன்னியர் ஆகி நிலவினில் ஆடிக் களித்ததும் இ நாடே தங்கள்
பொன் உடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இ நாடே இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ

#3
மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இ நாடே அவர்
தங்க மதலைகள் ஈன்று அமுது ஊட்டித் தழுவியது இ நாடே மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இ நாடே பின்னர்
அங்கு அவர் மாய அவர் உடல் பூம் துகள் ஆர்ந்ததும் இ நாடே இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ

@4 பாரத நாடு
**ராகம் – இந்துஸ்தானி : தாளம் – தோடி
**பல்லவி

#0
பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள்
பாரத நாடு
**சரணங்கள்

#1
ஞானத்திலே பரமோனத்திலே உயர்
மானத்திலே அன்னதானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு

#2
தீரத்திலே படை வீரத்திலே நெஞ்சில்
ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரம் கண்டு
தருவதிலே உயர் நாடு

#3
நன்மையிலே உடல் வன்மையிலே செல்வப்
பன்மையிலே மறத் தன்மையிலே
பொன் மயில் ஒத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினிலே உயர் நாடு

#4
ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே புய
வீக்கத்திலே உயர் நோக்கத்திலே
காக்கத் திறல் கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினிலே உயர் நாடு

#5
வண்மையிலே உளத் திண்மையிலே மனத்
தண்மையிலே மதி நுண்மையிலே
உண்மையிலே தவறாத புலவர்
உணர்வினிலே உயர் நாடு

#6
யாகத்திலே தவ வேகத்திலே தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்திகொண்டார்தம்
அருளினிலே உயர் நாடு

#7
ஆற்றினிலே சுனை ஊற்றினிலே தென்றல்
காற்றினிலே மலைப் பேற்றினிலே
ஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி
இனத்தினிலே உயர் நாடு

#8
தோட்டத்திலே மரக் கூட்டத்திலே கனி
ஈட்டத்திலே பயிர் ஊட்டத்திலே
தேட்டத்திலே அடங்காத நதியின்
சிறப்பினிலே உயர் நாடு

@5 பாரத தேசம்
**ராகம் புன்னாகவராளி
**பல்லவி

#0
பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் மிடிப்
பயம் கொல்லுவார் துயர்ப் பகை வெல்லுவார்
**சரணங்கள்

#1
வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம் அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள்
பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்

#2
சிங்களத் தீவினுக்கு ஓர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்

#3
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம்
எட்டுத் திசைகளிலும் சென்று இவை விற்றே
எண்ணும் பொருள் அனைத்தும் கொண்டுவருவோம்

#4
முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கு இனிய பொருள் கொணர்ந்தே
நம் அருள் வேண்டுவது மேற்கரையிலே

#5
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நல் நாட்டு இளம்பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்

#6
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்

#7
காசி நகர்ப் புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
ராசபுத்தானத்து வீரர்தமக்கு
நல் இயல் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்

#8
பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகள் என வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்

#9
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய்யோம் தலைசாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்

#10
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பு ஆணிகள் செய்வோம்
நடையும் பறப்பும் உணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம்

#11
மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்
வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்
சந்திரமண்டலத்து இயல் கண்டு தெளிவோம்
சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்

#12
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்

#13
சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை என்றே
தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம்
நீதி நெறியினின்று பிறர்க்கு உதவும்
நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர்

@6 எங்கள் நாடு
**ராகம் பூபாளம்

#1
மன்னும் இமயமலை எங்கள் மலையே
மாநிலம் மீது இது போல் பிறிது இலையே
இன் நறு நீர்க் கங்கையாறு எங்கள் யாறே
இங்கு இதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே
பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே
பார் மிசை ஏது ஒரு நூல் இது போலே
பொன் ஒளிர் பாரத நாடு எங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே

#2
மா ரத வீரர் மலிந்த நல் நாடு
மா முனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு
நாரத கான நலம் திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்த நல் நாடு
புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம் பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கு இலை ஈடே

#3
இன்னல் வந்து உற்றிடும் போது அதற்கு அஞ்சோம்
ஏழையர் ஆகி இனி மண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழி தொழில் கற்போம்
தாய்த்திருநாடு எனில் இனிக் கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும்
உன்னத ஆரிய நாடு எங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே

@7 ஜய பாரத

#1
சிறந்து நின்ற சிந்தையோடு தேயம் நூறு வென்று இவள்
மறம் தவிர்ந்து அ நாடர் வந்து வாழி சொன்ன போழ்தினும்
இறந்து மாண்பு தீரம் மிக்க ஏழ்மை கொண்ட போழ்தினும்
அறம் தவிர்க்கிலாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே

#2
நூறு கோடி நூல்கள் செய்து நூறு தேயவாணர்கள்
தேறும் உண்மை கொள்ள இங்கு தேடி வந்த நாளினும்
மாறுகொண்டு கல்லி தேய வண்மை தீர்ந்த நாளினும்
ஈறு நிற்கும் உண்மை ஒன்று இறைஞ்சி நிற்பள் வாழ்கவே

#3
வில்லர் வாழ்வு குன்றி ஓய வீர வாளும் மாயவே
வெல்லு ஞானம் விஞ்சியோர் செய் மெய்மை நூல்கள் தேயவும்
சொல்லும் இவ் அனைத்தும் வேறு சூழ நன்மையும் தர
வல்ல நூல் கெடாது காப்பள் வாழி அன்னை வாழியே

#4
தேவர் உண்ணும் நல் மருந்து சேர்ந்த கும்பம் என்னவும்
மேவுவார் கடற்கண் உள்ள வெள்ள நீரை ஒப்பவும்
பாவ நெஞ்சினோர் நிதம் பறித்தல் செய்வராயினும்
ஓவிலாத செல்வம் இன்னும் ஓங்கும் அன்னை வாழ்கவே

#5
இதம் தரும் தொழில்கள் செய்து இரும் புவிக்கு நல்கினள்
பதம் தரற்கு உரியவாய பல் மதங்கள் நாட்டினள்
விதம் பெறும் பல் நாட்டினர்க்கு வேறு ஒர் உண்மை தோற்றவே
சுதந்திரத்தில் ஆசை இன்று தோற்றினாள்-மன் வாழ்கவே

@8 பாரத மாதா
**தான தனந்தன தான தனந்தன
**தானனத் தானா னே

#1
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்த வில் யாருடை வில் எங்கள்
அன்னை பயங்கரி பாரததேவி நல்
ஆரிய ராணியின் வில்

#2
இந்திரசித்தன் இரண்டு துண்டாக
எடுத்த வில் யாருடை வில் எங்கள்
மந்திரத் தெய்வம் பாரதராணி
வயிரவிதன்னுடை வில்

#3
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி என்றே மிக
நன்று பல் வேதம் வரைந்த கை பாரத
நாயகிதன் திருக்கை

#4
சித்தமயம் இவ் உலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கிவிட்டால் துன்பம்
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல்
ஆரிய ராணியின் சொல்

#5
சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத்
தட்டி விளையாடி நன்று
உகந்ததோர் பிள்ளை முன் பாரதராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை

#6
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல் ஒத்த தோள் எவர் தோள் எம்மை
ஆண்டு அருள்செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரியர் தேவியின் தோள்

#7
சாகும் பொழுதில் இரு செவிக் குண்டலம்
தந்தது எவர் கொடைக் கை சுவைப்
பாகு மொழியில் புலவர்கள் போற்றிடும்
பாரதராணியின் கை

#8
போர்க்களத்தே பரஞான மெய்க் கீதை
புகன்றது எவருடை வாய் பகை
தீர்க்கத் திறம் தரு பேரினள் பாரத
தேவி மலர் திருவாய்

#9
தந்தை இனி துறந்தான் அரசாட்சியும்
தையலர்தம் உறவும் இனி
இந்த உலகில் விரும்புகிலேன் என்றது
எம் அனை செய்த உள்ளம்

#10
அன்பு சிவம் உலகத் துயர் யாவையும்
அன்பினில் போகும் என்றே இங்கு
முன்பு மொழிந்து உலகு ஆண்டதோர் புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி

#11
மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி தன்
மதியினில் கொண்டதை நின்று முடிப்பது
வல்ல நம் அன்னை மதி

#12
தெய்வீகச் சாகுந்தலம் எனும் நாடகம்
செய்தது எவர் கவிதை அயன்
செய்வது அனைத்தின் குறிப்பு உணர் பாரத
தேவி அருள் கவிதை

@9 எங்கள் தாய்
**(காவடிச் சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு)

#1
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு
சூழ் கலைவாணர்களும் இவள்
என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்

#2
யாரும் வகுத்தற்கு அரிய பிராயத்த
ளாயினுமே எங்கள் தாய் இந்தப்
பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்னப்
பயின்றிடுவாள் எங்கள் தாய்

#3
முப்பது கோடி முகம் உடையாள் உயிர்
மொய்ம்புற ஒன்று உடையாள் இவள்
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில்
சிந்தனை ஒன்று உடையாள்

#4
நாவினில் வேதம் உடையவள் கையில்
நலம் திகழ் வாள் உடையாள் தனை
மேவினர்க்கு இன் அருள்செய்பவள் தீயரை
வீட்டிடு தோள் உடையாள்

#5
அறுபது கோடி தடக்கைகளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் தனைச்
செறுவது நாடி வருபவரைத் துகள்
செய்து கிடத்துவள் தாய்

#6
பூமியினும் பொறை மிக்கு உடையாள் பெறும்
புண்ணிய நெஞ்சினள் தாய் எனில்
தோம் இழைப்பார் முன் நின்றிடுங்கால் கொடும்
துர்க்கை அனையவள் தாய்

#7
கற்றைச் சடை மதி வைத்த துறவியைக்
கைதொழுவாள் எங்கள் தாய் கையில்
ஒற்றைத் திகிரி கொண்டு ஏழுலகு ஆளும்
ஒருவனையும் தொழுவாள்

#8
யோகத்திலே நிகரற்றவள் உண்மையும்
ஒன்று என நன்று அறிவாள் உயர்
போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொன் குவை தான் உடையாள்

#9
நல் அறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரிவாள் எங்கள் தாய் அவர்
அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்

#10
வெண்மை வளர் இமயாசலன் தந்த
விறல்மகளாம் எங்கள் தாய் அவன்
திண்மை மறையினும் தான் மறையாள் நித்தம்
சீருறுவாள் எங்கள் தாய்

@10 வெறி கொண்ட தாய்
**ராகம் -ஆபோகி : தாளம் – ரூபகம்

#1
பேயவள் காண் எங்கள் அன்னை பெரும்
பித்துடையாள் எங்கள் அன்னை
காய் தழல் ஏந்திய பித்தன்தனைக்
காதலிப்பாள் எங்கள் அன்னை

#2
இன் இசையாம் இன்பக் கடலில் எழுந்து
எற்றும் அலைத் திரள் வெள்ளம்
தன்னிடை மூழ்கித் திளைப்பாள் அங்குத்
தாவிக் குதிப்பாள் எம் அன்னை

#3
தீம் சொல் கவிதை அம் சோலைதனில்
தெய்வீக நல் மணம் வீசும்
தேம் சொரி மா மலர் சூடி மது
தேக்கி நடிப்பாள் எம் அன்னை

#4
வேதங்கள் பாடுவள் காணீர் உண்மை
வேல் கையில் பற்றிக் குதிப்பாள்
ஓதரும் சாத்திரம் கோடி உணர்ந்து
ஓதி உலகு எங்கும் விதைப்பாள்

#5
பாரதப் போர் எனில் எளிதோ விறல்
பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள்
மா ரதர் கோடி வந்தாலும் கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள்

@11 பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி

#1
பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை இருள் கணம் போயின யாவும்
எழு பசும் பொன் சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவு எனும் இரவி
தொழுது உனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர் பல் ஆயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே
வியப்பு இது காண் பள்ளியெழுந்தருளாயே

#2
புள்ளினம் ஆர்த்தன ஆர்த்தன முரசம்
பொங்கியது எங்கும் சுதந்திர நாதம்
வெள்ளிய சங்கம் முழங்கின கேளாய்
வீதி எலாம் அணுகுற்றனர் மாதர்
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த் திருநாமமும் ஓதி நிற்கின்றார்
அள்ளிய தெள் அமுது அன்னை எம் அன்னை
ஆருயிரே பள்ளியெழுந்தருளாயே

#3
பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்
பார் மிசை நின் ஒளி காணுதற்கு அளந்தோம்
கருதி நின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர் கொடுவந்தோம்
சுருதிகள் பயந்தனை சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின ஈன்றனை அம்மே
நிருதர்கள் நடுக்குறச் சூல் கரத்து ஏற்றாய்
நிர்மலையே பள்ளியெழுந்தருளாயே

#4
நின் எழில் விழி அருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீ அறியாயோ
பொன் அனையாய் வெண்பனி முடி இமயப்
பொருப்பினன் ஈந்த பெரும் தவப்பொருளே
என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின் அருட்கு ஏழையம் யாமே
இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ
இன் உயிரே பள்ளியெழுந்தருளாயே

#5
மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ
மாநிலம் பெற்றவள் இஃது உணராயோ
குதலை மொழிக்கு இரங்காது ஒரு தாயோ
கோமகளே பெரும் பாரதர்க்கு அரசே
விதமுறு நின் மொழி பதினெட்டும் கூறி
வேண்டியவாறு உனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்து எமை ஆண்டு அருள்செய்வாய்
ஈன்றவளே பள்ளியெழுந்தருளாயே

@12 பாரத மாதா நவரத்தின மாலை
**(இப்பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள் இயற்கைப் பொருளிலேனும்
** சிலேடைப் பொருளிலேனும் வழங்கப் பட்டிருக்கின்றன)
**(காப்பு)

#1
வீரர் முப்பத்திரண்டு கோடி விளைவித்த
பாரதமாதாவின் பதமலர்க்கே சீர் ஆர்
நவரத்னமாலை இங்கு நான் சூட்டக் காப்பாம்
சிவ ரத்ந மைந்தன் திறம்
**(வெண்பா)

#2
திறம் மிக்க நல் வயிரச் சீர் திகழும் மேனி
அறம் மிக்க சிந்தை அறிவு பிற நலங்கள்
எண்ணற்றன பெறுவார் இந்தியா என்ற நின்றன்
கண் ஒத்த பேர் உரைத்தக்கால்
**(கட்டளை கலித்துறை)

#3
காலன் எதிர்ப்படில் கைகூப்பிக் கும்பிட்டுக் கம்பனமுற்று
ஓலமிட்டு ஓடி மறைந்து ஒழிவான் பகை ஒன்று உளதோ
நீலக் கடல் ஒத்த கோலத்தினாள் மூன்று நேத்திரத்தாள்
காலக் கடலுக்கு ஓர் பாலமிட்டாள் அன்னை கால் படினே
**(எண்சீர் கழிநெடி லாசிரிய விருத்தம்)

#4
அன்னையே அந்நாளில் அவனிக்கு எல்லாம்
ஆணிமுத்துப் போன்ற மணிமொழிகளாலே
பன்னி நீ வேதங்கள் உபநிடதங்கள்
பரவு புகழ்ப் புராணங்கள் இதிகாசங்கள்
இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம்
என் என்று புகழ்ந்து உரைப்போம் அதனை இந்நாள்
மின்னுகின்ற பேரொளி காண் காலம் கொன்ற
விருந்து காண் கடவுளுக்கு ஓர் வெற்றி காணே
**(ஆசிரியப்பா)

#5
வெற்றி கூறு-மின் வெண்சங்கு ஊது-மின்
கற்றவராலே உலகு காப்புற்றது
உற்றது இங்கு இந்நாள் உலகினுக்கு எல்லாம்
இற்றை நாள் வரையினும் அறம் இலா மறவர்
குற்றமே தமது மகுடமாக் கொண்டோர்
மற்றை மனிதரை அடிமைப்படுத்தலே
முற்றிய அறிவின் முறை என்று எண்ணுவார்
பற்றை அரசர் பழிபடு படையுடன்
சொற்றை நீதி தொகுத்து வைத்திருந்தார்
இற்றை நாள்
பாரில் உள்ள பல நாட்டினர்க்கும்
பாரதநாடு புது நெறி பழக்கல்
உற்றது இங்கு இந்நாள் உலகு எலாம் புகழ
இன்ப வளம் செறி பண் பல பயிற்றும்
கவீந்திரன் ஆகிய ரவீந்திரநாதன்
சொற்றது கேளீர் புவி மிசை இன்று
மனிதர்க்கு எல்லாம் தலைப்படு மனிதன்
தர்மமே உருவமாம் மோஹனதாஸ
கர்ம சந்திர காந்தி என்று உரைத்தான்
அத்தகைக் காந்தியை அரசியல் நெறியிலே
தலைவனாக் கொண்டு புவி மிசைத் தருமமே
அரசியலதனிலும் பிற இயல் அனைத்திலும்
வெற்றி தரும் என வேதம் சொன்னதை
முற்றும் பேண முற்பட்டு நின்றார்
பாரத மக்கள் இதனால் படைஞர் தம்
செருக்கு ஒழிந்து உலகில் அறம் திறம்பாத
கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே
**(தரவு கொச்சக் கலிப்பா)

#6
ஊது-மினோ வெற்றி ஒலி-மினோ வாழ்த்தொலிகள்
ஓது-மினோ வேதங்கள் ஓங்கு-மினோ ஓங்கு-மினோ
தீது சிறிதும் பயிலாச் செம்மணி மா நெறி கண்டோம்
வேதனைகள் இனி வேண்டா விடுதலையோ திண்ணமே
**(வஞ்சி விருத்தம்)

#7
திண்ணம் காணீர் பச்சை
வண்ணன் பாதத்து ஆணை
எண்ணம் கெடுதல் வேண்டா
திண்ணம் விடுதலை திண்ணம்
**(கலிப்பா)

#8
விடுதலை பெறுவீர் விரைவா நீர்
வெற்றி கொள்வீர் என்று உரைத்து எங்கும்
கெடுதல் இன்றி நம் தாய்த்திருநாட்டின்
கிளர்ச்சிதன்னை வளர்ச்சிசெய்கின்றான்
சுடுதலும் குளிரும் உயிர்க்கு இல்லை
சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை
எடு-மினோ அறப் போரினை என்றான்
எம் கோமேதகம் ஏந்திய காந்தி
**(அறுசீர் விருத்தம்)

#9
காந்தி சேர் பதுமராகக் கடி மலர் வாழ் ஸ்ரீதேவி
போந்து நிற்கின்றாள் இன்று பாரதப் பொன் நாடு எங்கும்
மாந்தர் எல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்துவிட்டார்
காந்தி சொல் கேட்டார் காண்பார் விடுதலை கணத்தினுள்ளே
**(எழுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்)

#10
கணம் எனும் என்றன் கண் முன்னே வருவாய் பாரததேவியே கனல் கால்
இணை விழி ஆலவாயமாம் சிங்க முதுகினில் ஏறி வீற்றிருந்தே
துணை நினை வேண்டும் நாட்டினர்க்கு எல்லாம் துயர் கெட விடுதலை அருளி
மணி நகைபுரிந்து திகழ் திருக்கோலம் கண்டு நான் மகிழ்ந்திடுமாறே

@13 பாரத தேவியின் திருத் தசாங்கம்
**நாமம்
**(காம்போதி)

#1
பச்சை மணிக் கிளியே பாவி எனக்கே யோகப்
பிச்சை அருளியதாய் பேருரையாய் இச் சகத்தில்
பூரணமா ஞானப் புகழ் விளக்கை நாட்டுவித்த
பாரதமாதேவி எனப் பாடு
**நாடு
**(வசந்தா)

#2
தேன் ஆர் மொழிக் கிள்ளாய் தேவி எனக்கு ஆனந்த
மானாள் பொன் நாட்டை அறிவிப்பாய் வான் நாடு
பேர் இமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
ஆரிய நாடு என்றே அறி
**நகர்
**(மணியரங்கு)

#3
இன் மழலைப் பைங்கிளியே எங்கள் உயிர் ஆனாள்
நன்மையுற வாழும் நகர் எது-கொல் சின்மயமே
நான் என்று அறிந்த நனி பெரியோர்க்கு இன் அமுது
தான் என்ற காசித் தலம்
**ஆறு
**(சுருட்டி)

#4
வண்ணக் கிளி வந்தேமாதரம் என்று ஓதுவரை
இன்னல் அறக் காப்பாள் யாறு உரையாய் நன்னர் செயத்
தான் போம் வழி எலாம் தன்மமொடு பொன் விளைக்கும்
வான் போந்த கங்கை என வாழ்த்து
**மலை
**(கானடா)

#5
சோலைப் பசுங்கிளியே தொன் மறைகள் நான்கு உடையாள்
வாலை வளரும் மலை கூறாய் ஞாலத்துள்
வெற்பு ஒன்றும் ஈடு இலதாய் விண்ணில் முடி தாக்கும்
பொற்பு ஒன்று வெள்ளைப் பொருப்பு
**ஊர்தி
**(தன்யாசி)

#6
சீரும் சிறப்பும் உயர் செல்வமும் ஓர் எண்ணற்றாள்
ஊரும் புரவி உரை தத்தாய் தேரின்
பரி மிசை ஊர்வாள் அல்லள் பார் அனைத்தும் அஞ்சும்
அரி மிசையே ஊர்வாள் அவள்
**படை
**(முகாரி)

#7
கருணை உருவானாள் காய்ந்து எழுங்கால் கிள்ளாய்
செருநரை வீழ்த்தும் படை என் செப்பாய் பொருபவர் மேல்
தண் அளியால் வீழாது வீழின் தகைப்பு அரிதாம்
திண்ணமுறு வான் குலிசம் தேறு
**முரசு
**(செஞ்சுருட்டி)

#8
ஆசை மரகதமே அன்னை திருமுன்றிலிடை
ஓசை வளர் முரசம் ஓதுவாய் பேசுகவோ
சத்தியமே செய்க தருமமே என்று ஒலிசெய்
முத்தி தரும் வேத முரசு
**தார்
**(பிலகரி)

#9
வாராய் இளஞ்சுகமே வந்திப்பார்க்கு என்றும் இடர்
தாராள் புனையும் மணித் தார் கூறாய் சேராரை
முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தான் ஒளிர்வாள்
பொன் தாமரைத் தார் புனைந்து
**கொடி
**(கேதாரம்)

#10
கொடிப் பவள வாய்க் கிள்ளாய் சூத்திரமும் தீங்கும்
மடிப்பவளின் வெல் கொடிதான் மற்று என் அடிப்பணிவார்
நன்று ஆரத் தீயார் நலிவுறவே வீசும் ஒளி
குன்றா வயிரக் கொடி

@14 தாயின் மணிக்கொடி பாரீர்
**(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்)
**தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு
**பல்லவி

#0
தாயின் மணிக்கொடி பாரீர் அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
**சரணங்கள்

#1
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன்
உச்சியின் மேல் வந்தேமாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்

#2
பட்டுத் துகில் எனலாமோ அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும் புயல் காற்று
மட்டு மிகுந்து அடித்தாலும் அதை
மதியாது அவ் உறுதிகொள் மாணிக்கப் படலம்

#3
இந்திரன் வச்சிரம் ஓர்பால் அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ

#4
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் எங்கும்
காணரும் வீரர் பெரும் திருக்கூட்டம்
நம்பற்குரியர் அவ் வீரர் தங்கள்
நல் உயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்

#5
அணியணியாய் அவர் நிற்கும் இந்த
ஆரியக் காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ
பணிகள் பொருந்திய மார்பும் விறல்
பைம் திரு ஓங்கும் வடிவமும் காணீர்

#6
செந்தமிழ்நாட்டுப் பொருநர் கொடும்
தீக் கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் தாயின்
சேவடிக்கே பணிசெய்திடு துளுவர்

#7
கன்னடர் ஒட்டியரோடு போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்
பொன் நகர்த் தேவர்கள் ஒப்ப நிற்கும்
பொற்புடையார் இந்துஸ்தானத்து மல்லர்

#8
பூதலம் முற்றிடும் வரையும் அறப்
போர் விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்

#9
பஞ்சநதத்துப் பிறந்தோர் முன்னைப்
பார்த்தன் முதல் பலர் வாழ்ந்த நல் நாட்டார்
துஞ்சும் பொழுதினும் தாயின் பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தினோரும்

#10
சேர்ந்ததைக் காப்பது காணீர் அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க
தேர்ந்தவர் போற்றும் பரத நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க

@15 பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
**நொண்டிச் சிந்து

#1
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சியஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார் மிகத் துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்

#2
மந்திரவாதி என்பார் சொன்ன மாத்திரத்திலே மனக்கிலி பிடிப்பார்
யந்திர சூனியங்கள் இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்
தந்த பொருளைக் கொண்டே ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசர் எல்லாம்
அந்த அரசியலை இவர் அஞ்சுதரு பேய் என்று எண்ணி நெஞ்சம் அயர்வார்

#3
சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் ஊர்ச் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்
துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வரக் கண்டு வீட்டில் ஒளிவார்
அப்பால் எவனோ செல்வான் அவன் ஆடையைக் கண்டு பயந்து எழுந்து நிற்பார்
எப்போதும் கைகட்டுவார் இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார்

#4
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ
ஐந்து தலைப் பாம்பு என்பான் அப்பன் ஆறு தலை என்று மகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்

#5
சாத்திரங்கள் ஒன்றும் காணார் பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும் ஒரு கொள்கையில் பிரிந்தவனைக் குலைத்து இகழ்வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் தமைச் சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்
ஆத்திரம்கொண்டே இவன் சைவன் இவன் அரிபக்தன் என்று பெரும் சண்டையிடுவார்

#6
நெஞ்சு பொறுக்குதிலையே இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களைத் தீர்க்க ஓர் வழி இலையே

#7
எண்ணிலா நோயுடையார் இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியில் சென்று மாட்டிக்கொள்வார்
நண்ணிய பெரும் கலைகள் பத்து நாலாயிரம் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்

@16 போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்
**(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)

#1
வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ
பொலிவிலா முகத்தினாய் போ போ போ
பொறி இழந்த விழியினாய் போ போ போ
ஒலி இழந்த குரலினாய் போ போ போ
ஒளி இழந்த மேனியாய் போ போ போ
கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை என்றும் வேண்டுவாய் போ போ போ

#2
இன்று பாரதத்திடை நாய் போல
ஏற்றம் இன்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
நாண் இலாது கெஞ்சுவாய் போ போ போ
சென்றுபோன பொய் எலாம் மெய்யாகச்
சிந்தைகொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய் எலாம் பொய்யாக
விழி மயங்கி நோக்குவாய் போ போ போ

#3
வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய் கூறும்
நூலில் ஒத்து இயல்கிலாய் போ போ போ
மாறுபட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறும் சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ

#4
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தருமம் ஒன்று இயற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசு ஒன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வது அஞ்சிலாய் நின் முன்னே
தீமை நிற்கில் ஓடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ
**(வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்)

#5
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா

#6
மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதம் என்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூறல் அஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்கள் எற்றுவாய் வா வா வா
நொய்ம்மையற்ற சிந்தையாய் வா வா வா
நோய்களற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசம் மீது தோன்றுவாய் வா வா வா

#7
இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளி இழந்த நாட்டிலே நின்றேறும்
உதயஞாயிறு ஒப்பவே வா வா வா
களை இழந்த நாட்டிலே முன் போலே
கலை சிறக்க வந்தனை வா வா வா
விளையும் மாண்பு யாவையும் பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா

#8
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர் முகத்தினாய் வா வா வா
கற்றல் ஒன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதியது இயற்றுவாய் வா வா வா
ஒற்றுமைக்குள் உய்யவே நாடு எல்லாம்
ஒரு பெரும் செயல் செய்வாய் வா வா வா

@17 பாரத சமுதாயம்
**ராகம் பியாக்
**தாளம் திஸ்ர ஏகதாளம்
**பல்லவி

#0
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ஜய
**அனுபல்லவி
முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை வாழ்க
**சரணங்கள்

#1
மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ புலனில்
வாழ்க்கை இனியுண்டோ நம்மில் அந்த வாழ்க்கை இனி உண்டோ
இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெரு நாடு
கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு இது
கணக்கின்றித் தரும் நாடு நித்தநித்தம் கணக்கின்றித் தரும் நாடு வாழ்க

#2
இனி ஒரு விதிசெய்வோம் அதை எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவு இலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் வாழ்க

#3
எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்று உரைத்தான் கண்ணபெருமான்
எல்லாரும் அமரநிலை எய்தும் நல் முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம்
இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் வாழ்க

#4
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லாரும் இ நாட்டு மன்னர் நாம்
எல்லாரும் இ நாட்டு மன்னர் ஆம் எல்லாரும் இ நாட்டு மன்னர் வாழ்க

@18 ஜாதீய கீதம்
**(பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)

#1
இனிய நீர்ப் பெருக்கினை இன் கனி வளத்தினை
தனி நறு மலயத் தண் கால் சிறப்பினை
பைம் நிறப் பழனம் பரவிய வடிவினை

#2
வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்திடும் இரவினை
மலர் மணிப் பூத் திகழ் மரன் பல செறிந்தனை
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை
நல்குவை இன்பம் வரம் பல நல்குவை

#3
முப்பது கோடி வாய் நின் இசை முழங்கவும்
அறுபது கோடி தோள் உயர்ந்து உனக்கு ஆற்றவும்
திறனிலாள் என்று உனை யாவனே செப்புவன்
அரும் திறல் உடையாய் அருளினைப் போற்றி
பொருந்தலர் படை புறத்து ஒழித்திடும் பொற்பினை

#4
நீயே வித்தை நீயே தருமம்
நீயே இதயம் நீயே மருமம்
உடலகத்து இருக்கும் உயிரும்-மன் நீயே

#5
தடம் தோள் அகலாச் சக்தி நீ அம்மே
சித்தம் நீங்காது உறு பக்தியும் நீயே
ஆலயம்தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவி இங்கு உனதே

#6
ஒரு பது படை கொளும் உமையவள் நீயே
கமல மெல் இதழ்களில் களித்திடும் கமலை நீ
வித்தை நன்கு அருளும் வெண்மலர்த் தேவி நீ

#7
போற்றி வான் செல்வி புரையிலை நிகரிலை
இனிய நீர்ப் பெருக்கினை இன் கனி வளத்தினை
சாமள நிறத்தினை சரளமாம் தகையினை
இனிய புன்முறுவலாய் இலங்கு நல் அணியினை
தரித்து எமைக் காப்பாய் தாயே போற்றி
**(* மூலப் பாடலில் ஏழு கோடி என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது
** ஆனால் அது வங்காளத்தை மட்டுமே குறித்தது)

@19 ஜாதீய கீதம்
**(புதிய மொழிபெயர்ப்பு)

#1
நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும்
குளிர் பூம் தென்றலும் கொழும் பொழில் பசுமையும்
வாய்ந்து நன்கு இலகுவை வாழிய அன்னை

#2
தெள் நிலவதனில் சிலிர்த்திடும் இரவும்
தண் இயல் விரி மலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை

#3
கோடிகோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடிகோடி புயத் துணை கொற்றம் ஆர்
நீடு பல் படை தாங்கி முன் நிற்கவும்
கூடு திண்மை குறைந்தனை என்பது என்
ஆற்றலின் மிகுந்தனை அரும் பதம் கூட்டுவை
மாற்றலர் கொணர்ந்த வன் படை ஓட்டுவை

#4
அறிவும் நீ தருமம் நீ உள்ளம் நீ அதனிடை
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
தோளிடை வன்பு நீ நெஞ்சகத்து அன்பு நீ
ஆலயம்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலை எலாம் தேவி இங்கு உனதே

#5
பத்துப் படை கொளும் பார்வதி தேவியும்
கமலத்து இதழ்களில் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ

#6
திரு நிறைந்தனை தன்னிகர் ஒன்றிலை தீது தீர்ந்தனை நீர் வளம் சார்ந்தனை
மருவு செய்களின் நல் பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைம் நிறம் வாய்ந்தனை
பெருகும் இன்பம் உடையை குறுநகை பெற்று ஒளிர்ந்தனை பல் பணி பூண்டனை
இரு நிலத்தின் வந்து எம் உயிர் தாங்குவை எங்கள் தாய் நின் பாதங்கள் இறைஞ்சுவாம்
** தமிழ்நாடு

@20 செந்தமிழ் நாடு

#1
செந்தமிழ்நாடு எனும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே எங்கள்
தந்தையர் நாடு என்ற பேச்சினிலே ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

#2
வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் இளம்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

#3
காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி என
மேவிய யாறு பல ஓடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு

#4
முத்தமிழ் மா முனி நீள் வரையே நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு செல்வம்
எத்தனை உண்டு புவி மீதே அவை
யாவும் படைத்த தமிழ்நாடு

#5
நீலத் திரைக் கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவம்செய் குமரி எல்லை வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு

#6
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் மணம்
பார் எங்கும் வீசும் தமிழ்நாடு

#7
வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

#8
சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய
தீவு பலவினும் சென்று ஏறி அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு

#9
விண்ணை இடிக்கும் தலை இமயம் எனும்
வெற்பை அடிக்கும் திறனுடையார் சமர்
பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

#10
சீன மிசிரம் யவனர் அகம் இன்னும்
தேசம் பலவும் புகழ் வீசிக் கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு

@21 தமிழ்த் தாய்
**தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்
**(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)

#1
ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்று ஓர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை
மேவும் இலக்கண செய்துகொடுத்தான்

#2
மூன்று குலத் தமிழ் மன்னர் என்னை
மூண்ட நல் அன்போடு நித்தம் வளர்த்தார்
ஆன்ற மொழிகளினுள்ளே உயர்
ஆரியத்திற்கு நிகர் என வாழ்ந்தேன்

#3
கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் பல
தீம் சுவைக் காவியம் செய்துகொடுத்தார்

#4
சாத்திரங்கள் பல தந்தார் இந்தத்
தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரம் கெட்டவன் காலன்தன் முன்
நேர்ந்தது அனைத்தும் துடைத்து முடிப்பான்

#5
நன்று என்றும் தீது என்றும் பாரான் முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடும் காட்டு வெள்ளம் போல் வையச்
சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான்

#6
கன்னிப் பருவத்தில் அந்நாள் என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயர் உண்டு பின்னர்
யாவும் அழிவுற்றிருந்தன கண்டீர்

#7
தந்தை அருள் வலியாலும் முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்

#8
இன்று ஒரு சொல்லினைக் கேட்டேன் இனி
ஏது செய்வேன் எனது ஆருயிர் மக்காள்
கொன்றிடல் போல் ஒரு வார்த்தை இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்

#9
புத்தம் புதிய கலைகள் பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

#10
சொல்லவும் கூடுவதில்லை அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக்கு இல்லை
மெல்லத் தமிழ் இனிச் சாகும் அந்த
மேற்கு மொழிகள் புவி மிசை ஓங்கும்

#11
என்று அந்தப் பேதை உரைத்தான் ஆ
இந்த வசை எனக்கு எய்திடலாமோ
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்

#12
தந்தை அருள் வலியாலும் இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும் பழி தீரும் புகழ்
ஏறிப் புவி மிசை என்றும் இருப்பேன்

@22 தமிழ்

#1
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகு அனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழர் எனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகம் எலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்

#2
யாம் அறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொல் கேளீர்
சேமமுற வேண்டும் எனில் தெரு எல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்

#3
பிற நாட்டு நல் அறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை
திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம்செய்தல் வேண்டும்

#4
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும் கவிப் பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழி பெற்றுப் பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்புக் கண்டார்

@23 தமிழ்மொழி வாழ்த்து
**தான தனத்தன தான தனத்தன தானன தந்தா னே

#1
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண் மொழி வாழியவே

#2
ஏழ் கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே

#3
சூழ் கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே
தொல்லை வினை தரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே

#4
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து வளர் மொழி வாழியவே

@24 தமிழச் சாதி

#1
எனப் பல பேசி இறைஞ்சிடப்படுவதாய்
நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்
பாசியும் புதைந்து பயன் நீர் இலதாய்
நோய்க்களம் ஆகி அழிக எனும் நோக்கமோ
விதியே விதியே தமிழச் சாதியை 5
என் செய நினைத்தாய் எனக்கு உரையாயோ
சார்வினுக்கு எல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றும் ஓர் நிலையாய் இருந்து நின் அருளால்
வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடுவாயோ 10
தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்து மற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
சிதைவற்று அழியும் பொருள்களில் சேர்ப்பையோ
அழியாக் கடலோ அணி மலர்த் தடமோ
வானுறு மீனோ மாளிகை விளக்கோ 15
கற்பகத் தருவோ காட்டிடை மரமோ
விதியே தமிழச் சாதியை எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய் எனக்கு உணர்த்துவாய்
ஏனெனில்
சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும் 20
திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லை ஒன்று இன்மை எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்பு நான் தமிழச் 25
சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று
உறுதிகொண்டிருந்தேன் ஒரு பதினாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடைவு இன்றி உயர்த்திடு நெறிகளைக்
கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருந்தேன் 30
ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை அடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத்து உள்ள
பற்பல தீவினும் பரவி இவ் எளிய
தமிழச் சாதி தடி உதையுண்டும் 35
கால் உதையுண்டும் கயிற்று அடியுண்டும்
வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடும் செய்தியும் பசியால் சாதலும்
பிணிகளால் சாதலும் பெரும் தொலை உள்ள தம் 40
நாட்டினைப் பிரிந்த நலிவினால் சாதலும்
இஃது எலாம் கேட்டும் எனது உளம் அழிந்திலேன்
தெய்வம் மறவார் செயும் கடன் பிழையார்
ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார் 45
என்பது என் உளத்து வேர் அகழ்ந்திருத்தலால்
எனினும்
இப் பெரும் கொள்கை இதயம் மேல் கொண்டு
கலங்கிடாதிருந்த எனைக் கலக்குறுத்தும்
செய்தி ஒன்று அதனைத் தெளிவுறக் கேட்பாய் 50
ஊனமற்று எவைதாம் உறினுமே பொறுத்து
வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகு போல்
தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து
ஞானமும் பொய்க்க நசிக்கும் ஓர் சாதி
சாத்திரம் கண்டாய் சாதியின் உயர்த் தலம் 55
சாத்திரம் இன்றேல் சாதி இல்லை
பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள்
பொய்ம்மை ஆகிப் புழு என மடிவார்
நால்வகைக் குலத்தார் நண்ணும் ஓர் சாதியில்
அறிவுத் தலைமையாற்றிடும் தலைவர் 60
மற்று இவர் வகுப்பதே சாத்திரம் ஆகும்
இவர்தாம்
உடலும் உள்ளமும் தன்வசம் இலராய்
நெறி பிழைத்து இகழ்வுறு நிலைமையில் வீழினும்
பெரிது இலை பின்னும் மருந்து இதற்கு உண்டு 65
செய்கையும் சீலமும் குன்றிய பின்னரும்
உய்வகைக்கு உரிய வழி சில உளவாம்
மற்று இவர்
சாத்திரம் அதாவது மதியிலே தழுவிய
கொள்கை கருத்து குளிர்ந்திடும் நோக்கம் 70
ஈங்கு இதில் கலக்கம் எய்திடுமாயின்
மற்று அதன் பின்னர் மருந்து ஒன்று இல்லை
இந்நாள் எமது தமிழ்நாட்டிடையே
அறிவுத் தலைமை தமது எனக் கொண்டார்
தம்மிலே இரு வகை தலைபடக் கண்டேன் 75
ஒருசார்
மேற்றிசை வாழும் வெண்ணிறமக்களின்
செய்கையும் நடையும் தீனியும் உடையும்
கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை
யவற்றினும் சிறந்தன ஆதலின் அவற்றை 80
முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால்
தமிழச் சாதி தரணி மீது இராது
பொய்த்து அழிவு எய்தல் முடிபு எனப் புகழும்
நன்றடா நன்று நாம் இனி மேற்றிசை
வழி எலாம் தழுவி வாழ்குவம் எனிலோ 85
ஏ ஏ அஃது உமக்கு இசையாது என்பர்
உயிர் தரும் மேற்றிசை நெறிகளை உவந்து நீர்
தழுவிடா வண்ணம் தடுத்திடும் பெரும் தடை
பல அவை நீங்கும் பான்மையை வல்ல
என்று அருள்புரிவர் இதன் பொருள் சீமை 90
மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்
சாதியின் நோய்க்குத் தலையசைத்து ஏகினர்
என்பதே ஆகும் இஃது ஒரு சார்பாம்
பின் ஒரு சார்பினர் வைதிகப் பெயரோடு
நமது மூதாதையர் நாற்பதிற்று ஆண்டின் 95
முன் இருந்தவரோ முந்நூற்று ஆண்டிற்கு
அப்பால் வாழ்ந்தவர்-கொல்லோ ஆயிரம்
ஆண்டின் முன்னவரோ ஐயாயிரமோ
பவுத்தரே நாடு எலாம் பல்கிய காலத்
தவரோ புராணம் ஆக்கிய காலமோ 100
சைவரோ வைணவ சமயத்தாரோ
இந்திரன் தானே தனிமுதல் கடவுள்
என்று நம் முன்னோர் ஏந்திய வைதிகக்
காலத்தவரோ கருத்திலாதவர்தாம்
எமது மூதாதையர் என்பது இங்கு எவர்-கொல் 105
நமது மூதாதையர் நயமுறக் காட்டிய
ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்
ஆங்கு அவர் காட்டிய அவ்வப்படியே
தழுவிடின் வாழ்வு தமிழர்க்கு உண்டு
எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம் 110
கலி தடைபுரிவன் கலியின் வலியை
வெல்லலாகாது என விளம்புகின்றனரால்
நாசம் கூறும் நாட்டுவயித்தியர்
இவராம் இங்கு இவ் இருதலைக்கொள்ளியின்
இடையே நம்மவர் எப்படி உய்வர் 115
விதியே விதியே தமிழச் சாதியை
என் செயக் கருதியிருக்கின்றாயடா
**விதி
மேலே நீ கூறிய விநாசப் புலவரை
நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்
எத்திசைத்து எனினும் யாவரே காட்டினும் 120
மற்றவை தழுவி வாழ்வீராயின்
அச்சம் ஒன்று இல்லை ஆரிய நாட்டின்
அறிவும் பெருமையும்

@25 வாழிய செந்தமிழ்
**(ஆசிரியப்பா)

#1
வாழிய செந்தமிழ் வாழ்க நல் தமிழர்
வாழிய பாரத மணித் திருநாடு
இன்று எமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மை வந்து எய்துக தீது எலாம் நலிக
அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக
ஆரிய நாட்டினர் ஆண்மையோடு இயற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கு ஓங்குக
நம் தேயத்தினர் நாள்தொறும் உயர்க
வந்தேமாதரம் வந்தேமாதரம்
** சுதந்திரம்

@26 சுதந்திரப் பெருமை
**( தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர்
** திரும்பியும் வருவாரோ என்னும் வர்ணமெட்டு)

#1
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ என்றும்
ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ

#2
புகழும் நல் அறமுமே அன்றி எல்லாம் வெறும்
பொய் என்று கண்டாரேல் அவர்
இகழுறும் ஈனத் தொண்டு இயற்றியும் வாழ்வதற்கு
இச்சையுற்றிருப்பாரோ

#3
பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி எனும்
பெற்றியை அறிந்தாரேல் மானம்
துறந்து அறம் மறந்தும் பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகம் என்று மதிப்பாரோ

#4
மானுட ஜன்மம் பெறுவதற்கு அரிது எனும்
வாய்மையை உணர்ந்தாரேல் அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
உடன்படுமாறு உளதோ

#5
விண்ணில் இரவிதனை விற்றுவிட்டு எவரும் போய்
மின்மினி கொள்வாரோ
கண்ணினும் இனிய சுதந்திரம் போன பின்
கைகட்டிப் பிழைப்பாரோ

#6
மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ
கண் இரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ

#7
வந்தேமாதரம் என்று வணங்கிய பின்
மாயத்தை வணங்குவரோ
வந்தேமாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ

@27 சுதந்திரப் பயிர்
** கண்ணிகள்

#1
தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப் பயிரைக்
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ

#2
எண்ணம் எலாம் நெய்யாக எம் உயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கு இஃது மடியத் திருவுளமோ

#3
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பினர்
வாராது போல வந்த மா மணியைத் தோற்போமோ

#4
தர்மமே வெல்லுமேனும் சான்றோர் சொல் பொய் ஆமோ
கர்ம விளைவுகள் யாம் கண்டது எலாம் போதாதோ

#5
மேலோர்கள் வெம் சிறையில் வீழ்ந்துகிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ

#6
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு
கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ

#7
மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்து அழிதல் காணாயோ

#8
எந்தாய் நீ தந்த இயற்பொருள் எலாம் இழந்து
நொந்தார்க்கு நீ அன்றி நோவு அழிப்பார் யார் உளரோ

#9
இன்பச் சுதந்திரம் நின் இன் அருளால் பெற்றது அன்றோ
அன்பற்ற மாக்கள் அதைப் பறித்தால் காவாயோ

#10
வான மழை இல்லையென்றால் வாழ்வு உண்டோ எந்தை சுயா
தீனம் எமக்கு இல்லையென்றால் தீனர் எது செய்வோமே

#11
நெஞ்சகத்தே பொய் இன்றி நேர்ந்தது எலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத் தூய்மை காணாயோ

#12
பொய்க்கோ உடலும் பொருள் உயிரும் வாட்டுகிறோம்
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே

#13
நின்பொருட்டு நின் அருளால் நின் உரிமை யாம் கேட்டால்
என்பொருட்டு நீ தான் இரங்காதிருப்பதுவோ

#14
இன்று புதிதாய் இரக்கின்றோமோ முன்னோர்
அன்று கொடு வாழ்ந்த அருமை எலாம் ஓராயோ

#15
நீயும் அறமும் நிலத்து இருத்தல் மெய்யானால்
ஓயும் முனர் எங்களுக்கு இவ் ஓர் வரம் நீ நல்குதியே

@28 சுதந்திர தாகம்
**ராகம் கமாஸ்
**தாளம் ஆதி

#1
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும்
என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய் ஆகும்
அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே
ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே
வென்றி தரும் துணை நின் அருள் அன்றோ
மெய் அடியோம் இன்னும் வாடுதல் நன்றோ

#2
பஞ்சமும் நோயும் நின் மெய் அடியார்க்கோ
பாரினில் மேன்மைகள் வேறு இனி யார்க்கோ
தஞ்சமடைந்த பின் கைவிடலோமோ
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப்போமோ
அஞ்சல் என்று அருள்செயும் கடமை இல்லாயோ
ஆரிய நீயும் நின் அறம் மறந்தாயோ
வெம் செயல் அரக்கரை வீட்டிடுவோனே
வீர சிகாமணி ஆரியர் கோனே

@29 சுதந்திர தேவியின் துதி

#1
இதம் தரு மனையின் நீங்கி இடர் மிகு சிறைப்பட்டாலும்
பதம் திரு இரண்டும் மாறிப் பழி மிகுந்து இழிவுற்றாலும்
விதம் தரு கோடி இன்னல் விளைந்து எனை அழித்திட்டாலும்
சுதந்திரதேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே

#2
நின் அருள்பெற்றிலாதார் நிகரிலாச் செல்வரேனும்
பன்னருங் கல்வி கேள்வி படைத்து உயர்ந்திட்டாரேனும்
பின்னரும் எண்ணிலாத பெருமையில் சிறந்தாரேனும்
அன்னவர் வாழ்க்கை பாழாம் அணிகள் வேய் பிணத்தோடு ஒப்பார்

#3
தேவி நின் ஒளி பெறாத தேயம் ஓர் தேயம் ஆமோ
ஆவி அங்கு உண்டோ செம்மை அறிவு உண்டோ ஆக்கம் உண்டோ
காவிய நூல்கள் ஞானக் கலைகள் வேதங்கள் உண்டோ
பாவியர் அன்றோ நிந்தன் பாலனம் படைத்திலாதார்

#4
ஒழிவறு நோயில் சாவார் ஊக்கம் ஒன்று அறியமாட்டார்
கழிவுறு மாக்கள் எல்லாம் இகழ்ந்திடக் கடையில் நிற்பார்
இழிவறு வாழ்க்கை தேரார் கனவிலும் இன்பம் காணார்
அழிவுறு பெருமை நல்கும் அன்னை நின் அருள்பெறாதார்
** வேறு

#5
தேவி நின் அருள் தேடி உளம் தவித்து
ஆவியும் தமது அன்பும் அளிப்பவர்
மேவி நிற்பது வெம் சிறையாயினும்
தாவில் வானுலகு என்னத் தகுவதே

#6
அம்மை உன்றன் அருமை அறிகிலார்
செம்மை என்று இழி தொண்டினைச் சிந்திப்பார்
இம்மை இன்பங்கள் எய்து பொன் மாடத்தை
வெம்மையார் புன் சிறை எனல் வேண்டுமே

#7
மேற்றிசைப் பல நாட்டினர் வீரத்தால்
போற்றி நினைப் புது நிலை எய்தினர்
கூற்றினுக்கு உயிர் கோடி கொடுத்தும் நின்
பேற்றினைப் பெறுவேம் எனல் பேணினர்

#8
அன்ன தன்மைகொள் நின்னை அடியனேன்
என்ன கூறி இசைத்திட வல்லனே
பின்னமுற்றுப் பெருமை இழந்து நின்
சின்னமற்று அழி தேயத்தில் தோன்றினேன்

#9
பேரறத்தினைப் பேணுதல் வேலியே
சோர வாழ்க்கை துயர் மிடி ஆதிய
கார் அறுக்கக் கதித்திடு சோதியே
வீரருக்கு அமுதே நினை வேண்டுவேன்

@30 விடுதலை
**ராகம் பிலகரி

#1
விடுதலை விடுதலை விடுதலை

#2
பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை
திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே

#3
ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை ஜாதியில்
இழிவுகொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே

#4
மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொளுத்துவோம்
வைய வாழ்வுதன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே

@31 சுதந்திரப் பள்ளு
**(பள்ளர் களியாட்டம்)
**ராகம் – வராளி : தாளம் – ஆதி
**பல்லவி

#0
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று

#1
பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே வெள்ளைப்
பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே நம்மை
ஏய்ப்போருக்கு ஏவல் செய்யும் காலமும் போச்சே

#2
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதைத்
தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே

#3
எல்லோரும் ஒன்று என்னும் காலம் வந்ததே பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே இனி
நல்லோர் பெரியர் என்னும் காலம் வந்ததே கெட்ட
நயவஞ்சக்காரருக்கு நாசம் வந்ததே

#4
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனைசெய்வோம்
விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வெறும்
வீணருக்கு உழைத்து உடலம் ஓயமாட்டோம்

#5
நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம் இது
நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் பரி
பூரணனுக்கே அடிமைசெய்து வாழ்வோம்
** தேசிய இயக்கப் பாடல்கள்

@32 சத்ரபதி சிவாஜி
**(தன் சைனியத்திற்குக் கூறியது)

#1
ஜய ஜய பவானி ஜய ஜய பாரதம்
ஜய ஜய மாதா ஜய ஜய துர்க்கா
வந்தேமாதரம் வந்தேமாதரம்
சேனைத் தலைவர்காள் சிறந்த மந்திரிகாள்
யானைத் தலைவரும் அரும் திறல் வீரர்காள் 5
அதி ரத மன்னர்காள் துரகத்து அதிபர்காள்
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்
வேல் எறி படைகாள் சூல் எறி மறவர்காள்
காலன் உருக்கொளும் கணை துரந்திடுவீர்
மற்றும் ஆயிர விதம் பற்றலர்தம்மைச் 10
செற்றிடும் திறன் உடைத் தீர ரத்தினங்காள்
யாவிரும் வாழிய யாவிரும் வாழிய
தேவி நுந்தமக்கு எலாம் திருவருள் புரிக
மாற்றலர்தம் புலை நாற்றமே அறியா
ஆற்றல் கொண்டு இருந்தது இவ் அரும் புகழ் நாடு 15
வேதநூல் பழிக்கும் வெளித் திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரததேவி
வீரரும் அவர் இசை விரித்திடு புலவரும்
பார் எலாம் பெரும் புகழ் பரப்பிய நாடு
தர்மமே உருவமாத் தழைத்த பேரரசரும் 20
நிர்மல முனிவரும் நிறைந்த நல் நாடு
வீரரைப் பெறாத மேன்மை தீர் மங்கையை
ஊரவர் மலடி என்று உரைத்திடும் நாடு
பாரதப் பூமி பழம் பெரும் பூமி
நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர் 25
பாரத நாடு பார்க்கு எலாம் திலகம்
நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர்
வானகம் முட்டும் இமய மால் வரையும்
ஏனைய திசைகளில் இரும் திரைக் கடலும்
காத்திடும் நாடு கங்கையும் சிந்துவும் 30
தூத் திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
இன் அரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு
பைம் நிறப் பழனம் பசியிலாது அளிக்க
மை நிற முகில்கள் வழங்கும் பொன் நாடு 35
தேவர்கள் வாழ்விடம் திறல் உயர் முனிவர்
ஆவலோடு அடையும் அரும் புகழ் நாடு
ஊனம் ஒன்று அறியா ஞான மெய்ப் பூமி
வானவர் விழையும் மாட்சியார் தேயம்
பாரத நாட்டு இசை பகர யான் வல்லனோ 40
நீர் அதன் புதல்வர் நினைவு அகற்றாதீர்
தாய்த்திருநாட்டைத் தறுகண் மிலேச்சர்
பேய்த் தகை கொண்டோர் பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபுரி பகைவர்
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் 45
இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய்கின்றார்
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
மாதர் கற்பழித்தலும் மறைவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார் 50
சாத்திரத் தொகுதியைத் தாழ்த்துவைக்கின்றார்
கோத்திர மங்கையர் குலம் கெடுக்கின்றார்
எண்ணில துணைவர்காள் எமக்கு இவர் செயும் துயர்
கண்ணியம் மறுத்தனர் ஆண்மையும் கடிந்தனர்
பொருளினைச் சிதைத்தனர் மருளினை விதைத்தனர் 55
திண்மையை அழித்துப் பெண்மை இங்கு அளித்தனர்
பாரதப் பெரும் பெயர் பழிப் பெயர் ஆக்கினர்
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக்கு அடிமைகள் ஆயினர் 60
மற்று இதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை
வெற்றிகொள் புலையர் தாள் வீழ்ந்து-கொல் வாழ்வீர்
மொக்குகள் தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்
தாய்த்திருநாட்டைத் தகர்த்திடும் மிலேச்சரை 65
மாய்த்திட விரும்பான் வாழ்வும் ஓர் வாழ்வு-கொல்
மானம் என்று இலாது மாற்றலர் தொழும்பாய்
ஈனமுற்று இருக்க எவன்-கொலோ விரும்புவன்
தாய் பிறன் கைப்படச் சகிப்பவன் ஆகி
நாய் என வாழ்வோன் நமரில் இங்கு உளனோ 70
பிச்சை வாழ்வு உகந்து பிறருடை ஆட்சியில்
அச்சமுற்று இருப்போன் ஆரியன் அல்லன்
புன் புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு
அன்பிலாது இருப்போன் ஆரியன் அல்லன்
மாட்சி தீர் மிலேச்சர் மனப்படி ஆளும் 75
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்
ஆரியத் தன்மை அற்றிடும் சிறியர்
யார் இவண் உளர் அவர் யாண்டேனும் ஒழிக
படை முகத்து இறந்து பதம் பெற விரும்பாக்
கடைபடு மாக்கள் என் கண் முன் நில்லாதீர் 80
சோதரர்தம்மைத் துரோகிகள் அழிப்ப
மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க
நாடு எலாம் பிறர் வசம் நண்ணுதல் நினையான்
வீடு சென்று ஒளிக்க விரும்புவோன் விரும்புக
தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் 85
பாசமே பெரிது எனப் பார்ப்பவன் செல்க
நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன் வயிறு
ஊட்டுதல் பெரிது என உண்ணுவோன் செல்க
ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும்
வீணில் இங்கு இருந்து எனை வெறுத்திடல் விரும்பேன் 90
ஆரியர் இரு-மின் ஆண்கள் இங்கு இரு-மின்
வீரியம் மிகுந்த மேன்மையோர் இரு-மின்
மானமே பெரிது என மதிப்பவர் இரு-மின்
ஈனமே பொறாத இயல்பினர் இரு-மின்
தாய்நாட்டு அன்புறு தனையர் இங்கு இரு-மின் 95
மாய் நாள் பெருமையின் மாய்பவர் இரு-மின்
புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இரு-மின்
கலையறு மிலேச்சரைக் கடிபவர் இரு-மின்
ஊரவர் துயரில் நெஞ்சு உருகுவீர் இரு-மின்
சோர நெஞ்சிலாத் தூயவர் இரு-மின் 100
தேவி தாள் பணியும் தீரர் இங்கு இரு-மின்
பாவியர் குருதியைப் பருகுவார் இரு-மின்
உடலினைப் போற்றா உத்தமர் இரு-மின்
கடல் மடுப்பினும் மனம் கலங்கலர் உதவு-மின்
வம்-மினோ துணைவீர் மருட்சிகொள்ளாதீர் 105
நம்மின் ஓர் ஆற்றலை நாழிகைப் பொழுது எனும்
புல்லிய மாற்றலர் பொறுக்க வல்லார்-கொல்
மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்
இன் அருள் நமக்கு ஓர் இரும் துணை ஆகும்
பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும் 110
வீமனும் துரோணனும் வீட்டுமன்தானும்
ராமனும் வேறு உள இரும் திறல் வீரரும்
நல் துணைபுரிவர் வானக நாடுறும்
வெற்றியே அன்றி வேறு எதும் பெறுகிலேம்
பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வார் 115
செற்று இனி மிலேச்சரைத் தீர்த்திட வம்-மின்
ஈட்டியால் சிரங்களை வீட்டிட எழு-மின்
நீட்டிய வேல்களை நேர் இருந்து எறி-மின்
வாளுடை முனையினும் வயம் திகழ் சூலினும்
ஆளுடைக் கால்கள் அடியினும் தேர்களின் 120
உருளையின் இடையினும் மாற்றலர் தலைகள்
உருளையில் கண்டு நெஞ்சு உவப்புற வம்-மின்
நம் இதம் பெரு வளம் நலிந்திட விரும்பும்
வன்மியை வேரறத் தொலைத்த பின் அன்றோ
ஆண் எனப்பெறுவோம் அன்றி நாம் இறப்பினும் 125
வானுறு தேவர் மணி உலகு அடைவோம்
வாழ்வமேல் பாரத வான் புகழ்த் தேவியைத்
தாழ்வினின்று உயர்த்திய தடம் புகழ் பெறுவோம்
போர் எனில் இது போர் புண்ணியத் திருப்போர்
பாரினில் இது போல் பார்த்திடற்கு எளிதோ 130
ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி
வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே
நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சகம் அழிக்கும் மாமகம் புரிவம் யாம்
வேள்வியில் இது போல் வேள்வி ஒன்று இல்லை 135
தவத்தினில் இது போல் தவம் பிறிது இல்லை
முன்னையோர் பார்த்தன் முனைத் திசை நின்று
தன் எதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலை தரு குரவர் என்று 140
இன்னவர் இருத்தல் கண்டு இதயம் நொந்தோனாய்த்
தன் அரும் தெய்விகச் சாரதி முன்னர்
ஐயனே இவர் மீது அம்பையோ தொடுப்பேன்
வையகத்து அரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன் 145
மெய்யினில் நடுக்கம் மேவுகின்றதுவால்
கையினில் வில்லும் கழன்று வீழ்கின்றது
வாய் உலர்கின்றது மனம் பதைக்கின்றது
ஓய்வுறும் கால்கள் உலைந்தது சிரமும்
வெற்றியை விரும்பேன் மேன்மையை விரும்பேன் 150
சுற்றம் இங்கு அறுத்துச் சுகம் பெறல் விரும்பேன்
எனை இவர் கொல்லினும் இவரை யான் தீண்டேன்
சினை அறுத்திட்ட பின் செய்வதோ ஆட்சி
எனப் பல கூறி அவ் இந்திரன் புதல்வன்
கனப் படை வில்லைக் களத்தினில் எறிந்து 155
சோர்வோடு வீழ்ந்தனன் சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்ற நம் தெய்விகப் பெருமான்
வில் எறிந்து இருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவொடு புலம்புகின்றனையால்
அறத்தினைப் பிரிந்த சுயோதனாதியரைச் 160
செறுத்து இனி மாய்ப்பது தீமை என்கின்றாய்
உண்மையை அறியாய் உறவையே கருதிப்
பெண்மைகொண்டு ஏதோ பிதற்றி நிற்கின்றாய்
வஞ்சகர் தீயர் மனிதரை வருத்துவோர்
நெஞ்சகத் தருக்கு உடை நீசர்கள் இன்னோர் 165
தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம்
ஆரிய நீதி நீ அறிகிலை போலும்
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை
அரும் புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும் 170
பெரும் பதத் தடையுமாம் பெண்மை எங்கு எய்தினை
பேடிமை அகற்று நின் பெருமையை மறந்திடேல்
ஈடிலாப் புகழினாய் எழுகவோ எழுக என்று
மெய்ஞ்ஞானம் நம் இறையவர் கூறக்
குன்று எனும் வயிரக் கொற்ற வான் புயத்தோன் 175
அறமே பெரிது என அறிந்திடும் மனத்தனாய்
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்
சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
பற்றலர்தமை எலாம் பார்க்கு இரையாக்கினன்
விசயன் அன்று இருந்த வியன் புகழ் நாட்டில் 180
இசையும் நல் தவத்தால் இன்று வாழ்ந்திருக்கும்
ஆரிய வீரர்காள் அவருடை மாற்றலர்
தேரில் இ நாட்டினர் செறிவுடை உறவினர்
நம்மை இன்று எதிர்க்கும் நயனிலாப் புல்லோர்
செம்மை தீர் மிலேச்சர் தேசமும் பிறிதாம் 185
பிறப்பினில் அன்னியர் பேச்சினில் அன்னியர்
சிறப்புடை ஆரியச் சீர்மையை அறியார்

@33 கோக்கலே சாமியார் பாடல்
**(இராமலிங்க சுவாமிகள் களக்கமறப் பொதுநடனம் நான் கண்டுகொண்ட
** தருணம் என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது)
களக்கமுறும் மார்லி நடம் கண்டுகொண்ட தருணம்
கடைச் சிறியேன் உளம் பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பி விழுந்திடுமோ
வெம்பாது விழினும் என்றன் கரத்தில் அகப்படுமோ
வளர்த்த பழம் கர்சான் என்ற குரங்கு கவர்ந்திடுமோ
மற்று இங்ஙன் ஆட்சிசெய்யும் அணில் கடித்துவிடுமோ
துளக்கமற யான் பெற்று இங்கு உண்ணுவனோ அல்லால்
தொண்டை விக்குமோ ஏதும் சொல் அரியதாமோ

@34 தொண்டு செய்யும் அடிமை
**(சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு ஆங்கிலேய
** உத்தியோகஸ்தன் கூறுவது)
**நந்தனார் சரித்திரத்திலுள்ள மாடு தின்னும் புலையா உனக்கு
** மார்கழித் திருநாளா என்ற பாட்டின் வர்ணமெட்டு

#1
தொண்டு செய்யும் அடிமை உனக்கு
சுதந்திர நினைவோடா
பண்டு கண்டது உண்டோ அதற்குப்
பாத்திரம் ஆவாயோ

#2
ஜாதிச் சண்டை போச்சோ உங்கள்
சமயச் சண்டை போச்சோ
நீதி சொல்ல வந்தாய் கண் முன்
நிற்கொணாது போடா

#3
அச்சம் நீங்கினாயோ அடிமை
ஆண்மை தாங்கினாயோ
பிச்சை வாங்கிப் பிழைக்கும் ஆசை
பேணுதல் ஒழித்தாயோ

#4
கப்பல் ஏறுவாயோ அடிமை
கடலைத் தாண்டுவாயோ
குப்பை விரும்பும் நாய்க்கே அடிமை
கொற்றத் தவிசும் உண்டோ

#5
ஒற்றுமை பயின்றாயோ அடிமை
உடம்பில் வலிமை உண்டோ
வெற்றுரை பேசாதே அடிமை
வீரியம் அறிவாயோ

#6
சேர்ந்து வாழுவீரோ உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ
சோர்ந்து வீழ்தல் போச்சோ உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ

#7
வெள்ளை நிறத்தைக் கண்டால் பதறி
வெருவலை ஒழித்தாயோ
உள்ளது சொல்வேன் கேள் சுதந்திரம்
உனக்கு இல்லை மறந்திடடா

#8
நாடு காப்பதற்கே உனக்கு
ஞானம் சிறிதும் உண்டோ
வீடு காக்கப் போடா அடிமை
வேலை செய்யப் போடா

#9
சேனை நடத்துவாயோ தொழும்புகள்
செய்திட விரும்புவாயோ
ஈனமான தொழிலே உங்களுக்கு
இசைவது ஆகும் போடா

@35 நம்ம ஜாதிக் கடுக்குமோ
** (புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார் சொல்லுதல்)
** ஓய் நந்தனாரே நம்ம ஜாதிக் கடுக்குமோ நியாயந் தானோ நீர் சொல்லும்
** என்ற வர்ணமெட்டு
**பல்லவி

#0
ஓய் திலகரே நம்ம ஜாதிக்கு அடுக்குமோ
செய்வது சரியோ சொல்லும்
**கண்ணிகள்

#1
முன் அறியாப் புது வழக்கம் நீர்
மூட்டிவிட்டது இந்தப் பழக்கம் இப்போது
எ நகரிலும் இது முழக்கம் மிக
இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம்

#2
சுதந்திரம் என்கிற பேச்சு எங்கள்
தொழும்புகள் எல்லாம் வீணாய்ப் போச்சு இது
மதம்பிடித்தது போல் ஆச்சு எங்கள்
மனிதர்க்கு எல்லாம் வந்தது ஏச்சு

#3
வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் அன்றி
வேறெவர்க்கும் அது தியாஜ்யம் சிறு
பிள்ளைகளுக்கே உபதேசம் நீர்
பேசிவைத்தது எல்லாம் மோசம்

@36 நாம் என்ன செய்வோம்
**(நாம் என்ன செய்வோம் புலையரே இந்தப் பூமியிலில்லாத
** புதுமையைக் கண்டோம் என்ற வர்ணமெட்டு)
**ராகம் புன்னாகவராளி
**தாளம் ரூபகம்
**பல்லவி

#0
நாம் என்ன செய்வோம் துணைவரே இந்தப்
பூமியில் இல்லாத புதுமையைக் கண்டோம்
**சரணங்கள்

#1
திலகன் ஒருவனாலே இப்படி ஆச்சு
செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு
பல திசையும் துஷ்டர் கூட்டங்கள் ஆச்சு
பையல்கள் நெஞ்சில் பயம் என்பதே போச்சு

#2
தேசத்தில் எண்ணற்ற பேர்களும் கெட்டார்
செய்யும் தொழில் முறை யாவரும் விட்டார்
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார்
பின்வரவு அறியாமல் சுதந்திரம் தொட்டார்

#3
பட்டம் பெற்றோர்க்கு மதிப்பு என்பதும் இல்லை
பரதேசப் பேச்சில் மயங்குபவர் இல்லை
சட்டம் மறந்தோர்க்குப் பூஜை குறைவில்லை
சர்க்காரிடம் சொல்லிப்பார்த்தும் பயன் இல்லை

#4
சீமைத் துணி என்றால் உள்ளம் கொதிக்கிறார்
சீர் இல்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார்
தாம் எத்தையோ வந்தே என்று துதிக்கிறார்
தரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார்

@37 பாரத தேவியின் அடிமை
**(நந்தன் சரித்திரத்திலுள்ள ஆண்டைக் கடிமைக்காரன் அல்லவே என்ற பாட்டின்
**வர்ணமெட்டையும் கருத்தையும் பின்பற்றி எழுதியது)
**பல்லவி

#0
அன்னியர்தமக்கு அடிமை அல்லவே நான்
அன்னியர்தமக்கு அடிமை அல்லவே
**சரணங்கள்

#1
மன்னிய புகழ் பாரத தேவி
தன் இரு தாள் இணைக்கு அடிமைக்காரன்

#2
இலகு பெரும் குணம் யாவைக்கும் எல்லையாம்
திலக முனிக்கு ஒத்த அடிமைக்காரன்

#3
வெய்ய சிறைக்குள்ளே புன்னகையோடு போம்
ஐயன் பூபேந்தரனுக்கு அடிமைக்காரன்

#4
காவலர் முன் நிற்பினும் மெய் தவறா எங்கள்
பாலர்தமக்கு ஒத்த அடிமைக்காரன்

#5
காந்து அனல் இட்டாலும் தர்மம் விடா ப்ரமம்
பாந்தவன் தாள் இணைக்கு அடிமைக்காரன்

@38 வெள்ளைக்கார விஞ்ச்துரை கூற்று
**ராகம் -தாண்டகம் : தாளம் – ஆதி

#1
நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய் கனல் மூட்டினாய்
வாட்டி உன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன் வலி காட்டுவேன்

#2
கூட்டம் கூடி வந்தேமாதரம் என்று
கோஷித்தாய் எமை தூஷித்தாய்
ஓட்டம் நாங்கள் எடுக்கவென்றே கப்பல்
ஓட்டினாய் பொருள் ஈட்டினாய்

#3எ
கோழைப்பட்ட ஜனங்களுக்கு உண்மைகள்
கூறினாய் சட்டம் மீறினாய்
ஏழைப்பட்டு இங்கு இறத்தல் இழிவு என்றே
ஏசினாய் வீரம் பேசினாய்

#4
அடிமைப் பேடிகள்தம்மை மனிதர்கள்
ஆக்கினாய் புன்மை போக்கினாய்
மிடிமை போதும் நமக்கு என்று இருந்தோரை
மீட்டினாய் ஆசை ஊட்டினாய்

#5
தொண்டு ஒன்றே தொழிலாக் கொண்டிருந்தோரைத்
தூண்டினாய் புகழ் வேண்டினாய்
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினாய் சோர்வை ஓட்டினாய்

#6
எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய் விதை தூவினாய்
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ நீங்கள் உய்யவோ

#7
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்
சொல்லுவேன் குத்திக் கொல்லுவேன்
தட்டிப் பேசுவோர் உண்டோ சிறைக்குள்ளே
தள்ளுவேன் பழி கொள்ளுவேன்

@39 தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி

#1
சொந்த நாட்டில் பரர்க்கு அடிமைசெய்தே
துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
ஏற்குமோ தெய்வம் பார்க்குமோ

#2
வந்தேமாதரம் என்று உயிர் போம் வரை
வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம்
எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல்
ஈனமோ அவமானமோ

#3
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு
போகவோ நாங்கள் சாகவோ
அழுதுகொண்டு இருப்போமோ ஆண்பிள்ளைகள்
அல்லமோ உயிர் வெல்லமோ

#4
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ பன்றிச் சேய்களோ
நீங்கள் மட்டும் மனிதர்களோ இது
நீதமோ பிடிவாதமோ

#5
பாரதத்திடை அன்பு செலுத்துதல்
பாபமோ மனஸ்தாபமோ
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ இதில் செற்றமோ

#6
ஒற்றுமை வழி என்றே வழி என்பது
ஓர்ந்திட்டோம் நன்கு தேர்ந்திட்டோம்
மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கு எல்லாம்
மலைவுறோம் சித்தம் கலைவுறோம்

#7
சதையைத் துண்டுதுண்டாக்கினும் உன் எண்ணம்
சாயுமோ ஜீவன் ஓயுமோ
இதயத்துள்ளே இலங்கு மஹா பக்தி
ஏகுமோ நெஞ்சம் வேகுமோ

@40 நடிப்புச் சுதேசிகள்
**(பழித்தறிவுறுத்தல்)
**கிளிக் கண்ணிகள்

#1
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடீ கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி

#2
கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றல் அன்றி
நாட்டத்தில் கொள்ளாரடீ கிளியே
நாளில் மறப்பாரடீ

#3
சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்புகளும்
அந்தகர்க்கு உண்டாகுமோ கிளியே
அலிகளுக்கு இன்பம் உண்டோ

#4
கண்கள் இரண்டு இருந்தும் காணும் திறமையற்ற
பெண்களின் கூட்டமடீ கிளியே
பேசிப் பயன் என்னடீ

#5
யந்திர சாலை என்பார் எங்கள் துணிகள் என்பார்
மந்திரத்தாலே எங்கும் கிளியே
மாங்கனி வீழ்வது உண்டோ

#6
உப்பு என்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடீ கிளியே
செய்வது அறியாரடீ

#7
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினால் சொல்வது அல்லால் கிளியே
நம்புதல் அற்றாரடீ

#8
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போல் உயிரைக் கிளியே
பேணியிருந்தாரடீ

#9
தேவி கோயிலில் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிது என்று எண்ணிக் கிளியே
அஞ்சிக்கிடந்தாரடீ

#10
அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்தில் கொண்டாரடீ கிளியே
ஊமைச் சனங்களடீ

#11
ஊக்கமும் உள்வலியும் உண்மையில் பற்றும் இல்லா
மாக்களுக்கு ஓர்கணமும் கிளியே
வாழத் தகுதி உண்டோ

#12
மானம் சிறிது என்று எண்ணி வாழ்வு பெரிது என்று எண்ணும்
ஈனர்க்கு உலகம்தனில் கிளியே
இருக்க நிலைமை உண்டோ

#13
சிந்தையில் கள் விரும்பிச் சிவசிவ என்பது போல்
வந்தேமாதரம் என்பார் கிளியே
மனத்தில் அதனைக் கொள்ளார்

#14
பழமை பழமை என்று பாவனை பேசல் அன்றிப்
பழமை இருந்த நிலை கிளியே
பாமரர் ஏது அறிவார்

#15
நாட்டில் அவமதிப்பும் நாண் இன்றி இழி செல்வத்
தேட்டில் விருப்பும் கொண்டே கிளியே
சிறுமை அடைவாரடீ

#16
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ கிளியே
செம்மை மறந்தாரடீ

#17
பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத் தம் கண்ணால் கண்டும் கிளியே
சோம்பிக் கிடப்பாரடீ

#18
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார்
வாயைத் திறந்து சும்மா கிளியே
வந்தேமாதரம் என்பார்
** தேசியத் தலைவர்கள்

@41 வாழ்க நீ எம்மான்
**மகாத்மா காந்தி பஞ்சகம்

#1
வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரததேசம்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க

#2
அடிமை வாழ்வு அகன்று இ நாட்டார் விடுதலை ஆர்ந்து செல்வம்
குடிமையில் உயர்வு கல்வி ஞானமும் கூடி ஓங்கிப்
படி மிசைத் தலைமை எய்தும்படிக்கு ஒரு சூழ்ச்சி செய்தாய்
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய் புவிக்குள்ளே முதன்மையுற்றாய்
** வேறு

#3
கொடிய வெம் நாகபாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவன் என்கோ
இடி மின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ என் சொலிப் புகழ்வது இங்கு உனையே
விடிவிலாத் துன்பம் செயும் பராதீன வெம் பிணி அகற்றிடும் வண்ணம்
படி மிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்படிக்கு ஒரு சூழ்ச்சி நீ படைத்தாய்

#4
தன் உயிர் போலே தனக்கு அழிவு எண்ணும் பிறன் உயிர்தன்னையும் கணித்தல்
மன் உயிர் எல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணர்தல்
இன்ன மெய்ஞ்ஞானத் துணிவினை மற்று ஆங்கு இழிபடு போர் கொலை தண்டம்
பின்னியே கிடக்கும் அரசியலதனில் பிணைத்திடத் துணிந்தனை பெருமான்

#5
பெரும் கொலை வழியாம் போர் வழி இகழ்ந்தாய் அதனிலும் திறன் பெரிது உடைத்தாம்
அரும் கலைவாணர் மெய்த் தொண்டர்தங்கள் அற வழி என்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன் சேர் ஒத்துழையாமை நெறியினால் இந்தியாவிற்கு
வரும் கதி கண்டு பகைத் தொழில் மறந்து வையகம் வாழ்க நல் அறத்தே

@42 குரு கோவிந்தர்

#1
ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறு
விக்ரமன் ஆண்டு வீரருக்கு அமுதாம்
ஆனந்தபுரத்தில் ஆர்ந்து இனிது இருந்தனன்
பாஞ்சாலத்துப் படர் தரு சிங்கக்
குலத்தினை வகுத்த குருமணி ஆவான் 5
ஞானப் பெரும் கடல் நல் இசைக் கவிஞன்
வானம் வீழ்ந்து உதிரினும் வாள் கொடு தடுக்கும்
வீரர் நாயகன் மேதினி காத்த
குரு கோவிந்த சிங்கமாம் கோமகன்
அவன் திருக்கட்டளை அறிந்து பல் திசையினும் 10
பாஞ்சாலத்து உறு படைவலோர் நாள்தொறும்
நாள்தொறும் வந்து நண்ணுகின்றாரால்
ஆனந்தபுரத்தில் ஆயிரமாயிரம்
வீரர்கள் குருவின் விருப்பினைத் தெரிவான்
கூடிவந்து எய்தினர் கொழும் பொழில் இனங்களும் 15
புன்னகை புனைந்த புது மலர்த் தொகுதியும்
பைம் நிறம் விரிந்த பழனக் காட்சியும்
நல்வரவு ஆகுக நம்மனோர் வரவு என்று
ஆசிகள் கூறி ஆர்ப்பன போன்ற
புண்ணிய நாளில் புகழ் வளர் குரவன் 20
திருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள்
யாது அவன் கூறும் என் எமக்கு அருளும்
எப் பணி விதித்து எமது ஏழேழ் பிறவியும்
இன்புடைத்து ஆக்கும் எனப் பல கருதி
மாலோன் திருமுனர் வந்து கண் உயர்த்தே 25
ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும்
தேவரை ஒத்தனர் திடுக்கெனப் பீடத்து
ஏறி நின்றது காண் இளமையும் திறலும்
ஆதிபத் தகைமையும் அமைந்ததோர் உருவம்
விழிகளில் தெய்வப் பெரும் கனல் வீசிடத் 30
திருமுடி சூழ்ந்தோர் தேசி காத்திருப்ப
தூக்கிய கரத்தில் சுடர் உமிழ்ந்து இருந்தது
கூற நா நடுங்கும் ஓர் கொற்றக் கூர் வாள்
எண்ணிலா வீரர் இவ் உரு நோக்கி
வான்நின்று இறங்கிய மாந்திரிகன் முனர்ச் 35
சிங்கக் கூட்டம் திகைத்து இருந்தாங்கு
மோனமுற்று அடங்கி முடி வணங்கினரால்
வாள் நுனி காட்டி மாட்சியார் குரவன்
திருவுள நோக்கம் செப்புவன் தெய்வச்
சே இதழ் அசைவுறச் சினந்து ஓர் எரிமலை 40
குமுறுதல் போல் வெளிக் கொண்டன திருமொழி
வாள் இதை மனிதர் மார்பிடைக் குளிப்ப
விரும்புகின்றேன் யான் தீர்கிலா விடாய்கொள்
தருமத் தெய்வம் தான் பல குருதிப்
பல விழைகின்றதால் பக்தர்கள் நும்மிடை 45
நெஞ்சினைக் கிழித்து நிலம் மிசை உதிரம்
வீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்ப
யார் வருகின்றீர் என்னலும் சீடர்கள்
நடுங்கி ஓர்கணம் வரை நா எழாது இருந்தனர்
கம்மென ஓர் சிறுகணம் கழிவுற்றது 50
ஆங்கு இருந்தார் பல்லாயிரருள் ஒரு
வீரன் முன் வந்து விளம்புவான் இஃதே
குருமணி நின் ஒரு கொற்ற வாள் கிழிப்ப
விடாய் அறாத் தருமம் மேம்படு தெய்வதத்து
இரை என மாய்வன் ஏற்று அருள்புரிகவே 55
புன்னகை மலர்ந்தது புனித நல் வதனம்
கோயிலுள் அவனைக் குரவர் கோன் கொடுசெல
மற்று அதன் நின்றோர் மடுவின் வந்தால் எனக்
குருதிநீர் பாயக் குழாத்தினர் கண்டனர்
பார்-மின் சற்குரு பளீரெனக் கோயிலின் 60
வெளிப் போந்து ஆங்கு மேவினோர் முன்னம்
முதல் பலி முடித்து முகம் மலர்ந்தோனாய்
மின்னெனப் பாய்ந்து மீண்டு வந்து உற்றனன்
மீண்டும் அவ் உதிர வாள் விண் வழி தூக்கிப்
பின்வரு மொழிகள் பேசுபவன் குரவன் கோன் 65
மானுடர் நெஞ்சில் இவ் வாளினைப் பதிக்கச்
சித்தம் நான் கொண்டேன் தேவிதான் பின்னும் ஓர்
பலி கேட்கின்றாள் பக்தர்காள் நும்முளே
இன்னும் இங்கு ஒருவன் இரத்தமே தந்து இக்
காளியைத் தாகம் கழித்திடத் துணிவோன் 70
எவன் உளன் எனலும் இன்னும் ஓர் துணிவுடை
வீரன் முன் நின்று விருப்பினை உணர்த்தினன்
இவனையும் கோயிலுள் இனிது அழைத்து ஏகி
இரண்டாம் பலி முடித்து ஈண்டினன் குரவன்
குருதியைக் கண்டு குழாத்தினர் நடுங்கினர் 75
இங்ஙனம் மீண்டுமே இயற்றிப்
பலி ஓர் ஐந்து பரமன் அங்கு அளித்தனன்
அறத்தினைத் தமது ஓர் அறிவினால் கொண்ட
மட்டிலே மானிடர் மாண் பெறலாகார்
அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி 80
வாள் குத்து ஏற்று மாய்பவர் பெரியோர்
அவரே மெய்மையோர் முத்தரும் அவரே
தோன்று நூறாயிரம் தொண்டர்தம்முள்ளே
அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே
தண் அருள் கடலாம் தகவு உயர் குரவன் 85
கொடுமை சேர் சோதனை புரிந்திடல் குறித்தனன்
அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர்
ஐவரைக் கண்ட பின் அவ் இயல் உடையார்
எண்ணிலர் உளர் எனத் துணிந்து இன்பு எய்தினன்
வெய்ய செங்குருதியின் வீழ்ந்து தாம் இறந்து 90
சொர்க்கம் உற்றார் எனத் தொண்டர் கொண்டிருக்கும்
ஐந்து நல் மணி எனும் ஐந்து முத்தரையும்
கோயிலுள் இருந்து பேரவை முனர்க் கொணர்ந்தான்
ஆர்த்தனர் தொண்டர் அரு வியப்பு எய்தினர்
விழிகளைத் துடைத்து மீளவும் நோக்கினர் 95
ஜய ஜய குருமணி ஜய குரு சிங்கம்
எனப் பல வாழிகள் இசைத்தனர் ஆடினர்
அப்போழ்து இன் அருள் அவதரித்து அனையான்
நல் சுடர்ப் பரிதி நகைபுரிந்தாங்கு
குறுநகை புரிந்து குறையறு முத்தர் 100
ஐவர்கள்தம்மையும் அகமுறத் தழுவி
ஆசிகள் கூறி அவையினை நோக்கிக்
கடல் முழக்கு என்ன முழங்குவன் காணீர்
காளியும் நமது கனக நல் நாட்டுத்
தேவியும் ஒன்று எனத் தேர்ந்த நல் அன்பர்காள் 105
நடுக்கம் நீர் எய்த நான் ஐம் முறையும்
பலியிடச் சென்றது பாவனை மன்ற
என் கரத்தால்-கொலோ நும் உயிர் எடுப்பன்
ஐம் முறைதானும் அன்பரை மறைத்து நும்
நெஞ்சகச் சோதனை நிகழ்த்தினன் யானே 110
தாய் மணி நாட்டின் உண்மைத் தனயர் நீர்
என்பது தெளிந்தேன் என் கர வாளால்
அறுத்தது இங்கு இன்று ஐந்து ஆடுகள் காண்பீர்
சோதனை வழியினும் துணிவினைக் கண்டேன்
களித்தது என் நெஞ்சம் கழிந்தன கவலைகள் 115
குரு கோவிந்தன் கொண்டதோர் தருமம்
சீடர்தம் மார்க்கம் எனப் புகழ் சிறந்தது
இன்னும் அ மார்க்கத்து இருப்பவர்தம் பெயர்
காலசா என்ப காலசா எனும் மொழி
முத்தர்தம் சங்க முறை எனும் பொருளது 120
முத்தர்தம் சபைக்கு மூலர்களாக மற்று
ஐவர் அன்னோர்தமை அருளினன் ஆரியன்
சமைந்தது காலசா எனும் பெயர்ச் சங்கம்
பாரதம் என்ற பழம் பெரு நாட்டினர்
ஆவி தேய்ந்து அழிந்திலர் ஆண்மையில் குறைந்திலர் 125
வீரமும் சிரத்தையும் வீந்திலர் என்று
புவியினோர் அறியப் புரிந்தனன் முனிவன்
அ நாள் முகுந்தன் அவதரித்து ஆங்கு ஓர்
தெய்விகத் தலைவன் சீருறத் தோன்றி
மண் மாசு அகன்ற வான்படு சொற்களால் 130
எழுப்பிடுங்காலை இறந்துதான் கிடக்கிலள்
இளமையும் துணிவும் இசைந்து நம் அன்னை
சாதியின் மானம் தாங்க முற்படுவள் என்று
உலகினோர் அறிவிடை உறுத்தினன் முனிவன்
ஐம் பெரும் பூதத்து அகிலமே சமைத்த 135
முன்னவன் ஒப்ப முனிவனும் ஐந்து
சீடர்கள் மூலமாத் தேசுறு பாரதச்
சாதியை வகுத்தனன் தழைத்தது தருமம்
கொடுங்கோல் பற்றிய புன்னகைக் குரிசிலர்
நடுங்குவராயினர் நகைத்தனள் சுதந்திரை 140
ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறு
விக்கிரமார்க்கன் ஆண்டினில் வியன் புகழ்க்
குரு கோவிந்தன் கொற்றம் ஆர் சீடரைக்
கூட்டியே தெய்வக் கொலு ஒன்று அமைத்தனன்
காண்டற்கு அரிய காட்சி கவின் திகழ் 145
அரியாசனத்தில் அமர்ந்தனன் முனிவர் கோன்
சூழ்ந்திருந்தனர் உயிர்த் தொண்டர் தாம் ஐவரும்
தன் திருக்கரத்தால் ஆடைகள் சார்த்தி
மாலைகள் சூட்டி மதிப்புற இருத்திக்
கண்மணி போன்றோர் ஐவர் மேல் கனிந்து 150
குழைவுற வாழ்த்திக் குழாத்தினை நோக்கி
காண்டிரோ முதலாம் காலசா என்றனன்
நாடும் தருமமும் நன்கு இதில் காப்பான்
அமைந்தது இச் சங்கம் அறி-மின் நீர் என்றான்
அருகினில் ஓடிய ஆற்றினின்று ஐயன் 155
இரும்புச் சிறுகலத்து இன் நீர் கொணர்ந்து
வாள் முனை கொண்டு மற்று அதைக் கலக்கி
மந்திரம் ஓதினன் மனத்தினை அடக்கிச்
சித்தமே முழுதும் சிவத்திடை ஆக்கிச்
சபம் உரைத்திட்டான் சயப் பெரும் திரு அக் 160
கொலு முனர் வந்து குதித்து நின்றிட்டாள்
ஆற்றுநீர்தனையோ அடித்தது அத் திருவாள்
அயர்ந்துபோய் நின்ற அரும் புகழ் பாரதச்
சாதியின் திறல்கள்தம்மையே இயக்கி
நல் உயிர் நல்கினன் நாடு எலாம் இயங்கின 165
தவமுடை ஐவரைத் தன் முனர் நிறுத்தி
மந்திர நீரை மாசறத் தெளித்து
அருள் மயம் ஆகி அவர் விழி தீண்டினன்
பார்-மினோ உலகீர் பரமன் அம் கரத்தால்
அவர் விழி தீண்டிய அக்கணத்து அன்றே 170
நாடு அனைத்திற்கும் நல்வழி திறந்தது
சீடர்கள் அனைவரும் தீட்சை இஃது அடைந்தனர்
ஐயன் சொல்வான் அன்பர்காள் நீவிர்
செய்திடப்பெற்ற தீட்சையின் நாமம்
அமிர்தம் என்று அறி-மின் அரும் பேறாம் இது 175
பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார்
நுமக்கு இனித் தருமம் நுவன்றிடக் கேள்-மின்
ஒன்றாம் கடவுள் உலகிடைத் தோன்றிய
மானிடர் எல்லாம் சோதரர் மானிடர்
சமத்துவம் உடையார் சுதந்திரம் சார்ந்தவர் 180
சீடர்காள் குலத்தினும் செயலினும் அனைத்தினும்
இக்கணந்தொட்டு நீர் யாவிரும் ஒன்றே
பிரிவுகள் துடைப்பீர் பிரிதலே சாதல்
ஆரியர் சாதியுள் ஆயிரம் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க நீர் அனைவிரும் 185
தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீரச்
சாதி ஒன்றனையே சார்ந்ததோர் ஆவீர்
அநீதியும் கொடுமையும் அழித்திடும் சாதி
மழித்திடல் அறியா வன்முகச் சாதி 190
இரும்பு முத்திரையும் இறுகிய கச்சையும்
கையினில் வாளும் கழன்றிடாச் சாதி
சோதர நட்புத் தொடர்ந்திடு சாதி
அரசன் இல்லாது தெய்வமே அரசா
மானுடர் துணைவரா மறமே பகையாக் 195
குடியரசு இயற்றும் கொள்கையார் சாதி
அறத்தினை வெறுக்கிலீர் மறத்தினைப் பொறுக்கிலீர்
தாய்த்திருநாட்டைச் சந்ததம் போற்றிப்
புகழொடு வாழ்-மின் புகழொடு வாழ்-மின்
என்று உரைத்து ஐயன் இன்புற வாழ்த்தினன் 200
அவன் அடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள்
குருகோவிந்தக் கோமகன் நாட்டிய
கொடி உயர்ந்து அசையக் குவலயம் புகழ்ந்தது
ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி

@43 தாதாபாய் நவுரோஜி

#1
முன் நாளில் இராமபிரான் கோதமனாதிய புதல்வர் முறையின் ஈன்று
பல் நாடு முடி வணங்கத் தலைமை நிறுத்திய எமது பரதகண்ட
மின்னாள் இங்கு இந்நாளின் முதியோளாய்ப் பிறர் எள்ள வீழ்ந்த காலை
அன்னாளைத் துயர் தவிர்ப்பான் முயல்வர் சில மக்கள் அவர் அடிகள் சூழ்வாம்

#2
அவ் அறிஞர் அனைவோர்க்கும் முதல்வனாம் மைந்தன்தன் அன்னை கண்ணீர்
எவ்வகையினும் துடைப்பேன் இன்றேல் என் உயிர் துடைப்பேன் என்னப் போந்து
யௌவன நாள் முதற்கொடு தான் எண்பதின் மேல் வயதுற்ற இன்றுகாறும்
செவ்வியுறத் தனது உடலம் பொருள் ஆவி யான் உழைப்புத் தீர்தல் இல்லான்

#3
கல்வியைப் போல் அறிவும் அறிவினைப் போலக் கருணையும் அக் கருணை போலப்
பல்வித ஊக்கங்கள் செயும் திறனும் ஒரு நிகரின்றிப் படைத்த வீரன்
வில் விறலால் போர்செய்தல் பயன் இலதாம் என அதனை வெறுத்தே உண்மைச்
சொல் விறலால் போர்செய்வோன் பிறர்க்கு இன்றித் தனக்கு உழையாத் துறவி ஆவோன்

#4
மாதா வாய்விட்டு அலற அதைச் சிறிதும் மதியாதே வாணாள் போக்கும்
தீதாவார் வரினும் அவர்க்கு இனிய சொலி நன்கு உணர்த்தும் செவ்வியாளன்
வேதாவாயினும் அவனுக்கு அஞ்சாமே உண்மை நெறி விரிப்போன் எங்கள்
தாதாவாய் விளங்குறு நல் தாதாபாய் நவுரோஜி சரணம் வாழ்க

#5
எண்பஃது ஆண்டு இருந்தவன் இனிப் பல்லாண்டு இருந்து எம்மை இனிது காக்க
பண்பு அல்ல நமக்கு இழைப்போர் அறிவு திருந்துக எமது பரதநாட்டுப்
பெண் பல்லார் வயிற்றினும் அ நவுரோஜி போல் புதல்வர் பிறந்து வாழ்க
விண் புல்லு மீன்கள் என அவன் அன்னார் எவ்வயினும் மிகுக-மன்னோ

@44 பூபேந்திர விஜயம்

#1
பாபேந்திரியம் செறுத்த எங்கள் விவேகானந்தப் பரமன் ஞான
ரூபேந்திரன்தனக்குப் பின்வந்தோன் விண்ணவர்தம் உலகை ஆள் ப்ர
தாபேந்திரன் கோபமுறினும் அதற்கு அஞ்சி அறம் தவிர்க்கிலாதான்
பூபேந்திரப் பெயரோன் பாரதநாட்டிற்கு அடிமைபூண்டு வாழ்வோன்

#2
வீழ்த்தல் பெறத் தருமம் எலாம் மறம் அனைத்தும் கிளைத்துவர மேலோர்தம்மைத்
தாழ்த்த தமர் முன் ஓங்க நிலைபுரண்டு பாதகமே ததும்பிநிற்கும்
பாழ்த்த கலியுகம் சென்று மற்றொரு உகம் அருகில் வரும் பான்மை தோன்றக்
காழ்த்த மன வீரமுடன் யுகாந்திரத்தின் நிலை இனிது காட்டிநின்றான்

#3
மண் ஆளும் மன்னர் அவன்றனைச் சிறைசெய்திட்டாலும் மாந்தர் எல்லாம்
கண்ணாகக் கருதியவன் புகழ் ஓதி வாழ்த்தி மனம் களிக்கின்றாரால்
எண்ணாது நல் பொருளைத் தீது என்பார் சிலர் உலகில் இருப்பர் அன்றே
விண் ஆரும் பரிதி ஒளி வெறுத்து ஒரு புள் இருள் இனிது விரும்பல் போன்றே

#4
இன்னாத பிறர்க்கு எண்ணான் பாரதநாட்டிற்கு இரங்கி இதயம் நைவான்
ஒன்னார் என்று எவரும் இலான் உலகு அனைத்தும் ஓருயிர் என்று உணர்ந்த ஞானி
அன்னானைச் சிறைப்படுத்தார் மேலோர்தம் பெருமை எதும் அறிகிலாதார்
முன் நாளில் துன்பு இன்றி இன்பம் வராது எனப் பெரியோர் மொழிந்தார் அன்றே

@45 வாழ்க திலகன் நாமம்
**பல்லவி

#0
வாழ்க திலகன் நாமம் வாழ்க வாழ்கவே
வீழ்க கொடுங்கோன்மை வீழ்க வீழ்கவே
**சரணங்கள்

#1
நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே
நரகம் ஒத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே
ஏலு மனிதர் அறிவை அடர்க்கும் இருள் அழிகவே
எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே

#2
கல்வி என்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான நல்ல
கருத்தினால் அதனைச் சூழ்ந்து ஓர் அகழி வெட்டினான்
சொல் விளக்கம் என்றதனிடைக் கோயில் ஆக்கினான்
ஸ்வாதந்தர்யம் என்றதனிடைக் கொடியைத் தூக்கினான்

#3
துன்பம் என்னும் கடலைக் கடக்கும் தோணி அவன் பெயர்
சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர்
அன்பு எனும் தேன் ஊறித் ததும்பும் புது மலர் அவன் பேர்
ஆண்மை என்னும் பொருளைக் காட்டும் அறிகுறி அவன் பேர்

@46 திலகர் முனிவர் கோன்

#1
நாமகட்குப் பெரும் தொண்டு இயற்றிப் பல்
நாட்டினோர்தம் கலையிலும் அவ்வவர்
தாம் அகத்து வியப்பப் பயின்று ஒரு
சாத்திரக் கடல் என விளங்குவோன்
மாமகட்குப் பிறப்பிடமாக முன்
வாழ்ந்து இந்நாளில் வறண்டு அயர் பாரதப்
பூமகட்கு மனம் துடித்தே இவள்
புன்மை போக்குவல் என்ற விரதமே

#2
நெஞ்சகத்து ஓர் கணத்திலும் நீங்கிலான்
நீதமே ஓர் உரு எனத் தோன்றினோன்
வஞ்சகத்தைப் பகை எனக் கொண்டதை
மாய்க்குமாறு மனத்தில் கொதிக்கின்றோன்
துஞ்சுமட்டும் இப் பாரதநாட்டிற்கே
தொண்டு இழைக்கத் துணிந்தவர் யாவரும்
அஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல் போல்
அன்பொடு ஓதும் பெயருடை ஆரியன்

#3
வீரம் மிக்க மராட்டியர் ஆதரம்
மேவிப் பாரததேவி திருநுதல்
ஆர வைத்த திலகம் எனத் திகழ்
ஐயன் நல் இசைப் பாலகங்காதரன்
சேரலர்க்கு நினைக்கவும் தீ என
நின்ற எங்கள் திலக முனிவர் கோன்
சீர் அடிக் கமலத்தினை வாழ்த்துவேன்
சிந்தை தூய்மை பெறுக எனச் சிந்தித்தே

@47 லாஜபதி

#1
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும் அதன் கதிர்கள் விரைந்து வந்து
கண்ணகத்தே ஒளி தருதல் காண்கிலமோ நின்னை அவர் கனன்று இ நாட்டு
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும் யாங்கள் எலாம் மறக்கொணாது எம்
எண்ணகத்தே லாஜபதி இடையின்றி நீ வளர்தற்கு என் செய்வாரே

#2
ஒரு மனிதன் தனைப் பற்றிப் பல நாடு கடத்தியவர்க்கு ஊறு செய்தல்
அருமை இலை எளிதின் அவர் புரிந்திட்டார் என்றிடினும் அந்த மேலோன்
பெருமையை நன்கு அறிந்தவனைத் தெய்வம் என நெஞ்சினுளே பெட்பில் பேணி
வரு மனிதர் எண்ணற்றார் இவரை எலாம் ஓட்டி எவர் வாழ்வது இங்கே

#3
பேரன்பு செய்தாரில் யாவரே பெரும் துயரம் பிழைத்துநின்றார்
ஆர் அன்பு நாரணன்பால் இரணியன் சேய் செய்ததனால் அவனுக்கு உற்ற
கோரங்கள் சொலத் தகுமோ பாரதநாட்டில் பக்தி குலவி வாழும்
வீரம் கொள் மனமுடையார் கொடும் துயரம் பல அடைதல் வியத்தற்கு ஒன்றோ

@48 லாஜபதியின் பிரலாபம்
**கண்ணிகள்

#1
நாடு இழந்து மக்களையும் நல்லாளையும் பிரிந்து
வீடு இழந்து இங்குற்றேன் விதியினை என் சொல்கேனே

#2
வேதமுனி போன்றோர் விருத்தராம் எந்தை இரு
பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ

#3
ஆசைக் குமரன் அர்ச்சுனனைப் போல்வான்றன்
மாசற்ற சோதி வதனம் இனிக் காண்பேனோ

#4
அன்றிலைப் போன்று என்னை அரைக்கணமேனும் பிரிந்தால்
குன்றி மனம் சோர்வாள் இக் கோலம் பொறுப்பாளோ

#5
வீடும் உறவும் வெறுத்தாலும் என் அருமை
நாடு பிரிந்த நலிவினுக்கு என் செய்கேனே

#6
ஆதி மறை தோன்றிய நல் ஆரியநாடு எந்நாளும்
நீதி மறைவு இன்றி நிலைத்த திருநாடு

#7
சிந்து எனும் தெய்வத் திருநதியும் மற்று அதில் சேர்
ஐந்து மணி ஆறும் அளிக்கும் புனல் நாடு

#8
ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர்தம்
வெம் புலனை வென்ற எண்ணில் வீரர்க்கும் தாய்நாடு

#9
நல் அறத்தை நாட்டுதற்கு நம் பெருமான் கௌரவராம்
புல்லியரைச் செற்று ஆழ்ந்த புனிதப் பெரு நாடு

#10
கல் நாணும் திண் தோள் கள வீரன் பார்த்தன் ஒரு
வில் நாண் ஒலி கேட்ட மேன்மைத் திருநாடு

#11
கன்னன் இருந்த கருணை நிலம் தர்மன் எனும்
மன்னன் அறங்கள் வளர்த்த புகழ் நாடு

#12
ஆரியர்தம் தர்ம நிலை ஆதரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தம் காதல் துறந்திருந்த நல் நாடு

#13
வீமன் வளர்த்த விறல் நாடு வில் அசுவத்
தாமன் இருந்து சமர்புரிந்த வீர நிலம்

#14
சீக்கர் எனும் எங்கள் நல் சிங்கங்கள் வாழ்தரு நல்
ஆக்கம் உயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன் நாடு

#15
ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மை தந்த
சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு

#16
என் அருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ
பன்னரிய துன்பம் படர்ந்து இங்கே மாய்வேனோ

#17
ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ
ஏதெல்லாம் யான் அறியாது என் மனிதர் பட்டனரோ

#18
என்னை நினைத்தும் இரங்குவரோ அல்லாது
பின்னைத் துயர்களில் என் பேரு மறந்திட்டாரோ

#19
தொண்டுபட்டு வாடும் என்றன் தூய பெரு நாட்டில்
கொண்டுவிட்டு அங்கு என்னை உடன் கொன்றாலும் இன்புறுவேன்

#20
எத்தனை ஜன்மங்கள் இருள் சிறையில் இட்டாலும்
தத்து புனல் பாஞ்சாலம்தனில் வைத்தால் வாடுகிலேன்

@49 வஉசிக்கு வாழ்த்து

#1
வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் மன்னன் என மீண்டான் என்றே
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மைக் கோவே
தாளாண்மை சிறிது-கொலோ யாம் புரிவேம் நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி
வேளாண்மை நின் துணைவர் பெறுக எனவே வாழ்த்துதி நீ வாழ்தி வாழ்தி

@50 மாஜினியின் சபதம் பிரதிக்கினை

#1
பேரருள் கடவுள் திருவடி ஆணை
பிறப்பு அளித்து எமை எலாம் புரக்கும்
தாரணி விளக்காம் என் அரு நாட்டின்
தவப் பெயரதன் மிசை ஆணை
பார வெம் துயர்கள் தாய்த்திருநாட்டின்
பணிக்கு எனப் பலவிதத்து உழன்ற
வீரர் நம் நாடு வாழ்க என வீழ்ந்த
விழுமியோர் திருப்பெயர் ஆணை

#2
ஈசன் இங்கு எனக்கும் என்னுடன் பிறந்தோர்
யாவர்க்கும் இயற்கையின் அளித்த
தேசம் இன்புறுவான் எனக்கு அவன் பணித்த
சீர் உயர் அறங்களின் ஆணை
மாசறு மெல் நல் தாயினைப் பயந்து என்
வழிக்கு எலாம் உறையுளாம் நாட்டின்
ஆசை இங்கு எவர்க்கும் இயற்கையாம் அன்றோ
அத்தகை அன்பின் மீது ஆணை

#3
தீயன புரிதல் முறை தவிர் உடைமை
செம்மை தீர் அரசியல் அநீதி
ஆயவற்று என் நெஞ்சு இயற்கையின் எய்தும்
அரும் பகை அதன் மிசை ஆணை
தேயம் ஒன்று அற்றேன் நற்குடிக்கு உரிய
உரிமைகள் சிறிதெனும் இல்லேன்
தூய சீர் உடைத்தாம் சுதந்திரத் துவசம்
துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன்

#4
மற்றை நாட்டவர் முன் நின்றிடும் போழ்து
மண்டும் என் வெட்கத்தின் ஆணை
முற்றிய வீடு பெறுக எனப் படைப்புற்று
அச் செயல் முடித்திட வலிமை
அற்றதால் மறுகும் என் உயிர்க்கு அதனில்
ஆர்ந்த பேராவலின் ஆணை
நல் தவம்புரியப் பிறந்ததாயினும் இ
நலனறு மடிமையின் குணத்தால்

#5
வலி இழந்திருக்கும் என் உயிர்க்கு அதன்கண்
வளர்ந்திடும் ஆசை மீது ஆணை
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர்
மாண்பதன் நினைவின் மீது ஆணை
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்
வீழ்ச்சியின் உணர்ச்சி மீது ஆணை
பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும்
புன் சிறைக் களத்திடை அழிந்தும்

#6
வேற்று நாடுகளில் அவர் துரத்துண்டும்
மெய் குலைந்து இறந்துமே படுதல்
ஆற்றகிலாராய் எம் அரு நாட்டின்
அன்னைமார் அழும் கணீர் ஆணை
மாற்றலர் எங்கள் கோடியர்க்கு இழைக்கும்
வகுக்கொணாத் துயர்களின் ஆணை
ஏற்ற இவ் ஆணை அனைத்தும் மேற்கொண்டே
யான் செயும் சபதங்கள் இவையே

#7
கடவுள் இ நாட்டிற்கு ஈந்ததோர் புனிதக்
கட்டளைதன்னினும் அதனைத்
திடனுற நிறுவ முயலுதல் மற்று இத்
தேசத்தே பிறந்தவர்க்கு எல்லாம்
உடனுறு கடமை ஆகும் என்பதினும்
ஊன்றிய நம்புதல் கொண்டும்
தட நிலம் மிசை ஓர் சாதியை இறைவன்
சமைக எனப் பணிப்பனேல் அதுதான்

#8
சமைதலுக்கு உரிய திறமையும் அதற்குத்
தந்துளன் என்பதை அறிந்தும்
அமையும் அத் திறமை ஜனங்களைச் சாரும்
அன்னவர் தமக்கு எனத் தாமே
தமை அலது எவர்கள் துணையும் இல்லாது
தம் அரும் திறமையைச் செலுத்தல்
சுமை எனப் பொறுப்பின் செயத்தினுக்கு அதுவே
சூழ்ச்சியாம் என்பதை அறிந்தும்

#9
கருமமும் சொந்த நலத்தினைச் சிறிதும்
கருதிடாது அளித்தலும்தானே
தருமமாம் என்றும் ஒற்றுமையோடு
தளர்விலாச் சிந்தனை கொளலே
பெருமை கொள் வலியாம் என்றுமே மனத்தில்
பெயர்ந்திடா உறுதி மேற்கொண்டும்
அருமை சால் சபதம் இவை புரிகின்றேன்
ஆணைகள் அனைத்தும் முற்கொண்டே

#10
என்னுடன் ஒத்த தருமத்தை ஏற்றார்
இயைந்த இவ் வாலிபர் சபைக்கே
தன் உடல் பொருளும் ஆவியும் எல்லாம்
தத்தமா வழங்கினேன் எங்கள்
பொன் உயர் நாட்டை ஒற்றுமையுடைத்தாய்ச்
சுதந்திரம் பூண்டது ஆகி
இன்னும் ஓர் நாட்டின் சார்விலது ஆகிக்
குடியரசு இயன்றதாய் இலக

#11
இவருடன் யானும் இணங்கியே என்றும்
இது அலால் பிற தொழில் இலனாய்த்
தவமுறு முயற்சிசெய்திடக் கடவேன்
சந்ததம் சொல்லினால் எழுத்தால்
அவமறு செய்கை அதனினால் இயலும்
அளவு எல்லாம் எம்மவர் இந்த
நவமுறு சபையின் ஒரு பெரும் கருத்தை
நன்று இதன் அறிந்திடப் புரிவேன்

#12
உயரும் இ நோக்கம் நிறைவுற இணக்கம்
ஒன்றுதான் மார்க்கம் என்பதுவும்
செயம் நிலையாகச் செய்திடற்கு அறமே
சிறந்ததோர் மார்க்கம் என்பதுவும்
பெயர்வற எங்கள் நாட்டினர் மனத்தில்
பேணுமாறு இயற்றிடக் கடவேன்
அயல் ஒரு சபையில் இன்றுதோறு என்றும்
அமைந்திடாது இருந்திடக் கடவேன்

#13
எங்கள் நாட்டு ஒருமை என்னொடும் குறிக்கும்
இச் சபைத் தலைவராய் இருப்போர்
தங்கள் ஆக்கினைகள் அனைத்தையும் பணிந்து
தலைக்கொளற்கு என்றுமே கடவேன்
இங்கு எனது ஆவி மாய்ந்திடுமேனும்
இவர் பணி வெளியிடாதிருப்பேன்
துங்கம் ஆர் செயலால் போதனையாலும்
இயன்றிடும் துணை இவர்க்கு அளிப்பேன்

#14
இன்றும் எந்நாளும் இவை செயத் தவறேன்
மெய் இது மெய் இது இவற்றை
என்றுமே தவறு இழைப்பனேல என்னை
ஈசனார் நாசமே புரிக
அன்றியும் மக்கள் வெறுத்து எனை இகழ்க
அசத்தியப் பாதகம் சூழ்க
நின்ற தீ எழு வாய் நரகத்தின் வீழ்ந்து
நித்தம் யான் உழலுக-மன்னோ

#15
பேசி நின்ற பெரும் பிரதிக்கினை
மாசிலாது நிறைவுறும் வண்ணமே
ஆசி கூறி அருளுக ஏழையேற்கு
ஈசன் என்றும் இதயத்து இலகியே

@51 பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து

#1
அறத்தினால் வீழ்ந்துவிட்டாய் அன்னியன் வலியனாகி
மறத்தினால் வந்து செய்த வன்மையைப் பொறுத்தல் செய்வாய்
முறத்தினால் புலியைத் தாக்கும் மொய் வரைக் குறப்பெண் போலத்
திறத்தினான் எளியை ஆகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்

#2
வண்மையால் வீழ்ந்துவிட்டாய் வாரி போல் பகைவன் சேனை
திண்மையோடு அடர்க்கும் போதில் சிந்தனை மெலிதல் இன்றி
ஒண்மை சேர் புகழே மேல் என்று உளத்திலே உறுதிகொண்டாய்
உண்மை தேர் கோல நாட்டார் உரிமையைக் காத்து நின்றாய்

#3
மானத்தால் வீழ்ந்துவிட்டாய் மதிப்பிலாப் பகைவர் வேந்தன்
வானத்தால் பெருமை கொண்ட வலிமைதான் உடையனேனும்
ஊனத்தால் உள்ளம் அஞ்சி ஒதுங்கிட மனம் ஒவ்வாமல்
ஆனத்தைச் செய்வோம் என்றே அவன் வழி எதிர்த்துநின்றாய்

#4
வீரத்தால் வீழ்ந்துவிட்டாய் மேல் வரை உருளும் காலை
ஓரத்தே ஒதுங்கித் தன்னை ஒளித்திட மனம் ஒவ்வாமல்
பாரத்தை எளிதாக் கொண்டாய் பாம்பினைப் புழுவே என்றாய்
நேரத்தே பகைவன்தன்னை நில் என முனைந்து நின்றாய்

#5
துணிவினால் வீழ்ந்துவிட்டாய் தொகையிலாப் படைகளோடும்
பிணி வளர் செருக்கினோடும் பெரும் பகை எதிர்த்த போது
பணிவது கருதமாட்டாய் பதுங்குதல் பயன் என்று எண்ணாய்
தணிவதை நினைக்கமாட்டாய் நில் எனத் தடுத்தல் செய்தாய்

#6
வெருளுதல் அறிவு என்று எண்ணாய் விபத்தை ஓர் பொருட்டாக் கொள்ளாய்
சுருள் அலை வெள்ளம் போலத் தொகையிலாப் படைகள் கொண்டே
மருளுறு பகைவர் வேந்தன் வலிமையாக் புகுந்த வேளை
உருளுக தலைகள் மானம் ஓங்குக என்று எதிர்த்துநின்றாய்

#7
யாருக்கே பகை என்றாலும் யார் மிசை இவன் சென்றாலும்
ஊருக்குள் எல்லை தாண்டி உத்திரவு எண்ணிடாமல்
போருக்குக் கோலம் பூண்டு புகுந்தவன் செருக்குக் காட்டை
வேருக்கும் இடம் இல்லாமல் வெட்டுவேன் என்று நின்றாய்

#8
வேள்வியில் வீழ்வது எல்லாம் வீரமும் புகழும் மிக்கு
மீள்வதுண்டு உலகிற்கு என்றே வேதங்கள் விதிக்கும் என்பர்
ஆள்வினை செய்யும் போதில் அறத்திலே இளைத்து வீழ்ந்தார்
கேள்வியுண்டு உடனே மீளக் கிளர்ச்சிகொண்டு உயிர்த்து வாழ்தல்

#9
விளக்கு ஒளி மழுங்கிப்போக வெயில் ஒளி தோன்றும் மட்டும்
களக்கம் ஆர் இருளின் மூழ்கும் கனக மாளிகையும் உண்டாம்
அளக்கரும் தீதுற்றாலும் அச்சமே உளத்துக் கொள்ளார்
துளக்கற ஓங்கி நிற்பர் துயர் உண்டோ துணிவுள்ளோர்க்கே

@52 புதிய ருஷியா
**(ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி)

#1
மாகாளி பராசக்தி உருசியநாட்டினில் கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்
வாகான தோள் புடைத்தார் வான் அமரர் பேய்கள் எல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமல் கண்புகைந்து மடிந்தனவாம் வையகத்தீர் புதுமை காணீர்

#2
இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜார் எனும் பேர் இசைந்த பாவி
சரண் இன்றித் தவித்திட்டார் நல்லோரும் சான்றோரும் தருமம்தன்னைத்
திரணம் எனக் கருதிவிட்டான் ஜார் மூடன் பொய் சூது தீமை எல்லாம்
அரணியத்தில் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்து ஓங்கினவே அந்த நாட்டில்

#3
உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவு இல்லை பிணிகள் பல உண்டு பொய்யைத்
தொழுது அடிமைசெய்வாருக்குச் செல்வங்கள் உண்டு உண்மை சொல்வோர்க்கு எல்லாம்
எழுதரிய பெரும் கொடுமைச் சிறை உண்டு தூக்கு உண்டே இறப்பது உண்டு
முழுதும் ஒரு பேய்வனமாம் சிவேரியிலே ஆவி கெட முடிவது உண்டு

#4
இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் இவ்வாறு அங்கே
செம்மை எல்லாம் பாழாகிக் கொடுமையே அறம் ஆகித் தீர்ந்த போதில்
அம்மை மனம் கனிந்திட்டாள் அடி பரவி உண்மை சொலும் அடியார்தம்மை
மும்மையிலும் காத்திடும் நல் விழியாலே நோக்கினாள் முடிந்தான் காலன்

#5
இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் ஜார் அரசன் இவனைச் சூழ்ந்து
சமயம் உளபடிக்கு எல்லாம் பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார் புயல் காற்றும் சூறைதன்னில்
திமுதிமென மரம் விழுந்து காடு எல்லாம் விறகான செய்தி போலே

#6
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி
கடி ஒன்றில் எழுந்தது பார் குடியரசு என்று உலகு அறியக் கூறிவிட்டார்
அடிமைக்குத் தளை இல்லை யாரும் இப்போது அடிமை இல்லை அறிக என்றார்
இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான் கிருதயுகம் எழுக மாதோ

@53 கரும்புத் தோட்டத்திலே
**ஹரிகாம்போதி ஜன்யம்
**ராகம் – ஸைந்தவி : தாளம் – திஸ்ரசாப்பு
**பல்லவி

#0
கரும்புத் தோட்டத்திலே ஆ
கரும்புத் தோட்டத்திலே
**சரணங்கள்

#1
கரும்புத் தோட்டத்திலே அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்துகின்றனரே ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்து மெய்
சுருங்குகின்றனரே அவர்
துன்பத்தை நீக்க வழி இல்லையோ ஒரு
மருந்து இதற்கு இலையோ செக்கு
மாடுகள் போல் உழைத்து ஏங்குகின்றார் அந்தக்

#2
பெண் என்று சொல்லிடிலோ ஒரு
பேயும் இரங்கும் என்பார் தெய்வமே நினது
எண்ணம் இரங்காதோ அந்த
ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும்
மண்ணில் கலந்திடுமோ தெற்கு
மா கடலுக்கு நடுவினிலே அங்கு ஓர்
கண்ணற்ற தீவினிலே தனிக்
காட்டினில் பெண்கள் புழுங்குகின்றார் அந்தக்

#3
நாட்டை நினைப்பாரோ எந்த
நாள் இனிப் போய் அதைக் காண்பது என்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல்
கேட்டிருப்பாய் காற்றே துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல்
மீட்டும் உரையாயோ அவர்
விம்மி அழவும் திறம்கெட்டும் போயினர்

#4
நெஞ்சம் குமுறுகிறார் கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிர் எல்லாம் துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்து ஒரு
தஞ்சமும் இல்லாதே அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்சவிடலாமோ ஹே
வீர மாகாளி சாமுண்டி காளீஸ்வரி
** தேசீய கீதங்கள் முற்றிற்று
**தோத்திரப் பாடல்கள்
&2 தோத்திரப் பாடல்கள் – பக்திப்பாடல்கள்

@1 விநாயகர் நான்மணிமாலை
**வெண்பா

#1
சக்தி பெறும் பாவாணர் சாற்று பொருள் யாதெனினும்
சித்திபெறச் செய் வாக்கு வல்லமைக்கா அத்தனே
நின்றனுக்குக் காப்பு உரைப்பார் நின் மீது செய்யும் நூல்
இன்று இதற்கும் காப்பு நீயே
**கலித்துறை

#2
நீயே சரணம் நினது அருளே சரணம் சரணம்
நாயேன் பல பிழைசெய்து களைத்து உனை நாடி வந்தேன்
வாயே திறவாத மௌனத்து இருந்து உன் மலரடிக்குத்
தீயே நிகர்த்து ஒளிவீசும் தமிழ்க் கவி செய்குவனே
**விருத்தம்

#3
செய்யும் தொழிலுடன் தொழிலே காண்
சீர்பெற்றிட நீ அருள்செய்வாய்
வையம்தனையும் வெளியினையும்
வானத்தையும் முன் படைத்தவனே
ஐயா நான்முகப் பிரமா
யானைமுகனே வாணிதனைக்
கையால் அணைத்துக் காப்பவனே
கமலாசனத்துக் கற்பகமே
**அகவல்

#4
கற்பக விநாயகக் கடவுளே போற்றி
சிற்பர மோனத் தேவன் வாழ்க
வாரணமுகத்தான் மலர்த் தாள் வெல்க
ஆரணமுகத்தான் அருள் பதம் வெல்க
படைப்புக்கு இறையவன் பண்ணவர் நாயகன் 5
இந்திரகுரு எனது இதயத்து ஒளிர்வான்
சந்திரமவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்
குணமதில் பலவாம் கூறக் கேளீர்
உள் செவி திறக்கும் அகக்கண் ஒளிதரும் 10
அக்கினி தோன்றும் ஆண்மை வலியுறும்
திக்கு எல்லாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்
கட்செவிதன்னைக் கையிலே எடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம் பகையதனையும்
துச்சமென்று எண்ணித் துயர் இலாது இங்கு 15
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம்
அச்சம் தீரும் அமுதம் விளையும்
வித்தை வளரும் வேள்வி ஓங்கும்
அமரத்தன்மையும் எய்தவும்
இங்கு நாம் பெறலாம் இஃது உணர்வீரே 20
**வெண்பா

#5
உணர்வீர் உணர்வீர் உலகத்தீர் இங்குப்
புணர்வீர் அமரர் உறும் போகம் கணபதியைப்
போத வடிவாகப் போற்றிப் பணிந்திடு-மின்
காதலுடன் கஞ்ச மலர்க் கால்
**கலித்துறை

#6
காலைப் பிடித்தேன் கணபதி நின் பதம் கண்ணில் ஒற்றி
நூலைப் பலபலவாகச் சமைத்து நொடிப்பொழுதும்
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன்
கோலை மனம் எனும் நாட்டின் நிறுத்தல் குறி எனக்கே
**விருத்தம்

#7
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி
மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும்பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும்
கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே
**அகவல்

#8
கடமையாவன தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்
விநாயக தேவனாய் வேல் உடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச் சடைமுடியனாய்
பிற நாட்டு இருப்போர் பெயர் பல கூறி 5
அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி
உமை எனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகு எங்கும் காக்கும் ஒருவனைப் போற்றுதல்
இ நான்கே இப் பூமியில் எவர்க்கும் 10
கடமை எனப்படும் பயன் இதில் நான்காம்
அறம் பொருள் இன்பம் வீடு எனும் முறையே
தன்னை ஆளும் சமர்த்து எனக்கு அருள்வாய்
மணக்குள விநாயகா வான் மறைத் தலைவா
தனைத்தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில் 15
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்
அசையா நெஞ்சம் அருள்வாய் உயிர் எலாம்
இன்புற்றிருக்க வேண்டி நின் இரு தாள்
பணிவதே தொழில் எனக் கொண்டு
கணபதி தேவா வாழ்வேன் களித்தே 20
**வெண்பா

#9
களியுற்று நின்று கடவுளே இங்குப்
பழியற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய் ஒளி பெற்றுக்
கல்வி பல தேர்ந்து கடமை எலாம் நன்கு ஆற்றித்
தொல்வினைக் கட்டு எல்லாம் துறந்து
**கலித்துறை

#10
துறந்தார் திறமை பெரிது அதினும் பெரிதாகும் இங்குக்
குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவு ஈந்து குலமகளும்
அறம் தாங்கு மக்களும் நீடூழி வாழ்க என அண்டம் எலாம்
சிறந்து ஆளும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செயும் தவமே
**விருத்தம்

#11
தவமே புரியும் வகை அறியேன் சலியாது உற நெஞ்சு அறியாது
சிவமே நாடிப் பொழுது அனைத்தும் தியங்கித்தியங்கி நிற்பேனை
நவ மா மணிகள் புனைந்த முடி நாதா கருணாலயனே தத்து
வமாகியதோர் பிரணவமே அஞ்சேல் என்று சொல்லுதியே
**அகவல்

#12
சொல்லினுக்கு அரியனாய்ச் சூழ்ச்சிக்கு அரியனாய்
பல் உருவாகிப் படர்ந்த வான் பொருளை
உள் உயிர் ஆகி உலகம் காக்கும்
சக்தியே தானாம் தனிச் சுடர்ப் பொருளை
சக்தி குமாரனைச் சந்திரமவுலியைப் 5
பணிந்தவன் உருவிலே பாவனை நாட்டி
ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்தி
சக்தியைக் காக்கும் தந்திரம் பயின்று
யார்க்கும் எளியனாய் யார்க்கும் வலியனாய்
யார்க்கும் அன்பனாய் யார்க்கும் இனியனாய் 10
வாழ்ந்திட விரும்பினேன் மனமே நீ இதை
ஆழ்ந்து கருதி ஆய்ந்தாய்ந்து பல முறை
சூழ்ந்து தெளிந்து பின் சூழ்ந்தார்க்கு எல்லாம்
கூறிக்கூறிக் குறைவறத் தேர்ந்து
தேறித்தேறி நான் சித்திபெற்றிடவே 15
நின்னால் இயன்ற துணைபுரிவாயேல்
பொன்னால் உனக்கு ஒரு கோயில் புனைவேன்
மனமே எனை நீ வாழ்த்திடுவாய்
வீணே உழலுதல் வேண்டா
சக்திகுமாரன் சரண் புகழ்வாயே 20
**வெண்பா

#13
புகழ்வோம் கணபதி நின் பொன் கழலை நாளும்
திகழ்வோம் பெரும் கீர்த்தி சேர்ந்தே இகழ்வோமே
புல் அரக்கப் பாதகரின் பொய்யை எலாம் ஈங்கு இது காண்
வல்லபை கோன் தந்த வரம்
**கலித்துறை

#14
வரமே நமக்கு இது கண்டீர் கவலையும் வஞ்சனையும்
கரவும் புலமை விருப்பமும் ஐயமும் காய்ந்து எறிந்து
சிரம் மீது நங்கள் கணபதி தாள் மலர் சேர்த்து எமக்குத்
தரமே-கொல் வானவர் என்று உளத்தே களி சார்ந்ததுவே
**விருத்தம்

#15
சார்ந்து நிற்பாய் எனது உளமே சலமும் கரவும் சஞ்சலமும்
பேர்ந்து பரமசிவானந்தர் பேற்றை நாடி நாள்தோறும்
ஆர்த்த வேதப் பொருள் காட்டும் ஐயன் சக்தி தலைப்பிள்ளை
கூர்த்த இடர்கள் போக்கிடும் நம் கோமான் பாதக் குளிர் நிழலே
**அகவல்

#16
நிழலினும் வெயிலினும் நேர்ந்த நல் துணையாய்த்
தழலினும் புனலினும் அபாயம் தவிர்த்து
மண்ணினும் காற்றினும் வானினும் எனக்குப்
பகைமை ஒன்று இன்றிப் பயம் தவிர்த்து ஆள்வான்
உள்ளத்து ஓங்க நோக்குறும் விழியும் 5
மௌன வாயும் வரம் தரு கையும்
உடைய நம் பெருமான் உணர்விலே நிற்பான்
ஓம் எனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்
வேதமுனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருஹஸ்பதியும் பிரமனும் யாவும் 10
தானே ஆகிய தனி முதல் கடவுள்
யான் எனது அற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்து ஆவான்
ஸத் எனத் தத் எனச் சதுர்மறையாளர்
நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள் 15
ஏழையர்க்கு எல்லாம் இரங்கும் பிள்ளை
வாழும் பிள்ளை மணக்குளப் பிள்ளை
வெள்ளாடை தரித்த விட்டுணு என்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழுது ஏத்திப் பணிவது முறையே 20
**வெண்பா

#17
முறையே நடப்பாய் முழு மூட நெஞ்சே
இறையேனும் வாடாய் இனிமேல் கறையுண்ட
கண்டன் மகன் வேதகாரணன் சக்தி மகன்
தொண்டருக்கு உண்டு துணை
**கலித்துறை

#18
துணையே எனது உயிர் உள்ளே இருந்து சுடர் விடுக்கும்
மணியே எனது உயிர் மன்னவனே என்றன் வாழ்வினுக்கு ஓர்
அணியே என் உள்ளத்தில் ஆரமுதே எனது அற்புதமே
இணை ஏது உனக்கு உரைப்பேன் கடை வானில் எழும் சுடரே
**விருத்தம்

#19
சுடரே போற்றி கணத்தேவர்
துரையே போற்றி எனக்கு என்றும்
இடரே இன்றிக் காத்திடுவாய்
எண்ணாயிரம் கால் முறையிட்டேன்
படர் வான் வெளியில் பல கோடி
கோடி கோடிப் பல் கோடி
இடராது ஓடும் மண்டலங்கள்
இசைத்தாய் வாழி இறைவனே
**அகவல்

#20
இறைவி இறையவன் இரண்டும் ஒன்றாகித்
தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய்
உள் ஒளி ஆகி உலகு எலாம் திகழும்
பரம்பொருளேயோ பரம்பொருளேயோ
ஆதிமூலமே அனைத்தையும் காக்கும் 5
தேவ தேவா சிவனே கண்ணா
வேலா சாத்தா விநாயகா மாடா
இருளா சூரியா இந்துவே சக்தியே
வாணீ காளீ மா மகளேயோ
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ளது 10
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே
வேதச் சுடரே மெய்யாம் கடவுளே
அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்
நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன்
அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன் 15
உடைமை வேண்டேன் உன் துணை வேண்டினேன்
வேண்டாது அனைத்தையும் நீக்கி
வேண்டியது அனைத்தும் அருள்வது உன் கடனே
**வெண்பா

#21
கடமைதான் ஏது கரிமுகனே வையத்
திடம் நீ அருள்செய்தாய் எங்கள் உடைமைகளும்
இன்பங்களும் எல்லாம் ஈந்தாய் நீ யாங்கள் உனக்கு
என் புரிவோம் கைம்மாறு இயம்பு
**கலித்துறை

#22
இயம்பு மொழிகள் புகழ் மறை ஆகும் எடுத்த வினை
பயன்படும் தேவர் இருபோதும் வந்து பதம் தருவார்
அயன் பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
வியன் புகழ் பாடிப் பணிவார் தமக்கு உறு மேன்மைகளே
**விருத்தம்

#23
மேன்மைப்படுவாய் மனமே கேள்
விண்ணின் இடி முன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே
பயத்தால் ஏதும் பயன் இல்லை
யான் முன் உரைத்தேன் கோடி முறை
இன்னும் கோடி முறை சொல்வேன்
ஆன்மாவான கணபதியின்
அருள் உண்டு அச்சம் இல்லையே
**அகவல்

#24
அச்சம் இல்லை அமுங்குதல் இல்லை
நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை
பாவம் இல்லை பதுங்குதல் இல்லை
ஏது நேரினும் இடர்ப்படமாட்டோம்
அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம் 5
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்
வானம் உண்டு மாரி உண்டு
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும் 10
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்
கேட்கப் பாட்டும் காண நல் உலகும்
களித்து உரைசெய்யக் கணபதி பெயரும் 15
என்றும் இங்கு உளவாம் சலித்திடாய் ஏழை
நெஞ்சே வாழி நேர்மையுடன் வாழி
வஞ்சகக் கவலைக்கு இடங்கொடேல் மன்னோ
தஞ்சம் உண்டு சொன்னேன்
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே 20
**வெண்பா

#25
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராது இருத்தல் உமைக்கு இனிய
மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்
சிந்தையே இ மூன்றும் செய்
**கலித்துறை

#26
செய்யும் கவிதை பராசக்தியாலே செயப்படும் காண்
வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி வண்மை எலாம்
ஐயத்திலும் துரிதத்திலும் சிந்தி அழிவது என்னே
பையத் தொழில் புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே
**விருத்தம்

#27
பக்தியுடையார் காரியத்தில்
பதறார் மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மை போல்
மெல்லச் செய்து பயன் அடைவார்
சக்தி தொழிலே அனைத்தும் எனில்
சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்
வித்தைக்கு இறைவா கணநாதா
மேன்மைத் தொழிலில் பணி எனையே
**அகவல்

#28
எனை நீ காப்பாய் யாவுமாம் தெய்வமே
பொறுத்தார் அன்றே பூமி ஆள்வார்
யாவும் நீ ஆயின் அனைத்தையும் ஒறுத்தல்
செவ்விய நெறி அதில் சிவநிலை பெறலாம்
பொங்குதல் போக்கிப் பொறை எனக்கு ஈவாய் 5
மங்கள குணபதி மணக்குளக் கணபதி
நெஞ்சக் கமலத்து நிறைந்து அருள்புரிவாய்
அகல் விழி உமையாள் ஆசை மகனே
நாட்டினைத் துயர் இன்றி நன்கு அமைத்திடுவதும்
உள்ளம் எனும் நாட்டை ஒரு பிழை இன்றி 10
ஆள்வதும் பேரொளி ஞாயிறே அனைய
சுடர் தரு மதியொடு துயர் இன்றி வாழ்தலும்
நோக்கமாக் கொண்டு நின் பதம் நோக்கினேன்
காத்து அருள்புரிக கற்பக விநாயகா
காத்து அருள்புரிக கடவுளே உலகு எலாம் 15
கோத்து அருள்புரிக குறிப்பு அரும் பொருளே
அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய்
எம் குல தேவா போற்றி
சங்கரன் மகனே தாள் இணை போற்றி
**வெண்பா

#29
போற்றி கலியாணி புதல்வனே பாட்டினிலே
ஆற்றல் அருளி அடியேனைத் தேற்றமுடன்
வாணி பதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணி அருள்
வீணை ஒலி என் நாவில் விண்டு
**கலித்துறை

#30
விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே
தொண்டு உனது அன்னை பராசக்திக்கு என்றும் தொடர்ந்திடுவேன்
பண்டைச் சிறுமைகள் போக்கி என் நாவில் பழுத்த சுவைத்
தெண் தமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே
**விருத்தம்

#31
செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி செந்தாமரையில் சேர்ந்திருப்பாள்
கையாள் என நின்று அடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து
செய்வாள் புகழ் சேர் வாணியும் என்னுள்ளே நின்று தீம் கவிதை
பெய்வாள் சக்தி துணைபுரிவாள் பிள்ளாய் நின்னைப் பேசிடிலே
**அகவல்

#32
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீது உள்ள மக்கள் பறவைகள்
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே 5
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் தேவ தேவா
ஞானாகாசத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக துன்பமும் மிடிமையும் நோவும் 10
சாவும் நீக்கிச் சார்ந்த பல் உயிர் எலாம்
இன்புற்று வாழ்க என்பேன் இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி
அங்ஙனே ஆகுக என்பாய் ஐயனே
இ நாள் இப்பொழுது எனக்கு இவ் வரத்தினை 15
அருள்வாய் ஆதி மூலமே அநந்த
சக்தி குமாரனே சந்திரமவுலீ
நித்தியப் பொருளே சரணம்
சரணம் சரணம் சரணம் இங்கு உனக்கே
**வெண்பா

#33
உனக்கே என் ஆவியும் உள்ளமும் தந்தேன்
மனக் கேதம் யாவினையும் மாற்றி எனக்கே
நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து
**கலித்துறை

#34
விரைந்து உன் திருவுளம் என் மீது இரங்கிட வேண்டும் ஐயா
குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக் கொளுத்தியவன்
அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகா
வரங்கள் பொழியும் முகிலே என் உள்ளத்து வாழ்பவனே
**விருத்தம்

#35
வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணி மலரே
ஆழ்க உள்ளம் சலனம் இலாது அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க துயர்கள் தொலைந்திடுக தொலையா இன்பம் விளைந்திடுக
வீழ்க கலியின் வலி எல்லாம் கிருதயுகம்தான் மேவுகவே
**அகவல்

#36
மேவி மேவித் துயரில் வீழ்வாய்
எத்தனை கூறியும் விடுதலைக்கு இசையாய்
பாவி நெஞ்சே பார் மிசை நின்னை
இன்புறச்செய்வேன் எதற்கும் இனி அஞ்சேல்
ஐயன் பிள்ளையார் அருளால் உனக்கு நான் 5
அபயம் இங்கு அளித்தேன் நெஞ்சே
நினக்கு நான் உரைத்தன நிலைநிறுத்திடவே
தீயிடைக் குதிப்பேன் கடலுள் வீழ்வேன்
வெவ் விடம் உண்பேன் மேதினி அழிப்பேன்
ஏதும் செய்து உனை இடர் இன்றி காப்பேன் 10
மூட நெஞ்சே முப்பது கோடி
முறை உனக்கு உரைத்தேன் இன்னும் மொழிவேன்
தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே
ஏது நிகழினும் நமக்கு ஏன் என்று இரு
பராசக்தி உளத்தின்படி உலகம் நிகழும் 15
நமக்கு ஏன் பொறுப்பு நான் என்று ஓர் தனிப்பொருள்
இல்லை நான் எனும் எண்ணமே வெறும் பொய்
என்றான் புத்தன் இறைஞ்சுவோம் அவன் பதம்
இனி எப்பொழுதும் உரைத்திடேன் இதை நீ
மறவாதிருப்பாய் மடமை நெஞ்சே 20
கவலைப்படுதலே கருநரகு அம்மா
கவலையற்று இருத்தலே முக்தி
சிவன் ஒரு மகன் இதை நினக்கு அருள்செய்கவே
**வெண்பா

#37
செய்க தவம் செய்க தவம் நெஞ்சே தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம் வையகத்தில்
அன்பில் சிறந்த தவம் இல்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு
**கலித்துறை

#38
இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்
செயல் இங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும் சீர் மிகவே
பயிலும் நல் அன்பை இயல்பு எனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்
முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே
**விருத்தம்

#39
மொய்க்கும் கவலைப் பகை போக்கி முன்னோன் அருளைத் துணையாக்கி
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி உடலை இருப்புக்கு இணையாக்கிப்
பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண் முன்னே
மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதி இஃதே
**அகவல்

#40
விதியே வாழி விநாயகா வாழி
பதியே வாழி பரமா வாழி
சிதைவினை நீக்கும் தெய்வமே போற்றி
புது வினை காட்டும் புண்ணியா போற்றி
மதியினை வளர்க்கும் மன்னே போற்றி 5
இச்சையும் கிரியையும் ஞானமும் என்று ஆக்கு
மூல சக்தியின் முதல்வா போற்றி
பிறைமதி சூடிய பெருமாள் வாழி
நிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி
காலம் மூன்றையும் கடந்தான் வாழி 10
சக்தி தேவி சரணம் வாழி
வெற்றி வாழி வீரம் வாழி
பக்தி வாழி பலபல காலமும்
உண்மை வாழி ஊக்கம் வாழி
நல்ல குணங்களே நம்மிடை அமரர் 15
பதங்களாம் கண்டீர் பாரிடை மக்களே
கிருத யுகத்தினைக் கேடு இன்றி நிறுத்த
விரதம் நான் கொண்டனன் வெற்றி
தரும் சுடர் விநாயகன் தாள் இணை வாழியே
** விநாயகர் நான்மணிமாலை முற்றும்

@2 முருகன் பாட்டு
**ராகம் நாட்டைக் குறிஞ்சி தாளம் ஆதி
**பல்லவி

#0
முருகா முருகா முருகா
**சரணங்கள்

#1
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்

#2
அடியார் பலர் இங்கு உளரே
அவரை விடுவித்து அருள்வாய்
முடியா மறையின் முடிவே அசுரர்
முடிவே கருதும் வடிவேலவனே

#3
சுருதிப் பொருளே வருக
துணிவே கனலே வருக
சுருதிக் கருதிக் கவலைப்படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல்

#4
அமராவதி வாழ்வுறவே
அருள்வாய் சரணம் சரணம்
குமரா பிணி யாவையுமே சிதறக்
குமுறும் சுடர் வேலவனே சரணம்

#5
அறிவாகிய கோயிலிலே
அருளாகியதாய் மடி மேல்
பொறி வேலுடனே வளர்வாய் அடியார்
புது வாழ்வுறவே புவி மீது அருள்வாய்

#6
குருவே பரமன் மகனே
குகையில் வளரும் கனலே
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமராதிபனே சரணம் சரணம்

@3 வேலன் பாட்டு
**ராகம் புன்னாகவராளி தாளம் திஸ்ர ஏகம்

#1
வில்லினை ஒத்த புருவம் வளர்த்தனை வேலவா அங்கு ஓர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது வேலவா
சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியைக் கண்டு
சொக்கி மரம் என நின்றனை தென்மலைக் காட்டிலே
கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன்
கண் இரண்டாயிரம் காக்கைக்கு இரையிட்ட வேலவா
பல்லினைக் காட்டி வெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை ஒரு
பார்ப்பனக் கோலம் தரித்துக் கரம் தொட்ட வேலவா

#2
வெள் அலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை உடல்
வெம்பி மறுகிக் கருகிப் புகைய வெருட்டினாய்
கிள்ளை மொழிச் சிறு வள்ளி எனும் பெயர்ச் செல்வத்தை என்றும்
கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய்
கொள்ளைகொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் பானு
கோபன் தலை பத்துக் கோடி துணுக்குறக் கோபித்தாய்
துள்ளிக் குலாவித் திரியும் சிறுவன் மானைப் போல் தினைத்
தோட்டத்திலே ஒரு பெண்ணை மணம்கொண்ட வேலவா

#3
ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே கையில்
அஞ்சல் எனும் குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே
நீறுபடக் கொடும் பாவம் பிணி பசி யாவையும் இங்கு
நீங்கி அடியரை நித்தமும் காத்திடும் வேலவா
கூறுபடப் பல கோடி அவுணரின் கூட்டத்தைக் கண்டு
கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய்
மாறுபடப் பல வேறு வடிவொடு தோன்றுவாள் எங்கள்
வைரவி பெற்ற பெரும் கனலே வடிவேலவா

@4 கிளி விடு தூது
**பல்லவி

#0
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ
**அனுபல்லவி
வல்ல வேல் முருகன்தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவு என்று
**சரணங்கள்

#1
தில்லை அம்பலத்தே நடனம்
செய்யும் அமரர் பிரான் அவன்
செல்வத் திருமகனை இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடுவாய் என்று

#2
அல்லிக் குளத்து அருகே ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே அங்கு ஓர்
முல்லைச் செடியதன்பால் செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றது என்னே என்று

#3
பாலைவனத்திடையே தனைக் கைப்
பற்றி நடக்கையிலே தன் கை
வேலின் மிசை ஆணை வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய்வாய் என்று

@5 முருகன் பாட்டு

#1
வீரத் திருவிழிப் பார்வையும் வெற்றி
வேலும் மயிலும் என் முன் நின்றே எந்த
நேரத்திலும் என்னைக் காக்குமே அனை
நீலி பராசக்தி தண் அருள் கரை
ஓரத்திலே புணை கூடுதே கந்தன்
ஊக்கத்தை என் உளம் நாடுதே மலை
வாரத்திலே விளையாடுவான் என்றும்
வானவர் துன்பத்தைச் சாடுவான்

#2
வேடர் கனியை விரும்பியே தவ
வேடம் புனைந்து திரிகுவான் தமிழ்
நாடு பெரும் புகழ் சேரவே முனி
நாதனுக்கு இ மொழி கூறுவான் சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட இருள்
பார மலைகளைச் சீறுவான் மறை
ஏடு தரித்த முதல்வனும் குரு
என்றிட மெய்ப் புகழ் ஏறுவான்

#3
தேவர் மகளை மணந்திடத் தெற்குத்
தீவில் அசுரனை மாய்த்திட்டான் மக்கள்
யாவருக்கும் தலை ஆயினான் மறை
அர்த்தம் உணர்த்தும் நல் வாயினான் தமிழ்ப்
பாவலர்க்கு இன் அருள்செய்குவான் இந்தப்
பாரில் அறமழை பெய்குவான் நெஞ்சின்
ஆவல் அறிந்து அருள் கூட்டுவான் நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்

#4
தீ வளர்த்தே பழவேதியர் நின்றன்
சேவகத்தின் புகழ் காட்டினார் ஒளி
மீ வளரும் செம்பொன் நாட்டினார்
நின்றன் மேன்மையினால் அறம் நாட்டினார் ஐய
நீ வளரும் குரு வெற்பிலே வந்து
நின்று நின் சேவகம் பாடுவோம் வரம்
ஈவள் பராசக்தி அன்னைதான் உங்கள்
இன் அருளே என்று நாடுவோம் நின்றன்

@6 எமக்கு வேலை

#1
தோகை மேல் உலவும் கந்தன் சுடர்க் கரத்து இருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வேலை

@7 வள்ளிப் பாட்டு – 1
**பல்லவி

#0
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குற வள்ளீ சிறு கள்ளீ
**சரணங்கள்

#1
நேரத்திலே மலை வாரத்திலே நதி
ஓரத்திலே உனைக் கூடி நின்றன்
வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்திலே மனம்
மிக்க மகிழ்ச்சி கொண்டாடி குழல்
பாரத்திலே இதழ் ஈரத்திலே முலை
ஓரத்திலே அன்பு சூடி நெஞ்சம்
ஆரத் தழுவி அமர நிலை பெற்ற
தன் பயனை இன்று காண்பேன்

#2
வெள்ளை நிலா இங்கு வானத்தை மூடி
விரிந்து மொழிவது கண்டாய் ஒளிக்
கொள்ளையிலே உனைக் கூடி முயங்கிக்
குறிப்பினிலே ஒன்றுபட்டு நின்றன்
பிள்ளைக் கிளி மென் குதலையிலே மனம்
பின்னம் அறச் செல்லவிட்டு அடி
தெள்ளிய ஞானப் பெரும் செல்வமே நினைச்
சேர விரும்பினன் கண்டாய்

#3
வட்டங்களிட்டும் குளம் அகலாத
மணிப் பெரும் தெப்பத்தைப் போல நினை
விட்டுவிட்டுப் பல லீலைகள் செய்து நின்
மேனிதனை விடல் இன்றி அடி
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடும் காலை
இரவியைப் போன்ற முகத்தாய் முத்த
மிட்டுப் பல முத்தமிட்டுப் பல முத்த
மிட்டு உனைச் சேர்ந்திட வந்தேன்

@8 வள்ளிப் பாட்டு – 2
**ராகம் கரஹரப்ரியை தாளம்ஆதி
**பல்லவி

#0
உனையே மயல்கொண்டேன் வள்ளீ
உவமையில் அரியாய் உயிரினும் இனியாய்
**சரணம்

#1
எனை ஆள்வாய் வள்ளீ வள்ளீ
இளமயிலே என் இதய மலர் வாழ்வே
கனியே சுவையுறு தேனே
கலவியிலே அமுது அனையாய்
தனியே ஞான விழியாய் நிலவினில்
நினை மருவி வள்ளீ வள்ளீ
நீயாகிடவே வந்தேன்

@9 இறைவா இறைவா
**பல்லவி

#0
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள்
இறைவா இறைவா இறைவா
**சரணங்கள்

#1
சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு
சேரும் ஐம்பூதத்து வியன் உலகு அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபல நல் அழகுகள் சமைத்தாய்

#2
முக்தி என்று ஒரு நிலை சமைத்தாய் அங்கு
முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய்
பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய் எங்கள்
பரமா பரமா பரமா

@10 போற்றி அகவல்

#1
போற்றி உலகு ஒரு மூன்றையும் புணர்ப்பாய்
மாற்றுவாய் துடைப்பாய் வளர்ப்பாய் காப்பாய்
கனியிலே சுவையும் காற்றிலே இயக்கமும்
கலந்தால் போல நீ அனைத்திலும் கலந்தாய்
உலகு எலாம் தானாய் ஒளிர்வாய் போற்றி 5
அன்னை போற்றி அமுதமே போற்றி
புதியதில் புதுமையாய் முதியதில் முதுமையாய்
உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய்
உண்டு எனும் பொருளில் உண்மையாய் என் உளே
நான் எனும் பொருளாய் நானையே பெருக்கித் 10
தான் என மாற்றும் சாகாச் சுடராய்
கவலை நோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்
பிணி இருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்
யான் எனது இன்றி இருக்கும் நல் யோகியர்
ஞான மா மகுட நடுத் திகழ் மணியாய் 15
செய்கையாய் ஊக்கமாய் சித்தமாய் அறிவாய்
நின்றிடும் தாயே நித்தமும் போற்றி
இன்பம் கேட்டேன் ஈவாய் போற்றி
துன்பம் வேண்டேன் துடைப்பாய் போற்றி
அமுதம் கேட்டேன் அளிப்பாய் போற்றி 20
சக்தி போற்றி தாயே போற்றி
முக்தி போற்றி மோனமே போற்றி
சாவினை வேண்டேன் தவிர்ப்பாய் போற்றி

@11 சிவசக்தி

#1
இயற்கை என்று உரைப்பார் சிலர்
இணங்கும் ஐம்பூதங்கள் என்று இசைப்பார்
செயற்கையின் சக்தி என்பார் உயிர்த்
தீ என்பர் அறிவு என்பர் ஈசன் என்பர்
வியப்புறு தாய் நினக்கே இங்கு
வேள்விசெய்திடும் எங்கள் ஓம் என்னும்
நயப்படு மது உண்டே சிவ
நாட்டியம் காட்டி நல் அருள்புரிவாய்

#2
அன்புறு சோதி என்பார் சிலர்
ஆரிருள் காளி என்று உனைப் புகழ்வார்
இன்பம் என்று உரைத்திடுவார் சிலர்
எண்ணரும் துன்பம் என்று உனை இசைப்பார்
புன் பலி கொண்டுவந்தோம் அருள்
பூண்டு எமைத் தேவர்தம் குலத்து இடுவாய்
மின்படு சிவசக்தி எங்கள்
வீரை நின் திருவடி சரண்புகுந்தோம்

#3
உண்மையில் அமுது ஆவாய் புண்கள்
ஒழித்திடுவாய் களி உதவிடுவாய்
வண்மை கொள் உயிர்ச் சுடராய் இங்கு
வளர்ந்திடுவாய் என்றும் மாய்வதிலாய்
ஒண்மையும் ஊக்கமும்தான் என்றும்
ஊறிடும் திருவருள் சுனை ஆவாய்
அண்மையில் என்றும் நின்றே எம்மை
ஆதரித்து அருள்செய்யும் விரதமுற்றாய்

#4
தெளிவுறும் அறிவினை நாம் கொண்டு
சேர்த்தனம் நினக்கு அது சோமரசம்
ஒளியுறும் உயிர்ச் செடியில் இதை
ஓங்கிடும் அதி வலிதனில் பிழிந்தோம்
களியுறக் குடித்திடுவாய் நின்றன்
களிநடம் காண்பதற்கு உளம் கனிந்தோம்
குளிர் சுவைப் பாட்டு இசைத்தே சுரர்
குலத்தினில் சேர்ந்திடல் விரும்புகின்றோம்

#5
அச்சமும் துயரும் என்றே இரண்டு
அசுரர் வந்து எமை இங்கு சூழ்ந்து நின்றார்
துச்சம் இங்கு இவர் படைகள் பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்
இச்சையுற்று இவர் அடைந்தார் எங்கள்
இன் அமுதைக் கவர்ந்து ஏகிடவே
பிச்சை இங்கு எமக்கு அளித்தாய் ஒரு
பெருநகர் உடல் எனும் பெயரினதாம்

#6
கோடி மண்டபம் திகழும் திறல்
கோட்டை இங்கு இதை அவர் பொழுது அனைத்தும்
நாடி நின்று இடர் புரிவார் உயிர்
நதியினைத் தடுத்து எமை நலித்திடுவார்
சாடு பல் குண்டுகளால் ஒளி
சார் மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்
பாடி நின்று உனைப் புகழ்வோம் எங்கள்
பகைவரை அழித்து எமைக் காத்திடுவாய்

#7
நின் அருள் வேண்டுகின்றோம் எங்கள்
நீதியும் தர்மமும் நிலைப்பதற்கே
பொன் அவிர் கோயில்களும் எங்கள்
பொற்பு உடை மாதரும் மதலையரும்
அன்ன நல் அணி வயல்கள் எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும்
இன்னவை காத்திடவே அன்னை
இணை மலர்த் திருவடி துணைபுகுந்தோம்

#8
எம் உயிர் ஆசைகளும் எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும்
செம்மையுற்றிட அருள்வாய் நின்றன்
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்
மும்மையின் உடைமைகளும் திரு
முன்னர் இட்டு அஞ்சலி செய்து நிற்போம்
அம்மை நல் சிவசக்தி எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்

@12 காணி நிலம் வேண்டும்

#1
காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும் அங்கு
தூணில் அழகியதாய் நன் மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தர வேண்டும் அங்கு
கேணி அருகினிலே தென்னை மரம்
கீற்றும் இளநீரும்

#2
பத்துப் பன்னிரண்டு தென்னை மரம்
பக்கத்திலே வேணும் நல்ல
முத்துச் சுடர் போலே நிலாவொளி
முன்பு வர வேணும் அங்கு
கத்தும் குயில் ஓசை சற்றே வந்து
காதில் பட வேணும் என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம்
தென்றல் வர வேணும்

#3
பாட்டுக் கலந்திடவே அங்கே ஒரு
பத்தினிப் பெண் வேணும் எங்கள்
கூட்டுக் களியினிலே கவிதைகள்
கொண்டு தர வேணும் அந்தக்
காட்டு வெளியினிலே அம்மா நின்றன்
காவலுற வேணும் என்றன்
பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப்
பாலித்திட வேணும்

@13 நல்லதோர் வீணை

#1
நல்லதோர் வீணை செய்தே அதை
நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி எனைச்
சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி நிலச்
சுமை என வாழ்ந்திடப் புரிகுவையோ

#2
விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்
நசை அறு மனம் கேட்டேன் நித்தம்
நவம் எனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீ சுடினும் சிவ
சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்
அசைவறு மதி கேட்டேன் இவை
அருள்வதில் உனக்கு எதும் தடை உளதோ

@14 மஹாசக்திக்கு விண்ணப்பம்

#1
மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு அல்லால் அதில்
சிந்தனை மாய்த்துவிடு
யோகத்து இருத்திவிடு அல்லால் என்றன்
ஊனைச் சிதைத்துவிடு
ஏகத்து இருந்து உலகம் இங்கு உள்ள
யாவையும் செய்பவளே

#2
பந்தத்தை நீக்கிவிடு அல்லால் உயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு அல்லால் இதைச்
செத்த உடலாக்கு
இந்தப் பதர்களையே நெல்லாம் என
எண்ணி இருப்பேனோ
எந்தப் பொருளிலுமே உள்ளே நின்று
இயங்கி இருப்பவளே

#3
உள்ளம் குளிராதோ பொய் ஆணவ
ஊனம் ஒழியாதோ
கள்ளம் உருகாதோ அம்மா பக்திக்
கண்ணீர் பெருகாதோ
வெள்ளக் கருணையிலே இ நாய் சிறு
வேட்கை தவிராதோ
விள்ளற்கு அரியவளே அனைத்திலும்
மேவி இருப்பவளே

@15 அன்னையை வேண்டுதல்

#1
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போலே
நண்ணிய நின் முன் இங்கு நசித்திட வேண்டும் அன்னாய்

@16 பூலோக குமாரி
**பல்லவி

#0
பூலோக குமாரி ஹே அம்ருத நாரி
**அனுபல்லவி
ஆலோக ஸ்ருங்காரி அம்ருத கலச குச பாரே
கால பய குடாரி காம வாரி கன லதா ரூப கர்வ திமிராரே
**சரணம்

#1
பாலே ரஸ ஜாலே பகவதி ப்ரஸீத காலே
நீல ரத்ன மய நேத்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே
லீலா ஜ்வாலா நிர்மிதவாணீ நிரந்தரே நிகில லோகேசாநி
நிருபம ஸுந்தரி நித்யகல்யாணி நிஜம் மாம் குரு ஹே மன்மத ராணி

@17 மஹா சக்தி வெண்பா

#1
தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதம் காக்கும் மஹாசக்தி அன்னை
அவளே துணை என்று அனவரதம் நெஞ்சம்
துவளாது இருத்தல் சுகம்

#2
நெஞ்சில் கவலை நிதமும் பயிராக்கி
அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை தஞ்சம் என்றே
வையம் எலாம் காக்கும் மஹாசக்தி நல் அருளை
ஐயம் அறப் பற்றல் அறிவு

#3
வையகத்துக்கு இல்லை மனமே நினக்கு நலம்
செய்யக் கருதி இவை செப்புவேன் பொய் இல்லை
எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும் என்ற
சொல்லால் அழியும் துயர்

#4
எண்ணிற்கு அடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணில் சுடர்கின்ற மீனை எல்லாம் பண்ணியதோர்
சக்தியே நம்மை சமைத்தது காண் நூறாண்டு
பக்தியுடன் வாழும்படிக்கு

@18 ஓம் சக்தி

#1
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணிப் பூண்
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ
வஞ்சனை இன்றிப் பகை இன்றிச் சூது இன்றி வையக மாந்தர் எல்லாம்
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

#2
நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கு இழைப்பாள்
அல்லது நீங்கும் என்றே உலகு ஏழும் அறைந்திடுவாய் முரசே
சொல்லத் தகுந்த பொருள் அன்று காண் இங்கு சொல்லும் அவர்தமையே
அல்லல் கெடுத்து அமரர்க்கு இணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

#3
நம்புவதே வழி என்ற மறைதன்னை நாம் இன்று நம்பிவிட்டோம்
கும்பிட்டு எந்நேரமும் சக்தி என்றால் உனைக் கும்பிடுவேன் மனமே
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சம் இல்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

#4
பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு போற்றி உனக்கு இசைத்தோம்
அன்னை பராசக்தி என்று உரைத்தோம் தளை அத்தனையும் களைந்தோம்
சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறு இல்லை காண்
இன்னும் அதே உரைப்போம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

#5
வெள்ளை மலர் மிசை வேதக் கருப்பொருளாக விளங்கிடுவாய்
தெள்ளு கலைத் தமிழ் வாணி நினக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன்
எள்ளத்தனை பொழுதும் பயன் இன்றி இராது என்றன் நாவினிலே
வெள்ளம் எனப் பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல்

@19 பராசக்தி

#1
கதைகள் சொல்லிக் கவிதை எழுது என்பார் காவியம் பல நீண்டன கட்டு என்பார்
விதவிதப்படு மக்களின் சித்திரம் மேவி நாடகச் செய்யுளை வேவு என்பார்
இதயமோ எனில் காலையும் மாலையும் எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்
எதையும் வேண்டிலது அன்னை பராசக்தி இன்பம் ஒன்றினைப் பாடுதல் அன்றியே

#2
நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நையப் பாடு என்று ஒரு தெய்வம் கூறுமே
கூட்டி மானுடச் சாதியை ஒன்று எனக் கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டிலே அறம் காட்டு எனும் ஓர் தெய்வம் பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும்
ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன் கவி ஓது எனும் வேறு ஒன்றே

#3
நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேல் நிலை எய்தவும்
பாட்டிலே தனி இன்பத்தை நாட்டவும் பண்ணிலே களி கூட்டவும் வேண்டி நான்
மூட்டும் அன்புக் கனலொடு வாணியை முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல்
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்

#4
மழை பொழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான் வான் இருண்டு கரும் புயல் கூடியே
இழையும் மின்னல் சரேலென்று பாயவும் ஈர வாடை இரைந்து ஒலி செய்யவும்
உழை எலாம் இடையின்றி இவ் வான நீர் ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண் வாழ்க தாய் என்று பாடும் என் வாணியே

#5
சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள் சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள்
அல்லினுக்குள் பெரும் சுடர் காண்பவர் அன்னை சக்தியின் மேனி நலம் கண்டார்
கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால் கால வெள்ளத்திலே நிலை காணுங்கால்
புல்லினில் வயிரப் படை காணுங்கால் பூதலத்தில் பராசக்தி தோன்றுமே

@20 சக்திக் கூத்து
**ராகம் பியாக்
**பல்லவி

#0
தகத் தகத் தகத் தகதக என்று ஆடோமோ சிவ
சக்தி சக்தி சக்தி சக்தி என்று பாடோமோ
**சரணங்கள்

#1
அகத்து அகத்து அகத்தினிலே உள் நின்றாள் அவள்
அம்மை அம்மை எம்மை நாடு பொய் வென்றாள்
தகத்தக நமக்கு அருள்புரிவாள் தாள் ஒன்றே
சரணம் என்று வாழ்த்திடுவோம் நாம் என்றே

#2
புகப்புகப் புக இன்பமடா போது எல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூது எல்லாம்
குகைக்குள் அங்கே இருக்குதடா தீ போலே அது
குழந்தையதன் தாய் அடிக் கீழ் சேய் போலே

#3
மிகத் தகைப்படு களியினிலே மெய் சோர உன்
வீரம் வந்து சோர்வை வென்று கைதேர
சகத்தினில் உள்ள மனிதர் எல்லாம் நன்றுநன்று என நாம்
சதிருடனே தாளம் இசை இரண்டும் ஒன்று என

#4
இந்திரனார் உலகினிலே நல் இன்பம்
இருக்குது என்பார் அதனை இங்கே கொண்டு எய்தி
மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம் நல்ல
மதமுறவே அமுத நிலை கண்டு எய்தி

@21 சக்தி

#1
துன்பம் இலாத நிலையே சக்தி தூக்கம் இலாக் கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்பம் முதிர்ந்த முதிர்வே சக்தி எண்ணத்து இருக்கும் எரியே சக்தி
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி முக்தி நிலையின் முடிவே சக்தி

#2
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி சொல்லில் விளங்கும் சுடரே சக்தி
தீம் பழம்தன்னில் சுவையே சக்தி தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி
பாம்பை அடிக்கும் படையே சக்தி பாட்டினில் வந்த களியே சக்தி
சாம்பரைப் பூசி மலை மிசை வாழும் சங்கரன் அன்புத் தழலே சக்தி

#3
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மாநிலம் காக்கும் மதியே சக்தி
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி விண்ணை அளக்கும் விரிவே சக்தி
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத்து ஒளிரும் உயர்வே சக்தி

@22 வையம் முழுதும்
**கண்ணிகள்

#1
வையம் முழுதும் படைத்து அளிக்கின்ற மஹாசக்திதன் புகழ் வாழ்த்துகின்றோம்
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி சேர்ந்திட நல் அருள்செய்க என்றே

#2
பூதங்கள் ஐந்தில் இருந்து எங்கும் கண்ணில் புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம்
வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை மேன்மையுறச் செய்தல் வேண்டும் என்றே

#3
வேகம் கவர்ச்சி முதலிய பல் வினை மேவிடும் சக்தியை மேவுகின்றோம்
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை யாங்கள் அறிந்திட வேண்டும் என்றே

#4
உயிர் எனத் தோன்றி உணவு கொண்டே வளர்ந்து ஓங்கிடும் சக்தியை ஓதுகின்றோம்
பயிரினைக் காக்கும் மழை என எங்களைப் பாலித்து நித்தம் வளர்க்க என்றே

#5
சித்தத்திலே நின்று சேர்வது உணரும் சிவசக்திதன் புகழ் செப்புகின்றோம்
இத் தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்குத் தெரிந்திடல் வேண்டும் என்றே

#6
மாறுதல் இன்றிப் பராசக்திதன் புகழ் வையம் மிசை நித்தம் பாடுகின்றோம்
நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டும் என்றே

#7
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்று உரைசெய்திடுவோம்
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார் சுடர் ஒண்மை கொண்டார் உயிர் வண்மை கொண்டார்

@23 சக்தி விளக்கம்

#1
ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் அதை அன்னை எனப் பணிதல் ஆக்கம்
சூது இல்லை காணும் இந்த நாட்டீர் மற்றத் தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம்

#2
மூலப் பழம்பொருளின் நாட்டம் இந்த மூன்று புவியும் அதன் ஆட்டம்
காலப் பெரும் களத்தின் மீதே எங்கள் காளி நடம் உலகக் கூட்டம்

#3
காலை இளவெயிலின் காட்சி அவள் கண் ஒளி காட்டுகின்ற மாட்சி
நீல விசும்பினிடை இரவில் சுடர் நேமி அனைத்தும் அவள் ஆட்சி

#4
நாரணன் என்று பழவேதம் சொல்லும் நாயகன் சக்தி திருப்பாதம்
சேரத் தவம் புரிந்து பெறுவார் இங்கு செல்வம் அறிவு சிவபோதம்

#5
ஆதி சிவனுடைய சக்தி எங்கள் அன்னை அருள் பெறுதல் முக்தி
மீதி உயிர் இருக்கும்போதே அதை வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி

#6
பண்டை விதியுடைய தேவி வெள்ளைப் பாரதி அன்னை அருள் மேவி
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் பல கற்றல் இல்லாதவன் ஓர் பாவி

#7
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று அந்த மூலப் பொருள் ஒளியின் குன்று
நேர்த்தி திகழும் அந்த ஒளியை எந்த நேரமும் போற்று சக்தி என்று

@24 சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்
**ராகம் பூபாளம் தாளம் சதுஸ்ர ஏகம்

#1
கையைச்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சாதனைகள் யாவினையும் கூடும் கையைச்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தியுற்றுக் கல்லினையும் சாடும்

#2
கண்ணைச்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி வழியதனைக் காணும் கண்ணைச்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சத்தியமும் நல் அருளும் பூணும்

#3
செவி
சக்திதனக்கே கருவியாக்கு சிவ
சக்தி சொலும் மொழியது கேட்கும் செவி
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி திருப்பாடலினை வேட்கும்

#4
வாய்
சக்திதனக்கே கருவியாக்கு சிவ
சக்தி புகழினை அது முழங்கும் வாய்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி நெறி யாவினையும் வழங்கும்

#5
சிவ
சக்திதனை நாசி நித்தம் முகரும் அதைச்
சக்திதனக்கே கருவியாக்கு சிவ
சக்தி திருச்சுவையினை நுகரும் சிவ
சக்திதனக்கே எமது நாக்கு

#6
மெய்யைச்
சக்திதனக்கே கருவியாக்கு சிவ
சக்தி தரும் திறன் அதில் ஏறும் மெய்யைச்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சாதல் அற்ற வழியினைத் தேறும்

#7
கண்டம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சந்ததமும் நல் அமுதைப் பாடும் கண்டம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தியுடன் என்றும் உறவாடும்

#8
தோள்
சக்திதனக்கே கருவியாக்கு அது
தாரணியும் மேலுலகும் தாங்கும் தோள்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி பெற்று மேரு என ஓங்கும்

#9
நெஞ்சம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தியுற நித்தம் விரிவாகும் நெஞ்சம்
சக்திதனக்கே கருவியாக்கு அதைத்
தாக்க வரும் வாள் ஒதுங்கிப் போகும்

#10
சிவ
சக்திதனக்கே எமது வயிறு அது
சாம்பரையும் நல்ல உணவாக்கும் சிவ
சக்திதனக்கே எமது வயிறு அது
சக்தி பெற உடலினைக் காக்கும்

#11
இடை
சக்திதனக்கே கருவியாக்கு நல்ல
சக்தி உள்ள சந்ததிகள் தோன்றும் இடை
சக்திதனக்கே கருவியாக்கு நின்றன்
சாதி முற்றும் நல் அறத்தில் ஊன்றும்

#12
கால்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சாடி எழு கடலையும் தாவும் கால்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சஞ்சலம் இல்லாமல் எங்கும் மேவும்

#13
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சஞ்சலங்கள் தீர்ந்து ஒருமை கூடும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அதில்
சாத்துவிகத் தன்மையினைச் சூடும்

#14
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி அற்ற சிந்தனைகள் தீரும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அதில்
சாரும் நல்ல உறுதியும் சீரும்

#15
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி சக்தி சக்தி என்று பேசும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அதில்
சார்ந்திருக்கும் நல்லுறவும் தேசும்

#16
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி நுட்பம் யாவினையும் நாடும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தி சக்தி என்று குதித்து ஆடும்

#17
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சக்தியினை எத் திசையும் சேர்க்கும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
தான் விரும்பில் மா மலையைப் பேர்க்கும்

#18
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அது
சந்தமும் சக்திதனைச் சூழும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு அதில்
சாவு பெறும் தீவினையும் ஊழும்

#19
மனம்
சக்திதனக்கே உரிமையாக்கு எதைத்
தான் விரும்பினாலும் வந்து சாரும் மனம்
சக்திதனக்கே உரிமையாக்கு உடல்
தன்னில் உயர் சக்தி வந்து சேரும்

#20
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு இந்தத்
தாரணியில் நூறு வயது ஆகும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு உன்னைச்
சார வந்த நோய் அழிந்துபோகும்

#21
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு தோள்
சக்தி பெற்று நல்ல தொழில் செய்யும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு எங்கும்
சக்தி அருள் மாரி வந்து பெய்யும்

#22
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு சிவ
சக்தி நடை யாவும் நன்கு பழகும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு முகம்
சார்ந்து இருக்கும் நல் அருளும் அழகும்

#23
மனம்
சக்திதனக்கே கருவியாக்கு உயர்
சாத்திரங்கள் யாவும் நன்கு தெரியும் மனம்
சக்திதனக்கே கருவியாக்கு நல்ல
சத்திய விளக்கு நித்தம் எரியும்

#24
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு நல்ல
தாள வகை சந்த வகை காட்டும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அதில்
சாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும்

#25
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அறு
சக்தியை எல்லோர்க்கும் உணர்வுறுத்தும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு
சக்தி புகழ் திக்கு அனைக்கும் நிறுத்தும்

#26
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி சக்தி என்று குழல் ஊதும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அதில்
சார்வது இல்லை அச்சமுடன் சூதும்

#27
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி என்று வீணைதனில் பேசும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி பரிமளம் இங்கு வீசும்

#28
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி என்று தாளமிட்டு முழக்கும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும்

#29
சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி வந்து கோட்டைகட்டி வாழும் சித்தம்
சக்திதனக்கே உரிமையாக்கு அது
சக்தி அருள் சித்திரத்தில் ஆழும்

#30
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சங்கடங்கள் யாவினையும் உடைக்கும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அங்கு
சத்தியமும் நல் அறமும் கிடைக்கும்

#31
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சார வரும் தீமைகளை விலக்கும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும்

#32
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சக்தி உறைவிடங்களை நாடும்

#33
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தர்க்கம் எனும் காட்டில் அச்சம் நீக்கும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
தள்ளிவிடும் பொய் நெறியும் தீங்கும்

#34
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
சஞ்சலத்தின் தீய இருள் விலகும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
சக்தி ஒளி நித்தமும் நின்று இலகும்

#35
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
சார்வதில்லை ஐயம் எனும் பாம்பு மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
தான் முளைக்கும் முக்தி விதைக் காம்பு

#36
மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தாரணியில் அன்பு நிலைநாட்டும் மதி
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சர்வ சிவசக்தியினைக் காட்டும்

#37
மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது
சக்தி திருவருளினைச் சேர்க்கும் மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது
தாமதப் பொய்த் தீமைகளைப் போக்கும்

#38
மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது
சத்தியத்தின் வெல் கொடியை நாட்டும் மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது
தாக்க வரும் பொய்ப் புலியை ஓட்டும்

#39
மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது
சத்திய நல் இரவியைக் காட்டும் மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அதில்
சார வரும் புயல்களை வாட்டும்

#40
மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது
சக்தி விரதத்தை என்றும் பூணும் மதி
சக்தி விரதத்தை என்றும் காத்தால் சிவ
சக்தி தரும் இன்பமும் நல் ஊணும்

#41
மதி
சக்திதனக்கே அடிமையாக்கு தெளி
தந்து அமுதப் பொய்கை என ஒளிரும் மதி
சக்திதனக்கே அடிமையாக்கு அது
சந்ததமும் இன்பமுற மிளிரும்

#42
அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தன்னை ஒரு சக்தி என்று தேரும் அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தாமதமும் ஆணவமும் தீரும்

#43
அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தன்னை அவள் கோயில் என்று காணும் அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது
தன்னை எண்ணித் துன்பமுற நாணும்

#44
அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சக்தி எனும் கடலில் ஓர் திவலை அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு சிவ
சக்தி உண்டு நமக்கு இல்லை கவலை

#45
அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அதில்
சக்தி சிவநாதம் நித்தம் ஒலிக்கும் அகம்
சக்திதனக்கே உடைமையாக்கு அது
சக்தி திருமேனி ஒளி ஜ்வலிக்கும்

#46
சிவ
சக்தி என்றும் வாழி என்று பாடு சிவ
சக்தி சக்தி என்று குதித்து ஆடு சிவ
சக்தி என்றும் வாழி என்று பாடு சிவ
சக்தி சக்தி என்று விளையாடு

@25 சக்தி திருப்புகழ்

#1
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்று ஓது
சக்தி சக்தி சக்தீ என்பார் சாகார் என்றே நின்று ஓது

#2
சக்தி சக்தி என்றே வாழ்தல் சால்பாம் நம்மைச் சார்ந்தீரே
சக்தி சக்தி என்றீராகில் சாகா உண்மை சேர்ந்தீரே

#3
சக்தி சக்தி என்றால் சக்தி தானே சேரும் கண்டீரே
சக்தி சக்தி என்றால் வெற்றி தானே நேரும் கண்டீரே

#4
சக்தி சக்தி என்றே செய்தால் தானே செய்கை நேராகும்
சக்தி சக்தி என்றால் அஃது தானே முத்தி வேர் ஆகும்

#5
சக்தி சக்தி சக்தீ சக்தீ என்றே ஆடோமோ
சக்தி சக்தி சக்தீ என்றே தாளம் கொட்டிப் பாடோமோ

#6
சக்தி சக்தி என்றால் துன்பம் தானே தீரும் கண்டீரே
சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும் கண்டீரே

#7
சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும் கண்டீரோ
சக்தி சக்தி என்றால் கல்வி தானே தேறும் கண்டீரோ

#8
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ

#9
சக்தி சக்தி வாழீ என்றால் சம்பத்து எல்லாம் நேராகும்
சக்தி சக்தி என்றால் சக்திதாசன் என்றே பேர் ஆகும்

@26 சிவசக்தி புகழ்
**ராகம் தன்யாசி தாளம் சதுஸ்ர ஏகம்

#1
ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு

#2
ஓம் சக்தி மிசை பாடல் பல பாடு ஓம்
சக்தி சக்தி என்று தாளம் போடு
சக்தி தரும் செய்கை நிலம்தனிலே சிவ
சக்தி வெறிகொண்டு களித்து ஆடு

#3
ஓம் சக்திதனையே சரணம்கொள்ளு என்றும்
சாவினுக்கு ஓர் அச்சம் இல்லை தள்ளு
சக்தி புகழாம் அமுதை அள்ளு மது
தன்னில் இனிப்பு ஆகும் அந்தக் கள்ளு

#4
ஓம் சக்தி செய்யும் புதுமைகள் பேசு நல்ல
சக்தி அற்ற பேடிகளை ஏசு
சக்தி திருக்கோயில் உள்ளம் ஆக்கி அவள்
தந்திடும் நல் குங்குமத்தைப் பூசு

#5
ஓம் சக்தியினைச் சேர்ந்தது இந்தச் செய்கை இதைச்
சார்ந்து நிற்பதே நமக்கு ஒர் உய்கை
சக்தி எனும் இன்பம் உள்ள பொய்கை அதில்
தன் அமுத மாரி நித்தம் பெய்கை

#6
ஓம் சக்தி சக்தி சக்தி என்று நாட்டு சிவ
சக்தி அருள் பூமிதனில் காட்டு
சக்தி பெற்ற நல்ல நிலை நிற்பார் புவிச்
சாதிகள் எல்லாம் அதனைக் கேட்டு

#7
ஓம் சக்தி சக்தி சக்தி என்று முழங்கு அவள்
தந்திரம் எல்லாம் உலகில் வழங்கு
சக்தி அருள் கூடிவிடுமாயின் உயிர்
சந்ததமும் வாழும் நல்ல கிழங்கு

#8
ஓம் சக்தி செய்யும் தொழில்களை எண்ணு நித்தம்
சக்தி உள்ள தொழில் பல பண்ணு
சக்திகளையே இழந்துவிட்டால் இங்கு
சாவினையும் நோவினையும் உண்ணு

#9
ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு
சக்தி சில சோதனைகள் செய்தால் அவள்
தண் அருள் என்றே மனது தேறு

#10
ஓம் சக்தி துணை என்று நம்பி வாழ்த்து சிவ
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து
சக்தியும் சிறப்பும் மிகப் பெறுவாய் சிவ
சக்தி அருள் வாழ்க என்று வாழ்த்து

@27 பேதை நெஞ்சே

#1
இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே
எதற்கும் இனி உளைவதிலே பயன் ஒன்று இல்லை
முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை
முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை
மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே
வையகத்தில் பொருள் எல்லாம் சலித்தல் கண்டாய்
பின்னை ஒரு கவலையும் இங்கு இல்லை நாளும்
பிரியாதே விடுதலையைப் பிடித்துக்கொள்வாய்

#2
நினையாத விளைவு எல்லாம் விளைந்து கூடி
நினைத்த பயன் காண்பது அவள் செய்கை அன்றோ
மனமார உண்மையினைப் புரட்டலாமோ
மஹாசக்தி செய்த நன்றி மறக்கலாமோ
எனை ஆளும் மா தேவி வீரர் தேவி
இமையவரும் தொழும் தேவி எல்லைத் தேவி
மனை வாழ்வு பொருள் எல்லாம் வகுக்கும் தேவி
மலரடியே துணை என்று வாழ்த்தாய் நெஞ்சே

#3
சக்தி என்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்
சங்கரன் என்று உரைத்திடுவோம் கண்ணன் என்போம்
நித்தியம் இங்கு அவள் சரணே நிலை என்று எண்ணி
நினக்கு உள்ள குறைகள் எல்லாம் தீர்க்கச் சொல்லி
பக்தியினால் பெருமை எல்லாம் கொடுக்கச் சொல்லி
பசி பிணிகள் இல்லாமல் காக்கச் சொல்லி
உத்தம நல் நெறிகளிலே சேர்க்கச் சொல்லி
உலகளந்தநாயகி தாள் உரைப்பாய் நெஞ்சே

#4
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்
சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்
கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்
தொல்லை தரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்
துணை என்று நின் அருளைத் தொடரச் செய்தே
நல்ல வழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்
நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே

#5
பாட்டினிலே சொல்வதும் அவள் சொல் ஆகும் பயன்
இன்றி உரைப்பாளோ பாராய் நெஞ்சே
கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயம் இல்லை
கேடு இல்லை தெய்வம் உண்டு வெற்றி உண்டு
மீட்டும் உனக்கு உரைத்திடுவேன் ஆதி சக்தி
வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி
நாட்டினிலே சனகனைப் போல் நமையும் செய்தாள்
நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே

@28 மஹாசக்தி

#1
சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன்
சரணம் என்று புகுந்துகொண்டேன்
இந்திரியங்களை வென்றுவிட்டேன்
எனது என் ஆசையைக் கொன்றுவிட்டேன்

#2
பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னாள்
பக்திசெய்து பிழைக்கச் சொன்னாள்
துயர் இலாது எனைச் செய்துவிட்டாள்
துன்பம் என்பதைக் கொய்துவிட்டாள்

#3
மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்
வான்கண் உள்ள வெளியைச் செய்தாள்
வாழி நெஞ்சில் களியைச் செய்தாள்

@29 நவராத்திரிப் பாட்டு
**(உஜ்ஜயினி)

#1
உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

#2
உஜ்ஜய காரண சங்கர தேவீ
உமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா

#3
வாழி புனைந்து மஹேசுவர தேவன்
தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம்

#4
சத்ய யுகத்தை அகத்தில் இருத்தி
திறத்தை நமக்கு அருளிச் செய்யும் உத்தமி

@30 காளிப் பாட்டு

#1
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் காளி தெய்வ லீலை அன்றோ
பூதம் ஐந்தும் ஆனாய் காளி பொறிகள் ஐந்தும் ஆனாய்
போதம் ஆகி நின்றாய் காளி பொறியை விஞ்சி நின்றாய்

#2
இன்பம் ஆகிவிட்டாய் காளி என் உளே புகுந்தாய்
பின்பு நின்னை அல்லால் காளி பிறிது நானும் உண்டோ
அன்பு அளித்துவிட்டாய் காளி ஆண்மை தந்துவிட்டாய்
துன்பம் நீக்கிவிட்டாய் காளி தொல்லை போக்கிவிட்டாய்

@31 காளி ஸ்தோத்திரம்

#1
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்கள் அன்றி இல்லை
போதும் இங்கு மாந்தர் வாழும் பொய்ம்மை வாழ்க்கை எல்லாம்
ஆதி சக்தி தாயே என் மீது அருள்புரிந்து காப்பாய்

#2
எந்த நாளும் நின் மேல் தாயே இசைகள் பாடி வாழ்வேன்
கந்தனைப் பயந்தாய் தாயே கருணை வெள்ளம் ஆனாய்
மந்தமாருதத்தில் வானில் மலையின் உச்சி மீதில்
சிந்தை எங்கு செல்லும் அங்கு உன் செம்மை தோன்றும் அன்றே

#3
கர்மயோகம் என்றே உலகில் காக்கும் என்னும் வேதம்
தர்ம நீதி சிறிதும் இங்கே தவறல் என்பது இன்றி
மர்மமான பொருளாம் நின்றன் மலரடிக்கண் நெஞ்சம்
செம்மையுற்று நாளும் சேர்ந்தே தேசு கூட வேண்டும்

#4
என்றன் உள்ள வெளியில் ஞானத்து இரவி ஏற வேண்டும்
குன்றம் ஒத்த தோளும் மேருக் கோலம் ஒத்த வடிவும்
நன்றை நாடும் மனமும் நீ எந்நாளும் ஈதல் வேண்டும்
ஒன்றை விட்டு மற்று ஓர் துயரில் உழலும் நெஞ்சம் வேண்டா

#5
வானகத்தின் ஒளியைக் கண்டே மனமகிழ்ச்சி பொங்கி
யான் எதற்கும் அஞ்சேன் ஆகி எந்த நாளும் வாழ்வேன்
ஞானம் ஒத்தது அம்மா உவமை நான் உரைக்கொணாதாம்
வானகத்தின் ஒளியின் அழகை வாழ்த்துமாறு யாதோ

#6
ஞாயிறு என்ற கோளம் தரும் ஓர் நல்ல பேரொளிக்கே
தேயம் ஈது ஓர் உவமை எவரே தேடி ஓத வல்லார்
வாய் இனிக்கும் அம்மா அழகாம் மதியின் இன்ப ஒளியை
நேயமோடு உரைத்தால் அங்கே நெஞ்சு இளக்கம் எய்தும்

#7
காளி மீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும்
வேளை ஒத்த விறலும் பாரில் வேந்தர் ஏத்து புகழும்
யாளி ஒத்த வலியும் என்றும் இன்பம் நிற்கும் மனமும்
வாழி ஈதல் வேண்டும் அன்னாய் வாழ்க நின்றன் அருளே

@32 யோக சக்தி
**வரங் கேட்டல்

#1
விண்ணும் மண்ணும் தனி ஆளும் எங்கள் வீரை சக்தி நினது அருளே என்றன்
கண்ணும் கருத்தும் எனக் கொண்டு அன்பு கசிந்து கசிந்து கசிந்துருகி நான்
பண்ணும் பூசனைகள் எல்லாம் வெறும் பாலைவனத்தில் இட்ட நீரோ உனக்கு
எண்ணும் சிந்தை ஒன்று இலையோ அறிவில்லாது அகிலம் அளிப்பாயோ

#2
நீயே சரணம் என்று கூவி என்றன் நெஞ்சில் பேர் உறுதிகொண்டு அடி
தாயே எனக்கு மிக நிதியும் அறம்தன்னைக் காக்கும் ஒரு திறனும் தரு
வாயே என்று பணிந்து ஏத்திப் பலவாறா நினது புகழ் பாடி வாய்
ஓயேன் ஆவது உணராயோ நினது உண்மை தவறுவதோ அழகோ

#3
காளீ வலிய சாமுண்டி ஓங்காரத் தலைவி என் இராணி பல
நாள் இங்கு எனை அலைக்கலாமோ உள்ளம் நாடும் பொருள் அடைதற்கு அன்றோ மலர்த்
தாளில் விழுந்து அபயம் கேட்டேன் அது தாராயெனில் உயிரைத் தீராய் துன்பம்
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கருநீலி என் இயல்பு அறியாயோ

#4
தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பம் மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரை எனப் பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ

#5
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் அவை நேரே இன்று எனக்குத் தருவாய் என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் இன்னும் மூளாது அழிந்திடுதல் வேண்டும் இனி
என்னைப் புதிய உயிர் ஆக்கி எனக்கு ஏதும் கவலை அறச் செய்து மதி
தன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டு இருக்கச் செய்வாய்

#6
தோளை வலியுடையது ஆக்கி உடல் சோர்வும் பிணி பலவும் போக்கி அரி
வாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடலுறுதி தந்து சுடர்
நாளைக் கண்டதோர் மலர் போல் ஒளி நண்ணித் திகழும் முகம் தந்து மத
வேளை வெல்லும் முறை கூறித் தவ மேன்மை கொடுத்து அருளல் வேண்டும்

#7
எண்ணும் காரியங்கள் எல்லாம் வெற்றி ஏறப் புரிந்து அருளல் வேண்டும் தொழில்
பண்ணப் பெரு நிதியம் வேண்டும் அதில் பல்லோர் துணைபுரிதல் வேண்டும் சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் மிக நன்றா உளத்து அழுந்தல் வேண்டும் பல
பண்ணில் கோடி வகை இன்பம் நான் பாடத் திறனடைதல் வேண்டும்

#8
கல்லை வயிரமணி ஆக்கல் செம்பைக் கட்டித் தங்கம் எனச் செய்தல் வெறும்
புல்லை நெல் எனப் புரிதல் பன்றிப் போத்தைச் சிங்க ஏறு ஆக்கல் மண்ணை
வெல்லத்து இனிப்பு வரச்செய்தல் என விந்தை தோன்றிட இ நாட்டை நான்
தொல்லை தீர்த்து உயர்வு கல்வி வெற்றி சூழும் வீரம் அறிவு ஆண்மை

#9
கூடும் திரவியத்தின் குவைகள் திறல்கொள்ளும் கோடி வகைத் தொழில்கள் இவை
நாடும்படிக்கு வினை செய்து இந்த நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்கக் கலி
சாடும் திறன் எனக்குத் தருவாய் அடி தாயே உனக்கு அரியது உண்டோ மதி
மூடும் பொய்மை இருள் எல்லாம் எனை முற்றும் விட்டு அகல வேண்டும்

#10
ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும் பல
பையச் சொல்லுவது இங்கு என்னே முன்னைப் பார்த்தன் கண்ணன் இவர் நேரா எனை
உய்யக்கொண்டு அருள வேண்டும் அடி உன்னைக் கோடி முறை தொழுதேன் இனி
வையத் தலைமை எனக்கு அருள்வாய் அன்னை வாழி நின்னது அருள் வாழி

#11
ஓம் காளி வலிய சாமுண்டீ
ஓங்காரத் தலைவி என் இராணி

@33 மஹாசக்தி பஞ்சகம்

#1
கரணமும் தனுவும் நினக்கெனத் தந்தேன் காளி நீ காத்து அருள்செய்யே
மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன் மார வெம் பேயினை அஞ்சேன்
இரணமும் சுகமும் பழியும் நல் புகழும் யாவும் ஓர் பொருள் எனக் கொள்ளேன்
சரணம் என்று உனது பதமலர் பணிந்தேன் தாய் எனைக் காத்தல் உன் கடனே

#2
எண்ணிலாப் பொருளும் எல்லையில் வெளியும் யாவுமாம் நின்றனைப் போற்றி
மண்ணில் ஆர் வந்து வாழ்த்தினும் செறினும் மயங்கிலேன் மனம் எனும் பெயர் கொள்
கண் இலாப் பேயை எள்ளுவேன் இனி எக்காலுமே அமைதியில் இருப்பேன்
தண் நிலா முடியில் புனைந்து நின்று இலகும் தாய் உனைச் சரண்புகுந்தேனால்

#3
நீசருக்கு இனிதாம் தனத்தினும் மாதர் நினைப்பினும் நெறியிலா மாக்கள்
மாசுறு பொய் நட்பதனினும் பன்னாள் மயங்கினேன் அவை இனி மதியேன்
தேசுறு நீல நிறத்தினாள் அறிவாய்ச் சிந்தையில் குலவிடு திறத்தாள்
வீசுறும் காற்றில் நெருப்பினில் வெளியில் விளங்குவாள்தனைச் சரண்புகுந்தேன்

#4
ஐயமும் திகைப்பும் தொலைந்தன ஆங்கே அச்சமும் தொலைந்தது சினமும்
பொய்யும் என்று இனைய புன்மைகள் எல்லாம் போயின உறுதி நான் கண்டேன்
வையம் இங்கு அனைத்தும் ஆக்கியும் காத்தும் மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்ய வெண்ணிறத்தாள்தனைக் கரியவளைத் துணை எனத் தொடர்ந்து கொண்டே

#5
தவத்தினை எளிதாப் புரிந்தனள் போகத் தனிநிலை ஒளி எனப் புரிந்தாள்
சிவத்தினை இனிதாப் புரிந்தனள் மூடச் சித்தமும் தெளிவுறச் செய்தாள்
பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம் பான்மை கொன்றவள் மயம் புரிந்தாள்
அவத்தினைக் களைந்தாள் அறிவு என விளைந்தாள் அநந்தமா வாழ்க இங்கு அவளே

@34 மஹா சக்தி வாழ்த்து

#1
விண்டு உரைக்க அறிய அரியதாய் விரிந்த வான் வெளி என நின்றனை
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
மண்டலத்தை அணுவணுவாக்கினால் வருவது எத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே நினைக் காளி என்று ஏத்துவேன்

#2
நாடு காக்கும் அரசன்தனை அந்த நாட்டுளோர் அரசு என்று அறிவார் எனில்
பாடு தண்டைக் குழந்தை தனக்கு இதம் பண்ணும் அப்பன் இவன் என்று அறிந்திடும்
கோடி அண்டம் இயக்கி அளிக்கும் நின் கோலம் ஏழை குறித்திடல் ஆகுமோ
நாடி இச் சிறு பூமியில் காணும் நின் நலங்கள் ஏத்திட நல் அருள்செய்கவே

#3
பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை பரவும் வெய்ய கதிர் எனக் காய்ந்தனை
கரிய மேகத் திரள் எனச் செல்லுவை காலும் மின் என வந்து உயிர் கொல்லுவை
சொரியும் நீர் எனப் பல் உயிர் போற்றுவை சூழும் வெள்ளம் என உயிர் மாற்றுவை
விரியும் நீள் கடல் என்ன நிறைந்தனை வெல்க காளி எனது அம்மை வெல்கவே

#4
வாயு ஆகி வெளியை அளந்தனை வாழ்வு எதற்கும் உயிர்நிலை ஆயினை
தேயு ஆகி ஒளி அருள்செய்குவை செத்தவற்றைக் கருப்பொருள் ஆக்குவை
பாயும் ஆயிரம் சக்திகள் ஆகியே பாரில் உள்ள தொழில்கள் இயற்றுவை
சாயும் பல் உயிர் கொல்லுவை நிற்பனதம்மைக் காத்துச் சுகம் பல நல்குவை

#5
நிலத்தின் கீழ் பல் உலோகங்கள் ஆயினை நீரின் கீழ் எண்ணிலா நிதி வைத்தனை
தலத்தின் மீது மலையும் நதிகளும் சாரும் காடும் சுனைகளும் ஆயினை
குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம் கூட்டி வைத்துப் பல நலம் துய்த்தனை
புலத்தை இட்டு இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே போற்றி போற்றி நினது அருள் போற்றியே

#6
சித்த சாகரம் செய்தனை ஆங்கு அதில் செய்த கர்மபயன் எனப் பல்கினை
தத்துகின்ற திரையும் சுழிகளும் தாக்கி எற்றிடும் காற்றும் உள்ளோட்டமும்
சுத்த மோனப் பகுதியும் வெண்பனி சூழ்ந்த பாகமும் சுட்ட வெந்நீரும் என்று
ஒத்த நீர்க் கடல் போலப் பல வகை உள்ளம் என்னும் கடலில் அமைந்தனை

@35 ஊழிக்கூத்து

#1
வெடிபடும் அண்டத்து இடி பல தாளம்போட வெறும்
வெளியில் இரத்தக் களியொடு பூதம் பாடப் பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடும் ஒலியில் கூடக் களித்து
ஆடும் காளீ சாமுண்டீ கங்காளீ
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை

#2
ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாகப் பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப்போக அங்கே
முந்துறும் ஒளியில் சிந்தை நழுவும் வேகத்தோடே
முடியா நடனம் புரிவாய் அடு தீ சொரிவாய்
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை

#3
பாழாய் வெளியும் பதறிப்போய் மெய் குலையச் சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோஹோ என்று அலைய வெறித்து
உறுமித் திரிவாய் செரு வெம் கூத்தே புரிவாய்
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை

#4
சக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் சட்டச்
சடசட சட்டென்று உடைபடு தாளம் கொட்டி அங்கே
எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டித் தானே
எரியும் கோலம் கண்டே சாகும் காலம்
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை

#5
காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும் அங்கே
கடவுள் மோனத்து ஒளியே தனியாய் இலகும் சிவன்
கோலம் கண்டு உன் கனல்செய் சினமும் விலகும் கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக் கூத்திடுவாய்
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை

@36 காளிக்குச் சமர்ப்பணம்

#1
இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத்தேழு வருடங்கள் காத்தனன்
வந்தனம் அடி பேரருள் அன்னாய் வைரவீ திறல் சாமுண்டி காளி
சிந்தனை தெளிந்தேன் இனி உன்றன் திருவருட்கு எனை அர்ப்பணம்செய்தேன்
வந்திருந்து பல பயன் ஆகும் வகை தெரிந்துகொள் வாழியடி நீ

@37 ஹே காளீ

#1
எண்ணிலாத பொருள்குவைதானும் ஏற்றமும் புவி ஆட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும் வெம்மையும் பெரும் திண்மையும் அறிவும்
தண் நிலாவின் அமைதியும் அருளும் தருவள் இன்று எனது அன்னை என் காளி
மண்ணில் ஆர்க்கும் துயர் இன்றிச் செய்வேன் வறுமை என்பதை மண் மிசை மாய்ப்பேன்

#2
தானம் வேள்வி தவம் கல்வி யாவும் தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்
வானம் மூன்று மழை தரச் செய்வேன் மாறிலாத வளங்கள் கொடுப்பேன்
மானம் வீரியம் ஆண்மை நல் நேர்மை வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்
ஞானம் ஓங்கி வளர்ந்திடச் செய்வேன் நான் விரும்பிய காளி தருவாள்

@38 மஹா காளியின் புகழ்
**காவடிச் சிந்து : ராகம் – ஆனந்த பைரவி : தாளம் – ஆதி

#1
காலமாம் வனத்தில் அண்டக் கோல மா மரத்தின் மீது
காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல்
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும்
கால்கள் ஆறு உடையது எனக் கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு
மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி
விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ
வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த
வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம்

#2
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள்
ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள்
ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன்
அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள்
இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில்
எண்ணியே ஓம் சக்தி எனும் புண்ணிய முனிவர் நித்தம்
எய்துவார் மெய்ஞ்ஞானம் எனும் தீயை எரித்து எற்றுவார் இ நான் எனும் பொய்ப் பேயை

#3
ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான்
அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை
ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும்
நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர்
நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த
நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத
நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது

@39 வெற்றி

#1
எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி மற்று ஆங்கே
விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி வேண்டினேனுக்கு அருளினன் காளி
தடுத்து நிற்பது தெய்வதமேனும் சாரும் மானுடமாயினும் அஃதைப்
படுத்து மாய்ப்பள் அருள் பெரும் காளி பாரில் வெற்றி எனக்கு உறுமாறே

#2
எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி எங்கும் வெற்றி எதனினும் வெற்றி
கண்ணும் ஆருயிரும் என நின்றாள் காளித் தாய் இங்கு எனக்கு அருள்செய்தாள்
மண்ணும் காற்றும் புனலும் அனலும் வானும் வந்து வணங்கி நில்லாவோ
விண்ணுளோர் பணிந்து ஏவல் செய்யாரோ வெல்க காளி பதங்கள் என்பார்க்கே

@40 முத்துமாரி

#1
உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
உன் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
கலகத்து அரக்கர் பலர் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்து மாரி
கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
பல கற்றும் பல கேட்டும் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
பயன் ஒன்றும் இல்லையடி எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
நிலை எங்கும் காணவில்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
நின் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி

#2
துணி வெளுக்க மண் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
தோல் வெளுக்கச் சாம்பர் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
மணி வெளுக்கச் சாணை உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
மனம் வெளுக்க வழி இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
பிணிகளுக்கு மாற்று உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
பேதைமைக்கு மாற்று இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
அணிகளுக்கு ஒர் எல்லை இல்லாய் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி
அடைக்கலம் இங்கு உனைப் புகுந்தோம் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி

@41 தேச முத்துமாரி

#1
தேடி உனைச் சரணடைந்தேன் தேச முத்துமாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்

#2
பாடி உனைச் சரணடைந்தேன் பாசம் எல்லாம் களைவாய்
கோடி நலம் செய்திடுவாய் குறைகள் எல்லாம் தீர்ப்பாய்

#3
எப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி
ஒப்பி உனது ஏவல் செய்வேன் உனது அருளால் வாழ்வேன்

#4
சக்தி என்று நேரம் எல்லாம் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயம் அனைத்தும் தீரும்

#5
ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம்

#6
துன்பமே இயற்கை எனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்

#7
நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம்

@42 கோமதி மஹிமை

#1
தாருக வனத்திலே சிவன் சரண நல் மலரிடை உளம் பதித்துச்
சீருறத் தவம் புரிவார் பரசிவன் புகழ் அமுதினை அருந்திடுவார்
பேர் உயர் முனிவர் முன்னே கல்விப் பெரும் கடல் பருகிய சூதன் என்பான்
தேரும் மெய்ஞ்ஞானத்தினால் உயர் சிவன் நிகர் முனிவரன் செப்புகின்றான்

#2
வாழிய முனிவர்களே புகழ் வளர்த்திடும் சங்கரன் கோயிலிலே
ஊழியைச் சமைத்த பிரான் இந்த உலகம் எலாம் உருக்கொண்ட பிரான்
ஏழிரு புவனத்திலும் என்றும் இயல் பெரும் உயிர்களுக்கு உயிர் ஆவான்
ஆழும் நல் அறிவு ஆவான் ஒளி அறிவினைக் கடந்த மெய்ப்பொருள் ஆவான்

#3
தேவர்க்கெலாம் தேவன் உயர் சிவபெருமான் பண்டு ஒர் காலத்திலே
காவலின் உலகு அளிக்கும் அந்தக் கண்ணனும் தானும் இங்கு ஓர் உருவாய்
ஆவலொடு அரும் தவர்கள் பல ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேவி நின்று அருள்புரிந்தான் அந்த வியப்புறு சரிதையை விளம்புகின்றேன்

#4
கேளீர் முனிவர்களே இந்தக் கீர்த்தி கொள் சரிதையைக் கேட்டவர்க்கே
வேள்விகள் கோடி செய்தால் சதுர்வேதங்கள் ஆயிரம் முறை படித்தால்
மூளும் நல் புண்ணியம்தான் வந்து மொய்த்திடும் சிவன் இயல் விளங்கிநிற்கும்
நாளும் நல் செல்வங்கள் பல நணுகிடும் சரத மெய் வாழ்வு உண்டாம்

#5
இக் கதை உரைத்திடுவேன் உளம் இன்புறக் கேட்பீர் முனிவர்களே
நக்கபிரான் அருளால் இங்கு நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்
தொக்கன அண்டங்கள் வளர் தொகை பல கோடி பல் கோடிகளாம்
இக் கணக்கு எவர் அறிவார் புவி எத்தனை உளது என்பது யார் அறிவார்

#6
நக்கபிரான் அறிவான் மற்றும் நான் அறியேன் பிற நரர் அறியார்
தொக்க பேர் அண்டங்கள் கொண்ட தொகைக்கு இல்லை இல்லை என்று சொல்லுகின்ற
தக்க பல் சாத்திரங்கள் ஒளி தருகின்ற வானம் ஓர் கடல் போலாம்
அக் கடலதனுக்கே எங்கும் அக்கரை இக்கரை ஒன்று இல்லையாம்

#7
இக் கடலதன் அகத்தே அங்கங்கு இடையிடைத் தோன்றும் புன் குமிழிகள் போல்
தொக்கன உலகங்கள் திசைத் தூ வெளியதனிடை விரைந்து ஓடும்
மிக்கதொர் வியப்பு உடைத்தாம் இந்த வியன் பெரு வையத்தின் காட்சி கண்டீர்
மெய்க் கலை முனிவர்களே இதன் மெய்ப்பொருள் பரசிவன் சக்தி கண்டீர்

#8
எல்லை உண்டோ இலையோ இங்கு யாவர் கண்டார் திசை வெளியினுக்கே
சொல்லும் ஒர் வரம்பிட்டால் அதை
**(இது முற்றுப் பெறவில்லை)

@43 சாகா வரம்
**பல்லவி

#0
சாகா வரம் அருள்வாய் ராமா
சதுர்மறை நாதா சரோஜ பாதா
**சரணங்கள்

#1
ஆகாசம் தீ கால் நீர் மண் அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்
ஏகாமிர்தம் ஆகிய நின் தாள் இணை சரண் என்றால் இது முடியாதா

#2
வாகு ஆர் தோள் வீரா தீரா மன்மத ரூபா வானவர் பூபா
பாகு ஆர் மொழி சீதையின் மென் தோள் பழகிய மார்பா பதமலர் சார்பா

#3
நித்யா நிர்மலா ராமா நிஷ்களங்கா சர்வா சர்வாதாரா
சத்யா சநாதநா ராமா சரணம் சரணம் சரணம் உதாரா

@44 கோவிந்தன் பாட்டு

#1
கண் இரண்டும் இமையாமல் செம் நிறத்து மெல் இதழ்ப் பூம் கமலத் தெய்வப்
பெண் இரண்டு விழிகளையும் நோக்கிடுவாய் கோவிந்தா பேணினோர்க்கு
நண்ணு இரண்டு பொன் பாதம் அளித்து அருள்வாய் சராசரத்து நாதா நாளும்
எண் இரண்டு கோடியினும் மிகப் பலவாம் வீண் கவலை எளியனேற்கே

#2
எளியனேன் யான் எனலை எப்போது போக்கிடுவாய் இறைவனே இவ்
வளியிலே பறவையிலே மரத்தினிலே முகிலினிலே வரம்பில் வான
வெளியிலே கடலிடையே மண்ணகத்தே வீதியிலே வீட்டில் எல்லாம்
களியிலே கோவிந்தா நினைக் கண்டு நின்னொடு நான் கலப்பது என்றோ

#3
என் கண்ணை மறந்து உன் இரு கண்களையே என் அகத்தில் இசைத்துக்கொண்டு
நின் கண்ணால் புவி எல்லாம் நீ எனவே நான் கண்டு நிறைவு கொண்டு
வன்கண்மை மறதியுடன் சோம்பர் முதல் பாவம் எலாம் மடிந்து நெஞ்சில்
புன்கண் போய் வாழ்ந்திடவே கோவிந்தா எனக்கு அமுதம் புகட்டுவாயே

@45 கண்ணனை வேண்டுதல்

#1
வேத வானில் விளங்கி அறம் செய்-மின்
சாதல் நேரினும் சத்தியம் பூணு-மின்
தீது அகற்று-மின் என்று திசை எலாம்
மோத நித்தம் இடித்து முழங்கியே

#2
உண்ணும் சாதிக்கு உறக்கமும் சாவுமே
நண்ணுறாவணம் நன்கு புரந்திடும்
எண்ணரும் புகழ்க் கீதை எனச் சொலும்
பண் அமிழ்தத்து அருள் மழை பாலித்தே

#3
எங்கள் ஆரிய பூமி எனும் பயிர்
மங்களம் பெற நித்தலும் வாழ்விக்கும்
துங்கமுற்ற துணை முகிலே மலர்ச்
செங்கணாய் நின் பதமலர் சிந்திப்பாம்

#4
வீரர் தெய்வதம் கர்ம விளக்கு நல்
பாரதர் செய் தவத்தின் பயன் எனும்
தார் அவிர்ந்த தடம் புயப் பார்த்தன் ஓர்
காரணம் எனக் கொண்டு கடவுள் நீ

#5
நின்னை நம்பி நிலத்திடை என்றுமே
மன்னு பாரத மாண் குலம் யாவிற்கும்
உன்னுங்காலை உயர் துணையாகவே
சொன்ன சொல்லை உயிரிடைச் சூடுவோம்

#6
ஐய கேள் இனி ஓர் சொல் அடியர் யாம்
உய்ய நின் மொழி பற்றி ஒழுகியே
மையறும் புகழ் வாழ்க்கை பெறற்கு எனச்
செய்யும் செய்கையின் நின் அருள் சேர்ப்பையால்

#7
ஒப்பு இலாத உயர்வொடு கல்வியும்
எய்ப்பில் வீரமும் இப் புவி ஆட்சியும்
தப்பு இலாத தருமமும் கொண்டு யாம்
அப்பனே நின் அடி பணிந்து உய்வமால்

#8
மற்றும் நீ இந்த வாழ்வு மறுப்பையேல்
சற்று நேரத்துள் எம் உயிர் சாய்த்து அருள்
கொற்றவா நின் குவலயம் மீதினில்
வெற்றுவாழ்க்கை விரும்பி அழிகிலேம்

#9
நின்றன் மா மரபில் வந்து நீசராய்ப்
பொன்றல் வேண்டிலம் பொன் கழல் ஆணை காண்
இன்று இங்கு எம்மை அதம் புரி இல்லையேல்
வென்றியும் புகழும் தரல் வேண்டுமே

@46 வருவாய் கண்ணா
**பல்லவி

#0
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா
வருவாய் வருவாய் வருவாய்
**சரணங்கள்

#1
உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா உயிரின் அமுதாய்ப் பொழிவாய் கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா கமலத் திருவோடு இணைவாய் கண்ணா

#2
இணைவாய் எனது ஆவியிலே கண்ணா இதயத்தினிலே அமர்வாய் கண்ணா
கணைவாய் அசுரர் தலைகள் சிதறக் கடையூழியிலே படையோடு எழுவாய்

#3
எழுவாய் கடல் மீதினிலே எழும் ஓர் இரவிக்கு இணையா உளம் மீதினிலே
தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா துணையே அமரர் தொழு வானவனே

@47 கண்ண பெருமானே

#1
காயிலே புளிப்பதென்னே கண்ணபெருமானே நீ
கனியிலே இனிப்பதென்னே கண்ணபெருமானே நீ
நோயிலே படுப்பதென்னே கண்ணபெருமானே நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே கண்ணபெருமானே நீ

#2
காற்றிலே குளிர்ந்ததென்னே கண்ணபெருமானே நீ
கனலிலே சுடுவதென்னே கண்ணபெருமானே நீ
சேற்றிலே குழம்பலென்னே கண்ணபெருமானே நீ
திக்கிலே தெளிந்ததென்னே கண்ணபெருமானே நீ

#3
ஏற்றி நின்னைத் தொழுவதென்னே கண்ணபெருமானே நீ
எளியர்தம்மைக் காப்பதென்னே கண்ணபெருமானே நீ
போற்றினாரைக் காப்பதென்னே கண்ணபெருமானே நீ
பொய்யர்தம்மை மாய்ப்பதென்னே கண்ணபெருமானே நீ
**வேறு

#4
போற்றி போற்றி போற்றி போற்றி கண்ணபெருமானே நின்
பொன் அடி போற்றி நின்றேன் கண்ணபெருமானே

@48 நந்த லாலா
**ராகம் – யதுகுல காம்போதி : தாளம் – ஆதி

#1
காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

#2
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

#3
கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

#4
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

@49 கண்ணன் பிறந்தான்

#1
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் இந்தக்
காற்று அதை எட்டுத் திசையிலும் கூறிடும்
திண்ணமுடையான் மணி வண்ணமுடையான் உயிர்
தேவர் தலைவன் புவி மிசைத் தோன்றினன்
பண்ணை இசைப்பீர் நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர் இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை
எண்ணிடைக் கொள்வீர் நன்கு கண்ணை விழிப்பீர் இனி
ஏதும் குறைவில்லை வேதம் துணை உண்டு

#2
அக்கினி வந்தான் அவன் திக்கை வளைத்தான் புவி
ஆர் இருள் பொய்மைக் கலியை மடித்தனன்
துக்கம் கெடுத்தான் சுரர் ஒக்கலும் வந்தார் சுடர்ச்
சூரியன் இந்திரன் வாயு மருத்துக்கள்
மிக்க திரளாய் சுரர் இக்கணம்தன்னில் இங்கு
மேவி நிறைந்தனர் பாவி அசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார் உயிர் கக்கி முடித்தார் கடல்
போல ஒலிக்குது வேதம் புவி மிசை

#3
சங்கரன் வந்தான் இங்கு மங்கலம் என்றான் நல்ல
சந்திரன் வந்து இன் அமுதைப் பொழிந்தனன்
பங்கம் ஒன்று இல்லை ஒளி மங்குவது இல்லை இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று
கங்கையும் வந்தாள் கலை மங்கையும் வந்தாள் இன்பக்
காளி பராசக்தி அன்புடன் எய்தினள்
செங்கமலத்தாள் எழில் பொங்கும் முகத்தாள் திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்

@50 கண்ணன் திருவடி

#1
கண்ணன் திருவடி எண்ணுக மனமே
திண்ணம் அழியா வண்ணம் தருமே

#2
தருமே நிதியும் பெருமை புகழும்
கரு மா மேனிப் பெருமான் இங்கே

#3
இங்கே அமரர் சங்கம் தோன்றும்
மங்கும் தீமை பொங்கும் நலமே

#4
நலமே நாடில் புலவீர் பாடீர்
நில மா மகளின் தலைவன் புகழே

#5
புகழ்வீர் கண்ணன் தகை சேர் அமரர்
தொகையோடு அசுரப் பகை தீர்ப்பதையே

#6
தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியை
ஆர்ப்பார் அமரர் பார்ப்பார் தவமே

#7
தவறாது உணர்வீர் புவியீர் மாலும்
சிவனும் வானோர் எவரும் ஒன்றே

#8
ஒன்றே பலவாய் நின்று ஓர் சக்தி
என்றும் திகழும் குன்றா ஒளியே

@51 வேய்ங்குழல்
**ராகம் – ஹிந்துஸ்தான் தோடி
**தாளம் – ஏகதாளம்
எங்கிருந்து வருகுவதோ ஒலி
யாவர் செய்குவதோ அடி தோழி

#1
குன்றினின்றும் வருகுவதோ மரக்கொம்பினின்றும் வருகுவதோ வெளி
மன்றினின்று வருகுவதோ என்றன் மதி மருண்டிடச் செய்குதடி இஃது

#2
அலை ஒலித்திடும் தெய்வ யமுனை யாற்றினின்றும் ஒலிப்பதுவோ அன்றி
இலை ஒலிக்கும் பொழிலிடை நின்றும் எழுவதோ இஃது இன் அமுதைப் போல்

#3
காட்டினின்றும் வருகுவதோ நிலாக் காற்றைக் கொண்டு தருகுவதோ வெளி
நாட்டினின்றும் இத் தென்றல் கொணர்வதோ நாதம் இஃது என் உயிரை உருக்குதே

#4
பறவை ஏதும் ஒன்று உள்ளதுவோ இங்ஙன் பாடுமோ அமுதக் கனல் பாட்டு
மறைவினின்றும் கின்னரர் ஆதியர் வாத்தியத்தின் இசை இதுவோ அடி

#5
கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல் தானடீ காதிலே அமுது உள்ளத்தில் நஞ்சு
பண் நன்றாமடி பாவையர் வாடப் பாடி எய்திடும் அம்படி தோழி

@52 கண்ணம்மாவின் காதல்

#1
காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு ஊறித் ததும்பும் விழிகளும் பத்து
மாற்றுப் பொன் ஒத்த நின் மேனியும் இந்த வையத்தில் யான் உள்ள மட்டிலும் எனை
வேற்று நினைவு இன்றித் தேற்றியே இங்கு ஓர் விண்ணவனாகப் புரியுமே இந்தக்

#2
நீ எனது இன் உயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் துயர்
போயின போயின துன்பங்கள் நினைப் பொன் எனக் கொண்ட பொழுதிலே என்றன்
வாயினிலே அமுது ஊறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே உயிர்த்
தீயினிலே வளர் சோதியே என்றன் சிந்தனையே என்றன் சித்தமே இந்தக்

@53 கண்ணம்மாவின் நினைப்பு
**பல்லவி

#0
நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சசி என்று சரணம் எய்தினேன்
**சரணங்கள்

#1
பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா

#2
மாரன் அம்புகள் என் மீது வாரிவாரி வீச நீ கண்
பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா

#3
யாவுமே சுக முனிக்கு ஒர் ஈசனாம் எனக்கு உன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா

@54 மனப் பீடம்
**பல்லவி

#0
பீடத்தில் ஏறிக்கொண்டாள் மனப்
பீடத்தில் ஏறிக்கொண்டான்

#1
நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்
கேடற்றது என்று கண்டு கூடக் கருதும் ஒளி
மாடத்தில் ஏறி ஞானக் கூடத்தில் விளையாடி
ஓடத் திரிந்து கன்னி வேடத்தி ரதியைப் போல்
ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்
மூடிக் கிடக்கும் நெஞ்சின் ஊடுற்றதை அமரர்
தேடித் தவிக்கும் இன்ப வீடு ஒத்து இனிமை செய்து
வேடத்தி சிறு வள்ளி வித்தை என் கண்ணம்மா

#2
கண்ணன் திருமார்பில் கலந்த கமலை என்கோ
விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்காதனத்தே
நண்ணிச் சிவன் உடலை நாடும் அவள் என்கோ
எண்ணத் திதிக்குதடா இவள் பொன் உடல் அமுதம்
பெண்ணில் அரசி இவள் பெரிய எழிலுடையாள்
கண்ணுள் மணி எனக்குக் காதலி ரதி இவள்
பண்ணில் இனிய சுவை பரந்த மொழியினாள்
உண்ணும் இதழ் அமுத ஊற்றினள் கண்ணம்மா

@55 கண்ணம்மாவின் எழில்
**ராகம் – செஞ்சுருட்டி : தாளம் – ரூபகம்
**பல்லவி

#0
எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ
எங்கள் கண்ணம்மா முகம் செந்தாமரைப்பூ
எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன்
**சரணங்கள்

#1
எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்
திங்களை மூடிய பாம்பினைப் போலே
செறி குழல் இவள் நாசி எள்பூ

#2
மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று
மதுர வாய் அமிர்தம் இதழ் அமிர்தம்
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை
சாய வரம்பை சதுர் அயிராணி

#3
இங்கித நாத நிலையம் இரு செவி
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்
மங்களக் கைகள் மஹாசக்தி வாசம்
வயிறு ஆலிலை இடை அமிர்த வீடு

#4
சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்
தாமரை இருந்தாள் லக்ஷ்மீ பீடம்
பொங்கித் ததும்பித் திசை எங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த் திருக்கோலம்

@56 திருக்காதல்

#1
திருவே நினைக் காதல் கொண்டேனே நினது திரு
உருவே மறவாது இருந்தேனே பல திசையில்
தேடித் திரிந்து இளைத்தேனே நினக்கு மனம்
வாடித் தினம் களைத்தேனே அடி நினது
பருவம் பொறுத்திருந்தேனே மிகவும் நம்பிக் 5
கருவம் படைத்திருந்தேனே இடை நடுவில்
பையச் சதிகள்செய்தாயே அதனிலும் என்
மையல் வளர்தல் கண்டாயே அமுத மழை
பெய்யக் கடைக்கண் நல்காயே நினது அருளில்
உய்யக் கருணைசெய்வாயே பெருமை கொண்டு 10
வையம் தழைக்கவைப்பேனே அமர யுகம்
செய்யத் துணிந்து நிற்பேனே அடி எனது
தேனே எனது இரு கண்ணே எனை உகந்து
தானே வரும் திருப்பெண்ணே

@57 திருவேட்கை
**ராகம் நாட்டை தாளம் சதுஸ்ர ஏகம்

#1
மலரின் மேவு திருவே உன் மேல் மையல் பொங்கி நின்றேன்
நிலவு செய்யும் முகமும் காண்பார் நினைவு அழிக்கும் விழியும்
கலகலென்ற மொழியும் தெய்வக் களி துலங்கு நகையும்
இலகு செல்வ வடிவும் கண்டு உன் இன்பம் வேண்டுகின்றேன்

#2
கமலம் மேவும் திருவே நின் மேல் காதலாகி நின்றேன்
குமரி நினை இங்கே பெற்றோர் கோடி இன்பம் உற்றார்
அமரர் போல வாழ்வேன் என் மேல் அன்பு கொள்வையாயின்
இமய வெற்பின் மோத நின் மேல் இசைகள் பாடி வாழ்வேன்

#3
வாணிதன்னை என்றும் நினது வரிசை பாடவைப்பேன்
நாணி ஏகலாமோ என்னை நன்கு அறிந்திலாயோ
பேணி வையம் எல்லாம் நன்மை பெருகவைக்கும் விரதம்
பூணும் மைந்தர் எல்லாம் கண்ணன் பொறிகள் ஆவர் அன்றோ

#4
பொன்னும் நல்ல மணியும் சுடர்செய் பூண்கள் ஏந்தி வந்தாய்
மின்னும் நின்றன் வடிவில் பணிகள் மேவி நிற்கும் அழகை
என் உரைப்பனேடீ திருவே என் உயிர்க்கு ஒர் அமுதே
நின்னை மார்பு சேரத் தழுவி நிகர் இலாது வாழ்வேன்

#5
செல்வம் எட்டும் எய்தி நின்னால் செம்மை ஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்
முல்லை போன்ற முறுவல் காட்டி மோக வாதை நீக்கி
எல்லையற்ற சுவையே எனை நீ என்றும் வாழவைப்பாய்

@58 திருமகள் துதி
**ராகம் சக்ரவாகம் தாளம் திஸ்ர ஏகம்

#1
நித்தம் உனை வேண்டி மனம் நினைப்பது எல்லாம் நீயாய்ப்
பித்தனைப் போல் வாழ்வதிலே பெருமை உண்டோ திருவே
சித்த உறுதி கொண்டிருந்தார் செய்கை எல்லாம் வெற்றி கொண்டே
உத்தம நிலை சேர்வர் என்றே உயர்ந்த வேதம் உரைப்பது எல்லாம்
சுத்த வெறும் பொய்யோடீ சுடர் மணியே திருவே
மெத்த மையல் கொண்டு விட்டேன் மேவிடுவாய் திருவே

#2
உன்னை அன்றி இன்பம் உண்டோ உலக மிசை வேறே
பொன்னை வடிவென்று உடையாய் புத்தமுதே திருவே
மின் ஒளி தரும் நன் மணிகள் மேடை உயர்ந்த மாளிகைகள்
வண்ணம் உடைய தாமரைப்பூ மணிக் குளம் உள்ள சோலைகளும்
அன்னம் நறு நெய் பாலும் அதிசயமாத் தருவாய்
நின் அருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன் திருவே

#3
ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும்
வீடுகளும் நெடு நிலமும் விரைவினிலே தருவாய்
ஈடு நினக்கு ஓர் தெய்வம் உண்டோ எனக்கு உனை அன்றிச் சரணும் உண்டோ
வாடு நிலத்தைக் கண்டு இரங்கா மழையினைப் போல் உள்ளம் உண்டோ
நாடும் மணிச் செல்வம் எல்லாம் நன்கு அருள்வாய் திருவே
பீடு உடைய வான் பொருளே பெரும் களியே திருவே

@59 திருமகளைச் சரண்புகுதல்

#1
மாதவன் சக்தியினைச் செய்ய மலர் வளர் மணியினை வாழ்த்திடுவோம்
போதும் இவ் வறுமை எலாம் எந்தப் போதிலும் சிறுமையின் புகைதனிலே
வேதனைப்படு மனமும் உயர் வேதமும் வெறுப்புறச் சோர் மதியும்
வாதனை பொறுக்கவில்லை அன்னை மா மகள் அடி இணை சரண்புகுவோம்

#2
கீழ்களின் அவமதிப்பும் தொழில் கெட்டவர் இணக்கமும் கிணற்றின் உள்ளே
மூழ்கிய விளக்கினைப் போல் செய்யும் முயற்சி எல்லாம் கெட்டு முடிவதுவும்
ஏழ் கடல் ஓடியும் ஓர் பயன் எய்திட வழி இன்றி இருப்பதுவும்
வீழ்க இக் கொடு நோய்தான் வையம் மீதினில் வறுமை ஓர் கொடுமை அன்றோ

#3
பாற்கடலிடைப் பிறந்தாள் அது பயந்த நல் அமுதத்தின் பான்மை கொண்டாள்
ஏற்கும் ஓர் தாமரைப்பூ அதில் இணை மலர்த் திருவடி இசைந்திருப்பாள்
நால் கரம் தான் உடையாள் அந்த நான்கினும் பல வகைத் திரு உடையாள்
வேல் கரு விழி உடையாள் செய்ய மேனியள் பசுமையை விரும்பிடுவாள்

#4
நாரணன் மார்பினிலே அன்பு நலம் உற நித்தமும் இணைந்திருப்பாள்
தோரணப் பந்தரிலும் பசுத் தொழுவிலும் சுடர் மணி மாடத்திலும்
வீரர்தம் தோளினிலும் உடல் வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் ஒளி பரவிட வீற்றிருந்து அருள்புரிவாள்

#5
பொன்னிலும் மணிகளிலும் நறும் பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் செழும் காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்
முன்னிய துணிவினிலும் மன்னர் முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னி நல் புகழ் பாடி அவள் பத மலர் வாழ்த்தி நல் பதம் பெறுவோம்

#6
மண்ணினுள் கனிகளிலும் மலை வாய்ப்பிலும் வார் கடல் ஆழத்திலும்
புண்ணிய வேள்வியிலும் உயர் புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணும் நல் பாவையிலும் நல்ல பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை எங்கள் நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்

#7
வெற்றிகொள் படையினிலும் பல விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்
நல் தவ நடையினிலும் நல்ல நாவலர் தேமொழித் தொடரினிலும்
உற்ற செந்திருத் தாயை நித்தம் உவகையில் போற்றி இங்கு உயர்ந்திடுவோம்
கற்ற பல் கலைகள் எல்லாம் அவள் கருணை நல் ஒளி பெறக் கலி தவிர்ப்போம்

@60 ராதைப் பாட்டு
**ராகம் கமாஸ் தாளம் ஆதி
**பல்லவி

#0
தேகி முதம் தேகி ஸ்ரீ ராதே ராதே
**சரணங்கள்

#1
ராக ஸமுத்ரஜாம்ருதே ராதே ராதே
ராஜ்ஸ்ரீ மண்டல ரத்ந ராதே ராதே
போக ரதி கோடி துல்யே ராதே ராதே
பூதேவி தப பல ராதே ராதே

#2
வேத மஹா மந்த்ர ரஸ ராதே ராதே
வேத வித்யா விலாஸினி ஸ்ரீ ராதே ராதே
ஆதிபராசக்தி ரூப ராதே ராதே
அத்யத்புத சிருங்காரமய ராதே ராதே
**தமிழ்க்கண்ணிகள்

#3
காதலெனுந் தீவினிலே ராதே ராதே அன்று
கண்டெடுத்த பெண்மணியே ராதே ராதே

#4
காதலெனுஞ் சோலையிலே ராதே ராதே நின்ற
கற்பகமாம் பூம் தருவே ராதே ராதே

#5
மாதரசே செல்வப் பெண்ணே ராதே ராதே உயர்
வானவர்கள் இன்ப வாழ்வே ராதே ராதே

@61 கலைமகளை வேண்டுதல்
**நொண்டிச் சிந்து

#1
எங்ஙனம் சென்றிருந்தீர் எனது இன் உயிரே என்றன் இசை அமுதே
திங்களைக் கண்டவுடன் கடல் திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்
கங்குலைப் பார்த்தவுடன் இங்கு காலையில் இரவியைத் தொழுதவுடன்
பொங்குவீர் அமிழ்து எனவே அந்தப் புதுமையிலே துயர் மறந்திருப்பேன்

#2
மாதம் ஒர் நான்கா நீர் அன்பு வறுமையிலே எனை வீழ்த்திவிட்டீர்
பாதங்கள் போற்றுகின்றேன் என்றன் பாவம் எலாம் கெட்டு ஞான கங்கை
நாதமொடு எப்பொழுதும் என்றன் நாவினிலே பொழிந்திட வேண்டும்
வேதங்கள் ஆக்கிடுவீர் அந்த விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்

#3
கண்மணி போன்றவரே இங்குக் காலையும் மாலையும் திருமகளாம்
பெண்மணி இன்பத்தையும் சக்திப் பெரு மகள் திருவடிப் பெருமையையும்
வண்மையில் ஓதிடுவீர் என்றன் வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்
அண்மையில் இருந்திடுவீர் இனி அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ

#4
தான் எனும் பேய் கெடவே பல சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே
வான் எனும் ஒளி பெறவே நல வாய்மையிலே மதி நிலைத்திடவே
தேன் எனப் பொழிந்திடுவீர் அந்தத் திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்
ஊனங்கள் போக்கிடுவீர் நல்ல ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்

#5
தீயினை நிறுத்திடுவீர் நல்ல தீரமும் தெளிவும் இங்கு அருள்புரிவீர்
மாயையில் அறிவிழந்தே உம்மை மதிப்பது மறந்தனன் பிழைகள் எல்லாம்
தாய் என உமைப் பணிந்தேன் பொறை சார்த்தி நல் அருள்செய வேண்டுகின்றேன்
வாயினில் சபதமிட்டேன் இனி மறக்ககிலேன் எனை மறக்ககிலீர்

@62 வெள்ளைத் தாமரை
**ராகம் ஆனந்த பைரவி தாளம் சாப்பு

#1
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்

#2
மாதர் தீம் குரல் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோது அகன்ற தொழில் உடைத்தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈது அனைத்தின் எழிலிடை உற்றாள் இன்பமே வடிவாகிடப் பெற்றாள்

#3
வஞ்சமற்ற தொழில் புரிந்து உண்டு வாழும் மாந்தர் குலதெய்வம் ஆவாள்
வெம் சமர்க்கு உயிர் ஆகிய கொல்லர் வித்தை ஓர்ந்திடு சிற்பியர் தச்சர்
மிஞ்ச நல் பொருள் வாணிகம் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்சம் என்று வணங்கிடும் தெய்வம் தரணி மீது அறிவாகிய தெய்வம்

#4
தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமை காட்டி விலக்கிடும் தெய்வம்
உய்வம் என்ற கருத்துடையோர்கள் உயிரினுக்கு உயிர் ஆகிய தெய்வம்
செய்வம் என்று ஒரு செய்கை எடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கை வருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம்

#5
செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் சேர்ந்து இத் தேவை வணங்குவம் வாரீர்
வந்தனம் இவட்கே செய்வது என்றால் வாழி அஃது இங்கு எளிது என்று கண்டீர்
மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை வரிசையாக அடுக்கி அதன் மேல்
சந்தனத்தை மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனை அன்றாம்

#6
வீடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பலபல பள்ளி
தேடு கல்வி இலாதது ஒர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதம் என் அன்னை கேண்மை கொள்ள வழி இவை கண்டீர்

#7
ஊணர் தேசம் யவனர்தம் தேசம் உதய ஞாயிற்று ஒளி பெறு நாடு
சேண் அகன்றதோர் சிற்றடிச் சீனம் செல்வப் பாரசிகப் பழம் தேசம்
தோள் நலத்த துருக்கம் மிசிரம் சூழ் கடற்கு அப்புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை எல்லாம் கல்வித் தேவியின் ஒளி மிகுந்து ஓங்க

#8
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டிடை வந்தீர்
ஊனம் இன்று பெரிது இழைக்கின்றீர் ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்
மானமற்று விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வு எனலாமோ
போனதற்கு வருந்துதல் வேண்டா புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்

#9
இன் நறும் கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த் தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னர் உள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு ஓர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல்

#10
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர் ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
மதுரத் தேமொழி மாதர்கள் எல்லாம் வாணி பூசைக்கு உரியன பேசீர்
எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும் இப் பெரும் தொழில் நாட்டுவம் வாரீர்

@63 நவராத்திரிப் பாட்டு
**(மாதா பராசக்தி)
**பராசக்தி
**(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)

#1
மாதா பராசக்தி வையம் எலாம் நீ நிறைந்தாய்
ஆதாரம் உன்னை அல்லால் ஆர் எமக்குப் பாரினிலே
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமது உயிரே
வேதாவின் தாயே மிகப் பணிந்து வாழ்வோமே
**வாணி

#2
வாணி கலைத் தெய்வம் மணி வாக்கு உதவிடுவாள்
ஆணிமுத்தைப் போல அறிவு முத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பது எலாம் காட்டுவதாய்
மாண் உயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே
**ஸ்ரீதேவி

#3
பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி
மின்னு நவரத்தினம் போல் மேனி அழகுடையாள்
அன்னை அவள் வையம் எலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன் இரு பொன் தாளே சரண்புகுந்து வாழ்வோமே
**பார்வதி

#4
மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே ஊதி உலகக் கனல் வளர்ப்பாள்
நிலையில் உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம்
தலையிலே தாங்கித் தரணி மிசை வாழ்வோமே

@64 மூன்று காதல்
**முதலாவது சரஸ்வதி காதல்
**ராகம் – ஸரஸ்வதி மனோஹரி : தாளம் – திஸ்ர ஏகம்

#1
பிள்ளைப் பிராயத்திலே அவள் பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேன் அங்கு
பள்ளிப் படிப்பினிலே மதி பற்றிடவில்லை எனிலும் தனிப்பட
வெள்ளை மலரணை மேல் அவள் வீணையும் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருள் அமுதம் கண்டேன் வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா

#2
ஆடி வருகையிலே அவள் அங்கு ஒரு வீதி முனையில் நிற்பாள் கையில்
ஏடு தரித்திருப்பாள் அதில் இங்கிதமாகப் பதம் படிப்பாள் அதை
நாடி அருகணைந்தால் பல ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் இன்று
கூடி மகிழ்வம் என்றால் விழிக் கோணத்திலே நகை காட்டிச் செல்வாள் அம்மா

#3
ஆற்றங்கரைதனிலே தனியானதோர் மண்டபம் மீதினிலே தென்றல்
காற்றை நுகர்ந்திருந்தேன் அங்கு கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள் அதை
ஏற்று மனம் மகிழ்ந்தே அடி என்னோடு இணங்கி மணம்புரிவாய் என்று
போற்றிய போதினிலே இளம் புன்னகை பூத்து மறைந்துவிட்டாள் அம்மா

#4
சித்தம் தளர்ந்ததுண்டோ கலைத் தேவியின் மீது விருப்பம் வளர்ந்து ஒரு
பித்துப்பிடித்தது போல் பகல் பேச்சும் இரவில் கனவும் அவளிடை
வைத்த நினைவை அல்லால் பிற வாஞ்சை உண்டோ வயது அங்ஙனமே இரு
பத்திரண்டாம் அளவும் வெள்ளைப் பண்மகள் காதலைப் பற்றி நின்றேன் அம்மா
**இரண்டாவது லக்ஷ்மி காதல்
**ராகம் ஸ்ரீராகம் தாளம் திஸ்ர ஏகம்

#5
இந்த நிலையினிலே அங்கு ஒர் இன்பப் பொழிலினிடையினில் வேறு ஒரு
சுந்தரி வந்து நின்றாள் அவள் சோதி முகத்தின் அழகினைக் கண்டு என்றன்
சிந்தை திறைகொடுத்தேன் அவள் செந்திரு என்று பெயர் சொல்லினாள் மற்றும்
அந்தத் தினம் முதலா நெஞ்சம் ஆரத் தழுவிட வேண்டுகின்றேன் அம்மா

#6
புன்னகை செய்திடுவாள் அற்றைப் போது முழுதும் மகிழ்ந்திருப்பேன் சற்று என்
முன் நின்று பார்த்திடுவாள் அந்த மோகத்திலே தலைசுற்றிடும் காண் பின்னர்
என்ன பிழைகள் கண்டோ அவள் என்னைப் புறக்கணித்து ஏகிடுவாள் அங்கு
சின்னமும் பின்னமுமா மனம் சிந்தி உளம் மிக நொந்திடுவேன் அம்மா

#7
காட்டு வழிகளிலே மலைக் காட்சியிலே புனல் வீழ்ச்சியிலே பல
நாட்டுப்புறங்களிலே நகர் நண்ணு சில சுடர் மாடத்திலே சில
வேட்டுவர் சார்பினிலே சில வீரரிடத்திலும் வேந்தரிடத்திலும்
மீட்டும் அவள் வருவாள் கண்ட விந்தையிலே இன்பம் மேற்கொண்டு போம் அம்மா
**மூன்றாவது காளி காதல்
**ராகம் புன்னாகவராளி தாளம் திஸ்ர ஏகம்

#8
பின் ஒர் இராவினிலே கரும் பெண்மை அழகு ஒன்று வந்தது கண் முன்பு
கன்னி வடிவம் என்றே களி கண்டு சற்றே அருகில் சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா இவள் ஆதிபராசக்தி தேவியடா இவள்
இன் அருள் வேண்டுமடா பின்னர் யாவும் உலகில் வசப்பட்டுப்போமடா

#9
செல்வங்கள் பொங்கி வரும் நல்ல தெள் அறிவு எய்தி நலம் பல சார்ந்திடும்
அல்லும்பகலும் இங்கே இவை அத்தனை கோடிப் பொருளின் உள்ளே நின்று
வில்லை அசைப்பவளை இந்த வேலை அனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை நித்தம் தோத்திரம் பாடித் தொழுதிடுவோமடா

@65 ஆறு துணை
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

#1
கணபதிராயன் அவன் இரு காலைப் பிடித்திடுவோம்
குணம் உயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே

#2
சொல்லுக்கு அடங்காவே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம்
வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழி என்றே துதிப்போம்

#3
வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்

#4
தாமரைப் பூவினிலே சுருதியைத் தனி இருந்து உரைப்பாள்
பூ மணித் தாளினையே கண்ணில் ஒற்றிப் புண்ணியம் எய்திடுவோம்

#5
பாம்புத் தலை மேலே நடம்செயும் பாதத்தினைப் புகழ்வோம்
மாம்பழ வாயினிலே குழல் இசை வண்மை புகழ்ந்திடுவோம்

#6
செல்வத் திருமகளைத் திடங்கொண்டு சிந்தனைசெய்திடுவோம்
செல்வம் எல்லாம் தருவாள் நமது ஒளி திக்கு அனைத்தும் பரவும்

@66 விடுதலை வெண்பா

#1
சக்தி பதமே சரண் என்று நாம் புகுந்து
பக்தியினால் பாடிப் பலகாலும் முக்தி நிலை
காண்போம் அதனால் கவலைப் பிணி தீர்ந்து
பூண்போம் அமரப் பொறி

#2
பொறி சிந்தும் வெம் கனல் போல் பொய் தீர்ந்து தெய்வ
வெறி கொண்டால் ஆங்கு அதுவே வீடாம் நெறி கொண்ட
வையம் எலாம் தெய்வ வலி அன்றி வேறு இல்லை
ஐயம் எலாம் தீர்ந்தது அறிவு

#3
அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் குறி கண்டு
செல்வம் எலாம் பெற்றுச் சிறப்புறவே சக்தி தரும்
வெல் வயிரச் சீர் மிகுந்த வேல்

#4
வேலைப் பணிந்தால் விடுதலையாம் வேல்முருகன்
காலைப் பணிந்தால் கவலை போம் மேல் அறிவு
தன்னாலே தான் பெற்று சக்தி சக்தி சக்தி என்று
சொன்னால் அதுவே சுகம்

#5
சுகத்தினை நான் வேண்டித் தொழுதேன் எப்போதும்
அகத்தினிலே துன்புற்று அழுதேன் யுகத்தினில் ஓர்
மாறுதலைக் காட்டி வலிமை நெறி காட்டி
ஆறுதலைத் தந்தாள் அவள்

@67 ஜயம் உண்டு
**ராகம் – காமாஸ் : தாளம் – ஆதி
**பல்லவி

#0
ஜயம் உண்டு பயம் இல்லை மனமே இந்த
ஜன்மத்திலே விடுதலை உண்டு நிலை உண்டு
**அனுபல்லவி
பயன் உண்டு பக்தியினாலே நெஞ்சில்
பதிவுற்ற குல சக்தி சரண் உண்டு பகை இல்லை
**சரணங்கள்

#1
புயம் உண்டு குன்றத்தைப் போலே சக்தி
பொன் பாதம் உண்டு அதன் மேலே
நியமம் எல்லாம் சக்தி நினைவு அன்றிப் பிறிது இல்லை
நெறி உண்டு குறி உண்டு குல சக்தி வெறி உண்டு

#2
மதி உண்டு செல்வங்கள் சேர்க்கும் தெய்வ
வலி உண்டு தீமையைப் பேர்க்கும்
விதி உண்டு தொழிலுக்கு விளைவு உண்டு குறைவு இல்லை
விசனப் பொய்க் கடலுக்குக் குமரன் கைக் கணை உண்டு

#3
அலைபட்ட கடலுக்கு மேலே சக்தி
அருள் என்னும் தோணியினாலே
தொலை ஒட்டிக் கரையுற்றுத் துயர் அற்று விடுபட்டுத்
துணிவுற்ற குல சக்தி சரணத்தில் முடிதொட்டு

@68 ஆரிய தரிசனம்
**ஓர் கனவு
**ராகம் – ஸ்ரீராகம் : தாளம் – ஆதி

#0
கனவென்ன கனவே என்றன்
கண் துயிலாது நனவினிலே உற்ற

#1
கானகம் கண்டேன் அடர்
கானகம் கண்டேன் உச்சி
வானகத்தே வட்ட மதி ஒளி கண்டேன்

#2
பொன் திருக்குன்றம் அங்கு ஒர்
பொன் திருக்குன்றம் அதைச்
சுற்றி இருக்கும் சுனைகளும் பொய்கையும்
**புத்த தரிசனம்

#3
குன்றத்தின் மீதே அந்தக்
குன்றத்தின் மீதே தனி
நின்றதோர் ஆல நெடு மரம் கண்டேன்

#4
பொன் மரத்தின் கீழ் அந்தப்
பொன் மரத்தின் கீழ் வெறும்
சின்மயமானதோர் தேவன் இருந்தனன்

#5
புத்த பகவன் எங்கள்
புத்த பகவன் அவன்
சுத்த மெய்ஞ்ஞானச் சுடர் முகம் கண்டேன்

#6
காந்தியைப் பார்த்தேன் அவன்
காந்தியைப் பார்த்தேன் உப
சாந்தியில் மூழ்கத் ததும்பிக் குளித்தனன்

#7
ஈது நல் விந்தை என்னை
ஈது நல் விந்தை புத்தன்
சோதி மறைந்து இருள் துன்னிடக் கண்டனன்

#8
பாய்ந்தது அங்கு ஒளியே பின்னும்
பாய்ந்தது அங்கு ஒளியே அருள்
தேய்ந்தது என் மேனி சிலிர்த்திடக் கண்டேன்
**கிருஷ்ணார்ஜுன தரிசனம்

#9
குன்றத்தின் மீதே அந்தக்
குன்றத்தின் மீதே தனி
நின்ற பொன் தேரும் பரிகளும் கண்டேன்

#10
தேரின் முன் பாகன் மணித்
தேரின் முன் பாகன் அவன்
சீரினைக் கண்டு திகைத்து நின்றேன் இந்தக்

#11
ஓம் என்ற மொழியும் அவன்
ஓம் என்ற மொழியும் நீலக்
காமன்றன் உருவும் அ வீமன்றன் திறலும்

#12
அருள் பொங்கும் விழியும் தெய்வ
அருள் பொங்கும் விழியும் காணில்
இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்கும் திகிரியும்

#13
கண்ணனைக் கண்டேன் எங்கள்
கண்ணனைக் கண்டேன் மணி
வண்ணனை ஞான மலையினைக் கண்டேன்

#14
சேனைகள் தோன்றும் வெள்ளச்
சேனைகள் தோன்றும் பரி
யானையும் தேரும் அளவில் தோன்றும்

#15
கண்ணன் நல் தேரில் நீலக்
கண்ணன் நல் தேரில் மிக
எண் அயர்ந்தான் ஒர் இளைஞனைக் கண்டேன்

#16
விசையன்-கொல் இவனே விறல்
விசையன்-கொல் இவனே நனி
இசையும் நன்கு இசையும் இங்கு இவனுக்கு இ நாமம்

#17
வீரிய வடிவம் என்ன
வீரிய வடிவம் இந்த
ஆரியன் நெஞ்சம் அயர்ந்தது என் விந்தை

#18
பெற்றதன் பேறே செவி
பெற்றதன் பேறே அந்தக்
கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன்

#19
வெற்றியை வேண்டேன் ஜய
வெற்றியை வேண்டேன் உயிர்
அற்றிடுமேனும் அவர்தமைத் தீண்டேன்

#20
சுற்றம் கொல்வேனோ என்றன்
சுற்றம் கொல்வேனோ கிளை
அற்ற பின் செய்யும் அரசும் ஓர் அரசோ

#21
மிஞ்சிய அருளால் மித
மிஞ்சிய அருளால் அந்த
வெம் சிலை வீரன் பல சொல் விரித்தான்

#22
இ மொழி கேட்டான் கண்ணன்
இ மொழி கேட்டான் ஐயன்
செம்மலர் வதனத்தில் சிறுநகை பூத்தான்

#23
வில்லினை எடடா கையில்
வில்லினை எடடா அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய்திடடா

#24
வாடி நில்லாதே மனம்
வாடி நில்லாதே வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே

#25
ஒன்று உளது உண்மை என்றும்
ஒன்று உளது உண்மை அதைக்
கொன்றிடொணாது குறைத்தலொண்ணாது

#26
துன்பமும் இல்லை கொடும்
துன்பமும் இல்லை அதில்
இன்பமும் இல்லை பிறப் பிறப்பு இல்லை

#27
படைகளும் தீண்டா அதைப்
படைகளும் தீண்டா அனல்
சுடவுமொண்ணாது புனல் நனையாது

#28
செய்தல் உன் கடனே அறம்
செய்தல் உன் கடனே அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே

@69 சூரிய தரிசனம்
**ராகம் பூபாளம்

#1
சுருதியின்கண் முனிவரும் பின்னே தூ மொழிப் புலவோர் பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமை என்று ஏத்தும் பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன்
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே பானுவே பொன் செய் பேரொளித் திரளே
கருதி நின்னை வணங்கிட வந்தேன் கதிர் கொள் வாள் முகம் காட்டுதி சற்றே

#2
வேதம் பாடிய சோதியைக் கண்டு வேள்விப் பாடல்கள் பாடுதற்குற்றேன்
நாத வார் கடலின் ஒலியோடு நல் தமிழ்ச் சொல் இசையையும் சேர்ப்பேன்
காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே கடுகி ஓடும் கதிர் இனம் பாடி
ஆதவா நினை வாழ்த்திட வந்தேன் அணி கொள் வாள் முகம் காட்டுதி சற்றே

@70 ஞாயிறு வணக்கம்

#1
கடலின் மீது கதிர்களை வீசிக் கடுகி வான் மிசை ஏறுதி ஐயா
படரும் வான் ஒளி இன்பத்தைக் கண்டு பாட்டுப் பாடி மகிழ்வன புட்கள்
உடல் பரந்த கடலும் தன்னுள்ளே ஒவ்வொரு நுண் துளியும் வழியாகச்
சுடரும் நின்றன் வடிவை உட்கொண்டே சுருதி பாடிப் புகழ்கின்றது இங்கே

#2
என்றன் உள்ளம் கடலினைப் போலே எந்த நேரமும் நின் அடிக் கீழே
நின்று தன் அகத்து ஒவ்வோர் அணுவும் நின்றன் ஜோதி நிறைந்தது ஆகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா ஞாயிற்றின்கண் ஒளி தரும் தேவா
மன்று வானிடைக் கொண்டு உலகு எல்லாம் வாழ நோக்கிடும் வள்ளிய தேவா

#3
காதல் கொண்டனை போலும் மண் மீதே கண் பிறழ்வு இன்றி நோக்குகின்றாயே
மாதர்ப் பூமியும் நின் மிசைக் காதல் மண்டினாள் இதில் ஐயம் ஒன்று இல்லை
சோதி கண்டு முகத்தில் இவட்கே தோன்றுகின்ற புது நகை என்னே
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே ஆயிரம் தரம் அஞ்சலிசெய்வேன்

@71 ஞான பாநு

#1
திரு வளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல் அறிவு வீரம்
மருவு பல் கலையின் சோதி வல்லமை என்ப எல்லாம்
வருவது ஞானத்தாலே வையகம் முழுவதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு

#2
கவலைகள் சிறுமை நோவு கைதவம் வறுமைத் துன்பம்
அவலமாம் அனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை அச்சம்
இவை எலாம் அறிவிலாமை என்பதோர் இருளில் பேயாம்
நவமுறு ஞானபாநு நண்ணுக தொலைக பேய்கள்

#3
அனைத்தையும் தேவர்க்கு ஆக்கி அறத் தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்புத் தெய்வம்
தினத்து ஒளி ஞானம் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதர் என்று இசைக்கும் வேதம்

#4
பண்ணிய முயற்சி எல்லாம் பயனுற ஓங்கும் ஆங்கே
எண்ணிய எண்ணம் எல்லாம் எளிதிலே வெற்றி எய்தும்
திண்ணிய கருத்தினோடும் சிரித்திடும் முகத்தினோடும்
நண்ணிடும் ஞானபாநு அதனை நாம் நன்கு போற்றின்

@72 சோமதேவன் புகழ்

#0
ஜய சோம ஜய சோம ஜய சோம தேவா
ஜய ஜய
**சரணம்

#1
நயம் உடைய இந்திரனை நாயகத்து இட்டாய்
வயம் மிக்க அசுரரின் மாயையைச் சுட்டாய்
வியன் உலகில் ஆநந்த விண் நிலவு பெய்தாய்
துயர் நீங்கி என் உளம் சுடர்கொளச் செய்தாய்
மயல் கொண்ட காதலரை மண் மிசைக் காப்பாய்
உய வேண்டி இருவர் உளம் ஒன்றுறக் கோப்பாய்
புயல் இருண்டே குமுறி இருள் வீசி வரல் போல்
பொய்த் திரள் வருவதைப் புன்னகையில் மாய்ப்பாய்

@73 வெண்ணிலாவே

#1
எல்லையில்லாததோர் வானக் கடலிடை வெண்ணிலாவே விழிக்கு
இன்பம் அளிப்பதோர் தீ என்று இலகுவை வெண்ணிலாவே
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து இங்கு வெண்ணிலாவே நின்றன்
சோதி மயக்கும் வகையதுதான் என் சொல் வெண்ணிலாவே
நல்ல ஒளியின் வகை பல கண்டிலன் வெண்ணிலாவே இந்த
நனவை மறந்திடச்செய்வது கண்டிலன் வெண்ணிலாவே
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து
கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே

#2
மாதர் முகத்தை நினக்கு இணை கூறுவர் வெண்ணிலாவே அஃது
வயதின் கவலையின் நோவின் கெடுவது வெண்ணிலாவே
காதல் ஒருத்தி இளையபிராயத்தள் வெண்ணிலாவே அந்தக்
காமன்றன் வில்லை இணைத்த புருவத்தள் வெண்ணிலாவே
மீது எழும் அன்பின் விலை புன்னகையினள் வெண்ணிலாவே முத்தம்
வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில் இங்கு வெண்ணிலாவே
சாதல் அழிதல் இலாது நிரந்தரம் வெண்ணிலாவே நின்
தண் முகம்தன்னில் விளங்குவது என்னை-கொல் வெண்ணிலாவே

#3
நின் ஒளியாகிய பாற்கடல் மீது இங்கு வெண்ணிலாவே நன்கு
நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் வெண்ணிலாவே
மன்னு பொருள்கள் அனைத்திலும் நிற்பவன் வெண்ணிலாவே அந்த
மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன் வெண்ணிலாவே
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி வெண்ணிலாவே இங்கு
தோன்றும் உலகவளே என்று கூறுவர் வெண்ணிலாவே
பின்னிய மேகச் சடை மிசைக் கங்கையும் வெண்ணிலாவே நல்ல
பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் வெண்ணிலாவே

#4
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ என்பர் வெண்ணிலாவே நினைக்
காதல் செய்வார் நெஞ்சிற்கு இன் அமுது ஆகுவை வெண்ணிலாவே
சீத மணி நெடு வானக் குளத்திடை வெண்ணிலாவே நீ
தேசு மிகுந்த வெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே
மோத வரும் கரு மேகத் திரளினை வெண்ணிலாவே நீ
முத்தின் ஒளி தந்து அழகுறச் செய்குவை வெண்ணிலாவே
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே நலம்
செய்து ஒளி நல்குவர் மேலவராம் அன்றோ வெண்ணிலாவே

#5
மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே உன்றன்
மேனி அழகு மிகைபடக் காணுது வெண்ணிலாவே
நல்லியலார் யவனத்தியர் மேனியை வெண்ணிலாவே மூடு
நல் திரை மேனி நயம் மிகக் காட்டிடும் வெண்ணிலாவே
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும் வெண்ணிலாவே நின்
சோதி வதனம் முழுதும் மறைத்தனை வெண்ணிலாவே
புல்லியன் செய்த பிழை பொறுத்தே அருள் வெண்ணிலாவே இருள்
போகிடச் செய்து நினது எழில் காட்டுதி வெண்ணிலாவே

@74 தீ வளர்த்திடுவோம்
**யாகப் பாட்டு
**ராகம் – புன்னாகவராளி
**பல்லவி

#0
தீ வளர்த்திடுவோம் பெரும்
தீ வளர்த்திடுவோம்
**சரணங்கள்

#1
ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம் விண்ணின்
ஆசை வளர்த்திடுவோம் களி ஆவல் வளர்த்திடுவோம் ஒரு
தேவி மகனைத் திறமைக் கடவுளைச் செங்கதிர் வானவனை விண்ணோர்தமைத்
தேனுக்கு அழைப்பவனைப் பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர்

#2
சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத் தீமை அழிப்பவனை நன்மை
சேர்த்துக் கொடுப்பவனை பல சீர்களுடையவனைப் புவி
அத்தனையும் சுடர் ஏறத் திகழ்ந்திடும் ஆரியர் நாயகனை உருத்திரன்
அன்புத் திருமகனை பெரும் திரள் ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்

#3
கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடும் கண்மணி போன்றவனை எம்மைக்
காவல்புரிபவனைத் தொல்லைக் காட்டை அழிப்பவனைத் திசை
எட்டும் புகழ் வளர்ந்து ஓங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே புவி மிசை
இன்பம் பெருகிடவே பெரும் திரள் எய்திப் பணிந்திடுவோம் வாரீர்

#4
நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கிக் கொடுப்பவனை உயிர்
நீளத் தருபவனை ஒளிர் நேர்மைப் பெரும் கனலை நித்தம்
அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனைப் பல் வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனைப் பெரும் திரள் ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்

#5
அச்சத்தைச் சுட்டு அங்கு சாம்பரும் இன்றி அழித்திடும் வானவனைச் செய்கை
ஆற்றும் மதிச் சுடரைத் தடையற்ற பெரும் திறலை எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி
ஏறும் தவக் கனலைப் பெரும் திரள் எய்திப் பணிந்திடுவோம் வாரீர்

#6
வானகத்தைச் சென்று தீண்டுவன் இங்கு என்று மண்டி எழும் தழலைக் கவி
வாணர்க்கு நல் அமுதைத் தொழில் வண்ணம் தெரிந்தவனை நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு
தேக்கிக் களிப்பவனைப் பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர்

#7
சித்திர மாளிகை பொன் ஒளிர் மாடங்கள் தேவத் திருமகளிர் இன்பம்
தேக்கிடும் தேன் இசைகள் சுவை தேறிடும் நல் இளமை நல்ல
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழுக் குடம் பற்பலவும் இங்கே தர
முற்பட்டு நிற்பவனைப் பெரும் திரள் மொய்த்துப் பணிந்திடுவோம் வாரீர்

@75 வேள்வித் தீ
**ராகம் – நாதநாமக்கிரியை : தாளம் – சதுஸ்ர ஏகம்

#1
**ரிஷிகள்
எங்கள் வேள்விக் கூடம் மீதில் ஏறுதே தீ தீ இ நேரம்
பங்கமுற்றே பேய்கள் ஓடப் பாயுதே தீ தீ இ நேரம்

#2
**அசுரர்
தோழரே நம் ஆவி வேகச் சூழுதே தீ தீ ஐயோ நாம்
வாழ வந்த காடு வேக வந்ததே தீ தீ அம்மாவோ

#3
**ரிஷிகள்
பொன்னை ஒத்து ஓர் வண்ணமுற்றான் போந்துவிட்டானே இ நேரம்
சின்னமாகிப் பொய் அரக்கர் சிந்தி வீழ்வாரே இ நேரம்

#4
**அசுரர்
இந்திராதி தேவர்தம்மை ஏசி வாழ்ந்தோமே ஐயோ நாம்
வெந்துபோக மானிடர்க்கு ஓர் வேதம் உண்டாமோ அம்மாவோ

#5
**ரிஷிகள்
வானை நோக்கிக் கைகள் தூக்கி வளருதே தீ தீ இ நேரம்
ஞான மேனி உதய கன்னி நண்ணிவிட்டாளே இ நேரம்

#6
**அசுரர்
கோடி நாளாய் இவ் வனத்தில் கூடி வாழ்ந்தோமே ஐயோ நாம்
பாடி வேள்வி மாந்தர் செய்யப் பண்பு இழந்தோமே அம்மாவோ

#7
**ரிஷிகள்
காட்டில் மேயும் காளை போன்றான் காணுவீர் தீ தீ இ நேரம்
ஓட்டியோட்டிப் பகையை எல்லாம் வாட்டுகின்றானே இ நேரம்

#8
**அசுரர்
வலியிலாதார் மாந்தர் என்று மகிழ்ந்து வாழ்ந்தோமே ஐயோ நாம்
கலியை வென்றோர் வேத உண்மை கண்டுகொண்டாரே அம்மாவோ

#9
**ரிஷிகள்
வலிமை மைந்தன் வேள்வி முன்னோன் வாய் திறந்தானே இ நேரம்
மலியும் நெய்யும் தேனும் உண்டு மகிழ வந்தானே இ நேரம்

#10
**அசுரர்
உயிரை விட்டும் உணர்வை விட்டும் ஓடி வந்தோமே ஐயோ நாம்
துயில் உடம்பின் மீதிலும் தீ தோன்றிவிட்டானே அம்மாவோ

#11
**ரிஷிகள்
அமரர் தூதன் சமர நாதன் ஆர்த்து எழுந்தானே இ நேரம்
குமரி மைந்தன் எமது வாழ்வில் கோயில்கொண்டானே இ நேரம்

#12
**அசுரர்
வருணன் மித்ரன் அர்யமானும் மதுவை உண்பாரே ஐயோ நாம்
பெருகு தீயின் புகையும் வெப்பும் பின்னி மாய்வோமே அம்மாவோ

#13
**ரிஷிகள்
அமரர் எல்லாம் வந்து நம் முன் அவிகள் கொண்டாரே இ நேரம்
நமனும் இல்லை பகையும் இல்லை நன்மை கண்டோமே இ நேரம்

#14
**அசுரர்
பகனும் இங்கே இன்பம் எய்திப் பாடுகின்றானே ஐயோ நாம்
புகையில் வீழ இந்திரன் சீர் பொங்கல் கண்டீரோ அம்மாவோ

#15
**ரிஷிகள்
இளையும் வந்தாள் கவிதை தந்தாள் இரவி வந்தானே இ நேரம்
விளையும் எங்கள் தீயினாலே மேன்மையுற்றோமே இ நேரம்

#16
**ரிஷிகள்
அன்னம் உண்பீர் பாலும் நெய்யும் அமுதும் உண்பீரே இ நேரம்
மின்னி நின்றீர் தேவர் எங்கள் வேள்வி கொள்வீரே இ நேரம்

#17
**ரிஷிகள்
சோமம் உண்டு தேர்வு நல்கும் ஜோதி பெற்றோமே இ நேரம்
தீமை தீர்ந்தே வாழி இன்பம் சேர்ந்துவிட்டோமே இ நேரம்

#18
**ரிஷிகள்
உடல் உயிர் மேல் உணர்விலும் தீ ஓங்கிவிட்டானே இ நேரம்
கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி கைகொடுத்தாரே இ நேரம்

#19
**ரிஷிகள்
எங்கும் வேள்வி அமரர் எங்கும் யாங்கணும் தீ தீ இ நேரம்
தங்கும் இன்பம் அமர வாழ்க்கை சார்ந்து நின்றோமே இ நேரம்

#20
**ரிஷிகள்
வாழ்க தேவர் வாழ்க வேள்வி மாந்தர் வாழ்வாரே இ நேரம்
வாழ்க வையம் வாழ்க வேதம் வாழ்க தீ தீ தீ இ நேரம்

@76 கிளிப்பாட்டு

#1
திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில்புரிந்து
வருக வருவது என்றே கிளியே மகிழ்வுற்று இருப்போமடி

#2
வெற்றி செயலுக்கு உண்டு விதியின் நியமம் என்று
கற்றுத் தெளிந்த பின்னும் கிளியே கவலைப்படலாகுமோ

#3
துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம்
அன்பில் அழியுமடீ கிளியே அன்புக்கு அழிவு இல்லை காண்

#4
ஞாயிற்றை எண்ணி என்றும் நடுமை நிலை பயின்று
ஆயிரம் ஆண்டு உலகில் கிளியே அழிவு இன்றி வாழ்வோமடீ

#5
தூய பெரும் கனலைச் சுப்பிரமண்ணியனை
நேயத்துடன் பணிந்தால் கிளியே நெருங்கித் துயர் வருமோ

@77 யேசு கிறிஸ்து

#1
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
நேச மா மரியா’ மக்தலேநா நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்
தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர் தேவர் வந்து நமக்குள் புகுந்தே
நாசம் இன்றி நமை நித்தம் காப்பார் நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால்

#2
அன்பு காண் மரியா மக்தலேநா ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால் மூன்று நாளினில் நல் உயிர் தோன்றும்
பொன் பொலிந்த முகத்தினில் கண்டே போற்றுவாள் அந்த நல் உயிர்தன்னை
அன்பு எனும் மரியா மக்தலேநா ஆஹ சாலப் பெரும் களி இஃதே

#3
உண்மை என்ற சிலுவையில் கட்டி உணர்வை ஆணித் தவம் கொண்டு அடித்தால்
வண்மைப் பேர் உயிர் யேசு கிறிஸ்து வான மேனியில் அங்கு விளங்கும்
பெண்மை காண் மரியா மக்தலேநா பேணும் நல் அறம் யேசு கிறிஸ்து
நுண்மை கொண்ட பொருள் இது கண்டீர் நொடியில் இஃது பயின்றிடலாகும்

@78 அல்லா
**பல்லவி

#0
அல்லா அல்லா அல்லா
**சரணங்கள்

#1
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்
எல்லாத் திசையிலும் ஓர் எல்லையில்லா வெளி வானிலே
நில்லாது சுழன்று ஓட நியமம்செய்து அருள் நாயகன்
சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெரும் சோதி
கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவராயினும்
பொல்லாதவராயினும் தவம் இல்லாதவராயினும்
நல்லார் உரை நீதியின்படி நில்லாதவராயினும்
எல்லோரும் வந்து ஏத்தும் அளவில் யம பயம் கெடச் செய்பவன்
&3 வேதாந்தப் பாடல்கள் – ஞானப் பாடல்கள்

@1 அச்சமில்லை
**(பண்டாரப் பாட்டு)

#1
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
இச் சகத்துளோர் எலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
இச்சை கொண்டே பொருள் எலாம் இழந்துவிட்ட போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே

#2
கச்சு அணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
பச்சை ஊன் இயைந்த வேல் படைகள் வந்த போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே

@2 ஜய பேரிகை
**பல்லவி

#0
ஜய பேரிகை கொட்டடா கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா
**சரணங்கள்

#1
பயம் எனும் பேய்தனை அடித்தோம் பொய்ம்மைப் பாம்பைப் பிளந்து உயிரைக் குடித்தோம்
வியன் உலகு அனைத்தையும் அமுது என நுகரும் வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்

#2
இரவியின் ஒளியிடைக் குளித்தோம் ஒளி இன் அமுதினை உண்டு களித்தோம்
கரவினில் வந்து உயிர்க் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம்

#3
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசை எலாம் நான் அன்றி வேறில்லை நோக்கநோக்கக் களியாட்டம்

@3 விடுதலை சிட்டுக்குருவி
**பல்லவி

#0
விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக்குருவியைப் போலே
**சரணங்கள்

#1
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை ஏறி அக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப்படாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ் வான் ஒளி என்னும் மதுவின் சுவை உண்டு

#2
பெட்டையினோடு இன்பம் பேசிக் களிப்புற்றுப் பீடையிலாததோர் கூடுகட்டிக்கொண்டு
முட்டை தரும் குஞ்சைக் காத்து மகிழ்வு எய்தி முந்த உணவு கொடுத்து அன்புசெய்து இங்கு

#3
முற்றத்திலேயும் கழனி வெளியிலும் முன் கண்ட தானியம்தன்னைக் கொணர்ந்து உண்டு
மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின் வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று

@4 விடுதலை வேண்டும்
**ராகம் நாட்டை
**பல்லவி

#0
வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா
**சரணங்கள்

#1
தூண்டும் இன்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவில் அங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழராகி எம்மோடு அமுதம் உண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடும் இன்பம் அனைத்தும் உதவ

#2
விருத்திராதி தானவர்க்கு மெலிவது இன்றியே
விண்ணும் மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே
பொருத்தமுற நல் வேதம் ஓர்ந்து பொய்ம்மை தீர மெய்ம்மை நேர
வருத்தம் அழிய வறுமை ஒழிய வையம் முழுதும் வண்மை பொழிய

#3
பண்ணில் இனிய பாடலோடு பாயும் ஒளி எலாம்
பாரில் எம்மை உரிமைகொண்டு பற்றி நிற்கவே
நண்ணி அமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ணம் இனிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள

@5 உறுதி வேண்டும்

#1
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும்

#2
கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்

@6 ஆத்ம ஜயம்

#1
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திடமாட்டாவோ அட
மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படல் ஆகாதோ
எண்ணியெண்ணிப் பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வோமோ அட
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே

#2
என்ன வரங்கள் பெருமைகள் வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ
தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது சத்தியமாகும் என்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள் முற்றும் உணர்ந்த பின்னும்
தன்னை வென்று ஆளும் திறமை பெறாது இங்கு தாழ்வுற்று நிற்போமோ

@7 காலனுக்கு உரைத்தல்
**ராகம் சக்கரவாகம்
**தாளம் ஆதி
**பல்லவி

#0
காலா உனை நான் சிறு புல் என மதிக்கிறேன் என்றன்
கால் அருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன் அட
**சரணங்கள்

#1
வேலாயுத விருதினை மனதில் மதிக்கிறேன் என்றன்
வேதாந்தம் உரைத்த ஞானியர்தமை எண்ணித் துதிக்கிறேன் ஆதி
மூலா என்று கதறிய யானையைக் காக்கவே நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே அட

#2
ஆலாலம் உண்டவன் அடி சரண் என்ற மார்க்கண்டன்தனது
ஆவி கவரப் போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் இங்கு
நாலாயிரம் காதம் விட்டு அகல் உனை விதிக்கிறேன் ஹரி
நாராயணனாக நின் முன்னே உதிக்கிறேன் அட

@8 மாயையைப் பழித்தல்
**ராகம் காம்போதி
**தாளம் ஆதி

#1
உண்மை அறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ மாயையே மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வதும் ஒன்று உண்டோ மாயையே

#2
எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும் மாயையே நீ
சித்தத் தெளிவு எனும் தீயின் முன் நிற்பாயோ மாயையே

#3
என்னைக் கெடுப்பதற்கு எண்ணமுற்றாய் கெட்ட மாயையே நான்
உன்னைக் கெடுப்பது உறுதி என்றே உணர் மாயையே

#4
சாகத் துணியில் சமுத்திரம் எம்மட்டு மாயையே இந்தத்
தேகம் பொய் என்று உணர் தீரரை என் செய்வாய் மாயையே

#5
இருமை அழிந்த பின் எங்கு இருப்பாய் அற்ப மாயையே தெளிந்து
ஒருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே

#6
நீ தரும் இன்பத்தை நேர் என்று கொள்வனோ மாயையே சிங்கம்
நாய் தரக் கொள்ளுமோ நல் அரசாட்சியை மாயையே

#7
என் இச்சை கொண்டு உனை எற்றிவிட வல்லேன் மாயையே இனி
உன் இச்சை கொண்டு எனக்கு ஒன்றும் வராது காண் மாயையே

#8
யார்க்கும் குடியல்லேன் யான் என்பது ஓர்ந்தனன் மாயையே உன்றன்
போர்க்கு அஞ்சுவேனோ பொடியாக்குவேன் உன்னை மாயையே

@9 சங்கு

#1
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம் பேயுரையாம் என்று இங்கு ஊதேடா சங்கம்

#2
இத் தரை மீதினிலே இந்த நாளினில் இப்பொழுதே முக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையில் களிப்பவர் தூயராம் என்று இங்கு ஊதேடா சங்கம்

#3
பொய்யுறு மாயையைப் பொய் எனக் கொண்டு புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுறலின்றிக் களித்திருப்பார் அவர் ஆரியராம் என்று இங்கு ஊதேடா சங்கம்

#4
மையுறு வாள் விழியாரையும் பொன்னையும் மண் எனக் கொண்டு மயக்கற்று இருந்தாரே
செய்யுறு காரியம் தாம் அன்றிச் செய்வார் சித்தர்களாம் என்று இங்கு ஊதேடா சங்கம்

@10 அறிவே தெய்வம்
**கண்ணிகள்

#1
ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் பல்
லாயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வம் உண்டாம் எனல் கேளீரோ

#2
மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலிகாள் எத
னூடும் நின்று ஓங்கும் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஓதி அறியீரோ

#3
சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ பல
பித்த மதங்களிலே தடுமாறிப் பெருமை அழிவீரோ

#4
வேடம் பல் கோடி ஓர் உண்மைக்கு உள என்று வேதம் புகன்றிடுமே ஆங்கு ஓர்
வேடத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அவ் வேதம் அறியாதே

#5
நாமம் பல் கோடி ஒர் உண்மைக்கு உள என்று நான்மறை கூறிடுமே ஆங்கு ஓர்
நாமத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அ நான்மறை கண்டிலதே

#6
போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணும் நிலையாமே உப
சாந்த நிலையே வேதாந்த நிலை என்று சான்றவர் கண்டனரே

#7
கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு என்று காட்டும் மறைகள் எலாம் நீவிர்
அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு அவங்கள் புரிவீரோ

#8
உள்ளது அனைத்திலும் உள்ளொளி ஆகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே இங்கு
கொள்ளற்கு அரிய பிரமம் என்றே மறை கூவுதல் கேளீரோ

#9
மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறும் கதைகள் சேர்த்துப் பல
கள்ள மதங்கள் பரப்புதற்கு ஓர் மறை காட்டவும் வல்லீரோ

#10
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு எனும் வேதம் எலாம் என்றும்
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு எனக் கொள்வாயே

@11 பரசிவ வெள்ளம்

#1
உள்ளும் புறமுமாய் உள்ளது எலாம் தான் ஆகும்
வெள்ளம் உன்று உண்டாம் அதனைத் தெய்வம் என்பார் வேதியரே

#2
காணுவன நெஞ்சில் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பது அந்த வெள்ளத்தே

#3
எல்லை பிரிவற்றதுவாய் யாதெனும் ஓர் பற்றிலதாய்
இல்லை உளது என்று அறிஞர் என்றும் மயல் எய்துவதாய்

#4
வெட்டவெளியாய் அறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டும் முகிலாய் அணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்

#5
தூல அணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்தில்
சாலவுமே நுண்ணியதாய்த் தன்மை எலாம் தான் ஆகி

#6
தன்மை ஒன்று இலாததுவாய்த் தானே ஒரு பொருளாய்த்
தன்மை பலவுடைத்தாய்த் தான் பலவாய் நிற்பதுவே

#7
எங்கும் உளான் யாவும் வலான் யாவும் அறிவான் எனவே
தங்கு பல மதத்தோர் சாற்றுவதும் இங்கு இதையே

#8
வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்கு
ஈண்டு பொருளாய் அதனை ஈட்டுவதாய் நிற்குமிதே

#9
காண்பார்தம் காட்சியாய்க் காண்பாராய்க் காண் பொருளாய்
மாண்பு ஆர்ந்திருக்கும் வகுத்துரைக்க ஒண்ணாதே

#10
எல்லாம் தான் ஆகி இருந்திடினும் இஃது அறிய
வல்லார் சிலர் என்பர் வாய்மை எல்லாம் கண்டவரே

#11
மற்று இதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்
பற்று இதனைக் கொண்டார் பயன் அனைத்தும் கண்டாரே

#12
இப் பொருளைக் கண்டார் இடருக்கு ஓர் எல்லைகண்டார்
எப்பொருளும் தாம் பெற்று இங்கு இன்பநிலை எய்துவரே

#13
வேண்டுவ எலாம் பெறுவார் வேண்டார் எதனையும் மற்று
ஈண்டு புவியோர் அவரை ஈசர் எனப் போற்றுவரே

#14
ஒன்றுமே வேண்டாது உலகு அனைத்தும் ஆளுவர் காண்
என்றுமே இப் பொருளோடு ஏகாந்தத்து உள்ளவரே

#15
வெள்ளமடா தம்பி விரும்பிய போது எய்தி நினது
உள்ளம் மிசைத் தான் அமுத ஊற்றாய்ப் பொழியுமடா

#16
யாண்டும் இந்த இன்ப வெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே
வேண்டும் உபாயம் மிகவும் எளிதாகுமடா

#17
எண்ணமிட்டாலே போதும் எண்ணுவதே இவ் இன்பத்
தண் அமுதை உள்ளே ததும்பப்புரியுமடா

#18
எங்கும் நிறைந்திருந்த ஈச வெள்ளம் என் அகத்தே
பொங்குகின்றது என்று எண்ணிப் போற்றி நின்றால் போதுமடா

#19
யாதுமாம் ஈச வெள்ளம் என்னுள் நிரம்பியது என்று
ஓதுவதே போதும் அதை உள்ளுவதே போதுமடா

#20
காவித்துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா
பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே

#21
சாத்திரங்கள் வேண்டா சதுமறைகள் ஏதும் இல்லை
தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டுநின்றால் போதுமடா

#22
தவம் ஒன்றும் இல்லை ஒரு சாதனையும் இல்லையடா
சிவம் ஒன்றே உள்ளது எனச் சிந்தைசெய்தால் போதுமடா

#23
சந்ததமும் எங்கும் எல்லாம் தான் ஆகி நின்ற சிவம்
வந்து என் உளே பாயுது என்று வாய் சொன்னால் போதுமடா

#24
நித்தம் சிவவெள்ளம் என்னுள் வீழ்ந்து நிரம்புது என்று உன்
சித்தம் மிசைக் கொள்ளும் சிரத்தை ஒன்றே போதுமடா

@12 பொய்யோ மெய்யோ
** உலகத்தை நோக்கி வினவுதல்

#1
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் எல்லாம்
சொற்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்கள் எல்லாம்
அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ

#2
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்கள் எல்லாம்
கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ
போனது எல்லாம் கனவினைப் போல் புதைந்து அழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ

#3
காலம் என்றே ஒரு நினைவும் காட்சி என்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ
சோலையிலே மரங்கள் எல்லாம் தோன்றுவது ஓர் விதையில் என்றால்
சோலை பொய்யாமோ இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ

#4
காண்ப எல்லாம் மறையும் என்றால் மறைந்தது எல்லாம் காண்பம் அன்றோ
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ
காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதி இல்லை
காண்பது சக்தியாம் இந்தக் காட்சி நித்தியமாம்

@13 நான்
**இரட்டைக் குறள் வெண் செந்துறை

#1
வானில் பறக்கின்ற புள் எலாம் நான் மண்ணில் திரியும் விலங்கு எலாம் நான்
கான் நிழல் வளரும் மரம் எலாம் நான் காற்றும் புனலும் கடலுமே நான்

#2
விண்ணில் தெரிகின்ற மீன் எலாம் நான் வெட்டவெளியின் விரிவு எலாம் நான்
மண்ணில் கிடக்கும் புழு எலாம் நான் வாரியில் உள்ள உயிர் எலாம் நான்

#3
கம்பன் இசைத்த கவி எலாம் நான் காருகர் தீட்டும் உரு எலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில் நகர் கோபுரம் யாவுமே நான்

#4
இன் இசை மாதர் இசையுளேன் நான் இன்பத் திரள்கள் அனைத்துமே நான்
புல் நிலை மாந்தர்தம் பொய் எலாம் நான் பொறையரும் துன்பப் புணர்ப்பு எலாம் நான்

#5
மந்திரம் கோடி இயக்குவோன் நான் இயங்கு பொருளின் இயல்பு எலாம் நான்
தந்திரம் கோடி சமைத்துளோன் நான் சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்

#6
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான் அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்ட நல் சக்திக் கணம் எலாம் நான் காரணமாகிக் கதித்துளோன் நான்

#7
நான் எனும் பொய்யை நடத்துவோன் நான் ஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான்
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் அறிவாய் விளங்கும் முதல் சோதி நான்

@14 சித்தாந்தச் சாமி கோயில்

#1
சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில் தீப ஒளி உண்டாம் பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையும் காட்டிட மூண்ட திருச்சுடராம் பெண்ணே

#2
உள்ளத்து அழுக்கும் உடலில் குறைகளும் ஓட்ட வரும் சுடராம் பெண்ணே
கள்ளத்தனங்கள் அனைத்தும் வெளிப்படக் காட்ட வரும் சுடராம் பெண்ணே

#3
தோன்றும் உயிர்கள் அனைத்தும் நன்று என்பது தோற்றமுறும் சுடராம் பெண்ணே
மூன்று வகைப்படும் காலம் நன்று என்பதை முன்னரிடும் சுடராம் பெண்ணே

#4
பட்டினம்தன்னிலும் பார்க்க நன்று என்பதைப் பார்க்க ஒளிர் சுடராம் பெண்ணே
கட்டும் மனையிலும் கோயில் நன்று என்பதைக் காண ஒளிர் சுடராம் பெண்ணே

@15 பக்தி
**ராகம் – பிலஹரி
**பல்லவி

#0
பக்தியினாலே தெய்வ பக்தியினாலே
**சரணங்கள்

#1
பக்தியினாலே இந்தப் பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடீ
சித்தம் தெளியும் இங்கு செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும்
வித்தைகள் சேரும் நல்ல வீரர் உறவு கிடைக்கும் மனத்திடைத்
தத்துவம் உண்டாம் நெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்

#2
காமப் பிசாசைக் குதிகால் கொண்டு அடித்து விழுந்திடலாகும் இத்
தாமசப் பேயைக் கண்டு தாக்கி மடித்திடலாகும் எந்நேரமும்
தீமையை எண்ணி அஞ்சும் தேம்பல் பிசாசைத் திருகி எறிந்து பொய்
நாமம் இல்லாதே உண்மை நாமத்தினால் இங்கு நன்மை விளைந்திடும்

#3
ஆசையைக் கொல்வோம் புலை அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம் கெட்ட
பாசம் அறுப்போம் இங்குப் பார்வதி சக்தி விளங்குதல் கண்டு அதை
மோசம்செய்யாமல் உண்மை முற்றிலும் கண்டு வணங்கி வணங்கி ஓர்
ஈசனைப் போற்றி இன்பம் யாவையும் உண்டு புகழ்கொண்டு வாழ்குவம்

#4
சோர்வுகள் போகும் பொய்ச் சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெறலாகும் நல்
பார்வைகள் தோன்றும் மிடிப் பாம்பு கடித்த விஷம் அகன்றே நல்ல
சேர்வைகள் சேரும் பல செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
தீர்வைகள் தீரும் பிணி தீரும் பலபல இன்பங்கள் சேர்ந்திடும்

#5
கல்வி வளரும் பல காரியம் கையுறும் வீரியம் ஓங்கிடும்
அல்லல் ஒழியும் நல்ல ஆண்மை உண்டாகும் அறிவு தெளிந்திடும்
சொல்லுவது எல்லாம் மறைச்சொல்லினைப் போலப் பயனுளதாகும் மெய்
வல்லமை தோன்றும் தெய்வ வாழ்க்கையுற்றே இங்கு வாழ்ந்திடலாம் உண்மை

#6
சோம்பல் அழியும் உடல் சொன்னபடிக்கு நடக்கும் முடி சற்றும்
கூம்புதல் இன்றி நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலை பெறும்
வீம்புகள் போகும் நல்ல மேன்மை உண்டாகிப் புயங்கள் பருக்கும் பொய்ப்
பாம்பு மடியும் மெய்ப் பரம் வென்று நல்ல நெறிகள் உண்டாய்விடும்

#7
சந்ததி வாழும் வெறும் சஞ்சலம் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்
இந்தப் புவிக்கே இங்கு ஒர் ஈசன் உண்டாயின் அறிக்கையிட்டேன் உன்றன்
கந்த மலர்த்தாள் துணை காதல் மகவு வளர்ந்திட வேண்டும் என்
சிந்தை அறிந்தே அருள்செய்திட வேண்டும் என்றால் அருள் எய்திடும்

@16 அம்மாக்கண்ணு பாட்டு

#1
பூட்டைத் திறப்பது கையாலே நல்ல மனம் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே

#2
ஏட்டைத் துடைப்பது கையாலே மனவீட்டைத் துடைப்பது மெய்யாலே
வேட்டையடிப்பது வில்லாலே அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே

#3
காற்றை அடைப்பது மனதாலே இந்தக் காயத்தைக் காப்பது செய்கையிலே
சோற்றைப் புசிப்பது வாயாலே உயிர் துணிவுறுவது தாயாலே

@17 வண்டிக்காரன் பாட்டு
**(அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்)

#1
காட்டு வழிதனிலே அண்ணே கள்ளர் பயம் இருந்தால் எங்கள்
வீட்டுக் குலதெய்வம் தம்பி வீரம்மை காக்குமடா

#2
நிறுத்து வண்டி என்றே கள்ளர் நெருங்கிக் கேட்கையிலே எங்கள்
கறுத்த மாரியின் பேர் சொன்னால் காலனும் அஞ்சுமடா

@18 கடமை

#1
கடமை புரிவார் இன்புறுவார் என்னும் பண்டைக் கதை பேணோம்
கடமை அறிவோம் தொழில் அறியோம் கட்டு என்பதனை வெட்டு என்போம்
மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவும் மற்று இவை போல்
கடமை நினைவும் தொலைத்து இங்கு களியுற்று என்றும் வாழ்குவமே

@19 அன்பு செய்தல்

#1
இந்தப் புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறு மலர்ப் பூம் செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ

#2
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றி நீர்பாய்ச்சாவிடினும்
வான் உலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள்
வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் என்றே
யான் எதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே நீவிர்
என் மதத்தைக் கைக்கொள்-மின் பாடுபடல் வேண்டா
ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும்
உங்களுக்குத் தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீர்

@20 சென்றது மீளாது

#1
சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும்
சென்றதையே சிந்தைசெய்து
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்
தீமை எலாம் அழிந்துபோம் திரும்பி வாரா

@21 மனத்திற்குக் கட்டளை

#1
பேயாய் உழலும் சிறுமனமே பேணாய் என் சொல் இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே நினது தலைவன் யானே காண்
தாயாம் சக்தி தாளினிலும் தருமம் என யான் குறிப்பதிலும்
ஓயாதே நின்று உழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால்

@22 மனப் பெண்

#1
மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய்
ஒன்றையே பற்றி ஊசலாடுவாய்
அடுத்ததை நோக்கி அடுத்தடுத்து உலவுவாய்
நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய் 5
தொட்டதை மீளமீளவும் தொடுவாய்
புதியது காணில் புலன் அழிந்திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல்
பழமையாம் பொருளில் பரிந்து போய் வீழ்வாய் 10
பழமையே அன்றிப் பார் மிசை ஏதும்
புதுமை காணோம் எனப் பொருமுவாய் சீச்சீ
பிணத்தினை விரும்பும் காக்கையே போல
அழுகுதல் சாதல் அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்து அதில் இசைவாய் 15
அங்ஙனே
என்னிடத்து என்றும் மாறுதல் இல்லா
அன்புகொண்டிருப்பாய் ஆவி காத்திடுவாய்
கண்ணின் ஓர் கண்ணாய் காதின் காதாய்ப்
புலன் புலப்படுத்தும் புலனாய் என்னை 20
உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்
இன்பு எலாம் தருவாய் இன்பத்து மயங்குவாய்
இன்பமே நாடி எண்ணிலாப் பிழைசெய்வாய்
இன்பம் காத்துத் துன்பமே அழிப்பாய்
இன்பம் என்று எண்ணித் துன்பத்து வீழ்வாய் 25
தன்னை அறியாய் சகத்து எலாம் தொளைப்பாய்
தன் பின் நிற்கும் தனிப் பரம்பொருளைக்
காணவே வருந்துவாய் காண் எனில் காணாய்
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்
பொதுநிலை அறியாய் பொருளையும் காணாய் 30
மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய்
நின்னொடு வாழும் நெறியும் நன்கு அறிந்திடேன்
இத்தனை நாள் போல் இனியும் நின் இன்பமே
விரும்புவன் நின்னை மேம்படுத்திடவே
முயற்சிகள் புரிவேன் முத்தியும் தேடுவேன் 35
உன் விழிப் படாமல் என் விழிப் பட்ட
சிவம் எனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக்கு இன்பம் ஓங்கிடச் செய்வேன்

@23 பகைவனுக்கு அருள்வாய்

#0
பகைவனுக்கு அருள்வாய் நல் நெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய்

#1
புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியில் கண்டோமே நல் நெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நல் நெஞ்சே
பரமன் வாழ்கின்றான்

#2
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ நல் நெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி வளராதோ நல் நெஞ்சே

#3
உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ நல் நெஞ்சே
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்த பின் தேன் ஆமோ நல் நெஞ்சே

#4
வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேர் ஆமோ நல் நெஞ்சே
தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான் என்ற சாத்திரம் கேளாயோ நல் நெஞ்சே

#5
போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர் போல வந்தானும் அவன் நல் நெஞ்சே
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு நின்றதும் கண்ணன் அன்றோ நல் நெஞ்சே

#6
தின்ன வரும் புலிதன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய் நல் நெஞ்சே
அன்னை பராசக்தி அவ் உரு ஆயினள் அவளைக் கும்பிடுவாய் நல் நெஞ்சே

@24 தெளிவு

#1
எல்லாம் ஆகிக் கலந்து நிறைந்த பின் ஏழைமை உண்டோடா மனமே
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த பின் புத்தி மயக்கம் உண்டோ

#2
உள்ளது எலாம் ஓர் உயிர் என்று தேர்ந்த பின் உள்ளம் குலைவது உண்டோ மனமே
வெள்ளம் எனப் பொழி தண் அருள் ஆழ்ந்த பின் வேதனை உண்டோடா

#3
சித்தின் இயல்பும் அதன் பெரும் சத்தியின்
செய்கையும் தேர்ந்துவிட்டால் மனமே
எத்தனை கோடி இடர் வந்து சூழினும்
எண்ணம் சிறிதும் உண்டோ

#4
செய்க செயல்கள் சிவத்திடை நின்று எனத் தேவன் உரைத்தனனே மனமே
பொய் கருதாமல் அதன் வழி நிற்பவர் பூதலம் அஞ்சுவரோ

#5
ஆன்ம ஒளிக் கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு அச்சமும் உண்டோடா மனமே
தேன் மடை இங்கு திறந்தது கண்டு தேக்கித் திரிவமடா

@25 கற்பனையூர்

#1
கற்பனையூர் என்ற நகர் உண்டாம் அங்குக் கந்தர்வர் விளையாடுவாராம்
சொப்பனநாடு என்ற சுடர்நாடு அங்குச் சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை

#2
திருமணை இது கொள்ளைப் போர்க்கப்பல் இது ஸ்பானியக் கடலில் யாத்திரை போம்
வெருவுற மாய்வார் பலர் கடலில் நாம் மீளவும் நம் ஊர் திரும்பும் முன்னே

#3
அ நகர்தனில் ஓர் இளவரசன் நம்மை அன்பொடு கண்டு உரைசெய்திடுவான்
மன்னவன் முத்தமிட்டு எழுப்பிடவே அவன் மனைவியும் எழுந்து அங்கு வந்திடுவாள்

#4
எக்காலமும் பெரு மகிழ்ச்சி அங்கே எவ்வகைக் கவலையும் போரும் இல்லை
பக்குவத் தேயிலைநீர் குடிப்போம் அங்குப் பதுமை கைக் கிண்ணத்தில் அளித்திடவே

#5
இன் அமுதிற்கு அது நேர் ஆகும் நம்மை யோவான் விடுவிக்க வருமளவும்
நல் நகரதனிடை வாழ்ந்திடுவோம் நம்மை நலித்திடும் பேய் அங்கு வாராதே

#6
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணம் காண் அங்குக் கோல் பந்து யாவிற்கும் உயிர் உண்டாம்
அழகிய பொன் முடி அரசிகளாம் அன்றி அரசிளங்குமரிகள் பொம்மை எலாம்

#7
செந்தோல் அசுரனைக் கொன்றிடவே அங்குச் சிறு விறகு எல்லாம் சுடர் மணி வாள்
சந்தோஷத்துடன் செங்கலையும் அட்டைத் தாளையும் கொண்டு அங்கு மனைகட்டுவோம்

#8
கள்ளர் அவ் வீட்டினுள் புகுந்திடவே வழி காண்பதிலா வகை செய்திடுவோம் ஓ
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே நீர் பின்னும் அ நிலைபெற வேண்டீரோ

#9
குழந்தைகள் ஆட்டத்தின் கனவை எல்லாம் அந்தக் கோல நல் நாட்டிடைக் காண்பீரே
இழந்த நல் இன்பங்கள் மீட்குறலாம் நீர் ஏகுதிர் கற்பனைநகரினுக்கே
**[ஜான் ஸ்கர் என்ற ஆங்கிலப் புலவன் நக்ஷத்ர தூதன் என்ற பத்திரிகையில் பிரசுரித்த
**தி டவுன் ஓப் லெட்ஸ் பிரெடெண்டு என்ற பாட்டின் மொழி பெயர்ப்பு]
** குறிப்பு இப்பாடலின் பொருள் கற்பனை நகரமென்பது சித்தத்தில்
** குழந்தை நிலை பெறுவதை இங்குக் குறிப்பிடுகிறது. யோவான் என்பது
** குமார தேவனுடைய பெயர். அக்கடவுள் மனிதனுக்குள்ளே
** நிலைபெற்று மனிதன் அடையவேண்டும் என்று யேசு கிறிஸ்து நாதர்
** சொல்லியிருக்கும் பொருளை இப்பாடல் குறிப்பிடுகிறது கவலைகளை முற்றுந்
** துறந்துவிட்டு உலகத்தை வெறுமே **லீலையாகக் கருதினாலன்றி மோக்ஷம் எய்தப் படாது.
&4 பல்வகைப் பாடல்கள்

@1 புதிய ஆத்திசூடி
**(காப்பு – பரம்பொருள் வாழ்த்து)

#1
ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத்திருக்கும் முழு வெண்மேனியான்
கரு நிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறை அருள்புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து உணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே
அதன் இயல் ஒளியுறும் அறிவாம்
அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம்
**நூல்

#2
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண் மிக விரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறு போல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்தல் ஒழி
ஔடதம் குறை
கற்றது ஒழுகு
காலம் அழியேல்
கிளை பல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல்
குன்று என நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
கோல் கைக் கொண்டு வாழ்
கவ்வியதை விடேல்
சரித்திரத் தேர்ச்சிகொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்
சீறுவோர்ச் சீறு
சுமையினுக்கு இளைத்திடேல்
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்
சைகையில் பொருள் உணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிடம்தனை இகழ்
சௌரியம் தவறேல்
ஞமலி போல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிரென இன்புறு
ஞெகிழ்வது அருளின்
ஞேயம் காத்தல்செய்
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்று வாழ்
தீயோர்க்கு அஞ்சேல்
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்று உணர்
தேசத்தைக் காத்தல்செய்
தையலை உயர்வுசெய்
தொன்மைக்கு அஞ்சேல்
தோல்வியில் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி
நன்று கருது
நாள் எலாம் வினை செய்
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்
நேர்படப் பேசு
நையப் புடை
நொந்தது சாகும்
நோற்பது கைவிடேல்
பணத்தினைப் பெருக்கு
பாட்டினில் அன்புசெய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு
பூமி இழந்திடேல்
பெரிதினும் பெரிது கேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்ம்மை இகழ்
போர்த்தொழில் பழகு
மந்திரம் வலிமை
மானம் போற்று
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்துகொள்
முனையிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங்கொடேல்
மெல்லத் தெரிந்து சொல்
மேழி போற்று
மொய்ம்புறத் தவம்செய்
மோனம் போற்று
மௌட்டியம்தனைக் கொல்
யவனர் போல் முயற்சிகொள்
யாவரையும் மதித்து வாழ்
யௌவனம் காத்தல்செய்
ரஸத்திலே தேர்ச்சிகொள்
ராஜஸம் பயில்
ரீதி தவறேல்
ருசி பல வென்று உணர்
ரூபம் செம்மைசெய்
ரேகையில் கனி கொள்
ரோதனம் தவிர்
ரௌத்திரம் பழகு
லவம் பல வெள்ளமாம்
லாகவம் பயிற்சிசெய்
லீலை இவ் உலகு
லுத்தரை இகழ்
லோகநூல் கற்று உணர்
லௌகிகம் ஆற்று
வருவதை மகிழ்ந்து உண்
வானநூல் பயிற்சிகொள்
விதையினைத் தெரிந்திடு
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு
வேதம் புதுமைசெய்
வையத் தலைமைகொள்
வௌவுதல் நீக்கு

@2 பாப்பாப் பாட்டு

#1
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா

#2
சின்னஞ்சிறு குருவி போலே நீ திரிந்து பறந்து வா பாப்பா
வன்னப் பறவைகளைக் கண்டு நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா

#3
கொத்தித் திரியும் அந்தக் கோழி அதைக் கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடும் அந்தக் காக்காய் அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா

#4
பாலைப் பொழிந்து தரும் பாப்பா அந்தப் பசு மிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்து வரும் நாய்தான் அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா

#5
வண்டி இழுக்கும் நல்ல குதிரை நெல்லு வயலில் உழுது வரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா

#6
காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

#7
பொய் சொல்லக் கூடாது பாப்பா என்றும் புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா

#8
பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

#9
துன்பம் நெருங்கி வந்த போதும் நாம் சோர்ந்துவிடலாகாது பாப்பா
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா

#10
சோம்பல் மிகக் கெடுதி பாப்பா தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா
தேம்பி அழும் குழந்தை நொண்டி நீ திடங்கொண்டு போராடு பாப்பா

#11
தமிழ்த்திருநாடுதன்னைப் பெற்ற எங்கள் தாய் என்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

#12
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் அதைத் தினமும் புகழ்ந்திடடி பாப்பா

#13
வடக்கில் இமயமலை பாப்பா தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா

#14
வேதம் உடையது இந்த நாடு நல்ல வீரர் பிறந்தது இந்த நாடு
சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் இதைத் தெய்வம் என்று கும்பிடடி பாப்பா

#15
சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்

#16
உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேணும்
வயிரமுடைய நெஞ்சு வேணும் இது வாழும் முறைமையடி பாப்பா

@3 முரசு

#0
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே
நெற்றி ஒற்றைக்கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே

#1
ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்
சீருக்கெல்லாம் முதல் ஆகும் ஒரு தெய்வம் துணைசெய்ய வேண்டும்

#2
வேதம் அறிந்தவன் பார்ப்பான் பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

#3
பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டர் என்றோர் வகுப்பு இல்லை தொழில் சோம்பலைப் போல் இழிவு இல்லை

#4
நாலு வகுப்பும் இங்கு ஒன்றே இந்த நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி

#5
ஒற்றைக் குடும்பம்தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை
மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை

#6
ஏவல்கள் செய்பவர் மக்கள் இவர் யாவரும் ஓர் குலம் அன்றோ
மேவி அனைவரும் ஒன்றாய் நல்ல வீடு நடத்துதல் கண்டோம்

#7
சாதிப் பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வு என்றும் மேல் என்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்

#8
சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
ஆதரவுற்று இங்கு வாழ்வோம் தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்

#9
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்

#10
கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர்

#11
தெய்வம் பலபல சொல்லிப் பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வது அனைத்திலும் ஒன்றாய் எங்கும் ஓர்பொருளானது தெய்வம்

#12
தீயினைக் கும்பிடும் பார்ப்பார் நித்தம் திக்கை வணங்கும் துருக்கர்
கோவில் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் யேசு மதத்தார்

#13
யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்

#14
வெள்ளை நிறத்து ஒரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்று அந்தப் பூனை அவை பேருக்கு ஒரு நிறம் ஆகும்

#15
சாம்பல் நிறம் ஒரு குட்டி கரும் சாந்து நிறம் ஒரு குட்டி
பாம்பு நிறம் ஒரு குட்டி வெள்ளைப் பாலின் நிறம் ஒரு குட்டி

#16
எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிது என்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

#17
வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் இங்கு யாவர்க்கும் ஒன்று எனல் காணீர்

#18
நிகர் என்று கொட்டு முரசே இந்த நீணிலம் வாழ்பவர் எல்லாம்
தகர் என்று கொட்டு முரசே பொய்ம்மைச் சாதி வகுப்பினை எல்லாம்

#19
அன்பு என்று கொட்டு முரசே அதில் ஆக்கம் உண்டாம் என்று கொட்டு
துன்பங்கள் யாவுமே போகும் வெறும் சூதுப் பிரிவுகள் போனால்

#20
அன்பு என்று கொட்டு முரசே மக்கள் அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்று என்று கொண்டால்

#21
உடன்பிறந்தார்களைப் போலே இவ் உலகில் மனிதர் எல்லாரும்
இடம் பெரிது உண்டு வையத்தில் இதில் ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்

#22
மரத்தினை நட்டவன் தண்ணீர் நன்கு வார்த்து அதை ஓங்கிடச் செய்வான்
சிரத்தை உடையது தெய்வம் இங்கு சேர்த்த உணவு எல்லை இல்லை

#23
வயிற்றுக்குச் சோறு உண்டு கண்டீர் இங்கு வாழும் மனிதர் எல்லோருக்கும்
பயிற்றி உழுது உண்டு வாழ்வீர் பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்

#24
உடன்பிறந்தவர்களைப் போலே இவ் உலகினில் மனிதர் எல்லாரும்
திடங்கொண்டவர் மெலிந்தோரை இங்குத் தின்று பிழைத்திடலாமோ

#25
வலிமையுடையது தெய்வம் நம்மை வாழ்ந்திடச்செய்வது தெய்வம்
மெலிவு கண்டாலும் குழந்தைதன்னை வீழ்த்தி மிதித்திடலாமோ

#26
தம்பி சற்றே மெலிவானால் அண்ணன் தான் அடிமைகொள்ளலாமோ
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள் சிற்றடிமைப்படலாமோ

#27
அன்பு என்று கொட்டு முரசே அதில் யார்க்கும் விடுதலை உண்டு
பின்பு மனிதர்கள் எல்லாம் கல்வி பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்

#28
அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்

#29
பாருக்குள்ளே சமத்தன்மை தொடர் பற்றும் சகோதரத்தன்மை
யாருக்கும் தீமை செய்யாது புவி எங்கும் விடுதலை செய்யும்

#30
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்

#31
ஒன்று என்று கொட்டு முரசே அன்பில் ஓங்கு என்று கொட்டு முரசே
நன்று என்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக்கு எல்லாம்

@4 புதுமைப் பெண்

#1
போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின்
பொன் அடிக்குப் பல்லாயிரம் போற்றி காண்
சேற்றிலே புதிதாக முளைத்ததோர்
செய்ய தாமரைத் தேமலர் போல் ஒளி
தோற்றி நின்றனை பாரதநாட்டிலே
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை மாதரசே எங்கள்
சாதி செய்த தவப்பயன் வாழி நீ

#2
மாதர்க்கு உண்டு சுதந்திரம் என்று நின்
வண் மலர்த் திருவாயின் மொழிந்த சொல்
நாதம்தான் அது நாரதர் வீணையோ
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழல் இன்பமோ
வேதம் பொன் உருக் கன்னிகை ஆகியே
மேன்மைசெய்து எமைக் காத்திடச் சொல்வதோ
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ
தையல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இங்கே

#3
அறிவு கொண்ட மனித உயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டு உயர் தேவர்கள் ஆதற்கே
சிறிய தொண்டுகள் தீர்த்து அடிமைச் சுருள்
தீயில் இட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்
நறிய பொன் மலர் மென் சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ

#4
ஆணும் பெண்ணும் நிகர் எனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணும் நல் அறத்தோடு இங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல் அறம் வீர சுதந்திரம்
பேணும் நற்குடிப் பெண்ணின் குணங்களாம்
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ

#5
நிலத்தின் தன்மை பயிர்க்கு உளதாகுமாம்
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்பு உயர் மக்களைப் பெற்றிடல்
சாலவே அரிது ஆவதோர் செய்தியாம்
குலத்து மாதர்குக் கற்பு இயல்பு ஆகுமாம்
கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அ
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ

#6
புதுமைப்பெண் இவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிது அன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்த நாள்
தன்னிலே பொதுவான வழக்கமாம்
மதுரத் தேமொழி மங்கையர் உண்மை தேர்
மா தவப் பெரியோருடன் ஒப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்

#7
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்
அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்
அவலம் எய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம்
உதயகன்னி உரைப்பது கேட்டீரோ

#8
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவும் சென்று புதுமை கொணர்ந்து இங்கே
திலக வாணுதலார் நங்கள் பாரத
தேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்

#9
சாத்திரங்கள் பலபல கற்பாராம்
சவுரியங்கள் பலபல செய்வராம்
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்
மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம்
காத்து மானிடர் செய்கை அனைத்தையும்
கடவுளர்க்கு இனிதாகச் சமைப்பராம்
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ

#10
போற்றி போற்றி ஜய ஜய போற்றி இப்
புதுமைப்பெண் ஒளி வாழி பல்லாண்டு இங்கே
மாற்றி வையம் புதுமையுறச்செய்து
மனிதர்தம்மை அமர்கள் ஆக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல்
அருளினால் ஒரு கன்னிகை ஆகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேல் செல்வம் எய்தினோம்

@5 பெண்மை

#1
பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா
தண்மை இன்பம் நல் புண்ணியம் சேர்ந்தன
தாயின் பெயரும் சதி என்ற நாமமும்

#2
அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடுவோம்
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பம் தீர்வது பெண்மையினாலடா
சூரப் பிள்ளைகள் தாய் என்று போற்றுவோம்

#3
வலிமை சேர்ப்பது தாய் முலைப் பாலடா
மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலி அழிப்பது பெண்கள் அறமடா
கைகள் கோத்துக் களித்து நின்று ஆடுவோம்

#4
பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரம்தான்
பேணுமாயில் பிறகு ஒரு தாழ்வு இல்லை
கண்ணைக் காக்கும் இரண்டு இமை போலவே
காதல் இன்பத்தைக் காத்திடுவோமடா

#5
சக்தி என்ற மதுவை உண்போமடா
தாளம்கொட்டித் திசைகள் அதிரவே
ஒத்து இயல்வதொர் பாட்டும் குழல்களும்
ஊர் வியக்கக் களித்து நின்று ஆடுவோம்

#6
உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா
ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே

#7
போற்றி தாய் என்று தோள் கொட்டி ஆடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதல்கிளிகட்கே
நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண் இடைப் பெண் ஒருத்தி பணியிலே

#8
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா
போற்றி தாய் என்று பொன் குழல் ஊதடா
காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம்
காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே

#9
அன்னம் ஊட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்
கன்னத்தே முத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும் பொன் கைகளைப் பாடுவோம்

@6 பெண்கள் விடுதலைக் கும்பி
**காப்பு

#0
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள் பேசிக் களிப்பொடு நாம் பாடக்
கண்களிலே ஒளி போல உயிரில் கலந்து ஒளிர் தெய்வம் நல் காப்பாமே

#1
கும்மியடி தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோம் என்று கும்மியடி

#2
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று எண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்

#3
மாட்டை அடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டுவந்தே
வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார் அதை வெட்டிவிட்டோம் என்று கும்மியடி

#4
நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ
கொல்லத் துணிவின்றி நம்மையும் அ நிலை கூட்டிவைத்தார் பழி கூட்டிவிட்டார்

#5
கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்

#6
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி

#7
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோம் என்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவோம்

#8
காதலொருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து
மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சிபெறச் செய்து வாழ்வமடி

@7 பெண் விடுதலை

#1
விடுதலைக்கு மகளிர் எல்லோரும் வேட்கைகொண்டனம் வெல்லுவம் என்றே
திடமனத்தின் மதுக்கிண்ணம் மீது சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம்
உடையவள் சக்தி ஆண் பெண் இரண்டும் ஒரு நிகர் செய்து உரிமை சமைத்தாள்
இடையிலே பட்ட கீழ்நிலை கண்டீர் இதற்கு நாம் ஒருப்பட்டிருப்போமோ

#2
திறமையால் இங்கு மேனிலை சேர்வோம் தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்
குறைவிலாது முழு நிகர் நம்மைக் கொள்வர் ஆண்கள் எனில் அவரோடும்
சிறுமை தீர நம் தாய்த்திருநாட்டைத் திரும்ப வெல்வதில் சேர்ந்து இங்கு உழைப்போம்
அற விழுந்தது பண்டை வழக்கம் ஆணுக்குப் பெண் விலங்கு எனும் அஃதே

#3
விடியும் நல் ஒளி காணுதி நின்றே மேவும் நாகரிகம் புதிது ஒன்றே
கொடியர் நம்மை அடிமைகள் என்றே கொண்டு தாம் முதல் என்றனர் அன்றே
அடியொடு அந்த வழக்கத்தைக் கொன்றே அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர் நம் தேசத்து வீரக் காரிகைக் கணத்தீர் துணிவுற்றே

@8 தொழில்

#1
இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே யந்திரங்கள் வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவி மேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே
பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு நீரே

#2
மண் எடுத்துக் குடங்கள் செய்வீரே மரத்தை வெட்டி மனை செய்குவீரே
உண்ணக் காய்கனி தந்திடுவீரே உழுது நன்செய்ப் பயிரிடுவீரே
எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே இழையை நூற்று நல் ஆடை செய்வீரே
விண்ணினின்று எமை வானவர் காப்பார் மேவிப் பார் மிசைக் காப்பவர் நீரே

#3
பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே பரதநாட்டியக் கூத்திடுவீரே
காட்டும் வையப் பொருள்களின் உண்மை கண்டு சாத்திரம் சேர்த்திடுவீரே
நாட்டிலே அறம் கூட்டிவைப்பீரே நாடும் இன்பங்கள் ஊட்டிவைப்பீரே
தேட்டம் இன்றி விழி எதிர் காணும் தெய்வமாக விளங்குவிர் நீரே

@9 மறவன் பாட்டு

#1
மண் வெட்டிக் கூலி தினலாச்சே எங்கள் வாள் வலியும் வேல் வலியும் போச்சே
விண் முட்டிச் சென்ற புகழ் போச்சே இந்த மேதினியில் கெட்டபெயர் ஆச்சே

#2
நாண் இலகு வில்லினொடு தூணி நல்ல நாதம் மிகு சங்கொலியும் பேணி
பூண் இலகு திண் கதையும் கொண்டு நாங்கள் போர்செய்த காலம் எல்லாம் பண்டு

#3
கன்னங்கரிய இருள் நேரம் அதில் காற்றும் பெரு மழையும் சேரும்
சின்னக் கரிய துணியாலே எங்கள் தேகம் எல்லாம் மூடி நரி போலே

#4
ஏழை எளியவர்கள் வீட்டில் இந்த ஈன வயிறு படும் பாட்டில்
கோழை எலிகள் என்னச் சென்றே பொருள் கொண்டு இழிவின் வருகிறோம் இன்றே

#5
முன் நாளில் ஐயர் எல்லாம் வேதம் சொல்வார் மூன்று மழை பெய்யுமடா மாதம்
இந்நாளிலே பொய்ம்மைப் பார்ப்பார் இவர் ஏது செய்தும் காசு பெறப்பார்ப்பார்

#6
பேராசைக்காரனடா பார்ப்பான் ஆனால் பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் துரை இம்மென்றால் நாய் போலே உழைப்பான்

#7
பிள்ளைக்குப் பூணூலாம் என்பான் நம்மைப் பிய்த்துப் பணம் கொடு எனத் தின்பான்
கொள்ளைக்கே சென்று ஒரு பொய் மூட்டி நம்மைக் கொண்டதிலே தொல்லை செய்வான் மாட்டி

#8
மெல்லப் பயந்து மிகப் பதுங்கி ஒரு வேற்றுவரும் கண்ட பொழுது ஒதுங்கி
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்தது இந்தப் பஞ்சம்

#9
நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு ஐயோ நாள் எல்லாம் மற்று இதிலே உழைப்பு
பாயும் கடிநாய்ப் போலீசுக்காரப் பார்ப்பானுக்கு உண்டு இதிலே பீசு

#10
சோரம் தொழிலாக் கொள்வோமோ முந்தைச் சூரர் பெயரை அழிப்போமோ
வீர மறவர் நாம் அன்றோ இந்த வீண் வாழ்க்கை வாழ்வது இனி நன்றோ

@10 நாட்டுக் கல்வி
**(ஆங்கிலத்தில் ரவீந்திரநாதர் எழுதிய பாடலின் மொழிபெயர்ப்பு)

#1
விளக்கிலே திரி நன்கு சமைந்தது மேவுவீர் இங்கு தீக் கொண்டு தோழரே
களக்கமுற்ற இருள் கடந்து ஏகுவார் காலைச் சோதிக் கதிரவன் கோவிற்கே
துளக்கமுற்ற விண்மீனிடம் செல்லுவார் தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார்
களிப்பு மிஞ்சி ஒளியினைப் பண்டு ஒரு காலம் நீர் சென்று தேடியதில்லையோ

#2
அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே ஆசை என்ற விண்மீன் ஒளிர்செய்ததே
துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால் சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்
நின்று அவிந்தன நுங்கள் விளக்கு எலாம் நீங்கள் கண்ட கனாக்கள் எல்லாம் இசை
குன்றித் தீக்குறி தோன்றும் இராப்புட்கள் கூவுமாறு ஒத்திருந்தன காண்டிரோ

#3
இன்னும் இங்கு இருள் கூடியிருப்பினும் ஏங்குகின்ற நரகத்து உயிர்கள் போல்
இன்னும் இங்கு வனத்திடை காற்றுத்தான் ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும்
முன்னைக் காலத்தின் நின்று எழும் பேரொலி முறைமுறை பல ஊழியின் ஊடுற்றே
பின்னை இங்கு வந்து எய்திய பேரொலி போல மந்திர வேதத்தின் பேரொலி

#4
இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய் இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டுவாய்
அருளும் இந்த மறையொலி வந்து இங்கே ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப்பீர்தமைத்
தெருளுறுத்தவும் நீர் எழுகில்லிரோ தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர்
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ வான் ஒளிக்கு மகாஅர் இ யாம் என்றே

@11 புதிய கோணங்கி

#1
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி சொல்லடி சக்தி மாகாளீ
வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு

#2
தரித்திரம் போகுது செல்வம் வருகுது
படிப்பு வளருது பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோ என்று போவான்

#3
வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது
யந்திரம் பெருகுது தந்திரம் வளருது
மந்திரம் எல்லாம் வளருது வளருது

#4
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சொல்லடி சொல்லடி மலையாள பகவதீ
அந்தரி வீரி சண்டிகை சூலி
குடுகுடு குடுகுடு

#5
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சாமிமார்க்கு எல்லாம் தைரியம் வளருது
தொப்பை சுருங்குது சுறுசுறுப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது
சாத்திரம் வளருது சாதி குறையுது
நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது
வீரம் வருகுது மேன்மை கிடைக்குது
சொல்லடி சக்தி மலையாள பகவதி
தர்மம் பெருகுது தர்மம் பெருகுது
&5 தனிப் பாடல்கள்

@1 காலைப் பொழுது

#1
காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர் வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே

#2
கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான்
பார்த்த வெளி எல்லாம் பகல் ஒளியாய் மின்னிற்றே

#3
தென்னைமரத்தின் கிளையிடையே தென்றல் போய்
மன்னப் பருந்தினுக்கு மாலையிட்டுச் சென்றதுவே

#4
தென்னைமரக் கிளை மேல் சிந்தனையோடு ஓர் காகம்
வன்னமுற வீற்றிருந்து வானை முத்தமிட்டதுவே

#5
தென்னைப் பசுங்கீற்றைக் கொத்திச் சிறு காக்கை
மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே

#6
வன்னச் சுடர் மிகுந்த வானகத்தே தென்திசையில்
கன்னங்கரும் காகக் கூட்டம் வரக் கண்டது அங்கே

#7
கூட்டத்தைக் கண்டு அஃது கும்பிட்டே தன் அருகு ஓர்
பாட்டுக் குருவிதனைப் பார்த்து நகைத்ததுவே

#8
சின்னக் குருவி சிரிப்புடனே வந்து ஆங்கு
கன்னங்கரும் காக்கை கண் எதிரே ஓர் கிளை மேல்

#9
வீற்றிருந்தே கிக்கிக்கீ காக்காய் நீ விண்ணிடையே
போற்றி எதை நோக்குகிறாய் கூட்டம் அங்குப் போவது என்னே

#10
என்றவுடனே காக்கை என் தோழா நீ கேளாய்
மன்றுதனைக் கண்டே மனம் மகிழ்ந்து போற்றுகிறேன்

#11
என்று சொல்லிக் காக்கை இருக்கையிலே ஆங்கண் ஓர்
மின் திகழும் பச்சைக்கிளி வந்து வீற்றிருந்தே

#12
நட்புக் குருவியே ஞாயிற்று இளவெயிலில்
கட்புலனுக்கு எல்லாம் களியாகத் தோன்றுகையில்

#13
நும்மை மகிழ்ச்சிடன் நோக்கி இங்கு வந்திட்டேன்
அம்மவோ காகப் பெரும் கூட்டம் அஃது என்னே

#14
என்று வினவக் குருவிதான் இஃது உரைக்கும்
நன்று நீ கேட்டாய் பசுங்கிளியே நானும் இங்கு

#15
மற்று அதனை ஓர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன்
கற்றறிந்த காக்காய் கழறுக நீ என்றதுவே

#16
அப்போது காக்கை அருமையுள்ள தோழர்களே
செப்புவேன் கேளீர் சில நாளாக் காக்கையுள்ளே

#17
நேர்ந்த புதுமைகளை நீர் கேட்டு அறியீரோ
சார்ந்து நின்ற கூட்டம் அங்கு சாலையின் மேல் கண்டீரே

#18
மற்று அந்தக் கூட்டத்து மன்னவனைக் காணீரே
கற்றறிந்த ஞானி கடவுளையே நேர் ஆவான்

#19
ஏழு நாள் முன்னே இறை மகுடம் தான் புனைந்தான்
வாழி அவன் எங்கள் வருத்தம் எல்லாம் போக்கிவிட்டான்

#20
சோற்றுக்குப் பஞ்சம் இல்லை போர் இல்லை துன்பம் இல்லை
போற்றற்குரியான் புது மன்னன் காணீரோ

#21
என்று உரைத்துக் காக்கை இருக்கையிலே அன்னம் ஒன்று
தென்திசையினின்று சிரிப்புடனே வந்தது அங்கே

#22
அன்னம் அந்தத் தென்னை அருகினில் ஓர் மாடம் மிசை
வன்னமுற வீற்றிருந்து வாழ்க துணைவரே

#23
காலை இளவெயிலில் காண்பது எலாம் இன்பம் அன்றோ
சால நுமைக் கண்டு களித்தேன் சருவி நீர்

#24
ஏதுரைகள் பேசி இருக்கின்றீர் என்றிடவே
போதமுள்ள காக்கை புகன்றது அந்தச் செய்தி எல்லாம்

#25
அன்னம் இது கேட்டு மகிழ்ந்து உரைக்கும் ஆம் காணும்
மன்னர் அறம்புரிந்தால் வையம் எல்லாம் மாண்புபெறும்

#26
ஒற்றுமையால் மேன்மை உண்டாம் ஒன்றையொன்று துன்பிழைத்தல்
குற்றம் என்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே

#27
என்று சொல்லி அன்னம் பறந்து ஆங்கே ஏகிற்றால்
மன்று கலைந்து மறைந்தன அப் புட்கள் எல்லாம்

#28
காலைப் பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்கள் இதை
ஞாலம் அறிந்திடவே நாங்கள் இதைப் பாட்டிசைத்தோம்

@2 அந்திப் பொழுது

#1
காவென்று கத்திடும் காக்கை என்றன் கண்ணுக்கு இனிய கரு நிறக் காக்கை
மேவிப் பல கிளை மீதில் இங்கு விண்ணிடை அந்திப் பொழுதினைக் கண்டே
கூவித் திரியும் சிலவே சில கூட்டங்கள் கூடித் திசைதொறும் போகும்
தேவி பராசக்தி அன்னை விண்ணில் செவ்வொளி காட்டிப் பிறை தலைக் கொண்டாள்

#2
தென்னைமரக் கிளை மீதில் அங்கு ஓர் செல்வப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்
சின்னஞ்சிறிய குருவி அது ஜிவ்வென்று விண்ணிடை ஊசலிட்டு ஏகும்
மன்னப் பருந்து ஒர் இரண்டு மெல்ல வட்டமிட்டுப் பின் நெடுந்தொலை போகும்
பின்னர் தெருவில் ஓர் சேவல் அதன் பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும்

#3
செவ்வொளி வானில் மறைந்தே இளம் தேநிலவு எங்கும் பொழிந்தது கண்டீர்
இவ்வளவான பொழுதில் அவள் ஏறி வந்தே உச்சி மாடத்தின் மீது
கொவ்வை இதழ் நகை வீச விழிக் கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தான்
செவ்விது செவ்விது பெண்மை ஆ செவ்விது செவ்விது செவ்விது காதல்

#4
காதலினால் உயிர் தோன்றும் இங்கு காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவு எய்தும் இங்கு காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலினால் அவள் கையைப் பற்றி அற்புதம் என்று இரு கண்ணிடை ஒற்றி
வேதனை இன்றி இருந்தேன் அவள் வீணைக் குரலில் ஓர் பாட்டு இசைத்திட்டாள்

#5
**காதலியின் பாட்டு
கோலமிட்டு விளக்கினை ஏற்றிக் கூடி நின்று பராசக்தி முன்னே
ஓலமிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார் உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்
ஞாலம் முற்றும் பராசக்தி தோற்றம் ஞானம் என்ற விளக்கினை ஏற்றிக்
காலம் முற்றும் தொழுதிடல் வேண்டும் காதல் என்பதொர் கோயிலின்கண்ணே

@3 நிலாவும் வான்மீனும் காற்றும்
** மனத்தை வாழ்த்துதல்

#1
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்து ஆங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்து ஒரு கோல வெறி படைத்தோம்
உலாவும் மனச் சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம்
பலாவின் கனிச் சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ

#2
தாரகை என்ற மணித் திரள் யாவையும் சார்ந்திடப் போ மனமே
ஈரச் சுவையதில் ஊறி வரும் அதில் இன்புறுவாய் மனமே
சீர இரும் சுடர் மீனொடு வானத்துத் திங்களையும் சமைத்தே
ஓர் அழகாக விழுங்கிடும் உள்ளத்தை ஒப்பது ஒர் செல்வம் உண்டோ

#3
பன்றியைப் போல் இங்கு மண்ணிடைச் சேற்றில் படுத்துப் புரளாதே
வென்றியை நாடி இவ் வானத்தில் ஓட விரும்பி விரைந்திடுமே
முன்றிலில் ஓடும் ஒர் வண்டியைப் போல் அன்று மூன்று உலகும் சூழ்ந்தே
நன்று திரியும் விமானத்தைப் போல் ஒரு நல்ல மனம் படைத்தோம்

#4
தென்னையின் கீற்றுச் சலசலச என்றிடச்செய்து வரும் காற்றே
உன்னைக் குதிரைகொண்டு ஏறித் திரியும் ஓர் உள்ளம் படைத்துவிட்டோம்
சின்னப் பறவையின் மெல் ஒலி கொண்டு இங்கு சேர்ந்திடு நல் காற்றே
மின்னல் விளக்கிற்கு வானகம் கொட்டும் இவ் வெட்டொலி ஏன் கொணர்ந்தாய்

#5
மண்ணுலகத்து நல் ஓசைகள் காற்று எனும் வானவன் கொண்டுவந்தான்
பண்ணி இசைத்த அவ் ஒலிகள் அனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம்
நண்ணி வரும் மணியோசையும் பின் அங்கு நாய்கள் குலைப்பதுவும்
எண்ணும் முன்னே அன்னக்காவடிப் பிச்சை என்று ஏங்கிடுவான் குரலும்

#6
வீதிக் கதவை அடைப்பதும் கீழ்த்திசை விம்மிடும் சங்கொலியும்
வாதுகள் பேசிடும் மாந்தர் குரலும் மதலை அழும் குரலும்
ஏதெது கொண்டு வருகுது காற்று இவை எண்ணில் அகப்படுமோ
சீதக் கதிர் மதி மேல் சென்று பாய்ந்து அங்கு தேன் உண்ணுவாய் மனமே

@4 மழை

#1
திக்குக்கள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம் சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு
தக்கை அடிக்குது காற்று தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

#2
வெட்டி அடிக்குது மின்னல் கடல் வீரத் திரை கொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம் கூகூ என்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா

#3
அண்டம் குலுங்குது தம்பி தலை ஆயிரம் தூக்கிய சேடனும் பேய் போல்
மிண்டிக் குதித்திடுகின்றான் திசை வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடுகின்றார் என்ன தெய்விகக் காட்சியை கண் முன்பு கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம் இந்தக் காலத்தின் கூத்தினைக் கண் முன்பு கண்டோம்

@5 புயற் காற்று
**நள வருடம் காத்திகை மாதம் 8ம் தேதி புதன் இரவு
**ஒரு கணவனும் மனைவியும்

#1
**மனைவி
காற்று அடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகமே
தூற்றல் கதவு சாளரம் எல்லாம் தொளைத்து அடிக்குது பள்ளியிலே

#2
**கணவன்
வானம் சினந்தது வையம் நடுங்குது வாழி பராசக்தி காத்திடவே
தீனக் குழந்தைகள் துன்பப்படாது இங்கு தேவி அருள்செய்ய வேண்டுகிறோம்

#3
**மனைவி
நேற்று இருந்தோம் அந்த வீட்டினிலே இந்த நேரம் இருந்தால் என் படுவோம்
காற்று என வந்தது கூற்றம் இங்கே நம்மைக் காத்தது தெய்வ வலிமை அன்றோ

@6 பிழைத்த தென்னந்தோப்பு

#1
வயலிடையினிலே செழு நீர் மடுக் கரையினிலே
அயல் எவரும் இல்லை தனியே ஆறுதல்கொள்ள வந்தேன்

#2
காற்று அடித்ததிலே மரங்கள் கணக்கிடத் தகுமோ
நாற்றினைப் போலே சிதறி நாடு எங்கும் வீழ்ந்தனவே

#3
சிறிய திட்டையிலே உளதோர் தென்னம் சிறு தோப்பு
வறியவன் உடைமை அதனை வாயு பொடிக்கவில்லை

#4
வீழ்ந்தன சிலவாம் மரங்கள் மீந்தன பலவாம்
வாழ்ந்திருக்க என்றே அதனை வாயு பொறுத்துவிட்டான்

#5
தனிமை கண்டதுண்டு அதில் சாரம் இருக்குது அம்மா
பனி தொலைக்கும் வெயில் அது தேம் பாகு மதுரம் அன்றோ

#6
இரவி நின்றது காண் விண்ணிலே இன்ப ஒளித் திரளாய்
பரவி எங்கணுமே கதிர்கள் பாடிக் களித்தனவே

#7
நின்ற மரத்திடையே சிறிது ஓர் நிழலினில் இருந்தேன்
என்றும் கவிதையிலே நிலையாம் இன்பம் அறிந்துகொண்டேன்

#8
வாழ்க பராசக்தி நினையே வாழ்த்திடுவோர் வாழ்வார்
வாழ்க பராசக்தி இதை என் வாக்கு மறவாதே

@7 அக்கினிக் குஞ்சு

#1
அக்கினிக் குஞ்சு ஒன்று கண்டேன் அதை
அங்கு ஒரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல்
வீரத்தில் குஞ்சு என்றும் மூப்பு என்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

@8 சாதாரண வருஷத்துத் தூமகேது

#1
தினையின் மீது பனை நின்றாங்கு
மணிச் சிறு மீன் மிசை வளர்வால் ஒளிதரக்
கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண்டு இலகும்
தூமகேதுச் சுடரே வாராய்

#2
எண்ணில் பல கோடி யோசனை எல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்த நின் நெடு வால் போவது என்கின்றார்

#3
மண்ணகத்தினையும் வால் கொடு தீண்டி
ஏழையர்க்கு ஏதும் இடர்செயாதே நீ
போதி என்கின்றார் புதுமைகள் ஆயிரம்
நினைக்குறித்து அறிஞர் நிகழ்த்துகின்றனரால்

#4
பாரதநாட்டில் பரவிய எம்மனோர்
நூல் கணம் மறந்து பல் நூறு ஆண்டு ஆயின
உனது இயல் அன்னியர் உரைத்திடக் கேட்டே
தெரிந்தனம் எம்முளே தெளிந்தவர் ஈங்கு இலை

#5
வாராய் சுடரே வார்த்தை சில கேட்பேன்
தீயர்க்கு எல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல் புவியதனைத் துயர்க் கடல் ஆழ்த்தி நீ
போவை என்கின்றார் பொய்யோ மெய்யோ

#6
ஆதித் தலைவி ஆணையின்படி நீ
சலித்திடும் தன்மையால் தண்டம் நீ செய்வது
புவியினைப் புனிதமாப் புனைதற்கே என
விளம்புகின்றனர் அது மெய்யோ பொய்யோ

#7
ஆண்டு ஓர் எழுபத்தைந்தினில் ஒரு முறை
மண்ணை நீ அணுகும் வழக்கினையாயினும்
இ முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையும் என்கின்றார் மெய்யோ பொய்யோ

#8
சித்திகள் பலவும் சிறந்திடு ஞானமும
மீட்டும் எம்மிடை நின் வரவினால் விளைவதாப்
புகலுகின்றனர் அது பொய்யோ மெய்யோ

@9 அழகுத் தெய்வம்

#1
மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்
வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம்
துங்க மணி மின் போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே எழுந்து என்னைப் பார் என்று சொன்னாள்
அங்கதனில் கண் விழித்தேன் அடடா ஓ அடடா
அழகு என்னும் தெய்வம்தான் அது என்றே அறிந்தேன்

#2
யோகம்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன்
யோகமே தவம் தவமே யோகம் என உரைத்தாள்
ஏகமோ பொருள் அன்றி இரண்டாமோ என்றேன்
இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள்
தாகம் அறிந்து ஈயும் அருள் வான் மழைக்கே உண்டோ
தாகத்தின் துயர் மழைதான் அறிந்திடுமோ என்றேன்
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவது வேறாமோ என்றாள்

#3
காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கு ஓர் கருவியாம் என்றாள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்
ஏலத்தில் விடுவது உண்டோ எண்ணத்தை என்றேன்
எண்ணினால் எண்ணியது நண்ணும் காண் என்றாள்
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன்
முகத்தில் அருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்

@10 ஒளியும் இருளும்

#1
வானம் எங்கும் பரிதியின் சோதி மலைகள் மீதும் பரிதியின் சோதி
தானை நீர்க் கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின் கரைகள் மீதும் பரிதியின் சோதி
மானவன்தன் உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருள் இது என்னே

#2
சோதி என்னும் கரையற்ற வெள்ளம் தோன்றி எங்கும் திரைகொண்டு பாய
சோதி என்னும் பெரும் கடல் சோதிச் சூறை மாசறு சோதி அனந்தம்
சோதி என்னும் நிறைவு இஃது உலகைச் சூழ்ந்து நிற்ப ஒரு தனி நெஞ்சம்
கோது இயன்றதொர் சிற்றிருள் சேரக் குமைந்து சோரும் கொடுமை இது என்னே

#3
தேமலர்க்கு ஒர் அமுது அன்ன சோதி சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி
காமமுற்று நிலத்தொடு நீரும் காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாம் மயங்கி நல் இன்புறும் சோதி தரணி முற்றும் ததும்பியிருப்ப
தீமை கொண்ட புலை இருள் சேர்ந்தோர் சிறிய நெஞ்சம் தியங்குவது என்னே

#4
நீர்ச் சுனைக் கணம் மின்னுற்று இலக நெடிய குன்றம் நகைத்து எழில்கொள்ள
கார்ச் சடைக் கரு மேகங்கள் எல்லாம் கனகம் ஒத்துச் சுடர் கொண்டு உலாவ
தேர்ச்சிகொண்டு பல் சாத்திரம் கற்றும் தெவிட்டொணாத நல் இன்பக் கருவாம்
வேர்ச் சுடர் பர மாண் பொருள் கேட்டும் மெலிவு ஒர் நெஞ்சிடை மேவுதல் என்னே

@11 சொல்

#0
சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திகளை
நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்

#1
தேவர் வருக என்று சொல்வதோ ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்
ஆவல் அறிந்து வருவீர்-கொலோ உம்மை
யன்றி ஒரு புகலும் இல்லையே

#2
ஓம் என்று உரைத்துவிடின் போதுமோ அதில் உண்மைப் பொருள் அறியலாகுமோ
தீமை அனைத்தும் இறந்து ஏகுமோ என்றன் சித்தம் தெளிவு நிலை கூடுமோ

#3
உண்மை ஒளிர்க என்று பாடவோ அதில் உங்கள் அருள் பொருந்தக்கூடுமோ
வண்மையுடையதொரு சொல்லினால் உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம்

#4
தீயை அகத்தினிடை மூட்டுவோம் என்று செப்பும் மொழி வலியதாகுமோ
ஈயைக் கருடநிலை ஏற்றுவீர் எம்மை என்றும் துயரம் இன்றி வாழ்த்துவீர்

#5
வான மழை பொழிதல் போலவே நித்தம் வந்து பொழியும் இன்பம் கூட்டுவீர்
கானை அழித்து மனை கட்டுவீர் துன்பக் கட்டுச் சிதறி விழ வெட்டுவீர்

#6
விரியும் அறிவுநிலை காட்டுவீர் அங்கு வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்
தெரியும் ஒளி விழியை நாட்டுவீர் நல்ல தீரப் பெரும் தொழிலில் பூட்டுவீர்

#7
மின்னல் அனைய திறல் ஓங்குமே உயிர் வெள்ளம் கரை அடங்கிப் பாயுமே
தின்னும் பொருள் அமுதம் ஆகுமே இங்குச் செய்கையதனில் வெற்றி ஏறுமே

#8
தெய்வக் கனல் விளைந்து காக்குமே நம்மைச் சேரும் இருள் அழியத் தாக்குமே
கைவைத்தது பசும்பொன் ஆகுமே பின்பு காலன் பயம் ஒழிந்து போகுமே

#9
வலிமை வலிமை என்று பாடுவோம் என்றும் வாழும் சுடர்க் குலத்தை நாடுவோம்
கலியைப் பிளந்திடக் கை ஓங்கினோம் நெஞ்சில் கவலை இருள் அனைத்தும் நீங்கினோம்

#10
அமிழ்தம் அமிழ்தம்” என்று கூறுவோம் நித்தம் அனலைப் பணிந்து மலர் தூவுவோம்
தமிழில் பழமறையைப் பாடுவோம் என்றும் தலைமை பெருமை புகழ் கூடுவோம்

@12 கவிதைத் தலைவி

#1
வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி
தினமும் இவ் உலகில் சிதறியே நிகழும்
பலபல பொருளிலாப் பாழ்படு செய்தியை
வாழ்க்கைப் பாலையில் வளர் பல முட்கள் போல்
பேதை உலகைப் பேதைமைப்படுத்தும் 5
வெறும் கதைத் திரளை வெள்ளறிவு உடைய
மாயாசக்தியின் மகளே மனைக்கண்
வாழ்வினை வகுப்பாய் வருடம் பலவினும்
ஓர் நாள் போல மற்றோர் நாள் தோன்றாது
பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ 10
நடத்திடும் சக்தி நிலையமே நல் மனைத்
தலைவீ ஆங்கு அத் தனிப் பதர்ச் செய்திகள்
அனைத்தையும் பயன்நிறை அனுபவம் ஆக்கி
உயிரிலாச் செய்திகட்கு உயிர் மிகக் கொடுத்து
ஒளியிலாச் செய்திகட்கு ஒளி அருள்புரிந்து 15
வானசாத்திரம் மகமது வீழ்ச்சி
சின்னப் பையல் சேவகத் திறமை
என வரும் நிகழ்ச்சி யாவேயாயினும்
அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து
இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும் 20
பேதை மா சத்தியின் பெண்ணே வாழ்க
காளியின் குமாரி அறம் காத்திடுக
வாழ்க மனையகத் தலைவி வாழ்க

@13 கவிதைக் காதலி

#1
வாராய் கவிதையாம் மணிப் பெயர்க் காதலி
பல் நாள் பல் மதி ஆண்டு பல கழிந்தன
நின் அருள் வதனம் நான் நேருறக் கண்டே
அந்த நாள் நீ எனை அடிமையாக் கொள யாம்
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனி இருந்து 5
எண்ணிலா இன்பத்து இரும் கடல் திளைத்தோம்
கலந்து யாம் பொழிலிடைக் களித்த அ நாட்களில்
பூம் பொழில் குயில்களின் இன் குரல் போன்ற
தீம் குரலுடைத்து ஓர் புள்ளினைத் தெரிந்திலேன்
மலரினத்து உன்றன் வாள் விழி ஒப்ப 10
நிலவியது ஒன்றினை நேர்ந்திலேன் குளிர் புனல்
சுனைகளில் உன் மணிச் சொற்கள் போல் தண்ணிய
நீர் உடைத்து அறிகிலேன் நின்னொடு தமியனாய்
நீயே உயிர் எனத் தெய்வமும் நீ என
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன் 15
வானகத்து அமுதம் மடுத்திடும் போழ்து
மற்று அதனிடை ஓர் வஞ்சகத்தொடு முள்
வீழ்ந்து இடைத் தொண்டையில் வேதனை செய்தன
நின்னொடு களித்து நினைவிழந்து இருந்த
எனைத் துயர்ப்படுத்த வந்து எய்தியது உலகில் 20
கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை
அடிநா முள்ளினை அயல் சிறிது ஏகிக்
களைந்து பின் வந்து காண் பொழுது ஐயகோ
மறைந்தது தெய்வ மருந்துடைப் பொன் குடம்
மிடிமை நோய் தீர்ப்பான் வீணர்தம் உலகப் 25
புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பாள்
தென்திசைக்கண் ஒரு சிற்றூர்க்கு இறைவனாம்
திருந்திய ஒருவனைத் துணை எனப் புகுந்து அவன்
பணிசெய இசைந்தேன் பதகி நீ என்னைப்
பிரிந்து மற்று அகன்றனை பேசொணா நின் அருள் 30
இன்பம் அத்தனையும் இழந்து நான் உழன்றேன்
சின்னாள் கழிந்த பின் யாது எனச் செப்புகேன்
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது
கதையில் ஓர் முனிவன் கடியதாம் சாப
விளைவினால் பன்றியா வீழ்ந்திடும் முன்னர்த் 35
தன் மகனிடை என் தனய நீ யான் புலைப்
பன்றி ஆம் போது பார்த்து நில்லாதே
விரைவில் ஓர் வாள் கொடு வெறுப்புடை அவ் உடல்
துணித்து எனைக் கொன்று தொலைத்தல் உன் கடனாம்
பாவம் இங்கு இல்லை என் பணிப்பு இஃது ஆகலின் 40
தாதை சொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான்
முனிவனும் பன்றியா முடிந்த பின் மைந்தன்
முன்னவன் கூறிய மொழியினை நினைந்தும்
இரும் புகழ் முனிவனுக்கு இழியதாம் இவ் உடல்
அமைந்தது கண்டு நெஞ்சு அழன்றிடல் கொண்டும் 45
வாள் கொடு பன்றியை மாய்த்திடலுற்றனன்
ஆயிடை மற்று அவ் அரும் தவப் பன்றி
இனையது கூறும் ஏடா நிற்க
நிற்க நிற்க முன்னர் யாம் நினைந்தவாறு
அத்துணைத் துன்புடைத்தன்று இவ் வாழ்க்கை 50
காற்றும் புனலும் கடிப் புல் கிழங்கும்
இனைய பல் இன்பம் இதன்கணே உளவாம்
ஆறேழ் திங்கள் அகன்ற பின் வருதியேல்
பின் எனைக் கோறலாம் பீழையோடு இவ் உரை
செவியுறீஇ முடி சாய்த்து இளையவன் சென்றனன் 55
திங்கள் பல போன பின் முனிமகன் சென்ற
தாதைப் பன்றி ஓர் தடத்திடைப் பெடையொடும்
போத்து இனம் பலவொடும் அன்பினில் பொருத்தி
ஆடல் கண்டு அயிர்த்தனன் ஆற்றொணாது அருகு சென்று
எந்தாய் எந்தாய் யாது அரோ மற்று இது 60
வேதநூல் அறிந்த மேதகு முனிவரர்
போற்றிட வாழ்ந்த நின் புகழ்க்கு இது சாலுமோ
எனப் பல கூறி இரங்கினன் பின்னர்
வாள் கொடு பன்றியை மாய்த்திடல் விழைந்தான்
ஆயிடை முனிவன் அகம் பதைத்து உரைக்கும் 65
செல்லடா செல்க தீக்குணத்து இழிஞ
எனக்கு இவ் வாழ்க்கை இன்புடைத்தேயாம்
நினக்கு இதில் துன்பம் நிகழுமேல் சென்று அவ்
வாளின் நின் நெஞ்சை வகுத்து நீ மடிக
என்று இது கூறி இருந்த அப் பன்றி தன் 70
இனத்தொடும் ஓடி இன் உயிர் காத்தது
இன்னது கண்ட இளையவன் கருதும்
ஆ ஆ மானிடர் அருமையின் வீழ்ந்து
புல் நிலை எய்திய போழ்து அதில் நெடுங்கால்
தெருமருகின்றிலர் சில பகல் கழிந்த பின் 75
புதியதா நீசப் பொய்மை கொள் வாழ்வில்
விருப்புடையவராய் வேறு தாம் என்றும்
அறிந்திலரே போன்று அதில் களிக்கின்றார்
என் சொல்கேன் மாயையின் எண்ணரும் வஞ்சம்
திமிங்கில உடலும் சிறிய புன்மதியும் 80
ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்
தன் பணிக்கு இசைந்து என் தருக்கு எலாம் அழிந்து
வாழ்ந்தனன் கதையின் முனி போல் வாழ்க்கை

@ 14 மது

#1
**போகி
பச்சை முந்திரித் தேம்பழம் கொன்று பாட்டுப் பாடி நல் சாறு பிழிந்தே
இச்சை தீர மது வடித்து உண்போம் இஃது தீது என்று இடையர்கள் சொல்லும்
கொச்சைப் பேச்சில் கைகொட்டி நகைப்போம் கொஞ்சு மாதரும் கூட்டுணும் கள்ளும்
இச் சகத்தினில் இன்பங்கள் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறொன்றும் உண்டோ

#2
**யோகி
பச்சை முந்திரி அன்னது உலகம் பாட்டுப் பாடல் சிவக்களி எய்தல்
இச்சை தீர உலகினைக் கொல்வோம் இனிய சாறு சிவமதை உண்போம்
கொச்சை மக்களுக்கு இஃது எளிதாமோ கொஞ்சும் மாது ஒரு குண்டலி சக்தி
இச் சகத்தில் இவை இன்பம் அன்றோ இவற்றின் நல் இன்பம் வேறு உளதாமோ

#3
**போகி
வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி வேந்தர்தம்முள் பெரும் புகழ் எய்தி
ஒற்றை வெள்ளைக் கவிதை உயர்த்தே உலகம் அஞ்சிப் பணிந்திட வாழ்வோம்
சுற்று தேம் கமழ் மென் மலர் மாலை தோளின் மீது உருப் பெண்கள் குலாவச்
சற்றும் நெஞ்சம் கவலுதல் இன்றித் தரணி மீதில் மது உண்டு வாழ்வோம்

#4
**யோகி
வெற்றி ஐந்து புலன் மிசைக் கொள்வோம் வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும்
ஒற்றை வெள்ளைக் கவிதை மெய்ஞ்ஞானம் உண்மை வேந்தர் சிவநிலை கண்டார்
மற்றவர்தம்முள் சீர்பெற வாழ்வோம் வண் மலர் நறு மாலை தெளிவாம்
சுற்றி மார்பில் அருள் மது உண்டே தோகை சக்தியொடு இன்புற்று வாழ்வோம்

#5
**போகி
நல்ல கீதத் தொழில் உணர் பாணர் நடனம் வல்ல நகை முக மாதர்
அல்லல் போக இவருடன் கூடி ஆடியாடிக் களித்து இன்பம்கொள்வோம்
சொல்ல நாவு கனியுதடா நல் சுதியில் ஒத்துத் துணையொடும் பாடி
புல்லும் மார்பினோடு ஆடிக் குதிக்கும் போகம் போல் ஒரு போகம் இங்கு உண்டோ

#6
**யோகி
நல்ல கீதம் சிவத் தனி நாதம் நடன ஞானியர் சிற்சபை ஆட்டம்
அல்லல் போக இவருடன் சேர்ந்தே ஆடியாடிப் பெரும் களி கொள்வோம்
சொல்ல நாவில் இனிக்குதடா வான் சுழலும் அண்டத் திரளின் சுதியில்
செல்லும் பண்ணொடு சிற்சபை ஆடும் செல்வம் போல் ஒரு செல்வம் இங்கு உண்டோ

#7
**ஞானி
மாதரோடு மயங்கிக் களித்தும் மதுர நல் இசை பாடிக் குதித்தும்
காதல்செய்தும் பெறும் பல இன்பம் கள்ளில் இன்பம் கலைகளில் இன்பம்
பூதலத்தினை ஆள்வதில் இன்பம் பொய்மை அல்ல இவ் இன்பங்கள் எல்லாம்
யாதும் சக்தி இயல்பு எனக் கண்டோம் இனையது உய்ப்பம் இதயம் மகிழ்ந்தே

#8
இன்பம் துன்பம் அனைத்தும் கலந்தே இச் சகத்தின் இயல் வலி ஆகி
முன்பு பின் பலது ஆகி எந்நாளும் மூண்டு செல்லும் பராசக்தியோடே
அன்பில் ஒன்றிப் பெரும் சிவயோகத்து அறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார்
துன்பு நேரினும் இன்பு எனக் கொள்வார் துய்ப்பர் இன்பம் மிகச் சுவை கொண்டே

#9
இச் சகத்தோர் பொருளையும் தீரர் இல்லை என்று வருந்துவதில்லை
நச்சிநச்சி உளத் தொண்டு கொண்டு நானிலத்து இன்பம் நாடுவதில்லை
பிச்சை கேட்பதும் இல்லை இன்பத்தில் பித்துக் கொண்டு மயங்குவதில்லை
துச்சமென்று சுகங்களைக் கொள்ளச் சொல்லும் மூடர் சொல் கேட்பதும் இல்லை

#10
தீது நேர்ந்திடின் அஞ்சுவதில்லை தேறு நெஞ்சினொடே சிவம் கண்டோர்
மாதர் இன்பம் முதலிய எல்லாம் வையகத்துச் சிவன் வைத்த என்றே
ஆதரித்து அவை முற்றிலும் கொள்வார் அங்கும் இங்கும் ஒன்றாம் எனத் தேர்வார்
யாதும் எங்கள் சிவன் திருக்கேளி இன்பம் யாவும் அவனுடை இன்பம்

#11
வேத மந்திர நாதம் ஒருபால் வேயின் இன் குழல் மெல் ஒலி ஓர்பால்
காதல் மாதரொடு ஆடல் ஒருபால் கள வெம் போரிடை வென்றிடல் ஓர்பால்
போத நல் வெறி துய்த்திடல் ஓர்பால் பொலியும் கள் வெறி துய்த்தல் மற்று ஓர்பால்
ஏதெலாம் நமக்கு இன்புற நிற்கும் எங்கள் தாய் அருள் பால் அது அன்றே

#12
**சங்கீர்த்தனம்
**மூவரும் சேர்ந்து பாடுதல்
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண் எலாம்
மதுரம் மிக்க ஹரி நமக்கு மது எனக் கதித்தலால்
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன்
மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம்
மது நமக்கு ஒர் தோல்வி வெற்றி மது நமக்கு வினை எலாம்
மது நமக்கு மாதர் இன்பம் மது நமக்கு மது வகை
மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும்
மதுரம் மிக்க சிவம் நமக்கு மது எனக் கதித்தலால்

@ 15 சந்திரமதி
** ராகம் ஆனந்த பைரவி தாளம் ஆதி

#1
பச்சைக்குழந்தையடி கண்ணில் பாவையடி சந்திரமதி
இச்சைக்கு இனிய மது என்றன் இரு விழிக்குத் தேநிலவு
நச்சுத் தலைப் பாம்புக்குள்ளே நல்ல நாகமணி உள்ளது என்பார்
துச்சப்படு நெஞ்சிலே நின்றன் சோதி வளருதடீ

#2
பேச்சுக்கு இடம் ஏதடி நீ பெண் குலத்தின் வெற்றியடி
ஆச்சர்ய மாயையடி என்றன் ஆசைக் குமாரியடி
நீச்சு நிலை கடந்த வெள்ள நீருக்குள்ளே வீழ்ந்தவர் போல்
தீச் சுடரை வென்ற ஒளிகொண்ட தேவி நினைவிழந்தேனடி

#3
நீலக் கடலினிலே நின்றன் நீண்ட குழல் தோன்றுதடி
கோல மதியினிலே நின்றன் குளிர்ந்த முகம் காணுதடி
ஞால வெளியினிலே நின்றன் ஞான ஒளி வீசுதடி
கால நடையினிலே நின்றன் காதல் விளங்குதடி

@16 தாயுமானவர் வாழ்த்து

#1
என்றும் இருக்க உளம்கொண்டாய் இன்பத் தமிழுக்கு இலக்கியமாய்
இன்றும் இருத்தல் செய்கின்றாய் இறவாய் தமிழோடு இருப்பாய் நீ
ஒன்று பொருள் அஃது இன்பம் என உணர்ந்தாய் தாயுமானவனே
நின்ற பரத்து மாத்திரமோ நில்லா இகத்தும் நிற்பாய் நீ

@17 நிவேதிதா

#1
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கு ஓர் கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமது உயர் நாடாம் பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும் பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்

@18 அபேதாநந்தா

#1
சுருதியும் அரிய உபநிடதத்தின் தொகுதியும் பழுதற உணர்ந்தோன்
கருதிடற்கரிய பிரம நல் நிலையைக் கண்டு பேரொளியிடைக் களித்தோன்
அரிதினில் காணும் இயல்பொடு புவியின் அப்புறத்து இருந்து நண்பகலில்
பரிதியின் ஒளியும் சென்றிடா நாட்டில் மெய்யொளி பரப்பிடச் சென்றோன்
**வேறு

#2
ஒன்றே மெய்ப்பொருளாகும் உயிர்கள் எலாம் அதன் வடிவாம் ஓருங்காலை
என் தேவன் உன் தேவன் என்று உலகர் பகைப்பது எலாம் இழிவாம் என்று
நன்றே இங்கு அறிவுறுத்தும் பரமகுரு ஞானம் எனும் பயிரை நச்சித்
தின்றே பாழாக்கிடும் ஐம்புலன்கள் எனும் விலங்கினத்தைச் செகுத்த வீரன்
**வேறு

#3
வானம் தம் புகழ் மேவி விளங்கிய மாசில் ஆதி குரவன் அச் சங்கரன்
ஞானம் தங்கும் இ நாட்டினைப் பின்னரும் நண்ணினான் எனத் தேசுறும் அவ் விவே
கானந்தம் பெரும் சோதி மறைந்த பின் அவன் இழைத்த பெரும் தொழில் ஆற்றியே
ஊனம் தங்கிய மானிடர் தீது எலாம் ஒழிக்குமாறு பிறந்த பெரும் தவன்
**வேறு

#4
தூய அபேதாநந்தன் எனும் பெயர்கொண்டு ஒளிர் தருமிச் சுத்த ஞானி
நேயமுடன் இ நகரில் திருப்பாதம் சாத்தி அருள் நெஞ்சில் கொண்டு
மாயம் எலாம் நீங்கி இனிது எம்மவர் நன்னெறி சாரும் வண்ணம் ஞானம்
தோய நனி பொழிந்திடும் ஓர் முகில் போன்றான் இவன் பதங்கள் துதிக்கின்றோமே

@19 ஓவியர் மணி இரவிவர்மா

#1
சந்திரன் ஒளியை ஈசன் சமைத்து அது பருகவென்றே
வந்திடு சாதகப்புள் வகுத்தனன் அமுது உண்டாக்கிப்
பந்தியில் பருகவென்றே படைத்தனன் அமரர்தம்மை
இந்திரன் மாண்புக்கு என்ன இயற்றினன் வெளிய யானை

#2
மலரினில் நீல வானில் மாதரார் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான் சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவிவர்மன்
அலகிலா அறிவுக்கண்ணால் அனைத்தையும் நுகருமாறே

#3
மன்னர் மாளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்
உன்னரும் தேசு வீசி உளத்தினைக் களிக்கச்செய்வான்
நன்னர் ஓவியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள்
பொன் அணி உலகு சென்றான் புவிப் புகழ் போதும் என்பான்

#4
அரம்பை ஊர்வசி போல் உள்ள அமர மெல்லியலார் செவ்வி
திறம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பிய-கொல்லாம் இன்று விண்ணுலகு அடைந்துவிட்டாய்
அரம்பையர் நின் கைச்செய்கைக்கு அழிதல் அங்கு அறிவை திண்ணம்

#5
காலவான் போக்கில் என்றும் கழிகிலாப் பெருமைகொண்ட
கோல வான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர்தாமும்
சீல வாழ்வு அகற்றி ஓர் நாள் செத்திடல் உறுதியாயின்
ஞால வாழ்வினது மாயம் நவின்றிடற்கு அரியது அன்றோ

@20 சுப்பராம தீட்சிதர்
**அகவல்

#1
கவிதையும் அரும் சுவைக் கான நூலும்
புவியினர் வியக்கும் ஓவியப் பொற்பும்
மற்று உள பெரும் தொழில் வகைகளில் பலவும்
வெற்றிகொண்டு இலங்கிய மேன்மையார் பரத
நாட்டினில் இந்நாள் அன்னியர் நலிப்ப 5
ஈட்டிய செல்வம் இறந்தமையானும்
ஆண்டகையொடு புகழ் அழிந்தமையானும்
மாண்டன பழம் பெரு மாட்சியார் தொழில் எலாம்
தேவர்கள் வாழ்ந்த சீர் வளர் பூமியில்
மேவிய அரக்கர் விளங்குதல் போல 10
நேரிலாப் பெரியோர் நிலவிய நாட்டில்
சீரிலாப் புல்லர் செறிந்து நிற்கின்றார்
இவரிடை
சுரத்திடை இன் நீர்ச் சுனையது போன்றும்
அரக்கர்தம் குலத்திடை வீடணனாகவும் 15
சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும்
போற்றுதற்குரிய புனித வான் குலத்தில்
நாரதமுனிவன் நமர் மிசை அருளால்
பாரதநாட்டில் பழம் மாண்பு உறுக என
மீட்டும் ஓர் முறை இவன் மேவினன் என்ன 20
நாட்டும் நல் சீர்த்தி நலன் உயர் பெருமான்
தோமறு சுப்பராமன் நல் பெயரோன்
நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான்
இன்னான் தானும் எமை அகன்று ஏகினன்
என்னே நம்மவர் இயற்றிய பாவம் 25
இனி இவன் அனையாரை எந்நாள் காண்போம்
கனி அறு மரம் எனக் கடைநிலை உற்றோம்
அந்தோ மறலி நம் அமுதினைக் கவர்ந்தான்
நொந்தோ பயனிலை நுவல யாது உளதே
**விருத்தம்

#2
கன்னனொடு கொடை போயிற்று உயர் கம்பநாடனுடன் கவிதை போயிற்று
உன்னரிய புகழ்ப் பார்த்தனொடு வீரம் அகன்றது என உரைப்பர் ஆன்றோர்
என் அகம்நின்று அகலாதோன் அருள் சுப்பராமன் எனும் இணையிலா விற்
பன்னனொடு சுவை மிகுந்த பண் வளனும் அகன்றது எனப் பகரலாமே

#3
கலை விளக்கே இளசை எனும் சிற்றூரில் பெரும் சோதி கதிக்கத் தோன்றும்
மலை விளக்கே எம் அனையர் மன இருளை மாற்றுதற்கு வந்த ஞான
நிலை விளக்கே நினைப் பிரிந்த இசைத்தேவி நெய் அகல நின்ற தட்டின்
உலை விளக்கே எனத் தளரும் அந்தோ நீ அகன்ற துயர் உரைக்கற்பாற்றோ

#4
மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்தங்களையும் வணங்கலாதேன்
தன் அனைய புகழுடையாய் நினைக் கண்ட பொழுது தலை தாழ்ந்து வந்தேன்
உன் அருமைச் சொற்களையே தெய்விகமாம் எனக் கருதி வந்தேன் அந்தோ
இன்னம் ஒருகால் இளசைக்கு ஏகிடின் இவ் எளியன் மனம் என் படாதோ

@21 மகாமகோபாத்தியாயர்

#1
செம்பரிதி ஒளிபெற்றான் பைம் நறவு சுவைபெற்றுத் திகழ்ந்தது ஆங்கண்
உம்பர் எலாம் இறவாமை பெற்றனர் என்று எவரே-கொல் உவத்தல்செய்வார்
கும்பமுனி எனத் தோன்றும் சாமிநாதப் புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல் இதற்கு என்-கொல் பேருவகை படைக்கின்றீரே

#2
அன்னியர்கள் தமிழ்ச் செவ்வி அறியாதார் இன்று எம்மை ஆள்வோரேனும்
பன்னிய சீர் மகாமகோபாத்தியாயப் பதவி பரிவின் ஈந்து
பொன் நிலவு குடந்தைநகர்ச் சாமிநாதன்றனக்குப் புகழ்செய்வாரேல்
முன் இவன் அப் பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழியலாமோ

#3
நிதி அறியோம் இவ் உலகத்து ஒரு கோடி இன்ப வகை நித்தம் துய்க்கும்
கதி அறியோம் என்று மனம் வருந்தற்க குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வு அறியும் காலம் எலாம் புலவோர் வாயில்
துதி அறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்து அறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே

@22 வெங்கடேசு ரெட்டப்ப பூபதி
** ஸ்ரீ எட்டயபுரம் ராஜ ராஜேந்த்ர மாகராஜ
** வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு
** கவிராஜ ஸ்ரீ சி சுப்பிரமணிய பாரதி எழுதும்
** சீட்டுக் கவிகள்

#1
பாரி வாழ்ந்திருந்த சீர்த்திப் பழம் தமிழ்நாட்டின்கண்ணே
ஆரிய நீ இந்நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால்
காரியம் கருதி நின்னைக் கவிஞர் தாம் காணவேண்டின்
நேரில் அப்போதே எய்தி வழிபட நினைகிலேயோ

#2
விண்ணளவு உயர்ந்த கீர்த்தி வெங்கடேசுரெட்ட மன்னா
பண்ணளவு உயர்ந்தது என் பணி பா அளவு உயர்ந்தது என் பா
எண்ணளவு உயர்ந்த எண்ணில் இரும் புகழ்க் கவிஞர் வந்தால்
அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ

#3
கல்வியே தொழிலாக் கொண்டாய் கவிதையே தெய்வமாக
அல்லும் நன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய்
சொல்லிலே நிகரிலாத புலவர் நின் சூழல் உற்றால்
எல்லினைக் காணப் பாயும் இடபம் போல் முற்படாயோ
**எட்டயபுரம்
**1919ம் வருடம் மே மாதம் 2 உ சுப்பிரமணிய பாரதி
**ஸ்ரீ எட்டயபுரம் மகாராஜ ராஜேந்த்ர
**ஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி
**அவர்கள் சமூகத்துக்கு
**கவிராஜ ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதி எழுதும் ஓலைத் தூக்கு

#4
ராஜ மகாராஜேந்த்ர ராஜ குலசேகரன் ஸ்ரீ ராஜராஜன்
தேசம் எலாம் புகழ் விளங்கும் இளசை வெங்கடேசுரெட்ட சிங்கன் காண்க
வாசம் மிகு துழாய்த் தாரான் கண்ணன் அடி மறவாத மனத்தான் சக்தி
தாசன் எனப் புகழ் வளரும் சுப்ரமண்யபாரதி தான் சமைத்த தூக்கு

#5
மன்னவனே தமிழ்நாட்டில் தமிழ் அறிந்த மன்னர் இலை என்று மாந்தர்
இன்னலுறப் புகன்ற வசை நீ மகுடம் புனைந்த பொழுது இரிந்தது அன்றே
சொல் நலமும் பொருள் நலமும் சுவைகண்டு சுவைகண்டு துய்த்துத்துய்த்துக்
கன்னலிலே சுவை அறியும் குழந்தைகள் போல் தமிழ்ச் சுவை நீ களித்தாய் அன்றே

#6
புவி அனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்துத் தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லை எனும் வசை என்னால் கழிந்தது அன்றே
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது சோதி மிக்க
நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை என்று நன்கு

#7
பிரான்ஸ் என்னும் சிறந்த புகழ் நாட்டில் உயர் புலவோரும் பிறரும் ஆங்கே
விராவு புகழ் ஆங்கிலத் தீம் கவியரசர்தாமும் மிக வியந்து கூறிப்
பராவி என்றன் தமிழ்க் கவியை மொழிபெயர்த்துப் போற்றுகின்றார் பாரோர் ஏத்தும்
தராதிபனே இளசை வெங்கடேசுரெட்டா நின்பால் அத் தமிழ் கொணர்ந்தேன்
**வேறு

#8
வியப்பு மிகும் புத்திசையில் வியத்தகும் என் கவிதையினை வேந்தனே நின்
நயப்படு சந்நிதிதனிலே நான் பாட நீ கேட்டு நன்கு போற்றி
ஜயப் பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள் பொற்பைகள் ஜதி பல்லக்கு
வயப் பரிவாரங்கள் முதல் பரிசளித்துப் பல்லூழி வாழ்க நீயே
**எட்டயபுரம்
** 1919ம் வருடம் மே மாதம் 2 உ சுப்பிரமணிய பாரதி

@23 ஹிந்து மதாபிமான சங்கத்தார்

#1
மண்ணுலகின் மீதினிலே எக்காலும் அமரரைப் போல் மடிவில்லாமல்
திண்ணமுற வாழ்ந்திடலாம் அதற்கு உரிய உபாயம் இங்கு செப்பக் கேளீர்
நண்ணி எலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச் செய்கை எலாம் நடத்தும் வீறாய்த்
திண்ணிய நல் அறிவொளியாய்த் திகழும் ஒரு பரம்பொருளை அகத்தில் சேர்த்து

#2
செய்கை எலாம் அதன் செய்கை நினைவு எல்லாம் அதன் நினைவு தெய்வமே நாம்
உய்கையுற நாம் ஆகி நமக்குள்ளே ஒளிர்வது என உறுதிகொண்டு
பொய் கயமை சினம் சோம்பர் கவலை மயல் வீண்விருப்பம் புழுக்கம் அச்சம்
ஐயம் எனும் பேயை எலாம் ஞானம் எனும் வாளாலே அறுத்துத்தள்ளி

#3
எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில் வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர்
தப்பாதே இவ் உலகில் அமரநிலை பெற்றிடுவார் சதுர்வேதங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனும் இவற்றால் இவ் உண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமதம் எனப் புவியோர் சொல்லுவாரே

#4
அருமையுறு பொருளில் எலாம் மிக அரிதாய்த் தனைச் சாரும் அன்பர்க்கு இங்கு
பெருமையுறு வாழ்வு அளிக்கும் நல் துணையாம் ஹிந்துமதப் பெற்றிதன்னைக்
கருதி அதன் சொற்படி இங்கு ஒழுகாத மக்கள் எலாம் கவலை என்னும்
ஒரு நரகக்குழியதனில் வீழ்ந்து தவித்து அழிகின்றார் ஓய்விலாமே

#5
இத்தகைய துயர் நீக்கிக் கிருதயுகந்தனை உலகில் இசைக்க வல்ல
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப் பார் அறியப் புகட்டும் வண்ணம்
தத்து புகழ் வளப் பாண்டிநாட்டினில் காரைக்குடி ஊர்தனிலே சால
உத்தமராம் தனவணிகர் குலத்து உதித்த இளைஞர் பலர் ஊக்கம் மிக்கார்

#6
உண்மையே தாரகம் என்று உணர்ந்திட்டார் அன்பு ஒன்றே உறுதி என்பார்
வண்மையே குலதர்மம் எனக் கொண்டார் தொண்டு ஒன்றே வழியாக் கண்டார்
ஒண்மை உயர் கடவுளிடத்து அன்புடையார் அவ் அன்பின் ஊற்றத்தாலே
திண்மையுறும் ஹிந்துமத அபிமான சங்கம் ஒன்று சேர்த்திட்டாரே

#7
பல நூல்கள் பதிப்பித்தும் பல பெரியோர் பிரசங்கம் பண்ணுவித்தும்
நலமுடைய கலாசாலை புத்தகசாலை பலவும் நாட்டியும் தம்
குலம் உயர நகர் உயர நாடு உயர உழைக்கின்றார் கோடி மேன்மை
நிலவுற இச் சங்கத்தார் பல்லூழி வாழ்ந்து ஒளிர்க நிலத்தின் மீதே

@24 வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு
** ஆசிரியப்பா

#1
வருக செல்வ வாழ்க மன் நீயே
வடமேற்றிசைக்கண் மாபெரும் தொலையின் ஓர்
பொன் சிறு தீவகப் புரவலன் பயந்த
நல் தவப் புதல்வ நல்வரவு உனதே
மேதக நீயும் நின் காதல் அம் கிளியும் 5
என்றனைக் காணுமாறு இத்தனை காதம்
வந்தனிர் வாழ்திர் என் மனம் மகிழ்ந்ததுவே
செல்வ கேள் என் அரும் சேய்களை நின்னுடை
முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்
நெஞ்சு எலாம் புண்ணாய் நின்றனன் யாஅன் 10
ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்
ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில
போனதை எண்ணிப் புலம்பி இங்கு என் பயன்
மற்று உன் நாட்டினோர் வந்ததன் பின்னர்
அகத்தினில் சில புண் ஆறுதல் எய்தின 15
போர்த் தொகை அடங்கி என் ஏழைப் புத்திரர்
அமைதிபெற்று உய்வராயினர் எனவே
பாரததேவி பழமை போல் திருவருள்
பொழிகரலுற்றனள் பொருள் செயற்கு உரிய
தொழில் கணம் பலப்பல தோன்றின பின்னும் 20
கொடு மதப் பாவிகள் குறும்பு எலாம் அகன்றன
யாற்றினில் பெண்களை எறிவதூஉம் இரதத்து
உருளையில் பாலரை உயிருடன் மாய்த்தலும்
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்
எனப் பல தீமைகள் இறந்துபட்டனவால் 25
மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான
ஒண் பெரும் கதிரின் ஓர் இரு கிரணம் என்
பாலரின் மீது படுதலுற்றனவே
ஆயினும் என்னை ஆயிரம் கோடி
தொல்லைகள் இன்னும் தொலைந்தனவில்லை 30
நல்குரவு ஆதி நவமாம் தொல்லைகள்
ஆயிரம் எனை வந்து அடைந்துள நுமரால்
எனினும் இங்கு இவை எலாம் இறைவன் அருளால்
நீங்குவ அன்றி நிலைப்பன அல்ல
நோய் எலாம் தவிர்ப்பான் நுமரே எனக்கு 35
மருத்துவராக வந்தனர் என்பதூஉம்
பொய்யிலை ஆதலில் புகழ்பெறும் ஆங்கில
நாட்டினர் என்றும் நலமுற வாழ்கவே
என் அரும் சேய்களும் இவரும் நட்பு எய்தி
இருபான்மையர்க்கும் இன்னல் ஒன்று இன்றி 40
ஒருவரையொருவர் ஒறுத்திடல் இலாது
செவ்விதின் வாழ்க அச் சீர் மிகு சாதியின்
இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க
வாழ்க நீ வாழ்க நின் மனம் எனும் இனிய
வேரி மென் மலர் வாழ் மேரி நல் அன்னம் 45
மற்று என் சேய்கள் வாழிய வாழிய
&6 சுயசரிதை

@1 கனவு
** பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
** மெல்லப் போனதுவே
** பட்டினத்துப்பிள்ளை
**முன்னுரை

#1
வாழ்வு முற்றும் கனவு எனக் கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காண்
தாழ்வுபெற்ற புவித்தலக் கோலங்கள் சரதம் அன்று எனல் யானும் அறிகுவேன்
பாழ் கடந்த பரநிலை என்று அவர் பகரும் அ நிலை பார்த்திலன் பார் மிசை
ஊழ் கடந்து வருவதும் ஒன்று உண்டோ உண்மைதன்னில் ஓர் பாதி உணர்ந்திட்டேன்

#2
மாயை பொய் எனல் முற்றிலும் கண்டனன் மற்றும் இந்தப் பிரமத்து இயல்பினை
ஆய நல் அருள்பெற்றிலன் தன்னுடை அறிவினுக்குப் புலப்படல் இன்றியே
தேயம் மீது எவரோ சொலும் சொல்லினைச் செம்மை என்று மனத்திடைக் கொள்வதாம்
தீயபக்தி இயற்கையும் வாய்ந்திலேன் சிறிது காலம் பொறுத்தினும் காண்பமே

#3
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும் இதனிடை
சில தினங்கள் உயிர்க்கு அமுதாகியே செப்புதற்கு அரிதாக மயக்குமால்
திலத வாணுதலார் தரும் மையலாம் தெய்விகக் கனவு அன்னது வாழ்கவே

#4
ஆண்டு ஓர் பத்தினில் ஆடியும் ஓடியும் ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
ஈண்டு பல் மரத்து ஏறி இறங்கியும் என்னோடு ஒத்த சிறியர் இருப்பரால்
வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சி யான் வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன்
தூண்டு நூல் கணத்தோடு தனியனாய்த் தோழமை பிறிது இன்றி வருந்தினேன்
**பிள்ளைக் காதல்

#5
அன்ன போழ்தினில் உற்ற கனவினை அம் தமிழ்ச்சொலில் எவ்வண்ணம் சொல்லுகேன்
சொன்ன தீம் கனவு அங்குத் துயிலிடைத் தோய்ந்ததன்று நனவிடைத் தோய்ந்ததால்
மெல் நடைக் கனியின் சொல் கரு விழி மேனி எங்கும் நறு மலர் வீசிய
கன்னி என்று உறு தெய்வதம் ஒன்றனைக் கண்டு காதல் வெறியில் கலந்தனன்

#6
ஒன்பதாய பிராயத்தள் என் விழிக்கு ஓது காதைச் சகுந்தலை ஒத்தனள்
என்பது யார்க்கும் வியப்பினை நல்குமால் என் செய்கேன் பழி என் மிசை உண்டு-கொல்
அன்பு எனும் பெரு வெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்திட வல்லரே
முன்பு மா முனிவோர்தமை வென்ற வில் முன்னர் ஏழைக் குழந்தை என் செய்வனே

#7
வயது முற்றிய பின் உறு காதலே மாசுடைத்தது தெய்விகம் அன்று காண்
இயலு புன்மை உடலினுக்கு இன்பு எனும் எண்ணமும் சிறிது ஏற்றது அக் காதலாம்
நயம் மிகும் தனி மாதை மா மணம் நண்ணு பாலர் தமக்கு உரித்தாம் அன்றோ
கயல் விழிச் சிறு மானினைக் காண நான் காமன் அம்புகள் என் உயிர் கண்டவே

#8
கனகன் மைந்தன் குமரகுருபரன் கனியும் ஞானசம்பந்தன் துருவன் மற்று
எனையர் பாலர் கடவுளர் மீது தாம் எண்ணில் பக்திகொண்டு இன் உயிர் வாட்டினோர்
மனதிலே பிறந்தோன் மனன் உண்ணுவோன் மதனதேவனுக்கு என் உயிர் நல்கினன்
முனம் உரைத்தவர் வான் புகழ் பெற்றனர் மூடனேன் பெற்றது ஓதுவன் பின்னரே

#9
நீர் எடுத்து வருவதற்கு அவள் மணி நித்திலப் புன்னகை சுடர்வீசிடப்
போர் எடுத்து வரும் மதன் முன் செலப் போகும் வேளை அதற்குத் தினந்தொறும்
வேர் எடுத்துச் சுதந்திர நல் பயிர் வீந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீர் எடுத்த புலை உயிர் சாரர்கள் தேசபக்தர் வரவினைக் காத்தல் போல்

#10
காத்திருந்து அவள் போம் வழி முற்றிலும் கண்கள் பின்னழகு ஆர்ந்து களித்திட
யாத்த தேருருளைப் படும் ஏழைதான் யாண்டு தேர் செலுமாங்கு இழுப்புற்று எனக்
கோத்த சிந்தனையோடு ஏகி அதில் மகிழ்கொண்டு நாட்கள் பல கழித்திட்டனன்
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலன் அழிந்து ஒரு புத்துயிர் எய்துவேன்

#11
புலங்களோடு கரணமும் ஆவியும் போந்து நின்ற விருப்புடன் மானிடன்
நலங்கள் ஏது விரும்புவன் அங்கு அவை நண்ணுறப்பெறல் திண்ணமதாம் என
இலங்கு நூல் உணர் ஞானியர் கூறுவர் யானும் மற்றது மெய் எனத் தேர்ந்துளேன்
விலங்கு இயற்கை இலையெனில் யாம் எலாம் விரும்புமட்டினில் விண்ணுறல் ஆகுமே

#12
சூழும் மாய உலகினில் காணுறும் தோற்றம் யாவையும் மானதம் ஆகுமால்
ஆழும் நெஞ்சகத்து ஆசை இன்று உள்ளதேல் அதனுடைப் பொருள் நாளை விளைந்திடும்
தாழும் உள்ளத்தர் சோர்வினர் ஆடு போல் தாவித்தாவிப் பல பொருள் நாடுவோர்
வீழும் ஓர் இடையூற்றினுக்கு அஞ்சுவோர் விரும்பும் யாவும் பெறார் இவர்தாம் அன்றே

#13
விதியை நோவர் தம் நண்பரைத் தூற்றுவர் வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்
சதிகள் செய்வர் பொய்ச் சாத்திரம் பேசுவர் சாதகங்கள் புரட்டுவர் பொய்மை சேர்
மதியினில் புலை நாத்திகம் கூறுவர் மாய்ந்திடாத நிறைந்த விருப்பமே
கதிகள் யாவும் தரும் எனல் ஓர்ந்திடார் கண்ணிலாதவர் போலத் திகைப்பர் காண்

#14
கன்னி மீது உறு காதலின் ஏழையேன் கவலையுற்றனன் கோடி என் சொல்லுகேன்
பன்னி ஆயிரம் கூறினும் பக்தியின் பான்மை நன்கு பகர்ந்திடலாகுமோ
முன்னி வான் கொம்பில் தேனுக்கு உழன்றதோர் முடவன் கால்கள் முழுமைகொண்டால் என
என் இயன்று மற்று எங்ஙனம் வாய்ந்ததோ என்னிடத்து அவள் இங்கிதம் பூண்டதே

#15
காதல் என்பதும் ஓர்வயின் நிற்குமேல் கடலின் வந்த கடுவினை ஒக்குமால்
ஏதமின்றி இருபுடைத்தாம் எனில் இன் அமிர்தும் இணை சொலல் ஆகுமோ
ஓதொணாத பெரும் தவம் கூடினோர் உம்பர் வாழ்வினை எள்ளிடும் வாழ்வினோர்
மாதரார் மிசை தாம் உறும் காதலை மற்றவர் தரப் பெற்றிடும் மாந்தரே

#16
மொய்க்கும் மேகத்தின் வாடிய மா மதி மூடு வெம் பனிக் கீழுறு மென் மலர்
கைக்கும் வேம்பு கலந்திடு செய்ய பால் காட்சியற்ற கவினுறு நீள் விழி
பொய்க் கிளைத்து வருந்திய மெய் அரோ பொன்னனார் அருள்பூண்டிலராம் எனில்
கைக்கிளைப் பெயர் கொண்ட பெரும் துயர்க் காதல் அஃது கருதவும் தீயதால்

#17
தேவர் மன்னன் மிடிமையைப் பாடல் போல் தீய கைக்கிளை யான் எவன் பாடுதல்
ஆவல்கொண்ட அரும்பெறல் கன்னிதான் அன்பு எனக்கு அங்கு அளித்திடலாயினள்
பாவம் தீமை பழி எதும் தேர்ந்திடோம் பண்டைத் தேவ யுகத்து மனிதர் போல்
காவல் கட்டு விதி வழக்கு என்றிடும் கயவர் செய்திகள் ஏதும் அறிந்திலோம்

#18
கானகத்தில் இரண்டு பறவைகள் காதலுற்றது போலவும் ஆங்ஙனே
வானகத்தில் இயக்கர் இயக்கியர் மையல்கொண்டு மயங்குதல் போலவும்
ஊன் அகத்தது உவட்டுறும் அன்புதான் ஒன்றும் இன்றி உயிர்களில் ஒன்றியே
தேன் அகத்த மணிமொழியாளொடு தெய்வ நாட்கள் சில கழித்தேன் அரோ

#19
ஆதிரைத் திருநாள் ஒன்றில் சங்கரன் ஆலயத்து ஒரு மண்டபம்தன்னில் யான்
சோதி மானொடு தன்னந்தனியனாய்ச் சொற்களாடி இருப்ப மற்று அங்கு அவள்
பாதி பேசி மறைந்து பின் தோன்றித் தன் பங்கயக் கையில் மை கொணர்ந்தே ஒரு
சேதி நெற்றியில் பொட்டுவைப்பேன் என்றாள் திலகமிட்டனள் செய்கை அழிந்தனன்

#20
என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில் ஏங்கவிட்டு விண் எய்திய தாய்தனை
முன்னை ஈன்றவன் செந்தமிழ்ச் செய்யுளால் மூன்று போழ்தும் சிவனடி ஏத்துவோன்
அன்னவன் தவப் பூசனை தீர்ந்த பின் அருச்சனைப்படு தேமலர் கொண்டு யான்
பொன்னை என் உயிர்தன்னை அணுகலும் பூவை புன்னகை நல் மலர் பூப்பள் காண்
**ஆங்கிலப் பயிற்சி

#21
நெல்லையூர் சென்று அவ் ஊணர் கலைத்திறன் நேருமாறு எனை எந்தை பணித்தனன்
புல்லை உண்க என வாள் அரிச் சேயினைப் போக்கல் போலவும் ஊன் விலை வாணிகம்
நல்லது என்று ஒரு பார்ப்பனப்பிள்ளையை நாடுவிப்பது போலவும் எந்தைதான்
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கு இங்கு அருவருப்பாவதை

#22
நரி உயிர்ச் சிறு சேவகர் தாதர்கள் நாய் எனத் திரி ஒற்றர் உணவினைப்
பெரிது எனக் கொடு தம் உயிர் விற்றிடும் பேடியர் பிறர்க்கு இச்சகம் பேசுவோர்
கருதும் இவ்வகை மாக்கள் பயின்றிடும் கலை பயில்க என என்னை விடுத்தனன்
அருமை மிக்க மயிலைப் பிரிந்தும் இவ் அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ

#23
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் கார் கொள் வானில் ஓர் மீன் நிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழும் நாட்டில் பொருள் கெடல் கேட்டிலார்
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் சொல்லுவார் எள்துணைப் பயன் கண்டிலார்

#24
கம்பன் என்று ஒரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்
நம்பரும் திறலோடு ஒரு பாணினி ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்

#25
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல் இசைப் பாண்டிய சோழர்கள் பார் அளித்ததும் தர்மம் வளர்த்ததும்
பேரருள் சுடர் வாள்கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்

#26
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர்
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடிக் கல்வி பயின்று உழல் பித்தர்கள்
என்ன கூறி மற்று எங்ஙன் உணர்த்துவேன் இங்கு இவர்க்கு எனது உள்ளம் எரிவதே

#27
சூதிலாத உளத்தினன் எந்தைதான் சூழ்ந்து எனக்கு நலம் செயல் நாடியே
ஏதிலார் தரும் கல்விப் படுகுழி ஏறி உய்தற்கு அரிய கொடும்பிலம்
தீது இயன்ற மயக்கமும் ஐயமும் செய்கை யாவினுமே அசிரத்தையும்
வாதும் பொய்மையும் என்ற விலங்கினம் வாழும் வெம் குகைக்கு என்னை வழங்கினன்

#28
ஐயர் என்றும் துரை என்றும் மற்று எனக்கு ஆங்கிலக் கலை என்று ஒன்று உணர்த்திய
பொய்யருக்கு இது கூறுவன் கேட்பீரேல் பொழுது எலாம் உங்கள் பாடத்தில் போக்கி நான்
மெய் அயர்ந்து விழி குழிவு எய்திட வீறு இழந்து எனது உள்ளம் நொய்தாகிட
ஐயம் விஞ்சிச் சுதந்திரம் நீங்கி என் அறிவு வாரித் துரும்பு என்று அலைந்ததால்

#29
செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன
நலம் ஒர் எள்துணையும் கண்டிலேன் இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்
சில முன்செய் நல்வினைப் பயனாலும் நம் தேவி பாரதத்து அன்னை அருளினும்
அலைவுறுத்து நும் பேரிருள் வீழ்ந்து நான் அழிந்திடாது ஒருவாறு பிழைத்ததே
**மணம்

#30
நினைக்க நெஞ்சம் உருகும் பிறர்க்கு இதை நிகழ்த்த நா நனி கூசும் அதன்றியே
எனைத்து இங்கு எண்ணி வருந்தியும் இவ் இடர் யாங்ஙன் மாற்றுவது என்பதும் ஓர்ந்திலம்
அனைத்து ஒர் செய்தி மற்று ஏதெனில் கூறுவேன் அம்ம மாக்கள் மணம் எனும் செய்தியே
வினைத் தொடர்களில் மானுட வாழ்க்கையுள் மேவும் இ மணம் போல் பிறிதின்று அரோ

#31
வீடுறாவணம் யாப்பதை வீடு என்பார் மிக இழிந்த பொருளைப் பொருள் என்பார்
நாடுங்கால் ஒர் மணமற்ற செய்கையை நல்லதோர் மணமாம் என நாட்டுவார்
கூடுமாயில் பிரமசரியம் கொள் கூடுகின்றிலதென்னில் பிழைகள் செய்து
ஈடு அழிந்து நரக வழிச் செல்வாய் யாது செய்யினும் இ மணம் செய்யல் காண்

#32
வசிட்டருக்கும் இராமருக்கும் பின் ஒரு வள்ளுவர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர் போல்
பசித்து ஒர் ஆயிரம் ஆண்டு தவம்செய்துபார்க்கினும் பெறல் சால அரிது காண்
புசிப்பது உம்பரின் நல் அமுது என்று எணிப் புலையர் விற்றிடும் கள் உணலாகுமோ
அசுத்தர் சொல்வது கேட்கலீர் காளையீர் ஆண்மை வேண்டின் மணம்செய்தல் ஓம்பு-மின்

#33
வேறு தேயத்து எவர் எது செய்யினும் வீழ்ச்சிபெற்ற இப் பாரதநாட்டினில்
ஊர் அழிந்து பிணம் என வாழும் இவ் ஊனம் நீக்க விரும்பும் இளையர்தாம்
கூறும் எந்தத் துயர்கள் விளையினும் கோடி மக்கள் பழி வந்து சூழினும்
நீறுபட்ட இப் பாழ்ச் செயல் மட்டினும் நெஞ்சத்தாலும் நினைப்பது ஒழிகவே

#34
பால் அருந்து மதலையர்தம்மையே பாதகக் கொடும் பாதகப் பாதகர்
மூலத்தோடு குலம் கெடல் நாடிய மூட மூட நிர்மூடப் புலையர்தாம்
கோலமாக மணத்திடைக் கூட்டும் இக் கொலை எனும் செயல் ஒன்றினை உள்ளவும்
சால இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டு இவர் தாதராகி அழிக எனத் தோன்றுமே

#35
ஆங்கு ஒர் கன்னியைப் பத்துப் பிராயத்தில் ஆழ நெஞ்சிடை ஊன்றி வணங்கினன்
ஈங்கு ஒர் கன்னியைப் பன்னிரண்டு ஆண்டனுள் எந்தை வந்து மணம்புரிவித்தனன்
தீங்கு மற்று இதில் உண்டு என்று அறிந்தவன் செயல் எதிர்க்கும் திறனிலன் ஆயினேன்
ஓங்கு காதல் தழல் எவ்வளவு என்றன் உளம் எரித்துளது என்பதும் கண்டிலேன்

#36
மற்றொர் பெண்ணை மணம்செய்த போழ்து முன் மாதராளிடைக் கொண்டதொர் காதல்தான்
நிற்றல் வேண்டும் என உளத்து எண்ணிலேன் நினைவையே இ மணத்தில் செலுத்திலேன்
முன் தொடர்பினில் உண்மை இருந்ததால் மூண்ட பின் அது ஒர் கேளி என்று எண்ணினேன்
கற்றும் கேட்டும் அறிவு முதிரும் முன் காதல் ஒன்று கடமை ஒன்று ஆயின

#37
மதனன் செய்யும் மயக்கம் ஒருவயின் மாக்கள் செய்யும் பிணிப்பு மற்றோர்வயின்
இதனில் பன்னிரண்டு ஆட்டை இளைஞனுக்கு என்னை வேண்டும் இடர்க்கு உறு சூழ்ச்சிதான்
எதனிலேனும் கடமை விளையுமேல் எத்துயர்கள் உழன்றும் மற்று என் செய்தும்
அதனில் உண்மையோடு ஆர்ந்திடல் சாலும் என்று அறம் விதிப்பதும் அப்பொழுது ஓர்ந்திலேன்

#38
சாத்திரங்கள் கிரியைகள் பூசைகள் சகுன மந்திரம் தாலி மணி எலாம்
யாத்து எனைக் கொலைசெய்தனர் அல்லது யாது தர்மமுறை எனல் காட்டிலர்
தீத்திறன் கொள் அறிவற்ற பொய்ச் செயல் செய்து மற்றவை ஞான நெறி என்பர்
மூத்தவர் வெறும் வேடத்தின் நிற்குங்கால் மூடப் பிள்ளை அறம் எவண் ஓர்வதே
**தந்தை வறுமை எய்திடல்

#39
ஈங்கு இதற்கிடை எந்தை பெரும் துயர் எய்தி நின்றனன் தீய வறுமையான்
ஓங்கி நின்ற பெரும் செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன்
பாங்கில் நின்று புகழ்ச்சிகள் பேசிய பண்டை நண்பர்கள் கைநெகிழ்த்து ஏகினர்
வாங்கி உய்ந்த கிளைஞரும் தாதரும் வாழ்வு தேய்ந்த பின் யாது மதிப்பரோ

#40
பார்ப்பனக் குலம் கெட்டு அழிவு எய்திய பாழடைந்த கலியுகம் ஆதலால்
வேர்ப்ப வேர்ப்பப் பொருள்செய்வது ஒன்றையே மேன்மை கொண்ட தொழில் எனக் கொண்டனன்
ஆர்ப்பு மிஞ்சப் பலபல வாணிகம் ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன்
நீர்ப்படும் சிறு புற்புதமாம் அது நீங்கவே உளம் குன்றித் தளர்ந்தனன்

#41
தீய மாய உலகிடை ஒன்றினில் சிந்தைசெய்து விடாயுறுங்கால் அதை
வாய் அடங்க மென்மேலும் பருகினும் மாயத் தாகம் தவிர்வது கண்டிலம்
நேயமுற்றது வந்து மிகமிக நித்தலும் அதற்கு ஆசை வளருமால்
காயம் உள்ளவரையும் கிடைப்பினும் கயவர் மாய்வது காய்ந்த உளம் கொண்டே

#42
ஆசைக்கு ஓர் அளவில்லை விடயத்துள் ஆழ்ந்த பின் அங்கு அமைதி உண்டாம் என
மோசம்போகலிர் என்று இடித்து ஓதிய மோனி தாள் இணை முப்பொழுது ஏத்துவாம்
தேசத்தார் புகழ் நுண்ணறிவோடுதான் திண்மை விஞ்சிய நெஞ்சினனாயினும்
நாசக் காசினில் ஆசையை நாட்டினன் நல்லன் எந்தை துயர்க் கடல் வீழ்ந்தனன்
**பொருட் பெருமை

#43
பொருளிலார்க்கு இலை இவ் உலகு என்ற நம் புலவர்தம் மொழி பொய்ம்மொழி அன்று காண்
பொருளிலார்க்கு இனம் இல்லை துணை இலை பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால்
பொருளிலார் பொருள்செய்தல் முதற்கடன் போற்றிக் காசினுக்கு ஏங்கி உயிர்விடும்
மருளர்தம் இசையே பழி கூறுவன் மா மகட்கு இங்கு ஒர் ஊனம் உரைத்திலன்

#44
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் என்ற நல் அறிஞர்தம்மை அனுதினம் போற்றுவேன்
பிற விரும்பி உலகினில் யான் பட்ட பீழை எத்தனை கோடி நினைக்கவும்
திறன் அழிந்து என் மனம் உடைவெய்துமால் தேசத்து உள்ள இளைஞர் அறி-மினோ
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் ஆதலால் அறனையே துணை என்று கொண்டு உய்திரால்

#45
வெய்ய கர்மப் பயன்களின் நொந்துதான் மெய் உணர்ந்திடலாகும் என்று ஆக்கிய
தெய்வமே இது நீதி எனினும் நின் திருவருட்குப் பொருந்தியது ஆகுமோ
ஐயகோ சிறிது உண்மை விளங்கும் முன் ஆவி நையத் துயருறல் வேண்டுமே
பையப்பைய ஓர் ஆமை குன்று ஏறல் போல் பாருளோர் உண்மை கண்டு இவண் உய்வரால்

#46
தந்தை போயினன் பாழ் மிடி சூழ்ந்தது தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்
சிந்தையில் தெளிவு இல்லை உடலினில் திறனும் இல்லை உரன் உளத்து இல்லையால்
மந்தர்பால் பொருள் போக்கிப் பயின்றதாம் மடமைக் கல்வியால் மண்ணும் பயன் இலை
எந்த மார்க்கமும் தோற்றிலது என் செய்கேன் ஏன் பிறந்தனன் இத் துயர் நாட்டிலே
**முடிவுரை

#47
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும் இதற்கு நான்
பல நினைந்து வருந்தி இங்கு என் பயன் பண்டு போனதை எண்ணி என் ஆவது
சில தினங்கள் இருந்து மறைவதில் சிந்தைசெய்து எவன் செத்திடுவானடா

#48
ஞானம் முந்துறவும் பெற்றிலாதவர் நானிலத்துத் துயர் அன்றிக் காண்கிலர்
போனதற்கு வருந்திலன் மெய்த்தவப் புலமையோன் அது வானத்து ஒளிரும் ஓர்
மீனை நாடி வளைத்திடத் தூண்டிலை வீசல் ஒக்கும் எனலை மறக்கிலேன்
ஆனது ஆவது அனைத்தையும் செய்வதோர் அன்னையே இனியேனும் அருள்வையால்
** வேறு

#49
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம்
பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் நிலைத்திடல் என்று இவை அருளாய்
குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்க் குலவிடு தனிப் பரம்பொருளே

@2 பாரதி அறுபத்தாறு
**கடவுள் வாழ்த்து – பராசக்தி துதி

#1
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
மனத்தினிலே நின்று இதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மா சக்தி வையத்தேவி
தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும் செய்ய மணித் தாமரை நேர் முகத்தாள் காதல்
வனத்தினிலே தன்னை ஒரு மலரைப் போலும் வண்டினைப் போல் எனையும் உருமாற்றிவிட்டாள்

#2
தீராத காலம் எலாம் தானும் நிற்பாள் தெவிட்டாத இன் அமுதின் செவ்விதழ்ச்சி
நீராகக் கனலாக வானாக் காற்றா நிலமாக வடிவெடுத்தாள் நிலத்தின் மீது
போராக நோயாக மரணமாகப் போந்து இதனை அழித்திடுவாள் புணர்ச்சிகொண்டால்
நேராக மோன மஹானந்த வாழ்வை நிலத்தின் மிசை அளித்து அமரத்தன்மை ஈவாள்

#3
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை வைரவி கங்காளி மனோன்மணி மாமாயி
பாகு ஆர்ந்த தேமொழியாள் படரும் செந்தீ பாய்ந்திடும் ஓர் விழியுடையாள் பரமசக்தி
ஆகாரம் அளித்திடுவாள் அறிவு தந்தாள் ஆதிபராசக்தி எனது அமிர்தப் பொய்கை
சோகாடவிக்குள் எனைப் புகவொட்டாமல் துய்ய செழும் தேன் போலே கவிதை சொல்வாள்
**மரணத்தை வெல்லும் வழி

#4
பொன் ஆர்ந்த திருவடியைப் போற்றி இங்கு புகலுவேன் யான் அறியும் உண்மை எல்லாம்
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார் முடிவாக அவ் உரையை நான் மேற்கொண்டேன்
அன்னோர்கள் உரைத்தது அன்றிச் செய்கை இல்லை அத்வைத நிலை கண்டால் மரணம் உண்டோ
முன்னோர்கள் உரைத்த பல சித்தர் எல்லாம் முடிந்திட்டார் மடிந்திட்டார் மண்ணாய்விட்டார்

#5
பொந்திலே உள்ளாராம் வனத்தில் எங்கோ புதர்களிலே இருப்பாராம் பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே சற்றே அங்கங்கே தென்படுகின்றாராம்
நொந்த புண்ணைக் குத்துவதில் பயன் ஒன்று இல்லை நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான் அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்

#6
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான் தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான் பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்
மலிவு கண்டீர் இவ் உண்மை பொய் கூறேன் யான் மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே
நலிவும் இல்லை சாவும் இல்லை கேளீர் கேளீர் நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை
**அசுரர்களின் பெயர்

#7
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்துபோகும்
மிச்சத்தைப் பின் சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் மேதினியில் மரணம் இல்லை
துச்சமெனப் பிறர் பொருளைக் கருதலாலே சூழ்ந்தது எலாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே நேர்வதே மானுடர்க்குச் சினத் தீ நெஞ்சில்
**சினத்தின் கேடு

#8
சினம்கொள்வார் தமைத்தாமே தீயால் சுட்டுச் செத்திடுவார் ஒப்பாவார் சினம்கொள்வார்தாம்
மனம் கொண்டு தம் கழுத்தைத் தாமே வெய்ய வாள் கொண்டு கிழித்திடுவார் மானுவாராம்
தினம் கோடி முறை மனிதர் சினத்தில் வீழ்வார்
சினம் பிறர் மேல் தாம் கொண்டு கவலையாகச் செய்தது எணித் துயர்க் கடலில் வீழ்ந்து சாவார்

#9
மாகாளி பராசக்தி துணையே வேண்டும் வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா
சாகாமல் இருப்பது நம் சதுரால் அன்று சக்தி அருளால் அன்றோ பிறந்தோம் பார் மேல்
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன் பாரீர் நீர் கேளீரோ படைத்தோன் காப்பான்
வேகாத மனம் கொண்டு களித்து வாழ்வீர் மேதினியில் ஏது வந்தால் எமக்கு என் என்றே
**தேம்பாமை

#10
வடகோடு இங்கு உயர்ந்து என்னே சாய்ந்தால் என்னே வான் பிறைக்குத் தென்கோடு பார் மீது இங்கே
விடம் உண்டும் சாகாமல் இருக்கக் கற்றால் வேறெதுதான் யாதாயின் எமக்கு இங்கு என்னே
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம் தேம்பல் வேண்டா தேம்புவதில் பயன் இல்லை தேம்பித்தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி எதற்கும் இனி அஞ்சாதீர் புவியிலுள்ளீர்
**பொறுமையின் பெருமை

#11
திருத்தணிகை மலை மேலே குமாரதேவன் திருக்கொலு வீற்றிருக்குமதன் பொருளைக் கேளீர்
திருத்தணிகை என்பது இங்கு பொறுமையின் பேர் செந்தமிழ் கண்டீர் பகுதி தணி எனும் சொல்
பொருத்தமுறும் தணிகையினால் புலமை சேரும் பொறுத்தவரே பூமியினை ஆள்வார் என்னும்
அருத்தம் மிக்க பழமொழியும் தமிழில் உண்டாம் அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்

#12
பொறுமையினை அறக்கடவுள் புதல்வன் என்னும் யுதிட்டிரனும் நெடுநாள் இப் புவி மேல் காத்தான்
இறுதியிலே பொறுமை நெறி தவறிவிட்டான் ஆதலால் போர்புரிந்தான் இளையாரோடே
பொறுமை இன்றிப் போர்செய்து பரதநாட்டைப் போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது
வறுமையையும் கலியினையும் நிறுத்திவிட்டு மலை மீது சென்றான் பின் வானம் சென்றான்

#13
ஆனாலும் புவியின் மிசை உயிர்கள் எல்லாம் அநியாய மரணம் எய்தல் கொடுமை அன்றோ
தேனான உயிரைவிட்டுச் சாகலாமோ செத்திடற்குக் காரணம்தான் யாது என்பீரேல்
கோன் ஆகிச் சாத்திரத்தை ஆளும் மாண்பார் ஜகதீச சந்த்ரவஸு கூறுகின்றான்
ஞானானுபவத்தில் இது முடிவாம் கண்டீர் நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் என்றான்

#14
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம் கொடும் கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியது ஆகும் அச்சத்தால் நாடி எலாம் அவிந்துபோகும்
தாபத்தால் நாடி எலாம் சிதைந்துபோகும் கவலையினால் நாடி எலாம் தழலாய் வேகும்
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான் கொல்வதற்கு வழி என நான் குறித்திட்டேனே
**கடவுள் எங்கே இருக்கிறார்

#15
சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே சொல் என்று ஹிரணியன்தான் உறுமிக் கேட்க
நல்லதொரு மகன் சொல்வான் தூணில் உள்ளான் நாராயணன் துரும்பில் உள்ளான் என்றான்
வல்ல பெரும் கடவுள் இலா அணு ஒன்று இல்லை மஹாசக்தி இல்லாத வஸ்து இல்லை
அல்லல் இல்லை அல்லல் இல்லை அல்லல் இல்லை அனைத்துமே தெய்வம் என்றால் அல்லல் உண்டோ
**சுயசரிதை

#16
கேளப்பா சீடனே கழுதை ஒன்றைக் கீழான் பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்து இரு கரமும் சிரம் மேல் கூப்பிச் சங்கரசங்கர என்று பணிதல் வேண்டும்
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும் கூடி நின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம்
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன் விண் மட்டும் கடவுள் அன்று மண்ணும் அஃதே

#17
சுத்த அறிவே சிவம் என்று உரைத்தார் மேலோர் சுத்த மண்ணும் சிவம் என்றே உரைக்கும் வேதம்
வித்தகனாம் குரு சிவம் என்று உரைத்தார் மேலோர் வித்தை இலாப் புலையனும் அஃது என்னும் வேதம்
பித்தரே அனைத்து உயிரும் கடவுள் என்று பேசுவது மெய்யானால் பெண்டிர் என்றும்
நித்தம் நுமது அருகினிலே குழந்தை என்றும் நிற்பனவும் தெய்வம் அன்றோ நிகழ்த்துவீரே

#18
உயிர்கள் எல்லாம் தெய்வம் அன்றிப் பிற ஒன்று இல்லை ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
பயிலும் உயிர் வகை மட்டுமன்றி இங்குப் பார்க்கின்ற பொருள் எல்லாம் தெய்வம் கண்டீர்
வெயில் அளிக்கும் இரவி மதி விண்மீன் மேகம் மேலும் இங்குப் பலபலவாம் தோற்றம் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம் எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்
**குருக்கள் துதி(குள்ளச்சாமி புகழ்)

#19
ஞானகுருதேசிகனைப் போற்றுகின்றேன் நாடு அனைத்தும் தான் ஆவான் நலிவிலாதான்
மோன குரு திருவருளால் பிறப்பு மாறி முற்றிலும் நாம் அமரநிலை சூழ்ந்துவிட்டோம்
தேன் அனைய பராசக்தி திறத்தைக் காட்டிச் சித்தின் இயல் காட்டி மனத் தெளிவு தந்தான்
வானகத்தை இவ் உலகிலிருந்து தீண்டும் வகை உணர்த்திக் காத்த பிரான் பதங்கள் போற்றி

#20
எப்போதும் குரு சரணம் நினைவாய் நெஞ்சே எம்பெருமான் சிதம்பரதேசிகன் தாள் எண்ணாய்
முப்பாழும் கடந்த பெருவெளியைக் கண்டான் முத்தி எனும் வானகத்தே பரிதி ஆவான்
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான் தவம் நிறைந்த மாங்கொட்டைச்சாமித் தேவன்
குப்பாய ஞானத்தால் மரணம் என்ற குளிர் நீக்கி எனைக் காத்தான் குமாரதேவன்

#21
தேசத்தார் இவன் பெயரைக் குள்ளச்சாமி தேவர்பிரான் என்று உரைப்பார் தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான் பயத்தைச் சுட்டான் பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்
நாசத்தை அழித்துவிட்டான் யமனைக் கொன்றான் ஞானகங்கைதனை முடி மீது ஏந்திநின்றான்
ஆசை எனும் கொடிக்கு ஒரு காழ் மரமே போன்றான் ஆதி அவன் சுடர் பாதம் புகழ்கின்றேனே

#22
வாயினால் சொல்லிடவும் அடங்காதப்பா வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்கலாமோ ஞானகுரு புகழினை நாம் வகுக்கலாமோ
ஆயிரம் நூல் எழுதிடினும் முடிவுறாதாம் ஐயன் அவன் பெருமையை நான் சுருக்கிச் சொல்வேன்
காயகற்பம் செய்துவிட்டான் அவன் வாழ்நாளைக் கணக்கிட்டு வயது உரைப்பார் யாரும் இல்லை
**குரு தரிசனம்

#23
அன்றொரு நாள் புதுவைநகர்தனிலே கீர்த்தி அடைக்கலம் சேர் ஈசுவரன் தர்மராஜா
என்ற பெயர் வீதியில் ஓர் சிறிய வீட்டில் இராஜாராம் ஐயன் என்ற நாகைப் பார்ப்பான்
முன் தனது பிதா தமிழில் உபநிடதத்தை மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்றனை வேண்டிக்கொள்ள யான் சென்று ஆங்கண் இருக்கையிலே அங்கு வந்தான் குள்ளச்சாமி

#24
அப்போது நான் குள்ளச்சாமி கையை அன்புடனே பற்றி இது பேசலுற்றேன்
அப்பனே தேசிகனே ஞானி என்பார் அவனியிலே சிலர் நின்னைப் பித்தன் என்பார்
செப்புறு நல் அஷ்டாங்க யோக சித்தி சேர்ந்தவன் என்று உனைப் புகழ்வார் சிலர் என் முன்னே
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய் உத்தமனே எனக்கு நினை உணர்த்துவாயே

#25
யாவன் நீ நினக்குள்ள திறமை என்னே யாது உணர்வாய் கந்தை சுற்றித் திரிவது என்னே
தேவனைப் போல் விழிப்பது என்னே சிறியாரோடும் தெருவிலே நாய்களொடும் விளையாட்டு என்னே
பாவனையில் பித்தரைப் போல் அலைவது என்னே பரமசிவன் போல் உருவம் படைத்தது என்னே
ஆவலற்று நின்றது என்னே அறிந்தது எல்லாம் ஆரியனே எனக்கு உணர்த்தவேண்டும் என்றேன்

#26
பற்றிய கை திருகி அந்தக் குள்ளச்சாமி பரிந்து ஓடப்பார்த்தான் யான் விடவேயில்லை
சுற்றுமுற்றும் பார்த்துப் பின் முறுவல் பூத்தான் தூய திருக்கமல பதத் துணையைப் பார்த்தேன்
குற்றமற்ற தேசிகனும் திமிறிக்கொண்டு குதித்து ஓடி அவ் வீட்டுக் கொல்லை சேர்ந்தான்
மற்றவன் பின் யான் ஓடி விரைந்து சென்று வானவனைக் கொல்லையிலே மறித்துக்கொண்டேன்
**உபதேசம்

#27
பக்கத்து வீடு இடிந்து சுவர்கள் வீழ்ந்த பாழ்மனை ஒன்று இருந்தது அங்கே பரமயோகி
ஒக்கத் தன் அருள் விழியால் என்னை நோக்கி ஒரு குட்டிச்சுவர் காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்று உள தன் விம்பம் காட்டி அறிதி-கொலோ எனக் கேட்டான் அறிந்தேன் என்றேன்
மிக்க மகிழ்கொண்டு அவனும் சென்றான் யானும் வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன்

#28
தேசிகன் கைகாட்டி எனக்கு உரைத்த செய்தி செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்துகின்றேன்
வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்
தேசு உடைய பரிதி உருக் கிணற்றின் உள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
பேசுவதில் பயன் இல்லை அனுபவத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான்

#29
கையில் ஒரு நூல் இருந்தால் விரிக்கச் சொல்வேன் கருத்தை அதில் காட்டுவேன் வானைக் காட்டி
மை இலகு விழியாளின் காதல் ஒன்றே வையகத்தில் வாழும் நெறி என்று காட்டி
ஐயன் எனக்கு உணர்த்தியன பலவாம் ஞானம் அதற்கு அவன் காட்டிய குறிப்போ அநந்தம் ஆகும்
பொய் அறியா ஞானகுரு சிதம்பரேசன் பூமி விநாயகன் குள்ளச்சாமி அங்கே

#30
மற்றொரு நாள் பழம் கந்தை அழுக்குமூட்டை வளமுறவே கட்டி அவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கமல பாதக் கருணை முனி சுமந்துகொண்டு என் எதிரே வந்தான்
சற்று நகைபுரிந்தவன்பால் கேட்கலானேன் தம்பிரானே இந்தத் தகைமை என்னே
முற்றும் இது பித்தருடைச் செய்கை அன்றோ மூட்டை சுமந்திடுவது என்னே மொழிவாய் என்றேன்

#31
புன்னகைபூத்து ஆரியனும் புகலுகின்றான் புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தின் உள்ளே
இன்னதொரு பழம் குப்பை சுமக்கிறாய் நீ என்று உரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான்
மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன் மனத்தின் உள்ளே பழம் பொய்கள் வளர்ப்பதாலே
இன்னலுற்று மாந்தர் எல்லாம் மடிவார் வீணே இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்

#32
சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்

#33
மேன்மேலும் நினைந்து அழுதல் வேண்டா அந்தோ மேதை இல்லா மானுடரே மேலும் மேலும்
மேன்மேலும் புதிய காற்று எம்முள் வந்து மேன்மேலும் புதிய உயிர் விளைத்தல் கண்டீர்
ஆன்மா என்றே கருமத்தொடர்பை எண்ணி அறிவு மயக்கம்கொண்டு கெடுகின்றீரே
மான் மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டுத் தனை மறந்து வாழ்தல் வேண்டும்

#34
சென்ற வினைப்பயன்கள் எனைத் தீண்டமாட்டா ஸ்ரீதரன் யான் சிவகுமாரன் யான் அன்றோ
நன்று இந்தக் கணம் புதிதாய்ப் பிறந்துவிட்டேன் நான் புதியன் நான் கடவுள் நலிவிலாதோன்
என்று இந்த உலகின் மிசை வானோர் போலே இயன்றிடுவார் சித்தர் என்பார் பரமதர்மக்
குன்றின் மிசை ஒரு பாய்ச்சலாகப் பாய்ந்து குறிப்பற்றார் கேடற்றார் குலைதலற்றார்

#35
குறி அனந்தம் உடையோராய்க் கோடி செய்தும் குவலயத்தில் வினைக்கு அடிமைப்படாதார் ஆகி
வெறியுடையோன் உமையாளை இடத்தில் ஏற்றான் வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத் தீயினைப் போல் மண் மீது திரிவார் மேலோர்
அறிவுடைய சீடா நீ குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமரன் ஆவாய்

#36
கேளப்பா மேற்சொன்ன உண்மை எல்லாம் கேடற்ற மதியுடையான் குள்ளச்சாமி
நாளும் பல் காட்டாலும் குறிப்பினாலும் நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்
தோளைப் பார்த்துக் களித்தல் போலே அன்னான் துணை அடிகள் பார்த்து மனம் களிப்பேன் யானே
வாளைப் பார்த்து இன்பமுறும் மன்னர் போற்றும் மலர்த் தாளான் மாங்கொட்டைச்சாமி வாழ்க
**கோவிந்த சுவாமி புகழ்

#37
மாங்கொட்டைச்சாமி புகழ் சிறிது சொன்னோம் வண்மை திகழ் கோவிந்த ஞானி பார் மேல்
யாம் கற்ற கல்வி எலாம் பலிக்கச்செய்தான் எம்பெருமான் பெருமையை இங்கு இசைக்கக் கேளீர்
தீங்கற்ற குணமுடையான் புதுவை ஊரார் செய்த பெரும் தவத்தாலே உதித்த தேவன்
பாங்குற்ற மாங்கொட்டைச்சாமி போலே பயிலும் மதி வர்ணாசிரமத்தே நிற்போன்

#38
அன்பினால் முத்தி என்றான் புத்தன் அந்நாள் அதனை இந்நாள் கோவிந்தசாமி செய்தான்
துன்பமுறும் உயிர்க்கு எல்லாம் தாயைப் போலே சுரக்கும் அருள் உடைய பிரான் துணிந்த யோகி
அன்பினுக்குக் கடலையும்தான் விழுங்க வல்லான் அன்பினையே தெய்வம் என்பான் அன்பே ஆவான்
மன்பதைகள் யாவும் இங்கே தெய்வம் என்ற மதியுடையான் கவலை எனும் மயக்கம் தீர்ந்தான்

#39
பொன் அடியால் என் மனையைப் புனிதமாக்கப் போந்தான் இ முனி ஒருநாள் இறந்த எந்தை
தன் உருவம் காட்டினான் பின்னர் என்னைத் தரணி மிசைப் பெற்றவளின் வடிவம் உற்றான்
அன்னவன் மா யோகி என்றும் பரமஞானத்து அனுபூதி உடையன் என்றும் அறிந்துகொண்டேன்
மன்னவனைக் குரு என நான் சரணடைந்தேன் மரணபயம் நீங்கினேன் வலிமை பெற்றேன்
**யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்

#40
கோவிந்தசாமி புகழ் சிறிது சொன்னேன் குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான்
தேவி பதம் மறவாத தீர ஞானி சிதம்பரத்து நடராஜ மூர்த்தி ஆவான்
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி பரமபதவாயில் எனும் பார்வையாளன்
காவி வளர் தடங்களிலே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்

#41
தங்கத்தால் பதுமை செய்தும் இரதலிங்கம் சமைத்தும் அவற்றினில் ஈசன் தாளைப் போற்றும்
துங்கமுறு பக்தர் பலர் புவி மீது உள்ளார் தோழரே எந்நாளும் எனக்குப் பார் மேல்
மங்களம் சேர் திருவிழியால் அருளைப் பெய்யும் வானவர் கோன் யாழ்ப்பாணத்து ஈசன்தன்னைச்
சங்கரன் என்று எப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி
**குவளைக் கண்ணன் புகழ்

#42
யாழ்ப்பாணத்து ஐயனை என்னிடம் கொணர்ந்தான் இணை அடியை நந்திபிரான் முதுகில் வைத்துக்
காழ்ப்பான கயிலை மிசை வாழ்வான் பார் மேல் கனத்த புகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்
பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன் பறையரையும் மறவரையும் நிகராக் கொண்டான்
தீர்ப்பான சுருதி வழிதன்னில் சேர்ந்தான் சிவனடியார் இவன் மீது கருணை கொண்டார்

#43
மகத்தான முனிவர் எலாம் கண்ணன் தோழர் வானவர் எல்லாம் கண்ணன் அடியார் ஆவார்
மிகத் தானும் உயர்ந்த துணிவுடைய நெஞ்சின் வீரப் பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான்
ஜகத்தினில் ஓர் உவமையிலா யாழ்ப்பாணத்துச்சாமிதனை இவன் என்றன் மனைக் கொணர்ந்தான்
அகத்தினிலே அவன் பாதமலரைப் பூண்டேன் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு

#44
பாங்கான குருக்களை நாம் போற்றிக் கொண்டோம் பாரினிலே பயம் தெளிந்தோம் பாசம் அற்றோம்
நீங்காத சிவசக்தி அருளைப் பெற்றோம் நிலத்தின் மிசை அமரநிலை உற்றோம் அப்பா
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர் தாரணியில் பலர் உள்ளார் தருக்கி வீழ்வார்
ஏங்காமல் அஞ்சாமல் இடர் செய்யாமல் என்றும் அருள் ஞானியரே எமக்கு வேந்தர்
**பெண் விடுதலை

#45
பெண்ணுக்கு விடுதலை என்று இங்கு ஓர் நீதி பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர்
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால் மனையாளும் தெய்வம் அன்றோ மதிகெட்டீரே
விண்ணுக்குப் பறப்பது போல் கதைகள் சொல்வீர் விடுதலை என்பீர் கருணை வெள்ளம் என்பீர்
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால் பின் இந்த உலகினிலே வாழ்க்கை இல்லை
**தாய் மாண்பு

#46
பெண்டாட்டிதனை அடிமைப்படுத்த வேண்டிப் பெண்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ
கண்டார்க்கு நகைப்பு என்னும் உலக வாழ்க்கை காதல் எனும் கதையினுடைக் குழப்பம் அன்றோ
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை உமையவள் என்று அறியீரோ உணர்ச்சி கெட்டீர்
பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும் பாரிடை முன் அறி தெய்வம் என்றாள் அன்றோ

#47
தாய்க்கு மேல் இங்கே ஓர் தெய்வம் உண்டோ தாய் பெண்ணே அல்லளோ தமக்கை தங்கை
வாய்க்கும் பெண் மகவு எல்லாம் பெண்ணே அன்றோ மனைவி ஒருத்தியை அடிமைப்படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ தாயைப் போலே பிள்ளை என்று முன்னோர்
வாக்கு உளது அன்றோ பெண்மை அடிமையுற்றால் மக்கள் எலாம் அடிமையுறல் வியப்பு ஒன்றாமோ

#48
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் உண்டாம் வீட்டினிலே தனக்கு அடிமை பிறராம் என்பான்
நாட்டினிலே நாள்தோறும் முயன்றிடுவான் நலிந்து சாவான்
காட்டில் உள்ள பறவைகள் போல் வாழ்வோம் அப்பா காதல் இங்கே உண்டாயின் கவலை இல்லை
பாட்டினிலே காதலை நான் பாட வேண்டிப் பரமசிவன் பாதமலர் பணிகின்றேனே
**காதலின் புகழ்

#49
காதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம் கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகள் உண்டாம்
ஆதலினால் காதல்செய்வீர் உலகத்தீரே அஃது அன்றோ இவ் உலகத் தலைமை இன்பம்
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம்

#50
ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான் அயன் வாணிதனை நாவில் அமர்த்திக்கொண்டான்
சோதிமணி முகத்தினளைச் செல்வம் எல்லாம் சுரந்து அருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான் வானோர்க்கேனும் மாதர் இன்பம் போல் பிறிதோர் இன்பம் உண்டோ
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர் கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்

#51
கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக் கோக் கவிஞன் காளிதாசனும் பூஜித்தான்
மங்கைதனைக் காட்டினிலும் உடன்கொண்டு ஏகி மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே
சிங்க நிகர் வீரர் பிரான் தெளிவின் மிக்க ஸ்ரீதரனும் சென்று பல துன்பம் உற்றான்
இங்கு புவி மிசைக் காவியங்கள் எல்லாம் இலக்கியம் எல்லாம் காதல் புகழ்ச்சி அன்றோ

#52
நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால் நாட்டினர்தாம் வியப்பு எய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்று ஓரத்தே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்
பாடைகட்டி அதைக் கொல்ல வழிசெய்கின்றார் பாரினிலே காதல் என்னும் பயிரை மாய்க்க
மூடர் எலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடர் எய்திக் கெடுகின்றாரே

#53
காதலிலே இன்பம் எய்திக் களித்து நின்றால் கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ
மாதருடன் மனம் ஒன்றி மயங்கிவிட்டால் மந்திரிமார் போர்த்தொழிலை மனம்கொள்வாரோ
பாதி நடுக் கலவியிலே காதல் பேசிப் பகல் எல்லாம் இரவு எல்லாம் குருவி போலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருதுவாரோ
**விடுதலைக் காதல்

#54
காதலிலே விடுதலை என்று ஆங்கு ஓர் கொள்கை கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில்
மாதர் எலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்
பேதம் இன்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம் வந்தால் கலந்து அன்பு பிரிந்துவிட்டால்
வேதனை ஒன்று இல்லாதே பிரிந்து சென்று வேறொருவன்றனைக் கூட வேண்டும் என்பார்

#55
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர் விடுதலையாம் காதல் எனில் பொய்மைக் காதல்
சோரரைப் போல் ஆண்மக்கள் புவியின் மீது சுவை மிக்க பெண்மை நலம் உண்ணுகின்றார்
காரணம்தான் யாது எனிலோ ஆண்கள் எல்லாம் களவின்பம் விரும்புகின்றார் கற்பே மேல் என்று
ஈரம் இன்றி எப்போதும் உபதேசங்கள் எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்புவாரே

#56
ஆண் எல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பு அழிந்திடாதோ
நாணற்ற வார்த்தை அன்றோ வீட்டைச் சுட்டால் நலமான கூரையும்தான் எரிந்திடாதோ
பேணும் ஒரு காதலினை வேண்டி அன்றோ பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார்
காணுகின்ற காட்சி எலாம் மறைத்துவைத்துக் கற்புக்கற்பு என்று உலகோர் கதைக்கின்றாரே
**சர்வ மத சமரசம்
**(கோவிந்த சுவாமியுடன் உரையாடல்)

#57
மீளவும் அங்கு ஒரு பகலில் வந்தான் என்றன் மனையிடத்தே கோவிந்த வீர ஞானி
ஆள வந்தான் பூமியினை அவனி வேந்தர் அனைவருக்கும் மேலானோன் அன்பு வேந்தன்
நாளைப் பார்த்து ஒளிர்தரு நல் மலரைப் போலே நம்பிரான் வரவு கண்டு மனம் மலர்ந்தேன்
வேளையிலே நமது தொழில் முடித்துக்கொள்வோம் வெயில் உள்ள போதினிலே உலர்த்திக்கொள்வோம்

#58
காற்றுள்ள போதே நாம் தூற்றிக்கொள்வோம் கனமான குருவை எதிர் கண்ட போதே
மாற்றான அகந்தையினைத் துடைத்துக்கொள்வோம் மலமான மறதியினை மடித்துக்கொள்வோம்
கூற்றான அரக்கர் உயிர் முடித்துக்கொள்வோம் குலைவான மாயைதனை அடித்துக்கொள்வோம்
பேற்றாலே குரு வந்தான் இவன்பால் ஞானப் பேற்றை எல்லாம் பெறுவோம் யாம் என்று எனுள்ளே

#59
சிந்தித்து மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே தேய்வு என்ற மரணத்தைத் தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினைக் கேட்டேன் கூறாய் என்றேன் வானவனாம் கோவிந்தசாமி சொல்வான்
அந்தமிலா மா தேவன் கயிலை வேந்தன் அரவிந்த சரணங்கள் முடி மேல் கொள்வோம்
பந்தம் இல்லை பந்தம் இல்லை பந்தம் இல்லை பயம் இல்லை பயம் இல்லை பயமே இல்லை

#60
அதுவே நீ என்பது முன் வேத ஓத்தாம் அது என்றால் எது என நான் அறையக் கேளாய்
அது என்றால் முன் நிற்கும் பொருளின் நாமம் அவனியிலே பொருள் எல்லாம் அதுவாம் நீயும்
அது அன்றிப் பிறிதில்லை ஆதலாலே அவனியின் மீது எது வரினும் அசைவுறாமல்
மது உண்ட மலர் மாலை இராமன் தாளை மனத்தினிலே நிறுத்தி இங்கு வாழ்வாய் சீடா

#61
பாரான உடம்பினிலே மயிர்களைப் போல் பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே
நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா
காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டா கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா
சீரான மழை பெய்யும் தெய்வம் உண்டு சிவன் செத்தால் அன்றி மண் மேல் செழுமை உண்டு

#62
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால் அனைவருக்கும் உழைப்பின்றி உணவு உண்டாகும்
பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப் பின் அதற்குக் காவல் என்று பேரும் இட்டு
நீதம் இல்லாக் கள்வர் நெறி ஆயிற்று அப்பா நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி அன்றோ
பாதமலர் காட்டி நினை அன்னை காத்தாள் பாரினில் இத் தருமம் நீ பகருவாயே

#63
ஒரு மொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என்ற
ஒரு மொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம் ஒரு மொழி ஓம் நமச்சிவாய என்பர்
ஹரிஹரி என்றிடினும் அஃதே ராமராம சிவசிவ என்றிட்டாலும் அஃதே ஆகும்
தெரிவுறவே ஓம் சக்தி என்று மேலோர் ஜெபம்புரிவது அப் பொருளின் பெயரே ஆகும்

#64
சாரம் உள்ள பொருளினை நான் சொல்லிவிட்டேன் சஞ்சலங்கள் இனி வேண்டா சரதம் தெய்வம்
ஈரம் இலா நெஞ்சுடையார் சிவனைக் காணார் எப்போதும் அருளை மனத்து இசைத்துக்கொள்வாய்
வீரம் இலா நெஞ்சுடையார் சிவனைக் காணார் எப்போதும் வீரம் மிக்க வினைகள் செய்வாய்
பேர் உயர்ந்த ஏஹோவா அல்லா நாமம் பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்

#65
பூமியிலே கண்டம் ஐந்து மதங்கள் கோடி புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம்
சாமி என யேசு பதம் போற்றும் மார்க்கம் சநாதனமாம் ஹிந்து மதம் இஸ்லாம் யூதம்
நாமம் உயர் சீனத்துத் தாவு மார்க்கம் நல்ல கண்பூசி மதம் முதலாப் பார் மேல்
யாம் அறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே யாவினுக்கும் உட்புதைந்த கருத்து இங்கு ஒன்றே

#66
பூமியிலே வழங்கிவரும் மதத்துக்கு எல்லாம் பொருளினை நாம் இங்கு எடுத்துப் புகலக் கேளாய்
சாமி நீ சாமி நீ கடவுள் நீயே தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்
பூமியிலே நீ கடவுள் இல்லை என்று புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை
சாமி நீ அ மாயைதன்னை நீக்கிச் சதாகாலம் சிவோஹம் என்று சாதிப்பாயே
&7 கண்ணன் பாட்டு

@1 கண்ணன் என் தோழன்
**புண்ணாகவராளி – திஸ்ரஜாதி ஏகதாளம் – வத்ஸல ரஸம்

#1
பொன் அவிர் மேனிச் சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவதற்கே இனி
என்ன வழி என்று கேட்கில் உபாயம் இரு கணத்தே உரைப்பான் அந்தக்
கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக் காணும் வழி ஒன்றில்லேன் வந்து இங்கு
உன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒரு கணத்தே உரைப்பான்

#2
கானகத்தே சுற்றும் நாளிலும் நெஞ்சில் கலக்கம் இலாது செய்வான் பெரும்
சேனைத் தலை நின்று போர்செய்யும் போதினில் தேர் நடத்திக் கொடுப்பான் என்றன்
ஊனை வருத்திடும் நோய் வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான் நெஞ்சம்
ஈனக் கவலைகள் எய்திடும் போதில் இதம் சொல்லி மாற்றிடுவான்

#3
பிழைக்கும் வழி சொல்லவேண்டும் என்றால் ஒரு பேச்சினிலே சொல்லுவான்
உழைக்கும் வழி வினை ஆளும் வழி பயன் உண்ணும் வழி உரைப்பான்
அழைக்கும் பொழுதினில் போக்குச்சொல்லாமல் அரைநொடிக்குள் வருவான்
மழைக்குக் குடை பசி நேரத்து உணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்

#4
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான் சொல்லும் கேலி பொறுத்திடுவான் எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் ஆறுதல்செய்திடுவான் என்றன்
நாட்டத்தில் கொண்ட குறிப்பினை இஃது என்று நான் சொல்லும் முன் உணர்வான் அன்பர்
கூட்டத்திலே இந்தக் கண்ணனைப் போல் அன்பு கொண்டவர் வேறு உளரோ

#5
உள்ளத்திலே கருவம்கொண்ட போதினில் ஓங்கி அடித்திடுவான் நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அங்கு காறி உமிழ்ந்திடுவான் சிறு
பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட பாசியை எற்றிவிடும் பெரு
வெள்ளத்தைப் போல் அருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடுவான்

#6
சின்னக் குழந்தைகள் போல் விளையாடிச் சிரித்துக் களித்திடுவான் நல்ல
வன்ன மகளிர் வசப்படவே பல மாயங்கள் சூழ்ந்திடுவான் அவன்
சொன்னபடி நடவாவிடிலோ மிகத் தொல்லை இழைத்திடுவான் கண்ணன்
தன்னை இழந்துவிடில் ஐயனே பின் சகத்தினில் வாழ்வதிலேன்

#7
கோபத்திலே ஒரு சொல்லில் சிரித்துக் குலுங்கிடச்செய்திடுவான் மன
தாபத்திலே ஒன்று செய்து மகிழ்ச்சி தழைத்திடச் செய்திடுவான் பெரும்
ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று அதனை விலக்கிடுவான் சுடர்த்
தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும் தீமைகள் கொன்றிடுவான்

#8
உண்மை தவறி நடப்பவர்தம்மை உதைத்து நசுக்கிடுவான் அருள்
வண்மையினால் அவன் மாத்திரம் பொய்கள் மலைமலையா உரைப்பான் நல்ல
பெண்மைக் குணமுடையான் சில நேரத்தில் பித்தர் குணமுடையான் மிகத்
தண்மைக் குணமுடையான் சில நேரம் தழலின் குணமுடையான்

#9
கொல்லும் கொலைக்கு அஞ்சிடாத மறவர் குணம் மிகத் தான் உடையான் கண்ணன்
சொல்லும் மொழிகள் குழந்தைகள் போல் ஒரு சூது அறியாது சொல்வான் என்றும்
நல்லவருக்கு ஒரு தீங்கு நண்ணாது நயமுறக் காத்திடுவான் கண்ணன்
அல்லவருக்கு விடத்தினில் நோயில் அழலினிலும் கொடியான்

#10
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண் மகிழ் சித்திரத்தில் பகை
மோதும் படைத்தொழில் யாவினுமே திறம் முற்றிய பண்டிதன் காண் உயர்
வேதம் உணர்ந்த முனிவர் உணர்வினில் மேவு பரம்பொருள் காண் நல்ல
கீதை உரைத்து எனை இன்புறச்செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடுவேன்

@2 கண்ணன் என் தாய்
**(நொண்டிச் சிந்து)

#1
உண்ணஉண்ணத் தெவிட்டாத அம்மை உயிர் எனும் முலையினில் உணர்வு எனும் பால்
வண்ணமுறவைத்து எனக்கே என்றன் வாயினில் கொண்டு ஊட்டும் ஓர் வண்மையுடையாள்
கண்ணன் எனும் பெயருடையாள் என்னைக் கட்டி நிறை வான் எனும் தன் கையில் அணைத்து
மண் எனும் தன் மடியில் வைத்தே பல மாயமுறும் கதை சொல்லி மனம் களிப்பாள்

#2
இன்பம் எனச் சில கதைகள் எனக்கு ஏற்றம் என்றும் வெற்றி என்றும் சில கதைகள்
துன்பம் எனச் சில கதைகள் கெட்ட தோல்வி என்றும் வீழ்ச்சி என்றும் சில கதைகள்
என் பருவம் என்றன் விருப்பம் எனும் இவற்றினுக்கு இணங்க என் உளம் அறிந்தே
அன்பொடு அவள் சொல்லி வருவாள் அதில் அற்புதம் உண்டாய்ப் பரவசமடைவேன்

#3
விந்தைவிந்தையாக எனக்கே பல விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப்பாள்
சந்திரன் என்று ஒரு பொம்மை அதில் தண் அமுதம் போல ஒளி பரந்து ஒழுகும்
மந்தைமந்தையா மேகம் பல வண்ணமுறும் பொம்மை அது மழை பொழியும்
முந்த ஒரு சூரியன் உண்டு அதன் முகத்து ஒளி கூறுதற்கு ஒர் மொழி இலையே

#4
வானத்து மீன்கள் உண்டு சிறு மணிகளைப் போல் மின்னி நிறைந்திருக்கும்
நானத்தைக் கணக்கிடவே மனம் நாடி மிக முயல்கினும் கூடுவதில்லை
கானத்து மலைகள் உண்டு எந்தக் காலமும் ஒர் இடம்விட்டு நகர்வதில்லை
மோனத்திலே இருக்கும் ஒரு மொழி உரையாது விளையாட வரும் காண்

#5
நல்லநல்ல நதிகள் உண்டு அவை நாடெங்கும் ஓடி விளையாடி வரும் காண்
மெல்லமெல்லப் போய் அவைதாம் விழும் விரி கடல் பொம்மை அது மிகப் பெரிதாம்
எல்லை அதில் காணுவதில்லை அலை எற்றி நுரை கக்கி ஒரு பாட்டு இசைக்கும்
ஒல்லெனும் அப் பாட்டினிலே அம்மை ஓம் எனும் பெயர் என்றும் ஒலித்திடும் காண்

#6
சோலைகள் காவினங்கள் அங்கு சூழ்தரும் பல நிற மணி மலர்கள்
சாலவும் இனியனவாய் அங்கு தருக்களில் தூங்கிடும் கனி வகைகள்
ஞாலம் முற்றிலும் நிறைந்தே மிக நயம்தரு பொம்மைகள் எனக்கெனவே
கோலமும் சுவையும் உற அவள் கோடி பல கோடிகள் குவித்துவைத்தாள்

#7
தின்றிடப் பண்டங்களும் செவி தெவிட்டறக் கேட்க நல் பாட்டுகளும்
ஒன்றுறப் பழகுதற்கே அறிவுடைய மெய்த் தோழரும் அவள் கொடுத்தாள்
கொன்றிடும் என இனிதாய் இன்பக் கொடு நெருப்பாய் அனல் சுவை அமுதாய்
நன்று இயல் காதலுக்கே இந்த நாரியர்தமை எனைச் சூழவைத்தாள்

#8
இறகுடைப் பறவைகளும் நிலம் திரிந்திடும் விலங்குகள் ஊர்வனகள்
அறை கடல் நிறைந்திடவே எண்ணில் அமைந்திடற்கு அரிய பல்வகைப்படவே
சுறவுகள் மீன் வகைகள் எனத் தோழர்கள் பலரும் இங்கு எனக்கு அளித்தாள்
நிறைவுற இன்பம் வைத்தாள் அதை நினைக்கவும் முழுதிலும் கூடுதில்லை

#9
சாத்திரம் கோடி வைத்தாள் அவைதம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்
மீத்திடும் பொழுதினிலே நான் வேடிக்கை உறக் கண்டு நகைப்பதற்கே
கோத்த பொய் வேதங்களும் மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்
மூத்தவர் பொய் நடையும் இன மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்

#10
வேண்டிய கொடுத்திடுவாள் அவை விரும்பும் முன் கொடுத்திட விரைந்திடுவாள்
ஆண்டு அருள்புரிந்திடுவாள் அண்ணன் அருச்சுனன் போல் எனை ஆக்கிடுவாள்
யாண்டும் எக்காலத்தினும் அவள் இன் அருள் பாடும் நல் தொழில் புரிவேன்
நீண்டதோர் புகழ் வாழ்வும் பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள்

@3 கண்ணன் என் தந்தை
**(நொண்டிச் சிந்து)
**பிரதான ரஸம் – அற்புதம்

#1
பூமிக்கு எனை அனுப்பினான் அந்தப் புது மண்டலத்தில் என் தம்பிகள் உண்டு
நேமித்த நெறிப்படியே இந்த நெடுவெளி எங்கணும் நித்தம் உருண்டே
போம் இத் தரைகளில் எல்லாம் மனம் போல இருந்து ஆளுபவர் எங்கள் இனத்தார்
சாமி இவற்றினுக்கெல்லாம் எங்கள் தந்தை அவன் சரிதைகள் சிறிது உரைப்பேன்

#2
செவ்வத்திற்கு ஓர் குறைவு இல்லை எந்தை சேமித்துவைத்த பொன்னுக்கு அளவு ஒன்று இல்லை
கல்வியில் மிகச் சிறந்தோன் அவன் கவிதையின் இனிமை ஓர் கணக்கில் இல்லை
பல் வகை மாண்பினிடையே கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவது உண்டு
நல்வழி செல்லுபவரை மனம் நையும் வரை சோதனை செய் நடத்தை உண்டு

#3
நாவு துணிகுவதில்லை உண்மை நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே
யாவரும் தெரிந்திடவே எங்கள் ஈசன் என்றும் கண்ணன் என்றும் சொல்லுவதுண்டு
மூவகைப் பெயர் புனைந்தே அவன் முகம் அறியாதவர் சண்டைகள் செய்வார்
தேவர் குலத்தவன் என்றே அவன் செய்தி தெரியாதவர் சிலர் உரைப்பார்

#4
பிறந்தது மறக்குலத்தில் அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்
சிறந்தது பார்ப்பனருள்ளே சில செட்டி மக்களொடு மிகப் பழக்கம் உண்டு
நிறம்தனில் கருமை கொண்டான் அவன் நேயமுறக் களிப்பது பொன் நிறப் பெண்கள்
துறந்த நடைகள் உடையான் உங்கள் சூனியப் பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்

#5
ஏழைகளைத் தோழமைகொள்வான் செல்வம் ஏறியார்தமைக் கண்டு சீறிவிழுவான்
தாழ வரும் துன்பமதிலும் நெஞ்சத் தளர்ச்சிகொள்ளாதவர்க்குச் செல்வம் அளிப்பான்
நாழிகைக்கு ஒர் புத்தியுடையான் ஒரு நாள் இருந்தபடி மற்றொர் நாளினில் இல்லை
பாழிடத்தை நாடியிருப்பான் பல பாட்டினிலும் கதையிலும் நேரம் அழிப்பான்

#6
இன்பத்தை இனிது எனவும் துன்பம் இனிது இல்லை என்றும் அவன் எண்ணுவதில்லை
அன்பு மிகவும் உடையான் தெளிந்த அறிவினில் உயிர்க் குலம் ஏற்றமுறவே
வன்புகள் பல புரிவான் ஒரு மந்திரி உண்டு எந்தைக்கு விதி என்பவன்
முன்பு விதித்ததனையே பின்பு முறைப்படி அறிந்து உண்ண மூட்டிவிடுவான்

#7
வேதங்கள் கோத்துவைத்தான் அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியில் இல்லை
வேதங்கள் என்று புவியோர் சொல்லும் வெறும் கதைத் திரளில் அவ் வேதம் இல்லை
வேதங்கள் என்றவற்றுள்ளே அவன் வேதத்தில் சிலசில கலந்ததுண்டு
வேதங்களன்றி ஒன்று இல்லை இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகள் எல்லாம்

#8
நாலு குலங்கள் அமைத்தான் அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்
சீலம் அறிவு கருமம் இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்
மேலவர் கீழவர் என்றே வெறும் வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை எல்லாம் இன்று பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மையுண்டு என்பான்

#9
வயது முதிர்ந்துவிடினும் எந்தை வாலிபக்களை என்றும் மாறுவதில்லை
துயர் இல்லை மூப்பும் இல்லை என்றும் சோர்வு இல்லை நோய் ஒன்றும் தொடுவதில்லை
பயம் இல்லை பரிவு ஒன்று இல்லை எவர் பக்கமும் நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை
நயம் மிகத் தெரிந்தவன் காண் தனி நடுநின்று விதிச் செயல் கண்டு மகிழ்வான்

#10
துன்பத்தில் நொந்து வருவோர்தம்மைத் தூவென்று இகழ்ந்து சொல்லி அன்பு கனிவான்
அன்பினைக் கைக்கொள் என்பான் துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்
என்பு உடைபட்ட பொழுதும் நெஞ்சில் ஏக்கமுறப் பொறுப்பவர்தம்மை உகப்பான்
இன்பத்தை எண்ணுபவர்க்கே என்றும் இன்பம் மிகத் தருவதில் இன்பமுடையான்

@4 கண்ணன் என் சேவகன்

#1
கூலி மிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
ஏனடா நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை என்றால்
பானையிலே தேள் இருந்து பல்லால் கடித்தது என்பார்
வீட்டிலே பெண்டாட்டி மேல் பூதம் வந்தது என்பார் 5
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாள் என்பார்
ஓயாமல் பொய் உரைப்பார் ஒன்று உரைக்க வேறு செய்வார்
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்
உள்வீட்டுச் செய்தி எல்லாம் ஊர் அம்பலத்து உரைப்பார்
எள் வீட்டில் இல்லை என்றால் எங்கும் முரசறைவார் 10
சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர்
சேவகர் இல்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை
இங்கு இதனால் யானும் இடர் மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
மாடு கன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன் 15
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்
சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன்
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டு இசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்
காட்டுவழி ஆனாலும் கள்ளர் பயம் ஆனாலும் 20
இரவில் பகலிலே எந்நேரம் ஆனாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை தேவாணர்தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கு ஓர் துன்பம் உறாமல் காப்பேன்
கற்ற வித்தை ஏதும் இல்லை காட்டு மனிதன் ஐயே
ஆன பொழுதும் கோலடி குத்துப்போர் மற்போர் 25
நான் அறிவேன் சற்றும் நயவஞ்சனை புரியேன்
என்று பல சொல்லி நின்றான் ஏது பெயர் சொல் என்றேன்
ஒன்றுமில்லை கண்ணன் என்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்
கட்டுறுதியுள்ள உடல் கண்ணிலே நல்ல குணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடும் சொல் ஈங்கு இவற்றால் 30
தக்கவன் என்று உள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்
மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய்
கூலி என்ன கேட்கின்றாய் கூறுக என்றேன் ஐயனே
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதும் இல்லை
நான் ஓர் தனியாள் நரைதிரை தோன்றாவிடினும் 35
ஆன வயதிற்கு அளவில்லை தேவாணர்
ஆதரித்தால் போதும் அடியேனை நெஞ்சில் உள்ள
காதல் பெரிது எனக்குக் காசு பெரிதில்லை என்றான்
பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்று எனவே
கண்டு மிகவும் களிப்புடனே நான் அவனை 40
ஆளாகக் கொண்டுவிட்டேன் அன்று முதற்கொண்டு
நாளாகநாளாக நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்றுவரும் நன்மை எல்லாம் பேசி முடியாது
கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம் 45
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்
வீதி பெருக்குகிறான் வீடு சுத்தமாக்குகிறான்
தாதியர் செய் குற்றம் எல்லாம் தட்டி அடக்குகிறான்
மக்களுக்கு வாத்தி வளர்ப்புத்தாய் வைத்தியனாய்
ஒக்க நயம் காட்டுகிறான் ஒன்றும் குறைவின்றிப் 50
பண்டம் எல்லாம் சேர்த்துவைத்துப் பால் வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய் போல் பிரியமுற ஆதரித்து
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி என்று சொன்னான் 55
இங்கு இவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள் முதலாய்
எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச்
செல்வம் இளமாண்பு சீர் சிறப்பு நற்கீர்த்தி
கல்வி அறிவு கவிதை சிவயோகம் 60
தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
ஒளி சேர் நலம் அனைத்தும் ஓங்கி வருகின்றன காண்
கண்ணனை நான் ஆட்கொண்டேன் கண்கொண்டேன் கண்கொண்டேன்
கண்ணன் எனை ஆட்கொள்ளக் காரணமும் உள்ளனவே

@5 கண்ணன் என் அரசன்

#1
பகைமை முற்றி முதிர்ந்திடும் மட்டிலும் பார்த்திருப்பதல்லால் ஒன்றும் செய்திடான்
நகைபுரிந்து பொறுத்துப்பொறுத்து ஐயோ நாள்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான்

#2
கண்ணன் வென்று பகைமை அழிந்து நாம் கண்ணில் காண்பது அரிது எனத் தோன்றுமே
எண்ணமிட்டு எண்ணமிட்டுச் சலித்து நாம் இழந்த நாட்கள் யுகம் எனப் போகுமே

#3
படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல் பணம் உண்டாக்கல் எதுவும் புரிந்திடான்
இடையன் வீரமிலாதவன் அஞ்சினோன் என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான்

#4
கொல்லப் பூதம் அனுப்பிடும் மாமனே கோல் உயர்த்து உலகு ஆண்டு களித்திட
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும் மோகமுற்றுப் பொழுதுகள் போக்குவான்

#5
வான நீர்க்கு வருந்தும் பயிர் என மாந்தர் மற்று இவண் போர்க்குத் தவிக்கவும்
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துகள் தனிமை வேய்ங்குழல் என்று இவை போற்றுவான்

#6
காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம் கதி எமக்கு ஒன்று காட்டுவை என்றிட்டால்
நாலில் ஒன்று பலித்திடும் காண் என்பான் நாமச்சொல்லின் பொருள் எங்கு உணர்வதே

#7
நாம் அவன் வலி நம்பியிருக்கவும் நாணம் இன்றிப் பதுங்கி வளருவான்
தீமைதன்னை விலக்கவும் செய்குவான் சிறுமைகொண்டு ஒளித்து ஓடவும் செய்குவான்

#8
தந்திரங்கள் பயிலவும் செய்குவான் சவுரியங்கள் பழகவும் செய்குவான்
மந்திரத் திறனும் பல காட்டுவான் வலிமை இன்றிச் சிறுமையில் வாழ்குவான்

#9
காலம் வந்து கைகூடும் அப்போதில் ஓர் கணத்திலே புதிதாக விளங்குவான்
ஆலகால விடத்தினைப் போலவே அகிலம் முற்றும் அசைந்திடச் சீறுவான்

#10
வேரும் வேரடி மண்ணும் இலாமலே வெந்துபோகப் பகைமை பொசுக்குவான்
பாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள் பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான்

#11
சக்கரத்தை எடுப்பது ஒருகணம் தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்
இக்கணத்தில் இடைக்கணம் ஒன்று உண்டோ இதனுள்ளே பகை மாய்த்திட வல்லவன் காண்

#12
கண்ணன் எங்கள் அரசன் புகழினைக் கவிதைகொண்டு எந்தக் காலமும் போற்றுவேன்
திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனைத் தேசம் போற்றத் தன் மந்திரி ஆக்கினான்

#13
நித்தச் சோற்றினுக்கு ஏவல்செய வந்தேன் நிகரிலாப் பெரும் செல்வம் உதவினான்
வித்தை நன்கு கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்

#14
கண்ணன் எம்பெருமான் அருள் வாழ்கவே கலி அழிந்து புவித்தலம் வாழ்கவே
அண்ணல் இன் அருள் நாடிய நாடுதான் அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே

@6 கண்ணன் என் சீடன்
**(ஆசிரியப்பா)

#1
யானேயாகி என்னலால் பிறவாய்
யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய்
யாதோ பொருளாம் மாயக் கண்ணன்
என்னிலும் அறிவினில் குறைந்தவன் போலவும்
என்னைத் துணைக்கொண்டு என்னுடைய முயற்சியால் 5
என் நடை பழகலால் என் மொழி கேட்டலால்
மேம்பாடு எய்த வேண்டினோன் போலவும்
யான் சொலும் கவிதை என் மதி அளவை
இவற்றினைப் பெருமை இலங்கின என்று
கருதுவான் போலவும் கண்ணக் கள்வன் 10
சீடனா வந்து எனைச் சேர்ந்தவன் தெய்வமே
பேதையேன் அவ் வலைப்பின்னலின் வீழ்ந்து
பட்டன தொல்லை பல பெரும் பாரதம்
உளத்தினை வென்றிடேன் உலகினை வெல்லவும்
தான் அகம் சுடாதேன் பிறர்தமைத் தான் எனும் 15
சிறுமையின் அகற்றிச் சிவத்திலே நிறுத்தவும்
தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்
உற்றிடேன் இந்தச் சகத்திலே உள்ள
மாந்தர்க்கு உற்ற துயர் எலாம் மாற்றி
இன்பத்து இருத்தவும் எண்ணிய பிழைக்கு எனைத் 20
தண்டனை புரிந்திடத் தான் உளம்கொண்டு
மாயக் கண்ணன் வலிந்து எனைச் சார்ந்து
புகழ்ச்சிகள் கூறியும் புலமையை வியந்தும்
பலவகையால் அகப் பற்றுறச் செய்தான்
வெறும் வாய் மெல்லும் கிழவிக்கு இஃது ஓர் 25
அவலாய் மூண்டது யானும் அங்கு அவனை
உயர்நிலைப்படுத்தலில் ஊக்கம் மிக்கவனாய்
இன்னது செய்திடேல் இவரொடு பழகேல்
இவ்வகை மொழிந்திடேல் இனையன விரும்பேல்
இன்னது கற்றிடேல் இன்ன நூல் கற்பாய் 30
இன்னவர் உறவுகொள் இன்னவை விரும்புவாய்
எனப் பல தருமம் எடுத்தெடுத்து ஓதி
ஓய்விலாது அவனோடு உயிர்விடலானேன்
கதையிலே கணவன் சொல்லினுக்கு எல்லாம்
எதிர்செயும் மனைவி போல் இவனும் நான் காட்டும் 35
நெறியினுக்கு எல்லாம் நேரெதிர் நெறியே
நடப்பான் ஆயினன் நானிலத்தவர்தம்
மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும்
தெய்வமாக் கொண்ட சிறுமதி உடையேன்
கண்ணனாம் சீடன் யான் காட்டிய வழி எலாம் 40
விலகியே நடக்கும் விநோதம் இங்கு அன்றியும்
உலகினர் வெறுப்புறும் ஒழுக்கம் அத்தனையும்
தலையாக்கொண்டு சார்பு எலாம் பழிச்சொலும்
இகழும் மிக்கவனாய் என் மனம் வருந்த
நடந்திடல் கண்டேன் நாட்பட நாட்படக் 45
கண்ணனும் தனது கழிபடு நடையில்
மிஞ்சுவான் ஆகி வீதியில் பெரியோர்
கிழவியர் எல்லாம் கிறுக்கன் என்று இவனை
இகழ்ச்சியோடு இரக்கமுற்று ஏளனம்புரியும்
நிலையும் வந்திட்டான் நெஞ்சிலே எனக்குத் 50
தோன்றிய வருத்தம் சொல்லிடப்படாது
முத்தன் ஆக்கிட நான் முயன்றதோர் இளைஞன்
பித்தன் என்று உலகினர் பேசிய பேச்சு என்
நெஞ்சினை அறுத்தது நீதிகள் பலவும்
தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் 55
சொல்லி நான் கண்ணனைத் தொளைத்திடலாயினேன்
தேவநிலையிலே சேர்த்திடாவிடினும்
மானுடன் தவறி மடிவுறா வண்ணம்
கண்ணனை நானும் காத்திட விரும்பித்
தீ எனக் கொதித்துச் சினமொழி உரைத்தும் 60
சிரித்து உரை கூறியும் செள்ளென விழுந்தும்
கேலிகள் பேசிக் கிளறியும் இன்னும்
எத்தனை வகையிலோ என் வழிக்கு அவனைக்
கொணர்ந்திட முயன்றேன் கொள்பயன் ஒன்று இலை
கண்ணன் பித்தனாய்க் காட்டாள் ஆகி 65
எவ்வகைத் தொழிலிலும் எண்ணம் அற்றவனாய்
எவ்வகைப் பயனிலும் கருத்து இழந்தவனாய்
குரங்காய்க் கரடியாய்க் கொம்புடைப் பிசாசாய்
யாதோ பொருளாய் எங்ஙனோ நின்றான்
இதனால் 70
அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற
யான் கடும் சினமுற்று எவ்வகையானும்
கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்
எனப் பெரும் தாபம் எய்தினேன் ஆகி
எவ்வாறேனும் இவனை ஓர் தொழிலில் 75
ஓரிடம்தன்னில் ஒரு வழி வலிய
நிறுத்துவோமாயின் நேருற்றிடுவான்
என்று உளத்து எண்ணி இசைந்திடும் சமயம்
காத்திருந்திட்டேன் ஒருநாள் கண்ணனைத்
தனியே எனது வீட்டினில் கொண்டு 80
மகனே என்பால் வரம்பிலா நேசமும்
அன்பும் நீ உடையை அதனை யான் நம்பி
நின்னிடம் ஒன்று கேட்பேன் நீ அது
செய்திடல் வேண்டும் சேர்க்கையின்படியே
மாந்தர்தம் செயல் எலாம் வகுப்புறல் கண்டாய் 85
சாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில்
மெய்ப்பொருள் ஆய்வதில் மிஞ்சிய விழைவும்
கொண்டோர்தமையே அருகினில் கொண்டு
பொருளினுக்கு அலையும் நேரம் போக
மிஞ்சிய பொழுது எலாம் அவருடன் மேவி 90
இருந்திடலாகுமேல் எனக்கு நன்று உண்டாம்
பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்
அறிவுடை மகன் இங்கு உனையலால் அறிந்திடேன்
ஆதலால்
என் பயன் கருதி எனக்கு ஒரு துணையாய் 95
என்னுடன் சில நாள் இருந்திட நின்னை
வேண்டி நிற்கின்றேன் வேண்டுதல் மறுத்தே
என்னை நீ துன்பம் எய்துவித்திடாமே
இவ் உரைக்கு இணங்குவாய் என்றேன் கண்ணனும்
அங்ஙனே புரிவேன் ஆயின் நின்னிடத்தே 100
தொழில் இலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது
காரியம் ஒன்று காட்டுவையாயின்
இருப்பேன் என்றான் இவனுடை இயல்பையும்
திறனையும் கருதி என் செய்யுளை எல்லாம்
நல்லதோர் பிரதியில் நாள்தொறும் எழுதிக் 105
கொடுத்திடும் தொழிலினைக் கொள்ளுதி என்றேன்
நன்று எனக் கூறி ஓர் நாழிகை இருந்தான்
செல்வேன் என்றான் சினத்தோடு நானும்
பழங்கதை எழுதிய பகுதி ஒன்றினை அவன்
கையினில் கொடுத்துக் கவினுற இதனை 110
எழுதுக என்றேன் இணங்குவான் போன்று அதைக்
கையிலே கொண்டு கணப்பொழுது இருந்தான்
செல்வேன் என்றான் சினம் தீயாகி நான்
ஏதடா சொன்ன சொல் அழித்து உரைக்கின்றாய்
பித்தன் என்று உன்னை உலகினர் சொல்வது 115
பிழை இலை போலும் என்றேன் அதற்கு
நாளை வந்து இவ் வினை நடத்துவேன் என்றான்
இத் தொழில் இங்கே இப்பொழுது எடுத்துச்
செய்கின்றனையா செய்குவதில்லையா
ஓர் உரை சொல் என்று உறுமினேன் கண்ணனும் 120
இல்லை என்று ஒரு சொல் இமைக்கும் முன் கூறினான்
வெடுக்கெனச் சினத் தீ வெள்ளமாய்ப் பாய்ந்திடக்
கண் சிவந்து இதழ்கள் துடித்திடக் கனன்று நான்
சீச்சி பேயே சிறிது போழ்தேனும்
இனி என் முகத்தின் எதிர்நின்றிடாதே 125
என்றும் இவ் உலகில் என்னிடத்து இனி நீ
போந்திடல் வேண்டா போ போ போ என்று
இடியுறச் சொன்னேன் கண்ணனும் எழுந்து
செல்குவன் ஆயினன் விழிநீர் சேர்ந்திட
மகனே போகுதி வாழ்க நீ நின்னைத் 130
தேவர் காத்திடுக நின்றனைச் செம்மை
செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன்
தோற்றுவிட்டேனடா சூழ்ச்சிகள் அறிந்தேன்
மறந்து இனி வாராய் செல்லுதி வாழி நீ
எனத் துயர் நீங்கி அமைதியோடு இசைத்தேன் 135
சென்றனன் கண்ணன் திரும்பி ஓர்கணத்தே
எங்கிருந்தோ நல் எழுதுகோல் கொணர்ந்தான்
காட்டிய பகுதியைக் கவினுறு வரைந்தான்
ஐயனே நின் வழி அனைத்தையும் கொள்வேன்
தொழில் பல புரிவேன் துன்பம் இங்கு என்றும் 140
இனி நினக்கு என்னால் எய்திடாது எனப் பல
நல்ல சொல் உரைத்து நகைத்தனன் மறைந்தான்
மறைந்ததோர் கண்ணன் மறுகணத்து என்றன்
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவான் ஆயினன்
மகனே ஒன்றை ஆக்குதல் மாற்றுதல் 145
அழித்திடல் எல்லாம் நின் செயல் அன்று காண்
தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே
வென்றாய் உலகினில் வேண்டிய தொழில் எலாம்
ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து
வாழ்க நீ என்றான் வாழ்க மற்று அவனே 150

@7 கண்ணன் எனது சற்குரு
**புன்னாகவராளி – திஸ்ர ஜாதி – ஏகதாளம்
**ரஸங்கள் : அற்புதம், பக்தி

#1
சாத்திரங்கள் பல தேடினேன் அங்கு சங்கை இல்லாதன சங்கையாம் பழம்
கோத்திரங்கள் சொல்லும் மூடர்தம் பொய்மைக் கூடையில் உண்மை கிடைக்குமோ நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் சக மாயம் உணர்ந்திடல் வேண்டுமே என்னும்
ஆத்திரம் நின்றது அதனிடை நித்தம் ஆயிரம் தொல்லைகள் சூழ்ந்தன

#2
நாடு முழுதிலும் சுற்றி நான் பல நாள்கள் அலைந்திடும் போதினில் நிறைந்து
ஓடும் யமுனைக் கரையிலே தடி ஊன்றிச் சென்றார் ஓர் கிழவனார் ஒளி
கூடு முகமும் தெளிவுதான் குடிகொண்ட விழியும் சடைகளும் வெள்ளைத்
தாடியும் கண்டு வணங்கியே பல சங்கதி பேசி வருகையில்

#3
என் உளத்து ஆசை அறிந்தவர் மிக இன்புற்று உரைத்திடலாயினர் தம்பி
நின் உளத்திற்குத் தகுந்தவன் சுடர் நித்திய மோனத்து இருப்பவன் உயர்
மன்னர் குலத்தில் பிறந்தவன் வட மா மதுரைப்பதி ஆள்கின்றான் கண்ணன்
தன்னைச் சரண் என்று போவையேல் அவன் சத்தியம் கூறுவன் என்றனர்

#4
மா மதுரைப்பதி சென்று நான் அங்கு வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே என்றன்
நாமமும் ஊரும் கருத்துமே சொல்லி நன்மை தருக என வேண்டினன் அவன்
காமனைப் போன்ற வடிவமும் இளம்காளையர் நட்பும் பழக்கமும் கெட்ட
பூமியைக் காக்கும் தொழிலிலே எந்தப்போதும் செலுத்திடும் சிந்தையும்

#5
ஆடலும் பாடலும் கண்டு நான் முன்னர் ஆற்றங்கரையினில் கண்டதோர் முனி
வேடம் தரித்த கிழவரைக் கொல்லவேண்டும் என்று உள்ளத்தில் எண்ணினேன் சிறு
நாடு புரந்திடும் மன்னவன் கண்ணன் நாளும் கவலையில் மூழ்கினோன் தவப்
பாடுபட்டோர்க்கும் விளங்கிடா உண்மை பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்

#6
என்று கருதி இருந்திட்டேன் பின்னர் என்னைத் தனியிடம் கொண்டுபோய் நினை
நன்று மருவுக மைந்தனே பரஞானம் உரைத்திடக் கேட்பை நீ நெஞ்சில்
ஒன்றும் கவலை இல்லாமலே சிந்தை ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் அங்கு விண்ணை அளக்கும் அறிவுதான்

#7
சந்திரன் சோதி உடையதாம் அது சத்திய நித்திய வஸ்துவாம் அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் நினைச் சேர்ந்து தழுவி அருள்செயும் அதன்
மந்திரத்தால் இவ் உலகு எலாம் வந்த மாயக் களிப் பெரும் கூத்துக் காண் இதைச்
சந்ததம் பொய் என்று உரைத்திடும் மடச் சாத்திரம் பொய் என்று தள்ளடா

#8
ஆதித் தனிப்பொருள் ஆகும் ஓர் கடல் ஆரும் குமிழி உயிர்களாம் அந்தச்
சோதி அறிவு என்னும் ஞாயிறுதன்னைச் சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம் இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே அதன் மேனியில் தோன்றிடும் வண்ணங்கள் வண்ண
நீதி அறிந்து இன்பம் எய்தியே ஒரு நேர்மைத் தொழிலில் இயங்குவார்

#9
சித்தத்திலே சிவம் நாடுவார் இங்கு சேர்ந்து களித்து உலகு ஆளுவார் நல்ல
மத்த மத வெம் களிறு போல் நடை வாய்ந்து இறுமாந்து திரிகுவார் இங்கு
நித்தம் நிகழ்வது அனைத்துமே எந்தை நீண்ட திருவருளால் வரும் இன்பம்
சுத்த சுகம் தனி ஆநந்தம் எனச் சூழ்ந்து கவலைகள் தள்ளியே

#10
சோதி அறிவில் விளங்கவும் உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும் அற
நீதி முறை வழுவாமலே எந்தநேரமும் பூமித் தொழில் செய்து கலை
ஓதிப் பொருளியல் கண்டதாம் பிறர் உற்றிடும் தொல்லைகள் மாற்றியே இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் பெண்மை மோகத்தில் செல்வத்தில் கீர்த்தியில்

#11
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதி இனைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டு என்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார் அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் சில நாளினில் எய்தப்பெறுகுவார் அவர்
காடு புதரில் வளரினும் தெய்வக் காவனம் என்று அதைப் போற்றலாம்

#12
ஞானியர்தம் இயல் கூறினேன் அந்த ஞானம் விரைவினில் எய்துவாய் எனத்
தேனில் இனிய குரலிலே கண்ணன் செப்பவும் உண்மை நிலை கண்டேன் பண்டை
ஈன மனிதக் கனவு எலாம் எங்ஙன் ஏகி மறைந்தது கண்டிலேன் அறி
வான தனிச் சுடர் நான் கண்டேன் அதன் ஆடல் உலகு என நான் கண்டேன்

#13

@8 கண்ணம்மா என் குழந்தை
**(பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)
**ராகம் – பைரவி : தாளம் – ரூபகம்
**ஸ ஸ ஸ ஸா ஸா பபப
** தநீத பதப பா
**பபப பதப பமா கரிஸா
** ரிகம ரிகரி ஸா
**என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு
** மனோபாவப்படி மாற்றிப் பாடுக

#1
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

#2
பிள்ளைக்கனி அமுதே கண்ணம்மா பேசும் பொன் சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே

#3
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவுதடீ

#4
உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடீ
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ

#5
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள் வெறி கொள்ளுதடீ
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடீ

#6
சற்று உன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடீ
நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடீ

#7
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடீ
என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னது அன்றோ

#8
சொல்லும் மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்
முல்லைச் சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்

#9
இன்பக் கதைகள் எல்லாம் உன்னைப் போல் ஏடுகள் சொல்வது உண்டோ
அன்பு தருவதிலே உனை நேர் ஆகும் ஓர் தெய்வம் உண்டோ

#10
மார்பில் அணிவதற்கே உன்னைப் போல் வைர மணிகள் உண்டோ
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப் போல் செல்வம் பிறிதும் உண்டோ

@9 கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை
**கேதாரம் – கண்டஜாதி – ஏகதாளம்
**ரஸங்கள் : அற்புதம், சிருங்காரம்

#1
தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை

#2
தின்னப் பழம் கொண்டு தருவான் பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என் அப்பன் என் ஐயன் என்றால் அதனை எச்சிற்படுத்திக் கடித்துக் கொடுப்பான்

#3
தேன் ஒத்த பண்டங்கள் கொண்டு என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்
மான் ஒத்த பெண்ணடி என்பான் சற்று மனம் மகிழும் நேரத்திலே கிள்ளிவிடுவான்

#4
அழகுள்ள மலர் கொண்டுவந்தே என்னை அழஅழச் செய்து பின் கண்ணை மூடிக்கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்

#5
பின்னலைப் பின் நின்று இழுப்பான் தலை பின்னே திரும்பும் முன்னே சென்று மறைவான்
வன்னப் புதுச் சேலைதனிலே புழுதி வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்

#6
புல்லாங்குழல் கொண்டு வருவான் அமுது பொங்கித் ததும்பும் நல் கீதம் படிப்பான்
கள்ளால் மயங்குவது போலே அதைக் கண் மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம்

#7
அங்காந்திருக்கும் வாய்தனிலே கண்ணன் ஆறேழு கட்டெறும்பைப் போட்டுவிடுவான்
எங்காகிலும் பார்த்தது உண்டோ கண்ணன் எங்களைச் செய்கின்ற வேடிக்கை ஒன்றோ

#8
விளையாட வா என்று அழைப்பான் வீட்டில் வேலை என்றால் அதைக் கேளாது இழுப்பான்
இளையாரொடு ஆடிக் குதிப்பான் எம்மை இடையில் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான்

#9
அம்மைக்கு நல்லவன் கண்டீர் மூளி அத்தைக்கு நல்லவன் தந்தைக்கும் அஃதே
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான்

#10
கோளுக்கு மிகவும் சமர்த்தன் பொய்ம்மை சூத்திரம் பழி சொலக் கூசாச் சழக்கன்
ஆளுக்கு இசைந்தபடி பேசித் தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான்

@10 கண்ணன் என் காதலன் – 1
**செஞ்சுருட்டி – திஸ்ர ஏக தாளம் : சிருங்கார ரஸம்

#1
தூண்டில் புழுவினைப் போல் வெளியே சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக எனது நெஞ்சம் துடித்ததடீ
கூண்டுக்கிளியினைப் போல் தனிமைகொண்டு மிகவும் நொந்தேன்
வேண்டும் பொருளை எல்லாம் மனது வெறுத்துவிட்டதடீ

#2
பாயின் மிசை நானும் தனியே படுத்திருக்கையிலே
தாயினைக் கண்டாலும் சகியே சலிப்பு வந்ததடீ
வாயினில் வந்தது எல்லாம் சகியே வளர்த்துப் பேசிடுவீர்
நோயினைப் போல் அஞ்சினேன் சகியே நுங்கள் உறவை எல்லாம்

#3
உணவு செல்லவில்லை சகியே உறக்கம்கொள்ளவில்லை
மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்கவில்லை
குணம் உறுதி இல்லை எதிலும் குழப்பம் வந்ததடீ
கணமும் உள்ளத்திலே சுகமே காணக் கிடைத்ததில்லை

#4
பாலும் கசந்ததடீ சகியே படுக்கை நொந்ததடீ
கோலக் கிளி மொழியும் செவியில் குத்தலெடுத்ததடீ
நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார்
பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்தும் என்றுவிட்டான்

#5
கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல்
இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டுவிட்டான்
வினவக் கண் விழித்தேன் சகியே மேனி மறைந்துவிட்டான்
மனதில் மட்டிலுமே புதிதோர் மகிழ்ச்சி கண்டதடீ

#6
உச்சி குளிர்ந்ததடீ சகியே உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடும் எல்லாம் முன்னைப் போல் மனத்துக்கு ஒத்ததடீ
இச்சை பிறந்ததடீ எதிலும் இன்பம் விளைந்ததடீ
அச்சம் ஒழிந்ததடீ சகியே அழகு வந்ததடீ

#7
எண்ணும் பொழுதில் எல்லாம் அவன் கை இட்ட இடத்தினிலே
தண்ணென்று இருந்ததடீ புதிதோர் சாந்தி பிறந்ததடீ
எண்ணியெண்ணிப் பார்த்தேன் அவன்தான் யார் எனச் சிந்தைசெய்தேன்
கண்ணன் திருவுருவம் அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ

@11 கண்ணன் என் காதலன் – 2
**உறக்கமும் விழிப்பும்
**நாதநாமக்கிரியை – ஆதி தாளம்
**ரஸங்கள் : பீபத்ஸம், சிருங்காரம்

#1
நேரம் மிகுந்தது இன்னும் நித்திரை இன்றி உங்கள் நினைப்புத் தெரியவில்லை கூத்தடிக்கிறீர்
சோரன் உறங்கிவிழும் நள்ளிரவில் என்ன தூளிபடுகுதடி இவ்விடத்திலே
ஊரை எழுப்பிவிட நிச்சயங்கொண்டீர் அன்னை ஒருத்தி உண்டு என்பதையும் மறந்துவிட்டீர்
சாரம் மிகுந்தது என்று வார்த்தை சொல்கிறீர் மிகச் சலிப்புத் தருகுதடி சகிப் பெண்களே

#2
நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் இது நாளுக்குநாள் அதிகமாகிவிட்டதே
கூனன் ஒருவன் வந்து இ நாணி பின்னலைக் கொண்டை மலர் சிதற நின்று இழுத்ததும்
ஆனை மதம்பிடித்து இவ் வஞ்சி அம்மையின் அருகினில் ஓட இவள் மூர்ச்சையுற்றதும்
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால் பாங்கி உரோகிணிக்கு நோவுகண்டதும்

#3
பத்தினியாளை ஒரு பண்ணை வெளியில் பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்
நத்தி மகளினுக்கு ஓர் சோதிடன் வந்து நாற்பது அரசர் தம்மை வாக்களித்ததும்
கொத்துக் கனல் விழி அக் கோவினிப் பெண்ணைக் கொங்கத்து மூளி கண்டு கொக்கரித்ததும்
வித்தைப் பெயருடைய வீணியவளும் மேற்குத்திசை மொழிகள் கற்று வந்ததும்

#4
எத்தனை பொய்களடி என்ன கதைகள் என்னை உறக்கம் இன்றி இன்னல் செய்கிறீர்
சத்தமிடும் குழல்கள் வீணைகள் எல்லாம் தாளங்களோடு கட்டி மூடிவைத்து அங்கே
மெத்த வெளிச்சம் இன்றி ஒற்றை விளக்கை மேற்குச் சுவர் அருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ள எனைத் தனியில் விட்டே நீங்கள் எல்லோரும் உங்கள் வீடு செல்லுவீர்

#5
**(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)

#6
கண்கள் உறங்க ஒரு காரணம் உண்டோ கண்ணனை இன்று இரவு காண்பதன் முன்னே
பெண்கள் எல்லோரும் அவர் வீடு சென்றிட்டார் பிரியம் மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்
வெண்கல வாணிகரின் வீதி முனையில் வேலிப் புறத்தில் எனைக் காணடி என்றான்
கண்கள் உறங்கல் எனும் காரியம் உண்டோ கண்ணனைக் கை இரண்டும் கட்டல் இன்றியே

@12 கண்ணன் என் காதலன் – 3
**(காட்டிலே தேடுதல்)
**ஹிந்துஸ்தானி தோடி – ஆதி தாளம்
**ரஸங்கள் : பயாநகம், அற்புதம்

#0
திக்குத் தெரியாத காட்டில் உனைத்
தேடித்தேடி இளைத்தேனே

#1
மிக்க நலமுடைய மரங்கள் பல விந்தைச் சுவையுடைய கனிகள் எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள் அங்கு பாடி நகர்ந்து வரும் நதிகள்

#2
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் எங்கும் நீளக் கிடக்கும் இலைக் கடல்கள் மதி
வஞ்சித்திடும் அகழிச் சுனைகள் முட்கள் மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள்

#3
ஆசை பெற விழிக்கும் மான்கள் உள்ளம் அஞ்சக் குரல் பழகும் புலிகள் நல்ல
நேசக் கவிதை சொல்லும் பறவை அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு

#4
தன்னிச்சை கொண்டு அலையும் சிங்கம் அதன் சத்தத்தினில் கலங்கும் யானை அதன்
முன் நின்று ஓடும் இளமான்கள் இவை முட்டாது அயல் பதுங்கும் தவளை

#5
கால் கை சோர்ந்து விழலானேன் இரு கண்ணும் துயில் படரலானேன் ஒரு
வேல் கைக் கொண்டு கொலை வேடன் உள்ளம் வெட்கம் கொண்டு ஒழிய விழித்தான்

#6
பெண்ணே உனது அழகைக் கண்டு மனம் பித்தம்கொள்ளுது என்று நகைத்தான் அடி
கண்ணே எனது இரு கண்மணியே உனைக் கட்டித் தழுவ மனம்கொண்டேன்

#7
சோர்ந்தே படுத்திருக்கலாமோ நல்ல துண்டக் கறி சமைத்துத் தின்போம் சுவை
தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் நல்ல தேம் கள் உண்டு இனிது களிப்போம்

#8
என்றே கொடிய விழி வேடன் உயிர் இற்றுப்போக விழித்து உரைத்தான் தனி
நின்றே இரு கரமும் குவித்து அந்த நீசன் முன்னர் இவை சொல்வேன்

#9
அண்ணா உனது அடியில் வீழ்வேன் எனை அஞ்சக் கொடுமை சொல்ல வேண்டா பிறன்
கண்ணாலஞ்செய்துவிட்ட பெண்ணை உன்றன் கண்ணால் பார்த்திடவும் தகுமோ

#10
ஏடீ சாத்திரங்கள் வேண்டேன் நினது இன்பம் வேண்டுமடி கனியே நின்றன்
மோடி கிறுக்குதடி தலையை நல்ல மொந்தைப் பழைய கள்ளைப் போலே

#11
காதால் இந்த உரை கேட்டேன் அட கண்ணா என்று அலறி வீழ்ந்தேன் மிகப்
போதாகவில்லை இதற்குள்ளே என்றன் போதம் தெளிய நினைக் கண்டேன்

#12
கண்ணா வேடன் எங்கு போனான் உனைக் கண்டே அலறி விழுந்தானோ மணி
வண்ணா எனது அபயக் குரலில் எனை வாழ்விக்க வந்த அருள் வாழி

@13 கண்ணன் என் காதலன் – 4
**(பாங்கியைத் தூது விடுத்தல்)
**தங்கப் பாட்டு மெட்டு
**ரஸங்கள் சிருங்காரம் ரெளத்ரம்

#1
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர்
ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம்

#2
கன்னிகையாய் இருந்து தங்கமே நாங்கள்
காலம் கழிப்பமடி தங்கமே தங்கம்
அன்னிய மன்னர் மக்கள் பூமியில் உண்டாம் என்னும்
அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம்

#3
சொன்ன மொழி தவறும் மன்னவனுக்கே எங்கும்
தோழமை இல்லையடி தங்கமே தங்கம்
என்ன பிழைகள் இங்கு கண்டிருக்கின்றான் அவை
யாவும் தெளிவுபெறக் கேட்டுவிடடீ

#4
மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் தலை
மறைந்து திரிபவர்க்கு மானமும் உண்டோ
பொய்யை உருவம் எனக் கொண்டவன் என்றே கிழப்
பொன்னி உரைத்தது உண்டு தங்கமே தங்கம்

#5
ஆற்றங்கரையதனில் முன்னம் ஒருநாள் எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசியது எல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவன் என்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்

#6
சோரமிழைத்து இடையர் பெண்களுடனே அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவது எல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டியதில்லை என்று சொல்லிவிடடீ

#7
பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்
பண் ஒன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே

#8
நேர முழுதிலும் அப் பாவிதன்னையே உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு
தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்

@14 கண்ணன் என் காதலன் – 5
**(பிரிவாற்றாமை – பாங்கியைத் தூது விடுத்தல்)
**ராகம் – பிலஹரி

#1
ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமோ

#2
கண்ணில் தெரியுது ஒரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுது இல்லை
நண்ணும் முக வடிவு காணில் அந்த நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்

#3
ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம்
வாயும் உரைப்பது உண்டு கண்டாய் அந்த மாயன் புகழினை எப்போதும்

#4
கண்கள் புரிந்துவிட்ட பாவம் உயிர்க் கண்ணன் உரு மறக்கலாச்சு
பெண்கள் இனத்தில் இது போலே ஒரு பேதையை முன்பு கண்டது உண்டோ

#5
தேனை மறந்திருக்கும் வண்டும் ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதும் இல்லை தோழி

#6
கண்ணன் முகம் மறந்து போனால் இந்தக் கண்கள் இருந்து பயன் உண்டோ
வண்ணப் படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி தோழி

@15 கண்ணன் என் காந்தன்
**வராளி – திஸ்ர ஏகதாளம்
**ரஸம் – சிருங்காரம்

#1
கனிகள் கொண்டுதரும் கண்ணன் கற்கண்டு போல் இனிதாய்
பனிசெய் சந்தனமும் பின்னும் பல்வகை அத்தர்களும்
குனியும் வாள் முகத்தான் கண்ணன் குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே வண்ணம் இயன்ற சவ்வாதும்

#2
கொண்டை முடிப்பதற்கே மணம் கூடு தயிலங்களும்
வண்டு விழியினுக்கே கண்ணன் மையும் கொண்டுதரும்
தண்டைப் பதங்களுக்கே செம்மை சார்ந்து செம்பஞ்சு தரும்
பெண்டிர்தமக்கு எல்லாம் கண்ணன் பேசரும் தெய்வமடீ

#3
குங்குமம் கொண்டுவரும் கண்ணன் குழைந்து மார்பு எழுத
சங்கை இலாத பணம் தந்தே தழுவி மையல் செய்யும்
பங்கம் ஒன்று இல்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும்
மங்களம் ஆகுமடீ பின் ஓர் வருத்தம் இல்லையடீ

@16 கண்ணம்மா என் காதலி -1
**(காட்சி வியப்பு)
**செஞ்சுருட்டி – ஏகதாளம்
**ரஸங்கள் – சிருங்காரம், அற்புதம்

#1
சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக் கருமை-கொல்லோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வயிரம்
நட்டநடு நிசியில் தெரியும் நக்ஷத்திரங்களடீ

#2
சோலை மலர் ஒளியோ உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடல் அலையே உனது நெஞ்சில் அலைகளடீ
கோலக் குயில் ஓசை உனது குரல் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக் காதல்கொண்டேன்

#3
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம்கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தம் ஒன்று

@17 கண்ணம்மா என் காதலி – 2
**(பின்னே வந்து நின்று கண் மறைத்தல்)
**நாதநாமக்கிரியை – ஆதிதாளம்
**சிருங்கார ரஸம்

#1
மாலைப் பொழுதில் ஒரு மேடை மிசையே
வானையும் கடலினையும் நோக்கி இருந்தேன்
மூலைக் கடலினை அவ் வான வளையம்
முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி
நேரம் கழிவதிலும் நினைப்பு இன்றியே
சாலப் பலபல நல் பகற்கனவில்
தன்னை மறந்து அலயம்தன்னில் இருந்தேன்

#2
ஆங்கு அப்பொழுதில் என் பின்புறத்திலே
ஆள் வந்து நின்று எனது கண் மறைக்கவே
பாங்கினில் கை இரண்டும் தீண்டி அறிந்தேன்
பட்டுடை வீசு கமழ்தன்னில் அறிந்தேன்
ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன்
ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன்
வாங்கி விடடி கையை ஏடி கண்ணம்மா
மாயம் எவரிடத்தில் என்று மொழிந்தேன்

#3
சிரித்த ஒலியில் அவள் கை விலக்கியே
திருமித் தழுவி என்ன செய்தி சொல் என்றேன்
நெரித்த திரைக் கடலில் என்ன கண்டிட்டாய்
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்ற நலங்கள் என்ன பேசுதி என்றாள்

#4
நெரித்த திரைக் கடலில் நின் முகம் கண்டேன்
நீல விசும்பினிடை நின் முகம் கண்டேன்
திரித்த நுரையினிடை நின் முகம் கண்டேன்
சின்னக் குமிழிகளில் நின் முகம் கண்டேன்
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்றது உன் முகம் அன்றிப் பிறிது ஒன்றில்லை
சிரித்த ஒலியினிலுள் கை விலக்கியே
திருமித் தழுவி அதில் நின் முகம் கண்டேன்

@18 கண்ணம்மா என் காதலி – 3
**(முகத்திரை களைதல்)
**நாதநாமக்கிரியை – ஆதிதாளம்
**சிருங்கார ரஸம்

#1
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்
வல்லி இடையினையும் ஓங்கி முன் நிற்கும் இந்த
மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய்
வல்லி இடையினையும் மார்பு இரண்டையும் துணி
மறைத்ததனால் அழகு மறைந்ததில்லை
சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை முகச்
சோதி மறைத்தும் ஒரு காதல் இங்கு உண்டோ

#2
ஆரியர் முன் நெறிகள் மேன்மை என்கிறாய் பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ
ஓரிருமுறை கண்டு பழகிய பின் வெறும்
ஒப்புக்குக் காட்டுவது இ நாணம் என்னடீ
யாரிருந்து என்னை இங்கு தடுத்திடுவார் வலு
வாக முகத்திரையை அகற்றிவிட்டால்
காரியமில்லையடி வீண்பசப்பிலே கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ

@19 கண்ணம்மா என் காதலி – 4
**(நாணிக் கண் புதைத்தல்)
**நாதநாமக்கிரியை – ஆதிதாளம்
**சிருங்கார ரஸம்

#1
மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை இவன்
மருவ நிகழ்ந்தது என்று நாணமுற்றதோ
சின்னஞ்சிறு குழந்தை என்ற கருத்தோ இங்கு
செய்யத்தகாத செய்கை செய்தவர் உண்டோ
வன்ன முகத்திரையைக் களைந்திடு என்றேன் நின்றன்
மதம் கண்டு துகிலினை வலிது உரிந்தேன்
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய் எனக்கு
எண்ணப்படுவதில்லை ஏடி கண்ணம்மா

#2
கன்னி வயதில் உனைக் கண்டதில்லையோ கன்னம்
கன்றிச் சிவக்க முத்தமிட்டதில்லையோ
அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை இரண்டு
ஆவியும் ஒன்றாகும் எனக் கொண்டதில்லையோ
பன்னிப் பல உரைகள் சொல்லுவது என்னே துகில்
பறித்தவன் கை பறிக்கப் பயம் கொள்வனோ
என்னைப் புறம் எனவும் கருதுவதோ கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ

#3
நாட்டினில் பெண்களுக்கு நாயகர் சொல்லும் சுவை
நைந்த பழங்கதைகள் நான் உரைப்பதோ
பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்கால் தம்முள்
பன்னி உபசரணை பேசுவது உண்டோ
நீட்டும் கதிர்களோடு நிலவு வந்தே விண்ணை
நின்று புகழ்ந்து விட்டுப் பின் மருவுமோ
மூட்டும் விறகினைச் சோதி கவ்வுங்கால் அவை
முன் உபசார வகை மொழிந்திடுமோ

#4
சாத்திரக்காரரிடம் கேட்டு வந்திட்டேன் அவர்
சாத்திரம் சொல்லியதை நினக்கு உரைப்பேன்
நேற்று முன் நாளில் வந்த உறவு அன்றடீ மிக
நெடும் பண்டைக் காலம் முதல் சேர்ந்து வந்ததாம்
போற்றும் இராமன் என முன்பு உதித்தனை அங்கு
பொன் மிதிலைக்கு அரசன் பூமடந்தை நான்
ஊற்று அமுது என்ன ஒரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன்
உருவம் நினக்கு அமையப் பார்த்தன் அங்கு நான்

#5
முன்னை மிகப் பழமை இரணியனாம் எந்தை
மூர்க்கம் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ
பின்னை ஒர் புத்தன் என நான் வளர்ந்திட்டேன் ஒளிப்
பெண்மை அசோதரை என்று உன்னை எய்தினேன்
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர் காண் அவர்
சொல்லில் பழுது இருக்கக் காரணம் இல்லை
இன்னும் கடைசி வரை ஒட்டு இருக்குமாம் இதில்
ஏதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே

@20 கண்ணம்மா என் காதலி – 5
**(குறிப்பிடம் தவறியது)
** செஞ்சுருட்டி — ஆதிதாளம்
**சிருங்கார ரஸம்

#1
தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடு என்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடீ
பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடீ

#2
மேனி கொதிக்குதடீ தலைசுற்றியே வேதனைசெய்குதடீ
வானில் இடத்தை எல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்து இருக்குதடீ இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நான் ஒருவன் மட்டிலும் பிரிவு என்பதோர் நரகத்து உழலுவதோ

#3
கடுமையுடையதடீ எந்த நேரமும் காவல் உன் மாளிகையில்
அடிமை புகுந்த பின்னும் எண்ணும் போது நான் அங்கு வருவதற்கில்லை
கொடுமை பொறுக்கவில்லை கட்டும்காவலும் கூடிக்கிடக்குது அங்கே
நடுமை அரசி அவள் எதற்காகவோ நாணிக் குலைந்திடுவாள்

#4
கூடிப் பிரியாமலே ஓர் இரா எலாம் கொஞ்சிக் குலவி அங்கே
ஆடி விளையாடியே உன்றன் மேனியை ஆயிரம் கோடி முறை
நாடித் தழுவி மனக்குறை தீர்ந்து நான் நல்ல களி எய்தியே
பாடிப் பரவசமாய் நிற்கவே தவம்பண்ணியது இல்லையடி

@21 கண்ணம்மா என் காதலி – 6
**யோகம்

#1
பாயும் ஒளி நீ எனக்குப் பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நான் உனக்கு
வாய் உரைக்கவருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா

#2
வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புது வயிரம் நான் உனக்கு
காணுமிடம்தோறும் நின்றன் கண்ணின் ஒளி வீசுதடி
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா

#3
வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு
பானமடி நீ எனக்குப் பாண்டமடி நான் உனக்கு
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்
ஊனமறு நல் அழகே ஊறு சுவையே கண்ணம்மா

#4
வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு
பண்ணு கதி நீ எனக்குப் பாட்டு இனிமை நான் உனக்கு
எண்ணியெண்ணிப் பார்த்திடில் ஓர் எண்ணம் இலை நின் சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா

#5
வீசு கமழ் நீ எனக்கு விரியும் மலர் நான் உனக்கு
பேசுபொருள் நீ எனக்குப் பேணும் மொழி நான் உனக்கு
நேசம் உள்ள வான் சுடரே நின் அழகை ஏது உரைப்பேன்
ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே கண்ணம்மா

#6
காதலடி நீ எனக்குக் காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு வித்தையடி நான் உனக்கு
போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீம் சுவையே
நாத வடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா

#7
நல்ல உயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொன் சுடரே
முல்லை நிகர் புன்னகையாய் மோதும் இன்பமே கண்ணம்மா

#8
தாரையடி நீ எனக்குத் தண் மதியம் நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பம் எல்லாம்
ஒர் உருவமாய்ச் சமைந்தாய் உள் அமுதே கண்ணம்மா

@22 கண்ணன் என் ஆண்டான்
**புன்னாகவராளி – திஸ்ர ஏகதாளம்
**ரஸங்கள் – அற்புதம், கருணை

#1
தஞ்சம் உலகினில் எங்கணும் இன்றித் தவித்துத் தடுமாறி
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன் பாரம் உனக்கு ஆண்டே
ஆண்டே பாரம் உனக்கு ஆண்டே

#2
துன்பமும் நோயும் மிடிமையும் தீர்த்துச் சுகம் அருளல் வேண்டும்
அன்புடன் நின் புகழ் பாடிக் குதித்து நின் ஆணை வழி நடப்பேன்
ஆண்டே ஆணை வழி நடப்பேன்

#3
சேரி முழுதும் பறையடித்தே அருள் சீர்த்திகள் பாடிடுவேன்
பேரிகை கொட்டித் திசைகள் அதிர நின் பெயர் முழக்கிடுவேன்
ஆண்டே பெயர் முழக்கிடுவேன்

#4
பண்ணைப் பறையர்தம் கூட்டத்திலே இவன் பாக்கியம் ஓங்கிவிட்டான்
கண்ணன் அடிமை இவன் எனும் கீர்த்தியில் காதலுற்று இங்கு வந்தேன்
ஆண்டே காதலுற்று இங்கு வந்தேன்

#5
காடு கழனிகள் காத்திடுவேன் நின்றன் காலிகள் மேய்த்திடுவேன்
பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னர் என் பக்குவம் சொல் ஆண்டே
ஆண்டே பக்குவம் சொல் ஆண்டே

#6
தோட்டங்கள் கொத்திச் செடி வளர்க்கச்சொல்லிச் சோதனை போடு ஆண்டே
காட்டு மழைக் குறி தப்பிச் சொன்னால் எனைக் கட்டி அடி ஆண்டே
ஆண்டே கட்டி அடி ஆண்டே

#7
பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப் பிழைத்திட வேண்டும் ஐயே
அண்டைஅயலுக்கு என்னால் உபகாரங்கள் ஆகிட வேண்டும் ஐயே
உபகாரங்கள் ஆகிட வேண்டும் ஐயே

#8
மானத்தைக் காக்க ஓர் நாலுமுழத்துணி வாங்கித் தரவேணும்
தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித் தரவும் கடன் ஆண்டே
சில வேட்டி தரவும் கடன் ஆண்டே

#9
ஒன்பது வாயில் குடிலினைச் சுற்றி ஒரு சில பேய்கள் வந்தே
துன்பப்படுத்துது மந்திரம்செய்து தொலைத்திட வேண்டும் ஐயே
பகை யாவும் தொலைத்திட வேண்டும் ஐயே

#10
பேயும் பிசாசும் திருடரும் என்றன் பெயரினைக் கேட்டளவில்
வாயும் கையும் கட்டி அஞ்சி நடக்க வழிசெய்ய வேண்டும் ஐயே
தொல்லை தீரும் வழிசெய்ய வேண்டும் ஐயே

@23 கண்ணம்மா எனது குலதெய்வம்
**ராகம் புன்னாகவராளி
**பல்லவி

#0
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
**சரணங்கள்

#1
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத்தகாது என்று

#2
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமைபுகுந்தன கொன்று அவை போக்கு என்று

#3
தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்து இங்கு
நின் செயல் செய்து நிறைவுபெறும் வணம்

#4
துன்பம் இனி இல்லை சோர்வு இல்லை தோற்பு இல்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட

#5
நல்லது தீயது நாம் அறியோம் அன்னை
நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக
&8 பாஞ்சாலி சபதம்

@1 அழைப்புச் சருக்கம் (துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்)
**1 பிரம்ம ஸ்துதி
**நொண்டிச் சிந்து

#1
ஓம் எனப் பெரியோர்கள் என்றும் ஓதுவதாய் வினை மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பதுவாய் துயர் தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய்
நாமமும் உருவும் அற்றே மனம் நாடரிதாய்ப் புந்தி தேடரிதாய்
ஆம் எனும் பொருள் அனைத்தாய் வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய்

#2
நின்றிடும் பிரமம் என்பார் அந்த நிர்மலப் பொருளினை நினைத்திடுவேன்
நன்று செய் தவம் யோகம் சிவஞானமும் பக்தியும் நணுகிடவே
வென்றிகொள் சிவசக்தி எனை மேவுறவே இருள் சாவுறவே
இன் தமிழ் நூல் இதுதான் புகழ் ஏய்ந்து இனிதாய் என்றும் இலகிடவே
**2 ஸரஸ்வதி வணக்கம்

#3
வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
கொள்ளைக் கனி இசைதான் நன்கு கொட்டும் நல் யாழினைக் கொண்டிருப்பாள்
கள்ளைக் கடல் அமுதை நிகர் கண்டதொர் பூம் தமிழ்க் கவி சொலவே
பிள்ளைப் பருவத்திலே எனைப் பேண வந்தாள் அருள்பூண வந்தாள்

#4
வேதத் திருவிழியாள் அதில் மிக்க பல் உரை எனும் கரு மை இட்டாள்
சீதக் கதிர் மதியா நுதல் சிந்தனையே குழல் என்று உடையாள்
வாதத் தருக்கம் எனும் செவி வாய்ந்த நல் துணிவு எனும் தோடு அணிந்தாள்
போதம் என் நாசியினாள் நலம் பொங்கு பல் சாத்திர வாய் உடையாள்

#5
கற்பனைத் தேன் இதழாள் சுவைக் காவியம் எனும் மணிக் கொங்கையினாள்
சிற்பம் முதல் கலைகள் பல தேமலர்க் கரம் எனத் திகழ்ந்திருப்பாள்
சொற்படு நயம் அறிவார் இசை தோய்ந்திடத் தொகுப்பதின் சுவை அறிவார்
விற்பனத் தமிழ்ப் புலவோர் அந்த மேலவர் நா எனும் மலர்ப் பதத்தாள்

#6
வாணியைச் சரண்புகுந்தேன் அருள் வாக்கு அளிப்பாள் எனத் திடம் மிகுந்தேன்
பேணிய பெரும் தவத்தாள் நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள்
பூண் இயல் மார்பகத்தாள் ஐவர் பூவை திரௌபதி புகழ்க் கதையை
மாண் இயல் தமிழ்ப் பாட்டால் நான் வகுத்திடக் கலைமகள் வாழ்த்துகவே
**3 ஹஸ்தினாபுரம்

#7
அத்தினபுரம் உண்டாம் இவ் அவனியிலே அதற்கு இணையிலையாம்
பத்தியில் வீதிகளாம் வெள்ளைப் பனி வரை போல் பல மாளிகையாம்
முத்து ஒளிர் மாடங்களாம் எங்கும் மொய்த்து அளி சூழ் மலர்ச் சோலைகளாம்
நத்து இயல் வாவிகளாம் அங்கு நாடும் இரதி நிகர் தேவிகளாம்

#8
அந்தணர் வீதிகளாம் மறை ஆதிகளாம் கலைச் சோதிகளாம்
செந்தழல் வேள்விகளாம் மிகச் சீர்பெறும் சாத்திரக் கேள்விகளாம்
மந்திர கீதங்களாம் தர்க்க வாதங்களாம் தவ நீதங்களாம்
சிந்தையில் அறம் உண்டாம் எனில் சேர்ந்திடும் கலி செயும் மறமும் உண்டாம்

#9
மெய்த் தவர் பலர் உண்டாம் வெறும் வேடங்கள் பூண்டவர் பலரும் உண்டாம்
உய்த்திடு சிவஞானம் கனிந்து ஓர்ந்திடும் மேலவர் பலர் உண்டாம்
பொய்த்த இந்திரசாலம் நிகர் பூசையும் கிரியையும் புலை நடையும்
கைத்திடு பொய்ம்மொழியும் கொண்டு கண் மயக்கால் பிழைப்போர் பலராம்

#10
மாலைகள் புரண்டு அசையும் பெரு வரை எனத் திரண்ட வன் தோளுடையார்
வேலையும் வாளினையும் நெடு வில்லையும் தண்டையும் விரும்பிடுவார்
காலையும் மாலையிலும் பகை காய்ந்திடு தொழில் பல பழகி வெம் போர்
நூலையும் தேர்ச்சிகொள்வோர் கரி நூறினைத் தனி நின்று நொறுக்க வல்லார்

#11
ஆரிய வேல் மறவர் புவி ஆளும் ஒர் கடும் தொழில் இனிது உணர்ந்தோர்
சீர் இயல் மதி முகத்தார் மணித் தேன் இதழ் அமுது என நுகர்ந்திடுவார்
வேரி அம் கள் அருந்தி எங்கும் வெம் மத யானைகள் எனத் திரிவார்
பாரினில் இந்திரர் போல் வளர் பார்த்திவர் வீதிகள் பாடுவமே

#12
நல் இசை முழக்கங்களாம் பல நாட்டிய மாதர்தம் பழக்கங்களாம்
தொல் இசைக் காவியங்கள் அரும் தொழில் உணர் சிற்பர் செய் ஓவியங்கள்
கொல் இசை வாரணங்கள் கடும் குதிரைகள் அடு பெரும் தேர்கள் உண்டாம்
மல் இசை போர்கள் உண்டாம் திரள் வாய்ந்து இவை பார்த்திடுவோர்கள் உண்டாம்

#13
எண்ணரு கனி வகையும் இவை இலகி நல் ஒளிதரும் பணி வகையும்
தண் நறும் சாந்தங்களும் மலர்த் தார்களும் மலர் விழிக் காந்தங்களும்
சுண்ணமும் நறும் புகையும் சுரர் துய்ப்பதற்கு உரிய பல் பண்டங்களும்
உண்ண நல் கனி வகையும் களி உவகையும் கேளியும் ஓங்கினவே

#14
சிவனுடை நண்பன் என்பார் வடதிசைக்கு அதிபதி அளகேசன் என்பார்
அவனுடைப் பெரும் செல்வம் இவர் ஆவணந்தொறும் புகுந்திருப்பதுவாம்
தவனுடை வணிகர்களும் பல தரனுடைத் தொழில் செயும் மா சனமும்
எவனுடைப் பயமும் இலாது இனிது இருந்திடும் தன்மையது எழில் நகரே
**4 துரியோதனன் சபை

#15
கன்னங்கரியதுவாய் அகல் காட்சியதாய் மிகு மாட்சியதாய்
துன்னற்கு இனியதுவாய் நல்ல சுவைதரும் நீருடை யமுனை எனும்
வன்னத் திருநதியின் பொன் மருங்கிடைத் திகழ்ந்த அம் மணி நகரில்
மன்னவர்தம் கோமான் புகழ் வாள் அரவக் கொடி உயர்த்துநின்றான்

#16
துரியோதனப் பெயரான் நெஞ்சத் துணிவுடையான் முடி பணிவறியான்
கரி ஓர் ஆயிரத்தின் வலி காட்டிடுவான் என்று அக் கவிஞர்பிரான்
பெரியோன் வேதமுனி அன்று பேசிடும்படி திகழ் தோள்வலியோன்
உரியோர் தாம் எனினும் பகைக்குரியோர்தமக்கு வெம் தீயனையான்

#17
தந்தை சொல் நெறிப்படியே இந்தத் தடம் தோள் மன்னவன் அரசிருந்தான்
மந்திரம் உணர் பெரியோர் பலர் வாய்த்திருந்தார் அவன் சபைதனிலே
அந்தமில் புகழுடையான் அந்த ஆரிய வீட்டுமன் அறம் அறிந்தோன்
வந்தனைபெறும் குரவோர் பழமறைக்குல மறவர்கள் இருவரொடே

#18
மெய்ந்நெறி உணர் விதுரன் இனி வேறு பல் அமைச்சரும் விளங்கிநின்றார்
பொய்ந்நெறித் தம்பியரும் அந்தப் புலை நடைச் சகுனியும் புறம் இருந்தார்
மைந்நெறி வான் கொடையான் உயர் மானமும் வீரமும் மதியுமுளோன்
உய்ந்நெறி அறியாதான் இறைக்கு உயிர் நிகர் கன்னனும் உடன் இருந்தான்
**5 துரியோதனன் பொறாமை
**வேறு

#19
எண்ணிலாத பொருளின் குவையும் யாங்கணும் செலும் சக்கர மாண்பும்
மண்ணில் ஆர்க்கும் பெறல் அரிதாம் ஓர் வார் கடல் பெரும் சேனையும் ஆங்கே
விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று வேண்டும் இன்பமும் பெற்றவனேனும்
கண்ணிலாத் திரிதாட்டிரன் மைந்தன் காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர்
**வேறு

#20
பாண்டவர் முடி உயர்த்தே இந்தப் பார் மிசை உலவிடு நாள் வரை நான்
ஆண்டது ஒர் அரசாமோ எனது ஆண்மையும் புகழும் ஒர் பொருளாமோ
காண் தகு வில்லுடையோன் அந்தக் காளை அருச்சுனன் கண்களிலும்
மாண் தகு திறல் வீமன் தட மார்பிலும் எனது இகழ் வரைந்துளதே

#21
பாரதநாட்டில் உள்ள முடிப் பார்த்திவர் யார்க்கும் ஒர் பதி என்றே
நாரதன் முதல் முனிவோர் வந்து நாட்டிடத் தருமன் அவ் வேள்விசெய்தான்
சோரன் அவ் எதுகுலத்தான் சொலும் சூழ்ச்சியும் தம்பியர் தோள் வலியும்
வீரமிலாத் தருமன்தனை வேந்தர்தம் முதல் என விதித்தனவே

#22
ஆயிரம் முடிவேந்தர் பதினாயிரம் ஆயிரம் குறுநிலத்தார்
மா இரும் திறை கொணர்ந்தே அங்கு வைத்ததொர் வரிசையை மறந்திடவோ
தூ இழை ஆடைகளும் மணித் தொடையலும் பொன்னும் ஒர் தொகைப்படுமோ
சே இழை மடவாரும் பரித் தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ

#23
ஆணிப்பொன் கலசங்களும் ரவி அன்ன நல் வயிரத்தின் மகுடங்களும்
மாணிக்கக் குவியல்களும் பச்சை மரகதத் திரளும் நல் முத்துக்களும்
பூணிட்ட திருமணி தாம் பல புதுப்புது வகைகளில் பொலிவனவும்
காணிக்கையாக் கொணர்ந்தார் அந்தக் காட்சியை மறப்பதும் எளிதாமோ

#24
நால் வகைப் பசும்பொன்னும் ஒரு நாலாயிர வகைப் பணக் குவையும்
வேல் வகை வில் வகையும் அம்பு விதங்களும் தூணியும் வாள் வகையும்
சூல் வகை தடி வகையும் பல தொனி செயும் பறைகளும் கொணர்ந்து வைத்தே
பால் வளர் மன்னவர்தாம் அங்குப் பணிந்ததை என் உளம் மறந்திடுமோ

#25
கிழவியர் தபசியர் போல் பழம் கிளிக்கதை படிப்பவன் பொறுமை என்றும்
பழவினை முடிவு என்றும் சொலிப் பதுங்கி நிற்போன் மறத்தன்மை இலான்
வழவழத் தருமனுக்கோ இந்த மாநில மன்னவர் தலைமைதந்தார்
முழவினைக் கொடி கொண்டான் புவி முழுதையும் தனியே குடிகொண்டான்

#26
தம்பியர் தோள் வலியால் இவன் சக்கரவர்த்தி என்று உயர்ந்ததுவும்
வெம்பிடு மத கரியான் புகழ் வேள்விசெய்து அ நிலை முழக்கியதும்
அம்புவி மன்னர் எலாம் இவன் ஆணை தம் சிரத்தினில் அணிந்தவராய்
நம்பரும் பெரும் செல்வம் இவன் நலம் கிளர் சபையினில் பொழிந்ததுவும்

#27
எப்படிப் பொறுத்திடுவேன் இவன் இளமையின் வளமைகள் அறியேனோ
குப்பை-கொலோ முத்தும் அந்தக் குரை கடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார்
சிப்பியும் பவளங்களும் ஒளி திரண்ட வெண்சங்கத்தின் குவியல்களும்
ஒப்பில் வைடூரியமும் கொடுத்து ஒதுங்கி நின்றார் இவன் ஒருவனுக்கே

#28
மலைநாடு உடைய மன்னர் பல மான் கொணர்ந்தார் புதுத் தேன் கொணர்ந்தார்
கொலை நால்வாய் கொணர்ந்தார் மலைக் குதிரையும் பன்றியும் கொணர்ந்து தந்தார்
கலைமான் கொம்புகளும் பெரும் களிறுடைத் தந்தமும் கவரிகளும்
விலை ஆர் தோல் வகையும் கொண்டு மேலும் பொன் வைத்து அங்கு வணங்கி நின்றார்

#29
செம் நிறத் தோல் கரும் தோல் அந்தத் திரு வளர் கதலியின் தோலுடனே
வெம் நிறப் புலித்தோல்கள் பல வேழங்கள் ஆடுகள் இவற்றுடைத் தோல்
பல் நிற மயிருடைகள் விலை பகரரும் பறவைகள் விலங்கினங்கள்
பொன் நிறப் பாஞ்சாலி மகிழ் பூத்திடும் சந்தனம் அகில் வகைகள்

#30
ஏலம் கருப்பூரம் நறும் இலவங்கம் பாக்கு நல் சாதி வகை
கோலம் பெறக் கொணர்ந்தே அவர் கொட்டி நின்றார் கரம் கட்டி நின்றார்
மேலும் தலத்திலுளார் பல வேந்தர் அப் பாண்டவர் விழைந்திடவே
ஓலம் தரக் கொணர்ந்தே வைத்தது ஒவ்வொன்றும் என் மனத்து உறைந்ததுவே

#31
மாலைகள் பொன்னும் முத்தும் மணி வகைகளில் புனைந்தவும் கொணர்ந்து பெய்தார்
சேலைகள் நூறு வன்னம் பல சித்திரத் தொழில் வகை சேர்ந்தனவாய்
சாலவும் பொன் இழைத்தே தெய்வத் தையலர் விழைவன பலர் கொணர்ந்தார்
கோல நல் பட்டுக்களின் வகை கூறுவதோ எண்ணில் ஏறுவதோ

#32
கழல்களும் கடகங்களும் மணிக் கவசமும் மகுடமும் கணக்கிலவாம்
நிழல் நிறப் பரி பலவும் செம் நிறத்தன பலவும் வெண் நிறம் பலவும்
தழல் நிறம் மேக நிறம் விண்ணில் சாரும் இந்திரவில்லை நேரும் நிறம்
அழகிய கிளி வயிற்றின் வண்ணம் ஆர்ந்தனவாய்ப் பணி சேர்ந்தனவாய்

#33
காற்று எனச் செல்வனவாய் இவை கடிது உகைத்திடும் திறல் மறவரொடே
போற்றிய கையினராய்ப் பல புரவலர் கொணர்ந்து அவன் சபை புகுந்தார்
சீற்ற வன் போர் யானை மன்னர் சேர்த்தவை பலபல மந்தை உண்டாம்
ஆற்றல் மிலேச்ச மன்னர் தொலை அரபியர் ஒட்டைகள் கொணர்ந்து தந்தார்

#34
தென்திசைச் சாவகமாம் பெரும் தீவு தொட்டே வடதிசையதனில்
நின்றிடும் புகழ்ச் சீனம் வரை தேர்ந்திடும் பலப்பல நாட்டினரும்
வென்றி கொள் தருமனுக்கே அவன் வேள்வியில் பெரும் புகழ் விளையும் வண்ணம்
நன்று பல் பொருள் கொணர்ந்தார் புவி நாயகன் யுதிட்டிரன் என உணர்ந்தார்

#35
ஆடுகள் சிலர் கொணர்ந்தார் பலர் ஆயிரமாயிரம் பசுக் கொணர்ந்தார்
மாடுகள் பூட்டினவாய்ப் பல வகைப்படு தானியம் சுமந்தனவாய்
ஈடுறு வண்டி கொண்டே பலர் எய்தினர் கரும்புகள் பல கொணர்ந்தார்
நாடுறு தயில வகை நறு நானத்தின் பொருள் பலர் கொணர்ந்து தந்தார்

#36
நெய்க் குடம் கொண்டுவந்தார் மறை நியமம் கொள் பார்ப்பனர் மகத்தினுக்கே
மொய்க்கும் இன் கள் வகைகள் கொண்டு மோதினர் அரசினம் மகிழ்வுறவே
தைக்கும் நல் குப்பாயம் செம்பொன் சால்வைகள் போர்வைகள் கம்பளங்கள்
கைக்கு மட்டினும் தானோ அவை காண்பவர் விழிகட்கும் அடங்குபவோ

#37
தந்தத்தில் கட்டில்களும் நல்ல தந்தத்தின் பல்லக்கும் வாகனமும்
தந்தத்தின் பிடி வாளும் அந்தத் தந்தத்திலே சிற்பத் தொழில் வகையும்
தந்தத்தில் ஆதனமும் பின்னும் தமனிய மணிகளில் இவை அனைத்தும்
தந்தத்தைக் கணக்கிடவோ முழுத் தரணியின் திருவும் இத் தருமனுக்கோ
**வேறு

#38
என்று இவ்வாறு பலபல எண்ணி ஏழையாகி இரங்குதலுற்றான்
வன் திறத்து ஒரு கல் எனும் நெஞ்சன் வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான்
குன்றம் ஒன்று குழைவுற்று இளகிக் குழம்புபட்டு அழிவு எய்திடும் வண்ணம்
கன்று பூதலத்து உள் உறை வெம்மை காய்ந்து எழுந்து வெளிப்படல் போல

#39
நெஞ்சத்து உள் ஓர் பொறாமை எனும் தீ நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்போய்
மஞ்சன் ஆண்மை மறம் திண்மை மானம் வன்மை யாவும் மறந்தனன் ஆகிப்
பஞ்சையாம் ஒரு பெண்மகள் போலும் பாலர் போலும் பரிதவிப்பானாய்க்
கொஞ்ச நேரத்தில் பாதகத்தொடு கூடியே உறவு எய்தி நின்றானால்

#40
யாது நேரினும் எவ்வகையானும் யாது போயினும் பாண்டவர் வாழ்வைத்
தீதுசெய்து மடித்திட எண்ணிச் செய்கை ஒன்று அறியான் திகைப்பு எய்திச்
சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட துட்ட மாமனைத் தான் சரண் எய்தி
ஏது செய்வம் எனச் சொல்லி நைந்தான் எண்ணத்து உள்ளன யாவும் உரைத்தே

#41
மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த மா மகத்தினில் வந்து பொழிந்த
சொன்னம் பூண் மணி முத்து இவை கண்டும் தோற்றம் கண்டும் மதிப்பினைக் கண்டும்
என்ன பட்டது தன் உளம் என்றே ஈன மாமன் அறிந்திடும் வண்ணம்
முன்னம் தான் நெஞ்சில் கூறிய எல்லாம் மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான்
**6 துரியோதனன் சகுனியிடம் சொல்வது
**வேறு

#42
உலகு தொடங்கிய நாள் முதலாக நம் சாதியில் புகழ்
ஓங்கி நின்றார் இத் தருமனைப் போல் எவர் மாமனே
இலகு புகழ் மனு ஆதி முதுவர்க்கும் மாமனே பொருள்
ஏற்றமும் மாட்சியும் இப்படி உண்டு-கொல் மாமனே
கலைகள் உணர்ந்த நல் வேதியப் பாவலர் செய்தவாம் பழம்
கற்பனைக் காவியம் பற்பல கற்றனை மாமனே
பல கடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும் சொல்லப்
பார்த்தது உண்டோ கதை கேட்டது உண்டோ புகல் மாமனே

#43
எதனை உலகில் மறப்பினும் யான் இனி மாமனே இவர்
யாகத்தை என்றும் மறந்திடல் என்பது ஒன்று ஏது காண்
விதமுறச் சொன்ன பொருள் குவையும் பெரிதில்லை காண் அந்த
வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பல உண்டே
இதனை எலாம் அவ் விழியற்ற தந்தையின்பால் சென்றே சொல்லி
இங்கு இவர் மீது அவனும் பகை எய்திடச் செய்குவாய்
மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த
வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய்

#44
கண்ணைப் பறிக்கும் அழகுடையார் இளமங்கையர் பல
காமரு பொன் மணிப் பூண்கள் அணிந்தவர்தம்மையே
மண்ணைப் புரக்கும் புரவலர்தாம் அந்த வேள்வியில் கொண்டு
வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்க்கே எங்கள் மாமனே
எண்ணைப் பழிக்கும் தொகையுடையார் இளமஞ்சரைப் பலர்
ஈந்தனர் மன்னர் இவர்தமக்குத் தொண்டு இயற்றவே
விண்ணைப் பிளக்குந் தொனியுடைச் சங்குகள் ஊதினார் தெய்வ
வேதியர் மந்திரத்தோடு பல் வாழ்த்துக்கள் ஓதினார்

#45
நாரதன்தானும் அவ் வேதவியாசனும் ஆங்ஙனே பலர்
நான் இங்கு உரைத்தற்கு அரிய பெருமை முனிவரும்
மா ரத வீரர் அப் பாண்டவர் வேள்விக்கு வந்ததும் வந்து
மா மறை ஆசிகள் கூறிப் பெரும் புகழ் தந்ததும்
வீரர்தம் போரின் அரிய நல் சாத்திர வாதங்கள் பல
விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே
சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் நல்ல
தங்க மழை பொழிந்தாங்கு அவர்க்கே மகிழ் தந்ததும்

#46
விப்பிரர் ஆதிய நால் வருணத்தவர் துய்ப்பவே நல்
விருந்து செயலில் அளவற்ற பொன் செலவிட்டதும்
இப் பிறவிக்குள் இவை ஒத்த வேள்வி விருந்துகள் புவி
எங்கணும் நான் கண்டதில்லை எனத் தொனி பட்டதும்
தப்பு இன்றியே நல் விருந்தினர் யாருக்கும் தகுதிகள் கண்டு
தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும்
செப்புக நீ அவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் இந்தச்
செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய்

#47
அண்ணன் மைந்தன் அவனிக்கு உரியவன் யான் அன்றோ அவர்
அடியவர் ஆகி எமைப் பற்றி நிற்றல் விதி அன்றோ
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார் அந்தப்
பாண்டவர் நமைப் புல் என எண்ணுதல் பார்த்தையோ
கண்ணனுக்கு முதல் உபசாரங்கள் காட்டினார் சென்று
கண்ணிலாத் தந்தைக்கு இச் செயலின் பொருள் காட்டுவாய்
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான் என்றன்
மாமனே அவன் நம்மில் உயர்ந்த வகை சொல்வாய்

#48
சந்திரன் குலத்தே பிறந்தோர்தம் தலைவன் யான் என்று
சகம் எலாம் சொலும் வார்த்தை மெய்யோ வெறும் சாலமோ
தந்திரத் தொழில் ஒன்று உணரும் சிறு வேந்தனை இவர்
தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ
மந்திரத்தில் அச் சேதியர் மன்னனை மாய்த்திட்டார் ஐய
மா மகத்தில் அதிதியைக் கொல்ல மரபு உண்டோ
இந்திரத்துவம் பெற்று இவர் வாழும் நெறி நன்றே இதை
எண்ணியெண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே

#49
சதிசெய்தார்க்குச் சதிசெயல் வேண்டும் என் மாமனே இவர்
தாம் என் அன்பன் சராசந்தனுக்கு முன் எவ்வகை
விதி செய்தார் அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ இந்த
மேதினியோர்கள் மறந்துவிட்டார் இஃது ஓர் விந்தையே
நிதி செய்தாரைப் பணிகுவர் மானிடர் மாமனே எந்த
நெறியினால் அது செய்யினும் நாய் என நீள் புவி
துதிசெய்தே அடி நக்குதல் கண்டனை மாமனே வெறும்
சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிவு எலாம்
**வேறு

#50
பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில்
பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும்
உற்றதோர் தம்பிக்குத் தென்னவன் மார்பணி தந்ததும் ஒளி
ஓங்கிய மாலை அ மாகதன் தான் கொண்டு வந்ததும்
பற்றலர் அஞ்சும் பெரும் புகழ் ஏகலவியனே செம்பொன்
பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும்
முற்றிடும் மஞ்சனத்திற்குப் பலபல தீர்த்தங்கள் மிகு
மொய்ம்புடையான் அவ் அவந்தியர் மன்னவன் சேர்த்ததும்

#51
மஞ்சன நீர் தவ வேதவியாசன் பொழிந்ததும் பல
வைதிகர் கூடி நல் மந்திர வாழ்த்து மொழிந்ததும்
குஞ்சரச் சாத்தகி வெண்குடை தாங்கிட வீமனும் இளங்
கொற்றவனும் பொன் சிவிறிகள் வீச இரட்டையர்
அஞ்சுவர் போல் அங்கு நின்று கவரி இரட்டவே கடல்
ஆளும் ஒருவன் கொடுத்ததொர் தெய்விகச் சங்கினில்
வஞ்சகன் கண்ணன் புனிதமுறும் கங்கை நீர் கொண்டு திரு
மஞ்சனம் ஆட்டும் அப்போதில் எவரும் மகிழ்ந்ததும்

#52
மூச்சை அடைத்ததடா சபைதன்னில் விழுந்து நான் அங்கு
மூர்ச்சையடைந்தது கண்டனையே என்றன் மாமனே
ஏச்சையும் அங்கு அவர் கொண்ட நகைப்பையும் எண்ணுவாய் அந்த
ஏந்திழையாளும் எனைச் சிரித்தாள் இதை எண்ணுவாய்
பேச்சை வளர்த்துப் பயன் என்றும் இல்லை என் மாமனே அவர்
பேற்றை அழிக்க உபாயம் சொல்வாய் என்றன் மாமனே
தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து நாம் அவர்
செல்வம் கவர்ந்து அவரை விட வேண்டும் தெருவிலே
**7 சகுனியின் சதி
**வேறு

#53
என்று சுயோதனன் கூறியே நெஞ்சம் ஈர்ந்திடக் கண்ட சகுனிதான் அட
இன்று தருகுவன் வெற்றியே இதற்கு இத்தனை வீண்சொல் வளர்ப்பதேன் இனி
ஒன்று உரைப்பேன் நல் உபாயம்தான் அதை ஊன்றிக் கருத்தொடு கேட்பையால் ஒரு
மன்று புனைந்திடச் செய்தி நீ தெய்வ மண்டபம் ஒத்த நலம் கொண்டே

#54
மண்டபம் காண வருவிர் என்று அந்த மன்னவர்தம்மை வரவழைத்து அங்கு
கொண்ட கருத்தை முடிப்பவே மெல்லக் கூட்டி வன் சூது பொரச் செய்வோம் அந்த
வண்டரை நாழிகை ஒன்றிலே தங்கள் வான் பொருள் யாவையும் தோற்று உனைப் பணி
தொண்டர் எனச் செய்திடுவன் யான் என்றன் சூதின் வலிமை அறிவை நீ

#55
வெம் சமர் செய்திடுவோம் எனில் அதில் வெற்றியும் தோல்வியும் யார் கண்டார் அந்தப்
பஞ்சவர் வீரம் பெரிது காண் ஒரு பார்த்தன் கை வில்லுக்கு எதிர் உண்டோ உன்றன்
நெஞ்சத்தில் சூதை இகழ்ச்சியாக் கொள்ள நீதம் இல்லை முன்னைப் பார்த்திவர் தொகை
கொஞ்சம் இலைப் பெரு சூதினால் வெற்றி கொண்டு பகையை அழித்துளோர்

#56
நாடும் குடிகளும் செல்வமும் எண்ணி நானிலத்தோர் கொடும் போர்செய்வார் அன்றி
ஓடும் குருதியைத் தேக்கவோ தமர் ஊன் குவை கண்டு களிக்கவோ அந்த
நாடும் குடிகளும் செல்வமும் ஒரு நாழிகைப் போதினில் சூதினால் வெல்லக்
கூடும் எனில் பிறிது எண்ணலேன் என்றன் கொள்கை இது எனக் கூறினான்

#57
இங்கு இது கேட்ட சுயோதனன் மிக இங்கிதம் சொல்லினை மாமனே என்று
சங்கிலிப் பொன்னின் மணி இட்ட ஒளித் தாமம் சகுனிக்குச் சூட்டினான் பின்னர்
எங்கும் புவி மிசை உன்னைப் போல் எனக்கு இல்லை இனியது சொல்லுவோர் என்று
பொங்கும் உவகையின் மார்புறக் கட்டிப் பூரித்து விம்மித் தழுவினான்
**8 சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்

#58
மற்று அதன் பின்னர் இருவரும் அரு மந்திரக் கேள்வியுடையவன் பெரும்
கொற்றவர் கோன் திரிதராட்டிரன் சபை கூடி வணங்கி இருந்தனர் அரு
ளற்ற சகுனியும் சொல்லுவான் ஐய ஆண்டகை நின் மகன் செய்தி கேள் உடல்
வற்றித் துரும்பு ஒத்து இருக்கின்றான் உயிர் வாழ்வை முழுதும் வெறுக்கின்றான்

#59
உண்ப சுவை இன்றி உண்கின்றான் பின் உடுப்பது இகழ உடுக்கின்றான் பழ
நண்பர்களோடு உறவு எய்திடான் இளநாரியரைச் சிந்தைசெய்திடான் பிள்ளை
கண் பசலைகொண்டு போயினான் இதன் காரணம் யாது என்று கேட்பையால் உயர்
திண் பருமத் தடம் தோளினாய் என்று தீய சகுனியும் செப்பினான்

#60
தந்தையும் இவ் உரை கேட்டதால் உளம் சாலவும் குன்றி வருந்தியே என்றன்
மைந்த நினக்கு வருத்தம் ஏன் இவன் வார்த்தையில் ஏதும் பொருள் உண்டோ நினக்கு
எந்தவிதத்தும் குறை உண்டோ நினை யாரும் எதிர்த்திடுவார் உண்டோ நின்றன்
சிந்தையில் எண்ணும் பொருள் எலாம் கணம் தேடிக் கொடுப்பவர் இல்லையோ

#61
இன் அமுது ஒத்த உணவுகள் அந்த இந்திரன் வெஃகுறும் ஆடைகள் பலர்
சொன்ன பணிசெயும் மன்னவர் வரும் துன்பம் தவிர்க்கும் அமைச்சர்கள் மிக
நல் நலம் கொண்ட குடி படை இந்த நானிலம் எங்கும் பெரும் புகழ் மிஞ்சி
மன்னும் அப் பாண்டவச் சோதரர் இவை வாய்ந்தும் உனக்குத் துயர் உண்டோ

#62
தந்தை வசனம் செவியுற்றே கொடி சர்ப்பத்தைக் கொண்டதொர் கோமகன்
வெம் தழல் போலச் சினம்கொண்டே தன்னை மீறிப் பல சொல் விளம்பினான் இவன்
மந்த மதிகொண்டு சொல்வதை அந்த மாமன் மதித்து உரைசெய்குவான் ஐய
சிந்தை வெதுப்பத்தினால் இவன் சொலும் சீற்ற மொழிகள் பொறுப்பையால்

#63
தன் உளத்து உள்ள குறை எலாம் நின்றன் சந்நிதியில் சென்று சொல்லிட முதல்
என்னைப் பணித்தனன் யான் இவன்றனை இங்கு வலியக் கொணர்ந்திட்டேன் பிள்ளை
நல் நயமே சிந்தைசெய்கின்றான் எனில் நன்கு மொழிவது அறிந்திலன் நெஞ்சைத்
தின்னும் கொடும் தழல் கொண்டவர் சொல்லும் செய்தி தெளிய உரைப்பரோ

#64
நீ பெற்ற புத்திரனே அன்றோ மன்னர் நீதி இயல்பில் அறிகின்றான் ஒரு
தீபத்தில் சென்று கொளுத்திய பந்தம் தேசு குறைய எரியுமோ செல்வத்
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல் மன்னர் சாத்திரத்தே முதல் சூத்திரம் பின்னும்
ஆபத்து அரசர்க்கு வேறு உண்டோ தம்மில் அன்னியர் செல்வம் மிகுதல் போல்

#65
வேள்வியில் அன்று அந்தப் பாண்டவர் நமை வேண்டுமட்டும் குறைசெய்தனர் ஒரு
கேள்வி இலாது உன் மகன்றனைப் பலர் கேலிசெய்தே நகைத்தார் கண்டாய் புவி
ஆள்வினை முன்னவர்க்கு இன்றியே புகழ் ஆர்ந்து இளையோர் அது கொள்வதைப் பற்றி
வாள் விழி மாதரும் நம்மையே கயமக்கள் என்று எண்ணி நகைத்திட்டார்

#66
ஆயிரம் யானை வலி கொண்டான் உந்தன் ஆண்டகை மைந்தன் இவன் கண்டாய் இந்த
மா இரு ஞாலத்து உயர்ந்ததாம் மதி வான் குலத்திற்கு முதல்வனாம் ஒளி
ஞாயிறு நிற்பவும் மின்மினிதன்னை நாடித் தொழுதிடும் தன்மை போல் அவர்
வேய் இருந்து ஊதும் ஒர் கண்ணனை அந்த வேள்வியில் சால உயர்த்தினார்

#67
ஐய நின் மைந்தனுக்கு இல்லை காண் அவர் அர்க்கியம் முற்படத் தந்ததே இந்த
வையகத்தார் வியப்பு எய்தவே புவி மன்னவர் சேர்ந்த சபைதனில் மிக
நொய்யதொர் கண்ணனுக்கு ஆற்றினார் மன்னர் நொந்து மனம் குன்றிப்போயினர் பணி
செய்யவும் கேலிகள் கேட்கவும் உன்றன் சேயினை வைத்தனர் பாண்டவர்

#68
பாண்டவர் செல்வம் விழைகின்றான் புவிப் பாரத்தை வேண்டிக் குழைகின்றான் மிக
நீண்ட மகிதலம் முற்றிலும் உங்கள் நேமி செலும் புகழ் கேட்கின்றான் குலம்
பூண்ட பெருமை கெடாதவாறு எண்ணிப் பொங்குகின்றான் நலம் வேட்கின்றான் மைந்தன்
ஆண்டகைக்கு இஃது தகும் அன்றோ இல்லையாம் எனில் வையம் நகும் அன்றோ

#69
நித்தம் கடலினில் கொண்டுபோய் நல்ல நீரை அளவின்றிக் கொட்டுமாம் உயர்
வித்தகர் போற்றிடும் கங்கையாறு அது வீணில் பொருளை அழிப்பதோ ஒரு
சத்தமிலா நெடும் காட்டினில் புனல் தங்கி நிற்கும் குளம் ஒன்று உண்டாம் அது
வைத்ததன் நீரைப் பிறர் கொளாவகை வாரடைப் பாசியில் மூடியே

#70
சூரிய வெப்பம் படாமலே மரம் சூழ்ந்த மலை அடிக் கீழ்ப்பட்டே முடை
நீரினை நித்தலும் காக்குமாம் இந்த நீள் சுனை போல்வர் பலர் உண்டே எனில்
ஆரியர் செல்வம் வளர்தற்கே நெறி ஆயிரம் நித்தம் புதியன கண்டு
வாரிப் பழம் பொருள் ஏற்றுவார் இந்த வண்மையும் நீ அறியாததோ
**9 திரிதராட்டிரன் பதில் கூறுதல்

#71
கள்ளச் சகுனியும் இங்ஙனே பல கற்பனை சொல்லித் தன் உள்ளத்தின் பொருள்
கொள்ளப் பகட்டுதல் கேட்ட பின் பெரும் கோபத்தோடே திரிதாட்டிரன் அட
பிள்ளையை நாசம் புரியவே ஒரு பேய் என நீ வந்து தோன்றினாய் பெரு
வெள்ளத்தைப் புல் ஒன்று எதிர்க்குமோ இளவேந்தரை நாம் வெல்லல் ஆகுமோ

#72
சோதரர்தம்முள் பகை உண்டோ ஒரு சுற்றத்திலே பெரும் செற்றமோ நம்மில்
ஆதரம் கொண்டவர் அல்லரோ முன்னர் ஆயிரம் சூழ்ச்சி இவன் செய்தும் அந்தச்
சீதரன் தண் அருளாலும் ஓர் பெரும் சீலத்தினாலும் புயவலி கொண்டும்
யாதொரு தீங்கும் இலாமலே பிழைத்து எண்ணரும் கீர்த்திபெற்றார் அன்றோ

#73
பிள்ளைப் பருவம் தொடங்கியே இந்தப் பிச்சன் அவர்க்குப் பெரும்பகைசெய்து
கொள்ளப்படாத பெரும்பழி அன்றிக் கொண்டதொர் நன்மை சிறிது உண்டோ நெஞ்சில்
எள்ளத் தகுந்த பகைமையோ அவர் யார்க்கும் இளைத்த வகை உண்டோ வெறும்
நொள்ளைக் கதைகள் கதைக்கிறாய் பழநூலின் பொருளைச் சிதைக்கிறாய்

#74
மன்னவர் நீதி சொல வந்தாய் பகை மா மலையைச் சிறு மண்குடம் கொள்ளச்
சொன்னதொர் நூல் சற்றுக் காட்டுவாய் விண்ணில் சூரியன் போல் நிகரின்றியே புகழ்
துன்னப் புவிச் சக்கராதிபம் உடன் சோதரர் தாம் கொண்டிருப்பவும் தந்தை
என்னக் கருதி அவர் எனைப் பணிந்து என் சொற்கு அடங்கி நடப்பவும்

#75
முன்னை இவன் செய்த தீது எலாம் அவர் முற்றும் மறந்தவராகியே தன்னைத்
தின்ன வரும் ஒர் தவளையைக் கண்டு சிங்கம் சிரித்து அருள்செய்தல் போல் துணை
என்ன இவனை மதிப்பவும் அவர் ஏற்றத்தைக் கண்டும் அஞ்சாமலே நின்றன்
சின்னமதியினை என் சொல்வேன் பகைசெய்திட எண்ணிப் பிதற்றினாய்

#76
ஒப்பில் வலிமையுடையதாம் துணையோடு பகைத்தல் உறுதியோ நம்மைத்
தப்பு இழைத்தார் அந்த வேள்வியில் என்று சாலம் எவரிடம் செய்கிறாய் மயல்
அப்பி விழி தடுமாறியே இவன் அங்குமிங்கும் விழுந்து ஆடல் கண்டு அந்தத்
துப்பு இதழ் மைத்துனி தான் சிரித்திடில் தோஷம் இதில் மிக வந்ததோ

#77
தவறி விழுபவர்தம்மையே பெற்ற தாயும் சிரித்தல் மரபு அன்றோ எனில்
இவனைத் துணைவர் சிரித்ததோர் செயல் எண்ணரும் பாதகம் ஆகுமோ மனக்
கவலை வளர்த்திடல் வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ வெறும்
அவல மொழிகள் அளப்பது ஏன் தொழில் ஆயிரம் உண்டு அவை செய்குவீர்

#78
சின்னஞ்சிறிய வயதிலே இவன் தீமை அவர்க்குத் தொடங்கினான் அவர்
என் அரும் புத்திரன் என்று எண்ணித் தங்கள் யாகத்து இவனைத் தலைக்கொண்டு பசும்
பொன்னை நிறைத்ததொர் பையினை மனம் போலச் செலவிடுவாய் என்றே தந்து
மன்னவர் காண இவனுக்கே தம்முள் மாண்பு கொடுத்தனர் அல்லரோ

#79
கண்ணனுக்கே முதல் அர்க்கியம் அவர் காட்டினர் என்று பழித்தனை எனில்
நண்ணும் விருந்தினர்க்கு அன்றியே நம்முள் நாம் உபசாரங்கள் செய்வதோ உறவு
அண்ணனும் தம்பியும் ஆதலால் அவர் அன்னியமா நமைக் கொண்டிலர் முகில்
வண்ணன் அதிதியர்தம்முளே முதல் மாண்புடையான் எனக் கொண்டனர்

#80
கண்ணனுக்கே அது சாலும் என்று உயர் கங்கைமகன் சொலச் செய்தனர் இதைப்
பண்ணரும் பாவம் என்று எண்ணினால் அதன் பாரம் அவர்தமைச் சாருமோ பின்னும்
கண்ணனை ஏது எனக் கொண்டனை அவன் காலில் சிறு துகள் ஒப்பவர் நிலத்து
எண்ணரும் மன்னவர்தம்முளே பிறர் யாரும் இலை எனல் காணுவாய்

#81
ஆதிப் பரம்பொருள் நாரணன் தெளிவாகிய பாற்கடல் மீதிலே நல்ல
சோதிப் பணாமுடி ஆயிரம் கொண்ட தொல்லறிவு என்னும் ஒர் பாம்பின் மேல் ஒரு
போதத் துயில்கொளும் நாயகன் கலை போந்து புவி மிசைத் தோன்றினான் இந்தச்
சீதக் குவளை விழியினான் என்று செப்புவார் உண்மை தெளித்தவர்

#82
நான் எனும் ஆணவம் தள்ளலும் இந்த ஞாலத்தைத் தான் எனக் கொள்ளலும் பர
மோன நிலையின் நடத்தலும் ஒரு மூவகைக் காலம் கடத்தலும் நடு
வான கருமங்கள் செய்தலும் உயிர் யாவிற்கும் நல் அருள் பெய்தலும் பிறர்
ஊனைச் சிதைத்திடும் போதினும் தனது உள்ளம் அருளின் நெகுதலும்

#83
ஆயிரம் கால முயற்சியால் பெறலாவர் இப் பேறுகள் ஞானியர் இவை
தாயின் வயிற்றில் பிறந்த அன்றே தமைச் சார்ந்து விளங்கப்பெறுவரேல் இந்த
மா இரு ஞாலம் அவர்தமைத் தெய்வ மாண்புடையார் என்று போற்றும் காண் ஒரு
பேயினை வேதம் உணர்த்தல் போல் கண்ணன் பெற்றி உனக்கு எவர் பேசுவார்
**10 துரியோதனன் சினங் கொள்ளுதல்
**வேறு

#84
வெற்றி வேல் கைப் பரதர்தம் கோமான் மேன்மைகொண்ட விழி அகத்து உள்ளோன்
பெற்றி மிக்க விதுரன் அறிவைப் பின்னும் மற்றொரு கண் எனக் கொண்டோன்
முற்று உணர் திரிதராட்டிரன் என்போன் மூடப் பிள்ளைக்கு மாமன் சொல் வார்த்தை
எற்றி நல்ல வழக்குரை செய்தே ஏன்றவாறு நயங்கள் புகட்ட

#85
கொல்லலும் நோய்க்கு மருந்து செய் போழ்தில் கூடும் வெம்மையதாய்ப் பிணக்குற்றே
தொல் உணர்வின் மருத்துவன்தன்னைச் சோர்வுறுத்துதல் போல் ஒரு தந்தை
சொல்லும் வார்த்தையிலே தெருளாதான் தோம் இழைப்பதில் ஓர் மதியுள்ளான்
கல்லும் ஒப்பிடத் தந்தை விளக்கும் கட்டுரைக்குக் கடும் சினமுற்றான்
**11 துரியோதனன் தீ மொழி
**வேறு

#86
பாம்பைக் கொடி என்று உயர்த்தவன் அந்தப் பாம்பு எனச் சீறி மொழிகுவான் அட
தாம் பெற்ற மைந்தர்க்குத் தீது செய்திடும் தந்தையர் பார் மிசை உண்டு-கொல் கெட்ட
வேம்பு நிகர் இவனுக்கு நான் சுவை மிக்க சருக்கரை பாண்டவர் அவர்
தீம்பு செய்தாலும் புகழ்கின்றான் திருத் தேடினும் என்னை இகழ்கின்றான்

#87
மன்னர்க்கு நீதி ஒருவகை பிற மாந்தர்க்கு நீதி மற்றோர் வகை என்று
சொன்ன வியாழ முனிவனை இவன் சுத்தமடையன் என்று எண்ணியே மற்றும்
என்னென்னவோ கதை சொல்கிறான் உறவு என்றும் நட்பு என்றும் கதைக்கிறான் அவர்
சின்னமுறச் செயவே திறம்கெட்ட செத்தை என்று என்னை நினைக்கிறான்

#88
இந்திர போகங்கள் என்கிறான் உணவு இன்பமும் மாதரின் இன்பமும் இவன்
மந்திரமும் படை மாட்சியும் கொண்டு வாழ்வதைவிட்டு இங்கு வீணிலே பிறர்
செந்திருவைக் கண்டு வெம்பியே உளம் தேம்புதல் பேதைமை என்கிறான் மன்னர்
தந்திரம் தேர்ந்தவர்தம்மிலே எங்கள் தந்தையை ஒப்பவர் இல்லை காண்

#89
மாதர்தம் இன்பம் எனக்கு என்றான் புவி மண்டலத்து ஆட்சி அவர்க்கு என்றான் நல்ல
சாதமும் நெய்யும் எனக்கு என்றான் எங்கும் சாற்றிடும் கீர்த்தி அவர்க்கு என்றான் அட
ஆதரவு இங்ஙனம் பிள்ளை மேல் வைக்கும் அப்பன் உலகினில் வேறு உண்டோ உயிர்ச்
சோதரர் பாண்டவர் தந்தை நீ குறைசொல்ல இனி இடம் ஏதையா

#90
சொல்லின் நயங்கள் அறிந்திலேன் உனைச் சொல்லினில் வெல்ல விரும்பிலேன் கருங்
கல்லிடை நார் உரிப்பார் உண்டோ நினைக் காரணம் காட்டுதல் ஆகுமோ என்னைக்
கொல்லினும் வேறு எது செய்யினும் நெஞ்சில் கொண்ட கருத்தை விடுகிலேன் அந்தப்
புல்லிய பாண்டவர் மேம்படக் கண்டு போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன்

#91
வாது நின்னோடு தொடுக்கிலேன் ஒரு வார்த்தை மட்டும் சொலக் கேட்பையால் ஒரு
தீது நமக்கு வராமலே வெற்றி சேர்வதற்கு ஓர் வழி உண்டு காண் களிச்
சூதுக்கு அவரை அழைத்து எலாம் அதில் தோற்றிடுமாறு புரியலாம் இதற்கு
ஏதும் தடைகள் சொல்லாமலே எனது எண்ணத்தை நீ கொளல் வேண்டுமால்
**12 திரிதராட்டிரன் பதில்
** வேறு

#92
திரிதராட்டிரன் செவியில் இந்தத் தீமொழி புகுதலும் திகைத்துவிட்டான்
பெரிதாத் துயர் கொணர்ந்தாய் கொடும் பேய் எனப் பிள்ளைகள் பெற்றுவிட்டேன்
அரி தாக்குதல் போலே அமர் ஆங்கு அவரொடு பொரல் அவலம் என்றேன்
நரி தாக்குதல் போலாம் இந்த நாணமில் செயலினை நாடுவனோ

#93
ஆரியர் செய்வாரோ இந்த ஆண்மையிலாச் செயல் எண்ணுவரோ
பாரினில் பிறர் உடைமை வெஃகும் பதரினைப் போல் ஒரு பதர் உண்டோ
பேரியல் செல்வங்களும் இசைப் பெருமையும் எய்திட விரும்புதியேல்
காரியம் இதுவாமோ என்றன் காளை அன்றோ இது கருதலடா

#94
வீரனுக்கே இசைவார் திரு மேதினி எனும் இரு மனைவியர் தாம்
ஆர் அமர் தமரல்லார் மிசை ஆற்றி நல் வெற்றியில் ஓங்குதியேல்
பாரதநாட்டினிலே அந்தப் பாண்டவர் எனப் புகழ் படைத்திடுவாய்
சோரர்தம் மகனோ நீ உயர் சோமன்றன் ஒரு குலத்தோன்றல் அன்றோ

#95
தம் ஒரு கருமத்திலே நித்தம் தளர்வறு முயற்சி மற்றோர் பொருளை
இம்மியும் கருதாமை சார்ந்திருப்பவர்தமை நன்கு காத்திடுதல்
இம்மையில் இவற்றினையே செல்வத்து இலக்கணம் என்றனர் மூதறிஞர்
அம்ம இங்கு இதனை எலாம் நீ அறிந்திலையோ பிழை ஆற்றல் நன்றோ

#96
நின்னுடைத் தோளனையார் இளநிருபரைச் சிதைத்திட நினைப்பாயோ
என்னுடை உயிர் அன்றோ எனை எண்ணி இக் கொள்கையை நீக்குதியால்
பொன்னுடை மார்பகத்தார் இளம் பொன் கொடி மாதரைக் களிப்பதினும்
இன்னும் பல் இன்பத்தினும் உளம் இசையவிட்டே இதை மறந்திடடா
**13 துரியோதனன் பதில்

#97
தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே தார் இசைந்த நெடு வரைத் தோளான்
எந்தை நின்னொடு வாதிடல் வேண்டேன் என்று பல் முறை கூறியும் கேளாய்
வந்த காரியம் கேட்டி மற்று ஆங்கு உன் வார்த்தை இன்றி அப் பாண்டவர் வாரார்
இந்த வார்த்தை உரைத்துவிடாயேல் இங்கு நின் முன் என் ஆவி இறுப்பேன்

#98
மதி தமக்கென்று இலாதவர் கோடி வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும்
பதியும் சாத்திரத்து உள் உறை காணார் பானைத் தேனில் அகப்பையைப் போல்வார்
துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச் சுருதியாம் எனக் கொண்டனை நீதான்
அதிக மோகம் அவன் உளம்கொண்டான் ஐவர் மீதில் இங்கு எம்மை வெறுப்பான்

#99
தலைவன் ஆங்கு பிறர் கையில் பொம்மை சார்ந்து நிற்பவர்க்கு உய்ந்நெறி உண்டோ
உலைவு அலால் திரிதாட்டிர வர்க்கத்து உள்ளவர்க்கு நலம் என்பது இல்லை
நிலையிலாதன செல்வமும் மாண்பும் நித்தம் தேடி வருந்தல் இலாமே
விலையிலா நிதி கொண்டனம் என்றே மெய் குழைந்து துயில்பவர் மூடர்

#100
பழைய வான் நிதி போதும் என்று எண்ணிப் பாங்கு காத்திடும் மன்னவர் வாழ்வை
விழையும் அன்னியர் ஓர் கணத்துற்றே வென்று அழிக்கும் விதி அறியாயோ
குழைத்தல் என்பது மன்னவர்க்கு இல்லை கூடக்கூடப் பின் கூட்டுதல் வேண்டும்
பிழை ஒன்றே அரசர்க்கு உண்டு கண்டாய் பிறரைத் தாழ்த்துவதில் சலிப்பு எய்தல்
**வேறு

#101
வெல்வது எம் குலத்தொழிலாம் எந்தவிதத்தினில் இசையினும் தவறிலை காண்
நல்வழி தீயவழி என நாம் அதில் சோதனை செயத் தகுமோ
செல்வழி யாவினுமே பகை தீர்த்திடல் சாலும் என்றனர் பெரியோர்
கொல்வதுதான் படையோ பகை குமைப்பன யாவும் நல் படை அலவோ
** வேறு

#102
சுற்றத்தார் இவர் என்றனை ஐயா தோற்றத்தாலும் பிறவியினாலும்
பற்றலார் என்றும் நண்பர்கள் என்றும் பார்ப்பது இல்லை உலகினில் யாரும்
மற்று எத்தாலும் பகையுறல் இல்லை வடிவினில் இல்லை அளவினில் இல்லை
உற்ற துன்பத்தினால் பகை உண்டாம் ஓர் தொழில் பயில்வார்தமக்குள்ளே

#103
பூமித் தெய்வம் விழுங்கிடும் கண்டாய் புரவலர் பகை காய்கிலர்தம்மை
நாம் இப் பூதலத்தே குறைவு எய்த நாளும் பாண்டவர் ஏறுகின்றாரால்
நேமி மன்னர் பகை சிறிது என்றே நினைவு அயர்ந்திருப்பார் எனில் நோய் போல்
சாமி அந்தப் பகை மிகலுற்றே சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய்

#104
போர்செய்வோம் எனில் நீ தடுக்கின்றாய் புவியினோரும் பழி பல சொல்வார்
தார் செய் தோள் இளம் பாண்டவர்தம்மைச் சமரில் வெல்வதும் ஆங்கு எளிது அன்றாம்
யார் செய் புண்ணியத்தோ நமக்கு உற்றான் எங்கள் ஆருயிர் போன்ற இ மாமன்
நேர்செய் சூதினில் வென்று தருவான் நீதித் தர்மனும் சூதில் அன்புள்ளோன்

#105
பகைவர் வாழ்வினில் இன்புறுவாயோ பாரதர்க்கு முடி மணி அன்னாய்
புகையும் என்றன் உளத்தினை வீறில் புன்சொல் கூறி அவித்திடலாமோ
நகைசெய்தார்தமை நாளை நகைப்போம் நமர் இப் பாண்டவர் என்னில் இஃதாலே
மிகையுறும் துன்பம் ஏது நம்மோடு வேறுறாது எமைச் சார்ந்து நன்கு உய்வார்

#106
ஐய சூதிற்கு அவரை அழைத்தால் ஆடி உய்குதும் அஃது இயற்றாயேல்
பொய் அன்று என் உரை என் இயல் போர்வாய் பொய்ம்மை வீறு என்றும் சொல்லியது உண்டோ
நைய நின் முனர் என் சிரம் கொய்தே நான் இங்கு ஆவி இறுத்திடுவேனால்
செய்யலாவது செய்குதி என்றான் திரிதராட்டிரன் நெஞ்சம் உடைந்தான்
**14 திரிதராட்டிரன் சம்மதித்தல்
** வேறு

#107
விதி செயும் விளைவினுக்கே இங்கு வேறு செய்வார் புவி மீது உளரோ
மதி செறி விதுரன் அன்றே இது வரும் திறன் அறிந்து முன் எனக்கு உரைத்தான்
அதிசயக் கொடுங்கோலம் விளைந்து அரசர்தம் குலத்தினை அழிக்கும் என்றான்
சதிசெயத் தொடங்கிவிட்டாய் நின்றன் சதியினில்தான் அது விளையும் என்றான்

#108
விதி விதி விதி மகனே இனி வேறு எது சொல்லுவன் அட மகனே
கதியுறும் காலன் அன்றோ இந்தக் கயமகன் என நினைச் சார்ந்துவிட்டான்
கொதியுறும் உளம் வேண்டா நின்றன் கொள்கையின்படி அவர்தமை அழைப்பேன்
வதியுறு மனை செல்வாய் என்று வழியும் கண்ணீரொடு விடைகொடுத்தான்
**15 சபா நிர்மாணம்
** வேறு

#109
மஞ்சனும் மாமனும் போயின பின்னர் மன்னன் வினைஞர் பலரை அழைத்தே
பஞ்சவர் வேள்வியில் கண்டது போலப் பாங்கின் உயர்ந்ததொர் மண்டபம் செய்வீர்
மிஞ்சு பொருள் அதற்கு ஆற்றுவன் என்றான் மிக்க உவகையொடு ஆங்கு அவர் சென்றே
கஞ்ச மலரில் கடவுள் வியப்பக் கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே

#110
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும் வண்மைக் கவிஞர் கனவினைப் போலும்
நல்ல தொழில் உணர்ந்தார் செயல் என்றே நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறக்
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு காமர் மணிகள் சிலசில சேர்த்துச்
சொல்லை இசைத்துப் பிறர் செயுமாறே சுந்தரமாம் ஒரு காப்பியம் செய்தார்
**16 விதுரனைத் தூதுவிடல்

#111
தம்பி விதுரனை மன்னன் அழைத்தான் தக்க பரிசுகள் கொண்டு இனிது ஏகி
எம்பியின் மக்கள் இருந்து அரசாளும் இந்திரமாநகர் சார்ந்து அவர்தம்பால்
கொம்பினை ஒத்த மடப்பிடியோடும் கூடி இங்கு எய்தி விருந்து களிக்க
நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான் நல்லதொர் நுந்தை என உரைசெய்வாய்

#112
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும் நல் மணிமண்டபம் செய்ததும் சொல்வாய்
நீடு புகழ் பெரு வேள்வியில் அ நாள் நேயமொடு ஏகித் திரும்பிய பின்னர்
பீடுறு மக்களை ஓர் முறை இங்கே பேணி அழைத்து விருந்துகள் ஆற்றக்
கூடும் வயதில் கிழவன் விரும்பிக் கூறினன் இஃது எனச் சொல்லுவை கண்டாய்

#113
பேச்சின் இடையில் சகுனி சொல் கேட்டே பேய் எனும் பிள்ளை கருத்தினில் கொண்ட
தீச் செயல் இஃது என்று அதையும் குறிப்பால் செப்பிடுவாய் என மன்னவன் கூறப்
போச்சுது போச்சுது பாரதநாடு போச்சுது நல் அறம் போச்சுது வேதம்
ஆச்சரியக் கொடுங்கோலங்கள் காண்போம் ஐய இதனைத் தடுத்தல் அரிதோ

#114
என்று விதுரன் பெரும் துயர்கொண்டே ஏங்கிப் பல சொல் இயம்பிய பின்னர்
சென்று வருகுதி தம்பி இனிமேல் சிந்தனை ஏதும் இதில் செயமாட்டேன்
வென்று படுத்தனன் வெவ் விதி என்னை மேலை விளைவுகள் நீ அறியாயோ
அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கு எளிது என்று மெய் சோர்ந்து விழுந்தான்
**17 விதுரன் தூது செல்லுதல்

#115
அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான்
அடவி மலை ஆறு எல்லாம் கடந்துபோகித்
திண்ணமுறு தடம் தோளும் உளமும் கொண்டு
திரு மலியப் பாண்டவர்தாம் அரசு செய்யும்
வண்ணம் உயர் மணி நகரின் மருங்கு செல்வான்
வழி இடையே நாட்டின் உறு வளங்கள் நோக்கி
எண்ணமுறலாகித் தன் இதயத்துள்ளே
இனைய பல மொழி கூறி இரங்குவானால்

#116
நீல முடி தரித்த பல மலை சேர் நாடு
நீர் அமுதம் எனப் பாய்ந்து நிரம்பும் நாடு
கோலமுறு பயன் மரங்கள் செறிந்து வாழும்
குளிர் காவும் சோலைகளும் குலவும் நாடு
ஞாலம் எலாம் பசி இன்றிக் காத்தல் வல்ல
நன்செய்யும் புன்செய்யும் நலம் மிக்கு ஓங்கப்
பாலடையும் நறு நெய்யும் தேனும் உண்டு
பண்ணவர் போல் மக்கள் எலாம் பயிலும் நாடு

#117
அன்னங்கள் பொன் கமலத் தடத்தின் ஊர
அளி முரலக் கிளி மழலை அரற்றக் கேட்போர்
கன்னங்கள் அமுது ஊறக் குயில்கள் பாடும்
கா இனத்து நறு மலரின் கமழைத் தென்றல்
பொன் அங்க மணி மடவார் மாடம் மீது
புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச
வன்னம் கொள் வரைத்தோளார் மகிழ மாதர்
மையல் விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு

#118
பேர் அறமும் பெரும் தொழிலும் பிறங்கும் நாடு
பெண்கள் எல்லாம் அரம்பையர் போல் ஒளிரும் நாடு
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி
கேள்வி எனும் இவை எல்லாம் விளங்கும் நாடு
சோரம் முதல் புன்மை எதும் தோன்றா நாடு
தொல் உலகின் முடி மணி போல் தோன்றும் நாடு
பாரதர்தம் நாட்டிலே நாசம் எய்தப்
பாவியேன் துணைபுரியும் பான்மை என்னே
**18 விதுரனை வரவேற்றல்
**வேறு

#119
விதுரன் வரும் செய்தி தாம் செவியுற்றே வீறுடை ஐவர் உளம் மகிழ் பூத்துச்
சதுரங்க சேனையுடன் பல பரிசும் தாளமும் மேளமும் தாம் கொண்டுசென்றே
எதிர்கொண்டு அழைத்து மணிமுடி தாழ்த்தி ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி
மதுர மொழியில் குசலங்கள் பேசி மன்னனொடும் திருமாளிகை சேர்ந்தார்

#120
குந்தி எனும் பெயர்த் தெய்வதம்தன்னைக் கோமகன் கண்டு வணங்கிய பின்னர்
வெம் திறல் கொண்ட துருபதன் செல்வம் வெள்கித் தலைகுனிந்து ஆங்கு வந்து எய்தி
அந்தி மயங்க விசும்பிடைத் தோன்றும் ஆசைக் கதிர் மதி அன்ன முகத்தை
மந்திரம் தேர்ந்ததொர் மாமன் அடிக்கண் வைத்து வணங்கி வனப்புற நின்றான்

#121
தங்கப் பதுமை என வந்து நின்ற தையலுக்கு ஐயன் நல் ஆசிகள் கூறி
அங்கம் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர் ஆங்கு வந்துற்ற உறவினர் நண்பர்
சிங்கம் எனத் திகழ் வீரர் புலவர் சேவகர் யாரொடும் செய்திகள் பேசிப்
பொங்கு திருவின் நகர்வலம் வந்து போழ்து கழிந்து இரவாகிய பின்னர்
**19 விதுரன் அழைத்தல்

#122
ஐவர்தமையும் தனிக் கொண்டுபோகி ஆங்கு ஒரு செம்பொன் அரங்கில் இருந்தே
மை வரைத் தோளன் பெரும் புகழாளன் மா மகள் பூமகட்கு ஓர் மணவாளன்
மெய் வரு கேள்வி மிகுந்த புலவன் வேந்தர்பிரான் திரிதாட்டிரக் கோமான்
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மைச் சீரொடு நித்தலும் வாழ்க என வாழ்த்தி

#123
உங்களுக்கு என்னிடம் சொல்லி விடுத்தான் ஓர் செய்தி மற்று அஃது உரைத்திடக் கேளீர்
மங்களம் வாய்ந்த நல் அத்திபுரத்தே வையகம் மீதில் இணையற்றதாகத்
தங்கும் எழில் பெரு மண்டபம் ஒன்று தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர்
அங்கு அதன் விந்தை அழகினைக் காண அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன்

#124
வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து மீண்டு பல தினம் ஆயினவேனும்
வாள் வைக்கும் நல் விழி மங்கையோடே நீர் வந்து எங்கள் ஊரில் மறுவிருந்தாட
நாள் வைக்கும் சோதிடரால் இது மட்டும் நாயகன் நும்மை அழைத்திடவில்லை
கேள்விக்கு ஒரு மிதிலாதிபன் ஒத்தோன் கேடற்ற மாதம் இது எனக் கண்டே

#125
வந்து விருந்து களித்திட நும்மை வாழ்த்தி அழைத்தனன் என் அரு மக்காள்
சந்து கண்டே அச் சகுனி சொல் கேட்டுத் தன்மை இழந்த சுயோதன மூடன்
விந்தை பொருந்திய மண்டபத்து உம்மை வெய்ய புன் சூது களித்திடச் செய்யும்
மந்திரம் ஒன்றும் மனத்திடைக் கொண்டான் வன்மம் இதுவும் நுமக்கு அறிவித்தேன்
**20 தருமபுத்திரன் பதில்

#126
என்று விதுரன் இயம்பத் தருமன் எண்ணம் கலங்கிச் சில சொல் உரைப்பான்
மன்று புனைந்தது கேட்டும் இச் சூதின் வார்த்தையைக் கேட்டும் இங்கு என்றன் மனத்தே
சென்று வருத்தம் உளைகின்றது ஐயா சிந்தையில் ஐயம் விளைகின்றது ஐயா
நன்று நமக்கு நினைப்பவனல்லன் நம்பல் அரிது சுயோதனன்தன்னை

#127
கொல்லக் கருதிச் சுயோதனன் முன்பு சூத்திரமான சதி பல செய்தான்
சொல்லப்படாது அவனால் எமக்கு ஆன துன்பம் அனைத்தையும் நீ அறியாயோ
வெல்லக் கடவர் எவர் என்ற போதும் வேந்தர்கள் சூதை விரும்பிடலாமோ
தொல்லைப்படும் என் மனம் தெளிவு எய்தச் சொல்லுதி நீ ஒரு சூழ்ச்சி இங்கு என்றான்
**21 விதுரன் பதில்
** வேறு

#128
விதுரனும் சொல்லுகிறான் இதை விடம் எனச் சான்றவர் வெகுளுவர் காண்
சதுர் எனக் கொள்ளுவரோ இதன் தாழ்மை எலாம் அவர்க்கு உரைத்துவிட்டேன்
இது மிகத் தீது என்றே அண்ணன் எத்தனை சொல்லியும் இளவரசன்
மது மிகுத்து உண்டவன் போல் ஒரு வார்த்தையையே பற்றிப் பிதற்றுகிறான்

#129
கல் எனில் இணங்கிவிடும் அண்ணன் காட்டிய நீதிகள் கணக்கிலவாம்
புல்லன் அங்கு அவற்றை எலாம் உளம் புகுதவொட்டாது தன் மடமையினால்
சல்லியச் சூதினிலே மனம் தளர்வற நின்றிடும் தகைமை சொன்னேன்
சொல்லிய குறிப்பு அறிந்தே நலம் தோன்றிய வழியினைத் தொடர்க என்றான்
**22 தருமபுத்திரன் தீர்மானம்

#130
தருமனும் இவ்வளவில் உளத் தளர்ச்சியை நீக்கி ஒர் உறுதிகொண்டே
பருமம் கொள் குரலினனாய் மொழி பகைத்திடல் இன்றி இங்கு இவை உரைப்பான்
மருமங்கள் எவை செயினும் மதி மருண்டவர் விருந்து அறம் சிதைத்திடினும்
கருமம் ஒன்றே உளதாம் நங்கள் கடன் அதை நெறிப்படி புரிந்திடுவோம்

#131
தந்தையும் வரப் பணித்தான் சிறுதந்தையும் தூதுவந்து அதை உரைத்தான்
சிந்தை ஒன்று இனி இல்லை எது சேரினும் நலம் எனத் தெளிந்துவிட்டேன்
முந்தை அச் சிலை ராமன் செய்த முடிவினை நம்மவர் மறப்பதுவோ
நொந்தது செயமாட்டோம் பழநூலினுக்கு இணங்கிய நெறி செல்வோம்

#132
ஐம் பெரும் குரவோர் தாம் தரும் ஆணையைக் கடப்பதும் அறநெறியோ
வெம் பெரு மத யானை பரி வியன் தேர் ஆளுடன் இரு தினத்தில்
பைம் பொழில் அத்திநகர் செலும் பயணத்திற்கு உரியன புரிந்திடுவாய்
மொய்ம்புடை விறல் வீமா என மொழிந்தனன் அறநெறி முழுது உணர்ந்தான்
**23 வீமனுடைய வீரப்பேச்சு

#133
வீமனும் திகைத்துவிட்டான் இள விசயனை நோக்கி இங்கு இது சொலுவான்
மாமனும் மருமகனுமா நமை அழித்திடக் கருதி இவ் வழி தொடர்ந்தார்
தாமதம்செய்வோமோ செலத் தகும் தகும் என இடியுற நகைத்தான்
கோமகன் உரைப்படியே படை கொண்டுசெல்வோம் ஒரு தடை இலை காண்

#134
நெடுநாள் பகை கண்டாய் இந்த நினைவினில் யான் கழித்தன பல நாள்
கெடும் நாள் வருமளவும் ஒரு கிருமியை அழிப்பவர் உலகில் உண்டோ
படு நாள் குறி அன்றோ இந்தப் பாதகம் நினைப்பவர் நினைத்ததுதான்
விடு நாண் கோத்திடடா தம்பி வில்லினுக்கு இரை மிக விளையுதடா

#135
போரிடச் செல்வமடா மகன் புலைமையும் தந்தையின் புலமைகளும்
யாரிடம் அவிழ்க்கின்றார் இதை எத்தனை நாள் வரை பொறுத்திருப்போம்
பாரிடத்து இவரொடு நாம் எனப் பகுதி இவ் இரண்டிற்கும் காலம் ஒன்றில்
நேரிட வாழ்வு உண்டோ இரு நெருப்பினுக்கு இடையினில் ஒரு விறகோ
**24 தருமபுத்திரன் முடிவுரை
** வேறு

#136
வீமன் உரைத்தது போலவே உளம் வெம்பி நெடு வில் விசயனும் அங்கு
காமனும் சாமனும் ஒப்பவே நின்ற காளை இளைஞர் இருவரும் செய்ய
தாமரைக்கண்ணன் யுதிட்டிரன் சொல்லைத் தட்டிப் பணிவொடு பேசினார் தவ
நேமத் தவறலும் உண்டு காண் நரர் நெஞ்சம் கொதித்திடு போழ்திலே

#137
அன்பும் பணிவும் உருக்கொண்டோர் அணுவாயினும் தன் சொல் வழாதவர் அங்கு
வன்பு மொழி சொலக் கேட்டனன் அற மன்னவன் புன்னகை பூத்தனன் அட
முன்பு சுயோதனன் செய்ததும் இன்று மூண்டிருக்கும் கொடுங்கோலமும் இதன்
பின்பு விளைவதும் தேர்ந்துளேன் என்னைப் பித்தன் என்று எண்ணி உரைத்திட்டீர்

#138
கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்தன் கணக்கில் சுழன்றிடும் சக்கரம் அது
தப்பி மிகையும் குறையுமாச் சுற்றும் தன்மை அதற்கு உளதாகுமோ இதை
ஒப்பிடலாகும் புவியின் மேல் என்றும் உள்ள உயிர்களின் வாழ்விற்கே ஒரு
செப்பிடுவித்தையைப் போலவே புவிச் செய்திகள் தோன்றிடுமாயினும்

#139
இங்கு இவை யாவும் தவறிலா விதி ஏற்று நடக்கும் செயல்களாம் முடிவு
எங்கணும் இன்றி எவற்றினும் என்றும் ஏறி இடையின்றிச் செல்வதாம் ஒரு
சங்கிலி ஒக்கும் விதி கண்டீர் வெறும் சாத்திரம் அன்று இது சத்தியம் நின்று
மங்கி ஒர் நாளில் அழிவதாம் நங்கள் வாழ்க்கை இதனைக் கடந்ததோ

#140
தோன்றி அழிவது வாழ்க்கைதான் இங்குத் துன்பத்தொடு இன்பம் வெறுமையாம் இவை
மூன்றில் எது வருமாயினும் களி மூழ்கி நடத்தல் முறை கண்டீர் நெஞ்சில்
ஊன்றிய கொள்கை தழைப்பரோ துன்பம் உற்றிடும் என்பதொர் அச்சத்தால் விதி
போன்று நடக்கும் உலகு என்றே கடன் போற்றி ஒழுகுவர் சான்றவர்

#141
சேற்றில் உழலும் புழுவிற்கும் புவிச் செல்வம் உடைய அரசர்க்கும் பிச்சை
ஏற்று உடல் காத்திடும் ஏழைக்கும் உயிர் எத்தனை உண்டு அவை யாவிற்கும் நித்தம்
ஆற்றுதற்கு உள்ள கடமைதான் முன்வந்து அவ்வக்கணம்தொறும் நிற்குமால் அது
தோற்றும் பொழுதில் புரிகுவார் பல சூழ்ந்து கடமை அழிப்பரோ

#142
யாவருக்கும் பொது ஆயினும் சிறப்பு என்பர் அரசர்குலத்திற்கே உயர்
தேவரை ஒப்ப முன்னோர்தமைத் தங்கள் சிந்தையில் கொண்டு பணிகுதல் தந்தை
ஏவலை மைந்தர் புரிதற்கே வில் இராமன் கதையையும் காட்டினேன் புவிக்
காவலர்தம்மில் சிறந்த நீர் இன்று கர்மம் பிழைத்திடுவீர்-கொலோ
**25 நால்வரும் சம்மதித்தல்
** வேறு

#143
என்று இனைய நீதி பல தருமராசன்
எடுத்துரைப்ப இளைஞர்களும் தம் கைகூப்பிக்
குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கைப் போலக்
குவலயத்திற்கு அறம் காட்டத் தோன்றினாய் நீ
வென்றி பெறும் திருவடியாய் நினது சொல்லை
மீறி ஒரு செயல் உண்டோ ஆண்டான் ஆணை
அன்றி அடியார்தமக்குக் கடன் வேறு உண்டோ
ஐயனே பாண்டவர்தம் ஆவி நீயே

#144
துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின் வாய்ச்
சொல்லை மறுத்து உரைத்தோமோ நின்பால் உள்ள
அன்பு மிகையால் அன்றோ திருவுளத்தின்
ஆக்கினையை எதிர்த்து உரைத்தோம் அறிவில்லாமல்
மன்பதையின் உளச் செயல்கள் தெளியக் காணும்
மன்னவனே மற்று அது நீ அறியாது ஒன்றோ
வன்பு மொழி பொறுத்தருள்வாய் வாழி நின் சொல்
வழிச் செல்வோம் எனக் கூறி வணங்கிச் சென்றார்
**26 பாண்டவர் பயணமாதல்

#145
ஆங்கு அதன் பின் மூன்றாம் நாள் இளைஞரோடும்
அணியிழை அப் பாஞ்சாலர் விளக்கினோடும்
பாங்கினுறு பரிசனங்கள் பலவினோடும்
படையினோடும் இசையினோடும் பயணமாகித்
தீங்கதனைக் கருதாத தருமக் கோமான்
திருநகர் விட்டு அகல்கின்றான் தீயோர் ஊர்க்கே
நீங்கி அகன்றிடலாகும் தன்மை உண்டோ
நெடும் கரத்து விதி காட்டும் நெறியில் நின்றே

#146
நரி வகுத்த வலையினிலே தெரித்து சிங்கம்
நழுவி விழும் சிற்றெறும்பால் யானை சாகும்
வரி வகுத்த உடல் புலியைப் புழுவும் கொல்லும்
வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார்
கிரி வகுத்த ஓடையிலே மிதத்து செல்லும்
கீழ்மேலாம் மேல்கீழாம் கிழக்குமேற்காம்
புரி வகுத்த முந்நூலார் புலையர்தம்மைப்
போற்றிடுவார் விதி வகுத்த போழ்தின் அன்றே
**27 மாலை வருணனை

#147
மாலைப் போது ஆதலுமே மன்னன் சேனை
வழியிடை ஓர் பூம் பொழிலின் அமர்ந்த காலை
சேலைப் போல் விழியாளைப் பார்த்தன் கொண்டு
சென்று ஆங்கு ஓர் தனியிடத்தே பசும்புல் மேட்டில்
மேலைப் போம் பரிதியினைத் தொழுது கண்டான்
மெல்லியலும் அவன் தொடை மேல் மெல்லச் சாய்ந்து
பாலைப் போல் மொழி பிதற்ற அவளை நோக்கிப்
பார்த்தனும் அப் பரிதி எழில் விளக்குகின்றான்

#148
பாரடியோ வானத்தில் புதுமை எல்லாம்
பண்மொழீ கணம்தோறும் மாறிமாறி
ஓர் அடி மற்றோர் அடியோடு ஒத்தல் இன்றி
உவகையுற நவநவமாத் தோன்றுங் காட்சி
யாரடி இங்கு இவை போலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்
சீர் அடியால் பழவேத முனிவர் போற்றும்
செழும் சோதி வனப்பை எலாம் சேரக் காண்பாய்

#149
கணம்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்
கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்
கணம்தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றும்
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே
கணம்தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டிக்
காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம்
கணம்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்

#150
அடிவானத்தே அங்கு பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
இடி வானத்து ஒளி மின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே
மொய் குழலாய் சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்
வடிவானதொன்றாகத் தகடு இரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்

#151
அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே பின்னே
அசைவுறும் ஓர் மின் செய்த வட்டு முன்னே
சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய்
தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ
இமை குவிய மின் வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லாது இடையிடையே எழுதல் காண்பாய்
உமை கவிதை செய்கின்றாள் எழுந்து நின்றே
உரைத்திடுவோம் பல்லாண்டு வாழ்க என்றே
** வேறு

#152
பார் சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில்
எத்தனை தீப்பட்டு எரிவன ஓகோ
என்னடி இந்த வன்னத்து இயல்புகள்
எத்தனை வடிவம் எத்தனை கலவை
தீயின் குழம்புகள் செழும் பொன் காய்ச்சி 5
விட்ட ஓடைகள் வெம்மை தோன்றாமே
எரிந்திடும் தங்கத் தீவுகள் பாரடி
நீலப் பொய்கைகள் அடடா நீல
வன்னம் ஒன்றில் எத்தனை வகையடி
எத்தனை செம்மை பசுமையும் கருமையும் 10
எத்தனை கரிய பெரும்பெரும் பூதம்
நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத்
தோணிகள் சுடர் ஒளிப் பொன் கரை இட்ட
கரும் சிகரங்கள் காணடி ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம் பல மிதக்கும் 15
இருள் கடல் ஆஹா எங்கு நோக்கிடினும்
ஒளித் திரள் ஒளித் திரள் வன்னக் களஞ்சியம்
** வேறு

#153
செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக என்பதோர் நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே இவர்
தங்கள் இனங்கள் இருந்த பொழிலிடைச் சார்ந்தனர் பின்னர்
அங்கு அவ் இரவு கழிந்திட வைகறை ஆதலும் மன்னர் 5
பொங்கு கடல் ஒத்த சேனைகளோடு புறப்பட்டே வழி
எங்கும் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே கதிர்
மங்கிடும் முன் ஒளி மங்கும் நகரிடை வந்துற்றார்
**துரியோதனன் சூழ்ச்சிச் சுருக்கம் முற்றும்

@2 சூதாட்டச் சருக்கம்
**28 வாணியை வேண்டுதல்

#154
தெளிவுறவே அறிந்திடல் தெளிவு தர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே
களி வளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல் கண்ணீர்த்
துளி வளர உள் உருக்குதல் இங்கு இவை எல்லாம் நீ அருளும் தொழில்கள் அன்றோ
ஒளி வளரும் தமிழ் வாணீ அடியனேற்கு இவை அனைத்தும் உதவுவாயே
**29 பாண்டவர் வரவேற்பு

#155
அத்தினமாநகரத்தினில் வந்தனர் ஆரியப் பாண்டவர் என்றது கேட்டலும்
தத்தி எழுந்தன எண்ணரும் கூட்டங்கள் சந்திகள் வீதிகள் சாலைகள் சோலைகள்
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர் இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர்
இத் தினம்மட்டும் என வியப்பு எய்துற எள்ளும் விழற்கு இடம் இன்றி இருந்தார்

#156
மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர் வன் தடம் தோள் கொட்டி ஆர்த்தனர் மன்னவர்
வெம் திறல் யானையும் தேரும் குதிரையும் வீதிகள்தோறும் ஒலி மிகச் செய்தன
வந்தியர் பாடினர் வேசையர் ஆடினர் வாத்தியம் கோடி வகையின் ஒலித்தன
செந்திரு வாழும் நகரினில் அத் தினம் சேர்ந்த ஒலியைச் சிறிது எனலாமோ

#157
வாலிகன் தந்ததொர் தேர் மிசை ஏறி அ மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள்
நால் இயலாம் படையோடு நகரிடை நல்ல பவனி எழுந்த பொழுதினில்
சேல் இயல் கண்ணியர் பொன் விளக்கு ஏந்திடச் சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திடக்
கோலிய பூமழை பெய்திடத் தோரணம் கொஞ்ச நகர் எழில் கூடியது அன்றே
** வேறு

#158
மன்னவன் கோயிலிலே இவர் வந்து புகுந்தனர் வரிசையொடே
பொன் அரங்கினில் இருந்தான் கண்ணில் புலவனைப் போய் நின்று போற்றிய பின்
அன்னவன் ஆசி கொண்டே உயர் ஆரிய வீட்டுமன் அடி வணங்கி
வில் நயம் உணர் கிருபன் புகழ் வீரத் துரோணன் அங்கு அவன் புதல்வன்

#159
மற்று உள பெரியோர்கள்தமை வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கி நின்றார்
கொற்றம் மிக்கு உயர் கன்னன் பணிக் கொடியோன் இளையவர் சகுனியொடும்
பொன் தடம் தோள் சருவப் பெரும் புகழினர் தழுவினர் மகிழ்ச்சிகொண்டார்
நல் தவக் காந்தாரி முதல் நாரியர்தமை முறைப்படி தொழுதார்

#160
குந்தியும் இளங்கொடியும் வந்து கூடிய மாதர்தம்மொடு குலவி
முந்திய கதைகள் சொல்லி அன்பு மூண்டு உரையாடிப் பின் பிரிந்துவிட்டார்
அந்தியும் புகுந்ததுவால் பின்னர் ஐவரும் உடல் வலித் தொழில் முடித்தே
சந்தியும் சபங்களும் செய்து அங்கு சாரும் இன் உணவு அமுது உண்டதன் பின்

#161
சந்தன மலர் புனைந்தே இளம் தையலர் வீணை கொண்டு உயிர் உருக்கி
விந்தை கொள் பாட்டு இசைப்ப அதை விழைவொடு கேட்டனர் துயில்புரிந்தார்
வந்ததொர் துன்பத்தினை அங்கு மடித்திடல் அன்றிப் பின் வரும் துயர்க்கே
சிந்தனை உழல்வாரோ உளச் சிதைவின்மை ஆரியர் சிறப்பு அன்றோ
**30 பாண்டவர் சபைக்கு வருதல்

#162
பாணர்கள் துதி கூற இளம்பகலவன் எழும் முனர்த் துயிலெழுந்தார்
தோள் நலத்து இணையில்லார் தெய்வம் துதித்தனர் செய்ய பொன் பட்டு அணிந்து
பூண் அணிந்து ஆயுதங்கள் பல பூண்டு பொற்சபையிடைப் போந்தனரால்
நாணமில் கவுரவரும் தங்கள் நாயகனொடும் அங்கு வீற்றிருந்தார்

#163
வீட்டுமன்தான் இருந்தான் அற விதுரனும் பார்ப்பனக் குரவர்களும்
நாட்டு மந்திரிமாரும் பிற நாட்டினர் பலபல மன்னர்களும்
கேட்டினுக்கு இரையாவான் மதி கெடும் துரியோதனன் கிளையினரும்
மாட்டுறு நண்பர்களும் அந்த வான் பெரும் சபையிடை வணங்கிநின்றார்
**31 சூதுக்கு அழைத்தல்

#164
புன் தொழில் கவறதனில் இந்தப் புவி மிசை இணையிலை எனும் புகழான்
நன்று அறியாச் சகுனி சபை நடுவினில் ஏறு எனக் களித்து இருந்தான்
வென்றி கொள் பெரும் சூதர் அந்த விவிஞ்சதி சித்திரசேனனுடன்
குன்று சத்தியவிரதன் இதழ் கூர் புருமித்திரன் சயன் என்பார்

#165
சாலவும் அஞ்சுதரும் கெட்ட சதிக்குணத்தார் பல மாயம் வல்லோர்
கோல நல் சபைதனிலே வந்து கொக்கரித்து ஆர்ப்பரித்து இருந்தனரால்
மேலவர்தமை வணங்கி அந்த வெம் திறல் பாண்டவர் இளைஞர்தமை
ஆலமுற்றிடத் தழுவிச் செம்பொன் ஆதனத்து அமர்ந்த அப் பொழுதினிலே

#166
சொல்லுகின்றான் சகுனி அறத் தோன்றல் உன் வரவினைக் காத்து உளர் காண்
மல்லுறு தடம் தோளார் இந்த மன்னவர் அனைவரும் நெடும் பொழுதா
வில்லுறு போர்த்தொழிலால் புவி வென்று தம் குலத்தினை மேம்படுத்தீர்
வல்லுறு சூது எனும் போர்தனில் வலிமைகள் பார்க்குதும் வருதி என்றான்
**32 தருமன் மறுத்தல்

#167
தருமன் அங்கு இவை சொல்வான் ஐய சதியுறு சூதினுக்கு எனை அழைத்தாய்
பெருமை இங்கு இதில் உண்டோ அறப் பெற்றி உண்டோ மறப் பீடு உளதோ
வருமம் நின் மனத்து உடையாய் எங்கள் வாழ்வினை உகந்திலை எனல் அறிவேன்
இருமையும் கெடுப்பதுவாம் இந்த இழிதொழிலால் எமை அழித்தலுற்றாய்
**33 சகுனியின் ஏச்சு

#168
கலகல எனச் சிரித்தான் பழிக் கவற்றை ஒர் சாத்திரம் எனப் பயின்றோன்
பலபல மொழிகுவது ஏன் உனைப் பார்த்திவன் என்று எணி அழைத்துவிட்டேன்
நிலம் முழுது ஆட்கொண்டாய் தனி நீ எனப் பலர் சொலக் கேட்டதனால்
சில பொருள் விளையாட்டில் செலும் செலவினுக்கு அழிகலை என நினைத்தேன்

#169
பாரத மண்டலத்தார்தங்கள் பதி ஒரு பிசுனன் என்று அறிவேனோ
சோரம் இங்கு இதில் உண்டோ தொழில் சூது எனில் ஆடுநர் அரசர் அன்றோ
மா ரத வீரர் முன்னே நடு மண்டபத்தே பட்டப்பகலினிலே
சூரசிகாமணியே நின்றன் சொத்தினைத் திருடுவம் எனும் கருத்தோ

#170
அச்சம் இங்கு இதில் வேண்டா விரைந்து ஆடுவம் நெடும் பொழுதாயினதால்
கச்சை ஒர் நாழிகையா நல்ல காயுடன் விரித்து இங்கு கிடந்திடல் காண்
நிச்சயம் நீ வெல்வாய் வெற்றி நினக்கு இயல்பாயினது அறியாயோ
நிச்சயம் நீ வெல்வாய் பல நினைகுவது ஏன் களி தொடங்குக என்றான்
**34 தருமனின் பதில்
** வேறு

#171
தோல் விலைக்குப் பசுவினைக் கொல்லும் துட்டன் இவ் உரை கூறுதல் கேட்டே
நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன் உளம் நொந்து இவை கூறும்
தேவலப் பெயர் மா முனிவோனும் செய்ய கேள்வி அசிதனும் முன்னர்
காவலர்க்கு விதித்தது அ நூலில் கவறும் நஞ்சு எனக் கூறினர் கண்டாய்

#172
வஞ்சகத்தினில் வெற்றியை வேண்டார் மாயச் சூதைப் பழி எனக் கொள்வார்
அஞ்சல் இன்றிச் சமர்க்களத்து ஏறி ஆக்கும் வெற்றியதனை மதிப்பார்
துஞ்ச நேரினும் தூய சொல் அன்றிச் சொல் மிலேச்சரைப் போல் என்றும் சொல்லார்
மிஞ்சு சீர்த்தி கொள் பாரதநாட்டில் மேவும் ஆரியர் என்றனர் மேலோர்

#173
ஆதலால் இந்தச் சூதினை வேண்டேன் ஐய செல்வம் பெருமை இவற்றின்
காதலால் அரசாற்றுவனல்லேன் காழ்த்த நல் அறம் ஓங்கவும் ஆங்கே
ஓதலானும் உணர்த்துதலானும் உண்மை சான்ற கலைத் தொகை யாவும்
சாதல் இன்றி வளர்ந்திடுமாறும் சகுனி யான் அரசாளுதல் கண்டாய்

#174
என்னை வஞ்சித்து என் செல்வத்தைக் கொள்வோர் என்றனக்கு இடர் செய்பவரல்லர்
முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார் மூதுணர்வில் கலைத் தொகை மாய்ப்பார்
பின்னை என் உயிர்ப் பாரதநாட்டில் பீடை செய்யும் கலியை அழைப்பார்
நின்னை மிக்க பணிவொடு கேட்பேன் நெஞ்சில் கொள்கையை நீக்குதி என்றான்
**35 சகுனி வல்லுக்கு அழைத்தல்
** வேறு

#175
சாத்திரம் பேசுகின்றாய் எனத் தழல்படு விழியொடு சகுனி சொல்வான்
கோத்திரக் குல மன்னர் பிறர் குறைபடத் தம் புகழ் கூறுவரோ
நாத் திறன் மிக உடையாய் எனில் நம்மவர் காத்திடும் பழ வழக்கை
மாத்திரம் மறந்துவிட்டாய் மன்னர் வல்லினுக்கு அழைத்திடில் மறுப்பது உண்டோ

#176
தேர்ந்தவன் வென்றிடுவான் தொழில் தேர்ச்சியில்லாதவன் தோற்றிடுவான்
நேர்ந்திடும் வாட்போரில் குத்து நெறி அறிந்தவன் வெலப் பிறன் அழிவான்
ஓர்ந்திடு சாத்திரப் போர்தனில் உணர்ந்தவன் வென்றிட உணராதான்
சோர்ந்து அழிவு எய்திடுவான் இவை சூது என்றும் சதி என்றும் சொல்வாரோ

#177
வல்லவன் வென்றிடுவான் தொழில் வன்மையில்லாதவன் தோற்றிடுவான்
நல்லவன் அல்லாதான் என நாணமிலார் சொலும் கதை வேண்டா
வல் அமர் செய்திடவே இந்த மன்னர் முன்னே நினை அழைத்துவிட்டேன்
சொல்லுக வருவது உண்டேல் மனத் துணிவு இலையேல் அதும் சொல்லுக என்றான்
**36 தருமன் இணங்குதல்

#178
வெய்யதான விதியை நினைந்தான் விலக்கொணாது அறம் என்பது உணர்ந்தோன்
பொய்யதாகும் சிறு வழக்கு ஒன்றைப் புலனிலாதவர்தம் உடம்பாட்டை
ஐயன் நெஞ்சில் அறம் எனக் கொண்டான் ஐயகோ அந்த நாள் முதலாகத்
துய்ய சிந்தையர் எத்தனை மக்கள் துன்பம் இவ் வகை எய்தினர் அம்மா

#179
முன்பு இருந்ததொர் காரணத்தாலே மூடரே பொய்யை மெய் எனலாமோ
முன்பு எனச் சொலும் காலம் அதற்கு மூடரே ஓர் வரையறை உண்டோ
முன்பு எனச் சொலின் நேற்று முன்பேயாம் மூன்று கோடி வருடமும் முன்பே
முன்பு இருந்து எண்ணிலாது புவி மேல் மொய்த்த மக்கள் எலாம் முனிவோரோ

#180
நீர் பிறக்கும் முன் பார் மிசை மூடர் நேர்ந்தது இல்லை என நினைந்தீரோ
பார் பிறந்ததுதொட்டு இன்று மட்டும் பலப்பலப்பல பற்பல கோடி
கார் பிறக்கும் மழைத்துளி போலே கண்ட மக்கள் அனைவருள்ளேயும்
நீர் பிறப்பதன் முன்பு மடமை நீசத்தன்மை இருந்தன அன்றோ

#181
பொய் அழுக்கை அறம் என்று கொண்டும் பொய்யர் கேலியைச் சாத்திரம் என்றும்
ஐயகோ நங்கள் பாரதநாட்டில் அறிவிலார் அறப் பற்று மிக்குள்ளோர்
நொய்யர் ஆகி அழிந்தவர் கோடி நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன்
மெய் அறிந்தவர்தம்முள் உயர்ந்தோன் விதியினால் அத் தருமனும் வீழ்ந்தான்

#182
மதியினும் விதிதான் பெரிது அன்றோ வையம் மீது உளவாகும் அவற்றுள்
விதியினும் பெரிதோர் பொருள் உண்டோ மேலை நாம் செயும் கர்மம் அல்லாதே
நதியில் உள்ள சிறு குழிதன்னில் நான்கு திக்கிலிருந்தும் பல் மாசு
பதியுமாறு பிறர் செயும் கர்மப் பயனும் நம்மை அடைவது உண்டு அன்றோ
**37 சூதாடல்
** வேறு

#183
மாயச் சூதினுக்கே ஐயன் மனம் இணங்கிவிட்டான்
தாயம் உருட்டலானார் அங்கே சகுனி ஆர்ப்பரித்தான்
நேயமுற்ற விதுரன் போலே நெறியுளோர்கள் எல்லாம்
வாயை மூடிவிட்டார் தங்கள் மதி மயங்கிவிட்டார்

#184
அந்த வேளையதனில் ஐவர்க்கு அதிபன் இஃது உரைப்பான்
பந்தயங்கள் சொல்வாய் சகுனி பரபரத்திடாதே
விந்தையான செல்வம் கொண்ட வேந்தரோடு நீதான்
வந்து எதிர்த்துவிட்டாய் எதிரே வைக்க நிதியம் உண்டோ

#185
தருமன் வார்த்தை கேட்டே துரியோதனன் எழுந்து சொல்வான்
அருமையான செல்வம் என்பால் அளவிலாதது உண்டு
ஒரு மடங்கு வைத்தால் எதிரே ஒன்பதாக வைப்பேன்
பெருமை சொல்ல வேண்டா ஐயா பின் அடக்குக என்றான்

#186
ஒருவன் ஆடப் பணயம் வேறே ஒருவன் வைப்பது உண்டோ
தருமமாகுமோடா சொல்வாய் தம்பி இந்த வார்த்தை
வருமம் இல்லை ஐயா இங்கு மாமன் ஆடப் பணயம்
மருமகன் வைக்கொணாதோ இதிலே வந்த குற்றம் ஏதோ

#187
பொழுது போக்குதற்கே சூதுப் போர் தொடங்குகின்றோம்
அழுதல் ஏன் இதற்கே என்றே அங்கர் கோன் நகைத்தான்
பழுதிருப்பது எல்லாம் இங்கே பார்த்திவர்க்கு உரைத்தேன்
முழுதும் இங்கு இதற்கே பின்னர் முடிவு காண்பீர் என்றான்

#188
ஒளி சிறந்த மணியின் மாலை ஒன்றை அங்கு வைத்தான்
களி மிகுந்த பகைவன் எதிரே கன தனங்கள் சொன்னான்
விழி இமைக்கும் முன்னே மாமன் வென்று தீர்த்துவிட்டான்
பழி இலாத தருமன் பின்னும் பந்தயங்கள் சொல்வான்

#189
ஆயிரம் குடம் பொன் வைத்தே ஆடுவோம் இது என்றான்
மாயம் வல்ல மாமன் அதனை வசமது ஆக்கிவிட்டான்
பாயுமா ஒர் எட்டில் செல்லும் பாரமான பொன் தேர்
தாயம் உருட்டலானார் அங்கே சகுனி வென்றுவிட்டான்

#190
இளையரான மாதர் செம்பொன் எழில் இணைந்த வடிவும்
வளை அணிந்த தோளும் மாலை மணி குலுங்கும் மார்பும்
விளையும் இன்ப நூல்கள்தம்மில் மிக்க தேர்ச்சியோடு
களை இலங்கு முகமும் சாயல் கவினும் நன்கு கொண்டோர்

#191
ஆயிரக்கணக்கா ஐவர்க்கு அடிமை செய்து வாழ்வோர்
தாயம் உருட்டலானார் அந்தச் சகுனி வென்றுவிட்டான்
ஆயிரங்கள் ஆவார் செம்பொன் அணிகள் பூண்டிருப்பார்
தூ இழைப் பொனாடை சுற்றும் தொண்டர்தம்மை வைத்தான்

#192
சோரன் அங்கு அவற்றை வார்த்தை சொல்லும் முன்னர் வென்றான்
தீரம் மிக்க தருமன் உள்ளத் திடன் அழிந்திடாதே
நீரை உண்ட மேகம் போல நிற்கும் ஆயிரங்கள்
வாரணங்கள் கண்டாய் போரில் மறலி ஒத்து மோதும்

#193
என்று வைத்த பணயம்தன்னை இழிஞன் வென்றுவிட்டான்
வென்றி மிக்க படைகள் பின்னர் வேந்தன் வைத்து இழந்தான்
நன்று இழைத்த தேர்கள் போரின் நடை உணர்ந்த பாகர்
என்று இவற்றை எல்லாம் தருமன் ஈடுவைத்து இழந்தான்

#194
எண்ணிலாத கண்டீர் புவியில் இணையிலாத ஆகும்
வண்ணம் உள்ள பரிகள்தம்மை வைத்து இழந்துவிட்டான்
நண்ணு பொன் கடாரம்தம்மில் நாலு கோடி வைத்தான்
கண்ணிழப்பவன் போல் அவையோர் கணம் அழிந்துவிட்டான்

#195
மாடு இழந்துவிட்டான் தருமன் மந்தை மந்தையாக
ஆடு இழந்துவிட்டான் தருமன் ஆள் இழந்துவிட்டான்
பீடு இழந்த சகுனி அங்கு பின்னும் சொல்லுகின்றான்
நாடு இழக்கவில்லை தருமா நாட்டை வைத்திடு என்றான்
**38 நாட்டை வைத்தாடுதல்
** வேறு

#196
ஐயகோ இதை யாது எனச் சொல்வோம் அரசரானவர் செய்குவது ஒன்றோ
மெய்யதாக ஒர் மண்டலத்து ஆட்சி வென்று சூதினில் ஆளும் கருத்தோ
வையம் இஃது பொறுத்திடுமோ மேல் வான் பொறுத்திடுமோ பழி மக்காள்
துய்ய சீர்த்தி மதிக்குலமோ நாம் தூ என்று எள்ளி விதுரனும் சொல்வான்

#197
பாண்டவர் பொறை கொள்ளுவரேனும் பைம் துழாயனும் பாஞ்சாலத்தானும்
மூண்ட வெம் சினத்தோடு நம் சூழல் முற்றும் வேரறச்செய்குவர் அன்றோ
ஈண்டு இருக்கும் குருகுல வேந்தர் யார்க்கும் இஃது உரைப்பேன் குறிக்கொள்-மின்
மாண்டு போரில் மடிந்து நரகில் மாழ்குதற்கு வகைசெயல் வேண்டா

#198
குலம் எலாம் அழிவு எய்திடற்கு அன்றோ குத்திரத் துரியோதனன்தன்னை
நலமிலா விதி நம்மிடை வைத்தான் ஞால மீதில் அவன் பிறந்த அன்றே
அலறி ஓர் நரி போல் குரைத்திட்டான் அஃது உணர்ந்த நிமித்திகர் வெய்ய
கலகம் தோன்றும் இப் பாலகனாலே காணுவீர் எனச் சொல்லிடக் கேட்டோம்

#199
சூதில் பிள்ளை கெலித்திடல் கொண்டு சொர்க்க போகம் பெறுபவன் போலப்
பேதை நீயும் முகம் மலர்வு எய்திப் பெட்பும் மிக்குற வீற்றிருக்கின்றாய்
மீது சென்று மலையிடைத் தேனில் மிக்க மோகத்தினால் ஒரு வேடன்
பாதம் ஆங்கு நழுவிட மாயும் படு மலைச்சரிவு உள்ளது காணான்

#200
மற்று நீரும் இச் சூது எனும் கள்ளால் மதி மயங்கி வரும் செயல் காணீர்
முற்றும் சாதி சுயோதனனாம் ஓர் மூடற்காக முழுகிடலாமோ
பற்று மிக்க இப் பாண்டவர்தம்மைப் பாதகத்தில் அழித்திடுகின்றாய்
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே கடலில் காயம் கரைத்தது ஒப்பு ஆமே

#201
வீட்டுளே நரியை விடப் பாம்பை வேண்டிப் பிள்ளை என வளர்த்திட்டோம்
நாட்டுளே புகழ் ஓங்கிடுமாறு இ நரியை விற்றுப் புலிகளைக் கொள்வாய்
மோட்டுக் கூகையைக் காக்கையை விற்று மொய்ம்பு சான்ற மயில்களைக் கொள்வாய்
கேட்டிலே களியோடு செல்வாயோ கேட்கும் காதும் இழந்துவிட்டாயோ

#202
தம்பி மக்கள் பொருள் வெஃகுவாயோ சாதற்கான வயதினில் அண்ணே
நம்பி நின்னை அடைந்தவர் அன்றோ நாதன் என்று உனைக் கொண்டவர் அன்றோ
எம்பிரான் உளம் கொள்ளுதியாயின் யாவும் தானம் எனக் கொடுப்பாரே
கும்பி மா நரகத்தினில் ஆழ்த்தும் கொடிய செய்கை தொடர்வதும் என்னே

#203
குருகுலத் தலைவன் சபைக்கண்ணே கொற்றம் மிக்க துரோணன் கிருபன்
பெருகு சீர்த்தி அக் கங்கையின்மைந்தன் பேதை நானும் மதிப்பு இழந்து ஏகத்
திருகு நெஞ்சச் சகுனி ஒருவன் செப்பும் மந்திரம் சொல்லுதல் நன்றே
அருகு வைக்கத் தகுதியுள்ளானோ அவனை வெற்பிடைப் போக்குதி அண்ணே

#204
நெறி இழந்த பின் வாழ்வதில் இன்பம் நேரும் என்று நினைத்திடல் வேண்டா
பொறி இழந்த சகுனியின் சூதால் புண்ணியர்தமை மாற்றலர் ஆக்கிச்
சிறியர் பாதகர் என்று உலகு எல்லாம் சீ என்று ஏச உகந்து அரசாளும்
வறிய வாழ்வை விரும்பிடலாமோ வாழி சூதை நிறுத்துதி என்றான்
**இரண்டாவது சூதாட்டச் சருக்கம் முற்றிற்று

@3 மூன்றாவது : அடிமைச் சருக்கம்
**39 பராசக்தி வணக்கம்

#205
ஆங்கு ஒரு கல்லை வாயிலில் படி என்று அமைத்தனன் சிற்பி மற்றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவு என்று உயர்த்தினான் உலகினோர் தாய் நீ
யாங்கணே எவரை எங்ஙனம் சமைத்தற்கு எண்ணமோ அங்ஙனம் சமைப்பாய்
ஈங்கு உனைச் சரண் என்று எய்தினேன் என்னை இரும் கலைப் புலவன் ஆக்குதியே
**40 ஸரஸ்வதி வணக்கம்

#206
இடையின்றி அணுக்கள் எலாம் சுழலும் என இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றிக் கதிர்கள் எலாம் சுழலும் என வானூலார் இயம்புகின்றார்
இடையின்றித் தொழில் புரிதல் உலகினிடைப் பொருட்கு எல்லாம் இயற்கையாயின்
இடையின்றிக் கலைமகளே நினது அருளில் எனது உள்ளம் இயங்கொணாதோ
**41 விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல்
** வேறு

#207
அறிவு சான்ற விதுரன் சொல் கேட்டான் அழலும் நெஞ்சின் அரவை உயர்த்தான்
நெறி உரைத்திடும் மேலவர் வாய்ச்சொல் நீசரானவர் கொள்ளுவது உண்டோ
பொறி பறக்க விழிகள் இரண்டும் புருவம் ஆங்கு துடிக்கச் சினத்தின்
வெறி தலைக்க மதி மழுங்கிப்போய் வேந்தன் இஃது விளம்புதலுற்றான்
** வேறு

#208
நன்றிகெட்ட விதுரா சிறிதும் நாணமற்ற விதுரா
தின்ற உப்பினுக்கே நாசம் தேடுகின்ற விதுரா
அன்றுதொட்டு நீயும் எங்கள் அழிவு நாடுகின்றாய்
மன்றில் உன்னை வைத்தான் எந்தை மதியை என் உரைப்பேன்

#209
ஐவருக்கு நெஞ்சும் எங்கள் அரண்மனைக்கு வயிறும்
தெய்வம் அன்று உனக்கே விதுரா செய்துவிட்டதேயோ
மெய் வகுப்பவன் போல் பொதுவாம் விதி உணர்ந்தவன் போல்
ஐவர் பக்கம் நின்றே எங்கள் அழிவு தேடுகின்றாய்

#210
மன்னர் சூழ்ந்த சபையில் எங்கள் மாற்றலார்களோடு
முன்னர் நாங்கள் பணையம் வைத்தே முறையில் வெல்லுகின்றோம்
என்ன குற்றம் கண்டாய் தருமம் யாருக்கு உரைக்க வந்தாய்
கன்னம் வைக்கிறோமோ பல்லைக் காட்டி ஏய்க்கிறோமோ

#211
பொய் உரைத்து வாழ்வார் இதழில் புகழ் உரைத்து வாழ்வார்
வையம் மீதில் உள்ளார் அவர்தம் வழியில் வந்தது உண்டோ
செய்யொணாத செய்வார் தம்மைச் சீருறுத்த நாடி
ஐய நீ எழுந்தால் அறிஞர் அவலம் எய்திடாரோ

#212
அன்பிலாத பெண்ணுக்கு இதமே ஆயிரங்கள் செய்தும்
முன்பின் எண்ணுவாளோ தருணம் மூண்ட போது கழிவாள்
வன்பு உரைத்தல் வேண்டா எங்கள் வலி பொறுத்தல் வேண்டா
இன்பம் எங்கண் உண்டோ அங்கே ஏகிடு என்று உரைத்தான்
**42 விதுரன் சொல்வது
** வேறு

#213
நன்று ஆகும் நெறி அறியா மன்னன் அங்கு
நான்கு திசை அரசர்சபை நடுவே தன்னைக்
கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொல் கூறிக்
குமைவதனில் அணுவளவும் குழப்பம் எய்தான்
சென்றாலும் இருந்தாலும் இனி என்னேடா
செய்கை நெறி அறியாத சிறியாய் நின்னைப்
பொன்றாத வழி செய்ய முயன்று பார்த்தேன்
பொல்லாத விதி என்னைப் புறங்கண்டானால்

#214
கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும்
கருங்கல்லில் விடம் தோய்த்த நெஞ்சும் கொண்டோர்
படும் செய்தி தோன்றும் முனே படுவர் கண்டாய்
பால் போலும் தேன் போலும் இனிய சொல்லோர்
இடும்பைக்கு வழி சொல்வார் நன்மை காண்பார்
இளகுமொழி கூறார் என நினைத்தே தானும்
நெடும் பச்சைமரம் போலே வளர்ந்து விட்டாய்
நினக்கு எவரும் கூறியவர் இல்லை-கொல்லோ

#215
நலம் கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா
நரபதி நின் அவைக்களத்தே அமைச்சராக
வலம்கொண்ட மன்னரொடு பார்ப்பார்தம்மை
வைத்திருத்தல் சிறிதேனும் தகாது கண்டாய்
சிலங்கைப் பொன் கச்சு அணிந்த வேசை மாதர்
சிறுமைக்குத் தலைகொடுத்த தொண்டர் மற்றும்
குலம் கெட்ட புலை நீசர் முடவர் பித்தர்
கோமகனே நினக்கு உரிய அமைச்சர் கண்டாய்

#216
சென்றாலும் நின்றாலும் இனி என்னேடா
செப்புவன நினக்கென நான் செப்பினேனோ
மன்று ஆர நிறைந்திருக்கும் மன்னர் பார்ப்பார்
மதியில்லா மூத்தோனும் அறியச் சொன்னேன்
இன்றோடு முடிகுவதோ வருவது எல்லாம்
யான் அறிவேன் வீட்டுமனும் அறிவான் கண்டாய்
வென்றான் உள் ஆசை எலாம் யோகி ஆகி
வீட்டுமனும் ஒன்று உரையாது இருக்கின்றானே

#217
விதி வழி நன்கு உணர்ந்திடினும் பேதையேன் யான்
வெள்ளை மனம் உடைமையினால் மகனே நின்றன்
சதி வழியைத் தடுத்து உரைகள் சொல்லப் போந்தேன்
சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை
மதி வழியே செல்லுக என விதுரன் கூறி
வாய் மூடித் தலைகுனிந்தே இருக்கை கொண்டான்
பதிவுறுவோம் புவியில் எனக் கலி மகிழ்ந்தான்
பாரதப்போர் வரும் என்று தேவர் ஆர்த்தார்
**43 சூது மீட்டும் தொடங்குதல்

#218
காய் உருட்டலானார் சூதுக் களி தொடங்கலானார்
மாயம் உள்ள சகுனி பின்னும் வார்த்தை சொல்லுகின்றான்
நீ அழித்தது எல்லாம் பின்னும் நின்னிடத்து மீளும்
ஓய்வடைந்திடாதே தருமா ஊக்கம் எய்துக என்றான்

#219
கோயில் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும்
ஆயிரங்களான நீதியவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்து இழந்தான் சிச்சீ சிறியர் செய்கை செய்தான்

#220
நாட்டு மாந்தர் எல்லாம் தம் போல் நரர்கள் என்று கருதார்
ஆட்டு மந்தையாம் என்று உலகை அரசர் எண்ணிவிட்டார்
காட்டும் உண்மை நூல்கள் பலதாம் காட்டினார்களேனும்
நாட்டு ராஜ நீதி மனிதர் நன்கு செய்யவில்லை

#221
ஓரம்செய்திடாமே தருமத்து உறுதி கொன்றிடாமே
சோரம் செய்திடாமே பிறரைத் துயரில் வீழ்த்திடாமே
ஊரை ஆளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை
சாரமற்ற வார்த்தை மேலே சரிதை சொல்லுகின்றோம்
**44 சகுனி சொல்வது
** வேறு

#222
செல்வம் முற்று இழந்துவிட்டாய் தருமா
தேசமும் குடிகளும் சேர்த்து இழந்தாய்
பல் வளம் நிறை புவிக்கே தருமன்
பார்த்திவன் என்பது இனிப் பழங்கதை காண்
சொல்வதொர் பொருள் கேளாய் இன்னும்
சூழ்ந்து ஒரு பணயம்வைத்து ஆடுதியேல்
வெல்வதற்கு இடம் உண்டாம் ஆங்கு அவ்
வெற்றியில் அனைத்தையும் மீட்டிடலாம்

#223
எல்லாம் இழந்த பின்னர் நின்றன்
இளைஞரும் நீரும் மற்று எதில் பிழைப்பீர்
பொல்லா விளையாட்டில் பிச்சை
புக நினை விடுவதை விரும்புகிலோம்
வல்லார் நினது இளைஞர் சூதில்
வைத்திடத் தகுந்தவர் பணயம் என்றே
சொல்லால் உளம் வருந்தேல் வைத்துத்
தோற்றதை மீட்டு என்று சகுனி சொன்னான்
** வேறு

#224
கருணனும் சிரித்தான் சபையோர் கண்ணின் நீர் உதிர்த்தார்
இருள் நிறைந்த நெஞ்சன் களவே இன்பம் என்று கொண்டான்
அரவு உயர்த்த வேந்தன் உவகை ஆர்த்து எழுந்து சொல்வான்
பரவு நாட்டை எல்லாம் எதிரே பணயமாக வைப்போம்

#225
தம்பிமாரை வைத்தே ஆடித் தருமன் வென்றுவிட்டால்
முன்பு மாமன் வென்ற பொருளை முழுதும் மீண்டு அளிப்போம்
நம்பி வேலை செய்வோம் தருமா நாடு இழந்த பின்னர்
அம்பின் ஒத்த விழியாள் உங்கள் ஐவருக்கும் உரியாள்

#226
அவள் இகழ்ந்திடாளோ அந்த ஆயன் பேசுவானோ
கவலை தீர்த்துவைப்போம் மேலே களி நடக்குக என்றான்
இவளவான பின்னும் இளைஞர் ஏதும் வார்த்தை சொல்லார்
துவளும் நெஞ்சினாராய் வதனம் தொங்க வீற்றிருந்தார்

#227
வீமன் மூச்சுவிட்டான் முழையில் வெய்ய நாகம் போலே
காமன் ஒத்த பார்த்தன் வதனக் களை இழந்துவிட்டான்
நேமம் மிக்க நகுலன் ஐயோ நினைவு அயர்ந்துவிட்டான்
ஊமை போல் இருந்தான் பின்னோன் உண்மை முற்று உணர்ந்தான்

#228
கங்கைமைந்தன் அங்கே நெஞ்சம் கனலுறத் துடித்தான்
பொங்கு வெம் சினத்தால் அரசர் புகை உயிர்த்து இருந்தார்
அங்கம் நொந்துவிட்டான் விதுரன் அவலம் எய்திவிட்டான்
சிங்க மைந்தை நாய்கள் கொல்லும் செய்தி காணலுற்றே
**45 சகாதேவனைப் பந்தயம் கூறுதல்
** வேறு

#229
எப்பொழுதும் பிரமத்திலே சிந்தை
ஏற்றி உலகம் ஒர் ஆடல் போல் எண்ணித்
தப்பு இன்றி இன்பங்கள் துய்த்திடும் வகை
தான் உணர்ந்தான் ஸஹதேவனாம் எங்கும்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில் வைத்தல்
உன்னித் தருமன் பணயம் என்று அங்குச்
செப்பினன் காயை உருட்டினார் அங்குத்
தீய சகுனி கெலித்திட்டான்
**46 நகுலனை இழத்தல்

#230
நகுலனை வைத்தும் இழந்திட்டான் அங்கு
நள்ளிருட்கண் ஒரு சிற்றொளி வந்து
புகுவது போல் அவன் புந்தியில் என்ன
புன்மை செய்தோம் என எண்ணினான் அவ் எண்ணம்
மிகுவதன் முன்பு சகுனியும் ஐய
வேறு ஒரு தாயில் பிறந்தவர் வைக்கத்
தகுவர் என்று இந்தச் சிறுவரை வைத்துத்
தாயத்திலே இழந்திட்டனை

#231
திண்ணிய வீமனும் பார்த்தனும் குந்தி
தேவியின் மக்கள் உனை ஒத்தே நின்னில்
கண்ணியம் மிக்கவர் என்று அவர்தமைக்
காட்டுதற்கு அஞ்சினை போலும் நீ என்று
புண்ணியம் மிக்க தருமனை அந்தப்
புல்லன் வினவிய போதினில் தர்மன்
துண்ணென வெம் சினம் எய்தியே அட
சூதில் அரசு இழந்து ஏகினும்
**47 பார்த்தனை இழத்தல்
**தர்மன் சொல்வது

#232
எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம் ஐவர்
எண்ணத்தில் ஆவியில் ஒன்று காண் இவர்
பங்கமுற்றே பிரிவு எய்துவார் என்று
பாதகச் சிந்தனை கொள்கிறாய் அட
சிங்க மறவர்தமக்குள்ளே வில்லுத்
தேர்ச்சியிலே நிகரற்றவன் எண்ணில்
இங்குப் புவித்தலம் ஏழையும் விலை
ஈடு எனக் கொள்ளத் தகாதவன்

#233
கண்ணனுக்கு ஆருயிர்த் தோழனாம் எங்கள்
கண்ணிலும் சால இனியவன்
வண்ணமும் திண்மையும் சோதியும் பெற்று
வானத்து அமரரைப் போன்றவன் அவன்
எண்ணரு நற்குணம் சான்றவன் புகழ்
ஏறும் விஜயன் பணயம் காண் பொய்யில்
பண்ணிய காயை உருட்டுவாய் என்று
பார்த்திவன் விம்மி உரைத்திட்டான்

#234
மாயத்தையே உருவாக்கிய அந்த
மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே கெட்ட
தாயத்தைக் கையினில் பற்றினான் பின்பு
சாற்றி விருத்தம் அங்கு ஒன்றையே கையில்
தாயம் உருட்டி விழுத்தினான் அவன்
சாற்றியதே வந்து வீழ்ந்ததால் வெறும்
ஈயத்தைப் பொன் என்று காட்டுவார் மன்னர்
இப் புவி மீது உளராம் அன்றோ
**48 வீமனை இழத்தல்

#235
கொக்கரித்து ஆர்த்து முழங்கியே களி
கூடிச் சகுனியும் சொல்லுவான் எட்டுத்
திக்கு அனைத்தும் வென்ற பார்த்தனை வென்று
தீர்த்தனம் வீமனைக் கூறு என்றான் தர்மன்
தக்கது செய்தல் மறந்தனன் உளம்
சார்ந்திடு வெம் சின வெள்ளத்தில் எங்கும்
அக்கரை இக்கரை காண்கிலன் அறத்து
அண்ணல் இதனை உரைக்கின்றான்

#236
ஐவர் தமக்கு ஒர் தலைவனை எங்கள்
ஆட்சிக்கு வேர் வலி அஃதினை ஒரு
தெய்வம் முன்னே நின்று எதிர்ப்பினும் நின்று
சீறி அடிக்கும் திறலனை நெடும்
கை வளர் யானை பலவற்றின் வலி
காட்டும் பெரும் புகழ் வீமனை உங்கள்
பொய் வளர் சூதினில் வைத்திட்டேன் வென்று
போ என்று உரைத்தனன் பொங்கியே

#237
போரினில் யானை விழக் கண்ட பல
பூதங்கள் நாய் நரி காகங்கள் புலை
ஓரி கழுகு என்று இவை எலாம் தமது
உள்ளம் களிகொண்டு விம்மல் போல் மிகச்
சீரிய வீமனைச் சூதினில் அந்தத்
தீயர் விழுந்திடக் காணலும் நின்று
மார்பிலும் தோளிலும் கொட்டினார் களி
மண்டிக் குதித்து எழுந்து ஆடுவார்
**49 தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்

#238
மன்னவர்தம்மை மறந்துபோய் வெறி வாய்ந்த திருடரை ஒத்தனர் அங்கு
சின்னச் சகுனி சிரிப்புடன் இன்னும் செப்புக பந்தயம் வேறு என்றான் இவன்
தன்னை மறந்தவன் ஆதலால் தன்னைத் தான் பணயம் என வைத்தனன் பின்பு
முன்னைக் கதை அன்றி வேறு உண்டோ அந்த மோசச் சகுனி கெலித்தனன்
**50 துரியோதனன் சொல்வது

#239
பொங்கி எழுந்து சுயோதனன் அங்கு பூதல மன்னர்க்குச் சொல்லுவான் ஒளி
மங்கி அழிந்தனர் பாண்டவர் புவி மண்டலம் நம்மது இனிக் கண்டீர் இவர்
சங்கையிலாத நிதி எலாம் நம்மைச் சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள் இதை
எங்கும் பறையறைவாயடா தம்பி என்றது கேட்டுச் சகுனிதான்
**51 சகுனி சொல்வது

#240
புண்ணிடைக் கோல் கொண்டு குத்துதல் நின்னைப் போன்றவர் செய்யத் தகுவதோ இரு
கண்ணில் இனியவராம் என்றே இந்தக் காளையர்தம்மை இங்கு உந்தைதான் நெஞ்சில்
எண்ணியிருப்பது அறிகுவாய் இவர் யார் நின்றன் சோதரர் அல்லரோ களி
நண்ணித் தொடங்கிய சூது அன்றோ இவர் நாணுறச் செய்வது நேர்மையோ

#241
இன்னும் பணயம்வைத்து ஆடுவோம் வெற்றி இன்னும் இவர் பெறலாகும் காண்
பொன்னும் குடிகளும் தேசமும் பெற்றுப் பொற்பொடு போதற்கு இடம் உண்டாம் ஒளி
மின்னும் அமுதமும் போன்றவள் இவர் மேவிடு தேவியை வைத்திட்டால் அவள்
துன்னும் அதிட்டமுடையவள் இவர் தோற்றது அனைத்தையும் மீட்டலாம்

#242
என்று அந்த மாமன் உரைப்பவே வளர் இன்பம் மனத்தில் உடையனாய் மிக
நன்றுநன்று என்று சுயோதனன் சிறு நாய் ஒன்று தேன் கலசத்தினை எண்ணித்
துன்றும் உவகையில் வெற்றுநாவினைத் தோய்த்துச் சுவைத்து மகிழ்தல் போல் அவன்
ஒன்று உரையாமல் இருந்திட்டான் அழிவுற்றது உலகத்து அறம் எலாம்
** அடிமைச் சருக்கம் முற்றும்

@4 நான்காவது : துகிலுரிதற் சருக்கம்
**52 திரௌபதியை இழத்தல்

#243
பாவியர் சபைதனிலே புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை
ஆவியில் இனியவளை உயிர்த்து அணி சுமந்து உலவிடு செய் அமுதை
ஓவியம் நிகர்த்தவளை அருள் ஒளியினைக் கற்பனைக்கு உயிரதனைத்
தேவியை நிலத் திருவை எங்கும் தேடினும் கிடைப்பரும் திரவியத்தை

#244
படி மிசை இசையுறவே நடைபயின்றிடும் தெய்விக மலர்க் கொடியைக்
கடி கமழ் மின் உருவை ஒரு கமனியக் கனவினைக் காதலினை
வடிவுறு பேரழகை இன்ப வளத்தினைச் சூதினில் பணயம் என்றே
கொடியவர் அவைக்களத்தில் அறக் கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான்

#245
வேள்விப் பொருளினையே புலை நாயின் முன் மென்றிட வைப்பவர் போல்
நீள் விட்டப் பொன் மாளிகை கட்டிப் பேயினை நேர்ந்து குடியேற்றல் போல்
ஆள் விற்றுப் பொன் வாங்கியே செய்த பூணை ஓர் ஆந்தைக்குப் பூட்டுதல் போல்
கேள்விக்கு ஒருவர் இல்லை உயிர்த் தேவியைக் கீழ்மக்கட்கு ஆளாக்கினான்

#246
செருப்புக்கு தோல் வேண்டியே இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை
விருப்புற்ற சூதினுக்கே ஒத்த பந்தயம் மெய்த் தவப் பாஞ்சாலியோ
ஒருப்பட்டுப் போனவுடன் கெட்ட மாமனும் உன்னி அத் தாயம் கொண்டே
இருப் பகடை போடு என்றான் பொய்மைக் காய்களும் இருப் பகடை போட்டவே
**53 திரௌபதி சூதில் வசமானதுபற்றிக் கௌரவர் கொண்ட மகிழ்ச்சி

#247
திக்குக் குலுங்கிடவே எழுந்து ஆடுமாம் தீயவர் கூட்டம் எல்லாம்
தக்குத்தக்கென்றே அவர் குதித்து ஆடுவார் தம் இரு தோள் கொட்டுவார்
ஒக்கும் தருமனுக்கே இஃது என்பர் ஓ ஓ என்று இரைந்திடுவார்
கக்கக்கென்றே நகைப்பார் துரியோதனா கட்டிக்கொள் எம்மை என்பார்

#248
மாமனைத் தூக்காய் என்பார் அந்த மாமன் மேல் மாலை பல வீசுவார்
சேமத் திரவியங்கள் பல நாடுகள் சேர்ந்ததில் ஒன்றுமில்லை
காமத் திரவியமாம் இந்தப் பெண்ணையும் கைவசமாகச்செய்தான்
மாமன் ஒர் தெய்வம் என்பார் துரியோதனன் வாழ்க என்று ஆர்த்திடுவார்
**54 துரியோதனன் சொல்வது

#249
நின்று துரியோதனன் அந்த மாமனை நெஞ்சொடு சேரக் கட்டி
என் துயர் தீர்த்தாயடா உயிர் மாமனே ஏளனம் தீர்த்துவிட்டாய்
அன்று நகைத்தாளடா உயிர் மாமனே அவளை என் ஆளாக்கினாய்
என்றும் மறவேனடா உயிர் மாமனே என்ன கைம்மாறு செய்வேன்

#250
ஆசை தணித்தாயடா உயிர் மாமனே ஆவியைக் காத்தாயடா
பூசை புரிவோமடா உயிர் மாமனே பொங்கல் உனக்கு இடுவோம்
நாசமடைந்ததடா நெடுநாள் பகை நாம் இனி வாழ்ந்தோமடா
பேசவும் தோன்றுதில்லை உயிர் மாமனே பேரின்பம் கூட்டிவிட்டாய்

#251
என்று பல சொல்லுவான் துரியோதனன் எண்ணியெண்ணிக் குதிப்பான்
குன்று குதிப்பது போல் துரியோதனன் கொட்டிக் குதித்து ஆடுவான்
மன்று குழப்பமுற்றே அவர் யாவரும் வகைதொகை ஒன்றும் இன்றி
அன்று புரிந்தது எல்லாம் என்றன் பாட்டிலே ஆக்கல் எளிதாகுமோ
**55 திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு
** அழைத்து வரச் சொல்லியதுபற்றி ஜகத்தில் உண்டான
** அதர்மக் குழப்பம்

#252
தருமம் அழிவு எய்தச் சத்தியமும் பொய் ஆக
பெருமைத் தவங்கள் பெயர்கெட்டு மண் ஆக
வானத்துத் தேவர் வயிற்றிலே தீப் பாய
மோன முனிவர் முறைகெட்டுத் தாம் மயங்க
வேதம் பொருள் இன்றி வெற்றுரையே ஆகிவிட 5
நாதம் குலைந்து நடுமை இன்றிப் பாழ் ஆக
கந்தருவர் எல்லாம் களையிழக்கச் சித்தர் முதல்
அந்தரத்து வாழ்வோர் அனைவோரும் பித்துறவே
நான்முகனார் நா அடைக்க நாமகட்குப் புத்தி கெட
வான் முகிலைப் போன்றதொரு வண்ணத் திருமாலும் 10
அறிதுயில் போய் மற்று ஆங்கே ஆழ்ந்த துயில் எய்திவிட
செறிதரு நல் சீர் அழகு செல்வம் எலாம் தான் ஆகும்
சீதேவிதன் வதனம் செம்மை போய்க் கார் அடைய
மாதேவன் யோகம் மதிமயக்கம் ஆகிவிட
வாலை உமாதேவி மாகாளி வீறுடையாள் 15
மூலமாசக்தி ஒரு மூவிலை வேல் கை ஏற்றாள்
மாயை தொலைக்கும் மஹாமாயை தான் ஆவாள்
பேயைக் கொலையைப் பிணக் குவையைக் கண்டு உவப்பாள்
சிங்கத்தில் ஏறிச் சிரிப்பால் உலகு அழிப்பாள்
சிங்கத்தில் ஏறிச் சிரித்து எவையும் காத்திடுவாள் 20
நோவும் கொலையும் நுவலொணாப் பீடைகளும்
சாவும் சலிப்பும் எனத் தான் பல் கணம் உடையாள்
கடா எருமை ஏறும் கரு நிறத்துக் காலனார்
இடாது பணிசெய்ய இலங்கு மஹாராணி
மங்களம் செல்வம் வளர் வாழ்நாள் நற்கீர்த்தி 25
துங்கமுறு கல்வி எனச் சூழும் பல கணத்தாள்
ஆக்கம் தான் ஆவாள் அழிவு நிலை ஆவாள்
போக்குவரவு எய்தும் புதுமை எலாம் தான் ஆவாள்
மாறிமாறிப் பின்னும் மாறிமாறிப் பின்னும்
மாறிமாறிப் போம் வழக்கமே தான் ஆவாள் 30
ஆதிபராசக்தி அவள் நெஞ்சம் வன்மையுறச்
சோதிக் கதிர் விடுக்கும் சூரியனாம் தெய்வத்தின்
முகத்தே இருள் படர மூடப் புலைமையினோன்
**56 துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது
அகத்தே இருளுடையான் ஆரியரின் வேறு ஆனோன்
துரியோதனனும் சுறுக்கெனவே தான் திரும்பி 35
அரியோன் விதுரனவனுக்கு உரைசெய்வான்
செல்வாய் விதுரா நீ சிந்தித்திருப்பது ஏன்
வில் வாள் நுதலினாள் மிக்க எழிலுடையாள்
முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவி மகள்
இன்னே நாம் சூதில் எடுத்த விலைமகள்பால் 40
சென்று விளைவு எல்லாம் செவ்வனே தான் உணர்த்தி
மன்றினிடை உள்ளான் நின் மைத்துனன் நின் ஓர் தலைவன்
நின்னை அழைக்கிறான் நீள் மனையில் ஏவலுக்கே
என்ன உரைத்து அவளை இங்கு கொணர்வாய் என்றான்
**57 விதுரன் சொல்வது
துரியோதனன் இச் சுடுசொற்கள் கூறிடவும் 45
பெரியோன் விதுரன் பெரிதும் சினம்கொண்டு
மூட மகனே மொழியொணா வார்த்தையினைக்
கேடு வர அறியாய் கீழ்மையினால் சொல்லிவிட்டாய்
புள்ளிச் சிறுமான் புலியைப் போய்ப் பாய்வது போல்
பிள்ளைத் தவளை பெரும் பாம்பை மோதுதல் போல் 50
ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய்
தெய்வத் தவத்தியைச் சீர்குலையப் பேசுகின்றாய்
நின்னுடைய நன்மைக்கு இ நீதி எலாம் சொல்லுகிறேன்
என்னுடைய சொல் வேறு எவர்பொருட்டும் இல்லையடா
பாண்டவர்தாம் நாளைப் பழி இதனைத் தீர்த்திடுவார் 55
மாண்டு தரை மேல் மகனே கிடப்பாய் நீ
தன் அழிவு நாடும் தறுகண்மை என்னேடா
முன்னம் ஒரு வேனன் முடிந்த கதை கேட்டிலையோ
நல்லோர் தமது உள்ளம் நையச் செயல் செய்தான்
பொல்லாத வேனன் புழுவைப் போல் மாய்ந்திட்டான் 60
நெஞ்சம் சுட உரைத்தல் நேர்மை எனக் கொண்டாயோ
மஞ்சனே அச் சொல் மருமத்தே பாய்வது அன்றோ
கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்துவிடும்
பட்டார்தம் நெஞ்சில் பல நாள் அகலாது
வெம் நரகு சேர்த்துவிடும் வித்தை தடுத்துவிடும் 65
மன்னவனே நொந்தார் மனம் சுடவே சொல்லும் சொல்
சொல்லிவிட்டேன் பின்னொருகால் சொல்லேன் கவுரவர்காள்
புல்லியர்கட்கு இன்பம் புவித்தலத்தில் வாராது
பேராசை கொண்டு பிழைச் செயல்கள் செய்கின்றீர்
வாராத வன் கொடுமை மா விபத்து வந்துவிடும் 70
பாண்டவர்தம் பாதம் பணிந்து அவர்பால் கொண்டது எலாம்
மீண்டு அவர்க்கே ஈந்துவிட்டு விநயமுடன்
ஆண்டவரே யாங்கள் அறியாமையால் செய்த
நீண்ட பழி இதனை நீர் பொறுப்பீர் என்று உரைத்து
மற்று அவரைத் தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர் 75
குற்றம் தவிர்க்கும் நெறி இதனைக் கொள்ளீரேல்
மாபாரதப்போர் வரும் நீர் அழிந்திடுவீர்
பூபாலரே என்று அப் புண்ணியனும் கூறினான்
சொல் இதனைக் கேட்டுத் துரியோதன மூடன்
வல் இடி போல் சீச்சி மடையா கெடுக நீ 80
எப்போதும் எம்மைச் சபித்தல் இயல்பு உனக்கே
இப்போது உன் சொல்லை எவரும் செவிக்கொளார்
யாரடா தேர்ப்பாகன் நீ போய்க் கணம் இரண்டில்
பாரதர்க்கு வேந்தன் பணித்தான் எனக் கூறிப்
பாண்டவர்தம் தேவிதனைப் பார் வேந்தர் மன்றினிலே 85
ஈண்டு அழைத்துவா என்று இயம்பினான் ஆங்கே தேர்ப்
பாகன் விரைந்து போய்ப் பாஞ்சாலி வாழ் மனையில்
சோகம் ததும்பித் துடித்த குரலுடனே
அம்மனே போற்றி அறம் காப்பாய் தாள் போற்றி
வெம்மையுடைய விதியால் யுதிட்டிரனார் 90
மாமன் சகுனியொடு மாயச் சூதாடியதில்
பூமி இழந்து பொருள் இழந்து தம்பியரைத்
தோற்றுத் தமது சுதந்திரமும் வைத்து இழந்தார்
சாற்றிப் பணயம் எனத் தாயே உனை வைத்தார்
சொல்லவுமே நாவு துணியவில்லை தோற்றிட்டார் 95
எல்லாரும் கூடியிருக்கும் சபைதனிலே
நின்னை அழைத்துவர நேமித்தான் எம் அரசன்
என்ன உரைத்திடலும் யார் சொன்ன வார்த்தையடா
சூதர் சபைதனிலே தொல் சீர் மறக்குலத்து
மாதர் வருதல் மரபோடா யார் பணியால் 100
என்னை அழைக்கின்றாய் என்றாள் அதற்கு அவனும்
மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால் என்றிட்டான்
நல்லது நீ சென்று நடந்த கதை கேட்டு வா
வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர் தாம்
என்னை முன்னே கூறி இழந்தாரா தம்மையே 105
முன்னம் இழந்து முடித்து என்னைத் தோற்றாரா
சென்று சபையில் இச் செய்தி தெரிந்துவா
என்று அவளும் கூறி இவன் போகிய பின்னர்
தன்னந்தனியே தவிக்கும் மனத்தாளாய்
வன்னம் குலைந்து மலர் விழிகள் நீர் சொரிய 110
உள்ளத்தை அச்சம் உலையுறுத்தப் பேய் கண்ட
பிள்ளை என வீற்றிருந்தாள் பின் அந்தத் தேர்ப்பாகன்
மன்னன் சபை சென்று வாள் வேந்தே ஆங்கு அந்தப்
பொன்னரசி தாள் பணிந்து போதருவீர் என்றிட்டேன்
என்னை முதல் வைத்து இழந்த பின்பு தன்னை என் 115
மன்னர் இழந்தாரா மாறித் தமைத் தோற்ற
பின்னர் எனைத் தோற்றாரா என்றே நும் பேரவையை
மின்னல்கொடியார் வினவிவரத் தாம் பணித்தார்
வந்துவிட்டேன் என்று உரைத்தான் மாண்புயர்ந்த பாண்டவர்தாம்
நொந்துபோய் ஒன்றும் நுவலாது இருந்துவிட்டார் 120
மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்னர் எலாம்
முற்றும் உரை இழந்து மூங்கையர் போல் வீற்றிருந்தார்
**58 துரியோதனன் சொல்வது
** வேறு

#253
உள்ளம் துடித்துச் சுயோதனன் சினம் ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான் அட
பிள்ளைக் கதைகள் விரிக்கிறாய் என்றன் பெற்றி அறிந்திலை போலும் நீ அந்தக்
கள்ளக் கரிய விழியினாள் அவள் கல்லிகள் கொண்டு இங்கு வந்தனை அவள்
கிள்ளை மொழியின் நலத்தையே இங்கு கேட்க விரும்பும் என் உள்ளமே

#254
வேண்டிய கேள்விகள் கேட்கலாம் சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம் மன்னர்
நீண்ட பெரும் சபைதன்னிலே அவள் நேரிடவே வந்த பின்பு தான் சிறு
கூண்டில் பறவையும் அல்லளே ஐவர் கூட்டு மனைவிக்கு நாணம் ஏன் சினம்
மூண்டு கடும் செயல் செய்யும் முன் அந்த மொய்குழலாளை இங்கு இட்டுவா

#255
மன்னன் அழைத்தனன் என்று நீ சொல்ல மாறி அவள் ஒன்று சொல்வதோ உன்னைச்
சின்னமுறச் செய்குவேனடா கணம் சென்று அவளைக் கொணர்வாய் என்றான் அவன்
சொன்ன மொழியினைப் பாகன் போய் அந்தத் தோகை முன் கூறி வணங்கினான் அவள்
இன்னல் விளைந்து இவை கூறுவாள் தம்பி என்றனை வீணில் அழைப்பது ஏன்
**59 திரௌபதி சொல்லுதல்

#256
நாயகர்தாம் தம்மைத் தோற்ற பின் என்னை நல்கும் உரிமை அவர்க்கு இல்லை புலைத்
தாயத்திலே விலைப்பட்ட பின் என்ன சாத்திரத்தால் எனைத் தோற்றிட்டார் அவர்
தாயத்திலே விலைப்பட்டவர் புவி தாங்கும் துருபதன் கன்னி நான் நிலை
சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால் பின்பு தாரம் உடைமை அவர்க்கு உண்டோ

#257
கௌரவ வேந்தர் சபைதன்னில் அறம் கண்டவர் யாவரும் இல்லையோ மன்னர்
சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே அங்கு சாத்திரம் செத்துக்கிடக்குமோ புகழ்
ஒவ்வுற ஆய்ந்த குருக்களும் கல்வி ஓங்கிய மன்னரும் சூதிலே செல்வம்
வவ்வுறத் தாம் கண்டிருந்தனர் என்றன் மானம் அழிவதும் காண்பரோ

#258
இன்பமும் துன்பமும் பூமியின் மிசை யார்க்கும் வருவது கண்டனம் எனில்
மன்பதை காக்கும் அரசர்தாம் அற மாட்சியைக் கொன்று களிப்பரோ அதை
அன்பும் தவமும் சிறந்துளார் தலை அந்தணர் கண்டு களிப்பரோ அவர்
முன்பு என் வினாவினை மீட்டும் போய்ச் சொல்லி முற்றும் தெளிவுறக் கேட்டுவா

#259
என்று அந்தப் பாண்டவர் தேவியும் சொல்ல என் செய்வன் ஏழை அப் பாகனே என்னைக்
கொன்றுவிட்டாலும் பெரிதில்லை இவள் கூறும் வினாவிற்கு அவர் விடை தரின்
அன்றி இவளை மறுமுறை வந்து அழைத்திட நான் அங்கு இசைந்திடேன் என
நன்று மனத்திடைக் கொண்டவன் சபை நண்ணி நிகழ்ந்தது கூறினான்

#260
மாதவிடாயில் இருக்கிறாள் அந்த மாதரசு என்பதும் கூறினான் கெட்ட
பாதகன் நெஞ்சம் இளகிடான் நின்ற பாண்டவர்தம் முகம் நோக்கினான் அவர்
பேதுற்று நிற்பது கண்டனன் மற்றும் பேரவைதன்னில் ஒருவரும் இவன்
தீதுற்ற சிந்தை தடுக்கவே உள்ளத் திண்மை இலாது அங்கு இருந்தனர்

#261
பாகனை மீட்டும் சினத்துடன் அவன் பார்த்து இடி போல் உரைசெய்கின்றான் பின்னும்
ஏகி நமது உளம் கூறடா அவள் ஏழு கணத்தில் வரச்செய்வாய் உன்னைச்
சாக மிதித்திடுவேனடா என்று தார் மன்னன் சொல்லிடப் பாகனும் மன்னன்
வேகம்தனைப் பொருள்செய்திடான் அங்கு வீற்றிருந்தோர்தமை நோக்கியே

#262
சீறும் அரசனுக்கு ஏழையேன் பிழை செய்தது உண்டோ அங்குத் தேவியார்தமை
நூறுதரம் சென்று அழைப்பினும் அவர் நுங்களைக் கேட்கத் திருப்புவார் அவர்
ஆறுதல்கொள்ள ஒரு மொழி சொல்லில் அக்கணமே சென்று அழைக்கிறேன் மன்னன்
கூறும் பணி செய வல்லன் யான் அந்தக் கோதை வராவிடில் என் செய்வேன்
**60 துரியோதனன் சொல்வது

#263
பாகன் உரைத்தது கேட்டனன் பெரும் பாம்புக் கொடியவன் சொல்கிறான் அவன்
பாகன் அழைக்க வருகிலள் இந்தப் பையலும் வீமனை அஞ்சியே பல
வாகத் திகைப்புற்று நின்றனன் இவன் அச்சத்தைப் பின்பு குறைக்கிறேன் தம்பீ
போகக் கடவை இப்போது அங்கே இங்கு அப் பொற்றொடியோடும் வருக நீ
** திரௌபதியைச் சபைக்கு அழைத்த சருக்கம் முற்றும்

@5 ஐந்தாவது: சபதச் சருக்கம்
**61 துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல்

#264
இவ் உரை கேட்ட துச்சாதனன் அண்ணன் இச்சையை மெச்சி எழுந்தனன் இவன்
செவ்வி சிறிது புகலுவோம் இவன் தீமையில் அண்ணனை வென்றவன் கல்வி
எவ்வளவேனும் இலாதவன் கள்ளும் ஈரக் கறியும் விரும்புவோன் பிற
தெவ்வர் இவன்றனை அஞ்சுவார் தன்னைச் சேர்ந்தவர் பேய் என்று ஒதுங்குவார்

#265
புத்தி விவேகம் இல்லாதவன் புலி போல உடல் வலி கொண்டவன் கரை
தத்தி வழியும் செருக்கினால் கள்ளின் சார்பு இன்றியே வெறி சான்றவன் அவ
சக்தி வழி பற்றி நின்றவன் சிவசக்தி நெறி உணராதவன் இன்பம்
நத்தி மறங்கள் இழைப்பவன் என்றும் நல்லவர் கேண்மை விலக்கினோன்

#266
அண்ணன் ஒருவனை அன்றியே புவி அத்தனைக்கும் தலை ஆயினோம் என்னும்
எண்ணம் தனதிடைக் கொண்டவன் அண்ணன் ஏது சொன்னாலும் மறுத்திடான் அருள்
கண்ணழிவு எய்திய பாதகன் அந்தக் காரிகைதன்னை அழைத்துவா என்று அவ்
அண்ணன் உரைத்திடல் கேட்டனன் நல்லதாம் என்று உறுமி எழுந்தனன்

#267
பாண்டவர் தேவி இருந்ததோர் மணிப் பைம் கதிர் மாளிகை சார்ந்தனன் அங்கு
நீண்ட துயரில் குலைந்துபோய் நின்ற நேரிழை மாதினைக் கண்டனன் அவள்
தீண்டலை எண்ணி ஒதுங்கினாள் அடி செல்வது எங்கே என்று இரைந்திட்டான் இவன்
ஆண்டகையற்ற புலையன் என்று அவள் அச்சம் இலாது எதிர் நோக்கியே
**62 திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்

#268
தேவர் புவி மிசைப் பாண்டவர் அவர் தேவி துருபதன் கன்னி நான் இதை
யாவரும் இற்றை வரையினும் தம்பி என் முன் மறந்தவர் இல்லை காண் தம்பி
காவல் இழந்த மதி கொண்டாய் இங்குக் கட்டுத் தவறி மொழிகிறாய் தம்பி
நீ வந்த செய்தி விரைவிலே சொல்லி நீங்குக என்றனள் பெண்கொடி

#269
பாண்டவர் தேவியும் அல்லை நீ புகழ்ப் பாஞ்சாலத்தான் மகள் அல்லை நீ புவி
ஆண்டு அருள் வேந்தர் தலைவனாம் எங்கள் அண்ணனுக்கே அடிமைச்சி நீ மன்னர்
நீண்ட சபைதனில் சூதிலே எங்கள் நேசச் சகுனியோடு ஆடி அங்கு உன்னைத்
தூண்டும் பணயம் என வைத்தான் இன்று தோற்றுவிட்டான் தருமேந்திரன்

#270
ஆடி விலைப்பட்ட தாதி நீ உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன் மன்னர்
கூடியிருக்கும் சபையிலே உன்னைக் கூட்டிவருக என்று மன்னவன் சொல்ல
ஓடிவந்தேன் இது செய்தி காண் இனி ஒன்றும் சொலாது என்னோடு ஏகுவாய் அந்தப்
பேடி மகன் ஒரு பாகன்பால் சொன்ன பேச்சுக்கள் வேண்டிலன் கேட்கவே
** வேறு

#271
துச்சாதனன் இதனைச் சொல்லினான் பாஞ்சாலி
அச்சா கேள் மாதவிலக்கு ஆதலால் ஓராடை
தன்னில் இருக்கிறேன் தார் வேந்தர் பொற்சபை முன்
என்னை அழைத்தல் இயல்பில்லை அன்றியுமே
சோதரர்தம் தேவிதனைச் சூதில் வசமாக்கி 5
ஆதரவு நீக்கி அருமை குலைத்திடுதல்
மன்னர் குலத்து மரபோ காண் அண்ணன்பால்
என் நிலைமை கூறிடுவாய் ஏகுக நீ என்றிட்டாள்
கக்கக்க என்று கனைத்தே பெரு மூடன்
பக்கத்தில் வந்தே அப் பாஞ்சாலி கூந்தலினைக் 10
கையினால் பற்றிக் கரகரெனத் தான் இழுத்தான்
ஐயகோ என்றே அலறி உணர்வற்றுப்
பாண்டவர்தம் தேவியவள் பாதியுயிர் கொண்டு வர
நீண்ட கரும் குழலை நீசன் கரம் பற்றி
முன் இழுத்துச் சென்றான் வழிநெடுக மொய்த்தவராய் 15
என்ன கொடுமை இது என்று பார்த்திருந்தார்
ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரம் ஆமோ
வீரம் இலா நாய்கள் விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்தில் போக்கியே
பொன்னை அவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல் 20
நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணை ஆமோ
பேரழகு கொண்ட பெரும் தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னர் அறம் கெட்ட சபைதனிலே 25
கூடுதலும் அங்கே போய்க் கோவென்று அலறினாள்
**63 சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல்
விம்மி அழுதாள் விதியோ கணவரே
அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டி எனை
வேதச் சுடர்த் தீ முன் வேண்டி மணம்செய்து
பாதகர் முன் இந்நாள் பரிசு அழிதல் காண்பீரோ 30
என்றாள் விஜயனுடன் ஏறு திறல் வீமனுமே
குன்றா மணித் தோள் குறிப்புடனே நோக்கினார்
தருமனும் மற்று ஆங்கே தலைகுனிந்து நின்றிட்டான்
பொருமியவள் பின்னும் புலம்புவாள் வான் சபையில்
கேள்வி பலவுடையோர் கேடிலா நல் இசையோர் 35
வேள்வி தவங்கள் மிகப் புரிந்த வேதியர்கள்
மேலோர் இருக்கின்றீர் வெம் சினம் ஏன் கொள்கிலரோ
வேலோர் எனையுடைய வேந்தர் பிணிப்புண்டார்
இங்கு இவர் மேல் குற்றம் இயம்ப வழி இல்லை
மங்கியதோர் புன்மதியாய் மன்னர் சபைதனிலே 40
என்னைப் பிடித்து இழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய்
நின்னை எவரும் நிறுத்தடா என்பது இலர்
என் செய்கேன் என்றே இரைந்து அழுதாள் பாண்டவரை
மின் செய் கதிர் விழியால் வெம் நோக்கு நோக்கினாள்
மற்று அவர்தாம் முன் போல் வாய் இழந்து சீர் குன்றிப் 45
பற்றைகள் போல் நிற்பதனைப் பார்த்து வெறிகொண்டு
தாதியடி தாதி எனத் துச்சாதனன் அவளைத்
தீதுரைகள் கூறினான் கர்ணன் சிரித்திட்டான்
சகுனி புகழ்ந்தான் சபையினோர் வீற்றிருந்தார்
தகுதி உயர் வீட்டுமனும் சொல்கின்றான் தையலே 50
**64 வீட்டுமாசாரியன் சொல்வது
சூதாடி நின்னை யுதிட்டிரனே தோற்றுவிட்டான்
வாதாடி நீ அவன்றன் செய்கை மறுக்கின்றாய்
சூதிலே வல்லான் சகுனி தொழில் வலியால்
மாதரசே நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான்
மற்று இதனில் உன்னை ஒரு பந்தயமா வைத்ததே 55
குற்றம் என்று சொல்லுகிறாய் கோமகளே பண்டை யுக
வேதமுனிவர் விதிப்படி நீ சொல்லுவது
நீதம் எனக்கூடும் நெடுங்காலச் செய்தி அது
ஆணொடு பெண் முற்றும் நிகர் எனவே அந்நாளில்
பேணி வந்தார் பின் நாளில் இஃது பெயர்ந்துபோய் 60
இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால் ஆடவருக்கு
ஒப்பில்லை மாதர் ஒருவன் தன் தாரத்தை
விற்றிடலாம் தானம் என வேற்றுவர்க்குத் தந்திடலாம்
முற்றும் விலங்கு முறைமை அன்றி வேறு இல்லை
தன்னை அடிமை என விற்ற பின்னும் தருமன் 65
நின்னை அடிமை எனக் கொள்வதற்கு நீதி உண்டு
செல்லும் நெறியறியார் செய்கை இங்குப் பார்த்திடிலோ
கல்லும் நடுங்கும் விலங்குகளும் கண்புதைக்கும்
செய்கை அநீதி என்று தேர்ந்தாலும் சாத்திரம்தான்
வைகு நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால் 70
ஆங்கு அவையும் நின் சார்பில் ஆகா வகை உரைத்தேன்
தீங்கு தடுக்கும் திறம் இலேன் என்று அந்த
மேலோன் தலைகவிழ்ந்தான் மெல்லியளும் சொல்லுகிறாள்
**65 திரௌபதி சொல்வது
சால நன்கு கூறினீர் ஐயா தரும நெறி
பண்டு ஓர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால் 75
கொண்டு ஓர் வனத்திடையே வைத்துப் பின் கூட்டம் உற
மந்திரிகள் சாத்திரிமார்தம்மை வரவழைத்தே
செந்திருவைப் பற்றிவந்த செய்தி உரைத்திடுங்கால்
தக்கது நீர் செய்தீர் தருமத்துக்கு இச் செய்கை
ஒக்கும் எனக் கூறி உகந்தனராம் சாத்திரிமார் 80
பேய் அரசுசெய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
மாயம் உணராத மன்னவனைச் சூதாட
வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ நேர்மையோ
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கை அன்றோ
மண்டபம் நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ள அன்றோ 85
பெண்டிர்தமை உடையீர் பெண்களுடன் பிறந்தீர்
பெண்பாவம் அன்றோ பெரிய வசை கொள்வீரோ
கண் பார்க்க வேண்டும் என்று கையெடுத்துக் கும்பிட்டாள்
அம்பு பட்ட மான் போல் அழுது துடிதுடித்தாள்
வம்பு மலர்க் கூந்தல் மண் மேல் புரண்டுவிழத் 90
தேவி கரைந்திடுதல் கண்டே சில மொழிகள்
பாவி துச்சாதனனும் பாங்கு இழந்து கூறினான்
** வேறு

#272
ஆடை குலைவுற்று நிற்கிறாள் அவள் ஆவென்று அழுது துடிக்கிறாள் வெறும்
மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மைக் குழல் பற்றி இழுக்கிறான் இந்தப்
பீடையை நோக்கினன் வீமனும் கரை மீறி எழுந்தது வெம் சினம் துயர்
கூடித் தருமனை நோக்கியே அவன் கூறிய வார்த்தைகள் கேட்டிரோ
**66 வீமன் சொல்வது
** வேறு

#273
சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிர் உண்டு
சூதில் பணயம் என்றே அங்கு ஓர் தொண்டச்சி போவது இல்லை

#274
ஏது கருதி வைத்தாய் அண்ணே யாரைப் பணயம்வைத்தாய்
மாதர் குலவிளக்கை அன்பே வாய்ந்த வடிவழகை

#275
பூமி அரசர் எல்லாம் கண்டே போற்ற விளங்குகிறான்
சாமி புகழினுக்கே வெம் போர்ச் சண்டனப் பாஞ்சாலன்

#276
அவன் சுடர் மகளை அண்ணே ஆடி இழந்துவிட்டாய்
தவறுசெய்துவிட்டாய் அண்ணே தருமம் கொன்றுவிட்டாய்

#277
சோரத்தில் கொண்டது இல்லை அண்ணே சூதில் படைத்தது இல்லை
வீரத்தினால் படைத்தோம் வெம் போர் வெற்றியினால் படைத்தோம்

#278
சக்கரவர்த்தி என்றே மேலாம் தன்மை படைத்திருந்தோம்
பொக்கென ஓர் கணத்தே எல்லாம் போகத் தொலைத்துவிட்டாய்

#279
நாட்டை எல்லாம் தொலைத்தாய் அண்ணே நாங்கள் பொறுத்திருந்தோம்
மீட்டும் எமை அடிமை செய்தாய் மேலும் பொறுத்திருந்தோம்

#280
துருபதன் மகளைத் திட்டத் துய்மன் உடற்பிறப்பை
இரு பகடை என்றாய் ஐயோ இவர்க்கு அடிமை என்றாய்

#281
இது பொறுப்பது இல்லை தம்பி எரி தழல் கொண்டுவா
கதிரை வைத்து இழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம்
**67 அர்சு1னன் சொல்வது
** வேறு

#282
என வீமன் சகதேவனிடத்தே சொன்னான்
இதைக் கேட்டு வில் விஜயன் எதிர்த்துச் சொல்வான்
மனமாரச் சொன்னாயோ வீமா என்ன
வார்த்தை சொன்னாய் எங்கு சொன்னாய் யாவர் முன்னே
கனம் ஆரும் துருபதனார் மகளைச் சூதுக்
களியிலே இழந்திடுதல் குற்றம் என்றாய்
சினமான தீ அறிவைப் புகைத்தலாலே
திரிலோகநாயகனைச் சினந்து சொன்னாய்

#283
தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்
வழி தேடி விதி இந்தச் செய்கை செய்தான்
கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்
தனு உண்டு காண்டீவம் அதன் பேர் என்றான்
**68 விகர்ணன் சொல்வதும்

#284
அண்ணனுக்குத் திறல் வீமன் வணங்கி நின்றான்
அப்போது விகர்ணன் எழுந்து அவை முன் சொல்வான்
பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன
பேச்சதனை நான் கொள்ளேன் பெண்டிர்தம்மை
எண்ணமதில் விலங்கு எனவே கணவர் எண்ணி
ஏதெனிலும் செய்திடலாம் என்றான் பாட்டன்
வண்ணம் உயர் வேதநெறி மாறிப் பின் நாள்
வழங்குவது இ நெறி என்றான் வழுவே சொன்னான்

#285
எந்தையர் தாம் மனைவியரை விற்பது உண்டோ
இதுகாறும் அரசியரைச் சூதில் தோற்ற
விந்தையை நீர் கேட்டது உண்டோ விலைமாதர்க்கு
விதித்ததையே பிற்கால நீதிக்காரர்
சொந்தம் எனச் சாத்திரத்தில் புகுத்திவிட்டார்
சொல்லளவேதான் ஆனாலும் வழக்கம்தன்னில்
இந்த விதம் செய்வது இல்லை சூதர் வீட்டில்
ஏவல்பெண் பணயம் இல்லை என்றும் கேட்டோம்

#286
தன்னை இவன் இழந்து அடிமை ஆன பின்னர்த்
தாரம் எது வீடு ஏது தாதன் ஆன
பின்னையும் ஓர் உடைமை உண்டோ என்று நம்மைப்
பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால்
மன்னர்களே களிப்பதுதான் சூது என்றாலும்
மனுநீதி துறந்து இங்கே வலிய பாவம்
தன்னை இரு விழி பார்க்க வாய் பேசீரோ
தாத்தனே நீதி இது தகுமோ என்றான்

#287
இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார்
எழுந்திட்டார் சில வேந்தர் இரைச்சலிட்டார்
ஒவ்வாது சகுனி செயும் கொடுமை என்பார்
ஒருநாளும் உலகு இதனை மறக்காது என்பார்
எவ்வாறு புகைந்தாலும் புகைந்துபோவீர்
ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா
செவ்வானம் படர்ந்தால் போல் இரத்தம் பாயச்
செருக்களத்தே தீருமடா பழி இஃது என்பார்
**69 கர்ணன் பதில்
** வேறு

#288
விகருணன் சொல்லைக் கேட்டு வில் இசைக் கர்ணன் சொல்வான்
தகுமடா சிறியாய் நின் சொல் தாரணி வேந்தர் யாரும்
புகுவது நன்றன்று எண்ணி வாய்புதைத்திருந்தார் நீதான்
மிகும் உரை சொல்லிவிட்டாய் விரகிலாய் புலனும் இல்லாய்

#289
பெண் இவள் தூண்ட எண்ணிப் பசுமையால் பிதற்றுகின்றாய்
எண்ணிலாது உரைக்கலுற்றாய் இவளை நாம் வென்றதாலே
நண்ணிடும் பாவம் என்றாய் நாணிலாய் பொறையும் இல்லாய்
கண்ணிய நிலைமை ஓராய் நீதி நீ காண்பது உண்டோ

#290
மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கம் கீழடியார்க்கு இல்லை
சீரிய மகளும் அல்லள் ஐவரைக் கலந்த தேவி
யாரடா பணியாள் வாராய் பாண்டவர் மார்பில் ஏந்தும்
சீரையும் களைவாய் தையல் சேலையும் களைவாய் என்றான்

#291
இவ் உரை கேட்டார் ஐவர் பணிமக்கள் ஏவாமுன்னர்
தெவ்வர் கண்டு அஞ்சும் மார்பைத் திறந்தனர் துணியைப் போட்டார்
நவ்வியைப் போன்ற கண்ணாள் ஞானசுந்தரி பாஞ்சாலி
எவ்வழி உய்வோம் என்றே தியங்கினாள் இணைக் கை கோத்தாள்
**70 திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை
** வேறு

#292
துச்சாதனன் எழுந்தே அன்னை துகிலினை மன்றிடை உரிதலுற்றான்
அச்சோ தேவர்களே என்று அலறி அவ் விதுரனும் தரை சாய்ந்தான்
பிச்சேறியவனைப் போல் அந்தப் பேயனும் துகிலினை உரிகையிலே
உட்சோதியில் கலந்தாள் அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமையுற்றாள்

#293
ஹரி ஹரி ஹரி என்றாள் கண்ணா அபயம் அபயம் உனக்கு அபயம் என்றாள்
கரியினுக்கு அருள்புரிந்தே அன்று கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்
கரிய நல் நிறமுடையாய் அன்று காளிங்கன் தலை மிசை நடம்புரிந்தாய்
பெரியதொர் பொருள் ஆவாய் கண்ணா பேசரும் பழமறைப் பொருள் ஆளாவாய்

#294
சக்கரம் ஏந்தி நின்றாய் கண்ணா சார்ங்கம் என்று ஒரு வில்லைக் கரத்துடையாய்
அட்சரப் பொருள் ஆவாய் கண்ணா அக்கார அமுது உண்ணும் பசுங்குழந்தாய்
துக்கங்கள் அழித்திடுவாய் கண்ணா தொண்டர் கண்ணீர்களைத் துடைத்திடுவாய்
தக்கவர்தமைக் காப்பாய் அந்தச் சதுர்முகவேதனைப் படைத்துவிட்டாய்

#295
வானத்துள் வான் ஆவாய் தீ மண் நீர் காற்றினில் அவை ஆவாய்
மோனத்துள் வீழ்ந்திருப்பார் தவ முனிவர்தம் அகத்தினில் ஒளிர்தருவாய்
கானத்துப் பொய்கையிலே தனிக் கமலம் என் பூ மிசை வீற்றிருப்பாள்
தானத்து ஸ்ரீதேவி அவள் தாள் இணை கைக் கொண்டு மகிழ்ந்திருப்பாய்

#296
ஆதியில் ஆதி அப்பா கண்ணா அறிவினைக் கடந்த விண்ணகப் பொருளே
சோதிக்குச் சோதி அப்பா என்றன் சொல்லினைக் கேட்டு அருள்செய்திடுவாய்
மா திக்கு வெளியினிலே நடுவானத்தில் பறந்திடும் கருடன் மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய் கண்ணா சுடர்ப் பொருளே பேரடல் பொருளே

#297
கம்பத்தில் உள்ளானோ அடா காட்டு உன்றன் கடவுளைத் தூணிடத்தே
வம்புரை செய்யும் மூடா என்று மகன் மிசை உறுமி அத் தூண் உதைத்தான்
செம்பு அவிர் குழலுடையான் அந்தத் தீய வல் இரணியன் உடல் பிளந்தாய்
நம்பி நின் அடி தொழுதேன் என்னை நாண் அழியாது இங்குக் காத்தருள்வாய்

#298
வாக்கினுக்கு ஈசனையும் நின்றன் வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய்
ஆக்கினை கரத்துடையாய் என்றன் அன்புடை எந்தை என் அருள் கடலே
நோக்கினில் கதிர் உடையாய் இங்கு நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்து அருள்வாய்
தேக்கு நல் வான் அமுதே இங்கு சிற்றிடை ஆய்ச்சியில் வெண்ணெய் உண்டாய்

#299
வையகம் காத்திடுவாய் கண்ணா மணிவண்ணா என்றன் மனச் சுடரே
ஐய நின் பதமலரே சரண் ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி என்றாள்
பொய்யர்தம் துயரினைப் போல் நல்ல புண்ணியவாணர்தம் புகழினைப் போல்
தையலர் கருணையைப் போல் கடல் சலசலத்து எறிந்திடும் அலைகளைப் போல்

#300
பெண் ஒளி வாழ்த்திடுவார் அந்த பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல் போல்
கண்ணபிரான் அருளால் தம்பி கழற்றிடக் கழற்றிடத் துணி புதிதாய்
வண்ணப் பொன் சேலைகளாம் அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே
எண்ணத்தில் அடங்காவே அவை எத்தனை எத்தனை நிறத்தனவோ

#301
பொன் இழை பட்டு இழையும் பல புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்
சென்னியில் கைகுவித்தாள் அவள் செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே
முன்னிய ஹரி நாமம்தன்னில் மூளும் நல் பயன் உலகு அறிந்திடவே
துன்னிய துகில் கூட்டம் கண்டு தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான்

#302
தேவர்கள் பூச்சொரிந்தார் ஓம் ஜெய ஜெய பாரதசக்தி என்றே
ஆவலோடு எழுந்து நின்று முன்னை ஆரிய வீட்டுமன் கைதொழுதான்
சாவடி மறவர் எல்லாம் ஓம் சக்தி சக்தி சக்தி என்று கரம்குவித்தார்
காவலின் நெறி பிழைத்தான் கொடி கடி அரவு உடையவன் தலைகவிழ்ந்தான்
**71 வீமன் செய்த சபதம்
** வேறு

#303
வீமன் எழுந்து உரைசெய்வான் இங்கு
விண்ணவர் ஆணை பராசக்தி ஆணை
தாமரைப் பூவினில் வந்தான் மறை
சாற்றிய தேவன் திருக்கழல் ஆணை
மா மகளைக் கொண்ட தேவன் எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன் பதத்து ஆணை
காமனைக் கண் அழலாலே சுட்டுக்
காலனை வென்றவன் பொன் அடி மீதில்

#304
ஆணையிட்டு இஃது உரைசெய்வேன் இந்த
ஆண்மையிலாத் துரியோதனன்தன்னை
பேணும் பெரும் கனல் ஒத்தாள் எங்கள்
பெண்டு திரௌபதியைத் தொடை மீதில்
நாண் இன்றி வந்திரு என்றான் இந்த
நாய்மகனாம் துரியோதனன்தன்னை
மாண் அற்ற மன்னர் கண் முன்னே என்றன்
வன்மையினால் யுத்தரங்கத்தின் கண்ணே

#305
தொடையைப் பிளந்து உயிர் மாய்ப்பேன் தம்பி
சூரத் துச்சாதனன்தன்னையும் ஆங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன் அங்கு
கள் என ஊறும் இரத்தம் குடிப்பேன்
நடைபெறும் காண்பிர் உலகீர் இது
நான் சொல்லும் வார்த்தை என்று எண்ணிடல் வேண்டா
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை இது
சாதனை செய்க பராசக்தி என்றான்
**72 அர்சு1னன் சபதம்

#306
பார்த்தன் எழுந்து உரைசெய்வான் இந்தப்
பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்
தீர்த்தன் பெரும் புகழ் விஷ்ணு எங்கள்
சீரிய நண்பன் கண்ணன் கழல் ஆணை
கார்த் தடம் கண்ணி எம் தேவி அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் ஹே
பூதலமே அந்தப் போதினில் என்றான்
**73 பாஞ்சாலி சபதம்

#307
தேவி திரௌபதி சொல்வாள் ஓம்
தேவி பராசக்தி ஆணை உரைத்தேன்
பாவி துச்சாதனன் செந்நீர் அந்தப்
பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்
மேவி இரண்டும் கலந்து குழல்
மீதினில் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் இது
செய்யும் முன்னே முடியேன் என்று உரைத்தாள்

#308
ஓம் என்று உரைத்தனர் தேவர் ஓம்
ஓம் என்று சொல்லி உறுமிற்று வானம்
பூமியதிர்ச்சி உண்டாச்சு விண்ணைப்
பூழிப்படுத்தியதாம் சுழற்காற்று
சாமி தருமன் புவிக்கே என்று
சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும்
நாமும் கதையை முடித்தோம் இந்த
நானிலம் முற்றும் நல் இன்பத்தில் வாழ்க
&9 குயில் பாட்டு

@1. குயில்

#1
காலை இளம்பரிதி வீசும் கதிர்களிலே
நீலக் கடல் ஓர் நெருப்பு எதிரே சேர் மணி போல்
மோகனமாம் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடி
வந்து தவழும் வளம் சார் கரை உடைய 5
செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகரின்
மேற்கே சிறு தொலையில் மேவும் ஒரு மாஞ்சோலை
நால் கோணத்து உள்ள பல நத்தத்து வேடர்களும்
வந்து பறவை சுட வாய்ந்த பெரும் சோலை
அந்த மாஞ்சோலையதனில் ஓர் காலையிலே 10
வேடர் வாராத விருந்துத் திருநாளில்
பேடைக் குயில் ஒன்று பெண் புறவு ஓர் வான் கிளையில்
வீற்றிருந்தே ஆண் குயில்கள் மேனி புளகம் உற
ஆற்றல் அழிவு பெற உள்ளத்து அனல் பெருக
சோலைப் பறவை எலாம் சூழ்ந்து பரவசமாய்க் 15
காலைக்கடனில் கருத்து இன்றிக் கேட்டு இருக்க
இன் அமுதைக் காற்றினிடை எங்கும் கலந்தது போல்
மின்னல் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய்
வந்து பரவுதல் போல் வானத்து மோகினியாள்
இந்த உரு எய்தித் தன் ஏற்றம் விளக்குதல் போல் 20
இன் இசைத் தீம் பாடல் இசைத்து இருக்கும் விந்தைதனை
முன்னிக் கவிதை வெறி மூண்டே நனவு அழியப்
பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன் யான்
கன்னிக் குயில் அன்று கா இடத்தே பாடியது ஓர் 25
இன் இசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்
மனித உரு நீங்கிக் குயில் உருவம் வாராதோ
இனிது இக் குயில் பேட்டை என்றும் பிரியாமல்
காதலித்துக் கூடி களியுடனே வாழோமோ
நாதக் கனலினிலே நம் உயிரைப் போக்கோமோ 30
என்று பல எண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்
அன்று நான் கேட்டது அமரர்தாம் கேட்பாரோ
குக்குக்கூ என்று குயில் பாடும் பாட்டினிலே
தொக்க பொருள் எல்லாம் தோன்றியது என் சிந்தைக்கே
அந்தப் பொருளை அவனிக்கு உரைத்திடுவேன் 35
விந்தைக் குரலுக்கு மேதினியீர் என் செய்கேன்

@2. குயிலின் பாட்டு
** ராகம் – சங்கராபரணம் – தாளம் – ஏகதாளம்
** ஸ்வரம்- “ஸகா-ரிமா-காரீ – பாபாபாபா-மாமாமாமா
** ரீகா-ரிகமா-மாமா”
** சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க.

#0
காதல் காதல் காதல்
காதல் போயில் காதல் போயில்
சாதல் சாதல் சாதல்

#1
அருளேயா நல் ஒளியே
ஒளி போமாயின் ஒளி போமாயின்
இருளே இருளே இருளே

#2.
இன்பம் இன்பம் இன்பம்
இன்பத்திற்கு ஓர் எல்லை காணில்
துன்பம் துன்பம் துன்பம்

#3.
நாதம் நாதம் நாதம்
நாதத்தே ஓர் நலிவு உண்டாயின்
சேதம் சேதம் சேதம்

#4
தாளம் தாளம் தாளம்
தாளத்திற்கு ஓர் தடை உண்டாயின்
கூளம் கூளம் கூளம்

#5.
பண்ணே பண்ணே பண்ணே
பண்ணிற்கே ஓர் பழுது உண்டாயின்
மண்ணே மண்ணே மண்ணே

#6.
புகழே புகழே புகழே
புகழுக்கே ஓர் புரை உண்டாயின்
இகழே இகழே இகழே

#7.
உறுதி உறுதி உறுதி
உறுதிக்கே ஓர் உடைவு உண்டாயின்
இறுதி இறுதி இறுதி

#8.
கூடல் கூடல் கூடல்
கூடிப் பின்னே குமரன் போயின்
வாடல் வாடல் வாடல்

#9
குழலே குழலே குழலே
குழலில் கீறல் கூடுங்காலை
விழலே விழலே விழலே

@3. குயிலின் காதற் கதை

#1
மோகனப் பாட்டு முடிவு பெறப் பார் எங்கும்
ஏக மவுனம் இயன்றது காண் மற்று அதில் ஓர்
இன்ப வெறியும் துயரும் இணைந்தனவால்
பின்பு நான் பார்க்கப் பெடைக் குயில் அஃது ஒன்று அல்லால்
மற்று அப் பறவை மறைந்து எங்கோ போகவும் இவ் 5
ஒற்றைக் குயில் சோகமுற்றுத் தலைகுனிந்து
வாடுவது கண்டேன் மரத்து அருகே போய் நின்று
பேடே திரவியமே பேரின்பப் பாட்டுடையாய்
ஏழு உலகம் இன்பத் தீ ஏற்றும் திறன் உடையாய்
பீழை உனக்கு எய்தியது என் பேசாய் எனக் கேட்டேன் 10
மாயக் குயில் அதுதான் மானுடவர் பேச்சினில் ஓர்
மாயச் சொல் கூற மனம் தீயுற நின்றேன்
காதலை வேண்டிக் கரைகின்றேன் இல்லை எனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன் என்றதுவால்
வானத்துப் புள் எல்லாம் மையலுறப் பாடுகிறாய் 15
ஞானத்தில் புட்களிலும் நன்கு சிறந்து உள்ளாய்
காதலர் நீ எய்துகிலாக் காரணந்தான் யாது என்றேன்
வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே
கானக் குயில் இக் கதை சொல்லலாயிற்று
மானக் குலைவும் வருத்தமும் நான் பார்க்காமல் 20
உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேல்குலத்தீர்
பெண்மைக்கு இரங்கி பிழை பொறுத்தல் கேட்கின்றேன்
அறிவும் வடிவும் குறுகி அவனியிலே
சிறியது ஒரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும்
தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ 25
யாவர் மொழியும் எளிது உணரும் பேறு பெற்றேன்
மானுடவர் நெஞ்ச வழக்கு எல்லாம் தேர்ந்திட்டேன்
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்று நீர் ஓசை அருவி ஒலியினிலும் 30
நீலப் பெரும் கடல் எந்நேரமுமே தான் இசைக்கும்
ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்
மானுடப் பெண்கள் வளரும் ஒரு காதலினால்
ஊன் உருகப் பாடுவதில் ஊறிடும் தேன் வாரியிலும்
ஏற்ற நீர்ப் பாட்டின் இசையினிலும் நெல் இடிக்கும் 35
கோல் தொடியார் குக்குவென கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக் கரங்கள் தாம் ஒலிக்க
கொட்டி இசைத்திடும் ஓர் கூட்டு அமுதப் பாட்டினிலும் 40
வேயின் குழலோடு வீணை முதலா மனிதர்
வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல் கருவி
நாட்டினிலும் காட்டினிலும் நாள் எல்லாம் நன்று ஒலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்
நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளை 45
பாவி மனம் தான் இறுகப் பற்றி நிற்பது என்னேயோ
நெஞ்சத்தே தைக்க நெடு நோக்கு நோக்கிடுவீர்
மஞ்சரே என்றன் மன நிகழ்ச்சி காணீரோ
காதலை வேண்டிக் கரைகின்றேன் இல்லை எனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன் என்றதுவே 50
சின்னக் குயில் இதனைச் செப்பிய அப் போழ்தினிலே
என்னைப் புதியது ஓர் இன்பச் சுரம் கவர
உள்ளத்திடையும் உயிரிடையும் ஆங்கு அந்தப்
பிள்ளைக் குயிலினது ஓர் பேச்சு அன்றி வேறு அற்றேன்
காதலோ காதல் இனிக் காதல் கிடைத்திலதேல் 55
சாதலோ சாதல் என சாற்றும் ஒரு பல்லவி என்
உள்ளமாம் வீணைதனில் உள்ள வீடு அத்தனையும்
விள்ள ஒலிப்பதலால் வேறு ஓர் ஒலி இல்லை
சித்தம் மயங்கித் திகைப்பொடு நான் நின்றிடவும்
அத் தருணத்தே பறவை அத்தனையும் தாம் திரும்பிச் 60
சோலைக் கிளையில் எலாம் தோன்றி ஒலித்தனவால்
நீலக் குயிலும் நெடிது உயிர்த்து ஆங்கு இஃது உரைக்கும்
காதல் வழிதான் கரடுமுரடாம் என்பர்
சோதித் திருவிழியீர் துன்பக் கடலினிலே
நல் உறுதி கொண்டது ஓர் நாவாய் போல் வந்திட்டீர் 65
அல்லல் அற நும்மோடு அளவளாய் நான் பெறும் இவ்
இன்பத்தினுக்கும் இடையூறு மூண்டதுவே
அன்பொடு நீர் இங்கே அடுத்த நான்காம் நாளில்
வந்து அருளல் வேண்டும் மறவாதீர் மேல்குலத்தீர்
சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல் 70
ஆவி தரியேன் அறிந்திடுவீர் நான்காம் நாள்
பாவி இந்த நான்கு நாள் பத்து யுகமாக் கழிப்பேன்
சென்று வருவீர் என் சிந்தை கொடுபோகின்றீர்
சென்று வருவீர் எனத் தேறாப் பெரும் துயரம்
கொண்டு சிறு குயிலும் கூறி மறைந்தது காண் 75

@4. காதலோ காதல்

#1
கண்டதொரு காட்சி கனவு நனவு என்று அறியேன்
எண்ணுதலும் செய்யேன் இருபது பேய் கொண்டவன் போல்
கண்ணும் முகமும் களி ஏறிக் காமனார்
அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க
கொம்புக் குயில் உருவம் கோடி பல கோடியாய் 5
ஒன்றே அதுவாய் உலகம் எலாம் தோற்றமுற
சென்றே மனை போந்து சித்தம் தனது இன்றி
நாள் ஒன்று போவதற்கு நான் பட்ட பாடு அனைத்தும்
தாளம் படுமோ தறி படுமோ யார் படுவார்
நாள் ஒன்று போயினது நானும் எனது உயிரும் 10
நீளச் சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்
மாயக் குயிலும் அதன் மா மாயத் தீம் பாட்டும்
சாயை போல் இந்திர மா சாலம் போல் வையமுமா
மிஞ்சி நின்றோம் ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்
வஞ்சனை நான் கூறவில்லை மான்மதனார் விந்தையால் 15
புத்தி மனம் சித்தம் புலன் ஒன்று அறியாமல்
வித்தை செயும் சூத்திரத்தின் மேவும் ஒரு பொம்மை என
கால் இரண்டும் கொண்டு கடுகவும் நான் சோலையிலே
நீலிதனைக் காண வந்தேன் நீண்ட வழியினிலே
நின்ற பொருள் கண்ட நினைவு இல்லை சோலையிடைச் 20
சென்று நான் பார்க்கையிலே செஞ்ஞாயிற்று ஒண் கதிரால்
பச்சை மரம் எல்லாம் பளபள என என் உளத்தின்
இச்சை உணர்ந்தன போல் ஈண்டும் பறவை எலாம்
வேறு எங்கோ போயிருப்ப வெம்மைக் கொடும் காதல்
மீற எனைத் தான் புரிந்த விந்தைச் சிறு குயிலைக் 25
காண நான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன்
கோணம் எலாம் சுற்றி மரக் கொம்பை எலாம் நோக்கி வந்தேன்

@5. குயிலும் குரங்கும்

#1
மற்றை நாள் கண்ட மரத்தே குயில் இல்லை
சுற்றுமுற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே
வஞ்சனையே பெண்மையே மன்மதனாம் பொய்த்தேவே
நெஞ்சகமே தொல் விதியின் நீதியே பாழ் உலகே
கண்ணாலே நான் கண்ட காட்சிதனை என் உரைப்பேன் 5
பெண்ணால் அறிவு இழக்கும் பித்தர் எலாம் கேண்-மினோ
காதலினைப் போற்றும் கவிஞர் எலாம் கேண்-மினோ
மாதர் எலாம் கேண்-மினோ வல் விதியே கேளாய் நீ
மாயக் குயில் ஓர் மரக் கிளையில் வீற்றிருந்தே
பாயும் விழி நீர் பதைக்கும் சிறிய உடல் 10
விம்மிப் பரிந்து சொல்லும் வெம் துயர் சொல் கொண்டதுவாய்
அம்மவோ மற்று ஆங்கு ஓர் ஆண் குரங்குதன்னுடனே
ஏதேதோ கூறி இரங்கும் நிலை கண்டேன்
தீது ஏது நன்று ஏது செய்கை தெளிவு ஏது
அந்தக் கணமே அதையும் குரங்கினையும் 15
சிந்தக் கருதி உடைவாளில் கைசேர்த்தேன்
கொன்றுவிடும் முன்னே குயில் உரைக்கும் வார்த்தைகளை
நின்று சற்றே கேட்பதற்கு என் நெஞ்சம் விரும்பிடவும்
அங்கு அவற்றின் கண்ணில் அகப்படாவாறு அருகே
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே 20
பேடைக் குயில் இதனைப் பேசியது வானரரே
ஈடு அறியா மேன்மை அழகு ஏய்ந்தவரே பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும் ஏந்தலே நின் அழகைத்
தப்புமோ மையல் தடுக்கும் தரம் ஆமோ
மண்ணில் உயிர்க்கு எல்லாம் தலைவர் என மானிடரே 25
எண்ணிநின்றார் தம்மை எனில் ஒருகால் ஊர் வகுத்தல்
கோயில் அரசு குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே அந்த மனிதர் உயர்வு எனலாம்
மேனி அழகினிலும் விண்டு உரைக்கும் வார்த்தையிலும்
கூனி இருக்கும் கொலு நேர்த்திதன்னிலுமே 30
வானரர்தம் சாதிக்கு மாந்தர் நிகர் ஆவாரோ
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்
பட்டு மயிர் மூடப்படாத தமது உடலை
எட்டு உடையால் மூடி எதிர் உமக்கு வந்தாலும்
மீசையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம் 35
ஆசை முகத்தினைப் போல் ஆக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகில் உமை நேர்வற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும் கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும்
வேறு எத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே 40
வானரர் போல் ஆவரோ வாலுக்குப் போவது எங்கே
ஈனமுறும் கச்சை இதற்கு நிகராமோ
பாகையிலே வால் இருக்கப் பார்த்தது உண்டு கந்தை போல்
வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வம் கொடுத்த திருவாலைப் போல் ஆமோ 45
சைவ சுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும்
வானரர் போல் சாதி ஒன்று மண்ணுலகின் மீது உளதோ
வானரர்தம்முள்ளே மணி போல் உமை அடைந்தேன்
பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்
நிச்சயமா முன் புரிந்த நேமத் தவங்களினால் 50
தேவரீர் காதல் பெறும் சீர்த்தி கொண்டேன் தம்மிடத்தே
ஆவலினால் பாடுகின்றேன் ஆரியரே கேட்டு அருள்வீர்
வானரப் பேச்சினிலே மைக் குயில் பேசியதை
யான் அறிந்துகொண்டுவிட்டேன் யாதோ ஒரு திறத்தால்
நீசக் குயிலும் நெருப்புச் சுவைக் குரலில் 55
ஆசை ததும்பி அமுது ஊறப் பாடியதே
காட்டில் விலங்கு அறியும் கைக்குழந்தைதான் அறியும்
பாட்டின் சுவையதனைப் பாம்பு அறியும் என்று உரைப்பார்
வற்றல் குரங்கு மதி மயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறி போல் முழு வெறி கொண்டு ஆங்கனே 60
தாவிக் குதிப்பதுவும் தாளங்கள் போடுவதும்
ஆவி உருகுதடீ ஆகாகா என்பதுவும்
கண்ணைச் சிமிட்டுவதும் காலாலும் கையாலும்
மண்ணைப் பிறாண்டி எங்கும் வாரி இறைப்பதுவும்
ஆசைக் குயிலே அரும் பொருளே தெய்வதமே 65
பேச முடியாப் பெரும் காதல் கொண்டு விட்டேன்
காதல் இல்லையானால் கணத்திலே சாதல் என்றாய்
காதலினால் சாகும் கதியினிலே என்னை வைத்தாய்
எப்பொழுதும் நின்னை இனிப் பிரிவது ஆற்றகிலேன்
இப்பொழுதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன் 70
என்று பல பேசுவதும் என் உயிரைப் புண் செயவே
கொன்றுவிட எண்ணிக் குரங்கின் மேல் வீசினேன்
கைவாளை ஆங்கே கனவோ நனவு-கொலோ
தெய்வ வலியோ சிறு குரங்கு என் வாளுக்குத்
தப்பி முகஞ்சுளித்துத் தாவி ஒளித்திடவும் 75
ஒப்பிலா மாயத்தொரு குயிலும் தான் மறைய
சோலைப் பறவை தொகைதொகையாத் தாம் ஒலிக்க
மேலைச் செயல் அறியா வெள் அறிவில் பேதையேன்
தட்டுத்தடுமாறி சார்பு அனைத்தும் தேடியுமே
குட்டிப்பிசாசு அக் குயிலை எங்கும் காணவில்லை 80

@6. இருளும் ஒளியும்

#1
வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
மோன ஒளி சூழ்ந்திடவும் மொய்ம்பில் கொலுவிருந்தான்
மெய் எல்லாம் சோர்வு விழியில் மயக்கமுற
உய்யும் வழி உணராது உள்ளம் பதைபதைக்க
நாணும் துயரும் நலிவுறுத்த நான் மீண்டு 5
பேணும் மனை வந்தேன் பிரக்கினை போய் வீழ்ந்துவிட்டேன்
மாலையிலே மூர்ச்சைநிலை மாறித் தெளிவடைந்தேன்
நாலு புறமும் எனை நண்பர் வந்து சூழ்ந்து நின்றார்
ஏனடா மூர்ச்சையுற்றாய் எங்கு சென்றாய் ஏது செய்தாய்
வானம் வெளிறும் முன்னே வைகறையிலே தனித்துச் 10
சென்றனை என்கின்றார் அச் செய்தி என்னே ஊண் இன்றி
நின்றது என்னே என்று நெரித்துவிட்டார் கேள்விகளை
இன்னார்க்கு இது சொல்வது என்று தெரியாமல்
என்னால் பல உரைத்தல் இப்பொழுது கூடாதாம்
நாளை வருவீரேல் நடந்தது எலாம் சொல்வேன் இவ் 15
வேளை எனைத் தனியே விட்டு அகல்வீர் என்று உரைத்தேன்
நண்பர் எலாம் சென்றுவிட்டார் நைந்து நின்ற தாயார்தாம்
உண்பதற்குப் பண்டம் உதவி நல்ல பால் கொணர்ந்தார்
சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன்
முற்றும் மறந்து முழுத் துயிலில் ஆழ்ந்துவிட்டேன் 20
பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும்
மண்டு துயர் எனது மார்பை எலாம் கவ்வுவதே
ஓடித் தவறி உடைவனவாம் சொற்கள் எல்லாம்
கூடி மதியில் குவிந்திடுமாம் செய்தி எலாம்
நாசக் கதையை நடுவே நிறுத்திவிட்டுப் 25
பேசும் இடைப்பொருளின் பின்னே மதி போக்கிக்
கற்பனையும் வர்ணனையும் காட்டிக் கதை வளர்க்கும்
விற்பனர்தம் செய்கை விதமும் தெரிகிலன் யான்
மேலைக் கதை உரைக்க வெள்கிக் குலையும் மனம்
காலைக் கதிர் அழகின் கற்பனைகள் பாடுகின்றேன் 30
தங்கம் உருக்கித் தழல் குரைத்துத் தேன் ஆக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ வான் வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமை ஒன்று காண்பாரோ
கண்ணை இனிது என்று உரைப்பார் கண்ணுக்குக் கண் ஆகி 35
விண்ணை அளக்கும் ஒளி மேம்படும் ஓர் இன்பம் அன்றோ
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தைசெய்யும்
மேலவரும் அஃது ஓர் விரியும் ஒளி என்பாரேல்
நல் ஒளிக்கு வேறு பொருள் ஞாலம் மிசை ஒப்பு உளதோ
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி 40
மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளி ஆக்கி விந்தை செயும் சோதியினைக்
காலைப் பொழுதினிலே கண் விழித்து நான் தொழுதேன்
நாலு புறத்தும் உயிர் நாதங்கள் ஓங்கிடவும்
இன்பக் களியில் இயங்கும் புவி கண்டேன் 45
துன்பக் கதையின் தொடர் உரைப்பேன் கேளீரோ

@7. குயிலும் மாடும்

#1
காலைத் துயிலெழுந்து கால் இரண்டு முன் போலே
சோலைக்கு இழுத்திட நான் சொந்த உணர்வு இல்லாமே
சோலையினில் வந்து நின்று சுற்றுமுற்றும் தேடினேன்
கோலப் பறவைகளின் கூட்டம் எல்லாம் காணவில்லை
மூலையில் ஓர் மாமரத்தின் மோட்டுக் கிளையினிலே 5
நீலக் குயில் இருந்து நீண்ட கதை சொல்லுவதும்
கீழே இருந்து ஓர் கிழக் காளை மாடு அதனை
ஆழ மதியுடனே ஆவலுறக் கேட்பதுவும்
கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் நெஞ்சில் அனல்
கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய் வெயர்த்தேன் 10
கொல்ல வாள் வீசல் குறித்தேன் இப் பொய்ப் பறவை
சொல்லும் மொழி கேட்டு அதன் பின் கொல்லுதலே சூழ்ச்சி என
முன் போல் மறைந்து நின்றேன் மோகப் பழம் கதையைப்
பொன் போல் குரலும் புது மின் போல் வார்த்தைகளும்
கொண்டு குயில் ஆங்கே கூறுவதாம் நந்தியே 15
பெண்டிர் மனத்தைப் பிடித்து இழுக்கும் காந்தமே
காமனே மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே
பூமியிலே மாடு போல் பொற்பு உடைய சாதி உண்டோ
மானிடரும் தம்முள் வலி மிகுந்த மைந்தர்தமை
மேனியுறும் காளை என்று மேம்பாடுறப் புகழ்வர் 20
காளையர்தம்முள்ளே கனம் மிகுந்தீர் ஆரியரே
நீள முகமும் நிமிர்ந்து இருக்கும் கொம்புகளும்
பஞ்சுப் பொதி போல் படர்ந்த திருவடிவும்
மிஞ்சுப் புறச் சுமையும் வீரத் திருவாலும்
வானத்து இடி போல மா என்று உறுமுவதும் 25
ஈனப் பறவை முதுகின் மிசை ஏறிவிட்டால்
வாலைக் குழைத்து வளைத்து அடிக்கு நேர்மையும் பல்
காலம் நான் கண்டு கடு மோகம் எய்திவிட்டேன்
பார வடிவும் பயிலும் உடல் வலியும்
தீர நடையும் சிறப்புமே இல்லாத 30
சல்லித் துளிப் பறவைச் சாதியிலே நான் பிறந்தேன்
அல்லும்பகலும் நிதம் அற்ப வயிற்றினுக்கே
காடு எல்லாம் சுற்றி வந்து காற்றிலே எற்றுண்டு
மூட மனிதர் முடை வயிற்றுக்கு ஓர் உணவாம்
சின்னக் குயிலின் சிறு குலத்திலே தோன்றி 35
என்ன பயன் பெற்றேன் எனைப் போல் ஓர் பாவி உண்டோ
சேற்றிலே தாமரையும் சீழ் உடைய மீன் வயிற்றில்
போற்றும் ஒளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ
நீசப் பிறப்பு ஒருவர் நெஞ்சிலே தோன்றி வரும்
ஆசை தடுக்க வல்லது ஆகுமோ காமனுக்கே 40
சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ
வாதித்துப் பேச்சை வளர்த்து ஓர் பயனும் இல்லை
மூட மதியாலோ முன்னைத் தவத்தாலோ
ஆடவர்தம்முள்ளே அடியாள் உமைத் தெரிந்தேன்
மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும் 45
கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வம் என நீர் உதவி செய்த பின்னர் மேனி விடாய்
எய்தி இருக்கும் இடையினிலே பாவியேன்
வந்து உமது காதில் மதுர இசை பாடுவேன்
வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன் 50
வாலில் அடிபட்டு மனம் மகிழ்வேன் மா என்றே
ஓலிடும் நும் பேர் ஒலியோடு ஒன்றுபடக் கத்துவேன்
மேனியிலே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்
கானிடையே சுற்றிக் கழனி எலாம் மேய்ந்து நீர்
மிக்க உணவு உண்டு வாய் மென்று அசைதான் போடுகையில் 55
பக்கத்து இருந்து பல கதைகள் சொல்லிடுவேன்
காளை எருதரே காட்டில் உயர் வீரரே
தாளைச் சரணடைந்தேன் தையல் எனைக் காத்தருள்வீர்
காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை
மாதர் உரைத்தல் வழக்கம் இல்லை என்று அறிவேன் 60
ஆனாலும் என் போல் அபூர்வமாம் காதல் கொண்டால்
தானா உரைத்தல் அன்றிச் சாரும் வழி உளதோ
ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கம் எல்லாம்
இத் தரையில் மேலோர் முன் ஏழையர்க்கு நாணம் உண்டோ
தேவர் முன்னே அன்பு உரைக்க சிந்தை வெட்கம் கொள்வது உண்டோ 65
காவலர்க்குத் தம் குறைகள் காட்டாரோ கீழடியார்
ஆசைதான் வெட்கம் அறியுமோ என்று பல
நேச உரை கூறி நெடிது உயிர்த்துப் பொய்க் குயிலி
பண்டு போலே தனது பாழடைந்த பொய்ப் பாட்டை
எண் திசையும் இன்பக் களி ஏறப் பாடியதே 70
பாட்டு முடியும் வரை பார் அறியேன் விண் அறியேன்
கோட்டுப் பெரு மரங்கள் கூடி நின்ற கா அறியேன்
தன்னை அறியேன் தனைப் போல் எருது அறியேன்
பொன்னை நிகர்த்த குரல் பொங்கிவரும் இன்பம் ஒன்றே
கண்டேன் படைப்புக் கடவுளே நான்முகனே 75
பண்டே உலகு படைத்தனை நீ என்கின்றார்
நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டிவைத்தாய்
நீரைப் பழைய நெருப்பில் குளிர்வித்தாய்
காற்றை முன்னே ஊதினாய் காண் அரிய வான வெளி
தோற்றுவித்தாய் நின்றன் தொழில் வலிமை யார் அறிவார் 80
உள்ளம்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத
கொள்ளைப் பெரிய உருக் கொண்ட பல கோடி
வட்ட உருளைகள் போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்
எல்லாம் அசைவில் இருப்பதற்கே சக்திகளைப் 85
பொல்லாப் பிரமா புகுத்துவிட்டாய் அம்மாவோ
காலம் படைத்தாய் கடப்பதிலா திக்கு அமைத்தாய்
ஞாலம் பலவினிலும் நாள்தோறும் தாம் பிறந்து
தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்
சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய் நான்முகனே 90
சால மிகப் பெரிய சாதனை காண் இஃது எல்லாம்
தாலம் மிசை நின்றன் சமர்த்து உரைக்க வல்லார் யார்
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானாமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா
காட்டு நெடு வானம் கடல் எல்லாம் விந்தை எனில் 95
பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா
பூதங்கள் ஒத்துப் புதுமைதரல் விந்தை எனில்
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேர் ஆமோ
ஆசை தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம் அன்றோ 100
செத்தைக் குயில் புரிந்த தெய்விகத் தீம் பாட்டு எனும் ஓர்
வித்தை முடிந்தவுடன் மீட்டும் அறிவெய்தி நான்
கையில் வாள் எடுத்துக் காளையின் மேல் வீசினேன்
மெய்யில் படும் முன் விரைந்து அதுதான் ஓடிவிட
வன்னக் குயில் மறைய மற்றைப் பறவை எலாம் 105
முன்னைப் போல் கொம்பு முனைகளிலே வந்து ஒலிக்க
நாணம் இலாக் காதல் கொண்ட நானும் சிறு குயிலை
வீணிலே தேடிய பின் வீடு வந்து சேர்ந்துவிட்டேன்
எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை
கண்ணிலே நீர் ததும்பக் கானக் குயில் எனக்கே 110
காதல் கதை உரைத்து நெஞ்சம் கரைத்ததையும்
பேதை நான் அங்கு பெரிய மயல் கொண்டதையும்
இன்பக் கதையின் இடையே தடையாக
புன் பறவை எல்லாம் புகுந்த வியப்பினையும்
ஒன்றைப் பொருள் செய்யா உள்ளத்தைக் காம அனல் 115
தின்று எனது சித்தம் திகைப்புறவே செய்ததையும்
சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்து எனக்கு
முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும்
இத்தனை கோலத்தினுக்கும் யான் வேட்கை தீராமல்
பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும் 120
எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை
கண் இரண்டும் மூடக் கடும் துயிலில் ஆழ்ந்துவிட்டேன்

@8. நான்காம் நாள்

#1
நான்காம் நாள் என்னை நயவஞ்சனை புரிந்து
வான் காதல் காட்டி மயக்கிச் சதி செய்த
பொய்ம்மைக் குயில் என்னைப் போந்திடவே கூறிய நாள்
மெய்ம்மை அறிவு இழந்தேன் வீட்டிலே மாடம் மிசை
சித்தம் திகைப்புற்று ஓர் செய்கை அறியாமல் 5
எத்துக் குயில் என்னை எய்துவித்த தாழ்ச்சி எல்லாம்
மீட்டும் நினைத்து அங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே
காட்டுத் திசையினில் என் கண் இரண்டு நாடியவால்
வானத்தே ஆங்கு ஓர் கரும் பறவை வந்திடவும்
யான் அதனைக் கண்டே இது நமது பொய்க் குயிலோ 10
என்று திகைத்தேன் இரும் தொலைக்கே நின்றதனால்
நன்று வடிவம் துலங்கவில்லை நாடு மனம்
ஆங்கு அதனை விட்டுப் பிரிவதற்கும் ஆகவில்லை
ஓங்கும் திகைப்பில் உயர் மாடம் விட்டு நான்
வீதியிலே வந்து நின்றேன் மேல் திசையில் அவ் உருவம் 15
சோதிக் கடலிலே தோன்று கரும்புள்ளி எனக்
காணுதலும் சற்றே கடுகி அருகே போய்
நாணம் இலாப் பொய்க் குயிலோ என்பதனை நன்கு அறிவோம்
என்ற கருத்துடனே யான் விரைந்து சென்றிடுங்கால்
நின்ற பறவையும்தான் நேராகப் போயினதால் 20
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும்
மேனி நன்கு தோன்ற அருகினிலே மேவாது
வானில் அதுதான் வழி காட்டிச் சென்றிடவும்
யான் நிலத்தே சென்றேன் இறுதியிலே முன்பு நாம்
கூறியுள்ள மாஞ்சோலைதன்னைக் குறுகி அந்த 25
ஊறு இலாப் புள்ளும் அதன் உள்ளே மறைந்ததுவால்
மாஞ்சோலைக்கு உள்ளே மதியிலி நான் சென்று ஆங்கே
ஆஞ்சோதி வெள்ளம் அலையும் ஒரு கொம்பரின் மேல்
சின்னக் கரும் குயிலி செவ்வனே வீற்றிருந்து
பொன் அம் குழலின் புதிய ஒளிதனிலே 30
பண்டைப் பொய்க் காதல் பழம் பாட்டைத் தான் பாடிக்
கொண்டு இருத்தல் கண்டேன் குமைந்தேன் எதிரே போய்
நீசக் குயிலே நிலை அறியா பொய்ம்மையே
ஆசைக் குரங்கினையும் அன்பு ஆர் எருதினையும்
எண்ணி நீ பாடும் இழிந்த புலைப் பாட்டை 35
நண்ணி இங்கு கேட்க நடத்திவந்தாய் போலும் எனை
என்று சினம் பெருகி ஏதேதோ சொல் உரைத்தேன்
கொன்றுவிட நெஞ்சில் குறித்தேன் மறுபடியும்
நெஞ்சம் இளகி நிறுத்திவிட்டேன் ஈங்கு இதற்குள்
வஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கி 40
கண்ணிலே பொய் நீர் கடகடெனத் தான் ஊற்றப்
பண் இசை போல் இன் குரலால் பாவி அது கூறிடுமால்
ஐயனே என் உயிரின் ஆசையே ஏழை எனை
வையம் மிசை வைக்கத் திருவுளமோ மற்று எனையே
கொன்றுவிடச் சித்தமோ கூறீர் ஒரு மொழியில் 45
அன்றில் சிறு பறவை ஆண் பிரிய வாழாது
ஞாயிறுதான் வெம்மைசெயில் நாள்மலர்க்கு வாழ்வு உளதோ
தாய் இருந்து கொன்றால் சரண் மதலைக்கு ஒன்று உளதோ
தேவர் சினந்துவிட்டால் சிற்றுயிர்கள் என் ஆகும்
ஆவல் பொருளே அரசே என் ஆரியரே 50
சிந்தையில் நீர் என் மேல் சினம் கொண்டால் மாய்ந்திடுவேன்
வெம் தழலில் வீழ்வேன் விலங்குகளின் வாய்ப் படுவேன்
குற்றம் நீர் என் மேல் கொணர்ந்ததனை யான் அறிவேன்
குற்றம் நுமைக் கூறுகிலேன் குற்றம் இலேன் யான் அம்ம
புன்மைக் குரங்கைப் பொதி மாட்டை நான் கண்டு 55
மென்மையுறக் காதல் விளையாடினேன் என்றீர்
என் சொல்கேன் எங்ஙன் உய்வேன் ஏது செய்கேன் ஐயனே
நின் சொல் மறுக்க நெறி இல்லை ஆயிடினும்
என் மேல் பிழை இல்லை யார் இதனை நம்பிடுவார்
நின் மேல் சுமை முழுதும் நேராகப் போட்டுவிட்டேன் 60
வெம் விதியே நீ என்னை மேம்பாடுறச் செய்து
செவ்விதின் இங்கு என்னை என்றன் வேந்தனோடு சேர்த்திடினும்
அல்லாது என் வார்த்தை அவர் சிறிதும் நம்பாமே
புல்லாக எண்ணிப் புறக்கணித்துப் போய்விட நான்
அக்கணத்தே தீயில் அழிந்து விழ நேரிடினும் 65
எக்கதிக்கும் ஆளாவேன் என் செய்கேன் வெம் விதியே

@9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்

#1
தேவனே என் அருமைச் செல்வமே என் உயிரே
போவதன் முன் ஒன்று புகல்வதனைக் கேட்டு அருள்வீர்
முன்னம் ஒரு நாள் முடி நீள் பொதியமலை
தன் அருகே நானும் தனியே ஓர் சோலைதனில்
மாங்கிளையில் ஏதோ மனதில் எண்ணி வீற்றிருந்தேன் 5
ஆங்கு வந்தார் ஓர் முனிவர் ஆரோ பெரியர் என்று
பாதத்தில் வீழ்ந்து பரவினேன் ஐயர் எனை
ஆதரித்து வாழ்த்தி அருளினார் மற்று அதன் பின்
வேதமுனிவரே மேதினியில் கீழ்ப் பறவைச்
சாதியிலே நான் பிறந்தேன் சாதிக் குயில்களைப் போல் 10
இல்லாமல் என்றன் இயற்கை பிரிவு ஆகி
எல்லார் மொழியும் எனக்கு விளங்குவது ஏன்
மானுடர் போல் சித்தநிலை வாய்த்திருக்கும் செய்தி ஏன்
யான் உணரச் சொல்வீர் என வணங்கிக் கேட்கையிலே
கூறுகின்றார் ஐயர் குயிலே கேள் முன் பிறப்பில் 15
வீறு உடைய வெம் தொழிலார் வேடர் குலத் தலைவன்
வீர முருகன் எனும் வேடன் மகளாகச்
சேர வள நாட்டில் தென்புறத்தே ஓர் மலையில்
வந்து பிறந்து வளர்ந்தாய் நீ நல் இளமை
முந்தும் அழகினிலே மூன்று தமிழ் நாட்டில் 20
யாரும் நினக்கு ஓர் இணையில்லை என்றிடவே
சீர் உயர நின்றாய் செழும் கான வேடரில் உன்
மாமன் மகன் ஒருவன் மாடன் எனும் பேர் கொண்டான்
காமன் கணைக்கு இரையாய் நின் அழகைக் கண்டு உருகி
நின்னை மணக்க நெடுநாள் விரும்பியவன் 25
பொன்னை மலரை புதுத் தேனைக் கொண்டு உனக்கு
நித்தம் கொடுத்து நினைவு எல்லாம் நீ ஆக
சித்தம் வருந்துகையில் தேமொழியே நீ அவனை
மாலையிட வாக்களித்தாய் மையலினால் இல்லை அவன்
சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய் 30
ஆயிழையே நின்றன் அழகின் பெரும் கீர்த்தி
தேயம் எங்கும் தான் பரவத் தேன்மலையின் சார்பினில் ஓர்
வேடர் கோன் செல்வமும் நல் வீரமுமே தான் உடையான்
நாடு அனைத்தும் அஞ்சி நடுங்கும் செயல் உடையான்
மொட்டைப் புலியனும் தன் மூத்த மகனான 35
நெட்டைக் குரங்கனுக்கு நேர் ஆன பெண் வேண்டி
நின்னை மணம்புரிய நிச்சயித்து நின் அப்பன்
தன்னை அணுகி நின் ஓர் தையலை என் பிள்ளைக்குக்
கண்ணாலம் செய்யும் கருத்து உடையேன் என்றிடலும்
எண்ணாப் பெரு மகிழ்ச்சி எய்தியே நின் தந்தை 40
ஆங்கே உடம்பட்டான் ஆறிரண்டு நாட்களிலே
பாங்கா மணம்புரியத் தாம் உறுதிபண்ணிவிட்டார்
பன்னிரண்டு நாட்களிலே பாவை உனைத் தேன்மலையில்
அன்னியன் கொண்டு ஏகிடுவான் என்னும் அது கேட்டு
மாடன் மனம் புகைந்து மற்றை நாள் உன்னை வந்து 45
நாடிச் சினத்துடனே நானா மொழி கூற
நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால்
காயும் சினம் தவிர்ப்பாய் மாடா கடுமையினால்
நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டு ஆக நேர்ந்தாலும்
கட்டுப்படி அவர்தம் காவலில் போய் வாழ்ந்தாலும் 50
மாதம் ஒரு மூன்றில் மருமம் சில செய்து
பேதம் விளைவித்துப் பின் இங்கே வந்திடுவேன்
தாலிதனை மீட்டும் அவர்தங்களிடமே கொடுத்து
நாலிரண்டு மாதத்தே நாயகனா நின்றனையே
பெற்றிடுவேன் நின்னிடத்தே பேச்சுத் தவறுவனோ 55
மற்று இதனை நம்பிடுவாய் மாடப்பா என்று உரைத்தாய்
காதலினால் இல்லை கருணையினால் இஃது உரைத்தாய்
மாதரசாய் வேடன் மகள் ஆன முன் பிறப்பில்
சின்னக் குயிலி என்று செப்பிடுவார் நின் நாமம்
பின்னர்ச் சில தினங்கள் சென்றதன் பின் பெண் குயிலி 60
நின் ஒத்த தோழியரும் நீயும் ஒரு மாலையிலே
மின்னல் கொடிகள் விளையாடுதல் போலே
காட்டினிடையே களித்து ஆடி நிற்கையிலே
வேட்டைக்கு என வந்தான் வெல் வேந்தன் சேரமான்
தன் அருமை மைந்தன் தனியே துணை பிரிந்து 65
மன்னவன்தன் மைந்தன் ஒரு மானைத் தொடர்ந்து வரத்
தோழியரும் நீயும் தொகுத்து நின்றே ஆடுவதை
வாழி அவன் கண்டுவிட்டான் மையல் கரைகடந்து
நின்னைத் தனதாக்க நிச்சயித்தான் மாது நீ
மன்னவனைக் கண்டவுடன் மா மோகம் கொண்டு விட்டாய் 70
நின்னை அவன் நோக்கினான் நீ அவனை நோக்கி நின்றாய்
அன்ன ஒரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்
தோழியரும் வேந்தன் சுடர்க் கோலம்தான் கண்டே
ஆழி அரசன் அரும் புதல்வன் போலும் என்றே
அஞ்சி மறைந்துவிட்டார் ஆங்கு அவனும் நின்னிடத்தே 75
வஞ்சித் தலைவன் மகன் யான் என உரைத்து
வேடர் தவ மகளே விந்தை அழகு உடையாய்
ஆடவனாத் தோன்றியதன் பயனை இன்று பெற்றேன்
கண்டதுமே நின் மிசை நான் காதல் கொண்டேன் என்று இசைக்க
மண்டு பெரும் காதல் மனத்து அடக்கி நீ மொழிவாய் 80
ஐயனே உங்கள் அரமனையில் ஐந்நூறு
தையலர் உண்டாம் அழகில் தன்னிகர் இல்லாதவராம்
கல்வி தெரிந்தவராம் கல் உருகப் பாடுவராம்
அன்னவரைச் சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்
மன்னவரை வேண்டேன் மலைக் குறவர்தம் மகள் யான் 85
கொல்லும் அடல் சிங்கம் குழி முயலை வேட்பது உண்டோ
வெல்லு திறல் மா வேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பர்
பத்தினியா வாழ்வது அல்லால் பார் வேந்தர்தாம் எனினும்
நத்தி விலைமகளா நாங்கள் குடிபோவது இல்லை
பொன் அடியை போற்றுகின்றேன் போய்வருவீர் தோழியரும் 90
என்னை விட்டுப் போயினரே என் செய்கேன் என்று நீ
நெஞ்சம் கலக்கம் எய்தி நிற்கையிலே வேந்தன் மகன்
மிஞ்சு நின்றன் காதல் விழிக் குறிப்பினால் அறிந்தே
பக்கத்தில் வந்து பளிச்சென்று உனது கன்னம்
செக்கச் சிவக்க முத்தமிட்டான் சினம் காட்டி 95
நீ விலகிச் சென்றாய் நெறி ஏது காமியர்க்கே
தாவி நின்னை வந்து தழுவினான் மார்பு இறுக
நின்னை அன்றி ஓர் பெண் நிலத்தில் உண்டோ என்றனுக்கே
பொன்னே ஒளிர் மணியே புது அமுதே இன்பமே
நீயே மனையாட்டி நீயே அரசாணி 100
நீயே துணை எனக்கு நீயே குலதெய்வம்
நின்னை அன்றிப் பெண்ணை நினைப்பேனோ வீணிலே
என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம் இப்பொழுதே
நின் மனைக்குச் சென்றிடுவோம் நின் வீட்டில் உள்ளோர்பால்
என் மனதைச் சொல்வேன் எனது நிலை உரைப்பேன் 105
வேதநெறியில் விவாகம் உனைச் செய்துகொள்வேன்
மாதரசே என்று வலக்கை தட்டி வாக்களித்தான்
பூரிப்புக் கொண்டாய் புளகம் நீ எய்திவிட்டாய்
வாரிப் பெரும் திரை போல் வந்த மகிழ்ச்சியிலே
நாணம் தவிர்த்தாய் நனவே தவிர்ந்தவளாய் 110
காணத் தெவிட்டாத ஓர் இன்பக் கனவினிலே
சேர்ந்துவிட்டாய் மன்னன்தன் திண் தோளை நீ உவகை
ஆர்ந்து தழுவி அவன் இதழில் தேன் பருகச்
சிந்தைகொண்டாய் வேந்தன் மகன் தேனில் விழும் வண்டினைப் போல்
விந்தையுறு காந்தம் மிசை வீழும் இரும்பினைப் போல் 115
ஆவலுடன் நின்னை அறத் தழுவி ஆங்கு உனது
கோவை இதழ் பருகிக்கொண்டு இருக்கும் வேளையிலே
சற்று முன்னே ஊரினின்று தான் வந்து இறங்கியவன்
மற்று நீ வீட்டை விட்டு மாதருடன் காட்டினிலே
கூத்தினுக்குச் சென்றதனைக் கேட்டுக் குதூகலமாய் 120
ஆத்திரம்தான் மிஞ்சி நின்னை ஆங்கு எய்திக் காண வந்தான்
நெட்டைக் குரங்கன் நெருங்கி வந்து பார்த்துவிட்டான்
பட்டப்பகலிலே பாவி மகள் செய்தியைப் பார்
கண்ணாலம் கூட இன்னும் கட்டி முடியவில்லை
மண் ஆக்கிவிட்டாள் என் மானம் தொலைத்துவிட்டாள் 125
நிச்சியதாம்பூலம் நிலையா நடந்திருக்க
பிச்சைச் சிறுக்கி செய்த பேதகத்தைப் பார்த்தாயோ
என்று மனதில் எழுகின்ற தீயுடனே
நின்று கலங்கினான் நெட்டைக் குரங்கன் அங்கே
மாப்பிளை தான் ஊருக்கு வந்ததையும் பெண் குயிலி 130
தோப்பிலே தானும் தன் தோழிகளுமாச் சென்று
பாடி விளையாடும் பண்பு கேட்டே குரங்கன்
ஓடி இருப்பதோர் உண்மையையும் மாடனிடம்
யாரோ உரைத்துவிட்டார் ஈரிரண்டு பாய்ச்சலிலே
நீர் ஓடு மேனி நெருப்பு ஓடும் கண்ணுடனே 135
மாடன் அங்கு வந்து நின்றான் மற்று இதனைத் தேன்மலையின்
வேடர் கோன் மைந்தன் விழி கொண்டு பார்க்கவில்லை
நெட்டைக் குரங்கன் அங்கு நீண்ட மரம் போலே
எட்டி நிற்கும் செய்தி இவன் பார்க்க நேரம் இல்லை
அன்னியனைப் பெண் குயிலி ஆர்ந்து இருக்கும் செய்தி ஒன்று 140
தன்னையே இவ் இருவர் தாம் கண்டார் வேறு அறியார்
மாடன் அதைத் தான் கண்டான் மற்றவனும் அங்ஙனமே
மாடன் வெறிகொண்டான் மற்றவனும் அவ்வாறே
காவலன்தன் மைந்தனும் அக் கன்னிகையும் தானும் அங்கு
தேவ சுகம் கொண்டு விழியே திறக்கவில்லை 145
ஆவிக் கலப்பின் அமுத சுகம்தனிலே
மேவி அங்கு மூடியிருந்த விழி நான்கு
ஆங்கு அவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழி நான்கு
மாடனும் தன் வாள் உருவி மன்னவனைக் கொன்றிடவே 150
ஓடி வந்தான் நெட்டைக் குரங்கனும் வாள் ஓங்கி வந்தான்
வெட்டு இரண்டு வீழ்ந்தன காண் வேந்தன் முதுகினிலே
சட்டெனவே மன்னவனும் தான் திரும்பி வாள் உருவி
வீச்சு இரண்டில் ஆங்கு அவரை வீழ்த்தினான் வீழ்ந்தவர்தாம்
பேச்சு இழந்தே அங்கு பிணமாக் கிடந்துவிட்டார் 155
மன்னவனும் சோர்வு எய்தி மண் மேல் விழுந்துவிட்டான்
பின் அவனை நீயும் பெரும் துயர் கொண்டே மடியில்
வாரி எடுத்துவைத்து வாய் புலம்பக் கண் இரண்டும்
மாரி பொழிய மனம் அழிந்து நிற்கையிலே
கண்ணை விழித்து உனது காவலனும் கூறுகின்றான் 160
பெண்ணே இனி நான் பிழைத்திடேன் சில் கணத்தே
ஆவி துறப்பேன் அழுது ஓர் பயன் இல்லை
சாவிலே துன்பம் இல்லை தையலே இன்னமும் நாம்
பூமியிலே தோன்றிடுவோம் பொன்னே நினைக் கண்டு
காமுறுவேன் நின்னைக் கலந்து இனிது வாழ்ந்திடுவேன் 165
இன்னும் பிறவி உண்டு மாதரசே இன்பம் உண்டு
நின்னுடனே வாழ்வன் இனி நேரும் பிறப்பினிலே
என்று சொல்லிக் கண் மூடி இன்பமுறு புன்னகைதான்
நின்று முகத்தே நிலவுதர மாண்டனன் காண்
மாடன் இங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது 170
பீடையுறு புள் வடிவம் பேதை உனக்கு எய்தியது
வாழி நின்றன் மன்னவனும் தொண்டை வள நாட்டில்
ஆழிக் கரையின் அருகே ஓர் பட்டினத்தில்
மானிடனாத் தோன்றி வளருகின்றான் நின்னை ஒரு
கானிடத்தே காண்பான் கனிந்து நீ பாடும் நல்ல 175
பாட்டினைத்தான் கேட்பான் பழவினையின் கட்டினால்
மீட்டு நின் மேல் காதல்கொள்வான் மென் குயிலே என்று அந்தத்
தென்பொதியை மா முனிவர் செப்பினார் சாமீ
குயில் உருவம் கொண்டேன் யான் கோமானோ மேன்மை
பயிலும் மனித உருப் பற்றி நின்றான் எம்முள்ளே 180
காதல் இசைந்தாலும் கடி மணம்தான் கூடாதாம்
சாதல் பொழுதிலே தார் வேந்தன் கூறிய சொல்
பொய்யாய் முடியாதோ என்று இசைத்தேன் புன்னகையில்
ஐயர் உரைப்பார் அடி பேதாய் இப் பிறவி
தன்னிலும் நீ விந்தகிரி சார்பினில் ஓர் வேடனுக்குக் 185
கன்னி எனத் தான் பிறந்தாய் கர்ம வசத்தினால்
மாடன் குரங்கன் இருவருமே வன் பேயாக்
காடு மலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார்
நின்னை அங்கே இப் பிறப்பில் நீயும் பழமை போல்
மன்னனையே சேர்வை என்று தாம் சூழ்ந்து மற்று அவரும் 190
நின்னைக் குயில் ஆக்கி நீ செல்லும் திக்கில் எல்லாம்
நின்னுடனே சுற்றுகின்றார் நீ இதனைத் தேர்கிலையோ
என்றார் விதியே இறந்தவர்தாம் வாழ்வாரை
நின்று துயருறுத்தல் நீதியோ பேய்கள் எனைப்
பேதைப்படுத்திப் பிறப்பை மறப்புறுத்தி 195
வாதைப்படுத்தி வருமாயில் யான் எனது
காதலனைக் காணுங்கால் காய் சினத்தால் ஏதேனும்
தீது இழைத்தால் என் செய்கேன் தேவரே மற்று இதற்கு ஓர்
மாற்று இலையோ என்று மறுகி நான் கேட்கையிலே
தேற்றமுறு மா முனிவர் செப்புகின்றார் பெண் குயிலே 200
தொண்டை வள நாட்டில் ஓர் சோலையிலே வேந்தன் மகன்
கண்டு உனது பாட்டில் கருத்து இளகிக் காதல் கொண்டு
நேசம் மிகுதியுற்று நிற்கையிலே பேய் இரண்டும்
மோசம் மிகுந்த முழு மாயச் செய்கை பல
செய்து பல பொய்த் தோற்றம் காட்டித் திறல் வேந்தன் 205
ஐயமுறச் செய்துவிடும் ஆங்கு அவனும் நின்றனையே
வஞ்சகி என்று எண்ணி மதி மருண்டு நின் மீது
வெம் சினம்தான் எய்தி நினை விட்டுவிட நிச்சயிப்பான்
பிந்தி விளைவது எல்லாம் பின்னே நீ கண்டுகொள்வாய்
சந்தி ஜபம் செய்யும் சமயம் ஆய்விட்டது என்றே 210
காற்றில் மறைந்து சென்றார் மா முனிவர் காதலரே
மாற்றி உரைக்கவில்லை மா முனிவர் சொன்னது எல்லாம்
அப்படியே சொல்லிவிட்டேன் ஐயோ திருவுளத்தில்
எப்படி நீர் கொள்வீரோ யான் அறியேன் ஆரியரே
காதல் அருள்புரிவீர் காதல் இல்லை என்றிடிலோ 215
சாதல் அருளித் தமது கையால் கொன்றிடுவீர்
என்று குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண்
கொன்றுவிட மனம்தான் கொள்ளுமோ பெண் என்றால்
பேயும் இரங்காதோ பேய்கள் இரக்கம் இன்றி
மாயம் இழைத்தால் அதனை மானிடனும் கொள்ளுவதோ 220
காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பது உண்டோ
மாதர் அன்பு கூறில் மனம் இளகார் இங்கு உளரோ
அன்புடனே யானும் அரும் குயிலைக் கைக்கொண்டு
முன்பு வைத்து நோக்கிய பின் மூண்டு வரும் இன்ப வெறி
கொண்டு அதனை முத்தமிட்டேன் கோகிலத்தைக் காணவில்லை 225
விண்டு உரைக்க மாட்டாத விந்தையடா விந்தையடா
ஆசைக் கடலின் அமுதமடா அற்புதத்தின்
தேசமடா பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா
பெண் ஒருத்தி அங்கு நின்றாள் பேர் உவகை கொண்டு தான்
கண் எடுக்காது என்னைக் கணப் பொழுது நோக்கினாள் 230
சற்றே தலைகுனிந்தாள் சாமீ இவள் அழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன் கண் இரண்டும்
ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ
மீள விழியில் மிதந்த கவிதை எலாம்
சொல்லில் அகப்படுமோ தூய சுடர் முத்தை ஒப்பாம் 235
பல்லில் கனி இதழில் பாய்ந்த நிலவினை யான்
என்றும் மறத்தல் இயலுமோ பாரின் மிசை
நின்ற ஒரு மின்கொடி போல் நேர்ந்த மணிப் பெண்ணரசின்
மேனி நலத்தினையும் வெட்டினையும் கட்டினையும்
தேனில் இனியாள் திருத்த நிலையினையும் 240
மற்று அவர்க்குச் சொல்ல வசம் ஆமோ ஓர் வார்த்தை
கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனி பிழிந்த
சாற்றினிலே பண் கூத்து எனும் இவற்றின் சாரம் எலாம்
ஏற்றி அதனோடே இன் அமுதைத் தான் கலந்து
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் 245
மாது அவளின் மேனி வகுத்தான் பிரமன் என்பான்
பெண் அவளைக் கண்டு பெரும் களி கொண்டு ஆங்ஙனே
நண்ணித் தழுவி நறும் கள் இதழினையே
முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெரு மயக்கில்
சித்தம் மயங்கிச் சில போழ்து இருந்த பின்னே 250
பக்கத்து இருந்த மணிப் பாவையுடன் சோலை எலாம்
ஒக்க மறைந்திடலும் ஓகோ எனக் கதறி
வீழ்ந்தேன் பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி எழுதுகோல்
பத்திரிகைக் கூட்டம் பழம் பாய் வரிசை எல்லாம் 255
ஒத்திருக்க நாம் வீட்டில் உள்ளோம் என உணர்ந்தேன்
சோலைக் குயில் காதல் சொன்ன கதை அத்தனையும்
மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றிய ஓர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டுகொண்டேன்
ஆன்ற தமிழ்ப் புலவீர் கற்பனையே ஆனாலும் 260
வேதாந்தம் ஆக விரித்துப் பொருள் உரைக்க
யாதானும் சற்றே இடம் இருந்தால் கூறீரோ
&10 வசன கவிதை
**1 காட்சி

@1 முதற் கிளை இன்பம்

#1
இவ் உலகம் இனியது இதில் உள்ள வான் இனிமையுடைத்து காற்றும் இனிது
தீ இனிது நீர் இனிது நிலம் இனிது
ஞாயிறு நன்று திங்களும் நன்று
வானத்துச் சுடர்கள் எல்லாம் மிக இனியன
மழை இனிது மின்னல் இனிது இடி இனிது
கடல் இனிது மலை இனிது காடு நன்று
ஆறுகள் இனியன
உலோகமும் மரமும் செடியும் கொடியும்
மலரும் காயும் கனியும் இனியன
பறவைகள் இனிய
ஊர்வனவும் நல்லன
விலங்குகள் எல்லாம் இனியவை
நீர்வாழ்வனவும் நல்லன
மனிதர் மிகவும் இனியர்
ஆண் நன்று பெண் இனிது
குழந்தை இன்பம்
இளமை இனிது முதுமை நன்று
உயிர் நன்று சாதல் இனிது

#2
உடல் நன்று புலன்கள் மிகவும் இனியன
உயிர் சுவையுடையது
மனம் தேன் அறிவு தேன் உணர்வு அமுதம்
உணர்வே அமுதம்
உணர்வு தெய்வம்

#3
மனம் தெய்வம் சித்தம் தெய்வம் உயிர் தெய்வம்
காடு மலை அருவி ஆறு
கடல் நிலம் நீர் காற்று
தீ வான்
ஞாயிறு திங்கள் வானத்துச் சுடர்கள் எல்லாம் தெய்வங்கள்
உலோகங்கள் மரங்கள் செடிகள்
விலங்குகள் பறவைகள் ஊர்வன நீந்துவன
மனிதர் இவை அமுதங்கள்

#4
இவ் உலகம் ஒன்று
ஆண் பெண் மனிதர் தேவர்
பாம்பு பறவை காற்று கடல்
உயிர் இறப்பு இவை அனைத்தும் ஒன்றே
ஞாயிறு வீட்டுச்சுவர் ஈ மலை அருவி
குழல் கோமேதகம் இவ் அனைத்தும் ஒன்றே
இன்பம் துன்பம் பாட்டு
வண்ணான் குருவி
மின்னல் பருத்தி
இஃது எல்லாம் ஒன்று
மூடன் புலவன்
இரும்பு வெட்டுக்கிளி
இவை ஒரு பொருள்
வேதம் கடல்மீன் புயல்காற்று மல்லிகை மலர்
இவை ஒரு பொருளின் பல தோற்றம்
உள்ளது எல்லாம் ஒரே பொருள் ஒன்று
இந்த ஒன்றின் பெயர் தான்
தானே தெய்வம்
தான் அமுதம் இறவாதது

#5
எல்லா உயிரும் இன்பம் எய்துக
எல்லா உடலும் நோய் தீர்க
எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க
தான் வாழ்க
அமுதம் எப்போதும் இன்பம் ஆகுக

#6
தெய்வங்களை வாழ்த்துகின்றோம்
தெய்வங்கள் இன்பம் எய்துக
அவை வாழ்க
அவை வெல்க
தெய்வங்களே
என்றும் விளங்குவீர் என்றும் இன்பம் எய்துவீர்
என்றும் வாழ்வீர் என்றும் அருள்புரிவீர்
எவற்றையும் காப்பீர்
உமக்கு நன்று
தெய்வங்களே
எம்மை உண்பீர் எமக்கு உணவாவீர்
உலகத்தை உண்பீர் உலகத்துக்கு உணவாவீர்
உமக்கு நன்று
தெய்வங்களே
காத்தல் இனிது காக்கப்படுதலும் இனிது
அழித்தல் நன்று அழிக்கப்படுதலும் நன்று
உண்பது நன்று உண்ணப்படுதலும் நன்று
சுவை நன்று உயிர் நன்று நன்று நன்று

#7
உணர்வே நீ வாழ்க
நீ ஒன்று நீ ஒளி
நீ ஒன்று நீ பல
நீ நட்பு நீ பகை
உள்ளதும் இல்லாததும் நீ
அறிவதும் அறியாததும் நீ
நன்றும் தீதும் நீ
நீ அமுதம் நீ சுவை
நீ நன்று நீ இன்பம்

@2 இரண்டாங் கிளை – புகழ்
**ஞாயிறு

#1
ஒளி தருவது யாது தீராத இளமையுடையது யாது
வெய்யவன் யாவன் இன்பம் எவனுடையது
மழை எவன் தருகின்றான் கண் எவனுடையது
உயிர் எவன் தருகிறான்
புகழ் எவன் தருகின்றான் புகழ் எவனுக்கு உரியது
அறிவு எது போல் சுடரும்
அறிவுத் தெய்வத்தின் கோயில் எது
ஞாயிறு
அது நன்று

#2
நீ ஒளி நீ சுடர் நீ விளக்கம் நீ காட்சி
மின்னல் இரத்தினம் கனல் தீக்கொழுந்து
இவை எல்லாம் நினது நிகழ்ச்சி
கண் நினது வீடு
புகழ் வீரம் இவை நினது லீலை
அறிவு நின் குறி அறிவின் குறி நீ
நீ சுடுகின்றாய் வாழ்க நீ காட்டுகின்றாய் வாழ்க
உயிர் தருகின்றாய் உடல் தருகின்றாய்
வளர்க்கின்றாய் மாய்க்கின்றாய்
நீர் தருகின்றாய் காற்றை வீசுகின்றாய் வாழ்க

#3
வைகறையின் செம்மை இனிது
மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க
உஷையை நாங்கள் தொழுகின்றோம்
அவள் திரு
அவள் விழிப்புத் தருகின்றாள் தெளிவு தருகின்றாள்
உயிர் தருகின்றாள் ஊக்கம் தருகின்றாள்
அழகு தருகின்றாள் கவிதை தருகின்றாள்
அவள் வாழ்க
அவள் தேன் சித்த வண்டு அவளை விரும்புகின்றது
அவள் அமுதம் அவள் இறப்பதில்லை வலிமையுடன் கலக்கின்றாள்
வலிமைதான் அழகுடன் கலக்கும் இனிமை மிகவும் பெரிது
வடமேருவிலே பலவாகத் தொடர்ந்து வருவாள்
வானடியைச் சூழ நகைத்துத் திரிவாள்
அவளுடைய நகைப்புக்கள் வாழ்க
தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள் அன்பு மிகுதியால்
ஒன்று பலவினும் இனிது அன்றோ
வைகறை நன்று அதனை வாழ்த்துகின்றோம்

#4
நீ சுடுகின்றாய் நீ வருத்தம் தருகின்றாய்
நீ விடாய் தருகின்றாய் சோர்வு தருகின்றாய்
பசி தருகின்றாய்
இவை இனியன
நீ கடல்நீரை வற்றடிக்கிறாய் இனிய மழை தருகின்றாய்
வானவெளியிலே விளக்கேற்றுகிறாய்
இருளைத் தின்றுவிடுகின்றாய்
நீ வாழ்க

#5
ஞாயிறே இருளை என்ன செய்துவிட்டாய்
ஓட்டினாயா கொன்றாயா விழுங்கிவிட்டாயா
கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா
இருள் நினக்குப் பகையா
இருள் நின் உணவுப்பொருளா
அது நின் காதலியா
இரவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா
நின்னைக் கண்டவுடன் நின் ஒளி தானுங் கொண்டு நின்னைக் கலந்துவிட்டதா
நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்றுக் குழந்தைகளா
முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் தாய் ஏவியிருக்கிறாளா
உங்களுக்கு மரணம் இல்லையா நீங்கள் அமுதமா
உங்களைப் புகழ்கின்றேன்
ஞாயிறே உன்னைப் புகழ்கின்றேன்

#6
ஒளியே நீ யார்
ஞாயிற்றின் மகளா
அன்று நீ ஞாயிற்றின் உயிர் அதன் தெய்வம்
ஞாயிற்றினிடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம்
ஞாயிற்றின் வடிவம் உடல் நீ உயிர்
ஒளியே நீ எப்போது தோன்றினாய்
நின்னை யாவர் படைத்தனர்
ஒளியே நீ யார்
உனது இயல்பு யாது
நீ அறிவின் மகள் போலும் அறிவுதான் தூங்கிக்கிடக்கும் தெளிவு நீ போலும்
அறிவின் உடல் போலும்
ஒளியே நினக்கு வானவெளி எத்தனை நாள் பழக்கம்
உனக்கு அதனிடத்தே இவ்வகைப்பட்ட அன்பு யாது பற்றியது
அதனுடன் நீ எப்படி இரண்டறக் கலக்கிறாய்
உங்களை எல்லாம் படைத்தவள் வித்தைக்காரி
அவள் மோஹினி மாயக்காரி
அவளைத் தொழுகின்றோம்
ஒளியே வாழ்க

#7
ஞாயிறே
நின்னிடத்து ஒளி எங்ஙனம் நிற்கின்றது
நீ அதனை உமிழ்கின்றாயா
அது நின்னைத் தின்னுகிறதா
அன்றி ஒளி தவிர நீ வேறொன்றும் இல்லையா
விளக்குத்திரி காற்றாகிச் சுடர் தருகின்றது
காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு
காற்றின் வடிவே திரி என்று அறிவோம்
ஒளியின் வடிவே காற்றுப் போலும்
ஒளியே நீ இனியை

#8
ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு
வெம்மை ஏற ஒளி தோன்றும்
வெம்மையைத் தொழுகின்றோம்
வெம்மை ஒளியின் தாய் ஒளியின் முன்னுருவம்
வெம்மையே நீ தீ
தீ தான் வீரத்தெய்வம்
தீ தான் ஞாயிறு
தீயின் இயல்பே ஒளி
தீ எரிக
அதனிடத்தே நெய் பொழிகின்றோம்
தீ எரிக
அதனிடத்தே தசை பொழிகின்றோம்
தீ எரிக
அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம்
தீ எரிக
அதற்கு வேள்விசெய்கின்றோம்
தீ எரிக
அறத்தீ அறிவுத்தீ உயிர்த்தீ
விரதத்தீ வேள்வித்தீ
சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ
இவை அனைத்தையும் தொழுகின்றோம்
இவற்றைக் காக்கின்றோம்
இவற்றை ஆளுகின்றோம்
தீயே நீ எமது உயிரின் தோழன்
உன்னை வாழ்த்துகின்றோம்
நின்னைப் போல எமது உயிர் நூறாண்டு வெம்மையும் சுடரும் தருக
தீயே நின்னைப் போல எமது உள்ளம் சுடர்விடுக
தீயே நின்னைப் போல எமது அறிவு கனலுக
ஞாயிற்றினிடத்தே தீயே நின்னைத்தான் போற்றுகின்றோம்
ஞாயிற்றுத் தெய்வமே நின்னைப் புகழ்கின்றோம்
நினது ஒளி நன்று நின் செயல் நன்று நீ நன்று

#9
வானவெளி என்னும் பெண்ணை ஒளி என்னும் தேவன் மணந்திருக்கின்றான்
அவர்களுடைய கூட்டம் இனிது
இதனைக் காற்றுத்தேவன் கண்டான்
காற்று வலிமையுடையவன்
இவன் வானவெளியைக் கலக்க விரும்பினான்
ஒளியை விரும்புவது போல வானவெளி இவனை விரும்பவில்லை
இவன் தனது பெருமையை ஊதிப் பறையடிக்கின்றான்
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பது போல் கலந்தன
காற்றுத்தேவன் பொறாமைகொண்டான்
அவன் அமைதியின்றி உழலுகிறான்
அவன் சீறுகின்றான் புடைக்கின்றான் குமுறுகின்றான்
ஓலமிடுகின்றான் சுழலுகின்றான் துடிக்கின்றான்
ஓடுகின்றான் எழுகின்றான் நிலையின்றிக் கலங்குகின்றான்
வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகைசெய்கின்றன
காற்றுத் தேவன் வலிமையுடையவன்
அவன் புகழ் பெரிது அப் புகழ் நன்று
ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன
அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன
அவை வெற்றியுடையன
ஞாயிறே நீதான் ஒளித்தெய்வம்
நின்னையே வெளிப்பெண் நன்கு காதல் செய்கிறாள்
உங்கள் கூட்டம் மிக இனிது
நீவிர் வாழ்க

#10
ஞாயிறே நின் முகத்தைப் பார்த்த பொருள் எல்லாம் ஒளி பெறுகின்றது
பூமி சந்திரன் செவ்வாய் புதன் சனி வெள்ளி வியாழன்
யுரேனஸ் நெப்த்யூன் முதலிய பல நூறு வீடுகள்
இவை எல்லாம் நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகைசெய்கின்றன
தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவது போல
இவை எல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன என்பர்
இவற்றைக் காலம் என்னும் கள்வன் மருவினான்
இவை ஒளிகுன்றிப்போயின
ஒளியிழந்தன அல்ல குறைந்த ஒளியுடையன
ஒளியற்ற பொருள் சகத்திலே இல்லை
இருள் என்பது குறைந்த ஒளி
செவ்வாய் புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன
இவை தமது தந்தை மீது காதல் செலுத்துகின்றன
அவன் மந்திரத்திலே கட்டுண்டு வரை கடவாது சுழல்கின்றன
அவனுடைய சக்தி எல்லையை என்றும் கடந்துசெல்லமாட்டா
அவன் எப்போதும் இவற்றை நோக்கியிருக்கின்றான்
அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே இவை உருளுகின்றன
அவன் ஒளியை இவை மலரிலும் நீரிலும் காற்றிலும் பிடித்துவைத்துக்கொள்ளும்
ஞாயிறு மிகச் சிறந்த தேவன் அவன் கைப்பட்ட இடம் எல்லாம் உயிர் உண்டாகும்
அவனையே மலர் விரும்புகின்றது
இலைகள் அவனுடைய அழகிலே யோகம் எய்தியிருக்கின்றன
அவனை நீரும் நிலமும் காற்றும் உகந்து களியுறும்
அவனை வான் கவ்விக்கொள்ளும்
அவனுக்கு மற்றெல்லாத் தேவரும் பணிசெய்வர்
அவன் புகழைப் பாடுவோம்
அவன் புகழ் இனிது

#11
புலவர்களே அறிவுப்பொருள்களே உயிர்களே பூதங்களே சக்திகளே எல்லோரும் வருவீர்
ஞாயிற்றைத் துதிப்போம் வாருங்கள்
அவன் நமக்கெல்லாம் துணை
அவன் மழை தருகின்றான்
மழை நன்று
மழைத்தெய்வத்தை வாழ்த்துகின்றோம்
ஞாயிறு வித்தைகாட்டுகின்றான்
கடல்நீரைக் காற்றாக்கி மேலே கொண்டுபோகிறான்
அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான்
மழை இனிமையுறப் பெய்கின்றது
மழை பாடுகின்றது
அது பல கோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி
வானத்திலிருந்து அமுத வயிரக் கோல்கள் விழுகின்றன
பூமிப்பெண் விடாய் தீர்கிறாள் குளிர்ச்சி பெறுகின்றாள்
வெப்பத்தால் தண்மையும் தண்மையால் வெப்பமும் விளைகின்றன
அனைத்தும் ஒன்றாதலால்
வெப்பம் தவம் தண்மை யோகம்
வெப்பம் ஆண் தண்மை பெண்
வெப்பம் வலியது தண்மை இனிது
ஆணிலும் பெண் சிறந்தது அன்றோ
நாம் வெம்மைத் தெய்வத்தைப் புகழ்கின்றோம்
அது வாழ்க

#12
நாம் வெம்மையைப் புகழ்கின்றோம்
வெம்மைத் தெய்வமே ஞாயிறே ஒளிக் குன்றே
அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாகத் தோன்றும்
விழிகளின் நாயகமே
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே
வலிமையின் ஊற்றே ஒளி மழையே உயிர்க் கடலே
சிவன் என்னும் வேடன் சக்தி என்னும் குறத்தியை உலகம் என்னும்
புனம் காக்கச்சொல்லி வைத்துவிட்டுப்போன விளக்கே
கண்ணன் என்னும் கள்வன் அறிவு என்னும் தன் முகத்தை
மூடிவைத்திருக்கும் ஒளி என்னும் திரையே
ஞாயிறே நின்னைப் பரவுகின்றோம்
மழையும் நின் மகள் மண்ணும் நின் மகள்
காற்றும் கடலும் கனலும் நின் மக்கள்
வெளி நின் காதலி
இடியும் மின்னலும் நினது வேடிக்கை
நீ தேவர்களுக்குத் தலைவன்
நின்னைப் புகழ்கின்றோம்
தேவர்கள் எல்லாம் ஒன்றே
காண்பன எல்லாம் அவர் உடல்
கருதுவன அவர் உயிர்
அவர்களுடைய தாய் அமுதம்
அமுதமே தெய்வம் அமுதமே மெய்யொளி
அஃது ஆத்மா
அதனைப் புகழ்கின்றோம்
அதன் வீடாகிய ஞாயிற்றைப் புகழ்கின்றோம்
ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று

#13
மழை பெய்கிறது காற்று அடிக்கின்றது இடி குமுறுகின்றது மின்னல் வெட்டுகின்றது
புலவர்களே மின்னலைப் பாடுவோம் வாருங்கள்
மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை ஒளித்தெய்வத்தின் ஒரு தோற்றம்
அதனை யவனர் வணங்கி ஒளிபெற்றனர்
மின்னலைத் தொழுகின்றோம்
அது நம் அறிவை ஒளியுறச்செய்க
மேகக் குழந்தைகள் மின்னல்பூச் சொரிகின்றன
மின் சக்தி இல்லாத இடம் இல்லை
எல்லாத் தெய்வங்களும் அங்ஙனமே
கருங்கல்லிலே வெண்மணலிலே பச்சை இலையிலே செம்மலரிலே நீல மேகத்திலே
காற்றிலே வரையிலே எங்கும் மின்சக்தி உறங்கிக்கிடக்கின்றது
அதனைப் போற்றுகின்றோம்
நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக
நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்க
நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக
நமது பாட்டு மின்னல் உடைத்தாகுக
நமது வாக்கு மின் போல் அடித்திடுக
மின் மெலியதைக் கொல்லும்
வலியதிலே வலிமை சேர்க்கும்
அது நம் வலிமையை வளர்த்திடுக
ஒளியை மின்னலை சுடரை மணியை
ஞாயிற்றை திங்களை வானத்து வீடுகளை மீன்களை
ஒளியுடைய அனைத்தையும் வாழ்த்துகின்றோம்
அனைத்தையும் வாழ்த்துகின்றோம்
ஞாயிற்றை வாழ்த்துகின்றோம்

@3 சக்தி

#1
சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம்
சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்
சக்தி அநந்தம் எல்லையற்றது முடிவற்றது
அசையாமையில் அசைவு காட்டுவது
சக்தி அடிப்பது துரத்துவது கூட்டுவது
பிணைப்பது கலப்பது உதறுவது
புடைப்பது வீசுவது சுழற்றுவது
கட்டுவது சிதறடிப்பது தூற்றுவது
ஊதிவிடுவது நிறுத்துவது ஓட்டுவது
ஒன்றாக்குவது பலவாக்குவது
சக்தி குளிர்செய்வது அனல் தருவது
குதுகுதுப்புத் தருவது
குதூஹலம் தருவது நோவு தருவது நோவு தீர்ப்பது
இயல்பு தருவது இயல்பு மாற்றுவது
சோர்வு தருவது ஊக்கம் தருவது
எழுச்சி தருவது கிளர்ச்சி தருவது
மலர்விப்பது புளகம்செய்வது
கொல்வது உயிர் தருவது
சக்தி மகிழ்ச்சி தருவது சினம் தருவது
வெறுப்புத் தருவது உவப்புத் தருவது
பகைமை தருவது காதல் மூட்டுவது
உறுதி தருவது அச்சம் தருவது
கொதிப்புத் தருவது ஆற்றுவது
சக்தி முகர்வது சுவைப்பது தீண்டுவது கேட்பது காண்பது
சக்தி நினைப்பது ஆராய்வது கணிப்பது தீர்மானம்செய்வது
கனாக்காண்பது கற்பனைபுரிவது தேடுவது சுழல்வது
பற்றி நிற்பது எண்ணமிடுவது பகுத்து அறிவது
சக்தி மயக்கம் தருவது தெளிவு தருவது
சக்தி உணர்வது
பிரமன் மகள் கண்ணன் தங்கை சிவன் மனைவி
கண்ணன் மனைவி சிவன் மகள் பிரமன் தங்கை
பிரமனுக்கும் கண்ணனுக்கும் சிவனுக்கும் தாய்
சக்தி முதல்பொருள்
பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு
சக்திக் கடலிலே ஞாயிறு ஓர் நுரை
சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு ஒரு ஸ்வரஸ்தானம்
சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்
சக்தியின் கலைகளிலே ஒளி ஒன்று
சக்தி வாழ்க

#2
காக்கை கத்துகிறது
ஞாயிறு வையகமாகிய கழனியில் வயிர ஒளியாகிய நீர் பாய்ச்சுகிறது
அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன
அஃது மேகங்களை ஊடுருவிச் செல்லுகின்றது
மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது
மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன
கோழி கூவுகின்றது
எறும்பு ஊர்ந்து செல்கின்றது
ஈ பறக்கின்றது
இளைஞன் சித்திரத்திலே கருத்துச் செலுத்துகிறான்
இவை அனைத்தும் மஹாசக்தியின் தொழில்
அவள் நம்மைக் கர்மயோகத்தில் நாட்டுக
நமக்குச் செய்கை இயல்பாகுக
ரஸமுள்ள செய்கை இன்பமுடைய செய்கை
வலிய செய்கை சலிப்பில்லாத செய்கை
விளையும் செய்கை பரவும் செய்கை
கூடிவரும் செய்கை இறுதியற்ற செய்கை
நமக்கு மஹாசக்தி அருள்செய்க
கவிதை காவல் ஊட்டுதல் வளர்த்தல்
மாசு எடுத்தல் நலம் தருதல் ஒளி பெய்தல்
இச் செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள்புரிக
அன்பு நீர் பாய்ச்சி அறிவு என்னும் ஏர் உழுது
சாத்திரக் களை போக்கி வேதப் பயிர் செய்து
இன்பப் பயன் அறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை வேண்டுகிறோம்
அதனை அவள் தருக

#3
இருள் வந்தது ஆந்தைகள் மகிழ்ந்தன
காட்டிலே காதலனை நாடிச் சென்ற ஒரு பெண் தனியே கலங்கிப் புலம்பினாள்
ஒளி வந்தது காதலன் வந்தான் பெண் மகிழ்ந்தாள்
பேய் உண்டு மந்திரம் உண்டு
பேய் இல்லை மந்திரம் உண்டு
நோய் உண்டு மருந்து உண்டு
அயர்வு கொல்லும் அதனை ஊக்கம் கொல்லும்
அவித்தை கொல்லும் அதனை வித்தை கொல்லும்
நாம் அச்சம்கொண்டோம் தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள்
நாம் துயர்கொண்டோம் தாய் அதை மாற்றிக் களிப்புத் தந்தாள்
குனிந்த தலையை நிமிர்த்தினாள்
சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள்
கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்
இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள்
மஹாசக்தி வாழ்க

#4
மண்ணிலே வேலி போடலாம்
வானத்திலே வேலி போடலாமா
என்றான் ராமகிருஷ்ண முனி
ஜடத்தைக் கட்டலாம் சக்தியைக் கட்டலாமா உடலைக்
கட்டலாம் உயிரைக் கட்டலாமா
உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம்
என்னிடத்தே சக்தி எனது உயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள்
சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும்
தொடக்கமும் முடிவும் இல்லாத காலத்திலே நிமிஷம்தோறும்
அவளுக்குப் புதிய கோயில்கள் வேண்டும்
இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு நான் என்று பெயர்
இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள்
இது பழமைப்பட்டுப்போனவுடன் இதை விட்டுவிடுவாள்
இப்போது அவள் என்னுள்ளே நிறைந்திருக்கின்றாள்
இப்போது எனது உயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன
இப்போது எனது உடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன
இப்போது என் உள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது
இது எனக்குப் போதும்
சென்றது கருதமாட்டேன் நாளைச் சேர்வது நினைக்கமாட்டேன்
இப்போது என்னுள்ளே சக்தி கொலுவீற்றிருக்கின்றாள்
அவள் நீடூழி வாழ்க
அவளைப் போற்றுகின்றேன் புகழ்கின்றேன் வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன்

#5
மண்ணிலே வேலி போடலாம் வானத்திலே வேலி போடலாமா போடலாம்
மண்ணிலும் வானம்தானே நிரம்பியிருக்கின்றது
மண்ணைக் கட்டினால் அதில் உள்ள வானத்தைக் கட்டியது ஆகாதா
உடலைக் கட்டு உயிரைக் கட்டலாம்
உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம்
உள்ளத்தைக் கட்டு சக்தியைக் கட்டலாம்
அநந்த சக்திக்குக் கட்டுப்படுவதிலே வருத்தம் இல்லை
என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது
அதற்கு ஒரு வடிவம் ஓரளவு ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது
இந்த நியமத்தை அழியாதபடி சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள்
மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவு எய்தாதபடி காக்கலாம்
அதனை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டிருந்தால் அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும்
புதுப்பிக்காவிட்டால் அவ் வடிவம் மாறும்
அழுக்குத் தலையணை ஓட்டைத் தலையணை பழைய தலையணை
அதிலுள்ள பஞ்சை எடுத்துப் புதிய மெத்தையிலே போடு
மேலுறையை கந்தை என்று வெளியே எறி அந்த வடிவம் அழிந்துவிட்டது
வடிவத்தைக் காத்தால்
சக்தியைக் காக்கலாம்
அதாவது சக்தியை அவ் வடிவத்திலே காக்கலாம்
வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை
எங்கும் எதனிலும் எப்போதும் எல்லாவிதத் தொழில்களும் காட்டுவது சக்தி
வடிவத்தைக் காப்பது நன்று
சக்தியின் பொருட்டாக சக்தியைப் போற்றுதல் நன்று
வடிவத்தைக் காக்குமாறு
ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை இழந்துவிடுவர்

#6
பாம்புப்பிடாரன் குழல் ஊதுகின்றான்
இனிய இசை சோகமுடையது என்பது கேட்டுள்ளோம்
ஆனால் இப் பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும்
சோகரஸம் தவிர்ந்தது
இஃது ஓர் பண்டிதன் தர்க்கிப்பது போல் இருக்கின்றது
ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை
அடுக்கிக்கொண்டுபோவது போல் இருக்கிறது
இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்
தான தந்தத் தான தந்தத் தா தனத்
தான தந்தன தான தந்தன தா
தந்தனத் தன தந்தனத் தன தா
அவ்விதமாகப் பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக
வாசித்துக்கொண்டு போகிறான்
இதற்குப் பொருள் என்ன
ஒரு குழந்தை இதற்குப் பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று
காளிக்குப் பூச்சூட்டினேன் அதைக்
கழுதை ஒன்று தின்ன வந்ததே
பராசக்தியின்பொருட்டு இவ் உடல் கட்டினேன்
அதைப் பாவத்தால் விளைந்த நோய் தின்ன வந்தது
பராசக்தியைச் சரணடைந்தேன்
நோய் மறைந்துவிட்டது
பராசக்தி ஒளி ஏறி என் அகத்திலே விளங்கலாயினள்
அவள் வாழ்க

#7
பாம்புப்பிடாரன் குழல் ஊதுகின்றான்
குழலிலே இசை பிறந்ததா தொளையிலே பிறந்ததா
பாம்புப்பிடாரன் மூச்சிலே பிறந்ததா
அவன் உள்ளத்திலே பிறந்தது குழலிலே வெளிப்பட்டது
உள்ளம் தனியே ஒலிக்காது குழல் தனியே இசைபுரியாது உள்ளம் குழலிலே ஒட்டாது
உள்ளம் மூச்சிலே ஒட்டும் மூச்சுக் குழலிலே ஒட்டும் குழல் பாடும்
இஃது சக்தியின் லீலை
அவள் உள்ளத்திலே பாடுகிறாள் அது குழலின் தொளையிலே கேட்கிறது
பொருந்தாத பொருள்களைப் பொருத்திவைத்து அதிலே இசை உண்டாக்குதல் சக்தி
தொம்பப் பிள்ளைகள் பிச்சைக்குக் கத்துகின்றன
பிடாரன் குழலையும் தொம்பக் குழந்தைகளின் குரலையும் யார் சுருதிசேர்த்துவிட்டது சக்தி
ஜரிகை வேணும் ஜரிகை என்று ஒருவன் கத்திக்கொண்டு போகிறான் அதே சுருதியில்
ஆ பொருள் கண்டுகொண்டேன்
பிடாரன் உயிரிலும் தொம்பக் குழந்தைகளின் உயிரிலும் ஜரிகைக்காரன்
உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது
கருவி பல பாணன் ஒருவன்
தோற்றம் பல சக்தி ஒன்று
அஃது வாழ்க

#8
பராசக்தியைப் பாடுகின்றோம்
இவள் எப்படி உண்டாயினாள் அதுதான் தெரியவில்லை
இவள் தானே பிறந்த தாய் தான் என்ற பரம்பொருளினிடத்தே
இவள் எதிலிருந்து தோன்றினாள் தான் என்ற பரம்பொருளிலிருந்து
எப்படித் தோன்றினாள் தெரியாது
படைப்பு நமது கண்ணுக்குத் தெரியாது அறிவுக்கும் தெரியாது
சாவு நமது கண்ணுக்குத் தெரியும் அறிவுக்குத் தெரியாது
வாழ்க்கை நமது கண்ணுக்குத் தெரியும் அறிவுக்கும் தெரியும்
வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல் இதன் பயன் இன்பம் எய்தல்
உள்ளம் தெளிந்திருக்க உயிர் வேகமும் சூடும் உடையதாக உடல் அமைதியும்
வலிமையும் பெற்றிருக்க
மஹாசக்தியின் அருள் பெறுதலே வாழ்தல் நாம் வாழ்கின்றோம்
நம்மை வாழ்வுறச்செய்த மஹாசக்தியை மீட்டும் வாழ்த்துகின்றோம்

@4 காற்று

#1
ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல் ஓலைப் பந்தல் தென்னோலை
குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்டி
மேலே தென்னங்கிடுகுகளை விரித்திருக்கிறது
ஒரு மூங்கில் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது
ஒரு சாண் கயிறு
இந்தக் கயிறு ஒரு நாள் சுகமாக ஊசலாடிக்கொண்டு இருந்தது
பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை
சில சமயங்களில் அசையாமல் உம்மென்று இருக்கும் கூப்பிட்டால்கூட ஏன் என்று கேட்காது
இன்று அப்படி இல்லை குஷால்வழியில் இருந்தது
எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்நேஹம்
நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக்கொள்வது உண்டு
கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா
பேசிப்பார் மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை
ஆனால் அது ஸந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்லவேண்டும்
இல்லாவிட்டால் முகத்தைத் தூக்கிக்கொண்டு சும்மா இருந்துவிடும் பெண்களைப் போல
எது எப்படி இருந்தாலும் இந்த வீட்டுக் கயிறும் பேசும் அதில் ஸந்தேகமே இல்லை
ஒரு கயிறா சொன்னேன் இரண்டு கயிறு உண்டு
ஒன்று ஒரு சாண் மற்றொன்று முக்கால் சாண்
ஒன்று ஆண் மற்றொன்று பெண் கணவனும் மனைவியும்
அவை இரண்டும் ஒன்றையொன்று காமப் பார்வைகள் பார்த்துக்கொண்டும்
புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டும்
வேடிக்கைப் பேச்சுப் பேசிக்கொண்டும் ரஸப்போக்கிலே இருந்தன
அத் தருணத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்
ஆண் கயிற்றுக்குக் கந்தன் என்று பெயர்
பெண் கயிற்றுக்குப் பெயர் வள்ளியம்மை
மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர்வைக்கலாம்)
கந்தன் வள்ளியம்மை மீது கையைப் போட வருகிறது வள்ளியம்மை சிறிது
பின்வாங்குகிறது
அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்
என்ன கந்தா ஸௌக்கியந்தானா ஒரு வேளை நான் ஸந்தர்ப்பம் தவறி வந்துவிட்டேனோ
என்னவோ
போய் மற்றொரு முறை வரலாமா என்று கேட்டேன்
அதற்குக் கந்தன் அட போடா வைதீக மனுஷன் உன் முன்னேகூட லஜ்ஜையா
என்னடி வள்ளி
நமது ஸல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா என்றது
சரி சரி என்னிடத்தில் ஒன்றும் கேட்கவேண்டாம் என்றது வள்ளியம்மை
அதற்குக் கந்தன் கடகடவென்று சிரித்துக் கைதட்டிக் குதித்து நான்
பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மையைக் கட்டிக்கொண்டது
வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று ஆனால் மனதுக்குள்ளே
வள்ளியம்மைக்கு ஸந்தோஷம்
நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்கு ஸந்தோஷம்தானே
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான் உள்ளதைச்
சொல்லிவிடுவதிலே என்ன குற்றம்
இளமையின் ஸல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பம் அன்றோ
வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே கந்தன் அதை விட்டுவிட்டது
சில க்ஷணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக்கொண்டது
மறுபடியும் கூச்சல் மறுபடியும் விடுதல் மறுபடியும் தழுவல் மறுபடியும்
கூச்சல் இப்படியாக நடந்துகொண்டே வந்தது
என்ன கந்தா வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூடச் சொல்லமாட்டேன் என்கிறாய்
வேறொரு சமயம் வருகிறேன் போகட்டுமா என்றேன்
அட போடா வைதீகம் வேடிக்கைதானே பார்த்துக்கொண்டிருக்கிறாய்
இன்னும் சிறிது நேரம் நின்றுகொண்டிரு
இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்கவேண்டி இருக்கிறது தீர்ந்தவுடன்
நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன்
போய்விடாதே இரு என்றது
நின்று மேன்மேலும் பார்த்துக்கொண்டிருந்தேன்
சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை
மறந்து நாணத்தை விட்டுவிட்டது
உடனே பாட்டு நேர்த்தியான துக்கடாக்கள் ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு
இரண்டே ஸங்கதி பின்பு மற்றொரு பாட்டு
கந்தன் பாடி முடிந்தவுடன் வள்ளி இது முடிந்தவுடன் அது மாற்றிமாற்றிப்
பாடி கோலாஹலம்
சற்று நேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டே இருக்கும்
அப்போது வள்ளியம்மை தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும்
அது தழுவிக்கொள்ள வரும் இது ஓடும் கோலாஹலம்
இங்ஙனம் நெடும்பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களி ஏறிவிட்டது
நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டுவரப் போனேன்
நான் போவதை அவ் இரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை
நான் திரும்பிவந்து பார்க்கும் போது வள்ளியம்மை தூங்கிக்கொண்டு இருந்தது
கந்தன் என் வரவை எதிர்நோக்கி இருந்தது
என்னைக் கண்டவுடன் எங்கடா போயிருந்தாய் வைதீகம் சொல்லிக்கொள்ளாமல்
போய்விட்டாயே என்றது
அம்மா நல்ல நித்திரை போல் இருக்கிறதே என்று கேட்டேன்
ஆஹா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற
தேவனுடைய மஹிமையை என் என்று சொல்வேன்
காற்றுத்தேவன் தோன்றினான்
அவன் உடல் விம்மி விசாலமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்
வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி
காற்றே போற்றி நீயே கண்கண்ட பிரமம்
அவன் தோன்றிய பொழுதிலே வானம் முழுதும் ப்ராணசக்தி நிரம்பிக் கனல்
வீசிக்கொண்டு இருந்தது
ஆயிரம் முறை அஞ்சலிசெய்து வணங்கினேன்
காற்றுத்தேவன் சொல்வதாயினன்
மகனே ஏதடா கேட்டாய் அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா
இல்லை அது செத்துப்போய்விட்டது நான் ப்ராணசக்தி
என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும் என் உறவு இல்லாதது சவம்
நான் ப்ராணன் என்னாலேதான் அச் சிறு கயிறு உயிர்த்திருந்தது சுகம் பெற்றது
சிறிது களைப்பு எய்திய உடனே அதை உறங்க இறக்க விட்டுவிட்டேன் துயிலும்
சாவுதான் சாவும் துயிலே
நான் விளங்கும் இடத்தே அவ் இரண்டும் இல்லை மாலையில் வந்து ஊதுவேன்
அது மறுபடி பிழைத்துவிடும்
நான் விழிக்கச்செய்கிறேன் அசையச்செய்கிறேன் நான் சக்திகுமாரன் என்னை
வணங்கி வாழ்க என்றான்
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி
த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி

#2
நடுக்கடல் தனிக் கப்பல்
வானமே சினந்து வருவது போன்ற புயல்காற்று
அலைகள் சாரி வீசுகின்றன நிர்த்தூளிப்படுகின்றன
அவை மோதி வெடிக்கின்றன சூறையாடுகின்றன
கப்பல் நிர்த்தனஞ்செய்கிறது
மின் வேகத்தில் ஏற்றப்படுகின்றது
பாறையில் மோதிவிட்டது
ஹதம்
இருநூறு உயிர்கள் அழிந்தன
அழியும் முன் அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனம் இருக்கும் என்பதை
அறிந்துகொண்டு போயின
ஊழி முடிவும் இப்படியேதான் இருக்கும்
உலகம் ஓடுநீர் ஆகிவிடும் தீ நீர்
சக்தி காற்றாகிவிடுவாள்
சிவன் வெறியிலே இருப்பான்
இவ் உலகம் ஒன்று என்பது தோன்றும்
அஃது சக்தி என்பது தோன்றும்
அவள் பின்னே சிவன் நிற்பது தோன்றும்
காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான் அவற்றில் உயிர் பெய்கிறான்
காற்றே நீரில் சூறாவளி காட்டி வானத்தில் மின் ஏற்றி நீரை நெருப்பாக்கி
நெருப்பை நீராக்கி
நீரைத் தூளாக்கித் தூளை நீராக்கிச் சண்டமாருதம் செய்கின்றான்
காற்றே யுகமுடிவு செய்கின்றான்
காற்றே காக்கின்றான்
அவன் நம்மைக் காத்திடுக
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி

#3
காற்றுக்குக் காது நிலை
சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான்
காற்று இல்லாவிட்டால் சிவனுக்குக் காது கேட்காது
காற்றுக்குக் காது இல்லை
அவன் செவிடன்
காதுடையவன் இப்படி இரைச்சலிடுவானா
காதுடையவன் மேகங்களை ஒன்றோடோன்று மோதவிட்டு இடியிடிக்கச் சொல்லி
வேடிக்கை பார்ப்பானா
காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா
காற்றை ஒலியை வலிமையை வணங்குகின்றோம்

#4
பாலைவனம்
மணல் மணல் மணல் பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு
திசையிலும் மணல்
மாலை நேரம்
அவ் வனத்தின் வழியே ஒட்டைகளின் மீது ஏறி ஒரு வியாபாரக் கூட்டத்தார்
போகிறார்கள்
வாயு சண்டனாகி வந்துவிட்டான்
பாலைவனத்து மணல்கள் எல்லாம் இடைவானத்திலே சுழல்கின்றன
ஒரு க்ஷணம் யம வாதனை வியாபாரக் கூட்டம் முழுதும் மணலிலே
அழிந்துபோகிறது
வாயு கொடியோன் அவன் ருத்ரன் அவனுடைய ஓசை அச்சம் தருவது
அவனுடைய செயல்கள் கொடியன
காற்றை வாழ்த்துகின்றோம்

#5
வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும்
உயிருடையன எல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்
உயிர்தான் காற்று
உயிர் பொருள் காற்று அதன் செய்கை
பூமித்தாய் உயிரோடு இருக்கிறாள்
அவளுடைய மூச்சே பூமியில் உள்ள காற்று
காற்றே உயிர் அவன் உயிர்களை அழிப்பவன்
காற்றே உயிர் எனவே உயிர்கள் அழிவதில்லை
சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது
மரணம் இல்லை
அகில உலகமும் உயிர் நிலையே
தோன்றுதல் வளர்தல் மாறுதல் மறைதல் எல்லாம் உயிர்ச் செயல்
உயிரை வாழ்த்துகின்றோம்

#6
காற்றே வா
மகரந்தத்தூளைச் சுமந்துகொண்டு மனத்தை மயலுறுத்துகின்ற இனிய
வாசனையுடன் வா
இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த ப்ராணரஸத்தை
எங்களுக்குக் கொண்டு கொடு
காற்றே வா
எமது உயிர்நெருப்பை நீடித்து நின்று நல் ஒளி தருமாறு நன்றாக வீசு
சக்தி குறைந்துபோய் அதனை அவித்துவிடாதே
பேய் போல வீசி அதனை மடித்துவிடாதே
மெதுவாக நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்கொண்டிரு
உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்
உன்னை வழிபடுகின்றோம்

#7
சிற்றெறும்பைப் பார்
எத்தனை சிறியது
அதற்குள்ளே கை கால் வாய் வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக
வைத்திருக்கிறது
யார் வைத்தனர் மஹாசக்தி
அந்த உறுப்புகள் எல்லாம் நேராகவே தொழில்செய்கின்றன
எறும்பு உண்ணுகின்றது உறங்குகின்றது மணம்செய்துகொள்கின்றது
குழந்தை பெறுகிறது ஓடுகிறது
தேடுகிறது போர் செய்கிறது நாடு காக்கிறது
இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்
மஹாசக்தி காற்றைக்கொண்டுதான் உயிர்விளையாட்டு விளையாடுகின்றாள்
காற்றைப் பாடுகிறோம்
அஃது அறிவிலே துணிவாக நிற்பது
உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்கள் ஆவது
உயிரிலே உயிர் தானாக நிற்பது
வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம் நாம் அறிவதில்லை
காற்றுத்தேவன் வாழ்க

#8
மழைக் காலம்
மாலை நேரம்
குளிர்ந்த காற்று வருகிறது
நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான்
பயன் இல்லை
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது
பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வது உண்டோ
காற்று நம் மீது வீசுக
அது நம்மை நோயின்றிக் காத்திடுக
மலைக்காற்று நல்லது
கடல்காற்று மருந்து
வான்காற்று நன்று
ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கிவிடுகின்றனர்
அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை
அதனால் காற்றுத்தேவன் சினம் எய்தி அவர்களை அழிக்கின்றான்
காற்றுத்தேவனை வணங்குவோம்
அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது நாற்றம் இருக்கலாகாது அழுகின
பண்டங்கள் போடலாகாது
புழுதி படிந்திருக்கலாகாது எவ்விதமான அசுத்தமும் கூடாது
காற்று வருகின்றான்
அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்துவைத்திடுவோம்
அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்துவைப்போம்
அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களைக் கொளுத்திவைப்போம்
அவன் நல்ல மருந்தாக வருக
அவன் நமக்கு உயிராகி வருக
அமுதமாகி வருக
காற்றை வழிபடுகின்றோம்
அவன் சக்திகுமாரன் மஹாராணியின் மைந்தன்
அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம்
அவன் வாழ்க

#9
காற்றே வா மெதுவாக வா
ஜன்னல் கதவை அடித்து உடைத்துவிடாதே
காயிதங்களை எல்லாம் எடுத்து விசிறி எறியாதே
அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளிவிடாதே
பார்த்தாயா இதோ தள்ளிவிட்டாய்
புத்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய்
மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய்
வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கைபார்ப்பதிலே நீ மஹா ஸமர்த்தன்
நொய்ந்த வீடு நொய்ந்த கதவு நொய்ந்த கூரை
நொய்ந்த மரம் நொய்ந்த உடல் நொய்ந்த உயிர்
நொய்ந்த உள்ளம் இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான்
சொன்னாலும் கேட்கமாட்டான்
ஆதலால் மானிடரே வாருங்கள்
வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்
கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம்
உடலை உறுதிகொள்ளப் பழகுவோம்
உயிரை வலிமையுற நிறுத்துவோம்
உள்ளத்தை உறுதிசெய்வோம்
இங்ஙனம் செய்தால் காற்று நமக்குத் தோழனாகிவிடுவான்
காற்று மெலிய தீயை அவித்துவிடுவான்
வலிய தீயை வளர்ப்பான்
அவன் தோழமை நன்று
அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்

#10
மழை பெய்கிறது
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது
தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள்
ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள்
ஈரத்திலேயே நடக்கிறார்கள்
ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல் ஈரத்திலேயே உணவு
உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்படமாட்டான்
ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது
தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது
நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள் மிஞ்சியிருக்கும் மூடர் விதிவசம்
என்கிறார்கள்
ஆமடா விதிவசந்தான்
அறிவில்லாதவர்களுக்கு இன்பம் இல்லை என்பது ஈசனுடைய விதி
சாஸ்த்ரம் இல்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி
தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்கள் இல்லை உண்மையான சாஸ்த்ரங்களை
வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்துவிட்டுத்
தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க்கதைகளை மூடரிடம் காட்டி
வயிறுபிழைத்து வருகிறார்கள்
குளிர்ந்த காற்றையா விஷம் என்று நினைக்கிறாய்
அது அமிழ்தம் நீ ஈரம் இல்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால்
காற்று நன்று
அதனை வழிபடுகின்றோம்

#11
காற்று என்று சக்தியைக் கூறுகின்றோம்
எற்றுகிற சக்தி புடைக்கிற சக்தி மோதுகிற சக்தி சுழற்றுவது ஊதுவது
சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று
எல்லாத் தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம்
சக்தியின் கலைகளையே தெய்வங்கள் என்கின்றோம்
காற்று சக்திகுமாரன்
அவனை வழிபடுகின்றோம்

#12
காக்கை பறந்து செல்லுகிறது
காற்றின் அலைகளின் மீது நீந்திக்கொண்டு போகிறது
அலைகள் போல் இருந்து மேலே காக்கை நீந்திச் செல்வதற்கு இடமாகும்
பொருள் யாது காற்று
அன்று அஃது அன்று காற்று
அது காற்றின் இடம் வாயு நிலயம்
கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத் தூள்களே காற்றடிக்கும்
போது நம் மீது வந்து மோதுகின்றன
அத் தூள்களைக் காற்று என்பது உலகவழக்கு
அவை வாயு அல்ல வாயு ஏறிவரும் தேர்
பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது நீரிலே குடேற்றினால்
வாயு ஆகிவிடுகிறது
தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது அத் திரவத்திலே
சூடேற்றினால் வாயு ஆகின்றது
இங்ஙனமே உலகத்துப் பொருள்கள் அனைத்தையும் வாயுநிலைக்குக்
கொண்டுவந்துவிடலாம்
இந்த வாயு பௌதிகத்தூள்
இதனை ஊர்ந்து வரும் சக்தியையே நாம் காற்றுத்தேவன் என்று வணங்குகிறோம்
காக்கை பறந்து செல்லும் வழி காற்று
அந்த வழியை இயக்குபவன் காற்று
அதனை அவ் வழியிலே தூண்டிச் செல்பவன் காற்று
அவனை வணங்குகின்றோம்
உயிரைச் சரணடைகின்றோம்

#13
அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா ஆம்
இரைகின்ற கடல்நீர் உயிரால் அசைகின்றதா ஆம்
கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது
அதன் சலனம் எதனால் நிகழ்வது உயிருடைமையால்
ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது உயிர் நிலையில்
ஊமையாக இருந்த காற்று ஊதத்தொடங்கிவிட்டதே
அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது உயிர் நேரிட்டிருக்கிறது
வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது
வண்டி செல்லும்போது உயிருடனேதான் செல்லுகிறது
காற்றாடி உயிருள்ளது
நீராவிவண்டி உயிருள்ளது பெரிய உயிர் யந்திரங்கள் எல்லாம் உயிருடையன
பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது
அவள் தீராத உயிருடையவள் பூமித்தாய்
எனவே அவள் திருமேனியில் உள்ள ஒவ்வொன்றும் உயிர்கொண்டதேயாம்
அகில முழுதும் சுழலுகிறது
சந்திரன் சுழல்கின்றது ஞாயிறு சுழல்கின்றது
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும்
அதற்கு அப்பாலும் சிதறிக்கிடக்கும்
வானத்து மீன்கள் எல்லாம் ஓயாது சுழன்றுகொண்டே தான் இருக்கின்றன
எனவே இவ் வையகம் உயிருடையது
வையகத்தின் உயிரையே காற்று என்கிறோம்
அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல்செய்கின்றோம்

#14
காற்றைப் புகழ நம்மால் முடியாது
அவன் புகழ் தீராது
அவனை ரிஷிகள் ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம என்று போற்றுகிறார்கள்
ப்ராணவாயுவைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காத்திடுக
அபாநனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க
வ்யாநனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க
உதாநனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க
ஸமாநனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க
காற்றின் செயல்களை எல்லாம் பரவுகின்றோம்
உயிரை வணங்குகின்றோம்
உயிர் வாழ்க

#15
உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்
நீ கண்கண்ட தெய்வம்
எல்லா விதிகளும் நின்னால் அமைவன
எல்லா விதிகளும் நின்னால் அழிவன
உயிரே
நீ காற்று நீ தீ நீ நிலம் நீ நீர் நீ வானம்
தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ
மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில்
பறக்கின்ற பூச்சி கொல்லுகின்ற புலி ஊர்கின்ற புழு
இந்தப் பூமியில் உள்ள எண்ணற்ற உயிர்கள் எண்ணற்ற உலகங்களில் உள்ள
எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள்
இவை எல்லாம் நினது விளக்கம்
மண்ணிலும் நீரிலும் காற்றிலும் நிரம்பிக்கிடக்கும் உயிர்களைக் கருதுகின்றோம்
காற்றிலே ஒரு சதுரஅடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது
கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்றன
ஒரு பெரிய ஜந்து அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள் அவற்றுள்
அவற்றிலுஞ் சிறிய பல ஜந்துக்கள்
அவற்றுள் இன்னும் சிறியவை இங்ஙனம் இவ் வையக முழுதிலும் உயிர்களைப்
பொதிந்துவைத்திருக்கிறது
மஹத் அதனிலும் பெரிய மஹத் அதனிலும் பெரிது அதனிலும் பெரிது
அணு அதனிலும் சிறிய அணு அதனிலும் சிறிது அதனிலும் சிறிது
இரு வழியிலும் முடிவில்லை இருபுறத்திலும் அநந்தம்
புலவர்களே காலையில் எழுந்தவுடன் உயிர்களை எல்லாம் போற்றுவோம்
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி

@5 கடல்

#1
கடலே காற்றைப் பரப்புகின்றது
விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல்நீர் அந்தச்
சுழற்சியிலே தலைகீழாகக் கவிழ்ந்து
திசைவெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை
பராசக்தியின் ஆணை
அவள் நமது தலை மீது கடல் கவிழ்ந்துவிடாதபடி ஆதரிக்கிறாள்
அவள் திருநாமம் வாழ்க
கடல் பெரிய ஏரி விசாலமான குளம் பெரும் கிணறு
கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா
அதுபற்றியே கடலும் கவிழவில்லை
பராசக்தியின் ஆணை
அவள் மண்ணிலே ஆகர்ஷணத் திறமையை நிறுத்தினாள்
அது பொருள்களை நிலைப்படுத்துகின்றது
மலை நமது தலை மேலே புரளவில்லை
கடல் நமது தலை மேலே கவிழவில்லை
ஊர்கள் கலைந்துபோகவில்லை
உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது
இஃது எல்லாம் அவளுடைய திருவருள்
அவள் திருவருளை வாழ்த்துகின்றோம்

#2
வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மை குன்றிய பிரதேசங்களுக்குக்
காற்று ஓடிவருகிறது
அங்ஙனம் ஓடிவரும் போது காற்று மேகங்களையும் ஓட்டிக்கொண்டு வருகிறது
இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடல் பாரிசங்களிலிருந்தே வருகின்றது
காற்றே உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்மழை கொண்டுவா
உனக்குத் தூப தீபங்கள் ஏற்றிவைக்கிறோம்
வருணா இந்திரா நீவிர் வாழ்க
இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள்புரியவேண்டும்
எங்களுடைய புலங்கள் எல்லாம் காய்ந்துபோய்விட்டன
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்றுகாலிகளுக்கும் நோய் வருகிறது
அதனை மாற்றி அருள வேண்டும்
பகல் நேரங்களிலே அனல் பொறுக்கமுடியவில்லை
மனம் ஹா ஹா என்று பறக்கிறது
பறவைகள் எல்லாம் வாட்டம் எய்தி நிழலுக்காகப் பொந்துகளில் மறைந்து
கிடக்கின்றன
பல தினங்களாக மாலைதோறும் மேகங்கள் வந்து கூடுகின்றன
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய் ஓர் இலைகூட அசையாமல் புழுக்கம்
கொடிதாக இருக்கிறது
சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்துத்
துரத்திக்கொண்டு போகின்றன
இப்படிப் பல நாட்களாக ஏமாந்துபோகிறோம்
இந்திரா வருணா அர்யமா பகா மித்திரா உங்கள் கருணையைப் பாடுகிறேன்
எங்கள் தாபம் எல்லாம் தீர்ந்து உலகம் தழைக்குமாறு இன்ப மழை பெய்தல் வேண்டும்

@6 ஜகத் சித்திரம்
** (சிறு நாடகம்)
** முதல் காட்சி
** இடம் மலையடி வாரத்தில் ஒரு காளி கோயில்
** நேரம் நடுப்பகல்
** காக்கை யரசன் (கோயிலை எதிர்த்த தடாகத்தின் இடையிலிருந்த
** தெப்பமண்டபத்தின் உச்சியில் ஏறி
** உட்கார்ந்துகொண்டு சூர்யனை நோக்கிச் சொல்லுகிறான்)

#1
எங்கோ வாழ்
நீல மலைகள் நிரம்ப அழகியன
வானம் அழகியது வான்வெளி இனிது
வானவெளியை மருவிய நின் ஒளி
இனியவற்றுள் எல்லாம் இனிது
எங்கே எங்கோ எனவும் அன்றி
கிலுகிலு கிலுகிலு எனவும் கிக்கீ
கிக்கீ என்றும் கேக்க கேக்க
கேட்க கேட்க எனவும் கெக்கெக்கே
குக்குக் குக்குக் குக்குக் குக்குக்
குக்கூவே என்றும் கீச் கீச் கீச் கீச்
கிசு கிசு கிசு கீச் என்றும் ரங்க ரங்க
என்றும் பல்லாயிர வகையினில் இசைக்கும்
குயில்களும் கிளிகளும் குலவு பல ஜாதிப்
புட்களும் இனிய பூங்குரல் உடையன
எனினும்
இத்தனை இன்பத்தினிடையே உயிர்க்குலத்தின்
உளத்தே மாத்திரம் இன்பம் உறவில்லை
இஃது என்னே காக்கா காக்கா எங்கோ வாழ்
இதைக் கேட்டு மற்றப் பக்ஷிகள் எல்லாம் கத்துகின்றன
ஆம் ஆம் ஆமாம் ஆமாம் ஆமாமடா ஆமாமடா ஆமாம் எங்கோ வாழ்
எங்கோ வாழ் நன்றாக உரைத்தாய்
மனம்தான் சத்துரு வேறு நமக்குப் பகையே கிடையாது
மனம்தான் நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு நம்மை
வேரறுக்கிறது அடுத்துக்கெடுக்கிறது
மனந்தான் பகை
அதைக் கொத்துவோம் வாருங்கள் அதைக் கிழிப்போம் வாருங்கள் அதை
வேட்டையாடுவோம் வாருங்கள்
** இரண்டாம் காட்சி
** வானுலகம் இந்திர சபை
** தேவேந்திரன் கொலுவீற்றிருக்கிறான்
** தேவ சேவகன்

#2
தேவ தேவா
** இந்திரன்
சொல்
** தேவ சேவகன்
வெளியே நாரதர் வந்து காத்திருக்கிறார் தங்களைத் தரிசிக்கவேண்டும்
என்று சொல்லுகிறார்
** இந்திரன்
வருக
** (நாரதர் பாடிக்கொண்டு வருகிறார்)
நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
** இந்திரன்
நாரதரே நாராயணன் எங்கு இருக்கிறான்
** நாரதர்
நீ அவனைப் பார்த்தது கிடையாதோ
** இந்திரன்
கிடையாது
** நாரதர்
ஸர்வ பூதங்களிலும் இருக்கிறான்
** இந்திரன்
நரகத்தில் இருக்கிறானா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
துன்பத்தில் இருக்கிறானா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
மரணத்தில் இருக்கிறானா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
உங்களுடைய ஸர்வ நாராயண சித்தாந்தத்தின் துணிவு யாது
** நாரதர்
எல்லா வஸ்துக்களும் எல்லா லோகங்களும் எல்லா நிலைமைகளும் எல்லாத்
தன்மைகளும்
எல்லா சக்திகளும் எல்லா ரூபங்களும் எல்லாம் ஒன்றுக்கொன்று ஸமானம்
** இந்திரன்
நீரும் கழுதையும் ஸமானம்தானா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
அமிருதபானமும் விஷபானமும் ஸமானமா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
சாதுவும் துஷ்டனும் ஸமானமா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
அசுரர்களும் தேவர்களும் ஸமானமா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
ஞானமும் அஞ்ஞானமும் ஸமானமா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
ஸுகமும் துக்கமும் ஸமானமா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
அது எப்படி
** நாரதர்
ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்
** (பாடுகிறார்)
நாராயண நாராயண நாராயண நாராயண
** மூன்றாம் காட்சி
** இடம் மண்ணுலகத்தில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு காளி கோயிலுக்கெதிரே
சோலையில்
** கிளி பாடுகிறது

#3
தைர்யா தைர்யா தைர்யா
தன்மனப் பகையைக் கொன்று
தாமே குணத்தை வென்று
உள்ளக் கவலை அறுத்து
ஊக்கம் தோளில் பொறுத்து
மனதில் மகிழ்ச்சி கொண்டு
மயக்கம் எல்லாம் விண்டு
ஸந்தோஷத்தைப் பூண்டு
தைர்யா ஹுக்கும் ஹுக்கும்
ஹுக்கும் ஹுக்கும்
ஆமடா தோழா
ஆமாமடா
எங்கோவா எங்கோவா வா
தைர்யா தைர்யா தைர்யா
** குயில்கள்
சபாஷ் சபாஷ் சபாஷ்
** குருவிகள்
டிர்ர்ர்ர்ர்ர்ர்ர் டிர்ர்ர்ர்
** நாகணவாய்
ஜீவ ஜீவ ஜீவ ஜீவ ஜீவ ஜீவ
** குருவிகள்
சிவ சிவ சிவ சிவ சிவ சிவா சிவ சிவா
** காக்கை
எங்கோ வாழ் எங்கோ வாழ்
** கிளி
கேளீர் தோழர்களே இவ் உலகத்தில் தற்கொலையைக் காட்டிலும் பெரிய குற்றம்
வேறு இல்லை
தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக்கொள்வதைக் காட்டிலும் பெரிய பேதைமை
வேறு இல்லை
** காக்கை
அக்கா அக்கா காவு காவு
** குருவி
கொட்டடா கொட்டடா கொட்டடா
** கிளி
ஹுக்குக்கூ
** கிளி
காதலைக் காட்டிலும் பெரிய இன்பம் வேறு இல்லை
** அணிற் பிள்ளை
ஹுக்கும் ஹுக்கும் ஹுக்கும் ஹுக்கும்
** பசுமாடு
வெயிலைப் போல் அழகான பதார்த்தம் வேறு இல்லை
** அணில்
பசுவே இந்த மிக அழகிய வெயிலில் என் கண்ணுக்குப் புலப்படும்
வஸ்துக்களுக்குள்ளே
உன் கண்ணைப் போல் அழகிய பொருள் பிறிதொன்று இல்லை
** நாகணவாய்
டுபுக் பாட்டைக் காட்டிலும் ரசமான தொழில் வேறு இல்லை
** எருமை மாடு
பக்ஷி ஜாதிகளுக்கு உள்ள சந்தோஷமும் ஜீவ ஆரவாரமும் ஆட்ட ஓட்டமும்
இனிய குரலும்
மிருக ஜாதியாருக்கும் மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே இதன்
காரணம் யாது
** நாகணவாய்
டுபுக் வெயில் காற்று ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களைக்
காட்டிலும் எங்களுக்கு அதிகம்
எங்களுக்கு உடம்பு சிறிது ஆதலால் தீனி சொற்பம் அதைச் சிறிது சிறிதாக
நெடுநேரம் தின்கிறோம்
ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம் மிருக மனித ஜாதியார்களுக்குள்
இருப்பதைக் காட்டிலும்
எங்களுக்குள்ளே காதல் இன்பம் அதிகம் ஆதலால் நாங்கள் அதிக
ஸந்தோஷமும் பாட்டும் நகைப்பும்
கொஞ்சு மொழிகளுமாகக் காலம்கழிக்கிறோம் இருந்தாலும் கிளியரசு
சொல்லியது போல்
காலனுக்குத் தூதனாகிய மனக்குறை என்னும் பேய் எங்கள் குலத்தையும்
அழித்துவிடத்தான் செய்கிறது
அதற்கு நிவாரணம் தேடவேண்டும் கவலையைக் கொல்வோம் வாருங்கள்
அதிருப்தியைக் கொத்துவோம் கொல்லுவோம்
** மற்றப் பக்ஷிகள்
வாருங்கள் வாருங்கள் வாருங்கள் துயரத்தை அழிப்போம்
கவலையைப் பழிப்போம் மகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்வோம்
** நான்காம் காட்சி
** இடம் கடற்கரை
** நேரம் நள்ளிரவு முழுநிலாப் பொழுது
** இரண்டு பாம்புகள் ஒரு பாலத்தடியே இருட் புதரினின்றும்
** வெளிப்பட்டு நிலா வீசி ஒளிதரும் மணல்மீது வருகின்றன
** ஆண் பாம்பு

#4
உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கு இன்பம் இல்லை
உன்னால் எனது வாழ்நாள் விஷமயமாகிறது
உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில் பட்ட புழுவைப் போலே
துடித்துக்கொண்டிருக்கிறது
** பெண் பாம்பு
உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கு இன்பம் இல்லை
உன்னால் எனது வாழ்நாள் நரகமாகிறது
உன்னால் என் மனம் தழலில் பட்ட புழுவைப் போல் இடையறாது துடிக்கிறது
** ஆண் பாம்பு
நான் உன்னைப் பகைக்கிறேன்
** பெண் பாம்பு
நான் உன்னை விரோதிக்கிறேன்
** ஆண் பாம்பு
நான் உன்னைக் கொல்லப்போகிறேன்
** பெண் பாம்பு
நான் உன்னைக் கொல்லப்போகிறேன்
** ஒன்றையொன்று கடித்து இரண்டு பாம்புகளும் மடிகின்றன
** ஐந்தாம் காட்சி
** கடற்கரை
** தேவதத்தன் என்ற மனித இளைஞன்

#5
நிலா இனியது நீல வான் இனியது தெண் திரைக் கடலின் சீர் ஒலி இனிய
உலகம் நல்லது கடவுள் ஒளிப்பொருள் அறிவு கடவுள் அதன் நிலை மோக்ஷம்
விடுதலைப்பட்டேன் அசுரரை வென்றேன்
நானே கடவுள் கடவுளே நான்
காதல் இன்பத்தால் கடவுள்நிலை பெற்றேன்

@7 விடுதலை
** (நாடகம்)
** அங்கம் 1
** காட்சி 1
** இடம் வானுலகம்
** காலம் கலி முடிவு
** பாத்திரங்கள் இந்திரன் வாயு அக்நி ஒளி (சூரியன்) ஸோமன் இரட்டையர்
(அசுவிதி தேவர்) மருத்துக்கள்
** வசுக்கள் த்வஷ்டா விசு வே தேவர் முதலாயினோர்
** இந்திரன்

#0
உமக்கு நன்று தோழரே
** மற்றவர்
தோழா உனக்கு நன்று
** இந்திரன்
பிரம்மதேவன் நமக்கு ஓர் பணியிட்டான்
** மற்றோர்
யாங்ஙனம்
** இந்திரன்
மண்ணுலகத்து மானுடன்தன்னைக்
கட்டிய தளை எல்லாம் சிதறுக என்று
** அக்கி
வாழ்க தந்தை மானுடர் வாழ்க
** மற்றோர்
தந்தை வாழ்க தனிமுதல் வாழ்க
உண்மை வாழ்க உலகம் ஓங்குக
தீது கெடுக திறமை வளர்க
** ஒளி
உண்மையும் அறிவும் இன்பமும் ஆகி
பல எனத் தோன்றிப் பல வினை செய்து
பல பயன் உண்ணும் பரம நற்பொருளை
உயிர்க்கு எலாம் தந்தையை உயிர்க்கு எலாம் தாயை
உயிர்க்கு எலாம் தலைவனை உயிர்க்கு எலாம் துணைவனை
உயிர்க்கு எலாம் உயிரை உயிர்க்கு எலாம் உணர்வை
அறிவிலே கண்டு போற்றி
நெறியினில் அவன் பணி நேர்படச் செய்வோம்
** இந்திரன்
நன்று தோழரே அமிழ்தம் உண்போம்
** மற்றோர்
அமிழ்தம் நன்றே ஆம் அஃது உண்போம்
** (எல்லாரும் அமிர்த பானம் செய்கிறார்கள்)
** இந்திரன்
நித்தமும் வலிது
** வாயு
நித்தமும் புதிது
** அக்கி
தீரா விரைவு
** இரட்டையர்
மாறா இன்பம்
** மருத்துக்கள்
என்றும் இளமை
** ஒளி
என்றும் தெளிவு
** அக்கி
மண்ணுலகத்து மானுடர் வடிக்கும்
ஸோமப் பாலும் இவ் அமிழ்தமும் ஓர் சுவை
** இந்திரன்
மண்ணுலகத்து மக்களே நீவிர்
இன்பம் கேட்டீர் எண்ணிய மறப்பீர்
செயல் பல செய்வீர் செய்கையில் இளைப்பீர்
எண்ணளவதனால் ஏழுலகினையும்
விழுங்குதல் வேண்டுவீர் மீளவும் மறப்பீர் 5
தோழர் என்று எம்மை நித்தமும் சார்ந்தீர்
ஸோமப் பாலொடு சொல்லமுது ஊட்டுவீர்
நும்மையே அவுணர் நோவுறச் செய்தார்
ஆஅஅ மறவுக் குறும்பா அரக்கா
விருத்திரா ஒளியினை மறைத்திடும் வேடா 10
நமுசிப் புழுவே வலனே நலிசெயும்
துன்பமே அச்சமே இருளே தொழும்பர்காள்
பெயர் பல காட்டும் ஒரு கொடும் பேயே
உருப் பல காட்டும் ஒரு புலைப் பாம்பே
படை பல கொணர்ந்து மயக்கிடும் பாழே 15
ஏடா வீழ்ந்தனை யாவரும் வீழ்ந்தீர்
அரக்கரே மனித அறிவு எனும் கோயிலை
விட்டு நீர் ஒழிந்தால் மேவிடும் பொன்னுலகம்
முந்தை நாள் தொடங்கி மானுடர்தமக்குச்
சீர் தர நினைந்து நாம் செய்ததை எல்லாம் 20
மேகக் கரும் புலை விருத்திரன் கொடுத்தான்
வலியிலார் தேவர் வலியவர் அரக்கர்
அறமே நொய்யது மறமே வலியது
மெய்யே செத்தை பொய்யே குன்றம்
இன்பமே சோர்வது துன்பமே வெல்வது 25
என்று ஓர் வார்த்தையும் பிறந்தது மண் மேல்
மானுடர் திகைத்தார் மந்திரத் தோழராம்
விசுவாமித்திரன் வசிட்டன் காசிபன்
முதலியோர் செய்த முதல்நூல் மறைந்தது
பொய்ந்நூல் பெருகின பூமியின்கண்ணே 30
வேதம் கெட்டு வெறுங்கதை மலிந்தது
போதச் சுடரை புகை இருள் சூழ்ந்தது
தவம் எலாம் குறைந்து சதி பல வளர்ந்தன
எல்லாப் பொழுதினும் ஏழை மானுடர்
இன்பம் கருதி இளைத்தனர் மடிந்தார் 35
கங்கை நீர் விரும்பிக் கனல் நீர் கண்டார்
அமுதம் வேண்டி விடத்தினை உண்டார்
ஏஎ
வலியரே போலும் இவ் வஞ்சக அரக்கர்
***
விதியின் பணிதான் விரைக 40
மதியின் வலிமையால் மானுடன் ஓங்குக
** ஒளி
ஒருவனைக் கொண்டு சிறுமை நீக்கி
நித்திய வாழ்விலே நிலைபெறச் செய்தால்
மானுடச் சாதி முழுதும் நல்வழிப் படும்
மானுடச் சாதி ஒன்று மனத்திலும் 45
உயிரிலும் தொழிலிலும் ஒன்றேயாகும்
** தீ
பரதகண்டத்தில் பாண்டியநாட்டிலே
விரதம் தவறிய வேதியர் குலத்தில்
வசுபதி என்று ஓர் இளைஞன் வாழ்கின்றான்
தோலிலே மெலிந்தான் துயரிலே அமிழ்ந்தான் 50
நாளும் வறுமை நாயொடு பொருவான்
செய் வினை அறியான் தெய்வமும் துணியான்
ஐய வலையில் அகப்படலாயினன்
இவனைக் காண்போம் இவன் புவி காப்பான்
** காற்று
உயிர் வளம் கொடுத்தேன் உயிரால் வெல்க
** இந்திரன்
மதி வலி கொடுத்தேன் வசுபதி வாழ்க
** சூரியன்
அறிவிலே ஒளியை அமைத்தேன் வாழ்க
** தேவர்
மந்திரம் கூறுவோம் உண்மையே தெய்வம்
கவலையற்று இருத்தலே வீடு களியே
அமிழ்தம் பயன் வரும் செய்கையே அறமாம்
அச்சமே நரகம் அதனைச் சுட்டு
நல்லதை நம்பி நல்லதே செய்க
மகனே வசுபதி மயக்கம் தெளிந்து
தவத் தொழில்செய்து தரணியைக் காப்பாய்
** காட்சி 2
** பாணிநாட்டில் வேதபுரம் கடற்கரை
** வசுபதி தனியே நிலவைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்
** வசுபதி பாடுகிறான்
** நிலவுப் பாட்டு

#1
வாராய் நிலவே வையத் திருவே
வெள்ளைத் தீவில் விளையும் கடலே
வானப் பெண்ணின் மதமே ஒளியே
வாராய் நிலவே வா

#2
மண்ணுக்குள்ளே அமுதைக் கூட்டிக்
கண்ணுக்குள்ளே களியைக்காட்டி
எண்ணுக்குள்ளே இன்பத் தெளிவாய்
வாராய் நிலவே வா

#3
இன்பம் வேண்டில் வானைக் காண்பீர்
வான் ஒளிதன்னை மண்ணில் காண்பீர்
தும்பம்தான் ஓர் பேதைமை அன்றோ
வாராய் நிலவே வா

#4
அச்சப் பேயைக் கொல்லும் படையாம்
விதைத் தேனில் விளையும் களியாய்
வாராய் நிலவே வா
&11 பிற்சேர்க்கை – பல புதிய பாடல்கள்

@1 இந்தத் தெய்வம்

#0
இந்தத் தெய்வம் நமக்கு அநுகூலம்
இனி மனக் கவலைக்கு இடம் இல்லை

#1
மந்திரங்களைச் சோதனைசெய்தால் வையகத்தினை ஆள்வது தெய்வம்
இந்தத் தெய்வம் கதி என்று இருப்பீர் ஆக்கம் உண்டு என்று அனைத்தும் உரைக்கும்

#2
மரத்தின் வேரில் அதற்கு உணவு உண்டு வயிற்றினிலே கருவுக்கு உணவு உண்டு
தரத்தில் ஒத்த தருமங்கள் உண்டு சக்தி ஒன்றிலோ முக்தி உண்டு

#3
உலகமே உடலாய் அதற்குள்ளே உயிரது ஆகி விளங்கிடும் தெய்வம்
இலகும் வான் ஒளி போல் அறிவு ஆகி எங்கணும் பரந்திடும் தெய்வம்

#4
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை
உய்கை கொண்டு அதன் நாமத்தைக் கூறின் உணர்வு கொண்டவர் தேவர்கள் ஆவர்

#5
நோய் இல்லை வறுமை இல்லை நோன் பிழைப்பதிலே துன்பம் இல்லை
தாயும் தந்தையும் தோழனும் ஆகித் தகுதியும் பயனும் தரும் தெய்வம்

#6
அச்சம் இல்லை மயங்குவது இல்லை அன்பும் இன்பமும் மேன்மையும் உண்டு
மிச்சம் இல்லை பழம் துயர்க் குப்பை வெற்றி உண்டு விரைவினில் உண்டு
**1 ஆதாரம் பாரதி நினைவுகள் — பக்கம் 137-138 மகாகவி பாரதியாரின் மூத்த மகள்
**தங்கம்மாள் ருதுவான நாளன்று பாடிய பாடல் என யதுகிரி அம்மாள் குறிப்பிடுகிறார்

@2 வங்கமே வாழிய
**வங்க வாழ்த்துக் கவிகள்

#1
அங்கமே தளர்வு எய்திய காலையும் அங்கு ஒர் புல் நரி தந்திடும் ஊன் உணாச்
சிங்கமே என வாழ்தல் சிறப்பு எனாச் செம்மை கூறி நம் தாய்ப் பெரும் தேயத்தைப்
பங்கமே பெறும் இந் நிலை நின்று உயர் பண்டை மாண்பிடைக் கொண்டு
இனிது உய்த்திடும்
வங்கமே என வந்தனை வாழி நீ வங்கமே நனி வாழிய வாழிய

#2
கற்பகத் தருப் போல் எது கேட்பினும் கடிது நல்கிடும் பாரதநாட்டினில்
பொற்புறப் பிறந்தோம் நமக்கு ஓர் விதப் பொருளும் அன்னியர் ஈதல் பொறுக்கிலேம்
அற்பர் போலப் பிறர் கரம் நோக்கி யாம் அவனி வாழ்தல் ஆகாது என நன்கு இதை
வற்புறுத்திடத் தோன்றிய தெய்வமே வங்கமே நனி வாழிய வாழிய

#3
கண்ணில் நீர் துடைப்பாய் புன்னகை கொள்வாய் கவினுறும் பரதப்பெரும்தேவியே
உள் நிகழ்ந்திடும் துன்பம் களைதியால் உன்றன் மைந்தர்கள் மேல் நெறி உற்றனர்
பெண்ணின் நெஞ்சிற்கு இதம் எனலாவது பெற்ற பிள்ளைகள் பீடுறவே அன்றோ
மண்ணி நீ புகழ் மேவிட வாழ்த்திய வங்கமே நனி வாழிய வாழிய
** 2 ஆதாரம் பாரதி தமிழ் — பக்கம் 1-2 சுதேசமித்திரன் 15-9-1905
** 14-9-1905-ல் சென்னைக் கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் பாடிய பாடல்

@3 வந்தே மாதரம்

#1
ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும்
மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான்
மாரி எனும்படி வந்து சிறந்தது வந்தேமாதரமே மாண் உயர் பாரததேவியின்
மந்திரம் வந்தேமாதரமே
வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு
புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா
வாரிதி மீதில் எழுந்த இளம்கதிர் வந்தேமாதரமே வாழி நல் ஆரிய தேவியின்
மந்திரம் வந்தேமாதரமே

#2
கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து
ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும்
வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி
அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும்
பாரததேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடும் மந்திரமும் பாதகர் ஓதினும் மேதகவு
உற்றிடு பண்பு உயர் மந்திரமும்
வாரமுறும் சுவை இன் நறவு உண் கனி வான் மருந்து எனவே மாண் உயர்
பாரததேவி விரும்பிடும் வந்தேமாதரமே
** 3ஆதாரம் சக்ரவர்த்தினி — பக்கம் 168
** சுதேசமித்திரனில் 24-2-1906-ல் திரும்பவும் பிரசுரம் செய்யப்பட்டது

@4 என்னே கொடுமை

#1
மல் ஆர் திண் தோள் பாஞ்சாலன் மகள் பொன் கரத்தின் மாலுற்ற
வில்லால் விஜயன் அன்று இழைத்த விந்தைத் தொழிலை மறந்திலிரால்
பொல்லா விதியால் நீவிர் அவன் போர் முன் இழைத்த பெரும் தொழில்கள்
எல்லாம் மறந்தீர் எம்மவர்காள் என்னே கொடுமை ஈங்கு இதுவே

#2
வீமன் திறலும் அவற்கு இளைய விஜயன் திறலும் விளங்கிநின்ற
சேம மணிப் பூம் தட நாட்டில் சிறிய புழுக்கள் தோன்றி வெறும்
காமம் நுகர்தல் இரந்து உண்டல் கடையாம் வாழ்க்கை வாழ்ந்து பினர்
ஈமம் புகுதல் இவை புரிவார் என்னே கொடுமை ஈங்கு இதுவே
** 4 ஆதாரம் பாரதி தமிழ் — பக்கம் 16 சுதேசமித்திரன் 4-4-1906

@5 எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்
**கண்ணிகள்

#1
புன்னகையும் இன்னிசையும் எங்கு ஒளித்துப் போயினவோ
இன்னலொடு கண்ணீர் இருப்பாகிவிட்டனவே

#2
ஆண் எலாம் பெண்ணாய் அரிவையர் எலாம் விலங்காய்
மாண் எலாம் பாழாகி மங்கிவிட்டது இ நாடே

#3
ஆரியர்கள் வாழ்ந்துவரும் அற்புதநாடு என்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேசம் ஆயினதே

#4
வீமாதி வீரர் விளித்து எங்கு போயினரோ
ஏமாறி நிற்கும் இழிஞர்கள் இங்கு உள்ளாரே

#5
வேத உபநிடத மெய்ந்நூல்கள் எல்லாம் போய்
பேதைக் கதைகள் பிதற்றுவர் இ நாட்டினிலே

#6
ஆதிமறைக் கீதம் அரிவையர்கள் சொன்னது போய்
வீதி பெருக்கும் விலை அடிமை ஆயினரே

#7
செந்தேனும் பாலும் தெவிட்டி நின்ற நாட்டினிலே
வந்தே தீப் பஞ்சம் மரபாகிவிட்டதுவே

#8
மா முனிவர் தோன்றி மணம் உயர்ந்த நாட்டினிலே
காமுகரும் பொய் அடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே

#9
பொன்னும் மணியும் மிகப் பொங்கிநின்ற இ நாட்டில்
அன்னம் இன்றி நாளும் அழிவார்கள் எத்தனைபேர்

@6 வந்தே மாதரம்
** [“வந்தே மாதரம் என்போம் — எங்கள் மாநிலத் தாயை வணங்குது மென்போம்”
** என்று துவங்கும்
** “வந்தே மாதர”ப் பாடலில் 1907-ம் ஆண்டில் ஸ்ரீ வி கிருஷ்ணசாமி ஐயர்
** வெளியிட்ட நான்கு பக்க பாரதி பாடல்
** பிரசுரத்தில் காணப்படும் சரணம் இது ‘எப்பதம் வாய்த்திடுமேனும்’என்று
** துவங்கும் சரணத்திற்கு
** அடுத்த சரணமாக இது இருக்கவேண்டும்]
**5 ஆதாரம் பாரதி தமிழ் — பக்கம் 17
** சுதேசமித்திரன் 11-4-1906
**6 ஆதாரம் பாரதி புதையல் 1 — பக்கம் 22

#1
தேவி நம் பாரதபூமி எங்கள்
தீமைகள் யாவையும் தீர்த்து அருள்செய்வாள்
ஆவி உடல் பொருள் மூன்றும்
அந்த அன்னை பொன் தாளினுக்கு அர்ப்பிதம் ஆக்கி

@7 சுதந்திர தேவியிடம் முறையீடு

#1
அன்னாய் இங்கு உனைக் கூறப் பிழை இல்லை யாமே நின் அருள் பெற்று ஓங்க
என்னானும் தகுதியிலேம் மிகப் பொல்லேம் பழியுடையேம் இழிவு சான்றேம்
பொன்னான வழி அகற்றிப் புலை வழியே செல்லும் இயல் பொருந்தியுள்ளேம்
தன்னால் வந்திடும் நலத்தைத் தவிர்த்துப் பொய்த் தீமையினைத் தழுவுகின்றோம்

#2
எல்லையில்லாக் கருணையுறும் தெய்வதம் நீ எவர்க்கும் மனம் இரங்கிநிற்பாய்
தொல்லை எலாம் தவிர்த்து எங்கள் கண் காண நொடிப்பொழுதில் துருக்கி மாந்தர்
நல்ல பெரும் பதம் காணப்புரிந்திட்டாய் பல கால நவை கொண்டு அன்னார்
சொல்லரிய பிழை செய்தது அத்தனையும் மறந்து அவரைத் தொழும்புகண்டாய்

#3
அரைக்கணமாயினும் உன்னைத் திரிகரணத் தூய்மையுடன் அன்னாய் ஞானத்
திரை கடலே அருள்கடலே சீர் அனைத்தும் உதவு பெரும் தேவே இந்தத்
தரைக்கு அணிய பெரும்பொருளே காவாயோ என்று அலறித் தாய் உன் நாமம்
உரைக்க மனம் எமக்கு இன்றி யாம் அழிந்தாம் பிழை சிறிதும் உளதாம்-கொல்லோ

#4
வேண்டுமென விளக்கில் விழும் சிறு பூச்சிதனை யாவர் விலக்க வல்லார்
தூண்டும் அருளால் யாம் ஓர் விளக்கை அவித்தால் அதுதான் சுற்றிச்சுற்றி
மீண்டும் ஒரு விளக்கில் போய் மாண்டு விழும் அஃது ஒப்ப விருப்போடு ஏகித்
தீண்டரிய புன்மையினில் யாம் வீழ்ந்தால் அன்னாய் நீ செய்வது என்னே

#5
அந்த நாள் அருள்செய நீ முற்பட்ட பொழுது எலாம் அறிவிலாதேம்
வந்த மாதேவி நினை நல்வரவு கூறி அடி வணங்கிடாமல்
சொந்த மா மனிதருளே போரிட்டும் பாழாகித் துகளாய் வீழ்ந்தேம்
இந்த நாள் அச்சத்தால் நீ வருங்கால் முகம் திரும்பி இருக்கின்றோமால்
**7 ஆதாரம் பாரதி புதையல் 1 — பக்கம் 10-11 புதுவை இந்தியா 8-5-1909 இதழ்

@8 உயிர் பெற்ற தமிழர் பாட்டு
** பல்லவி

#0
இனி ஒரு தொல்லையும் இல்லை பிரிவு
இல்லை குறையும் கவலையும் இல்லை
** ஜாதி

#1
மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை
கனி தரும் மாமரம் ஒன்று அதில் காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு

#2
பூவில் உதிர்வதும் உண்டு பிஞ்சைப் பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு
நாவிற்கு இனியதைத் தின்பார் அதில் நாற்பதினாயிரம் சாதிகள் சொல்வார்

#3
ஒன்று உண்டு மானிட சாதி பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்
இன்று படுத்தது நாளை உயர்ந்து ஏற்றம் அடையும் உயர்ந்தது இழியும்

#4
நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை குணம் நல்லதாயின்
எந்தக் குலத்தினரேனும் உணர்வு இன்பம் அடைதல் எளிது எனக் கண்டோம்
** இன்பத்திற்கு வழி

#5
ஐந்து புலனை அடக்கி அரசு ஆண்டு மதியைப் பழகித் தெளிந்து
நொந்து சலிக்கும் மனதை மதி நோக்கத்தில் செல்லவிடும் பகை கண்டோம்
** புராணங்கள்

#6
உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய் எனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம் பிறிது உள்ள மறைகள் கதை எனக் கண்டோம்

#7
கடலினைத் தாவும் குரவும் வெம் கனலில் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும்

#8
நதியின் உள்ளே முழுகிப் போய் அந்த நாகர் உலகில் ஓர் பாம்பின் மகளை
விதியுறவே மணம்செய்த திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம்

#9
ஒன்று மற்றொன்றைப் பழிக்கும் ஒன்றில் உண்மை என்று ஓதி மற்றொன்று பொய் என்னும்
நன்று புராணங்கள் செய்தார் அதில் நல்ல கவிதை பலபல தந்தார்

#10
கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய் என்று தெளிவுறக் கண்டோம்
புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம்
** ஸ்மிருதிகள்

#11
பின்னும் ஸ்மிருதிகள் செய்தார் அவை பேணும் மனிதர் உலகினில் இல்லை
மன்னும் இயல்பின அல்ல இவை மாறிப் பயிலும் இயல்பின ஆகும்

#12
காலத்திற்கு ஏற்ற வகைகள் அவ்வக்காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும்
ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் எந்த நாளும் நிலைத்திடும் நூல் ஒன்றும் இல்லை

#13
சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்
சோறு உண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் அது
சாத்திரம் அன்று சதி என்று கண்டோம்
** மேற்குலத்தார் எவர்

#14
வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக்கடை வைப்பவரேனும்
பொய் அகலத் தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்
** தவமும் யோகமும்

#15
உற்றவர் நாட்டவர் ஊரார் இவர்க்கு உண்மைகள் கூறி இனியன செய்தல்
நல் தவம் ஆவது கண்டோம் இதில் நல்ல பெரும் தவம் யாதொன்றும் இல்லை

#16
பக்கத்திருப்பவர் துன்பம்தன்னைப் பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி
ஒக்கத் திருந்தி உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி
** யோகம்யாகம்ஞானம்

#17
ஊருக்கு உழைத்திடல் யோகம் நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் உளம் பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம்
** பரம்பொருள்

#18
எல்லை இல்லாத உலகில் இருந்து எல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம்
எல்லை இல்லாதன ஆகும் இவை யாவையுமாய் இவற்றுள் உயிர் ஆகி

#19
எல்லையில்லாப் பொருள் ஒன்று தான் இயல்பு அறிவு ஆகி இருப்பது உண்டு என்றே
சொல்லுவர் உண்மை தெளிந்தார் இதைத் தூவெளி என்று தொழுவர் பெரியோர்

#20
நீயும் அதனுடைத் தோற்றம் இந்த நீல நிறம் கொண்ட வானமும் ஆங்கே
ஓயுதல் இன்றிச் சுழலும் ஒளி ஓங்கு பல் கோடிக் கதிர்களும் அஃதே

#21
சக்திகள் யாவும் அதுவே பல் சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே
நித்தியமாம் இவ் உலகில் கடல் நீரில் சிறு துளி போலும் இப் பூமி

#22
இன்பமும் ஓர் கணத் தோற்றம் இங்கு இளமையும் செல்வமும் ஓர் கணத் தோற்றம்
துன்பமும் ஓர் கணத் தோற்றம் இங்கு தோல்வி முதுமை ஒரு கணத் தோற்றம்
** முக்தி

#23
தோன்றி அழிவது வாழ்க்கை இதில் துன்பத்தோடு இன்பம் வெறுமை என்று ஓதும்
மூன்றில் எது வருமேனும் களி மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி

@9 பகவத் கீதை
**காப்புச் செய்யுள்

#1
வேய் இனிக்க இசைத்திடும் கண்ணன்தான் வேதம் அன்ன மொழிகளில் பார்த்தனே
நீ இனிக் கவலாது அறப்போர்செய்தல் நேர்மை என்றதோர் செய்தியைக் கூறும் என்
வாய் இனிக்க வரும் தமிழ் வார்த்தைகள் வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திடத்
தாய் இனிக் கருணைசெயல் வேண்டும் நின் சரணம் அன்றி இங்கு ஓர் சரண் இல்லையே

@10 வருண சிந்தாமணி நூலுக்குப் பாடியளித்த பாயிரப் பாக்கள்
**காப்புச் செய்யுள்

#1
செந்தண்மை பூண்டு ஒழுகும் திறத்தானே அறவோர்தம் சிறப்பு வாய்ந்த
அந்தணர் அப் பிரமநிலை அறிகுநரே பிராமணர் என்றளவில் நூற்கள்
சந்தமும் கூறியதைத் தேராமே பிறப்பு ஒன்றால் தருக்கி நாமே
எந்த நெறியுடைய பிறர் எனினும் அவர் சூத்திரர் என்று இகழ்கின்றோமால்

#2
மேழி கொடு நிலம் உழுது வாழ்வதுவே முதல் வாழ்க்கை வேதம் ஓதல்
வாழி அதினும் சிறப்பாம் மற்ற இவை இரண்டனுக்கும் வல்லார்தம்மைப்
பாழில் இவர் கடைக்குலத்தார் என்பது பேதைமை அன்றோ பார்க்கும் காலைக்
கூழ் இவரே பிறர்க்கு அளிப்பர் நிலமுடை வைசியர் என்றே கொள்வாம்-மனோ

#3
பல் நாளா வேளாளர் சூத்திரர் என்று எண்ணிவரும் பழம் பொய்தன்னை
ஒன்னார் பற்பலர் நாண வருணசிந்தாமணி என்னும் உண்மை வாளால்
சின்னாபின்னம்புரிந்து புவியினரைக் கடப்படுத்தான் சென்னை வாழும்
நல் நா வலோர் பெருமான் கனகசபைப்பிள்ளை எனும் நாமத்தானே
**10 ஆதாரம் தினமணி சுடர் 11-12-77 ஆதாரம் வருண சிந்தாமணி — பக்கம் 4

@11 செட்டிமக்கள் குலவிளக்கு

#1
பல்லாண்டு வாழ்ந்து ஒளிர்க கானாடுகாத்தநகர்ப் பரிதி போன்றாய்
சொல் ஆண்ட புலவோர்தம் உயிர்த்துணையே தமிழ் காக்கும் துரையே வெற்றி
வில் ஆண்ட இராமனைப் போல் நிதி ஆளும் இராமன் என விளங்குவாய் நீ
மல் ஆண்ட திண் தோளாய் சண்முக நாமம் படைத்த வள்ளல் கோவே

#2
செட்டி மக்கள் குலத்தினுக்குச் சுடர் விளக்கே பாரதமாதேவி தாளைக்
கட்டி உளத்து இருத்திவைத்தாய் பராசக்தி புகழ் பாடிக் களித்துநிற்பாய்
ஒட்டிய புன் கவலை பயம் சோர்வு என்னும் அரக்கர் எல்லாம் ஒருங்கு மாய
வெட்டி உயர் புகழ்படைத்தாய் விடுதலையே வடிவம் என மேவிநின்றாய்

#3
தமிழ் மணக்கும் நின் நாவு பழவேத உபநிடதத்தின் சாரம் என்னும்
அமிழ்து நினது அகத்தினிலே மணம் வீசும் அதனாலே அமரத்தன்மை
குமிழ்பட நின் மேனி எலாம் மணம் ஓங்கும் உலகம் எலாம் குழையும் ஓசை
உமிழ்படு வேய்ங்குழல் உடைய கண்ணன் என நினைப் புலவோர் ஓதுவாரே

#4
பாரத தனாதிபதி என நினையே வாழ்த்திடுவார் பாரிலுள்ளோர்
ஈரம் இலா நெஞ்சுடையோர் நினைக் கண்டால் அருள் வடிவம் இசைந்துநிற்பார்
நேர் அறியா மக்கள் எலாம் நினைக் கண்டால் நீதி நெறி நேர்ந்து வாழ்வார்
யார் அறிவார் நின் பெருமை யார் அதனை மொழியினிடை அமைக்க வல்லார்

#5
பல நாடு சுற்றி வந்தோம் பல கலைகள் கற்று வந்தோம் இங்கு பற்பல
குலம் ஆர்ந்த மக்களுடன் பழகி வந்தோம் பல செல்வர் குழாத்தைக் கண்டோம்
நிலம் மீது நின் போல் ஓர் வள்ளலை யாம் கண்டிலமே நிலவை அன்றிப்
புலன் ஆரச் சகோர பக்ஷி களிப்பதற்கு வேறு சுடர்ப் பொருள் இங்கு உண்டோ

#6
மன்னர் மிசைச் செல்வர் மிசைத் தமிழ் பாடி எய்ப்புற்று மனம் கசந்து
பொன் அனைய கவிதை இனி வானவர்க்கே அன்றி மக்கள் புறத்தார்க்கு ஈயோம்
என்ன நமது உளத்து எண்ணியிருந்தோம் மற்று உன்னிடத்தே இமையோர்க்கு உள்ள
வன்னம் எலாம் கண்டு நினைத் தமிழ் பாடிப் புகழ்வதற்கு மனம்கொண்டோமே

#7
மீன் ஆடு கொடி உயர்ந்த மதவேளை நிகர்த்த உரு மேவிநின்றாய்
யாம் நாடு பொருளை எமக்கு ஈந்து எமது வறுமையினை இன்றே கொல்வாய்
வான் நாடும் மன் நாடும் களி ஓங்கத் திருமாது வந்து புல்கக்
கானாடுகாத்தநகர் அவதரித்தாய் சண்முகனாம் கருணைக் கோவே

@12 இளசை ஒருபா ஒருபஃது
** காப்பு

#0
நித்தர் எனும் தென் இளசை நின்மலனார் தாம் பயந்த
அத்தி முகத்து எம் கோன் அடி இணையே சித்தி தரும்
என் தமிழில் ஏதும் இழுக்கு இலாமே அஃது
நன்றாகும் என்று அருளும் நன்கு
** நூல்

#1
தேன் இருந்த சோலை சூழ் தென் இளசை நல் நகரின்
மான் இருந்த கையன் மலரடியே வானில்
சுரர் தமனியன் மால் தொழும் கால் கிரீடத்து
அரதனங்கள் சிந்தும் அகம்

#2
அக இடத்திற்கு ஓர் திலகமாம் என் இளசைப்
பகவன் என் எட்டீசன் பதமே திகிரி
பொருந்து கரத்தான் அன்று ஓர் போத்திரியாய்த் தேடி
வருந்தியுமே காணாச் செல்வம்

#3
செல்வம் இரண்டும் செழித்து ஓங்கும் தென் இளசை
யில் வளரும் ஈசன் எழில் பதமே வெல் வயிரம்
ஏந்து கரத்தான் கரியன் எண்கணன்தம் உள்ளத்துப்
போந்து வளர்கின்ற பொருள்

#4
பொருளாளர் ஈய வேல்போர் இளசை
மருளாளர் ஈசர் அடியே தெருள் சேர்
தமனா மறையவன் மேல் தன் பாசமிட்ட
சமன் ஆவி வாங்கும் பாசம்

#5
சங்கம் தவழ் கழனி தண் இளசை நல் நகரில்
எங்கள் சிவனார் எழில் பதமே துங்கம் மிகும்
வேத முடியின் மிசையே விளங்கு நல்
சோதி என நெஞ்சே துணி

#6
துணி நிலவு ஆர் செஞ்சடையன் தோள் இளசை ஊரன்
மணிகண்டன் பாதமலரே பிணி நரகில்
வீழச்செய்யாது விரும்பிய ஈந்தே அடியர்
வாழச்செய்கின்ற மருந்து

#7
மருள் அறக் கற்றோர்கள் மருவு இளசை ஊரில்
வரும் இறைவன் பாதமலரே திருவன்
விரை மலரா விட்ட விழியாம் வியன் தாம்
அரை பூத்த செந்தாமரை

#8
தாமரையின் முத்து எங்கும் தான் சிதறும் தென் இளசைக்
கோமான் எட்டீசன் மலர் கொள் பதமே நாம வேல்
வல் அரக்கன் கைலை வரை எடுத்தகால் அவனை
அல்லல்பட அடர்த்ததால்

#9
ஆல விழியாரவர் முலை நேர் தண் வரை சூழ்
கோல மணி இளசைக் கோன் பதமே சீல
முனிவர் விடுத்த முயலகன் மீது ஏறித்
தனி நடனம் செய்ததுவே தான்

#10
தானே பரம்பொருளாம் தண் இளசை எட்டீசன்
தேன் ஏய் கமல மலர்ச் சீர் அடியே யானே முன்
செய்த வினை தீர்த்துச் சிவாநந்தம் பொங்கி அருள்
எய்திடவும் செய்யும் எனை
** தனி

#11
கன்னன் எனும் எங்கள் கருணை வெங்கடேசுரெட்ட
மன்னவன் போற்று சிவ மாண் அடியே அன்னவனும்
இ நூலும் தென் ஆர் இளசை எனும் நல் நகரும்
எந்நாளும் வாழவைக்குமே
** 12 ஆதாரம் சக்தி வெளியீடு — பக்கம் 475 — 476

@13 மணிமுத்து நாவலர்
**காப்பு

#1
பந்தைத் தெறு முலை மாப் பால் மொழியினும் கரிய
எந்தைக்குச் சால இனிக்குமே விந்தை
அணி முத்துக் கோவை என அம் சொல் இசை சேர்க்கும்
மணிமுத்துநாவலர் வாக்கு
**13 ஆதாரம் பாரதி புதையல் 1 — பக்கம் 22 1935-ல் எட்டயபுரத்தில்
** வெளியான ‘மணிமுத்துப் புலவர் பாடல்’ என்ற நூலில் இப்பாடல்
** வெளியிடப்பட்டுள்ளது
** 14 ஆதாரம் பாரதி புதையல் 1 — பக்கம் 14-17 புதுவை ‘பாரதி அன்பன்’ 23-10-1946 இதழ்

@14 குருவிப் பாட்டு

#1
அருவி போலக் கவி பொழிய எங்கள் அன்னை பாதம் பணிவேனே
குருவிப்பாட்டை யான் பாடி அந்தக் கோதை பாதம் அணிவேனே
** கேள்வி

#2
சின்னஞ்சிறு குருவி நீ செய்கிற வேலை என்ன
வன்னக் குருவி நீ வாழும் முறை கூறாய்
** குருவியின் விடை

#3
கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை
மீளா அடிமை இல்லை எல்லோரும் வேந்தர் எனத் திரிவோம்

#4
உணவுக்குக் கவலை இல்லை எங்கும் உணவு கிடைக்குமடா
பணமும் காசும் இல்லை எங்குப் பார்க்கினும் உணவேயடா

#5
சிறியதோர் வயிற்றினுக்காய் நாங்கள் ஜன்மம் எல்லாம் வீணாய்
மறிகள் இருப்பது போல் பிறர் வசம்தனில் உழல்வது இல்லை

#6
காற்றும் ஒளியும் மிகு ஆகாயமே எங்களுக்கு
ஏற்றதொரு வீடு இதற்கு எல்லை ஒன்று இல்லையடா

#7
வையகம் எங்கும் உளது உயர்வான பொருள் எல்லாம்
ஐயம் இன்று எங்கள் பொருள் இவை எம் ஆகாரம் ஆகுமடா

#8
ஏழைகள் யாரும் இல்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை
வாழ்வுகள் தாழ்வும் இல்லை என்றும் மாண்புடன் வாழ்வமடா

#9
கள்ளம் கபடம் இல்லை வெறும் கர்வங்கள் சிறுமை இல்லை
எள்ளற்குரிய குணம் இவை யாவும் உம் குலத்திலடா

#10
களவுகள் கொலைகள் இல்லை பெரும் காமுகர் சிறுமை இல்லை
இளைத்தவர்க்கே வலியர் துன்பம் இழைத்துமே கொல்லவில்லை

#11
சின்னஞ்சிறு குடிலிலே மிகச் சீரழி வீடுகளில்
இன்னலில் வாழ்ந்திடுவீர் இது எங்களுக்கு இல்லையடா

#12
பூ நிறை தருக்களிலும் மிகப் பொலிவுடைச் சோலையிலும்
தேன் நிறை மலர்களிலும் நாங்கள் திரிந்து விளையாடுவோம்

#13
குளத்திலும் ஏரியிலும் சிறு குன்றிலும் மலையினிலும்
புலத்திலும் வீட்டினிலும் எப் பொழுதும் விளையாடுவோம்

#14
கட்டுகள் ஒன்றும் இல்லை பொய்க் கறைகளும் ஒன்றும் இல்லை
திட்டுகள் தீதங்கள் முதல் சிறுமைகள் ஒன்றும் இல்லை

#15
குடும்பக் கவலை இல்லை சிறு கும்பித் துயரும் இல்லை
இடும்பைகள் ஒன்றும் இல்லை எங்கட்கு இன்பமே என்றுமடா

#16
துன்பம் என்று இல்லையடா ஒரு துயரமும் இல்லையடா
இன்பமே எம் வாழ்க்கை இதற்கு ஏற்றம் ஒன்று இல்லையடா

#17
காலையில் எழுந்திடுவோம் பெரும் கடவுளைப் பாடிடுவோம்
மாலையும் தொழுதிடுவோம் நாங்கள் மகிழ்ச்சியில் ஆடிடுவோம்

#18
தானே தளைப்பட்டு மிகச் சஞ்சலப்படும் மனிதா
நான் ஓர் வார்த்தை சொல்வேன் நீ மெய்ஞ்ஞானத்தைக் கைக்கொள்ளடா

#19
விடுதலையைப் பெறடா நீ விண்ணவர் நிலை பெறடா
கெடுதலை ஒன்றும் இல்லை உன் கீழ்மைகள் உதறிடடா

#20
இன்பநிலை பெறடா உன் இன்னல்கள் ஒழிந்ததடா
துன்பம் இனி இல்லை பெருஞ்சோதி துணையடா

#21
அன்பினைக் கைக்கொள்ளடா இதை அவனிக்கு இங்கு ஓதிடடா
துன்பம் இனி இல்லை உன் துயரங்கள் ஒழிந்ததடா

#22
சத்தியம் கைக்கொள்ளடா இனிச் சஞ்சலம் இல்லையடா
மித்தைகள் தள்ளிடடா வெறும் வேஷங்கள் தள்ளிடடா

#23
தர்மத்தைக் கைக்கொள்ளடா இனிச் சங்கடம் இல்லையடா
கர்மங்கள் ஒன்றும் இல்லை இதில் உன் கருத்தினை நாட்டிடடா

#24
அச்சத்தை விட்டிடடா நல் ஆண்மையைக் கைக்கொள்ளடா
இச் சகத்து இனிமேலே நீ என்றும் இன்பமே பெறுவையடா
**சிறப்புக் குறிப்பு 14 குருவிப் பாட்டு இது மகாகவி பாரதியார் பாடல்
**அல்லவென்றும் ‘லோகோபகாரி’யில் பரலி ஸ்ரீ சு நெல்லையப்பர் பெயரால்
**வெளிவந்த பாடல் என்றும் திரு பெ தூரன் கூறுகிறார்
**மற்றும் பரலி சுநெல்லையப்பர் எழுதிய நெல்லைத் தென்றல் என்ற கவிதை
**நூலிலும் இப்பாடல் உள்ளது
** (பாரதி ஆய்வாளர் திரு ராஅபத்மநாபன் “பாரதி புதையல்” எனும் நூலில்
** வெளியிட்டிருக்கிற கட்டுரையின்
**முன்னுரைக் குறிப்பில் அவர் இந்தப் பாடல் குறித்த சில செய்திகளையும்
** சொல்லியிருக்கிறார் அவர் கூறுவது:
** இந்தப் பாட்டு புதுச்சேரியில் சரஸ்வதி விலாச சபை என்ற இளைஞர் சங்கத்தில்
** 1909இல் பாரதியார் பாடியது

@15 தனிமை இரக்கம்
** முதற் பாடல்

#1
குயிலனாய் நின்னொடு குலவி இன் கலவி
பயில்வதில் கழித்த பல் நாள் நினைந்து பின்
இன்று எனக்கிடையே எண்ணில் யோசனைப்படும்
குன்றமும் வனமும் கொழு திரைப் புனலும்
மேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால்
பாவி என் நெஞ்சம் பகீரெனல் அரிதோ
கலங்கரைவிளக்கு ஒரு காவதம் கோடியா
மலங்கும் ஓர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள் முன்னர் யான் அவளுடன்
உடம்பொடும் உயிர் என உற்று வாழ் நாட்களில்
வளி எனப் பறந்த நீர் மற்று யான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரி எனக் கிடக்கும்
செயலை என் இயம்புவல் சிவனே
மயலை இற்று என்று எவர் வகுப்பர் அங்கு அவட்கே
**17 ஆதாரம் சித்திர பாரதி
**மதுரை ‘விவேகபாநு’ ஜூலை இதழ் 1904-ம் வருடம்

@16 யான்

#1
ஆயிரம் கோடி அறிஞர்கள் பற்பல
ஆயிர யுகங்கள் ஆராய்ந்து அறிகிலா
யான் உடை இயற்கை யானோ அறிவன்
மீன் உணர்ந்திடும்-கொல் வியன் கடல் பெருமை
அருள் வழிக் காண்க என்று அருளினர் பெரியோர்
மருள் வழி அல்லால் மற்றொன்று உணர்கிலேன்
அகிலமும் யான் என ஆன்றோர் இசைப்பர்
மகிதலத்து இருளின் மண்டிய மனத்தேன்
யான் அதை ஒரோவழிக் கண்டுளேன் அதனினும்
மானத ஒளியது மங்கும் ஓர் கணத்தே
யான் எனும் பொருள்தான் என்னை-கொல் அதனை இவ்
ஊன் எனக் கொள்வர் உயிரிலார் சிலரே
பிரமமே யான் எனப் பேசுவர் பேசுக
பிரமமே யான் எனப் பேசினர் பெரியோர்
**18 ஆதாரம் பாரதி தமிழ் — பக்கம் 28 சுதேசமித்திரன் 17-9-1906 இதழ்

@17 சந்திரிகை

#1
யாணர்க் குறையுளாம் இந்துநாடதனில்
காணற்கு இனிய காட்சிகள் பலவினும்
மாணப் பெரிய வனப்பு அமைந்து இன் கவி
வாணர்க்கு அமுதா வயங்கிடும் பொருள் இது என்று
ஊணப் புலவோன் உரைத்துளன் முன் நாள்
அஃதுதான்
கருமையில் படர்ந்த வானமாம் கடலிடை
ஒருமையில் திகழும் ஒண் மதித் தீவினின்று
எல்லாத் திசையினும் எழில் பெற ஊற்றும்
சொல்லா இனிமை கொள் சோதி என்று ஓதினன்
ஓர் முறை
கடல்புற மணல் மிசைத் தனியே கண் அயர்ந்து
இடைப்படும் இரவில் இனிது கண் விழித்து யான்
வானகம் நோக்கினேன் மற்று அதன் மாண்பினை
ஊன மா நாவினில் உரைத்தலும் படுமோ
நினைவரும் தெய்வீகக் கனவிடைக் குளித்தேன் வாழி மதி
** 19 ஆதாரம் பாரதி தமிழ் பக்கம் 30 சுதேசமித்திரன் 25-9-1906 இதழ்

@18 காவடிச் சிந்து

#1
பச்சைத் திருமயில் வீரன்
அலங்காரன் கௌமாரன் ஒளிர்
பன்னிரு திண் புயப் பாரன் அடி
பணி சுப்பிரமணியர்க்கு அருள்
அணி மிக்கு உயர் தமிழைத் தரு
பக்தர்க்கு எளிய சிங்காரன் எழில்
பண்ணும் அருணாசலத் தூரன்

@19 செல்வத்துட் பிறந்தனமா

#1
செல்வத்துள் பிறந்தனமா அது பெறுவான் சிறு தொழில்கள் பயில வல்லோமா
வில் வைத்த நுதல் விழியார் கண்டு மையலுற வடிவம் மேவினேமா
பல் வித்தையிலும் சிறந்த தீம் கானப் பெரு வித்தை பயின்றிட்டேமா
கொல் வித்தை இருள் வித்தை மருள் வித்தை பயின்று மனம் குறைகின்றேமால்

#2
காவித் திருவிழி மானார்தம் மையல் கடு விஷமாம்
கூவிச் சமயர்க்கு உரைப்பன பொய் இக் குவலயத்தில்
ஆவிச் சுகம் என்று அறிந்தது எல்லாம் துன்பம் அன்றி இலை
பாவிச் சிறு உலகே உன்னை யாவன்-கொல் பண்ணியதே
**20 ஆதாரம் ப்ஹரதி அந்த் ஹிச் வொர்க்ச் — பக்கம் 6
**21 ஆதாரம் ப்ஹரதி அந்த் ஹிச் வொர்க்ச் — பக்கம் 6

@20 பெரியோரின் பெருமை கெடாது
**[இப் பாடலை திருகு அழகிரிசாமி அவர்கள் 15-9-68 கல்கி இதழில்
** ‘பாரதி புதையல்’ என வெளியிட்டு ஓர் ரசமான குறிப்பும் எழுதியிருந்தார்.
** அக் குறிப்பு வருமாறு திரிசிரபுரம் எச்ஜி ராமாநுஜலு நாயுடு
** ஆசிரியராக இருந்த ஆநந்த குணபோதினி என்ற மாதப் பத்திரிகையின்
** முதலாவது இதழில் (ஏப்ரல் 1926) கீழ்க்காணும் பாரதி பாட்டு இதே தலைப்புடனும்
** இதே அடி குறிப்புக்களுடனும் வெளியாகி இருக்கின்றது இந்தப் பாட்டு
** இதுவரையிலுமே வெளிவந்துள்ள பாரதி பாடல் தொகுதி எதிலும் இடம் பெறவில்லை
** என்பது குறிப்பிடத்தக்கது இந்தப் பாட்டின் அடியில் ஸ்ரீ பாரதி என்றே
** குறிப்பிட்டிருப்பது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரையே இதே பத்திரிகையின்
** 1926 ஆகஸ்டு இதழில் ** பிரசுரமாகியுள்ள பாரத பூமி பழம் பெரும் பூமி
** நீரதன் புதல்வர் இந் நினை வகற்றாதீர் என்ற
** பாரதி பாடல் வரிகளின் கீழேயும் ஸ்ரீ பாரதி என்றே குறிக்கப்பட்டிருக்கிறது]
** 21 (2) ஆதாரம் ‘கல்கி’ 13-4-1958
** 22 ஆதாரம் ‘கல்கி’ 15-9-68 இதழ்

#1
கண்ணிலான் காலில் கவின் மணியை எற்றிவிட்டால்
மண்ணில் அதுதான் மதிப்பு அகன்றதாய்விடுமோ

#2
பொய்த்தொழிலோன் மைதிலியாம் பூவைதனைப் புன் காவல்
வைத்ததனால் அன்னை மதிப்பு இழந்துபோயினளோ

#3
ஐவர் முன்னே பாஞ்சாலி ஆடை உரிந்தார் கயவர்
மை வளர்ந்த கண்ணாளின் மாண்பு அகன்றுபோயினதோ

@21 பண்டாரப் பாட்டு

#1
வையகத்தே சடவஸ்து இல்லை மண்ணும் கல்லும் சடம் இல்லை
மெய் உரைப்பேன் பேய் மனமே மேலும் கீழும் பயம் இல்லை

#2
பையப்பையத் தேரடா படையும் விஷமும் கடவுளடா
பொய்யும் மெய்யும் சிவனடா பூமண்டலத்தே பயம் இல்லை

#3
சாவும் நோவும் சிவனடா சண்டையும் வாளும் சிவனடா
பாவியும் ஏழையும் பாம்பும் பசுவும் பண்ணும் தானமும் தெய்வமடா

#4
எங்கும் சிவனைக் காணடா ஈனப் பயத்தைத் துரத்தடா
கங்கைச் சடையா காலன் கூற்றே காமன் பகையே வாழ்க நீ

#5
பாழும் தெய்வம் பதியும் தெய்வம் பாலைவனமும் கடலும் தெய்வம்
ஏழு புவியும் தெய்வம் தெய்வம் எங்கும் தெய்வம் எதுவும் தெய்வம்

#6
வையத்தே சடம் இல்லை மண்ணும் கல்லும் தெய்வம்
மெய் உரைப்பேன் பாழ் மனமே மேலும் கீழும் பயம் இல்லை
**23 ஆதாரம் பாரதி நூல்கள் — வசனம் கதைக் கொத்து பக்கம் 171

@22 வேலெனவென் விழி

#1
இடியேறு சார்பிலுற உடல் வெந்தோன் ஒன்று உரையாது இருப்ப ஆலி
முடி ஏறி மோதியது என்று அருள் முகிலைக் கடுஞ்சொற்கள் மொழிவான் போலக்
கடி ஏறு மலர்ப் பந்து மோதியது என்று இனியாளைக் காய்கின்றானால்
வடி ஏறு வேல் என வெவ் விழி ஏறி என் ஆவி வருந்தல் காணான்

@23 ஆனந்த மையா
**ஆசுகவி – வெண்பா

#1
உலகைத் துறந்தீர் உருவைத் துறந்தீர்
மலையைப் பிளந்துவிட வல்லீர் இலகு புகழ்
ஞானம் தவம் கல்வி நான்கும் துறக்கலீர்
ஆனந்தம் ஐயா ஹரீ
**24 ஆதாரம் ‘ஞானரதம்’ — பக்கம் 24
**25 ஆதாரம் நவதந்திரக் கதைகள் — பக்கம் 42

@24 பாரதியார் திருப்புகழும் தேவாரமும்
** [பாரதியார் எழுதிய கீழ்க்கண்ட நான்கு பாடல்களை அம்பாசமுத்திரம் திரு
** அ ரா கிருஷ்ணன் என்பார் திரு ராஅ பத்மநாபன் அவர்களிடம் மனமுவந்து அளிக்க
** அவற்றை அவர் தமது பாரதி புதையல் 2 நூலில் வெளியிட்டார் இந்நாள்வரை வெளிவந்த
** பாரதியார் கவிதைகள் நூலில் இப் பாடல்கள் இடம்பெறவில்லை
** இப் பாடல்களுக்குத் தலைப்புகள் கிடைக்கப் பெறாத காரணத்தால் முதல் மூன்று
** பாடல்கள் திருப்புகழ் நடையிலும் நான்காம் பாடல் தேவாரநடையிலும் இருப்பதை
** யொட்டி பாரதி திருப்புகழ் என்றும் பாரதி தேவாரம் என்றும் திரு கிருஷ்ணன்
** சூட்டியுள்ள தலைப்புகளே இங்கும் உபயோகிக்கப்பட்டுள்ளன என்று
** திரு ராஅ பத்மநாபன் ஒரு சிறு விளக்குக் குறிப்பும் தந்துள்ளமை
** கவனிக்கத்தக்கது-பதிப்பாசிரியர்கள்]
**பாரதி திருப்புகழ்

#1
தோதகம் எத்தெனை அத்தனை கற்றவர் சூதரம் ஒத்தவர் கொக்கு நிகர்ப்பவர்
சூது பெருத்தவர் உக்ர மனத்தவர் சதியோடே
பாதகம் நித்தமும் மெத்த இழைப்பவர் பாரகம் முற்றவும் நத்து சினத்தவர்
பாவம் இயற்றிடும் அத் துறை மிக்கவர் விரகாலே
வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி
மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும்
ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட
யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே

#2
மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர்
மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே
அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி
அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ எனக் கை தலை மோதி
விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ
புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா
புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே
** 26 ஆதாரம் பாரதி புதையல் 2 — பக்கம் 127-130
**கண்ணன்மீது திருப்புகழ்

#6
செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள்
சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி
சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நலச் சுதந்திர வழி தெரி கரிசு அகல்
திருத் தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே
வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல
மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர்
மதர்த்து எழுந்த இன் புளகித இளமுலை மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில்
வசப்படும்படி சிலர்களை மயல்புரி அதிநீசர்
மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல்
வனக் குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே
வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகைப் பெரும் கலை நெறி அறம் அழிபடா
மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே
அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர
அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா
அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர்
அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே
**பாரதி தேவாரம்

#14
அதி ஆசை விஞ்சி நெறி ஏதும் இன்றி அவமான வஞ்சம் மிகவே
துதி மேவும் எங்கள் பழநாடு கொண்டு தொலையாத வண்மை அறம் நீள்
சதியே புரிந்த படு நீசர் நைந்து தனி ஓட நன்கு வருவாய்
நதி ஏறு கொன்றை முடி மீதில் இந்து நகையாடும் செம்பொன் மணியே

@25 கடல்
**[ஸ்ரீ மான் அரவிந்த கோஷ் கடலுக்கு என்ற தலைப்பின்கீழ் ஆங்கில
**பாஷையில் சில கண்ணிகள் புனைந்து அவற்றை மாடர்ன் ரெவியூ (நவீன பரிசோதகம்) என்ற
**கல்கத்தா மாதப் பத்திரிகையில் பிரசுரம் செய்திருக்கிறார் மொழிபெயர்ப்பைக் கீழே தருகிறேன்
** கண்ணிகள்

#1
வெள்ளைத் திரையாய் வெருவுதரு தோற்றமதாய்
கொள்ளை ஒலிக் கடலே நல் அறம் நீ கூறுதி காண்

#2
விரிந்த பெரும் புறங்கள் மேல் எறிந்து உன் பேய் அலைகளை
பொருந்தும் இடையே புதைத்த பிளவுகள்தாம்

#3
பாதலம் போல் ஆழ்ந்திருப்பப் பார்க்க அரிதாய் அவற்றினை
மீது அலம்பிநிற்கும் ஒரு வெள்ளைச் சிறு தோணி
**கடல் போதனை முழங்குதல்

#4
ஏனடா நீ கரையில் ஏக்குற்று நிற்கின்றாய்
வானளாவு என் திரைகள் வாளாதான் காண்பானாய்

#5
புன் படகு காணாய் புடைக்கும் என்றன் வார் திரை மேல்
துன்பம் இலாதே மிதந்து துள்ளி விளையாடுவதே

#6
அல்லாது இது வீழ்ந்து அழிந்தாலும் என்னே காண்
பல்லாயிரம் இது போல் பார் மிசை வேறு உள்ளனவே

#7
சூழும் எனது அதிர்ச்சிக்கு அஞ்சேல் துணிக நீ
ஏழைக் கரையில் இருப்பது எளிமையடா

#8
வாராய் இடுக்கணினும் மாறி அதை எற்றலினும்
பாராய் நல் இன்பப் பரவசம் உண்டு என்பதையே
**மனிதன் மறுமொழி

#9
என்று முழங்கி அழைக்கும் இரும் கடலே
நன்று நீ சொல்லினை காண் நான் வருவேன் இக்கணமே

#10
நின்னில் வலியேன் நினது திரை வென்றிடுவேன்
முன்னி அவற்றின் முடி ஏறி மேல் எழுங்கால்

#11
வானகத்தோடு ஆடல்செய வாய்க்கும் காண் மூழ்குறினும்
யான் அகத்தே பேரொலிக் கீழ் உள்ளது அறிகுவனால்
**அபாயங்கள் ஈசனால் நன்மையின் பொருட்டுத் தரப்பட்டவை

#12
அபாயம் இலாது இக்கரையில் ஆர்ந்திருப்போர் ஈசனும்
உபாயம் அறியாத ஊமன் அன்றோ ஓர்ந்திடுங்கால்

#13
ஆழ உயிர் மானுடனுக்கு ஐயன் அருளிப் பின்
வாழி சிவத்தன்மை அதற்கு இலக்கா வைத்தனனே

#14
ஆதலால் கோடி அபாயம் இடையூறு எல்லாம்
மோது கடல்களைப் போல் முன்னர் இட்டான் அவ் உயிர்க்கே

#15
துன்பம் அருள்செய்தான் தோல்விதனை அளித்தான்
மன்பதையின் கால் சூழ வைத்தான் வலைத் திரளே

#16
நெற்றி மேல் மேகத்து மின் அடிகள் நேர்வித்தான்
எற்றி எமை வீழ்த்தப் பெரும் காற்று இயற்றினனே

#17
இங்கு மனிதன் வரும் இன்னல் எலாம் மாற்றி எதிரே
பொங்கும் இடுக்கண் எலாம் போழ்ந்து வெற்றிகொள்க எனவே

#18
விதிதான் எதிர்த்துவர வெல்லொணாத் தன் உயிரை
மதியாது அதில் தாக்கி மைந்தன் விஜயம் பெறவே

#19
**முடிவுரை

#20
ஏற்றிடுவாய் என்னை இரும் கடலே நின் மீது
தோற்றிடாது ஏறிப் போய் வானுலகு துய்ப்பேன் யான்

#21
வாரிதியாம் கோளரியே வந்து உன் பிடர் பிடித்துப்
பார் உன்னை என்னில் வசப்படுத்தும் பண்பினையே

#22
அல்லது நும்மால் அகழ்ப் பாதலங்களினும்
பொல்லாக் குகையினும் யான் போய் வீழ்ந்துவிட்டாலும்

#23
அங்கிருந்து உன் பாரம் அனைத்தும் பொறுத்துவித்து
மங்கி அழியும் வகை தேட வல்லேன் காண்

#24
தளை அறியா வார் கடலே நின்னோடு சாடி
அளவு அறிவேன் என்றன் பெரிய உயிர் ஆற்றலுக்கே
**27 ஆதாரம் பாரதி புதையல் 3 பக்கம் 1-4
**புதுவை ‘இந்தியா’ இதழ் 12-6-1909

@26 இந்தியாவின் அழைப்பு
**[இஃது யுனைடெட் ஸ்டேட்ஸ் மிஷிகன் மாகாணம் தெத்ருவா நகரத்திலுள்ள
** ஸ்ரீம மாட் (த்) ரால்ஸ்டன் ஷர்மன்
**என்ற ஸ்திரீ எழுதிய இங்கிலீஷ் கவிதையினின்றும் மொழிபெயர்த்தது]
**வேண்டுகோள்

#1
அன்பிற்கினிய இந்தியா அகில
மதங்கள் நாடுகள் மாந்தருக்கு எல்லாம்
தாயே எங்கள் உணர்வினைத் தூண்டிய
சேய் நெடுங்காலத்தின் முன்னே சிறந்து ஒளிர்
குருக்களை அளித்துக் குவலயம் காத்தனை 5
திருக் கிளர் தெய்வப் பிறப்பினர் பலரை
உலகினுக்கு அளித்தாய் உனது ஒளி ஞானம்
இலகிட நீ இங்கு எழுந்தருளுகவே
விடுதலை பெற நாம் வேண்டி நின் மறைவு
படு மணி முகத்தைத் திறந்து எம் பார்வை முன் 10
வருக நீ இங்கு உள மானுடச் சாதிகள்
பொருகளம் தவிர்ந்து அமைவுற்றிடப் புரிக நீ
மற்றவர் பகைமையை அன்பினால் வாட்டுக
செற்றவர் படைகளை மனையிடம் திருப்புக
தாயே நின்றன் பண்டைத் தநயராம் 15
மாயக் கண்ணன் புத்தன் வலிய சீர்
இராமனும் ஆங்கு ஒரு மஹமதும் இனையுற்ற
விராவு புகழ் வீரரை வேண்டுதும் இந்நாள்
தோன்றினேன் என்று சொல்லி வந்து அருளும்
சான்றோன் ஒரு முனி தருக நீ எமக்கே 20
மோசே கிறிஸ்து நானக் முதலியோர்
மாசற வணங்கி மக்கள் போற்றிடத்
தவித்திடும் திறத்தினர்தமைப் போல் இன்று ஒரு
பவித்திர மகனைப் பயந்து அருள்புரிக நீ
எம் முன் வந்து நீதியின் இயலைச் 25
செம்மையுற விளக்கும் ஒரு சேவகனை அருளுக நீ
**உத்தரம்
கேள் விடை கூறினள் மாதா நம்மிடை
யாவனே இங்கு தோன்றினன் இவன் யார்
உலகப் புரட்டர் தந்திர உரை எலாம்
விலகத் தாய் சொல் விதியினைக் காட்டுவான் 30
மலிவு செய்யாமை மனப் பகையின்மை
நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை
தீச்செயல் செய்யும் அரசினைச் சேராமை
ஆச்சரியப்பட உரைத்தனன் அவை எலாம்
வருக காந்தி ஆசியா வாழ்கவே 35
தரும விதிதான் தழைத்திட உழைப்பாய்
ஆன்மாஅதனால் ஜீவனை ஆண்டு
மேல் நெறிப்படுத்தும் விதத்தினை அருளினாய்
பாரதநாட்டின் பழம் பெரும் கடவுளர்
வீர வாள் கொடியை விரித்து நீ நிறுத்தினாய் 40
மானுடர்தம்மை வருத்திடும் தடைகள்
ஆனவை உருகி அழிந்திடும் வண்ணம்
உளத்தினை நீ கனலுறுத்துவாய் எங்கள்
காந்தி மஹாத்மா நின்பால் கண்டனம்
மாந்தருள் காண நாம் விரும்பிய மனிதனை 45
நின் வாய்ச் சொல்லில் நீதி சேர் அன்னை
தன் வாய்ச் சொல்லினைக் கேட்கின்றனம் யாம்
தொழும் தாய் அழைப்பிற்கு இணங்கி வந்தோம் யாம்
எழுந்தோம் காந்திக்கு ஈந்தோம் எமது உயிர்
இங்கு அவன் ஆவிக் கொள்கை வென்றிடவே 50
அன்றைக்கு உணவுதான் அகப்படுமாயின்
நன்று அதில் மகிழ்வோம் விடுதலை நாடி
எய்திடும் செல்வ எழுச்சியில் களிப்போம்
மெய் திகழ் ஒற்றுமை மேவுவோம் உளத்தே
கட்டின்றி வாழ்வோம் புறத் தளைக் கட்டினை 55
எள்துணை மதியாது ஏறுவோம் பழம் போர்க்
கொலைத் தொழில் கருவிகள் கொள்ளாது என்றும்
நிலைத்தன ஆகிய நீதிக் கருவியும்
அறிவும் கொண்டே அரும் போர் புரிவோம்
வறிய புன் சிறைகளில் வாடினும் உடலை 60
மடிய விதிப்பினும் மீட்டு நாம் வாழ்வோம் என்று
இடியுறக் கூறி வெற்றி ஏறி
ஒடிபடத் தளைகள் ஓங்குதும் யாமே
** 28 ஆதாரம் பாரதி தமிழ் — பக்கம் 467-468 சுதேசமித்திரன் 19-7-1921 இதழ்

@27 போர்க்கோலம் பூணுவீரே
**[‘லா மார்ஸெலேஸ்’ என்னும் பிரெஞ்சு தேசிய கீதத்தைத்
**தமிழ்ப்படுத்தி பள்ளி நாடகத்தில் பாடுவதற்காகப் பள்ளி
**மாணவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட பாடல் இது]

#1
அன்னை நல் நாட்டின் மக்காள் ஏகுவம்
மன்னு புகழ் நாள் இதுவே
நம் மேல் கொடுங்கோல் செலுத்துவோர்
நாட்டினார் உதிரக் கொடிதனை
கேட்டீர்களா கிராமங்களில் 5
வீரிடும் அரக்கப் படைகள்
அணுகி நம் மடிகளிலேயே
நம் மக்கள் பெண்டிரைக் கொல்லத் துணிவார்
போர்க்கோலம் பூணுவீர் வகுப்பீர் அணிகளை
செல்வோம் செல்வோம் 10
நாம் போம் பாதையில்
பாய்ச்சுவோம் அவர் இரத்தத்தை
**29 ஆதாரம் பாரதி புதையல் ஈ — பக்கம் 20

@28 சுதந்திரம்

#1
தாதையர் குருதியின் சாய்ந்து நாம் மடினும்
பின் வழி மக்கள் பேணுமாறு அளிக்கும்
சுதந்திரம் பெரும் போர் ஓர்கால் தொடங்குமேல்
பலமுறை தோற்கும் பான்மைத்து ஆயினும்
இறுதியில் வெற்றியொடு இலகுதல் திண்ணம்
**30 ஆதாரம் தாமரை 1979 செப்டம்பர் இதழ்
**இந்தியா 21-11-1908

@29 பெற்ற தாயும்

#1
பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும்
நல் தவ வானிலும் நனி சிறந்தனவே
** பாரதியார் பாடல் நூல்களில் பழைய பதிப்புகளிலெல்லாம் இந்த ஈரடிப் பாட்டு
** வெளியிடுவது வழக்கம்
*