வீ – முதல் சொற்கள்

வீ

1. (வி) 1. இற, die
2. அழி, இல்லாமற்போ, perish, cease to be
3. மாறு, பிறழ், change; deviate, as from one’s course
4. நீங்கு, leave, depart
5. மலர், blossom
– 2. (பெ) 1. பூ, flower
2. பூந்துகள், மகரந்தம், pollen

1.1

வறம் கொல வீந்த கானத்து குறும் பூ – நற் 238/1

கோடை வாட்டுவதால் பட்டுப்போன காட்டில், சிறிதளவு பூவேயுள்ள
– கோடைக் காலத்தே வேனில்வெம்மை மிக்குவெதுப்புதலால் புற்பூடுகளும் செடி, கொடிகளும் பசுமையறப்
புலர்ந்து கரிந்து கெடுதலால் கானம் வறம் கொல வீந்த கானம் எனப்படுவதாயிற்று -ஔவை.சு.து.விளக்கம்.

பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள் – குறு 165/4
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/6-8

அறியாமை மிகுதியால் பகைகொண்டு மேலேறி வந்த
வேந்தர்கள் தம் உடம்பை விட்டு மேலுலகத்துக்குச் சென்று வாழும்படி
இறந்து விழும் போர்க்களத்தில் ஆடுகின்ற அரசன்

1.2

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய் புரி பழம் கயிறு போல
வீவது-கொல் என் வருந்திய உடம்பே – நற் 284/9-11

ஒளிவிடும் ஏந்திய கொம்புகளைக் கொண்ட யானைகள் தமக்குள் மாறுபட்டு பற்றி இழுத்த
தேய்ந்த புரிகளைக் கொண்ட பழைய கயிற்றினைப் போல
இற்றுப்போவதோ? என் வருந்திய உடம்பு.

வான் பூ கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை
தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு – குறு 149/3,4

வெள்ளைப் பூவைக்கொண்ட கரும்பினையுடைய உயர்ந்த மணலாகிய சிறு கரை
இனிய நீர் பெருகி நெருக்க கரைந்து விழுந்ததைப் போல்

பொறை ஆற்றா நுசுப்பினால் பூ வீந்த கொடி போன்றாள் – கலி 132/18

பாரத்தைத் தாங்கமாட்டாத இடுப்பை உடையதால், பூக்கள் உதிர்ந்த கொடியைப் போன்றவள்

1.3

தூ துளி பொழிந்த பொய்யா வானின்
வீயாது சுரக்கும் அவன் நாள்_மகிழ் இருக்கையும் – மலை 75,76

தூய்மையான துளிகளை மிகுதியாகப் பெய்கின்ற பருவம் தவறாத வானத்தைப் போன்று,
பிறழாமற் கொடுக்கும் அவனது நாளோலக்கத்தையும் (முற்பகல் நேர அரசு வீற்றிருப்பு)

1.4

வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை
ஈர் எழு வேளிர் – அகம் 135/11,12

நீங்காத சிறந்த புகழினையும் வானை அளாவிய பெரிய குடையினையுமுடைய
பதினான்கு வேளிர்
– நாட்டார் உரை

1.5

புது நீர புதல் ஒற்ற புணர் திரை பிதிர் மல்க
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி – கலி 72/5,6

புது நீர் வரும் வழியிலுள்ள சிறு புதர்களின் மீது அலைகள் மோதுவதால் நீர்த்துவலை மிகுவதால்
அதனைத் திங்கள் என்று எண்ணி மலர்ந்த அல்லியின் வெண்மையான மலரின் அருகில்

2.1

நகு முல்லை உகு தேறு வீ
பொன் கொன்றை மணி காயா – பொரு 200,201

மலர்ந்து சிரிக்கின்ற முல்லையினையும், சிந்துகின்ற தேற்றா மலரினையும்,
பொன்னிறம் போன்ற நிறமுடைய கொன்றை மலரினையும், மணி போன்ற காயா மலரினையும் உடைய,

2.2

நல் நாள் பூத்த நாகு இள வேங்கை
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை – அகம் 85/10,11

நல்ல நாள்காலையில் பூத்த மிக இளைய வேங்கை மரத்தின்
நறிய பூக்களின் துகளை அளைந்த பொறிகளுடன்கூடிய வரிகளையுடைய மயில்

மேல்


வீங்கு

(வி) 1. பெரிதாகு, பரு, increase in size, become enlarged
2. பொங்கு, swell
3. பூரிப்படை, build up, expand
4. ஏக்கம்கொள், பெருமூச்சுவிடு, have morbid desires
5. இறுகு, விறைப்பாகு, become tight
6. மிகு, be copious or excessive; to increase

1

ஞாலம் வறம் தீர பெய்ய குணக்கு ஏர்பு
காலத்தில் தோன்றிய கொண்மூ போல் எம் முலை
பாலொடு வீங்க தவ நெடிது ஆயினை – கலி 82/1-3

“உலகத்தின் வறட்சி நீங்கும்படியாக மழை பெய்வதற்காக, கிழக்குத்திசையில் ஏறி
சரியான பருவத்தில் தோன்றிய கார்மேகத்தைப் போல, என்னுடைய முலைகள்
பாலால் பெருத்து வீங்க, மிகவும் காலம் தாழ்த்திவிட்டாய்,

2

பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர – கலி 134/6

பெரிய கடலில் ஓதநீர் பொங்கி எழுந்து கரையினைச் சேர,

3.

கூடி அவர் திறம் பாட என் தோழிக்கு
வாடிய மென் தோளும் வீங்கின
ஆடு அமை வெற்பன் அளித்த_கால் போன்றே – கலி 43/28-31

நானும் அவளும் சேர்ந்து அவரின் சிறப்புகளைப் பற்றிப்பாட, என் தோழிக்கு
வாடிப்போயிருந்த மென்மையான தோள்களும் பூரிப்படைந்தன,
அசைகின்ற மூங்கிலையுடைய மலை நாட்டினன் நேரில் வந்து அன்பு காட்டியது போன்று!”

4.

யானும் தாயும் மடுப்ப தேனொடு
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி
நெருநலும் அனையள்-மன்னே – நற் 179/5-7

நானும் தாயும் ஊட்டிவிட தேன்கலந்த
இனிய பாலை அருந்தாமல், ஏக்கங்கொண்டு விம்மி
நேற்றைக்குக்கூட அவ்வாறே இருந்தாள்;
– வீங்குவனள் – வெய்துயிர்த்து – ஔவை.சு.து.உரை

5.

நீயே வினை மாண் காழகம் வீங்க கட்டி
புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே – கலி 7/9,10

நீயோ, சிறப்பாகச் செய்யப்பட்ட கையுறையை இறுகக் கட்டி,
பூவும் சாந்தும் பூசிச் சிறந்த அம்புகளை ஆராய்ந்து தெரிகின்றாய்;

விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் – அகம் 89/10

கொழுப்பினையுடைய ஊனைத்தின்ற விசைகொண்ட சிலையினராய மறவர்கள்
– வீங்கு – விறைப்பு – தமிழ்ப்பேரகராதி – விசைகொள்ளுதல் – விறைப்பாக இருத்தல் – இறுகக் கட்டப்பெறுதல்

6.

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடு 161

விண்ணில் ஊர்ந்து திரிதலைச்செய்யும் மிகுந்த ஓட்டத்தையுடைய ஞாயிற்றோடு

மேல்


வீசு

(வி) 1. காற்று அடி, blow as wind
2. கொடு, வாரி வழங்கு, give, give liberally
3. விசிறு, fan
4. ஒளி, மணம் போன்றவை பரவு, spread, be diffused or emitted, as fragrance, rays, etc.
5. விசையுடன் எறி, throw, fling, as a weapon; to cast, as a net
6. சிந்து, spill, splash
7. கையை முன்னும் பின்னும் ஆட்டு, swing hand

1

அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின் – குறி 48

அகன்ற கரிய ஆகாயத்திடத்தில் அடிக்கின்ற காற்று ஒன்றுசேர்வதினால்

2

பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டி துவன்று இருக்கை – பட் 211,212

பல சரக்குகளையும் விலைசொல்லிக் கொடுக்கும்,
பழந்தொழிலால் வரும் உணவினைக் கொள்ளும், நெருங்கின குடியிருப்புகள்

தேம் பாய் கண்ணி தேர் வீசு கவி கை – மலை 399

தேன் சொரிகின்ற தலையிற் சூடும் மாலையினையும், தேர்களை (அள்ளி)வீசும் கவிந்த கையினையும் உடைய

3.

வேந்து வீசு கவரியின் பூ புதல் அணிய – நற் 241/6

அரசனுக்கு விசிறும் கவரி விசிறியைப் போல பூக்கள் புதர்களை அழகுசெய்ய

4.

விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான் – கலி 145/40

தன் கதிர்களை விரித்து ஒளிவிடும் வெண்ணிலா ஒளிவீசும் மாலைப் பொழுதில்

5.

மாலை வெண் காழ் காவலர் வீச
நறும் பூ புறவின் ஒடுங்கு முயல் இரியும் – ஐங் 421/1,2

மாலை நேரத்தில் வெண்மையான வயிரம்பாய்ந்த குறுந்தடியைப் புனங்காவலர் ஓங்கி எறிய,
நறுமணமுள்ள பூக்களைக் கொண்ட முல்லைக்காட்டினில் பதுங்கியிருக்கும் முயல்கள் வெருண்டோடும்

6.

வறந்து என்னை செய்தியோ வானம் சிறந்த என்
கண்ணீர் கடலால் கனை துளி வீசாயோ
கொண்மூ குழீஇ முகந்து – கலி 145/20-22

மழை பெய்யாமல் வறண்டு என்ன காரியம் செய்கிறாய் வானமே? பெருகிக்கிடக்கும் என்
கண்ணீர்க் கடலைக் கொண்டு பெருத்த மழையைப் பெய்யப்பண்ண மாட்டாயோ –
கூட்டமான மேகங்களால் முகந்துகொண்டு?

7.

அவிழ் இணர்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர
செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில் – நற் 20/2-5

மலர்ந்த கொத்துக்களையுடைய
தேன் ஒழுகும் மராமரத்தின் பூக்கள் மணக்கும் கூந்தலானது
வலமிடமாய் அசைய, கட்டியிருந்த ஆடை முன்னும் பின்னும் ஆட,
செறிவான வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசி

நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடி கை வீசினை – கலி 58/5

செம்மையான சிலம்பின் உள்ளே உள்ள பரல்கள் ஆரவாரிக்க, வரிசையாய் வளையல்களை அடுக்கிய
கையை வீசிக்கொண்டு

மேல்


வீட்டு

(வி) போக்கு, நீக்கு, remove

சுர முதல் வருத்தம் மர முதல் வீட்டி
பாடு இன் தெண் கிணை கறங்க – அகம் 301/9,10

சுரத்திடத்தே வந்த வெம்மையாலாய வருத்தத்தை மரத்தடியில் தங்கிப் போக்கி
இனிய ஒலியினையுடைய தெள்ளிய கிணைப்பறை ஒலிக்க

மேல்


வீடு

1. (வி) ஒழி, இல்லாமற்போ, cease
– 2. (பெ) 1. நெகிழ்தல், ஒதுங்குதல், sliping off
2. விடுதலை, liberation
3. விடுபட்டது, that which is left out (after removing the unwanted things)

1

விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட
தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே – கலி 40/22,23

“விண்ணைத் தொடுகின்ற மலையினில் பந்து எறிந்து விளையாடிய சோர்வு தீரும்படியாக
குளிர்ச்சியாய் விழுகின்ற அருவியில் தேவ மகளிர் ஆடுகின்றனரே!

2.1

அரவு கிளர்ந்து அன்ன விரவு_உறு பல் காழ்
வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்து_இழை அல்குல் பெரும் தோள் குறு_மகள் – நற் 366/1-3

பாம்பு படமெடுத்து உயர்ந்ததைப் போன்ற, வேறுபட்ட பலவான மணிகளைக் கோத்து
நெகிழ உடுக்கப்பட்ட நுண்ணிய ஆடை இடையிடையே வந்து பளிச்சிடும்
திருத்தமான அணிகலன் அணிந்த அல்குலையும் பெரிய தோளையும் உடைய இளையமகளின்
– வீடுறு நுண்டுகில் – இடையில் செறியச் செறுகாது நெகிழ்ந்து தொங்கவிடப்படும் முன்றானை.
– வீடுறு நுண்துகில் – நடத்தலால் ஒதுங்குதல் அமைந்த நுண்ணிய துகில் – பின்னத்தூரார்

2.2

பிணி வீடு பெறுக மன்னவன் தொழிலே – ஐங் 447/1

பிணிப்பிலிருந்து விடுதலை பெறுக, மன்னவனின் போர்த்தொழில்!

2.3

கோடை பருத்தி வீடு நிறை பெய்த – புறம் 393/12

கோடையிற் கொண்ட பருத்தியினின்று நீக்கிச் சுகிர்ந்த பஞ்சியானது நிறையத் திணித்த
– பருத்தி வீடு – பருத்தியினின்றும் எடுத்துக் கொட்டை நீக்கிச் சுகிரப்பட்ட பஞ்சு,
– பருத்தியினிறும் விடுபட்டது பருத்தி வீடாயிற்று – ஔவை.சு.து.உரை, விளக்கம்

மேல்


வீரை

(பெ) ஒரு சங்ககால நகரம், a city in sangam period
வீரை வெளியனார், வீரை வெளியன் தித்தனார் என்னும் சங்ககாலp புலவர்கள் இவ்வூரைச் சேர்ந்தவராக
இருத்தல் வேண்டும்.

வீரை வேண்மான் வெளியன் தித்தன்

முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கு – நற் 58/5,6

வீரை நகர்க்குரிய வேண்மானாகிய வெளியன் என்பானது மகன் தித்தன் என்பானது
முரசு இருக்கும் கட்டிலிடத்தே ஏற்றி வரிசையுற வைத்த விளக்குகள் போன்ற

அடு போர் வேளிர் வீரை முன்துறை
நெடுவெள் உப்பின் நிரம்பா குப்பை – அகம் 206/13,14

வெல்லும் போரினை வல்ல வேளிர்கட்கு உரிய வீரை என்னும் இடத்திலுள்ள துறையின் முன்னிடத்தே
நீண்டு கிடக்கும் வெள்ளை உப்பின் அளவிலடங்காத குவியல்

வீரை என்பது இக்காலத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் எனக் கருதலாம் எனக்கூறும் விக்கிப்பீடியா.
ஆனால் அங்கு உப்பு விளைந்தது .என்ற அகநானூற்றுக் குறிப்புப்படி இது கடற்கரை ஊர் ஆகிறது.

மேல்


வீவு

(பெ) 1. கேடு, அழிவு, ruin, destruction
2. நீக்கம், eradication, elimination

1

நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க – பெரும் 465

நாவலால் பெயர்பெற்ற அழகிய குளிர்ந்த உலகமெல்லாம் கேடில்லாமல் விளங்கும்படி,

2

ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் – குறி 2,3

செழித்து வளர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என்னுடைய தோழியின் உடம்பிலுள்ள
தனிச்சிறப்புக் கொண்ட நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய்

மேல்


வீழ்

1. (வி) 1. விழு, கீழ்நோக்கி இறங்கு, fall, fall down
2. குனி, தாழ், கீழ்நோக்கிச் சாய், bow down, lean downwards
3. விரும்பு, be desirous
4. தரைக்கடியில் வளர், grow underground
5. தோற்றுப்போ, be defeated
6. இறக்கச்செய், cause to die
7. விழச்செய், cause to fall
– 2. (பெ) 1. விழுது, aerial root
2. தாலிக்கயிறு, Cord on which the marriage-badge is strung

1.1

ஒரு கை
கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப – திரு 113,114

ஒரு கை
கீழ்நோக்கி நழுவி வீழும் தொடி என்ற அணிகலனோடு மேலே சுழல;

1.2

சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின்
வீழ் முக கேழல் அட்ட பூசல் – மது 294,295

குறவன் தோண்டின, மூடின வாயையுடைய பொய்க்குழியில்(விழுந்த)
கீழ்நோக்கிய பார்வையையுடைய ஆண்பன்றியைக் கொன்ற ஆரவாரமும்,

1.3

விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர – குறி 46

வானத்தில் அலையும் பறவைகள் தாம் விரும்பும் இருப்பிடங்களுக்குச் செல்லும்படியாக,

1.4

மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே – புறம் 109/6

மூன்றாவது, கொழுவிய கொடியையுடைய வள்ளி கிழங்குகளைக் கீழே வளர்க்கும்

புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும்
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன் சோறு தருநர் பல் வயின் நுகர – மது 533-535

புகழ்ந்து கூறுமாறு சமைத்த பெரிய இறைச்சிகள் கலந்த சோற்றையும்,
கீழே போகுமாறு வளர்ந்த கிழங்குடன், பிற பதார்த்தங்களையும்,
இனிய (கற்கண்டுச்)சோறு தரப்பெற்றோர் பலவிடங்களிலும் உண்ண
வீழ்ந்த – கீழே வளர்ந்த; நச்.உரை, உ.வே.சா விளக்கம்

விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை – மலை 128

சீரிதாகக் கீழே வளர்ந்தன கொழுவிய கொடியையுடைய கவலைகள்

1.5

வாய் வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் – அகம் 115/7,8

தப்பாத வாட்படையையுடைய
எவ்வி என்பான் வீழ்ந்த போர்க்களத்தே

1.6

நறவும் தொடு-மின் விடையும் வீழ்-மின் – புறம் 262/1

மதுவை உண்பதற்கேற்றபடி பிழியுங்கள், ஆட்டுக்கடாயையும் வெட்டுங்கள்

1.7

தன் நலம் காட்டி தகையினால் கால் தட்டி வீழ்க்கும்
தொடர் தொடராக வலந்து படர் செய்யும்
மென் தோள் தட கையின் வாங்கி தன் கண்டார்
நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை
இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ – கலி 97/17-21

தன்னுடைய அழகைக் காட்டி, அதன் தன்மையால் காலைத்தட்டிவிட்டு விழவைக்கும்
நட்புறவாகிய சங்கிலியால் கட்டுண்டு, பிறர்க்கு வருத்தத்தைச் செய்யும்
மென்மையான தோளாகிய பெரிய துதிக்கையினால் வாங்கிக்கொண்டு, தன்னைக் கண்டவரின்
நற்பண்புகளையே கவளமாக உண்ணும் சிரிப்பை முகத்திலே கொண்ட யானையை
இன்றைக்குத்தான் பார்த்தது போல ஏன் என்னிடம் பொய்சொல்கிறாய் நீ!

2.1

வீழ் இல் தாழை குழவி தீம் நீர் – பெரும் 357

விழுதில்லாத தாழையாகிய தென்னையின் இளநீரின் இனிய நீரையும்,

2.2

ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
பின் அமை நெடு வீழ் தாழ – நெடு 136,137

(முன்பு)முத்துமாலைகள் சுமந்த பருத்த முலையினையுடைய மார்பினில்
(இப்போது)முறுக்குப்பட்ட நெடிய வீழாகிய மங்கல நாண் (மட்டும்)வீழ்ந்துகிடக்க

மேல்


வீழ்க்கை

(பெ) விருப்பம், desire

இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர்
ஏதில் குறு நரி பட்டு அற்றால் காதலன்
காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம்
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்
வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான்
வீழ்க்கை பெரும் கரும்_கூத்து – கலி 65/24-29

பெரிய புலியைப் பிடிப்பதற்கு விரித்த வலையினில், ஒரு
ஒன்றிற்கும் உதவாத குள்ள நரி மாட்டிக்கொண்டதைப் போல், காதலனுடனான
சந்திப்பு கெடும்படியாகவும், நம் ஊருக்கெல்லாம்
பெரும் பேச்சாகவும் ஆகி முடிந்துபோனது, என்றைக்கும் தனக்குத்
தொழிலாகக் கொண்ட முதிய பார்ப்பானின்
காம வேட்கை என்னும் பெரிய கேலிக்கூத்து!
வீழ்க்கை – வாழ்க்கை போல் நின்றது – நச். உரை விளக்கம்
வீழ்க்கை – விரும்புதல் உடைய – மா.இரா.உரை விளக்கம்.

மேல்


வீழ்வு

(பெ) 1. கீழிறங்கி வருதல், coming down
2. விருப்பம், desire

1

அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர்
மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழ – மது 446,447

தெய்வமகளிர் கீழிறங்கிவந்ததைப் போல, பூத்தொழில் செய்த வளையலினையுடைய மகளிரின்,
மணம் கமழ்கின்ற வாசனை தெருவெங்கும் வீச,

2

ஊர் இழந்தன்று தன் வீழ்வு உறு பொருளே – அகம் 189/15

இந்த ஊரானது தனது விருப்பம் மிக்கதொரு பொருளை இழந்ததாயிற்று

மேல்


வீளை

(பெ) சீழ்க்கை, சீழ்க்கையொலி, சீட்டி, whistle, shrill sound

கணை விடு புடையூ கானம் கல்லென
மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர – குறி 160,161

அம்பை எய்து, தட்டையை அடித்து ஒலிஎழுப்பி, காடு(முழுவதும்) கல்லெனும் ஓசை பிறக்கும்படி,
(வாயை)மடித்து விடுகின்ற சீழ்க்கையராய், மிக்க ஓசையை உண்டாக்கி (அவ் வேழத்தை)எதிர்த்து நிற்க,

வீளை அம்பின் வில்லோர் பெருமகன் – நற் 265/3

சீழ்க்கை ஒலியுடன் செல்லும் அம்பைக்கொண்ட வில்லோர்களின் தலைவன்

வீளை பருந்தின் கோள் வல் சேவல் – அகம் 33/5

சீட்டி ஒலி எழுப்பும் பருந்தின் (இரையைக் குறிபார்த்துக்)கவர்வதில் திறமைமிக்க ஆண் பறவை

மேல்


வீற்றிரு

(வி) சிறப்புத்தோன்ற இரு, sit in state or majestically

திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து
மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 70,71

திருமகள் வீற்றிருந்த குற்றம் தீர்ந்த அங்காடித் தெருவினையும்,
மாடங்கள் மிகுந்திருக்கும் (ஏனைத்)தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையில் –

வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம் – நற் 84/9

வெயில் நிலைத்திருந்த வெப்பம் அலையிடும் அரிய காட்டுவழியில்

விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண் – பதி 56/1

விழா நடைபெறுகின்ற அகன்ற உள்ளிடத்தைக் கொண்ட ஊரில்

புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெம் சுரம் – அகம் 335/8

வருத்தம் குடிகொண்டுள்ள நிலம் பிளந்த வெவ்விய சுரங்களும்

மேல்


வீற்று

1. (பெ). துண்டம், piece
– 2. (பெ.அ) தனிச்சிறப்புள்ள, வீறு – தனிச்சிறப்பு, eminent, distinct

1

வெளிற்று பனம் துணியின் வீற்று_வீற்று கிடப்ப
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை – புறம் 35/22,23

இளைய பனையினது துண்டம் போல வேறுவேறு கிடப்ப
களிற்றுத் திரளைப் பொருத இடம் அகன்ற போர்க்களத்தின்கண்

2

வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும் – மலை 68

வேறெங்கும் காணமுடியாத செழிப்பு நாளும் உண்டாகும் அவனது நாடு விளைக்கும் உணவுகளையும்
– வீறு – வேறொன்றற்கில்லாத சிறப்பு – பொ.வே.சோ,உரை விளக்கம்

வில்லோர் மெய்ம்மறை வீற்று இரும் கொற்றத்து
செல்வர் செல்வ சேர்ந்தோர்க்கு அரணம் – பதி 59/9,10

வில்வீரர்களுக்குக் கவசம் போன்றவனே! வீறுபெற்று இருக்கும் பெரும் அரசாண்மையுடைய
வேந்தர்க்கெல்லாம் வேந்தனே! உன்னைச் சேர்ந்திருப்போருக்கு அரணம் போன்றவனே!
– வீற்றையுடைய கொற்றத்தை வீற்றிருங்கொற்றம் என்றார். வீறு – பிறிதொன்றிற்கில்லாத சிறப்பு
– ஔவை.சு.து.விளக்கம்

மேல்


வீறு

1. (வி) கீறு, பீறு, scratch, as with the point of an instrument, tear
– 2. (பெ) 1. தனிச்சிறப்பு, Distinctive excellence
2. வேறான தன்மை, separateness
3. பெருமை, greatness
4. பெருமிதம், majesty, stateliness, dignity
5. தோற்றப்பொலிவு, grandeur, splendour
6. வெற்றி, victory

1

சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண்
குதிரையோ வீறியது
கூர் உகிர் மாண்ட குளம்பின் அது – கலி 96/22-25

சேவகனே! ஞாயிற்றின் கதிர்கள் விரிகின்ற விடியற்காலையில் கையால் வாரப்பெற்ற
மதுரை நகரின் பெரிய முற்றத்தைப் போல, உன் உடம்பின் மீது
அந்தக் குதிரையோ பிறாண்டியது?
கூர்மையான நகத்தைக் கொண்ட குளம்பினையுடையது,

2.1

பசித்த ஒக்கல் பழங்கண் வீட
வீறு சால் நன் கலம் நல்கு-மதி பெரும – புறம் 389/14,15

பசித்த என் சுற்றத்தாருடைய துன்பம் கெட
சிறப்பமைந்த நல்ல கலன்களை நல்குவாயாக

2.2

பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி
முட்டை கொண்டு வன்_புலம் சேரும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப
சோறு உடை கையர் வீறு_வீறு இயங்கும்
இரும் கிளை சிறாஅர் காண்டும் – புறம் 173/5-9

காலம் தப்பாத மழை பெய்யும் காலத்தைப் பார்த்து
தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தினை அடையும்l
மிகச் சிறிய எறும்பினது சிலவாகிய ஒழுக்கத்தை ஒப்ப
சோறுடைக் கையினராய் வேறு வேறு போகின்ற
பெரிய சுற்றத்தாரோடும் கூடிய பிள்லைகளைக் காண்பேம்

2.3

விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர் – அகம் 227/19

மிக்க பொருள் நிலைபெற்றிருக்கும் பெருமை கொண்ட அழகிய நகராகிய

2.4

வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி
திரு நயந்து இருந்து அன்ன தேம் கமழ் விறல் வெற்ப – கலி 44/5-7

வரிகள் விளங்கும் நெற்றியையுடைய அழகிய இரு யானைகள் பூவுடன் கலந்த நீரை மேலே சொரிய
முறுக்குவிட்டு மலர்ந்த தாமரை மலரின் உள் இதழ்களில் பெருமிதத்துடன்
திருமகள் விரும்பி இருப்பதைப் போன்று தோன்றும் மலர் மணம் கமழும் சிறந்த மலைநாட்டுத் தலைவனே!

2.5

வேறு பல் உருவின் குறும் பல் கூளியர்
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 282,283

வேறு வேறாகிய பல வடிவினையுடைய குறிய பலராகிய பணியாளர்,
விழாவெடுத்த களத்தின் பொலிவுபெறத் தோன்றி,

2.6

வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறு முற்றவும் – மது 53,54

வாட்போரில் மிகுந்த வலிமை (கொண்ட)மைந்தர்கள்
(தம்)தோளால் முறையாகச் செய்யும் வெற்றி முற்றுப்பெறவும்

மேல்


வீறுவீறு

(வி.அ) தனித்தனியாக, separately

பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி
முட்டை கொண்டு வன்_புலம் சேரும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப
சோறு உடை கையர் வீறுவீறு இயங்கும்
இரும் கிளை சிறாஅர் காண்டும் – புறம் 173/5-9

காலம் தப்பாத மழை பெய்யும் காலத்தைப் பார்த்து
தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தினை அடையும்l
மிகச் சிறிய எறும்பினது சிலவாகிய ஒழுக்கத்தை ஒப்ப
சோறுடைக் கையினராய் வேறு வேறு போகின்ற
பெரிய சுற்றத்தாரோடும் கூடிய பிள்லைகளைக் காண்பேம்

ஈர செவ்வி உதவின ஆயினும்
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி
வீறுவீறு ஆயும் உழவன் போல – புறம் 289/1-3

ஈரமாகிய பருவம் உழுதற்கு உதவிசெய்தனவெனினும்
பலவாகிய எருதுகளுள்ளும் நல்ல எருதுகளையே தேர்ந்துகொள்வானாய்
வேறுவேறாக வைத்து ஆராய்ந்து தேரும் உழவனைப் போல

மேல்