தை – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின் மேல்
சொடுக்கவும்


தை
தைஇ
தைஇய
தைப்பு
தையல்
தைவரு(தல்)

தை

1. (வி) 1. குத்து, ஊடுருவு, துளைத்துச்செல், prick, pierce, penetrate
2. பூக்களைச் சேர்த்து மாலையாகக் கட்டு, tie, weave as wreath
3. அணி, அலங்கரி, wear, put on, adorn
4. மணிகளை வரிசையாகக் கோத்தல், string as beads
– 2. (பெ) 1. தமிழ் ஆண்டில் பத்தாவது மாதம், the tenth month in Tamil year
2. ஓர் இசை ஒலிக்குறிப்பு, a way of expressing sound in music

1.1.

கால மாரியின் அம்பு தைப்பினும் – புறம் 287/3

கார்காலத்து மழைத்தாரை போல் அம்புகள் வந்து உடம்பில்பட்டுத் துளைக்குமாயினும்

1.2.

தாரும் தையின தழையும் தொடுத்தன – அகம் 259/2

மாலைகளும் கட்டப்பெற்றன, தழையுடைகளும் தொடுக்கப்பட்டன

1.3.

சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள்
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள் – பரி 11/95,96

சாய்ந்து குழைந்த அசோகின் தளிரைத் தன் காதில் செருகியிருந்தவள்,
ஒளிபாயும் குழையையுடையவள் அணிந்திருந்த நீலமலர் இளவெயில் படர்ந்தது போன்று ஆகும்படி சூடிக்கொண்டாள்

1.4.

கைவல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகி – நற் 86/5,6

கைவேலைப்பாட்டில் வல்லவனான கம்மியன் மணிகளைக் கோத்துச் செய்த
சுரிதகம் என்னும் அணியைப் போன்ற உருவத்தைக்கொண்டனவாகி

2.1.

தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ – கலி 59/13

தை மாதத்தில் நீராடிய நோன்பின் பயனை அடைவாயோ?

2.2.

மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய் – கலி 118/13,14

ஏ மாலையே! ‘தை’யென்று வரும் கோவலரின் தனித்த குழலோசையைக் கேட்டுக்
குமுறுகின்ற நெஞ்சத்தினையுடைய எங்களின் பக்கம் வந்து எம்மைப் பழித்துப்பாராட்டுகிறாய்

மேல்


தைஇ

1. (வி.எ) தைத்து என்பதன் மரூஉ, பார்க்க – தை – 1. (வி)

2. (பெ) தை என்ற மாதம் – பார்க்க – தை – 2. (பெ) 1.

1.தைஇ – உடுத்தி

பை விரி அல்குல் கொய் தழை தைஇ – குறி 102

பாம்பின் படத்தைப் போல பரந்த அல்குலுக்கு நறுக்கின தழையைக் கட்டி உடுத்தி

தைஇ – (மணல்வீடு)கட்டி, செய்து, உருவாக்கி

மணல் காண்-தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே – நற் 9/8,9

மணல் கண்டவிடமெல்லாம் சிறுவீடுகட்டி (மகிழ்ந்து விளையாடி)
வருத்தமில்லாமல் செல்வாய், வெண்மையான பற்களையுடையவளே!

தைஇ – (மாலை)தொடுத்து

பூவுடன் நெறிதரு தொடலை தைஇ – நற் 138/7

பூவுடன் அலையலையாய் அமைந்த மாலையைத் தொடுத்துச் சூட்டியதை

தைஇ – அணிந்துகொண்டு

அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு பட தைஇ – நற் 245/2,3

அழகிய மலரான கழிமுள்ளியின் ஆய்ந்தெடுத்த பூக்களைக் கொண்ட மாலையை
நீலமணி போன்ற கூந்தலில் வண்டுகள் மொய்க்கும்படி அணிந்து,

தைஇ – சேர்த்துக்கொண்டு, பொருத்திக்கொண்டு

மா கழி மணி பூ கூம்ப தூ திரை
பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇ
கையற வந்த தைவரல் ஊதையொடு – குறு 55/1-3

பெரிய கழியின் நீலமணி போன்ற பூக்கள் கூம்ப, தூவுகின்ற அலைகளினின்றும்
பொங்கி வரும் சிதறல்கள் கொண்ட துவலையோடு, தாழ்ந்த முகில்களையும் சேர்த்துக்கொண்டு
செயலற்றுப்போக வந்த தடவிச்செல்லும் வாடைக்காற்றோடு

தைஇ – தடவிக்கொடுத்து

சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெரும் களிற்று செவியின் மான தைஇ
தண் வரல் வாடை தூக்கும் – குறு 76/3-5

மலைச் சரிவில் உள்ள சேம்பின் ஆடுகின்ற வளப்பமிக்க இலை
பெரிய களிற்றின் செவியை ஒக்கும்படி தடவிச்செல்லும்
குளிர்ந்த வாடைக்காற்று அசைக்கும்

தைஇ – சேர்த்துக்கட்டி

சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்
இலங்கு மணி மிடைந்த பசும்_பொன் படலத்து
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்க – பதி 39/13-15

சிலந்தி பின்னிய ஆடுகின்ற வலையைப் போல,
மின்னுகின்ற மணிகள் இடையிடையே கலந்த பசும்பொன்னாலான உட்குழிவுள்ள கூட்டின் ஓரத்தை.
ஒளிருகின்ற இழைகளால் தைத்து, மின்னலைப் போல பளிச்சிட,

தைஇ – போர்த்திக்கொண்டு

மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல்
அம் துகில் போர்வை அணி பெற தைஇ நம்
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக – கலி 65/3-5

உலகம் எல்லாம் உறங்கிவிட்ட இருட்டான நள்ளிரவில்,
அழகிய துகிலால் போர்த்திய போர்வையை அழகுபெறப் போர்த்திக்கொண்டு, நம்முடைய
இனிய வனப்புள்ள மார்பினனாகிய தலைவனின் சமிக்கையை எதிர்பார்த்து நான் நின்றிருக்க

தைஇ – பதித்து

திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆக தைஇ
பவழம் புனைந்த பருதி சுமப்ப – கலி 80/4,5

பிரகாசமான ஒளியையுடைய முத்துக்களை விளிம்பினில் அரும்பு போலப் பதித்து
பவழத்தால் செய்த சக்கரங்கள் சுமக்க,

தைஇ – சூட்டி

புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால்
வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா
ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ – கலி 114/3-5

புதிய மலர்களைச் சூட்டி, எம் சுற்றத்தார் என் பெயரைச் சொல்லி,
திருமண ஏற்பாடுகளைச் செய்வாரைக் கண்டு? ‘அறிவு கெட்ட
கோழையே’ என்று பெரிதாகச் சிரித்துவிட்டு வருவாய் நீ

2.தைஇ – தைமாதம்

தைஇ திங்கள் தண் கயம் படியும்
பெரும் தோள் குறு_மகள் – நற் 80/7,8

தைத்திங்களில் குளிர்ந்த குளத்துநீரில் நீராடும்
பெரிய தோள்களைக் கொண்ட இளையோளே

மேல்


தைஇய

(வி.எ) தைத்த – செய்யிய எனும் வாய்பாட்டு வினையெச்சம் – பார்க்க – தை – 1. (வி)
தைஇய – இட்ட

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24

திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்

தைஇய – போர்த்த

உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் – திரு 129

தோல் போர்த்த தசை கெடுகின்ற மார்பின்

தைஇய – உருவாக்கிய

வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 222

வேலன் இழைத்த வெறியாடு களத்திலும்

தைஇய – சேர்த்துத்தொடுத்த

வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை – நற் 169/8

வெண்மையான பனங்குருத்துடன் சேர்த்துத் தைத்த, மார்பில் அசைகின்ற அழகிய மாலை

தைஇய – உடுத்திய

தைஇய பூ துகில் ஐது கழல் ஒரு திரை – கலி 85/5

உடுத்தின மென்மையான துகில், மென்மையாய் விலகுகின்ற ஒரு மடிப்புடன்

தைஇய – பதிக்கப்பெற்ற

சீர் மிகு முத்தம் தைஇய
நார்முடிச்சேரல் நின் போர் நிழல் புகன்றே – பதி 39/16,17

சிறப்பு மிகுந்த முத்துக்கள் தைக்கப்பெற்ற
நார்முடிச் சேரலே! உனது போரினைப் புகலிடமாக விரும்பி –

தைஇய – தடவிய

தண் கமழ் சாந்தம் தைஇய வளியும் – பரி 21/47

ளிர்ச்சி பொருந்திய கமழ்கின்ற சந்தனத்தைத் தடவி ஏற்றுவரும் காற்றையும்

தைஇய – அலங்கரித்துக்கொண்ட

தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும்
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் – கலி 27/19,20

அழகு செய்துகொண்ட மகளிர் தம் தோழியருடன் சேர்ந்து ஆடுகின்ற,
வையையில் நீண்டுயர்ந்த மணல்மேட்டு இன்ப நுகர்ச்சியையும் அவர் நினைத்துப்பாராரோ?

மேல்


தைப்பு

(பெ) தைத்தல், stitching

தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை – பரி 21/3

நீ அணிந்துகொண்டது,
தைப்பதற்காக அமைந்த தோலினால், உன் திருவடிக்குப் பொருந்திய தாமரை மலர் போன்று செய்யப்பட்டது

மேல்


தையல்

(பெ) 1. பெண், woman
2. ஒப்பனை செய்யப்பட்டது, that which is decorated

1.

பையுள் நெஞ்சின் தையல் உவப்ப – ஐங் 489/3

மிகுந்த துன்பமுள்ள நெஞ்சத்தைக் கொண்ட பெண்மணி மகிழும்படியாக

2.

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர – பரி 11/86

ஒப்பனையையுடைய அந்தக் கன்னியர், தம் ஈர உடையை அந்தத் தீயில் உலர்த்திநிற்க,

மேல்


தைவரு(தல்)

(வி) 1. வருடு, உருவிவிடு, தேய், massage, shampoo, rub
2. தடவிக்கொடு, stroke
3. தடவிப்பார், grope
4. சுருதியேற்று, harmonise with the key-note

1.

மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்
நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடி
கல்லா இளையர் மெல்ல தைவர – சிறு 31-33

மடப்பத்தையுடைய மான்(போலும்) பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையும் (உடைய)விறலியரின்
நடையால் இளைத்து ஓய்ந்த நல்ல மெல்லிய சிறிய அடியினை
கல்வி நிரம்பாத இளைஞர் மெத்தென்று வருடிநிற்க

2.

விசும்பு தைவரு வளியும் – புறம் 2/3

ஆகாயத்தைத் தடவிவரும் காற்றும்

3.

அல்கல்
பொய் வலாளன் மெய் உற மரீஇய
வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து
அமளி தைவந்தனனே – குறு 30/1-4

நேற்று இரவில்
அந்தப் பொய்சொல்வதில் வல்ல தலைவன் என்னை மார்புறத் தழுவிய
வாய்ப்பதற்கேதுவான பொய்க்கனவு மருட்ட, நினைவு பெற்று எழுந்து
படுக்கையைத் தடவிப்பார்த்தேன்!

4.

நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் – அகம் 212/6

யாழ்வல்லோன் சுருதியேற்றும் நல்ல யாழின் செவ்வழிப்பண்ணை

மேல்