தே – முதல் சொற்கள்

தே

(பெ) தேம், தேன் ஆகியவற்றின் கடைக்குறை, இனிமை, sweet

வேய் பெயல் விளையுள் தே கள் தேறல் – மலை 171

வேய் பெயல் விளையுள் தேன் கள் தேறல்
மூங்கில் குழாய்க்குள்ளே பெய்தலையுடைய முற்றிய தேனால் செய்த கள்ளின் தெளிவை

தே கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய் – குறு 26/6

தேம் கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய்
தேமாவின் கனியை உண்ணும் முள் போன்ற கூரிய எயிற்றினையும் செவ்விய வாயினையும்

தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன் – நற் 250/3

சிறுதேர் உருட்டி விளையாடும் இனிய மொழிகளைப் பேசும் புதல்வன்

மேல்


தேஎத்த

(பெ) தேசத்தில் உள்ளவை, those which are in the country

மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே – அகம் 31/15

தமிழ் மொழியின் வேறான மொழிவழங்கும் தேசங்களில் உள்ள பல மலைகளையும் கடந்து

மேல்


தேஎத்தர்

(பெ) தேசத்தைச் சேர்ந்தவர், person belonging to a country

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவர்_உடை நாட்டே – குறு 11/7,8

மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவராயினும்
(அங்குச்)செல்வதை எண்ணினேன் அவருடைய நாட்டினிடத்துக்கு

மேல்


தேஎம்

(பெ) 1. தேசம், நாடு, land, country
2. திசை, திக்கு, direction

1

மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட – பெரும் 423

(தன்னை)எதிர்ப்போரின் நாட்டிலுள்ள (மக்கள் கூடும்)பொதுவிடங்கள் பாழ்படவும்

2

தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி – நெடு 77

திசைகளைக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை (ஏறிட்டுப்)பார்த்து(த் தொழுது),

மேல்


தேசு

(பெ) அழகு, beauty

மாசு அற கண்ணடி வயக்கி வண்ணமும்
தேசும் ஒளியும் திகழ நோக்கி – பரி 12/20,21

அழுக்கு நீங்க கண்ணாடியைப் பளபளப்பாக்கி, அதில் தம் இயற்கையழகும்,
செயற்கையழகும், மேனியெழிலும் தோன்ற, அவற்றைக் கண்டு மகிழ்ந்து

மேல்


தேடூஉ

(வி.எ) தேடிக்கொண்டே, keep looking for

கழி பெயர் களரில் போகிய மட மான்
விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட
காமர் நெஞ்சமொடு அகலா
தேடூஉ நின்ற இரலை ஏறே – நற் 242/7-10

கழிநீர் பெருகிப் பரவுகின்ற களர்நிலத்தில் கால்வைத்த இளைய மான்
கண்களை அகலவைத்துப் பார்க்கும் தன் அறியாக் குட்டியோடு தன் கூட்டத்தை விட்டு வெருண்டு ஓட,
விருப்பங்கொண்ட நெஞ்சத்தோடு இருக்கின்ற இடத்தைவிட்டு அகலாமல்
பார்வையால் தேடிக்கொண்டே நிற்கும் ஆண்மானை

மேல்


தேம்

(பெ) 1. இனிய மணம், வாசனை
2. தேன், honey
3. யானையின் மதநீர், must of an elephant
4. இனிமை, sweetness
5. நெய், oil
6. தேனீ, honey bee

1

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24

திலகம் இட்ட இனிய மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்

2

தேம் பாய் கண்ணி தேர் வீசு கவி கை – மலை 399

தேன் சொரிகின்ற தலையிற் சூடும் மாலையினையும், தேர்களை (அள்ளி)வீசும் கவிந்த கையினையும் உடைய

3

தேம் படு கவுள சிறு கண் யானை – முல் 31

மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையும் உடைய யானை

4

வேறு பட கவினிய தேம் மா கனியும் – மது 528

ஒன்றற்கொன்று வேறுபட்ட இனிய மாவின் பழங்களையும்

5

தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே – நற் 301/9

அகிலின் நெய்ப்பூச்சு நீங்குதல் இல்லாத மணங்கமழ்கின்ற கூந்தலையுடையவள்

6

தேம் ஊர் ஒண்_நுதல் நின்னோடும் செலவே – குறு 22/5

வண்டுகள் மொய்க்கும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய உன்னோடும்தான் பயணம்

மேல்


தேம்பு

(வி) 1. வலிமைகுன்று, loose strength; become weak

1

களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை
கல் ஊர் பாம்பின் தோன்றும் – அகம் 349/11-13

ஆண்யானை தன்
வரிகள் தங்கிய நெற்றியில் வைத்த வலிமை குன்றிய பெரிய கை
குன்றில் ஏறும் பாம்பு போலத் தோன்றும்

மேல்


தேமா

(பெ) இனிமையான மாம்பழம் (தரும் மரம்), sweet mango (tree, flower)

தேமா மேனி சில் வளை ஆயமொடு – சிறு 176

தேமாவின் தளிர்(போலும்) மேனி(யையும்), சிலவாகிய வளை(யினையும் உடைய நும்)மகளிரின் திரளோடு

மேல்


தேய்

(வி) 1. மெலிவடை, grow thin
2. இல்லாது போ, obliterated
3. குறை, grow less,
4. அழி, கொல், kill, destroy

1

விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி
பாசம் தின்ற தேய் கால் மத்தம் – நற் 12/1,2

விளாம்பழம் கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில்
தயிறு கடையும் கயிறு உராய்வதால் தேய்வுற்ற தண்டினையுடைய மத்தின்

2

நோகோ யானே தேய்கமா காலை – புறம் 116/9

நோவேன் யான், கெடுவதாக என் வாழ்நாள்

3

தேய்ந்தன்று பிறையும் அன்று
மை தீர்ந்தன்று மதியும் அன்று – கலி 55/9,10

நெற்றி மிகவும் தேய்ந்திருக்கிறது, ஆனால் அதும் பிறையும் இல்லை;
முகம் மாசற்று விளங்குகிறது, ஆனால் அது முழுமதியும் இல்லை;

4

செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை – திரு 5

தான்கோபங்கொண்டாரை அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும்,

மேல்


தேய்வை

(பெ) தேய்த்து அரைக்கப்படும் குழம்பு, paste formed by rubbing something on a stone

நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 33

நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை,

மேல்


தேயம்

(பெ) தேசம், country

காடும் காவும் அவனொடு துணிந்து
நாடும் தேயமும் நனி பல இறந்த
சிறு வன்கண்ணிக்கு – அகம் 383/3-5

காடும் சோலையும் அத் தலைவனோடு போகத் துணிந்து
மிகப் பலவான நாடுகளையும் தேசங்களையும் கடந்த
இளைய வன்கண்மையுடைவளுக்கு

மேல்


தேர்

1. (வி) 1. தேடு, search for
2. நாடிச்செல், seek
3. ஆராய், examine
4. எண்ணிப்பார், சிந்தி, ponder, deliberate
5. தெளிவுகொள், உறுதிப்படுத்து, ascertain
– 2. (பெ) 1. இரதம், chariot
2. சிறு பிள்ளைகள் இழுத்து விளையாடும் விளையாட்டு வண்டி
3. கானல், mirage

1.1

இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்து என – பெரும் 313

இரையைத் தேடுகின்ற (நீல)மணி(போலும்) மீன்கொத்தி (தனக்கு)இரை என எண்ணிப் பாய்ந்தெடுத்து

1.2

முன் பகல் தலைக்கூடி நன் பகல் அவள் நீத்து
பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய் – கலி 74/10,11

முற்பகலில் ஒருத்தியிடம் சேர்ந்திருந்து, உச்சிவேளையில் அவளை விட்டுப் பிரிந்து
பிற்பகலில் வேறொருத்தியை நாடிச் செல்லும் உன் நெஞ்சமும் பைத்தியம்பிடித்தது

1.3

சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்
தேரும்_கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/15-17

சிறப்புப் பொருந்திய வெண்மையான முத்துக்கள் அவற்றை அணிபவர்க்கன்றி,
அவை நீருக்குள்ளே பிறந்தாலும் நீருக்கு அவை தாம் என்ன செய்யும்?
ஆராய்ந்துபார்த்தால் உமது மகள் உமக்கும் அதனைப் போன்றவள்தான்;

1.4

ஏர் அணி இலங்கு எயிற்று இன் நகையவர்
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை_தன்
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என
தேருநர் தேரும்_கால் தேர்தற்கு அரிது காண் – பரி 22/31-34

அழகிய வரிசையாய் ஒளிரும் பற்களையும், இனிய புன்முறுவலையும் உடைய மகளிரும்,
இயற்கை அழகினையுடைய வையைக்கு அழகாய் அமைந்தாரோ? வையையின்
நீரால் அழகுற்ற வெள்ளம் இவருக்கு அழகு தந்ததோ? என்று
தெளிந்தறிய முயல்வோர் எண்ணிப்பார்த்தால் தெளிந்துகொள்வதற்கு அரிதாகும்,

1.5

ஏர் அணி இலங்கு எயிற்று இன் நகையவர்
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை_தன்
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என
தேருநர் தேரும்_கால் தேர்தற்கு அரிது காண் – பரி 22/31-34

அழகிய வரிசையாய் ஒளிரும் பற்களையும், இனிய புன்முறுவலையும் உடைய மகளிரும்,
இயற்கை அழகினையுடைய வையைக்கு அழகாய் அமைந்தாரோ? வையையின்
நீரால் அழகுற்ற வெள்ளம் இவருக்கு அழகு தந்ததோ? என்று
தெளிந்தறிய முயல்வோர் எண்ணிப்பார்த்தால் தெளிந்துகொள்வதற்கு அரிதாகும்,

2.1

வண் பரி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 489/5

வளமையான குதிரைகள் பூட்டிய நெடிய தேரினைச் செலுத்துவாயாக, விரைந்து.

2.2

ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர் – பெரும் 249

(ஏறி)ஊரப்படாத நல்ல சிறு தேரை உருட்டிக்கொண்டு திரிந்த பிள்ளைகள்

2.3

இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் – கலி 24/10

குத்தும் கொம்புகளையுடைய யானை தூரத்தே ஒளிர்கின்ற கானல்நீருக்காக ஓடும்

மேல்


தேர்ச்சி

(பெ) ஒரு துறையில் ஆழ்ந்த அறிவு, proficiency

நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி
ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர் – மது 646,647

நூற்கள் (கூறும்)வழிமுறையைத் தப்பாத நுட்பமான நுணுகிய ஆழ்ந்த அறிவினையுடையவராய்;(உள்ள)
ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்

மேல்


தேர்வு

(பெ) தேர்ந்தறியும் அறிவு, the discerning faculty

மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே – நற் 99/6-10

கார்காலமென்பதனை மறந்து, கடல் நீரை முகந்த நிறைவான சூல்கொண்ட கரிய மேகங்கள்,
அதனைத் தாங்கமாட்டாது கொட்டித்தீர்த்த பெருமழையைக்
கார்காலத்து மழை என்று பிறழக்கருதிய உள்ளத்தோடு, தேர்ந்தறியும் அறிவு இல்லாதனவான
பிடவமும், கொன்றையும், காந்தளும்
மடமையுடையனவாதலால் மலர்ந்துவிட்டன பலவாக

மேல்


தேரை

(பெ) தவளை, தவளைவகை, frog, indian toad

இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை
தட்டை_பறையின் கறங்கும் நாடன் – குறு 193/2,3

சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள்
தட்டைப் பறையைப் போல ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன்

வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட
கார் தொடங்கின்றே காலை – ஐங் 468/1,2

வரிகளைக் கொண்ட தவளைகள் மிக்கு ஒலிக்க, தேரைகள் ஒன்றாய் ஒலிக்க,
கார்காலம் தொடங்கிவிட்டது குறித்த பருவத்தில்

மேல்


தேவர்

(பெ) 1. கடவுளர், deities
2. முனிவர், hermits

1,2

ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நின் பாடுவோர் – பரி 3/27,28

இந்த ஞாலத்தில் வாழ்கின்ற முனிவர்களும், வானுலகின்
நால்வகை எண்ணிக்கையான மொத்தம் முப்பத்திமூன்று தேவர்களும் விரும்பி உன்னைப் பாடுவார்,

மேல்


தேள்

(பெ) ஒரு விஷப்பூச்சி, scorpion

தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் – புறம் 392/16

தேளின் நஞ்சினைப் போன்று கடுக்கும் நாள்பட்ட கள்

மேல்


தேற்றம்

(பெ) தெளிவு, clearness

ஊரன்
தேற்றம் செய்து நம் புணர்ந்து இனி
தாக்கு அணங்கு ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 23/2-4

தலைவன்
நல்லவற்றைக் கூறி நம்மைத் தெளிவித்துக் கூடிய பின்னர் இப்போது
தீண்டி வருத்தும் தெய்வமாக மாறிவிட்டது எதனால்? அன்னையே!

மேல்


தேற்றல்

(பெ) தெளிவுபடுத்தல், making clear

அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் – கலி 76/19

மிக அரிது, ஆராய்ந்தெடுத்த அணிகலன் அணிந்தவளே! இதனைத் தெளிவித்தல்

மேல்


தேற்று

(வி) 1. ஆறுதல் கூறு, console
2. தெளிவி, make clear
3. அறி, தெரிந்துகொள், புரிந்துகொள், know, understand
4. சூளுரை, swear, take an oath

1

நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும் – முல் 82

நீண்ட பிரிவினை நினைந்து, அது நன்மைக்கே என்று தனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டும்,
கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும்,

2

என்னும் உள்ளினள்-கொல்லோ தன்னை
நெஞ்சு உண தேற்றிய வஞ்சின காளையொடு
அழுங்கல் மூதூர் அலர் எழ
செழும் பல் குன்றம் இறந்த என் மகளே – ஐங் 371-374

என்னையும் நினைத்துப்பார்த்தாளோ? தன்னைத்
தன் மனம் ஏற்றுக்கொள்ளும்படி தெளிவித்த உறுதிமொழிகளைக் கூறிய இளைஞனோடு
ஆரவாரப்பேச்சுள்ள இந்த பழமையான ஊரில் பழிச்சொற்கள் உண்டாகுமாறு
செழித்த பலவான குன்றுகளைக் கடந்து சென்ற என் மகள்தான்

3

அளிய தாமே செ வாய் பைம் கிளி
குன்ற குறவர் கொய் தினை பைம் கால்
இருவி நீள் புனம் கண்டும்
பிரிதல் தேற்றா பேர் அன்பினவே – ஐங் 281-284

இரங்கத்தக்கனவாம், சிவந்த வாயினையுடைய பசிய கிளிகள்!
குன்றத்தின் குறவர்கள் கொய்துவிட்ட தினைப் பயிரின் பசிய தண்டுகளையுடைய
கதிரறுத்த வெறும் தட்டைகள் நீண்டிருக்கும் புனத்தைக் கண்டபின்னரும்
அப் புனத்தைவிட்டுப் பிரிந்துபோதலைத் தெரிந்துகொள்ளாத அளவுக்குப் பெரிய அன்பினை உடையவை.

4

உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்_வயின்
அனையேன் ஆயின் அணங்குக என் என
மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின் – அகம் 166/7-10

உயர்ந்த பலிகளைப் பெறும் அச்சம்தரும் தெய்வம்
அணிந்த கரிய கூந்தலையுடையவளான நீ சந்தேகப்படுபவளுடன்
நான் உறவுகோண்டவனாயின் என்னை வருத்துக என்று
தன் மனைவியை அவள் கணவன் சூளுரைத்துத் தெளியவைப்பானாயின்

மேல்


தேறல்

(பெ) 1. தெளிவு, clearness and transparency by settling of sediments
2. தெளிந்த மது, pure and clarified liquor
3. கள்ளின் தெளிவு, clarified toddy
4. நொதித்துப்போன பழச்சாறு, fermented fruit juice

1

கடும் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர – மது 599

கடிய கள்ளினது தெளிவை உண்டு களிப்பு மிக்குத் திரிதலைச் செய்ய

2

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் – புறம் 56/18

யவனர் நல்ல மரக்கலத்தில் கொணர்ந்த குளிர்ந்த நறு நாற்றத்தையுடைய மதுவை

3

தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – குறி 155

இனிமையான, பனை மடலைப் பிழிந்தெடுத்த தெளிவான கள்ளை நிறையக் குடித்து, மகிழ்ச்சி மிக்கு

4

முழு முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை – குறி 188-191

பருத்த அடிமரத்தைக்கொண்ட மாமரத்தின் இனிய பழங்கள் உதிர்ந்தனவாக,
(அது கேட்ட)வண்டுகள் (திடுக்கிட்டுப் பறக்க, அதனால்)சிதறிய தேன் கலந்த, பலாமரத்தின்
(நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை
நீரென்று கருதிப் பருகிய மயில்

மேற்கண்ட குறிப்புகளால், தேறல் என்பது போதைதரும் ஒரு தெளிந்த பானத்துக்குரிய
பொதுச்சொல்லாக இருந்திருக்கிறது எனத் தெரியவரும்.

அது இயற்கையாகக் கிடைக்கும் பனங்கள், அல்லது தென்னங்கள்ளாகவோ, செயற்கை முறையில் காய்ச்சி
வடிகட்டிய பானமாகவோ இருக்கலாம்.

இயற்கையாகக் கிடைக்கும் கள்ளை, ஒரு மூங்கில் குழாயினுள் ஊற்றிப் பல நாள் ஊறவைத்துப் பின்னர்
கிடைக்கும் தெளிவு தேக்கள் தேறல் எனப்பட்டது.

நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195
வேய் பெயல் விளையுள் தே கள் தேறல் – மலை 171
திருந்து அமை விளைந்த தே கள் தேறல் – மலை 522
அம் பணை விளைந்த தே கள் தேறல் – அகம் 368/14
வாங்கு அமை பழுனிய தேறல் மகிழ்ந்து – புறம் 129/2

அமை, வேய், பணை ஆகியவை மூங்கிலைக் குறிப்பன.

மட்டு எனப்படும் ஒருவகை மதுவை, ஒரு மண்கலத்தில் இட்டு, மண்ணுக்குள் புதைத்து நொதிக்க வைத்து
அதினின்றும் கிடைக்கும் தெளிவும் தேறல் எனப்பட்டது.

நிலம் புதை பழுனிய மட்டின் தேறல்
புல் வேய் குரம்பை குடி-தொறும் பகர்ந்து – புறம் 120/12,13

என்ற புறநானூற்று அடிகளால் இதனைத் தெரியலாம்.

போதை தரக்கூடிய சில பொருள்களைச் சேர்த்து ஊறவத்துப் பானையிலிட்டுக் காய்ச்சி வடித்த தெளிவும்
தேறல் எனப்பட்டது.

துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல்
இளம் கதிர் ஞாயிற்று களங்கள்-தொறும் பெறுகுவிர் – மலை 463,464

(வேகும்போது கொதிப்பதால்)குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான
தெளிந்த கள்ளை,
இள வெயில் சூரியனையுடைய(காலைவேளையில்) (நெற்)களங்கள்தோறும் பெறுவீர்

காட்டில், பலாப்பழங்கள் பழுத்துக் கனிந்து அவற்றினின்றும் வெடித்து ஒழுகும் நொதித்துப்போன பழச்சாறு,
கள்ளின் தன்மையை அடைவதால் அதுவும் தேறல் எனப்பட்டது.

பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல் – குறி 188-189

பலாமரத்தின்
(நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை

கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை
ஊழ்_உறு தீம் கனி உண்ணுநர் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு
பாறை நெடும் சுனை விளைந்த தேறல் – அகம் 2/1-4

கொழுத்த இலைகளைக் கொண்ட வாழையின், அடுக்குகள் முற்றிய பெரிய குலையின்
நன்கு பழுத்த இனிய கனிகள், (மிக்க இனிமையால்)உண்பவருக்குத் திகட்டும்,
மலைச்சரிவின் பலாச் சுளைகளுடன் (கலந்ததால்), நாட்பட்டு,
பாறையின் குழிந்த பகுதியில் சுனை போல் உண்டாகிய தெளிந்த சாறை

தீம் பழ பலவின் சுளை விளை தேறல் – அகம் 182/3

மரக்கலங்களில் வந்த வெளிநாட்டு மதுவகைகளும் தேறல் எனப்பட்டன.

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி – புறம் 56/18,19

தேனைப் பதப்படுத்தி அதினின்றும் கிடைக்கும் மதுவும் தேறல் எனப்பட்டது.

இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான்
மகிழ களி பட்ட தேன் தேறல் மாற்றி – பரி 16/27,28

பெரிய கடலை நோக்கி விரைந்து செல்லும் ஆற்றினைப் போல சிறிதும் தங்காமல் விரைந்து கரையேற
அவன் மகிழும்படி, களிப்பு மிக்க தேனால் சமைக்கப்பட்ட தேறலை அவனுக்குத் தர, அவன் அதனை மறுத்து

நொதிக்கவைக்கப்பட்ட கள்ளில் இஞ்சிப்பூ முதலியவற்றின் அரும்புகளை இட்டுப் பக்குவம் செய்து
தெளிவிக்கப்பட்டதும் தேறல் எனப்பட்டது.

நனை விளை நறவின் தேறல் மாந்தி – அகம் 221/1
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் – அகம் 366/11
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி – பதி 12/18
பூ கமழ் தேறல் வாக்குபு தர_தர – பொரு 157

நனை என்பது பூவின் அரும்பு.

கள்ளினை நெடுநாட்கள் நொதிக்கவைத்தால் அதன் கடுப்பு மிகும் என்பதால் நெடுநாள்பட்ட கள்
தேறல் எனப்பட்டது.

பழம்படு தேறல் பரதவர் மடுப்ப – சிறு 159
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்_மீன் அன்ன பொலம் கலத்து அளைஇ – புறம் 392/16,17
பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி – சிறு 237
அரவு வெகுண்டு அன்ன தேறலொடு சூடு தருபு – புறம் 376/14

கள்ளில் இருக்கும் கசடுகளை அகற்ற, நார்க்கூடையால் வடிகட்டித் தெளியவைத்திருக்கின்றனர்.

நார் பிழி கொண்ட வெம் கள் தேறல் – புறம் 170/12,13
நார் அரி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – புறம் 367/7

மேல்


தேறலர்

(பெ) 1. தெளியாதவர், one who is not convinced
2. தேறலை அளிப்பவர், one who gives pure liquor

1

ஒறுப்ப ஓவலர் மறுப்ப தேறலர் – குறு 34/1

தமர் ஒறுக்கவும் வருத்தம் நீங்காதவர், தோழியர் மறுத்துக்கூறவும் மனம் தெளியார்.

2

கலுழ் நனையால் தண் தேறலர் – புறம் 360/4

கலங்கிய கள்ளுடன் குளிர்ந்த தேறலை அளிப்பவர்.

மேல்


தேறு

1. (வி) 1. தெளிவடை, be clarified, made clear as water
2. மனம் தெளிவாகு, உறுதிப்படு, be convinced, accept as true
3. நம்பு, trust,believe, confide in
4. தெளிவாகச் சிந்தி, think clearly
5. தெளிவாக அறிந்துகொள், know clearly
– 2. (பெ) 1. தெளிவு, clarity, clearness
2. கொட்டுதல், sting as of a bee
3. தேற்றா என்னும் மரம், a tree called ‘thERRA’

1.1

தேறு நீர் புணரியோடு யாறு தலைமணக்கும் – பட் 97

தெளிந்த கடலின் அலைகளுடன் காவிரியாறு கலக்கும்

1.2

தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள்
சீறடி தோயா இறுத்தது அமையுமோ – கலி 90/17,18

‘தெளிவாயாக நீ! நான் தீயவன் அல்லன்’ என்று அவளின்
சிறிய பாதங்களைத் தொட்டு வீழ்ந்துகிடந்தது ஒன்று போதாதோ?

1.3

கல்_அக வெற்பன் சொல்லின் தேறி
யாம் எம் நலன் இழந்தனமே – நற் 36/4,5

மலைநாட்டுத் தலைவனின் சொல்லை நம்பி
நாம் எம் பெண்மைநலத்தை இழந்தோம்!

1.4

தேறின் பிறவும் தவறு இலேன் யான் – கலி 90/20

தெளிவாக யோசித்துப்பார்த்தால், நீ கூறுவது மட்டும் அல்ல, பிற குற்றங்களையும் நான் செய்யவில்லை

1.5

நின்னை
வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக செய்து
குறி கொள செய்தார் யார் செப்பு மற்று யாரும்
சிறு வரை தங்கின் வெகுள்வர் செறு தக்காய்
தேறினேன் சென்றீ – கலி 93/30-33

உன்னுடைய
மணங்கமழும் அகன்ற மார்பினைச் சிதைத்து
அதில் வடுக்களை உண்டாக்கியவர் யார்? சொல், அவர்களுள் எவரும்
சிறிதுநேரம்கூட நீ இங்குத் தங்கினால் கோபித்துக்கொள்வர், வெறுக்கத்தக்கவனே!
உன்னை நன்றாகத் தெரிந்துகொண்டேன்! நீ செல்வாயாக!

2.1

யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும்
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/13,14

ஆற்று நீர் சென்றுவிட்டால் அதனை மீண்டும் பெறமுடியாதது போன்ற இந்த இளமைக்காலத்தில்,
உம் நிலைத்த அன்பு என்னும்
தெளிவான தன்மையைக் கொண்டுள்ள நான் மனத்தடுமாற்றத்தோடு மாண்டுபோகவோ?
2.

2

கடும் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் – பதி 71/6

கடுமையாகக் கொட்டுதலைச் செய்யும் கூட்டமான குளவிகள் மொய்த்தவாறு தங்கியிருக்கும்

2.3

நகு முல்லை உகு தேறு வீ – பொரு 200

மலர்ந்து சிரிக்கின்ற முல்லையினையும், சிந்துகின்ற தேற்றா மலரினையும்,

மேல்


தேன்

(பெ) 1. பூக்களிலிருந்து தேனீக்கள்திரட்டும் இனிமையான திரவம், honey
2. தேனிறால், தேன்கூடு, honey-comb
3. இனிய சாறு, sweet juice
4. தேனீ, honey-bee
5. மலர் மணம், இனிய நறுமணம், fragrance,

1

பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும் – நற் 292/2,3

பசுமை நிறங்கொண்ட இலைகளையுடைய மணமிக்க தமாலக்கொடியை
இனிய தேனை எடுக்கும் குறவர்கள் வளைத்து முறிக்கும்

2

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல – நற் 1/4

சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல

3

கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் – நற் 372/2

கடற்கரைச் சோலையின் பனையின் இனிய சாறினையுடைய மிக முதிர்ந்த பழம்

4

மயில்கள் ஆல பெரும் தேன் இமிர – ஐங் 292/1

மயில்கள் களித்தாட, கூட்டமான வண்டினங்கள் ஒலிக்க,

5

தேன் நாறு கதுப்பினாய் யானும் ஒன்று ஏத்துகு – கலி 40/9

மலர் மணம் கமழும் தலைமயிரையும் கொண்டவளே! நானும் ஒரு பாட்டு வாழ்த்திப்பாடுவேன்

மேல்


தேனூர்

(பெ) பாண்டியநாட்டிலுள்ளதோர் ஊர், a city in the Pandiya country

திண் தேர் தென்னவன் நன் நாட்டு உள்ளதை
வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும்
தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ
ஊரின் ஊரனை – ஐங் 54/1-4

திண்மையான தேரினையுடைய பாண்டியனின் நல்ல நாட்டில் உள்ள
கோடைக் காலத்திலும் குளிர்ந்த நீர் வழிந்தோடும்
தேனூரைப் போன்ற இவளின் தெரிந்தெடுத்த வளையல்கள் கழன்றுபோகுமாறு
ஊரிலிருந்தும் சேரியில் வாழும் பெருமானே!

கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்
தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள்
நல் அணி நயந்து நீ துறத்தலின் – ஐங் 55/1-3

கரும்பினைப் பிழியும் எந்திரமானது களிறு பிளிறும் குரலுக்கு எதிராக ஒலிக்கும்
தேரினையும், வள்ளண்மையையும் கொண்ட பாண்டியனின் தேனூரைப் போன்ற இவளின்
நல்ல அழகை விரும்பிப் பாராட்டிப் பின்னர் நீ இவளைத் துறந்து செல்வதால்

பகலின் தோன்றும் பல் கதிர் தீயின்
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன – ஐங் 57/1,2

பகலைப் போலத் தோன்றும் பல கதிர்களையுடைய வேள்வித்தீயையும்,
ஆம்பல் மலர்கள் உள்ள கொண்ட வயல்களையும் கொண்ட தேனூரைப் போன்ற

– இங்குக் குறிப்பிடப்படும் தேனூரின் வளத்தையொட்டி, இவ்வூர் மதுரையின் அருகே திருவேடகத்துக்கு
அருகாமையிலுள்ள தேனூர் என்பர் ஔ.சு.து. தம் உரை விளக்கத்தில்

மேல்