பெ – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்கு(தல்)
பெட்டவை
பெட்டாஅளவை
பெட்டாங்கு
பெட்ப
பெட்பு
பெடை
பெண்கோள்
பெண்டு
பெண்ணை
பெதும்பை
பெய்
பெயர்
பெயர்த்தந்து
பெயர்த்தரல்
பெயர்த்தும்
பெயர்தரு(தல்)
பெயர்தல்
பெயர்ப்பு
பெயர்வு
பெயரல்
பெயரன்
பெயரிய
பெயல்
பெரிது
பெரிய
பெரியம்
பெரியள்
பெரியன்
பெரியை
பெரு
பெருநீர்
பெருவாய்மலர்
பெருக்கம்
பெருக்கு
பெருகல்
பெருகு
பெருங்கல்
பெருந்தகை
பெருந்துறை
பெருநாள்
பெரும்பாண்
பெரும்பிறிது
பெருமிதம்
பெருமொழி
பெருவிறல்
பெற்றத்தார்
பெற்றி

பெட்கு(தல்)

(வி) பேணு, விரும்பு, cherish, regard, desire

பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/14

நின்னை எய்திய கணவனை விரும்பிப்பேணும் விருப்பத்தையுடையை ஆக என்று வாழ்த்தி

எல்லை எம்மொடு கழிப்பி எல் உற
நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று
சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம்
நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே – அகம் 200/10-14

பகற்பொழுதினை எம்முடனிருந்து கழித்து, இரவு வரும்போது
நுமது நல்ல தேரினைப் பூட்டிச் செல்லுதற்கும் உரியீர், அதுவுமேயன்றி
இரவில் எம் பதியில் தங்கிச் செல்வீராயின், யாங்களும்
எங்களுக்கு இயன்ற அளவில் பேணுதல் செய்வோம்
இது நும் கருத்துக்கு இசைவதாமோ? கூறுவீராக எமக்கு.

மேல்


பெட்டவை

(பெ) விரும்பியவை, wishes, desired things

துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என – பொரு 125,126

‘துடி போலும் அடிகளையும் அசைந்த நடையினையும் உடைய கன்றுகளுடன்,
பிடிகளைக் கூடின களிற்றியானைகளையும், (நீவிர்)விரும்பிய ஏனையவற்றையும் கொள்வீராக’ என்று

மேல்


பெட்டாஅளவை

(பெ) பேணும் முன்னர், விரும்பும் முன்னர், before I asked for it

கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி
இரு சீர் பாணிக்கு ஏற்ப விரி கதிர்
வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்
ஒன்று யான் பெட்டாஅளவையின் ஒன்றிய – பொரு 70-73

கை அழுக்கு இருந்த என் கண் அகன்ற உடுக்கையில் (தோற்றுவித்த)
இரட்டைத் தாளத்திற்கு ஏற்ப, விரிகின்ற (ஒளிக்)கதிர்களையுடைய
வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே,
ஒரு பாட்டினை யான் பேணிப் பாடி முடிக்கும் முன்னே

ஒன்று யான் பெட்டாஅளவை அன்றே
ஆன்றுவிட்டனன் – புறம் 399/29,30

ஒன்றை நான் விரும்பிக்கேளா முன்பே அப்பொழுதே
கொடுத்தற்கு அமைந்து என்பால்வரவிடுவானாய்

மேல்


பெட்டாங்கு

(வி.அ) விரும்பியவாறு, as (you/one) liked it

பெறல் அரும் கலத்தில் பெட்டாங்கு உண்க என – பொரு 156

‘பெறுதற்கரிய (பொற்)கலத்தில் விரும்பியபடி உண்பாயாக’ என்று,

இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய – மலை 98

விதைத்தவை எல்லாம் விரும்பியவாறே விளைய

தண் துறை ஊரன் பெண்டிர் எம்மை
பெட்டாங்கு மொழிப என்ப – அகம் 216/5,6

குளிர்ந்த துறையினை உடைய ஊரனது பெண்டிர்கள் எம்மைத்
தம் மனம் விரும்பியபடியெல்லாம் இகழ்ந்துரைப்பர் என்பார்கள்

மேல்


பெட்ப

(பெ) விரும்பத்தக்கவை, desirables

மாணா செயினும் மறுத்து ஆங்கே நின்_வயின்
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என் உற்றாய்
பேணாய் நீ பெட்ப செயல் – கலி 91/22-24

மாண்பற்ற செயல்களைச் செய்தாலும் அவற்றை ஒதுக்கிவிட்டு, உன்னைக்
கண்டாலே நெகிழ்ந்துபோகிறது என் நெஞ்சு; அப்படியிருக்கையில் என்ன காரியம் செய்கிறாய்?
விரும்பமாட்டேன் என்கிறாயே நீ, விரும்பத்தக்கவைகளைச் செய்வதை”.

மேல்


பெட்பு

(பெ) 1. விருப்பம், desire, longing
2. பேணுதல், fostering

1

நிலவரை ஆற்றி நிறை பயன் ஒருங்கு உடன்
நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்புறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
குல வரை சிலவே – பரி 15/6-10

இந்த நிலவுலகிற்கு உதவும் வகையில் பல பயன்களைத் எல்லாம்
எப்பொழுதும் தந்து நிலையாக அமைந்து விளங்கும் மலைகள் சிலவே!
அந்தச் சில மலைகளிலும் சிறந்து விளங்குவன தெய்வங்கள் விரும்பும்
மலர்களையுடைய அகன்ற பகுதிகளையுடைய மேகங்கள் படியும் உச்சிகளையுடைய
குலமலைகள் சிலவே!

2

முற்றிய திருவின் மூவராயினும்
பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே – புறம் 205/1,2

நிறைந்த செல்வத்தையுடைய மூவேந்தராயினும்
எம்மைப் பேணுதல் இன்றி ஈதலை யாங்கள் விரும்பேம்.

மேல்


பெடை

(பெ) பறவைகளின் பெண்பால், female of birds

கலித்தொகையில் மட்டும் எருமையின் பெண் பெடை எனப்படுகிறது.

கோழி வய பெடை இரிய – திரு 311

பெடை மயில் உருவின் பெரும் தகு பாடினி – பொரு 47

பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ – நற் 152/7

புன் புறா வீழ் பெடை பயிரும் – நற் 314/11

பழன கம்புள் பயிர் பெடை அகவும் – ஐங் 60/1

குயில் பெடை இன் குரல் அகவ – ஐங் 341/2

புன் புற எருவை பெடை புணர் சேவல் – பதி 36/9

பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் – அகம் 117/7

மணி நிற மலர் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து என
கதுமென காணாது கலங்கி அ மட பெடை
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி – கலி 70/1-4

சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை
பாய் இரும் பனி கழி துழைஇ பைம் கால்
தான் வீழ் பெடைக்கு பயிரிடூஉ சுரக்கும் – நற் 31/2-4

கரும் தாள் மிடற்ற செம்பூழ் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண் – அகம் 63/78

பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு
உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை – நற் 91/3,4

உரவு நீர் திரை பொர ஓங்கிய எக்கர் மேல்
விரவு பல் உருவின வீழ் பெடை துணை ஆக
இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள – கலி 132/1-3

வலிமை மிக்க நீரலைகள் வந்து மோதுவதால் உயர்ந்து எழுந்து உண்டான மணல் மேட்டில்,
பல்வேறு உருவங்களுடன், தாம் விரும்பும் பெடைகள் துணையாக,
இரை தேர்ந்து உண்டு இளைப்பாறியிருக்கும் பறவைக் கூட்டம் தங்கியிருக்க,

தரு மணல் தாழ பெய்து இல் பூவல் ஊட்டி
எருமை பெடையோடு எமர் ஈங்கு அயரும் – கலி 114/12,13

புதிதாய்த் தருவிக்கப்பட்ட மணலைக் கீழே பரப்பி, வீட்டுக்குச் செம்மண் பூசி,
பெண் எருமைமாட்டுக் கொம்பை நட்டு எமது சுற்றத்தார் இங்குக் கொண்டாடும்

மேல்


பெண்கோள்

(பெ) பெண்ணைத்திருமணம் முடித்தல்

மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார்
தொன்று இயல் மரபின் மன்றல் அயர
பெண்கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி
நொதுமல் விருந்தினம் போல இவள்
புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே – அகம் 112/15-19

எய்துவதற்கு அரிய காமத்தால் நீர் கூடிய களவொழுக்கத்தை அறியாத எம் வீட்டார்
தொன்றுதொட்டு வரும்முறைப்படி திருமணம் நிகழ்த்திட
நீ இவளைப் பெண்கேட்டுவரும் ஒழுக்கத்தினைக் கண்ணார நோக்கி
யாம் அயலேம் ஆகிய புதியவர் போல,இவள்
புதிய நாணால் ஆகிய ஒடுக்கத்தினையும் காண்பேம் அன்றோ.

மேல்


பெண்டு

(பெ) 1. பெண், woman
2. காதலி, lady love
3. மனைவி, wife
4. காமக்கிழத்தி, காதற்பரத்தை, concubine

1

முதுவாய் பெண்டின் செது கால் குரம்பை – அகம் 63/14

முதிய பெண்ணின் சோர்ந்த கால்களையுடைய குடிசையில்

2

நென்னல்
ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார் பெண்டு என மொழிய – ஐங் 113/1-3

நேற்று,
உயர்ந்தெழும் கடலலைகள் வெள்ளிய மணல் மீது மோதி உடைக்கும் துறையைச் சேர்ந்தவனுக்கு
இந்த ஊரார் நான் காதலி என்று கூற

3

துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை
நம்மொடு புலக்கும் என்ப – அகம் 106/5,6

துறை பொருந்திய ஊரனின் மனைவி, தன் கணவனை
நாம்மோடு கூட்டிவைத்து வெறுத்துப்பேசுகின்றாள் என்பர்

4

கண்டனெம் அல்லமோ மகிழ்ந நின் பெண்டே – ஐங் 69/1

நேராகவே பார்த்துவிட்டேன் தலைவனே! உன் காதற் பரத்தையை;

மேல்


பெண்ணை

(பெ) 1. பனை, palmyrah-palm
2. வடபெண்ணை, தென்பெண்ணை ஆறுகள் , Rivers, North Pennaiyar, South Pennaiyar

1

வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின் – சிறு 27,28

பெரிய குலையினையுடைய பனை வளர்த்த நுங்கில் உள்ள
இனிய சுவைநீர் (தன் சுவையால்)தாழ்ந்துபோகும் (ஊறலையுடைய)பற்களையும்;

2

பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே – புறம் 126/23

பெண்ணையாற்றுப்பக்கத்தை உடைய நாட்டை உடையவனே

மேல்


பெதும்பை

(பெ) வயது எட்டு முதல் பதினொன்று உள்ள சிறுமி, girl in the age group 8 to 11

பேதை அல்லை மேதை அம் குறு_மகள்
பெதும்பை பருவத்து ஒதுங்கினை புறத்து என – அகம் 7/6,7

சிறுமி அல்லவே நீ, அறிவுள்ள சிறுமகளே!,
இளம்பெண் பருவத்தில் வெளியில் சென்றாயே” என்று நான் கூற,

மேல்


பெய்

(வி) 1. (பனி, மழை போன்றவை) மேலிருந்து விழு, பொழி, கொட்டு, fall as rain drops or dew
2. ஊற்று, வார், விடு, pour into, pour down
3. (பாத்திரத்தில்)இடு, put, place, lay, put into, serve up, as food in a dish;
4. கட்டு, tie, fasten
5. ஒழுகு, leak, ooze, dribble
6. கல, mix
7. உள் இடு, put inside
8. சூடு, wear (as string of flowers)
9. பூசு, smear
10. செலுத்து, வீசு, எறி, shoot an arrow
11. அமை, institute
12. பரப்பு, spread
13. அணி, wear, put on

1

கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து_இடித்து
பெய்க இனி வாழியோ பெரு வான் – குறு 270/3,4

குறுந்தடியால் அடிக்கப்படும் முரசினைப் போல் முழங்கி பலமுறை இடித்து
பெய்க இனி வாழ்க! பெரிய மேகமே!

பெய் பனி நலிய உய்தல் செல்லாது
குருகு_இனம் நரலும் பிரிவு அரும் காலை – ஐங் 457/1,2

பெய்யும் பனியினால் நலிவுற்று, அதினின்றும் உய்யும் வழியினைக் காணாது
குருகினங்கள் ஒலியெழுப்பும் பிரிந்திருக்க அரிதான கூதிர்ப் பருவத்தில்,

2

நாடன்
தீது இல் நெஞ்சத்து கிளவி நம்_வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு
தான் மணந்து அனையம் என விடுகம் தூதே – குறு 106/2-6

தலைவனின்
தீதில்லாத நெஞ்சத்தின் சொற்கள் நம்மிடம்
வந்தது வாழ்க தோழியே! நாமும்
நெய் ஊற்றிய தீயைப்போல் அதனை எதிர்கொண்டு
அவன் தன்னை மணந்தகாலத்து இருந்த நிலையிலுள்ளோம் என்று தூது விடுவோம்.

3

கான் நிலை எருமை கழை பெய் தீம் தயிர் – மலை 523

காட்டில் வசிக்கும் எருமையின், மூங்கில் குழாயினுள் இடப்பட்ட இன்சுவையுள்ள தயிரும்

எஃகு போழ்ந்து அறுத்த வாள் நிண கொழும் குறை
மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு – பதி 12/16,17

அரிவாளால் பிளந்து அறுக்கப்பட்ட வெண்மையான ஊனின் கொழுத்த இறைச்சித்துண்டுகளையும்,
ஆட்டு இறைச்சி இட்ட வெண்ணெல்லின் வெண்மையான சோற்றினையும்,

4

பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 217,218

பஞ்சாய்க் கோரையைப் பல்லால் சிதைத்து(க் கிழித்து)
முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை

5

வாள் வாய் சுறவொடு வய மீன் கெண்டி
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் – நற் 111/7,8

வாள் போன்ற வாயையுடைய சுறாமீனொடு வலிய பிற மீன்களையும் வாரிக்கொண்டு
நிணம் ஒழுகும் தோணியராய்த் தாழ்ந்துவிழும் மணல்மேட்டினின்றும் இறங்கிவரும்

6

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப – நற் 172/1-3

விளையாட்டுத் தோழியருடன் வெள்ளையான மணலில் ஊன்றிவைத்துப்
பின்னர் மறந்தவராய் விட்டுப்போன விதை முளைத்து, முளை தோன்ற
அதற்கு நெய் கலந்த இனிய பாலை ஊற்றி இனிதாக வளர்க்க,

7

அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில் – நற் 250/2

உள்ளே பரல்கள் இடப்பெற்ற கிண்கிணி ஒலியெழுப்ப,

8

வீ பெய் கூந்தல் வீசு வளி உளர – நற் 264/5

பூச்சூட்டப்பெற்ற கூந்தல் வீசுகின்ற காற்றில் அசைந்தாட,

9

ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி
கூழை பெய் எக்கர் குழீஇய பதுக்கை – குறு 372/4,5

கடலானது மேலெடுத்து வீசிய கருமணலான சேறு அருவியாய் இறங்கி
கூந்தலில் பூசுகின்ற மண்சேறுபோல் குவியப்பெற்ற குவியல்கள்

10.

நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள்
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் – கலி 143/31,32

நெய்தல் பூவின் புறவிதழை நீக்கி மாலை கட்டுவதில் அவன் வல்லவன், நீண்ட மென்மையான தோள்களின் மேல்
எய்யக்கூடிய கரும்புவில்லை எழுதுவதிலும் அவன் வல்லவன்

11.

ஐவனம் காவலர் பெய் தீ நந்தின்
ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும் – புறம் 172/6,7

ஐவன நெல்லைக் காப்பார் காவலுக்காக அமைத்த தீ அவ்விடத்துக் கெட்டகாலத்து
ஒளி விளங்கும் திருந்தின மாணிக்கம் செறிந்த இருளைத் துரக்கும்

12

பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும் – புறம் 246/9

பருக்கைக்கற்கள் பரப்பிய படுக்கையின்கண் பாயும் இன்றிக் கிடக்கும்

13

கொடும் குழை பெய்த செழும் செய் பேதை – நற் 120/3

வளைவான குழைகளை அணிந்த செழுமையாக அமைந்த பேதையானவள்

மேல்

பெயர் -1. (வி) 1. விலகு, நீங்கு, போ, leave, depart, move
2. இடம் மாறு, shift one’s place
3. மீள், return, go back
4. மாறு, change, vary
5. பின்வாங்கு, retreat, withdraw
6. இருக்குமிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல், migrate
7. பிரி, be separated
8. அசைபோடு, chew the cud
9. அகற்று, நீக்கு, போக்கு, remove, displace, dislodge, unseat
10. எடுத்துச்செல், கொண்டுசெல், take away
11, செலுத்து, lead, drive
12, பின்வாங்கச்செய், make retreat
13. எழுப்பு, raise
14. மீள், redeem
15, ஓட்டு, ஓடச்செய், drive away
16. செல்லவிடு, let go
17. அளி, கொடு, give away
18, பாய்ச்சு, make to flow
19. வெளிக்கொணர், துப்பு, கக்கு, eject outside, spit
20. இடம் மாறச்செய், make one shift residence
21. கூறு, மொழி, say, utter
22. துரத்து, அப்புறப்படுத்து, drive away
23. தன்னுள் அடக்கு, உள்வாங்க்கொள், ஒடுக்கு, gather into oneself, absorb
24. பறி, வலிந்து கொள், uproot, pull off, take with force
25. மாற்று, change
26. போக்கு, நீக்கு, cause to go, remove, eliminate
27. உருட்டிவிடு, toss, roll
28. இடம் மாற்று, shift one’s place
29. திருப்பிக்கொடு, return
– 2. (பெ) 1. ஒருவரை அல்லது ஒன்றை அடையாளப்படுத்த இடப்படுவது, name
2. புகழ், reputation, fame
3. சிறப்பு, pre-eminence, superiority
4. பொருள், property, substance
5. சூள், வஞ்சினம், vow

1.1

ஏனல் அம் சிறுதினை காக்கும் சேணோன்
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை – குறு 357/5,6

ஏனல் என்ற அழகிய சிறுதினையின் பயிரைக் காக்கும் பரண்மீதிருப்பவன்
தீக்கடைகோலில் எழுப்பிய தீயினால் விலகிச்சென்ற நெடிய நல்ல யானை

1.2

மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல் எஞ்ஞான்றும் – பரி 16/36,37

விண்மீன்கள் முத்தாரமாய்ப் பூத்துக்கிடக்கும் அகன்ற ஆகாய கங்கை பெருக்கெடுத்தோடும்
வானம் பெயர்ந்து இங்கே பக்கத்தில் வந்தது போன்றிருப்பது எந்நாளுமே

1.3

நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை
தொடு மணி மெல் விரல் தெண்ணென தைவர
நுதலும் கூந்தலும் நீவி
பகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டே – அகம் 386/12-15

உனக்குத் தங்கை ஆவேன் என்று கூறி, தன் கையின்
மோதிரம் அணிந்த மெல்லிய விரலால் தண்ணென்று பொருந்த
நெற்றியினையும் கூந்தலையும் தடவி
பகற்போதில் வந்து மீண்ட ஒள்ளிய நெற்றியினையுடைய பரத்தையைக் கண்டு

1.4

அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் – அகம் 207/1,2

தெய்வத்தையுடைய கடலின் நீர் பரவிய உப்பு விளையும் வயலில்
நீர் காய்ந்த தன்மையால் மாறிப்போன வெள்ளிய உப்பாகிய அமிழ்தினை

1.5

கடல் பெயர்ந்து அனைய ஆகி
புலர் பதம் கொண்டன ஏனல் குரலே – நற் 259/9,10

கடல் பின்வாங்கிக் காய்ந்தநிலம் ஆகியது போல ஆகி
காய்ந்து புலரும் பருவத்தை எய்தின தினையின் கதிர்கள்.

1.6

பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர – பதி 67/7

பலவான களிறுகளின் கூட்டம் வரிசை வரிசையாக தமக்குரிய இடத்தைவிட்டுப் பெயர்ந்து நடக்க,

1.7

பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான்
வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர்
ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க – பரி 19/58-61

தான் பிறந்த சுற்றத்தாரினின்றும் பிரிந்து ஓர் அறியா இளம்பெண்
செறிவான பாறைக்கற்களுக்கு இடையிடையே புகுந்து, வழிதவறி, நான்
வந்த வழியை மறந்துவிட்டேன் என்று தன் பெற்றோரை,
“ஏஎ ஓஒ” என்று தன் அவர் கேட்கும்படி செய்ய,

1.8

கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைம் கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர
விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா
குளவி பள்ளி பாயல்கொள்ளும் – சிறு 42-46

செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை
பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்,
மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவிநிற்ப,
முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மென்று அசைபோட்டு
காட்டு மல்லிகையாகிய பள்ளியில் துயில்கொள்ளும்

1.9

அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம்
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே – மது 259,260

சேற்றில் மாட்டிக்கொண்ட எருதுகள் படும் வருத்தத்தை
கள்ளை உண்ணும் களமர் நீக்கும் ஆரவாரமும்,

அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே – நற் 362/9,10

யாரும் போரிடுவதற்கு வருவாராயின் அஞ்சாமல் அவரை விரட்டுவேன்;
உன் வீட்டார் யாரும் வந்தால் மறைந்துகொள்வேன், மாமை நிறத்தவளே!

1.10

கோள் நாய் கொண்ட கொள்ளை
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே – நற் 82/10,11

வேட்டை நாய்கள் கொன்ற கொள்ளைப்பொருளை
கானவர் எடுத்துக்கொண்டு செல்லும் சிறுகுடியில் –

1.11

தண் அடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
அரும் திறை கொடுப்பவும் கொள்ளான் சினம் சிறந்து
வினை வயின் பெயர்க்கும் தானை
புனை தார் வேந்தன் பாசறையேமே – அகம் 84/14-17

மருதநிலம் சூழ்ந்த கொடிகள் அசையும் இந்த அரிய எயிலை
பகைவர் வணங்கி அரிய திறையாகக் கொடுப்பவும் ஏற்றுக்கொள்ளானாகி, சினம் மிக்கு
மேஎன்மேலும்போரின்கண் செலுத்தும் சேனையினையுடைய
மாலையை அணிந்த அரசனது பாசறையிடத்தே உள்ளோம்

1.12

இரு பெரு வேந்தர் மாறுகொள் வியன் களத்து
ஒரு படை கொண்டு வரு படை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் என – அகம் 174/1-3

பேரரசர் இருவர் மாறுபாடு கொண்டு பொரும் பெரிய போர்க்களத்தே
தமது ஒப்பற்ற படைக்கலத்தைக் கொண்டு எதிர்வரும் படைகளைப் பிறக்கிடச் செய்யும்
வெற்றியாகிய செல்வம் உடையோர்க்கு இப்பெருமை நிலைபெற்றது என்று கூறி

1.13

எருவை சேவல் இரும் சிறை பெயர்க்கும்
வெரு வரு கானம் நம்மொடு
வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே – அகம் 297/17-19

ஆண்பருந்து தனது பெரிய சிறகினை எழுப்பிப்பறக்கும்
அச்சம்தரும் காட்டிற்கு நம்முடன்
வருவேன் என்று கூறிய நம் தலைவியின் மகிழ்ச்சியைத்தரும் மடப்பம் வாய்ந்த நோக்கம்

1.14

நிறை அரும் தானை வேந்தரை
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே – புறம் 156/5,6

நிறுத்தற்கரிய படையையுடைய அரசரை
திறை கொண்டு அவரை மீட்கும் தலைமையும் உடைத்து

1.15

இரும் பனை அன்ன பெரும் கை யானை
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்
பெரும் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே – புறம் 340/7-9

கரிய பனைமரத்தைப் போன்ற பெரிய கையையுடைய யானைகளை
கரந்தைப்பூடு வளர்ந்துள்ள வயல்களில் தோற்றோடுமாறு செய்கின்ற
பெரிய தகுதியையுடைய மன்னர்களுக்குத் தன் மகளை மணம்செய்துகொடுக்க வரைந்துள்ளான்

1.16

அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க
புரையோர் சேர்ந்து என தந்தையும் பெயர்க்கும் – புறம் 354/1-3

முடிவேந்தர் நேர்நின்று பொர வரினும் அடங்குதல் அமையாத
நிரைத்த காம்பு அணிந்த வேல்படையை நீர்ப்படை செய்யும்பொருட்டு
சான்றோர்களாகிய உயர்ந்த வீரர்கள் வந்து கூடினராக தந்தையாகிய தலைவன் நீர்நிலைக்குச் செல்ல விடுக்கின்றான்.

1.17

நுண்ணூல் தடக்கையின் நா மருப்பாக
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ – புறம் 388/8-10

நுண்ணிய நூல்களைத் துதிக்கையாகவும், நாவைக் கொம்பாகவும் உடைய யானைகளாகிய
வெல்லும் பாடல்களை இயற்றும் புலவர்களுக்கு, நெல் விளையும் நிலங்களை
அவன் பரிசாக அளிப்பதை நான் கூறக் கேட்பீராக…

1.18

போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர் வாள் குவி முகம் சிதைய நூறி
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின் வயின் இமைப்ப – அகம் 144/14-17

போர் விரும்பி கிளர்ந்தெழும் வீரர்தம் கையிடத்ததாகிய
கூரிய வாளின் குவிந்த முனை சிதைந்திட மாற்றார் படையை வீசிக்கொன்று
குதிரைக் குளம்புகள் பதிந்த பள்ளங்களில் பாய்ச்சிய உதிரம்
வானின்கண் மீன் போல் இடங்கள்தோறும் மின்ன

1.19

குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த
வெண் காழ் தாய வண் கால் பந்தர் – புறம் 324/9,10

குமிழம் பழங்களை உண்ட வெள்ளாடுகள் தம்முடைய பிளந்த வாயினின்றும் வெளிப்படுத்தித்துப்பிய
வெண்மையான விதைகள் யாண்டும்படவிக் காணப்படும் வளவிய கால்களையுடைய பந்தலில்

1.20

முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து – அகம் 157/11

போர் நிகழ்ச்சி குடிகளை இடத்தினின்றும் பெயரச்செய்தமையின் பொலிவற்றிருக்கும் மன்றிடத்தே

1.21

ஆடு வரி அலவன் ஓடு_வயின் ஆற்றாது
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர் – நற் 106/3-6

அங்குமிங்கும் அலைந்துதிரியும் புள்ளிகளைக் கொண்ட நண்டுகள் ஓடுவனவற்றைப் பிடிக்க மாட்டாது
சோர்வுற்று அதன் மீது விருப்பம் நீங்கிய குற்றமற்ற சிறுமகளுக்காக
வருத்தமுற்றவனாய் அவளிடம் சென்று நான் எனது உள்ளத்துக் காமநோயைப் பற்றிக் கூற
அதற்கு மறுமொழி சொல்வதற்கும் முடியாதவளாய்

1.22

அவனை
நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது – கலி 47/19,20

அவனை,
நாணம் நம்மை வருத்துவதால், துரத்திவிடுவது நமக்கும் இங்கு இயலாது,

1.23

தெருவின்-கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ
வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில – கலி 60/12,13

தெருவில் காரணமில்லாமல் கலங்குகிறவர்களைப் பார்த்து
மாற்றார் துயரத்தைத் தம் துயராகக்கொள்ளும் வாரணவாசிக்காரர்களின் குணத்தைப் பெறுதல் நமக்கு அயலானது,

1.24

பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள் – குறு 84/1

முதுகோடு பெயர்த்தெடுத்துத் தழுவினேன், எனக்கு வியர்க்கிறது என்றாள்

1.25

நல் யாழ்
பண்ணு பெயர்த்து அன்ன காவும் பள்ளியும் – மலை 450,451

நல்ல யாழின்
பண்களை மாற்றிமாற்றி வாசிப்பதைப்போல, (பலவித இன்பம் தரும்)சோலைகளிலும், துயிலிடங்களிலும்

1.26

செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என – நற் 164/6,7

செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
புதிதான வழிப்போக்கரின் உயிராற்றலைப் போக்கியதால்

1.27

கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் என – நற் 243/5,6

“சூதாடுகருவியை உருட்டிவிட்டாற்போன்ற நிலையில்லாத வாழ்க்கையை முன்னிட்டுப்
பிரிந்து செல்வதைத் தவிர்ப்பீர்! அறிவுள்ளவர்களே!” என்று
கைவினை மாக்கள் தம் செய்வினை முடி-மார்

1.28

சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட
நீடிய வரம்பின் வாடிய விடினும்
கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும – குறு 309/1-6

களையெடுக்கும் மாந்தர் தாம் செய்யும் தொழிலை முடிப்பதற்காக
வண்டுகள் மொய்ப்பதினால் மலர்ந்த மலரின் மணம் நிலத்தில் படும்படி
நீண்ட வரப்பில் வாடும்படி போட்டுவைத்தாலும்
கொடியவரின் நிலத்தைவிட்டு வேறு நிலத்துக்குப்போய் வாழ்வோம் என்னாமல்
எடுத்துப்போட்டும் தம்மைக் களைந்த கழனியில் பூக்கும்
உனது ஊரின் நெய்தலைப் போன்றவள் நான், தலைவனே!

1.29

வாடா வஞ்சி பாடினேன் ஆக
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி
கொன்று சினம் தணியா புலவு நாறு மருப்பின்
வெம் சின வேழம் நல்கினன் அஞ்சி
யான் அது பெயர்த்தனென் ஆக தான் அது
சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர்
பெரும் களிறு நல்கியோனே – புறம் 394/9-15

வஞ்சித்துறைப் பாட்டஒன்றைப் பாடினேனாக
மனம் நிறைந்த உவகையினால் தன்பால் அன்புடன் நெருங்கி உறையவேண்டும் என விரும்பி
பகைவரைக் கொன்றும் சீற்றம் குன்றாத புலால் நாறும் கொம்புகளையுடைய
வெவ்விய சினத்தையுடைய யானை ஒன்றைத் தந்தான், அது கண்டு அச்சமுற்று
யான் அந்த யானையைத் திருப்பித்தந்தேனாக, அவன் தான் அது
என் வரிசைக்குச் சிறிது என உணர்ந்தமை எண்ணி நாணமுற்று, மேலும் வேறே ஒரு
பெரிய களிற்றை நல்கினான்

2.1

தன் பெயர் கிளக்கும்_காலை என் பெயர்
பேதை சோழன் என்னும் – புறம் 216/8,9

தனது பெயரைப் பிறர்க்கு அறிவிக்கும்போது
என்னுடைய பெயர் பேதைமையுடைய சோழன் என்று சொல்லும்

செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறி-மார்
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த – மலை 394,395

போகும் இடத்தின் பெயரும் எல்லையும் அறியும்படி,
கல்லைக் கொத்தி எழுதிய, நல்ல அடிப்பகுதியையுடைய மரா மரத்தடிகளில்

2.2

பொருந்தி யான் தான் வேட்ட பொருள்_வயின் நினைந்த சொல்
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப
பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே – கலி 17/18-21

பொருத்தமாக, நான் அவன் விரும்பிய செயல் ஆர்வத்தினால் விளையும் கேடுகளை நினைந்து கூறிய சொற்கள்,
சீர்படுத்தும் நிலையிலுள்ள உடம்பிற்கு மருத்துவன் ஊட்டிய
மருந்தினைப் போல் நல்ல மருந்தாக வேலைசெய்ய, உன் மனம் களிக்கும்படி,
பெரும் புகழ் கொண்ட நம் தலைவன் கைவிட்டுவிட்டான் தன் பயணத்தை

2.3

மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை – மது 699

மிகுத்துப் புகழைப் பெற்ற பெரிய சிறப்பையுடைய மதுரையின்கண் –

2.4

மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய – பதி 90/22,23

மலையிலும், நிலத்திலும் பகைவரின் அரண்களைக் கைப்பற்றி,
அங்குப் பெற்ற பெருமளவு பொருளைப் பலருக்கும் வழங்கியும்

2.5

பொருவேம் என பெயர் கொடுத்து – பட் 289

போரிடுவோம் எனச் சூள் உரைத்து

மேல்


பெயர்த்தந்து

(வி.எ) பெயர்த்து, ஒழித்து, bringing to an end,

கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவி
நீங்கும் பதத்தால் உருமு பெயர்த்தந்து
வாங்கி முயங்கி வய பிடி கால்கோத்து – பரி 10/49-51

பிளிறுகின்ற கையுடன், மதக்களிப்பையுடைய அந்த களிறு, வளைவான அங்குசத்திற்கும் அடங்காமல்
அவ்விடத்தைவிட்டு நீங்குகின்ற பொழுதில் அதன் இடிபோன்ற முழக்கத்தை ஒழித்து,
அதனைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வளைத்து, அணைவாக அந்த இளம் பெண்யானையுடன் சேர்த்து,

மேல்


பெயர்த்தரல்

(பெ) திருப்பித்தருதல், giving back

புரிபு நீ புறம்மாறி போக்கு எண்ணி புதிது ஈண்டி
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் – கலி 15/10-12

பொருள்மீது விருப்பம் கொண்டு, நீ இவளைக் கைவிட்டுப் போக எண்ணி, புதிதாகச் சேர்த்துப்
பெருகிய செல்வத்தால் மீட்டுத்தருவது இயலுமோ
அசோக மரத்தின் அழகிய தளிரைப் போன்றது இவளின் எழில் நலத்தை?

மேல்


பெயர்த்தும்

(வி.அ) 1. மீண்டும், மறுபடியும், again
2. (அதன்)பின்னும், even afterwards

1

பெரும் தண் மாரி பேதை பித்திகத்து
அரும்பே முன்னும் மிக சிவந்தனவே
யானே மருள்வென் தோழி பானாள்
இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும்
என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே
அருவி மா மலை தத்த
கருவி மா மழை சிலைதரும் குரலே – குறு 94

அறியாமையுடைய பிச்சியானது பெரிய குளிர்ந்த மாரிப்பருவத்து
முன்னரேயே அரும்புகள் மிகச் சிவந்தனவாய் வந்தன,
நான் மனம் மயங்கி நிற்கிறேன், தோழி! நடு இரவில்
இன்னும் தனியாகவே இருக்கிறவர் கேட்டால் மீண்டும்
என்ன ஆவாரோ? பிரிந்திருப்பவராகிய தலைவர்-
அருவிநீர் பெரிய மலையில் தத்திவீழ
கூட்டமான கரிய மேகங்கள் முழங்கும் ஓசையை-

2

கூழையும் குறு நெறி கொண்டன முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின
பெண் துணை சான்றனள் இவள் என பன் மாண்
கண் துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று-மன்னே நெஞ்சம் பெயர்த்தும்
அறியாமையின் செறியேன் யானே – அகம் 315/1-6

தலைமயிரும் குறுகிய நெறிப்பினைக் கொண்டன, முலைகளும்
உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழினுடன் மாறுபட்டன,
இவள் பெண் என்னுமியல்பினை அமைந்தனள் என்று பலமுறை
என் கண்களே துணையாகப் பார்த்து நேற்றும்
மிகவும் ஐயுற்றது என் நெஞ்சம், அதன்பின்னும்
அனது அறியாமையினால் யான் என் மகளைக் காவலுக்குள்வைக்காது ஒழிந்தேன்

மேல்


பெயர்தரு(தல்)

(வி) 1. மீண்டும் வரு(தல்), come again
2. திருப்பிக்கொடு(த்தல்), give back
3. வெளிப்படு, இடத்தைவிட்டு அகல், come out, leave a place

1

காமம் கடையின் காதலர் படர்ந்து
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி
ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடை
அழுவம் நின்ற அலர் வேய் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம்
பெயர்தர பெயர்தந்து ஆங்கு
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே – குறு 340

காதல் மிகும்போது காதலரை நினைத்துச் சென்று,
நாம் அவரிடத்தே வருந்தும்போது நம்மோடு ஆகி,
ஒரு பக்கமாகச் சேர்தல் இல்லாது, இரண்டு பக்கமுமாக,
கடற்கரைப் பரப்பில் நின்ற மலர்கள் நிறைந்த தாழை
கழிநீர் ஓடிய பக்கத்தே வளைந்து, பொங்கும் கடல்நீர்
மீண்டுவரும்போது தானும் மீண்டுநின்றாற்போல
வருந்தும் தோழி! தலைவர் இருந்த என் நெஞ்சம்.

திருந்து இழை அரிவை நின் நலம் உள்ளி
அரும் செயல் பொருள்_பிணி பெரும் திரு உறுக என
சொல்லாது பெயர்தந்தேனே – ஐங் 355/1-3

திருத்தமான அணிகலன்களை உடைய அரிவையே! உனது நலத்தை எண்ணி,
செயற்கரிய செயலாகிய பொருளீட்டலை, “பெரும் நலம் பெறுக” என வாழ்த்திவிட்டு
சொல்லாமற்கொள்ளாமல் திரும்பிவிட்டேன்

அளை மாறி பெயர்தருவாய் அறிதியோ – கலி 108/26

மோரினை விற்றுவிட்டு நீ திரும்பிவருவாய், உனக்குத்தெரியும் இல்லையா

2

சென்றுபடு விறல் கவின் உள்ளி என்றும்
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும்
தருநரும் உளரோ இ உலகத்தான் என – அகம் 75/14-16

சென்றொழிந்த மிக்க அழகினை நினைத்து என்றும்
இரங்குவார் ஆவரே அல்லது மீண்டும் எவரேனும்
அவ்வழகினைத் தருவார் உளராவரோ இவ்வுலகத்தே என்று

3

அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ம் தண் எருமை சுவல் படு முது போத்து
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி பொழுது பட
பைம் நிண வராஅல் குறைய பெயர்தந்து
குரூஉ கொடி பகன்றை சூடி மூதூர்
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் – அகம் 316/2-7

விளங்கும் ஆம்பல் மலரை மேய்ந்த நெறித்த கோட்டினையும்
மிக்க குளிர்ச்சியுற்ற முதுகினையுமுடைய முதிய எருமைக்கடா
மிக்க சேற்றின் குழம்பிலே கிடந்து இரவெல்லாம் துயின்று, ஞாயிறு தோன்றிய காலையில்
பசிய நிணத்தையுடைய வரால் மீன்கள் மிதிபட்டு அழிய வெளிப்பட்டு
வெள்ளிய பூக்களையுடைய பகன்றைக் கொடியினைச் சூடிக்கொண்டு பழமையான ஊரின்கண்
போரில்வென்றி எய்திய வீரர் வருமாறு போல புகும் ஊரினையுடைய நம் தலைவன்

மேல்


பெயர்தல்

(பெ) 1. திரும்பி வருதல், coming back, returning
2. திரும்பிச்செல்லுதல், going back, returning

1

அஞ்சுவரு மரபின் வெம் சுரம் இறந்தோர்
நோய் இலர் பெயர்தல் அறியின்
ஆழல மன்னோ தோழி என் கண்ணே – அகம் 375/16-18

அச்சம்வரும் இயல்பினையுடைய கொடிய சுரநெறியைக் கடந்து சென்ற நம் தலைவர்
தீங்கிலராய் மீண்டுவருதலை அறிவேனாயின்
அழமாட்டா தோழி என் கண்கள்

2

பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என்
நாடு இழந்ததனினும் நனி இன்னாது என – புறம் 165/10,11

பெருமை பெற்ற பரிசிலன் வாடினனாகத் திரும்பிச்செல்லுதல் என்
நாடு இழந்ததனினும் மிகைன்னாது என நினைத்து

மேல்


பெயர்ப்பு

(பெ) இடம்பெயரச் செய்தல், shifting, moving

இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை – கலி 134/10

பூமியே பிளப்பது போன்ற பெருந்துன்பம் மிகுகின்ற மனத்தைக் கலங்கவைக்கும் மாலைப் பொழுதில்

மேல்


பெயர்வு

(பெ) நீக்கம், separation, removal

பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே – அகம் 147/13,14

பிரிந்த தலைவரின் நீக்கத்திற்கு இரங்கியிருந்தும்
அதனைப் போக்கும் மருந்து பிறிதொன்று இல்லாமையால் வேறு செயலில்லேன் ஆயினன்

மேல்


பெயரல்

(வி.மு) 1. பிறழவேண்டாம், vary, change
2. திரும்பிச்செல்லமாட்டா, would not return

1

நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் – புறம் 3/14

நிலம் பிறழினும் நினது ஆணையாகிய சொல் பிறழாதொழியல் வேண்டும்

2

களிறு இன்று பெயரல பரிசிலர் கடும்பே – புறம் 205/14

களிறு இல்லாமல் திரும்பிச்செல்லா பரிசிலரது சுற்றம்

மேல்


பெயரன்

(பெ) 1. பெயரையுடையவன், One who bears a name
2. தந்தையின் பெயரைத் தாங்குபவன், பேரன், one who takes one’s father’s name, grandson

1

மே தக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் – கலி 81/35

சிறப்புடைய எம் தந்தையின் பெயர்கொண்டவனை நான் எடுத்துச் செல்கிறேன்,

2

நள்ளென் கங்குல் கள்வன் போல
அகன் துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே – நற் 40/10-12

நள்ளென்ற இரவில் கள்வன் போல,
அகன்ற துறையையுடைய தலைவனும் வந்தான்,
சிறந்தோனாகிய தன் தந்தையின் பெயரைத் தாங்குபவன் பிறந்ததினால்

மேல்


பெயரிய

1. (பெ.அ) பெயரைக்கொண்ட, that which bears the name
– 2. (வி.எ) பெயர்த்தெடுத்த, lifted.

நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை – திரு 18

நாவலின் பெயர்பெற்ற சாம்பூந்தமென்னும்பொன்னால் செய்த ஒளிரும் அணிகலன்களையும்

மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனி நீர் படுவின் பட்டினம் படரின் – சிறு 152,153

(நீல)மணி (போலும்)கழி (சூழ்ந்த)ஊர்களையுடையதும், மதிலின் பெயர்கொண்ட,
குளிர்ந்த நீர் மிக்க குளங்களையுடைத்தாகிய, (எயில்)பட்டினத்தே செல்வீராயின் –

நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து – நெடு 82

நாளின் பெயர் கொண்ட கோள்(உத்தரம்) நன்றாக வடிவமைக்கப்பட்ட சிறந்த (குறுக்குக்)கட்டையைக்கொண்டு

கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 114

கருவோடு பெயர்பெற்ற காட்சிக்கினிய நல்ல இல் (கர்ப்பக் கிருகம் – கருவறை) – (அதனுள்ளே)

பந்தர் பெயரிய பேர் இசை மூதூர் – பதி 67/2

பந்தல் என்ற பெயரைக் கொண்ட பெரிய புகழ்படைத்த முதிய ஊரைச் சேர்ந்த

கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து – பதி 88/2

விந்தை என்னும் கொற்றவையின் பெயரைக் கொண்ட விந்தாடவி என்ற காட்டோடு இருக்கும்
விந்திய மலை உயர்ந்து நிற்க

கேழல் திகழ்வர கோலமொடு பெயரிய
ஊழி ஒரு வினை உணர்த்தலின் – பரி 2/16,17

பன்றியின் சிறப்பான கோலத்தின் பெயரைக் கொண்ட
வராக கற்பம் என்னும் இந்த ஊழிக்காலம் உனது ஒரு திருவிளையாடலை உணர்த்துவதால்

புள்ளொடு பெயரிய பொருப்பு புடை திறந்த வேல் – பரி 21/9

கிரவுஞ்சம் என்னும் பறவையின் பெயர்கொண்ட மலையினைப் பிளந்த வேல்;

2

தோல் பெயரிய எறுழ் முன்பின் – புறம் 7/6

யானையையும் பெயர்த்த மிக்க வலியினையுமுடைய

மேல்


பெயல்

(பெ) 1. பொழிதல், பெய்தல், showering
2. மழை, rain
3. மேகம், cloud

1

பிடி கணம் சிதறும் பெயல் மழை தட கை – சிறு 124

பிடியானைத் திரளை(ப் பலர்க்கும்)வழங்கும் (ஓயாது)பெய்தலையுடைய மழை (போன்ற)பெரிய கையினையும்
உடையவனும்

2

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை – முல் 6

பெரிய மழையைப் பெய்த சிறு(பொழுதாகிய) துன்பமூட்டும் மாலைக் காலத்து

3

செய்_பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்-கொல்லோ தோழி தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி
நகுவது போல மின்னி
ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரலே – நற் 214/8-12

வருமானத்திற்காகச் சென்ற குறைகள் அற்ற நம் காதலர்
கேட்கமாட்டாரோ தோழி? தோளிலிருக்கும்
ஒளிரும் வளைகள் நெகிழ்ந்துபோகுமாறு செய்த கலங்கிய துன்பத்தை எள்ளி
நகையாடுவதுபோல மின்னி
ஆர்ப்பரிப்பது போன்ற இந்தக் கார்காலத்து மழையைப்பெய்யும் முகிலின் இடிக்குரலை –

மேல்


பெரிது

1. (வி.அ) 1. பெரிதும், greatly
2. அதிகமாக, மிகவும், intensively
– 2. (பெ) 1. அதிகமானது, உயர்வானது, something large, big, wide, great, eminent
2. நெடுங்காலம், long

1.1

விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 188

(வாசனைப்புகை முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும் மகிழ்ந்து,

1.2

வருந்துவள் பெரிது என அரும் தொழிற்கு அகலாது – ஐங் 499/3

வருந்துவாள் மிகவும் என்று அரிய போர்த்தொழிலுக்குச் செல்லாமல்

2.1

அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி
பகலும் வருதி – நற் 223/2,3

அன்பு பெரிதாக உடைமையினாலே இவளுக்குக் கருணைகாட்டல் வேண்டி
பகலிலும் வருகிறாய்;

2.2

வாழிய பெரிது என்று ஏத்தி – திரு 39

வாழ்வதாக, நெடுங்காலம்’, என்று வாழ்த்தி

மேல்


பெரிய

1. (பெ.அ) உரு, வடிவம், அளவு ஆகியவற்றில் அதிகமான, big, large, immense
– 2. (பெ) பெரிதானவை, something that is big, great, huge, immense, large

1

அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இரும் சுவல் வாளை பிறழும் ஊர – நற் 400/3,4

நெல்லறுப்போர் களத்தில் குவித்த நெற்கதிர்குவைக்கு அயலாக, பெரிய
கரிய பிடரியையுடைய வாளைமீன் துள்ளிப்பாயும் மருதநிலத்தலைவனே!

அளிய பெரிய கேண்மை நும் போல்
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் – நற் 345/6,7

கருணை செய்தலையுடைய பெரிய நட்பினையுடைய உம்மைப் போல,
நற்பண்புகளை எதிரேற்றுப் போற்றும் செம்மையான கொள்கையாரும்

2

பெரிய கற்று இசை விளக்கி – மது 767

பெரிய நூற்களைக் கற்று, (நின்)புகழைப் பலரறியச்செய்து,

சிறியிலை வேம்பின் பெரிய கொன்று – நற் 103/2

சிறிய இலையையுடைய வேப்பமரத்தின் பெரிய கிளைகளை முறித்துப்போட்டு

பெரிய அல்லவோ பெரியவர் நிலையே – நற் 266/9

மிகுந்த பெருமை உடையன அல்லவோ பெரிய குடிப்பிறந்தவர் இயல்புகள்?.

வைகறை 5
கடல் மீன் தந்து கானல் குவைஇ
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி
பெரிய மகிழும் துறைவன் – நற் 388/5-9

அதிகாலையில்
தாம் பிடித்த கடல் மீன்களைக் கொண்டுவந்து, கடற்கரைச் சோலையில் குவித்து,
உயர்ந்த பெரிய புன்னைமரத்தின் வரிவரியான நிழலில் தங்கியிருந்து
தேன் மணக்கும் தெளிந்த கள்ளைச் சுற்றத்தாரோடு நிரம்பக் குடித்து,
பெரிய அளவில் மகிழ்ச்சிகொள்ளும் துறையைச் சேர்ந்தவனாகிய காதலன்

தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு
அரியம் ஆகிய_காலை
பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/5-7

தொழுது காணும் பிறையைப் போல உமக்குத் தோன்றி, நாம் உமக்கு
அரியவளாய் இருந்த பொழுதில்
பெரிதான வருத்தத்தைப் பொறுத்துக்கொண்டிருந்தீரோ? வருந்துகிறேன் நான்.

அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை
குறிய ஆகும் துறைவனை
பெரிய கூறி யாய் அறிந்தனளே – குறு 248/5-7

அடப்பங்கொடி படர்ந்த மணற் குவியல்கள் பரவ, உயர்ந்த பனைமரம்
குட்டையாகிப் போகும் கடல் துறையையுடைய தலைவனைப்
உயர்வான புகழ்மொழிகள் கூறி அன்னை அவனைப் புரிந்துகொண்டாள் –

பெரிய கூறி நீப்பினும்
பொய் வலை படூஉம் பெண்டு தவ பலவே – ஐங் 283/4,5

பெற்றோர் வாய்மையுடைய உறுதிமொழிகள் பலவற்றைக் கூறி விலக்கினாலும்,
காதலரின் பொய்மொழிகளான வலையில் விழும் பெண்கள் மிகவும் அதிகமானோர்.

புரை_வயின் புரை_வயின் பெரிய நல்கி – பதி 15/37

உயர்ந்தோர்க்கெல்லாம் நிறையப் பொருள் கொடுத்து

பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசி – பதி 44/3,4

எவ்வளவு பெருமையுடையதாயினும், போரில் வெற்றியடைந்து பெற்றவைகளை,
மிகவும் அரியவை என்று எண்ணாமல், தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் வாரி வழங்கி,

சிறியிலை வேலம் பெரிய தோன்றும்
புன்_புலம் வித்தும் வன் கை வினைஞர் – பதி 58/14,15

சிறிய இலைகளைக் கொண்ட வேல மரங்கள் மிகுந்த எண்ணிக்கையில் இருக்கும்
புன்செய் நிலங்களை உழுது விதைக்கும் வலிமையான கைகளையுடைய உழவர்கள்

வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூ
பெரிய சூடிய கவர் கோல் கோவலர் – அகம் 264/3,4

வரிகளையுடைய வெண்காந்தளின் வளைந்த குலையிலுள்ள சிறந்த பூக்களை
மிகுந்த அளவில் சூடிக்கொண்ட கவர்த்த கோலினையுடைய ஆயர்கள்

சிறிய கள் பெரினே எமக்கு ஈயும் மன்னே
பெரிய கள் பெறினே
யாம் பாட தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே – புறம் 235/1-3

சிறிதளவு மதுவைப் பெறின் எங்களுக்கே தருவன்
பெரிய அளவினையுடைய மதுவைப் பெற்றானாயின்
அதனை யாம் உண்டு பாட எஞ்சியதைத் தான் விரும்பி நுகர்வான்.

அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின் – மது 394

(இவ்வாறு தடுத்தற்கு)அரியனவும், எண்ணிறந்தனவுமாகிய நால்வகைப் படையும் வந்து போகையினால்

சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய – புறம் 205/7

சிறியனவும் பெரியனவும் ஆகிய புழைகளைப் போக்கற விலக்கிய

மேல்


பெரியம்

(த.ப.வி.மு) (நாங்கள்)பெரியவர்கள் – தன்மை பன்மை, we are big people

விழுமியம் பெரியம் யாமே – புறம் 78/5

சிறப்புடையேம், படையால் பெரியேம் நாங்கள்

மேல்


பெரியள்

(பெ) பெரியவள், பெருமையுடையவள், great lady

ஆன்ற கற்பின் சான்ற பெரியள்
அம் மா அரிவையோ அல்லள் – அகம் 198/12,13

நிறைந்த கற்பினால் உயர்ந்த பெருமையுடையவளான
அழகிய மாமை நிறமுடைய பெண்ணோ அல்லள்

மேல்


பெரியன்

(பெ) 1. பெரியவன், a big person
2. ஒரு சங்ககாலச் சிற்றரசன், a chieftain of sangam period

1

அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய
இரு பெரு வேந்தர் பொரு_களத்து ஒழித்த
புன்னை விழுமம் போல – நற் 180/6-8

அன்னி என்பவன் பெரியவன்; அவனைக் காட்டிலும் சிறந்த திதியன் என்பவனும் ஆகிய
இரு பெரும் வேந்தர்கள் போரிட்டு அதனால் வெட்டிச்சாய்த்த
புன்னை மரத்தின் துயரமிக்க நிலையைப் போல

2.

பெரியன் என்பவன் சோழ நாட்டைச் சேர்ந்த குறுநில மன்னனாவான்.
இவன் பொறையாற்றுக் கிழான் நல் தேர்ப் பெரியன் எனப்படுகிறான்
அழுந்தூர்வேள் திதியன் என்பவனின் காவல் மரத்தை அன்னி வெட்டியபோது அவ்வன்னிக்கு
இப்பெரியன் துணை போனான். இவன் சிறந்த கொடையாளி. பொறையாறு என்பது இவனது ஊர்.
புறந்தை எனப்படும் அந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான்.
வேங்கட நாட்டில் வாழ்ந்த புலவர் கல்லாடனார் இவனைக் கண்டு பரிசில் வேண்டிப் பாடித் தன்
வறுமையைப் போக்கிக்கொண்டார்.

நறவு_மகிழ் இருக்கை நல் தேர் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன – நற் 131/7,8

நறவுண்டு மகிழும் அரச அமர்வையுடைய நல்ல தேரினைக்கொண்ட பெரியன் என்பானின்
தேன் மணக்கும் பொறையாறு என்ற ஊரைப் போன்ற

பாடுநர் தொடுத்த கைவண் கோமான்
பரி உடை நல் தேர் பெரியன் – அகம் 100/11,12

பாடிவருவோரை வளைத்துக்கொள்ளும் கைவண்மை வாய்ந்த கோமானாகிய
குதிரைகள் பூண்ட சிறந்த தேரினையுடைய பெரியன் என்பானது

மேல்


பெரியை

(மு.வி.மு) பெரியவன் – முன்னிலை, (you are) a great person

தாளும் தோளும் எருத்தொடு பெரியை
மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை – பரி 13/54,55

திருவடியும், தோளும், உன் பிடரியுடனே பெரியனவாகக் கொண்டிருக்கிறாய்;
உன் மார்பும், பின்புறமும் உன் மனத்தோடு மிக்க பருமையுடையனவாகக் கொண்டிருக்கிறாய்;

மேல்


பெரு

1. (வி) 1. பரு, பருமனாகு, become stout, large, grow thick
2. அதிகமாகு, மிகு, increase, become numerous, plenty
– 2. (பெ.அ) 1. பெரிய, big
2. அதிக அளவிலான, great, immense

1.1

பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/24

மழைநீரின் எழும் மொக்குகள் என்று கூறும்படியாக, பருமனாக நிற்கும் உன் இளமையான முலைகள்,

1.2

பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை – புறம் 177/14

செவ்வியையுடைய நிணம் மிகுத்த புதிய வெண்சோற்றுக் கட்டியை

2.1

நசையுநர் தடையா நன் பெரு வாயில் – பொரு 66

விரும்பி வந்தாரைத் தடுக்காத நல்ல பெரிய (கோபுர)வாயிலினுள்

2.2

பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள் – பெரும் 431,432

பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
மிகுந்த நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள்

மேல்


பெருநீர்

(பெ) கடல், sea

சிறு நனி வரைந்தனை கொண்மோ பெருநீர்
வலைவர் தந்த கொழு மீன் வல்சி
பறை தபு முது குருகு இருக்கும்
துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே – ஐங் 180

மிகக் குறுகிய காலத்தில் மணந்து உரியதாக்கிக்கொள்! கடலில்
வலைவீசும் மீனவர் கொண்டுவந்த மிகுதியான மீனைத் தனக்கு உணவாகக் கொள்ள
பறத்தல் இயலாத முதிய நாரை பார்த்துக்கொண்டிருக்கும்
துறையைப் பொருந்திய தொண்டியைப் போன்ற இவளது நல்ல அழகை!

மேல்


பெருவாய்மலர்

(பெ) இருவாட்சிப்பூ, Tuscan jasmine, Jasminum sambacflore manoraepleno;

சுரும்பு ஆர் சோலை பெரும் பெயர் கொல்லி
பெருவாய்மலரொடு பசும்பிடி மகிழ்ந்து – பதி 81/24,25

வண்டுகள் ஆரவாரிக்கும் சோலைகள் சூழ்ந்த பெரும் புகழையுடைய கொல்லி மலையில் உண்டாகிய
இருவாட்சிப் பூக்களோடு, பச்சிலையைத் தொடுத்து அணிந்து,

இருவாட்சிப்பூவை இருள்வாசி என்றும் சொல்வர்.
நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி – குறி 94
என்று குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் நள்ளிருள்நாறி இதுதான் என்பர்.

மேல்


பெருக்கம்

(பெ) 1. செழுமை, prosperity, opulence
2. வெள்ளம், flood

1

நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும்
அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின்
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே – பதி 24/15-17

நீர், நிலம், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய ஐந்தனையும்
அளந்து அவற்றின் எல்லையை அறிந்தாலும், உனது அறிவு, ஆற்றல் ஆகியவற்றை அளக்க முடியாது; உன்
செல்வம் மிக்க செழுமையை இனிதே கண்டறிந்தோம்;

2

உணர்த்த உணரா ஒள் இழை மாதரை
புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைந்து – பரி 7/36,37

ஊடலைத் தீர்ப்பதற்கு உணர்த்திக்கூறியும் உணராத ஒளிரும் இழையணிந்த பெண்களைச்
சேர்வதற்கான எழும் ஆடவரின் ஆசைப் பெருக்கினைப் போல வெள்ளம் பெருகி விரைய,

மேல்


பெருக்கு

1. (வி) அதிகரி, மிகுவி, increase, augment
– 2. (பெ) நீர்ப்பெருக்கு, வெள்ளம், flood

1

குளம் தொட்டு வளம் பெருக்கி – பட் 284

குளங்களைத் தோண்டி, செல்வத்தை மிகுத்து

2

காமர்
பெருக்கு அன்றோ வையை வரவு – பரி 6/69,70

அழகிய
நீர்ப்பெருக்கு அன்றோ இந்த வையையின் புதுப்புனல் வரவு”

மேல்


பெருகல்

(பெ) வளர்தல், அதிகமாதல், growing, increasing

தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் – புறம் 27/11

வளர்ந்ததொன்று பின் குறைதல் உண்டாதலும், குறைந்ததொன்று பின் வளர்தல் உண்டாதலும்

மேல்


பெருகு

(வி) 1. அளவு அல்லது எண்ணிக்கையில் மிகு, அதிகமாகு, increase, multiply
2. வளர்ச்சியடை, முன்னேற்றம்காண், improve, augment

1

நோயும் பெருகும் மாலையும் வந்தன்று – நற் 397/5

காதல்நோயும் அதிகமாகின்றது; மாலைக்காலமும் வந்துவிட்டது;

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
முட்டா சிறப்பின் பட்டினம் – பட் 216-218

மொழிகள் பல மிகுந்த குற்றமற்ற (பிற)தேசங்களிலே
(தத்தம்)நிலத்தைக் கைவிட்டுப்போந்த மக்கள் கூடி மகிழ்ந்து இருக்கும்,
குறைவுபடாத சிறப்புகள் கொண்ட – பட்டினம்

2

இரவல் மாக்கள் சிறுகுடி பெருக
உலகம் தங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை – பதி 59/7-9

இரந்துண்ணும் மக்கள் வாழும் ஊர்களில் வளம் சிறக்கும்படியாக
உலகத்து உயிர்களைத் தாங்குகின்ற, மேம்பட்ட கல்வியறிவையுடைய
வில்வீரர்களுக்குக் கவசம் போன்றவனே

மேல்


பெருங்கல்

(பெ) மலை, mountain

தென் குமரி வட_பெருங்கல் – மது 70
தென் குமரி வட_பெருங்கல் – புறம் 17/1

மேல்


பெருந்தகை

(பெ) 1. பெருமையுள்ளவன்(ள்), Noble minded person
2. பேரழகு, great beauty

1

பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் – நெடு 106,107

பெருமை பொருந்தின தலைமையினையுடைய மன்னனைத் தவிர
(மற்ற)ஆண்கள் கிட்டே(யும்)வராத கடும் காவலையுடைய மனைக்கட்டுக்களின்

விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது என்று – குறி 206,207

விருந்தினராக உண்டு மீந்துபோன உணவை, உயர்ந்த குணநலமுடைய பெண்ணே,
உன்னோடு (நான்)உண்பதும் உயர்ந்ததேயாம்”, என்று கூறி, அப்பொழுது

2

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்
பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும்
வருந்தினை – அகம் 59/1-3

குளிர்ந்த குளத்தில் நிறைந்த வண்டுகள் மொய்க்கும் இரட்டை மலர்கள் போன்ற
பெரிய அழகினை இழந்த கண்களையுடையவளாய்ப் பெரிதும்
வருந்துகின்றாய்

மேல்


பெருந்துறை

(பெ) பெரிய துறைமுகம், large seaport

கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை – அகம் 123/11

ஓடக்கோலும் மறையும் நீர்ப்பெருக்கையுடைய காவிரி கடலில் கலக்கும் பெரிய துறைமுகத்தில்

இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை
தனம் தரு நன் கலம் சிதைய தாக்கும்
சிறு வெள் இறவின் குப்பை அன்ன – அகம் 152/6-8

ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய கானலம் பெருந்துறை என்னும் பட்டினத்தே
பொன்னைக் கொண்டுவரும் நல்ல மரக்கலம் சிதையுமாறு தாக்குகின்ற
சிறிய வெள்ளிய இறாமீனின் தொகுதி போன்ற

குடாஅது
இரும் பொன் வாகை பெருந்துறை செருவில்
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய – அகம் 199/18-20

மேற்கின்கண்ணதாகிய
பெரிய பொன்னினையுடைய வாகைமரம் நிற்கும் பெருந்துறை என்னுமிடத்து நிகழ்ந்த போரில்
பொற்பூண் அணிந்த நன்னன் என்பான் போரிட்டு களத்தில் மடிய

மேல்


பெருநாள்

(பெ) திருநாள், விழாநாள், விழா, Festival; festive occasion;

உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை
அகல் இரு வானத்து குறைவில் ஏய்ப்ப
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி
முரண் பூ மலிந்த முது நீர் பொய்கை
குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர்
பெருநாள் அமையத்து பிணையினிர் கழி-மின் – பெரும் 291-296

துளி சொரிதலை ஒழிந்த, ஓங்கி உயர்ந்த பரந்த இடத்தையுடைத்தாகிய,
அகன்ற பெரிய வானத்திடத்தே தோன்றும் குறை வில்(லாகிய வானவில்)லை ஒப்ப
சாதிலிங்கம் (போன்ற)இதழையுடைய குவளைப் பூவோடே நீலப்பூவும் வளர்ந்து
(ஒன்றற்கொன்று நிறம்)மாறுபடும் (ஏனைப்)பூக்களும் மிக்க, நீண்டநாள் நீர்(இருக்கும்) பொய்கைகளில்,
பூப்பறிப்பார் உங்களுக்கிட்ட குவிதல் நெகிழ்ந்த பல பூக்களையும்,
விழாக்கோலம் (கொண்டாற் போல)சூடியவராய்ப் போவீராக –

கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும்
தண் கடல் நாடன் ஒண் பூ கோதை
பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ
விழைவு கொள் கம்பலை கடுப்ப – மது 523-526

வளைந்த பறையினையுடைய கூத்தரின் சுற்றம் சேர வாழ்த்தும்,
குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய
பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு
விரும்புதல் கொண்டு (எழுப்பும்)ஆரவாரத்தை ஒப்ப

மேல்


பெரும்பாண்

(பெ) யாழ் வாசிக்கும் பாணர் இன வகை, A division of PANar caste, who play the lute called yAzh

அவிர் அறல் வையை துறைதுறைதோறும்
பல் வேறு பூ திரள் தண்டலை சுற்றி
அழுந்துபட்டு இருந்த பெரும்பாண் இருக்கையும் – மது 340-342

விளங்குகின்ற அறலையுடைய வையையின் துறைகள்தோறும்
பலவாய் வேறுபட்ட பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள் சூழ்ந்த,
நெடுங்காலம் அடிப்பட்டிருந்த பெரும்பாணர்களின் குடியிருப்பினையும்

நெடு நா ஒண் மணி கடி மனை இரட்ட
குரை இலை போகிய விரவு மணல் பந்தர்
பெரும்பாண் காவல் பூண்டு என – நற் 40/1-3

நீண்ட நாவினைக்கொண்ட ஒள்ளிய மணி, காவலுள்ள மனையில் ஒலிக்க,
ஒலிக்கும் தென்னங்கீற்று வேய்ந்து, பரப்பிய மணலைக் கொண்ட பந்தலில்,
பெரும்பாணர்கள் காவலிருக்க,

மேல்


பெரும்பிறிது

(பெ) மரணம், death, as a great change

அரும் துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்_தலை
பெரும்பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும் – குறு 302/2,3

பொறுத்தற்கரிய பிரிவுத்துயரால் வருந்துவதற்கு ஆற்றலற்றுப்போனேன்; அதற்குமேலும்
இறந்துபோவதை அதைக் காட்டிலும் அஞ்சுகிறேன்;

மேல்


பெருமிதம்

(பெ) தருக்கு, செருக்கு, pride, arrogance

அச்சொடு தாக்கி பார் உற்று இயங்கிய
பண்ட சாகாட்டு ஆழ்ச்சி சொலிய
அரி மணல் ஞெமர கல் பக நடக்கும்
பெருமித பகட்டுக்கு துறையும் உண்டோ – புறம் 90/6-9

பாரத்து மிகுதியால் அச்சுமரட்தோடு பார் வந்து தாக்கி உற இருத்தலின் நிலத்தின்கண் குழிவான
பண்டத்தையுடைய சகடத்தினது ஆழ்ச்சியைப் போக்குவதற்கு
புனல் கொழிக்கப்பட்ட மணல் பரக்கவும் கற்கள் பிளக்கவும் நடக்கவல்ல
மிக்க மனச்செருக்கினையுடைய காளைகளுக்குப் போதற்கரிய துறையும் உண்டோ?

மேல்


பெருமொழி

(பெ) வீரவசனம், brave dialogue, words with overweening pride;

ஊரன்
எம் இல் பெருமொழி கூறி தம் இல்
கையும் காலும் தூக்க தூக்கும்
ஆடி பாவை போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே – குறு 8/2-6

தலைவன்,
எமது இல்லத்தில் பெருமையான மொழிகளைக் கூறிவிட்டு, தமது இல்லத்தில்
கையையும் காலையும் தூக்கத் தானும் தூக்கும்
கண்ணாடிப் பிம்பம் போல
விரும்பியவற்றைச் செய்வான் தன் மகனுடைய தாய்க்கே

மேல்


பெருவிறல்

(பெ) மிகுந்த வலிமை, great strength or power,
அன்மொழித்தொகையாக, மிகுந்த வலிமையுள்ளவரைக் குறிக்கும்.
person with great strength or power

தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிறல் தேரே – நற் 181/11,12

மாலை அணிந்த புரவி, பசுமையான பயிர்களை மிதித்து அழிக்க,
வந்தது தலைவனது தேர்,

அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்றும் இலனே – புறம் 313/1,2

வழிகள் பல பொருந்திய நாட்டையுடையவனாகிய பெரிய வலிமை மிக்க தலைவன்
கையிலே பொருள் யாதும் உடையன் அல்லன்.

மேல்


பெற்றத்தார்

(பெ) ஆயர், இடையர், cowherds

பெற்றத்தார் கவ்வை எடுப்ப அது பெரிது
உற்றீயாள் ஆயர்_மகள் – கலி 104/67,68

இனி இந்த ஆயர்மகளிர் தாழ்வாகப் பேசினால், அதனைப் பெரிதாக
எடுத்துக்கொள்ளமாட்டாள் இந்த ஆயர்மகள்;

மேல்


பெற்றி

(பெ) நிகழ்ச்சி, event, occurrence

முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல் என கூவுவேன்-கொல்
அலமரல் அசை வளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே – குறு 28

தலையைப் பிடித்து முட்டுவேனோ! கையால் தாக்குவேனோ!
என்ன செய்வதென்று அறியேன்! நானும் ஏதாவது சாக்குவைத்து
ஆவென்றும் ஒல்லென்றும் உரக்கக் கூவுவேனோ!
சுழன்று வீசும் வாடைக்காற்று உடலை வருத்த என்னை
வருத்தும் காமநோயை அறியாது இனிதாக உறங்கும் இந்த ஊரை.

மேல்