கூ – முதல் சொற்கள்

கூகை

(பெ) ஆந்தையில் ஒரு வகை, male of barn owl (tyto alba)

1.

இது குடுமியை உடையது

குடுமி கூகை குராலொடு முரல – மது 170

2.

வளைந்த வாயை உடையது. பகலிலும் ஒலியெழுப்பும்.

வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 268

3.

ஊரின் வெளிப்புறத்தில் உள்ள மரப்பொந்துகளில் வசிக்கும். ஓயாமல் ஒலியெழுப்பிக்கொண்டிருக்கும்.

எம் ஊர் வாயில் உண்துறை தடைஇய
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர்
வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை – நற் 83/4,5

எமது ஊரின் நுழைவாயிலில் உள்ள ஊருணியின் துறையில், பருத்த
தெய்வம் வீற்றிருக்கும் முதிய மரத்தில் இருப்பதனால் இவ்வூரில் என்னுடன் வசித்துப் பழகிய
தேயாத வளைந்த அலகினையும், தெளிந்த கண்பார்வையையும், கூர்மையான நகங்களையும் கொண்ட,
ஓயாது ஒலிக்கும் வாயினால் பிறரை வருத்தும், வலிமை மிகுந்த கூகையே!

4.

இரவு நேரத்தில் ஊருக்குள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரும்.

மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில்
கூகை சேவல் குராலோடு ஏறி
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும்
அணங்கு கால்கிளரும் மயங்கு இருள் நடுநாள் – நற் 319/3-6

மணல் மிகுந்த பழமையான ஊரின் அகன்ற நெடிய தெருவில்
ஆண்கூகையானது தன் பெடையுடன் சென்று
நடமாட்டமில்லாத பெரிய நாற்சந்தியில் அச்சம்தோன்றக் குழறுகின்ற ஒலியை எழுப்பும்
பேய்களும் நடமாடித்திரியும் தடுமாறவைக்கும் இருளைக்கொண்ட நள்ளிரவில்

5.

ஊரை ஒட்டியுள்ள குன்றுகளில் வாழும்.

குன்ற கூகை குழறினும் முன்றில்
பலவின் இரும் சினை கலை பாய்ந்து உகளினும்
அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் – குறு 153/1-3

குன்றிலுள்ள பேராந்தை குழறுவதுபோல் ஒலித்தாலும், முற்றத்திலுள்ள
பலாவின் பெரிய கிளையில் ஆண்குரங்கு தாவித் துள்ளினாலும்,
முன்பு அஞ்சும், இரங்கற்குரியது என் நெஞ்சு

6.

பாழிடங்களில் குடியிருக்கும்.

கூகை கோழி வாகை பறந்தலை – குறு 393/3

கூகைகளாகிய கோழிகளையுடைய வாகை என்னும் பாழ்வெளியில்

7.

கழன்றுவிழுவது போன்ற கண்களை உடையது.

கழல் கண் கூகை குழறு குரல் பாணி – பதி 22/36

பிதுங்கியது போன்ற கண்களையுடைய கூகைகள் குழறுகின்ற குரலின் தாளத்துக்கேற்ப

8.

பஞ்சுப்பிசிர் போன்ற மென்மையான தலையை உடையது.

துய் தலை கூகை – பதி 44/18

பஞ்சுபோன்ற கொண்டையையுடைய ஆண்கூகை

9.

இரவில் வீட்டு முற்றத்தில் திரியும் எலிகளைப் பிடித்துத் தின்னும்.
இது ஒலி எழுப்பினால் அழிவு உண்டாகும் என்ற நம்பிக்கை உண்டு.

இல் எலி வல்சி வல் வாய் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதக குழறும் – அகம் 122/13,14

வீட்டிலுள்ள எலிகளை இரையாகக் கொண்ட வலிய வாயையினை உடைய கூகை
பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவு உண்டாகக் குழறும்

10.

வயதான மரங்களிலுள்ள பொந்துகளுக்குள்ளிருந்து கூவும்.

முதுமரப் பொத்தில் கதுமென இயம்பும்
கூகை கோழி – புறம் 364/11,12

முதிய மரப்பொந்துகளிலிருந்து கதுமெனக் கூவும்
கூகைக் கோழி

11.

இதன் குரல் அழுவதுபோல் இருக்கும்.

அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் – பட் 258

12.

கூகை என்பது ஆணுக்குப் பெயர். இதனுடைய பேடை குரால் எனப்டும்.

கூகை சேவல் குராலோடு ஏறி
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/4,5

ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை என்பன தமிழ்நாட்டு ஆந்தை வகைகள்.

பார்க்க : ஆண்டலை
ஊமன்
குடிஞை
குரால்
மேல்


கூட்டுணவு

(பெ) கூட்டாஞ்சோறு, ஊரில் பலர் கூடி ஒன்றாகச் சமைத்து உண்பது

வலி கூட்டுணவின் வாள் குடி பிறந்த
புலி போத்து அன்ன புல் அணல் காளை – பெரும் 137,138

(தமது)வலிமையால் கொண்ட கூட்டாஞ்சோற்றை உடைய, வாள்(தொழிலே செய்யும்) குடியில் பிறந்த,
புலியின் போத்தை ஒத்

நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அரும் சுரம் – பெரும் 115-117

நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களைப் (வேறு)போக்கிடம் இல்லாதவாறு வளைத்து(ப் பிடித்து), 115
கடுமையான கானவர் (அக்)காட்டில் (கூட்டாஞ்சோற்றைக்)கூடியுண்ணும்
அரிய வழி

மேல்


கூடல்

(பெ) 1. மதுரை நகரம், the city of Madurai
2. முகத்துவாரம், mouth of a river, estuary
3. நதிகள் ஒன்றோடொன்று கூடும் இடம், Confluence of rivers
4. கைகூடிவருதல், ஆகிவருதல், materialize, come to fruition
5. கூடல்விழா, festivel of koodal

1.

மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல்
நாள்_அங்காடி நனம் தலை கம்பலை – மது 429,430

மாடத்தால் விளக்கமுற்ற மிக்க புகழையுடைய மதுரையில்
நாளங்காடியையுடைய அகன்ற இடத்தில் (எழுந்த)பெரிய ஆரவாரமும்

2.

மலி ஓதத்து ஒலி கூடல்
தீது நீங்க கடல் ஆடியும் – பட் 98,99

மிகுந்த அலைஆரவாரம் ஒலிக்கும் புகார்முகத்தில்,
தீவினை போகக் கடலாடியும்

3.

செம் குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறை
காவிரி அன்றியும் பூ விரி புனல் ஒரு
மூன்று உடன் கூடிய கூடல் அனையை – பதி 50/5-7

நேர் கிழக்காக ஓடும் கலங்கலான நிறைந்த வெள்ளத்தையுடைய,
காவிரியோடு கூட, பூக்கள் பரந்த வெள்ளத்தையுடைய ஆறுகள்
மூன்றும் ஒன்று கூடும் முக்கூடல் போன்றவன் நீ!
– மூன்றுடன் கூடிய கூடலைப் பழைய உரைகாரர் “அக் காவிரி தானும், ஆன் பொருநையும், குடவனாறும் என
இம் மூன்றும்சேரக்கூடிய கூட்டம்” என்பர்.- ஔ.சு.து.விளக்கம்

4.

ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
நின் நாடு உள்ளுவர் பரிசிலர் – புறம் 38/16,17

அவ்விண்ணுலகத்து நுகரும் நுகர்ச்சி இவ்விடத்தும் கைகூடுவதால்
நின் நாட்டை நினைப்பர் பரிசிலர்.

5.

கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல் – கலி 27/11,12

அணிகளால் அழகுபெற்ற மகளிர் கண்ணுக்கு இனிதாய்த் தோன்றி மகிழ்ச்சியூட்ட,
நாடே பொலிவுபெறுகின்ற, புகழ்ந்து முடியாத கூடல்விழாவையும் அவர் நினைத்துப்பாராரோ?
– மா.இராச.உரை.

மேல்

கூதளம்

(பெ) ஒரு வகைக் கொடி, கூதாளி, Convolvulus, Ipomea

1.

இது கொடி வகையைச் சேர்ந்தது

கூதள மூது இலை கொடி நிரை தூங்க – அகம் 255/14

கூதாளியின் முதிய இலைகளையுடைய கொடிகளின் கூட்டத்தில் கிடந்து

2.

குளிர்காலத்தில் மலரும்.

கூதிர் கூதளத்து அலரி நாறும் – நற் 244/2

கூதிர்காலத்துக் கூதளத்தின் பூக்களுடைய மணத்தைக் கொண்ட,

3.

ஆண்கள் மாலையாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர்.

குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன் – நற் 119/8,9

காட்டு மல்லிகையுடனே
கூதளத்து மலரையும் நெருக்கமாய்ச் சேர்த்துக்கட்டிய தலைமாலையை உடையவன்

4.

மலையகத்து மக்கள் காட்டு மல்லிகையோடு இதனையும் வீட்டில் வளர்ப்பர்

அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலை
————-
கூதளம் கவினிய குளவி முன்றில் – புறம் 168/1-12

அருவி ஒலிக்கும் மூங்கில் நிறைந்த அகன்ற இடத்தில்
————-
கூதாளி கவின் பெற்ற மலை மல்லிகை நாறும் முற்றத்தில்

5.

இதில் வெண்கூதாளம் என்று ஒரு வகையும் உண்டு.

பைம் புதல் நளி சினை குருகு இருந்தன்ன
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக – அகம் 178/8-10

பசிய புதரிலுள்ள செறிந்த கிளைகளில் வெள்ளையான நாரை இருந்ததைப் போல
வளம் பொருந்திய முகை விரிந்த வெள்ளைக் கூதாளத்தின்

மேல்


கூதிர்

(பெ) குளிர் காலம், ஐப்பசி, கார்த்திகை மாதங்கள், cold season

குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள் – நெடு 12

மலையையும் குளிர்விப்பது போன்ற கூதிர்க்காலத்தின் (ஒரு)நண்பகலில்

விரை பெயல்
அரும் பனி அளைஇய கூதிர்
பெரும் தண் வாடையின் முந்து வந்தனனே – ஐங் 252/3-5

வீசியடிக்கும் மழையையும்
பொறுத்தற்கரிய குளிரையும் கலந்து, கூதிர்காலத்தின்
பெரிதான குளிர்ந்த வாடைக் காற்று வருவதற்கு முன்னர் திரும்பி வந்துவிட்டான்

மேல்


கூந்தல்

(பெ) 1. பெண்கள் தலைமயிர், Long, flowing tresses of a woman
2. குதிரை, horse
3. கேசி என்னும் அசுரன், An Asura with the name kEsi slain by Lord Krishna
4. குதிரையின் பிடரி மயிர், horse’s mane

1.

அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல் – பொரு 25

(ஆற்றின்)அறல் போலும் கூந்தலினையும், பிறை போல் அழகிய நுதலினையும்,

2,3

கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய் நின் புகழ் உருவின கை – பரி 3/31,32

கூந்தல்மா என்ற குதிரை வடிவத்தோடு வந்த கேசி என்பவனின்
எரிகின்ற சினத்தைக் கொன்றவனே! உன் புகழைப் போன்றன உன் கைகள்;

4.

மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை – கலி 103/53

தன்னை விரும்பாத கஞ்சன் முதலானோர் கட்டவிழ்த்துவிட்ட கழுத்து மயிரினைக் கொண்ட குதிரையை

மேல்


கூம்பு

1. (வி) 1. குவி, fold, close, shut, as a flower
2. ஊக்கம் குன்று, lose courage, zeal, or enthusiasm
– 2. (பெ) பாய்மரம், mast

1.1

நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக – நற் 187/1

நெய்தல் மலர்கள் குவிந்துபோக, நிழல்கள் கிழக்குத் திசையில் நீண்டுவிழ,

1.2

வடவர் வாட குடவர் கூம்ப
தென்னவன் திறல் கெட சீறி – பட் 276,277

வடநாட்டவர் களையிழக்க, குடநாட்டவர் (மனவெழுச்சி)குன்றிப்போக,
பாண்டியன் வலியழிய, சினங்கொண்டு,

2.

பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை
தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும் – நற் 258/8,9

பசிய இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை,
அசைவாடிக்கொண்டிருக்கும் தோணியின் பாய்மரத்தில் சென்றுதங்கும்

தூங்கு நாவாய் துவன்று இருக்கை
மிசை கூம்பின் நசை கொடியும் – பட் 174,175

அசைகின்ற (நெருக்கமாய் நின்று காத்திருக்கும்)மரக்கலங்களின் நெருக்கமான இருப்பினில்,
(அவற்றின்)மேல் (நட்ட)பாய்மரத்தின் (மேலெடுத்த)விருப்பம் தரும் கொடிகளும்

கூம்பொடு
மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது – புறம் 30/11,12

கூம்புடனே
மேற் பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல்
அதன் மேற்பாரத்தையும் பறியாமல்

மேல்


கூர்

1. (வி) 1. மிகு, be abundant, be excessive
2. உறு, அடை, பெறு, experience, get
3. குன்னு, contract with cold
– 2. (பெ.அ) மிகுதியான, excessive, intense
– 3. (பெ) கூர்மை, sharpness
– 4. (து.வி) (கைதுசெய் போன்று) பெயரை வினையாக்கும் உருபு, verbalizer

1.1

துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப – சிறு 39

(தன்னை)வெறுத்தல் மிகுகின்ற வருத்தத்தோடு கூடின வறுமை உன்னைக் கொண்டு போகையால்

நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து – மலை 289

பார்த்தாலே நடுங்கும் பயம் மிக்க மலைச்சரிவுகளில்

1.2

புலியொடு பொருத புண் கூர் யானை – நற் 65/5

புலியோடு போருடற்றி உடம்பெங்கும் புண்ணுற்று வருகின்ற யானை
– ஔ.சு.து.உரை

1.3

மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9

விலங்குகள் மேய்தலை மறந்துபோக, குரங்குகள் (குளிரால்)குன்னிப்போக

2.

கொழு நிண தடியொடு கூர் நறா பெறுகுவிர் – பெரும் 345

கொழுவிய நிணத்தையுடைய தசையோடு களிப்பு மிக்க கள்ளைப் பெறுவீர்
கூர் நறா – களிப்பு மிக்க கள், “கூர்ப்பும் கழிப்பும் உள்ளது சிறத்தல் – தொல்.உரி-16) – பொ.வே.சோ விளக்கம்

இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 302

பெரிய மூங்கிலின் பசிய புதரினை மிக்க நெருப்பு சுட்டுவதக்க

3.

குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் – திரு 52

குருதியை அளைந்த கூர்மையுள்ள உகிரினையுடைய கொடிய விரலால்

4.

எக்கர் ஞாழல் இறங்கு இணர் படு சினை
புள் இறை கூரும் துறைவனை
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே – ஐங் 142

மணல்மேட்டிலுள்ள தாழ்வான பூங்கொத்துகள் மலர்ந்த கிளையினில்
பறவைகள் வந்து நெடும்பொழுது தங்கியிருக்கும் துறையைச் சேர்ந்தவனை
நினைத்துப்பார்க்கமாட்டேன் தோழி! உறங்கிப்போகட்டும் என் கண்கள்
– இறைகூர்தல் – ஒரு சொல்லாய் இறுத்தல் என்னும் பொருளது. ஔ.சு.து.விளக்கம்
– இறை என்பதற்குத் தங்குதல் என்று பொருள் தருகிறது தமிழ்ப்பேரகராதி (Tamil Lexicon).
– இறை – தங்கல் Abiding, halting, tarrying;
– எனவே தங்கல் என்ற பெயர்ச்சொல்லை தங்கு, தங்கியிரு என்று வினையாக ஆக்குதற்கு ’கூர்’
– பயன்படுகிறது என்று கொள்ளலாம் – ’கைதுசெய், அடக்கம்செய்’ போன்று.
– இதைப் போலவே ஏனைய இடங்களும் உண்டு.

தெறல் மறவர் இறைகூர்தலின்
பொறை மலிந்து நிலன் நெளிய – புறம் 345/5,6

– ஈர் குழாத்தொடு இறைகூர்ந்த
பேஎன் பகை என ஒன்று என்கோ – புறம் 136/4,5


– புள் இறைகூரும் மெல்லம்புலம்ப – அகம் 10/4

– இங்கே புறம் 345-க்கு உரை கூறிய ஔ.சு.து.அவர்கள், ”இறுத்தல் இறை என வந்தது. இறைகூர்தல்
– என்ற தொடர் ஒரு சொல்லாய்த் தங்குதல் என்னும் பொருள் குறித்து நின்றது” என்பார்.
– ஆனால் அகராதிகள் ‘கூர்’ என்பதர்கு இப்பொருள் தரவில்லை. இது ஆய்வுக்குரியது.

மேல்


கூரல்

(பெ) கூம்பிய நிலை, folded state (as petals of a flower)

மாரி கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் – நற் 100/2,3

கார்காலத்துக் கொக்கின் கூம்பின நிலையைப் போன்று
ஆழமான நீரில் முளைத்த ஆம்பல் பூவையுடைய குளிர்ந்த துறையையுடைய ஊரன்

மேல்


கூலம்

(பெ) நெல், புல், வரகு தினை, சாமை, இறுங்கு, துவரை, இராகி, எள்ளு கொள்ளு,
பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை; நெல் முதலிய
பதினெட்டு வகைப் பண்டம், grains of 18 kinds

பிரசம் தூங்க பெரும் பழம் துணர
வரை வெள் அருவி மாலையின் இழிதர
கூலம் எல்லாம் புலம் புக – நற் 93/1-3

தேனடைகள் தொங்க, பெரிய பழங்கள் குலைகுலையாய்ப் பழுக்க,
மலையிலுள்ள வெண்மையான அருவி மாலை போல இறங்கிவர,
பயிர்மணிகள் எல்லாம் நிலங்களில் விதைக்கப்பெற

மேல்


கூலி

(பெ) பரிசில், ஊதியம், wages, pay

நல்குநர் ஒழித்த கூலி சில் பதம் – அகம் 301/4

கொடையார் எஞ்சாது கொடுத்த பரிசிலாகிய சிறிய உணவினை

மேல்


கூவல்

(பெ) கிணறு, குழி, well, pit

வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி – நற் 240/6,7

வெயிலால் வெப்பமுற்ற பரல் மிக்க பள்ளத்தின் ஒருபக்கத்தில்
குந்தாலியால் குழிவு ஏற்படுத்திய கிணற்றை அடைந்து

மேல்


கூவியர்

(பெ) அப்ப வாணிகர், pancake selles

பாசிலை குருகின் புன் புற வரி பூ
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் – பெரும் 376-378

பசிய இலையினையும் உடைய குருக்கத்தியின் புற்கென்ற புறத்தினையும் வரிகளையும் உடைய பூக்கள்,
கரிய வட்டிலில் அப்ப வாணிகர் பாகுடன் பிடித்த
நூல் போலச் சூழ்ந்துகிடக்கின்ற அப்பம் பாலிலே கிடந்தவை போல்,

மேல்


கூவிரம்

(பெ) ஒரு மலை மரம், பூ, Crataeva religiosa

எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம் – குறி 66

மேல்


கூவிளம்

(பெ) வில்வம், bael, Aegle marmelos

கூவிளம் கண்ணி கொடும் பூண் எழினியும் – புறம் 158/9

மேல்


கூவை

(பெ) 1. ஒரு செடி – அதன் இலை, கிழங்கு, East Indian arrowroot, Curcuma angustifolia
2. கூட்டம், Crowd, horde, gathering

1.

கூவை துற்ற நால் கால் பந்தர் – புறம் 29/19

கூவை இலையால் வேயப்பட்ட நாங்கு காலையுடைய பந்தராகிய

கோழ் ஊஉன் குறை கொழு வல்சி
புலவு வில் பொலி கூவை – மது 141,142

கொழுத்த ஊனையுடைய இறைச்சித்துண்டு கலந்த கொழுமையான சோற்றினையும்,
புலால் (நாறும்)வில்லையும், பொலிவுடைய கூவைக்கிழங்கையும்,

நூறொடு குழீஇயின கூவை – மலை 137

சுண்ணாம்பின் தன்மையில் (முற்றித்)திரண்டன, கூவைக்கிழங்கு

2.

கொடு வில் கூளியர் கூவை காணின் – மலை 422

கொடிய வில்லினையும் உடைய (காட்டுப்படையான)விற்படையினரின் கூட்டத்தைக் கண்டால்

மேல்


கூழை

(பெ) 1. மகளிர் கூந்தல், Woman’s hair;
2. குட்டையானது, that which is short
3. படையின் பின் வரிசை, rear of an army

1.

வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின் – நற் 23/2

வாரி முடித்த கூந்தலையுடையவள் தோழியரோடு ஆடியதால்

2.

உச்சி கட்டிய கூழை ஆவின் – நற் 109/8

உச்சிப்பக்கமாகக் கயிற்றால் கட்டப்பட்ட குள்ளப்பசுவின்

3.

யாவிர் ஆயினும் கூழை தார் கொண்டு
யாம் பொருதும் என்றல் ஓம்புமின் – புறம் 88/1,2

யாராயிருந்தாலும், பின்படையையும், முன்படையையும் கொண்டு
யாம் அவனோடு போரிடுவோம் என்று சொல்லவேண்டாம்.

மேல்


கூளி

(பெ) பேய், demon

கூளி சுற்றம் குழீஇ இருந்து ஆங்கு – அகம் 233/10

பேய்ச் சுற்றங்கள் கூடியிருந்தாற் போல

மேல்


கூளியர்

(பெ) 1. ஏவல்செய்வோர், attendants
2. வேட்டுவர், hunters
3. வழிப்பறி செய்வோர், highway robbers

1.

வேறு பல் உருவின் குறும் பல் கூளியர்
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 282,283

வேறு வேறாகிய பல வடிவினையுடைய குறிய பலராகிய பணியாளர்,
விழாவெடுத்த களத்தின் பொலிவுபெறத் தோன்றி,

2.

காய் சின முன்பின் கடுங்கண் கூளியர்
ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும் – மது 691,692

எரிகின்ற சினத்தையுடைத்தாகிய வலியினையும் தறுகண்மையையும் உடைய வேட்டுவர்
(பகைவரின்)ஊரைச் சுடுகின்ற விளக்கில் கொண்டுவந்த பசுத்திரளும்,

3.

நின்னது தா என நிலை தளர
மரம் பிறங்கிய நளிச் சிலம்பில்
குரங்கு அன்ன புன் குறும் கூளியர்
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ – புறம் 136/11-14

உன் கைப்பொருளைத் தா என்று சொல்லி எம் நிலைகள் தளரும்படி
மரங்கள் செறிந்த குளிர்ந்த மலையில்
குரங்கு போல் பறித்துக்கொள்ளும் இயல்பையுடைய புல்லிய குறிய வழிப்பறிக் கள்வர்கள்
பரந்து வந்து அலைக்கும் பகையை ஒருபகை என்பேனோ

மேல்


கூற்றம்

(பெ) உயிரை உடலினின்றும் எடுப்பவர், யமன், one who separates soul from body. Yama

கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர் – குறு 283/5

கூற்றுவனைப் போன்ற கொலைத்தொழிலையுடைய வேலைக் கொண்ட மறவர்

மேல்


கூற்று

(பெ) கூற்றம், பார்க்க : கூற்றம்

கூற்று அடூஉ நின்ற யாக்கை போல – பதி 13/11

கூற்றுவனால் கொள்ளப்பட்டு நிற்கும் உடம்பினைப் போல

மேல்


கூன்

(பெ) 1. வளைவு, bend, curve
2. கூனன், முதுகு வளைந்தவன், person with the back bent forward

1.

வேனில் பாதிரி கூன் மலர் அன்ன – குறு 147/1

வேனில்காலத்துப் பாதிரியின் வளைந்த மலரைப் போன்று

2.

கூனும் குறளும் ஊமும் செவிடும் – புறம் 28/2

கூனும், குறுகிய தோற்றமும், ஊமையும், செவிடும்

மேல்


கூனல்

(பெ) வளைவாக இருத்தல், the state of being bent

கூனல் எண்கின் குறு நடை தொழுதி – அகம் 112/1

வளைவான முதுகினையும் குறுகக்குறுக நடக்கும் நடையினையும் உடைய கரடிக்கூட்டம்

மேல்


கூனி

(பெ) வளைவாக இருப்பது, that which is bent

குலை முதிர் வாழை கூனி வெண் பழம் – பெரும் 359

குலையில் முதிர்ந்த வாழையின் வளைந்த வெளுத்த பழத்தையும்,