திருவருட்பா – முதல் திருமுறை*திருவருட்பா 
*வள்ளலார் பாடிய பாடல்கள் - பாலகிருஷ்ணபிள்ளை பதிப்பு
&1 முதல் திருமுறை

@1 திருவடிப் புகழ்ச்சி

#1
இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று
என்று வருமோ அறியேன் எம் கோவே துன்று மல
வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்.

#2
பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்
பரசுகம் தன்மயம் சச்சிதானந்தம் மெய்ப் பரம ஏகாந்த நிலயம்
பரம ஞானம் பரம சத்துவ மகத்துவம் பரம கைவல்ய நிமலம்
பரம தத்துவம் நிர்_அதிசயம் நிட்களம் பூத பௌதிகாதார நிபுணம்
பவபந்த நிக்ரகம் வினோத சகளம் சிற்பரம் பரானந்த சொருபம்		5
பரிசயாதீதம் சுயம் சதோதயம் வரம் பரமார்த்தமுக்த மௌனம்
படனவேதாந்தாந்தம் ஆகமாந்தாந்தம் நிருபாதிகம் பரம சாந்தம்
பரநாத தத்துவாந்தம் சகச தரிசனம் பகிரங்கம் அந்தரங்கம்
பரவியோமம் பரம ஜோதி மயம் விபுலம் பரம்பரம் அனந்தம் அசலம்
பரம லோகாதிக்கம் நித்திய சாம்பிராச்சியம் பரபதம் பரம சூக்ஷ்மம்		10
பராபரம் அநாமயம் நிராதரம் அகோசரம் பரம தந்திரம் விசித்ரம்
பராமுதம் நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோதயம் அக்ஷயம்
பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம் பதித்துவ பரோபரீணம்
பஞ்ச_கிர்த்திய சுத்தகர்த்தத்துவம் தற்பரம் சிதம்பர விலாசம்
பகர் சுபாவம் புனிதம் அதுலம் அதுலிதம் அம்பராம்பர நிராலம்பனம்		15
பரவு சாக்ஷாத்கார நிரவயவம் கற்பனாதீதம் நிருவிகாரம்
பரதுரிய அநுபவம் குருதுரியபதம் அம்பகம் பகாதீத விமலம்
பரம கருணாம்பரம் தற்பதம் கனசொற்பதாதீதம் இன்ப வடிவம்
பரோக்ஷ ஞானாதீதம் அபரோக்ஷ ஞானானுபவ விலாசப் பிரகாசம்
பாவனாதீதம் குணாதீதம் உபசாந்தபதம் மகா மௌன ரூபம்		20
பரம போதம் போதரகித சகிதம் சம்பவாதீதம் அப்பிரமேயம்
பகரனந்தானந்தம் அமலம் உசிதம் சிற்பதம் சதானந்த சாரம்
பரையாதி கிரணாங்க சாங்க சௌபாங்க விம்பாகாரம் நிருவிகற்பம்
பரசுகாரம்பம் பரம்பிரம வித்தம் பரானந்த புரண போகம்
பரிமிதாதீதம் பரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம்			25
பரமாற்புதம் பரமசேதனம் பசுபாச பாவனம் பரம மோக்ஷம்
பரமானுகுண நவாதீதம் சிதாகாச பாஸ்கரம் பரம போகம்
பரிபாக வேதன வரோ தயானந்த பதபாலனம் பரம யோகம்
பரம சாத்திய அதீதானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம்
பரகேவலாத்து விதானந்தானுப சத்த பாதாக்ர சுத்த பலிதம்		30
பரம சுத்தாத்விதானந்த அனுபூதிகம் பரிபூத சிற்குணாந்தம்
பரம சித்தாந்த நிகமாந்த சமரச சுத்த பரமானுபவ விலாசம்
தரம் மிகும் சர்வ சாதிட்டான சத்தியம் சர்வ ஆனந்த போகம்
சார்ந்த சர்வாதார சர்வ மங்கள சர்வ சத்திதரம் என்ற அளவு_இலாச்
சகுண நிர்க்குணம் உறு சலக்ஷண இலக்ஷணத் தன்மை பலவாக நாடித்	35
தம்மை நிகர் மறை எலாம் இன்னும் அளவிட நின்ற சங்கரன் அநாதி ஆதி
சாமகீதப் பிரியன் மணி_கண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
சயசய எனும் தொண்டர் இதய_மலர் மேவிய சடா_மகுடன் மதன தகனன்
சந்திரசேகரன் இடப_வாகனன் கங்காதரன் சூல_பாணி இறைவன்
தனி முதல் உமாபதி புராந்தகன் பசுபதி சயம்பு மா தேவன் அமலன்		40
தாண்டவன் தலை மாலை பூண்டவன் தொழும் அன்பர்-தங்களுக்கு அருளாண்டவன்
தன்னிகரில் சித்து எலாம் வல்லவன் வட திசைச் சைலம் எனும் ஒரு வில்லவன்
தக்ஷிணா_மூர்த்தி அருள்_மூர்த்தி புண்ணிய_மூர்த்தி தகும் அட்ட_மூர்த்தி ஆனோன்
தலைமை பெறு கண_நாயகன் குழகன் அழகன் மெய்ச்சாமி நம் தேவதேவன்
சம்பு வேதண்டன் பிறப்பு_இலான் முடிவு_இலான் தாணு முக்கண்கள்_உடையான்	45
சதுரன் கடாசல உரி_போர்வையான் செம் தழல் கரத்து ஏந்திநின்றோன்
சர்வ காரணன் விறல் காலகாலன் சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன்
தகை கொள் பரமேச்சுரன் சிவபிரான் எம்பிரான் தம்பிரான் செம்பொன்_பதம்
தகவு பெறு நிட்பேத நிட்கம்பமாம் பராசத்தி வடிவாம் பொன்_பதம்
தக்க நிட்காடின்ய சம்வேதநாங்க சிற்சத்தி வடிவாம் பொன்_பதம்		50
சாற்ற அரிய இச்சை ஞானம் கிரியை என்னும் முச்சத்தி வடிவாம் பொன்_பதம்
தடை இலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்தி வடிவாம் பொன்_பதம்
தகு விந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு சத்தி வடிவாம் பொன்_பதம்
தாழ்வு_இல் ஈசானம் முதல் மூர்த்தி வரை ஐஞ்சத்தி-தம் சத்தியாம் பொன்_பதம்
சவிகற்ப நிருவிகற்பம் பெறும் அனந்த மா சத்தி சத்தாம் பொன்_பதம்	55
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திரு_அருள் சத்தி உருவாம் பொன்_பதம்
தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம் தரும் இணை மலர்ப் பூம்_பதம்
சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய சாக்ஷியாகிய பூம்_பதம்
தணிவு_இலா அணுபக்ஷ சம்புபக்ஷங்களில் சமரசம் உறும் பூம்_பதம்
தருபரம் சூக்குமம் தூலம் இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்_பதம்	60
சர அசர அபரிமித விவித ஆன்மப் பகுதி தாங்கும் திருப் பூம்_பதம்
தண்ட பிண்டாண்ட அகிலாண்ட பிரமாண்டம் தடிக்க அருளும் பூம்_பதம்
தத்வ தாத்விக சக சிருட்டி திதி சங்கார சகல கர்த்துரு பூம்_பதம்
சகச மல இருள் அகல நின்மல சுயம்ப்ரகாசம் குலவு நல் பூம்_பதம்
மரபு உறும் மதாதீத வெளி நடுவில் ஆனந்த மா நடனமிடு பூம்_பதம்	65
மன்னும் வினை ஒப்பு மலபரிபாகம் வாய்க்க மாமாயையை மிதிக்கும் பதம்
மலி பிறவி மறலியின் அழுந்தும் உயிர்-தமை அருளின் மருவுற எடுக்கும் பதம்
வளர் ஊர்த்த வீர தாண்டவம் முதல் பஞ்சகம் மகிழ்ந்திட இயற்றும் பதம்
வல்ல முயலகன் மீதில் ஊன்றிய திரு_பதம் வளம் தரத் தூக்கும் பதம்
வல்_வினை எலாம் தவிர்த்து அழியாத சுத்த நிலை வாய்த்திட வழங்கும் பதம்	70
மறை துதிக்கும் பதம் மறைச் சிலம்பு ஒளிர் பதம் மறைப் பாதுகைச் செம்பதம்
மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டாப் பதம் மறைப் பரி உகைக்கும் பதம்
மறையவன் உளம்கொண்ட பதம் அமித கோடியாம் மறையவர் சிரம் சூழ் பதம்
மறையவன் சிரசிகாமணி எனும் பதம் மலர் கொள் மறையவன் வாழ்த்தும் பதம்
மறையவன் செய உலகம் ஆக்கின்ற அதிகார வாழ்வை ஈந்து அருளும் பதம்	75
மறையவன் கனவினும் காணாத பதம் அந்த மறையவன் பரவும் பதம்
மால் விடை இவர்ந்திடும் மலர்_பதம் தெய்வ நெடுமால் அருச்சிக்கும் பதம்
மால் பரவி நாள்-தொறும் வணங்கும் பதம் மிக்க திருமால் விழி இலங்கும் பதம்
மால் தேட நின்ற பதம் ஓர் அனந்தம் கோடி மால் தலை அலங்கல் பதம்
மால் முடிப் பதம் நெடிய மால் உளப் பதம் அந்த மாலும் அறி அரிதாம் பதம்	80
மால் கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மை பெற நிற்கும் பதம்
மால் உலகு காக்கின்ற வண்மை பெற்று அடிமையின் வதிந்திட அளிக்கும் பதம்
வரையுறும் உருத்திரர்கள் புகழ் பதம் பல கோடி வய உருத்திரர்கள் சூழ் பதம்
வாய்ந்திடும் உருத்திரற்கு இயல் கொள் முத்தொழில் செய்யும் வண்மை தந்து அருளும் பதம்
வான இந்திரர் ஆதி எண் திசைக் காவலர்கள் மா தவத் திறனாம் பதம்	85
மதி இரவி ஆதி சுரர் அசுரர் அந்தரர் வானவாசிகள் வழுத்தும் பதம்
மணி உரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர் மா முனிவர் ஏத்தும் பதம்
மா நிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்து வரம் ஏற்கும் பதம்
மன்னு கின்னரர் பூதர் வித்தியாதரர் போகர் மற்றையர்கள் பற்றும் பதம்
வண்மை பெறு நந்தி முதல் சிவ_கணத் தலைவர்கள் மன_கோயில் வாழும் பதம்	90
மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம்
மறலியை உதைத்து அருள் கழல் பதம் அரக்கனை மலைக் கீழ் அடர்க்கும் பதம்
வஞ்சம் அறு நெஞ்சினிடை எஞ்சல் அற விஞ்சு திறல் மஞ்சு உற விளங்கும் பதம்
வந்தனை செய் புந்தியவர்-தம் துயர் தவிர்ந்திட உள் மந்தணம் நவிற்றும் பதம்
மாறு_இல் ஒரு மாறன் உளம் ஈறு_இல் மகிழ் வீறியிட மாறி நடம் ஆடும் பதம்		95
மறக் கருணையும் தனி அறக் கருணையும் தந்து வாழ்விக்கும் ஒண்மைப் பதம்		
இரவு உறும் பகல் அடியர் இரு மருங்கினும் உறுவர் என வயங்கிய சீர்ப் பதம்
எம் பந்தம் அற எமது சம்பந்த வள்ளல் மொழி இயல் மணம் மணக்கும் பதம்
ஈவு அரசர் எம்முடைய நாவரசர் சொல் பதிக இசை பரிமளிக்கும் பதம்
ஏவலார் புகழ் எமது நாவல்_ஆரூரர் புகல் இசை திரு_பாட்டுப் பதம்			100
ஏதவூர் தங்காத வாதவூர் எம் கோவின் இன் சொல் மணி அணியும் பதம்		
எல் ஊரும் மணி மாட நல்லூரின் அப்பர் முடியிடை வைகி அருள் மென் பதம்
எடும் மேல் எனத் தொண்டர் முடி மேல் மறுத்திடவும் இடை வலிந்து ஏறும் பதம்
எழில் பரவை இசைய ஆரூர் மறுகின் அருள் கொண்டு இரா முழுதும் உலவும் பதம்
இன் தொண்டர் பசி அறக் கச்சூரின் மனை-தொறும் இரக்க நடை கொள்ளும் பதம்	105
இளைப்புறல் அறிந்து அன்பர் பொதி_சோறு அருந்த முன் இருந்து பின் நடக்கும் பதம்
எறி விறகு விற்க வளர் கூடல் தெரு-தொறும் இயங்கிய இரக்கப் பதம்
இறு வைகை அம் கரையின் மண் படப் பல் கால் எழுந்து விளையாடும் பதம்
எங்கே மெய்_அன்பர் உளர் அங்கே நலம் தர எழுந்து அருளும் வண்மைப் பதம்
எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே இரங்கி ஈந்து அருளும் பதம்	110
என்_போன்றவர்க்கும் மிகு பொன் போன்ற கருணை தந்து இதயத்து இருக்கும் பதம்
என் உயிரை அன்ன பதம் என் உயிர்க்குயிராய் இலங்கு செம் பதுமப் பதம்
என் அறிவு எனும் பதம் என் அறிவினுக்கு அறிவாய் இருந்த செங்கமலப் பதம்
என் அன்பு எனும் பதம் என் அன்பிற்கு வித்தாய் இசைந்த கோகனகப் பதம்
என் தவம் எனும் பதம் என் மெய் தவப் பயனாய் இயைந்த செம் சலசப் பதம்		115
என் இரு கண்மணியான பதம் என் கண்மணிகளுக்கு இனிய நல் விருந்தாம் பதம்
என் செல்வமாம் பதம் என் மெய்ச் செல்வ வருவாய் எனும் தாமரைப் பொன்_பதம்
என் பெரிய வாழ்வான பதம் என் களிப்பாம் இரும் பதம் என் நிதியாம் பதம்
என் தந்தை தாய் எனும் இணைப் பதம் என் உறவாம் இயல் பதம் என் நட்பாம் பதம்
என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வப் பதம் எனது குல_தெய்வப் பதம்		120
என் பொறிகளுக்கு எலாம் நல் விடயமாம் பதம் என் எழுமையும் விடாப் பொன்_பதம்
என் குறை எலாம் தவிர்த்து ஆட்கொண்ட பதம் எனக்கு எய்ப்பில் வைப்பாகும் பதம்
எல்லார்க்கும் நல்ல பதம் எல்லாம் செய் வல்ல பதம் இணை_இலாத் துணையாம் பதம்
எழு மனம் உடைந்துஉடைந்து உருகி நெகிழ் பத்தர்கட்கு இன் அமுதம் ஆகும் பதம்
எண்ணுறில் பாலில் நறு நெய்யொடு சருக்கரை இசைந்து என இனிக்கும் பதம்		125
ஏற்ற முக்கனி பாகு கன்னல் கற்கண்டு தேன் என்ன மதுரிக்கும் பதம்
எங்கள் பதம் எங்கள் பதம் என்று சமயத் தேவர் இசை வழக்கிடும் நல் பதம்
ஈறு_இலாப் பதம் எலாம் தரு திரு_பதம் அழிவில் இன்பு உதவுகின்ற பதமே.

@2. விண்ணப்பக் கலிவெண்பா
* காப்பு

#0
அவ்வவ் இடை வந்து அகற்றி அருள்தரலால்
எவ்வெவ் இடையூறும் எய்தல் இலம் தெவ்வர்-தமைக்
கன்றும் மத_மா முகமும் கண் மூன்றும் கொண்டு இருந்தது
ஒன்று அது நம் உள்ளம் உறைந்து
* கலிவெண்பா

#1
சொல்_பெறும் மெய்ஞ்ஞானச் சுயம் சோதியாம் தில்லைச்
சிற்சபையில் வாழ் தலைமைத் தெய்வமே நல் சிவையாம்
தாயின் உலகு அனைத்தும் தாங்கும் திருப்புலியூர்க்
கோயில் அமர்ந்த குண_குன்றமே மாயம் மிகும்
வாள்_களம் உற்றாங்கு விழி மாதர் மயல் அற்றவர் சூழ்		5
வேட்களம் உற்று ஓங்கும் விழு_பொருளே வாழ்க்கை மனை
நல் வாயில் எங்கும் நவமணி_குன்று ஓங்கும் திரு
நெல்வாயில் நின்று ஒளிரும் நீள் ஒளியே செல்வாய்த்
தெழிப்பால் ஐ வேலைத் திரை ஒலி போல் ஆர்க்கும்
கழிப்பாலை இன்பக் களிப்பே விழிப்பாலன்			10
கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்கச் சோதி தரும்
நல்லூர்ப் பெருமணம் வாழ் நல் நிலையே சொல்லும்
தயேந்திரர் உள்ளத் தடம் போல் இலங்கும்
மயேந்திரப்பள்ளி இன்ப வாழ்வே கயேந்திரனைக்
காயலுறாது அன்று வந்து காத்தோன் புகழ் முல்லை		15
வாயிலின் ஓங்கும் மணி_விளக்கே மேய
பலிக்கா ஊர்-தோறும் பதம் சேப்பச் சென்று
கலிக்காமூர் மேவும் கரும்பே வலிக் கால்_இல்
பாய்க்கு ஆடுகின்ற ஒரு பச்சை முகில் பரவும்
சாய்க்காடு மேவும் தடம் கடலே வாய்க்கு அமையச்		20
சொல்ல அல் நீச்சர் அங்கு தோய உம்பர் ஆம் பெருமைப்
பல்லவனீச்சரத்து எம் பாவனமே நல்லவர்கள்
கண் காட்டும் நெற்றிக் கடவுளே என்று தொழ
வெண்காட்டில் மேவுகின்ற மெய்ப்பொருளே தண் காட்டிக்
கார் காட்டித் தையலர்-தம் கண் காட்டிச் சோலைகள் சூழ்		25
சீர்காட்டுப்பள்ளிச் சிவ_கொழுந்தே பார் காட்டு
உருகா ஊர் எல்லாம் ஒளி நயக்க ஓங்கும்
குருகாவூர் வெள்ளடை எம் கோவே அருகாத
கார் காழ் இல் நெஞ்சக் கவுணியர்க்குப் போதம் அருள்
சீர்காழி ஞானத் திரவியமே ஓர் காழிப்			30
பாலற்கா அன்று பசும்பொன் தாளம் கொடுத்த
கோலக்கா மேவும் கொடையாளா கோலக் கா
உள் இருக்கும் புள் இருக்கும் ஓதும் புகழ் வாய்ந்த
புள்ளிருக்குவேளூர்ப் புரி சடையாய் கள் இருக்கும்
காவின் மருவும் கனமும் திசை மணக்கும்			35
கோவில் மருவு கண்ணார் கோயிலாய் மாவின்
இடை முடியின் தீம் கனி என்று எல்லில் முசுத் தாவும்
கடைமுடியின் மேவும் கருத்தா கொடை முடியா
நன்றி ஊர் என்று இந்த ஞாலம் எலாம் வாழ்த்துகின்ற
நின்றியூர் மேவும் நிலைமையனே ஒன்றிக்			40
கருப் புன் கூர் உள்ளக் கயவர் நயவாத்
திருப்புன்கூர் மேவும் சிவனே உருப் பொலிந்தே
ஈடு ஊர் இலாது உயர்ந்த ஏதுவினால் ஓங்கு திரு
நீடூர் இலங்கு நிழல் தருவே பீடு கொண்டு
மன்னி ஊர் எல்லாம் வணங்க வளம் கொண்ட		45
அன்னியூர் மேவும் அதிபதியே மன்னர் சுக
வாழ்வு இ குடிகள் அடி_மண் பூசலால் என்னும்
வேழ்விக்குடி அமர்ந்த வித்தகனே சூழ்வுற்றோர்
விண் எதிர்கொண்டு இந்திரன் போல் மேவி நெடுநாள் வாழப்
பண் எதிர்கொள்பாடிப் பரம்பொருளே நண் உ			50
வணம் சேர் இறைவன் மகிழ்ந்து வணங்கும்
மணஞ்சேரி நீங்கா மகிழ்வே மணம் சேர்ந்து
வார் அட்ட கொங்கை மலையாளொடும் கொறுக்கை
வீரட்டம் மேவும் வியன் நிறைவே ஓர் அட்ட
திக்கும் கதி நாட்டிச் சீர் கொள் திரு_தொண்டர் உளம்		55
ஒக்கும் கருப்பறியலூர் அரசே மிக்க திரு
மா வளரும் செந்தாமரை வளரும் செய் குரக்குக்
கா வளரும் இன்பக் கன சுகமே தாவு மயல்
காழ் கொள் இரு மனத்துக் கார்_இருள் நீத்தோர் மருவும்
வாழ்கொளிபுத்தூர் மணிச் சுடரே தாழ்வு அகற்ற		60
நண் இப் படிக்கு அரையர் நாள்-தோறும் வாழ்த்துகின்ற
மண்ணிப்படிக்கரை வாழ் மங்கலமே விண்ணினிடை
வாமாம் புலி ஊர் மலர்ச் சோலை சூழ்ந்து இலங்கும்
ஓமாம்புலியூர் வாழ் உத்தமமே நேம் ஆர்ந்த
வான்_நாட்டும் உள்ளூர் மருவுகின்றோர் போற்று திருக்		65
கானாட்டு முள்ளூர்க் கலைக் கடலே மேல்_நாட்டும்
தேரை ஊர்ச் செங்கதிர் போல் செம்மணிகள் நின்று இலங்கும்
நாரையூர் மேவும் நடு நிலையே பாரில்
உடம்பு ஊர் பவத்தை ஒழித்து அருளும் மேன்மைக்
கடம்பூர் வாழ் என் இரண்டு கண்ணே தடம் பொழிலில்		70
கொந்து அணவும் கார்_குழலார் கோல மயில் போல் உலவும்
பந்தணநல்லூர்ப் பசுபதியே கந்த மலர்
அஞ்சன் ஊர் செய்த தவத்தால் அப் பெயர்கொண்ட
கஞ்சனூர் வாழும் என்றன் கண்மணியே அஞ்சுகங்கள்
நாடிக் கா உள்ளே நமச்சிவாயம் புகலும்.			75
கோடிக்கா மேவும் குளிர் மதியே ஓடிக்
கருமங்கல் அ குடியில் காண்டும் என ஓதும்
திருமங்கலக்குடியில் தேனே தரும
மனம் தாள்_மலரை மருவுவிப்போர் வாழும்
பனந்தாளில் பால் உகந்த பாகே தினம் தாளில்		80
சூழ் திருவாய்ப் பாடி அங்கு சூழ்கினும் ஆம் என்று உலகர்
வாழ் திருவாய்ப்பாடி இன்ப_வாரிதியே ஏழ் புவிக்குள்
வாய்ஞ்ஞல் ஊர் ஈதே மருவ என வானவர் சேர்
சேய்ஞ்ஞலூர் இன்பச் செழும் கனியே வாஞ்சையுறும்
சீவன் குடியுற இச் சீர் நகர் ஒன்றே எனும் சீர்த்		85
தேவன்குடி மகிழ்ந்த தெள் அமுதே ஓவு இல்
மயல் ஊர் மனம் போல் வயலில் கயல் ஊர்
வியலூர் சிவானந்த வெற்பே அயல் ஆம்பல்
மட்டை ஊர் வண்டு இனங்கள் வாய்ந்து விருந்து கொளும்
கொட்டையூர் உள் கிளரும் கோமளமே இட்டமுடன்		90
என் நம்பர் என் அம்பர் என்று அயன் மால் வாது கொள
இன்னம்பர் மேவிநின்ற என் உறவே முன் நம்பு
மாற்கும் புறம்பு இயலா வாய்மை அருள்செய்ய உளம்
ஏற்கும் புறம்பியம் வாழ் என் உயிரே மால் கருவின்-
கண் விசையம் அங்கைக் கனி போல் பெறத் தொண்டர்		95
எண் விசையமங்கையில் வாழ் என் குருவே மண் உலகில்
வைகா ஊர் நம் பொருட்டான் வைகியது என்று அன்பர் தொழும்
வைகாவூர் மேவிய என் வாழ்_முதலே உய்யும் வகைக்
காத்தும் படைத்தும் கலைத்தும் நிற்போர் நாள்-தோறும்
ஏத்தும் குரங்காட்டின் என் நட்பே மாத் தழைத்த		100
வண் பழம் நத்தின் குவி வெண் வாயில் தேன் வாக்கியிட
உண் பழனத்து என்றன் உயிர்க்குயிரே பண்பு அகன்ற
வெய் ஆற்றில் நின்றவரை மெய் ஆற்றின் ஏற்று திரு
வையாற்றின் மேவிய என் ஆதரவே பொய் ஆற்றி
மெய்த் தானம் நின்றோர் வெளித் தானம் மேவு திரு		105
நெய்த்தானத்துள் அமர்ந்த நித்தியமே மைத்த
கரும் புலி ஊர்க் காளையொடும் கண்ணோட்டம் கொள்ளும்
பெரும்புலியூர் வாழ் கருணைப் பேறே விரும்பி நிதம்
பொன்னும் கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்து அருளை
மன்னும் மழபாடி வச்சிரமே துன்னுகின்ற			110
நாய்க்கும் கடையேன் நவை தீர நல் கருணை
வாய்க்கும் பழுவூர் மரகதமே தேய்க் களங்கு_இல்
வான் ஊர் மதி போல் மணியால் குமுத_மலர்
கானூர் உயர் தங்கக்கட்டியே நானூறு
கோலம் துறை கொண்ட கோவை அருள் கோவை மகிழ்		115
ஆலந்துறையின் அணி முத்தே நீலம் கொள்
தேம் துறையில் அன்னம் மகிழ் சேக்கை பல நிலவும்
மாந்துறை வாழ் மாணிக்க மா மலையே ஏந்து அறிவாம்
நூல் துறையில் நின்றவர்கள் நோக்கி மகிழ்வு எய்து திருப்
பாற்றுறையில் நின்ற பரஞ்சுடரே நால்_திசையும்		120
தேனைக் கா உள் மலர்கள் தேம் கடல் என்று ஆக்குவிக்கும்
ஆனைக்கா மேவி அமர் அற்புதமே மானைப் போல்
மை ஞீல வாள் கண் மலராள் மருவு திருப்
பைஞ்ஞீலி மேவும் பரம்பரமே எஞ்ஞான்றும்
ஏச்சு இரா மங்கலத்தோடு இன்பம் தரும் பாச்சி		125
லாச்சிராமம் சேர் அருள் நிலையே நீச்சு அறியாது
ஆங்கு ஓய் மலைப் பிறவி ஆர்கலிக்கு ஓர் வார் கலமாம்
ஈங்கோய்மலை வாழ் இலஞ்சியமே ஓங்காது
நாள் போக்கி நிற்கும் நவை_உடையார் நாட அரிதாம்
வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே கோள் போக்கி		130
நில்லுங்கள் தம்ப நெறி போல் எனப் பூவை
சொல்லும் கடம்பந்துறை நிறைவே மல்லலொடு
வாழ் உம்பர் ஆய்த் துறை வான் மன்னவரும் மன்னவரும்
சூழும் பராய்த்துறை வாழ் தோன்றலே கூழும் பல்
நல் குடியும் ஓங்கி நலம் பெருகும் மேன்மை திருக்		135
கற்குடியில் சந்தான கற்பகமே சிற்சுகத்தார்
பின் சநநம் இல்லாப் பெருமை தரும் உறையூர்ச்
சற்சனர் சேர் மூக்கீச்சரத்து அணியே மல் செய்
அரா_பள்ளி மேவும் அவன் நின்று வாழ்த்தும்
சிராப்பள்ளி ஞானத் தெளிவே இராப் பள்ளி			140
நின்று எழல் மெய் அன்று எனவே நேர்ந்து உலகு வாழ்த்துகின்ற
நன்று எறும்பியூர் இலங்கு நல் நெறியே துன்று கயல்_கண்ணார்
நெடும் களத்தைக் கட்டு அழித்த மெய்_தவர் சூழ்
தண் ஆர் நெடுங்கள மெய்த் தாரகமே எண்ணார்
தருக்கு ஆள் துப்பு அள்ளித் தகை கொண்டோர் சூழும்		145
திருக்காட்டுப்பள்ளியில் வாழ் தேவே மருக் காட்டும்
நீலம் பொழிற்குள் நிறை தடங்கட்கு ஏர் காட்டும்
ஆலம்பொழில் சிவயோகப் பயனே சீலம் நிறைவு
ஆம் துருத்தி கொண்டு உள் அனல் எழுப்புவோர் புகழும்
பூந்துருத்தி மேவு சிவ புண்ணியமே காந்த அருவத்		150
தண்டி ஊர் போற்றும் தகை காசிக்-கண் செய்து
கண்டியூர் வாழும் களைகண்ணே கொண்டு இயல்பின்
வேற்றுத் துறையுள் விரவாதவர் புகழும்
சோற்றுத்துறையுள் சுக வளமே ஆற்றல் இலாத்
தீது இக் குடி என்று செப்பப்படார் மருவும்		155
வேதிக்குடி இன்ப_வெள்ளமே கோது இயலும்
வன் குடித் திட்டை மருவார் மருவு திரு_
தென்குடித்திட்டைச் சிவ பதமே நன்கு உடைய
உள்ளம் மங்கைமார் மேல் உறுத்தாதவர் புகழும்
புள்ளமங்கை வாழ் பரம போகமே கள்ளம் இல் அஞ்சு_		160
அக்கரப் பள்ளி-தனில் தாம் பயின்ற மைந்தர்கள் சூழ்
சக்கரப்பள்ளி-தனில் தண் அளியே மிக்க
அருகா ஊர் சூழ்ந்தே அழகுபெற ஓங்கும்
கருகாவூர் இன்பக் கதியே முருகு ஆர்ந்த
சோலைத் துறையில் சுகம் சிவ_நூல் வாசிக்கும்	165
பாலைத்துறையின் பரிமளமே சீலத்தர்
சொல் ஊர் அடி அப்பர் தூய முடி மேல் வைத்த
நல்லூர் அமர்ந்த நடு நாயகமே மல் ஆர்ந்த
மா ஊர் இரவியின் பொன் வையம் அளவும் சிகரி
ஆவூரில் உற்ற எங்கள் ஆண்தகையே ஓவாது	170
சித்தி முற்ற யோகம் செழும் பொழிலில் பூவை செயும்
சத்திமுற்றம் மேவும் சதாசிவமே பத்தி_உற்றோர்
முள் தீச் சுரத்தின் முயலா வகை அருளும்
பட்டீச்சரத்து எம் பராபரமே துட்ட மயல்
தீங்கு விழையார்-தமை வான் சென்று அமரச்செய்விக்க		175
ஓங்கு பழையாறையில் என் உள் உவப்பே பாங்குபெற
ஆர்ந்த வட_இலையான் அன்னத்தான் போற்றி நிதம்
சார்ந்த வடதளி வாழ் தற்பரமே சேர்ந்த
மலம் சுழிகின்ற மனத்தர்க்கு அரிதாம்
வலஞ்சுழி வாழ் பொன்_மலையே நிலம் சுழியாது	180
ஓணத்தில் வந்தோன் உடன் துதித்து வாழ் கும்ப
கோணத்தில் தெய்வக் குல_கொழுந்தே மாணுற்றோர்
காழ்க் கோட்டம் நீங்கக் கருதும் குடமூக்கில்
கீழ்க்கோட்டம் மேவும் அன்பர் கேண்மையே வாழ்க் கோட்டத்
தேர் ஓணம் மட்டும் திகழ் குடந்தை மட்டும் இன்றிக்		185
காரோணம் மட்டும் கமழ் மலரே சீர் ஓங்கும்
யோகீச்சுரர் நின்று வந்து வணங்கு திரு
நாகீச்சுரம் ஓங்கும் நம் கனிவே ஓகை உளம்
தேக்கும் வரகுணனாம் தென்னவன்-கண் சூழ் பழியைப்
போக்கும் இடைமருதில் பூரணமே நீக்கம் இலா		190
நன்கு உரம் காணும் நடையோர் அடைகின்ற
தென்குரங்காடுதுறைச் செம்மலே புன் குரம்பை
ஏலக் குடிபுகுந்த எம்மனோர்க்கு உண்மை தரு
நீலக்குடி இலங்கு நிட்களமே ஞாலத்து
நீள் தக்கோர் நாளும் நினைந்து ஏத்திடும் வைகல்	195
மாடக்கோயிற்குள் மதுரமே பாடச் சீர்
வல்ல தமிழ்ப் புலவர் மன்னி வணங்கு திரு
நல்லம் மகிழ் இன்ப நவ வடிவே இல்ல மயல்
ஆழம் பங்கு என்ன அறிந்தோர் செறிந்து ஏத்தும்
கோழம்பம் வாழ் கருணைக் கொண்டலே வீழும் பொய்		200
தீரா வடு_உடையார் சேர்தற்கு அரும் தெய்வச்
சீர் ஆவடுதுறை எம் செல்வமே பேராக் 
கருத் திருத்தி ஏத்தும் கருத்தர்க்கு அருள்செய்
திருத்துருத்தி இன்பச் செழிப்பே வருத்து மயல் 
நாளும் எழுந்து ஊர் நவை அறுக்கும் அன்பர் உள்ளம்		205
நீளும் அழுந்தூர் நிறை தடமே வேள் இமையோர் 
வாயூரத் தேமா மலர் சொரிந்து வாழ்த்துகின்ற
மாயூரத்து அன்பர் மனோரதமே தேயா 
வள நகர் என்று எவ்வுலகும் வாழ்த்தப்படும் சீர்
விளநகர் வாழ் எங்கள் விருந்தே இளமைச் 		210
செறியல் ஊர் கூந்தல் திரு_அனையார் ஆடும்
பறியலூர் வாழ் மெய்ப் பரமே நெறி கொண்டே 
அன்பு அள்ளி ஓங்கும் அறிவு_உடையோர் வாழ்த்தும் செம்
பொன்பள்ளி வாழ் ஞான போதமே இன்பு உள்ளித் 
தெள்ளியார் போற்றித் திகழும் திருநன்னிப்		215
பள்ளி ஆர்ந்து ஓங்கும் பரசிவமே எள்ளுறு நோய் 
ஏய் அவலம் புரத்தை எண்ணாமல் எண்ணுகின்றோர்
மேய வலம்புரத்து மேதகவே தூய கொடி 
அங்கு ஆடு கோபுரம் வான் ஆற்று ஆடுகின்ற தலைச்
சங்காடு மேவும் சயம்புவே பொங்கும் இருள் 			220
கூறு திரு ஆக்கு ஊர் கொடுப்பன போல் சூழ்ந்து மதில்
வீறு திரு_ஆக்கூர் விளக்கமே மாறு அகற்றி 
நன்கு அடை ஊர் பற்பலவும் நன்றி மறவாது ஏத்தும்
தென்கடையூர் ஆனந்தத் தேறலே வன்மை இலாச் 
சொல் கடவி மேலோர் துதித்தல் ஒழியாது ஓங்கும்		225
நல் கடவூர் வீரட்ட நாயகனே வற்கடத்தும் 
வாட்டக் குடி சற்றும் வாய்ப்பதே இல்லை எனும்
வேட்டக்குடி மேவும் மேலவனே நாட்டமுற்ற 
வாக்கு தெளிச்சு ஏர் இ மா தவத்தர்க்கு இன்ப நலம்
ஆக்கும் தெளிச்சேரி அங்கணனே நீக்கும் 		230
கரும புரத்தில் கலவாது அருள்செய்
தருமபுரம் செய் தவமே இருமையினும் 
எள் ஆற்றின் மேவாத ஏற்பு_உடையோர் சூழ்ந்து இறைஞ்சும்
நள்ளாற்றின் மேவிய என் நல் துணையே தெள் ஆற்றின் 
நீள் தாறு கொண்டு அரம்பை நின்று கவின் காட்டும்		235
கோட்டாறு மேவும் குளிர் துறையே கூட்டாக் 
கரு வம்பர்-தம்மைக் கலவாத மேன்மைத்
திரு_அம்பர் ஞானத் திரட்டே ஒருவந்தம்
மா காளம் கொள்ள மதனைத் துரத்துகின்ற
மாகாளாத்து அன்பர் மனோலயமே யோகு ஆளக் 		240
காயச் சூர் விட்டுக் கதி சேர வேட்டவர் சூழ்
மீயச்சூர் தண் என்னும் வெள் நெருப்பே மாயக் 
களம் கோயில் நெஞ்சக் கயவர் மருவா
இளங்கோயில் ஞான இனிப்பே வளம் கோவை 
நாடும் திலத நயப் புலவர் நாள்-தோறும்		245
பாடும் திலதைப் பதி நிதியே ஆடு மயில் 
காம்பு உரம் கொள் தோளியர் போல் காவில் பயில்கின்ற
பாம்புரம் கொள் உண்மைப் பரம்பொருளே ஆம் புவனம் 
துன்னும் பெரும் குடிகள் சூழ்ந்து வலம்செய்து உவகை
மன்னும் சிறுகுடி ஆன்மார்த்தமே முன் அரசும் 	250
காழி மிழலையரும் கண்டு தொழக் காசு அளித்த
வீழிமிழலை விராட்டு உருவே ஊழி-தொறும் 
மன்னி ஊர் மால் விடையாய் வானவா என்று தொழ
வன்னியூர் வாழு மணி_கண்டா இ நிமிடம் 
சிந்தும் கருவலியின் திண்மை என்று தேர்ந்தவர்கள்	255
முந்தும் கருவிலி வாழ் முக்கண்ணா மந்தணத்தைக் 
காணும் அரும் துறை இக் காமர் தலம் என்று எவரும்
பேணு பெருந்துறையில் பெம்மானே ஏணுடன் கா 
ஈட்டும் பெரு நறை ஆறு என்ன வயல் ஓடி
நாட்டும் பெருநறையூர் நம்பனே காட்டும் 		260
பரிசில் கரைப்புற்றோர் பாங்கு பெற ஓங்கும்
அரிசிற்கரை_புத்தூரானே தரிசனத்து எக்
காலும் சிவபுரத்தைக் காதலித்தோர்-தங்கள் துதி
ஏலும் சிவபுரத்தில் எம்மானே மாலும் கொள் 
வெப்பும் கலைய நல்லோர் மென் மதுரச் சொல்_மாலை		265
செப்பும் கலயநல்லூர்ச் சின்மயனே செப்பமுடன் 
ஓங்கும் திரு_தொண்டர் உள் குளிர நல் அருளால்
தாங்கும் கருக்குடி வாழ் சங்கரனே ஆம் ககனம்
தாம் சியத்தை வேங்கைத் தலையால் தடுக்கின்ற
வாஞ்சியத்தின் மேவும் மறையோனே ஆஞ்சி இலாது	270
இ நிலத்தும் வான் ஆதி எந்நிலத்தும் ஓங்கும் பெரு
நன்னிலத்து வாழ் ஞான நாடகனே மன்னும் மலர் 
வண்டு ஈ சுரம் பாடி வார் மது உண்டு உள் களிக்கும்
கொண்டீச்சுரத்து அமர்ந்த கோமானே கண்டு ஈச 
நண்பன் ஐ ஊரன் புகழும் நம்ப என உம்பர் தொழத்	275
தண் பனையூர் மேவும் சடாதரனே பண்புடனே 
எற்குள் தியானம் கொண்டு இருக்க மகிழ்ந்து அளித்த
விற்குடியின் வீரட்டம் மேயவனே சொல் கொடிய 
வன் புகலா நெஞ்சின் மருவும் ஒரு தகைமைத்
தென் புகலூர் வாழ் மகாதேவனே இன்ப மறை	280 
அர்த்தமா நீக்க அரிய ஆதாரம் ஆகி நின்ற
வர்த்தமாநேச்சரத்து வாய்ந்தவனே மித்தையுற்ற 
காமனது ஈசம் கெடவே கண் பார்த்து அருள்செய்த
ராமனது ஈசம் பெறும் நிராமயனே தோம் உள் 
மயல் தூர் பறித்த மனத்தில் விளைந்த		285
பயற்றூர் திசை அம்பரனே இயற்றும் சீர் 
ஆச்சிரம் மேவும் செங்காட்டங்குடியின் அம் கணப
தீச்சரம் வாழும் சந்த்ரசேகரனே ஏச்சு அகல 
விண் மருவினோனை விடம் நீக்க நல் அருள்செய்
வண் மருகல் மாணிக்க வண்ணனே திண்மை கொண்ட 		290
மாத் தமம் கை உள்ளம் மருவிப் பிரியாத
சாத்தமங்கைக் கங்கைச் சடா_முடியோய் தூத் தகைய 
பாகைக் கார் என்னும் பணி_மொழியார் வாழ்த்து ஓவா
நாகைக்காரோணம் நயந்தோனே ஓகை அற 
விக்கல் வருங்கால் விடாய் தீர்த்து உலகிடை நீ	295
சிக்கல் எனும் சிக்கல் திறலோனே மிக்க மினார் 
வாள் ஊர் தடம் கண் வயல் காட்டி ஓங்கும் கீழ்
வேளூரில் செம் கண் விடையோனே நீள் உவகைப் 
பா ஊர் இசையின் பயன் சுவையின் பாங்கு உடைய
தேவூர் வளர் தேவதேவனே பூவினிடை 		300
இக் கூடல் மைந்த இனிக் கூடல் என்று பள்ளி
முக்கூடல் மேவி அமர் முன்னவனே தக்க நெடும் 
தேர் ஊர் அணி வீதிச் சீர் ஊர் மணி மாட
ஆரூரில் எங்கள் அரு_மருந்தே நீர் ஊர்ந்த 
கார் ஊர் பொழிலும் கனி ஈந்து இளைப்பு அகற்றும்	305
ஆரூர் அரனெறி வேளாண்மையே ஏர் ஆர்ந்த 
மண் மண்டலிகர் மருவும் ஆரூர்ப் பரவை
யுள் மண்தளி எம் உடைமையே திண்மைக் 
களமர் மகிழக் கடைசியர் பாடும்
விளமர் கொளும் எம் விருப்பே வளமை 		310
எருக்கு அரவு ஈரம் சேர் எழில் வேணி கொண்டு
திருக்கரவீரம் சேர் சிறப்பே உருக்க 
வரு வேள் ஊர் மா எல்லாம் மா ஏறும் சோலைப்
பெருவேளூர் இன்பப் பெருக்கே கருமை 
மிலை ஆலம் காட்டும் மிடற்றாய் என்று ஏத்தும்	315
தலையாலங்காட்டுத் தகவே நிலை கொள் 
தட வாயில் வெண் மணிகள் சங்கங்கள் ஈனும்
குடவாயில் அன்பர் குறிப்பே மடவாட்கு ஓர் 
கூறை உவந்து அளித்த கோவே என்று அன்பர் தொழச்
சேறை உவந்து இருந்த சிற்பரமே வேறுபடாப் 	320
பால் ஊர் நிலவில் பணிலங்கள் தண் கதிர் செய்
நாலூரில் அன்பர் பெறும் நல் நயமே மேல் ஊரும் 
நோய்க் கரை உள் செய்யாத நோன்மையோர் சூழ்ந்த கடு
வாய்க்கரையுள் மேவுகின்ற வண்மையே வாய்த்த 
பெரும் பூகம் தெங்கின் பிறங்க வளம் கொள்ளும்	325
இரும்பூளை மேவி இருந்தோய் விரும்பும் 
விரதப் பெரும் பாழி விண்ணவர்கள் ஏத்தும்
அரதைப் பெரும்பாழி ஆர்ந்தோய் சரதத்தால் 
ஏதும் அவண் இவண் என்று எண்ணாதவர் இறைஞ்சி
ஓதும் அவளிவள் நல்லூர்_உடையோய் கோது அகன்ற 	330
நீட்டும் சுருதி நியமத்தோர்க்கு இன் அருளை
நீட்டும் பரிதி நியமத்தோய் காட்டிய நம் 
தேவன் ஊர் என்று திசைமுகன் மால் வாழ்த்துகின்ற
பூவனூர் மேவும் புகழ்_உடையோய் பூ_உலகாம்
ஈங்கும் பாதாளம் முதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும்	335
தாங்கும் பாதாளேச்சரத்து அமர்ந்தோய் ஓங்கு புத்தி
மான்கள் அரில் ஓட்டி மகிழ்வோடு இருந்து ஏத்தும்
வான் களரில் வாழும் மறை முடிபே மேன்மை தரும் 
முற்று ஏமம் வாய்ந்த முனிவர் தினம் பரவும்
சிற்றேமம் வாய்ந்த செழும் கதிரே கற்றவர்கள்	340 
எங்கும் உசாத்தானம் இரும் கழகம் மன்றம் முதல்
தங்கும் உசாத்தானத் தனி முதலே பொங்கு பவ 
அல்லல் இடும் பாவு அநத்தம் அட்டு ஒளிசெய்கின்ற திரு
மல்லல் இடும்பாவனத்து மாட்சிமையே தொல்லைப் 
படிக்குள் நோவாத பண்பு_உடையோர் வாழ்த்தும்	345
கடிக்குளத்து அன்பர் களிப்பே கடிக் குளத்தின் 
வண்டு அலைக்கத் தேன் அலரின் வார்ந்து ஓர் தடம் ஆக்கும்
தண்டலைக்குள் நீள் நெறிச் சிந்தாமணியே கொண்டல் என 
மன் கோட்டு ஊர் சோலை வளர் கோட்டு ஊர் தண் பழன
தென்கோட்டூர் தேவ சிகாமணியே தென் கூட்டிப் 	350
போய் வண்டு உறை தடமும் பூம் பொழிலும் சூழ்ந்து அமரர்
ஆய் வெண்துறை மாசு இலா மணியே தோய்வுண்ட 
கள்ளம் பூதாதி நிலை கண்டு உணர்வு கொண்டவர் சூழ்
கொள்ளம்பூதூர் வான் குல மணியே வெள்ளிடை வான் 
வாம் பேர் எயில் சூழ்ந்த மாண்பால் திரு_நாமம்		355
ஆம் பேரெயில் ஒப்பு இலா மணியே தாம் பேரா 
வீட்டில் அன்பர் ஆனந்தம் மேவச்செயும் கொள்ளிக்
காட்டில் அமர்ந்த என் கண் காட்சியே நீட்டும் ஒளி
யாம் கூர் இலை வேலவன் ஆதியர் சூழத்
தேங்கூரில் வாழ் தேவ சிங்கமே ஓங்கு மலை	360
வல்லிக்கு ஆதார மணிப் புய என்று அன்பர் தொழ
நெல்லிக்கா வாழ் மெய் நியமமே எல் அல்-கண் 
சேட்டு இயத்தானே தெரிந்து சுரர் வந்து ஏத்தும்
நாட்டியத்தான்குடி வாழ் நல் இனமே நாட்டும் ஒரு 
நூல் தாயில் அன்பர்-தமை நோக்கி அருள்செய் திருக்	365
காறாயில் மேலோர் கடைப்பிடியே வீறு ஆகும் 
இன்றாப் பூர்வம் தொட்டு இருந்தது இ ஊர் என்ன உயர்
கன்றாப்பூர் பஞ்சாக்கரப் பொருளே துன்று ஆசை 
வெய்ய வலி வலத்தை வீட்டி அன்பர்க்கு இன் அருள்செய்
துய்ய வலிவலத்துச் சொல் முடிபே நையும் மனம் 	370
மைச் சினத்தை விட்டோர் மனத்தில் சுவை கொடுத்துக்
கைச்சினத்தின் உள் கரையாக் கற்கண்டே நெல் சுமக்க 
ஆள் இலை என்று ஆரூரனார் துதிக்கத் தந்து அருளும்
கோளிலியின் அன்பர் குலம் கொள் உவப்பே நீள் உலகம் 
காய் மூர்க்கரேனும் கருதில் கதி கொடுக்கும்		375
வாய்மூர்க்கு அமைந்த மறைக் கொழுந்தே நேயம் உணத் 
தேடு எலியை மூவுலகும் தேர்ந்து தொழச்செய்து அருளும்
ஈடு இல் மறைக்காட்டில் என்றன் எய்ப்பு இல் வைப்பே நாடும் எனை 
நின் அகத்து யான் பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட
தென் அகத்தியான்பள்ளிச் செம்பொன்னே தொல்_நெறியோர் 	380
நாடிக் குழக நலம் அருள் என்று ஏத்துகின்ற
கோடிக் குழகர் அருள் கோலமே நீடு உலகில் 
நாட்டும் புகழ் ஈழ நாட்டில் பவ இருளை
வாட்டும் திருக்கோண மா மலையாய் வேட்டு உலகின் 
மூதீச்சரம் என்று முன்னோர் வணங்கு திருக்		385
கேதீச்சரத்தில் கிளர்கின்றோய் ஓதுகின்றோர்-
பால் அவாய் நிற்கும் பரையோடு வாழ் மதுரை
ஆலவாய்ச் சொக்கழகு ஆனந்தமே சீலர்-தமைக் 
காப்பன் ஊரு இல்லாக் கருணையால் என்று புகும்
ஆப்பனூர் மேவு சதானந்தமே மாப் புலவர்		390 
ஞான பரம் குன்றம் என நண்ணி மகிழ் கூர்ந்து ஏத்த
வான பரங்குன்றில் இன்பானந்தமே வானவர்_கோன் 
தேம் ஏடகத்தனொடு சீதரனும் வாழ்த்தும் சீ
ராம் ஏடகத்து அறிவானந்தமே பூ மீதில் 
நல் தவரும் கற்ற நவசித்தரும் வாழ்த்தி		395
உற்ற கொடுங்குன்றத்து எம் ஊதியமே முற்று கதி
இத் தூரம் அன்றி இனித் தூரம் இல்லை எனப்
புத்தூர் வரும் அடியார் பூரிப்பே சித்து ஆய்ந்து 
நாம் ஈசர் ஆகும் நலம் தரும் என்று உம்பர் தொழும்
ராமீசம் வாழ் சீவ ரத்தினமே பூ மீது 		400
நீள் தானை சூழும் நில மன்னர் வாழ்த்து திரு
வாடானை மேவு கருணாகரமே சேடான 
வானப் பேர்_ஆற்றை மதியை முடி சூடும்
கானப்பேர் ஆனந்தக் காளையே மோனர் உளே 
பூ வணமும் பூ மணமும் போல அமர்ந்து திருப்	405
பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே தீ வணத்தில் 
கண் சுழியல் என்று கருணை அளித்து என் உளம் சேர்
தண் சுழியல் வாழ் சீவ சாக்ஷியே பண் செழிப்பக் 
கற்றால் அங்கு உண்மைக் கதி தரும் என்று அற்றவர் சூழ்
குற்றாலத்து அன்பர் குதுகலிப்பே பொன் தாம 	410
நல் வேலி சூழ்ந்து நயன் பெறும் ஒண் செஞ்சாலி
நெல்வேலி உண்மை நிலயமே வல் வேலை 
நஞ்சைக் களத்து வைத்த நாத எனத் தொண்டர் தொழ
அஞ்சைக்களம் சேர் அருவுருவே நெஞ்சு அடக்கி 
ஆன்று நிறைந்தோர்க்கு அருள் அளிக்கும் புக்கொளியூர்த்		415
தோன்றும் அவிநாசிச் சுயம்புவே சான்றவர்கள்-
தம் உருகு அன்பு ஊண் உள் தலம் போல வாழ்கின்ற
எம் முருகன் பூண்டி இரு_நிதியே செம்மையுடன் 
அம் குன்றாது ஓங்கும் அணி கொள் கொடி மாடச்
செங்குன்றூர் வாழும் சஞ்சீவியே தங்கு மன 		420
வஞ்சம் ஆக்கு ஊடல் வரையாதவர் சூழும்
வெஞ்சமாக்கூடல் விரி சுடரே துஞ்சல் எனும் 
இன்னல் அகற்ற இலங்கு பவானிக்கூடல்
என்னும் நணாவினிடை இன் இசையே துன்னி அருள் 
வேண்டிக்கொடு முடியா மேன்மை பெறு மா தவர் சூழ்		425
பாண்டிக்கொடுமுடியில் பண் மயமே தீண்ட அரிய 
வெம் கருவூர் வஞ்ச வினை தீர்த்தவர் சூழ்ந்த
நம் கருவூர்ச் செய்யுள் நவரசமே தங்கு அளற்றின் 
தீங்கு ஆர் பிற தெய்வத் தீ குழியில் வீழ்ந்தவரைத்
தாங்கா அரத்துறையில் தாணுவே பூம் குழலார் 	430
வீங்கு ஆனை மாடம் சேர் விண் என்று அகல் கடந்தைத்
தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே நீங்காது 
நீடு அலை ஆற்று ஊர் நிழல் மணி_குன்று ஓங்கு திரு_
கூடலை ஆற்றூர்க் குண நிதியே நாடிய வான் 
அம்புலி ஊர் சோலை அணி வயல்கள் ஓங்கு எருக்கத்		435
தம்புலியூர் வேத சமரசமே நம்பு விடை 
ஆங்கு உந்தினை ஊர்ந்து அருளாய் என்று அன்பர் தொழுது
ஓங்கும் தினையூர் உமாபதியே தீங்கு உறும் ஒன்
னார் புரத்தை வெண்_நகைத் தீயால் அழித்தாய் என்று தொழச்
சோபுரத்தின் வாழ் ஞான தீவகமே வார் கெடிலச் 		440
செல் நதி கையோங்கித் திலதவதியார் பரவும்
மன் அதிகை வீரட்ட மா தவமே பன்ன அரிதாம் 
ஆவல் ஊர் எங்களுடை ஆரூரன் ஆர் ஊராம்
நாவலூர் ஞானியர் உள் ஞாபகமே தேவு அகமாம் 
மன்றம் அமர்ந்த வளம் போல் திகழ்ந்த முது			445
குன்றம் அமர்ந்த அருள் கொள்கையே அன்று அகத்தின் 
நல் வெண்ணெய் உண்டு ஒளித்த நாரணன் வந்து ஏத்துகின்ற
நெல்வெண்ணெய் மேவு சிவ நிட்டையே சொல் வண்ணம் 
நாவலர் போற்றி நலம் பெறவே ஓங்கு திருக்
கோவலூர் வீரட்டம் கொள் பரிசே ஆவலர் மா		450 
தேவா இறைவா சிவனே எனும் முழக்கம்
ஓவா அறையணி நல்லூர் உயர்வே தாவாக் 
கடை ஆற்றின் அன்பர்-தமைக் கல் ஆற்றின் நீக்கும்
இடையாற்றின் வாழ் நல் இயல்பே இடையாது 
சொல் ஊரன்-தன்னைத் தொழும்புகொளும் சீர் வெண்ணெய்	455
நல்லூர் அருள் துறையின் நல் பயனே மல் ஆர்ந்து 
மாசு உந்து உறையூர் மகிபன் முதல் மூவரும் சீர்
பேசும் துறையூர்ப் பிறை_சூடீ நேசம் உறவு 
ஏற்றா வடு கூர் இதயத்தினார்க்கு என்றும்
தோற்றா வடுகூர்ச் சுயம் சுடரே ஆற்ற மயல் 		460
காணிக் குழி வீழ் கடையர்க்குக் காண்பு அரிய
மாணிக்குழி வாழ் மகத்துவமே மாண் உற்ற 
பூப் பாதிரி கொன்றை புன்னை முதல் சூழ்ந்து இலங்கும்
ஏர்ப் பாதிரிப்புலியூர் ஏந்தலே சீர்ப் பொலியப் 
பண்டு ஈச்சுரன் இப் பதியே விழைந்தது எனும்		465
முண்டீச்சுரத்தின் முழு_முதலே பெண்தகையார் 
ஏர்ப் பன் அம் காட்டு ஊர் என்று இரு நிலத்தோர் வாழ்த்துகின்ற
சீர்ப் பனங்காட்டூர் மகிழ் நிக்ஷேபமே சூர்ப் புடைத்தது
ஆம் மாத் தூர் வீழத் தடிந்தோன் கணேசனொடும்
ஆமாத்தூர் வாழ் மெய் அருள் பிழம்பே யாம் ஏத்தும் 		470
உண்ணாமுலையாள் உமையோடு மேவு திரு
வண்ணாமலை வாழ் அருள் சுடரே கண் ஆர்ந்த 
நாகம் பராம் தொண்ட நாட்டில் உயர் காஞ்சி
ஏகம்பம் மேவும் பேர்_இன்பமே ஆகும் தென் 
காற்று அளி வள் பூ மணத்தைக் காட்டும் பொழில் கச்சி		475
மேல்தளி வாழ் ஆனந்த வீட்டு உறவே நாற்ற மலர்ப் 
பூந் தண்டு அளி விரித்துப் புக்கு இசைக்கும் சீர் ஓண
காந்தன்தளி அருள் ப்ரகாசமே சேர்ந்தவர்க்கே 
இங்கு ஆபதம் சற்றும் இல்லாத அனேக
தங்காபதம் சேர் தயாநிதியே மங்காது 		480
மெச்சி நெறிக்கு ஆர்வம் மேவிநின்றோர் சூழ்ந்த திரு_
கச்சி_நெறிக்காரைக்காட்டு இறையே முச்சகமும் 
ஆயும் குரங்கணில்_முட்டப் பெயர் கொண்டு ஓங்கு புகழ்
ஏயும் தலம் வாழ் இயல் மொழியே தோயும் மன 
யோகு அறல் இலாத் தவத்தோர் உன்ன விளங்கு திரு_		485
மாகறலில் அன்பர் அபிமானமே ஓகை இலா 
வீத் தூரமா ஓட மெய்த் தவர்கள் சூழ்ந்த திரு
வோத்தூரில் வேதாந்த உண்மையே பூத் தவிசின் 
ஆர்த்தான் பனகத்தவன் இந்திரன் புகழ் வன்
பார்த்தான் பனங்காட்டூர் பாக்கியமே பார்த்து உலகில் 		490
இல்லம் எனச் சென்று இரவாதவர் வாழும்
வல்லம் மகிழ் அன்பர் வசித்துவமே சொல் அரிக்குக் 
கால் பேறு கச்சியில் முக்கால் பேறு இவண் என்னும்
மால்பேற்றின் அன்பர் மனோபலமே ஏற்பு உடை வாய் 
ஊறல் அடியார் உறத் தொழுது மேவு திரு		495
வூறல் அழியா உவகையே மாறுபடு 
தீதும் இலம் பயம் கோள் தீர் என்று அடியர் புகழ்
ஓதும் இலம்பயம்கோட்டூர் நலமே தீது உடைய 
பொன் கோலம் ஆம் எயிற்குப் போர்_கோலம் கொண்ட திரு
விற்கோலம் மேவு பர மேட்டிமையே சொல்_போரில் 		500
ஓலம் காட்டும் பழையனூர் நீலி வாது அடக்கும்
ஆலங்காட்டில் சூழ் அருள் மயமே ஞாலம் சேர் 
மாசு ஊர் அகற்றும் மதி_உடையோர் சூழ்ந்த திருப்
பாசூரில் உண்மைப் பரத்துவமே தேசு_ஊரன் 
கண் பார்க்க வேண்டும் எனக் கண்டு ஊன்றுகோல் கொடுத்த	505
வெண்பாக்கத்து அன்பர் பெறும் வீறாப்பே பண்பார்க்கு 
நள் இப் பதியே நலம் தரும் என்று அன்பர் புகும்
கள்ளில்பதி நம் கடப்பாடே எள்ளலுறும்
கோள் அத்தி நீக்கும் குணத்தோர்க்கு அருள்செய் திரு_
காளத்தி ஞானக் களஞ்சியமே ஆள் அத்தா 			510
வெற்றி ஊர் என்ன வினையேன் வினை தவிர்த்த
ஒற்றியூர் மேவிய என் உள் அன்பே தெற்றிகளில் 
பொங்கு மணிக் கால்கள் பொலம் செய் திருவொற்றி நகர்
தங்கும் சிவபோக சாரமே புங்கவர்கள் 
சேர்ந்து வலம்கொள்ளுந் திருவொற்றியூர்க் கோயில்		515
சார்ந்து மகிழ் அமுத சாரமே தேர்ந்து உலகர் 
போற்றும் திருவொற்றிப் பூம் கோயிற்குள் பெரியோர்
சாற்றும் புகழ் வேத சாரமே ஊற்றுறு மெய் 
அன்பு மிகும் தொண்டர் குழு ஆயும் வலிதாயத்தில்
இன்பம் மிகு ஞான இலக்கணமே துன்பம் அற 		520
எல்லை வாயற்கு உள் மட்டும் ஏகில் வினை ஏகும் எனும்
முல்லைவாயிற்கு உள் வைத்த முத்தி வித்தே மல்லல் பெறு 
வேல் காட்டர் ஏத்து திருவேற்காட்டில் மேவிய முன்
நூல் காட்டு உயர் வேத நுட்பமே பால் காட்டும் 
ஆர்த்தி பெற்ற மாது மயிலாய்ப் பூசித்து ஆர் மயிலைக்		525
கீர்த்திபெற்ற நல் வேத கீதமே கார்த் திரண்டு 
வாவுகின்ற சோலை வளர் வான்மியூர்த் தலத்தில்
மேவுகின்ற ஞான விதரணமே தூவி மயில் 
ஆடும் பொழில் கச்சூர் ஆல_கோயிற்குள் அன்பர்
நீடும் கன தூய நேயமே ஈடு_இல்லை 			530
என்னும் திரு_தொண்டர் ஏத்தும் இடைச்சுரத்தின்
மன்னும் சிவானந்த வண்ணமே நல் நெறியோர் 
துன்னு நெறிக்கு ஓர் துணையாம் தூய கழுக்குன்றினிடை
முன்னும் அறிவு ஆனந்த மூர்த்தமே துன்னு பொழில் 
அம் மதுரத் தேன் பொழியும் அச்சிறுபாக்கத்து உலகர்		535
தம்மதம் நீக்கும் ஞான சம்மதமே எம்மதமும் 
சார்ந்தால் வினை நீக்கித் தாங்கு திருவக்கரையுள்
நேர்ந்தார் உபநிடத நிச்சயமே தேர்ந்தவர்கள் 
தத்தமது மதியால் சாரும் அரசிலியூர்
உத்தம மெய்ஞ்ஞான ஒழுக்கமே பத்தி_உள்ளோர் 		540
எண்ணும் புகழ் கொள் இரும்பை மாகாளத்து
நண்ணும் சிவயோக நாட்டமே மண்ணகத்துள் 
கோ பலத்தில் காண்பு அரிய கோகரணம் கோயில்கொண்ட
மா பலத்து மா பலமா மாபலமே தாபம் இலாப் 
பாகு இயல் சொல் மங்கையொடும் பாங்கு ஆர் பருப்பதத்தில்	545
யோகியர்கள் ஏத்திட வாழ் ஒப்புரவே போகி முதல் 
பாடி உற்ற நீல_பருப்பதத்தில் நல்லோர்கள்
தேடி வைத்த தெய்வத் திலகமே நீடு பவம் 
தங்காத அனேகதங்காபதம் சேர்ந்த
நம் காதலான நயப்பு உணர்வே சிங்காது 			550
தண் நிறைந்து நின்றவர்-தாம் சார் திருக்கேதாரத்தில்
பண் நிறைந்த கீதப் பனுவலே எண் நிறைந்த 
சான்றோர் வணங்கும் நொடித்தான்மலையில் வாழ்கின்ற
தேன் தோய் அமுதச் செழும் சுவையே வான் தோய்ந்த 
இந்திரரும் நாரணரும் எண்_இல் பிரமர்களும்			555
வந்து இறைஞ்சும் வெள்ளி_மலையானே தந்திடும் நல் 
தாய்க்கும் கிடையாத தண் அருள் கொண்டு அன்பர் உளம்
வாய்க்கும் கயிலை_மலையானே தூய்க் குமரன் 
தந்தையே என் அருமைத் தந்தையே தாயே என்
சிந்தையே கோயில்கொண்ட தீர்த்தனே சந்தம் மிகும் 		560
எண் தோள் உடையாய் எனை_உடையாய் மார்பகத்தில்
வண்டு ஓலிடும் கொன்றை_மாலையாய் தொண்டர் விழி 
உண்ணற்கு எளியாய் உருத்திரன் மால் ஆதியர்-தம்
கண்ணில் கனவினிலும் காண்பு அரியாய் மண்_உலகில் 
என்_போன்றவர்க்கும் இருள் நீக்கி இன்பு உதவும்		565
பொன் போன்ற மேனிப் புராதனனே மின் போன்ற 
செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கும் யாவருக்கும்
அஞ்சு அடையா வண்ணம் அளிப்போனே விஞ்சு உலகில் 
எல்லார்க்கும் நல்லவனே எல்லாம் செய் வல்லவனே
எல்லார்க்கும் ஒன்றாய் இருப்போனே தொல் ஊழி 		570
ஆர்ந்த சராசரங்கள் எல்லாம் அடி நிழலில்
சேர்ந்து ஒடுங்க மா நடனம் செய்வோனே சார்ந்து உலகில் 
எத் தேவர் மெய்த் தேவர் என்று உரைக்கப்பட்டவர்கள்
அத் தேவர்க்கு எல்லாம் முன் ஆனோனே சத்து ஆன 
வெண்மை முதல் ஐவணமும் மேவி ஐந்து தேவர்களாய்த்	575
திண்மை பெறும் ஐந்தொழிலும் செய்வோனே மண் முதலாம் 
ஐந்தாய் இரு சுடராய் ஆன்மாவாய் நாதமுடன்
விந்து ஆகி எங்கும் விரிந்தோனே அம் தண வெள் 
நீறு_உடையாய் ஆறு உடைய நீள் முடியாய் தேட அரிய
வீறு_உடையாய் நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மாறுபட 		580
எள்ளல் அடியேன் எனக்குள் ஒளியாமல்
உள்ளபடியே உரைக்கின்றேன் விள்ளுறும் யான் 
வன் சொலுடன் அன்றி வள்ளல் உனது அன்பர்-தமக்கு
இன் சொலுடன் பணிந்து ஒன்று ஈந்தது இலை புன் சொல் எனும் 
பொய் உரைக்க என்றால் புடை எழுவேன் அன்றி ஒரு		585
மெய் உரைக்க என்றும் விழைந்தது இலை வையகத்தில் 
பொல்லா விரதத்தைப் போற்றி உவந்து உண்பது அல்லால்
கொல்லா விரதத்தைக் கொண்டது இலை அல்லாதார் 
வன்புகழைக் கேட்க மனம்கொண்டது அல்லாமல்
நின் புகழைக் கேட்க நினைந்ததிலை வன்பு கொண்டே 		590
இல் நடிக்கும் நுண்_இடையார்க்கு ஏவல் புரிந்தேன் அலது உன்
பொன் அடிக்குத் தொண்டு புரிந்தது இலை பன்னுகின்ற 
செக்கு உற்ற எள் எனவே சிந்தை நசிந்தேன் அலது
முக்குற்றம்-தன்னை முறித்தது இலை துக்கம் மிகு 
தா இல் வலம்கொண்டு சஞ்சரித்தேன் அல்லது நின்		595
கோவில் வலம்கொள்ளக் குறித்தது இலை பூ_உலகில் 
வன் நிதியோர் முன் கூப்பி வாழ்த்தினேன் அன்றி உன்றன்
சன்னிதியில் கை கூப்பித் தாழ்ந்தது இலை புன் நெறி சேர் 
மிண்டரொடு கூடி வியந்தது அல்லால் ஐயா நின்
தொண்டரொடும் கூடிச் சூழ்ந்தது இலை கண்டவரைக் 		600
கன்றும் முகம் கொண்டு கடுகடுத்துப் பார்ப்பது அல்லால்
என்றும் முகமலர்ச்சி ஏற்றது இலை நன்று பெறு 
நல் நெஞ்சர் உன் சீர் நவில அது கேட்டுக்
கல்_நெஞ்சைச் சற்றும் கரைத்தது இலை பின் எஞ்சாப் 
பண் நீர்மை கொண்ட தமிழ்ப் பா_மாலையால் துதித்துக்		605
கண்ணீர் கொண்டு உன்-பால் கனிந்தது இலை தண்ணீர் போல் 
நெஞ்சம் உருகி நினைக்கும் அன்பர் போல் எனை நீ
அஞ்சல் என நின் தாள் அடுத்தது இலை விஞ்சு உலகர் 
மெய் அடியன் என்று உரைக்க வித்தக நின் பொன் அடிக்குப்
பொய் அடிமை வேடங்கள் பூண்டது உண்டு நைய மிகு 		610
மையல் வினைக்கு உவந்த மாதர் புணர்ச்சி எனும்
வெய்ய வினைக் குழியில் வீழ்ந்தது உண்டு துய்யர்-தமை 
என் ஒன்றும் இல்லாது இயல்பாகப் பின் ஒன்று
முன் ஒன்றுமாக மொழிந்தது உண்டு மன்னுகின்ற 
மானம் செயாது மனம் நொந்து இரப்போர்க்குத்		615
தானம் செய்வாரைத் தடுத்தது உண்டு ஈனம் இலா 
வாரம் உரையாது வழக்கினிடை ஓர
வாரம் உரைத்தே மலைந்தது உண்டு ஈரம் இலா 
நெஞ்சருடன் கூடி நேசம் செய்தும் அடியே
தஞ்சம் எனத் தாழாது தாழ்ந்தது உண்டு எஞ்சல் இலாத் 		620
தாய்_அனையாய் உன்றனது சந்நிதி நேர் வந்தும் ஒரு
நேயமும் இல்லாது ஒதி போல் நின்றது உண்டு தீய வினை 
மாளாக் கொடிய மனச் செல்வர் வாயிலில் போய்க்
கேளாச் சிவ_நிந்தை கேட்டது உண்டு மீளாத 
பொல்லாப் புலையரைப் போல் புண்ணியரை வன் மதத்தால்	625
சொல்லா வசை எல்லாம் சொன்னது உண்டு நல்லோரைப் 
போற்றாது பொய் உடம்பைப் போற்றிச் சிவ_பூசை
ஆற்றாது சோற்றுக்கு அலைந்தது உண்டு தேற்றாமல் 
ஈ பத்தா என்று இங்கு இரப்போர்-தமைக் கண்டு
கோபத்தால் நாய் போல் குரைத்தது உண்டு பாபத்தால் 		630
சிந்தை ஒன்று வாக்கு ஒன்று செய்கை ஒன்றாய்ப் போகவிட்டே
எந்தை நினை ஏத்தாது இருந்தது உண்டு புந்தி இந்த 
சொல்லைக் கல் என்று நல்லோர் சொன்ன புத்தி கேளாமல்
எல்லை_கல் ஒத்தே இருந்தது உண்டு தொல்லை வினை 
ஆழ்த்து ஆமய உலகில் அற்ப மகிழ்ச்சியினால்		635
வாழ்த்தாமல் உன்னை மறந்தது உண்டு தாழ்த்தாமல் 
பூணா எலும்பு அணியாய்ப் பூண்டோய் நின் பொன் வடிவம்
காணாது வீழ் நாள் கழித்தது உண்டு மாணாத 
காடு போல் ஞாலக் கடு நடையிலே இரு கால்
மாடு போல் நின்று உழைத்து வாழ்ந்தது உண்டு நாடு அகன்ற 	640
கள்ளி வாய் ஓங்கு பெரும் காமக் கடும் காட்டில்
கொள்ளிவாய்ப்பேய் போல் குதித்தது உண்டு ஒள்ளியரால் 
எள்ளுண்ட மாயா இயல்புறு புன் கல்வி எலாம்
கள் உண்ட பித்தனைப் போல் கற்றது உண்டு நள் உலகில் 
சீர் ஆசை எங்கும் சொல் சென்றிடவே வேண்டும் எனும்		645
பேர்_ஆசைப் பேய்-தான் பிடித்தது உண்டு தீரா என் 
சாதகமோ தீ_வினையின் சாதனையோ நான் அறியேன்
பாதகம் என்றால் எனக்குப் பால்_சோறு தீது அகன்ற 
தூய்மை நன்றாம் என்கின்ற தொன்மையினார் வாய்க்கு இனிய
வாய்மை என்றால் என்னுடைய வாய் குமட்டும் காய்மை தரும் 	650	
கற்கு நிகராம் கடும் சொல் அன்றி நல் மதுரச்
சொற்கும் எனக்கும் வெகு தூரம் காண் பொற்பு மிக 
நண்ணி உனைப் போற்றுகின்ற நல்லோர்க்கு இனிய சிவ
புண்ணியம் என்றால் எனக்குப் போராட்டம் அண்ணல் உனை 
நாள் உரையாது ஏத்துகின்ற நல்லோர் மேல் இல்லாத		655
கோள்_உரை என்றால் எனக்குக் கொண்டாட்டம் நீள நினை 
நேசிக்கும் நல்ல நெறியாம் சிவாகம நூல்
வாசிக்க என்றால் என் வாய் நோகும் காசிக்கு 
நீள் திக்கில் ஆனாலும் நேர்ந்து அறிவது அல்லது வீண்
வேடிக்கை என்றால் விடுவதிலை நாடு அயலில் 		660
வீறாம் உனது விழாச் செயினும் அவ்விடம்-தான்
ஆறாயிரம் காதமாம் கண்டாய் மாறான 
போகம் என்றால் உள்ளம் மிகப் பூரிக்கும் அன்றி சிவ
யோகம் என்றால் என்னுடைய உள் நடுங்கும் சோகமுடன் 
துள்ளல் ஒழிந்து என் நெஞ்சம் சோர்ந்து அழியும் காலத்தில்	665
கள்ளம் என்றால் உள்ளே களித்து எழும்பும் அள்ளல் நெறி 
செல் என்றால் அன்றிச் சிவசிவா என்று ஒரு கால்
சொல் என்றால் என்றனக்குத் துக்கம் வரும் நல்ல நெறி 
வாம் பலன் கொண்டோர்கள் மறந்தும் பெறாக் கொடிய
சோம்பல் என்பது என்னுடைய சொந்தம் காண் ஏம்பலுடன் 	670
எற்றோ இரக்கம் என்பது என்றனைக் கண்டு அஞ்சி எனை
உற்றோரையும் உடன் விட்டு ஓடும் காண் சற்றேனும் 
ஆக்கமே சேராது அறத் துரத்துகின்ற வெறும்
தூக்கமே என்றனக்குச் சோபனம் காண் ஊக்கம் மிகும் 
ஏறு_உடையாய் நீறு அணியா ஈனர் மனை ஆயினும் வெண்	675
சோறு கிடைத்தால் அதுவே சொர்க்கம் காண் வீறுகின்ற 
வாழ்வு உரைக்கும் நல்ல மனத்தர்-தமை எஞ்ஞான்றும்
தாழ்வு உரைத்தல் என்னுடைய சாதகம் காண் வேள்வி செயும் 
தொண்டர்-தமைத் துதியாத் துட்டரைப் போல் எப்பொழுதும்
சண்டை என்பது என்றனக்குத் தாய்_தந்தை கொண்ட எழு 	680
தாது ஆட ஓங்கித் தலை ஆட வஞ்சரொடு
வாதாட என்றால் என் வாய் துடிக்கும் கோது ஆடச் 
சிந்தை திரிந்து உழலும் தீயரைப் போல் நல் தரும
நிந்தை என்பது என் பழைய நேசம் காண் முந்த நினை 
எண் என்றால் அன்றி இடர் செய்திடும் கொடிய		685
பெண் என்றால் தூக்கம் பிடியாது பெண்கள் உடல் 
புல் என்றால் தேகம் புளகிக்கும் அன்றி விட்டு
நில் என்றால் என் கண்ணில் நீர் அரும்பும் புல்லர் என்ற 
பேர்க்கும் விருப்பு எய்தாத பெண் பேய்கள் வெய்ய சிறு
நீர்க் குழியே யான் குளிக்கும் நீர்ப் பொய்கை சீர்க்கரையின்	690
ஏறாப் பெண் மாதர் இடைக்குள் அளிந்து என்றும்
ஆறாப் புண்ணுக்கே அடிமை நான் தேறாத 
வெம் சலம்செய் மாயா விகாரத்தினால் வரும் வீண்
சஞ்சலம் எல்லாம் எனது சம்பந்தம் அஞ்செழுத்தை 
நேர்ந்தார்க்கு அருள் புரியும் நின் அடியர் தாமேயும்		695
சார்ந்தால் அது பெரிய சங்கட்டம் ஆர்ந்திடும் மான் 
காந்தும் விழிப் புலியைக் கண்டது போல் நல்ல குண
சாந்தம் எனைக் கண்டால் தலை சாய்க்கும் ஆம் தகையோர் 
சேர மனத்தில் செறிவித்திடும் புருட
தீரம் எனைக் கண்டால் சிரிக்கும் காண் கோரம்-அதைக் 		700
காணில் உலகில் கருத்து_உடையோர் கொள்ளுகின்ற
நாணம் எனைக் கண்டு நாணும் காண் ஏண் உலகில் 
ஞானம் கொளா எனது நாமம் உரைத்தாலும் அபி
மானம் பயம்கொண்டு மாய்ந்துவிடும் ஆன உன்றன் 
கேண்மைக் குலத் தொண்டர் கீர்த்திபெறக் கொண்ட		705
ஆண்மைக்கு நான் என்றால் ஆகாது வாண்மை பெறும் 
ஐய நின் தாள் பூசிக்கும் அன்பர் உள்ளத்து அன்பிற்கும்
பொய்யன் எனக்கும் பொருத்தம் இலை வையகத்தோர் 
இல் எனினும் சும்மா நீ ஈகின்றேன் என்று ஒரு சொல்
சொல் எனினும் சொல்லத் துணிவுகொளேன் நல்லை எமக்கு 	710
ஈ என்பார் அன்றி அன்னை என் பயத்தால் நின் சோற்றில்
ஈ என்பதற்கும் இசையாள் காண் ஈ என்பார்க்கு 
எண்ணும் சிலர் மண் இடுவார் எனக்கு அந்த
மண்ணும் கொடுக்க மனம்வாராது அண்ணுறும் என் 
இல்லை அடைந்தே இரப்பவருக்கு எப்போதும்			715
இல்லை என்பது என் வாய்க்கு இயல்பு காண் தொல் உலகை 
ஆண்டாலும் அன்றி அயலார் புன் கீரைமணிப்
பூண்டாலும் என் கண் பொறுக்காது நீண்ட எழு 
தீபம் உறுவோர் திசையோர் மற்று யாவர்க்கும்
கோபம்-அது நான் கொடுக்கில் உண்டு ஆபத்தில் 		720
வீசம் கொடுத்து எட்டு வீசம் எனப் பிறரை
மோசம்செய நான் முதல் பாதம் பாசம் உளோர் 
கைக் குடையவே எழுதிக் கட்டிவைத்த இ உலகப்
பொய்_கதையே யான் படிக்கும் புத்தகங்கள் மெய்ப்படு நின் 
மந்திரத்தை உச்சரியா வாய்_உடையேன் என் போலத்		725
தந்திரத்தில் கைதேர்ந்தவர் இல்லை எந்தை இனி 
ஏது என்று உரைப்பேன் இரும் கடல் சூழ் வையகத்தில்
சூது என்பது எல்லாம் என் சுற்றம் காண் ஓதுகின்ற 
நஞ்சம் எலாம் கூட்டி நவின்றிடினும் ஒவ்வாத
வஞ்சம் எலாம் என் கைவசம் கண்டாய் அஞ்ச வரும் 		730
வீண் அவமாம் வஞ்ச வினைக்கு முதல் ஆகி நின்ற
ஆணவமே என் காணி ஆட்சி-அதாம் மாண் நிறைந்த 
நல் அறிவே என்னை நெடுநாள் பகைத்தது அன்றி மற்றைப்
புல்_அறிவே என் உள் பொருள் கண்டாய் சொல்லவொணா 
வேடருக்கும் கிட்டாத வெம் குணத்தால் இங்கு உழலும்		735
மூடருக்குள் யானே முதல்வன் காண் வீடு அடுத்த 
மேதையர்கள் வேண்டா விலங்காய்த் திரிகின்ற
பேதை என்பது என் உரிமைப் பேர் கண்டாய் பேதம் உற 
ஓதுவது என் பற்பலவாய் உற்ற தவத்தோர் நீத்த
தீதுகள் எல்லாம் எனது செல்வம் காண் ஆதலினால் 		740
பேயினை ஒத்து இ உலகில் பித்தாகி நின்ற இந்த
நாயினை நீ ஆண்டிடுதல் நன்கு அன்றே ஆயினும் உன் 
மண்ணார் உயிர்களுக்கும் வானவர்க்கும் தான் இரங்கி
உண்ணாக் கொடு விடமும் உண்டனையே எண்ணாமல் 
வேய்த் தவள வெற்பு எடுத்த வெய்ய அரக்கன்-தனக்கும்		745
வாய்த்த வரம் எல்லாம் வழங்கினையே சாய்த்த மன 
வீம்பு உடைய வன் முனிவர் வேள்வி செய்து விட்ட கொடும்
பாம்பை எல்லாம் தோளில் பரித்தனையே நாம் பெரியர் 
எஞ்சேம் என்று ஆணவத்தால் ஏற்ற இருவரையும்
அஞ்சேல் என்று ஆட்கொண்டு அருளினையே துஞ்சு பன்றித்	750
தோயாக் குருளைகளின் துன்பம் பொறாது அன்று
தாயாய் முலை_பாலும் தந்தனையே வாய் இசைக்குப் 
பாண்டியன் முன் சொல்லி வந்த பாணன் பொருட்டு அடிமை
வேண்டி விறகு எடுத்து விற்றனையே ஆண்டு ஒரு நாள் 
வாய் முடியாத் துன்பு கொண்ட வந்திக்கு ஓர் ஆளாகித்		755
தூய் முடி மேல் மண்ணும் சுமந்தனையே ஆய் துயரம் 
மா அகம் சேர் மாணிக்கவாசகருக்காய்க் குதிரைச்
சேவகன் போல் வீதி-தனில் சென்றனையே மா விசயன் 
வில் அடிக்கு நெஞ்சம் விரும்பியது அல்லால் எறிந்த
கல் அடிக்கும் உள்ளம் களித்தனையே மல்லல் உறும் 		760
வில்வக் கிளை உதிர்த்த வெய்ய முசுக்கலையைச்
செல்வத் துரைமகனாய்ச் செய்தனையே சொல் அகலின் 
நீளுகின்ற நெய் அருந்த நேர் எலியை மூவுலகும்
ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே கோள் அகல 
வாய்ச்சு அங்கு நூல் இழைத்த வாய்ச் சிலம்பி-தன்னை உயர்	765
கோச்செங்கண் சோழன் எனக் கூட்டினையே ஏச்சு அறும் நல் 
ஆறு அடுத்த வாகீசர்க்கு ஆம் பசியைக் கண்டு கட்டுச்
சோறு எடுத்துப் பின்னே சுமந்தனையே கூறுகின்ற 
தொன்மை பெரும் சுந்தரர்க்குத் தோழன் என்று பெண் பரவை
நல் மனைக்குத் தூது நடந்தனையே நன்மை பெற 		770
இற்று என்ற இற்று என்னா எத்தனையோ பேர்கள் செய்த
குற்றம் குணம் ஆகக் கொண்டனையே பற்று உலகில் 
அன்பு உடைய தாயர்கள் ஓர் ஆயிரம் பேர் ஆனாலும்
அன்பு_உடையாய் நின்னைப் போல் ஆவாரோ இன்பமுடன் 
ஈண்ட வரும் தந்தையர்கள் எண்_இலரே ஆயினும் என்		775
ஆண்டவனே நின்னைப் போல் ஆவாரோ பூண் தகை கொள் 
ஏண் உடைய நின்னை அன்றி எந்தை பிரானே உன்
ஆணை எனக்கு உற்ற_துணை யாரும் இல்லை நாணம் உளன் 
ஆனேன் பிழைகள் அனைத்தினையும் ஐயா நீ-
தானே பொறுக்கத் தகும் கண்டாய் மேல் நோற்ற 		780
மால்-தனக்கும் மெட்டா மலர்_கழலோய் நீ என்னைக்
கூற்றனுக்குக் காட்டிக்கொடுக்கற்க பால் தவள 
நந்து அ கடல் புவியில் நான் இன்னும் வன் பிறவிப்
பந்தக் கடல் அழுந்தப்பண்ணற்க முந்தை நெறி 
நின்றே உன் பொன்_தாள் நினையாதார் பாழ் மனையில்		785
சென்றே உடல் ஓம்பச்செய்யற்க நன்றே நின்று
ஓங்கு நெறியோர் உளத்து அமர்ந்தோய் என்றன்னைத்
தீங்கு நெறியில் செலுத்தற்க ஈங்கு அடங்கி 
வாழி எனத் தான் வழுத்தினும் என் சொற்கு அடங்கா
ஏழை மனத்தால் இளைக்கின்றேன் வாழும் மரக் 		790
கோடு ஏறும் பொல்லாக் குரங்கு எனவே பொய் உலகக்
காடு ஏறும் நெஞ்சால் கலங்குகின்றேன் பாடு ஏறும் 
உள் அறியா மாயை எனும் உட்பகை ஆர்க் காமம் எனும்
கள் அறியாது உண்டு கவல்கின்றேன் தெள் உறும் என் 
கண்_அனையாய் நின் தாள்_கமலங்களை வழுத்தா		795
மண்_அனையார்-பால் போய் மயங்குகின்றேன் திண்ணம் இலாக் 
காதரவாம் துன்பக் கவலைக் கடல் வீழ்ந்தே
ஆதரவு ஒன்று இன்றி அலைகின்றேன் ஓது மறை 
ஆத்தர் எனும் உன் அடியார்-தமைக் கண்டு
நாத்திகம் சொல்வார்க்கு நடுங்குகின்றேன் பாத்து உண்டே	800
உய்வது அறியா உளத்தினேன் உய்யும் வகை
செய்வது அறியேன் திகைக்கின்றேன் சைவ நெறி
யுள் நிரம்பும் நின் கருணை உண்டோ இலையோ என்று
எண்ணிஎண்ணி உள்ளம் இளைக்கின்றேன் மண்ணினிடைக் 
கொன் செய்கை கொண்ட கொடும் கூற்றன் குறுகில் அதற்கு	805
என் செய்வோம் என்று எண்ணி எய்க்கின்றேன் முன் செய் வினை
யாம் அறையா நோயால் அகம் மெலிவுற்று ஐயோ நான்
தாமரையின் நீர் போல் தயங்குகின்றேன் தாமம் முடி 
வள்ளல் அருள் கொடுக்க வந்திலனே இன்னும் என
உள்ளம்-அது நீராய் உருகுகின்றேன் எள்ளலுறு 		810
மாலை பாய்ந்து இன்னும் என்ன வந்திடுமோ என்று நெஞ்சம்
ஆலை பாய்ந்து உள்ளம் அழிகின்றேன் ஞாலம் மிசைக் 
கோள் பார வாழ்க்கைக் கொடும் சிறையில் நின்று என்னை
மீட்பார் இலாது விழிக்கின்றேன் மீட்பு ஆகும் 
ஆற்றில் ஒரு காலும் அடங்காச் சமுசாரச்			815
சேற்றில் ஒரு காலும் வைத்துத் தேய்கின்றேன் தோற்றும் மயல் 
பாகமுறு வாழ்க்கை எனும் பாலைவனத்து உன் அருள் நீர்த்
தாகம்-அது கொண்டே தவிக்கின்றேன் மோகம்-அதில் 
போய்ப்படும் ஓர் பஞ்ச_பொறிகளால் வெம் பாம்பின்
வாய்ப்படும் ஓர் தேரையைப் போல் வாடுகின்றேன் மாய்ப்ப வரும் 	820
மீன் போலும் மாதர் விழியால் வலைப்பட்ட
மான் போலும் சோர்ந்து மடங்குகின்றேன் கான் போல 
வீற்றும் உலக விகாரப் பிரளயத்தில்
தோற்றும் சுழியுள் சுழல்கின்றேன் ஆற்றவும் நான் 
இப் பாரில் உன் மேல் அன்பு இல் எனினும் அன்பன் என		825
ஒப்பாரியேனும் உடையேன் காண் தப்பு ஆய்ந்த 
மட்டு விடேன் உன் தாள் மறக்கினும் வெண் நீற்று நெறி
விட்டுவிடேன் என்றனைக் கைவிட்டுவிடேல் துட்டன் என 
மாலும் திசைமுகனும் வானவரும் வந்து தடுத்
தாலும் சிறியேனைத் தள்ளிவிடேல் சால் உலக		830 
வாதனை கொண்டோன் என்று மற்று எவரானாலும் வந்து
போதனைசெய்தாலும் எனைப் போக்கிவிடேல் நீ தயவு 
சூழ்ந்திடுக என்னையும் நின் தொண்டருடன் சேர்த்து அருள்க
வாழ்ந்திடுக நின் தாள்_மலர்

@3. நெஞ்சறிவுறுத்தல்
* காப்பு

#-1
சீர் சான்ற முக்கண் சிவ_களிற்றைச் சேர்ந்திடில் ஆம்
பேர் சான்ற இன்பம் பெரிது

#0
ஆறுமுகத்தான் அருள் அடையின் ஆம் எல்லாப்
பேறும் மிகத் தான் பெரிது
* நெஞ்சறிவுறுத்தல் கலிவெண்பா

#1
பொன் ஆர் மலை போல் பொலிவுற்று அசையாமல்
எந்நாளும் வாழிய நீ என் நெஞ்சே பின் ஆன 
இப் பிறப்பினோடு இங்கு எழு பிறப்பும் அன்றி எனை
எப் பிறப்பும் விட்டு அகலா என் நெஞ்சே செப்பமுடன் 
செவ் ஒரு சார் நின்று சிறியேன் கிளக்கின்ற			5
இ ஒரு சொல் கேட்டிடுக என் நெஞ்சே எவ்வெவ் 
உலகும் பரவும் ஒரு முதலாய் எங்கும்
இலகும் சிவமாய் இறையாய் விலகும் 
உருவாய் உருவில் உருவாய் உருவுள்
அருவாய் அருவில் அருவாய் உருஅருவாய் 			10
நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச்
சத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் முத்தி அருள் 
ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்
நன்றாய் நவமாய் நடு நிலையாய் நின்று ஓங்கும் 
வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்கு பர			15
நாதமாய் நாதாந்த நாயகமாய் ஓதும் 
செறிவாய்த் திரமாய்ச் சிதாகாசமாய்ச் சொல்
அறிவாய் அறிவுள்_அறிவாய் நெறி மேவு 
காலமாய்க் காலம் கடந்த கருத்தாய் நல்
சீலமாய்ச் சிற்பரமாய்ச் சின்மயமாய் ஞாலம் 			20
பொருந்தா பொருளாய்ப் பொருந்தும் பொருளாய்ப்
பெரும் தாரகம் சூழ்ந்த பேறாய்த் திருந்தாத 
போக்கும்_வரத்தும் இலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள்
நோக்கும் திறத்து எழுந்த நுண் உணர்வாய் நீக்கம் இலா 
ஆதியாய் ஆதி நடு அந்தமாய் ஆங்கு அகன்ற			25
சோதியாய்ச் சோதியாச் சொல் பயனாய் நீதியாய் 
ஆங்கார நீக்கும் அகார உகாரம்-அதாய்
ஓங்காரமாய் அவற்றின் உட்பொருளாய்ப் பாங்கான 
சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச்
சத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் வித்தமாய் 			30
அண்டமாய் அண்டத்து அணுவாய் அருள் அகண்டா
கண்டமாய் ஆனந்தாகாரம்-அதாய் அண்டத்தின் 
அப்பாலாய் இப்பாலாய் அண்மையாய்ச் சேய்மை-அதாய்
எப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய்ச் செப்பாலும் 
நெஞ்சாலும் காய நிலையாலும் அ நிலைக்குள்		35
அஞ்சாலுங் காண்டற்கு அரும் பதமாய் எஞ்சாப் 
பரமாய்ப் பகாப்பொருளாய்ப் பாலாய்ச் சுவையின்
தரமாய்ப் பரப்பிரமம்-தானாய் வரமாய 
ஒன்பான் வடிவாய் ஒளி எண்_குண_கடலாய்
அன்பாய் அகநிலையாய் அற்புதமாய் இன்பாய் 		40
அகமாய்ப் புறமாய் அகம்புறமாய் நீங்கும்
சகமாய்ச் சகமாயை_தானாய் சகமாயை_
இல்லாதாய் என்றும் இருப்பதாய் யாதொன்றும்
கொல்லாதார்க்கு இன்பம் கொடுப்பதாய் எல்லார்க்கும் 
நண்ணுவதாய் நண்ணாதாய் நல்_வினையாய் அல்_வினையாய்	45
எண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் எண்ணுகின்ற 
வானாய் நிலனாய் வளியாய் அனலாய் நீர்_
தானாய் வழிபடும் நான்-தான்_தானாய் வான் ஆதி
ஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம்
மன்றிடத்தில் என்றும் வதிவதாய் ஒன்றியதோர் 		50
ஐந்நிறமாய் அ நிறத்தின் ஆம் ஒளியாய் அ ஒளிக்குள்
எ நிறமும் வேண்டா இயல் நிறமாய் முந்நிறத்தில் 
பூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய்
நீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் பூப்பது இன்றி 
வாளாது இருப்பதுவாய் வாதனாதீதமாய்			55
நீளாது நீண்ட நிலையினதாய் மீளாப் 
பெரிதாய்ச் சிறிதாய்ப் பெரிதும் சிறிதும்
அரிதாய் அரிதில்_அரிதாய்த் துரிய 
வெளியாய்ப் பர_வெளியாய் மேவு பர விந்தின்
ஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் தெளி ஆதி 		60
கற்பகமாய்க் காணும் சங்கற்ப விகற்பமாய்
நிற்பதாகார நிருவிகற்பாய்ப் பொற்பு உடைய 
முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்_ஒளியாய்ப் பின்_ஒளியாய்
எச்சுடரும் போதா இயல் சுடராய் அச்சில் 
நிறைவாய்க் குறைவாய் நிறைகுறைவு_இல்லாதாய்		65
மறைவாய் வெளியாய் மனுவாய் மறையாத 
சச்சிதானந்தம்-அதாய்த் தன்னிகர் ஒன்று இல்லாதாய்
விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் மெச்சுகின்ற 
யோகமாய் யோகியா யோகத்து எழுந்த சிவ
போகமாய்ப் போகியாய்ப் போகம் அருள் ஏகமாய்க் 		70
கேவலமாய்ச் சுத்த சகலமாய்க் கீழ்ச் சகல
கேவலங்கள் சற்றும் கிடையாதாய் மா வலத்தில் 
காட்சியாய்க் காண்பானாய்க் காணப்படு_பொருளாய்ச்
சூட்சியாய்ச் சூட்சியால் தோய்வு அரிதாய் மாட்சி பெறச் 
செய்பவனாய்ச் செய்தொழிலாய்ச் செய்பொருளாய்ச் செய்தொழிலால்	75
உய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் மொய்கொள் 
அதுவாய் அவளாய் அவனாய் அவையும்
கதுவாது நின்ற கணிப்பாய்க் கதுவாமல் 
ஐயம் திரிபோடு அறியாமை விட்டு அகற்றிப்
பொய் என்பது ஒன்றும் பொருந்தாராய்ச் செய் என்ற 		80
ஓர் வினையில் இன்பமும் மற்று ஓர் வினையில் துன்பமும் ஆம்
சார்வினை விட்டு ஓங்கும் தகையினராய்ப் பார் வினையில் 
ஓர் பால் வெறுப்பும் மற்றை ஓர் பால் விருப்பும் உறும்
சார்பால் மயங்காத் தகையினராய்ச் சார்பாய 
ஓர் இடத்தில் தண்மையும் மற்று ஓர் இடத்தில் வெம் சினமும்	85
பாரிடத்தில் கொள்ளாப் பரிசினராய் நீரிடத்தில் 
தண்மை நிகராது என்றும் சாந்தம் பழுத்து உயர்ந்த
ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் வெண்மை இலா 
ஒன்றும் அறிவின் உதயாதி ஈறு அளவும்
என்றும் இரண்டு என்பது இல்லவராய் மன்ற ஒளிர் 		90
அ மூன்றின் உள்ளே அடுக்கி வரும் ஒன்று அகன்ற
மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய்த் தம் ஊன்றி 
வீடாது நின்றும் விரிந்தும் விகற்ப நடை
நாடாது நான்கும் நசித்தவராய் ஊடாக 
எஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும்			95
அஞ்சாதி அஞ்சும் அறுத்தவராய் எஞ்சாமல் 
ஈண்டு ஆண்டு அருளும் இறையோர்-தமை ஆறில்
ஆண்டாண்டு கண்டு ஆறு அகன்றவராய் ஈண்டாது 
வாழியுற்ற வானோரும் வந்து தமக்கு இரண்டோடு
ஏழ் இயற்ற ஏழும் இகந்தவராய் ஊழ் இயற்றக் 		100
கட்டி நின்று உள் சோதி ஒன்று காணத் தொடங்குகின்றோர்
எட்டுகின்ற எட்டின் மேல் எய்தினராய்க் கட்டுகின்ற 
தேன் தோய் கருணைச் சிவம் கலந்து தேக்குகின்ற
சான்றோர்-தம் உள்ளம் தணவாதாய் மான்ற மலத் 
தாக்கு ஒழிந்து தத்துவத்தின் சார்பாம் தனு ஒழிந்து		105
வாக்கு ஒழிந்து மாணா மனம் ஒழிந்து ஏக்கம் உற 
வாய்க்கும் சுகம் ஒழிந்து மண் ஒழிந்து விண் ஒழிந்து
சாய்க்கும் இரா_பகலும்-தான் ஒழிந்து நீக்கு ஒழிந்து 
நானும் ஒழியாது ஒழிந்து ஞானம் ஒழியாது ஒழிந்து
தானும் ஒழியாமல் தான் ஒழிந்து மோன நிலை 		110
நிற்கும் பிரம நிர்_அதிசயானந்தம்-அதாய்
நிற்கும் பரம நிருத்தன் எவன் தற்பரமாய் 
நின்றான் எவன் அன்பர் நேய மனத்தே விரைந்து
சென்றான் எவன் சர்வ தீர்த்தன் எவன் வன் தீமை 
இல்லான் எவன் யார்க்கும் ஈசன் எவன் யாவும்		115
வல்லான் எவன் அந்தி வண்ணன் எவன் கல் ஆலில் 
சுட்டு அகன்ற ஞான சுகாதீதம் காட்டி முற்றும்
விட்டு அகன்ற யோக வினோதன் எவன் மட்டு அகன்ற 
அண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்து அருளித்
திண் தங்குமாறு இருத்தும் சித்தன் எவன் பண் தங்கு 		120
வீயாச் சிறுபெண் விளையாட்டுள் அண்டம் எலாம்
தேயாது கூட்டுவிக்கும் சித்தன் எவன் யாயாதும் 
வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்-தமைத்
தீண்டாது தீண்டுகின்ற சித்தன் எவன் ஈண்டு ஓது 
பற்றுருவாய்ப் பற்றாப் பர அணுவின் உள் விளங்கும்		125
சிற்றுருவாய் உள் ஒளிக்கும் சித்தன் எவன் மற்று உருவின் 
வையாது வைத்து உலகை மா இந்திரசாலம்
செய்யாது செய்விக்கும் சித்தன் எவன் நையாமல் 
அப்பிடை வைப்பாம் உலகில் ஆர்_உயிரை மாயை எனும்
செப்பிடை வைத்து ஆட்டுகின்ற சித்தன் எவன் ஒப்புறவே 	130
நில்லாத காற்றை நிலையாக் கடத்து அடைத்துச்
செல்லாது வைக்கின்ற சித்தன் எவன் பொல்லாத 
வெம் பாம்பை மேல் அணிந்து ஓர் வெம் புற்றின் உள் இருந்தே
செம் பாம்பை ஆட்டுகின்ற சித்தன் எவன் தம் பாங்கர் 
ஒண் கயிற்றான் ஒன்று இன்றி உள் நின்று உயிர்களை ஊழ்த்	135
திண் கயிற்றால் ஆட்டுகின்ற சித்தன் எவன் வண் கை உடைத் 
தான் அசைந்தால் மற்றைச் சகம் அசையும் என்று மறை
தேன் அசையச் சொல்லுகின்ற சித்தன் எவன் ஊனம் இன்றிப் 
பேர்த்து உயிர்கள் எல்லாம் ஓர் பெண்_பிள்ளையின் வசமாய்ச்
சேர்த்து வருவிக்கும் சித்தன் எவன் போர்த்து மிக 		140
அல் விரவுங் காலை அகிலம் எலாம் தன் பதத்து ஓர்
சில் விரலில் சேர்க்கின்ற சித்தன் எவன் பல் வகையாய்க் 
கை கலந்த வண்மைக் கருப்பாசயப் பையுள்
செய் கருவுக்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய் கருவை 
மெய் வைத்த வேர்வையினும் வீழ் நிலத்தும் அண்டத்தும்	145
செய்வித்து அங்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய்விக்கும் 
வித்து ஒன்றும் இன்றி விளைவித்து அருள் அளிக்கும்
சித்து என்றும் வல்ல ஒரு சித்தன் எவன் சத்துடனே 
உற்பத்தியாய் உலகில் ஒன்பது வாய்ப் பாவைகள் செய்
சிற்பத் தொழில் வல்ல சித்தன் எவன் பற்பலவாம்		150
கார் ஆழிகளைக் கரை இன்றி எல்லை இலாச்
சேர் ஊழி நிற்கவைத்த சித்தன் எவன் பேராத 
நீர் மேல் நெருப்பை நிலையுற வைத்து எவ்வுலகும்
சீர் மேவுறச் செய்யும் சித்தன் எவன் பார் ஆதி 
ஐந்திலைந்து நான்கு ஒரு மூன்று ஆம் இரண்டு ஒன்றாய் முறையே		155
சிந்தையுற நின்று அருளும் சித்தன் எவன் பந்தமுற 
ஆண்பெண்ணாய்ப் பெண்ஆணாய் அண்மை-தனை வானின்
சேண் பண்ண வல்ல ஒரு சித்தன் எவன் மாண்பு அண்ணாப் 
பேடு ஆணாய்ப் பெண்ணாய்ப் பெண் ஆண் பெரும் பேடாய்ச்
சேடாகச் செய்ய வல்ல சித்தன் எவன் சேடாய 		160
வெண்மை கிழமாய் விருத்தம் அந்த வெண்மை-அதாய்த்
திண்மை பெறச் செய்யும் சித்தன் எவன் ஒண்மை இலா 
ஓட்டினைச் செம்பொன்னாய் உயர் செம்பொன் ஓடாகச்
சேட்டை அறச் செய்கின்ற சித்தன் எவன் காட்டில் உறு 
காஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த்		165
தேம் சிவணச் செய்கின்ற சித்தன் எவன் வாஞ்சை உற 
நாரணன்_சேய் நான்முகனாய் நான்முகன்_சேய் நாரணனாய்ச்
சீர் அணவச் செய்ய வல்ல சித்தன் எவன் பேர் அணவக் 
கொம்மை பெறும் கோடாகோடி அண்டம் எல்லாம் ஓர்
செம் மயிர்க்காலுள் புகுத்தும் சித்தன் எவன் செம்மை இலா 	170
வெம் புலியை வெண் பால் விளை பசுவாய் அப் பசுவைச்
செம் புலியாச் செய்ய வல்ல சித்தன் எவன் அம்புலியை 
அம் கதிர் ஒண் செங்கதிராய் அம்புலியாய்ப் பம்புகின்ற
செங்கதிரைச் செய்ய வல்ல சித்தன் எவன் துங்கம் உறா 
ஓர் அணு ஓர் மா மலையாய் ஓர் மா மலை-அது ஓர்		175
சீர் அணுவாய்ச் செய்ய வல்ல சித்தன் எவன் வீரமுடன் 
முன் நகையா நின்றதொரு முப்புரத்தை அன்று ஒரு கால்
சில் நகையால் தீ மடுத்த சித்தன் எவன் முன் அயன் மால் 
மற்று இருந்த வானவரும் வாய்ந்து அசைக்கா வண்ணம் ஒரு
சில் துரும்பை நாட்டி நின்ற சித்தன் எவன் மற்றவர் போல் 	180
அல்லா அயனும் அரியும் உருத்திரனும்
செல்லா நெறி நின்ற சித்தன் எவன் ஒல்லாத 
கல்லில் சுவையாய்க் கனியில் சுவை_இலதாய்ச்
செல்லப் பணிக்க வல்ல சித்தன் எவன் அல்லல் அறப் 
பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனாதீதன் எனச்			185
சீர்க்கின்ற மெய்ஞ்ஞானச் சித்தன் எவன் மார்க்கங்கள் 
ஒன்று என்ற மேலவரை ஒன்று என்று உரைத்தவர்-பால்
சென்று ஒன்றி நிற்கின்ற சித்தன் எவன் அன்று ஒருநாள் 
கல்_ஆனை தின்னக் கரும்பு அளித்துப் பாண்டியன் வீண்
செல்லாது அளித்த மகா சித்தன் எவன் சொல்லாத 		190
ஒன்றே இரண்டே மேல் ஒன்றிரண்டே என்பவற்றுள்
சென்றே நடு நின்ற சித்தன் எவன் சென்று ஏறும் 
அத்திரத்தை மென் மலராய் அ மலரை அத்திரமாய்ச்
சித்திரத்தைப் பேசுவிக்கும் சித்தன் எவன் எத் தலத்தும் 
சங்கம்-அதே தாபரமாய்த் தாபரமே சங்கம்-அதாய்ச்		195
செம் கை இடாது ஆற்ற வல்ல சித்தன் எவன் தங்குகின்ற 
சத்து எல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச்
சித்து எல்லாம்_வல்ல சிவ சித்தன் எவன் தத்து எல்லாம் 
நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன் உண்மை
காட்டாது காட்டி நிற்கும் கள்வன் எவன் பாட்டோடு 		200
வண்டு ஆலும் கொன்றை மலரோய் என மறைகள்
கண்டாலும் காணாத கள்வன் எவன் தொண்டாக 
அள்ளு அஞ்சு எறியார்க்கே அன்றி அறிவார்க்குக்
கள்ளம் செறியாத கள்வன் எவன் எள்ளல் அறக் 
கொண்ட எலாம் தன்-பால் கொடுக்கும்-அவர்-தம்மிடத்தில்	205
கண்ட எலாம் கொள்ளை கொளும் கள்வன் எவன் கொண்டு உளத்தில் 
தன்னை ஒளிக்கின்றோர்கள்-தம் உள் ஒளித்து உள்ள எலாம்
கன்னமிடக் கைவந்த கள்வன் எவன் மன் உலகைச் 
சற்பனை செய்கின்ற திரோதானம் எனும் சத்தியினால்
கற்பனை செய்தே மயக்கும் கள்வன் எவன் முற்படும் இத் 	210
தொண்டு உலகில் உள்ள உயிர்-தோறும் ஒளித்து ஆற்றல் எலாம்
கண்டு உலவுகின்றதொரு கள்வன் எவன் விண்டு அகலா 
மண் மயக்கும் பொன் மயக்கும் மாதர் மயக்கும் எனும்
கண் மயக்கம் காட்டி நிற்கும் கள்வன் எவன் உள் மயக்கும்
மாசு பறிக்கும் மதி_உடையோர்-தம்முடைய			215
காசு பறிக்கின்ற கள்வன் எவன் ஆசு அகன்ற 
பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றை நுதல்
கண்ணால் அழிக்கின்ற கள்வன் எவன் எண்ணாது 
நான் என்று நிற்கில் நடுவே அ நான் நாணத்
தான் என்று நிற்கும் சதுரன் எவன் மான் என்ற 		220
மாயை-தனைக் காட்டி மறைப்பித்து அ மாயையில் தன்
சாயை-தனைக் காட்டும் சதுரன் எவன் நேயமுடன் 
நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடு-தொறும்
தான் மறையும் மேன்மைச் சதுரன் எவன் வான் மறையா 
முன்னை மறைக்கும் முடிப் பொருள் என்று ஆய்பவர்க்கும்	225
தன்னை மறைக்கும் சதுரன் எவன் உன்னுகின்றோர் 
சித்தத்தில் சுத்த சிதாகாசம் என்று ஒரு சித்.
சத்தத்தில் காட்டும் சதுரன் எவன் முத்தர் என 
யாவர் இருந்தார் அவர் காண வீற்றிருக்கும்
தேவர் புகழ் தலைமைத் தேவன் எவன் யாவர்களும் 		230
இ_வணத்தன் இ_இடத்தன் இ_இயலன் என்று அறியாச்
செவ்வணத்தனாம் தலைமைத் தேவன் எவன் மெய்_வணத்தோர்-
தாம் வாழ அண்ட சராசரங்கள்-தாம் வாழ
நாம் வாழத் தன் உரையாம் நான்மறைகள்-தாம் வாழச் 
சார் உருவின் நல் அருளே சத்தியாய் மெய் அறிவின்		235
சீர் உருவே ஓர் உருவாம் தேவன் எவன் ஈர் உருவும் 
ஒன்று என்று உணர உணர்த்தி அடியர் உளம்
சென்று அங்கு அமர்ந்து அருளும் தேவன் எவன் என்றென்றும் 
தன் சகசம் என்றே சமயம் சமரசமாம்
சிற்சபையில் வாழ்கின்ற தேவன் எவன் பிற்படும் ஓர் 		240
பொய் விட்டு மெய் நெறியைப் போற்றித் தற்போதத்தைக்
கைவிட்டு உணர்வே கடைப்பிடித்து நெய் விட்ட 
தீப் போல் கனலும் செருக்கு அறவே செங்கமலப்
பூப் போலும் தன் தாள் புணை பற்றிக் காப்பாய 
வெண் நீறு அணிந்து விதிர்விதிர்த்து மெய் பொடிப்பக்		245
கண்ணீர் அருவி கலந்து ஆடி உள் நீர்மை 
என்பு உருகி உள் உருகி இன்பு ஆர் உயிர் உருகி
அன்பு உருகி அன்பு உருவம் ஆகிப் பின் வன்பு அகன்று 
புண்ணியா திங்கள் புரி சடையாய் பொன் இதழிக்
கண்ணியா எங்கள் களைகண்ணே எண்ணியாங்கு		250
அன்பர்க்கு அருளும் அரசே அமுதே பேர்_
இன்பக் கடலே எமது உறவே மன் பெற்று 
மாற்று உரையாப் பொன்னே மணியே எம் கண்மணியே
ஏற்று உவந்த மெய்ப்பொருளே என்று நிதம் போற்றிநின்றால் 
உள் ஊறி உள்ளத்து உணர்வு ஊறி அ உணர்வின்		255
அள் ஊறி அண்ணித்து அமுது ஊறித் தெள் ஊறும் 
வான் போல் பரவி மதி போல் குளிர்ந்து உயர் கோல்
தேன் போல் மதுரிக்கும் தேவன் எவன் வான்_போனார் 
மாண் கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கலப் பொன்
நாண் கொடுக்க நஞ்சு உவந்த நாதன் எவன் நாள்_மலர் பெய்து	260
ஆர்த்தியாய்த் தேவர் அரகர என்று ஏத்த அட்ட_
மூர்த்தியாய் நின்ற முதல்வன் எவன் சீர்த்தி பெற 
ஈண்டு அற்புத வடிவாய் எத் தேவரேனும் நின்று
காண்டற்கு அரிதாம் கணேசன் எவன் வேண்டுற்றுப் 
பூமி எங்கும் வாழ்த்திப் புகழ்வார் விரும்பும் இட்ட		265
காமியங்கள் ஈயும் கணேசன் எவன் நாம் இயங்க 
ஏண வரும் இடையூறு எல்லாம் அகற்றி அருள்
காண எமக்கு ஈயும் கணேசன் எவன் மாண வரும்
முந்து அ மறையின் முழுப்பொருளை நான்முகற்குத்
தந்த அருள்_கடலாம் சாமி எவன் தம் தமக்காம் 		270
வாது அகற்றி உண்மை மரபு அளித்து வஞ்ச மலக்
கோது அகற்றும் நெஞ்சக் குகேசன் எவன் தீது அகற்றித் 
தங்கும் உலகங்கள் சாயாமல் செம் சடை மேல்
கங்கை-தனைச் சேர்த்த கடவுள் எவன் எங்கு உறினும் 
கூம்பா நிலைமைக் குணத்தோர் தொழுகின்ற			275
பாம்பு ஆபரணப் பரமன் எவன் கூம்பாது 
போற்று உரைத்து நிற்கும் புனிதன் மேல் வந்த கொடும்
கூற்று உதைத்த செம் தாள் குழகன் எவன் ஆற்றலுறு 
வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்தி முதல்
ஐயைந்து மூர்த்தி எனும் ஐயன் எவன் ஐயம் தீர் 		280
வல்லார் சொல் வண்ணம் எந்த வண்ணம் அந்த வண்ணங்கள்
எல்லாம் உடைய இதத்தன் எவன் எல்லார்க்கும் 
தாம் தலைவர் ஆகத் தம் தாள் தொழும் எத் தேவர்க்கும்
ஆம் தலைமை ஈந்த பரமார்த்தன் எவன் போந்து உயிர்கள் 
எங்கெங்கு இருந்து மனத்து யாது விழைந்தாலும்		285
அங்கங்கு இருந்து அளிக்கும் அண்ணல் எவன் புங்கம் மிகும் 
அண்ணல் திரு_மலர்க் கை ஆழி பெறக் கண் இடந்த
கண்ணற்கு அருளிய முக்கண்ணன் எவன் மண்ணிடத்தில் 
ஓயாது சூல் முதிர்ந்த ஓர் பெண்-தனக்காகத்
தாய் ஆகி வந்த தயாளன் எவன் சேயாக 			290
வேல் பிடித்த கண்ணப்பன் மேவும் எச்சில் வேண்டும் இதத்
தால் பொசித்து நேர்ந்த தயாளன் எவன் பால் குடத்தைத் 
தான் தந்தை என்று எறிந்தோன் தாள் எறிந்த தண்டிக்குத்
தான் தந்தை ஆன தயாளன் எவன் தான் கொண்டு 
சம்பு நறும் கனியின்-தன் விதையைத் தாள் பணிந்த		295
சம்பு முனிக்கு ஈயும் தயாளன் எவன் அம்புவியில் 
ஆண்டவன் என்று ஏத்தப் பொன்_அம்பலத்தில் ஆனந்தத்
தாண்டவம் செய்கின்ற தயாளன் எவன் காண் தகைய 
முத்துச் சிவிகையின் மேல் முன் காழி ஓங்கும் முழு
முத்தைத் தனி வைத்த முத்தன் எவன் பத்தி பெறு		300 
நா ஒன்று அரசர்க்கு நாம் தருவேம் நல்லூரில்
வா என்று வாய்_மலர்ந்த வள்ளன் எவன் பூ ஒன்று 
நல் தொண்டர் சுந்தரரை நாம் தடுக்க வந்தமையால்
வன் தொண்டன் நீ என்ற வள்ளல் எவன் நல் தொண்டின் 
காணிக்கையாகக் கருத்து அளித்தார்-தம் மொழியை		305
மாணிக்கம் என்று உரைத்த வள்ளல் எவன் தாள் நிற்கும் 
தன் அன்பர் தாம் வருந்தில் சற்றும் தரியாது
மன் அன்பர் உள் அளிக்கும் வள்ளல் எவன் முன் அன்பில் 
சால்பு உடைய நல்லோர்க்குத் தண் அருள்தந்து ஆட்கொள ஓர்
மால் விடை மேல் வந்து அருளும் வள்ளல் எவன் மால் முதலோர் 	310
தாம் அலையா வண்ணம் தகை அருளி ஓங்கு வெள்ளி
மா மலை வாழ்கின்ற அருள் வள்ளல் எவன் ஆம் அவனே 
நம்மைப் பணிகொண்டு நாரணனும் நாட அரிதாம்
செம்மைக் கதி அருள் நம் தெய்வம் காண் எம்மையினும் 
நாடக் கிடைத்தல் நமக்கு அன்றி நான்முகற்கும்		315
தேடக் கிடையா நம் தெய்வம் காண் நீடச் சீர் 
நல் வந்தனை செய்யும் நம்_போல்வார்க்கு ஓர் ஞானச்
செல்வம் தரும் நமது தெய்வம் காண் சொல் வந்த 
எண்மை பெறும் நாம் உலகில் என்றும் பிறந்து இறவாத்
திண்மை அளித்து அருள் நம் தெய்வம் காண் வண்மையுற 	320
முப்பாழ் கடந்த முழுப் பாழுக்கு அப்பாலைச்
செப்பாது செப்புறும் நம் தேசிகன் காண் தப்பாது 
தீரா இடும்பைத் திரிபு என்பது யாதொன்றும்
சேரா நெறி அருள் நம் தேசிகன் காண் ஆராது 
நித்தம் தெரியா நிலை மேவிய நமது			325
சித்தம் தெளிவிக்கும் தேசிகன் காண் வித்தர் என 
யாதொன்றும் தேராது இருந்த நமக்கு இ உலகம்
தீது என்று அறிவித்த தேசிகன் காண் கோது இன்றி 
ஓசை பெறு கடல் சூழுற்ற உலகில் நம்மை
ஆசையுடன் ஈன்ற அப்பன் காண் மாசு உறவே 		330
வன்பாய் வளர்க்கின்ற மற்றையர் போல் அல்லாமல்
அன்பாய் நமை வளர்க்கும் அப்பன் காண் இன்பு ஆக 
இப் பாரில் சேயார் இதயம் மலர்ந்து அம்மை
அப்பா எனும் நங்கள் அப்பன் காண் செப்பாமல் 
எள்ளித் திரிந்தாலும் இந்தா என்று இன் அமுதம்		335
அள்ளிக் கொடுக்கும் நமது அப்பன் காண் உள்ளிக்கொண்டு
இன்றே அருள்வாய் எனத் துதிக்கில் ஆங்கு நமக்கு
அன்றே அருளும் நமது அப்பன் காண் நன்றே முன் 
காதரவு செய்து நலம் கற்பித்துப் பின் பெரிய
ஆதரவு செய்யும் நங்கள் அப்பன் காண் கோதுறும் மா 		340
வஞ்ச மலத்தால் வருந்தி வாடுகின்ற நம்-தமையே
அஞ்சல்அஞ்சல் என்று அருளும் அப்பன் காண் துஞ்சல் எனும் 
நச்சென்ற வாதனையை நாளும் எண்ணி நாம் அஞ்சும்
அச்சம் கெடுத்து ஆண்ட அப்பன் காண் நிச்சலும் இங்
கே இரவும்_எல்லும் எளியேம் பிழைத்த பிழை		345
ஆயிரமும் தான் பொறுக்கும் அப்பன் காண் சேய் இரங்கா 
முன்னம் எடுத்து அணைத்து முத்தமிட்டுப் பால் அருத்தும்
அன்னையினும் அன்பு உடைய அப்பன் காண் மன் உலகில் 
வன்மை அறப் பத்து மாதம் சுமந்து நமை
நன்மை தரப் பெற்ற நற்றாய் காண் இம்மை-தனில் 		350
அன்றொருநாள் நம் பசி கண்டு அந்தோ தரியாது
நன்று இரவில் சோறு அளித்த நற்றாய் காண் என்றும் அருள் 
செம்மை இலாச் சிறிய தேவர்கள்-பால் சேர்க்காது
நம்மை வளர்க்கின்ற நற்றாய் காண் சும்மை என 
மூளும் பெரும் குற்றம் முன்னி மேல்மேல் செயினும்		355
நாளும் பொறுத்து அருளும் நற்றாய் காண் மூளுகின்ற 
வன் நெறியில் சென்றாலும் வா என்று அழைத்து நமை
நல் நெறியில் சேர்க்கின்ற நற்றாய் காண் செந்நெறியின் 
நாம் தேடா முன்னம் நமைத் தேடிப் பின்பு தனை
நாம் தேடச்செய்கின்ற நற்றாய் காண் ஆம்-தோறும் 		360
காலம் அறிந்தே கனிவோடு நல் அருள்_பால்
ஞாலம் மிசை அளிக்கும் நற்றாய் காண் சால உறு 
வெம் பிணியும் வேதனையும் வேசறிக்கையும் துயரும்
நம் பசியும் தீர்த்து அருளும் நற்றாய் காண் அம்புவியில் 
வெந்நீரில் ஆட்டிடில் எம் மெய் நோகும் என்று அருளாம்		365
நல் நீரில் ஆட்டுகின்ற நற்றாய் காண் எந்நீரின் 
மேலாய் நமக்கு வியன் உலகில் அன்பு உடைய
நாலாயிரம் தாயில் நற்றாய் காண் ஏலாது 
வாடி அழுதால் எம் வருத்தம் தரியாது
நாடி எடுத்து அணைக்கும் நற்றாய் காண் நீடு உலகில் 		370
தான் பாடக் கேட்டுத் தமியேன் களிக்கும் முன்னம்
நான் பாடக் கேட்டு உவக்கும் நற்றாய் காண் வான் பாடும் 
ஞான மணம் செய் அருளாம் நங்கை-தனைத் தந்து நமக்கு
ஆன மணம்செய்விக்கும் அம்மான் காண் தேனினொடும் 
இன் பால் அமுதாதி ஏக்கமுற இன் அருள் கொண்டு		375
அன்பால் விருந்து அளிக்கும் அம்மான் காண் வன் பாவ 
ஆழ் கடல் வீழ்ந்து உள்ளம் அழுந்தும் நமை எடுத்துச்
சூழ் கரையில் ஏற்றும் துணைவன் காண் வீழ் குணத்தால் 
இன்பம் எனைத்தும் இது என்று அறியா நம்
துன்பம் துடைக்கும் துணைவன் காண் வன் பவமாம் 		380
தீ நெறியில் சென்று தியங்குகின்ற நம்-தமக்குத்
தூ நெறியைக் காட்டும் துணைவன் காண் மா நிலத்தில் 
இன்று தொட்டது அன்றி இயற்கையாய் நம்-தமக்குத்
தொன்றுதொட்டு வந்த அருள் சுற்றம் காண் தொன்றுதொட்டே 
ஆயும் உடற்கு அன்பு உடைத்தாம் ஆர்_உயிரில் தான் சிறந்த	385
நேயம் வைத்த நம்முடைய நேசன் காண் பேயர் என 
வாங்காது நாமே மறந்தாலும் நம்மை விட்டு
நீங்காத நம்முடைய நேசன் காண் தீங்காக 
ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா என அருளை
நீட்டுகின்ற நம்முடைய நேசன் காண் கூட்டு உலகில் 		390
புல்லென்ற மாயையிடைப் போம்-தோறும் நம்மை இங்கு
நில் என்று இருத்துகின்ற நேசன் காண் சில்லென்று என் 
உள் தூவும் தன்னை மறந்து உண்டாலும் மற்று அதற்கு
நிட்டூரம் செய்யாத நேசன் காண் நட்டு ஊர்ந்து 
வஞ்சம்-அது நாம் எண்ணி வாழ்ந்தாலும் தான் சிறிதும்		395
நெஞ்சில் அது வையாத நேசன் காண் எஞ்சல் இலாப் 
பார் நின்ற நாம் கிடையாப் பண்டம் எது வேண்டிடினும்
நேர் நின்று அளித்து வரும் நேசன் காண் ஆர்வமுடன் 
ஆர்ந்த நமக்கு இவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும்
நேர்ந்த உயிர் போல் கிடைத்த நேசன் காண் சேர்ந்து மிகத் 	400
தாபம் செய் குற்றம் தரினும் பொறுப்பது அன்றிக்
கோபம்செயா நமது கோமான் காண் பாபம் அற 
விள்ளும் இறை நாம் அன்பு மேவல் அன்றி வேற்று அரசர்
கொள்ளும் இறை வாங்கா நம் கோமான் காண் உள்ளமுற 
உண்டு அளிக்கும் ஊண் உடை பூண் ஊர் ஆதிகள் தானே	405
கொண்டு நமக்கு இங்கு அளிக்கும் கோமான் காண் மண்டலத்தில் 
ஒன்றாலும் நீங்காது உகங்கள் பலபலவாய்ச்
சென்றாலும் செல்லா நம் செல்வம் காண் முன் தாவி 
நாடி வைக்கும் நல் அறிவோர் நாளும் தவம் புரிந்து
தேடிவைத்த நம்முடைய செல்வம் காண் மாடு இருந்து 		410
நாம் எத்தனை நாளும் நல்கிடினும் தான் உலவாச்
சேமித்த வைப்பின் திரவியம் காண் பூமி-கண் 
ஈங்கு உறினும் வான் ஆதி யாங்கு உறினும் விட்டு அகலாது
ஓங்கு அருளால் நம்மை உடையவன் காண் ஆங்கு அவன்றன் 
கங்கைச் சடை அழகும் காதல் மிகும் அச் சடை மேல்		415
திங்கள் கொழுந்தின் திரு_அழகும் திங்கள்-தன் மேல் 
சார்ந்து இலங்கும் கொன்றை மலர்த் தார் அழகும் அத் தார் மேல்
ஆர்ந்து இலங்கும் வண்டின் அணி அழகும் தேர்ந்தவர்க்கும் 
நோக்க அரிய நோக்கு அழகும் நோக்கு ஆர் நுதல் அழகும்
போக்கு அரிய நல் நுதலில் பொட்டு அழகும் தேக்கு திரி		420
புண்டரத்தின் நல் அழகும் பொன் அருள்-தான் தன் எழிலைக்
கண்டவர்-பால் ஊற்றுகின்ற கண் அழகும் தொண்டர்கள்-தம் 
நேசித்த நெஞ்ச மலர் நீடு மணம் முகந்த
நாசித் திரு_குமிழின் நல் அழகும் தேசு உற்ற 
முல்லை முகையாம் முறுவல் அழகும் பவள		425
எல்லை வளர் செவ் இதழ் அழகும் நல்லவரைத் 
தே என்ற தீம் பாலில் தேன் கலந்தால் போல் இனிக்க
வா என்று அருளும் மலர் வாய அழகும் பூ ஒன்றும் 
கோன் பரவும் சங்கக் குழை அழகும் அன்பர் மொழித்
தேன் பரவும் வள்ளைச் செவி அழகும் நான் பரவி		430 
வேட்டவையை நின்று ஆங்கு விண்ணப்பம் செய்ய அது
கேட்டு அருளும் வார் செவியின் கேழ் அழகும் நாட்டில் உயர் 
சைவம் முதலாய்த் தழைக்க அருள் சுரக்கும்
தெய்வ முகத்தின் திரு அழகும் தெய்வ முகத்து 
உள்ளம் குளிர உயிர் குளிர மெய் குளிரக்			435
கொள்ளும் கருணைக் குறிப்பு அழகும் உள் அறிவின் 
எள்ளாத மேன்மை உலகு எல்லாம் தழைப்ப ஒளிர்
தெள் ஆர் அமுதச் சிரிப்பு அழகும் உள் ஓங்கும் 
சீல அருளின் திறத்துக்கு இலச்சினையாம்
நீல மணி மிடற்றின் நீடு அழகும் மால் அகற்றி 		440
வாழ்ந்து ஒளிரும் அன்பர் மனம் போலும் வெண் நீறு
சூழ்ந்து ஒளிகொண்டு ஓங்கு திருத் தோள் அழகும் தாழ்ந்திலவாய்த் 
தான் ஓங்கும் அண்டம் எலாம் சத்தம் உறக் கூவும் ஒரு
மான் ஓங்கும் செங்கை மலர் அழகும் ஊன் ஓங்கும் 
ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர் மழுவைக்		445
காணவைத்த செங்கமலக் கை அழகும் நாணமுற்றே 
ஏங்கும் பரிசு உடைய எம்_போல்வார் அச்சம் எலாம்
வாங்கும் அபய மலர் அழகும் தீங்கு அடையாச் 
சீர் வரவும் எல்லாச் சிறப்பும் பெறவும் அருள்
சார் வரத ஒண் கைத்தலத்து அழகும் பேர் அரவப் 		450
பூண் இலங்க வெண் பொன் பொடி இலங்க என்பு அணித் தார்
மாண் இலங்க மேவு திரு மார்பு அழகும் சேண்_நிலத்தர் 
மேல் உடுத்த ஆடை எலாம் வெஃக வியாக்கிரமத்
தோல் உடுத்த ஒண் மருங்கில் துன் அழகும் பால் அடுத்த 
கேழ்க் கோலம் மேவு திருக் கீள் அழகும் அக் கீளின்		455
கீழ்க் கோவணத்தின் கிளர் அழகும் கீழ் கோலம் 
ஒட்டி நின்ற மெய் அன்பர் உள்ளம் எலாம் சேர்த்துக்
கட்டி நின்ற வீரக் கழல் அழகும் எட்டிரண்டும் 
சித்திக்கும் யோகியர்-தம் சிந்தை-தனில் தேன் போன்று
தித்திக்கும் சேவடியின் சீர் அழகும் சத்தித்து 			460
மல் வைத்த மா மறையும் மால் அயனும் காண்பு அரிய
செல்வத் திரு_அடியின் சீர் அழகும் சொல் வைத்த 
செம்மை மணி_மலையைச் சேர்ந்த மரகதம் போல்
அம்மை ஒரு பால் வாழ்ந்து அருள் அழகும் அம்ம மிகச் 
சீர்த்தி நிகழ் செம்பவளச் செம் மேனியின் அழகும்		465
பார்த்திருந்தால் நம் உள் பசி போம் காண் தீர்த்தர் உளம் 
கொண்டு இருந்தான் பொன்_மேனிக் கோலம்-அதை நாம் தினமும்
கண்டிருந்தால் அல்லல் எலாம் கட்டு அறும் காண் தொண்டு அடைந்து 
பாட்டால் அவன் புகழைப் பாடுகின்றோர் பக்கம் நின்று
கேட்டால் வினைகள் விடை கேட்கும் காண் நீட்டாமல்		470 
ஒன்னார் புரம் பொடித்த உத்தமனே என்று ஒரு கால்
சொன்னால் உலகத் துயர் அறும் காண் எந்நாளும் 
பன்னும் உள்ளத்துள் ஆம் பரசிவமே என்று ஒரு கால்
உன்னும் முன்னம் தீமை எலாம் ஓடிடும் காண் அன்னவன்-தன் 
ஆட்டு இயல் கால்_பூ மாட்டு அடை என்றால் அந்தோ முன்	475
நீட்டிய கால் பின் வாங்கி நிற்கின்றாய் ஊட்டும் அவன் 
மால் கடவுள் ஆம் ஓர் மகவு அலறக் கண்டு திரு_
பாற்கடலை ஈந்த அருள் பான்மை-தனை நூல் கடலின் 
மத்தியில் நீ கேட்டும் வணங்குகிலாய் அன்பு அடையப்
புத்தி_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ முத்தி நெறி 		480
மாணா அரக்கன் மலைக் கீழ் இருந்து ஏத்த
வாழ்நாள் வழங்கியதோர் வண்மை-தனை நாள்நாளும் 
நண்ணி உரைத்தும் நயந்திலை நீ அன்பு கொளப்
புண்ணியருக்கு ஈது ஒன்றும் போதாதோ புண்ணியராம் 
சுந்தரர்க்குக் கச்சூரில் தோழமையைத் தான் தெரிக்க		485
வந்து இரப்புச் சோறு அளித்த வண்மை-தனை முந்து அகத்தில் 
பேதம் அறக் கேட்டும் பிறழ்ந்தனையே அன்பு அடையப்
போதம்_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ போதவும் நெய் 
அங்கு ஓர் எலி-தான் அருந்த அகல் தூண்ட அதைச்
செங்கோலன் ஆக்கிய அச் சீர்த்தி-தனை இங்கு ஓதச் 		490
சந்ததம் நீ கேட்டும் அவன் தாள் நினையாய் அன்பு அடையப்
புந்தி_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ முந்த வரும் 
நல் துணை என்று ஏத்தும் அந்த நாவரசர்க்கு அன்று கடல்
கல் துணை ஓர் தெப்பம் எனக் காட்டியதை இற்று என நீ 
மா உலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்பு அடையப்		495
பூ_உலகர்க்கு ஈது ஒன்றும் போதாதோ தாவு நுதல் 
கண்_சுமந்தான் அன்பன் கலங்கா வகை வைகை
மண் சுமந்தான் என்று உரைக்கும் வாய்மை-தனைப் பண்பு_உடையோர் 
மாண உரைப்பக் கேட்டும் வாய்ந்து ஏத்தாய் மெய் அன்பு
பூண என்றால் ஈது ஒன்றும் போதாதோ நீள் நரகத்		500 
தீங்குறும் மா_பாதகத்தைத் தீர்த்து ஓர் மறையவனைப்
பாங்கு அடையச்செய்த அருள் பண்பு-அதனை ஈங்கு உலகர் 
துங்கம் உற உரைத்தும் சூழ்கின்றிலை அன்பு
பொங்க என்றால் ஈது ஒன்றும் போதாதோ தங்கிய இப் 
பார் அறியாத் தாய் ஆகிப் பன்றி_குருளைகட்கு		505
ஊர் அறிய நல் முலை_பால் ஊட்டியதைச் சீர் அறிவோர் 
சொல்லி நின்றார் கேட்டும் துதிக்கின்றிலை அன்பு
புல்ல என்றால் ஈது ஒன்றும் போதாதோ நல்ல திருப் 
பாத_மலர் வருந்தப் பாணன்-தனக்கு ஆளாய்க்
கோது இல் விறகு ஏற்று விலைகூறியதை நீதி_உளோர் 		510
சாற்றி நின்றார் கேட்டும் அவன் தாள் நினையாய் மெய் அன்பில்
போற்ற என்றால் ஈது ஒன்றும் போதாதோ போற்றுகின்ற 
ஆடும் கரியும் அணிலும் குரங்கும் அன்பு
தேடும் சிலம்பியொடு சிற்றெறும்பும் நீடுகின்ற 
பாம்பும் சிவார்ச்சனை-தான் பண்ணியது என்றால் பூசை		515
ஓம்புவதற்கு யார்தாம் உவவாதார் சோம்புறும் நீ 
வன்பு என்பது எல்லாம் மறுத்து அவன் தாள் பூசிக்கும்
அன்பு என்பது யாதோ அறியாயே அன்புடனே 
செம் சடை கொள் நம் பெருமான் சீர் கேட்டு இரை அருந்தாது
அஞ்சு அடக்கி யோகம் அமர்ந்து உலகின் வஞ்சம் அற 		520
நாரையே முத்தி இன்பம் நாடியது என்றால் மற்றை
யாரையே நாடாதார் என்று உரைப்பேன் ஈரம்_இலாய் 
நீயோ சிறிதும் நினைந்திலை அ இன்பம் என்னை
ஏயோ நின் தன்மை இருந்த விதம் ஓயாத 
அன்பு_உடையார் யாரினும் பேர்_அன்பு_உடையான் நம் பெருமான்	525
நின்-புடை யான் நித்தம் நிகழ்த்துகின்றேன் உன்-புடை ஓர் 
அன்பு அவன் மேல் கொண்டது அறியேன் புறச் சமயத்து
இன்பு_உடையார் ஏனும் இணங்குவரே அன்புடனே 
தா என்றால் நல் அருள் இந்தா என்பான் நம் பெருமான்
ஆ உன்-பால் ஓதி அலுக்கின்றேன் நீ வன்பால் 		530
நின்றாய் அலது அவனை நேர்ந்து நினையாய் பித்தர்
என்றாலும் என் சொற்கு இணங்குவரே குன்றாது 
பித்தா எனினும் பிறப்பு அறுப்பான் நம்_உடையான்
அத்தோ உனக்கு ஈது அறைகின்றேன் சற்றேனும் 
கேள்வி_இலார் போல் அதனைக் கேளாய் கெடுகின்றாய்		535
வேள்வி_இலார் கூட்டம் விழைகின்றாய் வேள்வி என்ற 
வேலை வரும் கால் ஒளித்து மேவுகின்றாய் நின் தலைக்கு அங்கு
ஓலை வரும் கால் இங்கு ஒளிப்பாயே மாலை உறும் 
இப் பார் வெறும் பூ இது நயவேல் என்று உனக்குச்
செப்பா முனம் விரைந்து செல்கின்றாய் அப் பாழில்		540 
செல்லாதே சைவ நெறி செல் என்றால் என்னுடனும்
சொல்லாது போய் மயக்கம் தோய்கின்றாய் பொல்லாத 
அஞ்சு அருந்து என்றால் அமுதின் ஆர்கின்றாய் விட்டிடு என்றால்
நஞ்சு அருந்து என்றால் போல் நலிகின்றாய் வஞ்சகத்தில் 
ஓடுகின்றாய் மீளாமல் உன் இச்சையின் வழியே		545
ஆடுகின்றாய் மற்றங் கயர்கின்றாய் நீடு உலகைச் 
சூழ்கின்றாய் வேறு ஒன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில்
வீழ்கின்றாய் மேல் ஒன்றில் மீள்கின்றாய் தாழ்வு ஒன்றே 
ஈகின்றாய் வன் நெறியில் என்னை வலது அழிக்கப்
போகின்றாய் மீட்டும் புகுகின்றாய் யோகு இன்றி 		550
ஒன்றை மறைக்கின்றாய் மற்றொன்றை நினைக்கின்றாய் என்
நன்றை மறைக்கின்றாய் நலிகின்றாய் வென்றி பெறும் 
சேவில் பரமன் தாள் சேர் என்றால் மற்றொரு சார்
மேவிப் பலவாய் விரிகின்றாய் பாவித்துக் 
குன்றும் உனக்கு அனந்தம் கோடி தெண்டனிட்டாலும்		555
ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் நன்று உருகாக் 
கல் என்பேன் உன்னைக் கரணம் கலந்து அறியாக்
கல் என்றால் என் சொல் கடவாதே புல்ல நினை 
வல் இரும்பு என்பேன் அந்த வல் இரும்பேல் கூடத்தில்
கொல்லன் குறிப்பை விட்டுக் கோணாதே அல்லல் எலாம் 	560
கூட்டுகின்ற வன்மைக் குரங்கு என்பேன் அக் குரங்கேல்
ஆட்டுகின்றோன் சொல் வழி விட்டு ஆடாதே நீட்டு உலகர் 
ஏசுகின்ற பேய் என்பேன் எப் பேயும் அஞ்செழுத்தைப்
பேசுகின்றோர்-தம்மைப் பிடியாதே கூசுகிற்பக் 
கண்டோரைக் கவ்வுங் கடும் சுணங்கன் என்பன் அது		565
கொண்டோரைக் கண்டால் குலையாதே அண்டார்க்கும் 
பூவில் அடங்காப் புலி என்பேன் எப் புலியும்
ஏவில் வயப்பட்டால் எதிராதே நோவு இயற்றி 
வீறுகின்ற மும்மத மால் வெற்பு என்பேன் ஆங்கு அதுவும்
ஏறுகின்றோன் சொல் வழி விட்டு ஏறாதே சீறுகின்ற 		570
வெல் நடை சேர் மற்றை விலங்கு என்பேன் எவ்விலங்கும்
மன்னவன் சேர் நாட்டில் வழங்காதே நின்னை இனி 
என் என்பேன் என் மொழியை ஏற்றனையேல் மாற்று உயர்ந்த
பொன் என்பேன் என் வழியில் போந்திலையே கொன் உற நீ 
போம் வழியும் பொய் நீ புரிவதுவும் பொய் அதனால்		575
ஆம் விளைவும் பொய் நின் அறிவும் பொய் தோம் விளைக்கும் 
நின் உடலும் பொய் இங்கு நின் தவமும் பொய் நிலையா
நின் நிலையும் பொய் அன்றி நீயும் பொய் என்னில் இவண் 
ஏதும் உணர்ந்திலையே இ மாய வாழ்க்கை எனும்
வாதில் இழுத்து என்னை மயக்கினையே தீது உறும் நீ 		580
வன் நேர் விடம் காணின் வன் பெயரின் முன்பு ஒரு கீற்று
என்னே அறியாமல் இட்டு அழைத்தேன் கொன்னே நீ 
நோவது ஒழியா நொறில் காம வெப்பின் இடை
ஆவது அறியாது அழுந்தினையே மேவும் அதில் 
உள் எரிய மேலாம் உணர்வும் கருக உடல்			585
நள் எரிய நட்பின் நலம் வெதும்ப விள்வது இன்றி 
வாடிப் பிலம் சென்று வான் சென்று ஒளித்தாலும்
தேடிச் சுடும் கொடிய தீ கண்டாய் ஓடி அங்கு 
பேர்ந்தால் அலது பெரும் காம_தீ நின்னைச்
சேர்ந்தாரையும் சுடும் செந்தீ கண்டாய் சார்ந்த ஆங்கு 		590
சந்தீ என வருவார்-தம்மைச் சுடும் காமஞ்
செந்தீயையும் சுடும் ஓர் தீ கண்டாய் வந்து ஈங்கு 
மண்ணில் தனைக் காணா வண்ணம் நினைத்தாலும்
நண்ணித் தலைக்கு ஏறும் நஞ்சம் காண் எண்_அற்ற 
போர் உறும் உள் காமப் புது மயக்கம் நின்னுடைய		595
பேர்_அறிவைக் கொள்ளைகொளும் பித்தம் காண் சோர் அறிவில் 
கள் அடைக்கும் காமக் கடு மயக்கம் மெய் நெறிக்கு ஓர்
முள்_அடைக்கும் பொல்லா முரண் கண்டாய் அள்ளல் உற 
ஏதம் எலாம் தன்னுள் இடும் காமம் பாதகத்தின்
பேதம் எலாம் ஒன்றிப் பிறப்பிடம் காண் ஆதலினால் 		600
வெம்_மால் மடந்தையரை மேவவொணாது ஆங்கு அவர்கள்-
தம் ஆசை இன்னும் தவிர்ந்திலையே இ மாயம் 
மன்ற அணங்கினர் செவ் வாய் மடவார் பேதையர்கள்
என்ற கொடும் சொல் பொருளை எண்ணிலையே தொன்று உலகில் 
பெண் என்று உரைப்பில் பிறப்பு ஏழும் ஆம் துயரம்		605
எண் என்ற நல்லோர் சொல் எண்ணிலையே பெண் இங்கு 
மா மாத்திரையின் வருத்தனம் என்று எண்ணினை அ
நாமார்த்தம் ஆசை என நாடிலையே ஆம் ஆர்த்தம் 
மந்திரத்தும் பூசை மரபினும் மற்று எவ்விதமாம்
தந்திரத்தும் சாயாச் சழக்கு அன்றோ மந்திரத்தில்		610 
பேய் பிடித்தால் தீர்ந்திடும் இப் பெண்_பேய் விடாதே செந்
நாய் பிடித்தால் போலும் என்று நாடிலையே ஆய்வு இல் உன்றன் 
ஏழமை என் என்பேன் இவர் மயக்கம் வல் நரகின்
தோழைமை என்று அந்தோ துணிந்திலையே ஊழ் அமைந்த 
கார்_இருளில் செல்லக் கலங்குகின்றாய் மாதர் சூழல்		615
பேர்_இருளில் செல்வதனைப் பேர்த்திலையே பார் இடையோர் 
எண் வாள் எனில் அஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார்
கண் வாள் அறுப்பக் கனிந்தனையே மண் வாழும் 
ஓர் ஆனையைக் கண்டால் ஓடுகின்றாய் மாதர் முலை
ஈர் ஆனையைக் கண்டு இசைந்தனையே சீரான 		620
வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய் மாதர் முலை
வெற்பு என்றால் ஏற விரைந்தனையே பொற்பு ஒன்றும் 
சிங்கம் என்றால் வாடித் தியங்குகின்றாய் மாதர் இடைச்
சிங்கம் எனில் காணத் திரும்பினையே இங்கு சிறு 
பாம்பு என்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதர் அல்குல்		625
பாம்பு என்றால் சற்றும் பயந்திலையே ஆம் பண்டைக் 
கீழ்க் கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ மாதர் அல்குல்
பாழ்க் கடலில் கேளாது பாய்ந்தனையே கீழ்க் கதுவும் 
கல் என்றால் பின்னிடுவாய் காரிகையார் கால் சிலம்பு
கல்லென்றால் மேல் எழும்பக் கற்றனையே அல் அளகம் 	630
மையோ கரு மென் மணலோ என்பாய் மாறி
ஐயோ நரைப்பது அறிந்திலையோ பொய் ஓதி 
ஒண் பிறையே ஒண் நுதல் என்று உன்னுகின்றாய் உள் எலும்பாம்
வெண் பிறை அன்றே அதனை விண்டிலையே கண் புருவம் 
வில் என்றாய் வெண் மயிராய் மேவி உதிர்ந்திடும் கால்		635
சொல் என்றால் சொல்லத் துணியாயே வல் அம்பில் 
கண் குவளை என்றாய்க் கண்ணீர் உலர்ந்து மிக
உள் குழியும் போதில் உரைப்பாயே கண் குலவு 
மெய்க் குமிழே நாசி என வெஃகினையால் வெண் மலத்தால்
உய்க் குமிழுஞ் சீந்தல் உளதேயோ எய்த்தல் இலா 		640
வள்ளை என்றாய் வார் காது வள்ளை-தனக்கு உள் புழையோடு
உள்ளும் நரம்பின் புனைவும் உண்டேயோ வெள்ளை நகை 
முல்லை என்றாய் முல்லை முறித்து ஒரு கோல் கொண்டு நிதம்
ஒல்லை அழுக்கு எடுப்பது உண்டேயோ நல்லதொரு 
கொவ்வை என இதழைக் கொள்கின்றாய் மேல் குழம்பும்		645
செவ்வை இரத்தம் எனத் தேர்ந்திலையே செவ்விய கண்
ணாடி எனக் கவுட்கே ஆசைவைத்தாய் மேல் செழும் தோல்
வாடியக்கால் என் உரைக்க மாட்டுவையே கூடியதோர் 
அந்த மதி முகம் என்று ஆடுகின்றாய் ஏழ் துளைகள்
எந்த மதிக்கு உண்டு அதனை எண்ணிலையே நந்து எனவே 	650
கண்டம் மட்டும் கூறினை அக் கண்டம் மட்டும் அன்றி உடல்
கொண்ட மட்டும் மற்று அதன் மெய்க் கூறு அன்றோ விண்டு அவற்றைத்
தோள் என்று உரைத்துத் துடிக்கின்றாய் அ வேய்க்கு
மூள் ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே நாள் ஒன்றும் 
செங்காந்தள் அங்கை எனச் செப்புகின்றாய் அ மலர்க்குப்		655
பொங்காப் பல விரலின் பூட்டு உண்டே மங்காத 
செவ்விளநீர் கொங்கை எனச் செப்பினை வல் ஊன் தடிப்பு இங்கு
எ இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே செவ்வை பெறும் 
செப்பு என்றனை முலையைச் சீசீ சிலந்தி அது
துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதியே வப்பு இறுகச் 		660
சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய் கீழ்த் துவண்டு
வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே தாழ்ந்த அவை 
மண் கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய் முதிர்ந்து உடையாப்
புண் கட்டி என்பவர் வாய்ப் பொத்துவையே திண் கட்டும் 
அம் நீர்க் குரும்பை அவை என்றாய் மேல் எழும்பும்		665
செந்நீர்ப் புடைப்பு என்பார் தேர்ந்திலையே அம் நீரார் 
கண்ணீர் தரும் பருவாய்க் கட்டுரைப்பார் சான்றாக
வெண் நீர் வரல் கண்டும் வெட்கிலையே தண் நீர்மைச் 
சாடி என்பாய் நீ அயலோர் தாதுக் கடத்து இடும் மேல்
மூடி என்பார் மற்றவர் வாய் மூடுதியோ மேடு-அதனை 		670
ஆல் இலையே என்பாய் அடர் குடரோடு ஈருளொடும்
தோல் இலையே ஆல் இலைக்கு என் சொல்லுதியே நூல் இடை-தான் 
உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய் கை தொட்டுக்
கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே விண்டு ஓங்கும் 
ஆழ் கடல் என்பாய் மடவார் அல்குலினைச் சிற்சிலர்கள்		675
பாழ்ங்கிணறு என்பார் அதனைப் பார்த்திலையே தாழ் கொடிஞ்சித் 
தேர் ஆழி என்பாய் அச் சீ_குழியை அன்று சிறு
நீர் ஆழி என்பவர்க்கு என் நேருதியே ஆராப் புன் 
நீர் வழியை ஆசை நிலை என்றாய் வன் மலம்-தான்
சோர் வழியை என் என்று சொல்லுதியே சார் முடை-தான் 	680
ஆறாச் சிலை நீர் கான்_ஆறாய் ஒழுக்கிடவும்
வீறாப் புண் என்று விடுத்திலையே ஊறு ஆக்கி 
மூலை எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி மற்று அதன் மேல்
சீலை இடக் கண்டும் தெரிந்திலையே மேலை உறு
மே நரகம் என்றால் விதிர்ப்புறும் நீ மாதர் அல்குல்		685
கோ நரகம் என்றால் குலைந்திலையே ஊனம் இதைக் 
கண்டால் நமது ஆசை கைவிடுவார் என்று அதனைத்
தண்டாது ஒளித்திடவும் சார்ந்தனையே அண்டாது 
போத விடாய் ஆகிப் புலம்புகின்றாய் மற்று அதன்-பால்
மாதவிடாய் உண்டால் மதித்திலையே மாதர் அவர்-		690
தம் குறங்கை மெல் அரம்பைத் தண்டு என்றாய் தண்டு ஊன்றி
வெம் குரங்கின் மேவும் கால் விள்ளுதியே நன்கு இலவாய் 
ஏய்ந்த முழந்தாளை வரால் என்றாய் புலால் சிறிதே
வாய்ந்து வரால் தோற்கும் மதித்திலையே சேந்த அடி 
தண் தாமரை என்றாய் தன்மை விளர்ப்பு அடைந்தால்		695
வெண் தாமரை என்று மேவுதியோ வண்டு ஆரா
மேல் நாட்டும் சண்பகமே மேனி என்றாய் தீ இடும் கால்
தீ நாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ வான்_நாட்டும் 
மின் தேர் வடிவு என்றாய் மேல் நீ உரைத்தவுள் ஈது
ஒன்றே ஒரு-புடையாய் ஒத்தது காண் ஒன்றாச் சொல்		700
வேள் வாகனம் என்றாய் வெய்ய நமன் விட்டிடும் தூ
தாள் வாகனம் என்றால் ஆகாதோ வேள்_ஆனோன் 
காகளமாய் இன் குரலைக் கட்டுரைத்தாய் காலன் என்போன்
காகளம் என்பார்க்கு என் கழறுதியே நாகு அளவும் 
சாயை மயில் என்றே தருக்குகின்றாய் சார் பிரம		705
சாயை அஃது என்பார்க்கு என் சாற்றுதியே சேய மலர் 
அன்ன நடை என்பாய் அஃது அன்று அருந்துகின்ற
அன்ன நடை என்பார்க்கு என் ஆற்றுதியே அன்னவரை 
ஓர் ஓவியம் என்பாய் ஓவியமேல் ஆங்கு எழுபத்
தீராயிரம் நாடி யாண்டு உடைத்தே பார் ஆர்ந்த 		710
முன்னும் மலர்க் கொம்பு என்பாய் மூன்றொடு_அரை_கோடி எனத்
துன்னும் உரோமத் துவாரம் உண்டே இன் அமுதால் 
செய்த வடிவு என்பாய் அச் செய்கை மெய்யேல் நீ அவர்கள்
வைதிடினும் மற்று அதனை வையாயே பொய் தவிராய் 
ஒள்_இழையார்-தம் உரு ஓர் உண் கரும்பு என்றாய் சிறிது	715
கிள்ளியெடுத்தால் இரத்தம் கீழ் வருமே கொள்ளும் அவர் 
ஈடு_இல் பெயர் நல்லார் என நயந்தாய் நாய்ப் பெயர்-தான்
கேடு இல் பெரும் சூரன் என்பர் கேட்டிலையோ நாடில் அவர் 
மெல்_இயலார் என்பாய் மிகு கருப்ப வேதனையை
வல்_இயலார் யார் பொறுக்க வல்லார் காண் வில் இயல் பூண் 	720
வேய்ந்தால் அவர் மேல் விழுகின்றாய் வெம் தீயில்
பாய்ந்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே வேய்ந்தாங்கு 
சென்றால் அவர் பின்னர்ச் செல்கின்றாய் வெம் புலிப் பின்
சென்றாலும் அங்கு ஓர் திறன் உண்டே சென்றாங்கு 
நின்றால் அவர் பின்னர் நிற்கின்றாய் கண் மூடி		725
நின்றாலும் அங்கு ஓர் நிலை உண்டே ஒன்றாது 
கண்டால் அவர் உடம்பைக் கட்டுகின்றாய் கல் அணைத்துக்
கொண்டாலும் அங்கு ஓர் குணம் உண்டே பெண்டானார் 
வைதாலும் தொண்டு வலித்தாய் பிணத் தொண்டு
செய்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே கை தாவி		730 
மெய்த் தாவும் செம் தோல் மினுக்கால் மயங்கினை நீ
செத்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே வைத்து ஆடும் 
மஞ்சள் மினுக்கால் மயங்கினை நீ மற்று ஒழிந்து
துஞ்சுகினும் அங்கு ஓர் சுகம் உளதே வஞ்சியரைப் 
பார்த்து ஆடி_ஓடிப் படர்கின்றாய் வெம் நரகைப்		735
பார்த்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே சேர்த்தார் கைத் 
தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய் வன் பூதம்
தொட்டாலும் அங்கு ஓர் துணை உண்டே நட்டாலும் 
தெவ்வின் மடவாரைத் திளைக்கின்றாய் தீ விடத்தை
வவ்வுகினும் அங்கு ஓர் மதி உண்டே செவ் இதழ்_நீர் 		740
உண்டால் மகிழ்வாய் நீ ஒண் சிறுவர்-தம் சிறுநீர்
உண்டாலும் அங்கு ஓர் உரன் உண்டே கண்டாகக் 
கவ்வுகின்றாய் அ இதழைக் கார் மதுகம் வேம்பு இவற்றைக்
கவ்வுகினும் அங்கு ஓர் கதி உண்டே அ இளையர் 
மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய் நீ வெறும் வாய்		745
மென்றாலும் அங்கு ஓர் விளைவு உண்டே முன்தானை 
பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்க அம்பு
பட்டாலும் அங்கு ஓர் பலன் உண்டே கிட்டா மெய்த்
தீண்டிடில் உள் ஓங்கிச் சிரிக்கின்றாய் செந்தேள் முன்
தீண்டிடினும் அங்கு ஓர் திறன் உண்டே வேண்டியவர் 		750
வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய் மற்று அதை ஓர்
நாய்க்கு இடினும் அங்கு ஓர் நலன் உண்டே தாக்கவர்க்காய்த் 
தேட்டாண்மை செய்வாய் அத் தேட்டாண்மையைத் தெருவில்
போட்டாலும் அங்கு ஓர் புகழ் உண்டே வாள் தாரைக் 
கொண்டாருடன் உணவு கொள்கின்றாய் குக்கலுடன்		755
உண்டாலும் அங்கு ஓர் உறவு உண்டே மிண்டு ஆகும் 
இங்கு இவர் வாய்ப் பாகு இலையை ஏற்கின்றாய் புன் மலத்தை
நுங்கினும் அங்கு ஓர் நல் நொறில் உண்டே மங்கையர்-தம் 
ஏத்தா மனை காத்து இருக்கின்றாய் ஈமம்-அது
காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே பூ_தாழ்வோர் 		760
காட்டாக் குரல் கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்
கேட்டாலும் அங்கு ஓர் கிளர் உண்டே கோள் தாவி 
ஆழ்ந்தாருடன் வாழ ஆதரித்தாய் ஆழ்ங் கடலில்
வீழ்ந்தாலும் அங்கு ஓர் விரகு உண்டே வீழ்ந்தாருள் 
வீட்டால் முலையும் எதிர்வீட்டால் முகமும் உறக்		765
காட்டாநின்றார் கண்டும் காய்ந்திலையே கூட்டு ஆட்குச் 
செய்கையிடும்படி தன் சீமான்-தனது பணப்
பை கையிடல் கண்டும் பயந்திலையே சைகை-அது 
கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும்
செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே எய்யாமல் 		770
ஈறு இகந்த இவ்வகையாய் இ மடவார் செய்கை எலாம்
கூறுவனேல் அம்ம குடர் குழம்பும் கூறும் இவர் 
வாய் ஒரு பால் பேச மனம் ஒரு பால் செல்ல உடல்
ஆய் ஒரு பால் செய்ய அழிவார் காண் ஆய இவர் 
நன்று அறியார் தீதே நயப்பார் சிவதலத்தில்			775
சென்று அறியார் பேய்க்கே சிறப்பு எடுப்பார் இன்று இவரை 
வஞ்சம் என்கோ வெவ் வினையாம் வல்லியம் என்கோ பவத்தின்
புஞ்சம் என்கோ மா நரக பூமி என்கோ அஞ்சுறும் ஈர் 
வாள் என்கோ வாய்க்கு அடங்கா மாயம் என்கோ மண் முடிவு
நாள் என்கோ வெய்ய நமன் என்கோ கோள் என்கோ 		780
சாலம் என்கோ வான் இந்த்ரசாலம் என்கோ வீறு ஆல
காலம் என்கோ நின் பொல்லா_காலம் என்கோ ஞாலம்-அதில் 
பெண் என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்
மண்_நின்றார் யார் நடுங்கமாட்டார் காண் பெண் என்றால் 
பேயும் இரங்கும் என்பார் பேய் ஒன்றோ தாம் பயந்த		785
சேயும் இரங்கும் அவர் தீமைக்கே ஆயும் செம்
பொன்னால் துகிலால் புனையாவிடில் அவர் மெய்
என் ஆகும் மற்று இதை நீ எண்ணிலையே இன்னாமைக் 
கொத்து என்ற அ மடவார் கூட்டம் எழுமைக்கும்
வித்து என்று அறிந்தும் அதை விட்டிலையே தொத்து என்று 	790
பாச வினைக்குள் படுத்துறும் அப் பாவையர் மேல்
ஆசை உனக்கு எவ்வாறு அடைந்ததுவே நேசம்_இலாய் 
நின் ஆசை என் என்பேன் நெய் வீழ் நெருப்பு எனவே
பொன்_ஆசை மேன்மேலும் பொங்கினையே பொன்_ஆசை 
வைத்து இழந்து வீணே வயிறு_எரிந்து மண்_உலகில்		795
எத்தனை பேர் நின் கண் எதிர்நின்றார் தத்துகின்ற 
பொன்_உடையார் துன்பப் புணரி ஒன்றே அல்லது மற்று
என்_உடையார் கண்டு இங்கு இருந்தனையே பொன் இருந்தால் 
ஆற்றல் மிகு தாயும் அறியா வகையால் வைத்திட ஓர்
ஏற்ற இடம் வேண்டும் அதற்கு என் செய்வாய் ஏற்ற இடம் 	800
வாய்த்தாலும் அங்கு அதனை வைத்த இடம் காட்டாமல்
ஏய்த்தால் சிவசிவ மற்று என் செய்வாய் ஏய்க்காது 
நின்றாலும் பின் அது-தான் நீடும் கரி ஆனது
என்றால் அரகர மற்று என் செய்வாய் நன்றாக 
ஒன்று ஒரு சார் நில் என்றால் ஓடுகின்ற நீ அதனை		805
என்றும் புரப்பதனுக்கு என் செய்வாய் வென்றியொடு 
பேர்த்துப் புரட்டிப் பெரும் சினத்தால் மாற்றலர்கள்
ஈர்த்துப் பறிக்கில் அதற்கு என் செய்வாய் பேர்த்து எடுக்கக் 
கை புகுத்தும் கால் உள் கருங்குளவி செங்குளவி
எய் புகுத்தக் கொட்டிடின் மற்று என் செய்வாய் பொய் புகுத்தும் 	810
பொன் காவல் பூதம்-அது போய் எடுக்கும் போது மறித்து
என் காவல் என்றால் மற்று என் செய்வாய் பொன் காவல் 
வீறும் கால் ஆணவமாம் வெம் கூளி நின் தலை மேல்
ஏறும் கால் மற்று அதனுக்கு என் செய்வாய் மாறும் சீர் 
உன் நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன்		815
இன்னே வருவன் அதற்கு என் செய்வாய் முன் ஏதும் 
இல்லா நமக்கு உண்டோ இல்லையோ என்னும் நலம்
எல்லாம் அழியும் அதற்கு என் செய்வாய் நில்லாமல் 
ஆய்ந்தோர் சில நாளில் ஆயிரம் பேர் பக்கல் அது
பாய்ந்து ஓடிப் போவது நீ பார்த்திலையே ஆய்ந்தோர் சொல் 	820
கூத்தாட்டு அவை சேர் குழாம் விளிந்தால் போலும் என்ற
சீர்த் தாள் குறள் மொழியும் தேர்ந்திலையே பேர்த்து ஓடும் 
நாள்_கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாள் அறியா
ஆள்_கொல்லி என்பர் இதை ஆய்ந்திலையே கீழ்க் கொல்லைப் 
பச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்று அதன் மேல்	825
இச்சை உனக்கு எவ்வாறு இருந்ததுவே இச்சை_இலார் 
இட்ட மலம் பட்ட இடம் எல்லாம் பொன்னாம் என்றால்
இட்டம்-அதை விட்டற்கு இசைந்திலையே முட்டு அகற்றப் 
பொன் நடப்பது அன்றி அது போனகமே ஆதியவாய்
என் அடுத்தது ஒன்றும் இஃது எண்ணிலையே இ நிலத்தில் 	830
நீள் மயக்கம் பொன் முன் நிலையாய் உலகியலாம்
வீண் மயக்கம் என்று அதனை விட்டிலையே நீள் வலயத்து
இ செல்வம் இன்றி இயலாதேல் சிற்றுயிர்கள்
எச்செல்வம் கொண்டு இங்கு இருந்தனவே வெச்சென்ற 
மண்_ஆசை கொண்டனை நீ மண் ஆளும் மன்னர் எலாம்	835
மண்ணால் அழிதல் மதித்திலையே எண்ணாது 
மண் கொண்டார் மாண்டார் தம் மாய்ந்த உடல் வைக்க அயல்
மண் கொண்டார் தம் இருப்பில் வைத்திலரே திண் கொண்ட 
விண் ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டு பிடி_
மண்ணேனும் கொண்டு ஏக வல்லாரோ மண் நேயம் 		840
என்னது என்றான் முன் ஒருவன் என்னது என்றான் பின் ஒருவன்
இன்னது நீ கேட்டு இங்கு இருந்திலையோ மன் உலகில் 
கண்காணியாய் நீயே காணி அல்லாய் நீ இருந்த
மண் காணி என்று மதித்தனையே கண் காண 
மண் காணி வேண்டி வருந்துகின்றாய் நீ மேலை		845
விண் காணி வேண்டல் வியப்பு அன்றே எண் காண 
அந்தரத்தில் நின்றாய் நீ அந்தோ நினைவிட மண்
அந்தரத்தில் நின்றது அறிந்திலையே தந்திரத்தில் 
மண் கொடுப்பேன் என்று உரைக்கில் வைவார் சிறுவர்களும்
மண் கொடுக்கில் நீ-தான் மகிழ்ந்தனையே வண் கொடுக்கும் 	850
வீடு என்றேன் மற்று அதை மண்_வீடு என்றே நீ நினைந்தாய்
வீடு என்ற சொல் பொருளை விண்டிலையே நாடு ஒன்றும் 
மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடு அனைத்தும்
கண்ணாரக் கட்டு அழிதல் கண்டிலையோ மண்ணான 
மேல்_வீடும் அங்கு உடைய வேந்தர்களும் மேல் வீட்டு அப்	855
பால் வீடும் பாழ் ஆதல் பார்த்திலையோ மேல்_வீட்டில் 
ஏறுவனே என்பாய் இயமன் கடா மிசை வந்து
ஏறுவனேல் உன் ஆசை என் ஆமோ கூறிடும் இ
மண் அளித்த வேதியனும் மண் விருப்பம்கொள்ளானேல்
எண்ணம் உனக்கு எவ்வாறு இருந்ததுவே மண்_இடத்தில் 	860
ஆகாத் துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் என்னில் உன்றன்
ஏகாப் பெரும் காமம் என் சொல்கேன் போகாத 
பாபக் கடற்கு ஓர் படு_கடலாம் பாழ் வெகுளிக்
கோப_கடலில் குளித்தனையே தாபம் உறச் 
செல்லா இடத்துச் சினம் தீது செல்_இடத்தும்			865
இல்லது எனில் தீயது என்றது எண்ணிலையே மல்லல் பெறத் 
தன்னைத் தான் காக்கில் சினம் காக்க என்றதனைப்
பொன்னைப் போல் போற்றிப் புகழ்ந்திலையே துன்னி 
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல என்னும்
திகழ் வாய்மையும் நீ தெளியாய் இகழ்வாரை			870 
எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோம் என்று
இவ்வண்ணம் என்னை வெளி இட்டனையே தெவ் என்ன 
ஓரா வெகுளி_உடையான் தவம் அடையான்
தீராய் என்பார் அதுவும் தேர்ந்திலையே பேரா நின் 
வெவ் வினைக்கு ஈடாக அரன் வெம்மை புரிவான் என்றால்	875
இ வெகுளி யார் மாட்டு இருத்துவதே செவ்வை_இலாய் 
ஏய்ந்தனை அன்பு ஓர் இடத்தில் இன்னாமை செய்தவரைக்
காய்ந்தனை மற்று என்ன பலன் கண்டனையே வாய்ந்து அறிவோர் 
எல்லா நலமும் இஃதே என்று ஏத்துகின்ற
கொல்லா நலம் சிறிதும் கொண்டிலையே பொல்லாத 		880
வன்போடு இருக்கும் மதி_இலி நீ மன் உயிர்-கண்
அன்போடு இரக்கம் அடைந்திலையே இன்பு ஓங்கு 
தூய்மை என்பது எல்லாம் துணையாய் அணைவது-தான்
வாய்மை என்பது ஒன்றே மதித்திலையே தூய்மை_இலாய் 
மான் ஒரு கை ஏந்திநின்ற வள்ளல் அன்பர்-தங்களுளே		885
நான் ஒருவன் என்று நடித்தனையே ஆன மற்றைப் 
பாதகங்கள் எல்லாம் பழகிப்பழகி அதில்
சாதகம் செய்வோரில் தலை_நின்றாய் பாதகத்தில் 
ஓயா விகார உணர்ச்சியினால் இ உலக
மாயா விகாரம் மகிழ்ந்தனையே சாயாது			890
நீ இளமை மெய்யாய் நினைந்தாய் நினைப் பெற்ற
தாய் இளமை எத்தனை நாள் தங்கியதே ஆ இளமை 
மெய் கொடுத்தது என்பாய் விருத்தர்கட்கு நின்_போல்வார்
கைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ மெய் கொடுத்த 
கூனொடும் கை_கோல் ஊன்றிக் குந்தி நடை தளர்ந்து		895
கால் நடுங்க நிற்பவரைக் கண்டிலையோ ஊன் ஒடுங்க 
ஐய நட என்றே அரும் புதல்வர் முன் செலப் பின்
பைய நடப்பவரைப் பார்த்திலையோ வெய்ய நமன் 
நாடு அழைக்கச் சேனம் நரி நாய் அழைக்க நாறு சுடு
காடு அழைக்க மூத்து நின்றார் கண்டிலையோ பீடு அடைந்த 	900
மெய் உலர்ந்து நீரின் விழி உலர்ந்து வாய் உலர்ந்து
கை உலர்ந்து நிற்பவரைக் கண்டிலையோ மெய் உலர்ந்தும் 
சாகான் கிழவன் தளர்கின்றான் என்று இவண் நீ
ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ ஆகாத 
கண்டம் இது பொல்லாக் கடு நோய் எனும் குமர		905
கண்டம் இஃது என்பவரைக் கண்டிலையோ கொண்ட உடல் 
குட்டம் உறக் கை_கால் குறுக்கும் இது பொல்லாத
குட்டம் என நோவார் குறித்திலையோ துட்ட வினை 
மாலையினும் காலையினும் மத்தியினும் குத்தும் இது
சூலை என நோவாரைச் சூழ்ந்திலையோ சாலவும் இத் 		910
தேகம்-அது நலியச் செய்யும் காண் உய்வு அரிதாம்
மேகம் இஃது என்பாரை மேவிலையோ தாகமுறச் 
சித்தம் நோய் செய்கின்ற சீத_நோய் வாதமொடு
பித்த_நோய் கொண்டவர்-பால் பேர்ந்திலையோ மெத்து அரிய 
கை_பிணியும் கால்_பிணியும் கண்_பிணியோடு எண்ண அரிய	915
மெய்_பிணியும் கொண்டவரை விண்டிலையோ எய்ப்பு உடைய 
முட்டு_ஊறும் கை_கால் முடம் கூன் முதலாய
எட்டு ஊறும் கொண்டவரை எண்ணிலையோ தட்டு ஊறு இங்கு
எண்_அற்றது உண்டேல் இளமை ஒரு பொருளாய்
எண்ணப்படுமோ என்று எண்ணிலையோ எண்ணத்தில் 		920
பொய் என்று அறவோர் புலம்புறவும் இ உடம்பை
மெய் என்று பொய் மயக்கம் மேவினையே கை நின்று 
கூ கா என மடவார் கூடி அழல் கண்டும்
நீ காதல் வைத்து நிகழ்ந்தனையே மா காதல் 
பெண்டு இருந்து மாழ்கப் பிணம் கொண்டுசெல்வாரைக்		925
கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே பண்டு இருந்த 
ஊரார் பிணத்தின் உடன் சென்று நாம் மீண்டும்
நீராடல் சற்றும் நினைந்திலையே சீராக
இன்று இருந்தார் நாளைக்கு இருப்பது பொய் என்று அறவோர்
நன்று இருந்த வார்த்தையும் நீ நாடிலையே ஒன்றி 		930
உறங்குவது போலும் என்ற ஒண் குறளின் வாய்மை
மறம் கருதி அந்தோ மறந்தாய் கறங்கின் 
நெருநல் உளன் ஒருவன் என்னும் நெடும்_சொல்
மருவும் குறள்_பா மறந்தாய் தெருவில் 
இறந்தார் பிறந்தார் இறந்தார் எனும் சொல்			935
மறந்தாய் மறந்தாய் மறந்தாய் இறந்தார் 
பறை ஓசை அண்டம் படீரென்று ஒலிக்க
மறை ஓசை அன்றே மறந்தாய் இறையோன் 
புலன் ஐந்தும் என்று அருளும் பொன்மொழியை மாயா
மலம் ஒன்றி அந்தோ மறந்தாய் நிலன் ஒன்றி 		940
விக்குள் எழ நீர் விடு-மின் என அயலோர்
நெக்குருகல் அந்தோ நினைந்திலையே மிக்கு அனலில் 
நெய்விடல் போல் உற்றவர் கண்ணீர்விட்டு அழ உயிர் பல்
மெய் விடலும் கண்டனை நீ விண்டிலையே செய் வினையின் 
வாள் கழியச் செங்கதிரோன் வான் கழிய நம்முடைய		945
நாள் கழிதற்கு அந்தோ நடுங்கிலையே கோள் கழியும் 
நாழிகை ஓர் நாள் ஆக நாடினையே நாளை ஒரு
நாழிகையாய் எண்ணி நலிந்திலையே நாழிகை முன் 
நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்து உயிர்-தான்
சென்றார் எனக் கேட்டும் தேர்ந்திலையே பின்றாது 		950
தொட்டார் உணவுடனே தும்மினார் அம்ம உயிர்
விட்டார் எனக் கேட்டும் வெட்கிலையே தட்டாமல் 
உண்டார் படுத்தார் உறங்கினார் பேர்_உறக்கம்
கொண்டார் எனக் கேட்டும் கூசிலையே வண் தாரார் 
நேற்று மணம் புரிந்தார் நீறு ஆனார் இன்று என்று		955
சாற்றுவது கேட்டும் தணந்திலையே வீற்றுறு தேர் 
ஊர்ந்தார் தெருவில் உலாப் போந்தார் வான்_உலகம்
சேர்ந்தார் எனக் கேட்டும் தேர்ந்திலையே சேர்ந்து ஆங்கு 
என்னே இருந்தார் இருமினார் ஈண்டு இறந்தார்
அன்னே எனக் கேட்டும் ஆய்ந்திலையே கொன்னே 		960
மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக்
கருவும் பிதிர்ந்து உதிரக் கண்டாய் கரு ஒன்
றொடு திங்கள் ஐயைந்தில் ஒவ்வொன்றில் அந்தோ
கெடுகின்றது என்றதுவும் கேட்டாய் படும் இ 
நிலை முற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்		965
பலன் அற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் பலனுற்றே 
கா என்று வீழ்ந்து அக் கணமே பிணமாகக்
கோ என்று அழுவார் குறித்திலையோ நோவு இன்றிப் 
பாலன் என்றே அன்னை முலை_பால் அருந்தும் காலையிலே
காலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ மேல் உவந்து 		970
பெற்றார் மகிழ்வு எய்தப் பேசி விளையாடும் கால்
அற்று ஆவி போவது அறிந்திலையோ கற்று ஆயப் 
பள்ளி இடும் கால் அவனைப் பார நமன் வாயில்
அள்ளி இடும் தீமை அறிந்திலையோ பள்ளி விடும் 
காளைப் பருவம்-அதில் கண்டார் இரங்கிட அ			975
ஆளைச் சமன் கொள்வது ஆய்ந்திலையோ வேளை மண 
மாப்பிள்ளை ஆகி மணம் முடிக்கும் அன்று அவனே
சாப்பிள்ளை ஆதல் எண்ணிச் சார்ந்திலையே மேல் பிள்ளை 
மாடை ஏர்ப் பெண்டுடன் இல் வாழும் கால் பற்பலர்-தாம்
பாடை மேல் சேர்தலினைப் பார்த்திலையோ வீடல் இஃது 	980
இக் கணமோ மேல் வந்திடும் கணமோ அன்றி மற்றை
எ கணமோ என்றார் நீ எண்ணிலையே தொக்குறு தோல் 
கூடு என்கோ இ உடம்பைக் கோள் வினை நீரோட்டில் விட்ட
ஏடு என்கோ நீர் மேல் எழுத்து என்கோ காடு என்கோ 
பாழ் என்கோ ஒன்பது வாய்ப் பாவை என்கோ வன் பிறவி	985
ஏழ் என்கோ கன்மம்-அதற்கு ஈடு என்கோ தாழ் மண்ணின் 
பாண்டம் என்கோ வெம் சரக்குப்பை என்கோ பாழ் கரும
காண்டம் என்கோ ஆணவத்தின் கட்டு என்கோ கோண்_தகையார் 
மெய் என்கோ மாய விளைவு என்கோ மின் என்கோ
பொய் என்கோ மாயப் பொடி என்கோ மெய் என்ற 		990
மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித்தனர் உலகர்
அங்கு அவற்றை எண்ணாது அலைந்தனையே தங்கு உலகில் 
மற்று இதனை ஓம்பி வளர்க்க உழன்றனை நீ
கற்றதனை எங்கே கவிழ்த்தனையே அற்றவரை 
இக் கட்டு அவிழ்த்து இங்கு எரி மூட்டு எனக் கேட்டும்		995
முக்கட்டும் தேட முயன்றனையே இக் கட்டு 
மண்பட்டு வெம் தீ மரம் பட்டிடக் கண்டும்
வெண்பட்டு உடுக்க விரைந்தனையே பண்பட்ட 
ஐயா அரைநாண் அவிழும் எனக் கேட்டு நின்றும்
மெய் ஆபரணத்தின் மேவினையே எய்யாமல் 		1000
காதில் கடுக்கன் கழற்றும் எனக் கேட்டு நின்றும்
ஏதில் பணியினிடத்து எய்தினையே தாதிற்குத் 
துற்கந்தமாகச் சுடும் கால் முகர்ந்திருந்தும்
நற்கந்தத்தின்-பால் நடந்தனையே புற்கென்ற 
வன் சுவைத் தீ நாற்றம் மலமாய் வரல் கண்டும்		1005
இன் சுவைப் பால் எய்தி இருந்தனையே முன் சுவைத்துப் 
பாறு உண்ட காட்டில் பலர் வெந்திடக் கண்டும்
சோறு உண்டு இருக்கத் துணிந்தனையே மாறுண்டு 
கூம்பு உலகம் பொய் என நான் கூவுகின்றேன் கேட்டும் மிகு
சோம்பலுடன் தூக்கம் தொடர்ந்தனையே ஆம் பலன் ஓர் 	1010
நல் வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத
இல் வாழ்வை மெய் என்று இருந்தனையே சொல் ஆவி 
ஈன்றோன்-தனை நாளும் எண்ணாமல் இ உடம்பை
ஈன்றோரை ஈன்றோர் என்று எண்ணினையே ஈன்றோர்கள் 
நொந்தால் உடன் நின்று நோவார் வினைப் பகை-தான்		1015
வந்தால் அது நீக்க வல்லாரோ வந்து ஆட
லுற்ற சிறார் நம் அடையாது ஓட்டுகிற்பார் தென் திசை வாழ்
மற்று அவன் வந்தால் தடுக்க வல்லாரோ சிற்றுணவை 
ஈங்கு என்றால் வாங்கி இடுவார் அருள் அமுதம்
வாங்கு என்றால் வாங்கி இட வல்லாரோ தீங்கு அகற்றத்	1020
தூண்டா மனை ஆதிச் சுற்றம் எலாம் சுற்றியிட
நீண்டாய் அவர் நல் நெறித் துணையோ மாண்டார் பின் 
கூடி அழத் துணையாய்க் கூடுவார் வல் நரகில்
வாடி அழும் போது வருவாரோ நீடிய நீ 
இச் சீவர்-தன் துணையோ ஈங்கு இவர்கள் நின் துணையோ	1025
சீச்சீ இது என்ன திறம் கண்டாய் இச் சீவர் 
நின்னை வைத்து முன் சென்றால் நீ செய்வது என் அவர் முன்
இ நிலத்தில் நீ சென்றால் என் செய்வர் நின் இயல்பின் 
எத்தனை தாய் எத்தனை பேர் எத்தனை ஊர் எத்தனை வாழ்வு
எத்தனையோ தேகம் எடுத்தனையே அத்தனைக்கும் 		1030
அவ்வவ் இடங்கள்-தொறும் அவ்வவரை ஆண்டாண்டு இங்கு
எவ்வெவ் விதத்தால் இழந்தனையோ அவ்விதத்தில் 
ஒன்றேனும் நன்றாய் உணர்ந்து இருத்தியேல் இவரை
இன்றே துறத்தற்கு இசையாயோ நின்றோரில் 
தாய் யார் மனை யார் தனயர் ஆர் தம்மவர் ஆர்		1035
நீ யார் இதனை நினைந்திலையே சேய் ஏகில் 
ஏங்குவரே என்றாய் இயமன் வரின் நின் உயிரை
வாங்கி முடியிட்டு அகத்தில் வைப்பாரோ நீங்கி இவண் 
உன் தந்தை தன்-தனக்கு இங்கு ஓர் தந்தை நாடுவன் நீ
என் தந்தை என்று உரைப்பது எவ்வாறே சென்று பின் நின்-	1040
தன் மனையாள் மற்றொருவன்-தன் மனையாள் ஆவள் எனில்
என் மனையாள் என்பது நீ எவ்வணமே நன்மை பெறும் 
நட்பு அமைந்த நல் நெறி நீ நாடா வகை தடுக்கும்
உட்பகைவர் என்று இவரை ஓர்ந்திலையே நட்பு_உடையாய் 
எம்மான் படைத்த உயிர் இத்தனைக்குள் சில் உயிர்-பால்		1045
இ மால் அடைந்தது நீ என் நினைந்தோ அ மாறு இல் 
எம் பந்தமே நினக்கு இங்கு இல்லை என்றால் மற்றையவர்-
தம் பந்தம் எவ்வாறு தங்கியதே சம்பந்தர் 
அற்றவருக்கு அற்ற சிவனாம் எனும் அப் பொன்மொழியை
மற்றை மொழி போன்று மறந்தனையே சிற்றுயிர்க்குக் 		1050
கல் பனையில் காய்ப்பு உளதாய்க் காட்டும் பிரபஞ்சக்
கற்பனையை மெய் என்று கண்டனையே பற்பலவாம் 
தூரியத்தில் தோன்று ஒலி போல் தோன்றிக் கெடும் மாயா
காரியத்தை மெய் என நீ கண்டனையே சீர் இயற்றும் 
ஆடகத்தில் பித்தளையை ஆலித்திடும் கபட			1055
நாடகத்தை மெய் என்று நம்பினையே நீடு அகத்தில் 
காய வித்தையால் அக் கடவுள் இயற்றும் இந்த
மாய வித்தை மெய் என நீ வாழ்ந்தனையே வாய் அவித்தை 
இப் படக மாயை இருள் தமமே என்னும் ஒரு
முப்படகத்து உள்ளே முயங்கினையே ஒப்பு இறைவன் 		1060
ஆன ஒளியில் பரையாம் ஆதபத்தினால் தோன்றும்
கானலினை நீராய்க் களித்தனையே ஆன கிரி
யா சத்தி என்றிடும் ஓர் அம்மை விளையாட்டு எனும் இப்
பாசத்தின் உள்ளே படர்ந்தனையே நேசத்தின் 
பொய் ஒன்றுள் மெய்யில் புகும் பால_லீலை-தனை		1065
மெய் என்று வீணில் விரிந்தனையே பொய் என்றும்
ஈட்டு நின்ற லீலாவினோதம் எனும் கதையைக்
கேட்டு நின்றும் அந்தோ கிளர்ந்தனையே ஈட்டி நின்ற 
காலத்தை வீணில் கழிக்கும்படி மேக
சாலத்தை மெய்யாய்த் தருக்கினையே சாலத்தில் 		1070
கண்மை அகன்று ஓங்கும் அந்தகாரத்தில் செம்மாப்புற்று
உண்மை ஒன்றும் காணாது உழன்றனையே வண்மை_இலாய் 
இங்கு நினைப் பெரியோர் என் நினைப்பார் ஏமாப்பில்
கங்குலினைப் பகலாய்க் கண்டனையே தங்குறும் இத் 
தேகாதி பொய் எனவே தேர்ந்தார் உரைக்கவும் நீ		1075
மோகாதிக்கு உள்ளே முயல்கின்றாய் ஓகோ நும் 
கோ முடி-கண் தீ பற்றிக்கொண்டது என்றால் மற்று அதற்குப்
பூ முடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே மா முடிக்கும் 
வாழ்வு நிலை அன்று இமைப்பில் மாறுகின்றது என்று உரைத்தும்
வீழ்வு கொடு வாளா விழுகின்றாய் தாழ்வு உற நும் 		1080
விண்டு உறும் கை வீடு அனலால் வேகின்றது என்ன உள் போய்
உண்டு உறங்குகின்றோரை ஒத்தனையே தொண்டு உலகம் 
கான முயல்_கொம்பாய்க் கழிகின்றது என்கின்றேன்
நீ நயம் உற்று அந்தோ நிகழ்கின்றாய் ஆன நும் ஊர் 
வெள்ளத்தினால் முழுகிவிட்டது என்றால் சென்று கடை		1085
கொள்ளத் திரிபவர் போல் கூடினையே கொள்ள இங்கு 
கண்டன எல்லாம் நிலையாக் கைதவம் என்கின்றேன் நீ
கொண்டு அவை முன் சேரக் குறிக்கின்றாய் உண்டு அழிக்க 
ஊழி வெள்ளம் வந்தது என்றால் உண்பதற்கும் ஆடுதற்கும்
ஊழி நல் நீரோ என்பார் ஒத்தனையே ஏழ் இயற்றும் 		1090
தத்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற
சொற்பனத்தில் அந்தோ துவன்றினையே பல் பகலும் 
உண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய்
கண்டனவே கண்டு களிக்கின்றாய் கொண்டனவே 
கொண்டு இயங்குகின்றாய் குறித்தனவே பின் குறித்துப்		1095
பண்டு அறியார் போலப் படர்கின்றாய் பண்டு அறிந்து 
சொல்லாடி நின்றனவே சொல்கின்றாய் மற்று இதனை
நல்லோர்கள் கண்டால் நகையாரோ செல்லான 
காலம் போல் இங்கு நிகழ்_காலமும் காண்கின்றி எதிர்_
காலம் மற்றும் அத் திறமே காண்குவையேல் சாலவும் உன் 	1100
போது செலா முன்னம் அனுபூதியை நீ நாடாமல்
யாது பயன் எண்ணி இனைகின்றாய் தீது செயும் 
வீண் அவத்தை எல்லாம் விளைக்கும் திறல் மூல
ஆணவத்தினாலே அழிந்தனையே ஆணவத்தில் 
நீ யார் என அறியாய் நின் எதிரில் நின்றவரை		1105
நீ யார் என வினவி நீண்டனையே ஓயாமல் 
ஊன் நின்ற ஒன்றின் உளவு அறியாய் அந்தோ நீ
நான் என்று சொல்லி நலிந்தனையே நான் என்று 
சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்று ஒரு நீ
அல்லல் உறும் காலத்து அறை கண்டாய் அல்ல எலாம் 		1110
நீ இங்கே நான் அங்கே நிற்க நடுவே குதித்தால்
நீ எங்கே நான் எங்கே நின்று அறி காண் நீ இங்கு 
ஒன்று எடுக்கச் சென்று மற்றை ஒன்று எடுக்கக் காண்கின்றேன்
இன்று அடுத்த நீ எங்கு இருந்தனையே மன்று அடுத்த 
தாள் ஆதரித்தே நின்றன்னை மறந்து உய்யாது		1115
வாளா மதத்தின் மலிகின்றாய் கேளாய் இச் 
சார்பில் ஒன்று விட்டு ஒழிந்தால் சால மகிழ்கிற்பேன் நான்
சோர்பு கொண்டு நீ தான் துயர்கின்றாய் சார்பு பெரும் 
தூ என்று நான் இவணம் சும்மா இருந்தாலும்
வா என்று எனையும் வலிக்கின்றாய் ஓ உன்றன் 		1120
சூழ்ச்சி அறியேன் நீ சுழல்கின்ற போது எல்லாம்
சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் நீட்சியில் நீ 
கால் அசைத்தால் யானும் கடிதில் தலை அசைப்பேன்
மால் அசைத்த நின் புணர்ப்பின் வாறு எதுவோ ஆலும் அண்டக் 
கூவத்தில் யான் ஓர் குடம் நீ கயிற்றோடும்			1125
ஏவல் கொளும் ஏழை என்கேனோ பாவத்தில் 
சுற்றுண்ட நீ கடலில் தோன்று சுழி ஆக அதில்
எற்றுண்ட நான் திரணம் என்கேனோ பற்றிடும் நீ 
சங்கற்பமாம் சூறை-தான் ஆக நான் ஆடும்
அங்கண் சருகு என்று அறைகேனோ பொங்குற்ற 		1130
சேலை விராய் ஓர் தறியில் செல் குழை நீ பின்தொடரும்
நூல்_இழை நான் என்று நுவல்கேனோ மால் இடு நீ 
துள் உறுப்பின் மண்_பகைஞன் சுற்று ஆழி ஆக அதின்
உள் உறுப்பே நான் என்று உரைக்கேனோ எள்ளுறும் நீ 
பாழ் அலை வான் ஏகும் பருந்து ஆக அப் பருந்தின்		1135
நீழலை நான் என்று நினைகேனோ நீழல் உறா 
நின் வசம் நான் என்று உலகு நிந்தை மொழிகின்றது அலால்
என் வசம் நீ என்பது இலை கண்டாய் என் வசம் நீ 
ஆனால் எளியேனுக்கு ஆகாப் பொருள் உளவோ
வான்_நாடர் வந்து வணங்காரோ ஆனாமல் 			1140
எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதிக்
கண்_நுதலும் அங்கைக் கனி அன்றோ எண்ணுமிடத்து
என் செய்வேன் ஓர் கணமும் என் சொல் வழி நில்லாமல்
கொன் செய்வேன் என்று குதிக்கின்றாய் வன் செய்யும் 
சிந்தோடும் ஓர் வடவைத் தீயும் கரத்து அடைப்பர்		1145
அந்தோ உனை யார் அடக்குவரே வந்து ஓடும் 
கச்சோதம் என்னக் கதிரோன்-தனை எடுப்பர்
அச்சோ உனை யார் அடக்குவரே வைச்சு ஓங்கு 
மூவுலகும் சேர்த்து ஒரு தம் முன்தானையின் முடிவர்
ஆ உனையும் இங்கு ஆர் அடக்குவரே மேவு பல 		1150
தேசம் என்றும் காலம் என்றும் திக்கு என்றும் பற்பலவாம்
வாசம் என்றும் அவ்வவ் வழக்கு என்றும் மாசு உடைய 
போகம் என்றும் மற்றைப் புலன் என்றும் பொய் அகலா
யோகம் என்றும் பற்பலவாம் யூகம் என்றும் மேகம் என்றும் 
வான் என்றும் முந்நீர் மலை என்றும் மண் என்றும்		1155
ஊன் என்றும் மற்றை உறவு என்றும் மேல் நின்ற 
சாதி என்றும் வாழ்வு என்றும் தாழ்வு என்றும் இ உலக
நீதி என்றும் கன்ம_நெறி என்றும் ஓத அரிய 
அண்டம் என்றும் அண்டத்து அசைவும் அசைவும்_அலாப்
பண்டம் என்றும் சொல்ப எலாம் பன்முகங்கள் கொண்டு இருந்த 	1160
உன் நினைவின் உள்ளே உதித்திட்டு உலவி நிற்ப
எ நினைவு கொண்டோ மற்று இ உலகர் எ நவையும் 
தந்தோன் எவனோ சதுமுகன் உண்டு என்பார்கள்
அந்தோ நின் செய்கை அறியாரே அந்தோ நான் 
ஆம் என்றால் மற்று அதனை அல்ல என்பாய் அல்ல என்றால்	1165
ஆம் என்பாய் என்னை அலைக்கின்றாய் நாம் அன்பாய் 
என்றும் பிறந்து இறவா இன்பம் அடைதும் என்றால்
நன்று என்று ஒருப்படுவாய் நண்ணும் கால் தொன்று எனவே 
செல்கிற்பாய் செல்லாச் சிறுநடையில் தீமை எலாம்
நல்கிற்பாய் என்னே நின் நட்புடைமை சொல்கிற்பில்		1170 
ஆவதுவும் நின்னால் அழிவதுவும் நின்னால் என யான்
நோவதுவும் கண்டு அயலில் நோக்கினையே தாவும் எனக்கு 
ஆண் அவலம் பெண் அவலம் ஆகும் பொருள் அவலம்
ஊண் அவலம் உற்றாரோடு ஊர் அவலம் பூண் அவலம் 
ஊன் அவலம் அன்றியும் என் உற்ற_துணையாம் நீயும்-		1175
தான் அவலம் என்றால் என் சாற்றுவதே நான் இவணம் 
இன்பம் எது கண்டேம் மால் இச்சை எலாம் துன்பம் அதில்
துன்பம் பிறப்பு என்றே சோர்கின்றேன் வன்பு உடைய 
இப் பிறவித் துன்பத்தினும் திதியில் துன்பம்-அது
செப்ப அரிதாம் என்றே திகைக்கின்றேன் செப்பு இறப்பின்		1180
ஓயாத துன்பம் உரைக்க உடம்பு எல்லாம்
வாயாகினும் போதமாட்டாதேல் ஏஏ நாம் 
செய்வது என்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம் நான்
நைவது எல்லாம் கண்டு நடந்தனையே கைவரும் இ 
இல்லிக் குடம் உடைந்தால் யாது ஆம் என்று உன்னுடன் யான்	1185
சொல்லித் திரிந்தும் எனைச் சூழ்ந்திலையே வல் இயமன் 
நாளையோ இன்றோ நடக்கின்ற நாட்களில் எ
வேளையோ தூதுவிடில் அவர்கள் கேள் ஐயோ 
நல்லோம் எனினும் நடவார் நடவார் நாம்
செல்லோம் எனினும் அது செல்லாதே வல்லீர் யாம் 		1190
இன் சொலினோம் இன்று இங்கு இருந்து வருவோம் என யாம்
என் சொலினும் அச் சொல் எலாம் ஏலாதே மன் சொல் உடைத் 
தாமரையோன் மால் முதலோர் தாம் அறையார் ஆயில் அன்று
நாம் அறைவோம் என்றல் நடவாதே நாம் இவணம் 
அ நாள் வரும் முன்னர் ஆதி அருள் அடையும்		1195
நல் நாள் அடைதற்கு நாடுதும் காண் என்னா நின்று 
ஓதுகின்றேன் கேட்டும் உறார் போன்று உலகியலில்
போதுகின்றாய் யாது புரிகிற்பேன் தீது நன்றோடு
ஏற்ற அடி_நாள் உறவாம் என்னை விட்டுத் தாமதமாம்
நேற்றை உறவோடு உறவு நேர்ந்தனையே சாற்றும் அந்த 	1200
தாமதமே ஓர் அவித்தை தாமதமே ஆவரணம்
தாமதமே மோக சமுத்திரம் காண் தாமதம் என்று
ஐயோ ஒரு நீ அதனோடு கூடினையால்
பொய்யோ நாம் என்று புகன்றதுவே கையாமல் 
ஒன்னலர் போல் கூடுவாரோடு ஒரு நீ கூடும் கால்		1205
என்னை நினையாய் என் சொல் எண்ணுதியோ பன்னுறும் நின் 
தீது எல்லாம் நான் ஆதிசேடர் பலராய்ப் பிரமன்
போது எல்லாம் சொல்லிடினும் போதாதே ஆதலினால் 
வைகின்றேன் வாழ்த்தாய் மதித்து ஒரு நீ செய்வது எல்லாம்
செய்கின்றாய் ஈது ஓர் திறம் அன்றே உய்கிற்பான் 		1210
வாடுகின்றேன் நின்னை மதித்து ஒரு நான் நீ மலத்தை
நாடுகின்றாய் ஈது ஓர் நலம் அன்றே கூடுகின்ற 
ஈண்டு ஓர் அணுவாய் இருந்த நீ எண் திசை போல்
நீண்டாய் இஃது ஓர் நெறி அன்றே வேண்டா நீ 
மற்றவர் போல் அன்றே மனனே நின் வண் புகழை		1215
முற்றும் இவண் ஆர்-தான் மொழிவாரே சுற்றி மனம் 
தான் அடங்கின் எல்லாச் சகமும் அடங்கும் ஒரு
மா நடம் கொள் பாத_மலர் வாய்க்கும் வான் அடங்க 
எல்லா நலமும் இதனால் என மறைகள்
எல்லாம் நின் சீரே எடுத்து இயம்பும் எல்லார்க்கும் 		1220
மா கமம் கொண்டு உற்ற மனோலயமே வான் கதி என்று
ஆகமங்கள் நின் சீர் அறைந்திடும் காண் ஆகும் இந்த 
நன்மை பெறும் மேன்மை நண்ணிய நீ நின்னுடைய
தன்மை விடல் அந்தோ சதுர் அல இப் புன்மை எலாம் 
விட்டு ஒழித்து நான் மொழியும் மெய்ச் சுகத்தை நண்ணுதி நீ	1225
இட்டு இழைத்த அச் சுகம்-தான் யாது என்னில் கட்டு அழித்த 
வேடம் சுகம் என்றும் மெய் உணர்வை இன்றி நின்ற
மூடம் சுகம் என்றும் முன் பலவாம் தோடம் செய் 
போகம் சுகம் என்றும் போகம் தரும் கரும
யோகம் சுகம் என்றும் உண்டு இலை என்று ஆகம் செய் 	1230
போதம் சுகம் என்றும் பொன்றல் சுகம் என்றும் விந்து
நாதம் சுகம் என்றும் நாம் பொருள் என்று ஓதல் அஃது
ஒன்றே சுகம் என்றும் உள் கண்டிருக்கும் அந்த
நன்றே சுகம் என்றும் நாம் புறத்தில் சென்றே கண்டு
ஆற்றல் சுகம் என்றும் அன்பு அறியாச் சூனியமே		1235
ஏற்ற சுகம் என்றும் இவ்வண்ணம் ஏற்றபடி 
வெல்லுகின்றோர் போன்று விரி நீர் உலகிடையே
சொல்லுகின்றோர் சொல்லும் சுகம் அன்று சொல்லுகின்ற 
வான் ஆதி தத்துவங்கள் மாய்த்து ஆண்டு உறுகின்ற
நான் ஆதி மூன்றில் ஒன்றும் நாடாமல் ஆனாமை 		1240
எள்ளும் பகலும் இரவும் இலா ஓர் இடத்தில்
உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் வள்ளல் என 
வாழும் பரசிவத்தின் வன்னி வெப்பம் போல முற்றும்
சூழும் சுகமே சுகம் கண்டாய் சூழ்வு-அதனுக்கு
எவ்வாறு இருந்தால் இயலும் எனில் அம்ம			1245
இவ்வாறு இருந்தால் இயலாதால் செவ் ஆற்றில் 
பற்று_அற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டும் அது
பற்று அற்றால் அன்றிப் பலியாதால் பற்று அற்றல் 
வேதனையால் ஈங்கு விரியும் சகப் பழக்க
வாதனை போய் நீங்கில் அன்றி வாராதால் வாதனையும் 	1250
ஈனம் அந்தோ இ உலகம் என்று அருளை நாடுகின்ற
ஞானம் வந்தால் அன்றி நலியாதால் ஞானம்-அது 
போகம் முற்றும் பொய் எனவே போதும் அனித்திய வி
வேகம் உற்றால் அன்றி விளங்காதால் ஆக அஃது 
உண்ண வந்தால் போலும் இவண் உற்று விசாரித்திடும் ஓர்	1255
எண்ணம் வந்தால் அன்றி இசையாதால் எண்ணம்-அது 
பங்கம் அடைந்தார் அவையைப் பாராது சாதுக்கள்
சங்கம் அடைந்தால் அன்றிச் சாராதால் இங்கு அதனால் 
வீழ் முகத்தர் ஆகி நிதம் வெண் நீறு அணிந்து அறியாப்
பாழ் முகத்தோர்-தம் பால் படர்ந்து உறையேல் பாழ் முகத்தில் 	1260
பேய் ஆட உள் அறியாப் பித்து ஆட நின்னுடனே
வாயாடுவோர் பால் மருவி நில்லேல் நீ ஆடிப் 
பேதித்திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே
வாதித்திடுவோர் பால் வாய்ந்து உறையேல் சாதித்துச் 
சைவம் எங்கே வெண் நீற்றின் சார்பு எங்கே மெய்யான		1265
தெய்வம் எங்கே என்பவரைச் சேர்ந்து உறையேல் உய்வது எங்கே 
தீராச் சிவ நிந்தை செய்து சிறுதேவர்களை
நேராய்ப் பிதற்றுவர் பால் நேர்ந்து உறையேல் ஓராமல் 
எள்ளென்றும் தெய்வம் என்பது இல்லை இது தெளிந்து
கொள் என்றும் துள்ளுகின்றோர் கூட்டம் உறேல் நள் ஒன்று 	1270
நாம் என்றும் நம்மை அன்றி நண்ணும் பிரமம் இல்லை
யாம் என்றும் சொல்பவர்-பால் ஆர்ந்து உறையேல் தாம் ஒன்ற 
எல்லா அறிவும் எமது அறிவே என்று உரைக்கும்
பொல்லா வலக்காரர் பொய் உகவேல் புல் ஆக 
அற்பமே மற்ற எலாம் ஆயில் அழியாக் காய_		1275
கற்பமே வத்து என்பார் கண் அடையேல் சிற்சிலவாம் 
சித்திகளே வத்து என்போர்ச் சேர்ந்து உறையேல் பல் மாயா
சத்திகளே வத்து என்போர் சார்பு அடையேல் பொத்திய இச் 
சன்மமே தோற்றும் தரமாம் திரம் அளித்த
கன்மமே வத்து என்போர் கண் உறையேல் கன்மம் மிகு 	1280
மாகம் கதி என்பார் மாட்டு உறையேல் பல் போக
யோகம் பொருள் என்பார் ஊடு உறையேல் ஏகம் கொள் 
மண் என்பார் வான் என்பார் வாய் முச்சுடர் என்பார்
பெண் என்பார் மற்று அவர்-தம் பேர் உரையேல் மண்ணின்-பால் 
மன் உரையாச் சில்லோர் மரம் தெய்வம் என்பார் மற்று		1285
என் உரையார் ஈண்டு அவர்-பால் எய்தியிடேல் மன் நலங்கள் 
பூத்தால் சிறுவர்களும் பூசா_பலம் என்பார்
தேற்றார் சிவ_பூசைசெய்யாராய்ப் பூத் தாவி 
வீறுகின்ற பூசையில் என் வீண் என்று வீண் பாழ் வாய்க்
கூறுகின்ற பேயர்கள்-பால் கூடி உறேல் மாறுகின்ற 		1290
நீள் கோல வாழ்க்கை எலாம் நீத்திடுவான் பொன்_அறைக்குத்
தாள்_கோல் இடுவாரைச் சார்ந்து உறையேல் நீள் கோல  
மெய்_ஒழுக்கத்தார் போல் வெளி நின்று அகத்து ஒழியாப்
பொய்_ஒழுக்கத்தார்-பால் பொருந்தி உறேல் பொய் ஒழுக்கில் 
பொய் நூல் பதறிப் புலம்புகின்ற பித்தர்கள்-பால்		1295
அ நூல் விரும்பி அடைந்து அலையேல் கை நேர்ந்து 
கோடாது கோடி கொடுத்தாலும் சைவ நெறி
நாடாதவர் அவையை நண்ணியிடேல் கோடாது 
கொல்லா விரதம்-அது கொள்ளாரைக் காணில் ஒரு
புல்லாக எண்ணிப் புறம்பு ஒழிக எல்லாமும் 		1300
ஆக நவில்கின்றது என் நம் ஐயனுக்கு அன்பு_இல்லாரை
நீ கனவிலேனும் நினையற்க ஏகன் அடிக்கு
அன்பே வடிவாய் அருளே உயிராய்ப் பேர்_
இன்பே உணர்வாய் இசைந்தாரும் அன்பு ஆகிக் 
கண்டிகையே பூணின் கலவையே வெண் நீறாய்க்		1305
கொண்டு இகவாச் சார்பு குறித்தாரும் தொண்டுடனே 
வாய்_மலரால் மாலை வகுத்தலொடு நம் இறைக்குத்
தூய் மலரால் மாலை தொடுப்பாரும் சார் மலரோன் 
ஏர் நந்தனப் பணி கண்டு இச்சையுற நம் இறைக்குச்
சீர் நந்தனப் பணிகள் செய்வோரும் நார் நந்தாத் 		1310
தீயின் மெழுகாச் சிந்தை சேர்ந்து உருகி நம் இறை வாழ்
கோயில் மெழுகா நின்ற கொள்கையரும் மேயினரைத் 
தாயில் வளர்க்கும் தயவு உடைய நம் பெருமான்
கோயில் விளக்கும் குணத்தோரும் தூய அருள் 
இன்புடனே தீபம் முதல் எல்லாச் சரியைகளும்		1315
அன்புடனே செய்து அங்கு அமர்வாரும் அன்புடனே 
அண்ணிய மேல் அன்பர்க்கு அமுது ஈதல் ஆதிசிவ
புண்ணியமே நாளும் புரிவோரும் புண்ணியமாம் 
தேனே அமுதே சிவமே சிவமே எம்மானே
என்று ஏத்தி மகிழ்வாரும் வானான  			1320
மன்னே அருள்_கடலே மாணிக்கமே எங்கள்
அன்னே என்று உன்னி அமர்வோரும் நல் நேயப் 
பண் நீர் மொழியால் பரிந்து ஏத்தி ஆனந்தக்
கண்ணீர் கொண்டு உள்ளம் களிப்போரும் உள் நீரில் 
பண்டு கண்டும் காணாப் பரிசினராய்ப் பொன்_மேனி		1325
கண்டுகண்டு நாளும் களிப்போரும் தொண்டு அடையும் 
பொற்பு அதிகம் என்று எண்ணிப் போற்றி ஒரு மூவர்களின்
சொல் பதிகம் கொண்டு துதிப்போரும் சொற்பனத்தும் 
மாசு அகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்ற திருவாசகத்தை
வாயால் மலர்வோரும் வாசகத்தின் 			1330
மன் இசைப்பால் மேலோர் வகுத்து ஏத்திநின்ற திரு
இன் இசைப்பா ஆதி இசைப்போரும் மன் இசைப்பின் 
நல் வாழ்வு அருளுகின்ற நம் பெருமான் மான்மியங்கள்
சொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் சொல் வாய்ந்த 
தாதா என்று அன்புடனே சாமகீதங்கள் முதல்			1335
வேதாகமங்கள் விரிப்போரும் வேதாந்தம் 
சேர்ந்தோர்க்கு அருளும் சிவமே பொருள் என்று
தேர்ந்தே சிவ_பூசைசெய்வோரும் ஆர்ந்து ஏத்தி 
நல் நெஞ்சே கோயில் என நம் பெருமான்-தன்னை வைத்து
மன்னும் சிவ_நேயம் வாய்ந்தோரும் முன் அயன்-தன் 		1340
அஞ்சு எழுத்து எல்லாம் கேட்கில் அஞ்செழுத்தாம் எம் பெருமான்
அஞ்செழுத்தால் அர்ச்சித்து அமர்வோரும் அஞ்சு எனவே 
விஞ்சும் பொறியின் விடயம் எலாம் நம் பெருமான்
செம் சுந்தரப் பதத்தில் சேர்த்தோரும் வஞ்சம் செய் 
பொய் வேதனை நீக்கும் புண்ணியன்-பால் தம் உயிரை		1345
நைவேதனம் ஆக்கும் நல்லோரும் செய் வேலை 
நீட நடத்தலொடு நிற்றல் முதல் நம் பெருமான்
ஆடல் அடித் தியானம் ஆர்ந்தோரும் வாடல் அறத்  
தூய நனவில் சுழுத்தியொடு நம் பெருமான்
நேயம் நிகழ்த்தும் நெறியோரும் மாயம் உறு 		1350
மான்-அதுவாய் நின்ற வயம் நீக்கித் தான் அற்றுத்
தான் அதுவாய் நிற்கும் தகையோரும் வானம்-அதில் 
வானம் கண்டு ஆடும் மயில் போன்று நம் பெருமான்
தானம் கண்டு ஆடும் தவத்தோரும் மோனமொடு 
தாழ் சடையும் நீறும் சரி கோவணக் கீளும்			1355
வாழ் சிவமும் கொண்டு வதிவோரும் ஆழ் நிலைய 
வாரி அலை போன்ற சுத்த மாயையினால் ஆம் பூதகாரியங்கள்
ஆதி எலாம் கண்டு ஒழித்து ஊர் இயங்கத் 
தஞ்சம் தரும் மலரோன் தத்துவமாம் பூதங்கள்
அஞ்சும் பொறி அஞ்சும் அஞ்சு அறிவும் அஞ்சு எனும் ஓர் 	1360	
வாக்கு முதல் அஞ்சும் அற்று மாலோன்-தன் தத்துவமாம்
ஊக்கும் கலை முதலாம் ஓர் ஏழும் நீக்கி அப்பால் 
மேவி விளங்கு சுத்த வித்தை முதல் நாதம் மட்டும்
தாவி வயங்கு சுத்த தத்துவத்தில் மேவி அகன்று 
அப்பால் அருள் கண்டு அருளால் தமைத்தாம் கண்டு		1365
அப்பால் பரவெளி கண்டு அப்பாலுக்கப்பாலும் 
தீராச் சுயமாய்ச் சிதானந்தமாம் ஒளியைப்
பாரா இருந்தபடி இருந்து பேராது 
கண்டது என்று ஒன்றும் கலவாது தாம் கலந்து
கொண்ட சிவயோகியராம் கொற்றவரும் அண்ட அரிய 		1370
சத்துவத்தில் சத்துவமே தம் உருவாய்க் கொண்டு பரதத்துவத்தின்
நிற்கும் தகவோரும் அத்துவத்தில் 
தீதும் சுகமும் சிவன் செயல் என்று எண்ணி வந்த
யாதும் சமமா இருப்போரும் கோதுபடக் 
கூறும் குறியும் குணமும் குலமும் அடி			1375
ஈறும் கடையும் இகந்தோரும் வீறுகின்ற 
சேந்தின் அடைந்த எலாம் சீரணிக்கச் சேர் சித்த
சாந்தியுடனே சரிப்போரும் சாந்தி பெறத் 
தம்மை உறும் சித்து எவையும் தாம் உவத்தல் செய்யாமல்
செம்மையுடன் வாழும் திறலோரும் எம்மையினும் 		1380
ஆராமை ஓங்கும் அவா_கடல் நீர் மான் குளம்பின்
நீராக நீந்தி நிலைத்தோரும் சேராது 
தம் பொருளைக் கண்டே சதானந்த வீட்டினிடைச்
செம்பொருளைச் சார்ந்த திறத்தோரும் மண் பொருள் போய்த் 
தாயர் என மாதர்-தம்மை எண்ணிப் பாலர் பித்தர்		1385
பேயர் என நண்ணும் பெரியோரும் ஈ-அதனில் 
எய்ப் பரிசாம் ஓர் திரணம் எவ்வுலகும் செய்து அளிக்க
மெய்ப் பரிசம் செய்ய வல்ல வித்தகரும் மெய்ப்படவே 
யாவும் அறிந்தும் அறியார் போன்று எப்பொழுதும்
சாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் ஓவல் இன்றி 		1390
வைதிடினும் வாழ்க என வாழ்த்தி உபசாரம்
செய்திடினும் தன்மை திறம்பாரும் மெய் வகையில் 
தேறா உலகம் சிவமயமாய்க் கண்டு எங்கும்
ஏறாது இழியாது இருப்போரும் மாறாது 
மோனம்-தான் கொண்டு முடிந்த இடத்து ஓங்கு பர		1395
மானந்தாதீதத்து அமர்ந்தோரும் தாம் நந்தாச் 
சாதுக்கள் ஆம் அவர்-தம் சங்க மகத்துவத்தைச்
சாதுக்கள் அன்றி எவர்தாம் அறிவார் நீ துக்கம் 
நீங்கி அன்னோர் சங்கத்தில் நின்று மகிழ்ந்து ஏத்தி நிதம்
ஆங்கு அவர் தாள் குற்றேவல் ஆய்ந்து இயற்றி ஓங்கு சிவ 	1400
பஞ்சாட்சரத்தைப் பகர் அருளே நாவாக
எஞ்சாப் பரிவுடனே எண்ணி அருள் செஞ்சோதித் 
தாது ஒன்று தும்பை முடித் தாணு அடி ஒன்றி மற்றை
யாதொன்றும் நோக்காது அமைந்திடுக தீது என்ற 
பாழ் வாழ்வு நீங்கப் பதி வாழ்வில் எஞ்ஞான்றும்		1405
வாழ்வாய் என்னோடும் மகிழ்ந்து

@4.சிவநேச வெண்பா
* காப்பு

#-1
முன்னவனே யானை_முகத்தவனே முத்தி நலம்
சொன்னவனே தூய மெய்ச் சுகத்தவனே என்னவனே
சிற்பரனே ஐங்கரனே செம் சடை அம் சேகரனே
தற்பரனே நின் தாள் சரண்

#0
வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய்
நீறு_உடையாய் நேயர்கள்-தம் நெஞ்சு_உடையாய் கூறு
முதல்வா ஓர் ஆறு முகவா முக்கண்ணன்
புதல்வா நின் தாள் என் புகல்
* சிவநேச வெண்பா

#1
சீர் சான்ற வேதச் செழும் பொருளே சிற்சொருபப்
பேர் சான்ற உண்மைப் பிரமமே நேர் சான்றோர்
நாடும் பரசிவமே நாயேனுக்கு அன்பு நின்-பால்
நீடும்படி நீ நிகழ்த்து

#2
நினைப் பித்தா நித்தா நிமலா என நீ
நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் நினைப்பின்
மறப்பித்தால் யானும் மறப்பேன் எவையும்
பிறப்பித்தாய் என்னால் என் பேசு

#3
உருவாய் உருவில் உரு ஆகி ஓங்கி
அருவாய் அருவில் அருவாய் ஒருவாமல்
நின்றாயே நின்ற நினைக் காண்பது எவ்வாறோ
என் தாயே என் தந்தையே

#4
வெம் சஞ்சலமா விகாரம் எனும் பேய்க்கு
நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் அஞ்சல் என
எண் தோள் இறையே எனை அடிமைகொள்ள மனம்
உண்டோ இலையோ உரை

#5
அப்பால் உன் சித்தம் அறியேன் எனக்கு அம்மை
அப்பா நின் தாள் அன்றி யார் கண்டாய் இப் பாரில்
சாதி உருவாக்கும் தளை அவிழ்த்துத் தன்மயமாம்
சோதி உருவாக்கும் துணை

#6
பேர்_அறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல்
யார் அறிவார் யானோ அறிகிற்பேன் சீர் கொள்
வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள்
ஒளி ஆகி நின்ற உனை

#7
வந்தித் தேன் பிட்டு உகந்த வள்ளலே நின் அடி யான்
சிந்தித்தேன் என்றல் சிரிப்பு அன்றோ பந்தத்தாம்
சிந்து சிந்திப்பித்து எனது சிந்தையுள் நின் பொன் அருளே
வந்து சிந்திப்பித்தல் மறந்து

#8
தேன் என்ற இன் சொல் தெரிந்து நினைப் பாடுகின்றேன்
நான் என்று உரைத்தல் நகை அன்றோ வான் நின்ற
ஒண் பொருள் நீ உள்ளம் உவந்து அருளால் இன் சொல்லும்
வண் பொருளும் ஈதல் மறந்து

#9
அண்டங்களோ அவற்றின் அப்பாலோ இப்பாலோ
பண்டங்களோ சிற்பரவெளியோ கண் தங்க
வெம் பெரு மால் நீத்தவர்-தம் மெய் உளமோ தையலொடும்
எம் பெருமான் நீ வாழ் இடம்

#10
பூதம் எங்கே மற்றைப் புலன் எங்கே பல்_உயிரின்
பேதம் எங்கே அண்டம் எனும் பேர் எங்கே நாதம் எங்கே
மன் வடிவம் எங்கே மறை எங்கே வான் பொருள் நீ
பொன் வடிவம் கொள்ளாத போது

#11
பேர்_உருவோ சோதிப் பிழம்பாகும் சின்மயத்தின்
சீர் உருவோ தேவர் திரு_உருவம் நேர் உருவில்
சால்புறச் சேர் அண்ட சராசரங்கள் எல்லாம் நும்
கால்_விரல்-பால் நின்று ஒடுங்கும் கால்

#12
இன்றோ பகலோ இரவோ வரும்_நாளில்
என்றோ அறியேன் எளியேனே மன்று ஓங்கும்
தாய்_அனையாய் நின் அருளாம் தண் அமுதம் உண்டு உவந்து
நாய்_அனையேன் வாழ்கின்ற நாள்

#13
மண்_ஆசை வெற்பே மறி கடலே பொன்_ஆசை
பெண்_ஆசை ஒன்றே என் பேர்_ஆசை நண்ணு ஆசை
விட்டார் புகழும் விடையாய் நான் பொய் ஆசைப்
பட்டால் வருமே பதம்

#14
தந்தையாய் என்னுடைய தாயாய்த் தகை சான்ற
சிந்தையாய் என் அருமைத் தேசிகனாய் முந்தையாய்
நீடு மறை முதலாய் நின்றாய் என்னே நெஞ்சம்
வாடும் எனை ஆட்கொள்ளாவாறு

#15
ஊட்டுகின்ற வல்_வினையாம் உள் கயிற்றால் உள் இருந்தே
ஆட்டுகின்ற நீ-தான் அறிந்திலையோ வாட்டுகின்ற
அஞ்சு_புல வேடர்க்கு அறிவைப் பறிகொடுத்தென்
நெஞ்சு புலர்ந்து ஏங்கும் நிலை

#16
ஆமோ அலவோ அறியேன் சிறியேன் நான்
தாமோதரனும் சதுமுகனும் தாமே
அடி ஆதரிக்கும் அரசே நின் ஏவல்
அடியார் குற்றேவல் அடியன்

#17
உன்னால் எனக்கு ஆவது உண்டு அது நீ கண்டதுவே
என்னால் உனக்கு ஆவது ஏது உளது சொன்னால் யான்
தந்து ஆர்வத்தோடும் தலைமேற்கொண்டு உய்கிற்பேன்
எந்தாய் இங்கு ஒன்றும் அறியேன்

#18
சென்று உரைப்பார் சொல்லில் சிறியான் பயம் அறியான்
என்று உரைப்பார் ஆங்கு அது மற்று என்னளவே மன்றகத்தோய்
அம் சேல் விழியாரை அந்தகன் என்பார் மொழியை
அஞ்சேன் சிறிதும் அறிந்து

#19
எந்தாய் நின் அன்பர்-தமக்கு இன் அமுதம் இட்டு ஏத்திச்
சிந்தா நலம் ஒன்றும் செய்து அறியேன் நந்தாச்
சுவர் உண்ட மண் போலும் சோறு உண்டேன் மண்ணில்
எவர் உண்டு எனைப் போல் இயம்பு

#20
உப்பு இருந்த ஓடோ ஓதியோ உலா_பிணமோ
வெப்பு இருந்த காடோ வினைச் சுமையோ செப்ப அறியேன்
கண்ணப்பருக்குக் கனி_அனையாய் நின் பணியாது
உண்ணப் பருக்கும் உடம்பு

#21
ஏலார் மனை-தொறும் போய் ஏற்று எலும்பும் தேய நெடும்
காலாய்த் திரிந்து உழலும் கால் கண்டாய் மால் ஆகித்
தொண்டே வலம்செய் கழல் தோன்றலே நின் கோயில்
கண்டே வலம்செய்யாக் கால்

#22
ஏசும் பிறர் மனையில் ஏங்க அவர் ஈயும் அரை_காசும்
பெற விரிக்கும் கை கண்டாய் மாசு உந்த
விண்டும் சிரம் குனிக்கும் வித்தகனே நின் தலத்தைக்
கண்டும் சிரம் குவியாக் கை

#23
வெம் கோடை ஆதபத்தின் வீழ் நீர் வறந்து உலர்ந்தும்
அங்கு ஓடை ஆதல் வழக்கு அன்றோ எம் கோ நின்
சீர் சிந்தாச் சேவடியின் சீர் கேட்டும் ஆனந்த
நீர் சிந்தா வன்கண் நிலை

#24
வாய் அன்றேல் வெம் மலம் செல் வாய் அன்றேல் மா நரக
வாய் அன்றேல் வல் வெறி_நாய் வாய் என்பாம் தாய் என்றே
ஊழ்_தாதா ஏத்தும் உடையாய் சிவ என்றே
வாழ்த்தாதார் நாற்றப் பாழ் வாய்

#25
வீட்டார் இறை நீ விடை மேல் வரும் பவனி
காட்டாது அடைத்த கதவு அன்றோ நாட்டு ஆதி
நல்லத்துள் ஐயா நதி_சடையாய் என்னும் சீர்ச்
செல்லத் துளையாச் செவி

#26
புல் அங்கண நீர்ப் புழை என்கோ புற்று என்கோ
சொல்லும் பசு_மண் துளை என்கோ சொல்லும் சீர்
வீயாத பிஞ்ஞகப் பேர் மெல்லினத்தின் நல் இசை-தான்
தோயாத நாசித் துளை

#27
தோற்றம் இலாக் கண்ணும் சுவை உணரா நாவும் நிகழ்
நாற்றம் அறியாத நாசியும் ஓர் மாற்றமும் தான்
கேளாச் செவியும் கொள் கீழ் முகமே நீற்று அணி-தான்
மூளாது பாழ்த்த முகம்

#28
மான்றாம் உலக வழக்கின்படி மதித்து
மூன்றா வகிர்ந்தே முடை நாற ஊன்றா
மல_கூடை ஏற்றுகினும் மாணாதே தென்-பால்
தலக் கூடல் தாழாத் தலை

#29
கல் என்கோ நீர் அடைக்கும் கல் என்கோ கான் கொள் கருங்
கல் என்கோ காழ் வயிர கல் என்கோ சொல் என்கோ
இன்றால் எனிலோ எடுத்தாள் எம் ஈன்றாள் நேர்
நின் தாள் நினையாத நெஞ்சு

#30
சொல்லுகின்ற உள் உயிரைச் சோர்வுற்றிடக் குளிர்ந்து
கொல்லுகின்ற நஞ்சில் கொடிது அன்றோ ஒல்லும் மன்றத்து
எம்மானின் தாள்_கமலம் எண்ணாது பாழ் வயிற்றில்
சும்மா அடைக்கின்ற சோறு

#31
சோர்பு அடைத்துச் சோறு என்றால் தொண்டை விக்கிக்கொண்டு நடு
மார்பு அடைத்துச் சாவுகினும் மா நன்றே சீர் படைக்க
எண்ணுவார் எண்ணும் இறைவா நின் தாள் ஏத்தாது
உண்ணுவார் உண்ணும்-இடத்து

#32
ஓகோ கொடிதே உறும் புலையர் இல்லினிடத்
தே கோ வதைத்து உண் செயல் அன்றோ வாகோர்-தம்
வாழ் மனையில் செல்லாது வள்ளல் நினை ஏத்தாதார்
பாழ்_மனையில் சென்று உண்பது

#33
வீயும் இடுகாட்டகத்துள் வேம் பிணத்தின் வெம் தசையைப்
பேயும் உடன் உண்ண உண்ணும் பேறு அன்றோ தோயும் மயல்
நீங்க அருள்செய்வோய் வெண் நீறு அணியார் தீ மனையில்
ஆங்கு அவரோடு உண்ணும்-அது

#34
கண் குழைந்து வாடும் கடு நரகின் பேர் உரைக்கில்
ஒண் குழந்தையேனும் முலை உண்ணாதால் தண் குழைய
பூண் தாது ஆர்க் கொன்றைப் புரி சடையோய் நின் புகழை
வேண்டாதார் வீழ்ந்து விரைந்து

#35
கண்_நுதலே நின் தாள் கருதாரை நேசிக்க
எண்ணுதலே செய்யேன் மற்று எண்ணுவனேல் மண்_உலகில்
ஆமிடத்து நின் அடியார்க்கு ஆசை உரைத்து இல்லை என்பார்
போமிடத்தில் போவேன் புலர்ந்து

#36
அங்கணனே நின் அடிக்கு ஓர் அன்பு_இலரைச் சார்ந்தோர்-தம்
வங்கணமே வைப்பு-அதில் நான் வைத்தேனேல் அங்கணத்தில்
நீர் போல் எனது நிலை கெடுக நின் பழி_சொற்
றார் போல் அழிக தளர்ந்து

#37
பூவை விட்டுப் புல் எடுப்பார் போல் உன் திரு_பாதத்
தேவை விட்டு வெம் பிறவித் தேவர்களைக் கோவையிட்டுக்
கூவுவார் மற்று அவரைக் கூடியிடேன் கூடுவனேல்
ஓவுவார் ஆவல் உனை

#38
யாதோ கனல் கண் யம_தூதர் காய்ச்சு கருந்
தாதோ தழல் பிழம்போ தான் அறியேன் மீதோங்கு
நாள்_தாது ஆர்க் கொன்றை நதி_சடையோய் அஞ்செழுத்தை
நாட்டாதார் வாய்க்கு நலம்

#39
என் நெஞ்சு ஓர் கோயில் எனக் கொண்டோய் நின் நினையார்-
தன் நெஞ்சோ கல்லாம் அச் சாம்_பிணத்தார் வன் நெஞ்சில்
சார்ந்தவர்க்கும் மற்று அவரைத் தான் நோக்கி வார்த்தை சொல
நேர்ந்தவர்க்கும் கல்லாகும் நெஞ்சு

#40
வெள்_அமுதும் தேனும் வியன் கரும்பும் முக்கனியின்
உள் அமுதும் தெள் அமுதும் ஒவ்வாதால் கள்ளம் இலா
நின் அன்பர்-தம் புகழின் நீள் மதுரம்-தன்னை இனி
என் என்பது ஐயா இயம்பு

#41
பண்ணால் உன் சீரினைச் சம்பந்தர் சொல வெள் எலும்பு
பெண் ஆனது என்பார் பெரிது அன்றே அண்ணா அச்
சைவ வடிவாம் ஞானசம்பந்தர் சீர் உரைக்கில்
தெய்வ வடிவாம் சாம்பர் சேர்ந்து

#42
எம் கோவே யான் புகலி எம் பெருமான்-தன் மணத்தில்
அங்கு ஓர் பொருள் சுமையாள் ஆனேனேல் இங்கே நின்
தாள் வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலின் இ
நாள் வருந்த வேண்டுகின்றேன் நான்

#43
பூவுக்கு அரையரும் வான் புங்கவரும் போற்று திரு
நாவுக்கரையர் எனும் நல் நாமம் மேவுற்ற
தொண்டர்க்கு நீ கட்டுச்சோறு எடுத்தாய் என்று அறிந்தோ
தொண்டர்க்குத் தொண்டன் என்பார் சொல்

#44
எம் பர ஐயோ மண் இடந்து அலைந்தான் சுந்தரனார்-
தம் பரவை வீட்டுத் தலைக்கடையாய் வம்பு அணையாய்
வாயிற்படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே
மாயப் பெயர் நீண்ட மால்

#45
நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பது எங்கள்
மண்ணில் பழைய வழக்கம் காண் பண்ணின் சொல்
அம்மை ஆர் வாமத்தோய் ஆயினும் உன் காரைக்கால்
அம்மையார் போல் நடந்தார் ஆர்

#46
வேத முடிவோ விளங்கு ஆகம முடிவோ
நாத முடிவோ நவில் கண்டாய் வாதம் உறு
மாசகர்க்குள் நில்லா மணி சுடரே மாணிக்கவாசகர்க்கு
நீ உரைத்த வாறு

#47
ஆர் கொண்டார் சேய்க்கறியிட்டாரே சிறுத்தொண்டப்
பேர் கொண்டார் ஆயிடில் எம் பெம்மானே ஓர் தொண்டே
நாய்க்கும் கடைப்பட்ட நாங்கள் என்பேம் எங்கள் முடை
வாய்க்கு இங்கு இஃது ஓர் வழக்கு

#48
கோள் கொண்ட நஞ்சம் குடியேனோ கூர் கொண்ட
வாள் கொண்டு வீசி மடியேனோ கீள் கொண்ட
அம் கோவணத்து அழகா அம்பலவா நின் புகழை
இங்கு ஓதி வாழ்த்தாத யான்

#49
ஆயாக் கொடியேனுக்கு அன்பு_உடையாய் நீ அருள் இங்கு
ஈயாக் குறையே இலை கண்டாய் மாயாற்கும்
விள்ளாத் திரு_அடிக் கீழ் விண்ணப்பம் யான் செய்து
கொள்ளாக் குறையே குறை

#50
பெற்றிடு தாய் போல்வது நின் பெற்றி என்பேன் பிள்ளை-அது
மற்று அழுதால் கேட்டும் வராது அங்கே சற்று இருக்கப்
பெற்றாள் பொறுப்பள் பிரான் நீ பொறுக்கினும் நின்
பொன்_தாள் பொறா எம் புலம்பு

#51
பொன் போல் பொறுமை_உளார் புந்தி விடாய் நீ என்பார்
என் போல் பொறுமை_உளார் யார் கண்டாய் புன் போக
வல்லாம்படி சினம்கொண்டு ஆணவம் செய் இன்னாமை
எல்லாம் பொறுக்கின்றேன் யான்

#52
முன் மணத்தில் சுந்தரரை முன் வலுவில் கொண்டது போல்
என் மணத்தில் நீ வந்திடாவிடினும் நின் கணத்தில்
ஒன்றும் ஒரு கணம் வந்துற்று அழைக்கில் செய்தது அன்றி
இன்றும் ஒரு மணம் செய்வேன்

#53
செய் ஆர் அழலே நின் செம் மேனி என்னினும் என்
அய்யா நின் கால் பிடித்தற்கு அஞ்சேன் காண் மெய்யா இஞ்
ஞான்று கண்டு நான் மகிழ நம் தொண்டன் என்று எனையும்
ஏன்றுகொண்டால் போதும் எனக்கு

#54
என்-பாலோ என் பால் இராது ஓடுகின்ற மனத்
தின்-பாலோ அ மனத்தைச் சேர் மாயை-தன்-பாலோ
யார்-பால் பிழை உளதோ யான் அறியேன் என் அம்மை
ஓர் பால் கொள நின்றோய் ஓது

#55
நாணவத்தினேன்-தனையோ நாயேனை மூடிநின்ற
ஆணவத்தையோ நான் அறியேனே வீண் அவத்தில்
தீங்கு_உடையாய் என்ன இவண் செய் பிழையை நோக்கி அருள்
பாங்கு_உடையாய் தண்டிப்பது

#56
எச்சம் பெறும் உலகோர் எட்டிமரம் ஆனாலும்
பச்சென்று இருக்கப் பகர்வார் காண் வெச்சென்ற
நஞ்சு_அனையேன் குற்றம் எலாம் நாடாது நாத எனை
அஞ்சல் நையேல் என்பாய் அமர்ந்து

#57
கற்று அறியேன் நின் அடிச் சீர் கற்றார் கழகத்தில்
உற்று அறியேன் உண்மை உணர்ந்து அறியேன் சிற்றறிவேன்
வன் செய் வேல் நேர் விழியார் மையலினேன் மா தேவா
என் செய்வேன் நின் அருள் இன்றேல்

#58
மெய்-தான்_உடையோர் விரும்புகின்ற நின் அருள் என்
செய்தால் வருமோ தெரியேனே பொய் தாவு
நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினைக் கேட்க
அஞ்சினேன் அன்பு இன்மையால்

#59
மா தேவா ஓவா மருந்தே வா மா மணி இப்
போதே வா என்றே புலம்புற்றேன் நீ தாவாயானால்
உன் சித்தம் அறியேன் உடம்பு ஒழிந்துபோனால்
என் செய்வேன் புகல்

#60
கொன் செய்தாற்கு ஏற்றிடும் என் குற்றம் எலாம் ஐய எனை
என் செய்தால் தீர்ந்திடுமோ யான் அறியேன் முன்_செய்தோய்
நின்-பால் எனைக் கொடுத்தேன் நீ செய்க அன்றி இனி
என்-பால் செயல் ஒன்று இலை

#61
எண்ணில் எளியேன் தவிர எல்லா உயிர்களும் நின்
தண் நிலகும் தாள் நீழல் சார்ந்திடும் காண் மண்ணில் வரும்
தீங்கு என்ற எல்லாம் என் சிந்தை இசைந்து உற்றன மற்று
ஆங்கு ஒன்றும் இல்லாமையால்

#62
தாரம் விற்றும் சேய் விற்றும் தன்னை விற்றும் பொய்யாத
வாரம் வைத்தான் முன் இங்கு ஓர் மன்னன் என்பர் நாரம் வைத்த
வேணி_பிரான் அது-தான் மெய் ஆமேல் அன்று எனை நீ
ஏணில் பிறப்பித்தது இல்

#63
உள் ஒன்ற நின் அடிக்கு அன்புற்று அறியேன் என் உளத்தின்
வெள்ளென்ற வன்மை விளங்காதோ நள் ஒன்ற
அச்சம்_கொண்டேனை நினக்கு அன்பன் என்பர் வேழத்தின்
எச்சம் கண்டால் போலவே

#64
நீத்து ஆடும் செஞ்சடையாய் நீள் வேடம்கட்டி வஞ்சக்
கூத்தாடுகின்றேனைக் கொண்டு சிலர் கூத்தா நின்
பத்தன் என்பர் என்னோ பகல்வேடத்தார்க்கும் இங்கு
வித்தம் இலா நாயேற்கும் வேறு

#65
அன்பு_உடையார் இன் சொல் அமுது ஏறு நின் செவிக்கே
இன்பு_உடையாய் என் பொய்யும் ஏற்கும்-கொல் துன்பு_உடையேன்
பொய்_உடையேன் ஆயினும் நின் பொன் அருளை வேண்டும் ஒரு
மெய்_உடையேன் என்கோ விரைந்து

#66
என் ஆர்_உயிர்க்குயிராம் எம் பெருமான் நின் பதத்தை
உன்னார் உயிர்க்கு உறுதி உண்டோ-தான் பொன்_ஆகத்
தார்க்கும் சதுமுகர்க்கும் தானத்தவர்க்கும் மற்றை
யார்க்கும் புகல் உன் அருள்

#67
வெள்ளைப் பிறை அணிந்த வேணி_பிரானே நான்
பிள்ளை_பிராயத்தில் பெற்றாளை எள்ளப்
பொறுத்தாள் அத் தாயில் பொறுப்பு_உடையோய் நீ-தான்
வெறுத்தால் இனி என் செய்வேன்

#68
ஆயிரம் அன்றே நூறும் அன்றே ஈர்_ஐந்து அன்றே
ஆயிரம் பேர் எந்தை எழுத்து ஐந்தே காண் நீ இரவும்
எல்லும் நினைத்தி என ஏத்துகினும் எந்தாய் வீண்
செல்லும் மனம் என் செய்கேன் செப்பு

#69
வஞ்சம் தரும் காம வாழ்க்கையிடைச் சிக்கிய என்
நெஞ்சம் திருத்தி நிலைத்திலையே எம் சங்
கரனே மழுக் கொள் கரனே அரனே
வரனே சிதம்பரனே வந்து

#70
தாழ்விக்கும் வஞ்சச் சகமால் ஒழித்து என்னை
வாழ்விக்கும் நல்ல மருந்து என்கோ வீழ்விக்கும்
ஈங்கான மாயை இகந்தோர்க்கு அருள்வோய் நின்
பாங்கான செம்பொன்_பதம்

#71
ஏசு_ஒலிக்கு மானிடனாய் ஏன் பிறந்தேன் தொண்டர்கள்-தம்
தூசொலிப்பான் கல்லாகத் தோன்றிலனே தூசொலிப்பான்
கல்லாகத் தோன்றுவனேல் காள_கண்டா நாயேனுக்கு
எல்லா நலமும் உளதே

#72
குற்றம் பல செயினும் கோபம்செயாத அருள்
சிற்றம்பலம் உறையும் சிற்பரனே வெற்று அம்பல்
பொய் விட்டால் அன்றிப் புரந்து அருளேன் என்று எனை நீ
கைவிட்டால் என் செய்கேன் காண்

#73
தீ_குணத்தார் யாவரும் என் சீடர் எனில் என்னுடைய
தீ_குணத்தின் எல்லை எவர் தேர்கிற்பார் ஊக்கம் மிகு
நல்லோர்க்கு அளிக்கும் நதி_சடையோய் எற்கு அருளில்
எல்லோர்க்கும் ஐயுறவாமே

#74
இன்பம்_அடையான் தன்பு_உடையான் என்று ஏழையேன் தலை மேல்
அன்பு_உடையாய் நீ அமைப்பித்தாய் இதற்கு வன்பு அடையாது
எவ்வண்ணம் நின் நெஞ்சு இசைந்ததோ அந்நாளில்
இவ்வண்ணம் என்று அறிகிலேன்

#75
ஏய்ப் பிறப்பு ஒன்று இல்லாதோய் என் பிறப்பின் ஏழ்_மடங்கு ஓர்
பேய்ப் பிறப்பே நல்ல பிறப்பு அந்தோ வாய்ப்பு உலகம்
வஞ்சம் எனத் தேகம் மறைத்து அடி மண் வையாமல்
அஞ்சி நின்னோடு ஆடும் அது

#76
கோடும் பிறை_சடையோய் கோளும் குறும்பும் சாக்
காடும் பிணி மூப்பும் காணார் காண் நீடு நினைக்
கண்டார் அடிப்பொடியைக் கண்டார் திரு_அடியைக்
கண்டார் வடிவு கண்டார்கள்

#77
மால் எங்கே வேதன் உயர் வாழ்வு எங்கே இந்திரன் செங்
கோல் எங்கே வானோர் குடி எங்கே கோலம் சேர்
அண்டம் எங்கே அவ்வவ் அரும் பொருள் எங்கே நினது
கண்டம் அங்கே நீலம் உறாக் கால்

#78
எவ்வேளையோ வரும் கூற்று எம்-பால் என்று எண்ணுகின்ற
அ வேளை-தோறும் அழுங்குற்றேன் செவ்வேளை
மிக்கு அளித்தோய் நின் கழல் கால் வீரத்தை எண்ணு-தொறும்
எக்களித்து வாழ்கின்றேன் யான்

#79
துற்சங்கத்தோர் கணமும் தோயாது நின் அடியர்
சற்சங்கத்து என்றனை நீ-தான் கூட்டி நல் சங்கக்
காப்பான் புகழ் உன் கழல் புகழைக் கேட்பித்துக்
காப்பாய் இஃது என் கருத்து

#80
என் அமுதே முக்கண் இறையே நிறை ஞான
இன் அமுதே நின் அடியை ஏத்துகின்றோர் பொன் அடிக்கே
காதலுற்றுத் தொண்டு செயக் காதல்கொண்டேன் எற்கு அருள் நீ
காதலுற்றுச் செய்தல் கடன்

#81
ஆரா_அமுதே அருள்_கடலே நாயேன்-தன்
பேராத வஞ்சப் பிழை நோக்கி யாரேனும்
நின்_போல்வார் இல்லாதோய் நீயே புறம் பழித்தால்
என்_போல்வார் என் சொல்லார் ஈங்கு

#82
மெய்யாக நின்னைவிட வேறு ஓர் துணை_இல்லேன்
ஐயா அது நீ அறிந்தது காண் பொய்யான
தீது செய்வேன்-தன் பிழையைச் சித்தம் குறித்திடில் யான்
யாது செய்வேன் அந்தோ இனி

#83
திண்ணம் அறியாச் சிறியேன் உளத்து இருக்கும்
எண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய் அண்ணல் உன்-பால்
நித்தம் இரங்கா என் நெஞ்சு அமர்ந்ததாலோ நின்
சித்தம் இரங்காச் செயல்

#84
கொன் அஞ்சேன்-தன் பிழையைக் கூர்ந்து உற்று நான் நினைக்கில்
என் நெஞ்சே என்னை எரிக்கும் காண் மன்னும் சீர்
எந்தாய் நின் சித்தத்திற்கு ஏது ஆமோ நான் அறியேன்
சிந்தாகுலன் என் செய்வேன்

#85
நின் அன்பர்-தம்பால் நிறுத்துதியோ அன்றி எனைப்
பொன் அன்பர்-தம்பால் புணர்த்துதியோ பொன் அன்பர்
வைவமே என்னும் வறியேன் அறியேன் என்
தெய்வமே நின்றன் செயல்

#86
என் சிறுமை நோக்காது எனக்கு அருளல்வேண்டும் என்றே
நின் பெருமை நோக்கி இங்கு நிற்கின்றேன் என் பெரும
யாதோ நின் சித்தம் அறியேன் அடியேற்கு எப்
போதோ அருள்வாய் புகல்

#87
எந்தாய் என் குற்றம் எலாம் எண்ணும் கால் உள் நடுங்கி
நொந்து ஆகுலத்தின் நுழைகின்றேன் சிந்தாத
காள மகிழ் நின் களக் கருணை எண்ணு-தொறும்
மீள மகிழ்கின்றேன் விரைந்து

#88
எள்ளலே என்னினும் ஓர் ஏத்துதலாய்க் கொண்டு அருள் எம்
வள்ளலே என்றனை நீ வாழ்வித்தால் தள்ளலே
வேண்டும் என யாரே விளம்புவார் நின் அடியர்
காண்டும் எனச் சூழ்வார் களித்து

#89
வேணிக்கு அம்மே வைத்த வெற்பே விலை_இல்லா
மாணிக்கமே கருணை மா கடலே மாணிக்கு
முன் பொற்கிழி அளித்த முத்தே என் ஆர்_உயிர்க்கு
நின் பொன் கழலே நிலை

#90
முத்தேவர் போற்றும் முதல்_தேவ நின்னை அன்றி
எ தேவர் சற்றே எடுத்துரை நீ பித்தேன் செய்
குற்றம் எலாம் இங்கு ஓர் குணமாகக் கொண்டு என்னை
அற்றம் இலாது ஆள்கின்றவர்

#91
கங்கை_சடையாய் முக்கண்_உடையாய் கட்செவியாம்
அம் கச்சு_உடையாய் அருள்_உடையாய் மங்கைக்கு
ஒரு கூறு அளித்தாய் உனைத் தொழும் இ நாயேன்
இரு கூறு அளித்தேன் இடர்க்கு

#92
பேசத் தெரியேன் பிழை அறியேன் பேதுறினும்
கூசத் தெரியேன் குணம் அறியேன் நேசத்தில்
கொள்ளுவார் உன் அடிமைக் கூட்டத்தார் அல்லாதார்
எள்ளுவார் கண்டாய் எனை

#93
ஊணே உடையே என்று உள் கருதி வெட்கம்_இலேன்
வீணே நல் நாளை விடுகின்றேன் காணேன் நின்
செம் பாதமே என்றும் தீராப் பொருள் என்று
நம்பாத நாய்_அடியேன் நான்

#94
சிவமே சிவஞானச் செல்வமே அன்பர்
நவமே தவமே நலமே நவமாம்
வடிவுற்ற தேவே நின் மாக் கருணை அன்றோ
படிவுற்ற என் உள் பயன்

#95
கோளாக்கிக் கொள்ளுங் கொடியேனையும் நினக்கு ஓர்
ஆளாக்கிக் கொள்ளற்கு அமைவாயேல் நீளாக்கும்
செம் கேச வேணிச் சிவனே என் ஆணவத்திற்கு
எங்கே இடம் காண் இயம்பு

#96
திண்ணம் சற்று ஈந்திட நின் சித்தம் திரும்பாத
வண்ணம் சற்றே தெரிய வந்தது காண் எண் நெஞ்சில்
இத்தனையும் என் வினைகள் நீங்கில் இருக்க அண்டம்
எத்தனையும் போதாமை என்று

#97
இண்டை_சடையோய் எனக்கு அருள எண்ணுதியேல்
தொண்டைப் பெறும் என் துயர் எல்லாம் சண்டைக்கு இங்கு
உய்ஞ்சேம் என ஓடும் ஓட்டத்திற்கு என்னுடைய
நெஞ்சே பிறகிடும் காண் நின்று

#98
கண்ணால் இழுதைகள்-பால் காட்டிக்கொடுக்கில் எனை
அண்ணா அருளுக்கு அழகு அன்றே உள் நாடு
நின் அடியார் கூட்டத்தில் நீர் இவனைச் சேர்த்திடு-மின்
என் அடியான் என்பாய் எடுத்து

#99
கண்ணப்பன் ஏத்தும் நுதல்_கண் அப்ப மெய்ஞ்ஞான
விண் அப்ப நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மண்ணில் சில்
வானவரைப் போற்றும் மதத்தோர் பலர் உண்டு
நான் அவரைச் சேராமல் நாட்டு

#100
பொன் நின்று ஒளிரும் புரி_சடையோய் நின்னை அன்றிப்
பின் ஒன்று அறியேன் பிழை நோக்கி என்னை
அடித்தாலும் நீயே அணைத்தாலும் நீயே
பிடித்தேன் உன் பொன்_பாதப் பேறு

#101
துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினும் மற்றை
நல் குணத்தில் உன் சீர் நயப்பேன் காண் சிற்குணத்தோய்
கூற்று உதைத்த நின் பொன் குரை கழல் பூம்_தாள் அறிக
வேற்று உரைத்தேன்_இல்லை விரித்து

#102
இப் பாரில் என் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் என்
அப்பா நின் தாட்கே அடைக்கலம் காண் இப் பாரில்
நான் நினது தாள் நீழல் நண்ணும் மட்டும் நின் அடியர்-
பால் நினது சீர் கேட்கப் பண்

@5. மகாதேவ மாலை
* காப்பு

#0
கருணை நிறைந்து அகம் புறமும் துளும்பி வழிந்து உயிர்க்கு எல்லாம் களைகண் ஆகித்
தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற கண்_உடையோய் சிதையா ஞானப்
பொருள் நிறைந்த மறை அமுதம் பொழிகின்ற மலர்_வாயோய் பொய்யனேன்-தன்
மருள் நிறைந்த மனக் கருங்கல் பாறையும் உள் கசிந்து உருக்கும் வடிவத்தோயே
* மகாதேவ மாலை

#1
உலக நிலை முழுது ஆகி ஆங்காங்கு உள்ள உயிர் ஆகி உயிர்க்குயிராம் ஒளி-தான் ஆகிக்
கலக நிலை அறியாத காட்சி ஆகிக் கதி ஆகி மெய்ஞ்ஞானக் கண்-அது ஆகி
இலகு சிதாகாசம் அதாய்ப் பரமாகாச இயல்பு ஆகி இணை ஒன்றும் இல்லாது ஆகி
அலகு_இல் அறிவானந்தம் ஆகிச் சச்சிதானந்த மயம் ஆகி அமர்ந்த தேவே

#2
உலகம் எலாம் தனி நிறைந்த உண்மை ஆகி யோகியர்-தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும்
கலகம் உறா உபசாந்த நிலை-அது ஆகிக் களங்கம்_அற்ற அருண் ஞானக் காட்சி ஆகி
விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி
இலகு பராபரமாய்ச் சிற்பரமாய் அன்பர் இதய_மலர் மீது இருந்த இன்பத் தேவே

#3
வித்து ஆகி முளை ஆகி விளைவு-அது ஆகி விளைவிக்கும் பொருள் ஆகி மேலும் ஆகிக்
கொத்து ஆகிப் பயன் ஆகிக் கொள்வோன் ஆகிக் குறைவு ஆகி நிறைவு ஆகிக் குறைவு_இலாத
சத்து ஆகிச் சித்து ஆகி இன்பம் ஆகிச் சதாநிலையாய் எவ்வுயிர்க்கும் சாட்சி ஆகி
முத்து ஆகி மாணிக்கம் ஆகித் தெய்வ முழு வயிரத் தனி மணியாய் முளைத்த தேவே

#4
வேதாந்த நிலை ஆகிச் சித்தாந்தத்தின் மெய் ஆகிச் சமரசத்தின் விவேகம் ஆகி
நாதாந்த வெளி ஆகி முத்தாந்தத்தின் நடு ஆகி நவ நிலைக்கு நண்ணாது ஆகி
மூதாண்ட கோடி எல்லாம் தாங்கிநின்ற முதல் ஆகி மனாதீத முத்தி ஆகி
வாது ஆண்ட சமய நெறிக்கு அமையாது என்றும் மவுன வியோமத்தின் இடை வயங்கும் தேவே

#5
தோன்று துவிதாத்துவிதமாய் விசிட்டாத்துவிதமாய்க் கேவலாத்துவிதம் ஆகிச்
சான்ற சுத்தாத்துவிதமாய்ச் சுத்தம் தோய்ந்த சமரசாத்துவிதமுமாய்த் தன்னை அன்றி
ஊன்று நிலை வேறு ஒன்றும் இலதாய் என்றும் உள்ளதாய் நிர்_அதிசய உணர்வாய் எல்லாம்
ஈன்று அருளும் தாய் ஆகித் தந்தை ஆகி எழில் குருவாய்த் தெய்வதமாய் இலங்குத் தேவே

#6
பரம் ஆகிச் சூக்குமமாய்த் தூலம் ஆகிப் பரமார்த்த நிலை ஆகிப் பதத்தின் மேலாம்
சிரம் ஆகித் திரு_அருளாம் வெளியாய் ஆன்ம சிற்சத்தியாய்ப் பரையின் செம்மை ஆகித்
திரம் ஆகித் தற்போத நிவிர்த்தி ஆகிச் சிவம் ஆகிச் சிவாநுபவச் செல்வம் ஆகி
அரம் ஆகி ஆனந்த_போதம் ஆகி ஆனந்தாதீதம்-அதாய் அமர்ந்த தேவே

#7
இந்தியமாய்க் கரணாதி அனைத்தும் ஆகி இயல் புருடனாய்க் கால பரமும் ஆகிப்
பந்தம் அற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால் பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை ஆகி
வந்த உபசாந்தம்-அதாய் மவுனம் ஆகி மகா மவுன_நிலை ஆகி வயங்கா நின்ற
அந்தம்_இல் தொம்பதமாய்த் தற்பதமாய் ஒன்றும் அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே.

#8
நின்மயமாய் என்மயமாய் ஒன்றும் காட்டா நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம்
தன்மயமாய்த் தற்பரமாய் விமலம் ஆகித் தடத்தமாய்ச் சொரூபமாய்ச் சகசம் ஆகிச்
சின்மயமாய்ச் சிற்பரமாய் அசலம் ஆகிச் சிற்சொலிதமாய் அகண்ட சிவமாய் எங்கும்
மன்மயமாய் வாசகாதீதம் ஆகி மனாதீதமாய் அமர்ந்த மவுனத் தேவே

#9
அளவு_இறந்த நெடும் காலம் சித்தர் யோகர் அறிஞர் மலர் அயன் முதலோர் அனந்த வேதம்
களவு_இறந்தும் கரணாதி இறந்தும் செய்யும் கடும் தவத்தும் காண்ப அரிதாம் கடவுள் ஆகி
உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகிப்
பிளவு இறந்து பிண்டாண்ட முழுதும் தானாய்ப் பிறங்குகின்ற பெரும் கருணைப் பெரிய தேவே

#10
வாய் ஆகி வாய் இறந்த மவுனம் ஆகி மதம் ஆகி மதம் கடந்த வாய்மை ஆகிக்
காய் ஆகிப் பழம் ஆகித் தருவாய் மற்றைக் கருவி கரணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற
தாய் ஆகித் தந்தையாய்ப் பிள்ளை ஆகித் தான் ஆகி நான் ஆகிச் சகலம் ஆகி
ஓயாத சத்தி எலாம் உடையது ஆகி ஒன்று ஆகிப் பல ஆகி ஓங்கும் தேவே

#11
அண்டங்கள் பல ஆகி அவற்றின் மேலும் அளவு ஆகி அளவாத அதீதம் ஆகிப்
பிண்டங்கள் அனந்த வகை ஆகிப் பிண்டம் பிறங்குகின்ற பொருள் ஆகிப் பேதம் தோற்றும்
பண்டங்கள் பல ஆகி இவற்றைக் காக்கும் பதி ஆகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம்
கொண்டு எங்கும் நிழல் பரப்பித் தழைந்து ஞானக் கொழும் கடவுள் தரு ஆகிக் குலவும் தேவே

#12
பொன் ஆகி மணி ஆகிப் போகம் ஆகிப் புறம் ஆகி அகம் ஆகிப் புனிதம் ஆகி
மன் ஆகி மலை ஆகிக் கடலும் ஆகி மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி
முன் ஆகிப் பின் ஆகி நடுவும் ஆகி முழுது ஆகி நாதமுற முழங்கி எங்கும்
மின் ஆகிப் பரவி இன்ப_வெள்ளம் தேக்க வியன் கருணை பொழி முகிலாய் விளங்கும் தேவே

#13
அரிது ஆகி அரியதினும் அரியது ஆகி அநாதியாய் ஆதியாய் அருள்_அது ஆகிப்
பெரிது ஆகிப் பெரியதினும் பெரியது ஆகிப் பேதமாய் அபேதமாய்ப் பிறங்காநின்ற
கரிது ஆகி வெளிது ஆகிக் கலைகள் ஆகிக் கலை கடந்த பொருள் ஆகிக் கரணாதீதத்
தெரிது ஆன வெளி நடுவில் அருளாம் வண்மைச் செழும் கிரணச் சுடர் ஆகித் திகழும் தேவே

#14
உரு ஆகி உருவினில் உள் உருவம் ஆகி உருவத்தில் உரு ஆகி உருவுள் ஒன்றாய்
அரு ஆகி அருவினில் உள் அருவம் ஆகி அருவத்தில் அரு ஆகி அருவுள் ஒன்றாய்க்
குரு ஆகிச் சத்துவ சிற்குணத்தது ஆகிக் குணரகிதப் பொருள் ஆகிக் குலவாநின்ற
மரு ஆகி மலர் ஆகி வல்லி ஆகி மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்கும் தேவே

#15
சகலமாய்க் கேவலமாய்ச் சுத்தம் ஆகிச் சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய்
அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை ஆகி அவை அனைத்தும் அணுகாத அசலம் ஆகி
இக உறாத் துணை ஆகித் தனியது ஆகி எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும்
உகல் இலாத் தண் அருள் கொண்டு உயிரை எல்லாம் ஊட்டி வளர்த்திடும் கருணை ஓவாத் தேவே

#16
வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த வாசக வாச்சியம் கடந்த மவுனம் ஆகித்
தேசு அகமாய் இருள் அகமாய் இரண்டும் காட்டாச் சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த
பாசம் உறாப் பதி ஆகிப் பசுவும் ஆகிப் பாச நிலை ஆகி ஒன்றும் பகராது ஆகி
நாசம் இலா வெளி ஆகி ஒளி-தான் ஆகி நாதாந்த முடிவில் நடம் நவிற்றும் தேவே

#17
சகம் ஆகிச் சீவனாய் ஈசன் ஆகிச் சதுமுகனாய்த் திருமாலாய் அரன்-தான் ஆகி
மகமாயை முதலாய்க் கூடத்தன் ஆகி வான் பிரமம் ஆகி அல்லா வழக்கும் ஆகி
இகம் ஆகிப் பதம் ஆகிச் சமய கோடி எத்தனையும் ஆகி அவை எட்டா வான் கற்
பகம் ஆகிப் பரம் ஆகிப் பரமம் ஆகிப் பராபரமாய்ப் பரம்பரமாய்ப் பதியும் தேவே

#18
விதி ஆகி அரி ஆகிக் கிரீசன் ஆகி விளங்கும் மகேச்சுரன் ஆகி விமலம் ஆன
நிதி ஆகும் சதாசிவனாய் விந்து ஆகி நிகழ் நாதமாய்ப் பரையாய் நிமலானந்தப்
பதி ஆகும் பரசிவமாய்ப் பரமாய் மேலாய்ப் பக்கம் இரண்டாய் இரண்டும் பகராது ஆகிக்
கதி ஆகி அளவு_இறந்த கதிகள் எல்லாம் கடந்துநின்று நிறைந்த பெரும் கருணைத் தேவே

#19
மான் ஆகி மோகினியாய் விந்தும் ஆகி மற்றவையால் காணாத வானம் ஆகி
நான் ஆகி நான்_அல்லன் ஆகி நானே_நான் ஆகும் பதம் ஆகி நான்-தான் கண்ட
தான் ஆகித் தான்_அல்லன் ஆகித் தானே தான் ஆகும் பதம் ஆகிச் சகச ஞான
வான் ஆகி வான் நடுவில் வயங்குகின்ற மவுன_நிலை ஆகி எங்கும் வளரும் தேவே

#20
மந்திரமாய்ப் பதம் ஆகி வன்னம் ஆகி வளர் கலையாய்த் தத்துவமாய்ப் புவனம் ஆகிச்
சந்திரனாய் இந்திரனாய் இரவி ஆகித் தானவராய் வானவராய்த் தயங்காநின்ற
தந்திரமாய் இவை ஒன்றும் அல்ல ஆகித் தான் ஆகித் தனது ஆகித் தான் நான் காட்டா
அந்தரமாய் அப்பாலாய் அதற்கு அப்பாலாய் அப்பாலுக்கு அப்பாலாய் அமர்ந்த தேவே

#21
மலை மேலும் கடல் மேலும் மலரின் மேலும் வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே
நிலை மேலும் நெறி மேலும் நிறுத்துகின்ற நெடும் தவத்தோர் நிறை மேலும் நிகழ்த்தும் வேதக்
கலை மேலும் எம்_போல்வார் உளத்தின் மேலும் கண் மேலும் தோள் மேலும் கருத்தின் மேலும்
தலை மேலும் உயிர் மேலும் உணர்வின் மேலும் தகும் அன்பின் மேலும் வளர் தாள் மெய்த் தேவே

#22
பொன்_குன்றே அகம் புறமும் பொலிந்து நின்ற பூரணமே ஆரணத்துள் பொருளே என்றும்
கற்கின்றோர்க்கு இனிய சுவைக் கரும்பே தான கற்பகமே கற்பகத் தீம் கனியே வாய்மைச்
சொல் குன்றா நாவகத்துள் மாறா இன்பம் தோற்றுகின்ற திரு_அருள் சீர்ச் சோதியே விண்
நிற்கின்ற சுடரே அச் சுடருள் ஓங்கும் நீள் ஒளியே அ ஒளிக்குள் நிறைந்த தேவே

#23
தேசு விரித்து இருள் அகற்றி என்றும் ஓங்கித் திகழ்கின்ற செழும் கதிரே செறிந்த வாழ்க்கை
மாசு விரித்திடும் மனத்தில் பயிலாத் தெய்வ மணி_விளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
காசு விரித்திடும் ஒளி போல் கலந்துநின்ற காரணமே சாந்தம் எனக் கருதாநின்ற
தூசு விரித்து உடுக்கின்றோர்-தம்மை நீங்காச் சுக மயமே அருள் கருணை துலங்கும் தேவே

#24
கோவே எண்_குணக் குன்றே குன்றா ஞானக் கொழும் தேனே செழும் பாகே குளிர்ந்த மோனக்
காவே மெய் அறிவு இன்ப மயமே என்றன் கண்ணே முக்கண் கொண்ட கரும்பே வானத்
தேவே அத் தேவுக்கும் தெளிய ஒண்ணாத் தெய்வமே வாடாமல் திகழ் சிற்போதப்
பூவே அப் பூவில் உறு மணமே எங்கும் பூரணமாய் நிறைந்து அருளும் புனிதத் தேவே

#25
வானே அ வான் உலவும் காற்றே காற்றின் வரு நெருப்பே நெருப்பு உறு நீர் வடிவே நீரில்
தான் ஏயும் புவியே அப் புவியில் தங்கும் தாபரமே சங்கமமே சாற்றுகின்ற
ஊனே நல் உயிரே உள் ஒளியே உள்ளத்து உணர்வே அ உணர்வு கலந்து ஊறுகின்ற
தேனே முக்கனியே செங்கரும்பே பாகின் தீம் சுவையே சுவை அனைத்தும் திரண்ட தேவே

#26
விண்ணே விண் உருவே விண் முதலே விண்ணுள் வெளியே அ வெளி விளங்கு வெளியே என்றன்
கண்ணே கண்மணியே கண் ஒளியே கண்ணுள் கலந்துநின்ற கதிரே அக் கதிரின் வித்தே
தண்ணே தண் மதியே அ மதியில் பூத்த தண் அமுதே தண் அமுத சாரமே சொல்
பண்ணே பண் இசையே பண் மயமே பண்ணின் பயனே மெய்த் தவர் வாழ்த்திப் பரவும் தேவே

#27
மாண் நேயத்தவர் உளத்தே மலர்ந்த செந்தாமரை மலரின் வயங்குகின்ற மணியே ஞானப்
பூணே மெய்ப்பொருளே அற்புதமே மோனப் புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே
ஆணே பெண் உருவமே அலியே ஒன்றும் அல்லாத பேர்_ஒளியே அனைத்தும் தாங்கும்
தூணே சிற்சுகமே அச் சுகம் மேல் பொங்கும் சொரூபானந்தக் கடலே சோதித் தேவே

#28
பூதமே அவை தோன்றிப் புகுந்து ஒடுங்கும் புகலிடமே இடம் புரிந்த பொருளே போற்றும்
வேதமே வேதத்தின் விளைவே வேத வியன் முடிவே அ முடிவின் விளங்கும் கோவே
நாதமே நாதாந்த நடமே அந்த நடத்தினை உள் நடத்துகின்ற நலமே ஞான
போதமே போதம் எலாம் கடந்துநின்ற பூரணமே யோகியருள் பொலிந்த தேவே

#29
ஞாலமே ஞாலம் எலாம் விளங்கவைத்த நாயகமே கற்பம் முதல் நவிலாநின்ற
காலமே காலம் எலாம் கடந்த ஞானக் கதியே மெய்க் கதி அளிக்கும் கடவுளே சிற்
கோலமே குணமே உள் குறியே கோலம் குணம் குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர்
சீலமே மால் அறியா மனத்தில் கண்ட செம்பொருளே உம்பர் பதம் செழிக்கும் தேவே

#30
தத்துவமே தத்துவாதீதமே சிற்சயம்புவே எங்கும் நிறை சாட்சியே மெய்ச்
சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம் தந்து அருளும் பெரு வாழ்வாம் சாமியே எம்
சித்த நிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும் தெவிட்டாத தெள் அமுதே தேனே என்றும்
சுத்த நெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த சுகப் பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே

#31
யோகமே யோகத்தின் பயனே யோகத்து ஒரு முதலே யோகத்தின் ஓங்குந் தூய
போகமே போகத்தின் பொலிவே போகம் புரிந்து அருளும் புண்ணியமே புனித ஞான
யாகமே யாகத்தின் விளைவே யாகத்து இறையே அ இறை புரியும் இன்பே அன்பர்
மோகமே மோகம் எலாம் அழித்து வீறு மோனமே மோனத்தின் முளைத்த தேவே

#32
காட்சியே காண்பதுவே ஞேயமே உள் கண்_உடையார் கண் நிறைந்த களிப்பே ஓங்கும்
மாட்சியே உண்மை அறிவு இன்பம் என்ன வயங்குகின்ற வாழ்வே மா மவுனக் காணி
ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த அறிவே மெய் அன்பே தெள் அமுதே நல்ல
சூட்சியே சூட்சி எலாம் கடந்துநின்ற துரியமே துரிய முடிச் சோதித் தேவே

#33
மறை முடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான வாரிதியே அன்பர்கள்-தம் மனத்தே நின்ற
குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோனக் கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளைப்
பிறை முடிக்கும் பெருமானே துளவ மாலைப் பெம்மானே செங்கமலப் பிரானே இந்த
இறை முடிக்கும் மூவர்கட்கும் மேலாய் நின்ற இறையே இ உருவும் இன்றி இருந்த தேவே

#34
கோது அகன்ற யோகர் மன_குகையில் வாழும் குருவே சண் முகம் கொண்ட கோவே வஞ்ச
வாது அகன்ற ஞானியர்-தம் மதியில் ஊறும் வான் அமுதே ஆனந்த_மழையே மாயை
வேது அகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய் இன்ப விருந்தே நெஞ்சில்
தீது அகன்ற மெய் அடியர்-தமக்கு வாய்த்த செல்வமே எல்லை_இலாச் சீர்மைத் தேவே

#35
அருள் அருவி வழிந்துவழிந்து ஒழுக ஓங்கும் ஆனந்தத் தனி மலையே அமல வேதப்
பொருள் அளவு நிறைந்து அவற்றின் மேலும் ஓங்கிப் பொலிகின்ற பரம்பொருளே புரணம் ஆகி
இருள் அறு சிற்பிரகாச மயமாம் சுத்த ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
தெருள் அளவும் உளம் முழுதும் கலந்துகொண்டு தித்திக்கும் செழும் தேனே தேவ தேவே

#36
அளவை எலாம் கடந்து மனம் கடந்து மற்றை அறிவை எலாம் கடந்துகடந்து அமல யோகர்
உளவை எலாம் கடந்து பதம் கடந்து மேலை ஒன்று கடந்து இரண்டு கடந்து உணரச் சூழ்ந்த
களவை எலாம் கடந்து அண்ட பிண்டம் எல்லாம் கடந்து நிறைவான சுகக் கடலே அன்பர்
வளவை எலாம் இருள் அகற்றும் ஒளியே மோன வாழ்வே என் உயிர்க்குயிராய் வதியும் தேவே

#37
வன்பு கலந்து அறியாத மனத்தோர்-தங்கள் மனம் கலந்து மதி கலந்து வயங்காநின்ற
என்பு கலந்து ஊன் கலந்து புலன்களோடும் இந்திரியம்-அவை கலந்து உள் இயங்குகின்ற
அன்பு கலந்து அறிவு கலந்து உயிர் ஐம்பூதம் ஆன்மாவும் கலந்துகலந்து அண்ணித்து ஊறி
இன்பு கலந்து அருள் கலந்து துளும்பிப் பொங்கி எழும் கருணைப் பெருக்கு ஆறே இன்பத் தேவே

#38
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீசத் தடம் பொழில் பூ மணம் வீசத் தென்றல் வீச
எண் அமுதப் பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீசத் தண் பனி_நீர் எடுத்து வீசப்
பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்டப் பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓடக்
கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொளத் தரும் கருணைக் கடவுள் தேவே

#39
சுழியாத அருள் கருணைப் பெருக்கே என்றும் தூண்டாத மணி_விளக்கின் சோதியே வான்
ஒழியாது கதிர் பரப்பும் சுடரே அன்பர்க்கு ஓவாத இன்பு அருளும் ஒன்றே விண்ணோர்
விழியாலும் மொழியாலும் மனத்தினாலும் விழைதரு மெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த
வழியாலும் கண்டுகொளற்கு அரிதாய்ச் சுத்த மவுன வெளியூடு இருந்து வயங்கும் தேவே

#40
சொல் ஒழியப் பொருள் ஒழியக் கரணம் எல்லாம் சோர்ந்து ஒழிய உணர்வு ஒழியத் துளங்காநின்ற
அல் ஒழியப் பகல் ஒழிய நடுவே நின்ற ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
நெல் ஒழியப் பதர் கொள்வார் போல இன்ப நிறைவு ஒழியக் குறை கொள் மத நெறியோர் நெஞ்சக்
கல் ஒழிய மெய் அடியர் இதயம் எல்லாம் கலந்துகலந்து இனிக்கின்ற கருணைத் தேவே

#41
அலை கடலும் புவி வரையும் அனல் கால் நீரும் அந்தரமும் மற்றை அகிலாண்டம் யாவும்
நிலைகுலையா வண்ணம் அருள் வெளியினூடு நிரைநிரையா நிறுத்தி உயிர் நிகழும் வண்ணம்
தலை குலையாத் தத்துவம் செய் திரோதை என்னும் தனி ஆணை நடத்தி அருள் தலத்தில் என்றும்
மலைவு அற வீற்றிருந்து அருளும் அரசே முத்தி வழி_துணையே விழித் துணையுள் மணியாம் தேவே

#42
வரம் பழுத்த நெறியே மெய் நெறியில் இன்ப வளம் பழுத்த பெரு வாழ்வே வானோர்-தங்கள்
சிரம் பழுத்த பதப் பொருளே அறிவானந்தச் சிவம் பழுத்த அநுபவமே சிதாகாசத்தில்
பரம் பழுத்த நடத்து அரசே கருணை என்னும் பழம் பழுத்த வான் தருவே பரம ஞானத்
திரம் பழுத்த யோகியர்-தம் யோகத்துள்ளே தினம் பழுத்துக் கனிந்த அருள் செல்வத் தேவே

#43
அண்டம் எலாம் கண் ஆகக் கொளினும் காண்டற்கு அணுத்துணையும் கூடா என்று அனந்த வேதம்
விண்டு அலறி ஓலமிட்டுப் புலம்ப மோன வெளிக்குள் வெளியாய் நிறைந்து விளங்கும் ஒன்றே
கண்ட வடிவாய் அகண்ட மயமாய் எங்கும் கலந்துநின்ற பெரும் கருணைக் கடவுளே எம்
சண்ட வினைத் தொடக்கு அறச் சின்மயத்தைக் காட்டும் சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே

#44
பேதம் உறா மெய்ப் போத வடிவம் ஆகிப் பெரும் கருணை நிறம் பழுத்துச் சாந்தம் பொங்கிச்
சீதம் மிகுந்து அருள் கனிந்துகனிந்து மாறாச் சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா
ஆதரவோடு இயல் மவுனச் சுவை மேன்மேல் கொண்டு ஆனந்த ரசம் ஒழுக்கி அன்பால் என்றும்
சேதம் உறாது அறிஞர் உளம் தித்தித்து ஓங்கும் செழும் புனிதக் கொழும் கனியே தேவ தேவே

#45
உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி ஓங்க உளம் கனிய மெய் அன்பர் உள்ளத்தூடே
கடல் அனைய பேர்_இன்பம் துளும்ப நாளும் கருணை மலர்த் தேன் பொழியும் கடவுள் காவே
விடல் அரிய எம்_போல்வார் இதயம்-தோறும் வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே வேதம்
தொடல் அலரிய வெளி முழுதும் பரவி ஞானச் சோதி விரித்து ஒளிர்கின்ற சோதித் தேவே

#46
கிரியை நெறி அகற்றி மறை முடிவில் நின்று கேளாமல் கேட்கின்ற கேள்வியே சொற்கு
அரிய அறை விடுத்து நவ நிலைக்கு மேலே காணாமல் காண்கின்ற காட்சியே உள்
அரிய நிலை ஒன்று இரண்டின் நடுவே சற்றும் அறியாமல் அறிகின்ற அறிவே என்றும்
உரிய சதா நிலை நின்ற உணர்ச்சி மேலோர் உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே

#47
சொல் போதற்கு அரும் பெரிய மறைகள் நாடித் தொடர்ந்துதொடர்ந்து அயர்ந்து இளைத்துத் துளங்கி ஏங்கிப்
பின் போத விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெரும் கருணைப் பெரு வாழ்வே பெயராது என்றும்
தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித் ததும்பி வழிந்து ஓங்கி எல்லாம் தானே ஆகிச்
சிற்போதத்து அகம் புறமும் கோத்து நின்ற சிவானந்தப் பெருக்கே மெய்ச் செல்வத் தேவே

#48
பொங்கு பல சமயம் எனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்கு கரை காணாத கடலே எங்கும் கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்க நிழல் பரப்பி மயல் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூம் தடமே ஞானச்
செங்குமுதம் மலர வரும் மதியே எல்லாம் செய்ய வல்ல கடவுளே தேவ தேவே

#49
வான் காணா மறை காணா மலரோன் காணான் மால் காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
நான் காணா இடத்து அதனைக் காண்பேம் என்று நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
மான் காணா உள கமலம் அலர்த்தாநின்ற வான் சுடரே ஆனந்த மயமே ஈன்ற
ஆன் காணா இளம் கன்றாய் அலமந்து ஏங்கும் அன்பர்-தமைக் கலந்து கொளும் அமலத் தேவே

#50
மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி மீது ஏறித் தெளிந்து இச்சை விடுதல் ஏறி
அஞ்ஞானம் அற்றபடி ஏறி உண்மை அறிந்தபடி நிலை ஏறி அது நான் என்னும்
கைஞ்ஞானம் கழன்று ஏறி மற்ற எல்லாம் கடந்து ஏறி மவுன இயல் கதியில் ஏறி
எஞ்ஞானம் அறத் தெளிந்தோர் கண்டும் காணேம் என்கின்ற அநுபவமே இன்பத் தேவே

#51
பற்று அறியா முத்தர்-தமை எல்லாம் வாழைப்பழம் போல விழுங்குகின்ற பரமே மாசு
பெற்று அறியாப் பெரும் பதமே பதத்தைக் காட்டும் பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
உற்று அறியாது இன்னும்இன்னும் மறைகள் எல்லாம் ஓலமிட்டுத் தேட நின்ற ஒன்றே ஒன்றும்
கற்று அறியாப் பேதையேன்-தனக்கும் இன்பம் கனிந்து அளித்த அருள்_கடலே கருணைத் தேவே

#52
மெய் உணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த வெளி ஆக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்
பொய் உணர்ந்த எமை_போல்வார்-தமக்கும் இன்பம் புரிந்து அருளும் கருணை_வெள்ளப் பொற்பே அன்பர்
கை உறைந்து வளர் நெல்லிக்கனியே உள்ளம் கரைந்துகரைந்து உருக அவர் கருத்தினூடே
உய்யும் நெறி ஒளி காட்டி வெளியும் உள்ளும் ஓங்குகின்ற சுயம் சுடரே உண்மைத் தேவே

#53
ஒலி வடிவு நிறம் சுவைகள் நாற்றம் ஊற்றம் உறு தொழில்கள் பயன் பல வேறு உளவாய் எங்கும்
மலி வகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும் மாட்டாதாய் எல்லாமும் வல்லது ஆகிச்
சலி வகை இல்லாத முதல் பொருளே எல்லாம் தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண் பெண்
அலி வகை அல்லாத வகை கடந்துநின்ற அருள் சிவமே சிவபோகத்து அமைந்த தேவே

#54
பேராய அண்டங்கள் பலவும் பிண்ட பேதங்கள் பற்பலவும் பிண்டாண்டத்தின்
வாராய பல பொருளும் கடலும் மண்ணும் மலை உளவும் கடல் உளவும் மணலும் வானும்
ஊராத வான் மீனும் அணுவும் மற்றை உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை
ஆராலும் அளப்ப அரிது என்று அனந்த வேதம் அறைந்து இளைக்க அதி தூரம் ஆகும் தேவே

#55
கற்பங்கள் பல கோடி செல்லத் தீய கனலின் நடு ஊசியின் மேல் காலை ஊன்றிப்
பொற்பு அற மெய் உணவு இன்றி உறக்கம் இன்றிப் புலர்ந்து எலும்பு புலப்பட ஐம்பொறியை ஓம்பி
நிற்பவருக்கு ஒளித்து மறைக்கு ஒளித்து யோக நீள் முனிவர்க்கு ஒளித்து அமரர்க்கு ஒளித்து மேலாம்
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத் திருவாளர் உள் கலந்த தேவ தேவே

#56
மட்டு அகன்ற நெடும் காலம் மனத்தால் வாக்கால் மதித்திடினும் புலம்பிடினும் வாராது என்றே
கட்டு அகன்ற மெய் அறிவோர் கரணம் நீக்கிக் கலை அகற்றிக் கருவி எலாம் கழற்றி மாயை
விட்டு அகன்று கரும மல போதம் யாவும் விடுத்து ஒழித்துச் சகச மல வீக்கம் நீக்கிச்
சுட்டு அகன்று நிற்க அவர்-தம்மை முற்றும் சூழ்ந்து கலந்திடும் சிவமே துரியத் தேவே

#57
உரு நான்கும் அரு நான்கும் நடுவே நின்ற உரு_அருவம் ஒன்றும் இவை உடன் மேல் உற்ற
ஒரு நான்கும் இவை கடந்த ஒன்றுமாய் அ ஒன்றின் நடுவாய் நடுவுள் ஒன்றாய் நின்றே
இரு நான்கும் அமைந்தவரை நான்கினோடும் எண்_நான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்
கரு நான்கும் பொருள் நான்கும் காட்டும் முக்கண் கடவுளே கடவுளர்கள் கருதும் தேவே

#58
பாங்கு உள நாம் தெரிதும் எனத் துணிந்து கோடிப் பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும்
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும்
தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே

#59
எழுத்து அறிந்து தமை உணர்ந்த யோகர் உள்ளத்து இயல் அறிவாம் தருவினில் அன்பு எனும் ஓர் உச்சி
பழுத்து அளிந்து மவுன நறும் சுவை மேல் பொங்கிப் பதம் பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக்
கழுத்து அரிந்து கரும மலத் தலையை வீசும் கடும் தொழிலோர்-தமக்கே நல் கருணை காட்டி
விழுத் துணையாய் அமர்ந்து அருளும் பொருளே மோன வெளியில் நிறை ஆனந்த விளைவாம் தேவே

#60
உருத்திரர் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர் உறு கருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடிக்
கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்களை வினவ மற்று அவையும் காணேம் என்று
வருத்தமுற்று ஆங்கு அவரோடு புலம்ப நின்ற வஞ்ச வெளியே இன்ப மயமாம் தேவே

#61
பாயிரம் மா மறை அனந்தம்அனந்தம் இன்னும் பார்த்து அளந்து காண்டும் எனப் பல் கால் மேவி
ஆயிரமாயிரம் முகங்களாலும் பல் நாள் அளந்தளந்து ஓர் அணுத்துணையும் அளவு காணா
தே இரங்கி அழுது சிவசிவ என்று ஏங்கித் திரும்ப அருள் பர வெளி வாழ் சிவமே ஈன்ற
தாய் இரங்கி வளர்ப்பது போல் எம்_போல்வாரைத் தண் அருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே

#62
அந்தரம் இங்கு அறிவோம் மற்று அதனில் அண்டம் அடுக்கடுக்காய் அமைந்த உளவு அறிவோம் ஆங்கே
உந்துறும் பல் பிண்ட நிலை அறிவோம் சீவன் உற்ற நிலை அறிவோம் மற்று அனைத்தும் நாட்டும்
எந்தை நினது அருள் விளையாட்டு அந்தோஅந்தோ எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று
முந்து அனந்த மறைகள் எலாம் வழுத்த நின்ற முழு_முதலே அன்பர் குறை முடிக்கும் தேவே

#63
தோன்று பர சாக்கிரமும் கண்டோம் அந்தச் சொப்பனமும் கண்டோம் மேல் சுழுத்தி கண்டோம்
ஆன்ற பர துரிய நிலை கண்டோம் அப்பால் அது கண்டோம் அப்பால் ஆம் அதுவும் கண்டோம்
ஏன்ற உபசாந்த நிலை கண்டோம் அப்பால் இருந்த நினைக் காண்கிலோம் என்னே என்று
சான்ற உபநிடங்கள் எலாம் வழுத்த நின்ற தன்மயமே சின்மயமே சகசத். தேவே

#64
பரிக்கிரக நிலை முழுதும் தொடர்ந்தோம் மேலைப் பரவிந்து நிலை அனைத்தும் பார்த்தோம் பாசம்
எரிக்கும் இயல் பரநாத நிலை-கண் மெல்ல எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம்
தெரிக்க அரிய வெளி மூன்றும் தெரிந்தோம் எங்கும் சிவமே நின் சின்மயம் ஓர்சிறிதும் தேறோம்
தரிக்க அரிது என்று ஆகமங்கள் எல்லாம் போற்றத் தனி நின்ற பரம்பொருளே சாந்தத் தேவே

#65
மணக்கும் மலர்த் தேன் உண்ட வண்டே போல வளர் பரமானந்தம் உண்டு மகிழ்ந்தோர் எல்லாம்
இணக்கமுறக் கலந்துகலந்து அதீதம் ஆதற்கு இயற்கை நிலை யாது அது-தான் எம்மால் கூறும்
கணக்கு_வழக்கு அனைத்தினையும் கடந்தது அந்தோ காண்ப அரிது இங்கு எவர்க்கும் எனக் கலைகள் எல்லாம்
பிணக்கு அற நின்று ஓலமிடத் தனித்து நின்ற பெரும் பதமே மதாதீதப் பெரிய தேவே

#66
பொது என்றும் பொதுவில் நடம் புரியாநின்ற பூரண சிற்சிவம் என்றும் போதானந்த
மது என்றும் பிரமம் என்றும் பரமம் என்றும் வகுக்கின்றோர் வகுத்திடுக அது-தான் என்றும்
இது என்றும் சுட்டவொணாது அதனால் சும்மா இருப்பதுவே துணிவு எனக் கொண்டு இருக்கின்றோரை
விது வென்ற தண் அளியால் கலந்துகொண்டு விளங்குகின்ற பெருவெளியே விமலத் தேவே

#67
அரு_மறை ஆகமங்கள் முதல் நடு ஈறு எல்லாம் அமைந்துஅமைந்து மற்று அவைக்கும் அப்பால் ஆகிக்
கரு மறைந்த உயிர்கள்-தொறும் கலந்து மேவிக் கலவாமல் பல் நெறியும் கடந்து ஞானத்
திரு_மணி மன்று அகத்து இன்ப உருவாய் என்றும் திகழ் கருணை நடம் புரியும் சிவமே மோனப்
பெரு மலையே பரம இன்ப நிலையே முக்கண் பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே

#68
என் உயிர் நீ என் உயிர்க்கு ஓர் உயிரும் நீ என் இன் உயிர்க்குத் துணைவன் நீ என்னை ஈன்ற
அன்னை நீ என்னுடைய அப்பன் நீ என் அரும் பொருள் நீ என் இதயத்து அன்பு நீ என்
நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனைக் கலந்த நட்பு நீ என்
றன்னுடைய வாழ்வு நீ என்னைக் காக்கும் தலைவன் நீ கண் மூன்று தழைத்த தேவே

#69
தான் ஆகித் தான் அல்லது ஒன்றும் இல்லாத் தன்மையனாய் எவ்வெவைக்கும் தலைவன் ஆகி
வான் ஆகி வளி அனலாய் நீரும் ஆகி மலர் தலைய உலகு ஆகி மற்றும் ஆகித்
தேன் ஆகித் தேனின் நறும் சுவையது ஆகித் தீம் சுவையின் பயன் ஆகித் தேடுகின்ற
நான் ஆகி என் இறையாய் நின்றோய் நின்னை நாய்_அடியேன் எவ்வாறு நவிற்றும் ஆறே

#70
ஆன் ஏறும் பெருமானே அரசே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அமுதே கொன்றைத்
தேன் ஏறு மலர்ச் சடை எம் சிவனே தில்லைச் செழும் சுடரே ஆனந்தத் தெய்வமே என்
ஊன் ஏறும் உயிர்க்குள் நிறை ஒளியே எல்லாம் உடையானே நின் அடிச் சீர் உன்னி அன்பர்
வான் ஏறுகின்றார் நான் ஒருவன் பாவி மண் ஏறி மயக்கு ஏறி வருந்துற்றேனே

#71
செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற செழும் கமலக் கரத்தவனே சிவனே சூழ்ந்து
மஞ்சு அடையும் மதில் தில்லை மணியே ஒற்றி வளர் மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை
அஞ்சு அடைய வஞ்சியர் மால் அடைய வஞ்சம் அடைய நெடும் துயர் அடைய அகன்ற பாவி
நெஞ்சு அடைய நினைதியோ நினைதியேல் மெய்ந்நெறி_உடையார் நெஞ்சு அமர்ந்த நீதன் அன்றே

#72
அன்னையினும் பெரிது இனிய கருணை ஊட்டும் ஆர்_அமுதே என் உறவே அரசே இந்த
மன் உலகில் அடியேனை என்னே துன்ப_வலையில் அகப்பட இயற்றி மறைந்தாய் அந்தோ
பொன்னை மதித்திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து போனகமும் பொய் உறவும் பொருந்தல் ஆற்றேன்
என்னை உளம்கொள்ளுதியோ கொள்கிலாயோ என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேனே

#73
படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய் நீயே படிப்பித்தாய் அன்றியும் அப் படிப்பில் இச்சை
ஒடித்தேன் நான் ஒடித்தேனோ ஒடிப்பித்தாய் பின் உன் அடியே துணை என நான் உறுதியாகப்
பிடித்தேன் மற்று அதுவும் நீ பிடிப்பித்தாய் இப் பேதையேன் நின் அருளைப் பெற்றோர் போல
நடித்தேன் எம் பெருமான் ஈது ஒன்றும் நானே நடித்தேனோ அல்லது நீ நடிப்பித்தாயோ

#74
மத்து ஏறி அலை தயிர் போல் வஞ்ச வாழ்க்கை மயல் ஏறி விருப்பு ஏறி மதத்தினோடு
பித்து ஏறி உழல்கின்ற மனத்தால் அந்தோ பேய் ஏறி நலிகின்ற பேதை ஆனேன்
வித்து ஏறி விளைவு ஏறி மகிழ்கின்றோர் போல் மேல் ஏறி அன்பர் எலாம் விளங்குகின்றார்
ஒத்து ஏறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள் உடையானே இது தகுமோ உணர்கிலேனே

#75
மதி அணிந்த முடிக் கனியே மணியே எல்லாம்_வல்ல அருள் குருவே நின் மலர்_தாள் வாழ்த்திக்
கதி அணிந்தார் அன்பர் எலாம் அடியேன் ஒன்றும் கண்டு அறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ
பொதி அணிந்து திரிந்து உழலும் ஏறு போலப் பொய் உலகில் பொய் சுமந்து புலம்பாநின்றேன்
துதி அணிந்த நின் அருள் என்றனக்கும் உண்டோ இன்று எனில் இப் பாவியேன் சொல்வது என்னே

#76
என் அரசே என் உயிரே என்னை ஈன்ற என் தாயே என் குருவே எளியேன் இங்கே
தன் அரசே செலுத்தி எங்கும் உழலாநின்ற சஞ்சல நெஞ்சகத்தாலே தயங்கி அந்தோ
மின் அரசே பெண் அமுதே என்று மாதர் வெய்ய சிறுநீர்க் குழி-கண் விழவே எண்ணிக்
கொன் நரை சேர் கிழக் குருடன் கோல் போல் வீணே குப்புறுகின்றேன் மயலில் கொடியனேனே

#77
அல் விலங்கு செழும் சுடராய் அடியார் உள்ளத்து அமர்ந்து அருளும் சிவ குருவே அடியேன் இங்கே
இல் விலங்கு மடந்தை என்றே எந்தாய் அந்த இருப்பு விலங்கினை ஒழித்தும் என்னே பின்னும்
மல் விலங்கு பரத்தையர்-தம் ஆசை என்னும் வல் விலங்கு பூண்டு அந்தோ மயங்கி நின்றேன்
புல்_விலங்கும் இது செய்யா ஓகோ இந்தப் புலை நாயேன் பிழை பொறுக்கில் புதிதே அன்றோ

#78
வன் கொடுமை மலம் நீக்கி அடியார்-தம்மை வாழ்விக்கும் குருவே நின் மலர்_தாள் எண்ண
முன் கொடு சென்றிடும் அடியேன்-தன்னை இந்த மூட மனம் இ உலக முயற்சி நாடிப்
பின் கொடு சென்று அலைத்து இழுக்குது அந்தோ நாயேன் பேய் பிடித்த பித்தனைப் போல் பிதற்றாநின்றேன்
என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய் என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே

#79
உய்குவித்து மெய் அடியார்-தம்மை எல்லாம் உண்மை நிலை பெற அருளும்_உடையாய் இங்கே
மை குவித்த நெடும் கண்ணார் மயக்கில் ஆழ்ந்து வருந்துகின்றேன் அல்லால் உன் மலர்_தாள் எண்ணிக்
கை குவித்துக் கண்களில் நீர் பொழிந்து நான் ஓர் கணமேனும் கருதி நினைக் கலந்தது உண்டோ
செய்குவித்துக் கொள்ளுதியோ கொள்கிலாயோ திருவுளத்தை அறியேன் என் செய்குவேனே

#80
அருள் வெளியில் ஆனந்த வடிவினால் நின்று ஆடுகின்ற பெரு வாழ்வே அரசே இந்த
மருள்_வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ மதி கலங்கி மெய் நிலைக்கு ஓர் வழி காணாதே
இருள் நெறியில் கோல் இழந்த குருட்டு_ஊமன் போல் எண்ணாது எல்லாம் எண்ணி ஏங்கிஏங்கி
உருள் சகடக் கால் போலும் சுழலாநின்றேன் உய்யும் வகை அறியேன் இ ஒதியனேனே

#81
கல் தவளை-தனக்கும் உணவு அளிக்கும் உன்றன் கருணை நிலை-தனை அறியேன் கடையேன் இங்கே
எற்ற வளை எறும்பே போல் திரிந்து நாளும் இளைத்து நினது அருள் காணாது எந்தாய் அந்தோ
பெற்றவளைக் காணாத பிள்ளை போலப் பேதுறுகின்றேன் செய்யும் பிழையை நோக்கி
இற்றவளைக் கேள் விடல் போல் விடுதியேல் யான் என் செய்வேன் எங்கு உறுவேன் என் சொல்வேனே

#82
அடிமைசெயப் புகுந்திடும் எம்_போல்வார் குற்றம் ஆயிரமும் பொறுத்து அருளும் அரசே நாயேன்
கொடுமை செயும் மனத்தாலே வருந்தி அந்தோ குரங்கின் கை மாலை எனக் குலையாநின்றேன்
கடுமை செயப் பிறர் துணிந்தால் அடிமை-தன்னைக் கண்டிருத்தல் அழகு அன்றே கருணைக்கு எந்தாய்
செடிமை உளப் பாதகனேன் என் செய்வேன் நின் திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின்றேனே

#83
கூம்பாத மெய் நெறியோர் உளத்தே என்றும் குறையாத இன்பு அளிக்கும் குருவே ஆசைத்
தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன் தையலார் மையல் எனும் சலதி ஆழ்ந்து
ஓம்பாமல் உவர் நீர் உண்டு உயங்குகின்றேன் உன் அடியர் அக் கரை மேல் உவந்து நின்றே
தீம் பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும் தேக்குகின்றார் இது தகுமோ தேவ தேவே

#84
வெள்ளம் அணி சடைக் கனியே மூவர் ஆகி விரிந்து அருளும் ஒரு தனியே விழலனேனைக்
கள்ள மன_குரங்கு ஆட்டும் ஆட்டம் எல்லாம் கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலையாலே
உள்ளம் மெலிந்து உழல்கின்ற சிறியேன் பின்னர் உய்யும் வகை எவ்வகை ஈது உன்னும்-தோறும்
பொள்ளென மெய் வியர்க்க உளம் பதைக்கச் சோபம் பொங்கி வழிகின்றது நான் பொறுக்கிலேனே

#85
எனை அறியாப் பருவத்தே ஆண்டுகொண்ட என் அரசே என் குருவே இறையே இன்று
மனை அறியாப் பிழை கருதும் மகிழ்நன் போல மதி அறியேன் செய் பிழையை மனத்துள் கொண்டே
தனை அறியா முகத்தவர் போல் இருந்தாய் எந்தாய் தடம் கருணைப் பெரும் கடற்குத் தகுமோ கண்டாய்
அனை அறியாச் சிறு குழவி ஆகி இங்கே அடி நாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ

#86
தீ_வினை நல்_வினை எனும் வன் கயிற்றால் இந்தச் சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன்
ஏவினை நேர் கண் மடவார் மையல் பேயால் இடர் உழந்தும் சலிப்பு இன்றி என்னே இன்னும்
நாவினை என்-பால் வருந்திக் கரண்டுகின்ற நாய்க்கும் நகை தோன்ற நின்று நயக்கின்றேன் நான்
ஆவினை விட்டு எருது கறந்திடுவான் செல்லும் அறிவு_இலிக்கும் அறிவு_இலியேன் ஆன வாறே

#87
எம் பெருமான் நின் விளையாட்டு என் சொல்கேன் நான் ஏதும் அறியாச் சிறியேன் எனை-தான் இங்கே
செம்_புனலால் குழைத்த புலால் சுவர் சூழ் பொத்தைச் சிறு வீட்டில் இருட்டு அறையில் சிறைசெய்து அந்தோ
கம்பமுறப் பசித் தழலுங் கொளுந்த அந்தக் கரணம் முதல் பொறி புலப் பேய் கவர்ந்து சூழ்ந்து
வம்பு இயற்றக் காம் ஆதி அரட்டர் எல்லாம் மடி பிடித்து வருத்த என்றோ வளர்த்தாய் எந்தாய்

#88
அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும் ஆடுகின்ற மா மணியே அரசே நாயேன்
இம்பர் அத்தம் எனும் உலக நடையில் அந்தோ இடர் உழந்தேன் பல் நெறியில் எனை இழுத்தே
பம்பரத்தின் ஆடு இயலைப் படுத்தும் இந்தப் பாவி மனம் எனக்கு வயப்படுவது_இல்லை
கொம்பர் அற்ற இளம் கொடி போல் தளர்ந்தேன் என்னைக் குறிக்கொள்ளக் கருதுதியோ குறித்திடாயோ

#89
கண் உடைய நுதல் கரும்பே மன்றில் ஆடும் காரண_காரியம் கடந்த கடவுளே நின்
தண் உடைய மலர்_அடிக்கு ஓர்சிறிதும் அன்பு சார்ந்தேனோ செம்மரம் போல் தணிந்த நெஞ்சேன்
பெண்ணுடைய மயலாலே சுழல்கின்றேன் என் பேதைமையை என் புகல்வேன் பேயனேனைப்
புண் உடைய புழு விரும்பும் புள் என்கேனோ புலை விழைந்து நிலை வெறுத்தேன் புலையனேனே

#90
பொன்_உடையார் இடம் புகவோ அவர்கட்கு ஏற்கப் பொய் மொழிகள் புகன்றிடவோ பொதி போல் இந்தக்
கொன் உடையா உடல் பருக்கப் பசிக்குச் சோறு கொடுக்கவோ குளிர்க்கு ஆடை கொளவோ வஞ்ச
மின்_இடையார் முடைச் சிறுநீர்க் குழி-கண் அந்தோ வீழ்ந்திடவோ தாழ்ந்து இளைத்து விழிக்கவோ-தான்
என்_உடையாய் என்_உடையாய் என்னை இங்கே எடுத்து வளர்த்தனை அறியேன் என் சொல்வேனே

#91
வரு கணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மல_கூடு என்று அறிஞர் எலாம் வருந்தக் கேட்டும்
அருகு அணைத்துக்கொளப் பெண் பேய் எங்கே மேட்டுக்கு அடைத்திட வெண் சோறு எங்கே ஆடை எங்கே
இரு கணுக்கு வியப்பு எங்கே வசதியான இடம் எங்கே என்று திரிந்து இளைத்தேன் அல்லால்
ஒரு கணத்தும் உனை நினைந்தது உண்டோ என்னை உடையானே எவ்வகை நான் உய்யும் ஆறே

#92
பொன்_மலையோ சிறிது எனப் பேர்_ஆசை பொங்கிப் புவி நடையில் பற்பல கால் போந்துபோந்து
நெல் மலையோ நிதி மலையோ என்று தேடி நிலைகுலைந்தது அன்றி உனை நினைந்து நேடி
மன் மலையோ மா மணியோ மருந்தோ என்று வழுத்தியதே இல்லை இந்த வஞ்ச நெஞ்சம்
கல் மலையோ இரும்போ செம்மரமோ பாறைக் கருங்கல்லோ பராய் முருட்டுக் கட்டையேயோ

#93
தம்மை மறந்து அருள் அமுதம் உண்டு தேக்கும் தகை_உடையார் திரு_கூட்டம் சார்ந்து நாயேன்
வெம்மை எலாம் தவிர்ந்து மனம் குளிரக் கேள்வி விருந்து அருந்தி மெய் அறிவாம் வீட்டில் என்றும்
செம்மை எலாம் தரும் மௌன அணை மேல் கொண்டு செறி இரவு_பகல் ஒன்றும் தெரியா வண்ணம்
இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த இன்ப நிலை அடைவேனோ ஏழையேனே

#94
அடியனேன் பிழை அனைத்தும் பொறுத்து ஆட்கொண்ட அருள்_கடலே மன்று ஓங்கும் அரசே இ நாள்
கொடியனேன் செய் பிழையைத் திருவுள்ளத்தே கொள்ளுதியோ கொண்டு குலம் குறிப்பது உண்டோ
நெடியனே முதல் கடவுள் சமுகத்தோர்-தம் நெடும் பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை
ஒடிய நேர் நின்ற பெரும் கருணை வள்ளல் என மறைகள் ஓதுவது இங்கு உனை-தான் அன்றே

#95
கண் மயக்கம் பேர்_இருட்டுக் கங்குல் போதில் கருத்து அறியாச் சிறுவனை ஓர் கடும் கானத்தே
உள் மயக்கம் கொள விடுத்தே ஒருவன் பின் போம் ஒரு தாய் போல் மாயை இருள் ஓங்கும் போதின்
மண் மயக்கம்பெறும் விடயக் காட்டில் அந்தோ மதி_இலேன் மாழாந்து மயங்க நீ-தான்
வண்மை உற்ற நியதியின் பின் என்னை விட்டே மறைந்தனையே பரமே நின் வண்மை என்னே

#96
நற்றாயும் பிழை குறிக்கக் கண்டோம் இந்த நானிலத்தே மற்றவர் யார் நாடார் வீணே
பற்றாயும் அவர்-தமை நாம் பற்றோம் பற்றில் பற்றாத பற்று_உடையார் பற்றி உள்ளே
உற்று ஆயும் சிவபெருமான் கருணை ஒன்றே உறு பிழைகள் எத்துணையும் பொறுப்பது என்று உன்
பொன்_தாளை விரும்பியது மன்றுள் ஆடும் பொருளே என் பிழை அனைத்தும் பொறுக்க அன்றே

#97
எண்ணிய நம் எண்ணம் எலாம் முடிப்பான் மன்றுள் எம் பெருமான் என்று மகிழ்ந்து இறுமாந்து இங்கே
நண்ணிய மற்றையர்-தம்மை உறாமை பேசி நன்கு மதியாது இருந்த நாயினேனைத்
தண்ணிய நல் அருள்_கடலே மன்றில் இன்பத் தாண்டவம் செய்கின்ற பெருந்தகையே எங்கள்
புண்ணியனே பிழை குறித்து விடுத்தியாயில் பொய்யனேன் எங்கு உற்று என் புரிவேன் அந்தோ

#98
அன்பர் திருவுளம் கோயில் ஆகக் கொண்டே அற்புதச் சிற்சபை ஓங்கும் அரசே இங்கு
வன்பரிடைச் சிறியேனை மயங்கவைத்து மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத்
துன்ப வடிவு உடைப் பிறரில் பிரித்து மேலோர் துரிய வடிவினன் என்று சொன்ன எல்லாம்
இன்ப வடிவு அடைந்து அன்றே எந்தாய் அந்தோ என்னளவு என் சொல்கேன் இ ஏழையேனே

#99
புற்று ஓங்கும் அரவம் எல்லாம் பணியாக் கொண்டு பொன்_மேனி-தனில் அணிந்த பொருளே மாயை
உற்று ஓங்கு வஞ்ச மனக் கள்வனேனை உளம்கொண்டு பணிகொள்வது உனக்கே ஒக்கும்
மற்று ஓங்கும் அவர் எல்லாம் பெருமை வேண்டும் வன்_மனத்தர் எனை வேண்டார் வள்ளலே நான்
கற்று ஓங்கும் அறிவு அறியேன் பலவாச் சொல்லும் கருத்து அறியேன் எனக்கு அருளக் கருதுவாயே

#100
அருள் உடைய பரம்பொருளே மன்றில் ஆடும் ஆனந்தப் பெரு வாழ்வே அன்பு_உளோர்-தம்
தெருள் உடைய உளம் முழுதும் கோயில்கொண்ட சிவமே மெய் அறிவு உருவாம் தெய்வமே இ
மருள் உடைய மனப் பேதை நாயினேன் செய் வன்_பிழையைச் சிறிதேனும் மதித்தியாயில்
இருள் உடைய பவக் கடல் விட்டு ஏறேன் என்னை ஏற்றுவதற்கு எண்ணுக என் இன்பத் தேவே

@6. திருவருண் முறையீடு

#1
துனியால் உளம் தளர்ந்து அந்தோ துரும்பில் சுழலுகின்றேன்
இனியாயினும் இரங்காதோ நின் சித்தம் எந்தாய் இது என்ன
அனியாயமோ என்னளவில் நின்-பால் தண் அருள் இலையோ
சனியாம் என் வல்_வினைப் போதனையோ என்-கொல் சாற்றுவதே

#2
என்னே முறை உண்டு எனில் கேள்வி உண்டு என்பர் என்னளவில்
இன்னே சிறிதும் இலையே நின்-பால் இதற்கு என் செய்குவேன்
மன்னே முக்கண் உடை மா மணியே இடை வைப்பு அரிதாம்
பொன்னே மின் நேர் சடைத் தன் நேர்_இலாப் பரிபூரணனே

#3
தண்டாத சஞ்சலம் கொண்டேன் நிலையை இத் தாரணியில்
கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கை திங்கள்
துண்டு ஆர் மலர்ச் சடை எந்தாய் இரங்கிலை தூய்மை இலா
அண்டார் பிழையும் பொறுப்போய் இது நின் அருட்கு அழகே

#4
பொய்யாம் உலக நடை நின்று சஞ்சலம் பொங்க முக்கண்
ஐயா என் உள்ளம் அழல் ஆர் மெழுகு ஒத்து அழிகின்றதால்
பை ஆர் அரவ மதி_சடையாய் செம்பவள நிறச்
செய்யாய் எனக்கு அருள்செய்யாய் எனில் என்ன செய்குவனே

#5
விடம் மிலை ஏர் மணி_கண்டா நின் சைவ விரதம் செய்யத்
திடம் இலையே உள் செறிவு இலையே என்றன் சித்தத்து நின்
நடம் இலையே உன்றன் நண்பு இலையே உனை நாடுதற்கு ஓர்
இடம் இலையே இதை எண்ணிலையே சற்று இரங்கிலையே

#6
விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை-
கண்_உடையாய் நெற்றிக்கண்_உடையாய் அருள் கண்_உடையாய்
பண்_உடையாய் திசைப் பட்டு_உடையாய் இடப் பாலில் அருள்
பெண்_உடையாய் வந்திப் பிட்டு_உடையாய் என் பெரும் செல்வமே

#7
விடை_உடையாய் மறை மேல்_உடையாய் நதி மேவிய செம்
சடை_உடையாய் கொன்றைத் தார்_உடையாய் கரம் தாங்கு மழுப்
படை_உடையாய் அருள் பண்பு_உடையாய் பெண் பரவையின்-பால்
நடை_உடையாய் அருள் நாடு_உடையாய் பதம் நல்குகவே

#8
கீள்_உடையாய் பிறைக் கீற்று_உடையாய் எம் கிளைத் தலை மேல்
தாள்_உடையாய் செம் சடை_உடையாய் என்றனை_உடையாய்
வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய்
ஆள்_உடையாய் மன்றுள் ஆட்டு_உடையாய் என்னை ஆண்டு அருளே

#9
நான் படும் பாடு சிவனே உலகர் நவிலும் பஞ்சு
தான் படுமோ சொல்லத்தான் படுமோ எண்ணத்தான் படுமோ
கான் படு கண்ணியின் மான் படு மாறு கலங்கி நின்றேன்
ஏன் படுகின்றனை என்று இரங்காய் என்னில் என் செய்வனே

#10
பொய்யோ அடிமை உரைத்தல் எந்தாய் என் உள் போந்து இருந்தாய்
ஐயோ நின் உள்ளத்து அறிந்தது அன்றோ என் அவலம் எல்லாம்
கையோட_வல்லவர் ஓர் பதினாயிரம் கற்பம் நின்று
மெய்யோடு எழுதினும் தான் அடங்காத வியப்பு உடைத்தே

#11
தேன் சொல்லும் வாய் உமை_பாகா நின்றன்னைத் தெரிந்து அடுத்தோர்
தான் சொல்லும் குற்றம் குணமாகக் கொள்ளும் தயாளு என்றே
நான் சொல்வது என்னை பொன்_நாண் சொல்லும் வாணி-தன் நாண் சொல்லும் அ
வான் சொல்லும் எம் மலை_மான் சொல்லும் கைம்மலை_மான் சொல்லுமே

#12
வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீள விடார்
என்றே உரைப்பர் இங்கு என் போன்ற மூடர் மற்று இல்லை நின் பேர்
நன்றே உரைத்து நின்று அன்றே விடுத்தனன் நாண் இல் என் மட்டு
இன்றே அக் கட்டுரை இன்றே என் சொல்வது இறையவனே

#13
கைக்கின்ற காயும் இனிப்பு ஆம் விடமும் கன அமுது ஆம்
பொய்க்கின்ற கானலும் நீர் ஆம் வன் பாவமும் புண்ணியம் ஆம்
வைக்கின்ற ஓடும் செம்பொன் ஆம் என் கெட்ட மனது நின் சீர்
துய்க்கின்ற நல்ல மனது ஆவது_இல்லை என் சொல்லுவனே

#14
வீணே பொழுது கழிக்கின்ற நான் உன் விரை மலர்_தாள்
காணேன் கண்டாரையும் காண்கின்றிலேன் சற்றும் காணற்கு அன்பும்
பூணேன் தவமும் புரியேன் அறமும் புகல்கின்றிலேன்
நாணேன் விலங்கு இழி ஆணே எனும் கடை நாயினனே

#15
நான் ஓர் எளிமை அடிமை என்றோ நல்லன் அல்லன் என்று
தானோ நின் அன்பர் தகாது என்பர் ஈது என்றுதான் நினைத்தோ
ஏனோ நின் உள்ளம் இரங்கிலை இன்னும் இரங்கிலையேல்
கான் ஓடுவேன்-கொல் கடல் விழுவேன்-கொல் முக்கண்ணவனே

#16
மின் போலும் செம் சடை வித்தகனே ஒளி மேவிய செம்
பொன் போலும் மேனி எம் புண்ணியனே எனைப் போற்றிப் பெற்ற
தன் போலும் தாய்_தந்தை ஆயிரம் பேர் இருந்தாலும் அந்தோ
நின் போலும் அன்பு_உடையார் எனக்கு ஆர் இந்த நீள் நிலத்தே

#17
அன்பால் என்றன்னை இங்கு ஆள்_உடையாய் இ அடியவனேன்
நின்-பால் என் துன்ப நெறிப்பால் அகற்று என்று நின்றது அல்லால்
துன்பால் இடரைப் பிறர்-பால் அடுத்து ஒன்று சொன்னது உண்டோ
என்-பால் இரங்கிலை என் பாற்கடல் பிள்ளைக்கு ஈந்தவனே

#18
என் போல் மனிதரை ஏன் அடுப்பேன் எனக்கு எய்ப்பில் வைப்பாம்
பொன் போல் விளங்கும் புரி சடையான்-தனைப் போய் அடுத்தேன்
துன்பு ஓர் அணுவும் பெறேன் இனி யான் என்று சொல்லி வந்தேன்
முன் போல் பராமுகம் செய்யேல் அருளுக முக்கணனே

#19
பொன்_உடையார்-தமைப் போய் அடுப்பாய் என்ற புன்மையினோர்க்கு
என்_உடையான்-தனையே அடுப்பேன் இதற்கு எள்ளளவும்
பின்னிடையேன் அவர் முன் அடையேன் எனப் பேசி வந்தேன்
மின் இடை மாது உமை_பாகா என் சோகம் விலக்குகவே

#20
சாதகத்தோர்கட்குத்தான் அருள்வேன் எனில் தாழ்ந்திடு மா
பாதகத்தோனுக்கு முன் அருள் ஈந்தது எப்பான்மை கொண்டோ
தீது_அகத்தேன் எளியேன் ஆயினும் உன் திரு_அடியாம்
போது அகத்தே நினைக்கின்றேன் கருணை புரிந்து அருளே

#21
அருள் அறியாச் சிறுதேவரும் தம்மை அடுத்தவர்கட்கு
இருள் அறியா விளக்கு என்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார்
மருள் அறியாப் பெரும் தேவே நின்றன் அடி வந்து அடுத்தேன்
தெருள் அறியாச் சிறியேன் ஆயினும் செய்க சீர் அருளே

#22
அரும் பொருளே என் அரசே என் ஆர்_உயிர்க்காக வந்த
பெரும் பொருளே அருள் பேறே சிவானந்தம் பெற்றவர்-பால்
வரும் பொருளே முக்கண் மா மணியே நின் வழி அருளால்
தரும் பொருளே பொருள் என்று வந்தேன் எனைத் தாங்கிக்கொள்ளே

#23
சரம் கார்முகம் தொடுத்து எய்வது போல் என்றனை உலகத்து
உரம் கார்_இருள் பெரு வாதனையால் இடர் ஊட்டும் நெஞ்சக்
குரங்கால் மெலிந்து நின் நாமம் துணை எனக் கூறுகின்றேன்
இரங்கார்-தமக்கும் இரங்குகின்றோய் எற்கு இரங்குகவே

#24
கூறுற்ற குற்றமும் தானே மகிழ்வில் குணம் எனவே
ஆறு உற்ற செம் சடை அண்ணல் கொள்வான் என்பர் ஆங்கு அதற்கு
வேறு உற்றதோர் கரி வேண்டும்-கொலோ என் உள் மேவி என்றும்
வீறு உற்ற பாதத்தவன் மிடற்றே கரி மேவியுமே

#25
சூல் படும் மேக_நிறத்தோனும் நான்முகத்தோனும் என்னைப்
போல் படும் பாடு நல்லோர் சொலக் கேட்கும் பொழுது மனம்
வேல் படும் புண்ணில் கலங்கி அந்தோ நம் விடையவன் பூங்
கால் படும் தூளி நம் மேல் படுமோ ஒரு கால் என்னுமே

#26
வாள் ஏய் நெடும்_கண்ணி எம் பெருமாட்டி வருடும் மலர்த்
தாளே வருந்த மணிக் கூடல் பாணன்-தனக்கு அடிமை
ஆளே என விறகு ஏற்று விற்றோய் நின் அருள் கிடைக்கும்
நாளே நல் நாள் அந்த நாட்கு ஆயிரம் தெண்டன் நான் செய்வனே

#27
அடுத்தார்-தமை என்றும் மேலோர் விடார்கள் அவர்க்குப் பிச்சை
எடுத்தாயினும் இடுவார்கள் என்பார் அதற்கு ஏற்கச் சொல்_பூத்
தொடுத்தார் ஒருவர்க்குக் கச்சூரிலே பிச்சைச் சோறு எடுத்துக்
கொடுத்தாய் நின் பேர்_அருள் என் சொல்லுகேன் எண்_குணக் குன்றமே

#28
நாடி நின்றே நினை நான் கேட்டுக்கொள்வது நண்ணும் பத்துக்
கோடி அன்றே ஒரு கோடியின் நூற்றொரு கூறும் அன்றே
தேடி நின்றே புதைப்போரும் தருவர் நின் சீர் நினைந்து உள்
பாடி அந்தோ மனம் வாடி நின்றேன் முகம் பார்த்து அருளே

#29
தாய் ஆகினும் சற்று நேரம் தரிப்பள் நம் தந்தையை நாம்
வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்து இது நீ
ஈயாய் எனில் அருள்வான் என்று உனை அடுத்தேன் உமையாள்_
நேயா மனம் இரங்காயா என் எண்ணம் நெறிப்படவே

#30
நடும்பாட்டை நாவலன் வாய்த் திரு_பாட்டை நயந்திட்ட நீ
குடும்ப ஆட்டை மேற்கொண்ட என் தமிழ்ப் பாட்டையும் கொண்டு என் உள்ளத்து
இடும்பாட்டை நீக்கிலை என்னினும் துன்பத்து இழுக்குற்று நான்
படும் பாட்டையாயினும் பார்த்து இரங்காய் எம் பரஞ்சுடரே

#31
ஏட்டாலும் கேள் அயல் என்பாரை நான் சிரித்து என்னை வெட்டிப்
போட்டாலும் வேறு இடம் கேளேன் என் நாணைப் புறம்விடுத்துக்
கேட்டாலும் என்னை உடையானிடம் சென்று கேட்பன் என்றே
நீட்டாலும் வாயுரைப் பாட்டாலும் சொல்லி நிறுத்துவனே

#32
சீர்க்கின்ற கூடலில் பாணனுக்கு ஆட்படச் சென்ற அ நாள்
வேர்க்கின்ற வெம் மணல் என் தலை மேல் வைக்கும் மெல் அடிக்குப்
பேர்க்கின்ற-தோறும் உறுத்தியதோ எனப் பேசி எண்ணிப்
பார்க்கின்ற-தோறும் என் கண்ணே என் உள்ளம் பதைக்கின்றதே

#33
நீயே என் தந்தை அருள்_உடையாய் எனை நேர்ந்து பெற்ற
தாயே நின்-பால் இடத்து எம் பெருமாட்டி இத் தன்மையினால்
நாயேன் சிறிதும் குணம்_இலன் ஆயினும் நானும் உங்கள்
சேயே எனைப் புறம்விட்டால் உலகம் சிரித்திடுமே

#34
தெருளும் பொருளும் நின் சீர் அருளே எனத் தேர்ந்த பின் யான்
மருளும் புவனத்து ஒருவரையேனும் மதித்தது உண்டோ
வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன்
இருளும் கரு மணி_கண்டா அறிந்தும் இரங்கிலையே

#35
பெண்ணால் மயங்கும் எளியேனை ஆளப் பெரும் கருணை
அண்ணா நின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன்
கண் ஆர் உலகில் என் துன்பம் எல்லாம் வெளி காணில் இந்த
மண்ணா பிலத்தொடு விண்_நாடும் கொள்ளை வழங்கும் என்றே

#36
நெறி கொண்ட நின் அடித் தாமரைக்கு ஆட்பட்டு நின்ற என்னைக்
குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடும் கலிப் பேய்
முறி கொண்டு அலைக்க வழக்கோ வளர்த்த முடக் கிழ நாய்
வெறிகொண்டதேனும் விடத் துணியார் இ வியன் நிலத்தே

#37
மதியாமல் ஆரையும் நான் இறுமாந்து மகிழ்கின்றது எம்
பதியாம் உனது திரு_அருள் சீர் உரம் பற்றி அன்றோ
எது யார் படினும் இடர்ப்பட்டு அலைய இ ஏழைக்கு என்ன
விதியா இனிப் பட மாட்டேன் அருள்செய் விடையவனே

#38
கல்_கோட்டை நெஞ்சரும் தம்-பால் அடுத்தவர்கட்குச் சும்மாச்
சொல்_கோட்டையாயினும் கட்டுவர் நின்னைத் துணிந்து அடுத்தேன்
அல்_கோட்டை நெஞ்சு உடையேனுக்கு இரங்கிலை அன்று உலவா
நெல்_கோட்டை ஈந்தவன் நீ அல்லையோ முக்கண் நின்மலனே

#39
ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து
வாதிக்க நொந்து வருந்துகின்றேன் நின் வழக்கம் எண்ணிச்
சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்கு கண்டாய்
போதிக்க வல்ல நல் சேய் உமையோடு என்னுள் புக்கவனே

#40
பிறை முடித்து ஆண்டு ஒரு பெண் முடித்து ஓர் பிள்ளைப்பேர் முடித்த
நிறை முடித்து ஆண்ட அம் செவ் வேணி செய்திட நித்தம் மன்றின்
மறை முடித் தாண்டவம் செய்வோய் என்-பால் அருள்வைத்து எளியேன்
குறை முடித்து ஆண்டுகொள் என்னே பல முறை கூறுவதே

#41
நடம் கொண்ட பொன் அடி நீழலில் நான் வந்து நண்ணும் மட்டும்
திடம் கொண்ட நின் புகழ் அல்லால் பிறர் புகழ் செப்பவையேல்
விடம் கொண்ட கண்டத்து அருள்_குன்றமே இம வெற்பு_உடையாள்
இடம் கொண்ட தெய்வத் தனி முதலே எம் இறையவனே

#42
விழிக்கு அஞ்சனம் தரும் மின்னார்-தம் வாழ்க்கையில் வீழ்ந்து அயலோர்
மொழிக்கு அஞ்சி உள்ளம் பொறாது நின் நாமம் மொழிந்து எளியேன்
குழி_கஞ்சி போல் மயங்கின்றேன் அருளக் குறித்திலையேல்
பழிக்கு அஞ்சினோய் இன்னும் என் பழிக்கு அஞ்சப்படும் உனக்கே

#43
சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்-
பால் வைக்குமேல் இடர் எல்லாம் எனை விட்டு அப்பால் நடக்கக்
கால்வைக்குமே நல் சுக வாழ்வு என் மீதினில் கண்வைக்குமே
மால் வைக்கும் மாயைகள் மண்வைக்குமே தங்கள் வாய்-தனிலே

#44
ஒரு மாது பெற்ற மகன் பொருட்டாக உவந்து முன்னம்
வரு மாமன் ஆகி வழக்குரைத்தோய் என் வழக்குரைத்தற்கு
இரு மா நிலத்தது போல் வேடம்கட்ட இருத்தி-கொலோ
திருமால் வணங்கும் பதத்தவ யான் உன் சிறுவன் அன்றே

#45
முன் நஞ்சம் உண்ட மிடற்று அரசே நின் முழுக் கருணை
அன்னம் சுகம் பெற உண்டும் உன்-பால் அன்பு அடைந்திலதால்
கல்_நெஞ்சமோ கட்டை வன் நெஞ்சமோ எட்டிக்காய் நெஞ்சமோ
என் நெஞ்சம் என் நெஞ்சமோ தெரியேன் இதற்கு என் செய்வதே

#46
வானம் விடாது உறு கால் போல் என்றன்னை வளைந்துகொண்ட
மானம் விடாது இதற்கு என் செய்குவேன் நின்னை வந்து அடுத்தேன்
ஊனம் விடாது உழல் நாயேன் பிழையை உளம்கொண்டிடேல்
ஞானம் விடாத நடத்தோய் நின் தண் அருள் நல்குகவே

#47
நாயும் செயாத நடை_உடையேனுக்கு நாணமும் உள்
நோயும் செயாநின்ற வன் மிடி நீக்கி நல் நோன்பு அளித்தாய்
பேயும் செயாத கொடும் தவத்தால் பெற்ற பிள்ளைக்கு நல்
தாயும் செயாள் இந்த நன்றி கண்டாய் செஞ்சடையவனே

#48
உருவத்திலே சிறியேன் ஆகி யூகத்தில் ஒன்றும் இன்றித்
தெருவத்திலே சிறு கால் வீசி ஆடிடச் சென்ற அந்தப்
பருவத்திலே நல் அறிவு அளித்தே உனைப் பாடச்செய்தாய்
அருவத்திலே உரு_ஆனோய் நின் தண் அளி யார்க்கு உளதே

#49
மான் எழுந்து ஆடும் கரத்தோய் நின் சாந்த மனத்தில் சினம்-
தான் எழுந்தாலும் எழுக என்றே என் தளர்வை எல்லாம்
ஊன் எழுந்து ஆர்க்க நின்-பால் உரைப்பேன் அன்றி ஊர்க்கு உரைக்க
நான் எழுந்தாலும் என் நா எழுமோ மொழி நல்கிடவே

#50
வனம் எழுந்து ஆடும் சடையோய் நின் சித்தம் மகிழ்தல் அன்றிச்
சினம் எழுந்தாலும் எழுக என்றே என் சிறுமையை நின்
முனம் எழுந்து ஆற்றுவது அல்லால் பிறர்க்கு மொழிந்திட என்
மனம் எழுந்தாலும் என் வாய் எழுமோ உள்ளவாறு இதுவே

#51
சிற்பரமே எம் சிவமே திரு_அருள் சீர் மிகுந்த
கற்பகமே உனைச் சார்ந்தோர்க்கு அளிக்கும் நின் கைவழக்கம்
அற்பம் அன்றே பல அண்டங்களின் அடங்காதது என்றே
நல் பர ஞானிகள் வாசகத்தால் கண்டு நாடினனே

#52
வரும் செல் உள் நீர் மறுத்தாலும் கருணை மறாத எங்கள்
பெரும் செல்வமே எம் சிவமே நினைத் தொழப்பெற்றும் இங்கே
தரும் செல் அரிக்கும் மரம் போல் சிறுமைத் தளர் நடையால்
அரும் செல்லல் மூழ்கி நிற்கின்றேன் இது நின் அருட்கு அழகே

#53
கரு முகம் நீக்கிய பாணனுக்கே கனகம் கொடுக்கத்
திருமுகம் சேரற்கு அளித்தோய் என்று உன்னைத் தெரிந்து அடுத்தென்
ஒரு முகம் பார்த்து அருள் என்கின்ற ஏழைக்கு உதவிலையேல்
உரும் உக ஆர்க்கும் விடையோய் எவர் மற்று உதவுவரே

#54
மருப் பா வனத்து உற்ற மாணிக்கு மன்னன் மனம் அறிந்து ஓர்
திரு_பாசுரம் செய்து பொற்கிழி ஈந்த நின் சீர் நினைந்தே
விருப்பா நினை அடுத்தேன் எனக்கு ஈந்திடவே இன்று என்னை
கருப்பா நின் சித்தம் திருப்பாய் என் மீது கறை_கண்டனே

#55
பீழையை மேவும் இ வாழ்க்கையிலே மனம் பேதுற்ற இ
ஏழையை நீ விடலாமோ அடிமைக்கு இரங்கு கண்டாய்
மாழையைப் போல் முன்னர்த் தாம் கொண்டு வைத்து வளர்த்த இள
வாழையைத் தாம் பின்னர் நீர்விடல் இன்றி மறுப்பது உண்டே

#56
கருத்து அறியாச் சிறியேன் படும் துன்பக் கலக்கம் எல்லாம்
உருத்து அறியாமை பொறுத்து அருள் ஈபவர் உன்னை அன்றித்
திருத்து அறியார் பிறர் அன்றே மென்_கன்றின் சிறுமை ஒன்றும்
எருத்து அறியாது நல் சேதா அறியும் இரங்குகவே

#57
வான் வேண்டிக் கொண்ட மருந்தோ முக்கண் கொண்ட வள்ளல் உன்னை
நான் வேண்டிக்கொண்டது நின் அடியார்க்கு நகை தரும் ஈது
ஏன் வேண்டிக்கொண்டனை என்பார் இதற்கு இன்னும் ஏன் இரங்காய்
தான் வேண்டிக்கொண்ட அடிமைக்குக் கூழ் இடத் தாழ்ப்பது உண்டே

#58
பை உரைத்து ஆடும் பணிப் புயத்தோய் தமைப் பாடுகின்றோர்
உய் உரைத்தா உள்ளது இல்லது என்று இல்லதை உள்ளது என்றே
பொய் உரைத்தாலும் தருவார் பிறர் அது போல் அன்றி நான்
மெய் உரைத்தாலும் இரங்காமை நின் அருள் மெய்க்கு அழகே

#59
மடல் வற்றினாலும் மணம் வற்றுறாத மலர் என என்
உடல் வற்றினாலும் என் உள் வற்றுமோ துயர் உள்ள எல்லாம்
அடல் வற்றுறாத நின் தாட்கு அன்றி ஈங்கு அயலார்க்கு உரையேன்
கடல் வற்றினாலும் கருணை வற்றாத முக்கண்ணவனே

#60
எள் இருக்கின்றதற்கேனும் சிறிது இடம் இன்றி என்-பால்
முள் இருக்கின்றது போல் உற்ற துன்ப முயக்கம் எல்லாம்
வெள்_இருக்கின்றவர் தாமும் கண்டார் எனில் மேவி என்றன்
உள் இருக்கின்ற நின் தாட்கு ஓதல் என் எம்_உடையவனே

#61
பொன்கு இன்று பூத்த சடையாய் இ ஏழைக்கு உன் பொன் அருளாம்
நன்கு இன்று நீ தரல் வேண்டும் அந்தோ துயர் நண்ணி என்னைத்
தின்கின்றதே கொடும் பாம்பையும் பால் உணச்செய்து கொலார்
என்கின்ற ஞாலம் இழுக்கு_உரை யாது எற்கு இரங்கிடினே

#62
வாய் மூடிக் கொல்பவர் போலே என் உள்ளத்தை வன் துயராம்
பேய் மூடிக்கொண்டது என் செய்கேன் முகத்தில் பிறங்கு கையைச்
சேய் மூடிக்கொண்டு நல் பாற்கு அழக் கண்டும் திகழ் முலையைத்
தாய் மூடிக்கொள்ளுவது உண்டோ அருளுக சங்கரனே

#63
கோள் வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக் கொள்ளித்
தேள் வேண்டுமோ சுடத் தீ வேண்டுமோ வதைசெய்திட ஓர்
வாள் வேண்டுமோ கொடும் துன்பே அதில் எண் மடங்கு கண்டாய்
ஆள் வேண்டுமேல் என்னை ஆள் வேண்டும் என் உள் அஞர் ஒழித்தே

#64
விடை இலையோ அதன் மேல் ஏறி என் முன் விரைந்து வரப்
படை இலையோ துயர் எல்லாம் துணிக்கப் பதம் கொள் அருள்
கொடை இலையோ என் குறை தீர நல்கக் குலவும் என் தாய்
புடை இலையோ என்றனக்காகப் பேச எம் புண்ணியனே

#65
நறை உள தே மலர்க் கொன்றை கொண்டு ஆடிய நல் சடை மேல்
பிறை உளதே கங்கைப் பெண் உளதே பிறங்கும் கழுத்தில்
கறை உளதே அருள் எங்கு உளதே இக் கடையவனேன்
குறை உளதே என்று அரற்றவும் சற்றும் குறித்திலதே

#66
சினத்தாலும் காமத்தினாலும் என்றன்னைத் திகைப்பிக்கும் இ
மனத்தால் உறும் துயர் போதாமை என்று மதித்துச் சுற்றும்
இனத்தாலும் வாழ்க்கை இடும்பையினாலும் இளைக்கவைத்தாய்
அனத்தான் புகழும் பதத்தோய் இது நின் அருட்கு அழகே

#67
புல் அளவாயினும் ஈயார்-தம் வாயில் புகுந்து புகழ்ச்
சொல் அளவாநின்று இரப்போர் இரக்க நல் சொன்னங்களைக்
கல் அளவாத் தருகின்றோர்-தம்பாலும் கருதிச் சென்றோர்
நெல் அளவாயினும் கேளேன் நின்-பால் அன்றி நின்மலனே

#68
பிறை சூழ்ந்த வேணி முடிக் கனியே எம் பெரும் செல்வமே
கறை சூழ்ந்த கண்டத்து எம் கற்பகமே நுதல்_கண் கரும்பே
மறை சூழ்ந்த மன்று ஒளிர் மா மணியே என் மனம் முழுதும்
குறை சூழ்ந்துகொண்டது என் செய்கேன் அகற்றக் குறித்து அருளே

#69
கண் கட்டி ஆடும் பருவத்திலே முலை கண்ட ஒரு
பெண் கட்டி ஆள நினைக்கின்ற ஓர் சிறுபிள்ளையைப் போல்
எண் கட்டி யான் உன் அருள் விழைந்தேன் சிவனே என் நெஞ்சம்
புண்கட்டியாய் அலைக்கின்றது மண்கட்டிப் போல் உதிர்ந்தே

#70
மெய் விட்ட வஞ்சக நெஞ்சால் படும் துயர் வெம் நெருப்பில்
நெய் விட்டவாறு இந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால்
பொய் விட்ட நெஞ்சு உறும் பொன்_பதத்து ஐய இப் பொய்யனை நீ
கைவிட்டிட நினையேல் அருள்வாய் கருணை_கடலே

#71
அருள்_கடலே அக் கடல் அமுதே அ அமுதத்து உற்ற
தெருள் சுவையே அச் சுவைப் பயனே மறைச் சென்னி நின்ற
பொருள் பதமே அப் பதத்து அரசே நின் புகழ் நினையா
இருள் குண மாயை மனத்தேனையும் உவந்து ஏன்றுகொள்ளே

#72
அண்டம் கண்டானும் அளந்தானும் காண்டற்கு அரியவ நின்
கண்டம் கண்டார்க்கும் சடை மேல் குறைந்த கலை மதியின்
துண்டம் கண்டார்க்கும் பயம் உளதோ எனச் சூழ்ந்து அடைந்தேன்
தொண்டன் கண்டு ஆள் பல தெண்டன் கண்டாய் நின் துணை அடிக்கே

#73
தேட்டக் கண்டு ஏர்_மொழி_பாகா உலகில் சிலர் குரங்கை
ஆட்டக் கண்டேன் அன்றி அக் குரங்கால் அவர் ஆடச் சற்றும்
கேட்டுக் கண்டேன்_இலை நான் ஏழை நெஞ்சக் கிழக் குரங்கால்
வேட்டுக் கொண்டு ஆடுகின்றேன் இது சான்ற வியப்பு உடைத்தே

#74
போகம் கொண்டு ஆர்த்த அருள் ஆர் அமுதப் புணர் முலையைப்
பாகம் கொண்டு ஆர்த்த பரம்பொருளே நின் பதம் நினையா
வேகம் கொண்டு ஆர்த்த மனத்தால் இ ஏழை மெலிந்து மிகச்
சோகம் கொண்டு ஆர்த்து நிற்கின்றேன் அருளத் தொடங்குகவே

#75
இன்று அலவே நெடுநாளாக ஏழைக்கு எதிர்த்த துன்பம்
ஒன்று அலவே பல எண்_இலவே உற்று உரைத்தது அயல்
மன்று அலவே பிறர் நன்று அலவே என வந்த கயக்
கன்று அலவே பசுங்கன்று அடியேன்-தனைக் காத்து அருளே

#76
படி பட்ட மாயையின்-பால் பட்ட சாலப் பரப்பில் பட்டே
மிடிபட்ட வாழ்க்கையில் மேல் பட்ட துன்ப விசாரத்தினால்
அடிபட்ட நான் உனக்கு ஆட்பட்டும் இன்னும் அலைதல் நன்றோ
பிடிபட்ட நேர் இடைப் பெண் பட்ட பாகப் பெருந்தகையே

#77
உடையாய் என் விண்ணப்பம் ஒன்று உண்டு கேட்டு அருள் உன் அடிச் சீர்
தடை யாதும் இன்றிப் புகல்வது அல்லால் இச் சகத்திடை நான்
நடையால் சிறுமை கொண்டு அந்தோ பிறரை நவின்று அவர்-பால்
அடையாமையும் நெஞ்சு உடையாமையும் தந்து அருளுகவே

#78
தஞ்சம் என்றே நின்ற நாயேன் குறையைத் தவிர் உனக்கு ஓர்
பஞ்சம் இன்றே உலகு எல்லாம் நின் சீர் அருள் பாங்கு கண்டாய்
எஞ்ச நின்றேற்கு உனை அல்லால் துணை பிறிது இல்லை இது
வஞ்சம் அன்றே நின் பதம் காண்க முக்கண் மணிச் சுடரே

#79
பொறுத்தாலும் நான் செயும் குற்றங்கள் யாவும் பொறாது எனை நீ
ஒறுத்தாலும் நன்று இனிக் கைவிட்டிடேல் என்னுடையவன் நீ
வெறுத்தாலும் வேறு இலை வேற்றோர் இடத்தை விரும்பி என்னை
அறுத்தாலும் சென்றிடமாட்டேன் எனக்கு உன் அருள் இடமே

#80
சேல் வரும் ஏர் விழி மங்கை_பங்கா என் சிறுமை கண்டால்
மேல் வரும் நீ வரத் தாழ்த்தாலும் உன்றன் வியன் அருள் பொன்
கால் வருமே இளம் கன்று அழத் தாய்ப்பசுக் காணின் மடிப்
பால் வருமே முலைப் பால் வருமே பெற்ற பாவைக்குமே

#81
வன் பட்ட கூடலில் வான் பட்ட வையை வரம்பிட்ட நின்
பொன் பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவி நடையாம்
துன்பு அட்ட வீரர் அந்தோ வாதவூரர்-தம் தூய நெஞ்சம்
என் பட்டதோ இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே

#82
நீர் சிந்தும் கண்ணும் நிலை சிந்தும் நெஞ்சமும் நீள் நடையில்
சீர் சிந்து வாழ்க்கையும் தேன் சிந்தி வாடிய செம்மலர் போல்
கூர் சிந்து புந்தியும் கொண்டு நின்றேன் உள் குறை சிந்தும் வாறு
ஓர் சிந்து போல் அருள் நேர் சிந்தன் ஏத்தும் உடையவனே

#83
கொடி கொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர் முகமும்
துடி கொண்ட கையும் பொடி கொண்ட மேனியும் தோல் உடையும்
பிடி கொண்ட பாகமும் பேர்_அருள் நோக்கமும் பெய் கழலும்
குடிகொண்ட நல் மனம் என் மனம் போல் குறை கொள்வது இன்றே

#84
விதிக்கும் பதிக்கும் பதி நதி ஆர் மதி வேணிப் பதி
திதிக்கும் பதிக்கும் பதி மேல் கதிக்கும் திகழ் பதி வான்
துதிக்கும் பதிக்கும் பதி ஓங்கு உமா பதி சொல் கடந்த
பதிக்கும் பதி சித். பதி எம் பதி நம் பசுபதியே

#85
எனை அடைந்து ஆழ்த்திய துன்பச் சுமையை இறக்கு எனவே
நினை அடைந்தேன் அடி நாயேற்கு அருள நினைதி கண்டாய்
வினை அடைந்தே மன வீறு உடைந்தே நின்று வேற்றவர்-தம்
மனை அடைந்தே மனம் வாடல் உன் தொண்டர் மரபு அல்லவே

#86
வனம் போய்வருவது போலே வன் செல்வர் மனையிடத்தே
தினம் போய்வரும் இச் சிறியேன் சிறுமைச் செயல்-அது போய்ச்
சினம் போய்க் கொடும் பகைக் காமமும் போய் நின் திறம் நிகழ்த்தா
இனம் போய்க் கொடிய மனம் போய் இருப்பது என்று என் அரசே

#87
பெற்றாள் அனைய நின் குற்றேவல் செய்து பிழைக்க அறியாச்
சிற்றாள் பலரினும் சிற்றாள் எனும் என் சிறுமை தவிர்த்து
உற்று ஆள்கிலை எனின் மற்று ஆர் துணை எனக்கு உன் கமலப்
பொன்_தாள் அருள் புகழ்க் கற்று ஆய்ந்து பாடப் புரிந்து அருளே

#88
அ நாள் நையாது நஞ்சு ஏற்று அயன் மால் மனை ஆதியர்-தம்
பொன்_நாணைக் காத்த அருள்_கடலே பிறர் புன் மனை போய்
இ நாள் நையா வகை என் நாணைக் காத்து அருள் ஏழைக்கு நின்
றன் ஆணை ஐய நின் தாள் ஆணை வேறு சரண் இல்லையே

#89
பவ சாதனம் பெறும் பாதகர் மேவும் இப் பாரிடை நல்
சிவசாதனத்தரை ஏன் படைத்தாய் அத் திரு_இலிகள்
அவ சாதனங்களைக் கண்டு இவர் உள்ளம் அழுங்க என்றோ
கவசாதனம் எனக் கைம்மான் உரியைக் களித்தவனே

#90
நான் செய்த புண்ணியம் யாதோ சிவாயநம எனவே
ஊன் செய்த நாவைக் கொண்டு ஓதப்பெற்றேன் எனை ஒப்பவர் ஆர்
வான் செய்த நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மற்றைத்
தேன் செய்த கற்பக_தேவனும் தேவரும் செய்ய அரிதே

#91
உற்று ஆயினும் மறைக்கு ஓர்வு அரியோய் எனை உற்றுப் பெற்ற
நற்றாயினும் இனி யானே நின் நல் அருள் நல்கில் என்னை
விற்றாயினும் கொள வேண்டுகின்றேன் என் விருப்பு அறிந்தும்
சற்றாயினும் இரங்காதோ நின் சித்தம் தயாநிதியே

#92
வான் மாறினும் மொழி மாறாத மாறன் மனம் களிக்கக்
கால் மாறி ஆடிய கற்பகமே நின் கருணை என் மேல்
தான் மாறினும் விட்டு நான் மாறிடேன் பெற்ற தாய்க்கு முலைப்
பால் மாறினும் பிள்ளை பால் மாறுமோ அதில் பல் இடுமே

#93
அன்பு அரிதாம் மனத்து ஏழையன் யான் துயரால் மெலிந்தே
இன்பு அரிதாம் இச் சிறு நடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன்
என் பரிதாப நிலை நீ அறிந்தும் இரங்கிலையேல்
வன்பு அரிதாம் தண் அருள்_கடலே என்ன வாழ்வு எனக்கே

#94
மை கண்ட கண்டமும் மான் கண்ட வாமமும் வைத்து அருளில்
கைகண்ட நீ எங்கும் கண்கண்ட தெய்வம் கருதில் என்றே
மெய் கண்ட நான் மற்றைப் பொய் கண்ட தெய்வங்கள் மேவுவனோ
நெய் கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நேடுவதே

#95
வேணிக்கு மேல் ஒரு வேணி வைத்தோய் முன் விரும்பி ஒரு
மாணிக்கு வேதம் வகுத்தே கிழி ஒன்று வாங்கித்தந்த
காணிக்கு-தான் அரைக் காணி மட்டாயினும் காட்டு கண்டாய்
பாணிக்குமோ தரும் பாணி வந்து ஏற்றவர் பான்மை கண்டே

#96
மறைக்கு ஒளித்தாய் நெடுமாற்கு ஒளித்தாய் திசை மா முகம் கொள்
இறைக்கு ஒளித்தாய் இங்கு அதில் ஓர் பழி இலை என்றன் மனக்
குறைக்கு ஒளித்தாலும் குறை தீர்த்து அருள் எனக் கூவிடும் என்
முறைக்கு ஒளித்தாலும் அரசே நின்-பால் பழி மூடிடுமே

#97
முன்_மழை வேண்டும் பருவப் பயிர் வெயில் மூடிக் கெட்ட
பின் மழை பேய்ந்து என்ன பேறு கண்டாய் அந்தப் பெற்றியைப் போல்
நின் மழை போல் கொடை இன்று அன்றி மூப்பு நெருங்கியக் கால்
பொன் மழை பேய்ந்து என்ன கல் மழை பேய்ந்து என்ன பூரணனே

#98
நீள் ஆதரவு கொண்டு என் குறை யாவும் நிகழ்த்தவும் நீ
கேளாதவன் என வாளா இருக்கின்ற கேண்மை என்னோ
சூளாத முக்கண் மணியே விடேல் உனைச் சூழ்ந்த என்னை
ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத்து அழுத்தினுமே

#99
வளம் கன்று மா வனத்து ஈன்ற தன் தாய் இன்றி வாடுகின்ற
இளம் கன்று போல் சிறு வாழ்க்கையில் நின் அருள் இன்றி அந்தோ
உளம் கன்றும் நான் செய்வது என்னே கருணை உதவு கண்டாய்
களங்கு அன்று பேர்_அருள் கார் என்று கூறும் களத்தவனே

#100
காற்றுக்கு மேல் விட்ட பஞ்சு ஆகி உள்ளம் கறங்கச் சென்றே
சோற்றுக்கு மேல் கதி இன்று என வேற்று அகம்-தோறும் உண்போர்
தூற்றுக்கு மேல் பெரும் தூறு இலை ஆங்கு என் துயரம் எனும்
சேற்றுக்கு மேல் பெரும் சேறு இலை காண் அருள் செவ் வண்ணனே

#101
அந்தோ துயரில் சுழன்று ஆடும் ஏழை அவல நெஞ்சம்
சிந்து ஓத நீரில் சுழியோ இளையவர் செம் கை தொட்ட
பந்தோ சிறுவர்-தம் பம்பரமோ கொட்டும் பஞ்சு-கொலோ
வந்தோடு உழலும் துரும்போ என் சொல்வது எம் மா மணியே

#102
பொன் வசமோ பெண்களின் வசமோ கடல் பூ வசமோ
மின் வசமோ எனும் மெய் வசமோ என் விதி வசமோ
தன் வசமோ மலம்-தன் வசமோ என் சவலை நெஞ்சம்
என் வசமோ இல்லை நின் வசம் நான் எனை ஏன்றுகொள்ளே

#103
நான் அடங்காது ஒரு நாள் செயும் குற்ற நடக்கை எல்லாம்
வான் அடங்காது இந்த மண் அடங்காது மதிக்கும் அண்டம்-
தான் அடங்காது எங்கும் தான் அடங்காது எனத் தான் அறிந்தும்
மால் நடம் காட்டும் மணி எனை ஆண்டது மா வியப்பே

#104
பாம்பு ஆயினும் உணப் பால் கொடுப்பார் வளர்ப்பார் மனை-பால்
வேம்பு ஆயினும் வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சிக் கடாத்
தாம் பாயினும் ஒரு தாம்பாயினும் கொடு தாம் பின் செல்வார்
தேம் பாய் மலர்க் குழல் காம்பு ஆக என்னையும் சேர்த்துக்கொள்ளே

#105
நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கு இட உப்பையும் நேடிச் செல்வோர்
பருப்புக்கு நெய்யும் ஒண் பாலுக்கு வாழைப் பழமும் கொள்ளத்
தெருப் புக்குவாரொடு சேர்கில் என் ஆம் இச் சிறுநடையாம்
இருப்புக்கு வேண்டிய நான் சிவயோகர் பின் எய்தில் என்னே

#106
எ மதம் மாட்டும் அரியோய் என் பாவி இடும்பை நெஞ்சை
மும்மத யானையின் கால் இட்டு இடறினும் மொய் அனல்-கண்
விம்மதம் ஆக்கினும் வெட்டினும் நன்று உன்னை விட்ட அதன்
வெம் மதம் நீங்கல் என் சம்மதம் காண் எவ்விதத்தினுமே

#107
கல்லாத புந்தியும் அந்தோ நின் தாளில் கணப் பொழுதும்
நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீள் மதமும்
கொல்லாமல்_கொன்று எனைத் தின்னாமல்_தின்கின்ற கொள்கையை இங்கு
எல்லாம் அறிந்த உனக்கு எளியேன் இன்று இசைப்பது என்னே

#108
தெவ் வழி ஓடும் மனத்தேனுக்கு உன்றன் திருவுளம்-தான்
இ வழி ஏகு என்று இரு வழிக்குள் விட்டது எவ்வழியோ
அ வழியே வழி செவ்வழி பாட நின்று ஆடுகின்றோய்
வெவ் வழி நீர்ப் புணைக்கு என்னே செயல் இ வியன் நிலத்தே

#109
கண் ஆர் நுதல் செங்கரும்பே நின் பொன் அருள் கால்_மலரை
எண்ணாத பாவி இங்கு ஏன் பிறந்தேன் நினை ஏத்துகின்றோர்
உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சி சற்றும்
நண்ணாத நெஞ்சமும் கொண்டு உலகோர் முன்னர் நாண் உறவே

#110
அம்மா வயிற்று எரிக்கு ஆற்றேன் என நின்று அழுது அலறச்
சும்மா அச் சேய் முகம் தாய் பார்த்து இருக்கத் துணிவள்-கொலோ
இ மா நிலத்து அமுது ஏற்றாயினும் தந்திடுவள் முக்கண்
எம்மான் இங்கு ஏழை அழு முகம் பார்த்தும் இரங்கிலையே

#111
ஓயாக் கருணை முகிலே நுதல்_கண் ஒருவ நின்-பால்
தோயாக் கொடிய வெம் நெஞ்சத்தை நான் சுடு_சொல்லைச் சொல்லி
வாயால் சுடினும் தெரிந்திலதே இனி வல் வடவைத்
தீயால் சுடினும் என் அந்தோ சிறிதும் தெரிவது அன்றே

#112
மால் அறியான் மலரோன் அறியான் மகவான் அறியான்
கால் அறியான் மற்றை வானோர் கனவினும் கண்டு அறியார்
சேல் அறியா விழி மங்கை_பங்கா நின் திறத்தை மறை
நால் அறியா எனில் நான் அறிவேன் எனல் நாண் உடைத்தே

#113
ஆறு இட்ட வேணியும் ஆட்டு இட்ட பாதமும் அம்மை ஒரு
கூறு இட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலம் மிக்க
நீறு இட்ட மேனியும் நான் காணும் நாள் என் நிலைத் தலை மேல்
ஏறிட்ட கைகள் கண்டு ஆணவப் பேய்கள் இறங்கிடுமே

#114
அல் உண்ட கண்டத்து அரசே நின் சீர்த்தி அமுதம் உண்டோர்
கொல் உண்ட தேவர்-தம் கோள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ
சொல் உண்ட வாயினர் புல் உண்பரோ இன் சுவைக் கண்டு எனும்
கல் உண்டபேர் கருங்கல் உண்பரோ இக் கடலிடத்தே

#115
காரே எனும் மணி_கண்டத்தினான் பொன் கழலை அன்றி
யாரே துணை நமக்கு ஏழை நெஞ்சே இங்கிருந்து கழு
நீரே எனினும் தரற்கு அஞ்சுவாரொடு நீயும் சென்று
சேரேல் இறுகச் சிவாயநம எனச் சிந்தைசெய்யே

#116
வலைப்பட்ட மான் என வாள்பட்ட கண்ணியர் மையல் என்னும்
புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான் மதி போய்ப் புலம்ப
இலைப்பட்ட இ மனம் அந்தோ இ ஏழைக்கு என்று எங்கிருந்து
தலைப்பட்டதோ இதற்கு என் செய்குவேன் முக்கண் சங்கரனே

#117
குருந்தாம் என் சோக மனம் ஆன பிள்ளைக் குரங்குக்கு இங்கே
வருந்து ஆணவம் என்னும் மானிடப் பேய் ஒன்று மாத்திரமோ
பெரும் தாமதம் என்று இராக்கதப் பேயும் பிடித்தது எந்தாய்
திருந்தா அதன் குதிப்பு என் ஒரு வாய்கொண்டு செப்ப அரிதே

#118
பெண்மணி_பாக பெரு மணியே அருள் பெற்றி கொண்ட
விண் மணி ஆன விழி மணியே என் விருப்புறு நல்
கண்மணி நேர் கடவுள் மணியே ஒருகால் மணியைத்
திண் மணிக் கூடலில் விற்று ஓங்கு தெய்வ சிகாமணியே

#119
அலை எழுத்தும் தெறும் ஐந்தெழுத்தால் உன்னை அர்ச்சிக்கின்றோர்
கலை எழுத்தும் புகழ் கால் எழுத்திற்குக் கனிவு இரக்கம்
இலை எழுத்தும் பிறப்பீடு எழுத்தும் கொண்ட எங்கள் புழுத்
தலையெழுத்தும் சரி ஆமோ நுதல்_கண் தனி முதலே

#120
ஆட்சிகண்டார்க்கு உற்ற துன்பத்தைத் தான் கொண்டு அருள் அளிக்கும்
மாட்சி கண்டாய் எந்தை வள்ளல் குணம் என்பர் மற்று அதற்குக்
காட்சி கண்டேன்_இலை ஆயினும் உன் அருள் கண்டத்தில் ஓர்
சாட்சி கண்டேன் களி கொண்டேன் கருணைத் தடம் கடலே

#121
கண் கொண்ட நெற்றியும் கார் கொண்ட கண்டமும் கற்பு அளிக்கும்
பெண் கொண்ட பாகமும் கண்டேன் முன் மாறன் பிரம்படியால்
புண் கொண்ட மேனிப் புறம் கண்டிலேன் அப் புறத்தைக் கண்டால்
ஒண் கொண்ட கல்லும் உருகும் என்றோ இங்கு ஒளித்தனையே

#122
வேய்க்குப் பொரும் எழில் தோள் உடைத் தேவி விளங்கும் எங்கள்
தாய்க்குக் கனிந்து ஒரு கூறு அளித்தோய் நின் தயவும் இந்த
நாய்க்குக் கிடைக்கும் என ஒரு சோதிடம் நல்கில் அவர்
வாய்க்குப் பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே

#123
காண்டத்தில் மேவும் உலகீர் இத் தேகம் கரும் பனை போல்
நீண்டத்தில் என்ன நிலை அலவே இது நிற்றல் பசும்
பாண்டத்தில் நீர் நிற்றல் அன்றோ நமை நம் பசுபதி-தான்
ஆண்டத்தில் என்ன குறையோ நம் மேல் குறை ஆயிரமே

#124
வேணி-கண் நீர் வைத்த தேவே மதுரை வியன் தெருவில்
மாணிக்கம் விற்ற செம் மாணிக்கமே எனை வாழ்வித்ததோர்
ஆணி_பொன்னே தெள் அமுதே நின் செய்ய அடி_மலர்க்குக்
காணிக்கையாக்கிக்கொண்டு ஆள்வாய் எனது கருத்தினையே

#125
மா கலை_வாணர் பிறன்-பால் எமக்கும் மனைக்கும் கட்ட
நீ கலை தா ஒரு மேகலை தா உண நெல்_மலை தா
போகல் ஐயா எனப் பின்தொடர்வார் அவர் போல் மனன் நீ
ஏகலை ஈகலர் ஏகம்பவாணரிடம் செல்கவே

#126
ஊர் தருவார் நல்ல ஊண் தருவார் உடையும் தருவார்
பார் தருவார் உழற்கு ஏர் தருவார் பொன் பணம் தருவார்
சோர் தருவார் உள் அறிவு கெடாமல் சுகிப்பதற்கு இங்கு
ஆர் தருவார் அம்மை ஆர்தரு பாகனை அன்றி நெஞ்சே

#127
பண் செய்த சொல் மங்கை_பாகா வெண் பாற்கடல் பள்ளிகொண்டோன்
திண் செய்த சக்கரம் கொள்வான் அருச்சனை செய்திட்ட நாள்
விண் செய்த நின் அருள் சேவடி மேல் பட வேண்டி அவன்
கண் செய்த நல் தவம் யாதோ கருத்தில் கணிப்ப அரிதே

#128
மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண்
காப்பு இட்டு மேல் பல பாப்பு இட்ட மேனியைக் கண்டு தொழக்
கூப்பிட்டு நான் நிற்க வந்திலை நாதனைக் கூட இல்லாள்
பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே

#129
என் மேல் பிழை இலை யான் என் செய்கேன் என்னிடத்து இருந்து என்
சொல் மேற்கொளாது எனை இல் மேல் துரும்பு எனச் சுற்றும் நெஞ்சத்
தின் மேல் பிழை அது புல் மேல் பனி எனச் செய்து ஒழிக்க
நின் மேல் பரம் விடை-தன் மேல் கொண்டு அன்பர் முன் நிற்பவனே

#130
மை விட்டிடா மணி_கண்டா நின்றன்னை வழுத்தும் என்னை
நெய் விட்டிடா உண்டி போல் இன்பு_இலான் மெய் நெறி அறியான்
பொய் விட்டிடான் வெம் புலை விட்டிடான் மயல் போகம் எலாம்
கைவிட்டிடான் எனக் கைவிட்டிடேல் வந்து காத்து அருளே

#131
நல் அமுதம் சிவை தான் தரக் கொண்டு நின் நல் செவிக்குச்
சொல் அமுதம் தந்த எங்கள் பிரான் வளம் சூழ் மயிலை
இல் அமுதம் திகழ் பெண்ணாக என்பை எழுப்பிய நாள்
சில் அமுதம் பெற்ற தேவரை வானம் சிரித்தது அன்றே

#132
சொற்றுணை வேதியன் என்னும் பதிகச் சுருதியை நின்
பொன் துணை வார் கழற்கு ஏற்றி அப் பொன் அடிப் போதினையே
நல் துணையாக் கரை ஏறிய புண்ணிய நாவரசைக்
கற்று நையாது இந்தக் கல் துணையாம் என் கடை நெஞ்சமே

#133
சடையவ நீ முன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும்
கடையவனேன் செயும் கைம்மாறு அறிந்திலன் கால் வருந்தி
நடையுற நின்னைப் பரவை-தன் பாங்கர் நடத்தி அன்பர்
இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான் வெளியிட்டதற்கே

#134
திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு அன்று தென்னன் முன்னே
வெருவாத வைதிகப் பாய் பரி மேல் கொண்டு மேவி நின்ற
ஒருவாத கோலத்து ஒருவா அக் கோலத்தை உள் குளிர்ந்தே
கருவாதம் நீங்கிடக் காட்டு கண்டாய் என் கனவினிலே

#135
சீர் தரு நாவுக்கரையரைப் போல் இச் சிறியனும் ஓர்
கார் தரு மாயைச் சமணால் மனக் கருங்கல்லில் கட்டிப்
பார் தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டு உழன்றே
ஏர்தரும் ஐந்தெழுத்து ஓதுகின்றேன் கரை ஏற்று அரசே

#136
தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையைத் தொட்டு வரும்
ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும் விட்ட
நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள்
ஆக்கமும் நின் பதத்து அன்பும் தருக அருள் சிவமே

#137
பொய் வந்த வாயும் புலை வந்த செய்கையும் புன்மை எல்லாம்
கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனி நல் கனிவுடன் யான்
மெய் வந்த வாயும் விதி வந்த செய்கையும் வீறு அன்பினால்
தைவந்த நெஞ்சமும் காண்பது என்றோ செம் சடைக் கனியே

#138
கங்கை கொண்டாய் மலர் வேணியிலே அருள் கண்ணி மலை_
மங்கை கொண்டாய் இடப் பாகத்திலே ஐய மற்றும் ஒரு
நங்கை கொண்டால் எங்கு கொண்டு அருள்வாய் என்று நண்ணும் அன்பர்
சங்கை கொண்டால் அதற்கு என் சொல்லுவாய் முக்கண் சங்கரனே

#139
வாள் கொண்ட கண்ணியர் மாயா விகார வலை பிழைத்து உன்
தாள் கொண்ட நீழலில் சார்ந்திடுமாறு என்றனக்கு அருள்வாய்
கீள் கொண்ட கோவணப் பேர்_அழகா எனைக் கேதம் அற
ஆட்கொண்ட நீ இன்று வாளா இருப்பது அழகு அல்லவே

#140
வீட்டுத் தலைவ நின் தாள் வணங்கார்-தம் விரி தலை சும்
மாட்டுத் தலை பட்டி_மாட்டுத் தலை புன் வராகத் தலை
ஆட்டுத் தலை வெறி_நாய்த் தலை பாம்பின் அடும் தலை கல்
பூட்டுத் தலை வெம் புலைத் தலை நாற்றப் புழுத்  தலையே

#141
தெள் நீர்_முடியனைக் காணார்-தம் கண் இருள் சேர் குருட்டுக்
கண் நீர் சொரிந்த கண் காசக் கண் புன் முலைக் கண் நகக் கண்
புண் நீர் ஒழுகும் கொடும் கண் பொறாமைக் கண் புன் கண் வன் கண்
மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே

#142
கண்_நுதலான் புகழ் கேளார் செவி பொய்க் கதை ஒலியும்
அண்ணுற மாதரும் மைந்தரும் கூடி அழும் ஒலியும்
துண்ணெனும் தீ_சொல் ஒலியும் அ அந்தகன் தூதர்கள் மொத்
துண்ணுற வா என்று உரப்பு ஒலியும் புகும் ஊன் செவியே

#143
மணி கொண்ட கண்டனை வாழ்த்தார்-தம் வாய்த் தெரு மண் உண்ட வாய்
பிணி கொண்ட வாய் விடப் பிச்சு உண்ட வாய் வரும் பேச்சு அற்ற வாய்
துணிகொண்ட வாய் அனல் சூடுண்ட வாய் மலம் சோர்ந்து இழி வாய்
குணி கொண்ட உப்பிலிக் கூழ் உண்ட வாய் எனக் கூறுபவே

#144
சகம் இலையே என்று உடையானை எண்ணலர்-தங்கள் நெஞ்சம்
சுகம் இலையே உணச் சோறு இலையே கட்டத் தூசு இலையே
அகம் இலையே பொருள் ஆ இலையே வள்ளலார் இலையே
இகம் இலையே ஒன்றும் இங்கு இலையே என்று இரங்கும் நெஞ்சே

#145
பொங்கு அரும் பேர் முலை மங்கைக்கு இடம் தந்த புத்தமுதே
செங்கரும்பே நறும் தேனே மதுரச் செழும் கனியே
திங்களும் கங்கையும் சேர்ந்து ஒளிர் வேணிச் சிவ_கொழுந்தே
எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே

#146
வில்லைப் பொன்னாக் கரம் கொண்டோய் வன் தொண்டர் விரும்புறச் செங்
கல்லைப் பொன் ஆக்கிக் கொடுத்தோய் நின் பாதம் கருத்தில்வையார்
புல்லைப் பொன்னாக் கொளும் புல்லர்கள்-பால் சென்று பொன் அளிக்க
வல்லைப் பொன் ஆர் புய என்பார் இஃது என் சொல்_வாணர்களே

#147
கூத்து_உடையாய் என்_உடையாய் முத்தேவரும் கூறுகின்ற
ஏத்து_உடையாய் அன்பர் ஏத்து_உடையாய் என்றன் எண்மை மொழிச்
சாத்து_உடையாய் நின்றனக்கே பரம் எனைத் தாங்குதற்கு ஓர்
வேத்து_உடையார் மற்று இலை அருள் ஈது என்றன் விண்ணப்பமே

#148
வெப்பு இலையே எனும் தண் விளக்கே முக்கண் வித்தக நின்
ஒப்பு இலையே எனும் சீர் புகலார் புற்கை உண்ணுதற்கு ஓர்
உப்பு இலையே பொருள் ஒன்று இலையே என்று உழல்பவர் மேல்
தப்பு இலையே அவர் புன் தலை ஏட்டில் தவம் இலையே

#149
எனைப் பெற்ற தாயினும் அன்பு_உடையாய் எனக்கு இன்பம் நல்கும்
உனைப் பெற்ற உள்ளத்தவர் மலர்ச் சேவடிக்கு ஓங்கும் அன்பு-
தனைப் பெற்ற நல் மனம் தாம் பெற்ற மேலவர் சார்பைப் பெற்றால்
வினைப் பெற்ற வாழ்வின் மனைப் பெற்றம் போல மெலிவது இன்றே

#150
நிறைமதியாளர் புகழ்வோய் சடை உடை நீள் முடி மேல்
குறை_மதி தான் ஒன்று கொண்டனையே அக் குறிப்பு எனவே
பொறை மதியேன்-தன் குறை மதி-தன்னையும் பொன் அடிக் கீழ்
உறை மதியாக் கொண்டு அருள்வாய் உலகம் உவப்புறவே

#151
துடி வைத்த செங்கை அரசே நல்லூரில் நின் தூ மலர்ப் பொன்
அடி வைத்த போது எங்கள் அப்பர்-தம் சென்னி-அது குளிர்ந்து எப்
படி வைத்ததோ இன்பம் யான் எணும்-தோறும் இப் பாவிக்கு மால்
குடிவைத்த புன் தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே

#152
ஒரு முடி மேல் பிறை வைத்தோய் அரி அயன் ஒண் மறை-தம்
பெரு முடி மேல் உற வேண்ட வராது உனைப் பித்தன் என்ற
மரு முடி ஊரன் முடி மேல் மறுப்பவும் வந்தது அவர்
திரு_முடி மேல் என்ன ஆசை கண்டாய் நின் திரு_அடிக்கே

#153
வேல் கொண்ட கையும் முந்நூல் கொண்ட மார்பமும் மென் மலர்ப் பொன்
கால் கொண்ட ஒண் கழல் காட்சியும் பன்னிரு கண்ணும் விடை
மேல் கொண்ட செஞ்சுடர் மேனியும் சண் முக வீறும் கண்டு
மால் கொண்ட நெஞ்சம் மகிழ்வது எந்நாள் என் கண் மா மணியே

#154
விண் பூத்த கங்கையும் மின் பூத்த வேணியும் மென் முகமும்
கண் பூத்த நெற்றியும் பெண் பூத்த பாகமும் கார் மிடறும்
தண் பூத்த பாதமும் பொன் பூத்த மேனியும் சார்ந்து கண்டே
மண் பூத்த வாழ்க்கையை விண் பூத்த பூவின் மதிப்பது என்றே

#155
தண் மதியோ அதன் தண் அமுதோ எனச் சார்ந்து இருள் நீத்து
உள்_மதியோர்க்கு இன்பு உதவும் நின் பேர்_அருள் உற்றிடவே
எண் மதியோடு இச்சை எய்தாது அலையும் என் ஏழை மதி
பெண் மதியோ அன்றிப் பேய் மதியோ என்ன பேசுவதே

#156
பிட்டுக்கும் வந்து முன் மண் சுமந்தாய் என்பர் பித்தன் என்ற
திட்டுக்கும் சீர் அருள்செய்து அளித்தாய் என்பர் தீ விறகுக்
கட்டுக்கும் பொன் முடி காட்டி நின்றாய் என்பர் கண்டிட என்
மட்டுக்கும் வஞ்சகத் தெய்வம் என்கோ முக்கண் மாணிக்கமே

#157
மை இட்ட கண்ணியர் பொய் இட்ட வாழ்வின் மதி மயங்கிக்
கையிட்ட நானும் உன் மெய் இட்ட சீர் அருள் காண்குவனோ
பை இட்ட பாம்பு அணியை இட்ட மேனியும் பத்தர் உள்ளம்
மொய் இட்ட காலும் செவ்வை இட்ட வேலும் கொள் முன்னவனே

#158
தவமே புரியும் பருவம் இலேன் பொய்ச் சக நடை-கண்
அவமே புரியும் அறிவு_இலியேனுக்கு அருளும் உண்டோ
உவமேயம் என்னப்படாது எங்கும் ஆகி ஒளிர் ஒளியாம்
சிவமே முக்கண் உடைத் தேவே நின் சித்தம் தெரிந்திலனே

#159
மட்டு உண்ட கொன்றைச் சடை அரசே அன்று வந்தி இட்ட
பிட்டு உண்ட பிச்சைப் பெருந்தகையே கொடும் பெண் மயலால்
கட்டுண்ட நான் சுகப்பட்டு உண்டு வாழ்வன் இக் கல்_மனமாம்
திட்டுண்ட பேய்த் தலை வெட்டுண்ட நாளில் என் தீமை அற்றே

#160
ஆட்டுக்குக் கால் எடுத்தாய் நினைப் பாடலர் ஆங்கு இயற்றும்
பாட்டுக்குப் பேர் என்-கொல் பண் என்-கொல் நீட்டி அப் பாட்டு எழுதும்
ஏட்டுக்கு மை என்-கொல் சேற்றில் உறங்க இறங்கும் கடா
மாட்டுக்கு வீடு என்-கொல் பஞ்சணை என்-கொல் மதித்திடினே

#161
ஒப்பு அற்ற முக்கண் சுடரே நின் சீர்த்தி உறாத வெறும்
துப்பு அற்ற பாட்டில் சுவை உளதோ அதைச் சூழ்ந்து கற்றுச்
செப்பு அற்ற வாய்க்குத் திரு உளதோ சிறிதேனும் உண்டேல்
உப்பு அற்ற புன் கறி உண்டோர்-தம் நாவுக்கு உவப்பு உளதே

#162
சேல் வரும் கண்ணி இடத்தோய் நின் சீர்த்தியைச் சேர்த்தி அந்த
நால்வரும் செய் தமிழ் கேட்டுப் புறத்தில் நடக்கச் சற்றே
கால் வரும் ஆயினும் இன்புருவாகிக் கனி மனம் அப்
பால் வருமோ அதன்-பால் பெண்களை விட்டுப் பார்க்கினுமே

#163
கார்முகமாகப் பொன் கல் வளைத்தோய் இக் கடையவனேன்
சோர் முகமாக நின் சீர் முகம் பார்த்துத் துவளுகின்றேன்
போர் முகமாக நின்றோரையும் காத்த நின் பொன் அருள் இப்
பார் முகமாக என் ஓர் முகம் பார்க்கப் பரிந்திலதே

#164
வான் வளர்த்தாய் இந்த மண் வளர்த்தாய் எங்கும் மன் உயிர்கள்-
தான் வளர்த்தாய் நின் தகை அறியா என்றனை அரசே
ஏன் வளர்த்தாய் கொடும் பாம்பை எல்லாம் தள்ளிலை வளர்த்தாய்
மான் வளர்த்தாய் கரத்து ஆர் நினைப் போல வளர்ப்பவரே

#165
அல் கண்டம் ஓங்கும் அரசே நின்றன் அடியார் மதுரச்
சொல் கண்ட போதும் என் புல் கண்ட நெஞ்சம் துணிந்து நில்லாது
இல் கண்ட மெய்த் தவர் போல் ஓடுகின்றது எறிந்தது தீம்
கற்கண்டு எனினும் அக் கல் கண்ட காக்கை நிற்காது என்பரே

#166
சொல்லுகின்றோர்க்கு அமுதம் போல் சுவை தரும் தொல் புகழோய்
வெல்லுகின்றோர் இன்றிச் சும்மா அலையும் என் வேட நெஞ்சம்
புல்லுகின்றோர்-தமைக் கண்டால் என் ஆம்-கொல் புகல் வெறும் வாய்
மெல்லுகின்றோர்க்கு ஒரு நெல் அவல் வாய்க்கில் விடுவர் அன்றே

#167
சீர் இடுவார் பொருள் செல்வர்க்கு அலாமல் இத் தீனர்கட்கு இங்கு
ஆர் இடுவார் பிச்சை ஆயினும் பிச்சன் அசடன் என்றே
பேரிடுவார் வம்புப் பேச்சிடுவார் இந்தப் பெற்றி கண்டும்
போரிடுவார் நினைப் போற்றார் என்னே முக்கண் புண்ணியனே

#168
சேலுக்கு நேர் விழி மங்கை_பங்கா என் சிறுமதி-தான்
மேலுக்கு நெஞ்சை உள் காப்பது போல் நின்று வெவ் விடய
மாலுக்கு வாங்கி வழங்கவும் தான் சம்மதித்தது காண்
பாலுக்கும் காவல் வெம் பூனைக்கும் தோழன் என்பார் இதுவே

#169
இணை ஏதும் இன்றிய தேவே கனல் இனன் இந்து எனும் முக்
கணையே கொளும் செங்கரும்பே பிறவி_கடல் கடத்தும்
புணையே திரு_அருள் பூரணமே மெய்ப் புலம் அளிக்கும்
துணையே என் துன்பம் துடைத்து ஆண்டுகொள்ளத் துணிந்து அருளே

#170
நிலை காட்டி ஆண்ட நின் தாட்கு அன்பு இலாது அன்பில் நீண்டவன் போல்
புலை காட்டிய மனத்தேன் கொண்ட வேடம் புனை இடை மேல்
கலை காட்டிக் கட்டு_மயிர்த் தலை காட்டிப் புன் கந்தை சுற்றி
முலை காட்டி ஆண்_மகன் பெண் வேடம் காட்டு முறைமை அன்றே

#171
விட நாகப் பூண் அணி மேலோய் என் நெஞ்சம் விரிதல்விட்டு என்
உடனாக மெய் அன்பு உள் ஊற்றாக நின் அருள் உற்றிடுதற்கு
இடனாக மெய் நெறிக்கு ஈடாகச் செய்குவது இங்கு உனக்கே
கடனாக நிற்பது கண்டேன் பின் துன்பு ஒன்றும் கண்டிலனே

#172
நயப்படும் ஓர் நின் அருள் எனக்கு இன்று எனில் நாய் மனம் என்
வயப்படுமோ துயர் மண்படுமோ நல்ல வாழ்வை என்னால்
செயப்படுமோ குணம் சீர்ப்படுமோ பவம் சேரச் சற்றும்
பயப்படுமோ மலம் பாழ்படுமோ எம் பசுபதியே

#173
சோபம் கண்டார்க்கு அருள்செய்வோய் மதிக்கு அன்றிச் சூழ்ந்திடு வெம்
தீபம் கண்டாலும் இருள் போம் இ ஏழை தியங்கும் பரி
தாபம் கண்டாய் அருள்செய்யாது என் குற்றம்-தனைக் குறித்துக்
கோபம் கண்டாலும் நன்று ஐயா என் துன்பக் கொதிப்பு அறுமே

#174
எல்லாம் உடைய இறையவனே நினை ஏத்துகின்ற
நல்லார்-தமக்கு ஒரு நாளேனும் பூசை நயந்து இயற்றிச்
சொல்லால் அவர் புகழ் சொல்லாது இவ்வண்ணம் துயர்வதற்கு என்
கல்லாமை ஒன்று மற்று இல்லாமை ஒன்று இரு காரணமே

#175
பிறை ஆறு கொண்ட செவ் வேணிப் பிரான் பதப் பேறு அடைவான்
மறை ஆறு காட்டும் நின் தண் அருளே அன்றி மாயை என்னும்
நிறை ஆறு சூழும் துரும்பாய்ச் சுழலும் என் நெஞ்சின் உள்ள
குறை ஆறுதற்கு இடம் வேறு இல்லை காண் இக் குவலையத்தே

#176
மால் அறியாதவன் அன்றே அத் தெய்வ வரதனும் நின்
கால் அறியாதவன் என்றால் அக் காலை எக் காலை எமைப்
போல் அறியாதவர் காண்பார் முன் கண்ட மெய்ப் புண்ணியர்-தம்
பால் அறியாதவன் நான் இது கேட்டு உணர்பாலன் அன்றே

#177
ஒன்றே என் ஆர்_உயிர்க்கு ஓர் உறவே எனக்கு ஓர் அமுதே
நன்றே முக்கண் உடை நாயகமே மிக்க நல்ல குணக்
குன்றே நிறை அருள் கோவே எனது குல_தெய்வமே
மன்றே ஒளிர் முழு மாணிக்கமே எனை வாழ்விக்கவே

#178
தாழ்வு ஏதும் இன்றிய கோவே எனக்குத் தனித்த பெரு
வாழ்வே நுதல்_கண் மணியே என் உள்ள மணி_விளக்கே
ஏழ் வேலை என்னினும் போதா இடும்பை இடும் குடும்பப்
பாழ் வேதனைப்பட மாட்டேன் எனக்கு உன் பதம் அருளே

#179
வண்டு கொண்டு ஆர் நறும் கொன்றையினான்-தன் மலர்_அடிக்குத்
தொண்டுகொண்டார்-தம் சுகத்துக்கும் வாழ்க்கைச் சுழலில் தள்ளும்
பெண்டுகொண்டார்-தம் துயருக்கும் ஒப்பு இன்று பேசில் என்றே
கண்டுகொண்டாய் இனி நெஞ்சே நின் உள்ளக் கருத்து எதுவே

#180
மலம் கவிழ்ந்தார் மனம் வான் கவிழ்ந்தாலும் அ வான் புறமாம்
சலம் கவிழ்ந்தாலும் சலியாது என் புன் மனம்-தான் கடலில்
கலம் கவிழ்ந்தார் மனம் போலே சலிப்பது காண் குடும்ப
விலங்கு அவிழ்ந்தால் அன்றி நில்லாது என் செய்வல் விடையவனே

#181
மை கொடுத்து ஆர் நெடும் கண் மலை மானுக்கு வாய்ந்து ஒரு பால்
மெய் கொடுத்தாய் தவர் விட்ட வெம் மானுக்கு மேவுற ஓர்
கை கொடுத்தாய் மயல் கண்ணியில் வீழ்ந்து உள் கலங்குறும் என்
கொய் கொடுத்து ஆழ் மன மானுக்குக் காலைக் கொடுத்து அருளே

#182
உடம்பார் உறு மயிர்க்கால் புழை-தோறு அனலூட்டி வெய்ய
விடம் பாச்சிய இருப்பு ஊசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும் இத்
தடம் பார் சிறு நடைத் துன்பம் செய் வேதனை தாங்க அரிது என்
கடம்பா நல் பன்னிரு கண்ணா இனி எனைக் காத்து அருளே

#183
மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையினாலும் அ வாழ்க்கைக்கு உற்ற
பெண்ணாலும் நொந்து வந்தாரை எலாம் அருள் பேறு எனும் முக்
கண்ணாலும் பார்த்து ஐந்து கையாலும் ஈயும் கணபதி நின்
பண் ஆலும் மா மறை மேல் தாளை என் உள் பதித்தருளே

#184
வான் ஆள மால் அயன் வாழ்வு ஆள அன்றி இ மண் முழுதும்
தான் ஆள நின் பதம் தாழ்பவர் தாழ்க ஒண் சங்கை அம் கை
மான் ஆள மெய் இடம் தந்தோய் துன்பு அற்ற மனம்-அது ஒன்றே
நான் ஆள எண்ணி நின் தாள் ஏத்துகின்றனன் நல்குகவே

#185
ஈடு அறியாத முக்கண்ணா நின் அன்பர் இயல்பினை இ
நாடு அறியாது உன் அருள் அன்றி ஊண் சுவை நாவை அன்றி
மேடு அறியாது நல் பாட்டைக் கற்றோர் அன்றி மேல் சுமந்த
ஏடு அறியாது அவை ஏன் அறியா என்று இகழ்வர் அன்றே

#186
சூடுண்ட பூஞைக்குச் சோறு உண்ட வாய் பின் துடிப்பது அன்றி
ஊடுண்ட பால் இட்ட ஊண் கண்டதேனும் உணத் துணியாது
ஈடுண்ட என் மனம் அந்தோ துயரில் இடியுண்டும் இ
வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்டதால் எம் விடையவனே

#187
கரம் காட்டி மை இட்ட கண் காட்டி என் பெரும் கன்ம நெஞ்சக்
குரங்கு ஆட்டிச் சேய்மையில் நிற்கின்ற மாதரைக் கொண்டு கல்லார்
உரம் காட்டிக் கோல் ஒன்று உடன் நீட்டிக் காட்டி உரப்பி ஒரு
மரம் காட்டிய குரங்கு ஆட்டுகின்றோர் என் மணி கண்டனே

#188
களங்கனி போல் மணி_கண்டா நின் பொன் கழல் காணற்கு என் சிற்
றுளம் கனியாது நின் சீர் கேட்கினும் அன்புற உருகா
வளம் கனி காமம் சிறவாமல் சிற்றில் வகுத்து உழலும்
இளம் கனி போல் நின்றது என் செய்குவேன் எம் இறையவனே

#189
மா மத்தினால் சுழல் வெண் தயிர் போன்று மடந்தையர்-தம்
காமத்தினால் சுழல் என்றன் நெஞ்சோ உன்றன் காலை அன்பாம்
தாமத்தினால் தளையிட்ட நெஞ்சோ இத்தகை இரண்டின்
நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கு எது நல்ல நெஞ்சே

#190
ஏற்றில் இட்டார் கொடி கொண்டோய் விளக்கினை ஏற்ற பெரும்
காற்றில் இட்டாலும் இடலாம் நெல் மாவைக் கலித்திடும் நீர்
ஆற்றில் இட்டாலும் பெறலாம் உள் காலை அடும் குடும்பச்
சேற்றில் இட்டால் பின்பு அரிதாம் எவர்க்கும் திருப்புவதே

#191
தேர் ஓங்கு காழி-கண் மெய்ஞ்ஞானப் பால் உண்ட செம்மணியைச்
சீர் ஓங்கு முத்துச் சிவிகையின் மேல் வைத்த தேவ உன்றன்
பேர் ஓங்கும் ஐந்தெழுத்து அன்றோ படைப்பைப் பிரமனுக்கும்
ஏர் ஓங்கு காப்பைத் திரு நெடுமாலுக்கும் ஈந்ததுவே

#192
வேதனையா மதுசூதனையா என்று வேதனையால்
போதல் நையாநின்று உனைக் கூவும் ஏழையைப் போதனை கேள்
வாதனை யாது இங்கு வா தனையா என்று உன் வாய்_மலரச்
சோதனையாயினும் சோதனை யா சிற்சுகப் பொருளே

#193
இன்பு அற்ற இச் சிறு வாழ்க்கையிலே வெயில் ஏற வெம்பும்
என்பு அற்ற புன் புழுப் போல் தளர் ஏழை எனினும் இவன்
அன்பு அற்ற பாவி என்று அந்தோ எனை விடில் ஐய வையத்து
என் பற்று-அது ஆக மற்று இல்லை கண்டாய் எனை ஏன்றுகொள்ளே

#194
களம் கொண்ட ஓர் மணிக் காட்சியும் முச்சுடர்க் கண் அருளும்
வளம் கொண்ட தெய்வத் திரு_முக மாட்சியும் வாய்ந்த பரி
மளம் கொண்ட கொன்றைச் சடையும் பொன் சேவடி மாண்பும் ஒன்ற
உளம்கொண்ட புண்ணியர் அன்றோ என்றன்னை உடையவரே

#195
காவிக்கு நேர் மணி_கண்டா வண்டு ஆர் குழல் கற்பு அருளும்
தேவிக்கு வாமம் கொடுத்தோய் நின் மா மலர்ச் சேவடி-பால்
சேவிக்கும் சேவகம்செய்வோரை ஆயினும் சேவிக்க இப்
பாவிக்கு வாய்க்கில் என் ஆவிக்கு நீண்ட பயன் அதுவே

#196
கொங்கு இட்ட கொன்றைச் சடையும் நின் ஓர் பசும் கோமளப் பெண்
பங்கிட்ட வெண் திரு_நீற்று ஒளி மேனியும் பார்த்திடில் பின்
இங்கு இட்ட மாயையை எம் கிட்ட வா என்று இசைப்பினும் போய்ச்
சங்கு இட்ட ஓசையில் பொங்கிட்ட வாய் கொடு தாண்டிடுமே

#197
வெம் பெரு மானுக்குக் கை கொடுத்து ஆண்ட மிகும் கருணை
எம்பெருமானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்_பிடியார்-
தம் பெருமானுக்கும் சார் மலை_மானுக்கும் சாற்றும் ஐங்கைச்
செம்பெருமானுக்கும் எந்தாய்க்கும் நான் பணி செய்யச் செய்யே

#198
சாற்ற அனேக நல் நா உள்ளதாயினும் சாற்ற அரிதாம்
வீற்றவனே வெள்ளி வெற்பவனே அருள் மேவிய வெண்
நீற்றவனே நின் அருள்தர வேண்டும் நெடு முடி வெள்
ஏற்றவனே பலி ஏற்றவனே அன்பர்க்கு ஏற்றவனே

#199
பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம்
திதியே சரணம் சிவமே சரணம் சிவம் உணர்ந்தோர்
கதியே சரணம் என் கண்ணே சரணம் முக்கண் கருணா
நிதியே சரணம் சரணம் என்-பால் மெய் நிலை அருளே

#200
என் உறவே என் குருவே என் உள்ளத்து எழும் இன்பமே
என் உயிரே என்றன் அன்பே நிலைபெற்ற என் செல்வமே
என் அறிவே என்றன் வாழ்வே என் வாழ்வுக்கு இடு முதலே
என் அரசே என் குல_தெய்வமே எனை ஏன்றுகொள்ளே

#201
கான் போல் இருண்ட இ வஞ்சக வாழ்க்கையில் கல்_நெஞ்சமே
மான் போல் குதித்துக்கொண்டு ஓடேல் அமுத மதி விளங்கும்
வான் போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச் செந்
தேன் போல் இனிக்கும் சிவாயநம எனச் சிந்தைசெய்யே

#202
வேதன் என் கோது அற வேண்டும் என் கோ என விண்ணப்பம்செய்
பாதன் என்கோ கடல் பள்ளிகொண்டான் தொழும் பண்பன் என்கோ
நாதன் என்கோ பரநாதன் என்கோ எங்கள் நம்பிக்கு நல்
தூதன் என்கோ அவன் தோழன் என்கோ நினைத் தூய் மணியே

#203
இயங்கா மனமும் கயங்கா நிலையும் இக_பரத்தே
மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்து அருள்வாய்
வயங்கா நிலத்தின் முயங்கா உயர் தவர் வாழ்த்துகின்ற
புயங்கா துதித்தற்கு உயங்காதவர் உள் புகுந்தவனே

#204
சிவசங்கரா சிவயோகா சிவகதிச் சீர் அளிக்கும்
சிவசம்புவே சிவலோகா சிவாநந்தச் செல்வம் நல்கும்
சிவசுந்தரா சிவபோகா சிவாகமச் செந்நெறி சொல்
சிவபுங்கவா சிவஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே

#205
மதி தத்துவாந்த அருள் சிவமே சின்மய சிவமே
துதி சித்து எலாம் வல்ல மெய்ச் சிவமே சிற்சுக சிவமே
கதி நித்த சுத்தச் சிவமே விளங்கு முக்கண் சிவமே
பதி சச்சிதாநந்த சிற்சிவமே எம் பரசிவமே

#206
கடும் புல வேடர்கள் ஓர் ஐவர் இந்தியக் கள்வர் ஐவர்
கொடும் கரணத் துட்டர் நால்வர்கள் வன் மலக் கோளர் ஐவர்
அடும் படை கோடி கொண்டு உற்றார் மற்று ஏழையன் யான் ஒருவன்
இடும் படை யாதும் இலேன் வெல்வது எங்ஙன் இறையவனே

#207
இடை_கொடி வாமத்து இறைவா மெய்ஞ்ஞானிகட்கு இன்பம் நல்கும்
விடைக் கொடி ஏந்தும் வலத்தாய் நின் நாமம் வியந்து உரையார்
கடைக் கொடி போலக் கதறுகின்றார் பொய்_கதையவர்-தாம்
புடைக் கொடியால் அன்றிப் புல்லால் எயிலைப் புனைபவரே

#208
உருமத்திலே பட்ட புன் புழுப் போல் இ உலக நடைக்
கருமத்திலே பட்ட என் மனம்-தான் நின் கழல் அடையும்
தருமத்திலே பட்டது இன்றே என்று எண்ணுந்தனையும் அந்தோ
மருமத்திலே பட்ட வாளியைப் போன்று வருத்துவதே

#209
என் இறைவா இமையோர் இறைவா மறையின் முடி பின்
முன் இறைவா மலை_மின் இறைவா மலர் முண்டகத்தோன்-
தன் இறைவா திதித்தான் இறைவா மெய்த் தபோதனர் உள்
மன் இறைவா இங்கு வா என்று எனக்கு நல் வாழ்வு அருளே

#210
போற்றி என் ஆவித் துணையே என் அன்பில் புகும் சிவமே
போற்றி என் வாழ்வின் பயனே என் இன்பப் புது நறவே
போற்றி என் கண்ணுள் மணியே என் உள்ளம் புனை அணியே
போற்றி என் ஓர் பெரும் தேவே கருணை புரிந்து அருளே

#211
கஞ்சத்தில் ஏர் முகம் அஞ்சத்தில் ஏர் நடைக் கன்னியர் கண்
நஞ்சத்திலே அவர் வஞ்சத்திலே பட்டு நாணுறும் புன்
நெஞ்சத்திலே அதன் தஞ்சத்திலே முக்கணித்த என் போல்
பஞ்சத்திலே பிரபஞ்சத்திலே உழப்பார் எவரே

#212
நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மெய்ஞ்ஞானம் என்னும்
வால் முகக் கண் கொண்டு காணாமல் தம் உரு மாறியும் நின்
தேன் முகக் கொன்றை முடியும் செந்தாமரைச் சேவடியும்
ஊன் முகக் கண் கொண்டு தேடி நின்றார் சற்று உணர்வு_இலரே

#213
இருவர்க்கு அறியப்படாது எழுந்து ஓங்கி நின்று ஏத்துகின்றோர்
கரு வர்க்கம் நீக்கும் கருணை_வெற்பே என் கவலையை இங்கு
ஒருவர்க்கு நான் சொல மாட்டேன் அவர் என் உடையவரோ
வெருவற்க என்று எனை ஆண்டு அருள் ஈது என்றன் விண்ணப்பமே

#214
ஒண் நுதல் ஏழை மடவார்-தம் வாழ்க்கையின் உற்றிடினும்
பண் நுதல் ஏர் மறை ஆயிரம் சூழும் நின் பாதத்தை யான்
எண்ணுதலே தொழிலாகச் செய்வித்து என்னை ஏன்றுகொள்வாய்
கண்_நுதலே கருணை)_கடலே என் கருத்து இதுவே

#215
தளைக்கின்ற மாயக் குடும்பப் பெரும் துயர் தாங்கி அந்தோ
இளைக்கின்ற ஏழைக்கு இரங்கு கண்டாய் சிறிதே இறகு
முளைக்கின்றபோது அறுப்பார் போல் நின் நாமம் மொழிந்திடும் கால்
வளைக்கின்ற மாயைக்கு இங்கு ஆற்றேன் முக்கண் உடை மா மணியே

#216
மஞ்சு அடைவான நிறத்தோன் அயன் முதல் வானவர்க்கா
நஞ்சு அடையாளம் இடும் மிடற்றோய் கங்கை நண்ணுகின்ற
செஞ்சடையாய் நின் திரு_பெயராகச் சிறந்த எழுத்து
அஞ்சு அடையார் கண்கள் பஞ்சடையா முன் அறிவு_இலரே

#217
இலங்காபுரத்தன் இராக்கதர்_மன்னன் இராவணன் முன்
மலங்கா நின் வெள்ளி மலைக் கீழ் இருந்து வருந்த நின் சீர்
கலங்காமல் பாடிடக் கேட்டே இரங்கிக் கருணைசெய்த
நலம் காண் நின் தன்மை இன்று என்னளவு யாண்டையின் நண்ணியதே

#218
உடை என்றும் பூண் என்றும் ஊண் என்றும் நாடி உழன்றிடும் இ
நடை என்றும் சஞ்சலம் சஞ்சலம் காண் இதில் நான் சிறியேன்
புடை என்று வெய்யல் உறும் புழுப் போன்று புழுங்குகின்றேன்
விடை என்று மால் அறம் கொண்டோய் என் துன்பம் விலக்குகவே

#219
அருள் அரசே அருள்_குன்றே மன்று ஆடும் அருள் இறையே
அருள் அமுதே அருள் பேறே நிறைந்த அருள்_கடலே
அருள் அணியே அருள் கண்ணே விண் ஓங்கும் அருள் ஒளியே
அருள் அறமே அருள் பண்பே முக்கண் கொள் அருள் சிவமே

#220
நிலை அறியாத குடும்பத் துயர் என்னும் நீத்தத்திலே
தலை அறியாது விழுந்தேனை ஆண்டு அருள்-தான் அளிப்பாய்
அலை அறியாத கடலே முக்கண் கொண்ட ஆர்_அமுதே
விலை_அறியாத மணியே விடேல் இது என் விண்ணப்பமே

#221
மெய் அகத்தே கணப் போதும் விடாது விரும்புகின்றோர்
கையகத்தே நின்று ஒளிர் கனியே நுதல்_கண் கரும்பே
வையகத்தே நினை அல்லாமல் நல் துணை மற்று இலை இப்
பொய்_அகத்தேன் செயும் தீங்கு ஆயிரமும் பொறுத்து அருளே

#222
முலைக்கு அலங்காரம் இடும் மடவார் மயல் மூடி அவர்
தலைக்கு அலங்கார மலர் சூடுவார் நின்றனை வழுத்தார்
இலைக் கலங்கார் அ இயமன் வந்தால் என் இசைப்பர் வெள்ளி
மலைக்கு அலங்கார மணியே முக்கண் கொண்ட மா மருந்தே

#223
புரிகின்ற வீட்டு அகம் போந்து அடிபட்டுப் புறங்கடையில்
திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம் என் பாவிச் சிறு பிழைப்பைச்
சொரிகின்ற புண்ணில் கனல் இடல் போல் எணும்-தோறும் நெஞ்சம்
எரிகின்றது என் செய்குவேன் பிறை வார் சடை என் அமுதே

#224
மனக் கேதம் மாற்றும் மருந்தே பொது ஒளிர் மாணிக்கமே
கனக் கேது உற என் கருத்து அறியாமல் கழறுகின்ற
தனக் கேளர்-பால் சென்று அடியேன் இதயம் தளர்வது எல்லாம்
நினக்கே தெரிந்தது எனக்கே அருள நினைந்து அருளே

#225
மோகம் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றும் அற்றுத்
தேகம் கலந்த பவம் தீர்க்கும் நின் பதம் சிந்திக்கும் நாள்
போகம் கலந்த திரு_நாள் மலை அற்புதப் பசும்_தேன்
பாகம் கலந்த செம்பாலே நுதல்_கண் பரஞ்சுடரே

#226
கோல் ஒன்று கண்ட இறை_மகன் வாழ்வினும் கோடி பங்கு
மேல் ஒன்று கண்டனம் நெஞ்சே என் சொல்லை விரும்பு இனி அஞ்
சேல் ஒன்று கண்ட_மணியான் வரைப் பசும் தேன் கலந்த
பால் ஒன்று கண்ட கண் கொண்டு உயர் வாழ்வு பலித்ததுவே

#227
புலை அளவோ எனும் நெஞ்சகனேன் துயர்ப் போகம் எட்டு
மலை அளவோ இந்த மண் அளவோ வந்த வான் அளவோ
அலை அளவோ அன்று மன்றுள் நின்று ஓங்கும் அரு_மருந்தே
இலை அளவோ எனும் தேவே அறிந்தும் இரங்கிலையே

#228
கல் என்று வல் என்று மின்னார் புளகக் கன தனத்தைச்
சொல் என்று சொல்லும் முன் சொல்லும் அந்தோ நின் துணை அடி-கண்
நில் என்று பல்ல நிகழ்த்தினும் என் மனம் நிற்பது அன்றே
அல் என்று வெல் களம் கொண்டோய் என் செய்வது அறிந்திலனே

#229
கள் ஆடிய கொன்றைச் செஞ்சடையோய் நல் கனக மன்றின்
உள் ஆடிய மலர்ச் சேவடியோய் இ உலகியல்-கண்
எள் ஆடிய செக்கு இடைப்படல் போல் துன்பிடை இளைத்துத்
தள்ளாடிய நடை கொண்டேற்கு நல் நடை தந்தருளே

#230
மருக் கா மலர்க் குழல் மின்னார் மயல் சண்டமாருதத்தால்
இருக்காது உழலும் என் ஏழை நெஞ்சே இ இடும்பையிலே
செருக்காது உருகிச் சிவாயநம எனத் தேர்ந்து அன்பினால்
ஒரு கால் உரைக்கில் பெருக்காகும் நல் இன்பம் ஓங்கிடுமே

#231
மதிக் கண்ணி வேணிப் பெருந்தகையே நின் மலர்_அடிக்குத்
துதி_கண்ணி சூட்டும் மெய்த் தொண்டரில் சேர்ந்து நின் தூய ஒற்றிப்
பதிக்கு அண்ணி நின்னைப் பணிந்து ஏத்தி உள்ளம் பரவசமாக்
கதிக் கண்ணி வாழும்படி அருளாய் என் கருத்து இதுவே

#232
இரை ஏற்று துன்பக் குடும்ப விகார இருள்_கடலில்
புரை ஏற்று நெஞ்சம் புலர்ந்து நின்றேனைப் பொருட்படுத்திக்
கரையேற்றவேண்டும் என் கண்ணே பவத்தைக் கடி மருந்தே
திரை ஏற்று செம் சடைத் தேவே அமரர் சிகாமணியே

@7. வடிவுடை மாணிக்க மாலை
* காப்பு

#0
சீர் கொண்ட ஒற்றிப் பதி_உடையானிடம் சேர்ந்த மணி
வார் கொண்ட கொங்கை வடிவாம்பிகை-தன் மலர்_அடிக்குத்
தார் கொண்ட செந்தமிழ்ப் பா_மாலை சாத்தத் தமியனுக்கே
ஏர்கொண்ட நல் அருள் ஈயும் குணாலய ஏரம்பனே.
* வடிவுடை மாணிக்க மாலை

#1
கடல் அமுதே செங்கரும்பே அருள் கற்பகக் கனியே
உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே
அடல் விடையார் ஒற்றியார் இடம் கொண்ட அரு_மருந்தே
மடல் அவிழ் ஞான_மலரே வடிவுடை_மாணிக்கமே.

#2
அணியே அணி பெறும் ஒற்றித் தியாகர்-தம் அன்புறு சற்
குணியே எம் வாழ்க்கைக் குல_தெய்வமே மலை_கோன் தவமே
பணியேன் பிழை பொறுத்து ஆட்கொண்ட தெய்வப் பதி கொள் சிந்தா
மணியே என் கண்ணுள் மணியே வடிவுடை_மாணிக்கமே.

#3
மான் நேர் விழி மலை மானே எம்மான் இடம் வாழ் மயிலே
கான் ஏர் அளகப் பசும் குயிலே அருள் கண் கரும்பே
தேனே திருவொற்றி மா நகர் வாழும் சிவ_சத்தியே
வானே கருணை வடிவே வடிவுடை_மாணிக்கமே.

#4
பொருளே அடியர் புகலிடமே ஒற்றிப் பூரணன் தண்
அருளே எம் ஆர்_உயிர்க்காம் துணையே விண்ணவர் புகழும்
தெருளே மெய்ஞ்ஞானத் தெளிவே மறை முடிச் செம்பொருளே
மருள் ஏதம் நீக்கும் ஒளியே வடிவுடை_மாணிக்கமே.

#5
திருமாலும் நான்முகத் தேவும் முன்_நாள் மிகத் தேடி மனத்து
அரு மால் உழக்க அனல் உரு ஆகி அமர்ந்து அருளும்
பெருமான் எம்மான் ஒற்றிப் பெம்மான் கை மான் கொளும் பித்தன் மலை
மருமான் இடம் கொள் பெண் மானே வடிவுடை_மாணிக்கமே.

#6
உன் நேர் அருள் தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
பொன்னே அப் பொன் அற்புத ஒளியே மலர்ப் பொன் வணங்கும்
அன்னே எம் ஆர்_உயிர்க்கு ஓர் உயிரே ஒற்றி அம் பதி வாழ்
மன்னேர் இடம் வளர் மின்னே வடிவுடை_மாணிக்கமே.

#7
கண்ணே அக் கண்ணின் மணியே மணியில் கலந்து ஒளிசெய்
விண்ணே வியன் ஒற்றியூர் அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
பெண்ணே மலை பெறும் பெண் மணியே தெய்வப் பெண் அமுதே
மண் நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#8
மலையான் தவம் செய்து பெற்ற முத்தே ஒற்றி வாழ் கனகச்
சிலையான் மணக்க மணக்கும் தெய்வீகத் திரு_மலரே
அலையால் மலி கடல் பள்ளிகொண்டான் தொழும் ஆர்_அமுதே
வலையான் அருமை மகளே வடிவுடை_மாணிக்கமே.

#9
காமம் படர் நெஞ்சு_உடையோர் கனவினும் காணப்படாச்
சேமம் படர் செல்வப் பொன்னே மதுரச் செழும் கனியே
தாமம் படர் ஒற்றியூர் வாழ் பவளத் தனி மலையின்
வாமம் படர் பைங்கொடியே வடிவுடை_மாணிக்கமே.

#10
கோடா அருள் குண_குன்றே சிவத்தில் குறிப்பு_இலரை
நாடாத ஆனந்த நட்பே மெய் அன்பர் நயக்கும் இன்பே
பீடு ஆர் திருவொற்றிப் பெம்மான் இடம் செய் பெரும் தவமே
வாடா மணி மலர்க் கொம்பே வடிவுடை_மாணிக்கமே.

#11
நாலே எனும் மறை அந்தங்கள் இன்னமும் நாடி எனைப்
போலே வருந்த வெளி ஒளியாய் ஒற்றிப் புண்ணியர்-தம்
பாலே இருந்த நினைத் தங்கையாகப் பகரப்பெற்ற
மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை_மாணிக்கமே.

#12
கங்கை_கொண்டோன் ஒற்றியூர் அண்ணல் வாமம் கலந்து அருள்செய்
நங்கை எல்லா உலகும் தந்த நின்னை அ நாரணற்குத்
தங்கை என்கோ அன்றித் தாயர் என்கோ சொல் தழைக்கும் மலை
மங்கை அம் கோமள மானே வடிவுடை_மாணிக்கமே.

#13
சோலையிட்டு ஆர் வயல் ஊர் ஒற்றி வைத்துத் தன் தொண்டர் அன்பின்
வேலையிட்டால் செயும் பித்தனை மெய்யிடை மேவு கரித்
தோலையிட்டு ஆடும் தொழில்_உடையோனைத் துணிந்து முன்_நாள்
மாலையிட்டாய் இஃது என்னே வடிவுடை_மாணிக்கமே.

#14
தனை ஆள்பவர் இன்றி நிற்கும் பரமன் தனி அருளாய்
வினை ஆள் உயிர் மலம் நீக்கி மெய் வீட்டின் விடுத்திடும் நீ
எனை ஆள் அருள் ஒற்றியூர் வாழ் அவன்றன்னிடத்தும் ஒரு
மனையாள் என நின்றது என்னே வடிவுடை_மாணிக்கமே.

#15
பின் ஈன்ற பிள்ளையின் மேல் ஆர்வம் தாய்க்கு எனப் பேசுவர் நீ
முன் ஈன்ற பிள்ளையின் மேல் ஆசை உள்ளவா மொய் அசுரர்
கொன் ஈன்ற போர்க்கு இளம்பிள்ளையை ஏவக் கொடுத்தது என்னே
மன் ஈன்ற ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#16
பை ஆளும் அல்குல் சுரர் மடவார்கள் பலருளும் இச்
செய்யாளும் வெண்ணிற_மெய்யாளும் எத் தவம் செய்தனரோ
கையாளும் நின் அடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய்
மை ஆளும் கண் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#17
இலை ஆற்றும் நீ மலர்_காலால் பணிக்கும் குற்றேவல் எலாம்
தலையால் செயும் பெண்கள் பல்லோரில் பூ_மகள்-தன்னைத் தள்ளாய்
நிலையால் பெரிய நின் தொண்டர்-தம் பக்கம் நிலாமையினால்
மலையாற்கு அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#18
கலை_மகளோ நின் பணியை அன்போடும் கடைப்பிடித்தாள்
அலை_மகளோ அன்பொடு பிடித்தாள் எற்கு அறைதி கண்டாய்
தலை_மகளே அருள் தாயே செவ் வாய்க் கரும் தாழ் குழல் பொன்
மலை_மகளே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#19
பொன்னோடு வாணி என்போர் இருவோரும் பொருள் நல் கல்வி-
தன்னோடு அருளும் திறம் நின் குற்றேவலைத் தாங்கிநின்ற
பின்னோ அலது அதன் முன்னோ தெளிந்திடப் பேசுக நீ
மன்னோடு எழில் ஒற்றியூர் வாழ் வடிவுடை_மாணிக்கமே.

#20
கா மட்டு அலர் திருவொற்றி நின் நாயகன் கந்தை சுற்றி
ஏம் அட்ட அரையொடு நிற்பது கண்டும் இரங்கலர் போல்
நீ மட்டுமே பட்டு உடுக்கின்றனை உன்றன் நேயம் என்னோ
மா மட்டு அலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

#21
வீற்று ஆர் நின்றன் மணத்து அம்மியின் மேல் சிறு மெல் அனிச்சம்
ஆற்றா நின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத்தார் எனின் மால்
ஏற்றார் திருவொற்றியூரார் களக் கறுப்பு ஏற்றவரே
மாற்றா இயல் கொள் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#22
பொருப்பு உறு நீலி என்பார் நின்னை மெய் அது போலும் ஒற்றி
விருப்புறு நாயகன் பாம்பாபரணமும் வெண் தலையும்
நெருப்பு உறு கையும் கனல் மேனியும் கண்டு நெஞ்சம் அஞ்சாய்
மருப்பு உறு கொங்கை மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#23
அனம்_பொறுத்தான் புகழ் ஒற்றி நின் நாயகன் அம் குமிழித்
தனம்_பொறுத்தாள் ஒரு மாற்றாளைத் தன் முடி-தன்னில் வைத்தே
தினம் பொறுத்தான் அது கண்டும் சினம் இன்றிச் சேர்ந்த நின் போல்
மனம் பொறுத்தார் எவர் கண்டாய் வடிவுடை_மாணிக்கமே.

#24
ஓர் உருவாய் ஒற்றியூர் அமர்ந்தார் நின்னுடையவர் பெண்
சீர் உரு ஆகும் நின் மாற்றாளை நீ தெளியாத் திறத்தில்
நீர் உரு ஆக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே
வாருரு வார் கொங்கை நங்காய் வடிவுடை_மாணிக்கமே.

#25
சார்ந்தே நின்-பால் ஒற்றியூர் வாழும் நாயகர் தாம் மகிழ்வு
கூர்ந்தே குலாவும் அக் கொள்கையைக் காணில் கொதிப்பள் என்று
தேர்ந்தே அக் கங்கையைச் செம் சடை மேல் சிறைசெய்தனர் ஒண்
வார்ந்தே குழை கொள் விழியாய் வடிவுடை_மாணிக்கமே.

#26
நீயே எனது பிழை குறிப்பாய் எனில் நின் அடிமைப்
பேயேன் செயும் வண்ணம் எவ்வண்ணமோ எனைப் பெற்று அளிக்கும்
தாயே கருணைத் தடம் கடலே ஒற்றிச் சார் குமுத
வாய் ஏர் சவுந்தர மானே வடிவுடை_மாணிக்கமே.

#27
முப்போதும் அன்பர்கள் வாழ்த்து ஒற்றியூர் எம் முதல்வர் மகிழ்
ஒப்பு ஓத அரும் மலைப் பெண் அமுதே என்று வந்து நினை
எப்போதும் சிந்தித்து இடர் நீங்கி வாழ எனக்கு அருள்வாய்
மைப் போது அனைய கண் மானே வடிவுடை_மாணிக்கமே.

#28
மீதலத்தோர்களுள் யார் வணங்காதவர் மேவு நடுப்
பூதலத்தோர்களுள் யார் புகழாதவர் போற்றி நிதம்
பாதலத்தோர்களுள் யார் பணியாதவர் பற்றி நின்றாள்
மா தலத்து ஓங்கு ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#29
சேய்க் குற்றம் தாய் பொறுத்து ஏடா வருக எனச் செப்புவள் இ
நாய்க் குற்றம் நீ பொறுத்து ஆளுதல் வேண்டும் நவில் மதியின்
தேய்க் குற்றம் மாற்றும் திருவொற்றி_நாதர்-தம் தேவி அன்பர்
வாய்க் குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#30
செங்கமலாசனன்_தேவி பொன்_நாணும் திரு முதலோர்
சங்கம்-அதாம் மிடற்று ஓங்கு பொன்_நாணும் தலைகுனித்துத்
துங்கமுறாது உளம் நாணத் திருவொற்றி_தோன்றல் புனை
மங்கலநாண்_உடையாளே வடிவுடை_மாணிக்கமே.

#31
சேடு ஆர் இயல் மணம் வீசச் செயல் மணம் சேர்ந்து பொங்க
ஏடு ஆர் பொழில் ஒற்றியூர் அண்ணல் நெஞ்சம் இருந்து உவக்க
வீடா இருளும் முகிலும் பின்னிட்டு வெருவவைத்த
வாடா_மலர்க் குழலாளே வடிவுடை_மாணிக்கமே.

#32
புரம் நோக்கினால் பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர் களக்
கரம் நோக்கி நல் அமுது ஆக்கி நின் போற்றும் கருத்தினர் ஆ
தரம் நோக்கி உள் இருள் நீக்கி மெய்ஞ்ஞானத் தனிச் சுகம்-தான்
வர நோக்கி ஆள் விழி மானே வடிவுடை_மாணிக்கமே.

#33
உன்னும் திருவொற்றியூர்_உடையார் நெஞ்சு உவப்ப எழில்
துன்னும் உயிர்ப் பயிர் எல்லாம் தழைக்கச் சுகக் கருணை
என்னும் திரு_அமுது ஓயாமல் ஊற்றி எமது உளத்தின்
மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#34
வெள்ளம் குளிரும் சடை_முடியோன் ஒற்றி வித்தகன்-தன்
உள்ளம் குளிர மெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
தெள்ளம் குளிர் இன் அமுதே அளிக்கும் செவ் வாய்க் குமுத
வள்ளம் குளிர் முத்த மானே வடிவுடை_மாணிக்கமே.

#35
மா நந்தம் ஆர் வயல் காழிக் கவுணியர் மா மணிக்கு அன்று
ஆநந்த இன் அமுது ஊற்றும் திரு_முலை ஆர்_அணங்கே
கா நந்த ஓங்கும் எழில் ஒற்றியார் உள் களித்து இயலும்
வானம் தரும் இடை மானே வடிவுடை_மாணிக்கமே.

#36
வான் தேட நான்கு மறை தேட மாலுடன் வாரிச_மே
லான் தேட மற்றை அரும் தவர் தேட என் அன்பு இன்மையால்
யான் தேட என் உளம் சேர் ஒற்றியூர் எம் இரு_நிதியே
மான் தேடும் வாள் கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#37
முத்தேவர் விண்ணன் முதல் தேவர் சித்தர் முனிவர் மற்றை
எத்தேவரும் நின் அடி நினைவார் நினைக்கின்றிலர் தாம்
செத்தே பிறக்கும் சிறியர் அன்றோ ஒற்றித் தேவர் நல் தா
மத் தேவர் வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#38
திரு_நாள் நினைத் தொழும் நல் நாள் தொழாமல் செலுத்திய நாள்
கரு நாள் என மறை எல்லாம் புகலும் கருத்து அறிந்தே
ஒருநாளினும் நின்றனை மறவார் அன்பர் ஒற்றியில் வாழ்
மரு நாள்_மலர்க் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

#39
வாணாள் அடைவர் வறுமையுறார் நல் மனை மக்கள் பொன்
பூண் ஆள் இடம் புகழ் போதம் பெறுவர் பின் புன்மை ஒன்றும்
காணார் நின் நாமம் கருதுகின்றோர் ஒற்றிக் கண்_நுதல்-பால்
மாண் ஆர்வம் உற்ற மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#40
சீர் அறிவாய்த் திருவொற்றிப் பரமசிவத்தை நினைப்
போர் அறிவாய் அ அறிவாம் வெளிக்கு அப்புறத்து நின்றாய்
யார் அறிவார் நின்னை நாயேன் அறிவது அழகு உடைத்தே
வார் எறி பூண் முலை மானே வடிவுடை_மாணிக்கமே.

#41
போற்றிடுவோர்-தம் பிழை ஆயிரமும் பொறுத்து அருள்செய்
வீற்று ஒளிர் ஞான விளக்கே மரகத மென் கரும்பே
ஏற்று ஒளிர் ஒற்றி_இடத்தார் இடத்தில் இலங்கும் உயர்
மாற்று ஒளிரும் பசும்பொன்னே வடிவுடை_மாணிக்கமே

#42
ஆசை_உள்ளார் அயன் மால் ஆதி தேவர்கள் யாரும் நின் தாள்
பூசை உள்ளார் எனில் எங்கே உலகர் செய் பூசை கொள்வார்
தேசை உள்ளார் ஒற்றியூர்_உடையார் இடம் சேர் மயிலே
மாசை உள்ளார் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே.

#43
அண்டாரை வென்று உலகு ஆண்டு மெய்ஞ்ஞானம் அடைந்து விண்ணில்
பண் தாரை சூழ் மதி போல் இருப்போர்கள் நின் பத்தர் பதம்
கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்_நுதல் சேர்
வண் தாரை வேல் அன்ன மானே வடிவுடை_மாணிக்கமே.

#44
அடியார் தொழும் நின் அடிப் பொடி தான் சற்று அணியப்பெற்ற
முடியால் அடிக்குப் பெருமை பெற்றார் அ முகுந்தன் சந்தக்
கடி ஆர் மலர் அயன் முன்னோர் தென் ஒற்றிக் கடவுள் செம்பால்
வடியாக் கருணைக் கடலே வடிவுடை_மாணிக்கமே.

#45
ஓவாது அயன் முதலோர் முடி கோடி உறழ்ந்துபடில்
ஆஆ அனிச்சம் பொறா மலர்ச் சிற்றடி ஆற்றும்-கொலோ
காவாய் இமயப் பொன் பாவாய் அருள் ஒற்றிக் காமர் வல்லி
வாவா எனும் அன்பர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#46
இட்டு ஆர் மறைக்கும் உபநிடதத்திற்கும் இன்னும் சற்றும்
எட்டா நின் பொன்_அடிப் போது எளியேன் தலைக்கு எட்டும்-கொலோ
கட்டு ஆர் சடை முடி ஒற்றி எம்மான் நெஞ்சகத்து அமர்ந்த
மட்டு ஆர் குழல் மட மானே வடிவுடை_மாணிக்கமே.

#47
வெளியாய் வெளிக்குள் வெறுவெளியாய்ச் சிவமே நிறைந்த
ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரை நினை ஒப்பவர் ஆர்
எளியார்க்கு எளியர் திருவொற்றியார் மெய் இனிது பரி
மளியாநின்று ஓங்கும் மருவே வடிவுடை_மாணிக்கமே.

#48
விண் அம் காதல் அன்பர்-தம் அன்பிற்கும் நின் புலவிக்கும் அன்றி
வணங்கா மதி முடி எங்கள் பிரான் ஒற்றி_வாணனும் நின்
குணம் காதலித்து மெய்க்கூறு தந்தான் எனக் கூறுவர் உன்
மணம் காதலித்தது அறியார் வடிவுடை_மாணிக்கமே.

#49
பன்னும் பல்வேறு அண்டம் எல்லாம் அ அண்டப் பரப்பினின்று
துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை
இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பது என்னே
மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#50
சினம்_கடந்தோர் உள்ளச் செந்தாமரையில் செழித்து மற்றை
மனம் கடந்து ஓதும் அ வாக்கும் கடந்த மறை அன்னமே
தினம் கடந்தோர் புகழ் ஒற்றி எம்மான் இடம் சேர் அமுதே
வனம்_கடந்தோன் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே.

#51
வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர் முதல்
எல்லாரும் நின் செயல் அல்லாது அணுவும் இயக்கிலரேல்
இல்லாமையால் உழல் புல்லேன் செய் குற்றங்கள் ஏது கண்டாய்
மல் ஆர் வயல் ஒற்றி நல்லாய் வடிவுடை_மாணிக்கமே.

#52
எழுதா எழில் உயிர்ச் சித்திரமே இன் இசைப் பயனே
தொழுது ஆடும் அன்பர்-தம் உள் களிப்பே சிற்சுக_கடலே
செழு ஆர் மலர்ப் பொழில் ஒற்றி எம்மான்-தன் திரு_துணையே
வழுவா மறையின் பொருளே வடிவுடை_மாணிக்கமே.

#53
தெருள் பால் உறும் ஐங்கை_செல்வர்க்கும் நல் இளம் சேய்க்கும் மகிழ்ந்து
அருள்_பால் அளிக்கும் தனத் தனமே எம் அகம் கலந்த
இருள் பால் அகற்றும் இரும் சுடரே ஒற்றி எந்தை உள்ளம்
மருள் பால் பயிலும் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#54
அயில் ஏந்தும் பிள்ளை நல் தாயே திருவொற்றி ஐயர் மலர்க்
கயில் ஏந்து அரும்_பெறல் முத்தே இசையில் கனிந்த குரல்
குயிலே குயின் மென் குழல் பிடியே மலை_கோன் பயந்த
மயிலே மதி முக மானே வடிவுடை_மாணிக்கமே.

#55
செய்யகம் ஓங்கும் திருவொற்றியூரில் சிவபெருமான்
மெய்யகம் ஓங்கு நல் அன்பே நின்-பால் அன்பு மேவுகின்றோர்
கையகம் ஓங்கும் கனியே தனி மெய்க் கதி நெறியே
வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை_மாணிக்கமே.

#56
தரும் பேர் அருள் ஒற்றியூர்_உடையான் இடம் சார்ந்த பசுங்
கரும்பே இனிய கற்கண்டே மதுரக் கனி நறவே
இரும் பேய் மனத்தினர்-பால் இசையாத இளம் கிளியே
வரும் பேர் ஒளிச் செம் சுடரே வடிவுடை_மாணிக்கமே.

#57
சேல் ஏர் விழி அருள் தேனே அடியர் உள் தித்திக்கும் செம்
பாலே மதுரச் செம் பாகே சொல் வேதப் பனுவல் முடி
மேலே விளங்கும் விளக்கே அருள் ஒற்றி வித்தகனார்
மாலேகொளும் எழில் மானே வடிவுடை_மாணிக்கமே.

#58
எம்-பால் அருள்வைத்து எழில் ஒற்றியூர் கொண்டிருக்கும் இறைச்
செம் பால் கலந்த பைந்தேனே கதலிச் செழும் கனியே
வெம் பாலை நெஞ்சர் உள் மேவா மலர்ப் பத மென் கொடியே
வம்பால் அணி முலை மானே வடிவுடை_மாணிக்கமே.

#59
ஏமம் உய்ப்போர் எமக்கு என்றே இளைக்கில் எடுக்கவைத்த
சேம வைப்பே அன்பர் தேடும் மெய்ஞ்ஞானத் திரவியமே
தாமம் அமைக் கார் மலர்க் கூந்தல் பிடி மென் தனி நடையாய்
வாம நல் சீர் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே.

#60
மன் ஏர் மலையன்_மனையும் நல் காஞ்சனமாலையும் நீ
அன்னே எனத் திருவாயால் அழைக்கப்பெற்றார் அவர்-தாம்
முன்னே அரும் தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி
வல் நேர் இளம் முலை மின்னே வடிவுடை_மாணிக்கமே.

#61
கணம் ஒன்றிலேனும் என் உள்ளக் கவலை_கடல் கடந்தே
குணம் ஒன்று இலேன் எது செய்கேன் நின் உள்ளக் குறிப்பு அறியேன்
பணம் ஒன்று பாம்பு அணி ஒற்றி எம்மானிடப் பாலில் தெய்வ
மணம் ஒன்று பச்சைக் கொடியே வடிவுடை_மாணிக்கமே.

#62
கரு வேதனை அற என் நெஞ்சகத்தில் களிப்பொடு ஒற்றிக்
குருவே எனும் நின் கணவனும் நீயும் குலவும் அந்தத்
திருவே அருள் செந்திருவே முதல் பணி செய்யத் தந்த
மருவே மருவு மலரே வடிவுடை_மாணிக்கமே.

#63
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்கு உன் அருள்
பண்ணிய உள்ளம் கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
புண்ணிய மல்லிகைப் போதே எழில் ஒற்றிப் பூரணர் பால்
மண்ணிய பச்சை மணியே வடிவுடை_மாணிக்கமே.

#64
தீது செய்தாலும் நின் அன்பர்கள்-தம் முன் செருக்கி நின்று
வாதுசெய்தாலும் நின் தாள் மறந்தாலும் மதி_இலியேன்
ஏது செய்தாலும் பொறுத்து அருள்வாய் ஒற்றியின்னிடைப் பூ_
மாது செய் தாழ் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

#65
மருந்தில் நின்றான் ஒற்றியூர் வாழும் நின்றன் மகிழ்நன் முன்னும்
திருந்தி நின்றார் புகழ் நின் முன்னும் நல் அருள் தேன் விழைந்தே
விருந்தில் நின்றேன் சற்றும் உள் இரங்காத விதத்தைக் கண்டு
வருந்தி நின்றேன் இது நன்றோ வடிவுடை_மாணிக்கமே.

#66
என் போல் குணத்தில் இழிந்தவர் இல்லை எப்போதும் எங்கும்
நின் போல் அருளில் சிறந்தவர் இல்லை இ நீர்மையினால்
பொன் போலும் நின் அருள் அன்னே எனக்கும் புரிதி கண்டாய்
மன் போல் உயர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#67
துன்பே மிகும் இ அடியேன் மனத்தில் நின் துய்ய அருள்
இன்பே மிகுவது எந்நாளோ எழில் ஒற்றி எந்தை உயிர்க்கு
அன்பே மெய்த் தொண்டர் அறிவே சிவ நெறிக்கு அன்பு_இலர்-பால்
வன்பே மெய்ப் போத வடிவே வடிவுடை_மாணிக்கமே.

#68
சற்றே எனினும் என் நெஞ்சத் துயரம் தவிரவும் நின்
பொன் தே மலர்_பதம் போற்றவும் உள்ளம் புரிதி கண்டாய்
சொல் தேர் அறிஞர் புகழ் ஒற்றி மேவும் துணைவர்-தம் செம்
மல் தேர் புயத்து அணை மானே வடிவுடை மாணிக்கமே.

#69
சந்தோடமாப் பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால்
அந்தோ ஒரு தமியேன் மட்டும் வாடல் அருட்கு அழகோ
நம் தோடம் நீக்கிய நங்காய் எனத் திரு நான்முகன் மால்
வந்து ஓதும் ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#70
அடியேன் மிசை எப் பிழை இருந்தாலும் அவை பொறுத்துச்
செடி ஏதம் நீக்கி நல் சீர் அருள்வாய் திகழ் தெய்வ மறைக்
கொடியே மரகதக் கொம்பே எழில் ஒற்றிக் கோமளமே
வடி ஏர் அயில் விழி மானே வடிவுடை_மாணிக்கமே.

#71
கண்ணப்பன் ஏத்தும் நல் காளத்தியார் மங்கலம் கொள் ஒற்றி
நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நல் நறவே
எண்ணப்படா எழில் ஓவியமே எமை ஏன்றுகொண்ட
வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை_மாணிக்கமே.

#72
கற்பே விகற்பம் கடியும் ஒன்றே எங்கள் கண் நிறைந்த
பொற்பே மெய்த் தொண்டர்-தம் புண்ணியமே அருள் போத இன்பே
சொல் பேர் அறிவுள் சுகப் பொருளே மெய்ச் சுயம் சுடரே
மல் பேர் பெறும் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே.

#73
மிகவே துயர்_கடல் வீழ்ந்தேனை நீ கைவிடுதல் அருள்
தகவே எனக்கு நல் தாயே அகில சராசரமும்
சுக வேலை மூழ்கத் திருவொற்றியூரிடம் துன்னிப் பெற்ற
மகவே எனப் புரக்கின்றோய் வடிவுடை_மாணிக்கமே.

#74
வேதங்களாய் ஒற்றி மேவும் சிவத்தின் விளைவு அருளாய்ப்
பூதங்களாய்ப் பொறியாய்ப் புலனாகிப் புகல் கரண
பேதங்களாய் உயிர் ஆகிய நின்னை இப் பேதை என் வாய்
வாதங்களால் அறிவேனோ வடிவுடை_மாணிக்கமே.

#75
மதியே மதி முக மானே அடியர் மனத்து வைத்த
நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள் நிலையே
கதியே கதி வழி காட்டும் கண்ணே ஒற்றிக் காவலர் பால்
வதி ஏர் இள மட மானே வடிவுடை_மாணிக்கமே.

#76
ஆறாத் துயரத்து அழுந்துகின்றேனை இங்கு அஞ்சல் என்றே
கூறாக் குறை என் குறையே இனி நின் குறிப்பு அறியேன்
தேறாச் சிறியர்க்கு அரிதாம் திருவொற்றித் தேவர் மகிழ்
மாறாக் கருணை_மழையே வடிவுடை_மாணிக்கமே.

#77
எற்றே நிலை ஒன்றும் இல்லாது உயங்கும் எனக்கு அருளச்
சற்றே நின் உள்ளம் திரும்பிலை யான் செயத்தக்கது என்னே
சொல் தேன் நிறை மறைக் கொம்பே மெய்ஞ்ஞானச் சுடர்க் கொழுந்தே
மல் தேர் அணி ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#78
செவ் வேலை வென்ற கண் மின்னே நின் சித்தம் திரும்பி எனக்கு
எவ்வேலை செய் என்றிடினும் அ வேலை இயற்றுவல் காண்
தெவ் வேலை வற்றச்செய் அ வேலை ஈன்று ஒற்றித் தேவர் நெஞ்சை
வவ்வு ஏல வார் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

#79
தாயே மிகவும் தயவு_உடையாள் எனச் சாற்றுவர் இச்
சேயேன் படும் துயர் நீக்க என்னே உளம் செய்திலையே
நாயேன் பிழை இனி நாடாது நல் அருள் நல்க வரு
வாயே எம் ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#80
நானே நினைக் கடியேன் என் பிழைகளை நாடிய நீ
தானே எனை விடில் அந்தோ இனி எவர் தாங்குகின்றோர்
தேனே நல் வேதத் தெளிவே கதிக்குச் செலு நெறியே
வான் ஏர் பொழில் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே.

#81
கல்லாரிடத்தில் என் இல்லாமை சொல்லிக் கலங்கி இடா
நல்லாண்மை உண்டு அருள் வல்லாண்மை உண்டு எனின் நல்குவையோ
வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி_வாணரொடு
மல் ஆர் பொழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#82
சுந்தர வாள் முகத் தோகாய் மறைகள் சொலும் பைங்கிள்ளாய்
கந்தர வார் குழல் பூவாய் கருணைக் கடைக்கண் நங்காய்
அந்தர நேர் இடைப் பாவாய் அருள் ஒற்றி அண்ணல் மகிழ்
மந்தர நேர் கொங்கை மங்காய் வடிவுடை_மாணிக்கமே.

#83
பத்தர்-தம் உள்ளத் திரு_கோயில் மேவும் பரம் பரையே
சுத்த மெய்ஞ்ஞான ஒளிப் பிழம்பே சிற்சுகாநந்தமே
நித்தம் நின் சீர் சொல எற்கு அருள்வாய் ஒற்றி நின் மலர் உன்
மத்தர்-தம் வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#84
பூவாய் மலர்க் குழல் பூவாய் மெய் அன்பர் புனைந்த தமிழ்ப்
பாவாய் நிறைந்த பொன் பாவாய் செந்தேனில் பகர் மொழியாய்
காவாய் என அயன் கா_ஆய்பவனும் கருதும் மலர்
மா வாய் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#85
தாதா உணவு உடை தாதா எனப் புல்லர்-தம்மிடைப் போய்
மா தாகம் உற்றவர் வன் நெஞ்சில் நின் அடி வைகும்-கொலோ
காது ஆர் நெடும் கண் கரும்பே நல் ஒற்றிக் கருத்தர் நட
வாதாரிடம் வளர் மாதே வடிவுடை_மாணிக்கமே.

#86
களம் திரும்பா இக் கடையேனை ஆளக் கருணைகொண்டு உன்
உளம் திரும்பாமைக்கு என் செய்கேன் துயர்_கடலூடு அலைந்தேன்
குளம் திரும்பா விழிக் கோமானொடும் தொண்டர் கூட்டமுற
வளம் திரும்பா ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#87
ஆரணம் பூத்த அருள் கோமளக் கொடி அந்தரி பூந்
தோரணம் பூத்த எழில் ஒற்றியூர் மகிழ் சுந்தரி சற்
காரணம் பூத்த சிவை பார்ப்பதி நம் கவுரி என்னும்
வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை_மாணிக்கமே.

#88
திரு_வல்லி ஏத்தும் அபிடேக_வல்லி எம் சென்னியிடை
வரு வல்லி கற்பக_வல்லி ஒண் பச்சை மணி_வல்லி எம்
கரு வல்லி நீக்கும் கருணாம்பக_வல்லி கண்கொள் ஒற்றி
மரு வல்லி என்று மறை தேர் வடிவுடை_மாணிக்கமே.

#89
உடை என்ன ஒண் புலித்தோல்_உடையார் கண்டு உவக்கும் இள
நடை அன்னமே மலர்ப் பொன் முதலாம் பெண்கள் நாயகமே
படை அன்ன நீள் விழி மின் நேர் இடைப் பொன் பசுங்கிளியே
மடை மன்னும் நீர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#90
கற்பதும் கேட்பதும் எல்லாம் நின் அற்புதக் கஞ்ச_மலர்ப்
பொன்_பதம் காணும் பொருட்டு என எண்ணுவர் புண்ணியரே
சொல் பதமாய் அவைக்கு அப்புறமாய் நின்ற தூய்ச் சுடரே
மல் பதம் சேர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#91
நின்னால் எனக்கு உள எல்லா நலனும் நினை அடைந்த
என்னால் உனக்கு உளது என்னை கண்டாய் எமை ஈன்றவளே
முன் நால்வருக்கு அருள் ஒற்றி எம்மான் கண் முழு மணியே
மன் நான்மறையின் முடிவே வடிவுடை_மாணிக்கமே.

#92
நன்றே சிவநெறி நாடும் மெய்த் தொண்டர்க்கு நன்மை செய்து
நின்றே நின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈது
என்றே முடிகுவது இன்றே முடியில் இனிது கண்டாய்
மன்று ஏர் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#93
அத்தனை ஒற்றிக்கு இறைவனை அம்பலத்து ஆடுகின்ற
முத்தனைச் சேர்ந்த ஒண் முத்தே மதிய முக அமுதே
இத்தனை என்று அளவு ஏலாத குற்றம் இழைத்திடும் இ
மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை_மாணிக்கமே.

#94
கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும் என்
தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திரு_செவியில்
ஏறாத வண்ணம் என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின்
மாறாது அமர்ந்த மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#95
ஓயா இடர்கொண்டு உலைவேனுக்கு அன்பர்க்கு உதவுதல் போல்
ஈயாவிடினும் ஓர் எள்ளளவேனும் இரங்கு கண்டாய்
சாயா அருள்தரும் தாயே எழில் ஒற்றித் தற்பரையே
மாயா நலம் அருள் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#96
பெரும் பேதையேன் சிறு வாழ்க்கைத் துயர் எனும் பேர் அலையில்
துரும்பே என அலைகின்றேன் புணை நின் துணை பதமே
கரும்பே கருணைக் கடலே அருள் முக்கனி நறவே
வரும் பேர் அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#97
காதரவால் உள் கலங்கி நின்றேன் நின் கடைக்கண் அருள்
ஆதரவால் மகிழ்கின்றேன் இனி உன் அடைக்கலமே
சீதரன் ஏத்தும் திருவொற்றி_நாதர்-தம் தேவி எழில்
மாதரசே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#98
பொன்_உடையார் அன்றிப் போற்றும் நல் கல்விப் பொருள்_உடையார்
என்_உடையார் என ஏசுகின்றார் இஃது என்னை அன்னே
மின்_உடையாய் மின்னில் துன் இடையாய் ஒற்றி மேவும் முக்கண்
மன்_உடையாய் என்னுடையாய் வடிவுடை_மாணிக்கமே.

#99
பொய்விட்டிடாதவன் நெஞ்சகத்தேனைப் புலம்பும் வண்ணம்
கைவிட்டிடாது இன்னும் காப்பாய் அது நின் கடன் கரும்பே
மெய்விட்டிடார் உள் விளை இன்பமே ஒற்றி வித்தகமே
மை விட்டிடா விழி மானே வடிவுடை_மாணிக்கமே.

#100
நேயானுகூல மனம்_உடையாய் இனி நீயும் என்றன்
தாய் ஆகில் யான் உன் தனையனும் ஆகில் என்றன் உளத்தில்
ஓயாது உறும் துயர் எல்லாம் தவிர்த்து அருள் ஒற்றியில் செவ்
வாய் ஆர் அமுத வடிவே வடிவுடை_மாணிக்கமே.

#101
வாழி நின் சேவடி போற்றி நின் பூம்_பத வாரிசங்கள்
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர்
வாழி என் உள்ளத்தில் நீயும் நின் ஒற்றி மகிழ்நரும் நீ
வாழி என் ஆர் உயிர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

@8. இங்கித மாலை காப்பு

#0
ஒரு மா_முகனை ஒரு மாவை ஊர் வாகனமாய் உற நோக்கித்
திருமால் முதலோர் சிறுமை எலாம் தீர்த்து எம் இரு கண்மணியாகிக்
கரு மால் அகற்றும் கணபதியாம் கடவுள் அடியும் களித்து அவர் பின்
வரும் மா கருணை_கடல் குமர வள்ளல் அடியும் வணங்குவாம்.
* இங்கித மாலை

#1
திரு ஆர் கமலத் தடம் பணை சூழ் செல்வப் பெருஞ் சீர் ஒற்றியில் வாழ்
மரு ஆர் கொன்றைச் சடை முடி கொள் வள்ளல் இவர்க்குப் பலி கொடு நான்
ஒரு வாது அடைந்தேன் இனி நமக்கு இங்கு உதவ வரும்-தோறு உன் முலை மேல்
இரு வார் இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#2
தண் ஆர் மலரை மதி நதியைத் தாங்குஞ் சடையார் இவர்-தமை நான்
அண்ணால் ஒற்றி இருந்தவரே ஐயரே நீர் யார் என்றேன்
நண்ணாரிடத்தும் அம்பலத்தும் நடவாதவர் நாம் என்று சொலி
எண்ணாது அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#3
பிட்டின் நதி மண் சுமந்த ஒற்றிப் பிச்சைத் தேவர் இவர்-தமை நான்
தட்டு இல் மலர்க் கை-இடத்து எது ஓதனத்தைப் பிடியும் என்று உரைத்தேன்
மட்டு இன் ஒரு மூன்று உடன் ஏழு மத்தர் தலை ஈது என்று சொலி
எட்டி முலையைப் பிடிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#4
மடையில் கயல் பாய் ஒற்றி நகர் வள்ளல் ஆகும் இவர்-தமை நான்
அடையில் கனிவால் பணி என்றே அருளீர் உரி ஈர் உடை என்றேன்
கடையில் படும் ஓர் பணி என்றே கருதி உரைத்தேம் என்று உரைத்து என்
இடையில் கலையை உரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#5
மன்றல் மணக்கும் ஒற்றி நகர் வாணர் ஆகும் இவர்-தமை நான்
நின்று அன்பொடும் கை ஏந்து அனத்தை ஏற்று ஓர் கலத்தில் கொளும் என்றேன்
நன்று அன்பு_உடையாய் எண் கலத்தில் நாம் கொண்டிடுவேம் என்று சொலி
என்றன் முலையைத் தொடுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#6
கோமாற்கு அருளும் திருவொற்றிக் கோயில்_உடையார் இவரை மத_
மா மாற்றிய நீர் ஏகல் அவி மகிழ்ந்து இன்று அடியேன் மனையினிடைத்
தாம் மாற்றிடக் கொண்டு ஏகும் என்றேன் தா என்றார் தந்தால் என்னை
ஏமாற்றினையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#7
அ மால் அயனும் காண்ப அரியீர்க்கு அமரும் பதி-தான் யாது என்றேன்
இ மால்_உடையாய் ஒற்றுதற்கு ஓர் எச்சம்-அது கண்டு அறி என்றார்
செம்மால் இஃது ஒன்று என் என்றேன் திருவே புரி மேல் சேர்கின்ற
எம்மால் மற்றொன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#8
கண்கள் களிப்ப ஈண்டு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி அதாம்
பண்கள் இயன்ற திருவாயால் பலி தா என்றார் கொடு வந்தேன்
பெண்கள் தரல் ஈது அன்று என்றார் பேசு அப் பலி யாது என்றேன் நின்
எண்-கண் பலித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#9
ஆரா மகிழ்வு தரும் ஒரு பேர்_அழகர் இவர் ஊர் ஒற்றி-அதாம்
நேராய் விருந்து உண்டோ என்றார் நீர் தான் வேறு இங்கு இலை என்றேன்
வார் ஆர் முலையாய் வாய் அமுதும் மலர்_கை அமுதும் மனை அமுதும்
ஏராய் உளவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#10
அடுத்தார்க்கு அருளும் ஒற்றி நகர் ஐயர் இவர்-தாம் மிகத் தாகம்
கடுத்தாம் என்றார் கடி தட நீர் கண்டீர் ஐ அம் கொளும் என்றேன்
கொடுத்தாய் கண்டதிலை ஐயம்கொள்ளும் இடம் சூழ்ந்திடும் கலையை
எடுத்தால் காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#11
இந்து ஆர் இதழி இலங்கு சடை ஏந்தல் இவர் ஊர் ஒற்றி-அதாம்
வந்தார் பெண்ணே அமுது என்றார் வரையின் சுதை இங்கு உண்டு என்றேன்
அந்து ஆர் குழலாய் பசிக்கினும் பெண்_ஆசை விடுமோ அமுது இன்றேல்
எம் தாரம் தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#12
தன்னந்தனியாய் இங்கு நிற்கும் சாமி இவர் ஊர் ஒற்றி-அதாம்
அன்னம் தருவீர் என்றார் நான் அழைத்தேன் நின்னை அன்னம் இட
முன்னம் பசி போயிற்று என்றார் முன்-நின்று அகன்றேன் இ அன்னம்
இன்னம் தருவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#13
மாறா அழகோடு இங்கு நிற்கும் வள்ளல் இவர் ஊர் ஒற்றி-அதாம்
வீறாம் உணவு ஈ என்றார் நீர் மேவா உணவு இங்கு உண்டு என்றேன்
கூறா மகிழ்வே கொடு என்றார் கொடுத்தால் இது-தான் அன்று என்றே
ஏறா வழக்குத் தொடுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#14
வண்மை_உடையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் பலி என்றார்
உண்மை அறிவீர் பலி எண்மை உணர்கிலீர் என் உழை என்றேன்
பெண்மை சிறந்தாய் நின் மனையில் பேசும் பலிக்கு என்று அடைந்தது நாம்
எண்மை உணர்ந்தே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#15
திருவை அளிக்கும் திருவொற்றித் தேவரீர்க்கு என் விழைவு என்றேன்
வெருவல் உனது பெயரிடை ஓர் மெய் நீக்கிய நின் முகம் என்றார்
தருவல் அதனை வெளிப்படையால் சாற்றும் என்றேன் சாற்றுவனேல்
இரு வை மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#16
முந்தை மறையோன் புகழ் ஒற்றி முதல்வர் இவர்-தம் முகம் நோக்கிக்
கந்தை_உடையீர் என் என்றேன் கழியா உன்றன் மொழியாலே
இந்து முகத்தாய் எமக்கு ஒன்றே இரு_நான்கு உனக்குக் கந்தை உளது
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#17
துன்னல்_உடையார் இவர்-தமை நீர் துன்னும் பதி-தான் யாது என்றேன்
நென்னல் இரவில் எமைத் தெளிவான் நின்ற நினது பெயர் என்றார்
உன்னலுறுவீர் வெளிப்பட ஈது உரைப்பீர் என்றேன் உரைப்பேனேல்
இன்னல் அடைவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#18
சிமைக் கொள் சூலத் திரு_மலர்_கைத் தேவர் நீர் எங்கு இருந்தது என்றேன்
எமைக் கண்ட அளவின் மாதே நீ இருந்தது என யாம் இருந்தது என்றார்
அமைக்கும் மொழி இங்கிதம் என்றேன் ஆம் உன் மொழி இங்கு இதம் அன்றோ
இமைக்கும் இழையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#19
நடம் கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமான் நீர் அன்றோ
திடம் கொள் புகழ்க் கச்சூரிடம் சேர்ந்தீர் என்றேன் நின் நடு நோக்காக்
குடம் சேர்ந்ததும் ஆங்கு அஃது என்றார் குடம் யாது என்றேன் அஃது அறிதற்கு
இடங்கர் நடு நீக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#20
சங்கம் மருவும் ஒற்றி_உளீர் சடை மேல் இருந்தது என் என்றேன்
மங்கை நினது முன் பருவம் மருவும் முதல் நீத்து இருந்தது என்றார்
கங்கை இருந்ததே என்றேன் கமலை அனையாய் கழுக்கடையும்
எம் கை இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#21
துதி சேர் ஒற்றி வளர் தரும_துரையே நீர் முன் ஆடல் உறும்
பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தைப் பறித்தது என்றார்
நிதி சேர்ந்திடும் அ பெயர் யாது நிகழ்த்தும் என்றேன் நீ இட்டது
எதுவோ அது காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#22
உடற்கு அச்சு உயிராம் ஒற்றி_உளீர் உமது திரு_பேர் யாது என்றேன்
குடக்குச் சிவந்த பொழுதினை முன் கொண்ட வண்ணர் ஆம் என்றார்
விடைக்குக் கருத்தா ஆம் நீர்-தாம் விளம்பல் மிகக் கற்றவர் என்றேன்
இடக்குப் புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#23
மணம் கேதகை வான் செயும் ஒற்றி வள்ளல் இவரை வல் விரைவு ஏன்
பிணங்கேம் சிறிது நில்லும் என்றேன் பிணங்காவிடினும் நென்னல் என
அணங்கே நினக்கு ஒன்றினில் பாதி அதில் ஓர் பாதியாகும் இதற்கு
இணங்கேம் சிறிதும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#24
ஒற்றி நகரார் இவர்-தமை நீர் உவந்து ஏறுவது இங்கு யாது என்றேன்
மற்று உன் பருவத்து ஒரு பங்கே மடவாய் என்றார் மறை விடை ஈது
இற்று என்று அறிதற்கு அரிது என்றேன் எம்மை அறிவார் அன்றி அஃது
எற்று என்று அறிவார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#25
கண்ணின் மணி போல் இங்கு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி-அதாம்
பண்ணின் மொழியாய் நின்-பால் ஓர் பறவைப் பெயர் வேண்டினம் படைத்தால்
மண்ணின் மிசை ஓர் பறவை-அதாய் வாழ்வாய் என்றார் என் என்றேன்
எண்ணி அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#26
சேடு ஆர் வளம் சூழ் ஒற்றி நகர் செல்வப் பெருமான் இவர்-தமை நான்
ஓடு ஆர் கரத்தீர் எண் தோள்கள்_உடையீர் என் என்று உரைத்தேன் நீ
கோடாகோடி முகம் நூறு கோடாகோடிக் களம் என்னே
ஈடாய்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#27
துருமம் செழிக்கும் பொழில் ஒற்றித் தோன்றால் இங்கு நீர் வந்த
கருமம் சொலும் என்றேன் இவண் யான் கடாதற்கு உன்-பால் எம் உடைமைத்
தருமம் பெறக் கண்டாம் என்றார் தருவல் இருந்தால் என்றேன் இல்
இரு மந்தரமோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#28
ஒரு கை முகத்தோர்க்கு ஐயர் எனும் ஒற்றித் தேவர் இவர்-தமை நான்
வருகை உவந்தீர் என்றனை நீர் மருவி அணைதல் வேண்டும் என்றேன்
தரு கையுடனே அகங்காரம்-தனை எம் அடியார்-தமை மயக்கை
இரு கை வளை சிந்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#29
திருத்தம் மிகும் சீர் ஒற்றியில் வாழ் தேவரே இங்கு எது வேண்டி
வருத்த மலர்_கால் உற நடந்து வந்தீர் என்றேன் மாதே நீ
அருத்தம் தெளிந்தே நிருவாணம் ஆக உன்றன் அகத்து அருள்_கண்
இருத்த அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#30
வளம் சேர் ஒற்றி மாணிக்க வண்ணர் ஆகும் இவர்-தமை நான்
குளம் சேர்ந்து இருந்தது உமக்கு ஒரு கண் கோலச் சடையீர் அழகு இது என்றேன்
களம் சேர் குளத்தின் எழில் முலை கண் காண ஓர் ஐந்து உனக்கு அழகு ஈது
இளம் சேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#31
பலம் சேர் ஒற்றிப் பதி_உடையீர் பதி வேறு உண்டோ நுமக்கு என்றேன்
உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன்
வலம் சேர் இடை த வருவித்த மலை காண் அதனில் மம் முதல் சென்று
இலம் சேர்ந்ததுவும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#32
வயல் ஆர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் வாய் திறவார்
செயல் ஆர் விரல்கள் முடக்கி அடி சேர்த்து ஈர் இதழ்கள் விரிவித்தார்
மயல் ஆர் உளத்தோடு என் என்றேன் மறித்து ஓர் விரலால் என்னுடைய
இயல் ஆர் வடிவில் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#33
பேர் வாழ் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌன யோகியராய்ச்
சீர் வாழ் நமது மனையினிடைச் சேர்ந்தார் விழைவு என் செப்பும் என்றேன்
ஓர் வாழ் அடியும் குழல் அணியும் ஒரு நல் விரலால் சுட்டியும் தம்
ஏர் வாழ் ஒரு கை பார்க்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#34
பெரும் சீர் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌனம் பிடித்து இங்கே
விரிஞ்சு ஈர்தர நின்று உடன் கீழும் மேலும் நோக்கி விரைந்தார் யான்
வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடைக் காழ்
இரும் சீர் மணியைக் காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#35
வலம் தங்கிய சீர் ஒற்றி நகர் வள்ளல் இவர்-தாம் மௌனமொடு
கலந்து அங்கு இருந்த அண்டசத்தைக் காட்டி மூன்று விரல் நீட்டி
நலம் தங்கு உறப்பின் நடு முடக்கி நண்ணும் இந்த நகத்தொடு வாய்
இலம் தம் கரத்தால் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#36
தேன் ஆர் பொழில் ஆர் ஒற்றியில் வாழ் தேவர் இவர் வாய் திறவாராய்
மான் ஆர் கரத்தோர் நகம் தெரித்து வாளாநின்றார் நீள் ஆர்வம்-
தான் ஆர் உளத்தோடு யாது என்றேன் தம் கைத்தலத்தில் தலையை அடி
யேன் நாடுறவே காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#37
செச்சை அழகர் திருவொற்றித் தேவர் இவர் வாய் திறவாராய்
மெச்சும் ஒரு கால் கரம் தொட்டு மீண்டும் மிடற்று அக் கரம் வைத்தார்
பிச்சர் அடிகேள் வேண்டுவது பேசீர் என்றேன் தமைக் காட்டி
இச்சை எனையும் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#38
மன்றார் நிலையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் மௌனமொடு
நின்றார் இரு கை ஒலி இசைத்தார் நிமிர்ந்தார் தவிசின் நிலை குறைத்தார்
நன்று ஆர் அமுது சிறிது உமிழ்ந்தார் நடித்தார் யாவும் ஐயம் என்றேன்
இன் தாமரைக் கை ஏந்துகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#39
வாரா_விருந்தாய் வள்ளல் இவர் வந்தார் மௌனமொடு நின்றார்
நீர் ஆர் எங்கே இருப்பது என்றேன் நீண்ட சடையைக் குறிப்பித்தார்
ஊரா வைத்தது எது என்றேன் ஒண் கை ஓடு என் இடத்தினில் வைத்து
ஏர் ஆர் கரத்தால் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#40
செங்கேழ் கங்கைச் சடையார் வாய் திறவாராக ஈண்டு அடைந்தார்
எங்கே இருந்து எங்கு அணைந்தது காண் எங்கள் பெருமான் என்றேன் என்
அங்கு ஏழ் அருகின் அகன்று போய் அங்கே இறைப் போது அமர்ந்து எழுந்தே
இங்கே நடந்து வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#41
கொடையார் ஒற்றி_வாணர் இவர் கூறா மௌனர் ஆகி நின்றார்
தொடை ஆர் இதழி மதிச் சடை என் துரையே விழைவு ஏது உமக்கு என்றேன்
உடையார் துன்னல் கந்தை-தனை உற்று நோக்கி நகைசெய்தே
இடையாக் கழுமுள் காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#42
பொன்னைக் கொடுத்தும் புணர்வு அரிய புனிதர் இவர் ஊர் ஒற்றி-அதாம்
முன்னைத் தவத்தால் யாம் காண முன்னே நின்றார் முகம் மலர்ந்து
மின்னில் பொலியும் சடையீர் என் வேண்டும் என்றேன் உணச் செய்யாள்
இல் நச்சினம் காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#43
வயல் ஆர் சோலை எழில் ஒற்றி_வாணர் ஆகும் இவர்-தமை நான்
செயலார் அடியர்க்கு அருள்வீர் நும் சிரத்தும் உரத்தும் திகழ் கரத்தும்
வியலாய்க் கொண்டது என் என்றேன் விளங்கும் பிநாகம் அவை மூன்றும்
இயலால் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#44
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் விழி என்றேன்
இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான்
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று சொலி
எதிர்நின்று உவந்து நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#45
இட்டம் களித்த ஒற்றி_உளீர் ஈண்டு இ வேளை எவன் என்றேன்
சுட்டும் சுதனே என்றார் நான் சுட்டி அறியச் சொலும் என்றேன்
பட்டு உண் மருங்குல் பாவாய் நீ பரித்தது அன்றே பார் என்றே
எட்டும் களிப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#46
பாற்றக் கணத்தார் இவர் காட்டுப்பள்ளித் தலைவர் ஒற்றியின்-நின்று
ஆற்றப் பசித்து வந்தாராம் அன்னம் இடு-மின் என்று உரைத்தேன்
சோற்றுக்கு இளைத்தோம் ஆயினும் யாம் சொல்லுக்கு இளையேம் கீழ்ப் பள்ளி
ஏற்றுக் கிடந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#47
குருகு ஆர் ஒற்றி_வாணர் பலிகொள்ள வகை உண்டோ என்றேன்
ஒரு கால் எடுத்து ஈண்டு உரை என்றார் ஒரு கால் எடுத்துக் காட்டும் என்றேன்
வரு காவிரிப் பொன்_அம்பலத்தே வந்தால் காட்டுகின்றாம் வீழ்
இரு கால் உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#48
வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் அணிகின்ற
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார்
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுப்பது என
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#49
உயிருள் உறைவீர் திருவொற்றி_உடையீர் நீர் என் மேல் பிடித்த
வயிரம்-அதனை விடும் என்றேன் வயிரி அல நீ மாதே யாம்
செயிர்-அது அகற்று உன் முலை இடம் கொள் செல்வன் அல காண் தெளி என்றே
இயல் கொள் முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#50
தண் கா வளம் சூழ் திருவொற்றித் தலத்தில் அமர்ந்த சாமி நும் கை
எண் கார்முகம் மாப் பொன் என்றேன் இடையிட்டு அறிதல் அரிது என்றார்
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றே
எண் காண் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#51
செய் காண் வளம் சூழ் ஒற்றி_உளீர் திருமால் முதன் முத்தேவர்கட்கும்
ஐ காண் நீர் என்றேன் இதன் மேல் அணங்கே நீ ஏழ் அடைதி என்றார்
மெய் காண் அது-தான் என் என்றேன் விளங்கும் சுட்டுப் பெயர் என்றே
எய் காணுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#52
விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில்
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்க்_கை வண்டும் விழுந்தது என்றார்
தொண்டர்க்கு அருள்வீர் மிக என்றேன் தோகாய் நாமே தொண்டன் என
எண் தங்குறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#53
மட்டு ஆர் மலர்க் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன்
எட்டாம் எழுத்தை எடுத்து அது நாம் இசைத்தேம் என்றார் எட்டாக
உள் தாவுறும் அ எழுத்து அறிய உரைப்பீர் என்றேன் அந்தணர் ஊர்க்கு
இட்டார் நாமம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#54
ஒற்றி நகரீர் மனவசி-தான் உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன்
பற்றி இறுதி தொடங்கி அது பயிலும் அவர்க்கே அருள்வது என்றார்
மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உள்ள வன்மை எலாம்
எற்றில் உணர்தி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#55
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன்
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேன் ஓ இது-தான்
சான்றோர் உமது மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்குத் தகாது என்றே
ஏன்று ஓர் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#56
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன்
ஈது நமக்குத் தெரிந்தது என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன்
ஓதும் அடியார் மனக் கங்குல் ஓட்டும் நாமே உணர் அன்றி
ஏதும் இறை அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#57
ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர்
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கைப் பன்மை நாதர் என்றார்
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இவை அதற்கு என்று
எண் சொல் மணி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#58
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டோ என்றேன்
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் எம் பேர்
மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றே
இருவும் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#59
பேர் ஆர் ஒற்றியீர் உம்மைப் பெற்றார் எவர் என்றேன் அவர்-தம்
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டாம் எழுத்தார் என்றார் என்
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் உரைப்பாம் என்று
ஏர் ஆய் உரைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#60
தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைக்க வாழ்வீர் தனி ஞான
ஒளி நாவரசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் என்றேன்
களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றே
எளியேற்கு உவப்பின் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#61
ஓம் ஊன்று_உளத்தீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன்
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிகத்
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே
ஏம் ஊன்றுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#62
மன்னி விளங்கும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான்
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார்
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எமக்கும் தெரியும் எனத் திருவாய்
இன் நல் அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#63
வளம் சேர் ஒற்றியீர் எனக்கு மாலை அணிவீரோ என்றேன்
குளம் சேர் மொழிப் பெண் பாவாய் நின் கோல மனை-கண் நாம் மகிழ்வால்
உளம் சேர்ந்து அடைந்த போதே நின் உளத்தில் அணிந்தேம் உணர் என்றே
இளம் சீர் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#64
வீற்று ஆர் ஒற்றி நகர் அமர்ந்தீர் விளங்கும் மலரே விளம்பும் நெடு
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் பார் என்றார்
சாற்றாச் சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றே
ஏற்று ஆதரவால் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#65
புயப் பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார்
வயப் பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைத்தது என்றேன்
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பா உரைத்தும் என்றே
இயல் பால் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#66
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன்
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார்
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் மடவாய் உனது மொழிக்கு என்றே
எண்ணம் கொள நின்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#67
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன்
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார்
சுகம் சேர்ந்திடும் நும் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றே
இகம் சேர் நயப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#68
ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது
நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்குச்
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதித் தந்தவர்-தாம்
யார் ஆர் மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#69
வருத்தம் தவிரீர் ஒற்றி_உளீர் மனத்தில் அகாதம் உண்டு என்றேன்
நிருத்தம் தொழும் நம் அடியவரை நினைக்கின்றோரைக் காணின் அது
உருத் தன் பெயர் முன் எழுத்து இலக்கம் உற்றே மற்ற எல்லை அகன்று
இருத்தல் அறியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#70
மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன்
செய்ய அதன் மேல் சிகரம் வைத்துச் செவ்வன் உரைத்தால் இரு வா என்று
உய்ய உரைப்பேம் என்றார் நும் உரை என் உரை என்றேன் இங்கே
எய் உன் உரையை என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#71
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற
வா என்று அருள்வீர் என்றேன் அ வாவின் பின்னர் வரும் எழுத்தை
மேவு என்று அதனில் சேர்த்தது இங்கே மேவின் அன்றோ வா என்பேன்
ஏ வென்றிடு கண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#72
என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைவான் நினைவீரேல்
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை ஆங்கு அதன் மேல்
அல் மேல் குழலாய் சேய் அதன் மேல் அலவன் அதன் மேல் ஞாயிறு அஃ
தின் மேல் ஒன்று இன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#73
வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நாமம் யாது என்றேன்
மயலாய் இடும் இப் பெயர்ப் பின்னர் வந்த இளைய நாமம் என்றார்
செயல் ஆர் காலம் அறிந்து என்னைச் சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு
இயல் ஆர் அயல் ஆர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#74
நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கல் என் என்றேன்
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலைத் தோல் வல்லீர் நீர் என்றேன்
வேல் ஆர் விழி மாப் புலித்தோலும் வேழத்தோலும் வல்லேம் என்று
ஏலா அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#75
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன்
கடியா உள்ளங்கையின் முதலைக் கடிந்தது என்றார் கமலம் என
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அகன்றது என்றே
இடியா நயத்தின் நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#76
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உடையீர் யார்க்கும் உணர்வு அரியீர்
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்றேன் யான்
துன்றும் விசும்பே காண் என்றார் சூதாம் உமது சொல் என்றேன்
இன்று உன் முலை தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#77
வானார் வணங்கும் ஒற்றி_உளீர் மதி வாழ் சடையீர் மரபிடை நீர்
தான் ஆர் என்றேன் நனிப்பள்ளித் தலைவர் எனவே சாற்றினர் காண்
ஆனால் ஒற்றி இரும் என்றேன் ஆண்டே இருந்து வந்தனம் சேய்
ஈனாதவள் நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#78
பற்று முடித்தோர் புகழ் ஒற்றிப் பதியீர் நுமது பசுவின் இடை_
கற்று முடித்தது என் இரு கை_கன்று முழுதும் காண் என்றேன்
மற்று முடித்த மாலையொடு உன் மருங்குல் கலையும் கற்று முடிந்து
இற்று முடித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#79
வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்து எனது
மானம் கெடுத்தீர் என்று உரைத்தேன் மா நன்று இஃது உன் மான் அன்றே
ஊனம் கலிக்கும் தவர் விட்டார் உலகம் அறியும் கேட்டு அறிந்தே
ஈனம் தவிர்ப்பாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#80
ஞானம் படைத்த யோகியர் வாழ் நகராம் ஒற்றி நலத்தீர் மால்
ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்னை உவந்து இப்பொழுது என்றேன்
ஊனம் தவிர்த்த மலர் வாயின் உள்ளே நகைசெய்து இஃது உரைக்கேம்
ஈனம் புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#81
கரு மை அளவும் பொழில் ஒற்றிக் கணத்தீர் முனிவர் கலக்கம் அறப்
பெருமை நடத்தினீர் என்றேன் பிள்ளை நடத்தினான் என்றார்
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்-பால்
இரு மை விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#82
ஒசிய இடுகும் இடையாரை ஒற்றி இருந்தே மயக்குகின்ற
வசியர் மிக நீர் என்றேன் எம் மகன் காண் என்றார் வளர் காமப்
பசிய தொடையுற்றேன் என்றேன் பட்டம் அவிழ்த்துக் காட்டுதியேல்
இசையக் காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#83
கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணைவீர்
மலையாள் உமது மனை என்றேன் மருவின் மலையாள்_அல்லள் என்றார்
அலையாள் மற்றையவள் என்றேன் அறியின் அலையாள்_அல்லள் உனை
இலை யாம் அணைவது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#84
சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாகரே நீர் திண்மை_இலோர்
சூலம் படைத்தீர் என் என்றேன் தோன்றும் உலகு உய்ந்திட என்றார்
ஆலம் களத்தீர் என்றேன் நீ ஆலம் வயிற்றாய் அன்றோ நல்
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#85
ஞாலம் நிகழும் புகழ் ஒற்றி நடத்தீர் நீர் தான் நாட்டமுறும்
பாலர் அலவோ என்றேன் ஐம்பாலர் பாலைப் பருவத்தில்
சால மயல்கொண்டிட வரும் ஓர் தனிமைப் பாலர் யாம் என்றே
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#86
வண்மை தருவீர் ஒற்றி நகர் வாழ்வீர் என்னை மருவீர் என்
உண்மை அறியீர் என்றேன் யாம் உணர்ந்தே அகல நின்றது என்றார்
கண்மை_இலரோ நீர் என்றேன் களம் மை உடையேம் கண் மை உறல்
எண்மை நீயே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#87
தவம் தங்கிய சீர் ஒற்றி நகர்-தனைப் போல் நினைத்து என் மனை அடைந்தீர்
உவந்து என் மீதில் தேவர் திருவுள்ளம் திரும்பிற்றோ என்றேன்
சிவம் தங்கிட நின் உள்ளம் எம் மேல் திரும்பிற்று அதனைத் தேர்ந்து அன்றே
இவர்ந்து இங்கு அணைந்தாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#88
ஒன்னார் புரம் மூன்று எரிசெய்தீர் ஒற்றி_உடையீர் உம்முடைய
பொன் ஆர் சடை மேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீர் என் என்றேன்
நின் ஆர் அளகத்து அணங்கே நீ நெட்டி மிலைந்தாய் இதில் அது கீழ்
என்னார் உலகர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#89
கனி மான் இதழி முலைச் சுவடு களித்தீர் ஒற்றிக் காதலர் நீர்
தனி மான் ஏந்தியாம் என்றேன் தடம் கண் மடந்தாய் நின் முகமும்
பனி மான் ஏந்தியாம் என்றார் பரை மான் மருவினீர் என்றேன்
இனி மால்_மருவி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#90
சிறியேன் தவமோ எனைப் பெற்றார் செய்த தவமோ ஈண்டு அடைந்தீர்
அறியேன் ஒற்றி அடிகேள் இங்கு அடைந்த வாறு என் நினைத்து என்றேன்
பொறி நேர் உனது பொன் கலையைப் பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#91
அளிக்கும் குணத்தீர் திருவொற்றி அழகரே நீர் அணி வேணி
வெளிக்கொள் முடி மேல் அணிந்தது-தான் விளியா விளம்பத் திரம் என்றேன்
விளிக்கும் இளம் பத்திரமும் முடி மேலே மிலைந்தாம் விளங்கு_இழை நீ
எளிக் கொண்டு உரையேல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#92
வாசம் கமழும் மலர்ப் பூங்காவனம் சூழ் ஒற்றி மா நகரீர்
நேசம் குறிப்பது என் என்றேன் நீயோ நாமோ உரை என்றார்
தேசம் புகழ்வீர் யான் என்றேன் திகழ் தைத்திரி தித்திரியே யா
மே சம் குறிப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#93
பேசும் கமலப் பெண் புகழும் பெண்மை உடைய பெண்கள் எலாம்
கூசும்படி இப்படி ஒற்றிக் கோவே வந்தது என் என்றேன்
மா சுந்தரி நீ இப்படிக்கு மயங்கும்படிக்கும் மாதர் உனை
ஏசும்படிக்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#94
கொடி ஆல் எயில் சூழ் ஒற்றி இடம் கொண்டீர் அடிகள் குரு உருவாம்
படி ஆல் அடியில் இருந்த மறைப் பண்பை உரைப்பீர் என்றேன் நின்
மடி ஆல் அடியில் இருந்த மறை மாண்பை வகுத்தாய் எனில் அது நாம்
இடியாது உரைப்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#95
என் நேர் உளத்தின் அமர்ந்தீர் நல் எழில் ஆர் ஒற்றியிடை இருந்தீர்
என்னே அடிகள் பலி ஏற்றல் ஏழ்மை_உடையீர் போலும் என்றேன்
இன்னே கடலினிடை நீ பத்து ஏழ்மை_உடையாய் போலும் என
இன் நேயம் கொண்டு உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#96
நல்லார் மதிக்கும் ஒற்றி_உளீர் நண்ணும் உயிர்கள்-தொறும் நின்றீர்
எல்லாம் அறிவீர் என்னுடைய இச்சை அறியீர் போலும் என்றேன்
வல்லாய் அறிவின் மட்டு ஒன்று மன மட்டு ஒன்று வாய் மட்டு ஒன்று
எல்லாம் அறிந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#97
மறி நீர்ச் சடையீர் சித்து எல்லாம்_வல்லீர் ஒற்றி மா நகரீர்
பொறி சேர் உமது புகழ் பலவில் பொருந்தும் குணமே வேண்டும் என்றேன்
குறி நேர் எமது வில் குணத்தின் குணத்தாய் அதனால் வேண்டுற்றாய்
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#98
ஊரூர் இருப்பீர் ஒற்றி வைத்தீர் ஊர்-தான் வேறு உண்டோ என்றேன்
ஓர் ஊர் வழக்கிற்கு அரியை இறை உன்னி வினவும் ஊர் ஒன்றோ
பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக
ஏர் ஊர் அனந்தம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#99
விழி ஒண் நுதலீர் ஒற்றி_உளீர் வேதம் பிறவி_இலர் என்றே
மொழியும் நுமை-தான் வேய் ஈன்ற முத்தர் எனல் இங்கு என் என்றேன்
பழி அன்று அணங்கே அ வேய்க்குப் படு முத்து ஒரு வித்து அன்று அதனால்
இழியும் பிறப்போ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#100
விண் ஆர் பொழில் சூழ் ஒற்றி_உளீர் விளங்கும் தாமம் மிகு வாசத்
தண் ஆர் மலர் வேதனை ஒழிக்கத் தருதல் வேண்டும் எனக்கு என்றேன்
பண் ஆர் மொழியாய் உபகாரம்பண்ணாப் பகைவரேனும் இதை
எண்ணார் எண்ணார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#101
செம்பால் மொழியார் முன்னர் எனைச் சேர்வீர் என்கோ திருவொற்றி
அம்பு ஆர் சடையீர் உமது ஆடல் அறியேன் அருளல் வேண்டும் என்றேன்
வம்பு ஆர் முலையாய் காட்டுகின்றாம் மன்னும் பொன் ஆர் அம்பலத்தே
எம்-பால் வா என்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#102
மைக் கொள் மிடற்றீர் ஊர் ஒற்றி வைத்தீர் உண்டோ மனை என்றேன்
கை-கண் நிறைந்த தனத்தினும் தன் கண்ணின் நிறைந்த கணவனையே
துய்க்கும் மடவார் விழைவர் எனச் சொல்லும் வழக்கு ஈது அறிந்திலையோ
எய்க்கும் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#103
ஆறு_முகத்தார்-தமை ஈன்ற ஐந்து_முகத்தார் இவர்-தமை நான்
மாறு முகத்தார் போல் ஒற்றி வைத்தீர் பதியை என் என்றேன்
நாறும் மலர்ப் பூங் குழல் நீயோ நாமோ வைத்தது உன் மொழி மன்று
ஏறு மொழி அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#104
வள்ளல் மதியோர் புகழ் ஒற்றி வள்ளால் உமது மணிச் சடையின்
வெள்ள_மகள் மேல் பிள்ளை மதி விளங்கல் அழகு ஈது என்றேன் நின்
உள்ள-முகத்தும் பிள்ளை மதி ஒளி கொள் முகத்தும் பிள்ளை மதி
எள்ளல்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#105
உள்ளத்து அனையே போல் அன்பர் உவக்கும் திரு வாழ் ஒற்றி_உளீர்
கள்ளத்தவர் போல் இவண் நிற்கும் கருமம் என் நீர் இன்று என்றேன்
மெள்ளக் கரவுசெயவோ நாம் வேடம் எடுத்தோம் நின் சொல் நினை
எள்ளப் புரிந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#106
அச்சை அடுக்கும் திருவொற்றியவர்க்கு ஓர் பிச்சை கொடும் என்றேன்
விச்சை அடுக்கும்படி நம்-பால் மேவினோர்க்கு இ அகில நடைப்
பிச்சை எடுப்பேம் அலது உன் போல் பிச்சை கொடுப்பேம் அல என்றே
இச்சை எடுப்பாய் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#107
அள்ளல் பழனத் திருவொற்றி அழகர் இவர்-தம் முகம் நோக்கி
வெள்ளச் சடையீர் உள்ளத்தே விருப்பு ஏது உரைத்தால் தருவல் என்றேன்
கொள்ளக் கிடையா அலர் குமுதம் கொண்ட அமுதம் கொணர்ந்து இன்னும்
எள்ளத்தனை தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#108
விஞ்சும் நெறியீர் ஒற்றி_உளீர் வியந்தீர் வியப்பு என் இவண் என்றேன்
கஞ்சம் இரண்டும் நமை அங்கே கண்டு குவிந்த விரிந்து இங்கே
வஞ்ச இரு தாமரை முகையை மறைக்கின்றன நின்-பால் வியந்தாம்
எஞ்சல் அற நாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#109
அளியார் ஒற்றி_உடையாருக்கு அன்னம் நிரம்ப விடும் என்றேன்
அளி ஆர் குழலாய் பிடி அன்னம் அளித்தால் போதும் ஆங்கு அது நின்
ஒளி ஆர் சிலம்பு சூழ் கமலத்து உளதால் கடகம் சூழ் கமலத்து
எளியார்க்கு இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#110
விச்சைப் பெருமான் எனும் ஒற்றி விடங்கப் பெருமான் நீர் முன்னம்
பிச்சைப் பெருமான் இன்று மண_பிள்ளைப் பெருமான் ஆம் என்றேன்
அச்சைப் பெறும் நீ அ மண_பெண் ஆகி இடையில் ஐயம் கொள்
இச்சைப் பெரும் பெண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#111
படை அம்புயத்தோன் புகழ் ஒற்றிப் பதியீர் அரவப் பணி சுமந்தீர்
புடை அம் புயத்தில் என்றேன் செம்பொன்னே கொடை அம்புயத்தினும் நல்
நடை அம்புயத்தும் சுமந்தனை நீ நானா அரவப் பணி மற்றும்
இடை அம்புயத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#112
கூம்பா ஒற்றியூர்_உடையீர் கொடும் பாம்பு அணிந்தீர் என் என்றேன்
ஓம்பாது உரைக்கில் பார்த்திடின் உள் உன்னில் விடம் ஏற்று உன் இடைக் கீழ்ப்
பாம்பு ஆவதுவே கொடும் பாம்பு எம் பணிப் பாம்பு அது போல் பாம்பு அல என்று
ஏம்பா நிற்ப இசைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#113
புயல் சூழ் ஒற்றி_உடையீர் என் புடை என் குறித்தோ போந்தது என்றேன்
கயல் சூழ் விழியாய் தனத்தவரைக் காணல் இரப்போர் எதற்கு என்றார்
மயல் சூழ் தனம் இங்கு இலை என்றேன் மறையாது எதிர் வைத்து இலை என்றல்
இயல் சூழ் அறம் அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#114
நட வாழ்வு ஒற்றி_உடையீர் நீர் நாகம் அணிந்தது அழகு என்றேன்
மடவாய் அது நீர்_நாகம் என மதியேல் அயன் மால் மனம் நடுங்க
விட வாய் உமிழும் பட நாகம் வேண்டில் காண்டி என்றே என்
இட வாய் அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#115
கோடா ஒற்றி_உடையீர் நும் குலம்-தான் யாதோ கூறும் என்றேன்
வீடு ஆர் பிரம குலம் தேவர் வேந்தர் குலம் நல் வினை வசியப்
பாடு ஆர் குலம் ஓர் சக்கரத்தான் பள்ளிக் குலம் எல்லாம் உடையேம்
ஏடு ஆர் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#116
நலமாம் ஒற்றி_உடையீர் நீர் நல்ல அழகர் ஆனாலும்
குலம் ஏது உமக்கு மாலையிடக் கூடாது என்றேன் நின் குலம் போல்
உலகு ஓதுறும் நம் குலம் ஒன்றோ ஓர் ஆயிரத்தெட்டு உயர் குலம் இங்கு
இலகா நின்றது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#117
மதில் ஒற்றியின் நீர் நும் மனையாள் மலையின் குலம் நும் மைந்தருள் ஓர்
புதல்வர்க்கு ஆனைப் பெரும் குலம் ஓர் புதல்வர்க்கு இசை அம்புலிக் குலமாம்
எதிர் அற்று அருள்வீர் நும் குலம் இங்கு எதுவோ என்றேன் மனைவியருள்
இது மற்றொருத்திக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#118
தேமா பொழில் சூழ் ஒற்றி_உளீர் திகழும் தகர_கால் குலத்தைப்
பூமான் நிலத்தில் விழைந்துற்றீர் புதுமை இஃதும் புகழ் என்றேன்
ஆமா குலத்தில் அரைக் குலத்துள் அணைந்தே புறம் மற்று அரைக் குலம் கொண்டு
ஏமாந்தனை நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#119
அனம் சூழ் ஒற்றிப் பதி_உடையீர் அகிலம் அறிய மன்றகத்தே
மனம் சூழ் தகரக் கால் கொண்டீர் வனப்பாம் என்றேன் உலகு அறியத்
தனம் சூழ் அகத்தே அணங்கே நீ தானும் தகரத் தலை கொண்டாய்
இனம் சூழ் அழகாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#120
பங்கேருகப் பூம் பணை ஒற்றிப் பதியீர் நடு அம்பரம் என்னும்
அங்கே ஆட்டுக் கால் எடுத்தீர் அழகு என்றேன் அ அம்பரம் மேல்
இங்கே ஆட்டுத் தோல் எடுத்தாய் யாம் ஒன்று இரண்டு நீ என்றால்
எங்கே நின் சொல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#121
மாணப் புகழ் சேர் ஒற்றி_உளீர் மன்று ஆர் தகர வித்தை-தனைக்
காணற்கு இனி நான் செயல் என்னே கருதி உரைத்தல் வேண்டும் என்றேன்
வேள் நச்சுறும் மெல்_இயலே யாம் விளம்பும் மொழி அ வித்தை உனக்கு
ஏணப் புகலும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#122
நல்லார் ஒற்றி_உடையீர் யான் நடக்கோ வெறும் பூ_அணை அணைய
அல்லால் அவண் உம்முடன் வருகோ அணையாது அவலத் துயர் துய்க்கோ
செல்லா என் சொல் நடவாதோ திரு_கூத்து எதுவோ என விடைகள்
எல்லாம் நடவாது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#123
ஆட்டுத் தலைவர் நீர் ஒற்றி அழகீர் அதனால் சிறுவிதிக்கு ஓர்
ஆட்டுத் தலை தந்தீர் என்றேன் அன்று ஆல் அறவோர் அறம் புகல
ஆட்டுத் தலை முன் கொண்டதனால் அஃதே பின்னர் அளித்தாம் என்று
ஈட்டு உத்தரம் ஈந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#124
ஒற்றிப் பெருமான் உமை விழைந்தார் ஊரில் வியப்பு ஒன்று உண்டு இரவில்
கொற்றக் கமலம் விரிந்து ஒரு கீழ்க் குளத்தே குமுதம் குவிந்தது என்றேன்
பொற்றைத் தனத்தீர் நுமை விழைந்தார் புரத்தே மதியம் தேய்கின்றது
எற்றைத் தினத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#125
இடம் சேர் ஒற்றி_உடையீர் நீர் என்ன சாதியினர் என்றேன்
தடம் சேர் முலையாய் நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி என்றார்
விடம் சேர் களத்தீர் நும் மொழி-தான் வியப்பாம் என்றேன் நயப்பால் நின்
இடம் சேர் மொழி-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#126
உடையார் என்பார் உமை ஒற்றி_உடையீர் பணம்-தான் உடையீரோ
நடையாய் ஏற்கின்றீர் என்றேன் நங்காய் நின் போல் ஒரு பணத்தைக்
கடையார் எனக் கீழ் வைத்து அருமை காட்டேம் பணிகொள் பணம் கோடி
இடையாது உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#127
என் ஆர்_உயிர்க்குப் பெரும் துணையாம் எங்கள் பெருமான் நீர் இருக்கும்
நல் நாடு ஒற்றி அன்றோ-தான் நவில வேண்டும் என்று உரைத்தேன்
முன் நாள் ஒற்றி எனினும் அது மொழிதல் அழகோ தாழ்தல் உயர்வு
இ நானிலத்து உண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#128
பெரும் தாரணியோர் புகழ் ஒற்றிப் பெருமான் இவர்-தம் முகம் நோக்கி
அருந்தா அமுதம் அனையீர் இங்கு அடுத்த பரிசு ஏது அறையும் என்றேன்
வருந்தாது இங்கே அருந்து அமுத மனையாளாக வாழ்வினொடும்
இருந்தாய் அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#129
செம்மை வளம் சூழ் ஒற்றி_உளீர் திகழாக் கரித் தோல் உடுத்தீரே
உம்மை விழைந்த மடவார்கள் உடுக்கக் கலை உண்டோ என்றேன்
எம்மை அறியாய் ஒரு கலையோ இரண்டோ அனந்தம் கலை மெய்யில்
இம்மை உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#130
கற்றைச் சடையீர் திருவொற்றிக் காவல்_உடையீர் ஈங்கு அடைந்தீர்
இற்றைப் பகலே நன்று என்றேன் இற்றை இரவே நன்று எமக்குப்
பொற்றைத் தனத்தாய் கை அமுதம் பொழியாது அலர் வாய்ப் புத்தமுதம்
இற்றைக்கு அளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#131
கற்றீர் ஒற்றீர் முன்பு ஒரு வான் காட்டில் கவர்ந்து ஓர் நாட்டில் வளை
விற்றீர் இன்று என் வளை கொண்டீர் விற்கத் துணிந்தீரோ என்றேன்
மற்று ஈர் குழலாய் நீ எம் ஓர் மனையின் வளையைக் கவர்ந்து களத்
தில் தீது அணிந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#132
உடுக்கும் புகழார் ஒற்றி_உளார் உடை தா என்றார் திகை எட்டும்
உடுக்கும் பெரியீர் எது கண்டோ உரைத்தீர் என்றேன் திகை முழுதும்
உடுக்கும் பெரியவரைச் சிறிய ஒரு முன்தானையால் மூடி
எடுக்கும் திறம் கண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#133
கா வாய் ஒற்றிப் பதி_உடையீர் கல்_ஆனைக்குக் கரும்பு அன்று
தேவாய் மதுரையிடத்து அளித்த சித்தர் அலவோ நீர் என்றேன்
பாவாய் இரு கல் ஆனைக்குப் பரிவில் கரும்பு இங்கு இரண்டு ஒரு நீ
ஈவாய் இது சித்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#134
ஊட்டும் திரு வாழ் ஒற்றி_உளீர் உயிரை உடலாம் செப்பிடை வைத்து
ஆட்டும் திறத்தீர் நீர் என்றேன் அணங்கே இரு செப்பிடை ஆட்டும்
தீட்டும் புகழ் அன்றியும் உலகைச் சிறிது ஓர் செப்பில் ஆட்டுகின்றாய்
ஈட்டும் திறத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#135
கந்த வனம் சூழ் ஒற்றி_உளீர் கண் மூன்று_உடையீர் வியப்பு என்றேன்
வந்த எமை-தான் பிரி போதும் மற்றையவரைக் காண் போதும்
சந்தம் மிகும் கண் இரு_மூன்றும் தகு நான்கு_ஒன்றும் தான் அடைந்தாய்
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#136
ஆழி விடையீர் திருவொற்றி அமர்ந்தீர் இருவர்க்கு அகம் மகிழ்வான்
வீழி-அதனில் படிக்காசு வேண்டி அளித்தீராம் என்றேன்
வீழி-அதனில் படிக்கு ஆசு வேண்டாது அளித்தாய் அளவு ஒன்றை
ஏழில் அகற்றி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#137
உற்ற இடத்தே பெரும் துணையாம் ஒற்றிப் பெருமான் உம் புகழைக்
கற்ற இடத்தே முக்கனியும் கரும்பும் அமுதும் கயவாவோ
மற்ற இடச் சீர் என் என்றேன் மற்றை உபயவிடமும் முதல்
எற்ற விடமே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#138
யான் செய் தவத்தின் பெரும் பயனே என் ஆர்_அமுதே என் துணையே
வான் செய் அரசே திருவொற்றி வள்ளால் வந்தது என் என்றேன்
மான் செய் விழிப் பெண்ணே நீ ஆண் வடிவு ஆனது கேட்டு உள்ளம் வியந்
தேன் கண்டிடவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#139
கருணைக் கடலே என் இரண்டு கண்ணே முக்கண் கரும்பே செவ்
வருணப் பொருப்பே வளர் ஒற்றி வள்ளல் மணியே மகிழ்ந்து அணையத்
தருணப் பருவம் இஃது என்றேன் தவிர் அன்று எனக் காட்டியது உன்றன்
இருள் நச்சு அளகம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#140
காவிக் களம் கொள் கனியே என் கண்ணுள் மணியே அணியே என்
ஆவித் துணையே திருவொற்றி அரசே அடைந்தது என் என்றேன்
பூவில் பொலியும் குழலாய் நீ பொன்னின் உயர்ந்தாய் எனக் கேட்டு உன்
ஈவைக் கருதி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#141
கண்ணும் மனமும் களிக்கும் எழில் கண் மூன்று_உடையீர் கலை_உடையீர்
நண்ணும் திரு வாழ் ஒற்றி_உளீர் நடம் செய் வல்லீர் நீர் என்றேன்
வண்ணம் உடையாய் நின்றனைப் போல் மலர் வாய் நடம் செய் வல்லோமோ
எண்ண வியப்பாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#142
தாங்கும் விடை மேல் அழகீர் என்றன்னைக் கலந்தும் திருவொற்றி
ஓங்கும் தளியில் ஒளித்தீர் நீர் ஒளிப்பில் வல்லராம் என்றேன்
வாங்கும் நுதலாய் நீயும் எனை மருவிக் கலந்து மலர்த் தளியில்
ஈங்கு இன்று ஒளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#143
அம்மை அடுத்த திரு_மேனி அழகீர் ஒற்றி அணி நகரீர்
உம்மை அடுத்தோர் மிக வாட்டம் உறுதல் அழகோ என்று உரைத்தேன்
நம்மை அடுத்தாய் நமை அடுத்தோர் நம் போல் உறுவர் அன்று எனில் ஏது
எம்மை அடுத்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#144
உண் கள் மகிழ்வால் அளி மிழற்றும் ஒற்றி நகரீர் ஒரு மூன்று
கண்கள்_உடையீர் என் காதல் கண்டும் இரங்கீர் என் என்றேன்
பண் கொள் மொழியாய் நின் காதல் பல் நாள் சுவை செய் பழம் போலும்
எண் கொண்டு இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#145
வணம் கேழ் இலங்கும் செஞ்சடையீர் வளம் சேர் ஒற்றி மா நகரீர்
குணம் கேழ் மிடற்று ஓர் பால் இருளைக் கொண்டீர் கொள்கை என் என்றேன்
அணங்கே ஒரு பால் அன்றி நின் போல் ஐம்பால் இருள் கொண்டிடச் சற்றும்
இணங்கேம் இணங்கேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#146
கரும்பில் இனியீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர்
பெரும் பை அணியீர் திருவொற்றிப் பெரியீர் எது நும் பெயர் என்றேன்
அரும்பு அண் முலையாய் பிறர் கேட்க அறைந்தால் அளிப்பீர் எனச் சூழ்வர்
இரும்_பொன் இலையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#147
நிலையைத் தவறார் தொழும் ஒற்றி நிமலப் பெருமான் நீர் முன்னம்
மலையைச் சிலையாக் கொண்டீர் நும் மா வல்லபம் அற்புதம் என்றேன்
வலையத்து அறியாச் சிறுவர்களும் மலையைச் சிலையாக் கொள்வர்கள் ஈது
இலை அற்புதம்-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#148
உதயச் சுடரே_அனையீர் நல் ஒற்றி_உடையீர் என்னுடைய
இதயத்து அமர்ந்தீர் என்னே என் எண்ணம் அறியீரோ என்றேன்
சுதையில் திகழ்வாய் அறிந்து அன்றோ துறந்து வெளிப்பட்டு எதிர் அடைந்தாம்
இதை உற்று அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#149
புரக்கும் குணத்தீர் திருவொற்றிப் புனிதரே நீர் போர்க் களிற்றை
உரக்கும் கலக்கம் பெற உரித்தீர் உள்ளத்து இரக்கம் என் என்றேன்
கரக்கும் இடையாய் நீ களிற்றின் கன்றைக் கலக்கம் புரிந்தனை நின்
இரக்கம் இதுவோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#150
பதம் கூறு ஒற்றிப் பதியீர் நீர் பசுவில் ஏறும் பரிசு-அதுதான்
விதம் கூறு அறத்தின் விதி-தானோ விலக்கோ விளம்பல் வேண்டும் என்றேன்
நிதம் கூறிடும் நல் பசும் கன்றை நீயும் ஏறி இடுகின்றாய்
இதம் கூறிடுக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#151
யோகம்_உடையார் புகழ் ஒற்றியூரில் பரம யோகியராம்
தாகம் உடையார் இவர்-தமக்குத் தண்ணீர் தர நின்றனை அழைத்தேன்
போகம்_உடையாய் புறத் தண்ணீர் புரிந்து விரும்பாம் அகத் தண்ணீர்
ஈக மகிழ்வின் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#152
வள நீர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் மாதே நாம்
உள நீர்த் தாக மாற்றுறு நீர் உதவ வேண்டும் என்றார் நான்
குள நீர் ஒன்றே உளது என்றேன் கொள்ளேம் இடை மேல் கொளும் இந்த
இளநீர் தருக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#153
மெய் நீர் ஒற்றி_வாணர் இவர் வெம்மை உள நீர் வேண்டும் என்றார்
அ நீர் இலை நீர் தண்ணீர்-தான் அருந்தில் ஆகாதோ என்றேன்
முந்நீர்_தனையை_அனையீர் இ முது நீர் உண்டு தலைக்கு ஏறிற்று
இ நீர் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#154
சீலம் சேர்ந்த ஒற்றி_உளீர் சிறிதாம் பஞ்ச காலத்தும்
கோலம் சார்ந்து பிச்சை கொளக் குறித்து வருவீர் என் என்றேன்
காலம் போகும் வார்த்தை நிற்கும் கண்டாய் இது சொல் கடன் ஆமோ
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#155
ஊற்று ஆர் சடையீர் ஒற்றி_உளீர் ஊரூர் இரக்கத் துணிவுற்றீர்
நீற்றால் விளங்கும் திரு_மேனி நேர்ந்து இங்கு இளைத்தீர் நீர் என்றேன்
சோற்றால் இளைத்தேம் அன்று உமது சொல்லால் இளைத்தேம் இன்று இனி நாம்
ஏற்றால் இகழ்வே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#156
நீரை விழுங்கும் சடை_உடையீர் உளது நுமக்கு நீர் ஊரும்
தேரை விழுங்கும் பசு என்றேன் செறி நின் கலைக்குள் ஒன்று உளது
காரை விழுங்கும் எமது பசுக் கன்றின் தேரை நீர்த் தேரை
ஈர விழுங்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#157
பொன் நேர் மணி மன்று உடையீர் நீர் புரிந்தது எது எம் புடை என்றேன்
இன்னே உரைத்தற்கு அஞ்சுதும் என்றார் என் என்றேன் இயம்புதுமேல்
மின்னே நினது நடைப் பகையாம் மிருகம் பறவை-தமைக் குறிக்கும்
என்னே உரைப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#158
அடையார் புரம் செற்று அம்பலத்தே ஆடும் அழகீர் எண் பதிற்றுக்
கடையாம் உடலின் தலை கொண்டீர் கரம் ஒன்றினில் அற்புதம் என்றேன்
உடையாத் தலை மேல் தலையாக உன் கை ஈர்_ஐஞ்ஞூறு கொண்டது
இடையா வளைக்கே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#159
தேவர்க்கு அரிய ஆனந்தத் திரு_தாண்டவம் செய் பெருமான் நீர்
மேவக் குகுகுகுகுகு அணி வேணி_உடையீராம் என்றேன்
தாவக் குகுகுகுகுகுகுகுத் தாமே ஐந்தும் விளங்க அணி
ஏவு_அல் குணத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#160
கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற்கு அஞ்சுவல் யான்
ஒன்றப் பெரும் கோள் என் மீதும் உரைப்பார் உண்டு என்று உணர்ந்து என்றேன்
நன்று அப்படியேல் கோளிலியாம் நகரும் உடையேம் நங்காய் நீ
இன்று அச்சுறல் என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#161
புரியும் சடையீர் அமர்ந்திடும் ஊர் புலியூர் எனில் எம்_போல்வார்க்கும்
உரியும் புலித்தோல்_உடையீர் போல் உறுதற்கு இயலுமோ என்றேன்
திரியும் புலியூர் அன்று நின் போல் தெரிவையரைக் கண்டிடில் பயந்தே
இரியும் புலியூர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#162
தெவ்_ஊர் பொடிக்கும் சிறு_நகை இ தேவர்-தமை நான் நீர் இருத்தல்
எ ஊர் என்றேன் நகைத்து அணங்கே ஏழூர் நாலூர் என்றார் பின்
அ ஊர்த் தொகையில் இருத்தல் அரிதாம் என்றேன் மற்று அதில் ஒவ்_ஊர்
இ ஊர் எடுத்து ஆய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#163
மணம்கொள் இதழிச் சடையீர் நீர் வாழும் பதி யாது என்றேன் நின்
குணம் கொள் மொழி கேட்டு ஓர் அளவு குறைந்த குயிலாம் பதி என்றார்
அணங்கின் மறையூராம் என்றேன் அஃது அன்று அருள் ஓத்தூர் இஃது
இணங்க உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#164
ஆற்றுச் சடையார் இவர் பலி என்று அடைந்தார் நுமது ஊர் யாது என்றேன்
சோற்றுத்துறை என்றார் நுமக்குச் சோற்றுக் கருப்பு ஏன் சொலும் என்றேன்
தோற்றுத் திரிவேம் அன்று நின் போல் சொல்லும் கருப்பு என்று உலகு இயம்ப
ஏற்றுத் திரியேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#165
ஓங்கும் சடையீர் நெல்வாயில் உடையேம் என்றீர் உடையீரேல்
தாங்கும் புகழ் நும்மிடை சிறுமை சார்ந்தது எவன் நீர் சாற்றும் என்றேன்
ஏங்கும்படி நும் இடைச் சிறுமை எய்திற்று அலது ஈண்டு எமக்கு இன்றால்
ஈங்கும் காண்டிர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
*