திருமுறை ஒன்பது


&1 திருமாளிகைத் தேவர்

@1 கோயில் – ஒளிவளர் விளக்கே
** பண் :பஞ்சமம்

#1
ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே
தெளி வளர் பளிங்கின் திரள் மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளி வளர் உள்ளத்து ஆனந்தக் கனியே அம்பலம் ஆடரங்காக
வெளி வளர் தெய்வக் கூத்து உகந்தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே
**பண் :பஞ்சமம்

#2
இடர் கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள் இருள் பிழம்பு அற எறிந்து எழுந்த
சுடர் மணி விளக்கினுள் ஒளி விளங்கும் தூய நல் சோதியுள் சோதீ
அடல் விடைப் பாகா அம்பலக் கூத்தா அயனொடு மால் அறியாமைப்
படர் ஒளி பரப்பிப் பரந்து நின்றாயைத் தொண்டனேன் பணியுமா பணியே
**பண் :பஞ்சமம்

#3
தத் பரம் பொருளே சசி கண்ட சிகண்டா சாம கண்டா அண்டவாணா
நல் பெரும் பொருளாய் உரை கலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னைத் தந்த பொன்னம்பலத்து அரசே
கற்பமாய் உலகாய் அல்லை ஆனாயைத் தொண்டனேன் கருதுமா கருதே
**பண் :பஞ்சமம்

#4
பெருமையில் சிறுமை பெண்ணொடு ஆணாய் என் பிறப்பு இறப்பு அறுத்த பேரொளியே
கருமையின் வெளியே கயல்_கணாள் இமவான் மகள் உமையவள் களைகண்ணே
அருமையின் மறை நான்கு ஓலமிட்டு அரற்றும் அப்பனே அம்பலத்து அமுதே
ஒருமையில் பல புக்கு உருவி நின்றாயைத் தொண்டனேன் உரைக்குமாறு உரையே
**பண் :பஞ்சமம்

#5
கோலமே மேலை வானவர் கோவே குணம் குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள் காலகாலா காம நாசா
ஆலமே அமுது உண்டு அம்பலம் செம்பொன் கோயில் கொண்டு ஆட வல்லானே
ஞாலமே தமியேன் நல் தவத்தாயைத் தொண்டனேன் நணுகுமா நணுகே
**பண் :பஞ்சமம்

#6
நீறு அணி பவளக் குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறு அணி புவன போகமே யோக வெள்ளமே மேரு வில் வீரா
ஆறு அணி சடை எம் அற்புதக் கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே
ஏறு அணி கொடி எம் ஈசனே உன்னைத் தொண்டனேன் இசையுமாறு இசையே
**பண் :பஞ்சமம்

#7
தனதன் நல் தோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனே
கனக நல் தூணே கற்பகக் கொழுந்தே கண்கள் மூன்று உடையதோர் கரும்பே
அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரர் சேகரனே
நுன கழல் இணை என் நெஞ்சினுள் இனிதாத் தொண்டனேன் நுகருமா நுகரே
**பண் :பஞ்சமம்

#8
திறம்பிய பிறவிச் சில தெய்வ நெறிக்கே திகைக்கின்றேன்-தனைத் திகையாமே
நிறம் பொன்னும் மின்னும் நிறைந்த சேவடிக் கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே
அறம் பல திறம் கண்டு அரும் தவர்க்கு அரசாய் ஆலின் கீழ் இருந்த அம்பலவா
புறம் சமண் புத்தர் பொய்கள் கண்டாயைத் தொண்டனேன் புணருமா புணரே
**பண் :பஞ்சமம்

#9
தக்கன் நல் தலையும் எச்சன் வன் தலையும் தாமரை நான்முகன் தலையும்
ஒக்க விண்டு உருள ஒண் திருப் புருவம் நெறித்து அருளிய உருத்திரனே
அக்கு அணி புலித்தோல் ஆடை மேல் ஆட ஆடப் பொன்னம்பலத்து ஆடும்
சொக்கனே எவர்க்கும் தொடர்வு_அரியாயைத் தொண்டனேன் தொடருமா தொடரே
**பண் :பஞ்சமம்

#10
மடங்கலாய்க் கனகன் மார்பு கீண்டானுக்கு அருள் புரி வள்ளலே மருள் ஆர்
இடம் கொள் முப்புரம் வெந்து அவிய வைதிகத் தேர் ஏறிய ஏறு சேவகனே
அடங்க வல் அரக்கன் அரட்டு இரு வரைக் கீழ் அடர்த்த பொன்னம்பலத்து அரசே
விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னைத் தொண்டனேன் விரும்புமா விரும்பே
**பண் :பஞ்சமம்

#11
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன் திருமாலொடு மயங்கி
முறைமுறை முறையிட்டு ஓர்வு_அரியாயை மூர்க்கனேன் மொழிந்த புன்மொழிகள்
அறை கழல் அரன் சீர் அறிவிலா வெறுமைச் சிறுமையில் பொறுக்கும் அம்பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே உன்னைத் தொண்டனேன் நினையுமா நினையே

@2 கோயில் – உயர்கொடி ஆடை
** பண் :பஞ்சமம்

#1
உயர் கொடி ஆடை மிடை படலத்தின் ஓம தூமப் படலத்தின்
பியர் நெடு மாடத்து அகில் புகைப் படலம் பெருகிய பெரும்பற்றப்புலியூர்
சியர் ஒளி மணிகள் நிரந்து சேர் கனகம் நிறைந்த சிற்றம்பலக் கூத்தா
மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர்ச் சேவடிகள் என் மனத்து வைத்தருளே
** பண் :பஞ்சமம்

#2
கரு வளர் மேகத்து அகடு தோய் மகுடக் கனக மாளிகை கலந்து எங்கும்
பெரு வள முத்தீ நான்மறைத் தொழிலால் எழில் மிகு பெரும்பற்றப்புலியூர்த்
திரு வளர் தெய்வப் பதி விதி நிதியம் திரண்ட சிற்றம்பலக் கூத்தா
உரு வளர் இன்பச் சிலம்பு ஒலி அலம்பும் உன் அடிக் கீழது என் உயிரே
** பண் :பஞ்சமம்

#3
வரம்பு இரி வாளை மிளிர் மடுக் கமலம் கரும்பொடு மாந்திடும் மேதி
பிரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப் பழனம் சூழ் பெரும்பற்றப்புலியூர்ச்
சிரம் புரை முடி வானவர் அடி முறையால் இறைஞ்சு சிற்றம்பலக் கூத்தா
நிரந்தரம் முனிவர் நினை திருக் கணைக் கால் நினைந்து நின்று ஒழிந்தது என் நெஞ்சே
** பண் :பஞ்சமம்

#4
தேர் மலி விழவில் குழல் ஒலி தெருவில் கூத்து ஒலி ஏத்து ஒலி ஓத்தின்
பேரொலி பரந்து கடல் ஒலி மலியப் பொலிதரு பெரும்பற்றப்புலியூர்ச்
சீர் நிலவு இலயத் திரு நடத்து இயல்பில் திகழ்ந்த சிற்றம்பலக் கூத்தா
வார் மலி முலையாள் வருடிய திரள் மா மணிக் குறங்கு அடைந்தது என் மதியே
** பண் :பஞ்சமம்

#5
நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மாப்
பிறை தவழ் பொழில் சூழ் கிடங்கிடைப் பதண முது மதில் பெரும்பற்றப்புலியூர்ச்
சிறைகொள் நீர்த் தரளத் திரள் கொள் நித்திலத்த செம்பொன் சிற்றம்பலக் கூத்தா
பொறை அணி நிதம்பப் புலி அதள் ஆடைக் கச்சு நூல் புகுந்தது என் புகலே
** பண் :பஞ்சமம்

#6
அது மதி இது என்று அலந்து அலை நூல் கற்று அழைப்பு ஒழிந்து அரு மறை அறிந்து
பிது மதி வழிநின்று ஒழிவிலா வேள்விப் பெரியவர் பெரும்பற்றப்புலியூர்ச்
செது மதிச் சமணும் தேரரும் சேராச் செல்வச் சிற்றம்பலக் கூத்தா
மது மதி வெள்ளத் திரு வயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே
** பண் :பஞ்சமம்

#7
பொரு வரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல் பொடி அணி பூண நூல் அகலம்
பெரு வரை புரை திண் தோளுடன் காணப்பெற்றவர் பெரும்பற்றப்புலியூர்த்
திரு மருவு தரத்தார் திசை அடைப்ப நடம்செய் சிற்றம்பலக் கூத்தா
உரு மருவு உதரத் தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே
**பண் :பஞ்சமம்

#8
கணி எரி விசிறு கரம் துடி விட வாய்க் கங்கணம் செம் கை மற்று அபயம்
பிணி கெட இவை கண்டு உன் பெரு நடத்தில் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர்த்
திணி மணி நீல கண்டத்து என் அமுதே சீர் கொள் சிற்றம்பலக் கூத்தா
அணி மணி முறுவல் பவள வாய்ச் செய்ய சோதியுள் அடங்கிற்று என் அறிவே
** பண் :பஞ்சமம்

#9
திரு நெடுமால் இந்திரன் அயன் வானோர் திருக்கடைக் காவலில் நெருக்கிப்
பெரு முடி மோதி உகு மணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றப்புலியூர்ச்
செரு நெடு மேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பலக் கூத்தா
கரு வடி குழைக் காது அமலச் செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே
** பண் :பஞ்சமம்

#10
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலைப் புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன்
பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப்புலியூர்ச்
சீர் கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னிச் சிற்றம்பலக் கூத்தா
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே
** பண் :பஞ்சமம்

#11
காமன் அக் காலன் தக்கன் மிக்க எச்சன் படக் கடைக்கணித்தவன் அல்லாப்
பேய் மனம் பிறிந்த தவப் பெரும் தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றப்புலியூர்ச்
சேம நல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வச் சிற்றம்பலக் கூத்தா
பூ மலர் அடிக் கீழ்ப் புராண பூதங்கள் பொறுப்பர் என் புன்சொலின் பொருளே

@3 கோயில் – உறவாகிய யோகம்
** பண் :பஞ்சமம்

#1
உறவாகிய யோகமும் போகமுமாய் உயிர்_ஆளீ என்னும் என் பொன் ஒருநாள்
சிறவாதவர் புரம் செற்ற கொற்றச் சிலை கொண்டு பன்றிப் பின் சென்று நின்ற
மறவா என்னும் மணி நீர் அருவி மகேந்திர மா மலை மேல் உறையும்
குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்

#2
காடு ஆடு பல் கணம் சூழக் கேழல் கடும்பின் நெடும் பகல் கான் நடந்த
வேடா மகேந்திர வெற்பா என்னும் வினையேன் மடந்தை விம்மா வெருவும்
சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும்
கோடா என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்

#3
கானே வரு முரண் ஏனம் எய்த களி ஆர் புளின நல் காளாய் என்னும்
வானே தடவு நெடும் குடுமி மகேந்திர மா மலை மேல் இருந்த
தேனே என்னும் தெய்வ வாய்மொழியார் திருவாளர் மூவாயிரவர் தெய்வக்
கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்

#4
வெறி ஏறு பன்றிப் பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள்செய்த வேந்தே என்னும்
மறி ஏறு சாரல் மகேந்திர மா மலை மேல் இருந்த மருந்தே என்னும்
நெறியே என்னும் நெறிநின்றவர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்
குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்

#5
செழும் தென்றல் அன்றில் இத் திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி
எழுந்து இன்று என் மேல் பகையாட வாடும் எனை நீ நலிவது என் என்னே என்னும்
அழுந்தா மகேந்திரத்து அந்தரப் புட்கு அரசுக்கு அரசே அமரர் தனிக்
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
**பண் :பஞ்சமம்

#6
வண்டு ஆர் குழல் உமை நங்கை முன்னே மகேந்திரச் சாரல் வராகத்தின் பின்
கண்டார் கவல வில் ஆடி வேடர் கடி நாயுடன் கை வளைந்தாய் என்னும்
பண்டு ஆய மலர் அயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசும் கண்
கொண்டாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்

#7
கடுப்பாய்ப் பறை கறங்கக் கடு வெம் சிலையும் கணையும் கவணும் கைக்கொண்டு
உடுப்பு ஆய தோல் செருப்புச் சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப
நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்து அரையா என்பார்க்கு நாதாந்த பதம்
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்

#8
சே ஏந்து வெல் கொடியானே என்னும் சிவனே என் சேமத் துணையே என்னும்
மா ஏந்து சாரல் மகேந்திரத்தின் வளர் நாயகா இங்கே வாராய் என்னும்
பூ ஏந்தி மூவாயிரவர் தொழப் புகழ் ஏந்து மன்று பொலிய நின்ற
கோவே என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
**பண் :பஞ்சமம்

#9
தர வார் புனம் சுனைத் தாழ் அருவி தடம் கல் உறையும் மடங்கல் அமர்
மரவு ஆர் பொழில் எழில் வேங்கை எங்கும் மழை சூழ் மகேந்திர மா மலை மேல்
சுரவா என்னும் சுடர் நீள் முடி மால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கு எல்லாம்
குரவா என்னும் குணக் குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்

#10
திருநீறு இடா உருத் தீண்டேன் என்னும் திருநீறு மெய் திருமுண்டம் தீட்டிப்
பெரு நீலகண்டன் திறம் கொண்டு இவள் பிதற்றிப் பெரும் தெருவே திரியும்
வரு நீர் அருவி மகேந்திரப் பொன் மலையில் மலை_மகளுக்கு அருளும்
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்

#11
உற்றாய் என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்று
ஆய ஐந்தெழுத்தும் பிதற்றிப் பிணி தீர் வெண் நீறு இடப்பெற்றேன் என்னும்
சுற்று ஆய சோதி மகேந்திரம் சூழ மனத்து இருள் வாங்கிச் சூழாத நெஞ்சில்
குற்றாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
**பண் :பஞ்சமம்

#12
வேறாக உள்ளத்து உவகை விளைத்து அவனிச் சிவலோக வேத வென்றி
மாறாத மூவாயிரவரையும் எனையும் மகிழ்ந்து ஆள வல்லாய் என்னும்
ஆறு ஆர் சிகர மகேந்திரத்து உன் அடியார் பிழை பொறுப்பாய் அமுது ஓர்
கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே

@4 கோயில் – இணங்கிலா ஈசன்
** பண் :காந்தாரம்

#1
இணங்கிலா ஈசன் நேசத்து இருந்த சித்தத்தினேற்கு
மணம்கொள் சீர்த் தில்லை_வாணன் மண அடியார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறு_இல் கோறை வாய்ப் பீறல் பிண்டப்
பிணங்களைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்

#2
எட்டு உரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி
விட்டு இலங்கு அலங்கல் தில்லை வேந்தனைச் சேர்ந்திலாத
துட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்

#3
அருள் திரள் செம்பொன் சோதி அம்பலத்து ஆடுகின்ற
இருள் திரள் கண்டத்து எம்மான் இன்பருக்கு அன்புசெய்யா
அரட்டரை அரட்டுப் பேசும் அழுக்கரைக் கழுக்கள் ஆய
பிரட்டரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்

#4
துணுக்கென அயனும் மாலும் தொடர்வு அரும் சுடராய் இப்பால்
அணுக்கருக்கு அணிய செம்பொன் அம்பலத்து_ஆடிக்கு அல்லாச்
சிணுக்கரைச் செத்தல் கொத்தைச் சிதம்பரைச் சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்

#5
திசைக்கு மிக்கு உலவு கீர்த்தித் தில்லைக் கூத்து உகந்து தீய
நசிக்க வெண் நீறது ஆடும் நமர்களை நணுகா நாய்கள்
அசிக்க ஆரியங்கள் ஓதும் ஆதரைப் பேத வாதப்
பிசுக்கரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்

#6
ஆடு அரவு ஆட ஆடும் அம்பலத்து அமுதே என்னும்
சேடர் சேவடிகள் சூடாத் திரு இலா உருவினாரைச்
சாடரைச் சாண் கை மோடச் சழக்கரைப் பிழைக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்

#7
உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறல் அம் தேறல் மாறாத்
திருக்குறிப்பு அருளும் தில்லைச் செல்வன்-பால் செல்லும் செல்வு_இல்
அருக்கரை அள்ளல்-வாய கள்ளரை அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்

#8
செக்கர் ஒத்து இரவி நூறாயிரத் திரள் ஒப்பாம் தில்லைச்
சொக்கர் அம்பலவர் என்னும் சுருதியைக் கருத மாட்டா
எக்கரைக் குண்டாம் மிண்ட எத்தரைப் புத்தர் ஆதிப்
பொக்கரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்

#9
எச்சனைத் தலையைக் கொண்டு செண்டடித்து இடபம் ஏறி
அச்சம்கொண்டு அமரர் ஓட நின்ற அம்பலவற்கு அல்லாக்
கச்சரைக் கல்லாப் பொல்லாக் கயவரைப் பசு நூல் கற்கும்
பிச்சரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்

#10
விண்ணவர் மகுட கோடி மிடைந்து ஒளி மணிகள் வீசும்
அண்ணல் அம்பலவன் கொற்ற வாசலுக்கு ஆசை இல்லாத்
தெண்ணரைத் தெருளா உள்ளத்து இருளரைத் திட்டைமுட்டைப்
பெண்ணரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்

#11
சிறப்பு உடை அடியார் தில்லைச் செம்பொன் அம்பலவற்கு ஆள் ஆம்
உறைப்பு உடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார்
இறப்பொடு பிறப்பினுக்கே இனியராய் மீண்டும்மீண்டும்
பிறப்பரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே

&2 சேந்தனார்

@1 திருவீழிமிழலை
** பண் :பஞ்சமம்

#1
ஏக நாயகனை இமையவர்க்கு அரசை என் உயிர்க்கு அமுதினை எதிர்_இல்
போக நாயகனைப் புயல்_வணற்கு அருளிப் பொன் நெடும் சிவிகையா ஊர்ந்த
மேக நாயகனை மிகு திருவீழிமிழலை விண் இழி செழும் கோயில்
யோக நாயகனை அன்றி மற்றொன்றும் உண்டு என உணர்கிலேன் யானே
** பண் :பஞ்சமம்

#2
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணை மா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மன மணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனைத் திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன்-தன்னைக் கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே
** பண் :பஞ்சமம்

#3
மண்டலத்து ஒளியை விலக்கி யான் நுகர்ந்த மருந்தை என் மாறிலா மணியைப்
பண்டு அலர் அயன் மாற்கு அரிதுமாய் அடியார்க்கு எளியதோர் பவள மால் வரையை
விண்டு அலர் மலர்-வாய் வேரி வார் பொழில் சூழ் திருவீழிமிழலை ஊர் ஆளும்
கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியைக் குறுக வல்வினை குறுகாவே
** பண் :பஞ்சமம்

#4
தன் அடி நிழல் கீழ் என்னையும் தகைத்த சசி குலா மவுலியைத் தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர்
மின் நெடும் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்கு வெண் பளிங்கின்
பொன் அடிக்கு அடிமை புக்கு இனிப் போக விடுவனோ பூண்டுகொண்டேனே
** பண் :பஞ்சமம்

#5
இத் தெய்வ நெறி நன்று என்று இருள் மாயப் பிறப்பு அறா இந்திரசாலப்
பொய்த் தெய்வ நெறி நான் புகா வகை புரிந்த புராண சிந்தாமணி வைத்த
மெய்த் தெய்வ நெறி நான்மறையவர் வீழிமிழலை விண் இழி செழும் கோயில்
அத் தெய்வ நெறியில் சிவம் அலாது அவமும் அறிவரோ அறிவுடையோரே
** பண் :பஞ்சமம்

#6
அக் கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு அழுந்தி யான் அவமே
புக்கிடா வண்ணம் காத்து எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை எண்
திக்கு எலாம் குலவும் புகழ்த் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ்ப்
புக்கு நிற்பவர்-தம் பொன் அடிக் கமலப் பொடி அணிந்து அடிமை பூண்டேனே
** பண் :பஞ்சமம்

#7
கங்கை நீர் அரிசில் கரை இரு மருங்கும் கமழ் பொழில் தழுவிய கழனித்
திங்கள் நேர் தீண்ட நீண்ட மாளிகை சூழ் மாட நீடு உயர் திருவீழித்
தங்கு சீர்ச் செல்வத் தெய்வத் தான்தோன்றி நம்பியைத் தன் பெரும் சோதி
மங்கை ஓர் பங்கத்து என் அரு மருந்தை வருந்தி நான் மறப்பனோ இனியே
** பண் :பஞ்சமம்

#8
ஆயிரம் கமலம் ஞாயிறு ஆயிர முக்கண் முக கர சரணத்தோன்
பாய் இரும் கங்கை பனி நிலாக் கரந்த படர் சடை மின்னு பொன் முடியோன்
வேய் இரும் தோளி உமை மணவாளன் விரும்பிய மிழலை சூழ் பொழிலைப்
போய் இருந்தேயும் போற்றுவார் கழல்கள் போற்றுவார் புரந்தராதிகளே
** பண் :பஞ்சமம்

#9
எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள்
எண்_இல் பல் கோடி திருவுரு நாமம் ஏர்கொள் முக்கண் முகம் இயல்பும்
எண்_இல் பல் கோடி எல்லைக்கு அப்பாலாய் நின்று ஐஞ்ஞூற்று அந்தணர் ஏத்தும்
எண்_இல் பல் கோடி குணத்தர் ஏர் வீழி இவர் நம்மை ஆளுடையாரே
** பண் :பஞ்சமம்

#10
தக்கன் வெம் கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன்
திக்கு எலாம் நிறைந்த புகழ்த் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ்ப்
புக்கு இருந்தவர்-தம் பொன் அடிக் கமலப் பொடி அணிந்து அடிமை பூண்டேனே
** பண் :பஞ்சமம்

#11
உளம் கொள மதுரக் கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை
வளம் கிளர் நதியும் மதியமும் சூடி மழ விடை மேல் வருவானை
விளங்கு ஒளி வீழிமிழலை வேந்தே என்று ஆம்தனைச் சேந்தன் தாதையை யான்
களம் கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனக கற்பகமே
** பண் :பஞ்சமம்

#12
பாடு அலங்காரப் பரிசில் காசு அருளிப் பழுத்த செந்தமிழ் மலர் சூடி
நீடு அலங்காரத்து எம் பெருமக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின்றானை
வேடு அலங்காரக் கோலத்தின் அமுதைத் திருவீழிமிழலை ஊர் ஆளும்
கேடு_இல் அம் கீர்த்திக் கனக கற்பகத்தைக் கெழுமுதற்கு எவ்விடத்தேனே

@2 திருவாவடுதுறை
** பண் :பஞ்சமம்

#1
பொய்யாத வேதியர் சாந்தை மெய்ப் புகழாளர் ஆயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரிக் கரை மேய
ஐயா திருவாவடுதுறை அமுதே என்று உன்னை அழைத்தக்கால்
மை ஆர் தடம் கண் மடந்தைக்கு ஒன்று அருளாது ஒழிவது மாதிமையே
** பண் :பஞ்சமம்

#2
மாதி மணம் கமழும் பொழில் மணி மாட மாளிகை வீதி சூழ்
சோதி மதில் அணி சாந்தை மெய்ச் சுருதி விதிவழியோர் தொழும்
ஆதி அமரர் புராணனாம் அணி ஆவடுதுறை நம்பி நின்ற
நீதி அறிகிலள் பொன் நெடும் திண் தோள் புணர நினைக்குமே
** பண் :பஞ்சமம்

#3
நினைக்கும் நிரந்தரனே என்னும் நிலாக் கோலச் செம் சடைக் கங்கை நீர்
நனைக்கும் நலம் கிளர் கொன்றை மேல் நயம் பேசும் நல் நுதல் நங்கைமீர்
மனக்கு இன்ப வெள்ள மலை_மகள் மணவாள நம்பி வண் சாந்தை ஊர்
தனக்கு இன்பன் ஆவடு தண் துறைத் தருணேந்து சேகரன் என்னுமே
** பண் :பஞ்சமம்

#4
தருணேந்து சேகரனே எனும் தடம் பொன்னித் தென்கரைச் சாந்தை ஊர்ப்
பொருள் நேர்ந்த சிந்தையவர் தொழப் புகழ் செல்வம் மல்கு பொன் கோயிலுள்
அருள் நேர்ந்து அமர் திருவாவடுதுறை ஆண்ட ஆண்டகை அம்மானே
தெருள் நேர்ந்த சித்தம் வலியவா திலக நுதலி திறத்திலே
** பண் :பஞ்சமம்

#5
திலக நுதல் உமை நங்கைக்கும் திருவாவடுதுறை நம்பிக்கும்
குலக அடியவர்க்கு என்னை ஆட்கொடுத்து ஆண்டுகொண்ட குணக்கடல்
அலது ஒன்று அறிகின்றிலேம் எனும் அணியும் வெண் நீறு அஞ்செழுத்து அலால்
வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே
** பண் :பஞ்சமம்

#6
வேந்தன் வளைத்தது மேரு வில் அரவு நாண் வெம் கணை செம் கண் மால்
போந்த மதில் அணி முப்புரம் பொடியாட வேதப் புரவித் தேர்ச்
சாந்தை முதல் அயன் சாரதி கதி அருள் என்னும் இத் தையலை
ஆம் தண் திருவாவடுதுறையான் செய்கை யார் அறிகிற்பரே
**பண் :பஞ்சமம்

#7
கிற்போம் எனத் தக்கன் வேள்வி புக்கு எடுத்து ஓடிக் கெட்ட அத் தேவர்கள்
சொல் போலும் மெய்ப் பயன் பாவிகாள் என் சொல்லிச் சொல்லும் இத் தூ_மொழி
கல் போல் மனம் கனிவித்த எம் கருணாலயா வந்திடாய் என்றால்
பெற்போ பெரும் திருவாவடுதுறையாளி பேசாது ஒழிவதே
** பண் :பஞ்சமம்

#8
ஒழிவு ஒன்று இலா உண்மை வண்ணமும் உலப்பிலள் ஊறு இன்ப வெள்ளமும்
மொழிவு ஒன்று இலாப் பொன்னித் தீர்த்தமும் முனி கோடிகோடியா மூர்த்தியும்
அழிவு ஒன்று இலாச் செல்வச் சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆடினாள்
இழிவு ஒன்று இலா வகை எய்தி நின்று இறுமாக்கும் என் இள_மான் அனே
** பண் :பஞ்சமம்

#9
மான் ஏர் கலை வளையும் கவர்ந்து உளம் கொள்ளைகொள்ள வழக்கு உண்டே
தேனே அமுதே என் சித்தமே சிவலோக நாயகச் செல்வமே
ஆனே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை அன்பர்-தம்
கோனே நின் மெய் அடியார் மனக் கருத்தை முடித்திடும் குன்றமே
** பண் :பஞ்சமம்

#10
குன்றேந்தி கோகனகத்து அயன் அறியா நெறி என்னைக் கூட்டினாய்
என்று ஏங்கிஏங்கி அழைக்கின்றாள் இள_வல்லி எல்லை கடந்தனள்
அன்றே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை ஆடினாள்
நன்றே இவள் நம் பரம் அல்லள் நவலோக நாயகன் பாலளே
** பண் :பஞ்சமம்

#11
பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்து உள்ளே பாலிப்பான்
போலும் என் ஆருயிர்ப் போகமாம் புர கால காம புராந்தகன்
சேலும் கயலும் திளைக்கும் நீர்த் திருவாவடுதுறை வேந்தனோடு
ஆலும் அதற்கே முதலுமாம் அறிந்தோம் அரிவை பொய்யாததே

@3 சேந்தனார் – திருவிடைக்கழி
**பண் :பஞ்சமம்

#1
மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை
மேல் உலாம் தேவர் குலம் முழுது ஆளும் குமரவேள் வள்ளி-தன் மணாளன்
சேல் உலாம் கழனித் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
வேல் உலாம் தடக் கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே
** பண் :பஞ்சமம்

#2
இவளை வார் இள மென் கொங்கை பீர் பொங்க எழில் கவர்ந்தான் இளம் காளை
கவள மா கரி மேல் கவரி சூழ் குடைக் கீழ்க் கனகக் குன்று என வரும் கள்வன்
திவள் அம் மாளிகை சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
குவளை மா மலர்க் கண் நங்கையாள் நயக்கும் குழகன் நல் அழகன் நம் கோவே
** பண் :பஞ்சமம்

#3
கோ வினைப் பவளக் குழ மணக்கோலக் குழாங்கள் சூழ் கோழி வெல் கொடியோன்
காவன் நல் சேனை என்னக் காப்பவன் என் பொன்னை மேகலை கவர்வானே
தேவின் நல் தலைவன் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
தூவி நல் பீலி மா மயில் ஊரும் சுப்பிரமண்ணியன் தானே
** பண் :பஞ்சமம்

#4
தான் அமர் பொருது தானவர் சேனை மடியச் சூர் மார்பினைத் தடிந்தோன்
மான் அமர் தடக் கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளரத்
தேன் அமர் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே
** பண் :பஞ்சமம்

#5
குண மணிக் குருளைக் கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோ
மணம் அணி மறையோர் வானவர் வையம் உய்ய மற்று அடியனேன் வாழத்
திணம் மணி மாடத் திருவிடைக்கழியில் திருக் குரா நீழல் கீழ் நின்ற
கண மணி பொரு நீர்க் கங்கை-தன் சிறுவன் கணபதி பின் இளங்கிளையே
** பண் :பஞ்சமம்

#6
கிளை இளம் சேய் அக் கிரி-தனைக் கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன்
வளை இளம் பிறைச் செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன்
திளை இளம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
முளை இளம் களிறு என் மொய் குழல் சிறுமிக்கு அருளும்-கொல் முருகவேள் பரிந்தே
** பண் :பஞ்சமம்

#7
பரிந்த செம் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்த சிந்துரமோ தூ மணித் திரளோ சுந்தரத்து அரசு இது என்னத்
தெரிந்தவை திகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
வரிந்த வெம் சிலைக் கை மைந்தனை அம் சொல் மையல்கொண்டு ஐயுறும் வகையே
** பண் :பஞ்சமம்

#8
வகை மிகும் அசுரர் மாள வந்து உழிஞை வான் அமர் விளைத்த தாளாளன்
புகை மிகும் அனலில் புரம் பொடிபடுத்த பொன்மலை வில்லி-தன் புதல்வன்
திகை மிகு கீர்த்தித் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
தொகை மிகு நாமத்தவன் திருவடிக்கு என் துடி_இடை மடல் தொடங்கினளே
** பண் :பஞ்சமம்

#9
தொடங்கினள் மடல் என்று அணி முடித் தொங்கல் புறஇதழாகிலும் அருளான்
இடம் கொளக் குறத்தி திறத்திலும் இறைவன் மறத் தொழில் வார்த்தையும் உடையன்
திடம் கொள் வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்து அறு முகத்து அமுதினை மருண்டே
** பண் :பஞ்சமம்

#10
மருண்டு உறை கோயில் மல்கு நல் குன்றப் பொழில் வளர் மகிழ் திருப்பிடவூர்
வெருண்ட மான் விழியார்க்கு அருள்செயாவிடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர்
தெருண்டவை திகர் வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
குருண்ட பூம் குஞ்சிப் பிறைச் சடை முடி முக்கண் உடைக் கோமளக் கொழுந்தே
** பண் :பஞ்சமம்

#11
கொழும் திரள் வாய் ஆர் தாய் மொழியாகத் தூ மொழி அமரர் கோமகனைச்
செழும் திரள் சோதிச் செப்புறைச் சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே
செழும் தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
எழும் கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர் கெடும் மால் உலா மனமே

&3 கருவூர்த் தேவர்

@1 கோயில் – கணம் விரி
** பண் :புறநீர்மை

#1
கணம் விரி குடுமிச் செம் மணிக் கவை நாக் கறை அணல் கண் செவிப் பகு வாய்
பணம் விரி துத்திப் பொறி கொள் வெள் எயிற்றுப் பாம்பு அணி பரமர்-தம் கோயில்
மணம் விரிதரு தேமாம் பொழில் மொழுப்பின் மழை தவழ் வளர் இளம் கமுகம்
திணர் நிரை அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த் திரு வளர் திருச்சிற்றம்பலமே
** பண் :புறநீர்மை

#2
இவ் அரும் பிறவிப் பௌவ நீர் நீந்தும் ஏழையேற்கு என்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார் துணை என்றால் அஞ்சல் என்று அருள்செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்த செம் சாலிக் கடைசியர் களை தரு நீலம்
செய் வரம்பு அரும்பு பெரும்பற்றப்புலியூர்த் திரு வளர் திருச்சிற்றம்பலமே
** பண் :புறநீர்மை

#3
தாயின் நேர் இரங்கும் தலைவவோ என்றும் தமியனேன் துணைவவோ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம் புரி பரமர்-தம் கோயில்
வாயின் ஏர் அரும்பு மணி முருக்கு அலர வளர் இளம் சோலை மாந்தளிர் செம்
தீயின் நேர் அரும்பு பெரும்பற்றப்புலியூர்த் திரு வளர் திருச்சிற்றம்பலமே
** பண் :புறநீர்மை

#4
துந்துபி குழல் யாழ் மொந்தை வான் இயம்பத் தொடர்ந்து இருடியர் கணம் துதிப்ப
நந்தி கை முழவம் முகில் என முழங்க நடம் புரி பரமர்-தம் கோயில்
அந்தியின் மறை நான்கு ஆரணம் பொதிந்த அரும் பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த் திரு வளர் திருச்சிற்றம்பலமே
** பண் :புறநீர்மை

#5
கண் பனி அரும்பக் கைகள் மொட்டித்து என் களைகணே ஓலம் என்று ஓலிட்டு
என்பு எலாம் உருகும் அன்பர்-தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில்
பண் பல தெளி தேன் பாடி நின்று ஆடப் பனி மலர்ச் சோலை சூழ் மொழுப்பில்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த் திரு வளர் திருச்சிற்றம்பலமே
** பண் :புறநீர்மை

#6
நெஞ்சு இடர் அகல அகம் புகுந்து ஒடுங்கு நிலைமையோடு இருள் கிழித்து எழுந்த
வெம் சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரி சடை அடிகள்-தம் கோயில்
அம் சுடர்ப் புரிசை ஆழி சூழ் வட்டத்து அகம் படி மணி நிரை பரந்த
செம் சுடர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த் திரு வளர் திருச்சிற்றம்பலமே
** பண் :புறநீர்மை

#7
பூத் திரள் உருவம் செம் கதிர் விரியாப் புந்தியில் வந்த மால் விடையோன்
தூத் திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில்
நாத் திரள் மறை ஓர்ந்து ஓமகுண்டத்து நறு நெயால் மறையவர் வளர்த்த
தீத் திரள் அரும்பு பெரும்பற்றப்புலியூர்த் திரு வளர் திருச்சிற்றம்பலமே
** பண் :புறநீர்மை

#8
சீர்த்த திண் புவனம் முழுவதும் ஏனைத் திசைகளோடு அண்டங்கள் அனைத்தும்
போர்த்த தம் பெருமை சிறுமை புக்கு ஒடுங்கும் புணர்ப்பு உடை அடிகள்-தம் கோயில்
ஆர்த்து வந்து அமரித்து அமரரும் பிறரும் அலை கடல் இடு திரைப் புனிதத்
தீர்த்த நீர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த் திரு வளர் திருச்சிற்றம்பலமே
** பண் :புறநீர்மை

#9
பின்னு செம் சடையும் பிறை தவழ் மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டி
அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில்
புன்னை தேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறி வரி வண்டு இனம் பாடும்
தென்ன தேன் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த் திரு வளர் திருச்சிற்றம்பலமே
** பண் :புறநீர்மை

#10
உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும் ஒளி வளர் திரு மணிச் சுடர் கான்று
எம்பிரான் நடம்செய் சூழல் அங்கு எல்லாம் இருள் பிழம்பு அற எறி கோயில்
வம்பு உலாம் கோயில் கோபுரம் கூடம் வளர் நிலை மாட மாளிகைகள்
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த் திரு வளர் திருச்சிற்றம்பலமே
** பண் :புறநீர்மை

#11
இரும் திரைத் தரளப் பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள்
திருந்து உயிர்ப் பருவத்து அறிவுறு கருவூர்த் துறை வளர் தீம் தமிழ் மாலை
பொருந்து அரும் கருணைப் பரமர்-தம் கோயில் பொழிலகம் குடைந்து வண்டு உறங்கச்
செருந்தி நின்று அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த் திரு வளர் திருச்சிற்றம்பலமே

@2 கருவூர்த் தேவர் – திருக்களந்தை ஆதித்தேச்சரம்
** பண் :புறநீர்மை

#1
கலைகள்-தம் பொருளும் அறிவுமாய் என்னைக் கற்பினில் பெற்றெடுத்து எனக்கே
முலைகள் தந்து அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும்
மலை குடைந்து அனைய நெடு நிலை மாட மருங்கு எலாம் மறையவர் முறை ஓத்து
அலை கடல் முழங்கும் அம் தண் நீர்க் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே
** பண் :புறநீர்மை

#2
சந்தன களபம் துதைந்த நல் மேனித் தவள வெண் பொடி முழுது ஆடும்
செம் தழல் உருவில் பொலிந்து நோக்கு உடைய திருநுதலவர்க்கு இடம் போலும்
இந்தன விலங்கல் எறி புனம் தீப்பட்டு எரிவது ஒத்து எழு நிலை மாடம்
அந்தணர் அழல் ஓம்பு அலை புனல் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே
** பண் :புறநீர்மை

#3
கரியரே இடம் தான் செய்யரே ஒருபால் கழுத்தில் ஓர் தனி வடம் சேர்த்தி
முரிவரே முனிவர் தம்மொடு ஆல் நிழல் கீழ் முறை தெரிந்து ஓர் உடம்பினராம்
இருவரே முக்கண் நால் பெரும் தடம் தோள் இறைவரே மறைகளும் தேட
அரியரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே
** பண் :புறநீர்மை

#4
பழையராம் தொண்டர்க்கு எளியரே மிண்டர்க்கு அரியரே பாவியேன் செய்யும்
பிழை எலாம் பொறுத்து என் பிணி பொறுத்து அருளாப் பிச்சரே நச்சு அரா மிளிரும்
குழையராய் வந்து என் குடி முழுது ஆளும் குழகரே ஒழுகு நீர்க் கங்கை
அழகரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே
** பண் :புறநீர்மை

#5
பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம்பு அதனில்
தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல் ஆடு அரவம்
துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடி இடை இட மருங்கு ஒருத்தி
அவளுமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே
** பண் :புறநீர்மை

#6
நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்து இலங்கினவே
போலுமே முறுவல் நிறைய ஆனந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர்
கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்ட
தாலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே
** பண் :புறநீர்மை

#7
திக்கு அடா நினைந்து நெஞ்சு இடிந்து உருகும் திறத்தவர் புறத்து இருந்து அலச
மைக் கடா அனைய என்னை ஆள் விரும்பி மற்றொரு பிறவியில் பிறந்து
பொய்க்கு அடா வண்ணம் காத்து எனக்கு அருளே புரியவும் வல்லரே எல்லே
அக்கடா ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே
** பண் :புறநீர்மை

#8
மெய்யரே மெய்யர்க்கு இடு திருவான விளக்கரே எழுது கோல் வளையாள்
மையரே வையம் பலி திரிந்து உறையும் மயானரே உளம் கலந்திருந்தும்
பொய்யரே பொய்யர்க்கு அடுத்த வான் பளிங்கின் பொருள் வழி இருள் கிழித்து எழுந்த
ஐயரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே
** பண் :புறநீர்மை

#9
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இரு செவி ஒருபால்
விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறி வரி நாகம்
கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலை நீர்
அமலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே
** பண் :புறநீர்மை

#10
நீர் அணங்கு அசும்பு கழனி சூழ் களந்தை நிறை புகழ் ஆதித்தேச்சரத்து
நாரணன் பரவும் திருவடி நிலை மேல் நலம் மலி கலை பயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவள வாய் சுரந்த அமுதம் ஊறிய தமிழ் மாலை
ஏர் அணங்கு இருநான்கு இரண்டு இவை வல்லோர் இருள் கிழித்து எழுந்த சிந்தையரே

@3 கருவூர்த் தேவர் – திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
** பண் :பஞ்சமம்

#1
தளிர் ஒளி மணிப் பூம் பதம் சிலம்பு அலம்பச் சடை விரித்து அலை எறி கங்கைத்
தெளிர் ஒளி மணி நீர்த் திவலை முத்து அரும்பித் திருமுகம் மலர்ந்து சொட்டு அட்டக்
கிளர் ஒளி மணி வண்டு அறை பொழில் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
வளர் ஒளி மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே
** பண் :பஞ்சமம்

#2
துண்ட வெண் பிறையும் படர் சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவள வாய் இதழும் கண் நுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளும் நீர்ப் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
வண்டு அறை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே
** பண் :பஞ்சமம்

#3
திரு நுதல் விழியும் பவள வாய் இதழும் திலகமும் உடையவன் சடை மேல்
புரிதரு மலரின் தாது நின்று ஊதப் போய்வரும் தும்பிகாள் இங்கே
கிரி தவழ் முகிலின் கீழ்த் தவழ் மாடம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
வரு திறல் மணி அம்பலவனைக் கண்டு என் மனத்தையும் கொண்டு போது-மினே
** பண் :பஞ்சமம்

#4
தெள்ளு நீறவன் நீறு என் உடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும்
மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும்
கிள்ளை பூம் பொதும்பில் கொஞ்சி மாம் பொழிற்கே கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
வள்ளலே மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே என்னும் என் மனனே
** பண் :பஞ்சமம்

#5
தோழி யாம் செய்த தொழில் என் எம்பெருமான் துணை மலர்ச் சேவடி காண்பான்
ஊழிதோறூழி உணர்ந்து உளம் கசிந்து நெக்கு நைந்து உளம் கரைந்து உருக்கும்
கேழலும் புள்ளும் ஆகி நின்று இருவர் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
வாழிய மணி அம்பலவனைக் காண்பான் மயங்கவும் மால் ஒழியோமே
** பண் :பஞ்சமம்

#6
என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில்
அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமருமாறு கண்டு அயர்வன்
கிஞ்சுக மணி வாய் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
மஞ்சு அணி மணி அம்பலவவோ என்று மயங்குவன் மாலையம் பொழுதே
** பண் :பஞ்சமம்

#7
தழை தவழ் மொழுப்பும் தவள நீற்று ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும்
குழை தவழ் செவியும் குளிர் சடைத் தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழை தவழ் கனகம் பொழியும் நீர்ப் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
மழை தவழ் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தர்-தம் வாழ்வு போன்றதுவே
** பண் :பஞ்சமம்

#8
தன் அக மழலைச் சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு
இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான்
கின்னரம் முழவம் மழலை யாழ் வீணை கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
மன்னவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனத்துள் வைத்தனனே
** பண் :பஞ்சமம்

#9
யாது நீ நினைவது எவரை யாம் உடையது எவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்து என் பனி மலர்க் கண்ணுள் நின்று அகலான்
கேதகை நிழலைக் குருகு என மருவிக் கெண்டைகள் வெருவு கீழ்க்கோட்டூர்
மாதவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் புகுந்தானே
** பண் :பஞ்சமம்

#10
அந்தி போல் உருவும் அந்தியில் பிறை சேர் அழகிய சடையும் வெண் நீறும்
சிந்தையால் நினையில் சிந்தையும் காணேன் செய்வது என் தெளி புனல் அலங்கல்
கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண் பணை செய் கீழ்க்கோட்டூர்
வந்த நாள் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே அறியும் என் மனமே
** பண் :பஞ்சமம்

#11
கித்தி நின்று ஆடும் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
மத்தனை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணி நெடு மாலை பெரியவர்க்கு அகல் இரு விசும்பின்
முத்தியாம் என்றே உலகர் ஏத்துவரேல் முகம் மலர்ந்து எதிர்கொளும் திருவே

@4 கருவூர்த் தேவர் – திருமுகத்தலை
** பண் :பஞ்சமம்

#1
புவன நாயகனே அக உயிர்க்கு அமுதே பூரணா ஆரணம் பொழியும்
பவள வாய் மணியே பணிசெய்வார்க்கு இரங்கும் பசுபதீ பன்னகாபரணா
அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவள மா மணிப் பூம் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்குதற்கே
** பண் :பஞ்சமம்

#2
புழுங்கு தீவினையேன் வினை கெடப் புகுந்து புணர் பொருள் உணர்வு நூல் வகையால்
வழங்கு தேன் பொழியும் பவள வாய் முக்கண் வளர் ஒளி மணி நெடும் குன்றே
முழங்கு தீம் புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன்
விழுங்கு தீம் கனியாய் இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளம் ஆயினையே
** பண் :பஞ்சமம்

#3
கல் நகா உள்ளக் கள்வனேன் நின்-கண் கசிவிலேன் கண்ணின் நீர் சொரியேன்
முன் நகா ஒழியேன் ஆயினும் செழு நீர் முகத்தலை அகத்து அமர்ந்து உறையும்
பன்னகாபரணா பவள வாய் மணியே பாவியேன் ஆவியுள் புகுந்தது
என்ன காரணம் நீ ஏழை நாய் அடியேற்கு எளிமையோ பெருமை ஆவதுவே
** பண் :பஞ்சமம்

#4
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழு நீர்க் கிடை_அனாருடைய என் நெஞ்சில்
பாடிலா மணியே மணி உமிழ்ந்து ஒளிரும் பரமனே பன்னகாபரணா
மேடு எலாம் செந்நெல் பசும் கதிர் விளைந்து மிகத் திகழ் முகத்தலை மூதூர்
நீடினாய் எனினும் உள் புகுந்து அடியேன் நெஞ்சு எலாம் நிறைந்து நின்றாயே
** பண் :பஞ்சமம்

#5
அக் கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு என்னொடும் விளைந்த
இக் கலாம் முழுதும் ஒழிய வந்து உள் புக்கு என்னை ஆள் ஆண்ட நாயகனே
முக்கண் நாயகனே முழுது உலகு இறைஞ்ச முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன்
பக்கல் ஆனந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவள வாய் மொழிந்தே
** பண் :பஞ்சமம்

#6
புனல் பட உருகி மண்டு அழல் வெதும்பிப் பூம் புனல் பொதிந்து உயிர் அளிக்கும்
வினைபடு நிறை போல் நிறைந்த வேதகத்து என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியே
முனை படு மதில் மூன்று எரித்த நாயகனே முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன்
வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே
** பண் :பஞ்சமம்

#7
விரியும் நீர் ஆலக் கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத்து ஒளியும்
கரியும் நீறு ஆடும் கனலும் ஒத்து ஒளிரும் கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி
முரியுமாறு எல்லாம் முரிந்து அழகியையாய் முகத்தலை அகத்து அமர்ந்தாயைப்
பிரியுமாறு உளதே பேய்களோம் செய்த பிழை பொறுத்து ஆண்ட பேரொளியே
** பண் :பஞ்சமம்

#8
என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என்பு எலாம் உருக நீ எளிவந்து
உன்னை என்-பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே
முன்னை என் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே
கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே
** பண் :பஞ்சமம்

#9
அம்பரா அனலா அனிலமே புவி நீ அம்புவே இந்துவே இரவி
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே
மொய்ம்பராய் நலம் சொல் மூதறிவாளர் முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே
எம்பிரான் ஆகி ஆண்ட நீ மீண்டே எந்தையும் தாயும் ஆயினையே
** பண் :பஞ்சமம்

#10
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தலை அகத்து அமர்ந்து இனிய
பாலுமாய் அமுதாப் பன்னகாபரணன் பனி மலர்த் திருவடி இணை மேல்
ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகி நின்றாரே

@5 கருவூர்த் தேவர் – திரைலோக்கிய சுந்தரம்
** பண் :காந்தாரம்

#1
நீர் ஓங்கி வளர் கமலம் நீர் பொருந்தாத் தன்மை அன்றே
ஆர ஓங்கி முகம் மலர்ந்தாங்கு அருவினையேன் திறம் மறந்து இன்று
ஊர் ஓங்கும் பழி பாராது உன்-பாலே விழுந்து ஒழிந்தேன்
சீர் ஓங்கும் பொழில் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
** பண் :காந்தாரம்

#2
நையாத மனத்தினனை நைவிப்பான் இத் தெருவே
ஐயா நீ உலாப் போந்த அன்று முதல் இன்று வரை
கை ஆரத் தொழுது அருவி கண் ஆரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
** பண் :காந்தாரம்

#3
அம் பளிங்கு பகலோன்-பால் அடை பற்றாய் இவள் மனத்தின்
முன்பு அளிந்த காதலும் நின் முகம் தோன்ற விளங்கிற்றால்
வம்பு அளிந்த கனியே என் மருந்தே நல் வளர் முக்கண்
** பண் :காந்தாரம்

#4
மை நின்ற குழலாள் தன் மனம் தரவும் வளை தாராது
இ நின்ற கோவணவன் இவன் செய்தது யார் செய்தார்
மெய் நின்ற தமர்க்கு எல்லாம் மெய் நிற்கும் பண்பின் உறு
செய்ஞ்ஞன்றி இலன் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
** பண் :காந்தாரம்

#5
நீ வாராது ஒழிந்தாலும் நின்-பாலே விழுந்து ஏழை
கோவாத மணி முத்தும் குவளை மலர் சொரிந்தனவால்
ஆஆ என்று அருள் புரியாய் அமரர் கணம் தொழுது ஏத்தும்
தேவா தென் பொழில் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
** பண் :காந்தாரம்

#6
முழுவதும் நீ ஆயினும் இ மொய் குழலாள் மெய் முழுதும்
பழுது எனவே நினைந்து ஓராள் பயில்வதும் நின் ஒரு நாமம்
அழுவதும் நின் திறம் நினைந்தே அது அன்றோ பெறும் பேறு
செழு மதில் சூழ் பொழில் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
** பண் :காந்தாரம்

#7
தன் சோதி எழும் மேனித் தபனியப் பூச்சாய்க் காட்டாய்
உன் சோதி எழில் காண்பான் ஓலிடவும் உருக் காட்டாய்
துஞ்சாக் கண் இவளுடைய துயர் தீரும் ஆறு உரையாய்
செஞ்சாலி வயல் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
** பண் :காந்தாரம்

#8
அரும் பேதைக்கு அருள் புரியாது ஒழிந்தாய் நின் அவிர் சடை மேல்
நிரம்பாத பிறை தூவும் நெருப்பொடு நின் கையில் யாழ்
நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர் புரிசைக் குளிர் வனம் பாதிரம்
போது சொரி கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
** பண் :காந்தாரம்

#9
ஆறாத பேரன்பினவர் உள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர் சூழ வீற்றிருத்தி அது கொண்டு
வீறாடி இவள் உன்னைப் பொதுநீப்பான் விரைந்து இன்னம்
தேறாள் தென் பொழில் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
** பண் :காந்தாரம்

#10
சரிந்த துகில் தளர்ந்த இடை அவிழ்ந்த குழல் இளம் தெரிவை
இருந்த பரிசு ஒருநாள் கண்டு இரங்காய் எம்பெருமானே
முரிந்த நடை மடந்தையர்-தம் முழங்கு ஒலியும் வழங்கு ஒலியும்
திருந்து விழவு அணி கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
** பண் :காந்தாரம்

#11
ஆரணத் தேன் பருகி அரும் தமிழ் மாலை கமழ வரும்
காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ் மாலை
பூரணத்தார் ஈரைந்தும் போற்றி இசைப்பார் காந்தாரம்
சீர் அணைத்த பொழில் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே

@6 கருவூர்த் தேவர் – கங்கைகொண்ட சோளேச்சரம்
** பண் :பஞ்சமம்

#1
அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட அங்ஙனே பெரிய நீ சிறிய
என்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்
முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நால் பெரும் தடம் தோள்
கன்னலே தேனே அமுதமே கங்கைகொண்டசோளேச்சரத்தானே
** பண் :பஞ்சமம்

#2
உள் நெகிழ்ந்து உடலம் நெக்கு முக்கண்ணா ஓலம் என்று ஓலமிட்டு ஒருநாள்
மண்ணின் நின்று அலறேன் வழி மொழி மாலை மழலை அம் சிலம்பு அடி முடி மேல்
பண்ணி நின்று உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்து என்
கண்ணின்-நின்று அகலான் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே
** பண் :பஞ்சமம்

#3
அற்புதத் தெய்வம் இதனின் மற்று உண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்
சொல் பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண் திசைக் கனகம்
பற்பதக் குவையும் பைம்பொன் மாளிகையும் பவள வாயவர் பணை முலையும்
கற்பகப் பொழிலும் முழுதும் ஆம் கங்கைகொண்டசோளேச்சரத்தானே
** பண் :பஞ்சமம்

#4
ஐய பொட்டிட்ட அழகு வாள் நுதலும் அழகிய விழியும் வெண் நீறும்
சைவம் விட்டிட்ட சடைகளும் சடை மேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும்
மொய் கொள் எண் திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இரு கண் நீர் அரும்பக்
கைகள் மொட்டிக்கும் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே
** பண் :பஞ்சமம்

#5
சுருதி வானவனாம் திரு நெடு மாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதி வானவனாம் படர் சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம்
எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கைகொண்டசோளேச்சரத்தானே
** பண் :பஞ்சமம்

#6
அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன்
உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி
கொண்ட நாண் பாம்பாப் பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த
கண்டனே நீல கண்டனே கங்கைகொண்டசோளேச்சரத்தானே
** பண் :பஞ்சமம்

#7
மோது அலைப்பட்ட கடல் வயிறு உதித்த முழு மணித் திரள் அமுது ஆங்கே
தாய் தலைப்பட்டு அங்கு உருகி ஒன்றாய தன்மையில் என்னை முன் ஈன்ற
நீ தலைப்பட்டால் யானும் அவ் வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர்
காதலில் பட்ட கருணையாய் கங்கைகொண்டசோளேச்சரத்தானே
** பண் :பஞ்சமம்

#8
தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த தயாவை நூறாயிரம் கூறிட்டு
அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை
பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்து அருள்செய்யும்
கைத்தலம் அடியேன் சென்னி மேல் வைத்த கங்கைகொண்டசோளேச்சரத்தானே
** பண் :பஞ்சமம்

#9
பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய
புண்ணியம் பின் சென்று அறிவினுக்கு அறியப் புகுந்ததோர் யோகினில் பொலிந்து
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுன்னிடை ஒடுங்க நீ வந்து என்
கண்ணினுள் மணியின் கலந்தனை கங்கைகொண்டசோளேச்சரத்தானே
** பண் :பஞ்சமம்

#10
அங்கை கொண்டு அமரர் மலர் மழை பொழிய அடிச் சிலம்பு அலம்ப வந்து ஒருநாள்
உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில்
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல்
கங்கை கொண்டு இருந்த கடவுளே கங்கைகொண்டசோளேச்சரத்தானே
** பண் :பஞ்சமம்

#11
மங்கையோடு இருந்தே யோகுசெய்வானை வளர் இளம் திங்களை முடி மேல்
கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கைகொண்டசோளேச்சரத்தானை
அங்கையோடு ஏந்திப் பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழிச்
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவன் அருள் கடலே

@7 கருவூர்த் தேவர் – திருப்பூவணம்
** பண் :பஞ்சமம்

#1
திருவருள் புரிந்து ஆள் ஆண்டுகொண்டு இங்ஙன் சிறியனுக்கு இனியது காட்டிப்
பெரிது அருள் புரிந்து ஆனந்தமே தரும் நின் பெருமையில் பெரியது ஒன்று உளதே
மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையைப்
பொரு திரை மருங்கு ஓங்கு ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண்டாயே
** பண் :பஞ்சமம்

#2
பாம்பணைத் துயின்றோன் அயன் முதல் தேவர் பன்னெடுங்காலம் நின் காண்பான்
ஏம்பலித்து இருக்க என் உளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்
தேம் புனல் பொய்கை வாளை வாய் மடுப்பத் தெளிதரு தேறல் பாய்ந்து ஒழுகும்
பூம் பணைச் சோலை ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண்டாயே
** பண் :பஞ்சமம்

#3
கரை கடல் ஒலியின் தமருகத்து அரையில் கையினில் கட்டிய கயிற்றால்
இரு தலை ஒரு நா இயங்க வந்து ஒருநாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே
விரி திகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்த போது அவிழ்ந்த
புரி சடை துகுக்கும் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண்டாயே
** பண் :பஞ்சமம்

#4
கண் இயல் மணியின் சூழல் புக்கு அங்கே கலந்து புக்கு ஒடுங்கினேற்கு அங்ஙன்
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன்
மண் இயல் மரபின் தங்கு இருள் மொழுப்பின் வண்டு இனம் பாட நின்று ஆடும்
புண்ணிய மகளிர் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண்டாயே
** பண் :பஞ்சமம்

#5
கடு வினைப் பாசக் கடல் கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்து உன்
அடி இணை இரண்டும் அடையுமாறு அடைந்தேன் அருள்செய்வாய் அருள்செயாது ஒழிவாய்
நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேகப்
புடை கிடந்து இலங்கும் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண்டாயே
** பண் :பஞ்சமம்

#6
செம் மனக் கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச
எம் மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான் ஆர் என் உடை அடிமைதான் யாதே
அ மனம் குளிர் நாள் பலிக்கு எழுந்தருள அரிவையர் அவிழ் குழல் சுரும்பு
பொம்மென முரலும் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண்டாயே
** பண் :பஞ்சமம்

#7
சொல் நவில் முறை நான் காரணம் உணராச் சூழல் புக்கு ஒளித்த நீ இன்று
கல் நவில் மனத்து என் கண் வலைப் படும் இக் கருணையில் பெரியது ஒன்று உளதே
மின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம் பிறை தவழ் மாடம்
பொன் நவில் புரிசை ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண்டாயே
** பாடல்கள் 8,9 கிடைக்கவில்லை
** பண் :பஞ்சமம்

#10
பூவணம் கோயில்கொண்டு எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை வெண்
கோவணம் கொண்டு வெண்தலை ஏந்தும் குழகனை அழகு எலாம் நிறைந்த
தீ_வணன்-தன்னைச் செழும் மறை தெரியும் திகழ் கருவூரனேன் உரைத்த
பா வணத் தமிழ்கள் பத்தும் வல்லார்கள் பரமனது உருவம் ஆகுவரே

@8 கருவூர்த் தேவர் – திருச்சாட்டியக்குடி
** பண் :பஞ்சமம்

#1
பெரியவா கருணை இள நிலா எறிக்கும் பிறை தவழ் சடை மொழுப்பு அவிழ்ந்து
சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம்
கரியவா தாமும் செய்ய வாய் முறுவல் காட்டுமா சாட்டியக்குடியார்
இரு கை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே
** பண் :பஞ்சமம்

#2
பாந்தள் பூண் ஆரம் பரிகலம் கபாலம் பட்டவர்த்தனம் எருது அன்பர்
வார்ந்த கண் அருவி மஞ்சனசாலை மலை_மகள் மகிழ் பெருந்தேவி
சாந்தமும் திருநீறு அரு மறை கீதம் சடை முடி சாட்டியக்குடியார்
ஏந்து எழில் இதயம் கோயில் மாளிகை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே
** பண் :பஞ்சமம்

#3
தொழுது பின்செல்வது அயன் முதல் கூட்டம் தொடர்வன மறைகள் நான்கு எனினும்
கழுது உறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரி உரி திரிந்து ஊண்
தழல் உமிழ் அரவம் கோவணம் பளிங்கு சப வடம் சாட்டியக்குடியார்
இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே
** பண் :பஞ்சமம்

#4
பதிகம் நான்மறை தும்புருவும் நாரதரும் பரிவொடு பாடு காந்தர்ப்பர்
கதி எலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடி இருள் திருநடம் புரியும்
சதியில் ஆர்கலியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக்குடியார்
இதயமாம் கமலம் கமல வர்த்தனை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே
** பண் :பஞ்சமம்

#5
திருமகன் முருகன் தேவியேல் உமையாள் திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலை உடை அரையர்-தம் பாவை
தரு மனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக்குடியார்
இரு முகம் கழல் மூன்று ஏழு கைத்தலம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே
** பண் :பஞ்சமம்

#6
அனலமே புனலே அனிலமே புவனி அம்பரா அம்பரத்து அளிக்கும்
கனகமே வெள்ளிக் குன்றமே என்றன் களைகணே களைகண் மற்று இல்லாத்
தனியனேன் உள்ளம் கோயில்கொண்டு அருளும் சைவனே சாட்டியக்குடியார்க்கு
இனிய தீம் கனியாய் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே
** பண் :பஞ்சமம்

#7
செம்பொனே பவளக் குன்றமே நின்ற திசைமுகன் மால் முதல் கூட்டத்து
அன்பர் ஆனவர்கள் பருகும் ஆரமுதே அத்தனே பித்தனேனுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே சங்கரா சாட்டியக்குடியார்க்கு
இன்பனே எங்கும் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே
** பண் :பஞ்சமம்

#8
செங்கணா போற்றி திசைமுகா போற்றி சிவபுர நகருள் வீற்றிருந்த
அங்கணா போற்றி அமரனே போற்றி அமரர்கள் தலைவனே போற்றி
தங்கள் நான்மறை நூல் சகலமும் கற்றோர் சாட்டியக்குடி இருந்து அருளும்
எங்கள் நாயகனே போற்றி ஏழ் இருக்கை இறைவனே போற்றியே போற்றி
** பண் :பஞ்சமம்

#9
சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள் வீற்றிருந்த
அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய்
தத்து நீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல் சாட்டியக்குடியுள் ஏழ் இருக்கை
முத்தனே அருளாய் முதல்வனே அருளாய் முன்னவா துயர் கெடுத்து எனக்கே
** பண் :பஞ்சமம்

#10
தாள் தரும் பழனப் பைம் பொழில் படுகர்த் தண்டலைச் சாட்டியக்குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர் மேல்
காட்டிய பொருள் கலை பயில் கருவூரன் கழறு சொல் மாலை ஈரைந்தும்
மாட்டிய சிந்தை மைந்தருக்கு அன்றே வளர் ஒளி விளங்கு வானுலகே

@9 கருவூர்த் தேவர் – தஞ்சை இராசராசேச்சரம்
** பண் : பஞ்சமம்

#1
உலகு எலாம் தொழ வந்து எழு கதிர்ப் பரிதி ஒன்று நூறாயிர கோடி
அலகு எலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ அரணம்
பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள்
இலை குலாம் பதணத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே
** பண் : பஞ்சமம்

#2
நெற்றியில் கண் என் கண்ணின்-நின்று அகலா நெஞ்சினில் அம் சிலம்பு அலைக்கும்
பொன் திருவடி என் குடி முழுது ஆளப் புகுந்தன போந்தன இல்லை
மற்று எனக்கு உறவு என் மறி திரை வடவாற்று இடு புனல் மதகில் வாழ் முதலை
எற்று நீர்க் கிடங்கின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே
** பண் : பஞ்சமம்

#3
சடை கெழு மகுடம் தண் நிலா விரிய வெண் நிலா விரிதரு தரளக்
குடை நிழல் விடை மேல் கொண்டு உலாப் போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய
குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர்ப் படு குவை ஓங்கு
இடை கெழு மாடத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே
** பண் : பஞ்சமம்

#4
வாழி அம்பு ஓதத்து அருகு பாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த
சூழல் அம் பளிங்கின் பாசலர் ஆதிச் சுடர் விடு மண்டலம் பொலியக்
காழ் அகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்-வாய் அங்குலி கெழும
யாழ் ஒலி சிலம்பும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே
** பண் : பஞ்சமம்

#5
எவரும் மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாள் திருக் கமலத்தவரும்
மாலவனும் அறிவு அரும் பெருமை அடல் அழல் உமிழ் தழல் பிழம்பர்
உவரி மா கடலின் ஒலிசெய் மா மறுகில் உறு களிற்று அரசின தீட்டம்
இவரும் மால் வரை செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே
** பண் : பஞ்சமம்

#6
அருளுமாறு அருளி ஆளுமாறு ஆள அடிகள் தம் அழகிய விழியும்
குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ
தரள வான் குன்றில் தண் நிலா ஒளியும் தரு குவால் பெருகு வான் தெருவில்
இருள் எலாம் கிழியும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே
** பண் : பஞ்சமம்

#7
தனிப் பெரும் தாமே முழுது உறப் பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால்
நினைப்பு அரும் தம்-பால் சேறல் இன்றேனும் நெஞ்சு இடிந்து உருகுவது என்னோ
சுனைப் பெரும் கலங்கல் பொய்கை அம் கழுநீர்ச் சூழல் மாளிகை சுடர் வீசும்
எனைப்பெரு மணம்செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே
** பண் : பஞ்சமம்

#8
பன்னெடுங்காலம் பணிசெய்து பழையோர் தாம் பலர் ஏம்பலித்து இருக்க
என் நெடும் கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்று நான் மறக்கேன்
மின் நெடும் புருவத்து இள மயில்_அனையார் விலங்கல் செய் நாடகசாலை
இன் நடம் பயிலும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே
** பண் : பஞ்சமம்

#9
மங்குல் சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்து ஒளிப்பார்
அங்கு அழல் சுடராம் அவர்க்கு இளவேனல் அலர் கதிர்_அனையர் வாழியரோ
பொங்கு எழில் திருநீறு அழி பொசி வனப்பின் புனல் துளும்பு அவிர் சடை மொழுப்பர்
எங்களுக்கு இனியர் இஞ்சி சூழ் தஞ்சை இராசாராசேச்சரத்திவர்க்கே
** பண் : பஞ்சமம்

#10
தனியர் எத்தனை ஓராயிரவருமாம் தன்மையர் என் வயத்தினராம்
கனியர் அத் தரு தீம் கரும்பர் வெண் புரிநூல் கட்டியர் அட்ட ஆரமிர்தர்
புனிதர் பொன் கழலர் புரி சடா மகுடர் புண்ணியர் பொய் இலா மெய்யர்க்கு
இனியர் எத்தனையும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே
** பண் : பஞ்சமம்

#11
சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தனவனத்தின்
இருள் விரி மொழுப்பின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவரை
அரு மருந்து அருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொல் மாலை ஈரைந்தின்
பொருள் மருந்து உடையோர் சிவபதம் என்னும் பொன் நெடும் குன்று உடையோரே

@10 கருவூர்த் தேவர் – திருவிடைமருதூர்
** பண் : பஞ்சமம்

#1
வெய்ய செம் சோதி மண்டலம் பொலிய வீங்கு இருள் நடு நல் யாமத்து ஓர்
பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில்
ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று
மைய செம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே
பொழிப்புரை :
** பண் : பஞ்சமம்

#2
இந்திரலோகம் முழுவதும் பணிகேட்டு இணை அடி தொழுது எழத் தாம் போய்
ஐந்தலை நாக மேகலை அரையா அகம்-தொறும் பலி திரி அடிகள்
தந்திரி வீணை கீதம் முன் பாடச் சாதி கின்னரம் கலந்து ஒலிப்ப
மந்திர கீதம் தீம் குழல் எங்கும் மருவு இடம் திருவிடைமருதே
** பண் : பஞ்சமம்

#3
பனி படு மதியம் பயில் கொழுந்து அன்ன பல்லவம் வல்லி என்று இங்ஙன்
வினைபடு கனகம் போல யாவையுமாய் வீங்கு உலகு ஒழிவற நிறைந்து
துனிபடு கலவி மலை_மகளுடனாய்த் தூங்கு இருள் நடு நல் யாமத்து என்
மனனிடை அணுகி நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே
** பண் : பஞ்சமம்

#4
அணி உமிழ் சோதி மணியினுள் கலந்தாங்கு அடியனேன் உள் கலந்து அடியேன்
பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள்
துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே
மணி உமிழ் நாக மணி உமிழ்ந்து இமைப்ப மருவு இடம் திருவிடைமருதே
** பண் : பஞ்சமம்

#5
பந்தமும் பிரிவும் தெரி பொருள் பனுவல் படி வழி சென்றுசென்று ஏறிச்
சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறா வண்ணம்
எந்தையும் தாயும் யானும் என்று இங்ஙன் எண்_இல் பல் ஊழிகளுடனாய்
வந்து அணுகாது நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே
** பண் : பஞ்சமம்

#6
எரி தரு கரிகாட்டு இடு பிண நிணம் உண்டு ஏப்பமிட்டு இலங்கு எயிற்று அழல் வாய்த்
துரு கழல் நெடும் பேய்க் கணம் எழுந்து ஆடும் தூங்கு இருள் நடு நல் யாமத்தே
அருள் புரி முறுவல் முகிழ் நிலா எறிப்ப அந்தி போன்று ஒளிர் திருமேனி
வரி அரவு ஆட ஆடும் எம்பெருமான் மருவு இடம் திருவிடைமருதே
** பண் : பஞ்சமம்

#7
எழிலை ஆழ்செய்கைப் பசும் கலன் விசும்பின் இன் துளி பட நனைந்து உருகி
அழலை ஆழ்பு உருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவித்
தொழிலை ஆழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கு இருள் நடு நல் யாமத்து ஓர்
மழலை யாழ் சிலம்ப வந்து அகம் புகுந்தோன் மருவு இடம் திருவிடைமருதே
** பண் : பஞ்சமம்

#8
வை அவாம் பெற்றம் பெற்று அம் ஏறு_உடையார் மாதவர் காதல்வைத்து என்னை
வெய்யவாம் செம் தீப் பட்ட இட்டிகை போல் விழுமியோன் முன்பு பின்பு என்கோ
நொய்ய ஆறு என்ன வந்து உள் வீற்றிருந்த நூறுநூறாயிர கோடி
மை அவாம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே
** பண் : பஞ்சமம்

#9
கலங்கல் அம் பொய்கைப் புனல் தெளிவிடத்துக் கலந்த மண்ணிடைக் கிடந்தாங்கு
நலம் கலந்து அடியேன் சிந்தையுள் புகுந்த நம்பனே வம்பனேனுடைய
புலம் கலந்தவனே என்று நின்று உருகிப் புலம்புவார் அவம் புகார் அருவி
மலங்கல் அம் கண்ணில் கண்மணி_அனையான் மருவு இடம் திருவிடைமருதே
** பண் : பஞ்சமம்

#10
ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர்
கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து எனக் கலந்து உணர் கருவூர்
தரும் கரும்பு அனைய தீம் தமிழ் மாலை தடம் பொழில் மருதயாழ் உதிப்ப
வரும் கரும் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே

&4 பூந்துருத்தி நம்பி காடநம்பி

@1 பூந்துருத்தி நம்பி காடநம்பி – திருவாரூர் பஞ்சமம்
** பண் :பஞ்சமம்

#1
கைக்கு வால் முத்தின் சரி வளை பெய்து கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி
முக்கண் நாயகராய்ப் பவனி போந்து இங்ஙன் முரிவது ஓர் முரிவு உமை அளவும்
தக்க சீர்க் கங்கை அளவும் அன்று என்னோ தம் ஒருப்பாடு உலகதன் மேல்
மிக்க சீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே
** பண் : பஞ்சமம்

#2
பத்தியாய் உணர்வோர் அருளை வாய்மடுத்துப் பருகு-தோறு அமுதம் ஒத்து அவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்-தம் திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகு எலாம் படைத்த தனி முழுமுதலுமாய் அதற்கு ஓர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே

@2 பூந்துருத்தி நம்பி காடநம்பி – கோயில்
** பண் :சாளரபாணி

#1
முத்து வயிர மணி மாணிக்க மாலைகள் மேல்
தொத்து மிளிர்வன போல் தூண்டு விளக்கு ஏய்ப்ப
எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில் தில்லை
அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே
** பண் :சாளரபாணி

#2
கடி ஆர் கணம்புல்லர் கண்ணப்பர் என்று உன்
அடியார் அமர் உலகம் ஆள நீ ஆளாதே
முடியா முத்தீ வேள்வி மூவாயிரவரொடும்
குடி வாழ்க்கை கொண்டு நீ குலாவிக் கூத்தாடினையே
** பண் :சாளரபாணி

#3
அல்லி அம் பூம் பழனத்து ஆமூர் நாவுக்கரசைச்
செல்ல நெறி வகுத்த சேவகனே தென் தில்லைக்
கொல்லை விடை ஏறி கூத்தாடு அரங்காகச்
செல்வம் நிறைந்த சிற்றம்பலமே சேர்ந்தனையே
** பண் :சாளரபாணி

#4
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டு எமை ஆளும்
சம்பந்தன் காழியர்_கோன்-தன்னையும் ஆட்கொண்டு அருளி
அம்பு உந்து கண்ணாளும் தானும் அணி தில்லைச்
செம்பொன் செய் அம்பலமே சேர்ந்து இருக்கை ஆயிற்றே
** பண் :சாளரபாணி

#5
களையா உடலோடு சேரமான் ஆரூரன்
விளையா மதம் மாறா வெள்ளானை மேல் கொள்ள
முளையா மதி சூடி மூவாயிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே
** பண் :சாளரபாணி

#6
அகலோகம் எல்லாம் அடியவர்கள் தன் சூழப்
புக லோகம் உண்டு என்று புகும் இடம் நீ தேடாதே
புவலோக நெறி படைத்த புண்ணியங்கள் நண்ணிய சீர்ச்
சிவலோகம் ஆவதுவும் தில்லைச் சிற்றம்பலமே
** பண் :சாளரபாணி

#7
களகமணி மாடம் சூளிகை சூழ் மாளிகை மேல்
அளக மதி நுதலார் ஆயிழையார் போற்றி இசைப்ப
ஒளி கொண்ட மா மணிகள் ஓங்கு இருளை ஆங்கு அகற்றும்
தெளிகொண்ட தில்லைச் சிற்றம்பலமே சேர்ந்தனையே
** பண் :சாளரபாணி

#8
பாடகமும் நூபுரமும் பல் சிலம்பும் பேர்ந்து ஒலிப்பச்
சூடகக் கை நல்லார் தொழுது ஏத்தத் தொல் உலகில்
நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் நாள்-தோறும்
ஆடகத்தால் மேய்ந்து அமைந்த அம்பலம் நின் ஆடரங்கே
** பண் :சாளரபாணி

#9
உருவத்து எரி உருவாய் ஊழி-தோறு எத்தனையும்
பரவிக் கிடந்து அயனும் மாலும் பணிந்து ஏத்த
இரவிக்கு நேர் ஆகி ஏய்ந்து இலங்கு மாளிகை சூழ்ந்து
அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே
** பண் :சாளரபாணி

#10
சேடர் உறை தில்லைச் சிற்றம்பலத்தான்-தன்
ஆடல் அதிசயத்தை ஆங்கு அறிந்து பூந்துருத்திக்
காடன் தமிழ் மாலை பத்தும் கருத்து அறிந்து
பாடும் இவை வல்லார் பற்று நிலை பற்றுவரே

&5 கண்டராதித்தர்

@1 கண்டராதித்தர் – கோயில்
** பண் :பஞ்சமம்

#1
மின்னார் உருவம் மேல் விளங்க வெண் கொடி மாளிகை சூழப்
பொன் ஆர் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள்
என் ஆரமுதை எங்கள் கோவை என்று-கொல் எய்துவதே
** பண் :பஞ்சமம்

#2
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறு_அங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்தணாளர் ஆகுதி வேட்டு உயர்வார்
மூவாயிரவர் தங்களோடு முன் அரங்கு ஏறி நின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக் கூடுவது என்று-கொலோ
** பண் :பஞ்சமம்

#3
முத்தீயாளர் நான்மறையர் மூவாயிரவர் நின்னோடு
ஒத்தே வாழும் தன்மையாளர் ஓதிய நான்மறையைத்
தெத்தே என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள்
அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்று-கொலோ
** பண் :பஞ்சமம்

#4
மானைப் புரையும் மட மென்_நோக்கி மா மலையாளோடும்
ஆனம் சாடும் சென்னி மேல் ஓர் அம்புலி சூடும் அரன்
தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக்கொழுந்து-தன்னைக் கூடுவது என்று-கொலோ
** பண் :பஞ்சமம்

#5
களி வான் உலகில் கங்கை நங்கை காதலனே அருள் என்று
ஒளி மால் முன்னே வரம் கிடக்க உன் அடியார்க்கு அருளும்
தெளிவு ஆர் அமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்
ஒளி வான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்று-கொலோ
** பண் :பஞ்சமம்

#6
பாரோர் முழுதும் வந்து இறைஞ்சப் பதஞ்சலிக்கு ஆட்டு உகந்தான்
வார் ஆர் முலையாள் மங்கை_பங்கன் மா மறையோர் வணங்கச்
சீரால் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்து ஆடுகின்ற
கார் ஆர் மிடற்று எம் கண்டனாரைக் காண்பதும் என்று-கொலோ
** பண் :பஞ்சமம்

#7
இலை ஆர் கதிர் வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும் இற
மலை தான் எடுத்த மற்று அவற்கு வாளொடு நாள் கொடுத்தான்
சிலையால் புரம் மூன்று எய்த வில்லி செம்பொனின் அம்பலத்துக்
கலை ஆர் மறி பொன் கையினானைக் காண்பதும் என்று-கொலோ
** பண் :பஞ்சமம்

#8
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்ட திறல்
செங்கோல் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன் அணிந்த
அம் கோல் வளையார் பாடி ஆடும் அணி தில்லை அம்பலத்துள்
எம் கோன் ஈசன் எம் இறையை என்று-கொல் எய்துவதே
** பண் :பஞ்சமம்

#9
நெடியானோடு நான்முகன்னும் வானவரும் நெருங்கி
முடியால் முடிகள் மோதி உக்க முழு மணியின் திரளை
அடியார் அலகினால் திரட்டும் அணி தில்லை அம்பலத்துக்
கடி ஆர் கொன்றை மாலையானைக் காண்பதும் என்று-கொலோ
** பண் :பஞ்சமம்

#10
சீரால் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்து_ஆடி-தன்னைக்
கார் ஆர் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர்_கோன் கலந்த
ஆரா இன் சொல் கண்டராதித்தன் அரும் தமிழ் மாலை வல்லார்
பேரா உலகில் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே

&6 வேணாட்டடிகள்

@1 வேணாட்டடிகள் – கோயில்
** பண் : புறநீர்மை

#1
துச்சான செய்திடினும் பொறுப்பர் அன்றே ஆள் உகப்பார்
கைச்சாலும் சிறுகதலி இலை வேம்பும் கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும் எனது பணி
நச்சாய் காண் திருத் தில்லை நடம் பயிலும் நம்பானே
** பண் : புறநீர்மை

#2
தம் பானை சாய்ப் பற்றார் என்னும் முதுசொல்லும்
எம்போல்வார்க்கு இல்லாமை என்னளவே அறிந்து ஒழிந்தேன்
வம்பானார் பணி உகத்தி வழி அடியேன் தொழில் இறையும்
நம்பாய் காண் திருத் தில்லை நடம் பயிலும் நம்பானே
** பண் : புறநீர்மை

#3
பொசியாதோ கீழ்க் கொம்பு நிறை குளம் என்றது போலத்
திசை நோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான் ஓ எனினும்
இசையானால் என் திறத்தும் எனை உடையாள் உரையாடாள்
நசையானேன் திருத் தில்லை நடம் பயிலும் நம்பானே
** பண் : புறநீர்மை

#4
ஆயாத சமயங்கள் அவரவர் கண் முன்பு என்னை
நோயோடு பிணி நலிய இருக்கின்ற அதனாலே
பேயா இத் தொழும்பனைத் தம் பிரான் இகழும் என்பித்தாய்
நாயேனைத் திருத் தில்லை நடம் பயிலும் நம்பானே
** பண் : புறநீர்மை

#5
நின்று நினைந்து இருந்து கிடந்து எழுந்து தொழும் தொழும்பனேன்
ஒன்றி ஒருகால் நினையாது இருந்தாலும் இருக்க ஒட்டாய்
கன்று பிரி கற்றாப் போல் கதறுவித்தி வரவு நில்லாய்
நன்று இதுவோ திருத் தில்லை நடம் பயிலும் நம்பானே
** பண் : புறநீர்மை

#6
படு மதமும் இட வயிறும் உடைய களிறு உடைய பிரான்
அடி அறிய உணர்த்துவதும் அகத்தியனுக்கு ஓத்து அன்றே
இடுவது புல் ஓர் எருதுக்கு ஒன்றினுக்கு வை இடுதல்
நடு இதுவோ திருத் தில்லை நடம் பயிலும் நம்பானே
** பண் : புறநீர்மை

#7
மண்ணோடு விண் அளவும் மனிதரொடு வானவர்க்கும்
கண் ஆவாய் கண் ஆகாது ஒழிதலும் நான் மிகக் கலங்கி
அண்ணாவோ என்று அண்ணாந்து அலமந்து விளித்தாலும்
நண்ணாயால் திருத் தில்லை நடம் பயிலும் நம்பானே
** பண் : புறநீர்மை

#8
வாடா வாய் நாப் பிதற்றி உனை நினைந்து நெஞ்சு உருகி
வீடாம் செய் குற்றேவல் எற்றே மற்று இது பொய்யில்
கூடாமே கைவந்து குறுகுமாறு யான் உன்னை
நாடாயால் திருத் தில்லை நடம் பயிலும் நம்பானே
** பண் : புறநீர்மை

#9
வாளா மால் அயன் வீழ்ந்து காண்பு அரிய மாண்பு இதனைத்
தோளாரக் கையாரத் துணையாரத் தொழுதாலும்
ஆளோ நீ உடையதுவும் அடியேன் உன் தாள் சேரும்
நாள் ஏதோ திருத் தில்லை நடம் பயிலும் நம்பானே
** பண் : புறநீர்மை

#10
பா ஆர்ந்த தமிழ் மாலை பத்தர் அடித் தொண்டன் எடுத்து
ஓவாதே அழைக்கின்றான் என்று அருளின் நன்று மிகத்
தேவே தென் திருத் தில்லைக் கூத்தாடீ நாய் அடியேன்
சா வாயும் நினைக் காண்டல் இனி உனக்குத் தடுப்பு அரிதே

&7 திருவாலியமுதனார்

@1 திருவாலியமுதனார் – கோயில்
** பண் :பஞ்சமம்

#1
மையல் மாதொரு_கூறன் மால் விடை ஏறி மான் மறி ஏந்திய தடம்
கையன் கார் புரையும் கறைக் கண்டன் கனல் மழுவான்
ஐயன் ஆர் அழல் ஆடுவான் அணி நீர் வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்து என் சிந்தையுள் இடம்கொண்டனவே
** பண் :பஞ்சமம்

#2
சலம் பொன் தாமரை தாழ்ந்து எழுந்த தடமும் தடம் புனல்-வாய் மலர் தழீஇ
அலம்பி வண்டு அறையும் அணி ஆர் தில்லை அம்பலவன்
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்து ஏத்த ஆடு பொன் கூத்தனார் கழல்
சிலம்பு கிங்கிணி என் சிந்தையுள் இடம்கொண்டனவே
** பண் :பஞ்சமம்

#3
குருண்ட வார் குழல் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லை-தன்னுள் திரு மல்கு சிற்றம்பலவன்
மருண்டு மா மலையான் மகள் தொழ ஆடும் கூத்தன் மணி புரைதரு
திரண்ட வான் குறங்கு என் சிந்தையுள் இடம்கொண்டனவே
** பண் :பஞ்சமம்

#4
போழ்ந்து யானை-தன்னைப் பொருப்பன் மகள் உமை அச்சம் கண்டவன்
தாழ்ந்த தண் புனல் சூழ் தடம் மல்கு சிற்றம்பலவன்
சூழ்ந்த பாய் புலித்தோல் மிசைத் தொடுத்து வீக்கும் பொன் நூல்-தன்னினொடு
தாழ்ந்த கச்சது அன்றே தமியேனைத் தளர்வித்ததே
** பண் :பஞ்சமம்

#5
பந்தபாசம் எலாம் அறப் பசு பாசம் நீக்கிய பல் முனிவரோடு
அந்தணர் வணங்கும் அணி ஆர் தில்லை அம்பலவன்
செம் தழல் புரை மேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள்
உந்தி வான் சுழி என் உள்ளத்துள் இடம்கொண்டனவே
** பண் :பஞ்சமம்

#6
குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு
மதுர வாய்மொழியார் மகிழ்ந்து ஏத்து சிற்றம்பலவன்
அதிர வார் கழல் வீசி நின்று அழகா நடம் பயில் கூத்தன் மேல் திகழ்
உதரபந்தனம் என் உள்ளத்துள் இடம்கொண்டனவே
** பண் :பஞ்சமம்

#7
படம் கொள் பாம்பணையானொடு பிரமன் பரம்பரமா அருள் என்று
தடம் கையால் தொழவும் தழல் ஆடு சிற்றம்பலவன்
தடம் கை நான்கும் அத் தோள்களும் தட மார்பினில் பூண்கள் மேற்று இசை
விடம் கொள் கண்டம் அன்றே வினையேனை மெலிவித்தவே
** பண் :பஞ்சமம்

#8
செய்ய கோடுடன் கமல மலர் சூழ்தரு தில்லை மா மறையோர்கள் தாம் தொழ
வையம் உய்ய நின்று மகிழ்ந்து ஆடு சிற்றம்பலவன்
செய்ய வாயின் முறுவலும் திகழும் திருக் காதும் காதினின் மாத்திரைகளோடு
ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண்டனவே
** பண் :பஞ்சமம்

#9
செற்று வன் புரம் தீ எழச் சிலை கோலி ஆர் அழல் ஊட்டினான் அவன்
எற்றி மா மணிகள் எறி நீர்த் தில்லை அம்பலவன்
மற்றை நாட்டம் இரண்டொடு மலரும் திருமுகமும் முகத்தினுள்
நெற்றி நாட்டம் அன்றே நெஞ்சுளே திளைக்கின்றனவே
** பண் :பஞ்சமம்

#10
தொறுக்கள் வான் கமல மலர் உழக்கக் கரும்பு நல் சாறு பாய்தர
மறுக்கமாய்க் கயல்கள் மடை பாய் தில்லை அம்பலவன்
முறுக்கு வார் சிகை-தன்னொடு முகிழ்த்த அவ் அகத்து மொட்டோடு மத்தமும்
பிறைக் கொள் சென்னி அன்றே பிரியாது என்னுள் நின்றனவே
** பண் :பஞ்சமம்

#11
தூவி நீரொடு பூ அவை தொழுது ஏத்து கையினர் ஆகி மிக்கதோர்
ஆவி உள் நிறுத்தி அமர்ந்து ஊறிய அன்பினராய்த்
தேவர் தாம் தொழ ஆடிய தில்லைக் கூத்தனைத் திருவாலி சொல் இவை
மேவ வல்லவர்கள் விடையான் அடி மேவுவரே

@2 திருவாலியமுதனார் – கோயில்
** பண் :நட்டராகம்

#1
பவள மால் வரையைப் பனி படர்ந்து அனையதோர் படர் ஒளி தரு திருநீறும்
குவளை மா மலர்க் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திருச் சடையும்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற
தவள_வண்ணனை நினை-தொறும் என் மனம் தழல் மெழுகு ஒக்கின்றதே
** பண் :நட்டராகம்

#2
ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும் அலை கடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும் நிறை அழிந்திருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர்க் கணை படும்-தொறும் அலந்தேனே
** பண் :நட்டராகம்

#3
அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ
சிலந்தியை அரசாள்க என்று அருள்செய்த தேவதேவீசனே
உலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அக் காலனை உயிர் செக உதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வன முலை மேல் ஒற்ற வந்து அருள்செய்யாயே
** பண் :நட்டராகம்

#4
அருள்செய்து ஆடும் நல் அம்பலக் கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ
மருள்செய்து என்றனை வன முலை பொன் பயப்பிப்பது வழக்கு ஆமோ
திரளும் நீள் மணிக் கங்கையைத் திருச்சடை சேர்த்தி அச் செய்யாளுக்கு
உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே
** பண் :நட்டராகம்

#5
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடி தேடி
எய்த்து வந்து இழிந்து இன்னமும் துதிக்கின்றார் எழில் மறை அவற்றாலே
செய்த்-தலைக் கமலம் மலர்ந்து ஓங்கிய தில்லை அம்பலத்தானைப்
பத்தியால் சென்று கண்டிட என் மனம் பதைபதைப்பு ஒழியாதே
** பண் :நட்டராகம்

#6
தேய்ந்து மெய் வெளுத்து அகம் வளைந்து அரவினை அஞ்சித் தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந்து என்றனை வலிசெய்து கதிர் நிலா எரி தூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்து அரன் ஆடல்
வாய்ந்த மா மலர்ப் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே
** பண் :நட்டராகம்

#7
உடையும் பாய் புலித்தோலும் நல் அரவமும் உண்பதும் பலி தேர்ந்து
விடையது ஊர்வதும் மேவு இடம் கொடு வரை ஆகிலும் என் நெஞ்சம்
மடை கொள் வாளைகள் குதிகொளும் வயல் தில்லை அம்பலத்து அனல் ஆடும்
உடைய கோவினை அன்றி மற்று ஆரையும் உள்ளுவது அறியேனே
** பண் :நட்டராகம்

#8
அறிவும் மிக்க நல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்கு உள்ள
உறவும் பெற்ற நற்றாயொடு தந்தையும் உடன்பிறந்தவரோடும்
பிரிய விட்டு உனை அடைந்தனன் ஏன்றுகொள் பெரும்பற்றப்புலியூரின்
மறைகள் நான்கும் கொண்டு அந்தணர் ஏத்த நல் மா நடம் மகிழ்வானே
** பண் :நட்டராகம்

#9
வானநாடு உடை மைந்தனே ஓ என்பன் வந்து அருளாய் என்பன்
பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடைப் பால்_வண்ணனே என்பன்
தேன் அமர் பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற
ஏன மா மணிப் பூண் அணி மார்பனே எனக்கு அருள் புரியாயே
** பண் :நட்டராகம்

#10
புரியும் பொன் மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர் பலர் போற்ற
எரியது ஆடும் எம் ஈசனைக் காதலித்து இனைபவள் மொழியாக
வரை செய் மா மதில் மயிலையர் மன்னவன் மறை வல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர் பரமனது அடி இணை பணிவாரே

@3 திருவாலியமுதனார் – கோயில்
** பண் :இந்தளம்

#1
அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்க்
கல் ஆல் நிழலாய் கயிலை மலையாய் காண அருள் என்று
பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டுச்
செல் வாய் மதிலின் தில்லைக்கு அருளித் தேவன் ஆடுமே
** பண் :இந்தளம்

#2
அன்ன_நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில் தில்லைத்
தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம்-தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கு இட்டு
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே
** பண் :இந்தளம்

#3
இள மென் முலையார் எழில் மைந்தரொடும் ஏர் ஆர் அமளி மேல்
திளையும் மாடத் திரு ஆர் தில்லைச் சிற்றம்பலம்-தன்னுள்
வளர் பொன் மலையுள் வயிர மலை போல் வலக்கை கவித்து நின்று
அளவு_இல் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே
** பண் :இந்தளம்

#4
சந்தும் அகிலும் தழைப் பீலிகளும் சாதி பலவும் கொண்டு
உந்தி இழியும் நிவவின் கரை மேல் உயர்ந்த மதில் தில்லைச்
சிந்திப்பு அரிய தெய்வப் பதியுள் சிற்றம்பலம்-தன்னுள்
நந்தி முழவம் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே
** பண் :இந்தளம்

#5
ஓமப் புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகில் தோயத்
தீ மெய்த் தொழில் ஆர் மறையோர் மல்கு சிற்றம்பலம்-தன்னுள்
வாமத்து எழில் ஆர் எடுத்த பாதம் மழலைச் சிலம்பு ஆர்க்கத்
தீ மெய்ச் சடை மேல் திங்கள் சூடித் தேவன் ஆடுமே
** பண் :இந்தளம்

#6
குரவம் கோங்கம் குளிர் புன்னை கைதை குவிந்த கரைகள் மேல்
திரை வந்து உலவும் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள்
வரை போல் மலிந்த மணி மண்டபத்து மறையோர் மகிழ்ந்து ஏத்த
அரவம் ஆட அனல் கை ஏந்தி அழகன் ஆடுமே
** பண் :இந்தளம்

#7
சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேன் ஆர் பொழில் தில்லை
அத்தா அருளாய் அணி அம்பலவா என்றென்று அவர் ஏத்த
முத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளை வெண் மதி சூடிக்
கொத்து ஆர் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே
** பண் :இந்தளம்

#8
அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருள் என்று
துதித்து மறையோர் வணங்கும் தில்லைச் சிற்றம்பலம்-தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக் கதிர் போல் ஒளிர் மா மணி எங்கும்
பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே
** பண் :இந்தளம்

#9
மாலோடு அயனும் அமரர்_பதியும் வந்து வணங்கி நின்று
ஆலகண்டா அரனே அருளாய் என்றென்று அவர் ஏத்தச்
சேல் ஆடும் வயல் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள்
பால் ஆடும் முடிச் சடைகள் தாழப் பரமன் ஆடுமே
** பண் :இந்தளம்

#10
நெடிய சமணும் மறை சாக்கியரும் நிரம்பாப் பல் கோடிச்
செடி உந்து அவத்தோர் அடையாத் தில்லைச் சிற்றம்பலம்-தன்னுள்
அடிகள் அவரை ஆரூர் நம்பி அவர்கள் இசை பாடக்
கொடியும் விடையும் உடைய கோலக் குழகன் ஆடுமே
** பண் :இந்தளம்

#11
வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடம் ஆடும்
தேன் ஆர் பொழில் சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத்தானைத்
தூ நான்மறையான் அமுத வாலி சொன்ன தமிழ் மாலைப்
பால் நேர் பாடல் பத்தும் பாடப் பாவம் நாசமே

@4 திருவாலியமுதனார் – கோயில்
** பண் :பஞ்சமம்

#1
கோல மலர் நெடும் கண் கொவ்வை வாய்க் கொடி ஏர் இடையீர்
பாலினை இன் அமுதைப் பரமாய பரஞ்சுடரைச்
சேல் உகளும் வயல் சூழ் தில்லை மா நகர்ச் சிற்றம்பலத்து
ஏல் உடை எம் இறையை என்று-கொல் காண்பதுவே
** பண் :பஞ்சமம்

#2
காண்பது யான் என்று-கொல் கதிர் மா மணியைக் கனலை
ஆண் பெண் அரு உரு என்று அறிதற்கு அரிதாயவனைச்
சேண் பணை மாளிகை சூழ் தில்லை மா நகர்ச் சிற்றம்பலம்
மாண்பு உடை மா நடம்செய் மறையோன் மலர்ப் பாதங்களே
** பண் :பஞ்சமம்

#3
கள் அவிழ் தாமரை மேல் கண்ட அயனோடு மால் பணிய
ஒள் எரியின் நடுவே உருவாய்ப் பரந்து ஓங்கிய சீர்த்
தெள்ளிய தண் பொழில் சூழ் தில்லை மா நகர்ச் சிற்றம்பலத்துள்
எரி ஆடுகின்ற ஒருவனை உணர்வு அரிதே
** பண் :பஞ்சமம்

#4
அரிவை ஓர் கூறு உகந்தான் அழகன் எழில் மால் கரியின்
உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார்-தம் பிரான்
புரிபவர்க்கு இன் அருள்செய் புலியூர்த் திருச்சிற்றம்பலத்து
எரி மகிழ்ந்து ஆடுகின்ற எம்பிரான் என் இறையவனே
** பண் :பஞ்சமம்

#5
இறைவனை என் கதியை என் உளே உயிர்ப்பு ஆகி நின்ற
மறைவனை மண்ணும் விண்ணும் மலி வான் சுடராய் மலிந்த
சிறை அணி வண்டு அறையும் தில்லை மா நகர்ச் சிற்றம்பலம்
நிறை அணியாம் இறையை நினைத்தேன் இனிப் போக்குவனே
** பண் :பஞ்சமம்

#6
நினைத்தேன் இனிப் போக்குவனோ நிமலத் திரளை நினைப்பார்
மனத்தினுளே இருந்த மணியை மணி மாணிக்கத்தைக்
கனைத்து இழியும் கழனிக் கனகம் கதிர் ஒண் பவளம்
சினத்தொடு வந்து எறியும் தில்லை மா நகர்க் கூத்தனையே
** பண் :பஞ்சமம்

#7
கூத்தனை வானவர்-தம் கொழுந்தைக் கொழுந்தாய் எழுந்த
மூத்தனை மூவுருவின் முதலை முதலாகி நின்ற
ஆத்-தனைத் தான் படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள்
ஏத்த நின்று ஆடுகின்ற எம்பிரான் அடி சேர்வன்-கொலோ
** பண் :பஞ்சமம்

#8
சேர்வன்-கொலோ அன்னைமீர் திகழும் மலர்ப் பாதங்களை
ஆர்வம்கொளத் தழுவி அணி நீறு என் முலைக்கு அணியச்
சீர் வங்கம் வந்து அணவும் தில்லை மா நகர்ச் சிற்றம்பலத்து
ஏர்வு அம் கை மான் மறியன் எம்பிரான் போல் நேசனையே
** பண் :பஞ்சமம்

#9
நேசமுடையவர்கள் நெஞ்சுளே இடம்கொண்டிருந்த
காய் சின மால் விடை ஊர் கண்_நுதலைக் காமரு சீர்த்
தேசம் மிகு புகழோர் தில்லை மா நகர்ச் சிற்றம்பலத்து
ஈசனை எவ்வுயிர்க்கும் எம் இறைவன் என்று ஏத்துவனே
** பண் :பஞ்சமம்

#10
இறைவனை ஏத்துகின்ற இளையாள் மொழி இன் தமிழால்
மறை வல நாவலர்கள் மகிழ்ந்து ஏத்து சிற்றம்பலத்தை
அறை செந்நெல் வான் கரும்பின் அணி ஆலைகள் சூழ் மயிலை
மறை வல ஆலி சொல்லை மகிழ்ந்து ஏத்துக வான் எளிதே

&8 புருடோத்தம நம்பி

@1 புருடோத்தம நம்பி – கோயில்
** பண் :பஞ்சமம்

#1
வார் அணி நறு மலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலை மாலை
வார் அணி வன முலை மெலியும் வண்ணம் வந்துவந்து இவை நம்மை மயக்கும் மாலோ
சீர் அணி மணி திகழ் மாடம் ஓங்கு தில்லை அம்பலத்து எங்கள் செல்வன் வாரான்
ஆர் எனை அருள் புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரம் அன்று என்றன் ஆதரவே
** பண் :பஞ்சமம்

#2
ஆவியின் பரம் என்றன் ஆதரவும் அருவினையேனை விட்டு அம்மஅம்ம
பாவி வன் மனம் இது பையவே போய்ப் பனி மதிச் சடை அரன் பாலதாலோ
நீவியும் நெகிழ்ச்சியும் நிறை அழிவும் நெஞ்சமும் தஞ்சம் இலாமையாலே
ஆவியின் வருத்தம் இது ஆர் அறிவார் அம்பலத்து அரு நடம் ஆடுவானே
** பண் :பஞ்சமம்

#3
அம்பலத்து அரு நடம் ஆடவேயும் யாது-கொல் விளைவது என்று அஞ்சி நெஞ்சம்
உம்பர்கள் வன் பழியாளர் முன்னே ஊட்டினர் நஞ்சை என்றேயும் உய்யேன்
வன் பல படை உடைப் பூதம் சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கே
என் பெரும் பயலைமை தீரும் வண்ணம் எழுந்தருளாய் எங்கள் வீதியூடே
** பண் :பஞ்சமம்

#4
எழுந்தருளாய் எங்கள் வீதியூடே ஏதம்_இல் முனிவரோடு எழுந்த ஞானக்
கொழுந்தது ஆகிய கூத்தனே நின் குழை அணி காதினின் மாத்திரையும்
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ
அழுந்தும் என் ஆருயிர்க்கு என் செய்கேனோ அரும் புனல் அலமரும் சடையினானே
** பண் :பஞ்சமம்

#5
அரும் புனல் அலமரும் சடையினானை அமரர்கள் அடி பணிந்து அரற்ற அ நாள்
பெரும் புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை நெஞ்சம்
கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன்
திருந்திய மலர் அடி நசையினாலே தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவே
** பண் :பஞ்சமம்

#6
தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவைத் தேறிய அந்தணர் சிந்தைசெய்யும்
எல்லையது ஆகிய எழில் கொள் சோதி என் உயிர் காவல்கொண்டு இருந்த எந்தாய்
பல்லை ஆர் பசும் தலையோடு இடறிப் பாத மென் மலர் அடி நோவ நீ போய்
அல்லினில் அரு நடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவல் இங்கு அரிதுதானே
** பண் :பஞ்சமம்

#7
ஆருயிர் காவல் இங்கு அருமையாலே அந்தணர் மதலை நின் அடி பணியக்
கூர் நுனை வேல் படைக் கூற்றம் சாயக் குரை கழல் பணிகொள மலைந்தது என்றால்
ஆர் இனி அமரர்கள் குறைவு_இலாதார் அவரவர் படு துயர் களைய நின்ற
சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே
** பண் :பஞ்சமம்

#8
சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே நீ
தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன்
பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே
இவள் இழந்தது சங்கம் ஆஆ எங்களை ஆளுடை ஈசனேயோ
** பண் :பஞ்சமம்

#9
எங்களை ஆளுடை ஈசனேயோ இள முலை முகம் நெக முயங்கி நின் பொன்
பங்கயம் புரை முகம் நோக்கிநோக்கிப் பனி மதி நிலவது என் மேல் படரச்
செங்கயல் புரை கண்ணிமார்கள் முன்னே திருச்சிற்றம்பலமுடனே புகுந்து
அங்கு உன பணி பல செய்து நாளும் அருள் பெறின் அகலிடத்து இருக்கலாமே
** பண் :பஞ்சமம்

#10
அருள் பெறின் அகலிடத்து இருக்கலாம் என்று அமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடையாரின் மிக்கார் ஏத்துகின்றார் இன்னம் எங்கள் கூத்தை
மருள்படு மழலை மென் மொழி உமையாள் கணவனை வல்வினையாட்டியேன் நான்
அருள் பெற அலமரும் நெஞ்சம் ஆஆ ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே
** பண் :பஞ்சமம்

#11
ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே அம்பலத்து அரு நடம் ஆடுவானை
வாச நல் மலர் அணி குழல் மடவார் வைகலும் கலந்து எழு மாலைப் பூசல்
மாசிலா மறை பல ஓது நாவன் வண் புருடோத்தமன் கண்டு உரைத்த
வாசக மலர்கள் கொண்டு ஏத்த வல்லார் மலை_மகள் கணவனை அணைவர் தாமே

@2 புருடோத்தம நம்பி – கோயில்
** பண் : பஞ்சமம்

#1
வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார் தாம்
ஊனம் இலா என் கை ஒளி வளைகள் கொள்வாரோ
தேன் நல் வரி வண்டு அறையும் தில்லைச் சிற்றம்பலவர்
நான் நமரோ என்னாதே நாடகமே ஆடுவரே
** பண் : பஞ்சமம்

#2
ஆடி வரும் கார் அரவும் ஐ மதியும் பைம் கொன்றை
சூடி வருமா கண்டேன் தோள் வளைகள் தோற்றாலும்
தேடி இமையோர் பரவும் தில்லைச் சிற்றம்பலவர்
ஆடி வரும் போது அருகே நிற்கவுமே ஒட்டாரே
** பண் : பஞ்சமம்

#3
ஒட்டா வகை அவுணர் முப்புரங்கள் ஓர் அம்பால்
பட்டு ஆங்கு அழல் விழுங்க எய்து உகந்த பண்பினார்
சிட்டார் மறை ஓவாத் தில்லைச் சிற்றம்பலவர்
கொட்டு ஆம் நடம் ஆடக் கோல் வளைகள் கொள்வாரே
** பண் : பஞ்சமம்

#4
ஆரே இவை படுவார் ஐயம்கொள வந்து
போர் ஏடி என்று புருவம் இடுகின்றார்
தேர் ஆர் விழவு ஓவாத் தில்லைச் சிற்றம்பலவர்
தீரா நோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே
** பண் : பஞ்சமம்

#5
காணீரே என்னுடைய கை வளைகள் கொண்டார் தாம்
சேண் ஆர் மணி மாடத் தில்லைச் சிற்றம்பலவர்
பூண் ஆர் வன முலை மேல் பூ அம்பால் காமவேள்
ஆண் ஆடுகின்றவா கண்டும் அருளாரே
** பண் : பஞ்சமம்

#6
ஏ இவரே வானவர்க்கும் வானவரே என்பாரால்
தாய் இவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால்
தேய் மதியம் சூடிய தில்லைச் சிற்றம்பலவர்
வாயின கேட்டு அறிவார் வையகத்தார் ஆவாரே
** பண் : பஞ்சமம்

#7
ஆஆ இவர்-தம் திருவடி கொண்டு அந்தகன்-தன்
மூவா உடல் அவியக் கொன்று உகந்த முக்கண்ணர்
தே ஆம் மறை பயிலும் தில்லைச் சிற்றம்பலவர்
கோவாய் இன வளைகள் கொள்வாரோ என்னையே
** பண் : பஞ்சமம்

#8
என்னை வலிவார் ஆர் என்ற இலங்கையர்_கோன்
மன்னு முடிகள் நெரித்த மணவாளர்
செந்நெல் விளை கழனித் தில்லைச் சிற்றம்பலவர்
முன்னம் தான் கண்டறிவார் ஒவ்வார் இ முத்தரே
** பண் : பஞ்சமம்

#9
முத்தர் முதுபகலே வந்து என்றன் இல் புகுந்து
பத்தர் பலி இடுக என்று எங்கும் பார்க்கின்றார்
சித்தர் கணம் பயிலும் தில்லைச் சிற்றம்பலவர்
கைத்தலங்கள் வீசி நின்று ஆடுங்கால் நோக்காரே
** பண் : பஞ்சமம்

#10
நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாம் என்று
மாற்கு ஆழி ஈந்து மலரோனை நிந்தித்துச்
சேக் காதலித்து ஏறும் தில்லைச் சிற்றம்பலவர்
ஊர்க்கே வந்து என் வளைகள் கொள்வாரோ ஒள்_நுதலீர்
** பண் : பஞ்சமம்

#11
ஒள்_நுதலி காரணமா உம்பர் தொழுது ஏத்தும்
கண்_நுதலான்-தன்னைப் புருடோத்தமன் சொன்ன
பண்ணுதலைப் பத்தும் பயின்று ஆடிப் பாடினார்
எண்ணுதலைப் பட்டு அங்கு இனிதா இருப்பாரே

&9 சேதிராயர்

@1 சேதிராயர் – கோயில்
** பண் : பஞ்சமம்

#1
சேல் உலாம் வயல் தில்லை_உளீர் உமைச்
சால நாள் அயல் சார்வதினால் இவள்
வேலை ஆர் விடம் உண்டு உகந்தீர் என்று
மாலது ஆகும் என் வாள்_நுதலே
** பண் : பஞ்சமம்

#2
வாள்_நுதல் கொடி மாலதுவாய் மிக
நாணம் அற்றனள் நான் அறியேன் இனிச்
சேண் நுதல் பொலி தில்லை_உளீர் உமைக்
காணில் எய்ப்பிலள் காரிகையே
** பண் : பஞ்சமம்

#3
காரிகைக்கு அருளீர் கரு மால் கரி
ஈர் உரித்து எழு போர்வையினீர் மிகு
சீர் இயல் தில்லையாய் சிவனே என்று
வேரி நல் குழலாள் இவள் விம்முமே
** பண் : பஞ்சமம்

#4
விம்மி விம்மியே வெய்து உயிர்த்து ஆள் எனா
உம்மையே நினைந்து ஏத்தும் ஒன்று ஆகிலள்
செம்மலோர் பயில் தில்லை_உளீர் எங்கள்
அம்_அல்_ஓதி அயர்வுறுமே
** பண் : பஞ்சமம்

#5
அயர்வுற்று அஞ்சலி கூப்பி அந்தோ எனை
உய உன் கொன்றை அம் தார் அருளாய் எனும்
செயலுற்று ஆர் மதில் தில்லை_உளீர் இவண்
மயலுற்றாள் என்றன் மாது இவளே
** பண் : பஞ்சமம்

#6
மாது_ஒர்_கூறன் வண்டு ஆர் கொன்றை மார்பன் என்று
ஓதில் உய்வன் ஒண் பைங்கிளியே எனும்
சேதித்தீர் சிரம் நான்முகனைத் தில்லை
வாதித்தீர் என் மடக்கொடியையே
** பண் : பஞ்சமம்

#7
கொடியைக் கோமளச் சாதியைச் கொம்பு இளம்
பிடியை என் செய்திட்டீர் பகைத்தார் புரம்
இடியச் செம் சிலை கால் வளைத்தீர் என்று
முடியும் நீர் செய்த மூச்சறவே
** பண் : பஞ்சமம்

#8
அறவனே அன்று பன்றிப் பின் ஏகிய
மறவனே எனை வாதைசெய்யேல் எனும்
சிறை வண்டு ஆர் பொழில் தில்லை_உளீர் எனும்
பிறை குலாம் நுதல் பெய்_வளையே
** பண் : பஞ்சமம்

#9
அன்று அருக்கனைப் பல் இறுத்து ஆனையைக்
கொன்று காலனைக் கோள் இழைத்தீர் எனும்
தென்றல் ஆர் பொழில் தில்லை_உளீர் இவள்
ஒன்றும் ஆகிலள் உம் பொருட்டே
** பண் : பஞ்சமம்

#10
ஏயுமாறு எழில் சேதிபர்_கோன் தில்லை
நாயனாரை நயந்து உரை செய்தன
தூயவாறு உரைப்பார் துறக்கத்திடை
ஆய இன்பம் எய்தி இருப்பரே
** திருப்பல்லாண்டு

&10 சேந்தனார்

@1 சேந்தனார் – கோயில்
** பண் : பஞ்சமம்

#1
மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போய் அகலப்
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனி எல்லாம் விளங்க
அன்ன நடை மடவாள் உமை_கோன் அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே
** பண் : பஞ்சமம்

#2
மிண்டு மனத்தவர் போ-மின்கள் மெய் அடியார்கள் விரைந்து வம்-மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து
அண்டம் கடந்த பொருள் அளவில்லதோர் ஆனந்த வெள்ளப் பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே
** பண் : பஞ்சமம்

#3
நிட்டை இலா உடல் நீத்து என்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும்
சிட்டன் சிவன் அடியாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்து
அட்டமூர்த்திக்கு என் அகம் நெக ஊறும் அமிர்தினுக்கு ஆல நிழல்
பட்டனுக்கு என்னைத் தன்-பால் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே
** பண் : பஞ்சமம்

#4
சொல் ஆண்ட சுருதிப் பொருள் சோதித்த தூய் மனத் தொண்டர்_உள்ளீர்
சில் ஆண்டில் சிதையும் சில தேவர் சிறுநெறி சேராமே
வில் ஆண்ட கனகத் திரள் மேரு விடங்கன் விடைப் பாகன்
பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே
** பண் : பஞ்சமம்

#5
புரந்தரன் மால் அயன் பூசலிட்டு ஓலமிட்டு இன்னம் புகல் அரிதாய்
இரந்திரந்து அழைப்ப என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம் என்றும்
கரந்தும் கரவாத கற்பகன் ஆகிக் கரை_இல் கருணைக் கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பு இலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே
** பண் : பஞ்சமம்

#6
சேவிக்க வந்து அயன் இந்திரன் செம் கண் மால் எங்கும் திசைதிசையன
கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாம்குழாமாய் நின்று கூத்து ஆடும்
ஆவிக்கு அமுதை என் ஆர்வத் தனத்தினை அப்பனை ஒப்பு அமரர்
பாவிக்கும் பாவகத்து அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே
** பண் : பஞ்சமம்

#7
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக் கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றது ஆர் பெறுவார் உலகில்
ஊரும் உலகும் கழற உழறி உமை மணவாளனுக்கு ஆள்
பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே
** பண் : பஞ்சமம்

#8
சேலும் கயலும் திளைக்கும் கண் ஆர் இளம் கொங்கையில் செம் குங்குமம்
போலும் பொடி அணி மார்பு இலங்கும் என்று புண்ணியர் போற்றி இசைப்ப
மாலும் அயனும் அறியா நெறி தந்து வந்து என் மனத்து அகத்தே
பாலும் அமுதமும் ஒத்து நின்றானுக்கே பல்லாண்டு கூறுதுமே
** பண் : பஞ்சமம்

#9
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்குச் சக்கரம் அன்று அருள்செய்தவன் மன்னிய தில்லை-தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே
** பண் : பஞ்சமம்

#10
தாதையைத் தாள் அற வீசிய சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனே
பூதலத்தோரும் வணங்கப் பொன் கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணி முடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே
** பண் : பஞ்சமம்

#11
குழல் ஒலி யாழ் ஒலி கூத்து ஒலி ஏத்து ஒலி எங்கும் குழாம் பெருகி
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின்
மழ விடையாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடிப் பிறந்த
பழ அடியாரொடும் கூடி எம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே
** பண் : பஞ்சமம்

#12
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணி உடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேர் ஆர் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து
பார் ஆர் தொல் புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே
** பண் : பஞ்சமம்

#13
எந்தை எம் தாய் சுற்றம் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தைசெய்யும் சிவன் சீர் அடியார் அடி நாய் செப்பு உரை
அந்தம்_இல் ஆனந்தச் சேந்தன் எனைப் புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர் மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே
** ஒன்பதாம் திருமுறை நிறைவுற்றது