திருவருட்பா – இரண்டாம் திருமுறை


@1 கருணை விண்ணப்பம்

#571.
நல்லார்க்கு எல்லாம் நல்லவன் நீ ஒருவன் யாண்டும் நாய்_அடியேன்
பொல்லார்க்கு எல்லாம் பொல்லவன் நான் ஒருவன் இந்தப் புணர்ப்பதனால்
எல்லாம் உடையாய் நினக்கு எதிர் என்று எண்ணேல் உறவு என்று எண்ணுக ஈது
அல்லால் வழக்கு என் இருமைக்கும் பொதுமை அன்றோ அருளிடமே.

#572.
இடமே பொருளே ஏவலே என்றென்று எண்ணி இடர்ப்படும் ஓர்
மடமே உடையேன்-தனக்கு அருள் நீ வழங்கல் அழகோ ஆநந்த
நடமே உடையோய் நினையன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத்
திடமே அருள்-தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே.

#573.
தெரித்தாலன்றிச் சிறிதேனும் தெரிவு ஒன்று இல்லாச் சிறியேனைப்
பிரித்தாய் கூடும் வகையறியும் பெற்றி என்னே பிறை முடி மேல்
தரித்தாய் அடியேன் பிழை பொறுக்கத் தகும் காண் துன்பம் தமியேனை
அரித்தால் கண்டு இங்கு இரங்காமை அந்தோ அருளுக்கு அழகேயோ.

#574.
அருள் ஓர்சிறிதும் உதவுகிலாய் அதனைப் பெறுதற்கு அடியேன்-பால்
தெருள் ஓர்சிறிதும் இலையே என் செய்கேன் எங்கள் சிவனேயோ
மருளோர் எனினும் தமை நோக்கி வந்தார்க்கு அளித்தல் வழக்கு அன்றோ
பொருளோர் இடத்தே மிடிகொண்டோர் புகுதல் இன்று புதிது அன்றே.

#575.
புதியேன் அல்லேன் நின் அடிமைப் பொருத்தம் இல்லேன்_அல்லேன் யான்
மதியேன் வேற்றுத் தேவர்-தமை வந்து அங்கு அவர்-தாம் எதிர்ப்படினும்
துதியேன் நின்னை விடுவேனோ தொண்டனேனை விடல் அழகோ
நதி ஏர் சடையோய் இன் அருள் நீ நல்கல் வேண்டும் நாயேற்கே.

#576.
நாயேன் துன்ப_கடல் வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கு இங்கு
ஈயேன் ஒன்றும் இல்லேன் நான் என் செய்கேனோ என்னுடைய
தாயே_அனையாய் சிறிது என் மேல் தயவு புரிந்தால் ஆகாதோ
சேயேன்-தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகம் சிரியாதோ.

#577.
சிரிப்பார் நின் பேர் அருள்_பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ
விரிப்பார் பழிச்சொல் அன்றி எனை விட்டால் வெள்ளை_விடையோனே
தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும் வண்ணம்
தெரிப்பார் நினக்கும் எவர் கண்டாய் தேவர் தேடற்கு அரியானே.

#578.
அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும்
பெரிய பெருமாள் சிவபெருமான் பித்த_பெருமான் என்று உன்னை
உரிய பெரு மா தவர் பழிச்சல் உண்மை எனில் என் உடையானே
கரிய பெரு மால் உடையற்கும் அருளல் உன்றன் கடன் அன்றே.

#579.
அன்றும் சிறியேன் அறிவு அறியேன் அது நீ அறிந்தும் அருள்செய்தாய்
இன்றும் சிறியேன் அறிவு அறியேன் இது நீ அறிந்தும் அருளாயேல்
என்றும் ஒரு தன்மையன் எங்கள் இறைவன் என மா மறைகள் எலாம்
தொன்று மொழிந்த தூ_மொழி-தான் சூது மொழியோ சொல்லாயே.

#580.
சொல்லற்கு அரிய பெரிய பரஞ்சுடரே முக்கண் சுடர்க் கொழுந்தே
மல்லல் கரு மால் அயன் முதலோர் வழுத்தும் பெரும் சீர் மணி_குன்றே
புல்லற்கு அரிதாம் எளியேன்-தன் பிழைகள் யாவும் பொறுத்து இந்த
அல்லல்_கடல்-நின்று எனை எடுத்தே அருள்வாய் உன்றன் அருள் நலமே.

@2. பிரார்த்தனைப் பதிகம்

#581.
அப்பு ஆர் மலர்ச் சடை ஆர்_அமுதே என் அருள்_துணையே
துப்பு ஆர் பவள மணி_குன்றமே சிற்சுகக் கடலே
வெப்பு ஆர்தரு துயரால் மெலிகின்றனன் வெற்று அடியேன்
இப் பார்-தனில் என்னை அப்பா அஞ்சேல் என ஏன்றுகொள்ளே.

#582.
ஏன்றுகொள்வான் நமது இன் உயிர் போல் முக்கண் எந்தை என்றே
சான்றுகொள்வாய் நினை நம்பி நின்றேன் இத் தமி அடியேன்
மான்றுகொள்வான் வரும் துன்பங்கள் நீக்க மதித்திலையேல்
ஞான்றுகொள்வேன் அன்றி யாது செய்வேன் இந்த நானிலத்தே.

#583.
நிலத்தே சிறுவர் செய் குற்றங்கள் யாவும் நினைத்து அறவோர்
சலத்தே உளத்தை விடார் என்பர் ஆதலின் தாதை என்றே
குலத் தேவர் போற்றும் குண_குன்றமே எம் குல_தெய்வமே
புலத்தே இழிதகையேன் பிழை யாவும் பொறுத்து அருளே.

#584.
அருள் ஆர் அமுதப் பெரும் கடலே தில்லை அம்பலத்தில்
பொருள் ஆர் நடம் புரி புண்ணியனே நினைப் போற்றுகிலேன்
இருள் ஆர் மனத்தின் இடர் உழந்தேன் இனி யாது செய்கேன்
மருள் ஆர் மல_குடில் மாய்ந்திடில் உன் அருள் வாய்ப்பதற்கே.

#585.
வாயார நின் பொன்_மலர்_தாள் துணையே வழுத்துகிலேன்
ஓயா இடர் உழந்து உள் நலிகின்றனன் ஓ கெடுவேன்
பேயாய்ப் பிறந்திலன் பேயும் ஒவ்வேன் புலைப் பேறு உவக்கும்
நாயாய்ப் பிறந்திலன் நாய்க்கும் கடைப்பட்ட நான் இங்ஙனே.

#586.
நான் செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்து நின் நல் அருள் நீ
தான் செய்தனை எனில் ஐயா முக்கண் பெரும் சாமி அவற்கு
ஏன் செய்தனை என நின் தடுப்பார் இலை என் அரசே
வான் செய்த நன்றியை யார் தடுத்தார் இந்த வையக்தே.

#587.
வையகத்தே இடர் மாக் கடல் மூழ்கி வருந்துகின்ற
பொய்யகத்தேனைப் புரந்து அருளாமல் புறம்பொழித்தால்
நையகத்தேன் எது செய்வேன் அந்தோ உள் நலிகுவன் காண்
மெய்யகத்தே நின்று ஒளிர்தரும் ஞான விரி சுடரே.

#588.
விரி துயரால் தடுமாறுகின்றேன் இந்த வெவ்வினையேன்
பெரிது உயராநின்ற நல்லோர் அடையும் நின் பேர்_அருள்-தான்
அரிது கண்டாய் அடைவேன் எனல் ஆயினும் ஐய மணிப்
புரி துவர் வார் சடையாய் நீ உவப்பில் புரியில் உண்டே.

#589.
உண்டோ என் போல் துயரால் அலைகின்றவர் உத்தம நீ
கண்டு ஓர்சிறிதும் இரங்குகிலாய் இக் கடையவனேன்
பண்டு ஓர் துணை அறியேன் நின்னை அன்றி நின் பற்றி நின்றேன்
எண் தோள் மணி மிடற்று எந்தாய் கருணை இரும்_கடலே.

#590.
கடலே அனைய துயர் மிகையால் உள் கலங்கும் என்னை
விடலே அருள் அன்று எடுத்து ஆளல் வேண்டும் என் விண்ணப்பம் ஈது
அடல் ஏறு உவந்த அருள்_கடலே அணி அம்பலத்துள்
உடலே மருவும் உயிர் போல் நிறை ஒற்றியூர் அப்பனே.

@3. பெரு விண்ணப்பம்

#591.
இருள் ஆர் மனத்தேன் இழுக்கு உடையேன் எளியேன் நின்னை ஏத்தாத
மருள் ஆர் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன்
அருள் ஆர் அமுதப் பெருக்கே என் அரசே அது நீ அறிந்து அன்றோ
தெருள் ஆர் அன்பர் திரு_சபையில் சேர்க்காது அலைக்கும் திறம் அந்தோ.

#592.
உண்மை அறியேன் எனினும் எனை_உடையாய் உனையே ஒவ்வொருகால்
எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத
வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை
வண்மை உடையாய் என் செய்கேன் மற்று ஓர் துணை இங்கு அறியேனே.

#593.
எளியேன் இழைத்த பெரும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு இன்பு அளித்தாய்
களியேன்-தனை நீ இனி அந்தோ கைவிட்டிடில் என் கடவேனே
ஒளியே முக்கண் செழும் கரும்மே ஒன்றே அன்பர் உறவே நல்
அளியே பரம_வெளியே என் ஐயா அரசே ஆர்_அமுதே.

#594.
காம_கடலில் படிந்து அஞராம் கடலில் விழுந்தேன் கரை காணேன்
ஏமக் கொடும் கூற்று எனும் மகரம் யாது செயுமோ என் செய்கேன்
நாமக் கவலை ஒழித்து உன் தாள் நண்ணும்அவர்-பால் நண்ணுவித்தே
தாமக் கடிப் பூம் சடையாய் உன்றன் சீர் பாடத் தருவாயே.

#595.
எண்ணாது எளியேன் செயும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு எனை ஆள்வது
அண்ணா நினது கடன் கண்டாய் அடியேன் பல கால் அறைவது என்னே
கண்ணார் நுதல் செங்கரும்பே முக்கனியே கருணை_கடலே செவ்
வண்ணா வெள்ளை மால் விடையாய் மன்று ஆடிய மா மணி_சுடரே.

#596.
பாலே அமுதே பழமே செம் பாகே எனும் நின் பதப் புகழை
மாலே அயனே இந்திரனே மற்றைத் தேவரே மறைகள்
நாலே அறியாது எனில் சிறியேன் நானோ அறிவேன் நாயக என்
மேலே அருள்கூர்ந்து எனை நின் தாள் மேவுவோர்-பால் சேர்த்து அருளே.

#597.
கண் ஆர் நுதலோய் பெரும் கருணை_கடலோய் கங்கை மதிச் சடையோய்
பெண் ஆர் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும்
அண்ணா என நின்று ஏத்து எடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடி_மலரை
எண்ணாது உழல்வோர் சார்பாக இருக்கத் தரியேன் எளியேனே.

#598.
பொய் ஓர் அணியா அணிந்து உழலும் புலையேன் எனினும் புகலிடம்-தான்
ஐயோ நினது பதம் அன்றி அறியேன் இது நீ அறியாயோ
கை ஓர் அனல் வைத்து ஆடுகின்ற கருணாநிதியே கண்_நுதலே
மெய்யோர் விரும்பும் அரு_மருந்தே வேத முடிவின் விழு_பொருளே.

#599.
இன்னே எளியேன் பொய்_உடையேன் எனினும் அடியன் அலவோ நான்
என்னே நின்னைத் துதியாதார் இடத்தில் என்னை இருத்தினையே
அன்னே என்றன் அப்பா என் ஐயா என்றன் அரசே செம்
பொன்னே முக்கண் பொருளே நின் புணர்ப்பை அறியேன் புலையேனே.

#600.
வஞ்ச மடவார் மயல் ஒரு பால் மணியே நின்னை வழுத்தாத
நஞ்சம்_அனையார் சார்பு ஒரு பால் நலியும் வாழ்க்கைத் துயர் ஒரு பால்
விஞ்சும் நினது திரு_அருளை மேவாது உழலும் மிடி ஒரு பால்
எஞ்சல் இலவாய் அலைக்கின்றது என் செய்கேன் இ எளியேனே.

@4. சிறு விண்ணப்பம்

#601.
பண்ணால் உன் அருள்_புகழைப் பாடுகின்றார்
பணிகின்றார் நின் அழகைப் பார்த்துப்பார்த்துக்
கண்ணார உளம் குளிரக் களித்து ஆனந்த_
கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய்
என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன்
அண்ணா நான் ஒரு பாவி வஞ்ச நெஞ்சத்தால்
அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

#602.
எப்பாலும் நின் அன்பர் எல்லாம் கூடி
ஏத்துகின்றார் நின் பதத்தை ஏழையேன் நான்
வெப்பாய மடவியர்-தம் கலவி வேட்டு
விழுகின்றேன் கண் கெட்ட விலங்கே போல
இப் பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும்
எண்ணுகிலேன் முக்கண் உடை இறைவா என்றன்
அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் துணைவா வீணில்
அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

#603.
இன்பு_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் சீர்
இசைக்கின்றார் நான் ஒருவன் ஏழை இங்கே
வன்பு_உடையார்-தமைக் கூடி அவமே நச்சு
மா மரம் போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கைத்
துன்பு_உடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன்
தூய்மை என்பது அறிந்திலேன் சூழ்ந்தோர்க்கு எல்லாம்
அன்பு_உடையாய் எனை_உடையாய் விடையாய் வீணே
அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

#604.
விஞ்சு_உடையாய் நின் அன்பர் எல்லாம் நின் சீர்
மெய்_புளகம் எழத் துதித்து விளங்குகின்றார்
நஞ்சு_உடையார் வஞ்சகர்-தம் சார்பில் இங்கே
நான் ஒருவன் பெரும் பாவி நண்ணி மூட
நெஞ்சு_உடையார்-தமக்கு எல்லாம் தலைமைபூண்டு
நிற்கின்றேன் கருணை முக நிமலக் கஞ்சம்
அஞ்சு_உடையாய் ஆறு உடைய சடையாய் வீணில்
அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

#605.
பொய்யாத நின் அடியார் எல்லாம் நல்ல
புண்ணியமே செய்து நினைப் போற்றுகின்றார்
நையாநின்று உலைகின்ற மனத்தால் இங்கே
நான் ஒருவன் பெரும் பாவி நாயேன் தீமை
செய்யாநின்று உழைக்கின்றேன் சிறிதும் நின்னைச்
சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன்
ஐயா என் அப்பா என் அரசே வீணில்
அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

#606.
தெருள்_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் தாள்
சிந்தையில் வைத்து ஆனந்தம் தேக்குகின்றார்
மருள்_உடையேன் நான் ஒருவன் பாவி வஞ்ச
மனத்தாலே இளைத்திளைத்து மயங்குகின்றேன்
இருள்_உடையேன் ஏர்பூட்டும் பகடு போல் இங்கு
இல் உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம்_வல்ல
அருள்_உடையாய் ஆள்_உடையாய் உடையாய் வீணில்
அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

#607.
வாரம்_உளார் நின் அடியார் எல்லாம் நின்னை
வாழ்த்துகின்றார் தலை குளிர வணங்குகின்றார்
தீரம் இலேன் நான் ஒருவன் பாவி வஞ்சச்
செயல் விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ
சாரம் இலேன் ஆசாரம் இல்லேன் சித்த
சாந்தம் இலேன் இரக்கம்_இலேன் தகவும் இல்லேன்
ஆர்_அமுதே முக்கண் உடை அரசே வீணில்
அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

#608.
வண்மை பெறு நின் அன்பர் எல்லாம் நின்னை
வந்தனைசெய்து ஆனந்த வயத்தே நின்றார்
பெண்மை உறும் மனத்தாலே திகைத்தேன் நின் சீர்
பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நான் ஓர்
ஒண்மை இலேன் ஒழுக்கம் இலேன் நன்மை என்பது
ஒன்றும் இலேன் ஒதியே போல் உற்றேன் மிக்க
அண்மையில் வந்து அருள்_புரிவோய் என்னே வீணில்
அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

#609.
உம்பர்-தமக்கு அரிதாம் உன் பதத்தை அன்றி
ஒன்றும் அறியார் உன்னை உற்றோர் எல்லாம்
இம்பர் வினை உடையேன் நான் ஒருவன் பாவி
எள்துணையும் நினைந்து அறியேன் என்றும் எங்கும்
வம்பு அவிழ் பூங் குழல் மடவார் மையல் ஒன்றே
மனம் உடையேன் உழைத்து இளைத்த மாடு போல்வேன்
அம்பலத்து எம் அரசே இ வாழ்க்கைத் துன்பில்
அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

#610.
கொலை அறியாக் குணத்தோர் நின் அன்பர் எல்லாம்
குணமே செய்து உன் அருள்-தான் கூடுகின்றார்
புலை அறிவேன் நான் ஒருவன் பிழையே செய்து
புலம் கெட்ட விலங்கே போல் கலங்குகின்றேன்
நிலை அறியேன் நெறி ஒன்றும் அறியேன் எங்கும் நினை
அன்றித் துணை ஒன்றும் அறியேன் சற்றும்
அலை அறியா அருள்_கடல் நீ ஆள்க வீணில்
அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

@5. கலி முறையீடு

#611.
பொய் விடுகின்றிலன் என்று எம் புண்ணியா
கைவிடுகின்றியோ கடையனேன்-தனைப்
பை விடம் உடைய வெம் பாம்பும் ஏற்ற நீ
பெய் விடம் அனைய என் பிழை பொறுக்கவே.

#612.
பொறுக்கினும் அன்றி என் பொய்மை நோக்கியே
வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன்
மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டு பின்
சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே.

#613.
செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரைப்
புல்லலும் கொண்ட என் பொய்மை கண்டு நீ
கொல்லலும் தகும் எனைக் கொன்றிடாது அருள்
மல்லலும் தகும் சடா_மகுட வள்ளலே.

#614.
வள்ளலே நின் அடி_மலரை நண்ணிய
உள்ளலேன் பொய்மையை உன்னி என்னை ஆட்
கொள்ளலே இன்று எனில் கொடிய என்றனை
எள்ளலே அன்றி மற்று என் செய்கிற்பனே.

#615.
செய்ய நன்று அறிகிலாச் சிறியனேன்-தனைப்
பொய்யன் என்று எண்ணி நீ புறம்பொழிப்பையேல்
வைய நின்று ஐயவோ மயங்கல் அன்றி யான்
உய்ய நின்று உணர்குவது ஒன்றும் இல்லையே.

#616.
இல்லை என்பது இலா அருள்_வெள்ளமே
தில்லை மன்றில் சிவ_பரஞ்சோதியே
வல்லை யான் செயும் வஞ்சம் எலாம் பொறுத்து
ஒல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே.

#617.
இல்லையே என்பது இங்கு இல்லை என்று அருள்
நல்லையே நீ அருள் நயந்து நல்கினால்
கல்லையே அனைய என் கன்ம நெஞ்சகம்
ஒல்லையே வஞ்சம் விட்டு உவக்கும் உண்மையே

#618.
உண்மையே அறிகிலா ஒதியனேன் படும்
எண்மையே கண்டும் உள் இரக்கம் வைத்திலை
அண்மையே அம்பலத்து ஆடும் ஐய நீ
வண்மையே அருள் பெரு வாரி அல்லையோ

#619.
அல்லல் அம் கடலிடை ஆழ்ந்த நாயினேன்
சொல் அலங்கு அடல் விடைத் தோன்றல் நின் அருள்
மல்லல் அம் கடலிடை மகிழ்ந்து மூழ்கினால்
கல் அலங்கு அடல் மனம் கனிதல் மெய்மையே.

#620.
மெய்மையே அறிகிலா வீணனேன் இவன்
உய்மையே பெற உனை உன்னி ஏத்திடாக்
கைமையே_அனையர்-தம் கடையில் செல்லவும்
பொய்மையே உரைக்கவும் புணர்த்தது என்-கொலோ.

#621.
என்னுடை வஞ்சக இயற்கை யாவையும்
பொன் உடை விடையினோய் பொறுத்துக்கொண்டு நின்
றன்னுடை அன்பர்-தம் சங்கம் சார்ந்து நான்
நின்னுடைப் புகழ்-தனை நிகழ்த்தச் செய்கவே.

#622.
நிகழும் நின் திரு_அருள் நிலையைக் கொண்டவர்
திகழும் நல் திரு_சபை-அதனுள் சேர்க்க முன்
அகழும் மால் ஏனமாய் அளவும் செம் மலர்ப்
புகழுமாறு அருளுக பொறுக்க பொய்மையே.

@6. அச்சத் திரங்கல்

#623.
துறையிடும் கங்கைச் செழும் சடைக் கனியே சுயம்_பிரகாசமே அமுதில்
கறையிடும் கண்டத்து ஒரு பெரும் கருணைக் கடவுளே கண் நுதல் கரும்பே
குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும் கொடும் துயரால் அலைந்து ஐயா
முறையிடுகின்றேன் அருள்தராது என்னை மூடன் என்று இகழ்வது முறையோ.

#624.
இகழ்ந்திடேல் எளியேன்-தன்னை நீ அன்றி ஏன்றுகொள்பவர் இலை அந்தோ
அகழ்ந்து எனது உளத்தைச் சூறைகொண்டு அலைக்கும் அஞர் எலாம் அறுத்து அருள் புரிவாய்
புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளிப் பொருப்பினும் பொதுவினும் நிறைந்து
திகழ்ந்து அருள் பழுக்கும் தெய்வதத் தருவே செல்வமே சிவ_பரம் பொருளே.

#625.
பொருள் எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே புத்தமுதே குண_பொருப்பே
இருள் எலாம் அறுக்கும் பேர்_ஒளிப் பிழம்பே இன்பமே என் பெரும் துணையே
அருள் எலாம் திரண்ட ஒரு சிவ_மூர்த்தி அண்ணலே நின் அடிக்கு அபயம்
மருள் எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப மயக்கு எலாம் மாற்றி ஆண்டு அருளே.

#626.
ஆண்ட நின் கருணை_கடலிடை ஒரு சிற்றணுத்துணைத் திவலையே எனினும்
ஈண்ட என்றன் மேல் தெறித்தியேல் உய்வேன் இல்லையேல் என் செய்கேன் எளியேன்
நீண்டவன் அயன் மற்று ஏனை வானவர்கள் நினைப்ப அரும் நிலைமையை அன்பர்
வேண்டினும் வேண்டாவிடினும் ஆங்கு அளிக்கும் விமலனே விடை_பெருமானே.

#627.
பெருமையில் பிறங்கும் பெரிய நற்குணத்தோர் பெற்றதோர் பெரும் தனிப் பொருளே
அருமையில் பிரமன் ஆகிய தேவர் அடைந்த நல் செல்வமே அமுதே
இருமையில் பயனும் நின் திரு_அருளே என்று நின் அடைக்கலம் ஆனேன்
கருமையில் பொலியும் விடம் நிகர் துன்ப_களை களைந்து எனை விளைத்து அருளே.

#628.
விளைத்தனன் பவ நோய்க்கு ஏதுவாம் விடய விருப்பினை நெருப்பு உறழ் துன்பின்
இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால் என் செய்கேன் என் பிழை பொறுத்துத்
தளைத்தவன் துயர் நீத்து ஆள வல்லவர் நின்றனை அன்றி அறிந்திலன் தமியேன்
கிளைத்த வான் கங்கை நதிச் சடையவனே கிளர்தரும் சிற்பர சிவனே.

#629.
சிற்பர சிவனே தேவர்-தம் தலைமைத் தேவனே தில்லை அம்பலத்தே
தற்பர நடம்செய் தாணுவே அகில சராசர காரணப் பொருளே
அற்பர்-தம்மிடம் செல் பற்பல துயரால் அலைதருகின்றனன் எளியேன்
கற்பகம் அனைய நின் திரு_அருள்_கடலில் களிப்புடன் ஆடுவது என்றோ.

#630.
என்று நின் அருள்_நீர் உண்டு வந்திடும் நாள் என்று நின் உருவு கண்டிடும் நாள்
என்று நின் அடியர்க்கு ஏவல்செய்திடும் நாள் என்று எனது அகத் துயர் அறும் நாள்
மன்றுள் நின்று ஆடும் பரஞ்சுடர்_குன்றே வானவர் கனவினும் தோன்றாது
ஒன்றுறும் ஒன்றே அருள்மயமான உத்தம வித்தக மணியே.

#631.
வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப விரி கடல் ஆழ்ந்தனன் அந்தோ
அத்தகவேனை எடுப்பவர் நின்னை அன்றி எங்கணும் இலை ஐயா
மத்தகக் கரியின் உரி புனை பவள வண்ணனே விண்ணவர் அரசே
புத்து அக நிறைவின் அடியவர் வேண்டும் பொருள் எலாம் புரிந்து அருள்பவனே.

#632.
அருள்பவன் நின்னை அல்லதை இங்கும் அங்கும் மற்று எங்கும் இன்று அது போல்
மருள்பவன் என்னையல்லதை மண்ணும் வானமும் தேடினும் இன்றே
இருள் பவம் உடையேன் என் செய்கேன் நின் தாள் இணை துணை என நினைந்து உற்றேன்
மருள் பவத்தொடும் என் துயர் அறுத்து ஆள்வாய் வாழிய அருள் பெரும் துறையே.

@7. அபராதத் தாற்றாமை

#633.
துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன் துட்டனேன் தூய்மை ஒன்று இல்லா
எச்சிலை_அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன்
பச்சிலை இடுவார் பக்கமே மருவும் பரமனே எம் பசுபதியே
அச்சிலை விரும்பும்அவர் உளத்து அமுதே ஐயனே ஒற்றியூர் அரைசே.

#634.
தூங்கினேன் சோம்பற்கு உறைவிடம் ஆனேன் தோகையர் மயக்கிடை அழுந்தி
ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன்
வாங்கி மேருவினை வளைத்திடும் பவள மா மணி_குன்றமே மருந்தே
ஓங்கி வான் அளவும் பொழில் செறி ஒற்றியூர் வரும் என்னுடை உயிரே.

#635.
கரப்பவர்க்கு எல்லாம் முற்படும் கொடிய கடையனேன் விடையமே உடையேன்
இரப்பவர்க்கு அணுவும் ஈந்திலேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன்
திரப்படும் கருணைச் செல்வமே சிவமே தெய்வமே தெய்வநாயகமே
உரப்படும் அன்பர் உள் ஒளி விளக்கே ஒற்றியூர் வாழும் என் உவப்பே.

#636.
இல்லை என்பதனுக்கு அஞ்சிடேன் நாய்க்கும் இணை_இலேன் இழிவினேன் துயர்க்கு ஓர்
எல்லை மற்று அறியேன் ஒதியனேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன்
கல்லை வில்லாக்கும் கருணை_வாரிதியே கண் நுதல் உடைய செங்கனியே
தில்லை வாழ் அரசே தெய்வ மா மணியே திருவொற்றியூர் வரும் தேவே.

#637.
மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டு உன் மலர்_அடி வழுத்திடச் சிறிதும்
எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன்
விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே விடையில் வந்து அருள் விழி விருந்தே
கண்ணிலே விளங்கும் அரும்_பெறல் மணியே காட்சியே ஒற்றி அம் கரும்பே.

#638.
முட்டியே மடவார் முலை-தலை உழக்கும் மூடனேன் முழு புலை முறியேன்
எட்டியே அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன்
ஒட்டியே அன்பர் உளத்து எழும் களிப்பே ஒளிக்குள் ஆம் சோதியே கரும்பின்
கட்டியே தேனே சடை உடைக் கனியே காலமும் கடந்தவர் கருத்தே.

#639.
கருது என அடியார் காட்டியும் தேறாக் கல்_மன குரங்கு_அனேன் உதவா
எருது என நின்றேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன்
மருதிடை நின்ற மாணிக்க மணியே வன் பவம் தீர்ந்திடும் மருந்தே
ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே ஒற்றியூர் மேவும் என் உறவே.

#640.
வைதிலேன் வணங்காது இகழ்பவர்-தம்மை வஞ்சனேன் நின் அடியவர்-பால்
எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன்
கொய்து மா மலர் இட்டு அருச்சனை_புரிவோர் கோல நெஞ்சு ஒளிர் குண_குன்றே
உய்திறம் உடையோர் பரவும் நல் ஒற்றியூர்-அகத்து அமர்ந்து அருள் ஒன்றே.

#641.
தெவ் வண மடவார் சீ_குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன்
எவ்வணம் உய்வேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன்
எவ்வணப் பொருப்பே என் இரு கண்ணே இடையிடாப் பசிய செம்பொன்னே
செவ் வண மணியே திகழ் குண_கடலே திருவொற்றியூர்ச் செழும் தேனே.

#642.
வாதமே புரிவேன் கொடும் புலி_அனையேன் வஞ்சக மனத்தினேன் பொல்லா
ஏதமே உடையேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன்
போதமே ஐந்தாம் பூதமே ஒழியாப் புனிதமே புது மணப் பூவே
பாதமே சரணம் சரணம் என்றன்னைப் பாதுகாத்து அளிப்பது உன் பரமே.

@8. காட்சிப் பெருமிதம்

#643.
திரை படாத செழும் கடலே சற்றும்
உரைபடாமல் ஒளிசெய் பொன்னே புகழ்
வரைபடாது வளர் வல்லி கேச நீ
தரை படாக் கந்தை சாத்தியது என்-கொலோ.

#644.
சிந்தை நின்ற சிவாநந்தச் செல்வமே
எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே
தந்தையே வலிதாயத் தலைவ நீ
கந்தை சுற்றும் கணக்கு அது என்-கொலோ.

#645.
வேலை கொண்ட விடம் உண்ட கண்டனே
மாலை கொண்ட வளர் வல்லி கேசனே
பாலை கொண்ட பராபர நீ பழம்
சேலை கொண்ட திறம் இது என்-கொலோ

#646.
பன்னுவார்க்கு அருளும் பரமேட்டியே
மன்னும் மா மணியே வல்லி கேசனே
உன்ன நீ இங்கு உடுத்திய கந்தையைத்
துன்னுவார் இல்லையோ பரஞ்சோதியே

#647.
கடுத்த தும்பிய கண்ட அகண்டனே
மடுத்த நல் புகழ் வாழ் வல்லி கேச நீ
தொடுத்த கந்தையை நீக்கித் துணிந்து ஒன்றை
உடுத்துவார் இலையோ இ உலகிலே.

#648.
ஆல் அடுத்த அரும் பொருளே திரு
மால் அடுத்து மகிழ் வல்லி கேச நீ
பால் உடுத்த பழம் கந்தையைவிடத்
தோல் உடுப்பதுவே மிகத் தூய்மையே

#649.
துன்னும் மா மருந்தே சுடரே அருள்
மன்னும் மாணிக்கமே வல்லி கேசரே
துன்னு கந்தையைச் சுற்றி நிற்பீரெனில்
என்ன நீர் எமக்கு ஈயும் பரிசு அதே.

#650.
மாசு_இல் சோதி மணி_விளக்கே மறை
வாசி மேவிவரும் வல்லி கேச நீர்
தூசில் கந்தையைச் சுற்றி ஐயோ பர
தேசி போல் இருந்தீர் என்-கொல் செய்வனே.

#651.
தேரும் நல் தவர் சிந்தை எனும் தலம்
சாரும் நல் பொருளாம் வலிதாய நீர்
பாரும் மற்று இ பழம் கந்தை சாத்தினீர்
யாரும் அற்றவரோ சொலும் ஐயரே.

#652.
மெல்லிதாய விரை மலர்ப் பாதனே
வல்லிதாயம் மருவிய நாதனே
புல்லிதாய இக் கந்தையைப் போர்த்தினால்
கல் இதாய நெஞ்சம் கரைகின்றதே.

@9. அருளியல் வினாவல்

#653.
தேன் என இனிக்கும் திரு_அருள்_கடலே தெள்ளிய அமுதமே சிவமே
வான் என நிற்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
ஊன் என நின்ற உணர்வு_இலேன் எனினும் உன் திரு_கோயில் வந்து அடைந்தால்
ஏன் எனக் கேளாது இருந்தனை ஐயா ஈது நின் திரு_அருட்கு இயல்போ.

#654.
பூ_கொடி இடையைப் புணர்ந்த செந்தேனே புத்தமுதே மறைப் பொருளே
வாம் கொடி விடை கொள் அண்ணலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
தீங்கு ஒடியாத வினையனேன் எனினும் செல்வ நின் கோயில் வந்து அடைந்தால்
ஈங்கு ஒடியாத அருள் கணால் நோக்கி ஏன் எனாது இருப்பதும் இயல்போ.

#655.
துப்பு நேர் இதழி மகிழ்ந்த கல்யாண சுந்தரா சுந்தரன் தூதா
மை பொதி மிடற்றாய் வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
அப்பனே உன்னை விடுவனோ அடியேன் அறிவிலேன் எனினும் நின் கோயிற்கு
எய்ப்புடன் வந்தால் வா என உரையாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.

#656.
கங்கை அம் சடை கொண்டு ஓங்கு செங்கனியே கண்கள் மூன்று ஓங்கு செங்கரும்பே
மங்கல் இல்லாத வண்மையே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
துங்க நின் அடியைத் துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால்
எங்கு வந்தாய் நீ யார் எனவேனும் இயம்பிடாது இருப்பதும் இயல்போ.

#657.
நன்று வந்து அருளும் நம்பனே யார்க்கும் நல்லவனே திரு_தில்லை
மன்று வந்து ஆடும் வள்ளலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
துன்று நின் அடியைத் துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால்
என்று வந்தாய் என்று ஒரு சொலும் சொல்லாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.

#658.
பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே பத்தர்கட்கு அருள்செயும் பரமே
மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
பெண்ணினும் பேதை மதியினேன் எனினும் பெரும நின் அருள் பெறலாம் என்று
எண்ணி வந்து அடைந்தால் கேள்வி இல்லாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.

#659.
முன்னிய மறையின் முடிவின் உட்பொருளே முக்கணா மூவர்க்கும் முதல்வா
மன்னிய கருணை_வாரியே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்றன் அருள் பெரும் கோயில் வந்து அடைந்தால்
என் இது சிவனே பகைவரைப் போல் பார்த்து இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.

#660.
நல்லவர் பெறும் நல் செல்வமே மன்றுள் ஞான_நாடகம் புரி நலமே
வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
புல்லவன் எனினும் அடியனேன் ஐயா பொய்யல உலகு அறிந்தது நீ
இல்லை என்றாலும் விடுவனோ சும்மா இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.

#661.
பொதுவில்-நின்று அருளும் முதல் தனிப் பொருளே புண்ணியம் விளைகின்ற புலமே
மதுவின் நின்று ஓங்கும் பொழில் தரு முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
புதுமையன் அல்லேன் தொன்றுதொட்டு உனது பூங்குழற்கு அன்பு பூண்டவன் காண்
எது நினைந்து அடைந்தாய் என்று கேளாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.

#662.
பொன்னையுற்றவனும் அயனும் நின்று அறியாப் புண்ணியா கண் நுதல் கரும்பே
மன்னனே மருந்தே வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
உன்னை நான் கனவினிடத்தும் விட்டு ஒழியேன் உன் திரு_அடித் துணை அறிய
என்னை ஈன்றவனே முகம் அறியார் போல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.

@10. திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்

#663.
தாயின் மேவிய தற்பரமே முல்லை
வாயில் மேவிய மா மணியே உன்றன்
கோயில் மேவி நின் கோ மலர்த் தாள் தொழா
தே இல் மேவி இருந்தனன் என்னையே.

#664.
தில்லை வாய்ந்த செழும் கனியே திரு
முல்லைவாயில் முதல் சிவ_மூர்த்தியே
தொல்லையேன் உன்றன் தூய் திரு_கோயிலின்
எல்லை சேர இன்று எ தவம் செய்ததே.

#665.
வளம் கொளும் முல்லைவாயிலில் மேவிய
குளம் கொளும் கண் குரு மணியே உனை
உளம்கொளும்படி உன் திரு_கோயில் இக்
களம் கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே.

#666.
மலைவு இலா முல்லைவாயிலில் மேவிய
விலை_இலா மணியே விளக்கே சற்றும்
குலைவு_இலாதவர் கூடும் நின் கோயிலில்
தலை நிலாவத் தவம் என்-கொல் செய்ததே.

#667.
சீர் சிறக்கும் திரு_முல்லைவாயிலில்
ஏர் சிறக்கும் இயல் மணியே கொன்றைத்
தார் சிறக்கும் சடைக் கனியே உன்றன்
ஊர் சிறக்க உறுவது எவ்வண்ணமே.

#668.
சேல் கொள் பொய்கைத் திரு_முல்லைவாயிலில்
பால் கொள் வண்ணப் பரஞ்சுடரே விடை
மேல் கொள் சங்கரனே விமலா உன்றன்
கால் கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ.

#669.
வண்ண மா முல்லைவாயிலின் மேவிய
அண்ணலே அமுதே அரைசே நுதல்_
கண்ணனே உனைக் காண வந்தோர்க்கு எல்லாம்
நண்ண அரும் துயர் நல்குதல் நன்றதோ.

#670.
மண்ணின் ஓங்கி வளர் முல்லைவாயில் வாழ்
கண் உள் மா மணியே கரும்பே உனை
எண்ணும் அன்பர் இழிவடைந்தால் அது
பண்ணும் நின் அருள் பாரிடை வாழ்கவே.

#671.
தீது_இலாத திரு_முல்லைவாயில் வாழ்
கோது_இலாத குணப் பெரும் குன்றமே
வாது இலாது உனை வாழ்த்த வந்தோர்-தமை
ஏதிலார் என்று இருப்பதும் என்-கொலோ.

#672.
தேசு உலாவிய சீர் முல்லைவாயில் வாழ்
மாசிலாமணியே மருந்தே சற்றும்
கூசிடாமல் நின் கோயில் வந்து உன் புகழ்
பேசிடாத பிழை பொறுத்து ஆள்வையே.

@11. கொடைமடப் புகழ்ச்சி

#673.
திரப்படும் திருமால் மயன் வாழ்த்தத் தியாகர் என்னும் ஓர் திரு_பெயர் அடைந்தீர்
வரப்படும் திறத்தீர் உமை அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
இரப்பவர்க்கு ஒன்றும் ஈகிலீர் ஆனால் யாதுக்கு ஐய நீர் இ பெயர் எடுத்தீர்
உரப்படும் தவத்தோர் துதித்து ஓங்க ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

#674.
வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் எனக் கொண்டீர்
வள்ளியீர் என நும்மை வந்து அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
எள்ளி எண்ணெய் போல் எங்கணும் நின்றீர் ஏழையேன் குறை ஏன் அறியீரோ
ஒள்ளியீர் உமை அன்றி ஒன்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

#675.
கள்ளம் அற்ற வாக்கரசும் புத்திரரும் களிக்கவே படிக்காசு அளித்து அருளும்
வள்ளல் என்று உமை வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
எள்ள அரும் புகழ்த் தியாகர் என்று ஒரு பேர் ஏன் கொண்டீர் இரப்போர்க்கு இட அன்றோ
உள்ளம் இங்கு அறிவீர் எனை ஆள்வீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

#676.
அண்மையாகும் சுந்தரர்க்கு அன்று கச்சூர் ஆல_கோயிலில் சோறு இரந்து அளித்த
வண்மை கேட்டு இங்கு வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
திண்மை சேர் திருமால் விடை ஊர்வீர் தேவரீருக்குச் சிறுமையும் உண்டோ
உண்மையான் உமை அன்றி மற்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

#677.
சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மைச் சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு
வந்து அடைந்த எற்கு உண்டு இலை எனவே வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
இந்த வண்ணம் நீர் இருந்திடுவீரேல் என் சொலார் உமை இ உலகத்தார்
உந்தி_வந்தவனோடு அரி ஏத்த ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

#678.
கல்லையும் பசும்பொன் எனப் புரிந்த கருணை கேட்டு உமைக் காதலித்து இங்கு
வல்லை வந்து நின்று ஏற்றிடில் சிறிதும் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
இல்லை நீர் பிச்சையெடுக்கின்றீரேனும் இரக்கின்றோர்களும் இட்டு உண்பர் கண்டீர்
ஒல்லை இங்கு எனது உளம் கொண்டது அறிவீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

#679.
துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம் தோன்றலே உமைத் துணை என நம்பி
வளிக்குள் பஞ்சு_அனையேன் அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
அளிக்கும் தன்மையீர் வாழ்ந்து இவண் இருக்க அடியனேன் அலைகின்றதும் அழகோ
ஒளிக்கும் தன்மை-தான் உமக்கும் உண்டேயோ ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

#680.
குற்றம் எத்தனை அத்தனை எல்லாம் குணம் எனக் கொளும் குண_கடல் என்றே
மற்றும் நான் நம்பி ஈங்கு வந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
கற்ற நல் தவர்க்கே அருள்வீரேல் கடையனேன் எந்தக் கடைத்தலைச் செல்கேன்
உற்ற நல் துணை உமை அன்றி அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

#681.
பொய்_இலார்க்கு முன் பொற்கிழி அளித்த புலவர் ஏறு எனப் புகழ்ந்திடக் கேட்டு
மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
ஐய நும் அடியன்றி ஓர் துணையும் அறிந்திலேன் இஃது அறிந்து அருளீரேல்
உய்யும் வண்ணம் எவ்வண்ணம் என் செய்கேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

#682.
தாய்_இலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உம் திரு_சந்நிதி அடைந்தேன்
வாய்_இலார் என இருக்கின்றீர் அல்லால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
கோயிலாக என் நெஞ்சகத்து அமர்ந்த குணத்தினீர் என்றன் குறை அறியீரோ
ஓய் இலாது நல் தொண்டருக்கு அருள்வான் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

@12.திருவருள் வேட்கை

#683.
மன் அமுதாம் உன் தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
இன் அமுதம் ஓர்பொழுதும் இட்டு அறியேன் ஆயிடினும்
முன் அமுதா உண்ட களம் முன்னிமுன்னி வாடுகின்றேன்
என் அமுதே இன்னும் இரக்கம்-தான் தோன்றாதோ.

#684.
தோன்றாத் துணையாகும் சோதியே நின் அடிக்கே
ஆன்று ஆர்த்த அன்போடு அகம் குழையேன் ஆயிடினும்
ஊன் தார்த் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன்
தேன் தார்ச் சடையாய் உன் சித்தம் இரங்காதோ.

#685.
காது ஆர் சுடு விழியார் காம_வலைக்கு உள்ளாகி
ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும்
போது ஆர் நினது கழல் பொன்_அடியே போற்றுகின்றேன்
நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ.

#686.
இலை வேட்ட மாதர்-தமது ஈன நலமே விழைந்து
கொலை வேட்டு உழலும் கொடியனேன் ஆயிடினும்
நிலை வேட்ட நின் அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன்
கலை வேட்ட வேணியனே கருணை சற்றும் கொண்டிலையே.

#687.
கொண்டல்_நிறத்தோனும் குணிக்க அரிய நின் அடிக்கே
தொண்டு அறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும்
எண் தக நின் பொன்_அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன்
தண்டலை சூழ் ஒற்றி_உளாய் தயவு சற்றும் சார்ந்திலையே.

#688.
சாரா வறும் சார்பில் சார்ந்து அரைசே உன்னுடைய
தார் ஆர் மலர்_அடியைத் தாழ்ந்து ஏத்தேன் ஆயிடினும்
நேராய் நின் சந்நிதி-கண் நின்றுநின்று வாடுகின்றேன்
ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே.

#689.
ஊர் மதிக்க வீணில் உளறுகின்றதல்லது நின்
சீர் மதிக்க நின் அடியைத் தேர்ந்து ஏத்தேன் ஆயிடினும்
கார் மதிக்கும் நஞ்சம் உண்ட கண்ட நினைந்து உள்குகின்றேன்
ஏர் மதிக்கும் ஒற்றியூர் எந்தை அளி எய்தாயோ.

#690.
தாய்க்கும் இனிது ஆகும் உன்றன் தாள்_மலரை ஏத்தாது
நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும்
வாய்க்கும் உன்றன் சந்நிதி-கண் வந்துவந்து வாடுகின்றேன்
தூய்க் குமரன் தந்தாய் என் சோர்வு அறிந்து தீராயோ.

#691.
அறியாப் பருவத்து அடியேனை ஆட்கொண்ட
நெறியாம் கருணை நினைந்து உருகேன் ஆயிடினும்
குறியாப் பொருளே உன் கோயிலிடை வந்து நின்றும்
பறியாப் பிணியேன் பரதவிப்பைப் பார்த்திலையே.

#692.
பார் நடையாம் கானில் பரிந்து உழல்வதல்லது நின்
சீர் நடையாம் நல் நெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும்
நேர் நடையாம் நின் கோயில் நின்றுநின்று வாடுகின்றேன்
வார்_நடையார் காணா வளர் ஒற்றி மன் அமுதே.

@13. அபராத விண்ணப்பம்

#693.
தேவியல் அறியாச் சிறியனேன் பிழையைத் திருவுளத்து எண்ணி நீ கோபம்
மேவி இங்கு ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
மூவிரு முகம் சேர் முத்தினை அளித்த முழு சுவை முதிர்ந்த செங்கரும்பே
சேவின் மேல் ஓங்கும் செழும் மணி_குன்றே திருவொற்றியூர் மகிழ் தேவே.

#694.
உய்ய ஒன்று அறியா ஒதியனேன் பிழையை உன் திரு_உள்ளத்தில் கொண்டே
வெய்யன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
செய்ய நெட்டிலை வேல் சேய்-தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே
மையல்_அற்றவர்-தம் மனத்து ஒளிர் விளக்கே வளம் பெறும் ஒற்றியூர் மணியே.

#695.
கழல் கொள் உன் அருமைத் திரு_அடி_மலரைக் கருதிடாப் பிழை-தனைக் குறித்தே
விழலன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
அழல் அயில் கரத்து எம் ஐயனை ஈன்ற அப்பனே அயனும் மால் அறியாத்
தழல் நிறப் பவள_குன்றமே ஒற்றித் தனி நகர் அமர்ந்து அருள் தகையே.

#696.
வாள்-தனக்கு உறழும் வடு_கணார்க்கு உருகும் வஞ்சனேன் பிழை-தனைக் குறித்தே
வேடன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
நீடு அயில் படை சேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா
ஏடகத்து அமர்ந்த ஈசனே தில்லை எந்தையே ஒற்றியூர் இறையே.

#697.
நாணம் ஒன்று இல்லா நாயினேன் பிழையை நாடி நின் திருவுளத்து அடைத்தே
வீணன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
காண நின்று அடியார்க்கு அருள்தரும் பொருளே கடி மதில் ஒற்றியூர்க்கு அரசே
பூண் அயில் கரத்து ஓர் புத்தமுது எழுந்த புண்ணியப் புனித வாரிதியே.

#698
அஞ்செழுத்து ஓதி உய்ந்திடாப் பிழையை ஐய நின் திருவுளத்து எண்ணி
வெஞ்சன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
கஞ்சன் மால் முதலோர் உயிர்பெற விடத்தைக் களத்து இருத்திய அருள்_கடலே
சஞ்சிதம் அறுக்கும் சண்முகன் உடையோன் தந்தையே ஒற்றி எம் தேவே

#699.
நம்பினேன் நின்றன் திரு_அடி_மலரை நாயினேன் பிழை-தனைக் குறியேல்
வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
தும்பி மா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிரத் தூணே
அம்பிகாபதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே.

#700.
சூழ்ந்த வஞ்சகனேன் பிழை-தனைக் குறியேல் துன்ப_சாகரம்-தனில் அழுந்தி
வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
வாழ்ந்த மா தவர்கள் மனத்து ஒளிர் ஒளியே வள்ளலே மழ விடையவனே
போழ்ந்த வேல் படை கொள் புனிதனை அளித்த பூரணா ஒற்றியூர்ப் பொருளே.

#701.
துரும்பினேன் பிழையைத் திருவுளத்து அடையேல் துய்ய நின் அருள்_கடல் ஆட
விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
கரும்பின் நேர் மொழியார் இருவரை மணக்கும் கனி-தனை அளித்த கற்பகமே
இரும்பின் நேர் நெஞ்சர் எனினும் என்_போல்வார்க்கு இன் அருள்தரும் ஒற்றி இறையே

#702.
கட்டினேன் பாபக் கொடும் சுமை எடுப்பேன் கடும் பிழை கருதிடேல் நின்னை
விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
சுட்டு இலாப் பொருளே சுகப் பெரும் கடலே தூய்த் திருவொற்றியூர்த் துணையே
தட்டு இலாக் குணத்தோர் புகழ்செயும் குகனைத் தந்து அருள்தரும் தயாநிதியே.

@14. அறிவரும் பெருமை

#703.
நாயினும் கடையேன் என் செய்வேன் பிணியால் நலிகின்ற நலிவினை அறிந்தும்
தாயினும் இனியாய் இன்னும் நீ வரவு தாழ்த்தனை என்-கொல் என்று அறியேன்
மாயினும் அல்லால் வாழினும் நினது மலர்_அடி அன்றி ஒன்று ஏத்தேன்
காயினும் என்னைக் கனியினும் நின்னைக் கனவினும் விட்டிடேன் காணே.

#704.
காண்பது கருதி மாலொடு மலர் வாழ் கடவுளர் இருவரும் தங்கள்
மாண்பு அது மாறி வேறு உருவெடுத்தும் வள்ளல் நின் உரு அறிந்திலரே
கோண் பதர் நெஞ்சக் கொடியனேன் எந்தக் கொள்கை கொண்டு அறிகுவது ஐயா
பூண்பது பணியாய் பொதுவில் நின்று ஆடும் புனித நின் அருள் அலாது இன்றே.

#705.
இன்று வந்து எனை நீ அடிமைகொள்ளாயேல் எவ்வுலகத்தரும் தூற்ற
நன்று நின்றன் மேல் பழி வரும் என் மேல் பழி இலை நவின்றனன் ஐயா
அன்று வந்து ஒரு சேய்க்கு அருள் புரிந்து ஆண்ட அண்ணலே ஒற்றியூர் அரசே
நின்று சிற்சபைக்குள் நடம்செயும் கருணா_நிலையமே நின்மலச் சுடரே.

#706.
சுடர் கொளும் மணிப் பூண் முலை மடவியர்-தம் தொடக்கினில் பட்டு உழன்று ஓயா
இடர் கொளும் எனை நீ ஆட்கொளும் நாள்-தான் எந்த நாள் அந்த நாள் உரையாய்
படர் கொளும் வானோர் அமுது உண நஞ்சைப் பரிந்து உண்ட கருணை அம்பரமே
குடர் கொளும் சூலப் படை_உடையவனே கோதை ஓர் கூறு_உடையவனே.

#707.
உடைமை வைத்து எனக்கு இன்று அருள்செயாவிடினும் ஒப்பு_இலாய் நின் அடிக்கு எனையே
அடைமைவைத்தேனும் நின் அருள் பொருள் இங்கு அளித்திடவேண்டும் இன்று எவைக்கும்
கடைமையேன் வேறு ஓர் தேவரை அறியேன் கடவுள் நின் திரு_அடி அறிக
படைமை சேர் கரத்து எம் பசுபதி நீயே என் உளம் பார்த்து நின்றாயே.

#708.
பார்த்து நிற்கின்றாய் யாவையும் எளியேன் பரதவித்து உறுகணால் நெஞ்சம்
வேர்த்து நிற்கின்றேன் கண்டிலை-கொல்லோ விடம் உண்ட கண்டன் நீ அன்றோ
ஆர்த்து நிற்கின்றார் ஐம்புல வேடர் அவர்க்கு இலக்கு ஆவனோ தமியேன்
ஓர்த்து_நிற்கின்றார் பரவு நல் ஒற்றியூரில் வாழ் என் உறவினனே.

#709.
உறவனே உன்னை உள்கி நெஞ்சு அழலின் உறும் இழுது எனக் கசிந்து உருகா
மறவனேன்-தன்னை ஆட்கொளாவிடில் யான் வருந்துவதன்றி என் செய்கேன்
நிறவனே வெள்ளை நீறு அணிபவனே நெற்றி மேல் கண்ணுடையவனே
அறவனே தில்லை அம்பலத்து ஆடும் அப்பனே ஒற்றியூர்க்கு அரைசே.

#710.
கரைபடா வஞ்சப் பவ_கடல் உழக்கும் கடையனேன் நின் திரு_அடிக்கு
விரைபடா மலர் போல் இருந்து உழல்கின்றேன் வெற்றனேன் என் செய விரைகேன்
திரைபடாக் கருணைச் செல்வ_வாரிதியே திருவொற்றியூர் வளர் தேனே
உரைபடாப் பொன்னே புரைபடா மணியே உண்ணுதற்கு இனிய நல் அமுதே.

#711.
நல் அமுது_அனையார் நின் திரு_அடிக்கே நண்புவைத்து உருகுகின்றனரால்
புல் அமுது_அனையேன் என் செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பது ஒன்று அறியேன்
சொல் அமுது அனைய தோகை ஓர் பாகம் துன்னிய தோன்றலே கனியாக்
கல் அமுது ஆக்கும் கடன் உனக்கு அன்றோ கடையனேன் கழறுவது என்னே.

#712.
என்னை நின்னவனாக் கொண்டு நின் கருணை என்னும் நல் நீரினால் ஆட்டி
அன்னை அப்பனுமாய்ப் பரிவுகொண்டு ஆண்ட அண்ணலே நண்ண அரும் பொருளே
உன்ன அரும் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும் என் உறவே
நன்னர் செய்கின்றோய் என் செய்வேன் இதற்கு நன்கு கைம்மாறு நாயேனே.

@15. அருள்விடை வேட்கை

#713
போகம் கொண்ட புணர் முலை மாது ஒரு
பாகம் கொண்ட படம்பக்கநாதரே
மாகம் கொண்ட வளம் பொழில் ஒற்றியின்
மோகம் கொண்ட எம் முன் நின்று அருளிரோ.

#714.
தவள நீற்று மெய்ச் சாந்த வினோதரே
பவள மேனிப் படம்பக்கநாதரே
கவள வீற்றுக் கரி உரி போர்த்த நீர்
இவளை ஒற்றிவிட்டு எங்ஙனம் சென்றிரோ.

#715.
சீலம் மேவித் திகழ் அனல் கண் ஒன்று
பாலம் மேவும் படம்பக்கநாதரே
ஞாலம் மேவும் நவையை அகற்ற முன்
ஆலம் உண்டவர்_அல்லிர்-கொல் ஐயரே.

#716.
உடை கொள் கோவணத்து உற்ற அழகரே
படை கொள் சூலப் படம்பக்கநாதரே
கடை கொள் நஞ்சு உண்டு கண்டம் கறுத்த நீர்
இடையில் ஒற்றி விட்டு எங்ஙனம் சென்றிரோ.

#717.
நிறைய வாழ் தொண்டர் நீடு உற வன் பவம்
பறைய நின்ற படம்பக்கநாதரே
உறைய மாணிக்கு உயிர் அளித்திட்ட நீர்
குறை இலா ஒற்றிக் கோயில்-கண் உள்ளிரோ.

#718.
வணம் கொள் நாக மணித் தலை ஐந்து உடைப்
பணம் கொள் செல்வப் படம்பக்கநாதரே
கணம் கொள் காமனைக் காய்ந்து உயிர் ஈந்த நீர்
வணங்குவார்க்கு என்-கொல் வாய் திறவாததே.

#719.
நாட நல் இசை நல்கிய மூவர்-தம்
பாடல் கேட்கும் படம்பக்கநாதரே
வாடல் என்று ஒரு மாணிக்கு அளித்த நீர்
ஈடில் என்னளவு எங்கு ஒளித்திட்டிரோ.

#720.
சுலவு காற்று அனல் தூய மண் விண் புனல்
பலவும் ஆகும் படம்பக்கநாதரே
நிலவு தண் மதி நீள் முடி வைத்த நீர்
குலவும் என்றன் குறை தவிர்க்கீர்-கொலோ.

#721.
அடியர் நெஞ்சத்து அருள்_பெரும்_சோதி ஓர்
படிவம் ஆகும் படம்பக்கநாதரே
நெடிய மாலுக்கு நேமி அளித்த நீர்
மிடியனேன் அருள் மேவ விரும்பிரோ.

#722.
மதி கொள் அன்பர் மனம் எனும் திவ்வியப்
பதி கொள் செல்வப் படம்பக்கநாதரே
விதி கொள் துன்பத்தை வீட்டி அளித்த நீர்
துதி கொள்வீர் என் துயரைத் துரத்துமே.

@16. எழுத்தறியும் பெருமான் மாலை

#723
சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
முந்தை வினை தொலைத்து உன் மொய் கழற்கு ஆளாக்காதே
நிந்தையுறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
எந்தை நீ ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

#724.
மத்தனை வன்_நெஞ்சகனை வஞ்சகனை வன் பிணி கொள்
பித்தனை வீண் நாள் போக்கும் பேயேனை நாயேனை
முத்து_அனையாய் உன்றன் முளரித் தாட்கு ஆளாக்க
எத்தனை நாள் செல்லும் எழுத்தறியும்_பெருமானே.

#725.
நல் நெறி சேர் அன்பர்-தமை நாடிடவும் நின் புகழின்
செம் நெறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்கு உனக்கு
முன் அறியேன் பின் அறியேன் மூடனேன் கைம்மாறு இங்கு
என் அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே.

#726.
மைப் படியும் கண்ணார் மயல் உழக்கச்செய்வாயோ
கைப் படிய உன்றன் கழல் கருதச்செய்வாயோ
இப்படி என்று அப்படி என்று என் அறிவேன் உன் சித்தம்
எப்படியோ ஐயா எழுத்தறியும்_பெருமானே.

#727.
நில்லா உடம்பை நிலை என்றே நேசிக்கும்
பொல்லாத நெஞ்சப் புலையனேன் இ உலகில்
சொல்லா மன_நோயால் சோர்வுற்று அலையும் அல்லல்
எல்லாம் அறிவாய் எழுத்தறியும்_பெருமானே.

#728.
தீது அறிவேன் நன்கு அணுவும் செய்யேன் வீண் நாள் போக்கும்
வாது அறிவேன் வஞ்சகனேன் வல்_வினையேன் வாய்மை_இலேன்
சூது அறிவேன் மால் அயனும் சொல்ல அரிய நின் பெருமை
யாது அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே.

#729.
மாறாத வன் பிணியால் மாழாந்து நெஞ்சு அயர்ந்தே
கூறாத துன்பக் கொடும்_கடற்குள் வீழ்ந்து அடியேன்
ஆறாது அரற்றி அழுகின்றேன் நின் செவியில்
ஏறாதோ ஐயா எழுத்தறியும்_பெருமானே.

#730.
உள் நாடும் வல்_வினையால் ஓயாப் பிணி உழந்து
புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே
கண்ணாளா உன்றன் கருணை எனக்கு அளிக்க
எண்ணாயோ ஐயா எழுத்தறியும்_பெருமானே.

#731.
புன் செய்கை மாறாப் புலைய மட மங்கையர்-தம்
வன் செய்கையாலே மயங்குகின்ற வஞ்சகனேன்
கொன் செய்கை மாறாத கூற்றன் வருவானேல்
என் செய்வேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே.

#732.
சங்கு_உடையான் தாமரையான் தாள் முடியும் காண்ப அரிதாம்
கொங்கு உடைய கொன்றைக் குளிர்ச் சடையாய் கோதை ஒரு
பங்கு_உடையாய் ஏழை முகம் பாராது தள்ளிவிட்டால்
எங்கு அடைவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே.

#733.
மன்றினிடை நடம்செய் மாணிக்க மா மலையே
வென்றி மழுக் கை உடைய வித்தகனே என்றென்று
கன்றின் அயர்ந்து அழும் என் கண்ணீர் துடைத்து அருள
என்று வருவாய் எழுத்தறியும்_பெருமானே.

#734.
மன் அளவில் சோதி மணி போல்வாய் மா தவத்தோர்
தென் அளவும் வேணிச் சிவமே என ஒருகால்
சொன்ன அளவில் சொன்னவர்-தம் துன்பு ஒழிப்பாய் என்பர் அது
என்னளவில் காணேன் எழுத்தறியும்_பெருமானே.

#735.
மின்_போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
தன்_போல்வாய் என் ஈன்ற தாய்_போல்வாய் சார்ந்து உரையாப்
பொன்_போல்வாய் நின் அருள் இப்போது அடியேன் பெற்றேனேல்
என்_போல்வார் இல்லை எழுத்தறியும்_பெருமானே.

#736.
பூ மாந்தும் வண்டு என நின் பொன்_அருளைப் புண்ணியர்கள்
தாம் மாந்தி நின் அடிக் கீழ்ச் சார்ந்து நின்றார் ஐயோ நான்
காமாந்தகாரம் எனும் கள் உண்டு கண் மூடி
ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

#737.
பன்ன அரும் இப் பார் நடையில் பாடு உழன்ற பாதகனேன்
துன்னிய நின் பொன்_அடியைச் சூழாதேன் ஆயிடினும்
புல் நிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்பு உனக்கே
என் அருமைத் தாய் நீ எழுத்தறியும்_பெருமானே.

#738.
வீட்டுக்கு அடங்கா விளையாட்டு_பிள்ளை எனத்
தேட்டுக்கு அடங்காத தீ மனத்தால் ஆம் துயரம்
பாட்டுக்கு அடங்கா நின் பத்தர் அடிப் புகழ் போல்
ஏட்டுக்கு அடங்காது எழுத்தறியும்_பெருமானே.

#739.
பன்னும் மனத்தால் பரிசு இழந்த பாதகனேன்
துன்னும் மல வெம் கதிரோன் சூழ்கின்ற சோடையினால்
நின் அருள் நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்
இன்னும் அறியாயோ எழுத்தறியும்_பெருமானே.

#740.
கல்லை நிகராம் கடை மனம் போம் கான் நெறியில்
புல்லை மதித்து ஐயோ பைம் பூ இழந்த பொய் அடியேன்
ஒல்லை படுகின்ற ஒறு வேதனை-தனக்கு ஓர்
எல்லை அறியேன் எழுத்தறியும்_பெருமானே.

#741.
பொன்னை மதித்து ஐயா நின் பொன்_அடியைப் போற்றாத
கல் நிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன்
இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழை கண்டாய்
என்னை விடாதே எழுத்தறியும்_பெருமானே.

#742.
மாசு உவரே என்னும் மல_கடலில் வீழ்ந்து உலகோர்
ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல்
கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்து அடியார்
ஏசுவரே ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

#743.
ஊர் சொல்வேன் பேர் சொல்வேன் உத்தமனே நின் திரு_தாள்
சீர் சொல்வேன் என்றனை நீ சேர்க்காது அகற்றுவையேல்
நேர் சொல்வாய் உன்றனக்கு நீதி ஈது அல்ல என்றே
யார் சொல்வார் ஐயா எழுத்தறியும்_பெருமானே.

#744.
நீக்கம் இலா மெய்_அடியர் நேசம் இலாப் பொய்_அடியேன்
ஊக்கம் இலா நெஞ்சத்தின் ஓட்டு அகலச்செய்வாயேல்
தூக்கம் இலா ஆனந்தத் தூக்கமன்றி மற்றும் இங்கு ஓர்
ஏக்கம்_இலேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

#745.
போகின்ற வஞ்சகரைப் போக்கி உன்றன் பொன்_அடிக்கு ஆ
ளாகின்ற மேலோர் அடி வழுத்தா நாயேற்குப்
பாகின் தனிச் சுவையின் பாங்கு ஆகும் நின் அருளை
ஈகின்றது என்றோ எழுத்தறியும்_பெருமானே.

#746.
ஊழை அகற்ற உளவு அறியாப் பொய்யன் இவன்
பீழை மனம் நம்மைப் பெறாது அ மனம் கொடிய
தாழை என எண்ணி என்னைத் தள்ளிவிட்டால் என் செய்வேன்
ஏழை நான் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

#747.
மடுக்க முடியா மல_இருட்டில் சென்று மனம்
கடுக்க முடியாப் புலனால் கட்டிச் சுமக்கவைத்த
தொடுக்க முடியாத துன்பச் சுமையை இனி
எடுக்க முடியாதே எழுத்தறியும்_பெருமானே.

#748.
முள் அளவு நெஞ்ச முழுப் புலைய மாதர்களாம்
கள் அளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு
உள்ளளவும் அன்பர்க்கு உதவும் உன் தாட்கு அன்பு ஒரு சிற்
றெள் அளவும் உண்டோ எழுத்தறியும்_பெருமானே.

#749.
பண்ண முடியாப் பரிபவம் கொண்டு இ உலகில்
நண்ண முடியா நலம் கருதி வாடுகின்றேன்
உண்ண முடியா அமுதாம் உன்னையன்றி எவ்வெவர்க்கும்
எண்ண முடியாதே எழுத்தறியும்_பெருமானே.

#750.
வெம் கொளித் தேள் போன்ற வினையால் வெதும்பி மனம்
அங்கு ஒளிக்காது உன்னை அழைத்து அழுது வாடுகின்றேன்
இங்கு ஒளிக்கா நஞ்சம் உண்ட என் அருமை அப்பா நீ
எங்கு ஒளித்தாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

#751.
பித்து அனைக்கும் காமப் பெரும் பேய் மயக்கும் மயல்
வித்து அனைத்தாம் ஆணவம் பொய் வீறும் அழுக்காறு சினம்
கொத்து அனைத்தாம் வஞ்சம் கொலை முதலாம் பாவங்கள்
இத்தனைக்கும் நான் காண் எழுத்தறியும்_பெருமானே.

#752.
ஒல்லையே நஞ்சு அனைத்தும் உண்ட தயாநிதி நீ
அல்லையோ நின்று இங்கு அயர்வேன் முன்வந்து ஒரு சொல்
சொல் ஐயோ ஒற்றியூர்த் தூய திரு_கோயிலுள் நீ
இல்லையோ ஐயா எழுத்தறியும்_பெருமானே.

#753.
நினை_உடையாய் நீ அன்றி நேடில் எங்கும் இல்லாதாய்
மனை_உடையார் மக்கள் எனும் வாழ்க்கையிடைப் பட்டு அவமே
இனை_உடையான் என்று இங்கு எனை ஆள்வது உன் கடனே
எனை_உடையாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

@17. நெஞ்சொடு நேர்தல்

#754.
ஒக்க நெஞ்சமே ஒற்றியூர்ப் படம்
பக்கநாதனைப் பணிந்து வாழ்த்தினால்
மிக்க காமத்தின் வெம்மையால் வரும்
துக்கம் யாவையும் தூர ஓடுமே.

#755.
ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டி நீ
நீடும் ஒற்றியூர் நிமலன் மூவர்கள்
பாடும் எம் படம்பக்கநாதன் தாள்
நாடு நாடிடில் நாடு நம்மதே.

#756.
நம்பு நெஞ்சமே நன்மை எய்து மால்
அம்புயன் புகழ் அண்ணல் ஒற்றியூர்ப்
பம்பு சீர்ப் படம்பக்கன் ஒன்னலார்-தம்
புரம் சுடும் தம்பிரானையே.

#757.
தம்பலம் பெறும் தையலார் கணால்
வெம்பலம் தரும் வெய்ய நெஞ்சமே
அம்பலத்தினில் அமுதை ஒற்றியூர்ச்
செம் பலத்தை நீ சிந்தைசெய்வையே.

#758.
செய்யும் வண்ணம் நீ தேறி நெஞ்சமே
உய்யும் வண்ணமாம் ஒற்றியூர்க்கு உளே
மெய்யும் வண்ண மாணிக்க வெற்பு அருள்
பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே.

#759.
வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர்
ஆண்டு நின்று அருள் அரசின் பொன்_பதம்
பூண்டுகொண்டு உளே போற்றி நிற்பையேல்
யாண்டும் துன்பம் நீ அடைதல் இல்லையே.

#760.
இல்லை உண்டு என எய்தி ஐயுறும்
கல்லை ஒத்த என் கன்ம நெஞ்சமே
ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல்
நல்லை நல்லை நீ நட்பின் மேலையே.

#761.
மேலை அந்தகன் வெய்ய தூதுவர்
ஓலை காட்டும் முன் ஒற்றியூரில் வாழ்
பாலை சேர் படம்பக்கநாதர்-தம்
காலை நாடி நற்கதியின் நிற்பையே.

#762.
நிற்பது என்று நீ நீல நெஞ்சமே
அற்ப மாதர்-தம் அவலம் நீங்கியே
சிற்பரன் திரு_தில்லை அம்பலப்
பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே.

#763.
போற்றி ஒற்றியூர்ப் புண்ணியன் திரு_
நீற்றினான்-தனை நினைந்து நிற்பையேல்
தோற்ற அரும் பரஞ்சோதி நல் அருள்
ஊற்று எழும் கடல் ஒக்க நெஞ்சமே.

@18. திருப்புகழ் விலாசம்

#764.
துங்க வெண்_பொடி அணிந்து நின் கோயில் தொழும்புசெய்து நின் துணை_பதம் ஏத்திச்
செங்கண் மால் அயன் தேடியும் காணாச் செல்வ நின் அருள் சேர்குவது என்றோ
எங்கள் உள் உவந்து ஊறிய அமுதே இன்பமே இமையான் மகட்கு அரசே
திங்கள் தங்கிய சடை உடை மருந்தே திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

#765.
கண்ணனோடு அயன் காண்ப அரும் சுடரே கந்தன் என்னும் ஓர் கனி தரும் தருவே
எண்ணமே தகும் அன்பர்-தம் துணையே இலங்கும் திவ்விய எண்_குண_பொருப்பே
அண்ணலே திரு_ஆலங்காட்டு உறையும் அம்மை அப்பனே அடியனேன்-தன்னைத்
திண்ணமே அடித் தொழும்பனாய்ச் செய்வாய் திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

#766.
விடம் கலந்து அருள் மிடறு_உடையவனே வேதன் மால் புகழ் விடை_உடையவனே
கடம் கலந்த மா உரி_உடையவனே கந்தனைத் தரும் கனிவு_உடையவனே
இடம் கலந்த பெண் கூறு_உடையவனே எழில் கொள் சாமத்தின் இசை_உடையவனே
திடம் கலந்த கூர் மழு_உடையவனே திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

#767.
கஞ்சன் ஓர் தலை நகத்து அடர்த்தவனே காமன் வெந்திடக் கண்விழித்தவனே
தஞ்சமானவர்க்கு அருள்செயும் பரனே சாமிக்கு ஓர் திரு_தந்தை ஆனவனே
நஞ்சம் ஆர் மணி_கண்டனே எவைக்கும் நாதனே சிவஞானிகட்கு அரசே
செஞ்சொல் மா மறை ஏத்துறும் பதனே திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

#768.
ஏல வார் சூழலாள் இடத்தவனே என்னை ஆண்டவனே எனது அரசே
கோலமாக மால் உருக்கொண்டும் காணாக் குரை கழல் பதக் கோமளக் கொழுந்தே
ஞால மீதில் எம்_போல்பவர் பிழையை நாடிடாது அருள் நல் குண_குன்றே
சீலம் மேவிய தவத்தினர் போற்றத் திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

#769.
ஆறு வாள் முகத்து அமுது எழும் கடலே அயனும் மாலும் நின்று அறிவு அரும் பொருளே
ஏறு மீது வந்து ஏறும் எம் அரசே எந்தையே எமை ஏன்றுகொள் இறையே
வீறு கொன்றை அம் சடை உடைக் கனியே வேதம் நாறிய மென் மலர்ப் பதனே
தேறு நெஞ்சினர் நாள்-தொறும் வாழ்த்தத் திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

#770.
மாறு பூத்த என் நெஞ்சினைத் திருத்தி மயக்கம் நீக்கிட வருகுவது என்றோ
ஏறு பூத்த என் இன் உயிர்க்கு உயிரே யாவும் ஆகி நின்று இலங்கிய பொருளே
நீறுபூத்து ஒளி நிறைந்த வெண் நெருப்பே நித்தியானந்தர்க்கு உற்ற நல் உறவே
சேறு பூத்த செந்தாமரை முத்தம் நிகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

#771.
மாலின் கண்_மலர் மலர் திரு_பதனே மயிலின் மேல் வரு மகவு_உடையவனே
ஆலின் கீழ் அறம் அருள்_புரிந்தவனே அர என்போர்களை அடிமைகொள்பவனே
காலில் கூற்று உதைத்து அருள்செயும் சிவனே கடவுளே நெற்றிக்கண்_உடையவனே
சேலின் நீள் வயல் செறிந்து எழில் ஓங்கித் திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

#772.
நாட்டும் முப்புரம் நகைத்து எரித்தவனே நண்ணி அம்பலம் நடம்செயும் பதனே
வேட்டு வெண் தலைத் தார் புனைந்தவனே வேடன் எச்சிலை விரும்பி உண்டவனே
கோட்டு மேருவைக் கோட்டிய புயனே குற்றமும் குணமாக் குறிப்பவனே
தீட்டும் மெய்ப் புகழ்த் திசை பரந்து ஓங்கத் திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

#773.
அம்பலத்துள் நின்று ஆட வல்லானே ஆன் இவர்ந்து வந்து அருள்_புரிபவனே
சம்பு சங்கர சிவசிவ என்போர்-தங்கள் உள்ளகம் சார்ந்திருப்பவனே
தும்பை வன்னியம் சடை_முடியவனே தூயனே பரஞ்சோதியே எங்கள்
செம்பொனே செழும் பவள மா மலையே திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

@19. தியாக வண்ணப் பதிகம்

#774.
கார் ஆர் குழலாள் உமையோடு அயில் வேல் காளையொடும் தான் அமர்கின்ற
ஏர் ஆர் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல்
நீர் ஆர் சடை மேல் பிறை ஒன்று உடையான் நிதி_கோன் தோழன் என நின்றான்
பேர் ஆர் ஒற்றியூரான் தியாக_பெருமான் பிச்சை பெருமானே.

#775.
தண் ஆர் நீப_தாரானொடும் எம் தாயோடும் தான் அமர்கின்ற
கண் ஆர் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல்
பண் ஆர் இன் சொல் பதிகம் கொண்டு படிக்காசு அளித்த பரமன் ஓர்
பெண் ஆர் பாகன் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சை பெருமானே.

#776.
பத்தர்க்கு அருளும் பாவையொடும் வேல் பாலனொடும் தான் அமர்கின்ற
நித்தக் கோலம் கண்டு களிப்பான் நினைக்கும் எமக்கு ஒன்று அருளானேல்
சித்தப் பெருமான் தில்லைப் பெருமான் தெய்வப் பெருமான் சிவபெருமான்
பித்தப் பெருமான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே.

#777.
மன்னும் கதிர் வேல் மகனாரோடும் மலையாளொடும் தான் வதிகின்ற
துன்னும் கோலம் கண்டு களிப்பான் துதிக்கும் எமக்கு ஒன்று அருளானேல்
மின்னும் சூல_படையான் விடையான் வெள்ளிமலை ஒன்று அது உடையான்
பின்னும் சடையான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே.

#778.
அணி வேல் படை கொள் மகனாரொடும் எம் அம்மையொடும் தான் அமர்கின்ற
தணியாக் கோலம் கண்டு களிக்கத் தகையாது எமக்கு ஒன்று அருளானேல்
மணி சேர் கண்டன் எண் தோள் உடையான் வட-பால் கனக_மலை வில்லான்
பிணி போக்கிடுவான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே.

#779.
சூதம் எறி வேல் தோன்றலொடும் தன் துணைவியொடும் தான் அமர்கின்ற
காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல்
ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன் மாற்கு இறை ஆனான்
பேதம் இல்லான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே.

#780.
வெற்றிப் படை வேல் பிள்ளையோடும் வெற்பாளோடும் தான் அமர்கின்ற
மற்று இக் கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கு ஒன்று அருளானேல்
கற்றைச் சடையான் கண் மூன்று உடையான் கரியோன் அயனும் காணாதான்
பெற்றத்து இவர்வான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே.

#781.
வரம் மன்றலினார் குழலாளொடும் வேல் மகனாரொடும் தான் அமர்கின்ற
திரம் மன்றவும் நின்று எழில் கண்டிடுவான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல்
பரமன் தனி மால் விடை ஒன்று உடையான் பணியே பணியாப் பரிவுற்றான்
பிரமன் தலையான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே.

#782.
அறம் கொள் உமையோடு அயில் ஏந்திய எம் ஐயனொடும் தான் அமர்கின்ற
திறம் கொள் கோலம் கண்டு களிப்பான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல்
மறம் கொள் எயில் மூன்று எரித்தான் கனக_மலையான் அடியார் மயல் தீர்ப்பான்
பிறங்கும் சடையான் ஒற்றித் தியாக_பெருமாள் பிச்சைப் பெருமானே.

#783.
தேசு ஆர் அயில் வேல் மகனாரொடும் தன் தேவியொடும் தான் அமர் கோலம்
ஈசா என நின்று ஏத்திக் காண எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல்
காசு ஆர் அரவக் கச்சு ஏர் இடையான் கண் ஆர் நுதலான் கனிவுற்றுப்
பேசார்க்கு அருளான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே.

@20. திருவடிச் சரண்புகல்

#784.
ஓடல் எங்கணும் நமக்கு என்ன குறை காண் உற்ற நல் துணை ஒன்றும் இல்லார் போல்
வாடல் நெஞ்சமே வருதி என்னுடனே மகிழ்ந்து நாம் இருவரும் சென்று மகிழ்வாய்க்
கூடல் நேர் திருவொற்றியூர் அகத்துக் கோயில் மேவி நம் குடி முழுது ஆளத்
தாள் தலம் தரும் நமது அருள் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

#785.
ஏங்கி நோகின்றது எற்றினுக்கோ நீ எண்ணி வேண்டியது யாவையும் உனக்கு
வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல் மகிழ்ந்து நெஞ்சமே வருதி என்னுடனே
ஓங்கி வாழ் ஒற்றியூரிடை அரவும் ஒளி கொள் திங்களும் கங்கையும் சடை மேல்
தாங்கி வாழும் நம் தாணுவாம் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

#786.
கயவர் இல்லிடைக் கலங்கலை நெஞ்சே காம ஐம்புலக் கள்வரை வீட்டி
வயம் அளிக்குவன் காண்டி என் மொழியை மறுத்திடேல் இன்று வருதி என்னுடனே
உயவு அளிக்கும் நல் ஒற்றியூர் அமர்ந்து அங்கு உற்று வாழ்த்திநின்று உன்னுகின்றவர்க்குத்
தயவு அளிக்கும் நம் தனி முதல் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

#787.
சண்ட வெம் பவப் பிணியினால் தந்தை தாய் இலார் எனத் தயங்குகின்றாயே
மண்டலத்து உழல் நெஞ்சமே சுகமா வாழ வேண்டிடில் வருதி என்னுடனே
ஒண் தலத் திருவொற்றியூரிடத்தும் உன்னுகின்றவர் உள்ளகம் எனும் ஓர்
தண் தலத்தினும் சார்ந்த நம் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

#788.
விடம் கொள் கண்ணினார் அடி விழுந்து ஐயோ வெட்கினாய் இந்த விதி உனக்கு ஏனோ
மடம் கொள் நெஞ்சமே நினக்கு இன்று நல்ல வாழ்வு வந்தது வருதி என்னுடனே
இடம் கொள் பாரிடை நமக்கு இனி ஒப்பார் யார் கண்டாய் ஒன்றும் எண்ணலை கமலத்
தடம் கொள் ஒற்றியூர் அமர்ந்த நம் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

#789.
பொருந்தி ஈனருள் புகுந்து வீண் காலம் போக்கி நின்றனை போனது போக
வருந்தி இன்னும் இங்கு உழன்றிடேல் நெஞ்சே வாழ்க வாழ்க நீ வருதி என்னுடனே
திருந்தி நின்ற நம் மூவர்-தம் பதிகச் செய்ய தீந்தமிழ்த் தேறல் உண்டு அருளைத்
தரும் தென் ஒற்றியூர் வாழும் நம் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

#790.
நாட்டமுற்று எனை எழுமையும் பிரியா நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால்
வாட்டமுற்று இவண் மயங்கினை ஐயோ வாழ வேண்டிடில் வருதி என்னுடனே
கோட்டம் அற்று இரு மலர்_கரம் கூப்பிக் கும்பிடும் பெரும் குணத்தவர்-தமக்குத்
தாள் தலம் தரும் ஒற்றியூர்ச் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

#791.
உடுக்க வேண்டி முன் உடை இழந்தார் போல் உள்ள ஆகும் என்று உன்னிடாது இன்பம்
மடுக்க வேண்டி முன் வாழ்வு இழந்தாயே வாழ வேண்டிடில் வருதி என்னுடனே
அடுக்க வேண்டி நின்று அழுதழுது ஏத்தி அரும் தவத்தினர் அழிவுறாப் பவத்தைத்
தடுக்க வேண்டி நல் ஒற்றியூர்ச் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

#792.
மோகம் ஆதியால் வெல்லும் ஐம்புலனாம் மூட வேடரை முதலற எறிந்து
வாகை ஈகுவன் வருதி என்னுடனே வஞ்ச வாழ்க்கையின் மயங்கும் என் நெஞ்சே
போகம் நீக்கி நல் புண்ணியம் புரிந்து போற்றி நாள்-தொறும் புகழ்ந்திடும் அவர்க்குச்
சாகை நீத்து அருள் ஒற்றியூர்ச் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

#793.
பசியெடுக்கும் முன் அமுது சேகரிப்பார் பாரினோர்கள் அப் பண்பு அறிந்திலையோ
வசி எடுக்கும் முன் பிறப்பதை மாற்றா மதி இல் நெஞ்சமே வருதி என்னுடனே
நிசி எடுக்கும் நல் சங்கவை ஈன்ற நித்திலக் குவை நெறிப்பட ஓங்கிச்
சசி எடுக்கும் நல் ஒற்றியூர்ச் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

@21. அருள் நாம விளக்கம்

#794.
வாங்கு வில் நுதல் மங்கையர் விழியால் மயங்கி வஞ்சர்-பால் வருந்தி நாள்-தோறும்
ஏங்குகின்றதில் என் பயன் கண்டாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
தேன் குலாவு செங்கரும்பினும் இனிதாய்த் தித்தித்து அன்பர்-தம் சித்தத்துள் ஊறி
ஓங்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

#795.
தவம்-அது இன்றி வன் மங்கையர் முயக்கால் தருமம் இன்று வஞ்சகர் கடும் சார்வால்
இவ்வகையால் மிக வருந்துறில் என்னாம் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
பவம்-அது ஓட்டி நல் ஆனந்த உருவாம் பாங்கு காட்டி நல் பதம் தரும் அடியார்
உவகை ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

#796.
மின்னும் நுண் இடைப் பெண் பெரும் பேய்கள் வெய்ய நீர் குழி விழுந்தது போக
இன்னும் வீழ்கலை உனக்கு ஒன்று சொல்வேன் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
பொன் உலாவிய பூ_உடையானும் புகழ் உலாவிய பூ_உடையானும்
உன்னும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

#797.
பொன்றும் வாழ்க்கையை நிலை என நினைந்தே புலைய மங்கையர் புழு நெறி அளற்றில்
என்றும் வீழ்ந்து உழல் மடமையை விடுத்தே எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
துன்று தீம் பலாச்சுளையினும் இனிப்பாய்த் தொண்டர்-தங்கள் நாச் சுவை பெற ஊறி
ஒன்றும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

#798.
வரைக்கு நேர் முலை மங்கையர் மயலால் மயங்கி வஞ்சரால் வருத்தமுற்று அஞராம்
இரைக்கும் மாக் கடலிடை விழுந்து அயரேல் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ கனி-கொலோ எனக் கனிவுடன் உயர்ந்தோர்
உரைக்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

#799.
வாதுசெய் மடவார்-தமை விழைந்தாய் மறலி வந்து உனை வா என அழைக்கில்
ஏது செய்வையோ ஏழை நீ அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
போது வைகிய நான்முகன் மகவான் புணரி வைகிய பூ_மகள் கொழுநன்
ஓதும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

#800.
நண்ணும் மங்கையர் புழு மல_குழியில் நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய்
எண்ணும் என் மொழி குரு மொழி ஆக எண்ணி ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
பண்ணும் இன் சுவை அமுதினும் இனிதாய்ப் பத்தர் நாள்-தொறும் சித்தம் உள் ஊற
உண்ணும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

#801.
பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால் பசை இல் நெஞ்சரால் பரிவுறுகின்றாய்
எந்தவண்ணம் நீ உய் வணம் அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
சந்தமாம் புகழ் அடியரில் கூடிச் சனனம் என்னும் ஓர் சாகரம் நீந்தி
உந்த ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

#802.
மட்டு இல் மங்கையர் கொங்கையை விழைந்தாய் மட்டிலாததோர் வன் துயர் அடைந்தாய்
எட்டி_அன்னர்-பால் இரந்து அலைகின்றாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
தட்டு இலாத நல் தவத்தவர் வானோர் சார்ந்தும் காண்கிலாத் தற்பரம் பொருளை
ஒட்டி ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

#803.
நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய் நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய்
இலவு காத்தனை என்னை நின் மதியோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
பலவும் ஆய்ந்து நன்கு உண்மையை உணர்ந்த பத்தர் உள்ளகப் பதுமங்கள்-தோறும்
உலவும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

@22. சிவசண்முகநாமப் பதிகம்

#804.
பழுது நேர்கின்ற வஞ்சகர் கடை வாய்ப் பற்றி நின்றதில் பயன் எது கண்டாய்
பொழுது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகித்
தொழுது சண்முக சிவசிவ என நம் தோன்றலார்-தமைத் துதித்தவர் திருமுன்
பழுது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

#805.
சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச் சுற்றி நின்றதில் சுகம் எது கண்டாய்
போது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி
ஓது சண்முக சிவசிவ எனவே உன்னி நெக்குவிட்டு உருகி நம் துயராம்
ஆது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

#806.
ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடை வாய் நண்ணி நின்றதில் நலம் எது கண்டாய்
காலம் செல்கின்றது எழுதி என் நெஞ்சே கருதும் ஒற்றி அம் கடி நகர்க்கு ஏகிக்
கோலம் செய் அருள் சண்முக சிவ ஓம் குழகவோ எனக் கூவி நம் துயராம்
ஆலம் சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

#807.
மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார் வாயல் காத்து இன்னும் வருந்தில் என் பயனோ
இருட்டிப்போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகித்
தெருள் திறம் செயும் சண்முக சிவ ஓம் சிவ நமா எனச் செப்பி நம் துயராம்
அரிட்டை ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

#808.
இல்லை என்பதே பொருள் எனக் கொண்டோர் ஈன வாயிலில் இடர்ப்படுகின்றாய்
எல்லை செல்கின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகித்
தொல்லை ஓம் சிவ சண்முக சிவ ஓம் தூய என்று அடி தொழுது நாம் உற்ற
அல்லல் ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

#809.
கரவு நெஞ்சினர் கடைத்தலைக்கு உழன்றாய் கலங்கி இன்னும் நீ கலுழ்ந்திடில் கடிதே
இரவு போந்திடும் எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகிப்
பரவு சண்முக சிவசிவ சிவ ஓம் பர சுயம்பு சங்கர சம்பு நம ஓம்
அர என்று ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

#810.
ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி இருக்கின்றாய் இனி இ சிறு பொழுதும்
சாய்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே தகை கொள் ஒற்றி அம் தலத்தினுக்கு ஏகி
வாய்ந்து சண்முக நம சிவ சிவ ஓம் வர சுயம்பு சங்கர சம்பு எனவே
ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

#811.
ஈர்ந்த நெஞ்சினார் இடம்-தனில் இருந்தே இடர்கொண்டாய் இனி இச் சிறு பொழுதும்
பேர்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே பிறங்கும் ஒற்றி அம் பெரு நகர்க்கு ஏகி
ஓர்ந்து சண்முக சரவணபவ ஓம் ஓம் சுயம்பு சங்கர சம்பு எனவே
ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

#812.
கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக் காத்திருக்கலை கடுகி இப் பொழுதும்
இமைப்பில் போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி
எமைப் புரந்த சண்முக சிவசிவ ஓம் இறைவ சங்கர அரகர எனவே
அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

#813.
உறைந்து வஞ்சர்-பால் குறையிரந்து அவமே உழல்கின்றாய் இனி உரைக்கும் இப் பொழுதும்
குறைந்துபோகின்றது எழுதி என் நெஞ்சே குலவும் ஒற்றி அம் கோ நகர்க்கு ஏகி
நிறைந்த சண்முக குரு நம சிவ ஓம் நிமல சிற்பர அரகர எனவே
அறைந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

@23. நமச்சிவாய சங்கீர்த்தன லகரி

#814.
சொல் அவாவிய தொண்டர்-தம் மனத்தில் சுதந்தரம் கொடு தோன்றிய துணையைக்
கல் அவாவிய ஏழையேன் நெஞ்சும் கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச்
செல் அவாவிய பொழில் திருவொற்றித் தேனைத் தில்லைச் சிற்றம்பலத்து ஆடும்
நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை நமச்சிவாயத்தை நான் மறவேனே.

#815.
அட்ட_மூர்த்தம்-அது ஆகிய பொருளை அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை
விட்ட வேட்கையர்க்கு அங்கையில் கனியை வேத மூலத்தை வித்தக விளைவை
எட்ட அரும் பரமானந்த நிறைவை எங்கும் ஆகி நின்று இலங்கிய ஒளியை
நட்டம் ஆடிய நடன நாயகத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே.

#816.
உம்பர் வான் துயர் ஒழித்து அருள் சிவத்தை உலகு எலாம் புகழ் உத்தமப் பொருளைத்
தம்பமாய் அகிலாண்டமும் தாங்கும் சம்புவைச் சிவ தருமத்தின் பயனைப்
பம்பு சீர் அருள் பொழிதரு முகிலைப் பரம ஞானத்தைப் பரம சிற்சுகத்தை
நம்பினோர்களை வாழ்விக்கும் நலத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே.

#817.
மாலின் உச்சி மேல் வதிந்த மா மணியை வழுத்தும் நாவகம் மணக்கும் நல் மலரைப்
பாலின் உள் இனித்து ஓங்கிய சுவையைப் பத்தர்-தம் உளம் பரிசிக்கும் பழத்தை
ஆலின் ஓங்கிய ஆனந்த_கடலை அம்பலத்தில் ஆம் அமுதை வேதங்கள்
நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே.

#818.
உள் நிறைந்து எனை ஒளித்திடும் ஒளியை உண்ணஉண்ண மேல் உவட்டுறா நறவைக்
கண் நிறைந்ததோர் காட்சியை யாவும் கடந்த மேலவர் கலந்திடும் உறவை
எண் நிறைந்த மால் அயன் முதல் தேவர் யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
நண்ணி ஒற்றியூர் அமர்ந்து அருள் சிவத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே.

#819.
திக்கு மாறினும் எழு_கடல் புவி மேல் சென்று மாறினும் சேண் விளங்கு ஒளிகள்
உக்கு மாறினும் பெயல் இன்றி உலகில் உணவு மாறினும் புவிகள் ஓர் ஏழும்
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம் விழுந்து மாறினும் வேதங்கள் உணரா
நக்கன் எம் பிரான் அருள் திரு_பெயராம் நமச்சிவாயத்தை நான் மறவேனே.

#820.
பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நல் தவத்தவர் உள் இருந்து ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே.

#821.
உடை உடுத்திட இடை மறந்தாலும் உலகுளோர் பசிக்கு உண மறந்தாலும்
படையெடுத்தவர் படை மறந்தாலும் பரவை தான் அலைப்பது மறந்தாலும்
புடை அடுத்தவர் தமை மறந்தாலும் பொன்னை வைத்த அப் புதை மறந்தாலும்
நடை அடுத்தவர் வழி மறந்தாலும் நமச்சிவாயத்தை நான் மறவேனே.

#822.
வன்மை செய்திடும் வறுமை வந்தாலும் மகிழ்வுசெய் பெரு வாழ்வு வந்தாலும்
புன்மை மங்கையர் புணர்ச்சி நேர்ந்தாலும் பொருந்தினாலும் நின்றாலும் சென்றாலும்
தன்மை_இல்லவர் சார்பு இருந்தாலும் சான்ற மேலவர்-தமை அடைந்தாலும்
நன்மை என்பன யாவையும் அளிக்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே.

#823.
இன்னும் பற்பல நாள் இருந்தாலும் இ கணம்-தனிலே இறந்தாலும்
துன்னும் வான் கதிக்கே புகுந்தாலும் சோர்ந்து மா நரகத்து உழன்றாலும்
என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும் எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடி நின்று ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே.

@24. திருவருள் வழக்க விளக்கம்

#824.
தோடு_உடையார் புலித்தோல்_உடையார் கடல் தூங்கும் ஒரு
மாடு_உடையார் மழு மான்_உடையார் பிரமன் தலையாம்
ஓடு_உடையார் ஒற்றியூர்_உடையார் புகழ் ஓங்கிய வெண்
காடு_உடையார் நெற்றிக்கண்_உடையார் எம் கடவுளரே.

#825.
வண்ணப் பல் மா மலர் மாற்றும்படிக்கு மகிழ்ந்து எமது
திண்ணப்பர் சாத்தும் செருப்பு அடி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய்
உண்ணப் பரிந்து நல் ஊன் தர உண்டு கண் ஒத்தக் கண்டே
கண்ணப்ப நிற்க எனக் கை தொட்டார் எம் கடவுளரே.

#826.
செல் இடிக்கும் குரல் கார் மத வேழச் சின உரியார்
வல் அடுக்கும் கொங்கை மாது_ஒரு_பாகர் வடப் பொன்_வெற்பாம்
வில் எடுக்கும் கையர் சாக்கியர் அன்று விரைந்து எறிந்த
கல்லடிக்கும் கதி காட்டினர் காண் எம் கடவுளரே.

#827.
ஏழியல் பண் பெற்று அமுதோடு அளாவி இலங்கு தமிழ்க்
கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்டக் கிளர்ந்த நல் சீர்
வீழியில் தம் பதிக்கே விடை கேட்க வெற்பாளுடனே
காழியில் தன் உருக் காட்டினரால் எம் கடவுளரே.

#828.
நாட்டில் புகழ்பெற்ற நாவுக்கரசர் முன்_நாள் பதிகப்
பாட்டிற்கு இரக்கம்_இல்லீர் எம்பிரான் எனப் பாட அன்றே
ஆட்டிற்கு இசைந்த மலர் வாழ்த்தி வேதம் அமைத்த மறைக்
காட்டில் கதவம் திறந்தனரால் எம் கடவுளரே.

#829.
பைச்சு ஊர் அரவப் பட நடத்தான் அயன் பற்பல நாள்
எய்ச்சு ஊர் தவம் செய்யினும் கிடையாப் பதம் ஏய்ந்து மண் மேல்
வைச்சு ஊரன் வன் தொண்டன் சுந்தரன் என்னும் நம் வள்ளலுக்குக்
கச்சூரில் சோறு இரந்து ஊட்டினரால் எம் கடவுளரே.

#830.
ஏணப் பரி செஞ்சடை முதலான எல்லாம் மறைத்துச்
சேணப் பரிகள் நடத்திடுகின்ற நல் சேவகன் போல்
மாணப் பரிபவம் நீக்கிய மாணிக்கவாசகர்க்காய்க்
காணப் பரி மிசை வந்தனரால் எம் கடவுளரே.

#831.
எல்லாம் செய வல்ல சித்தரின் மேவி எழில் மதுரை
வல்லாரின் வல்லவர் என்று அறியா முடி_மன்னன் முன்னே
பல்லாயிர அண்டமும் பயம் எய்தப் பராக்கிரமித்துக்
கல்லானை தின்னக் கரும்பு அளித்தார் எம் கடவுளரே.

#832.
மால் எடுத்து ஓங்கிய மால் அயன் ஆதிய வானவரும்
ஆல் அடுத்து ஓங்கிய அந்தணனே என்று அடைந்து இரண்டு
பால் எடுத்து ஏத்த நம் பார்ப்பதி காணப் பகர்செய் மன்றில்
கால் எடுத்து ஆடும் கருத்தர் கண்டீர் எம் கடவுளரே.

#833.
மால் பதம் சென்ற பின் இந்திரர் நான்முகர் வாமனர் மான்
மேல் பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல் மற்றுள்ளோ
ரால் பதம் கொண்ட பல் ஆயிரம் கோடி அண்டங்கள் எல்லாம்
கால் பதம் ஒன்றில் ஒடுக்கி நிற்கார் எம் கடவுளரே.

@25. புண்ணிய விளக்கம்

#834.
பாடற்கு இனிய வாக்கு அளிக்கும் பாலும் சோறும் பரிந்து அளிக்கும்
கூடற்கு இனிய அடியவர்-தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே.

#835.
கரு மால் அகற்றும் இறப்பு-அதனைக் களையும் நெறியும் காட்டுவிக்கும்
பெரு மால்-அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசை அறுக்கும்
அரு மால் உழந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
திருமால் அயனும் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே.

#836.
வெய்ய வினையின் வேர் அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டில் அடைந்து
உய்ய அமல நெறி காட்டும் உன்னற்கு அரிய உணர்வு அளிக்கும்
ஐயம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
செய்ய மலர்க் கண் மால் போற்றும் சிவாய நம என்று இடு நீறே.

#837.
கோல மலர்த் தாள் துணை வழுத்தும் குலத் தொண்டு அடையக் கூட்டுவிக்கும்
நீல மணி_கண்டப் பெருமான் நிலையை அறிவித்து அருள் அளிக்கும்
ஆல வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
சீலம் அளிக்கும் திரு அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே.

#838.
வஞ்சப் புலக் காடு எறிய அருள் வாளும் அளிக்கும் மகிழ்வு அளிக்கும்
கஞ்சத்தவனும் கரியவனும் காணற்கு அரிய கழல் அளிக்கும்
அஞ்சில் புகுந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
செஞ்சொல் புலவர் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே.

#839.
கண் கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டி-தனை
விண் கொள் அமுதை நம் அரசை விடை மேல் நமக்குத் தோற்றுவிக்கும்
அண்கொள் வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
திண் கொள் முனிவர் சுரர் புகழும் சிவாய நம என்று இடு நீறே.

#840.
நோயை அறுக்கும் பெரு மருந்தை நோக்கற்கு அரிய நுண்மை-தனைத்
தூய விடை மேல் வரும் நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
ஆய வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
சேய அயன் மால் நாட அரிதாம் சிவாய நம என்று இடு நீறே.

#841.
எண்ண இனிய இன் அமுதை இன்பக் கருணைப் பெரும்_கடலை
உண்ண முடியாச் செழும் தேனை ஒரு மால் விடை மேல் காட்டுவிக்கும்
அண்ண வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
திண்ணம் அளிக்கும் திறம் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே.

#842.
சிந்தாமணியை நாம் பல நாள் தேடி எடுத்த செல்வம்-அதை
இந்து ஆர் வேணி முடி கனியை இன்றே விடை மேல் வரச்செயும் காண்
அந்தோ வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
செந்தாமரையோன் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே.

#843.
உள்ளத்து எழுந்த மகிழ்வை நமக்கு உற்ற_துணையை உள் உறவைக்
கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடை மேல் கூட்டுவிக்கும்
அள்ளல் துயரால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
தெள்ள_கடலான் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே.

#844.
உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு-அதனைக்
கற்ற மனத்தில் புகும் கருணைக் கனியை விடை மேல் காட்டுவிக்கும்
அற்றம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
செற்றம் அகற்றித் திறல் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே

@26. நெஞ்சொடு நெகிழ்தல்

#845.
சீர் தருவார் புகழ்ப் பேர் தருவார் அருள் தேன் தருவார்
ஊர் தருவார் மதியும் தருவார் கதியும் தருவார்
ஏர் தருவார் தரு ஆர் ஒற்றியூர் எம் இறைவர் அன்றி
யார் தருவார் நெஞ்சமே இங்கும் அங்கும் இயம்புகவே.

#846.
வாடக் கற்றாய் இஃது என்னை நெஞ்சே இசை வாய்ந்த சிந்து
பாடக் கற்றாய்_இலை பொய் வேடம் கட்டிப் படி மிசைக் கூத்து
ஆடக் கற்றாய்_இலை அந்தோ பொருள் உனக்கு ஆர் தருவார்
நீடக் கற்றார் புகழ் ஒற்றி எம்மானை நினை இனியே.

#847.
சோடு இல்லை மேல் வெள்ளைச் சொக்காய் இலை நல்ல சோமன் இல்லை
பாடு இல்லை கையில் பணம் இல்லை தேகப் பருமன் இல்லை
வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே

#848.
நேரா அழுக்குத் துணியாகில் உன்றனை நேரில் கண்டும்
பாராதவர் என நிற்பார் உடுத்தது பட்டு எனிலோ
வாராதிருப்பது என் வாரும் என்பார் இந்த வஞ்சகர்-பால்
சேராது நல் நெஞ்சமே ஒற்றியூரனைச் சேர் விரைந்தே.

#849.
பொய் விரிப்பார்க்குப் பொருள் விரிப்பார் நல் பொருள் பயனாம்
மெய் விரிப்பார்க்கு இரு கை விரிப்பார் பெட்டி மேவு பணப்
பை விரிப்பார் அல்குல் பை விரிப்பார்க்கு அவர்-பால் பரவி
மை விரிப்பாய் மனமே என்-கொலோ நின் மதியின்மையே.

#850.
வாழைக் கனி உணமாட்டாது வானின் வளர்ந்து உயர்ந்த
தாழைக் கனி உணத் தாவுகின்றோரில் சயிலம் பெற்ற
மாழைக் கனி திகழ் வாமத்து எம்மான் தொண்டர்-மாட்டு அகன்றே
ஏழைக் கல் நிகர் உளத்தினர்-பால் சென்றது என்னை நெஞ்சே.

#851.
காய் ஆர் சரிகைக் கலிங்கம் உண்டேல் இக் கலிங்கம் கண்டால்
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின்
தாயார் நின் தந்தை எவன் குலம் ஏது என்பர் சாற்றும் அ வல்
வாயார் இடம் செலல் நெஞ்சே விடைதர வல்லை அன்றே.

#852.
துட்ட வஞ்சக நெஞ்சகமே ஒன்று சொல்லக் கேள் கடல் சூழ் உலகத்திலே
இட்டம் என்-கொல் இறையளவேனும் ஓர் இன்பம் இல்லை இடைக்கிடை இன்னலால்
நட்டம் மிக்குறல் கண்டுகண்டு ஏங்கினை நாணுகின்றிலை நாய்க்கும் கடையை நீ
பட்ட வன்மைகள் எண்ணில் எனக்கு உடல் பதைக்கும் உள்ளம் பகீல் என ஏங்குமே.

#853.
பெரிய பொருள் எவைக்கும் முதல் பெரும் பொருளாம் அரும் பொருளைப் பேசற்கொண்ணாத்
துரிய நிலை அநுபவத்தைச் சுகமயமாய் எங்கும் உள்ள தொன்மை-தன்னை
அரிய பரம்பரமான சிதம்பரத்தே நடம் புரியும் அமுதை அந்தோ
உரிய பரகதி அடைதற்கு உன்னினையேல் மனனே நீ உய்குவாயே.

#854.
சொல் நிலைக்கும் பொருள் நிலைக்கும் தூரியதாய் ஆனந்தச் சுடராய் அன்பர்
தன் நிலைக்கும் செல் நிலைக்கும் அண்மையதாய் அருள் பழுக்கும் தருவாய் என்றும்
முன் நிலைக்கும் நில் நிலைக்கும் காண்ப அரிதாய் மூவாத முதலாய்ச் சுத்த
நல் நிலைக்கும் நிலையாய பசுபதியை மனனே நீ நவின்றிடாயே.

#855.
மண் முகத்தில் பல் விடய வாதனையால் மனனே நீ வருந்தி அந்தோ
புண் முகத்தில் சுவை விரும்பும் எறும்பு என வாளா நாளைப் போக்குகின்றாய்
சண் முகத்து எம்பெருமானை ஐங்கரனை நடராஜத் தம்பிரானை
உள் முகத்தில் கருதி அநுபவமயமாய் இருக்கிலை நின் உணர்ச்சி என்னே.

#856.
மால் எடுத்துக்கொண்டு கரு மால் ஆகித் திரிந்தும் உளம் மாலாய்ப் பின்னும்
வால் எடுத்துக்கொண்டு நடந்து அணி விடையாய்ச் சுமக்கின்றான் மனனே நீ அக்
கால் எடுத்துக்கொண்டு சுமந்திட விரும்புகிலை அந்தோ கருதும் வேதம்
நால் எடுத்துக்கொண்டு முடி சுமப்பதையும் அறிகிலை நின் நலம்-தான் என்னே.

#857.
உலகம் ஏத்திநின்று ஓங்க ஓங்கிய ஒளி கொள் மன்றிடை அளி கொள் மா நடம்
இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே
திலக வாள்_நுதலார்க்கு உழன்றினை தீமையே புரிந்தாய் விரிந்தனை
கலகமே கனிந்தாய் என்னை காண் நின் கடைக் கருத்தே.

@27. அவத்தொழிற் கலைசல்

#858.
அணங்கு_அனார் களபத் தன மலைக்கு இவரும் அறிவிலேன் என்பு காத்து உழலும்
சுணங்கு_அனேன்-தனக்கு உன் திரு_அருள் கிடைக்கும் சுகமும் உண்டாம்-கொலோ அறியேன்
கணங்கள் நேர் காட்டில் எரி உகந்து ஆடும் கடவுளே கடவுளர்க்கு இறையே
உணங்கு வெண் தலைத் தார் புனை திருப் புயனே ஒற்றியூர் உத்தம தேவே.

#859.
தேவரே அயனே திரு நெடுமாலே சித்தரே முனிவரே முதலா
யாவரே எனினும் ஐய நின் தன்மை அறிந்திலர் யான் உனை அறிதல்
தா_இல் வான் சுடரைக் கண்ணிலி அறியும் தன்மை அன்றோ பெரும் தவத்தோர்
ஓவு_இல் மா தவம் செய்து ஓங்கு சீர் ஒற்றியூர் அமர்ந்து அருள்செயும் ஒன்றே.

#860.
ஒன்று நின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம் நொந்து இளைக்கின்றது இன்னும்
நன்று நின் தன்மை நான் அறிந்து ஏத்தல் நாய் அரசாளல் போல் அன்றோ
சென்று நின்று அடியர் உள்ளகத்து ஊறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே
மன்றுள் நின்று ஆடும் மாணிக்க_மலையே வளம் கொளும் ஒற்றியூர் மணியே.

#861.
மணித் தலை நாகம் அனைய வெம் கொடியார் வஞ்சக விழியினால் மயங்கிப்
பிணித் தலைக்கொண்டு வருந்தி நின்று உழலும் பேதையேற்கு உன் அருள் உளதோ
கணித்தலை அறியாப் பேர் ஒளி_குன்றே கண்கள் மூன்று உடைய என் கண்ணே
அணித் தலை அடியர்க்கு அருள் திருவொற்றி அப்பனே செப்ப அரும் பொருளே.

#862.
ஒப்பு_இலாய் உனது திரு_அருள் பெறுவான் உன்னி நைகின்றனன் மனமோ
வெப்பில் ஆழ்ந்து எனது மொழிவழி அடையா வேதனைக்கு இடம்கொடுத்து உழன்ற
இப் பரிசானால் என் செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள் கிடைக்கும்
துப்புரவு_ஒழிந்தோர் உள்ளகத்து ஓங்கும் சோரியே ஒற்றியூர்த் துணையே.

#863.
துணை_இலேன் நினது திரு_அடி அல்லால் துட்டனேன் எனினும் என்றன்னை
இணை_இலாய் உனது தொண்டர்-தம் தொண்டன் எனச் செயல் நின் அருள் இயல்பே
அணை_இலாது அன்பர் உள்ளகத்து ஓங்கும் ஆனந்த_வெள்ளமே அரசே
பணையில் வாளைகள் பாய் ஒற்றி அம் பதியில் பரிந்து அமர்ந்து அருள்செயும் பரமே.

#864.
பரிந்துநின்று உலக வாழ்க்கையில் உழலும் பரிசு ஒழிந்து என் மலக் கங்குல்
இரிந்திட நினது திரு_அருள் புரியாது இருத்தியேல் என் செய்வேன் எளியேன்
எரிந்திட எயில் மூன்று அழற்றிய நுதல் கண் எந்தையே எனக்கு உறும் துணையே
விரிந்த பூம் பொழில் சூழ் ஒற்றி அம் பதியில் மேவிய வித்தக வாழ்வே.

#865.
வாழ்வது நின்றன் அடியரோடன்றி மற்றும் ஓர் வெற்றருள் வாழேன்
தாழ்வது நினது தாட்கு அலால் மற்றைத் தாட்கு எலாம் சரண் எனத் தாழேன்
சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன்-தன்னை
ஆள்வது கருதின் அன்றி என் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே.

#866.
ஐயனே மாலும் அயனும் நின்று அறியா அப்பனே ஒற்றியூர் அரசே
மெய்யனே நினது திரு_அருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றிப்
பொய்யனேன் தன்மைக்கு அடாதது கருதிப் பொன்_அருள் செயாதிருப்பாயோ
கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னைக் காத்து அருள்செய்வது உன் கடனே.

#867.
செய்வது உன் கடன் காண் சிவபெருமானே திருவொற்றியூர் வரும் தேனே
உய்வது என் கடன் காண் அன்றி ஒன்று இல்லை உலகு எலாம் உடைய நாயகனே
நைவது என் நெஞ்சம் என் செய்கேன் நினது நல் அருள் பெறாவிடில் என்னை
வைவது உன் அடியர் அன்றி இ உலக வாழ்க்கையில் வரும் பொலா அணங்கே.

@28. நாள் அவத்து அலைசல்

#868.
இன்று_இருந்தவரை நாளை இ உலகில் இருந்திடக் கண்டிலேம் ஆஆ
என்று இரும் தவத்தோர் அரற்றுகின்றனரால் ஏழையேன் உண்டு உடுத்து அவமே
சென்று இருந்து உறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ
மன்று இருந்து ஓங்கும் மணிச் சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.

#869.
தாவியே இயமன் தமர் வரும் அ நாள் சம்பு நின் திரு_அருள் அடையாப்
பாவியேன் செய்வது என் என நெஞ்சம் பதைபதைத்து உருகுகின்றனன் காண்
கூவியே எனக்கு உன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய் வகை அறியேன்
வாவி ஏர்பெறப் பூஞ் சோலை சூழ்ந்து ஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.

#870.
நீரின் மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து நிலைபடா உடம்பினை ஓம்பிப்
பாரின் மேல் அலையும் பாவியேன்-தனக்குப் பரிந்து அருள்பாலியாய் என்னில்
காரின் மேல் வரல் போல் கடா மிசை வரும் அக் காலன் வந்திடில் எது செய்வேன்
வாரின் மேல் வளரும் திரு_முலை மலையாள்_மணாளனே ஒற்றியூர் வாழ்வே.

#871.
கரும் கணம் சூழக் கசியும் இ உடலம் கருதும் இக்கணம் இருந்தது-தான்
வரும் கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என் செய வல்லேன்
பெரும் கணம் சூழ வடவனத்து ஆடும் பித்தனே உத்தம தவத்தோர்
மருங்கு அணவுற நின்று அரகர எனும் சொல் வான் புகும் ஒற்றியூர் வாழ்வே.

#872.
கன்னியர் அளகக் காட்டிடை உழன்ற கல்_மன குரங்கினேன்-தனை நீ
அன்னியன் என்றே கழித்திடில் உனக்கு இங்கு ஆர் சொல வல்லவர் ஐயா
என் இயல் அறியேன் நமன்_தமர் வரும் நாள் என் செய்வேன் என் செய்வேன் அந்தோ
மன்னிய வன்னி மலர்ச் சடை மருந்தே வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே.

#873.
பசிக்கு உணவு உழன்று உன் பாத_தாமரையைப் பாடுதல் ஒழிந்து நீர்ப் பொறி போல்
நசிக்கும் இ உடலை நம்பினேன் என்னை நமன்_தமர் வருத்தில் என் செய்கேன்
விசிக்கும் நல் அரவக் கச்சினோய் நினது மெய் அருள் அலது ஒன்றும் விரும்பேன்
வசிக்கும் நல் தவத்தோர்க்கு அருள்செய ஓங்கி வளம் பெறும் ஒற்றியூர் வாழ்வே.

#874.
கான்ற சோறு அருந்தும் சுணங்கனின் பல நாள் கண்ட புன் சுகத்தையே விரும்பும்
நான்ற நெஞ்சகனேன் நமன்_தமர் வரும் நாள் நாணுவது அன்றி என் செய்கேன்
சான்றவர் மதிக்கும் நின் திரு_அருள்-தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா
மான் தனிக் கரத்து எம் வள்ளலே என்னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே.

#875.
மடிக்குறும் நீர் மேல் எழுத்தினுக்கு இடவே மை வடித்து எடுக்குநர் போல
நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால்
படிக்குளே மனத்தால் பரிவுறுகின்றேன் பாவியேன்-தனக்கு அருள் புரியாய்
வடிக்குறும் தமிழ் கொண்டு அன்பருக்கு அருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.

#876.
அங்கையில் புண் போல் உலக வாழ்வு அனைத்தும் அழிதரக் கண்டு நெஞ்சு அயர்ந்தே
பங்கமுற்று அலைவதன்றி நின் கமல_பாதத்தைப் பற்றிலேன் அந்தோ
இங்கு எனை நிகரும் ஏழை யார் எனக்குள் இன் அருள் எவ்வணம் அருள்வாய்
மங்கை ஓர் புடை கொள் வள்ளலே அழியா வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே.

#877.
கணத்தினில் உலகம் அழிதரக் கண்டும் கண்_இலார் போல் கிடந்து உழைக்கும்
குணத்தினில் கொடியேன்-தனக்கு நின் அருள்-தான் கூடுவது எவ்வணம் அறியேன்
பணத்தினில் பொலியும் பாம்பு அரை ஆர்த்த பரமனே பிரமன் மால் அறியா
வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.

@29. நெஞ்சைத் தேற்றல்

#878.
சென்று வஞ்சர்-தம் புறங்கடை நின்று திகைக்க எண்ணும் என் திறன்_இலா நெஞ்சே
ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி ஒற்றியூர்க்கு இன்று வருதியேல் அங்கு
மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து வாழ்கின்றார் அவர் மலர்_அடி வணங்கி
நன்று வேண்டிய யாவையும் வாங்கி நல்குவேன் எனை நம்புதி மிகவே.

#879.
தீது வேண்டிய சிறியர்-தம் மனையில் சென்று நின்று நீ திகைத்திடல் நெஞ்சே
யாது வேண்டுதி வருதி என்னுடனே யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து
மாது வேண்டிய நடன நாயகனார் வள்ளலார் அங்கு வாழ்கின்றார் கண்டாய்
ஈது வேண்டியது என்னும் முன் அளிப்பார் ஏற்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே.

#880.
இரக்கின்றோர்களுக்கு இல்லை என்னார்-பால் இரத்தல் ஈதலாம் எனல் உணர்ந்திலையோ
கரக்கின்றோர்களைக் கனவினும் நினையேல் கருதி வந்தவர் கடியவர் எனினும்
புரக்கின்றோர் மலர்ப் புரி சடை உடையார் பூத_நாயகர் பொன்_மலைச் சிலையார்
உரக் குன்றோர் திருவொற்றியூர்க்கு ஏகி உன்னி ஏற்குதும் உறுதி என் நெஞ்சே.

#881.
கல்லின் நெஞ்சர்-பால் கலங்கல் என் நெஞ்சே கருதி வேண்டியது யாது அது கேண்மோ
சொல்லின் ஓங்கிய சுந்தரப் பெருமான் சோலை சூழ் ஒற்றித் தொல் நகர்ப் பெருமான்
அல்லின் ஓங்கிய கண்டத்து எம் பெருமான் அயனும் மாலும் நின்று அறிவரும் பெருமான்
வல்லை ஈகுவான் ஈகுவது எல்லாம் வாங்கி ஈகுவேன் வருதி என்னுடனே.

#882.
இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய் என்னை நின் மதி ஏழை நீ நெஞ்சே
பலவு வாழை மாக் கனி கனிந்து இழியும் பணை கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி
நிலவு வெண் மதிச் சடை உடை அழகர் நிறைய மேனியில் நிகழ்ந்த நீற்று அழகர்
குலவுகின்றனர் வேண்டிய எல்லாம் கொடுப்பவர் வாங்கி நான் கொடுப்பன் உன்றனக்கே.

#883.
மன் உருத்திரர் வாழ்வை வேண்டினையோ மாலவன் பெறும் வாழ்வு வேண்டினையோ
அன்ன ஊர்தி போல் ஆக வேண்டினையோ அமையும் இந்திரன் ஆக வேண்டினையோ
என்ன வேண்டினும் தடை இலை நெஞ்சே இன்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே
வன்னி அம் சடை எம்பிரான் ஒற்றி வளம் கொள் ஊரிடை வருதி என்னுடனே.

#884.
மறப்பு_இலாச் சிவயோகம் வேண்டுகினும் வழுத்த அரும் பெரு வாழ்வு வேண்டுகினும்
இறப்பு_இலாது இன்னும் இருக்க வேண்டுகினும் யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே
பிறப்பு_இலான் எங்கள் பரசிவ பெருமான் பித்தன் என்று நீ பெயர்ந்திடல் நெஞ்சே
வறப்பு_இலான் அருள்_கடல் அவன் அமர்ந்து வாழும் ஒற்றியின் வருதி என்னுடனே.

#885.
காலம் செல்கின்றது அறிந்திலை போலும் காலன் வந்திடில் காரியம் இலை காண்
நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில் நிமிர்ந்த வெண் நெருப்பு ஏந்திய நிமலர்
ஏலம் செல்கின்ற குழலி ஓர் புடையார் இருக்கும் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி
ஞாலம் செல்கின்ற துயர் கெட வரங்கள் நல்குவார் அவை நல்குவன் உனக்கே.

#886.
சென்று நீ புகும் வழி எலாம் உன்னைத் தேட என் வசம் அல்ல என் நெஞ்சே
இன்று அரைக் கணம் எங்கும் நேர்ந்து ஓடாது இயல்கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி
அன்று வானவர் உயிர்பெற நஞ்சம் அருந்தி நின்ற எம் அண்ணலாரிடத்தே
நின்று வேண்டிய யாவையும் உனக்கு நிகழ வாங்கி நான் ஈகுவன் அன்றே.

#887.
கெடுக்கும் வண்ணமே பலர் உனக்கு உறுதி கிளத்துவார் அவர் கெடு மொழி கேளேல்
அடுக்கும் வண்ணமே சொல்கின்றேன் எனை நீ அம்மை இம்மையும் அகன்றிடாமையினால்
தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றித் தலத்தினுக்கு இன்று என்றன்னுடன் வருதி
மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம் வாங்கி ஈகுவன் வாழ்தி என் நெஞ்சே.

@30. நெஞ்சறை கூவல்

#888.
கண்கள் மூன்றினார் கறை_மணி_மிடற்றார் கங்கை நாயகர் மங்கை பங்கு உடையார்
பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கயப் பதத்தார்
ஒண் கண் மாதரார் நடம் பயில் ஒற்றியூர் அமர்ந்து வாழ்வுற்றவர்க்கே நம்
மண் கொள் மாலை போம் வண்ணம் நல் தமிழ்ப் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே.

#889.
கரிய மால் அன்று கரிய மா ஆகிக் கலங்க நின்ற பொன் கழல் புனை பதத்தார்
பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும் பித்தர் என்னும் அப் பேர்-தனை அகலார்
உரிய சீர் கொளும் ஒற்றியூர் அமர்ந்தார் உம்பர் நாயகர்-தம் புயம் புனைய
வரி அகன்ற நல் மலர் கொடு தெரிந்து மாலை சூட்டுதும் வருதி என் மனனே.

#890.
திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர்ப் பதத்தார்
கருவின் நின்ற எம்_போல்பவர்-தம்மைக் காத்து அளிப்பதே கடன் எனக் கொண்டார்
உருவின் நின்றவர் அரு என நின்று ஓர் ஒற்றியூரிடை உற்றனர் அவர்க்கு
மருவின் நின்ற நல் மணம்கொளும் மலர்ப் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே.

#891.
கரும் பை நாக அணைக் கடவுள் நான்முகன் வான்_கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான்
துரும்பை நாட்டி ஓர் விஞ்சையன் போலத் தோன்றி நின்று அவர் துரிசு அறுத்திட்டோன்
தரும் பைம் பூம் பொழில் ஒற்றியூரிடத்துத் தலம்கொண்டார் அவர்-தமக்கு நாம் மகிழ்ந்து
வரும் பைஞ் சீர்த் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே.

#892.
வதனம் நான்கு உடை மலரவன் சிரத்தை வாங்கி ஓர் கையில் வைத்த நம் பெருமான்
நிதன நெஞ்சகர்க்கு அருள்தரும் கருணாநிதியம் ஆகிய நின்மலப் பெருமான்
சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றித் தூயனால் அவர் துணைத் திரு_தோட்கு
மதன இன் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே.

#893.
கஞ்சன் அங்கு ஒரு விஞ்சனம் ஆகிக் காலில் போந்து முன் காண அரும் முடியார்
அஞ்சனம் கொளும் நெடும்_கணாள் எங்கள் அம்மை காண நின்று ஆடிய பதத்தார்
செஞ்சொல் மா தவர் புகழ் திருவொற்றித் தேவர் காண் அவர் திரு_முடிக் காட்ட
மஞ்சனம் கொடுவருதும் என் மொழியை மறாது நீ உடன் வருதி என் மனனே.

#894.
சூழு மால் அயன் பெண்ணுருவெடுத்துத் தொழும்புசெய்திடத் தோன்றி நின்று அவனைப்
போழும் வண்ணமே வடுகனுக்கு அருளும் பூத_நாதர் நல் பூரணானந்தர்
தாழும்_தன்மையோர் உயர்வுறச்செய்யும் தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்-தாம்
வாழும் கோயிற்குத் திரு_அலகிடுவோம் மகிழ்வு கொண்டு உடன் வருதி என் மனனே.

#895.
விதியும் மாலும் முன் வேறு உருவெடுத்து மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர்
நதியும் கொன்றையும் நாகமும் பிறையும் நண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார்
பதியும் நாமங்கள் அனந்தம் முற்று உடையார் பணை கொள் ஒற்றியூர்ப் பரமர் காண் அவர்-தாம்
வதியும் கோயிற்குத் திரு_விளக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே.

#896.
குளம் கொள் கண்ணினார் குற்றமே செயினும் குணம் என்றே அதைக் கொண்டு அருள் புரிவோர்
உளம்கொள் அன்பர்-தம் உள்ளகத்து இருப்போர் ஒற்றியூர் இடம் பற்றிய புனிதர்
களம் கொள் கண்டர் எண்_தோளர் கங்காளர் கல்லை வில் எனக் கண்டவர் அவர்-தம்
வளம் கொள் கோயிற்குத் திரு_மெழுக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே.

#897.
பணிகொள் மார்பினர் பாகு அன மொழியாள் பாகர் காலனைப் பாற்றிய பதத்தார்
திணி கொள் வன் மத மலை உரி_போர்த்தோர் தேவர் நாயகர் திங்கள் அம் சடையார்
அணி கொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர் அழகர் அங்கு அவர் அமைந்து வீற்றிருக்கும்
மணி கொள் கோயிற்குத் திரு_பணி செய்தும் வாழ்க நீ உடன் வருதி என் மனனே.

@31. பற்றின் திறம் பகர்தல்

#898.
வாள் நரை விடை ஊர் வரதனை ஒற்றி வாணனை மலி கடல் விடமாம்
ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கி நின்று ஏத்தா
வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்சக்
கோணரை முருட்டுக் குறும்பரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.

#899.
மூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியைத் தீர்த்தனைப் பெரிய
தேவரைக் காத்த செல்வனை ஒற்றித் தியாகனை நினைந்து நின்று ஏத்தாப்
பாவரை வரையாப் படிற்றரை வாதப் பதடரைச் சிதடரைப் பகை சேர்
கோவரைக் கொடிய குணத்தரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.

#900.
அண்டனை எண் தோள் அத்தனை ஒற்றி அப்பனை ஐயனை நீல
கண்டனை அடியர் கருத்தனைப் பூத கணத்தனைக் கருதி நின்று ஏத்தா
மிண்டரைப் பின்றா வெளிற்றரை வலிய வேற்றரைச் சீற்றரைப் பாபக்
குண்டரை வஞ்சக் குடியரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.

#901.
நாதனைப் பொதுவில் நடத்தனை எவர்க்கும் நல்லனை வல்லனைச் சாம
கீதனை ஒற்றிக்கு இறைவனை எங்கள் கேள்வனைக் கிளர்ந்து நின்று ஏத்தாத்
தீதரை நரகச் செக்கரை வஞ்சத்து இருட்டரை மருட்டரைத் தொலையாக்
கோதரைக் கொலை செய் கோட்டரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.

#902.
நம்பனை அழியா நலத்தனை எங்கள் நாதனை நீதனைக் கச்சிக்
கம்பனை ஒற்றிக் கங்கை வேணியனைக் கருத்தனைக் கருதி நின்று ஏத்தா
வம்பரை ஊத்தை வாயரைக் கபட மாயரைப் பேயரை எட்டிக்
கொம்பரைப் பொல்லாக் கோளரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.

#903.
சடையனை எவர்க்கும் தலைவனைக் கொன்றை_தாரனைச் சராசர சடத்துள்
உடையனை ஒற்றி_ஊரனை மூவர் உச்சனை உள்கி நின்று ஏத்தாக்
கடையரைப் பழைய கயவரைப் புரட்டுக் கடியரைக் கடியரைக் கலக
நடையரை உலக நசையரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.

#904.
கஞ்சனைச் சிரம் கொய் கரத்தனை மூன்று_கண்ணனைக் கண்ணனைக் காத்த
தஞ்சனை ஒற்றி_தலத்தனைச் சைவத் தலைவனைத் தாழ்ந்து நின்று ஏத்தா
வஞ்சரைக் கடைய மடையரைக் காம_மனத்தரைச் சினத்தரை வலிய
நஞ்சரை இழிந்த நரகரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.

#905.
தாமனை மழு மான் தரித்த செங்கரனைத் தகையனைச் சங்கரன்-தன்னைச்
சேமனை ஒற்றித் தியாகனைச் சிவனைத் தேவனைத் தேர்ந்து நின்று ஏத்தா
ஊமரை நீண்ட ஒதியரைப் புதிய ஒட்டரைத் துட்டரைப் பகை கொள்
நாமரை நரக_நாடரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.

#906.
ஈசனைத் தாயில் இனியனை ஒற்றி இன்பனை அன்பனை அழியாத்
தேசனைத் தலைமை தேவனை ஞானச் சிறப்பனைச் சேர்ந்து நின்று ஏத்தா
நீசரை நாண்_இல் நெட்டரை நரக_நேயரைத் தீயரைத் தரும_
நாசரை ஒழியா நட்டரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.

#907.
நித்தனைத் தூய நிமலனைப் புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மைச்
சுத்தனை ஒற்றித் தலம் வளர் ஞான சுகத்தனைச் சூழ்ந்து நின்று ஏத்தா
மத்தரைச் சமண_வாதரைத் தேர_வறியரை முறியரை வைண_
நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.

@32. அடிமைத் திறத் தலைசல்

#908.
தேவர் அறியார் மால் அறியான் திசை மா முகத்தோன்-தான் அறியான்
யாவர் அறியார் திருவொற்றி அப்பா அடியேன் யாது அறிவேன்
மூவர் திரு_பாட்டினுக்கு இசைந்தே முதிர் தீம்பாலும் முக்கனியும்
காவல் அமுதும் நறும் தேனும் கைப்ப இனிக்கும் நின் புகழே.

#909.
புகழே விரும்பிப் புலன் இழந்தேன் போந்து உன் பதத்தைப் போற்றுகிலேன்
இகழேன் எனை நான் ஒற்றி அப்பா என்னை மதித்தேன் இருள் மனத்தேன்
திகழ் ஏழ் உலகில் எனைப் போல் ஓர் சிறியர் அறியேன் தீவினையை
அகழேன் எனினும் எனை ஆளாது அகற்றல் அருளுக்கு அழகு அன்றே.

#910.
அன்றும் அறியார் மா தவரும் அயனும் மாலும் நின் நிலையை
இன்றும் அறியார் அன்றி அவர் என்றும் அறியார் என்னில் ஒரு
நன்றும் அறியேன் நாய்_அடியேன் நான் எப்படி-தான் அறிவேனோ
ஒன்றும் நெறி ஏது ஒற்றி அப்பா ஒப்பார் இல்லா உத்தமனே.

#911.
ஒப்பார் இல்லா ஒற்றி அப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்-தம்
வெப்பு ஆர் குழியில் கண் மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன்
இப் பார் நடையில் களித்தவரை ஈர்த்துக் கொடுபோய்ச் செக்கிலிடு
விப்பார் நமனார் என்பதை நான் நினையாது அறிவை விடுவித்தேனே.

#912.
விடுத்தேன் தவத்தோர் நெறி-தன்னை வியந்தேன் உலக வெம் நெறியை
மடுத்தேன் துன்ப_வாரி-தனை வஞ்ச மனத்தர்-மாட்டு உறவை
அடுத்தேன் ஒற்றி அப்பா உன் அடியை நினையேன் அலமந்தேன்
படுத்தே நமன் செக்கிடும்போது படிறேன் யாது படுவேனோ.

#913.
படுவேன்_அல்லேன் நமன்_தமரால் பரிவேன்_அல்லேன் பரம நினை
விடுவேன்_அல்லேன் என்னையும் நீ விடுவாய்_அல்லை இனிச் சிறிதும்
கெடுவேன்_அல்லேன் சிறியார் சொல் கேட்பேன்_அல்லேன் தரும நெறி
அடுவேன்_அல்லேன் திருவொற்றி அப்பா உன்றன் அருள் உண்டே

#914.
உண்டோ எனைப் போல் மதி_இழந்தோர் ஒற்றி அப்பா உன்னுடைய
திண் தோள் இலங்கும் திரு_நீற்றைக் காண விரும்பேன் சேர்ந்து ஏத்தேன்
எண் தோள் உடையாய் என்று இரங்கேன் இறையும் திரும்பேன் இ அறிவைக்
கொண்டே உனை நான் கூடுவன் நின் குறிப்பு ஏதொன்றும் அறியேனே.

#915.
அறியேன் உன்றன் புகழ்ப் பெருமை அண்ணா ஒற்றி அப்பா நான்
சிறியேன் எனினும் நினையன்றித் தெறியேன் மற்றோர் தேவர்-தமை
வெறியேன் பிழையைக் குறித்து எனைக் கைவிட்டால் என் செய்வேன் அடியேன்
நெறியே தருதல் நின் கடன் காண் நின்னைப் பணிதல் என் கடனே.

#916.
கடனே அடியர்-தமைக் காத்தல் என்றால் கடையேன் அடியன் அன்றோ
உடல் நேர் பிணியும் ஒழித்திலை என் உள்ளத் துயரும் தவிர்த்திலையே
விடன் நேர் கண்டத்து இன் அமுதே வேத முடியில் விளங்கு ஒளியே
அடன் ஏர் விடையாய் திருவொற்றி அப்பா உனை நான் அயர்ந்திலனே.

#917.
இலனே மற்று ஓர் துணை சிறிதும் என்னே காமம் எனும் கடலில்
மலனேன் வருந்தக் கண்டு இருத்தல் மணியே அருளின் மரபு அன்றே
அலனே அயலான் அடியேன் நான் ஐயா ஒற்றி அப்பா நல்
நலன் நேர் தில்லை அம்பலத்தில் நடிக்கும் பதமே நாடினேன்.

#918.
நாடி அலுத்தேன் என்னளவோ நம்பா மன்றுள் நன்கு நடம்
ஆடி மகிழும் திருவொற்றி அப்பா உன்றன் அருள்_புகழைக்
கோடி அளவில் ஒரு கூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும்
தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே.

@33. ஆனந்தப் பதிகம்

#919.
குடிகொள் மலம் சூழ் நவ வாயில் கூட்டைக் காத்துக் குணம்_இலியாய்ப்
படிகொள் நடையில் பரதவிக்கும் பாவியேனைப் பரிந்து அருளிப்
பொடி கொள் வெள்ளைப் பூச்சு அணிந்த பொன்னே உன்னைப் போற்றி ஒற்றிக்
கடி கொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே.

#920.
சாதல் பிறத்தல் எனும் கடலில் தாழ்ந்து கரை காணாது அழுந்தி
ஈதல் இரக்கம் எள்ளளவும் இல்லாது அலையும் என்றனை நீ
ஓதல் அறிவித்து உணர்வு அறிவித்து ஒற்றியூர்ச் சென்று உனைப் பாடக்
காதல் அறிவித்து ஆண்டதற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

#921.
அற்ப அளவும் நிச்சயிக்கலாகா உடம்பை அருமைசெய்து
நிற்பதலது உன் பொன்_அடியை நினையாக் கொடிய நீலன் எனைச்
சற்ப அணியாய் நின்றன் ஒற்றித் தலத்தைச் சார்ந்து நின் புகழைக்
கற்ப அருள்செய்தனை அதற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

#922.
உண்டு வறிய ஒதி போல உடம்பை வளர்த்து ஊன் ஊதியமே
கொண்டு காக்கைக்கு இரையாகக் கொடுக்க நினைக்கும் கொடியன் எனை
விண்டு அறியா நின் புகழை விரும்பி ஒற்றியூரில் நினைக்
கண்டு வணங்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

#923.
நாய்க்கும் எனக்கும் ஒப்பாரி நாடி அதற்கு விருந்திடுவான்
வாய்க்கும் ஒதி போல் பொய் உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன் எனை
ஆய்க்கும் இனிய அப்பா உன் ஒற்றியூரை அடைந்து இருளைக்
காய்க்கும் வண்ணம் செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

#924.
குருதி நிறைந்த குறும் குடத்தைக் கொண்டோன் வழியில் சென்று இடவாய்
எருதின் மனத்தேன் சுமந்து நலம் இழந்து திரியும் எய்ப்பு ஒழிய
வருதி எனவே வழி அருளி ஒற்றியூர்க்கு வந்து உன்னைக்
கருதி வணங்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

#925.
பாவம் எனும் ஓர் பெரும் சரக்குப் பையை எடுத்துப் பண்பு அறியாக்
கோவம் எனும் ஓர் குரங்கு ஆட்டும் கொடியேன்-தன்னைப் பொருட்படுத்தித்
தேவர் அமுதே சிவனே நின் திரு_தாள் ஏத்த ஒற்றி எனும்
காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே.

#926.
பொள்ளல் குடத்தின் புலால் உடம்பைப் போற்றி வளர்த்துப் புலன் இழந்தே
துள்ளற்கு எழுந்த மனத்துடனே துள்ளி அலைந்த துட்டன் எனை
உள்ளற்கு அறிவு தந்து உன்றன் ஒற்றியூர்க்கு வந்து வினைக்
கள்ளப் பகை நீக்கிடச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே.

#927.
கூட்டும் எலும்பால் தசை-அதனால் கோலும் பொல்லாக் கூரை-தனை
நாட்டும் பரம வீடு எனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை
ஊட்டும் தாய் போல் உவந்து உன்றன் ஒற்றியூர் வந்துற நினைவு
காட்டும் கருணைசெய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

#928.
ஊணத்து உயர்ந்த பழு_மரம் போல் ஒதி போல் துன்பைத் தாங்குகின்ற
தூணத் தலம் போல் சோரி மிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை
மாணப் பரிவால் அருள் சிந்தாமணியே உன்றன் ஒற்றி நகர்
காணப் பணித்த அருளினுக்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

#929.
புண்ணும் வழும்பும் புலால் நீரும் புழுவும் பொதிந்த பொதி போல
நண்ணும் கொடிய நடை_மனையை நான் என்று உளறும் நாயேனை
உண்ணும் அமுதே நீ அமர்ந்த ஒற்றியூர் கண்டு என் மனமும்
கண்ணும் களிக்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

@34. அவல மதிக்கு அலைசல்

#930.
மண்ணை மனத்துப் பாவியன் யான் மடவாருள்ளே வதிந்து அளிந்த
புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே
எண்ண இனிய நின் புகழை ஏத்தேன் ஒதி போல் இருக்கின்றேன்
தண் நல் அமுதே நீ என்னைத் தடுத்து இங்கு ஆளத் தக்கதுவே.

#931.
தக்கது அறியேன் வெறியேன் நான் சண்ட மடவார்-தம் முலை தோய்
துக்கம்-அதனைச் சுகம் என்றே துணிந்தேன் என்னைத் தொழும்பன் எனில்
மிக்க அடியார் என் சொல்லார் விண்ணோர் மண்ணோர் என் புகலார்
செக்கர் நிறத்துப் பொன்_மேனித் திரு_நீற்று ஒளி சேர் செங்கரும்பே.

#932.
கரும்பே ஒற்றியூர் அமர்ந்த கனியே உன்றன் கழல் அடியை
விரும்பேன் அடியார் அடி_தொண்டில் மேவேன் பொல்லா விடம் அனைய
பெரும் பேய் மாதர் பிணக் குழியில் பேதை மனம் போந்திடச் சூறைத்
துரும்பே என்னச் சுழல்கின்றேன் துணை ஒன்று அறியேன் துனியேனே.

#933.
துனியே பிறத்தற்கு ஏது எனும் துட்ட மடவார் உள் ததும்பும்
பனி ஏய் மலம் சூழ் முடை நாற்றப் பாழும் குழிக்கே வீழ்ந்து இளைத்தேன்
இனி ஏதுறுமோ என் செய்கேன் எளியேன்-தனை நீ ஏன்றுகொளாய்
கனியே கருணை_கடலே என் கண்ணே ஒற்றிக் காவலனே.

#934.
வலமே உடையார் நின் கருணை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன்
மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும் பேய் வாக்கும் உவர்ச்
சலமே ஒழுக்குப் பொத்தரிடைச் சாய்ந்து தளர்ந்தேன் சார்பு அறியேன்
நலமே ஒற்றி நாடு_உடையாய் நாயேன் உய்யும் நாள் என்றோ.

#935.
நாளை வருவது அறியேன் நான் நஞ்சம் அனைய நங்கையர்-தம்
ஆளை அழுத்தும் நீர்க் குழியில் அழுந்தி அழுந்தி எழுந்து அலைந்தேன்
கோளை அகற்றி நின் அடிக்கே கூடும் வண்ணம் குறிப்பாயோ
வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே.

#936.
முத்தி முதலே முக்கண் உடை மூரிக் கரும்பே நின் பதத்தில்
பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ
எத்தி அழைக்கும் கரும்_கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பு-அதனில்
தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்றது என் மனமே.

#937.
மனமே முன்னர் வழிகாட்டப் பின்னே சென்று மங்கையர்-தம்
தனமே என்னும் மலை ஏறிப் பார்த்தேன் இருண்ட சலதி ஒன்று
முனமே தோன்ற மதி_மயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன்
இனமே என்னை நீ அன்றி எடுப்பார் இல்லை என் அரசே.

#938.
என்னைக் கொடுத்தேன் பெண் பேய்கட்கு இன்பம் எனவே எனக்கு அவர் நோய்-
தன்னைக் கொடுத்தார் நான் அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லது செம்
பொன்னைக் கொடுத்தும் பெற அரிய பொருளே உன்னைப் போற்றுகிலேன்
இன்னல் கொடுத்த பவம்_உடையேன் எற்றுக்கு இவண் நிற்கின்றேனே.

#939.
எற்றுக்கு அடியர் நின்றது நின் இணைத் தாள்_மலரை ஏத்த அன்றோ
மற்று இக் கொடியேன் அஃது இன்றி மடவார் இடை வாய் மணிப் பாம்பின்
புற்றுக்கு உழன்றேன் என்னே என் புந்தி எவர்க்குப் புகல்வேனே
கற்றுத் தெளிந்தோர் புகழ் ஒற்றி-கண் ஆர்ந்து ஓங்கும் கற்பகமே.

#940.
ஓங்கும் பொருளே திருவொற்றியூர் வாழ் அரசே உனைத் துதியேன்
தீங்கும் புழுவும் சிலை நீரும் சீழும் வழும்பும் சேர்ந்து அலைக்கத்
தூங்கும் மடவார் புலை நாற்றத் தூம்பில் நுழையும் சூதகனேன்
வாங்கும் பவம் தீர்த்து அருள்வது நின் கடன் காண் இந்த மண்ணிடத்தே.

@35. ஆனா வாழ்வின் அலைசல்

#941.
துள்ளி வாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக்
கொள்ளிவாய்ப் பேய்கள் எனும் மடவியர்-தம் கூட்டத்துள் நாட்டம்வைத்து உழன்றேன்
உள்ளி வாய் மடுத்து உள் உருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார்
அள்ளி வாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே.

#942.
ஒற்றியூர் அமரும் ஒளி கெழு மணியே உன் அடி உள்கி நின்று ஏத்தேன்
முற்றி ஊர் மலினக் குழி இருள் மடவார் முலை எனும் மலம் நிறைக் குவையைச்
சுற்றி ஊர்_நாயின் சுழன்றனன் வறிதே சுகம் எனச் சூழ்ந்து அழி உடலைப்
பற்றி ஊர் நகைக்கத் திரிதருகின்றேன் பாவியேன் உய்_திறம் அரிதே.

#943.
அரியது நினது திரு_அருள் ஒன்றே அ அருள் அடைதலே எவைக்கும்
பெரியதோர் பேறு என்று உணர்ந்திலேன் முருட்டுப் பேய்களை ஆயிரம் கூட்டிச்
சரி எனச் சொலினும் போதுறா மடமைத் தையலார் மையலில் அழுந்திப்
பிரியமுற்று அலைந்தேன் ஏழை நான் ஒற்றிப் பெரும நின் அருள் எனக்கு உண்டே.

#944.
பெரும நின் அருளே அன்றி இ உலகில் பேதையர் புழு மலப் பிலமாம்
கரும வாழ்வு எனைத்தும் வேண்டிலேன் மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன்
தரும_வாரிதியே தடம் பணை ஒற்றித் தலத்து அமர் தனி முதல் பொருளே
துரும வான் அமுதே அடியனேன்-தன்னைச் சோதியாது அருள்வது உன் பரமே.

#945.
அருள்வது உன் இயற்கை உலகு எலாம் அறியும் ஐயவோ நான் அதை அறிந்தும்
மருள்வது என் இயற்கை என் செய்வேன் இதனை மனம்கொளாது அருள் அருளாயேல்
தெருள்வது ஒன்று இன்றி மங்கையர் கொங்கைத் திடர் மலைச் சிகரத்தில் ஏறி
உருள்வதும் அல்குல் படு_குழி விழுந்து அங்கு உலைவதும் அன்றி ஒன்று உண்டோ .

#946.
உண்டு நஞ்சு அமரர் உயிர்பெறக் காத்த ஒற்றியூர் அண்ணலே நின்னைக்
கண்டு நெஞ்சு உருகிக் கண்கள் நீர் சோரக் கைகுவித்து இணை அடி இறைஞ்சேன்
வண்டு நின்று அலைக்கும் குழல் பிறை நுதலார் வஞ்சக விழியினால் மயங்கிக்
குண்டு நீர் ஞாலத்திடை அலைகின்றேன் கொடியனேன் அடியனேன் அன்றே.

#947.
அன்று நீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்ட ஆரூரனார் உன்னைச்
சென்று தூது அருள் என்று இரங்குதல் நோக்கிச் சென்ற நின் கருணையைக் கருதி
ஒன்று-தோறு உள்ளம் உருகுகின்றனன் காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்து
என்றும் மால் உழந்தேன் எனினும் நின் அடியேன் என்றனைக் கைவிடேல் இனியே.

#948.
இனிய நின் திரு_தாள் இணை மலர் ஏத்தேன் இளம் முலை மங்கையர்க்கு உள்ளம்
கனிய அக் கொடியார்க்கு ஏவல்செய்து உழன்றேன் கடையனேன் விடய வாழ்வு உடையேன்
துனிய இ உடல்-கண் உயிர் பிரிந்திடுங்கால் துணை நினை அன்றி ஒன்று அறியேன்
தனிய மெய்ப் போத வேத_நாயகனே தடம் பொழில் ஒற்றியூர் இறையே

#949.
இறையும் நின் திரு_தாள்_கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பிக்
குறையும் வெண் மதி போல் காலங்கள் ஒழித்துக் கோதையர் குறும் குழி அளற்றில்
பொறையும் நல் நிறையும் நீத்து உழன்று அலைந்தேன் பொய்யனேன்-தனக்கு வெண் சோதி
நிறையும் வெள் நீற்றுக் கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே.

#950.
நெறி_இலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும்
பொறி_இலேன் பிழையைப் பொறுப்பது உன் கடனே பொறுப்பதும் அன்றி இ உலக
வெறியிலே இன்னும் மயங்கிடாது உன்றன் விரை மலர் அடித் துணை ஏத்தும்
அறிவுளே அருள்வாய் ஒற்றியூர் அரசே அன்றினார் துள் அறுத்தவனே.

@36. அருள் திறந்து அலைசல்

#951.
நறை மணக்கும் கொன்றை நதிச் சடில நாயகனே
கறை மணக்கும் திரு நீல_கண்டப் பெருமானே
உறை மணக்கும் பூம் பொழில் சூர் ஒற்றி அப்பா உன்னுடைய
மறை மணக்கும் திரு_அடியை வாய் நிரம்ப வாழ்த்தேனோ.

#952.
அலை வளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்தி நிதம்
தலை வளைக்கும் செங்கமலத் தாள்_உடையாய் ஆள்_உடையாய்
உலை வளைக்கா முத்தலை வேல் ஒற்றி அப்பா உன்னுடைய
மலை வளைக்கும் கை_மலரின் வண்மை-தனை வாழ்த்தேனோ.

#953.
ஆறு அடுத்துச் சென்ற எங்கள் அப்பருக்கா அன்று கட்டுச்
சோறு எடுத்துச் சென்ற துணையே சுயம் சுடரே
ஊறு_எடுத்தோர் காண அரிய ஒற்றி அப்பா உன்னுடைய
நீறு அடுத்த எண் தோள் நிலைமை-தனைப் பாரேனோ.

#954.
சைவத் தலைவர் தவத்தோர்கள்-தம் பெருமான்
மெய் வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே
உய் வைத்த உத்தமனே ஒற்றி அப்பா உன்னுடைய
தெய்வப் புகழ் என் செவி நிறையக் கேளேனோ.

#955.
பாடுகின்றோர் பாடப் பரிசளிக்கும் புண்ணியனே
தேடுகின்றோர் தேட நிற்கும் தியாக_பெருமானே
ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள்
ஆடுகின்ற சேவடி கண்டு அல்லல் எலாம் தீரேனோ.

#956.
பூண் நாகம் ஆடப் பொது நடிக்கும் புண்ணியனே
சேண் நாகம் வாங்கும் சிவனே கடல் விடத்தை
ஊணாக உள் உவந்த ஒற்றி அப்பா மால் அயனும்
காணாத நின் உருவைக் கண்டு களியேனோ.

#957.
கொள்ளுவார் கொள்ளும் குல மணியே மால் அயனும்
துள்ளுவார் துள் அடக்கும் தோன்றலே சூழ்ந்து நிறம்
உள்ளுவார் உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய
தெள்ளு வார் பூம் கழற்கு என் சிந்தைவைத்து நில்லேனோ.

#958.
செவ்வண்ண மேனித் திரு_நீற்றுப் பேர்_அழகா
எவ்வண்ணம் நின் வண்ணம் என்று அறிதற்கு ஒண்ணாதாய்
உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றி அப்பா உன் வடிவம்
இவ்வண்ணம் என்று என் இதயத்து எழுதேனோ.

#959.
மன்று_உடையாய் மால் அயனும் மற்றும் உள வானவரும்
குன்று_உடையாய் என்னக் குறை தவிர்த்த கோமானே
ஒன்று_உடையாய் ஊர் விடையாய் ஒற்றி அப்பா என்னுடைய
வன் துடையாய் என்று உன் மலர்_அடியைப் போற்றேனோ.

#960.
குற்றம் செயினும் குணமாக் கொண்டு அருளும்
நல் தவர்-தம் உள்ளம் நடு நின்ற நம்பரனே
உற்றவர்-தம் நல் துணைவா ஒற்றி அப்பா என் கருத்து
முற்றிட நின் சந்நிதியின் முன் நின்று வாழ்த்தேனோ.

#961.
வஞ்ச மடவார் மயக்கும் மயக்கு ஒழிய
நஞ்சம் அணி கண்டத்து நாதனே என்றென்று
உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய
கஞ்ச மலர்_அடிக்கே காதலுற்றுப் போற்றேனோ.

#962.
இன்னல் உலக இருள் நடையில் நாள்-தோறும்
துன்ன வரும் நெஞ்சத் துடுக்கு அழிய நல்லோர்கள்
உன்னலுறும் தெள் அமுதே ஒற்றி அப்பா என் வாய் உன்
றன் அடைவே பாடித் தழும்பேறக் காணேனோ.

#963.
பெண்மணியே என்று உலகில் பேதையரைப் பேசாது என்
கண்மணியே கற்பகமே கண் நுதலில் கொள் கரும்பே
ஒண் மணியே தேனே என்று ஒற்றி அப்பா உன்றனை நான்
பண் மணம் செய் பாட்டில் பரவித் துதியேனோ.

#964.
மானம்_இலார் நின் தாள் வழுத்தாத வன்_மனத்தார்
ஈனர் அவர்-பால் போய் இளைத்தேன் இளைப்பாற
ஊனம்_இலார் போற்றுகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய
ஞான அடியின் நிழல் நண்ணி மகிழேனோ.

#965.
கல்லார்க்கு இதம் கூறிக் கற்பு அழிந்து நில்லாமல்
எல்லார்க்கும் நல்லவனே என் அரசே நல் தருமம்
ஒல்லார் புரம் எரித்த ஒற்றி அப்பா உன் அடிக்கே
சொல்லால் மலர் தொடுத்துச் சூழ்ந்து அணிந்து வாழேனோ.

#966.
கற்பவற்றைக் கல்லாக் கடையரிடம் சென்று அவர் முன்
அற்ப அற்றை_கூலிக்கு அலையும் அலைப்பு ஒழிய
உற்பவத்தை நீக்குகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய
நல் பதத்தை ஏத்தி அருள் நல் நலம்-தான் நண்ணேனோ.

#967.
தந்தை தாய் மக்கள் மனை தாரம் எனும் சங்கடத்தில்
சிந்தை-தான் சென்று தியங்கி மயங்காமே
உந்தை என்போர் இல்லாத ஒற்றி அப்பா உன் அடிக் கீழ்
முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ.

#968.
பொய் ஒன்றே அன்றிப் புறம்பு ஒன்றும் பேசாத
வை ஒன்றும் தீ நாற்ற வாயார்க்கும் மேலானேன்
உய் என்று அருள் ஈயும் ஒற்றி அப்பா உன்னுடைய
மெய் ஒன்று நீற்றின் விளக்கம் அது பாரேனோ.

#969.
தூக்கமும் முன் தூங்கிய பின் சோறு இலையே என்னும் அந்த
ஏக்கமுமே அன்றி மற்று ஓர் ஏக்கம் இலா ஏழையனேன்
ஊக்கம்_உளோர் போற்றுகின்ற ஒற்றி அப்பா நின் அடிக் கீழ்
நீக்கம்_இலா ஆனந்த நித்திரை-தான் கொள்ளேனோ.

#970.
வாது புரிந்து ஈன மடவார் மதித்திடுவான்
போது நிதம் போக்கிப் புலம்பும் புலை நாயேன்
ஓதும் மறையோர் குலவும் ஒற்றி அப்பா ஊரனுக்காத்
தூதுசென்ற நின் தாள் துணைப் புகழைப் பாடேனோ.

#971.
பொன்_ஆசையோடும் புலைச்சியர்-தம் பேர்_ஆசை
மன்_ஆசை மன்னுகின்ற மண்_ஆசைப் பற்று அறுத்தே
உன் ஆசை கொண்டே என் ஒற்றி அப்பா நான் மகிழ்ந்து உன்
மின் ஆரும் பொன்_மேனி வெண் நீற்றைப் பாரேனோ.

#972.
கள் உண்ட நாய் போல் கடும் காம வெள்ளம் உண்டு
துள்ளுண்ட நெஞ்சத் துடுக்கு அடக்கி அன்பர்கள்-தம்
உள் உண்ட தெள் அமுதே ஒற்றி அப்பா உன்றனை நான்
வெள்ளுண்ட நந்தி விடை மீதில் காணேனோ.

#973.
பேராத காமப் பிணி கொண்ட நெஞ்சகனேன்
வாராத ஆனந்த வாழ்வு வந்து வாழ்ந்திடவே
ஓராதார்க்கு எட்டாத ஒற்றி அப்பா உன்னுடைய
நீர் ஆர் சடை மேல் நிலவொளியைக் காணேனோ.

#974.
வன் நெஞ்சப் பேதை மடவார்க்கு அழிந்து அலையும்
கல்_நெஞ்சப் பாவியன் யான் காதலித்து நெக்குருகி
உன் நெஞ்சத்து உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய
வெல் நஞ்சு அணி மிடற்றை மிக்கு வந்து வாழ்த்தேனோ.

#975.
புண்ணியம் ஓர்போதும் புரிந்து அறியாப் பொய்யவனேன்
எண்ணியதோர் எண்ணம் இடர் இன்றி முற்றியிட
உள் நிலவு நல் ஒளியே ஒற்றி அப்பா உன்னுடைய
தண் நிலவு தாமரைப் பொன்_தாள் முடியில் கொள்ளேனோ.

#976.
நன்று இது என்று ஓர்ந்தும் அதை நாடாது நல் நெறியைக்
கொன்று இது நன்று என்னக் குறிக்கும் கொடியவன் யான்
ஒன்றும் மனத்து உள் ஒளியே ஒற்றி அப்பா உன்னுடைய
வென்றி மழுப் படையின் மேன்மை-தனைப் பாடேனோ.

#977.
மண் கிடந்த வாழ்வின் மதி மயக்கும் மங்கையரால்
புண் கிடந்த நெஞ்சப் புலையேன் புழுக்கம் அற
ஒண் கிடந்த முத் தலை வேல் ஒற்றி அப்பா நாரணன்-தன்
கண் கிடந்த சேவடியின் காட்சி-தனைக் காணேனோ.

#978.
கூட்டு விக்குள் மேல் எழவே கூற்றுவன் வந்து ஆவி-தனை
வாட்டுவிக்கும் காலம் வரும் முன்னே எவ்வுயிர்க்கும்
ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றி அப்பா நீ உலகை
ஆட்டுவிக்கும் அம்பலத்து உன் ஆட்டம்-அதைப் பாரேனோ.

#979.
மின் ஒப்பாம் வாழ்வை வியந்து இடருள் வீழ்ந்து அலைந்தேன்
பொன் ஒப்பாய் தெய்வ மணப் பூ ஒப்பாய் என்னினுமே
உன் ஒப்பார் இல்லாத ஒற்றி அப்பா உன்னுடைய
தன் ஒப்பாம் வேணியின் மேல் சார் பிறையைப் பாரேனோ.

#980.
சீலம் அற நிற்கும் சிறியார் உறவிடை நல்
காலம் அறப் பேசிக் கழிக்கின்றேன் வானவர்-தம்
ஓலம் அற நஞ்சு அருந்தும் ஒற்றி அப்பா உன்னுடைய
நீல மணி மிடற்றின் நேர்மை-தனைப் பாரேனோ.

#981.
சீர் புகழும் மால் புகழும் தேவர் அயன்-தன் புகழும்
யார் புகழும் வேண்டேன் அடியேன் அடி நாயேன்
ஊர் புகழும் நல் வளம் கொள் ஒற்றி அப்பா உன் இதழித்
தார் புகழும் நல் தொழும்பு சார்ந்து உன்-பால் நண்ணேனோ.

#982.
ஆதவன்-தன் பல் இறுத்த ஐயற்கு அருள் புரிந்த
நாத அரனே என்று நாத் தழும்புகொண்டு ஏத்தி
ஓத வளம் மிக்க எழில் ஒற்றி அப்பா மண்ணிடந்தும்
மாதவன் முன் காணா மலர்_அடி-கண் வைகேனோ.

#983.
கல்லைப் புறம்கண்ட காய் மனத்துக் கைதவனேன்
தொல்லைப் பழ_வினையின் தோய்வு அகன்று வாய்ந்திடவே
ஒல்லைத் திரு_அருள் கொண்டு ஒற்றி அப்பா உன்னுடைய
தில்லைப் பொதுவின் திரு_நடனம் காணேனோ.

#984.
கடையவனேன் கல்_மனத்தேன் கைதவனேன் வஞ்ச
நடையவனேன் நாணிலியேன் நாய்க்கு_இணையேன் துன்பு ஒழிய
உடையவனே உலகு ஏத்தும் ஒற்றி அப்பா நின்-பால் வந்து
அடைய நின்று மெய் குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ.

#985.
வாதை மயல் காட்டும் மடவார் மல_குழியில்
பேதை என வீழ்ந்தே பிணி உழத்தே பேய்_அடியேன்
ஓதை கடற்கரை வாய் ஒற்றி அப்பா வாழ்த்துகின்றோர்
தீதை அகற்றும் உன்றன் சீர் அருளைச் சேரேனோ.

#986.
பொய்யர்க்கு உதவுகின்ற புன்மையினேன் வன்மை செயும்
வெய்யல் கிரிமி என மெய் சோர்ந்து இளைத்து அலைந்தேன்
உய்யற்கு அருள்செய்யும் ஒற்றி அப்பா உன் அடி சேர்
மெய்யர்க்கு அடிமைசெய்து உன் மென் மலர்_தாள் நண்ணேனோ.

@37. நற்றுணை விளக்கம்

#987.
எஞ்சவேண்டிய ஐம்புலப் பகையால் இடர்கொண்டு ஓய்ந்தனை என்னினும் இனி நீ
அஞ்சவேண்டியது என்னை என் நெஞ்சே அஞ்சல் அஞ்சல் காண் அரு_மறை நான்கும்
விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்-கண் அமுதா
நஞ்சை வேண்டிய நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

#988.
காவின்_மன்னவன் எதிர்க்கினும் காமன் கணைகள் ஏவினும் காலனே வரினும்
பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே
ஓவு இல் மா துயர் எற்றினுக்கு அடைந்தாய் ஒன்றும் அஞ்சல் நீ உளவு அறிந்திலையோ
நாவின்_மன்னரைக் கரை-தனில் சேர்த்த நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

#989.
நீட்டமுற்றதோர் வஞ்சக மடவார் நெடும் கண் வேல் பட நிலையது கலங்கி
வாட்டமுற்றனை ஆயினும் அஞ்சேல் வாழி நெஞ்சமே மலர்_கணை தொடுப்பான்
கோட்டமுற்றதோர் நிலையொடு நின்ற கொடிய காமனைக் கொளுவிய நுதல் தீ
நாட்டமுற்றதோர் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

#990.
எம்மை வாட்டும் இப் பசியினுக்கு எவர்-பால் ஏகுவோம் என எண்ணலை நெஞ்சே
அம்ம ஒன்று நீ அறிந்திலை போலும் ஆல_கோயிலுள் அன்று சுந்தரர்க்காய்
செம்மை மா மலர்ப் பதங்கள் நொந்திடவே சென்று சோறு இரந்து அளித்து அருள்செய்தோன்
நம்மை ஆளுடை நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

#991.
ஓடுகின்றனன் கதிரவன் அவன் பின் ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்
வீடுகின்றன என் செய்வோம் இனி அ வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே
வாடுகின்றனை அஞ்சலை நெஞ்சே மார்க்கண்டேயர்-தம் மாண்பு அறிந்திலையோ
நாடுகின்றவர் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

#992.
மலங்கும் மால் உடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே
கலங்குறேல் அருள் திரு_வெண் நீறு எனது கரத்து இருந்தது கண்டிலை போலும்
விலங்குறாப் பெரும் காம நோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா
நலம் கொள் செஞ்சடை_நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

#993.
மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான் மற்றை வானவர் முற்றிலும் அழிவார்
ஏலும் நல் துணை யார் நமக்கு என்றே எண்ணிநிற்றியோ ஏழை நீ நெஞ்சே
கோலும் ஆயிரம் கோடி அண்டங்கள் குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும்
நாலு மா மறைப் பரம்பொருள் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

#994.
கந்த வண்ணமாம் கமலன் மால் முதலோர் கண்டிலார் எனில் கைலை அம் பதியை
எந்தவண்ணம் நாம் காண்குவது என்றே எண்ணிஎண்ணி நீ ஏங்கினை நெஞ்சே
அந்த வண்ண வெள் ஆனை மேல் நம்பி அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும்
நம்-தம் வண்ணமாம் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

#995.
வீர மாந்தரும் முனிவரும் சுரரும் மேவுதற்கொணா வெள்ளியங்கிரியைச்
சேர நாம் சென்று வணங்கும் வாறு எதுவோ செப்பு என்றே எனை நச்சிய நெஞ்சே
ஊரனாருடன் சேரனார் துரங்கம் ஊர்ந்து சென்ற அ உளவு அறிந்திலையோ
நாரம் ஆர் மதிச் சடையவன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

#996.
தலங்கள்-தோறும் சென்று அ விடை அமர்ந்த தம்பிரான் திரு_தாளினை வணங்கி
வலம்கொளும்படி என்னையும் கூட வா என்கின்றனை வாழி என் நெஞ்சே
இலங்கள்-தோறும் சென்று இரந்திடும் அவனே என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு
நலம் கொளும் துணை யாது எனில் கேட்டி நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

@38 சிவபுண்ணியத் தேற்றம்

#997
கடவுள் நீறு இடாக் கடையரைக் கண்காள் கனவிலேனும் நீர் காணுதல் ஒழிக
அட உள் மாசு தீர்த்து அருள் திரு_நீற்றை அணியும் தொண்டரை அன்புடன் காண்க
தடவும் இன் இசை வீணை கேட்டு அரக்கன்-தனக்கு வாளொடு நாள் கொடுத்தவனை
நடவும் மால் விடை ஒற்றியூர் உடைய நாதன்-தன்னை நாம் நண்ணுதல் பொருட்டே

#998
போற்றி நீறு இடாப் புலையரைக் கண்டால் போக போக நீர் புலம் இழந்து அவமே
நீற்றின் மேனியர்-தங்களைக் கண்டால் நிற்க நிற்க அ நிமலரைக் காண்க
சாற்றின் நல் நெறி ஈது காண் கண்காள் தமனியப் பெரும் தனு எடுத்து எயிலைக்
காற்றி நின்ற நம் கண் நுதல் கரும்பைக் கைலை ஆளனைக் காணுதல் பொருட்டே

#999
தெய்வ நீறு இடாச் சிறியரைக் கண்டால் சீறு பாம்பு கண்டு என ஒளித்து ஏக
சைவ நீறு இடும் தலைவரைக் கண்காள் சார்ந்து நின்று நீர் தனி விருந்து உண்க
செய்பவன் செயலும் அவை உடனே செய்விப்பானுமாய்த் தில்லை அம்பலத்துள்
உய்வதே தரக் கூத்து உகந்து ஆடும் ஒருவன் நம் உளம் உற்றிடல் பொருட்டே

#1000
தூய நீறு இடாப் பேயர்கள் ஒன்று சொல்லுவாரெனில் புல்லென அடைக்க
தாய நீறு இடும் நேயர் ஒன்று உரைத்தால் தழுவியே அதை முழுவதும் கேட்க
சேய நல் நெறி அணித்தது செவிகாள் சேரமானிடைத் திரு_முகம் கொடுத்து
ஆய பாணற்குப் பொன் பெற அருளும் ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே

#1001.
நல்ல நீறு இடா நாய்களின் தேகம் நாற்றம் நேர்ந்திடில் நண் உயிர்ப்பு அடக்க
வல்ல நீறு இடும் வல்லவர் எழில் மெய் வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
சொல்ல அரும் பரிமளம் தரும் மூக்கே சொல்லும் வண்ணம் இத் தூய் நெறி ஒன்றாம்
அல்லல் நீக்கி நல் அருள்_கடல் ஆடி ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே.

#1002.
அருள்செய் நீறு இடார் அமுது உனக்கு இடினும் அ மலத்தினை அருந்துதல் ஒழிக
தெருள் கொள் நீறு இடும் செல்வர் கூழ் இடினும் சேர்ந்து வாழ்த்தி அத் திரு அமுது உண்க
இருள் செய் துன்பம் நீத்து என்னுடை நாவே இன்ப நல் அமுது இனிது இருந்து அருந்தி
மருள் செய் யானையின் தோல் உடுத்து என்னுள் வதியும் ஈசன்-பால் வாழுதல் பொருட்டே.

#1003.
முத்தி நீறு இடார் முன்கையால் தொடினும் முள் உறுத்தல் போல் முனிவுடன் நடுங்க
பத்தி நீறு இடும் பத்தர்கள் காலால் பாய்ந்து தைக்கினும் பரிந்து அதை மகிழ்க
புத்தி ஈது காண் என்னுடை உடம்பே போற்றலார் புரம் பொடிபட நகைத்தோன்
சத்தி வேல் கரத் தனயனை மகிழ்வோன்-தன்னை நாம் என்றும் சார்ந்திடல் பொருட்டே.

#1004.
இனிய நீறு இடா ஈன நாய்ப் புலையர்க்கு எள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக
இனிய நீறு இடும் சிவன்_அடியவர்கள் எம்மைக் கேட்கினும் எடுத்து அவர்க்கு ஈக
இனிய நல் நெறி ஈது காண் கரங்காள் ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்கு
இனிய மால் விடை ஏறிவந்து அருள்வோன் இடம் கொண்டு எம் உளே இசைகுதல் பொருட்டே.

#1005.
நாட நீறு இடா மூடர்கள் கிடக்கும் நரக இல்லிடை நடப்பதை ஒழிக
ஊடல் நீக்கும் வெண் நீறிடும் அவர்கள் உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க
கூட நல் நெறி ஈது காண் கால்காள் குமரன் தந்தை எம் குடி முழுது ஆள்வோன்
ஆட அம்பலத்து அமர்ந்தவன் அவன்றன் அருள்_கடல் படிந்து ஆடுதல் பொருட்டே.

#1006.
நிலைகொள் நீறு இடாப் புலையரை மறந்தும் நினைப்பது என்பதை நெஞ்சமே ஒழிக
கலை கொள் நீறு இடும் கருத்தரை நாளும் கருதி நின்று உளே கனிந்து நெக்குருக
மலை கொள் வில்லினான் மால் விடை உடையான் மலர் அயன் தலை மன்னிய கரத்தான்
அலை கொள் நஞ்சு அமுது ஆக்கிய மிடற்றான் அவனை நாம் மகிழ்ந்து அடைகுதல் பொருட்டே.

@39 நெடுமொழி வஞ்சி

#1007
வார்க் கொள் மங்கையர் முலை மலைக்கு ஏற்றி மறித்தும் அங்கு அவர் மடுவினில் தள்ளப்
பார்க்கின்றாய் எனைக் கெடுப்பதில் உனக்குப் பாவமே அலால் பலன் சிறிது உளதோ
ஈர்க்கின்றாய் கடும் காமமாம் புலையா இன்று சென்று நான் ஏர்பெறும் ஒற்றி
ஊர்க்குள் மேவிய சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

#1008.
கொடிய மாதர்கள் இடையுறும் நரகக் குழியில் என்றனைக் கொண்டுசென்று அழுத்திக்
கடிய வஞ்சனையால் எனைக் கலக்கம் கண்ட பாவியே காம_வேட்டுவனே
இடிய நெஞ்சகம் இடர் உழந்து இருந்தேன் இன்னும் என்னை நீ ஏன் இழுக்கின்றாய்
ஒடிவு இல் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

#1009.
பேதை மாதர்-தம் மருங்கிடை ஆழ்ந்த பிலத்தில் என்றனைப் பிடித்து அழ வீழ்த்தி
வாதையுற்றிடவைத்தனை ஐயோ மதி இல் காமமாம் வஞ்சக முறியா
ஏதம் நீத்து அருள் அடியர்-தம் சார்வால் எழுகின்றேன் எனை இன்னும் நீ இழுக்கில்
ஓதும் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

#1010.
கோவம் என்னும் ஓர் கொலைப் புலைத் தலைமைக் கொடியனே எனைக் கூடி நீ நின்ற
பாவ வன்மையால் பகை அடுத்து உயிர் மேல் பரிவு இலாமலே பயன் இழந்தனன் காண்
சாவ நீ இலதேல் எனை விடுக சலம்செய்வாயெனில் சதுர்_மறை முழக்கம்
ஓவு இல் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே

#1011.
சார்ந்த லோபமாம் தயை_இலி ஏடா தாழ்ந்து இரப்பவர்-தமக்கு அணு-அதனுள்
ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய் இரக்கின்றோர் தரின் அது கொளற்கு இசைவாய்
சோர்ந்திடாது நான் துய்ப்பவும் செய்யாய் சுகம் இலாத நீ தூர நில் இன்றேல்
ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

#1012.
மோகம் என்னும் ஓர் மூடரில் சிறந்தோய் முடிவு இலாத் துயர் மூல இல் ஒழுக்கில்
போகம் என்னும் ஓர் அளற்றிடை விழவும் போற்று மக்கள் பெண்டு அன்னை தந்தையராம்
சோக_வாரியில் அழுந்தவும் இயற்றிச் சூழ்கின்றாய் எனைத் தொடர்ந்திடேல் தொடரில்
ஓகை ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

#1013.
மதம் எனும் பெரு மத்தனே எனை நீ வருத்தல் ஓதினால் வாயினுக்கு அடங்கா
சிதம் எனும் பரன் செயலினை அறியாய் தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம்
இதம் அறிந்தனம் எமக்கு இனி ஒப்பார் யாவர் என்று எனை இழிச்சினை அடியார்க்கு
உதவும் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

#1014.
அமைவு அறிந்திடா ஆணவப் பயலே அகில கோடியும் ஆட்டுகின்றவன் காண்
எமை நடத்துவோன் ஈது உணராமல் இன்று நாம் பரன் இணை அடி தொழுதோம்
கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம் கனிகின்றோம் எனக் கருதிட மயக்கேல்
உமையன் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

#1015.
கருமையாம் அகங்கார மர்க்கடவா கடையனே உனைக் கலந்ததனாலே
அருமையாக நாம் பாடினோம் கல்வி அற அறிந்தனம் அருளையும் அடைந்தோம்
இருமை இன்பமும் பெற்றனம் என்றே எனை மதித்து நான் இழிவடைந்தனன் காண்
ஒருமை ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

#1016.
வெண்மை சேர் அகங்காரமாம் வீணா விடுவிடு என்றனை வித்தகம் உணராய்
தண்மை இன்று இதற்கு இது எனத் துணிந்து என்றனையும் சாய்ப்பது தகவு என நினைத்தாய்
அண்மை நின்றிடேல் சேய்மை சென்று அழி நீ அன்றி நிற்றியேல் அரி முதல் ஏத்தும்
உண்மை ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

@40. அவலத் தழுங்கல்

#1017
ஊதியம் பெறா ஒதியனேன் மதி போய் உழலும் பாவியேன் உண்மை ஒன்று அறியேன்
வாது இயம்புறும் வஞ்சகருடனே வாய் இழுக்குற வன்மைகள் பேசி
ஆதி எம்பெருமான் உனை மறந்தேன் அன்பு இலாத என் வன்பினை நினைக்கில்
தீது இயம்பிய நஞ்சமும் கலங்கும் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

#1018.
கல் இகந்தவன் நெஞ்சகக் கொடியேன் கயவர்-தங்களுள் கலந்து நாள்-தோறும்
மல் இகந்த வாய் வாதமிட்டு உலறி வருந்துகின்ற துன்மார்க்கத்தை நினைக்கில்
இல் இகந்த என் மீது எனக்கே-தான் இகலும் கோபமும் இருக்கின்றதானால்
தில்லையாய் உன்றன் உளத்துக்கு என் ஆமோ திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

#1019.
கைதவத்தர்-தம் களிப்பினில் களித்தே காலம் போக்கினேன் களைகண் மற்று அறியேன்
செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன் செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே
எய் தவத் திரு_அருள் எனக்கு இரங்கி ஈயில் உண்டு மற்று இன்று எனில் இன்றே
செய் தவத் திரு_மடந்தையர் நடனம் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

#1020.
அழுத_பிள்ளைக்கே பால் உணவு அளிப்பாள் அன்னை என்பர்கள் அழ வலி இல்லாக்
கொழுது நேர் சிறு குழவிக்கும் கொடுப்பாள் குற்றம் அன்று அது மற்று அவள் செயலே
தொழுது நின் அடி துதிக்கின்றோர்க்கெனவே துட்டனேனுக்கும் சூழ்ந்து அருள் செயலாம்
செழுது மாதவி மலர் திசை மணக்கத் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

#1021.
உள்ளியோ என அலறி நின்று ஏத்தி உருகி நெக்கிலா உளத்தன் யான் எனினும்
வள்ளியோய் உனை மறக்கவும் மாட்டேன் மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன்
வெள்ளியோ எனப் பொன் மகிழ் சிறக்க விரைந்து மும்மதில் வில் வளைத்து எரித்தோய்
தெள்ளியோர் புகழ்ந்து அரகர என்னத் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

#1022.
விருப்பு_இலேன் திருமால் அயன் பதவி வேண்டிக்கொள்க என விளம்பினும் கொள்ளேன்
மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன்
ஒருப்படாத இ என்னளவு இனி உன் உள்ளம் எப்படி அப்படி அறியேன்
திரு_புயாசல மன்னர் மா தவத்தோர் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

#1023.
நிலையிலா உலகியல் படும் மனத்தை நிறுத்திலேன் ஒரு நியமமும் அறியேன்
விலையிலா மணியே உனை வாழ்த்தி வீட்டு நல் நெறிக் கூட்டு என விளம்பேன்
அலையில் ஆர்ந்து எழும் துரும்பு என அலைந்தேன் அற்பனேன் திரு_அருள் அடைவேனே
சிலையில் ஆர் அழல் கணை தொடுத்தவனே திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

#1024.
காயம் என்பது ஆகாயம் என்று அறியேன் கலங்கினேன் ஒரு களைகணும் இல்லேன்
சேய நல் நெறி அணித்து எனக் காட்டும் தெய்வ நின் அருள் திறம் சிறிது அடையேன்
தூய நின் அடியவருடன் கூடித் தொழும்புசெய்வதே சுகம் எனத் துணியேன்
தீயனேன்-தனை ஆள்வது எவ்வாறோ திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

#1025.
புல் நுனிப்படும் துளியினும் சிறிய போகம் வேட்டு நின் பொன்_அடி மறந்தேன்
என் இனிப் படும் வண்ணம் அஃது அறியேன் என் செய்கேன் எனை என் செயப் புகுகேன்
மின்னினில் பொலி வேணி அம் பெருமான் வேறு அலேன் எனை விரும்பல் உன் கடனே
தென் நனிப்படும் சோலை சூழ்ந்து ஓங்கித் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

#1026.
அடியனேன்_அலன் என்னினும் அடியேன் ஆக நின்றனன் அம்மை இம்மையினும்
கடியனேன் பிழை யாவையும் பொறுக்கக் கடன் உனக்கு அலால் கண்டிலன் ஐயா
பொடி கொள் மேனி எம் புண்ணிய முதலே புன்னை அம் சடைப் புங்கவர் ஏறே
செடியர் தேடுறாத் திவ்விய ஒளியே திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

@41. திருவிண்ணப்பம்

#1027.
சழக்கு இருந்தது என்னிடத்தில் ஆயினும் நீர் தந்தை ஆதலின் சார்ந்த நல் நெறியில்
பழக்கிவைப்பது தேவரீர்க்கு உரிய பண்பு அன்றோ எனைப் பரிந்திலீரானால்
வழக்கு இருப்பது இங்கு உமக்கும் என்றனக்கும் வகுத்துக் கூறுதல் மரபு மற்று அன்றால்
புழைக்கை மா உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

#1028. .
அழுது நெஞ்சு அயர்ந்து உமை நினைக்கின்றேன் ஐய நீர் அறியாததும் அன்றே
கழுது துன்றிய காட்டகத்து ஆடும் கதி_இலீர் எனக் கழறினன் அல்லால்
பழுது பேசினது ஒன்று இலை ஒற்றிப் பதியில் வாழ் படம்பக்க நாயகரே
பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

#1029.
முன்னை மா தவ முயற்சி ஒன்று இல்லா மூடனேன்-தனை முன் வரவழைத்துப்
பின்னை ஒன்றும் வாய்ப் பேச்சிலீரானால் பித்தர் என்று உமைப் பேசிடலாமே
என்னை நான் பழித்திடுகின்றதல்லால் இகழ்கிலேன் உமை எழில் ஒற்றி உடையீர்
புன்னை அம் சடையீர் எனை_உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

#1030. .
வன்மை பேசிய வன் தொண்டர் பொருட்டாய் வழக்குப் பேசிய வள்ளல் நீர் அன்றோ
இன்மையாளர் போல் வலிய வந்திடினும் ஏழையாம் இவன் என்று ஒழித்திட்டால்
தன்மை அன்று அது தருமமும் அன்றால் தமியனேன் இன்னும் சாற்றுவது என்னே
பொன்மை அம் சடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

#1031. .
உறங்குகின்றதும் விழிப்பதும் மகிழ்வாய் உண்ணுகின்றதும் உடுப்பதும் மயக்குள்
இறங்குகின்றதும் ஏறுகின்றதுமாய் எய்க்கின்றேன் மனம் என்னினும் அடியேன்
அறம் கொள் நும் அடி அரண் என அடைந்தேன் அயர்வு தீர்த்து எனை ஆட்கொள நினையீர்
புறம் கொள் காட்டகத்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம் வழி எதுவோ.

#1032. .
கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால் கயவராயினும் கசக்கும் என்று உரையார்
அரும்பின் கட்டிள முலை உமை மகிழும் ஐய நீர் உமது அருள் எனக்கு அளிக்க
இரும்பின் கட்டி நேர் நெஞ்சினேன் எனினும் ஏற்று வாங்கிடாது இருந்தது உண்டேயோ
பொரும்பின் கட்டு உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

#1033. .
விருப்பு நின்றதும் பத_மலர் மிசை அ விருப்பை மாற்றுதல் விரகு மற்று அன்றால்
கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும் கடமை நீங்குறார் உடமையின்றேனும்
நெருப்பு நும் உரு ஆயினும் அருகில் நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால்
பொருப்பு வில்_உடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

#1034. .
கொடிய நஞ்சு அமுது ஆக்கிய உமக்கு இக் கொடியனேனை ஆட்கொள்ளுதல் அரிதோ
அடியர்-தம் பொருட்டு அடிபடுவீர் எம் ஐய நும் அடிக்கு ஆட்பட விரைந்தேன்
நெடிய மால் அயன் காண்கிலரேனும் நின்று காண்குவல் என்று உளம் துணிந்தேன்
பொடிய நீறு அணிவீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

#1035. .
வினையினால் உடல் எடுத்தனனேனும் மேலை_நாள் உமை விரும்பிய அடியேன்
எனை இன்னான் என அறிந்திலிரோ நீர் எழுமைச் செய்கையும் இற்று என அறிவீர்
மனையினால் வரும் துயர் கெட உமது மரபு வேண்டியே வந்து நிற்கின்றேன்
புனையினால் அமர்ந்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

#1036.
பிழை புரிந்தனன் ஆகிலும் உமது பெருமை நோக்கில் அப் பிழை சிறிது அன்றோ
மழை புரிந்திடும் வண் கையை மாற்ற மதிக்கின்றோர் எவர் மற்று இலை அது போல்
உழை புரிந்து அருள்வீர் எனில் தடுப்பார் உம்பர் இம்பரில் ஒருவரும் இலை காண்
புழை புரிந்த கை உலவு ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

@42. நெஞ்சறிவுறூஉ

#1037.
என்னது அன்று காண் வாழ்க்கையுள் சார்ந்த இன்ப_துன்பங்கள் இரு_வினைப் பயனால்
மன்னும் மும்மல மடம் செறி மனனே வாழ்தியோ இங்கு வல்_வினைக்கு இடமாய்
உன்ன நல் அமுதாம் சிவபெருமான் உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க்கு இன்றே
இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

#1038.
துன்ப வாழ்வினைச் சுகம் என மனனே சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்து நிற்கின்றாய்
வன்பு-அதாகிய நீயும் என்னுடனே வருதியோ அன்றி நிற்றியோ அறியேன்
ஒன்பதாகிய உரு உடைப் பெருமான் ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க்கு இன்றே
இன்ப வாழ்வு உறச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

#1039.
ஆட்டுகின்றதற்காக அம்பலத்துள் ஆடுகின்ற சேவடி_மலர் நினையாய்
வாட்டுகின்றனை வல்_வினை மனனே வாழ்ந்து நீ சுகமாய் இரு கண்டாய்
கூட்டுகின்ற நம் பரசிவன் மகிழ்வில் குலவும் ஒற்றியூர்க் கோயில் சூழ்ந்து இன்பம்
ஈட்டுகின்றதற்கு ஏகின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

#1040.
வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே வாரிக்கொண்டு இங்கு வாழ்ந்திரு மனனே
நஞ்சம் ஆயினும் உண்குவை நீ-தான் நானும் அங்கு அதை நயப்பது நன்றோ
தஞ்சம் என்றவர்க்கு அருள்தரும் பெருமான் தங்கும் ஒற்றியூர்த் தலத்தினுக்கு இன்றே
எஞ்சல் இன்றி நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

#1041.
உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே உப்பிலிக்கு உவந்து உண்ணுகின்றவர் போல்
வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி வெளுக்கின்றாய் உனை வெறுப்பதில் என்னே
தண்மை மேவிய சடை உடைப் பெருமான் சார்ந்த ஒற்றி அம் தலத்தினுக்கு இன்றே
எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

#1042.
நீடும் ஐம்பொறி நெறி நடந்து உலக நெறியில் கூடி நீ நினைப்பொடு மறப்பும்
நாடும் மாயையில் கிடந்து உழைக்கின்றாய் நன்று நின் செயல் நின்றிடு மனனே
ஆடும் அம்பல_கூத்தன் எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயத்து இன்றே
ஈடு நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

#1043.
கூறும் ஓர் கணத்து எண்ணுறும் நினைவு கோடிகோடியாய்க் கொண்டு அதை மறந்து
மாறு மாயையால் மயங்கிய மனனே வருதி அன்று எனில் நிற்றி இவ்வளவில்
ஆறு மேவிய வேணி எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்-பால்
ஈறு_இல் இன்புறச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

#1044.
யாது கண்டனை அதனிடத்தெல்லாம் அணைகின்றாய் அவமாக நிற்கு ஈந்த
போது போக்கினையே இனி மனனே போதி போதி நீ போம்_வழி எல்லாம்
கோது நீக்கி நல் அருள்தரும் பெருமான் குலவும் ஒற்றியூர்க் கோயிலுக்கு இன்றே
ஏதம் ஓட நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

#1045.
விச்சை வேண்டினை வினை உடை மனனே மேலை_நாள் பட்ட வேதனை அறியாய்
துச்சை நீ படும் துயர் உனக்கு அல்லால் சொல் இறந்த நல் சுகம் பலித்திடுமோ
பிச்சை எம்பெருமான் என நினையேல் பிறங்கும் ஒற்றி அம் பெருந்தகை அவன்-பால்
இச்சைகொண்டு நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

#1046.
தூக்கம் உற்றிடும் சோம்பு உடை மனனே சொல்வது என்னை ஓர் சுகம் இது என்றே
ஆக்கமுற்று நான் வாழ நீ நரகில் ஆழ நேர்ந்திடும் அன்று கண்டு அறி காண்
நீக்கமுற்றிடா நின்மலன் அமர்ந்து நிகழும் ஒற்றியூர் நியமத்திற்கு இன்றே
ஏக்கம் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

@43. பிரசாத விண்ணப்பம்

#1047.
பசை இலாக் கருங்கல் பாறை நேர் மனத்துப் பதகனேன் படிற்று உரு அகனேன்
வசை_இலார்க்கு அருளும் மாணிக்க மணியே வள்ளலே நினைத் தொழல் மறந்து
நசை இலா மலம் உண்டு ஓடுறும் கொடிய நாய் என உணவு கொண்டு உற்றேன்
தசை எலாம் நடுங்க ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

#1048.
அன்னை போன்று அடியர்க்கு அருத்தியில் அருத்தும் அப்ப நின் அடியினை காணாது
என்னையோ மலம் உண்டு உழன்றிடும் பன்றி என்ன உண்டு உற்றனன் அதனால்
புன்னை அம் சடை எம் புண்ணிய ஒளியே பூத_நாயக என்றன் உடலம்
தன்னை நீ அமர்ந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

#1049.
கண்ணினால் உனது கழல் பதம் காணும் கருத்தினை மறந்து பாழ் வயிற்றை
மண்ணினால் நிறைத்தல் என உணவு அருந்தி மலம் பெற வந்தனன் அதனால்
எண்ணினால் அடங்கா எண்_குண_குன்றே இறைவனே நீ அமர்ந்து அருளும்
தண்ணினால் ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

#1050.
நின் முனம் நீல_கண்டம் என்று ஓதும் நெறி மறந்து உணவுகொண்டு அந்தோ
பொன் முனம் நின்ற இரும்பு என நின்றேன் புலையனேன் ஆதலால் இன்று
மின் முனம் இலங்கும் வேணி அம் கனியே விரி கடல் தானை சூழ் உலகம்
தன் முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

#1051.
குழிக்கு மண் அடைக்கும் கொள்கை போல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால்
செழிக்கும் உன் திருமுன் நீல_கண்டம்-தான் செப்புதல் மறந்தனன் அதனால்
விழிக்குள் நின்று இலங்கும் விளங்கு ஒளி மணியே மென் கரும்பு ஈன்ற வெண் முத்தம்
தழிக்கொளும் வயல் சூழ் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

#1052.
கமரிடை மல நீர் கவிழ்த்தல் போல் வயிற்றுக் கடன்கழித்திட்டனன் அல்லால்
அமரிடைப் புரம் மூன்று எரித்து அருள் புரிந்த ஐயனே நினைத் தொழல் மறந்தேன்
சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே
தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

#1053.
அரு_மருந்து_அனையாய் நின் திருமுன் போந்து அரகர எனத் தொழல் மறந்தே
இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த இயல்புற உண்டனன் அதனால்
கரு மருந்து அனைய அஞ்செழுத்து ஓதும் கருத்தர் போல் திருத்தம்-அது ஆகத்
தருமம் நின்று ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

#1054.
கண் நுதல் கரும்பே நின் முனம் நீல_கண்டம் என்று ஓதுதல் மறந்தே
உண்ணுதற்கு இசைந்தே உண்டு பின் ஒதி போல் உன் முனம் நின்றனன் அதனால்
நண்ணுதல் பொருட்டு ஓர் நான்முகன் மாயோன் நாடிட அடியர்-தம் உள்ளத்து
அண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

#1055.
கற்றவர்க்கு இனிதாம் கதி அருள் நீல_கண்டம் என்று உன் திருமுன்னர்
சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தைத் துருத்தியில் அடைத்தனன் அதனால்
செற்றம் அற்று உயர்ந்தோர் சிவசிவ சிவ மாதேவ ஓம் அரகர எனும் சொல்
சற்றும் விட்டு அகலா ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

#1056.
முறைப்படி நினது முன்பு நின்று ஏத்தி முன்னிய பின்னர் உண்ணாமல்
சிறை படி_வயிற்றில் பொறைப்பட ஒதி போல் சென்று நின் முன்னர் உற்றதனால்
கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகு சீர்
தறை படர்ந்து ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

@44. ஆடலமுதப் பத்து

#1057.
சிந்தை நொந்துநொந்து அயர்கின்றேன் சிவனே செய்வது ஓர்ந்திலேன் தீ_குணம்_உடையேன்
வந்து நின் அடிக்கு ஆட்செய என்றால் வஞ்ச நெஞ்சம் என் வசம் நின்றது இலையே
எந்தை நின் அருள் உண்டு எனில் உய்வேன் இல்லை என்னில் நான் இல்லை உய்ந்திடலே
அந்தி வான் நிறத்து ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

#1058.
மாய நெஞ்சமோ நின் அடி வழுத்தா வண்ணம் என்றனை வலிக்கின்றது அதனால்
தீயன் ஆயினேன் என் செய்வேன் சிவனே திரு_அருட்கு நான் சேயனும் ஆனேன்
காய வாழ்க்கையில் காமம் உண்டு உள்ளம் கலங்குகின்றனன் களைகண் மற்று அறியேன்
ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

#1059.
உன்னை உன்னி நெக்குருகி நின்று ஏத்த உள்ளம் என் வசம் உற்றதின்றேனும்
என்னை ஆளுதல் உன் கடன் அன்றேல் இரக்கம் என்பது உன்னிடத்து இலை அன்றோ
முன்னை வல்_வினை முடித்திடில் சிவனே மூடனேனுக்கு முன் நிற்பது எவனோ
அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

#1060.
என்ன நான் சொலி நிறுத்தினும் நில்லாது ஏகுகின்றது இ ஏழையேன் மனம்-தான்
உன்னது இன்னருள் ஒருசிறிது உண்டேல் ஒடுக்கி நிற்பனால் உண்மை மற்று இன்றேல்
இன்னது என்று அறியாமல் இருளில் இடர்கொள்வேன் அன்றி என் செய்வேன் சிவனே
அன்னது உன் செயல் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

#1061.
பாவி நெஞ்சம் என்-பால் இராது ஓடிப் பாவையார் மயல் படிந்து உழைப்பதனால்
சேவியாத என் பிழை பொறுத்து ஆளும் செய்கை நின்னதே செப்பல் என் சிவனே
காவி நேர் விழி மலை_மகள் காணக் கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள்
ஆவி ஈந்து அருள் ஒற்றி எம் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

#1062.
மூட நெஞ்சம் என் மொழி வழி நில்லா மோக_வாரியின் முழுகுகின்றது காண்
தேட என் வசம் அன்றது சிவனே திரு_அருள்_கடல் திவலை ஒன்று உறுமேல்
நாட நாடிய நலம் பெறும் அதனால் நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும்
ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப்புலியூர் அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

#1063.
கலங்குகின்ற என் கண் உனது அருள் ஓர் கடுகின் எல்லை-தான் கலந்திடுமானால்
விலங்குகின்ற என் நெஞ்சம் நின்றிடுமால் வேறு நான் பெறும் வேட்கையும் இன்றால்
மலங்குகின்றதை மாற்றுவன் உனது மலர்ப் பொன்_தாள் அலால் மற்று இலன் சிவனே
அலங்குகின்ற சீர் ஒற்றியூர் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

#1064.
மறைவது என்னையும் மறைப்பது பொல்லா வஞ்ச நெஞ்சன் என் வசப்படல் இலை காண்
இறைவ நின் அருட்கு என் செய்வோம் எனவே எண்ணிஎண்ணி நான் ஏங்குகின்றனனால்
உறைவது உன் அடி_மலர் அன்றி மற்றொன்று உணர்ந்திலேன் இஃது உண்மை நீ அறிதி
அறைவது என்ன நான் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

#1065.
ஒரு கணப்பொழுதேனும் நின் அடியை உள்கிடாது உளம் ஓடுகின்றதனால்
திருகு அணப்பெறும் தீயனேன் செய்யும் திறம் அறிந்திலேன் செப்பல் என் சிவனே
வரு கணத்து உடல் நிற்குமோ விழுமோ மாயுமோ என மயங்குவேன்-தன்னை
அருகு அணைத்து அருள் ஒற்றியூர் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

#1066.
யாது நின் கருத்து அறிந்திலேன் மனமோ என் வசப்படாது இருத்தலை உரைத்தேன்
தீது செய்யினும் பொறுத்து எனைச் சிவனே தீய வல்_வினைச் சேர்ந்திடா வண்ணம்
பாதுகாப்பது உன் பரம் இன்றேல் பலவாய்ப் பகர்தல் என்ன காண் பழி வரும் உனக்கே
ஆது காண்டி எம் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

@45.வழிமொழி விண்ணப்பம்

#1067.
நீலனேன் கொடும் பொய்யலது உரையா நீசன் என்பது என் நெஞ்சு அறிந்தது காண்
சால ஆயினும் நின் கழல் அடிக்கே சரண்புகுந்திடில் தள்ளுதல் வழக்கோ
ஆலம் உண்ட நின் தன்மை மாறுவதேல் அகில கோடியும் அழிந்திடும் அன்றே
சீலம் மேவிய ஒற்றி அம் பரனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே.

#1068.
கண்ணுள் மா மணியே அருள் கரும்பே கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே
எண்ணுள் உட்படா இன்பமே என்றென்று எந்தை நின்றனை ஏத்திலன் எனினும்
மண்ணுள் மற்று யான் வழிவழி அடியேன் மாயம் அன்று இது உன் மனம் அறிந்ததுவே
திண்ணம் ஈந்து அருள் ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே.

#1069.
நல்லன்_அல்லன் நான் ஆயினும் சிறியேன் நான் அறிந்ததோ நாடு அறிந்தது காண்
சொல்ல வாய் இலை ஆயினும் எனை நீ தொழும்புகொண்டிடில் துய்யனும் ஆவேன்
வல்ல உன் கருத்து அறிந்திலேன் மனமே மயங்குகின்றது யான் வாடுகின்றனன் காண்
செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே.

#1070.
இரக்கம் என்பது என்னிடத்து இலை என நீ இகழ்தியேல் அஃது இயல்பு மற்று அடியேன்
பரக்க நின் அருட்கு இரக்கமே அடைந்தேன் பார்த்திலாய்-கொலோ பார்த்தனை எனில் நீ
கரப்பது உன்றனக்கு அழகு அன்று கண்டாய் காள_கண்டனே கங்கை_நாயகனே
திரக் கண்_நெற்றியாய் ஒற்றியாய்த் தில்லைத் திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே.

#1071.
யாது நான் பிழைசெய்யினும் பொறுப்பான் எந்தை எம் இறை என்று வந்து அடைந்தேன்
தீது நோக்கி நீ செயிர்த்திடில் அடியேன் செய்வது என்னை நின் சித்தம் இங்கு அறியேன்
போது போகின்றதன்றி என் மாயப் புணர்ச்சி யாதொன்றும் போகின்றதிலை காண்
சீத வார் பொழில் ஒற்றி அம் பரனே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே.

#1072.
தாய்க்கும் தந்தைக்கும் நிகரும் நின் இரு தாள் சார்ந்த மேலவர்-தமைத் தொழுது ஏத்தா
நாய்க்கும் நாய் எனும் பாவியேன் பிழையை நாடி நல் அருள் நல்கிடாதிருந்தால்
ஏய்க்கும் மால் நிறக் காலன் வந்திடும் போது என்-கொலாம் இந்த எண்ணம் என் மனத்தைத்
தீய்க்குது என் செய்வேன் ஒற்றி அம் சிவனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே.

#1073.
ஆட்டுகின்ற நீ அறிந்திலை போலும் ஐவர் பக்கம் நான் ஆடுகின்றதனைக்
காட்டுகின்ற வான் கடலிடை எழுந்த காளம் உண்ட அக் கருணையை உலகில்
நாட்டுகின்றனையாயில் இக் கொடிய நாய்க்கும் உன் அருள் நல்கிடவேண்டும்
தீட்டுகின்ற நல் புகழ் ஒற்றி அரசே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே.

#1074.
உய்ய ஒன்று இலேன் பொய்யன் என்பதனை ஒளித்திலேன் இந்த ஒதியனுக்கு அருள் நீ
செய்யவேண்டுவது இன்று எனில் சிவனே செய்வது என்னை நான் திகைப்பதை அன்றி
மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை மறந்திலேன் இது வஞ்சமும் அன்றே
செய்ய மேனி எம் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே.

#1075.
வாடுகின்றனன் என்றனை இன்னும் வருந்தவைக்கினும் மறந்திடேன் உன்னைப்
பாடுகின்றனன் பாவியேன் என்னைப் பாதுகாப்பது உன் பரம் அது கண்டாய்
தேடுகின்ற மால் நான்முகன் முதலாம் தேவர் யாவரும் தெரிவ அரும் பொருளே
சேடு நின்ற நல் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே.

#1076.
சிறியர் செய் பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது உன் திரு_மொழி அன்றே
வறியனேன் பிழை யாவையும் உனது மனத்தில் கொள்ளுதல் வழக்கு அல இனி நீ
இறையும் தாழ்க்கலை அடியனேன்-தன்னை ஏன்றுகொண்டு அருள் ஈந்திடல் வேண்டும்
செறிய ஓங்கிய ஒற்றி அம் பரமே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே.

@46. சிறுமை விண்ணப்பம்

#1077.
இன்று நின்றவர் நாளை நின்றிலரே என் செய்வோம் இதற்கு என்று உளம் பதைத்துச்
சென்று நின்று சோர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
நன்று நின் துணை நாடக மலர்_தாள் நண்ண என்று நீ நயந்து அருள்வாயோ
பொன்றல் இன்றிய எழில் ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

#1078.
மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன் மருவும் நின் அருள் வாழ்வுற அடையாச்
சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
வறுமையாளனேன் வாட்டம் நீ அறியா வண்ணம் உண்டு-கொல் மாணிக்க_மலையே
பொறுமையாளனே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

#1079.
உய்ய வல்லனேல் உன் திரு அருளாம் உடைமை வேண்டும் அ உடைமையைத் தேடல்
செய்ய வல்லனோ அல்ல காண் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
பெய்ய வல்ல நின் திரு_அருள் நோக்கம் பெற விழைந்தனன் பிற ஒன்றும் விரும்பேன்
பொய் இது அல்ல எம் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

#1080.
வெல்லுகின்றனர் வினைப் புல வேடர் மெலிகின்றேன் இங்கு வீணினில் காலம்
செல்லுகின்றன ஐயவோ சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
சொல்லுகின்றனன் கேட்கின்றாய் கேட்டும் தூர நின்றனை ஈரம்_இல்லார் போல்
புல்லுகின்ற சீர் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

#1081.
ஏறுகின்றிலேன் இழிகிலேன் நடு நின்று எய்க்கின்றேன் பவம் என்னும் அக் குழியில்
தேறுகின்றிலேன் சிக்கெனச் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
கூறுகின்றது என் கடவுள் நீ அறியாக் கொள்கை ஒன்று இலை குன்ற_வில்லோனே
பூறுவம் கொளும் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

#1082.
கந்தமும் மலரும் என நின்றாய் கண்டுகொண்டிலேன் காம வாழ்வு-அதனால்
சிந்தை நொந்து அயர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
எந்த நல் வழியால் உனை அடைவேன் யாதும் தேர்ந்திலேன் போதுபோவது காண்
புந்தி இன்பமே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

#1083.
அல்லல் என்னை விட்டு அகன்றிட ஒற்றி அடுத்து நிற்கவோ அன்றி நல் புலியூர்த்
தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
ஒல்லை இங்கு வா என்று அருள் புரியாது ஒழிதியேல் உனை உறுவது எவ்வணமோ
புல்லர் மேவிடா ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

#1084.
ஞால வாழ்க்கையை நம்பி நின்று உழலும் நாய்களுக்கெலாம் நாய்_அரசு ஆனேன்
சீலம் ஒன்று இலேன் திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
ஏல நின் அருள் ஈதியேல் உய்வேன் இல்லையேல் எனக்கு இல்லை உய் திறமே
போல என்று உரையா ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

#1085.
சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது
சித்தம் என்னளவு அன்றது சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
நித்தம் நின் அடி அன்றி ஒன்று ஏத்தேன் நித்தனே அது நீ அறியாயோ
புத்த அரும் தமிழ் ஒற்றியூர் அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

#1086.
தத்து மத்திடைத் தயிர் என வினையால் தளர்ந்து மூப்பினில் தண்டு கொண்டு உழன்றே
செத்து மீளவும் பிறப்பு எனில் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
தொத்து வேண்டும் நின் திரு_அடிக்கு எனையே துட்டன் என்றியேல் துணை பிறிது அறியேன்
புத்தை நீக்கிய ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

#1087.
பரிந்திலேன் அருள் பாங்குறும் பொருட்டாய்ப் பந்தபாசத்தைப் பறித்திடும் வழியைத்
தெரிந்திலேன் திகைப்புண்டனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும் வெய்ய மாயையில் கையறவு அடைந்தே
புரிந்து சார்கின்றது ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

@47. ஆற்றா விண்ணப்பம்

#1088.
அன்னையில் பெரிதும் இனிய என் அரசே அம்பலத்து ஆடல்செய் அமுதே
பொன்னை ஒத்து ஒளிரும் புரி சடைக் கனியே போதமே ஒற்றி எம் பொருளே
உன்னை விட்டு அயலார் உறவுகொண்டு அடையேன் உண்மை என் உள்ளம் நீ அறிவாய்
என்னை விட்டிடில் நான் என் செய்வேன் ஒதி போல் இருக்கின்ற இ எளியேனே.

#1089.
எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என் செய்வேன் என் செய்வேன் பொல்லாக்
களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய்திலை அருள் கரும்பே
அளியனே திரு_சிற்றம்பலத்து ஒளியே அரு_மருந்தே வடவனத்துத்
தனியனே ஒற்றித் தலத்து அமர் மணியே தயை_இலி போல் இருந்தனையே.

#1090.
இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் என் துயர் அறிந்திலை போலும்
முருந்து அனை முறுவல் மங்கையர் மலை நேர் முலை-தலை உருண்டனனேனும்
மருந்து_அனையாய் உன் திரு_அடி_மலரை மறந்திலேன் வழுத்துகின்றனன் காண்
வருந்தனையேல் என்று உரைத்திலை ஐயா வஞ்சகம் உனக்கும் உண்டேயோ.

#1091.
உண்ட நஞ்சு இன்னும் கண்டம் விட்டு அகலாது உறைந்தது நாள்-தொறும் அடியேன்
கண்டனன் கருணை_கடல் எனும் குறிப்பைக் கண்டுகண்டு உளம்-அது நெகவே
விண்டனன் என்னைக் கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன் நான் அன்றோ
அண்டர்கட்கு அரசே அம்பலத்து அமுதே அலைகின்றேன் அறிந்திருந்தனையே.

#1092.
தனையர் செய் பிழையைத் தந்தையர் குறித்துத் தள்ளுதல் வழக்கு அல என்பார்
வினையனேன் பிழையை வினை_இலி நீ-தான் விவகரித்து எண்ணுதல் அழகோ
உனை அலாது இறந்தும் பிறந்தும் இ உலகில் உழன்றிடும் தேவரை மதியேன்
எனை அலாது உனக்கு இங்கு ஆள் இலையோ உண்டு என்னினும் ஏன்றுகொண்டு அருளே.

#1093.
ஏன்றுகொண்டு அருளவேண்டும் இ எளியேன் இருக்கினும் இறக்கினும் பொதுவுள்
ஊன்றுகொண்டு அருளும் நின் அடியல்லால் உரைக்கும் மால் அயன் முதல் தேவர்
நான்றுகொண்டிடுவரேனும் மற்று அவர் மேல் நா எழாது உண்மை ஈது இதற்குச்
சான்று கொண்டு அருள நினைத்தியேல் என்னுள் சார்ந்த நின் சரண் இரண்டு அன்றே.

#1094.
சரண வாரிசம் என் தலை மிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன்
கரண வாதனையும் கந்த வாதனையும் கலங்கிடக் கபம் இழுத்து உந்தும்
மரண வாதனைக்கு என் செய்குவம் என்றே வருந்துகின்றனன் மனம் மாழாந்து
அரணம் மூன்று எரிய நகைத்த எம் இறையே அடியனை ஆள்வது உன் கடனே.

#1095.
கடம் பொழி ஓங்கல் உரி உடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே
மடம் பொழி மனத்தேன் மலம் செறிந்து ஊறும் வாயில் ஓர் ஒன்பதில் வரும் இ
உடம்பு ஒழிந்திடுமேல் மீண்டுமீண்டு எந்த உடம்பு கொண்டு உழல்வனோ என்று
நடம் பொழி பதத்தாய் நடுங்குகின்றனன் காண் நான் செயும் வகை எது நவிலே.

#1096.
வகை எது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்து எனை ஆளும்
தகை-அது இன்றேல் என் செய்வேன் உலகர் சழக்கு உடைத் தமியன் நீ நின்ற
திகை எது என்றால் சொல அறியாது திகைத்திடும் சிறியனேன்-தன்னைப்
பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே.

#1097.
கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக் கல்வி கற்று உழன்றனன் கருணை
சொற்பனம் அதிலும் காண்கிலேன் பொல்லாச் சூகரம் என மலம் துய்த்தேன்
விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகு இலா வெறியேன்
அற்பனேன்-தன்னை ஆண்ட நின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே.

@48.சந்நிதி முறையீடு

#1098.
ஒற்றி மேவிய உத்தமனே மணித்
தெற்றி மேவிய தில்லை அப்பா விழி
நெற்றி மேவிய நின்மலனே உனைப்
பற்றி மேவிய நெஞ்சம் உன் பாலதே.

#1099.
பாலின் நீற்றுப் பரஞ்சுடரே மலர்க்
காலின் ஈற்றுக் கதி பெற ஏழையேன்
மாலின் ஈற்று மயக்கு அறல் என்று கல்
ஆலின் ஈற்றுப் பொருள் அருள் ஆதியே.

#1100.
ஆதியே தில்லை அம்பலத்து ஆடல்செய்
சோதியே திரு_தோணிபுரத்தனே
ஓதியே தரும் ஒற்றி அப்பா இது
நீதியே எனை நீ மருவாததே.

#1101.
வாதம் ஓதிய வஞ்சரைக் காணில் ஓர்
காதம் ஓடும் கடியனை ஆள்வது
நீதமோ அன்றி நேரும் அநீதமோ
ஓதம் ஓது ஒலி ஒற்றித் தலத்தனே.

#1102.
தலத்தனே தில்லைச் சங்கரனே தலைக்
கலத்தனே நெற்றிக்கண்ணுடையாளனே
நலத்தனே ஒற்றி நாயகனே இந்த
மலத்தனேனையும் வாழ்வித்தல் மாண்பு அதே.

#1103.
மாண் கொள் அம்பல மாணிக்கமே விடம்
ஊண் கொள் கண்டத்து எம் ஒற்றி அப்பா உன்றன்
ஏண் கொள் சேவடி இன் புகழ் ஏத்திடாக்
கோண் கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே.

#1104.
உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் எய்த நான்
செய்யும் வண்ணம் தெரிந்திலன் செல்வமே
பெய்யும் வண்ணப் பெரு முகிலே புரம்
எய்யும் வண்ணம் எரித்து அருள் எந்தையே.

#1105.
எந்தையே தில்லை எம் இறையே குகன்
தந்தையே ஒற்றித் தண் அமுதே என்றன்
முந்தை ஏழ் பவ மூட மயக்கு அறச்
சிந்தை ஏதம் திருந்த அருள்வையே.

#1106.
திருந்த நான்மறைத் தில்லைச் சிற்றம்பலத்து
இருந்த ஞான இயல் ஒளியே ஒற்றிப்
பொருந்த நின்று அருள் புண்ணியமே இங்கு
வருந்த என்றனை வைத்தது அழகு-அதோ.

#1107.
வைத்த நின் அருள் வாழிய வாழிய
மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே
உய்த்த நல் அருள் ஒற்றி அப்பா எனைப்
பொய்த்த சிந்தை விட்டு உன்றனைப் போற்றவே.

#1108.
போற்றவைத்தனை புண்ணியனே எனைச்
சாற்றவைத்தனை நின் புகழ்த் தன்மையைத்
தேற்றவைத்தனை நெஞ்சைத் தெளிந்து அன்பை
ஊற்றவைத்தனை உன் ஒற்றி மேவியே.

@49. இரங்கல் விண்ணப்பம்

#1109.
பற்று நோக்கிய பாவியேன்-தனக்குப் பரிந்து நீ அருள்_பதம் அளித்திலையே
மற்று நோக்கிய வல்_வினை அதனால் வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின்
அற்று நோக்கிய நோய்களின் மூப்பின் அலைதந்து இ உலகம் படும் பாட்டை
உற்று நோக்கினால் உருகுது என் உள்ளம் ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

#1110.
கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன் கோடிகோடியாம் குணப் பழுது_உடையேன்
கடிய வஞ்சகக் கள்வனேன்-தனக்கு உன் கருணை ஈந்திடாது இருந்திடில் கடையேன்
அடியன் ஆகுவது எவ்வணம் என்றே ஐய ஐய நான் அலறிடுகின்றேன்
ஒடிய மும்மலம் ஒருங்கு_அறுத்தவர் சேர் ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

#1111.
காமம் என்பதோர் உருக் கொடு இ உலகில் கலங்குகின்ற இக் கடையனேன்-தனக்குச்
சேமம் என்பதாம் நின் அருள் கிடையாச் சிறுமையே இன்னும் செறிந்திடுமானால்
ஏம_நெஞ்சினர் என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில் அவர் முன்
ஊமன் ஆகுவதன்றி என் செய்வேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

#1112.
மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில் வருந்தி மாய்வதும் மற்று இவை எல்லாம்
கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலாக் கல்_மனக் கொடியேன்
எண்ணிநின்ற ஓர் எண்ணமும் முடியாது என் செய்கேன் வரும் இரு_வினைக் கயிற்றால்
உள் நிரம்ப நின்று ஆட்டுகின்றனை நீ ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

#1113.
வெருட்சியே தரும் மல_இரா இன்னும் விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
மருட்சி மேவியது என் செய்கேன் உன்-பால் வருவதற்கு ஒரு வழியும் இங்கு அறியேன்
தெருட்சியே தரும் நின் அருள் ஒளி-தான் சேரில் உய்குவேன் சேர்ந்திலதானால்
உருட்சி ஆழி ஒத்து உழல்வது மெய் காண் ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

#1114.
யாதும் உன் செயலாம் என அறிந்தும் ஐய வையம் மேல் அவர் இவர் ஒழியாத்
தீது செய்தனர் நன்மை செய்தனர் நாம் தெரிந்து செய்வதே திறம் என நினைத்துக்
கோது செய் மல_கோட்டையைக் காவல் கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனி நீ
ஓது செய்வது ஒன்று என் உயிர்_துணையே ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

#1115.
பந்தம் மட்டின் ஆம் பாவி நெஞ்சகத்தால் பவப் பெரும் கடல் படிந்து உழன்று அயர்ந்தேன்
இந்தமட்டில் நான் உழன்றதே அமையும் ஏற வேண்டும் உன் எண்ணம் ஏது அறியேன்
அந்தமட்டினில் இருத்தியோ அன்றி அடிமை வேண்டி நின் அருள் பெரும் புணையை
உந்த மட்டினால் தருதியோ உரையாய் ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

#1116.
ஞானம் என்பதின் உறு_பொருள் அறியேன் ஞானி அல்லன் நான் ஆயினும் கடையேன்
ஆன போதிலும் எனக்கு நின் அருள் ஓர் அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால்
வானம் மேவிய அமரரும் அயனும் மாலும் என் முனம் வலி_இலர் அன்றே
ஊனம் நீக்கி நல் அருள்தரும் பொருளே ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

#1117.
அளிய நெஞ்சம் ஓர் அறிவுரு ஆகும் அன்பர்-தம் புடை அணுகிய அருள் போல்
எளிய நெஞ்சினேற்கு எய்திடாதேனும் எள்ளில் பாதி மட்டு ஈந்து அருள்வாயேல்
களிய மா மயல் காடு அற எறிந்து ஆங்கார வேரினைக் களைந்து மெய்ப் போத
ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

#1118.
நாக_நாட்டதின் நலம்பெற வேண்டேன் நரகில் ஏகு என நவிலினும் அமைவேன்
ஆகம் நாட்டிடை விடுக எனில் விடுவேன் அல்லல் ஆம் பவம் அடை எனில் அடைவேன்
தாகம் நாட்டிய மயல் அற அருள் நீர் தருதல் இல் எனச் சாற்றிடில் தரியேன்
ஓகை நாட்டிய யோகியர் பரவும் ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

@50. நெஞ்சொடு நேர்தல்

#1119.
அணி கொள் கோவணக் கந்தையே நமக்கு இங்கு அடுத்த ஆடை என்று அறி மட நெஞ்சே
கணி கொள் மா மணிக் கலன்கள் நம் கடவுள் கண்ணுள் மா மணிக் கண்டிகை கண்டாய்
பிணி கொள் வன் பவம் நீக்கும் வெண் நீறே பெருமைச் சாந்தமாம் பிறங்கு ஒளி மன்றில்
திணி கொள் சங்கர சிவசிவ என்று சென்று வாழ்த்தலே செய் தொழிலாமே.

#1120.
செய்த நன்றி மேல் தீங்கு இழைப்பாரில் திருப்பும் என்றனைக் திருப்புகின்றனை நீ
பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும் பேதையாதலில் பிறழ்ந்தனை உனை நான்
வைத போதினும் வாழ்த்து என நினைத்து மறுத்து நீக்கி அ வழி நடக்கின்றாய்
கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய் கொடிய நெஞ்சமே மடியகிற்றிலையே.

#1121.
இலை எனாது அணுவளவும் ஒன்று ஈய எண்ணுகின்றிலை என் பெறுவாயோ
கொலை இனாது என அறிந்திலை நெஞ்சே கொல்லுகின்ற அக் கூற்றினும் கொடியாய்
தலையின் மாலை தாழ் சடை உடைப் பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில்
புலையினார்கள்-பால் போதியோ வீணில் போகப்போக இப் போக்கினில் அழிந்தே.

#1122.
அழிந்த வாழ்க்கையின் அவலம் இங்கு அனைத்தும் ஐயம் இன்றி நீ அறிந்தனை நெஞ்சே
கழிந்த எச்சிலை விழைந்திடுவார் போல் கலந்து மீட்டு நீ கலங்குகின்றனையே
மொழிந்த முன்னையோர் பெறும் சிவகதிக்கே முன் உறா வகை என் உறும் உன்னால்
இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன் என் செய்வேன் உனை ஏன் அடுத்தேனே.

#1123.
தேன் நெய் ஆடிய செம் சடைக் கனியைத் தேனை மெய் அருள் திருவினை அடியர்
ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை உள்ளத்து ஓங்கிய உவப்பினை மூவர்
கோனை ஆனந்தக் கொழும் கடல் அமுதைக் கோமளத்தினைக் குன்ற_வில்லியை எம்
மானை அம்பல_வாணனை நினையாய் வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே.

#1124.
இன்னும் எங்ஙனம் ஏகுகின்றனையோ ஏழை நெஞ்சமே இங்கும்அங்கும்-தான்
முன்னை நாம் பிறந்து உழன்ற அத் துயரை முன்னில் என் குலை முறுக்குகின்றன காண்
என்னை நீ எனக்கு உறுதுணை அந்தோ என் சொல் ஏற்றிலை எழில் கொளும் பொதுவில்
மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால் மற்று நாம் பிறவா வகை வருமே.

#1125.
பிறந்து முன்னர் இ உலகினாம் பெண்டு பிள்ளை ஆதிய பெரும் தொடக்கு உழந்தே
இறந்து வீழ் கதியிடை விழுந்து உழன்றே இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம்
மறந்து விட்டனை நெஞ்சமே நீ-தான் மதி_இலாய் அது மறந்திலன் எளியேன்
துறந்து நாம் பெறும் சுகத்தினை அடையச் சொல்லும் வண்ணம் நீ தொடங்கிடில் நன்றே.

#1126.
நன்று செய்வதற்கு உடன்படுவாயேல் நல்ல நெஞ்சமே வல்ல இவ்வண்ணம்
இன்று செய்தி நீ நாளை என்பாயேல் இன்று இருந்தவர் நாளை நின்றிலரே
ஒன்று கேள்-மதி சுகர் முதல் முனிவோர் உக்க அக்கணம் சிக்கெனத் துறந்தார்
அன்று முன்னரே கடந்தனர் அன்றி அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே.

#1127.
அன்றின் நேர்கிலை நம்முடைப் பெருமான் அஞ்செழுத்தையும் அடிக்கடி மறந்தாய்
ஒன்றி மேல்_கதி உற வகை அந்தோ உணர்கிலாய் வயிற்று ஊண் பொருட்டு அயலோர்
முன்றில் காத்தனை அவ்வளவேனும் முயன்று காத்திலை முன்னவன் கோயில்
துன்றி நின்ற நல் தொண்டர்-தம் தொழும்பு தொடங்கு வானவர் தூய முன்றிலையே.

#1128.
தூய நெஞ்சமே சுகம் பெற வேண்டில் சொல்லுவாம் அது சொல் அளவு அன்றால்
காய மாயமாம் கான் செறிந்து உலவும் கள்வர் ஐவரைக் கைவிடுத்ததன் மேல்
பாய ஆணவப் பகை கெட முருக்கிப் பகல் இரா இலாப் பாங்கரின் நின்றே
ஆய ஆனந்தக் கூத்து உடைப் பரமா காய சோதி கண்டு அமருதல் அணியே.

@51.சிவானந்தப் பத்து

#1129.
இச்சை உண்டு எனக்கு உன் திரு_மலர்_தாள் எய்தும் வண்ணம் இங்கு என் செய வல்லேன்
கொச்சை நெஞ்சம் என் குறிப்பில் நில்லாது குதிப்பில் நின்றது மதிப்பின் இ உலகில்
பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன்
செச்சை மேனி எம் திருவொற்றி அரசே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

#1130.
ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம் அழிவு இல் இன்பமுற்று அருகு இருக்கின்றார்
வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய வீணனேன் இங்கு வீழ் கதிக்கு இடமாய்
வைய வாழ்க்கையின் மயங்குகின்றனன் மேல் வருவது ஓர்ந்திலன் வாழ்வு அடைவேனோ
செய்ய வண்ணனே ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

#1131.
மடி கொள் நெஞ்சினால் வள்ளல் உன் மலர்_தாள் மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன்
துடி கொள் நேர் இடை மடவியர்க்கு உருகிச் சுழல்கின்றேன் அருள் சுகம் பெறுவேனோ
வடி கொள் வேல் கரத்து அண்ணலை ஈன்ற வள்ளலே என வாழ்த்துகின்றவர்-தம்
செடிகள் நீக்கிய ஒற்றி அம் பரனே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

#1132.
இருக்கு அவாவுற உலகு எலாம் உய்ய எடுத்த சேவடிக்கு எள்ளளவேனும்
உருக்கம் ஒன்று இலேன் ஒதியினில் பெரியேன் ஒண்மை எய்துதல் வெண்மை மற்று அன்றே
தருக்க நின்ற என் தன்மையை நினைக்கில் தமியனேனுக்கே தலை நடுக்குறும் காண்
திரு_கண் மூன்று உடை ஒற்றி எம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

#1133.
எண்பெறா வினைக்கு ஏதுசெய் உடலை எடுத்த நாள் முதல் இந்த நாள் வரைக்கும்
நண்புறாப் பவம் இயற்றினன் அல்லால் நன்மை என்பது ஓர் நாளினும் அறியேன்
வண் பெறா எனக்கு உன் திரு_அருளாம் வாழ்வு நேர்ந்திடும் வகை எந்த வகையோ
திண் பெறாநிற்க அருள் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

#1134.
பேதை நெஞ்சினேன் செய் பிழை எல்லாம் பேசினால் பெரும் பிணக்கினுக்கு இடமாம்
தாதை நீ அவை எண்ணலை எளியேன்-தனக்கு நின் திருத் தண் அளி புரிவாய்
கோதை நீக்கிய முனிவர்கள் காணக் கூத்து உகந்து அருள் குணப் பெரும் குன்றே
தீதை நீக்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

#1135.
வஞ்ச நெஞ்சர்-தம் சேர்க்கையைத் துறந்து வள்ளல் உன் திரு_மலர்_அடி ஏத்தி
விஞ்சு நெஞ்சர்-தம் அடித் துணைக்கு ஏவல் விரும்பி நிற்கும் அப் பெரும் பயன் பெறவே
தஞ்சம் என்று அருள் நின் திரு_கோயில் சார்ந்து நின்றனன் தருதல் மற்று இன்றோ
செஞ்சொல் ஓங்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

#1136.
புல்லனேன் புவி நடையிடை அலையும் புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய
அல்லல் என்பதற்கு எல்லை ஒன்று அறியேன் அருந்துகின்றனன் விருந்தினன் ஆகி
ஒல்லை உன் திரு_கோயில் முன் அடுத்தேன் உத்தமா உன்றன் உள்ளம் இங்கு அறியேன்
செல்லல் நீக்கிய ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

#1137.
எளியனேன் பிழை இயற்றிய எல்லாம் எண்ணின் உட்படாவேனும் மற்று அவையை
அளிய நல் அருள் ஈந்திடும் பொருட்டால் ஆய்தல் நன்று அல ஆதலின் ஈண்டே
களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக் கருணை ஈகுதல் கடன் உனக்கு ஐயா
தெளிய ஓங்கிய ஒற்றி என் அமுதே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

#1138.
வெறிபிடிக்கினும் மகன்-தனைப் பெற்றோர் விடுத்திடார் அந்த வெறி-அது தீரும்
நெறி பிடித்து நின்று ஆய்வர் என் அரசே நீயும் அப்படி நீசனேன்-தனக்குப்
பொறி பிடித்த நல் போதகம் அருளிப் புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும்
செறி பிடித்த வான் பொழில் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

@52.காதல் விண்ணப்பம்

#1139.
வஞ்சக வினைக்கு ஓர் கொள்கலம் அனைய மனத்தினேன் அனைத்தினும் கொடியேன்
தஞ்சம் என்று அடைந்தே நின் திரு_கோயில் சந்நிதி முன்னர் நிற்கின்றேன்
எஞ்சலில் அடங்காப் பாவி என்று எனை நீ இகழ்ந்திடில் என் செய்வேன் சிவனே
கஞ்சன் மால் புகழும் ஒற்றி அம் கரும்பே கதி தரும் கருணை அம் கடலே.

#1140.
நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம் வைத்து ஓம்புறும் பொருட்டாய்ப்
பொற்பு-அது தவிரும் புலையர்-தம் மனை வாய்ப் புந்தி நொந்து அயர்ந்து அழுது இளைத்தேன்
சொல் பதம் கடந்த நின் திரு_அடிக்குத் தொண்டுசெய் நாளும் ஒன்று உளதோ
கற்பது கற்றோர் புகழ் திருவொற்றிக் காவல்கொள் கருணை அம் கடலே.

#1141.
முன்னை வல்_வினையால் வஞ்சக மடவார் முழுப் புலைக் குழி விழுந்து இளைத்தேன்
என்னையோ கொடியேன் நின் திரு_அருள்-தான் எய்திலனேல் உயிர்க்கு உறுதிப்
பின்னை எவ்வணம்-தான் எய்துவது அறியேன் பேதையில்பேதை நான் அன்றோ
கன்னலே தேனே ஒற்றி எம் அமுதே கடவுளே கருணை அம் கடலே.

#1142.
மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் மனம் தளர்ந்து அழுங்கி நாள்-தோறும்
எண்ணினுள் அடங்காத் துயரொடும் புலையர் இல்லிடை மல்லிடுகின்றேன்
விண்ணினுள் இலங்கும் சுடர் நிகர் உனது மெல் அடிக்கு அடிமைசெய்வேனோ
கண்ணினுள் மணியே ஒற்றி அம் கனியே கடவுளே கருணை அம் கடலே.

#1143.
அளவு_இலா உலகத்து அனந்த கோடிகளாம் ஆர்_உயிர்த் தொகைக்குளும் எனைப் போல்
இளகிலா வஞ்ச நெஞ்சகப் பாவி ஏழைகள் உண்டு-கொல் இலை காண்
தளர்வு இலாது உனது திரு_அடி எனும் பொற்றாமரைக்கு அணியன் ஆகுவனோ
களவு_இலார்க்கு இனிய ஒற்றி எம் மருந்தே கனம் தரும் கருணை அம் கடலே.

#1144.
ஞானம் என்பதில் ஓர் அணுத்துணையேனும் நண்ணிலேன் புண்ணியம் அறியேன்
ஈனம் என்பதனுக்கு இறை எனல் ஆனேன் எவ்வணம் உய்குவது அறியேன்
வான_நாடவரும் பெறற்கு அரும் நினது மலர்_அடித் தொழும்புசெய்வேனோ
கான வேட்டு உருவாம் ஒருவனே ஒற்றிக் கடவுளே கருணை அம் கடலே.

#1145.
ஞால வாழ்வு அனைத்தும் கானல்_நீர் எனவே நன்கு அறிந்து உன் திரு_அருளாம்
சீல வாழ்வு அடையும் செல்வம் இப் பொல்லாச் சிறியனும் பெறுகுவதேயோ
நீல மா மிடற்றுப் பவள மா மலையே நின்மல ஆனந்த நிலையே
காலன் நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றிக் கடவுளே கருணை அம் கடலே.

#1146.
மாலொடு நான்கு_வதனனும் காணா மலர்_அடிக்கு அடிமைசெய்து இனிப்பாம்
பாலொடு கலந்த தேன் என உன் சீர் பாடும் நாள் எந்த நாள் அறியேன்
வேலொடு மயிலும் கொண்டிடும் சுடரை விளைவித்த வித்தக விளக்கே
காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றிக் கடவுளே கருணை அம் கடலே.

#1147.
சற்றும் நல் குணம்-தான் சார்ந்திடாக் கொடியார்-தம் தலைவாயிலுள் குரைக்கும்
வெற்று நாய்-தனக்கும் வேறு நாயாக மெலிகின்றேன் ஐம்புலச் சேட்டை
அற்று நின்றவர்க்கும் அரிய நின் திரு_தாட்கு அடிமைசெய்து ஒழுகுவனேயோ
கற்று முற்று_உணர்ந்தோர்க்கு அருள்தரும் ஒற்றிக் கடவுளே கருணை அம் கடலே.

#1148.
மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்து உலகு உயிர்-தொறும் ஒளித்த
இறைவ நின் திரு_தாட்கு அன்பு இலாக் கொடியன் என்னினும் ஏழையேன்-தனக்கு
நிறைதரும் நினது திரு_அருள் அளிக்க நினைத்தலே நின் கடன் கண்டாய்
கறை மணி மிடற்றுத் தெய்வமே ஒற்றிக் காவல்கொள் கருணை அம் கடலே.

@53. பொருள் விண்ணப்பம்

#1149.
உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம் ஒன்று கோடியாய்ச் சென்றுசென்று உலைந்தே
கலக மாயையில் கவிழ்க்கின்றது எளியேன் கலுழ்கின்றேன் செயக்கடவது ஒன்று அறியேன்
இலகும் அன்பர்-தம் எய்ப்பினில் வைப்பே இன்ப_வெள்ளமே என்னுடை உயிரே
திலகமே திரு ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே.

#1150.
எண்ணிலா நினைப்புற்றதின் வழியே இன்ப_துன்பங்கள் எய்தி என் நெஞ்சம்
கண் இலாக் குரங்கு என உழன்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன்
பெண் நிலாவிய பாகத்து எம் அமுதே பிரமன் ஆதியர் பேச அரும் திறனே
தெள் நிலா முடி ஒற்றி அம் கனியே செல்வமே பரசிவ பரம்பொருளே.

#1151.
ஊண் உறக்கமே பொருள் என நினைத்த ஒதியனேன் மனம் ஒன்றியது இன்றாய்க்
காணுறக் கரும் காமம் சான்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன்
மாணுறக் களம் கறுத்த செம் மணியே வள்ளலே எனை வாழ்விக்கும் மருந்தே
சேணுறத் தரும் ஒற்றி நாயகமே செல்வமே பரசிவ பரம்பொருளே.

#1152.
யாது சொல்லினும் கேட்பது_இன்று அந்தோ யான் செய்தேன் எனது என்னும் இ இருளில்
காதுகின்றது என் வஞ்சக நெஞ்சம் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன்
ஓது மா மறை உபநிடதத்தின் உச்சி மேவிய வச்சிர மணியே
தீது நீக்கிய ஒற்றி அம் தேனே செல்வமே பரசிவ பரம்பொருளே.

#1153.
சொல்லும் சொல்லளவு அன்று காண் நெஞ்சத் துடுக்கு அனைத்தும் இங்கு ஒடுக்குவது எவனோ
கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன்
அல்லும் எல்லும் நின்று அகம் குழைந்து ஏத்தும் அன்பருள் ஊறும் ஆனந்தப் பெருக்கே
செல் உலாம் பொழில் ஒற்றி அம் கரும்பே செல்வமே பரசிவ பரம்பொருளே.

#1154.
இம்மை இன்பமே வீடு எனக் கருதி ஈனர் இல்லிடை இடர் மிக உழந்தே
கைம்மை நெஞ்சம் என்றனை வலிப்பது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன்
மும்மையாகிய தேவர்-தம் தேவே முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே
செம்மை மேனி எம் ஒற்றியூர் அரசே செல்வமே பரசிவ பரம்பொருளே.

#1155.
நின் அடி-கண் ஓர் கணப்பொழுதேனும் நிற்பது இன்றியே நீச மங்கையர்-தம்
கல் நவில் தனம் விழைந்தது மனம் காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன்
அன்ன ஊர்தியும் மாலும் நின்று அலற அடியர்-தங்கள் உள் அமர்ந்து அருள் அமுதே
தென் இசைப் பொழில் ஒற்றி எம் வாழ்வே செல்வமே பரசிவ பரம்பொருளே.

#1156.
புலைய மங்கையர் புணர் முலைக் குவட்டில் போந்து உருண்டு எனைப் புலன் வழிப் படுத்திக்
கலைய நின்றது இக் கல் உறழ் மனம்-தான் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன்
விலையிலா உயர் மாணிக்க மணியே வேத உச்சியில் விளங்கு ஒளி விளக்கே
சிலை விலாக் கொளும் ஒற்றி எம் மருந்தே செல்வமே பரசிவ பரம்பொருளே.

#1157.
தந்தை தாய் மனை மக்கள் என்று உலகச் சழக்கிலே இடர் உழக்கும் என் மனம்-தான்
கந்த வாதனை இயற்றுகின்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன்
எந்தையே எனை எழுமையும் தொடர்ந்த இன்ப_வெள்ளமே என் உயிர்க்குயிரே
சிந்தை ஓங்கிய ஒற்றி எம் தேவே செல்வமே பரசிவ பரம்பொருளே.

#1158.
கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும் ஓர் குரங்கிற்கு என் உறு குறை பல உரைத்தும்
கடியது ஆதலின் கசிந்திலது இனி இக் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன்
அடியனேன் பிழை உளத்திடை நினையேல் அருளல் வேண்டும் என் ஆர்_உயிர்த் துணையே
செடிகள் நீக்கிய ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே.

@54. திருவண்ண விண்ணப்பம்

#1159.
கண்ணப்பா என்று அருளும் காளத்தி அப்பா முன்
வண்ணப் பால் வேண்டும் மதலையைப் பால்_வாரிதியை
உண் அப்பா என்று உரைத்த ஒற்றி அப்பா வந்து அருள
எண் அப்பா என்று அழும் இ ஏழை முகம் பாராயோ.

#1160.
மஞ்சு படும் செம் சடில வள்ளலே உள்ளுகின்றோர்
உஞ்சுபடும் வண்ணம் அருள் ஒற்றியூர் உத்தமனே
நஞ்சு படும் கண்டம் உடை நம் பரனே வன் துயரால்
பஞ்சு படும் பாடு படும் பாவி முகம் பாராயோ.

#1161.
கண் ஆர் அமுதே கரும்பே என் கண்ணே என்
அண்ணா உன் பொன் அருள்-தான் ஆர்ந்திடுமோ அல்லது என்றும்
நண்ணாதோ யாது நணுகுமோ என்று உருகி
எண்ணாதும் எண்ணும் இந்த ஏழை முகம் பாராயோ.

#1162.
நாடிய சீர் ஒற்றி நகர்_உடையாய் நின் கோயில்
நீடிய நல் சந்நிதியில் நின்றுநின்று மால் அயனும்
தேடி அறி ஒண்ணாத் திரு_உருவைக் கண்டு உருகிப்
பாடி அழுது ஏங்கும் இந்தப் பாவி முகம் பாராயோ.

#1163.
வாங்கி மலை வில் ஆக்கும் மன்னவனே என் அரசே
ஓங்கி வளம் தழுவும் ஒற்றியூர் உத்தமனே
தூங்கிய துன்பச் சுமை சுமக்க மாட்டாது
ஏங்கி அழுகின்ற இந்த ஏழை முகம் பாராயோ.

#1164.
தொண்டர்க்கு அருளும் துணையே இணை_இல் விடம்
உண்டு அச்சுதற்கு அருளும் ஒற்றியூர் உத்தமனே
சண்டப் பவ நோயால் தாய் இலாப் பிள்ளை எனப்
பண்டைத் துயர்கொளும் இப் பாவி முகம் பாராயோ.

#1165.
உள் திகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே
மட்டு இலங்கும் உன்றன் மலர்_அடியைப் போற்றாது
தட்டு இலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்து உன் சந்நிதி-கண்
எட்டி நின்று பார்க்கும் இந்த ஏழை முகம் பாராயோ.

#1166.
நச்சை மிடற்று அணிந்த நாயகனே ஓர் பாகம்
பச்சை நிறம் கொண்ட பவளத் தனி மலையே
மிச்சை தவிர்க்கும் ஒற்றி வித்தகனே நின் அருட்கே
இச்சை கொடு வாடும் இந்த ஏழை முகம் பாராயோ.

#1167.
மால் அயர்ந்தும் காணா மலர்_அடியாய் வஞ்ச வினைக்
கால் அயர்ந்து வாட அருள் கண்_உடையாய் விண்_உடையாய்
சேல் அயர்ந்த கண்ணார் தியக்கத்தினால் உன் அருள்
பால் அயர்ந்து வாடும் இந்தப் பாவி முகம் பாராயோ.

#1168.
சொந்தமுற எண்ணித் தொழுகின்ற மெய் அடியர்
சந்தமுறும் நெஞ்சத் தலத்து அமர்ந்த தத்துவனே
நந்தவனம் சூழ் ஒற்றி நாயகனே வாழ்க்கை எனும்
பந்தம்-அதில் வாடும் இந்தப் பாவி முகம் பாராயோ.

#1169.
தில்லையிடை மேவும் எங்கள் செல்வப் பெரு வாழ்வே
ஒல்லை அடியார்க்கு அருளும் ஒற்றியூர் உத்தமனே
அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசை-தனக்கு
எல்லை அறியாத இந்த ஏழை முகம் பாராயோ.

#1170.
விதி இழந்த வெண் தலை கொள் வித்தகனே வேதியனே
மதி_இழந்தோர்க்கு ஏலா வளர் ஒற்றி வானவனே
நிதி_இழந்தோர் போல் அயர்ந்து நின்னுடைய வாழ்க்கைப்
பதி விரும்பி வாடும் இந்தப் பாவி முகம் பாராயோ.

@55. நாடக விண்ணப்பம்

#1171.
மடுக்கும் நீர் உடைப் பாழ்ங்கிணறு-அதனுள் வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம்
எடுக்கின்றோர் என இடையில் கைவிடுதல் இரக்கம்_உள்ளவர்க்கு இயல்பு அன்று கண்டீர்
தடுக்கிலாது எனைச் சஞ்சல வாழ்வில் தாழ்த்துகின்றது தருமம் அன்று உமக்கு
நடுக்கு_இலார் தொழும் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

#1172.
வெண்மை நெஞ்சினேன் மெய் என்பது அறியேன் விமல நும்மிடை வேட்கையும் உடையேன்
உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை உவரி வீழ்வனேல் உறுதி மற்று அறியேன்
கண்மை_உள்ளவர் பாழ்ங்குழி வீழக் கண்டு இருப்பது கற்றவர்க்கு அழகோ
நண்மை ஒற்றியீர் திரு_சிற்றம்பலத்துள் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

#1173.
குற்றமே பல இயற்றினும் எனை நீர் கொடியன் என்பது குறிப்பு அல உமது
பொற்றை நேர் புயத்து ஒளிர் திரு_நீற்றைப் பூசுகின்றனன் புனித நும் அடி-கண்
உற்றதோர் சிறிது அன்பும் இவ்வகையால் உறுதி ஈவது இங்கு உமக்கு ஒரு கடன் காண்
நல் தவத்தர் வாழ் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

#1174.
உள்ளது ஓதினால் ஒறுக்கிலேம் என்பர் உலகுளோர் இந்த உறுதி கொண்டு அடியேன்
கள்ளம் ஓதிலேன் நும் அடி அறியக் காம வேட்கையில் கடலினும் பெரியேன்
வள்ளலே உமது அருள் பெறச் சிறிது வைத்த சிந்தையேன் மயக்கு அற அருள்வீர்
நள்ளல்_உற்றவர் வாழ் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

#1175.
அரந்தையோடு ஒரு வழிச்செல்வோன்-தனை ஓர் ஆற்று வெள்ளம் ஈர்த்து அலைத்திட அவனும்
பரந்த நீரிடை நின்று அழுவானேல் பகைவர் ஆயினும் பார்த்திருப்பாரோ
கரந்தை அம் சடை அண்ணல் நீர் அடியேன் கலங்கக் கண்டு இருக்கின்றது கடனோ
நரந்தம் ஆர் பொழில் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

#1176.
பிறவிக் கண்_இலான் கைக்கொளும் கோலைப் பிடுங்கி வீசுதல் பெரியவர்க்கு அறமோ
மறவிக் கையறை மனத்தினேன் உம் மேல் வைக்கும் அன்பை நீர் மாற்றுதல் அழகோ
உற இக் கொள்கையை உள்ளிரேல் இதனை ஓதிக்கொள் இடம் ஒன்று இலை கண்டீர்
நற இக்கு ஓங்கிய ஒற்றி அம் பதியீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

#1177.
வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார் வண்கை உள்ளவர் மற்று அது போலக்
கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில் கலங்கி ஐய நும் கருணையாம் அமுதை
மலிய உண்டிட வருகின்றேன் வரும் முன் மாற்றுகிற்பிரேல் வள்ளல் நீர் அன்றோ
நலியல் நீக்கிடும் ஒற்றி அம் பதியீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

#1178.
பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியாப் புலையன் ஆண்டவன் புகழ் உரைப்பானேல்
உய்ய வைப்பன் ஈது உண்மை இ உலகில் ஒதியனேன் புகல் ஓர் இடம் அறியேன்
ஐய நும் அடிக்கு ஆட்செயல் உடையேன் ஆண்ட நீர் எனை அகற்றுதல் அழகோ
நையல் அற்றிட அருள் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

#1179.
தந்தை ஆயவர் தனையரைக் கெடுக்கச் சமைவர் என்பது சற்றும் இன்று உலகில்
எந்தை நீர் எனை வஞ்சக வாழ்வில் இருத்துவீர் எனில் யார்க்கு இது புகல்வேன்
பந்தம் மேலிட என் பரிதாபம் பார்ப்பிரோ அருள் பங்கய விழியீர்
நந்த ஒண் பணை ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

#1180.
கல்வி வேண்டிய மகன்-தனைப் பெற்றோர் கடுத்தல் ஓர் சிறு கதையிலும் இலை காண்
செல்வம் வேண்டிலேன் திரு_அருள் விழைந்தேன் சிறியனேனை நீர் தியக்குதல் அழகோ
பல் விதங்களால் பணி செயும் உரிமைப் பாங்கு நல்கும் அப் பரம் உமக்கு அன்றே
நல்_விதத்தினர் புகழ் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

#1181.
மண்ணில் அல்லவன் நல்லவரிடத்து ஓர் வணக்கம் இன்மையன் வணங்குவன் ஆனால்
எண்ணி நம் புடை இரு என உரைப்பர் ஏன் வணங்கினை என்று உரைப்பாரோ
கண்ணின் நல்ல நும் கழல் தொழ இசைந்தால் கலக்கம் காண்பது கடன் அன்று கண்டீர்
நண்ணி மாதவன் தொழும் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

@56. கொடி விண்ணப்பம்

#1182.
மாலை ஒன்று தோள் சுந்தரப் பெருமான் மணத்தில் சென்று அவண் வழக்கிட்டது எனவே
ஓலை ஒன்று நீர் காட்டுதல் வேண்டாம் உவந்து தொண்டன் என்று உரைப்பிரேல் என்னை
வேலை ஒன்று அல மிகப் பல எனினும் வெறுப்பு இலாது உளம் வியந்து செய்குவன் காண்
சோலை ஒன்று சீர் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

#1183.
பூதம் நும் படை எனினும் நான் அஞ்சேன் புதிய பாம்பின் பூண் பூட்டவும் வெருவேன்
பேதம் இன்றி அம்பலம்-தனில் தூக்கும் பெருமைச் சேவடி பிடிக்கவும் தளரேன்
ஏதம் எண்ணிடாது என்னையும் தொழும்பன் என்று கொள்விரேல் எனக்கு அது சாலும்
சூத ஒண் பொழில் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

#1184.
உப்பு இடாத கூழ் இடுகினும் உண்பேன் உவந்து இ வேலையை உணர்ந்து செய் என நீர்
செப்பிடா முனம் தலையினால் நடந்து செய்ய வல்லன் யான் செய்யும் அப் பணிகள்
தப்பிடாது அதில் தப்பு இருந்து என்னைத் தண்டிப்பீரெனில் சலித்து உளம் வெருவேன்
துப்பு இடா எனக்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

#1185.
கூலி என்பது ஓர் அணுத்துணையேனும் குறித்திலேன் அது கொடுக்கினும் கொள்ளேன்
மாலினோடு அயன் முதலியர்க்கு ஏவல் மறந்தும் செய்திடேன் மன் உயிர்ப் பயிர்க்கே
ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண் அருளை வேண்டினேன் அடிமைகொள்கிற்பீர்
சூலி ஓர் புடை மகிழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே

#1186.
தேர்ந்து தேடினும் தேவர் போல் தலைமைத் தேவர் இல்லை அத் தெளிவுகொண்டு அடியேன்
ஆர்ந்து நும் அடிக்கு அடிமைசெய்திடப் பேர் ஆசைவைத்து உமை அடுத்தனன் அடிகேள்
ஓர்ந்து இங்கு என்றனைத் தொழும்புகொள்ளீரேல் உய்கிலேன் இஃது உம் பதம் காண்க
சோர்ந்திடார் புகழ் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

#1187.
புதியன் என்று எனைப் போக்குதிரோ நீர் பூருவத்தினும் பொன்_அடிக்கு அடிமைப்
பதியவைத்தனன் ஆயினும் அந்தப் பழம் கணக்கினைப் பார்ப்பதில் என்னே
முதியன்_அல்லன் யான் எப் பணிவிடையும் முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன்
துதி-அது ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

#1188.
ஒழுக்கம்_இல்லவன் ஓர் இடத்து அடிமைக்கு உதவுவான்-கொல் என்று உன்னுகிற்பீரேல்
புழுக்க நெஞ்சினேன் உம்முடைச் சமுகம் போந்து நிற்பனேல் புண்ணியக் கனிகள்
பழுக்க நின்றிடும் குண_தரு ஆவேன் பார்த்த பேரும் அப் பரிசினர் ஆவர்
தொழுக்கன் என்னை ஆள்வீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

#1189.
பிச்சை ஏற்று உணும் பித்தர் என்று உம்மைப் பேசுகின்றவர் பேச்சினைக் கேட்டும்
இச்சை நிற்கின்றது உம் அடிக்கு ஏவல் இயற்றுவான் அந்த இச்சையை முடிப்பீர்
செச்சை மேனியீர் திருவுளம் அறியேன் சிறியனேன் மிகத் தியங்குகின்றனன் காண்
துச்சை நீக்கினோர்க்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

#1190.
ஆலம் உண்ட நீர் இன்னும் அ வானோர்க்கு அமுது வேண்டி மால் அக் கடல் கடைய
ஓல வெவ் விடம் வரில் அதை நீயே உண்க என்றாலும் நும் உரைப்படி உண்கேன்
சாலம் செய்வது தகை அன்று தருமத் தனிப் பொன்_குன்று_அனீர் சராசரம் நடத்தும்
சூல_பாணியீர் திருவொற்றி நகரீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

#1191.
முத்தி நேர்கிலாத் தேவர்கள்-தமை நான் முந்துறேன் அவர் முற்பட வரினும்
சுத்தியாகிய சொல் உடை அணுக்கத் தொண்டர்-தம்முடன் சூழ்த்திடீரெனினும்
புத்தி சேர் புறத் தொண்டர்-தம்முடனே பொருந்தவைக்கினும் போதும் மற்று அதுவே
துத்தி ஆர் பணியீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

#1192.
என்ன நான் அடியேன் பல பல கால் இயம்பி நிற்பது இங்கு எம்பெருமானீர்
இன்னும் என்னை ஓர் தொண்டன் என்று உளத்தில் ஏன்றுகொள்ளிரேல் இரும் கடல் புவியோர்
பன்ன என் உயிர் நும் பொருட்டாகப் பாற்றி நும் மிசைப் பழிசுமத்துவல் காண்
துன்னு மா தவர் புகழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

@57. மருட்கை விண்ணப்பம்

#1193.
யாது செய்குவன் போது போகின்றது அண்ணலே உமது அன்பருக்கு அடியேன்
கோது செய்யினும் பொறுத்து அருள் புரியும் கொள்கையீர் எனைக் குறுகிய குறும்பர்
வாதுசெய்கின்றார் மனம் தளர்கின்றேன் வலி_இலேன் செயும் வகை ஒன்றும் அறியேன்
மாதர் செய் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

#1194.
எனக்கு நீர் இங்கு ஓர் ஆண்டை அல்லீரோ என்னை வஞ்சகர் யாவரும் கூடிக்
கனக்கும் வன் பவக் கடலிடை வீழ்த்தக் கண்டு இருத்தலோ கடன் உமக்கு எளியேன்-
தனக்கு மற்றொரு சார்பு இருந்திடுமேல் தயவு செய்திடத் தக்கது அன்று இலை காண்
மனக்கு நல்லவர் வாழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

#1195.
எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல் ஆழ்ந்து இளைக்கின்றேன் இனி என் செய்வன் அடியேன்
தஞ்சம் என்று உமது இணை மலர்_அடிக்கே சரண்புகுந்தனன் தயவு செய்யீரேல்
வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனும் மீன் வாரிக்கொண்டு எனை வாய் மடுத்திடும் காண்
மஞ்சு அளாவிய பொழில் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

#1196.
என் பிறப்பினை யார்க்கு எடுத்துரைப்பேன் என் செய்வேன் எனை என் செய நினைக்கேன்
முன்_பிறப்பிடை இருந்த சேடத்தால் மூட வாழ்க்கையாம் காடகத்து அடைந்தே
அன்பு இறந்த வெம் காம வேட்டுவனால் அலைப்புண்டேன் உமது அருள் பெற விழைந்தேன்
வன்பு_இறந்தவர் புகழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

#1197.
காமம் என்னும் ஓர் காவலில் உழன்றே கலுழ்கின்றேன் ஒரு களைகணும் அறியேன்
சேம நல் அருள் பதம் பெறும் தொண்டர் சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன்
ஏமம் உற்றிடும் எனை விடுவிப்பார் இல்லை என் செய்வன் யாரினும் சிறியேன்
வாம மாதராள் மருவு ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

#1198.
இன்பம் என்பது விழைந்து இடர் உழந்தேன் என்னை ஒத்த ஓர் ஏழை இங்கு அறியேன்
துன்பம் என்பது பெரும் சுமையாகச் சுமக்கின்றேன் அருள் துணை சிறிது இல்லேன்
அன்பர் உள்ளகத்து அமர்ந்திடும் தேவர் அடிக் குற்றேவலுக்கு ஆட்படுவேனோ
வன்பர் நாடுறா ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

#1199.
ஊழ்வினைப்படி எப்படி அறியேன் உஞற்றுகின்றனன் உமது அருள் பெறவே
தாழ்வினைத் தரும் காமமோ எனைக் கீழ்த் தள்ளுகின்றதே உள்ளுகின்றது காண்
பாழ் வினைக் கொளும் பாவியேன் செய்யும் பாங்கு அறிந்திலேன் ஏங்குகின்றனனால்
வாழ்வினைத் தரும் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

#1200.
இறப்பு_இலார் தொழும் தேவரீர் பதத்தை எவ்வம் நீக்கியே எவ்விதத்தானும்
மறப்பு இலாது உளம் நினைத்திடில் காமம் வழிமறித்து அதை மயக்குகின்றது காண்
குறிப்பு இலாது என்னால் கூடிய_மட்டும் குறைத்தும் அங்கு அது குறைகிலது அந்தோ
வறிப்பு இலா வயல் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

#1201.
சஞ்சிதம் தரும் காமம் என்றிடும் ஓர் சலதி வீழ்ந்து அதில் தலைமயக்குற்றே
அஞ்சிஅஞ்சி நான் அலைகின்றேன் என்னை அஞ்சல் என்பவர் யாரையும் அறியேன்
துஞ்சினால் பின்பு சுகம் பலித்திடுமோ துணை_இலார்க்கு ஒரு துணை என இருப்பீர்
மஞ்சின் நீள் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

#1202.
அல்ல ஓதியர் இடைப்படும் கமருக்கு ஆசைவைத்த என் அறிவின்மை அளவைச்
சொல்லவோ முடியாது எனை ஆளத் துணிவு கொள்விரோ தூயரை ஆளல்
அல்லவோ உமது இயற்கை ஆயினும் நல் அருள்_கணீர் எனை ஆளலும் தகும் காண்
மல்லல் ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி அனையீரே.

@58. கொடைமட விண்ணப்பம்

#1203.
நின் போன்ற தெய்வம் ஒன்று இன்று என வேதம் நிகழ்த்தவும் நின்
பொன் போன்ற ஞானப் புது மலர்த் தாள் துணைப் போற்றுகிலேன்
என் போன்ற ஏழையர் யாண்டு உளர் அம்பலத்தே நடம்செய்
மின் போன்ற வேணியனே ஒற்றி மேவிய வேதியனே.

#1204.
வேதியனே வெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே
நீதியனே மன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும்
ஆதியனே எமை ஆண்டவனே மலையாள் மகிழும்
பாதியனே எம் பராபரனே முக்கண் பண்ணவனே.

#1205.
பண்ணவனே பசு பாசத்தை நீக்கும் பரம்பரனே
மண்ணவனேனை மகிழ்ந்தவனே மலம் மாற்றுகின்ற
விண்ணவனே வெள் விடையவனே வெற்றி மேவும் நெற்றிக்
கண்ணவனே எனைக் காத்தவனே ஒற்றிக் காவலனே.

#1206.
காவலனே அன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டு அவிழ்த்த
பாவலனே தொழும் பாணன் பரிசுறப் பாட்டு அளித்த
நாவலனே தில்லை நாயகனே கடல் நஞ்சை உண்ட
மா_வலனே முக்கண் வானவனே ஒற்றி மன்னவனே.

#1207.
மன்னவனே கொன்றை மாலையனே திருமால் அயற்கு
முன்னவனே அன்று நால்வர்க்கும் யோக முறை அறம்-தான்
சொன்னவனே சிவனே ஒற்றி மேவிய தூயவனே
என்னவனே ஐயம் ஏற்பவனே எனை ஈன்றவனே.

#1208.
ஈன்றவனே அன்பர் இன் உயிர்க்கு இன்புறும் இன் அமுதம்
போன்றவனே சிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே
ஆன்றவனே எமது உள்ளும் புறம்பும் அறிந்து நின்ற
சான்றவனே சிவனே ஒற்றி மேவிய சங்கரனே.

#1209.
சங்கரனே அரனே பரனே நல் சராசரனே
கம்_கரனே மதி_கண்ணியனே நுதல்_கண்ணினனே
நம் கரம் மேவிய அம் கனி போன்று அருள் நாயகனே
செங்கரன் நேர் வணனே ஒற்றி மேவிய சின்மயனே.

#1210.
சின்மயனே அனல் செங்கையில் ஏந்திய சேவகனே
நன்மையனே மறை நான்முகன் மாலுக்கு நாட அரிதாம்
தன்மையனே சிவசங்கரனே எம் சதாசிவனே
பொன்_மயனே முப்புராந்தகனே ஒற்றிப் புண்ணியனே.

#1211.
புண்ணியனே எமைப் போல்வார்க்கும் இன்பப் பொருள் அளிக்கும்
திண்ணியனே நல் சிவஞான நெஞ்சில் தெளிந்த அருள்
அண்ணியனே கங்கை ஆறு அமர் வேணியில் ஆர்ந்த மதிக்
கண்ணியனே பற்பலவாகும் அண்டங்கள் கண்டவனே.

#1212.
கண்டவனே சற்றும் நெஞ்சு உருகாக் கொடும் கள்வர்-தமை
விண்டவனே கடல் வேம்படி பொங்கும் விடம் அனைத்தும்
உண்டவனே மற்றும் ஒப்பு ஒன்று இலாத உயர்வு-தனைக்
கொண்டவனே ஒற்றிக் கோயிலின் மேவும் குருபரனே.

@59. திருக்காட்சிக் கிரங்கல்

#1213.
மண் ஏயும் வாழ்க்கையிடை மாழாந்து வன் பிணியால்
புண் ஏயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன்
பண் ஏயும் இன்பப் பரஞ்சுடரே என் இரண்டு
கண்ணே உன் பொன்_முகத்தைக் காணக் கிடைத்திலனே.

#1214.
மருள் ஆர்ந்த வல்_வினையால் வன் பிணியால் வன் துயரால்
இருள் ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன்
தெருள் ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமே நின்
அருள் ஆர்ந்த முக்கண் அழகு-தனைக் கண்டிலனே.

#1215.
வல் ஆர் முலையார் மயல் உழந்த வஞ்சகனேன்
பொல்லார் புரம் எரித்த புண்ணியனே பொய் மறுத்த
நல்லார் தொழும் தில்லை நாயகனே நன்று அளித்த
அல் ஆர் களத்தின் அழகு-தனைக் கண்டிலனே.

#1216.
நோயால் மெலிந்து உன் அருள் நோக்குகின்ற நொய்யவனேன்
தாயானவனே என் தந்தையே அன்பர்-தமைச்
சேயாய் வளர்க்கும் சிவனே சிவனே எம்
தூயா நின் பொன் தோளின் சுந்தரத்தைக் கண்டிலனே.

#1217.
வல் நேர் முலையார் மயல் உழந்த வன்_மனத்தேன்
அன்னே என் அப்பா என் ஐயா என் ஆர்_அமுதே
மன்னே மணியே மலையாள் மகிழ் உனது
பொன் நேர் இதழிப் புயம் காணப்பெற்றிலனே.

#1218.
நண்ணும் வினையால் நலிகின்ற நாய்_அடியேன்
எண்ணும் சுகாதீத இன்பமே அன்பு_உடையோர்
கண்ணும் கருத்தும் களிக்க வரும் கற்பகமே
பெண் ஒரு-பால் வாழும் உருப் பெற்றி-தனைக் கண்டிலனே.

#1219.
தெவ் வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன்
இவ்வண்ணம் என்று அறிதற்கு எட்டாத வான் பொருளே
அவ்வண்ணமான அரசே அமுதே நின்
செவ் வண்ண மேனித் திறம் காணப்பெற்றிலனே.

#1220.
அல் வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாய்_அடியேன்
சொல் வைத்த உண்மைத் துணையே இணைத் தோள் மேல்
வில்வத் தொடை அணிந்த வித்தகனே நின்னுடைய
செல்வத் திரு_அடியின் சீர் காணப்பெற்றிலனே.

#1221.
பொத்து ஏர் மயலால் புழுங்குகின்ற பொய்_அடியேன்
கொத்து ஏர் செழும் கொன்றைக் குன்றமே கோவாத
முத்தே எவர்க்கும் முழு_முதலே முத்திக்கு
வித்தே நின் பொன்_அடிக் கீழ் மேவி நிற்க கண்டிலனே.

#1222.
நீதி_இலார் வாயிலிடை நின்று அலைந்த நெஞ்சகனேன்
சோதி எலாம் சூழ்ந்த பரஞ்சோதியே செம் சடை மேல்
பாதி நிலா ஓங்கும் பரமே நீ ஒற்றி நகர்
வீதி உலா வந்த எழில் மெய் குளிரக் கண்டிலனே.

@60. திரு அருட் கிரங்கல்

#1223.
ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில் என்
அப்பா உன் பொன் அடிக்கே அன்பு_இலேன் ஆனாலும்
தப்பாது அகம் மெலியச் சஞ்சலத்தால் ஏங்குகின்ற
இப் பாதகத்தேற்கு இரங்கினால் ஆகாதோ.

#1224.
எஞ்சா இடரால் இரும் பிணியால் ஏங்கி மனம்
பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனைச்
செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி அப்பா நீ
அஞ்சாதே என்று உன் அருள்கொடுத்தால் ஆகாதோ.

#1225.
பற்றும் செழும் தமிழால் பாடுகின்றோர் செய்த பெரும்
குற்றம் குணமாகக் கொள்ளும் குண_கடலே
மல் தங்கும் எண் தோள் மலையே மரகதமே
பெற்றிங்கு அடியேன் பிணி கெடுத்தால் ஆகாதோ.

#1226.
எந்தையே என்பவர்-தம் இன் அமுதே என் உரிமைத்
தந்தையே தாயே தமரே என் சற்குருவே
சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயா என்
நிந்தையே நீங்க நிழல் அளித்தால் ஆகாதோ.

#1227.
உள்ளும் திரு_தொண்டர் உள்ளத்து எழும் களிப்பே
கொள்ளும் சிவானந்தக் கூத்தா உன் சேவடியை
நள்ளும் புகழ் உடைய நல்லோர்கள் எல்லாரும்
எள்ளும் புலையேன் இழிவு ஒழித்தால் ஆகாதோ.

#1228.
கோதை ஓர் கூறு உடைய குன்றமே மன்று அமர்ந்த
தாதையே ஒற்றித் தலத்து அமர்ந்த சங்கரனே
தீதையே நாள்-தோறும் செய்து அலைந்து வாடும் இந்தப்
பேதையேன் செய்த பிழை பொறுத்தால் ஆகாதோ.

#1229.
முத்திக்கு வித்தே முழு மணியே முத்தர் உளம்
தித்திக்கும் தேனே சிவமே செழும் சுடரே
சத்திக்கும் நாதத் தலம் கடந்த தத்துவனே
எத்திக்கும் இல்லேன் இளைப்பு ஒழித்தால் ஆகாதோ.

#1230.
வஞ்சம்_இலார் உள்ளம் மருவுகின்ற வான் சுடரே
கஞ்சம்_உளான் போற்றும் கருணைப் பெரும் கடலே
நஞ்சு அமுதாக் கொண்டு அருளும் நல்லவனே நின் அலது ஓர்
தஞ்சம்_இலேன் துன்பச் சழக்கு ஒழித்தால் ஆகாதோ.

#1231.
சேய் பிழையைத் தாய் அறிந்தும் சீறாள் பொறுப்பாள் இ
நாய் பிழையை நீ பொறுக்க ஞாயமும் உண்டு ஐயாவே
தேய்_மதி போல் நெஞ்சம் தியக்கமுறச் சஞ்சலத்தால்
வாய் அலறி வாடும் எனை வா என்றால் ஆகாதோ.

#1232.
கண்ணுள் மணி போல் கருதுகின்ற நல்லோரை
எண்ணும் கணமும் விடுத்து ஏகாத இன் அமுதே
உண்ணும் உணவுக்கும் உடைக்கும் முயன்று ஓடுகின்ற
மண்_உலகத்து என்றன் மயக்கு அறுத்தால் ஆகாதோ.

@61. பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல்

#1233.
வானை நோக்கி மண் வழி நடப்பவன் போல் வயங்கும் நின் அருள் வழியிடை நடப்பான்
ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன் உய்யும் வண்ணம் நீ உவந்து அருள் புரிவாய்
மானை நோக்கிய நோக்கு உடை மலையாள் மகிழ மன்றிடை மா நடம் புரிவோய்
தேனை நோக்கிய கொன்றை அம் சடையோய் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

#1234.
வாய்_இலான் பெரு வழக்கு உரைப்பது போல் வள்ளல் உன் அடி_மலர்களுக்கு அன்பாம்
தூய் இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெற நினைவாய்
கோயிலாக நல் அன்பர்-தம் உளத்தைக் கொண்டு அமர்ந்திடும் குணப் பெரும் குன்றே
தேய் இலாத பல் வளம் செறிந்து ஓங்கித் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

#1235.
வித்தை இன்றியே விளைத்திடுபவன் போல் மெய்ய நின் இரு மென் மலர்ப் பதத்தில்
பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன் பாவியேன் அருள் பண்புற நினைவாய்
மித்தை இன்றியே விளங்கிய அடியார் விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய்
சித்தி வேண்டிய முனிவரர் பரவித் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

#1236.
கலம் இலாது வான் கடல் கடப்பவன் போல் கடவுள் நின் அடி_கமலங்கள் வழுத்தும்
நலம் இலாது நின் அருள் பெற விழைந்த நாயினேன் செயும் நவை பொறுத்து அருள்வாய்
மலம் இலாத நல் வழியிடை நடப்போர் மனத்துள் மேவிய மா மணிச் சுடரே
சிலம் இலாஞ்சம் ஆதிய தருப் பொழில்கள் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

#1237.
போர்க்கும் வெள்ளத்தில் பொன் புதைப்பவன் போல் புலைய நெஞ்சிடைப் புனித நின் அடியைச்
சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும் சிறியனேனுக்கு உன் திரு_அருள் புரிவாய்
கூர்க்கும் நெட்டு இலை வேல் படைக் கரம் கொள் குமரன் தந்தையே கொடிய தீ வினையைத்
தீர்க்கும் தெய்வமே சைவ வைதிகங்கள் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

#1238.
ஓட உன்னியே உறங்குகின்றவன் போல் ஓங்கும் உத்தம உன் அருள்_கடலில்
ஆட உன்னியே மங்கையர் மயலில் அழுந்துகின்ற எற்கு அருள் செய நினைவாய்
நாட உன்னியே மால் அயன் ஏங்க நாயினேன் உளம் நண்ணிய பொருளே
தேட உன்னிய மா தவ முனிவர் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

#1239.
முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத்
துதல் இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெறுவேனோ
நுதலில் ஆர் அழல் கண்_உடையவனே நோக்கும் அன்பர்கள் தேக்கும் இன் அமுதே
சிதல் இலா வளம் ஓங்கி எந்நாளும் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

#1240.
கல்லை உந்தி வான் நதி கடப்பவர் போல் காமம் உந்திய நாம நெஞ்சகத்தால்
எல்லை உந்திய பவ_கடல் கடப்பான் எண்ணுகின்றனன் எனக்கு அருள்வாயோ
அல்லை உந்திய ஒண் சுடர்_குன்றே அகில கோடிகட்கு அருள் செயும் ஒன்றே
தில்லை நின்று ஒளிர் மன்றிடை அமுதே திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

#1241.
நெய்யினால் சுடு நெருப்பு அவிப்பவன் போல் நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த
பொய்யினால் பவம் போக்கிட நினைத்தேன் புல்லனேனுக்கு உன் நல் அருள் வருமோ
கையினால் தொழும் அன்பர்-தம் உள்ள_கமலம் மேவிய விமல வித்தகனே
செய்யினால் பொலிந்து ஓங்கி நல் வளங்கள் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

#1242.
நீர் சொரிந்து ஒளி விளக்கு எரிப்பவன் போல் நித்தம் நின்னிடை நேசம் வைத்திடுவான்
பார் சொரிந்திடும் பவ நெறி முயன்றேன் பாவியேன்-தனைக் கூவி நின்று ஆள்வாய்
கார் சொரிந்து எனக் கருணை ஈந்து அன்பர் களித்த நெஞ்சிடை ஒளித்திருப்பவனே
தேர் சொரிந்த மா மணித் திரு_வீதித் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

@62. நெஞ்சு நிலைக் கிரங்கல்

#1243.
ஆளாக நின் பொன்_அடிக்கு அன்புசெய்திட ஐய நெடு
நாளாக இச்சை உண்டு என்னை செய்கேன் கொடு நங்கையர்-தம்
மாளா மயல் சண்டமாருதத்தால் மன_வாசி என் சொல்
கேளாது அலைகின்றதால் ஒற்றி மேவும் கிளர் ஒளியே.

#1244.
ஒளியாய் ஒளிக்குள் ஒளிர் ஒளியே ஒற்றி உத்தம நீ
அளியாவிடில் இதற்கு என்னை செய்கேன் அணங்கு_அன்னவர்-தம்
களியால் களித்துத் தலைதெரியாது கயன்று உலவா
வளியாய்ச் சுழன்று இவண் மாயா மனம் எனை வாதிப்பதே.

#1245.
மாயா மனம் எவ்வகை உரைத்தாலும் மடந்தையர்-பால்
ஓயாது செல்கின்றது என்னை செய்கேன் தமை உற்றது ஒரு
நாயாகினும் கைவிடார் உலகோர் உனை நான் அடுத்தேன்
நீயாகிலும் சற்று இரங்கு கண்டாய் ஒற்றி நின்மலனே.

#1246.
மலம் சான்ற மங்கையர் கொங்கையிலே நசை வாய்த்து மனம்
சலம் சான்றதால் இதற்கு என்னை செய்கேன் நின் சரண் அன்றியே
வலம் சான்ற நல் துணை மற்று அறியேன் ஒற்றி வானவனே
நலம் சான்ற ஞானத் தனி முதலே தெய்வ நாயகனே.

#1247.
நாயினும் கீழ்ப்பட்ட என் நெஞ்சம் நன்கு அற்ற நங்கையர்-பால்
ஏயினும் செல்கின்றது என்னை செய்கேன் உனை ஏத்தியிடேன்
ஆயினும் இங்கு எனை ஆட்கொளல் வேண்டும் ஐயா உவந்த
தாயினும் நல்லவனே ஒற்றி மேவும் தயாநிதியே.

#1248.
நிதியே நின் பொன்_அடி ஏத்தாது நெஞ்சம் நிறை மயலாம்
சதியே புரிகின்றது என்னை செய்கேன் உனைத் தாழலர்-தம்
விதியே எனக்கும் விதித்தது அன்றோ அ விதியும் இள_
மதி ஏர் சடை அண்ணலே ஒற்றியூர் ஒளி மாணிக்கமே.

#1249.
மாணாத என் நெஞ்சம் வல் நஞ்சு அனைய மடந்தையர்-பால்
நாணாது செல்கின்றது என்னை செய்கேன் சிவ ஞானியர்-தம்
கோணாத உள்ளத் திரு_கோயில் மேவிக் குலவும் ஒற்றி_
வாணா என் கண்ணினுள் மா மணியே என்றன் வாழ் முதலே.

#1250.
வாழாத நெஞ்சம் எனை அலைத்து ஓடி மடந்தையர்-பால்
வீழாத நாள் இல்லை என்னை செய்கேன் உன் விரை மலர்_தாள்
தாழாத குற்றம் பொறுத்து அடியேன்-தனைத் தாங்கிக்கொள்வாய்
சூழாதவரிடம் சூழாத ஒற்றிச் சுடர்_குன்றமே.

#1251.
குன்று ஏர் முலைச்சியர் வன் மல ஊத்தைக் குழியில் மனம்
சென்றே விழுகின்றது என்னை செய்கேன் எம் சிவ_கொழுந்தே
நன்றே சதானந்த நாயகமே மறை நான்கினுக்கும்
ஒன்றே உயர் ஒளியே ஒற்றியூர் எம் உயிர்_துணையே

#1252.
துணையாம் உன் பொன்_அடி ஏத்தா மனம்-அது தோகையர் கண்_
கணையால் இளைக்கின்றது என்னை செய்கேன் என்றன் கண் இரண்டின்
இணையாம் பரஞ்சுடரே அழியா நலமே இன்பமே
பணை ஆர் திருவொற்றியூர் அரசே எம் பரம்பொருளே.

#1253.
பொருளே நின் பொன்_அடி உன்னாது என் வன் மனம் பூவையர்-தம்
இருளே புரிகின்றது என்னை செய்கேன் அடியேன் மயங்கும்
மருளே தவிர்ந்து உனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திட நீ
அருளே அருள்_கடலே ஒற்றி மா நகர் ஆள்பவனே.

@63. எண்ணத் திரங்கல்

#1254.
எளியேன் நின் திருமுன்பே என் உரைக்கேன் பொல்லாத
களியேன் கொடும் காமக் கல்_மனத்தேன் நன்மை இலா
வெளியேன் வெறியேன்-தன் மெய்ப் பிணியை ஒற்றியில் வாழ்
அளியோய் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

#1255.
முன்னே செய் வெம் வினை-தான் மூண்டதுவோ அல்லது நான்
இன்னே பிழை-தான் இயற்றியது உண்டோ அறியேன்
பொன் நேர் புரி சடை எம் புண்ணியனே என் நோயை
அன்னே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

#1256.
இப் பாரிடை உனையே ஏத்துகின்ற நாயேனை
வெப்பு ஆர் உளத்தினர் போல் வெம்மை செயும் வெம் பிணியை
எப்பாலவர்க்கும் இறைவனாம் என் அருமை
அப்பா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

#1257.
ஓவா மயல் செய் உலக நடைக்குள் துயரம்
மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய் நோயைச்
சே ஆர் கொடி எம் சிவனே சிவனேயோ
ஆஆ நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

#1258.
பொய்யாம் மல இருட்டுப் பொத்தரிடை வீழ்ந்து உழலும்
கையாம் நெறியேன் கலங்க வந்த வெம் பிணியை
மை ஆர் மிடற்று எம் மருந்தே மணியே என்
ஐயா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

#1259.
இ மா நிலத்தில் இடர் உழத்தல் போதாதே
விம்மா அழுங்க என்றன் மெய் உடற்றும் வெம் பிணியைச்
செம் மான் மழுக் கரம் கொள் செல்வச் சிவமே என்
அம்மான் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

#1260.
புரை சேரும் நெஞ்சப் புலையனேன் வன் காமத்
தரை சேரும் துன்பத் தடம் கடலேன் வெம் பிணியை
விரை சேரும் கொன்றை விரி சடையாய் விண்ணவர்-தம்
அரைசே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

#1261.
இத் தாரணியில் எளியோரைக் கண்டு மிக
வித்தாரம் பேசும் வெறியேன்-தன் மெய்ப் பிணியைக்
கொத்து ஆர் குழலி ஒரு கூறு உடைய கோவே என்
அத்தா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

#1262.
மறி ஏர் விழியார் மயக்கினிடை மாழாந்த
சிறியேன் அடியேன் தியங்க வந்த வல் நோயைச்
செறிவே பெறும் தொண்டர் சிந்தை-தனில் ஓங்கும்
அறிவே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

#1263.
துன்பே சுமையாச் சுமக்கின்ற நாயேனை
வன்பே செய்து உள்ளம் மயக்கி நின்ற வன் நோயை
இன்பே அருள்கின்ற என் ஆர்_உயிரே என்
அன்பே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

@64.பிரசாதப் பதிகம்

#1264.
சரதத்தால் அன்பர் சார்ந்திடும் நின் திரு
விரதத்தால் அன்றி வேறு ஒன்றில் தீருமோ
பரதத் தாண்டவனே பரிதிப்புரி
வரதத்து ஆண்டவனே இ வருத்தமே.

#1265.
வேதனேனும் விலக்குதற்பாலனோ
தீதனேன் துயர் தீர்க்கும் வயித்திய
நாதனே உன்றன் நல் அருள் இல்லையேல்
நோதல் நேரும் வன் நோயில் சிறிதுமே.

#1266.
அருந்தினால் அன்பு அகம் குளிர் ஆனந்த
விருந்தினால் மகிழ்வித்து அருள் அண்ணலே
வருந்தி நாட வரும் பிணி நின் அருள்
மருந்தினாலன்றி மற்றொன்றில் தீருமோ.

#1267.
மாலும் நான்கு_வதனனும் மா மறை
நாலும் நாட அரும் நம் பரனே எவ
ராலும் நீக்க அரிது இ வருத்தம் நின்
ஏலும் நல் அருள் இன்று எனில் சற்றுமே.

#1268.
தேவராயினும் தேவர் வணங்கும் ஓர்
மூவராயினும் முக்கண நின் அருள்
மேவுறாது விலக்கிடற்பாலரோ
ஓவுறாத உடல் பிணி-தன்னையே.

#1269.
வைய நாயக வானவர் நாயக
தையல் நாயகி சார்ந்திடும் நாயக
உய்ய நின் அருள் ஒன்றுவது இல்லையேல்
வெய்ய நோய்கள் விலகுவது இல்லையே.

#1270.
கல்லை வில்லில் கணித்து அருள்செய்ததோர்
எல்லை இன்றி எழும் இன்ப_வெள்ளமே
இல்லை இல்லை நின் இன் அருள் இல்லையேல்
தொல்லை நோயின் தொடக்கு-அது நீங்கலே.

#1271.
நீதி மா தவர் நெஞ்சிடை நின்று ஒளிர்
சோதியே முத்தொழில் உடை மூவர்க்கும்
ஆதியே நின் அருள் ஒன்றும் இல்லையேல்
வாதியாநிற்கும் வன் பிணி யாவுமே.

#1272.
பத்தர் நித்தம் பயில் பரிதிப்புரி
உத்தமப் பொருளே உன் அருள்-தனைப்
பெத்தம் அற்றிடப் பெற்றவர்க்கு அல்லது
நித்தம் உற்ற நெடும் பிணி நீங்குமோ.

#1273.
சைவ சிற்குணர் தம் உளம் மன்னிய
தெய்வ தற்பரனே சிவனே இங்கு
உய்வதற்கு உன் அருள் ஒன்றும் இல்லையேல்
நைவதற்கு நணுகுவ நோய்களே.

@65. நெஞ்சுறுத்த திருநேரிசை

#1274.
பொன் ஆர் விடை_கொடி எம் புண்ணியனைப் புங்கவனை
ஒன்னார் புரம் எரித்த உத்தமனை மன்னாய
அத்தனை நம் ஒற்றியூர் அப்பனை எல்லாம்_வல்ல
சித்தனை நீ வாழ்த்துதி நெஞ்சே.

#1275.
நெஞ்சே உலக நெறி நின்று நீ மயலால்
அஞ்சேல் என் பின் வந்து அருள் கண்டாய் எஞ்சாத்
தவ_கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்து ஏத்தும் ஒற்றிச்
சிவ_கொழுந்தை வாழ்த்துதும் நாம் சென்று

#1276.
சென்றுசென்று நல்காத செல்வர் தலைவாயிலிலே
நின்றுநின்று வாடுகின்ற நெஞ்சமே இன்று திரு
ஒற்றியப்பன் தாள்_மலரை உன்னுதியேல் காதலித்து
மற்று இசைப்பது எல்லாம் வரும்.

#1277.
வரு_நாள் உயிர் வாழும் மாண்பு அறியோம் நெஞ்சே
ஒருநாளும் நீ வேறு ஒன்று உன்னேல் திருநாளைப்
போவான் தொழும் மன்றில் புண்ணியனை ஒற்றியில் தாய்
ஆவான் திரு_அடி அல்லால்.

#1278.
அல் ஆலம் உண்ட மிடற்று ஆர்_அமுதை அற்புதத்தைக்
கல் ஆல நீழல் அமர் கற்பகத்தைச் சொல் ஆர்ந்த
விண்மணியை என் உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில் என்
கண்மணியை நெஞ்சே கருது.

#1279.
கருதாயோ நெஞ்சே கதி கிடைக்க எங்கள்
மருதா எழில் தில்லை மன்னா எருது ஏறும்
என் அருமைத் தெய்வதமே என் அருமைச் சற்குருவே
என் அருமை அப்பாவே என்று.

#1280.
என்றும் உனக்கு ஆளாவேன் என் நெஞ்சே வன்_நெஞ்சர்
ஒன்றும் இடம் சென்று அங்கு உழலாதே நன்று தரும்
ஒற்றியப்பன் பொன்_அடியை உன்னுகின்றோர்-தம் பதத்தைப்
பற்றி நிற்பையாகில் பரிந்து.

#1281.
பரிந்து உனக்குச் சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம்
எரிந்து விழ நாம் கதியில் ஏறத் தெரிந்து
விடையானை ஒற்றியூர் வித்தகனை மாது ஓர்
புடையானை நெஞ்சமே போற்று.

#1282.
போற்றுதி என் நெஞ்சே புரம் நகையால் சுட்டவனை
ஏற்று உகந்த பெம்மானை எம்மவனை நீற்று ஒளி சேர்
அம்_வண்ணத்தானை அணி பொழில் சூழ் ஒற்றியூர்ச்
செம்_வண்ணத்தானைத் தெரிந்து.

#1283.
தெரிந்து நினக்கு அனந்தம் தெண்டன் இடுகின்றேன்
விரிந்த நெஞ்சே ஒற்றியிடை மேவும் பரிந்த நெற்றிக்
கண்ணானை மால் அயனும் காணப்படாதானை
எண்ணாரை எண்ணாதே என்று.

#1284.
என்று என்று அழுதாய் இலையே என் நெஞ்சமே
ஒன்று என்று நின்ற உயர்வு_உடையான் நன்று என்ற
செம்மைத் தொழும்பர் தொழும் சீர் ஒற்றியூர் அண்ணல்
நம்மைத் தொழும்புகொள்ளும் நாள்.

#1285.
நாள் ஆகும் முன் எனது நல் நெஞ்சே ஒற்றியப்பன்
தாள் ஆகும் தாமரைப் பொன் தண் மலர்க்கே ஆளாகும்
தீர்த்தர்-தமக்கு அடிமை_செய்தவர்-தம் சீர்ச் சமுகம்
பார்த்து மகிழ்வாய் அதுவே பாங்கு.

#1286.
பாங்கு_உடையார் மெய்யில் பலித்த திரு_நீறு அணியாத்
தீங்கு_உடையார் தீ மனையில் செல்லாதே ஓங்கு_உடையாள்
உற்று அமர்ந்த பாகத்து எம் ஒற்றியப்பன் பொன்_அருளைப்
பெற்று அமர்தி நெஞ்சே பெரிது.

#1287.
பெரியானை மாதர்ப் பிறை_கண்ணியானை
அரியானை அங்கணனை ஆர்க்கும் கரி யானைத்
தோலானைச் சீர் ஒற்றிச் சுண்ண வெண்_நீற்றானை
மேலானை நெஞ்சே விரும்பு.

#1288.
விரும்பித் திருமால் விலங்காய் நெடுநாள்
அரும் பித்து அளைந்து உள் அயர்ந்தே திரும்பி விழி
நீர் கொண்டும் காணாத நித்தன் ஒற்றியூரன் அடிச்
சீர் கொண்டு நெஞ்சே திகழ்.

#1289.
திகழ்கின்ற ஞானச் செழும் சுடரை வானோர்
புகழ்கின்ற தெய்வத்தைப் போதம் நிகழ்கின்ற
ஒற்றிக் கனியை உலகு உடைய நாயகத்தை
வெற்றித் துணையை நெஞ்சே வேண்டு.

#1290.
வேண்டாமை வேண்டுவது மேவாத் தவம்_உடையோர்
தீண்டாமை யாது அது நீ தீண்டாதே ஈண்டாமை
ஒன்றுவ போல் நெஞ்சே நீ ஒன்றி ஒற்றியூரன்-பால்
சென்று தொழு கண்டாய் தினம்.

#1291.
தினம்-தோறும் உள் உருகிச் சீர் பாடும் அன்பர்
மனம்-தோறும் ஓங்கும் மணியை இனம்-தோறும்
வேதம் மலர்கின்ற வியன் பொழில் சூழ் ஒற்றி நகர்ப்
போத மலரை நெஞ்சே போற்று.

#1292.
போற்றார் புரம் பொடித்த புண்ணியனை விண்ணவர்கள்
ஆற்றாத நஞ்சம் உண்ட ஆண்தகையைக் கூற்று ஆவி
கொள்ளும் கழல் கால் குரு மணியை ஒற்றி இடம்
கொள்ளும் பொருளை நெஞ்சே கூறு.

#1293.
கூறு உமையாட்கு ஈந்து அருளும் கோமானைச் செம் சடையில்
ஆறு மலர்க் கொன்றை அணிவோனைத் தேறு மனம்
உள்ளவர்கட்கு உள்ளபடி உள்ளவனை ஒற்றி அமர்
நள்ளவனை நெஞ்சமே நாடு.

#1294.
நாடும் சிவாய நம என்று நாடுகின்றோர்
கூடும் தவ நெறியில் கூடியே நீடும் அன்பர்
சித்த மனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர்
உத்தமனை நெஞ்சமே ஓது.

#1295.
ஓது நெறி ஒன்று உளது என் உள்ளமே ஓர்தி அது
தீது நெறி சேராச் சிவ நெறியில் போது நெறி
ஓதம் பிடிக்கும் வயல் ஒற்றியப்பன் தொண்டர் திருப்
பாதம் பிடிக்கும் பயன்.

#1296.
பயன் அறியாய் நெஞ்சே பவம் சார்தி மாலோடு
அயன் அறியாச் சீர் உடைய அம்மான் நயன்_அறியார்
உள்ளத்து அடையான் உயர் ஒற்றியூரவன் வாழ்
உள்ளத்தவரை உறும்.

#1297.
தவராயினும் தேவர்-தாமாயினும் மற்று
எவராயினும் நமக்கு இங்கு என்னாம் கவராத
நிந்தை அகன்றிட என் நெஞ்சமே ஒற்றியில் வாழ்
எந்தை அடி வணங்காரேல்.

#1298.
ஏலக் குழலார் இடைக் கீழ்ப் படும் கொடிய
ஞாலக் கிடங்கரினை நம்பாதே நீல
மணி_கண்டா என்று உவந்து வாழ்த்தி நெஞ்சே நாளும்
பணி கண்டாய் அன்னோன் பதம்.

#1299.
பதம் தருவான் செல்வப் பயன் தருவான் மன்னும்
சதம் தருவான் யாவும் தருவான் இதம் தரும் என்
நெஞ்சம் என்-கொல் வாடுகின்றாய் நின்மலா நின் அடியே
தஞ்சம் என்றால் ஒற்றியப்பன்-தான்.

@66. தனிமைக் கிரங்கல்

#1300.
ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த அயன் முன் ஆகிய ஐவரை அளித்து
நீக்கம் இன்றி எவ்விடத்தினும் நிறைந்த நித்த நீ எனும் நிச்சயம் அதனைத்
தாக்க எண்ணியே தாமதப் பாவி தலைப்பட்டான் அவன்றனை அகற்றுதற்கே
ஊக்கம் உற்ற நின் திரு_அருள் வேண்டும் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

#1301.
கணத்தில் என்னை விட்டு ஏகுகின்றவன் போல் காட்டுகின்றனன் மீட்டும் வந்து அடுத்துப்
பணத்தும் மண்ணினும் பாவையரிடத்தும் பரவ நெஞ்சினை விரவுகின்றனன் காண்
குணத்தினில் கொடும் தாமதன் எனும் இக் கொடிய வஞ்சகன் ஒடிய மெய்ப் போதம்
உணர்த்துவார் இலை என் செய்கேன் எளியேன் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

#1302.
இமைக்கும் அவ்வளவேனும் நெஞ்சு ஒடுங்கி இருக்கக் கண்டிலேன் இழிவு கொள் மலத்தின்
சுமைக்கு நொந்துநொந்து ஐயவோ நாளும் துயர்கின்றேன் அயர்கின்ற என் துயரைக்
குமைக்கும் வண்ணம் நின் திரு_அருள் இன்னும் கூடப் பெற்றிலேன் கூறுவது என்னே
உமைக்கு நல் வரம் உதவிய தேவே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

#1303.
சென்ற நாளில் ஓர் இறைப் பொழுதேனும் சிந்தை ஓர் வகை தெளிந்ததன்று அது போய்
நின்ற நாளினும் நிற்கின்
என்றன் ஆர்_உயிர்க்கு ஒரு பெரும் துணையாம் எந்தையே எனை எழுமையும் காத்த
உன்றனால் இன்னும் உவகை கொள்கின்றேன் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

#1304.
கோடி நாவினும் கூறிட அடங்காக் கொடிய மாயையின் நெடிய வாழ்க்கையினை
நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனை ஓர் நாளும் எண்ணிலேன் நன்கு அடைவேனே
வாடினேன் பிழை மனம்கொளல் அழியா வாழ்வை ஏழையேன் வசம்செயல் வேண்டும்
ஊடினாலும் மெய் அடியரை இகவா ஒற்றி மேவிய உத்தமப் பொருளே.

#1305.
அன்பு-அது என்பதைக் கனவினும் காணேன் ஆடுகின்றனன் அன்பரைப் போல
வன் பவத்தையும் மாய்த்திட நினைத்தேன் வஞ்ச நெஞ்சினை வசப்படுக்கில்லேன்
துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத் தொழுது வாழ்த்தி நல் சுகம் பெறுவேனே
ஒன்பது ஆகிய உரு உடைப் பெரியோய் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

#1306.
முன்னை நான் செய்த வல்_வினை இரண்டின் முடிவு தேர்ந்திலன் வடிவெடுத்து உலகில்
என்னை நான் கண்டது அந்த நாள் தொடங்கி இந்த நாள் மட்டும் இருள் என்பது அல்லால்
பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப் பேச என் உளம் கூசுகின்றது காண்
உன்னை நம்பினேன் நின் குறிப்பு உணரேன் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

#1307.
கண்_இலான் சுடர் காணிய விழைந்த கருத்தை ஒத்த என் கருத்தினை முடிப்பத்
தெள் நிலா முடிச் சிவ_பரம்பொருள் நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன்
பண் நிலாவிய பாடல் அம் தொடை நின் பாத_பங்கயம் பதிவுறப் புனைவோர்
உள் நிலாவிய ஆனந்தப் பெருக்கே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

#1308.
உண்மை நின் அருள் சுகம் பிற எல்லாம் உண்மை அன்று என உணர்த்தியும் எனது
பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண்டு உலகப் பித்திலே இன்னும் தொத்துகின்றது காண்
வண்மை ஒன்று இலேன் எண்மையின் அந்தோ வருந்துகின்றனன் வாழ்வு அடைவேனோ
ஒண்மை அம்பலத்து ஒளிசெயும் சுடரே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

#1309.
நையுமாறு எனைக் காமம் ஆதிகள் தாம் நணுகி வஞ்சகம் நாட்டுகின்றது நான்
செய்யும் ஆறு இதற்கு அறிந்திலன் எந்தாய் திகைக்கின்றேன் அருள் திறம் பெறுவேனே
வையுமாறு இலா வண்_கையர் உளத்தின் மன்னி வாழ்கின்ற மா மணி_குன்றே
உய்யுமாறு அருள் அம்பலத்து அமுதே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

@67. கருணை பெறா திரங்கல்

#1310.
நன்றி ஒன்றிய நின் அடியவர்க்கே நானும் இங்கு ஒரு நாய்_அடியவன் காண்
குன்றின் ஒன்றிய இடர் மிக உடையேன் குற்றம் நீக்கும் நல் குணம்_இலேன் எனினும்
என்றின் ஒன்றிய சிவ_பரஞ்சுடரே இன்ப_வாரியே என் உயிர்த் துணையே
ஒன்றின் ஒன்றிய உத்தமப் பொருளே உனை அலால் எனை_உடையவர் எவரே.

#1311.
தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன் தீயனேன் கொடும் தீ_குண இயல்பே
ஏது செய்தனனேனும் என்றன்னை ஏன்றுகொள்வது எம் இறைவ நின் இயல்பே
ஈது செய்தனை என்னை விட்டு உலகில் இடர்கொண்டு ஏங்கு என இயம்பிடில் அடியேன்
ஓது செய்வது ஒன்று என் உயிர்த் துணையே உனை அலால் எனை_உடையவர் எவரே.

#1312.
சென்ற நாளினும் செல்கின்ற நாளில் சிறியனேன் மிகத் தியங்குறுகின்றேன்
மன்ற நான் இவண் இவ்வகை ஆனால் வள்ளலே நினை வழுத்தும் ஆறு எதுவோ
என்றனால் இனி ஆவது ஒன்று இலை உன் எண்ணம் எப்படி அப்படி இசைக
உன்றனால் களித்து உவகைகொள்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே.

#1313.
மையல் வாழ்க்கையில் நாள்-தொறும் அடியேன் வருந்தி நெஞ்சகம் மாழ்குவது எல்லாம்
ஐய ஐயவோ கண்டிடாதவர் போல் அடம்பிடிப்பது உன் அருளினுக்கு அழகோ
செய்ய மேல் ஒன்றும் அறிந்திலன் சிவனே தில்லை மன்றிடைத் தென் முகம் நோக்கி
உய்யவைத்த தாள் நம்பி நிற்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே.

#1314.
மண்ணகச் சிறு வாழ்க்கையின் பொருட்டால் வருந்தி மற்று அதன் வன்மைகள் எல்லாம்
எண்ணஎண்ண என் நெஞ்சகம் பதைப்புற்று ஏங்கிஏங்கி நான் இளைப்புறுகின்றேன்
அண்ணல் நின் திரு_அருள் துணை அடைந்தால் அமைந்து வாழ்குவன் அடை வகை அறியேன்
உண்ண நல் அமுது அனைய எம் பெருமான் உனை அலால் எனை_உடையவர் எவரே.

#1315.
அன்னை அப்பனும் நீ என மகிழ்ந்தே அகம் குளிர்ந்து நான் ஆதரித்திருந்தேன்
என்னை இப்படி இடர் கொள விடுத்தால் என் செய்கேன் இதை யாரொடு புகல்கேன்
பொன்னை ஒத்த நின் அடி துணை மலரைப் போற்றுவார்க்கு நீ புரிகுவது இதுவோ
உன்னை எப்படி ஆயினும் மறவேன் உனை அலால் எனை_உடையவர் எவரே.

#1316.
நீலம் இட்ட கண் மடவியர் மயக்கால் நெஞ்சம் ஓர் வழி நான் ஒரு வழியாய்
ஞாலம் இட்ட இ வாழ்க்கையில் அடியேன் நடுங்கி உள்ளகம் நலியும் என் தன்மை
ஆலம் இட்டு அருள் களத்த நீ அறிந்தும் அருள் அளித்திலை ஆக மற்று இதனை
ஓலமிட்டு அழுது அரற்றி எங்கு உரைப்பேன் உனை அலால் எனை_உடையவர் எவரே.

#1317.
கொடிய பாவியேன் படும் பரிதாபம் குறித்துக் கண்டும் என் குறை அகற்றாது
நெடிய காலமும் தாழ்த்தனை நினது நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்தது உண்டேயோ
அடியர்-தம் துயர் கண்டிடில் தரியார் ஐயர் என்பர் என் அளவு அஃது இலையோ
ஒடிய மா துயர் நீக்கிடாய் என்னில் உனை அலால் எனை_உடையவர் எவரே.

#1318.
என்னென்று ஏழையேன் நாணம் விட்டு உரைப்பேன் இறைவ நின்றனை இறைப் பொழுதேனும்
உன் என்றால் எனது உரை மறுத்து எதிராய் உலக மாயையில் திலகம் என்று உரைக்கும்
மின் என்று ஆல் இடை மடவியர் மயக்கில் வீழ்ந்து என் நெஞ்சகம் ஆழ்ந்துவிட்டதனால்
உன் அன்பு என்பது என்னிடத்து இலையேனும் உனை அலால் எனை_உடையவர் எவரே.

#1319.
அடியனேன் மிசை ஆண்டவ நினக்கு ஓர் அன்பு இருந்தது என்று அகங்கரித்திருந்தேன்
கொடியனேன் படும் இடர் முழுது அறிந்தும் கூலியாளனைப் போல் எனை நினைத்தே
நெடிய இத்துணைப் போதும் ஓர்சிறிதும் நெஞ்சு இரங்கிலை சஞ்சலத்து அறிவும்
ஒடிய நின்றனன் என் செய்கேன் சிவனே உனை அலால் எனை_உடையவர் எவரே.

@68. அர்ப்பித் திரங்கல்

#1320.
தம்பிரான் தயவு இருக்க இங்கு எனக்கு ஓர் தாழ்வு உண்டோ எனத் தருக்கொடும் இருந்தேன்
எம் பிரான் நினக்கு ஏழையேன் அளவில் இரக்கம் ஒன்று இலை என்னென்பது இன்னும்
நம் பிரான் என நம்பி நிற்கின்றேன் நம்பும் என்றனை வெம்பிடச் செயினும்
செம் பிரான் அருள் அளிக்கினும் உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

#1321
துட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன் சொல்வது என்னை என் தொல் வினை வசத்தால்
இட்ட நல் வழி அல் வழி எனவே எண்ணும் இ வழி இரண்டிடை எனை நீ
விட்டது எவ்வழி அவ்வழி அகன்றே வேறும் ஓர் வழி மேவிடப்படுமோ
சிட்டர் உள்ளுறும் சிவபெருமான் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

#1322.
ஊட்டுகின்றனை உண்ணுகின்றனன் மேல் உறக்குகின்றனை உறங்குகின்றனன் பின்
காட்டுகின்றனை காணுகின்றனன் நீ களிப்பிக்கின்றனை களிப்புறுகின்றேன்
ஆட்டுகின்றனை ஆடுகின்றனன் இ அகில கோடியும் அவ்வகையானால்
தீட்டும் அன்பருக்கு அன்ப நின்றனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

#1323.
கண்_இலான் சுடர் காண உன்னுதல் போல் கருத்து_இலேனும் நின் கருணையை விழைந்தேன்
எண்_இலா இடையூறு அடுத்ததனால் இளைக்கின்றேன் எனை ஏன்றுகொள்வதற்கு என்
உள் நிலாவிய உயிர்க்குயிர்_அனையாய் உன்னை ஒத்தது ஓர் முன்னவர் இலை காண்
தெள் நிலா முடிச் சிவ_பரம்பொருள் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

#1324.
மெச்சுகின்றவர் வேண்டிய எல்லாம் விழி இமைக்கும் முன் மேவல் கண்டு உனை நான்
நச்சுகின்றனன் நச்சினும் கொடியேன் நன்மை எய்தவோ வன்மையுற்றிடவோ
இச்சை நன்று அறிவாய் அருள்செய்யாது இருக்கின்றாய் உனக்கு யான் செய்தது என்னே
செச்சை மேனி எம் சிவ_பரஞ்சுடர் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

#1325.
நாடும் தாயினும் நல்லவன் நமது நாதன் என்று உனை நாடும் அப்பொழுதே
வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை வைகல் போது எலாம் வாடுகின்றனன் காண்
பாடும் தொண்டர்கள் இடர்ப்படில் தரியாப் பண்பு என் மட்டும் நின்-பால் இலை போலும்
தேடும் பத்தர்-தம் உளத்து அமர்வோய் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

#1326.
மருள் அளித்து எனை மயக்கி இ உலகில் வருத்துகின்றனை மற்று எனக்கு உன்றன்
அருள் அளிக்கிலை ஆயினும் நினக்கே அடிமை ஆக்கிலை ஆயினும் வேற்றுப்
பொருள் அளிக்கிலை ஆயினும் ஒரு நின் பொன்_முகத்தை ஓர் போது கண்டிடவே
தெருள் அளித்திடில் போதும் இங்கு உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

#1327.
மாறுகின்றனன் நெஞ்சகம் அஞ்சி வள்ளல் இத்துணை வந்திலன் இனிமேல்
கூறுகின்றது என் என்று அயர்கின்றேன் குலவித் தேற்றும் அக் கொள்கையர் இன்றி
ஏறுகின்றனன் இரக்கம்_உள்ளவன் நம் இறைவன் இன்று அருள் ஈகுவன் என்றே
தேறுகின்றனன் என் செய்கேன் நினது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

#1328.
தாயினும் பெரும் தயவு_உடையவன் நம் தலைவன் என்று நான் தருக்கொடும் திரிந்தேன்
நாயினும் கடையேன் படும் இடரை நாளும் கண்டனை நல் அருள்செய்யாய்
ஆயினும் திரு_முகம் கண்டு மகிழும் அன்பர்-தம் பணி ஆற்றி மற்று உடலம்
தேயினும் மிக நன்று எனக்கு அருள் உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

#1329.
வானும் வையமும் அளிக்கினும் உன்-பால் மனம்வைத்து ஓங்குவர் வள்ளல் நின் அடியார்
நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில் நாடி நின் அருள் நலம் பெற விழைதல்
கூனும் ஓர் முடக் கண்_இலி வானில் குலவும் ஒண் சுடர் குறித்திடல் போலும்
தேனும் கைக்கும் நின் அருள் உண்டேல் உண்டு உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

@69. கழிபகற் கிரங்கல்

#1330.
ஆண்டது உண்டு நீ என்றனை அடியேன் ஆக்கை ஒன்றுமே அசை மடல் பனை போல்
நீண்டது உண்டு மற்று உன் அடிக்கு அன்பே நீண்டது இல்லை வல் நெறி செலும் ஒழுக்கம்
பூண்டது உண்டு நின் புனித நல் ஒழுக்கே பூண்டது இல்லை என் புன்மையை நோக்கி
ஈண்ட வந்து அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே.

#1331.
ஊழையே மிக நொந்திடுவேனோ உளத்தை நோவனோ உலகிடை மயக்கும்
பாழையே பலன் தருவது என்று எண்ணிப் பாவியேன் பெரும் படர் உழக்கின்றேன்
மாழை ஏர் திரு_மேனி எம் பெருமான் மனம் இரங்கி என் வல்_வினை கெட வந்து
ஏழையேற்கு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே.

#1332.
ஈன்று கொண்ட என் தந்தையும் தாயும் யாவும் நீ என எண்ணிய நாயேன்
மான்று கொண்ட இ வஞ்சக வாழ்வின் மயக்கினால் மிக வன்மைகள் செய்தேன்
சான்று கொண்டு அது கண்டனையேனும் தமியனேன் மிசைத் தயவுகொண்டு என்னை
ஏன்றுகொண்டு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே.

#1333.
அம்மை அப்பன் என் ஆர்_உயிர்த் துணைவன் அரசன் தேசிகன் அன்பு உடைத் தேவன்
இம்மையில் பயன் அம்மையில் பயன் மற்று யாவும் நீ என எண்ணிநிற்கின்றேன்
செம்மையில் பெறும் அன்பர் உள்ளகம் சேர் செல்வமே எனைச் சேர்த்து அருளாயேல்
எம்மையில் பெறுவேன் சிறு நாயேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே.

#1334.
தாயர் ஆதியர் சலிப்புறுகிற்பார் தமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார்
நேயர் ஆதியர் நேயம் விட்டு அகல்வார் நின்னை நம்பி என் நெஞ்சு உவக்கின்றேன்
தீயர் ஆதியில் தீயன் என்று எனை நின் திருவுளத்திடைச் சேர்த்திடாது ஒழித்தால்
ஏயர் கோனுக்கு அன்று அருளும் எம் பெருமான் என் செய்கேன் நரகிடை இடும் போதே.

#1335.
முன்னை நான் செய்த வல்_வினைச் சிமிழ்ப்பால் மோக_வாரியின் மூழ்கினனேனும்
அன்னை போலும் என் ஆர்_உயிர்த் துணையாம் அப்ப நின் அருள் அம்பியை நம்பி
தன்னை நேர் சிவஞானம் என் கரையைச் சார்குவேம் எனும் தருக்குடன் உழன்றேன்
இன்னும் நின் அருள் ஈந்திலை அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே.

#1336.
உண்ணுகின்றதும் உறங்குகின்றதும் மேல் உடுத்துகின்றதும் உலவுகின்றதும் மால்
நண்ணுகின்றதும் நங்கையர் வாழ்க்கை நாடுகின்றதும் நவை உடைத் தொழில்கள்
பண்ணுகின்றதும் ஆன பின் உடலைப் பாடை மேல் உறப் படுத்துகின்றதும் என்று
எண்ணுகின்ற-தோறு உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே.

#1337.
கல்லை வெல்லவும் வல்ல என் மனம்-தான் கடவுள் நின் அடி_கமலங்கள் நினைத்தல்
இல்லை நல்லை நின் அருள் எனக்கு அதனால் இல்லை இல்லை நீ இரக்கம்_இல்லாதான்
அல்லை இல்லையால் அருள்தராது இருத்தல் அடியனேன் அளவாயின் இங்கு இடர்க்கே
எல்லை இல்லை என்று உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே.

#1338.
பொங்கு மாயையின் புணர்ப்பினுக்கு உள்ளம் போக்கி நின்றதும் புலப் பகைவர்களால்
இங்கு மால் அரி_ஏற்றின் முன் கரி போல் ஏங்குகின்றதும் இடர்ப் பெரும் கடலில்
தங்கும் ஆசை அம் கராப் பிடித்து ஈர்க்கத் தவிப்பில் நின்றதும் தமியனேன்-தனையும்
எங்கும் ஆகி நின்றாய் அறிந்திலையோ என் செய்கேன் நரகிடை இடும் போதே.

#1339.
அரக்கன் அல்லன் யான் அரக்கனே எனினும் அரக்கனுக்கும் முன் அருள் அளித்தனையே
புரக்க என்னை நின் அருள் கடன் என்றே போற்றுகின்றனன் புலையரில் புலையேன்
உரக்க இங்கு இழைத்திடும் பிழை எல்லாம் உன்னல் ஐய நீ உன்னி என்னளவில்
இரக்கம் நின் திரு உளத்து இலையானால் என் செய்கேன் நரகிடை இடும் போதே.

@70. தரிசனப் பதிகம்

#1340.
திரு ஆர் பொன்_அம்பல நடுவே தெள் ஆர் அமுதத் திரள் அனைய
உரு ஆர் அறிவானந்த நடம் உடையார் அடியார்க்கு உவகை நிலை
தருவார் அவர்-தம் திரு_முகத்தே ததும்பும் இள வெண்_நகை கண்டேன்
இரு_வாதனை அற்று அந்தோ நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ.

#1341.
பொன்_நாயகனும் புரந்தரனும் பூ_வாழ்பவனும் புகழ்ந்து ஏத்த
மின் ஆர் பொன்_அம்பல நடுவே விளங்கும் கருணை விழி வழங்கும்
அன்னார் அறிவானந்த நடம் ஆடும் கழல் கண்டு அகம் குளிர்ந்தேன்
என் நாயகனார் அவர் கழலை இன்னும் ஒரு கால் காண்பேனோ.

#1342.
தாயின் பெரிய கருணையினார் தலை மாலையினார் தாழ் சடையார்
வாயிற்கு இனிய புகழ் உடைய வள்ளல் அவர்-தம் திரு_அழகைக்
கோயிற்கு அருகே சென்று மனம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன்
ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒரு கால் காண்பேனோ.

#1343.
புன்கண் அகற்றும் மெய் அடியார் போற்றும் பொன்_அம்பல நடுவே
வன்கண் அறியார் திரு_நடம்செய் வரதர் அமுதத் திரு_முகத்தை
முன்-கண் உலகில் சிறியேன் செய் முழு மா தவத்தால் கண்டேன் நான்
என் கண்_அனையார் அவர் முகத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ

#1344.
அன்புற்று அடியார் தொழுது ஏத்த அணி ஆர் மணிப் பொன்_அம்பலத்தே
வன்புற்று அழியாப் பெரும் கருணை_மலையார் தலை ஆர் மாலையினார்
மன் புற்று அரவு ஆர் கச்சு இடையின் வயங்க நடம்செய்வது கண்டேன்
இன்புற்று அடியேன் அவர் நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ

#1345.
இ மா நிலத்தில் சிவபதம் ஈது என்னும் பொன்_அம்பல நடுவே
அ மால் அறியா அடிகள் அடி அசைய நடம்செய்வது கண்டேன்
எம்மால் அறியப்படுவது அல என்னென்று உரைப்பேன் ஏழையன் யான்
எம்மான் அவர்-தம் திரு_நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ

#1346.
சிறியேன் தவமோ எனை ஈன்றாள் செய்த தவமோ யான் அறியேன்
மறி ஏர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார்-தமைக் கண்டேன்
பிறியேன் எனினும் பிரிந்தேன் நான் பேயேன் அந்தப் பிரிவினைக் கீழ்
எறியேன் அந்தோ அவர்-தம்மை இன்னும் ஒரு கால் காண்பேனோ

#1347.
அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்-தமைத்
தெருளே வடிவாம் அடியவர் போல் சிறியேன் கண்டேன் சீருற்றேன்
மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதி கெட்டேன்
இருள் ஏர் மனத்தேன் அவர்-தமை நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ

#1348.
அன்னோ திரு_அம்பலத்தே எம் ஐயர் உருக் கண்டேன் அது-தான்
பொன்னோ பவளப் பொருப்பு அதுவோ புது மாணிக்க மணித் திரளோ
மின்னோ விளக்கோ விரி சுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன்
என்னோ அவர்-தம் திரு_உருவை இன்னும் ஒரு கால் காண்பேனோ

#1349.
பொன் என்று உரைக்கும் அம்பலத்தே புனிதனார்-தம் அழகு இயலை
உன் என்று உரைப்பேன் என்னே என் உள்ளம் சிறிதும் உணர்ந்தது இலை
மின் என்று உரைக்கும் படி மூன்று விளக்கும் மழுங்கும் எனில் அடியேன்
என்னென்று உரைப்பேன் அவர் அழகை இன்னும் ஒரு கால் காண்பேனோ

@71. முத்தி உபாயம்

#1350.
ஒற்றி ஊரனைப்
பற்றி நெஞ்சமே
நிற்றி நீ அருள்
பெற்றி சேரவே.

#1351.
சேர நெஞ்சமே
தூரம் அன்று காண்
வாரம் வைத்தியேல்
சாரும் முத்தியே.

#1352.
முத்தி வேண்டுமேல்
பத்தி வேண்டுமால்
சத்தியம் இது
புத்தி நெஞ்சமே.

#1353.
நெஞ்சமே இது
வஞ்சமே அல
பிஞ்சகன் பதம்
தஞ்சம் என்பதே.

#1354.
என்பது ஏற்றவன்
அன்பு-அது ஏற்று நீ
வன்பு மாற்றுதி
இன்பம் ஊற்றவே.

#1355.
ஊற்றம் உற்று வெண்_
நீற்றன் ஒற்றியூர்
போற்ற நீங்குமால்
ஆற்ற நோய்களே.

#1356.
நோய்கள் கொண்டிடும்
பேய்கள் பற்பலர்
தூய்தன் ஒற்றியூர்க்கு
ஏய்தல் இல்லையே.

#1357.
இல்லை இல்லை காண்
ஒல்லை ஒற்றியூர்
எல்லை சேரவே
அல்லல் என்பதே.

#1358.
அல்லல் என்பது ஏன்
தொல்லை நெஞ்சமே
மல்லல் ஒற்றியூர்
எல்லை சென்றுமே.

#1359.
சென்று வாழ்த்துதி
நன்று நெஞ்சமே
என்றும் நல் வளம்
ஒன்றும் ஒற்றியே.

@72. தவத்திறம் போற்றல்

#1360.
வில்வத்தொடும் பொன் கொன்றை அணி வேணிப் பெருமான் ஒற்றி நகர்
செல்வப் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகைக்
கல் வைப்பு உடைய மனம் களிக்கக் கண்கள் களிக்கக் கண்டு நின்றேன்
இல் வைப்பு_உடையேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

#1361.
கூடும்படி முன் திருமாலும் கோலம் ஆகிப் புவி இடந்து
தேடும் திரு_தாள் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி
நாடும் புகழ் சேர் ஒற்றி நகர் நாடிப் புகுந்து கண்டேனால்
ஈடும் அகன்றேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

#1362.
ஆர்க்கும் கடல்-கண் அன்று எழுந்த ஆலகாலம் அத்தனையும்
சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தைக்
கார்-கண் பொழில் சூழ் ஒற்றியில் போய்க் கண்டேன் பிறவி கண்டிலனே
யார்க்கு என்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

#1363.
உள்ளும் புறமும் நிறைந்து அடியார் உள்ளம் மதுரித்து ஊறுகின்ற
தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_முகத்தைக்
கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில் போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே
எள்ளல் இகந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

#1364.
ஆவல்_உடையார் உள்_உடையார் அயன் மால் மகவான் ஆதியராம்
தேவர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_வடிவைக்
கா அம் பொழில் சூழ் ஒற்றியில் போய்க் கண்டேன் கண்ட காட்சி-தனை
யாவர் பெறுவார் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

#1365.
மறப்பை அகன்ற மனத்து உரவோர் வாழ்த்த அவர்க்கு வான் கதியின்
சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தைப்
பிறப்பை அகற்றும் ஒற்றியில் போய்ப் பேர்_ஆனந்தம் பெறக் கண்டேன்
இறப்பைத் தவிர்த்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

#1366.
வில்லாம்படிப் பொன்_மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான்
செல்லாம் கருணைச் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_கூத்தைக்
கல்லாம் கொடிய மனம் கரையக் கண்டேன் பண்டு காணாத
எல்லாம் கண்டேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

#1367.
ஒல்லை எயில் மூன்று எரி கொளுவ உற்று நகைத்தோன் ஒற்றி_உளான்
தில்லை நகரான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி
கல்லை அளியும் கனி ஆக்கக் கண்டேன் கொண்ட களிப்பினுக்கு ஓர்
எல்லை அறியேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

#1368.
துன்னும் சோமசுந்தரனார் தூய மதுரை நகர் அளித்த
தென்னர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகைப்
பன்னும் ஒற்றி நகர்-தன்னில் பார்த்தேன் வினை போம் வழி பார்த்த
என்னை மறந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

#1369.
முன்னம் காழி வள்ளலுக்கு முத்துச் சிவிகை குடையொடு பொன்
சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அடியைக்
கல் நின்று உருகா நெஞ்சு உருகக் கண்டேன் கண்ட காட்சி-தனை
என்னென்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

@73. திருச்சாதனத் தெய்வத் திறம்

#1370.
உடையாய் உன் அடியவர்க்கும் அவர் மேல் பூண்ட ஒண் மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ
அடையாளம் என்ன ஒளிர் வெண் நீற்றுக்கும் அன்பு_இலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ
நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று நவில்கின்றேன் என் பாவி நாவைச் சற்றும்
இடையாத கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

#1371.
கண்_நுதலே நின் அடியார்-தமையும் நோக்கேன் கண்மணி மாலைக்கு எனினும் கனிந்து நில்லேன்
பண்ணுதல் சேர் திரு_நீற்றுக் கோலம்-தன்னைப் பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயன் இலாமே
நண்ணுதல் சேர் உடம்பு எல்லாம் நாவாய் நின்று நவில்கின்றேன் என் கொடிய நாவை அந்தோ
எண்ணுதல் சேர் கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

#1372.
வஞ்சம்_இலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் மா மணியே உனை நினையேன் வாளா நாளைக்
கஞ்ச மலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடையனேனை
நஞ்சம் உணக் கொடுத்து மடித்திடினும் வாளால் நசிப்புறவே துணித்திடினும் நலியத் தீயால்
எஞ்சலுறச் சுடினும் அன்றி அந்தோ இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

#1373.
அருள் பழுக்கும் கற்பகமே அரசே முக்கண் ஆர்_அமுதே நினைப் புகழேன் அந்தோ வஞ்ச
மருள் பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதி_இலேனை
வெருள் பழுக்கும் கடும் காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்து ஏக விடினும் பொல்லா
இருள் பழுக்கும் பிலம் சேர விடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

#1374.
பெரும் கருணைக் கடலே என் குருவே முக்கண் பெருமானே நினைப் புகழேன் பேயேன் அந்தோ
கருங்கல்_மன_குரங்கு ஆட்டி வாளா நாளைக் கழிக்கின்றேன் பயன் அறியாக் கடையனேனை
ஒருங்கு உருள உடல் பதைப்ப உறும் குன்று ஏற்றி உருட்டுகினும் உயிர் நடுங்க உள்ளம் ஏங்க
இரும் கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

#1375.
தொழுகின்றோர் உளத்து அமர்ந்த சுடரே முக்கண் சுடர்க் கொழுந்தே நின் பதத்தைத் துதியேன் வாதில்
விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி வெறித்து உழலும் நாய்_அனையேன் விழலனேனை
உழுகின்ற நுகப் படை கொண்டு உலையத் தள்ளி உழக்கினும் நெட்டு உடல் நடுங்க உறுக்கி மேன்மேல்
எழுகின்ற கடலிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

#1376.
விருப்பு ஆகும் மதி_சடையாய் விடையாய் என்றே மெய் அன்போடு உனைத் துதியேன் விரைந்து வஞ்சக்
கருப் பாயும் விலங்கு எனவே வளர்ந்தே நாளைக் கழிக்கின்றேன் கரு நெஞ்சக் கள்வனேனைப்
பொருப்பு ஆய யானையின் கால் இடினும் பொல்லாப் புழுத் தலையில் சோரி புறம் பொழிய நீண்ட
இருப்பு ஆணி ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

#1377.
அக்க_நுதல் பிறை_சடையாய் நின் தாள் ஏத்தேன் ஆண்பனை போல் மிக நீண்டேன் அறிவு ஒன்று இல்லேன்
மிக்க ஒதி போல் பருத்தேன் கரும் கடாப் போல் வீண் கருமத்து உழல்கின்றேன் விழலனேனைச்
செக்கிடை வைத்து உடல் குழம்பிச் சிதைய அந்தோ திருப்பிடினும் இருப்பறை முள் சேரச் சேர்த்து
எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

#1378.
அன்புடன் நின் பதம் புகழாப் பாவி நாவை அறத் துணியேன் நின் அழகை அமர்ந்து காணாத்
துன்புறு கண் இரண்டினையும் சூன்றேன் நின்னைத் தொழாக் கையை வாள்-அதனால் துண்டம் ஆக்கேன்
வன்பு அற நின்றனை வணங்காத் தலையை அந்தோ மடித்திலேன் ஒதியே போல் வளர்ந்தேன் என்னை
இன்பு அறு வல் எரியிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

#1379.
தேவே நின் அடி நினையா வஞ்ச நெஞ்சைத் தீமூட்டிச் சிதைக்க அறியேன் செதுக்குகில்லேன்
கோவே நின் அடியர்-தமைக் கூடாப் பொய்மைக் குடிகொண்டேன் புலை கொண்ட கொடியேன் அந்தோ
நா ஏற நினைத் துதியேன் நலம் ஒன்று இல்லேன் நாய்க் கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணுகின்றோர்க்கு
ஈவு ஏதும் அறியேன் இங்கு என்னை அந்தோ என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

@74. உள்ளப் பஞ்சகம்

#1380.
நீர் ஆர் சடையது நீள் மால் விடையது நேர் கொள் கொன்றைத்
தார் ஆர் முடியது சீர் ஆர் அடியது தாழ்வு அகற்றும்
பேர் ஆயிரத்தது பேரா வரத்தது பேர்_உலகம்
ஓரா வளத்தது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே.

#1381.
மட்டுப்படாதது மா மறையாலும் மலப் பகையால்
கட்டுப்படாதது மால் ஆதியர்-தம் கருத்தினுக்கும்
தட்டுப்படாதது பார் முதல் பூதத் தடைகளினால்
ஒட்டுப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே.

#1382.
பேதப்படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும்
சேதப்படாதது நன்று இது தீது இது எனச் செய்கைகளால்
ஏதப்படாதது உள் எட்டப்படாதது இங்கு யாவர்கட்கும்
ஓதப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே.

#1383.
தண் ஆர் அளியது விண் நேர் ஒளியது சாற்று மறைப்
பண் ஆர் முடிவது பெண்ணார் வடிவது பண்பு உயர் தீக்
கண் ஆர் நுதலது கண் ஆர் மணியது கண்டு கொள்ள
ஒண்ணா நிலையது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே.

#1384.
பிறவா நெறியது பேசா நிலையது பேசில் என்றும்
இறவா உருவது உள் ஏற்றால் வருவது இருள் அகன்றோர்
மறவாது உடையது மாது ஓர் புடையது வாழ்த்துகின்றோர்
உறவாய் இருப்பது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே.

@75. வடிவுடை மாணிக்க மாலை

#1385.
சீர் கொண்ட ஒற்றிப் பதி_உடையானிடம் சேர்ந்த மணி
வார் கொண்ட கொங்கை வடிவாம்பிகை-தன் மலர்_அடிக்குத்
தார் கொண்ட செந்தமிழ்ப் பா_மாலை சாத்தத் தமியனுக்கே
ஏர்கொண்ட நல் அருள் ஈயும் குணாலய ஏரம்பனே.

#1386.
கடல் அமுதே செங்கரும்பே அருள் கற்பகக் கனியே
உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே
அடல் விடையார் ஒற்றியார் இடம் கொண்ட அரு_மருந்தே
மடல் அவிழ் ஞான_மலரே வடிவுடை_மாணிக்கமே.

#1387.
அணியே அணி பெறும் ஒற்றித் தியாகர்-தம் அன்புறு சற்
குணியே எம் வாழ்க்கைக் குல_தெய்வமே மலை_கோன் தவமே
பணியேன் பிழை பொறுத்து ஆட்கொண்ட தெய்வப் பதி கொள் சிந்தா
மணியே என் கண்ணுள் மணியே வடிவுடை_மாணிக்கமே.

#1388.
மான் நேர் விழி மலை மானே எம்மான் இடம் வாழ் மயிலே
கான் ஏர் அளகப் பசும் குயிலே அருள் கண் கரும்பே
தேனே திருவொற்றி மா நகர் வாழும் சிவ_சத்தியே
வானே கருணை வடிவே வடிவுடை_மாணிக்கமே.

#1389.
பொருளே அடியர் புகலிடமே ஒற்றிப் பூரணன் தண்
அருளே எம் ஆர்_உயிர்க்காம் துணையே விண்ணவர் புகழும்
தெருளே மெய்ஞ்ஞானத் தெளிவே மறை முடிச் செம்பொருளே
மருள் ஏதம் நீக்கும் ஒளியே வடிவுடை_மாணிக்கமே.

#1390.
திருமாலும் நான்முகத் தேவும் முன்_நாள் மிகத் தேடி மனத்து
அரு மால் உழக்க அனல் உரு ஆகி அமர்ந்து அருளும்
பெருமான் எம்மான் ஒற்றிப் பெம்மான் கைம் மான் கொளும் பித்தன் மலை
மருமான் இடம் கொள் பெண் மானே வடிவுடை_மாணிக்கமே.

#1391.
உன் நேர் அருள் தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
பொன்னே அப் பொன் அற்புத ஒளியே மலர்ப் பொன் வணங்கும்
அன்னே எம் ஆர்_உயிர்க்கு ஓர் உயிரே ஒற்றி அம் பதி வாழ்
மன்னேர் இடம் வளர் மின்னே வடிவுடை_மாணிக்கமே.

#1392.
கண்ணே அக் கண்ணின் மணியே மணியில் கலந்து ஒளிசெய்
விண்ணே வியன் ஒற்றியூர் அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
பெண்ணே மலை பெறும் பெண் மணியே தெய்வப் பெண் அமுதே
மண் நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1393.
மலையான் தவம் செய்து பெற்ற முத்தே ஒற்றி வாழ் கனகச்
சிலையான் மணக்க மணக்கும் தெய்வீகத் திரு_மலரே
அலையால் மலி கடல் பள்ளிகொண்டான் தொழும் ஆர்_அமுதே
வலையான் அருமை மகளே வடிவுடை_மாணிக்கமே.

#1394.
காமம் படர் நெஞ்சு_உடையோர் கனவினும் காணப்படாச்
சேமம் படர் செல்வப் பொன்னே மதுரச் செழும் கனியே
தாமம் படர் ஒற்றியூர் வாழ் பவளத் தனி மலையின்
வாமம் படர் பைங்கொடியே வடிவுடை_மாணிக்கமே.

#1395.
கோடா அருள் குண_குன்றே சிவத்தில் குறிப்பு_இலரை
நாடாத ஆனந்த நட்பே மெய் அன்பர் நயக்கும் இன்பே
பீடு ஆர் திருவொற்றிப் பெம்மான் இடம் செய் பெரும் தவமே
வாடா மணி மலர்க் கொம்பே வடிவுடை_மாணிக்கமே.

#1396.
நாலே எனும் மறை அந்தங்கள் இன்னமும் நாடி எனைப்
போலே வருந்த வெளி ஒளியாய் ஒற்றிப் புண்ணியர்-தம்
பாலே இருந்த நினைத் தங்கையாகப் பகரப்பெற்ற
மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை_மாணிக்கமே.

#1397.
கங்கை_கொண்டோன் ஒற்றியூர் அண்ணல் வாமம் கலந்து அருள்செய்
நங்கை எல்லா உலகும் தந்த நின்னை அ நாரணற்குத்
தங்கை என்கோ அன்றித் தாயர் என்கோ சொல் தழைக்கும் மலை
மங்கை அம் கோமள மானே வடிவுடை_மாணிக்கமே.

#1398.
சோலையிட்டு ஆர் வயல் ஊர் ஒற்றி வைத்துத் தன் தொண்டர் அன்பின்
வேலையிட்டால் செயும் பித்தனை மெய்யிடை மேவு கரித்
தோலையிட்டு ஆடும் தொழில்_உடையோனைத் துணிந்து முன்_நாள்
மாலையிட்டாய் இஃது என்னே வடிவுடை_மாணிக்கமே.

#1399.
தனை ஆள்பவர் இன்றி நிற்கும் பரமன் தனி அருளாய்
வினை ஆள் உயிர் மலம் நீக்கி மெய் வீட்டின் விடுத்திடும் நீ
எனை ஆள் அருள் ஒற்றியூர் வாழ் அவன்றன்னிடத்தும் ஒரு
மனையாள் என நின்றது என்னே வடிவுடை_மாணிக்கமே.

#1400.
பின் ஈன்ற பிள்ளையின் மேல் ஆர்வம் தாய்க்கு எனப் பேசுவர் நீ
முன் ஈன்ற பிள்ளையின் மேல் ஆசை உள்ளவா மொய் அசுரர்
கொன் ஈன்ற போர்க்கு இளம்பிள்ளையை ஏவக் கொடுத்தது என்னே
மன் ஈன்ற ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#1401.
பை ஆளும் அல்குல் சுரர் மடவார்கள் பலருளும் இச்
செய்யாளும் வெண்ணிற_மெய்யாளும் எத் தவம் செய்தனரோ
கையாளும் நின் அடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய்
மை ஆளும் கண் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1402.
இலை ஆற்றும் நீ மலர்_காலால் பணிக்கும் குற்றேவல் எலாம்
தலையால் செயும் பெண்கள் பல்லோரில் பூ_மகள்-தன்னைத் தள்ளாய்
நிலையால் பெரிய நின் தொண்டர்-தம் பக்கம் நிலாமையினால்
மலையாற்கு அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1403.
கலை_மகளோ நின் பணியை அன்போடும் கடைப்பிடித்தாள்
அலை_மகளோ அன்பொடு பிடித்தாள் எற்கு அறைதி கண்டாய்
தலை_மகளே அருள் தாயே செவ் வாய்க் கரும் தாழ் குழல் பொன்
மலை_மகளே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1404.
பொன்னோடு வாணி என்போர் இருவோரும் பொருள் நல் கல்வி-
தன்னோடு அருளும் திறம் நின் குற்றேவலைத் தாங்கிநின்ற
பின்னோ அலது அதன் முன்னோ தெளிந்திடப் பேசுக நீ
மன்னோடு எழில் ஒற்றியூர் வாழ் வடிவுடை_மாணிக்கமே.

#1405.
கா மட்டு அலர் திருவொற்றி நின் நாயகன் கந்தை சுற்றி
ஏம் அட்ட அரையொடு நிற்பது கண்டும் இரங்கலர் போல்
நீ மட்டுமே பட்டு உடுக்கின்றனை உன்றன் நேயம் என்னோ
மா மட்டு அலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

#1406.
வீற்று ஆர் நின்றன் மணத்து அம்மியின் மேல் சிறு மெல் அனிச்சம்
ஆற்றா நின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத்தாரெனின் மால்
ஏற்றார் திருவொற்றியூரார் களக் கறுப்பு ஏற்றவரே
மாற்றா இயல் கொள் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#1407.
பொருப்பு உறு நீலி என்பார் நின்னை மெய் அது போலும் ஒற்றி
விருப்புறு நாயகன் பாம்பாபரணமும் வெண் தலையும்
நெருப்பு உறு கையும் கனல் மேனியும் கண்டு நெஞ்சம் அஞ்சாய்
மருப்பு உறு கொங்கை மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#1408.
அனம்_பொறுத்தான் புகழ் ஒற்றி நின் நாயகன் அம் குமிழித்
தனம்_பொறுத்தாள் ஒரு மாற்றாளைத் தன் முடி-தன்னில் வைத்தே
தினம் பொறுத்தான் அது கண்டும் சினம் இன்றிச் சேர்ந்த நின் போல்
மனம் பொறுத்தார் எவர் கண்டாய் வடிவுடை_மாணிக்கமே.

#1409.
ஓர் உருவாய் ஒற்றியூர் அமர்ந்தார் நின்னுடையவர் பெண்
சீர் உரு ஆகும் நின் மாற்றாளை நீ தெளியாத் திறத்தில்
நீர் உரு ஆக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே
வாருரு வார் கொங்கை நங்காய் வடிவுடை_மாணிக்கமே.

#1410.
சார்ந்தே நின்-பால் ஒற்றியூர் வாழும் நாயகர் தாம் மகிழ்வு
கூர்ந்தே குலாவும் அக் கொள்கையைக் காணில் கொதிப்பள் என்று
தேர்ந்தே அக் கங்கையைச் செம் சடை மேல் சிறைசெய்தனர் ஒண்
வார்ந்தே குழை கொள் விழியாய் வடிவுடை_மாணிக்கமே.

#1411
நீயே எனது பிழை குறிப்பாயெனில் நின் அடிமைப்
பேயேன் செயும் வண்ணம் எவ்வண்ணமோ எனைப் பெற்று அளிக்கும்
தாயே கருணைத் தடம் கடலே ஒற்றிச் சார் குமுத
வாய் ஏர் சவுந்தர மானே வடிவுடை_மாணிக்கமே.

#1412.
முப்போதும் அன்பர்கள் வாழ்த்து ஒற்றியூர் எம் முதல்வர் மகிழ்
ஒப்பு ஓத அரும் மலைப் பெண் அமுதே என்று வந்து நினை
எப்போதும் சிந்தித்து இடர் நீங்கி வாழ எனக்கு அருள்வாய்
மைப் போது அனைய கண் மானே வடிவுடை_மாணிக்கமே.

#1413.
மீதலத்தோர்களுள் யார் வணங்காதவர் மேவு நடுப்
பூதலத்தோர்களுள் யார் புகழாதவர் போற்றி நிதம்
பாதலத்தோர்களுள் யார் பணியாதவர் பற்றி நின்றாள்
மா தலத்து ஓங்கு ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1414.
சேய்க் குற்றம் தாய் பொறுத்து ஏடா வருக எனச் செப்புவள் இ
நாய்க் குற்றம் நீ பொறுத்து ஆளுதல் வேண்டும் நவில் மதியின்
தேய்க் குற்றம் மாற்றும் திருவொற்றிநாதர்-தம் தேவி அன்பர்
வாய்க் குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#1415.
செங்கமலாசனன்_தேவி பொன்_நாணும் திரு முதலோர்
சங்கம்-அதாம் மிடற்று ஓங்கு பொன்_நாணும் தலைகுனித்துத்
துங்கமுறாது உளம் நாணத் திருவொற்றி_தோன்றல் புனை
மங்கலநாண்_உடையாளே வடிவுடை_மாணிக்கமே.

#1416.
சேடு ஆர் இயல் மணம் வீசச் செயல் மணம் சேர்ந்து பொங்க
ஏடு ஆர் பொழில் ஒற்றியூர் அண்ணல் நெஞ்சம் இருந்து உவக்க
வீடா இருளும் முகிலும் பின்னிட்டு வெருவவைத்த
வாடா_மலர்க் குழலாளே வடிவுடை_மாணிக்கமே.

#1417.
புரம் நோக்கினால் பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர் களக்
கரம் நோக்கி நல் அமுது ஆக்கி நின் போற்றும் கருத்தினர் ஆ
தரம் நோக்கி உள் இருள் நீக்கி மெய்ஞ்ஞானத் தனிச் சுகம்-தான்
வர நோக்கி ஆள் விழி மானே வடிவுடை_மாணிக்கமே.

#1418.
உன்னும் திருவொற்றியூர்_உடையார் நெஞ்சு உவப்ப எழில்
துன்னும் உயிர்ப் பயிர் எல்லாம் தழைக்கச் சுகக் கருணை
என்னும் திரு_அமுது ஓயாமல் ஊற்றி எமது உளத்தின்
மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#1419.
வெள்ளம் குளிரும் சடை_முடியோன் ஒற்றி வித்தகன்-தன்
உள்ளம் குளிர மெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
தெள்ளம் குளிர் இன் அமுதே அளிக்கும் செவ் வாய்க் குமுத
வள்ளம் குளிர் முத்த மானே வடிவுடை_மாணிக்கமே.

#1420.
மா நந்தம் ஆர் வயல் காழிக் கவுணியர் மா மணிக்கு அன்று
ஆநந்த இன் அமுது ஊற்றும் திரு_முலை ஆர்_அணங்கே
கா நந்த ஓங்கும் எழில் ஒற்றியார் உள் களித்து இயலும்
வானம் தரும் இடை மானே வடிவுடை_மாணிக்கமே.

#1421.
வான் தேட நான்கு மறை தேட மாலுடன் வாரிச_மே
லான் தேட மற்றை அரும் தவர் தேட என் அன்பு இன்மையால்
யான் தேட என் உளம் சேர் ஒற்றியூர் எம் இரு_நிதியே
மான் தேடும் வாள் கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#1422.
முத்தேவர் விண்ணன் முதல் தேவர் சித்தர் முனிவர் மற்றை
எத்தேவரும் நின் அடி நினைவார் நினைக்கின்றிலர் தாம்
செத்தே பிறக்கும் சிறியர் அன்றோ ஒற்றித் தேவர் நல் தா
மத் தேவர் வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#1423.
திரு_நாள் நினைத் தொழும் நல் நாள் தொழாமல் செலுத்திய நாள்
கரு நாள் என மறை எல்லாம் புகலும் கருத்து அறிந்தே
ஒருநாளினும் நின்றனை மறவார் அன்பர் ஒற்றியில் வாழ்
மரு நாள்_மலர்க் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

#1424.
வாணாள் அடைவர் வறுமையுறார் நல் மனை மக்கள் பொன்
பூண் ஆள் இடம் புகழ் போதம் பெறுவர் பின் புன்மை ஒன்றும்
காணார் நின் நாமம் கருதுகின்றோர் ஒற்றிக் கண்_நுதல்-பால்
மாண் ஆர்வம் உற்ற மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#1425.
சீர் அறிவாய்த் திருவொற்றிப் பரமசிவத்தை நினைப்
போர் அறிவாய் அ அறிவாம் வெளிக்கு அப்புறத்து நின்றாய்
யார் அறிவார் நின்னை நாயேன் அறிவது அழகு உடைத்தே
வார் எறி பூண் முலை மானே வடிவுடை_மாணிக்கமே.

#1426.
போற்றிடுவோர்-தம் பிழை ஆயிரமும் பொறுத்து அருள்செய்
வீற்று ஒளிர் ஞான விளக்கே மரகத மென் கரும்பே
ஏற்று ஒளிர் ஒற்றி_இடத்தார் இடத்தில் இலங்கும் உயர்
மாற்று ஒளிரும் பசும்பொன்னே வடிவுடை_மாணிக்கமே

#1427.
ஆசை_உள்ளார் அயன் மால் ஆதி தேவர்கள் யாரும் நின் தாள்
பூசை உள்ளார் எனில் எங்கே உலகர் செய் பூசை கொள்வார்
தேசை உள்ளார் ஒற்றியூர்_உடையார் இடம் சேர் மயிலே
மாசை உள்ளார் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே.

#1428.
அண்டாரை வென்று உலகு ஆண்டு மெய்ஞ்ஞானம் அடைந்து விண்ணில்
பண் தாரை சூழ் மதி போல் இருப்போர்கள் நின் பத்தர் பதம்
கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்_நுதல் சேர்
வண் தாரை வேல் அன்ன மானே வடிவுடை_மாணிக்கமே.

#1429.
அடியார் தொழும் நின் அடிப் பொடி தான் சற்று அணியப்பெற்ற
முடியால் அடிக்குப் பெருமை பெற்றார் அ முகுந்தன் சந்தக்
கடி ஆர் மலர் அயன் முன்னோர் தென் ஒற்றிக் கடவுள் செம்பால்
வடியாக் கருணைக் கடலே வடிவுடை_மாணிக்கமே.

#1430.
ஓவாது அயன் முதலோர் முடி கோடி உறழ்ந்துபடில்
ஆஆ அனிச்சம் பொறா மலர்ச் சிற்றடி ஆற்றும்-கொலோ
காவாய் இமயப் பொன் பாவாய் அருள் ஒற்றிக் காமர் வல்லி
வாவா எனும் அன்பர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1431.
இட்டு ஆர் மறைக்கும் உபநிடதத்திற்கும் இன்னும் சற்றும்
எட்டா நின் பொன்_அடிப் போது எளியேன் தலைக்கு எட்டும்-கொலோ
கட்டு ஆர் சடை முடி ஒற்றி எம்மான் நெஞ்சகத்து அமர்ந்த
மட்டு ஆர் குழல் மட மானே வடிவுடை_மாணிக்கமே.

#1432.
வெளியாய் வெளிக்குள் வெறுவெளியாய்ச் சிவமே நிறைந்த
ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரை நினை ஒப்பவர் ஆர்
எளியார்க்கு எளியர் திருவொற்றியார் மெய் இனிது பரி
மளியாநின்று ஓங்கும் மருவே வடிவுடை_மாணிக்கமே.

#1433.
விண் அம் காதல் அன்பர்-தம் அன்பிற்கும் நின் புலவிக்கும் அன்றி
வணங்கா மதி முடி எங்கள் பிரான் ஒற்றி_வாணனும் நின்
குணம் காதலித்து மெய்க்கூறு தந்தான் எனக் கூறுவர் உன்
மணம் காதலித்தது அறியார் வடிவுடை_மாணிக்கமே.

#1434.
பன்னும் பல்வேறு அண்டம் எல்லாம் அ அண்டப் பரப்பினின்று
துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை
இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பது என்னே
மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1435.
சினம்_கடந்தோர் உள்ளச் செந்தாமரையில் செழித்து மற்றை
மனம் கடந்து ஓதும் அ வாக்கும் கடந்த மறை அன்னமே
தினம் கடந்தோர் புகழ் ஒற்றி எம்மான் இடம் சேர் அமுதே
வனம்_கடந்தோன் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே.

#1436.
வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர் முதல்
எல்லாரும் நின் செயல் அல்லாது அணுவும் இயக்கிலரேல்
இல்லாமையால் உழல் புல்லேன் செய் குற்றங்கள் ஏது கண்டாய்
மல் ஆர் வயல் ஒற்றி நல்லாய் வடிவுடை_மாணிக்கமே.

#1437.
எழுதா எழில் உயிர்ச் சித்திரமே இன் இசைப் பயனே
தொழுது ஆடும் அன்பர்-தம் உள் களிப்பே சிற்சுக_கடலே
செழு ஆர் மலர்ப் பொழில் ஒற்றி எம்மான்-தன் திரு_துணையே
வழுவா மறையின் பொருளே வடிவுடை_மாணிக்கமே.

#1438.
தெருள் பால் உறும் ஐங்கை_செல்வர்க்கும் நல் இளம் சேய்க்கும் மகிழ்ந்து
அருள்_பால் அளிக்கும் தனத் தனமே எம் அகம் கலந்த
இருள் பால் அகற்றும் இரும் சுடரே ஒற்றி எந்தை உள்ளம்
மருள் பால் பயிலும் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#1439.
அயில் ஏந்தும் பிள்ளை நல் தாயே திருவொற்றி ஐயர் மலர்க்
கயில் ஏந்து அரும்_பெறல் முத்தே இசையில் கனிந்த குரல்
குயிலே குயின் மென் குழல் பிடியே மலை_கோன் பயந்த
மயிலே மதி முக மானே வடிவுடை_மாணிக்கமே.

#1440.
செய்யகம் ஓங்கும் திருவொற்றியூரில் சிவபெருமான்
மெய்யகம் ஓங்கு நல் அன்பே நின்-பால் அன்பு மேவுகின்றோர்
கையகம் ஓங்கும் கனியே தனி மெய்க் கதி நெறியே
வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை_மாணிக்கமே.

#1441.
தரும் பேர் அருள் ஒற்றியூர்_உடையான் இடம் சார்ந்த பசுங்
கரும்பே இனிய கற்கண்டே மதுரக் கனி நறவே
இரும் பேய் மனத்தினர்-பால் இசையாத இளம் கிளியே
வரும் பேர் ஒளிச் செம் சுடரே வடிவுடை_மாணிக்கமே.

#1442.
சேல் ஏர் விழி அருள் தேனே அடியர் உள் தித்திக்கும் செம்
பாலே மதுரச் செம் பாகே சொல் வேதப் பனுவல் முடி
மேலே விளங்கும் விளக்கே அருள் ஒற்றி வித்தகனார்
மாலேகொளும் எழில் மானே வடிவுடை_மாணிக்கமே.

#1443.
எம்-பால் அருள்வைத்து எழில் ஒற்றியூர் கொண்டிருக்கும் இறைச்
செம் பால் கலந்த பைந்தேனே கதலிச் செழும் கனியே
வெம் பாலை நெஞ்சர் உள் மேவா மலர்ப் பத மென் கொடியே
வம்பால் அணி முலை மானே வடிவுடை_மாணிக்கமே.

#1444.
ஏமம் உய்ப்போர் எமக்கு என்றே இளைக்கில் எடுக்கவைத்த
சேம வைப்பே அன்பர் தேடும் மெய்ஞ்ஞானத் திரவியமே
தாமம் அமைக் கார் மலர்க் கூந்தல் பிடி மென் தனி நடையாய்
வாம நல் சீர் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே.

#1445.
மன் ஏர் மலையன்_மனையும் நல் காஞ்சனமாலையும் நீ
அன்னே எனத் திருவாயால் அழைக்கப்பெற்றார் அவர்-தாம்
முன்னே அரும் தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி
வல் நேர் இளம் முலை மின்னே வடிவுடை_மாணிக்கமே.

#1446.
கணம் ஒன்றிலேனும் என் உள்ளக் கவலை_கடல் கடந்தே
குணம் ஒன்று இலேன் எது செய்கேன் நின் உள்ளக் குறிப்பு அறியேன்
பணம் ஒன்று பாம்பு அணி ஒற்றி எம்மானிடப் பாலில் தெய்வ
மணம் ஒன்று பச்சைக் கொடியே வடிவுடை_மாணிக்கமே.

#1447.
கரு வேதனை அற என் நெஞ்சகத்தில் களிப்பொடு ஒற்றிக்
குருவே எனும் நின் கணவனும் நீயும் குலவும் அந்தத்
திருவே அருள் செந்திருவே முதல் பணி செய்யத் தந்த
மருவே மருவு மலரே வடிவுடை_மாணிக்கமே.

#1448.
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்கு உன் அருள்
பண்ணிய உள்ளம் கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
புண்ணிய மல்லிகைப் போதே எழில் ஒற்றிப் பூரணர் பால்
மண்ணிய பச்சை மணியே வடிவுடை_மாணிக்கமே.

#1449.
தீது செய்தாலும் நின் அன்பர்கள்-தம் முன் செருக்கி நின்று
வாதுசெய்தாலும் நின் தாள் மறந்தாலும் மதி_இலியேன்
ஏது செய்தாலும் பொறுத்து அருள்வாய் ஒற்றியின்னிடைப் பூ_
மாது செய் தாழ் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

#1450.
மருந்தில் நின்றான் ஒற்றியூர் வாழும் நின்றன் மகிழ்நன் முன்னும்
திருந்தி நின்றார் புகழ் நின் முன்னும் நல் அருள் தேன் விழைந்தே
விருந்தில் நின்றேன் சற்றும் உள் இரங்காத விதத்தைக் கண்டு
வருந்தி நின்றேன் இது நன்றோ வடிவுடை_மாணிக்கமே.

#1451.
என் போல் குணத்தில் இழிந்தவர் இல்லை எப்போதும் எங்கும்
நின் போல் அருளில் சிறந்தவர் இல்லை இ நீர்மையினால்
பொன் போலும் நின் அருள் அன்னே எனக்கும் புரிதி கண்டாய்
மன் போல் உயர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1452.
துன்பே மிகும் இ அடியேன் மனத்தில் நின் துய்ய அருள்
இன்பே மிகுவது எந்நாளோ எழில் ஒற்றி எந்தை உயிர்க்கு
அன்பே மெய்த் தொண்டர் அறிவே சிவ நெறிக்கு அன்பு_இலர்-பால்
வன்பே மெய்ப் போத வடிவே வடிவுடை_மாணிக்கமே.

#1453.
சற்றே எனினும் என் நெஞ்சத் துயரம் தவிரவும் நின்
பொன் தே மலர்_பதம் போற்றவும் உள்ளம் புரிதி கண்டாய்
சொல் தேர் அறிஞர் புகழ் ஒற்றி மேவும் துணைவர்-தம் செம்
மல் தேர் புயத்து அணை மானே வடிவுடை மாணிக்கமே.

#1454.
சந்தோடமாப் பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால்
அந்தோ ஒரு தமியேன் மட்டும் வாடல் அருட்கு அழகோ
நம் தோடம் நீக்கிய நங்காய் எனத் திரு நான்முகன் மால்
வந்து ஓதும் ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#1455.
அடியேன் மிசை எப் பிழை இருந்தாலும் அவை பொறுத்துச்
செடி ஏதம் நீக்கி நல் சீர் அருள்வாய் திகழ் தெய்வ மறைக்
கொடியே மரகதக் கொம்பே எழில் ஒற்றிக் கோமளமே
வடி ஏர் அயில் விழி மானே வடிவுடை_மாணிக்கமே.

#1456.
கண்ணப்பன் ஏத்தும் நல் காளத்தியார் மங்கலம் கொள் ஒற்றி
நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நல் நறவே
எண்ணப்படா எழில் ஓவியமே எமை ஏன்றுகொண்ட
வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை_மாணிக்கமே.

#1457.
கற்பே விகற்பம் கடியும் ஒன்றே எங்கள் கண் நிறைந்த
பொற்பே மெய்த் தொண்டர்-தம் புண்ணியமே அருள் போத இன்பே
சொல் பேர் அறிவுள் சுகப் பொருளே மெய்ச் சுயம் சுடரே
மல் பேர் பெறும் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே.

#1458.
மிகவே துயர்_கடல் வீழ்ந்தேனை நீ கைவிடுதல் அருள்
தகவே எனக்கு நல் தாயே அகில சராசரமும்
சுக வேலை மூழ்கத் திருவொற்றியூரிடம் துன்னிப் பெற்ற
மகவே எனப் புரக்கின்றோய் வடிவுடை_மாணிக்கமே.

#1459.
வேதங்களாய் ஒற்றி மேவும் சிவத்தின் விளைவு அருளாய்ப்
பூதங்களாய்ப் பொறியாய்ப் புலனாகிப் புகல் கரண
பேதங்களாய் உயிர் ஆகிய நின்னை இப் பேதை என் வாய்
வாதங்களால் அறிவேனோ வடிவுடை_மாணிக்கமே.

#1460.
மதியே மதி முக மானே அடியர் மனத்து வைத்த
நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள் நிலையே
கதியே கதி வழி காட்டும் கண்ணே ஒற்றிக் காவலர் பால்
வதி ஏர் இள மட மானே வடிவுடை_மாணிக்கமே.

#1461.
ஆறாத் துயரத்து அழுந்துகின்றேனை இங்கு அஞ்சல் என்றே
கூறாக் குறை என் குறையே இனி நின் குறிப்பு அறியேன்
தேறாச் சிறியர்க்கு அரிதாம் திருவொற்றித் தேவர் மகிழ்
மாறாக் கருணை_மழையே வடிவுடை_மாணிக்கமே.

#1462.
எற்றே நிலை ஒன்றும் இல்லாது உயங்கும் எனக்கு அருளச்
சற்றே நின் உள்ளம் திரும்பிலை யான் செயத்தக்கது என்னே
சொல் தேன் நிறை மறைக் கொம்பே மெய்ஞ்ஞானச் சுடர்க் கொழுந்தே
மல் தேர் அணி ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1463.
செவ் வேலை வென்ற கண் மின்னே நின் சித்தம் திரும்பி எனக்கு
எவ்வேலை செய் என்றிடினும் அ வேலை இயற்றுவல் காண்
தெவ் வேலை வற்றச்செய் அ வேலை ஈன்று ஒற்றித் தேவர் நெஞ்சை
வவ்வு ஏல வார் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

#1464.
தாயே மிகவும் தயவு_உடையாள் எனச் சாற்றுவர் இச்
சேயேன் படும் துயர் நீக்க என்னே உளம் செய்திலையே
நாயேன் பிழை இனி நாடாது நல் அருள் நல்க வரு
வாயே எம் ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#1465.
நானே நினைக் கடியேன் என் பிழைகளை நாடிய நீ
தானே எனை விடில் அந்தோ இனி எவர் தாங்குகின்றோர்
தேனே நல் வேதத் தெளிவே கதிக்குச் செலு நெறியே
வான் ஏர் பொழில் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே.

#1466.
கல்லாரிடத்தில் என் இல்லாமை சொல்லிக் கலங்கி இடர்
நல்லாண்மை உண்டு அருள் வல்லாண்மை உண்டு எனின் நல்குவையோ
வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி_வாணரொடு
மல் ஆர் பொழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1467.
சுந்தர வாள் முகத் தோகாய் மறைகள் சொலும் பைங்கிள்ளாய்
கந்தர வார் குழல் பூவாய் கருணைக் கடைக்கண் நங்காய்
அந்தர நேர் இடைப் பாவாய் அருள் ஒற்றி அண்ணல் மகிழ்
மந்தர நேர் கொங்கை மங்காய் வடிவுடை_மாணிக்கமே.

#1468.
பத்தர்-தம் உள்ளத் திரு_கோயில் மேவும் பரம் பரையே
சுத்த மெய்ஞ்ஞான ஒளிப் பிழம்பே சிற்சுகாநந்தமே
நித்தம் நின் சீர் சொல எற்கு அருள்வாய் ஒற்றி நின் மலர் உன்
மத்தர்-தம் வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#1469.
பூவாய் மலர்க் குழல் பூவாய் மெய் அன்பர் புனைந்த தமிழ்ப்
பாவாய் நிறைந்த பொன் பாவாய் செந்தேனில் பகர் மொழியாய்
காவாய் என அயன் கா_ஆய்பவனும் கருதும் மலர்
மா வாய் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1470.
தாதா உணவு உடை தாதா எனப் புல்லர்-தம்மிடைப் போய்
மா தாகம் உற்றவர் வன் நெஞ்சில் நின் அடி வைகும்-கொலோ
காது ஆர் நெடும் கண் கரும்பே நல் ஒற்றிக் கருத்தர் நட
வாதாரிடம் வளர் மாதே வடிவுடை_மாணிக்கமே.

#1471.
களம் திரும்பா இக் கடையேனை ஆளக் கருணைகொண்டு உன்
உளம் திரும்பாமைக்கு என் செய்கேன் துயர்_கடலூடு அலைந்தேன்
குளம் திரும்பா விழிக் கோமானொடும் தொண்டர் கூட்டமுற
வளம் திரும்பா ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1472.
ஆரணம் பூத்த அருள் கோமளக் கொடி அந்தரி பூந்
தோரணம் பூத்த எழில் ஒற்றியூர் மகிழ் சுந்தரி சற்
காரணம் பூத்த சிவை பார்ப்பதி நம் கவுரி என்னும்
வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை_மாணிக்கமே.

#1473.
திரு_வல்லி ஏத்தும் அபிடேக_வல்லி எம் சென்னியிடை
வரு வல்லி கற்பக_வல்லி ஒண் பச்சை மணி_வல்லி எம்
கரு வல்லி நீக்கும் கருணாம்பக_வல்லி கண்கொள் ஒற்றி
மரு வல்லி என்று மறை தேர் வடிவுடை_மாணிக்கமே.

#1474.
உடை என்ன ஒண் புலித்தோல்_உடையார் கண்டு உவக்கும் இள
நடை அன்னமே மலர்ப் பொன் முதலாம் பெண்கள் நாயகமே
படை அன்ன நீள் விழி மின் நேர் இடைப் பொன் பசுங்கிளியே
மடை மன்னும் நீர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1475.
கற்பதும் கேட்பதும் எல்லாம் நின் அற்புதக் கஞ்ச_மலர்ப்
பொன்_பதம் காணும் பொருட்டு என எண்ணுவர் புண்ணியரே
சொல் பதமாய் அவைக்கு அப்புறமாய் நின்ற தூய்ச் சுடரே
மல் பதம் சேர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1476.
நின்னால் எனக்கு உள எல்லா நலனும் நினை அடைந்த
என்னால் உனக்கு உளது என்னை கண்டாய் எமை ஈன்றவளே
முன் நால்வருக்கு அருள் ஒற்றி எம்மான் கண் முழு மணியே
மன் நான்மறையின் முடிவே வடிவுடை_மாணிக்கமே.

#1477.
நன்றே சிவநெறி நாடும் மெய்த் தொண்டர்க்கு நன்மை செய்து
நின்றே நின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈது
என்றே முடிகுவது இன்றே முடியில் இனிது கண்டாய்
மன்று ஏர் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1478.
அத்தனை ஒற்றிக்கு இறைவனை அம்பலத்து ஆடுகின்ற
முத்தனைச் சேர்ந்த ஒண் முத்தே மதிய முக அமுதே
இத்தனை என்று அளவு ஏலாத குற்றம் இழைத்திடும் இ
மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை_மாணிக்கமே.

#1479.
கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும் என்
தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திரு_செவியில்
ஏறாத வண்ணம் என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின்
மாறாது அமர்ந்த மயிலே வடிவுடை_மாணிக்கமே.

#1480.
ஓயா இடர்கொண்டு உலைவேனுக்கு அன்பர்க்கு உதவுதல் போல்
ஈயாவிடினும் ஓர் எள்ளளவேனும் இரங்கு கண்டாய்
சாயா அருள்தரும் தாயே எழில் ஒற்றித் தற்பரையே
மாயா நலம் அருள் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1481.
பெரும் பேதையேன் சிறு வாழ்க்கைத் துயர் எனும் பேர் அலையில்
துரும்பே என அலைகின்றேன் புணை நின் துணை பதமே
கரும்பே கருணைக் கடலே அருள் முக்கனி நறவே
வரும் பேர் அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1482.
காதரவால் உள் கலங்கி நின்றேன் நின் கடைக்கண் அருள்
ஆதரவால் மகிழ்கின்றேன் இனி உன் அடைக்கலமே
சீதரன் ஏத்தும் திருவொற்றி_நாதர்-தம் தேவி எழில்
மாதரசே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

#1483.
பொன்_உடையார் அன்றிப் போற்றும் நல் கல்விப் பொருள்_உடையார்
என்_உடையார் என ஏசுகின்றார் இஃது என்னை அன்னே
மின்_உடையாய் மின்னில் துன் இடையாய் ஒற்றி மேவும் முக்கண்
மன்_உடையாய் என்னுடையாய் வடிவுடை_மாணிக்கமே.

#1484.
பொய்விட்டிடாதவன் நெஞ்சகத்தேனைப் புலம்பும் வண்ணம்
கைவிட்டிடாது இன்னும் காப்பாய் அது நின் கடன் கரும்பே
மெய்விட்டிடார் உள் விளை இன்பமே ஒற்றி வித்தகமே
மை விட்டிடா விழி மானே வடிவுடை_மாணிக்கமே.

#1485.
நேயானுகூல மனம்_உடையாய் இனி நீயும் என்றன்
தாய் ஆகில் யான் உன் தனையனும் ஆகில் என்றன் உளத்தில்
ஓயாது உறும் துயர் எல்லாம் தவிர்த்து அருள் ஒற்றியில் செவ்
வாய் ஆர் அமுத வடிவே வடிவுடை_மாணிக்கமே.

#1486.
வாழி நின் சேவடி போற்றி நின் பூம்_பத வாரிசங்கள்
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர்
வாழி என் உள்ளத்தில் நீயும் நின் ஒற்றி மகிழ்நரும் நீ
வாழி என் ஆர் உயிர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

@76. தனித் திருமாலை

#1487.
வன் மூட்டைப்பூச்சியும் புன் சீலைப்பேனும் தம் வாய்க் கொள்ளியால்
என் மூட்டைத் தேகம் சுறுக்கிடவே சுட்டு இரா முழுதும்
தொன் மூட்டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்றது ஓர்
பொன் மூட்டை வேண்டி என் செய்கேன் அருள் முக்கண் புண்ணியனே.

#1488.
மான் முடி மேலும் கமலத்தான் முடி மேலும் தேவர்_
கோன் முடி மேலும் போய்க் குலாவுமே வான் முடி நீர்
ஊர்ந்து வலம்செய்து ஒழுகும் ஒற்றியூர்த் தியாகரை நாம்
சார்ந்து வலம்செய் கால்கள் தாம்.

#1489.
சத்திமான் என்பர் நின்றன்னை ஐயனே
பத்திமான்-தனக்கு அலால் பகர்வது எங்ஙனே.

#1490.
படியே அளந்த மாலவனும் பழைய மறை சொல் பண்ணவனும்
முடி ஈறு அறியா முதல்_பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கு இறையே
அடியார்களுக்கே இரங்கி முனம் அடுத்த சுர_நோய் தடுத்தது போல்
படி மீது அடியேற்கு உறு பிணி போம்படி நீ கடைக்கண் பார்த்து அருளே.

#1491.
மன்று ஆடும் மா மணியே நின் பொன் பாத_மலர்த் துணையே துணையாக வாழ்கின்றோர்க்கு
ஒன்றாலும் குறைவு இல்லை ஏழையேன் யான் ஒன்றும்_இலேன் இ உலகில் உழலாநின்றேன்
இன்றாக நாள் கழியில் என்னே செய்கேன் இணை முலையார் மையலினால் இளைத்துநின்றேன்
என்றாலும் சிறிது எளியேற்கு இரங்கல் வேண்டும் எழில் ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே.

#1492.
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலாச் சுகமாம்
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கு ஓர்
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன_குறிப்பு அறியேன்
சேறு வேண்டிய கயப் பணைக் கடல் சார் திகழும் ஒற்றியூர்ச் சிவ_பரஞ்சுடரே.

@77. திரு உலாப் பேறு

#1493.
சீர் ஆர் வளம் சேர் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி-தனை
ஊராருடன் சென்று எனது நெஞ்சம் உவகை ஓங்கப் பார்த்தனன் காண்
வார் ஆர் முலைகள் மலைகள் என வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால்
ஏர் ஆர் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

#1494.
சீர்த் தேன் பொழில் ஆர் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரப்
பார்த்தேன் கண்கள் இமைத்தில காண் பைம்பொன் வளைகள் அமைத்தில காண்
தார்த் தேன் குழலும் சரிந்தன காண் தானை இடையில் பிரிந்தன காண்
ஈர்த்தேன் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

#1495.
சீதப் புனல் சூழ் வயல் ஒற்றித் தியாக_பெருமான் திரு மாட_
வீதிப் பவனி வரக் கண்டேன் மென் பூம் துகில் வீழ்ந்தது காணேன்
போதிற்று எனவும் உணர்ந்திலேன் பொன்_அனார் பின் போதுகிலேன்
ஈது அற்புதமே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

#1496.
தென் ஆர் சோலைத் திருவொற்றித் தியாக_பெருமான் பவனி வரப்
பொன் ஆர் வீதி-தனில் பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல் பூத்தேன்
மின் ஆர் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில் வேட்டு
என் ஆர் அணங்கே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

#1497.
சீல_குணத்தோர் புகழ் ஒற்றித் தியாக_பெருமான் பவனி இரா_
காலத்து அடைந்து கண்டேன் என் கண்கள் இரண்டோ ஆயிரமோ
ஞாலத்தவர்கள் அலர் தூற்ற நல் தூசு இடையில் நழுவி விழ
ஏலக் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

#1498.
சேயை அருளும் திருவொற்றித் தியாக_பெருமான் வீதி-தனில்
தூய பவனி வரக் கண்டேன் சூழ்ந்த மகளிர்-தமைக் காணேன்
தாயை மறந்தேன் அன்றியும் என்றனையும் மறந்தேன் தனிப்பட்டேன்
ஏய் என் தோழி என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

#1499.
திங்கள் உலவும் பொழில் ஒற்றித் தியாக_பெருமான் திரு_வீதி
அங்கண் களிக்கப் பவனி வந்தான் அது போய்க் கண்டேன் தாயர் எலாம்
தங்கள் குலத்துக்கு அடாது என்றார் தம்மை விடுத்தேன் தனியாகி
எம் கண்_அனையாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

#1500.
தேசு ஆர் மணி சூழ் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரக்
கூசாது ஓடிக் கண்டு அரையில் கூறை இழந்தேன் கை_வளைகள்
வீசாநின்றேன் தாயர் எலாம் வீட்டுக்கு அடங்காப் பெண் எனவே
ஏசாநிற்க என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

#1501.
தேடார்க்கு அரியான் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரத்
தோடு ஆர் பணைத் தோள் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி
வாடாக் காதல் கொண்டு அறியேன் வளையும் துகிலும் சோர்ந்ததுடன்
ஏடு ஆர் கோதை என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

#1502.
திருமாற்கு அரியான் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரப்
பெருமான் மனமும் நானும் முன்னும் பின்னும் சென்று கண்டேமால்
பொருமாநின்றேன் தாயர் எலாம் போ என்று ஈர்க்கப் போதுகிலேன்
இருள் மாண் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

@78. நாரையும் கிளியும் நாட்டுறு தூது

#1503.
கண்ணன் நெடுநாள் மண் இடந்தும் காணக் கிடையாக் கழல்_உடையார்
நண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய் சென்று நவிற்றாயோ
அண்ணல் உமது பவனி கண்ட அன்று முதலாய் இன்றளவும்
உண்ணும் உணவோடு உறக்கமும் நீத்து உற்றாள் என்று இ ஒரு மொழியே.

#1504.
மன்னும் கருணை வழி விழியார் மதுர மொழியார் ஒற்றி நகர்த்
துன்னும் அவர்-தம் திருமுன் போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
மின்னும் தேவர் திரு_முடி மேல் விளங்கும் சடையைக் கண்டவள் தன்
பின்னும் சடையை அவிழ்த்து ஒன்றும் பேசாள் எம்மைப் பிரிந்து என்றே.

#1505.
வடிக்குந் தமிழ்த் தீம் தேன் என்ன வசனம் புகல்வார் ஒற்றி-தனில்
நடிக்கும் தியாகர் திருமுன் போய் நாராய் நின்று நவிற்றாயோ
பிடிக்கும் கிடையா நடை உடைய பெண்கள் எல்லாம் பிச்சி என
நொடிக்கும்படிக்கு மிகும் காம நோயால் வருந்தி நோவதுவே.

#1506.
மாய_மொழியார்க்கு அறிவரியார் வண்கை_உடையார் மறை மணக்கும்
தூய_மொழியார் ஒற்றியில் போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
நேய_மொழியாள் பந்து ஆடாள் நில்லாள் வாச_நீராடாள்
ஏய_மொழியாள் பால் அனமும் ஏலாள் உம்மை எண்ணி என்றே.

#1507.
ஒல்லார் புரம் மூன்று எரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும்
நல்லார் வல்லார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியே
அல் ஆர் குழலாள் கண்ணீராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கு_அனையார்
பல்லார் சூழ்ந்து பழி தூற்றப் படுத்தாள் விடுத்தாள் பாயல் என்றே.

#1508.
ஓவா நிலையார் பொன்_சிலையார் ஒற்றி நகரார் உண்மை சொலும்
தூ வாய்_மொழியார் அவர் முன் போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
பூ ஆர் முடியாள் பூ முடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள்
ஆஆ என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம் என்றே.

#1509.
வட்ட மதி போல் அழகு ஒழுகும் வதன விடங்கர் ஒற்றி-தனில்
நட்ட நவில்வார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றாயோ
கட்ட அவிழ்ந்த குழல் முடியாள் கடுகி விழுந்த கலை புனையாள்
முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்து என்றே.

#1510.
வேலை விடத்தை மிடற்று அணிந்த வெண் நீற்று அழகர் விண்ணளவும்
சோலை மருவும் ஒற்றியில் போய்ச் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ
மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள்
காலை அறியாள் பகல் அறியாள் கங்குல் அறியாள் கனிந்து என்றே.

#1511.
மாண் காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப் பொன்
நாண் காத்து அளித்தார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியோ
பூண் காத்து அளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன் மால் ஆதியராம்
சேண் காத்து அளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன் என்றே.

#1512.
தேசு பூத்த வடிவழகர் திரு வாழ் ஒற்றித் தேவர் புலித்
தூசு பூத்த கீள்_உடையார் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ
மாசு பூத்த மணி போல வருந்தாநின்றாள் மங்கையர் வாய்
ஏசு பூத்த அலர்க் கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணி என்றே.

@79. இரங்கன் மாலை

#1513.
நன்று புரிவார் திருவொற்றி_நாதர் எனது நாயகனார்
மன்றுள் அமர்வார் மால் விடை மேல் வருவார் அவரை மாலையிட்ட
அன்று முதலாய் இன்றளவும் அந்தோ சற்றும் அணைந்து அறியேன்
குன்று நிகர் பூண் முலையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1514.
தகை சேர் ஒற்றித் தலத்து அமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க
நகை சேர்ந்தவரை மாலையிட்ட நாளே முதல் இந்நாள் அளவும்
பகை சேர் மதன் பூச் சூடல் அன்றிப் பத_பூச் சூடப் பார்த்து அறியேன்
குகை சேர் இருள் பூங் குழலாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1515.
தோடு ஆர் குழையார் ஒற்றியினார் தூயர்க்கு அலது சுகம் அருள
நாடார் அவர்க்கு மாலையிட்ட நாளே முதல் இந்நாள் அளவும்
சூடா மலர் போல் இருந்ததல்லால் சுகம் ஓர் அணுவும் துய்த்து அறியேன்
கோடா ஒல்கும் கொடியே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1516.
அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார் அணியார் ஒற்றியார் நீல_
கண்டர் அவர்க்கு மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
பண்டம் அறியேன் பலன் அறியேன் பரிவோடு அணையப் பார்த்து அறியேன்
கொண்டல் மணக்குங் கோதாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1517.
பாடல் கமழும் பதம்_உடையார் பணை சேர் ஒற்றிப் பதி_உடையார்
வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால்
ஆடல் அளி சூழ் குழலாய் உன் ஆணை ஒன்றும் அறியனடி
கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1518.
துடி சேர் கரத்தார் ஒற்றியில் வாழ் சோதி வெண் நீற்று அழகர் அவர்
கடி சேர்ந்து என்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
பிடி சேர் நடை நேர் பெண்களைப் போல் பின்னை யாதும் பெற்று அறியேன்
கொடி நேர் இடையாய் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1519.
ஒற்றி நகர் வாழ் உத்தமனார் உயர் மால் விடையார் உடையார் தாம்
பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றிப் பகை தெரிந்து
வெற்றி மதனன் வீறு அடங்க மேவி அணைந்தார்_அல்லரடி
குற்றம் அணுவும் செய்து அறியேன் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1520.
வானும் புவியும் புகழ் ஒற்றி_வாணர் மலர்க் கை மழுவினொடு
மானும் உடையார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால்
நானும் அவரும் கூடி ஒருநாளும் கலந்தது இல்லையடி
கோல் நுந்திய வேல் கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1521.
தெறித்து மணிகள் அலை சிறக்கும் திரு வாழ் ஒற்றித் தேவர் எனை
வறித்து இங்கு எளியேன் வருந்தாமல் மாலையிட்ட நாள் அலது
மறித்தும் ஒருநாள் வந்து என்னை மருவி அணைய நான் அறியேன்
குறித்து இங்கு உழன்றேன் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1522.
மின்னோடு ஒக்கும் வேணியினார் விமலர் ஒற்றி_வாணர் எனைத்
தென்னோடு ஒக்க மாலையிட்டுச் சென்றார் பின்பு சேர்ந்து அறியார்
என்னோடு ஒத்த பெண்கள் எலாம் ஏசி நகைக்க இடர் உழந்தேன்
கொன்னோடு ஒத்த கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1523.
உடுத்தும் அதளார் ஒற்றியினார் உலகம் புகழும் உத்தமனார்
தொடுத்து இங்கு எனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே
படுத்தும் அறியார் எனக்கு உரிய பரிவில் பொருள் ஓர் எள்ளளவும்
கொடுத்தும் அறியார் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1524.
உழை ஒன்று அணி கைத்தலம்_உடையார் ஒற்றி_உடையார் என்றனக்கு
மழை ஒன்று அலர் பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி
பிழை ஒன்று அறியேன் பெண்கள் எலாம் பேசி நகைக்கப் பெற்றேன் காண்
குழை ஒன்றிய கண் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1525.
ஏடு ஆர் பொழில் சூழ் ஒற்றியினார் என் கண்_அனையார் என் தலைவர்
பீடு ஆர் மாலையிட்டது அன்றிப் பின் ஓர் சுகமும் பெற்று அறியேன்
வாடாக் காதல் பெண்கள் எலாம் வலது பேச நின்றனடி
கோடு ஆர் கொங்கை மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1526.
கஞ்சன் அறியார் ஒற்றியினார் கண் மூன்று_உடையார் கனவினிலும்
வஞ்சம் அறியார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால்
மஞ்சம்-அதனில் என்னோடு மருவி இருக்க நான் அறியேன்
கொஞ்சம்_மதி நேர் நுதலாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1527.
ஆலம் இருந்த களத்து அழகர் அணி சேர் ஒற்றி ஆலயத்தார்
சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது
கால நிரம்ப அவர் புயத்தைக் கட்டி அணைந்தது இல்லையடி
கோல மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1528.
நெய்தல் பணை சூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால் அயனும்
எய்தற்கு அரியார் மாலையிட்டார் எனக்கென்று உரைக்கும் பெருமை அல்லால்
உய்தற்கு அடியேன் மனையின்-கண் ஒருநாளேனும் உற்று அறியார்
கொய்தற்கு அரிதாம் கொடியே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1529.
போர்க்கும்_உரியார் மால் பிரமன் போகி முதலாம் புங்கவர்கள்
யார்க்கும் அரியார் எனக்கு எளியர் ஆகி என்னை மாலையிட்டார்
ஈர்க்கும் புகுதா முலை மதத்தை இன்னும் தவிர்த்தார்_அல்லரடி
கூர்க்கும் நெடு வேல் கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1530.
இறையார் ஒற்றியூரினிடை இருந்தார் இனியார் என் கணவர்
மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ
பொறை ஆர் இரக்கம் மிக_உடையார் பொய் ஒன்று உரையார் பொய் அலடி
குறையா_மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1531.
உடுப்பார் கரி தோல் ஒற்றி எனும் ஊரார் என்னை உடையவனார்
மடுப்பு ஆர் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழை உரைத்துக்
கெடுப்பார் இல்லை என் சொலினும் கேளார் எனது கேள்வர் அவர்
கொடுப்பார் என்றோ மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1532.
எருதில் வருவார் ஒற்றி_உளார் என் நாயகனார் எனக்கு இனியார்
வருதி எனவே மாலையிட்டார் வந்தால் ஒன்றும் வாய்திறவார்
கருதி அவர்-தம் கட்டளையைக் கடந்து நடந்தேன்_அல்லவடி
குருகு உண் கரத்தாய் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1533.
மா வென்று உரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால்
வா என்று உரையார் போ என்னார் மௌனம் சாதித்திருந்தனர் காண்
ஆ என்று அலறிக் கண்ணீர்விட்டு அழுதால் துயரம் ஆறுமடி
கோ என்று இரு வேல் கொண்டாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1534.
நாட்டும் புகழ் ஆர் திருவொற்றி நகர் வாழ் சிவனார் நன்மை எலாம்
காட்டும்படிக்கு மாலையிட்ட கணவர் என ஓர் காசளவில்
கேட்டும் அறியேன் தந்து அறியார் கேட்டால் என்ன விளையுமடி
கோட்டு மணிப் பூண் முலையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1535.
வெற்பை வளைத்தார் திருவொற்றி மேவி அமர்ந்தார் அவர் எனது
கற்பை அழித்தார் மாலையிட்டுக் கணவர் ஆனார் என்பதல்லால்
சிற்ப மணி மேடையில் என்னைச் சேர்ந்தார் என்பது இல்லையடி
கொன் பை அரவின் இடையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1536.
என்ன கொடுத்தும் கிடைப்ப அரியார் எழில் ஆர் ஒற்றி நாதர் எனைச்
சின்ன வயதில் மாலையிட்டுச் சென்றார் சென்ற திறன் அல்லால்
இன்னும் மருவ வந்திலர் காண் யாதோ அவர்-தம் எண்ணம்-அது
கொல் நுண் வடி வேல் கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1537.
கரும்பின் இனியார் கண்_நுதலார் கடி சேர் ஒற்றிக் காவலனார்
இரும்பின் மனத்தேன்-தனை மாலையிட்டார் இட்ட அன்று அலது
திரும்பி ஒருகால் வந்து என்னைச் சேர்ந்து மகிழ்ந்தது இல்லையடி
குரும்பை அனைய முலையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1538.
தீது தவிர்ப்பார் திருவொற்றித் தியாகர் அழியாத் திறத்தர் அவர்
மாது மகிழ்தி என என்னை மாலையிட்டார் மாலையிட்ட
போது கண்ட திரு_முகத்தைப் போற்றி மறித்தும் கண்டு அறியேன்
கோது கண்டேன் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1539.
வென்றிக் கொடி மேல் விடை உயர்த்தார் மேலார் ஒற்றியூரர் என்-பால்
சென்று இக் குளிர் பூ மாலையிட்டார் சேர்ந்தார்_அல்லர் யான் அவரை
அன்றிப் பிறரை நாடினனோ அம்மா ஒன்றும் அறியனடி
குன்றில் துயர்கொண்டு அழும் எனது குறையை எவர்க்குக் கூறுவனே.

#1540.
தோளா மணி நேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார்
மாளா நிலையர் என்றனக்கு மாலையிட்டார் மருவிலர் காண்
கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்தது எனினும் அதைக்
கோள் ஆர் உரைப்பார் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1541.
வாடாது இருந்தேன் மழை பொழியும் மலர்க் கா வனம் சூழ் ஒற்றியினார்
ஏடு ஆர் அணி பூ மாலை எனக்கு இட்டார் அவர்க்கு மாலையிட்டேன்
தேடாது இருந்தேன்_அல்லடி யான் தேடி அருகில் சேர்ந்தும் எனைக்
கூடாது இருந்தார் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1542.
நலத்தில் சிறந்த ஒற்றி நகர் நண்ணும் எனது நாயகனார்
வலத்தில் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல்
நிலத்தில் சிறந்த உறவினர்கள் நிந்தித்து ஐயோ எனைத் தமது
குலத்தில் சேரார் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

#1543.
ஈர்ம் தேன் அளி சூழ் ஒற்றி_உளார் என் கண்மணியார் என் கணவர்
வார் தேன் சடையார் மாலையிட்டும் வாழாது அலைந்து மனம் மெலிந்து
சோர்ந்தேன் பதைத்துத் துயர்_கடலைச் சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன்
கூர்ம் தேன் குழலாய் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

@80 திரு உலா வியப்பு

#1544
வெள்ளச் சடையார் விடையார் செவ்வேலார் நூலார் மேலார்-தம்
உள்ளத்து உறைவார் நிறைவார் நல் ஒற்றித் தியாக_பெருமானர்
வள்ளல் குணத்தார் திரு_பவனி வந்தார் என்றார் அ மொழியை
விள்ளற்குள்ளே மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே.

#1545.
அம் தார் அணியும் செஞ்சடையார் அடையார் புரம் மூன்று அவை அனலின்
உந்தாநின்ற வெண்_நகையார் ஒற்றித் தியாகர் பவனி இங்கு
வந்தார் என்றார் அந்தோ நான் மகிழ்ந்து காண வரும் முன்னம்
மந்தாகினி போல் மனம் என்னை வஞ்சித்து அவர் முன் சென்றதுவே.

#1546.
பொன் நேர் சடையார் கீள்_உடையார் பூவை-தனை ஓர் புடை_உடையார்
தென் ஏர் பொழில் சூழ் ஒற்றியூர்த் திகழுந் தியாகர் திரு_பவனி
இன்னே வந்தார் என்றார் நான் எழுந்தேன் நான் அங்கு எழுவதற்கு
முன்னே மனம் என்றனை விடுத்து முந்தி அவர் முன் சென்றதுவே.

#1547.
காண இனியார் என் இரண்டு கண்கள்_அனையார் கடல் விடத்தை
ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார் நல் ஒற்றித் தியாக_பெருமானார்
மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன் நான்
நாண எனை விட்டு என் மனம்-தான் நயந்து அங்கு அவர் முன் சென்றதுவே.

#1548.
செழும் தெண் கடல் தெள் அமுது_அனையார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார்
கொழும் தண் பொழில் சூழ் ஒற்றியினார் கோலப் பவனி என்றார் நான்
எழுந்து இங்கு அவிழ்ந்த கலை புனைந்து அங்கு ஏகும் முன்னர் எனை விடுத்தே
அழுந்து நெஞ்சம் விழுந்து கூத்தாடி அவர் முன் சென்றதுவே.

#1549.
சால மாலும் மேலும் இடந்தாலும் அறியாத் தழல்_உருவார்
சேலும் புனலும் சூழ் ஒற்றித் திகழும் தியாக_பெருமானார்
பாலும் தேனும் கலந்தது எனப் பவனி வந்தார் என்றனர் யான்
மேலுங் கேட்கும் முன்னம் மனம் விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே.

#1550.
பின் தாழ்_சடையார் தியாகர் எனப் பேசும் அருமைப் பெருமானார்
மன்று ஆர் நடத்தார் ஒற்றி-தனில் வந்தார் பவனி என்றார் நான்
நன்றாத் துகிலைத் திருத்தும் முனம் நலம் சேர் கொன்றை நளிர்ப் பூவின்
மென் தார் வாங்க மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே.

#1551.
கண் ஆர் நுதலார் மணி_கண்டர் கனக வரையாம் கன_சிலையார்
பெண் ஆர் பாகர் தியாகர் எனப் பேசும் அருமைப் பெருமானார்
தண் ஆர் பொழில் சூழ் ஒற்றி-தனில் சார்ந்தார் பவனி என்றனர் நான்
நண்ணா முன்னம் என் மனம்-தான் நாடி அவர் முன் சென்றதுவே.

#1552.
ஈமப் புறங்காட்டு எரி ஆடும் எழிலார் தில்லை இனிது அமர்வார்
சேமப் புலவர் தொழும் ஒற்றித் திகழுந் தியாக_பெருமானார்
வாமப் பாவையொடும் பவனி வந்தார் என்றார் அது காண்பான்
காமப் பறவை போல் என் மனம் கடுகி அவர் முன் சென்றதுவே.

#1553.
சூல_படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்-தம்
சீலப் பதியார் திருவொற்றித் திகழுந் தியாக_பெருமானார்
நீலக் களத்தார் திரு_பவனி நேர்ந்தார் என்றார் அது காண்பான்
சாலப் பசித்தார் போல் மனம்-தான் தாவி அவர் முன் சென்றதுவே.

@81. சல்லாப வியன்மொழி

#1554.
காது நடந்த கண் மடவாள் கடி மா மனைக்குக் கால் வருந்தத்
தூது நடந்த பெரியவர் சிற்சுகத்தார் ஒற்றித் தொல் நகரார்
வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வா என்றார்
போது நடந்தது என்றேன் எப்போது நடந்தது என்றாரே.

#1555.
கச்சை இடுவார் பட வரவைக் கண் மூன்று உடையார் வாமத்தில்
பச்சை இடுவார் ஒற்றி_உள்ளார் பரிந்து என் மனையில் பலிக்கு உற்றார்
இச்சையிடுவார் உண்டி என்றார் உண்டேன் என்றேன் எனக்கு இன்று
பிச்சை இடுவாய் என்றார் நான் பிச்சை அடுவேன் என்றேனே.

#1556.
கருதற்கு அரியார் கரியார் முன் காணக் கிடையாக் கழல்_அடியார்
மருதத்து_உறைவார் திருவொற்றி_வாணர் இன்று என் மனைக்கு உற்றார்
தருதற்கு என்-பால் இன்று வந்தீர் என்றேன் அது நீ-தான் என்றார்
வருதற்கு உரியீர் வாரும் என்றேன் வந்தேன் என்று மறைந்தாரே.

#1557.
கல்லை வளைக்கும் பெருமானார் கழி சூழ் ஒற்றிக் கடி நகரார்
எல்லை வளைக்கும் தில்லை_உள்ளார் என்றன் மனைக்குப் பலிக்கு உற்றார்
அல்லை வளைக்கும் குழல் அன்னம் அன்பின் உதவாவிடில் லோபம்
இல்லை வளைக்கும் என்றார் நான் இல் ஐ வளைக்கும் என்றேனே.

#1558.
வெற்றி இருந்த மழு_படையார் விடையார் மேரு வில்_உடையார்
பெற்றி இருந்த மனத்தர்-தம் உள் பிறங்கும் தியாக_பெருமானார்
சுற்றி இருந்த பெண்கள் எல்லாஞ் சொல்லி நகைக்க அருகு அணைந்தார்
ஒற்றி இரும் என்று உரைத்தேன் நான் ஒற்றி இருந்தேன் என்றாரே.

#1559.
விண் தங்கு அமரர் துயர் தவிர்க்கும் வேல் கை மகனை விரும்பி நின்றோர்
வண்டு அங்கு இசைக்கும் பொழில் ஒற்றி வதிவார் என்றன் மனை அடைந்தார்
தண்டு அங்கு அழற்கு நிகரானீர் தண்டம் கழற்கு என்றேன் மொழியால்
கண்டு அங்கு அறுத்தாய் என்றார் நீர் கண்டம் கறுத்தீர் என்றேனே.

#1560.
விற்கு அண்டாத நுதல் மடவாள் வேட்ட நடன வித்தகனார்
சொற்கு அண்டாத புகழ் ஒற்றித் தூயர் இன்று என் மனை புகுந்தார்
நின் கண்டார்கள் மயல் அடைவார் என்றார் நீர்-தாம் நிகழ்த்திய சொல்
கற்கண்டாம் என்று உரைத்தேன் நான் கல் கண்டாம் என்று உரைத்தாரே.

#1561.
விடை ஆர் கொடி மேல் உயர்த்தருளும் வேத கீதப் பெருமானார்
உடையார் ஒற்றியூர் அமர்ந்தார் உவந்து என் மனையில் இன்று அடைந்தார்
இடையா வையம் என்றார் நான் இடை-தான் ஐயம் என்றேனால்
கடையார் அளியார் என்றார் கண் கடையார் அளியார் என்றேனே.

#1562.
நாடு ஒன்றிய சீர்த் திருவொற்றி நகரத்து அமர்ந்த நாயகனார்
ஈடு ஒன்று இல்லார் என் மனை உற்றிருந்தார் பூ உண்டு எழில் கொண்ட
மாடு ஒன்று எங்கே என்றேன் உன் மனத்தில் என்றார் மகிழ்ந்து அமர் வெண்
காடு ஒன்று உடையீர் என்றேன் செங்காடு ஒன்று உடையேன் என்றாரே.

#1563.
சொல்லால் இயன்ற தொடை புனைவார் தூயார் ஒற்றித் தொல் நகரார்
அல்லால் இயன்ற மனத்தார்-பால் அணுகார் என்றன் மனை புகுந்தார்
வல்லால் இயன்ற முலை என்றார் வல்லார் நீர் என்றேன் உன் சொல்
கல்லால் இயன்றது என்றார் முன் கல் ஆல் இயன்றது என்றேனே.

@82. இன்பக் கிளவி

#1564.
தில்லை வளத்தார் அம்பலத்தார் திருவேட்களத்தார் செவ் வணத்தார்
கல்லை வளைத்தார் என்றன் மனக் கல்லைக் குழைத்தார் கங்கணத்தால்
எல்லை வளைத்தார் தியாகர்-தமை எழில் ஆர் ஒற்றி எனும் நகரில்
ஒல்லை வளைத்துக் கண்டேன் நான் ஒன்றும் உரையாது இருந்தாரே.

#1565.
இருந்தார் திருவாரூரகத்தில் எண்ணாக் கொடியார் இதயத்தில்
பொருந்தார் கொன்றைப் பொலன் பூந் தார் புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்-கண்
விருந்தார் திருந்தார் புரம் முன் தீ விளைத்தார் ஒற்றி நகர் கிளைத்தார்
தரும் தார் காம மருந்து ஆர் இத் தரணி இடத்தே தருவாரே.

#1566.
தருவார் தரு ஆர் செல்வம் முதல் தரு ஆர் ஒற்றித் தலம் அமர்வார்
மருவார்-தமது மனம் மருவார் மரு ஆர் கொன்றை மலர் புனைவார்
திரு ஆர் புயனும் மலரோனும் தேடும் தியாக_பெருமானார்
வருவார் வருவார் என நின்று வழி பார்த்திருந்தேன் வந்திலரே.

#1567.
வந்தார்_அல்லர் மாதே நீ வருந்தேல் என்று மார்பு இலங்கும்
தம் தார் அல்லல் தவிர்ந்து ஓங்கத் தந்தார் அல்லர் தயை_உடையார்
சந்து ஆர் சோலை வளர் ஒற்றித் தலத்தார் தியாக_பெருமானார்
பந்து ஆர் முலையார்க்கு அவர் கொடுக்கும் பரிசு ஏதொன்றும் பார்த்திலமே.

#1568.
இலமே செறித்தார் தாயர் இனி என் செய்குவது என்று இருந்தேற்கு
நலமே தருவார் போல் வந்து என் நலமே கொண்டு நழுவினர் காண்
உலமே அனைய திரு_தோளார் ஒற்றித் தியாக_பெருமானார்
வலமே வலம் என் அவலம் அவலம் மாதே இனி என் வழுத்துவதே.

#1569.
வழுத்தார் புரத்தை எரித்தார் நல் வலத்தார் நடன மலர்_அடியார்
செழு தார் மார்பர் திருவொற்றித் திகழுந் தியாக_பெருமானார்
கழுத்து ஆர் விடத்தார் தமது அழகைக் கண்டு கனிந்து பெரும் காமம்
பழுத்தார்-தம்மைக் கலந்திட நல் பதத்தார் என்றும் பார்த்திலரே.

#1570.
பாராது இருந்தார் தமது முகம் பார்த்து வருந்தும் பாவை-தனைச்
சேராது இருந்தார் திருவொற்றித் திகழுந் தியாக_பெருமானார்
வாராது இருந்தார் இன்னும் இவள் வருத்தங் கேட்டும் மாலை-தனைத்
தாராது இருந்தார் சல_மகளைத் தாழ்ந்த சடையில் தரித்தாரே.

#1571.
சடையில் தரித்தார் ஒருத்தி-தனைத் தழுவி மகிழ் மற்றொரு பெண்ணைப்
புடையில் தரித்தார் மகளே நீ போனால் எங்கே தரிப்பாரோ
கடையில் தரித்த விடம்-அதனைக் களத்தில் தரித்தார் கரித் தோலை
இடையில் தரித்தார் ஒற்றியூர் இருந்தார் இருந்தார் என் உளத்தே.

#1572.
உளத்தே இருந்தார் திருவொற்றியூரில் இருந்தார் உவர் விடத்தைக்
களத்தே வதிந்தார் அவர் என்றன் கண்ணுள் வதிந்தார் கடல் அமுதாம்
இளத் தே மொழியாய் ஆதலினால் இமையேன் இமைத்தல் இயல்பு அன்றே
வளத்தே மனத்தும் புகுகின்றார் வருந்தேன் சற்றும் வருந்தேனே.

#1573.
வருந்தேன் மகளிர் எனை ஒவ்வார் வளம் சேர் ஒற்றி மன்னவனார்
தரும் தேன் அமுதம் உண்டு என்றும் சலிய வாழ்வில் தருக்கி மகிழ்ந்து
இருந்தேன் மணாளர் எனைப் பிரியார் என்றும் புணர்ச்சிக்கு ஏது இதாம்
மருந்து ஏன் மையல் பெரு நோயை மறந்தேன் அவரை மறந்திலனே.

@83. இன்பப் புகழ்ச்சி

#1574.
மாடு ஒன்று உடையார் உணவு இன்றி மண் உண்டது காண் மலரோன்-தன்
ஓடு ஒன்று உடையார் ஒற்றி வைத்தார் ஊரை மகிழ்வோடு உவந்து ஆலங்
காடு ஒன்று உடையார் கண்டம் மட்டும் கறுத்தார் பூத கணத்தோடும்
ஈடு ஒன்று உடையார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே.

#1575. .
பித்தர் எனும் பேர் பிறங்க நின்றார் பேயோடு ஆடிப் பவுரி கொண்டார்
பத்தர்-தமக்குப் பணி_செய்வார் பணியே பணியாப் பரிவுற்றார்
சித்தர் திரு வாழ் ஒற்றியினார் தியாகர் என்று உன் கலை கவர்ந்த
எத்தர் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே

#1576. .
கடுத் தாழ் களத்தார் கரித் தோலார் கண்ணால் மதனைக் கரிசெய்தார்
உடுத்தார் முன் ஓர் மண்_ஓட்டை ஒளித்தே தொண்டனொடும் வழக்குத்
தொடுத்தார் பாம்பும் புலியும் மெச்சித் துதிக்க ஒருகால் அம்பலத்தில்
எடுத்தார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே.

#1577..
உரப் பார் மிசை இல்_பூச் சூட ஒட்டார் சடை மேல் ஒரு பெண்ணைக்
கரப்பார் மலர் தூவிய மதனைக் கண்ணால் சுட்டார் கல் எறிந்தோன்
வரப்பார் மிசை-கண் வாழ்ந்திருக்கவைத்தார் பலிக்கு மனை-தொறும் போய்
இரப்பார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே

#1578. .
கருதும் அவரை வெளிக்கு இழுப்பார் காணாது எல்லாம் காட்டி நிற்பார்
மருதில் உறைவார் ஒற்றி-தனில் வதிவார் புரத்தை மலை_வில்லால்
பொருது முடிப்பார் போல் நகைப்பார் பூ உண்டு உறங்கும் புது வெள்ளை
எருதில் வருவார் மகளே நீ ஏதுக் கவரை விழைந்தனையே

#1579. .
ஆக்கம்_இல்லார் வறுமை_இலார் அருவம்_இல்லார் உருவம்_இலார்
தூக்கம்_இல்லார் சுகம்_இல்லார் துன்பம்_இல்லார் தோன்றும் மல
வீக்கம்_இல்லார் குடும்பம்-அது விருத்தியாகவேண்டும் எனும்
ஏக்கம்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே

#1580..
ஊரும்_இல்லார் ஒற்றி வைத்தார் உறவு ஒன்று_இல்லார் பகை_இல்லார்
பேரும்_இல்லார் எவ்விடத்தும் பிறவார் இறவார் பேச்சு_இல்லார்
நேரும்_இல்லார் தாய் தந்தை நேயர்-தம்மோடு உடன்பிறந்தோர்
யாரும்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே

#1581. .
தங்கும் மருப்பார் கண்மணியைத் தரிப்பார் என்பின் தார் புனைவார்
துங்கும் அருள் கார் முகில்_அனையார் சொல்லும் நமது சொல் கேட்டே
இங்கும் இருப்பார் அங்கு இருப்பார் எல்லாம் இயல்பில் தாம் உணர்ந்தே
எங்கும் இருப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே

#1582. .
துத்திப் படத்தார் சடைத் தலையார் தொலையாப் பலி தேர் தொன்மையினார்
முத்திக்கு_உடையார் மண் எடுப்பார் மொத்துண்டு உழல்வார் மொய் கழற்காம்
புத்திக்கு உரிய பத்தர்கள்-தம் பொருளை உடலை யாவையுமே
எத்திப் பறிப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே

#1583.
மாறித் திரிவார் மனம் அடையார் வணங்கும் அடியார் மனம்-தோறும்
வீறித் திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகு விலை
கூறித் திரிவார் குதிரையின் மேல் கொள்வார் பசுவில் கோல்_வளையோடு
ஏறித் திரிவார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே

@84. திரு உலாத் திறம்

#1584.
தேன் ஆர் கமலத் தடம் சூழும் திரு வாழ் ஒற்றித் தியாகர் அவர்
வானார் அமரர் முனிவர் தொழ மண்ணோர் வணங்க வரும் பவனி
தான் ஆர்வம்கொண்டு அகம் மலரத் தாழ்ந்து சூழ்ந்து கண்டு அலது
கான் ஆர் அலங்கல் பெண்ணே நான் கண்கள் உறக்கம்கொள்ளேனே.

#1585.
திருமால் வணங்கும் ஒற்றி நகர் செழிக்கும் செல்வத் தியாகர் அவர்
கரு மால் அகற்றுந் தொண்டர் குழாம் கண்டு களிக்க வரும் பவனி
மரு மாண்பு உடைய மனம் மகிழ்ந்து மலர்க் கை கூப்பிக் கண்டு அலது
பெரு மான் வடுக் கண் பெண்ணே நான் பெற்றாளோடும் பேசேனே.

#1586.
சேல் ஆர் தடம் சூழ் ஒற்றி நகர் சேரும் செல்வத் தியாகர் அவர்
ஆல் ஆர் களம் மேல் விளங்கும் முகம் அழகு ததும்ப வரும் பவனி
நால் ஆரணஞ் சூழ் வீதியிடை நாடிப் புகுந்து கண்டு அலது
பால் ஆர் குதலைப் பெண்ணே நான் பாயில் படுக்கை பொருந்தேனே.

#1587.
செல் வந்து உறழும் பொழில் ஒற்றித் தெய்வத் தலம் கொள் தியாகர் அவர்
வில்வம் திகழும் செஞ்சடை மின் விழுங்கி விளங்க வரும் பவனி
சொல் வந்து ஓங்கக் கண்டு நின்று தொழுது துதித்த பின் அலது
அல் வந்த அளகப் பெண்ணே நான் அவிழ்ந்த குழலும் முடியேனே.

#1588.
சே ஆர் கொடியார் ஒற்றி நகர் திகழும் செல்வத் தியாகர் அவர்
பூ ஆர் கொன்றைப் புயங்கள் மனம் புணரப்புணர வரும் பவனி
ஓவாக் களிப்போடு அகம் குளிர உடலம் குளிரக் கண்டு அலது
பா ஆர் குதலைப் பெண்ணே நான் பரிந்து நீரும் பருகேனே.

#1589.
சிற்றம்பலத்தார் ஒற்றி நகர் திகழுஞ் செல்வத் தியாகர் அவர்
உற்று அங்கு உவந்தோர் வினைகள் எலாம் ஓட நாடி வரும் பவனி
சுற்றுங் கண்கள் களிகூரத் தொழுது கண்ட பின் அலது
முற்றுங் கனி வாய்ப் பெண்ணே நான் முடிக்கு ஓர் மலரும் முடியேனே.

#1590.
சிந்தைக்கு இனியார் ஒற்றி நகர் திகழும் செல்வத் தியாகர் அவர்
சந்தத் தடம் தோள் கண்டவர்கள்-தம்மை விழுங்க வரும் பவனி
முந்தப் புகுந்து புளகமுடன் மூடிக் குளிரக் கண்டு அலது
கந்தக் குழல் வாய்ப் பெண்ணே நான் கண்ணீர் ஒழியக் காணேனே.

#1591.
தென்னஞ்சோலை வளர் ஒற்றியூர் வாழ் செல்வத் தியாகர் அவர்
பின்னும் சடை மேல் பிறை விளங்கிப் பிறங்காநிற்க வரும் பவனி
மன்னும் கரங்கள் தலை குவித்து வணங்கி வாழ்த்திக் கண்டு அலது
துன்னும் துவர் வாய்ப் பெண்ணே நான் சோறு எள்ளளவும் உண்ணேனே.

#1592.
சிந்தாகுலம் தீர்த்து அருள் ஒற்றியூர் வாழ் செல்வத் தியாகர் அவர்
வந்தார் கண்டார் அவர் மனத்தை வாங்கிப் போக வரும் பவனி
நந்தா மகிழ்வு தலைசிறப்ப நாடி ஓடிக் கண்டு அலது
பந்து ஆர் மலர்க் கைப் பெண்ணே நான் பாடல் ஆடல் பயிலேனே.

#1593.
செக்கர்ச் சடையார் ஒற்றி நகர்ச் சேரும் செல்வத் தியாகர் அவர்
மிக்க அற்புத வாள் முகத்தில் நகை விளங்க விரும்பி வரும் பவனி
மக்கள்_பிறவி எடுத்த பயன் வசிக்க வணங்கிக் கண்டு அலது
நக்கற்கு இயைந்த பெண்ணே நான் ஞாலத்து எவையும் நயவேனே.

@85. வியப்பு மொழி

#1594.
மாதர் மணியே மகளே நீ வாய்த்த தவம்-தான் யாது அறியேன்
வேதர் அனந்தர் மால் அனந்தர் மேவி வணங்கக் காண்ப அரியார்
நாதர் நடன நாயகனார் நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர்
கோதர் அறியாத் தியாகர்-தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

#1595.
திருவில் தோன்றும் மகளே நீ செய்த தவம்-தான் யார் அறிவார்
மருவில் தோன்றும் கொன்றை அம் தார் மார்பர் ஒற்றி மா நகரார்
கருவில் தோன்றும் எங்கள் உயிர் காக்க நினைத்த கருணையினார்
குருவில் தோன்றும் தியாகர்-தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

#1596.
என் ஆர்_உயிர் போல் மகளே நீ என்ன தவம்-தான் இயற்றினையோ
பொன் ஆர் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொன்_பதத்தார்
தென் ஆர் ஒற்றித் திரு_நகரார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார்
கொன் ஆர் சூலப் படையவரைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

#1597.
சேலை நிகர் கண் மகளே நீ செய்த தவம்-தான் செப்ப அரிதால்
மாலை அயனை வானவரை வருத்தும்படிக்கு மதித்து எழுந்த
வேலை விடத்தை மிடற்று அணிந்தார் வீட்டு நெறியாம் அரசியல் செங்
கோலை அளித்தார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

#1598.
தேன் நேர் குதலை மகளே நீ செய்த தவம்-தான் எத் தவமோ
மான் ஏர் கரத்தார் மழ விடை மேல் வருவார் மரு ஆர் கொன்றையினார்
பால் நேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல் சடை மேல்
கோல் நேர் பிறையார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

#1599.
வில் ஆர் நுதலாய் மகளே நீ மேலை_நாள் செய் தவம் எதுவோ
கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரியக் கண் விழித்தார்
வில்லார் விசையற்கு அருள் புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவி நின்றார்
கொல்லா நெறியார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

#1600.
அம் சொல் கிளியே மகளே நீ அரிய தவம் ஏது ஆற்றினையோ
வெம் சொல் புகலார் வஞ்சர்-தமை மேவார் பூ ஆர் கொன்றையினார்
கஞ்சற்கு அரியார் திருவொற்றிக் காவல் உடையார் இன் மொழியால்
கொஞ்சத் தருவார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

#1601.
பூ வாய் வாள் கண் மகளே நீ புரிந்த தவம்-தான் எத் தவமோ
சே வாய் விடங்கப் பெருமானார் திருமால் அறியாச் சேவடியார்
கா வாய்ந்து ஓங்கும் திருவொற்றிக் காவல் உடையார் எவ்வெவர்க்கும்
கோவாய் நின்றார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

#1602.
மலை நேர் முலையாய் மகளே நீ மதிக்கும் தவம் ஏது ஆற்றினையோ
தலை நேர் அலங்கல் தாழ்_சடையார் சாதி அறியாச் சங்கரனார்
இலை நேர் தலை மூன்று ஒளிர் படையார் எல்லாம் உடையார் எருக்கின் மலர்க்
குலை நேர் சடையார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

#1603.
மயிலின் இயல் சேர் மகளே நீ மகிழ்ந்து புரிந்தது எத் தவமோ
வெயிலின் இயல் சேர் மேனியினார் வெண் நீறு உடையார் வெள் விடையார்
பயிலின்_மொழியாள் பாங்கு_உடையார் பணை சூழ் ஒற்றிப் பதி அமர்ந்தார்
குயிலின் குலவி அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

@86. புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்

#1604.
உள்ளார் புறத்தார் ஒற்றி எனும் ஊரார் ஒப்பு என்று ஒன்றும் இலார்
வள்ளால் என்று மறை துதிக்க வருவார் இன்னும் வந்திலரே
எள்ளாது இருந்த பெண்கள் எலாம் இகழாநின்றார் இனிய மொழித்
தெள் ஆர் அமுதே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1605.
மால் ஏறு உடைத்தாம் கொடி_உடையார் வளம் சேர் ஒற்றி மா நகரார்
பால் ஏறு அணி நீற்று அழகர் அவர் பாவியேனைப் பரிந்திலரே
கோல் ஏறுண்ட மதன் கரும்பைக் குனித்தான் அம்பும் கோத்தனன் காண்
சேல் ஏறு உண்கண் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1606.
பொய்யர் உளத்துப் புகுந்து அறியார் போதனொடு மால் காண்ப அரிதாம்
ஐயர் திரு வாழ் ஒற்றி நகர் அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே
வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன்
செய்ய முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1607.
நந்திப் பரியார் திருவொற்றி_நாதர் அயன் மால் நாடுகினும்
சந்திப்பு அரியார் என் அருமைத் தலைவர் இன்னும் சார்ந்திலரே
அந்திப் பொழுதோ வந்தது இனி அந்தோ மதியம் அனல் சொரியும்
சிந்திப்பு உடையேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1608.
என் ஆர்_உயிர்க்கு ஓர் துணை ஆனார் என் ஆண்டவனார் என்னுடையார்
பொன் ஆர் ஒற்றி நகர் அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே
ஒன்னார் எனவே தாயும் எனை ஒறுத்தாள் நானும் உயிர் பொறுத்தேன்
தென் ஆர் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1609.
மாணி உயிர் காத்து அந்தகனை மறுத்தார் ஒற்றி மா நகரார்
காணி_உடையார் உலகு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே
பேணி வாழாப் பெண் எனவே பெண்கள் எல்லாம் பேசுகின்றார்
சேண்-நின்று இழிந்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1610.
வன் சொல் புகலார் ஓர் உயிரும் வருந்த நினையார் மனம் மகிழ
இன் சொல் புகல்வார் ஒற்றி_உளார் என் நாயகனார் வந்திலரே
புன் சொல் செவிகள் புகத் துயரம் பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன்
தென் சொல் கிளியே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1611.
எட்டிக் கனியும் மாங்கனி போல் இனிக்க உரைக்கும் இன் சொலினார்
தட்டில் பொருந்தார் ஒற்றியில் வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே
மட்டில் பொலியும் மலர்_கணை செல் வழியே பழி செல் வழி அன்றோ
தெட்டில் பொலியும் விழியாய் நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1612.
காலை மலர்ந்த கமலம் போல் கவின் செய் முகத்தார் கண்_நுதலார்
சோலை மலர்ந்த ஒற்றியினார் சோகம் தீர்க்க வந்திலரே
மாலை மலர்ந்த மையல் நோய் வசந்தம் அதனால் வளர்ந்தது ஐயோ
சேலை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1613
உலகம்_உடையார் என்னுடைய உள்ளம்_உடையார் ஒற்றியினார்
அலகு இல் புகழார் என் தலைவர் அந்தோ இன்னும் அணைந்திலரே
கலகம் உடையார் மாதர் எலாம் கல்_நெஞ்சு உடையார் தூதர் எலாம்
திலக முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1614.
மாலும் அறியான் அயன் அறியான் மறையும் அறியா வானவர் எக்
காலும் அறியார் ஒற்றி நிற்கும் கள்வர் அவரைக் கண்டிலனே
கோலும் மகளிர் அலர் ஒன்றோ கோடாகோடி என்பது அல்லால்
சேல் உண் விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1615.
உந்து மருத்தோடு ஐம்பூதம் ஆனார் ஒற்றியூர் அமர்ந்தார்
இந்தும் இருத்தும் சடைத்_தலையார் என்-பால் இன்னும் எய்திலரே
சந்துபொறுத்துவார் அறியேன் தமியளாகத் தளர்கின்றேன்
சிந்து உற்பவத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1616.
ஆடல் அழகர் அம்பலத்தார் ஐயாறு_உடையார் அன்பர்களோ(டு)
ஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே
வாடல் எனவே எனைத் தேற்றுவாரை அறியேன் வாய்ந்தவரைத்
தேடல் அறியேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1617.
தொழுது வணங்கும் சுந்தரர்க்குத் தூது நடந்த சுந்தரனார்
அழுது வணங்கும் அவர்க்கு மிக அருள் ஒற்றியினார் அணைந்திலரே
பொழுது வணங்கும் இருள் மாலைப் பொழுது முடுகிப் புகுந்தது காண்
செழுமை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1618.
பாவம் அறுப்பார் பழி அறுப்பார் பவமும் அறுப்பார் அவம் அறுப்பார்
கோவம் அறுப்பார் ஒற்றியில் என் கொழுநர் இன்னும் கூடிலரே
தூவ மதன் ஐங்கணை மாதர் தூறு தூவத் துயர்கின்றேன்
தேவ மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1619.
உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்று_இலரைச்
செயிர்க்குள் அழுத்தார் மணி_கண்டத் தேவர் இன்னும் சேர்ந்திலரே
வெயிற்கு மெலிந்த செந்தளிர் போல் வேள் அம்பு-அதனால் மெலிகின்றேன்
செயற்கை மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1620.
ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத்து உறைகின்றோர்
கானம்_உடையார் நாடு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே
மானம்_உடையார் எம் உறவோர் வாழாமைக்கே வருந்துகின்றார்
தீனம் அடையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1621.
மலையை வளைத்தார் மால் விடை மேல் வந்தார் வந்து என் வளையினொடு
கலையை வளைத்தார் ஒற்றியில் என் கணவர் என்னைக் கலந்திலரே
சிலையை வளைத்தான் மதன் அம்பு தெரிந்தான் விடுக்கச் சினைக்கின்றான்
திலக_நுதலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1622.
பிரமன் தலையில் பலிகொள்ளும் பித்தர் அருமைப் பெருமானார்
உரம் மன்னிய சீர் ஒற்றி நகர் உள்ளார் இன்னும் உற்றிலரே
அரம் மன்னிய வேல் படை அன்றோ அம்மா அயலார் அலர்_மொழி-தான்
திரம் மன்னுகிலேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1623
பவள நிறத்தார் திருவொற்றிப் பதியில் அமர்ந்தார் பரசிவனார்
தவள நிற நீற்று அணி அழகர் தமியேன்-தன்னைச் சார்ந்திலரே
துவளும் இடை தான் இற முலைகள் துள்ளாநின்றது என்னளவோ
திவளும் இழையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1624
வண்டு ஆர் கொன்றை வளர் சடையார் மதிக்க எழுந்த வல் விடத்தை
உண்டார் ஒற்றியூர் அமர்ந்தார் உடையார் என்-பால் உற்றிலரே
கண்டார் கண்டபடி பேசக் கலங்கிப் புலம்பல் அல்லாது
செண்டு ஆர் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1625.
உணவை இழந்தும் தேவர் எலாம் உணரா ஒருவர் ஒற்றியில் என்
கணவர் அடியேன் கண் அகலாக் கள்வர் இன்னும் கலந்திலரே
குணவர் எனினும் தாய் முதலோர் கூறாது எல்லாம் கூறுகின்றார்
திணி கொள் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1626.
வாக்குக்கு அடங்காப் புகழ்_உடையார் வல்லார் ஒற்றி மா நகரார்
நோக்குக்கு அடங்கா அழகு_உடையார் நோக்கி என்னை அணைந்திலரே
ஊக்கம் மிகும் ஆர்கலி ஒலி என் உயிர் மேல் மாறேற்று உரப்பு ஒலி காண்
தேக்கம் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1627.
தரையில் கீறிச் சலந்தரனைச் சாய்த்தார் அந்தச் சக்கரம் மால்
வரையற்கு அளித்தார் திருவொற்றி_வாணர் இன்னும் வந்திலரே
கரையில் புணர்ந்த நாரைகளைக் கண்டேன் கண்டவுடன் காதல்
திரையில் புணர்ந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1628.
பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியாப் பேர்_ஒளியாய்
உற்ற சிவனார் திருவொற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே
எற்றென்று உரைப்பேன் செவிலி அவள் ஏறா_மட்டும் ஏறுகின்றாள்
செற்றம் ஒழியாள் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1629.
போகம்_உடையார் பெரும்பற்றப்புலியூர் உடையார் போத சிவ
யோகம் உடையார் வளர் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே
சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில் ஒழியா
தேகம் அயர்ந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1630.
தாமப் புயனார் சங்கரனார் தாயில் இனியார் தற்பரனார்
ஓமப் புகை வான் உறும் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே
காம_பயலோ கணை எடுத்தான் கண்ட மகளீர் பழி தொடுத்தார்
சேமக் குயிலே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1631.
ஆரூர் உடையார் அம்பலத்தார் ஆலங்காட்டார் அரசிலியார்
ஊரூர் புகழும் திருவொற்றியூரார் இன்னும் உற்றிலரே
வார் ஊர் முலைகள் இடை வருத்த மனம் நொந்து அயர்வதன்றி இனிச்
சீர் ஊர் அணங்கே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1632.
காலம் கடந்தார் மால் அயன்-தன் கருத்தும் கடந்தார் கதி கடந்தார்
ஞாலம் கடந்த திருவொற்றி நாதர் இன்னும் நண்ணிலரே
சாலங் கடந்த மனம் துணையாய்த் தனியே நின்று வருந்தல் அல்லால்
சீலங் கடந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

#1633.
சங்கக் குழையார் சடை_முடியார் சதுரர் மறையின் தலை நடிப்பார்
செங்கண் பணியார் திருவொற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலரே
மங்கைப் பருவம் மணம் இல்லா மலர் போல் ஒழிய வாடுகின்றேன்
திங்கள் முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

@87. குறி ஆராய்ச்சி

#1634.
நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க நடனம் புரியும் நாயகனார்
அந்தி நிறத்தார் திருவொற்றி அமர்ந்தார் என்னை அணைவாரோ
புந்தி இலள் என்று அணையாரோ யாதுந் தெரியேன் புலம்புகின்றேன்
சிந்தை மகிழக் குற மடவாய் தெரிந்தோர் குறி-தான் செப்புவையே.

#1635.
தரும விடையார் சங்கரனார் தகை சேர் ஒற்றித் தனி நகரார்
ஒருமை அளிப்பார் தியாகர் எனை_உடையார் இன்று வருவாரோ
மருவ நாளை வருவாரோ வாராது என்னை மறப்பாரோ
கருமம் அறிந்த குற மடவாய் கணித்து ஓர் குறி-தான் கண்டு உரையே.

#1636.
ஆழி விடையார் அருள்_உடையார் அளவிட்டு அறியா அழகு_உடையார்
ஊழி வரினும் அழியாத ஒற்றித் தலம் வாழ் உத்தமனார்
வாழி என்-பால் வருவாரோ வறியேன் வருந்த வாராரோ
தோழி அனைய குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே.

#1637
அணியார் அடியார்க்கு அயன் முதலாம் அமரர்க்கு எல்லாம் அரியர் என்பாம்
பணியார் ஒற்றிப் பதி_உடையார் பரிந்து என் முகம்-தான் பார்ப்பாரோ
தணியாக் காதல் தவிர்ப்பாரோ சார்ந்து வரவு தாழ்ப்பாரோ
குணியா எழில் சேர் குற மடவாய் குறி-தான் ஒன்றும் கூறுவையே.

#1638.
பொன் ஆர் புயத்துப் போர் விடையார் புல்லர் மனத்துள் போகாதார்
ஒன்னார் புரம் தீ உற நகைத்தார் ஒற்றி எனும் ஓர் ஊர் அமர்ந்தார்
என் நாயகனார் எனை மருவல் இன்றோ நாளையோ அறியேன்
மின் ஆர் மருங்குல் குற மடவாய் விரைந்து ஓர் குறி நீ விளம்புவையே.

#1639.
பாலில் தெளிந்த திரு_நீற்றர் பாவ_நாசர் பண்டரங்கர்
ஆலில் தெளிய நால்வர்களுக்கு அருளும் தெருளர் ஒற்றியினார்
மாலில் தெளியா நெஞ்சகத்தேன் மருவிக் கலக்க வருவாரோ
சேலில் தெளி கண் குறப் பாவாய் தெரிந்து ஓர் குறி நீ செப்புகவே.

#1640.
நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீல_கண்டர்
ஒருத்தர் திரு வாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என் கணவர்
பொருத்தம் அறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாராது அணைவாரோ
வருத்தந் தவிரக் குறப் பாவாய் மகிழ்ந்து ஓர் குறி-தான் வழுத்துவையே.

#1641.
கமலன் திருமால் ஆதியர்கள் கனவினிடத்தும் காண்ப அரியார்
விமலர் திரு வாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார்
அமலர் அவர்-தாம் என் மனைக்கு இன்று அணைகுவாரோ அணையாரோ
தமலம் அகன்ற குறப் பாவாய் தனித்து ஓர் குறி-தான் சாற்றுவையே.

#1642.
வன்னி இதழி மலர்_சடையார் வன்னி என ஓர் வடிவு_உடையார்
உன்னி உருகும் அவர்க்கு எளியார் ஒற்றி நகர் வாழ் உத்தமனார்
கன்னி அழித்தார்-தமை நானும் கலப்பேன்-கொல்லோ கலவேனோ
துன்னி மலை வாழ் குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே.

#1643
கற்றைச் சடை மேல் கங்கை-தனைக் கலந்தார் கொன்றைக் கண்ணியினார்
பொற்றைப் பெரு வில் படை_உடையார் பொழில் சூழ் ஒற்றிப் புண்ணியனார்
இற்றைக்கு அடியேன் பள்ளியறைக்கு எய்துவாரோ எய்தாரோ
சுற்றும் கரும் கண் குற மடவாய் சூழ்ந்து ஓர் குறி நீ சொல்லுவையே.

#1644.
அரவக் கழலார் கரும் களத்தார் அஞ்சைக்களத்தார் அரி பிரமர்
பரவப்படுவார் திருவொற்றிப் பதியில் அமர்ந்தார் பாசுபதர்
இரவு வரும் முன் வருவாரோ என்னை அணைதற்கு இசைவாரோ
குரவம் மணக்கும் குற மடவாய் குறி நீ ஒன்று கூறுவையே.

@88. காட்சி அற்புதம்

#1645.
பூணா அணி பூண் புயம்_உடையார் பொன்_அம்பலத்தார் பொங்கு விடம்
ஊணா உவந்தார் திருவொற்றியூர் வாழ்வு_உடையார் உண்மை சொலி
நீண் ஆல் இருந்தார் அவர் இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே
காணாது அயர்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

#1646.
ஓட்டில் இரந்து உண்டு ஒற்றியிடை உற்றார் உலகத்து உயிரை எலாம்
ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளியளாம் எனவே
ஏட்டில் அடங்காக் கையறவால் இருந்தேன் இருந்த என் முன் உருக்
காட்டி மறைத்தார் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

#1647.
ஈதல் ஒழியா வண்_கையினார் எல்லாம்_வல்ல சித்தர் அவர்
ஓதல் ஒழியா ஒற்றியில் என் உள்ளம் உவக்க உலகம் எலாம்
ஆதல் ஒழியா எழில் உருக்கொண்டு அடைந்தார் கண்டேன் உடன் காணேன்
காதல் ஒழியாது என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

#1648.
தொண்டு புரிவோர்-தங்களுக்கு ஓர் துணைவர் ஆவார் சூழ்ந்து வரி
வண்டு புரியும் கொன்றை மலர் மாலை அழகர் வல் விடத்தை
உண்டு புரியும் கருணையினார் ஒற்றியூரர் ஒண் பதத்தைக்
கண்டும் காணேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

#1649.
அடியர் வருந்த உடன் வருந்தும் ஆண்டை அவர்-தாம் அன்று அயனும்
நெடிய மாலும் காணாத நிமல உருவோடு என் எதிரே
வடியல் அறியா அருள் காட்டி மறைத்தார் மருண்டேன் மங்கை நல்லார்
கடிய அயர்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

#1650.
கொற்றம்_உடையார் திருவொற்றிக் கோயில்_உடையார் என் எதிரே
பொற்றை மணித் தோள் புயம் காட்டிப் போனார் என்னைப் புலம்பவைத்துக்
குற்றம் அறியேன் மன நடுக்கம் கொண்டேன் உடலம் குழைகின்றேன்
கல் திண் முலையாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

#1651.
ஆல நிழல் கீழ் அன்று அமர்ந்தார் ஆதி நடு ஈறு ஆகி நின்றார்
நீல மிடற்றார் திருவொற்றி நியமத்து எதிரே நீற்று உருவக்
கோலம் நிகழக் கண்டேன் பின் குறிக்கக் காணேன் கூட்டுவிக்கும்
காலம் அறியேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

#1652.
சலம் காதலிக்கும் தாழ்_சடையார் தாமே தமக்குத் தாதையனார்
நிலம் காதலிக்கும் திருவொற்றி நியமத்து எதிரே நின்றனர் காண்
விலங்காது அவரைத் தரிசித்தேன் மீட்டும் காணேன் மெய்மறந்தேன்
கலங்காநின்றேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

#1653.
நிரந்து ஆர் கங்கை நீள்_சடையார் நெற்றி விழியார் நித்தியனார்
சிரம் தார் ஆகப் புயத்து அணிவார் திரு வாழ் ஒற்றி_தியாகர் அவர்
பரந்து ஆர் கோயிற்கு எதிர்நிற்கப் பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன் முன்
கரந்தார் கலுழ்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

#1654.
அளித்தார் உலகை அம்பலத்தில் ஆடி வினையால் ஆட்டி நின்றார்
தளித் தார் சோலை ஒற்றியிடைத் தமது வடிவம் காட்டி உடன்
ஒளித்தார் நானும் மனம் மயங்கி உழலாநின்றேன் ஒண் தொடிக் கைக்
களித் தார் குழலாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

@89. ஆற்றாக் காதலின் இரங்கல்

#1655.
மந்தாகினி வான் மதி மத்தம் மருவும் சடையார் மாசு_அடையார்
நுந்தா விளக்கின் சுடர்_அனையார் நோவ நுதலார் கண்_நுதலார்
உந்தா ஒலிக்கும் ஓதம் மலி ஒற்றியூரில் உற்று எனக்குத்
தந்தார் மையல் என்னோ என் சகியே இனி நான் சகியேனே.

#1656.
பூ மேல் அவனும் மால் அவனும் போற்றி வழுத்தும் பூ_கழலார்
சே மேல் வருவார் திருவொற்றித் தியாகர் அவர்-தம் திரு_புயத்தைத்
தேம் மேல் அலங்கல் முலை அழுந்தச் சேர்ந்தால் அன்றிச் சித்தசன் கைத்து
ஆம் மேல் அழல் பூத் தாழாது என் சகியே இனி நான் சகியேனே.

#1657.
கருணைக்கு ஒரு நேர் இல்லாதார் கல்லைக் கரைக்கும் கழல்_அடியார்
அருணைப்பதியார் ஆமாத்தூர் அமர்ந்தார் திருவாவடுதுறையார்
இருள் நச்சிய மா மணி_கண்டர் எழில் ஆர் ஒற்றி இறைவர் இந்தத்
தருணத்து இன்னும் சேர்ந்திலர் என் சகியே இனி நான் சகியேனே.

#1658.
ஆரா_அமுதாய் அன்பு_உடையோர் அகத்துள் இனிக்கும் அற்புதனார்
தீரா வினையும் தீர்த்து அருளும் தெய்வ மருந்தார் சிற்சபையார்
பாரார் புகழும் திருவொற்றிப் பரமர் தமது தோள் அணையத்
தாரார் இன்னும் என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே.

#1659.
துதி செய் அடியர்-தம் பசிக்குச் சோறும் இரப்பார் துய்யர் ஒரு
நதி செய் சடையார் திருவொற்றி நண்ணும் எனது நாயகனார்
மதி செய் துயரும் மதன் வலியும் மாற்ற இன்னும் வந்திலரே
சதிசெய்தனரோ என்னடி என் சகியே இனி நான் சகியேனே.

#1660.
எங்கள் காழிக் கவுணியரை எழிலார் சிவிகை ஏற்றிவைத்தோர்
திங்கள் அணியும் செஞ்சடையார் தியாகர் திரு வாழ் ஒற்றியினார்
அம் கள் அணி பூ தார்ப் புயத்தில் அணைத்தார்_அல்லர் எனை மடவார்-
தங்கள் அலரோ தாழாது என் சகியே இனி நான் சகியேனே.

#1661.
காவி மணந்த கரும் களத்தார் கருத்தர் எனது கண்_அனையார்
ஆவி_அனையார் தாய்_அனையார் அணி சேர் ஒற்றி ஆண்தகையார்
பூவின் அலங்கல் புயத்தில் எனைப் புல்லார் அந்திப் பொழுதில் மதி
தாவி வருமே என் செயுமோ சகியே இனி நான் சகியேனே.

#1662.
மலம் சாதிக்கும் மக்கள்-தமை மருவார் மருவார் மதில் அழித்தார்
வலம் சாதிக்கும் பாரிடத்தார் மாலும் அறியா மலர்_பதத்தார்
நிலம் சாதிக்கும் ஒற்றியினார் நினையார் என்னை அணையாமல்
சலம் சாதித்தார் என்னடி என் சகியே இனி நான் சகியேனே.

#1663.
நாக அணியார் நக்கர் எனும் நாமம்_உடையார் நாரணன் ஓர்
பாகம்_உடையார் மலை_மகள் ஓர் பாங்கர்_உடையார் பசுபதியார்
யோகம்_உடையார் ஒற்றி_உளார் உற்றார்_அல்லர் உறும் மோக
தாகம் ஒழியாது என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே.

#1664.
தீர்ந்தார் தலையே கலனாகச் செறித்து நடிக்கும் திரு_கூத்தர்
தேர்ந்தார்-தம்மைப் பித்து அடையச்செய்வார் ஒற்றித் தியாகர் அவர்
சேர்ந்தார்_அல்லர் இன்னும் எனைத் தேடி வரும் அத் தீ மதியம்
சார்ந்தால் அது-தான் என் செயுமோ சகியே இனி நான் சகியேனே.

#1665.
ஆயும் படிவத்து அந்தணனாய் ஆரூரன்-தன் அணி முடி மேல்
தோயும் கமலத் திரு_அடிகள் சூட்டும் அதிகைத் தொல் நகரார்
ஏயும் பெருமை ஒற்றி_உளார் இன்னும் அணையார் எனை அளித்த
தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனி நான் சகியேனே.

@90. திருக்கோலச் சிறப்பு

#1666.
பொன் என்று ஒளிரும் புரி சடையார் புனை நூல் இடையார் புடை_உடையார்
மன் என்று உலகம் புகழ் ஒற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
மின் என்று இலங்கு மாதர் எலாம் வேட்கை அடைய விளங்கி நின்றது
இன்னென்று அறியேன் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

#1667.
அள்ளிக் கொடுக்கும் கருணையினார் அணி சேர் ஒற்றி ஆலயத்தார்
வள்ளிக்கு உவந்தோன்-தனை ஈன்ற வள்ளல் பவனி வரக் கண்டேன்
துள்ளிக் குதித்து என் மனம் அவரைச் சூழ்ந்தது இன்னும் வந்தது_இலை
எள்ளிக் கணியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

#1668.
அனத்துப் படிவம் கொண்டு அயனும் அளவா முடியார் வடியாத
வனத்துச் சடையார் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
மனத்துக்கு அடங்காதாகில் அதை வாய் கொண்டு உரைக்க வசமாமோ
இனத்துக்கு உவப்பாம் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

#1669.
கொழுதி அளி தேன் உழுது உண்ணும் கொன்றைச் சடையார் கூடல் உடை
வழுதி மருகர் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
பழுது இல் அவனாம் திருமாலும் படைக்குங் கமல_பண்ணவனும்
எழுதி முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

#1670.
புன்னை இதழிப் பொலி சடையார் போக யோகம் புரிந்து_உடையார்
மன்னும் விடையார் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
உன்னும் உடலம் குளிர்ந்து ஓங்க உவகை பெருக உற்று நின்ற
என்னை விழுங்கும் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

#1671
சொல்லுள் நிறைந்த பொருள் ஆனார் துய்யர் உளத்தே துன்னி நின்றார்
மல்லல் வயல் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
கல்லும் மரமும் ஆனந்தக் கண்ணீர் கொண்டு கண்டதெனில்
எல்லை_இல்லா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

#1672.
நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்று நறா
ஆர்க்கும் பொழில் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பல் மா தவர்க்கும் பண்ணவர்க்கும்
யார்க்கும் அடங்கா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

#1673.
கலக அமணக் கைதவரைக் கழுவில் ஏற்றுங் கழுமலத்தோன்
வல கை குவித்துப் பாடும் ஒற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
உலக நிகழ்வைக் காணேன் என் உள்ளம் ஒன்றே அறியுமடி
இலகும் அவர்-தம் திரு_அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

#1674.
கண்ணன் அறியாக் கழல்_பதத்தார் கண்ணார் நெற்றிக் கடவுள் அருள்
வண்ணம் உடையார் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
நண்ண இமையார் என இமையா நாட்டம் அடைந்து நின்றனடி
எண்ண முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

#1675.
மாழை மணித் தோள் எட்டு_உடையார் மழு மான் ஏந்தும் மலர்_கரத்தார்
வாழை வளம் சூழ் ஒற்றியூர்_வாணர் பவனி வரக் கண்டேன்
யாழை மலைக்கும் மொழி மடவார் யாரும் மயங்கிக் கலை அவிழ்ந்தார்
ஏழையேன் நான் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

@91.சோதிடம் நாடல்

#1676.
பொன் அம் சிலையால் புரம் எறித்தார் பொழில் சூழ் ஒற்றிப் புண்ணியனார்
முன் நஞ்சு அருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர் அவர்
இன்னம் சில நாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ
உன்னம் சிறந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

#1677.
பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெற அறியார்
புற்றின் அரவார் கச்சை உடைப் புனிதர் என்னைப் புணரும் இடம்
தெற்றி மணிக் கால் விளங்கு தில்லைச் சிற்றம்பலமோ அன்றி இந்த
ஒற்றி நகரோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

#1678.
அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்
தெளித்து நதியைச் சடை இருத்தும் தேவர் திரு வாழ் ஒற்றி_உளார்
களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ
ஒளித்து ஒன்று உரையீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

#1679.
எண் தோள் இலங்கும் நீற்று_அணியர் யார்க்கும் இறைவர் எனை_உடையார்
வண்டு ஓலிடும் பூ கொன்றை அணி மாலை மார்பர் வஞ்சம்_இலார்
தண் தோய் பொழில் சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மண_பொருத்தம்
உண்டோ இலையோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

#1680.
தவர்-தாம் வணங்கும் தாள்_உடையார் தாய் போல் அடியர்-தமைப் புரப்பார்
பவர்-தாம் அறியாப் பண்பு_உடையார் பணை சூழ் ஒற்றிப் பதி அமர்ந்தார்
அவர்-தாம் மீண்டு உற்று அணைவாரோ அன்றி நான் போய் அணைவேனோ
உவர்-தாம் அகற்றும் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

#1681.
பைத்த அரவப் பணி அணிவார் பணை சூழ் ஒற்றிப் பதி மகிழ்வார்
மைத்த மிடற்றார் அவர்-தமக்கு மாலையிடவே நான் உளத்தில்
வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியாது அழிந்திடுமோ
உய்த்த மதியால் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

#1682.
தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண் அளியார்
மிக்க வளம் சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்-தன்
துக்கம் அகலச் சுகம் அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோ-தான்
ஒக்க அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

#1683.
வெண்மை நீற்றர் வெள்_ஏற்றர் வேத கீதர் மெய் உவப்பார்
வண்மை_உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனம் மகிழ்ந்து
வண்மை அகலாது அருள்_கடல் நீராடுவேனோ ஆடேனோ
உண்மை அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

#1684.
ஆர்த்து மலி நீர் வயல் ஒற்றி அமர்ந்தார் மதியோடு அரவை முடிச்
சேர்த்து நடிப்பார் அவர்-தமை நான் தேடி வலியச் சென்றிடினும்
பார்த்தும் பாராது இருப்பாரோ பரிந்து வா என்று உரைப்பாரோ
ஓர்த்து மதிப்பீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே.

#1685.
அள்ள மிகும் பேர் அழகு_உடையார் ஆனை உரியார் அரிக்கு அரியார்
வெள்ளம் மிகும் பொன் வேணியினார் வியன் சேர் ஒற்றி விகிர்தர் அவர்
கள்ளமுடனே புணர்வாரோ காதலுடனே கலப்பாரோ
உள்ளம் அறியேன் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே.

@92. திருஅருட் பெருமிதம்

#1686.
விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்_நகையால்
அடையார் புரங்கள் எரித்து அழித்தார் அவரே இந்த அகிலம் எலாம்_
உடையார் என்று நினைத்தனை ஊர் ஒற்றி அவர்க்கு என்று உணர்ந்திலையோ
இடையா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

#1687.
கரு வாழ்வு அகற்றும் கண்_நுதலார் கண்ணன் அயனும் காண்ப அரியார்
திரு வாழ் ஒற்றித் தேவர் எனும் செல்வர் அவரே செல்வம்-அதில்
பெரு வாழ்வு_உடையார் என நினைத்தாய் பிச்சை எடுத்தது அறிந்திலையோ
இருவா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

#1688.
மட்டுக்கு அடங்கா வண் கையினார் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர்
பட்டுத் துகிலே திசைகள் எலாம் படர்ந்தது என்னப் பரிந்தனையோ
கட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்தது அறிந்திலையோ
இட்டுப் புணர்ந்து இங்கு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

#1689.
நடம் கொள் கமலச் சேவடியார் நலம் சேர் ஒற்றி_நாதர் அவர்
தடம் கொள் மார்பின் மணிப் பணியைத் தரிப்பார் நமக்கு என்று எண்ணினையால்
படம் கொள் பாம்பே பாம்பு என்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ
இடம் கொள் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

#1690.
திரு_கண் நுதலால் திரு_மகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர் அவர்
எருக்க மலரே சூடுவர் நீ எழில் மல்லிகை என்று எண்ணினையால்
உருக்கும் நெருப்பே அவர் உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ
இருக்க மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

#1691.
மேலை வினையைத் தவிர்த்து அருளும் விடையார் ஒற்றி விகிர்தர் அவர்
மாலை கொடுப்பார் உணங்கு தலை மாலை அது-தான் வாங்குவையே
ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே
ஏல மயல்கொண்டு என் பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

#1692
மாகம் பயிலும் பொழில் பணை கொள் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர்
யோகம் பயில்வார் மோகம்_இலார் என்னே உனக்கு இங்கு இணங்குவரே
ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள் காண்
ஏக மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

#1693.
விண் பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடம் தரினும்
உண்பார் இன்னும் உனக்கு அது-தான் உடன்பாடு ஆமோ உளம் உருகித்
தண்பார் என்பார்-தமை எல்லாம் சார்வார் அது உன் சம்மதமோ
எண்பார் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

#1694.
நீடி வளம் கொள் ஒற்றியில் வாழ் நிமலர் உலகத்து உயிர்-தோறும்
ஓடி ஒளிப்பார் அவர் நீயும் ஒக்க ஓட உன் வசமோ
நாடி நடிப்பார் நீயும் உடன் நடித்தால் உலகர் நகையாரோ
ஈடு_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

#1695.
உள்ளி உருகும் அவர்க்கு அருளும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்க்கு
வெள்ளி மலையும் பொன்_மலையும் வீடு என்று உரைப்பார் ஆனாலும்
கள்ளி நெருங்கிப் புறம் கொள் சுடுகாடே இடம் காண் கண்டு அறி நீ
எள்_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

@93. காதற் சிறப்புக் கதுவா மாண்பு

#1696.
உலகம்_உடையார் தம் ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும்
அலகு_இல் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும்
திலகம் அனையார் புறம் காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும்
கலக விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

#1697.
பெருமை_உடையார் மனை-தொறும் போய்ப் பிச்சையெடுத்தார் ஆனாலும்
அருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும்
ஒருமை_உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும்
கருமை விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

#1698.
எல்லாம்_உடையார் மண் கூலிக்கு எடுத்துப் பிழைத்தார் ஆனாலும்
கொல்லா நலத்தார் யானையின் தோல் கொன்று தரித்தார் ஆனாலும்
வல்லார் விசையன் வில் அடியால் வடுப்பட்டு உவந்தார் ஆனாலும்
கல்லாம் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

#1699
என்னை உடையார் ஒரு வேடன் எச்சில் உவந்தார் என்றாலும்
அன்னை_அனையார் ஒரு மகனை அறுக்க உரைத்தார் என்றாலும்
துன்னும் இறையார் தொண்டனுக்குத் தூதர் ஆனார் என்றாலும்
கன்னி இது கேள் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

#1700.
என்றும் இறவார் மிடற்றில் விடம் இருக்க அமைத்தார் என்றாலும்
ஒன்று நிலையார் நிலையில்லாது ஓடி உழல்வார் என்றாலும்
நன்று புரிவார் தருமன் உயிர் நலிய உதைத்தார் என்றாலும்
கன்று உண் கரத்தாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

#1701.
என் கண்_அனையார் மலை_மகளை இச்சித்து அணைந்தார் ஆனாலும்
வன்கண் அடையார் தீக் கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும்
புன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும்
கன்னல்_மொழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

#1702.
வாழ்வை அளிப்பார் மாடு ஏறி மகிழ்ந்து திரிவார் என்றாலும்
தாழ்வை மறுப்பார் பூத கணத் தானை உடையார் என்றாலும்
ஊழ்வை அறுப்பார் பேய்க் கூட்டத்து ஒக்க நடிப்பார் என்றாலும்
காழ் கொள் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

#1703.
விமலை இடத்தார் இன்ப_துன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும்
அமலம்_உடையார் தீ வண்ணராம் என்று உரைப்பார் ஆனாலும்
நம் மலம் அறுப்பார் பித்தர் எனும் நாமம்_உடையார் ஆனாலும்
கமலை_அனையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

#1704.
மான் கொள் கரத்தார் தலை மாலை மார்பில் அணிந்தார் என்றாலும்
ஆன் கொள் விடங்கர் சுடலை எரி அடலை விழைந்தார் என்றாலும்
வான் கொள் சடையார் வழுத்தும் மது மத்தர் ஆனார் என்றாலும்
கான் கொள் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

#1705.
போர் மால் விடையார் உலகம் எலாம் போக்கும் தொழிலர் ஆனாலும்
ஆர் வாழ் சடையார் தமை அடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும்
தார் வாழ் புயத்தார் மா விரதர் தவ ஞானியரே ஆனாலும்
கார் வாழ் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

#1706.
கோதே மருவார் மால் அயனும் குறியா நெறியார் என்றாலும்
சாதே மகிழ்வார் அடியாரைத் தம் போல் நினைப்பார் என்றாலும்
மா தேவருக்கும் மா தேவர் மௌன யோகி என்றாலும்
காது ஏர் குழையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

#1707.
உடையார் உலகில் காசு என்பார்க்கு ஒன்றும் உதவார் ஆனாலும்
அடையார்க்கு அரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும்
படை ஆர் கரத்தர் பழிக்கு அஞ்சாப் பாசுபதரே ஆனாலும்
கடையா அமுதே நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

@94. ஆற்றா விரகம்

#1708.
ஓணம்_உடையான் தொழுது ஏத்தும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்-பால்
மாண வலியச் சென்று என்னை மருவி அணைவீர் என்றே நான்
நாணம் விடுத்து நவின்றாலும் நாம் ஆர் நீ யார் என்பாரேல்
ஏண விழியாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

#1709.
காதம் மணக்கும் கடி மலர்ப் பூங்கா ஆர் ஒற்றிக் கண்_நுதலார்
போதம் மணக்கும் புனிதர் அவர் பொன் அம் புயத்தைப் புணரேனேல்
சீதம் மணக்கும் குழலாய் என் சிந்தை மயங்கித் தியங்குமடி
ஏதம் மணக்கும் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

#1710.
பண் ஆர் மொழியார் உருக் காட்டும் பணை சூழ் ஒற்றிப் பதியினர் என்
கண்ணார் மணி போன்று என் உயிரில் கலந்து வாழும் கள்வர் அவர்
நண்ணார் இன்னும் திரு_அனையாய் நான் சென்றிடினும் நலம் அருள
எண்ணார் ஆயின் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

#1711.
ஊர் என்று உடையீர் ஒற்றி-தனை உலகம்_உடையீர் என்னை அணை
வீர் என்று அவர் முன் பலர் அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்
சேர் என்று உரைத்தால் அன்றி அவர் சிரித்துத் திருவாய்_மலர்ந்து எனை நீ
யார் என்று உரைத்தால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

#1712.
சோமன் நிலவும் தூய்ச் சடையார் சொல்லில் கலந்த சுவையானார்
சேமம் நிலவும் திருவொற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர் நான்
தாமம் அருள்வீர் என்கினும் இத் தருணத்து இசையாது என்பாரேல்
ஏம முலையாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

#1713.
வில்லை மலையாய்க் கைக் கொண்டார் விடம் சூழ் கண்டர் விரி பொழில் சூழ்
தில்லை நகரார் ஒற்றி உளார் சேர்ந்தார் அல்லர் நான் அவர் பால்
ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும்
இல்லை எனிலோ என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ.

#1714.
திருந்து ஆல் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம்பலத்தில் திரு_நடம்செய்
மருந்தார் ஒற்றி_வாணர் இன்னும் வந்தார்_அல்லர் நான் போய் என்
அரும் தாழ்வு அகல அருள்வீர் என்றாலும் ஒன்றும் அறியார் போல்
இருந்தால் அம்மா என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

#1715.
அசையாது அமர்ந்தும் அண்டம் எலாம் அசையப் புலியூர் அம்பலத்தே
நசையா நடிக்கும் நாதர் ஒற்றி_நாட்டார் இன்னும் நண்ணிலர் நான்
இசையால் சென்று இங்கு என்னை அணைவீர் என்று உரைப்பேன் எனில் அதற்கும்
இசையார் ஆகில் என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ.

#1716.
மால் காதலிக்கும் மலர்_அடியார் மாசற்று இலங்கும் மணி_அனையார்
சேல் காதலிக்கும் வயல் வளம் சூழ் திரு வாழ் ஒற்றித் தேவர் அவர்-
பால் காதலித்துச் சென்றாலும் பாவி அடி நீ யான் அணைதற்கு
ஏற்காய் என்றால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

#1717.
மாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர்-தமை வருத்தும்
ஊழை அழிப்பார் திருவொற்றி ஊரார் இன்னும் உற்றிலர் என்
பாழை அகற்ற நான் செலினும் பாராது இருந்தால் பைங்கொடியே
ஏழை அடி நான் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

@95. காதல் மாட்சி

#1718.
திடன் நான்மறையார் திருவொற்றித் தியாகர் அவர்-தம் பவனி-தனை
மடன் நாம் அகன்று காண வந்தால் மலர்க் கை வளைகளினைக் கவர்ந்து
படன் நாக அணியர் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
உடனா ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

#1719.
தக்க வளம் சேர் ஒற்றியில் வாழ் தம்பிரானார் பவனி-தனைத்
துக்கம் அகன்று காண வந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே
பக்கம் மருவும் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
ஒக்க ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

#1720.
தாயாய் அளிக்கும் திருவொற்றி_தலத்தார் தமது பவனி-தனை
மாயா நலத்தில் காண வந்தால் மருவும் நமது மனம் கவர்ந்து
பாயா விரைவில் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
ஓயாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

#1721.
நிலவு ஆர் சடையார் திருவொற்றி நிருத்தர் பவனி-தனைக் காண
நல ஆதரவின் வந்து நின்றால் நங்காய் எனது நாண் கவர்ந்து
பல ஆதரவால் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
உலவாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

#1722.
நாடார் வளம் கொள் ஒற்றி நகர் நாதர் பவனி-தனைக் காண
நீடு ஆசையினால் வந்துவந்து நின்றால் நமது நிறை கவர்ந்து
பாடு ஆர்வலராம் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
ஓடாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

#1723
அழியா வளத்தார் திருவொற்றி ஐயர் பவனி-தனைக் காண
இழியா மகிழ்வினொடும் வந்தால் என்னே பெண்ணே எழில் கவர்ந்து
பழியா எழிலின் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
ஒழியாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

#1724.
திரை ஆர் ஓதை ஒற்றியில் வாழ் தியாகர் அவர்-தம் பவனி-தனைக்
கரையா மகிழ்வில் காண வந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு
பரை ஆதரிக்க நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
உரையாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

#1725.
கடுக் காதலித்தார் திருவொற்றி_காளை அவர்-தம் பவனி-தனை
விடுக்கா மகிழ்வில் காண வந்தால் விரியும் நமது வினை கவர்ந்து
படுக்கா மதிப்பின் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
உடுக்காது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

#1726.
தில்லை_உடையார் திருவொற்றித் தியாகர் அவர்-தம் பவனி-தனைக்
கல்லை உருக்கிக் காண வந்தால் கரணம் நமது கரந்து இரவி
பல்லை இறுத்தார் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
ஒல்லை ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

#1727.
மடை ஆர் வாளை வயல் ஒற்றி வள்ளல் பவனி-தனைக் காண
அடையா மகிழ்வினொடும் வந்தால் அம்மா நமது விடயம் எலாம்
படையால் கவர்ந்து நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
உடையாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

@96. அருண்மொழி மாலை

#1728.
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் முலை என்றேன்
இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான்
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று உரைத்தார்
அது இன்று அணங்கே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1729.
மரு கா ஒற்றி_வாணர் பலி வாங்க வகை உண்டே என்றேன்
ஒரு கால் எடுத்தேன் காண் என்றார் ஒரு கால் எடுத்துக் காட்டும் என்றேன்
வரு காவிரிப் பொன்_அம்பலத்துள் வந்தால் காட்டுவேம் என்றார்
அருகா வியப்பாம் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1730.
விட்டு ஒற்றியில் வாழ்வீர் எவன் இ வேளை அருள நின்றது என்றேன்
சுட்டும் சுதனே என்றார் நான் சுட்டி அறியச் சொல்லும் என்றேன்
பட்டு உண் மருங்கே நீ குழந்தைப் பருவம்-அதனின் முடித்தது என்றார்
அட்டு உண்டு அறியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1731.
வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் நீர் அணியும்
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார்
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுத்தது என்றார்
ஆலும் மிடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1732.
உயிருள் உறைவீர் திருவொற்றி_உள்ளீர் நீர் என் மேல் பிடித்த
வயிரம்-அதனை விடும் என்றேன் மாற்றாள் அல நீ மாதே யாம்
செயிர்-அது அகற்று உன் முலைப்பதி வாழ் தேவன் அலவே தெளி என்றார்
அயிர மொழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1733.
தண் கா வளம் சூழ் திருவொற்றித் தலத்தில் அமர்ந்த சாமி நும் கை
எண் கார்முகம் மா பொன் என்றேன் எடையிட்டு அறிதல் அரிது என்றார்
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றார்
அண் கார்க் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1734.
அலங்கும் புனல் செய் ஒற்றி_உளீர் அயன் மால் ஆதி யாவர்கட்கும்
இலங்கும் ஐ காண் நீர் என்றேன் இதன் முன் ஏழ் நீ கொண்டது என்றார்
துலங்கும் அது-தான் என் என்றேன் சுட்டு என்று உரைத்தார் ஆ கெட்டேன்
அலங்கல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1735.
விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில்
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார்
தொண்டர்க்கு அருள்வீர் நீர் என்றேன் தோகாய் நாமே தொண்டர் என்றார்
அண்டர்க்கு அரியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1736.
மட்டு ஆர் மலர்க் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன்
எட்டாம் எழுத்தை எடுக்கும் என்றார் எட்டாம் எழுத்து இங்கு எது என்றேன்
உள் தா அகற்றும் அந்தணர்கள் உறை ஊர் மாதே உணர் என்றார்
அட்டார் புரங்கள் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1737.
ஒற்றி நகரீர் மனவாசி உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன்
பற்றி இறுதி தொடங்கியது பயிலும்-அவர்க்கே அருள்வது என்றார்
மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உணரும் வகை நான்கும்
அற்றிடு என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1738.
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன்
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேனோ இது-தான்
சான்றோர் உம்-கண் மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்குத் தகாது என்றார்
ஆன் தோய் விடங்கர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1739.
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன்
ஈது நமக்கும் தெரியும் என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன்
ஓதும் அடியர் மன_கங்குல் ஓட்டும் யாமே உணர் என்றார்
ஆது தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1740
ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர்
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கைப் பன்மை நாதர் என்றார்
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இதற்கு என்றார்
அண்கொள் அணங்கே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1741.
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டே என்றேன்
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் என் பேர்
மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றார்
அருவும் இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1742.
பேர் ஆர் ஒற்றியீர் உம்மைப் பெற்றார் எவர் என்றேன் அவர்-தம்
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டு அகத்தார் என்றார் என்
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் ஆம் என்றார்
ஆர் ஆர் சடையர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1743.
தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைத்து வாழ்வீர் தனி ஞான
ஒளி நாவரைசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் என்றேன்
களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றார்
அளி நாண் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1744.
ஓம் ஊன்று எழிலீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன்
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிகத்
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார்
ஆ மூன்று அறுப்பார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1745.
மன்னி வளரும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான்
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார்
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எவர்க்கும் தெரியும் என்று உரைத்தார்
அல் நில் ஓதி என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1746.
வளம் சேர் ஒற்றியீர் உமது மாலை கொடுப்பீரோ என்றேன்
குளம் சேர் மொழியாய் உனக்கு அது முன் கொடுத்தேம் என்றார் இலை என்றேன்
உளம் சேர்ந்தது காண் இலை_அன்று ஓர் உருவும் அன்று அங்கு அரு என்றார்
அளம் சேர் வடிவாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1747.
வீற்று ஆர் ஒற்றியூர் அமர்ந்தீர் விளங்கும் மதனன் மென் மலரே
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் காண் என்றார்
சாற்றாச் சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றார்
ஆற்றா இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1748.
புயப் பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார்
வயப் பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைப்பது என்றேன்
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பாவுடன் என்றார்
அயப் பால் இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1749.
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன்
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார்
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் வாய்ந்து ஒன்று எனக்குக் காட்டு என்றார்
அண் அஞ்சுகமே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1750.
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன்
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார்
சுகம் சேர்ந்தன உம் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றார்
அகம் சேர் விழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1751.
ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது
நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்குச்
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதித் தந்தவர்-தாம்
ஆர் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1752.
வருத்தம் தவரீர் ஒற்றி_உளீர் மனத்து அகாதம் உண்டு என்றேன்
நிருத்தம் தரும் நம் அடியாரை நினைக்கின்றோரைக் கண்டு அது தன்
திருத்தம் தரும் முன் எழுத்து இலக்கம் சேரும் தூரம் ஓடும் என்றார்
அருத்தம் தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1753.
மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன்
துய்ய அதன் மேல் தலைவைத்துச் சொன்னால் சொல்வேம் இரண்டு என்றார்
உய்ய உரைத்தீர் எனக்கு என்றேன் உலகில் எவர்க்கும் ஆம் என்றார்
ஐய இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1754.
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற
வா என்று உரைப்பீர் என்றேன் பின் வரும் அ எழுத்து இங்கு இலை என்றார்
ஓ என் துயர் தீர்த்து அருளுவது ஈதோ என்றேன் பொய் உரைக்கின்றாய்
ஆ என்று உரைத்தார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1755.
வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நும் பேர் யாது என்றேன்
இயலாய் இட்ட நாமம் அதற்கு இளைய நாமமே என்றார்
செயல் ஆர் காலம் அறிந்து என்னைச் சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு
அயல் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1756.
என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைய நினைவீரேல்
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை அறி என்றார்
மின் மேல் சடையீர் ஈது எல்லாம் விளையாட்டு என்றேன் அன்று என்றார்
அல் மேல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1757.
நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கி என் என்றேன்
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலைத் தோல் வல்லீர் நீர் என்றேன்
வேல் ஆர் விழி மாத் தோலோடு வியாளத் தோலும் உண்டு என்றார்
ஆல் ஆர் களத்தர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#1758.
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன்
கடியா உள்ளங்கையின் முதலைக் கடிந்தது என்றார் கமலம் என
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அற்றது என்றார்
அடியார்க்கு எளியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

@97. இன்ப மாலை

#1759.
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உள்ளார் உவந்து இன்று உற்றனர் யான்
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்று உரைத்தேன்
துன்றும் விசும்பே என்றனர் நான் சூதாம் உமது சொல் என்றேன்
குன்றும் குடமும் இடை உனது கொங்கை எனவே கூறினரே.

#1760.
கான் ஆர் சடையீர் என் இரு கைக் கன்றும் பசுப் போல் கற்றது என்றேன்
மான் ஆர் விழியாய் கற்றது நின் மருங்குல் கலையும் என்றார் நீர்-
தான் ஆர் என்றேன் நனிப்பள்ளித் தலைவர் எனவே சாற்றினர் நான்
ஆனால் ஒற்றி இரும் என்றேன் அங்கும் இருந்தேன் என்றாரே.

#1761.
வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்தீர் என்
மானம் கெடுத்தீர் என்றேன் முன் வனத்தார் விடுத்தார் என்றார் நீர்
ஊனம் தடுக்கும் இறை என்றேன் உலவாது அடுக்கும் என்றார் மால்
ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்றேன் அகலார் என்றாரே.

#1762.
இரு மை அளவும் பொழில் ஒற்றி_இடத்தீர் முனிவர் இடர் அற நீர்
பெருமை நடத்தீர் என்றேன் என் பிள்ளை நடத்தினான் என்றார்
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்றார்
கருமம் எவன் யான் செய என்றேன் கருது ஆண்பால் அன்று என்றாரே.

#1763.
ஒசிய இடுகும் இடையாரை ஒற்றி இருந்தே உருக்குகின்ற
வசியர் மிக நீர் என்றேன் என் மகனே என்றார் வளர் காமப்
பசி-அது உடையேன் என்றேன் உள் பணி அல்குலும் அப்படி என்றார்
நிசிய மிடற்றீராம் என்றேன் நீ கண்டதுவே என்றாரே.

#1764.
கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணையீர்
மலையாள் உமது மனைவி என்றேன் மலைவாள் உனை நான் மருவின் என்றார்
அலையாள் மற்றையவள் என்றேன் அலைவாள் அவளும் அறி என்றார்
நிலை ஆண்மையினீர் ஆ என்றேன் நீயா என்று நின்றாரே.

#1765.
சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாகரே நீர் திண்மை மிகும்
சூலம் படைத்தீர் என் என்றேன் தொல்லை உலகம் உண என்றார்
ஆலம் படுத்த களத்தீர் என்று அறைந்தேன் அவள் இ ஆன் என்றார்
சால் அம்பு எடுத்தீர் உமை என்றேன் தாரம் இரண்டாம் என்றாரே.

#1766.
ஞாலர் ஆதி வணங்கும் ஒற்றி_நாதர் நீரே நாட்டமுறும்
பாலராம் என்று உரைத்தேன் நாம் பாலர் அல நீ பார் என்றார்
மேல் அரா வந்திடும் என்றேன் விளம்பேல் மகவும் அறியும் என்றார்
கோலராம் என்று உரைத்தேன் யாம் கொண்டோம் முக்கண் என்றாரே.

#1767.
வண்மை தருவீர் ஒற்றி நின்று வருவீர் என்னை மருவீர் நீர்
உண்மை_உடையீர் என்றேன் நாம் உடைப்பேம் வணங்கினோர்க்கு என்றார்
கண்மை_உடையீர் என்றேன் நான் களம் மை_உடையேம் யாம் என்றார்
தண்மை அருளீர் என்றேன் நாம் தகையே அருள்வது என்றாரே.

#1768.
ஒன்னார் புரம் மூன்று எரிசெய்தீர் ஒற்றி_உடையீர் உவப்புடனே
என் ஆகுலத்தை ஓட்டும் என்றேன் இடையர் அல நாம் என்று உரைத்தார்
பொன் ஆல் சடையீர் என்றேன் என் புதிய தேவி மனைவி என்றார்
சொல் நால் கேள்வி வியப்பு என்றேன் சுத்த வியப்பு ஒன்று என்றாரே.

#1769.
கனி மான் இதழி முலைச் சுவடு களித்தீர் ஒற்றிக் கடி நகரீர்
தனி மான் ஏந்தி என்றேன் என் தலை மேல் ஒரு மான் ஏந்தி என்றார்
துனி மால் துகிலீர் என்றேன் நல் துகில் கோவணம் காண் என்றார் என்
பனி மால் வரையீர் என்றேன் என் பனி மால் வரை காண் என்றாரே.

@98. இங்கித மாலை

#1770.
அன்பர்-பால் நீங்கா என் அம்மையே தாமரை மேல்
பொன் பொருவு மேனி அயன் பூவின் மன் பெரிய
வாக்கு இறைவி நின் தாள்_மலர்ச் சரணம் போந்தேனைக்
காக்கக் கடன் உனக்கே காண்.

#1771.
ஒரு மா_முகனை ஒரு மாவை ஊர் வாகனமாய் உற நோக்கித்
திருமால் முதலோர் சிறுமை எலாம் தீர்த்து எம் இரு கண்மணியாகிக்
கரு மால் அகற்றும் கணபதியாம் கடவுள் அடியும் களித்து அவர் பின்
வரும் மா கருணை_கடல் குமர வள்ளல் அடியும் வணங்குவாம்.

#1772.
திரு ஆர் கமலத் தடம் பணை சூழ் செல்வப் பெருஞ் சீர் ஒற்றியில் வாழ்
மரு ஆர் கொன்றைச் சடை முடி கொள் வள்ளல் இவர்க்குப் பலி கொடு நான்
ஒரு வாது அடைந்தேன் இனி நமக்கு இங்கு உதவ வரும்-தோறு உன் முலை மேல்
இரு வார் இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1773
தண் ஆர் மலரை மதி நதியைத் தாங்குஞ் சடையார் இவர்-தமை நான்
அண்ணால் ஒற்றி இருந்தவரே ஐயரே நீர் யார் என்றேன்
நண்ணாரிடத்தும் அம்பலத்தும் நடவாதவர் நாம் என்று சொலி
எண்ணாது அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1774.
பிட்டின் நதி மண் சுமந்த ஒற்றிப் பிச்சைத் தேவர் இவர்-தமை நான்
தட்டு இல் மலர்க் கை-இடத்து எது ஓதனத்தைப் பிடியும் என்று உரைத்தேன்
மட்டு இன் ஒரு மூன்று உடன் ஏழு மத்தர் தலை ஈது என்று சொலி
எட்டி முலையைப் பிடிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1775.
மடையில் கயல் பாய் ஒற்றி நகர் வள்ளல் ஆகும் இவர்-தமை நான்
அடையில் கனிவால் பணி என்றே அருளீர் உரி ஈர் உடை என்றேன்
கடையில் படும் ஓர் பணி என்றே கருதி உரைத்தேம் என்று உரைத்து என்
இடையில் கலையை உரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1776.
மன்றல் மணக்கும் ஒற்றி நகர் வாணர் ஆகும் இவர்-தமை நான்
நின்று அன்பொடும் கை ஏந்து அனத்தை ஏற்று ஓர் கலத்தில் கொளும் என்றேன்
நன்று அன்பு_உடையாய் எண் கலத்தில் நாம் கொண்டிடுவேம் என்று சொலி
என்றன் முலையைத் தொடுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1777.
கோமாற்கு அருளும் திருவொற்றிக் கோயில்_உடையார் இவரை மத_
மா மாற்றிய நீர் ஏகல் அவி மகிழ்ந்து இன்று அடியேன் மனையினிடைத்
தாம் மாற்றிடக் கொண்டு ஏகும் என்றேன் தா என்றார் தந்தால் என்னை
ஏமாற்றினையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1778.
அ மால் அயனும் காண்ப அரியீர்க்கு அமரும் பதி-தான் யாது என்றேன்
இ மால்_உடையாய் ஒற்றுதற்கு ஓர் எச்சம்-அது கண்டு அறி என்றார்
செம்மால் இஃது ஒன்று என் என்றேன் திருவே புரி மேல் சேர்கின்ற
எம்மால் மற்றொன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1779.
கண்கள் களிப்ப ஈண்டு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி அதாம்
பண்கள் இயன்ற திருவாயால் பலி தா என்றார் கொடு வந்தேன்
பெண்கள் தரல் ஈது அன்று என்றார் பேசு அப் பலி யாது என்றேன் நின்
எண்-கண் பலித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1780.
ஆரா மகிழ்வு தரும் ஒரு பேர்_அழகர் இவர் ஊர் ஒற்றி-அதாம்
நேராய் விருந்து உண்டோ என்றார் நீர் தான் வேறு இங்கு இலை என்றேன்
வார் ஆர் முலையாய் வாய் அமுதும் மலர்_கை அமுதும் மனை அமுதும்
ஏராய் உளவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1781.
அடுத்தார்க்கு அருளும் ஒற்றி நகர் ஐயர் இவர்-தாம் மிகத் தாகம்
கடுத்தாம் என்றார் கடி தட நீர் கண்டீர் ஐ அம் கொளும் என்றேன்
கொடுத்தாய் கண்டதிலை ஐயம்கொள்ளும் இடம் சூழ்ந்திடும் கலையை
எடுத்தால் காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1782.
இந்து ஆர் இதழி இலங்கு சடை ஏந்தல் இவர் ஊர் ஒற்றி-அதாம்
வந்தார் பெண்ணே அமுது என்றார் வரையின் சுதை இங்கு உண்டு என்றேன்
அந்து ஆர் குழலாய் பசிக்கினும் பெண்_ஆசை விடுமோ அமுது இன்றேல்
எம் தாரம் தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1783.
தன்னந்தனியாய் இங்கு நிற்கும் சாமி இவர் ஊர் ஒற்றி-அதாம்
அன்னம் தருவீர் என்றார் நான் அழைத்தேன் நின்னை அன்னம் இட
முன்னம் பசி போயிற்று என்றார் முன்-நின்று அகன்றேன் இ அன்னம்
இன்னம் தருவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1784.
மாறா அழகோடு இங்கு நிற்கும் வள்ளல் இவர் ஊர் ஒற்றி-அதாம்
வீறாம் உணவு ஈ என்றார் நீர் மேவா உணவு இங்கு உண்டு என்றேன்
கூறா மகிழ்வே கொடு என்றார் கொடுத்தால் இது-தான் அன்று என்றே
ஏறா வழக்குத் தொடுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1785.
வண்மை_உடையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் பலி என்றார்
உண்மை அறிவீர் பலி எண்மை உணர்கிலீர் என் உழை என்றேன்
பெண்மை சிறந்தாய் நின் மனையில் பேசும் பலிக்கு என்று அடைந்தது நாம்
எண்மை உணர்ந்தே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1786.
திருவை அளிக்கும் திருவொற்றித் தேவரீர்க்கு என் விழைவு என்றேன்
வெருவல் உனது பெயரிடை ஓர் மெய் நீக்கிய நின் முகம் என்றார்
தருவல் அதனை வெளிப்படையால் சாற்றும் என்றேன் சாற்றுவனேல்
இரு வை மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1787.
முந்தை மறையோன் புகழ் ஒற்றி முதல்வர் இவர்-தம் முகம் நோக்கிக்
கந்தை_உடையீர் என் என்றேன் கழியா உன்றன் மொழியாலே
இந்து முகத்தாய் எமக்கு ஒன்றே இரு_நான்கு உனக்குக் கந்தை உளது
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1788.
துன்னல்_உடையார் இவர்-தமை நீர் துன்னும் பதி-தான் யாது என்றேன்
நென்னல் இரவில் எமைத் தெளிவான் நின்ற நினது பெயர் என்றார்
உன்னலுறுவீர் வெளிப்பட ஈது உரைப்பீர் என்றேன் உரைப்பேனேல்
இன்னல் அடைவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1789
சிமைக் கொள் சூலத் திரு_மலர்_கைத் தேவர் நீர் எங்கு இருந்தது என்றேன்
எமைக் கண்ட அளவின் மாதே நீ இருந்தது என யாம் இருந்தது என்றார்
அமைக்கும் மொழி இங்கிதம் என்றேன் ஆம் உன் மொழி இங்கு இதம் அன்றோ
இமைக்கும் இழையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1790.
நடம் கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமான் நீர் அன்றோ
திடம் கொள் புகழ்க் கச்சூரிடம் சேர்ந்தீர் என்றேன் நின் நடு நோக்காக்
குடம் சேர்ந்ததும் ஆங்கு அஃது என்றார் குடம் யாது என்றேன் அஃது அறிதற்கு
இடங்கர் நடு நீக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1791.
சங்கம் மருவும் ஒற்றி_உளீர் சடை மேல் இருந்தது என் என்றேன்
மங்கை நினது முன் பருவம் மருவும் முதல் நீத்து இருந்தது என்றார்
கங்கை இருந்ததே என்றேன் கமலை அனையாய் கழுக்கடையும்
எம் கை இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1792.
துதி சேர் ஒற்றி வளர் தரும_துரையே நீர் முன் ஆடல் உறும்
பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தைப் பறித்தது என்றார்
நிதி சேர்ந்திடும் அ பெயர் யாது நிகழ்த்தும் என்றேன் நீ இட்டது
எதுவோ அது காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1793.
உடற்கு அச்சு உயிராம் ஒற்றி_உளீர் உமது திரு_பேர் யாது என்றேன்
குடக்குச் சிவந்த பொழுதினை முன் கொண்ட வண்ணர் ஆம் என்றார்
விடைக்குக் கருத்தா ஆம் நீர்-தாம் விளம்பல் மிகக் கற்றவர் என்றேன்
இடக்குப் புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1794.
மணம் கேதகை வான் செயும் ஒற்றி வள்ளல் இவரை வல் விரைவு ஏன்
பிணங்கேம் சிறிது நில்லும் என்றேன் பிணங்காவிடினும் நென்னல் என
அணங்கே நினக்கு ஒன்றினில் பாதி அதில் ஓர் பாதியாகும் இதற்கு
இணங்கேம் சிறிதும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1795.
ஒற்றி நகரார் இவர்-தமை நீர் உவந்து ஏறுவது இங்கு யாது என்றேன்
மற்று உன் பருவத்து ஒரு பங்கே மடவாய் என்றார் மறை விடை ஈது
இற்று என்று அறிதற்கு அரிது என்றேன் எம்மை அறிவார் அன்றி அஃது
எற்று என்று அறிவார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1796.
கண்ணின் மணி போல் இங்கு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி-அதாம்
பண்ணின் மொழியாய் நின்-பால் ஓர் பறவைப் பெயர் வேண்டினம் படைத்தால்
மண்ணின் மிசை ஓர் பறவை-அதாய் வாழ்வாய் என்றார் என் என்றேன்
எண்ணி அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1797.
சேடு ஆர் வளம் சூழ் ஒற்றி நகர் செல்வப் பெருமான் இவர்-தமை நான்
ஓடு ஆர் கரத்தீர் எண் தோள்கள்_உடையீர் என் என்று உரைத்தேன் நீ
கோடாகோடி முகம் நூறு கோடாகோடிக் களம் என்னே
ஈடாய்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1798.
துருமம் செழிக்கும் பொழில் ஒற்றித் தோன்றால் இங்கு நீர் வந்த
கருமம் சொலும் என்றேன் இவண் யான் கடாதற்கு உன்-பால் எம் உடைமைத்
தருமம் பெறக் கண்டாம் என்றார் தருவல் இருந்தால் என்றேன் இல்
இரு மந்தரமோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1799.
ஒரு கை முகத்தோர்க்கு ஐயர் எனும் ஒற்றித் தேவர் இவர்-தமை நான்
வருகை உவந்தீர் என்றனை நீர் மருவி அணைதல் வேண்டும் என்றேன்
தரு கையுடனே அகங்காரம்-தனை எம் அடியார்-தமை மயக்கை
இரு கை வளை சிந்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1800.
திருத்தம் மிகும் சீர் ஒற்றியில் வாழ் தேவரே இங்கு எது வேண்டி
வருத்த மலர்_கால் உற நடந்து வந்தீர் என்றேன் மாதே நீ
அருத்தம் தெளிந்தே நிருவாணம் ஆக உன்றன் அகத்து அருள்_கண்
இருத்த அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1801.
வளம் சேர் ஒற்றி மாணிக்க வண்ணர் ஆகும் இவர்-தமை நான்
குளம் சேர்ந்து இருந்தது உமக்கு ஒரு கண் கோலச் சடையீர் அழகு இது என்றேன்
களம் சேர் குளத்தின் எழில் முலை கண் காண ஓர் ஐந்து உனக்கு அழகு ஈது
இளம் சேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1802.
பலம் சேர் ஒற்றிப் பதி_உடையீர் பதி வேறு உண்டோ நுமக்கு என்றேன்
உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன்
வலம் சேர் இடை தவ் வருவித்த மலை காண் அதனில் மம் முதல் சென்று
இலம் சேர்ந்ததுவும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1803
வயல் ஆர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் வாய் திறவார்
செயல் ஆர் விரல்கள் முடக்கி அடி சேர்த்து ஈர் இதழ்கள் விரிவித்தார்
மயல் ஆர் உளத்தோடு என் என்றேன் மறித்து ஓர் விரலால் என்னுடைய
இயல் ஆர் வடிவில் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1804.
பேர் வாழ் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌன யோகியராய்ச்
சீர் வாழ் நமது மனையினிடைச் சேர்ந்தார் விழைவு என் செப்பும் என்றேன்
ஓர் வாழ் அடியும் குழல் அணியும் ஒரு நல் விரலால் சுட்டியும் தம்
ஏர் வாழ் ஒரு கை பார்க்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1805.
பெரும் சீர் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌனம் பிடித்து இங்கே
விரிஞ்சு ஈர்தர நின்று உடன் கீழும் மேலும் நோக்கி விரைந்தார் யான்
வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடைக் காழ்
இரும் சீர் மணியைக் காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1806
வலம் தங்கிய சீர் ஒற்றி நகர் வள்ளல் இவர்-தாம் மௌனமொடு
கலந்து அங்கு இருந்த அண்டசத்தைக் காட்டி மூன்று விரல் நீட்டி
நலம் தங்கு உறப்பின் நடு முடக்கி நண்ணும் இந்த நகத்தொடு வாய்
இலம் தம் கரத்தால் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1807.
தேன் ஆர் பொழில் ஆர் ஒற்றியில் வாழ் தேவர் இவர் வாய் திறவாராய்
மான் ஆர் கரத்தோர் நகம் தெரித்து வாளாநின்றார் நீள் ஆர்வம்-
தான் ஆர் உளத்தோடு யாது என்றேன் தம் கைத்தலத்தில் தலையை அடி
யேன் நாடுறவே காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1808.
செச்சை அழகர் திருவொற்றித் தேவர் இவர் வாய் திறவாராய்
மெச்சும் ஒரு கால் கரம் தொட்டு மீண்டும் மிடற்று அக் கரம் வைத்தார்
பிச்சர் அடிகேள் வேண்டுவது பேசீர் என்றேன் தமைக் காட்டி
இச்சை எனையும் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1809.
மன்றார் நிலையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் மௌனமொடு
நின்றார் இரு கை ஒலி இசைத்தார் நிமிர்ந்தார் தவிசின் நிலை குறைத்தார்
நன்று ஆர் அமுது சிறிது உமிழ்ந்தார் நடித்தார் யாவும் ஐயம் என்றேன்
இன் தாமரைக் கை ஏந்துகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1810.
வாரா_விருந்தாய் வள்ளல் இவர் வந்தார் மௌனமொடு நின்றார்
நீர் ஆர் எங்கே இருப்பது என்றேன் நீண்ட சடையைக் குறிப்பித்தார்
ஊரா வைத்தது எது என்றேன் ஒண் கை ஓடு என் இடத்தினில் வைத்து
ஏர் ஆர் கரத்தால் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1811.
செங்கேழ் கங்கைச் சடையார் வாய் திறவாராக ஈண்டு அடைந்தார்
எங்கே இருந்து எங்கு அணைந்தது காண் எங்கள் பெருமான் என்றேன் என்
அங்கு ஏழ் அருகின் அகன்று போய் அங்கே இறைப் போது அமர்ந்து எழுந்தே
இங்கே நடந்து வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1812.
கொடையார் ஒற்றி_வாணர் இவர் கூறா மௌனர் ஆகி நின்றார்
தொடை ஆர் இதழி மதிச் சடை என் துரையே விழைவு ஏது உமக்கு என்றேன்
உடையார் துன்னல் கந்தை-தனை உற்று நோக்கி நகைசெய்தே
இடையாக் கழுமுள் காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1813
பொன்னைக் கொடுத்தும் புணர்வு அரிய புனிதர் இவர் ஊர் ஒற்றி-அதாம்
முன்னைத் தவத்தால் யாம் காண முன்னே நின்றார் முகம் மலர்ந்து
மின்னில் பொலியும் சடையீர் என் வேண்டும் என்றேன் உணச் செய்யாள்
இல் நச்சினம் காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1814
வயல் ஆர் சோலை எழில் ஒற்றி_வாணர் ஆகும் இவர்-தமை நான்
செயலார் அடியர்க்கு அருள்வீர் நும் சிரத்தும் உரத்தும் திகழ் கரத்தும்
வியலாய்க் கொண்டது என் என்றேன் விளங்கும் பிநாகம் அவை மூன்றும்
இயலால் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1815.
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் விழி என்றேன்
இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான்
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று சொலி
எதிர்நின்று உவந்து நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1816.
இட்டம் களித்த ஒற்றி_உளீர் ஈண்டு இ வேளை எவன் என்றேன்
சுட்டும் சுதனே என்றார் நான் சுட்டி அறியச் சொலும் என்றேன்
பட்டு உண் மருங்குல் பாவாய் நீ பரித்தது அன்றே பார் என்றே
எட்டும் களிப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1817.
பாற்றக் கணத்தார் இவர் காட்டுப்பள்ளித் தலைவர் ஒற்றியின்-நின்று
ஆற்றப் பசித்து வந்தாராம் அன்னம் இடு-மின் என்று உரைத்தேன்
சோற்றுக்கு இளைத்தோம் ஆயினும் யாம் சொல்லுக்கு இளையேம் கீழ்ப் பள்ளி
ஏற்றுக் கிடந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1818.
குருகு ஆர் ஒற்றி_வாணர் பலிகொள்ள வகை உண்டோ என்றேன்
ஒரு கால் எடுத்து ஈண்டு உரை என்றார் ஒரு கால் எடுத்துக் காட்டும் என்றேன்
வரு காவிரிப் பொன்_அம்பலத்தே வந்தால் காட்டுகின்றாம் வீழ்
இரு கால் உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1819.
வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் அணிகின்ற
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார்
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுப்பது என
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1820.
உயிருள் உறைவீர் திருவொற்றி_உடையீர் நீர் என் மேல் பிடித்த
வயிரம்-அதனை விடும் என்றேன் வயிரி அல நீ மாதே யாம்
செயிர்-அது அகற்று உன் முலை இடம் கொள் செல்வன் அல காண் தெளி என்றே
இயல் கொள் முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1821.
தண் கா வளம் சூழ் திருவொற்றித் தலத்தில் அமர்ந்த சாமி நும் கை
எண் கார்முகம் மாப் பொன் என்றேன் இடையிட்டு அறிதல் அரிது என்றார்
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றே
எண் காண் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1822.
செய் காண் வளம் சூழ் ஒற்றி_உளீர் திருமால் முதன் முத்தேவர்கட்கும்
ஐ காண் நீர் என்றேன் இதன் மேல் அணங்கே நீ ஏழ் அடைதி என்றார்
மெய் காண் அது-தான் என் என்றேன் விளங்கும் சுட்டுப் பெயர் என்றே
எய் காணுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1823.
விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில்
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்க்_கை வண்டும் விழுந்தது என்றார்
தொண்டர்க்கு அருள்வீர் மிக என்றேன் தோகாய் நாமே தொண்டன் என
எண் தங்குறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1824.
மட்டு ஆர் மலர்க் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன்
எட்டாம் எழுத்தை எடுத்து அது நாம் இசைத்தேம் என்றார் எட்டாக
உள் தாவுறும் அ எழுத்து அறிய உரைப்பீர் என்றேன் அந்தணர் ஊர்க்கு
இட்டார் நாமம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1825.
ஒற்றி நகரீர் மனவசி-தான் உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன்
பற்றி இறுதி தொடங்கி அது பயிலும் அவர்க்கே அருள்வது என்றார்
மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உள்ள வன்மை எலாம்
எற்றில் உணர்தி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1826.
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன்
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேன் ஓ இது-தான்
சான்றோர் உமது மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்குத் தகாது என்றே
ஏன்று ஓர் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1827.
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன்
ஈது நமக்குத் தெரிந்தது என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன்
ஓதும் அடியார் மனக் கங்குல் ஓட்டும் நாமே உணர் அன்றி
ஏதும் இறை அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1828.
ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர்
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கைப் பன்மை நாதர் என்றார்
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இவை அதற்கு என்று
எண் சொல் மணி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1829.
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டோ என்றேன்
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் எம் பேர்
மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றே
இருவும் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1830.
பேர் ஆர் ஒற்றியீர் உம்மைப் பெற்றார் எவர் என்றேன் அவர்-தம்
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டாம் எழுத்தார் என்றார் என்
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் உரைப்பாம் என்று
ஏர் ஆய் உரைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1831.
தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைக்க வாழ்வீர் தனி ஞான
ஒளி நாவரசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் என்றேன்
களி நாவலனை ஈர்_எரெழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றே
எளியேற்கு உவப்பின் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1832.
ஓம் ஊன்று_உளத்தீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன்
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிகத்
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே
ஏம் ஊன்றுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1833.
மன்னி விளங்கும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான்
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார்
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எமக்கும் தெரியும் எனத் திருவாய்
இன் நல் அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1834.
வளம் சேர் ஒற்றியீர் எனக்கு மாலை அணிவீரோ என்றேன்
குளம் சேர் மொழிப் பெண் பாவாய் நின் கோல மனை-கண் நாம் மகிழ்வால்
உளம் சேர்ந்து அடைந்த போதே நின் உளத்தில் அணிந்தேம் உணர் என்றே
இளம் சீர் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1835.
வீற்று ஆர் ஒற்றி நகர் அமர்ந்தீர் விளங்கும் மலரே விளம்பும் நெடு
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் பார் என்றார்
சாற்றாச் சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றே
ஏற்று ஆதரவால் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1836.
புயப் பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார்
வயப் பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைத்தது என்றேன்
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பா உரைத்தும் என்றே
இயல் பால் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1837.
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன்
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார்
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் மடவாய் உனது மொழிக்கு என்றே
எண்ணம் கொள நின்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1838.
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன்
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார்
சுகம் சேர்ந்திடும் நும் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றே
இகம் சேர் நயப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1839.
ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது
நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்குச்
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதித் தந்தவர்-தாம்
யார் ஆர் மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1840.
வருத்தம் தவிரீர் ஒற்றி_உளீர் மனத்தில் அகாதம் உண்டு என்றேன்
நிருத்தம் தொழும் நம் அடியவரை நினைக்கின்றோரைக் காணின் அது
உருத் தன் பெயர் முன் எழுத்து இலக்கம் உற்றே மற்ற எல்லை அகன்று
இருத்தல் அறியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1841.
மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன்
செய்ய அதன் மேல் சிகரம் வைத்துச் செவ்வன் உரைத்தால் இரு வா என்று
உய்ய உரைப்பேம் என்றார் நும் உரை என் உரை என்றேன் இங்கே
எய் உன் உரையை என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1842.
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற
வா என்று அருள்வீர் என்றேன் அ வாவின் பின்னர் வரும் எழுத்தை
மேவு என்று அதனில் சேர்த்தது இங்கே மேவின் அன்றோ வா என்பேன்
ஏ வென்றிடு கண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1843.
என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைவான் நினைவீரேல்
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை ஆங்கு அதன் மேல்
அல் மேல் குழலாய் சேய் அதன் மேல் அலவன் அதன் மேல் ஞாயிறு அஃ
தின் மேல் ஒன்று இன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1844.
வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நாமம் யாது என்றேன்
மயலாய் இடும் இப் பெயர்ப் பின்னர் வந்த இளைய நாமம் என்றார்
செயல் ஆர் காலம் அறிந்து என்னைச் சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு
இயல் ஆர் அயல் ஆர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1845.
நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கல் என் என்றேன்
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலைத் தோல் வல்லீர் நீர் என்றேன்
வேல் ஆர் விழி மாப் புலித்தோலும் வேழத்தோலும் வல்லேம் என்று
ஏலா அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1846.
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன்
கடியா உள்ளங்கையின் முதலைக் கடிந்தது என்றார் கமலம் என
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அகன்றது என்றே
இடியா நயத்தின் நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1847.
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உடையீர் யார்க்கும் உணர்வு அரியீர்
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்றேன் யான்
துன்றும் விசும்பே காண் என்றார் சூதாம் உமது சொல் என்றேன்
இன்று உன் முலை தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1848.
வானார் வணங்கும் ஒற்றி_உளீர் மதி வாழ் சடையீர் மரபிடை நீர்
தான் ஆர் என்றேன் நனிப்பள்ளித் தலைவர் எனவே சாற்றினர் காண்
ஆனால் ஒற்றி இரும் என்றேன் ஆண்டே இருந்து வந்தனம் சேய்
ஈனாதவள் நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1849.
பற்று முடித்தோர் புகழ் ஒற்றிப் பதியீர் நுமது பசுவின் இடை_
கற்று முடித்தது என் இரு கை_கன்று முழுதும் காண் என்றேன்
மற்று முடித்த மாலையொடு உன் மருங்குல் கலையும் கற்று முடிந்து
இற்று முடித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1850.
வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்து எனது
மானம் கெடுத்தீர் என்று உரைத்தேன் மா நன்று இஃது உன் மான் அன்றே
ஊனம் கலிக்கும் தவர் விட்டார் உலகம் அறியும் கேட்டு அறிந்தே
ஈனம் தவிர்ப்பாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1851.
ஞானம் படைத்த யோகியர் வாழ் நகராம் ஒற்றி நலத்தீர் மால்
ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்னை உவந்து இப்பொழுது என்றேன்
ஊனம் தவிர்த்த மலர் வாயின் உள்ளே நகைசெய்து இஃது உரைக்கேம்
ஈனம் புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1852.
கரு மை அளவும் பொழில் ஒற்றிக் கணத்தீர் முனிவர் கலக்கம் அறப்
பெருமை நடத்தினீர் என்றேன் பிள்ளை நடத்தினான் என்றார்
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்-பால்
இரு மை விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1853.
ஒசிய இடுகும் இடையாரை ஒற்றி இருந்தே மயக்குகின்ற
வசியர் மிக நீர் என்றேன் எம் மகன் காண் என்றார் வளர் காமப்
பசிய தொடையுற்றேன் என்றேன் பட்டம் அவிழ்த்துக் காட்டுதியேல்
இசையக் காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1854.
கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணைவீர்
மலையாள் உமது மனை என்றேன் மருவின் மலையாள்_அல்லள் என்றார்
அலையாள் மற்றையவள் என்றேன் அறியின் அலையாள்_அல்லள் உனை
இலை யாம் அணைவது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1855.
சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாகரே நீர் திண்மை_இலோர்
சூலம் படைத்தீர் என் என்றேன் தோன்றும் உலகு உய்ந்திட என்றார்
ஆலம் களத்தீர் என்றேன் நீ ஆலம் வயிற்றாய் அன்றோ நல்
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1856.
ஞாலம் நிகழும் புகழ் ஒற்றி நடத்தீர் நீர் தான் நாட்டமுறும்
பாலர் அலவோ என்றேன் ஐம்பாலர் பாலைப் பருவத்தில்
சால மயல்கொண்டிட வரும் ஓர் தனிமைப் பாலர் யாம் என்றே
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1857.
வண்மை தருவீர் ஒற்றி நகர் வாழ்வீர் என்னை மருவீர் என்
உண்மை அறியீர் என்றேன் யாம் உணர்ந்தே அகல நின்றது என்றார்
கண்மை_இலரோ நீர் என்றேன் களம் மை உடையேம் கண் மை உறல்
எண்மை நீயே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1858.
தவம் தங்கிய சீர் ஒற்றி நகர்-தனைப் போல் நினைத்து என் மனை அடைந்தீர்
உவந்து என் மீதில் தேவர் திரு_உள்ளம் திரும்பிற்றோ என்றேன்
சிவம் தங்கிட நின் உள்ளம் எம் மேல் திரும்பிற்று அதனைத் தேர்ந்து அன்றே
இவர்ந்து இங்கு அணைந்தாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1859.
ஒன்னார் புரம் மூன்று எரிசெய்தீர் ஒற்றி_உடையீர் உம்முடைய
பொன் ஆர் சடை மேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீர் என் என்றேன்
நின் ஆர் அளகத்து அணங்கே நீ நெட்டி மிலைந்தாய் இதில் அது கீழ்
என்னார் உலகர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1860
கனி மான் இதழி முலைச் சுவடு களித்தீர் ஒற்றிக் காதலர் நீர்
தனி மான் ஏந்தியாம் என்றேன் தடம் கண் மடந்தாய் நின் முகமும்
பனி மான் ஏந்தியாம் என்றார் பரை மான் மருவினீர் என்றேன்
இனி மால்_மருவி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1861
சிறியேன் தவமோ எனைப் பெற்றார் செய்த தவமோ ஈண்டு அடைந்தீர்
அறியேன் ஒற்றி அடிகேள் இங்கு அடைந்த வாறு என் நினைத்து என்றேன்
பொறி நேர் உனது பொன் கலையைப் பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1862
அளிக்கும் குணத்தீர் திருவொற்றி அழகரே நீர் அணி வேணி
வெளிக்கொள் முடி மேல் அணிந்தது-தான் விளியா விளம்பத் திரம் என்றேன்
விளிக்கும் இளம் பத்திரமும் முடி மேலே மிலைந்தாம் விளங்கு_இழை நீ
எளிக் கொண்டு உரையேல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1863
வாசம் கமழும் மலர்ப் பூங்காவனம் சூழ் ஒற்றி மா நகரீர்
நேசம் குறிப்பது என் என்றேன் நீயோ நாமோ உரை என்றார்
தேசம் புகழ்வீர் யான் என்றேன் திகழ் தைத்திரி தித்திரியே யா
மே சம் குறிப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1864
பேசும் கமலப் பெண் புகழும் பெண்மை உடைய பெண்கள் எலாம்
கூசும்படி இப்படி ஒற்றிக் கோவே வந்தது என் என்றேன்
மா சுந்தரி நீ இப்படிக்கு மயங்கும்படிக்கும் மாதர் உனை
ஏசும்படிக்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1865
கொடி ஆல் எயில் சூழ் ஒற்றி இடம் கொண்டீர் அடிகள் குரு உருவாம்
படி ஆல் அடியில் இருந்த மறைப் பண்பை உரைப்பீர் என்றேன் நின்
மடி ஆல் அடியில் இருந்த மறை மாண்பை வகுத்தாய் எனில் அது நாம்
இடியாது உரைப்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1866
என் நேர் உளத்தின் அமர்ந்தீர் நல் எழில் ஆர் ஒற்றியிடை இருந்தீர்
என்னே அடிகள் பலி ஏற்றல் ஏழ்மை_உடையீர் போலும் என்றேன்
இன்னே கடலினிடை நீ பத்து ஏழ்மை_உடையாய் போலும் என
இன் நேயம் கொண்டு உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1867
நல்லார் மதிக்கும் ஒற்றி_உளீர் நண்ணும் உயிர்கள்-தொறும் நின்றீர்
எல்லாம் அறிவீர் என்னுடைய இச்சை அறியீர் போலும் என்றேன்
வல்லாய் அறிவின் மட்டு ஒன்று மன மட்டு ஒன்று வாய் மட்டு ஒன்று
எல்லாம் அறிந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1868
மறி நீர்ச் சடையீர் சித்து எல்லாம்_வல்லீர் ஒற்றி மா நகரீர்
பொறி சேர் உமது புகழ் பலவில் பொருந்தும் குணமே வேண்டும் என்றேன்
குறி நேர் எமது வில் குணத்தின் குணத்தாய் அதனால் வேண்டுற்றாய்
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1869
ஊரூர் இருப்பீர் ஒற்றி வைத்தீர் ஊர்-தான் வேறு உண்டோ என்றேன்
ஓர் ஊர் வழக்கிற்கு அரியை இறை உன்னி வினவும் ஊர் ஒன்றோ
பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக
ஏர் ஊர் அனந்தம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1870
விழி ஒண் நுதலீர் ஒற்றி_உளீர் வேதம் பிறவி_இலர் என்றே
மொழியும் நுமை-தான் வேய் ஈன்ற முத்தர் எனல் இங்கு என் என்றேன்
பழி அன்று அணங்கே அ வேய்க்குப் படு முத்து ஒரு வித்து அன்று அதனால்
இழியும் பிறப்போ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1871
விண் ஆர் பொழில் சூழ் ஒற்றி_உளீர் விளங்கும் தாமம் மிகு வாசத்
தண் ஆர் மலர் வேதனை ஒழிக்கத் தருதல் வேண்டும் எனக்கு என்றேன்
பண் ஆர் மொழியாய் உபகாரம்பண்ணாப் பகைவரேனும் இதை
எண்ணார் எண்ணார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1872
செம்பால் மொழியார் முன்னர் எனைச் சேர்வீர் என்கோ திருவொற்றி
அம்பு ஆர் சடையீர் உமது ஆடல் அறியேன் அருளல் வேண்டும் என்றேன்
வம்பு ஆர் முலையாய் காட்டுகின்றாம் மன்னும் பொன் ஆர் அம்பலத்தே
எம்-பால் வா என்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1873
மைக் கொள் மிடற்றீர் ஊர் ஒற்றி வைத்தீர் உண்டோ மனை என்றேன்
கை-கண் நிறைந்த தனத்தினும் தன் கண்ணின் நிறைந்த கணவனையே
துய்க்கும் மடவார் விழைவர் எனச் சொல்லும் வழக்கு ஈது அறிந்திலையோ
எய்க்கும் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1874
ஆறு_முகத்தார்-தமை ஈன்ற ஐந்து_முகத்தார் இவர்-தமை நான்
மாறு முகத்தார் போல் ஒற்றி வைத்தீர் பதியை என் என்றேன்
நாறும் மலர்ப் பூங் குழல் நீயோ நாமோ வைத்தது உன் மொழி மன்று
ஏறு மொழி அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1875
வள்ளல் மதியோர் புகழ் ஒற்றி வள்ளால் உமது மணிச் சடையின்
வெள்ள_மகள் மேல் பிள்ளை மதி விளங்கல் அழகு ஈது என்றேன் நின்
உள்ள-முகத்தும் பிள்ளை மதி ஒளி கொள் முகத்தும் பிள்ளை மதி
எள்ளல்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1876
உள்ளத்து அனையே போல் அன்பர் உவக்கும் திரு வாழ் ஒற்றி_உளீர்
கள்ளத்தவர் போல் இவண் நிற்கும் கருமம் என் நீர் இன்று என்றேன்
மெள்ளக் கரவுசெயவோ நாம் வேடம் எடுத்தோம் நின் சொல் நினை
எள்ளப் புரிந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1877
அச்சை அடுக்கும் திருவொற்றியவர்க்கு ஓர் பிச்சை கொடும் என்றேன்
விச்சை அடுக்கும்படி நம்-பால் மேவினோர்க்கு இ அகில நடைப்
பிச்சை எடுப்பேம் அலது உன் போல் பிச்சை கொடுப்பேம் அல என்றே
இச்சை எடுப்பாய் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1878
அள்ளல் பழனத் திருவொற்றி அழகர் இவர்-தம் முகம் நோக்கி
வெள்ளச் சடையீர் உள்ளத்தே விருப்பு ஏது உரைத்தால் தருவல் என்றேன்
கொள்ளக் கிடையா அலர் குமுதம் கொண்ட அமுதம் கொணர்ந்து இன்னும்
எள்ளத்தனை தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1879
விஞ்சும் நெறியீர் ஒற்றி_உளீர் வியந்தீர் வியப்பு என் இவண் என்றேன்
கஞ்சம் இரண்டும் நமை அங்கே கண்டு குவிந்த விரிந்து இங்கே
வஞ்ச இரு தாமரை முகையை மறைக்கின்றன நின்-பால் வியந்தாம்
எஞ்சல் அற நாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1880
அளியார் ஒற்றி_உடையாருக்கு அன்னம் நிரம்ப விடும் என்றேன்
அளி ஆர் குழலாய் பிடி அன்னம் அளித்தால் போதும் ஆங்கு அது நின்
ஒளி ஆர் சிலம்பு சூழ் கமலத்து உளதால் கடகம் சூழ் கமலத்து
எளியார்க்கு இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1881
விச்சைப் பெருமான் எனும் ஒற்றி விடங்கப் பெருமான் நீர் முன்னம்
பிச்சைப் பெருமான் இன்று மண_பிள்ளைப் பெருமான் ஆம் என்றேன்
அச்சைப் பெறும் நீ அ மண_பெண் ஆகி இடையில் ஐயம் கொள்
இச்சைப் பெரும் பெண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1882.
படை அம்புயத்தோன் புகழ் ஒற்றிப் பதியீர் அரவப் பணி சுமந்தீர்
புடை அம் புயத்தில் என்றேன் செம்பொன்னே கொடை அம்புயத்தினும் நல்
நடை அம்புயத்தும் சுமந்தனை நீ நானா அரவப் பணி மற்றும்
இடை அம்புயத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1883
கூம்பா ஒற்றியூர்_உடையீர் கொடும் பாம்பு அணிந்தீர் என் என்றேன்
ஓம்பாது உரைக்கில் பார்த்திடின் உள் உன்னில் விடம் ஏற்று உன் இடைக் கீழ்ப்
பாம்பு ஆவதுவே கொடும் பாம்பு எம் பணிப் பாம்பு அது போல் பாம்பு அல என்று
ஏம்பா நிற்ப இசைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1884.
புயல் சூழ் ஒற்றி_உடையீர் என் புடை என் குறித்தோ போந்தது என்றேன்
கயல் சூழ் விழியாய் தனத்தவரைக் காணல் இரப்போர் எதற்கு என்றார்
மயல் சூழ் தனம் இங்கு இலை என்றேன் மறையாது எதிர் வைத்து இலை என்றல்
இயல் சூழ் அறம் அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1885.
நட வாழ்வு ஒற்றி_உடையீர் நீர் நாகம் அணிந்தது அழகு என்றேன்
மடவாய் அது நீர்_நாகம் என மதியேல் அயன் மால் மனம் நடுங்க
விட வாய் உமிழும் பட நாகம் வேண்டில் காண்டி என்றே என்
இட வாய் அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1886.
கோடா ஒற்றி_உடையீர் நும் குலம்-தான் யாதோ கூறும் என்றேன்
வீடு ஆர் பிரம குலம் தேவர் வேந்தர் குலம் நல் வினை வசியப்
பாடு ஆர் குலம் ஓர் சக்கரத்தான் பள்ளிக் குலம் எல்லாம் உடையேம்
ஏடு ஆர் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1887.
நலமாம் ஒற்றி_உடையீர் நீர் நல்ல அழகர் ஆனாலும்
குலம் ஏது உமக்கு மாலையிடக் கூடாது என்றேன் நின் குலம் போல்
உலகு ஓதுறும் நம் குலம் ஒன்றோ ஓர் ஆயிரத்தெட்டு உயர் குலம் இங்கு
இலகா நின்றது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1888.
மதில் ஒற்றியின் நீர் நும் மனையாள் மலையின் குலம் நும் மைந்தருள் ஓர்
புதல்வர்க்கு ஆனைப் பெரும் குலம் ஓர் புதல்வர்க்கு இசை அம்புலிக் குலமாம்
எதிர் அற்று அருள்வீர் நும் குலம் இங்கு எதுவோ என்றேன் மனைவியருள்
இது மற்றொருத்திக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1889.
தேமா பொழில் சூழ் ஒற்றி_உளீர் திகழும் தகர_கால் குலத்தைப்
பூமான் நிலத்தில் விழைந்துற்றீர் புதுமை இஃதும் புகழ் என்றேன்
ஆமா குலத்தில் அரைக் குலத்துள் அணைந்தே புறம் மற்று அரைக் குலம் கொண்டு
ஏமாந்தனை நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1890.
அனம் சூழ் ஒற்றிப் பதி_உடையீர் அகிலம் அறிய மன்றகத்தே
மனம் சூழ் தகரக் கால் கொண்டீர் வனப்பாம் என்றேன் உலகு அறியத்
தனம் சூழ் அகத்தே அணங்கே நீ தானும் தகரத் தலை கொண்டாய்
இனம் சூழ் அழகாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1891.
பங்கேருகப் பூம் பணை ஒற்றிப் பதியீர் நடு அம்பரம் என்னும்
அங்கே ஆட்டுக் கால் எடுத்தீர் அழகு என்றேன் அ அம்பரம் மேல்
இங்கே ஆட்டுத் தோல் எடுத்தாய் யாம் ஒன்று இரண்டு நீ என்றால்
எங்கே நின் சொல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1892.
மாணப் புகழ் சேர் ஒற்றி_உளீர் மன்று ஆர் தகர வித்தை-தனைக்
காணற்கு இனி நான் செயல் என்னே கருதி உரைத்தல் வேண்டும் என்றேன்
வேள் நச்சுறும் மெல்_இயலே யாம் விளம்பும் மொழி அ வித்தை உனக்கு
ஏணப் புகலும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1893.
நல்லார் ஒற்றி_உடையீர் யான் நடக்கோ வெறும் பூ_அணை அணைய
அல்லால் அவண் உம்முடன் வருகோ அணையாது அவலத் துயர் துய்க்கோ
செல்லா என் சொல் நடவாதோ திரு_கூத்து எதுவோ என விடைகள்
எல்லாம் நடவாது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1894.
ஆட்டுத் தலைவர் நீர் ஒற்றி அழகீர் அதனால் சிறுவிதிக்கு ஓர்
ஆட்டுத் தலை தந்தீர் என்றேன் அன்று ஆல் அறவோர் அறம் புகல
ஆட்டுத் தலை முன் கொண்டதனால் அஃதே பின்னர் அளித்தாம் என்று
ஈட்டு உத்தரம் ஈந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1895.
ஒற்றிப் பெருமான் உமை விழைந்தார் ஊரில் வியப்பு ஒன்று உண்டு இரவில்
கொற்றக் கமலம் விரிந்து ஒரு கீழ்க் குளத்தே குமுதம் குவிந்தது என்றேன்
பொற்றைத் தனத்தீர் நுமை விழைந்தார் புரத்தே மதியம் தேய்கின்றது
எற்றைத் தினத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1896.
இடம் சேர் ஒற்றி_உடையீர் நீர் என்ன சாதியினர் என்றேன்
தடம் சேர் முலையாய் நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி என்றார்
விடம் சேர் களத்தீர் நும் மொழி-தான் வியப்பாம் என்றேன் நயப்பால் நின்
இடம் சேர் மொழி-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1897.
உடையார் என்பார் உமை ஒற்றி_உடையீர் பணம்-தான் உடையீரோ
நடையாய் ஏற்கின்றீர் என்றேன் நங்காய் நின் போல் ஒரு பணத்தைக்
கடையார் எனக் கீழ் வைத்து அருமை காட்டேம் பணிகொள் பணம் கோடி
இடையாது உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1898.
என் ஆர்_உயிர்க்குப் பெரும் துணையாம் எங்கள் பெருமான் நீர் இருக்கும்
நல் நாடு ஒற்றி அன்றோ-தான் நவில வேண்டும் என்று உரைத்தேன்
முன் நாள் ஒற்றி எனினும் அது மொழிதல் அழகோ தாழ்தல் உயர்வு
இ நானிலத்து உண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1899.
பெரும் தாரணியோர் புகழ் ஒற்றிப் பெருமான் இவர்-தம் முகம் நோக்கி
அருந்தா அமுதம் அனையீர் இங்கு அடுத்த பரிசு ஏது அறையும் என்றேன்
வருந்தாது இங்கே அருந்து அமுத மனையாளாக வாழ்வினொடும்
இருந்தாய் அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1900.
செம்மை வளம் சூழ் ஒற்றி_உளீர் திகழாக் கரித் தோல் உடுத்தீரே
உம்மை விழைந்த மடவார்கள் உடுக்கக் கலை உண்டோ என்றேன்
எம்மை அறியாய் ஒரு கலையோ இரண்டோ அனந்தம் கலை மெய்யில்
இம்மை உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1901.
கற்றைச் சடையீர் திருவொற்றிக் காவல்_உடையீர் ஈங்கு அடைந்தீர்
இற்றைப் பகலே நன்று என்றேன் இற்றை இரவே நன்று எமக்குப்
பொற்றைத் தனத்தாய் கை அமுதம் பொழியாது அலர் வாய்ப் புத்தமுதம்
இற்றைக்கு அளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1902.
கற்றீர் ஒற்றீர் முன்பு ஒரு வான் காட்டில் கவர்ந்து ஓர் நாட்டில் வளை
விற்றீர் இன்று என் வளை கொண்டீர் விற்கத் துணிந்தீரோ என்றேன்
மற்று ஈர் குழலாய் நீ எம் ஓர் மனையின் வளையைக் கவர்ந்து களத்
தில் தீது அணிந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1903.
உடுக்கும் புகழார் ஒற்றி_உளார் உடை தா என்றார் திகை எட்டும்
உடுக்கும் பெரியீர் எது கண்டோ உரைத்தீர் என்றேன் திகை முழுதும்
உடுக்கும் பெரியவரைச் சிறிய ஒரு முன்தானையால் மூடி
எடுக்கும் திறம் கண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1904.
கா வாய் ஒற்றிப் பதி_உடையீர் கல்_ஆனைக்குக் கரும்பு அன்று
தேவாய் மதுரையிடத்து அளித்த சித்தர் அலவோ நீர் என்றேன்
பாவாய் இரு கல் ஆனைக்குப் பரிவில் கரும்பு இங்கு இரண்டு ஒரு நீ
ஈவாய் இது சித்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1905.
ஊட்டும் திரு வாழ் ஒற்றி_உளீர் உயிரை உடலாம் செப்பிடை வைத்து
ஆட்டும் திறத்தீர் நீர் என்றேன் அணங்கே இரு செப்பிடை ஆட்டும்
தீட்டும் புகழ் அன்றியும் உலகைச் சிறிது ஓர் செப்பில் ஆட்டுகின்றாய்
ஈட்டும் திறத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1906.
கந்த வனம் சூழ் ஒற்றி_உளீர் கண் மூன்று_உடையீர் வியப்பு என்றேன்
வந்த எமை-தான் பிரி போதும் மற்றையவரைக் காண் போதும்
சந்தம் மிகும் கண் இரு_மூன்றும் தகு நான்கு_ஒன்றும் தான் அடைந்தாய்
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1907
ஆழி விடையீர் திருவொற்றி அமர்ந்தீர் இருவர்க்கு அகம் மகிழ்வான்
வீழி-அதனில் படிக்காசு வேண்டி அளித்தீராம் என்றேன்
வீழி-அதனில் படிக்கு ஆசு வேண்டாது அளித்தாய் அளவு ஒன்றை
ஏழில் அகற்றி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1908.
உற்ற இடத்தே பெரும் துணையாம் ஒற்றிப் பெருமான் உம் புகழைக்
கற்ற இடத்தே முக்கனியும் கரும்பும் அமுதும் கயவாவோ
மற்ற இடச் சீர் என் என்றேன் மற்றை உபயவிடமும் முதல்
எற்ற விடமே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1909.
யான் செய் தவத்தின் பெரும் பயனே என் ஆர்_அமுதே என் துணையே
வான் செய் அரசே திருவொற்றி வள்ளால் வந்தது என் என்றேன்
மான் செய் விழிப் பெண்ணே நீ ஆண் வடிவு ஆனது கேட்டு உள்ளம் வியந்
தேன் கண்டிடவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1910.
கருணைக் கடலே என் இரண்டு கண்ணே முக்கண் கரும்பே செவ்
வருணப் பொருப்பே வளர் ஒற்றி வள்ளல் மணியே மகிழ்ந்து அணையத்
தருணப் பருவம் இஃது என்றேன் தவிர் அன்று எனக் காட்டியது உன்றன்
இருள் நச்சு அளகம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1911
காவிக் களம் கொள் கனியே என் கண்ணுள் மணியே அணியே என்
ஆவித் துணையே திருவொற்றி அரசே அடைந்தது என் என்றேன்
பூவில் பொலியும் குழலாய் நீ பொன்னின் உயர்ந்தாய் எனக் கேட்டு உன்
ஈவைக் கருதி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1912.
கண்ணும் மனமும் களிக்கும் எழில் கண் மூன்று_உடையீர் கலை_உடையீர்
நண்ணும் திரு வாழ் ஒற்றி_உளீர் நடம் செய் வல்லீர் நீர் என்றேன்
வண்ணம் உடையாய் நின்றனைப் போல் மலர் வாய் நடம் செய் வல்லோமோ
எண்ண வியப்பாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1913.
தாங்கும் விடை மேல் அழகீர் என்றன்னைக் கலந்தும் திருவொற்றி
ஓங்கும் தளியில் ஒளித்தீர் நீர் ஒளிப்பில் வல்லராம் என்றேன்
வாங்கும் நுதலாய் நீயும் எனை மருவிக் கலந்து மலர்த் தளியில்
ஈங்கு இன்று ஒளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1914.
அம்மை அடுத்த திரு_மேனி அழகீர் ஒற்றி அணி நகரீர்
உம்மை அடுத்தோர் மிக வாட்டம் உறுதல் அழகோ என்று உரைத்தேன்
நம்மை அடுத்தாய் நமை அடுத்தோர் நம் போல் உறுவர் அன்று எனில் ஏது
எம்மை அடுத்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1915.
உண் கள் மகிழ்வால் அளி மிழற்றும் ஒற்றி நகரீர் ஒரு மூன்று
கண்கள்_உடையீர் என் காதல் கண்டும் இரங்கீர் என் என்றேன்
பண் கொள் மொழியாய் நின் காதல் பல் நாள் சுவை செய் பழம் போலும்
எண் கொண்டு இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1916.
வணம் கேழ் இலங்கும் செஞ்சடையீர் வளம் சேர் ஒற்றி மா நகரீர்
குணம் கேழ் மிடற்று ஓர் பால் இருளைக் கொண்டீர் கொள்கை என் என்றேன்
அணங்கே ஒரு பால் அன்றி நின் போல் ஐம்பால் இருள் கொண்டிடச் சற்றும்
இணங்கேம் இணங்கேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1917.
கரும்பில் இனியீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர்
பெரும் பை அணியீர் திருவொற்றிப் பெரியீர் எது நும் பெயர் என்றேன்
அரும்பு அண் முலையாய் பிறர் கேட்க அறைந்தால் அளிப்பீர் எனச் சூழ்வர்
இரும்_பொன் இலையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1918.
நிலையைத் தவறார் தொழும் ஒற்றி நிமலப் பெருமான் நீர் முன்னம்
மலையைச் சிலையாக் கொண்டீர் நும் மா வல்லபம் அற்புதம் என்றேன்
வலையத்து அறியாச் சிறுவர்களும் மலையைச் சிலையாக் கொள்வர்கள் ஈது
இலை அற்புதம்-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1919.
உதயச் சுடரே_அனையீர் நல் ஒற்றி_உடையீர் என்னுடைய
இதயத்து அமர்ந்தீர் என்னே என் எண்ணம் அறியீரோ என்றேன்
சுதையில் திகழ்வாய் அறிந்து அன்றோ துறந்து வெளிப்பட்டு எதிர் அடைந்தாம்
இதை உற்று அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1920.
புரக்கும் குணத்தீர் திருவொற்றிப் புனிதரே நீர் போர்க் களிற்றை
உரக்கும் கலக்கம் பெற உரித்தீர் உள்ளத்து இரக்கம் என் என்றேன்
கரக்கும் இடையாய் நீ களிற்றின் கன்றைக் கலக்கம் புரிந்தனை நின்
இரக்கம் இதுவோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1921.
பதம் கூறு ஒற்றிப் பதியீர் நீர் பசுவில் ஏறும் பரிசு-அதுதான்
விதம் கூறு அறத்தின் விதி-தானோ விலக்கோ விளம்பல் வேண்டும் என்றேன்
நிதம் கூறிடும் நல் பசும் கன்றை நீயும் ஏறி இடுகின்றாய்
இதம் கூறிடுக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1922.
யோகம்_உடையார் புகழ் ஒற்றியூரில் பரம யோகியராம்
தாகம் உடையார் இவர்-தமக்குத் தண்ணீர் தர நின்றனை அழைத்தேன்
போகம்_உடையாய் புறத் தண்ணீர் புரிந்து விரும்பாம் அகத் தண்ணீர்
ஈக மகிழ்வின் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1923.
வள நீர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் மாதே நாம்
உள நீர்த் தாக மாற்றுறு நீர் உதவ வேண்டும் என்றார் நான்
குள நீர் ஒன்றே உளது என்றேன் கொள்ளேம் இடை மேல் கொளும் இந்த
இளநீர் தருக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1924.
மெய் நீர் ஒற்றி_வாணர் இவர் வெம்மை உள நீர் வேண்டும் என்றார்
அ நீர் இலை நீர் தண்ணீர்-தான் அருந்தில் ஆகாதோ என்றேன்
முந்நீர்_தனையை_அனையீர் இ முது நீர் உண்டு தலைக்கு ஏறிற்று
இ நீர் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1925
சீலம் சேர்ந்த ஒற்றி_உளீர் சிறிதாம் பஞ்ச காலத்தும்
கோலம் சார்ந்து பிச்சை கொளக் குறித்து வருவீர் என் என்றேன்
காலம் போகும் வார்த்தை நிற்கும் கண்டாய் இது சொல் கடன் ஆமோ
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1926
ஊற்று ஆர் சடையீர் ஒற்றி_உளீர் ஊரூர் இரக்கத் துணிவுற்றீர்
நீற்றால் விளங்கும் திரு_மேனி நேர்ந்து இங்கு இளைத்தீர் நீர் என்றேன்
சோற்றால் இளைத்தேம் அன்று உமது சொல்லால் இளைத்தேம் இன்று இனி நாம்
ஏற்றால் இகழ்வே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1927.
நீரை விழுங்கும் சடை_உடையீர் உளது நுமக்கு நீர் ஊரும்
தேரை விழுங்கும் பசு என்றேன் செறி நின் கலைக்குள் ஒன்று உளது
காரை விழுங்கும் எமது பசுக் கன்றின் தேரை நீர்த் தேரை
ஈர விழுங்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1928.
பொன் நேர் மணி மன்று உடையீர் நீர் புரிந்தது எது எம் புடை என்றேன்
இன்னே உரைத்தற்கு அஞ்சுதும் என்றார் என் என்றேன் இயம்புதுமேல்
மின்னே நினது நடைப் பகையாம் மிருகம் பறவை-தமைக் குறிக்கும்
என்னே உரைப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1929.
அடையார் புரம் செற்று அம்பலத்தே ஆடும் அழகீர் எண் பதிற்றுக்
கடையாம் உடலின் தலை கொண்டீர் கரம் ஒன்றினில் அற்புதம் என்றேன்
உடையாத் தலை மேல் தலையாக உன் கை ஈர்_ஐஞ்ஞூறு கொண்டது
இடையா வளைக்கே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1930.
தேவர்க்கு அரிய ஆனந்தத் திரு_தாண்டவம் செய் பெருமான் நீர்
மேவக் குகுகுகுகுகு அணி வேணி_உடையீராம் என்றேன்
தாவக் குகுகுகுகுகுகுகுத் தாமே ஐந்தும் விளங்க அணி
ஏவு_அல் குணத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1931.
கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற்கு அஞ்சுவல் யான்
ஒன்றப் பெரும் கோள் என் மீதும் உரைப்பார் உண்டு என்று உணர்ந்து என்றேன்
நன்று அப்படியேல் கோளிலியாம் நகரும் உடையேம் நங்காய் நீ
இன்று அச்சுறல் என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1932.
புரியும் சடையீர் அமர்ந்திடும் ஊர் புலியூர் எனில் எம்_போல்வார்க்கும்
உரியும் புலித்தோல்_உடையீர் போல் உறுதற்கு இயலுமோ என்றேன்
திரியும் புலியூர் அன்று நின் போல் தெரிவையரைக் கண்டிடில் பயந்தே
இரியும் புலியூர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1933.
தெவ்_ஊர் பொடிக்கும் சிறு_நகை இ தேவர்-தமை நான் நீர் இருத்தல்
எ ஊர் என்றேன் நகைத்து அணங்கே ஏழூர் நாலூர் என்றார் பின்
அ ஊர்த் தொகையில் இருத்தல் அரிதாம் என்றேன் மற்று அதில் ஒவ்_ஊர்
இ ஊர் எடுத்து ஆய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1934.
மணம்கொள் இதழிச் சடையீர் நீர் வாழும் பதி யாது என்றேன் நின்
குணம் கொள் மொழி கேட்டு ஓர் அளவு குறைந்த குயிலாம் பதி என்றார்
அணங்கின் மறையூராம் என்றேன் அஃது அன்று அருள் ஓத்தூர் இஃது
இணங்க உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1935.
ஆற்றுச் சடையார் இவர் பலி என்று அடைந்தார் நுமது ஊர் யாது என்றேன்
சோற்றுத்துறை என்றார் நுமக்குச் சோற்றுக் கருப்பு ஏன் சொலும் என்றேன்
தோற்றுத் திரிவேம் அன்று நின் போல் சொல்லும் கருப்பு என்று உலகு இயம்ப
ஏற்றுத் திரியேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

#1936.
ஓங்கும் சடையீர் நெல்வாயில் உடையேம் என்றீர் உடையீரேல்
தாங்கும் புகழ் நும்மிடை சிறுமை சார்ந்தது எவன் நீர் சாற்றும் என்றேன்
ஏங்கும்படி நும் இடைச் சிறுமை எய்திற்று அலது ஈண்டு எமக்கு இன்றால்
ஈங்கும் காண்டிர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

@99. கண் நிறைந்த கணவன்

#1937.
மையல் அழகீர் ஊர் ஒற்றிவைத்தீர் உளவோ மனை என்றேன்
கையில் நிறைந்த தனத்தினும் தம் கண்ணின் நிறைந்த கணவனையே
மெய்யின் விழைவார் ஒரு மனையோ விளம்பின் மனையும் மிகப் பலவாம்
எய்யில் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடி

@100. இராமநாம சங்கீர்த்தனம்

#1938.
காராய வண்ண மணி வண்ண கண்ண கன சங்கு சக்ரதர நீள்
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே
தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய நம கேசவாய நமவே.

@101. இராமநாமப் பதிகம்

#1939.
திருமகள் எம் பெருமாட்டி மகிழும் வண்ணச் செழும் கனியே கொழும் பாகே தேனே தெய்வத்
தரு_மகனைக் காத்து அருளக் கரத்தே வென்றித் தனு எடுத்த ஒரு முதலே தருமப் பேறே
இருமையும் என் உளத்து அமர்ந்த ராம நாமத்து என் அரசே என் அமுதே என் தாயே நின்
மரு மலர்ப் பொன்_அடி வழுத்தும் சிறியேன் அந்தோ மனம் தளர்ந்தேன் அறிந்தும் அருள் வழங்கிலாயே.

#1940.
கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான
மலை-கண் எழும் சுடரே வான் சுடரே அன்பர் மனத்து ஒளிரும் சுயம் சுடரே மணியே வானோர்
தலைக் கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மைத் தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள
நிலைக் கண்ணுறும் ஸ்ரீராம வள்ளலே என் நிலை அறிந்தும் அருள இன்னும் நினைந்திலாயே.

#1941.
மண் ஆளாநின்றவர்-தம் வாழ்வு வேண்டேன் மற்றவர் போல் பற்று அடைந்து மாள வேண்டேன்
விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன்
புண் ஆளாநின்ற மனம்_உடையேன் செய்த பொய் அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்
கண்ணாளா சுடர்க் கமலக் கண்ணா என்னைக் கைவிடில் என் செய்வேனே கடையனேனே.

#1942.
தெவ்_வினையார் அரக்கர் குலம் செற்ற வெற்றிச் சிங்கமே எங்கள் குல_தெய்வமேயோ
வெவ் வினை தீர்த்து அருள்கின்ற ராம நாம வியன் சுடரே இ உலக விடயக் காட்டில்
இ வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்கு இலக்கு ஆனேன் துணை ஒன்றும் இல்லேன் அந்தோ
செய் வினை ஒன்று அறியேன் இங்கு என்னை எந்தாய் திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வது என்னே.

#1943.
வான் வண்ணக் கரு முகிலே மழையே நீல மணி வண்ணக் கொழும் சுடரே மருந்தே வானத்
தேன் வண்ணச் செழும் சுவையே ராம நாமத் தெய்வமே நின் புகழைத் தெளிந்தே ஓதா
ஊன் வண்ணப் புலை வாயார்-இடத்தே சென்று ஆங்கு உழைக்கின்றேன் செய் வகை ஒன்று உணரேன் அந்தோ
கான் வண்ணக் குடும்பத்திற்கு இலக்கா என்னைக் காட்டினையே என்னே நின் கருணை ஈதோ.

#1944.
பொன்_உடையார் வாயிலில் போய் வீணே காலம் போக்குகின்றேன் இ உலகப் புணர்ப்பை வேண்டி
என்னுடையாய் நின் அடியை மறந்தேன் அந்தோ என் செய்கேன் என் செய்கேன் ஏழையேன் நான்
பின்_உடையேன் பிழை_உடையேன் அல்லால் உன்றன் பேர்_அருளும் உடையேனோ பிறந்தேன் வாளா
உன்னுடைய திருவுளத்து என் நினைதியோ என் ஒரு முதல்வா ஸ்ரீராமா உணர்கிலேனே.

#1945.
அறம் பழுக்கும் தருவே என் குருவே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அரசே பூவை
நிறம் பழுக்க அழகு ஒழுகும் வடிவக் குன்றே நெடும் கடலுக்கு அணை அளித்த நிலையே வெய்ய
மறம் பழுக்கும் இலங்கை இராவணனைப் பண்டு ஓர் வாளினால் பணிகொண்ட மணியே வாய்மைத்
திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே நின் திரு_அருளே அன்றி மற்று ஓர் செயல் இலேனே.

#1946.
கல் ஆய வன்_மனத்தர்-தம்பால் சென்றே கண் கலக்கம்கொள்கின்றேன் கவலை வாழ்வை
எல்லாம் உள் இருந்து அறிந்தாய் அன்றோ சற்றும் இரங்கிலை எம் பெருமானே என்னே என்னே
பொல்லாத வெவ் வினையேன் எனினும் என்னைப் புண்ணியனே புரப்பது அருள் புகழ்ச்சி அன்றோ
அல் ஆர்ந்த துயர்_கடல்-நின்று எடுத்திடாயேல் ஆற்றேன் நான் பழி நின்-பால் ஆக்குவேனே.

#1947.
மை ஆன நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே மனம் தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்
ஐயா என் உளத்து அமர்ந்தாய் நீ-தான் சற்றும் அறியாயோ அறியாயேல் அறிவார் யாரே
பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப் புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி
மெய்யா என்றனை அ நாள் ஆண்டாய் இ நாள் வெறுத்தனையேல் எங்கே யான் மேவுவேனே.

#1948.
கூறுவதோர் குணம் இல்லாக் கொடிதாம் செல்வக் குருட்டு_அறிவோர் இடைப்படும் என் குறைகள் எல்லாம்
ஆறுவதோர் வழி காணேன் அந்தோ அந்தோ அவலம் எனும் கரும்_கடலில் அழுந்துகின்றேன்
ஏறுவதோர் வகை அறியேன் எந்தாய் எந்தாய் ஏற்றுகின்றோர் நின்னை அன்றி இல்லேன் என்னைச்
சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தைத் தெரியேனே சிறியனேனே.

@102. வீரராகவர் போற்றிப் பஞ்சகம்

#1949.
தண் அமர் மதி போல் சாந்தம் தழைத்த சத்துவனே போற்றி
வண்ண மா மணியே போற்றி மணி வண்ணத் தேவா போற்றி
அண்ணலே எவ்வுளூரில் அமர்ந்து அருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீரராகவனே போற்றி.

#1950.
பாண்டவர் தூதனாகப் பலித்து அருள் பரனே போற்றி
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி
தூண்டல் இல்லாமல் ஓங்கும் ஜோதி நல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி.

#1951.
மேதினி புரக்கும் வேந்தர் வீறு எலாம் நினதே போற்றி
கோது இலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
ஓதிய எவ்வுளூரில் உறைந்து அருள் புரிவாய் போற்றி
வேதியன்-தன்னை ஈன்ற வீரராகவனே போற்றி.

#1952.
இளம் கொடி-தனைக் கொண்டு ஏகும் இராவணன்-தனை அழித்தே
களங்கம்_இல் விபீடணர்க்குக் கன அரசு அளித்தாய் போற்றி
துளங்கும் மா தவத்தோர் உற்ற துயர் எலாம் தவிர்த்தாய் போற்றி
விளங்கும் நல் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி.

#1953.
அற்புதத் திருவை மார்பில் அணைத்த பேர்_அழகா போற்றி
பொற்பு உறு திகிரி சங்கு பொருந்து கைப் புனிதா போற்றி
வற்புறு பிணி தீர்த்து என்னை மகிழ்வித்த வரதா போற்றி
வெற்பு உயர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி.

@103. இரேணுகை தோத்திரம்

#1954.
சீர் வளர் மதியும் திரு வளர் வாழ்க்கைச் செல்வமும் கல்வியும் பொறையும்
பார் வளர் திறனும் பயன் வளர் பரிசும் பத்தியும் எனக்கு அருள் பரிந்தே
வார் வளர் தனத்தாய் மரு வளர் குழலாய் மணி வளர் அணி மலர் முகத்தாய்
ஏர் வளர் குணத்தாய் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே.

#1955.
உவந்து ஒரு காசும் உதவிடாக் கொடிய உலுத்தர்-தம் கடை-தொறும் ஓடி
அவம்-தனில் அலையா வகை எனக்கு உன்றன் அகம் மலர்ந்து அருளுதல் வேண்டும்
நவம் தரு மதியம் நிவந்த பூங் கொடியே நலம் தரு நசை மணிக் கோவை
இவந்து ஒளிர் பசும் தோள் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு ச்

#1956.
விருந்தினர்-தம்மை உபசரித்திடவும் விரவுறும் உறவினர் மகிழத்
திருந்திய மனத்தால் நன்றி செய்திடவும் சிறியனேற்கு அருளுதல் வேண்டும்
வருந்தி வந்து அடைந்தோர்க்கு அருள்செயும் கருணை_வாரியே வடிவுறு மயிலே
இரும் திசை புகழும் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே.

#1957.
புண்ணியம் புரியும் புனிதர்-தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய்
நண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும் நன்கும் எனக்கு அருள் புரிவாய்
விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கு அருள் ஒழுகிய விழியாய்
எண்ணிய அடியர்க்கு இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே.

#1958.
மனம் மெலியாமல் பிணியடையாமல் வஞ்சகர்-தமை மருவாமல்
சினம் நிலையாமல் உடல் சலியாமல் சிறியனேன் உற மகிழ்ந்து அருள்வாய்
அனம் மகிழ் நடையாய் அணி துடி இடையாய் அழகுசெய் காஞ்சன உடையாய்
இனம் மகிழ் சென்னை இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே.