திருவருட்பா – ஐந்தாம் திருமுறை


@1 அன்பு மாலை

#3029
அற்புதப் பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே ஆர்_அமுதே அடியேன்-தன் அன்பே என் அறிவே
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்தக் களிப்பே மெய்க் கதியே
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே
பொற்புறவே இ உலகில் பொருந்து சித்தன் ஆனேன் பொருத்தமும் நின் திரு_அருளின் பொருத்தம் அது தானே.

#3030
நிறை அணிந்த சிவகாமி நேய நிறை ஒளியே நித்த பரிபூரணமாம் சுத்த சிவ வெளியே
கறை அணிந்த களத்து அரசே கண் உடைய கரும்பே கற்கண்டே கனியே என் கண்ணே கண்மணியே
பிறை அணிந்த முடி மலையே பெரும் கருணை_கடலே பெரியவர் எல்லாம் வணங்கும் பெரிய பரம்பொருளே
குறை அணிந்து திரிகின்றேன் குறைகள் எலாம் தவிர்த்தே குற்றம் எலாம் குணமாகக் கொள்வது நின் குணமே.

#3031
ஆண்_பனை பெண்_பனை ஆக்கி அங்கம் அது அங்கனையாய் ஆக்கி அருள் மணத்தில் ஒளி அனைவரையும் ஆக்கும்
மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே
நாண்பனையும் தந்தையும் என் நல் குருவும் ஆகி நாய்_அடியேன் உள்ளகத்து நண்ணிய நாயகனே
வீண் பனை போல் மிக நீண்டு விழற்கு இறைப்பேன் எனினும் விருப்பம் எலாம் நின் அருளின் விருப்பம் அன்றி இலையே.

#3032
சித்தம் அனேகம் புரிந்து திரிந்து உழலும் சிறியேன் செய் வகை ஒன்று அறியாது திகைக்கின்றேன் அந்தோ
உத்தமனே உன்னை அலால் ஒரு துணை மற்று அறியேன் உன் ஆணை உன் ஆணை உண்மை இது கண்டாய்
இத் தமன் நேயச் சலனம் இனிப் பொறுக்க மாட்டேன் இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் எந்தாய்
சுத்த மன் நேயத்தவர்க்கும் எனைப் போலும் அவர்க்கும் துயர் தவிப்பான் மணி மன்றில் துலங்கு நடத்து அரசே.

#3033
துப்பு ஆடு திரு_மேனிச் சோதி மணிச் சுடரே துரிய வெளிக்குள் இருந்த சுத்த சிவ வெளியே
அப்பு ஆடு சடை முடி எம் ஆனந்த_மலையே அருள்_கடலே குருவே என் ஆண்டவனே அரசே
இப் பாடுபட எனக்கு முடியாது துரையே இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் கண்டாய்
தப்பாடுவேன் எனினும் என்னை விடத் துணியேல் தனி மன்றுள் நடம் புரியுந் தாள்_மலர் எந்தாயே.

#3034
கண் ஓங்கு நுதல் கரும்பே கரும்பின் நிறை அமுதே கற்கண்டே சர்க்கரையே கதலி நறும் கனியே
விண் ஓங்கு வியன் சுடரே வியன் சுடர்க்குள் சுடரே விடையவனே சடையவனே வேத முடிப் பொருளே
பெண் ஓங்கும் ஒரு பாகம் பிறங்கு பெருந்தகையே பெரு மானை ஒரு கரம் கொள் பெரிய பெருமானே
எண் ஓங்கு சிறியவனேன் என்னினும் நின் அடியேன் என்னை விடத் துணியேல் நின் இன் அருள்தந்து அருளே.

#3035
திரு_நெறி சேர் மெய் அடியர் திறன் ஒன்றும் அறியேன் செறிவு அறியேன் அறிவு அறியேன் செய் வகையை அறியேன்
கரு நெறி சேர்ந்து உழல்கின்ற கடையரினும் கடையேன் கற்கின்றேன் சாகாத கல்வி நிலை காணேன்
பெரு நெறி சேர் மெய்ஞ்ஞான சித்தி நிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்கு உரிய பெற்றி_இலேன் அந்தோ
வரு நெறியில் என்னை வலிந்து ஆட்கொண்ட மணியே மன்று உடைய பெரு வாழ்வே வழங்குக நின் அருளே.

#3036
குன்றாத குண_குன்றே கோவாத மணியே குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே
என் தாதை ஆகி எனக்கு அன்னையுமாய் நின்றே எழுமையும் என்றனை ஆண்ட என் உயிரின் துணையே
பொன்றாத பொருளே மெய்ப் புண்ணியத்தின் பயனே பொய் அடியேன் பிழைகள் எலாம் பொறுத்த பெருந்தகையே
அன்று ஆல நிழல் அமர்ந்த அருள் இறையே எளியேன் ஆசை எலாம் நின் அடி மேல் அன்றி ஒன்றும் இலையே.

#3037
பூணாத பூண்கள் எலாம் பூண்ட பரம்பொருளே பொய் அடியேன் பிழை முழுதும் பொறுத்து அருளி என்றும்
காணாத காட்சி எலாம் காட்டி எனக்கு உள்ளே கருணை நடம் புரிகின்ற கருணையை என் புகல்வேன்
மாணாத குணக் கொடியேன் இதை நினைக்கும்-தோறும் மனம் உருகி இரு கண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய்
ஏண் ஆதன் என்னினும் யான் அம்மையின் நின் அடியேன் என அறிந்தேன் அறிந்த பின்னர் இதயம் மலர்ந்தேனே.

#3038
அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு அறியாச் சிறியேனை அறிவு அறியச்செய்தே
இந்து ஓங்கு சடை மணி நின் அடி முடியும் காட்டி இது காட்டி அது காட்டி என் நிலையும் காட்டிச்
சந்தோட சித்தர்கள்-தம் தனிச் சூதும் காட்டி சாகாத நிலை காட்டிச் சகச நிலை காட்டி
வந்து ஓடு நிகர் மனம் போய்க் கரைந்த இடம் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே.

#3039
அன்பர் உளக் கோயிலிலே அமர்ந்து அருளும் பதியே அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே
வன்பர் உளத்தே மறைந்து வழங்கும் ஒளி மணியே மறை முடி ஆகம முடியின் வயங்கு நிறை_மதியே
என் பருவம் குறியாமல் என்னை வலிந்து ஆட்கொண்டு இன்ப நிலை-தனை அளித்த என் அறிவுக்கு அறிவே
முன் பருவம் பின் பருவம் கண்டு அருளிச் செய்யும் முறைமை நினது அருள் நெறிக்கு மொழிதல் அறிந்திலனே.

#3040
பால் காட்டும் ஒளி வண்ணப் படிக மணி_மலையே பத்திக்கு நிலை-தனிலே தித்திக்கும் பழமே
சேல் காட்டும் விழிக் கடையால் திரு_அருளைக் காட்டும் சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே
மால் காட்டி மறையாது என் மதிக்கு மதி ஆகி வழி காட்டி வழங்குகின்ற வகை-அதனைக் காட்டிக்
கால் காட்டிக் காலாலே காண்பதுவும் எனக்கே காட்டிய நின் கருணைக்குக் கைம்மாறு ஒன்று இலனே.

#3041
என்னை ஒன்றும் அறியாத இளம் பருவம்-தனிலே என் உளத்தே அமர்ந்து அருளி யான் மயங்கும்-தோறும்
அன்னை எனப் பரிந்து அருளி அப்போதைக்கப்போது அப்பன் எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்
நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ
இன்னல் அறுத்து அருள்கின்ற என் குரு என்பேனோ என் என்பேன் என்னுடைய இன்பம்-அது என்பேனே.

#3042
பாடும் வகை அணுத்துணையும் பரிந்து அறியாச் சிறிய பருவத்தே அணிந்து அணிந்து பாடும் வகை புரிந்து
நாடும் வகை உடையோர்கள் நன்கு மதித்திடவே நல் அறிவு சிறிது அளித்துப் புல்_அறிவு போக்கி
நீடும் வகை சன்மார்க்க சுத்த சிவ நெறியில் நிறுத்தினை இச் சிறியேனை நின் அருள் என் என்பேன்
கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார் குற்றம் எலாம் குணமாகக் கொண்ட குண_குன்றே.

#3043
சற்றும் அறிவி இல்லாத எனையும் வலிந்து ஆண்டு தமியேன் செய் குற்றம் எலாம் சம்மதமாக் கொண்டு
கற்றும் அறிந்தும் கேட்டும் தெளிந்த பெரியவரும் கண்டு மகிழப் புரிந்து பண்டை வினை அகற்றி
மற்றும் அறிவன எல்லாம் அறிவித்து என் உளத்தே மன்னுகின்ற மெய் இன்ப வாழ்க்கை முதல் பொருளே
பெற்றும் அறிவு இல்லாத பேதை என் மேல் உனக்குப் பெரும் கருணை வந்த வகை எந்த வகை பேசே.

#3044
சுற்று அது மற்று அ வழி மா சூது அது என்று எண்ணாத் தொண்டர் எலாம் கற்கின்றார் பண்டும் இன்றும் காணார்
எல் ததும்பு மணி மன்றில் இன்ப நடம் புரியும் என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால்
கற்றது நின்னிடத்தே பின் கேட்டது நின்னிடத்தே கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே.

#3045
ஏறிய நான் ஒரு நிலையில் ஏற அறியாதே இளைக்கின்ற காலத்து என் இளைப்பு எல்லாம் ஒழிய
வீறிய ஓர் பருவ சத்தி கைகொடுத்துத் தூக்கி மேல் ஏற்றச்செய்து அவளை மேவுறவும் செய்து
தேறிய நீர் போல் எனது சித்தம் மிகத் தேறித் தெளிந்திடவும் செய்தனை இச் செய்கை எவர் செய்வார்
ஊறிய மெய் அன்பு_உடையார் உள்ளம் எனும் பொதுவில் உவந்து நடம் புரிகின்ற ஒரு பெரிய பொருளே.

#3046
தரு நிதியக் குரு இயற்றச் சஞ்சலிக்கும் மனத்தால் தளர்ந்த சிறியேன் தனது தளர்வு எல்லாம் தவிர்த்து
இரு_நிதியத் திரு_மகளிர் இருவர் எனை வணங்கி இசைந்திடு வந்தனம் அப்பா என்று மகிழ்ந்து இசைத்துப்
பெரு நிதி வாய்த்திட எனது முன் பாடி ஆடும் பெற்றி அளித்தனை இந்தப் பேதமையேன்-தனக்கே
ஒரு நிதி நின் அருள் நிதியும் உவந்து அளித்தல் வேண்டும் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம்பொருளே.

#3047
அஞ்சாதே என் மகனே அனுக்கிரகம் புரிந்தாம் ஆடுக நீ வேண்டியவாறு ஆடுக இ உலகில்
செஞ்சாலி வயல் ஓங்கு தில்லை மன்றில் ஆடும் திரு_நடம் கண்டு அன்பு உருவாய்ச் சித்த சுத்தன் ஆகி
எஞ்சாத நெடும் காலம் இன்ப_வெள்ளம் திளைத்தே இனிது மிக வாழிய என்று எனக்கு அருளிச் செய்தாய்
துஞ்சு ஆதி அந்தம் இலாச் சுத்த நடத்து அரசே துரிய நடுவே இருந்த சுயம் சோதி மணியே.

#3048
நான் கேட்கின்றவை எல்லாம் அளிக்கின்றாய் எனக்கு நல்லவனே எல்லாமும் வல்ல சிவ சித்தா
தான் கேட்கின்றவை இன்றி முழுது ஒருங்கே உணர்ந்தாய் தத்துவனே மதி அணிந்த சடை முடி எம் இறைவா
தேன் கேட்கும் மொழி மங்கை ஒரு பங்கில் உடையாய் சிவனே எம் பெருமானே தேவர் பெருமானே
வான் கேட்கும் புகழ்த் தில்லை மன்றில் நடம் புரிவாய் மணி மிடற்றுப் பெரும் கருணை வள்ளல் என் கண்மணியே.

#3049
ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய் ஆனந்த நடம் புரியும் ஆனந்த அமுதே
வான் அந்தம் முதல் எல்லா அந்தமும் கண்டு அறிந்தோர் மதிக்கின்ற பொருளே வெண் மதி முடிச் செங்கனியே
ஊனம் தங்கிய மாயை உடலினிடத்து இருந்தும் ஊனம் இலாது இருக்கின்ற உளவு அருளிச் செய்தாய்
நான் அந்த உளவு கண்டு நடத்துகின்ற வகையும் நல்லவனே நீ மகிழ்ந்து சொல்ல வருவாயே.

#3050
ஆரணமும் ஆகமமும் எது துணிந்தது அதுவே அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டம் என எனக்குக்
காரணமும் காரியமும் புலப்படவே தெரித்தாய் கண்_நுதலே இங்கு இதற்குக் கைம்மாறு ஒன்று அறியேன்
பூரண நின் அடித் தொண்டு புரிகின்ற சிறியேன் போற்றி சிவ போற்றி எனப் போற்றி மகிழ்கின்றேன்
நாரண நான்முகன் முதலோர் காண்ப அரும் அ நடத்தை நாய்_அடியேன் இதயத்தில் நவிற்றி அருள்வாயே.

#3051
இறைவ நினது அருளாலே எனைக் கண்டுகொண்டேன் எனக்குள் உனைக் கண்டேன் பின் இருவரும் ஒன்றாக
உறைவது கண்டு அதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும் உளவு அறியேன் அ உளவு ஒன்று உரைத்து அருளல் வேண்டும்
மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே
குறைவது_இலாக் குளிர் மதியே சிவகாமவல்லிக் கொழுந்து படர்ந்து ஓங்குகின்ற குண நிமல_குன்றே.

#3052
சத்திய மெய் அறிவு இன்ப வடிவு ஆகிப் பொதுவில் தனி நடம் செய்து அருளுகின்ற சற்குருவே எனக்குப்
புத்தியொடு சித்தியும் நல் அறிவும் அளித்து அழியாப் புனித நிலை-தனில் இருக்கப் புரிந்த பரம் பொருளே
பத்தி அறியாச் சிறியேன் மயக்கம் இன்னும் தவிர்த்துப் பரம சுக மயம் ஆக்கிப் படிற்று உளத்தைப் போக்கித்
தத்துவ நீ நான் என்னும் போதம்-அது நீக்கித் தனித்த சுகாதீதமும் நீ தந்து அருள்க மகிழ்ந்தே.

#3053
ஏதும் அறியாது இருளில் இருந்த சிறியேனை எடுத்து விடுத்து அறிவு சிறிது ஏய்ந்திடவும் புரிந்து
ஓது மறை முதல் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டித்
தீது செறி சமய நெறி செல்லுதலைத் தவிர்த்துத் திரு_அருள் மெய்ப் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும்
போது மயங்கேல் மகனே என்று மயக்கு எல்லாம் போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே.

#3054
முன் அறியேன் பின் அறியேன் முடிபு-அது ஒன்றும் அறியேன் முன்னியும் முன்னாதும் இங்கே மொழிந்த மொழி முழுதும்
பல் நிலையில் செறிகின்றோர் பலரும் மனம் உவப்பப் பழுதுபடா வண்ணம் அருள் பரிந்து அளித்த பதியே
தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப் பேர்_ஒளியே தனி மன்றுள் நடம் புரியும் சத்திய தற்பரமே
இ நிலையில் இன்னும் என்றன் மயக்கம் எலாம் தவிர்த்தே எனை அடிமைகொளல் வேண்டும் இது சமயம் காணே.

#3055
ஐயறிவில் சிறிதும் அறிந்து அனுபவிக்கக் தெரியாது அழுது களித்து ஆடுகின்ற அ பருவத்து எளியேன்
மெய்_அறிவில் சிறந்தவரும் களிக்க உனைப் பாடி விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ
பொய்_அறிவில் புலை மனத்துக் கொடியேன் முன்_பிறப்பில் புரிந்த தவம் யாதது அனைப் புகன்று அருள வேண்டும்
துய் அறிவுக்கு அறிவு ஆகி மணி மன்றில் நடம் செய் சுத்த பரிபூரணமாம் சுக ரூபப் பொருளே.

#3056
அருள் நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே அற்புதப் பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே
தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே செங்கனியே மதி அணிந்த செஞ்சடை எம் பெருமான்
மருள் நிறைந்த மனக் கொடியேன் வஞ்சம் எலாம் கண்டு மகிழ்ந்து இனிய வாழ்வு அளித்த மா கருணைக் கடலே
இருள் நிறைந்த மயக்கம் இன்னும் தீர்த்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே.

#3057
மன்னிய பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் மா மணியே என் இரு கண் வயங்கும் ஒளி மணியே
தன் இயல்பின் நிறைந்து அருளும் சத்துவ பூரணமே தற்பரமே சிற்பரமே தத்துவப் பேர்_ஒளியே
அன்னியம் இல்லாத சுத்த அத்துவித நிலையே ஆதி அந்தம் ஏதும் இன்றி அமர்ந்த பரம் பொருளே
என் இயல்பின் எனக்கு அருளி மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை ஆண்டுகொளல் வேண்டும் இது தருணம் காணே.

#3058
பூத நிலை முதல் பரம நாத நிலை அளவும் போந்தவற்றின் இயற்கை முதல் புணர்ப்பு எல்லாம் விளங்க
வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே
போத நிலையாய் அதுவும் கடந்த இன்ப நிலையாய்ப் பொதுவினில் மெய் அறிவு இன்ப நடம் புரியும் பொருளே
ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்தே எனைக் காத்தல் வேண்டுகின்றேன் இது தருணம் காணே.

#3059
செவ் வண்ணத் திரு_மேனி கொண்டு ஒரு பால் பசந்து திகழ் படிக வண்ணமொடு தித்திக்கும் கனியே
இவ்வண்ணம் என மறைக்கும் எட்டா மெய்ப்பொருளே என் உயிரே என் உயிர்க்குள் இருந்து அருளும் பதியே
அ வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடம் செய் ஆர்_அமுதே அடியேன் இங்கு அகம் மகிழ்ந்து புரிதல்
எவ்வண்ணம் அது வண்ணம் இசைத்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே.

@2. அருட்பிரகாச மாலை

#3060
உலகம் எலாம் உதிக்கின்ற ஒளி நிலை மெய் இன்பமுறுகின்ற வெளி நிலை என்று உபய நிலை ஆகி
இலகிய நின் சேவடிகள் வருந்தியிட நடந்தே இரவில் எளியேன் இருக்கும் இடம் தேடி அடைந்து
கலகம் இலாத் தெருக் கதவம் காப்பு அவிழ்க்கப் புரிந்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்
அலகு_இல் அருள்_கடலாம் உன் பெருமையை என் என்பேன் ஆனந்தவல்லி மகிழ் அருள் நட நாயகனே.

#3061
ஒளி வண்ணம் வெளி வண்ணம் என்று அனந்த வேத உச்சி எலாம் மெச்சுகின்ற உச்ச மலர்_அடிகள்
அளி வண்ணம் வருந்தியிட நடந்து அருளி அடியேன் அடைந்த இடத்து அடைந்து கதவம் திறக்கப் புரிந்து
களி வண்ணம் எனை அழைத்து என் கையில் வண்ணம் அளித்த கருணை வண்ணம்-தனை வியந்து கருதும் வண்ணம் அறியேன்
தெளி வண்ணம் உடையர் அன்புசெய்யும் வண்ணம் பொதுவில் தெய்வ நடம் புரிகின்ற சைவ பரம் பொருளே.

#3062
திருமாலும் உரு மாறிச் சிரஞ்சீவி ஆகித் தேடியும் கண்டு அறியாத சேவடிகள் வருந்த
வரும் மாலை மண் உறுத்தப் பெயர்த்து நடந்து அருளி வஞ்சகனேன் இருக்கும் இடம் வலிந்து இரவில் தேடித்
தெரு மாலைக் கதவு-தனைத் திறப்பித்து நின்று செவ் வண்ணத்திடைப் பசந்த திரு_மேனி காட்டிக்
குரு மாலைப் பெரு வண்ணக் கொழுந்து ஒன்று கொடுத்தாய் குரு மணி நின் திரு_அருளைக் குறித்து மகிழ்ந்தனனே.

#3063
அன்று ஒரு நாள் இரவிடை வந்து அணிக் கதவம் திறப்பித்து அருள் மலர்ச் சேவடி வாயிற்படிப் புறத்தும் அகத்தும்
மன்ற வைத்துக்கொண்டு என்னை வரவழைத்து மகனே வருந்தாதே இங்கு இதனை வாங்கிக்கொள் என்ன
ஒன்று சிறியேன் மறுப்ப மறித்தும் வலிந்து எனது ஒரு கை-தனில் கொடுத்து இங்கே உறைதி என்று மறைந்தாய்
இன்று அது-தான் அனுபவத்துக்கு இசைந்தது நாய்_அடியேன் என்ன தவம் புரிந்தேனோ இனித் துயர் ஒன்று இலனே.

#3064
இரவில் அடி வருந்த நடந்து எழில் கதவம் திறப்பித்து எனை அழைத்து மகனே நீ இ உலகில் சிறிதும்
கரவிடை நெஞ்சு அயர்ந்து இளைத்துக் கலங்காதே இதனைக் களிப்பொடு வாங்கு என எனது கை-தனிலே கொடுத்து
உரவிடை இங்கு உறைக மகிழ்ந்து எனத் திருவாய்_மலர்ந்த உன்னுடைய பெரும் கருணைக்கு ஒப்பு இலை என் புகல்வேன்
அரவு இடையில் அசைந்து ஆட அம்பலத்தின் நடுவே ஆனந்தத் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே.

#3065
இயங்காத இரவிடை அன்று ஒரு நாள் வந்து எளியேன் இருக்கும் இடம்-தனைத் தேடிக் கதவு திறப்பித்துக்
கயங்காத மலர்_அடிகள் கவின் வாயிற்படியின் கடைப் புறத்தும் அகத்தும் வைத்துக் களித்து எனை அங்கு அழைத்து
மயங்காதே இங்கு இதனை வாங்கிக்கொண்டு உலகில் மகனே நீ விளையாடி வாழ்க என உரைத்தாய்
புயங்கா நின் அருள் அருமை அறியாது திரிந்தேன் பொய் அடியேன் அறிந்து இன்று பூரித்தேன் உளமே.

#3066
ஒரு நாள் அன்று இரவில் அடி வருந்த நடந்து அடியேன் உற்ற இடம்-தனைத் தேடிக் கதவு திறப்பித்து
மரு நாள மலர்_அடி ஒன்று உள்ளகத்தே பெயர்த்துவைத்து மகிழ்ந்து எனை அழைத்து வாங்கு இதனை என்று
தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய்
வரும் நாளில் அதன் அருமை அறிந்து மகிழ்கின்றேன் மணி மன்றுள் நடம் புரியும் மாணிக்க மணியே.

#3067
நெடுமாலும் பன்றி என நெடும் காலம் விரைந்து நேடியும் கண்டு அறியாது நீடிய பூம் பதங்கள்
தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டித் தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனைத் தேடித் தொடர்ந்து
கடும் மாலை நடு_இரவில் கதவு திறப்பித்துக் கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்துக்
கொடும் மாலை விடுத்து மகிழ் எனத் திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே.

#3068
மறை முடிக்கு மணி ஆகி வயங்கிய சேவடிகள் மண் மீது பட நடந்து வந்து அருளி அடியேன்
குறை முடிக்கும்படிக் கதவம் திறப்பித்து நின்று கூவி எனை அழைத்து ஒன்று கொடுத்து அருளிச் செய்தாய்
கறை முடிக்கும் களத்து அரசே கருணை நெடும் கடலே கண் ஓங்கும் ஒளியே சிற்கன வெளிக்குள் வெளியே
பிறை முடிக்கும் சடைக் கடவுள் பெரும் தருவே குருவே பெரிய மன்றுள் நடம் புரியும் பெரிய பரம் பொருளே.

#3069
அன்று அகத்தே அடி வருந்த நடந்து என்னை அழைத்து இங்கு அஞ்சாதே மகனே என்று அளித்தனை ஒன்று அதனைத்
துன்றகத்துச் சிறியேன் நான் அறியாது வறிதே சுழன்றது கண்டு இரங்கி மிகத் துணிந்து மகிழ்விப்பான்
இன்று அகத்தே புகுந்து அருளி எனக்கு அதனைத் தெரிவித்து இன்புறச்செய்து அருளிய நின் இரக்கம் எவர்க்கு உளதோ
மன்றகத்து நடம் புரிந்து வயங்கும் ஒரு குருவே வல்லவர் எல்லாம் வணங்கும் நல்ல பரம் பொருளே.

#3070
அன்பர் மன_கோயிலிலே அமர்ந்து அருளி விளங்கும் அரும் பொருளாம் உனது மலர்_அடி வருந்த நடந்து
வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த மனைக் கதவு திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்துத்
துன்பம் எலாம் நீங்குக இங்கு இது-தனை வாங்குக நீ தொழும்பன் என்ற என்னுடைய துரையே நின் அருளை
என் பகர்வேன் என் வியப்பேன் எங்ஙனம் நான் மறப்பேன் என் உயிருக்கு உயிர் ஆகி இலங்கிய சற்குருவே.

#3071
ஞால நிலை அடி வருந்த நடந்து அருளி அடியேன் நண்ணும் இடம்-தனில் கதவம் நன்று திறப்பித்துக்
கால நிலை கருதி மனம் கலங்குகின்ற மகனே கலங்காதே என்று எனது கையில் ஒன்று கொடுத்துச்
சீல நிலை உற வாழ்க எனத் திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமைத் திரு_அருள் என் என்பேன்
ஆல நிலை மணி கண்டத்து அரும் பெரும் சீர் ஒளியே அம்பலத்தில் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே.

#3072
இருள் நிறைந்த இரவில் அடி வருந்த நடந்து அடியேன் இருக்கும் இடம்-தனைத் தேடிக் கதவு திறப்பித்து
மருள் நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே மயங்காதே என்று என்னை வரவழைத்துப் புகன்று
தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்துத் திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன்
அருள் நிறைந்த மெய்ப்பொருளே அடி முடி ஒன்று இல்லா ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே.

#3073
கல் மயமும் கனிவிக்கும் திரு_அடிகள் வருந்தக் கடைப் புலையேன் இருக்கும் இடம்-தனைத் தேடி நடந்து
தொல் மயமாம் இரவினிடைக் கதவு திறப்பித்துத் துணிந்து அழைத்து என் கை-தனிலே தூய ஒன்றை அளித்து
வன் மயம் இல்லா மனத்தால் வாழ்க என உரைத்த மா மணி நின் திரு_அருளின் வண்மையை என் என்பேன்
தன்மயமே சின்மயப் பொன்_அம்பலத்தே இன்பத் தனி நடம் செய்து அருளுகின்ற தத்துவப் பேர்_ஒளியே.

#3074
பிரணவத்தின் அடி முடியின் நடுவினும் நின்று ஓங்கும் பெரும் கருணைத் திரு_அடிகள் பெயர்ந்து வருந்திடவே
கரணமுற்று நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடிக் கதவு திறப்பித்து அருளிக் கடையேனை அழைத்துச்
சரணமுற்று வருந்திய என் மகனே இங்கு இதனைத் தாங்குக என்று ஒன்று எனது தடம் கை-தனில் கொடுத்து
மரணம் அற்று வாழ்க எனத் திரு_வார்த்தை அளித்தாய் மன்று_உடையாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே.

#3075
ஓங்காரத்து உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய் உபய வடிவு ஆகிய நின் அபய பதம் வருந்த
ஈங்கு ஆர நடந்து இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு என்னை வலிந்து அழைத்துப்
பாங்காரும் வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்துப் பண்பொடு வாழ்ந்திடுக எனப் பணித்த பரம் பொருளே
ஆங்கார வண்ணம் அகன்றதை அறிந்து மகிழ்ந்தே அனுபவிக்கின்றேன் பொதுவில் ஆடுகின்ற அரசே.

#3076
அரி பிரமாதியர் எல்லாம் அறிந்து அணுக ஒண்ணா அரும் பெரும் சீர் அடி_மலர்கள் அன்று ஒரு நாள் வருந்தக்
கரி இரவில் நடந்து அருளி யான் இருக்கும் இடத்தே கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுத்து
உரிமையொடு வாழ்க என உரைத்ததுவும் அன்றி உவந்து இன்றை இரவினும் வந்து உணர்த்தினை என் மீது
பிரியம் உனக்கு இருந்த வண்ணம் என் புகல்வேன் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிழை பொறுத்த குருவே.

#3077
காரணன் என்று உரைக்கின்ற நாரணனும் அயனும் கனவிடத்தும் காண்ப அரிய கழல் அடிகள் வருந்த
ஊர் அணவி நடந்து எளியேன் உறையும் இடம் தேடி உவந்து எனது கை-தனிலே ஒன்று கொடுத்து இங்கே
ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன்
பார் அணவி அன்பர் எலாம் பரிந்து புகழ்ந்து ஏத்தப் பணி அணிந்து மணி மன்றுள் அணி நடம் செய் பதியே.

#3078
துரிய வெளி-தனில் பரம நாத அணை நடுவே சுயம் சுடரில் துலங்குகின்ற துணை அடிகள் வருந்தப்
பிரியமொடு நடந்து எளியேன் இருக்கும் இடம் தேடிப் பெரும் கதவம் திறப்பித்துப் பேயன் எனை அழைத்து
உரிய பொருள் ஒன்று எனது கையில் அளித்து இங்கே உறைக மகிழ்ந்து என உரைத்த உத்தம நின் அருளைப்
பெரிய பொருள் எவற்றினுக்கும் பெரிய பொருள் என்றே பின்னர் அறிந்தேன் இதற்கு முன்னர் அறியேனே.

#3079
நீள் ஆதிமூலம் என நின்றவனும் நெடுநாள் நேடியும் கண்டு அறியாத நின் அடிகள் வருந்த
ஆளா நான் இருக்கும் இடம்-அது தேடி நடந்தே அணிக் கதவம் திறப்பித்து உள்ளன்பொடு எனை அழைத்து
வாளா நீ மயங்காதே மகனே இங்கு இதனை வாங்கிக்கொள் என்று எனது மலர் கை-தனில் கொடுத்தாய்
கேளாய் என் உயிர்த் துணையாய்க் கிளர் மன்றில் வேத கீத நடம் புரிகின்ற நாத முடிப் பொருளே.

#3080
சத்த உருவாம் மறைப் பொன் சிலம்பு அணிந்து அம்பலத்தே தனி நடம் செய்து அருளும் அடி_தாமரைகள் வருந்த
சித்த உரு ஆகி இங்கே எனைத் தேடி நடந்து தெருக் கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்து
மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக எனத் திருவாய்_மலர்ந்த குண_மலையே
சுத்த உருவாய்ச் சுத்த அரு ஆகி அழியாச் சுத்த அரு_உரு ஆன சுத்த பரம் பொருளே.

#3081
பல கோடி மறைகள் எலாம் உலகு ஓடி மயங்கப் பர நாத முடி நடிக்கும் பாத_மலர் வருந்தச்
சில கோடி நடந்து எளியேன் இருக்கும் இடத்து அணைந்து தெருக் கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்தே
அல கோடி வருந்தேல் இங்கு அமர்க எனத் திருவாய்_அலர்ந்த அருள் குருவே பொன்_அம்பலத்து எம் அரசே
விலகு ஓடி எனத் துயர்கள் ஒன்றொடொன்று புகன்று விரைந்து ஓடச்செய்தனை இ விளைவு அறியேன் வியப்பே.

#3082
செய் வகை ஒன்று அறியாது திகைப்பினொடே இருந்தேன் திடுக்கென இங்கு எழுந்திருப்பத் தெருக் கதவம் திறப்பித்து
உய் வகை ஒன்று எனது கரத்து உவந்து அளித்து மகனே உய்க மகிழ்ந்து இன்று முதல் ஒன்றும் அஞ்சேல் என்று
மெய் வகையில் புகன்ற பின்னும் அஞ்சியிருந்தேனை மீட்டும் இன்றை இரவில் உணர்வூட்டி அச்சம் தவிர்த்தாய்
ஐவகையாய் நின்று மன்றில் ஆடுகின்ற அரசே அற்புதத் தாள்_மலர் வருத்தம் அடைந்தன என் பொருட்டே.

#3083
உள் இரவி மதியாய் நின்று உலகம் எலாம் நடத்தும் உபய வகையாகிய நின் அபய பதம் வருந்த
நள்ளிரவின் மிக நடந்து நான் இருக்கும் இடத்தே நடைக் கதவம் திறப்பித்து நடைக் கடையில் அழைத்து
எள் இரவு நினைந்து மயக்கு எய்தியிடேல் மகனே என்று என் கை-தனில் ஒன்றை ஈந்து மகிழ்வித்தாய்
அள் இரவு போல் மிடற்றில் அழகு கிளர்ந்து ஆட அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவள_குன்றே.

#3084
விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய்த் துரிய நிலத்தே விளையும் அனுபவ மயமாம் மெல் அடிகள் வருந்தத்
துளங்கு சிறியேன் இருக்கும் இடம் தேடி நடந்து தொடர்க் கதவம் திறப்பித்துத் தொழும்பன் எனை அழைத்துக்
களங்கம்_இலா ஒன்று எனது கை-தனிலே கொடுத்துக் களித்து உறைக எனத் திரு_வாக்கு அளித்த அருள்_கடலே
குளம் கொள் விழிப் பெருந்தகையே மணி மன்றில் நடம் செய் குரு மணியே அன்பர் மன_கோயிலில் வாழ் குருவே.

#3085
வேத முடி மேல் சுடராய் ஆகமத்தின் முடி மேல் விளங்கும் ஒளி ஆகிய நின் மெல் அடிகள் வருந்தப்
பூத முடி மேல் நடந்து நான் இருக்கும் இடத்தே போந்து இரவில் கதவு-தனைக் காப்பு அவிழ்க்கப் புரிந்து
நாத முடி மேல் விளங்குந் திரு_மேனி காட்டி நல் பொருள் என் கை-தனிலே நல்கிய நின் பெருமை
ஓத முடியாது எனில் என் புகல்வேன் அம்பலத்தே உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே.

#3086
தங்கு சராசரம் முழுதும் அளித்து அருளி நடத்தும் தாள்_மலர்கள் மிக வருந்தத் தனித்து நடந்து ஒரு நாள்
கங்குலில் யான் இருக்கும் மனைக் கதவு திறப்பித்துக் கையில் ஒன்று கொடுத்த உன்றன் கருணையை என் என்பேன்
இங்கு சிறியேன் பிழைகள் எத்தனையும் பொறுத்த என் குருவே என் உயிருக்கு இன்பு அருளும் பொருளே
திங்கள் அணி சடைப் பவளச் செழும் சோதி மலையே சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே.

#3087
மாமாயை அசைந்திடச் சிற்றம்பலத்தே நடித்தும் வருந்தாத மலர்_அடிகள் வருந்த நடந்து அருளி
ஆமாறு அன்று இரவினிடை அணிக் கதவம் திறப்பித்து அங்கையில் ஒன்று அளித்து இனி நீ அஞ்சேல் என்று உவந்து
தேமாவின் பழம் பிழிந்து வடித்து நறு நெய்யும் தேனும் ஒக்கக் கலந்தது எனத் திரு_வார்த்தை அளித்தாய்
கோமான் நின் அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் கூத்தாடி எங்களை ஆட்கொண்ட பரம் பொருளே.

#3088
படைப்பவனும் காப்பவனும் பற்பல நாள் முயன்று பார்க்க விரும்பினும் கிடையாப் பாத_மலர் வருந்த
நடைப் புலையேன் பொருட்டாக நடந்து இரவில் கதவம் நன்கு திறப்பித்து ஒன்று நல்கியதும் அன்றி
இடைப்படு நாளினும் வந்து என் இதய மயக்கு எல்லாம் இரிந்திடச்செய்தனை உன்றன் இன் அருள் என் என்பேன்
தடைப்படுமாறு இல்லாத பேர்_இன்பப் பெருக்கே தனி மன்றில் ஆனந்தத் தாண்டவம் செய் அரசே.

#3089
முன்னை மறை முடி மணியாம் அடி_மலர்கள் வருந்த முழுதிரவில் நடந்து எளியேன் முயங்கும் இடத்து அடைந்து
அன்னையினும் பரிந்து அருளி அணிக் கதவம் திறப்பித்து அங்கையில் ஒன்று அளித்து எனையும் அன்பினொடு நோக்கி
என்னை இனி மயங்காதே என் மகனே மகிழ்வோடு இருத்தி என உரைத்தாய் நின் இன் அருள் என் என்பேன்
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே.

#3090
மீதானத்து அருள் ஒளியாய் விளங்கிய நின் அடிகள் மிக வருந்த நடந்து இரவில் வினையேன்-தன் பொருட்டாச்
சீதானக் கதவு-தனைத் திறப்பித்துச் சிறியேன் செங்கையில் ஒன்று அளித்து இனி நீ சிறிதும் அஞ்சேல் இங்கு
மாதானத்தவர் சூழ வாழ்க என உரைத்தாய் மா மணி நின் திரு_அருளின் வண்மை எவர்க்கு உளதே
ஓதானத்தவர்-தமக்கும் உணர்வு அரிதாம் பொருளே ஓங்கிய சிற்றம்பலத்தே ஒளி நடம் செய் பதியே.

#3091
வேதாந்த சித்தாந்தம் என்னும் அந்தம் இரண்டும் விளங்க அமர்ந்து அருளிய நின் மெல் அடிகள் வருந்த
நாதாந்த வெளி-தனிலே நடந்து அருளும் அது போல் நடந்து அருளிக் கடை நாயேன் நண்ணும் இடத்து அடைந்து
போதாந்தம் மிசை விளக்கும் திரு_மேனி காட்டிப் புலையேன் கையிடத்து ஒன்று பொருந்தவைத்த பொருளே
சூதாந்தம் அனைத்தினுக்கும் அப்பாற்பட்டு இருந்த துரிய வெளிக்கே விளங்கும் பெரிய அருள்_குருவே.

#3092
ஒருமையிலே இருமை என உருக் காட்டிப் பொதுவில் ஒளி நடம் செய்து அருளுகின்ற உபய பதம் வருந்த
அருமையிலே நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்தே அணிக் கதவம் திறப்பித்து என் அங்கையில் ஒன்று அளித்துப்
பெருமையிலே பிறங்குக நீ எனத் திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன்
கருமையிலே நெடும் காலம் கலந்து கலக்குற்ற கலக்கம் எலாம் தவிர்த்து எம்மைக் காத்து அருளும் பதியே.

#3093
விந்து நிலை நாத நிலை இரு நிலைக்கும் அரசாய் விளங்கிய நின் சேவடிகள் மிக வருந்த நடந்து
வந்து நிலைபெறச் சிறியேன் இருக்கும் இடத்து அடைந்து மணிக் கதவம் திறப்பித்து மகனே என்று அழைத்து
இந்து நிலை முடி முதலாம் திரு_உருவம் காட்டி என் கையில் ஒன்று அளித்து இன்பம் எய்துக என்று உரைத்தாய்
முந்து நிலைச் சிறியேன் செய் தவம் அறியேன் பொதுவில் முத்தர் மனம் தித்திக்க நிருத்தமிடும் பொருளே.

#3094
நவ நிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய் நண்ணிய நின் பொன் அடிகள் நடந்து வருந்திடவே
அவ நிலைக்கும் கடைப் புலையேன் இருக்கும் இடத்து இரவில் அணைந்து அருளிக் கதவு திறந்து அடியேனை அழைத்தே
சிவ நிலைக்கும்படி எனது செங்கையில் ஒன்று அளித்துச் சித்தம் மகிழ்ந்து உறைக எனத் திரு_பவளம் திறந்தாய்
பவ நிலைக்கும் கடை நாயேன் பயின்ற தவம் அறியேன் பரம்பர மா மன்றில் நடம் பயின்ற பசுபதியே.

#3095
புண்ணியர்-தம் மன_கோயில் புகுந்து அமர்ந்து விளங்கும் பொன்_மலர்ச் சேவடி வருத்தம் பொருந்த நடந்து எளியேன்
நண்ணிய ஓர் இடத்து அடைந்து கதவு திறப்பித்து நல் பொருள் ஒன்று என் கை-தனில் நல்கிய நின் பெருமை
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன்
தண்ணிய வெண் மதி அணிந்த செம் சடை நின்று ஆடத் தனித்த மன்றில் ஆனந்தத் தாண்டவம் செய் அரசே.

#3096
மூவருக்கும் எட்டாது மூத்த திரு அடிகள் முழுதிரவில் வருந்தியிட முயங்கி நடந்து அருளி
யாவருக்கும் இழிந்தேன் இங்கு இருக்கும் இடத்து அடைந்தே எழில் கதவம் திறப்பித்து உள் எனை அழைத்து மகனே
தேவருக்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே சித்தம் மகிழ்ந்து அளித்தனை நின் திரு_அருள் என் என்பேன்
பூ வருக்கும் பொழில் தில்லை அம்பலத்தே நடனம் புரிந்து உயிருக்கு இன்பு அருளும் பூரண வான் பொருளே.

#3097
கற்றவர்-தம் கருத்தினில் முக்கனிரசம் போல் இனிக்கும் கழல் அடிகள் வருந்தியிடக் கடிது நடந்து இரவில்
மற்றவர் காணாது எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மனைக் கதவு திறப்பித்து வலிந்து எனை அங்கு அழைத்து
நல் தவர்க்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே நல்கிய நின் பெரும் கருணை நட்பினை என் என்பேன்
அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடம் செய் அருள் குருவே சச்சிதானந்த பரம் பொருளே.

#3098
கருணை வடிவாய் அடியார் உள்ளகத்தே அமர்ந்த கழல் அடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து
மருள் நிறையும் சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து மணிக் கதவம் திறப்பித்து மகிழ்ந்து அழைத்து மகனே
பொருள் நிறையும் இதனை இங்கே வாங்கு என என் கரத்தே பொருந்த அளித்து அருளிய நின் பொன் அருள் என் என்பேன்
அருள் நிறையும் பெரும் கடலே அம்பலத்தில் பரமானந்த உரு ஆகி நடம் ஆடுகின்ற அரசே.

#3099
அருள் உருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள் அசைந்து வருந்திட இரவில் யான் இருக்கும் இடத்தே
தெருள் உருவில் நடந்து தெருக் கதவு திறப்பித்துச் சிறியேனை அழைத்து எனது செங்கையில் ஒன்று அளித்து
மருள் உருவின் மற்றவர் போல் மயங்கேல் என் மகனே மகிழ்ந்து திரு_அருள் வழியே வாழ்க என உரைத்தாய்
இருள் உருவின் மனக் கொடியேன் யாது தவம் புரிந்தேன் எல்லாம்_வல்லவன் ஆகி இருந்த பசுபதியே.

#3100
முழுதும் உணர்ந்தவர் முடி மேல் முடிக்கு மணி ஆகி முப்பொருளும் ஆகிய நின் ஒப்பில் அடி_மலர்கள்
கழுதும் உணர்வு அரிய நடுக் கங்குலிலே வருந்தக் கடிது நடந்து அடி நாயேன் கருதும் இடத்து அடைந்து
பழுதுபடா வண்ணம் எனைப் பரிந்து அழைத்து மகனே பணிந்து இதனை வாங்கு என என் பாணியுறக் கொடுத்துத்
தொழுது எனைப் பாடுக என்று சொன்ன பசுபதி நின் தூய அருள் பெருமையை என் சொல்லி வியக்கேனே.

#3101
மால் நினைத்த அளவு எல்லாம் கடந்து அப்பால் வயங்கும் மலர்_அடிகள் வருந்தியிட மகிழ்ந்து நடந்து அருளிப்
பால் நினைத்த சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து பணைக் கதவம் திறப்பித்துப் பரிந்து அழைத்து மகனே
நீ நினைத்த வண்ணம் எலாம் கைகூடும் இது ஓர் நின்மலம் என்று என் கை-தனில் நேர்ந்து அளித்தாய் நினக்கு
நான் நினைத்த நன்றி ஒன்றும் இலையே நின் அருளை நாய்_அடியேன் என் புகல்வேன் நடராஜ மணியே.

#3102
சூரிய சந்திரர் எல்லாம் தோன்றாமை விளங்கும் சுயம் சோதியாகும் அடித் துணை வருந்த நடந்து
கூரிய மெய் அறிவு என்பது ஒருசிறிதும் குறியாக் கொடியேன் நான் இருக்கும் இடம் குறித்து இரவில் நடந்து
காரியம் உண்டு எனக் கூவிக் கதவு திறப்பித்துக் கையில் ஒன்றை அளித்தனை உன் கருணையை என் என்பேன்
ஆரியர்-தம் அளவு கடந்து அப்பாலும் கடந்த ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே.

#3103
தற்போதம் தோன்றாத தலம்-தனிலே தோன்றும் தாள்_மலர்கள் வருந்தியிடத் தனித்து நடந்து அருளி
எல் போது அங்கு அகன்று இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து இ எளியேனை அழைத்துப்
பொன் போத வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்துப் புலை ஒழிந்த நிலை-தனிலே பொருந்துக என்று உரைத்தாய்
சிற்போத மயமான திரு_மணி மன்றிடத்தே சிவ மயமாம் அனுபோகத் திரு_நடம் செய் அரசே.

#3104
கற்பனைகள் எல்லாம் போய்க் கரைந்த தலம்-தனிலே கரையாது நிறைந்த திருக் கழல் அடிகள் வருந்த
வெற்பு அனையும் இன்றி ஒரு தனியாக நடந்து விரைந்து இரவில் கதவு-தனைக் காப்பு அவிழ்க்கப் புரிந்து
அற்பனை ஓர் பொருளாக அழைத்து அருளி அடியேன் அங்கையில் ஒன்று அளித்தனை நின் அருளினை என் புகல்வேன்
நல் பனவர் துதிக்க மணி மன்றகத்தே இன்ப நடம் புரியும் பெரும் கருணை_நாயக மா மணியே.

#3105
ஒன்று ஆகி இரண்டு ஆகி ஒன்று_இரண்டின் நடுவே உற்ற அனுபவ மயமாய் ஒளிர் அடிகள் வருந்த
அன்று ஆர நடந்து இரவில் யான் உறையும் இடத்தே அடைந்து கதவம் திறப்பித்து அன்பொடு எனை அழைத்து
நன்று ஆர எனது கரத்து ஒன்று அருளி இங்கே நண்ணி நீ எண்ணியவா நடத்துக என்று உரைத்தாய்
இன்று ஆர வந்து அதனை உணர்த்தினை நின் அருளை என் புகல்வேன் மணி மன்றில் இலங்கிய சற்குருவே.

#3106
எங்கும் விளங்குவது ஆகி இன்ப மயம் ஆகி என் உணர்வுக்கு உணர்வு தரும் இணை அடிகள் வருந்த
பொங்கும் இரவிடை நடந்து நான் உறையும் இடத்தே போந்து மணிக் கதவு-தனைக் காப்பு அவிழ்க்கப் புரிந்து
தங்கும் அடியேனை அழைத்து அங்கையில் ஒன்று அளித்தே தயவினொடு வாழ்க எனத் தனித் திருவாய்_மலர்ந்தாய்
இங்கு நினது அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என்னுடை நாயகனே.

#3107
சித்து எவையும் வியத்தியுறும் சுத்த சிவ சித்தாய்ச் சித்தம்-அதில் தித்திக்கும் திரு_அடிகள் வருந்த
மத்த இரவிடை நடந்து வந்து அருளி அடியேன் வாழும் மனைத் தெருக் கதவு திறப்பித்து அங்கு அடைந்து
அத் தகவின் எனை அழைத்து என் அங்கையில் ஒன்று அளித்தாய் அன்னையினும் அன்பு_உடையாய் நின் அருள் என் என்பேன்
முத்தர் குழுக் காண மன்றில் இன்ப நடம் புரியும் முக்கண் உடை ஆனந்தச் செக்கர் மணி_மலையே.

#3108
சகலமொடு கேவலமும் தாக்காத இடத்தே தற்பரமாய் விளங்குகின்ற தாள்_மலர்கள் வருந்தப்
பகல் ஒழிய நடு_இரவில் நடந்து அருளி அடியேன் பரியும் இடத்து அடைந்து மணிக் கதவு திறப்பித்துப்
புகல் உறுக வருக என அழைத்து எனது கரத்தே பொருந்த ஒன்று கொடுத்தனை நின் பொன் அருள் என் என்பேன்
உகல் ஒழியப் பெரும் தவர்கள் உற்று மகிழ்ந்து ஏத்த உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே.

#3109
உள் உருகும் தருணத்தே ஒளி காட்டி விளங்கும் உயர் மலர்ச் சேவடி வருந்த உவந்து நடந்து அருளிக்
கள்ள மனத்தேன் இருக்கும் இடம் தேடி அடைந்து கதவு திறப்பித்து அருளிக் களித்து எனை அங்கு அழைத்து
நள் உலகில் உனக்கு இது நாம் நல்கினம் நீ மகிழ்ந்து நாளும் உயிர்க்கு இதம் புரிந்து நடத்தி என உரைத்தாய்
தெள்ளும் அமுதாய் அன்பர் சித்தம் எலாம் இனிக்கும் செழும் கனியே மணி மன்றில் திரு_நட நாயகனே.

#3110
தன் உருவம் காட்டாத மல இரவு விடியும் தருணத்தே உதயம்செய் தாள்_மலர்கள் வருந்தப்
பொன் உருவத் திரு_மேனி கொண்டு நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்கப் புரிந்து
தன் உருவம் போன்றது ஒன்று அங்கு எனை அழைத்து என் கரத்தே தந்து அருளி மகிழ்ந்து இங்கே தங்குக என்று உரைத்தாய்
என் உருவம் எனக்கு உணர்த்தி அருளிய நின் பெருமை என் உரைப்பேன் மணி மன்றில் இன்ப நடத்து அரசே.

#3111
அண்ட வகை பிண்ட வகை அனைத்தும் உதித்து ஒடுங்கும் அணி மலர்ச் சேவடி வருத்தம் அடைய நடந்து அருளிக்
கண்டவரும் காணாத நடு_இரவு-தனில் யான் கருதும் இடத்து அடைந்து கதவம் திறக்கப் புரிந்து
தொண்டன் என எனையும் அழைத்து என் கையில் ஒன்று அளித்தாய் துரையே நின் அருள் பெருமைத் தொன்மையை என் என்பேன்
உண்டவர்கள் உணும்-தோறும் உவட்டாத அமுதே உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே.

#3112
அறிவு_உடையார் உள்ளகப் போது அலருகின்ற தருணத்து அருள் மணத்தேன் ஆகி உற்ற அடி_இணைகள் வருந்தப்
பிறிவு_உடையேன் இருக்கும் இடம் தேடி நடந்து அடைந்து பெரும் கதவம் திறப்பித்துப் பேயன் எனை அழைத்துச்
செறிவு_உடையாய் இது வாங்கு என்று உதவவும் நான் மறுப்பத் திரும்பவும் என் கை-தனிலே சேர அளித்தனையே
பொறி வறியேன் அளவினில் உன் கருணையை என் என்பேன் பொன் பொதுவில் நடம் புரியும் பூரண வான் பொருளே.

#3113
விடையம் ஒன்றும் காணாத வெளி நடுவே ஒளியாய் விளங்குகின்ற சேவடிகள் மிக வருந்த நடந்து
கடையனையும் குறிக்கொண்டு கருதும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுக்க
இடையின் அது நான் மறுப்ப மறுக்கேல் என் மகனே என்று பின்னும் கொடுத்தாய் நின் இன் அருள் என் என்பேன்
உடைய பரம் பொருளே என் உயிர்த் துணையே பொதுவில் உய்யும் வகை அருள் நடனம் செய்யும் ஒளி மணியே.

#3114
நான் தனிக்கும் தருணத்தே தோன்றுகின்ற துணையாய் நான் தனியா இடத்து எனக்குத் தோன்றாத துணையாய்
ஏன்று அருளும் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி யான் உறையும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து
ஆன்ற எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்க்கு அறிவு_இலியேன் செய்யும் வகை அறியேன் நின் கருணை
ஈன்றவட்கும் இல்லை என நன்கு அறிந்தேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என் உயிர்_நாயகனே.

#3115
அருள் விளங்கும் உள்ளகத்தே அது அதுவாய் விளங்கும் அணி மலர்ச் சேவடி வருத்தம் அடைய நடந்து அருளிப்
பொருள் விளங்கா நடு_இரவில் நான் உறையும் இடத்தே போந்து தெருக் காப்பு அவிழ்க்கப் புரிந்து எனை அங்கு அழைத்துத்
தெருள் விளங்கும் ஒரு பொருள் என் செங்கை-தனில் அளித்தாய் சிவபெருமான் பெரும் கருணைத் திறத்தினை என் என்பேன்
மருள் விளங்கி உணர்ச்சியுறத் திரு_மணி மன்றிடத்தே மன் உயிர்க்கு இன்பு அருள வயங்கு நடத்து அரசே.

#3116
பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும் பாலும் நெய்யும் அளிந்த நறும் பழரசமும் போல
மருவும் உளம் உயிர் உணர்வோடு எல்லாம் தித்திக்க வயங்கும் அடி_இணைகள் மிக வருந்த நடந்து அருளித்
தெரு அடைந்து நான் இருக்கும் மனைக் காப்புத் திறக்கச்செய்து அருளிப் பொருள் ஒன்று என் செங்கை-தனில் அளித்தாய்
திரு_மணி மன்றிடை நடிக்கும் பெருமான் நின் கருணைத் திறத்தினை இச் சிறியேன் நான் செப்புதல் எங்ஙனமே.

#3117
என் அறிவை உண்டு அருளி என்னுடனே கூடி என் இன்பம் எனக்கு அருளி என்னையும் தான் ஆக்கித்
தன் அறிவாய் விளங்குகின்ற பொன் அடிகள் வருந்தத் தனி நடந்து தெருக் கதவம் தாள் திறப்பித்து அருளி
முன்னறிவில் எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்த முன்னவ நின் இன் அருளை என் என யான் மொழிவேன்
மன் அறிவுக்கு அறிவாம் பொன்_அம்பலத்தே இன்ப வடிவு ஆகி நடிக்கின்ற மா கருணை_மலையே.

#3118
பர யோக அனுபவத்தே அகம் புறம் தோன்றாத பரஞ்சோதியாகும் இணைப் பாத_மலர் வருந்த
வர யோகர் வியப்ப அடியேன் இருக்கும் இடத்தே வந்து தெருக் கதவு-தனைக் காப்பு அவிழ்க்கப் புரிந்து
திர யோகர்க்கு அரிது இதனை வாங்குக என்று எனது செங்கை-தனில் அளித்தாய் நின் திரு_அருள் என் என்பேன்
உர யோகர் உளம் போல விளங்கும் மணி மன்றில் உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே.

#3119
சொல் நிறைந்த பொருளும் அதன் இலக்கியமும் ஆகித் துரிய நடு இருந்த அடித் துணை வருந்த நடந்து
கொன் நிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம் கொழும் காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து
என் நிறைந்த ஒரு பொருள் என் கையில் அளித்து அருளி என் மகனே வாழ்க என எழில் திருவாய்_மலர்ந்தாய்
தன் நிறைந்த நின் கருணைத் தன்மையை என் புகல்வேன் தனி மன்றில் ஆனந்தத் தாண்டவம் செய் அரசே.

#3120
முத்தி ஒன்று வியத்தி ஒன்று காண்-மின் என்று ஆகமத்தின் முடிகள் முடித்து உரைக்கின்ற அடிகள் மிக வருந்தப்
பத்தி ஒன்றும் இல்லாத கடைப் புலையேன் பொருட்டாப் படிற்று உளத்தேன் இருக்கும் இடம்-தனைத் தேடி நடந்து
சித்தி ஒன்று திரு_மேனி காட்டி மனைக் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் செங்கையிலே மகிழ்ந்து
சத்தி ஒன்று கொடுத்தாய் நின் தண் அருள் என் என்பேன் தனி மன்றுள் ஆனந்தத் தாண்டவம் செய் அரசே.

#3121
எனக்கு நன்மை தீமை என்பது இரண்டும் ஒத்த இடத்தே இரண்டும் ஒத்துத் தோன்றுகின்ற எழில் பதங்கள் வருந்தத்
தனக்கு நல்ல வண்ணம் ஒன்று தாங்கி நடந்து அருளித் தனித்து இரவில் கடைப் புலையேன் தங்கும் இடத்து அடைந்து
கனக்கும் மனைத் தெருக் கதவம் காப்பு அவிழ்க்கப் புரிந்து களிப்பொடு எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து
உனக்கு இனிய வண்ணம் இது என்று உரைத்து அருளிச் சென்றாய் உடையவ நின் அருள் பெருமை உரைக்க முடியாதே.

#3122
இம்மையினோடு அம்மையினும் எய்துகின்ற இன்பம் எனைத்தொன்றும் வேண்டாத இயற்கை வரும் தருணம்
எம்மையினும் நிறை சொருப சுத்த சுகாரம்பம் இயல் சொருப சுத்த சுக அனுபவம் என்று இரண்டாய்ச்
செம்மையிலே விளங்குகின்ற திரு_அடிகள் வருந்தச் சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய்
உம்மையிலே யான் செய் தவம் யாது எனவும் அறியேன் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே.

#3123
அன்பு அளிப்பது ஒன்று பின்னர் இன்பு அளிப்பது ஒன்று என்று அறிஞர் எலாம் மதிக்கின்ற அடி_மலர்கள் வருந்த
என்பு அளித்த உடல்கள்-தொறும் உயிர்க்குயிராய் இருக்கும் எம் பெருமான் நடந்து அருளிக் கதவு திறப்பித்துத்
துன்பு அளிக்கும் நெஞ்சகத்து என்றனைக் கூவி அழைத்துத் தூய இளநகை முகத்தே துளும்ப எனை நோக்கி
முன்பு அளித்தது என்றனது கையில் ஒன்றை அளித்தாய் முன்னவ நின் அருள் பெருமை முன்ன அறியேனே.

#3124
மோக இருள்_கடல் கடத்தும் புணை ஒன்று நிறைந்த மோன சுகம் அளிப்பிக்கும் துணை ஒன்று என்று உரைக்கும்
யோக மலர்த் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி உணர்வு_இலியேன் பொருட்டாக இருட்டு இரவில் நடந்து
போக மனைப் பெரும் கதவம் திறப்பித்து உள் புகுந்து புலையேனை அழைத்து ஒன்று பொருந்த என் கை கொடுத்தாய்
நாகமணிப் பணி மிளிர அம்பலத்தே நடம் செய் நாயக நின் பெரும் கருணை நவிற்ற முடியாதே.

#3125
காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க் காட்டுகின்ற ஒளி-தனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்
பூணுகின்ற திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்கப் புரிந்து
கோணுகின்ற மனத்தாலே நாணுவது ஏன் மகனே குறைவு அற வாழ்க என மகிழ்ந்து கொடுத்தனை ஒன்று எனக்கு
மாணுகின்ற நின் அருளின் பெருமையை என் என்பேன் மணி மன்றில் ஆனந்த மா நடம் செய் அரசே.

#3126
ஆறாறு தத்துவத்தின் சொரூப முதல் அனைத்தும் அறிவிக்கும் ஒன்று அவற்றின் அப்பாலே இருந்த
வீறாய தற்சொருப முதல் அனைத்தும் அறிவில் விளக்குவிக்கும் ஒன்று என்று விளைவு_அறிந்தோர் விளம்பும்
பேறு ஆய திரு_அடிகள் வருந்த நடந்து இரவில் பேய் அடியேன் இருக்கும் இடத்து அடைந்து என்னை அழைத்துச்
சோறு ஆய பொருள் ஒன்று என் கரத்து அளித்தாய் பொதுவில் சோதி நினது அருள் பெருமை ஓதி முடியாதே.

#3127
கருவிகளை நம்முடனே கலந்து உளத்தே இயக்கிக் காட்டுவது ஒன்று அக் கருவி கரணங்கள் அனைத்தும்
ஒருவி அப்பாற்படுத்தி நமை ஒரு தனியாக்குவது ஒன்று பயம் எனப் பெரியர் சொலும் அபய பதம் வருந்தத்
துருவி அடியேன் இருக்கும் இடத்து இரவில் அடைந்து துணிந்து எனது கையில் ஒன்று சோதியுறக் கொடுத்து
வெருவியிடேல் இன்று முதல் மிக மகிழ்க என்றாய் வித்தக நின் திரு_அருளை வியக்க முடியாதே.

#3128
ஆதியிலே கலப்பு ஒழிய ஆன்ம சுத்தி அளித்து ஆங்கு அது அது ஆக்குவது ஒன்றாம் அது அதுவாய் ஆக்கும்
சோதியிலே தான் ஆகிச் சூழ்வது ஒன்றாம் என்று சூழ்ச்சி அறிந்தோர் புகலும் துணை அடிகள் வருந்த
வீதியிலே நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடி விரும்பி அடைந்து எனைக் கூவி விளைவு ஒன்று கொடுத்தாய்
பாதியிலே ஒன்றான பசுபதி நின் கருணைப் பண்பை அறிந்தேன் ஒழியா நண்பை அடைந்தேனே.

#3129
இருட்டு ஆய மலச் சிறையில் இருக்கும் நமை எல்லாம் எடுப்பது ஒன்றாம் இன்ப நிலை கொடுப்பது ஒன்றாம் எனவே
பொருள்_தாயர் போற்றுகின்ற பொன் அடிகள் வருந்தப் பொறை இரவில் யான் இருக்கும் இடம் தேடிப் புகுந்து
மருட்டு ஆயத்து_இருந்தேனைக் கூவி வரவழைத்து வண்ணம் ஒன்று என் கை-தனிலே மகிழ்ந்து அளித்தாய் நின்றன்
அருள் தாயப் பெருமை-தனை என் உரைப்பேன் பொதுவில் ஆனந்தத் திரு_நடம் செய்து அருளுகின்ற அரசே.

#3130
உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவது ஒன்று ஆகி உற்ற அதன் வெளிப் புறத்தே ஓங்குவது ஒன்று ஆகிச்
சின்மயமாய் விளங்குகின்ற திரு_அடிகள் வருந்தச் சிறு நாயேன் பொருட்டாகத் தெருவில் நடந்து அருளிப்
பொன் மயமாம் திரு_மேனி விளங்க என்-பால் அடைந்து பொருள் ஒன்று என் கை-தனிலே பொருந்த அளித்தனையே
நின்மலனே நின் அருளை என் புகல்வேன் பொதுவில் நிறைந்த இன்ப வடிவு ஆகி நிருத்தம் இடும் பதியே.

#3131
ஐவர்களுக்கு ஐந்தொழிலும் அளித்திடுவது ஒன்றாம் அத் தொழில் காரணம் புரிந்து களித்திடுவது ஒன்றாம்
தெய்வ நெறி என்று அறிஞர் புகழ்ந்து புகழ்ந்து ஏத்தும் திரு_அடிகள் மிக வருந்தத் தெருவினிடை நடந்து
கைவர யான் இருக்கும் மனைக் கதவு திறப்பித்துக் களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்
சைவ மணி மன்றிடத்தே தனி நடனம் புரியும் தற்பர நின் அருள் பெருமை சாற்ற முடியாதே.

#3132
அருள் உதிக்கும் தருணத்தே அமுத வடிவு ஆகி ஆனந்த மயம் ஆகி அமர்ந்த திரு_அடிகள்
இருள் உதிக்கும் இரவினிடை வருந்த நடந்து அருளி யான் இருக்கும் மனைக் கதவம் திறப்பித்து அங்கு அடைந்து
மருள் உதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி மகிழ்ந்து எனது கரத்து ஒன்று வழங்கிய சற்குருவே
தெருள் உதிக்கும் மணி மன்றில் திரு_நடம் செய் அரசே சிவபெருமான் நின் கருணைத் திறத்தை வியக்கேனே.

#3133
நான் கண்ட போது சுயம் சோதி மயம் ஆகி நான் பிடித்த போது மதி நளின வண்ணம் ஆகித்
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த
வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே.

#3134
யோகாந்த மிசை இருப்பது ஒன்று கலாந்தத்தே உவந்து இருப்பது ஒன்று என மெய்யுணர்வு_உடையோர் உணர்வால்
ஏகாந்தத்து இருந்து உணரும் இணை அடிகள் வருந்த என் பொருட்டாய் யான் இருக்கும் இடம் தேடி நடந்து
வாகாம் தச்சு அணிக் கதவம் திறப்பித்து அங்கு என்னை வரவழைத்து என் கை-தனிலே மகிழ்ந்து ஒன்று கொடுத்தாய்
மோகாந்தகாரம்_அறுத்தவர் ஏத்தப் பொதுவில் முயங்கி நடம் புரிகின்ற முக்கண் உடை அரசே.

#3135
மகம் மதிக்கும் மறையும் மறையால் மதிக்கும் அயனும் மகிழ்ந்து அயனால் மதிக்கும் நெடுமாலும் நெடுமாலால்
மிக மதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும் மேலவனும் அவன் மதிக்க விளங்கு சதாசிவனும்
தக மதிக்கும்-தோறும் அவரவர் உளத்தின் மேலும் தலை மேலும் மறைந்து உறையும் தாள்_மலர்கள் வருந்த
அகம் மதிக்க நடந்து என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் அம்பலத்தில் ஆடுகின்றாய் அருள் பெருமை வியப்பே.

#3136
இரு_வினை ஒப்பு ஆகி மல பரிபாகம் பொருந்தல் எ தருணம் அ தருணத்து இயல் ஞான ஒளியாம்
உருவினையுற்று உள்ளகத்தும் பிரணவமே வடிவாய் உற்று வெளிப் புறத்தும் எழுந்து உணர்த்தி உரைத்து அருளும்
திரு_அடிகள் மிக வருந்த நடந்து எளியேன் பொருட்டாத் தெருக் கதவம் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்
குரு வடிவம் காட்டி ஒன்று கொடுத்தாய் என் கரத்தே குண_குன்றே நின் அருட்கு என் குற்றம் எலாம் குணமே.

#3137
தம் அடியார் வருந்தில் அது சகியாது அக் கணத்தே சார்ந்து வருத்தங்கள் எலாம் தயவினொடு தவிர்த்தே
எம் அடியார் என்று கொளும் இணை அடிகள் வருந்த இரவினிடை நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து
கம் மடியாக் கதவு பெரும் காப்பு அவிழப் புரிந்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து
நம் அடியான் என்று எனையும் திருவுளத்தே அடைத்தாய் நடம் புரியும் நாயக நின் நல் கருணை வியப்பே.

#3138
உம்பருக்கும் கிடைப்ப அரிதாம் மணி மன்றில் பூத உரு வடிவம் கடந்து ஆடும் திரு_அடிகளிடத்தே
செம் பருக்கைக்_கல் உறுத்தத் தெருவில் நடந்து இரவில் தெருக் கதவம் திறப்பித்துச் சிறியேனை அழைத்து
வம்பருக்குப் பெறல் அரிதாம் ஒரு பொருள் என் கரத்தே மகிழ்ந்து அளித்துத் துயர் தீர்ந்து வாழ்க என உரைத்தாய்
இம்பருக்கோ அம்பருக்கும் இது வியப்பாம் எங்கள் இறைவ நினது அருள் பெருமை இசைப்பது எவன் அணிந்தே.

#3139
உருவம் ஒரு நான்கு ஆகி அருவமும் அ அளவாய் உரு அரு ஒன்று ஆகி இவை ஒன்பானும் கடந்து
துருவ முடியாப் பரம துரிய நடு இருந்த சொருப அனுபவ மயமாம் துணை அடிகள் வருந்தத்
தெருவம் மிசை நடந்து சிறு செம் பரல்_கல் உறுத்தச் சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய்
மருவ இனியாய் மன்றில் நடம் புரிவாய் கருணை மா கடலே நின் பெருமை வழுத்த முடியாதே.

#3140
பக்குவத்தால் உயர் வாழைப் பழம் கனிந்தால் போலும் பரம் கருணையால் கனிந்த பத்தர் சித்தம்-தனிலே
பொக்கம் இல் அப் பழம்-தனிலே தெள் அமுதம் கலந்தால் போல் கலந்து தித்திக்கும் பொன் அடிகள் வருந்த
மிக்க இருள் இரவினிடை நடந்து எளியேன் இருக்கும் வியன் மனையில் அடைந்து கதவம் திறக்கப் புரிந்து
ஒக்க எனை அழைத்து ஒன்று கொடுத்து இங்கே இரு என்று உரைத்தனை எம் பெருமான் நின் உயர் கருணை வியப்பே.

#3141
உளவு_அறிந்தோர்-தமக்கு எல்லாம் உபநிடதப் பொருளாய் உளவு_அறியார்க்கு இக_பரமும் உறுவிக்கும் பொருளாய்
அளவு அறிந்த அறிவாலே அறிந்திட நின்று ஆடும் அடி_மலர்கள் வருந்தியிட நடந்து இரவில் அடைந்து
களவு_அறிந்தேன்-தனைக் கூவிக் கதவு திறப்பித்துக் கையில் ஒன்று கொடுத்தாய் நின் கருணையை என் என்பேன்
விளவு_எறிந்தோன் அயன் முதலோர் பணிந்து ஏத்தப் பொதுவில் விளங்கு நடம் புரிகின்ற துளங்கு ஒளி மா மணியே.

#3142
எவ்வுலகும் எவ்வுயிரும் எச் செயலும் தோன்றி இயங்கும் இடம் ஆகி எல்லாம் முயங்கும் இடம் ஆகித்
தெவ் உலகும் நண்பு உலகும் சமனாகக் கண்ட சித்தர்கள்-தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்
இ உலகில் வருந்த நடந்து என் பொருட்டால் இரவில் எழில் கதவம் திறப்பித்து அங்கு என் கையில் ஒன்று அளித்தாய்
அ உலக முதல் உலகம் அனைத்தும் மகிழ்ந்து ஏத்த அம்பலத்தே நடம் புரியும் செம்பவள_குன்றே.

#3143
மானினொடு மோகினியும் மாமாயையுடனே வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்து அசைய அசைத்தே
ஊனினொடும் உயிர் உணர்வும் கலந்து கலப்புறுமாறு உறுவித்துப் பின் கரும ஒப்பு வரும் தருணம்
தேனினொடு கலந்த அமுது என ருசிக்க இருந்த திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன்-பால் அடைந்து
வானினொடு விளங்கு பொருள் ஒன்று எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே.

#3144
பசுபாச பந்தம் அறும் பாங்கு-தனைக் காட்டிப் பரம் ஆகி உள் இருந்து பற்று அறவும் புரிந்தே
அசமானம் ஆன சிவானந்த அனுபவமும் அடைவித்து அ அனுபவம் தாம் ஆகிய சேவடிகள்
வசு மீது வருந்தியிட நடந்து அடியேன் இருக்கும் மனையை அடைந்து அணிக் கதவம் திறப்பித்து நின்று
விசுவாசமுற எனை அங்கு அழைத்து ஒன்று கொடுத்தாய் விடையவ நின் அருள் பெருமை என் புகல்வேன் வியந்தே.

#3145
ஆதியுமாய் அந்தமுமாய் நடு ஆகி ஆதி அந்த நடு இல்லாத மந்தண வான் பொருளாய்ச்
சோதியுமாய்ச் சோதி எலாம் தோன்று பரம் ஆகித் துரியமுமாய் விளங்குகின்ற துணை அடிகள் வருந்த
பாதி_இரவிடை நடந்து நான் இருக்கும் இடத்தே படர்ந்து தெருக் கதவம் காப்பு அவிழ்த்திடவும் புரிந்து
ஓதியில் அங்கு எனை அழைத்து என் கரத்து ஒன்று கொடுத்தாய் உடையவ நின் அருள் பெருமை என் உரைப்பேன் உவந்தே.

#3146
பாடுகின்ற மறைகள் எலாம் ஒருபுறம் சூழ்ந்து ஆடப் பத்தரொடு முத்தர் எலாம் பார்த்து ஆடப் பொதுவில்
ஆடுகின்ற திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன் அடையும் இடத்து அடைந்து இரவில் காப்பு அவிழ்க்கப் புரிந்து
நாடுகின்ற சிறியேனை அழைத்து அருளி நோக்கி நகை முகம் செய்து என் கரத்தே நல்கினை ஒன்று இதனால்
வாடுகின்ற வாட்டம் எலாம் தவிர்ந்து மகிழ்கின்றேன் மன்னவ நின் பொன் அருளை என் என வாழ்த்துவனே.

#3147
எ மதத்தில் எவரெவர்க்கும் இயைந்த அனுபவமாய் எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே
அ மதப் பொன்_அம்பலத்தில் ஆனந்த நடம் செய் அரும் பெரும் சேவடி இணைகள் அசைந்து மிக வருந்த
இ மதத்தில் என் பொருட்டாய் இரவில் நடந்து அருளி எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் கரத்தே
சம்மதத்தால் ஒன்று அளித்த தயவினை என் புகல்வேன் தம்மை அறிந்தவர் அறிவின் மன்னும் ஒளி மணியே.

#3148
பூத வெளி கரண வெளி பகுதி வெளி மாயா போக வெளி மாமாயா யோக வெளி புகலும்
வேத வெளி அபர விந்து வெளி அபர நாத வெளி ஏக வெளி பரம வெளி ஞான வெளி மா
நாத வெளி சுத்த வெறுவெளி வெட்டவெளியா நவில்கின்ற வெளிகள் எலாம் நடிக்கும் அடி வருந்த
ஏத எளியேன் பொருட்டா நடந்து என்-பால் அடைந்தே என் கையின் ஒன்று அளித்தனை நின் இரக்கம் எவர்க்கு உளதே.

#3149
வானதுவாய்ப் பசு மலம் போய்த் தனித்து நிற்கும் தருணம் வயங்கு பரானந்த சுகம் வளைந்துகொள்ளும் தருணம்
தான் அதுவாய் அது தானாய்ச் சகசமுறும் தருணம் தடை அற்ற அனுபவமாம் தன்மை அடி வருந்த
மானதுவாய் நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மணிக் கதவம் திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்து
ஆனதொரு பொருள் அளித்தாய் நின் அருள் என் என்பேன் அம்பலத்தே நடம் புரியும் எம் பெரும் சோதியனே.

#3150
புன் தலை என் தலை என நான் அறியாமல் ஒருநாள் பொருத்திய போதினில் சிவந்து பொருந்திய பொன் அடிகள்
இன்று அலைவின் மிகச் சிவந்து வருந்த நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து கதவம் திறக்கப் புரிந்து
மன்றலின் அங்கு எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்தாய் மன்னவ நின் பெரும் கருணை வண்மையை என் என்பேன்
பொன்றல் இலாச் சித்தர் முத்தர் போற்ற மணி மன்றில் புயங்க நடம் புரிகின்ற வயங்கு ஒளி மா மணியே.

#3151
தஞ்சமுறும் உயிர்க்கு உணர்வாய் இன்பமுமாய் நிறைந்த தம் பெருமை தாம் அறியாத் தன்மையவாய் ஒருநாள்
வஞ்சகனேன் புன் தலையில் வைத்திடவும் சிவந்து வருந்திய சேவடி பின்னும் வருந்த நடந்து அருளி
எஞ்சல் இலா இரவினிடை யான் இருக்கும் இடம் சேர்ந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து ஒன்று அளித்தாய்
விஞ்சு பரானந்த நடம் வியன் பொதுவில் புரியும் மேலவ நின் அருள் பெருமை விளம்பல் எவன் வியந்தே.

#3152
எழுத்தினொடு பதம் ஆகி மந்திரமாய்ப் புவனம் எல்லாமாய்த் தத்துவமாய் இயம்பு கலை ஆகி
வழுத்தும் இவைக்கு உள் ஆகிப் புறம் ஆகி நடத்தும் வழி ஆகி நடத்துவிக்கும் மன் இறையும் ஆகி
அழுத்துறும் இங்கு இவை எல்லாம் அல்லனவாய் அப்பால் ஆகியதற்கு அப்பாலும் ஆன பதம் வருந்த
இழைத்து நடந்து இரவில் என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் எம் பெருமான் நின் பெருமை என் உரைப்பேன் வியந்தே.

#3153
மாவின் மணப் போர் விடை மேல் நந்தி விடை மேலும் வயங்கி அன்பர் குறை தவிர்த்து வாழ்வு அளிப்பது அன்றிப்
பூவின் மணம் போல் உயிருக்குயிர் ஆகி நிறைந்து போகம் அளித்து அருள்கின்ற பொன் அடிகள் வருந்தத்
தாவி நடந்து இரவின் மனைக் கதவு திறப்பித்தே தயவுடன் அங்கு எனை அழைத்துத் தக்கது ஒன்று கொடுத்தாய்
நாவின் மணந்துறப் புலவர் வியந்து ஏத்தும் பொதுவில் நடம் புரியும் நாயக நின் நல் கருணை இதுவே.

#3154
மணப் போது வீற்றிருந்தான் மாலவன் மற்றவரும் மன அழுக்காறு உறச் சிறியேன் வருந்திய நாள் அந்தோ
கணப் போதும் தரியாமல் கருணை அடி வருந்தக் கங்குலிலே நடந்து என்னைக் கருதி ஒன்று கொடுத்தாய்
உணப் போது போக்கினன் முன் உளவு அறியாமையினால் உளவு அறிந்தேன் இ நாள் என் உள்ளம் மகிழ்வுற்றேன்
தணப்பு ஓதும் மறைகள் எலாம் தனித்தனி நின்று ஏத்தத் தனி மன்றில் ஆனந்தத் தாண்டவம் செய் அரசே.

#3155
நடுங்க மலக்கண் குறுகி நெடும் கமலக் கண் விளங்கும் நல்ல திரு_அடி வருந்த வல் இரவில் நடந்து
தொடும் கதவம் திறப்பித்துத் துணிந்து எனை அங்கு அழைத்துத் துயரம் எலாம் விடுக இது தொடுக எனக் கொடுத்தாய்
கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமாக் கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன்
இடும் கடுக என்று உணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர் ஏத்த மணிப் பொதுவில் அருள் கூத்து உடைய பொருளே.

#3156
வெய்ய பவக் கோடையிலே மிக இளைத்து மெலிந்த மெய் அடியர்-தமக்கு எல்லாம் விரும்பு குளிர் சோலைத்
துய்ய நிழலாய் அமுதாய் மெலிவு அனைத்தும் தவிர்க்கும் துணை அடிகள் மிக வருந்தத் துணிந்து நடந்து அடியேன்
உய்ய நடு_இரவினில் யான் இருக்கும் இடத்து அடைந்தே உயர் கதவம் திறப்பித்து அங்கு உவந்து அழைத்து ஒன்று அளித்தாய்
வையகமும் வானகமும் வாழ மணிப் பொதுவில் மா நடம் செய் அரசே நின் வண்மை எவர்க்கு உளதே.

#3157
சிறியவனேன் சிறுமை எலாம் திருவுளம்கொள்ளாது என் சென்னி மிசை அமர்ந்து அருளும் திரு_அடிகள் வருந்தச்
செறி இரவில் நடந்து அணைந்து நான் இருக்கும் இடத்தே தெருக் கதவம் திறப்பித்துச் சிறப்பின் எனை அழைத்துப்
பிறிவிலது இங்கு இது-தனை நீ பெறுக எனப் பரிந்து பேசி ஒன்று கொடுத்தாய் நின் பெருமையை என் என்பேன்
பொறியின் அறவோர் துதிக்கப் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் எனத் தேர்ந்தனனே.

#3158
அடிநாளில் அடியேனை அறிவு குறிக்கொள்ளாது ஆட்கொண்டு என் சென்னி மிசை அமர்ந்த பதம் வருந்தப்
படி நாளில் நடந்து இரவில் அடைந்து அருளித் தெருவில் படர் கதவம் திறப்பித்துப் பரிந்து எனை அங்கு அழைத்துப்
பிடி நாளும் மகிழ்ந்து உனது மனம்கொண்டபடியே பேர்_அறம் செய்து உறுக எனப் பேசி ஒன்று கொடுத்தாய்
பொடி நாளும் அணிந்து மணிப் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் எனத் தேர்ந்தனனே.

#3159
உலகியலோடு அருளியலும் ஒருங்கு அறியச் சிறியேன் உணர்வில் இருந்து உணர்த்தி எனது உயிர்க்குயிராய் விளங்கித்
திலகம் எனத் திகழ்ந்து எனது சென்னி மிசை அமர்ந்த திரு_அடிகள் வருந்த நடை செய்து அருளி அடியேன்
இலகு மனைக் கதவு இரவில் திறப்பித்து அங்கு என்னை இனிது அழைத்து ஒன்று அளித்து மகிழ்ந்து இன்னும் நெடும் காலம்
புலவர் தொழ வாழ்க என்றாய் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் எனத் தேர்ந்தனனே.

@3. பிரசாத மாலை

#3160
திரு உருக்கொண்டு எழுந்தருளிச் சிறியேன் முன் அடைந்து திரு_நீற்றுப் பை அவிழ்த்துச் செம் சுடர்ப் பூ அளிக்கத்
தரு உருக்கொண்டு எதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திரு_நீறும் தருக எனக் கேட்ப
மரு உருக்கொண்டு அன்று அளித்தாம் திரு_நீறு இன்று உனக்கு மகிழ்ந்து அளித்தாம் இவை என்று வாய்_மலர்ந்து நின்றாய்
குரு உருக்கொண்டு அம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே என்னை முன்_நாள் ஆட்கொண்ட குண_குன்றே.

#3161
என் வடிவம் தழைப்ப ஒரு பொன் வடிவம் தரித்தே என் முன் அடைந்து எனை நோக்கி இளநகைசெய்து அருளித்
தன் வடிவத் திரு_நீற்றுத் தனிப் பை அவிழ்த்து எனக்குத் தகு சுடர்ப் பூ அளிக்கவும் நான்-தான் வாங்கிக் களித்து
மின் வடிவப் பெருந்தகையே திரு_நீறும் தருதல் வேண்டும் என முன்னர் அது விரும்பி அளித்தனம் நாம்
உன் வடிவில் காண்டி என உரைத்து அருளி நின்றாய் ஒளி நடம் செய் அம்பலத்தே வெளி நடம் செய் அரசே.

#3162
அழகு நிறைந்து இலக ஒரு திரு_மேனி தரித்தே அடியேன் முன் எழுந்தருளி அருள் நகை கொண்டு அடியார்
கழக நடு எனை இருத்தி அவர்க்கு எல்லாம் நீறு களித்து அருளி என்னளவில் கருணை முகம் மலர்ந்து
குழகு இயல் செம் சுடர்ப் பூவைப் பொக்கணத்தில் எடுத்துக் கொடுத்து அருளி நின்றனை நின் குறிப்பு அறியேன் குருவே
மழ களிற்றின் உரி விளங்க மணிப் பொதுவில் சோதி மய வடிவோடு இன்ப நடம் வாய்ந்து இயற்றும் பதியே.

#3163
விலை_கடந்த மணி என ஓர் திரு_மேனி தரித்து வினையேன் முன் எழுந்தருளி மெய் அடியர் விரும்பக்
கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாதக் கதி கடந்த பெரும் கருணைக் கடைக்கண் மலர்ந்து அருளி
அலை கடந்த கடல் மலர்ந்த மணச் செழும் பூ அடியேன் அங்கை-தனில் அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன்
மலை கடந்த நெடும் தோளில் இதழி அசைந்து ஆட மன்றில் நடம் புரிகின்ற வள்ளல் அருள் குருவே.

#3164
உலர்ந்த மரம் தழைக்கும் ஒரு திரு_உருவம் தாங்கி உணர்வு_இலியேன் முன்னர் உவந்து உறு கருணை துளும்ப
மலர்ந்த முகம் காட்டி நின்று திரு_நீற்றுப் பையை மலர்_கரத்தால் அவிழ்த்து அங்கு வதிந்தவர்கட்கு எல்லாம்
அலர்ந்த திரு_நீறு அளித்துப் பின்னர் என்றன் கரத்தில் அருள் மணப் பூ அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன்
கலந்தவரைக் கலந்து மணிக் கனக மன்றில் நடம் செய் கருணை நெடு கடலே என் கண் அமர்ந்த ஒளியே.

#3165
பிழை அலது ஒன்று அறியாத சிறியேன் முன் புரிந்த பெரும் தவமோ திரு_அருளின் பெருமை இதோ அறியேன்
மழை என நின்று இலகு திரு_மணி மிடற்றில் படிக வடம் திகழ நடந்து குரு வடிவு-அது கொண்டு அடைந்து
விழைவினொடு என் எதிர்நின்று திரு_நீற்றுக் கோயில் விரித்து அருளி அருள் மணப் பூ விளக்கம் ஒன்று கொடுத்தாய்
குழை அசையச் சடை அசையக் குலவு பொன்_அம்பலத்தே கூத்து இயற்றி என்னை முன் ஆட்கொண்ட சிவ_கொழுந்தே.

#3166
முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த முழு மணி போன்று ஒரு வடிவு என் முன் கொடு வந்து அருளி
எத் தேவர்-தமக்கு மிக அரிய எனும் மணப் பூ என் கரத்தே கொடுத்தனை நின் எண்ணம் இது என்று அறியேன்
சித்தே என்பவரும் ஒரு சத்தே என்பவரும் தேறிய பின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
அத் தேவர் வழுத்த இன்ப உரு ஆகி நடம் செய் ஆர்_அமுதே என் உயிருக்கு ஆன பெரும் துணையே.

#3167
தெள் அமுதம் அனைய ஒரு திரு_உருவம் தாங்கிச் சிறியேன் முன் எழுந்தருளிச் செழு மணப் பூ அளித்தாய்
உள் அமுதம் ஆகிய நின் திரு_குறிப்பு ஏது உணரேன் உடையவளை உடையவனே உலகு உணரா ஒளியே
கள்ளம் இலா அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய்க் கலந்துநின்ற பெரும் கருணை_கடலே என் கண்ணே
கொள்ளு-தொறும் கரணம் எலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழும் கனியே கோல்_தேனே பொது விளங்கும் குருவே.

#3168
கண் விருப்பம்கொளக் கரணம் கனிந்துகனிந்து உருகக் கருணை வடிவு எடுத்து அருளிக் கடையேன் முன் கலந்து
மண் விருப்பம்கொளும் மணப் பூ மகிழ்ந்து எனக்குக் கொடுத்து வாழ்க என நின்றனை நின் மனக் குறிப்பு ஏது அறியேன்
பெண் விருப்பம் தவிர்க்கும் ஒரு சிவகாமவல்லிப் பெண் விருப்பம் பெற இருவர் பெரியர் உளம் களிப்பப்
பண் விருப்பம் தரும் மறைகள் பலபல நின்று ஏத்தப் பரம சிதம்பர நடனம் பயின்ற பசுபதியே.

#3169
உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம் ஒன்று எடுத்து மெய் அன்பர் உவக்க எழுந்தருளி
முன்னுதற்கு ஓர் அணுத்துணையும் தரம் இல்லாச் சிறியேன் முகம் நோக்கிச் செழும் மணப் பூ முகம் மலர்ந்து கொடுத்தாய்
துன்னுதற்கு இங்கு அரிதாம் நின் திரு_உள்ளக் குறிப்பைத் துணிந்து அறியேன் என்னினும் ஓர் துணிவின் உவக்கின்றேன்
பொன் நுதற்குத் திலகம் எனும் சிவகாமவல்லிப் பூவை ஒரு புறம் களிப்பப் பொது நடம் செய் பொருளே.

@4. ஆனந்த மாலை

#3170
திரு வருடும் திரு_அடிப் பொன் சிலம்பு அசைய நடந்து என் சிந்தையிலே புகுந்து நின்-பால் சேர்ந்து கலந்து இருந்தாள்
தெருமரல் அற்று உயர்ந்த மறைச் சிரத்து அமர்ந்த புனிதை சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்பப்
பொரு அரும் மெய் அன்பு_உடையார் இருவரும் கண்டு உவந்து போற்ற மணிப் பொதுவில் நடம் புரிகின்ற துரையே
பருவரல் அற்று அடிச் சிறியேன் பெரு வரம் பெற்று உனையே பாடுகின்றேன் பெரிய அருள் பருவம் அடைந்தனனே.

#3171
சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள்
செண்பகப் பொன்_மேனியினாள் செய்ய மலர்_பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்பப்
பண் பகர் பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் பரம்பர நின் திரு_அருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து
எண் பகர் குற்றங்கள் எலாம் குணமாகக் கொள்ளும் எம் துரை என்று எண்ணுகின்ற எண்ணம் அதனாலே.

#3172
அருள் உடைய நாயகி என் அம்மை அடியார் மேல் அன்பு_உடையாள் அமுது_அனையாள் அற்புதப் பெண் அரசி
தெருள் உடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப
மருள் உடைய மாயை எலாம் தேய மணி மன்றின் மா நடம் செய் துரையே நின் மன் அருளின் திறத்தை
இருள் உடைய மனச் சிறியேன் பாடுகின்றேன் பருவம் எய்தினன் என்று அறிஞர் எலாம் எண்ணி மதித்திடவே.

#3173
மாசு_உடையேன் பிழை அனைத்தும் பொறுத்து வரம் அளித்தாள் மங்கையர்கள் நாயகி நான்மறை அணிந்த பதத்தாள்
தேசு_உடையாள் ஆனந்தத் தெள் அமுத வடிவாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்பக்
காசு உடைய பவக் கோடைக்கு ஒரு நிழலாம் பொதுவில் கன நடம் செய் துரையே நின் கருணையையே கருதி
ஆசு_உடையேன் பாடுகின்றேன் துயரம் எலாம் தவிர்ந்தேன் அன்பர் பெறும் இன்ப நிலை அனுபவிக்கின்றேனே.

#3174
பொய்யாத வரம் எனக்குப் புரிந்த பரம் பரை வான் பூதம் முதல் கருவி எலாம் பூட்டுவிக்கும் திறத்தாள்
செய்யாளும் கலையவளும் உருத்திரையும் வணங்கும் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்பக்
கையாத இன்ப நடம் கனக மணிப் பொதுவில் களித்து இயற்றும் துரையே நின் கருணையை நான் கருதி
நையாத வண்ணம் எலாம் பாடுகின்றேன் பருவம் நண்ணிய புண்ணியர் எல்லாம் நயந்து மகிழ்ந்திடவே.

#3175
அறம் கனிந்த அருள்_கொடி என் அம்மை அமுது அளித்தாள் அகிலாண்டவல்லி சிவானந்தி சௌந்தரி சீர்த்
திறம் கலந்த நாத மணிச் சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப
மறம் கனிந்தார் மயக்கம் எலாம் தெளிய மணிப் பொதுவில் மா நடம் செய் துரையே நின் வண்மை-தனை அடியேன்
புறம் கவியப் பாடுகின்றேன் அகம் கவியப் பாடும் புண்ணியர் எல்லாம் இவன் ஓர் புதியன் எனக் கொளவே.

#3176
உள் அமுதம் ஊற்றுவிக்கும் உத்தமி என் அம்மை ஓங்கார பீடம் மிசைப் பாங்காக இருந்தாள்
தெள் அமுத வடிவு_உடையாள் செல்வம் நல்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்பக்
கள்ளம் மறுத்து அருள் விளக்கும் வள்ளல் மணிப் பொதுவில் கால் நிறுத்திக் கால் எடுத்துக் களித்து ஆடும் துரையே
எள்ளல் அறப் பாடுகின்றேன் நின் அருளை அருளால் இப் பாட்டில் பிழை குறித்தல் எங்ஙனம் இங்ஙனமே.

#3177
பார் பூத்த பசும்_கொடி பொன் பாவையர்கள் அரசி பரம் பரை சிற்பரை பராபரை நிமலை ஆதி
சீர் பூத்த தெய்வ மறைச் சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப
ஏர் பூத்த மணி மன்றில் இன்ப நடம் புரியும் என் அருமைத் துரையே நின் இன் அருளை நினைந்து
கார் பூத்த கனை மழை போல் கண்களில் நீர் சொரிந்து கனிந்து மிகப் பாடுகின்ற களிப்பை அடைந்தனனே.

#3178
பூரணி சிற்போதை சிவ_போகி சிவயோகி பூவையர்கள் நாயகி ஐம்பூதமும் தான் ஆனாள்
தேர் அணியும் நெடு வீதித் தில்லை நகர் உடையாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப
ஏர் அணியும் மணி மன்றில் இன்ப வடிவு ஆகி இன்ப நடம் புரிகின்ற எம்முடைய துரையே
தாரணியில் உனைப் பாடும் தரத்தை அடைந்தனன் என் தன்மை எலாம் நன்மை எனச் சம்மதித்தவாறே.

#3179
தன் ஒளியில் உலகம் எலாம் தாங்குகின்ற விமலை தற்பரை அம் பரை மா சிதம்பரை சிற்சத்தி
சின்ன வயதினில் என்னை ஆள நினக்கு இசைத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப
மன்னிய பொன் மணிப் பொதுவில் இன்ப நடம் புரிந்து வயங்குகின்ற துரையே நின் மா கருணைத் திறத்தை
உன்னி உவந்து உணர்ந்து உருகிப் பாடுகின்றேன் எங்கள் உடையானே நின் அருளின் அடையாளம் இதுவே.

@5. பக்தி மாலை

#3180
அருள்_உடையாய் அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
மருள்_உடையேன்-தனை அழைத்துத் திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும்
தெருள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே
இருள் உடைய சிலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

#3181
அன்பு_உடையாய் அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
வன்பு_உடையேன்-தனை அழைத்துத் திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும்
இன்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் விளங்குகின்றதாயினும் என் வெய்ய மனம் உருகா
என்பு உடைய உடலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

#3182
ஆள்_உடையாய் சிறியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
வாள்_உடையேன்-தனை அழைத்துத் திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும்
நீள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் நிகழ்கின்றதாயினும் என் நெஞ்சம் உருகிலதே
ஏள் உடைய மலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

#3183
ஆர்_அமுதே அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
வாரம் உற எனை அழைத்துத் திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும்
சீர் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே
ஈரம் இலா மரமும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

#3184
அற்புத நின் அருள் அருமை அறியேன் நான் சிறிதும் அறியாதே மறுத்த பிழை ஆயிரமும் பொறுத்து
வற்புறுவேன்-தனை அழைத்துத் திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும்
கற்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றது என்னினும் என் கல்_மனமோ உருகா
இற்புடைய இரும்பும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

#3185
ஆண்டவ நின் அருள் அருமை அறியாதே திரிந்தேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
வேண்டி எனை அருகு அழைத்துத் திரும்பவும் என் கரத்தே மிக அளித்த அருள் வண்ணம் வினை_உடையேன் மனமும்
காண் தகைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருகக் காணேன்
ஈண்டு உருகாக் கரடும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

#3186
அரசே நின் திரு_அருளின் அருமை ஒன்றும் அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
விரவும் அன்பில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும்
உரவு மலர்க் கண்களும் விட்டு அகலாதே இன்னும் ஒளிர்கின்றதாயினும் என் உள்ளம் உருகிலதே
இரவு_நிறத்தவரும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

#3187
ஐயா நின் அருள் பெருமை அருமை ஒன்றும் அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
மெய்யா அன்று எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும்
கையாது கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருகக் காணேன்
எய்யா வன் பரலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

#3188
அப்பா நின் திரு_அருள் பேர்_அமுது அருமை அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
இப் பாரில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே இனிது அளித்த பெரும் கருணை இன்பம் என்றன் மனமும்
துப்பாய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தோன்றுகின்றதாயினும் இத் துட்ட நெஞ்சம் உருகா
எப் பாவி நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

#3189
அம்மான் நின் அருள் சத்தி அருமை ஒன்றும் அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
வெம் மாயை அகற்றி எனை அருகு அழைத்து என் கரத்தே மிக அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும்
மை மாழை விழிகளும் விட்டு அகலாதே இன்னும் வதிகின்றதாயினும் என் வஞ்ச நெஞ்சம் உருகா
எ மாய நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

@6. சௌந்தர மாலை

#3190
சேல் ஓடும் இணைந்த விழிச் செல்வி பெரும் தேவி சிவகாமவல்லியொடு சிவ போக வடிவாய்
மேலோடு கீழ் நடுவும் கடந்து ஓங்கு வெளியில் விளங்கிய நின் திரு_உருவை உளம்கொளும் போது எல்லாம்
பாலோடு பழம் பிழிந்து தேன் கலந்து பாகும் பசு நெய்யும் கூட்டி உண்டபடி இருப்பது என்றால்
மாலோடு காண்கின்ற கண்களுக்கு அங்கு இருந்த வண்ணம் இந்த வண்ணம் என எண்ணவும் ஒண்ணாதே.

#3191
இன்பு அருளும் பெரும் தாய் என் இதயத்தே இருந்தாள் இறைவியொடும் அம்பலத்தே இலங்கிய நின் வடிவை
வன்புறு கல்_மனக் கொடியேன் நினைக்குமிடத்து எல்லாம் மனம் கரைந்து சுக மயமாய் வயங்கும் எனில் அந்தோ
அன்பு_உடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம் ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம் ஈங்கு எவர்கள் புகல்வார்
துன்புறுதல் இல்லாத சுத்த நிலை உடையார் தொழுகின்ற-தோறும் மகிழ்ந்து எழுகின்ற துரையே.

#3192
சிவயோக சந்தி தரும் தேவி உலகு_உடையாள் சிவகாமவல்லியொடும் செம்பொன் மணிப் பொதுவில்
நவ யோக உரு முடி-கண் விளங்கிய நின் வடிவை நாய்க் கடையேன் நான் நினைத்த நாள் எனக்கே மனமும்
பவ யோக இந்தியமும் இன்ப மயமானபடி என்றால் மெய் அறிவில் பழுத்த பெரும் குணத்துத்
தவ யோகர் கண்டவிடத்து அவர்க்கு இருந்த வண்ணம் தன்னை இந்த வண்ணம் என என்னை உரைப்பதுவே.

#3193
சித்தி எலாம் அளித்த சிவ_சத்தி எனை_உடையாள் சிவகாமவல்லியொடு சிவ ஞானப் பொதுவில்
முத்தி எலாம் தர விளங்கும் முன்னவ நின் வடிவை மூட மனச் சிறியேன் நான் நாட வரும் பொழுது
புத்தி எலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்போலும் இருப்பது அதற்கு மேலும் இருப்பதுவேல்
பத்தி எலாம் உடையவர்கள் காணும் இடத்து இருக்கும்படி தான் எப்படியோ இப்படி என்பது அரிதே.

#3194
தெய்வம் எலாம் வணங்குகின்ற தேவி எனை அளித்தாள் சிவகாமவல்லியொடு திரு மலி அம்பலத்தே
சைவம் எலாம் தர விளங்கும் நின் வடிவைக் கொடியேன் தான் நினைத்த போது எனையே நான் நினைத்ததிலையேல்
ஐவகை இந்தியம் கடந்தார் கண்டவிடத்து இருந்த அனுபவத்தின் வண்ணம்-அதை யார் புகல வல்லார்
உய் வகை அ நாள் உரைத்தது அன்றியும் இ நாளில் உந்திரவில் வந்து உணர்வு தந்த சிவ குருவே.

#3195
தேன் மொழிப் பெண் அரசி அருள் செல்வம் எனக்கு அளித்தாள் சிவகாமவல்லியொடு செம்பொன் மணிப் பொதுவில்
வான் மொழிய நின்று இலங்கு நின் வடிவைச் சிறியேன் மனம்கொண்ட காலத்தே வாய்த்த அனுபவத்தை
நான் மொழிய முடியாதேல் அன்பர் கண்ட காலம் நண்ணிய மெய் வண்ணம்-அதை எண்ணி எவர் புகல்வார்
நூல் மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் ஞான நோக்கு_உடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப்பொருளே.

#3196
சிற்றிடை எம் பெருமாட்டி தேவர் தொழும் பதத்தாள் சிவகாமவல்லியொடு சிறந்த மணிப் பொதுவில்
உற்றிடை நின்று இலங்குகின்ற நின் வடிவைக் கொடியேன் உன்னு-தொறும் உளம் இளகித் தளதள என்று உருகி
மற்று இடையில் வலியாமல் ஆடுகின்றது என்றால் வழி_அடியர் விழிகளினால் மகிழ்ந்து கண்ட காலம்
பற்று இடையாது ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம்-தனை யார் பகர்வாரே பகர்வாரேல் பகவன் நிகர்வாரே

#3197
ஆர்_அமுதம் அனையவள் என் அம்மை அபிராமி ஆனந்தவல்லியொடும் அம்பலத்தே விளங்கும்
பேர்_அமுத மயமாம் உன் திரு_வடிவைக் குறித்துப் பேசுகின்ற போது மணம் வீசுகின்றது ஒன்றோ
சீர் அமுதம் ஆகி எல்லாம் தித்திப்பது அன்பு ஓர்சிறிதும் இலாக் கடைப் புலையேன் திறத்துக்கு இங்கு என்றால்
ஊர் அமுதப் பேர் அன்பர் பேசுமிடத்து அவர்-பால் உற்ற வண்ணம் இற்றிது என்ன உன்ன முடியாதே.

#3198
பொன்_பதத்தாள் என்னளவில் பொன்_ஆசை தவிர்த்தாள் பூரணி ஆனந்த சிவ போக வல்லியோடு
சொல் பதமும் கடந்த மன்றில் விளங்கிய நின் வடிவைத் தூய்மை_இலேன் நான் எண்ணும்-தோறும் மனம் இளகிச்
சிற்பதத்தில் பர ஞான மயம் ஆகும் என்றால் தெளிவு_உடையார் காண்கின்ற திறத்தில் அவர்க்கு இருக்கும்
நல் பதம் எத்தன்மையதோ உரைப்ப அரிது மிகவும் நாத முடி-தனில் புரியும் ஞான நடத்து அரசே.

#3199
என் பிழை யாவையும் பொறுத்தாள் என்னை முன்னே அளித்தாள் இறைவி சிவகாமவல்லி என் அம்மையுடனே
இன்ப வடிவாய்ப் பொதுவில் இலங்கிய நின் வண்ணம் இற்று என நான் நினைத்திடும் கால் எற்று எனவும் மொழிவேன்
அன்பு உருவாய் அது_அதுவாய் அளிந்த பழம் ஆகி அப் பழச்சாறு ஆகி அதன் அரும் சுவையும் ஆகி
என்பு உருக மன ஞான மயமாகும் என்றால் எற்றோ மெய் அன்பு_உடையார் இயைந்து கண்ட இடத்தே.

#3200
கரும்பு_அனையாள் என் இரண்டு கண்களிலே இருந்தாள் கற்பகப் பொன் வல்லி சிவகாமவல்லியுடனே
விரும்பு மணிப் பொதுவினிலே விளங்கிய நின் வடிவை வினை_உடையேன் நினைக்கின்ற வேளையில் என் புகல்வேன்
இரும்பு அனைய மனம் நெகிழ்ந்துநெகிழ்ந்து உருகி ஒரு பேர்_இன்ப மயம் ஆகும் எனில் அன்பர் கண்ட காலம்
அரும்பி மலர்ந்திட்ட சிவானந்த அனுபவத்தை யார் அறிவார் நீ அறிவாய் அம்பலத்து எம் அரசே.

#3201
காம சத்தியுடன் களிக்கும் காலையிலே அடியேன் கன ஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள்
வாம சத்தி சிவகாமவல்லியொடும் பொதுவில் வயங்கிய நின் திரு_அடியை மனம்கொளும் போது எல்லாம்
ஆமசத்தன் எனும் எனக்கே ஆனந்த_வெள்ளம் அது ததும்பிப் பொங்கி வழிந்து ஆடும் எனில் அந்தோ
ஏமசத்தர் எனும் அறிஞர் கண்டவிடத்து இருந்த இன்ப அனுபவப் பெருமை யாவர் புகல்வாரே.

@7. அதிசய மாலை

#3202
அக்கோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அயன் முதலோர் நெடும் காலம் மயல் முதல் நீத்து இருந்து
மிக்கு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் இருளால் மிக மருண்டு மதி_இலியாய் வினை விரிய விரித்து
இக் கோலத்துடன் இருந்தேன் அன்பு அறியேன் சிறியேன் எனைக் கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும்
தக்கோன் என்று உலகு இசைப்பத் தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

#3203
அச்சோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரி முதலோர் நெடும் காலம் புரி முதல் நீத்து இருந்து
நச்சு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் நாள் கழித்துக் கோள் கொழிக்கும் நடை நாயில் கடையேன்
எச்சு ஓடும் இழிவினுக்கு ஒன்று இல்லேன் நான் பொல்லேன் எனைக் கருதி யான் இருக்கும் இடத்தில் எழுந்தருளித்
தம் சோதி வணப் பொருள் ஒன்று எனக்கு அளித்துக் களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

#3204
அத்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அந்தணர் எல்லாரும் மறை மந்தணமே புகன்று
ஒத்து ஓலமிடவும் அவர்க்கு ஒருசிறிதும் அருளான் ஒதி_அனையேன் விதி அறியேன் ஒருங்கேன் வன் குரங்கேன்
இத் தோடம் மிக உடையேன் கடை நாய்க்கும் கடையேன் எனைக் கருதி யான் இருக்கும் இடம் தேடி நடந்து
சத்தோடமுற எனக்கும் சித்தி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

#3205
அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு_உடையார் ஐம்புலனும் செறிவு_உடையார் ஆகி
வந்து ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் மனம் சென்ற வழி எல்லாம் தினம் சென்ற மதியேன்
எந்தோ என்று உலகு இயம்ப விழி வழியே உழல்வேன் எனைக் கருதி எளியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து
சந்தோடமுற எனக்கும் தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

#3206
அப்பா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரும் தவர்கள் விரும்பி மிக வருந்தி உளம் முயன்று
இப் பாரில் இருந்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இ உலக நடை விழைந்து வெவ் வினையே புரிந்து
எப்பாலும் இழிந்து மனத்து இச்சை புரிகின்றேன் எனைக் கருதி யான் இருக்கும் இடம் தேடி அடைந்து
தப்பாத ஒளி வண்ணம் தந்து என்னை அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

#3207
அம்மா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அன்பர் எலாம் முயன்றுமுயன்று இன்பு அடைவான் வருந்தி
எம்மான் என்று ஏத்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இது நன்மை இது தீமை என்று நினையாமே
மை மாலில் களி சிறந்து வல்_வினையே புரியும் வஞ்சகனேன்-தனைக் கருதி வந்து மகிழ்ந்து எனக்கும்
தம்மானம் உற வியந்து சம்மானம் அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

#3208
ஆஆ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அடியர் எலாம் நினைந்துநினைந்து அவிழ்ந்து அகம் நெக்குருகி
ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கு அருளான் மாயை உலக விடயானந்தம் உவந்துஉவந்து முயன்று
தீவு ஆய நரகினிடை விழக்கடவேன் எனை-தான் சிவாயநம எனப் புகலும் தெளிவு_உடையன் ஆக்கிச்
சாவாத வரம் கொடுத்துத் தனக்கு அடிமை பணித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

#3209
அண்ணா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறம் கரைந்த நாவினர்கள் அகம் கரைந்துகரைந்து
கண் ஆர நீர் பெருக்கி வருந்தவும் அங்கு அருளான் கடை நாயில் கடையேன் மெய்க் கதியை ஒருசிறிதும்
எண்ணாத கொடும் பாவிப் புலை மனத்துச் சிறியேன் எனைக் கருதி வலியவும் நான் இருக்கும் இடத்து அடைந்து
தண் ஆர் வெண் மதி அமுதம் உணவு ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

#3210
ஐயா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அருமை அறிந்து அருள் விரும்பி உரிமை பல இயற்றிப்
பொய்யாத நிலை நின்ற புண்ணியர்கள் இருக்கப் புலை மனத்துச் சிறியேன் ஓர் புல்லு நிகர் இல்லேன்
செய்யாத சிறு தொழிலே செய்து உழலும் கடையேன் செருக்கு_உடையேன் எனைத் தனது திருவுளத்தில் அடைத்தே
சைய ஆதி அந்தம் நடுக் காட்டி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

#3211
அன்னோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அருள் அருமை அறிந்தவர்கள் அருள் அமுதம் விரும்பி
என்னோ இங்கு அருளாமை என்று கவன்று இருப்ப யாதும் ஒரு நன்றி_இலேன் தீது நெறி நடப்பேன்
முன்னோ பின்னும் அறியா மூட மனப் புலையேன் முழுக் கொடியேன் எனைக் கருதி முன்னர் எழுந்தருளித்
தன்னோடும் இணைந்த வண்ணம் ஒன்று எனக்குக் கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

#3212
ஐயோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரு வினைகள் அணுகாமல் அற நெறியே நடந்து
மெய் ஓதும் அறிஞர் எலாம் விரும்பி இருந்திடவும் வெய்ய வினை_கடல் குளித்து விழற்கு இறைத்துக் களித்துப்
பொய் ஓதிப் புலை பெருக்கி நிலை சுருக்கி உழலும் புரை மனத்தேன் எனைக் கருதிப் புகுந்து அருளிக் கருணைச்
சையோகமுற எனக்கும் வலிந்து ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

#3213
எற்றே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இச்சை எலாம் விடுத்து வனத்திடத்தும் மலையிடத்தும்
உற்றே மெய்த் தவம் புரிவார் உன்னி விழித்திருப்ப உலக விடயங்களையே விலகவிட மாட்டேன்
கற்று ஏதும் அறியகிலேன் கடையரினும் கடையேன் கருணை இலாக் கல்_மனத்துக் கள்வன் எனைக் கருதிச்
சற்றேயும் அன்று மிகப் பெரிது எனக்கு இங்கு அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

#3214
என்னே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இரவு_பகல் அறியாமல் இருந்த இடத்து இருந்து
முன்னே மெய்த் தவம் புரிந்தார் இன்னேயும் இருப்ப மூடர்களில் தலைநின்ற வேட மனக் கொடியேன்
பொன் நேயம் மிகப் புரிந்த புலைக் கடையேன் இழிந்த புழுவினும் இங்கு இழிந்திழிந்து புகுந்த எனைக் கருதித்
தன் நேயம் உற எனக்கும் ஒன்று அளித்துக் களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

#3215
ஓகோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் உரைப்பேன் உள்ளபடி உள்ள ஒன்றை உள்ளமுற விரும்பிப்
பாகோ முப்பழரசமோ என ருசிக்கப் பாடிப் பத்தி செய்வார் இருக்கவும் ஓர் பத்தியும் இல்லாதே
கோகோ என்று உலகு உரைப்பத் திரிகின்ற கொடியேன் குற்றம் அன்றிக் குணம் அறியாப் பெத்தன் எனைக் கருதித்
தாகோதரம் குளிர்ந்த தன்மை ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

@8. அபராத மன்னிப்பு மாலை

#3216
செய் வகை நன்கு அறியாதே திரு_அருளோடு ஊடிச் சில புகன்றேன் அறிவு அறியாச் சிறியரினும் சிறியேன்
பொய்_வகையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியனே மதி அணிந்த புரி சடையாய் விடையாய்
மெய்_வகையோர் விழித்திருப்ப விரும்பி எனை அன்றே மிக வலிந்து ஆட்கொண்டு அருளி வினை தவிர்த்த விமலா
ஐ வகைய கடவுளரும் அந்தணரும் பரவ ஆனந்தத் திரு_நடம் செய் அம்பலத்து எம் அரசே.

#3217
நிலை நாடி அறியாதே நின் அருளோடு ஊடி நீர்மை_அல புகன்றேன் நல் நெறி ஒழுகாக் கடையேன்
புலை நாயேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூத கணம் சூழ நடம் புரிகின்ற புனிதா
கலை நாடு மதி அணிந்த கன பவளச் சடையாய் கருத்து அறியாக் காலையிலே கருணை அளித்தவனே
தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே.

#3218
கலைக் கடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடிக் கரிசு புகன்றேன் கவலை_கடல் புணை என்று உணரேன்
புலைக் கடையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போற்றி சிவ போற்றி சிவ போற்றி சிவ போற்றி
தலைக்கடைவாய் அன்று இரவில் தாள்_மலர் ஒன்று அமர்த்தித் தனிப் பொருள் என் கையில் அளித்த தயவு உடைய பெருமான்
கொலைக் கடையார்க்கு எய்த அரிய குண_மலையே பொதுவில் கூத்தாடிக்கொண்டு உலகைக் காத்து ஆளும் குருவே

#3219
நின் புகழ் நன்கு அறியாதே நின் அருளோடு ஊடி நெறி_அலவே புகன்றேன் நல் நிலை விரும்பி நில்லேன்
புன் புலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூரண சிற்சிவனே மெய்ப்பொருள் அருளும் புனிதா
என் புடை அ நாள் இரவில் எழுந்தருளி அளித்த என் குருவே என் இரு கண் இலங்கிய நல் மணியே
அன்பு_உடையார் இன்பு அடையும் அழகிய அம்பலத்தே ஆத்தாளும் அப்பனுமாய்க் கூத்தாடும் பதியே.

#3220
துலைக்கொடி நன்கு அறியாதே துணை அருளோடு ஊடித் துரிசு புகன்றேன் கருணைப் பரிசு புகன்று அறியேன்
புலைக் கொடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பொங்கு திரைக் கங்கை மதி தங்கிய செம் சடையாய்
மலை_கொடி என் அம்மை அருள் மாது சிவகாமவல்லி மறைவல்லி துதி சொல்லி நின்று காணக்
கலை_கொடி நன்கு உணர் முனிவர் கண்டு புகழ்ந்து ஏத்தக் கனகசபை-தனில் நடிக்கும் காரண சற்குருவே.

#3221
பழுத்தலை நன்கு உணராதே பதி அருளோடு ஊடிப் பழுது புகன்றேன் கருணைப் பாங்கு அறியாப் படிறேன்
புழு_தலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியர்-தம் உள்ளகத்தே நண்ணிய மெய்ப்பொருளே
கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய்
விழுத் தலைவர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மெய்ம்மை அறிவு இன்பு உருவாய் விளங்கிய சற்குருவே.

#3222
கையடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடிக் காசு புகன்றேன் கருணைத் தேசு அறியாக் கடையேன்
பொய் அடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புத்தமுதே சுத்த சுக பூரண சிற்சிவமே
ஐயடிகள் காடவர்கோன் அகம் மகிழ்ந்து போற்றும் அம்பலத்தே அருள் நடம் செய் செம்பவள மலையே
மெய் அடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே வேத முடி மீது இருந்த மேதகு சற்குருவே.

#3223
திறப்பட நன்கு உணராதே திரு_அருளோடு ஊடித் தீமை புகன்றேன் கருணைத் திறம் சிறிதும் தெளியேன்
புறப் படிறேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதம் முதல் நாதம் வரைப் புணருவித்த புனிதா
உறப்படும் மெய் உணர்வு_உடையார் உள்ளகத்தே விளங்கும் உண்மை அறிவானந்த உரு உடைய குருவே
சிறப்பு அடை மா தவர் போற்றச் செம்பொன் மணிப் பொதுவில் திரு_தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திரு_நட நாயகனே.

#3224
தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடிச் சில புகன்றேன் திரு_கருணைத் திறம் சிறிதும் தெரியேன்
போந்தகனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போதாந்த மிசை விளங்கு நாதாந்த விளக்கே
ஊர்ந்த பணக் கங்கணமே முதல் பணிகள் ஒளிர உயர் பொதுவில் நடிக்கின்ற செயல் உடைய பெருமான்
சார்ந்தவரை எவ்வகையும் தாங்கி அளிக்கின்ற தயவு உடைய பெரும் தலைமைத் தனி முதல் எந்தாயே.

#3225
ஒல்லும் வகை அறியாதே உன் அருளோடு ஊடி ஊறு புகன்றேன் துயரம் ஆறும் வகை உணரேன்
புல்லியனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதி அணிந்து ஒளிர்கின்ற பொன்_மேனிப் பெருமான்
சொல்லியலும் பொருளியலும் கடந்த பரநாதத் துரிய வெளிப் பொருளான பெரிய நிலைப் பதியே
மெல் இயல் நல் சிவகாமவல்லி கண்டு மகிழ விரியும் மறை ஏத்த நடம் புரியும் அருள் இறையே.

@9. ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை

#3226
உலகியல் உணர்வோர் அணுத்துணையேனும் உற்றிலாச் சிறிய ஓர் பருவத்து
இலகிய எனக்கு உள் இருந்து அருள் நெறியில் ஏற்றவும் தரம் இலாமையினான்
விலகுறும் காலத்து அடிக்கடி ஏறவிடுத்துப் பின் விலகுறாது அளித்தாய்
திலக நல் காழி ஞானசம்பந்தத் தெள் அமுதாம் சிவ குருவே

#3227
உயிர் அனுபவம் உற்றிடில் அதனிடத்தே ஓங்கு அருள் அனுபவம் உறும் அச்
செயிர் இல் நல் அனுபவத்திலே சுத்த சிவ அனுபவம் உறும் என்றாய்
பயிலும் மூ ஆண்டில் சிவை தரு ஞான_பால் மகிழ்ந்து உண்டு மெய் நெறியாம்
பயிர் தழைந்துற வைத்து அருளிய ஞானபந்தன் என்று ஓங்கு சற்குருவே.

#3228
தத்துவ நிலைகள் தனித்தனி ஏறித் தனிப் பரநாதமாம் தலத்தே
ஒத்த தன்மயமாம் நின்னை நீ இன்றி உற்றிடல் உயிர் அனுபவம் என்று
இ துணை வெளியின் என்னை என்னிடத்தே இருந்தவாறு அளித்தனை அன்றோ
சித்த நல் காழி ஞானசம்பந்தச் செல்வமே எனது சற்குருவே.

#3229
தனிப் பரநாத வெளியின் மேல் நினது தன்மயம் தன்மயம் ஆக்கிப்
பனிப்பு இலாது என்றும் உள்ளதாய் விளங்கிப் பரம்பரத்து உள் புறம் ஆகி
இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்ததே அருள் அனுபவம் என்று
எனக்கு அருள் புரிந்தாய் ஞானசம்பந்தன் என்னும் என் சற்குரு மணியே.

#3230
உள்ளதாய் விளங்கும் ஒரு பெருவெளி மேல் உள்ளதாய் முற்றும் உள்ளதுவாய்
நள்ளதாய் எனதாய் நானதாய்த் தனதாய் நவிற்ற அரும் தானதாய் இன்ன
விள்ளொணா அப்பால் அப்படிக்கு அப்பால் வெறுவெளி சிவ அனுபவம் என்று
உள்ளுற அளித்த ஞானசம்பந்த உத்தம சுத்த சற்குருவே.

#3231
பொத்திய மூல மலப் பிணி தவிர்க்கும் பொருள் அருள் அனுபவம் அதற்குப்
பத்தியம் உயிரின் அனுபவம் இதனைப் பற்று அறப் பற்றுதி இதுவே
சத்தியம் என என்றனக்கு அருள் புரிந்த தனிப் பெருங் கருணை என் புகல்வேன்
முத்து இயல் சிவிகை இவர்ந்து அருள் நெறியின் முதல் அரசு இயற்றிய துரையே.

#3232
அடி எனல் எதுவோ முடி எனல் எதுவோ அருள் சிவம்-அதற்கு எனப் பல கால்
படியுற வருந்தி இருந்த என் வருத்தம் பார்த்து அருளால் எழுந்தருளி
மிடி அற எனை-தான் கடைக்கணித்து உனக்குள் விளங்குவ அடி முடி என்றாய்
வடிவு இலாக் கருணை_வாரியே மூன்று வயதினில் அருள் பெற்ற மணியே.

#3233
செவ் வகை ஒருகால் படும் மதி அளவே செறி பொறி மனம் அதன் முடிவில்
எவ்வகை நிலையும் தோற்றும் நீ நினக்குள் எண்ணியபடி எலாம் எய்தும்
இவ்வகை ஒன்றே வருத்தம் இல் வகை என்று எனக்கு அருள் புரிந்த சற்குருவே
தெவ் வகை அமண இருள் அற எழுந்த தீபமே சம்பந்தத் தேவே.

#3234
முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னி நின்று உளம் மயக்குறும் கால்
அன்புறு நிலையால் திரு_நெறித் தமிழ் கொண்டு ஐயம் நீத்து அருளிய அரசே
என்பு பெண் உருவோடு இன் உயிர்-அது கொண்டு எழுந்திடப் புரிந்து உலகு எல்லாம்
இன்புறப் புரிந்த மறைத் தனிக் கொழுந்தே என் உயிர்க்குயிர் எனும் குருவே.

#3235
வரு பகல் கற்பம் பல முயன்றாலும் வரல் அரும் திறன் எலாம் எனக்கே
ஒரு பகல் பொழுதில் உற அளித்தனை நின் உறு பெரும் கருணை என் உரைப்பேன்
பெருமணநல்லூர்த் திருமணம் காணப் பெற்றவர்-தமை எலாம் ஞான
உரு அடைந்து ஓங்கக் கருணைசெய்து அளித்த உயர் தனிக் கவுணிய மணியே.

#3236
சீர் ஆர் சண்பைக் கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே
கார் ஆர் மிடற்றுப் பவள மலைக் கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்பக் குதலை_மொழிக் குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே
பேர் ஆர் ஞானசம்பந்தப் பெருமானே நின் திரு_புகழைப் பேசுகின்றோர் மேன்மேலும் பெரும் செல்வத்தில் பிறங்குவரே

@10 ஆளுடைய அரசுகள் அருண்மாலை

#3237
திருத் தகு சீர் அதிகை அருள் தலத்தின் ஓங்கும் சிவ_கொழுந்தின் அருள் பெருமைத் திறத்தால் வாய்மை
உருத்தகு மெய் உணர்ச்சி வடிவு ஆகிச் சைவ ஒளி விளங்க நாவரசு என்று ஒரு பேர் பெற்றுப்
பொருத்தமுற உழவாரப்படை கைக் கொண்ட புண்ணியனே நண்ணிய சீர்ப் புனிதனே என்
கருத்து அமர்ந்த கலை மதியே கருணை ஞான_கடலே நின் கழல் கருதக் கருதுவாயே.

#3238
வாய்மை இலாச் சமணாதர் பல கால் செய்த வஞ்சம் எலாம் திரு_அருள் பேர் வலத்தால் நீந்தித்
தூய்மை பெறும் சிவ நெறியே விளங்க ஓங்கும் சோதி மணி_விளக்கே என் துணையே எம்மைச்
சேய்மை விடாது அணிமையிடத்து ஆள வந்த செல்வமே எல்லை_இலாச் சிறப்பு வாய்ந்து உள்
ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ அணியே சொல்லரசு எனும் பேர் அமைந்த தேவே.

#3239
தேவர் எலாம் தொழும் தலைமைத் தேவர் பாதத் திரு_மலரை முடிக்கு அணிந்து திகழ்ந்து நின்ற
நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான நாயகனே நல்லவர்க்கு நண்பனே எம்
பாவம் எலாம் அகற்றி அருள் பான்மை நல்கும் பண்பு உடைய பெருமானே பணிந்து நின்-பால்
மேவ விருப்புறும் அடியர்க்கு அன்புசெய்ய வேண்டினேன் அவ்வகை நீ விதித்திடாயே.

#3240
விதி விலக்கு ஈது என்று அறியும் விளைவு ஒன்று இல்லா வினையினேன் எனினும் என்னை விரும்பி என்னுள்
மதி விளக்கை ஏற்றி அருள் மனையின் ஞான வாழ்வு அடையச்செயல் வேண்டும் வள்ளலே நல்
பதி மலர்_தாள் நிழல் அடைந்த தவத்தோர்க்கு எல்லாம் பதியே சொல்லரசு எனும் பேர் படைத்த தேவே
கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே.

#3241
கண் உளே விளங்குகின்ற மணியே சைவக் கனியே நாவரசே செங்கரும்பே வேதப்
பண் உளே விளைந்த அருள் பயனே உண்மைப் பதி ஓங்கு நிதியே நின் பாதம் அன்றி
விண் உளே அடைகின்ற போகம் ஒன்றும் விரும்பேன் என்றனை ஆள வேண்டும் கண்டாய்
ஒண் உளே ஒன்பது வாய் வைத்தாய் என்ற உத்தமனே சித்தம் மகிழ்ந்து உதவுவோனே.

#3242
ஓங்காரத் தனி மொழியின் பயனைச் சற்றும் ஓர்கிலேன் சிறியேன் இ உலக வாழ்வில்
ஆங்காரப் பெரு மத மால் யானை போல அகம்பாவமயன் ஆகி அலைகின்றேன் உன்
பாங்கு ஆய மெய் அடியர்-தம்மைச் சற்றும் பரிந்திலேன் அருள் அடையும் பரிசு ஒன்று உண்டோ
தீங்கு ஆய செயல் அனைத்தும் உடையேன் என்ன செய்வேன் சொல்லரசே என் செய்குவேனே.

#3243
செய் வகை ஒன்று அறியாத சிறியேன் இந்தச் சிற்றுலக வாழ்க்கையிடைச் சிக்கி அந்தோ
பொய் வகையே புரிகின்றேன் புண்ணியா நின் பொன் அடியைப் போற்றிலேன் புனிதனே நான்
உய் வகை எவ்வகை யாது செய்வேன் நீயே உறு_துணை என்று இருக்கின்றேன் உணர்வு_இலேனை
மெய் வகையில் செலுத்த நினைத்திடுதியோ சொல்வேந்தே என் உயிர்_துணையாய் விளங்கும் கோவே.

#3244
விளங்கும் மணி_விளக்கு என நால்_வேதத்து உச்சி மேவிய மெய்ப்பொருளை உள்ளே விரும்பி வைத்துக்
களங்கு அறு மெய் அன்பர் எல்லாம் களிப்ப அன்று ஓர் கல் துணையால் கடல் கடந்து கரையில் போந்து
துளங்கு பெரும் சிவ நெறியைச் சார்ந்த ஞானத் துணையே நம் துரையே நல் சுகமே என்றும்
வளம் கெழும் ஆகம நெறியை வளர்க்க வந்த வள்ளலே நின் அருளை வழங்குவாயே.

#3245
அருள் வழங்கும் திலகவதி அம்மையார் பின் அவதரித்த மணியே சொல்லரசே ஞானத்
தெருள் வழங்கும் சிவ நெறியை விளக்க வந்த செழும் சுடர் மா மணி_விளக்கே சிறியனேனை
இருள் வழங்கும் உலகியல் நின்று எடுத்து ஞான இன் அருள்தந்து ஆண்டு அருள்வாய் இன்றேல் அந்தோ
மருள் வழங்கும் பவ நெறியில் சுழல்வேன் உய்யும் வகை அறியேன் நின் அருட்கு மரபு அன்று ஈதே.

#3246
தேர்ந்த உளத்திடை மிகவும் தித்தித்து ஊறும் செழும் தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை
சார்ந்து திகழ் அப்பூதி அடிகட்கு இன்பம் தந்த பெருந்தகையே எம் தந்தையே உள்
கூர்ந்த மதி நிறைவே என் குருவே எங்கள் குல_தெய்வமே சைவக் கொழுந்தே துன்பம்
தீர்ந்த பெரு நெறி துணையே ஒப்பு_இலாத செல்வமே அப்பன் எனத் திகழ்கின்றோனே.

@11. ஆளுடைய நம்பிகள் அருண்மாலை

#3247
மதி அணி செம் சடைக் கனியை மன்றுள் நடம் புரி மருந்தைத்
துதி அணி செம் சுவைப் பொருளில் சொல்_மாலை தொடுத்து அருளி
விதி அணி மா மறை நெறியும் மெய் நிலை ஆகம நெறியும்
வதி அணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே.

#3248
நீற்றில் இட்ட நிலையாப் புன்_நெறி_உடையார்-தமைக் கூடிச்
சேற்றில் இட்ட கம்பம் எனத் தியங்குற்றேன்-தனை ஆளாய்
ஏற்றில் இட்ட திரு_அடியை எண்ணி அரும் பொன்னை எலாம்
ஆற்றில் இட்டுக் குளத்து எடுத்த அருள் தலைமைப் பெருந்தகையே.

#3249
இலைக் குள நீர் அழைத்து அதனில் இடங்கர் உற அழைத்து அதன் வாய்த்
தலைக் குதலை மதலை உயிர் தழைப்ப அழைத்து அருளிய நின்
கலைக்கும் வட_கலையின் முதல் கலைக்கும் உறு கணக்கு உயர் பொன்
மலைக்கும் அணு நிலைக்கும் உறா வன்தொண்டப் பெருந்தகையே.

#3250
வேதம் முதல் கலைகள் எலாம் விரைந்துவிரைந்து அனந்தம் முறை
ஓத அவைக்கு அணுத்துணையும் உணர்வு அரிதாம் எம் பெருமான்
பாத_மலர் நினது திரு_பணி முடி மேல் படப் புரிந்த
மா தவம் யாது உரைத்து அருளாய் வன்தொண்டப் பெருந்தகையே.

#3251
ஏழ்_இசையாய் இசைப் பயனாய் இன் அமுதாய் என்னுடைய
தோழனுமாய் என்று முன் நீ சொன்ன பெரும் சொல் பொருளை
ஆழ நினைத்திடில் அடியேன் அரும் கரணம் கரைந்துகரைந்து
ஊழ் இயல் இன்புறுவது காண் உயர் கருணைப் பெருந்தகையே.

#3252
வான் காண இந்திரனும் மாலையனும் மா தவரும்
தான் காண இறை அருளால் தனித் தவள யானையின் மேல்
கோன் காண எழுந்தருளிக் குலவிய நின் கோலம்-அதை
நான் காணப்பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.

#3253
தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டைத் தினம்-தோறும்
நான் படிக்கும் போது என்னை நான் அறியேன் நா ஒன்றோ
ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும்
தான் படிக்கும் அனுபவம் காண் தனிக் கருணைப் பெருந்தகையே.

#3254
இன்பு ஆட்டுத் தொழில் பொதுவில் இயற்றுகின்ற எம் பெருமான்
உன் பாட்டுக்கு உவப்புறல் போல் ஊர் பாட்டுக்கு உவந்திலர் என்று
என்பாட்டுக்கு இசைப்பினும் என் இடும் பாட்டுக் கரணம் எலாம்
அன்பு ஆட்டுக்கு இசைவது காண் அருள் பாட்டுப் பெருந்தகையே.

#3255
பரம்பரமாம் துரியம் எனும் பதத்து இருந்த பரம்பொருளை
உரம் பெறத் தோழமைகொண்ட உன் பெருமை-தனை மதித்து
வரம் பெற நல் தெய்வம் எலாம் வந்திக்கும் என்றால் என்
தரம் பெற என் புகல்வேன் நான் தனித் தலைமைப் பெருந்தகையே.

#3256
பேர் ஊரும் பரவை மனப் பிணக்கு அற எம் பெருமானை
ஊரூரும் பல புகல ஓர் இரவில் தூதன் எனத்
தேர் ஊரும் திருவாரூர்த் தெருவு-தொறும் நடப்பித்தாய்
ஆரூர நின் பெருமை அயன் மாலும் அளப்ப அரிதே.

@12. ஆளுடைய அடிகள் அருண்மாலை

#3257
தேசு அகத்தில் இனிக்கின்ற தெள் அமுதே மாணிக்க
வாசகனே ஆனந்த வடிவான மா தவனே
மாசு அகன்ற நீ திருவாய்_மலர்ந்த தமிழ் மா மறையின்
ஆசு அகன்ற அனுபவம் நான் அனுபவிக்க அருளுதியே.

#3258
கரு வெளிக்கு உள் புறன் ஆகிக் கரணம் எலாம் கடந்துநின்ற
பெருவெளிக்கு நெடும் காலம் பித்தாகித் திரிகின்றோர்
குரு வெளிக்கே நின்று உழலக் கோது அற நீ கலந்த தனி
உரு வெளிக்கே மறை புகழும் உயர் வாதவூர் மணியே.

#3259
மன் புருவ நடு முதலா மனம் புதைத்து நெடும் காலம்
என்பு உருவாய்த் தவம் செய்வார் எல்லாரும் ஏமாக்க
அன்பு உருவம் பெற்றதன் பின் அருள் உருவம் அடைந்து பின்னர்
இன்பு உருவம் ஆயினை நீ எழில் வாதவூர் இறையே.

#3260
உரு அண்டப் பெரு மறை என்று உலகம் எலாம் புகழ்கின்ற
திருஅண்டப்பகுதி எனும் திரு அகவல் வாய்_மலர்ந்த
குரு என்று எ பெரும் தவரும் கூறுகின்ற கோவே நீ
இரு என்ற தனி அகவல் எண்ணம் எனக்கு இயம்புதியே.

#3261
தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய்
ஆடுகின்ற சேவடிக் கீழ் ஆடுகின்ற ஆர்_அமுதே
நாடுகின்ற வாதவூர் நாயகனே நாய்_அடியேன்
வாடுகின்ற வாட்டம் எலாம் வந்து ஒருக்கால் மாற்றுதியே.

#3262
சேமம் மிகும் திருவாதவூர்த் தேவு என்று உலகு புகழ்
மா மணியே நீ உரைத்த வாசகத்தை எண்ணு-தொறும்
காமம் மிகு காதலன்-தன் கலவி-தனைக் கருதுகின்ற
ஏமமுறு கற்பு_உடையாள் இன்பினும் இன்பு எய்துவதே.

#3263
வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடும் கால் நல் கருப்பஞ்சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழும் கனித் தீம் சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.

#3264
வரு மொழி செய் மாணிக்கவாசக நின் வாசகத்தில்
ஒரு மொழியே என்னையும் என் உடையனையும் ஒன்றுவித்துத்
தரு மொழியாம் என்னில் இனிச் சாதகம் ஏன் சஞ்சலம் ஏன்
குரு மொழியை விரும்பி அயல் கூடுவது ஏன் கூறுதியே

#3265
பெண் சுமந்த பாகப் பெருமான் ஒரு மா மேல்
எண் சுமந்த சேவகன் போல் எய்தியதும் வைகை நதி
மண் சுமந்து நின்றதும் ஓர் மாறன் பிரம்படியால்
புண் சுமந்து கொண்டதும் நின் பொருட்டு அன்றோ புண்ணியனே.

#3266
வாட்டம் இலா மாணிக்கவாசக நின் வாசத்தைக்
கேட்ட பொழுது அங்கு இருந்த கீழ்ப் பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னில் இங்கு நான் அடைதல் வியப்பு அன்றே