திருப்புகழில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

திருப்புகழ் – சொற்கள் – எண்ணிக்கை

பாடல்கள் சொற்கள் தனிச்சொற்கள்
1334 1,30,457 30998

விளக்கம்

திருப்புகழ் நூலின் பாடல்கள் பல்வேறு முறைகளில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. அவை பல்வேறு எண்ணிக்கையிலும் உள்ளன. இந்தத் தொடரடைவில் கொடுக்கப்பட்டுள்ள பாடல் வரிசை எண்களும், எண்ணிக்கையும் kaumaram.com என்ற இணையதளத்தில் உள்ளபடி கொடுக்கப்பட்டுள்ளன. அந்த இணையதளத்தை உருவாக்கியோருக்கு என் நன்றி.
திருப்புகழின் பாடல்கள் சந்தத்தின்படி அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள சொற்களைப் பிரித்து உணர்வது வெகு கடினம். அவ்வாறு பிரித்துள்ள ஒரு கோப்பினைக் கவிப்பெருஞ்சுடர்.ஹரிகிருஷ்ணன் அவர்கள் எனக்கு மின்னஞ்சல் மூலம் கொடுத்துதவினார். மிகப்பெரும்பாலும் அந்தக் கோப்பில் உள்ளவாறே சொற்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.

திருப்புகழில் உள்ள ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளைக் கொண்டவை. இவற்றை அடி எதுகைகளின் மூலம் அறியலாம். ஆனால் மிகப்பெரும்பாலான அடிகள் இரண்டு வரிகளைக் கொண்டிருக்கின்றன. காட்டாக,

ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞான மொழி பேசு முகம் ஒன்றே.

இவை இரண்டுமே பாடலின் முதல் அடியாகும். இந்தத் தொடரடைவில் இவை இரண்டு வரிகளாகக் கொள்ளப்பட்டுள்ளன, பல பாடல்களில் ஒவ்வொரு வரியுமே மிக நீளமாக அமைந்துள்ளதைக் காணலாம். ஒரு வரியில் 24 சீர்கள் கொண்ட பாடல்களும் உண்டு. இவற்றைக் கணினித் திரையில் காண்பிக்கும்போது இவை மடக்கி அடிக்கப்படுவதால் பாடல் வரிகளைக் காண்பதில் குழப்பம் ஏற்படும். எனவே பாடலின் அடிகள் கணினித் திரைக்குள் அடங்குமாறு பல வரிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே பாடலின் வரிகள் புத்தகத்தில் அச்சிட்டவாறு இரா. எனவே, தொடரடைவில் பாடல் எண்ணுக்கு அடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள எண், தொடரடைவுக்காகப் பிரிக்கப்பட்டுள்ள பாடலில் உள்ள
வரியின் எண் ஆகும். பாடல் எண்ணைச் சொடுக்கினால் முழுப்பாடலையும் திரையில் காணலாம். அங்கு அந்தப் பாடல் வரிகள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என்பதைக் காணலாம். சந்தங்களில் குழப்பம் ஏற்படாவண்ணம் வெகு கவனத்துடன் பாடல் வரிகள் பிரித்து அமைக்கப்பட்டுள்ளன.

தொடரடைவு உருவாக்கத்தில் சில வழக்காறுகள் பின்பற்றப்பட்டுள்ளன.

1. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் பாடலின் எண் கொடுக்கப்படும். அதற்கடுத்த / என்ற கோட்டை அடுத்து அச் சொல் இடம்பெறும் வரி எண் கொடுக்கப்படும்.

எ.காட்டு

சூரசூர (1)
சூரசூர சூராதிசூரர்க்கு எளிவு ஆயா தோகையா குமாரா கிராத கொடி கேள்வா – திருப்:1030/3

இந்த வரி காணப்படும் பாடல் எண் 1030. அந்த எண்ணைச் சொடுக்கினால் முழுப்பாடலையும் காணலாம். அதில் இந்த வரியின் எண் 3. இந்த வரி எண், புத்தகங்களில் காணப்படும் வரி முறையினின்றும் வேறுபட்டது.
எனவே, இங்கு கொடுக்கப்பட்டுள்ள பாடல் வரியின் எண்ணை வைத்துப் புத்தகங்களில் தேடும்போது, அச்சொல் வேறு வரியில் இருக்க வாய்ப்புண்டு.

2. வழக்காறு-2

ஒரு சொல் ஒரு வரியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த வரியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி வரியில் இருந்தால் அடுத்த வரி கொடுக்கப்படமாட்டாது.

திருப்புகழில் பெரும்பாலான இரட்டைப்படை எண் உள்ள வரிகள் பொருள் முடிவுற்றனவாக அமைந்துள்ளன. எனவே அவற்றின் இறுதிச் சொற்களுக்கு அடுத்த வரியில் பொருள் தொடர்ச்சி இருக்க வாய்ப்பில்லை. அத்தகைய இறுதிச் சொற்களுக்கும் அடுத்த வரி கொடுக்கப்படவில்லை.

எ.காட்டு

காசிடை (1)
செய்வார் இப்படியே பல வாணிபம் இய்யார் இல் பணமே ஒரு காசிடை
செய்யார் சற்பனைகாரர் பிசாசர் உன் அடி பேணா – திருப்:767/5,6

5-ஆம் வரியில் இறுதியில் காசிடை என்ற சொல் வந்துள்ளதால், பொருள் முடிபுக்காக, அடுத்த வரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

3. வழக்காறு-3

ஒரு வரியில் ஒரே சொல் பன் முறை வந்தால், அந்த வரி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

பால் மொழி படித்து காட்டி ஆடையை நெகிழ்த்து காட்டி பாயலில் இருத்தி காட்டி அநுராகம் – திருப்:1176/1
பால் மொழி படித்து காட்டி ஆடையை நெகிழ்த்து காட்டி பாயலில் இருத்தி காட்டி அநுராகம் – திருப்:1176/1
பால் மொழி படித்து காட்டி ஆடையை நெகிழ்த்து காட்டி பாயலில் இருத்தி காட்டி அநுராகம் – திருப்:1176/1

காட்டி என்ற சொல் இந்த வரியில் மூன்று முறை வந்திருப்பதால் இந்த வரி மூன்று முறை கொடுக்கப்பட்டுள்ளது.