திருக்குற்றாலக் குறவஞ்சி


@1 தற்சிறப்புப்பாயிரம்
** விநாயகர் துதி

#1
பூ மலி இதழி மாலை புனைந்த குற்றாலத்து ஈசர்
கோ மலர்ப் பாதம் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட
மா மதத்து அருவி பாயும் மலை என வளர்ந்த மேனிக்
கா மலி தருப் போல் ஐந்துகைவலான் காவலனே
** முருகக் கடவுள்

#2
பன்னிரு கை வேல் வாங்கப் பதினொருவர் படை தாங்கப் பத்துத் திக்கும்
நல் நவவீரரும் புகழ மலைகள் எட்டும் கடல் ஏழும் நாடி ஆடிப்
பொன்னின் முடி ஆறு ஏந்தி அஞ்சுதலை எனக்கு ஒழித்துப் புயம் நால் மூன்றாய்த்
தன் இரு தாள் தரும் ஒருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே
** திரிகூடநாதர்

#3
கிளைகளாய்க் கிளைத்த பல கொப்பு எலாம் சதுர்வேதம் கிளைகள் ஈன்ற
களை எலாம் சிவலிங்கம் கனி எலாம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற
சுளை எலாம் சிவலிங்கம் வித்து எலாம் சிவலிங்க சொரூபமாக
விளையும் ஒரு குறும் பலவின் முளைத்து எழுந்த சிவக்கொழுந்தை வேண்டுவோமே
** குழல்வாய்மொழியம்மை

#4
தவள மதி தவழ் குடுமிப் பனிவரையின் முளைத்து எழுந்து தகை சேர் முக்கண்
பவளமலைதனில் ஆசை படர்ந்து ஏறிக் கொழுந்துவிட்டுப் பருவமாகி
அவிழும் நறைப் பூம் கடப்பம் தாமரையும் ஈன்று ஒரு கோட்டு ஆம்பல் ஈன்று
குவலயம் பூத்து அருள் கொடியைக் கோதை குழல்வாய்மொழியைக் கூறுவோமே
** சைவசமயாச்சாரியார் நால்வருள் மூவர்

#5
தலையிலே ஆறு இருக்க மாமிக்காகத் தாங்கு கடல் ஏழு அழைத்த திருக்குற்றாலர்
சிலையிலே தடித்த தடம் புயத்தை வாழ்த்திச் செழித்த குறவஞ்சி நாடகத்தைப் பாட
அலையிலே மலை மிதக்க ஏறினானும் அத்தியிலே பூவை அந்நாள் அழைப்பித்தானும்
கலையிலே கிடைத்த பொருள் ஆற்றில் போட்டுக் கன குளத்தில் எடுத்தானும் காப்பதாமே
** அகத்தியமுனிவர் மாணிக்கவாசக சுவாமிகள்

#6
நித்தர் திரிகூடலிங்கர் குறவஞ்சி நாடகத்தை நிகழ்த்த வேண்டி
முத்தர் திருமேனி எல்லாம் உருகவே தமிழ் உரைத்த முனியைப் பாடி
இத் தனுவில் ஆத்துமம் விட்டு இறக்கும் நாள் சிலேட்டுமம் வந்து ஏறாவண்ணம்
பித்தன் அடித் துணை சேர்ந்த வாதவூரான் அடிகள் பேணுவோமே
** சரசுவதி

#7
அடி இணை மலரும் செவ் வாய் ஆம்பலும் சிவப்பினாளை
நெடிய பூம் குழலும் மைக் கண் நீலமும் கறுப்பினாளைப்
படிவமும் புகழும் செம் கைப் படிகம் போல் வெளுப்பாம் ஞானக்
கொடிதனைத் திருக்குற்றாலக் குறவஞ்சிக்கு இயம்புவோமே
** நூற்பயன்

#8
சிலை பெரிய வேடனுக்கும் நரிக்கும் வேதச் செல்வருக்கும் தேவருக்கும் இரங்கி மேனாள்
கொலை களவு கள் காமம் குருத்துரோகம் கொடிய பஞ்சபாதகமும் தீர்த்ததாலே
நிலவு_அணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள் நினைத்த வரம் பெறுவர் அது நினைக்க வேண்டிப்
பல வளம் சேர் குறவஞ்சி நாடகத்தைப் படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் பலன் உண்டாமே
** அவையடக்கம்

#9
தாரினை விருப்பமாகத் தலைதனில் முடிக்கும்தோறும்
நாரினைப் பொல்லாது என்றே ஞாலத்தோர் தள்ளுவாரோ
சீரிய தமிழ் மாலைக்குள் செல்வர் குற்றாலத்து ஈசர்
பேரினால் எனது சொல்லைப் பெரியவர் தள்ளார் தாமே

@2 நூல்
** 2. குற்றாலநாதர் திருவுலா
** கட்டியக்காரன் வரவு

#1
தேர் கொண்ட வசந்த வீதிச் செல்வர் குற்றாலத்து ஈசர்
பார் கொண்ட விடையில் ஏறும் பவனி எச்சரிக்கை கூற
நேர் கொண்ட புரி நூல் மார்பும் நெடிய கைப்பிரம்புமாகக்
கார் கொண்ட முகில் ஏறு என்னக் கட்டியக்காரன் வந்தான்
** இராகம் – தோடி : தாளம் – சாப்பு
** கண்ணிகள்

#2
பூ மேவும் மனு வேந்தர் தேவேந்தர் முதலோரைப்
புரந்திடும் செங்கோலான் பிரம்புடையான்

#3
மா மேருச் சிலையாளர் வரதர் குற்றாலநாதர்
வாசல் கட்டியக்காரன் வந்தனனே
** திரிகூடநாதர் பவனி வருதலைக் கட்டியக்காரன் கூறுதல்
** விருத்தம்

#4
மூக்கு எழுந்த முத்து_உடையார் அணிவகுக்கும் நல் நகர மூதூர் வீதி
வாக்கு எழுந்த குறுமுனிக்கா மறி எழுந்த கரம் காட்டும் வள்ளலார் சீர்த்
தேக்கு எழுந்த மறை நான்கும் சிலம்பு எழுந்த பாதர் விடைச் சிலம்பில் ஏறி
மேக்கு எழுந்த மதி சூடிக் கிழக்கு எழுந்த ஞாயிறு போல் மேவினாரே
** இராகம் – பந்துவராளி : தாளம் – சாப்பு
** பல்லவி

#5
பவனி வந்தனரே மழ விடைப் பவனி வந்தனரே
** அநுபல்லவி

#6
அவனி போற்றிய குறும்பலா உறை மவுனநாயகர் எவனநாயகர்
சிவனுமாய் அரி அயனும் ஆனவர் கவன மால் விடைஅதனில் ஏறியே
** சரணங்கள்

#7
அண்டர் கூட்டமும் முனிவர் கூட்டமும் அசுரர் கூட்டமும் மனிதராகிய
தொண்டர் கூட்டமும் இமைப்பிலார் எனச் சூழ்ந்து தனித்தனி மயங்கவே
பண்டை நரர் இவர் தேவர் இவர் எனப் பகுத்து நிறுவிய வேளை-தொறும்தொறும்
மண்டலீகரை நந்தி பிரம்படி மகுட கோடியில் புடைக்கவே

#8
தடுப்பது ஒரு கரம் கொடுப்பது ஒரு கரம் தரித்த சுடர் மழு விரித்தது ஒரு கரம்
எழுத்த சிறு மறி பிடித்தது ஒரு கரம் இலங்கப் பணி அணி துலங்கவே
அடுத்த ஒரு புலி கொடுத்த சோமனும் ஆனை கொடுத்த விதானச் சேலையும்
உடுத்த திருமருங்கு அசைய மலர் அயன் கொடுத்த பரிகலம் இசையவே

#9
தொடரும் ஒரு பெருச்சாளி ஏறிய தோன்றல் செயப் படை தாங்கவே
அடல் குலாவிய தோகை வாகனத்து அரசு வேல் வலம் வாங்கவே
படலை மார்பினில் கொன்றை மாலிகை பதக்கம் மணி ஒளி தேங்கவே
உடைய நாயகன் வரவு கண்டுகண்டு உலகு எலாம் தழைத்து ஓங்கவே

#10
இடியின் முழக்கொடு படரும் முகில் என யானை மேல் கன பேரி முழக்கமும்
துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி துதிக்கையால் செவி புதைக்கவே
அடியர் முழக்கிய திருப்பலாண்டு இசை அடைத்த செவிகளும் திறக்க மூவர்கள்
வடிசெய் தமிழ்த் திருமுறைகள் ஒருபுறம் மறைகள் ஒருபுறம் வழங்கவே

#11
கனக தம்புரு கின்னரம் களி ஆசை வீணை மிழற்றவே
அனக திருமுத்தின் சிவிகை கவிகை பொன் ஆலவட்டம் நிழற்றவே
வனிதைமார் பல குஞ்சம் சாமரை வரிசை விசிறி சுழற்றவே
தனதன் இந்திரன் வருணன் முதலிய சகல தேவரும் வழுத்தவே

#12
சைவர் மேலிடச் சமணர் கீழிடச் சகல சமயமும் ஏற்கவே
கை வல் ஆழி அம் கருணை மாலொடு கமலத்தோன் புடை காக்கவே
ஐவர்நாயகன் வந்தனன் பல அமரர்நாயகன் வந்தனன்
தெய்வநாயகன் வந்தனன் எனச் சின்னம் எடுத்தெடுத்து ஆர்க்கவே

#13
சேனைப் பெருக்கமும் தானைப் பெருக்கமும் தேரின் பெருக்கமும் தாரின் பெருக்கமும்
ஆனைப் பெருக்கமும் குதிரைப் பெருக்கமும் அவனி முழுதினும் நெருங்கவே
மோனைக் கொடிகளின் காடு நெடுவெளி மூடி அடங்கலும் ஓடி இருண்ட பின்
ஏனைச் சுடர் விரி இடப கேதனம் எழுந்து திசைதிசை விளங்கவே

#14
கொத்து மலர்க் குழல் தெய்வ மங்கையர் குரவை பரவையை நெருக்கவே
ஒத்த திருச்செவி இருவர் பாடல்கள் உலக மேழையும் உருக்கவே
மத்தளம் புயல் போல் முழங்கிட மயில்_அனார் நடம் பெருக்கவே
சத்தி பயிரவி கெளரி குழல் பொழித் தையலாள் இடம் இருக்கவே
** பவனி காணப் பெண்கள் வருதல்
** விருத்தம்

#15
பால் ஏறும் விடையில் திரிகூடப்பெருமானார் பவனி காணக்
கால் ஏறும் காமனுக்காக் கை ஏறும் படைப் பவுஞ்சாய்க் கன்னிமார்கள்
சேல் ஏறும் கலக விழிக் கணை தீட்டிப் புருவ நெடும் சிலைகள் கோட்டி
மால் ஏறப் பொருதும் என்று மணிச் சிலம்பு முரசு அறைய வருகின்றாரே
** பவனி காண வந்த பெண்கள் சொல்லுதல்
** இராகம் – புன்னாகவராளி : தாளம் – சாப்பு
** கண்ணிகள்

#16
ஒரு மானைப் பிடித்துவந்த பெருமானைத் தொடர்ந்துவரும்
ஒரு கோடி மான்கள் போல் வரு கோடி மடவார்

#17
புரிநூலின் மார்பன் இவன் அயன் என்பார் அயன் ஆகில்
பொங்கு அரவம் ஏது தனிச் சங்கம் ஏது என்பார்

#18
விரி கருணை மால் என்பார் மாலாகில் விழியின் மேல்
விழி உண்டோ முடியின் மேல் முடி உண்டோ என்பார்

#19
இருபாலும் நான்முகனும் திருமாலும் வருகையால்
ஈசன் இவன் திரிகூடராசனே என்பார்

#20
ஒரு கை வளை பூண்ட பெண்கள் ஒரு கை வளை பூண மறந்து
ஓடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்

#21
இரு தனத்து ரவிக்கைதனை அரையில் உடை தொடுவார் பின்
இந்த உடை ரவிக்கை எனச் சந்த முலைக்கு இடுவார்

#22
கரு மனம் புறம் போக ஒரு கண்ணுக்கு மை எடுத்த
கையுமா ஒரு கண் இட்ட மையுமாய் வருவார்

#23
நிருபன் இவன் நல் நகரத் தெருவிலே நெடுநேரம்
நில்லானோ ஒரு வசனம் சொல்லானோ என்பார்

#24
மெய் வளையும் மறு உடைய தெய்வநாயகன் முடித்த
வெண்மதியும் விளங்குது எங்கள் பெண்மதி போல் என்பார்

#25
பை வளைத்துக் கிடக்கும் இவன் மெய் வளையும் பாம்புகட்குப்
பசியாதோ தென்றலைத்தான் புசியாதோ என்பார்

#26
இவ் வளைக் கை தோள் அழுந்த இவன் மார்பில் அழுந்தாமல்
என்ன முலை நமக்கு எழுந்த வன்ன முலை என்பார்

#27
மை வளையும் குழல் சோரக் கை வளை கொண்டான் இது என்ன
மாயமோ சடை தரித்த ஞாயமோ என்பார்

** 3. வசந்தவல்லியின் காதல்
** வசந்தவல்லி வருதல்
** விருத்தம்

#28
நல் நகர்ப் பெருமான் முன் போய் நாணமும் கலையும் தோற்ற
கன்னியர் சநுப் போல் காட்டிக் காமவேள் கலகமூட்டிப்
பொன் அணித் திலதம் தீட்டிப் பூ மலர் மாலை சூட்டி
வன்ன மோகினியைக் காட்டி வசந்த மோகினி வந்தாளே
** இராகம் – கல்யாணி : தாளம் – ஆதி
** கண்ணிகள்

#29
வங்காரப் பூஷணம் பூட்டித் திலதம் தீட்டி மாரனைக் கண்ணாலே மருட்டிச்
சிங்கார மோகனப் பெண்ணாள் வசந்தவல்லி தெய்வ ரம்பை போலவே வந்தாள்

#30
கண்ணுக்குக் கண் இணை சொல்லத் திரிகூடக் கண்ணுதலைப் பார்வையால் வெல்லப்
பெண்ணுக்குப் பெண் மயங்கவே வசந்தவல்லி பேடை அன்னம் போலவே வந்தாள்

#31
கை ஆரச் சூடகம் இட்டு மின்னாரை வெல்லக் கண்ணில் ஒரு நாடகம் இட்டு
ஒய்யாரமாக நடந்து வசந்தவல்லி ஓவியம் போலவே வந்தாள்

#32
சல்லாப மாது லீலர் குற்றாலநாதர் சங்க நெடுவீதிதனிலே
உல்லாச மாது ரதி போல் வசந்தவல்லி உருவசியும் நாணவே வந்தாள்
** இராகம் – பைரவி : தாளம் – சாப்பு
** கண்ணிகள்

#33
இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டு சுழியெறியும் கொண்டையாள் குழை
ஏறி ஆடி நெஞ்சைச் சூறையாடும் விழிக் கெண்டையாள்
திருந்து பூ முருக்கின் அரும்பு போல் இருக்கும் இதழினாள் வரிச்
சிலையைப் போல் வளைந்து பிறையைப் போல் இலங்கு நுதலினாள்

#34
அரம்பை தேச வில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள் பிறர்
அறிவை மயக்கும் ஒரு கருவம் இருக்கும் மங்கைப் பருவத்தாள்
கரும்பு போல் இனித்து மருந்து போல் வடித்த சொல்லினாள் கடல்
கத்தும் திரை கொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள்

#35
பல்லின் அழகை எட்டிப்பார்க்கும் மூக்கில் ஒரு முத்தினாள் மதி
பழகும் வடிவு தங்கி அழகு குடிகொளும் முகத்தினாள்
வில்லுப் பணி புனைந்து வல்லிக் கமுகை வென்ற கழுத்தினாள் சகம்
விலையிட்டு எழுதி இன்ப நிலையிட்டு எழுதும் தொய்யில் எழுத்தினாள்

#36
கல்லுப் பதித்த தங்கச் செல்லக் கடகம் இட்ட செங்கையாள் எங்கும்
கச்சுக் கிடக்கினும் தித்திச்சுக்கிடக்கும் இரு கொங்கையாள்
ஒல்லும் கருத்தர் மனக் கல்லும் சுழிக்கும் எழில் உந்தியாள் மீதில்
ஒழுங்கு கொண்டு உளத்தை விழுங்கு சிறிய ரோம பந்தியாள்

#37
துடிக்குள் அடங்கி ஒரு பிடிக்குள் அடங்கும் சின்ன இடையினாள் காமத்
துட்டன் அரண்மனைக்குக் கட்டும் கதலி வாழைத் தொடையினாள்
அடுக்கு வன்னச் சேலை எடுத்து நெறிபிடித்த உடையினாள் மட
அன்ன நடையில் ஒரு சின்ன நடை பயிலும் நடையினாள்

#38
வெடித்த கடல் அமுதை எடுத்து வடிவு செய்த மேனியாள் ஒரு
வீமப்பாகம் பெற்ற காமப் பாலுக்கு ஒத்த சீனியாள்
பிடித்த சுகந்த வல்லிக் கொடி போல் வசந்தவல்லி பெருக்கமே சத்தி
பீட வாசர் திரிகூடராசர் சித்தம் உருக்குமே
** வசந்தவல்லி பந்தடித்தல்
** விருத்தம்

#39
வித்தகர் திரிகூடத்தில் வெளிவந்த வசந்தவல்லி
தத்துறு விளையாட்டாலோ தட முலைப் பணைப்பினாலோ
நத்து அணி கரங்கள் சேப்ப நால் அடி முன்னே ஓங்கிப்
பத்து அடி பின்னே வாங்கிப் பந்தடி பயில்கின்றாளே
** இராகம் ; பைரவி – தாளம் : சாப்பு
** கண்ணிகள்

#40
செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயம் செயம் என்று ஆட இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்து ஆட இரு
கொங்கை கொடும் பகை வென்றனம் என்று குழைந்து குழைந்து ஆட மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே

#41
பொங்கு கனம் குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டு ஆடக் குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன் சிலை வண்டு ஓட இனி
இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும் என்று இடை திண்டாட மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே

#42
சூடக முன்கையில் வால் வளை கண்டு இரு தோள் வளை நின்று ஆடப் புனை
பாடகமும் சிறு பாதமும் அங்கு ஒரு பாவனை கொண்டாட நய
நாடகம் ஆடிய தோகை மயில் என நல் நகர் வீதியிலே அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி அடர்ந்து பந்து ஆடினளே

#43
இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ மனம்
முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே உயர்
சந்திர சூடர் குறும் பலவு ஈசுரர் சங்கு அணி வீதியிலே மணிப்
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொன் பந்துகொண்டு ஆடினளே
** விருத்தம்

#44
கொந்து அடிப் பூம் குழல் சரிய நல் நகரில் வசந்தவல்லி கொடிய காமன்
முந்தடி பிந்தடி இடை போய் மூன்றடி நாலடி நடந்து முடுகி மாதர்
சந்தடியில் திருகி இடசாரி வலசாரி சுற்றிச் சகிமார் சூழப்
பந்தடிக்கும் பாவனையைப் பார்க்க அயன் ஆயிரம் கண் படைத்திலானே
** தரு
** இராகம் – காம்போதி : ஆதி – தாளம்
** பல்லவி

#45
பந்தடித்தனளே வசந்த சுந்தரி விந்தையாகவே
** சரணங்கள்

#46
மந்தர முலைகள் ஏசல் ஆட மகரக் குழைகள் ஊசலாடச்
சுந்தர விழிகள் பூசலாடத் தொங்கத் தொங்கத் தொங்கத் தொம்மென

#47
பொன்னின் ஒளிவில் வந்து தாவிய மின்னின் ஒளிவு போலவே
சொல் நயத்தினை நாடிநாடித் தோழியருடன் கூடிக்கூடி
நல் நகர்த் திரிகூடம் பாடி நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம் என
** வசந்தவல்லி திரிகூடநாதரைக் காணுதல்
** விருத்தம்

#48
வரு சங்க வீதி-தன்னில் வசந்த பூங்கோதை காலில்
இரு பந்து குதிகொண்டு ஆட இரு பந்து முலைகொண்டு ஆட
ஒரு பந்து கைகொண்டு ஆட ஒரு செப்பில் ஐந்து பந்தும்
தெரிகொண்டு வித்தை ஆடும் சித்தரை எதிர்கொண்டாளே
** வசந்தவல்லி வியந்து கூறுதல்
** இராகம் – அடாணா : தாளம் – ரூபகம்
** பல்லவி

#49
இந்தச் சித்தர் ஆரோ வெகு
விந்தைக்காரராக விடையில் ஏறி வந்தார்
** சரணங்கள்

#50
நாகம் புயத்தில் கட்டி நஞ்சு கழுத்தில் கட்டிக்
காகம் அணுகாமல் எங்கும் காடுகட்டிப்
பாகம்-தனில் ஒரு பெண் பச்சைக்கிளி போல் வைத்து
மோகம் பெற ஒரு பெண் முடியில் வைத்தார்

#51
மெய்யில் சிவப்பழகும் கையில் மழு அழகும்
மை ஆர் விழியார் கண்டால் மயங்காரோ
செய்ய சடையின் மேலே திங்கள்கொழுந்து இருக்கப்
பையை விரிக்குது அம்மா பாம்பு சும்மா

#52
அருள் கண் பார்வையால் என் அங்கம் தங்கம் ஆக
உருக்கிப்போட்டார் கண்டவுடனே தான்
பெருக்கம் பார்க்கில் எங்கள் திருக்குற்றாலர் போலே
இருக்குது இவர் செய் மாயம் ஒருக்காலே
** தோழியர் சொல்கேட்டு வசந்தவல்லி மோகங்கொள்ளுதல்
** விருத்தம்

#53
திங்களை முடித்தார் கண்டாய் திரிகூடச் செல்வர் கண்டாய்
எங்கு உள சித்துக்கு எல்லாம் இறையவர் இவரே என்று
நங்கைமார் பலரும் கூறும் நல் மொழித் தேறல் மாந்தி
மங்கையாம் வசந்தவல்லி மனம்கொண்டாள் மயல்கொண்டாளே
** இராகம் – புன்னாகவராளி : தாளம் – ரூபகம்
** கண்ணிகள்

#54
முனி பரவும் இனியானோ வேத முழுப்பலவின் கனி-தானோ
கனியில் வைத்த செந்தேனோ பெண்கள் கருத்து உருக்க வந்தானோ
தினகரன் போல் சிவப்பழகும் அவன் திருமிடற்றில் கறுப்பழகும்
பனக மணி இரு காதும் கண்டால் பாவையும்-தான் உருகாதோ

#55
வாகனைக் கண்டு உருகுதையோ ஒரு மயக்கமதாய் வருகுதையோ
மோகம் என்பது இதுதானோ இதை முன்னமே நான் அறிவேனோ
ஆகம் எல்லாம் பசந்தேனே பெற்ற அன்னை சொல்லும் கசந்தேனே
தாகம் இன்றிப் பூணேனே கையில் சரி வளையும் காணேனே
** தோழியர் புலம்பல்
** விருத்தம்

#56
நடை கண்டால் அன்னம் தோற்கும் நல் நகர் வசந்தவல்லி
விடைகொண்டான் எதிர்போய்ச் சங்க வீதியில் சங்கம் தோற்றாள்
சடைகொண்டான் உடை தான் கொண்டு தன் உடை கொடுத்தாள் ஐயன்
உடை கொண்ட வழக்குத்தானோ ஊர்கின்ற தேர் கொண்டாளே
** இராகம் – தோடி : தாளம் – சாப்பு
** கண்ணிகள்

#57
ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மான் என்பார் விளை
யாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண் என்பார்
பேசிடாத மோசம் என்ன மோசமோ என்பார் காமப்
பேயோ என்பார் பிச்சோ என்பார் மாயமோ என்பார்

#58
ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்
பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார்
கையில் திருநீறு எடுப்பார் தையலார் எல்லாம் சூலக்
கையா திரிகூடநாதா கண்பாராய் என்பார்
** வசந்தவல்லியைப் பாங்கியர் உபசரித்தல்
** விருத்தம்

#59
வானவர் திருக்குற்றாலர் மையலால் வசந்தவல்லி
தான் உடல் சோர்ந்தாள் என்று தமனிய மாடம் சேர்த்து
மேனி ஆர் அழகு தோற்ற மின்_அனார் விழுந்த பேரைக்
கூனை கொண்டு அமிழ்த்துவார் போல் குளிர்ச்சியால் வெதுப்புவாரே
** இராகம் – கல்யாணி : தாளம் – சாப்பு
** கண்ணிகள்

#60
முருகு சந்தனக் குழம்பு பூசுவார் விரகத்தீயை மூட்டி மூட்டி விசிறி வீசுவார்
கருகுதே உடல் உருகுதே என்பார் விரித்த பூவும் கரியுதே முத்தம் பொரியுதே என்பார்

#61
அருகில் இருந்து கதைகள் நடத்துவார் எடுத்து மாதர்
அணைத்து வாழைக்குருத்தில் கிடத்துவார்
பெருகு நல் நகர்க் குறும்பலாவினார் வசந்த மோகினி
பெரு நிலாவினொடு கலாவினாள்
** வசந்தவல்லி சந்திரனை நிந்தித்தல்
** விருத்தம்

#62
பெண்ணிலே குழல்மொழிக்கு ஓர் பங்குகொடுத்தவர் கொடுத்த பிரமையாலே
மண்ணிலே மதி மயங்கிக்கிடக்கின்றேன் உனக்கும் மதி மயக்கம் தானோ
கண்ணிலே நெருப்பை வைத்துக் காந்துவாருடன் கூடிக் காந்திக்காந்தி
விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண் நிலாக் கொடும் பாவி வெண்ணிலாவே
** இராகம் – வராளி : தாளம் – ஆதி
** கண்ணிகள்

#63
தண் அமுதுடன் பிறந்தாய் வெண்ணிலாவே அந்தத்
தண் அளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே
பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன்
பெண்மை கண்டும் காயலாமோ வெண்ணிலாவே

#64
விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே எரு
விட்டு நான் எறிந்ததற்கோ வெண்ணிலாவே
கண்ணில் விழியாதவர் போல் வெண்ணிலாவே மெத்தக்
காந்தியாட்டம் ஆடுகிறாய் வெண்ணிலாவே

#65
ஆகடியம் செய்தல்லவோ வெண்ணிலாவே நீதான்
ஆட்கடியன் போல் குறைந்தாய் வெண்ணிலாவே
மோகன் வரக் காணேன் என்றால் வெண்ணிலாவே இந்த
வேகம் உனக்கு ஆனது என்ன வெண்ணிலாவே

#66
நாகம் என்றே எண்ணவேண்டாம் வெண்ணிலாவே இது
வாகு குழல் பின்னல் கண்டாய் வெண்ணிலாவே
கோகனக வீறு அழித்தாய் வெண்ணிலாவே திரி
கூடலிங்கர் முன் போய்க் காய்வாய் வெண்ணிலாவே
** வசந்தவல்லி மன்மதனை நிந்தித்தல்
** விருத்தம்

#67
தண் நிலா மெளலி தந்த மையலான் அதை அறிந்துத் தையலார்கள்
எண்ணிலாப் பகையெடுத்தார் இ நகரை நல் நகர் என்று எவர் சொன்னாரோ
அண்ணலார் திரிகூடநாதர் என்பது என்னளவும் அமைந்திடாரோ
வெண்ணிலாக் குடை பிடித்து மீன கேதனம் பிடித்த வேனிலானே
** இராகம் – எதுகுலகாம்போதி : தாளம் – சாப்பு
** கண்ணிகள்

#68
கைக் கரும்பு என்ன கணை என்ன நீ என்ன மன்மதா இந்தச்
செக்கரும் பாவி நிலாவுமே போதாதோ மன்மதா
மைக் கருங்கண்ணாள் இரதிக்கு மால் கொண்ட மன்மதா விடை
வல்லார்க்கு மால் கொண்டால் பொல்லாப்பு என் மேல் உண்டோ மன்மதா

#69
திக்கு எலாம் தென்றல் புலி வந்து பாயுதே மன்மதா குயில்
சின்னம் பிடித்த பின் அன்னம் பிடியாதே மன்மதா
அக்காள் எனும் சகி வெட்காமல் ஏசுவாள் மன்மதா அவள்
அல்லாமல் தாய் ஒரு பொல்லாத நீலி காண் மன்மதா

#70
நேரிழையாரையும் ஊரையும் பாரடா மன்மதா கண்ணில்
நித்திரை-தான் ஒரு சத்துரு ஆச்சுதே மன்மதா
பேரிகையே அன்றிப் பூரிகை ஏன் பிள்ளாய் மன்மதா சிறு
பெண்பிள்ளை மேல் பொருது ஆண்பிள்ளை ஆவையோ மன்மதா

#71
வார் சடை ஈது அல்ல கார் குழல் பின்னல் காண் மன்மதா நெற்றி
வந்தது கண் அல்ல சிந்தூர ரேகை பார் மன்மதா
நாரிபங்காளர் தென் ஆரியநாட்டினர் மன்மதா எங்கள்
நல் நகர்க் குற்றாலர் முன்னமே செல்லுவாய் மன்மதா
** வசந்தவல்லியைப் பாங்கி வினாவுதல்
** விருத்தம்

#72
படி ஏழு உடையோர் திரிகூடப் படை மா மதனைப் பயிற்றிய சொல்
அடியேன் சகியாய் இருக்கையிலே அது நான் பயின்றால் ஆகாதோ
கொடியே மதுரம் பழுத்து ஒழுகு கொம்பே வம்பு பொருத முலைப்
பிடியே எமது குடிக்கு ஒரு பெண்பிள்ளாய் கருத்து விள்ளாயே
** வசந்தவல்லி பங்கிக்குச் சொல்லுதல்
** இராகம் – கல்யாணி : தாளம் – சாப்பு
** கண்ணிகள்

#73
மெய்யர்க்கு மெய்யர் திரிகூடநாயகர் மீதில் மெத்த
மையல்கொண்டேன் அந்தச் செய்தியைக் கேளாய் நீ பாங்கி
செய்ய சடையும் திருக்கொன்றை மாலை அழகும் அவர்
கையில் மழுவும் என் கண்ணைவிட்டே அகலாவே

#74
கங்கைக்கொழுந்து அணி தெய்வக்கொழுந்தை நான் கண்டு குளிர்
திங்கள்கொழுந்தையும் தீக்கொழுந்து ஆக்கிக்கொண்டேனே
சங்கக்குழையாரைச் சங்க மறுகினில் கண்டு இரு
செங்கைக்குள் சங்கமும் சிந்தி மறுகிவிட்டேனே

#75
மன்றல் குழவி மதியம் புனைந்தாரைக் கண்டு சிறு
தென்றல் குளவி தினம் கொட்டக்கொட்ட நொந்தேனே
குன்றச் சிலையாளர் குற்றாலநாதர் முன் போனேன் மதன்
வென்றிச் சிலை கொடு மெல்லமெல்லப் பொருதானே

#76
பெம்மானை நல் நகர் பேர் ராசவீதியில் கண்டு அவர்
கைம் மானைக் கண்டு கலையை நெகிழவிட்டேனே
செம் மேனி-தன்னில் சிறு கறுப்பாரை நான் கண்டு இப்போது
அம்மா என் மேனி அடங்கலுமே கறுத்தேனே

#77
வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரைக் கண்டு சிந்தை
நள்ளிய திங்களை ஞாயிறு போலக் கண்டேனே
எள்ளளவு ஊணும் உறக்கமும் இல்லாரைக் கண்டு நானும்
ஒள்ளிய ஊணும் உறக்கமும் அற்றுவிட்டேனே
** வசந்தவல்லியைப் பாங்கி பழித்தல்
** விருத்தம்

#78
தரைப்பெண்ணுக்கு அணி போல் வந்த தமனியக் கொடியே மாதர்
துரைப்பெண்ணே வசந்தவல்லி சொன்ன பேதைமைக்கு என் சொல்வேன்
வரைப்பெண்ணுக்கு ஆசை பூண்டு வளர் சங்க மறுகினூடே
நரைத்த மாடு ஏறுவார்க்கோ நங்கை நீ மயல்கொண்டாயே
** வசந்தவல்லி திரிகூடநாதரைப் புகழ்ந்து பாங்கிக்குக் கூறுதல்
** இராகம் – செளராஷ்டிரம் : தாளம் – ரூபகம்
** கண்ணிகள்

#79
மன்னவர் குற்றாலர் செய்தி இன்னம் இன்னம் கேளாயோ மானே அவர்
வாகனத்தின் மால் விடைக்கு லோகம் ஒக்க ஓரடி காண் மானே
சன்னதியின் பேறு அல்லவோ பொன்னுலகில் தேவர் செல்வம் மானே
சந்திரரும் சூரியரும் வந்து இறங்கும் வாசல் கண்டு ஆய் மானே

#80
நல் நகரில் ஈசருக்கு நான்தானோ ஆசைகொண்டேன் மானே பல
கன்னியரும் ஆசைகொண்டார் பன்னியரும் ஆசைகொண்டார் மானே
தென்னிலங்கை வாழும் ஒரு கன்னிகை மண்டோதரியாள் மானே அவர்
பொன் அடியில் சேர்ந்து அணைய என்ன தவம் செய்தாளோ மானே
** இதுவுமது
** விருத்தம்

#81
வேரிலே பழம் பழுத்துத் தூரிலே சுளை வெடித்து வெடித்த தீம் தேன்
பாரிலே பாதாளகங்கை வந்தது எனக் குதித்துப் பசும் தேன் கங்கை
நீரிலே பெருகு குறும்பலாவிலே கொலுவிருக்கும் நிமலமூர்த்தி
பேரிலே பிரமைகொண்ட பெண்களிலே நானும் ஒரு பெண் கண்டாயே
** பாங்கி வசந்தவல்லியை நியாயம் வினாவுதல்
** விருத்தம்

#82
வசந்த உல்லாச வல்லி வல் இக்கு வல்லி பேசி
பசந்ததோர் பசப்பும் கண்டாய் பரமர் மேல் ஆசைகொண்டாய்
நிசம் தரும் திருக்குற்றால நிரந்தரமூர்த்தி உன்-பால்
இசைந்திடக் கருமம் ஏதோ இசைய நீ இசைத்திடாயே
** வசந்தவல்லி வருந்திக் கூறுதல்
** இராகம் – நாதநாமக்கிரியை : தாளம் – ஆதி
** கண்ணிகள்

#83
புரத்து நெருப்பை மூவர்க்கு அவித்தவர் மையல் கொண்ட என்
ஒருத்தி காம நெருப்பை அவிக்கிலார்
பருத்த மலையைக் கையில் இணக்கினார் கொங்கையான
பருவ மலையைக் கையில் இணக்கிலார்

#84
அஞ்சு தலைக்குள் ஆறு தலை வைத்தார் எனது மனதில்
அஞ்சுதலைக்கு ஒர் ஆறுதலை வையார்
நஞ்சு பருகி அமுதம் கொடுத்தவர் எனது வாள் விழி
நஞ்சு பருகி அமுதம் கொடுக்கிலார்

#85
தேவர்துரை-தன் சாபம் தீர்த்தவர் வன்ன மாங்குயில்
சின்னத்துரை-தன் சாபம் தீர்க்கிலார்
ஏவரும் புகழ் திருக்குற்றாலர் தாம் சகல பேர்க்கும்
இரங்குவார் எனக்கு இரங்கிலார் பெண்ணே
** பாங்கி வசந்தவல்லிக்குப் புத்தி கூறுதல்
** விருத்தம்

#86
நல் நகர்த் திருக்குற்றாலநாதர் மேல் ஆசை பூண்டு
சொன்னவர்க்கு இணங்க வார்த்தை சொல்லவும் படித்துக்கொண்டாய்
சன்னிதி விசேஷம் சொல்லத்தக்கதோ மிக்க தோகாய்
என்னில் ஆனது நான் சொன்னேன் இனி உனது இச்சைதானே
** வசந்தவல்லி பாங்கியைத் தூதனுப்புதல்
** இராகம் – காம்போதி : தாளம் – ஆதி
** பல்லவி

#87
தூது நீ சொல்லி வாராய் பெண்ணே குற்றாலர் முன் போய்த்
தூது நீ சொல்லி வாராய்
** அநுபல்லவி

#88
ஆதிநாள் சுந்தரர்க்குத் தூதுபோனவர் முன்னே
** சரணங்கள்

#89
உறங்க உறக்கமும் வாராது மாயம்செய்தாரை
மறந்தால் மறக்கவும் கூடாது பெண்சென்மம் என்று
பிறந்தாலும் பேராசை ஆகாது அஃது அறிந்தும்
சலுகைக்காரர்க்கு ஆசையானேன் இப்போது

#90
நேற்றைக்கு எல்லாம் குளிர்ந்து காட்டி இன்று கொதிக்கும்
நித்திரா பாவிக்கு என்ன போட்டி நடுவே இந்தக்
காற்றுக்கு வந்தது ஒரு கோட்டி விரகநோய்க்கு
மாற்று மருந்து முக்கண் மருந்து என்று பரஞ்சாட்டி

#91
வந்தால் இந்நேரம் வரச்சொல்லு வராதிருந்தால்
மாலையாகிலும் தரச்சொல்லு குற்றாலநாதர்
தந்தால் என் நெஞ்சைத் தரச்சொல்லு தராதிருந்தால்
தான் பெண்ணாகிய பெண்ணை நான் விடேன் என்று
** வசந்தவல்லி திரிகூடநாதர் சமயத்தைப் பாங்கிக்குச் சொல்லுதல்
** விருத்தம்

#92
செவ்வேளை ஈன்று அருள்வார் சிலைவேளை வென்று அருள்வார் திரும்பத் தாமே
அவ் வேளை அழைத்து அருள்வார் அகங்காரம் மிகுதலால் அறவர் ஏவும்
கைவேழம் உரித்தவர் குற்றாலர் கொலு அமரருக்கும் காணொணாதால்
வெவ் வேளை பலவும் உண்டு வியல் வேளை நான் சொலக் கேள் மின்_அனாளே
** இராகம் – பியாகடை : தாளம் – ஆதி
** கண்ணிகள்

#93
திரகூடராசருக்குத் திருவனந்தல் முதலாகத்
தினமும் ஒன்பது காலம் கொலுவில் சகியே

#94
பெரிதான அபிஷேகம் ஏழு காலமும் ஒருவர்
பேசுதற்குச் சமயமல்ல கண்டாய் சகியே

#95
வரும் நாளில் ஒரு மூன்று திருநாளும் வசந்தனும்
மாதவழி வருஷவழிச் சிறப்பும் சகியே

#96
ஒருநாளுக்கொருநாளில் வியனாகக் குழல்மொழிப்பெண்
உகந்திருக்கும் கொலு வேளை கண்டாய் சகியே

#97
பெத்தரிக்கம் மிகுந்த திருக்குற்றாலநாதலிங்கர்
பெரும் கொலுவில் சமயமறியாமல் சகியே

#98
சித்தரொடு தேவகணம் சிவகணங்கள் தடைசெய்யத்
திருவாசல் கடை நிற்பார் சிலபேர் சகியே

#99
அத் தலையில் கடந்தவர்கள் நந்தி பிரம்படிக்கு ஒதுங்கி
ஆட்கொண்டார் குறட்டில் நிற்பார் சிலபேர் சகியே

#100
மைக் கரும் கண் மாதர் விட்ட வண்டுகளும் கிள்ளைகளும்
வாசல்-தொறும் காத்திருக்கும் கண்டாய் சகியே

#101
கோல மகுடாகமம் சங்கர விசுவநாதன் அருள்
குற்றாலச் சிவராமநம்பி செயும் சகியே

#102
பாலாறு நெய்யாறாய் அபிஷேகம் நைவேத்யம்
பணிமாறு காலமும் கொண்டு அருளிச் சகியே

#103
நாலுமறைப் பழம் பாட்டும் மூவர் சொன்ன திருப்பாட்டும்
நாலுகவிப் புலவர் புதுப்பாட்டும் சகியே

#104
நீலகண்டர் குற்றாலர் கொண்டு அருளும் நிறை கொலுவில்
நீக்கமிலை எல்லார்க்கும் பொதுக் காண் சகியே

#105
அப்பொழுது குற்றாலர் தேவியுடன் கொலுவிருப்பார்
ஆசை சொலக் கூடாது கண்டாய் சகியே

#106
முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் வந்து நின்று
முயற்சிசெயும் திருவனந்தல் கூடிச் சகியே

#107
கொப்பழகு குழை மடந்தை பள்ளியறை-தனிலிருந்து
கோயில் புகும் ஏகாந்த சமயம் சகியே

#108
மைப் பழகு விழியாய் என் பெரு மாலை நீ சொல்லி
மரு மாலை வாங்கியே வாராய் சகியே
** வசந்தவல்லி கூடலிழைத்தல்
** கொச்சகம்

#109
தெள் நீர் வட அருவித் தீர்த்தத்தார் செஞ்சடை மேல்
விண் நீர் புனைந்தார் விரக வெம்மைக்கு ஆற்றாமல்
கண்ணீர் நறும் புனலாக் கை வளையே செய் கரையா
உள் நீரில் கூடல் உறைக்கிணறு செய்வாளே
** சிந்து
** இராகம் – பந்துவராளி : தாளம் – திரிபுடை
** கண்ணிகள்

#110
பாடிய மறை தேடிய நாயகர் பன்னகர் பணி நல் நகர் நாயகர்
பாவலர் மனுக் காவலர் நாயகர் பதஞ்சலி பணி தாளர்

#111
கோடிய மதி சூடிய நாயகர் குழல்மொழி புணர் அழகிய நாயகர்
குறும்பலாவினில் கூடுவராம் எனில் கூடலே நீ கூடாய்

#112
கஞ்சனை முகில் மஞ்சனை நொடித்தவர் காமனைச் சிறு சோமனை முடித்தவர்
காரண மறை ஆரணம் படித்தவர் கருதிய பெருமானார்

#113
குஞ்சரம் முதல் பூசித்த நாயகர் குறுமுனி தமிழ் நேசித்த நாயகர்
குறும்பலாவினில் கூடுவராம் எனில் கூடலே நீ கூடாய்

** 4. குறவஞ்சி குறிசொல்லல்
** குறிசொல்லும் குறத்தி வருதல்
** விருத்தம்

#114
ஆடல் வளை வீதியிலே அங்கணர் முன் போட்ட சங்கம் அரங்குவீட்டில்
தேடல் வளைக்கும் குறி போல் கூடல் வளைத்திருந்து வல்லி தியங்கும் போதில்
கூடல் வளைக் கரம் அசைய மாத்திரைக்கோல் ஏந்தி மணிக் கூடை தாங்கி
மாடம் மறுகு ஊடு திரிகூடமலைக் குறவஞ்சி வருகின்றாளே
** ஆசிரியப்பா

#115
சைவமுத்திரையை வானின் மேல் தரிக்கும்
தெய்வ முத்தலை சேர் திரிகூடமலையான்
வான் புனல் குதட்டும் மடக் குருகினுக்குத்
தேன் புரையேறும் சித்திரா நதியான்
ஏரி நீர் செழிக்க வாரி நீர் கொழிக்கும் 5
மாரி நீர் வளர் தென் ஆரியநாட்டான்
கன்னி மாப் பழுத்துக் கதலி தேன் கொழித்துச்
செந்நெல் காத்து அளிக்கும் நல் நகர்ப் பதியான்
ஓராயிரம் மறை ஓங்கிய பரியான்
ஈராயிரம் மருப்பு ஏந்திய யானையான் 10
சேவக விருது செய விடைக் கொடியான்
மூவகை முரசும் முழங்கும் மண்டபத்தான்
அண்ட கோடிகளை ஆணையால் அடக்கிக்
கொண்டல் போல் கவிக்கும் கொற்ற வெண்குடையான்
வால சுந்தரி குழல்வாய்மொழி அருள் கண் 15
கோல வண்டு இணங்கும் கொன்றை மாலிகையான்
பூ வளர் செண்பகக் கா வளர் தம்பிரான்
தேவர்கள் தம்பிரான் திருவருள் பாடி
இலகு நீறு அணிந்து திலகமும் எழுதிக்
குல மணிப் பாசியும் குன்றியும் புனைந்து 20
சலவை சேர் மருங்கில் சாத்திய கூடையும்
வலதுகைப் பிடித்த மாத்திரைக்கோலும்
மொழிக்கு ஒரு பசப்பும் முலைக்கு ஒரு குலுக்கும்
விழிக்கு ஒரு சிமிட்டும் வெளிக்கு ஒரு பகட்டுமாக
உருவசி அரம்பை கருவமும் அடங்க 25
முறுவலின் குறும்பால் முனிவரும் அடங்க
சமனிக்கும் உரையால் சபை எலாம் அடங்கக்
கமனிக்குமவரும் கடைக்கண்ணால் அடங்க
கொட்டிய உடுக்கு கோடாங்கிக் குறி முதல்
மட்டிலாக் குறிகளும் கட்டினால் அடக்கிக் 30
கொங்கணம் ஆரியம் குச்சலர் தேசமும்
செங்கை மாத்திரைக்கோல் செங்கோல் நடாத்திக்
கன்னடம் தெலுங்கு கலிங்க ராச்சியமும்
தென்னவர் தமிழால் செயத்தம்பம் நாட்டி
மன்னவர்-தமக்கு வலதுகை நோக்கி 35
இன் நகை மடவார்க்கு இடதுகை பார்த்துக்
காலம் முன் போம் குறி கைப்பலனாம் குறி
மேல் இனி வரும் குறி வேண்டுவார் மனக்குறி
மெய்க் குறி கைக் குறி விழிக் குறி மொழிக் குறி
எக்குறி ஆயினும் இமைப்பினில் உரைக்கும் 40
மைக் குறி விழிக் குறவஞ்சி வந்தனளே
** விருத்தம்

#116
சிலை நுதலில் கஸ்தூரித் திலகமிட்டு நறும் குழலில் செச்சை சூடிக்
கொலை மதர்க் கண் மை எழுதி மாத்திரைக்கோல் வாங்கி மணிக் கூடை தாங்கி
முலை முகத்தில் குன்றிமணி வடம் பூண்டு திரிகூடமுதல்வர் சாரல்
மலை-தனில் பொன் வஞ்சி குறவஞ்சி அபரஞ்சி கொஞ்சி வருகின்றாளே
** கீர்த்தனை
** இராகம் – தோடி : தாளம் – சாப்பு
** பல்லவி

#117
வஞ்சி வந்தனளே மலைக் குறவஞ்சி வந்தனளே
** அநுபல்லவி

#118
வஞ்சி எழில் அபரஞ்சி வரி விழி நஞ்சி முழு மற நெஞ்சி பலவினில்
அஞ்சு சடை முடி விஞ்சை அமலனை நெஞ்சில் நினைவோடு மிஞ்சு குறி சொல
** சரணங்கள்

#119
வல்லை நிகர் முலை இல்லை எனும் இடை வில்லை அன நுதல் முல்லை பொரு நகை
வல்லி என ஒரு கொல்லிமலை-தனில் வல்லி அவளினும் மெல்லி இவள் என
ஒல்லி வட கன டில்லி வரை புகழ் புல்லி வரு குறிசொல்லி மதுரித
நல்லி பனிமலை வல்லி குழல்மொழிச்செல்வி புணர்பவர் கல்வி மலைக் குற

#120
குன்றில் இடு மழை மின்கள் என நிரை குன்றி வடம் முலை தங்கவே
மன்றல் கமழ் சிறு தென்றல் வரும் வழி நின்று தரளம் இலங்கவே
ஒன்றில் இரதியும் ஒன்றில் மதனனும் ஊசலிடு குழை பொங்கவே
என்றும் எழுதிய மன்றில் நடமிடுகின்ற சரணினர் வென்றி மலைக் குற

#121
ஆடும் இரு குழைத் தோடும் ஒரு குழல் காடும் இணை விழி சாடவே
கோடு பொரு முலை மூடு சலவையின் ஊடு பிதுங்கி மல்லாடவே
தோடி முரளி வராளி பயிரவி மோடி பெற இசை பாடியே
நீடு மலை மயில் ஆடு மலை மதி சூடு மலை திரிகூடமலைக் குற
** கொச்சகக்கலிப்பா

#122
முன்னம் கிரி வளைந்த முக்கணர் குற்றால வெற்பில்
கன்னங்கரிய குழல் காம வஞ்சி-தன் மார்பில்
பொன்னின் குடம் போல் புடைத்து எழுந்த பார முலை
இன்னம் பருத்தால் இடை பொறுக்கமாட்டாதே
** இராகம் – தோடி : தாளம் – ஆதி
** பல்லவி

#123
வஞ்சி வந்தாள் மலைக் குறவஞ்சி வந்தாள்
** அநுபல்லவி

#124
வஞ்சி வந்தாள் திரிகூட ரஞ்சித மோகினி முன்னே
மிஞ்சிய விரகநோய்க்குச் சஞ்சீவி மருந்து போலே
சரணங்கள்

#125
மும்மை உலகு எங்கும் வெல்லக் கொம்மை முலையார்க்கு நல்ல
செம்மையாக் குறிகள் சொல்ல அம்மே அம்மே என்று செல்ல

#126
சோலையில் வசந்த காலம் வால கோகிலம் வந்தால் போல்
கோல மலை வில்லியார் குற்றாலமலை வாழும் குற

#127
மாத்திரைக்கோலது துன்னச் சாத்திரக் கண் பார்வை பன்னத்
தோத்திர வடிவம் மின்ன பூத்த மலர்க் கொடி என்ன
** வசந்தவல்லி குறத்தியைக்கண்டு மலைவளங்கேட்டல்
** விருத்தம்

#128
அந்தரத் துந்துபி முழங்கும் நல் நகர் குற்றாலலிங்கர் அருளைப் பாடி
வந்த குறவஞ்சி-தன்னை வசந்தவல்லி கண்டு மனம் மகிழ்ச்சி கொண்டு
சந்த முலைத் துவளும் இடைத் தவள நகை பவள இதழ்த் தையலே உன்
சொந்த மலை எந்த மலை அந்த மலை வளம் எனக்குச் சொல் என்றாளே
** குறத்தி மலைவளங்கூறுதல்
** இராகம் – புன்னாகவராளி : தாளம் – ஆதி
** கண்ணிகள்

#129
வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்

#130
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்
கமன சித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

#131
தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும்

#132
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே

#133
முழங்கு திரைப் புனல் அருவி கழங்கு என முத்தாடும்
முற்றம் எங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டு ஓடும்

#134
கிழங்கு கிள்ளித் தேன் எடுத்து வளம் பாடி நடப்போம்
கிம்புரியின் கொம்பு ஒடித்து வெம்பு தினை இடிப்போம்

#135
செழும் குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேன் அலர் சண்பக வாசம் வானுலகில் வெடிக்கும்

#136
வழங்கு கொடை மகராசர் குறும்பலவில் ஈசர்
வளம் பெருகும் திரிகூடமலை எங்கள் மலையே

#137
ஆடும் அரவு ஈனும் மணி கோடி வெயில் எறிக்கும்
அம்புலியைக் கவளம் என்று தும்பி வழி மறிக்கும்

#138
வேடுவர்கள் தினை விதைக்கச் சாடு புனம்-தோறும்
விந்தை அகில் குங்குமமும் சந்தனமும் நாறும்

#139
காடு-தொறும் ஓடி வரையாடு குதி பாயும்
காகம் அணுகா மலையில் மேகம் நிரை சாயும்

#140
நீடு பலவு ஈசர் கயிலாசகிரி வாசர்
நிலை தங்கும் திரிகூடமலை எங்கள் மலையே

#141
கயிலை எனும் வடமலைக்குத் தெற்கு மலை அம்மே
கனக மகா மேரு என நிற்கும் மலை அம்மே

#142
சயில மலை தென்மலைக்கு வடக்கு மலை அம்மே
சகல மலையும் தனக்குள் அடக்கும் மலை அம்மே

#143
வயிரமுடன் மாணிக்கம் விளையும் மலை அம்மே
வான் இரவி முழைகள்-தொறும் நுழையும் மலை அம்மே

#144
துயிலுமவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும்
துங்கர் திரிகூடமலை எங்கள் மலை அம்மே

#145
கொல்லிமலை எனக்கு இளைய செல்லிமலை அம்மே
கொழுநனுக்குக் காணிமலை பழனிமலை அம்மே

#146
எல் உலவும் விந்தை மலை எந்தை மலை அம்மே
இமயமலை என்னுடைய தமயன் மலை அம்மே

#147
சொல்லரிய சாமிமலை மாமி மலை அம்மே
தோழி மலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே

#148
செல் இனங்கள் முழவு கொட்ட மயில் இனங்கள் ஆடும்
திரிகூடமலை எங்கள் செல்வ மலை அம்மே

#149
ஒரு குலத்தில் பெண்கள் கொடோம் ஒரு குலத்தில் கொள்ளோம்
உறவு பிடித்தாலும் விடோம் குறவர் குலம் நாங்கள்

#150
வெருவி வரும் தினைப்புனத்தில் பெரு மிருகம் விலக்கி
வேங்கையாய் வெயில் மறைத்த பாங்குதனைக் குறித்தே

#151
அருள் இலஞ்சி வேலர்-தமக்கு ஒரு பெண்ணைக் கொடுத்தோம்
ஆதினத்து மலைகள் எல்லாம் சீதனமாக் கொடுத்தோம்

#152
பரிதி மதி சூழ் மலையைத் துருவனுக்குக் கொடுத்தோம்
பரமர் திரிகூடமலை பழைய மலை அம்மே
** வசந்தவல்லி குறத்தியினது நாட்டுவளமும் நகர்வளமும் வினாவுதல்
** விருத்தம்

#153
கோட்டு வளம் முலை காட்டும் கொடியின் வளம் இடை காட்டும் குறிஞ்சி பூத்த
காட்டு வளம் குழல் காட்டும் மலை வளம்தான் நீ உரைத்துக் காட்டுவானேன்
தோட்டு வளம் புரி காதர் திரிகூடமலை வளரும் தோகையே உன்
நாட்டு வளம் எனக்கு உரைத்துக் குற்றால நகர் வளமும் நவிலுவாயே
** குறத்தி நாட்டுவளம் கூறுதல்
** இராகம் – கேதாரகெளளம் : தாளம் – சாப்பு
** கண்ணிகள்

#154
சூர மாங்குயில் சின்னங்கள் காமத்துரை வந்தான் துரை வந்தான் என்று ஊத
ஆர மா முலை மின்னார் அவரவர் அல்குல் தேர்கள் அலங்காரம் செய்யப்
பார மா மதி வெண்குடை மிஞ்சப் பறக்கும் கிள்ளைப் பரிகள் முன் கொஞ்சத்
தேரின் மாரன் வசந்தன் உலாவும் திருக்குற்றாலர் தென் ஆரியநாடே

#155
காரைச் சேர்ந்த குழலார்க்கு நாணிக் கடலைச் சேர்ந்த கறுப்பான மேகம்
வாரைச் சேர்ந்த முலைக்கு இணையாகும் மலையைச் சேர்ந்து சிலை ஒன்று வாங்கி
நீரைச் சேர்ந்த மழைத் தாரை அம்பொடு நீளக் கொண்டல் அம் தேர் ஏறி வெய்யவன்
தேரைச் சூழ்ந்திடக் கார்காலம் வெல்லும் திருக்குற்றாலர் தென் ஆரியநாடே

#156
சூழ மேதி இறங்கும் துறையில் சொரியும் பாலைப் பருகிய வாளை
கூழை வாசப் பலாவினில் பாயக் கொழும் பலாக் கனி வாழையில் சாய
வாழை சாய்ந்து ஒரு தாழையில் தாக்க வரு விருந்துக்கு உபசரிப்பார் போல்
தாழை சோறிட வாழை குருத்திடும் சந்திரசூடர் தென் ஆரியநாடே

#157
அம் நலார் மொழி-தன்னைப் பழித்தது என்று ஆடவர் மண்ணில் மூடும் கரும்பு
துன்னி மீள வளர்ந்து மடந்தையர் தோளை வென்று சுடர் முத்தம் ஈன்று
பின்னும் ஆங்கு அவர் மூரலை வென்று பிரியும் காலத்தில் பெண்மையை வெல்லக்
கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே

#158
தக்க பூமிக்கு முன்பு உள்ள நாடு சகல தேவர்க்கும் அன்பு உள்ள நாடு
திக்கு எலாம் வளர்ந்து ஓங்கிய நாடு சிவத் துரோகமும் நீங்கிய நாடு
முக்கணான் விளையாடிய நாடு முதிய நான்மறை பாடிய நாடு
மைக் கணாள் குழல்வாய்மொழி பாகர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே

#159
அஞ்சு நூறு மகம் கொண்ட நாடு அநேக கோடி யுகம் கண்ட நாடு
கஞ்சயோனி உதிக்கின்ற நாடு கமலை வாணி துதிக்கின்ற நாடு
செஞ்சொல் மா முனி ஏகிய நாடு செங்கண்மால் சிவன் ஆகிய நாடு
வஞ்சி பாகர் திரிகூடநாதர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே

#160
மாதம் மூன்று மழை உள்ள நாடு வருடம் மூன்று விளைவு உள்ள நாடு
வேதம் மூன்றும் பலா உள்ள நாடு விசேஷம் மூன்றும் குலாவுள்ள நாடு
போதம் ஊன்றும் நலம்செயும் நாடு புவனம் மூன்றும் வலம்செயும் நாடு
நாதம் மூன்று உருவான குற்றாலநாதர் ஆரியநாடு எங்கள் நாடே

#161
நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம் நெருங்கக் காண்பது கன்னலில் செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து சுழலக் காண்பது தீம் தயிர் மத்து
வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
ஏங்கக் காண்பது மங்கல பேரிகை ஈசர் ஆரியநாடு எங்கள் நாடே

#162
ஓடக் காண்பது பூம் புனல் வெள்ளம் ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு வருந்தக் காண்பது சூலுளை சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல் அறம் கீர்த்தி திருக்குற்றாலர் தென் ஆரியநாடே
** வசந்தவல்லிக்குக் குறத்தி தலச் சிறப்பு கூறுதல்
** விருத்தம்

#163
அரிகூட அயன்கூட மறைகூடத் தினம் தேட அரிதாய் நின்ற
திரிகூடப் பதி இருக்கும் திருநாட்டு வளம் உரைக்கத் தெவிட்டாது அம்மே
கரிகூடப் பிடி திரியும் சாரலிலே ஒரு வேடன் கை வில் ஏந்தி
நரிகூடக் கயிலை சென்ற திரிகூடத் தல மகிமை நவிலக் கேளே
** இராகம் – பிலகரி : தாளம் – ஐம்பை
** கண்ணிகள்

#164
ஞானிகளும் அறியார்கள் சித்ரநதி மூலம்
நான் அறிந்த வகை சிறிது பேசக் கேள் அம்மே

#165
மேன்மை பெறும் திரிகூடத் தேனருவித் துறைக்கே
மேவும் ஒரு சிவலிங்கம் தேவ ரகசியமாய்

#166
ஆன துறை அயன் உரைத்த தானம் அறியாமல்
அரும் தவத்துக்காய்த் தேடித் திரிந்து அலையும் காலம்

#167
மோன வானவர்க்கு எங்கள் கானவர்கள் காட்டும்
முது கங்கை ஆறு சிவமதுகங்கை ஆறே

#168
சிவமதுகங்கையின் மகிமை புவனம் எங்கும் புகழும்
செண்பகாடவித் துறையின் பண்பு சொல்லக் கேளாய்

#169
தவ முனிவர் கூட்டரவும் அவர் இருக்கும் குகையும்
சஞ்சீவி முதலான விஞ்சை மூலிகையும்

#170
கவனசித்தர் ஆதியரும் மவுனயோகியரும்
காத்திருக்கும் கயிலாயம் ஒத்திருக்கும் அம்மே

#171
நவநிதியும் விளையும் இடம் அவிடம் அது கடந்தால்
நங்கைமார் குரவை ஒலிப் பொங்குமாகடலே

#172
பொங்கு கடல் திரிவேணிசங்கம் எனச் செழிக்கும்
பொருந்து சித்ரநதித் துறைகள் பொன்னும் முத்தும் கொழிக்கும்

#173
கங்கை எனும் வட அருவி தங்கும் இந்த்ரசாபம்
கலந்து ஆடில் கழிநீராய்த் தொலைந்து ஓடும் பாபம்

#174
சங்க வீதியில் பரந்து சங்கு இனங்கள் மேயும்
தழைத்த மதில் சிகரம் எங்கும் கொழுத்த கயல் பாயும்

#175
கொங்கு அலர் செண்பகச்சோலைக் குறும்பலா ஈசர்
குற்றாலத் திரிகூடத் தலம் எங்கள் தலமே

#176
மன்று-தனில் தெய்வமுரசு என்றும் மேல் முழங்கும்
வளமை பெறும் சதுரயுகம் கிழமை போல் வழங்கும்

#177
நின்று மத கரி பூசை அன்று செய்த தலமே
நிந்தனைசெய் புட்பகந்தன் வந்தனைசெய் தலமே

#178
பன்றியொடு வேடன் வலம் சென்றது இந்தத் தலமே
பற்றாகப் பரமர் உறை குற்றாலத் தலமே

#179
வென்றிபெறும் தேவர்களும் குன்றமாய் மரமாய்
மிருகமதாய்த் தவசிருக்கும் பெரிய தலம் அம்மே
** வசந்தவல்லி திரிகூடநாதர் சுற்றம் வினாவுதல்
** விருத்தம்

#180
தீர்த்த விசேடமும் தலத்தின் சிறந்த விசேடமும் உரைத்தாய் திருக்குற்றால
மூர்த்தி விசேடம்-தனையும் மொழி-தோறும் நீ உரைத்த முறையால் கண்டேன்
வார்த்தை விசேடங்கள் கற்ற மலைக் குறவஞ்சிக் கொடியே வருக்கை வாசர்
கீர்த்தி விசேடம் பெரிய கிளை விசேடத்தை இனிக் கிளத்துவாயே
** குறத்தி திரிகூடநாதர் கிளைவிசேடம் கூறுதல்
** இராகம் – முகாரி : தாளம் – ஏகம்
** கண்ணிகள்

#181
குற்றாலர் கிளை வளத்தைக் கூறக் கேள் அம்மே
குலம் பார்க்கில் தேவரினும் பெரிய குலம் கண்டாய்

#182
பெற்ற தாய்தந்தை-தனை உற்று நீ கேட்கில்
பெண்கொடுத்த மலையரசன்-தனைக் கேட்கவேணும்

#183
உற்றதொரு பனிமலையின் கொற்ற வேந்தனுக்கும்
உயர் மதுரை மாறனுக்கும் செய மருகர் கண்டாய்

#184
வெற்றி பெறும் பாற்கடலில் புற்றரவில் உறங்கும்
வித்தகர்க்குக் கண்ணான மைத்துனர் காண் அம்மே

#185
ஆனை_வாகனத்தானை வானுலகில் இருத்தும்
ஆகு_வாகனத்தார்க்கும் தோகை_வாகனர்க்கும்

#186
தானையால் தந்தை கால் எறிந்த மகனார்க்கும்
தரு காழி_மகனார்க்கும் தகப்பனார் கண்டாய்

#187
சேனை மகபதி வாசல் ஆனை பெறும் பிடிக்கும்
தேன் ஈன்ற மலைச்சாரல் மான் ஈன்ற கொடிக்கும்

#188
கான மலர் மேல் இருக்கும் மோன அயனார்க்கும்
காமனார்-தமக்கும் இவர் மாமனார் அம்மே

#189
பொன்னுலகத் தேவருக்கும் மண்ணுலகத்தவர்க்கும்
பூதலத்தின் முனிவருக்கும் பாதலத்துளார்க்கும்

#190
அன்ன_வடிவெடுத்தவர்க்கும் ஏன_உருவார்க்கும்
அல்லார்க்கும் முன் உதித்த செல்வர் காண் அம்மே

#191
முன் உதித்து வந்தவரைத் தமையன் என உரைப்பார்
மொழிந்தாலும் மொழியலாம் பழுதிலை காண் அம்மே

#192
நல் நகரில் குற்றாலநாதர் கிளை வளத்தை
நான் உரைப்பது அரிது உலகம் தான் உரைக்கும் அம்மே
** வசந்தவல்லி குறத்தியைக் குறியின் விசேடம் வினாவுதல்
** விருத்தம்

#193
நீர் வளர் பவள மேனி நிமலர் குற்றாலநாதர்
கூர் வளம் பாடி ஆடும் குறவஞ்சிக் கொடியே கேளாய்
கார் வளர் குழலார்க்கு எல்லாம் கருதி நீ விருந்தாச் சொல்லும்
சீர் வளர் குறியின் மார்க்கம் தெரியவே செப்புவாயே
** குறத்தி தன் குறியின் விசேடம் கூறுதல்
** இராகம் – தோடி : தாளம் – ஆதி
** பல்லவி

#194
வித்தாரம் என் குறி அம்மே மணி
முத்தாரம் பூணும் முகிழ் முலைப் பெண்ணே
வித்தாரம் என் குறி அம்மே
** சரணங்கள்

#195
வஞ்சி மலைநாடு கொச்சி கொங்கு மக்கம் மராடம் துலக்காணம் மெச்சி
செஞ்சி வடகாசி நீளம் சீனம் சிங்களம் ஈழம் கொழும்பு வங்காளம்
தஞ்சை சிராப்பள்ளிக் கோட்டை தமிழ்ச் சங்க மதுரை தென்மங்கலப்பேட்டை
மிஞ்சு குறிசொல்லிப் பேராய்த் திசை வென்று நான் பெற்ற விருதுகள் பாராய்

#196
நல் நகர்க் குற்றாலம்-தன்னில் எங்கும் நாட்டும் எண்ணூற்றெண்பத்தேழு ஆண்டு-தன்னில்
பன்னக மா முனி போற்றத் தமிழ்ப் பாண்டியனார் முதல் சிற்றொடு மேய்ந்த
தென் ஆரும் சித்ரசபையை எங்கள் சின்னணஞ்சாத்தேவன் செப்போடு மேய்ந்த
முன் நாளிலே குறிசொல்லிப் பெற்ற மோகனமாலை பார் மோகனவல்லி

#197
அன்பாய் வடகுண பாலில் கொல்லத்து ஆண்டு ஒரு நானூற்றிருபத்துநாலில்
தென்காசி ஆலயம் ஓங்கக் குறி செண்பகமாறற்குச் சொன்ன பேர் நாங்கள்
நல் பாண்டிராச்சியம் உய்யச் சொக்கநாயகர் வந்து மணக்கோலம் செய்ய
இன் பா மதுரை மீனாட்சி குறி எங்களைக் கேட்டதும் சங்கத்தார் சாட்சி
** வசந்தவல்லி குறி கேட்டல்
** விருத்தம்

#198
கலவிக்கு விழி வாள் கொண்டு காமனைச் சிங்கி கொள்வாய்
குலவித்தை குறியே ஆனால் குறவஞ்சி குறைவைப்பாயோ
பலவுக்குள் கனியாய் நின்ற பரமர் குற்றாலர் நாட்டில்
இலவுக்கும் சிவந்த வாயால் எனக்கு ஒரு குறிசொல்வாயே
** குறத்தி குறி சொல்லுதல்
** இராகம் – அடாணா : தாளம் – ஆதி
** கண்ணிகள்

#199
என்ன குறியாகிலும் நான் சொல்லுவேன் அம்மே சதுர்
ஏறுவேன் எதிர்த்தபேரை வெல்லுவேன் அம்மே

#200
மன்னவர்கள் மெச்சுகுற வஞ்சி நான் அம்மே என்றன்
வயிற்றுக்கு இத்தனை போதும் கஞ்சி வார் அம்மே

#201
பின்னம் இன்றிக் கூழ் எனினும் கொண்டுவா அம்மே வந்தால்
பெரிய குடுக்கை முட்ட மண்டுவேன் அம்மே

#202
தின்ன இலையும் பிளவும் அள்ளித்தா அம்மே கப்பல்
சீனச் சரக்குத் துக்கிணி கிள்ளித்தா அம்மே

#203
அம்மே அம்மே சொல்ல வாராய் வெள்ளச்சி அம்மே உனக்கு
ஆக்கம் வருகுது பார் வெள்ளச்சி அம்மே

#204
விம்மு முலைக் கன்னி சொன்ன பேச்சு நன்று அம்மே நேரே
மேல்புறத்தில் ஆந்தை இட்ட வீச்சு நன்று அம்மே

#205
தும்மலும் காகமும் இடம் சொல்லுதே அம்மே சரம்
சூட்சமாகப் பூரணத்தை வெல்லுதே அம்மே

#206
செம்மை இது நல் நிமித்தம் கண்டு பார் அம்மே திரி
கூடமலைத் தெய்வம் உனக்கு உண்டு காண் அம்மே
** விருத்தம்

#207
பல்லியும் பலபலென்னப் பகரும் திரிகூடத்தில்
கல்விமான் சிவப்பின் மிக்கான் கழுத்தின் மேல் கறுப்பும் உள்ளான்
நல்ல மேற்குலத்தான் இந்த நல் நகர்த் தலத்தான் ஆக
வல்லியே உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவான் அம்மே
** இராகம் – ஸ்ரீராகம் : அடதாளம் – சாப்பு
** கண்ணிகள்

#208
தறை மெழுகு கோலமிடு முறை பெறவே கணபதி வை அம்மே குடம்
தாங்காய் முப்பழம் படைத்தாய் தேங்காயும் உடைத்து வைப்பாய் அம்மே

#209
அறுகு புனல் விளக்கிடுவாய் அடைக்காய் வெள்ளிலை கொடுவா அம்மே வடை
அப்பம் அவல் வர்க்க வகை சர்க்கரையோடு எள் பொரி வை அம்மே

#210
நிறை நாழி அளந்துவைப்பாய் இறையோனைக் கரம்குவிப்பாய் அம்மே குறி
நிலவரத்தைத் தேர்ந்துகொள்வாய் குலதெய்வத்தை நேர்ந்துகொள்வாய் அம்மே

#211
குறிசொல்லவா குறிசொல்லவா பிறை_நுதலே குறிசொல்லவா அம்மே ஐயர்
குறும்பலவர் திருவுளத்தால் பெரும் பலனாம் குறிசொல்லவா அம்மே
** கட்டளைக் கலித்துறை

#212
ஆன் ஏறும் செல்வர் திரிகூடநாதர் அணி நகர் வாழ்
மானே வசந்தப் பசுங்கொடியே வந்தவேளை நன்றே
தானே இருந்த தலமும் நன்றே செழும் தாமரை போல்
கான் ஏறும் கைம்மலர் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே
** இராகம் – கல்யாணி : தாளம் – சாப்பு
** கண்ணிகள்

#213
முத்திரை மோதிரம் இட்ட கையைக் காட்டாய் அம்மே
முன்கை முதாரி இட்ட கையைக் காட்டாய்

#214
அத்த கடகம் புனைந்த கையைக் காட்டாய் பொன்னின்
அலங்கார நெளியிட்ட கையைக் காட்டாய்

#215
சித்திரச் சூடகம் இட்ட கையைக் காட்டாய் பசும்
செங்கமலச் சங்க ரேகைக் கையைக் காட்டாய்

#216
சத்திபீடத்து இறைவர் நல் நகர்க்குள்ளே வந்த
சஞ்சீவியே உனது கையைக் காட்டாய்
** கவிக்கூற்று
** கொச்சகக்கலிப்பா

#217
ஏழைபங்கர் செங்கை மழு_ஏற்றவர் குற்றாலர் வெற்பில்
வாழி கொண்ட மோக வசந்தவல்லி கை பார்த்து
வீழி கொண்ட செம் கனி வாய் மிக்க குறவஞ்சி பழம்
கூழை உண்ட வாயால் குறியை விண்டு சொல்வாளே
** இராகம் – பைரவி : தாளம் – ரூபகம்
** கண்ணிகள்

#218
மாறாமல் இரு நிலத்தில் அறம் வளர்க்கும் கையே
மனையறத்தால் அறம் பெருக்கித் திறம் வளர்க்கும் கையே

#219
வீறாக நவநிதியும் விளையும் இந்தக் கையே
மேன்மேலும் பால் அமுதம் அளையும் இந்தக் கையே

#220
ஆறாத சனங்கள் பசியாற்றும் இந்தக் கையே
அணங்கு_அனையார் வணங்கி நித்தம் போற்றும் இந்தக் கையே

#221
பேறாக நல் நகரம் காக்கும் இந்தக் கையே
பிறவாத நெறியார்க்கே ஏற்கும் இந்தக் கையே
** குறத்தி தெய்வ வணக்கம் செய்தல்
** விருத்தம்

#222
கைக்குறி பார்க்கில் இந்தக் கைப்பிடிப்பவர்தாம் எட்டுத்
திக்குமே உடையர் ஆவர் செக மகராசி நீயே
இக் குறி பொய்யாது என்றே இறையவர் திரிகூடத்தில்
மெய்க் குறவஞ்சி தெய்வம் வியப்புற வணங்குவாளே
** ஆசிரியப்பா

#223
குழல்மொழி_இடத்தார் குறும்பலா_உடையார்
அழகு சந்நிதி வாழ் அம்பல விநாயகா
செந்தில் வாழ் முருகா செங்கண்மால் மருகா
கந்தனே இலஞ்சிக் கடவுளே சரணம்
புள்ளிமான் ஈன்ற பூவையே குறக் குல 5
வள்ளிநாயகியே வந்து எனக்கு உதவாய்
அப்பனே மேலை வாசலில் அரசே
செப்பரு மலை மேல் தெய்வகன்னியர்காள்
ஆரியங்காவா அருள் சொரிமுத்தே
நேரிய குளத்தூர் நின்ற சேவகனே 10
கோல மா காளி குற்றால நங்காய்
கால வைரவா கன துடிக் கறுப்பா
முன்னோடி முருகா வன்னிய ராயா
மன்னிய புலி போல் வரும் பன்றி மாடா
எக்கலாதேவி துர்க்கை பிடாரி 15
மிக்கதோர் குறிக்கா வேண்டினேன் உங்களை
வந்து முன் இருந்து வசந்த மோகினிப் பெண்
சிந்தையில் நினைந்தது சீவனோ தாதுவோ
சலவையோ பட்டோ தவச தானியமோ
கலவையோ புழுகோ களப கஸ்தூரியோ 20
வட்டிலோ செம்போ வயிரமோ முத்தோ
கட்டிலோ மெத்தையோ கட்டி வராகனோ
வைப்பொடு செப்போ வரத்தொடு செலவோ
கைப்படு திரவியம் களவுபோனதுவோ
மறு இலாப் பெண்மையில் வரும் திட்டி தோடமோ 25
திரிகண்ணரானவர் செய்த கைம் மயக்கமோ
மன்னர்-தாம் இவள் மேல் மயல் சொல்லிவிட்டதோ
கன்னி-தான் ஒருவர் மேல் காமித்த குறியோ
சேலையும் வளையும் சிந்தின தியக்கமோ
மாலையும் மணமும் வரப்பெறும் குறியோ 30
இத்தனை குறிகளில் இவள் குறி இது என
வைத்ததோர் குறியை வகுத்தருள்வீரே
** விருத்தம்

#224
கடித்திடும் அரவம் பூண்ட கர்த்தர் குற்றாலர் நேசம்
பிடிக்குது கருத்து நன்றாய்ப் பேசுது சக்கதேவி
துடிக்குது என் உதடு நாவும் சொல்லு சொல் எனவே வாயில்
இடிக்குது குறளி அம்மே இனிக் குறிசொல்லக் கேளே
** இராகம் – பிலகரி : தாளம் – சாப்பு
** கண்ணிகள்

#225
சொல்லக் கேளாய் குறிசொல்லக் கேளாய் அம்மே
தோகையர்க்கு அரசே குறிசொல்லக் கேளாய்

#226
முல்லைப்பூம் குழலாளே நல் நகரில் வாழ் முத்து
மோகனப் பசுங்கிளியே சொல்லக் கேளாய்

#227
பல்லக்கு ஏறும் தெருவில் ஆனை நடத்தி மணிப்
பணி ஆபரணம் பூண்ட பார்த்திபன் வந்தான்

#228
செல்லப் பூங்கோதையே நீ பந்தடிக்கையில் அவன்
சேனை கண்ட வெருட்சி போல் காணுதே அம்மே
** வசந்தவல்லி குறத்தி சொன்னதைத் தடுத்து வினாவுதல்
** கண்ணிகள்

#229
நன்று நன்று குறவஞ்சி நாடகக்காரி இந்த
நாட்டானபேர்க்கான வார்த்தை நான் அறியேனோ

#230
ஒன்றுபோடாமல் குறிசொல்லிவந்தாய் பின்னை
உளப்பிப்போட்டாய் குறியைக் குழப்பிப்போட்டாய்

#231
மன்றல் வரும் சேனை-தனைக் கண்டு பயந்தால் இந்த
மையலும் கிறுகிறுப்பும் தையலர்க்கு உண்டோ

#232
இன்று வரை மேல் குளிரும் காய்ச்சலும் உண்டோ பின்னை
எந்த வகை என்று குறி கண்டு சொல்லடி
** குறத்தி சொல்லுதல்
** கண்ணிகள்

#233
வாகனத்தில் ஏறிவரும் யோக புருடன் அவன்
வங்காரப் பவனி ஆசைப் பெண்களுக்குள்ளே

#234
தோகை நீ அவனைக் கண்டு மோகித்தாய் அம்மே அது
சொல்லப் பயந்திருந்தேன் சொல்லுவேன் முன்னே

#235
காகம் அணுகாத திரிகூடமலைக்கே உன் மேல்
காய்ச்சல் அல்ல காய்ச்சல் அல்ல காமக் காய்ச்சல் காண்

#236
மோகினியே உன்னுடைய கிறுகிறுப்பை எல்லாம் அவன்
மோகக் கிறுகிறுப்படி மோகனக் கள்ளி
** வசந்தவல்லி கோபித்துப் பேசுதல்
** கண்ணிகள்

#237
கன்னி என்று நான் இருக்க நல் நகர்க்குளே என்னைக்
காமி என்றாய் குறவஞ்சி வாய் மதியாமல்

#238
சன்னையாகச் சொன்ன குறி சாதிப்பாயானால் அவன்
தாரும் சொல்லிப் பேரும் சொல்லி ஊரும் சொல்லடி
** குறத்தி சொல்லுதல்
** கண்ணிகள்

#239
உன்னைப் போல் எனக்கு அவன் அறிமுகமோ அம்மே
ஊரும் பேரும் சொல்லுவதும் குறிமுகமோ

#240
பின்னையும்-தான் உனக்காகச் சொல்லுவேன் அம்மே அவன்
பெண் சேர வல்லவன் காண் பெண்கட்கு அரசே
** வசந்தவல்லி சொல்லுதல்
** கண்ணிகள்

#241
வண்மையோ வாய்மதமோ வித்தைமதமோ என் முன்
மதியாமல் பெண் சேர வல்லவன் என்றாய்

#242
கண் மயக்கால் மயக்காதே உண்மை சொல்லடி பெரும்
கான மலைக் குறவஞ்சி கள்ளி மயிலி
** குறத்தி சொல்லுதல்
** கண்ணிகள்

#243
பெண்ணரசே பெண் என்றால் திரியும் ஒக்கும் ஒரு
பெண்ணுடன் சேர என்றால் கூடவும் ஒக்கும்

#244
திண்ணமாக வல்லவனும் நாதனும் ஒக்கும் பேதைத்
திரிகூடநாதன் என்று செப்பலாம் அம்மே
** கவிக்கூற்று
** கண்ணிகள்

#245
மன்னர் திரிகூடநாதர் என்னும் போதிலே முகம்
மாணிக்க வசந்தவல்லி நாணிக் கவிழ்ந்தாள்
** குறத்தி சொல்லுதல்

#246
நல் நகரில் ஈசர் உன்னை மேவ வருவார் இந்த
நாணம் எல்லாம் நாளை நானும் காணவேபோறேன்

#247
கைந்நொடியில் பொன் இதழி மாலை வரும் காண் இனிக்
கக்கத்தில் இடுக்குவாயோ வெட்கத்தை அம்மே

#248
என்னும் ஒரு குறவஞ்சி-தன்னை அழைத்தே அவட்கு
ஈட்டு சருவாபரணம் பூட்டினாளே

** 5 சிங்கன் சிங்கி
** சிங்கன் சிங்கி (குறத்தி)யைத் தேடிவருதல்
** விருத்தம்

#249
பா மாலைத் திரிகூடப் பரமன் அருள் பெறு வசந்தப் பாவை கூந்தல்
பூ மாலை இதழி பெறப் பொன் மாலை மணி மாலை பொலிவாய்ப் பூண்டு
நா மாலைக் குறவஞ்சி நல் நகர்ப் பட்டணம் முழுதும் நடக்கும் நாளில்
மா மாலை பூண்ட சிங்கன் வங்கணச் சிங்கியைத் தேடி வருகின்றானே

#250
வக்காவின் மணி பூண்டு கொக்கிறகு சிகை முடித்து வரித் தோல் கச்சை
தொக்காக வரிந்து இறுக்கித் தொடர் புலியைக் கண்டு உறுக்கித் தூணி தூக்கிக்
கைக்கான ஆயுதங்கள் கொண்டு சில்லிக்கோல் எடுத்துக் கண்ணி சேர்த்துத்
திக்கு அடங்காக் குளுவ சிங்கன் குற்றாலத் திரிகூடச் சிங்கன் வந்தான்

#251
வக்காவின் மணி சூடி வகைக்காரி சிங்கி வரும் வழியைத் தேடி
மிக்கான புலி கரடி கிடுகிடென நடுநடுங்க வெறித்து நோக்கிக்
கக்கா என்று ஓலமிடும் குருவி கொக்குக்கு ஏற்ற கண்ணி கையில் வாங்கித்
தொக்கான நடை நடந்து திரிகூடமலைக் குறவன் தோன்றினானே
** இராகம் – அடாணா : தாளம் – சாப்பு
** கண்ணி

#252
கொக்கிறகு சூடிக்கொண்டு குருவி வேட்டையாடிக்கொண்டு
வக்கா மணி பூட்டிக்கொண்டு மடவார் கண் போல் ஈட்டிக் கொண்டு
தொக்காக் கச்சை இறுக்கிக்கொண்டு துள்ளு மீசை முறுக்கிக்கொண்டு
திக்கு அடங்காக் குளுவ சிங்கன் திரிகூடச் சிங்கன் வந்தான்
** சிங்கன் தன் வலிமை கூறுதல்
** விருத்தம்

#253
ஆளி போல் பாய்ந்து சுரும்பு இசை கேட்கும் திரிகூடத்து அமலர் நாட்டில்
வேளை-தோறும் புகுந்து திருவிளையாட்டம் கண்ணி குத்தி வேட்டையாடி
ஞாளி போல் சுவடெடுத்துப் பூனை போல் ஒளிபோட்டு நரி போல் பம்மிக்
கூளி போல் தொடர்ந்து அடிக்கும் திரிகூடச் சிங்கன் எனும் குளுவன் நானே
** இராகம் – தன்யாசி : தாளம் – ஆதி
** கண்ணிகள்

#254
தேவருக்கு அரியார் மூவரில் பெரியார் சித்திரசபையார் சித்திரநதி சூழ்
கோவிலில் புறவில் காவினில் அடங்காக் குருவிகள் படுக்கும் குளுவனும் நானே

#255
காதல் அஞ்செழுத்தார் போத நீறு அணியார்
கைந்நரம்பு எடுத்துக் கின்னரம் தொடுத்துப்
பாதகர் தோலால் பல தவில் அடித்துப்
பறவைகள் படுக்கும் குறவனும் நானே

#256
தலை-தனில் பிறையார் பலவினில் உறைவார்
தகையினை வணங்கார் சிகை-தனைப் பிடித்தே
பல மயிர் நறுக்கிச் சில கண்ணி முறுக்கிப்
பறவைகள் படுக்கும் குளுவனும் நானே

#257
ஒரு குழை சங்கம் ஒரு குழை தங்கம் உரிய விநோதர் திரிகூடநாதர்
திருநாமம் போற்றித் திருநீறு சாற்றும் திரிகூட நாமச் சிங்கனும் நானே
** நூவன் வருதல்
** விருத்தம்

#258
புலியொடு புலியைத் தாக்கிப் போர் மத யானை சாய்க்கும்
வலியவர் திரிகூடத்தில் மதப் புலிச் சிங்கன் முன்னே
கலிகளும் கதையும் பேசிக் கையிலே ஈட்டி வாங்கி
எலிகளைத் துரத்தும் வீரன் ஈப்புலி நூவன் வந்தான்
** இராகம் – அடாணா : தாளம் – சாப்பு
** கண்ணிகள்

#259
ஊர்க்குருவிக்குக் கண்ணியும் கொண்டு உள்ளானும் வலியானும் எண்ணிக்கொண்டு
மார்க்கம் எல்லாம் பல பன்னிக்கொண்டு கோட்கார நூவனும் வந்தானே

#260
கரிக்குருவிக்குக் கண்ணியும் கொண்டு கானாங்கோழிக்குப் பொரியும் கொண்டு
வரிச் சிலைக் குளுவரில் கவண்டன் மல்லன் வாய்ப்பான நூவனும் வந்தானே

#261
ஏகனை நாகனைக் கூவிக்கொண்டு எலியனைப் புலியனை ஏவிக்கொண்டு
வாகான சிங்கனை மேவிக்கொண்டு வங்கார நூவனும் வந்தானே

#262
கொட்டகைத் தூண் போல் கால் இலங்க ஒட்டகம் போலே மேல் இலங்கக்
கட்டான திரிகூடச் சிங்கன் முன்னே மட்டு ஈ வாய் நூவனும் வந்தானே
** சிங்கன் பறவைகளைப் பார்த்தல்
** விருத்தம்

#263
மூவகை மதிலும் சாய மூரலால் வீரம்செய்த
சேவகர் திருக்குற்றாலர் திருவிளையாட்டம்-தன்னில்
பாவகமாக நூவன் பறவை போல் பறவை கூவ
மாவின் மேல் ஏறிச் சிங்கன் வரும் பட்சி பார்க்கின்றானே
** சிங்கன் பறவை வரவு கூறுதல்
** இராகம் – கல்யாணி : தாளம் – ஆதி
** பல்லவி

#264
வருகினும் ஐயே பறவைகள் வருகினும் ஐயே
** அநுபல்லவி

#265
வருகினும் ஐயே திரிகூடநாயகர்
வாட்டமில்லாப் பண்ணைப் பாட்டப்புறவு எல்லாம்
குருகும் நாரையும் அன்னமும் தாராவும்
கூழைக்கடாக்களும் செங்கால்நாரையும்
** சரணங்கள்

#266
சென்னியிலே புனல் கன்னியை வைத்த திரிகூடநாதர் கிரி மாது வேட்கையில்
மன்னன் ஒருவன் வரிசையிட்டான் கங்கை மங்கைக்கு நானே வரிசைசெய்வேன் என
அன்னை தயவுடை ஆகாசகங்கை அடுக்களை காணப் புறப்படும் நேர்த்தி போல்
பொன் நிற வான் எங்கும் தம் நிறமாகப் புரிந்து புவனம் திரிந்து குருகினம்

#267
காடை வருகுது கம்புள் வருகுது காக்கை வருகுது கொண்டைக்குலாத்தியும்
மாடப்புறாவும் மயிலும் வருகுது மற்றொரு சாரியாய்க் கொக்குத் திரள் எல்லாம்
கூடலை உள்ளாக்கிச் சைவம் புறம்பாக்கிக் கூடும் சமணரை நீடும் கழுவேற்ற
ஏடு எதிர் ஏற்றிய சம்பந்தமூர்த்திக்கு அன்று இட்ட திருமுத்தின் பந்தர் வந்தால் போல

#268
வெள்ளைப் புறாவும் சகோரமும் ஆந்தையும் மீன்கொத்திப்புள்ளும் மரங்கொத்திப்பட்சியும்
கிள்ளையும் பஞ்சவர்ணக்கிளி கூட்டமும் கேகயப்பட்சியும் நாகணவாய்ச்சியும்
உள்ளானும் சிட்டும் வலியானும் அன்றிலும் ஓலம்செய்தே கூடி நாலஞ்சு பேதமாய்த்
துள்ளாடும் சூல கபாலர் பிராட்டியார் தொட்டாடும் ஐ வனப் பட்டாடை போலவே
** சிங்கன் சொல்லுதல்
** கொச்சகக் கலிப்பா

#269
ஈராயிரங்கரத்தான் ஏற்ற சங்கும் நான்மறையும்
சீராய் இரங்க நடம்செய்தவர் குற்றால வெற்பில்
ஓராயிரம் முகமாய் ஓங்கிய கங்காநதி போல்
பார் ஆர் பல முகமும் பட்சி நிரை சாயுது ஐயே
** இராகம் – கல்யாணி : தாளம் – ஆதி
** பல்லவி

#270
சாயினும் ஐயே பறவைகள் சாயினும் ஐயே
** அநுபல்லவி

#271
சாயினும் ஐயே பாயும் பறவைகள் சந்தனக் காட்டுக்கும் செண்பகக் காவுக்கும்
கோயில் குழல்வாய்மொழி மங்கைப் பேரிக்கும் குற்றாலநாயகர் சிற்றாற்று வெள்ளம் போல்
** சரணங்கள்

#272
கார் ஆரும் செங்குள மேலப்பாட்டப்பற்று காடுவெட்டிப்பற்று நீடுசுண்டைப்பற்று
சீர் ஆரும் பேட்டைக் குளமுடைக் காங்கேயன் ஸ்ரீகிருஷ்ணன்மேடு முனிக்குருகன்பேரி
ஏரிவாய் சீவலப்பேரி வடகால் இராசகுலராமன் கண்டுகொண்டான் மேலை
மாரிப்பற்றும் கீழை மாரிப்பற்றும் சன்னநேரிப்பற்றும் சாத்தனேரிப்பற்றும் சுற்றிச்

#273
பாரைக்குளம் தெற்கு மேல் வழுதிக்குளம் பாட்டப் பெருங்குளம் செங்குறிஞ்சிக்குளம்
ஊருணிப்பற்றும் திருப்பணி நீளம் உயர்ந்த புளியங்குளம் துவரைக்குளம்
மாரனேரிக்குளம் மத்தளம்பாறை வழிமறித்தான்குளம் ஆலடிப்பற்றும்
ஆர் அணி குற்றாலர் தோட்ட நெடுஞ்செய் அபிஷேகப்பேரிக் கணக்கன்பற்றிலும்

#274
ஐயர் குற்றாலத்து நம்பியார் திருத்தும் அப்பால் ஒரு தாதன் குற்றாலப்பேரிச்
செய் அம் புலியூர் இலஞ்சி மேலகரம் செங்கோட்டை சீவலநல்லூர் சிற்றம்பலம்
துய்ய குன்றக்குடி வாழவல்லான்குடி சுரண்டையூர் முதல் உட்கிடை சுற்றியே
கொய்யும் மலர்த் தார் இலஞ்சிக் குமார குரு விளையாடும் திருவிளையாட்டத்தில்
** சிங்கன் தன் காதலி அழகுபற்றிச் சொல்லுதல்
** கொச்சகக்கலிப்பா

#275
கொட்டழகு கூத்துடையார் குற்றாலநாதர் வெற்பில்
நெட்டழகு வாள் விழியும் நெற்றியின் மேல் கஸ்தூரிப்
பொட்டழகும் காதழகும் பொன்னழகுமாய் நடந்த
கட்டழகி-தன் அழகு என் கண் அளவுகொள்ளாதே
** சிங்கன் பறவை இரை மேய்தலைச் சொல்லுதல்
** இராகம் – கல்யாணி : தாளம் – ஆதி
** பல்லவி

#276
மேயினும் ஐயே பறவைகள் மேயினும் ஐயே
** அநுபல்லவி

#277
மேயினும் ஐயே குற்றாலநாதர்
வியன் குலசேகரப்பட்டிக் குளங்களும்
ஆயிரப் பேரியும் தென்காசியும் சுற்றி
அயிரையும் தேளியும் ஆராலும் கொத்தியே
** சரணங்கள்

#278
ஆலயம் சூழத் திருப்பணியும் கட்டி அன்னசத்திரம் கட்டி அப்பாலும் தென்காசிப்
பாலமும் கட்டிப் படித்தரம் சேர் கட்டிப் பக்த சனங்களைக் காக்கத் துசம் கட்டி
மால் அயன் போற்றிய குற்றாலநாதர் வழித்தொண்டுசெய்திடக் கச்சைகட்டிக்கொண்ட
சீலன் கிளுவையில் சின்னணைஞ்சேந்த்ரன் சிறுகால சந்தித் திருத்துப் புறவு எல்லாம்

#279
தானைத்தலைவன் வயித்தியப்பன் பெற்ற சைவக்கொழுந்து தருமத்துக்கு ஆலயம்
சேனைச் சவரிப்பெருமாள் சகோதரன் செல்வன் மருதூர் வயித்தியப்பனுடன்
மானவன் குற்றாலநாதனைப் பெற்றவன் வள்ளல் எனும் பிச்சைப்பிள்ளை திருத்து எல்லாம்
கானக் குளத்து உள்வாய்க் கீழைப் புதுக்குளம் கற்பூரக்கால்பற்றும் தட்டான்குளச்சுற்றும்

#280
மன்னன் கிளுவையில் சின்னணைஞ்சேந்த்ரன் வடகரை வீட்டுக்கு மந்திரியாகவும்
செந்நெல் மருதூர்க்கு நாயகமாகவும் தென்காசியூருக்குத் தாயகமாகவும்
தன்னை வளர்க்கின்ற குற்றாலநாதர் தலத்தை வளர்க்கின்ற தானிகளாகவும்
நல் நகர்க் குற்றாலத்து அந்தாதி சொன்னவன் நள்ளார் தொழும் பிச்சைப்பிள்ளை திருத்து எல்லாம்

#281
நல் நகர் ஊர் கட்டிச் சாலை மடம் கட்டி நாயகர் கோவில் கொலுமண்டபம் கட்டித்
தென்னமரம் பரமானந்தத் தோப்பிட்டுத் தெப்பக்குளம் கட்டித் தேர்மண்டபம் கட்டிப்
பன்னும் திரிகூடத்து அம்பலம் கட்டிப் பசுப்புரை கோடி திருப்பணியும் கட்டி
அந்நாளில் தர்மக்களஞ்சியம் கட்டும் அனந்தபற்பநாபன் கட்டளைப்பற்று எல்லாம்

#282
தந்தை முன் கட்டின அம்பலத்துக்கும் தருமத்துக்கு நிலைக்கண்ணாடி போலவே
எந்தையார் வாசலில் பிள்ளையார் செய்வித்து இரண்டு குறிஞ்சிப் படித்துறையும் செய்த
கொந்து ஆர் புயத்தான் இராக்கதப்பெருமாள் குற்றாலநாதன் முன் உற்ற சகோதரன்
வந்தனை சேர் சங்குமுத்து-தன் மைத்துனன் மன்னன் வயித்தியநாதன் திருத்து எல்லாம்

#283
ஆர் மேல் வருகின்ற துன்பமும் நீக்கி அடங்கார் குறும்பும் அடக்கியே தென்காசி
ஊர் மேல் உயர்ந்த மனுநீதி நாட்டி உடையவர் குற்றாலர் பூசை நைவேத்தியம்
தேர் மேல் திருநாளும் தெப்பத்திருநாளும் சித்திரமண்டபம் சத்திரம் சாலையும்
பார் மேல் வளம்செய் அனந்தபற்பநாபன் பாலன் வயித்தியநாதன் திருத்து எல்லாம்

#284
ஆறை அழகப்ப பூபாலன் கட்டளை அன்பன் திருமலைக்கொழுந்து-தன் கட்டளை
நாறும் பூக் குற்றாலச்சங்கு-தன் கட்டளை நங்கள் ஒல்லார் அரி நரபாலன் கட்டளை
வீறு சேர் பால்வண்ணச்சங்கு-தன் கட்டளை மிக்கான ஓமலூர்க் கிருஷ்ணன் வணிகேசன்
பேறுடைப் பம்பை வரு சங்குமுத்து-தன் பேரான கட்டளைச் சீரான பற்று எல்லாம்

#285
தானிகன் சர்க்கரைப்பண்டாரம் என்னும் தணியாத காதல் பணிவிடை செய்கின்ற
மேன்மை பெரும் சுந்தரத்தோழன் கட்டளை மிக்க கருவைப் பதி ராமநாயகன்
நானிலமும் புகழ் தாகம்தீர்த்தானுடன் நல்லூர் வரு சங்கரமூர்த்தி கட்டளை
ஆன சடைத்தம்பிரான்பிச்சைக் கட்டளை அப்பால் மலைநாட்டார் கட்டளைப் பற்று எல்லாம்
** சிங்கன் சிங்கியை நினைத்துக் கூறுதல்
** கொச்சகக்கலிப்பா

#286
செட்டிக்கு இரங்கி வினை தீர்த்தவர் குற்றாலர் வெற்பில்
சுட்டிக்கு இணங்கு நுதல் சுந்தரியாள் கொங்கையின் மேல்
முட்டிக் கிடந்து கொஞ்சி முத்தாடிக் கூடி நன்றாய்க்
கட்டிக் கிடக்க முலைக் கச்சாய்க் கிடந்திலனே
** சிங்கன் குளுவனைப் பார்த்துக் கண்ணி கொண்டுவரச் சொல்லுதல்
** இராகம் – கல்யாணி : தாளம் – சாப்பு
** பல்லவி

#287
கண்ணி கொண்டுவாடா குளுவா கண்ணி கொண்டுவாடா
** அநுபல்லவி

#288
கண்ணி கொண்டுவாடா பண்ணவர் குற்றாலர் கார் ஆர் திரிகூடச் சாரலிலே வந்து
பண்ணிய புண்ணியம் எய்தினால் போலப் பறவைகள் எல்லாம் பரந்து ஏறி மேயுது
** சரணங்கள்

#289
மானவர் குழு மதுரையில் பாண்டியன் மந்திரியார் கையில் முந்திப் பணம்போட்டுத்
தான் ஆசைப்பட்டு முன் கொண்ட கொக்கு எல்லாம் தரிகொண்டுதில்லை நரி கொண்டுபோச்சுது
கானவர் வேடத்தை ஈனம் என்று எண்ணாதே காக்கை படுத்தான் கரு முகில்வண்ணனும்
மேனாள் படுத்திட்ட கொக்கிறகு இன்னும் விடைமேலிருப்பார் சடை மேல் இருக்குது

#290
முன்னாள் படுத்த பரும் பெருச்சாளியை மூத்த நயினார் மொடுவாய்க் கொடுபோனார்
பின்னான தம்பியார் ஆடு மயிலையும் பிள்ளைக் குறும்பால் பிடித்துக்கொண்டு ஏகினார்
பன்னரும் அன்னத்தை நல் நகர் ஈசர் பரிகலம் ஈந்திடும் பார்ப்பானுக்கு ஈந்தனர்
வன்னப் பருந்து ஒரு கள்வன் கொடுபோனான் வக்காவும் நாரையும் கொக்கும் படுக்கவே

#291
மீறும் இலஞ்சிக் குறத்தியைக் கொண்ட செவ்வேள் குறவன் முதல் வேட்டைக்குப் போன நாள்
ஆறு நாள் கூடி ஒரு கொக்குப் பட்டது அகப்பட்ட கொக்கை அவித்து ஒரு சட்டியில்
சாறாக வைத்த பின் வேதப் பிராமணர் தாமும் கொண்டார் சைவர் தாமும் கொண்டார் தவப்
பேறா முனிவரும் ஏற்றுக்கொண்டார் இதைப் பிக்குச் சொல்லாமலே கொக்குப் படுக்கவே
** கவிக்கூற்று
** கொச்சகக்கலிப்பா

#292
ஆனை குத்திச் சாய்த்த திறலாளர் திருக்குற்றாலர்
கூனி கொத்தி முக்கி விக்கிக் கொக்கு இருக்கும் பண்ணை எலாம்
சேனை பெற்ற வாட்காரச் சிங்கனுக்குக் கண்ணி கொண்டு
பூனைகுத்தி நூவன் முழுப் பூனை போல் வந்தானே
** நூவன் சொல்லுதல்
** இராகம் – காம்போதி : தாளம் – சாப்பு

#293
கலந்த கண்ணியை நெருக்கிக் குத்தினால்
காக்கையும் படுமே குளுவா காக்கையும் படுமே

#294
மலர்ந்த கண்ணியைக் கவிழ்த்துக் குத்தினால்
வக்காவும் படுமே குளுவா வக்காவும் படுமே

#295
உலைந்த கண்ணியை இறுக்கிக் குத்தினால்
உள்ளானும் படுமே குளுவா உள்ளானும் படுமே

#296
குலைந்த கண்ணியைத் திருத்திக் குத்தடா
குற்றாலமலை மேல் குளுவா குற்றாலமலை மேல்
** சிங்கன் சொல்லுதல்
** கொச்சகக்கலிப்பா

#297
கள் உலவு கொன்றை அம் தார்க் கர்த்தர் திரிகூட வெற்பில்
பிள்ளை மதி வாள்_நுதலாள் பேசாத வீறு அடங்கத்
துள்ளி மடி மேல் இருந்து தோளின் மேல் ஏறியவள்
கிள்ளைமொழி கேட்க ஒரு கிள்ளை ஆனேனிலையே
** இராகம் – கல்யாணி : தாளம் – ஆதி
** பல்லவி

#298
கெம்பாறடையே பொறு பொறு கெம்பாறடையே
** அநுபல்லவி

#299
கெம்பாறடையே நம்பர் குற்றாலர்
கிருபைப் புறவில் பறவை படுக்கையில்
வம்பாக வந்த உன் சத்தத்தைக் கேட்டல்லோ
வந்த குருவி கலைந்து ஓடிப்போகுது
** சரணங்கள்

#300
ஏறாத மீன்களும் ஏறி வருகுது எத்திசைப்பட்ட குருகும் வருகுது
நூறாவது கண்ணியைப் பேறாகக் குத்தியே நூவனும் நானும் இருந்தோம் உனக்கு இனிப்
பேறான சூளை மருந்தாகிலும் பிறர் பேசாமல் வாடைப் பொடியாகிலும் அரைக்
கூறாகிலும் ஒரு கொக்காகிலும் நரிக்கொம்பாகிலும் தாரேன் வம்புகள் பேசியே

#301
பூசி உடுத்து முடித்து வளையிட்டுப் பொட்டிட்டு மையிட்டுப் பொன்னிட்டுப் பூவிட்டுக்
காசு பறித்திடும் வேசையர் ஆசாரக் கண்ணிக்குள்ளே படும் காமுகர் போலவும்
ஆசார ஈனத் துலுக்கன் குதிரை அடி ஒட்டுப் பாறை அடி ஒட்டினால் போலும்
தேசத்துக் கொக்கு எல்லாம் கண்ணிக்குள்ளே வந்து சிக்குது பார் கறி தக்குது பார் இனிக்

#302
ஆலாவும் கொக்கும் அருகே வருகுது ஆசாரக் கள்ளர் போல் நாரை திரியுது
வேலான கண்ணியர் ஆசையினால் கீழும் மேலும் திரிந்திடும் வேடிக்கைக்காரர் போல்
காலால் திரிந்து திரிந்து திரிந்து எங்கள் கண்ணிக்கு உள்ளாகும் பறவையைப் போகட்டுப்
பாலாறு நெய்யாறு பாய்கின்ற ஓட்டத்தில் பல் ஒடிக்கச் சிறு கல் அகப்பட்டால் போல
** கவிக்கூற்று
** விருத்தம்

#303
தேவி குழல்வாய்மொழிப் பெண் நாச்சியார் கால் செண்பகக் கால் திருந்த மதி சூடினார் கால்
காவி வயல் வெண்ணமடை தட்டான்பற்றுக் கள்ளிகுளம் அழகர்பள்ளம் கூத்தன்மூலை
வாவி-தொறும் நின்று சிங்கன் வேட்டையாடி வட அருவி ஆற்றுக்கால் வடகால் தென்கால்
கோவில் விளையாட்டம் எங்கும் கண்ணி குத்திக் கூவினான் நூவனை விட்டு ஏவினானே
** சிங்கன் சொல்லுதல்
** இராகம் – தர்பார் : தாளம் – சாப்பு
** கண்ணிகள்

#304
கல்வித் தமிழ்க்கு_உரியார் திரிகூடக் கர்த்தர் பொன் தாள் பரவும்
செல்வக் கடன்_அனையான் குற்றாலச் சிவராமநம்பி எம் கோன்
வல்ல மணியபட்டன் பெருமை வளர் சங்குமுத்துநம்பி
வெல்லும் குற்றாலநம்பி புறவு எல்லாம் மீன்கொத்திக் கூட்டம் ஐயே

#305
சீராளன் பிச்சைப்பிள்ளை திருப்பணிச் செல்வப் புதுக்குளமும்
காராளன் சங்குமுத்து திருத்தொடைக் காங்கேயன் கட்டளையும்
மாராசன் தென்குடிசை வயித்தியநாதன் புதுக்குளமும்
தாராளமான புள்ளும் வெள் அன்னமும் தாராவும் மேயுது ஐயே

#306
தானக் கணக்குடனே ஸ்ரீபண்டாரம் தன்ம பத்தர் கணக்கும்
வானவர் குற்றாலர் திருவாசல் மாட நல் பத்தியமும்
நானிலம் சூழ் குடிசை வைத்தியநாத நரபாலன்
தான் அபிமானம் வைத்த சிவராமன் சம்பிரதிக் கணக்கும்

#307
வேதநாராயணவேள் குமாரன் விசைத் தொண்டை நாடாளன்
சீதரன் முத்துமன்னன் விசாரிப்புச் சேர்ந்த புறவின் எல்லாம்
காதலாய்க் கண்ணிவைத்துப் பறவைக்குக் கங்கணம்கட்டி நின்றேன்
ஏதோ ஒரு பறவை தொடர்ந்து வந்து என்னைக் கடிக்குது ஐயோ
** சிங்கன் சிங்கியை நினைத்தல்
** விருத்தம்

#308
கா அலர் திரிகூடத்தில் காமத்தால் கலங்கி வந்த
நூவனைப் பழித்துச் சிங்கன் நோக்கிய வேட்டைக் காட்டில்
ஆவல் சேர் காம வேட்டை ஆசையால் அன்னப் பேட்டைச்
சேவல் போய்ப் புணரக் கண்டான் சிங்கி மேல் பிரமைகொண்டான்
** சிங்கன் சிங்கியை நினைத்துப் புலம்பல்
** இராகம் – ஆகரி : தாளம் – சாப்பு

#309
எட்டுக் குரலில் ஒரு குரல் கூவும் புறாவே எனது
ஏகாந்தச் சிங்கியைக் கூவாதது என்ன குலாவே
மட்டு ஆர் குழலி-தன் சாயலைக் காட்டும் மயூரமே அவள்
மா மலர்த் தாள் நடை காட்டாதது என்ன விகாரமே
தட்டு ஒத்த கும்பத் தட முலை காட்டும் சகோரமே சற்றுத்
தண்ணென்றும் வெச்சென்றும் காட்டிவிட்டால் உபகாரமே
கட்டித் திரவியம் கண் போலும் நல் நகர்க் காவியே கண்ணில்
கண்டிடம் எல்லாம் அவளாகத் தோணுதே பாவியே
** சிங்கன் வேட்டையைப் பற்றிச் சொல்லுதல்
** கொச்சகக்கலிப்பா

#310
செட்டி பற்றில் கண்ணிவைத்துச் சிங்கி நடைச் சாயலினால்
பெட்டைக்குளத்தில் அன்னப் பேடை நடை பார்த்திருந்தேன்
கட்டுற்ற நல் நகர்க்கு என் கண்ணி எலாம் கொத்தி வெற்றி
கொட்டிக்கொண்டு ஐயே குருவி எலாம் போயினுமே
** இராகம் – முகாரி : தாளம் – சாப்பு
** பல்லவி

#311
போயினும் ஐயே பறவைகள் போயினும் ஐயே
** அநுபல்லவி

#312
போயினும் ஐயே நாயகர் குற்றாலர் பொல்லாத தக்கன் மகத்தை அழித்த நாள்
வாயில் அடிபட்டு இடிபட்டு உதைபட்டு வானவர் தானவர் போனது போலவே
** சரணங்கள்

#313
மேடையினின்று ஒரு பஞ்சவர்ணக்கிளி மின்னார் கைதப்பி என் முன்னாக வந்தது
பேடை என்றே அதைச் சேவல் தொடர்ந்தது பின் ஒரு சேவலும் கூடத் தொடர்ந்தது
சூடிய இன்பம் இரண்டுக்கும் எட்டாமல் சுந்தோபசுந்தர் போல் வந்த கலகத்தில்
காடு எல்லாம் பட்சியாக் கூடி வளம் பாடிக் கண்ணியும் தட்டி என் கண்ணிலும் குட்டியே

#314
ஆயிரம் கொக்குக்குக் கண்ணியை வைத்து நான் அப்பாலே போய் ஒருமிப்பாய் இருக்கையில்
மா இரும் காகங்கள் ஆயிரம் பட்டு மறைத்து விறைத்துக் கிடப்பது போலவே
காயம் ஒடுங்கிக் கிடந்தது கண்டு நான் கண்ணி கழற்றி நிலத்திலே வைத்த பின்
சேயிழை-தன் பொருட்டாலே பஞ்சாட்சரம் செபித்த மன்னவன் பாவம் போனால் போலப்

#315
தம்பம் என்றே நம்பினோரைச் சதிபண்ணித் தாம் வாழப் பார்ப்பவர் செல்வங்கள் போலவும்
பம்பும் வடபால் அருவியில் தோய்ந்தவர் பாவம் கழுநீராய்ப் போவது போலவும்
கும்பமுனிக்குச் சிவமான காலம் குதித்து ஓடிப்போன வயிணவர் போலவும்
அம்பிகை பாகர் திரிகூடநாதர் அடியவர் மேல் வந்த துன்பங்கள் போலவும்
** நூவன் சிங்கனைப் பழித்தல்
** விருத்தம்

#316
வருக்கையார் திரிகூடத்தில் மாமியாள் மகள் மேல் கண்ணும்
பருத்தி மேல் கையுமான பான்மை போல் வேட்டைபோனாய்
கருத்து வேறானாய் தாயைக் கற்பித்த மகள் போல் என்னைச்
சிரித்தனை சிங்கா உன்னைச் சிரித்தது காமப் பேயே
** இதுவுமது

#317
கடுக்கையார் திரிகூடத்தில் காமத்தால் வாமக் கள்ளைக்
குடித்தவர் போலே வீழ்ந்தாய் கொக்கு நீ படுத்து வாழ்ந்தாய்
அடிக்கொரு நினைவு ஏன் சிங்கா ஆசைப் பேய் உனை விடாது
செடிக்கொரு வளையம் போட்டுச் சிங்கியைத் தேடுவாயே
** சிங்கன் சிங்கியைத் தேடும்படி நூவனுக்குச் சொல்லுதல்
** விருத்தம்

#318
வேடுவக் கள்ளி ஓர் நாள் மெய்யிலாதவன் என்று என்னை
ஊடலில் சொன்ன பேச்சால் உருவிலி பகைத்தான் என் மேல்
போடுவான் புட்பபாணம் புறப்படமாட்டேன் நூவா
தேடு நீ திரிகூடத்தில் சிங்கியைக் காட்டுவாயே
** நூவன் சிங்கியைத் தேட மாட்டே னென்று மறுத்துக் கூறல்

#319
அங்கணர் திரிகூடத்தில் அவளை நீ அணைந்தால் என்ன
நுங்களில் பிரிந்தால் என்ன நூவனுக்கு உண்டோ நட்டம்
கங்கணம் எனக்கு ஏன் சிங்கா காசலை உனக்கு உண்டானால்
கொங்கணச் சிங்கி-தன்னைக் கூட்டிவா காட்டுவேனே
** சிங்கன் சிங்கியைத் தேடல்

#320
திருவண்ணாமலை காஞ்சி திருக்காளத்தி சீகாழி சிதம்பரம் தென் ஆரூர் காசி
குருநாடு கேதாரம் கோலக்கொண்டை கோகரணம் செகநாதம் கும்பகோணம்
அரியலூர் சீரங்கம் திருவானைக்கா அடங்கலும் போய்ச் சிங்கி-தனைத் தேடிச் சிங்கன்
வரு சிராப்பள்ளி விட்டு மதுரை தேடி மதி_கொண்டான் திரிகூடம் எதிர் கண்டானே

#321
வில்லிபுத்தூர் கருவைநல்லூர் புன்னைக்காவு வேள் திருச்செந்தூர் குருகூர் சீவைகுந்தம்
நெல்வேலி சிங்கிகுளம் தேவநல்லூர் நிலைதரும் சிற்றூர் குமரி திருவாங்கோடு
சொல் அரிய குறுங்கை களாக்காடு தேடித் தொன் மருதூர் அத்தாளநல்லூர் தேடிச்
செல்வர் உறை சிவசயிலம் பாவநாசம் திரிகூடச் சிங்கி-தனைத் தேடுவானே
** இராகம் – நீலாம்பரி : தாளம் – ஆதி
** கண்ணிகள்

#322
பேடைக் குயிலுக்குக் கண்ணியை வைத்து நான்
மாடப் புறாவுக்குப் போனேன்
மாடப் புறாவும் குயிலும் படுத்தேன்
வேடிக்கைச் சிங்கியைக் காணேன்

#323
கோல மயிலுக்குக் கண்ணியை வைத்து நான்
ஆலாப் படுக்கவே போனேன்
ஆலாவும் கோல மயிலும் படுத்தேன்
மாலான சிங்கியைக் காணேன்

#324
வெவ்வாப் பறவையின் வேட்டைக்குப் போய்க் காம
வேட்டையைத் தப்பிவிட்டேனே
வவ்வால் பறக்க மரநாய் அகப்பட்ட
வைபவம் ஆச்சுது தானே

#325
இவ்வாறு வந்த என் நெஞ்சின் விரகத்தை
எவ்வாறு தீர்த்துக்கொள்வேனே
செவ் வாய்க் கரும்பை அநுராக வஞ்சியைச்
சிங்கியைக் காணகிலேனே
** குற்றாலத்தில் சிங்கன் சிங்கியைத் தேடுதல்
** விருத்தம்

#326
நல் தாலம்-தன்னில் உள்ளோர் யாவரேனும் நல் நகரத் தலத்தில் வந்து பெறுவார் பேறு
பெற்றார் தாம் நல் நகரத் தலத்தை விட்டால் பிரமலோகம் வரைக்கும் பேறு உண்டாமோ
வற்றாத வட அருவிச் சாரல் நீங்கி வடகாசி குமரி மட்டும் அலைந்த சிங்கன்
குற்றாலத் தலத்தின் முன்னே தவத்தால் வந்து கூடினான் சிங்கி-தனைத் தேடினானே
** சிங்கன் சிங்கியைக் காணாமல் புலம்பல்
** இராகம் – தோடி : தாளம் – ஆதி
** பல்லவி

#327
சிங்கியைக் காணேனே என் வங்கணச் சிங்கியைக் காணேனே
** அநுபல்லவி

#328
சிங்கியைக் காமப் பசுங்கிளிப் பேடையைச் சீர் வளர் குற்றாலர் பேர் வளம் பாடிய
சங்கீத வாரியை இங்கித நாரியைச் சல்லாபக்காரியை உல்லாச மோகனச்
** சரணங்கள்

#329
ஆரத் தனத்தைப் படம் கொண்டு மூடி அசைத்து நின்றாள் அதை யானைக் கொம்பு என்று நான்
கோரத்தை வைத்த விழிக்கு எதிர் சென்றேன் என் கொஞ்சத்தனத்தை அறிந்து சுகக்காரி
பாரத் தனத்தைத் திறந்துவிட்டாள் கண்டு பாவியேன் ஆவி மறந்துவிட்டேன் உடன்
தீரக் கனிய மயக்கி முயக்கியே சிங்கார மோகனம் சிங்கி கொண்டாள் அந்தச்

#330
பூ என்ற பாதம் வருடிவருடிப் புளக முலையை நெருடிநெருடி
ஏ வென்ற கண்ணுக்கு ஓர் அஞ்சனம் தீட்டி எடுத்த சுருளும் இதழால் இடுக்குவள்
வா என்று கைச்சுருள் தா என்று வாங்காள் மனக்குறி கண்டு நகக்குறி வைத்த பின்
ஆ என்று ஒருக்கால் இருக் கால் உதைப்பள் அதுக்குக் கிடந்து கொதிக்குது என் பேய் மனம்

#331
தார் ஆடும் குன்றி வடத்தை ஒதுக்கித் தட மார்பு இறுகத் தழுவ வந்தால் அவள்
வார் ஆடும் கொங்கைக்குச் சந்தனம் பூசாள் மறுத்து நான் பூசினும் பூசலாகாது என்பாள்
சீராடிக் கூடி விளையாடி இப்படித் தீரா மயல் தந்த தீராமைக்காரியைக்
காராடும்கண்டர் தென் ஆரியநாட்டு உறை காரியப் பூவையை ஆரியப் பாவையை
** நூவன் சிங்கியினது அடையாளம் வினாவுதல்
** கொச்சகக்கலிப்பா

#332
சங்கம் எலாம் முத்து ஈனும் சங்கர் திரிகூட வெற்பில்
பொங்கம் எலாம் செய்யும் உங்கள் போகம் எலாம் ஆர் அறிவார்
சிங்கம் எலாம் ஒத்த துடிச் சிங்கா உன் சிங்கி-தனக்கு
அங்கம் எலாம் சொல்லி அடையாளம் சொல்வாயே
** சிங்கன் சிங்கியினது அடையாளங் கூறுதல்
** இராகம் – பியாகடை : தாளம் – மிசுரம்
** பல்லவி

#333
கறுப்பில் அழகியடா என் சிங்கி கறுப்பில் அழகியடா
** அநுபல்லவி

#334
கறுப்பில் அழகி காமச் சுறுக்கில் மிகுந்த சிங்கி சுகக்காரி
** சரணங்கள்

#335
கண்கள் இரண்டும் அம்புக் கணை போல் நீண்டு இருக்கும் கையத்தனை அகலம் காணுமடா
பெண்கள் மயக்கும் அவள் விரகப் பார்வை சிங்கி பிடித்தால் மதப் பயலும் பெலப்பானோ

#336
நகையும் முகமும் அவள் நாணையக் கைவீச்சும் பகைவரும் திரும்பிப் பார்ப்பாரடா
தொகையாய்ச் சொன்னேன் இனிச் சொல்லக்கூடாது ஒரு வகையாய் வருகுது என்னை மயக்குது ஐயே

#337
விடையில் வரும் பவனி உடைய திருக்குற்றாலர் சடையில் இளம்பிறை போல் தனி நுதலாள்
நடையில் அழகும் இரு துடையில் அழகும் அவள் உடையில் அழகும் என்னை உருக்குது ஐயோ
** நூவன் சிங்கியைச் சேர்த்து வைப்பதற்குச் சிங்கனிடங் கூலி வினாவுதல்
** கொச்சகக்கலிப்பா

#338
சாட்டி நிற்கும் அண்டம் எலாம் சாட்டை இலாப் பம்பரம் போல்
ஆட்டுவிக்கும் குற்றாலத்து அண்ணலார் நல் நாட்டில்
காட்டுவிக்கும் முன் மோகக் கண் மாயச் சிங்கி-தனைக்
கூட்டுவிக்கும் பேர்களுக்குக் கூலி என்ன சொல்வாயே
** சிங்கன் நூவனுக்குப் பிரதிஉபகாரங் கூறுதல்
** இராகம் – தர்பார் : தாளம் – ரூபகம்
** கண்ணிகள்

#339
வாடை மருந்துப் பொடியும் அம்மி ஊர் மரப்பாவை பின்தொடர மாயப் பொடியும்
கூடியிருக்க மருந்தும் இரு பொழுதும் கூடியிருப்பார்களைக் கலைக்க மருந்தும்
காடுகட்டு அக்கினிக்கட்டு குறளிவித்தை கண்கட்டுவித்தைகளும் காட்டித் தருவேன்
வேடிக்கைக் காம ரதி போல் திரிகூட வெற்பில் உறை சிங்கி-தனைக் காட்டாய் ஐயே

#340
மலையைக் கரையப்பண்ணுவேன் குமரிகட்கு வாராத முலைகளும் வரப்பண்ணுவேன்
முலையை ஒழிக்கப்பண்ணுவேன் ஒழித்த பேர்க்கு மோகினி மந்திரம் சொல்லி வரப்பண்ணுவேன்
திலத வசீகரம் செய்வேன் ஒருவருக்கும் தெரியாமல் போகவரச் சித்தும் அறிவேன்
கலக மதனப் பயலை என் மேல் கண்காட்டிவிட்ட சிங்கி-தனைக் காட்டாய் ஐயே
** நூவன் சிங்கனைப் பரிகசித்தல்
** விருத்தம்

#341
ஆற்றை நான் கடத்திவிட்டால் ஆகாசமார்க்கம் ஓடத்
தேற்ற நீ அறிவாய்-கொல்லோ திரிகூடமலையில் சிங்கா
சாற்றும் முன் மருந்து போலச் சகலர்க்கும் குறிகள் சொல்லிப்
போற்றும் உன் சிங்கி போன புதுத்தெரு இது கண்டாயே
** சிங்கன் சிங்கியைக் காணாமல் வருந்துதல்
** இராகம் – முகாரி : தாளம் – ஆதி
** பல்லவி

#342
எங்கேதான் போனாள் ஐயே என் சிங்கி இப்போது
எங்கேதான் போனாள் ஐயே
** அநுபல்லவி

#343
கங்காளர் திரிகூடக் கர்த்தர் திரு நாடு-தன்னில்
** சரணங்கள்

#344
வேளாகிலு மயக்குவள் வலியத் தட்டிக்
கேளாமலும் முயக்குவள்
ஆளாய் அழகனுமாய் யாரை எங்கே கண்டாளோ
தோளாசைக்காரி சிங்கி சும்மா கிடக்கமாட்டாள்

#345
மெய்க்குறியால் எங்கும் வெல்லுவள் மனக்குறியும்
கைக்குறியும் கண்டு சொல்லுவள்
திக்கில் அடங்காது குறி இக்கில் அடங்காது மொழி
மைக்குள் அடங்காது விழி கைக்குள் அடங்காத கள்ளி

#346
சித்திர சபேசர்மேலே சிவசமயப்
பத்தியில்லாப் பேயர் போலே
குத்தியில் அரக்கும் கள்ளும் குடுவையில் தென்னங்கள்ளும்
அத்தனையும் குடித்துப்போட்டு ஆர் பிறகே தொடர்ந்தாளோ
** சிங்கன் சிங்கியைக் காணுதல்
** கொச்சகக்கலிப்பா

#347
ஆணாகிப் பெண் விரகம் ஆற்றாமல்போன சிங்கன்
பூணாகப் பாம்பு அணிவார் பொன் நகர் சூழ் நல் நகரின்
சேண் ஆர் பெரும் தெருவில் சிங்கியை முன் தேடிவைத்துக்
காணாமல்போன பொருள் கண்டவர் போல் கண்டானே
** விருத்தம்

#348
சீத மதி புனைந்தவர் குற்றாலநாதர் திருநாட்டில் இருவரும் தாம் கண்ட போது
காதல் எனும் கடல் பெருகித் தரிகொள்ளாமல் கைகலக்கும் போது கரை குறுக்கிட்டால் போல்
வீதி வந்து குறுக்கிடவே நாணம் பூண்ட விண்ணாணச் சிங்கி-தனைக் கண்டு சிங்கன்
தூதுவந்த நளன் ஆனான் கன்னிமாடம் துலங்கு தமயந்தி அவள் ஆயினாளே
** இராகம் – எதுகுலகாம்போதி : தாளம் – சாப்பு
** பல்லவி

#349
இங்கே வாராய் என் கண்ணே இங்கே வாராய்
** அநுபல்லவி

#350
இங்கே வாராய் மலர்ச் செம் கை தாராய் மோகச்
சங்கை பாராய் காமச் சிங்கியாரே
** சரணங்கள்

#351
பாதம் நோமே நொந்தால் மனம் பேதம் ஆமே
பாதம் நோக நிற்பது ஏது பாவம் இனிக்
கூதலோ கொடிது காதலோ கடினம்

#352
பாவிதானே மதன் கணை ஏவினானே
காவில் மாங்குயில்கள் கூவிக்கூவி எனது
ஆவி சோருது உனை ஆவியாவிக் கட்ட

#353
வருக்கைமூலர் வட அருவித் திருக்குற்றாலர்
பெருக்கம் பாடிக்கொள்ள மருக்கள் சூடிக்கொள்ள
ஒருக்கால் ஊடிக்கொள்ள இருக்கால் கூடிக்கொள்ள
** சிங்கன் சிங்கியை மகிழ்வித்தல்
** கொச்சகக்கலிப்பா

#354
தொண்டாடும் சுந்தரர்க்குத் தோழர் திரிகூட வெற்பில்
திண்டாடி நின்ற சிங்கன் சீராடும் சிங்கி-தனைக்
கண்டாடித் துள்ளாடிக் கள் ஆடும் தும்பியைப் போல்
கொண்டாடிக் கொண்டாடிக் கூத்தாடிக்கொண்டானே
** சிங்கனுக்கும் சிங்கிக்கும் உரையாடல்
** இராகம் – தன்யாசி : தாளம் – ஆதி
** கண்ணிகள்

#355
இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி எங்கே நடந்தாய் நீ

#356
கொத்து ஆர் குழலார்க்கு வித்தாரமாகக்
குறிசொல்லப் போனனடா சிங்கா குறிசொல்லப் போனனடா

#357
பார்க்கில் அதிசயம் தோணுது சொல்லப்
பயமா இருக்குதடி சிங்கி பயமா இருக்குதடி

#358
ஆர்க்கும் பயம் இல்லைத் தோணின காரியம்
அஞ்சாமல் சொல்லடா சிங்கா அஞ்சாமல் சொல்லடா

#359
காலுக்கு மேலே பெரிய விரியன்
கடித்துக் கிடப்பானேன் சிங்கி கடித்துக் கிடப்பானேன்

#360
சேலத்து நாட்டில் குறிசொல்லிப் பெற்ற
சிலம்பு கிடக்குதடா சிங்கா சிலம்பு கிடக்குதடா

#361
சேலத்தார் இட்ட சிலம்புக்கு மேலே
திருகு முருகு என்னடி சிங்கி திருகு முருகு என்னடி

#362
கோலத்து நாட்டார் முறுக்கிட்ட தண்டை
கொடுத்த வரிசையடா சிங்கா கொடுத்த வரிசையடா

#363
நீண்டு குறுகிய நாங்கூழுப் போல
நெளிந்த நெளிவு என்னடி சிங்கி நெளிந்த நெளிவு என்னடி

#364
பாண்டியனார் மகள் வேண்டும் குறிக்காகப்
பாடகம் இட்டதடா சிங்கா பாடகம் இட்டதடா

#365
மாண்ட தவளை உன் காலிலே கட்டிய
மார்க்கமது ஏது பெண்ணே சிங்கி மார்க்கமது ஏது பெண்ணே

#366
ஆண்டவர் குற்றாலர் சந்நிதிப் பெண்கள்
அணிமணிக் கெச்சமடா சிங்கா அணிமணிக் கெச்சமடா

#367
சுண்டு விரலிலே குண்டலப் பூச்சி
சுருண்டு கிடப்பானேன் சிங்கி சுருண்டு கிடப்பானேன்

#368
கண்டிய தேசத்தில் பண்டு நான் பெற்ற
காலாழி பீலியடா சிங்கா காலாழி பீலியடா

#369
மெல்லிய பூம் தொடை வாழைக் குருத்தை
விரித்து மடித்தது ஆர் சிங்கி விரித்து மடித்தது ஆர்

#370
நெல்வேலியார் தந்த சல்லாச் சேலை
நெறிபிடித்து உடுத்தினேன் சிங்கா நெறிபிடித்து உடுத்தினேன்

#371
ஊருக்கு மேக்கே உயர்ந்த அரசிலே
சாரைப்பாம்பு ஏது பெண்ணே சிங்கி சாரைப்பாம்பு ஏது பெண்ணே

#372
சீர் பெற்ற சோழன் குமாரத்தியார் தந்த
செம்பொன் அரைஞாணடா சிங்கா செம்பொன் அரைஞாணடா

#373
மார்பிற்கு மேலே புடைத்த சிலந்தியில்
கொப்புளம் கொள்வானேன் சிங்கி கொப்புளம் கொள்வானேன்

#374
பாருக்குள் ஏற்றமாம் காயலார் தந்த
பார முத்தாரமடா சிங்கா பார முத்தாரமடா

#375
எட்டுப் பறவை குமுறும் கமுகிலே
பத்தெட்டுப் பாம்பு ஏதடி சிங்கி பத்தெட்டுப் பாம்பு ஏதடி

#376
குட்டத்து நாட்டாரும் காயங்குளத்தாரும்
இட்ட சவடியடா சிங்கா இட்ட சவடியடா
** வேறு
** இராகம் – புன்னாகவராளி : தாளம் – ஆதி
** கண்ணிகள்

#377
வள்ளிக் கொடியிலே துத்திப்பூப் பூப்பானேன் சிங்கி காதில்
வங்காளத்தார் இட்ட சிங்காரக் கொப்படா சிங்கா

#378
கள்ளிப்பூப் பூத்தது அதிசயம் அல்லவோ சிங்கி தெற்கு
வள்ளியூரார் தந்த மாணிக்கத் தண்டொட்டி சிங்கா

#379
வன்னக் குமிழிலே புன்னை அரும்பு ஏது சிங்கி மண்ணில்
முந்நீர்ச் சலாபத்து முத்து மூக்குத்தி காண் சிங்கா

#380
சொருகி முடித்ததில் தூக்கணம் ஏதடி சிங்கி தென்
குருகையூரார் தந்த குப்பியும் தொங்கலும் சிங்கா

#381
பொன் இட்ட மேல் எல்லாம் மின் வெட்டிப் பார்ப்பானேன் சிங்கி இந்த
வன்னப் பணிகளின் மாணிக்கக்கல்லடா சிங்கா

#382
இந்து அப்பு அணியை நீ பூணப் பொறுக்குமோ சிங்கி பூவில்
ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக்கும் காண் சிங்கா

#383
குன்றத்தைப் பார்த்தால் கொடி இடை தாங்குமோ சிங்கி தன்
கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா

#384
இல்லாத சுற்று எல்லாம் எங்கே படித்தாய் நீ சிங்கி நாட்டில்
நல்லாரைக் காண்பவர்க்கு எல்லாம் வருமடா சிங்கா

#385
பெட்டகப் பாம்பைப் பிடித்து ஆட்டவேண்டாமோ சிங்கி இந்த
வெட்டவெளியிலே கோடிப்பாம்பு ஆடுமோ சிங்கா

#386
கட்டிக்கொண்டே சற்றே முத்தம்கொடுக்கவா சிங்கி நடுப்
பட்டப்பகலில் நான் எட்டிக் கொடுப்பேனோ சிங்கா

#387
முட்டப் படாம் முலை யானையை முட்டவோ சிங்கி காமம்
மட்டுப்படாவிடில் மண்ணோடே முட்டடா சிங்கா

#388
சேலை உடை-தனைச் சற்றே நெகிழ்க்கவா சிங்கி சும்மா
நாலுபேர் முன் எனை நாணம் குலையாதே சிங்கா

#389
பாதம் வருடித் துடை குத்த வேண்டாமோ சிங்கி மனப்
போதம் வருடிப் போய் பூனையைக் குத்தடா சிங்கா

#390
நாக்குத் துடிக்குது உன் நல் வாய் இதழுக்குச் சிங்கி உன்றன்
வாய்க்கு ருசிப்பது மாலைக் கள் அல்லவோ சிங்கா

#391
ஒக்கப் படுக்க ஒதுக்கிடம் பார்க்கவோ சிங்கி பரும்
கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா

#392
விந்தைக்காரி உன்னை வெல்லக்கூடாதடி சிங்கி அது
சந்தேகமோ உன் தலைப் பேனைக் கேளடா சிங்கா

#393
தென்னாடு எல்லாம் உன்னைத் தேடித் திரிந்தேனே சிங்கி அப்பால்
இ நாட்டில் வந்து என்னை எப்படி நீ கண்டாய் சிங்கா

#394
நல் நகர்க் குற்றாலநாதரை வேண்டினேன் சிங்கி மணிப்
பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள்வோமடா சிங்கா

#395
பாடிக்கொள்வார் எவர் ஆடிக்கொள்வார் எவர் சிங்கி நீதான்
பாடிக்கொண்டால் போதும் ஆடிக்கொள்வேனடா சிங்கா

#396
பார்க்கப் பொறுக்குமோ பாவி என் ஆவிதான் சிங்கி முன்னே
ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறார்களோ சிங்கா
** வாழ்த்து
** வெண்பா

#397
சுற்றாத ஊர்-தோறும் சுற்றவேண்டா புலவீர்
குற்றாலம் என்று ஒருகால் கூறினால் வற்றா
வட அருவியான் மறுபிறவிச் சேற்றில்
நட வருவியானே நமை
** கண்ணிகள்

#398
கொற்ற மதிச் சடையானைக் குறும்பலா உடையானை
வெற்றி மழுப் படையானை விடையானை வாழ்த்துகிறேன்

#399
தாதை இலாத் திருமகனைத் தட மலைக்கு மருமகனை
வேத சங்க வீதியனை வேதியனை வாழ்த்துகிறேன்

#400
தந்தி முகத்து ஒரு கோனைத் தமிழ் இலஞ்சி முருகோனை
மைந்தர் எனும் இறையோனை மறையோனை வாழ்த்துகிறேன்

#401
தீ முகத்தில் பறிகொடுத்த திருமுடிக்கா ஒரு முடியை
மாமனுக்கு வரிசையிட்ட மாமனை நான் வாழ்த்துகிறேன்

#402
காமனுக்கும் பூமனுக்கும் கன்னி தெய்வயானைக்கும்
மாமன் எனவே பகரும் வள்ளல்-தனை வாழ்த்துகிறேன்

#403
நீடு உலகு எலாம் அளந்த நெடியானும் மயனும்
தேடு அரிய திரிகூடச்செல்வனை யான் வாழ்த்துகிறேன்

#404
சித்ரநதியிடத்தானைத் தேனருவித் தடத்தானைச்
சித்ரசபை நடத்தானைத் திடத்தானை வாழ்த்துகிறேன்

#405
பனக அணி பூண்டவனைப் பக்தர்களை ஆண்டவனை
அனவரத தாண்டவனை ஆண்டவனை வாழ்த்துகிறேன்

#406
அரி கூட அயன் ஆகி அரன் ஆகி அகலாத
திரிகூடப் பரம்பரனைத் திகம்பரனை வாழ்த்துகிறேன்

#407
சிற்றாற்றங்கரையானைத் திரிகூடவரையானைக்
குற்றாலத்து உறைவானைக் குருபரனை வாழ்த்துகிறேன்

#408
கட கரியை உரித்தவனைக் கலை மதியம் தரித்தவனை
வட அருவித் துறையவனை மறையவனை வாழ்த்துகிறேன்

#409
ஆதி மறை சொன்னவனை அனைத்து உயிர்க்கும் முன்னவனை
மாது குழல்வாய்மொழி சேர் மன்னவனை வாழ்த்துகிறேன்
** விருத்தம்

#410
வார் வாழும் தனத்தி குழல்வாய்மொழி அம்பிகை வாழி வதுவை சூட்டும்
தார் வாழி திரிகூடத்தார் வாழி குறுமுனிவன் தலைநாள் சொன்ன
பேர் வாழி அரசர் செங்கோல் வாழி நல் நகரப் பேரால் ஓங்கும்
ஊர் வாழி குற்றாலத் தலத்து அடியார் வாழி நீடூழி தானே
*