திருக்குறளில் உள்ள சொற்களின் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்

திருக்குறள் – சொற்கள் – எண்ணிக்கை

எண் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
மொத்தம் 2660 11661 72 262 4780

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = மயிர்_குறை_கருவி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = மயிர், குறை, கருவி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். அணி_இழை, வால்_அறிவன், மதி_நுட்பம், பொருள்_பெண்டிர் போன்றன
கூட்டுப்பொருளால் ஒரே சொல் ஆகின்றன. இங்கு, சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும்.
முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, திரு_நுதல் என்பது அன்மொழித்தொகையாகி
ஒரே சொல் ஆகிறது. இந்தச் சொல்லுக்குரிய பிரிசொற்கள் திரு, நுதல் ஆகிய இரண்டும். எனவே திரு_நுதல் என்ற சொல்லுக்குரிய
நிகழ்விடங்கள், திரு, நுதல், திரு_நுதல் என்ற மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

திரு (11)
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
தீ உழி உய்த்துவிடும் – குறள் 17:8
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
திறன் அறிந்து ஆங்கே திரு – குறள் 18:9
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
பேர் அறிவாளன் திரு – குறள் 22:5
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
தெள்ளியர் ஆதலும் வேறு – குறள் 38:4
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்-கண் பட்ட திரு – குறள் 41:8
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
நினைப்பானை நீங்கும் திரு – குறள் 52:9
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
சீறின் சிறுகும் திரு – குறள் 57:8
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப்பட்டார் தொடர்பு – குறள் 92:10
கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல்
நல்லவர் நாணு பிற – குறள் 102:1
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
நெஞ்சத்து அவலம் இலர் – குறள் 108:2
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திரு_நுதற்கு இல்லை இடம் – குறள் 113:3

திரு_நுதல் (1)
கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல்
நல்லவர் நாணு பிற – குறள் 102:1

நுதல் (4)
கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல்
நல்லவர் நாணு பிற – குறள் 102:1
முயங்கிய கைகளை ஊக்க பசந்தது
பைம் தொடி பேதை நுதல் – குறள் 124:8
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒள்_நுதல் செய்தது கண்டு – குறள் 124:10
ஊடி பெறுகுவம்-கொல்லோ நுதல் வெயர்ப்ப
கூடலின் தோன்றிய உப்பு – குறள் 133:8

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. கொல், மன், மின், கண்(ஏழன் உருபு)
போன்வை கட்டுருபன்கள். அவன்-கண், அணங்கு-கொல், அரியர்-மன், இரவன்-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள்
இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

நாள்-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், நாள்-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும்
இடம்பெறும். நாள் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்களில் இச்சொல் இடம்பெறாது.

நாள்-தொறும் (2)
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்-தொறும் நாடு கெடும் – குறள் 56:3

-தொறும் (5)
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்-தொறும் நாடு கெடும் – குறள் 56:3
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
பண்பு உடையாளர் தொடர்பு – குறள் 79:3
களி-தொறும் கள் உண்டல் வேட்ட அற்றால் காமம்
வெளிப்படும்-தோறும் இனிது – குறள் 115:5

3. வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் குறள் முழுமையாகக்
கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த குறள் இடம்பெறும் அதிகார எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அதிகாரத்தில்
அச் சொல் இடம்பெறும் குறள் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு குறளில் ஒரே சொல் பன் முறை வந்தாலும், அந்தக் குறள் ஒரு முறைதான் கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

மிசை (2)
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நில மிசை நீடு வாழ்வார் – குறள் 1:3