தேம்பாவணி


0.பாயிரம் – கடவுள் வாழ்த்து
1.நாட்டுப் படலம்
2.நகரப் படலம்
3.வளன் சனித்த படலம்
4.பால மாட்சிப் படலம்
6.ஈரறம் பொருத்து படலம்
5.திருமணப் படலம்
7.ஐயந்தோற்று படலம்
8.ஐயம் நீங்கு படலம்
9.மகிழ்வினைப் படலம்
10.மகவருள் படலம்
11.காட்சிப் படலம்
12.மகனேர்ந்த படலம்
13.பைதிரம் நீங்கு படலம்
14.இளவன் மாட்சிப் படலம்
15.சோசுவன் வெற்றிப் படலம்
16.சேதையோன் வெற்றிப் படலம்
17.காசை சேர் படலம்
18.சீனயி மாமலை காண் படலம்
19.பாலை புகு படலம்
20.சித்திரக் கூடப் படலம்
21.நீர்வரமடைந்த படலம்
22.எசித்து சேர் படலம்
23.குணுங்கு மந்திரப் படலம்
24.சோகு தோர்வைப் படலம்
25.குழவிகள் வதைப் படலம்
26.கருணையன் மாட்சிப் படலம்
27.ஞாபகப் படலம்
28.வாமன் ஆட்சிப் படலம்
29.வேதக் கெழுமைப் படலம்
30.மீட்சிப் படலம்
31.பிரிந்த மகவைக் காண் படலம்
32.புரோகிதப் படலம்
33.பிணிதோற்று படலம்
34.தூதுரைப் படலம்
35.உத்தானப் படலம்
36.முடிசூட்டுப் படலம்

@0 பாயிரம்


#1
சீரிய உலகம் மூன்றும் செய்து அளித்து அழிப்ப வல்லாய்
நேரிய எதிர் ஒப்பு இன்றி நீத்த ஓர் கடவுள் தூய
வேரிய கமல பாதம் வினை அற பணிந்து போற்றி
ஆரிய வளன்-தன் காதை அறம் முதல் விளங்க சொல்வாம்

#2
தே உலகு இறைஞ்சும் சூசை தேன் மலர் கொடியை பூத்து
மூ உலகு அனைத்தும் எஞ்சா முறையொடு நிழற்றும் நாதன்
பூ உலகு எய்தி அன்ன பூ_நிழற்கு ஒதுங்கி சாய்ந்த
யா உலகு அனைத்தும் வாழ்த்தும் இரும் கதை இயம்பல் செய்வாம்

#3
வளம் செயும் வரங்கள் தம்மால் வரைவு இல வளர்வு அமைந்த
உளம் செயும் அரிய மாட்சி உடையவன் ஆய தன்மை
நளம் செயும் வட நூலோர்கள் நவின்று இவன் சூசை என்பது
அளம் செயும் தமிழ் சொல்லானும் அவன் வளன் என்பது ஒத்தே

#4
சூசை உற்றன வரங்கள் தூய் கடல் கடக்கல் இல்லால்
ஓசை உற்று ஒழுகு அமிர்தம் உடை கடல் என்ன நண்ணி
பூசை உற்று அதனை நக்க புக்கு என உளத்தை தூண்டும்
ஆசை உற்று ஊமன் ஏனும் அரும் கதை அறையல் உற்றேன்

#5
முறை அடுத்து அரும் நூலோர் உள் மூழ்கிய உவப்பில் அன்ன
துறை அடுத்து அள்ளி உண்ணும் துணிவிலான் என்னை நோக்கில்
குறை எடுத்தனை என்று அன்னார் கொடும் சினத்து உறுக்கல் நன்றோ
பறை எடுத்து உலகம் கேட்ப பழித்து எனை நகைத்தல் நன்றோ

#6
வண் தமிழ் இனிதின் கேட்ட மட கிளி கிளக்கும் புன் சொல்
கொண்டு உமிழ்ந்து உரைப்ப நூலோர் குறை என கேளார்-கொல்லோ
உண்டு அமிழ்து உமிழ்ந்தால் என்ன உலகு ஒருங்கு ஆள்வாள் சொன்ன
பண்டு அமிழ்து உண்டு யான் புன் பாவொடு கக்க கேட்பார்

#7
அடவியால் வனப்பில் வாய்ந்த ஆகிர்த எனும் நகர்க்குள்
புடவியால் உவமை நீத்த புகழ் வரத்து உயர்ந்த கன்னி
நடவி ஆர் தவத்தில் ஓங்கி நாதனை ஈன்றாள் தாளை
தடவி ஆர்வு உயர போற்றி தகவு அடைந்து இருந்தாள் அன்றோ

#8
பொறையுழி சிறப்பில் வாய்ந்த புலன் தவிர் காட்சி-தன்னால்
அறை மொழி இனிமை கான்ற அருள் அவிழ் வாயினாளே
நிறை மொழி மாந்தர் பூத்த நீர்மையோடு ஒழுகல் செய்து
மறை மொழி வாய்மை காட்டும் மாண்பு உடை அறத்தினாளே

#9
சீது அருள் உடுக்கள் ஊடு திங்களை போல கன்னி
மாதருள் அரிய மாண்பால் வயங்கினாள் அன்றி தன்னில்
கோது அருள் குறை அற்று உம்பர் குழுவினுக்கு எந்தை அண்டம்
மீது அருள் காட்சி பூத்து வேதியர்க்கு ஒளியே போன்றாள்

#10
இளம் கொடி மாட்சி காட்ட இனிய தன் நாமம் தந்து
வளம் கொடு நட்பு காட்ட வரைவு இல வரங்கள் ஈந்தாள்
விளங்கு ஒளி உடுத்த மேனி வெண் மதி மிதித்த பாதம்
உளங்கு உடு சூட்டும் சென்னி உடையவள் பரம தாயே

#11
இன்னவை மகளும் தாயும் இணை என நடத்தும் வேளை
பல் நவை அறும் தன் பூமான் பழங்கதை உரைத்து உரைத்த
அன்னவை எவரும் கேட்ப அவை வரைக என்றாள் தாயும்
சொன்னவை மகளும் அன்ன துணிவொடு வரைந்திட்டாளே

#12
வருந்திய நசையால் நானும் வரைந்தவை வரைந்து காட்ட
திருந்திய தமிழ் சொல் இல்லால் செவி புலன் கைப்ப நல்லோர்
பொருந்திய குறைகள் நோக்கின் புணர்ந்த மண் கலத்தை பாராது
அருந்திய அமுது நன்றேல் அருத்தியோடு அருந்தல் செய்வார்

#13
சீரிய மறை நூல் பூண்ட செழும் தவத்து அரிய மாட்சி
நேரிய உளத்தில் ஓங்கி நேமி காத்தவனை காத்த
வேரி அம் கொடியோன் காதை விளம்ப அ கொடி விள் பைம் பூ
ஆரியனூரில் தேம்பாவணி என பிணித்தல் செய்வாம்
மேல்

@1 நாட்டுப்படலம்


#1
புள் உலாம் விசும்பு-இடை-தொறும் பொரும் படை பொருவ
வெள் உலாம் மழை வெண் கொடி உரு கொடு விளங்கி
தெள் உலாம் திளை திதைப்ப உண்டு எழுந்து உயர் பரந்து
வள் உலாம் கரு மத கரி இனம் என தோன்ற

#2
போர் புறம் கொடு பொருந்தலர் உரத்தில் தேய்த்து ஒளிர் வேல்
சீர் புறம் கொடு திசை-தொறும் இருள் அற மின்னி
வார் புறம் கொடு வளர் முரசு ஒலி என அதிர்ந்து
நீர் புறம் கொடு நீல் முகில் முழங்கின-மாதோ

#3
படை என செரு பகை தர படர்ந்தன அல்லால்
கடை என செறி கருணையோடு உஞற்றிய வள்ளர்
கொடை என செழும் குன்றொடு வயின்-தொறும் குளிர
மிடை என சொரி வியன் முகில் வரைவு இல பொழிவ

#4
படித்த நூல் அவை பயன்பட விரித்து உரைப்பவர் போல்
தடித்த நீல் முகில் தவழ் தலை பொலிந்த பொன் மலையே
குடித்த நீர் எலாம் கொப்புளித்து அமுது என அருவி
இடித்து அறா ஒலி எழ திரை எறிந்து உருண்டு இரிவ

#5
புள்ளி மால் வரை பொன் உலகு இடத்து எடுத்து உய்த்தல்
உள்ளி வான் விடும் வடம் என தாரைகள் ஒழுக
வெள்ளி நீள் தொடர் விசித்து அதை பிடித்து என சூழ
துள்ளி வீழ் உயர் தூங்கிய அருவியின் தோற்றம்

#6
ஒள் நுரைத்து எரி உமிழ்ந்து அவிர் இன மணி வரன்றி
தெள் நுரைத்து எழும் திரை திரள் வயின்-தொறும் புகுந்து
வள் நுரைத்து எதிர் வதிந்த எலாம் சாய்த்து அவை கொடு போய்
புண் உரைத்து அட கொள்ளை செய் பொருந்தலர் போன்றே

#7
விரை கிடந்து அசை வீ உமிழ் மதுவினால் பெருகி
நிரை கிடந்து எழும் சோலையும் கழனியும் நிறைப்ப
வரை கிடந்து இழி வளம் புனல் எங்கணும் உலவல்
திரை கிடந்து உயிர் சீர்த்து உறுப்பு உலாவிய போன்றே

#8
அஞ்சு இலா எதிர் அடுக்கிய கல் எலாம் கடந்தே
எஞ்சு இலா எழில் இமைத்த நீள் மருதமும் நீக்கி
துஞ்சு இலா நதி தொடர்ந்து அகல் கரும் கடல் நோக்கல்
விஞ்சையார் எலாம் வெறுத்து வீடு இவறிய போன்றே

#9
மலையின் நேர் அறல் மலிய நால் திணை அருந்திய பின்
அலையின் நேர் உறல் அவனி தன் மகர்க்கு எலாம் ஊட்டி
முலையின் நேர் உறீஇ விஞ்சு பால் முடுகலில் உடுத்த
கலையின் நேர் உறீஇ களிப்பொடு சிந்துவ போன்றே

#10
செறி உலாம் புனல் சிறை செய்து பயன்பட ஒதுக்கி
வெறி உலாம் மலர் மிடைந்து அகல் வயல் வழி விடுவார்
பொறி உலாம் வழி போக்கு இலது இயல்பட அடக்கி
நெறி உலாவு அற நேர் அவை நிறுத்தினர் போன்றே

#11
உவர்க்கும் தாழ் கடல் உடுத்து அகல் விரி தலை ஞாலம்
எவர்க்கும் தாய் என எண் இலா கிழிபட கீறும்
அவர்க்கும் தான் உணவு அளித்தலே நோய் செய்வார்க்கு உதவும்
தவர்க்கும் தாவ அரும் தருமம் என்று இயற்றுதல் போன்றே

#12
கூர் விளைத்து அருள் குரு விதி போன்று ஒன்று கோடி
நீர் விளைத்த நெல் நிரம்ப என வித்தினர் இரட்ட
ஏர் விளைத்த பல் கடைச்சியர் குரவை ஆடு இயல்பால்
தேர் விளைத்த ஓர் சிறப்பு எழும் விழா அணி போன்றே

#13
நோக்க இன்பு உளம் நுகர ஒள் முளரியோடு ஆம்பல்
நீக்கு அலாது எலாம் நீர்_மலர் களை என கட்டல்
ஆக்கம் ஆக்கினும் அறன் இழந்து ஆவது கேடு என்று
ஊக்கம் மாண்பினர் ஒருங்கு அவை ஒழிக்குதல் போன்றே

#14
பூரியார் திரு போல் தலை பசிய கூழ் நிறுவி
நீரினார் தலை நேர நேர் வளைவொடு பழுத்த
ஆரம் மானும் நெல் அறுத்து அரி கொண்டுபோய் அங்கண்
போர் இது ஆம் என களித்தனர் போர் பல புனைவார்

#15
மெய் கலந்த பொய் விலக்கி மெய் கொள்பவர் வினை போல்
வை கலந்த நெல் பகட்டினால் தெளித்து வை மறுத்து
கை கலந்து அடுத்து ஏற்குநர்க்கு அளித்த பின் களித்து
துய் கலந்த நெல் உண்ணவும் ஈயவும் தொகுப்பார்

#16
ஈதலோடு இசை இனிய வாழ்வுகள்
ஆதலோடு அறன் அழிவு இல் ஆக்கினர்
காதலோடு உடல் கடிய நாள் வர
வீதலோடு உறும் வீட்டில் வாழ்வரே

#17
மறமொடு ஆகுலம் மலிந்த தீது எலாம்
புறமொடு ஆகையின் பொருவு இலா வளர்
அறமொடு ஆன்ற சூதேய நாடு அமை
திறமொடு ஆண்மையை செப்ப சீரதோ

#18
மிடியில் ஆர் நயன் விளைவில் மாற்றுவான்
முடியில் ஆர் கனி பொறை பொறா முயன்று
அடியில் ஆருயிர் அமைந்த நீர் தொழ
கடியில் ஆர் மரம் வளைதல் காணுமே

#19
ஆலை ஆர் புகை முகில் என்று ஆர்ப்பு எழ
சோலை ஆர் மயில் துள்ள மாம் குயில்
மாலை ஆர் இருள் விரும்பும் மாக்கள் காண்
மேலையார் என மெலிந்து தேம்பும்-ஆல்

#20
மல்ல விள் அலர் மலிந்த கான்-தொறும்
புல்ல அன்பு அறா பொருது காரணம்
இல்லது ஒல்லென குறும்புள் ஈந்த போர்
அல்லது இல்லது ஓர் அமர் அ நாட்டிலே

#21
தீ எழ தகர் சினந்து தாக்குப
மீ எழ துகள் விரைந்து பின் உறல்
நோய் எழ பகை நுதலும் ஒன்னலர்
வாய் எழ செயும் வணக்கம் மானுமே

#22
வேர்ப்பு எழ கயல் விழியர் கை வளை
ஆர்ப்பு எழ கடை தயிரில் ஆய நெய்
கூர்ப்பு எழ துயர் குறுக மேல் அறம்
ஏர்ப்பு எழ செய்வோர் இயல்பு மானுமே

#23
கழை இறால் பனை கனிகள் தேங்கு அலர்
உழையில் தாவிய தேறல் உண்ட பின்
மழையில் தாவிய மதுவின் ஊங்கு இனிது
இழை இறா அழகு இளம் புள் பாடும்-ஆல்

#24
உண்டு அகன்ற கன்று உள்ளி மேதிகள்
மண்ட அன்பு உறீஇ வழிந்த பால் திரள்
கொண்ட அன்னமே குடித்தல் ஆவது
கண்டது அங்கு உள களவு இது ஆம் அரோ

#25
குயில் இனத்தொடு கொம்பில் ஆர் கிளி
பயில் இனத்தொடு ஞிமிறும் பாடவே
துயில் இனத்தொடு விரித்த தோகை கொள்
மயில் இனத்தொடு மகளிர் ஆடும்-ஆல்

#26
கா சிலம்புவ களித்த புள் இனம்
வீ சிலம்புவ மிடைந்த தும்பிகள்
பா சிலம்புவ சிலம்ப பண் புகழ்
நா சிலம்புவ சிலம்பும் நாடு எலாம்

#27
முட்டு இரட்டின முரண் தகர் பெடை
பெட்டு இரட்டின குயில் மிளிர்ந்த முத்து
இட்டு இரட்டின கரும்பு இன்பு ஈன்ற கள்
விட்டு இரட்டின வீ இனங்களே

#28
நிழலின் கண் சிறைபடுத்தும் நீள் பொழில்
குழலில் பூ சிறைபடுத்தும் கோதையார்
கழலில் கால் சிறைபடுத்தும் காந்தர் நீர்
விழலின் தான் சிறைபடுத்தும் வேலியே

#29
துன் அல் இல் சிறைபடுத்த தோம் இலால்
அன்ன பல் சிறை அல்லது இல்லை-ஆல்
பொன்ன நல் சிறை அன்ன புள் உறை
மன்னவர்க்கு இறை வழங்கும் நாட்டிலே

#30
வாய்ந்த செந்நெலை மறுகும் பண்டியும்
ஆய்ந்த மெல் இலை அமையும் பண்டியும்
பாய்ந்த பூக ஒண் பழம் பெய் பண்டியும்
வேய்ந்த தீம் கனி விம்மும் பண்டியும்

#31
பன்னும் தேங்கு இளநீர் பெய் பண்டியும்
துன்னும் தீம் கழை சுமக்கும் பண்டியும்
மின்னும் தேன் செறி வீ பெய் பண்டியும்
மன்னும் தேசு பல் மணி கொள் பண்டியும்

#32
துளித்த தேறலை துவலை சோலை சூழ்
களித்த நாடு எலாம் கசடு இல் வாழ்வு உற
சுளித்த மள்ளர்கள் தூண்டும் ஏற்று இனம்
திளைத்த பண்டிகள் நெருங்கி தேயும்-ஆல்

#33
பாய்ந்த தேங்கு அதின் பழங்கள் வீழ்தலால்
வாய்ந்த வாழை மா வருக்கை ஆசினி
சாய்ந்த தீம் கனி சரிந்த தேன் புனல்
தோய்ந்த வாய் எலாம் இனிமை தோய்ந்தன

#34
வளைந்து அளித்தரும் கடலின் வாழ் வளை
உளைந்து அளித்த முத்து ஒருங்கு மற்று எலாம்
திளைந்து அளித்தலின் திரு என்று ஆண்டகை
விளைந்து அளித்தவை விருந்து என்று ஆம் அரோ

#35
பொறையினோடு இகல் பொதிர்ந்த பொன் மணி
உறையினோடு இகல் உவந்து இடும் கொடை
மறையினோடு இகல் முனிவர் மாண்பு வான்
முறையினோடு இகல் முயன்ற நாடு எலாம்

#36
காம் அலர் பெடை தழீஇ அன்னம் கண்படும்
தேம் மலர் தடம் தழீஇ சினைகள் நீடிய
பூ மலர் பொழில் தழீஇ பொலிந்த பொற்பு எழும்
தூ மலர் வயல் தழீஇ துளங்கு நாடு அதே

#37
ஓலைகள் கிடந்த நீள் கமுகொடும் பனை
பாலைகள் மா மகிள் பலவு சுள்ளிகள்
கோலைகள் சந்தனம் குங்குமம் பல
சோலைகள் கிடந்தன தொகுக்கும் வண்ணமோ

#38
தேன் வளர் அலங்கலை சிறை செய் கூந்தலோ
கான் வளர் சண்பகம் மலர்ந்த காவுகள்
வான் வளர் துளி நலம் வழங்கும் கொண்டலோ
தேன் வளர் ஒலி கொடு தேன் பெய் சோலையே

#39
தோடு அணி கவினொடு தூங்கும் குண்டலம்
நீடு அணி மதி முகம் நிழல் செய் மாதரோ
கோடு அணி எழுது அரும் கோல போதொடு
சேடு அணி கனி நலம் திளைத்த சோலையே

#40
நீல் நிரைத்து எழுதிய படத்தின் நேர் உடு
மேல் நிரைத்து எழுதிய விசும்பின் தோற்றமோ
கால் நிரைத்து எழும் தளிர் காழகத்து உயர்
தேன் நிரைத்து அவிழ் மலர் திளைத்த சோலையே

#41
அ புறத்து அமுது உணும் சிறை பொற்பு ஆர்ந்த புள்
இ புறத்து அலர்கள் கொய் இளைஞர் வாள் முகம்
மு புறத்து எழுதிய முகைகள் காட்டிய
துப்பு உற சித்திர கூடம் சோலையே

#42
கயில் துணை கலன் என கம்பில் தூங்கு அலர்
குயில் துணை குயிலவும் குழல் வண்டு ஊதவும்
மயில் துணை உலவி வந்து இரட்ட மற்று எலாம்
பயில் துணை களி மண பந்தர் சோலையே

#43
முதிர் செயும் கனி மலர் மொய்த்து தூங்கலோடு
உதிர் செயும் பழம் துணர் ஒளி செய் குப்பையால்
கதிர் செயும் முடி கலன் கழிந்து மன்னவர்
பொதிர் செயும் துறவு இடம் போலும் சோலையே

#44
வால் நிற தகர் இனம் கலையின் மான் இனம்
தூ நிறத்து உயரிய தூரியத்து இனம்
நீல் நிற பகட்டு இனம் நெடிது உழற்றலின்
கோன் நிற சிலம்ப நல் கூடம் சோலையே

#45
கறாகறா என ஒர்-பால் காடை புள் இனம்
ஞறாஞறா என ஒர்-பால் நயந்த தோகைகள்
புறா குறாவுதலொடு புள் பல் ஓதையால்
அறாது உறா உணர்வு உகும் அரங்கம் சோலையே

#46
மேல் வளர் அலர் படம் விரித்து வீணை செய்
பால் வளர் சுரும்பு இசை பாட மாம் குயில்
வால் வளர் மயில் நடம் காண மற்றை புள்
சால் வளர் நாடக சாலை சோலையே

#47
கால் எடுத்து அடுத்து எதிர்த்து ஒளி கலாப நீள்
வால் எடுத்து பக மாற மஞ்ஞைகள்
கோல் எடுத்து அஞ்சன கோல காருகம்
மேல் எடுத்து ஆரிய கூத்து வீக்கும்-ஆல்

#48
கூட நின்று ஓடை தன் குவளை கண் திறந்து
ஓட நின்று அலைந்து அலைந்து ஒருமித்து ஓர் இடம்
நாடலின் நகைத்து என நனைத்த முல்லை நீடு
ஆடலின் ஆவித்து என்று அலர்ந்த காந்தளே

#49
தோகை கொள் மயில் என மாதர் தோன்றலின்
வாகை கொண்டார் என மயில் ஒடுங்கலால்
சாகை கொண்டு எனைய புள் சிரித்த தன்மை போல்
ஓகை கொண்டு ஒலிதர ஒலிக்கும் நாடு எலாம்

#50
உதித்தன கதிர் என உவந்த மாம் குயில்
துதித்து என பாட ஒள் அனம் தன் தூய் நடை
விதித்து என முன் நடந்தன தம் மெல் அடி
பதித்து என நடந்தனர் பனி கொள் கோதையார்

#51
இன் நிற பிறை கதிர் திரட்டி ஈட்டு எனா
பல் நிறத்து அலர்ந்த பூ படர்ந்த கா-இடை
கொன் நிறத்து அலர்ந்து என கொய்து கொய்து தாம்
மின் நிறத்து அடவி சூழ் விரும்பி ஏகுவார்

#52
கொள்ளை கண்டு அளி இனம் கூ என் ஓதையும்
கிள்ளை கண்டு இனைவ போல் கீ என் ஓதையும்
வள்ளை கொண்டு இனிது இசை மறல பாடினர்
வெள்ளை கொண்டு உள பல நிறத்த வீ கொய்வார்

#53
ஐ மணி பவளம் முத்து அம் பொன் இற்று எலாம்
பம்மு அணி பெற அரும் படலை கோத்து என
பொம்மு அணி மலர் எலாம் புணர் பொன் நூலினால்
தம் அணி இணை என தார் பிணிக்குவார்

#54
பிணித்த தார் விரலின் மேல் பிறழ காட்டுவார்
அணி தகாது உனது என இசலி ஆர்த்த பின்
தணித்த பூண் ஒள் கலம் சவி கிலுத்தங்கள்
பணித்த பூம் புகை குழல் படிய சூடுவார்

#55
முருகு விம்மிய மலர் குடைந்து மூழ்கு தேன்
பருகு விம்மிய அளி பசி தவிர்ந்த பின்
அருகு விம்மியது என அலர் கொய் மங்கையர்
உருகு விம்மிய களிப்பு உயிர்த்து பாடுவார்

#56
பூமலி சேக்கை மேல் பொலிந்து நூல் படி
பா மலி பதத்து அறம் பழிச்சி பங்கய
தேம் மலி சேக்கை மேல் சிறந்த ஓதிமம்
நா மலி இனிது இசை நாண பாடுவார்

#57
ஆம்பல் வாய் நறும் விரை அவிழ்த்து விள்ளிய
ஆம்பல் வாய் மலர்ந்து அன அணங்கையார் இனிது
ஆம்பல் வாய் குரலுடன் ஆய்ந்து வெண் மதி
ஆம்பல் வாய் திருந்து உணர்வு அறைந்து பாடுவார்

#58
விண் புதைத்த மலர் பணை வாய் விரை குளித்த தேன் ஒழுகி
கண் புதைக்கும் இருள் பொழில் கொள் களி கூர்ந்த நாடு இதுவே
களி கூர்ந்த நாடு இதுவேல் கண் கடந்த கவின் நாடி
நளி கூர்ந்த நயன் நல்கும் வான் உலகம் நாடேமோ

#59
நிழல் மூழ்கும் பூம் பொழில் கண் நிறம் மது கான் இன்பம் அலால்
குழல் மூழ்கும் இசை துவைப்ப கோடு அரும் சீர் நாடு இதுவே
கோடு அரும் சீர் நாடு இதுவேல் கோது என கோள் புறத்து இமைப்ப
வாடு அரும் சீர் மல்கி எழும் வான் உலகம் நாடேமோ

#60
பட நாகம் தோல் உரித்த பான்மையின் கல் ஊடு உரிஞ்சி
தட நாகம் தூங்கு அருவி தாவு அழகு ஆர் நாடு இதுவே
தாவு அழகு ஆர் நாடு இதுவேல் தரங்கம் இலாது அருள் பவ்வம்
வாவு அழகு ஆர் திரு நிலைத்த வான் உலகம் நாடேமோ

#61
பகை தீர்ந்து சண்பகத்தின் தண் நிழல் கீழ் பள்ளி வர
மிகை தீர்ந்து புறத்து எவர்க்கும் வேட்கை செயும் நாடு இதுவே
வேட்கை செயும் நாடு இதுவேல் விரி காலத்து இமிழ் குன்றா
வாட்கை செயும் நிலைமை உள வான் உலகம் நாடேமோ

#62
நக்கு அளவாய் நயன் கொண்ட நாட்டு நலம் நாடிய-கால்
மக்கள் அவா மேல் நலம் கொள் வான் உலகம் நாடேமோ
வான் உலகம் நாடேமேல் மன் உயிர் மன் நயன் வெஃக
கான் உலகம் காட்டும் நலம் அ கவலை மாற்றுவதோ

#63
பண் கனிந்த நரம்பு உளரி பாண் இசைகள் பாடல் எனா
கண் கனிந்த கவின் நல்லார் களி கூர்ந்து இன்னதும் பலவும்
தண் கனிந்த தேன் இசையால் சாற்றலொடு பல நாளும்
விண் கனிந்த இன்பு உண்பார் விழைவு ஓங்க அ நாடே

#64
தேய முழங்கின ஆலைகள் பண்டிகள் தேய முழங்கின பா
ஆய முழங்கின ஆர் புகழ் சங்குகள் ஆயம் முழங்கின மேல்
பாய முழங்கின மேடகம் இன் புனல் பாய முழங்கின நீர்
தோய முழங்கின மேதிகள் தெண் திரை தோய முழங்கு இழையார்

#65
கான் திரள் சிந்திய சோலை இபம் செறி கான் மலர் சிந்திய தீம்
தேன் திரள் சிந்திய பூ தரளம் செறி தீம் புனல் சிந்திய வான்
மீன் திரள் சிந்திய மான வளம் செறி வேய் மணி சிந்திய பால்
ஆன் திரள் சிந்திய சீர் எவையும் செறி ஆர் பொழில் சிந்தியதே

#66
ஆலையின் வாய் உள தேன் அகலும் தரு ஆர் மலர் வாய் உள தேன்
சோலையின் வாய் உள தேனொடு தூறிய தூய் கனி வாய் உள தேன்
மாலையின் வாய் உள தேன் அளி வந்த இறால் அதின் வாய் உள தேன்
வேலியின் வாய் உள தேறிய செந்நெல் விளைக்குவ பாயினவே

#67
பானு அழகே நனி காட்டிய பங்கய நானம் முயங்கு அழகே
மீன் அழகே நனி காட்டிய விண்டு அவிர் வீ இனம் மண்டு அழகே
தேன் அழகே நனி காட்டிய தெள் துளி மாரி செறிந்த அழகே
வான் அழகே நனி காட்டும் பளிங்கு என வாவி வழங்கு அழகே

#68
காரொடு நேர் பொருதும் பொறையே பொழி காரொடு கை பொருதும்
தாரொடு நேர் பொருதும் கலனே தட மாரொடு தார் பொருதும்
பாரொடு நேர் பொருதும் சகடே நளிர் பாலொடு பா பொருதும்
சீரொடு நேர் பொருதும் பொழிலே செழு வீடொடு சீர் பொருதும்

#69
காலை ஒளிர்ந்துளி மொட்டு இதழ் விண்ட கடி கமலம் தவிசின்
சூலை உளைந்து ஒளிர் முத்து சொரிந்த வளை குலம் நின்று இரிய
மாலை உறைந்துளி பொன் சிறை வந்து அது தன் கரு என்று அடைகாத்து
ஆலை உளைந்து இழி இக்கு இடும் இன்பம் அவித்து இசை பாடினவே

#70
கா-இடை மா தவர் கந்தம் மலிந்தன கஞ்சம் மிடைந்த அனமே
பூ-இடை தேன் அளி கொம்பு மலிந்து புகன்ற மடம் கிளிகள்
நா-இடை பா இனம் நங்கையின் நன் கையில் நம்பும் நரம்பு உள யாழ்
யா-இடை ஆயினும் என்றும் அரும் தயை எந்தையை வாழ்த்தினவே

#71
அறத்தில் துறும் புகழ் ஒள் புகழ் என்றும் அடும் பகை நின்றனர்-கொல்
திறத்தில் துறும் புகழ் வஞ்சனை என்றும் தெளிந்த மனம் சிதைய
மறத்தில் துறும் களி துன்பு என வந்து மயங்கி வழங்கும் எலாம்
புறத்தில் துறும் களி பொன்று இல உண்டு அன பொன் பொழில் பொங்கினவே

#72
எல்லை நிகழ்த்திய எல் என எல்லை_இல் எந்தை நிகழ்த்திய நூல்
வில்லை நிகழ்த்திய மெய் மறையின் விதி உண்மை நிகழ்த்திய தூய்
ஒல்லை நிகழ்த்திய ஒள் அறம் ஒன்றிய உள்ளம் நிகழ்த்திய சீர்
சொல்லை நிகழ்த்திய நுண்மை அறிந்தவர் சொல்லி நிகழ்த்துவரோ

#73
ஆற்ற வருந்து இல நல் அறம் அல்லதும் அல்லவை இல்லை எனா
மாற்று_அரும் துயர் இல்லதும் உள் மயல் மல்கலும் இல்லை எனா
ஏற்று_அரும் துதி ஒல் ஒலி அல்லதும் எள் அதும் இல்லை எனா
சாற்ற வருந்தினும் ஒல்லும் அரும் தமிழும் சமம் அல்லதுவே

#74
பூமலிந்த பொருத்த அரும் பொற்பு எலாம்
பூமலிந்து பொருந்திய பொற்பினால்
நாம் மலிந்த நசைக்கு உயர் நாடினும்
நா மலிந்த இசைக்கு உயர் நாடு அதே

#75
வண்டு உரைத்து மலர்ந்த அலர் புண் அலால்
வண்டு உரைத்து மலர்ந்த அக புண் இலால்
வண்டு உரைத்து மயக்கு இல நாடு அலை
வண்டு உரைத்து மயக்கு உறும் நாடு அதே

#76
மாலை மாறி வயங்கிய மா மதி
மாலை மாறி வயங்கிய மாதர்கள்
மாலை மாறிய கற்பு உடை மார்பு உறை
மாலை மாறிய கற்பு உடை மாண்பர் அரோ

#77
மாசு இகற்கு வழங்கிய அம்பு இலார்
மாசு இகற்கு வழங்கிய அன்பினார்
தேசிகத்து இணை சீர் வரை தோளினார்
தேசிகத்து இணை சீர் வரைத்து ஓதும்-ஆர்

#78
அல்லது இல்லை அரும் தவம் ஆய் திரு
அல்லது இல்லை அருந்த அளித்தலால்
புல்லது இல்லை புனைந்த அற மாட்சியால்
புல்லது இல்லை புனைந்து அன வாழ்க்கையால்

#79
இருள் அகன்று அவிர் எல் வினை போல் எலா
இருள் அகன்று அவிர் இல் வினையோர் தமுள்
அருள் அகன்ற கைப்பு ஆரும் இலாமையால்
அருள் அகன்று அகைப்பார் அலது இல்லையே

#80
வேயும் முத்தம் மிடைந்தன வேலி வாய்
வேயும் முத்தம் மிடைந்தன வேலை வாய்
வாயும் முத்தம் மலிந்தன தீம் கழை
வாயும் முத்தம் மலிந்தன வாய் எலாம்

#81
செல்லின் மாரி திளைத்து என வள்ளியோர்
செல்லின் மாரி திளைத்தன வண்மையே
சொல்லின் மாரி சொரிந்து என ஏது இலா
சொல்லின் மாரி சொரிந்தனர் வேதியார்

#82
வாவு இபம் கயம் மல்கிய நாள் மலர்
வாவி பங்கயம் மல்கிய மாண்பு என
பாவி அங்கு இயலா பயன் ஆகையால்
பா இயங்கிய யா பயன் சால்பு அரோ

#83
பார் அணிந்த அணிக்கல பான்மைபோல்
சீர் அணிந்த செழும் தட நாட்டு-இடை
மார் அணிந்து அணி மா மணி மானிய
ஏர் அணிந்த நகர்க்கு இயல் ஏத்துவாம்
மேல்

@2 நகரப்படலம்


#1
மெய் வழி மறை நூல் நீங்கி வியன் உலகு இனிது என்று இன்னா
வவ்வு அழிவு உற்றது என்ன வதிந்து எமை அளித்து காக்க
செ வழி உளத்த தூயோன் தெரிந்த மா நகர் இது என்றால்
இ வழி பின்னர் உண்டோ எருசலேம் நகரை வாழ்த்த

#2
ஆள் எனை உடைய நாதன் அவனியுள் மனு ஆய் தூய் தன்
தாள் இணை தாங்கிற்று என்ன தாழ வானவரும் மாக்கள்
கோளினை உடை வான் வீட்டை குறுகவும் வழி ஈது என்றால்
மீள் இணை வருந்தி நாடி வியன் நகர் புகழ்வார் ஆரோ

#3
விண் புலன் அகன்று வாய்த்த வீட்டு-இடை வழங்கு மாட்சி
கண் புலன் அகன்றது என்ன கருதி ஓர் உவமை காட்ட
மண் புலன் இணங்கும் இன்ன மா நகர் இணை என்று ஓதி
உள் புலன் கடந்த நாதன் உயர் நகர் புகழும் ஆறே

#4
நவ்வியம் கதிர் கொள் சூட்சி நாயகன் முதல் வானோரும்
செவ்விய மதுர சொல்லால் சீரிய காட்சியோரும்
அவ்வியம் அகன்று தேறும் அரும் தவத்தோரும் செய்த
குவ்விய புகழ் பின் உண்டோ கூறவும் மூகை யானே

#5
தேன் அக இனிய அன்பு ஆர் திருவினோன் அருளின் சிந்தும்
மீன் நக இருளை சீக்கும் வெயில் குழாம் உயிர்த்த செந்நீர்
தான் நக முடியாய் சூடி இ தமனிய நகரம் பூண்ட
வானகம் நக ஒள் மாட்சி வகுத்து உரைப்பு அரிய ஆறே

#6
பயனினால் மறை_நூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும்
வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும்
முயலினால் அலையை ஒக்கும் முனி முனிவு ஒன்னார்க்கு ஒக்கும்
நயனினால் உயர் வீடு ஒக்கும் நகரினை ஒக்கும் வீடே

#7
பொன் தங்கும் உலகம் தன்னை பொங்கு இரும் கடல் சூழ்ந்து என்ன
வில் தங்கும் இரவி காலும் வெயில் பிழம்பு அனைய நாறி
செல் தங்கும் மலையின் ஓங்கி சேண் உறும் மதிலை சூழ்ந்த
எல் தங்கும் அலையை மாறி இகன்று அகல் அகழி தோற்றம்

#8
பூ_உலகு இயல்பு அன்று அம் பொன் பொலி மணி நகரம் பொன் ஆர்
தே உலகு உரித்து என்று அங்கண் தெளிந்து புக்கிடும் என்று ஆழி
தாவு உலகு இருத்த வெள்ளி தாள் தளை இட்டதே போல்
கோ உலவு இஞ்சி சூழ்ந்த குவளை நீள் அகழி தோற்றம்

#9
சீரியார் நட்பு வேர் கொள் சீர் என நிலத்தில் தாழ்ந்து
பூரியார் நட்பு போல புணர்ந்த சைவலம் மேல் ஆடி
நாரியார் அழகு காண நாணிய கமலம் இங்கண்
வேரி ஆர் இதழை பூத்து வெறி எறி அகழி தோற்றம்

#10
ஈரும் வாள் எயிற்றின் கூன் வெண் இளம் பிறை தோன்ற ஊனை
சோரும் வாய் விரித்து கண் தீ சொரிதர அகழி தாழ்ந்து
பேரும் வாய் உருக்கொண்டு அன்று பேய் குலம் வெரு உய்த்து எய்தி
ஊரும் வாய் என்ன அங்கண் உழக்கிய இடங்கர் ஈட்டம்

#11
ஓவல் இற்ற எழில் பூ_மாதே உவந்த நாள் செறிந்த கற்றை
தூவலின் பகல் செய் பைம்பொன் சுடர் முடி சூழ்ந்தது என்ன
ஆவலின் கிளர் நன்று உட்கொண்டு அடிகள்-தம் மனத்தை காக்கும்
காவலின் கது விடாத கனக மா மதிலின் தோற்றம்

#12
கார் அணி பசும்பொன் குன்றின் காட்சி போல் மதிலை சூழ்ந்து
சீர் அணி அனைத்தும் சேர்த்த செழு நகர் திறந்த வாயில்
பேர் அணி எவையும் ஈட்டி பின் அவை உவப்பின் காட்டி
பார் அணி பேழை யாரும் பயன்பட திறந்த போன்றே

#13
நீதி நல் முறைகள் ஓதி நீண்டு வீடு எய்தி வாழ
வீதி இது என்ன காட்டி விரித்த நுண் அரு நூல் வேதம்
ஆதி வந்து உரைப்ப வாய்ந்த அருத்தியோடு அலர்ந்த வாயே
சோதி பெய் அறத்தின் பண்பால் சுடர் நகர் திறந்த வாயில்

#14
மீன் நிகர் வயிர தூண்கள் விண் புக நிரைத்து வாய்ந்த
யா நிகர் அனைத்தும் நீக்கும் எரி மணி கோபுரத்தின்
வான் நிகர் நிறுவும் சென்னி வைத்த பொன் தசும்பின் தோற்றம்
கோன் நிகர் நகரம் சூடும் குளும் சுடர் மகுடம் போன்றே

#15
இட்ட நூல் வழாமை ஓடி எல்லை இல் ஓடும் வீதி
சுட்ட நூல் அறிஞர் கல்வி துணிவொடு வளர்த்த மாடம்
சட்ட நூல் வீரர் கற்பின் தகை நலார் முறையும் மற்ற
வட்ட நூல் வழாமையோடு மலி நலம் கிளக்கல் உற்றேன்

#16
மழை தலை விலகுப வளர்ந்த மாடங்கள்
இழை தலை அரிதினில் இழைத்த வெண் சுதை
பிழை தலை அறுத்து ஒளி பிளிர வெள்ளி அம்
தழை தலை மலை குழாம் தயங்கும் தன்மையே

#17
பயிற்றிய முகில்-இடை பரந்த பால் மதி
வெயில் தியங்கிய என வெந்த அகில் புகை
அயிற்றிய வெயில் உமிழ் அரிய மா மணி
குயிற்றிய மாடங்கள் குளிர நாறுமே

#18
புலையினார் மன இணை வளைவு இல் பொன் அம் கால்
தலையின் ஆர் மனவினை தரித்த பூம் கொடி
கலையினார் மன இணை வெளிறு கான்று உக
முலையினார் மன இணை முயன்று அங்கு ஆடும்-ஆல்

#19
கோது அகன்று அளிக்குவார் அருத்தி கொள்கை போல்
தீது அகன்ற அரும் திரு நுகர செல்-மின் என்று
ஏது அகன்று அணி குலத்து இலங்கு மாடங்கள்
மீது அகன்று அசை கொடி விளிப்ப மானுமே

#20
பேர்த்தன பருதி போய் பெருகும் மா இரா
போர்த்தன இருள் அற தயங்கும் பொன் மணி
கோர்த்தன தரளம் மேல் கொளுமும் தோரணம்
ஆர்த்தன முகில்-இடை அவிர் வில் மானுமே

#21
தேனொடும் ஞிமிறொடும் செறிந்த தும்பிகள்
வானொடு வழங்கிய மலர் செய் தோரணம்
கானொடு வழிந்த தேன் களித்து மேய்ந்த பின்
ஆனொடும் இசையொடும் ஊஞ்சல் ஆடும்-ஆல்

#22
கரி இனம் கரியொடும் கலினம் பூண்டு பாய்
பரி இனம் பரியோடும் பரியை பூட்டிய
எரி இன மணி செறி ஏம தேர்களும்
நெரியின நெருங்குப நெரிந்த வாய் எலாம்

#23
பேர் ஒலி முரசு ஒலி பிளிர்ந்த சங்கு ஒலி
தேர் ஒலி மத மழை சிதறி யானைகள்
ஊர் ஒலி இவுளிகள் ஒலி மயங்கி மேல்
கார் ஒலி கடல் ஒலி கலங்க விம்மும்-ஆல்

#24
பொதிர் படும் மணி ஒலி பொருநர் சாய்தலோடு
எதிர் படும் முடி ஒலி இரங்கு யாழ் ஒலி
கதிர் படும் சிலம்பு ஒலி கழல் குலாவு ஒலி
அதிர் படும் வெருவு அற இனிதில் ஆர்த்தன

#25
நெரிந்தன குடை கொடி நிசியை செய்ய ஆங்கு
எரிந்தன கலனொடும் இரும் பொன் மா முடி
திரிந்தன வயின்-தொறும் தெளிந்த நண்பகல்
புரிந்தன புரி எலாம் பொருவு_இல் வாழவே

#26
சங்கு இட்ட விம்மிய தரளமோடு இயை
கொங்கு இட்ட விம்மிய கோதை ஆர் மது
பொங்கிட விம்மிய அளி புசித்து இசை
அங்கு இட விம்மிய இன்பம் அ நகர்

#27
நாறிய நானமும் நறும் அகில் புகை
ஊறிய கானமும் உரைத்த சந்தமும்
வீறிய மது மலர் மிடைந்த வாசமும்
தேறிய வெறியொடு செறிந்த அ நகர்

#28
பூம் துறை தெரியல்கள் பொழிந்த தேறலும்
காந்து உறை தசும்பு-இடை கமழும் நீரமும்
தேம் துறை குங்கும தெளிந்த சுண்ணமும்
ஆம் துறை திரள் மணத்து ஆர்ந்த அ நகர்

#29
தேசு சூழ் செம் துகிர் திருந்தும் காலின் மேல்
காசு சூழ் தமனிய கம்பலம் திரை
தூசு சூழ் நித்திலம் துதைந்த குஞ்சுகள்
பாசு சூழ் மணி சுவர் படுக்கும் மாடமும்

#30
பொருந்தலர் உரத்து ஒளி புசித்த வாளொடும்
விருந்து அமர் புள் இனம் விழைந்த வேலொடும்
வருந்து அமர் கடந்த வில் மழுவினோடு மற்று
இருந்து அமர் படைக்கலம் இருக்கும் மாடமும்

#31
நீல் மணி மரகதம் நித்திலம் துகிர்
வேல் மணி வயிரம் கோமேதகம் மிளிர்
பால் மணி பரும் வயிடூரியம் படர்
வான் மணி மாணிக்கம் வைக்கும் மாடமும்

#32
ஒன்னலர் இறை கொணர்ந்து உற்ற அம் பொனும்
துன் அலர் மலை-வயின் துதைந்த பைம்பொனும்
மின் அலர் புனல் கொணர் மிடைந்த செம்பொனும்
இன் அலர் நிதி எலாம் இருக்கும் மாடமும்

#33
அவ்வியம் ஒழித்து அருள் அளிக்கும் மா மறை
திவ்விய மதுர நூல் செப்பும் சாலையும்
நவ்விய உணர்வு உறீஇ எவையும் நாடி உள்
வவ்விய பல கலை வகுக்கும் சாலையும்

#34
பெற்றி ஆர் குணில் கவண் பெரும் வில் நேமியோர்
குற்று இலா குறி பட குமுறும் சாலையும்
வெற்றி ஆர் அலங்கல் வாள் முதல் பல் வேல் படை
பற்று இலார் வெரு உற பழக்கும் சாலையும்

#35
கான் நல கனியினும் கனிந்த யாழொடு
தேன் நல பல்லியம் திளைக்கும் சாலையும்
பால் நலம் ஒழித்த பா பாடி ஆடி விண்
மேல் நலம் என ஒலி விம்மும் சாலையும்

#36
மாற்று அரசு இனம் இறை வணங்கும் சாலையும்
வேற்று அரசு இனம் திறை விசிக்கும் சாலையும்
ஏற்ற அரசு இனம் இனிது இருக்கும் சாலையும்
போற்று அரசு இனத்து மாண் பொருத்தும் சாலையும்

#37
ஆம் உறை முகில் என அளிக்கும் வான் பொருள்
மீ முறை திருந்திட விரும்பி யாவரும்
தாம் உறை இடம் எலாம் தரும_சாலை ஆய்
ஏம் முறை சிறந்தது ஓர் சாலை இல்லையே

#38
பணி சுவர் சாலையும் பவள பந்தி கால்
தணி சுவர் சாலையும் தரள கொத்து உடை
மணி சுவர் சாலையும் வளைத்த தேவ மா
அணி சுவர் கோவிலை அறையலாம் அரோ

#39
மண்ணிய முடியோ முடியின் மா மணியோ வான்-இடை வயங்கு செம்_சுடரோ
புண்ணிய உடலத்து உயிர்-கொலோ முகமோ பொலம் முக கண்-கொலோ யாதோ
கண்ணிய அளவு அற்று இடம் எலாம் நிறைந்த கடவுள் தான் உறைந்து அருள் காட்ட
பண்ணிய அம் மா நகர்-இடை பகலை பழித்து எரி பரந்த ஆலயமே

#40
பொன் பொதிர் வயிர கால் மிசை பவள போதிகை பொருத்தியது ஒரு-பால்
வில் பொதிர் துகிர் கால் மரகத மணியால் விளங்கிய போதிகை ஒரு-பால்
எல் பொதிர் நிதி கால் அமைந்த போதிகையாய் இன மணி கிடத்தியது ஒரு-பால்
செல் பொதிர் மின்னின் மின்னி முன் நிரையின் செறிந்த பல் மண்டப நிலையே

#41
செம்பொனால் அம் பொன் மேல் எழுத்து அரிதின் தீட்டிய அழகு என தெளிந்த
அம் பொனால் இசைத்த மணி சுவர் ஏற்றி அரும் தொழில் தச்சரும் நாண
பைம்பொனால் இழைத்த சிகரம் வான் ஒட்ட பட்டு என அ உலகத்தோர்
கம் பொனால் வனைந்த தொழிலை இ உலகில் கை விடா காட்டினர் போன்றே

#42
வையகத்து உள்ளோர் ஏறவும் விரும்பி வானவர் இழியவும் வழி என்று
ஐ அகத்து ஒளிர் வான் பாய்ந்த ஆலயமே அந்தரத்து உயர் தலை சாய்ந்து
கை அகத்து அதனை கடவுள் தான் தாங்க களித்து யாக்கோபு என்பாற்கு அங்கண்
துய் அகத்து எழிலோர் இழிந்து எழுந்து உலவ தோன்றிய ஏணியை போன்றே

#43
தூண் தொடர் பொலிந்த முகட்டு உயர் விளங்கும் தூய பொன் தகட்டு மேல் படர்ந்த
சேண் தொடர் பருதி தன் கதிர் படலின் செறிந்த பல் அணி அணி கிளர்ந்த
பூண் தொடர் அணி ஆர் தனது உரு கண்டு பொருவு_இல் தோற்று உட்கு என சாய
மாண் தொடர் இரவி ஆயிரம் என்ன வயங்கும் அ ஆலயம் மாதோ

#44
துன்_அரும் எழில் செய் இன்பு உணும் விழிக்கும் சுருதி நூல் இனிதினில் காட்ட
பொன் அரும் இழையான் நிரை நிரை சுவரில் புடைத்து எழ பல உரு கிளம்ப
உன்ன_அரும் வனப்பின் கிளர் ஒளி வாய்ந்த உயிர் பெற சித்திரம் தீட்டி
இன் அரும் கவின் கண்டு அயர்வு உறீஇ உரையும் இமைப்பும் இல் ஆயின மாதோ

#45
வான் மணி விளக்கு ஓர் ஆயிரம் இழைத்த மரகதத்து இருள் அற கற்றை
கால் மணி விளக்கு ஓர் ஆயிரம் பவளம் கலந்த முத்து அணி அணி தயங்க
நீல் மணி விளக்கு ஓர் ஆயிரம் பசும்பொன் நிலை விளக்கு ஆயிரம் வயிர
பால் மணி விளக்கு ஓர் ஆயிரம் எவணும் பகலவன் பட பகல் செயும்-ஆல்

#46
தீ எரி வாய்ந்த குரு மணி ஆதி செறிந்த பல் மணிகளும் அகன்ற
வாய் எரி விளக்கின் தொகுதியும் மல்கி வயின்வயின் எரிந்த பைம்பொன்னும்
ஆய் எரி திரண்டு விழித்த கண் கூச அகில் முதல் நறும் புகை நாளும்
மீ எரி சுடரை இள முகில் மூடி வேய்ந்து என குளிர வேய்ந்தனவே

#47
முருடு ஒடு பம்பை ஒலி வயிர் ஒலி வன் முரசொடு வளை ஒலி ஒலித்த
தெருள் தொடும் இனிய குழல் ஒலி வீணை செறி ஒலி கின்னரத்து ஒலி நல்
மருள் தொடும் மதுர பல்லியம் ஒலிப்ப மாகதர் பா ஒலி இசைந்து இ
அருள் தொடும் ஒலிகள் கடல் ஒலி ஒழிக்கும் அரிய இன்பு இரு செவி மாந்த

#48
பூ_மழை திரளும் நாறிய கலவை பொழிதர கமழும் நீர் துவலை
தேம் மழை திரளும் ஆங்கு தம் சிறுமை தீர்த்த நாதனை புகழ்பவர் வாய்
பா மழை திரளும் கன்னியர் இனிய பா மழை திரளும் எ ஞான்றும்
மீ மழை திரளும் மெலி தர விம்மி விண்ணும் மேல் குளிர நாறினவே

#49
மீ முறை ஒப்ப நாள்-தொறும் குறை இல வேதியர் அருச்சனை திருத்தும்
மா முறை நலமும் வானொடு வையம் மருள நல் அற நெறி வழங்கும்
யா முறை அனைத்தும் இன்புற கண்டார் இமைப்பு இலது அயர்வு உறும் அல்லால்
பா முறை நடத்தி தொடை சரம் தொடுத்து பகர்ந்து அவை புகழ்வது பாலோ

#50
உலகு எலாம் வணங்கும் பொது அற தனி கோல் ஓச்சிய இறைவனை வணங்க
அலகு எலாம் கடந்து பழுது அற பயத்த அற நெறி அருமையால் உவமை
விலகு எலா நயங்கள் தாங்கிய குடிகள் விழைவொடு வதிந்தன தன்மைத்து
இலகு எலா நகரை நிலத்து-இடை பழிக்கும் எருசலேம் என்னும் மா நகரம்

#51
இன்ன அரு நகர் அமை எரி மணி இழையின்
உன்ன_அரும் எழில் நலம் உடை பெரும் கவினார்
பன்ன_அரும் அற நெறி பழுது அற இனிதாய்
துன்ன_அரு நயனொடு தொலைவன பொழுதே

#52
ஆடுவர் அமுதினோடு அலர் மது இகல
பாடுவர் பொருள் நகு பயன் அமை கலை நூல்
நாடுவர் நளிர் உற நறவு உறு மலரை
சூடுவர் நயனொடு தொலைவன பொழுதே

#53
மரு கொடு மிளிர் அலர் மருவிய முடி சூழ்ந்து
உரு கொடு மிளிருவர் எரியொடு மண நீர்
திரு கொடு மிளிரின தெரு-இடை எறிய
பெரு கொடு மிளிர் நகர் பெயர்வன பொழுதே

#54
இந்து இணை இதழ் அவிழ் இள மது மலரால்
பந்தினை வனைகுவர் படிகுவர் எறிவார்
வந்து இணை எதிர்குவர் மறைகுவர் நகுவார்
சிந்தனை நயனொடு செலும் ஒரு பொழுதே

#55
மீன் மலை மெலிதர மிளிர் அற வினையோர்
பால் மலை மெலிதர இசையொடு பகல் போய்
நூல் மலை மெலிதர நுணி உணர்வு இரவு ஆய்
வான் மலை மெலிதர வரும் இரு பொழுதே

#56
எழுது இனிது உரு என எழில் நலர் இழிவு ஆர்
வழுது இனிது இனிது அல வழு இல இறையோன்
தொழுது இனிது அற நெறி துறுவன நயனால்
பொழுது இனிது இரிவன பொருவு இல நகரே

#57
பொறை இணை நகுவனர் புயம் மலி பொருநர்
உறை இணை நகுவனர் உதவிய கொடையோர்
துறை இணை நகுவனர் துறுவிய கலையோர்
தறை இணை நகுவனர் தடம் மலி நகரே

#58
அலையினோடு இகல்வன அரிது ஒலி நியமம்
விலையினோடு இகல்வன விரி அணி மணிகள்
கலையினோடு இகல்வன கடை இல நயம் ஓர்
வலையினோடு இகல்வன மலி திரு நகரம்

#59
வளை ஒலி வளைவு உடை வயிர் ஒலி வளர் பா
கிளை ஒலி இசை ஒலி குழல் ஒலி கிளர் பல்
துளை ஒலி நலம் ஒலி துறுவலொடு இனிதாய்
விளை ஒலி அலை ஒலி மெலிதர மிகும்-ஆல்

#60
கொடியொடு குடை உற இறையவர் குழுவின்
அடியொடு அடி உற விரிவன அனிகம்
பொடியொடும் இருள் உற நெரிவன பொருள் தேர்
முடியொடு முகில் உற முயல்வன நகரம்

#61
கோடாதன உயர் கோலொடு குளிர் மாறு இல குடையும்
வாடாதன தனி வாகையும் மதம் மாறு இல களிறும்
ஓடாதன அடல் தானையும் உள கோனொடு நகரம்
வீடாதன நெறி மாண் உறீஇ மெலியா நலம் உளது-ஆல்

#62
சால் அன்பொடு நிறை தாய் முலை தழுவும் சிறு குழவி
போல் அன்பொடு நகர் ஆள்பவன் அருளின் தயை புரி செம்
கோல் அன்பொடு தழுவும் குடி குறை ஒன்று இல நகரின்
பால் அன்பொடு தனி வாழ்வொடு படு நன்றியது அளவோ

#63
இருந்து ஓடிய திரு இங்கணில் இனிது அன்புற இடலால்
பருந்தோடு உறும் நிழல் என்று உயர் பயன் ஈன்றிடும் எனவே
மருந்தோடு இகல் அரிது அன்பு உளம் மலிகின்றன மரபோர்
விருந்தோடு உண வருகின்றனர் இலை என்று உளம் மெலிவார்

#64
தெள் வார் உரை முகிலும் கடல் திரையும் கெட முகியா
வள் வார் முரசு அதிர் மா நகர்-வயின் வாழ்பவர் கொடையை
கொள்வார் இல குறை அல்லது குறை இல்லதும் எனவே
கள்வார் இல கடையார் இல கழிவார் இல நயவார்

#65
கோ வீற்று உறை தனி நாதனை குறையா புகழ் இடவும்
நா வீற்று உறை கலை ஆயவும் நறு மாண் அறம் செயவும்
பா வீற்று உறை இசை பாடவும் பதம் ஆடவும் படரும்
பூ வீற்று உறை நகர் ஆங்கு இரு பொழுது ஆயின இனிதால்

#66
நீர் அல்லதும் அலை இல்லது நிறை வான் பொருள் இடுவார்
போர் அல்லது பகை இல்லது புரி வான் மழை பொழியும்
கார் அல்லது கறை இல்லது கடி காவலும் அறனால்
சீர் அல்லது சிறை இல்லது திரு மா நகர்-இடையே

#67
மின்னார் இனிது இசை பாடலில் விளை இன்பு அது பெரிதோ
பொன் ஆர் குழல் புகல் இன்பு அது பெரிதோ கலை புரி நூல்
சொன்னார் அவர் உரை இன்பு அது பெரிதோ பொழி துளிகள்
அன்னார் நிறை கொடையால் பொருள் அருள் இன்பு அது பெரிதோ

#68
சிலை ஒத்தன நுதலார் மன சிறை ஒத்தன மதில்கள்
கலை ஒத்தன உயர் மாலைகள் கனம் ஒத்தன கரிகள்
மலை ஒத்தன இரதம் திரள் வளி ஒத்தன பரிகள்
அலை ஒத்தன கடை வீதிகள் அலை ஒத்தனர் அபயர்

#69
பா நாணுப இசை ஓதைகள் பகல் நாணுப மணிகள்
பூ நாணுப மது ஆர் அருள் புயல் நாணுப கொடைகள்
நா நாணுப கலை மாட்சிமை நசை நாணுப நிறை சீர்
கோ நாணுப நலம் யாவிலும் குறையா வளர் நகரம்

#70
நளிர் பூ-இடை மது நேர் முக நவியே இடை விழி நேர்
ஒளிர் பூண்-இடை மணி நேர் உடல் உருவே கிடை உயிர் நேர்
குளிர் நாடு-இடை புனல் நேர் அற வழியே-இடை குரு நேர்
மிளிர் ஊர்-இடை அரசு ஆகையில் மிடை கோ இயல் பகர்வாம்
மேல்

@3 வளன் சனித்த படலம்


#1
அன்ன மா திரு நகர் அகத்து உடற்கு உயிர்
என்ன மா தாவிதன் இனிதில் வீற்றிருந்து
ஒன்னலார் வெரு உற உவந்து பாவலர்
சொன்ன பா நிகரும் மேல் துளங்கினான் அரோ

#2
அருளொடு வீங்கிய அகத்தினான் துளி
மருளொடு வீங்கிய மழை கையான் மலர்
சுருளொடு வீங்கிய தொடையல் மார்பினான்
பொருளொடு வீங்கிய பொறை புயத்தினான்

#3
ஒளி தவழ் அசனியை உமிழ்ந்த வில்லினான்
அளி தவழ் நிழல் செயும் அருள் குடையினான்
வெளி தவழ் நவ மணி விழுங்கும் தேரினான்
களி தவழ் மதம் பொழி களிற்றின் ஆண்மையான்

#4
மொய் முனர் பின்று இலா முரண் கொடு ஏறு எனா
மெய் முனர் பொய் என வெருவு ஒன்னார் இவன்
கை முனர் நிற்கு இலா கலங்கி போற்றும் போர்
செய் முனர் செயம் செயும் சிங்க வாகையான்

#5
வேல் செயும் போரினால் வெலப்படான்-தனை
சால் செயும் தவத்தினால் வென்ற தன்மையான்
சேல் செயும் புணரி சூழ் செகத்தில் நின்று ஒளி
மேல் செயும் வானவர் விழைந்த பான்மையான்

#6
நீதி நல் முறை எலாம் நிறைந்த நீள் தவம்
ஆதி தன் மறை இவை அனைத்தும் மேல் படர்
கோது இல் நன் உதவி செய் கொழுகொம்பு ஆகி வான்
ஏது இல் நல் முறை இவண் இசைந்த மாட்சியான்

#7
கோல் நலம் கோடு இலா நிறுவி கூர்த்தலால்
நூல் நலம் பொருள் நலம் அறத்தின் நுண் நலம்
தேன் நலம் இனிதினில் திளைந்து நாடு எலாம்
மீன் நலம் பயின்ற வான் வியப்ப வாழ்ந்ததே

#8
பகை செய்வார்க்கு இடி என படிந்து போற்றிய
தகை செய்வார்க்கு அமுது என நாம தன்மையான்
நகை செய்வார்க்கு இளவலாய் நடத்தும் வேல் இலான்
மிகை செய்வான் ஆண்மையை விளம்பல் நன்று அரோ

#9
மறை வழங்கிய வளம் கொள் நாட்டு-இடை சவூல் ஆண்ட
முறை வழங்கிய கால் மறை பகைத்தனர் முகில் நின்று
உறை வழங்கிய ஒப்பு என சர மழை வழங்கி
பொறை வழங்கிய பிலித்தையர் போர் செய எதிர்த்தார்

#10
வேலியால் கது விடா திரு நகர் எலாம் நடுங்க
மாலியால் கதிர் வகுத்த வாள் ஏந்தினர் நாப்பண்
ஆலியால் கரிந்து அகல் முகில் உருக்கொடு வேய்ந்த
கோலியாற்று எனும் கொடியது ஓர் இராக்கதன் எதிர்த்தான்

#11
துளி சிறை செயும் முகில் புகும் இரு மலை சுமந்த
ஒளி சிறை செயும் ஒரு கரும் பருவதம் என்னா
வெளி சிறை செயும் வியன் இரு புயத்து மேல் சிரமே
களி சிறை செயும் கதம் கொடு வெரு உற தோன்றும்

#12
நீண்ட வாள் புடை நெருங்கியே படர் கரு முகில் போல்
மாண்ட தோள் வியன் வட்டமே பொறுத்து வெம் சுடரை
தூண்டல் ஆம் என சுளித்த நீள் ஈட்டி கை தாங்கி
கீண்டு அளாவு அழல் விழிவழி கிளர்ப்ப விட்டு எதிர்ந்தான்

#13
பெருக்கு வீங்கிய பெரும் புனல் அலை சுருட்டு அன்ன
எருக்கு வீங்கிய இழிவு உகு நெஞ்சு-இடை அடங்கா
செருக்கு வீங்கிய இராக்கதன் எரி எழ சினந்து
தருக்கு வீங்கிய சல உரை இடி என இடிப்பான்

#14
கூர்த்த போர் செய கூடினர்க்கு ஒருவன் வந்து எய்தி
சீர்த்த நான் அவன் சிறந்த போர் தனித்தனி தாக்க
தோர்த்த பாங்கினர் தொழும்பர் என்று ஆகுவர் என்னா
ஆர்த்த ஓகையான் நகைத்து இகழ்வு அறைந்து அறைந்து அழைப்பான்

#15
பெரிய குன்றமோ பேய் அதோ பூதமோ யாதோ
உரியது ஒன்று இலா உருவினை கண்டுளி வெருவி
கரிய விண் இடி கதத்த மின் கொடு விடுத்து அன்ன
அரிய கோலியாற்று அறைந்த சொல் கேட்டனர் மருண்டார்

#16
நல் நெடும் படை நடுக்கு உறீஇ வெருவிய தன்மை
கல் நெடும் குவடு ஒத்தனன் செருக்கு எழ கடுத்து
பல் நெடும் பகல் பரமனை பகைப்பவும் இகழ்ந்த
சொல் நெடும் பகை தொடர்ந்தனன் எவரையும் நகைப்பான்

#17
தாங்குவார் இலா சாற்றிய உரைகள் கேட்டு எவரும்
நீங்குவார் என நிருபனும் அயரு தன் நெஞ்சிற்கு
ஏங்குவான் எவன் எதிர்ந்த அ அரக்கனை வென்றால்
ஆங்கு நான் அவற்கு என் மகள் அளிக்குவேன் என்பான்

#18
இன்னவாய் பகல் நாற்பதும் இரிந்த பின் அண்ணர்
முன்னர் மூவரே முரண்செய போயினர் அவரை
துன்ன ஆசையால் தொடர்ந்து இள தாவிதன் எய்தி
அன்ன யாவையும் அஞ்சினர் அறைதலும் கேட்டான்

#19
கேட்ட வாசகம் கிளர் திற நெஞ்சு இடத்து எரியை
ஈட்டல் ஆம் என எழுந்து உளம் நினைந்தவை ஆக்கி
காட்ட வாய்மையின் கடந்த வல் கடவுளை நகைப்ப
வேட்டலால் விளி விழுங்கிய கயவன் ஆர் என்றான்

#20
கை வயத்தினால் கருத்து இடத்து உடலின் ஊங்கு ஓங்கும்
பொய் வயத்தினான் புகைந்த சொற்கு அஞ்சுவது என்னோ
மெய் வயத்தினால் விழை செயம் ஆவதோ கடவுள்
செய் வயத்தினால் சிறுவன் நான் வெல்லுவேன் என்றான்

#21
என்றது அண்ணல் கேட்டு இவன்-தனை கொணர்-மின் என்று இசைப்ப
சென்ற அன்ன நல் சேடனை நோக்கலும் நீயோ
பொன்ற உன்னினாய் பொருப்பினை பெயர்த்து எறிந்து உவமை
வென்ற திண்மையான் வெகுளி முன் நீய் எவன் என்றான்

#22
ஏந்தல் ஈர் அடி இறைஞ்சிய இளவலும் அறைவான்
காய்ந்தது ஓர் பகை கடுத்த தன் பவம் செயின் மீட்டு
வேய்ந்தது ஓர் படை வேண்டுமோ கடவுளை பகைத்து
வாய்ந்த ஆண்மையை மறுத்தனை எவன் வெலான் அய்யா

#23
திறம் கடுத்த கொல் சிங்கமும் உளியமும் பாய்ந்து
மறம் கடுத்து அதிர் வல்லியத்து இனங்களும் எதிர்ந்து
கறங்கு அடுத்த கால் கழுத்தினை முருக்கி நான் கொன்றேன்
அறம் கெடுத்தவன் அவற்றினும் வலியனோ என்றான்

#24
அரிய ஆண்மையை அதிசயித்து அரசன் நன்று என்னா
விரி அளாவு ஒளி வேலொடு தனது பல் கருவி
உரிய போர் செய ஒருங்கு தந்தனன் அவற்றொடுதான்
திரிய வாய் முறை தெரிகிலேன் என மறுத்து அகன்றான்

#25
தெரிந்த வாய்ந்த ஐம் சிலையொடு கவண் எடுத்து எவரும்
இரிந்த பாலனை நோக்கி உள் அதிசயித்து இரங்க
விரிந்த ஆசையால் வேதியர் ஆசியை கூற
பிரிந்த கால் ஒலி பெருக ஆங்கு அனைவரும் ஆர்த்தார்

#26
ஆர்த்த ஓதை கேட்டு அரக்கன் நின்று அமர்க்கு எதிர் வருக
பார்த்த பாலனை பழித்து எழுந்து யாவரும் அஞ்ச
கூர்த்த வேலொடு குறுக வந்து அகல் கரு முகிலின்
பேர்த்த கோடை நாள் பேர் இடி என உரை செய்தான்

#27
நீ அடா எதிர் நிற்பதோ மதம் பொழி கரி மேல்
நாய் அடா வினை நடத்துமோ கதம் கொடு நானே
வாய் அடா பிளந்து உயிர்ப்பு இட மறுகி நீ நுண் தூள்
ஆய் அடா உலகு அப்புறத்து ஏகுவாய் என்றான்

#28
வெல் வை வேல் செயும் மிடல் அது உன் மிடல் அடா நானோ
எல்வை ஆதரவு இயற்று எதிர் இலா திற கடவுள்
வல் கையோடு உனை மாய்த்து உடல் புட்கு இரை ஆக
ஒல் செய்வேன் எனா உடை கவண் சுழற்றினன் இளையோன்

#29
கல்லை ஏற்றலும் கவணினை சுழற்றலும் அ கல்
ஒல்லை ஓட்டலும் ஒருவரும் காண்கிலர் இடிக்கும்
செல்லை ஒத்து அன்ன சிலை நுதல் பாய்தலும் அன்னான்
எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும் கண்டார்

#30
கடை யுகத்தினில் கரு முகில் உருமொடு விழும் போல்
படை முகத்தினில் பார் பதைத்து அஞ்ச வீழ்ந்தனன் தன்
புடை அகத்தினில் புணர்ந்த வாள் உருவி என் தெய்வம்
உடை உரத்தினை உணர்-மின் என்று இரும் சிரம் கொய்தான்

#31
கூன் நெடும் பிறை குழைந்த வாய் நிரைநிரை தோன்ற
ஊன் நெடும் திரை ஒழுக ஆங்கு அனைவரும் கூச
நீல் நெடும் பொறை நிகர் தலை தூக்கினான் ஒன்னார்
மால் நெடும் படை மருண்டு உளைந்து உளம் முறிந்து ஓட

#32
கார் முகத்து அசனி கூச கடுத்த அ அரக்கன் வென்ற
சீர் முகத்து இளவல் பின்னர் திறத்த தன் நாம வேலால்
போர் முகத்து எதிர் ஒன்று இல்லான் பொழி மறை பழித்த யாரும்
பார் முகத்து அதற்கு எஞ்ஞான்றும் பரிந்திட வகை செய்தானே

#33
கொய்த வாள் முடி திரண்ட குப்பைகள் ஏறி வெய்யில்
செய்த வாள் முடியை சூடி சிறந்த ஆசனத்தில் ஓங்கி
பெய்த வான் ஒளியோடு ஆய்ந்த பெரும் தயை பிலிற்றும் செங்கோல்
எய்த வான் இறையோன் ஆண்மை எய்தியே அரசன் ஆனான்

#34
நூல் நக துளங்கு கேள்வி நுண் அறிவாளர்க்கு ஒவ்வா
வான் அகத்து ஒதுங்கி வாழும் வரும் பொருள் காட்டும் காட்சி
கான் அகத்து ஒதுங்கி வைகும் கடி தவத்தோடும் இன்ன
கோன் அகத்து இலங்கி அங்கண் குடி என வதிந்ததாம்-ஆல்

#35
சூழ்ந்த பொன் முடியும் கோலும் துறந்து போய் அரிய கானில்
வாழ்ந்த ஒண் தவம் செய் மன்னர் வழங்கினும் அதனை கூட்டி
ஆழ்ந்த பல் மணியின் வீங்கும் ஆசனத்து இருக்க சேர்த்தல்
தாழ்ந்த பண்பு ஒழித்த இன்ன தரும கோன் அரிதின் செய்தான்

#36
வேலொடு மாற்றார் வெள்ளம் வென்று வென்று அடக்கி தன்னை
நூலொடு வெல்ல ஐந்து நுண் புலன் அடக்கி காத்து
கோலொடு வழாமை நீதி கொழுந்து சேர் கொழுகொம்பு ஆனான்
சூலொடு வழங்கும் மாரி துளி பழித்து அருளும் கையான்

#37
மன் அரும் தயையால் பாரில் வழங்கிய கீர்த்தி அல்லால்
இன் அரும் குணங்கள் தம்மால் இறையவற்கு உகந்த கோமான்
முன் அரும் தவத்தோர் கொண்ட முறை தவிர் வரங்கள் எய்தி
துன் அரும் உயர் வீடு உள்ளோர் துணை என புவியில் வாழ்ந்தான்

#38
ஆயினான் நடந்த தன்மை ஆண்டகை உவப்பில் ஓர் நாள்
வீயினால் நிகர்ந்த எச்சம் இடை முறை பலவும் போய் ஓர்
சேயினால் நயப்ப செய்வேன் சிறந்த மூ_உலகில் அன்னான்
வாயினால் நவிலா கோன்மை வரம் பெற அளிப்பேன் என்றான்

#39
தந்த இ வரம் இன்னான் தன் சந்ததி முறையில் சேய் ஆய்
வந்த தற்பரனால் ஆய வளப்பம் என்றாலும் என்ற
இந்த நல் முறையால் மைந்தன் இயல்பொடு தேவன் என்பான்
அந்தரம் முதலாய் யாண்டும் ஆள்வதும் அரிய பாலோ

#40
கோன்மையால் உயர்ந்த தாவின் கோத்திரத்து உதிக்கும் தெய்வ
மேன்மையால் ஒருவன் அன்றி விபுலையில் பிறக்கும் மாக்கள்
பான்மையால் உயிர்த்த மைந்தன் பாரொடு வானும் ஆள
நான்மையால் வழுவா செங்கோல் நல்க உள்ளினன்-ஆல் நாதன்

#41
உள்ளினது எல்லாம் உள்ளும் உறுதியால் ஆக்க வல்லோன்
எள்ளினது எல்லாம் நீக்கும் இயல்பொடு தாவிதன் தன்
வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ_உலகம் ஆள
நள்ளின வளம் கொள் சூசை நயத்தொடு தெரிந்திட்டானே

#42
ஏற்றிய முறையோடு எந்தை இயன்ற தன் வலிமை காட்ட
போற்றிய வரம் கொடு எங்கும் பொருநனாய் தெரிந்த சூசை
சாற்றிய கோத்திரத்தின் தலைமுறை வழுவாது ஏனும்
மாற்றிய திரு ஒன்று இன்றி வறுமையான் பிறக்க செய்தான்

#43
பொய் படும் உலக வாழ்வின் பொருட்டு இலா மிடிமையோடு
கைப்படும் உழைப்பில் உண்டி காண வந்து உதித்த இல்லான்
மெய்ப்படும் மறத்தின் ஆண்மை விளங்கிய முறையின் பின்னர்
ஐ படும் விசும்பொடு எங்கும் அரசனாய் வணங்க செய்தான்

#44
நூல் நிலம் காட்சியால் நுனித்த கால் உணர்
மீன் நிலம் கடந்து எலாம் ஆளும் வேந்து தான்
தேனில் அம் கருணையால் தெளிந்த எல்வையில்
கான் நிலம் தவத்தினால் கருப்பம் ஆயதே

#45
கொலை முகந்து அழன்ற வேல் கொற்ற தாவிதன்
தலை முகந்து ஒழுகிய குலம் சகோபு அவன்
சிலை முகந்து அவிர் நுதல் தேவி நீப்பி இன்பு
அலை முகந்து உவந்து சூல் அணிந்து உள் ஓங்கினாள்

#46
மணி பழித்த அரும் கவின் மங்கை உள் உவந்து
அணி பழித்து அணிந்த நல் கருப்பம் ஆய கால்
பிணி பழித்து உறு நயம் பெருகி மேல் எழீஇ
பணி பழித்து ஒளி முகம் பொறித்த பான்மையே

#47
தாரொடு சனித்த தேன் தன்மையோ வளை
ஏரொடு கொண்ட முத்து இலங்கும் தன்மையோ
நீரொடும் ஐந்து தம் பகையை நீத்து ஒரு
சீரொடு வேற்று இல சிறந்த சூல் அதே

#48
அறை வளர் மனையினுள் அரசன் புக்கு என
இறை வளர் அன்பின் ஓர் உயிர் இயற்றி வெண்
பிறை வளர் நலம் என வளர்ந்த பீள் உள
சிறை வளர் உடலினுள் செலுத்தினான் அரோ

#49
வாய் வழி பரவிய நஞ்சின் வண்ணமே
காய் வழி ஆதன் முன் கனிந்து அருந்திய
தீய் வழி கரு வழி சேரும் தொல் செயிர்
ஓய் வழி பொறாது இறை ஒழிய முன்னினான்

#50
புரப்ப ஓர் பொது முறை பொறாத தன்மையால்
கருப்பம் ஓர் எழு மதி கடக்கும் முன் வினை
பரிப்ப ஓர் சிறப்பு அருள் பயத்தின் சூல் செயிர்
விருப்பமோடு இறையவன் விலக்கினான் அரோ

#51
தீயவை விலக்கிய சிறப்பின் தேவு அருள்
தூயவை பதி வர தொகையின் சூல் இடத்து
ஆயவை அறிந்திலள் அளவு_இல் உள் மகிழ்
தாய் அவள் வியப்பு உறீஇ தளர்வு அற்று ஓங்கினாள்

#52
தேன் முகம் புதைத்த சூல் செறித்த சீர் கொடு
கான் முகம் புதைத்து அவிழ் கமல பூ என
சூல் முகம் புதைத்த சீர் தொகை புறப்பட
தான் முகம் புதைத்து ஒளி தயங்கும் தாய் அரோ

#53
சொல் ஆர் நிகர் கெட ஓர் வனப்பின் பைம்பொன் சூல் முற்றி
அல் ஆர் இருள் கெட மீ முளைத்த திங்கள் அணி மணி போல்
எல் ஆர் முகத்து இலங்கி பிறந்த தோன்றல் எழில் கண்டு
பல்லார் உடை மம்மர் கெட தாய் இன்ப பயன் கொண்டாள்

#54
கண்டார் எவரும் உளத்து உவப்ப மேல் ஓர் கனி இன்பம்
கொண்டார் அருள் பொறித்த முகத்தின் மாமை கொழித்த கதிர்
உண்டார் தெளிவு உண்டார் கடவுள்-தன் தாட்கு உவகை செயும்
தண் தார் இவன் ஆவான் என்ன வாழ்த்தி சயம் சொன்னார்

#55
மாசை மிக்க நிற மணியின் சாயல் மகன் நோக்கி
ஆசை மிக்க கனி ஈன்றாள் கற்றோர் அரும் தொடைப்பா
ஓசை மிக்க அற தொகையின் பீடத்து உயர் வளர்க
சூசை என்று அவனை ஏற்றி எந்தை தொழுகின்றாள்

#56
எல்லின் கதிர் திரட்டி திலகம் திங்கட்கு இட்டது போல்
வில்லின் முகத்து இன் தாய் மகனை ஏந்தி விழைவு உற்ற
சொல்லின் முகத்து இறையோன் தாளை தாழ்ந்து இ தோன்றல் அறத்து
அல்லின் வேந்தன் என வளர்தற்கு ஆசி அருள்க என்றாள்

#57
வீடா வான் நலம் செய் நோக்கு நோக்கி விண் இறையோன்
கோடா வரத்து ஆசி செய் வான் மேல் ஓர் குரல் தோன்றி
ஆடா நிலை அறத்து என் மார்பில் தேம்பா அணி ஆவான்
வாடா அருள் மகன் என்று அம் பூ_மாரி வழங்கிற்றே

#58
மை நூற்று என கரும் பூம் குழலாள் வாய்ந்த மகன் நலம் கேட்டு
எ நூல் திறத்தினும் மேல் அடியின் வீழ்ச்சி இனிது இயற்றி
மெய்ந்நூல் திறத்த மறை முறையின் விள்ளா வினை எல்லாம்
கைந்நூல் திறத்து அறவோர் இயற்றி ஆசி கனிந்து உரைத்தார்

#59
கூம்பா அணி மகற்கு கணிதம் மிக்கோர் கூறு புகழ்
ஓம்பா அணி ஆக அனைத்தும் நீக்கி ஒருங்கு உடன் ஓர்
சாம்பா அணி ஆக இரங்கி எந்தை தான் புகழ்ந்த
தேம்பாவணியே என்று அணி மிக்கு அம் பூண் சேர்த்தினரே

#60
செய் வாய் வான் உடு சூழ் குழவி திங்கள் சீர் பொருவ
பெய் வாய் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப பெய்து சுடர்
வை வாய் மணி ஆழி இட்டு பைம் பூ மலர் கிடத்தி
மொய் வாய் கடல் உலகின் திலதம் என்பார் முகம் கண்டார்

#61
வான் மேல் வைத்த சுடர் கிடக்கும் வண்ண வடிவு என்பார்
கான் மேல் வைத்த தவம் இனி நன்று இங்கண் காட்டும் என்பார்
நூல் மேல் வைத்த மறை விளக்கும் நுண் மாண் சுடர் என்பார்
நால் மேல் வைத்த புகழ் விள்ளார் கொண்ட நயம் விள்ளார்
மேல்

@4 பால மாட்சிப் படலம்


#1
வான் அடுத்த அரசு அடைந்து வாழ அ
கோன் அடுத்த நல் குணத்த சீர் எலாம்
மீன் அடுத்த வீடு உடைய விண்ணவர்
தேன் அடுத்த அலர் சிறுவற்கு ஊட்டினார்

#2
ஊட்டினார் அருள் முடியின் ஒப்பு என
சூட்டினார் அறம் சுடரும் பூண் என
பூட்டினார் தவம் பொன் செங்கோல் என
காட்டினார் அறிவு அமைந்த காட்சியே

#3
இளைய வான் பிறை என வளர்ந்து உளம்
வளைய மாசு உறா வயது மூன்று உளான்
உளைய நூலவர் உற்ற காட்சியின்
திளைய வான் அறிவு எய்தி சீர்த்தனன்

#4
அறிவுற்று ஆகையின் அலர் செங்கை எழீஇ
செறிவுற்று ஆசையின் தெய்வம் ஏற்றி வில்
நெறிவுற்று ஆர் நுதல் நிலத்தில் தாழ்ந்தனன்
வறிதுற்று ஆம் உடற்கு உயர்ந்த மாட்சியோன்

#5
இரவி காண் மரை இகல வாய் மலர்ந்து
அருவி மான் துதி அறைந்து கும்பிட
மருவி ஓங்கு செம் கரங்கள் மாலையில்
பருதி போய் குவி பதுமம் மானுமே

#6
தூ நிலாவு செம்_சுடரும் மீன்களும்
வான் உலாவு உடு நடு வழங்கிய
பால் நிலாவையும் பார்த்து நாதனை
தேன் உலாவு உரை செப்பி வாழ்த்துவான்

#7
முலைகள் ஆம் என மலை முடிக்கு மேல்
அலை கொள் பால் என அருவி விஞ்சி வெண்
கலைகள் ஆம் என கடலில் சிந்திய
நிலை கொள் மாது என நிலம் கண்டு ஓங்குவான்

#8
சோலை வாய் இறால் துளித்த தேறலும்
மாலை வாய் மலர் வழிந்த தேறலும்
ஆலை வாய் கழை அளித்த தேறலும்
நூலை ஆய்ந்து என நுதலி மூழ்குவான்

#9
நிழலில் மேதிகள் நீரில் சங்குகள்
பொழிலில் தோகைகள் பூவில் வண்டுகள்
கழனி ஓதிமம் துயில கண்டு வாழ்
குழவி வாய் நலம் துயில் கொள்வு ஆம் அரோ

#10
குயில்கள் பாடலும் குழல் ஒப்பு ஓதிமம்
வயல்-கண் பாடலும் மது உண் கிள்ளைகள்
பயில்கள் பாடலும் பாலன் கேட்டு இயைந்து
இயல்கள் பாடலும் இனிது இயங்கும்-ஆல்

#11
மலை மலைக்கு உரி வனப்பும் வாங்க_அரும்
அலை அலைக்கு உரி மணியும் ஆர்ந்த சீர்
நிலை நிலைக்கு உரி மருத நீர்மையும்
கலை கலைக்கு உரி கருத்தும் எய்தினான்

#12
மூக்கில் தாக்கிய முயல் மெய் தாக்கிய
நாக்கில் தாக்கிய செவி நள் தாக்கிய
நோக்கில் தாக்கிய நுனை இன்பு இன்ன ஆய்
தூக்கில் தாக்கிய நயன் சொல்வு ஆகுமோ

#13
மீது உலாவிய மீன்கள் தீபமாய்
போது உலாவிய புவியும் வீதியாய்
கோது உலாவிய குறை கொய் காட்சியான்
மூது உலாவு இறை அடைய முன்னினான்

#14
ஆறும் ஆறும் ஒன்று ஓடலாய் தம் உள்
மாறும் ஆறு கொண்டு அலை மயங்கு என
சாறு தாறும் ஒன்று இன்றி தான் வளத்து
ஏறு பேறு கொண்டு இளவல் ஓங்கினான்

#15
மாக்கள் தாக்கிய மறம் கொள் கூளிகள்
நோக்கத்து ஆக்கிய நுண் சடத்து இவன்
ஆக்கத்து ஆக்கிய அருளை தாக்கு உற
ஊக்கத்து ஆக்கிய இகல் உடைத்து உளான்

#16
கள்ளம் காட்டு களங்கம் கடிந்து ஒளிர்
உள்ளம் காட்டு ஒளி காட்டிய ஒள் முகம்
தெள்ளம் காட்டு எழில் தீட்டி வரங்கள் தம்
வெள்ளம் காட்டி வளர்ந்து விளங்கினான்

#17
இன் தெளித்து எவரும் நசை எய்துவ
பொன் தெளித்து எழுதும் பட பொற்பினான்
மின் தெளித்து எழுதி கதிர் வீசு எழில்
கொன் தெளித்து என ஆசையின் கோடு இலான்

#18
கதிர் முகத்து அலர் கஞ்சம்-கொல் கஞ்சம் மேல்
பொதிர் முகத்து எழும் பொற்பு அளி-கொல் நசை
பிதிர் முகத்து இழையார் இவன் பேர் எழில்
முதிர் முகத்து-இடை மொய்த்தன நோக்கமே

#19
விதி முகத்து அலர் மேதையின் மேன்மையான்
புதி முகத்து அலர் பூ அணி சாயலார்
நிதி முகத்து எதிர் மூடிய நீண்ட கண்
மதி முகத்து எதிர் தாமரை மானுமே

#20
கான் இறைஞ்சிய நல் தவ காவலன்
மீன் இறைஞ்சிய மின் விழியார் உரை
ஊன் இறைஞ்சிய வேல் என ஓர்ந்து தான்
தேன் இறைஞ்சிய தீம் சொலை கேட்கிலான்

#21
கார் முகத்து வளைத்தன கார் முகம்
சீர் முகத்து செயம் தரும் காம வெம்
போர் முகத்து வெல்வான் புரை ஆசை அற்று
ஏர் முகத்து எதிராது ஒளித்தான் என்றான்

#22
என்று ஒளித்து என கான் உற ஏகினான்
குன்று ஒளித்த குரு மணி சாயலான்
கன்று ஒளித்த கறவை கனைத்து என
அன்று ஒளித்தவற்கு ஆர்த்து அழ யாருமே

#23
தேம் முயங்கிய தேன் தரு நீடிய
கா முயங்கிய கார் வரை கண்ட கால்
பூ முயங்கு புலம் தரு நீழல் கீழ்
பா முயங்க வதிந்தனன் பாடுவான்

#24
வளைத்தன தனு கொடு எழுவும் ஈர்க்கு அடைவடி கணை வினைப்பட வினையை ஆக்கிய
விளைத்தன நசை கொடு விளையும் நோய் திரள் விட பகை பகைத்தன பொறிகள் ஈர்த்துபு
திளைத்தன மிறை கொடு நசையும் நீத்து அவை செகுத்து ஒடு புதைத்திட உரியது ஆய் பொருவு
இளைத்தன திரு கொடு வளரும் மாட்சியை இயற்றிய முகில் படர் மலையின் ஊக்கமே

#25
சினை கரு முகில் தலை விலக ஊக்குபு திரள் கனி திளைத்தன பொழில்கள் சூட்டிய
நனை கரு விளைத்து உயர் இடம் இது ஆய் கதிர் நடத்திய திரு கிளர் உலகின் மேல் செல
நினைக்கு_அரும் உரி தடம் என இரா பகல் நிறுத்திய தவ துணை உதவியால் பல
வினை கரு மறுத்து இறையவனை வாழ்த்தலின் விருப்பினும் நனி தகும் மலையின் ஊக்கமே

#26
உடித்தன முதல் கதிர் எழுது கோட்டு உயர் உளத்து இருள் ஒளித்து ஒளி அறிவு நீர்த்தலின்
முடித்தன தவத்து உயிர் இனிது காத்துளி முரண் படு பகை பட அரணின் மாட்சி ஆய்
இடித்தன மழை துளி பெருகும் ஆற்றொடும் இணைப்பட நிறைபடும் அருளின் நீத்தம் உள்
குடித்தன மனத்து எழ உறுதி ஆக்கிய குணத்து அருள் குடி தகும் மலையின் ஊக்கமே

#27
என்று எழுந்து உவப்பில் ஓங்கி இரட்டு அலை கடலின் நீந்தி
நின்று எழும் கரை கண்டால் போல் நிழற்றிய திமிசு விம்மும்
குன்று எழும் குவடு நோக்கி குயில் குயின்று அகவ மஞ்ஞை
அன்று எழுந்து எழுதும் வண்ணத்து அலர்ந்த கான் நுழைந்தான் சூசை

#28
கார்-இடை குளித்த மின் போல் கான்-இடை குளிப்ப போகில்
நீர்-இடை குளித்த பேவு நிற நரை குளித்த ஓர் மூப்பன்
தார்-இடை குளித்த தேன் போல் தயை-இடை குளித்த சொல் கொண்டு
ஏர்-இடை குளித்த பாலா இயம்புதி போவது என்றான்

#29
வீடு இழந்து இகல் செய் பேய்கள் வினை பகைக்கு அஞ்சி ஓடி
நாடு இழந்து ஒளித்து கானில் நயந்து உறை அறத்தை நாடி
ஈடு இழந்து உயர்ந்த குன்றத்து இடத்து நான் ஒளித்தல் உள்ளி
தோடு இழந்து ஏகுது என்றான் துணை இழந்து உயர்ந்த பாலன்

#30
கார் முகத்து அலரும் முல்லை கடி முகத்து இமைக்கும் வண் கால்
ஊர் முகத்து அஞ்சும் நாவாய் உடை திரு கொணரும்-கொல்லோ
போர் முகத்து எதிரா நீங்கின் புணருமோ விழைந்த வெற்றி
ஏர் முகத்து உணர்வில் தேர்ந்த இளவலோய் என்றான் மூத்தோன்

#31
பைம் பொறி அரவின் நஞ்சில் பழிப்பட பகைத்து கொல்லும்
ஐம்பொறி அன்றி சூழ்ந்த அனைத்துமே பகைத்த-காலை
செம் பொறி பெய்த பைம் பூ சிதைந்து என உளமும் ஏங்கி
வெம் பொறி ஆக ஆற்றா வேட்கையே என்றான் சூசை

#32
பொன் ஒளி காட்டும் செம் தீ புகை அகில் மணத்தை காட்டும்
மின் ஒளி மணியை காட்டும் வினை செயும் படைக்கல் மாட்சி
தன் ஒளி காட்டும் துன்ப தகுதியில் குன்றா ஊக்கம்
மன் ஒளி காட்டும் நல்லோய் மறை இது என்றான் சான்றோன்

#33
உள் உயிர் உண்ணும் கூற்றின் உடன்று கொல் நசையை கொல்ல
தெள் உயிர் மருட்டும் செல்வ திரள் துறந்து ஒருங்கு நீங்கி
கள் உயிர் உயிர்த்த பைம் பூம் கானில் வாழ் தவத்தை நாடல்
எள் உயிர் தெளிக்கும் வண்ணம் என்பரே என்றான் சேடன்

#34
ஒருங்கு எலாம் நீக்கல் ஓர் நாள் உறுதியே பகைத்து சூழ் தன்
மருங்கு எலாம் இருப்ப உள்ள வாய் அடைத்து இடை விடாது
நெருங்கு எலாம் நுழையா காத்தல் நெடும் பயன் பயத்த நீள் போர்
சிருங்கு எலா நிலையின் ஊங்கும் திறம் இது என்று அய்யன் சொன்னான்

#35
நாள்-தொறும் கனிந்த செம் தேன் நல் கனி அளித்தல் நன்றோ
கோடு உறு மரமும் தன்னை கொடுத்தலே நன்றோ இவ்வாறு
ஈடு உறும் உளதும் உள்ளும் ஈதல் செய் துறவே என்பார்
வீடு உறு நூலோர் என்ன விளம்பினான் இளவல் மாதோ

#36
காயொடு மரம் தந்தால் போல் கடி துறவு அருமை வெஃகி
வேயொடு நெருங்கும் கானில் விழைந்து தான் ஒழுகல் நன்றோ
தீயொடு குழை மற்றோரும் செவ்வுற செலுத்தல் நன்றோ
தூய் உடு உணர்வோய் என்ன சொற்றினான் குரவன் அம்மா

#37
பெற்று அறம் அணிந்த நல்லோய் பிறர் மனை விளைந்த செம் தீ
அற்று அற ஓடி தன் வீடு அழன்றதே போல வேட்கை
பற்று அற உணர்த்தி உள்ளம் பற்றிய நசையில் வெந்தால்
இற்று அற உறுதி என்னோ என்றனன் அரிய சூசை

#38
தீது இலா இடமே வேண்டின் சேண் உலகு எய்தல் வேண்டும்
கோது இலா வனத்தும் தன்னை கொணர்ந்த கால் விளையும் வெம் போர்
ஏது இலாது ஒழுகல் உள்ளத்து இயல்பினால் ஆகும் அன்றி
வாது இலா இடத்தால் ஆகா மைந்தனே என்றான் சான்றோன்

#39
ஈர் அறம் வழங்கும் வண்ணத்து யாவையும் துறந்த தன்மை
பேர் அறம் என்ப கேட்டேன் பின்னை அ துறவின் ஊங்கும்
ஓர் அறம் உளதேல் ஐயா உரைக்குதி உரைத்த அன்ன
சீர் அறம் விழைவேன் என்றான் சேண் உலகு உரிய பாலன்

#40
ஈர் அறம் பிரிந்து நோக்கில் இயம்பிய துறவின் மாட்சி
பேர் அறம் ஆவது அன்றி பிரிவு இலா இரண்டும் தம்முள்
ஓர் அறம் ஆக சேர்க்கில் உறுதியும் பயனும் ஓங்க
தேர் அறம் ஆகும் என்றான் செழும் துறை கேள்வி மூத்தோன்

#41
பால் கலந்திட்ட தெள் நீர் பால் குன்றும் பண்பும் இல்-ஆல்
மேல் கலந்து ஒளிர்ந்த வெய்யோன் வெயிலின் முன் எரித்த தீபம்
போல் கலந்து இசைத்த மற்ற புண்ணியம் துறவு வாய்ந்த
சால் கலந்த இயல்பை ஏற்றும் தகுதியோ என்றான் பாலன்

#42
தெருள் தகும் உணர்வின் சான்றோன் சேடனை தழுவி சொல்வான்
அருள் தகும் உணர்வு அன்பு ஊக்கம் அரும் பொறை ஈகை மற்ற
மருள் தகும் இயல் தீர் மாட்சி மதியை மீன் சூழ்ந்ததே போல்
பொருள் தகும் நாட்டில் வைகும் பொலம் துறவு அணியும் அன்றோ

#43
கான் வளர் தவத்தை கானில் கண்டு எளிது அடைவார் மற்றோர்
தான் வளர் தவத்தை கூட்டி தமர்க்கு எலாம் நகரில் காட்டல்
வான் வளர் வலமை பூத்த மாண்பு இதே இது நின்-பால் ஆம்
மீன் வளர் உணர்வோய் என்று மின் என மறைந்தான் சான்றோன்

#44
ஊன் உரு காட்டி வந்த உம்பன் என்று அறிந்து போற்றி
தேன் உரு கோதை ஒத்தான் திளைத்த இன்பு உருகி மூழ்கி
கூன் உரு பிறையும் எஞ்ச கொழும் கதிர் முகத்தில் வீச
பான் உரு சுமந்து நாறும் பவள நல் மதலை ஒத்தான்

#45
நீதியும் நெறியும் சொன்ன நிலை எலாம் உணர்ந்த பின்னர்
ஆதியும் அந்தம் தானும் ஆய நின் கழல் அல்லாது
வீதியும் எனக்கு ஒன்று உண்டோ வினை அறும் இறையோய் என்ன
ஓதியும் விறலும் விம்ம ஒளித்த தன் நகரம் சேர்ந்தான்

#46
கார் வளர் மின்னின் மின்னி கதிர் வளர் பசும்பொன் இஞ்சி
வார் வளர் முரசம் ஆர்ப்ப மணி வளர் நகரம் வில் செய்
தேர் வளர் பருதி ஒத்தான் சென்று புக்கு உவப்ப யாரும்
பார் வளர் திலகம் ஒத்தான் பழிப்பு அற விளங்கினானே

#47
மீன் ஆர் வானம் பெற்றவன் ஓது விதி பெற்று
தேன் ஆர் கானம் பெற்ற திருந்தும் தெளிவு ஆறாது
ஊன் ஆர் காயம் பெற்று இவன் உவவோடு உயர் மற்ற
வான் ஆர் மானம் பெற்று அறம் ஒன்றாய் வனைகின்றான்

#48
வானம் கொண்டார் மாண் அருள் கொள்வான் அவர் கொண்ட
ஞானம் கொண்டான் இல்லவன் இல்லோர் நகை கொள்வான்
தானம் கொண்டான் மாசு இல தூயோன் தவம் கொண்டான்
ஈனம் கொண்டார் உள் வலி கொள்வான் இவை கொண்டான்

#49
புன்மை பட்டார் கொண்டவை வெஃகி பொருள் கொண்ட
தன்மை பட்டார் யாவையும் உண்ணார் தரல் செய்யார்
இன்மை பட்டான் சூசை உழைத்தே இனிது உண்பான்
நன்மை பட்டு ஆர்ந்து ஏற்குநர் உய்வான் நனி ஈவான்

#50
வேய்ந்து ஆர்ந்து ஒன்றும் வான் பொருள் விஞ்ச விழைவோடு ஒன்று
ஈய்ந்தால் ஒன்றே கோடி பயக்கும் எனில் அன்பால்
வாய்ந்தான் ஒன்றும் தன் வறுமைக்கே மலிவு ஈகல்
ஆய்ந்தால் ஒன்றும் வான் புகழ் கூறல் அரிது அன்றோ

#51
மெய்யால் குன்றாது ஒள் தவம் மாறா வினை ஆண்மை
கையால் குன்றா வண் கொடையோடு உள் களி கூர்ந்து
பொய்யால் குன்றா நெஞ்சு அரு வல்லோன் புணர்வு ஆக்க
மையால் குன்றா வெம் வனம் ஏகா மனை நின்றான்

#52
காக்காது உள்ளம் ஐம்பொறி காட்டும் வழி நிற்ப
போக்காது உள்ளம் உய்ய மெய் ஞானம் புரி ஆண்மை
ஆக்காது உள்ள யாவும் அகன்றே அழிவு ஆக்கம்
நோக்காது உள்ள தே அருள் நோக்கி நுதல்கிற்பான்

#53
சொல்லும் செல்லா கான் நுழையா தண் துளி தூற்றும்
செல்லும் செல்லா தீ எரி கற்றை திளை வேந்தன்
எல்லும் செல்லா கான் நகு நல் கான் என உள்ளம்
புல்லும் பொல்லாங்கு ஈர்த்துபு புக்கு ஐம்பொறி காத்தான்

#54
சுட்டு ஆகுலம் உற்று ஓர் வனம் உற்றான் துகள் தீரா
முட்டு ஆசையை உற்று எங்கணும் உற்றால் முனி தானோ
பட்ட ஆசை இரண்டு ஈர்த்து உளம் ஓங்க பல யாவும்
விட்டு ஆய் உளது ஓர் ஆண்டகை மேவி வினை தீர்த்தான்

#55
மை பட்டு இளகும் சேற்றில் உலா விண் மணி மாலி
செய் பட்டு ஒளிரும் செம் கதிர் மாசு ஆய் சிதைவு ஆமோ
பொய் பட்டு அயரும் புன் பொருள் மேல் ஐம்பொறி விட்டால்
மெய் பட்டு உயர் இன்னான் உளம் மாழ்கா வினை கொள்ளான்

#56
போர் ஆறு என்னும் இடை மாக்கள் புரை எல்லாம்
சேர் ஆறு என்னும் இன்பம் எலாம் தீர் தெளிவு எய்தி
ஈர் ஆறு என்னும் ஆண்டு உளன் என்றும் இனிது இன்னா
ஊர் ஆறு என்னும் மன்றல் செயேன் என்று உரன் உற்றான்

#57
உடல் கிடந்து உடலம் கடந்தான் எனா
மிடல் கிடந்து உயர் வீடு உள இன்பு அது
கடல் கிடந்து கனிந்த களிப்பு உறீஇ
மடல் கிடந்த கள் வார் மலர் மானுவான்

#58
கலை உற்று உள் இருள் நீங்கிய காட்சியான்
அலை உற்று இ பொருளோடு அலையாது உளம்
நிலை உற்று எந்தை நெருங்கு அடி சேர்ந்து உயர்
மலை உற்றான் என மாறுபடான் அரோ

#59
தேக்கு பாரில் திளைத்து உள யாவையும்
தூக்கி பார்த்தனன் தோன்றிய தீது எலாம்
போக்கி பாய் பயன் பூத்து கலந்த நீர்
நீக்கி பால் உணும் ஓதிமம் நேருவான்

#60
மீ இருள் கொணர் மேகம் மிடைந்து எனா
போய் இருள் கொணர் ஐம்பொறி போக்கு இலான்
தூய் அருள் கொணர் சூழ்ச்சி தெளிந்து உளம்
பாய் அருள் கொணர் பற்றுதல் எய்தினான்

#61
கோது_இல் ஓர் முறை கொண்டு நடந்த பின்
ஏது_இல் ஓர் முறை யாரும் நடந்து எழ
நீதி ஓர் முறை நேர் நெறி ஓதுவான்
வேதியோர் முறை விஞ்சிய மாட்சியான்

#62
முனி பழித்த இளைய மூத்தோன் என
பனி பழித்த பயன் பட யாவரும்
கனி பழித்த கனிந்த நல் வீணை தன்
தொனி பழித்த சொல் சொல்லிய வாய்மையான்

#63
பொருள் கடிந்து புலன்கள் அடக்கலால்
மருள் கடிந்த மனம் தெளி காட்சியான்
அருள் கடிந்த அசடரை நோக்கலோடு
இருள் கடிந்த இரக்கம் உற்று ஏங்குவான்

#64
தவர்க்கும் ஊங்கு அரிது ஆம் தயை தாங்கு உளத்து
உவர்க்கும் வேலை உடுத்தன பார் உறை
எவர்க்கும் நன்றி இயற்றி இன்னா செயும்
அவர்க்கும் வாய்ந்த அறம் துணை ஆயினான்

#65
அன்பு வாய்ந்த உயிர் நிலை அஃது இலார்க்கு
என்பு தோல் உடல் போர்த்தது என்று அன்பு உறை
இன்பு தோய்ந்த நிலை என தான் இவண்
துன்பு காய்ந்த உயிர் துணை ஆயினான்

#66
பொறையது ஆண்மையினோடு எரி பூண் எனா
மறையது ஆட்சி அணிந்த வளன் தகும்
நிறைய மாட்சி நிகர்ப்பது நூல் வழி
அறைய வாய்மையர் எய்துப ஆண்மையோ
மேல்

@5 திருமணப்படலம்


#1
இ அரும் குணத்து இரங்கிய இனிய அன்புடைமை
வவ்வு அரும் குணத்து அவனி கொள் மடி வினை நீக்கி
செ அரும் குணத்து இறையவன் சென்று அதை தீர்ப்ப
அ அரும் குண தவன் விருப்பு எய்தி நொந்து அயர்வான்

#2
உலகு உண்டாய-கால் மனு_குல தலையவன் உண்ட
விலகு உண்டு ஆய காய் விளைத்த தீது உயிர் எலாம் சிதைப்ப
அலகு உண்டு ஆய் இலாது அடும் விடம் குடித்த வாய் வழியால்
இலகு உண்டு ஆயின எலா உறுப்பு உலவு என உலவு ஆம்

#3
குடித்த நஞ்சினால் குருடு கண் பாய் என பாவம்
முடித்த நஞ்சினால் முதிர் செயிர்க்கு உளத்து இருள் மொய்ப்ப
படித்த விஞ்சையால் பணிந்த மெய் இறைவனை பழித்து
பிடித்த வஞ்சனால் பெருகியது எங்கணும் மருளே

#4
பண் அரும் சுடர் பருதி போய் பாய் இருள் நீக்க
எண் அரும் சுடர் ஏற்றுவர் இணை என மாக்கள்
ஒண் அரும் சுடர் ஓர் இறையவன் ஒளித்து எவையும்
மண் அரும் சுடர் மானும் என்று இறைஞ்ச உள்ளினர்-ஆல்

#5
மறம் ஒழித்திலர் மறை முறை ஒழித்தனர் இறைவன்
திறம் ஒழித்தனர் செய் முறை ஒழித்தனர் சிறந்த
அறம் ஒழித்தனர் அறிவு ஒழித்தனர் நலம் யாவும்
புறம் ஒழித்தனர் புணர் உயிர் ஒழித்தனர் சிதடர்

#6
எஞ்சுக பயன் இயற்றிய அறங்களே இன்னா
விஞ்சுக பகை வினை செயும் பழம் பழி பேய் அ
நஞ்சு உக பகு வாய் அரவு உரு கொடு அ நாளில்
அஞ்சுக புவி அனைத்துமே தோன்றியது ஆம்-ஆல்

#7
அன்ன நஞ்சு உறும் பாவமே பரந்ததின் அதனை
உன்னின் நஞ்சு உறும் உன்னிய உன்னமும் அதனை
பன்னின் நஞ்சு உறும் பன்னிய வாய் அதும் அதனை
துன்னின் நஞ்சு உறும் துன்னிய திசை எலாம் அன்றோ

#8
நிழலில் நஞ்சு உறும் வெய்யிலில் நஞ்சு உறும் நெடு நீர்
கழனி நஞ்சு உறும் கடி மலர் நஞ்சு உறும் பொலிந்த
பொழிலில் நஞ்சு உறும் புணர் கனி நஞ்சு உறும் மடவார்
எழிலில் நஞ்சு உறும் காண்டலால் இன் உயிர் இறக்கும்

#9
காரும் நஞ்சு என கனலியும் நஞ்சு என மாரி
சோரும் நஞ்சு என துறும் வளி நஞ்சு என சுடர் பூண்
ஆரும் நஞ்சு என ஆடை நஞ்சு உணவு நஞ்சு அமிர்த
நீரும் நஞ்சு என நேமி கொள் எவையும் நஞ்சு எனவே

#10
நஞ்சு எஞ்சாமையின் நடு நெறி தவிர்தலோடு இன்னா
விஞ்சு எஞ்சாமையின் சிறுமை நோய் துயர் பிணி மிடைந்து
நெஞ்சு எஞ்சாமலும் நெடியது ஓர் நடுக்கு உறா நிற்ப
மஞ்சு எஞ்சாமலும் மருண்டு இருண்டு அழிந்தன உலகம்

#11
மீன் மறந்தன மேதினி விளக்கலும் வெய்ய
வான் மறந்தன மாரியை வழங்கலும் மதுர
தேன் மறந்தன செழு மலர் பெய்தலும் வேத
நூல் மறந்தனர் நுதல்_அரும் தீமை செய்தமையால்

#12
அறம் மடிந்தன அடைந்தன தீயவை அனைத்தும்
மறம் மிடைந்தன மறந்தன தருமமே வஞ்ச
திறம் நிறைந்தன தீர்ந்தன தவங்களே விரதம்
புறம் முரிந்தன பொதிர்ந்தன பகை செயும் புரையே

#13
விண் கிழித்து இழி வெள்ள நீர் சிறை செயும் உழுநர்
மண் கிழித்து உழ வழங்கிய கொழுவினை நீட்டி
புண் கிழித்து நெய் புனலொடு போர் முகத்து அஞ்சா
கண் கிழித்து ஒளி கான்ற வேல் ஆக்கின பகையே

#14
அன்பும் இல்லன எனது உனது என்பதில் ஆர்வ
நண்பும் இல்லன வஞ்சனை கற்கலால் நல் நூல்
பின்பும் இல்லன தீயவை இனிது என பெட்டற்கு
இன்பும் இல்லன இச்சையால் வறுமை உள்ளதுவே

#15
கரும்பு உலாவிய சாறு இல காய்ந்தன ஆலை
அரும்பு உலாவிய அமுது இல அழுதன கமலம்
சுரும்பு உலா வயல் பயன் இல துறுவின கடு முள்
விரும்பு தேன் உணா பாடு இல விம்மின குயிலே

#16
எள்ளல் ஆய மன் உயிர்கள் இன்னா இனிது என்று அதை விரும்பி
அள்ளல் ஆய இருள் மொய்ப்ப அவனி எங்கும் மொய்த்தன தீது
உள்ளல் ஆயது அருமை அதோ உள்ளி உள்ளத்து இரங்கி வளன்
வள்ளல் ஆய இறையவனை வணங்கி வருந்தி உரை வகுத்தான்

#17
ஒன்றாய் ஆளும் அரசே என் உயிர்க்கு ஓர் நிலையே தயை கடலே
குன்றா ஒளியே அருள் பரனே குணுங்கு ஈங்கு ஓச்சும் கொடுங்கோன்மை
பின்றா வினை செய்வது நன்றோ பிறந்து அ பகையை தீர்த்து அளிப்ப
சென்றால் ஆகாதோ இரக்கம் செய்ய குணித்த நாள் எவனே

#18
மறையை பழித்த பொய் மதங்கள் மருட்டும் வினையால் ஒண் தவத்தின்
முறையை பழித்த சிற்றின்பம் மூழ்கும் நசையால் என்றும் இதோ
உறையை பழித்த எண்_இல மன் உயிர்கள் எரி தீ நரகு எய்த
தறையை பழித்த பேய் இனங்கள் தவிராது ஈங்கு ஆள்வது நன்றோ

#19
முன் நாள் இனிதின் நீ உரைத்த முறையால் பகைத்த வெறி தலையை
இ நாள் மனுவாய் அவதரித்து இங்கு எய்தி மிதிக்கில் ஆகாதோ
பல் நாள் உலகம் கொண்ட பழி பகையை எண்ணுவது நன்றோ
அ நாள் எம் மேல் காட்டிய பேர் அன்பு இன்று எண்ணில் ஆகாதோ

#20
தந்தை நோக உணர்வு இன்றி தவறா நின்ற பிள்ளைகள்-தம்
சிந்தை நோக பணிந்து அடுத்தால் சினந்த தாதை அகற்றுவனோ
நிந்தை ஆக பிழைத்து எனினும் நினக்கு ஓர் பிள்ளை ஆக எமக்கு
எந்தை ஆக நீ என்றும் இரங்கா முனிவது ஆம்-கொல்லோ

#21
பொறியை தவிர்த்த மா தவத்தோர் புலம்பற்கு இரங்கின் குறை என்னோ
அறிவை தவிர்த்த குழவிகளும் அழுதற்கு இனைந்தால் தீ என்னோ
நெறியை தவிர்த்த வஞ்சம் மிக நேமி சிதைத்து ஆள் கொடுங்கோன்மை
வெறியை தவிர்த்த வயம் கொடு நீ வினை தீர்த்து உதிப்ப தடை என்னோ

#22
கன்னித்தாய்-தன் கரத்து உன்னை கண்டு உள் உவப்ப உன் மலர் தாள்
சென்னி தார் என்று அணிந்து இலங்க சிறுவனாய் நீ அழுது உணும்-கால்
துன்னி தாழ்ந்து தொழ உன் தீம் சுவை ஆர் குதலை சொல் கேட்ப
என்னில் தாழ்வு உண்டு ஆயினும் என் இறைவா அடியேற்கு அருள்க என்பான்

#23
இன்னான் இன்ன யாவும் உரைத்து ஏங்கி ஏங்கி அழுகின்ற
அ நாள் அன்ன உரைக்கு இசையாய் அன்பு தூண்டும் அரிய நசை
தன்னால் உன்ன பொருவு அற்ற தரும கன்னி மரி என்பாள்
பல் நாள் துன்னாத அருள் புரிய பரமன் எய்த வேண்டினளே

#24
அன்று என் தொடையால் அடையா பண்பு அன்னார் இருவர் சொல் அமிர்தம்
துன்று என்று இரு நள் செவி உவப்ப தொடர்பின் கேட்ட வான் இறையோன்
நன்று என்று இரங்கி உலகு அளிப்ப நரன் ஆவதற்கே உதவி இவர்
ஒன்று என்று இவரை மணத்து ஒன்ற உள்ளத்து உள்ளி முடித்தான்-ஆல்

#25
அணை அற்று அகன்ற பவ வெள்ளத்து அமிழ்ந்தும் உயிர்கள் தம் குறை தீர்த்து
இணை அற்று அகன்ற அருள் பவ்வத்து இனிதின் மூழ்கி உய்வதற்கே
தணை அற்று அகன்ற தயை கடவுள் தனி தான் செய்யும் தொழில் எனினும்
துணை அற்று அகன்ற மாண்பு இவரை துணையாய் சேர்த்த நலம் சொல்வாம்

#26
ஆர் ஆனும் நிகர்ப்பு அரிய அன்பு ஆர்ந்த நாயகன் தான் அலகை வெல்ல
கார் ஆரும் வான் உலகும் மண் உலகும் கடி நயக்கும் கருணை கண்ணி
ஏர் ஆரும் மணி இமைக்கும் எருசலேம் ஆலயத்தில் இருமை வாய்ந்த
சீர் ஆரும் கன்னியின்-கண் சேடு அமை ஓர் வானவனை செலுத்தி சொல்வான்

#27
சேய் ஆக மனு_குலத்தில் சேர்ந்து உதித்து வையகத்தார் சிதைவை நீக்க
தாயாக வளர் கன்னி தாய் வயிற்றில் பழம் பழி சேர் தவறு இல்லாது
தூய் ஆகம் அறிவு ஆண்மை சுடர் காட்சி வலி அருள் மாண் துணிவு சூழ்ச்சி
வீயாத வரம் கொடு பெற்று எ உலகும் வியப்பு எய்த வேய்ந்தாள் அன்றோ

#28
காரணமாய் ஏது அறியா வையகத்தார் இனிது உளத்தில் களித்து மூழ்கி
வாரணமாய் இன்பு எய்த தலைவி என வான் தளங்கள் வகுப்பு யாவும்
பூரணமாய் தொழுது உவப்ப பூவனத்தில் பொருவு இன்றி போர்த்த வெய்யோன்
பேர் அணியாய் பிறை மிதித்து முடி ஒப்ப மீன் சூடி பிறந்து வேய்ந்தாள்

#29
பிறை ஒக்கும் ஒளி அன்னாள் பெருகும் வயது ஒரு_மூன்றில் கோயில் சேர்ந்து
மறை ஒக்கும் ஒளி அன்னாள் வழு_இல நாள்-தொறும் என்னை வணங்கும் ஆற்றால்
பொறை ஒக்கும் துணை அன்னாள் பூவனத்தில் நிற்பவருள் பொலிந்த வானோர்
முறை ஒக்கும் நிலை அன்னாள் முற்றி வளர் வரத்து அங்கண் முதிர்ந்தாள் அன்றோ

#30
துணை தீர்ந்து கன்னி எனை ஈன்றாலும் உறும் துயரில் துணை ஆதற்கும் அ
இணை தீர்ந்த இ பயன் பேய்க்கு ஒளிப்பதற்கும் அவட்கு இகழ்வு ஆங்கு எய்தாதற்கும்
அணை தீர்ந்த துணை அளிப்பேன் இவை கூறா மண தூதாய் வான் விட்டு அங்கண்
அணை தீர்ந்த அருள் கன்னி ஆம் என ஏகு என்று இறையோன் அனுப்புகின்றான்

#31
வான் செய்த சுடர் ஏய்க்கும் வடிவொடு வானவன் சடுதி வந்து அ கன்னி
கான் செய்த மலர் பதத்தை கண்டு இறைஞ்சி கடவுள் அருள் கருதும் தன்மை
தான் செய்த ஏவல் என தவறாது ஓர் மணத்து அமைதல் தருமம் என்ன
தேன் செய்த கனி சொல்லால் சீர்த்த பல உறுதிகளும் செப்பினானே

#32
மண மொழி முற்று உணரா முன் மனம் உளைந்து வாடுகின்ற வதனம் மாற
பணி மொழி முற்று உணராதாய் பகல் செய் கண் ஆறு என நீர் பயின்று சேப்ப
அணி மொழி முற்று உணர் நெஞ்சம் உள் துடிப்ப நெட்டு உயிர்ப்போடு அரற்றி பின்னர்
துணி மொழி உற்று இறைவனது துணை தாளை பணிந்து இவளும் சொல்லல் ஓர்ந்தாள்

#33
தேன் தானோ நஞ்சு அதுவோ என விழுங்கலோடு உமிழ்தல் தேற்றா நெஞ்சள்
மீன் தான் ஓர் முடி சென்னி நிலம் புல்ல முழந்தாளை விரும்பி ஊன்றி
வான் தான் ஓர் அணி என வெஃகிய கூந்தல் வல தோளின் வயங்கு திங்கள்
கூன் தானோ பூ எருத்தம் கோட்டி இரு கை கூப்பி கூறல் உற்றான்

#34
உலகு எல்லாம் புரக்கும் அருள் கொடையோனே உரு இல்லாது ஒளி வல்லோனே
அலகு இல்லா தற்பரனே அற்புதனே என் அன்பே அரசர் கோவே
நலம் எல்லாம் தந்து தந்த நல் உணர்வும் அறியாயோ நலம் மிக்கோய் உள்
புலம் எல்லாம் அறிந்தாயேல் புலம்பி மனம் உடைந்து உளைய புகல்கிற்பான் ஏன்

#35
நீ உகுத்த வணக்கம் என் நினைவு ஓங்கி மூ வயது நிகழா முன்னர்
மாய் உகுத்த வாழ்வு உகுக்கும் மணம் இன்றி எம் ஞான்றும் மாறா கன்னியாய்
இருப்ப நான் உணர்-கால் ஆம் என நீ அருள் புரிந்தாய் அன்றோ ஐயா
நோய் உகுப்ப உளத்து அலக்கண் நுழைந்து அறுப்ப மணம் இப்போ நுதல்கிற்பானேன்

#36
என்று என்றாள் மென் தாளாள் இதயத்தில் தீ பாய்ந்து உள் எரி புண் அன்னாள்
அன்று என் தாய் மனம் உருகி ஆகுலத்து ஆழ் கடல் மூழ்கி அழுந்தா நிற்ப
நின்று அன்று ஆயிர கதிரோன் நேர் உரு காட்டிய வானோன் நிகரா கன்னி
மின் தன் தாள் தொழுது இன்னும் விரி வேதத்து உறுதி உரை விளம்புகின்றான்

#37
மீனொடு மின் சுடர் எல்லாம் வெல் அறிவு உற்று அயர்வானேன் வெருவாது ஒன்றாய்
தேனொடு கொல் அரி இனம் ஓர் நாவாய்க்குள் அடக்கினனும் திளைத்த செம் தீ
கானொடு தண் மது மலரின் குளிர செய்தவனும் மண கடியோடு உன்-கண்
வானொடு மண் வணங்கும் தூய் கன்னிமை காப்பதும் அரிதோ மறை பூண்டு உள்ளாய்

#38
சொல் வழியும் உள் வழியும் தொடர்ந்து அடங்காது எ உவமை தொகுதி யாவும்
வெல் வழியும் ஆய வலி வேய்ந்த பரன் திருவுளம் ஆய் விகற்பம் என்னோ
எல் வழியும் கடந்த அறிவான் ஏவலினால் இன்னல் உறாது என்ன வானோன்
கல் வழியும் கடந்து அன திண் கன்னி அறா மணத்து இணங்கி கடவுள் தாழ்ந்தாள்

#39
ஆம் என ஆயினது அறைய வானவன்
நாம் என யாவரும் நயப்ப நாயகன்
ஏம் என மாண்பு இசை சீமையோன் எனும்
தோம் என யாவும் தீர் தவற்கு சொற்றுவான்

#40
கோது இல தாவிதன் குலத்தில் தாதை தாய்
மாது இல தணர்ந்த மா மரி என்பாள் இவண்
ஏது இல வரத்து உயர்ந்து இலங்கு மீன்களுள்
மீது இயை மதி என விளங்கின்றாள் அரோ

#41
ஈர் எழு வயது உள் ஆய் இலங்கு இ மங்கையை
நேர் எழு துணை மணம் முகிப்ப நீர்த்த தன்
சீர் எழு குலத்தினுள் தெரிந்து அ மாட்சியான்
பேர் எழு மணம் கொடு பிணிக்குவாய் என்றான்

#42
முனிவரன் முதலவன் மொழிந்த யாவையும்
தனி வர மடந்தையை விளித்து சாற்றி உள்
நனி வர அருள் புரி நாதன் ஏவல் ஆல்
இனி வர மணம் செயல் வேண்டுமே என்றான்

#43
என்றலும் கேட்டு உயிர்ப்பு எழ இரங்கினாள்
மன்றலும் மன்றல் செய் வாழ்வும் எற்கு அதே
பொன்றலும் பொருவு_இல புன்கண் ஆயினும்
ஒன்றலும் ஆம் இறை உரைக்கிலே என்றாள்

#44
என்றவை உணர்ந்த மா தவனும் இன்பொடு
மன்றலை முடிதர அங்கண் வைகிய
நன்று அமை முனிவரை கூட்டி நாயகன்
அன்று அமைந்து அறைந்த நல் பணி அறைந்து உளான்

#45
அறைந்த வாசகம் உணர்ந்து அரிய மா தவர்
நிறைந்த தாவிதன் குல நிலையில் மாட்சி கொண்டு
உறைந்த யாவரையும் விளித்து ஒருவனை பிரான்
பறைந்தது ஆகையில் ஒரு பழுது உறாது என்றார்

#46
நன்று என நயப்பொடு நாதன் வேண்டினர்
கன்றின முரசு ஒலி கறங்க தாவிதன்
துன்றின அனைவரும் துன்-மின் என்று அழைத்து
அன்று இன மணி நகர் அரிது உவந்ததே

#47
கார்க்கடை உரும் என முரசம் கால் ஒலி
ஈர்க்கு அடை கணை என இரு செவி புக
போர் கடை என மனம் புலம்பி மா மரி
சீர்க்கு அடை பிரான் அடி இறைஞ்சி செப்புவாள்

#48
எள் ஒழிந்து உனது தாள் இறைஞ்சி நாள் எலாம்
தெள் ஒளிர்ந்து உயர்ந்த இ தேவ கோயிலின்
நள் ஒளிந்து இருப்ப என் நசை அறிந்து உளாய்
உள் ஒளிந்ததும் எலாம் உணரும் நாதனே

#49
தீயினும் சுடும் மணம் செய்க என்றாய் அது
வாயினும் மடவரல் மறுக்கல் ஆம்-கொலோ
வீயினும் கொடியது இ வினையினால் உளம்
காயினும் திரு உளம் கனிவு என்று ஆம் அரோ

#50
கடி செயும் காலையும் கன்னி காக்க நின்
அடி செயும் உறுதியால் அகத்தில் ஓங்கி வான்
குடி செயும் அவரை நேர் குணித்த என் துணை
படி செயும் திரு நக பயன் பகுக்குவாய்

#51
பார் படைத்தன திரு பற்று இலான் அருள்
சீர் படைத்தன நலம் திளைப்ப கற்பு எனும்
பேர் படைத்தன வரம் பெற தந்து ஆயினான்
சூர் படைத்தன எனை துணை கொள்வு ஆம் அரோ

#52
உடைப்பதற்கு அரும் துயர் உயிர்த்த வாழ்வுகள்
கிடைப்பதற்கு உரி துணை கிடைப்ப கேட்கிலன்
துடைப்பதற்கு அரும் துகள் துடைத்து நின் அருள்
படைப்பதற்கு அற துணை பணிக்குவாய் என்றாள்

#53
என்று பெய் மாரியால் எழுந்த வெள்ளம் ஆய்
சென்று மொய் வேலை மேல் திரண்ட ஆறு போல்
துன்று துய் மணம் செய தெரிந்த சூசை மேல்
நன்று பெய் வரம் எலாம் நாதன் ஈட்டினான்

#54
இன்ன அரு முறைக்கு இவர் இருவர் எய்திய
துன்ன_அரும் வரங்களால் துணை இலார் தமுள்
உன்ன_அரும் துணைவர் என்று உணர்ந்த நாயகன்
பன்ன_அரு மணம் புணர் பயன் சொல்வாம் அரோ

#55
குணில் உற்று ஒலி உற்று அகல் கோ முரசின்
பணி உற்று மண பயன் ஆக நசை
துணிவு உற்று அரசு ஆயின சுற்றம் உளார்
அணி உற்று எவரும் கடிது அண்டினர்-ஆல்

#56
குரு மா முனி கூறிய ஏவலினால்
மருவா நசை ஆ மணமும் தவிர்கின்ற
அரு மா தவன் ஆயின சூசை பணிந்து
இரும் மா மணி ஆலயம் எய்தினன்-ஆல்

#57
குரு மா மணியால் ஒளிர் கோயிலினுள்
திரு மாதினை வேட்டும் எலாரும் உற
பொருவாது ஒளிர் பூம் கொடியை கொணர்வான்
அரு மா முனி அங்கண் அறைந்தனன்-ஆல்

#58
தன்னில் தவிரா தகு பற்று அளவாய்
உன்னில் தவிரா பயம் ஓங்கிய போல்
கன்னிக்கு அழிவு ஆகும் எனா கதனம்
துன்னி கலுழ்வாள் சுடர் சுந்தரியாள்

#59
மின்னும் திரை சூழ் விரி மேதினி மேல்
துன்னும் உயிரும் தொடர் காவலன் நீ
என்னும் பொழுது என் இறை நின்னை அலால்
பின்னும் உயிர் காவலன் ஆர் பெறவோ

#60
இறையோன் அடி எய்திய வானவரே
பொறையோர் பொருவா துயர் பூத்து அயர்வான்
கறை ஆகுலம் அற்று உயர் கன்னியர் ஊடு
உறை யான் பெயர தகும் ஓர் விதி ஏன்

#61
தாது ஊது அளி சூழ் தவழ் தண் தொடையால்
மாது ஊடு மனம் சுட வானவனே
மீது ஊது ஒலி இங்கிதம் மேவு உரையால்
நீ தூது நடந்த இது நேர் பயனோ

#62
பரனோ பரிவு அற்று அருளே பணியான்
சுரரோ மணம் ஆகுப தூது அறைவார்
நரரோ உதவார் நறு மா மணமே
வரலோடு வரும் பயன் மாட்சி இதோ

#63
நிழல் ஆலயம் நீங்கும் மண பயனால்
சுழல் ஆயின என் துயர் நாளும் எலாம்
புழல் ஆயின புண் நுழைய பொதுளும்
தழலாய் உருகும் தமியேன் இனியே

#64
மனனே மறவாது வருந்துதியே
கனலே உணு கண்கள் கலுழ்ந்துதிரே
எனவே உளம் ஏங்கி அறாது அழுவாள்
புனலே பொருவா விழி பொங்கு இழையாள்

#65
உள் உற்ற அணங்கில் அணங்கு உளைய
தெள் உற்ற அரும் தெருள் தேர்ந்து இறையோன்
அள் உற்ற அழுங்கும் அழுங்கல் அரும்
கள் உற்ற கனிந்த சொல் உற்றனன்-ஆல்

#66
அருள் எஞ்சு இல நெஞ்சு அவிரும் சுதையே
மருள் நெஞ்சு ஒரு வஞ்சனை அஞ்சியதோ
திரு எம் சரண் அஞ்சலியும் செயும் நின்
தருமம் செறி தஞ்சமும் எஞ்சியவோ

#67
கொன்னே குலையேல் குலையேல் குழைவு ஏன்
நின் ஏசு இல கன்னி நினைத்த விதத்து
என் ஏவலினால் துணை எய்தினனே
கல் நேரிய கன்னிமை காக்குவான்-ஆல்

#68
நீ ஆவிய நீர்மையின் நேர் துணைவன்
ஓயாத தவத்து உனொடு ஒத்தனன் ஆய்
தூய் ஆரினும் ஊங்கு அருள் தூயனும் ஆய்
வீயாது ஒளிர் கன்னிமை வீற்று இயல்பு ஆம்

#69
குலையேல் குலையேல் குழையா மரபால்
கலையே தரு காட்சி கடந்த அறிவோடு
அலையே நிகர் ஆம் துணை ஆகும் அவன்
நிலையே நெறியே எழ நீ அறைவேன்

#70
தாய் செய் சிறை நீக்கு முன்னர் தரையில்
பேய் செய் சிறை நீத்து அருள் பெற்று உடல் ஆம்
நோய் செய் சிறை நூறுப கன்னி அறா
நீ செய் சிறை நேர் பொறி காத்தனன்-ஆல்

#71
அடை ஆரணம் நேர் அறம் நேர் வடிவான்
கொடை ஆகையினால் குளிர் கார் அனையான்
உடை ஞான அறிவால் ஒளி மானம் அருள்
கடை ஆவது இலால் கடல் நேரினன்-ஆல்

#72
தீ ஒக்கும் வனம் தெளியாத தவம்
தாய் ஒக்கும் அருள் தகை வென்ற தயை
மீ ஒக்கும் அவர்க்கு உரி மேதை உளன்
நீ ஒக்கும் நிலைக்கு உரி நீர்மையினான்

#73
விண் ஆரும் அவர்க்கும் வியப்புறவே
கண் ஆதி எலா பொறி காக்குதலால்
தெண் ஆழியினும் திரைகொள் நசை அற்று
எண்ணான் இவறான் எனை நீங்கும் எலாம்

#74
எனக்கு ஆவல் இயற்றிய யாரினும் உள்
மன காவலினால் மறவா பிரியன
தனக்கு ஆய வரத்து அமரர் தகை மேல்
உனக்கு ஆகுவதற்கு உரி காவலனே

#75
என்றான் இறையோன் களி கூர்ந்து இவளும்
வன் தாள் தொழுவாள் தகை வானவரும்
சென்று ஆர் விழி நீர் திரை மாற்றி அறாத
அன்று ஆர் உரன் ஆகி எழுந்தனளே

#76
ஈறு ஒப்பு அளவு ஆதி யாவும் இலாது
ஆறு ஒப்பு இல நீர்மையினான் அருள் உள்
தேறு ஒப்பு இல ஊக்கமொடும் தெருளாள்
நூறு ஒப்பு இல தோழியர் நோக்கினளே

#77
இடி ஒத்து அலர்ந்த எழில் ஏந்து சிலம்பு இரட்ட
குடி ஒத்து அலர்ந்த இருள் வைகிய கூந்தல் நல்லார்
முடி ஒத்து அலர்ந்த மதி நாண முதிர்ந்த பைம்பொன்
தொடி ஒத்து அலர்ந்த கொடி வேய்துப சூழ்ந்து அடைந்தார்

#78
வான் வைத்து அவிழ்ந்த மலர் போல் ஒளிர் மீன்கள் மான
தேன் வைத்து அவிழ்ந்த சினை நாடு அளி சேர்ந்து விம்ம
கான் வைத்து அவிழ்ந்த கடி மாலை கனிந்து சூழ
மீன் வைத்து அவிழ்ந்த விழியார் சிலரே மிடைந்தார்

#79
கடியாய் அலர்ந்த ஒளிர் காந்தளின் நேர் கரத்தில்
இடியாய அணி பொன் வளை இட்டு அணிவாரும் அல்லால்
கொடி ஆய தண்ண நறை நானமொடும் குளிர்ந்த
பொடி ஆய சுண்ணம் சிலர் பூசிடவும் பொதிர்ந்தார்

#80
செம்பொன் சிலம்பும் செருவோடு சிலம்பல் அன்றி
பைம்பொன் சிலம்பும் பல கிண்கிணியும் படர்ந்த
அம் பொன் சிலம்பும் மணிமேகலையோடு பொற்பு ஆர்
அம் பொன் சிலம்பும் கலனும் சிலர் கொண்டு அடைந்தார்

#81
நல் வாசம் உண்ட நறு நெய் நனி பூசி நானம்
கொல் வாசம் உண்ட குளிர் பூம் புனல் ஆட்டி வெந்த
பல் வாசம் உண்ட புகை பாய்ந்து அவிர் பாலின் ஆவி
வெல் வாசம் உண்ட துகில் ஏந்தினர் வேய்ந்து அடைந்தார்

#82
கடு கொண்ட கண்ணின் கவினார் கனிவு ஆய ஆசை
கொடு கொண்ட யாவும் இவள் கண்டு குளிர்ந்த சொல்லால்
உடு கொண்ட சென்னி ஒசித்து ஒல்லை அகல்-மின் என்னா
நடு கொண்டு அகன்று நகை கொண்டு நடந்து போனாள்

#83
தூங்கு ஆய மாலை தொடையோ மணவாது தூய் பொன்
வீங்கு ஆய ஆர கலனோ மிளிராது எந்தை
பாங்கு ஆய பாதம் பணியே அழகே அது அல்லால்
ஈங்கு ஆய யாவும் இழிவு என்று விரைந்து அகன்றாள்

#84
விண் ஆவி ஆய கதிர் தூசு என வேய்ந்து விண் மேல்
கண் ஆவி ஆய கடி மீன் முடி கவ்வி நல் தாள்
தண் ஆவி ஆய மதி தாங்கிய தாரின் மேலும்
பண் ஆவி ஆய குரலாட்கு ஒரு பாங்கு நன்றோ

#85
வஞ்சம் செறிந்த நிலம் மண்டிய பூண் அனைத்தும்
கஞ்சம் செறிந்த அடியாள் கழிவாய் கடிந்தே
அஞ்சம் செறிந்த நடை ஆடி அகன்று அனந்தன்
விஞ்சம் செறிந்த மிளிர் வான் அணி வேய்ந்து அணிந்தான்

#86
வான் ஆரும் எய்தி அறமே மணி என்று அணிந்தார்
மீன் ஆரும் ஓதி மிளிர் தோடு என வேய்குகின்றார்
தேன் ஆரும் மாலை திரள் என்று அருள் சேர்க்குகின்றார்
கான் ஆரும் வாய்ந்த தவமே கலையாய் வனைந்தார்

#87
அலின் ஆர் ஒளிர் ஆரிய தாரகையுள்
மலி பால் ஒளி கால் மதி போவது போல்
ஒலி ஆய சிலம்பு உடை மங்கையருள்
பொலி ஆலயம் ஊடு இவள் புக்கனளே

#88
அடர் அற்று அடி வைத்தனள் அண்டிய வாய்
சுடர் அற்ற இருளும் துகளும் வெறியும்
படர் அற்று இசை பன் எழு காதம் அகன்று
இடர் அற்று இழிவு அற்று எழு சீர் அடியாள்

#89
வையம் பொருவா மடவாள் வர அம்பு
எய்யும் கொடு வேளொடு காம் இழிவும்
பொய்யும் பவமும் அகலும் புசியாத
ஐ உண் அலர் கண்டு அளி நீங்கின போல்

#90
காம கனல் ஆற்றின நோக்கிய கண்
வீம கருள் விட்டன மூடிய கண்
ஏம கதி காட்டும் விழித்த இரு கண்
வாம கதிர் வாட்டும் களித்த கணே

#91
வில் ஏவிய கோல் விழியார் அறை தீம்
சொல்லே உயிர் உண் எனவே சொலுவார்
கொல் ஏதம் இலா குதலை சொல் நல்லாள்
நல்லே உயிர் காக்கும் நவின்ற சொலால்

#92
பல்லும் விழியும் பவளத்து இதழும்
சொல்லும் கனி அம் சொலும் ஒள் நுதல் கொள்
வில்லும் கரமும் விரி சீறடியும்
செல்லும் திசை செல் உறழ் செல் அருளே

#93
அரிதாய் மடவாள் வர ஆங்கு எவரும்
பரிவாய் விழி விண்டனர் பார்க்குதலும்
எரி வானில் உலாம் மதி எய்திய கால்
விரி ஆம்பல் விரை சினை விண்டமை போல்

#94
அரு ஞானமும் மானமும் ஆய் அறிவும்
இரும் ஊக்கமும் ஆக்கமும் ஆங்கு எவரும்
கருதா வழி கண் வழி மேய்ந்து மனம்
தெருள் தாவு அருள் தேர்ந்து தெளிந்தனரே

#95
வீடு ஆடி விளங்கு எழில் வேய்ந்த முகத்து
ஆடு ஆடி விரும்பி அழுந்திய கண்
ஏடு ஆடி வடிந்த இளம் கனி தேன்
ஊடு ஆடி உவந்த அளி ஒத்தன ஆம்

#96
குறை ஈர்ந்து உயர் வான் குடி ஆய இவள்
கறை ஈர்ந்த எழில் காண எமக்கு இரு கண்
முறை ஈந்து அலது ஆயிர கண் முதல் ஆம்
இறை ஈந்தனனேல் இனிது என்று அறைவார்

#97
மறை செய்த வனப்பு என வாய்ந்த நலாள்
மிறை செய்தது இலா விழியும் உளமும்
சிறை செய்தன காலும் நலம் செயும் நல்
முறை செய்தன ஏது எனவே மொழிவார்

#98
எள்வார் இல இ கவினால் எமது உள்
கள்வு ஆய் களி நாம் பெறல் என் களவை
கொள்வாரும் அலாது கொடுப்பவரோ
உள் வாரிய இன்பு உளர் என்று அறைவார்

#99
அருகு ஆயின வான் அழகு ஆர் வதனம்
பருகு ஆயின எம் விழி பார்த்தலின் நாம்
உருகாது அளி உற்றிலமேல் எமது உள்
திருகாதன கல் திரள் என்று அறைவார்

#100
அவளோடு இனிதாய் மணமே அமைவான்
உவமோடு இறையோன் உளம் ஒத்தனனோ
தவம் ஓகையனோ தகவு ஆனவனோ
எவனோ அவள் எய்துவன் என்று அறைவார்

#101
மின் பட்ட மடந்தை விடங்கம் உறீஇ
மன் பட்ட மணம் பெறுவான் முதலோன்
நன் பட்டன தாள் நலம் வீட்டு நயம்
பின் பட்டனன் வான் பெறும் என்று அறைவார்

#102
அறைவார் அறை நீக்கி அரும் தவன் ஆங்கு
உறைவார் கையிலே தனி ஒவ்வொரு கோல்
இறை வாய் முறை என்று அதை ஈந்து எவரும்
முறை வாய் விதி கேட்ப மொழிந்தனன்-ஆல்

#103
மொய் பட்டு அலை நீர் முடுகும் தலம் மேல்
மெய் பட்டு எதிர் அற்று ஒளிர் மின் கொடியை
கை பட்டு உறல் ஓர்ந்து களித்து எவரும்
மை பட்ட வளன் தனில் அஞ்சினன்-ஆல்

#104
திறல் ஆர் திரு நீரிய தீம் கொடியை
பெறல் ஆக எனக்கு ஒரு பேறு உளதோ
துறவு ஆய் மணம் நீக்குப சொல்லிய பின்
உறல் ஆம் மணமோ என உள்ளினன்-ஆல்

#105
உள்ளும் பொழுதே இவன் ஓங்கிய கோல்
கள்ளும் கடியும் பொழி காமர் இதழ்
விள்ளும் செழு வெண் மலர் பூத்தமையால்
மள்ளும் விரை ஆலயம் மல்கியதே

#106
காம்பா அணி காட்டிய கன்னி நலத்து
ஓம்பா அணி இ அணி ஓர்ந்த பிரான்
நாம்பா அணி நம்பியை நல்கிட ஓர்
தேம்பா அணி பூங்கொடி சேர்த்தன் என்றார்

#107
செழும் தூய் துகிர் சே அடி பொன் நிற வாய்
விழும் தூவிய வெண் சிறை வேய் புறவம்
கொழும் தூவி கொடு ஓங்கி வளன் தலை மேல்
எழும் தூவியை நீட்டி இருந்ததுவே

#108
கண்ணா மணம் நான் செயல் ஆம் கசடு என்று
உள் நாணிய சூசை உளைந்து உருக
விண் நாதன் உரம் தரவே வெரு அற்று
எண்ணாதன காட்சியை ஈந்து அறைவான்

#109
துறவு ஆதல் தொடர்ந்து மணம் தொடராது
உறல் ஆவது எனோ திரு என் உளம் ஆய்
அற ஆலயம் ஆய அணங்கினை நீ
பெற ஆவிய பெற்றி அதே பெறுவாய்

#110
என்ற ஊடு ஒலி ஆய் இள வெண் புறவும்
தன் தூவி புடைத்து உயர் தாவிய கால்
வன் தூய் ஒளி வீழ்ந்து வளன் தலை மேல்
மின் தூவி நிலா முடி வேய்ந்ததுவே

#111
வேய்ந்தான் ஒளி வேந்து என வேய்ந்தது எலாம்
ஆய்ந்தான் அருளே அளிய அமுதே
தோய்ந்தான் கடல் தோய்ந்து என உம்பரினும்
வாய்ந்தான் தொழுதான் மது வாகையினான்

#112
வண் ஆம் கவின் ஆர் வயது ஈர் எழு கொள்
தண் ஆம் கலை தேய்த்து ஒளிர் தாள் கொடியை
எண்_நாங்கொடும் ஓர் வயது ஏகி மணம்
தெண் ஆம் கொடியான் செய வான் விதியே

#113
வடிய மலி மது நுகர அளி இனம் மலரை மருவு அன வழி எனா
நெடிய கொடியுடன் உரிய வர நிலை நிகர்_இல் நிறை அமை வளனின் மேல்
படிய விழி விழி படிய மனம் மனம் இனிதின் விழ விழு பரிவுடன்
முடிய வரு மணம் உரிய துணை இவன் முறையின் மொழிகுவர் எவருமே

#114
அருப்பு விரை மலர் தளிர்த்து நறு மது அவிழ்த்த வளன் உடை கொடியினை
கருப்பு விலின் இடை தொடுத்த பசு மலர் கதிர்த்த பகழி-கொல் என அவர்
நெருப்பு விட அது குளிர்ச்சி விடும் இது நிகர்த்த வினை அலது என இவர்
விருப்பு மலி அன தவத்தில் இணை அற விதித்த விருது என எவருமே

#115
அன்று நசையொடு நின்ற அனைவரும் அங்கண் அமைவன காணலால்
கன்று மனம் எழ இன்பம் மலி கடல் கன்றி முழுகிய வேலையே
நின்று குரவனும் மன்று அ கொடியொடு நின்ற வளனினை வா எனா
சென்று துணை அடி துன்றி வளன் அவை சென்னி மிசை தொழுதான் அரோ

#116
நாண நளினமும் நாண மதியமும் நாண அனையவும் நாரியை
காண மனம் எழு ஞான ஒளியொடு காமம் அற உறு காதலாய்
கோண மரபு அறு ஞான குரு அடி கோதை என அணி கோதையும்
யாணர் ஒளியொடு சாயு பிறை நுதல் ஈசன் அடி உற ஏத்தினாள்

#117
வாய்ந்த ஒளி இரு வான சுடரினை மானும் இருவரை வாழ்க என
சாய்ந்த முனிவரன் ஆசி மொழியொடு தாவி அணைகுபு தாங்கினான்
ஆய்ந்த இறையவன் ஏவு விதி முறை ஆகி இணை என ஆசியால்
வேய்ந்த மணம் இனி மேவி முடி தரல் வேத முறை என ஓதினான்

#118
காந்தள் மிசை ஒரு தாமரையின் அலர் காணல் என அரு மா தவன்
காந்தன் விரியு கை நான மலர் மிசை காந்தை கரம் அணிவு ஆகி வான்
வேந்தன் உமது உரி தாய முறை உரு மேவி வர எனும் ஆசியோடு
ஏந்த மறை முறை ஏது இல் முடிதர ஏது இல் அரு மணம் ஆயதே

#119
முடுகு முரசு ஒலி முடுகு முழவு ஒலி முடுகு முருடு ஒலி முடிவு இலா
கடுகு பறை ஒலி கடுகு கலம் ஒலி கடுகு கடம் ஒலி கனிவு எழா
தொடுகு குழல் ஒலி தொடுகு குரல் ஒலி தொடுகு துதி ஒலி தொடுதலால்
படுகு முகில் ஒலி படுகு கடல் ஒலி படுதல் இல மணம் ஆயதே

#120
வாழி அற உரு வாழி மறை உரு வாழி திரு உரு மானுவீர்
வாழி எமது உயிர் வாழி உலகு உயிர் வாழி உயிர் உயிர் போலுவீர்
வாழி அருள் நிலை வாழி தவ நிலை வாழி நில நிலை ஆயினீர்
வாழி என இவர் வாழி என அவர் வாழும் அரு மணம் ஆயதே

#121
பொறுமை அறு பகை பொதுளும் பழி அமர் பொதுளும் சினம் இடர் புரை அறா
நறுமை அறு சலம் நணுகு மறம் மருள் நணுகும் இருள் நிசி நயம் அறும்
சிறுமை உறு துயர் செறியும் மடி மிடி செறியும் வெருவு இழி சிலுகு நோய்
வறுமை மறு பவம் அனைய இவை இனி மடிய அரு மணம் ஆயதே

#122
நிறையும் ஒளியொடு திருவும் நயமொடு நிதியும் நனியொடு நெறி வழா
முறையும் மகிழ்வொடு கலையும் அறிவொடு முயலும் வலியொடு முரண் அறா
பொறையும் அளியொடு பொருளும் வரமொடு புகழும் நலமொடு புரை இலா
மறையும் அருளொடு தவமும் அறமொடு வளர அரு மணம் ஆயதே

#123
ஓசை எழு புகழ் ஓதல் எழு கடல் ஓதம் எழும் என வேதியார்
பூசை எழு துதி தூபம் எழு புகை போதும் எழு வெறி போழ்து இலா
சூசை எழும் ஒளி கோதை எழும் ஒளி சோதி இணை என வேய்தலால்
ஆசை எழு நயம் ஆய எழு திரை ஆழ அரு மணம் ஆயதே

#124
கன்னி முறையொடு நாயகனை ஒளி காலும் உடு என ஈனுதல்
என் இனிய முறை சூடும் இவள் என ஏக பரன் இடும் ஏவலால்
துன்னி இவள் துணை ஆக மணம் அமை போதில் இவன் உள தூய கற்பு
உன்னி மருவிய வானம் உளர் துதி ஓத அரு மணம் ஆயதே

#125
பாட மடவரர் பாட விறலியர் பாகு நனி செவி மேயலால்
நாட நய நலம் நாடும் அளவுடன் ஆகி நகரொடு நாடு எழா
கூட ஒளி விரி வான உலகினர் கூரு களி இசை கூறி இன்பு
ஆட இரு உலகு ஆக அளவு_அற வாழ அரு மணம் ஆயதே

#126
ஓய வினை இனி ஓவல் இல நிலம் ஓகை எழு கடல் ஊடு உலாய்
மாய இருள் தவிர் வான நிலையினர் வாழி என என வாசம் ஆர்
தூய மலர் மழை தூவி இசை மழை தூவி ஒளி மழை தூவலாய்
ஆய இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே

#127
ஒல்லை உளியவை உள்ளும் முறை செயும் உண்மை உள பரன் ஆசி தந்து
எல்லை இல நயம் உள்ளும் அமரரும் எண்ணி அறைவன ஆசியோடு
அல்லை அறும் நெறி உள்ள முனி முதல் அன்னவரும் இடும் ஆசியால்
வல்லை இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே

#128
உரைத்த விதம் கொடு ஆய முறை உவப்பில் நடந்த நாள் பலவும்
விரை தகவு உண்ட வாகையனை விளித்து அகலும் தன் ஊரில் உற
திரை தகவு உண்ட ஆர்வமொடு திளைத்து அருள் உண்ட ஆசி அறை
புரை தணிவு இன்றி வாழும் முனி புயத்தை அணிந்து கூறினன்-ஆல்

#129
அளிப்பட வந்த ஏவல் உணர் அளி பட விண்ட வாகை வளன்
ஒளிப்பட மன்றல் ஆய வரம் உவப்பில் இணங்கல் ஆகும் முறை
வெளிப்பட அன்று வேணும் என விழு படை அன்பு உலாவி உறு
களிப்பட நின்ற ஈசன் அடி கருத்தில் அணிந்து தாழுவனே

#130
உடுத்த அனந்த ஞான முறை உரைத்து உமிழ்கின்ற மான முனி
கொடுத்த வரங்களால் உயரு குணத்து வணங்கும் மா வரனை
எடுத்த பின் உண்ட ஓகை எழ எடுத்த முதிர்ந்த வேத முறை
அடுத்த அனந்த நீதி பல அவிழ்த்தனன் பின்பு கூறுவன்-ஆல்

#131
இருத்தி அகன்ற கேணி அறல் இறைத்த அளவு உந்தி ஊறும் என
பொருத்தி அமைந்த தேவ அருள் புணர்த்த அறம் கொடு ஏறும் அது
கருத்தில் ஒளித்த போது பசும் கலத்தில் ஒளித்த நீர் அது அறிந்து
அருத்தி எழும்ப வாழி என அணைத்து விரும்பி ஏவினன்-ஆல்

#132
இடித்து முழங்கும் ஏறு அனைய இவற்றை அறிந்த கோதை உளம்
வெடித்து வருந்தி மாறும் இல விதி குரு மன்னு பாதம் இல
நெடித்து வதிந்த கோயில் இல நெறி துணை நின்ற மாதர் இல
பிடித்து நடந்த வீதி இல பெயர்க்குவன் என்று வாடினளே

#133
உடை தனம் நின்று பேரும் என உயிர்த்தன மைந்தர் பேரும் என
குடைத்து அழல் புண் துழாவல் என குறைத்து உடல் ஒன்று பேரும் என
பெடை தணர் அன்றில் வாடும் என பெயர்த்து உயிர் நின்ற தேகம் என
அடைத்த அரந்தை காலும் என அரற்றி வருந்தி வாடினளே

#134
இருத்திய தந்தை தேவ உளம் என தெருள் உண்டு தேறி உயர்
கருத்தில் அணிந்த மாண முனி கழற்கள் பணிந்து காதல் எழ
பொருத்திய அன்பின் ஓகையொடு புடை துணை நின்ற பேதையரை
அருத்தி கலந்த நீர் இரிய அரற்றி அணைந்து தாழுவளே

#135
கனத்தில் எழுந்த ஓதையொடு கனத்தில் எழுந்த கூரலினர்
வனத்தில் எழுந்த தீ அனைய மனத்தில் எழுந்த பீடை உறீஇ
இனத்தில் எழுந்த ஆர்வம் மிக இதயத்தில் எழுந்த தேறலொடு
தனத்தில் எழுந்த கோயில் அது தலத்தில் எழுந்து போயினரே

#136
உடு குலம் உண்டு சூடினளும் உரு கொடு மன்று வாகையனும்
அடுக்கு நெருங்க யாரும் முறை அணி குலம் மண்டு கோயில் உறீஇ
எடுக்கும் நலம் கொள் நாயகனை இரட்டி இறைஞ்சல் ஆயின பின்
வடு குலம் ஒன்று இலாத முனி மனத்தில் உவந்து கூறுவன்-ஆல்

#137
கனத்தில் இழிந்து சாய வரை கரத்தில் விழுந்து பேர அரும்
வனத்தில் வளர்ந்து போக வயல் வயத்தில் மெலிந்து பாய அலை
இனத்தில் இரிந்து பேரும் இல இளி பட வந்த வாரி என
தனத்தில் இருந்த வாழ்வு இனிமை தவிர்க்கல் நிறைந்த ஞானம் அதே

#138
அற துணை அன்றி ஆய துணை அது அற்றம் அறிந்து உறாமை என
திற துணை நம்பு வீரர் பிறர் திறத்தில் மெலிந்து மாள்வர் என
மற துணை தந்த தீது தரும் மடத்து இழிவு என்று தேவ அருள்
உற துணை தந்த பாதம் அது உயிர்க்கு ஓர் அநந்த வீடு எனவே

#139
இவற்றை இயம்பி மீள மறை இயல்படு மண்டு நீதி பல
தவத்தை அணிந்த தேவ முனி தர தயை தந்த ஆசி தர
அவற்றை உணர்ந்த போது இருவர் அகத்தில் உயர்ந்து பாத மலர்
உவத்தை உவந்து தாழுகுவர் உகத்தில் உதிர்ந்த மீன் அனையார்

#140
இசை பட ஒன்றி ஈர் அறமும் எவர்க்கும் இலங்கும் ஆடியினர்
நசை பட நின்ற ஈசன் அடி நயப்பில் வணங்க வீழும் முறை
சுசைப்பு அவன் முன் தன் ஈர் அடிகள் துடைத்து வணங்கவே கனவில்
விசை படு திங்கள் மாலியொடு விழ தகை கண்ட ஆறு எனவே

#141
அணி தக எந்தை கூற இனிது அளி தக மன்றல் ஆதலொடும்
பிணித்த மனங்கள் வேறும் இல பிரித்த இரண்டு தேகம்-இடை
கணித்த விதங்கள் மாறும் முறை களித்து உயிர் ஒன்றி வாழ்க என
பணித்தனர் அங்கு யாரும் அறை பழிச்சல் கடந்த ஓகையிலே

#142
மிகுத்தனர் அங்கண் யாரும் அருள் விருப்பில் அருந்தி ஆசிகளை
வகுத்தனர் அங்கண் ஆய திரு மணத்தில் மிகுந்த சீர் அமைதி
தொகுத்தனர் எங்கும் யாரும் இல துணை பட ஒன்றி ஏகு அணிகள்
பகுத்தனர் அங்கு ஞான ஒளி பரப்பி நடந்து போயினரே

#143
ஆங்கு வம்-மின் வம்-மின் என ஆரணம் புனைந்த வடிவு ஆக வந்த மைந்தர் அகலாது
ஈங்கு நில்-மின் நில்-மின் என ஆகம் உண்ட இன்பம் மிக யாரும் வந்து அருந்த வரவே
தாங்கள் வம்-மின் வம்-மின் என யாரும் வந்து மண்டலொடு தாவி முன்பு பின்பு வரலால்
நீங்கள் நில்-மின் நில்-மின் என மீ முழங்கு எழுந்த நகர் நீடு நின்று நின்று பெயர்வார்

#144
காவி விண்ட மன்றல் இதழ் காலும் இன்பம் ஒன்றும் உரை காலுகின்ற நன்றி இயலால்
பூவில் இன்பு உமிழ்ந்த உயிர் போகுது என்று நின்ற நரர் பூசை கொண்டு கொண்டு துதியின்
ஓவியம் பொருந்த வெறு ஆய் உடம்பு நின்று உயிர் ஓவுகின்று பின்று செலவே
கோ இனம் பொருந்து இனவர் கோள் ஒளிந்து இரிந்த முறை கோசின் நின்று அகன்று பெயர்வார்

#145
மாசை உற்று உருண்ட உருள் தேர் உருட்டி வந்த வழி மாசை உற்று ஒளிர்ந்தது அனைய
ஆசை அற்று எழுந்த தவர் போக முற்று இடங்கள்-தொறும் ஆரணத்து அநந்த நயன் ஆய்
பூசை உற்ற உம்பர் இசை பாடல் உற்று அகன்ற வழி போய் ஒளி தகும் தம் உறையுள்
நாசரெத்தை என்ற நகர் தாம் அடுத்து அடைந்து உறைவர் நான் அடுத்து இறைஞ்சும் அவரே

#146
ஏதம் அங்கு ஒழிந்தது என நோவு அணங்கு ஒழிந்து நிறை ஏசு இல் இன்பு அடைந்து கடவுள்
பாதம் அங்கு எழுந்தது என ஞானம் அங்கு இலங்க இவர் பாழி வந்து அடைந்த பொழுதே
ஓதம் அங்கு எழுந்தது என ஊரில் நின்று அடங்கலரும் ஓடி வந்து அடர்ந்து மழை கொள்
சீதம் அங்கு அதிர்ந்தது என வாய் மலர்ந்து அறைந்த புகழ் சேண் அழுந்த மண்டும் ஒலியே

#147
அருகு மண்ட வந்து கொழு விழி உவந்து அருந்து நயன் அளவு அகன்று வந்து மிடைய
பெருகு மண்டு எழுந்த துகள் வெளியில் மண்டி மண்டும் இருள் பெருகல் இன்றி அங்கு குளிர
முருகு மண்ட மன்றல் மழை அனைய வம்பு உமிழ்ந்த மலர் முடுகுகின்ற மைந்தர் உளமே
பருகு மண்டு அநந்த அருள் அரிது சிந்துகின்ற இருவர் பதி அமைந்து எழுந்து புகுவார்

#148
விதி எழுந்து ஒளிர்ந்த மறை வடிவு அணிந்து அநந்த தவன் விருது அணிந்து அடைந்தது என வான்
மதி எழுந்து ஒளிர்ந்த அடி மரி எழுந்து அடைந்தாள் என மனம் எழுந்து உவந்த முறையால்
நிதி எழுந்து ஒளிர்ந்த உலகு உளர் எழுந்து அடர்ந்து வர நிறைய மண்டுகின்ற நசை செய்
பதி எழுந்து ஒளிர்ந்த நகர் புகுவர் இன்பு உமிழ்ந்து புவி பரிவொடும் புரந்த இவரே

#149
தகவு அடைந்த எந்தை திரு அடிகள் அங்கு இலங்க வழி தர வரம் கொள் அங்கண் இருவர்
புக மருங்கு எழுந்த மறை புக நிறைந்து அடர்ந்த அருள் புக அறம் செறிந்து புகவே
முகம் மலர்ந்து உவந்து அமரர் குடி அமைந்து உறைந்த நகர் முதிர் அநந்தம் உண்ட முறைகள்
அகம் மலிந்து உணர்ந்த தமிழ் கலை வருந்துகின்ற தொடை அளவின் நின்று அடங்க முறையோ

#150
இற்றை இனிது ஆயின பின் மற்றையவரும் தொடர
கற்றை மலி சோதி கருள் முற்று முகில் புக்கு அனைய
நிறத்து இயல் நில்லாமை என வெறுத்த சிறிது ஓர் மனையுள்
அறத்தின் இயல் மாண்பு உரிமை பெற தகவர் புக்கு உறைவார்

#151
புக்க இவரோடு புடை மிக்க நலம் யாவும் உறீஇ
சொக்கு அவிழும் வான் உலகர் ஒக்க நசை தூண்ட உறீஇ
மீட்பது இனி எந்தை உற வேட்பது செய் வீடு இது எனில்
கோட்பு அது இல நூல் முறையின் கேட்பது இனி வாழ்த்து உளதோ

#152
மங்குல்-இடை மாலி என அங்கு நுழைவார் எனினும்
எங்கும் உளர் காண உளம் பொங்கு நசை பூத்து வர
தெள் அரிய சேடர் மிசை உள்ளமொடும் ஊரும் விழி
கள் அவிழு கான் அலர்கள் விள்ள அளி வீழ்வது போல

#153
திங்களை உரிஞ்சு ஒளியை மங்கு அரிய தாளின் நலாள்
நங்கையரை ஞானம் மிகு தங்க உரை சாற்றலொடு
மாலை மது வாகை வளன் நூலை அறை நூழை உரை
ஆலை மது ஆக நிறை வேலை மடு விட்டது போல்

#154
இ உலகு உள் ஆய பொழுது அ உலகம் ஆவல் உற
செ ஒழுகு தேவன் அருள் வவ்வு இரு மைந்தர் இனை
சேர்த்து மணம் ஆக்கல் இவர் நீர்த்த மணம் நேரியதோ
தோற்றது எனவோ என உள் ஆர்த்து அறைகுவார் சிலரே

#155
துப்பு ஒளிறு செம்_சுடரோடு ஒப்பு ஒளிறும் ஒள் மதியம்
எப்பொழுதும் மீ திரிய அப்பொழுதில் ஆண்டகையும்
இ எழிலை ஒக்கும் என அ எழிலை ஆக்கினனோ
கு எழில்-கொல் வான் எழில்-கொல் வவ்வல் அரிது என்று அறைவார்

#156
மன்னரது மன்னன் இனிது உன்ன_அரிய ஒண் தவமே
துன்னலொடு துன்னு பயன் இன்ன மகர் காட்டும் என
தாவிது அது சந்ததியின் மேவி இவர் வேய்ந்து உறவே
ஏவினன் அநந்தன் என ஆவி அறைவார் சிலரே

#157
பொழுதும் இவர் பூண் இருமை எழுது மறை காட்டும் என
எழுது மறை ஒன்று எனினும் பழுது இல் இரு கல் எழுத
வேண்டியது நீதி என மாண்ட மறை காட்டும் இவர்
மீண்டு இவரை காட்டு மறை ஈண்டு அறிதும் என்று அறைவார்

#158
பொய் வினை பிரிந்த நயன் மெய்வினை உணர்த்தும் இவர்
செய் வினை அளிக்கும் என நொய் வினை குறித்த பரன்
மண் உலகும் வான் உலகும் நண்ணும் உறவோடு உற நாள்
அண்ணும் என இன்ன மணம் எண்ணும் எனும் ஓர் சிலரே

#159
முனிய அளி மொய்த்த துணர் குனிய உமிழ் தேறலினும்
கனிய இவை ஓதுதலின் இனிய இரு போதும் உறீஇ
நனை வரும் இரண்டு பெயர் வனைவு அரும் மணம் பெறலால்
புனைவு அரும் அநந்தம் உறீஇ அனைவரும் மகிழ்ந்தனரே

#160
தேன் கொடியை ஏந்தினனும் பூம் கொடியை வென்றவளும்
தாம் குடி இருந்து மறை ஆம் கொடி படர்ந்து வளர்
அரிய கொழுகொம்பு அனையர் புரிய அரிது ஈர் அறமும்
உரிய முறையோடு அணையல் விரிய அறைவாம் இனியே
மேல்

@6 ஈரறம் பொருத்து படலம்


#1
சுலவு உற்ற திரை ஆழி சூழ் புவனம் தாங்குகின்ற
அலைவு உற்ற உயிர்க்கு எல்லாம் ஆதரவு ஆம் திரு மணத்தால்
நிலவு உற்ற பதத்தாளும் நீர் மலர் கோல் பூமானும்
உலைவு உற்ற உளத்து அஞ்சி உளைந்து இரங்கி வருந்தினரே

#2
தேன் வழங்கும் பூம் துறை ஆம் செழு வாகை ஏந்து தவன்
வான் வழங்கும் இறையோன் தான் மனம் எழ முன் உணர்த்தமையால்
மீன் வழங்கும் முடியாள்-தன் விளம்பு அரிய மாட்சியொடு
கான் வழங்கும் தவ புங்கம் கணித்து அவளை வணங்குவன்-ஆல்

#3
இருள் நீக்கும் துறவு ஆக இதய நசை தூண்டு எனினும்
மருள் நீக்கும் கோல் தொடி தன் வாள் முகத்தால் எஞ்ஞான்றும்
கருள் நீக்கும் கதிர் உயிர்த்த காட்சியினால் உளம் வெருவி
அருள் நீக்கும் பொறி செறித்தோன் அஞ்சி உணர்ந்தவை சொல்லான்

#4
மின்னிய தாரகை முடியின் விளங்கு அரிய காட்சியினால்
துன்னியது ஓர் ஆவி பட தூய பளிங்கு ஆசு உறும் என்று
உன்னியதால் ஆடவரோடு உரைப்பு அறியா மடவாளும்
மன்னிய தார் துணையொடும் தன் மனம் காட்ட நாணுவள்ஆம்

#5
ஒப்பு அடையா துணை தந்து என் உடை கன்னி காப்பான் என்று
அப்பு அடை ஆர் கலி என்ன அலைந்த மனத்து உரம் செய்தாய்
வெப்பு அடையா மனம் குளிர விதித்தது எலாம் வெளியாகும்
தப்பு அடையா முறை அருள்தி தற்பரனே என தொழுதாள்

#6
வளம் ஆளும் திரு மடந்தை வருத்தம் கண்டு இரக்கு உறீஇ வான்
தளம் ஆளும் அரசு என்பான் தவிர்க்கு அரிய வய தன்மைத்து
உளம் ஆளும் முறை தன்னால் உரையாதும் உளம் தூண்டி
அளம் ஆளும் மலர் கொடியோன் ஆய்ந்து அறைய துணிவு ஈந்தான்

#7
உற்ற ஆறு உளத்தில் அறிவு உறாது உற்ற துணிவு ஓங்கி
சொற்ற ஆறு அறியேனேல் துகள் துடைத்த எந்தை வரம்
பெற்ற ஆறு உரைத்து அதற்கு பிரியாத ஓர் கைம்மாறும்
உற்ற ஆறு இவள் கேட்பேன் என வளன் முன் மொழி கொண்டான்

#8
வையகத்தார் வானகத்தார் வணங்குகின்ற வான் இறையோன்
மெய் அகத்தால் அருள் உணர்ந்து வெய்து அரிய துணைவி என
பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல்
மொய் அகத்தால் உணர்ந்து அடியேன் முயலும் கைம்மாறு உண்டோ

#9
மொய் படு வெண் திரை ஆழி மூழ்கி எழும் பதங்கனது
செய் படு வெம் கதிர் தாங்கி தெளிந்து அத்தம் கதிர் விடும் போல்
கை படு நன்று உளம் ஏய்ந்து கைம்மாறாய் நன்று செயும்
மெய் படு நல் முறை நீயே விதித்து அருள்தி என்று அறைந்தான்

#10
இன் இசையும் கோல் தேனும் இன் கனியும் கழை பாகும்
பன் இசையும் பாகு ஊறும் பணி யாழும் மாம் குயிலும்
அன்னவையும் நாண இனிது அம் சொல் நலாள் உளம் நாணி
சொன்னவை கொண்டு உணர்வு உரைப்ப துணிந்து துவர் வாய் மலர்ந்தாள்

#11
மின்னை அடை கடல் சூழ்ந்த வியன் உலகம் பரந்து அளிக்கும்
என்னை உடை இறைவன் அலால் என் உயிரை இனிது அளிப்ப
பின்னை அடைவது ஓர் காவல் பேதை பெற வேண்டியதேல்
உன்னை அடை யான் அடைந்த உவப்பு உரைப்ப பாலதோ

#12
இவ்வாறு ஒன்று அருள் புரிந்தே இனிது என்னை காத்து இறையோன்
வவ்வு ஆறு ஒன்று இல யாரும் மலி நன்றி யாவினும் நான்
ஒவ்வு ஆறு ஒன்று இல நன்மை உற்றதின் கைம்மாறு ஆக
செ ஆறு என்று உளத்து ஓர்ந்த சிறிது உரைப்பேனோ என்றாள்

#13
கான் பயிலும் முறுக்கு அவிழ் செம் கமலம் தேன் துளித்தது என
மீன் பயிலும் முடியாள் வாய் விரித்து உரைத்த தீம் சொல்லால்
தேன் பயிலும் மலர் கொடியோன் செவி இன்பு உண்டு அறைதி என
தான் பயிலும் விடை ஆகி தாழ்ந்து இவளும் மொழிகின்றாள்

#14
தணிக்க அரிது ஆம் ஐம்பொறிகள் சார் பொருள் சார்ந்து உளம் பிரிந்து
துணிக்க அரிது ஆம் விழைவு ஆதல் இளமையின்-கண் தோன்றுதலால்
கணிக்க அரிது ஆம் அருள் புரிந்த கடவுள் ஒன்றே மனம் சேர
குணிக்க அரிது ஆம் இருள் ஈனும் கோது இனிமை நசை வெறுத்தேன்

#15
நசை அற்ற மனம் ஓங்கி நாயகற்கே பலியாக
வசை அற்ற கன்னிமையின் வளம் காக்க நினைத்தேன் இ
திசை உற்ற காவலன் நீ சேர்ந்து அதனை காக்குதி என்று
இசை உற்ற மதி பதத்தாள் இணை அடி தாழ்ந்து இறைஞ்சினளே

#16
மீது-இடை ஊர் பானு உடுத்தாள் விளம்பிய சொல் கதிர் வெள்ளம்
காது-இடை ஊர்ந்து இதய செம் கமலம் முகை மேல் படவே
தாது-இடை ஊர் அமுது என நீர் தட கண் பெய்து உளம் மலர்ந்து
போது-இடை ஊர் மண கொடியோன் பொங்கு அருளால் புகல்கின்றான்

#17
புண் கனிந்த மருந்து ஒப்ப பொங்கு கருணாகரியே
விண் கனிந்த ஒளி இமைக்கும் வெம் சுடரோன் விரித்து உய்க்கும்
மண் கனிந்த கதிர் இருளை மாற்றும் என இனிது உரைத்த
பண் கனிந்த நின் சொல்லால் பாசறை செய் மருள் தீர்த்தாய்

#18
திரு உளத்திற்கு உணராது ஒன்று ஈங்கு உண்டோ செய் மணத்தோடு
இரு உளத்திற்கு உணர்வு ஒன்றாய் இசைத்த முறை நன்று அறிய
கரு உளத்திற்கு உணர்வு உண்டோ கருத்து உயர்ந்து தூண்டும் நசை
வரு உளத்திற்கு கருணை வலோன் வாய்ந்த தயை வழங்குவனே

#19
ஆசு அடை பூ_வனத்து உன்னை அமலன் எனக்கு அளித்ததனால்
மாசு அடை பூரியர் ஒத்த என் மனம் மலரும் என்று உணர
பாசு அடை பூம் கொடி தந்து பாசறை தீர் உரம் செய்யும்
தேசு அடை பூண் அறிவு உன்னை செழும் துணையாய் தந்தனனே

#20
அணித்து ஆக அரிது ஆய அருள் புரிந்த நாயகன் தாள்
பிணித்து ஆக நசையொடு நான் பெறும் வயது ஓர் ஈர் ஆறு
நணித்து ஆகி சாம்தனையும் நறும் கற்பு நலம் காக்க
குணித்து ஆகி கடவுள்-தனை சாட்சி என கூறல் உற்றேன்

#21
இளி செயும் என்று இ மணத்தை ஏவிய-கால் வெரு உற்றேன்
நளி செயும் என் உயிர் நாதன் நவை அறும் நின் கன்னிமையால்
அளி செயும் என் கற்பு இனிதாய் அளிப்பதற்கு அன்றோ மணம் ஆய்
களி செயும் என் இறைவற்கு ஓர் கைம்மாறு எது அறிகிலன் யான்

#22
கைம்மாறும் அரிது எனில் அ கடன் கழிப்ப வீவு அளவும்
பொய்ம்மாறும் காட்சியினால் பொற்பு உயர் எம் கற்பினை யாம்
மெய்ம்மாறும் செயிர் இன்றி வெய்ய மலர் என காத்து
மைம்மாறும் திரு தகும் தாள் வாழ்த்திடல் நன்றே என்றான்

#23
என்பதும் ஆங்கு உள் உருக இவர் இன்ப கடல் மூழ்கி
அன்பு அது வாழ் இல்லறத்தோடு அணிக்க அரிய துறவறத்தை
முன்பு அது ஆங்கு இல முறையான் முயன்று தமில் சேர்த்தமையால்
பின்பு அது வான் அதிசயிப்ப பெயர்ப்பு அரிய மாண்பு அடைந்தார்

#24
கண் புலன் ஆதி ஐம்_கதவு அடைக்கலான்
மண் புலன் உளது எலாம் மனம் புகாது உயர்
விண் புலன் முதல் எலாம் ஆளும் வேந்து இவர்
உள் புலன் தனித்து அடைந்து உவப்பில் ஆளும்-ஆல்

#25
ஐம்_கதவு அடைத்து அதற்கு அறம் நல் காவலாய்
தம் கதவு அடுத்த பல் பொருள் தடுத்து உளத்து
அங்கு அது கொணர் உணர்வு விட்ட பின் விடை
பங்கு அது பகர்ந்து உள பகை அற்று ஓங்குவார்

#26
மானமே வேலியாய் வகுத்த சொல் தரும்
ஞானமே தூதனாய் நயப்ப யாவரும்
தானமே தோழனாய் அறிவின் தன்மையால்
வானமே உறையுளாய் மடிவு_இல் வாழுவார்

#27
எள்ளலை கலந்த வாழ்வு இழந்து அகன்று வான்
வள்ளலை சிவணி உள் மலிய வாழுவார்
அள்ளலை கலந்த நீர் கடந்து அருந்து இலா
தெள் அலை சுனை அடுத்து உண்ட சீர்மை போல்

#28
கோல் திருந்தினர்க்கு எலாம் கோன் என்பான் பணி
நூல் திருந்திய முறை நுதலி ஆக்கிய
பால் திருந்து இவர் உளம் பழுது அற்று ஆண்டகை
வீற்றிருந்து ஆளும் ஆசனத்தின் மேன்மையே

#29
வெப்பு அருள் ஆசையை வெறுத்த சீர் கொடு
தப்பு அருள் பொருளினை தவிர்த்த ஆண்மையால்
அ பொருள் படைத்தனை அடைந்த மாண்பினர்
எ பொருள் அனைத்திலும் இதயத்து ஓங்கினார்

#30
எள்ளும் ஓர் நவை இலாது எனினும் யாக்கையை
உள்ளும் ஓர் தவத்தினால் ஒறுத்த தன்மையார்
விள்ளும் ஓர் மலர் உலை பெய்து வீழும் நீர்
கொள்ளும் ஓர் மணம் என குணம் கொண்டு ஓங்கினார்

#31
பொன் ஒளி காட்டும் எரி பொறிகளோ மணி
பன் ஒளி காட்டிய பாடையோ உரு
உன் ஒளி காட்டிய உளியனோ உளம்
தன் ஒளி காட்டிய தவம் அது ஏந்தினார்

#32
மீன் ஒளி விழுங்கிய மேகம் போல் நசை
தான் ஒளிந்து இறைவனை உணரும் தன்மையால்
வான் ஒளிர் காட்சியால் வளன் விளங்கி உள்
பானு ஒளி விழுங்கிய பளிங்கு ஒத்து ஆயினான்

#33
உண்ட செம் கதிர் உமிழ் அத்தம் ஒத்து அவன்
விண்ட செம் கமலம் மான் இதயமே ஒளி
மண்ட வெம் கதிர் என மலிந்த காட்சியை
கொண்ட சொல் இறைவனை வாழ்த்தி கூறுவான்

#34
அற கடல் நீயே அருள் கடல் நீயே அரும் கருணாகரன் நீயே
திற கடல் நீயே திரு கடல் நீயே திருந்து உளம் ஒளிபட ஞான
நிற கடல் நீயே நிகர் கடந்து உலகின் நிலையும் நீ உயிரும் நீ நிலை நான்
பெற கடல் நீயே தாயும் நீ எனக்கு பிதாவும் நீ அனைத்தும் நீ அன்றோ

#35
கார் திரள் மறையா கடலின் உள் மூழ்கா கடை இலாது ஒளிர் பரம் சுடரே
நீர் திரள் சுருட்டி மாறு அலை இன்றி நிலைபெறும் செல்வ நல் கடலே
போர் திரள் பொருத கதுவிடா அரணே பூ_வனம் தாங்கிய பொறையே
சூர் திரள் பயக்கும் நோய் திரள் துடைத்து துகள் துடைத்து உயிர் தரும் அமுதே

#36
விண் கிழித்து ஓங்கி மின் பயில் கொடிஞ்சி வேய்ந்து உயர் தேர் திரள் காப்போ
கண் கிழித்து ஒளி பாய் வாள் திரள் காப்போ கால் தவிர் பரி திரள் காப்போ
மண் கிழித்து ஒழுகும் புனல் என சீறி மதம் பொழி கரி திரள் காப்போ
புண் கிழித்து அடலார் காப்பு அதோ நீயே புரந்து செய் காப்பு அது காப்பே

#37
வஞ்சினர் உளம் போல் அளக்க அரிது ஆழ்ந்த வாரணத்து-இடை வழி கீண்டி
அஞ்சினர் நனையா கடக்கவே தந்தாய் ஆறு நின்று அதர் விட தந்தாய்
துஞ்சினர் சுகத்தில் இனிது மூ இளையோர் சிகிக்கு-இடை குளிர்ந்து உற தந்தாய்
எஞ்சினர் உன்னை நம்பிய தன்மைத்து இயற்ற ஒன்று உனக்கு அரிது உண்டோ

#38
தலை எழும் வரையோடு உயர்ந்த மற்ற எவையும் தகர்ப்ப வான் ஏறு உமிழ் முகிலே
முலை எழும் பயன் நேர் உமிழ்ந்த நீர் குழிவின் முடுகி வந்து இனிது உறைவது போல்
அலை எழும் கடல் சூழ் புடவியில் செருக்கு உற்ற அசடரை தாழ்த்திய கையால்
கலை எழும் பயனால் தாழ்குவர் எடுத்து களிபட கருணையே செய்வாய்

#39
வான் முகத்து எழுந்து ஈங்கு உலகையே நோக்கி மாலி தன் செழும் கதிர் கோலால்
கான் முகத்து அரிது ஓர் ஓவியம் என்ன கடி மலர் எழுதிய வண்ணம்
நூல் முகத்து அடங்காத அன்பில் என் தணிமை நோக்கி முள் கான் பொருவு என் உள்
தேன் முகத்து அவிழ்ந்த பூம் பொழில் ஒப்ப திருத்திய நினது அருட்கு அளவோ

#40
காய்ந்த போது அழல் முன் வை என உன் முன் காய்ந்து எரியாதது உண்டோ கருணை
ஈய்ந்த போது அருத்தி பின் உற அளிப்பாய் இருள் தவிர் காட்சியால் அனைத்தும்
ஆய்ந்த போது இருளும் உள்ளமும் கடந்தே அறிகு இலாது ஏது உண்டோ மனு ஆய்
வேய்ந்த போது அன்றே என் உயிர் இன்ப வேலையில் மூழ்குப செய்வாய்

#41
வளி சிறை ஆக பொங்கு அலை கீண்டி மரக்கலம் போயின வழியும்
ஒளி சிறை ஆக விண் திசை கீண்டி ஓதிமம் பறந்தன வழியும்
அளி சிறை ஆக நினைவு செல் வழியும் ஆய்ந்து அவை அடைகினும் ஆர்வ
களி சிறை ஆக நீ வரும் வழியே கண்டு அதை அடைவது பாலோ

#42
உணங்கிய மரத்திற்கு உயிர் வர பெய்த உறை என வருதியே உலகிற்கு
இணங்கிய இருளை சீக்க வெம் கதிர் கொள் இரவி போல் வருதியே எஞ்சாது
அணங்கு இயற்றிய வெம் பழம் பழி கூளிக்கு அரி என வருதியே உன்னை
வணங்கிய நல்லோர்க்கு அருள் புரிந்து அன்னை வரும் என வருதியே என்றான்

#43
சூல் மலி முகில் பெய் மாரியால் பெருகி சுருட்டு அலை கரை அகட்டு அடங்கா
தேன் மலி காவும் கழனியும் நிறைப்ப திரை புரண்டு உலவிய வண்ணம்
நூல் மலி யோகத்து உணர்ந்தவை பொங்கி நுதலிய இவற்றொடு பலவும்
தான் மலி உவப்பின் சாற்றுவான் உயர் வான் தளம் தொழும் தவத்து இறை என்பான்

#44
தேன் உண்ட உவப்பில் குயில் இரண்டு உண்ட தேன் உமிழ்ந்து என தம்முள் இசலி
பானு உண்ட நிழல் செய் சினை அடுத்து இனிதாய் பாடிய வண்ணமே ஒரு நாள்
கான் உண்ட கொடியோடு ஆரணம் பூண்ட காவலனோடு உயிர் விளக்கும்
மீன் உண்ட முடியாள் ஞான பல் விதிகள் விளம்பிய முறை உரைப்பு அரிதே

#45
பொருள் கொண்டு எவையும் ஆக்கினன் அ பொருளில் குன்றா புகுந்துளன் ஆய்
மருள் கொண்டு அவை கொள் மாறும் இலா வயிர குன்றின் நிலை கொண்டோன்
அருள் கொண்டவர்க்கு அல்லால் உண்டோ ஆவல் கொண்ட உயிர்க்கு நிலை
சுருள் கொண்ட அலை நீர் சூழ்ந்த புவி சூழ்ந்தால் என்றான் பூம் துசத்தான்

#46
தேர் மேல் தியங்கும் பதாகை அதோ சிகரி சிந்தும் சிந்து அலையோ
நீர் மேல் படரும் சைவலமோ நீர் மேல் ஆடு குமிழிகளோ
தார் மேல் பனியோ நுண் மணல் மேல் தடத்தில் வரைந்த உணர்வு என்றோ
பார் மேல் கடவுள் நிலை இல்லார் பான்மை என்றாள் மீன் முடியாள்

#47
நிலை கொண்டேனும் அ நிலையால் நிலைக்கும் பயன் ஒன்று உயிர்க்கு உண்டோ
அலை கொண்டு அவியா மொய் கடல் போன்று அயர்ந்து மயங்கும் மனம் நிலை கொண்டு
உலை கொண்டு எரித்தால் போல் நசையை உய்க்கும் துயர் அற்று உள் குளிர
கலை கொண்டவரும் ஈங்கு ஏதோ கண்டார் என்றான் பொறி செறித்தான்

#48
கனவில் பிடித்த தனம் என்றோ கனம் நின்று ஒல்கி பாய்ந்த மின்னோ
சினவி திளை தீ முன் வையோ திளைப்ப உவரில் பெய் உறையோ
நினவிற்கு ஊமன் உணர் தூதோ நிசி நாடகர் கொள் கோலம் அதோ
என இ திசை கொள் வாழ்வு அனைத்தும் என்றாள் பிறை தேய்த்து ஒளிர் பதத்தாள்

#49
நிந்தை பொதுளும் வாழ்வு அடை முன் நினைவை தூண்டும் ஆசை சுடும்
சிந்தை பொதுளும் என்று அடைந்தால் சிந்தை வருந்த வெறுப்பு எய்தும்
எந்தை பொதுளும் தாய் வினையால் இரங்கி புரிந்த அருள் ஒன்றே
நந்தை பொதுளும் நசை நிறைய நயக்கும் என்றான் மறை வடிவான்

#50
கனியோ கழையோ கழை கான்ற கனிந்த பாகோ கோல் தேனோ
நனி ஓகையினால் கூட்டியது ஓர் நறவோ உயிர் செய் மருந்தோ வான்
தனிலோ வழங்கும் அமுது என்றால் தகுமோ எந்தை அருட்கு இவையே
இனி ஓர் உவமை ஈங்கு உண்டோ என்றாள் வழுவா மறை மொழியாள்

#51
தேவ அருள் அல்லால் இங்கண் தேடற்கு உரிது ஓர் பயன் உண்டோ
மேவ நயம் செய் மற்று எவையும் விரும்புகின்ற நசை தானே
ஓவ வினை செய்து அதின் ஊங்கும் ஒன்னார் உண்டோ உயிர்க்கு எல்லாம்
பாவம் மலிதற்கு என்று உரைத்தான் பகை பேய் நடுக்கும் பரிசு அன்னான்

#52
நக்கி கொல்லும் நச்சு அரவோ நயம் செய்து உயிர் உண் கொடுங்கோலோ
பக்கிக்கு இட்டது ஓர் இரையோ பயனுள் கலந்த நஞ்சு அதுவோ
புக்கு இற்று ஒக்க யாவும் அற பொறி தீ ஒளி என்று எரிப்பதுவோ
இக்கு இச்சிக்கும் நசை என்றாள் எரி வான் நயக்கும் பரிசு அன்னாள்

#53
பவமே பழித்து பூ_வனத்தில் படர்ந்த அணங்கு இற்று உயிர் காத்து
துவமே நயனை பயத்து உய்க்கும் துணை ஏது என்னின் மன் உயிர்க்கு ஈங்கு
அவமே துயர் செய் நான் எனது என்று ஆய இரு பற்று இனிது அறுக்கும்
தவமே உயிர்க்கு ஓர் துணை என்றான் தவத்தின் பவ்வ கரை கண்டான்

#54
பொதிரும் முள் தாள் தாமரையோ பொதிர் முள் புற உள் சுவை கனியோ
அதிரும் ஒலியால் வெருவு உய்த்தே அவனி உவப்ப பெய் முகிலோ
எதிரும் ஒன்னார்க்கு ஓங்கு அரணோ எவரும் அஞ்சும் உரு காட்டி
கதிரும் இன்பு ஆர் தவம் என்றாள் கருணை பவ்வ கரை இல்லாள்

#55
மொய்யும் துறவே எந்தை அடி முறைகொண்டு அடைய வழி என்றால்
பொய்யும் இருளும் பொதிர்ந்தது எலாம் போக்கும் துறவோ குறை என்பார்
கொய்யும் புரை தீர் இறைவன் அருள் கொடுக்கும் துறவே இன்பு அலையே
மெய்யும் உயிரும் நீ என்றான் விளங்கு ஈர் அற கண்ணாடியினான்

#56
தாயும் நீயே தந்தையும் நீ தாவும் நசை நாட்டு இயம் நீயே
தீயும் நசை தீர் நசை நீயே செல்வம் நீயே உயிர் இனிதின்
தோயும் அலை நீ ஆகி உனை துறவாது அணுகல் செய் துறவோ
காயும் வினை என்பார் என்றாள் கதிப்பால் காட்டும் கஞ்சனத்தாள்

#57
என்றான் அவன் என்றாள் அவள் என்று இன்ப கடலில் மூழ்கி உளம்
குன்றா வியப்போடு எய்திய வான் கொண்ட தளமும் பொங்கு உவப்பின்
பொன்றா மணமும் தேன் திரளும் பொழி பூ_மழையை பொழிந்து ஆசி
ஒன்றாய் எவரும் உரைத்து நிற்ப உயர் வானவர் ஒத்து இவர் வாழ்ந்தார்

#58
துறவினால் உடல் துறந்தன உயிர் என தோன்றி
நறவினால் நறை நறும் துணர் விள் அலர் போல் இல்லற
வினாவுடன் அனைவரும் ஓம்பிய அன்பின்
உறவினால் உலகு உயிர் எலாம் உடல் என கொண்டார்

#59
தாழு பான்மையோர் தகவு உடை பான்மையோர் என்னா
சூழும் யாரையும் சூழ்ந்து சூழ்வு அரு நயம் செய்வார்
கீழும் மேலும் என்று உணர்கிலாது உறுப்பு எலாம் கிளர்ப்ப
வாழுமே உயிர் மலிந்து உடல் உலவிய போன்றே

#60
துய் அம் தாய் உரி தொடர்பினார் சுட புகன்றவர்க்கும்
மய்யம் தாவிய மனத்து எழும் அன்பின் நன்று இயற்றல்
நொய் அம் தாதுகள் நோவ உள் குடைந்து இமிர் அளிக்கும்
செய் அம் தாமரை திளைப்ப நல் விருந்து இடும் போன்றே

#61
வாய்ந்த மாண்பினர் வருந்தலும் செய்குவர்க்கு உள்ளம்
தோய்ந்த ஆர்வு உற துறவிய நலம் நிறை அளித்தல்
காய்ந்த ஆலையின் கரும்பினை முறுக்குதற்கு அளவில்
ஈய்ந்த பாகு இனிது இரிந்து எலாம் நிறைந்தன போன்றே

#62
வருந்தினார் முகத்து எழுதிய வருத்தமே கண்டால்
விருந்தினார் முகத்து அழைத்து அவர்க்கு ஊட்டிய மிடை தேன்
திருந்து இன் ஆர் முகத்து உரைத்த சொல் திளை மது செவியால்
அருந்தினார் முகத்து எழு நய கடலின் ஆழ்ந்து அகல்வார்

#63
கூர்ந்த நன்மையை கூறிய பயனினால் எவரும்
சேர்ந்த தன்மையின் செயிர் அற ஓங்கி வேறு ஆவார்
ஆர்ந்த பொன் வரை அடுத்து உறை காகமும் கருமை
பேர்ந்து அ பொன் வரை பேர் எழில் பிளிர்ந்தன போன்றே

#64
போய தாதையர் ஈட்டிய பொருள் எலாம் பொறை என்று
ஆய ஆயின அனைத்தையும் ஆலயத்து ஒரு-பால்
நேயம் ஆருயிர் நேரிய இரவலர்க்கு ஒரு-பால்
தூய ஆரியர் விரைந்து அரும் தொடர்பொடு தொகுத்தார்

#65
துன்பு துன்றிய பொருள் என அனைத்தையும் தொகுத்த
பின்பு துன்றிய பேர் அரிது அன்பு உளம் தூண்டி
என்பு தந்தினும் இனிது என ஈயவும் உழைத்தே
அன்பு தந்து உணவு அளித்து உணவு ஆம் மழை போன்றார்

#66
சிறுமையார் துயர் சிதைத்து இரந்து ஆயினும் அளித்து
வறுமையார் பலர் வறுமை தீர் திருவினர் ஆகி
உறுமை ஆர் முகில் உறை இரந்து உயிர்க்கு எலாம் உகுத்த
நறுமை ஆர் நளிர் நறு மலர் வாவியே போன்றார்

#67
தாய் ஒத்து ஆர்வொடு தரித்திரர்க்கு அனைத்துமே ஆகி
தீ ஒத்த ஆகுலம் தீர்த்து உளம் குளிர வண் முகில் ஆய்
பேய் ஒத்தால் அதை பெயர்க்க அணி ஒத்தனர் பெயரா
நோய் ஒத்து ஆய கால் நுகர்ந்து உயிர் தரும் மருந்து ஒத்தார்

#68
பொய் என படர் புழை பட குடைந்த புண் உடலை
மெய் என தயை வேர்விடு நெஞ்சினார் நோக்கி
ஐ என தமுள் இரங்கிய தன்மையோடு அ புண்
நொய் என கதிர் உதித்து இருள் என மறைந்ததுவே

#69
காவி உண்ட அருள் கண்ணினார் முகமன் நோக்கலின் ஆங்கு
ஆவி உண்ட சாவு அதை கடிது உமிழ்ந்ததே அமலன்
ஏவியும் தவிர்த்து ஏகிய இயோனசு என்றவனை
தாவி உண்ட பின் தந்தன திமிங்கிலம் போன்றே

#70
ஓதும் முற்று அருள் உரையினால் எவரும் உள் காம
கோது முற்று அழல் குளிர நீக்குவர் கரம் பிடித்து
தீது முற்று அழல் திளைத்த போது இலோத்து எனும் அவனை
சோதுமத்தில் நின்று அமரரே துரத்தினர் போன்றே

#71
அன்பின் காணியார் அன்பொடு வீங்கும் இல்லறம் செய்
இன்பின் காதலால் இன் உயிர் தன்னிலும் எவர்க்கும்
நன்பின் காவலாய் நவை அற நயன் எலாம் நல்கி
முன்பின் காசினிக்கு இணை_இலா முயன்றதற்கு அளவோ

#72
ஆலம் முற்றிய அகல் புவி நயன்பட அருளின்
கோலம் முற்றிய குணத்து இவர் கெழுவிய கருணை
நீலம் முற்றிய நெடும் வரை எங்கணும் குளிர
சீலம் முற்றிய சினை முகில் பொழிந்தன போன்றே

#73
கானக துறவு ஆயினர் இன்னணம் கனிவாய்
வானகத்து உறவு ஆயின இல்லறம் வனைந்தார்
மான் அகத்து உற மனுவொடு தெய்வதம் இறையோன்
ஊன் அகத்து உற உரம் கொடு புனைந்தன போன்றே
மேல்

@7 ஐயந்தோற்று படலம்


#1
மாசு அறு துறவோர் அன்ன வட திசை உள்ளி வெய்யோன்
காசு அறு மேடம் உற்று களித்த பங்குனி நாள் கன்னி
ஆசு அறு கடவுள் எய்தி அவதரித்து உடலம் போர்த்த
ஏசு அறு காதை பாட இணை அவன் அடி மேல் கொள்வாம்

#2
தண் படு கொழுகொம்பு ஊன்றி தலை படர் வல்லி அன்ன
தெண் படு மது பூ வாகை சேர்த்த நல் துணைவனோடு
விண் படும் உடுக்கள் சூழ்ந்த விரை கொடி கன்னி இவ்வாறு
எண் படும் அளவு அற்று ஆய்ந்த ஈர் அறம் புனைந்த நாளில்

#3
குணிக்க_அரும் கருணை ஆர்ந்த குணத்தை ஆறு அமைந்த நாதன்
தணிக்க_அரும் குணுங்கை வென்று தரணியை புரந்து காக்க
கணிக்க_அரும் வளமை பூத்த கன்னியின் வயிற்றில் தான் ஈங்கு
அணிக்க_அரு முறையால் மைந்தன் ஆக உள் கருத்து உற்றானே

#4
மணம் முடித்து ஏழாம் திங்கள் வளர்ந்து தேய்ந்து ஒழுகா முன்னர்
கண முடி கன்னி உள்ளம் கனிவு இயைந்து அமைய கஞ்ச
மண மடல் குவியும் காலை வந்த பங்குனி ஐ_ஐ நாள்
கணம் என கபிரியேலை கடவுளே விட்டான் அன்றோ

#5
தூது என வலியோன் ஆய கபிரியேல் சுடரை சூட்டி
கோது என அ இருளை நீத்த கோதை-கண் விரைவில் சென்று
சீது என மதியம் தாங்கும் சே அடி பணிய வீழ்ந்து
போது என வழிந்த தேனை பொருது வெல் உரை உற்றானே

#6
பொய் அகன்று எழுவ தெய்வ பூரண ஓகையாளே
ஐ அகன்று உவப்பின் நாதன் அடைந்து வாழ் நெஞ்சத்தாளே
வையகம் வைகும் வாய்ந்த மாதருள் எண்_இல் ஆசி
துய் அகம் பொலிய பூத்த சுந்தரி வாழி என்றான்

#7
கனிக்கு அளவு உயர்ந்த கோடு வளையும் போல் கருணை ஆர்ந்த
நனிக்கு அளவு எளிமை பூத்த நறுமையில் பொருவா கன்னி
தனக்கு அளவு அகன்ற ஆசி சாற்றிய சொல்லை ஆய்ந்த
மனக்கு அளவு உளைந்து நாணி வரைந்த ஓவியமே ஒத்தாள்

#8
கலங்கின அகத்தும் தெள் நீர் கடல் அளறு ஆகா வண்ணம்
மலங்கின அகத்தும் கன்னி மயக்கு உறாது உரன் உற்று ஓங்கி
துலங்கின அகத்து உன் ஏவல் தொடர் நெறி தோற்றுவாய் என்று
இலங்கின அகத்துள் உள்ளி இறைவனை வணக்கம் செய்தாள்

#9
பளிங்கு அடுத்தவற்றை காட்டும் பான்மையால் இவள் முகத்தில்
உளம் கடுத்தவற்றை ஓர்ந்த கபிரியேல் உறுதி சொல்வான்
விளங்கு அடுத்து இறைவற்கு அன்பு மீது உற உவகை பூத்த
வளம் கடுத்து உயர்ந்த மாதே மயக்கு உற வருந்துவானேன்

#10
மதி பழித்து இலங்கு சங்கின் வாய்ந்த சூல் பழித்து ஈங்கு உள்ள
விதி பழித்து அரிய ஆற்றல் வேய்ந்தது ஓர் கருப்பம் ஆகி
நிதி பழித்து ஒளிர்ந்த தோன்றல் நீய் பயந்து அவற்கு இயேசு
துதி பழித்து இட்ட நாமம் சொற்றுவாய் கன்னி மாதே

#11
அளி அமைந்து உயிர்த்த செம்மல் அநந்தன் சேய் என்ன நேமியுளி
அமைந்து அரசு தாவித்து உயர்ந்த கோல் ஓச்சி நாளும்
களி அமைந்து அளித்த பாரில் காவல் என்று ஆள்வான் என்ன
நளி அமைந்த இனிய சொல்லை நவின்று அடி வணங்கிட்டானே

#12
தொய்யல் உற்று இறைவன் தாளை தொழுது வாழ் திரு வல்லோனே
மய்யல் அற்று அழிவு_இல் கன்னி மைந்தனை பெறுதல் ஏது என்று
அய்யம் உற்று இவள் வினாவ அரிய மாது அடியை போற்றி
வெய்யில் உற்று அடைந்த தூதன் விடை மொழி உரைப்பான்-மன்னோ

#13
கார் உலாம் உலகும் ஆங்கு கதிர் உலாம் சுடரை எல்லாம்
கார் உலாம் உலகும் யாவும் காரணம் ஒன்றும் இன்றி
சீர் உலாம் வயத்த நாதன் செய்தலின் மகவை ஈன்றும்
சீர் உலாம் கன்னி ஆதல் சேர்த்தலே அரிது என்பாயோ

#14
மகன் பெறும் வயது முற்றி மைமை ஆம் எலிசபெற்கும்
தகல் பெறு கருப்பம் ஆகி தவன்ற வெண் திங்கள் ஆறு ஆய்
பகல் பெறு கன்னியாய் நீ பழுது இலா சிறுவன் ஈனல்
இகல் பெறு வினை என்றாலும் இறையவற்கு எளியது அன்றோ

#15
ஆவதும் கடந்த காட்சிக்கு அரும் தவன் ஈசயீயன்
நோவதும் இன்றி கன்னி ஒரு மகவு உயிர்ப்பாள் என்ன
கோ அது இறைவன் சொன்ன கூற்று என உரைத்தல் பொய்யா
யாவதும் அறிதி அல்லால் யான் நினக்கு உரைப்பது என்னோ

#16
நேயம் ஆம் பிரீத்து சாந்து நிழன்ற தண் கவிகை கீழ் நீ
தாயும் ஆய் ஒன்று ஆம் மூவர்-தமில் சுதன்-தன்னை ஈன்றும்
தூய மா கன்னிக்கு ஏதம் தோன்று இலா சுடரின் ஊங்கு
மாயமாய் காக்குவான் என்று அஞ்சலி செய்திட்டானே

#17
தேற்று உரை உரைத்த தூதன் செப்பிய யாவும் கேட்டு
வேற்று உரை உரைத்திலாள் உள் விழைவு உற இறைவன் தாளை
போற்று உரை உரைத்து கேட்ட புதிவினை ஓர்ந்து உசாவி
ஏற்று உரை உடைத்த கன்னி இரவு எலாம் போக்கினாளே

#18
அருள் புறம் கண்ட செல்வத்து அமலை முன் எளிமை உள்ளி
வெருள் புறம் கண்டு கூசி வெறுத்தலோடு அமைதல் தேற்றாள்
தெருள் புறம் கண்ட மீனின் திரு முகத்து ஒளி வில் வீச
இருள் புறம் கண்ட பாரிற்கு எரி விளக்கு ஒப்ப நின்றாள்

#19
இன்னவாய் உசாவும் வேலை இளம் பிடி அன்ன ஓர் நல்
கன்னி வாய் மொழியை கேட்ப கடவுளும் கடவுள் தன்னை
துன்னி வாழ் அமரர் யாரும் துகள் தவிர்ந்து உலகம் எல்லாம்
அன்ன வாய் உய்யும் என்ன அவாவொடு நிற்பார் அன்றோ

#20
சூழ் திரை உடுத்த பாரில் தோன்றிய நவத்தை காண்டற்கு
ஆழ் திரை விரைவின் நீக்க ஆதவன் கதித்து தூண்டும்
தாழ் திரை ஆழ்ந்த பாய்மா தழல் சினத்து உயிர்த்தது என்ன
கீழ் திரை கவிந்த வானம் கேழ் ஒளி சிவந்தது அன்றோ

#21
நல் நிலா உதயத்து எந்தை நயப்பு உற வியப்ப வானோர்
மன்னி யாம் எவரும் வாழ்க வந்த வானவனை நோக்கி
கன்னி தாழ் சிரத்தை கோட்டி கடவுள் ஆள் என்னை இதோ
பன்னி ஆயின நின் வாய் சொற்படி எனக்கு ஆக என்றாள்

#22
என்றுளி கடுத்த அன்பால் இதயம் கூர்ந்து உயிர்த்த செந்நீர்
மின் துளி மூன்றும் சேர்ந்து ஓர் மெல் உடல் ஆய் உள் ஆவி
சென்றுளி மனுவும் வாய்ந்த தெய்வமும் பொருந்த வீக்கி
ஒன்றுளி இறைவன் மைந்தன் ஓர் மனு_மகனும் ஆனான்

#23
மீ அகன்று உயர்ந்த மாண்பாள் விளங்கவே உலகம் மூன்றும்
ஆய் அகன்று ஒன்று நீத்து ஐயாயிரத்து இருநூறு ஆண்டில்
பாய் அகன்று ஒளியின் சான்றோன் படர் இருள் நீக்கு முன்னர்
நாயகன் மருளை நீக்க நான் என ஆயினானே

#24
ஆதனே விதித்த நாளும் அமையமும் ஆகும் வேலை
ஏதமே விளைத்த ஆதன் இழிவு ஒழித்து உயிர்கள் யாவும்
நாதனே அளிப்ப சுங்க நாளையில் உதித்து முன்னோர்
வேதமே உரைத்த வண்ணம் விகலம் அற்று ஆயிற்று அன்றே

#25
யாழ் இசை பழிப்ப வானோர் இனிது என பாட ஆங்கும்
ஆழ் அலை பழிப்ப தொய்யல் ஆர்ந்த தாய் நயப்ப வெய்யோன்
கேழ் ஒளி பழிப்ப அன்ன மனை ஒளி கிளர்ப்ப வானில்
வீழ் உறை பழிப்ப எங்கும் விழு நயன் பொழிந்தது அன்றோ

#26
பளிக்கு வேய் செப்பில் உண்ட பருதி சூழ் எறிக்கும் வில்லால்
தெளிக்குமே போலும் தேன் பெய் செழு மலர் முகைகள் மோதம்
அளிக்குமே போலும் வாய்ந்த அன்ன மா கன்னி மாட்டு எ
உளிக்குமே மணமும் வில்லும் ஒளி முகத்து ஒழுகிற்று அம்மா

#27
சேய் என தன்-கண் வந்த தேவனை வணக்கம் செய்து
தாய் என திறம்பா கன்னி தன் உயிர் கிளர்ப்ப தாறு_இல்
தூய் என துளித்த மாரி தொகையின் மேல் வரங்கள் வாரும்
வாய் என கண்ட வானோர் வாய் அடைத்து அஞ்சா நின்றார்

#28
அஞ்சிய வணக்கத்தோடும் அஞ்சலி செய்து தாயும்
துஞ்சிய உயிர்கள் உய்ய தொடர்பொடு ஈங்கு எய்தி ஆர்வம்
விஞ்சிய சேயும் வாழ்த்தி விரும்பி வான் வாழ் உயர் வீட்டை
எஞ்சிய விழுப்பத்து ஓங்கி இனிது என பாடா நின்றார்

#29
வாழும் வான் உளோர் யாமும் மருவு நன்றி மேல் உயர்ந்து
ஆழும் ஆழி சூழு பாரில் அரிவை உண்ட தே அருள்
சூழு சூல் இது ஆய போது சுடர் எரிந்த வானும் மேல்
தாழு பூமி ஏற ஆய தகவு வாடு இல் ஆவதே

#30
வாடு இலாது மாறு இலாது மணம் எறிந்த பூம் கொடி
கேடு இலாது உலாவு தேறல் கிளர் அரும்பு சூல் உறீஇ
ஈடு இலாது ஞாலம் மேவும் இழிவு அமைந்த நோய் அற
காடு யாவும் வாசம் ஆரு கனியை ஈனும் நாள் இதே

#31
நாள் இதே உவப்ப ஞாலம் நசை அமிழ்ந்து இரா அற
கோள் இதே கடுத்த தீது கொணர் குணுங்கின் நோய் அற
வாள் இதே பிழைத்த நீச மனு மலிந்த கேடு அற
பீள் இதே வியப்ப வீடு பெறுவுகின்ற நாமுமே

#32
பெறுவுகின்ற நாம வாகை பெருகுகின்ற வேலினான்
உறுவுகின்ற ஞாலம் யாவும் உளைய வந்த பீடைகள்
இறுவுகின்ற காலம் ஆக இளவல் நின்ற நாதனை
துறுவுகின்ற நூலினோடு துதி செய்கின்றார் யாவரே

#33
துதி செய்கின்ற யாரும் உண்ட துகள் துடைத்த நன்றியால்
விதி செய்கின்ற வேதம் நின்ற மிகை துடைத்த ஞானம் ஆய்
கதி செய்கின்ற ஈறு அகன்ற கனிவு உகுக்கு வான் மிசை
பதி செய்கின்று வாழ ஒன்று பரிசு இலக்கம் ஆகுமோ

#34
இலக்கம் ஆக நேமி மீதில் இனிது எழும் பதங்கன் நீ
உலக்கம் ஆக வீதி தீதர் ஒழுகல் இன்றி உண்ட தோம்
விலக்கம் ஆக நாதன் ஆகி மெலிய மைந்தன் என்று உளாய்
கலக்கம் ஆக நேமி தேயு கடி அகம் கலங்கவே

#35
அகம் கலங்க முனை உடன்று அழிவு உகும் குணுங்கு இனம்
நகம் கலங்க உரும் இழிந்த நடையில் மண்டு எழுந்த தீ
சகம் கலங்க வெரு அடைந்து சடுதி இன்று இழிந்தது ஆம்
முகம் கலங்க உறும் அரந்தை முடிய மண் தலங்களே

#36
மண் தலம் களங்கம் எங்கும் வாரி மாறும் வாள்_முகன்
கண் தலங்களும் கலங்கு காலும் ஞான காந்தியால்
விண் தலங்கள் அங்கண் நின்ற மீனும் நாண வேய்ந்த சூல்
எண் தலங்கள் எங்கும் நன்றி ஈறு இலாமல் ஈயுமே

#37
ஈறு இலாமல் ஏகி மூடர் ஈங்கு தேடு சீர் எலாம்
சேறு இலாத செறுவில் விட்ட சிதடர் செந்நெல் வித்து அதே
மாறு இலாது நீடு வாழ்வு வான நாதன் ஈகுவான்
பேறு இலாத மனுவொடு ஒத்த பிணி அருந்த உற்று உளான்

#38
உற்ற மீனும் வானும் வானம் உற்ற யாமும் ஓயும் ஈறு
அற்ற ஆசையோடு கூசு அதிர்ப்பில் வாழ்த்தும் நாதனை
குற்றம் மாறி வாழு கோதை குக்கி சூழ ஆய சூல்
சொற்ற ஆய சீரதோ தொடுத்த பாவின் மாலையால்

#39
தொடுத்த பாவை நிகர நீதி தொடரும் நூலின் முறையினால்
அடுத்த மூ உலகம் யாவும் அரிய மூன்று விரலினால்
தடுத்த வீர எதிர் இலாது தகவில் தாங்கு பரமனை
உடுத்த சூலில் அரிதில் தாங்கும் உவமியாத ஓர் விறலியே

#40
விறலியால் உயிர்த்த பாலன் விறலினால் உயர்ந்து அரா
மறலினால் அமைத்த தீது மரபினால் அழிந்து அற
திறலினால் மிதித்து கூளி சிரம் எலாம் நெரித்து அடும்
மிறலினால் உகுத்த பாவம் விலகுவான் விளங்குவான்

#41
வான் விளங்க மண் விளங்க வந்த நாதன் வாழியே
மீன் விளங்கல் ஏய்த்த முத்து வேய்ந்த சிப்பி வாழியே
கான் விளங்க உயிர் அளிக்கு கனி இராயன் வாழியே
தேன் விளங்க முகை விளாது தேறு கன்னி வாழியே

#42
வாழி மைந்தர் உய்ய வந்த வான நாதன் வாழியே
வாழி நன்மை ஈய இன்மை மலி தயாபன் வாழியே
வாழி வாழும் வானின் வாழ்வு மண்ணின் வாழ்வு வாழியே
வாழி கருணை ஆழி வாழி மதுர ஆழி வாழியே

#43
என்று பா வழங்கும் மாரி இ திறத்து உகுத்த பின்
மன்று பூ வழங்கும் மாரி மட்டு இனத்து இறக்கிய
கன்று நீர் வழங்கும் மாரி கற்றை விட்ட மாரியும்
குன்று மீ வழங்கும் மாரி குறை என பரப்பினார்

#44
ஒளி முகத்து உள யாவும் உவந்தது ஒத்து
அளி முகத்து அமலன் மனு ஆயின
களி முகத்து உயர் காயமொடு ஆர்கலி
நளி முகத்து அகல் ஞாலம் நயந்தவே

#45
சேது உலாவிய செம் கதிரோடு வான்
மீது உலாவிய மீன் மகிழ்ந்தால் எனா
மாது உலாவிய மாட்சி ஒப்பாக விள்
ஏது இலா ஒளி ஏழ் மடங்கு ஆயதே

#46
மிகை உற்று ஆம் நிலம் காத்து அவன் வேய்தலால்
தகை உற்ற ஆரிய தாரகை நோய் செய
நகை உற்றால் என நாள் மலர் தேன் உக
முகை உற்று ஆய முறுக்கு அவிழ்ந்து ஆம் அரோ

#47
கடு கொடு இங்கு கடுத்தன தீது அற
நடு கொடு அன்பு உடை நாயகன் தாழ்தலான்
மடு கொடு எங்கணும் பூ மலர் வண்ணமே
உடு கொடு அண்டம் இறங்கினது ஒத்தது-ஆல்

#48
வள்ள வாய் இள மாம் குயிலோடு எலா
புள் அவாவு உவப்பில் புகழ்ந்தால் என
உள் அளாம் மகிழ்வு ஒத்து இனி பாடலால்
எள்ள யாழ் இசை ஏய்த்தன ஆம் அரோ

#49
ஐயும் போயின போயின ஆகுலம்
மொய்யும் போயின போயின முன் பழி
மையும் போயின போயின வஞ்சனை
பொய்யும் போயின போயின பூதமே

#50
நெடிது நாள் வெளி மூடிய நீல் முகில்
கடிது போதலில் வான் கதிர் கான்று என
கொடிது நோய் ஒழியும் குணத்து அன்று அணி
முடி துளவு எழில் முற்றின ஞாலமே

#51
அலகு அற்று ஆயின ஆண்டகை ஓர் மகன்
உலகத்து ஆயினன் என்று உணரா தவத்து
இலக தாவிய மாண்பு இயலோர்க்கு எதிர்
விலக தாவிய மீ களி கூர்ந்ததே

#52
வேறு அரங்கில் உறங்கி விழித்து இறை
கால் தொழும் கடை காரணம் காண்டு இலன்
மால் தகும் கறை மாறிய சூசை உள்
தாறு இறந்த தடம் பட ஆழ்ந்தனன்

#53
வைய நாயகன் வையத்தார் எலாம்
உய்ய வந்து உலகு உற்றனனோ எனா
ஐயம் ஆய் இறையோனை அருச்சனை
செய்ய வீழ்ந்து மகிழ்ந்து அருள் சீர்த்தனன்

#54
வீடு அமைந்தன வாழ்வு விழுங்கிய
வீடு அமைந்தன இன்பு அது வேலை தன்
வீடு அமைந்து அதின் மூழ்கிய வேலையின்
வீடு அமைந்திலன் வெண் மலர் கோலினான்

#55
பானு அக கதிர் பானு அது சூலில் வான்
பால் நக களியாள் தர பார்த்ததால்
பால் நக களி பவ்வம் உள் மூழ்கினான்
பால் நக கமழ் பாடலி வாகையான்

#56
கண்டு அகம்-தனில் வாழ்ந்து தன் காதலி
கண்டு அகம் தகும் காதை தெரிந்து இலான்
கண்டு அகன்ற கனிந்த இன்பு எய்தலால்
கண் தகு அம் துளி கான்று களித்தனன்

#57
கலையின் மேல் எழு கால் கவினாள் உடை
கலையின் மேல் எழு காந்தி பரந்து அன
கலையின் மேல் எழுகும் களியோடு அரும்
கலையின் மேல் எழு காட்சி அடைந்து உளான்

#58
நாள்-தொறும் கரு நன்று வளர்ந்து பொன்
நாடு உறும் கருணை பொலி நாயகி
நாடு உறும் களி நம்பி கொள் நட்பு இயல்
நாட_அரும் கலையால் நவில்வு ஆம்-கொலோ

#59
கால்வு அரும் பிழி கால் கமழ் வாகையான்
கால் வரும் பரிசாய் களி மாற மேல்
கால் வரும்படி கம்பலை காய்ந்து உறும்
கால் வருந்திய காதை சொல்வாம் அரோ

#60
மாசு அறும் கருப்பம் ஆகி வளர்ந்து தேய் திங்கள் ஐந்து ஆய்
ஆசு அறும் தரும கன்னி அகடு இனிது ஓங்கும் வண்ணம்
ஏசு அறும் தவத்தோன் கண்டே எய்திட காட்சி வாளால்
தேசு அறும் நெஞ்சம் ஈர்ந்த செல்லலோடு ஐயம் கொண்டான்

#61
மணி நிறத்து அழகின் சாயல் வழங்கிய மடவாள் முன்னர்
அணி நிற படலை ஆக அறம் எலாம் சேர்த்த தன்மை
துணி நிற தெளிந்தோன் கண்ட தோற்றம் ஈங்கு ஆய்ந்த-காலை
பிணி நிறத்து உருத்த துன்பம் பெருகியே முற்றிற்று அம்மா

#62
நாள் வளர் பருவத்து அம் சூல் நன்று உற வளரும் வாய்ந்த
பீள் வளர் பருவத்து எஞ்சா பெரும் துயர் வளர்ந்து மிக்கு ஆய்
வாள் வளர் புண்ணில் செம் தீ வைத்து என துயரும் ஆற்றா
கோள் வளர் புணரி தாழ்ந்து குளித்த நெஞ்சு அமிழ்ந்துகின்றான்

#63
கதிர் வரு முகத்தின் மாமை காண்டலின் கண்ட கண்ணால்
பொதிர் வரும் அன்பும் ஐய புன்கணும் உளத்து உண்டு உண்ட
முதிர் வரும் துயர செம் தீ முழுதும் அவிப்ப சிந்தி
பிதிர் வரும் இரு கண் ஆறே பெரும் துயர் ஒழிக்கல் ஆற்றா

#64
கார் முகத்து எழுந்து சூழ கதத்த கால் முகத்தில் பவ்வ
நீர் முகத்து எழுந்த ஓதம் நேர நொந்து அலைந்த நெஞ்சான்
நேர் முகத்து எழுந்த ஐயம் இவள் அகன்று அகலும் தன்மை
சீர் முகத்து எழுந்து தேர்ந்து சிந்தையில் தேறல் ஓர்வான்

#65
பொய் எனக்கு அறைந்தீர் கண்ணே புரை உறா கன்னி முன் நாள்
மெய் எனக்கு அறைந்த தன்மை மெலியுமோ பளிங்கில் தூயாள்
மை என களங்கம் உற்று மயங்கும் முன் இரவி நீட்டும்
கை என் அ கதிர்கள் மாறி கலங்கலே காண்பீர் என்றான்

#66
என்றனன் கருக்கொள் காந்தை எதிர் வர எய்தல் உற்றான்
நின்றனன் விழித்தான் ஐயம் நீக்கவும் அருகு நண்ணி
சென்றனன் கரு கண்டு உற்றான் தேர்ந்து உளம் சிதைந்தான் நொந்தான்
பின்று அனன் பின்றா துன்பம் பெற்று அழுது உரைப்பன் மீண்டே

#67
வான் வளர் நாதன் ஏவி மணம் செய நானே பூத்த
தேன் வளர் வாகை விண்ட செழு மலர் வாடாது ஓங்க
மீன் வளர் கண்ணின் நல்லாள் விளைந்த தன் கன்னி அம் பூ
கான் வளர் இதழ்கள் வாடி காய்ந்தது என்று உணர்தல் ஆமோ

#68
புண் செயும் வை வாள் செய்த புண்-தனை ஆற்றும் தன்மை
கண் செயும் காட்சி காட்டும் கரு உளம் கிழித்து காட்டும்
பண் செயும் மொழியாள் மாட்சி பற்றிய துயர்கள் ஆற்ற
எண் செயும் உணர்வில் இங்கண் யாது மெய் என்பது அம்மா

#69
நீர் விளை கடலோடு ஒத்து நெஞ்சு அலைந்து உருக பின்றா
சூர் விளை காட்சி தந்து துறும் துயர் தந்த கண்ணே
ஏர் விளை இரவி நோக்காது இருள் அடைந்து அரற்றி எஞ்சா
கார் விளை தாரை ஒப்ப கலுழ்ந்து இனி வருந்துதீரே

#70
இருள் அற உணர்வில் தேர்ந்த இரும் திறத்து அரசர் கோவே
தெருள் அற உணர்ந்த ஐயம் செய்த நோய் இனி நீத்து உற்ற
மருள் அற உணராய்-கொல்லோ மணம் செய பணி செய்து அன்றே
அருள் அற வருத்தும் தன்மை அதன் பயன் என ஓர்ந்தாயோ

#71
ஆவி நோய் செய்த இ சூல் ஆய என் வினை அன்றேனும்
தாவி நோய் செய்த ஐய தகுதியால் உணரா நானே
காவி நோய் செய்த கண்ணாள் காசு உற செய்தாள் என்னில்
ஓவி நோய் செய்த இ பார் ஒருங்கு எனை விழுங்கும் இன்றே

#72
பார் உலகு அளித்து காக்க பரமனை உயிர்க்கும் தாயே
பேர் உலகு உவப்ப கன்னி பெயர்கிலள் பெறுவாள் ஆகில்
ஈர் உலகு இறைஞ்சும் அன்னாள் என் மண துணைவி ஆமோ
நீர் உலகு உறழ் நெஞ்சிற்கு இ நினைவு அகன்று அகல்-மின் அன்றோ

#73
அலை புறம் கண்ட நெஞ்சே அரந்தை உண்டு உய்யல் உன்னேல்
உலை புறம் கண்ட செம் தீ ஒருங்கு மூழ்குதி இன்று என்ன
இலை புறம் கண்ட பைம் பூ இரும் கொடி வாட நொந்து
கலை புறம் கண்ட நூலோன் கலங்கி உள் உளைந்து சோர்ந்தான்

#74
இரு மதி எல்லை நாள் இன்ன ஆறு போய்
பரு மதி மயக்கிய பலவும் ஓர்ந்து தேர்
ஒரு மதி உணர்கிலன் உயிர்ப்பு வீங்கி வீங்கு
அரு மதி மா தவன் அரற்றி விம்முவான்

#75
கருவினை தெளிகினும் காந்தை-கண் புரை
வரு வினை உணர்கிலன் வருத்தும் பாசறை
பெரு வினை உரைக்கிலன் உருகி பேர் உளத்து
அரு வினை தனித்து உணர்ந்து அலக்கண் மூழ்கினான்

#76
திருகினால் நொய் அலர் சிதைதல் போல் உளத்து
உருகினான் மெலிந்து உயிர் ஊசல் ஆட நோய்
பருகினான் துயில்கில் ஆய் பருகு இல் ஆகி வீ
மருகினான் மது மலர் வயங்கும் வாகையான்

#77
உள் படை பாய்ந்து அகன்று உடைத்த புண் எனா
நட்பு அடை உளத்தினுள் நணுகும் பாசறை
நுட்பு அடை துயரினும் நொந்த நோய் எனா
கண் படை கீறிய கருத்தின் நொந்து உளான்

#78
கார் முகத்து உடைந்த ஏறு அன்ன காதலி
சேர் முகத்து உடைந்து தான் கண்டு தேறலால்
நீர் முகத்து உடைந்த நீள் குரம்பின் நீர்மையால்
சூர் முகத்து உடைந்து உளம் கரைந்து தோன்றினான்

#79
உயர் வினை உணர்கு இலாது உடலை இன் உயிர்
பெயர் வினை போன்று தன் தலைவன் பேர் உளத்து
அயர் வினை அனைத்தும் உள் அறிந்த மங்கையும்
துயர் வினை அடைந்து உளத்து அரற்றி தோன்றினாள்

#80
நிறை பட சிறப்பொடு நிமலன் செய் அருள்
மறை படல் தகவு என மனத்தில் எண்ணலோடு
அறை பட திரு உளம் அறிந்து இலாமையால்
பொறை பட துறும் துயர் புகன்று தீர்க்கு இலாள்

#81
அன்பினால் இவன் துயர் அடைந்து உளான் எனா
நன்பினால் உவமியா நங்கை ஓர்தலால்
துன்பினால் உருகினள் துனியை நீக்கும் ஓர்
இன்பினால் உரம் செய இறைவன் போற்றினாள்

#82
வல்ல வள் வளி உருத்து அதிர வான் உயர்
பல்லவ மரமும் மேல் படர் பொன் வல்லியும்
ஒல் அவை அலைவு உறீஇ வளையும் உண்மை போல்
இல்லவள் கொழுநனோடு இடுக்கண் எய்தினாள்

#83
உருகிய துணைவனை உருகி நோக்கினள்
பெருகிய துயர் செயும் பிணிகள் ஏது ஐயா
மருகிய அடிமை யான் வனைவது ஏது எனா
அருகு இயைந்து அன்புற அறைந்து இறைஞ்சினாள்

#84
கண் நலாள் உரைத்த சொல் காதின் உள் புக
புண் அலாம் பெரும் புழை புகுந்த தீ எனா
எண்ணலால் அரும் துயர் எய்தி சூசை உள்
நண்ணல் ஆம் தழல் பொறா பிரிதில் நாடினான்

#85
காசு அடை கடல் எழும் கமலம் காலினால்
பாசு அடை தளம்பிய பான்மை பாசறை
ஆசு அடை பொழுது அரிது அமைந்த காட்சியால்
தேசு அடை உளத்தையும் சிதைப்பது ஆம் அரோ

#86
நீரின் மேல் தாள் பிரிந்து அலைந்த நீர் மலர்
சீரின் மேல் அலைந்து அலைந்து அமிழ்ந்தும் சிந்தையான்
சூரின் மேல் அன்பு உளம் சுடச்சுட தகும்
போரின் மேல் கலங்கி உள் புலம்பினான் அரோ

#87
மருள் தரு கரு என மாதை காட்டினேல்
இருள் தரு கசடு அது ஆம் இவை ஒளிக்கினேல்
அருள் தரு மறை முறை அழித்தல் ஆம் இனி
தெருள் தரு பிரிவு அலால் செய்வது ஏது உண்டோ

#88
என் உயிர் அதனின் ஊங்கு இனிய பொன் தொடி
தன் உயிர் பிரிந்து யான் தனித்து போயின
பின் உயிர் எனது உடல் பிரிவு இல் ஆம்-கொலோ
உன் உயிர் உய்யலும் எளியதோ என்றான்

#89
என்றலும் திரு உளம் இன்னது ஆகுமேல்
மன்று அரும் துணரொடு வந்த பூம் கொடி
நின்று அரும் துணை பெறா நீக்கி கான்-இடை
சென்று அரும் தவம் இனிது என்று தேறினான்

#90
பிரிந்துளி துணைவியின் பிணி கண்டால் உளம்
முரிந்துளி துணிவு இல் ஆம் என முடங்கு ஒளி
இரிந்துளி இருண்டு உறும் இரவின் நாப்பண் இல்
சரிந்துளி நீக்குப தனில் குணித்தனன்

#91
பிரிவு_அரும் அன்பினர் பிரியும் கால் உறும்
புரிவு_அரும் துயர்கள் கண் உறல் பொறாது ஒளித்து
எரி வரும் பருதி போய் ஐயம் எய்தினோன்
முரி வரும் சிந்தை போல் இருளும் மொய்த்ததே

#92
என் உளம் அறிந்த ஓர் எதிர் இல் நாதனே
உன் உளம் இனது என உளத்தில் உன்னலால்
மின்னலை அகலுது இவளை மேவி நீ
துன்னு அலைவு அகற்றுதி என்று துஞ்சினான்

#93
குணித்த யா நினைவையும் குறை இல் கோது எலாம்
துணித்த மா மடந்தை காண் சூழ்ச்சியால் தனை
தணித்த மா துணையவன் தணந்து போயினால்
கணித்த மா துயரினால் கலுழ்ந்து அரற்றினாள்

#94
தாய் பெறும் தனயனை மறந்த தன்மையால்
நீய் பெறும் அன்பு அருள் நிகழ்த்திலாய் ஐயா
தீய் பெறும் வளைத்த வில் நிமிரும் சீர்மையால்
நோய் பெறும் கருத்து அற நுதலின் தீது அதோ

#95
வளம் படு என்-வயின் வைகும் நாதனே
இளம் படு பேதை யான் தனிக்கில் ஈடு இதோ
உளம் படு துயர் அத்து உறுதி செய்க எனா
வளம் படு விழி சிவந்து அழுது வேண்டினாள்

#96
எள்_அரும் குணத்து இறை இரக்கம் மீது உறீஇ
உள்_அரும் துயரினால் உறுதி ஆம் என
தெள்_அரும் இருவருக்கு இடர் செய்தேன் இனி
தள்_அரும் துனி அற தயை செய்வேன் என்றான்

#97
என்றலும் கபிரியேற்கு ஏவல் செய்து அறா
மன்றலும் பிழியும் பெய் வாகை சூசை-கண்
சென்று அழுந்திய துயர் தீர்ப்ப சூல் வினை
நன்று அழுந்து உவப்பு எழ நவில்குவாய் என்றான்
மேல்

@8 ஐய நீங்கு படலம்


#1
செல் ஆரும் உலகு இமைக்கும் செம் கதிரோன் உரு தோன்றி தேவ வல்லோன்
வில் ஆரும் மணி இமைக்கும் முடி சூடி தேன் தூற்றும் விரத செ வாய்
சொல் ஆரும் பங்கய கண் பொன் வரை தோள் சுடர் அகலம் தோற்று மேனி
எல் ஆரும் கதிர் எறிப்ப இக்கு உமிழும் மலர் கொடியோன் இடத்து சென்றான்

#2
கண் புலன் ஆம் கதவு அடைத்து கரிய துயில் கொண்ட தவ கரையை கண்டோன்
உள் புலனால் அறிவு அமைந்து உள் உருக்குகின்ற துயர் நீக்கி உவகை எய்த
விண் புலன் ஆங்கு இரவி என விண்ணவன் வந்து உளத்து உருவம் வேய தோன்றி
மண் புலனான் இரு செவியால் வான் உரிய இன்பு அருந்த மது சொல் கொண்டான்

#3
வையத்தார் வானகத்தார் வணங்குகின்ற வரம் பெற்ற மதி வல்லோனே
அய்யத்தால் அகத்து அலக்கண் நுழைந்து அறுப்ப அலைவான் ஏன் அழிவு_இல் கன்னி
பொய் அற்று ஆரணத்தோரும் புகன்றபடி பெறுவள் என் அ பொருவு_இல் வாய்ந்த
மெய்யை தான் அறியாயோ விரை உயர்க்கும் மலர் வாடா விருது நல்லோய்

#4
நேர் விளைந்த நீதி பரன் நெடும் காலத்து உணர்த்த தயை நிகழ்த்தும் கால் ஆய்
சீர் விளைந்த நின் மனை-கண் கன்னி அறா தான் மகன் ஆய் திங்கள் ஏழு ஆம்
சூர் விளைந்த பிணி இன்றி சூல் கன்னி பெறும் தேவ தோன்றல் தானே
பார் விளைந்த துகள் தீர்ப்பான் என இயேசு எனும் நாமம் பகர்வாய் என்றான்

#5
அலை புறம் காண் அயிர்ப்பு அகத்தோன் ஐ என கண் விழித்து ஒளி சூழ் அன்றி மற்று ஓர்
நிலை புறம் காண்கிலன் களியும் வெருவும் உறீஇ கடிது எழுந்தான் நிறை நூல் தந்த
கலை புறம் காண் அறிவு ஓங்கி கணிக்க_அரிய தன்மையின் தூய் கன்னி மாறா
விலை புறம் காண் மணி என தன் மனை மகன் ஆம் எந்தை தொழ விரும்பி வீழ்ந்தான்

#6
சால் அரும்பு சூல் அணிந்த சண்பக தண் சினைகள்-தொறும் தவறும் தென்றல்
கால் அரும்ப தாது அரும்பி கடி மலர் தேனோடு அரும்பும் கந்தம் என்னா
வால் அரும்பு வாய் அரும்ப அரும்பு அரும் பூ வாகையினான் மகிழ வானோர்
நூல் அரும்ப வாய் அரும்பி சுருதி மது பொழியும் உரை நுதலி சொல்வான்

#7
எல்லோடும் ஒளி பெருகாது இரவொடு இருள் படாது எங்கும் இலங்கும் சோதி
சொல்லோடும் உணர்வு இன்றி சூழ்ந்த எலா கலை வல்லோய் தொழும் தொழும்பன்
புல்லோடும் புன்மை அறியாது என்னோ இ திறத்தில் பொலிய செய்தாய்
செல் ஓடும் வான் வியப்ப சிறுமை எடுத்து அடல் காட்டும் திறலின் மிக்கோய்

#8
பார் ஆழி உரை கொண்டே படைத்தாய் ஓர் குறும் சூரல் பயனை கொண்டே
நீர் ஆழி வழி வகுத்தாய் நெடும் படையோன் பணி கொண்டே நில்லா வான் மீது
ஊர் ஆழி நிறுத்தினையே ஒத்த திறத்து இன்று உலகம் உய்தற்கு அன்பின்
பேர் ஆழி கடக்கவும் நீ தொழும்பன் எனை துணை கொண்டாய் பெயரா செல்வோய்

#9
என்பு என்போடு அடிபட கின்னரத்து ஓதை அடிபட சேர் இனத்து இனங்கள்
அன்பு அன்போடு இசைபட நேர் நரம்பு ஓடி வளர் தசை மீது அதளும் போர்த்த
பின்பு இன்போடு உயிர் படவே பெயர்ந்து எழ முன் இசேக்கியல் காண் பெற்றி என்னா
முன்பு என்போடு ஒன்று பட கிடந்தனன் நான் உயிர்பட இ முயல் கொண்டாயோ

#10
தெவ்வின் அகத்து ஊன் உண்டு தீ உமிழ் மால் கரியினும் உள் திறன் சுதீத்தை
நவ்வி அகத்து உரன் விஞ்ச நால் கடல் அம் படை தலைவன் நவிர் சிரத்தை
வவ்வி அக துணிவு எய்தி வாளால் இற்றது கேட்டு உன் வலி புகழ்ந்தேன்
குவ்வின் அகத்து எனை உயர்த்த குணம் கண்டே இனி யாது கூறுகிற்பேன்

#11
மேழகங்கள் காத்தன கால் மேதினியின் காவலராய் விரி செங்கோலால்
கேழ் அகம் கை தாவிதனும் மோயிசனும் நீ தெரிந்த கிளர் அன்பு ஆண்மை
சூழ் அகம் கண் களி கூர்ந்தேன் இனி உன் தாய் காவலனாய் துணை தந்தே உன்
வாழ் அகம் கை எனை தூக்கி வகுத்த வரத்து இணை எவன் நான் வகுப்பல் என்றான்

#12
உம்பரிலும் அரிதில் தனை உயர்த்த நிலை அன்பு பட உணர்ந்து உணர்ந்தே
பொம் பரிவும் பொங்கி எழ தொழுது தொழுது ஆயிரம் நா புகல் கொண்டேனும்
எம்பரிலும் நிழற்று மலர் எழில் துசத்தோன் சூழ்ந்தவை நான் இயம்பும் பாலோ
கம் பரிவு மிக முன்னர் கணித்த அயிர்ப்பு உணர்ந்து உரைப்பான் கனிவின் மீண்டே

#13
வான் செய்த சுடரினும் தூய் தெருளோனே மருள் அற்ற வலி நல்லோனே
தேன் செய்த மலர் ஈந்து சிறந்த மணம் கூட்டி நினை சேய் என்று ஈனும்
மீன் செய்த முடியாளை தந்து தந்த நயன் அறியா வினை பயத்தால்
யான் செய்த குறை குணியாது இனிது அளித்தி நினைவினும் ஊங்கு இரக்கம் மிக்கோய்

#14
செய் படு வான் உலகினோடு திணை யாவும் படைத்து அளித்து ஆள் சிறந்த கோவே
மொய் படும் ஆர் கலி உடுத்த பாரில் நினக்கு அன்னை எனும் முகுளம் கன்னி
கைப்படுவான் அடியேனை தெரிந்தாயோ அதன் பின் யான் கசடு உலாவும்
பொய்ப்படு ஆகுலம் எய்தி போய் இவள் நல் புடை அகல உன்னினேனே

#15
அரிய மறை கொழுந்து என மேல் படர் தர ஈங்கு ஒர் கொழுகொம்பு அன்னவட்கே
உரிய முறை அறிவு இல்லா யான் கொழுகொம்பு ஆவது உண்டோ உயர் வான் மீதில்
விரிய உறை உம்பரையும் ஏவலை கொள் பொருவு அற்ற மேன்மையாளை
திரிய முறை இட்டு ஏவல் கொண்டேனே கொண்ட நயன் தெரியா சீர்க்கே

#16
சேது உலாம் கதிர் எறிக்கும் செழு வெய்யோன் தனை உடுத்த செய்ய மேனி
மீது உலாம் தாரகையை விளக்கு இமைக்கும் மகுடம் என வேய்ந்த சென்னி
சீது உலாம் கதிர் காலும் திங்கள் உரைத்து ஒளி பாய்ந்த செழும் தண் பூம் தாள்
ஈது உலாம் வடிவம் கொண்டு இணை தீர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ

#17
இலகு எல்லாம் முயன்று உயர்ந்த எந்தை மடிவு இன்றி வகுத்து இனிதின் செய்த
உலகு எல்லாம் முரிதர நஞ்சு உயிர்த்த கரும் பாந்தள் தலை உயர் மிதித்தே
விலகு எல்லா நஞ்சினுக்கு ஓர் மருந்து ஆகும் தையல் இவள் விரிந்த வையத்து
அலகு இல்லாள் பொருவு இல்லாள் அமரர் தொழும் அடி நல்லாள் இவள் ஆம் அன்றோ

#18
செய் முறையும் கடன் முறையும் திறம்பாத நீதி நெறி செழும் கண்ணாடி
மெய் முறையும் மறை முறையும் விளக்குகின்ற ஞானம் அமை வியன் அத்தாணி
கை முறையும் அளி முறையும் பொழி கனக மாரியினால் கருணை காளம்
இ முறையும் எம் முறையும் கடந்து உயர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ

#19
புத்து ஆன வளம் எல்லாம் பூண்டு இமைக்கும் இயல்புறி நூல் புலமை நல்லோர்
எத்தாலும் நிகர்ப்பு அரிய இ அறத்தி-தனை ஐயம் இதயத்து எண்ணி
சத்து ஆன கடவுள் தரும் தெருளோடு என் அகம் அறிந்த தகைவினாள்-கண்
உத்தான வழி யாது என்று உள களிப்போடு உட்கு எய்தி உளைந்தான் சூசை

#20
கொழுந்து அழுந்து அழன்ற வாய் குறுகி வீழ்தலில்
எழுந்து எழும் கரத்தினால் இழிவு இன்று உய்வர் போல்
விழுந்து எழும் தகவினோன் வெருவி நாதன் அன்பு
அழுந்து எழும் துணர் அடி அரற்றி ஏற்றினான்

#21
மடல் மடு வழிந்த தேன் வாகையான் உளத்து
அடல் மடு திறந்து அழுந்து அன்பொடு ஆண்டகை
கடல் மடு திறந்து என வரங்கள் கால இன்பு
உடன் மடு மூழ்கினான் உவந்த சிந்தையான்

#22
இற்றை ஆகையில் இவை காண இச்சையால்
ஒற்றை ஆழியன் கடல் ஒல்லென்று ஈர்த்து எழ
கற்றை ஆம் கரங்களை நீட்டும் காட்சி போல்
அற்றை ஆர் ஒளியொடு சிவந்தது ஐந்திரி

#23
மருள் தரும் இருள்-தனை மாறி சூசை உள்
அருள் தரும் நய நலம் அன்று காட்டிட
இருள் தரும் உலகு இனிது இருளும் தீர்ந்தன
பொருள் தரும் ஒளியவன் பொலிந்து சேரவே

#24
செய் படும் உலகினர் வணங்கும் சீர்மையாள்
மொய் படு பணி இனி முயல்தல் ஆம்-கொலோ
மெய் படும் அடிமை யான் வினை செய்வேன் எனா
கை படு தொழில் எலாம் கனிவொடு இயற்றினான்

#25
படைத்தவன் தாய் அடி பணிந்து போற்றவும்
துடைத்த தன் ஐயமும் துகளும் சொற்றவும்
உடைத்து அன மன நசை பொறாத உண்மையால்
அடைத்தன கதவின் வாய் அணுகி நின்றனன்

#26
செழும் திரு மாது அறை திறந்த போது இவன்
எழுந்திருந்து ஐ என இதயம் துண்ணெனா
விழுந்து இரு விழும் திரு அடியை வேண்டினான்
தொழும் திரு அடி மிசை மழை கண் தூவியே

#27
ஈர் அணி தயவுடன் என்னை ஆள் உடை
சீர் அணி அறத்தினாய் செகத்து நாயகி
காரணன் மகவு என கருப்பம் தாங்கி மெய்
ஆரண மொழி முறை அமைந்த மாட்சியாய்

#28
கோது உற தமியன் உள் குணித்த யாவையும்
ஏது அற தெரி தரும் இரவி காட்சியாய்
தீது அற தயையில் உன் சிறுவன் தன்மையால்
நீது அற திளைத்த என் குறைகள் நீக்குவாய்

#29
துன்புற செய்த தோம் துடைத்து ஆசி நீ
அன்புற சொல்லினால் அல்லது உன் அடி
பின்பு உற பெயர்வனோ என பெருக்கு அனை
இன்புற துயருற இரங்குவான் அரோ

#30
பொருள் தொடும் அருமறை வடிவம் போன்று ஒளிர்
அருள் தொடும் மடவரல் அகத்தில் இன்புற
இருள் தொடு துயர் அகன்று அறிவை ஈந்தன
தெருள் தொடும் இறைவனை சிறந்து போற்றினாள்

#31
பொருக்கென துணைவனை பொலிய தூக்கினாள்
பெருக்கு என பெருகும் இன்பு உளம் புரண்டு எனா
கரு கனம் கண் மழை கழுமி வீழ்ந்தனள்
இரு கண முடியுடன் இரவி ஆடையாள்

#32
கதிர்ந்து எழும் அன்பினான் காந்தை வீழ்கு உறா
எதிர்ந்து எழுக என மலர் கரம் கொடு ஏந்தினான்
விதிர்ந்து எழு தாழ்ச்சியால் மீண்டும் வீழ்ந்தனள்
பொதிர்ந்து எழு வரங்களால் பொங்கு மாட்சியாள்

#33
என் உளம் கொளா கனிவு இயற்றும் அன்பினோய்
நின் உளம் கொளா துயர் நெடிது செய்து யான்
துன் உளம் கொளா துகள் சூட்டினேன் என
நன் உளம் கொளா தயை நல்கல் வேண்டுமே

#34
மன்னர் ஆள் மன்னவன் வகுத்த மா வரம்
தன்னை யான் மறைப்பது தகவு அது ஆம் என
என்னை ஆள் உடையவன் ஏவல் இன்மையால்
உன்னை யான் சூல் வினை ஒளித்தது ஆம் என்றாள்

#35
என்று அலர் கரம் எடுத்து இவனை ஏத்தினாள்
மன்று அலர் உயிர்த்த வெண் வாகையாளனும்
துன்று அலர் கடுத்து உடு சூட்டு மங்கையும்
சென்று அலர் இறைவன் தாள் செறிந்து போற்றினார்

#36
பீடையால் வற்றிய உளத்தில் பேர் ஒளி
ஆடையாள் உரையினால் அரிது இன்பு ஆழ்ந்தனன்
கோடையால் வற்றி பெய் கொண்டலால் பெருகு
ஓடையால் நிகர்த்தன ஓகை சிந்தையான்

#37
கோள் கடைந்து அழுத்திய மகுட கோதையாள்
பீள் கடைந்து அழுத்திய கதிர் பிலிற்றல் காண்
தாள் கடைந்து அழுத்திய தாரின் வாகையான்
வாள் கடைந்து அழுத்திய வருத்தம் நீக்கினான்

#38
வண்டு உலாம் தாரினான் மலர் கண் வாயினால்
உண்டு உலாம் மகிழ் வினை உளம் பொறாமையின்
பண்டு உலாம் வளம் எலாம் பழித்த காந்தையை
கண்டு உலாம் உரை மது கனிய காலுவான்

#39
கூறு_அரும் தகை உடை கோதையார் தமுள்
மாறு_அரும் திரு வரம் வயங்கு மாட்சியாய்
சேறு_அரும் தன்மையால் சிறுவன் ஆகிய
பேறு_அரும் கடவுளை தாங்கும் பீடமே

#40
ஒளி முகத்து இந்து எதிர் இரவி உற்று எனா
களி முகத்து உன்னை உன் கடவுள் நோக்கி முன்
தெளி முகத்து இயம்பிய சீர் இன்று உன்-இடை
துளி முகத்து அமைந்ததால் துதிப்பர் யாருமே

#41
மை கடல் மருவிய வையத்தாரின் உள்
இ கடல் மான் அரும் இருமை உற்ற நான்
அ கடன் தவறு இலா திருத்தல் ஆக நீ
நிக்கு அடல் மதலை ஆம் நிமலன் போற்றுவாய்

#42
என்று உதிர் இரவி வில் எதிர் திருப்பல் ஆ
நின்று உதிர் பளிங்கு என நிரம்பி ஓதிய
தன் துதி அடங்கலும் தனது நாதனை
துன் துதி ஆக்கினள் பளிங்கில் தூயினள்

#43
எண்_இலா சுடர் என இமைத்த வானவர்
வண் நிலா நறு மலர் வருடம் தூவினர்
ஒள் நிலாவு இவர் பதம் உவந்து சூடினர்
அண்ணல் ஆம்-தனை துதி அளவு_இல் பாடினர்

#44
இருள் பரந்த ஐயமொடு துயரும் நீக்கி இன்பு அலையில் மூழ்கிய ஒண் தவத்தின் மிக்கோன்
தெருள் பரந்த காட்சி உறீஇ உளத்தில் ஓங்க சேண் உறையோர் பாடிய பேர் உவகையால் ஓர்
உருள் பரந்த சுடர் உடுத்த மேனி தானும் உயிர் சென்ற வழி சென்றால் என்னா சூழ
பொருள் பரந்த கதிர் எறிக்கும் உருவம் தோன்றி புவி நிலை விட்டு உயர் நின்றாள் உரை மேல் நின்றாள்

#45
நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து உரைப்ப நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான்
சென்ற நிலை கண்டு இரங்கி துணிவும் பாவும் திருத்தி தந்தால் அல்லால் துறை வல் நல் நூல்
வென்ற நிலை கொண்ட உணர்வோர்க்கும் பாலோ விண் வியப்ப நீ வியப்ப விருப்பம் மூழ்கி
மன்றல் நிலை வாகையினோய் அன்று கண்ட மாட்சி நலம் யான் இசைப்ப துணையே நிற்பாய்

#46
விண் கதிர் கால் உரு தோன்றி விண்ணில் நின்றாள் விரத நிலை இதோ என்ன வளர்ந்து தேயும்
தண் கதிர் கால் பிறை குழவி அடியால் தேய்த்து தனை சென்றார் சிதையார் என்று இரவி முன்னும்
தெண் கதிர் கால் உடு குலமே முடியாய் சூடி தெளி ஞான நிலை இது என சுடாது தண்ணத்து
ஒண் கதிர் கால் செம்_சுடரை உடுத்து நின்றாள் உணர்வினும் மேல் நின்று இனிது என் உளத்தில் நின்றாள்

#47
திரு கொண்டு ஆர் ஒளி கொண்ட வானில் வைகி தெளி உணர்வு உண்டு உரு இன்றி அணுவாய் நின்றோர்
உரு கொண்டார் உயர் நின்ற எந்தை தாய் தன் ஒளி எறிக்கும் மலர் பதத்தை ஏத்தி ஏத்தி
மரு கொண்டு ஆர் மது மலரை தூவி தூவி மது தொடையால் மண்டு புகழ் பாடி பாடி
கரு கொண்டாள் வர பவ்வம் நீந்தி நீந்தி கதிர் வெள்ளம் சூழ் எறித்து கனி நின்றார்-ஆல்

#48
எ உலகினோரும் உய்ய கருணை உள்ளி இ மடந்தை தனை முதலோன் வனைந்து வானத்து
அ உலகினோர் பிரிந்த அவைகள் ஒன்பான் அவை அவைக்கு ஓர் ஒரு நூறும் பலர் ஓர் நூறும்
இ உலகின் இவள் பிறந்த முதல் நாள் ஆதி இவள் பணி கேட்டு ஆயிரரும் பிரியா முந்நீர்
வவ்வு உலகின் தமது அரசி ஆக சூழ வான் இறையோன் அன்பு புரிந்து ஏவினானே

#49
ஏவிய ஆறு இவள் பிரியா அன்னார் இ நாள் எழில் முகத்தில் வான் முகத்தை தோன்ற தோன்றி
பூவிய ஆறு அரக்கு ஒளி பெய் துகில் உடுத்து பொழி மது வாடாத மலர் சுடிகை சூடி
ஆவிய ஆறு அணி அணியாய் நின்ற யாரும் ஆண்டகை தாய் மரி என்னும் வாசகத்தை
மேவிய ஆறு ஓங்கிய மார்பு அணிந்து வெய்யோன் வேய்ந்து அனைய அ அணி வேய்ந்து இனிதின் நின்றார்

#50
நீமம் உடை திங்கள் துடைத்து ஒளியை பாய்ந்த நேர் அடியாள் நேர் அற விள்ளா வண்ணம்
காமம் உடைத்து ஒளி உடுத்து சுடரில் தூய கருத்தில் அமை கன்னி நலம் காட்டுதற்கே
தாமம் உடை தண் தாது மடு உடைத்து சாய்ந்த மது வெள்ளமொடு வாசம் வீசி
ஏமம் உடை தனி விருது என்று அலர் சுவேத இலீலி எனும் மாலை பதத்து ஒரு நூறு உய்த்தார்

#51
இருதி எழில் படுத்திய வான் வரத்து வல்லாள் இவர் வானோர் நிலை கடந்த அன்பு விஞ்ச
கருதி எழில் படுத்திய ஒன்று ஆய எந்தை கண்ணி அமை நேய நலம் காட்டுதற்கே
குருதி எழில் படுத்திய செம் தாது உலாவும் கொழும் தண் தேன் உரோசை எனும் கோதை கொண்டு
பருதி எழில் படுத்திய சீறடியை போற்றி பணி ஆக முன் படைத்தார் ஒரு நூறு அன்றோ

#52
வீடு அவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள் விரி புவி மன் உயிர்கள் எலாம் இன்புற்று உய்ய
கேடு அவிழ்த்த நெஞ்சினர்க்கும் உறுதி செய்யும் கிளர்ந்தன தன் தயாப நலம் காட்டுதற்கே
நீடு அவிழ்த்த வாய் இடத்து பிரிந்து ஓடும் பல் நீர்க்கு எல்லாம் அடைக்கலம் செய் வாவி பூத்த
தோடு அவிழ்த்த விரை கமலம் மாலை மாற்றி சூடிய தாள் தொழுகின்றார் ஒரு நூறு அன்றோ

#53
துறை கெழு நூல் வழி அனைத்தும் அடையா ஞான துறை அன்னாள் மாசு அறு நல் உணர்வின் நீர்த்து
மறை கெழு நூல் வழி வழுவா கடவுள் நல் தாள் மாறு இல மெய்ஞ்ஞான நலம் அமைந்ததற்கே
முறை கெழு நூல் வழி அன்ன வெய்யோன் வானின் முடுகு வழி விடா திரியும் இரவி காந்தம்
அறை கெழு நூல் வழி தொடை போல் தொடையல் ஆக்கி அருச்சனை செய்து அடி அணிந்தார் ஒரு நூறு அன்றோ

#54
மாசு என்று மதியம் மிதித்து உயர் தூய் தாளாள் மனம் கலங்க துயர் வரினும் நெருப்பிற்கு அஞ்சா
தேசு என்று குலையா நெஞ்சு உறுதி எஞ்சா செல் அல்லற்கு உயர்ந்த திறம் காட்டுதற்கே
தூசு என்று மலை சூழ்ந்து ஒல் என தாழ் ஓடி துறும் வெள்ளத்து அளவில் தலை நிறுவி பூண்ட
காசு என்று தேன் துளிக்கும் குமுத மாலை கால் அணியாய் தொழுது இடுவார் ஒரு நூறு அன்றோ

#55
மண் பொதுளும் சேற்று ஒழுகும் கதிர் சேறு ஆகா வண்ணம் என கதிர் கலங்கின் கலங்கா நெஞ்சாள்
கண் பொதுளும் இன்னாமைக்கு அழுக்கு உறாதாள் கதிரினும் தூய் மாட்சி நலம் அணிந்ததற்கே
முள் பொதுளும் மணம் பொதுளும் நொய் அம் தாது முருகு ஒழுகும் முகை விண்ட செம் செவ்வந்தி
விண் பொதுளும் நலம் தொடுத்த மாலையாக விழுந்து இறைஞ்சி கொணர்ந்தனரே ஒரு நூறு அன்றோ

#56
இ திறத்தால் வெம் சுடரும் எஞ்ச எஞ்சாது இயல்பு உயர்ந்தாள் இன்பு அருந்தி செயிர் நாம் செய்த
அ திறத்தால் வந்த தவம் செயிர் ஒன்று இன்றி அரிது உலகம் அதிசயிப்ப நோற்றாள் என்னா
மை திறத்தால் விரி சிறகை ஓசனித்த வண்டு அணுகா சண்பக அம் தொடையை அன்றே
மெய் திறத்தால் மறை தொடுத்த தொடையல் என்னா விசித்து அணிந்தார் தாள் வணங்கி ஒரு நூறு அன்றோ

#57
வானாரும் நடுக்கு உற்று வணங்கும் தேவ வரத்து உயர்ந்த வான் அரசாள் நவை நாம் மாறா
கூன் ஆரும் செருக்கு ஆறா திறத்தின் நாண குணிக்கு அரிய தாழ்ச்சி அருள் கொண்டாள் என்னா
தேன் ஆரும் மலர் இனத்துள் புன்மை கொண்டு தேறலொடும் மணத்தினொடும் எவையும் வெல்லும்
கான் ஆரும் வகுளம் பூ மாலை தாள் மேல் களிப்பு எழ இட்டு இறைஞ்சி நின்றார் ஒரு நூறு அன்றோ

#58
வஞ்சம் சேர் தந்திரத்தால் பழியே விஞ்ச மன் உயிர்கள் பகைத்து அழிக்கும் குணுங்கு இனங்கள்
நெஞ்சம் சேர் நஞ்சு உகுப்ப எடுத்த நாக நெடும் தலையை என் தொடையால் நேரா வல்லாள்
கஞ்சம் சேர் திரு பதத்தால் மிதித்த வெற்றி காட்ட மது கான்ற நறும் தும்பை மாலை
பஞ்சம் சேர் உவப்பினொடு பைம்பொன் சேர்ந்த பதத்து அணியாய் தொழுது அணிந்தார் ஒரு நூறு அன்றோ

#59
இ முறையால் ஒன்பது அணி சூழ்ந்து நிற்ப எவர்க்கும் நலம் செய் பொழிலோ முகிலோ பானோ
அ முறையால் நிகராது எ உயிரும் யாவும் அமுதினும் ஊங்கு இனிது அன்பால் ஓம்பும் தாய் செய்
கைம்முறையாம் என பணி பொன் சுடிகை ஆரம் கண்டிகையோடு இன கலன் எண் இல்லாது ஏந்தி
மெய்ம்முறையால் ஒளிர்ந்து இறைஞ்சும் ஈர் ஆறு உம்பர் விழைந்து இவள் சூடு ஈர் அறு மீன் போல நின்றார்

#60
வையகத்தார் வடு தீர்ப்ப இவட்கு ஓர் மைந்தன் வந்த பிரான் அருள் புரிந்து வஞ்சம் மிக்கோர்
கை அகத்தால் அடியுண்டு மாள்வான் என்னா கடு மரமோடு ஆணியும் முள்_முடியும் தூணும்
மொய் அகத்தால் அடும் மற்ற கருவி யாவும் மூ அறு வானவர் ஒரு-பால் கையில் ஏந்தி
மெய் அகத்தாள் உள் உருக முன்னர் நின்றார் விளம்பு அரிய எந்தை தயை வாழ்த்தி நின்றார்

#61
ஏர் இறகு ஆறு ஓர் ஒருவர் கொண்டு தோன்றி ஏழ் எழு ஆய் பத்து அணியாய் நின்ற வானோர்
ஈர் இறகால் அஞ்சினர் போல் முகத்தை மூட ஈர் இறகால் அடி மூடி மற்று இரண்டு
சீர் இறகால் தென்றலும் தண் நிலாவும் கால செழும் பைம்பொன் சாமரை போல் விசித்து இரட்டி
பாரில் தகா வளத்து ஓங்கும் அரசாள் தன் தாள் பணிந்து பணிந்து அருத்தி எழ சூழ்ந்து நின்றார்

#62
செம்பொன் மேல் பசும்பொன்னால் எழுதினால் போல் திண் கவச மேல் அணிகள் தியங்கி தோன்ற
பைம்பொன் மேல் பயிற்றிய மா மணியால் எல்லை பாய் மகுடம் புனைந்து அலகை முனைந்து வென்ற
வெம் பொன் மேல் கதிர்ந்த வை வேல் கையில் ஏந்து மிக்கயலும் கபிரியல் ஆம் திரு வல்லோனும்
அம் பொன் மேல் தவழ் உருக்கொண்டு ஆங்கு உலாம் பேர் அணிகள் இரு தலைவர் என தோன்றினாரே

#63
இவரும் அலது உள அமரரும் அளவு இலாது எரியும் வெளி மிசை இரி பல சுடர் ஒளி
கவரும் முடிகளும் நவமணி அணியொடு ககன எழில் அணி பணிகளும் மிக ஒளி
துவரும் உடன் உள பல நிற மலர் அணி தொடையல் மது மழை குமிழிகள் எழ விழ
நிவரும் மணி அணி குடையொடு கொடிகளும் நிறைய வெளி வெளி நிரை நிரை நிகழ்வரே

#64
அலையின் அலை அலை மிசை இசைவன என அரசர் உருவுடன் அணி அணி நெரிதர
நிலையின் உள முரசொடும் உள கருவிகள் நிகர்_இல் உயர் உலகு உள பல கருவிகள்
மலையின் உயர் இன முகில் அதிர்வன என மலிய முழகின இனியன ஒலியொடு
கலையின் உயரின தொடை தொடை தொடர்வன கனிய இன எனது உரை அடை கருமமோ

#65
ஒலி அதிர முடி முடியொடும் அடிபட உவகை எழ விழ அணி தொடை அசைவொடு
மலிய மது மழை சலசல என இன மணிகள் கணகணவென எனது அணு உரை
மெலிய நிமலனை மகவு உடையவள் உடை வெயிலின் எழு மடி ஒளி வடி வடிவு அடி
பொலிய அவரவர் சிரம் மிசை அணிகுவர் பொருவு_இல் நசையொடு பணிகுவர் அணுகியே

#66
அரவின் உருவொடு கடி விடு விடம் அற அரிதில் உயிர் தரும் இனிது அமுது இவள் என
இரவின் இருளினும் வடு தரும் இருள் அற இரவி ஒளியினும் ஒளிர் சுடர் இவள் என
உர இழிவும் அற உயிர் அடும் இகல் அற உறுதி இவள் என உயிர் இவள் என விரி
புரவில் நிகர்_இல தயவினில் நிகர்_இல புணரி இவள் என அறைகுவர் சிலருமே

#67
கடியின் நெடிது அமர் எழ உயிர் மெலிகுவர் கவலை அடைகுவர் மகர் இல உளைகுவர்
மிடியின் மெலிகுவர் பிணிகளின் மெலிகுவர் வெருவி உருகுவர் விளிவு உறி அயர்பவர்
குடியின் மெலிவொடும் இருமையின் இழிவொடு குழைய அழுகுவர் கலுழுவர் மடிபவர்
படியின் அனையவர் உதவிய நலம் மலி பரவை இவள் என மொழிகுவர் சிலருமே

#68
ஒளி கொள் உலகமும் முதலிய உள பல உலகு பொது அற அனையவும் நடவிய
அளி கொள் அதிபதி-தனை மகவு என அணி அரிய கருவுடன் உலகு இடர் எரி அற
வளி கொள் கவரமும் நிழல் தரு கவிகையும் மருவும் எமது அரசியும் இவள் என அருள்
துளி கொள் முகில் என மண மலர் மது மழை சொரிய அடி இணை தொழுகுவர் சிலருமே

#69
ஒருவர் கவரிகள் இடஇட அணுகுவர் ஒருவர் கவிகைகள் எழ எழ மருகுவர்
ஒருவர் பணிவிடை முடிதர விழைகுவர் ஒருவர் இறையவன் விடை மொழி கொணர்குவர்
ஒருவர் எழுதிய முக எழில் கருதுவர் ஒருவர் அதிசயம் உறி இனிது உருகுவர்
ஒருவர் புகழிட நிகர்_இல மெலிகுவர் ஒருவர் புகழுவர் பணிகுவர் எவருமே

#70
பருதி உடை உடை நலம் மிக அருள் உடை பரமன் அதிபதி ஒரு கரு உடையவள்
சுருதி மொழி எழ எனது இறையவன் இவை தொகுதி அற அளவு அற இடும் அளவையில்
இருதி அற எனது அற அறிவு இசைதர இனி அடியனளும் என முயல்வது என உள்
கருதி நசையொடு கருதிய உணர்வுகள் கனிய உணர்தலில் அமரர் உள் உயருவார்

#71
அயமும் வழுவையும் இரதமும் விருதரும் அடையும் நிருபரும் நிகர்_இல மெலி தர
வயமும் இருமையும் அறிவொடு கருணையும் மருவும் இறையவன் ஒரு சிறு மனை-இடை
நயமும் ஒளிமையும் விபவமும் அடையலும் நடவும் அளவையும் இது எனில் வடுவொடு
கயமும் நடலையும் மலி புவி அருளொடு கனிய அது பொழுது உயர் கதி நிகருமே

#72
இற்றை எலாமும் இயற்றிய காலை இனத்து இயலா நயம் ஆய்
மற்றை எலாமும் மனத்தின் உசாவும் மலர் திரு வாகையினான்
கற்றை உலாவு பளிக்கு உரு வாமம் மிக கதிர் வீசி உருள்
ஒற்றை உலாவு இரத கதிர் ஆக உவப்பு அலை மூழ்கினனே

#73
வென்னை விரித்திடு கூளி நடுக்கிய வேத மொழி திறலோன்
பொன்னை விரித்து அதன் மீது புதைத்த மின் மாலை இறுத்திய போல்
கொன்னை விரித்த நிலாவின் நிறத்து அவிர் கோலம் உடுத்து எனை ஆள்
அன்னை விரித்த நிலா உண அ திறல் நானும் விரித்தனன்-ஆல்

#74
ஓசை எழுந்து அகல் ஓலம் எறிந்தன வாரி உடன்றல் எனா
ஆசை எழுந்தன ஓகை அடங்கு இலதாய் அலர் தன் கொடி போல்
பூசை எழுந்த நறா மது அம் புகழ் பூசல் தரும் படியே
சூசை எழுந்து உயர் நாயகி தன் துதி தூவி அறைந்தனன்-ஆல்

#75
நீ ஒரு தாய் ஒரு தாதையும் நீ உயிர் நீ எவை ஆகிலும் நீ
நீய் கனிவு ஆர் கடல் நீ ஒளி ஆர் சுடர் நீ அருள் ஆர் முகில் நீ
நீ இறையோன் எழும் ஆசனம் நீ நெறி வேதம் வழா நெறி நீ
நீய் முகிழாத நறா மலர் நீ நிறை நூல் நிகரா உரு நீ

#76
ஏர் அணியே இதயத்தில் இருந்து எனை ஆள் உடை ஆனவளே
சீர் அணியே மதி வெண் குடையே திரு மாரி விடும் புயலே
ஆரணியே கருணாகரியே உயிர் யாவும் அளித்த அமுது ஆர்
வாரணியே தனி நாயகியே நனி வாழுதி வாழுதியே

#77
வாழி அனந்த தயாபரனுக்கு உரி வாய்ந்த அருள் தாய் அவளே
வாழி விசும்பு-இடை வாழ் உயர் உம்பரின் வாம இராக்கினியே
வாழி முகிண்டு இல பூ அனை கன்னிய மாதரை ஆள் அரசே
வாழி அழுந்து அருளே மறையே அறனே நனி வாழுதியே

#78
என்றனன் என்று புகழ்ந்து புகழ்ந்து இவை எண்ணி மகிழ்ந்தன-கால்
நின்றன உம்பர் அடைந்த நிறைந்த நிகர்ந்து இல காட்சி எனா
தன் தனது ஆசை தணந்த தவன் தகை தாங்கிய மார்பில் எழ
சென்ற பிரான் முகமே மறையாது தெளிந்து உயர் கண்டனனே

#79
மேவு அரு மீ வரும் மாணொடு வேய்ந்த பிதா_சுதன் நேயன் எனும்
மூவரும் ஓர் நிகராத பராபரம் ஆம் முதலோன் முயல் ஓர்
தாவு அரு மா முறையால் மறையாது உரு ஏந்து தயாபம் எழா
ஆவு அரு மா தவன் ஈது உயர் காண் அளவு ஆம் நயன் ஓர் அளவோ

#80
செகத்து இயலாத சிறப்பு எழு நாயகியை செக நாயகனே
அகத்து இயலாத அருள் கொடு நோக்கி அருத்தியொடு ஏவியதால்
முகத்து இயலாத நயத்து நிலா உரு முற்றிய வானவர் சூழ்
நகத்து இயலாத மணி கலன் ஆர நயத்தொடு சூட்டினரே

#81
தன் உயிர் ஆம் என உன்னு தயாபமொடு எண்ணிய மூ உலகு ஆர்
மன் உயிர் யாவையும் உள்ளினள் ஆள் ஒரு மன் அரசாள் இவள் என்று
என் உயிர் ஆள்பவன் மின்னிய மீன் ஒளி எண்_இல ஏவி உலாம்
மின் உயிர் ஆகிய சென்னியின் மீது ஒரு மின்_முடி சூடினனே

#82
முழுது உணர்ந்து அருள் முற்றிய மா முனி
பழுது உணர்ந்த பனிப்பு அற இற்றை அ
பொழுது உணர்ந்தமையால் புகல் அற்று இனிது
அழுது உணர்ந்தவை ஆர் அறைவார் அரோ

#83
ஈது யாவும் உணர்ந்து இதயத்து எழும்
போது யாவும் புரந்திட நாயகன்
கோது யாவும் துடைத்து இவண் கொண்ட மெய்
நீதி யாவும் நிறைந்தவன் கண்டு உளான்

#84
பளிங்கு மஞ்சிகத்து ஊடு உறை பால் மணி
வெளிக்கு மஞ்சு அற வேய்ந்தது போல் உலகு
அளிக்கும் நாதன் அமைத்த மெய் தாய் வயிற்று
ஒளிக்குள் மா தவன் ஓர்ந்து கண்டான் அரோ

#85
கஞ்சமோ விரை கஞ்சம் உள் முத்தமோ
விஞ்சு பால் மதியோ விரி செம்_சுடர்
எஞ்சு பான் இயல்போ எனவோ வளன்
நெஞ்சு வாழ்குப காண் உடல் நீர்மையே

#86
கண்ட நாயகன் கண் ஒழுகும் கதிர்
உண்ட மா தவன் ஒள் ஒளி உண்டது ஓர்
சண்ட தூய பளிங்கு உயர் தாணு எனா
விண்ட வான் ஒளி வெம் சுடர் வெல்லும்-ஆல்

#87
சீர்த்த பூம் கொடியோன் திரு நாதனை
பார்த்த வேலையில் பார்த்தனன் நாயகன்
நேர்த்த ஆசையின் கண் எதிர்ப்பட்டு எழும்
கூர்த்த ஆர்வமும் கூறுதல் ஆம்-கொலோ

#88
தண் அம் தாமரை தாது அவிழ சுடர்
கண் அங்கு ஆம் கதிரால் கனி பார்த்து எனா
விண் அம் காவலன் பார்த்து விழைந்து உளத்து
எண்ணம் தாவு உணர்வு இன்பொடு உணர்த்தினான்

#89
விண்ட பூம் கொடி தந்த விருப்புடன்
உண்ட மா மணத்து உன் துணை பூம் கொடி
கொண்ட மாட்சி குணிக்க அரும் காட்சியால்
கண்டது ஆம் மறை காட்டிய மாண்பினோய்

#90
இன்ன தன்மையினாட்கு இவண் நீ துணை
துன்னு தன்மையினால் அருள் சூழ்ந்து உனக்கு
உன்னு தன்மையினால் உணரா வரம்
மன்னு தன்மையினால் வகுத்தோன் அரோ

#91
கருவி ஒன்று இல கன்னி பயந்தினும்
மருவி என்னை வளர்க்கும் கை_தாதையாய்
பொருவு_இல் நன்றி புணர்ந்திட நான் உனை
துருவினேன் என சூழ்ந்து ஒழுகு என்றனன்

#92
சொரிய மாரி துறும் தொனி வெள்ளம் ஆய்
பெரிய ஆர்கலி மேல் புரண்டால் எனா
அரிய மா தவற்கு ஆதி வளர்ப்பதற்கு
உரிய மா வரம் உற்று உளம் கூர்ந்ததே

#93
அண்ணற்கு இங்கண் அமைந்த கை_தாதையை
கண்ணற்கு ஓங்கு கருத்தொடு போற்றி உள்
எண்ணற்கு ஏந்திய ஆசி இயம்பினார்
வண்ண பூ மழை வானவர் வாரியே

#94
சிறை படும் கனல் சிக்கென வாய் கிழித்து
உறை படும் ககனத்து எழ ஓங்கல் போல்
அற படும் தவன் அன்பு மிகுந்து உயிர்
புற படும் பரன் போதல் இருத்து இலால்

#95
இருத்தி வாழ் உயிர் ஏவி உள் தூண்டிய
அருத்தியால் இளவல் பதத்து அர்ச்சனை
திருத்தி வீழ்ந்தனன் சென்னி நிலம் பட
கருத்தில் ஆர்ந்த மறை கொழுகொம்பினான்

#96
வீழ்ந்த ஆசையின் மீண்டு எழுந்தான் அருள்
ஆழ்ந்த காட்சி ஒன்று இன்றியும் அண்டையில்
தாழ்ந்த காந்தையை கண்ட தவத்தினோன்
சூழ்ந்த யாவையும் சூழ்ந்து உளத்து ஓங்கினான்
மேல்

@9 மகிழ் வினைப் படலம்


#1
இன்ன யாவையும் உளத்து எண்ணி எண்ணிய நிலைக்கு
உன்னலால் உளம் உயர்ந்து இன்பு அறாது உருகுவான்
பன்னலால் அடைவு_அரும் பண்பு அடைந்து உயரினாள்
துன்னலால் அடை நயன் சூழ்ந்த மா தவ நலோன்

#2
முந்தை ஆம் முதலினோன் மூ இடத்து ஒருவன் ஆய்
தந்தை யாவரும் இலா கன்னியின் தனயன் ஆம்
எந்தை யான் இவண் வளர்த்து எற்கு இதோ இயல்பு எனா
சிந்தையால் உருகி மீண்டு ஆய்ந்த சொல் செப்பினான்

#3
வானும் நேராது மாறா வரத்து ஓங்கி வான்
மீனும் நேராது மெல் ஆக்கை கண்டு ஏந்தி ஊர்
தேனும் நேராது தேர் தீம் சொலை செப்பவே
நானும் நேர் ஆகி நாணாது கேட்பேன்-கொலோ

#4
வேதமே வேடமாய் வேய்ந்த மா தவர் எலாம்
ஏதமே தீர்க்குவான் ஈங்கு நாடிய பிரான்
பாதமே பாவி நான் பார்க்கவும் தலையின் என்
கேதமே தீர மேல் சூடவும் கெழுமுமோ

#5
நீர் உலாம் உலகினோர் நீண்ட செம் கதிரவன்
தேர் உலாம் உலகினோர் சேர்ந்து போற்றிய நிலா
ஏர் உலாம் அடியினாள் எய்தி எய்திய நலம்
சீர் உலாம் அடியினால் தீம் சொலார் அடைவரோ

#6
மேலின் ஆர் வாசமே வீசு பூ விள்ளும் ஓர்
கோலினால் வந்த கோடாத பூம் கொடியை என்
பாலின் நான் எய்தலால் பான் உலாம் நாடரே
ஏலினால் மேவு சீர் ஆயது என்று எண்ணுவான்

#7
மாட்சியால் ஓங்கு பூ வாகையான் எண்_அரும்
காட்சியால் ஓங்கி முன் கண்ட யாவும் தரும்
சூட்சியால் ஓங்கு தன் தூய மா தேவியை
தாட்சியால் ஓங்கு உளத்து ஓர்ந்ததே சாற்றுவான்

#8
தூய் உலாம் இந்து உலாம் சொக்கு உலாம் பாதமும்
சேய் உலாம் பான் உலாம் சீர் உலாம் தேகமும்
மீ உலாம் மீன் உலாம் மின் உலாம் சென்னியும்
ஓய் இலாது இற்று எலாம் உற்ற மா மாட்சியாய்

#9
நீர் அளாம் புணரி சூழ் நீண்ட பார் உலகமும்
கார் அளாம் கதிர் அளாம் காய வான் உலகமும்
சீர் அளாம் கருவி இல்லாது செய்தன விதத்து
ஏர் அளாம் முறைமை ஈங்கு இன்று கண்டனன் யான்

#10
ஈறு இலா செகம் எலாம் ஏத்தும் ஓர் இறையவன்
மாறு இலா தயையினால் வந்து காரணம் இலா
பேறு இலா தகவு இலா பேதையாம் எனை உன்னால்
தாறு இலா திரு உற தான் தெரிந்தனன் இதோ

#11
வானகத்து உற்று நின்றோர் வணங்கு உன் வளம்
யான் அகத்து உற்றிலன் ஏவல் கொண்டேன் நினை
தேன் அகத்து உற்ற அருள் சீர்மையான் நீ பொறுத்து
ஊன் அகத்து உற்ற உன் சேயொடு ஆள் என்னையே

#12
தாயும் நீ தலைவி நீ தாழ்வு இலா தயவு எலாம்
ஈயும் நீ பரியும் நீ இட்ட என் குறை எலாம்
தேயும் நீ கருணை ஆம் சேயொடு அன்பு அலையினுள்
தோயும் நீ எனையும் நீ ஆள் எனா தொழுது உளான்

#13
பற்று அறுத்து உள் திறல் பற்று அருள் பொற்பினான்
சொற்றல் உற்றிட்ட அ சொல் செவி பட்ட போது
உற்ற அழல் பட்டது ஒத்து உள் திகைத்து ஒப்பு இலாது
உற்று அகத்துள் தக சொக்கினாள் சொற்றுவாள்

#14
தொழுதேல் தொழுதேல் இறைவன் தொழுதால் நன்று என்றாலும்
பழுதே தவிர் சூல் பயனால் பரமன் என்னோடு ஒன்று ஆம்
பொழுதே தொழுதால் எனக்கே புரி ஓர் பணிவு ஆம் என்னா
அழுதே அழுதே தொழுதாள் அமரர்க்கு அரசாள் என்பாள்

#15
பைம் தாள் உயர் தாமரை போல் பிறை மேல் படி பொன் பதத்தாள்
நொந்தாள் என்னா தானும் நொந்து ஆம் என்றான் என்றால்
செம் தாள் நோக பணி நீ செய்யாது அடியேன் முடிப்ப
தந்து ஆள்பவே தயை செய்து அருள்வாய் என்றான் முனிவன்

#16
துன்று ஆய பணி தொழில் என் தொழிலே என்றாள் அவளும்
என்று ஆய் எளிமை தகவு எய்துதற்கே இருவர்-தம்மில்
பின்றா முறையால் இசலி பெரிது உம்பரும் உள் வியப்ப
சென்று ஆய பணி தொழிலை செய முன்னுவர் அ சான்றோர்

#17
வீழ் வாரியினால் குழி நீர் வீயாது உறைகின்று என்னா
சூழ்வார் இல்லால் தொடர் தீது அறியாது ஆள்வார் அல்லால்
வாழ்வார் இல்லை என்பார் மாணா மண்ணோர் மனத்தில்
தாழ்வார் உயர்வார் என இ தக்கார் தண்மை விழைவார்

#18
காயா மரமே அல்லால் காய்த்த சினைகள் நிறுவா
தீயார் செல்வத்து அல்லால் தெருளோர் செருக்கு எய்துவரோ
பாயா நெகிழும் பணியாதன வில் பணித்த சரமே
வீயாது உயரும் வளி நேர் வெகுளா வளையும் தருவே

#19
சால் ஓர் பொருளால் நிறை பொன் கலமே தரும் ஓர் தொனியோ
நூலோர் இயக்கம் பேசார் நுண் மாண் நுழைகின்ற அறம் கொள்
மேலோர் உகப்பே மேவார் மேவார் தொடர் தம் நிழலை
போல் ஓர் இடத்தும் தேடா பொழுதே தொடரும் புகழே

#20
ஈதே மறை_நூல் என்னா அறைதற்கு இறையோன் வந்த அ
போதே எளிமை புணர கண்டு அ தணிவில் பொலிவோர்
கோதே கொணர் ஆள் வினையை குணியா குனி தாழ் வினையே
நீதே என அ நெறி நின்று ஒழுகற்கு இசலா நின்றார்

#21
பல் நாட்கு ஒரு நாள் மனையாள் மனையை பரிவாய் விளக்க
முன் நாட்கு இணையா முனிவோன் கண்டே முதலோன் சூல் கொள்
அன்னாட்கு இதுவே முறையோ என்றான் அவளும் முறை ஈது
இன்னாட்கு இறை ஆம் நினக்கோ என அ தொழிலை முயன்றாள்

#22
உனதே எனதே இல்லாது இல்லில் ஒரு நாள் பணி-பால்
தனதே என மா தவனே செய்தான் தவறாது இ நன்று
எனதே என்றாள் அமரர்க்கு அரசாள் இது நன்று என்றால்
நினதே என்பாய்-கொல்லோ நிருபற்கு இது என்று உழைத்தான்

#23
வண்டு ஆயிரம் செம்_சுடர் தோன்றிய முன் வந்தே கமல
தண் தாதினை தாம் குடைந்து ஊறிய தேன் உண்ணும் தன்மைத்து
ஒண் தாது அவிழ் பூம் கொடியோன் உறங்கு இன்று அவள் தாமரை கண்
விண்டு ஆகுதல் முன் விழையும் பணியே எல்லாம் முயல்வான்

#24
முயலாது ஒன்று உண்டு என்றால் முடுகி முடிப்ப கேட்பாள்
புயல் ஆர் உடு ஆர் குழலாள் அவனும் புரி புன்னகையால்
இயலாது உனக்கு என்று மறுத்து-இடை வான் பொருள் போக்கிய-கால்
மயல் ஆம் என்னா மனம் நொந்து அழுவாள் வானோர்க்கு அரசாள்

#25
சேய் ஆய் எளிமைக்கு ஒளி ஆக்குதற்கே சென்றாய் திருவோய்
தாய் ஆய் அடியாட்கு எளிமை தகைமை வேண்டாது என்னோ
தூய் ஆய் இ நன்று இலதேல் துஞ்சாது உயிர்க்கு ஓர் நிலையோ
வீயா அருளே மகவே என்னா விழைவு உற்று அயர்வாள்

#26
அயர்வாள் தாயோ என்னா அன்போடு இரக்கு உற்று அம் சேய்
துயர் வாடு அகமே துன்பு அற்று அலர தூது ஏவிய ஓர்
உயர் வானவன் உற்று ஒரு நாள் வளன் அ பணியை செய்ய
பெயர்வு ஆயின கால் பிழி வாய் மலரே பிளிர சொல்வான்

#27
நுணி கொம்பினும் ஊக்கினர் நொந்து இறப்பார் அனைய ஊக்கம்
குணிக்க உம்பரும் மானிடரும் குணியா கெட்டார் என்னா
கணிக்கும் பரிசால் கடவுள் மனுவாய் எளிமை காட்ட
தணிக்கும் பரிசால் தாய் தண் தொழில் செய்யாதால் தகவோ

#28
செல் ஆர் உலகிற்கு உயர் வாழ் எமக்கும் சேல் ஆர் கடல் சூழ்
கல் ஆர் உலகு உற்றவர்க்கும் கனி இன்பு இயற்றும் கருணை
வல் ஆரிய மா மடவாள் வருந்தும் துயரம் கண்டும்
வில் ஆர் அறிவோய் விழையும் தொழிலை விடல் ஆகாதோ

#29
இன்பால் வான் ஏத்து இவளை நீ ஏற்றுதல் நன்று அன்றோ
அன்பால் விழை தண் தொழிலை அன்னாள் அரிது ஆற்றிடலே
தன்-பால் என தாய் தனையன் இனி வாழ்ந்து உண வேர்த்து உழைத்தல்
உன்-பால் என ஆண்டகை ஏவினன் என்று உரைசெய்து ஒளிந்தான்

#30
மீ ஏவியது ஓர் விதி மேல் விதி ஒன்று உண்டோ இறைவா
நீ ஏவியதே நான் மேவிய நீதி என தொழுதே
போய் ஏவியதை புகழ் மேல் நின்றாட்கு உரைசெய்தனன்-ஆல்
வாய் ஏவிய பா நிகரா மறைக்கு ஓர் கொழுகொம்பு அன்னான்

#31
இப்பால் ஏது ஒன்று இல்லாது எல்லாம் உள ஆக்கினனாய்
முப்பால் ஒன்று ஆம் முந்தைக்கு உரி மாண் முறையோடு அருகு உற்று
ஒப்பால் அடையா இ பண்பு உடையோர் உடை இ எளிமைக்கு
அப்பு ஆர்கலி சூழ் உலகு ஆள் அரசர் தகவு ஒத்து உளதோ

#32
நீர் கணம் குழி நேடிய நீர்மையால்
சீர்க்கு அணங்கு எளிமை துணை தேடினர்
கார்க்கு அணங்கு உறை கான்றலும் போல் அறத்து
ஏர்க்கு அணங்கு எனும் ஈகை இயற்றினார்

#33
மறுமை நாடி வழங்கிய அன்பொடு
நறுமை நாடிய வான் கொடை நல்கலின்
சிறுமை நாடிய பற்று அற தீர்த்திட
வெறுமை நாடினர் நாடு அரு மேன்மையார்

#34
வீட்டு நன்மை விளை நிலம் ஆம் இலோர்
நீட்டு தம் கரம் என்று நினைத்து அருள்
மாட்டு வித்து என வந்து இரப்பார் கரத்து
ஈட்டு வான் பொருள் எண்_இலது ஆம் அரோ

#35
ஈந்து தாமும் இல்லார் என ஆய பின்
காய்ந்து தீந்த குளம் கடி தோண்டு எனா
தோய்ந்து உலாம் அருளால் தொழில் செய்து உயிர்
வாய்ந்து வாழவும் ஈகை வழங்குவார்

#36
உழுது உண்பார் உயிர் வாழ்பவர் மற்று எலாம்
தொழுது உண்பார் எனில் தாம் தொழில் செய்த பின்
அழுது உண்பார் கொடை கோடல் இல் ஆயின
பொழுது உண்பாரில் யார் என பூசவே

#37
அந்த நுண் தொழில் ஆம் என கொள்பவர்
தந்தது ஒன்றினை தாமும் நிறை குறை
வந்தது என்று இலர் வாழ்த்தி கொண்டு அய்யமாய்
சிந்தவும் புயல் செம் கையில் கொள்ளுவார்

#38
நாக்கு அணங்கு கனிந்து நவின்ற சொல்
நோக்கு அணங்கு கண்ணோட்டம் நொதுத்த கை
ஊக்கு அணங்கு இடும் தானம் என்று உள்ளுவார்
கோக்கு அணம் கொடு ஓங்கு குலத்தினார்

#39
மங்குல் முட்டிய மாடம் எவன் செயும்
கங்குல் முற்றிய கையரை கொண்டதேல்
சங்கு உள் முத்து என புன் மனை தாம் உறைந்து
எங்கும் முற்றிய மாண்பு இவர் ஏந்தினார்

#40
அங்க மண் கலம் தீட்டுவர் ஆ எனா
பொங்கு அகத்தை கவர் வலை போன்ற பூண்
செம் கலத்து இனம் தீது என நீத்து அருள்
தங்க முற்று எளி வேடம் தரித்து உளார்

#41
பானு உடை கொடு பால் மதி பாவலும்
மீன் உடை குடமும் தனில் வேய்ந்த பின்
கான் உடை தொடையோ கலனோ தகா
வான் உடை தளம் வாழ்த்து அரசாட்கு அரோ

#42
வான் பொழிந்த இன்பு எய்து இலர் மண்-இடை
தேன் பொழிந்தவை இன்பு என தேடுவார்
கான் பொழிந்த கனி கடு பாய்ந்த பின்
ஊன் பொழிந்த உடற்கு இனிது ஏது என்பார்

#43
என்று தம் பசி மாற்றிட உண்கிலர்
பொன்று தம் உயிர் போக்கு இலது உண்பர்-ஆல்
பின்று தம் இறையோன் பெரிது ஊட்டியது
ஒன்று தம் உளத்து உண்டு இனிது ஓங்குவார்

#44
புவி அருந்திய புன் மிடி ஊங்கு எழ
செவி அருந்திய கேள்வியார் தே அருள்
அவி அருந்தல் அல்லாது அருந்த ஒன்று இலா
நவி அருந்திய நல் உடல் வாடும்-ஆல்

#45
சிந்தை தேறிய தேறல் செய் வாகையான்
முந்தை ஆய எலீய முனிக்கு உணா
தந்தை காகை கொடு ஈந்தன தன்மையால்
எந்தை இன்று உணவு ஈதல் செய்வான் என்றான்

#46
உரை செயும் பொழுது ஒப்பு இல பாடிய
நிரை செயும் பல புள் நெடு நாள் உறீஇ
விரை செயும் கனி ஈந்து விருந்து எனா
கரை செயும் கடை அற்று இனிது உண்பர்-ஆல்

#47
ஏம் அகத்து அருள் நாயகன் ஏவியும்
சேம் அகத்து அருள் தேறு நல்லோர் பல
யாம் அகத்தில் நினைத்து இலது இன்ன மா
கோ மகர்க்கு விருந்து எதிர் கொள்வர்-ஆல்

#48
கொண்ட யாவையும் கொண்டு இறை வாழ்த்தி முன்
பண்ட நாள் சிறைப்பட்டு உறை தானியல்
கண்ட மேலவன் ஆங்கு உழவன் கொடு
மண்டு உணா கொணர் மாண்பு இது எனா உண்டார்

#49
பின்னை ஒன்று இல பிற்பகல் பேர் எழில்
அன்னையின் திரு ஆனனம் வாடல் காண்
தன்னை உன்னு இல மா தவன் நொந்து மீன்
மின்னை வென்ற கண் விண்டு உறை வென்றதே

#50
மன்ன நம் மணம் வாய்ந்து முடிப்ப முன்
பொன்ன நின் கொடி பூத்தது தந்த பின்
உன்ன_அரும் சுவை ஒன்று இலது ஈதலும்
அன்ன வண் தயையோற்கு அரிதோ என்றாள்

#51
என்னலோடு ஒரு காரணம் இன்றியும்
கன்னலோ மதுவோ கனி தன்மையோ
மின்னல் ஓடிய பொன் கலம் மீது ஒரு
பன்னலோடு அடையா பயன் கண்டு உளார்

#52
இற்றை ஓர்ந்த இல்லோர் உவந்து ஓங்கவே
மற்றை ஓர் பகல் மாந்திட ஒன்று இலர்
கற்றை ஓர் பிழம்பு உற்ற உரு காட்டி வான்
உற்றையோர் உணவு உய்த்து வழங்கினார்

#53
எண்ணம் தீர்ந்த எழில் கொடு வெண் நிலா
வண்ணம் தீர்ந்து ஒளிர் மாறுகத்து உம்பர் சூழ்
தண் அம் தீம் புனல் ஆடு அலர் தண் தொடை
சுண்ணம் தோய்ந்து உரம் தூங்குபு தோன்றினார்

#54
துகிலில் தோய் உரம் தோய் அணி தோன்றவே
அகிலில் தோய் துகில் வாடையோடு ஆட விண்
முகிலில் தோய் வரை மொய் புயம் ஓங்க நான்
புகலின் தோய் நயத்து ஓர் பொருவு ஒத்ததோ

#55
புரிந்த தாமரை பொன் தவிசு இட்டு மின்
எரிந்த மீனொடு தேன் இழி பூம் துகள்
விரிந்த வானி விரித்து உயர் வாசனை
சொரிந்த நீர் புனல் தூற்றி வழங்கினார்

#56
கான் சொரிந்த கனி பட பாலொடு
தேன் சொரிந்த சுவைப்பட சேண்உளோர்
வான் சொரிந்த மது கொடு பல் உணா
மீன் சொரிந்த வெயில் கலத்து ஈட்டினார்

#57
கண் கொடு உண்ட களிப்பினும் ஏழு இசை
பண் கொடு உண்ட செவி பயன் பாடு எனா
எண் கொடு உண்டு அளவு எல்லை_இல் தேவ பல்
உண் கொடு உண்ட நயத்து இணை உள்ளதோ

#58
எல்லும் செல்லா ஒள் ஒளி ஏந்து ஓர் எழில் உண்டு ஆய்
செல்லும் செல்லா விண் உறைகின்றோர் சிறிது ஆங்கு ஓர்
இல்லும் செல்லா நின்றன தன்மைத்து இவர்-தம்-பால்
சொல்லும் செல்லா உள்நயம் உண்டே தொழுது உண்டார்

#59
அள்ளும் தன்மைத்து ஆர்ந்த ஒளி வானோர் அரிது என் பா
கொள்ளும் தன்மைத்து இன் இசை பாட குளிர் தன் கோல்
விள்ளும் தன்மைத்து ஊறிய தேன் போல் வினை எல்லாம்
உள்ளும் தன்மைத்து ஒண் கொடி கொண்டான் உரை கொண்டான்

#60
பின்றா வல்லோய் பேணிய அன்போய் பிரிவு இன்றி
ஒன்றாய் நின்றோய் ஈங்கு உயிர் எல்லாம் உணவு ஈய்ந்தோய்
குன்றா அன்பால் நம்பின யார் யார் குறை உண்டோம்
என்றார் உண்டோ என் உயிர் மாறாது இனிது ஆள்வோய்

#61
வல்லார் உண்டோ உன்னை அலாது உன் வலம் நம்பி
இல்லார் உண்டோ உண்டிலர் உண்டோ இவை இங்கண்
கல்லார் உண்டோ கண்டவை எண்ணி கரவாதேல்
சொல்லார் உண்டோ உன் அருள் வாழ்த்தும் தொடை மிக்கோய்

#62
நீர் தோய் பொன் ஆர் தன் தலை நீட்ட நிசி நீத்தோன்
ஏர் தோய் மின் ஆர் பொன் சிறை அம் புள் இனம் எல்லாம்
சீர் தோய் தம் நா நின் புகழ் பாட செயிர் இன்றி
தார் தோய் தேனோடு ஊண் பல தந்தே தயை செய்வோய்

#63
காய் கான் செல் என் முந்தையர் உண்_நீர் கனிவு இல்லா
நோய் கான்று ஈட்டும் தாகம் அவித்தே நுகர்வு எய்த
தீய் கால் கல்லே தீம் புனல் கால திரிவார் தம்
வாய் கான் எல்லாம் பின் செல அ கல் மலிவு உண்டார்

#64
அன்னார் அ நாள் அ வனவாய் வந்து அமுது இன்றி
பல் நாள் தன்னால் உள்ளிய இன்பம் பல ஈந்த ஓர்
உன்னா நுண் மா தே அவி தந்து ஆங்கு ஒரு கோடி
இன்னா துன் நோய் ஒன்று இல வாழ்ந்தே இனிது உண்டார்

#65
மாண்ட ஓர் முனியே கான் வழி உண்ணா மயல் உற்றான்
ஆண்டு ஓர் அமரன் தந்த ஓர் பிண்டம் அயில்கின்றான்
நீண்ட ஓர் வழியே நாற்பது நாள் போய் நிகர் அற்றான்
மீண்டு ஓர் பசி தோன்றாது உயர் குன்றின் மிசை சென்றான்

#66
கறித்து உண் பைம்புல் ஒன்று இல காய்தல் கருதி கார்
மறித்து உண்ணாது எண்ணா உயிர் மாழ்ந்தே மருள் எல்லாம்
செறித்து உண் அன்று ஆர் யோகி அவற்கே திளை பல் நாள்
பறித்து உண் காகம் தான் உணவு ஈய பரிவு ஈந்தோய்

#67
நின்னால் ஆம் ஓர் நன்றது வெள்ளம் நெடிது எண்ணல்
என்னால் ஆமோ என் உயிர் வேந்தே இயல் தம் கை
தன்னால் ஆம் ஓர் புன் தொழில் சார்பு என்றவர் வாழாது
உன்னால் ஆம் ஓர் நல் துணை ஓர்ந்தார் உயிர் வாழ்வார்

#68
குற்றம் தேடேன் கோல் குடை என்னும் குறை தேடேன்
சுற்றம் தேடேன் சூழ்ந்து என உள்ளம் சுடு அம் பொன்
பெற்றம் தேடேன் நம்பிய இம்மை பெரிது உய்க்கும்
அற்றம் தேடேன் தேடுவன் நீ செய் அருள் என்றான்

#69
என்றான் மென் தாது ஓங்கிய கோலான் இவை கேட்டு ஆங்கு
ஒன்றா நின்றார் வான் சபை உள்ளா உணர்வு உள்ளி
குன்றா மென் தாது ஊறிய தீம் தேன் கொடு பைம் பூ
பொன்றா அன்பால் விண் மழை போல பொழிகின்றார்

#70
மாண் அ கால் அ புன் மனை வானோர் மனை ஒப்ப
பேண் அ காலத்து ஒள் ஒளி பெற்ற பெரிது என்னா
காண் அ காலத்து ஆக்கை சிவந்தே கடல் அம் கீழ்
நாண் அ காலத்து ஆழ் முழுகிற்றே நனி வெய்யோன்

#71
மா இரு ஞாலம் மூடு மாசு இரா அற வில் வீசி
பாய் இரு சுடரோடு ஒத்தார் பகல் இரா இல வானோர்க்கு ஒன்று
ஆய் இருவரும் உள் ஓங்கி அமரர் சூழ் பணிந்து நிற்ப
காய் இரு விசும்பின் மாட்சி காட்டிய மனை அது அன்றோ

#72
சூல் முகத்து எரிந்த மேகம் சுடர்ந்து இருள் அற சூழ் மின்னும்
போல் முகத்து இறைவன் தன்னை புதல்வனாய் கருப்பம் பூண்டாள்
தான் முக திரு வில் வீசும் தகுதியால் தெளிந்த ஓதி
நூல் முகத்து உமிழ்ந்து தீம் தேன் நுகர்ந்த வாய் மலர்ந்து சொல்வாள்

#73
கார் எழும் ககனத்து ஊர்ந்த கதிர் பல உதித்தல் தந்தே
ஏர் எழும் மணியும் பூவும் இனிய தீம் கனியும் மற்ற
சீர் எழும் பொறித்த மாமை திளைத்தன எவையும் தந்த
பேர் எழும் கருணையானே பின்னையும் தன்னை தந்தான்

#74
நூல் நெறி வழங்கா வண்ணம் நுதலிய கருணை சால்பில்
சூல் நெறி நர_தேவு ஆகி தோன்றிய பின்னர் எந்தை
பால் நெறி பெருகும் இன்ப பரவை நாம் மூழ்கல் தந்து
வான் நெறி வழங்கும் தன்மை மண்-இடை வழங்கான்-கொல்லோ

#75
கோல நல் படலை பைம் பூ கூர் உகிர் விசித்த மாலை
சால நல் கதிர் பொன் பற்றும் தட மணி படலை மற்ற
நீல நல் கடல் சூழ் பாரில் நிகர் அற வலிய ஆர்த்து இ
ஞாலம் நல் தகவில் ஓங்க நாயகன் மனிதன் ஆனான்

#76
பூட்டிய புணர்ச்சி பாலால் புணர் இரு துவங்கள் வேற்று ஆய்
கூட்டிய ஒருவன் ஆய குணத்தவன் மனுவும் என்பான்
ஈட்டிய நலங்கள் குன்றா இறைவனும் என்பான் இ-வாய்
சூட்டிய கருணை நல் நூல் துறை வலோர் அடையும் பாலோ

#77
நஞ்சு அமிர்து இரண்டும் சேர்த்து நஞ்சு நல் அமிர்தம் ஆமோ
விஞ்சு அவிர் பொன்னில் சீருள் விசித்து இது பசும்பொன் ஆமோ
நெஞ்சு அவிர் கருணை பூண்ட நிமலன் தன் குணமும் குன்றா
எஞ்சு அழி மனுவின் தன்மை இறைமையோடு உயர்த்தினானே

#78
கீழ்வரே சேர்ந்த மேலோர் கீழ்மையே மாறி தாமும்
தாழ்வரே அன்றி தாழ்ந்தார் தகவு உற வலியர் ஆரோ
வாழ்வரே இறைவற்கு ஒத்த வளமையும் உணர்வும் பண்பும்
சூழ்வரே பரமன் நல் தாள் தொழுது அருகு உவப்பின் சேர்ந்தார்

#79
புரு வளர் கதிர்கள் கோலால் பொறித்தது ஓர் படத்தின் சாயல்
மரு வளர் மலரும் வாமம் வளர் இன மணியும் பொன்னும்
உரு வளர் பருதி தோற்றி உடை தொழில் எஞ்ச நாதன்
திரு வளர் தயையின் சார்பு சீர் எலாம் பயக்கும் அன்றோ

#80
மெய் விளை இடம் ஐந்து இன்றி விளங்கிய கடவுள் ஆகி
பொய் விளை பொறிகள் அட்டு புரை விளை நசையும் அட்டு
துய் விளை உளத்தில் பொங்கும் தொடர்பு இறகு ஆக ஊக்கி
ஐ விளை உணர்வோர் அல்லால் அனந்தன் நல் பாதம் சேரார்

#81
செரு வழி பொறிகள் ஐந்தும் செகுத்து தன் நிலையில் ஊக்கல்
அரு வழி என்று தானே அம் கண் வான் இறங்கி பாரில்
கரு வழி வந்த நாதன் கலை முதிர் சுருதி காட்ட
உரு வழி தோன்றி மாக்கள் உறவு உற மகன் ஆனானே

#82
கோள் நெறி கடந்த ஞானம் கூறி எம் உயிர்கள் வாழ
வாள் நெறி கடந்த புண் போல் வருந்தல் நிற்கு இனிதோ அன்பால்
பாண் நெறி கடந்தோய் எம்மால் பயன் உனக்கு ஈங்கு ஒன்று உண்டோ
சேண் நெறி கடந்து நம்மை தேடி வந்து உளைவாய் என்றாள்

#83
தேன் உரு கோதை ஒத்தாள் செப்பிய கனிந்த தீம் சொல்
கான் உரு கொடியோன் சால களிப்புற செவியின் மாந்தி
ஊன் உரு கொண்ட நாதன் உணர்ந்து இறைஞ்சு இருவர் வாழ்த்தி
மீன் உரு கொடு வில் வீச வேத நல் திலதம் ஒத்தார்

#84
இன்ன அரு நிலைமையோடு இரவு எலாம் இனிது
உன்ன_அரும் உவகையோடு உணர்ந்த ஓதியால்
துன்ன_அரும் அருள் புரி சுதனை வாழ்த்தலின்
பன்ன_அரு மகிழ் வினை பயத்தது ஆம் அரோ

#85
உள் நிலா உரை வழி உகுத்த பான்மையால்
தெண் நிலா அடியினாள் செப்பும் சொல் விழைந்து
எண்_இலா வரத்தவன் எண்_இலா முறை
அண்ணி ஆய் அவள் உறை அரங்குள் ஏகுவான்

#86
விரை செயும் கொடியினான் நுழை பல் வேலை தேன்
உரை செயும் மடந்தை வான் உயர் நின்று ஒள் ஒளி
வரை செயும் அளவு அற வழங்கல் காண்டலும்
கரை செயும் கடலினும் களிப்புற்று ஓங்குவான்

#87
தேனின் ஆர் மடி என திங்கள் தெண் சுடர்
பால் நிலா சகோரமே பருகினால் எனா
வான் நிலா எழுந்த தாள் மடந்தை கால் கதிர்
மீன் நிலாவு இரு விழி மேய்ந்து உள் தேறுவான்

#88
பேர் உயிர் துணை உடல் பெயர்ந்து வான் மிசை
ஏர் உயிர்த்து இரவி போல் எறிந்த வில் திரள்
நேர் உயிர்த்து அனலி முன் பளிங்கு நேர் முகத்து
ஆருயிர் தோழனும் அலங்கி தோன்றினான்

#89
சடம் கொடு விண் உறை தளங்கள் தாழ்தலும்
கடம் கொடு பல்லியம் கறங்கி பாடலும்
இடம் கொடு சூழ்தலும் கண்டுளி இன்பு அலை
புடம் கொடு கடல் பெருக்கு எடுத்து உள் புக்கு உளான்

#90
கண் குடித்தன ஒளி கிளர்த்த காட்சியான்
எண் குடித்து உவந்த கண் இமைப்பு இலாமையும்
வண் கொடி துணர் அலர் வாடு இலாமையும்
விண் குடி தகைமையால் விளங்கி தோன்றினான்

#91
இன் நிழல் இவரிய இழை பொன் பூணினாள்
தன் நிழல் ஒடுங்க நான் தகு மணத்து-இடை
மன் நிழல் எழும் கொடி வகுத்தது ஆம் என்றான்
மின் நிழலுடன் புனல் விளைக்கும் கண்ணினான்

#92
உன்னிய உவகையோடு உருகி இன்பு அறா
மின்னிய முகில் துளி விட்டு எனா மிளிர்
கன்னிய விழி மழை கான்று கான்று உயர்
துன்னிய புய மலை துளங்க தோன்றினான்

#93
மன் என மணத்து-இடை அமைந்த மாது போய்
மின் என மிளிர்ந்து உயர் மேவி மீள்கு இலா
தன் என விசும்பு உறின் இவள் தணந்து நான்
பின் என செய்வது என்று உளத்தில் பேணினான்

#94
உந்து தேர் என நசை உகப்பில் ஏறினள்
நொந்து தேர் அரும் புவி இடுக்கண் நூக்கு சூல்
நந்து தேறிய நயன் நல்க மீட்டு இவண்
வந்து தேறுவள் என மனத்தில் தேறினான்

#95
இ திறத்து உணர்ந்த காலத்து எந்தை தன் கருணை வீர
மொய் திறத்து அவிர் தன் தாளின் முழுது உற விசித்த கோதை
மெய் திறத்து எறிந்த கற்றை விலகி நீத்து இறங்கினாள் என்று
அ திறத்து இவன் தன் சொல்லும் ஆர்வமும் உயிர்த்து சொல்வான்

#96
கடம் புகும் தேறலை சூல் கொள் கண்ணி போல்
தடம் புகும் கடவுளை தாங்கும் பீடமே
உடம்பு கொள் உனது சேய் உவப்பதற்கு நின்
புடம் புகும் தமியனே புரிவது ஓதுவாய்

#97
கையினால் உரை செய கேட்ப கண்களால்
மொய்யினால் அலைவு கொள் சிந்தை மூகை போல்
மெய்யினால் அமைந்த பின் விமலன் செய் அருள்
மையினால் உணர்கு இலா மருள்கின்றேன் அரோ

#98
கொம்பு அயில் கொடி என கொடியில் என
கம்பு அயில் முத்து என மலருள் கள் என
அம் பயில் உன் வயிற்று அமலன் ஆய பின்
நம்பு அயில் எமக்கு உள நயன் சொல்வு ஆம்-கொலோ

#99
மொய் அகத்து இரட்டும் நீர் முடுகி சூழ்ந்து அமர்
வையகத்து உறும் துயர் மடிய நாயகன்
மெய் அகத்து உதித்த போது அலரை வென்ற நின்
கை அகத்து அடியனேன் காணல் ஆம்-கொலோ

#100
ஒளி அமை பிறை நுதல் புருவத்து ஒண் சிலை
வெளி அமை உடு விழி துகிரை வெல் இதழ்
நளி அமை ஆம்பல் வாய் நளினம் நாண் முகம்
களி அமை நீர் உக காணல் ஆம்-கொலோ

#101
தண் படு மதுவொடு நறவு தாது அவிழ்
நுண் படும் அனிச்சையின் நொய்ய சீறடி
தெண் படும் மலர் இணை முத்தம் சேர்த்தி என்
கண் படு புனலினால் கழுவல் ஆம்-கொலோ

#102
வீயினின் பூளையின் நொய்ய மெய் உடை
சேயினை தொழிலினால் காய்த்த திண் கர
தே இனி அடியனென் ஏந்தல் ஆம்-கொலோ
வாயின் என் உயிர் பிரியாமை ஆகுமோ

#103
ஒளி பட உயர்ந்த பேறு ஒன்றும் இன்றியும்
வெளி பட மனு புரம் வேய்ந்த நாயகன்
நளி பட மலர் பதம் நயந்து சென்னி மேல்
அளி பட இருத்தி யான் அணிதல் ஆம்-கொலோ

#104
திருந்து பூம் சிகழிகை பூண்ட சீர் என
பொருந்து பூம் திரு உடல் போர்த்து நின் வயிற்று
இருந்து பூ-இடை அவன் பிறந்த எல்லையின்
வருந்து பூ எழ செயும் வளப்பு எவன்-கொலோ

#105
களிப்பனோ அழுவனோ கனிய தான் எனை
விளிப்பனோ சுளிப்பனோ விழைந்த வாள் முகம்
ஒளிப்பனோ தழுவிய உவப்பின் முத்தமும்
அளிப்பனோ உலகு எலாம் அளித்த நாதனே

#106
கோ முழுது இறைஞ்சிய கொற்ற கொற்றவன்
கா முழுது அளி பட கலிகை விண்டு என
பூ முழுது ஒழி நகை புரிதல் கண்டதேல்
ஓ முழுது உவந்து உளத்து உருகி ஓங்குவேன்

#107
பால் நலம் கழை நலம் பகர் யாழ் நலம்
தேன் நலம் கடந்த மென் குதலை தீம் சொலை
வான் நலம் உளம் பட செவிகள் மாந்தினேல்
யான் அலங்கு உயிர் விடல் இனியது ஆம் அரோ

#108
வளமை கொள் திறலினால் வயங்கு மாண்பினோன்
இளமை கொள் பிறை என இளவலாய் வளர்ந்து
எளிமை கொள் உணவினை எளியன் எம்மொடு
நளிமை கொள் கருணையால் நுகர்வது ஆவனோ

#109
கங்கை அம் சுழியினில் பட்ட கால் என
சங்கை அம் பெற்றியால் தவிக்கும் என் உளம்
பங்கையம் பதத்தினான் பருக நான் உழைத்து
எம் கை அம் தொழிலனுக்கு இயலும் பான்மையோ

#110
அரு வினை தொழில் உழைத்து அருந்துதீர் என
கரு வினை சாபமாய் கடவுள் ஏவினான்
பெரு வினை செய்ய நான் பிரான் உண்பான் எனில்
திரு வினை தன்மை ஆம் தொழில் செய்து ஆற்றலே

#111
துதி வளர் வரம்பு இலாது அனந்த சோபன
திதி வளர் உவப்பு எழீஇ அமரர் செய் புகழ்
விதி வளர் தகுதி மா விமலற்கு ஈங்கு உரி
பதி வளர் இருத்தியின் பயன் இல் ஆயதே

#112
தேனொடு ஏந்திய மலர் பதத்தில் சேர்த்திட
கானொடு ஏந்திய நுரை கதுவு அ பூம் துகில்
ஊனொடு ஏந்திய திரு உடலம் சாய்ந்திட
மீனொடு ஏந்திய அணை வேய்ந்து இல் ஆயதே

#113
இலங்கு ஒளி குரு மணி இணைக்கி பொன் தவழ்
அலங்கு ஒளி சாமரை அமைந்து இல் ஆயதே
விலங்கு ஒளி பரப்பு உற விரித்து நல் பகல்
துலங்கு ஒளி படம் உயர் தோன்று இல் ஆயதே

#114
தான் இழுக்குறாது எரி மதியம் தாங்கிய
மீன் இழுக்குற எரி பசும்பொன் வெற்பு எனா
வான் இழுக்குற எரி மணி சிங்காசனம்
பான் இழுக்குற எரி பாலற்கு இல்லதே

#115
மின் வளர் நவ மணி மிடைந்த போதிகை
பொன் வளர் தூண் மிசை பொருத்தி செம்_சுடரின்
வளர் இள வெயில் எறிந்த மாளிகை
கொன் வளர் நசைக்கு இணை கொண்டது இல்லதே

#116
இறைவனை அருத்தியோடு இருத்தல் ஆக நூல்
துறை வனை உணர்வினாய் பணியை சொல் எனா
அறைவன் நைகுவான் நசைக்கு அலைந்த நெஞ்சினான்
சிறை வனை வயிற்று உறை சேயை ஏற்றுவான்

#117
ஏற்றுவான் அன்பின் உள் உருகி இன்பு உற
தூற்றுவான் இரு விழி சொரிந்த மாரியை
போற்றுவான் அவற்கு பொழி வர தொகை
சாற்றுவான் உணர்குவான் மக்கள் தன்மையோ

#118
பண் என சொன்ன தீம் சொல் பயன் உணர்ந்து அரிய அன்பால்
கண் என தன்னை காக்கும் காவலன் விருப்பம் கண்டு
விண் என தரணி கவ்வும் விரிந்த மா கருணை வல்லாள்
நுண் என முறுவல் கோட்டி நுதல்வு அரும் கனி சொல் சொல்வாள்

#119
வான்-தனை காத்தோன் காத்து வளர்ப்பதற்கு உரி கை_தாதை
போன்று அனைத்து உணர்வும் பூண்டோய் பொலிந்த நின் விருப்பம் நன்றே
மீன் தனை கசடு என்று ஓட்டி விழி கடந்த ஒளி நிற்பானை
மூன்று அனைத்து உலகம் எல்லாம் முயன்று செய் வணக்கம் சால்போ

#120
பகை எலாம் பழித்து யாவும் படைத்து அளித்து அழிப்போனேனும்
தகை எலாம் பழித்த பாவம் தாங்கிய உலகம் தாங்கு
மிகை எலாம் பழித்து இ வாழ்க்கை விழைவு செய் மருளை நீக்க
நகை எலாம் பழித்து தண்மை நல்கிய வறுமை தேர்ந்தான்

#121
தூய் மணி பெயர் பெற்று அஃகா துளங்கு உடு புறத்து நீக்கி
வேய் மணி பெயர் அற்று உன்னா விளக்கு அணி வீட்டில் நின்றோன்
ஆய் மணி பெயர் பெற்ற இ கல் ஆசை கொண்டு இங்கண் சேயாய்
தாய் மணி பெயர் பெற்று எம்-பால் தாழ்ந்துறல் உணர்வான்-கொல்லோ

#122
கதிர் செயும் உலகின் வேந்தர் கழல் தொழ உவகை பொங்கி
பொதிர் செயும் திருவோன் ஈங்கு புன் திரு நேடான் அன்றோ
முதிர் செயும் கனி தேன் மாந்தி முன்னர் யாம் உற்ற நோயை
பிதிர் செயும் மருந்து ஆம் கைக்கும் பிணி உண தலையாய் வந்தான்

#123
ஆறு எலாம் கடலுள் வைகும் அரிய தூய் அறத்தின் உள்ளும்
வேறு எல்லா திருவே வைகும் விழு தவத்து இறைவ நாமே
மாறு எலாம் கடந்த அன்பால் வணக்கம் உள் புரிந்தால் எம் சேய்
பேறு எலாம் கடந்த செல்வ பெற்றியால் இமிழின் கொள்வான்

#124
களி வளர் தவத்தின் வீட்டில் காட்சி நல் நிலையில் ஞான
ஒளி வளர் கதவு சேர்த்தி ஒழுக்க நல் தாளை பூட்டி
அளி வளர் நெஞ்சின் மஞ்சத்து அன்பு அணை பரப்பினேமேல்
வெளி வளர் உயர் வான் வேந்தன் விழைந்து உறைந்து எம்மை ஆள்வான்

#125
துளைத்து எழும் நசையின் முந்நீர் சுழியில் நாம் பட்டதே போல்
திளைத்து எழும் ஐயம் என்னோ செய் கடன் இன்னது என்ன
விளைத்து எழும் தயையின் எந்தை விளம்ப வேண்டுதல் நன்று என்றாள்
கிளைத்து எழும் நயப்பில் தம் சேய் கேட்டு இவர் வேண்டுகின்றார்

#126
காரின்-பால் கடந்த அம் கண் ககனம்-பால் எதிர் இல் ஆளும்
ஓர் என்பான் மனத்துள் சொல்வான் உளத்தின்-பால் வணக்கம் செய்து
பாரின்-பால் தோன்றும் பாலால் இருவர்-பால் பயந்த சேய் போல்
நீரின்-பால் வறுமைக்கு ஒப்ப நீர் எனை வளர்த்தல் வேண்டும்

#127
பொறையினார் விரும்பும் வாழ்க்கை புரையினால் சிதைவுற்றார் என்று
இறைவன் நான் அழிவு இல் வீட்டை இருக்கும் ஆறு இமிழின் காட்ட
சிறுமையால் வளம் பெற்று உம் கண் சிறுவன் ஆய் திரு என்று ஈந்த
வறுமையால் உயர்ந்த உம்மை வையம்-வாய் தெரிந்தேன் என்றான்

#128
மாடக இசை நேர் இ சொல் மா தவன் சூசை கேட்டே
ஆடக மாடத்து ஓங்கி அரு மணி அணை மீது அம் பொன்
பாடகம் ஒளிர்ந்து ஈங்கு ஆளும் பார்த்திபர் செல்வம் ஏய்க்கும்
கோடு அகல் எமது இல்லாமை குணம் என கூறினானே

#129
அழற்றிய வேனில் காலத்து அருந்திய அமுதை கான்று
நிழற்றிய கொம்பில் பேசு நிற கிளி இரண்டும் என்னா
மிழற்றிய வண்ணத்து அன்னார் விருப்பு எனும் எழும் கால் பொங்கி
சுழற்றிய நெஞ்சில் ஆவி சுக கடல் அமிழ்ந்திற்று அன்றோ

#130
தோடு அணி மகளிர் மன்றல் துடங்கிய உவகை போல
கேடு அணி உலகம் பூத்த கேதம் அற்று உவப்ப கன்னி
நீடு அணி கருப்பம் முற்றி நீத்து எழும் பருதி போல் மெய்
கூடு அணி பரமன் தோன்ற குணித்த நாள் குறுகிற்று அம்மா

#131
வீ முயங்கிய பைம் தோகை விரித்த நல் மஞ்ஞை போன்றே
மீ முயங்கிய மீன் செய்த வெயில் முடி பூண்ட கோதை
சே முயங்கிய மெய் போர்த்த சேய் எழும் முன் தன் கையால்
பூ முயங்கிய பால் ஆவி பூம் துகில் வனைந்திட்டாளே

#132
தூம நல் புகைகள் சூட்டி துளித்த தேன் சினை கொள் பைம் பூ
தாம நல் கமழ் நீர் தூற்றி தாழ்ந்து ஒரு பேழை-தன்னில்
வாம நல் துகில் பெய்தே தன் மனம் என திரு தன் சேயின்
நாம நல் புணர்ச்சி பூட்டி நயப்ப நாள் விரும்பி நின்றாள்

#133
தண் தமிழ் சொல்லும் நூலும் சால்பொடு கடந்த வண்ணத்து
உண்ட அமிழ்து உவப்பின் உள்ளத்து ஓங்கும் இ இருவர் தம்முள்
பண் தமிழ் உரைத்ததே போல் பயன் பகர்ந்து இளவல் காண
மண்டு அமிழ்து உகும் அவாவின் மகிழ்வினை உரைப்பர் ஆரோ
மேல்

@10 மகவருள் படலம்


#1
செல் செயும் சாபம் நீக்க செம்_சுடர் சாபம் சேர் கால்
கொல் செயும் சாபம் நீக்கி கூ எலாம் உறவு ஆய் பாவத்து
அல் செயும் சாபம் நீக்க ஆண்டகை மகரம் சேர்ந்து உள்
எல் செயும் கன்னி நீக்கி இளவலாய் உதித்தல் சொல்வாம்

#2
மா இரு ஞாலம் கொண்ட மருட்கு இனைந்து அழுத வானம்
காய் இரும் இடர் தீர் கால் ஆய் களித்து என மாரி காலம்
போய் இரு புடையில் செந்நெல் பொதிர்ந்த மார்கழி நாள் ஐ_ஐந்து
ஆய் இரு உலகும் ஓங்க ஆண்டகை உதித்தல் ஓர்ந்தான்

#3
பழி எலாம் நீக்கி நீங்கா பகை முதிர் கொடுங்கோல் ஓச்சி
அழிவு எலாம் பயத்த பேய் வென்று அமலனும் மகரும் ஒன்றாய்
இழிவு எலாம் ஒழித்து வீக்க இளவலாய் பிறப்ப நாதன்
உழிவு எலாம் முனைவு அற்று எங்கும் ஒரு குடை நிழற்றிற்று அன்றே

#4
நிலம் உறை பகையை சீக்கி நிகர்_இல் ஒத்தவியான் என்பான்
வல முறை ஒருவன் ஆண்ட வளமையால் செருக்குற்று எங்கும்
பல முறை பிரிந்த யாரும் பண்டு உறை காணி ஊர் போய்
குல முறை இறையும் எண்ணும் கொணர்ந்து இட பணி இட்டானே

#5
இ பணி கேட்டு வேதத்து எழில் நுதல் திலதம் ஒப்ப
ஒப்பு அணி கடந்த சூசை உளத்து அழல் புகுத்தினால் போல்
வெப்பு அணி உயிர் உலாவும் வெய்து உறல் ஆற்ற மொய் கொள்
அப்பு அணி உலக வேந்தின் அன்னையை நோக்கி சொல்வான்

#6
மன்னவன் உலகில் எங்கும் வகுத்தது ஓர் பணி ஈது அன்றோ
பின் அவன் பணித்த ஆற்றால் பெத்திலேம் என்னும் வாய்ந்த
என் நகர்க்கு இறையும் எண்ணும் ஈவதற்கு ஏகல் வேண்டும்
அன்னதற்கு அடியேன் செய்யும் ஆவது என்று அருளி சொல்வாய்

#7
விண் தலம் அகத்து வேந்தர் வேந்தனாம் உனது மைந்தன்
மண் தலம் அகத்து தோன்றி மனு_மகன் பிறப்ப நாள் ஆய்
தண்டலை அகத்து விள்ளும் தாதினும் நொய் தாள் நீயும்
கண்டகம் அகத்து என்னோடு துணை வர கருதலாமோ

#8
மின்னி நா இடி வெற்பு ஈர்ந்து வேறு இரு கூறு செய்வது
உன்னி நான் உய்யல் ஆற்றேன் ஒரு நொடி பிரிந்து போகின்
முன்னி நான் அடை நோய் நீக்க முதல்வன் கேட்டு அவன் செய் ஏவல்
பன்னி நான் செய்வது என்னோ பகர்தியே என்றான் சூசை

#9
என்று அரு மா மறை வடிவம் ஏந்து தவன் இவை கூற
பின் தரு யாவையும் உணர்ந்தும் பேர் இறையோன்-தனை தாங்கும்
துன்று அரு மா மாட்சிமையாள் தன் துணைவன் சொல் பணிய
அன்று அரு மா மகவினை தாழ்ந்து அதற்கு இயற்றும் பணி கேட்டாள்

#10
கேட்பது அரும் தயைக்கு இறைவன் கேட்டு உரைத்த திரு உளமே
கோட்பது அரும் குண கிழத்தி கொழுநன் உளத்து எழ சொல்லி
வேட்பது அரும் மணம் மணத்த உயிர் இரண்டும் வேறு ஆகா
வாட்பது அரும் நயத்து இருவர் மா நகர்க்கு ஏகுதும் என்றாள்

#11
தேன் நிகர் சொல் செவி மாந்த செழும் தவத்தோன் உளத்து ஓங்கி
மீன் நிகர் பொன் சிவிகையும் மால் வேழமும் பாய் பரிமாவும்
வான் நிகர் பொன் திண் தேரும் வறுமையர்க்கு இல்லாமையின் நீ
கான் நிகர் முள் தடத்து ஏக காண்டல் உளம் பொறுப்பு அரிதே

#12
தொல் மாண்ட புடை நகரில் துன்னிய பின் ஆங்கு உறையும்
பொன் மாண்ட முடி தாவின் பொலிவு அமைந்த எம் குலத்தோர்
வல் மாண்ட அருள் புரிந்து வந்த துயர் ஆறும் என
தன் மாண்ட உளத்து இதுவே சார்பு என தான் உணர்ந்தானே

#13
மாண் தகையார் அறன் சார்வார் அல்லது இன மனு சாரார்
ஆண்டகை ஆர் அருள் சாரார்க்கு அல்லது ஒரு துயர் சாரா
சேண் தகை ஆர் இவன் சார்பால் செல்லுதும் நாம் என வான் ஆர்
பூண் தகையால் அறம் சார்ந்தாள் புரை சாரா புகல் செய்தாள்

#14
குவட்டு ஆய வெள்ள நிகர் கூர்த்து உவகை பெருகி எழ
துவட்டாத தூய் தவனும் துணைவி எனும் ஆய் இழையும்
உவட்டாத பணி முறையால் செல்வது என உணர்வு உற்றார்
சவட்டாத அன்பு உரிமை சால்பின் இரண்டு அன்றில் ஒத்தார்

#15
பூண் மின்னும் மணி பேழை போன்று அரும் சூல் முற்று அணிந்தாள்
கோள் மின்னும் முடி தாழ கொழுநனை தான் தொழ அவனும்
மாண் மின்னும் மனம் வெருவி வணங்க பின்பு இருவர் தொழும்
தாள் மின்னும் மகன் தந்த ஆசியோடு தடம் கொண்டார்

#16
அருள் வீங்கும் விண் அரசாட்கு ஆயின ஆயிரர் அன்றி
இருள் வீங்கும் துகள் துடைத்தோன் பிறக்கும் கால் என இன்னும்
பொருள் வீங்கும் உம்பர் ஒன்பது_ஆயிரரும் புடை திரிந்து
தெருள் வீங்கும் கதிர் பரப்பி செல விட்டான் முதலோனே

#17
பிறை பழித்த பொன் பதத்தால் பிறை மிதித்தாள்-தனை சூழ
பொறை பழித்த தோள் திறத்தில் பூண் தவழ செம்_சுடரை
நிறை பழித்த உரு சூட்டி நிரை நிரை விண்ணோர் இறைஞ்சி
உறை பழித்த மலர் மாரி உந்தரத்தில் பொழிகின்றார்

#18
வஞ்சத்தார் மனம் போல இருண்ட இரா வாட்டும் ஒளி
விஞ்ச தாரணி அறியா வெயில் வெள்ளம் உம்பர் உக
தஞ்சத்து ஆர் தவம் செய்தோர் தகை போல இவர்க்கு இருள் சூழ்
எஞ்ச தாம் இரவு பகல் என்று அறியாது ஏகுகின்றார்

#19
புண் காத்த மருந்து அன்ன பொலி அருள் சேர் மா தவனும்
விண் காத்த வேந்தனை சூல் வேய்ந்து ஒவ்வா கன்னிகையும்
மண் காத்த அருள் பரப்பி வழி வரும்-கால் வளைத்து இவரை
கண் காத்த நிமை என்ன காத்தார் அ ககனத்தார்

#20
துன்று ஆங்கு முள் தடத்தில் துயர் ஆற்றா துவள் கொடி போல்
அன்று ஆங்கு நொய் அடியாள் அயர்வுற்று சோர்ந்து விழ
பொன் தாங்கு பொறை திண் தோள் பொலிந்த உம்பர் தாங்கினர்-ஆல்
மின் தாங்கு மலை தோற்றம் விளங்கு வடிவு ஒத்து எனவே

#21
பானு அளாவுழி பாய் இருள் நீத்து ஒளி
தான் அளாவிய தன்மையின் ஆயினார்
போன வாயில் எலாம் புரை நீத்து அருள்
ஆனது ஆருயிர் உயிர் ஆகுலம் மாறவே

#22
போர் கணம் கடுத்தால் என பொங்கு ஒலி
கார் கணம் கதம் காட்டி மலிந்து கால்
நீர் கணம் கழு வாவி நிறைந்து சூழ்
சீர் கணம் கொடு சீர்த்தன நாடு எலாம்

#23
சோலை சூழ் வரை தூங்கிய தீம் புனல்
மாலை சூழ் வழி ஒல்லென வந்து பாய்ந்து
ஆலை சூழ் வயல் ஆர்ந்து விளைந்த நெல்
வேலை சூழ் வளை முத்து என வேய்ந்ததே

#24
மாலை ஆரும் மணமகள் ஆம் எனா
சோலை ஆர் தரு பூம் பணை தோற்றமே
மாலை ஆர் உடு காட்டிய வான் எனா
சேலை வார் பொய்கை தேன் மலர் விள்ளவே

#25
வீறி மின்னிய விண் திரள் பெய்த நீர்
ஊறி நீத்தம் முடுக்கு என ஓங்கி இவர்
தேறி எங்கணும் செய் தயை நேர நல்
ஆறு இது ஒத்து என ஓடிய ஆலையே

#26
கொம்பின் ஆர் குயில் கூவவும் மஞ்ஞைகள்
பம்பி ஆடவும் பைம் சிறை தேனொடு
தும்பி பாடவும் தூய் அனம் நாணவும்
நம்பி மாதொடு நல் நெறி போயினான்

#27
தூமம் சூடிய தூய் துகில் ஏந்துபு
தாமம் சூடிய தாரொடு பூண் மலி
காமம் சூடிய காந்தரி என்று ஒரு
நாமம் சூடிய நாரியை கண்டுளார்

#28
வெம் சின கரி மேய்ந்து உகும் வெள்ளிலோ
நஞ்சின் முற்றிய காஞ்சிரமோ நகை
விஞ்சி வெற்று எழில் பாவையின் வேடமோ
நெஞ்சின் நல் தகை நீத்த எழில் நாரியே

#29
ஆலம் ஏந்திய ஆனனத்து ஓடி நல்
கோலம் ஏந்திய கோள் என வேய்ந்து கொல்
காலன் ஏந்திய வாள் கவர்ந்து ஈர்ந்து உயிர்
நீலம் ஏந்தி நிறைந்து உணும் கண்ணினாள்

#30
புலம்பும் ஓதையின் நொந்து என பொன் இட
சிலம்பு மேல் வல சீறடி ஊன்றி வில்
அலம் புனைந்த பொன் தூண் அயல் பொன் மலை
தலம் புனைந்த மின் சாயல் ஒத்தாள் அரோ

#31
துகில் கலாபம் உள் தோன்ற விளிம்பு எடுத்து
உகிர் கொடு ஆய் அலர் கிள்ளி உதிர்த்து எழும்
அகில் கவர் புகை தூது விட்டு அம் குழல்
முகில் கவர் மினின் மின் முகம் கோட்டுவாள்

#32
பால் கலந்தன நஞ்சு பருகினால்
போல் கலந்தன இன்பொடு புன்கணை
மால் கலந்த மனத்து உண மைந்தர் சூழ்
வேல் கலந்த கண் வெஃகி நெருங்கினார்

#33
காம தீ எழ ஓர் நகை காட்டினள்
ஈம தீ எழ வெம் சினம் காட்டுவாள்
தூம தீ எழ தோன்று இருள் போன்று கண்
வாம தீ எழ உள் நிசி மல்கும்-ஆல்

#34
மஞ்சு தோய் சிறகு ஆடிய மஞ்ஞை போல்
நஞ்சு தோய் மன நங்கை நறா அகில்
மஞ்சு தோய் துகில் ஆடி வதிந்த கால்
நெஞ்சு தோய் தகவோர் நெறி எய்தினார்

#35
கோலம் மூடிய அங்க குடத்து இணை
சீலம் மூடிய தீ மனம் கண்டு கார்
நீலம் மூடிய பானொடு நேர் மிடி
சால் மூடு தலைவி இரங்கினாள்

#36
வீய் கலந்த வனப்பொடு வீங்கு உளம்
பேய் கலந்து குடி என பேர்கு இலா
தீய் கலந்த சிதைவு உடை பேதையை
நோய் கலந்த உயிர்ப்பொடு நோக்கினாள்

#37
கண்ட தீயவை அல்லது கண் உறா
கொண்ட தீயவை எண்ணுவர்-கொல் எனா
உண்ட தீய உளத்தில் உறைந்த பேய்
அண்ட வாகை வளற்கு அவள் சூட்டினாள்

#38
கொடிய கோல் கோடு ஆண்ட குணுங்கு இனம்
மடிய சூல் கொடு வந்தவன் நாம வல்
கடிய வேல் கொடு அ கடி ஓட்டு எனா
நெடிய கோல் கொடு நின்றவன் வேண்டினான்

#39
மொய் கொள் நீரொடு மூ உலகிற்கு எலாம்
மெய் கொள் நாயகி மேவி உள் ஏவலால்
மை கொள் சோகு பழம் பதி மாற்றி வாய்
பொய் கொள் வேகம் நரகு உற போயதே

#40
கள்ளம் காட்டு குணுங்கு கடிந்த பின்
உள்ளம் காட்டு பளிங்கு உணர்ந்தால் என
வெள்ளம் காட்டு வாலாமை விழுங்கு எனா
மள்ளம் காட்டி மாழ்ந்தேன் என நாணினாள்

#41
உவா அமர்த்திய அங்குசம் ஒப்பு என
தவா வயத்து இவள் தாங்கிய நாணமே
சுவாது அமைத்த துகள் துடைத்து ஓர் கரை
அவா உடை கடற்கு ஆங்கு அடைத்தாள் அரோ

#42
நாணி நாணுப நாடிய காரணம்
காண் இலாள் வெருவும் களியும் கொடு
வாள் நிலா விழி நித்திலம் வார் முகம்
கோணி ஒன்று உரையா குழு நீங்கினாள்

#43
நீர் ஆர் பவள துறையின் நிரை நித்திலம் உய்த்து என்னா
ஏர் ஆர் துவர் வாய் முறுவல் இலங்க நின்றாள் ஏதோ
சூர் ஆர் முகத்தோடு உரையா துறந்தாள் என்று ஆங்கு உறைந்தார்
வார் ஆர் கழல் ஆர்த்து இடிப்ப வருந்தி வெருவி போனார்

#44
விண் தோய் மாடத்து ஒதுங்கி வினை அற்று உளம் தூண்டு உணர்வால்
கண் தோய் புனல் ஆடினள் தன் கசடே கருதும் தன்மைத்து
உண்டு ஓய் இல மெய்ஞ்ஞானத்து உறுதி துணை ஓர் அமரன்
மண் தோய் துகள் தீர்ந்தவன் தாய் விடவே மனம் ஓங்கினள்-ஆல்

#45
இன்னே இரவி காண் அந்தகன் நேர் இயல் கொண்டு இன்னாள்
பொன்னே மணியே பொலி ஓர் பெயர் கொள் வலைகாள் உம்மால்
கொன்னே குழைய பிறரும் குழைந்தேன் என நொந்து அழுதே
மின்னே மின்னி பெயும் கால் விழும் போல் விழ ஈர்த்து எறிந்தாள்

#46
விண்டு இக்கு ஒழுகி குழல் சூழ் விரை வீசிய தண் தொடைகாள்
வண்டிற்கு இரை செய்து எனையும் வண்டிற்கு இரை செய்தீரே
இண்டு இக்கு ஒழுகா நஞ்சு இட்டீர் என்று இவள் உள் சினந்தே
தெண்டித்து என பூம் தாளால் தேய்த்தாள் துவைத்தாள் துடைத்தாள்

#47
அரும்பு மடல் தேன் குளிர் என்று அணியாய் முலை சூழ் அலங்காள்
கரும்பு வில் ஏவிய வெம் கணையாய் மனமே கருக
விருப்பு செய்து உள் நுழைந்தே வெம் தீ புகுத்தி கொன்றீர்
நெருப்பு கொணர்ந்தீர் நெருப்பில் வேவீர் என சுட்டிட்டாள்

#48
சுண்ணம் கலவை சுவை சாந்து எனும் வண்டு இவறும் சேறே
தண்ணம் கொண்டாய் என்றார் சடமே என்றார் தழலும்
வண்ணம் கொண்டாய் என என் மனமே அறியும் கசடு ஆய்
எண்ணம் கடிய எரிந்தேன் எரிந்தேன் என்னா எறிந்தாள்

#49
பண்ணே நீ ஓர் முலையாய் கீதம் பாலாய் சுரந்தேன்
கண்ணே காத்த கனிவால் ஊட்டி காம குழவி
பெண்ணே அறியா வளர்த்தேன் பெரிதாய் கணையால் சுடும் என்று
எண்ணேன் இதற்கே இனம் செய்து இருந்தாய் நீ என்று ஒடித்தாள்

#50
வாயே கரமே செவியே மருளும் கண்ணே மூக்கே
போயே வினை கொண்டு உள்ளே புகும் ஐம் பகையாம் பொறிகாள்
தீயே கொணர்ந்தீர் என உள் சிறை செய்து ஒறுப்பேன் ஒறுத்தற்கு
ஓயேன் ஓயேன் என உள் ஊக்கம் காவல் கொண்டாள்

#51
மீனே கொடியாய் விதுவே குடையாய் வேலை முரசாய்
கானே உமிழ் பூ கணையாய் கழையே தனுவாய் உருவம்
நானே எழுதி நாமம் வேள் என்றேன் என் உயிரை
தானே உண்டான் இனி-கொல் சமன் ஆக்குவன் நான் என்றாள்

#52
நின்னை மறந்தாய் நெஞ்சே நெடும் கோல் நீதி வல்லோன்
தன்னை மறந்தாய் நெஞ்சே தழல தழல் கீழ் உலகு உய்த்து
என்னை மறந்தாய் நெஞ்சே இனி முன் விழைந்தது எல்லாம்
பின்னை மறப்பாய் நெஞ்சே என்னா பெரிது ஆர்த்து அழுதாள்

#53
கண் நீர் ஆடி கழுவும் கசடு அற்று உணர்ந்த ஞான
தெண் நீர் ஆடி தெளிந்தாள் தெளி உள் நிறை தே அருளின்
தண் நீர் ஆடி குளிர்ந்தாள் தவறா அற மா புணரிக்கு
உள் நீராடி உயர்ந்தாள் உரு வேறு இயல் வேறு ஆனான்

#54
உள்ளம் கெட உள்குடியாய் உறைந்த குணுங்கு ஓட்டிய பின்
கள்ளம் கெட மெய்ஞ்ஞானம் காட்டி கடந்து ஏகினும் கான்
வெள்ளம் கெட மல்கு அருள் சேர் வியன் வான் கிழத்தி நிழலால்
வள்ளம் கெட உள் வரம் எய்திய அம் மடந்தை ஒசிந்தாள்

#55
இவ்வாறு எவ்வாறு உள்ளம் கெட எ பொருளோ உதவிற்று
அவ்வாறு அன்னாள் அகற்றி அட்டு ஐம்பொறியை புதைத்து
வவ்வு ஆறு ஒரு மாறு இன்றி பல நாள் வானோர்க்கு அரசாள்
செ ஆறு உளத்து திறன் செய்து அறம் சேர் கதியே சேர்ந்தாள்

#56
அப்பால் நடந்தார் அண்டத்து இரு அம் சுடர் ஒத்து அன்னார்
எப்பால் அனைத்தும் இயலும் தயையால் எதிர்கின்ற எவர்க்கும்
ஒப்பால் அடையா மரபால் உயிராய் உடலாய் துயர் செய்
வெப்பால் அயர்கின்ற உயிர்கள் விரிவாய் நிழற்றி போனார்

#57
என் பா நிகரா இன்பால் இவை ஆங்கு ஆங்கால் இவரீஇ
மின்-பால் வெயில் செய் மிடை விண்ணவர் ஈர்_ஐயாயிரர் சூழ்ந்து
அன்பால் அணுகும் தன்மைத்து ஐம் வைகலும் வைகிய பின்
பொன்-பால் உயர் பெத்திலேம் ஆம் பொலி மா புரம் அண்மினரே

#58
ஓடையாய் பெரிது ஒலித்து பெயர்ந்த வெள்ளம் ஒழுகிய பின்
கோடை ஆய் வற்றும் என வழியில் கொண்ட கூர் நயமே
மாடையாய் இலங்கு நகர் வந்து மாற்றி மருவியது ஓர்
பீடை ஆய் உணங்கு அன்னார் வருந்தும் பெற்றி பெரிது எனவே

#59
எரி மாலை தாங்கு உடலால் பகல் செய் விண்ணோர் இரு புடையில்
புரி மாலை காண்டல் இலா பொலிவான் மாட்சி புலமையினோர்
உரி மாலை காண்டல் இலா எளிமை போர்த்த உரு தோன்ற
திரி மாலை கண்டவர் தாம் செய்த நிந்தை செப்பல் உற்றாம்

#60
மண் சிறையை ஒழித்தவர் தம் வருத்தம் காணா வழி முடுகி
தண் சிறை செய் கடல் மூழ்கி பருதி அங்கண் தாழ்ந்து ஒளிப்ப
ஒண் சிறை மொய் அளிகள் அழ முளரி தன் தாது உடன்று அடைப்ப
கண் சிறை செய் கங்குல் உறீஇ நகரில் சென்றார் கருணை வலார்

#61
சாதியினால் நிகர்க்கு அரிய மலர் மென் தாளின் தகுதி நலாள்
வீதியினால் எய்திய நோய் ஆற்ற வெஃகி வெயில் மிடைந்த
ஓதியினால் உளத்து உயர்ந்தோன் ஒதுங்கும் தன்மைத்து உறையுள் அருள்
சோதியினால் அவிர் முகத்தில் உறவோர் கேட்டு துருவினன்-ஆல்

#62
அடைப்பதற்கே அரும் கடலாம் அவா உள் பொங்கி ஆக்கம் இவண்
கிடைப்பதற்கே உறவு கிளை தேடும் பாலால் கிளர் நிரப்பில்
படைப்பதற்கே அரிய பொருள் கொண்டார்க்கு அல்லால் பயன் பயவா
துடைப்பதற்கே அரும் வறுமையவர்க்கு ஒன்று உண்டோ சுற்றம் அதே

#63
நஞ்சு எஞ்சா காஞ்சிரம் காய் அழகு என்று எண்ணி நச்சுவர் போல்
விஞ்சு எஞ்சா வினை பயக்கும் பொருளே வெஃகி விழி கடந்த
மஞ்சு எஞ்சா அருள் செல்வம் எண்ணா மூடர் வறியர் எனா
நெஞ்சு எஞ்சா திருவோரை எவரோ என்னா நீக்கினர்-ஆல்

#64
பொன் அன்ன பொலிந்த நகர் புடைகள்-தோறும் புகுந்து இன்னார்
மின் அன்ன விரைந்து இரிய உரும் என்று அன்னார் விடைந்து உடற்ற
பின் அன்ன முகில் உறை பெய் அன்ன சூசை பெரிது அழுது
முன் அன்ன நகர் உதவி உணர்ந்த பாலால் முழுது உளைந்தான்

#65
நான் செய்த குறை தானோ நகரே செய்த நவை தானோ
தான் செய்த விதி தானோ தரணி காக்க தற்பரன் ஈங்கு
ஊன் செய்த உடலொடு எழ இடம் ஒன்று இல்லை உலகில் எனா
தேன் செய்த உயர்த்தோன் அரற்றி விம்மி திரிவான் ஆம்

#66
இகழுவர் என்று இகழ்வு இன்றி அருள் உற்று இன்னார் இகழ்ந்தாரும்
புகழுவர் என்று ஆசி நலம் புகன்று வாழ்த்தி புரை எண்ணா
நிகழுவரே நெகிழுவரே வணங்கி கேட்கின் நிந்தை உறீஇ
மகிழுவரே மருட்டும் அவா அரிந்து வாய்ந்த மாட்சி நலோர்

#67
தன் உயிர் சேர் துயர் கண்டு மகிழ்ந்த நல்லோன் தன் உயிரின்
இன் உயிர் சேர் துயர் ஆற்றா விரும்பி எங்கு இரிந்து இரப்ப
மன் உயிர் சேர் உறவு எமக்கு சேரா என்னில் வறியர் எனா
துன் உயிர் சேர் இரக்கம் எமக்கு இலது ஏன் என்னா சொலல் உற்றான்

#68
அடுத்து இரப்பார்க்கு ஆர்வம் உற அளித்த நன்றி அஞர் கடலே
மடுத்து இருப்ப கரை அன்றோ என்று கூப்பி வணங்கி இரு கை
எடுத்து இருப்ப காய் முகனோடு எள்ளும் தன்மைத்து எவர் எவரும்
கடுத்து இருப்ப கண் அருவி கடுக நொந்தான் கடி கொடியான்

#69
துன்புற்ற-கால் ஒருவர்க்கு இரங்கி செய்த துணை உறுதி
இன்பு உற்ற கால் ஒருவர் மறந்தால் அஃதே இவர்க்கு இறுதி
பின்பு உற்ற கால் உயர் வான் தரும் வித்து என்பான் பெரிது உவப்ப
முன்பு உற்ற கால் மொழிவாய் ஞானம் என்று முனி நகைத்தார்

#70
நலம் செய்வான் விருப்புற்றார் நேரம் தேடார் நசை அற்றார்
சலம் செய்வார் கிலம் செய்யார் வணிகர் ஆக்கம் வரல் வெஃகி
அலம் செய்வார் போல் உயர் வீடு இயற்றும் நன்றி அமைவதற்கே
தலம் செய்வார் அறிவு உற்றார் என்று தாழ்ந்து பணிவான் ஆம்

#71
பால் நேர பாடிய பண் கோகிற்கு இன்பம் பயவா போல்
வேல் நேர பாய் துயர் கொண்டு இவற்றை கொன்னே விளம்பி இவர்
நூல் நேர பாய் நெடிய மறுகிற்கு எல்லாம் நொந்து ஒழுகில்
கோன் நேர பாவிய கையிறையும் எண்ணும் கொடுத்தனரே

#72
செய்முறை யாவையும் திருந்தி திறம்பா நீதி செழும் தகவோர்
கை முறையாம் இறை தந்து மலர்த்தாள் நல்லாள் கடி வருந்த
மொய் முறையால் கடல் ஒக்கும் நகரம் எல்லாம் முடுகிய பின்
மை முறையால் இரவின் நடு மருவ கண்டு வளன் சொல்வான்

#73
நிலத்து இயல்பால் துளி நல் நீர் திரிந்த தோற்றம் நிகர் என சேர்
குலத்து இயல்பால் கிழமை நிலை திரிகும் என்றார் குறை கிளர் என்
கிலத்து இயல்பால் கிளைத்தன இ கேதம் எல்லாம் கிடைத்து உளைய
நலத்து இயல்பால் தகை நல்லாய் வருந்தி எண்ணால் நகவு ஆனாய்

#74
முன் செய்கை பயத்த துயர் அகற்றி எம்மை முயன்று அளிக்கும்
தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து இறைவன் இங்கண் தான் மகன் ஆய்
நல் செய்கை ஒன்றும் இலா அடியன்-தன்னை நண்ணிய-கால்
மல் செய்கை வீங்கு வயத்து உயர்ந்தோனேனும் வருந்தானோ

#75
உடை நகர்-கண் வாழ் அரசன் வறுமை நாடி உதிப்ப சீர்
மிடை நகர்-கண் பதி அல்லது என்றோ இன்னார் விலகி எமக்கு
இடை நகர்-கண் இடம் இன்றி இரிந்த தன்மை இமிழில் இனி
புடை நகர்-கண் கண்ட முழை புணர போகின் புரிவு என்றான்

#76
இ தலை இவளும் நன்று என்று பேர் ஒலி
மொய்த்து அலை பெரும் கடல் நிகர் முற்று ஊர் கடந்து
அ தலை இருமையோர் அமரர் செய் ஒளி
மைத்து அலை நடு நிசி மயங்க போயினார்

#77
காய் ஒளி காண்கிலான் கையில் காண்கின் எல்
தோய் ஒளி மணி நலம் தோன்றுமோ இவர்
ஆய் ஒளி தெரிவதோ அறிவு இலார்க்கு எனா
வேய் ஒளி அமரர் சூழ் விரிப்ப போயினார்

#78
துறவினால் இரவலர் ஆகி தோன்றினார்
உறவினாரினும் உறவு எனினும் ஓர்வரோ
அற வினா அகன்றனர் என்ன அண்டனர்
திற வினா இயம்பிட செறிந்து போயினார்

#79
பூரியர்-கணும் உள பொருள் செய் செல்வம் நீத்து
ஆரியர் விரும்பிய அருளின் செல்வம் ஆய்
சீரியர் வழி இதே என்ன சேண் தள
வீரியர் விருப்பு எழீஇ விளம்பி போயினார்

#80
எல் என சுடர் அவிழ் ஈர்_ஐயாயிரம்
வில் என கவின் உரு விரி விண்ணோர் உறீஇ
அல் என பகல் என அறிகிலாது வான்
செல் என களிப்பு எழீஇ சிறந்து போயினார்

#81
கோள் ஐ வாய் புகழ் தர கோல வானவர்
பாளை வாய் கமுகு பாய் பலவின் காய் அற
சூளை வாய் பொய் என துளித்த தேன் செயும்
மூளை வாய் தண் பொழில் கடந்து முன்னினார்

#82
கள் உடை கயத்து எழும் கமல பொய்கையும்
புள் உடை கனியினால் பொலிந்த சோலையும்
உள் உடை புடை கடந்து உளத்தில் உன்னிய
எள் உடை புற நிலை இமிழில் எய்தினார்

#83
உயரிய வரை பகிர் உறுப்பு போன்று என
பெயரிய கல் மிசை பெரும் கல் சேர்த்திய
துயர் இயல் தோன்று இடம் விலங்கு துன் இடம்
அயரிய இடம் ஒரு முழை அஃது ஆம் அரோ

#84
வீசு அறை வளி மழை விளிப்ப வாய் திறந்து
ஏசு அறை கிழவி தீ எரி முகத்தொடு
பாசறை பரிப்பு நோய் பதி பயிற்றிய
ஆசு அறை உரு என் ஆம் முழை அஃது ஆம் அரோ

#85
கலங்கு எழும் திரை எறி கடல் எனா நகர்
புலம் கெழு மிடை மனு புழங்கலாமையும்
விலங்கு எழும் இடம் எனா வெறுத்த அ முழை
நலம் கெழும் இறையவன் பிறப்ப நாடினான்

#86
ஒப்பு உடை உயரினோர் உவந்து புக்க பின்
அ புடை விளக்கிட அருத்தி காண் மணி
துப்பு உடை உரு கொடு சூழ்ந்த வானவர்
வெப்பு உடை விருப்பொடு விளக்கினார் அரோ

#87
ஆவு அருள் தீது உள அகமும் வந்து அடை
தே அருள் புக்க பின் சீர்த்த பான்மையால்
நோவு அருள் முழை இவர் நுழைந்த-கால் அலர்
கா அருள் வனப்பொடு களித்தது ஆம் அரோ

#88
தணிவு அரும் சினத்தொடு தகைத்து அகற்றினார்
அணிவு அரும் குணத்தில் ஈங்கு அமலன் நாடிய
பணிவு அரு மிடி நலம் பயக்கின்றார் எனா
துணிவு அரும் அன்பு எழுந்து ஆசி சொற்றினார்

#89
அரும் பயன் நஞ்சினை ஆக்கும் பாம்பு எனா
விருப்பவர் நயன் செய பகைக்கும் மேல் அலார்
நெருப்பு அட துமிப்பரை நிழற்றும் கா எனா
பெரும் பகை செய்வரை பேணும் மாட்சியார்

#90
எஃகு என பாய்ந்து உளம் இரிந்த வான் துயர்
அஃகு என கண்படற்கு அமைதி என்றனள்
வெஃகு என துணைவியே விலகி தானும் நல்
இஃது என தனித்து இறை இறைஞ்சி நின்றனன்

#91
அய்யனை இறைஞ்சிய அமையத்து ஒண் தவன்
பொய் அனை உடல் நிலை மறந்து பொற்பு உறீஇ
மெய் அனை உளம் வளர்ந்து ஏவல் மேவி விண்
பெய் அனை அருவி கண் பிளிர்ந்து இன்பு ஓங்கினான்

#92
பொதிர் தரும் களி பொழிந்து வாய்ந்து அருள்
முதிர் தரும் கணாள் முழந்தின் நின்று இவண்
எதிர் தரும் பொருவு இன்றி இன்பு உற
கதிர் தரும் சுதன் அசைய கண்டனள்

#93
திரு முகம் செறி சுடர் சிறப்பினால்
ஒரு முகம் செறி ஒளிகள் ஆயிரம்
தரு முகம் பகல் தருக காலம் ஆய்
குரு முகம் கொளும் குணக்கு ஒத்தாள் அரோ

#94
உலகம் மூன்றினும் உவமை நீக்கிய
இலயை மூன்றினும் இழிவு இல் கன்னியாய்
அலகு_இல் மூன்றினுள் நடுவ மைந்தனை
நிலவு மூன்றினும் நிறப்ப ஈன்றனள்

#95
வாய் படா நுழை பளிங்கின் வாய் கதிர்
போய் படா ஒளி படரும் போன்று தாய்
நோய் படாது அரும் கன்னி நூக்கு இலாது
ஆய் படா வயத்து அமலன் தோன்றினான்

#96
மாதம் மார்கழி வைகல் ஐ_ஐந்து ஆய்
ஏது இலா நிசிக்கு இருத்தை மூ_ஐந்து ஆய்
ஆதி நாள் என ஆதி நாதனை
காதல் நாயகி களிப்பின் நல்கினாள்

#97
தீபம் உற்று மேல் உலவு செம்_சுடர்
சாபம் உற்றுழி சாபம் தீர்த்து எமை
ஆபதத்து இறை அளிப்ப தாய் மடி
தாபதத்து எழீஇ தரையில் தோன்றினான்

#98
தோன்றினான் என நசை உள் தூண்டினால்
போன்று வாவு தேர் முடுக்கி போய் ஒளி
கான்று இராசிவம் களிப்ப மாலி எல்
ஈன்று இரா அன்று குறுகிற்று என்னவே

#99
கதிர் செய் தேர் எழ கடிய கோல் நிசி
பொதிர் செய் கார் இருள் புதைப்ப புக்கல் போல்
பிதிர் செய் பேய் எலாம் பெயர்ந்து தீ உற
எதிர் செய் ஆதி ஈங்கு இலங்கினான் அரோ

#100
பேயும் போயின அமரர் பிந்தினர்
தீயும் போயின அறங்கள் தேறின
நோயும் போயின நூற்கள் தேர்ந்தன
தோயும் ஓகையில் துளங்க வையமே

#101
இரவில் மீன்களும் இரவி பின்றையும்
பரவினால் என பரப்பும் தம் கதிர்
புரவின் ஏழு மடங்கு ஒளிர்ந்து அ பொற்பினை
விரவின் காண கண் விளக்கல் மானுமே

#102
பாய்ந்த வான் தரு பருவம் இன்றியும்
ஈய்ந்த தீம் கனி இயைய பூத்தலும்
வேய்ந்த நாயகன் விளைத்த நன்றியால்
வாய்ந்த ஓகையின் முறுவல் மானுமே

#103
பொதிர் செய் மாட்சி கொண்டு உயர்ந்த பூ எலாம்
கதிர் செய் வானம் நேர் களித்தது ஆம் எனில்
எதிர் செய் பா புகழ்ந்து இசைக்கும் தன்மையோ
முதிர் செய் மாண்பு உடை முழையின் தோற்றமே

#104
வான் உலா வனப்பு எண்_இல் வானவர்
மீன் உலாவு அடி இறைஞ்சி மீது பெய்
கான் உலா மலர் கந்த மாரியால்
தேன் உலா மழை திளைத்து ஓர்-பால் எலாம்

#105
பண் இன் ஓதையும் பண்ணின் பா இசை
தண் இன் ஓதையும் தாழ்ந்து வாழ்த்தினர்
விண் இன் ஓதையும் வழங்க வேட்டு உளம்
கண் இன் ஓகையின் களித்து ஓர்-பால் எலாம்

#106
பொன்னின் ஒள் உரு பொருந்தி பூணொடு
மின்னின் ஒள் நுதல் மின்னி வீழ்தர
துன் இன்பு உள் எழ தொழுது போற்றலின்
இன் இன்பு ஆர்ந்தன இனிது ஓர்-பால் எலாம்

#107
சந்த நல் சுதை நான சாயலின்
வந்த நல் சுதை மணம் கொள் காழ் அகில்
வெந்த நல் புகை கலந்து வீங்கின
கந்த நல் சுவை கனிவு ஓர்-பால் எலாம்

#108
மெய் திறத்து எழுந்து உதித்த வேந்தனை
கை திறத்து எழுந்து இறைஞ்சும் காதலால்
மொய் திறத்து எழும் கடலின் மொய்த்த ஆர்ப்பு
இ திறத்து எழுந்து எல்லை இல்லையே

#109
சொக்கு அளாவு உரு தோன்றிய தோன்றலை
மிக்கயேலொடு காபிரியேல் விழைந்து
ஒக்க ஏந்தினர் ஒக்கவும் தாய் முனர்
மக்கள் நாதனை மாண்பு எழ காட்டினர்

#110
பொதிர் கொள் பூ மணம் போல் மகவு ஈன்றனள்
கதிர் கொள் சேயொடு கண்கள் கலந்த கால்
எதிர் கொள் வெம் சுடர் காண் முழு இந்து எனா
முதிர் கொள் இன்ப முகத்து விளங்கினாள்

#111
தன்னை ஈன்றன தாய்-தனை நோக்கலோடு
அன்னை நீயும் என் சாயலின் ஆகு எனா
மின்னை வீறிய தோன்றல் விளம்பினான்
என்னை ஆள்பவள் இன்பு அலை மூழ்கவே

#112
தந்தை ஈன்றன தாயும் தன் சேயனை
இந்தை நேர் நுதல் தாழ்ந்து இறைஞ்சிட்ட பின்
சிந்தை ஓங்கு அமரர் அவள் செம் கையில்
முந்தை தோன்றலை தந்து முன் ஏற்றினார்

#113
காந்தள் நேரிய செம் கரத்து ஏந்தினள்
ஏந்த மார்பில் இறுகவும் சேர்த்தனள்
வாய்ந்த பூம் பதம் நீவி வணங்கினள்
ஆய்ந்த நூல் கடந்து ஆர் உணர்வு எய்தினாள்

#114
காவி மேல் கமழ் கஞ்சம் அமைந்து எனா
ஆவி ஆம் மகவு அம் கையில் ஏந்தினள்
ஓவி மாழ்கிய மன் உயிர் ஓர்ந்து அருள்
மேவி முந்தையை நோக்கி விளம்புவாள்

#115
உனக்கும் ஆகி எனக்கும் ஓர் பிள்ளை ஆய்
தனக்கு நேர் இழந்து ஆர் தகவோன்-தனை
நினக்கு நான் இவண் நேர்தலின் மற்று உயிர்க்கு
எனக்கு நேர் அருள் ஈந்து அளிப்பாய் என்றாள்

#116
ஊக்கி வாழ உணர்ந்து அறம் ஆதியில்
போக்கினார் புரை பொங்கி மலிந்த தீ
சீக்கி வாழ்வு இட எய்திய சேய் முகம்
நோக்கினால் சினம் நூக்கு அரிதோ என்றாள்

#117
மறம் செய் வேடம் எனா மனு வேடமே
நிறம் செய் தெய்வதம் மூடிய நீர்மையால்
அறம் செய் தான் எமது ஆர் துகள் மூடலின்
திறம் செய் காய்ந்த சினத்து இடம் ஏது என்றாள்

#118
தாய் விழைந்த நலம் தரு சேயனே
நீய் விழைந்த துன்பு ஊட்டிட நேமியே
மீய் விழைந்த நலம் மிடைந்து ஊட்டி நீ
தீய் விழைந்த செயிர் செகுப்பாய் என்றாள்

#119
என்ன நல் உயிர் காத்த மருந்து எனா
மன்ன நல் அருள் வாய்ந்தனள் இன்னணம்
சொன்ன நல் உரை தேன் சுவையில் சுவை
அன்ன உண் குழவி நகை ஆடினான்

#120
நகை செய் தன்மையின் நம்பு எழீஇ தாய் துகள்
பகை செய் நெஞ்சமும் பற்றலும் ஒன்று உற
முகை செய் மேனி தழுவி முத்து இட்டலும்
குகை செய் இன்பு எழ கோலம் இட்டு ஒத்ததே

#121
தெருள் சுரந்த திரை புவி ஆர்ந்து உண
பொருள் சுரந்து உயிர்க்கு உண்டி பொழிந்தனன்
மருள் சுரந்த வடு கெட மைந்தன் ஆய்
அருள் சுரந்து அமுது ஆய் தர நுங்கினான்

#122
வேழ்வி மந்திர தீய் கொடி வேடமாய்
கேழ்வி ஒண் தவன் காட்சி கிளர்ப்பினால்
வாழ்வில் நின்றுழி வாழ்ந்த இவை யாவையும்
தாழ்வு இல் இன்பு உற கண்டு அருள் தாங்கினான்

#123
வேதம் நின்ற உரு தகு மேன்மையான்
காதல் நின்று இவை காட்சியின் காண்கினும்
நாதன் நின்ற நலம் வழியால் உண
சீது அணிந்தனள் வா என சென்று உளான்

#124
இந்து நேர் நுதல் மீன்கள் நேர் விழி இண்டை நேர் முக நீர்மையால்
கந்தம் நேர் நளிர் தாது நேர் உடல் காட்டு நாதனை அம்புய
சந்தம் நேரிய கன்னி நேர் கையில் தாமம் நேரிய முத்து என
சிந்து நேர் நயம் மூழ்கு சீர்மையில் தேற நோக்கினன் சூசையே

#125
வீழ்ந்து வீழ்ந்து அகல் நெற்றி பார்-இடை மேவலோடு உற வீழ்ந்தனன்
தாழ்ந்து தாழ்ந்து இரு தாமரை கழல் தாழ்தல் ஆர்தல் இல் தாழ்ந்தனன்
சூழ்ந்து சூழ்ந்து உள இன்பு அறா மழை தூவ நீள் விழி வாழ்ந்தனன்
வாழ்ந்து வாழ்ந்து உயர் வான் உளோர் மனம் வாய் வியப்புற ஓங்கினான்

#126
அன்பு உற கடல் என்று எலா உயிர் ஆண்டு அளித்து அருள் நாயகி
துன்புற துணை ஆய் மாண்பு அருள் துற்று மார்பு உடை மா தவன்
இன்புற துணை ஆதல் ஆம் என இன்று எழுந்து உறை நாதனை
உன் புறத்து-இடை ஏந்துக என்று அலர் ஒத்த செம் கரம் நீட்டினாள்

#127
விண் புலத்து உயர் ஏக ஆணையின் வேந்தர் வேந்து எனும் தேவனை
உள் புலத்து வணக்கம் மிக்கு உற உற்று எடுத்திட நாணினான்
மண் புலத்து இணை அற்ற மாது அறை வாய்ந்த சொல் கொடு தேறினன்
கண் புலத்து உறு மாரியோடு இரு கை தலங்களில் ஏந்தினான்

#128
கை தலத்தில் எடுத்து மார்பொடு காதல் ஓங்க அணைத்தலும்
முத்தம் இட்டலும் நோக்கில் தீட்டலும் உற்ற நீரில் நனைத்தலும்
சித்தம் முற்றலும் நாள் மலர் கழல் சென்னியின் மிசை வைத்தலும்
இ திறத்திலும் உள் மகிழ்ந்து உறும் இன்பம் எல்லையும் இல்லையே

#129
கோதை வாகையை நீழல் ஆர் அடி கோதை ஆக அணிந்த கை
தாதையான்-தனை நோக்கும் அன்பொடு தாவு உளத்து உலவு இன்பதின்
ஓதை ஆர்கலி ஓட ஓர் நகை உற்ற பாலகன் ஒண் முக
பாதையால் களி எய்தி மொய்த்தன பாரோடு உம்பர்கள்-பால் எலாம்

#130
வேது அணிந்தன பாலன் வீ அணி வாகையான்-தனை வீக்கலால்
போது அணிந்தன கோடு சூழ் படர் பூத்த பொன் கொடி போலுமே
மீது அணிந்தன நீவி போர்த்து அவிர் மேனியை தவன் வீக்கலும்
சீது அணிந்தன மேகம் ஒண் சுடர் செவ்வி மூடிய போலுமே

#131
தத்து எரிந்தன மீன்கள் சூடிய தன்ம நாயகி தன் முகத்து
ஒத்து எரிந்தன கண் களிப்பு எழ உற்று நோக்கிய நோக்கு அறா
மொய்த்து எரிந்தன சேய் முகத்து ஒளி முற்றும் உண்டனள் செம்_சுடர்
துய்த்து எரிந்தன திங்கள் தேறிய தோற்றம் ஒத்தது இலங்கினாள்

#132
மீன் வரம்பு என மின்னு நீள் விழி மீண்டு இமைப்பு இல காண் வளன்
வான் வரம்பு என வாம ஓவியம் மான நின்றனள் என்று ஒரீஇ
தேன் வரம்பு என இன்பு தேறிய ஆவி ஆயின சேயனை
கான் வரம்பு என விண்ட தாயது கஞ்ச அம் கையில் ஈந்தனன்

#133
காம்பு இல் அம் கிளர் கால் பெயர்ந்தன காலை அங்கு அலர் பேர்ந்தது ஓர்
ஆம்பலம் கிளர் பூ இரும் சினையாக நின்றன மா தவன்
சாம்பி அம் கிளர் தாள் துணர் துணை தார் அது என்று அணி ஓகையால்
ஓம்பி அம் கிளர் வாகை ஒண் குடை ஊச நல் நிழல் நீடினான்

#134
ஊசல் அம்புலி உற்றது ஒத்தென ஒள் இரண்டு வெண் சாமரை
காசு அலம்பிய மேனி காட்டிய காதல் வானவர் வீசவே
பாசு அலம் புரி பாழி பற்றிய பள்ளி பண்பொடு வீங்கினான்
ஆசலம் புரி ஆசையால் நிறை ஆகுல கடல் தூர்த்தனன்

#135
விண்ணே புரக்கும் அருள் துஞ்சான் விரி செ இதழ் தாமரை தவிசின்
கண்ணே அன்ன பார்ப்பு அன்ன கன்னி கரத்தில் துஞ்சிய-கால்
உள் நேர் உணர்வு உய்த்து உயர் வேதத்து உரை மந்திர வாய் மொழி தவத்தோன்
பண் நேர் பால் நேர் மாம் குயில் நேர் பாடி படர் நல் புகழ் உற்றான்

#136
இருளே அணுகா மறைவு அணுகா இரவிக்கு ஒளி ஆம் திரு விழியை
மருளே அணுகா மூடுகின்றான் வானும் மண்ணும் வழுவாது ஆள்
அருளே மருளா இ உலகில் அயர்வு மாற அயர்வு இல்லான்
தெருளே மருளா மனம் துயிலா திளை நான் களிப்ப துயில்கின்றான்

#137
களித்த நாளில் அரும்பும் தென் காலே இனிது ஈங்கு அரும்புதியே
துளித்த நான தேன் அரும்ப துணர் நாள் மலர்காள் அரும்புதிரே
விளித்த நாகு மாம் குயில்காள் விளை தேன் பாவை அரும்புதிரே
அளித்த நாதன் நான் கனிய அன்பு துயிலா துயில்கின்றான்

#138
கண் பட்டு உறங்க கண்டேனோ கருணாகரனே களி கடலே
புண் பட்டு உளையும் நெஞ்சிற்கு ஓர் பொருவா மருந்தே அருள் அன்பே
மண் பட்டு அலையும் கடல் அன்ன மருள் என் நெஞ்சிற்கு உயிர் நிலையே
எண் பட்டு உயர்ந்த செல்வ அரசே எம் மேல் இரங்கும் தயை இதுவோ

#139
வான் தோய் நயங்கள் பயந்தோய் நீ மண் தோய் துயர் நீத்து அளித்தோய் நீ
தேன் தோய் இன்பத்து அமைந்தோய் நீ சேண் மேல் புகழப்படுவோய் நீ
நான் தோய் உணர்வின் உயர்ந்தோய் நீ நரன் என்று ஆக அவதரித்தே
ஊன் தோய் உடல் கொண்டன அன்பின் உணர்வு இட்டு எனக்கு பணியாயோ

#140
கோ வீற்றிருந்து மகிழ்வோய் நீ குலையா வயத்து ஒப்பு இகழ்ந்தோய் நீ
நா வீற்றிருந்த புகழ் மிக்க நணுகா காட்சிக்கு இறையோய் நீ
பூ வீற்றிருந்து நாம் வாழ பூ வந்து இடர் உற்று அழுவோய் நீ
ஆ வீற்றிராயோ என் இதயத்து அதற்கே உறுதி புரியாயோ

#141
நூல் வாய் புகழ் மேல் உயர்ந்தோய் நீ நோய் வாய் மருந்தின் கனிவோய் நீ
கோல் வாய் கோடா நீதி நெறி கொண்டு எ உலகும் புரந்தோய் நீ
வேல் வாய் குருதி பாய்ந்து இறப்ப மெய் கொண்டாயோ இதை அறியா
கால் வாய் இலை போல் தியங்கிய என் கருத்திற்கு உணர்வை உணர்த்தாயோ

#142
நீர் பாய் உலகிற்கு உயிரோய் நீ நிமிர் வீட்டு உலகிற்கு உயிரோய் நீய்
சீர் பாய் பாவிற்கு உரையோய் நீ திறன் கொண்டு ஆள்வார்க்கு அடலோய் நீய்
ஏர் பாய் இரவிக்கு ஒளியோய் நீ எம் மேல் இரங்கி பிறந்தனை நாம்
சூர் பாய் துகள் அற்று உய்வதற்கு உன் துணை தாள் தொழும் பண்பு உரையாயோ

#143
தேறும் தயையின் முனிவோய் நீ சினத்திற்கு அருள் செய் கனிவோய் நீ
கூறும் கலை அற்று உணர்வோய் நீ கூறும் தொனி அற்று உரைப்போய் நீ
மாறும் பொருள் யாவிலும் நின்றே மாறா நிலை கொள் மரபோய் நீ
ஈறும் தவிர்ந்த உன் புகழ் கடல் ஆழ்ந்த எனக்கே கரை காட்ட அருளாயோ

#144
ஒளி நாக்கொடு வான் சுடர் புகழ ஒளி நாக்கொடு பல் மணி புகழ
களி நாக்கொடு பல் புள் புகழ கமழ் நாக்கொடு கா மலர் புகழ
தெளி நாக்கொடு நீர் புனல் புகழ தினமே புகழப்படுவோய் நீ
அளி நாக்கொடு நான் உனை புகழ அறியா மூகை உணர்த்தாயோ

#145
என்றும் போற்றப்படுவோய் நீ எங்கும் நிழற்று ஓர் குடையோய் நீ
முன் துன் பொழுது அற்று உளனோய் நீ முக்காலத்து ஓர் பொழுதோய் நீ
குன்றும் தன்மைத்து உரை பின்ற குணியா அருள் செய்தாய் அதற்கே
ஒன்றும் தேறா என் இதயத்து உணர்வின் காட்சி அருளாயோ

#146
என்றான் அழுதான் உள் உருகி இன்ப கடல் ஆழ்ந்து அன்று ஆழ்ந்தான்
குன்றா இறையோன் தயை கடலுள் குளித்தான் நீந்தி கரை காணான்
சென்றான் என்ன மெய் மறந்தே சிறிது ஓர் கால் நின்று உணர்ந்தவை வான்
நின்றார் கண்டு உள் அதிசயிப்ப நிகர்_இல் அன்பால் மீண்டு உரைப்பான்

#147
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்று அனைத்தும் நீயே கதி நீயே
பிறந்தாய் உலகிற்கு உயிர் அன்னோய் பிறந்து எம் துயரும் எம் பகையும்
துறந்தாய் எங்கள் சிறை தீர்த்தாய் துகள் பூட்டிய வீட்டு உயர் வாயில்
திறந்தாய் இவை யாவரும் அறிய திறன் செய்து அருள் செய்து இரங்காயோ

#148
குருவாய் வந்தோய் ஒளிப்பாயோ கோது ஆர் இருள் தீர் வெம் சுடரின்
உருவாய் வந்தோய் ஒளியாயோ உயர் வான் நிகரே மண் கனிய
கருவாய் வந்தோய் இ கருணை கண் கொண்டு எவரும் களித்து அறிய
தருவாய் வந்து ஓய் இல அன்பின் தகவோய் திருவோய் என தொழுதான்

#149
துஞ்சும் தன்மைத்து எ உலகும் துணை அற்று ஆள்வோன் இவை கேட்டு
விஞ்சும் தன்மைத்து ஓங்க வளன் விழைவே விளைக்கும் விழி விழித்தான்
எஞ்சும் தன்மைத்து உதவிய தான் இயைந்த தன்மை உலகு உணர்த்த
அஞ்சும் தன்மைத்து எதிர் இறைஞ்சும் அமரர்க்கு உரையாது ஏவல் இட்டான்

#150
ஏவும் பாலால் விண்ணவர் போய் இடையர் வந்து ஏற்றிய ஆறும்
தூவும் பாலால் ஒளி பகலில் துளங்கு மீன் தோன்றிய ஆறும்
மேவும் பாலால் விரைந்து இறைஞ்ச வேந்தர் மூன்று எய்திய ஆறும்
ஆவும் பாலால் வளன் உணர்வு ஒத்து ஆய தன்மை உரை செய்வாம்
மேல்

@11 காட்சிப் படலம்


#1
இன்ன வாயில் இன்ன தன்மை இன்ன யாவும் ஆகையில்
பொன்ன நாடு துன்னும் உம்பர் பொன் உரு கொடு ஆங்கு போய்
மின்னல் நேரும் அன்னை ஈன்ற வேதநாதனை தொழ
உன் அலாத கோவர் இன்பம் உண்ண உற்று அழைத்தனர்

#2
கொழுந்து உறும் குளிர்ந்த முல்லை கொண்ட கோவர் கூட்டமும்
எழுந்து உறும் குடத்தியாரும் ஏகி ஆய காட்சியால்
விழுந்து உறும் களிப்பு விஞ்சி வேதநாதன் மேல் பதம்
தொழும்-தொறும் தொழும்-தொறும் துளங்குகின்ற தோற்றமே

#3
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன
மாலை ஆக வீங்கு உவந்து வாசம் ஆரும் முல்லை ஆர்
மாலை ஆக ஈங்கு வந்து வாசம் ஆரும் முல்லையார்

#4
பஞ்ச அரங்கில் இன்பு அரங்கு பான்மையால் அடை வரத்து
அம் சலம் குழிந்து உவந்து அமிழ்ந்து அமிழ்ந்த உரம் தனில்
விஞ்ச இன்பம் நெஞ்சு அடங்கு இல் மேவல் ஆர்ந்த தம் உயிர்
உஞ்சல் ஆடி வாயின் வாயில் உற்று உரைத்தல் உற்றனர்

#5
எண் உளே அடங்கல் இன்றி ஏந்து மாட்சி பூண்டு வான்
விண் உளே பொலிந்து உவந்த விண்ணவர்க்கு வேந்தனே
புண் உளே மருந்து நீவி போன ஆட்டை மீட்கவோ
மண் உளே எழுந்து வந்து மண்ணன் என்று உதித்தனை

#6
ஒண் தலங்கள் அண்ட உம்பரும் தொழும் பராபரா
விண் தலம் கலந்து இலங்கு வெண் களங்கன் ஒப்பு எனா
மண் தலங்கள் எங்கும் யாரும் வாழ ஈர வெண் குடை
கொண்டு அலங்கல் கொண்ட தேறல் கொண்ட அன்பு கொற்றவா

#7
மணி கலத்து அகத்து அமைத்த வான் அமிர்த மார்பினோய்
பிணி குலத்து அகத்து உதித்த பெற்றி ஆய்ந்து வாழ்த்திட
பணி குலத்து அகத்து அடங்கு இலால் பணித்த நின் பணி
அணி குலத்து அகத்து அணிந்த அன்பு பேர்கு இல் ஆகுமே

#8
இரவி வேய்ந்த கஞ்சம் ஈன்ற இலகு முத்தம் ஏய்த்து வெல்
புரவில் வேய்ந்த சேயை ஈன்ற பொருவு_இல் அன்னை வாழுதி
சுருதி வேய்ந்த மாட்சி பூண்ட துணைவன் ஆய மா தவத்து
உருவில் வேய்ந்த வேந்த வாழி என்று உறுதி சொற்றினார்

#9
இடத்து இடத்து அடர்த்தி உற்ற இக்கு உடைத்த இன்பு சொல்
குடத்தியர்க்கு அமைத்த பற்றல் கூர்ந்து தோன்றல் தாள் மிசை
தட துணர்க்கு அமைத்த தேறல் தாங்கு மாலை சாத்தலும்
முடித்த திங்களை தொடுத்து உடுக்கள் உற்றல் ஒத்ததே

#10
ஏதம் இன்றி மாலி ஈன்ற காந்தி என்று தோன்றலை
கோது அகன்று உயிர்த்த கோதை தாள் முன் அன்ன கோவலர்
சீத இன்பமோடு இரங்கு தேன் அமிழ்தம் ஈகலும்
பாதம் ஒன்று சோமன் ஈன்ற பால் நிலாவை மானுமே

#11
பால் நிலத்து அமைத்த அன்பு பதுமம் நேரு கண் செய
தேன் நிலத்தினாரை நோக்கு சிறுவன் இன்பு காட்டலால்
மேல் நிலத்தினாரின் ஒத்த விரியு காட்சி உற்று உளம்
வான் நிலத்தின் ஆர்ந்த இன்பு மலிய வாழ மாந்தினார்

#12
கன்னி ஆய தாயும் ஓங்கு காவலானும் அன்பு உற
இன் இறாலினும் கனிந்த இன்ப அம் சொல் ஓதலால்
உன்னம் மேவும் ஈர அன்பு முன்னம் உள் உறாமையால்
மின்ன மாரி தூவல் ஒத்த வீழும் நாட்ட மாரியே

#13
ஏவல் ஆகி மூவரை இறைஞ்சி ஏங்கி ஏகினர்
ஆவல் ஆகி ஆங்கு வைத்த ஆவி அல்லது இல்லதால்
மேவல் ஆகி ஆவியாக வேய்ந்த அன்பு இலாது எனின்
ஓவல் ஆகி வெற்று உடல்கள் ஊரை உற்றல் ஒத்ததே

#14
ஏகு ஆணை ஏக எங்கும் ஏகன் ஆகி ஆள்பவன்
மாகம் மேவு மாடம் நீக்கி மாடு மேவு உழைக்கு உறைந்து
ஆகம் மாடை வேந்தர் நீக்கி ஆயரை தெரிந்தது என்று
ஓகை ஆக ஓகனோடும் ஓங்கு தாயும் வாழ்த்தினாள்

#15
முன் அருந்திய தீம் சுவை முல்லையார்
பின் அருந்திட பெட்பு உறீஇ நாள்-தொறும்
மின் அருந்திய மெல் அடியாள் கரத்து
அன்ன அரும் திரு சேய் தொழ அண்ணுவார்

#16
அண்ணி நீர் தவழ் தீ என அம்புய
கண்ணி தாள் மிசை பெய்துழி காதலன்
விண்ணின் நீர் முகில் மின் என நோக்கலோடு
உள் நிலாவொடு இன்பு ஓர் மழை தூவினான்

#17
தூவி ஓடிய வாரி துவற்றொடு
காவில் ஓடிய முத்து என காதலால்
நாவில் ஓடிய நல் புகழ் சிந்துவார்
ஏவி ஓடிய கோல் விழி ஏந்தினார்

#18
ஏந்தி ஓங்கு உளத்து இன்ப நெடும் கடல்
நீந்தி நீந்தி நிலை கரை காண்கு இலா
காந்தி வேய்ந்தனளை கனிந்து ஓதுவாள்
சாந்தி நாமம் தரித்த குடத்தியே

#19
குடத்தி வாய் மொழி கோது என கோதையாய்
உடற்றி நீ ஒருவாது அருள் ஓர்ந்து கேள்
மடத்து யாது எனும் கிள்ளை வகுத்தன
இடத்து யாவரும் கேட்பது இல் ஆவதோ

#20
ஆவதே முனர் ஆயது போல் அறிந்து
ஈவதே நசை பின்ற அளித்திடும்
கோ அதே மிசை ஆள் தனி கோலினான்
நோவதே இனிது என்று உதித்தான்-கொலோ

#21
கொல்லும் வேலொடும் கூர் நெடும் வாளொடும்
வில்லும் வாளியும் ஆழியும் வில் செய
ஒல்லும் ஆழி உருட்டிட கோன் துணை
செல்லும் வீர வெம் சேனை இல் ஆயது ஏன்

#22
ஆய வான் மணி ஆர்ந்து அணி உச்சியால்
காய நெற்றி கடந்து உயர் மாடமும்
தூய பொன்னொடு சூழ் சுடர் பூணும் இ
தேய வேந்தர் தம் செல்வம் ஒன்று இல்லது ஏன்

#23
இல் அதே இல இ வழி வந்தது ஏன்
செல்ல வான் வழி செய்ய வந்தான் எனில்
வல்ல வேடம் அணிந்து மறைவு அற
வெல்ல வான் உரு வேய்ந்தின் நன்று அல்லதோ

#24
ஓவு உண்டு ஆய உரு கொடு என் உளத்து
ஆவு உண்டாயின ஐயம் இதே இனி
தூவு உண் தாதுவ தூய் மலர் வாய் திறந்து
ஏவு உண்டு ஓதுதி ஆய் இழையாய் என்றாள்

#25
என்ற வாசகம் எந்தை மனு_குலம்
சென்ற வாய் அருள் காட்டிய சீர் உணர்வு
ஒன்றல் ஆகி உருகிய தாய் புனல்
மின் தவா விழி தூவி விளம்பினாள்

#26
அம்பினால் அபயர் செயும் அ துணை
நம்பினார் தனி நல் செய்கை ஈடு இலார் பை
கொம்பில் ஏறும் இடை துவளும் கொடி
எம் பிரான் வலிக்கு இ துணை வேண்டுமோ

#27
வேண்டும் ஓர் வினை வேண்டும் என்றால் முடித்து
ஆண்டும் ஓர் தனி கோல் அரசான் எரி
தூண்டும் ஓர் சினம் தோன்றுழி அ பகை
தாண்டும் ஓர் வலி தாங்குவர் யாவரோ

#28
யாவரும் கடிது அஞ்சலொடு எஞ்சுவான்
மீ வரும் துளி மேதினி மொய்த்ததும்
தீ வரும் துளி ஐம் புரம் தீந்ததும்
தூ வரும் பலவும் தொகை சொற்றவோ

#29
சொல் தவிர்ந்த அருள் தொழில் கால் இது என்று
உற்று அவிர்ந்த உடு முடியாள் உரைத்து
இற்று அவிர்ந்த இடைச்சி உணர்ந்த பின்
பற்று அவிர்ந்த உரை பயன் கூறுவாள்

#30
கூறுவாள் செயும் கொள்கையின் என் உளம்
பீறு வாள் என பின்னை ஓர் ஐயமும்
தேறு வாய் மொழி கேட்டிட செப்புவேன்
ஈறு வாய் இல எந்தையின் அன்னையே

#31
அன்னை தந்தை இலான் அறை நூற்படி
என்னை இங்கு அளித்தோன் வரும் எல்வையின்
மின்னை ஒன்றிய வேடம் எடுத்து அவன்
தன்னை யாவரும் தாழ இறைஞ்சுவார்

#32
அஞ்சுவார் அவன் முன் உலகு ஆள்பவர்
எஞ்சுவார் அவனை இறைஞ்சுவார்
விஞ்சும் ஆரணம் ஆக விளம்பினார்
துஞ்சு மா தவரே என சொல்லினாள்

#33
சொல்ல கேட்டனள் தொன் மொழி தன்மையும்
வெல்ல கேட்பு_அரும் வெம் சினத்து எல்லை நாள்
ஒல்ல கேட்டனர் உட்குற ஆவதை
புல்ல கேட்கில் யான் புகல்வேன் என்றாள்

#34
தாள் எழும் கமலம் சுடர் தாவிய
கோள் எழும் கதிர் கொண்டு என கேட்டலும்
வாள் எழுந்த கண் மாதொடு யாவரும்
சூள் எழுந்து உற சொல் என சொல்லுவாள்

#35
மல் செய்கை முதிர்ந்து உயர்ந்தோன் இரு கால் இங்கண் வந்து உதிப்பான் என மறையால் அறிந்தேம் அன்பின்
நல் செய்கை தளிர்ப்பதற்கே முன்னர் தோன்றி நயன் தருவான் மீண்டு அரிய திறத்து நீதி
பல் செய்கை காட்ட இரு வினையால் யார்க்கும் பயன் தர நீய் முன் உரைத்த வண்ணம் எய்தி
முன் செய்கை அருள் செய்கை இக்கால் ஆய் பின் முனி செய்கை உலகு அஞ்ச தோற்றுவிப்பான்

#36
மண் கனிய பொன் பொழிந்த மழை ஒத்து ஆர்வம் வழங்க உரி பொழுது என இன்று இறங்கி சேய் ஆய்
கண் கனிய பொன் கோலால் அரிதின் தீட்டி கதிர் தவழும் ஓவியம் நல் உயிர் பெற்று அன்ன
விண் கனிய கவின் பூண்ட வடிவம் சூட்டி விழைவு இயற்றும் குழவி என இங்கண் தோன்றி
புண் கனிய குளிர்ந்து ஆற்றும் மருந்து போன்றான் புலவர் எலாம் வருந்தினும் தம் புகழின் மிக்கோன்

#37
அழுது ஆர்ந்த துயர் கரத்தில் பிறந்து கைக்கும் அரந்தையின் பால் அருந்தி வளர்ந்து அருள் வளர்த்த
பொழுது ஆர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப பொறை ஏராய் பூட்டி செம்_புனல் சேறு ஆக
உழுது ஆர்ந்த ஆர்வ விதை வித்தி பின்னும் உரிய வர நீர் இறைத்து விளைந்த இன்பம்
வழுது ஆர்ந்த வையகத்தார் உய்தற்கு ஈவான் மணி கலத்து ஊடு அமுது ஏந்தும் அருள் மொய் மார்போன்

#38
பொய் பொதுளும் ஐம்பொறி பின் மனமும் செல்ல போக்கிய கால் பொருள் புகழ் இன்பு எவரும் வெஃகி
மை பொதுளும் வினை பொதுள விளைந்த பாவ மருள் சீய்க்க பொறை மிடி தாழ்வு உரியது அல்லால்
கை பொதுளும் கனி விடம் என்று ஒருவுக என்றான் கனிவு என்ன தான் அருந்தி பொன்றல் போல
மெய் பொதுளும் மறை தந்தோன் விலகும் தீமை விழைந்து உற்றால் உலகிற்கும் பொருந்தும் பாலோ

#39
இ காலம் தயை காலம் என்று தோன்றி எளியன் என திரிந்து இனியது எவர்க்கும் கூறி
முக்காலம் கடந்து உணர்த்து இ சுருதி நல் நூல் மொழிந்து அருளை காட்டிய பின் முதிர்ந்த நீதி
அ காலம் குறுகிய கால் தீர்வை தீர்க்க ஆங்கு இவன் தான் மூ உலகம் கலங்கி கூச
மிக்கு ஆலம் கால் உருவத்து எய்தா முன்னர் விடும் தூது என்று எய்தும் எலாம் சொல்லும் பாலோ

#40
தேர் எழுந்த செம்_சுடரோன் இருண்டு மாழ்க தெண் கதிர் கால் திங்கள் முகத்து இரத்தம் சேப்ப
தார் எழுந்த வம்பு அலரோ மணியோ நாறும் தாரகைகள் அங்கண் விட்டு இரிந்து வீழ்க
போர் எழுந்த கதத்து உடன்று திரைகள் தாவ புயல் பாய்ந்து பொங்கிய நீள் புணரி ஆர்ப்ப
பார் எழுந்த பருப்பதங்கள் நடுங்கி பேர படர் நிலத்தோர் கடை யுகம் என்று அஞ்சா நிற்பர்

#41
கடுகியன இடி சூல் கொள் கரும் கார் மொய்ப்ப கணகணென கடும் செம் தீ மாரி தூவ
வடுகி என பெய்த அழல் திரண்டு ஆங்கு ஓட மண்டு இருண்ட புகை அள்ளும் தன்மை மூய்ப்ப
முடுகியன சாப மழை திரளின் விம்ம முகில் கீறி இடி இடித்த இடிகள் தாக்க
கிடுகிடென பார் உலகம் நடுங்கி ஆட கிளர் துயர் கொண்டு உயிர் அனைத்தும் மாழ்கும் அன்றே

#42
வெம் பர மா சினத்து எரிந்த மண்ணோர் எல்லாம் வெண் பலி ஆயின பின்னர் வயத்திற்கு எஞ்சாது
உம்பரம் ஆள் தனி கோலான் ஏவும் தன்மைத்து உம்பர் பலர் விடும் கணையில் விரைந்து சென்றே
அம்பரம் நான்கு ஓடி எழும் கடலும் காரும் அதிர்த்த அரவம் எஞ்சி விஞ்ச காளம் ஊதி
எம் பரம் இறைவன் இடும் தீர்வை கேட்ப எழு-மின் என எழுந்திருப்பர் மக்கள் எல்லாம்

#43
ஏவுகின்ற வயத்து உள்ள உலகம் மூன்றும் எழில் பட முன் ஒன்றும் இலாது உள ஆக்கின்றோன்
மேவுகின்ற திரு உளம் ஆய் சொல்லல் ஆற்றா மிடல் தன்னால் அடலை என புழுதி என்னா
தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய் சேர்த்து இ தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண்
தாவுகின்ற மனு_குலத்தோன் ஒருவன் நீங்கா தம் உடலை போர்த்து எழுந்து கலந்து நிற்பார்

#44
குல முறையும் இன முறையும் ஒன்றும் பாரா குண தொகையால் வேறுபட வினையை செய்த
நல முறையும் பார்த்து இரு-பால் பகுப்ப வானோர் நம்பி தனது இல்லாளை மகனை தன் தாய்
பல முறையும் மூதுனனை தம்பி ஓர் தூர் பற்றிய பல் கிளை தம்முள் பிரிந்து நிற்கும்
வல முறையும் கண்டு அலறி தளர்ந்து நோக வானவர் ஈண்டு எவரையும் ஓர் இடத்து இட்டு உய்ப்பார்

#45
இடி உண்ட முகில் ஒரு-பால் மின்னி விம்ம இகல் முரசும் பல் பறையும் ஒரு-பால் ஆர்ப்ப
கொடி உண்ட வான் தளங்கள் ஒரு-பால் முன்ன கோ கணம் போல் மற்று அமரர் இரு-பால் சூழ
துடி உண்ட ஒலிக்கொடு சூழ் வெரு உய்த்து ஒல்கி சுடர் தவழும் தூய் முகிலில் பொலிந்து தோன்றி
முடி உண்ட அரசர் அரசு என மேல் நிற்பான் முருகு முகை முகத்து இங்கண் நிற்கும் இன்னான்

#46
குன்று எழுந்த செம்_சுடர் போல் முகில் மேல் தோன்றும் குண தொகையோன் வலத்து இறைஞ்சி உயர வானோர்
சென்று எழுந்த நல்லோரை முகமன் நோக்கி தீ அலகை இனத்தினுடன் இடத்தில் அஞ்சி
நின்று எழுந்த துயர் அழற்று மன தீயோரை நெடும் வேல் கண்ணால் சுளித்து நோக்கி நோக்கும்
நன்று எழுந்த வினை பயத்தால் விளக்கு இட்டு அன்ன நவை எல்லாம் எல்லார்க்கும் தோற்றுவிப்பான்

#47
முன் செய்கை அனைத்தும் அவண் தோன்றி தீமை முயன்றதும் உள் விரும்பியதும் உரைத்த சொல்லும்
நல் செய்கை நன்றாய் செய்யாமல் செய்த நவையும் ஒளித்து இருள் தேடி இரவில் செய்த
தன் செய்கை யாவும் அன்றே நடுங்கி கூச தரணி எலாம் முற்று அறிய தவம் பயக்கும்
மல் செய்கை உறுதியினால் இமிழில் இக்கால் மறைய அவை துடையாதால் தோன்றும் அன்றே

#48
மின்னி வீழ் உரும் அன்ன களித்து நோக்கி வெரு உய்க்கும் முகத்து ஆர்த்து விமலன் சொல்வான்
துன்னி வீழ் புனல் அன்ன நிலையா செல்வ தொகுதி விழைந்து அறம் நீத்த பாவிகாள் விண்
சென்னி வீழ் துளி ஆதி சூழ்ந்த யாவும் திளைப்ப தந்தனன் நான் ஆய் என்னை நீக்கி
வன்னி வீழ்ந்து எரி வஞ்ச பேய்கள் தம்மை வர கடவுள் என்று எண்ணி தொழுதது என்னோ

#49
நூல் வழியே வந்த மறை நீக்கி காமம் நுழை வழி ஆம் கதை பலவும் சுருதி என்றீர்
கோல் வழியே கோட்டம் இல என்னை போற்றும் குணத்தவரை குலம் இலரே என்றீர் நீங்கா
வேல் வழியே இரத்தம் உக அவரை கொன்றீர் வீட்டில் அவர் என்னுடன் வாழ்ந்து உவப்ப தீமை
கால் வழியே வணங்கிய தீ வஞ்சக தேவர் கணத்தொடு நீர் ஊழி_தீ முழுகி வேவீர்

#50
நண்ணாது நின்றுழி நான் தெரிந்த நீரோ நல் மறை நூல் உணர்ந்து உணராதவரை போன்றீர்
உண்ணாதும் ஈயாதும் பொருள் ஈட்டிட்டீர் உள பிறர் கைப்பொருள் கொண்டீர் இகழ்ந்தீர் பொய்த்தீர்
எண்ணாது தாய் தந்தை இறைஞ்சீர் கேளீர் எதிர்த்து உடன்று பகைத்தீர் பொய் ஆணை இட்டீர்
கண்ணாது பிறர் மனை போய் காமத்து ஆழ்ந்தீர் கதி வழி எய்தாரொடு தீ நரகில் தாழ்வீர்

#51
என்றான் ஆர்த்து அசனி அனான் என்ற தன்மைத்து எ உலகும் அதிர்த்து அஞ்ச ஆர்ப்பார் அன்னார்
குன்றாது ஆங்கு உள செல்வம் இழந்தோம் நொந்தோம் குலைகிற்போம் கரை காணா மருண்டோம் கெட்டோம்
பின்றாது ஆர்த்து எரி வேவோம் அந்தோ அந்தோ பேறு இல்லார் குலம் இல்லார் அவரை என்றோம்
பொன்றாதார் வாழ அவர் பொன்றாது அந்தோ புகை செம் தீய் வேவோம் நாம் அந்தோ என்பார்

#52
துடித்திடுவார் உடல் பதைப்பார் மோதி வீழ்வார் சுழல்கிற்பார் புரள்வார் நொந்து அழுவார் சோர்வார்
கடித்திடுவார் தம் உடலை முனிவார் ஆர்ப்பார் கலுழ்கிற்பார் குருதிகள் தாவிட தாம் தம்மை
அடித்திடுவார் உடல் கீறி ஊன் உண்டு ஆற்றார் அயர்ந்து ஏங்கி தயங்குகிற்பார் துயரின் வெள்ளம்
குடித்திடுவார் தீ கடலை நீந்தார் நீந்தார் குன்றாது எஞ்ஞான்றும் எரி பொன்றா வேவார்

#53
வானகத்தே பேர் உவகை பயக்கும் பாலால் வடிவ முகத்து இவன் நல்லோர் தம்மை நோக்கி
கானகத்தே துயர் உண்டீர் நிந்தை உண்டீர் கசடு அற்றீர் அறம் பூண்டீர் இனி எஞ்ஞான்றும்
மீன் அகத்தே மீன்கள் என ஒளிர்ந்து என்னோடு ஓர் வீட்டு-இடை வீற்றிருந்து ஆள எந்தை ஆசி
மால் நகத்தே பெற்றோரே வம்-மின் என்னா வர கடலில் மூழ்கு உவப்பின் தொழுவார் நல்லோர்

#54
மற நெஞ்சீர் போய் திரு என் முகத்து அகன்றே மண்ணையுடன் ஊழி_தீய் போ-மின் என்னா
அற நெஞ்சாரொடு வானோர் புகழ்ந்து சூழ ஆங்கு இவ தான் வானின் உயர் செல்லும் காலில்
புறம் நெஞ்சு ஈர்ந்து அன துயரோடு இவற்றை கண்ட பொதிர் தீயோர் அயர்ந்து ஏங்கி புலம்பி சீற
திற நெஞ்சு ஈர்ந்து என புவி உள் பிளந்த வாயில் திரண்டு உருண்டு ஆர்த்து அலறி தீ நரகில் வீழ்வார்

#55
சுற்றத்தார் வேண்டும் அன்றோ மறை உள் கொள்ளா சுற்றத்தோடு ஈங்கு அந்தோ என்றும் வேவோம்
செற்றத்தால் முந்தையர் தீ வழியை நீங்கா சிதைந்து இவரோடு அடர்ந்து எரி தீ ஆழ்ந்தோம் அந்தோ
குற்றத்தால் உலகு இயற்கை பிறழாது அண்ணி கொண்ட பயன் இதோ அந்தோ அந்தோ இன்ப
பெற்றத்தால் இதோ கெட்டோம் அந்தோ என்று பின் தாம் நச்சு உயிர் பொன்றாது என்றும் வேவார்

#56
அன்று இன்னான் இரு வினைக்கும் பயன் உய்த்து எய்தற்கு அரசு ஒக்கும் வடிவு ஒக்க பொலிந்து தோன்ற
இன்று அன்னான் நீதி முறை பிறழா நேர் சென்று இருபற்று அற்று ஒழுகும் நெறி எவர்க்கும் காட்ட
சென்று இன்னா பயத்த பொருள் புகழ் இன்பு எல்லாம் செகுத்து எம்மை அளிப்பதற்கே எளிய வேடம்
நன்று என்னா முகை முகத்து குழவி ஆனான் நவைக்கு இறுதி நவை கொண்டோர்க்கு உறுதி ஆனான்

#57
இன்பு அருந்தி நாம் உண்ட விடத்தை தீர்க்க இயல்பு ஆம் கைப்பு என நாமே உண்டால் நன்றே
துன்பு அருந்தி தான் மருந்து நமக்கே ஆகி துயர் துய்த்த பயன் எல்லாம் நமக்கே ஈவான்
அன்பு அருந்தி அமுது ஏந்தும் மணி கலத்தின் அன்னான் என்று இறைஞ்சினள் தாய் துயர் முன் இன்பம்
பின்பு அருந்தி கேட்டு எவரும் வணங்கி நிற்ப பேர் அறிவு ஓங்கிய சாந்தி தொழுது சொல்வாள்

#58
வழுது ஆயின இன்பு உண நான் மனம் உள்
பழுது ஆயின பாவியினால் இறைவா
அழுதாய்-கொல் உளைந்து அயர்வாய்-கொல் எனா
தொழுதாள் அழுதாள் பினை சொற்றுவள்-ஆல்

#59
மறம் மேவினர் கை வசம் ஆகுப ஈங்கு
உற மேவிய காதல் உள் ஆயினையோ
திறம் மேவிய சீவனியே அமுதே
அறமே அருளே கருணாகரனே

#60
சிந்தா ஆகுல வேலை உடைத்த செயிர்
தந்த ஆகுல ஆசை தகைத்த கரை
உந்து ஆகுப நீ உலகு ஓர் மகனாய்
வந்து ஆகுல மா கடல் மூழ்குவதோ

#61
தேன் தோய் நயம் நாம் உண ஆம் செயிர் தீர்
வான் தோய் அமுது ஒத்த மருந்து இடவோ
ஊன் தோய் உடல் நோய் உறு கைப்பு அயில்வாய்
கான் தோய் மலரே உயிர் செய் கனியே

#62
மண்ணோர்கள் வருந்து இல வாழ்வு அயிற
விண்ணோர் தொழும் ஓர் தனி வேந்து என நீ
புண் நோக உடல் துயர் பூத்திடவோ
கண் ஓர் மணியே கனிவு ஆருயிரே

#63
பை நாகம் எனா பல மின்னல் எழீஇ
கை நாகம் எனா கடிது ஆர்த்து நிறை
பெய் நாகம் எனா பிதிர் வந்தனை கல
மை நாகம் எனா உருகோம் மனம் நாம்

#64
அற ஈடும் இலார் அறிவு ஈடும் இலார்
திற ஈடும் இலார்-இடை சேர் பயனால்
உறவு ஈடும் இலா உறை வீடும் இலா
புற ஈடும் இலா பிணி பூத்து அழுவாய்

#65
புகை ஆடிய காடு எனும் இ புவியே
பகை ஆடியது அல்லது பண்பு உளதோ
நகை ஆடுவர் நாளி என கஞறி
மிகை ஆடுவர் நின் விழைவு ஆற்றுவரே

#66
பிணி ஆசையில் எய்தினையோ பிணியே
அணி ஆசையின் மேல் நிறை ஆக்குவரே
கணியா அருள் மா கை கருத்து இதுவோ
மணி ஆர் அணியே மறையின் திருவே

#67
இடி மொய்த்தன எல்வை இரும் கரிகள்
பிடியை தழுவி பிணி ஆற்றுவன
மடி உற்று இளம் குஞ்சுகள் மாழ்கும் என
முடி மொய்த்து உறை முன் பெடை தாங்குவன

#68
நெடு மூ உலகு ஆக்கிய நீ எனினும்
சுடு சூழ் அழல் ஆற்றிடவும் சுழல
படு விண் மழை தாங்கிடவும் பரிவு அற்றிடும்
ஒன்று இலது ஆம் அரு மாய்கை இதே

#69
பொய்யா விதியோய் பொருவா அருளோய்
உய்யா உலகு என்னில் உனக்கு இழிவோ
அய்யா பயன் நிற்கு இதன் ஆகுவதோ
கொய்யா வலியே குறையா திருவே

#70
விடியா இருள் முடிய மேதினி மேல்
முடியா ஒளி முற்றிய செம்_சுடரே
அடியாள் உயிரே அணியே என மென்
கொடி ஆடு என நொந்து குழைந்து அழுவாள்

#71
அழுவார் எவரும் அயர்வார் எவரும்
தொழுவார் புகழ்வார் துணர் மெல் அடி மேல்
விழுவார் சிர மேல் கொளுவார் மிடைவார்
எழுவார் நணுவார் பெயரார் இனிதே

#72
இன்றே நினை எள்ளினர் எல்லையின் நாள்
அன்றே அறிவார் அழுவார் அருளை
கொன் தேடினர் வன்னி குளிப்பவரே
என்றே தொழுவார் இளையோர் சிலரே

#73
மெய் ஆகிய நின் விதியே விழையா
பொய் ஆகிய புன் கதை பூத்த பயன்
மொய் ஆகிய நாள் மொழிவார் என நீர்
மை ஆகிய கண் வடிவார் சிலரே

#74
சிலர் நீதி செழும் திறல் பாடுவரே
சிலர் ஆர்வ இரும் திரு ஓதுவரே
சிலர் தீது செயும் பகை செப்புவரே
சிலர் தேடிய தீமை கலுழ்குவரே

#75
சிலர் தாள் இணை சென்னியில் ஏற்றுவரே
சிலர் ஏற்றிய சே அடி நீவுவரே
சிலர் பூ அணி சீறடி சூடுவரே
சிலர் வாள் விழி முத்து அணி சேர்க்குவரே

#76
சிலர் செய் துதி சீரியதோ அது என
அலர் வைகிய தேன் அளி பாடுவன
பலர் பெய் கமழ் நீர் பனி கோதது என
மலர் மல்கிய தேன் மழை தூவுவன

#77
திரு முற்று உறை சிந்திய கார் இது என
வரு பல் சிகி வால் சிறகு ஆடுவன
பருவத்து இருள் நீக்கிய பானு இது என
குரு நல் குயில் கொம்பு உயர் கூவுவன

#78
விரை மாறு இல தேன் விளை பூ இது என
நிரை தேன் நிறை வண்டொடு பாடுவன
கரை நீத்த அமுதின் கடலே இது என
உரையால் துதி ஒண் கிளி பேசுவன

#79
இவ்வாறு இமிழ் எல்லையும் இல்லை என
அவ்வாறு அணுகு ஆயரும் அன்பினொடு
செ ஆறு உளம் மேவிய சீர் பல நாள்
வவ்வு ஆறு உரை வவ்விய ஆறு அதுவோ

#80
செல்லை தாராய் சூடிய குன்றில் திரிகின்ற
முல்லை தாரார் இ தலை பல் நாள் முறை எஞ்சாது
எல்லை தாராய் ஏந்திய எந்தை தொழ அம் பூ
வில்லை தாராய் வேய்ந்தனன் அன்பு ஆர் விதி சொல்வான்

#81
சொல்லும் தன்மை பொன் மொழி மாரி துளி வெற்பில்
புல்லும் தன்மை தண்பட உள்ளம் பொலிவு எய்தி
செல்லும் தன்மைத்து ஏழ் மடி ஓங்க தெளி ஞானம்
ஒல்லும் தன்மைத்து ஒள் அறம் உற்றே கதி உற்றார்

#82
மை விண் மேல் ஆள்வோன் தனை ஏந்தும் வளன் ஓங்க
மொய் விண் நேர் உள் தூவிய ஞான முறை எல்லாம்
பெய் விண் நீர் உண்டே மலை ஆறாய் பிளிர்வு அன்ன
மெய் விண்டு அம் பூவாய் வழி கால்வான் வினை தீர்த்தான்

#83
செல் வாய் நின்ற அம் முழை சென்றார் எவர் உண்டோ
வில் வாய் விண்ட பூம் குழவி-கண் விளை ஞானம்
வல் வாய் உண்ட மா தவன் நல் நூல் மறை கூறும்
சொல் வாய் மல்கும் தூய் அறம் உற்றார் துகள் தீர்ந்தார்

#84
புன்மை கொண்டார் அ வழி போய் அ புடை ஆர்ந்த
இன்மை கண்டால் எள்ளுவர் எள்ளாது இவர் நிற்கும்
தன்மை கண்டே நூல் வடிவோன் சொல் தகை கேட்டால்
நன்மை கொண்டே நல் புகழ் ஓதி நடை கொள்வார்

#85
பார் ஆர் கங்குல் பானு ஒளி முன்னர் பரவு உண்டோ
ஏர் ஆர் வில் செய் மு சுடர் அன்னான் இவரை கண்டு
ஆர் ஆர் உள் ஆர் ஆசு இருள் நீங்காது அவண் உண்டோ
தேரார் உண்டோ தேர்ந்து அடைவார்க்கு ஓர் சிதைவு உண்டோ

#86
துன்பால் இங்கண் ஆம் குலைவு எல்லாம் துகள் தீர்த்தோன்
தன்-பால் என்றே தான் அயர்வு உற்றான் தனை உற்றார்
இன்பால் எஞ்சா வாழ்வது தம்-பால் என விட்டான்
அன்பால் அஃகாது ஓர் உயிர் அன்னான் அமுது அன்னான்

#87
அணி கலத்து அழகு அழுந்திய உரு கொடு அமரர்
மணி கலத்து அமுது உய்த்து என வணங்கி ஆங்கு உய்த்த
பிணி கலத்து-இடை கிடந்து உறை குழவி தன் பெயரை
பணி கலத்து-இடை படைத்து உலகு உய்ந்து எழ பகர்வாம்

#88
மட்டு வாய் விளா மணி முகை மணம் உயிர்த்து அன்ன
கட்டு வாய் விளா கன்னி தன் மகவினை ஈன்ற
எட்டு நாளும் ஆய் இரவி ஆயிரர் என இரவி
சிட்டு வான் எழா முன்னர் ஆங்கு அமரரே திளைத்தார்

#89
வம் பொன் ஆடை மேல் செம்பொனால் வரைந்தன வண்ணத்து
அம் பொன் மார்பின் மேல் அழல் கொழுந்து அழற்று என அணிந்த
செம்பொன்னால் திரு நாமமே செறிந்த பேர் அணியாய்
பைம்பொன் மேனியர் பரப்பு ஒளி பருகி வில் செயும்-ஆல்

#90
அங்களை தெளித்து அகல் நறு மலர் கொடு மார்பில்
திங்களை தெளித்து இட்டு என நாமம் பூண் தியங்க
எங்களை தெளித்து உயர்த்திய இறைவ என்று இறைஞ்சி
மங்கள தெளி திரு புகழ் வழங்குபு வதிந்தார்

#91
ஆர் அணிக்கு எழு மிக்கயேல் கபிரியேல் அன்ன
பேர் அணிக்கு இரு தலைவரின் பெற்றியின் தோன்றி
தேர் அணிக்கு இரும் செம்_சுடர் அழகு உற தீட்டும்
ஏர் அணிக்கு இணை ஏமம் மேல் திரு பெயர் அணிந்தார்

#92
தகடு வைத்த பொன் பரப்பின் வாய் முத்து அணி தயங்க
முகடு வைத்த பைம் மணியொடு குரு மணி முடியாய்
அகடு வைத்த வால் மணியினால் அழகு எடுத்து அழுத்தி
துகள் துடைத்தவன் தூய் திரு நாமம் வேய்ந்ததுவே

#93
வருந்த மாசு உடை மனு_குலம் புரந்திடல் இவனால்
பொருந்தல் ஆம் என புரவலன் என்று ஒக்கும் நாமம்
திருந்த யேசுவே செப்புதீர் என மிக்கயேல் ஆங்கு
இருந்த வானவர் இடையிடை விருப்பு எழீஇ தொழுதார்

#94
முருடொடும் திசை முழுவதும் பல்லியம் முழங்க
அருள் தொடும் திசை அந்தரம் அளவு இல களிப்ப
மருள் தொடும் திசை வையகம் இனிது அயர்வு உயிர்ப்ப
இருள் தொடும் திசை இடியொடு நடுநடுங்கினவே

#95
பிணத்து இனங்களை நடுக்குறும் பெற்றி மா தவனும்
கணத்து இனங்களை முடி புனை கன்னி அம் தாயும்
குணத்து இணங்கிய குரு மணி திருந்திய நாமம்
மணத்து இணங்கினர் வணங்கலின் மிக்கயேல் உரைப்பான்

#96
இ திறத்திலும் இ தகை ஏந்திய நாமம்
கை திறத்திலும் களிப்புற கூப்பியர் உரைப்ப
மை திறத்தில் உள் மயங்கிய சிதைவு எலாம் கடிந்து
மெய் திறத்திலும் விளைந்த நன்று இயம்புதல் பாலோ

#97
பொய்யும் போவன போவன பொருந்திய புரைகள்
ஐயும் போவன ஆகுலம் போவன அலகை
மொய்யும் போவன முதிர்ந்த நோய் போவன மற்றும்
மையும் போவன வகுத்த இ திரு பெயர் வயத்தால்

#98
நோயும் ஒக்குமேல் நுகர்ந்து உயிர் தரும் மருந்து ஒக்கும்
பேயும் ஒக்குமேல் வெற்றியை பெறும் படை ஒக்கும்
தீயும் ஒக்குமேல் தீர்த்து அரும் செல் கதி உய்க்கும்
தாயும் ஒக்குமே தருமன் அன்பு உய்க்கும் இ நாமம்

#99
இன்ன இன்புறும் இனிய இ திரு பெயர் தன்னை
பன்ன இன்புறும் பன்னிய வாயும் உள் வணங்கி
உன்ன இன்புறும் உன்னிய உன்னமும் அதனை
துன்ன இன்புறும் துன்னிய திசை எலாம் அன்றோ

#100
வான மேலவர் வணங்கிய இ பெயர் தன்னால்
தானமே தவம் தகை அருள் பொறை புகழ் வளர்ந்து
ஞானமே பயில் நன்று எலாம் மிகுத்து உயிர் பிரிதல்
ஆன வேலையில் அனந்த வீடு அமைதல் ஆம் என்றான்

#101
என்ற காலையில் இன் இசை மகர யாழ் உளரி
நன்று அளாவிய நயத்து அமிழ்ந்து ஆசியை நவின்று
குன்று அளாவிய குன்று இல முகில் பொழி மழை போல்
மன்று அளாவிய மலர் மழை வழங்கினர் வானோர்

#102
மின்னு மா மகன் மேனி கொண்டு உதித்த எண் பகல் ஆய்
பன்னு மா மறை பயில்வரை விளித்து அரும் அன்பின்
மன்னு மா மறை வகுத்த நல் முறைகளை தவிரா
துன்னு மாண் உடை தூய் திரு நாமம் இட்டனரே

#103
வையத்தார் திரு விரும்பி மறு உற்றார் என்று எளிமை வடிவம் பூண்டு
மெய்யை தான் உலகு உணர்த்த விருப்பமொடு மனு ஆய விசைய வேந்தன்
பொய் அற்ற ஆர் வலி தன்மை பூதலத்தில் தோற்றுவிப்ப புகழ் உற்று ஆய்ந்த
ஐ அற்று ஓர் அறிவு உடை மூ அரசரை தன் தாள் தொழுவான் அழைத்தல் சொல்வாம்

#104
விண் எழுந்த வெண் மதியம் மிதித்து ஒளிரு மெல் அடியாள் விரும்பி ஈன்ற
ஒண் எழுந்த திரு மகற்கே உரி கொடி ஆம் என மறையோர் உரைத்த வண்ணம்
கண் எழுந்த கவின் காட்டி கதிர் பொங்கு நவ மீனை கடவுள் தானே
மண் எழுந்த நாளில் அருமறை நா போல் தோற்றுவித்து வழங்கல் செய்தான்

#105
நறு நானம் நறிய புகை நாறு நறும் அராபிய நல் நாட்டு வேந்தும்
பெறுமான மணி புனல் சேர் பேர்சிய நாடு ஆண்டு அருளை பிளிர்ந்த வேந்தும்
செறு ஆகத்து அரசு அன்னம் திளைத்து ஆர்க்கும் சப நாட்டு சிறந்த வேந்தும்
துறு வாமத்து ஒளிர்ந்த நவ சுற்கையொடு உள் அறிவு எய்தி தொய்யல் உற்றார்

#106
தனத்து இனத்து துணிவு எய்தி தாரகையை கொடி கொண்ட தரணி வேந்தை
மனத்து இனத்து தொழுது அடியை வணங்குவல் என்று அவனவனும் மனத்தில் தேறி
இனத்து இனத்து கடல் தானை இணைந்து வர கோ வேந்தை இறைஞ்ச போகில்
கனத்து இனத்து தாழ்ந்து ஒளியை கான்று உடுவே அரிய சுரம் காட்டும் அன்றோ

#107
மாறு இன்றி இரவு பகல் மல்கு ஒளி கால் ஓர் உடுவே வழியை காட்ட
வேறு இன்றி தடம் ஒன்றை மேவிய மூ அரசர் ஒன்றி விழுப்பம் ஓங்கி
காறு இன்றி களிப்புற தம் கருத்து எல்லாம் உணர்ந்து உணர்த்தி கருணை ஆர்ந்த
ஈறு இன்றி வளம் பூத்த இறையோனை இறைஞ்சுவதற்கு இணைந்து போனார்

#108
மிடை அடைந்த மணி குயிற்றி வெயில் எறிக்கும் பொன் கொடிஞ்சி மின் தேர் ஈட்டம்
குடை அடைந்த பரிகளொடு குன்று அருவி மதம் மாறா கும்பி ஈட்டம்
படை அடைந்த பகைவர் உரம் பாய்ந்து உணும் ஊன் உமிழ் வடி வேல் படையர் ஈட்டம்
மடை உடைந்த கடல் உடைத்த மயக்கு அடைந்து நெருங்கிற்றே வையம் எல்லாம்

#109
குழல் எடுத்து மாகதர் தேன் பட பாடி பல்லியம் கார் குரலின் ஆர்ப்ப
நிழல் எடுத்து சுடர் இமைக்கும் முடி வேந்தர் நெட்டு-இடை பல் நெறிகள் நீக்கி
சுழல் எடுத்து முகில் தலை ஈர் கொடி நகரை கடந்து ஏகி சோகு இனங்கள்
அழல் எடுத்து செய்த துயர் ஆற்ற இறையோன் உறைந்த இடம் அடைந்தார் அன்றோ

#110
மந்திர மேல் தூய் ஒளி கால் வாகை என அங்கண் உடு வதிந்து நிற்ப
அந்தர மேலவர் வணங்கும் அரசர் பிரான் விலங்கு இனங்கள் அடையும் அன்ன
கந்தரமே தெரிந்தது என கண்டு உளத்தில் வியப்பினொடு களித்த மூவர்
எந்திரமே பொருக்கென நின்று இழிந்து அருத்தி எழுந்து உவந்து உள் இறைஞ்சி புக்கார்

#111
அழிவு இன்றி கன்னி தாய் அரிதில் அவண் திரு மகவு ஈன்று அளித்த ஆறும்
இழிவு இன்றி உலகு அளிப்ப இருதுவத்தை ஒன்றுபட இசைத்த ஆறும்
பழி இன்றி உரு கொடு பற்பல உம்பர் புடை புடை தாள் பணிந்த ஆறும்
விழி இன்றி இறை ஈந்த மேதையினால் அறிந்து உளத்து வியப்பு உற்றாரே

#112
மு மலை வீழ்ந்து என வீழ்ந்து மு சுடர் போல் மு முடிகள் முகிழம் தாளில்
விம்மு அலை வில் உற பெய்து மேவிய நெஞ்சு உருகி கண் விடுத்த நீரால்
பொம்மு அலையின் பெருகு இன்ப புணரியினுள் மூவர் அங்கண் பொலிக மூழ்கி
இ மலையின் தொழ தொழ வீழ்ந்து எழுந்து எழுந்து கோ வேந்தை இறைஞ்சிட்டாரே

#113
ஓர் ஆழி உருட்டலின் மூ உலகு ஆளும் தனி மன்னற்கு உரிய மாடை
நீர் ஆழி நிலம் காக்க மாள்வான் எனும் அதற்கு உரிய நெய் கொள் மீறை
ஆர் ஆழி அறத்து இறைவற்கு அருச்சனை செய்வதற்கு உரிய அரிய தூபம்
பார் ஆழி உடை மூவர் இ மூன்றும் பத மலர் முன் பணிந்து வைத்தார்

#114
மண் களிப்ப மனு ஆனாய் மனம் வருந்த இ துயர் கொள் வடிவு உற்றாயோ
விண் களிப்ப உவப்பு ஆனாய் வெயில் வடிவம் மறைந்து எஞ்ச மிடி கொள்வாயோ
கண் களிப்ப உரு ஆனாய் கசடு ஒழிப்ப உள் இரங்கி கலுழ்குவாயோ
புண் களிப்ப மருந்து ஆனாய் புண்பட மாள்வாய்-கொல் என புலம்பி நின்றார்

#115
மூ உலகும் பொது அற ஆள் முதிர் கருணை வேந்து இவரை முகமன் நோக்கி
பூ உலகும் களி கூர புகலா பூம் கரத்து ஆசி புரிதலோடு
மேவு அலகும் ஒன்று இன்றி வெள்ளம் என வரங்கள் எலாம் மிடைய தந்தே
தே உலகு நிகர் நயத்து இ மூவரும் எண்_இல ஆசி செலுத்தினாரே

#116
அருத்தியொடு மனத்து ஓங்கி அனிச்சையில் நொய் அடி சிரம் மேல் அணுகி சேர்த்தி
கருத்தினொடு கண்ணில் ஒற்றி கண் உகு நீர் முத்து என கால் கழல் போல் மாற்றி
இருத்தியொடு முலை தழுவும் இளையோர் போல் வாய் பொருத்தி இரு முத்து ஏற்றி
வருத்தினொடு மனத்து இன்ப மகிழ்வு எல்லை இல்லை என வரைவு_இல் வாழ்ந்தார்

#117
கோது அணிந்த உலகு அளிக்கும் குணம் வேண்டின் இ துயரோ குளித்தல் வேண்டும்
போது அணிந்த புனல் தவழ் நாம் புரக்கின்ற நாடு அடைந்து பொது அற்று ஆண்டு
நீது அணிந்த இவன் பணித்த நெறியொடு நாம் பணி செய்யா நின்றால் என்னோ
வேது அணிந்த தவம் பொய்யா விதி நல்லோய் என வளனை விரும்பி கேட்டார்

#118
ஒன்று ஆன வயத்து உள மூ உலகு அரசற்கு இ திருவோ உலகில் வேண்டும்
குன்றாத அறம் ஒன்றே குணித்து எய்தி மற்று எவையும் கோது என்று ஓர்ந்து
பின்றாத விதி முறையால் பிறந்த பிரான் உமது ஆர்வ பெற்றி ஒன்றே
பொன்றாத பொற்பு என கொண்டு உவப்பன் என புகன்று ஆசி புரிந்தான் சூசை

#119
வீங்கு ஒடியா விம்மிதத்து இ விதி கேட்டு புகழ்ந்து இவரை வேந்தர் ஏற்ற
பூங்கொடியாய் அழிவு இன்றி பூ அனைய மகவு ஈன்ற பொருவு_இல் தாயும்
தேன் கொடியால் இ மகற்கு செகத்து அமைந்த கை_தாதை சிறப்பு உற்றோனும்
ஆங்கு ஒடியா உறுதி சொல் அருத்தியினால் இருத்தியர் போல் அயனம் உன்னார்

#120
பணிப்பு அரிய குணத்து உம்பர் பரமன் தன் பணி என்ன பயணம் கூற
பிணிப்பு அரிய உடம்பு உயிரை பிரிந்தால் போல் உள் துயரம் பெருகலோடு
தணிப்பு அரிய இ மூவர் தாள் தொழுது அ மூ அரசர் தணந்து நீங்கி
அணிப்பு அரிய நெறி வேறு காட்டு உடு பின் சென்று தமது அகலுள் சேர்ந்தார்

#121
தேர்ந்து அரிது ஓர் தெருளுடன் அ செல்வ அரசர் ஈய்ந்த நிறை செம்பொன் யாவும்
பேர்ந்து அரிது ஓர் பொறை என்ன பேர் அருளோர் மு பாலாய் பிரிதல் செய்தே
ஓர்ந்து அரிது ஓர் முறையில் தமக்கு ஒன்று இன்றி மெய் மறையை ஓதினார்க்கும்
ஆர்ந்து அரிது ஒண் மணி தேவாலயத்திற்கும் இரப்போர்க்கும் அளவில் ஈந்தார்

#122
உடை ஒக்க நீர் உடுக்கும் உலகு அறிய மன்னவர் வந்து ஒழிந்த பின்னர்
கொடி ஒக்க மலர் உயர்த்தோன் குழவி எடுத்து அரும் புகழ் செய் குழுவிற்கு அஞ்சி
மிடி ஒக்க எளிமை உற வெயில் ஆர்ந்த கதிர் கரக்கும் விகத்தன் போல
கடல் ஒக்க பெத்திலையேம் கடி நகருள் சிறு வீட்டில் கரந்து புக்கார்

#123
ஆனகத்தால் பல்லியம் சூழ் ஆர்த்து எழ இ முறை மூவர் அகன்று போகில்
பான் அகத்து ஆர் சுடர் உமிழ் வேல் பற்று ஒரு வானவன் அங்கண் பதிந்து எஞ்ஞான்றும்
கானகத்து ஆர் விலங்கு இனம் அ கந்தரத்துள் புகல் செய்யா காவல் செய்து
வானகத்தார் உறையுள் என்று ஆம் மன்னர் பிரான் பிறந்த முழை வயினே மாதோ
மேல்

@12 மகனேர்ந்த படலம்


#1
இ நீர் அன்னார்க்கு எண்_ஐ நாள் இனிதில் அங்கண் போயின பின்
மெய் நீர் உடுத்து ஈங்கு அவதரித்து விள்ளா முகை ஆம் திருமகன் தன்
அ நீர் முகத்தின் துகள் துடைத்து இ அவனிக்கு எங்கும் பயன் பயப்ப
முந்நீர் எழுந்த இளம் கதிர் போல் மூது ஊர் புறம் வந்தது சொல்வாம்

#2
நிறை நீத்து எசித்தார் பகை முற்றி நெடு நாள் சிறை செய்து யூதர்கள்-தம்
மிறை நீத்து உயர்ந்த குலம் எல்லாம் விடைத்தார் என்னா விடைத்து இறையோன்
குறை நீத்து எல்லா தலை மகரை குலைய ஒன்னார் தான் கொன்று
சிறை நீத்து யூதர் அமுது ஒழுகும் திரு நாடு அமைத்தி அருள் செய்தான்

#3
முன் நாள் செய்த அருள் மறவா முறை கொண்டு ஒழுகும் தன்மை என
பின் நாள் பெறும் தம் தலை மகரை பிறழாமையின் நேர்ந்து அவர் மீட்பது
அன்ன நாள் சிறையை தீர்த்த பிரான் அவர்க்கு ஏவின பாலால் எவர்க்கும்
இன்ன நாள் சிறை தீர் தனி மகனை இவரும் நேர்தற்கு ஏகல் உற்றார்

#4
பிறை ஒண் வடிவம் தேய்த்து ஒளி சூழ் பிலிற்றும் அனிச்ச பதத்தாளும்
மறை ஒண் வடிவம் போர்த்து இலங்கி மலர் கோல் ஓங்கு மா தவனும்
நறை ஒண் வடிவு அம் துணர் பதத்தை நண்ணி ஏற்றி ஆசியை கேட்டு
உறை ஒண் வடிவம் கொள் முகில் போல் உடல் கொள் இறைவன் ஏந்தினரே

#5
விண்ணும் மண்ணும் பொது அற்று விதித்தும் அருளால் புரிந்து அளித்தும்
எண்ணும் எள்ளும் நீத்த குணத்து இருமை ஏந்தும் எனை ஆள்வான்
கண்ணும் கையும் அருள் புரிய கருணை கடலோன் புறத்து ஏகி
மண்ணும் விண்ணும் உவந்த நிலை வகுத்ததற்கு ஆற்றா பா நிலையே

#6
கான் தோய் மலர் மேல் தேன் துளியோ கதிர் தோய் வளை மேல் முத்து அணியோ
தேன் தோய் கமலத்து அன பார்ப்போ சீர் தோய் பொன் மேல் துகிர் செப்போ
மீன் தோய் முடி சூழ் தாய் கரத்தில் வேய்ந்தான் முகத்தில் வில் வீசி
வான் தோய் முகில் தோய் சுடர் அன்ன மனுவின் உடல் தோய்ந்து உதித்த பிரான்

#7
வேய்ந்தான் அன்னான் என வானின் விழி போல் வேய்ந்தான் ஒளி வேந்தன்
ஆய்ந்தான் கண்டான் நீத்த கடல் ஆற்றா இன்ப கடல் இனிதின்
தோய்ந்தான் மலர் தாள் கதிர் கையால் தொழுதான் தொழா மற்றவர் கண்டு
காய்ந்தான் என்ன கதிர் சரங்கள் கடுகி வீசி கடுத்தனனே

#8
பைம் தார் பூண்ட பிறன் மனையாள் பற்றி சென்ற கண் மறுத்த
செம் தார் நல்லோர் மாட்சி என சிறுவன் நோக தீண்டிய தீ
வெம் தார் வெய்யோன் புழுங்கிய தன் வில்லை சுருக்கி புது மகளிர்
தம் தார் மறைவில் நின்றது என தண் கார் மறைவு உற்று ஒளித்தனனே

#9
கடுத்த பருதி கதிர் சரங்கள் காத்த வட்டத்து இள முகிலோடு
அடுத்த தென்றல் சாமரை இட்டு அனைய வீசி நறும் பைம் பூ
உடுத்த வண்ணத்து உள் உள பேர் உவகை பொறித்த முகத்து உலகம்
தொடுத்த உவப்பில் இன்பு ஒழியா தோன்றிற்று அன்று ஓர் விழா அணியே

#10
சிரை வாய் கனி யாழ் தும்பி செய சிகிகள் ஆடும் நாடகமும்
இரை வாய் குயில்கள் தீம் குரலும் இணர் வாய் பொழில்கள் பெய் நறவும்
கரை வாய் பொய்கை மலர் கரத்தில் கனிந்து ஏந்திய தீம் தேன் மணமும்
விரை வாய் தடத்து ஆர்ந்து எதிர் எதிரே விருந்து செய்ய போயினர்-ஆல்

#11
பில்கி தீம் தேன் துளி சுரக்கும் பிணையல் திரள் ஓர் மாரி என
நல்கி தீம் சொல் பா இசைகள் நயப்பின் பாடி மின்னின் நிறத்து
ஒல்கி தீண்டின் கண் கனிய ஒளி செய்து ஐயாயிரத்து_இரட்டி
மல்கி காத்த உம்பர் அலால் வந்தார் அன்று ஓர் எண்_இலரே

#12
கற்பே அணி என்று ஓம்பி மது கரை ஆம் தண் தார் மாதர்கள்-தம்
பொற்பே கணவர் தமக்கு அல்லால் புறத்து பயனே பயவா போல்
வெற்பே எழும் செம்_சுடர் நாண விண்ணோர் புடையின் மொய்த்து உற்ற
பல் பேர் உரு இ மூவர் அலால் பலரும் காணா தோன்றினரே

#13
குரவம் நீள் வேலி கோலும் குடங்கையுள் துஞ்சி-தன்னை
கரவ நீள் பசும் பூ நெற்றி கரும்புகள் நிறுவி ஊக்கி
விரவ நீள் தலையின் வாழை விடும் கனி நக்கி தீம் கான்
பரவ நீள் பல பூங்காவும் படு நெறி போயினாரே

#14
சண்பக பூம் பந்து ஒத்த தனையனை ஏந்தி போய் தம்
பண்பு அகத்து அனைய நீழல் படர்ந்து கான் படர பூத்து
விண் பக பாய்ந்த கொம்பர் விட்டு கண்டு உலவ யூகம்
ஒண் பகல் தகைத்த மேகத்து உறை மருட்டிடும் வீழ் தேனே

#15
மலைத்து அளி இரு-பால் மல்கி மகர யாழ் இசைகள் செய்ய
இலை தளிர் இரும் பூம் சோலை இடத்தில் இட்டு ஏகி பின்னர்
கலை திரிபு ஆக கோலி கதிர் மணி அருவி ஆர்ப்ப
சிலைத்து இரி சிகிகள் ஆடும் திகிரியின் நலத்தை கண்டார்

#16
கண்டுளி உளத்தில் ஓங்க களித்த பூம் கொடியோன் சொல்லும்
தண் துளி முகில் சூழ் வெற்பை தகு மறை வடிவாய் நோக்காய்
பண்டுளி அனைத்தும் எஞ்சா பசி சினந்து உயிர்கள் யாவும்
உண்டுளி உயிரை தந்த உயர் மலை வனப்பு இது என்றான்

#17
கோல் அடி கோடி ஆய கொடுமையால் வருடம் மூன்றும்
மேல் அடி மழையும் இன்றி மெலிந்து உலகு எஞ்சி நிற்ப
கால் அடி தன்மைத்து ஓர் கார் காண தன் கோட்டில் தந்தே
ஆல் அடி நிழற்றும் பொச்சை அன்று உயிர் தந்தது என்றான்

#18
நூல் வழி புகழே போன்று நொடிப்பினில் பரந்த மேகம்
வேல் வழி ஒளியே போன்று மின்னி ஆர்த்து இறைவன் அன்பின்
பால் வழி பயனே போன்று பகல் இரா அளவு_இல் தூவி
கோல் வழி படமே போன்று கூ எலாம் கேழ்த்தது என்றான்

#19
ஊன் நிலை குழவி தோன்றி உலகு எலாம் அளிக்கும் அன்பின்
பால் நிலை இடம் மூன்று ஆற்றா பரிசு உடை இவனை காட்ட
கால் நிலை தோன்றி அ கார் கடல் நிலை பயத்தது என்று
மீன் நிலை முடி தாள் சேர்த்தி மெய்யனை தொழுதாள் தாயே

#20
சுளகொடு சவரம் வீசும் தோற்றமே போன்று வேழம்
புளகொடு மதத்தின் சீறி புடைத்த தன் செவி கால் வீச
மிளகொடு படர்ந்த மெல் நீள் கொடியின் மேல் ஊஞ்சல் ஆடி
அளகொடு பொலி கூன் ஆர்க்கும் அத்திரி அணுகினாரே

#21
நாக நீல் நெற்றி தூங்கு நல் மணி ஓடை போன்று
நாக நீல் நெற்றி நாறு நல் மலர் அணியாய் சூழ்ந்த
நாக நீல் நெற்றி தோன்றி நயன் தரு மறையின் சிந்தும்
நாக நீல் நெற்றி மீன் போல் நல் மணி அருவி கண்டார்

#22
நிறை தவிர்ந்து உணர்ந்த காம நெறியில் கை பொருளே போன்றும்
முறை தவிர்ந்து அடை சீர் போன்றும் முனிகள் தம் முனிவு போன்றும்
பொறை தவிர்ந்து இழிந்து ஈண்டு ஓடும் புனல் நலம் எதிர் கொண்டு ஆங்கு அ
துறை தவிர்ந்து இடத்து இட்டு ஏகி துளித்த தேன் முல்லை சேர்ந்தார்

#23
நீழ் கிளர் மலரின் தண் பூ நிழல் கிளர் கொம்பில் புல்லி
கேழ் கிளர் பொறித்த மாமை கெழும் சிறை வகிர்ந்து பேணி
வாழ் கிளர் அன்பினாலும் மணி கிளர் வனப்பினாலும்
சூழ் கிளர் காவில் ஒவ்வா துணை புறவு இருந்தது அம்மா

#24
உலை வளர் எரி செம் கண்ணான் ஊன் எயிற்று ஊற்று வாயான்
கொலை வளர் புலி பால் உண்டு கொலையொடு வளர்ந்த வேடன்
இலை வளர் நிழல் பூங்காவில் எய்தி அ பறவை கண்டே
சிலை வளர் கொலை ஈண்டு உள்ளி சிலை வளைத்து அணுகி சேர்ந்தான்

#25
ஓர் பகை இவன் கீழ் உள்ள உலவி மேல் பருந்து தானும்
கூர் பகை உகிர் வவ்வா முன் கொடிய கண் இரையை வவ்வி
பேர் பகை உணர்ந்து சூழ பிறர் எலாம் தமை போல் எண்ணி
சேர் பகை உணரா அ புள் சிறுமை கண்டு இனைந்தான் சூசை

#26
சிட்டம் இட்டு எழுதப்பட்ட சிறகு ஒளி செகுப்ப பாறும்
வட்டம் இட்டு இழிந்து பாய வருகையில் வேடன் வாளி
சட்டம் இட்டு எய்ய சர்ப்பம்-தனை மிதித்திடும் கால் தீண்டி
தட்டம் இட்டு அவனும் மாய்ந்தான் தவிர்ந்த கோல் பருந்தும் கொய்தே

#27
வினையது விளைவு நோக்காய் வினை பிறர்க்கு உணர்ந்த பாவம்
தனை அது கொல் கூற்று ஆதல் தகவினார் உரையின் கேட்டேம்
பினை அது இன்று காண பெற்றனம் என்று சூசை
அனையது விளம்பி போன அணி வளர் முல்லை சொல்வாம்

#28
புது பட வேந்து உறீஇ பொலி தெரு-தொறும்
சது பட நகர் எலாம் சிறந்த தன்மை போல்
விது பட முகத்து வான் வேந்தன் எய்தலால்
மது பட மலர்ந்தன முல்லை வாய் எலாம்

#29
வானக தகவினோர் மகிழ வேய்ந்து என
மீன் நக தரு எலாம் முகைகள் விள்ளலே
கானக தவத்தினோன் மணத்தில் கானொடு
தேன் அகத்து அலர்ந்த கோல் சிறப்பு காட்டுமே

#30
சென்னி ஆர் இள மது திருந்தும் பூ மலர்
துன்னி ஆர் நறவிய கனிகள் தோற்றமும்
மின்னி ஆர் உடு முடி வேய்ந்த நாயகி
கன்னியாய் மகன் பெறு மாட்சி காட்டுமே

#ஃ31
பரு இலார் மனம் என முகில் பரந்து நூல்
கரு இலார் மனம் என கருக அந்தரம்
திரு இலார் மனம் என தேம்ப மாம் குயில்
மருவு இலார் மனம் என மஞ்ஞை ஆடும்-ஆல்

#32
ஏர் முகம் புதைத்த வில் இவர் செய்து எய்தலால்
கார் முகம் புதைத்த வெம் கதிர் உதித்தது என்று
ஆர் முகம் புதைத்த இன்பு அருந்தி கூய் குயில்
சூர் முகம் புதைத்தன தோகை நாணியே

#33
பொய் மறுத்து இவர் என பொலிந்த ஓகையால்
ஐ மறுத்து இரி மயில் ஆடி மற்றையும்
மை மறுத்து உளத்து எழீஇ மகிழ்ந்து பாடவே
கை மறுத்து அதிசயித்து அலர்ந்த கா எலாம்

#34
புல்லிய பொழிற்கு-இடை புறப்பட்டு எய்திய
மெல்லியது ஓர் வளி விருந்து எதிர் கொள
சொல்லிய தூது போல் சுருங்கி வீசி அங்கு
அல்லிய மலர் மணம் வாரி கக்கும்-ஆல்

#35
சூழ் இசை மேல் வளி துதைந்து அங்கு ஆடிய
காழ் இசை தரு தழை கனிய பாடலும்
கேழ் இசை மூவரை வாழ்த்த கின்னர
யாழ் இசை இன் நரம்பு உளரல் என்பவே

#36
ஆயரும் உலவு தீம் குழலின் ஆர்ப்பு எழ
ஆய் அரும் உறவினோடு ஆவும் மானும் ஒன்றாய்
அரும் அறிவு என அமர்ந்து நோக்கலின்
ஆயரும் மறந்த கன்று அடி தொடர்ந்தவே

#37
அம்பு உகை வில் என அடி வணங்கின
அம் புகை துகில் என அலர்ந்த பூம் தரு
அம்பு கை முளரி கொண்டு அடி வணங்கின
அம்பு கை ஒலி என ஆர்ப்ப வண்டு அரோ

#38
தழீஇயின கலன் பொறா தளர் நுசுப்பு என
குழீஇயின மலர் பொறா கொடிகள் ஊசல் கொண்டு
எழீஇயின கனி பொறா வளை இபங்கள் மேல்
விழீஇயின இணை பொறா விளங்க முல்லையே

#39
காவின் மீது ஆடிய கனத்தின் ஆர்ப்பு என
பாவின் மீது ஆடிய பரிசினார் அவண்
மேவில் மீது ஆடிய மிஞிறு விம்மின
பூவின் மீது ஆடிய புது கள் நாடியே

#40
ஈய்ந்த கள் நாடி வண்டு யாழ் செய்து ஆர் நிழல்
தோய்ந்த கண் நாடி ஒண் மயில்-தம் தோகைகள்
வாய்ந்த கண்ணாடிகள் வனப்பு என்று ஆயிரம்
ஆய்ந்த கண் நாடி வந்தவர் கண்டு ஆடும்-ஆல்

#41
பைம் கயிற்று இசைத்த பொன் தாலி பற்று என
கொங்கு அயல் திமிசு சூழ் குளிர பூத்தன
செம் கயிற்று அடி உறை திரண்ட முத்து என
அங்கு அயல் திரா மரம் முகைத்த தாம் அரோ

#42
சிந்துரம் விழித்து என சினைத்த பாடலம்
சிந்துர முகை மணி துகளின் தீர்ந்தன
சிந்துரம் மணந்த நீர் குளித்த சீர்மை போல்
சிந்துரம் மணத்தொடு முகைத்த சீலமே

#43
மீன் பரப்பு என முகை விண்ட மற்றையும்
வான் பரப்பு என விரி வனத்தில் எங்கணும்
தேன் பரப்பு என குளிர் செலவை சென்று செல்
கான் பரப்பு அனைத்தையும் கடந்து போயினார்

#44
வீங்கு தம் குலம் மெலிவு உறா தாங்கு உயர் நீரார்
ஓங்கு தம் குணத்து ஒத்த சூழ் நிலத்தில் தாழ் விழுதே
தாங்கு தொன் மரத்து அடி மணல் திண்ணையில் தங்கி
ஆங்கு வெம் கதிர் சாய்ந்த பின் நின்று செல்வு அயர்ந்தார்

#45
விண் விளக்கு ஒளி வேந்தனை பொற்புற தெளித்து
கண் விளக்கிய கவின் மணி மேனியை பூண்டு
மண் விளக்கிட வந்த நாதனை புகழ்ந்து உம்பர்
பண் விளக்கு இசை பாடி போய் மருதமே சேர்ந்தார்

#46
ஆறு பாய் ஒலி அடல் தகர் பாய் ஒலி நெறி கொம்பு
ஏறு பாய் ஒலி எருமை நீர் பாய் ஒலி கரும்பின்
சாறு பாய் ஒலி சங்கு ஒலி வயிர் ஒலி மற்ற
மாறு பாய் ஒலி மயக்கு உறீஇ எதிர்கொண்டு ஆர்த்தனவே

#47
உறை செய் கார் அணி உயர் மலை முலை பொழி பாலாய்
நறை செய் தேனொடு நனி மலி புனல் வயல் பாய
சிறை செய் கால் அது சிலைத்தலே இவர் அடி சேர்ந்தோர்
குறை செய் நோய் அற கூவுபு கூப்பிடல் போன்றே

#48
நடிப்ப நாள் மலர் நறும் புனல் தடத்தில் ஆங்கு உழுநர்
இடிப்ப நீல் நிறத்து உழும் பகடு உரப்பலால் எழு மீன்
துடிப்ப ஆமைகள் தூம்பு-இடை தலை சுரித்து ஒளித்தல்
உடிப்ப மூவரே இடர் உலகு ஒளிக்குவ போன்றே

#49
கேழ்த்த பூ வயல் கிழிபட சிலர் அவண் கீறி
வீழ்த்த தாமரை மெலிவொடு வரம்பின் மேல் வாடல்
நீழ்த்த மாண்பு இவர் நிழல் அடி வணங்கு இலார் நீக்கி
வாழ்த்த மாண்பு இலர் வருந்தி உள் வாடுவ போன்றே

#50
புரிந்த ஓகையில் பொருவு இலா இவர் அருள் போன்று
பிரிந்த மேதி தன் பிள்ளையை உள்ளலின் கனைந்து
சொரிந்த பால் உண்டு துஞ்சிய ஓதிமம் வெருவி
இரிந்தது ஆக ஆர்த்து எழுக என வித்தினர் சிலரே

#51
இங்கண் பா இயாப்பு இசை பயன் விரித்து உரைத்து என்ன
அம் கண் மாதர் கட்டு அவிழ்த்து செந்நெல் முடி நடுவார்
திங்கள் நாண் முகத்து இவர்க்கு இணை அல என சினந்தே
அங்கண் ஆம்பலோடு அலர் எலாம் களை என பறிப்பார்

#52
படி ஒருங்கு இவர் பயத்த நன்று இயல்பு என ஒரு-பால்
நெடிது ஒருங்கு செந்நெல் வளர்ந்து இவர் தொழுது ஒரு-பால்
கடிது ஒருங்கு கை கூப்பு என கதிர் நெறித்து ஒரு-பால்
அடி ஒருங்கு உற வளை தலை விளைந்தன அகணி

#53
மீன் இரும் கொடி வேந்து தன் அருள் வளம் காட்ட
தேன் இரும் தலை கரும்பு உறழ் ஆடிய செந்நெல்
வான் இரும் புலத்து அரிவை தான் அணி இள மதி போல்
கூன் இரும்பினில் குறைத்து அரி பகுத்தனர் ஒரு-பால்

#54
குறைக்குவார் சிலர் கூ மகள் குழல் என சேர்த்தி
இறுக்குவார் சிலர் இவள் புணர் முலை என பல போர்
நிறைக்குவார் சிலர் நீல் நிற பகட்டினால் தெளிப்ப
உறுக்குவார் சிலர் உறைந்த வை நீக்குவார் சிலரே

#55
மாரி மல்கிய மதி-தொறும் மு மழை பொய்யா
வேரி மல்கிய விளை புலத்து எனை பகல்-தோறும்
பூரி மல்கிய தொழில் எலாம் பொருந்தி இ மூவர்
சீரின் மல்கிய செல்வ நாட்டு அலர் பணை கடந்தார்

#56
காரி வாய் என நிறுவிய கழுகு உயர் காவும்
நாரி வாய் என நனி நரல் தெங்கு எழும் காவும்
பூரி வாய் வளை புலவர் போல் அரம்பையின் காவும்
வேரி வாய் மலர் காவும் நீத்து அணி நகர் மிடைந்தார்

#57
விருந்தினார் முகம் விரும்பினர் கண்டு என மலர்ந்து
வருந்தினார் முகம் கண்டு அழு நீர் என மது பெய்து
அருந்தினார் முகந்து அவா அற கனி மலி காவில்
பொருந்தினார் முகம் பொலி நகர் புரிசையை கண்டார்

#58
மின்னிய முகில் சூழ் பொன் மலை தழுவி வேய்ந்து என விசும்பினை தாவும்
கன்னிய புரிசை சூழ் தர தோன்றி கசடுறும் எரோதன் என்ற அரசன்
துன்னிய கொடும் கோல் துயர் செய உளைந்து தொல் மறை வழு இல காத்து
மன்னிய வளம் கொள் எருசலேம் என்னும் மா நகர் தோன்றியது அன்றே

#59
அல் உமிழ் இருளின் இருண்ட நெஞ்சு அவன் செய் அரந்தையின் வெவ் அழல் ஆற்ற
வில் உமிழ் பசும்பொன் மாடங்கள் நெற்றி விரித்த பூம் கொடிகள் தம் ஈட்டம்
எல் உமிழ் மூவர் வருகை கண்டு அரசன் இயற்றிய வஞ்சனைக்கு அஞ்சி
நில்லு-மின் நில்-மின் என இடை விடாது நீண்ட கை காட்டுவ போன்றே

#60
மண் புடை வான மன்னனை வணங்கி வளம் பெறும் பசிய பொன் கோயில்
விண் புடை தீண்டி மின் மணி கோட்டின் மீது ஒளிர் பதாகை நின்று ஆடல்
ஒண் புடை கொடிகாள் நில்லு-மின் நில்-மின் உயிர் அரும் துயர் அற வந்த
எண் புடை காக்கும் அருள் புரி நாதன் இவன் என அமர்த்திடல் போன்றே

#61
சுதை நலம் ஞாயில் முலை நிறை வரைந்து துகில் என அகழியை சூடி
புதை நல இருள் கொள் முகில் நெடும் கூந்தல் பொறுத்து உயர் கோபுர முகத்தில்
ததை நலம் கொணர் இ மூவரை காண தடம் விழி திறந்து என திறந்த
வதை நல மணிகள் குயிற்றிய வாயில் அருமறை வடிவினோர் புக்கார்

#62
நூலினும் வழுவா செம்மையின் ஒழுகி நோக்கினும் அகன்று ஒளித்து ஓடி
நூலினும் மலி சீர் சிறப்பு அணி தெருவில் நுண் மணி கொடிஞ்சி வண் தேரும்
காலினும் காலின் பாய் பரிமாவும் கடாம் கழி கரிகளும் நெருங்க
காலின் உம்பரும் சூழ் யாவையும் நீக்கி கதி புரி வேந்தர் போயினரே

#63
அகில் அடும் புகையும் வாச பூம் புகையும் அடர்ந்து நல் இருள் செயும் தெருவில்
முகில் அடும் குன்றில் துணை மயில் திரிந்த முகம் என இருவரே நடந்து
துகிலொடும் ஏந்தும் குழவி அம் முகிலுள் தோன்றிய மதி என தோன்றி
இகல் அடும் இன்பத்து எவரும் உள் குளிர இளம் கதிர் பரப்பியே போனார்

#64
தேன் நலம் பயின்று நறா மழை துளித்து சீர் கெழு தூங்கு இசை திருத்தி
பால் நலம் பயின்று பாடிய வண்டின் பல் இனம் ஊசல் ஆடுதற்கே
கான் நலம் பயின்ற மலர்கள் தோரணத்தின் கதிர் மணி தோரணம் தயங்க
வான் நலம் பயின்ற வேந்து வந்தமையால் வான வில் வீழ்ந்து என போன்றே

#65
தூமம் மேய்ந்து இருண்ட குழலினார் மார்பில் துளங்கிய முத்து அணி வடம் மேல்
காமனே களிப்புற்று ஊசல் ஆடிய-கால் கசடு அறும் இவர் வர கண்டு
வீமமே உற்று நடு கொடு வழுவி வீழ்ந்து உளத்து அழற்று அழல் ஆறி
தாமம் மேய் அளி போல் குளிர உள் களித்து தயவொடு தீது அற புகழ்ந்தார்

#66
விடும் திரை கொழித்த விம் ஒலி போன்ற விற்பவர் கொள்பவர் ஒலியும்
நெடும் திரை கொழித்த திரு திரள் போன்ற நிதியொடு நிற மணி பலவும்
படும் திரை கொழித்த மயங்கு அலை போன்ற பரி கரி ஈட்டமும் அமைவின்
கடும் திரை கொழித்த கரும் கடல் போன்ற கடை வழி போயினார் மாதோ

#67
மோயிசன் தன் கை சூரலின் பிரிந்த மொய் கடல் வழி விடுத்து அன்ன
மீ இசை தளங்கள் யாவரும் காணா மிடைந்து சூழ் வந்து செய் நெறியால்
போய் இசை பொருள் சேர் நசை எனும் திரையுள் புக்கிலர் மூழ்கிலர் கடந்து
சேய் இசை சுடர் போன்று அ கடல் நீக்கி செயிர் இருள் சீக்க ஆங்கு உதித்தார்

#68
உதித்தனர் என்ன ஆயிரம் கதிரோன் உவமையில் தோற்று என ஒளித்து
குதித்தனன் கரும் தண் புணரியுள் புதைப்ப கோதையும் கொடும் தவத்தவனும்
புதி தனம் இழைத்த மணி கலத்து உயிரை புரி அமுது ஏந்திய போன்றே
விதித்த நன் மறையின் நாதனை ஏந்தி விருப்பொடு சிறு மனை புக்கார்

#69
கோண் நிகர் உணர்வில் கை பொருள் தந்து குறும் புகழ் கோடலே சிறிய
வாணிகர் தொழில் ஆம் ஈங்கு மாறு உணரார் வழங்கும் ஒன்று ஆயிரம் ஆக
சேண் நிகர் பயனை விளைக்கும் என்று உள்ளி செல்வர் மூன்று அளித்த வான் நிதியம்
பூண் நிகர் மறை நூல் அணி வளன் இருளின் போர்வை போர்த்து ஆலயத்து அளித்தான்

#70
விண் திறம் துதைந்த பூசனை அன்றே விழிப்பதற்கு அருத்தியோடு உயர் வான்
கண் திறந்து என்ன கதிரவன் முந்நீர் கடிந்து எழும் காலையில் இனிதாய்
பண் திறம் துவைப்ப ஆர்க்கும் நல் சுடர் செய் பசிய பொன் கோயிலை விருப்பம்
கொண்டு இறந்து இருவர் கோது_அறு பலியாய் குழவியை ஏந்தி எய்தினரே

#71
மேல் நிலா எறிக்கும் குரு மணி குயிற்றி விழு தக நிரை நிரை தீட்டி
பால் நிலா எறிக்கும் பளிங்கு உயர் கோயில் பற்பல சாளர விழிகள்
வான் நிலா எறிக்கும் மகவினை நோக்க மலர்ந்த பின் வம்-மின் என்று அழைப்ப
தூ நிலா எறிக்கும் மணி கதவு அகற்றி சுருதி வாய் திறந்து இவர் புக்கார்

#72
தேக்கிய புகையும் வாம தெருட்சியும் மருளின் நோக்கிற்கு
ஆக்கிய விருந்தின் விம்ம அணி மணி கோயில் புக்கு
வீக்கிய துவங்கட்கு ஒன்று ஆம் மெய்யனை வினையின் தீய்மை
போக்கிய பலி என்று ஆக போற்றி வைத்து இருவர் நின்றார்

#73
வாய்மையோர் புகும்-கால் கோவில் வணக்கு உரி பணியில் வைகும்
தூய்மையோர் என உள் கோட்டம் துறந்தனர் அவையின் மூத்தோன்
மேய்மையோடு உயர்ந்த வேதம் மேல் படர் கொழுகொம்பு அன்னான்
சீய்மையோன் என்னும் வாய்ந்த சீர் கெழு முனியும் வந்தான்

#74
உணங்கிய மரத்திற்கு ஆர்ந்த உயிர் வரு மாரி போன்றும்
இணங்கிய இருளை சீக்கும் இரவியே போன்றும் நாதன்
இணங்கிய வினைகள் தீர்ப்ப பிறந்து இவண் மனு ஆய் காண
வணங்கிய முனிவன் நாளும் வரம் தர வேண்டுவானே

#75
வம்பு அலர் சுனையின் நீருள் வலம்புரி பிறத்தல் போன்றும்
கொம்பு அலர் தருவின் உச்சி குவளையே பூத்தல் போன்றும்
அம்பு அலர் கன்னி விள்ளாது அளித்தது ஓர் மகவாய் நாதன்
கம்பு அலர் கண்கள் பூப்ப காண்பை என்று இறைவன் சொன்னான்

#76
நம்பிய இன்ன வாய்மை நல் உயிர் ஆக நின்றான்
அம்புய மலரின் சாயல் அவதரித்து உதித்த நாதன்
கொம்பிய வினைகள் தீர்ப்ப கோயில் வந்து அடைந்தான் என்ன
பம்பிய காட்சி தோன்றி பறந்து என அன்று வந்தான்

#77
விண்டன மலர் போல் விண்ட விரும்பினான் வெய்தென்று எய்தி
கண்டனன் கனிந்த கண்ணால் கறவை காண் கன்றின் வெஃகி
உண்டு அன உருவில் குன்றா உயர் குணத்து இறைவன் தாளை
கொண்டனன் தலையில் சூடி குண கடல் குளித்து தாழ்ந்தான்

#78
தொழுது தன் உளத்து இன்பு ஆற்றா துணை அடி மலரை ஏற்றி
அழுது தன் கண்ணீர் ஆட்டி அருள் கொழும் துகிலின் நீவி
முழுது தன் கண்கள் கையால் முக கவின் முகந்து உண்டு ஆர்வத்து
இழுது தன் சுவையின் காய்த்த இரும் கனி சுவைத்து விள்ளான்

#79
பார் உடம்பு உயிராய் வந்த பரமனை கரத்தில் ஏந்தி
ஈர் உடம்பு உயிர் ஒன்று ஆக எழுந்த அன்பு உவப்பின் பொங்கி
சேர் உடம்பு இரண்டு ஒன்றாக சேர்த்துபு தழுவி அன்பின்
நேர் உடம்பு எழீஇ வீடு உற்ற நிலைமையின் பாடல் உற்றான்

#80
பால் கடல் என் உள்ள பதும மலர் அரும்ப
நூல் கடலே ஈங்கு உதித்தாய் நும் மலர் கண் முத்து அரும்ப
நும் மலர் கண் முத்து அரும்ப நோய் செய் வினை செய்தேம்
எம் மலர் கண் முத்து அரும்ப இன்று வினை தீர்த்தாய்

#81
வினை தீர்ப்ப எய்தி வினை கொண்டாய் பாவ
புனை தீர்ப்ப ஈங்கு மனு பூட்சி சிறை கொண்டாய்
பூட்சி சிறை கொண்ட புல் என் உயிர் போய் உன்
காட்சி சிறை கொண்டு கண்டேன் கதி நிலையே

#82
கண்டேன் கதி நிலையே கண்டு உயிர் என் பூண்பல் இனி
உண்டேன் உயிராய் அன்பு உன் அடியை சூடினேன்
உன் அடியை சூடி உனை அணுகான் தன் வினையே
தன் அடியை சூழ்ந்து உதைப்ப சுட்ட எரி வீழ்ந்து ஆழ்வானே

#83
ஆசை எழும் இன்னவை அரும் தவனும் பாடி
ஓசை எழும் வீணை குழல் யாழொடு இசை பாட
பூசை எழும் பூம் புகை பொலிந்து இனிதின் நாற
மாசை எழும் ஆலயமும் வான் உலகு போல்வு ஆம்

#84
கொங்கு அடரும் பூ மழையும் பா மழையும் கூர்ப்ப
சங்கு அடரும் வாய் தரள வெண் குடைகள் தாங்க
திங்கள் தரும் தீம் கதிரின் சேர் கவரி பொங்க
அங்கு அடரும் யாவரும் அருச்சனையின் மிக்கார்

#85
ஒருவர் அடி ஏற்றி மலர் ஒள் ஒலியல் சூட
ஒருவர் அகிலோடு மலர் ஊறு புகை காட்ட
ஒருவர் புகழும் தொடை உணர்ந்த இசை பாட
ஒருவர் வியப்போடு உருக வாழுவர் ஒருங்கே

#86
வான் தவழும் மீன்கள் திரள் பூத்தது என மல்கி
கான் தவழும் மாலையொடு கல் மணிகள் கண் பூத்து
ஊன் தவழும் யாக்கை உடை நாயகனை நோக்க
மீன் தவழும் வெண் மதியின் மெய்யன் உரு மிக்கான்

#87
தும்மிய பொறி சுடர் துதைந்து எரியு செம் தீ
விம்மிய இருள் புகை விளைத்த நரகு எய்தா
பம்மிய வினை பகை பரிந்து உயிர்கள் காப்ப
பொம்மிய துயர்க்கு இறைவ பொன்றுவை-கொல் என்பார்

#88
தீய் வினை செய் நாம் மகிழ உம்பர் தொழு செல்வா
நீய் வினை செய் மெய் கொடு நிலத்தில் உலவாயோ
வீய் வினை செய் மெய் உளைய விண்ணில் எமை உய்க்கும்
தாய் வினை செய் உன் தயையை யார் அறிவர் என்பார்

#89
தீய அமை தீயர் எரி சென்று எரிவர் என்றால்
காய அமை ஓர் குறை நின்-கண் அமைவது உண்டோ
தூய அமை வீட்டு உவகை தோய்ந்து மனு வாழ்தல்
ஆய அமைதிக்கு நயன் யாது நினக்கு என்பார்

#90
வெம் வினை அறுத்து உயிர் விளைத்த கனி ஆக
உய் வினை எமக்கு அருள உற்றன பிரானை
எ வினையும் அற்ற முறை ஈன்ற அருள் தாயே
மை வினையை நாம் கழிய வாழி நனி என்பார்

#91
ஆரணம் எழுந்து படர் கொம்பு அனைய மார்ப
காரணன் ஓர் மைந்தனை வளர்த்திடு கை_தாதை
பூரண வரத்து அமரர் நின் புகழ இன்ப
வாரணம் அமிழ்ந்தி நனி வாழி நெடிது என்பார்

#92
ஏமம் சால் இன்பத்து அங்கண் இன்னவை ஆகி மூத்தோன்
சேமம் சால் வரங்கள் மிக்கு தெளிந்த மு பொழுதும் தாவி
வாமம் சால் காட்சி வாய்ந்த வரும் பொருள் உணர்த்தும் தாயும்
சோமம் சால் கொடி வல்லோனும் துயருற சொற்றினானே

#93
திரு கிளர் இன்ன தோன்றல் சிலர்க்கு உயிர் சிலர்க்கு கேடாய்
செரு கிளர் பகைவர் ஏவும் சின கணை குறி என்று ஆவான்
உரு கிளர் நெஞ்சம் போழ்தற்கு உறுகண் வாள் உருவ பாய்ந்து
தரு கிளர் தரும தாயே தளர்ந்து இடர் குளிப்பாய் என்றான்

#94
என்றன கடும் சொல் வாளால் இரு செவி முதல் ஈர்த்து அங்கண்
நின்றன இருவர் நோக நிலத்தில் எம் வினைகள் தீர்ப்ப
சென்றன நாதன் தன் தூய் செம் புனல் சிந்தி மாள்வான்
பின்று என உளத்தில் ஓர்ந்தார் பீடை நீள் புணரி தாழ்ந்தே

#95
நூல் நிலம் காட்சி மூத்தோன் நுதலி ஆங்கு உரைத்த சொல்லை
தேன் நில முகையின் நின்ற திரு நர_தேவன் கேட்டு
கான் நில முகை விண்டு அன்ன கனிந்த புன் முறுவல் கொட்டி
மீன் அம் சென்னி சாய்த்து விழைந்து அதற்கு அமைந்தான்-மன்னோ

#96
இன்னியம் ஒலிக்கும் கோயில் இவை இவர்ந்து அங்கண் வைகும்
கன்னிய மாதர்க்கு எல்லாம் கனிந்த கை தாயாய் மீன் செய்
மின்னிய முடியாள் தன்னை விரும்பி முன் வளர்த்த மாட்சி
துன்னிய அன்னம் என்பாள் துன்னி வந்து இளவல் கண்டாள்

#97
தேன் தும்மு மாலை சேர்த்தி திரு அடி பணிந்து நம்மால்
ஊன் தும்மு வேல் வாய் பின் நாள் உறும் துயர் உணர்ந்து நொந்து
வான் தும்மு மின்னின் மின்னு மகவினை நெடிது வாழ்த்தி
கான் தும்மு முக பூம் தேன் உண் கண் கனிந்து இமைத்தல் செய்தாள்

#98
ஏற்றினாள் இளவல் தாளை இணை_அறும் கன்னி தாயை
போற்றினாள் இருவர் மாட்சி புடையில் வந்து எவரும் கேட்ப
சாற்றினாள் இன்பு உள் பொங்கி தாரை நீர் தாரையாக
தூற்றினாள் பெருக்குற்ற இன்ப தூய் கடல் அமிழ்ந்தினாளே

#99
எடுப்பு_அரும் இன்ன யாவும் இன்பமும் துயரும் ஆக
கெடுப்பு_அரும் மாட்சி பூத்த கேழ் கொடி துணையும் தாயும்
தடுப்பு_அரும் மறையின் வாய்மை தவறு இலாது இரு கபோதம்
கொடுப்ப_அரும் உலகை ஆளும் குழவியை மீட்டிட்டாரே

#100
மண்டு அரும் தவத்து மூத்தோன் வரைவு_இல ஆசி ஓத
பண்டு அருமறையோர் யாரும் பரிவு எழீஇ முகமன் கூற
அண்டரும் புடையில் சூழ அணி முகை மகவை ஏந்தி
கொண்டு அரும் தகவினோர் பொன் கோயில் நின்று ஏகினாரே
மேல்

@13 பைதிரம் நீங்கு படலம்


#1
களி முகத்தின் இவை ஆகி பைம் பூ மேய்ந்த கனல் ஒப்ப
சுளி முகத்தின் உற்ற துயர் உள்ளம் வாட்டி துகைத்து அன்னார்
வளி முகத்தின் விளக்கு அன்ன மயங்கி ஏங்க வந்தவை யான்
கிளி முகத்து இன் கிளவியொடு விரும்பி இங்கண் கிளத்துகிற்பேன்

#2
பூம் தாம கொம்பு அனையாள் பூத்த பைம் பூ முகை முகத்தில்
தேன் தாம திருமகன் நேர்ந்து இன்னும் எண் நாள் செல அன்னார்
தாம் தாம் அ கடி நகர்-கண் தங்கல் உள்ளி நாள்-தொறும் பொன்
காந்து ஆம் அ கோயில் விழா அணியின் வெஃகி கனி சேர்வார்

#3
நெஞ்சு பதி கொண்ட அருள் எஞ்சா நீரார் நிறைந்து ஐம் நாள்
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த பைம் பூ மணி புகை சூழ்
விஞ்சு பதி கொண்ட அமரர் வைகும் கோயில் மேவிய பின்
நஞ்சு பதி கொண்ட உரை தூது வானோன் நவின்று அடைந்தான்

#4
கான் வயிறு ஆர் பூம் கொடியோன் உறங்கும் காலை கதிர் தும்மி
மீன் வயிறு ஆர் உரு காட்டி விண்ணோன் எய்தி விரை கொடியோய்
ஊன் வயிறு ஆர் வேல் வேந்தன் இளவல் கோறல் உள்ளினன் நீ
தேன் வயிறு ஆர் இ பதி நீத்து எசித்து நாட்டை செல்க என்றான்

#5
அழல் குளித்த பைம் தாதோ கண் பாய் வேலோ அகல் வாய் புண்
புழல் குளித்த செம் தீயோ உருமோ கூற்றோ பொருவு இன்றி
நிழல் குளித்த உரு வானோன் கொடும் சொல் கேட்டு நெடும் கடல் நீர்
சுழல் குளித்த மனம் சோர்ந்து வளன் அ பணியை தொழுது உளைந்தான்

#6
மலி நிழல் பட்டு அலர் மலரின் நொய் அம் சேயின் மழ வினையும்
பொலி நிழல் பட்டு அலர் பூம் கொம்பு ஒத்தாள் நொய்வும் புரை வினையால்
அலி நிழல் பட்டு எரி எசித்தார் நாட்டின் சேணும் ஆய்ந்த வளன்
புலி நிழல் பட்டு ஏங்கிய மான் போல ஏங்கி புலம்பினன்-ஆல்

#7
அறிவு இன்மை உறவு இன்மை அறத்தின் இன்மை அங்கண் செல்
நெறி இன்மை நெறி தொலைக்கும் உறுதி இன்மை நெறி தன்னில்
பறி இன்மை சார்பு இன்மை தன்-பால் இன்மை பரிசு அல்லால்
பிறிவு இன்மை ஓர்ந்து உளைந்தான் உளைந்தும் ஈண்டே பிரிவு உற்றான்

#8
வேரி அம் தாரினான் விரைந்து எழுந்தனன்
மாரி அம் தாரையின் வளர் கண் தாரை நீர்
நேரி அம் துணைவியை நேடி நாயகன்
தேரி அங்கு ஏவிய பணியை செப்பினான்

#9
செய் இதழ் தாமரை பழித்த சீறடி
துய் இதழ் துப்பு அவிழ் சுருதி வாயினாள்
ஐ இதழ் தாரினான் அறைய தீ முனர்
நொய் இதழ் தாது என நொந்து வாடினாள்

#10
எதிர் இலான் பகை இலான் இணை எலாம் இலான்
உதிர் இலா மதுகையான் உணர்வின் மேல் நின்றான்
விதிர் இலா விதி இது என்று இறைஞ்சி வேண்டினர்
பிதிர் இலா திரு உளம் பேணி தேரினார்

#11
தேரிய மனத்தவர் தேறி நாயகன்
ஆரிய முகத்து உறை அங்கண் ஏகினார்
நீரிய முகில் என அ படத்தை நீக்கலால்
சூரியன் நவி என தோன்றல் தோன்றினான்

#12
மு பொழுது ஒரு பொழுது ஆக முற்று உணர்ந்து
எ பொழுது அனைத்தும் எ பொருள் யாவிலும்
மெய்ப்பொருள் தெளித்து அவிர் காட்சி மேன்மையான்
அப்பொழுது உறங்கினான் அன்ன பார்ப்பு அனான்

#13
கலை முகந்து அருந்திய புலமை காட்சியோய்
அலை முகந்து அருந்திய அருள் என்று உன் பணி
கொலை முகந்து அரும் துயர் கொண்டும் செய்வல் என்று
உலை முகந்து அரும் தழற்கு உருகி ஏந்தினாள்

#14
ஏர் வளர் அடி பணிந்து இளவல் ஏந்தலின்
நீர் வளர் குவளை தேன் துளித்தல் நேர் அவன்
சீர் வளர் விழி மலர் சிறந்து முத்து உக
சூர் வளர் மனத்து அவர் துகைத்து உள் ஏங்கினார்

#15
கதிர் தரும் காதலன் கன்னி தாய் உரத்து
எதிர் தரும் விழி கலந்து இனிதின் சாய்ந்தனன்
முதிர் தரும் அமிர்து உக முறுவல் கொட்டலால்
பொதிர் தரும் இன்பம் உற்று இருவர் பொங்கினார்

#16
பொங்கிய அருத்தியால் பொலிந்த கன்னியும்
தங்கிய கொடியொடு உள் தளிர்த்த சூசையும்
பங்கய மலர் அடி பணிந்து பாலனை
அங்கு இவர் அகலுதற்கு ஆசி கேட்டனர்

#17
மருந்து அட கனி முகம் மகிழ்ந்து நாயகன்
அரும் தடத்து அவர்க்கு நல் அருளோடு ஆசியை
தரும் தடத்து இவர்ந்து இருள் புதைத்த சாமத்து ஆங்கு
இரும் தடத்து ஏகுதற்கு எழுந்து போயினார்

#18
இரு சுடரோன் பட ஈர்_ஐயாயிரம்
குரு சுடர் மேனியை கொண்ட வானவர்
திரு சுடரோன் என அ சிறுவன் தாள் இணை
பரு சுடர் பாய்ந்து உற பணிந்து தோன்றினார்

#19
எல் இயல் பட சுடர் இரவில் தோற்றினார்
பல்லியம் கடல் ஒலி பட முழக்கினார்
அல்லி அம் குழவியை அளவு_இல் வாழ்த்தினார்
கல்லியம் பா தொடை கனிய பாடினார்

#20
வார் வளர் முரசும் ஆரா வரி வளர் வளையும் ஊதா
தேர் வளர் உருளும் செல்லா தெரு வளர் அரவும் தோன்றா
ஊர் வளர் அசைவும் இல்லா உறங்கிய சாமத்து ஏகி
சீர் வளர் உயிர் போய் அ ஊர் செத்த உடம்பு ஒத்தது அன்றே

#21
நல் வினை உலந்த போழ்தின் நலம் எலாம் அகல்தல் போல
கொல் வினை அறுப்ப வந்த குண தொகை இறைவன் போக
வல் வினை மருளில் பொங்கும் அல்லவை உயிரை வாட்ட
புல் வினை மல்கி சீலம் புரி நலம் போயிற்று அன்றே

#22
இருள் புரி கங்குல் நாப்பண் இரிந்து அற கடலோன் போக
அருள் புரிவு உணர்வு காட்சி அறம் தவம் சுருதி தானம்
தெருள் பொறை நீதி வீரம் சீர் தகை உறுதி ஞானம்
பொருள் புகழ் புலமை மற்ற பொலி நலம் போயிற்று அன்றே

#23
அலை புறம் கொண்ட ஞாலத்து அடர் இருள் நீக்க யாக்கை
நிலை புறம் கொண்ட ஞான நெடும் சுடர் அனையான் போக
கொலை புறம் கொண்ட வேந்தன் குணத்து உரி நகரும் நாடும்
வலை புறம் கொண்ட பாவம் மலிந்து இருள் மொய்த்தது அன்றே

#24
கதி தள்ளி உயர் வான் ஏற்றும் கனிந்த தம் வேந்தனோடும்
பதி தள்ளி அமரர் போக பகையும் நீள் பசியும் நோயும்
நிதி தள்ளி மிடியும் கேடும் நிசிதமும் தீய யாவும்
மதி தள்ளி மருட்டும் பேயும் மறு குடி ஆயிற்று அன்றே

#25
மணி வளர் முகில் தண் ஊர்தி வான் உடு கொடி தண் திங்கள்
அணி வளர் குடை கொண்டு எங்கும் அருள் நிழல் மன்னன் போக
பணி வளர் நகரும் நாடும் பனிப்பு உற பகைத்து வாட்டி
பிணி வளர் வினையின் செம் தீ பிரிவு இலா மேய்ந்தது அன்றே

#26
கண் அகன்ற அகழி கலங்கலின்
தண் அகன்ற தரங்கம் தளம்பலே
எண் அகன்ற குணத்து இவர் நில்-மின் என்று
ஒண் அகன்ற கை நீட்டினது ஒத்தவே

#27
அலை அலைந்து அலர் கூப்பிய தாமரை
இலை அலைந்து அலை மீது எழுந்து ஆடல் அ
நிலை அடைந்தனர் நீங்கலிர் நில்-மின் என்று
உலைவு அடைந்து கை கூப்பியது ஒத்தவே

#28
நாக நெற்றியின் நன் மணி ஓடை போல்
நாக நெற்றியின் நன் மணி ஆறு பாய்
நாக நெற்றியின் நன் மலர் கா அப்பால்
நாக நெற்றியின் நன் மதி தோன்றிற்றே

#29
உறை கிடந்த விண் வேந்து உயிர் உண்பல் என்று
உறை கிடந்த அயில் ஓங்கு அரசை பகைத்து
உறை கிடந்த கடல் பறைக்கு ஓர் குணில்
உறை கிடந்து அன ஒண் பிறை தோற்றமே

#30
சிதம் மிடைந்த அலர் சேடு அனையாள் கையில்
சிதம் மிடைந்து அலர் சேடனை நோக்குப
சிதம் மிடைந்து அலர் சேடு என தாங்கு பல்
சிதம் மிடைந்து அலர் சேடு கண் ஒத்தவே

#31
மனவு அணங்கு வணங்கு அடி நாயகன்
மன அணங்கு வணங்கு இல் வருந்தினார்
மன அணங்கு வணங்கல் இல் ஆளனும்
மனவு அணங்கு வணங்கும் அணங்குமே

#32
ஆரணம் தரும் ஆண்டகை ஆகுலம்
காரணம் தரும் கண் புனல் கண்டு இடர்
பூரணம் தரும் மார்பு புடைத்து எலா
வாரணம் தரும் வான் உற கூக்குரல்

#33
பேர்ந்த தன் பெருமான் அடை பிழை வான்
ஓர்ந்த தன்மை உழைந்து அழுதால் என
வார்ந்த தண் பனி தாரையின் மல்கி அன்று
ஆர்ந்த பைம் தழை கா அழுது ஆயதே

#34
கறாகறா என காடை கலுழ்ந்தன
ஞறாஞறா என தோகைகள் நைந்து அழும்
புறா குறாவுதலோடு இவர் போதலால்
அறா நறா பொழில் ஆர் அழும் ஓதையே

#35
கிளி அழ குயில் கேட்டு அழ தேன் உணாது
அளி அழ சிறை நைந்து அழ ஆ என
வளி அழ துயர் மல்கி வனத்து எலா
உளி அழ தகவோர் அழ ஏகினார்

#36
கான் மறந்தன கா மலர் அன்னதே
தேன் மறந்தன தேன் இனம் அன்னதே
பால் மறந்தன மான் பறழ் அன்னதே
ஆன் மறந்தன தம் பிள்ளை அன்னதே

#37
சுருதி ஏந்து சுதன் துமிப்பேன் என
கருதி ஏந்து குரோதம் கதித்து என
பருதி ஏந்து படம் படரா முனர்
குருதி ஏந்து குணக்கு சிவந்ததே

#38
முழவு எழும் தொனி ஒப்ப முந்நீர் ஒலி
எழ எழுந்து பொர கதிர் எய் சரம்
விழ எழுந்த வெய்யோன் சிவந்து எய்தி வான்
அழ எழும் துயர் ஆற்று இல தோன்றிற்றே

#39
பானும் பானொடு பாசறை பட்டு அழும்
வானும் வானொடு மண்ணும் இரங்கின
ஏனும் ஏதும் உணர்கில மாக்களும்
கோனும் கோடனை கொண்டு இரங்காயினார்
மேல்

@14 இளவன் மீட்சிப் படலம்


#1
இரங்கு படர் கான் எவையும் நைந்து அழுது இரைக்கும்
தரங்கு படர் வேலையில் தளம்பி அலை நெஞ்சார்
அரங்கு படர் வான் தொழும் அருள் குழவி ஏந்தி
குரங்கு படர் காட்டு நெறி கொள்ள வலம் உற்றார்

#2
பிழை குலம் அளிப்பவர் பிழைப்பு இடம் இலார் போல்
உழை குல நடுக்கம் என உள் குலைய நைந்து
மழை குலமிடத்து நுழை மின் மருள மல்கும்
தழை குலமிடத்து நுழைய சடுதி போனார்

#3
இருத்தி எழு வான் அரசன் ஈர் அடி நனைப்ப
அருத்தி எழு துன்ப முகில் ஆர்த்து உமிழ் கண் மாரி
திருத்தி எழு மா தவன் உளைந்து உளை உள் தேற்றா
கருத்தில் எழும் ஆர்ந்த துயர் கான்று இனைய சொன்னான்

#4
விண் முழுதும் ஏற்று தனி வீர முதலோனே
புண் முழுதும் ஏந்திய புலால் அயிலனோடு
மண் முழுதும் ஒன்றுபட மல்கி அமர் செய்தால்
எண் முழுதும் நீத்த நினது ஆண்மை எதிர் உண்டோ

#5
புல் வினை உளைந்து அழ உதித்து அருள் புரிந்து
நல் வினை தளிர்ப்ப நலம் யார்க்கும் இடும் நல்லோய்
கொல் வினை உணர்ந்து உன் உயிர் கோறல் தனது ஆண்மைக்கு
ஒல் வினை என கருதும் இ உலகில் உண்டோ

#6
தொல்லை உள நம் வினை துடைத்து நமை வீட்டில்
வல்லை உள அன்பொடு புகுப்ப மனு வந்தோய்
ஒல்லை உள நம் துயர் ஒழித்திட நினக்கே
எல்லை உளது ஒன்றும் இல வேண்டும் இடர்-கொல்லோ

#7
முற்று முதல் ஆய் உலகம் மூன்று தொழ வான் மேல்
பெற்று முதல் ஈறு இல பெரும் தகையை மண் மேல்
உற்று முதல் வீடு இல விலங்கு உறையுள் வந்தாய்
இற்று முதல் நாடு அகலல் வேண்டும் இனி-கொல்லோ

#8
ஞானம் உறு சீலம் இல நட்பு உறவும் இல்லா
வானம் உறு வேதம் இல மாண்பு அருளும் இல்லா
கானம் உறு காய்ந்த சுரம் அ கடை கிடந்தார்
ஈனம் உறு நாடு அடைதல் வேண்டும் இனி-கொல்லோ

#9
வெவ் வினை விளைத்து அடும் இ வாழ்வு விடம் என்னா
மை வினை மறுப்ப இவண் வந்து துயர் வேண்டின்
மொய் வினை முதிர்ந்த முழுது என் மிடிமை அல்லால்
எ வினை தொலைக்கு அடைதல் வேண்டும் இனி ஐயா

#10
விஞ்சிய திறம் செறியும் விஞ்சை மலி வல்லோய்
துஞ்சிய நிலத்தில் உயிர் தோன்றி வினை நீக்கி
எஞ்சிய நலம் தருவை என்று அறிவர் யாரே
அஞ்சியது ஓர் தன்மை இது என்று அறைவர் என்றான்

#11
இற்று உறும் அருத்தியில் இயம்பின இயம்ப
பற்று உறும் உணர்ந்த பலவும் பகர்தல் தேற்றா
முற்று உறும் அரந்தை எனும் நீத்தம் முழுகி சொல்
அற்று உறும் அழும் தொழில் அலால் எதுவும் ஆற்றான்

#12
ஆசை வெற்பு வீழ் அரந்தை வாரியுள்
சூசை பட்டு அய்ய சுழியின் மூழ்கலின்
பூசை வாயினாள் புகல் கை தந்து உரம்
மாசை அம் கரை மருவ சொல்லினாள்

#13
உருக்கும்-கால் உலகு உயிர் எலாம் கெட
முருக்கும் காலமே முடிந்து போய் அருள்
பருக்கும் காலம் ஆய் புரந்து பாதுகாத்து
இருக்கும் காலம் என்று இளவல் ஆயினான்

#14
மண்ணை வேண்டினும் வகுத்து வாழ்வு அறா
விண்ணை வேண்டினும் விரும்பி ஈகுவான்
கண்ணை வேண்டினும் அளிக்கும் கால்-தனை
எண்ணி வேண்டினும் இகல் செய்வான்-கொலோ

#15
மணி உயிர்க்கு நாண் வடிவில் தோன்றினன்
பிணி உயிர்க்கும் மால் அவா செய் பீழையால்
தணி உயிர்க்கு எலாம் உறுதி தந்து தன்
அணி உயிர்க்கு இடர் ஆக மாள்குவான்

#16
இறந்து நம் உயிர் இரங்கி காக்க வந்து
அறம் துதைந்தவன் இறத்தற்கு அஞ்சவோ
திறம் துதைந்து மு_செகத்தை ஆள்பவன்
மறம் துதைந்த புன் மதுகைக்கு அஞ்சவோ

#17
நஞ்சினால் உயிர் அருந்தும் நால் படைக்கு
அஞ்சு இலான் அறிவு அருள் வல் ஆண்மை ஈடு
எஞ்சு இலான் என இறைஞ்சி கூறினாள்
நெஞ்சினால் அமுது ஆர்ந்த நேமியாள்

#18
புடை வரும் புகழ் பொலிந்த மிக்கயேல்
அடைவு_அரும் தயை அணிந்த தாள் தொழுது
உடைவு_அரும் கருத்து உணர்ந்த ஆண்மையை
தொடை வரும் கனி பாவின் சொற்றினான்

#19
அஞ்சுவான்-கொல்லோ நீதி அணி கலத்து இலங்கு வீரத்து
எஞ்சுவான்-கொல்லோ ஞாலத்து யாவரும் பனிப்ப ஆண்மை
விஞ்சுவான்-கொல்லோ என்ன மேவிய எசித்து நாடர்
துஞ்சுவான் உணர்ந்தார் முன் நாள் சுருதி சேர் கொழுகொம்பு அன்னோய்

#20
நினைந்த யாவையும் நினைந்த நிலைக்கு அவை நிகழ்த்தும் தன்மை
புனைந்த மா மதுகை காட்ட புணர்ந்த புன் சூரல் கொண்டு
முனைந்த கால் இவன் முன் நாளில் முரிந்து எசித்து அஞ்சி வாட
வனைந்த யாவையும் நினக்கு ஏன் வகுத்து யான் உரைப்பல் என்றான்

#21
வீங்கு எழும் துயருள் ஆற்றா வெதிர்ப்பு எழும் புணரி நெஞ்சில்
பூம் கெழும் கொடியோன் சொல்லி புரை அற உணர்ந்ததேனும்
ஈங்கு எழுந்து எளியன் என்ன இரிந்த நாயகனை வாழ்த்த
ஆங்கு எழும் திறலின் ஆண்மை அறைதி என்று அறைந்தான் வானோன்

#22
பேர ஓங்கிய வெற்பு உச்சி பிளந்த விண் அசனி ஏறு
நேர ஓங்கு அடலில் சீற்றம் நெறித்து அருள் வணங்கா சென்னி
பாரயோன் என்பான் நாதன் பணித்த நல் பூசை செய்யா
வீர யோகத்து யூதர் விலக்கி மிக்கு அல்லல் செய்தான்

#23
உடை கலத்து இலங்கி செற்றத்து உடன்று இருள் பருகும் நெஞ்சான்
அடைக்கலத்து அடைந்த யூதர்க்கு அடிமை என்று இயற்றும் பீழை
துடைக்கல் அற்று எவரும் எஞ்சி தொறும்தொறும் அழுத கண்ணீர்
படைக்கல தகுதி போல பைதிரம் சிதைத்தது அன்றே

#24
நொந்து நொந்து அழுத ஓதை நுழைந்து உயர் வானத்து உச்சி
வந்து வந்து அருளில் மிக்கான் வருந்தினர்க்கு இரங்கி குன்றின்
முந்து நின்று அருணம் மேய்த்த மோயிசன் விளித்து ஓர் சூரல்
தந்து நின் குலம் கொல் கோன் கண் சடுதி தூது ஏகுக என்றான்

#25
கொடிய கோன் வெருவா அன்னான் குலைவு உறீஇ வெருவ பேசி
விடிய மா பூசை ஆக விடுதி என்று அவன் விடாதேல்
நெடிய சூரலை சூழ் ஓங்கி நிருபனோடு எவரும் அஞ்ச
கடியது ஓர் துயர் ஆங்கு உய்த்து என் கத திறல் காட்டுக என்றான்

#26
ஓளியில் சொன்ன யாவும் உணர்ந்த மோயிசன் போய் கூற
ஆளியில் கொடுங்கோன் கேளாது ஆங்கு அவன் எறிந்த சூரல்
வாள் எயிற்று அடும் செம் பாந்தள் வடிவு எடுத்து எழுந்து அங்கு ஆடி
நீள் எயிற்று அழலும் கண் தீ நிறைய விட்டு உடற்றிற்று அன்றோ

#27
சாத்திர மாய விஞ்சை தன்மையில் அவரும் பல்பல்
காத்திரம் காட்ட அன்னார் காட்டிய அரவை தேவ
சூத்திர அரவு நுங்க தொடர்ந்து மோயிசன் வால் வவ்வி
வேத்திரம் ஆய தன்மை வேந்து கண்டு அஞ்சினானே

#28
அஞ்சினான் எனினும் தேவ அருச்சனைக்கு இடம் செய்யாத
நெஞ்சினான் கொடுமை ஆற்ற நீர் எரி கமலத்து அன்னம்
துஞ்சி வாழ் பொய்கை போகில் சொன்னவை மறுப்பாய் ஆயின்
எஞ்சு இலா துயரத்து ஆழ்வாய் என்று மோயிசன் சொல்கின்றான்

#29
சொல்லிய விசையில் ஏந்தும் சூரலை சுழற்றி நிற்ப
கல்லிய மலர்கள் வாட கயல் இனம் தளர்ந்து மாள
உல்லியர் மயங்க யாரும் உண்ணும் நீர் இன்றி சோர
புல்லிய புனல்கள் யாவும் புண்ணின் நீர் ஆயிற்று அன்றே

#30
மீட்டு அரும் சூரல் வீச வீழ்ந்தன நுணலை மாரி
தீட்டு அரும் சயன மாடம் சித்திரக்கூடம் யாவும்
ஈட்டு அரும் கனக சாலை இவை முதல் இடங்கள்-தோறும்
வாட்டு அரும் துயர் கொள் நாட்டில் மல்கிய நுணலை ஈட்டம்

#31
பண் இகல் இசையால் கோகு பயன் படாது என்ன அன்னான்
எண் இகல் விடாமை நாதன் ஏவலில் சூரல் ஓங்கி
உண்ணிகள் எண்_இல் மொய்ப்ப உழி-தொறும் வெருவும் மொய்த்து
புண் நிகழ் கிடந்த நாடு பொருவு_இலா வருந்திற்று அன்றே

#32
தீ இனம் குளித்த நெஞ்சான் செருக்கு உளத்து அறாது சீற
தூய் இனம் வெருவ மீண்டு சூரலை ஆட்டும் தன்மைத்து
ஈ இனம் எண்ணும் ஈறும் இன்றியே எவணும் மொய்த்து
வீ இனம் மலர்ந்த நாடு வீந்தது ஓர் பிணத்திற்று ஆமே

#33
வெரு உற அரசன் போக விடை செய இடரும் நீங்கும்
உரு அற இடர்கள் நீங்க உரைத்தவை மறுத்து சீற
செரு உற சாதி ஓங்க சிந்துரம் முதல் மா எல்லாம்
தரு அறா உணரா நோயால் தளர்ந்து நொந்து இறக்கும் மாதோ

#34
சுட்ட நோய் ஆறின் ஆறா துகள் தரும் தருக்கு நீக்க
விட்ட நோய் போதா வேகத்து இவன் சுழல் சூரல் தன்னால்
குட்ட நோய் அரசன் ஆதி கொண்டு உளம் குலைந்தார் யாரும்
பட்ட நோய் ஒன்றும் இன்றி பரிவு அற யூதர் வாழ்ந்தே

#35
உலை முகந்து அருந்தும் தீய் நெஞ்சு உரு உற சூரல் ஓங்கி
அலை முகந்து அருந்தி ஐ என்று அழல் முகில் ஆர்த்து மின்னி
சிலை முகந்து அருந்தி கான்ற சீர் என பெய்த ஆலி
கொலை முகந்து அருந்தி எங்கும் கொல் உயிர் அளவு ஒன்று உண்டோ

#36
மதம் கலந்து அரசன் கொண்ட மறம் கழிந்திலன் ஆம் தன்மை
கதம் கலந்து அசைத்த சாதி கடுகிய பதங்கம் எங்கும்
சிதம் கலந்து அலர்ந்த நாட்டில் சிறு புல் ஒன்று இன்றி யாவும்
இதம் கலந்து இமைக்கும் முன்னர் இற்று அழித்து ஆயிற்று அன்றே

#37
துச்சு இறை உளம் போன்று அள்ளும் தொகுதியால் இருள் மொய்த்து ஆடா
கை சிறை கடக்கல் தேற்றா கால் சிறை ஆகி எங்கும்
மெய் சிறைப்பட்ட யாரும் வெருவி ஆர்த்து அலறி நோக
மை சிறைப்பட்ட நாடு மற சிறை நகு ஒத்து ஆம்-ஆல்

#38
அங்கு அடைக்கலமாய் அடைந்தவர் ஆள் என்று ஆக்கிய கொடு வினை மாறா
பங்கு அடை கொடிய வேந்தனை தணிப்ப படி உள வேந்தர் ஆள் பரமன்
வெம் கறை நீகம் உண்ணிகள் ஈக்கள் விலங்கின் நோய் குட்ட நோய் ஆலி
சங்கு அடை பதங்கம் மல்கு இருள் என்னும் சபித்தது ஓர் சாபம் ஒன்பதுவே

#39
கான் முகம் புதைத்த கள் மலர் நாட்டில் கலக்கம் உற்று இடம்-தொறும் யாரும்
வான் முகம் புதைத்த முகில் முழக்கு எஞ்ச மயங்கி ஆர்த்து அலற மற்று யூதர்
தேன் முகம் புதைத்த மலர் என அங்கு ஓர் சிதைவு இல வாழ்தலை கண்டே
ஊன் முகம் புதைத்த வேல் அரசு அஞ்சி ஒருங்கு அகன்று ஏகு-மின் என்பான்

#40
என்பதும் வீர மோயீசன் தன் கை எடுத்து இடர் தீர்ப்பதும் ஒன்றாய்
துன்பு அது நீங்க அரசு உளத்து இகன்று தொழும்பராய் நில்-மின் என்றமையால்
ஒன்பது சாபம் நிறை நிறை தொடர உவமியா மதுகையோன் இட்ட
பின்பு அது கணியானோ என சினந்து பெயர்ப்பு அரும் இடுக்கண் உய்த்திட்டான்

#41
கண் முழுது அட்ட இருள் இரா நடுவில் கதத்து அளவு அரும் திறல் மிக்க
விண் முழுது அன்றி மண் முழுது இறைஞ்சும் வேந்தர் வேந்து அரை நொடி பொழுதில்
மண் முழுது ஆண்ட கோன் தலை மகனும் மற்றவர் தலை மகர் யாரும்
எண் முழுது இன்றி இறந்து உயிர் செகுப்ப எசித்து நாடு எங்கணும் கொன்றான்

#42
ஒல்லென உளைந்து கண் புதைத்து அலறி உடன்ற இ கடவுளோடு எதிர்ப்ப
வல் என எவரோ மற்று எமை ஒருங்கு மடிப்பனோ என உளத்து அஞ்சி
அல் என எண்ணாது அரசன் மோயிசனை அழைத்து உமர் இ கணத்து எழுக
சொல் என இரைப்ப அனைவரும் உவந்து துணுக்கென எழுந்து ஒருங்கு அகன்றார்

#43
இற்று யாவையும் இ இளவல் தான் காட்டி எசித்து-இடை சிதறிய வெருவின்
வெற்றியால் யூதர் தம் சிறை தீர்த்து மிடைந்தன தெரிவையர் இளைஞர்
முற்றி ஆம் கிழவர் இவர் அலது அரும் போர் முரண்பட மலை புய வீர
பெற்றியார் அறு_நூறாயிரர் கடல் சேர் பெரும் சுரத்து ஏகினர் அன்றே

#44
விண் உக ஆர்த்து வீழ் உரும் அன்ன வேந்து மீண்டு உலம்பி ஐ என்ன
பண்ணுக பசும்பொன் கொடிஞ்சி அம் தேரும் பண்ணுக புரவியும் செம் தீ
கண்ணுக படு மா மத கரி மாவும் கடிந்தனர் தகைப்பன் என்று அயில் கொண்டு
எண் உக இடம் அற்று அபயர் மா கடல் சூழ்ந்து எய்த கோல் பின்னுற தொடர்ந்தான்

#45
நோக்கிய நோக்கம் திசை-தொறும் தீக்க நூக்க_அரும் செருக்கொடு நோக்கி
தாக்கிய தாக்கின் உடன்று உளம் தாக்க சலத்து அடும் மடங்கல் ஏறு அன்னான்
நீக்கிய பாக்கத்து அகல்வரை தாக்க நெருங்கிய கால் நெடு மறைவை
ஆக்கிய படத்தில் ஆர்த்த கார் முகில் விட்டு அடைத்தனன் மதுகையின் வல்லோன்

#46
இ படை தொடர புணரி முன் நெருங்க இடை வரும் யூதர் உள் வெருவ
அப்பு அடை கடலை மோயிசன் பிரம்பால் அடித்தலின் பளிங்கு ஒளி சுவர்கள்
ஒப்பு அடை அலைகள் பிரிந்து அகன்று இரு-பால் உயர்ந்து நின்று இடத்து இவர் புக்கு
வெப்பு அடை அரசன் உளத்து உடன்று உலம்ப விருப்புடன் யூதர்கள் போனார்

#47
மறம் கொடு கதம் சால் மருட்டிய மனத்தில் வரும் சிதைவு உணர்கிலா கொடியோன்
அறம் கொடு புக்க யூதரை தடுப்ப ஐ என தானையும் தானும்
புறம் கொடு பிரிந்த புணரி செய் வழியே புக்கு உறீஇ கடல் நடு அடைந்தான்
திறம் கொடு சினமும் ஆசையும் பெருக சேர் இழிவு அறிகுவர் எவரோ

#48
நெடு மா கடல் நிகர் மா படை உறி மா கடல் நெறியே
நடு மா கடல் அடை காலையில் நமை ஆள்பவன் நவில் சொல்லொடு
மா கடல் மிசை வானவன் அரு ஆயின ஒருவன்
வடு மா கடல் எனும் தானையை மதியா வதை வகுத்தான்

#49
உரம் அற்றனர் கவசத்தொடும் உறழ் அற்றன உழவர்
சரம் அற்றனர் சாபத்தொடு சமம் அற்றன சமித
கரம் அற்றனர் கருவி கொடு கழல் அற்றனர் கவிழ
சிரம் அற்றனர் படை விட்டு எதிர் செரு உற்றனர் தெரியார்

#50
கோல் இல்லன புதையோடு உள குதை இல்லன கொடிய
வேல் இல்லன வளையோடு இரு மழு இல்லன விரி நீள்
தோல் இல்லன வசியோடு உயர் கதை இல்லன சுளி வில்
கால் இல்லன வடமோடு ஒரு கடை இல் என மடிவார்

#51
உருள் பூட்டிய நெடும் அச்சு இல உருள் கால் இல உகளி
மருள் பூட்டிய பரிமா இல வரு பாகரும் இல மேல்
பொருள் பூட்டிய உயர் கூம்பு இல பொலி நீள் கொடி இல பொன்
தெருள் பூட்டிய விரி பார் இல சிதை தேர் பல பலவே

#52
பிரிவார் தமில் நெரிவார் கறை பிளிர்வார் வதை பெறுவார்
முரிவார் அலை புகுவார் உளம் முனிவார் துயர் முதிர்வார்
எரிவார் உடல் கரிவார் இறந்து இழிவார் இடையிடையே
ஒரு வாளி எய் அரு ஆயின ஒரு வானவன் உரனால்

#53
வலம் ஆயினும் இடம் ஆயினும் வரு வாளிகள் அளவு உண்டு
இலது ஆயினும் வரு வாளிகள் படும் அல்லதும் இலை-ஆல்
பல வாளியில் ஒரு வாளியும் பறிப்பார் இலர் உயிர் உண்டு
அலது ஆறு உயிர் உணும் ஓர் சரம் அலது எல்லையும் இலையே

#54
அழல குயவு அழல கரி அழல பரி அயிலோடு
அழல கதை அழல தனு அழல சரம் அசியோடு
அழல கிடுகு அழல புதை அழல படை எவையும்
அழல குடை அழல கொடி அழல் அத்திரம் விடவே

#55
அழி தாரொடு கடல் ஆழியின் அடி வீழ்வன உயர் தேர்
ஒழி பாயொடு கவிழ்கின்றன உரு ஒத்தன மதமே
கழி மால் கரி கழறி குளிர் கடலுள் புகல் கதிரோன்
எழில் வான் உற அலை புக்கன இருள் ஒத்தன எனவே

#56
முடி வான் உறும் இரதத்து உளர் சிரம் அற்று உகும் முடிகள்
வடி வாளியொடு உரம் அற்று உகும் வடிவு உற்ற அணி மணிகள்
அடியோடு இரு கரம் அற்று உகும் அழகு உற்ற அவிர் அணிகள்
கடிதாய் உலகு ஒழி நாள் உகும் கணம் ஒத்தன எனவே

#57
கார் ஆர் ஒலி கடல் ஆர் ஒலி கறை பாய் ஒலி கடிது ஊர்
தேர் ஆர் ஒலி கரி ஆர் ஒலி பரி ஆர் ஒலி சிதறும்
போரார் ஒலி முரசு ஆர் ஒலி புகைவார் ஒலி புரை செய்
நேரார் ஒலி மடிவார் ஒலி நிறை பார் ஒலி நிகரா

#58
மாறா மத கரி பட்டன வதை பட்டன வயமா
வேறாய் உருள் அழிபட்டன அழிபட்டன மிளிர் தேர்
கூறாய் உடல் குறைபட்டன குறைபட்டன குருதி
ஆறாய் அலை கிழிபட்டு என அதிர்பட்டு உறும் அகடே

#59
செப்பு ஆறு இலது அடல் தானைகள் திரள் மாள்தலில் திரளும்
துப்பு ஆறு என உதிர திரை தொடர் ஆழியின் விரவ
அப்பால் திகழ் அலை சேப்பலின் அது செங்கடல் எனவே
ஒப்பு ஆறு இல கதை யாவரும் உணர பினர் உரைத்தார்

#60
நால் நேர் உள திசை எங்கணும் நானா படை நணுக
மேல் நேர் உள முகிலின் துளி மேல் நேர் கணை விழவே
கால் நேர் உள படை கண்டிலர் காணார் விடு கரமும்
மான் நேர் உளம் அழி வஞ்சகர் மானாது உளம் மருள்வார்

#61
முன் நேரினர் பின் நேரினர் புடை நேரினர் முகிலின்
அ நேரினர் இன்ன நேரினர் அன்ன நேரினர் அலை மேல்
என் நேரினர் என் நேரினர் என்றே அவர் எனினும்
கொன்னே படை கொண்டு ஆருயிர் கொன்றான் கரம் குறிப்பார்

#62
கண் துற்று எழு கனல் துற்றிய கதம் முற்றிய கயவர்
உள் துற்று எழு பகை ஒத்தன உற விண் திசை உயர் நேர்
பட்டு உற்று எழு முகில் ஒத்து எழு பகழி திரள் விடுவார்
விட்டு உற்று எழு சரம் விட்டனர் மிசை பட்டு உருவிடும்-ஆல்

#63
அண்டத்து உயர் உலகு ஆள் இறையவனோடு எவர் பொருவார்
மண்ட துயர் வலி அற்றனம் என மற்று அவர் மத மா
கண்டத்து உயர் பொலி வேந்தொடு கடிது ஓடிய கடையில்
சண்டத்து உயர் கரை யூதர்கள் தனி உற்றனர் ஒருங்கே

#64
கரை மேல் இவர் சென்றனர் என்று கதத்து இறையோன் கடல் தெண்
திரை மேல் அடல் சூரலை நீட்டு என நீட்டிய சீர் திரண்ட
வரை மேல் வரை வீழ்ந்து என ஆங்கு அலை வீழ்ந்து அவர் மேல் கவிழ்ந்து
குரை மேல் எழ உள் குளித்து ஆழ்ந்து கொடும் பகைவர் மடிந்தார்

#65
கடை நாள் கடல் நீர் குடைந்து கழறி பொங்கும் கதம் போல்
உடை மால் கரிகள் பரிகள் உருள் தேர் உழவர் உள மன்
படை நால் வகையும் குடைய பட மேல் பட கீழ் படவே
புடை வாங்கு அலையோடு அலைய பொலி ஆர்ப்பு உலகில் பொருவா

#66
ஓர் ஆயிர மால் கரிமா ஓர் ஆயிர_நூறு அயமா
ஈர்_ஆயிரம் ஓர் எழு_நூறு உருள் தேர் எரி தும்மிய வேலார்
ஆயின பல் கோடி அமிழ்ந்தி இமைப்பில் அனைத்தும்
பேர் ஆயின நீர் வலை இட்ட பிரான் நிறை வாரினன்-ஆல்

#67
போர் மீது ஏந்தும் புரவி கரி தேர் பொருநர் பொருவா
சீர் மீது ஏந்தும் செருக்கு உற்று எவையும் தெளியா நெஞ்சில்
நேர் மீது ஏந்தும் திறன் கொள் நிமலற்கு அஞ்சா கொடுங்கோன்
ஏர் மீது ஏந்தும் படையோடு இமைப்பில் சிதைந்தான் அழிந்தான்

#68
கரை மேல் நின்றார் கொடிஞ்சி கழி தேர் திரள் பல் தீவின்
புரை மேல் மிதக்க ஆமை புரையில் கிடுகு மிதக்க
நுரை மேல் எழும் போல் குடை வெண் கொடி வெண் கவரி மிதக்க
திரை மேல் மகர திரள் போல் செரு மா மிதக்க காண்பார்

#69
அல்லின் வண்ணத்து உடலோர் அணியா திரண்டு பிரியாது
எல்லின் வண்ணத்து எரி வாள் தணவாது இணைந்து திரிய
வில்லின் வண்ணத்து ஒளிர் தெண் திரை மேல் மிளிர் மின்னொடு மேய்
செல்லின் வண்ணத்து எவணும் திரண்டு மிதக்க காண்பார்

#70
மிக பட்டு உயர் வல் இறையோன் விறலால் கரை சேர்ந்தவரே
நக பட்டு ஒருங்கே நவைப்பட்டு உடன்ற நண்ணர் கடலுள்
அகப்பட்டு அமிழ்ந்தி அலை மேல் மிதக்க அனைத்தும் கண்டே
புக பட்டு அழிக்கும் வினையின் பொலிசை காண்-மின் என்பார்

#71
பரியே காவா உயிரை பருகி ஊன் பெய் மருப்பின்
கரியே காவா வளி முன் கடிது ஊர் இரதம் காவா
எரி வேல் காவா எவையும் காவா இறையோன் அருளில்
புரிவே காவாதன கால் புரையின் விளைவு இது என்பார்

#72
நல்லது இலதேல் அமுதே நஞ்சு ஆம் நஞ்சே அமுது ஆம்
அல்லது இலதேல் வினையே அமர் செய்து உதைப்ப நிற்பார்
இல்லது இலதேல் வினையே இகல் செய்து அவரை கெடுக்க
வல்லது இலதே என்பார் வரையா தொழுது மகிழ்வார்

#73
சொல் வாய் தவிர் சிறை தீர் சூதர் உவந்து அப்புறம் போய்
எல் வாய் முகிலும் அல் வாய் எரி தூண் உருவும் இவர் முன்
செல் ஆய் இவர் சென்று எரி வாய் திளைத்த பாலை திணை வாய்
ஒல் வாய் அழலும் ஆற்றாது உணும் நீர் இன்றி உளைந்தார்

#74
தொடையே நின்ற தயையும் நீதி தொகையும் பிரியா
மிடையே நின்ற இறையோன் பணிப்ப வேத்திரத்தால்
புடையே நின்ற கல்லை புடைப்ப புனல் பாய்ந்து அ கல்
இடையே நின்று தொடர இனிது எண்_இலர் சால்பு உண்டார்

#75
அவ்வாறு ஒரு சூரலை கொண்டு அவை யாவையும் செய்தவனோ
இவ்வாறு இளவல் என்ன ஒளித்து அ நாடு ஏகுகின்றான்
செ ஆறு உளத்தோன் பயந்து அ திசை தேடுவனோ என்னா
ஒவ்வா எசித்தார் உணர்வார் என மீட்டு உரைத்தான் வானோன்

#76
கடல் உடை உலகு எலாம் கலங்க இன்னவை
மிடல் உடை வலியொடு விளங்க செய்தவன்
உடல் உடை இளவலாய் ஒளித்த பான்மையால்
அடல் உடை அருள் உணர்வு அமைந்து உளான் அரோ

#77
தீய் வினை செய்த போது எசித்து சீர் கெட
நோய் வினை செய்தனன் நுனித்து அ நாடர் தாம்
தாய் வினை செய்து முன் சகோபு காத்தலால்
போய் வினை அறுத்து அருள் பொழிய உள்ளினான்

#78
விண் துளி இலாமையால் வியன்ற பார் மிசை
பண்டுளி அனைத்திலும் பசி பரந்து உயிர்
உண்டுளி சகோபு தன் உயர் குலத்தொடும்
அண்டுளி எசித்தனர் அருள் செய்தார் அரோ

#79
வேதம் ஒன்று அறிந்திலார் வேதம் கொள் குலம்
கேதம் ஒன்றியது என கிளர்ந்த அன்பொடும்
ஏதம் ஒன்று இல வளர் அகலுள் இட்டனர்
பேதம் ஒன்று இல நயன் பெருக ஈட்டினார்

#80
தோல் முதல் உடைமை சால் தொகுத்து அங்கு ஓச்சு செங்கோல்
முதல் அளித்த கோன் பேணும் கொள்கையால்
வான் முதலவன் தொழும் வளர் சகோபு அவன்
கால் முதல் இனம் எலாம் கரை_இல் வாழ்ந்ததே

#81
இ குலத்து இவன் பிறந்து எய்துவான் எனா
அ குலத்தினர் உவந்து அருள் கைம்மாறு உற
மை குலத்து ஒளி நலம் வகுப்ப போய் அவண்
மெய் குலத்து அறிவு இட அன்று மேவினான்

#82
மேவிய கருத்து அறிந்து அரிய வேத நூல்
ஏவிய விதியினோர் இவன் அங்கு ஏகிய
தூவிய முகில் என தோன்றுவான் என்றார்
பாவிய முறைக்கு இது பயணம் உள்ளினான்

#83
உள்ளிய அருள் நலம் ஒளித்து செய்குவான்
தெள்ளிய அமைதி ஈது என்று தீ உளத்து
எள்ளிய அரசு செய் இகல் பெயர் பட
விள்ளிய உளத்து உணர் வினை முடிக்குவான்

#84
மெல்லிய உரு கொடு மிடலினோன் உணர்
கல்லிய கருணையின் கருத்து இது ஆம் என
சொல்லிய மிக்கயேல் தோன்றல் தூய் அடி
புல்லிய வணக்கொடு பொலிய போற்றினான்

#85
பெய்த கான் மது மழை பெருக்குற்று ஓடிய
மொய் தகா வெள்ளம் உள் மூழ்கி இன்பு எழ
பொய் தகா சுருதி நூல் பூத்த வாகையான்
கொய்த காய் இடர் கெட குளித்து உள் ஆடினான்

#86
தன் உயிர் காத்தன தன்மை தன்னிலும்
மன் உயிர் காத்து அருள் மலி பிரான் தனது
இன் உயிர் காத்து என ஒளித்து எசித்து போய்
அன்ன உயிர் காக்கவோ அயர்வுற்றான் என்றான்

#87
தெவ் உலகு அருள் பட தெரிந்த சூழ்ச்சி வான்
அ உலகினர் உணர்ந்து அறிகுவார் அலால்
இ உலகு உணர்குவார் எவர்-கொல் என்று அருள்
துவ்வு உலகு இறைஞ்சு அடி தொழுது பாடினான்

#88
தனை வேண்டி போய் ஒளித்த தன்மை பிறர் கொள்
வினை வேண்டி தான் உள் மெலிந்து அழுவான் யாரே
வினை வேண்டி தான் உள் மெலிந்து அழுதே இங்கண்
எனை வேண்டி மைந்தன் என எய்திய நீ அன்றே

#89
புள் வழியே நீர் மேல் புணை வழியே ஆய்ந்து அடைந்தால்
உள் வழியே நீத்து அடையா ஓங்கு இயல்பான் தான் யாரே
உள் வழியே நீத்து அடையா ஓங்கு இயல்பான் வான் அரசு ஆய்
முள் வழியே ஈங்கு இடருள் மூழ்கி அழும் நீ அன்றே

#90
காய்ந்தால் உலகு எரிக்கும் கண்ணால் கருணை முகந்து
ஈய்ந்தால் அவா அவிக்கும் ஏந்து அருளான் தான் யாரோ
ஈய்ந்தால் அவா அவிக்கும் ஏந்து அருளான் நீ அன்றோ
ஆய்ந்தால் உனது இயல்பு ஈங்கு ஆர் அறிவார் ஆர் உயிரே

#91
பாடினான் வியந்து உளத்தில் பெருகும் இன்ப பரவையில் தான்
ஆடினான் அழும் கண்ணீர் ஆட்டி தேம் பூ அடி தொழுதான்
சூடினான் சுவை விள்ளான் பினர் முந்நீர் மேல் துறும் வெள்ளம்
ஓடினால் என தொழும் காபிரியல் இன்புற்று உரை உற்றான்

#92
உடல் வண்ணத்து இளவல் என இங்கண் தோன்றி உதித்த பிரான்
கடல் வண்ணத்து எ குணமும் உளனாய் முன் நாள் கடு நீதி
அடல் வண்ணத்து எசித்து அறியும் அல்லால் இங்கண் ஆர் அறிவார்
மிடல் வண்ணத்து எழும் கதத்தில் இவன் தன் நீதி வெகுண்டன கால்

#93
செய் பட்ட வான் உலகும் வான் மீன் திங்கள் செம்_சுடரும்
மொய் பட்ட நீர் உலகும் நீரில் துப்பும் முத்து அணியும்
ஐப்பட்ட பூ உலகும் புனலும் வெற்பும் ஐம் திணையும்
கைப்பட்ட எ உலகும் செய்தான் இ நல் காதலனே

#94
சீர் ஆரும் மணி இனமும் பைம் பூ மு பால் திளை இனமும்
பார் ஆரும் கூழ் இனமும் கனியும் தீம் தேனும் பல் இனமும்
ஏர் ஆரும் நிறத்து இனமும் இன்பு உய்த்து ஆரும் இசை இனமும்
நீர் ஆரும் பூ உலகின் செல்வம் கூறும் நிலை இலதே

#95
கூறு உற நான் கூறும் கால் கூற்றும் குன்ற குவிந்த திரு
வேறு உற வேறாய் பரப்பி மண் மேல் நீர் மேல் விண் திசை மேல்
பாறு உற வாழ் புள் இனமும் நீர் வாழ் மீன்கள் பல் இனமும்
மாறு உற நீள் நிலத்து உயிரும் எண் அற்று ஈட்டி வகுத்தனனே

#96
மட்டு_அற்ற புல் உயிர்கட்கு அரசன் ஆக வானவர் போல்
கட்டு_அற்ற வேண்டுதல் வேண்டாமை வல்ல கருத்து உயிரை
நட்டு அற்றம் நிகர் கடந்த உருவின் மாமை ஞாயில் பொறித்து
இட்டு அற்றம் இன்றி மனு_குலத்தை ஈன்றான் இ திறத்தான்

#97
இற்று எல்லாம் கலை முகந்த கற்றோர் எஞ்ச ஈட்டிய பின்
அற்று எல்லாம் உணர்கு இல்லா மக்கள் இன்னா அருந்தும் அவா
உற்று எல்லாம் அழுக்கு உற்றது என்று நாதன் உடன்றன கால்
முற்று எல்லாம் அழிப்ப முனிவு உணர்ந்த தன்மை மொழிகிற்பேன்

#98
மாயிரத்து அவிர் புவி வகுத்தும் ஆயனம்
ஆயிரத்து_ஆறு_நூற்று_ஐம்பத்தாறும் ஆய்
தீ அகத்து ஆர்ந்தன செயிர் பொறாமையால்
காய் அகத்து ஆண்டகை கதத்தை உள்ளினான்

#99
மறை நெறி நீங்கிய மனிதர் உள் கெட
நிறை நெறி நீங்கிய காம நீர் குளித்து
இறை நெறி நீங்கிய இன்ன பார் உடை
கறை நெறி நீங்குப கழுவல் உள்ளினான்

#100
உள்ளிய வாய் செய உளத்தின் ஏவலால்
எள்ளிய உலகு எலாம் எஞ்ச கார் முகில்
விள்ளிய கண் பக மின்னி ஆர்த்து இடித்து
அள்ளிய இருள் புவி அனைத்தும் மொய்த்ததே

#101
வரையுழி வரைவு இலா வடிந்த ஆறு என
புரையுழி முகில்கள் நீர் பொழிய நாழிகை
அரை ஒழியா முனர் அகன்று யாண்டையும்
தரையுழி ஆற்றொடு தடங்கள் ஆர்ந்தன

#102
ஆறொடும் ஆறொடும் அரிதம் நான்கினும்
ஆறொடும் ஆறு மொய்த்து அதிர்ந்து எழும் திரை
பாறொடு பாறு என பொருது பார் எலாம்
பாறொடு பாறு நீர் படர்ந்து மொய்த்ததே

#103
கரை கொலும் கடல் எழீஇ கழறி வாங்கிய
வரை கொலும் உயர் திரை மங்குல் பாய்ந்து எழ
புரை கொலும் முழக்கு எழீஇ புவனம் எங்கணும்
உரை கொலும் நடுக்கு உறீஇ உலம்பிற்று ஆயதே

#104
நீர் எழும் ஓதையும் நீர் பெய் ஓதையும்
கார் எழும் ஓதையும் கால் செய் ஓதையும்
சூர் எழும் ஓதையும் துதைந்து வீழ் மனை
பேர் எழும் ஓதையும் பெருகி மாறும்-ஆல்

#105
புதைத்து இருள் கிளர்த்தலும் புயல் பனித்தலும்
துதைத்து அடுத்து இடித்தலும் கடல் சுளித்தலும்
சிதைத்த அலை பெருக்கமும் திளைப்ப கண்டனர்
பதைத்து இரைத்து உகப்பு இடை பனிப்புற்று ஓடுவார்

#106
மாடம் நீள் முகட்டு உயர் மரத்தின் கொம்பு உயர்
கூடம் நீள் பொருப்பு உயர் குழாம் கொண்டு எய்தினர்
தேட நீள் நாள் உளைந்து அடுத்த சீர் எலாம்
ஓட நீள் நீத்தமோடு ஒழிய காண்பரே

#107
கவிகையும் கொடிகளும் கதிர் செய் மஞ்சமும்
சிவிகையும் தளிமமும் திகழ்ந்த கோசிக
குவிகையும் குஞ்சமும் கோல வட்டமும்
புவி கை உண் பெரு கொடு போக காண்பரே

#108
ஏர் முக புதி மணத்து இணைந்த காந்தனும்
ஓர் முகத்து அன்னையும் உலந்த தாதையும்
சீர் முக துணைவரும் இனிய சேயரும்
நீர் முகத்து அமிழ்ந்தி மேல் ஞெமுங்க காண்பரே

#109
கண்டு கண் புதைக்குவார் கலங்கி ஆர்த்து இடர்
உண்டு கண் மழையொடும் உமிழ்ந்து விம்முவார்
வண்டு கண் விசை வரும் வாரி மேட்டு மேல்
கொண்டு கண்டு அங்கணார் குழைந்து அமிழ்ந்துவார்

#110
ஏர் அணி வலியின் நீதி இறையவன் முனிந்த-காலை
நீர் அணி அரணம் ஆகா நெடு மதிள் அரணம் ஆகா
சீர் அணி அரணம் ஆகா சேண் வரை அரணம் ஆகா
பேர் அணி அரணம் ஆக பெற்ற நல் வினை இலார்க்கே

#111
எல் இரா பனிப்ப மாரி எழுந்து இரா கதிரில் பாய்ந்த
இல் இரா புரிசை ஓங்கும் எயில் இரா புணர்ந்த நாவாய்
வல் இரா கவிழ்ந்து மூழ்க வரை இரா பெருக்குள் மூழ்கா
கொல் இரா உயிரும் இல்லா குழைந்து உலகு அழிந்தது அன்றே

#112
ஆதியை பழித்து காமத்து அசனி பட்டு எரிகின்றாரும்
நீதியை பழித்து எள்ளி நீந்தி நைந்து அமிழ்ந்துவாரும்
ஓதியை பழித்த பாவத்து உணவு இல சோர்கின்றாரும்
சேதியை பழித்த மாடம் சிதைந்து வீழ்ந்து அழுங்குவாரும்

#113
இடி முகத்து ஊற்றும் மாரி இடைவிடா நால்_பான் நாளும்
படி முகத்து எழுந்த வாரி பருப்பதத்து உயர்ந்த எல்லா
முடி முகத்து எழுந்து மூ_ஐ முழத்து எழீஇ எவரும் மாண்டு
மடி முகத்து அழிந்த ஞாலம் வயின்-தொறும் நீத்த வாரி

#114
பிடி நலம் தழுவி நீந்தும் பெரும் கரி வரை என்று எண்ணி
மடி நல முயல் மான் கேழல் மரை கவி பலவும் ஏறி
கடி நலம் சோர்ந்து மூழ்கும் களிற்றொடும் அவையும் மூழ்க
அடி நலம் இழந்த வாழ்க்கை அடுத்தனர் சிதைவ போன்றே

#115
பயம் மிக பகை தோன்றாது பசு வரி புலியின் மேலும்
அயம் மிக சிங்கம் மேலும் மான் கலை யாளி மேலும்
அயம் மிக சடுதி நீந்தி அயர்ந்து சோர்ந்து உள மா யாவும்
கயம் மிகு அ பெருக்குள் மாண்டு கயற்கு இனம் விருந்து உண்டாமே

#116
மயில் கிளி புறவு பூவை மட அன்னம் குறும்புள் நாரை
குயில் கொடி சிரவம் கூகை கொக்கு இனம் முதல் புள் யாவும்
பயில் துளி விடாமையானும் பருக ஒன்று இலாமையானும்
துயில் சிறிது இலாமையானும் தொறும்தொறும் துஞ்சிற்று அன்றே

#117
வாயு முன் தூமம் போலும் மாலி முன் கங்குல் போலும்
தீயின் முன் பூளை போலும் திடனின் முன் பொய்யும் போலும்
வீயு முன் உழைகள் போலும் விமலன் உள் முனிந்த நீதி
நோயு முன் எதிர்த்து தாங்க நுனித்த பீடு உடையார் யாரே

#118
நூல் வரும் சுருதி வேலி நொறில் தவம் விளைத்த சீலம்
சால் வரும் மாட்சி நோவன் தானும் தான் தவத்தில் ஈன்ற
வால் வரும் சேமும் காமும் யாப்பனும் மக்கள் ஆக
நால்வரும் நால்வர் காந்தை நான்கும் அன்று அறிந்திலாரே

#119
எண்மரும் இறைவன் நூலால் இயைந்த நவ்வி ஏறி மீண்டும்
மண் மருவு இனங்கள் விண் மேல் மருவு இனம் விடாமை ஏற்றி
விண் மருவு அமலன் தானே விரும்பி மீகாமன் ஆய் பார்
கண் மருவு அளவு_இல் வாரி கடந்து மேல் மிதந்து நின்றார்

#120
அணி வளர் ஆருமேனி ஆகிய நாட்டில் அங்கண்
மணி வளர் குன்றத்து உச்சி வதிந்த பாறு இழிந்த வேலை
பிணி வளர் இன்ன தன்மை பின்னர் பெயாது ஆணையாக
பணி வளர் வான் வில் பெய்-கால் பரப்புவல் என்றான் நாதன்

#121
சோதியின் வடிவாய் ஞானம் தொடர் குணத்து எஞ்சான் கோப
வீதியின் வடிவாய் நீத்தம் விட்டு உலகு அஞ்சி எஞ்சி
நீதியின் வடிவாய் நின்ற நிமலனே கருணை பூத்த
சாதியின் வடிவாய் இங்கண் தனயன் ஆம் இவன்-தான் என்றான்

#122
பொன் கலத்து ஏந்தி தந்த பொழி அமுது அனைய வானோன்
சொல் கலத்து ஏந்து இ காதை தூற்றிய இருவர் உள்ளம்
தன் கலத்து ஏந்தும் இன்பம் சால்பினால் அன்னை தன் கை
எல் கலத்து ஏந்து தேவ இளவலை பாடினாளே

#123
மருள் தரு மறு அற மழை தரு மடிவு அற
அருள் தரு குருதியின் அடை மழை தருகுவை
அருள் தரு குருதியின் அடை மழை தருகும் நின்
சுருள் தரு மது மலர் இணை அடி தொழுதும்

#124
சின வழி தெரிகு இல தயை வழி தெரிகு இல
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுளை
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுள் நின்
தன வழி ஒளிர் அருள் தரும் அடி தொழுதும்

#125
மெலி உலகு அழிவுற வெருவிட வெகுளினை
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவனை
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவ நின்
வலி உலகு உணர்வுற மலர் அடி தொழுதும்

#126
பாண் நெறி பலவையும் பகர்ந்து உவப்பு எழீஇ
கோள் நெறி ஒளி முக குழவி ஏந்தினர்
சேண் நெறி கடந்து போய் தெளிந்த வாவியை
காண் நெறி எய்தி அ கரையின் அண்மினார்

#127
புல் அம் கரை வதிந்தனர் புடை அகன்றது ஓர்
நிலம் கரை இலாது ஒரு நிழல் இலாது நீறு
இலங்கு அரை உயர் மலை என கண்டு உம்பரை
அலம் கரை வாகையான் அழைத்து அஃது ஏது என்றான்

#128
இன்னவை மிக்கயேல் இறைஞ்சி கேட்டு அவண்
பல் நவை மிடைந்த ஐம்புரத்தில் பண்டு நாள்
துன் அவை இளவல் தன் ஆண்மை தோற்றும் என்று
அன்னவை கேள்-மின் என்று அணுகி கூறினான்

#129
கான் ஊறு நேமி காணாது மூடு காவாத வாரி கழிவு ஆய்
நானூறும் ஆக நால்_மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி நவை ஆர்
ஊன் ஊறு சோதுமத்தாரது ஐந்தும் ஊர் உற்ற பாவம் ஒழிய
வான் ஊறு தீயை ஓர் மாரி ஆக வான் வாரினான் இ மகனே

#130
மறை ஒன்று இலாது தவம் ஒன்று இலாது மருள்கின்ற சீலம் மடிய
நிறை ஒன்று இலாது நிரை ஒன்று இலாது நெகிழ்கின்ற நீதி அகல
முறை ஒன்று இலாது வரைவு ஒன்று இலாது முறிகின்ற காமம் முதிர
சிறை ஒன்று இலாது சிதைகின்ற நாடு திளைகின்ற தீயின் இரை ஆம்

#131
முடி கோடி கோடி கதிர் காலும் ஏக முதல் ஏவல் ஆகி அசனி
இடி கோடி கோடி எரியோடு வீழ எதிர் ஓதை சீற எரி வான்
துடி கோடி கோடி துறும் ஓதை போலு சுடு சூல் அகோர முகிலே
கடி கோடி கோடி குடியாய் உலாவு கடு நாடு மூடி மிடைய

#132
புரி வாய் பிளந்த இறையோன் உடன்று புரி சாபம் என்று கடிதே
எரி வாய் பிளந்த முகிலே உமிழ்ந்த இடி ஏறு அதிர்ந்து படலான்
முரி வாய் பிளந்த முகில் தாவு உயர்ந்த முடி மாடம் எங்கும் முரிய
விரி வாய் பிளந்த முகில் காலும் அங்கி விளியாது எரிந்து பொழிய

#133
பட்டு ஈயும் எங்கும் எழ ஓதை பட்ட படர் ஞாலம் முற்றும் நெகிழ
விண் தீயும் எங்கும் இழி காமம் முற்றி விளை சோதுமத்தர் விரகத்து
உள் தீயும் எங்கும் வெருவோடும் உற்ற உள வேகம் முற்றி உருகும்
கண் தீயும் எங்கும் விரவே கலந்து கடி மாகம் மொய்ப்ப எழுமே

#134
மேகங்கள் வேக இடு மீன்கள் வேக இடி ஏறு வேக மிளிரும்
மாகங்கள் வேக ஒளி வேந்தன் வேக மனம் அஞ்சி மேகம் மறைய
ஆகங்கள் வேக விழி கண்கள் வேக அறை நாவும் வேக அலை கொள்
வேகங்கள் வேக நதி வேக வேக வெரு ஆக வேலை அகல

#135
நாலோடு_நாலு திசை ஓடி ஓடி நனியாய் நடுங்கி நலிய
காலோடு காலும் எரி கந்தகம் செய் கனலால் எரிந்த பலவோடு
ஆலோடு மாலும் அழல் ஆலி மண்டி அவியாத காம அசடர்
மாலோடு மாலும் மிக மாழ்கி வெந்து மதியாது எலாரும் மடிவார்

#136
வீழ்ந்து ஆரும் ஏறு படுவாரும் உண்டு வெருவு ஆகம் உண்டு மனையின்
தாழ்ந்து ஆரும் ஆவி விடுவாரும் உண்டு தழல் மாடம் உண்டு தகர
வாழ்ந்தாரும் ஆகி நெரிவாரும் உண்டு வயின் யாவும் உண்டு வடியா
சூழ்ந்து ஆரு தீயின் எரிவாரும் உண்டு சுடு மாரி உண்டது இலை யார்

#137
விரகம் கொள் தீய மிறை யாவும் வேக விரி நீதி தூண்டும் விளியா
நரகம் கொள் தீயின் நிகர் தோற்று மாரி நனியாக விட்ட இவனே
உரகம் கொள் தீய விடம் மிஞ்சு பாவம் உரு ஆகி மாறு கருணை
சிரகம் கொள் தூய முகிலாக இன்று திரி நாதன் என்று தொழுதான்

#138
மெய் நூல் திறத்துள் இவை யாவும் இன்பம் மிக உம்பர் கேட்டு விரிவாய்
கை நூல் திறத்து நிகராத மாலை கடிது ஆக வாச மலரை
இ நூல் திறத்து வடிவாக வீக்கி அடி மேல் இறைஞ்சி அணிய
எ நூல் திறத்தும் இணையாத ஆசி இனிது அன்று பாடி இடுவார்

#139
மாற்றாரை மாய்த்த கத நீதி மாற்றி மாற்றாரை ஆற்ற மனு ஆய்
ஏற்றாரை ஏற்ற அடு காலம் நீக்கி ஏற்றாரை ஏற்ற இழிந்தே
தேற்றாரை ஆற்ற அழுது ஆவி வாழ்தல் தேற்றாரை உய்ப்ப மடிவாய்
ஆற்றாரை ஆற்றும் அருள் ஆய்ந்து யார் உன் அரு வீர ஆண்மை அறிவார்

#140
ஒரு நாதன் என்று தனி ஏகன் நின்றும் ஒரு மூவர் என்று பெயர் ஆய்
குரு ஆகி வந்து தணவாது அகன்று குறுகாதும் எங்கும் உளன் ஆய்
பொருள் ஆதி என்று பொருள்-தோறும் நின்று பொருள்-தோறு அழிந்து சிதையாய்
அரு ஆகி நின்றும் உருவோய் யார் உன் அரு வீர ஆண்மை அறிவார்

#141
வினை ஒன்றும் இன்றி வினை செய்து செய்த வினை-தன்னில் ஒன்றும் விழையாய்
நினைவு ஒன்றும் இன்றி மறவு ஒன்றும் இன்றி நிகிலம் தெரிந்த நிலவு ஆய்
முனைவு ஒன்றும் இன்றி முனிவாய் முனிந்தும் முதிர்கின்ற அன்பு முயல்வாய்
அனை ஒன்றும் இன்றி உயர்வோய் யார் உன் அரு வீர ஆண்மை அறிவார்
மேல்

@15 சோசுவன் வெற்றிப் படலம்


#1
தேன் ஆர்ந்த நறும் பாகில் தெள் அமுதில் தீம் சொல்லால்
மீன் ஆர்ந்த விண்ணவர் சூழ் விழைந்து இளவல் துதி பாட
கான் ஆர்ந்த மலர் வாவி கடிந்து அன்னார் நெடு நெறி போய்
வான் ஆர்ந்த கதிர் சாய்ந்து வாருதி நீர் ஒளித்ததுவே

#2
நீர் ஒளித்த சுடர் எழு முன் நின்று எழுந்த நிறை நீரார்
பார் ஒளித்த நாதன் அடி பணிந்து ஏந்தி துயர்க்கு எஞ்சா
கார் ஒளித்த மின்கள் என கடுகி போய் நெடு நெறியின்
சூர் ஒளித்த வானவர் தீம் சொல் ஆட ஏகினரே

#3
முளைத்து எழுந்த முழு மதி போல் அரச அன்னம் முதிர் தூவி
வளைத்து எழுந்த குடை விரிப்ப வான் உச்சி செம்_சுடரோன்
திளைத்து எழுந்த கதிர் வீசி தேன் துளித்த பூம் சினைகள்
விளைத்து எழுந்த மலர் சோலை மிடைந்து அடைந்தார் வினை வென்றார்

#4
நீர் தவழும் செம் தீயோ நில_மகள் தன் துவர் வாயோ
கார் தவழும் மின் இனமோ கமல மலர் தடம் ஒரு-பால்
வார் தவழும் புவி சிலம்போ மணி வரன்றி ஒலித்து ஓடி
பார் தவழும் யாறு ஒரு-பால் பணி கை போல் தழுவினவே

#5
அ தலையார் அ நிழல் கா அகட்டு உறைந்தார் மா தவனும்
மைத்து அலை ஆர் முகில் உலகின் வான் உலகின் மேல் உயர்ந்தோன்
மொய்த்து அலை ஆர் உலகு எய்தி முற்று எளியன் உரு கொண்டான்
இ தலையான் ஆண்மையை வான் எய்தினரே சொல்-மின் என்றான்

#6
செய் பட்ட வானவரும் திற முனி சொல் கேட்டு உவந்து
மெய் பட்ட மறை முதலோன் மெல் அடியை பணிந்து ஏற்றி
கை பட்ட படை வீரர் களத்து-இடை முன் இவன் காட்டும்
மெய் பட்ட வலி காட்ட மிக்கயேலே மொழியுற்றான்

#7
அலை ஈன்ற முத்து என ஈங்கு அயர்வுற்றோன் முன் நாளில்
மலை ஈன்ற இ மணி பூம் புனலிடத்தும் மறை பகைத்த
கொலை ஈன்ற வேல் வல்லார் குழைந்து அற இ நாட்டிடத்தும்
கலை ஈன்ற சொல் கடந்து காட்டியவை கேள்-மின் என்றான்

#8
கல்லில் தீட்டி வரைந்த மறை கடவுள் தந்து மலை இறங்கி
எல்லின் தீட்டி ஒளிர்ந்த முகத்து எழு மோயிசன் செல் கதி சேர்ந்து
வில்லின் தீட்டி ஊன் உமிழ்ந்த வேல் சோசுவன் அ குலத்து அரசு ஆய்
வல்லின் தீட்டி வளர் தெய்வ மாட்சி காட்டும் உரு ஆனான்

#9
கார் தாவு அசல மேல் பிறந்து கதிர் சால் தும்மு மணி வரன்றி
தார் தாவு என்ன சூழ் தயங்கி தண் தாது அலரில் தவழ்ந்து உலவி
சீர் தாவு இ நாட்டு-இடை பரந்து செல்வாய் எல்லாம் திரு செலுத்தும்
சோர்தான் என்னும் இ நதியை துன்னி யூதர் எய்தினரே

#10
தெண் அம் தண் நீர் மேய்ந்து உயர்ந்த செல்லே மின்னி திரண்டு ஆர்த்து
கண் அம் குன்றத்து உயர் நெற்றி களிப்ப பொழிந்த வெள்ளமொடு
தண் அம் கந்த மலர் முல்லை தடத்தில் பெருகி அ நாளில்
வண்ணம் கொள் நாடு உவந்து ஓங்க வரைவு அற்று ஒழுகும் மா நதியே

#11
கரை மேல் திரண்ட யூதர் கொணர் கதி நூல் பேழை சேர்ந்தன-கால்
நிரை மேல் கீழ் நின்றன திரைகள் நெறி போய் ஓட மேல் வரு நீர்
திரை மேல் திரை நின்று அதிசயித்த சீர் போல் அடுக்கி நின்று இனிதாய்
புரை மேல் களித்த யூதர் எல்லாம் போய் அ கரை சேர்ந்து எய்தினரே

#12
இவ்வாறு அ ஆறு அவர் கடந்த எல்வை எவரும் உள் வியப்ப
செ ஆறு அடிகள் தம் பொறி போல் சிதறாது ஒதுங்கி நின்ற திரை
ஒவ்வா மறையை தொழும் தன்மைத்து உவந்து ஒல்லென வீழ்ந்து உலகு அறிய
அ ஆறு உற்றது உரைத்து என்ன அதிர முழங்கி ஓடினவே

#13
அமிர்தம் பாய்ந்து மது பாய்ந்து ஆர் அன்னம் பாய்ந்த வயல் கடந்து
துமிர்தம் பாய்ந்து கயல் பாய்ந்து துள்ளும் கமல தடம் நீக்கி
திமிர்தம் பாய்ந்து நிழல் பாய்ந்த செழும் பூம் சோலை புடை மருவ
நிமிர்தம் பாய்ந்து முகில் பாய்ந்த நேரார் வைகும் நகர் கண்டார்

#14
செல்லே வரையை தழுவுதலோ செல்லை தாங்கும் வரை தானோ
எல் ஏர் எரிக்கோ என்னும் நகர் ஏந்தும் கன்னி அம் புரிசை
வல்லே வளர் வேல் யூதர் எலாம் மகிழ கண்டு ஆர்த்து அம்பு விசை
ஒல்லே வெல்ல போயின போது உரை உற்று அறைந்தான் சோசுவனே

#15
செல்வேம் செல்வ நகர் தகர்ப்ப செல்ல செல்லும் எல்லை செலும்
வெல்வேம் வெல்லும் வல்லமையோ வீர வில்லில் மாரியினோடு
எல் வேல் வல்லது அல்லது என இறைவன் தான் தன் வலி காட்ட
கொல் வேல் இல்லாது இ நகரை குலைய சிதைத்தல் காண்-மின் என்றான்

#16
ஏறு ஆர் ஒலி போல் பல் பறை ஆர்த்து இறைவன் பணியால் மறை பேழை
வீறு ஆம் மதில் சூழ் கொணர்ந்து ஒரு சொல் விளம்பா வெல் வேல் ஏந்தி விரைந்து
ஆறா அழல் பெய் அரி அன்னார் ஆறு நாளைக்கு ஒரு காலை
மாறா வரவே மருண்டு ஒன்னார் மனம் உள் பதைப்ப வியப்புற்றார்

#17
கோள் உற்று ஒளிர் வான் கோன் இவற்றை காண குணக்கில் எழ ஏழாம்
நாளுற்று அம்பின் கடிது ஓடி நகர் ஏழ் முறை இன்று இடை வளைத்து
வாள் உற்று எவரும் வான் அதிர வாய் விட்டு ஆர்த்து வருக என
தோள் உற்று உயர் குன்று இயல் குன்றும் சோசுவன் தான் பணித்திட்டான்

#18
ஆர்த்தார் திரண்டார் முடுகுகின்றார் அன்றே ஏழாம் முறை வர கார்
ஈர்த்து ஆர் உரும் ஒத்து ஒலித்து அதிர இடை விட்டு அரணும் தகர்ந்து இடிந்தே
பார்த்தார் ஒன்னார் பதைத்து அஞ்ச பாய்ந்தார் யூதர் வாள் பசியை
தீர்த்தார் துமித்தார் பகை வெள்ளம் சிறந்த வெற்றி நலம் கொண்டார்

#19
பொருவு_அற்ற விதத்து உயர் பொற்ப நகர்
செரு அற்ற திறத்தில் தகர்ந்தது எனா
வெருவுற்ற வியப்பில் ஒருங்கு எவரும்
தரு உற்ற பிரான் அடி தாழ்ந்தனரே

#20
விண் காவலன் ஆர் மிடல் அஞ்சினராய்
மண் காவல் வழங்கிய சோசுவன் வாய்
தண் காவில் அடைக்கலமே தா என்று
ஒண் காபன நாடர் ஒடுங்கினர்-ஆல்

#21
பார் அஞ்சின அஞ்சின பாரினொடு
நீர் அஞ்சினிர் நித்தன் அடைக்கலம் வந்தீர்
அஞ்சிலிர் அஞ்சிலிர் என்றனன்-ஆல்
போர் அஞ்சில கை புகழ் எஞ்சிலனே

#22
எஞ்சா உறவு ஆயினர் என்று உள மற்று
அஞ்சா மறம் ஆர் பல நாடர் எலாம்
நஞ்சு ஆடிய நாணி வில் வவ்வி அறா
நெஞ்சு ஆடு இகல் ஆட நினைந்தனர்-ஆல்

#23
வேறாய் உரையும் உறையுள் விதமும்
வேறாய் முறையும் விதியும் குலமும்
வேறாய் இறையும் விழையும் மறையும்
வேறு ஆய் உறவாட விரும்புதல் என்

#24
பகையார்க்கு உறவோர் பகையார் எனலே
தகையார்க்கு உள தம் முறை ஆம் எனவே
நகை ஆர்க்க நகைத்து நடுங்கிய அ
வகையார்க்கு இகல் செய்திட வந்தனரே

#25
வஞ்சித்து உயிர் உண் அயில் வவ்வினர் போர்
விஞ்சி திரள் ஆக மிடைந்தனர் என்று
அஞ்சி திரி காபனர் வந்து அலறி
எஞ்சி தொழுது இற்றை இயம்பினர்-ஆல்

#26
ஒன்னாரின் உரத்தில் உலாவி உண் ஊன்
மின்னோடு உமிழும் கத வேல் அடலோய்
உன்னோடு உறவாடினம் என்று உள மற்று
அ நாடர் எலாம் பகை ஆடினர்-ஆல்

#27
மஞ்சு எஞ்சுக மா முரசு ஆர்ப்ப அரா
நஞ்சு எஞ்சுக எய் படை ஞாஞ்சிலொடு
நெஞ்சு அஞ்சுக நீள் நிலம் அஞ்சுக வந்து
அஞ்சு அஞ்சில மன்னர் அடுத்தனர்-ஆல்

#28
விது வீசிய வில்லில் வெலற்கு அரியான்
மது வீசும் எருசல மண்டிலம் ஆள்
அதுனீசதன் என்னும் அடல் பெயரான்
பொது ஈசர் பிரான் பொர எய்தினன்-ஆல்

#29
நாவால் அடையா நயன் ஆபிரம் ஆள்
மேவார் பணி வேல் எறி கை மிடலோன்
கா ஆரும் மதத்த களிற்றின் உயர்
ஓவான் எனும் நாமனும் உற்றனன்-ஆல்

#30
ஏர் ஆடிய ஏரிம நாட்டு இறையோன்
பாரான் எனும் நாமன் அகல் படியின்
வேர் ஆடிய மூ இலை வேலுடன் ஓர்
சீர் ஆடிய தேர் மிசை சென்றனன்-ஆல்

#31
கணையோ வலியோ கதிர் கார் மினலோ
துணை ஓர் துரகத்து உயர் வாள் சுழல
பணை ஓம்பு அயிலக்கின பாழியினான்
இணையோ தவிர் யாப்பியன் எய்தினன்-ஆல்

#32
வாசத்து அலர் பூம் வயல் ஏகில நல்
தேசத்து அரசாய் சிகி வாகையனாய்
பாசத்து இணை பால் மதி ஆழியனாய்
பூசத்தியில் தாபிர் பொலிந்தனன்-ஆல்

#33
இன்னாரும் எவேயரும் எந்தையரும்
பொன் நாடு அமுறேயரும் வண் புகழ் சேர்
நல் நாடு எபுசேயரும் நச்சு அயில் வேல்
மன் ஆர் பிரசேயரும் மண்டினரே

#34
மடையை கடல் வாரி திறந்தது என
புடையில் புவி யாவும் புழக்கம் உற
இடை எக்கணும் உள்ள யாவருமே
படை உற்று எமை இன்று பகைத்தனர்-ஆல்

#35
மலை நேர் கரியும் வளி நேர் பரியும்
முலை நேர் தனுவும் உறை நேர் கணையும்
சிலை நேர் உரமும் திளை சேனைகளே
நிலை நேர் இல நேமி நிறைந்தனவே

#36
போர் கீறிய வெய் புணரி திரையோ
நீர் கீறிய நீள் கலமோ சிறகால்
கார் கீறிய கல் திகிரி குலமோ
பார் கீறிய கால் படர் தேர் திரளே

#37
வளியோ கடலோ மழையோ உருமோ
விளியோடு அதிர் கூற்று இனமோ எவையோ
தெளியோம் உயிர் உண்டு சினந்து அதிரும்
களி ஓடு கடத்த கரி திரளே

#38
மேல் மன்னிய வீரியர் வில்லில் உகும்
கோல் முன்னின கொல்லு குளம்பின மேல்
வான் மின் என ஒல்கின வாவின போர்
பால் மன் மனம் உற்ற பரி திரளே

#39
சுழல் காலினர் கல் திரள் தோளினர் பொன்
நிழல் தாரினர் போர் பல நீந்தினரே
அழல் கோலினர் கூற்றது தோழர் அலை
சுழல் கார் இணை துன்று அபயர் திரளே

#40
கோல் பேர் படை தேர் கொடி மா படை மால்
தோல் பேர் படை ஓர் தொகை இன்றி வரும்
கால் பேர் படை மா கடல் அ கடை போய்
வேல் பேர் படையோய் எவர் வெல்வர் என்றார்

#41
ஊன் முகந்து அழன்ற வேலோன் ஓர் நகை சினந்து கொட்டி
தேன் முகம் தந்து கொல்லும் தீ வினை பகை ஒன்று அன்றி
வேல் முகம் தந்த வெம் போர் வெருவவோ இரங்கி நாதன்
தான் முகம் தந்த காலை சயம் நமக்கு அரிதோ என்றான்

#42
கூற்று என சினந்து அங்கு இன்ன கூற்றினை முடியா முன்னர்
ஏற்று இனத்து உடன்ற தானை எழுக என்று உயர் தேர் ஏறி
காற்று என பறந்து ஞாலம் கலக்கு உறீஇ கூச செம் தீ
ஊற்று என சுடரை பில்கி ஒளிர் படை படர்ந்தது அன்றே

#43
கால் என விசையில் தேர்கள் காலொடு பறந்து செல்ல
கோல் என பரிகள் செல்ல குளிறி வேம் இடி சூல் மேகம்
சால் என கரிகள் செல்ல சமர் புலி வெள்ளம் மொய்த்த
பால் என பதாதி செல்ல பகைவர் வெம் படையை கண்டார்

#44
கண் புலன் அழலை தும்ம கதத்து எதிர் கடலை கண்டான்
உள் புலன் அழற்றும் சீற்றம் ஒடுக்கிய சீலம் உள்ளி
மண் புலன் மொய்த்த வாரி மறித்து என படையை போக்கா
புண் புலன் தேய் வேல் ஆபன் புணர்க என்று அறைந்தான் வல்லோன்

#45
ஐவரும் இடை தூது ஏகி அனைத்தையும் பொது அற்று ஆளும்
மெய் வரும் சுருதி நாதன் விரைந்து அடைக்கலம் வந்தாரை
கை வரும் படையின் சால்பில் கலக்கு உறீஇ பகைத்தது என்னோ
மொய் வரும் பகையின் ஊங்கு முதலவன் பகை தீது என்பாய்

#46
பார் பெற ஆசையானும் பானு முன் பனியின் நீங்கும்
சீர் பெற ஆசையானும் செகுத்து உயிர் வித்தி கொள்ளும்
பேர் பெற ஆசையானும் பிறர்க்கு யான் செரு போர் செய்யேன்
போர் பெற நாதன் வேண்டி பொறுக்கவும் செய்யேன் என்பாய்

#47
ஒரு பட உறவு நன்று என்று உடன்று தாம் செருக்கு உற்று இன்றே
செரு பட வேண்டின் இன்றே செரு வரம் தருவல் என்பாய்
மரு பட மலர்ந்த தாரோய் மருள் படாது அறைதி என்றான்
நெருப்பு அட வெய்ய ஆபன் நிருபனை தொழுது போனான்

#48
வில் முகத்து அம்பின் சென்று வேந்தர் ஐந்து இறைஞ்சி சொல்வான்
சொல் முகத்து அடங்கா சீர்த்தி சோசுவன் தூது என்று உற்றேன்
வன் முகத்து ஒவ்வா நாதன் வணங்கு காபனரை சீய்க்க
செல் முகத்து உறையின் வை வேல் செரு படை மிடைந்தது என்னோ

#49
மண் முழுது அன்றி வானும் வணங்கும் ஒப்பு எதிர் ஈறு இன்றி
எண் முழுது இழந்த சீலத்து இறைவனை தொழுதல் தீதோ
உள் முழுது அறிவு மாழ்க உடற்றலே வேண்டா என்றான்
புள் முழுது ஏற்றும் வேலோன் பொருநரும் சினந்து நக்கார்

#50
வேற்று அலாது அவரும் நீரும் விரும்பி ஒன்று ஆய போழ்தில்
மாற்றலார் எமக்கு என்று அன்ன மன்னவர் உரைப்ப மீட்டும்
கூற்று அலாது இணையா வேலோன் கூறுவான் படையின் வெள்ளம்
போற்றலால் உளத்தில் ஏமம் பொங்குபு மருளல் வேண்டா

#51
பிரம்பினால் எசித்து நாட்டில் பெரும் துயர் விளைந்த ஆறும்
கரம்பின் ஆர் அடியே காண கடல் திரை பிரிந்த ஆறும்
வரம்பு இராது எழுந்து இ நாட்டில் வரும் புனல் நின்ற ஆறும்
பரம் பிரான் வலியை காட்டும் பலவையும் கேளீர்-கொல்லோ

#52
இ திறத்து அனைத்தும் செய்த இறைவன் நம் இறைவன் ஆகி
அ திறத்து அடலோன் நம்மை அமர் செய வெகுண்ட-காலை
கை திறத்து உடன்ற வெள் வேல் கடல் படை அரணம் ஆமோ
மெய் திறத்து இறைஞ்சி அன்னான் விரி நிழல் பெறல் நன்று என்றான்

#53
போற்றிய தேவர் நீக்கி புதுப்பட ஒருவன் போற்ற
சாற்றிய தூதோ போதி சடுதியே நீரும் நீவீர்
ஏற்றிய தெய்வம் தானும் எம் படை ஆண்மை நும்மை
தூற்றிய பின்னர் வாழ்த்தி சொற்றுவீர் என்றார் அன்னார்

#54
போரிடத்து அஞ்சி தூது புகலவோ வந்தேன் ஒன்றாய்
பாரிடத்து எதிரா நாதன் பழித்த போது இன்றே இ வேல்
சீரிடத்து உரிமை சொல்வேன் செரு பட வம்-மின் என்ன
காரிடத்து அசனி கூச கதத்தில் ஆர்த்து ஆபன் மீண்டான்

#55
சுளி முகத்து அனைத்தும் கேட்ட சோசுவன் உருமின் சீற
வெளி முகத்து அமலன் சொல்லும் வெல்லுவாய் வென்று என் ஆண்மை
தெளி முகத்து எவர்க்கும் தோன்ற தெளிக்குவாய் என்ன கேட்டு
வளி முகத்து அழலின் பொங்கி வய படை எழுக என்றான்

#56
காரின் மேல் முழங்க யானை கடலின் மேல் முழங்க திண் தேர்
தேரின் மேல் முழங்க மன்னர் திசைகள் மேல் முழங்க பம்பை
போரின் மேல் முழங்க பாய்மா புரவி மேல் முழங்க வீரர்
பாரின் மேல் முழங்க யாவும் பகைவர் மேல் முழங்கி மொய்த்தார்

#57
யானை எழும் கடல் ஏந்திய தேர் பரி கால்
சேனை எழும் கடல் சென்று செழும் கடல் மேல்
ஏனை எழும் கடல் மோதல் என பகைவர்
தானை எழும் கடலோடு தலைப்படும்-ஆல்

#58
செல் உகும் மாரி என சினம் முற்றிய நீள்
வில் உகும் மாரி மிடைந்து மிடைந்தனர் வாய்
சொல் உகும் மாரி சுளித்த முழக்கம் எழீஇ
அல் உகும் மாரி அகத்தினர் அஞ்சினர்-ஆல்

#59
நெஞ்சு உறை நீள் கவசத்தொடு நேரலர் தம்
நஞ்சு உறை நெஞ்சு அற நஞ்சு உறை வெம் சரம் மொய்த்து
எஞ்சு உறை விஞ்சிய குஞ்சரம் இற்றது அதின்
மஞ்சு உறையும் சினர் வஞ்சகர் துஞ்சினர்-ஆல்

#60
அற்று இழிவார் பிரிவார் அதிர்வார் இரிவார்
மற்று இகல்வார் மருள்வார் வரையா மடிவார்
முற்றிய மா தவம் ஆர் முனிமார் முனிவை
உற்று இரி கோல் உயிர் உண்டிலது ஒன்று இலை-ஆல்

#61
தாரொடு தானைகள் சாய்ந்து மடிந்திடவும்
நீரொடு நூறிய வீறு உடல் நீறிடவும்
பாறொடு பல் சிரம் மீது பறந்திடவும்
ஆறொடு மாறு உதிர திரை ஆர்ந்தன-ஆல்

#62
தோலொடு தோல் பொர மீமிசை துள்ளி எழீஇ
கோலொடு கோல் பொரு கொள்கையின் வாசி பொர
காலொடு கால் பொர நேமி கலந்து உலகின்
நாலொடு நால் திசை நாதம் நரன்றனவே

#63
மேகம் நிகர்த்தன வேழ மருப்பு மிதித்து
ஏகம் அறுத்தலின் ஆணை என புயல் பாய்
வேக இன பரி மேகம் உகுக்கு உரும் ஒத்து
ஆக வரை துகளாக உழக்கின-ஆல்

#64
வேலொடு வாள் எடு வீரர்கள் மேல் அதிர
கோலாடு கோலிய கொல் கரி சாய்ந்து பொர
சூலொடு சூழ்ந்து சுளித்து இடி மின்னொடு உக
காலொடு காய்ந்து அதிர் கார் திரள் ஒத்தனவே

#65
கோடை எழுந்த பதங்கன் என கொடி நீள்
ஆடை எழுந்து அகல் ஆகவ நீள் அடவி
பீடை எழுந்து பெரும் படை வாடி அற
மாடை எழுந்து உயர் தேர் வரு சோசுவனே

#66
மிடலொடு வேகம் மிகுந்து எறி வெம் கணைகள்
படலொடு மேகம் மலிந்த பருப்பதம் ஒத்து
உடலொடு வேழம் உருண்டு உகு வெம் குருதி
கடலொடு தீவு கிடந்து அன காட்சியதே

#67
படு கணை அல்லது பட்டிலது ஒன்று இலதால்
விடு கணை யாவையும் வீழ்த்தலில் வில் விசையால்
தொடு கணை மாரி துளித்தன பின் தொகை அற்று
அடு கணை வாரி அனைத்தையும் வாரினவே

#68
ஈர்_இரு தேரினர் ஈர்_அறு யானையினர்
ஓர் இரு_நூறு உகள் மா உயர் வில்லினர் வந்து
ஆர் இரு பாலினர் ஆர்த்து இவனை துதைய
பார் இரு நால் திசை அன்று பதைத்தனவே

#69
இ தகவு உற்றது என கடி நக்கு இடி வில்
அ தகவோன் அவர் மீது வளைத்தமையால்
மத்தக மாவொடு பாய் பரிமாவொடு வெண்
முத்து அகம் நாறு இரதங்கள் முரிந்தனவே

#70
ஓர் அறு_பத்தும் இரட்டியும் ஓர் தொடையால்
சீர் அறு வேகமொடு அம்புகள் சேர்த்தி விட
பார் அறு வாரி என படர் சோரி விழ
ஈர்_அறு பேர் பிணம் இற்றது ஒரோர் கணையால்

#71
வேல் அற வாள் அற வில் அற வீரர் அற
கால் அற கூம்பு கவிழ்ந்து அற நேமி அற
தோல் அற மீமிசை துள்ளிய வாசி அற
மேல் அறம் மேவினன் வில் உகும் மாரி அறா

#72
துறுவன வாளி துமிந்தன யானைகள் தேர்
இறுவன தாரொடு எரிந்தன இன்னது எலாம்
அறுவன கால் தொடை அம் கை உரம் தலைகள்
உறுவன யாரும் ஒழிந்து நடந்தனனே

#73
திரு தகு புய கிரி வளர வீக்குபு செரு களம் உழக்கு இவன் உலவல் நோக்கிய
மரு தகு தடத்து அணி எகில நாட்டினை வயப்பட அளித்தன அரசன் ஏற்று எரி
கரு தகு முகில் குரல் மெலிய ஆர்த்தன கதத்தொடு கடுத்தன களிறு போக்கியும்
உரு தகு புயத்து எழ வளையை ஓச்சியும் உருக்கினன் இரட்டினன் உருமில் தாக்கியே

#74
மிக படு பசி தகு வளை இது ஆய் பல விதத்து உயிர் வெறுத்து உனது உயிர் அலால் பசி
தக படு சுவை கொடு நிறைய ஆற்றில தருக்கொடு வர பசி அருளி நீக்கு என
நக படு சின தொடு கரியில் ஊக்குபு நகை தகு மதிக்கு இணை பருதி வாய்த்து இழை
பக படு குறி கையில் எழுக தீய் திரள் பயப்படு சமர் களம் இரிய ஓச்சினான்

#75
பசி பட வரின் பசி இனிதில் ஆற்றிய பருக்கை இது என குனி தனுவின் வாய்க்கு ஒரு
வசி பட வளைத்தன விசிகம் ஏற்றலும் வயப்பட வகுத்தலும் அறிகு இலா கழு
சசி பட அறுத்து இரு பிறைகள் ஆக்கிய சமத்து எரி வளை படை அறவும் நோக்கு இலா
சுசி பட அறுத்தன துணிகள் மேல் திசை துடிப்பன பறப்பன வெருவ நோக்கினார்

#76
பொருக்கென மன சினம் அனைய தீக்கிய பொறி படு சிலை படை வளைய மாற்றினான்
முருக்கின சினத்து இரு புடையின் நூற்றுவர் முறுக்கென வளைத்திட ஒரு கை தாக்கினர்
கரு கனம் இடித்து என வருக தீ கணை கணைக்கு ஒரு கணை பட எழுதி மீட்டு அவர்
வெரு கனம் உளத்து உற இடைவிடா சரம் விடுத்தனன் மறைக்கு அரசு ஒரு வில் கோட்டியே

#77
திளைத்தன சினத்து இரு புடையின் நூற்றுவர் சிலை கொடு பனித்தன கணைகள் தாக்கலின்
முளைத்தன பொறி சிறகு உடைய தேர் கிரி முனை கொடு பறப்பு என நடவு பார்த்திபன்
வளைத்தன தனு புயல் இடைவிடா சர மழை திரள் களிற்று உயர் மலையின் மேல் பட
விளைத்தன களத்து-இடை உதிர நீத்தம் உள் விறல் கயல் என குறை உடல்கள் ஈட்டமே

#78
என் இ சிலை பனித்து எதிர் உறைகள் நீக்கியும் இழை கொடு அகத்து அணி கவசம் நூக்கியும்
நுனி சிலை அடி சிலை சிலையை வீக்கிய நுனி கரம் அடி கரம் எவையும் வீழ்த்தியும்
தனி சிலை வளைத்தன ஒருவன் ஆக்கிய சய சமர் நலத்தினை வெருவ நோக்கினர்
இனி சிலை அமர்க்கு அரசு இவனை நீத்து எவர் என சிலர் வியப்பு உறி அளவு_இல் வாழ்த்தினார்

#79
இளைத்தனர் இளைத்து அமர் முரிய ஆர்த்தனர் எதிர்த்தனர் கணை திரள் எழுதி ஓட்டினர்
திளைத்தனர் புடைப்புடை படு புண் வாய் கறை சிதர்த்தனர் சின தொடு சின வில் பூட்டு என
வளைத்தனர் வளைத்த வில் ஒடிய மீட்டு ஒரு வய சிலை பிடித்தனர் முனியு தாக்கு என
விளைத்தனர் சின சமர் ஒரு வில் வாய்க்கு உயிர் விடுத்தனர் ஒருப்பட இடையின் நூற்றுவர்

#80
பரப்பின நிண பிணம் எழுக நூற்றுவர் பட தனி இபத்து உயர் திரியு பார்த்திபன்
நிரப்பின சிலை கொடு தொடையொடு ஈட்டிய நெறி கணை தடுத்தன கவசம் மேல் பட
வரப்பு என அழல் பொறி தவழ மீ சுடர் வனப்பு என இமைத்தவன் அடியின் மேல் கணை
இரப்பு என நிரைத்தன வரம் இது ஆய் கடிது எடுத்து அமர் எதிர்த்தனன் அயர ஓச்சுவான்

#81
வெறுத்தன பொறி தவர் முனிவு போல் பிறர் விலக்கு அரும் வடி கணை விசையில் ஓட்டலோடு
இறுத்து என மறைக்கு உயர் இரதம் நீர்த்தனன் இருள் பொறி அகி கொடு இரு நிலா பிறை
அறுத்து என மருப்பு இணை கரமொடு ஈர்ந்தனன் அடல் கரி முழக்கொடு விழு முன் மீட்டு இமன்
உறுத்து என மறுத்து ஒரு கணையை ஓச்சியும் உரு படு முடி தலை அடியில் வீழ்த்தினான்

#82
கார் எழுந்து இடித்ததே போல் கதத்த பல் பறை ஆர்த்து இன்ன
போர் எழுந்து ஆய போது ஐம் பொருநர் நீடு உவப்ப என்ன
தார் எழும் தலைவன் ஆய தகஞ்சனன் புரவி மேல் ஆய்
நீர் எழும் திரையின் பொங்கி ஞெகிழி வேல் ஏந்தி நின்றான்

#83
நூல் வரும் மறையை வாழ்த்தி நுகோதரன் எதிர்ப்ப கண்டு
கோல் வரும் விசையின் பாய்ந்து குந்தம் விட்டு உனது இது என்றான்
மேல் வரும் நிரையின் சாய்ந்து விலகி நின்று ஒலி கொண்டு உற்ற
கால் வரும் அழல் பெய் வேலை கவ்வி மீட்டு எறிந்தான் வல்லோன்

#84
உழி அறிந்து எறிக பாராய் உனது இது என்று எறிந்த வை வேல்
வழி அறிந்து ஓடினால் போல் வளியினும் முடுகி மார்பில்
குழி அறிந்து இனிதின் மூழ்கி கொன்று உயிர் உண்டு அ நெஞ்சின்
பழி அறிந்து அங்கண் நில்லா பறந்து என போயிற்று அன்றே

#85
காய் எரி சீற்றத்து எல்லாம் கண்ட யாப்பியன் ஆர்த்து எய்ய
தீ எரி அசனி ஊழ்த்து சினந்து வீழ் விசையில் வீழ்ந்த
வாய் எரி கொடும் வேல் தைத்த மார்பினில் பறித்து எய்யும்-கால்
நோய் எரி கையும் சோர்ந்து நுகோதரன் உயிரில் சோர்ந்தான்

#86
களி முகத்து அரசன் ஆர்ப்ப கத முகத்து எதிர்ந்த ஆபன்
சுளி முகத்து அழலை தும்மும் துரக மேல் இருவர் தோன்றி
தெளி முகத்து எரிந்த மின் போல் தீ எரி இரு வாள் வீசி
வளி முகத்து அன்ன தூளி மலிந்து எழ உழக்கி பாய்ந்தார்

#87
வாள் தக விசையோடு ஆபன் வலத்து இடத்து ஒல்கி வீச
ஆடக முடியின் செல்வன் அதற்கு உடல் கரந்து தந்த
கேடக விளிம்பில் பட்டு கீழ் சரிந்து எருத்தின் மூழ்கி
கோடக தலையை கொய்து கோன் நிலத்து உருமின் பாய்ந்தான்

#88
கோளொடு பரியின் தானும் குதித்து உடன்று ஆபன் தீ போல்
வாளொடு பிரிந்து துன்னி வதிந்து பாய்ந்து இயல்பில் வீச
தோளோடு குரிசில் ஏந்தும் சுடர்ந்த பொன் கிடுகு நீண்ட
தாளொடு முளரி வீழ்ந்த தன்மையின் வீழ கொய்தான்

#89
ஏமமே தானும் நீங்கி இருவர் ஈர் ஊழி_தீ போல்
தூமமே மல்க பொங்கி தூதின் நீ நகைத்த தெய்வ
நாமம் ஏய் வலி இது என்ன நல் வினை உலந்த கோமான்
வாமம் ஏய் முடியின் சென்னி வாளொடு வீழ்த்தினானே

#90
வார் எழுந்த முரசு எதிர் எழுந்த பரி மதம் எழுந்த கரி வளியினும்
தேர் எழுந்த விசை விசை எழுந்த வசி திரள் எழுந்த கணை கணை உகும்
போர் எழுந்த தனு புகை எழுந்து அபயர் பொர எழுந்த வெரு ஒலி மருள்
கார் எழுந்த இடி இடி எழுந்த ஒலி கடல் எழுந்த அலை மெலியும்-ஆல்

#91
அணி உடன்ற பரி பரி உடன்ற கரி கரி உடன்ற கொடி அணியு தேர்
மணி உடன்ற தனு தனு உடன்ற கணை கணை உடன்ற கறை மலிதர
பிணி உடன்ற அமர் அமர் உடன்ற உடல் உடல் உடன்ற உயிர் பிரி தர
பணி உடன்ற குயவு உயர் உடன்று படை பட உடன்ற மறை அரசன்-ஆல்

#92
முனி வெகுண்ட முனிவு இணை புகைந்து முனி முனி வளைந்து விடு முனிவு அறா
நனி வெகுண்ட கணை குறி தவிர்ந்தது இல நனி எழுந்த பிணம் இரு கரை
தொனி வெகுண்ட நதி என எழுந்த கறை துணை எழுந்த கரையொடும் எழ
தனி வெகுண்ட நர_பதி பொழிந்த சர மழை ஒழிந்தது இல தணிவு இலா

#93
நீர் ஓர் வாரி முனர் நீள் ஓர் கூலம் என நீல் ஓர் மேனியர் ஓர் நூறு எதிர்த்து
ஓர் ஓர் வாளி விட ஓர் ஓர் ஆகம் அற ஓர் ஓர் ஆவி உக ஏகி அ
போர் ஓர் சோசுவனும் ஓர் ஓர் ஆயிரர்கள் ஓர் ஓர் ஆயிர வில் போலும் என்று
ஆர் ஓர் சாபம் உளன் ஆயினான் எதிர ஆவி வாழ்வன் என மாழ்குவார்

#94
மலை இரண்டு மிசை மலை எழுந்தது என மலி புயங்கள் மிசை தலை எழ
உலை இரண்டு மிசை அழல் அழன்றது என உயிர் எரிந்த எரி விழி விட
அலை இரண்டு மிசை எழ முழங்கும் என அதிர் எழுந்து அவுணன் ஒருவன் நீர்
கலை இரண்டு மிசை அமர் நிகர்ந்து இருவர் களம் நடுங்க அமர் நடவினார்

#95
கொடி சுமந்த உயர் குயவு இரண்டும் உயர் கொலை மலிந்த மத கரி எனா
இடி சுமந்த முகிலொடும் எதிர்ந்த முகில் என எதிர்ந்து விடு கணை இருள்
கடி சுமந்த முகில் என மறைந்து வெளி கடை முடிந்த உகம் இது எனா
படி சுமந்த பல உயிர் அடங்கல் மருள் பட வளைந்த இரு தனு பொர

#96
தேர் இரண்டு வலம் இடம் இரிந்து அகல அருகு எதிர்ந்து தம்முள் திரியவே
ஓர் இரண்டு சிலை அளவு இறந்த கணை உக அடைந்து படு கணை இலா
நேர் இரண்டு படை என எதிர்ந்த சரம் நெறியின் நின்று உரக இனம் என
ஆர் இரண்டு படை வியவ மண்டி விரி படம் மலர்ந்து மிசை ஆடவே

#97
சுசி முகந்து சுடும் என சரங்கள் தம தொழில் மறந்தன-கொல் என ஒளி
வசி முகந்து கதிர் அளவு இறந்து இரவி மலியு கங்குல் அட விடும் எனா
நிசி முகந்து கரி நிறம் மலிந்த அவுணன் நிணம் அருந்த உரி விட நுனி
உசி முகந்து பல முக முனிந்த கணை ஒர் ஓர் அலங்கல் அளவு இல எய்தான்

#98
அற நிமிர்ந்த கொடி அற உயர்ந்த உருள் அற உகண்ட பரி அலவனோடு
அற எதிர்ந்த சிலை அற முனைந்த கரம் அற அணிந்த கழல் கழல்களோடு
அற உடன்ற உரம் அற விடைந்த சிரம் அறம் உலந்த அவுணன் உயிர் அற
அறம் மலிந்த சிலை நிகர் அடங்கல் அற அறம் உணர்ந்து பொரும் அமரினால்

#99
பொன் பொதுளும் கதிர் பூண் மகுட பொருநன் புனை வாகையினான்
மின் பொதுளும் புயல் ஆர்ப்பு மெலிந்திட வீங்கு ஒலி யூதர் எழீஇ
வென் பொதுள் உண்ட தழும்பு மிடைந்த பொருந்தலர் மேல் முடுகி
முன் பொதுளும் பகையார் முரிய கணை மாரி முடுக்கினர்-ஆல்

#100
வளைய முழங்கின வண் சிலை தேர் உருள் வளைய முழங்கின நொந்து
உளைய முழங்கின மாள் கரி மாள் பரி உளைய முழங்கின போர்
விளைய முழங்கின பல் பறை செம் புனல் விளைய முழங்கின மெய்
களைய முழங்கின வெம் படை ஒன்னலர் களைய முழங்கினரே

#101
துண்டு பட படும் உந்தி பட படு தூசி கொள் தேர் சுடர் வாள்
கொண்டு பட படு பல் சிரமும் கரமும் குவியும் பிணமும்
தண்டு பட படு வாளியும் வாளொடு சாபமும் வை அயிலும்
வண்டு பட படு யானைகள் பாய் பரி வண்டு பட படுமே

#102
கீழ் கடல் மேல் கடல் மேல் முடுகி கிளர் ஓதை கிளைத்தது எனா
ஆழ் கடல் மான் அடல் தானை இரண்டும் அதிர்ப்ப அமர் களம் ஓர்
தாழ் கடல் மான் உதிரங்கள் தரங்கம் எழுந்து ததும்ப நிலம்
சூழ் கடல் தீவுகள் என்று கிடந்தன துஞ்சிய தோல் இனமே

#103
இடித்தன ஏறு என ஆர்ப்பு எழ இன்னணமே எதிர் யூதர் பொர
தடித்தன கை படை தந்தன வாய் வழி தாவிய தம் உயிர் போய்
மடித்தன மேனி வடிந்தன சோரி மலிந்தன ஆர்கலியுள்
துடித்தன குன்றுகள் என்று உயர் தோலொடு துஞ்சுவ தூசிகளே

#104
போரில் எழுந்து அதிர் போரினை ஆடினர் பொங்கிய ஓதையினால்
மூரி எழுந்த முரண் கரி தூசி முரிந்து துடித்தமையால்
சோரி எழும் துமிதம் படவோ சுடர சுழல் ஒற்றை உருள்
தேரில் எழும் சுடர் மேனி சிவந்ததின் மாலை சிவந்ததுவே

#105
அல் இருள் தோன்றி அடுத்தன காலை அடங்கலும் ஒன்னலரை
வெல்லிட எல்வை இலாது ஒளி வேந்தன் இழிந்து அலை வீழும் எனா
எல்லினை நோக்கி எழுந்த மன திறல் ஏந்திய சோசுவனே
நில் என நின்றனன் நேமி விளக்கிய விண் தவழ் நேமியினான்

#106
மாலையில் மாலி பெயர்ந்து அகலாது வதிந்து அவண் நின்று ஒரு நாள்
காலையில் ஆகையில் ஆகிய காட்சியில் ஆய களிப்பொடு அற
சாலையில் ஆரிய சோசுவன் மாலை தகாது தடுத்தன அ
வேலையில் வேலையை வெல் அடல் தானையை வென்றன ஆறு அரிதே

#107
மருள் தரு நெஞ்சு-இடை அஞ்சின எஞ்சு இல வஞ்சனர் வெம் சமருக்கு
இருள் தரும் ஆதரவாக எதிர்ந்த இரா எனும் மேல் படையை
தெருள் தரும் மாலி செகுத்து மறித்திட வான் திரி தேர் முடுகாது
அருள் தரும் அன்பொடு வெம் கதிர் அம்பு என வல் எதிர் ஏவினன்-ஆல்

#108
நூல் மறை ஆதி சினம் தரும் நூக்கு அரிது ஆம் வலி காட்டிய போர்
வான் மறையாது வழங்கி மலர்ந்து அகல் வையம் அறிந்து அதனை
கால் மறையாது கதிர் குணிலோடு கறங்கு கடல் பறையை
தான் மறையாது புடைத்து என மாலி தரித்தன தோற்றம் அதே

#109
கதிர் எதிர் உருட்டும் ஆழி அகல்வு இல கருதலர் பதைத்த தானை புறம் இட
எதிர் எதிர் கடுத்த வீர நிசிதரன் இரதம் உயர் உற்று வேக உரையினால்
பொதிர் எதிர் சினத்து மீள முகம் இடு பொருதனர் முடுக்கி வேதம் மலிக என
முதிர் எதிர் கதத்த சோணன் அமர் செய முகில் இடி மறைத்த பூசல் விளையுமே

#110
அழல் எழ வளைத்த சாப இரு முகில் அளவு_இல பனித்த பாண மழையொடு
நிழல் எழ மறைத்த வானம் வெரு உற நிறை நிறை எதிர்த்த தானை முரிதர
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட இருவரும்
சுழல் எழ உருத்த வாரி என அமர் தொடு முறை உரைக்க நூலின் அளவதோ

#111
கொடை இல தின் மக்கள் நாமம் என உயர் கொடி முழுது ஒழித்து நீற நிசிதரன்
கடை இல சினத்த வாளி எழுவினன் கணம் என இடித்த சோணன் அளவு_இல
தொடையில் அழல் உற்ற பாணம் இடுதலின் துரகமோடு அறுத்த பாகன் மடிதர
நடை இல நிலைத்த தேரின் நிசிதரன் நணுகு இறகு அறுத்த நாகம் நிகருவான்

#112
உகம் உக முடித்த நாளின் வளி என உருள் உருள் முடுக்கு சோணன் அலமர
நிக முகம் உகுத்த தேரின் நிலை மிசை நெய்யும் அவர் பிடித்த நோழிகையின் அவன்
முக முகம் எதிர்த்து வாளி இடை இடை முறை முறை தொடுத்து மீள வய மலை
பக முகம் முனைத்த சூலம் உனது இறை பழி இது என கடாவ எழுதினான்

#113
முதிர் வினை விளைத்த காலம் என இவன் முதல்வனை நகைத்தன் ஆதி எறி அழல்
கதிர் வினை பழுத்த சூலம் வழி-இடை கதிர் முனர் இருட்டு மாரி என அழிந்து
எதிர் வினை விளைத்த சோணன் எறி கணை இழிவுற உரைத்த வாயில் நிறைவன
பொதிர் வினை பழுத்த மார்ப நிசிதரன் புகை கணை புதைத்த தூணி நிகரவே

#114
மடிவுற்ற தலைவன் எனும் மறம் உற்ற நிசிதரனை மனம் உற்ற வெகுளியொடு கண்டு
இடி உற்ற விசையினொடு எரி ஒத்த இவுளி வரு மலை ஒத்த இரத மிசையான்
கடி உற்ற மதுவின் அவர் எரிமத்தின் அரசன் எதிர் கதம் முற்றி முடுகு விசை காண்
அடி உற்ற சுருதி அரசு அனிலத்து விசையில் உறீஇ அமர் முட்ட எதிர் அணுகினான்

#115
விரதத்தின் நெடிது உறி உன் உயிர் துய்ப்ப வரமொடு அமர் மழை விழைவு உற்ற மழு இது எனா
பிரதத்தின் இரிய இடை அமர் உற்ற எவரும் மழை பிரிவு உற்ற இடியில் எறிய
சுரதத்தின் எதிரு வெளிறு என விட்ட கணையில் அது துகள் இட்டு வெளியில் எழ மற்று
இரதத்தின் அணியு முடி எரி உற்று மடிய மறை இறை மொய்த்த கணை எழுதினான்

#116
சிரகத்தின் உழுவை முகன் உரும் ஒப்ப உறுமி மதி தெளிவுற்ற வளை விட எடுத்து
உரகத்தின் எயிறு படு மதி ஒப்ப விரலில் உள ஒளி உற்ற வளை எறியும் முன்
நரகத்தின் வெருவு விடு தருமத்து விசயன் ஒரு நகை உற்ற பிறை எழுதினான்
விரதத்தின் விளையு வினை விசையுற்ற கணையினொடு விழ வட்டமொடு கரமுமே

#117
அடி அற்ற வலது கையை வதை முற்றி இடது கையில் அணி வட்டமொடு விட எடுத்து
இடி அற்ற முகிலின் ஒலி எழ மற்ற விருதர் நக இடைவிட்ட விசை இல விழ
கொடி அற்ற இரதம் அற உரம் அற்ற வலவன் அற அடி அற்ற குதிரை அற மின்
முடி அற்ற சிரமும் அற முனை உற்ற பகைவன் அற முடிவு அற்ற கணை அரசு எய்தான்

#118
இறை உற்ற இறுதலொடு வெருவுற்ற படை முடுகி எதிர் உற்ற கரி மதம் இலா
பிறை ஒத்த எயிறும் இல கயவு அற்ற பரியும் இல பிரிவுற்ற உருளையும் இலா
சிறையுற்ற பறவை என விசையுற்ற அயமும் இல செரு உற்ற படைகளும் இலா
கறை உற்றது இணையும் இல செயம் உற்ற அரசு படை கடை அற்ற கணை எழுதவே

#119
புயலினொடு மாறும் உயர் கரிய கரி மேல் சபலை பொழியும் அயில் ஏந்தி அதில் ஓவான்
பெயரினொடும் ஓவ முனை முடுகு மிடல் வேந்து இவுளி பெல கரி பதாதி உருள் திண் தேர்
இயலினொடு நால் வகையும் உவணம் எனும் யூகம் உறி இரணம் முறியாது உறுதி நிற்ப
குயவினொடு சோசுவனோடு அசனி எறி சாபம் உளர் குழுமி அவன் மேல் முடுகி மொய்த்தார்

#120
முடுகி வரும் வேகமுடன் உவண இரு வண் சிறகும் முரிய வரு தாக்கில் அவர் தாக்க
கிடுகில் வரும் வாளி புடை விலக அழல் மீது எழுக கிடுகிடென மாரி பொழி நாளில்
வடுகி வரும் வாரி விசை மறைய மறையோர் எதிர வய இரதம் யானை பரி வீழ்ந்தே
கடுகி வரு சாப மழை கருடன் இறகு ஈர்ந்து இகல்வர் கடிது எவமம் ஓர் ஓர் அணி வீழ்ந்தார்

#121
வருடல் என யூக இரு புடையில் உள யாவும் அற வய விருதர் வீழ்ந்த பினர் மீள
கருடன் அகல் மார்பு உலவு கணையில் அவர் மாற்று அரசு கரியில் உறை பேரணி எதிர்த்தார்
புருடனினும் விஞ்சு அரிவை அனைய இகல் எண்ணம் இல பொருநன் இவை கண்டு மனம் நோக
குருடன் ஒரு காட்சி உறின் அதிசயித்து மலை குவடு அதிர ஆர்த்த அசனி ஒத்தான்

#122
கொடிகள் அற வானில் தவழ் குடைகள் அற மேகம் அறு கொடிகளொடு தேரும் அற யானை
அடிகள் அற வாசி அற நெடிய சிலை நாணி அற அரணமொடு மார்பும் அற மற மன்னர்
முடிகள் அற முங்கம் அற அணிகள் அற மள்ளர் அற முனையும் ஒரு சோசுவனொடு ஆர் ஆர்
இடிகள் அற வேகு அமரில் எழுது கணையோடு கணை எழுத எதிர்கின்றவருள் உய்ந்தார்

#123
கடிய கணை சென்ற விசை கடுகும் இடி மின்னல் இணை கவசம் அற மீதில் அழல் பொங்க
கொடிய கரு வஞ்சர் உரம் உலவி உறை என்று நிறை குருதி உக விண்டு அனையர் வீழ
நெடிய வரை விண்டு பக உருவும் உரும் என்று நெடு பகழி கரி மார்பு உலவி வீழ்த்த
இடிய முகில் மின்னில் இவன் இரதமுடன் ஒல்கி உயிர் இறுதி உற எங்கும் அமர் செய்வான்

#124
உருளும் உயர் காலும் இல கடவு பல பாகர் இல ஒளிரும் உயர் பாரும் இல பாய்ந்து
மருளு சுழி வாசி இல வடிவின் நிமிர் கூம்பும் இல வயிர உயர் தேர் பலவும் நிற்ப
வெருளு பரி காலும் இல அணிகள் ஒரு வேலும் இல விசை உறவில் நாணி இல வெம் போர்
அருளும் இவர் ஈறும் இல நடுவை அணி பேரணியும் அழிய முனை சோசுவன் உள் நுழைந்தான்

#125
தீய் புறம் வளைப்ப நடு வயிர அரண் ஒத்து அபயர் செறிய இடை நின்ற அரசு ஓவான்
காய்ப்பு உற வயத்த படை கடவி நுழை வீரர் முனர் கடுகி வடி செம் புனல்கள் அ தீ
ஏய்ப்பு உற அவித்தது என எரியை விழி வாய் பொழிய இழியும் மத மால் களிறு தூண்டி
போய் புறம் அழித்து நுழை தருமன் எதிர் வந்து அசனி பொருவும் அயில் ஏந்தி நணுகின்றான்

#126
கடவும் அழலோடு கடம் வடியு கரி நாண நனி கதறி இப மேல் பொலிய வெம் தீ
சுடவும் அழலோடு விடம் வடியும் அயில் நின்று இரு கை துறுவி எதிர் கோ உரம் உரைத்து
படவும் அழல் தாவு விசை எறிய எறி வேல் அசனி படு முன் இவன் நாகு மதி வாளி
விடவும் அழல் மேல் பறிய வெளியில் உயர் பட்ட துணி விழி அகல ஓச்சினன் வில் வல்லோன்

#127
நீறு பட நெட்டு அயில் துணித்த அரசனோடு இவனும் நீள் தனு எடுத்து எவரும் அஞ்ச
வீறு பட ஆர்த்து நிமிர் கார் முகம் மலிந்த மழை விண் தலமும் மண் தலமும் மொய்ப்ப
மாறு பட முட்டு சரம் மாறுபடுகின்ற விசை வன்னி எழ மின்னி விழி கூச
ஊறு பட ஓர் கணை படாது புவி ஊறு பட ஓர் இரு வில் போர் படும் உடன்றே

#128
உரைத்த கணை மேல் கணை தடுப்பது தடுப்பு இலதும் ஒண் கவச மேல் உதிர எங்கும்
விரைத்த நிலை சோசுவன் உணர்ந்து ஓர் அறு பத்து இருபது ஐம்பது அரும் வெம் பகழி வேகத்து
இரைத்த சிலை கால் எரிய ஓர் ஒர் தொடை ஏவினன் இகல் சிலையும் மால் களிறும் அம் பொன்
வரைத்த வயிர கவசமும் துணிபட படு பல் வாளி உரம் மூழ்கி விழ ஓவான்

#129
வெருவி முரியாத படை முரிய முரிதற்கு உலகில் வெருவு தரு நான் விளிய நீய் கொள்
பெரு விலது செய் தொழில் கொல் உவமை இல நின் கடவுள் பெறு வலி இது என்று அலறி ஓவான்
செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு இவன் ஓர் சிலையொடு பொர புவியில் ஆர் ஆர்
மருவி எதிர் வாளி தொட மடிவர் அலது உய்வர் என மருளி எவரும் கடிது அகன்றார்

#130
அகல அவர் யூதர் எதிர் அகலம் உற வந்து அரிகர் அகலம் உலவ சுருதி வாய்மை
புகல் அனைய வாடு அரிய கொடிய கணை ஏவலொடு புரவு கரி தேர் விரி பதாதி
இகலவரின் நால் வகைகள் சிவையொடு அற ஈர்ந்த அளவு எதிர் அமரின் நால் அரசர் வையம்
நகல மடிவு ஆய பழி அழல உளம் முந்து இரதம் நடவி அதுனீசதன் எதிர்ந்தான்

#131
சிறை பதி தேரினன் தீ பெய் வில்லினன்
பிறை பதி முடியினன் பெயர் செய் வாகையன்
நறை பதி தொடையினன் நளி பல் மன்னவர்
இறை பதி அடியினன் நொந்து அன்று எஞ்சினான்

#132
ஓர் இரு_நூறு உறழ் ஒரு மு_நூறு உடை
ஈர் இரு வகை படை ஈட்டினான் பினர்
பேர் இரு சிறகென பிரித்து அதற்கு வெம்
போர் இரு வரி என இருவர் போக்கினான்

#133
இட சிறை தலைவன் என்று இகுலன் ஆய் வலம்
படு அ சிறை தலைவனாய் நிகலன் பார்த்திபன்
விட சிறைக்கு உயிர் நடு அணியில் வேய்ந்து தான்
தட சிறை திகிரி மேல் சினந்து தாக்கினான்

#134
பெரியவர் கேண்மை போல் பீடையில் திளைத்து
அரியவை கண்டு எழும் அடலின் சோசுவன்
கரிய வல் யானையர் கனையன் சச்சுதன்
உரி இரு வகுப்பில் விட்டு உருமின் முட்டினான்

#135
கார் விளை முழக்கமும் காலொடும் கடல்
நீர் விளை முழக்கமும் நிகர் இலாத வெம்
போர் விளை முழக்கம் மேல் பொருமி பொங்கலின்
பார் விளை கலக்கம் நால் திசை பரந்ததே

#136
போர் முகம் காண்டலும் புனைந்த வாகையின்
சீர் முகம் கோடலும் சேர்ந்து ஒன்றாய் புகழ்
ஆர் முகம் தகும் மறைக்கு அரசன் அன்று தன்
கார் முகம் குனி முகத்து எதிர் கண்டான் அரோ

#137
ஆர் இருள் நெடுமையார் ஆடும் ஊசல் போல்
பேர் இரு படை-தமுள் பிரிந்து சேர்ந்து வெம்
போர் இரு முகம் முறிவு இன்றி போர் செய்வார்
ஓர் இரு புனல் என உதிரம் ஓடவே

#138
இட முகத்து இகுலன் ஆர்த்து எரித்த சூளையின்
தட முகத்து எழும் படை தாக்கும் தன்மையின்
பட முகத்து எதிர்த்தனர் முரிய பார்த்து மால்
கட முகத்து இபத்து உயர் கனையன் சீறினான்

#139
நூல் நலம் குல நலம் நுனித்த போர் நலம்
தான் நலம் பட சொலி தானை மீட்டு வேய்
கான் நலம் சினந்த தீ கனன்று மேய்ந்து என
வேல் நலம் பகைவரை வெம்பி தூற்றினான்

#140
எரி கெட சினந்த வில் எறிந்த மாரி முன்
பரி கெட பரி புனை பறந்த தேர் கெட
கரி கெட படை எலாம் கலங்கி போர் கெட
நரி கெட சினத்து அரி நலத்தின் கோறினான்

#141
முரிந்த தன் தானையை முனிந்தும் மீட்டிலான்
கரிந்த கை கடித்து இடித்து இகுலன் காற்று என
வரிந்த வில் கனையனை நோக்கி வந்து எதிர்
சொரிந்த மு மத கரி தூண்டினான் அரோ

#142
பொன் நாணினர் மணி வில்லினர் பொறி அம்பினர் புகையும்
சொல் நாவினர் சய நெஞ்சினர் சுடு கண்ணினர் சுடர் பூண்
மின் நாறினர் புலை நாறினர் விறல் வாளினர் மதம் ஆர்
கொன் ஆளியின் இரு மா உயர் கொலை ஈர் எமர் பொருதார்

#143
சொல் வாய் உகு சுடு தீயொடு சுளி கண் அழல் உக நீர்
செல் வாய் உகு இடி ஆர்ப்பொடு சின வாய் உயிர் உண நீள்
வில் வாய் உகு கணை மாரியின் விரி போர் இரு முகமும்
கொல் வாய் உகு கறை தாறு இல கொடி தாய் அமர் எழும்-ஆல்

#144
தடவி திரி இயமற்கு இணை தட வில் குனி கனையன்
நடவி திரி மத அத்தியின் நடு மத்தகம் நுழைய
கடவி திரி கணை தைத்து என களி உற்றனன் இகுலன்
சுட வில் திறல் கணை மட்டு இல தொடை விட்டனன் அவனே

#145
இசை உண்டு உறு கணையும் பட இகுலன் தனு ஒடிய
கசை உண்டு உறும் உரமும் பக அளவு ஒன்று இல கணைகள்
விசை உண்டு உற வளையம் பட விசை அம் தனு வளைய
வசை உண்டு உற ஒலி பொங்கின மடி வில் முகம் அறவே

#146
பதம் ஏற்பட பவளத்தொடு பதி முத்து என இருவர்
இதம் ஏற்பட எயிறு உய்த்தனர் எறி பல் படை இலராய்
கதம் ஏற்பட வய நெட்டு இரு கதை இட்டு இரு கனல் போல்
மதம் ஏற்பட உறும் அத்திகள் மறல தமுள் விடுவார்

#147
இரு கார் பல எரி ஏறு உக விளையாடின எனவே
செரு ஆர் களம் இடை ஆடுக திரள் தீ எழ அலறி
பொரு யானைகள் கதை வீசிய பொருவா விசை படலோடு
அருகு ஆயின படை யாவையும் அடி நூறின பொருதே

#148
திரிகின்றன இரு தீ நிகர் திரிகின்றன எவணும்
எரிகின்றன எதிர் யாவதும் இரிகின்றனர் எவரும்
பிரிகின்றன எதிர் சீறின பிளிர்கின்றன அழலை
விரிகின்றன கதையே மிசை விசை வெம் கதை படவே

#149
அழல கதை அழல கரி அழல கரி மிசையார்
சுழல கதை இகுலன் கரி சுழல் தன் கதை பறிபட்டு
எழ விண் திசை உறீஇ மற்றது எதிர் பட்டு இடு கதை மேல்
விழ மத்தகம் அடியில் பக விழும் அ கரி படவே

#150
கிரி நின்று இழி புலி என்று எரி கிளர் வெம் சின இகுலன்
கரி நின்று இழிதர மின் தவழ் கனல் மண்டு அசியொடு பாய்ந்து
எரிகின்ற இழி கதை முன் விழ எயிறு உள் உரம் உருவி
சொரிகின்ற இழி கறை சிந்துக சுழல் கொண்டு எறிதருமே

#151
இடி முழங்கின முகிலொடும் கடல் இணை முழங்கின ஒலி எனா
துடி முழங்கின தொனி எழுந்து இவர் துறுவி வெம் சமர் பொருத கால்
படி முழங்கின ஒலி நிகர்ந்தில பருபதங்களும் அதிரவே
கடி முழுங்கின வல முகம் சமர் கனல் சினந்து என விளையும்-ஆல்

#152
கரி அதட்டிய சினம் இரட்டிய கடிய சச்சுதன் இடைவிடாது
எரி அதட்டிய கொடிய அத்திரம் இடையிடைக்கு அளவு இல விட
பரி அதட்டிய இரத வெற்புகள் பரிகள் அத்திகள் சிதற வெய்
அரி அதட்டிய கரி இனத்து எதிர் அரிகள் உட்கு உறீஇ முறிவர்-ஆல்

#153
பணையில் ஆடிய பரிகள் யானைகள் பரவு தேர்களும் இவை எலாம்
இணை இலாது அற உயர் உவா மலை இடையில் ஓடிய அளவு இலா
கணையின் வாரி முன் அடையல் சாய்வன கறை அளாவிய பிணம் இரண்டு
அணையின் ஏறின குருதி நீர் நிறை அருவி ஓடின எவணுமே

#154
எதிர் எழுந்து உயர் இரதம் நின்று அமர் இட உடன்றன நிகலனும்
கதிர் எழுந்து எரி கனல் அழுந்திய கதம் மலிந்து அடும் உழுவை பாய்ந்து
அதிர் எழுந்து உயர் வரை நடுங்குப அரிது உடன்று என இடி இடித்து
உதிர் எழும் தழல் உமிழ் சரம் கொடு உயிர் விழுங்கினன் எவணுமே

#155
சொரி இரத்தமொடு எரி பிலிற்றிய களி எயிற்று அடல் அதிரும் ஓர்
அரி இரட்டிய அமர் முகத்து எதிர் அழல் உடற்றிய வதை வளர்
வரி எதிர்த்து என வலிய சச்சுதன் வரு முகத்து எதிர் நிகலன் வந்து
எரி எரித்தன உலறும் முள் கழை இரு சுரத்து என அமர் செய்வார்

#156
இரு முகத்து எதிர் படைகள் சிந்திட இருவர் வெம் சமர் பெருகலின்
வரு முகத்து எதிர் நிகலன் நின்று எறி வளை உடன்று உறி இடி முகில்
கரு முகத்து-இடை மதி நுழைந்து என எதிரவன் கடவிய கரி
செரு முகத்து-இடை உரம் நுழைந்து உயிர் சிதைய உண்டது திகிரியே

#157
கரிய உச்சிய முகிலின் மின்னொடு கனல் உமிழ்ந்து இழி இடி எனா
அரிய சச்சுதன் இபம் இழிந்து அழல் அசி சுழன்று அவன் இரதம் மேல்
உரிய நஞ்சு அரவு என இவர்ந்து அவன் உடல் பிளந்து எதிர் படை எலாம்
இரிய அச்சமோடு உளம் உடன்று அவன் இரதம் உந்தினன் நடவினான்

#158
இரு முகத்து இவை இவரலின் நடு உள எரி முகத்து இரு நிருபரும் எதிர் எதிர்
பொரு முகத்து எழும் முரசு ஒலி வளை ஒலி புரவி மிக்க ஒலி கரி ஒலி குயவு ஒலி
செரு முகத்து இவை மருளிய வெருவொடு சிலை வளைத்து ஒலி எழ விழும் மழை ஒலி
ஒரு முகத்தினும் நிகர் இல முரிவு இல உரை முகத்து அடை அளவு இல அமர் செய்வார்

#159
சுழல் எழ திரி இடிகளொடு இரு முகில் சுளி முகத்து என வர இரு இரதமும்
அழல் எழ குனி இரு சிலை முடிவு இல அழல் பனித்து என விடு கணை மழை விழ
புழல் எழ படு கணி கணை வழி வழி புனல் என கறை குமிழிகள் எழ விழ
நிழல் எழ புயலொடு குயில் இனம் என நிரை நிரைத்து எதிர் இரு படை மெலியவே

#160
வலம் இடத்து உறும் விசையொடு வளி என வரும் இடத்து எழும் ஒலியொடு கடல் என
நிலம் இடத்து இடும் வெருவொடும் இடி என நிறை பனித்திடு கணையொடு முகில் என
பல இடத்து இடு கொலையொடு நமன் என படை முகத்து இவர் இருவரும் நெடிது அமர்
சலம் இடத்து அடும் வினை என மலிவன சவம் மிதித்து எழும் மலை மிசை மலைகுவார்

#161
வெளி முகத்து எழு கணை மழை இருள் இட விளி முகத்து எழு கொடிது ஒலி செவி அட
வளி முகத்து எழு நதிபதி அலை என வதை உடற்றிய நர_பதி இருவரும்
சுளி முகத்து எழு வயவரும் முரிவு இல துணை அற சமர் பொருதலின் ஒருவன் வந்து
இளி முகத்து எழு சிறை முரிவன என இள மதி பிறை முடியினன் அலறினான்

#162
கதம் மிக படர் இரதமும் அதிர்குப கழல் புடைத்தனன் அழல் எழ அளவு அற
பதம் மிக தனு வளையவும் இரு துணி பட மறுத்து அடல் ஒரு சிலை வளையும் முன்
சதம் மிக பதி மறை அரசு இடு கணை சடுதி தைத்தன அளவு_இல உடல் எலாம்
மதம் மிக கரி என ஒலி இட அவன் மருளி முள் கிரி கிடி உரு நிகருவான்

#163
குருதி மிக்கு உக மலை மிசை துகிர் அது கொடி முளைத்து என உயரிய இரத மேல்
கருதி மிக்கு உறு நிலை பல பயன் இல கதறி நிற்பவன் விழி வழி அழல் எழ
விருதின் உய்த்தன பிறை உண்ணும் அரவு என விடு சரத்தொடும் அற விழ மறு கணை
பருதி மொய் கடல் முழுகு என ஒளி முடி பரிய விட்டனன் அறம் உணர் இறைவே

#164
பிறை புதைத்தன முடி விழ உளம் அறு பிணி புகைத்தன இறையவன் அலறி நல்
நறை புதைத்தன சிகழிகை மெலிதர நனி உரத்து அழல் எழ மிகு வெகுளியின்
கறை புதைத்தன விட நுனி வசி மிகு கணை எடுத்து உனது உயர் முடி புனைவல் என்று
உறை புதைத்தன முகில் என உறுமி வில் உடல் புதைத்து எழ விசையினொடு எழுதினான்

#165
தனை உதைத்து அன தனு முழுது அகல் முனர் சரம் உதைத்து அற எதிர் சரம் எழுதினன்
முனை உதைத்தன அரி என எதிர் இவன் மொழி மறுத்து இது முடி புனைக என மறு
கனை உதைத்தன பிறை என வளைவு உள கணை உதைத்திட நுதலொடு தலை பக
வினை உதைத்து அன உயிர் விடும் இறையவன் விழ உழைத்து என முரிவன படைகளே

#166
உழை என படை முரிதர அரி என உடறி மொய்த்தன மறையினர் இடை இடை
மழை என தொடு கணையொடு பல படை வழி வகுத்து உயிர் அளவு இல அனிலம் முன்
தழை என பட உதிரமும் அலையொடு ததைய விட்டு இசை இறையவன் வெகுளி முன்
பிழை என படை வகை வகை மடிவன பெருகுதற்கு ஒரு நிகர் இட அளவதோ

#167
வினை முடுக்கிய பகையவர் இரிதர விசயம் உற்றன களி எழும் இறையவன்
முனை முடுக்கிய தமர் அமர் தொடர்கு இல முனை நிறுத்திய பொழுதினும் அரிது அமர்
தனை முடுக்கிய கடவுள் தன் வய வலி தகு சின திறம் அறிகுவர் வெரு உறீஇ
கனை முடுக்கிய கடல் உடை அகல் புவி கடி நடுக்கு உற விரி படை கொலை செய்தான்

#168
முரி தரு பகையவர் முழுது அட அவர் மிசை
விரி தரு வலை கவிழ்வன என வெகுள் இடி
எரி தரு கரு முகில் இடை இடை ஒரு கணம்
பரி தரு முனர் உயர் பரவின வெளி எலாம்

#169
முனை முதிர் படை எழ முரசு அதிர் ஒலி என
சினை முதிர் இடியொடு செரு முதிர் சினம் எழ
கனை முதிர் அரவொடு கரு முகில் பரவலின்
வினை முதிர் உளம் என வெளி முதிர் இருள் அதே

#170
முடியொடு முடி பட வரை முனைவன என
இடியொடு சினம் முதிர் எரி முகில் எதிர் பொரும்
படியொடு பிரி பருப்பதம் என விழுவன அசனியின்
வெடியொடு மழை என விழுவன உபலமே

#171
துறுவன வலிய கல் துகள் எழ இரதமும்
இறுவன கரி பரி இனம் இனம் மடிவன
அறுவன படை இனம் அழிவனர் பகையவர்
உறுவன இடிகளொடு உடன் அவை எரிவன

#172
கடி ஒலி எழ விழு கல்லின் உறை படும் ஒலி
இடி ஒலி இடியினும் இறும் இரதமது ஒலி
மடி கரி எழும் ஒலி மடி பரி எழும் ஒலி
முடிவு இல விளிகுவர் முதிர் ஒலி நிகர் இல

#173
சிந்தின சிலை மழை சிந்தின சிலை கணை
சிந்தின பல படை சிந்தின கரதலம்
சிந்தின இரு கழல் சிந்தின தலைமுடி
சிந்தின உடல் உயிர் சிந்து எரி நரகு உற

#174
தப்பு இல களிறுகள் தப்பு இல புரவிகள்
தப்பு இல அபயவர் தப்பு இல தலையவர்
தப்பு இல குருசிலர் தப்பு இல அனையவர்
தப்பு இல எமது இறை தப்பு இல அமர் செய

#175
வானவர் அனைவரும் அலை மலி உலகு உள
ஏனையர் அனைவரும் இதயம் உள் வெரு உறீஇ
ஆனவை அறிதலொடு அளவு_இல இறையவன்
மேல் நிவர் அரு மிடல் விழைவொடு புகழுவார்

#176
வில்லொடு வயவரும் மிடல் இடும் அமர் அலது
எல்லொடு பிரிகு இல இரவியும் அமர் செய
வல்லொடு தவிரின சில உயிர் மடி தர
கல்லொடு மழை பொருது இறையது கதம் என

#177
கைவரும் ஒரு சிலை கனை எழ வளை முகத்து
ஐவரும் ஒரு பகல் அழியின பினர் இனி
மொய் வரு சினமொடு முதலவன் அமர் செயின்
உய்வரும் எவர் என வெரு உறீஇ உருகுவார்

#178
வலியவர் பகை முனர் மடிவு இலர் உளர் எனின்
மெலியவர் எதிரினும் வெகுளிய பல நவை
மலி அவர் எனின் இறை வய அமர் சின முனர்
பொலி அவர் எவர் என அளவு இல புகழுவர்

#179
ஊன் முகம் செறித்த வெம் போர் உடன்று இவை அனைத்தும் செய்தோன்
வான் முகம் செறித்த வாழ்க்கை வகுப்ப ஈங்கு இளவலாக
தேன் முகம் செறித்த பைம் பூம் திரு முகை முகத்தில் தோன்றி
தான் முகம் செறித்த அன்பின் தகவு உகும் இவன் தான் என்றான்

#180
புண் கனிந்து ஆற்றினால் போல் புன்கண் நீத்து உவப்ப சூசை
பண் கனிந்து இசைத்ததே போல் பாகினும் இனிய சொல்லால்
கண் கனிந்து உவப்ப தெள் ஆர் கதிர் கிழி பொறித்ததே போல்
விண் கனிந்து ஆய காதை விரித்து அடி பணிந்தான் வானோன்

#181
நாமம் சால் உயர்ந்த வீர நாயகன் எளிய கோலம்
காமம் சால் உருத்த அன்பில் கனிந்து எடுத்து உதித்த பாலால்
வாமம் சால் பொறித்த பைம் பூ மலர் அடி வணங்கி உள்ளத்து
ஏமம் சால் இன்பம் மூழ்கி இருவரும் வியப்பின் மிக்கார்

#182
மரு மணி தொடை யாழ் ஏந்தி மரகத மணி தாள் வைத்த
பரு மணி காந்தள் கையால் பயிர் அளி கிளி போல் கீதம்
தரு மணி நரம்பின் மேல் எண் தரும் இசை கிளப்ப வானோர்
திரு மணி சாயல் தாய் தன் சிறுவனை பாடினாளே

#183
மருள் தரு வலி உருவே மருள் அறு சின உருவே
அருள் தரு தயை உருவே அளவு அறு திரு உருவே
தெருள் தரு கலை உருவே செயிர் அறு மனு உருவே
பொருள் தரு மணி உருவே பொழி மண அடி தொழுதேன்

#184
உரை இல கலை நிலையே உயர் அறம் அடை உரையே
கரை இல படர் கடலே கதி உயிர் பெறு கரையே
வரை இல சுக நிலையே வளர் தவம் அடை வரையே
புரை இல மனு_மகனே பொதி மலர் அடி தொழுதேன்

#185
மரு மலி மலர் நிழலே மறை மலி உயர் பயனே
திரு மலி கர முகிலே சிவம் மலி தனி முதலே
இரு மலி உலகு உளரே இணரொடு தொழும் அடியே
குரு மலி அற நெறியே கொழு மலர் அடி தொழுதேன்

#186
காய் முகத்து உறை நீர் போலும் கங்குலின் விளக்கு போலும்
நோய் முகத்து உலன்ற நெஞ்சார் நுனித்து எழ இவை அங்கு ஆகி
சேய் முகத்து உயிரின் கான்ற செழும் கதிர் தெளிப்ப மாந்தி
போய் முகத்து எதிர்ந்த நாடு புக்கு நீள் நெறியே போனார்

#187
ஒழித்து என சுடர் நீர் மூழ்க உலகு இருள் போர்ப்ப கஞ்சம்
தெழித்து என கதவு அடைப்ப செழும் பொழில் பறவை ஆர்ப்ப
விழித்து என கண்களாக மீன் நலம் வானம் பூப்ப
கழித்து என நெடும் செலவு அப்பால் களரிமாபுரத்தில் சேர்ந்தார்
மேல்

@16 சேதையோன் வெற்றிப் படலம்


#1
கிணை நிலை முரசம் ஆர்ப்ப கீத யாழ் தெளிப்ப வேளில்
பிணை நிலை கரிகள் சீற பிரி நிலை கறவை ஏங்க
பணை நிலை புரவி ஆல படர் ஒலி களரி மூதூர்
திணை நிலை புறத்தில் அன்னார் சிறந்த மண்டபத்தில் நின்றார்

#2
தாள் உறு வருத்தம் ஓம்பி தலை விரி கதலி முற்றி
நீள் உறு கனிகள் மாந்தி நெடும் பசி பரிவும் ஆற்றி
வாள் உறு கதிரால் எங்கும் மல்கிய இருளை போழ்ந்து
கோள் உறு திங்கள் வான் மேல் குளிர் முகம் காட்டிற்று அன்றே

#3
கோள் கடைந்து அழுத்தினால் போல் கொழு மணி அழுத்தி வைத்த
தாள் கடைந்து அழுத்தி பைம்பொன் தவழ் கதிர் பவள தூணில்
வாள் கடைந்து அருந்தினால் போல் மதி சொரி பசும் பால் கற்றை
பீள் கடைந்து அழுத்தி பாயும் பெரும் கதிர் சூசை கண்டான்

#4
மணி நிலை புரத்தின் வாயில் மணி கதிர் தூணும் நிற்ப
அணி நிலை பவள தூண் மேல் அவிர் மணி பாவை நின்று
பணி நிலை பசும்பொன் காளம் பதி மணி தீபமோடு
துணி நிலை பசும் பூம் காந்தள் துணை கையில் தாங்க கண்டான்

#5
கதிர் எழும் உருவின் நின் கபிரியேல்-தன்னை நோக்கி
பொதிர் எழும் பவள தூண் மேல் பொன் மணி தீபம் காளம்
எதிர் எழும் அணி பொன் பாவை ஏந்தியது உரைமோ என்ன
பிதிர் எழும் கதிரின் வானோன் பிழி மொழி பிலிற்றி சொல்வான்

#6
வான் முழுது இறைஞ்சு நாயகன் வலிமையின் உருவமாக
தேன் முழுது உமிழ் பூம் தண் தார் சேதையோன் மறை பகைத்த
ஊன் முழுது உடன்ற வேலார் ஒருங்கு அழிந்து அற வெம் போரில்
வேல் முழுது இல கை கொண்ட விளக்கும் காளமும் இது என்றான்

#7
வான் சுவை தகவின் தேவ வாழ்த்து இரு செவியின் வாயால்
தான் சுவைத்து அல்லது அல்லல் தரும் பசி ஆற்றா நீரான்
ஊன் சுவைத்து உடன்ற போரில் உற்றது சொல்-மின் என்ன
தேன் சுவைத்து உமிழ் தீம் சொல்லால் செப்புதலுற்றான் வானோன்

#8
சொல் வழங்கிய தகுதியால் சுருதி நூல் வழங்க
செல் வழங்கிய துளியினும் கொடையொடு சினந்த
வில் வழங்கிய விசய மா சோசுவன் வென்ற
எல் வழங்கிய இரு முடி அரசர் எண் அரிதே

#9
சாரன் ஆப்பகன் தாப்புவன் பெத்திலன் தாபிர்
தோரன் யாக்கனன் சுடர் முடி இலேபுவன் எரிக்கோன்
தேரிசானொடு தேனகன் காசரன் உபரன்
ஏரிமான் அவன் ஏருசலன் எரிதன் எரிமான்

#10
ஏதில் ஏபிரன் இலக்கனன் எகிலன் சிமோரன்
காதன் ஆயரன் கலகலன் காதரன் உதுலன்
மாதன் ஆசுரன் மச்சதன் அக்கிசன் மகத்தன்
ஓது பேர் உள முப்பதோர் அரசர் வென்று ஒழித்தான்

#11
ஒழிந்த மாற்றலர் உறைந்த பல் உழி-தொறும் உறைந்து ஆண்டு
இழிந்த மாரியின் இரும் திரு யூதர்கள் பின் நாள்
விழிந்த தேவரை மேவலின் அறமொடு விரதம்
அழிந்த பான்மையால் அடல் அழிந்து ஒளி அழிந்து அழிந்தார்

#12
அறம் அகற்றினார் அற பயத்து ஆண்டவன் அளித்த
திறம் அகற்றினார் சிதைவுற அறிவுறீஇ கொடிய
மறம் அகற்றினார் வணங்கிய இறைவனும் சிறுமை
புறம் அகற்றினான் பொருவு_இல வலி திறம் விளங்க

#13
ஆளும் கோன் இல அடல் படை வீரரும் இல எ
நாளும் கோடிய கோல் பொறை சுமந்து இறை பிறர்க்கு
நீளும் கோடணை நிந்தையோடு அழிவு உடை குலத்தோர்
மீளும் கோது அறு மிடலினோன் உழுநனை தெரிந்தான்

#14
ஓதை ஓங்கிய களத்து நெல் தெளித்து எடுத்து உறைந்த
சேதையோன்-இடை சென்ற வான் தூது உமை பகைத்த
கோதை வேலினர் கொல்ல வெம் போர் அமைக என இ
பேதையோ பகை பெயர்த்து அட என அயிர்ப்புற்றான்

#15
அரிய ஓர் தொழில் ஆண்டவன் ஏவிய காலை
உரிய ஓர் தகவு உளத்து இடும் தகுதியால் ஊக்கம்
புரிய ஓர் மத புகர் முகம் என எழுந்து ஐயம்
பரிய ஓர் குல படை முகம் பண்ணுக என்றான்

#16
வேல் முகந்து இவர் வெம் சமர்க்கு அமைகுவர் என்னா
மீன் முகந்து ஒளி விரி மணி முடி பல அரசர்
ஊன் முகந்த கோட்டு உவா பரி தேர் பல பண்ணி
நால் முகம் தகு ஞாலமும் நெளி தர திரண்டார்

#17
துதியால் நிகரா வலியான் சுடும் ஏறு வில்லான்
திதி யாவும் எரிந்து கெட தழல் திக்கு கண்ணான்
மதியான் எனும் மா பெயரான் வரையாத எண்ணில்
பதியாத படை கடல் பண்ணி அதிர்ந்து எதிர்த்தான்

#18
மலை ஈன்ற மணி புயம் மா புலி ஈன்ற மார்பம்
கொலை ஈன்ற கரம் கொடிது ஈன்ற அழல் கொடும் கண்
சிலை ஈன்ற சரத்து இடி கொண்டு எரி ஈன்ற சீற்றத்து
அலை ஈன்ற படை திரளோடு அமலேக்கு எதிர்த்தான்

#19
வாளி திரள் ஓங்கிய தூணி வளர்ந்த தோளார்
கூளி திரளோ அடு கூற்றது தோழர்-கொல்லோ
யாளி திரளோ அவிர் கீழ் திசை யாவும் ஆளும்
ஓளி திரளோரும் ஒருங்கு திரண்டு உடன்றார்

#20
தாம கவின் இ முடியாரொடு சாய்ந்த காலை
தூம கண் எரித்து அன தானைகளோ துளித்த
காம கடம் ஆர் கரியோ பரியோ கவின் கொள்
சேம கடி தேர் திரளோ எவர் செப்ப வல்லார்

#21
கரி ஏகுக ஏகு இல கால் கடல் தானை காலாள்
வரி ஏகுக ஏகு இல வாய்ந்து எழு தேர் தடம் தேர்
கிரி ஏகுக ஏகு இல கேழ் கிளி வாசி பாயும்
பரி ஏகுக ஏகு இல தோல் படர் வெள்ளம் மட்டோ

#22
நாட்டம் கண் இமைப்பின் நடிப்பு நடத்து பாய்மா
கூட்டம் கதி கொண்ட குர துகள் கோ விசும்பின்
மோட்டு அம் கண் ஒளிக்கும் எனா மதம் முற்று யானை
ஈட்டம் கட மாரி வழங்க முன் ஏக விட்டார்

#23
கார் வென்றன போர் முரசு ஆர்ப்பு ஒலி காள கார் பெய்
நீர் வென்றன தோல் மத நீர் உகள் என்னில் அ சொல்
சீர் வென்றன பாய் பரி மா திசை யாங்கணும் பல்
போர் வென்றன பொன் பொறை வென்ற புயத்து வீரர்

#24
கண் தாவிய தீ கனல் இ கடல் தானை செல்ல
விட்டு ஆவி விழுங்கு அயில் வேல் உடை சேதையோன்-தன்
உள் தாவிய தே அருள் ஊக்கமொடு ஓங்கி ஓர் நான்கு
எட்டாயிரம் சேவகரை கடிது ஈட்டினான்-ஆல்

#25
கவி மதத்து உயர் வலி கடவுள் கண்டுளி
குவி மதத்து இபம் முதல் கொலை படை கடல்
செவி மதத்து உரு உற சிதைத்து நான் வெல
சவி மதத்து எழுந்த இ தானை வேண்டுமோ

#26
சுட்ட அழல் சமர்க்கு உளம் துவள அஞ்சுவார்
விட்டு அழல் சினம் முதிர் வீரர் நிற்ப என்று
இட்டு அழல் கதத்து எழுந்து ஈர்_ஐயாயிரம்
கண் தழல் திறலினோர் கனி நின்றார் அரோ

#27
வாகை மிக்கு ஒளி எனக்கு ஆக மற்று நாள்
வேகம் மிக்கு உறீஇ பகல் வேலை ஆற்று-இடை
தாகம் மிக்கு அக்கனின் தன்மை நீர் உண்பார்
போக மிக்கு அள்ளி உண் பொருநர் சேர்க்க என்றான்

#28
நீர் முகந்து உண்ட மு_நூறு நின்ற பின்
பார் முகம் தொழும் பிரான் பார்த்து நும் பகை
போர் முகம் தகும் செயம் இனி பொலிந்த என்
சீர் முகம் தகும் திறல் சிறப்பிற்று ஆம் என்றான்

#29
வவ்வு ஒரு வேல் இல மாங்குல் நாப்பணில்
கவ்வு ஒரு காளம் மண் கலம் விளக்கு இவை
ஒவ்வொருவற்கு இடுக என உரைத்தனன்
செ ஒரு திருவிளையாட்டு தேவனே

#30
செம் முகம் புதைத்து ஒளி சிகன்ற பின் செயல்
நும் முகம் தரும் என நூறு நூறுமாய்
மு முகம் பிரித்து மூன்று இட்டு மொய் பகை
அ முகம் வாய் விடாது அணுகினார் அரோ

#31
எதிர் எழுந்த பகையவர் உறைந்த இடை இவர் எழுந்து அரவம் இல உறீஇ
கதிர் எழுந்த சுடர் ஒளி மறைந்து பிசை கவழுகின்ற பல கலமொடு
பொதிர் எழுந்த இருள் தலை பரந்து விரி புவி மறைந்த நிசி நடு வலி
முதிர் எழுந்த இறையவன் அறைந்த விதி முறை பணிந்த சமர் முயல்குவார்

#32
வீறு வீரன் இயை தாழி நூறி இடு வேலை வேகமுடன் நூறொடு
நூறு நூறு கலம் நூறி நூறுமொடு நூறு நூறு சுடர் தோன்ற நூறு
ஏறு நூறுமொடு நூறு தாரை ஒலி ஈறு இலாதும் எழ வானின் மேல்
சீறும் ஏறு பல கோடி கோடி அதிர் சீரின் நாலு திசை கூசவே

#33
கனவு உடைந்த மருள் இரவு அடர்ந்த இருள் கலம் உடைந்த ஒலி சுடர் இடும்
வினவு உடைந்த ஒளி மலி மலிந்த ஒலி வெரு இயன்ற இவை மருளி வெம்
மனம் உடைந்த பதை பகை உடன்ற படை வய முழங்கி வளர் முகில் இடி
இனம் உடைந்த படி கரி இனங்கள் உயர் பரி இனங்கள் உயர் ஏறினார்

#34
மருள் முதிர்ந்த வெருவொடு வளைந்த வினை வடு வளர்ந்த பொழுது அது என
தெருள் முதிர்ந்த மறையவர் கலந்தது என செரு முதிர்ந்த பகையவர் தமை
இருள் முதிர்ந்த இரவு எரி முதிர்ந்து சினமொடு துமிந்து கொலை இடஇட
அருள் முதிர்ந்த இறையவன் அனந்த வய அடல் விளங்க அரிது அமர் செய்தார்

#35
இடி எழுந்த ஒலி முகில் எதிர்ந்தது என இழி முதிர்ந்த மத கரி பொர
முடி எழுந்த வரை உயர் பறந்து பொரு முனை இணைந்து இரதம் முனை செய
கடி எழுந்த திரை எறி சினந்த கடல் என எதிர்ந்த கதி இவுளிகள்
துடி எழுந்த பறை ஒலி முழங்க அமர் தொடர் உடன்ற கொலை அளவதோ

#36
பறை முழங்க மத கரி முழங்க வய பரி முழங்க விடு பகழிகள்
உறை முழங்க அவரவர் முழங்க இகல் உழவர் என்று தமர் ஒழி தர
நிறை நுகர்ந்த மது வெறி முதிர்ந்த நெறியிலர் உடன்ற அமர் நிகர் என
பிறை நுகர்ந்த இருளொடு மயங்கி அவர் பெரிது உமிழ்ந்த உயிர் அளவதோ

#37
வண்டு பட்டன இபங்கள் பட்டன அயங்கள் பட்டன வளர்ந்த தேர்
துண்டு பட்டன கரங்கள் பட்டன துமிந்து பட்டன பதங்கள் திண்
தண்டு பட்டன சிரங்கள் பட்டன சடங்கள் பட்டன தடிந்த வாள்
கொண்டு பட்டனர் குணுங்கர் பட்டன குணுங்கு பட்டில நயங்களே

#38
உழை இனங்கள் தமை அட எதிர்ந்த வய உகிர் உடன்ற வரி எனவும் முள்
கழை உலர்ந்த வனம் இடை நுழைந்து நுகர் கனல் உடன்ற கதம் எனவும் எமன்
மழை நிகர்ந்த கணை கனை மலிந்த வசி வசி முனிந்த அயில் நுழை இடும்
புழை அகன்ற வழிவழி சிவந்த புனல் புறம் மறைந்த மருள் இரணமே

#39
முருடொடு முரசம் ஆதி முனிந்த பல் பறைகள் ஆர்ப்ப
இருள் தொடு நிசியில் ஆதி இறைவனை பகைத்த பாலால்
மருள் தொடு தலைவர் ஆதி மற்றவர் தம்மில் தாம் தம்மை
உருள் தொடும் இரதம் ஆதி உள படை சிதைத்து மாய்த்தார்

#40
கூன் பிறை எயிற்று மா போல் கொற்றவர் இருவர்-தம்மை
தேன் பிறழ் அலங்கல் மார்பின் சேதையோன் என்ன எண்ணி
வான் பிறை உறழ் வில் வாங்கி மறம் கொடு மயங்கி தம் மேல்
ஊன் பிறழ் பகழி மாரி உதிர்த்து அரிது அமரின் நேர்ந்தார்

#41
கடு உண்ட எண்_இல் பல்லம் கதம் உண்ட அமலேக்கு எய்தான்
கடு உண்ட எண்_இல் பல்லம் கான்று அவை மதியான் காத்தான்
வடு உண்ட பிறையின் வாளி மறம் உண்ட மதியான் கோத்தான்
வடு உண்ட பிறையின் வாளி வகுத்து அவை அமலேக்கு ஈர்ந்தான்

#42
பொறி பட பகழி மாரி போக்கினான் அமலேக்கு அற்றை
பொறி பட பகழி மாரி புகுத்திய மதியான் தீர்த்தான்
கறி பட பகு வாய் புங்கம் கதத்துடன் இவனும் ஏவ
கறி பட பகு வாய் புங்கம் கடைத்து அவை அவனும் காத்தான்

#43
நச்சு அரவு ஒக்கும் வாளி நடுக்குற மதியான் தூவ
நச்சு அரவு ஒக்கும் வாளி நவிழ்த்து அவை விலக்கி மீட்டு
மு சிரம் மொய்க்கும் வாளி முடுக்கினான் அமலேக்கு அற்றை
மு சிரம் மொய்க்கும் வாளி முனிந்து விட்டு அறுத்தான் முன்பான்

#44
ஓர் இரு முகிலின் ஒப்ப ஒலித்து இரு தடம் தேர் ஓடி
பேர் இரு அசனி ஒத்தார் பெரும் சினத்து உடற்றி ஆர்ப்ப
நேர் இரு வய வில் கோலி நேர் அலால் தமில் தாழ்வு இன்றி
ஈர்_இரு திசைகள் கூச இயன்ற போர் உரைக்கும்-பாலோ

#45
பை மணி தேரின் சித்தி பகழியால் அமலேக்கு ஈர்ந்தான்
மை மணி தேரின் சித்தி வாளியால் மதியான் அற்றான்
செய் மணி தேரின் சாரன் சிரம் கவிழ்த்து இவனும் கொய்தான்
ஐ மணி தேரின் சாரன் அகலம் அற்று அவனும் மாய்த்தான்

#46
சாரர் சார்பு இழந்த வாசி தழல் பட தவறி தாவ
தேரர் தேர் உளத்தின் சீறி சீயமும் உருமும் தீயும்
நேரர் நேரலர் இலாதும் நெடு மருள் அறாதும் வீர
போரர் போர் இயற்றும் ஆறு புகன்றிடல் அரிய ஆறே

#47
எரிக்கு ஒன்றும் சின கண் சேப்ப இரைத்த வில் குனிய வாங்கி
கரிக்கு ஒன்றும் கதத்த வீரர் கடுத்து இளம் பிறையின் வாளி
பரிக்கு ஒன்றும் ஒன்ற ஏவி பக படு பரிகள் வீழ்க
அரிக்கு ஒன்றும் சீற்றத்து ஒண் தேர் அசல மேல் இருவர் காய்ந்தார்

#48
நிலை உண்ட தேரில் செம் தீ நிலை உண்ட மதியான் சீறி
சிலை உண்ட பகழி போக்கி திறத்து உண்ட கவசம் ஈர்ந்தான்
மலை உண்ட கவசம் ஈர்ந்தான் மறம் உண்ட விழி தீயோடு
கொலை உண்ட கணை ஒன்று ஏவும் கூற்று உண்ட அமலேக்கு என்பான்

#49
வேல் நிகர் வடி வை வாளி வில்-இடை அவன் கோத்து எய்ய
வான் நிகர் விலங்கல்-தன்னை வான் உரும் அறுத்தால் போல
தோல் நிகர் அமலேக்கு ஆகம் துளைத்த கோல் உருவி அப்பால்
கால் நிகர் மூடர்க்கு ஓதும் கலை என போயிற்று அன்றே

#50
தனம் பழுத்து அமலேக்கு ஏங்கி தன் உயிர் உயிர்க்கும் வேலை
சினம் பழுத்து உயிரை தாங்கி திங்களின் பாதி கோத்து
கனம் பழுத்து இழி ஏறு ஒத்த கணையொடும் உயிரும் போக்கி
மனம் பழுத்து எதிர்ந்தோன் சென்னி வலித்து அறுத்து இருவர் மாய்ந்தார்

#51
மா இரவு இடையில் தம்மின் மயக்கொடு வீரர் ஓர் நூறு
ஆயிரரோடு நால்_ஐயாயிரர் அன்றி அங்கண்
தூய் இரவு அரசின் சூழ்ந்த சுடிகையோர் மடிந்து மூ_ஐயாயிரர்
இன்னும் நிற்ப அவிர் சிகன் முளைத்தது அன்றே

#52
மண் மா மகள் போர்த்த இருளின் போர்வை வாங்கிட தன்
ஒண் மா ஒளி கரத்தை நீட்டி வெய்யோன் உதித்தன-கால்
கண் மா இருள் கொண்ட மயக்கம் தீர்ந்த கடும் பகைவர்
விண் மா இறையோன் தன் வலிமை கண்டு வெருவுற்றார்

#53
தீ வை வேல் ஆடா வெருவி ஏங்கி திறம் குழைந்து அ
மூ_ஐயாயிரரும் ஓட யூதர் முடுகி அவர்
மீ வை வாளி தொடுத்து ஒருங்கு மாய்த்தார் வியந்து எவரும்
நா ஐ_ஐ_இரட்டி அடையா வண்ணம் நடுக்குறவே

#54
ஏம போர் களம் இது என்ன இ ஊர் களரி என்றார்
தாம தீபமொடு காளம் தந்த சயம் அது ஓர்
வாம பாவை அவை ஏந்தி எந்தை வளம் மறவா
நாம திறல் காட்ட வைத்தார் என்றான் நவி வானோன்

#55
மாலை தூண் உச்சி விரித்த நீல மணி படத்து
வேலை தாளம் என விளக்கு மீன் பூம் பந்தர் கீழ்
பால் ஐ கதிர் மதியம் தீபம் ஏந்த பணி தூண் மேல்
கால் ஐ கடவுள் திறல் கண்ட சூசை தகவுற்றான்

#56
மாற்றார் உடல் படத்தில் அவர் தம் கையால் வடி உதிரத்து
ஏற்றார் அறிந்து ஏற்ற அரிது உன் ஆண்மை எழுதிய பின்
தேற்றார் என வருந்தி துன்பத்து இன்று உன் திரு உடலத்து
ஆற்றா அன்பின் நிலை வரைந்தாயோ என்று அடி பணிந்தான்

#57
தணியா வலி திறத்தை உலகம் கண்டு தாள் துதிப்ப
மணியால் தவழ் சுடர் செய் தூண் மனன் ஆர வைத்து உயர்த்தார்
கணியா நயன் செய் உன் ஆர்வம் காட்டும் கம்பம் என
அணி ஆர் திரு மேனி அணிந்தாயோ என்று அடி பணிந்தான்

#58
வினை அம் கடல் நீந்தி வழி என்று அறியார் மிளிர் பைம்பொன்
மனை அம் கதி அடைய நாட்டி வைத்த மணி தூணே
நனை அம் திரு அடி நான் பிரியா வாழ்க நறும் பைம் பூ
அனை அம் கதிர் மேனி அணிந்தாயோ என்று அடி தொழுதான்

#59
தான் ஓர் களி பெருக்கின் பலவும் சூசை சாற்றிய பின்
வானோர் அவை கேட்ட களிப்பின் பொங்கி மணி பண் யாழ்
தேன் ஓர் இசை தளிர்ப்ப தாமும் பாடி செயிர் நீக்க
ஈனோர் உடல் கொண்டான் நெடிது வாழ்த்தி இசை செய்தார்

#60
சிறந்த திரு புகழ் ஆர் கீதம் கேட்ட செழும் தவத்தோன்
திறந்த மணி கதவம் புக்கு அம் வீட்டில் சென்றவன் போல்
மறந்த மெய் உருக மங்குல் எல்லாம் வழி வருத்தம்
துறந்த துயில் ஆக தொடுத்த தேவ துதி விள்ளான்
மேல்

@17 காசை சேர் படலம்


#1
பள்ளி அம் தாமரை பறவை ஆர்ப்பு எழ
தெள்ளி அம் வைகறை தெளிப்ப வாரணம்
வெள்ளி அன்று உதித்து இருள் படத்தை மேதினி
தள்ளி அம் முகம் தர தடம் கொண்டு ஏகினார்

#2
புதை ஒளி பவள கால் பொலிய நீட்டிய
ததை ஒளி மரகத படத்து தைத்து இருள்
வதை ஒளி பல மணி மான வாய் எலாம்
துதை ஒளி பல மலர் சோலை வண்ணமே

#3
திறை சுமந்து அடி தொழும் தெவ்வர் போல் மது
நறை சுமந்த இணர் குடம் சுமந்த நாள் மலர்
நிறை சுமந்த இரும் பொழில் நெரிந்த புள் இனம்
பறை சுமந்து அடித்து என பாடும் ஓதையே

#4
தேன் மொழி கிள்ளையும் செழும் பொன் பூவையும்
பா மொழி கையிலும் பண்செய் தேனொடு
பூ மொழி தும்பியும் மருளி பொங்கு ஒலி
நா மொழி கீதம் போல் நரல போயினார்

#5
அள் இலை கமல மேல் அணி சங்கு ஈன்ற முத்து
ஒள் இலை குவளை கண் விழித்து உகுத்த தேன்
நள் இலை புறத்து இழீஇ நழுவ புள் எழ
கள் இலை கொழும் தடம் கடந்து போயினார்

#6
நவி வரி நகுலமும் நாவி பிள்ளையும்
கவி வரி நிபுடமும் கான கோழியும்
சவி வரி நவிரமும் களப தந்தியும்
குவி வரி மலை சரி குதிப்ப போயினார்

#7
மட்டு இடை அலந்தையும் மலர் பெய் சோலையும்
நட்டு இடை அணி வயல் நாடும் குன்றமும்
நெட்டு இடை நெறிகளும் நீந்தி கான் பொழி
மொட்டு இடை நிழல் பொழில் முழை கண் எய்தினார்

#8
நண் பகல் நெற்றி வான் நடக்கும்-காலை ஆழ்
மண் பக ஊன்றி மேல் மலர்ந்த பூம் சினை
செண்பகம் நிழற்றிய மணல் தண் திண்ணை மேல்
ஒண் பகல் ஒத்து ஒளிர்ந்து உவந்து வைகினார்

#9
அணி முகத்து அளி இனம் அலம்பி யாழ் செய
மணி முக குயில் இனம் மகிழ்ந்து பாட ஒண்
பிணி முகத்து இனம் சிறை பிரித்து அங்கு ஆடலின்
பணி முக கதலி நல் பழங்கள் மாந்தினார்

#10
தேன் சினை மலர் மது தின்ற வண்டு அருகு
ஆம் சினை ஒசிந்து இனிது அலம்பும் தன்மை போல்
தாம் சினை மலர் தொடை தாளில் பெய்து பைம்
பூம் சினை முக திரு புதல்வன் வாழ்த்தினார்

#11
நூல் நிலம் கடந்த அ நுண் புகழ்க்கு இசை
மீன் நிலம் திசையினோர் விரும்பி பாடலின்
வான் நிலம் கலந்து உயர் மதிளின் பொன் முகம்
கான் நிலம் கொடியினோன் கனி கண்டான் அரோ

#12
தேன் நிரைத்து அலர்ந்த பொன் குன்ற சென்னியின்
மேல் நிரைத்து ஒழுகிய வெள்ளி ஆறு என
வான் நிரைத்து உயர் மணி மாட நெற்றி கண்
கோல் நிரைத்து அசை கொடி கோட்டம் யாது என்றான்

#13
ஆசை கொண்டு அறைந்த மாற்றம் அறஞ்சயன் என்னும் வானோன்
பூசை கொண்டு இறைஞ்சி கேட்டு பொழி மது உரையின் சொல்லும்
மாசை கொண்டு ஒளிர் குன்று அன்ன வயங்கும் அ நகரை முன்னோர்
காசை என்றனர் முன் நாள் என் காவல் ஊர் அ ஊர் என்றான்

#14
தோடு உண்ட மணி பைம் பூம் தார் சூசையே நீயும் திங்கள்
கோடு உண்ட பதத்தினாளும் குழவியாய் பேணும் நாதன்
ஈடு உண்ட திறமும் பெண்மை இன்பம் என்று இருட்டும் ஆசை
கேடு உண்ட திறமும் காட்ட கிளைத்தது ஈங்கு உரைப்பல் கேள்மோ

#15
சேமம் சால் திறத்து நாதன் சிறுமையின் பெருமை காட்ட
வாமம் சால் மணியின் சென்னி மயிர் புலத்து ஒத்தி தந்த
தாமம் சால் திறத்தின் ஆண்மை தாங்கிய சஞ்சோன் என்பான்
நாமம் சால் வழங்க தோல்வி நவை பெறா வரம் பெற்று உற்றான்

#16
வல் அரி குழவி போன்றே வய தொடு பிறந்த தோன்றல்
செல் அரிது அடலோடு ஓங்கி சிறுவன் ஆய் சிறுமை இன்றி
புல் அரிது அகன்ற கானில் புடை துணை இன்றி போகில்
கொல் அரி எதிர்ப்ப கையால் கொறி என வகிர்ந்து கொல்வான்

#17
தனி திரு தகவோன் தந்த தனி திறல் அவன் மாற்றார் மேல்
இனி திருத்திடல் நன்று என்ன ஈங்கு உண்ட பீலித்தேயர்
பனி திரு தடத்து தந்த பழ மறை பகைத்தார் என்ன
முனி திரு திறத்த சஞ்சோன் மொய் செய அளவு_இல் மாய்ந்தார்

#18
கதிர் படும் வயலில் செந்நெல் காய்த்தன நாளில் ஓர் நாள்
எதிர் படும் நரிகள் மு_நூறு இவன் பிடித்து இரண்டாய் சேர்த்து
பொதிர் படும் வாலில் வாலை புணர்த்தலோடு எரி தீ பந்தம்
பிதிர் படும் பொறிகள் சிந்த பிணித்து இகல் நாட்டில் விட்டான்

#19
எண் திசை சம்பும் ஓட எண் திசை பொறி தீ சிந்த
மண்டு இசை வளியும் வீச மண்டு இசை கொழுந்து தீயால்
விண் திசை மலர் தண் காவும் விண் திசை தவழ் நெற்போரும்
பண்டு இசை பகைவர் நாடும் பழி பழுத்து எரிந்தது அன்றோ

#20
முனி பட்டார் பீலி தேயர் மொய் படை இன்றி ஓர் நாள்
தனி பட்டான் சஞ்சோன் என்ன தாம் வய அரிகள் போல
இனி பட்டான் என்று சீறி எண்_இலார் அவனை சூழ்ந்து
தொனி பட்டு ஆர்த்து அரிய போரை தொடங்கினார் வயிர தோளார்

#21
வீங்கினான் வெறும் கை சஞ்சோன் விளிந்த வேசரி வாய் என்பும்
வாங்கினான் வயிர தண்ட வய படை என்ன சீறி
ஓங்கினான் அரும் போராக ஒன்னலர் படைகள் எல்லாம்
தாங்கினான் அரி ஏறு அன்ன தாக்கினான் பகைவர் மாள்க

#22
அதிர்த்தனன் அதிர வானம் ஆர்த்தனன் தனி வல் மொய்ம்பான்
விதிர்த்தனன் அரிய தண்டம் வீசினன் எண்_இல் ஆவி
உதிர்த்தனன் உதிர வெள்ளம் ஓட வெம் கத கண் வாயும்
கதிர் தழல் ஓட ஓடி கத கனத்து உருமின் மிக்கான்

#23
இந்து இணை குனி வில் சிந்த ஈர்க்கு அடை பகழி சிந்த
கந்து இணை கரங்கள் சிந்த கரிய நெய் மூளை சிந்த
பந்து இணை சிரங்கள் சிந்த பல் உயிர் உடலம் சிந்த
சிந்தனை எவரும் சிந்த சிந்தின குருதி சிந்தே

#24
ஆயின தன்மைத்து அங்கண் ஆயிரம் உருமின் பாய்ந்து
பாயின இடங்கள்-தோறும் பரப்பினான் பிணத்தின் குப்பை
வீயின பகைவர் அங்கண் விழுந்த ஆயிரரும் அன்றி
ஓயின அமர் விட்டு ஓடி உடல் குறை இலரும் உண்டோ

#25
புற துணை கடந்த வல்லோன் போர்க்களத்து ஒருவன் நின்று
திற துணை வரை தோள் வீங்கி திசை திசை சுளித்து நோக்கி
மற துணை துணை என்று உற்ற வஞ்சகர் ஓட கண்டே
அற துணை பெற்றால் பெற்றது அழிவு உண்டோ இடையில் என்றான்

#26
கார் திரள் அனைய ஆர்த்த கதத்தொடு கனலும் விம்மி
போர் திரள் இயற்றினான் உள் புலத்து எழும் தாகம் ஆற்றா
சூர் திரள் பயத்த தண்டம் சுனையின் ஊற்று என என்பின் வாய்
நீர் திரள் ஓட சால்பின் நிமலனை வாழ்த்தி உண்டான்

#27
மலை மூழ்கும் திண் தோளான் மன்னார் வைகும் அ நகருள்
அலை மூழ்கும் சுடர் போய் ஓர் நாள் புக்கான் என்று அறிந்து அன்னார்
விலை மூழ்கும் மணி கோட்ட கதவம் பூட்டி விடிந்தன பின்
கொலை மூழ்கும் உயிர் பழியை கொள்வது என்ன கூர்த்து உவந்தார்

#28
தன் தொழில் செய்து ஆயின பின் அன்னான் போக தாம மணி
கல் தொழில் செய் வாய் கதவம் அடைத்தது என்ன கண்டு ஒன்னார்
புன் தொழில் செய் வலி இதுவோ என்ன நக்கு பொன் கதவம்
மல் தொழில் செய் புயத்து எடுத்து அம் மலை மேல் உய்த்தான் மயிர் திறத்தான்

#29
போர் முகத்து நிகர் இன்றி பொலிந்த வெற்றி புனைந்து உயர்ந்தோன்
கார் முகத்து மணி கூந்தல் வலை பட்டு ஓர் பூம் கவின் நல்லாள்
ஏர் முகத்து வயம் குழைய சிதைந்த தன்மை இனி கேட்டோர்
பார் முகத்து பெண்மையின் ஓர் பழியும் கேடும் இலை என்பார்

#30
கடம் புனைந்த வளை உருட்டும் பெரும் சீர் செங்கோல் கடி வளமும்
சடம் புனைந்து பெண் ஆசை சழக்கில் கோலும் என்று உணரான்
விடம் புனைந்த நலம் பொறித்த விலைமாது என்னும் தாலிலை ஓர்
நடம் புனைந்த அரிவையின் மேல் நவை உற்று எஞ்ச நசை வைத்தான்

#31
காது அளவு நீண்டு உலவும் களி கண் மாமை கனிந்து உண்ட
போது அளவு காதல் உளம் கோட்டி அன்னாள் புணரியின் ஆழ்
கோது அளவு மனம் மூழ்கி நிலையும் கொள்ளா குழைந்து அலை தன்
தீது அளவு மனம் மயங்கி சிறைப்பட்டு அ தீ சிறை விள்ளான்

#32
அண்ணி பற்று அன்பு அறிந்த அரிகர் பொன் சால்பு அளித்து அன்னாள்
நண்ணி பற்று அரும் திறத்தின் நிலை கேள் என்ன நனி கேட்டார்
எண்ணி பத்து அம் கை இடும் எல்வை நட்பும் இயல் பிறப்பும்
கண்ணி பற்றாது என்னை கடிதின் செய்யாள் பெண் பிறந்தாள்

#33
கோல் கலந்த கண் விருப்பம் குளிர காட்டி கொல் அகத்தாள்
பால் கலந்த நஞ்சு அன்ன பணி தீம் சொல்லால் பகைக்கு எஞ்சா
மேல் கலந்த வலி நிலை எங்கு என்றாள் காதல் வெறுப்பு ஆற்றா
மால் கலந்த அன்பின் தலை மயிர்க்கண் என்றான் மதி கெட்டான்

#34
முதிர் சூலும் பெண் காதின் மொழியும் நில்லா முறையில் அவள்
கதிர் சூழும் உதயத்து அன்று ஒன்னார்க்கு எல்லாம் காட்டிய பின்
பொதிர் சூழும் பின் இரவில் இன்பத்து அன்னாள் பூ மடி மேல்
எதிர் சூழும் கேடு உணரான் துஞ்ச மயிர் ஈர்ந்து இமிழ்த்தனரே

#35
மின்னினால் என எரி கண் விழித்து யாக்கை விடல் தேற்றான்
உன்னினாள் கொலை நட்பில் வஞ்சித்தாள் என்று உளத்து எஞ்சி
துன்னினார் பழம் பழியார் உவப்பில் ஆர்த்து சுடு நகை சொல்
பன்னினார் விழி குடைந்தார் பல் நாள் கோற சிறை வைத்தார்

#36
பல் நாளில் பல் நகையில் பழியின் ஆசை பற்று அமர்ந்த
பின் நாளில் பகைத்தன நாடு ஒருப்பட்டு ஒன்னார் பெரிது உவந்து
முன் நாளில் செய்த ஓர் ம