தக்கயாகப்பரணி


@1 கடவுள் வாழ்த்து

#0
உரக கங்கணம் தருவன பண மணி உலகு அடங்கலும் துயில் எழ
வெயில் எழ உடை தவிர்ந்த தன் திரு அரை உடை மணி உலவி ஒன்றோடொன்று அலமர விலகிய
கரதலம் தரும் தமருக சதி பொதி கழல் புனைந்த செம் பரிபுர ஒலியொடு
கலகலன் கலன்கலன் என வரும் ஒரு கரிய கஞ்சுகன் கழல் இணை கருதுவாம்

#1
புயல் வாழ நெடிது ஊழி புவி வாழ முதல் ஈறு புகல் வேதநூல்
இயல் வாழ உமை வாழ்வது ஒரு பாகர் இரு தாளின் இசை பாடுவாம்

#2
குல நேமி ரவி போல வலம் நேமி தனி கோலு குலதீபனே
நில நேமி பொலன் நேமி அளவாக உக கோடி நெடிது ஆளவே

#3
சத கோடி இத் தாள சதி பாய முக பாகை குதி பாய் கடாம்
மத கோடி உலகு ஏழும் மணம் நாற வரும் யானை வலி பாடுவாம்

#4
நக கோடி பல கோடி புலிஏறு தனி ஏற நளினாலயன்
உக கோடி பல கோடி குலதீபன் எழு தீவும் உடன் ஆளவே

#5
ஒரு தோகை மிசை ஏறி உழல் சூரும் மலை மார்பும் உடன் ஊடுறப்
பொரு தோகை சுரராசபுரம் ஏற விடு காளை புகழ் பாடுவாம்

#6
கடல் ஆழி வரை ஆழி தரை ஆழி கதிர் ஆழி களி கூர்வதோர்
அடல் ஆழி தனி ஏவு குலதீபன் ந்ருபதீபன் அருள் கூரவே

#7
வழு ஏறு குட கூடல் வட ஆறு வழி மாற மணலால் ஒரோர்
கழு ஏறும் அமண் மூகர் கரு மாள வரும் மீளி கழல் பாடுவாம்

#8
எருதோடு கலையோடு சிலை ஓட மலை ஓட இபம் ஓடவே
விருதோடு பொருது ஏறு புலி நேமி கிரி சூழ விளையாடவே

#9
இறை வாழி தரை வாழி நிரை வாழி இயல் வாழி இசை வாழியே
மறை வாழி மனு வாழி மதி வாழி ரவி வாழி மழை வாழியே

@2 கடைதிறப்பு

#10
தார் மார்பமும் முக விம்பமும் நும் காதலர் தர நீர்
சேர் தாமரை இறையாள் அடி பணிவீர் கடை திற-மின்

#11
கை வைக்கவும் அடி தோயவும் உடன் நின்று கவிக்கும்
தெய்வக்கொடி திசை தைவர நிற்பீர் கடை திற-மின்

#12
வெல்லும் பொருளதிகாரம் அலங்காரம் விளங்கச்
சொல்லும் பொருள் பகரும் குழல் மடவீர் கடை திற-மின்

#13
உருகும் சுரர் உயிர் உண்டன உணர்வு உண்டன ஒழுகத்
திருகும் குழல் அரமங்கையர் திற-மின் கடை திற-மின்

#14
வேல் போல் நிறை பொருது உண்பது மெய்யே உயிர் பொய்யே
சேல் போல் கடை பிறழும் சில கண்ணீர் கடை திற-மின்

#15
வெங்கோல் வர நீர் பெற்ற தலைக்கோல் வர விறல் வேள்
செங்கோல் வர வருவீர் உயர் செம்பொன் கடை திற-மின்

#16
மூவராய் அவரின் முதல்வராய் அதிதி புதல்வராய முப்பத்துமுத்
தேவராயவர்-தம் ராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ

#17
உம்பர் ஆளும் அமராபுரம் தவிர லோகபாலர் எயில் காவல் கூர்
செம்பொன் மாடம் நிரை ராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ

#18
யாவரும் பரவும் இந்த்ரரும் பழைய சந்த்ர சூரியரும் எண் திசைத்
தேவரும் புகுதும் ராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ

#19
பாடியும் பணிந்தும் பரவியும் பண்டை நுங்கள் வட சேடி தென்
சேடியும் தவிர ராசராசபுரி புகுதும் மாதர் கடை திற-மினோ

#20
யாவர் தேவர் இவர்தாம் எனப் பெரிய இருவர் தேவர் இவர் எளிவரும்
தேவர்தேவர்-தம் இராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ

#21
ஈரும் மதியம் என முதிய மதி வெருவி ராசராச நாயகர் முடிச்
சேரும் மதியம் என இளையமதியொடு உறவு உடைய மகளிர் கடை திற-மினோ

#22
போய பேரொளி அடைத்துவைத்த பல புண்டரிகம் இரு பொன் குழைச்
சேய பேரொளி மணிப் பெரும் ப்ரபை திறக்க வந்து கடை திற-மினோ

#23
தாம வில்லு வெறும் ஒன்று முன்னம் இவை சாமனார் கொடிகள் காமனார்
சேம வில் என விசும்புவில் வெருவு தெய்வமாதர் கடை திற-மினோ

#24
மையவாய் அருகு வெளிய ஆய சில கெண்டை புண்டரிக மலரினும்
செய்யவாய் உலகம் உறவு கோள் அழிய நறவு கொள் மகளிர் திற-மினோ

#25
கலக மாரன் வெறும் ஒருவனால் உலகு களவுபோக இரு காலமும்
திலகம் ஆரும் நுதல் அளகபார இருள் அருளும் மாதர் கடை திற-மினோ

#26
எளிவரும் கொழுநர் புயமும் நுங்கள் இரு குயமும் மண்டி எதிரெதிர் விழுந்து
எளிவரும் கலவி புலவி போல் இனிய தெய்வ மாதர் கடை திற-மினோ

#27
உலகு அபாடம் மனு என உலாவுவன ஒழுகு நீள் நயனம் உடைய நீர்
திலக பாடம் இருள் பருக வந்து நிலை செறி கபாட நிரை திற-மினோ

#28
அரனும் ஏனை இமையவரும் உண்பர் என அஞ்சி நஞ்சம் அமுதமும் உன்
திரை மகோததியை விட இருந்து அனைய தெய்வ மாதர் கடை திற-மினோ

#29
மிசை அகன்று உயரும் நகில் மருங்குல் குடி அடி பறிந்தது அழவிடும் எனத்
திசை அகன்றளவும் அகல் நிதம்பதடம் உடைய மாதர் கடை திற-மினோ

#30
மகர வாரிதி மறுக வாசுகி வளைய மேருவில் வட முகச்
சிகர சீகர அருவி நீர்அரமகளிர் நீர் கடை திற-மினோ

#31
வட பகீரதி குமரி காவிரி யமுனை கெளதமை மகரம் மேய்
தட மகோததி இவை விடாது உறை தருண மாதர் கடை திற-மினோ

#32
உருகுவார் உயிர் படு படா முலை உழறுமேல் உலகு இறும் எனத்
திருகு வார் முசி விசி விடாதவர் திற-மினோ கடை திற-மினோ

#33
மந்தமே சில நூபுராரவம் மகிழ்நர் சேகர மதுகரம்
சிந்த மேல் வரு மேகலாரவம் உடைய நீர் கடை திற-மினோ

#34
நாவி மான மணம் கமழ்ந்து இள நவ்வி மான மலர் பெருந்
தேவி மான விமான வாயில் புகுந்த ரம்பையர் திற-மினோ

#35
எளியராம் மிர்த மதனன் ஆள் படை இறைவர் சீறினும் இனி எனாத்
தெளிவர் ஆமிர்தம் மதன நாள் வரு தெரிவைமீர் கடை திற-மினோ

#36
நெளியும் மகர இரு குழையும் இளவெயில் விட நிறையும் மதி இரவும் மழுகி நிலைகெட நகைத்
தெளியும் நிலவு பகலினும் முளரி கெட மலர்த் திலக வதன சுரமகளிர் கடை திற-மினோ

#37
அருகு திசை அருகு கடிதடமும் மிசை வெளி அகலம் அடைய வளர் தன தடமும் அவையவை
திருகு செரு நினைய நினைய நடு இடை இறு திகிரி வரையில் அரமகளிர் கடை திற-மினோ

#38
உலரும் முதுமரம் இளமையும் வளமையும் உயிரும் நிலைபெற ஒளிவிடும் இவர் உரு
உறுதி அமுதினும் இவர் இவர் பிறவியும் உததி இவர்களில் ஒரு மகள் திருமகள்
அலகு_இல் சுர பதி மதனர்கள் அரசு இவர் அவர திகிரியும் அனிகமும் அகிலமும்
அலகு_இல் புவனமும் இவர் இவர் என வரும் அமரர் வனிதையர் அணி கடை திற-மினோ

#39
அடைய அரியன கடை இரு புடையினும் அளவு கெட நிமிர் விழி விடம் அடுதலின்
அமரர் அனைவரும் முனிவரில் அதிகரும் அவனி தலம் உற விழு பொழுது அயில் எயிறு
உடைய கவிர் இதழ் உமிழ் நகை அமிழ்து உயிர் உதவும் உதவியொடு உவமை_இல் இளமையொடு
உரக குல பதி வர அவனுடன் வரும் உரிமை அரிவையர் உயர் கடை திற-மினோ

#40
முடிதும் என மறை முதலிய பரவவும் முறிதும் என நிசிசரர் குலம் இரியவும்
முறிதும் என எழு குலகிரி குலையவும் முறிதும் என எழு புணரிகள் மறுகவும்
மடிதும் என மகிதலம் நிலைதளரவும் மறிதும் என அடி சுர பதி வருடவும்
வரதன் ஒரு தமிழ் முனிவரன் வர வரும் மலய வரை அரமகளிர்கள் திற-மினோ

#41
அலகு_இல் மரகத முறிகளும் வயிரமும் அபரிமிதம் எரி தமனியம் அடையவும்
அரிய தரளமும் அழகிய பவளமும் அரச அரவின சிகையவும் மலை கொடு
கலக மறி கடல் புக விடுவன கதிர் கவடு விடுவன இவருழையினும் உள
ககன தரு வனம் இவர்களும் என வரு கனக வரை அரமகளிர்கள் திற-மினோ

#42
அளக முகில் இரு புடையினும் அதிரவும் அகரு மணம் மிர்கமதமொடு கமழவும்
அதிகம் இடை இடை சில கொடி அசையவும் அமிர்து பொதிவன சில குவடு அசையவும்
இளகு கலவை கொடு எழுதமை சமையவும் எறியும் இரு கடை இன பிணை அணையவும்
இறைவர் கயிலையில் இறைமகளுடன் வரும் இமய வரை அரமகளிர்கள் திற-மினோ

#43
எமது மலை இறை இகல் பொரு சிலை மலை ரவியும் மதியமும் உடன் வலம்வரு மலை
இருளும் இருள் கெட எரி தமனிய மலை ரசத மலை இ மலையில் ஓர் சிறு குவடு
உமது மலை என உயர் கயிலையை இகழ் உரிமை உடை வடவரை அரமகளிரை
உலகு வெயில் கெட இளநிலவு எழ நகும் உதய வரை அரமகளிர்கள் திற-மினோ

#44
மயிலாய் இறக்கின் அயிர்ப்பிக்கும் வறும் கண் என்று வாசவனார்
குயிலாய் இறந்த கதை பாடக் கோலக் கபாடம் திற-மினோ

#45
விண்ணில் பகனார் தாம் துரக்கும் எல்லா இருளும் மீண்டும் தம்
கண்ணில் புகுந்த கதை பாடக் கன பொன் கபாடம் திற-மினோ

#46
புக்கு ஆவுதிகள் பல ஏற்றும் போரில் ஏற்றும் சிரம் ஒருவர்
முக்கால் இழந்த கதை பாட மூரிக் கபாடம் திற-மினோ

#47
ஊத்தைத் தலை நீத்து உய்ந்து ஒழிந்த ஒரு மாமடிகள் ஒரு முருட்டு
மோத்தைத் தலை பெற்றமை பாட மூரிக் கபாடம் திற-மினோ

@3 காடு பாடியது

#48
நெடும் குன்று ஏழும் பிலம் ஏழும் நேமிக்கிரியும் கடல் ஏழும்
ஒடுங்கும் பாகத்து உறை மோடி உறையும் காடு பாடுவாம்

#49
பால் வறந்து கீழ் நின்ற கள்ளியும் பசை வறந்துபோய் மீமிசைச்
சூல் வறந்துபோய் மாக மேகமும் சுண்ட ஈம எரி மண்டவே

#50
பிணம் சுடும் கனலும் இன்றி வெந்து நிலவாய் நிமிர்ந்து பில வாய பேய்
நிணம் கரைந்து உருக நெய்யை நீர் என நினைத்து நாவினை நனைக்குமே

#51
சிரம் தெரிந்தன அறிந்து அறிந்து குவைசெய்து பைரவர்கள் செந்நிலம்
பரந்து எரிந்து பொடிசெய்ய மற்று அவை பரிக்க வந்தவர் சிரிப்பரே

#52
புற்றில்-நின்று எழு புயங்க சூடிகை நெருப்பு விட்ட சிறு பொறி எனப்
பற்றி நின்றன அநந்த மின்மினி இனம் தனித்தனி பறப்பவே

#53
பிணப் பறைக் குரல் உவந்து வந்து சில பேய் துணங்கை இடு-தொறும் இடும்
கணப் பறைக் குரல் படப்படச் சிறிது செவிடுபடும் அமரர் கன்னமே

#54
பள்ளி வேலை விடு கானம் நாடி படை பாடிவீடு கொள் படங்கு எனக்
கள்ளி வேலிகளின் மீது எழப் பல சிலம்பி நூல் கொடு கவிக்குமே

#55
காதுமே இறைவி திகிரி பூதமும் கழுதுமே ககனம் முழுதுமே
போதுமே இரவி புரவி உடுவும் நடு புகுதுமேல் நகுதும் நகுதுமே

#56
யோக முதல் இறைவி கோயில் மிசை நிருதர் யூதம் வர அலகை ஓட்டுமே
மேகம் உருமொடு அற வெற்பும் இறகொடு அற மேலை எயிறு கொடு வெட்டுமே

#57
நீல வரை நிரைகள் போலும் அவுணர் தொகை நிற்குமே இறைவி நிற்குமே
கால இறுதி எரி போல முகில் வயிறு காய வரும் உருமு கக்குமே

#58
ஈரல் சுருள முளி பேய்கள் எரி தலையொடு ஏறு சருகுடன் எடுத்து எழும்
சூரல் நிரைகள் எரி சூளை நிரைகள் என வானின் இடையிடை சுழிக்குமே

#59
பூதம் அலகிலன பொங்கு கழுதிரதம் எங்கும் எழ நடுவு புதைய வந்து
ஓதம் உக இறுதி போத நடுநடுவு முழுகும் எழு கிரியும் ஒக்குமே

#60
யாமும் இமையவர்தாமும் வெருவர ஈம எரி இரவு எரி-தொறும்
தாமும் எரிவன போல எரிவன தாபம் இல சில தீபமே

#61
ஈடுபடும் இறைமகள் பொறாமை-கொல் இது பொறாமை-கொல் இறைவர்-தம்
காடு படு சடையூடும் உருவு கரந்து வருவது கங்கையே

#62
வெம்பு கருநடர் வந்த வனம் எனும் விந்த வனம் என வேவவும்
கொம்பு விடுவன கொங்கு கமழ்வன கொந்து சொரிவன கொன்றையே

#63
கண்டம் மலை வன சண்ட தரு நிரை கந்துள் எழ மிசை கதுவவும்
சண்ட எரியினுள் நின்று குளிர்வது தங்கள் ஒரு சிறு திங்களே

#64
படப்படப் பொடியாக எங்கு உள பாதவாதிகள் ஆதவம்
சுடச்சுடப் பொடியாய் எழச் சுழல் சூறை புகுவன பாறையே

#65
புறச்சோலை பூதங்களும் பேயும் யாவும் புகும் சோலையே
அறச் சோலை தானும் பிரானும் பயின்று ஆடும் அச் சோலையே

#66
வெற்பு அநேக சிகரத்துடன் மிடைந்தன என
கற்பகோடி விழ நீடுவன கற்ப தருவே

#67
வாரி ஆலயனும் ஆலயம் நமக்கு என வரும்
பாரிசாதம் உள சாதகர் பராவுவனவே

#68
பாலை தாழ மது மாரி சொரியும் பருவ நாள்
மாலை தாழ்வன அநேகம் உள மந்தாரமே

#69
மீதெடுத்த பணை யாவையும் விழுங்க எழு செம்
தாது எடுத்தன அநேகம் உள சந்தானமே

#70
சுவடு கொண்ட பொழில் ஏழின் ஞிமிறும் துறும் ஒரோர்
சுவடு கொண்ட அரி சந்தன வனம் கவினவே

#71
பூ ஐந்தாலும் புகுதற்கு அரும் பொலம்
கா ஐந்தால் ஐந்து சோலை கவினவே

#72
மலை தருவன கடல் தருவன மணி அணி பணி மகுடத்
தலை தருவன புவி தருவன தருவன சுர தருவே

#73
பொங்கு அமளிப் புணரித் துயில் வல்லி புறங்கடையில்
சங்கம் அளிப்பன ரத்னவிதம் சத கோடியே

#74
பாகன் அகம் குழைவித்த பவித்ர பயோதரி-தன்
கோகனகம் கனகம் சத கோடி கொடுப்பனவே

#75
நுதிக் கோடு கூர்க் கலை உகைப்பான் விடா முல்லை நூறாயிரம் கிளை கொடு ஏறா விசும்பு இவர்
மதிக் கோடு தைவர எழும் தண் கொழுந்துகளை வாயா எனக் கொண்டு மேயாது மான் மதியே

#76
வாரும் சடாடவி முடித் தேவர்-தம் தேவி வன் மான் உகைத்த கொடி பொன் மாதவிக் கொடிகள்
ஊரும் பகல் தேரை முட்டுவன கட்டுவன உருகா கொழுந்து முகை கருகா செழும் துணரே

#77
பிரமற்கும் அம்மனை பெறும் கற்பகக் கொடிகள் பெரு வானம் ஏறுவன வரு வானம் மாறுவன
பரமற்கும் ஈது மிடை சடை ஒக்கும் என்பது-கொல் பறியா பெரும் சுழியும் எறியா தரங்கமுமே

#78
சூரியர்கள் பன்னிருவர் பன்னிரண்டாயிரம் சுடரொடும் சூழ்வருவரே
நேரியர்கள் திகிரியும் திகிரியோ அவை-தொறும் நிலா வர உலாவருவதே

#79
சேவக முராரிகள் புராரிகள் தெரித்தன சிவாகம விதம் தெரிவரே
பூவகம் விடாதவர்கள் ஓத உடன் ஓதுவர் பரம்பரம் புரந்தரமே

#80
கானம் நாடி திருமுன்றில் கவினக் கஞலுவர்
வானம் நாடியர் வணங்க வரும் மாதர் உளரே

#81
ஓலக் கடல் நெருப்பின் உலகு ஏழும் உருகும்
காலக் கடையினும் கொடிய கண் கடைகளே

#82
புங்கப் படை விழிக்கடையில் அன்று இவர் புரூஉப்
பங்கத்து அகிலமும் படுகொலைப் படுவதே

#83
நச்சுக் கண் முலை மேல் இடுது நிற்கும் நகு பொன்
கச்சுக்கும் அடையப் புடவி கையடை-கொலோ

#84
மின் போல்வர் அவரே அவர் மருங்குல் இனி வேறு
என் போல்வது என எண்ணுவது என் இல்லை இணையே

#85
நின்ன்று அகன்ற இடை நேடி வரை நேமி அளவும்
சென்ன்று அகன்றன நிதம்பம் நடு இல்லை திசையே

#86
அங்ங்கண் முளரி மலர் அன்மையது திங்கள் அறியத்
திங்ங்கள் அன்மை அரவு அறிய இலகும் திலகமே

#87
அடைய மோகினிகள் ஆயினர்-கொல் அவ் உரு நினைந்து
உடைய மோகினியை ஒக்க உளர் யோகினிகளே

#88
சூழும் மின் ஒளி நிவந்து சுர நாடியர்களும்
தாழும் மின்மினிகளாக உளர் சர்மினிகளே

#89
தர வரும் புடவி குறைய உளர் சாகினிகளே
பரவு அரும் தகைய நாயகி பதாகினிகளே

#90
நகுநகும் கடவுள் இத்தகைய மாதர் நகை போய்
மொகுமொகு என்று அகில லோகமும் முழங்குவனவே

#91
தலை அரிந்து விடுவார் உயிர்விடார் தலைவி முன்
விலை அரும் தமது மெய் எரியில் நின்று எரிவரே

#92
அக வனசம் முக வனசம் அவை மலர அரிவார்
நக வனச மலர் குவிய வலம்வருவர் நகரே

#93
கொக்கு ஒழுங்குபட ஓடி முகில் கூடி அனையார்
அக்கு ஒழுங்குபடு கஞ்சுகம் அலம்ப உளரே

#94
இந்திராதியரும் எக் கமலயோனிகளுமே
சந்திராதியரும் அத் தலைவி சாதகர்களே

#95
அடையாள முளரித் தலைவி ஆதி மடவார்
உடையாள் திரு அகம் படியில் யோகினிகளே

#96
சுழல் வட்டத் துடி கொட்டத் துனை நட்டத்தினரே
தழல் வட்டத் தனி நெற்றித் தறுகண் கொட்பினரே

#97
கழுவைப் புக்கு அற வெட்டிக் கவர் சுற்றத்தினரே
உழுவைச் சிற்றுரிவைப் பச்சு உதிரப் பட்டினரே

#98
அகை மத்தத்து அளி வர்க்கத்து அளகக் கொத்தினரே
பகை குத்திப் பயில் சத்திப் பரு முக்கப்பினரே

#99
உகு நச்சுத் தலை நெட்டு எட்டு உரகக் கச்சினரே
தகு புத்தப்புது மக்கள் தலை மைக் கட்டினரே

#100
குடர் அட்டத்து ஒரு செக்கர்க் குருதிப் பொட்டினரே
படர் பொன் கைச் செறி அக்குச் சரி பப்பத்தினரே

#101
இரு பக்கத்து ஒரு பக்கத்து எறி வச்ரத்தினரே
ஒரு பக்கத்து ஒளி வட்டத்து ஒரு பொன் தட்டினரே

#102
தழை வர்க்கக் கரு வெப்புத் தடி சக்ரத்தினரே
கழை முத்துப் பொதி கக்கக் கிழி கண் கட்சியரே

@4 தேவியைப் பாடியது

#103
கவன மாவொடு ஈராறு கதிரும் வாரி ஊடாடு கனல் கடாவி ஓர் ஏழு கடலும் வாரும் ஆலாலம்
அவனி வேவ வான் வேவ அளறு வேவ வேவாமல் அயிலும் நாதன் மா தேவி அகில லோக மாதாவே

#104
அனக பூமி கோலோகம் அருகு நேமி பாதாளம் அயன் நிவாசம் ஏழ் தீவும் அசலம் ஏழும் ஏழ் காவும்
கனகலோகம் ஏழ் ஆழி கஞல வீதி போதாத கலக பூத வேதாள கடகம் மேய மாயோளே

#105
இரவை ஈரும் ஈர் வாள்-கொல் என விடாது பாதாள இருளை வேறுபோய் நூறி எழிலி ஏழொடு ஏழ் ஆய
பரவை ஒளி வாள் ஏறு பட நடாவி மீள் சோதி படல சூடிகாகோடி பணி மதாணி மார்பாளே

#106
நிகரம் வேறுவேறாய நிலவு வீசு பேர் ஆர நிபுட மாலை மால் யாறு நிமிர வீழ்வ போல் வீழ
மகர ஏறும் ஈர் ஆளி மதுகை ஏறு மாறாடி வதன பாக மேய் வாகுவலையம் மோது காதாளே

#107
தமர நூபுராதார சரணி ஆரணாகாரி தருண வாள் நிலா வீசு சடில மோலி மா காளி
அமரர் வாழ்வு வாழ்வாக அவுணர் வாழ்வு பாழாக அருளும் மோகினீ ஆகி அமுத பானம் ஈவாளே

#108
எறியல் ஓவி மா வாதம் இரிய வீசி ஊடாடும் எழிலி பீறி மா மேரு இடையை நூறி ஓர் ஆழி
முறிய மோதி வான் யாறு முழுதும் மாறி ஆகாய முடிய ஏறி மேலாய முகடு சாடு தாளாளே

#109
வழியும் நீறு வேறு ஆர மகிழும் ஓரொரோர் கூறு மறம் அறாத ஆண் ஆள மடம் அறாத மான் ஆள
ஒழியும் ஓரொரோர் கூறும் ஒருவர் ஆகி நேர் ஆகி உடைய கேள்வர் ஓர் பாதி உருகு காதல் கூர் வாளே

#110
அதர சோதி மீதாடு குமுத வாச வாய் ஆர அமிழ்தமாக நேராக அகில லோகம் ஈரேழும்
உதர சோபிதா நாபி கமல வாயினால் மீள உமிழும் நீலி மேலாய உவண ஊர்தி ஊர்வாளே

#111
வலைய வாள் அரா மீது துயில் விடாத தான் மான மதியம் ஊர் சடா மோலி மகிணர்தாமும் மீதோடி
அலையும் மேகலாபார கடி தடாக மா நாக அமளி ஏறினாராக அழகு கூர நேர்வாளே

#112
போர்ப்பன தீம் புகையோ புராதனர் ஓமப் புகையே
ஆர்ப்பன பல்லியமோ அந்தர துந்துமியுமே

#113
பரவுவன யாமளமோ பதினெட்டுப் புராணமுமே
விரவுவன பூதமோ விண் முதல் ஐம்பூதமே

#114
ஆடுவன தோகையோ அயன் ஊர்தி அன்னமுமே
பாடுவன பூவையோ கின்னரங்கள் பலவுமே

#115
வன மலரோ பூமாரி வானக் கற்பக மலரே
கன சலமோ அபிடேகம் கடவுள் கங்கா சலமே

#116
வயங்கு குழை மதியமோ வாள் இரவி மண்டலமே
தயங்கு கவுத்துவமோ பூண் தனிச் சோதிச் சக்கரமே

#117
சார்த்துவன கோசிகமோ தன் பேழைத் தமனியமே
ஆர்த்துவன அறுசுவையோ அந்தம் இலா அமுதமுமே

#118
கொடும் புரிசை நேமியோ கொற்றப் போர் நேமியே
இடும் திலக மான்மதமோ எண் திசைய மான்மதமே

#119
அடிச் சூட்டு நூபுரமோ ஆரணங்கள் அனைத்துமே
முடிச் சூட்டு முல்லையோ முதல் கற்பு முல்லையே

@5 பேய்களைப் பாடியது

#120
எல்லை நான்மறை பரவும் இறைமகளைச் சிறிது உரைத்தாம்
தொல்லை நாயகியுடைய பேய்க் கணங்கள் சொல்லுவாம்

#121
வாய் எழப் புகைந்து கீழ் வயிற்று எரிந்து மண்டு செந்
தீ எழக் கொளுந்தி அன்ன குஞ்சி வெம் சிரத்தவே

#122
புரண்டு போத வேரி வாரி போனபோன பூமி புக்கு
இரண்டு போதும் உண்டும் உண்டிலாத போல் இருப்பவே

#123
பாதியில் பிலம் துழாவு பாறு கால மாறுகால்
ஓதியில் செவித் துளைத் திளைக்கும் முத்து உடுப்பவே

#124
எழும் கடல் பகைப் பிணத்தும் ரவி திகந்த எல்லை போய்
விழும் கடல் பகைப் பிணத்தும் ஓடி உண்டு மீள்பவே

#125
எயிறு இரண்டு தட்டினூடும் இவ் இரண்டு எழுந்து பாழ்
வயிறு அறிந்து தாழ் செறித்து வைத்த ஒத்த வாயவே

#126
வயங்களில் புறப் பொருப்பில் வேரி வாரி வந்து திக்
கயங்களில் கடாம் மிடா மடுத்து எடுத்த கையவே

#127
உலர் எலும்பொடு ஒசி நரம்பின் உடலில் நின்ற குடலை போன்று
அலர் சிலம்பி இழை சுழன்று வெளி அடங்க அணிவவே

#128
குறிக்கும் எக்கொழுக்களுக்கும் மிக்கு அடிக் கொடுக்கொடுத்து
எறிக்கும் எப்பிறைக்கும் எட்டிரட்டி நெட்டு எயிற்றவே

#129
கதுப்பு இறக் கழுக்களில் பழுக்களைக் கடித்துழிப்
புதுப் பிணத்து இரைப்பு மிக்கு அடிப் பொருப்பொருப்பவே

#130
புரக்கும் அற்புதத்து உயிர்க் கிழத்தி புக்குழித் தமக்கு
இரக்கம் அற்றிருப்பதற்கு எடுத்து உளைத்து இளைப்பவே

#131
மதி துரந்து வரவு ஒழிந்த மதம் நினைந்து சதமகன்
பதி துரந்து படை அயின்று சிறிது அவிந்த பசியவே

#132
கரு நிறம் கொடு உருவு கொம்பு வெருவும் உம்பர் கழிவிடும்
பரி பிளந்து தசை மிசைந்து சிறிது அவிந்த பசியவே

#133
இரு விசும்பு வறிது இயம்ப இடி விழுந்தது என விழும்
பெரு விலங்கல் அன புயங்க பிசித உண்டி பெறுபவே

#134
வாரி உண்டு மேக இந்த்ர வாகனங்கள் வாய்விடும்
சோரி உண்டு சூல் முதிர்ந்த போல் மிதந்த தோலவே

#135
மிசை பெறாது குறளான கூளிகளும் விம்மி உள்ள திசை செம்மியே
திசை பெறாது தடியாத பாரிடமும் உடையள் உலகு உடைய செல்வியே

@6 கோயிலைப் பாடியது

#136
இக் கணங்கள் வந்து சூழும் யோக யாமளத்தினாள்
மெய்க் கணங்களே விரும்பு கோயில் யாம் விளம்புவாம்

#137
கீழும் ஏழு நிலை மேலும் ஏழு நிலை கோயில் வாயில் இரு கிரியுமே
சூழும் ஏழ் கடலும் அகழி சக்ரகிரி புரிசை காவல் ஒரு சூலமே

#138
பூத நாயகர் மகோதராதிகள் புரக்க வாயில் முறை புகுதுவார்
வேதநாயகி விமான பீடிகை அநேக கோடி வட மேருவே

#139
அப் பெரும் பழைய கோயிலூடு அகில லோக நாயகி அமர்ந்ததோர்
ஒப்பு அரும் கடவுள் ஆலம் உண்டு அதனை உள்ளவா சிறிது உரைத்துமே

#140
முடுகிய புறம்பு நீர் நலிய முகடுபடும் அண்டகோளகையை
நெடுகிய வரம்பு இலாத பணை நிரை கொடு சுமந்த நேமியது

#141
விரி கடல் கொளுந்தி வேவ விழ வரும் மிகு பதங்கர் ஆறிருவர்
எரி விரி கரங்கள் ஆறி எழ எழு குழை அசைந்த சாகையது

#142
சதுமுகன் முடிந்த ஊழி ஒரு சருகு இலை உதிர்ந்து தூர் புனலின்
இது முதல ஐந்து பூதம் என இரு நிலம் வழங்கு சோபையது

#143
இறுதியின் எரிந்து பார் உருக எழு கனல் கரிந்துபோய் அவிய
உறுதியின் அனந்த சாகை-தொறும் ஒரு தனி குளிர்ந்த நீர்மையது

#144
படி அடி எறிந்து கால் பொருது பல குல விலங்கல் மேருவொடு
குடி அடி பறிந்த நாளும் ஒரு குழை சலனம் இன்றி நீடுவது

#145
மழை என உகங்கள் ஏழ் எழிலி வரவர விசும்பின் மாறுவது
பழையன பொதும்பில் ஏழும் எழு பரவையும் அடங்கு கோளினது

#146
அரி தனி துயின்றது ஓர் இலையில் அரன் அவை இருந்த நீழலது
விரி சுடர் நிவந்த சாயை மதி மிசை இடை விளங்கு சோபையது

#147
இசையன பிலங்கள் ஏழும் அதன் இடையிடை விழுந்த வேர் விவரம்
மிசையன பதங்கள் ஏழும் அதன் விடு கவடு தந்த கோடரமே

#148
உரிய பல அண்ட கோடி புகும் உதரமொடு அனந்த கோடி யுகம்
அரி தனி துயின்றது ஓர் இலையில் அதனது அளவு இயம்புவார் எவரே

#149
கட நாகத்து ஈர் உரிவை அரன் விரிப்பக் கடல் திவலைப்
பட நாகப் பெரும் பாயல் அரி விரிக்கும் பணையதே

#150
கோழியான் மயில் அதனில் குல மயிலில் ஒரு மயிலே
ஆழியான் ஏறுவதும் அதன் உவணத்து உவணமே

#151
அயனுடைய ஊர்தி அதன் அன்னத்து ஓர் அன்னமே
பயனுடைய கின்னரமும் அதில் பிறந்த பறவையே

#152
பை நாகம் இருநான்கும் அதன் வேரில் பயில்வனவே
கை நாகம் இருநான்கும் அதன் வீழில் கட்டுபவே

#153
அப்படி அது ஒரு கடவுள் ஆலின் கீழ் அமளியா
எப்படியும் தனி தாங்கும் அரவரசை இயம்புவாம்

#154
மா இரும் பயோததித் தொகை என வாள்விடும் திவாகரத் திரள் என
ஆயிரம் பணாமிதப் பரவையது ஆயிரம் சிகாமணி ப்ரபையதே

#155
வேலை-நின்று எழா உகக் கனல் என வேக நஞ்சு அறா மதிப் பிளவு என
மாலையும் படா விழித் திரளது வாய்-தொறும் குவால் எயிற்று அணியதே

#156
நேரியன் பதாகையில் புலி என நேரியன் தராதரப் புயம் என
மேருவும் பொறா வயப் பொறையது மேருவின் பராரையில் பெரியதே

#157
திரண்ட கலை கூடி நிறை திங்கள் குடையாக நிழல் செய்ய முறையால்
இரண்டு அருகும் வாடையொடு தென்றல் குளிர் சாமரை இரட்டிவரவே

#158
குறிக்கும் இரு பாலும் உள தீபம் என வேறு சில கூற உளவோ
எறிக்கும் மதியும் பருதியும் சுடர் எடுப்பன இரண்டு அருகுமே

#159
எளிது அளித்தன சுரர் தருத் தொகை இரவி புற்கிட எழிலியும்
தளி தளித்து இரு தனு எடுத்தன தகனம் அற்றது கனமே

#160
வட்டம் ஒத்தன வண்ணம் ஒத்தன மதுகை ஒத்தன வானில் வந்து
இட்ட விற்கள் இரண்டு தங்கள் இரண்டு விற்களும் என்னவே

#161
பொங்கு திரிபுரம் வெந்து பொடிபட வந்து பொரும் ஒரு பொருநர் கைத்
தங்கு மலை சிலை கொண்ட பொழுது உலகங்கள் தகைவது தண்டமே

#162
தடிந்த துரக குலங்கள் உரக பிலங்கள் வயிறு தழங்குமா
வடிந்த குருதி படிந்து பருதிகள் மட்க வரும் ஒரு கட்கமே

#163
எறிப்ப எறி படை நிசிசரன் சிரம் ஒரு பதும் கரம் இருபதும்
தறிப்ப ஒரு சரம் விடுவதும் கடல் சுடுவதும் குனி சாபமே

#164
இகலும் நிசிசர கணமும் அவுணரும் இடியின் மலை என மடிய எப்
பகலும் ரவி ஒளி இரிய நிலவு ஒளி விரிய வரும் ஒரு பணிலமே

#165
இருவர் உதயமும் இருள ஒளிவிடும் எனைய பலர் இரணியர் எனும்
ஒருவர் உரம் இரு பிளவுபட நடும் உகிரி தனது ஒரு திகிரியே

#166
அரவின் அமளியின் அகில பண மணி அடைய மரகதம் ஆன ஓர்
இரவி வெயில் இலன் மதியும் நிலவு இலன் இறைவி ஒளி வெளி எங்குமே

#167
கோகனகன் நாள் பெறு கொடும் கனகன் ஆகம் இரு கூறுபடு கூர்
ஏக நக நாயகி அனந்தசயனத்து இனிது இருந்து அருளியே

#168
எறி படை வல்ல விசயை இசை கெழு தெய்வ மகளிர்
எழுவரும் வெள்ளை முளரி இனிது உறை செல்வ மகளும்
மறி கடல் வைய மகளும் மலர் கெழு செய்ய திருவும்
வர இரும் மெல்ல உரகன் மணி அணி பள்ளி அருகே

#169
வரு கதை தெய்வ மகள் என் மருமகள் வள்ளி வதுவை
மனம் மகிழ் பிள்ளை முருகன் மதுரையில் வெல்லும் இனியது
ஒரு கதை சொல்லு தவள ஒளி விரி செவ்வி முளரி
ஒளி திகழ் அல்லி கமழும் ஒரு மனை வல்லி எனவே

#170
எழுமலை கொல்லும் அசனி இளமயில் வள்ளி கணவன்
இறை மலை வில்லி புதல்வன் இகல் மகள் ஐயை களிறு
கழுமலம் உய்ய விரவு கலியுக எல்லை பொருத
கதைகளில் உள்ளது அமணர் கழு மிசை கொள்வது இதுவே

#171
பொய்கை சூழ் புகலிப் பெருந்தகை பொன்னி நாடு கடந்துபோய்
வைகை சூழ் மதுராபுரித் திரு ஆலவாயை வணங்கியே

#172
ஞாயில் கொண்ட மதிற்புறம் பர சமய கோளரி நண்ணியே
கோயில்கொண்ட மடத்தை வெம் கனல் கொண்டு குண்டர் கொளுத்தவே

#173
திருமடத்து எரியிட்ட குண்டர் கிடக்க அவ் எரி தென்னனின்
பெரு மடத்து அரசைச் சுடத் திருவாய்மலர்ந்தது பிள்ளையே

#174
பிள்ளை கொண்ட சினத்தொடு அக் கனல் சென்று தென்னர்பிரான் உயிர்
கொள்ளைகொண்டு உடலம் கிளர்ந்து கொதிப்ப வந்து கொளுந்தவே

#175
யந்திரங்கள் வரைந்து கட்டி விரைந்து குண்டர் எடுக்கும் மா
மந்திரங்களின் மிக்க பேரழல் மாதிரங்களில் மண்டவே

#176
ஆலி வெந்து மந்த்ரம் வெந்து யந்த்ரம் வெந்து அமைந்ததோர்
பீலி வெந்து பாயும் வெந்து பிண்டி ஏற மண்டவே

#177
ஒருவரும் பொருவாத தென்னன் இரண்டு கண்களும் ஒத்த பேர்
இருவரும் பெரிது அஞ்சி யாம் இனி என் செய்வேம் என எண்ணியே

#178
விலங்கினார் இலர் வெம்மை எம்மையும் மேல் முனிந்திடுவான் மிகக்
கலங்கினான் இறை பிள்ளையாரை அழைத்துமேல் இது காலமே

#179
என்று போய் அதிகாரி வைதிக ராச சிங்கம் இருந்துழிச்
சென்று முன்னர் விழுந்து பின்னர் எழுந்து தம் குறை செப்புமே

#180
கச்சைக் கிரி நேரியர் பாவை திருக்காவற்கு இறைவா இது காலம் எனக்
கொச்சைப் பெருமான் அடி தன் முடியில் கொண்டான் அதிகாரி குலச்சிறையே

#181
உவரிப் பரு முத்தம் நிரைத்த திருப்பள்ளிச் சிவிகைப் புடை உம்பர் வரக்
கவரிச் சிறு தென்றல் அசைப்ப மிசைக் கொற்றக்குடை வந்து கவிப்பவுமே

#182
மேகத்து ஒரு பந்தர் எடுத்து உடுவாம் வெண் முத்தம் ஒழுக்கி மினல் கொடியால்
மாகத்து நிரைத்து மழைச் சிலையால் வழி தோரணம் இட்டனன் வாசவனே

#183
சதுரானனனும் சக்ராயுதனும் சந்த்ராதவரும் இந்த்ராதியரும்
மதுராபுரி வாது அறிவாம் என மேல் வர வந்தனன் வைதிக வாரணமே

#184
ஆலியும் கடிதில் புலர்ந்து கலந்து குண்டர் துடைக்கும் அப்
பீலியும் சுறு நாறி ஏறி எரிந்துபோன பிரம்புமே

#185
பொறை சூழ் வரையில் புலி ஏறு எழுதும் பொன் மேரு வரைப் பெருமான் மகளார்
மறை சூழ் திரு வெள்ளிமலைப் பெருமான் மகனார் அடி வந்து வணங்கியுமே

#186
மன் காதலில் உய்வது இவ் வையம் எலாம் மலையாள் முலை ஆரமுது உண்டவனே
என் காதலன் எம் பெருமான் இவனுக்கு இதுவோ தகவு என்றனள் என்றலுமே

#187
மாமான் மரபின் பகல் மண்டிலம் ஒத்து எரி மண்டினன் என்னும் மகீபதி நின்
கோமான் மரபின் சசி மண்டிலம் நேர் குளிரும்படி காணுதி கோமளமே

#188
என்னக் களி கூரும் இளங்கொடியோடு எதிர்கொண்டு புகுந்து குலச்சிறையார்
தென்னற்கு அருகே ஒரு பீடிகை இட்டு இனிது ஏறியிருந்து அருள் செய்க எனவே

#189
ஏறிச் செழியற்கு அருகு இட்ட திருப்பள்ளித் தவிசின்-கண் இருந்து அருளச்
சீறிச் சமண் மூகர் குலச்சிறையார் செவி வேவன சிற்சில செப்புவரே

#190
வருவான் ஒரு சோழிய வைதிகனாம் வந்தால் இவன் மாளிகை வாயில்-தனில்
வெருவாது புகுந்து தொடப்பெறுமோ மீளச் செழியன் திரு மேனியையே

#191
தண் ஆர் மதியக் கவிகைச் செழியன் தனி மந்திரிகாள் முனிபுங்கவர் ஓர்
எண்ணாயிரவர்க்கும் விடாத வெதுப்பு இவனால் விடும் என்பது இழித்தகவே

#192
என்றார் அவர் என்றலுமே கெடுவீர் எரியால் அரவால் இடியால் முடியச்
சென்றார் பவம் ஏழினும் இப்படியே செல்வார் இவர் முன்பு செயிர்த்தவரே

#193
நாணீர் அறியீர் உறி வல் அமணீர் மதுரேசனை எம் குல நாயகனைக்
காணீர் இவர் தம் திருநீறு இடவே முகிலூர்தி பெறாத கவின் பெறவே

#194
ஏ ஏய் இமவான் மகளார் மகனே எந்தாய் சிந்தாகுல வேர் அரியும்
சேயே வர சைவ சிகாமணியே திருநீறு இனி இட்டு அருள்செய்க எனவே

#195
எப் புத்தரொடு எவ் அமணும் களைவார் திருநீறு இவன் நெற்றியில் இட்டலுமே
வெப்புத் தடைபட்டது பட்டளவே வேவாத உடம்பு உடை மீனவனே

#196
உய்யா உணரா விழியா அருகே சரியா ஒரு கேசரி ஆசனம் மேல்
வையா அதிகாரிகளும் பெருமாள் மகளாரும் வணங்க வணங்கினனே

#197
சுடுகின்ற மருங்கு இரு பாலும் இருந்து அனைவேமும் விடாது தொடத்தொடவே
விடுகின்ற வெதுப்பை வெறும் பொடியால் விடுவித்தனனாம் இவன் வேதியனே

#198
யாம் யாதும் இதற்கு முயன்றிலமோ எ மந்த்ரமும் யந்த்ரமும் இல்லை-கொலோ
கோமான் இவனைப் பணிகின்றது என் நீறு அணிகின்றது என் என்று கொதித்து எழவே

#199
கெடுவீர் கெடுவீர் இவை சொல்லுவதே கெட்டேன் அடிகள் இவர் கேவலரோ
விடுவீர் விடுவீர் இனி என் எதிர் நீர் வெம் கோபமும் உங்கள் விவாதமுமே

#200
நீர் வந்து தொடத்தொட வெந்து உருகா நெடு வேனில் சுடச்சுட நின்று உலறிக்
கார் வந்து தொடத்தொட உய்ந்து இளகும் காடு ஒத்தனென் யான் இவர் கைப்படவே

#201
ஒரு நீ ஒரு மாணி இடும் பொடியால் உய்ந்தேன் உயிர் என்பது உரைத்தனையேல்
வரும் நீரினும் இட்டு நெருப்பினும் இட்டு அறிவோம் இரு மந்த்ரமும் யந்த்ரமுமே

#202
எரியாதன தீயில் இடின் கொடுபோய் எறி வைகையிலே இடில் வைகையுடன்
சரியாதன ஏடு உடையார் தவமே தவமாவது மேல் இது சாதனமே

#203
வேம் ஏடு உடையாரையும் வைகையிலே விட்டால் அதன் மீது மிதந்து ஒழுகிப்
போம் ஏடு உடையாரையும் நீ கழுவில் புகுவிப்பது தெக்கண பூபதியே

#204
என்னக் கடிது எண் பெரு வெற்பும் விடா எண்ணாயிரம் மூகரும் இப்படியே
பன்னப் பெரிது அஞ்சிய அச்சமுடன் பகலோன் மரபில் பெறு பைம்_தொடியே

#205
மலை கொண்டு எழுவார் கடல் கொண்டு எழுவார் மிசை வந்து சிலாவருடம் சொரிவார்
நிலை கொண்டு எழுவார் கொலை கொண்டு எழுதற்கு இவரில் பிறர் யாவர் நிசாசரரே

#206
குழை தந்தனை செந்தமிழ் மண்டலமும் கொடி மா நகரும் குன்றம் களி கூர்
மழை தந்து என வந்தனை வாழி இனிப் பிரமாபுரம் ஏற மறித்தருளே

#207
கேள் பற்றி அமண் கெடுவாரொடு போர் கெட்டேன் அடிகேள் ஒட்டேன் எனவே
தாள் பற்றி வணங்கி வணங்கி விடாள் தவனன் குல_வல்லி தடுத்தலுமே

#208
காதில் கனகக் குழை நின்று இலகக் கமழும் குழல் முன்பு கலந்து அசையச்
சோதித் திரு நெற்றியில் நீறு இலகச் சுட்டிக் கலன் மீது துலங்கவுமே

#209
கனல் எம் கனல் அக் கனலால் விளையும் கார் கார் அவை வந்து தரும் கலுழிப்
புனல் எம் புனல் யாம் இடும் ஏடு சுடா போகா திரியக் கொடுபோம் எனவே

#210
நீரோடு நெருப்பு இவை நும்மனவே இது நிச்சயம் ஆகிலும் நின் எதிர் இப்
பாரோடு விசும்பு பனிப்ப இனிப் பணிகொள்ளுதும் யாம் இது பார் எனவே

#211
என்னும் சமண் மூகரும் நான்மறையோர் ஏறும் தமிழ்நாடனும் ரகு மரபில்
பொன்னும் பெருநம்பி குலச்சிறையும் போய் வைகையில் வாது களம் புகவே

#212
கனலில் புகும் ஏடு இறை கண்ணில் மதன் கை அம்பு என வெந்தன கையர் இடப்
புனலில் புகும் ஏடு இறை வைகையுடன் போகவிடினும் கடல் புக்கனவே

#213
பொற்பு அங்கு அனலில் புகும் ஏடு உறவும் புனலில் புகும் ஏடு எதிர் போகவும் ஏழ்
வெற்பும் பிளவு ஓட ஒலித்தனவால் வேதங்களும் ஐம்பூதங்களுமே

#214
மேல் நின்ற சுராசுரர் ஆர்த்தனரே திருமாலும் விரிஞ்சனும் ஆர்த்தனரே
பால் நின்ற சராசரம் ஆர்த்தனவே பதினால் உலகங்களும் ஆர்த்தனவே

#215
வாராய் இவர் ஆகம துல்லபமும் வரும் எங்கள் சிவாகம வல்லபமும்
பாராய் வழுதீ இது பார் உருவத் திரு விக்ரமம் இன்று படும்படியே

#216
ஒரு கூன் மிசை வைத்த திருக் கை புறத்து ஒரு கூன் மிசை வைத்தனர் வைத்தலுமே
இரு கூனும் நிமிர்த்தன தென்னவர்கோன் முதுகும் தட மார்பும் இடம்பெறவே

#217
ஆதிச் செழியற்கு ஒரு கை மலர் பொன் அடையப் புகலிக்கு இறை வெப்பு அழலால்
வேதிக்க உடம்பு ஒரு பொன்மயமா ஒளிவிட்டு விளங்கினன் மீனவனே

#218
வேதப் பகைவர்-தம் உடம்பு வீங்கத் தூங்கும் வெம் கழுவிற்கு
ஏதப்படும் எண்பெருங்குன்றத்து எல்லா அசோகும் எறிக எனவே

#219
மண்ணா உடம்பு தம் குருதி மண்ணக் கழுவின் மிசை வைத்தார்
எண்ணாயிரவர்க்கு எளியரோ நாற்பத்தெண்ணாயிரவரே

#220
கொன்று பிள்ளை ஊர் புக்கார் குண்டர் நரகக் குழி புக்கார்
என்று சொல்லி அகிலகலாவல்லி இறைஞ்சி இருத்தலுமே

#221
தெவ் முன் சென்று நம் பிள்ளை செய்தது ஒரு போர் செப்பினையால்
நம் முன் தவள முளரி மிசை இருக்கப் பெறுதி நாமகளே

@7 பேய் முறைப்பாடு

#222
என்று இறைவி நாமகட்குத் திருவுள்ளம்செய்யக் கேட்டிருந்த பேயில்
ஒன்று இறையும் கூசாதே உறு பசி நோய் விண்ணப்பம்செய்யலுற்றே

#223
ஒற்றைத் தலை வெட்டு உண்டது கொண்டு ஓடிச் சென்றான் சென்றால் என்
மற்றைத் தலையும் தானுமாய் வணங்கி நின்றான் மலரோனே

#224
உலகில் பெரிய கபாலத்தே ஒருவர் உதிரம் ஏற்று ஊற்றி
விலகின் பிழையாச் சூலத்தே கொண்டார் கணவர் வெற்றுடலே

#225
கூறாக்குதற்கு வாள் இலரோ குத்தி நூக்க வேல் இலரோ
நீறாக்குவது என் முப்புரத்தில் உள்ள வெள்ள நிருதரையே

#226
குழம்பு அடியேம் புக விழுந்து பொருப்பு அடியில் கொள்ளாமே
பழம்படியே தசமுகனை விட்டார் தம் பாட்டு அறிவே

#227
வையம் உண்ணோம் கடல் மடோம் மற்றும் புவனம் முற்றும் போய்
ஐயம் உண்ணோம் கடல் நஞ்சு குடியோம் உங்கள் அடியோமே

#228
கார் மலையச் சந்தனமும் வட இமயக் கார் அகிலும்
போர் மலையக் கடவது ஒரு பிள்ளைக்குப் போக்குதியே

#229
எப்பயறும் எக்கனியும் எக்கிழங்கும் எத்தேனும்
தொப்பை ஒரு பெருவயிற்றுப் பிள்ளைக்குச் சுமத்துதியே

#230
மிக்கு அள்ளும் கறி அநந்த மிடாப் பலவும் தடாப் பலவும்
எக்கள்ளும் ஒரு பிள்ளை மடுத்து ஆட எடுத்துதியே

#231
சூரொடும் பொர வஞ்சி சூடிய பிள்ளையார் படை தொட்ட நாள்
ஈர் உடம்பும் மிசைந்து இரண்டு உதிரப் பரப்பும் இறைத்தனம்

#232
அசும்பு தூர் வயிறு ஆர முன்பு அவர் செற்ற தானவர் அற்ற நாள்
விசும்பு தூர விழும் பிணங்கள் நிணங்கள் ஊற மிசைந்தனம்

#233
அறம் தவா மலயப் பொருப்பில் அகத்தியற்கு அமுதாக நீர்
வறந்த வாரிதி ஏழின் மீனும் எடுத்து வாயில் மடுத்தனம்

#234
மிடையப் போய் நரம்பு உடலும் வெறும் தலையே தலை ஆகி
அடையப்போய் அடியோமும் ஆண்டலையாய் அற்றனமே

#235
வற்றியே உடம்பு இழந்தோம் மற்றொரு மானிட உடம்பு
பற்றியே நின்று அடியோம் பணிசெய்யப் பணி வாழி

#236
வில்லவனைத் திறைகொண்ட வேல் தண்டகாபதியைப்
பல்லவனைப் பாடாதார் பசி அனைய பசியினமே

#237
கட்டரணம் வல்லவனை நடைகொண்டார் காவிரிப்பூம்
பட்டினமும் பாடாதார் பசி அன்ன பசியினமே

#238
விரைந்து இருந்து தின்பதற்கும் உண்பதற்குமே மிகக்
கரைந்திருந்து கண் துயின்று காணும் நல் கனாவமே

#239
கடல் முகந்து தனி எழுந்த முகில் விழுந்த கனவுகண்டு
அடல் முகந்த திகிரி மொய்ம்பன் அமளி மண்டி அறிதுமே

#240
கடை பயின்ற பவனம் அண்ட முகடு கொண்ட கனவொடும்
புடைபெயர்ந்து தனி விரிஞ்சன் முளரி சென்று புகுதுமே

#241
என்று பேய் அடைய நின்று பூசலிட இங்கு-நின்று படைபோன பேய்
ஒன்று பேருவகை சென்று கூறுக என ஓடி மோடி கழல் சூடியே

#242
இரைத்த கூர் பசி உழந்த பேய்கள் இனி என் பின் வாரும் என முன்பு சென்று
உரைத்ததோ அதுவும் இல்லையோ திரிய யாகசாலை புக ஓடவே

#243
ஓடுகின்றதனை நின்ற பேய் தொடர ஓடியோடி உளையப் பிடித்து
ஆடுகின்ற கொடி மாட முன்றில் விட ஐயை கண்டருளி அதனையே

#244
அஞ்சல் என்று திருவாய்மலர்ந்து அயனும் அம்பரத்தவனும் உம்பரும்
எஞ்சல் இன்றி உடன் நின்று அவிந்தபடி எம் படைக்கு உரைசெய்க என்னவே

@8 காளிக்குக் கூளி கூறியது

#245
பாவியார் சிறு தக்கனார் ஒரு பக்கமாய பரம்பரன்
தேவியால் முனிவுண்டு பட்டது கேள்-மின் என்று அது செப்புமே

#246
எல்லை நாயக ராசராச புரேசர் ஈசர் இதற்கு எனும்
தொல்லை நான்மறை நிற்க மற்றொரு கேள்வி வேள்வி தொடங்கியே

#247
கங்கை மா நதி வீழ் புறத்தது கனகலத்து ஒரு களன் இழைத்து
அங்கண் வானவர் வருக என்றனன் முனிவர் தன் படையாகவே

#248
அழைத்த வானவர் பயணம் என்றலும் அவுணர் நின்றிலர் ஆசையால்
இழைத்த யாக விபாகம் முற்பட உண்ணலாம் என எண்ணியே

#249
பாவகாதிகள் லோகபாலர் பரந்துவந்து புரந்தரன்
சேவகாதிகள் போல நாலிரு வேழம் ஏறினர் சேரவே

#250
திங்கள் வெண்குடை மேல் எறிப்ப அருக்கர் பன்னிரு தேரினும்
தங்கள் வெம் கதிர் நடு எறித்தனர் உடு எறிப்பு ஒளி தவிரவே

#251
ஏறு களிறு என ஏறி எரி விழி ஈசர் பதினொரு தேசரும்
கூறுபடு பிறை ஆறு சுழல் சடையோடு முடுகினர் கூடவே

#252
விண் மருங்கு அமரர்-தம்முடன் பழகி வேள்வி ஆவுதி உண்ணவோ
புண் மருந்திட எண்ணியோ கடிது ஆயுள் வேதியர் போதவே

#253
மருக் கணங்களும் விசுவ தேவரும் மற்றை அட்ட வசுக்களும்
குருக்களும் பிறரும் கடாவு விமான கோடிகள் கூடவே

#254
சோதி நேமியும் வச்ரமாலையும் மருளி நின்று துளும்பவே
யாது கற்பகம் யாது மேரு எனத் தெளிந்திலர் யாதுமே

#255
வேய் திரைக் கடல் ஏழும் அம்புதம் ஏழும் மையல் விளைக்க வெம்
மாதிரக் களிறு எட்டும் ஆதி விலங்கல் எட்டும் மயங்கவே

#256
குரத் துரங்கமும் வெய்ய காலும் மனத்தின் மையல் கொளுத்தவே
அரக்கர் வெள்ளமும் உள்ள தீயும் நிகர்ப்ப யாரும் அயர்ப்பவே

#257
மீது போம் நதியும் பதாகையும் வேறுபட்டில விண்ணிலே
ஆதபத்ரமும் அண்டகோளமும் ஒத்து மம்மர் அளிக்கவே

#258
விட்ட கார் முகில் யாவை யாவர் சுரேசர் என்று வியக்கவே
இட்ட கார்முகம் யாவை யாவை எடுத்த கார்முகம் என்னவே

#259
அலம் கையில் படை உடைய நம்பியொடு அதிர் பயோததி அனையது ஓர்
இலங்கு எயிற்று அயிராபதத்தொடு கடிது வந்தனன் இந்திரன்

#260
மைந்தரான சுரேசரோடு அசுரேசர் முன் வர மதி மருண்டு
அந்தணாளனும் மலரில் வந்தனன் முனிவர் தன் புடையாகவே

#261
ஆதி நான்முகனொடு சுராசுரர் வரவு சொல்லி அமைந்ததோ
சோதி நேமி வலத்தினான் ஒரு பயணம் நின்றது சொல்லுவாம்

#262
மரகதமே எனலாய வனப்பின
குரகதமே பதினாயிர கோடியே

#263
ஏறியதாம் இவை போகிலம் எனவே
கூறிய கற்கிகளே சத கோடியே

#264
கவனம் உவப்பன கரிய வனப்பின
பவனம் வியப்பன பற்பல கோடியே

#265
தரங்கம் நிரைத்தன தரளம் நிரைத்தன
துரங்கம் எனைப் பல கோடி தொகுத்தே

#266
வெய்யன செக்கர் விசும்பு வெளுக்கச்
செய்யன ஆயிர கோடி திரண்டே

#267
பைத் துரகங்கள் விசித்த படைப் பரி
கைத் துரகங்கள் கலந்து இடையிட்டே

#268
திரையைத் தோய்வன நாலிரு திசையைச் சூழ்வன சூழ்வரு
சிலையைப் போல்வன தானவர் திரளைப் போழ்வன ஏழ் குல
வரையைப் பாய்வன சூல் முதிர் மழையைக் கீள்வன கால் கொடு
மதியைக் காய்வன பேரொளி வயிரத் தேர் சத கோடியே

#269
பவனப் போர் விரவாதன பருவத் தீ உறையாதன
பரவைக் கால் குளியாதன பறியப் பேரிடி போல்வன
கவனத்தால் எழு வாரிதி கழியப் பாய் பரி மாவின
கமலத்தோன் முடி தாழ்வன கனகத் தேர் சத கோடியே

#270
கடையில் காய் எரி போல் விரி கனலிக்கே குளிர் கூர்வன
கதுவிச் சீத கலா மதி கருகக் காயும் நிலாவின
சடையில் பாய் புனல் வானவர் தறுகண் தீயொடு மூள்வன
தமரச் சேனை அறாதன தரளத் தேர் சத கோடியே

#271
என்று மாதிரம் எட்டினும் சென்றுசென்று எவ்வெட்டா அண்டம் யாவும் சுமப்பன
சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய சேடன் தெவ்வைத் தனித்தனி தீர்ப்பன

#272
விலங்கல் ஏழில் தடத்தும் குல நதி வேலை ஏழினும் நீர்க்கு விடுவன
பொலங்கல் மேரு கிரிச் சிகரம்-தொறும் போக விட்ட சிந்தூரப் பொடியன

#273
மழவில் பாற்கடல் மாந்தி வளர்ந்தன மதத்தில் அக் கடல் பால் முடை மாற்றின
முழவின் பூரித்த கும்ப குடம்-தொறும் மூரி ஏழ் கடலும் தரு மூக்கின

#274
ஓடும் நான்கு பரூஉத் தாள் உடையன உருத் தனித்தனி பாற்கடல் ஒப்பன
கோடு நான்கின செக்கர் முகத்தின குஞ்சரம் பதினாயிர கோடியே

#275
அப் பெரும் புரவித் தொகை மேலும் நீடு ஆடகக் கொடி ஆடு பொன் தேரினும்
எப்பெரும் களிற்று ஈட்டத்தின் மேலினும் எண்_இல் கோடி நாராயணர் ஏறவே

#276
முகடு விண்ட பழ அண்ட கோளமும் முன்னை மேருவும் இட்டு உருக்கிப் பெரும்
தகடு செய்துகொண்டு ஒப்பவும் இட்டன சாத்தும் பீதக ஆடை தயங்கவே

#277
பொங்கு அலங்கல் வருணன் உரம் புகப் பொருப்பு மத்தம் திரித்த பொழுது எழும்
செம் கலங்கல் பரந்து எனப் பாற்கடல் சேப்ப வந்த கவுத்துவம் சேர்த்தியே

#278
அரி செய் நாட்டத்து அரவிந்த வாள்_நுதல் அம்மணிக்கு எதிராக வந்து ஆகத்தில்
எரி செய் தாமரைப் பூ விட்டு இலையிலே இருந்தது என்ன எதிர் வீற்றிருப்பவே

#279
காலை சூழ் செங்கதிர் முதலாயின கமலக் காடு அன்ன கண்ணன் கமழ் துழாய்
மாலை சூழ் முடி சூழ் வருதற்கு ஒளி மழுங்கி மேரு கிரி சூழ் வருவதே

#280
நதிக்குப் போத ஒழுகும் முத்தாரமும் நகைசெய் வச்சிர நாயக மாலையும்
மதிக்குப் புன் மறு வாய்த்து எனத் தன் திரு மரகதப் பெரும் சோதி மெய் வாய்ப்பவே

#281
அந்திச் சே ஒளி முச்சுடர் முக்கணும் ஆதிக் காதல் கூர் ஆயிரம் பேரிதழ்
உந்திச் செம் தனித் தாமரை நாள்_மலரூடு இருந்த குருசிலோடு ஓங்கவே

#282
திறத்து மாலைத் திருமுடிப் பக்கமே சென்று அகன்ற பணங்களும் சேடனும்
புறத்தும் ஆயிரம் வெள் இதழால் ஒரு புண்டரீகமும் அண்ணலும் போலவே

#283
பெயர்த்தது ஓர் அடித் தாமரைத் தாள் விடப் பெரும் பொன் கோளகை பண்டு பிளந்ததற்கு
உயர்த்தது ஓர் வெள்ளி அண்ட கபாலம் ஒத்து ஒரு தனிக் கொற்ற வெண்குடை ஓங்கவே

#284
திரண்டு வந்த வராமிர்த சீகரம் சிதற வீசித் திருப் பாற்கடல் திரை
இரண்டு வந்தன எங்கும் விடா என இரு மருங்கும் கவரி இரட்டவே

#285
வாளும் வில்லும் திகிரியும் தண்டமும் வளையும் என்ற கிளை புறம் சூழ்வர
ஆளும் ஐம்படையும் புடைசூழ வந்து அம்பரப் பரப்பு எங்கும் அடைப்பவே

#286
வயங்கும் ஈர் உரு வண்ணக் கலுழன் மேல் வளரும் பாற்கடல் பாழ்பட வந்தனன்
இயங்கும் மேரு கிரிச் சிகரத்தில் ஓர் இந்த்ர நீலகிரி போன்று இருப்பவே

#287
இப் பரிசு வேள்வி புரி தாதை செயல் எல்லாம்
ஒப்பு அரிய நாயகி உணர்ந்தனள் உணர்ந்தே

#288
எந்தை புரி வேள்வியிடை யானும் விடைகொள்ளத்
தந்தருளுக என்றனள் பணிந்து இறைவர் தாளே

#289
விண்ணவர்கள் மேலும் அயன் மேலும் அரி மேலும்
கண் நுதல் முதல் கடவுளும் கருணைவைத்தே

#290
அழைத்திலன் அதற்கு அகல்வது என்-கொல் என ஐயன்
பிழைத்தன பொறுத்தருளுக என்றனள் பெயர்த்தே

#291
என்றலும் முகிழ்த்த குறுமுறுவலொடும் ரசதக்
குன்றவர் கொடுத்தனர் கொடுக்க விடைகொண்டே

#292
பங்கன் அகலத்து இறைவி வேள்வி பழுதாகத்
தம் கனகலத்து அமர்செய் தாதை மனை புக்கே

#293
காதலனை விட்டு அவள் எழுந்தருளவும் கண்டு
ஏதிலர் எனத் தமர் இருந்தனர் இருந்தே

#294
தன்னை இகழ் தாதையொடு தங்கையரொடும் தன்
அன்னையை முனிந்து உலகின் அன்னை அருள்செய்வாள்

#295
பின்னோர் பெறும் கண் பெறேஎன்
என்னோ இவன் பட்டது இன்றே

#296
இழைப்பாய் இழைப்பாய் இனி யாகம்
பிழைப்பாய் பிழைப்பாய் பிதாவே

#297
யாயும் கொடியேற்கு இரங்காய்
நீயும் கெடவோ நினைப்பே

#298
எங்கைமீர் ஏன் என்கிலீர்
நங்கைமீர் ஈதோ நலனே

#299
எம் படைப்புத் தானும் யாயும்
கும்பிடப் போலும் குறிப்பே

#300
தந்தை ஆர் தாய் ஆர் தலைவருக்கு
எந்தை ஆர் யாய் ஆர் எமக்கே

#301
எனக்கும் எவற்கும் இறைவன்
தனக்கும் எவனோ தவறே

#302
இரை ஆசையால் வந்த யஞ்ஞா
உரையாய் உறுமோ நின் ஊணே

#303
வான் வந்த மண் வந்த வேள்விக்கு
யான் வந்த எளிவந்தவாறே

#304
தீக்குப் பிறந்த இல் என்னும்
வேய்க்குச் சிறப்பு என்-கொல் வேறே

#305
இவ்வாறு உரைத்து இங்கு நின்றும்
செவ் வாய் மடப் பாவை சென்றே

#306
வில் சாரும் மேருப் பொருப்பின்
பொன் சாரல் சாரப் புகவே

#307
விதி நன்கு அமைத்து வழிபாடுசெய்து மட ஆயம் ஆகி மிடையும்
பதினெண்கணத்து மடவாரும் அன்னை முனிவு ஆறுமாறு பகர்வார்

#308
விழி வழி கருணைப் பச்சை விளக்கே மின்னே நின்
வழிவழி அடியேம் நீர்அரமகளிரோம் யாமே

#309
இது திருமலை இது திருவடி மலர் தோய் மலர் வாவி
இது துறை வரும் இவள் திருமகள் இவள் பார்மகள் பாரே

#310
மேல் நிற்பன உலகம் பொதி வெள்ளம் பொதி கள்ளச்
சேல் நிற்பன விடு நீர் புனை தெள் நீர் படு சுனையே

#311
அடையப் பிலநதி கீழ் விழ அண்டத்து அடி இடை போய்
உடையப் புடைபெயர் வெள்ளம் உடைத்து இக் குளிர் தடமே

#312
அலரோடு அளி தோயாதன இவ் வாவி அணங்கே
மலரோன் உலகு அடையப் புடைபெயர் கார்களின் வைப்பே

#313
மண் முழுவதும் மேல் வான் முழுவதும் கொண்டது போல
வெண்மதி தின பதி தாரகை விழ எழு சாயையதே

#314
நடுவே வரும் நானாவித ரத்னங்களினால் மேல்
உடு வேய்தரு ககனாகரர் ஊர் ஒத்துள ஒளியே

#315
அந்திப் போது அனையானுடன் ஆடும் திருவே நின்
உந்திப் போது இவ் வாவியின் ஊடே ஒரு மலரே

#316
படைக்கும் திரிபுவனம் பின் பாழாக எழுந்து அங்கு
உடைக்கும் பெரு வெள்ளங்களின் உற்பத்தியது ஈதே

#317
இவ் வாவியில் இவை செங்குவளைகளே இவையிவை நின்
மை வார் திருநயனங்களின் வலிபட்டன மிகவே

#318
நிரை ஏறிய குமுதங்களில் வெள் என்பன இவை நின்
விரை ஏறிய திருவாய் மலர் மீதூர்வன உறவே

#319
வேதம் கவர் கிளவித் திரு மின்னே விரை கெழு நின்
பாதம் கவர் செந்தாமரை வெண்தாமரை பண்டே

#320
குளிப்பார் இலர் அஞ்சாது இது கொண்டு ஓதி முடிக்-கண்
தெளிப்பார் கலைமகள் பார்மகள் திரு என்பவர் இவரே

#321
அலம் வந்தன வேதங்கள் அரற்றத் திருமலையே
வலம்வந்தனள் மழுவார் திரு நெடு மங்கலமகளே

#322
என்றென்று வணங்கி வணங்கி விடாது எல்லாரும் இரப்ப இரப்ப அதற்கு
ஒன்றும் தணிவு இன்றி விரைந்து பிரான் உறை கோ நகர் புக்கனள் ஒள்_நுதலே

#323
புக்குப் பெருமான் அடி சேவடியில் பொன் மா மலர் கொண்டு புனைந்து பொலம்
செக்கர்ச் சடையான் எதிர்நின்று அருளிச்செய்தாள் அடையத் தமர் செய்தனவே

#324
தாய் தந்தை எனத் தடைசெய்வள் இனித் தானே என வேள்வி தகர்ப்பது மேல்
நாதன் திருவுள்ளம் எடுத்திலன் மற்று அது கண்டு முனிந்தனள் நாயகியே

#325
வேல் எடுத்திலர் அம்பு தொட்டிலர் முயலகன் பெரு வெரிந் மிசைக்
கால் எடுத்திலர் அகிலமும் சுடு கை எடுத்திலர் ஐயரே

#326
விழித்தது இல்லை நுதல் திருக்கண் மிடற்றில் ஆலமும் மேல் எழக்
கொழித்தது இல்லை இருந்தவா இது என்று நாயகி கூசியே

#327
கரந்த பாகமும் நின்ற பாகமும் வேறு கொண்டு அமை காதலாள்
புரந்த பாகமும் அவற்கு விட்டு இமயம் புகத் தனி போகவே

#328
விட்ட பாகம் வலிந்து கண்டனர் வேறு கண்டிலர் மெய்ப்படப்
பட்ட பாகம் இரண்டும் அங்கு அவர் இல்லை அன்று படாதவே

#329
இந்தனாடவி முன் சிவக்க எரிந்தது ஒத்தது இருண்ட தண்
சந்தனாடவி வேறுபட்டது தம் மலைக் குளிர் சாரலே

#330
பைத்த பூணும் உயிர்ப்பு அழன்றன பண்டை உண்டியும் அவ்வழிக்
கைத்தது ஊழியில் ஆடும் மஞ்சனமும் கிளர்ந்து கனன்றதே

#331
மதியும் அன்று ஒரு தீ விளைந்து வளைந்துகொண்டது கங்கை மா
நதியும் வீசிய சீகரங்களின் வந்துவந்து நலிந்ததே

#332
சூடும் மஞ்சன ஆறு சுட்டது கண்ணி சுட்டது பண்டு தாம்
ஆடும் மஞ்சனமும் கொதித்தது இருப்பரோ தனி ஐயரே

#333
அன்று வானவர் உய்ய ஐயர் மிடற்று அடக்கிய ஆலமே
சென்று வானவர் உயிர் கொளத் திருவுள்ளம்வைத்தமை தெரியவே

#334
காலை நெற்றியின் அகிலமும் சுடு கனலி குறைபட இறைவர் தம்
மேலை நெற்றி விழிக்க வந்து பணிந்து நின்றனன் வீரனே

#335
நின்ற வீரனை மாமன் வேள்வி தகர்க்க என்று நெடும் சிலைக்
குன்ற வீரர் பணித்தலும் பணியாமல் வந்தன கூளியே

#336
திரண்ட பூத பசாசம் ஆயிர கோடிகோடி திறத்தவாய்
இரண்டு பாலும் உடன் செலத் திருமலை வலம்செய்து இறைஞ்சியே

#337
உலகும் ஊழியும் கொண்டு அமைந்தது ஓர்
இலகு வைதிகத் தேரில் ஏறியே

#338
மாக சந்த்ர மண்டலம் மழுங்க நின்று
ஏக சந்த்ர மண்டலம் எறிப்பவே

#339
மழைத்த தென்றலால் வாடையால் வகுத்து
இழைத்த திவ்ய சாமரை இரட்டவே

#340
கொள்ளையில் படும் குல வராக மான்
வெள் எயிற்று முத்தாரம் மின்னவே

#341
காத்த ஆமையோடும் கபாலமும்
கோத்த சன்ன வீரம் குலாவவே

#342
வந்தவந்த மாயவர்கள் மாய்-தொறும்
தந்ததந்த சங்கம் தழங்கவே

#343
திருக் கொள் மார்பன் திரிவிக்ரமம் செய்த
உருக் கொள் நீள் குரல் காளம் ஊதவே

#344
செய்த வேள்வி-வாய் யஞ்ஞர்-தம் சிரம்
பெய்த சிங்க சின்னம் பிடிக்கவே

#345
ஓடியோடி வீழ் தருமர் ஊர்தியின்
கோடிகோடி கொம்புகள் குறிக்கவே

#346
கொண்ட சூல வேல் விடு பொறிக் குழாம்
அண்ட வான மீன் நிரை மயங்கவே

#347
அற்ற வில்லின் வான் அடையவும் திருக்
கொற்ற வில்லின் நாண் விழி கொளுத்தவே

#348
பூத நெற்றியில் புண்டரம் புகுந்து
யாது தானர் நெய்த்தோர் இழக்கவே

#349
கூளி நாயகக் குலம் விடும் திருத்
தூளி சாகராதிகள் சுவற்றவே

#350
ஏனையோர் இருந்து இனையது என்னவே
சேனை வல்லபம் செய்த செய்தியே

#351
கொம்மை முலை மருங்கு எழுவர் குமரிமார்
தம்மை இடுக பேய் என்று சாடியே

#352
படைவிடா விசும்பாளரைப் பறித்து
இடைவிடா விமானங்கள் ஏறியே

#353
இடி இருந்த கண் பதினொர் ஈசர்-தம்
குடியிருந்த ஊர் எரி கொளுத்தியே

#354
அகல் இடம் தொழும் துவாதசாதித்தர்
புகலிடம் பொடி செய்து போகியே

#355
போழும் மின்னின் முன் புகுந்து எழுந்து கீழ்
வீழும் முன் பிடித்து இடி விழுங்கியே

#356
பூதம் யாவையும் புக விழுங்கும் மா
ஓதம் யாவையு தேடி ஓடியே

#357
இந்துகாந்தக் கிரியை இடக் கணால்
வந்து காந்தக் கடல் செய்து மாந்தியே

#358
முதிய வான மீன் வாரி முக்கி வான்
நதிய ஆன மீன் முழுகி நாடியே

#359
கடவுள் நீலி ஊர் யாளி கைப்படுத்து
அடவி வாரி மால் யானை வாரியே

#360
செலல் விலங்கு தேன் மடை தெவிட்டி ஏழ்
குல விலங்கலும் பாதி குன்றவே

#361
கார் கிழித்து அமரர் நாடு கண்டு உடன்
பார் கிழித்து உரகர் பூமி பற்றியே

#362
குடத்து எடுத்து நல் அமுது கொண்டவர்
படத்து எடுத்த சூடிகை பறித்துமே

#363
கடித்து மென்று உரகர் நஞ்சு கருதியோ
குடித்தும் என்று அமிழ்து கொண்டுபோயுமே

#364
எழாதவாறும் எழுந்த சுராசுரர்
விழாதவாறும் விசும்பு அற வீசியே

#365
பேர்த்து நின்ற வயிற்றின் பெரு வெளித்
தூர்த்து நின்ற விசும்பு எதிர் தோன்றவே

#366
வரு தரைக் குன்று வாழும் குழி வழி
நிருதரைப் புக நூக்கி நிரப்பியே

#367
ஓதமும் பொருப்பும் மண்ணும் விண்ணும் மற்றும் உள்ள எப்
பூதமும் த்ரிசூலம் இட்டு உடன் கலந்து போதவே

#368
வெம்மையே புரிந்த பேர் அலாயுதத்தர் வெள்ளையோர்-
தம்மையே உரித்து அமைத்த சட்டை மெய் தயங்கவே

#369
துற்று எழுந்த பேய் நிரை துளங்கு தம் உடம்பு விட்டு
அற்று எழுந்த தோல் முழுச் சளம்பம் மீது அலம்பவே

#370
மலைப் பிடித்த சீய ஏறுடன் பிணைத்து வாரி நீர்
அலைப் பிடித்த மீன ஏறு பெய்த காது அலைப்பவே

#371
பள்ளி வெற்பின் மாறுகோள் பெறாது விஞ்சை மன்னர் பாழ்
வெள்ளி வெற்பு எடுத்து இடும் குதம்பை காதில் மின்னவே

#372
குஞ்சி வேர் பறித்த குண்டர் செம்பொனின் குயின்ற பேர்
இஞ்சி வேர் அகழ்ந்து காதில் இட்ட தோடு எறிப்பவே

#373
பாரிடக் குலங்கள் பேய் நெடும் கை கால்களில் படக்
கார் உடல் சமண் குழாம் அநேக கோடி கட்டியே

#374
படர்ந்த பாரமே கவர்ந்து தின்று பாழ்படுத்தின
கிடந்த குண்டர் மெய் நரம்பும் என்புமே கிடப்பவே

#375
ஏறு நாலு திக்கிலும் புதுப் புலால் கமழ்ந்து எழுந்து
ஆறுநால் அமண் பிணம் கிடந்து எயிற்று அலைப்பவே

#376
தாழியில் பிணங்களும் தலைப்படா வெறும் தவப்
பாழியில் பிணங்களும் துளப்பு எழப் படுத்தியே

#377
பால் எழும்-கொல் பண்டு போல அன்றியே பசும்புணீர்
மேல் எழும்-கொல் என்று தேரர் தே அடங்க வெட்டியே

#378
தடம்-தொறும் படிந்து கை த்ரிதண்டும் ஏக தண்டுமாய்
மடம்-தொறும் கிடந்த சோரர் கொத்து அடங்க வாரியே

#379
வேலை-வாய் அரக்கர்-தம்மை மேரு வில்லி மஞ்சனச்
சாலை-வாய் வெதுப்பி வாள் எயிற்றினில் சவட்டியே

#380
காவி_வண்ணன் ஊர்தியும் த்ரிவேத போத காரணன்
தூவி அன்னமும் கலந்து சுட்டு வாயில் இட்டுமே

#381
சங்கு எடுத்து உடைத்து அயின்று தன் துணைத் தனிப்பெரும்
கொங்கு உடைச் சரோருகக் கிழங்கு அகழ்ந்து கொண்டுமே

#382
கை வழிக் குலப் பொருப்பு ஒர் எட்டுடன் கலந்து கொண்டு
அவ் வழிப் புயங்கம் எட்டும் அம் புயத்து இருத்தியே

#383
நீர் கலக்கி மீன ஏறு எடுத்து அயின்று நீல் நிறக்
கார் கலக்கி வான ஏறு செவ்வியோடு கவ்வியே

#384
ஆழி மால் வரைப் புறத்து இறைத்து வாரி அற்ற பின்
பாழி மால் கடல் பெரும் திமிங்கிலங்கள் பற்றியே

#385
அடவி முற்றும் அசலம் முற்றும் அவனி முற்றும் அதிர்படத்
தடவி முற்றும் உயிர் தொலைச்சி வயிறு வேட்கை தணியவே

#386
பிடிப்பிடித் துணித்துணிப் பிணிக்க எனப் பெயல் புலத்து
இடிப்பு இடித்து எருத் திறத்து எயிற்று அரைத்து இறக்கியே

#387
வால் எடுத்து நாகர் தங்கள் திவ்யபானம் வைத்த பொன்
சால் எடுத்து வாய்மடுத்து வெவ் விடாய் தணித்துமே

#388
கொண்டல் கோள் அறுத்து வானயாறு கோள் அறுத்து மேல்
அண்டகோளகைப் புறத்து அறாத நீர் அறுத்துமே

#389
மண்ணில் செந்தீ அடுப்ப உடுப் பல மாய்ந்தன
கண்ணில் காய்ச்சிக் குடித்தன நால் பாற்கடலுமே

#390
உயிர்ப் பெரும் பசி தீர்ந்த-கொல் இல்லை-கொல் உண்டு வெண்
தயிர்ப் பெரும் கடல் மாய்ந்தன பூத வேதாளமே

#391
அப் புளித் தயிர்க் கடலின் உப்புக் கடல் அடையவே
கொப்புளித்து அவை இரண்டும் ஒன்றாக்கிக் குடித்தவே

#392
பொய்க் கடல்புறத் தெய்வங்களைப் பொரித்துத் தினா
நெய்க் கடல் பசை அற்றது எங்கு உண்டு இனி நெய்யே

#393
வடிய வாங்கி மடுக்க எங்கே உள வந்து தாம்
படிய அன்று அளறு ஆயின தண்ணீர்ப் பரவையே

#394
கருப்புச்சாற்றுக் கடல் அன்று பிழைத்ததோ கழுது
விருப்புச் சாற்றின் குடித்தன கிடந்தன வெடித்தே

#395
மண் பெரும் பழம் கலத்தொடு மடுத்தன எடுத்துக்
கள் பெரும் கடல் குடித்தன தடித்தன கழுதே

#396
வேலின் மாயன் மாய்வுற விடும் பலி மேவு நாயகன் விடு படைக்
காலின் மாய்வன அல்லவோ ஒரு கையின் மாய்வன கடலுமே

#397
நதிகள் ஏழினும் முதல் கிரிகள் ஏழினும் அறா நளினி ஏழினும் வலம்புரிய நல்லன மகோ
ததிகள் ஏழினும் எடுத்து அடைய உள்ளன எனும் சங்ககோடிகள் குறித்து அகிலமும் தகரவே

#398
சக்கரக்கிரியும் எக்கிரியும் எப்புடவியும் சமைய வந்து தகரத் தழுவினும் தழுவும் நின்று
அக் கரத்து உலகு உடைக்கினும் உடைக்கும் இதில் ஓர் அலகையே என விரிஞ்சன் அலம்வந்து அலறவே

#399
ஓர் எயிற்றினும் வயிற்றின் ஒரு பாலும் இடவே உள்ளது எவ்வுலகும் அல்லது ஒரு பூதம் ஒரு பேய்
ஈர் எயிற்றினும் வயிற்றின் இரு பாலும் இட வேறு இல்லையே என வெறித்து அயன் மறித்து இரியவே

#400
சுடர் கிளைத்து அனைய செய்ய சுரி பங்கி விரியச் சுழல் விழிப் புகை பரந்து திசை சூழ வரு பேய்
கடல் குடித்து அவனி தின்று உலகும் அண்டமும் எழக் கதுவும் ஊழி முடிவின் கனல் எனக் கடுகவே

#401
யானை ஆன சில பாய் புரவி ஆன சில வாள் அடவி ஆன சில தேர் அசலம் ஆன சில நேர்
சேனை ஆன சில நிற்ப எவன் நிற்பது என இச் செல்லும் நால் அணியிலும் தலைவர் ஆன சிலவே

#402
அம் கண் நாரணர் பயோததியும் இல்லை மகனார் அம்புயாலயமும் இல்லை அவர் கட்கு அரியராம்
எங்கள் நாயகர் திருக்கயிலை வெற்பும் உளதோ இல்லையோ பிற புலங்களை இயம்புகிலமே

#403
கால் எழுந்த பொழுதோ கடல் எழுந்த பொழுதோ கனல் எழுந்த பொழுதோ கயிலையாளி கடகம்
மேல் எழுந்த பொழுதும் பிரமர் அண்ட கடகம் விண்டு உடைந்தில பெரும் திகிரி வெற்பு உடையவே

#404
புத்தர் போதி அருகந்தர்கள் அசோகு திருமால் புகுதும் ஆல் சதமகன் சுர தருக்கள் பொருளோ
எத்தராதலமும் நீழலிடும் ஏழ் பொழிலும் நேர் எழு விலங்கல்களும் நேர் அடி எழுந்து இடறவே

#405
விண்ணில் வந்த மழையும் பனியும் எவ் அடவியும் மிடைய வந்த தளிரும் துணரும் வெற்பின் நடு ஏழ்
மண்ணில் வந்த மணலும் பொடியும் வீரன் அவன் ஓர் வடிவின் வந்த கழுதும் குறளும் ஆன பரிசே

#406
பூதமும் பழைய வாமனன் வளர்ந்ததனையும் புடைபெயர்ந்து எழ வளர்ந்து பெயர் போன கழுதின்
சாதமும் கழுது எனும் பெயர் தவிர்ந்தன நிணத் தசை மிசைந்து உடல் விசும்பு புதையத் தணியவே

#407
கார் அடங்கியன தாரகை அடங்கியன கோள் கதி அடங்கியன மூவர் சிலர் தேவர் ககனத்து
ஊர் அடங்கியன பின்னும் எழுகின்ற அனிகத்துள் அடங்கியன உள்ள பதினால் உலகுமே

#408
வானும் இன்றி மகராலயமும் இன்றி நடு ஏழ் மண்ணும் இன்றி வடவானலமும் இன்றி அனிலம்
தானும் இன்றி அற நின்ற தனி மூல முதல்வன்-தன்னை ஒத்தது இனி என்னை இது தானை நிலையே

#409
கொண்ட கோடி சத கோடி கூளிகள் குளிக்க அன்று அவை தெளிக்கவே
அண்ட கோடிகள் அநேக கோடிகளும் உடைய நீர் சுவறும் அடையவே

#410
மலைகள் வாரியன ஏழும் முக்கி அவை விக்கி உடுவொடும் அடுத்து எடுத்து
அலைகொள் வாரிதிகள் ஏழும் நக்கி நடம் ஆடி ஐயை கழல் பாடியே

#411
எயிறு வெட்டுவன சக்ரவாளம் முதல் ஏழ் பொருப்பும் எட்டு எண் பணிக்
கயிறு கட்டுவன அண்ட கோடி புனை கைய காலன கழுத்தவே

#412
படம் பெறா மணி விசும்பு இழந்து உலகு பகல் பெறா பவனம் அடைய ஓர்
இடம் பெறா வெளி இழந்து நடு உடு எழப்பெறா ககனம் எங்குமே

#413
இடும் இடும் பதயுகத்து வீழ் கதியில் ஏழ் பிலங்களும் இறங்கவே
விடும் விடும் கரதலத்து எழுந்து கிரி சக்ரகிரி கிழிய வீழவே

#414
விட்ட குல கிரிகள் எட்டும் உம்பர் திசை யானை எட்டும் விழ வீழவே
சுட்ட விழியில் எழு கடலும் வற்றி எழு தீவும் ஒக்க நிலை சுவறவே

#415
சங்கு நேமியொடு உறங்கும் மேகமும் இறங்கும் ஏகமும் தப்புமே
பொங்கு நேமியுடன் வேவ வெந்து பொருபொரியுமே சகல கிரியுமே

#416
விழும் விழும் சிலாதல நிலம் பகிர்ந்து உரகர் விடர் நடுவு வீழவே
எழும் எழும் பணா மணிகள் அவ் வழியில் இரவிகள் வருவது என்னவே

#417
கரங்களால் ரவிகள் யாவரும் பெரிய கால்களால் உரிய கங்கையும்
சிரங்களால் அரசு பணியும் ஆகி முதல் பூதநாதர் பலர் செல்லவே

#418
விழவிடும் கிரிகள் கீழும் உள்ள பிலம் ஏழும் ஊடுருவ வீழவே
எழவிடும் கிரிகள் சூழும் அண்ட முகடு ஏழும் ஊடுருவ ஏறவே

#419
ஓமகூட கிரி நின்று எடுத்து எறிய அண்டகூடம் உருவிப் புறத்து
ஏமகூடமொடு சித்ரகூடம் எரி கனக கூடம் என எரியவே

#420
எயிறு இரண்டு அருகு வெண்பிறைக்கு இவை இரண்டு உடுத் தொடை-கொல் என்னலாய்
அயில் திரண்டு அனைய பல் ஒழுங்குகள் அலங்கு சோதியொடு இலங்கவே

#421
மாகமே அனையர் தம் மகோதரமும் எம்மகோததியும் மாய மேய்
மேகமே அனையர் ஆகமே கடவுள் மேருவே அனையர் ஊருவே

#422
உடுத்த நேமிகிரி நெரிய ஒருவர் நகம் உருவுமே உலகு வெருவுமே
எடுத்த சூலமொடு காலபாசம் இனி வீச யாதும் வெளி இல்லையே

#423
ஒருவரே அகில லோகமும் புதைய வேறுவேறு உடம்பு உடையரே
இருவரே தெரிய அரியர்தாம் இவரை எங்ஙனே தருவர் என்னவே

#424
கொண்ட கோலம் இவையாக அண்ட சத கோடி கோடி நிரை தானை இவ்
அண்டகோளகை வளாகம் ஒன்றினுள் அடங்கி நின்றன மடங்கியே

#425
எங்ஙனே இறைவர் உலகு பொதி வடிவம் எவ்வுடம்பினும் அடங்குமாறு
அங்ஙனே அவர்கள் விசுவரூபமும் அடங்கி நின்றபடி அதனிலே

#426
சாய்வது இன்மையின் நெருக்கி மேரு முதல் தாமும் நின்ற அவர் தாள் நிலம்
தோய்வது இன்மையின் இடம் கிடந்தபடி தோயுமேல் அவையும் மாயுமே

#427
நிலத்தினும் பல பிலத்தினும் சுரபி நிலையினும் திகிரி மலையினும்
சலத்தினும் கனகலத்தினும் புடை அடங்கி நின்றது உயர் தானையே

#428
ஊழி ஏறு கடல் நீர் அண்டகோளகை உடைத்து உம்பர் நீரொடு கலந்தனையது ஒக்கும் உடனே
பாழி ஏறு திணி தோள் வீரபத்ர கணமும் பத்ரகாளி கணமும் படை எழுந்தபடியே

#429
கார் முகக்கும் இரவு என்ன இருள் குஞ்சி விரிவார் கடல் முகக்கும் அகல் வாயன கபாலம் உடையார்
பார் முகக்கும் உருமுக் கழு நிரைத்த படையார் பல முகக் குமுத வாய் இறைவி பைரவர்களே

#430
பாரப் பணை முலைக் கொலையினும் சில புரூஉப் பங்கத்தினும் அடுப்பன வடுப் பகவினும்
கூரப் புறவ முல்லை முகை நகையினும் கொல்லுகை தவிரா இறைவி சாகினிகளே

#431
வெளி படப்பட முகிழ்த்து எயிறு எறிக்கும் நிலவார் விழி படக் குழை சுடச் சுடர் எறிக்கும் வெயிலார்
அளி வளர்த்தன வெறிக் குழல் எறிக்கும் இருளார் அறுமுக த்ரிபுர பயிரவி அகம்படியரே

#432
அடவியாகி வருவார் அசலமாகி வருவார் அமரராகி வருவார் அவுணராகி வருவார்
புடவியாகி வருவார் புணரியாகி வருவார் புவனநாயகி-தன் யாமள புராதனர்களே

#433
இடி பொறாமல் ஒருபால் அதிர்வர் சாகினிகளே எரி பொறாமல் ஒருபால் நகுவர் டாகினிகளே
படி பொறாமல் ஒருபால் வருவர் யோகினிகளே பகருமாறு அரியர் நாயகி பதாகினிகளே

#434
இப் படையோடும் ஐயன் மகராலயத்தில் ரவி போல் எழுந்தருளும் என்று
அப் படையோடு நின்ற சுரர் சென்று தங்கள் அரசற்கு இசைத்த பொழுதே

#435
ஆவ புகுந்த ப்ரத்தம் அறியாது அடுப்பது அறியாத தேவர் எதிர் தன்
பாவ மனம் கவற்ற அறிவின்மை கொண்டு சில வச்ரபாணி பகர்வான்

#436
பேதை மணந்த கெளரி அழையாமல் இங்கு வருவாள் இகழ்ந்து பெரிதும்
தாதை முகம்கொடாது விடுவான் நமக்கும் உலகுக்கும் என்-கொல் தவறே

#437
முகடு தகர்ந்து சிந்த முரி சக்ரவாளகிரியே பிடித்து முகில் எண்
பகடும் எழுந்து பெய்யும் மகராலயங்கள் அவை செய்வது யாவர் பணியே

#438
தரையை அகழ்ந்து தின்று கடல் ஏழும் நக்கி வட மேரு ஆதி தட மால்
வரையை வளைந்து தின்னும் வடவானலத்தின் வலியே நமக்கு வலியே

#439
அடி அடையப் பறித்த குல பூதரங்கள் அழியாக ஊழி அறையும்
படி அடையப் பிதிர்க்கும் ஒரு வாதராசன் அவன் நிற்க யாது பகையே

#440
மாயிரம் நேமி ஆதி மலை சுட்டு வேலை நிலை சுட்டு அயின்றும் மடியா
ஆயிரமான வெய்ய கதிர் ஆறிரண்டும் எவன் ஏவல்செய்வது அவரே

#441
உம்பரும் ஏனையோரும் மலை மத்தில் இட்ட உரகம் பிடிக்கும் அமுதத்
தம்பம் அமைந்து உடம்பு சலியாது நின்ற தனி மன்னன் யாவர் தமரே

#442
பருதி படப் பரந்து புகை கண் கடப்ப உலகங்கள் மூடு பகு வாய்
நிருதி செருக் குறிக்கின் உளரே தெரிக்கின் இனி என் படைக்கு நிகரே

#443
மது நுரை வார் கடுக்கை ஒரு கண்ணி சூடி மழுவாள் வலத்து வர நம்
பதினொரு தேவர் ஏறு பதினொன்றும் ஏறின் உலகங்கள் யாவர் பரமே

#444
சொல் பல சொல்லி என்-கொல் உயிர் வீசு பாசம் விடு காலன் யாவர் துணையே
பற்பல கோடி அண்டம் ஒரு தண்டில் எற்றும் யமராசன் யாவர் படையே

#445
கருடர் இயக்கர் சித்தர் கடி பூதநாதர் நிசிசரர் தானவர்கள் கிம்
புருடர் முதல் குலத்த பதினெண் பதாதி புடையே பரந்த படையே

#446
முனிவரும் ஆழியானும் இமையோரும் யானும் இளையோனும் நிற்க ரவி முன்
பனி வரும் என்ன இங்கு வருகின்றது என்-கொல் ஒரு சூலபாணி படையே

#447
வறுமை எவன்-கொல் என்-கண் ஒரு தன் படைக்கு வலியாவது என்-கொல் இமையோர்
சிறுமை எவன்-கொல் என்னை மதியாது சேனை விடுவான் எவன்-கொல் சிவனே

#448
யான் ஆள் பதி அமராபதி ஈமம் தனது எனது ஏழ்
கானாள் குல கிரி தன் மலை கயிலைச் சிறு கறடே

#449
குல எண் பணி யானே பணிகொள்வேன் அணி கொள்ளும்
பல வெண் பணி அவையும் சிலர் விடுதந்தன பண்டே

#450
சுரும்பு ஊத விழும் பேயொடு சூழ் பூதம் அவற்கு ஐம்
பெரும் பூதமும் எல்லீரும் எனக்கே படை பெரிதே

#451
கோலம்தரு தருவின் குளிர் குழை நீழல் விடேன் யான்
ஆலம் தரு வறு நீழலினிடை வைகுவது அவனே

#452
எண் கூறு அவன் ஒரு பேருரு அதனில் கனல் முதல் ஏழ்
திண் கூறும் எனக்கே படை என் கொண்டு-கொல் செருவே

#453
வான் ஏறு உரும் எனது ஆயுதம் அவன் ஆயுதம் மழுவாள்
யான் ஏறுவது அயிராபதம் அவன் ஏறுவது எருதே

#454
என் கண்ணினில் இவை ஆயிரம் எதிராய் வரும் ஈசன்
தன் கண்ணினில் முக்கண் இனி யார் கண்ணது தாழ்வே

#455
எம் இன்னுயிர் அனையீர் படை எல்லாம் உடன்வர நீர்
வம்-மின் என விடை நல்கினன் இது வாசவன் வகையே

#456
சிகரக் குலக் கிரிகள் சிதரத் தகர்க்கும் எறி திரையால் ஒரோர்
மகரக் களிக் களிறு மறுகக் கடற்கு அரசன் வர வாரவே

#457
கலகக் கனல் கொடிகள் ககனப் பரப்பில் எரி கதிரூடு போய்
உலகக் கவிப்பு அடைய உருகக் கடைக் கனலும் உடன் ஏறவே

#458
பல வெற்பு எடுத்து அடவி பறியப் பறித்து நதி பல வாரி நீர்
விலகிப் புடைப்ப விடவி வை கைப்படுத்து அனிலன் விளையாடவே

#459
தொழில் மிக்க செக்கர் எரி சுடர் இட்டு எரித்து உலகு சுடுவார்கள் போல்
எழில் மிக்கு இரட்டியறுவரும் ஒக்க அரக்கர் தம ரதம் ஏறவே

#460
குமுதப் பரப்பும் இதழ் குவியப் பனிப்பது ஒரு குளிர் கூருமால்
அமுதக் கதிர்க் கடவுள் ரவி கட்கு இரட்டி தனி அறைகூறவே

#461
எரி கக்கும் முக்கணினர் இடி ஒக்கும் முக்குடுமி எறி வேலினோர்
செருவிற்கு உருத்து எதிர்வர் சில முத்து எருத்தர் பதினொரு தேவரே

#462
மற வைத் தனித் திகிரி வளை ஒத்து இரட்டைநிதி வர ஆளிலே
பறவைக் கழுத்தில் வரும் அரி ஒத்து இயக்கர் குல பதி போதனே

#463
அரிகட்கு வைத்த எழு நரகக் குலப் பகுதி அணி ஏழினோடு
எரி கண் பணைத்த படர் எருமைப் பகட்டின் மிசை யமன் ஏறவே

#464
முடி இட்டு முட்ட வரும் முதுகல் குவட்டு மலை முதல்காறும் வீழ்
இடி இட்டு வெட்டுவன எரியிட்டு உருக்குவன இன மேகமே

#465
கரியைத் தொகுத்து உழுவை கஞலப் பெருக்கி உயிர் கவர் யாளியோடு
அரியைப் பரப்பி அதிர் அருவிக் குலக் கிரிகள் அணி கூரவே

#466
தொக்க மேகம் மாக வெளி சுற்றும் ஓடி மூடி வன துர்க்கம் யாவும் வேவ எரி துற்று வேறும் ஏறு கொடு
மிக்க கோடு கோடி பல வெற்பு அநேக பாகைபட வெட்டி வாரி வாரி வர விட்டு வீசி மேல் விழவே

#467
பைத்த சோதி ஆறிரு பதிற்றுநூறு காய விரை பச்சை வாசி நாலிருபதிற்று மேலும் நால் உறழ
அத்த சாலம் ஈர் அருகும் அத்ரசாலம் வீசி வர அர்க்க த்வாத சாதிபர் இரட்டியாறு தேர் விடவே

#468
சுத்த ஞான போதர் கழல் சுட்டி யானை-தோறும் இடு தொட்டி-தோறும் ஏறி இடை தொட்ட கார்முகாசனியர்
அத்த சாம கோடி என நிற்பர் ஆவ நாழிகையில் அப்பு மாரி தூவி வரும் அட்ட லோக பாலகரே

#469
முற்று மேரு ஆதிகளை முக்க வாரி ஊழி எரி முத்தன் நீல மோலி என முட்ட ஓதம் மீது எரிய
மற்றை ஆலகால எரி வர்க்க லோக கோடி சுடும் மத்த சாகரேசனொடு மச்சராசன் மேல் வரவே

#470
தக்கன் யாகசாலை வினை தப்ப மாடு சாமரைகள் தைப்ப வீசி மீது விரி சத்ரசாயை தோய உடன்
மக்கள் யானை சூழ வர மற்றை நாலு கோடு உடைய மத்த யானை ஏறி வரும் வச்ரபாணி வாசவனே

#471
அங்கண் வாசவற்கு இளைய வாசவற்காக ஆகவம் செய்க போய் எனத்
தங்கள் சேனையின் பின்பு நின்ற தன் தானை ஏவினன் சக்ரபாணியே

#472
சக்ரபாணியுடனே சகத்ரயம் தரு தசப் பிதா மகர்கள்-தம்மொடும்
பக்க மா முனி கணத்தர்-தம்மொடும் கூடி நின்றனன் பத்மயோனியே

#473
உம்பரும் பெரும் படையும் இப்படி உடன்று நிற்க மற்றவரை ஊடறுத்து
எம் பெரும் படைத்தலைவரான கும்போதராதிகள் இரைத்து மண்டியே

#474
அருக் ககனப் பரப்பு அடையப் புயத்து உற விட்டு அடைத்தே
உருக்கும் எரிப் பிழப்பு ஒளி புக்குழிப் புகவிட்டு உளைத்தே

#475
தனித் துரகத் தடத்து எரியைத் தழைத்து எரியச் சமைத்தே
பனிப் பரவைப் பரப்பினிடைக் கடைக் கனலைப் பழித்தே

#476
செயிர்த்து உதரத்து எரிச் சுரர் பொன் சிகைக் கதுவச் சிரித்தே
உயிர்ப்பில் இணைக் குருக்களை இட்டு உருக்கி நகத்து உரைத்தே

#477
திறத்து அவுணக் கணத்து உருவச் செறித்து உகிரைப் பறித்தே
புறத் திகிரிப் புகக் குருதிப் புதுப் புனல் கொப்புளித்தே

#478
கொதித்து உவணக் கொழுப்பு அரி பொன் கொடிக் குமுறக் குமைத்தே
கதித்து உரகக் கழுத்தின் முடிக் கவர்ப்பு அடையக் கழித்தே

#479
கலத்து அமிர்தப் பரப்பு அடையக் கவுள் புடையில் கவிழ்த்து ஏழ்
பிலத்து உருவப் பிளப்பு இடியப் பிடித்து உதிரப் பிதிர்த்தே

#480
அரக்கர் உரத்து அரத்தம் மடுத்து அழுக்கை எயிற்று அரைத்தே
புரக் ககனப் பொருப்பர்களைப் பொடித்து எரி கண் பொரித்தே

#481
கனத்த களக் கொளுத்தில் அறக் களிற்று அணியைக் கடித்தே
இனத்த குறைப் பிறக்கம் எயிற்று எதிர்ப்ப வயிற்று எடுத்தே

#482
அழித்த மதிக் கதிர்க் குளிர் இட்டு அருக்கர் உருப்பு அவித்தே
விழித்த வெயில் ப்ரபைக் கனலைப் பனிப் ப்ரபையிட்டு அவித்தே

#483
தகட்டு முடிப் பசுக்கள் வசுக்களைத் தழுவிச் சமைத்தே
பகட்டின் ஒடித்து உருத்திரரைத் திருக்கை முடப்படுத்தே

#484
தடுத்த குலப் பொருப்பை முடித் தடத்து உடையத் தகர்த்தே
உடுத் தொடை அற்று அழைத்து நிலத்து உழைப்ப உதைத்து உகைத்தே

#485
குனித்த களத் தளக் குதிரைக் குளப்படியைக் குறைத்தே
பனிப்பகையைப் பனிச்சுடர் விட்டு எறிப்பன பல் பறித்தே

#486
சுமப்பன திக்கயத்துடன் அத் திசைச் சுரரைத் துணித்தே
தமப்பன் அடிக் கழுத்து அடையத் தனிப் பகழித் தறித்தே

#487
நிழல் கடவுள் சுடர்த் தொகையைத் திரைத்து நிலத்து அரைத்தே
தழல் கடவுள் தடக் கைகளைத் தறித்து மழுப் பொறித்தே

#488
இனத்து அமரர்க்கு இறைக் குயிலைப் பிடித்து இறகைப் பறித்தே
பனத்தியை விட்டு அசட்டு வசிட்டனைப் பசுவைப் பறித்தே

#489
அகத்தியனைத் தமிழ்ப் பொதியில் குகைப் புகவிட்டு அடைத்தே
இகத்தி எனப் புலத்தியனைத் துடிக்க அடித்து இழுத்தே

#490
இகல் தருமற்கு எடுத்த கொடித் தடுத்து இறைவற்கு எடுத்தே
பகல் சுடரின் பகற்கு இரு கண் பரப்பு இருளைப் படுத்தே

#491
சலத்து அரசைக் கயிற்றில் இணைத் தடக் கைகளைத் தளைத்தே
கலக்கல முத்து உகுப்ப அடல் கடல் சுறவைக் கடித்தே

#492
அடுத்த குலப் பொருப்பை இருப்பு உலக்கை பிடித்து அடித்தே
எடுத்தன கற்பகப் பொழில்கள் கடைக் கனல் இட்டு எரித்தே

#493
குலப் பரவைப் பரப்பு அடையக் கடைக் கனலில் குடித்தே
சிலப்பு அரசைத் திருப்பரசுக்களின் சிதையத் துடைத்தே

#494
வேவின் உள்-வயின் வேவது ஈது எனப்
பாவகன் தகர் சுடாது பற்றியே

#495
ஏழு மானையும் ரவி இழக்க உள்
வாழும் மானையும் மதி இழக்கவே

#496
செம்பொடிப் புரத் திக்கயங்களைக்
கொம்பு ஒடித்து அடிக் குருகு துற்றியே

#497
தருமன் ஒளியோடு இவுளியைத் தகர்த்து
எருமையோர் ஒரோ புகழ் கெடுத்துமே

#498
வருதி என்று பேய் ஊர்தி வெளவியே
நிருதி-தன்னையே நிலைநிறுத்தியே

#499
இருள் கடல் கடைக் கனலில் இட்டு எடா
வருணன் வாகனங்களை மடக்கியே

#500
ஆர்வம் ஆளும் நாரணர் அநேகர்-தம்
மார்வம் ஆளும் மா நெளவி வவ்வியே

#501
நாம ராசியை உதிர்த்து உரோணி-தன்
சோம ராசி அளகம் சுலாவியே

#502
சேய மாதிரத் தேவர் தேவிமார்
மாய மேகலாபாரம் வாரியே

#503
மையலால் மிகும் தக்கன் மக்களாம்
தையலாரையுந் தாலி வாரியே

#504
என்ன மாமி என்று யாக பன்னியைக்
கன்னபூரமும் காதும் அள்ளியே

#505
பாபதண்டி-தன் பசுவை விட்டு அதன்
யூபதண்டு கொண்டு ஓட எற்றியே

#506
விவித முத்தழல் மீது வெய்ய நெய்
அவி தவிர்த்து நீர் பெய்து அவித்துமே

#507
பொய்ப் பருந்து காலொடு பறந்துபோய்
மெய்ப் பருந்துடன் விண்ணில் ஆடவே

#508
எடும் அடா நமக்கு என்று சென்று புக்கு
அடும் மடா எலாம் அற அருந்தியே,

#509
புக்க பூத வேதாள யூதமே
தக்கன் யாகம் இப்படி சமைக்கவே

#510
மாலை நாக மார்பர் மேகம் ஆகி நின்று இடிப்ப வான்
மேலை நாகர் கீழை நாகர் போல் மயங்கி வீழவே

#511
விழுந்த நாரணாதிகட்கு மீள வாழும் நாள் கொடுத்து
எழுந்து போர் தொடங்குக என்று குன்றவில்லி ஏவவே

#512
சிரமும் சிரமும் செறிந்தன
சரமும் சரமும் தறிப்பவே

#513
கனமும் கனமும் கனைத்தன
சினமும் சினமும் சிறக்கவே

#514
கடையும் கடையும் கலித்தன
தொடையும் தொடையும் துரப்பவே

#515
தாரும் தாரும் தழைத்தன
தேரும் தேரும் திளைப்பவே

#516
தோலும் தோலும் துவைத்தன
கோலும் கோலும் குளிப்பவே

#517
தோளும் தோளும் தொடங்கின
தாளு தாளு தரிப்பவே

#518
கிரியும் கிரியும் கிடைத்தன
கரியும் கரியும் கடுப்பவே

#519
தலையும் தலையும் தகர்த்தன
சிலையும் சிலையும் சிலைப்பவே

#520
குடையும் குடையும் கொழித்தன
படையும் படையும் பகைப்பவே

#521
மடிந்தன குவலய வலயமே
இடிந்தன குல கிரி எவையுமே

#522
அற்றன எழிலியொடு அசனியே
வற்றின எழு பெரு வாரியே

#523
உதிர்வன எழிலியும் உடுவுமே
அதிர்வன புடவிகள் அடையவே

#524
நெரிந்தன மாசு உண நெற்றியே
இரிந்தன மாசுணம் எவையுமே

#525
அழுந்தின குல கிரி அடையவே
விழுந்தன திசை பல மிதியிலே

#526
சிதைவது சூழ்வரு திகிரியே
புதைவது சிலை-கொல் பொருப்புமே

#527
பறிந்தன அடவிகள் பலவுமே
மறிந்தன பல குல மலையுமே

#528
பெருத்தன அமரர் பிணங்களே
பருத்தன பூத பசாசமே

#529
அயின்றன எருவையொடு அலகையே
பயின்றன பிண மலை பலவுமே

#530
முழங்கின முகில் என முரசமே
தழங்கின எதிரெதிர் சங்கமே

#531
மா கலக்கம் மூள் வாரணங்கள் முன்
பாகலப் பசாசுகள் பரக்கவே

#532
வெள்ளி வாய் மதிக் குடை விளிந்த ஓர்
கொள்ளிவாய் நெடும் பேய் கொளுத்தவே

#533
விரவி வெள்ளியின் தெரி விபஞ்சியில்
புரவி வெள்ளம் முற்றும் புரட்டவே

#534
மாக் கணம் கொள் படை வானநாடரைத்
தாக்கணங்குகள் தரைப்படுப்பவே

#535
அடப் படப் பொருது அமரர்-தம் படை
படப்பட ப்ரசாபதி படைக்கவே

#536
பள்ளிக் குன்றும் வில் குன்றும் ஒழியச் சிறகு அறுப்புண்டு பாழ்
வெள்ளிக் குன்று பொன் குன்று கல் குன்று அடைய வீழவே

#537
வெள்ளிக் குலக் குன்று பொன் குன்று கல்லின் விழுக் குன்று எனப்பட்ட குன்று யாவும் வீழக்
கிள்ளிச் சிறைப் பாரம் உகிரில் கிடப்பக் கிளர்ந்து உம்பர் கோமானை மானம் கெடுத்தே

#538
பொற்பு ஊடறக் கற்பகக் காடு சாடிப் புகுந்து உம்பர்கோன் முன்பு பூதப்பிரான்மார்
வெற்பு ஊடறப் போய் வெறும் கைகளாலே விழுத் தோகையான் வாகை வென் வேலை வென்றே

#539
குமிழ்க்கும் குவட்டு ஏழு குன்றும் பிலத்தே குளிப்பக் குறும்பூதம் ஒன்றே குமைத்துத்
தமிழ்க் குன்றின் வாழும் சடாதாரி பேர்யாழ் தழங்கும் திருக்கைத் தருக்கைத் தவிர்த்தே

#540
கட்டிக் குறங்கைக் குறங்காலும் மோதிக் காதும் சிறைக் கைகளைக் கைகளாலே
மட்டித்து வெற்போடு மற்போர்செய் பூதம் மல்லர்க் கடந்தானை மானம் கெடுத்தே

#541
அலங்கல் பணைத் தோள் இணைக் குன்றின் ஒன்றால் அடல் பூதம் ஒன்று ஏழை ஆகண்டலன்-தன்
விலங்கல் குழாம் மாரி போய் நீறுநீறாய் விழப் பண்டு கல்மாரி வென்றானை வென்றே

#542
புடைக்காலம் மற்று ஒத்து உருக்குண்ண ஏழ் பொன் பொருப்பும் கனல் கண் கடைச் சுட்ட பூதம்
கடைக்காலம் எக்குன்றமும் சுட்டு உருக்கும் கடும் கோள்கள் ஈராறு நாணக் கலித்தே

#543
கைந்நாகமே மேயும் மா நாக நாகக் கணம்கூட வாரிக் கவுள் கொண்ட பூதம்
மைந்நாக வெற்பு ஒன்றையும் தன் வயிற்றே மறைக்கும் கடல்கோனை மானம் கெடுத்தே

#544
சோரிக் கடல் சாடியில் குன்றம் ஒன்றைச் சுழற்றித் துழாய் வெண் நிணம் துய்த்த பூதம்
பாரித்த பெளவங் கடைந்தார்கள் என்னும் பராவின்மை தேவா சுரர்க்குப் பணித்தே

#545
மேல் ஆழியார் வெள்ளி வேதண்ட லோகம் விழிக்கே உருக்குண்ண வெள்ளம் செய் பூதம்
பாலாழியும் தாழ அவ் ஆழி வைகும் பரந்தாமனும் தாழ உள் பள்ளிகொண்டே

#546
சென்று எட்டு வெற்பும் பணிப்பத் துணிப்பச் செயிர்த்து எண்மர் கணநாதர் இனம் மிண்டு சிகரக்
குன்று எட்டும் இட்டு எண் திசாதேவர் ஏறும் கொல் யானை எட்டும் விழக் குத்துவித்தே

#547
தம் பூதராதிகளொடும் கூடி ஆடித் தயிராக வயிராகரக் குன்று இளக்கிக்
கும்போதராதிகள் குடித்துத் தடித்துக் கொள்ளாத வச்ரகாயம் கொண்டு கொண்டே

#548
தீ வாய்-வயின் திண் பொருப்பு இட்டு உருக்கிச் செவ் வாய்-தொறும் கொண்டுகொண்டு உம்பர் சென்மார்
வாய்வாய்-தொறும் கொப்புளிப்பார் களிப்பார் மழுவாளியார் சாரமாணி என வந்தே

#549
அலை கொன்று வரு கங்கை வாராமல் மேன்மேல் அடைக்கின்ற குன்று ஊடறுக்கின்ற பூதம்
மலை கொன்று பொன்னிக்கு வழி கண்ட கண்டன் வர ராசராசன் கை வாள் என்ன வந்தே

#550
மின் வெள்ளி பொன் கொல் எனச் சொல்லும் முப்போர் விலங்கல் குழாம் ஓர் விழிச் சுட்ட பூதம்
பொன் வெள்ளி எஃகு என்ன வானத்து உலாம் முப்புரம் சுட்ட வீரர்க்கு மேலே பொலிந்தே

#551
பொங்கக் களிற்று ஈர் உரிப் போர்வை கொண்டும் புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தே
சிங்கப் பசுந்தோல் கொடு ஏகாசம் இட்டும் செய்யப்பெறா வல்லபம் செய்து சென்றே

#552
சங்கும் பொலன் கற்பகக் காவும் மாவும் சதுர்த் தந்தியும் சர்வமும் தேரும் வாரிப்
பொங்கும் கடற்கே புகப்போக வீசும் பூதம் தபோவாரி கோதம் புரைத்தே

#553
நீர் இன்றியே செல் நெருப்பு உண்டு அறுத்தும் நெருப்பு இன்றியே நீரை நேரே குடித்தும்
கார் இன்றியே நின்று இடிக்கின்ற பூதம் கடற்கும் கனற்கும் கடும் கெளவை கண்டே

#554
மஞ்சு ஊடு வேவக் கொளுத்தும் கனல் கண் மா நாகம் ஓர் எட்டும் மட்டித்து அவற்றின்
செஞ்சூடிகா கோடி சிந்தப் பறித்துச் சிறைப் புள் குலம் காவலன் சீர் சிதைத்தே

#555
கட்டுக் கொள் பொன் தேரின் ஞாயிற்றையும் தண் கதிர்க் கோளையும் பாரிடம் சென்று கெளவிச்
சுட்டுக் கொல் கூசிக் கொல் விட்டும் பிடித்தும் தொடர்ந்து இராகு கேதுக்கள் சீலம் தொலைத்தே

#556
மக்காள் நுமக்கு அம்ம தாய் காணும் யான் நீர் மறந்தீர்கள் என்றென்று வஞ்சப் பெண் அங்குப்
புக்காள் முலைக் கண்களால் ஆவி உண்டு அப் பொய் மாயனார் செய்தி போகப் புணர்த்தே

#557
எயிறு ஆர வாய் ஆர மிடறு ஆர ஒருகாலும் எரி தீ அறா
வயிறு ஆர ஆறாத வடவு ஆற இமையோரை வர வாரியே

#558
அரிது இன்று போர் என்று கோன் அஞ்ச அமிர்தோடும் அமிர்து உண்டு எழும்
கரி தின்று பரி தின்று தேர் தின்று முளி கூளி களி கூரவே

#559
தேர் இல்லை கரி இல்லை பரி இல்லை இவை நிற்க தேவு என்பது ஓர்
பேர் இல்லை சுரராசன் விடு சேனை பேய் தின்று பேய் ஆகியே

#560
பரந்து அரனார் படை ஊழியில் ஆழியை ஒத்தது பாய் எரி கொன்று படும் கடல் போல் குறைபட்டது
புரந்தரனார் படை வந்து படும்படும் உம்பர்கள் பூதமும் வேதாளங்களுமாயே புகுதவே

#561
தம் தடி தின்றனர் தம் தலை மூளை விழுங்கினர் தத்தம் உரத்து உகுமாறு தடுத்து மடுத்தனர்
சிந்தடி வன் குறளால் அலகைக் குலம் ஆகிய தேவர் பிறப்பும் இறப்பும் இலாதவர் செத்தே

#562
ஆடா விழி இணை காகம் இருந்து பறிப்பன அடி படி தோயாதன கத நாய்கள் அலைப்பன
வாடா மிஞிறு இமிரா முடி மாலை துகைப்பன வல் வாய் எருவைகள் வானோர் பெருமிதம் வாழியே

#563
போர்த் தேர் இவுளி தின்று ஆளும் பாகும் மிசைந்து பூட்டழிந்தே
தேர்த் தேர் என்ன வரும் பேய்த் தேர் தேவர் உலகில் திரியுமால்

#564
அமையோம் என்னும் அலகை இனம் தின்று விடாய் பண்டு அமிர்து உண்ட
இமையோர் இமையாப் பேய் ஆகி இந்த்ர லோகத்து ஈண்டுவரால்

#565
முடை கமழ்ந்து தசை இழந்து முது நரம்பொடு என்புமாய்
அடைய இந்த்ர லோகமும் பசாச லோகம் ஆகவே

#566
முடை அழுங்கி அமிர்தம் நாறி அழகு அமைந்த மொய்ம்பினால்
அடையவும் பசாச லோகம் இந்த்ர லோகம் ஆகவே

#567
பின்னையும் பிதாமகன் படைக்கப் பேர் அமர்
முன்னையின் எழு மடி முடுகி மூளவே

#568
பித்த வானவர் எங்கே பிழைப்பது
மொய்த்த பூதம் வயிற்று எரி மூண்டவே

#569
மேலும் கீழும் வெளிப்பட வான் விடும்
கோலும் குந்தமுமே விளை கொள்ளியே

#570
விட்ட தேர் எலாம் வாரி விழுங்கவோ
இட்ட பேர் உதரத் தீ எரிவதே

#571
புக்க வேழம் பொரியப் புகை புறம்
கக்க ஏழு பொழிலும் கதுவவே

#572
இரிந்தது அப்புறம் இந்திரன் ஏவலால்
விரிந்த தீ அடையச் சென்று விம்மவே

#573
சேனை எல்லாம் திரிய விழுந்தன
ஆனை எல்லாம் அணியணியாகவே

#574
ஆழம் எட்டும்-கொல் அவ் வயிறு எண் திசை
வேழம் எட்டும் புகப்புக வீழவே

#575
வீழ்ந்த வேழங்கள் வெந்து வயிற்று வீழ்ந்து
ஆழ்ந்தது அண்ணல் அயிராபதமுமே

#576
மெய் அடங்க வெந்தார் சிலர் விண்ணவர்
கை அடங்கிய செந்தீக் கதுவவே

#577
சோற்றுப் பாவகன் வெந்தனன் சூழ் திசை
வேற்றுத் தேவர் எழுவரும் வேவவே

#578
சாலத் தீயில் அரக்கர் உபாதிகள்
ஆலத் தீயில் அற வெந்து அவியவே

#579
அடைய வெந்தனர் துவாதசா தித்தரும்
உடைய வெங்கதிர் தம்மை உருக்கவே

#580
தடம்செய் ஏகாதசரைத் தனித்தனி
முடம்செய்தே அவர் முத்து எருத்து எற்றியே

#581
திங்கள் தண்மையின் தேரோன் அவிந்தனன்
தங்கள் வெம்மையின் தண் மதி வேவவே

#582
கால் கொளுத்தும் அச் செந்தீக் கடவுளும்
மேல் கொளும் தகர் வீழ்ந்துழி வீழவே

#583
ஏறு தூக்கும் இடி எரி தீந்து அவர்
ஆறு தூக்கும் அ மேகம் அடங்கவே

#584
காந்த மூளத் திருக்கண் கதிர்க்கு எதிர்
போந்த எல்லாப் பொருப்பும் பொரியவே

#585
எப்புத்தேளும் இடும் எப்பணிகளும்
வெப்புத் தீயில் விரவி எரியவே

#586
அனிகமாய் வரும் ஆகண்டலன் விடும்
முனி கணத்தர்-தம் முத்தழல் மூழ்கவே

#587
விரி முகக் கடல் ஏழ் பெரு வெள்ளமும்
பரி முகத்து ஒரு செந்தீப் பருகவே

#588
வேட்டுத் தீ வர விட்டன காட்டு வெம்
காட்டுத் தீ இனம் மூண்டு கதுவவே

#589
பெருக வெந்தன செந்தீப் பிழம்பு எழ
உருக வெந்தன தாரகா லோகமே

#590
முன்னமுன்ன அடைய முளியுமால்
பின்னை யார் அவர் கையில் பிழைப்பரே

#591
பாவகாரப் பதின்மரும் யாவரும்
வேவவேவப் படைத்தனர் மீளவே

#592
படைத்துவிட்ட சுரர் சேனையைத் தலைவி பத்ரகாளி படை கண்டு பண்டு
அடைத்துவிட்டபடி அன்றியே இறைவர் முன்பு நின்றன பின்பாகவே

#593
மோக மோகினிகள் யோக யோகினிகள் யாக சம்மினிகள் முலை விடா
நாக சாகினிகள் வீர பைரவிகள் நாத சாதகர்கள் நண்ணியே

#594
யானை யாளி பரி ஏதி தேர்கள் என எண்_இல் கோடி பல பண்ணி இச்
சேனை ஆள் என அநேக பூதமொடு செய்த பேய்களொடு செல்லவே

#595
கொண்ட திருக்கோலங்கள் இருக்கும்படி அடியோமே கூற இருப்பேம்
அண்டம் அனைத்தும் சூழ வரும் பேர் ஆழிகளாமே ஆழி அவர்க்கே

#596
உலகு வகுப்பார் உலகு தொகுப்பார் உலகு படைப்பார் உலகு துடைப்பார்
அலகு வகுப்பார் அகில கலைக் கூறு அடைய விடுப்பார் அவள் அடியாரே

#597
பொய் யானையும் ஆளும் உடன்று பொரா
மெய் யானையும் ஆளும் விழுங்கினவே

#598
பொய் யாளியில் ஆள் இடும் எஃகு இடைபோய்
மெய் யாளியொடு இற்றனர் விஞ்சையரே

#599
பொய்த் தேர் அணி முட்ட வெறும் பொடியாய்
மெய்த் தேர் அணி அற்றனர் விண்ணவரே

#600
பொய் வாரி பரந்து புகப் புரளும்
மெய் வாரி பிறங்கி விசும்பு உறவே

#601
பொய் வந்த பதாதியுள் ஆவி புகா
மெய் வந்த பதாதி விழுந்து அறவே

#602
பொய் ஆயுத வாய் உமிழ் பொங்கு அழலால்
மெய் ஆயுதம் யாவையும் வெந்து அறவே

#603
பொய் நின்ற பதாகினி தந்தது போய்
மெய் நின்ற பதாகினி மெய் கெடவே

#604
நுங்கள் கூறு கொன்றீர் இனி நொய்ய கூறு
எங்கள் கூறு எமக்கே விடும் என்னவே

#605
பால் நிலாவைப் பசும் கதிர்க் கொத்தொடு
மேல் நிலாவும் சகோரங்கள் மேயவே

#606
கோன் அம்போதரம் கும்போதரம் புக
வானம்பாடியே கூடி மடுப்பவே

#607
ஏறும் ஏறும் மலைகள் எல்லாம் புக
வேறுவேறு கபோதங்கள் மேயவே

#608
பதங்கர் வெம் கதிர் பன்னிரண்டாயிரம்
கதம் கொள் நீலி கைக் கிள்ளை கவரவே

#609
யூத நாயகரோடு உரகேசரை
வேதநாயகி தோகை விழுங்கவே

#610
முன் நரம்பினும் முத்தர் மிடற்றினும்
கின்னரம் சுரர் நெஞ்சம் கிழிக்கவே

#611
சக்ரமாய்ச் சென்று சக்ரவாகங்களே
விக்ரம் ஆயுத வெள்ளத்தை வெட்டவே

#612
திருடன் இந்திரன் உய்ந்து திரியுமோ
கருடன் ஆயிரம் கண்ணும் கவரவே

#613
ஆளி ஏறி அகிலாண்ட நாயகி
வாளி ஏவி உலகை வளைப்பவே

#614
எக்கவந்தமும் எப்பிணமும் கிரி
ஒக்க வந்து ஒரு வாளிக்கு உதவவே

#615
பூமி வட்டமும் போர் எரி வட்டமும்
நேமி வட்டமும் நேர் ஒத்து நிற்கவே

#616
கொன்றது அன்று இமையோர் பிணம் கூளிகள்
தின்ற சீர் தம் திருவுள்ளம் சேர்த்தியே

#617
புங்க வாளி ஒன்றினால் புரத்ரயம் சகத்ரயம்
சிங்க வாளி ஒன்றினால் இருவரும் சிதைப்பவே

#618
இப்படிப் பட்ட பின்னும் இமையவர் படை கண்டு ஐயர்
அப் படை இன்னம் நின்றது என்-கொல் என்று அருளிச் செய்ய

#619
படப்பட அயனும் மக்கள் பதின்மரும் படையா நின்றார்
விடப்பட அணியோய் என்று விண்ணப்பம்செய்யக் கேட்டே

#620
சீறிய சினத் தீ உண்ணத் திரிபுரம் எரித்த நாளில்
ஏறின திருத்தேர்-நின்றும் இழிந்தனன் எங்கள் வீரன்

#621
மாண் என் எண்மரும் நால் முகத்தன மூகை சூழ அமைந்தது ஓர்
ஞாண் என் மஞ்சனம் என்-கொல் காரணம் நாரணாதிகள் நாசமே

#622
காடு போகு சடாமுடிக்கு அபிடேகம் அண்ட கபாலமே
ஊடுபோக அநந்த கோடி சகத்ரதாரை ஒழுக்கவே

#623
செய்ய கைத் திருநாண் அணிந்து அருள்செய்க எனத் திருமங்கலம்
துய்ய தும்புரு நாரதாதிகள் வேத வீணை தொடங்கவே

#624
பொதியில் வாழ் முனி புங்கவன் திருவாய்மலர்ந்த புராணநூல்
விதியினால் வரு தும்பை மாலை விசும்பு தூர மிலைச்சியே

#625
கச்சியில் சுரசூத சீதள பல்லவம் கனலில் கலித்து
உச்சியில் பனி வீசு கண்ணியின் வெண்ணிலாவை ஒதுக்கவே

#626
மாறில் பேரொளி வட்டம் இட்டு வரம்பிலா மறை மா நிறுத்து
ஈறு_இல் காலமும் ஞாலமும் கொடு செய்த தேர் மிசை ஏறியே

#627
கால்பிடித்து நிவந்த தேர் தம காணியாய் வழி வந்து முள்
கோல் பிடித்து வலம்செய்து ஏறி விரிஞ்சனே குசை கொள்ளவே

#628
மாகமே வரும் ஊர் இறக்க விளைந்த நாளில் வளைந்தது ஓர்
நாகமே-கொல் பினாகமே-கொல் இடத் திருக்கையில் நண்ணவே

#629
புரம் கொல் அம்பு-கொல் வந்துவந்து இடை போனபோன புராணர் பொன்
சிரம் கொல் அம்பு-கொல் என்-கொல் ஒன்று வலத் திருக்கை திரிக்கவே

#630
ஏனம் எய்தன சிங்கம் எய்தன கற்கி எய்தன வெண்ணிலா
மீனம் எய்தன ஆமை எய்தன ஆவ நாழிகை விம்மவே

#631
பிடித்த வில்லின் எறிந்த நாண் ஒலி அண்ட பித்தி பிளந்துபோய்
வெடித்த ஓசையில் அப்புறத்வனி போல மேல் எழ விம்மவே

#632
சூலமோ புவனங்களுக்கும் முகுந்தன் ஆதி சுரர்க்கும் மாய்
காலமோ என வந்தது அந்தில் கணிச்சியும் கனல் காலவே

#633
புனைந்து வந்த மதிக்கு முன்பு பயந்த வேலை பொறாமையால்
நினைந்து வந்து அமுதம் சொரிந்து என மாலை வெண்குடை நிற்பவே

#634
அமைய நிற்கும் அலங்கல் ஏறு பிறங்க வெண் கொடி ஆடுமால்
இமைய வெற்பும் அதன்கண்-நின்றும் எடுத்த கங்கையும் என்னவே

#635
வாசவன் தசநூறு கண்ணும் மறைந்து பேரிருள் மண்டவே
கேசவன் தகை மெளலி போய் இருள் கெட்ட கேடு கிடக்கவே

#636
சடை-கொல் வெம் மழு வாய்-கொல் உண்டு புனல் பெருந்தகை சாயவே
கடை-கொல் தீ கொள் கரம்-கொல் வவ்வி இருந்த அத்தி கரிந்தவே

#637
திங்கள் மண்டிலம் ஏற வெந்து களங்கம் அல்லது தீயவே
வெங்கண் மண்டிலம் ராகு முற்ற விழுங்கி ஒத்து மழுங்கவே

#638
கொட்ட ஊத எடுத்த பல்லியம் ஐந்தும் வந்து இறைகொள்ளவே
இட்ட வெண்குடை வீச சாமரை யாவும் யாரும் இழக்கவே

#639
சூட என்று வகுத்த தும்பை புராரி சேவடி தோயவே
வீட என்று வகுத்த தும்பை சுரேசர் மெளலி மிலைச்சவே

#640
விட்ட ஊர்தி அனைத்தும் உம்பரை வீசி வந்தன விம்மவே
தொட்ட ஆயுதம் முற்றும் மற்றவர் கைதுறந்து அடி சூழவே

#641
போகையே என வைனதேயனும் அன்னமும் குடிபோகவே
கூகையே மிடை காகமே அவர் கொடி மிசைக் குடிகொள்ளவே

#642
பின் வரும் சுடர் ஆழியான் நடு வாக மீது ப்ரதானராய்
முன் வரும் சுரரோடும் இந்திரன் வந்து தோமரம் முட்டவே

#643
புரண்டு மின்னும் நெடுநாள் நுடங்குவன மேக ராசி பொழியப் புறத்து
இரண்டு வில்லும் என இந்த்ர சாபமுடன் யந்த்ர சாபமும் இறங்கவே

#644
சேய கண் கனல் முராரி தங்கள் கடல் செல்க என்ன அது சென்றதால்
நாயகன் பரசுபாணி வேணி ஒரு நாக நாவினை நனைத்ததால்

#645
படப்படப் பெரும் பரவை ஆயிரம் பள்ளி மால் எதிர் பரப்பினான்
விடக் கரும் கணினது ஐயர் கைத் தொடி விழித்தது அன்று அவையும் வேவவே

#646
வையம் உண்டு தனி துஞ்சும் ஆலை வர மாயனார் விலக நாயனார்
ஐயம் உண்டு தருமம் பணித்தருளும் ஆதி ஆல் பொருது அழித்ததால்

#647
ஆழி மாயன் விட ஆதி வானவன் முன் ஆடகச் சிறகின் அருகு புக்கு
ஊழி மாருதம் இரண்டு பாடும் வர ஊடு சென்றது அவன் உவணமே

#648
இறகு தீய உயிர் தீய வீயும் அதன் வெற்றுடம்பு உலகின் எல்லையில்
பிறகு தீ என எழுந்து வீழ்ந்திட உயிர்த்தது ஐயர் விடு பெற்றமே

#649
சக்கரப்படை முகுந்தன் ஏவ அதுதானும் எங்கள் இரைதான் எனா
நக்கர் அப்பு அடை சடாடவிப் புடையில் உண்டு அறுத்தது ஒரு நாகமே

#650
ஆலம் ஒன்றும் அமுது என்று பண்டு அமுது செய்யும் ஐயர் பணி அன்றியே
சூலம் ஒன்று தனி சென்று மற்றவன் மணித் துழாய் முடி துணித்ததே

#651
வளையும் ஆழியும் மருங்கு பற்றியது ஒர் இந்த்ர நீலகிரி மறிவது ஒத்து
இளைய வாசவன் விசும்பின்-நின்றும் விழ எரி சினம் திருகி இந்த்ரனே

#652
மேக வெள்ள நதி வெள்ளம் நூறுக என உம்பர் நாயகன் விளம்பினான்
மாக வெள்ள நதி கொண்டது ஓர் சடை வளைந்து கொண்டது அவை வற்றவே

#653
மெத்து வேலைகளை வச்ரபாணி வரவிட்ட போது அரி விரிஞ்சரைக்
குத்தும் வேல்-கொல் தலை வெட்டும் வாள்-கொல் எயில் எய்யும் அம்பு-கொல் குடித்ததே

#654
வளைந்து வந்தன புரந்தரன் குல விலங்கலைப் பணி மதாணியோன்
விளைந்து வந்தன வெறும் பொடித் தனது கைப் பொடிச் சிறிது வீசவே

#655
காடு கொண்ட படை கொண்டு வந்த சுரர் ஈசன் விட்டது ஒரு கற்பகக்
கோடு கொண்டு அதனையும் படைப்பையும் அடக்கி நின்றது அவர் கொன்றையே

#656
இடிப் பெரும் படை எரிந்து மண்டி வர விண் தலத்து அரசன் ஏவினான்
அடிப் பெரும் கடவுள் ஊழி ஈறு-தொறும் ஆடும் மஞ்சனம் அவித்ததால்

#657
வச்சிரப் படையும் இந்திரன் படையில் வந்ததால் அதனை வல்லவன்
முச்சிரப் படையும் வேறு செய்திலது நீறு செய்தது எதிர் முட்டியே

#658
நிலத்தை ஏவ நிசிந்தனும் ஓர் அடித்
தலத்தை ஏவினன் முற்றும் தகரவே

#659
ஓதம் ஏவ ஒரு குறும்பூதத்தை
நாதன் ஏவினன் நாவை நனைக்கவே

#660
தீயை ஏவச் சிரித்து ஒரு கொள்ளிவாய்ப்
பேயை ஏவினன் எங்கள் பிரானுமே

#661
காற்றை ஏவ உயிர்ப்பது ஒர் கட்செவிக்
கூற்றை ஏவினன் ஐய குறளனே

#662
வானை ஏவ வயப் புயமாம் பெரும்
சேனை ஏவினன் எங்கணும் செம்மலே

#663
அண்டர் யாவரும் ஆழி கடைந்து பண்டு
உண்ட ஆரமுதோடும் ஒருங்கவே

#664
அமுதில் வந்த அயிராபதம் அவர்
குமுத வாய் உமிழ் நஞ்சில் குளிப்பவே

#665
பாற்கடல் படு பாய்மாப் படு புனல்
கால் கடல் சுழி உள்ளே கரப்பவே

#666
அங்கண் நாயகி அங்கியில் உள்ளன
தங்கள் கால் தம் கை தாம் கண்ட வண்ணமே

#667
வேற்றுக் கோட்டிப் பதினொரு விண்ணவர்
ஏற்றுக் கோட்டின் உயிர்க் கழுவேற்றவே

#668
உக்கு நின்றனர் உம்பர் உடம்பு தாம்
புக்கு நின்ற நிலை விடப் போகவே

#669
உய்யலாம் என உம்பர் பிதாமகன்
மய்யலால் பின்னும் சேனை வகுக்கவே

#670
வகுத்துச் சேனையை வானவர் கோமகன்
தொகுத்து விட்டு அமர் மீளத் தொடங்கவே

#671
தேர்த்தட்டாய் அன்று உடைந்தது தேர்ந்து-கொல்
பார்ப் புத்தேள் பயத்தோடு பறந்ததே

#672
பண்டு மாண் மகன்-தன் செயல் பார்த்தவோ
மண்டும் ஆழிகள் என்-கொல் மறிந்தவே

#673
ஊழித் தீ உவந்து ஆடுவது ஓர்ந்ததோ
பாழித் தீ நடு என்-கொல் பனிப்பதே

#674
உயிர்ப்பு அவர்க்கு நாம் என்பதை உள்ளியோ
செயிர்ப்பு மாருதம் பேர்ந்து திரிந்ததே

#675
தம்மை மாய்க்கும் தழல் பிழம்பு என்பதோ
வெம்மை மாறி விசும்பின் மின் மீண்டவே

#676
ஐயர் வேணி அரவம் அங்காப்பவோ
வெய்ய நாயிறும் திங்களும் மீண்டவே

#677
உழைக்கும் பண்டை உதை நினைந்து உட்கியோ
இழைக்கும் கூற்றம் எதிராது இரிவதே

#678
வெம்பு தானவர் மூவெயில் வேவித்த
அம்புதான் உளது என்றோ அகன்றதே

#679
அரிய வீழ்ந்த அரும் சிறை உள்ளியோ
திரிய வீழ்ந்தன எல்லாச் சிலம்புமே

#680
அருந்தும் ஆழியில் ஆலம் உண்டார் என்றோ
பொருந்து மேகங்கள் போர்விடப் போவதே

#681
எட்ட நிற்கின் உரிப்பர் என்று எண்ணியோ
விட்ட மாதிர வேழங்கள் மீண்டவே

#682
கூறும் ஏகக் குலிசாயுதன் பட
ஏறும் மேகத்து உருமேறு எறியவே

#683
காய்ந்து இரண்டு கதுப்பினும் தன் கடாய்
பாய்ந்து பாவகப் பாவி பதைக்கவே

#684
சட்டத் தென்னவன்-தன் கடா வேந்தனை
வெட்டிக் கூறு இரண்டாய் விழ வீழ்த்தவே

#685
குருதி ஊற்றிக் குடித்திடு கூளியால்
நிருதி ஊற்றம் இழந்து உயிர் நீங்கவே

#686
முகர வாயன் வருணன் முதியவன்
மகர போசனமாய் உடன் மாயவே

#687
மலை மருப்பு எறி மாருத மார்பு தன்
கலை மருப்பில் கழியக் கிழியவே

#688
பாழி வாய் மதி தன்னைப் பரிப்பது ஓர்
ஆழி ஈரப் பிறை இரண்டாகவே

#689
மாறுகூர் வடகீழ்த் திசை வானவன்
ஏறு மார்பம் திறப்ப இறப்பவே

#690
அங்கிகள் மூவரும் நேர் அட்ட வசுக்களும் நேர்
எங்கு உள தேவரும் நேர் கின்னரர் யாவரும் நேர்

#691
இந்த்ர முராரிகள் நேர் யம வருணாதிகள் நேர்
சந்த்ர திவாகரர் நேர் தாரகை யாவையும் நேர்

#692
மண்தலம் அடி இட நேர் தோள் இட மாதிரம் நேர்
விண்தலம் முடி இட நேர் விண்ணவரே இனி நேர்

#693
பொக்கம் தவிர் வியாழன் சுக்ரன் போல் வீழப் பூகண்டகர்கோவோடு ஆகண்டலன் மாயத்
தக்கன் தலையானார் பக்கம் படை போதச் சதுரானனன் வெள்ளம் சூழத் தான் வந்தே

#694
காரில் துளியால் ஓர் அசனிக் கதழ் ஏறும் கடலில் திரையால் ஓர் வடவைக் கனல் மாவும்
பாரில் துகளால் ஓர் பட நாகமும் ஆகப் பரமன் பூரிக்கப் பிரமன் பாரித்தே

#695
சதுரானனன் வெள்ளம் சூழத் தான் முற்றும் தந்த்ரங்களும் எல்லா யந்த்ரங்களும் உட்கொண்டு
எதிராய் அவியக் கண்டு ஈரைவரையும் கொண்டு இறையோன் எதிர்சென்றான் மறையோர் இறையோனே

#696
சாதித் தழலாம் முத்தொகையும் முக்குடுமிச் சத்திப் பிழையாமே குத்தித் தனி நெற்றிச்
சோதித் தழலில் பண்டு எரி முப்புரம் ஒப்பச் சுட்டுக் ககனத்தே விட்டுத் துகள்செய்தே

#697
பத்துத் தலையோடும் பதின்மர்க்கும் தத்தம் பறியா உயிர் போகப் பதுமத்து இறைவற்கும்
கொத்துத் தலை நாலும் கலனாகிய முன்னைக் குறளைத் தலையாகக் கொளை வில் குனிவித்தே

#698
செந்தாமரையோனைக் கிளையோடு உயிர் வவ்வித் திருமால் வருக என்று எம் பெருமான் அறைகூவத்
தம் தாமரை உந்திப் புதல்வன் கொலையுண்ணத் தரியார் இவர் என்னக் கரியார் எதிர்சென்றே

#699
பொரு தரங்கம் வீங்கு சிலம்பு அடை சேவடிப் புரை அடங்க ஊன்ற விழுந்தது மேதினி
இரு விசும்பு தூர்ந்து அற உந்திய மோலியின் இடை கழிந்து கூம்பினது அண்ட கபாலமே

#700
தம் பொன் மகுடம் அண்டகோளகை சங்கு திகிரி சந்த்ர சூரியர்
செம்பொன் அறுவை குன்ற வேதிகை சென்ற திருமன் நின்ற கோலமே

#701
எங்கும் உலகு நுங்கு தீ என இன்று கனல நின்ற நீர் ஒரு
பங்கு பெறுக இங்குதான் இது பண்டு மறையில் உண்டு பார்-மினே

#702
என்று போதும் ஒரு புள்கொடி எடுத்தும் ஒரு பேர் இடப நல் கொடி எடுத்தும் இருவர்க்கும் இரு தேர்
குன்று போல்வன விசும்பு கெட மேல் வரு பெரும் கொண்டல் போல்வன புகுந்தன கொடிப் படையொடே

#703
தண் துழாய் மார்பர் சங்கு ஒன்றுமே ஊதவும் தமனியக் கொன்றையார் தம் திருத்தேர் மிசைப்
பண்டு மால் வரவரக் கொண்ட நாள் இடும்இடும் படை விடா அலகு_இல் சங்கு இடைவிடாது ஊதவே

#704
நின்ற வில்லி கொடியில் கருடன் ஆர்த்த பொழுதே நிமிர் சிறைக் கருட லோகம் உடன் ஆர்த்தது எழவே
குன்ற வில்லி கொடி மேல் இடபம் ஒன்று குமுறக் கோவு லோகம் மக லோகம் அடையக் குமுறவே

#705
நேமியங்கிரி நெரிந்தது முரிந்தது இடையே நின்ற மேரு கிரி எக்கிரியும் எக்கடலும் நேர்
பூமி கம்பமும் எதிர்ந்தன உதிர்ந்தன உடுப் பொரு புராரியும் முராரியும் உடன்ற பொழுதே

#706
சந்திராதிகள் ஒன்பதின்மர் இருபத்தெட்டு நாள் தாரகாகணித ராசி சோதிச் சக்ரம் என்று
இந்திராதிகள் விமானம் ஒரு முப்பத்துநால் இருவர் தேரினும் மடிந்தன-கொல் எங்கும் இலவே

#707
ஞால நேமி திரை நேமி வரை நேமி இவையே நடை சுழன்று இடை சுழன்றன சுழன்றிலது தம்
கால நேமி ரத நேமி இரு காலும் முடுகக் கடவுள் வீதியில் விசும்பிடை படக் கடுகியே

#708
வேறு அநேக வித தாரகை அநேகம் இடையே வீசு மாருதம் அநேகம் மினல் மேக குலமே
ஆறு அநேகம் இரதங்களும் அநேகம் அவர்தாம் ஆர் பதங்கள் எதிர் நீறுபட வேறுபடவே

#709
எம்ம் பாய் புரவி இற்று எமது தேரும் இறுமேல் இடபமாய் வர எழுந்து சுமவீர் எங்களுக்கு
அம்ம்பாய் வருகிலீர் சிலை புகுந்து பிடியீர் அஃது போலும் இனி எம்மொடு உறும் உம்மது உறவே

#710
புனலன் மேனியில் நிசிந்தன் விடும் அம்பு அடையவும் புரை அடங்கும் இனி அப் பரசுபாணி புரை தீர்
அனலன் மேனியில் முகுந்தன் விடும் அம்பு அடைய வேம் ஆதலால் அவர் வலம் தெரிவது அம்ம அரிதே

#711
மாயோன் விடும்விடும் பகழி செய்ய எரி மேல் வந்துவந்து அடைய வெந்து பொடியாய் மடியவே
சேயோன் விடும்விடும் பகழி மாயன் உதகத் திருவுடம்பு புக மூழ்கி உருவச் செருகவே

#712
அறும்அறும் பிரமர் நாரணர் கபாலம் நிரை பேர் ஆர மார்புடைய வீரர் திருமேனி அருகே
உறுமுறும் பகழி வெந்து பொடியானபடி கண்டு உள்ள பஞ்ச ஆயுதங்களையும் ஒக்க விடவே

#713
தண்டு தோள் வளை கழுத்து நுதல் சாபம் விழி வாள் சக்ரம் ஆனனம் எனத் தேவர் தானவர்களைப்
பண்டு நீர் அமுது அருத்தும் உருவத்தில் இவையே பஞ்ச ஆயுதமும் அல்லது இவை என்ன படையே

#714
சங்கம் எங்கள் குழை வில் எமது சக்ரம் எமதே தண்டம் எங்கள் யமதண்டம் மழுவின் சாதி வாள்
பொங்கு கண்ண இவை ஐம்படையும் எங்களுடனே போதும் எங்ஙனம் இனிப் பொருவது என்ற பொழுதே

#715
பொரும் அம்பு சிலை கொள்வதில்லை இவ் உலகையும் பொரு பினாகத்தையும் ஒரு பெரும் பன்றியாய்
இரு கொம்பின் ஒரு கொம்பின் நுதியினால் மறியவிட்டு இற மிதிப்பன் நின் மதிப்பு ஒழிக என்று இகலவே

#716
கொம்பு இரண்டு முகம் ஒன்று நடை நாலு முதுகும் கூறு இரண்டுபட வீழ் புடவி நீறுபட ஓர்
அம்பு இரண்டு எயிறும் இன்றி வெறும் ஓர் எயிறு கொண்டு அடைய வெட்டுதலும் ஆதி உரு எய்தி அரியே

#717
மண்ணும் நீ புனலும் நீ அனலும் மாருதமும் நீ மதியும் நீ ரவியும் நீ அவை அனைத்தும் வழிபோம்
விண்ணும் நீ என அகண்டமும் விழுங்க அரி-வாய் விட்டவிட்ட அவன் ஐம்படையும் மீள விடவே

#718
நின்றுநின்று படை ஐந்தும் அவை ஐந்தின் வழியே நெடிய மாயன் விட நாயகன் விலக்கி விடலும்
சென்றுசென்று பதினால் உலகமும் புக விழச் செய்ய வாயும் மிடறும் புரை அறச் செருகவே

#719
சிங்கமும் கற்கியும் பன்றியும் செற்றவன் திரிய நீர் செல்க எனச் சென்று மால் சின எரிச்
சங்கமும் சக்ரமும் தண்டமும் கட்கமும் சாபமும் பொடிபடத் தகனமே ககனமே

#720
பார் எழும் நதி எழும் மலை எழும் மலை-வயின் படு எழும் நடு எழும் கடல் எழும் பகுவிதக்
கார் எழும் மினல் எழும் என வரும் கனல் எழக் கண்டு மேரு வரையில் கடவுள் கங்கை விடவே

#721
மேல் விசும்பு உடையவும் கீழ் நிலம் கரையவும் மிடை விலங்கல் இறவும் குல விலங்கல் எவையும்
கால் பரிந்து இளகவும் கடல் சுரந்து ஒழுகவும் கடவுள் யாறு பதினால் உலகமும் கவ்வவே

#722
அப் பெரும் புனலில் இவ் அரி வராக உரு விட்டு ஆமையாய் உலகு அளந்த வடிவு ஆயதுவும் விட்டு
ஒப்பு அரும் பழைய சேல் வடிவுகொள்ள இறையோன் ஒரு சுறா வடிவுகொண்டு எதிர் உடன்று உகளவே

#723
பூதம் ஐந்தும் இரு கோளும் இயமானனும் எனப் புகலும் எங்களை விழுங்குக புகுந்து உனது உடல்
பேதம் ஐந்து அமளியும் தெளியும் ஓதமும் உடன் பின்னும் மன் உயிரும் உண்டு உயிர் உயப்பெறுதுமே

#724
கொண்டுவா பொர இறப்பன பிறப்பின் இனி விடாய் கொய்தகொய்த நின் முடிப் பழைய கோவை குறியாய்
தண்டு வாள் வளை தனுத் திகிரி என்னும் ஒரு நின் தவிரும் ஐம்படையும் ஐய திரியத் தருதுமே

#725
என்று மேருதரன் ஐம்படையும் ஈய நெடியோன் எறிய ஊதை விழ மோதி வர வெய்ய மழுவாள்
ஒன்றுமே அவை அனைத்தையும் ஒருக்க நெடியோன் உள் அழிந்து தலையைச் சிலையில் வைத்து உளையவே

#726
விதைக்கும் அப் பகழி வில் பொருநன் வைத்த முடியால் மிக வளைந்து குதைபோய் நெகிழ விண்ணுற நிமிர்ந்து
உதைக்கும் அத் தலை எழுந்து குதை கவ்வியது வானுற்ற சந்த்ரனையும் ராகுவையும் ஒக்கும் எனவே

#727
இன்னவாறு அமரர் யாகபலம் உண்டபடி என்று இறைவியைத் தொழுதிருந்து அழுத பேய்க்கு இதனை நீ
சொன்னவாறு அழகிது என்று அருளி வென்றருளும் அத் தொல்லை நாயகனை நாயகி நினைந்து தொழுதே

@9 கூழடுதலும் இடுதலும்

#728
எண்ணுதற்கு அரிய கூளி புடைசூழ விடையோன் யாகசாலை புக வான் மிசை எழுந்தருளி எம்
கண் நுதல் கடவுள் வென்ற களம் என்று முடியக் கட்டுரைப்பது என நின்று இறைவி கண்டருளியே

#729
சுமக்கும் நாகம் நமது ஆதலின் அதற்கு இனி முதல் சுரர் பிணத் தொகை சுமப்பது அரிதாகும் அவை கொண்டு
எமக்கு நீர் கடிது கூழ் அடு-மின் என்றலும் மகிழ்ந்து யாளியூர்தி முது கூளிகள் எனைப் பலவுமே

#730
மலைகளுள் மறு ஏறுண்ட மலைகளும் வான யானைத்
தலைகளும் அடுப்புக் கொள்ளீர் கடுப்பில் அத் தாழி ஏற்றீர்

#731
அழிந்தன கற்பம்-தோறும் தொடுத்தன நகு சிரத்தில்
கழிந்தன கபால மாலை குருதியில் கழுவிக்கொள்ளீர்

#732
இரவிகள் பல்லும் தத்தம் ஈரறு தேரில் அவ் ஏழ்
புரவிகள் பல்லும் குத்திக் துகளறப் புடைத்துக்கொள்ளீர்

#733
வானவர் பல்லும் வானோர் மன்னவர் பல்லும் எல்லாத்
தானவர் பல்லும் தீட்டி அரிசியாச் சமைத்துக்கொள்வீர்

#734
செரு முடி சுரேசரோடு த்ரிவிக்ரமன் வீழ வீழ்ந்த
பெரு முடி உரல்களாகப் பிறங்கிய அரிசி பெய்யீர்

#735
அசலமே அனைய திக்கில் ஆனைக் கோடு அனைத்தும் பொன் பூண்
முசலமே ஆக முப்பத்திரண்டையும் முறித்துக் குத்தீர்

#736
எத் திசையானை ஈரெண் செவிகளும் சுளகாய் ஈண்டக்
குத்திய அரிசி எல்லாம் முரி அறக் கொழிக்க வாரீர்

#737
இற்றை நாள் அமரர் சோரி திணுங்கியது இன்னம் பெய்ய
அற்றை நாள் குருதி பெய்த முகில்களை அழைத்துக்கொள்வீர்

#738
தனித்தனி வயிறு வீங்கக் குடித்து உடல் தடித்தீர் நீரும்
இனித் தனித்து இங்கும் எங்கும் பிணமலை அருவி பெய்யீர்

#739
தாங்குகைக்கு உரியவானைத் தட வரை அருவிச் சோரி
வாங்கு கைத் துருத்தி கொண்டு அ மிடாக்களில் சொரிய வாரீர்

#740
துளிபடு கடா யானைக் கைத் துணிபடு சோரி வாரி
முளிபடும் உடம்பின் முன்னைப் பொரிவற மூழ்கி ஏறீர்

#741
தேன் இணர் அலங்கல் மெளலித் தேவர் தானவர் உடம்பில்
தூ நிண வெள்ளைக் கோவை எடுத்தெடுத்து அரையில் சுற்றீர்

#742
கருதியும் தவிர யாகம் தொடங்கிய சுரேசர்-தங்கள்
குருதியின் குழம்பு கொண்டு குங்குமச் செச்சை கொட்டீர்

#743
குடர் முடி செறியக் கட்டிக் கோவையாச் சேர்த்துத் தேவர்
சுடர் முடி கடக சூத்ரம் உடம்பு எலாம் தொடக்கிக்கொள்வீர்

#744
யாம் இனி உண்ணும் கூழிற்கு ஈரலை இட்டுவைத்துத்
தாமரை மொட்டில் செய்த தனிப் பெரும் சூட்டுக் கட்டீர்

#745
அரசு உள அநந்த கோடி அசோகு உள அமரர் இட்ட
முரசு உள முகுந்தன் மூங்கில் சார்ங்கம் உண்டு அவற்றின் மூட்டீர்

#746
எள்ளி வாய் மடங்கிக் கைகள் இழந்து எரி கரிந்துபோன
கொள்ளிவாய்ப் பேயை மாட்டி அவற்றிலே கொளுத்திக்கொள்வீர்

#747
இருந்து அலை உலைகள் எல்லாம் பொங்கின துங்க யானைப்
பெரும் தலை வாரி வைத்த அரிசிகள் பெய்ய வாரீர்

#748
எருவையும் பருந்தும் ஓச்சித் தக்கனார் யாகசாலைச்
சுருவையும் தோளும் கொண்டு துடுப்பு எனத் துழாவிக்கொள்வீர்

#749
மாறின மடுத்த செந்தீ மலைச் சிறகு அடுத்துப் பற்றி
ஏறின மிடாக்கள் வெந்து சமைந்தன இழியப் பற்றீர்

#750
சேத்-தனது ஊர்தி கொண்டான் திரு நெற்றிக்கண்ணில் வெந்து
பூத்தன மலைகள் வாங்கிப் புண்டரம் புடையில் தீட்டீர்

#751
எரி கலன் இமைக்கும் கோலத்து இறைமகள் அமுதுசெய்யப்
பரிகலம் பண்டை அண்ட கபாலமாம் பற்றி வாரீர்

#752
பிரமனைப் பண்டு பெற்ற பெரும் திரு அமுதுசெய்யப்
பரமனைப் பாடிப்பாடிப் போனகம் படைக்க வாரீர்

#753
சாகினி கணமும் உள்ள சம்மினி கணமும் எல்லாம்
யோகினி கணமும் பக்கத்து உண்பன ஊட்ட வாரீர்

#754
கொடுத்த தன் அமுதம் தானும் கொண்டனள் இறைவி ஈண்டுப்
படுத்த பாவாடையோடும் பரிகலம் பேரப் பற்றீர்

#755
கமலத்தோன் கையில் வீழ்ந்த கமண்டலம் நிறைந்த தண்ணீர்
அமலைக்குத் தூய தெள் நீர் ஆரமுது ஆக்கி வாரீர்

#756
கதக் களிறு எட்டும் பட்ட களம்-தொறும் கும்பம் சாய்த்த
மதப் புதுத் தயிலம் தோய்ந்த மணி முத்துப் பிளவும் கொள்வீர்

#757
உந்தியில் முகுந்தன் முன் நாள் உயிர்த்த தாமரையும் ஈரைந்து
இந்திர தருவும் தந்த இலைச்சுருள் எடுத்துக் கட்டீர்

#758
மாயவன் சங்கு சுட்டு வடித்த நீறு அடைக்காயோடு
நாயகி அமுதுசெய்ய நாம் இனிப் படைக்க வாரீர்

#759
என்று கொண்டு அலகை எல்லாம் இமையவர் பிணம் கொண்டு ஈண்டு அக்
குன்று கொண்டு அட்ட கூழ் நம் குடிமுறை பகுக்க வாரீர்

#760
அண்டர் பொன் எயில் வட்டம் முட்ட நெருங்கு பேய் பெற அட்ட கூழ்
குண்டர் பொன் எயில் வட்டம் முட்ட முகந்து அளந்து கொடுக்கவே

#761
மைந்து கூர் நிலம் நீர் நெருப்பு வழங்கு மாருதம் மாகம் என்று
ஐந்து பூதமும் உண்ணஉண்ண அடும் கள்ளோடும் இடுங்களே

#762
நீலம் உண்ட முகில் குழாம் என நின்ற பேய் இது நிற்பது ஓர்
ஞாலம் உண்ட வயிற்று இரைப்பை அடக்கும்-மின்கள் நடக்கவே

#763
நின்று அலைப்பன நால் முகத்து ஒரு பேய் மடுப்ப நிணம் பெய் கூழ்
தன் தலைப் பொலி மண்டையில் சத கோடி சாடிகள் சாய்-மினே

#764
பேய் இரங்க இரந்து வந்தது இருந்த கூழது பெய்ம்-மினோ
ஆயிரம் கண் இழந்த பேயை அருத்தி தீர இருத்தியே

#765
எயிறு இழந்தும் நிலா இழந்தும் விலா இழந்தும் அமர்ந்த பேய்
வயிறு இழந்தில இன்னம்இன்னம் அருந்து கூழ் புக வார்-மினோ

#766
இழந்த வாள் விழி போன பின்னை இறந்து வந்து பிறந்த பேய்
அழுந்த வாயில் அநந்த கோடி மடா எடுத்து மடுக்கவே

#767
நெய் இழந்தது பால் இழந்தது நீள் பெரும் பசி தீருமோ
கை இழந்து பிறந்த பேய் இது கோடி சாடி கவிழ்க்கவே

#768
மாய் குடிக்கு நிமித்தமாக மகள் பெறும் திரு மாமடிப்
பேய் குடிக்க அநேக கோடி மடா எடுத்தவை பெய்ம்-மினோ

#769
இது பகு வாய்த்து வயிற்றினில் இப் பேர் உலகு விழங்கு பேய்
மதுவொடும் அண்ட கடத் தடா மடுக்க எடுக்க எடுக்கவே

#770
அடிக்கஅடிக்க எழும் அருகப் பேய்கட்கும் புத்தப் பேய்கட்கும் அண்ட கபாடக் கூழ்
பிடிக்கப்பிடிக்க உறும் வயிறு பழம்படியே பெருகுக பெருகுக வாய் பருகுக பருகுகவே

#771
இப்படிக் கழுத்தே கிட்ட இரைந்த புத்தப் பேய் மண்டை
கைப்பிடி பெறும் பேயோடு கலந்து ஒரு கலத்தில் உண்டே

#772
தாராக அண்டம் தொடுத்து அணிந்தார்-தமக்கு இடம் போதத் தமனியத்தால்
சீராசராசீச்சரம் சமைத்த தெய்வப் பெருமாளை வாழ்த்தினவே

#773
நீடிய எண் திசை நீழல் வாய்ப்ப நேரிய தெக்கிண மேரு என்னப்
பீடிகை தில்லை வனத்து அமைத்த பெரிய பெருமாளை வாழ்த்தினவே

#774
பிரட்டனையே பட்டம் கட்டழித்துப் பேர் ஏழரை இலக்கம் புரக்க
இரட்டனையே பட்டம் கட்டிவிட்ட இராசகம்பீரனை வாழ்த்தினவே

#775
அழிவந்த வேதத்து அழிவு மாற்றி அவனி திருமகட்காக மன்னர்
வழிவந்த சுங்கம் தவிர்த்த பிரான் மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே

#776
செருத்தம் தரித்துக் கலிங்கர் ஓடத் தென் தமிழ்த் தெய்வப் பரணி கொண்டு
வருத்தம் தவிர்த்து உலகு ஆண்ட பிரான் மைந்தற்குமைந்தனை வாழ்த்தினவே

#777
முன்றில் கிடந்த தடம் கடல் போய் முன்னைக் கடல் புகப் பின்னைத் தில்லை
மன்றிற்கு இடம் கண்ட கொண்டல் மைந்தன் மரகத மேருவை வாழ்த்தினவே

@10 களங்காட்டல்

#778
ஒரு மருங்கு உடைய மூலநாயகியொடு ஒற்றை வெள்ளை விடை ஊர்தி மேல்
இரு மருங்கும் மறை தொழ எழுந்தருளி இராசராசபுரி ஈசரே

#779
யாக நாயகரொடு ஏனை வானவர் இறந்து பேயொடு பிறந்தவாறு
ஆக நாயகி-தனக்கு உணர்த்தி வர அன்னை முன்னை முனிவு ஆறியே

#780
நெடு நிலம் அளந்து கொள்ள வளர்ந்து தாள் நீட்டு நாளில்
இடு நிழல் போல நின்ற இப் பெரும் பேயைப் பாராய்

#781
பொன் முகம் ஒன்று பண்டு போனது புகுதப் பொன்றித்
தன் முகம் ஐந்தும் பெற்ற சதுமுகப் பேயைப் பாராய்

#782
அங்கு நின்று ஏவல்செய்யும் அமரரே அலகையாக
இங்கு நின்று அரசுசெய்யும் இந்திரப் பேயைப் பாராய்

#783
விடு புகை உயிராது ஏங்கி வெம் கனல் உயிர்ப்ப என்றும்
படு புகை வடிவம் கொண்ட பாவகப் பேயைப் பாராய்

#784
விசும்பினும் நிலத்தும் உள்ள உயிர் பண்டு விழுங்கி இன்று
பசும் தசை மிசையாநின்ற தென் திசைப் பேயைப் பாராய்

#785
சாயை மேற்கொண்டு நின்ற சாயையே போல இன்று
பேயை மேற்கொண்டு நின்றது ஒரு கரும் பேயைப் பாராய்

#786
தன் அகத்து அங்கி இங்கு வயிற்றுத் தீயாகத் தாங்கும்
பன்னகப் பாசம் வீசும் குட திசைப் பேயைப் பாராய்

#787
வாயுவே ஆய பண்டை வடிவு அற மாய்ந்து பெற்ற
ஆயுவே வடிவமான அழி பசிப் பேயைப் பாராய்

#788
வளர் இளம் கொங்கை மங்கை நங்கையர் வனப்புக்கு ஏற்ற
கிளர் ஒளி வனப்புத் தீர்ந்த கெடு மதிப் பேயைப் பாராய்

#789
கருத்துப் பேய் ஏற ஏறும் கழி பசி உழப்பது ஓர் முத்து
எருத்துப் பேய் ஏறி நின்ற இப் பெரும் பேயைப் பாராய்

#790
விடை வலன் ஏந்தி வந்து வெண் பிறை மலைந்து சூலப்
படை வலன் ஏந்தி மாய்ந்த பதினொரு பேயைப் பாராய்

#791
ஓர் இரு சுடரும் அன்ன யோகமே போகப் போகா
ஈரிரு மறையும் தேடும் எண் பெரும் பேயைப் பாராய்

#792
ஆயுநூல் ஆயும் பண்டு என்று அரும் பசி நோய்க்குத் தங்கள்
பேயும் நூல் கேட்க நின்ற மருத்துவப் பேயைப் பாராய்

#793
அணங்கு நீ வணங்காயாக அன்று இகழ்ந்ததற்குத் தானே
வணங்கியே நன்று நிற்கும் மாமடிப் பேயைப் பாராய்

#794
அவ்வகை இறைவர் காட்ட அமரர் மேல் முனிவு தீர்ந்து
மை வகை நெறிந்த கூந்தல் மலைமகள் அருளிச் செய்வாள்

#795
நின் முதலாகத் தோன்றும் நெடிய மால் முதலா உள்ளோர்
என் முதலாக மாய்தற்கு உறுவது என் இறைவ என்றே

#796
தணிந்தருள் இறைவ யானும் தணிந்தனன் என்று தாளில்
பணிந்தனள் இறைவி நிற்கப் பரனும் புன்முறுவல்செய்தே

#797
மிக்கன பேசித் தம்மை வேள்வியில் இகழ்ச்சிசெய்த
தக்கனை முதிய மோத்தைத் தலை பெற அருளிச்செய்தே

#798
ஒழிந்த வானவர்கட்கு எல்லாம் உயிரும் தம் உடம்பும் நல்கி
அழிந்த வானுலகும் தங்கள் பதங்களும் அளிப்பக் கொண்டே

#799
குலம்கொண்ட அமரர் எல்லாம் குனி சிலை வீரன்-தன்னை
வலம்கொண்டு விடையும் கொண்டு போயினார் வாழ்த்தி வாழ்த்தி

@11 வாழ்த்து

#800
இஞ்சியின் வல் உருமேறு கிடந்த
வஞ்சியின் வாகை புனைந்தவன் வாழியே

#801
வில்லவன் வில்லமர் கோதை விடாத ஓர்
வல்லவன் வல்ல பிரான்மகன் வாழியே

#802
குறுகு முடுக்கும் இலங்கு பொலன் கொடி
மறுகும் வகுத்த பிரான்மகன் வாழியே

#803
தென்னவர் தென் மதுராபுரி சீறிய
மன்னவர் மன்னன் வரோதயன் வாழியே

#804
தில்லை வனம் கடவுள் செறி கற்பக
வல்ல வனம் பெற வந்தவன் வாழியே

#805
மீனவன் மீனவர் ஏக விடு படை
மானதன் மான பராயணன் வாழியே

#806
ஆன் நிரை தந்து அதில் ஐம்மடி மும்மத
மான் நிரை தந்த பிரான்மகன் வாழியே

#807
பார் தருவார் பெற மாறு_இல் பசும்பொன்
தேர் தரு மா பரகேசரி வாழியே

#808
கூடம் எடுத்த குளத்தொடு கோபுர
மாடம் எடுத்த பிரான்மகன் வாழியே

#809
கோயில் முன் ஏழ்நிலை கொண்டது ஓர் கோபுர
வாயில் வகுத்த பிரான்மகன் வாழியே

#810
எண்தரு திக்கினில் தில்லையின் எல்லையில்
மண்டபம் வைத்த பிரான்மகன் வாழியே

#811
இறையவன் இராசபுரந்தரன் ஏத்தும்
மறையவர் வாழி மகத்தவர் வாழியே

#812
வாழிய மண்டல மால் வரை வாழி குடக் கோழிமாநகர்
வாழிய வற்றாத காவிரி வாழி வர ராசராசனே

#813
ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியே ஆற்றங்கரைச் சொற்கிழத்தி வாழியே
கோக்குத் தமிழ்க் கொத்து அனைத்தும் வாழியே கூத்தன் கவிச்சக்ரவர்த்தி வாழியே

#814
வாழி தமிழ்ச் சொல் தெரிந்த நூல் துறை வாழி தமிழ்க் கொத்து அனைத்து மார்க்கமும்
வாழி திசைக்கு அப்புறத்து நாற்கவி வாழி கவிச்சக்ரவர்த்தி கூத்தனே