சீறாப்புராணத்தில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

சீறாப்புராணம் சொற்கள் – எண்ணிக்கை

எண் காண்டம் படலங்கள் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. விலாதத்து 24 1241 4964 33635 242 465 34342 11232
2. நுபுவ்வத்து 21 1105 4420 28831 122 393 29346 10272
3. இசிறத்து 47 2683 10732 68905 262 932 70099 19423
  மொத்தம் 92 5029 20116 131371 626 1790 133787 29125

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (தே_மொழி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = தே_மொழி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = தே, மொழி (2) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 3 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். அணி_இழை, வேத_நாயகன், மன்னர்_மன்னன், ஆய்_இழை போன்றன கூட்டுப்பொருளால் ஒரே சொல் ஆகின்றன. இங்கு, சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, ஆய் இழை மகளிர் என்ற தொடரில் ஆய், இழை ஆகியவை மகளிர் என்ற சொல்லுக்கு அடைமொழிகளாக வருகின்றன. எனவே அவை தனித்தனிச் சொற்களாகக்
கொள்ளப்படும். ஆயிழை கூறினாள் என்றவிடத்தில் இங்கு ஆயிழை என்பது அன்மொழித்தொகை ஆகி ஒரே சொல் ஆகிறது. எனவே இச் சொல் ஆய்_இழை எனக்கொள்ளப்படுகிறது. இங்கு ஆய், இழை, ஆய்_இழை ஆகிய மூன்று சொற்களாக இது கணக்கிடப்படும். ஆய்_இழை என்பது தனிச் சொல்லாகவும், ஆய், இழை ஆகியவை பிரிசொற்களாகவும் கணக்கிடப்படும். எனவே ஆய்_இழை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், ஆய், இழை, ஆய்_இழை என்ற மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது.
கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றவை கட்டுருபன்கள். அவன்-கண், அணங்கு-கொல், அரியர்-மன், இரவன்-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

நாள்தொறும் என்ற சொல் நாள்-தொறும் எனக் குறிக்கப்படுகிறது. இதில், நாள்-தொறும் என்பது தனிச்சொல்லாகவும்,  -தொறும் என்பது கட்டுருபனாகவும் கணக்கிடப்பட்டும். நாள்-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், நாள்-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும்
உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக்  டுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் பாடலின் எண் கொடுக்கப்படும். அதற்கடுத்த / என்ற கோட்டை அடுத்து அச் சொல் இடம்பெறும் அடி எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் பன் முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.