தேவாரம், இரட்சணிய யாத்திரிகம்

** 1. முடிவுரைத் தேவாரம்

@1 உண்மை வற்புறுத்தல் – பண் பழம்பஞ்சுரம்

#1
தொக்க பாவமன்னிப்பு நித்திய_ஜீவ நன்மையும் சுகிர்தமும்
மிக்க பேர்_இன்ப வீடும் நம் கிறிஸ்து யேசுவை விசுவாசிக்கில்
கைக்குள் வந்தது இங்கு ஐயம் ஒன்று இலை கண்டு கேட்டு உணர்ந்து உலகுளீர்
தக்கவாறு நன்று ஆய்-மின் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே

#2
தேவ_தேவ த்ரியேக தெய்விக ஜேசுவின் திரு_நாமமே
ஜீவ ரக்ஷணை நல்கு திவ்விய சீலம் ஆர் திரு_மந்திரம்
ஆவது அன்றி மற்று இல்லை வேறு இதை ஆயு-மின் விரைந்து உலகுளீர்
தா_அரும் பரமார்த்த ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே

#3
இம்பர் மெய்ப் புருஷார்த்தம் ஈட்டுதற்கு ஏற்ற நல் வழி ஈசனை
நம்பி அன்பு_செய்வார்க்கு எலாம் அழியாத பேர்_இன்ப நல் நிதி
உம்பர் நோக்கு சன்மார்க்கம் ஆதி உணர்த்து சற்குரு உலகுளீர்
தம்பிரான் கதி கூட்டு ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே

#4
எமை உயக்கொண்ட ஈசன் ஆதி-தொட்டு எழுதுவித்ததும் இம்பரில்
சிமையத்தே அலர் தீபம் போன்று உள திருச்சபைக்கு உய்த்துத் தெருட்டலும்
உமை அடுத்தடுத்து உண்மை கூறி வற்புறுத்தி நிற்பதும் உலகுளீர்
சமைய பாஷ்கரனாம் இரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே

#5
முத்துவத் தனி ஏக வஸ்துவும் மோக்ஷமும் தருமார்த்தமும்
நித்ய_ஜீவனும் ஜீவ மார்க்கமும் நெறி திரிந்து செல் பாவமும்
சித்த சஞ்சலப் படுகரும் உள தீர்க்க சத்தியம் உலகுளீர்
சத்தியம் தவறாத ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே

#6
ஆதி நித்தியம் ஆத்துமா மற்ற அகிலம் யாவும் அநித்தியம்
பூதலத்து இறந்தோர் உயிர்த்தெழுந்து எம்பிரான் நடுப்புரியும் நாள்
நீதியாய் வரு பலனும் நித்தியம் நீக்கம் இன்று உலகத்துளீர்
சாது சங்கத்தைச் சார்-மின் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே

#7
கனிதல் நீர்மையில் கிறிஸ்துவின் திரு_கடைக்கணுக்கு இலக்கு ஆகிடில்
துனி தவிர்ந்திடும் பாவ சங்கடம் தொலையும் நும் நடை சுகிர்தமாம்
புனித நல் மனம் பொருந்தும் அன்பு உளம் பொங்கி மேலிடும் உலகுளீர்
தனிதம் ஆர்_அருள் மல்கும் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே

#8
கிழக்கு எழும் சுடர் போலச் சத்தியம் கிளரக் கண்டினும் கேதம் ஆர்
பழக்கமான தீ_வினையை வேரறப் படுத்தும் நல் நெறி பற்றிடீர்
வழக்குரைத்து வாழ்நாளைப் போக்குதல் மதி-கொலோ உலகத்துளீர்
சழக்கை விட்டு உளம்திரும்பும் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே

#9
சேயரும் தமரும் சிநேகரும் தேடு பல் பொருள் செல்வமும்
காயம் நீத்து உயிர் பிரியும் கால் ஒரு கடிகை பின் வரக் காண்டுமோ
நாயகன் கிறிஸ்து யேசுவே மறுமைக்கு நல் துணை உலகுளீர்
தாயகம் பிறிது இல்லை ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே

#10
நம்மை நோக்கிய தண்டனைக்கு ஒரு நடுவராய் நின்று தாங்கியும்
செம்மையில் திறம்பாது நித்திய_ஜீவ புண்ணியம் திரட்டியும்
இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை உண்டாக இங்கு உதித்து உலகுளீர்
தம்மையும் தந்த சாமி ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே
** உண்மை வற்புறுத்தல் முற்றிற்று

@2 அந்திப்பலி – பண் பழம்பஞ்சுரம்

#1
தேவ_தேவ த்ரியேக தோத்திரம் ஜேசு நாயக தோத்திரம்
பாவகாரி சிரம் சிதைத்து எழு பாத பங்கஜ தோத்திரம்
ஜீவ பாதையில் வழிநடத்திடும் திவ்விய ஆத்தும தோத்திரம்
ஆவலோடு உனக்கு அனந்த தோத்திரம் அகில லோக சர்வேசனே

#2
அலகு_இலா அருள் ஜோதியே பகல் அருணன் ஆர் ஒளி அத்தமித்து
உலகு எலாம் இருள் படலம் மூடியது உனக்கு அந்திப்பலி உதவுவான்
இலகு நின் கிருபாசனத்தை வந்து எய்தினேன் இதயத்து ஒளி
அலரவைத்து எனக்கு ஆவி தந்து அருள் அகில லோக சர்வேசனே

#3
உடைப் பெரும் பொருள் கல்வி நட்பு உறவு உரிமை யாவும் இ உடலொடும்
இடைக்-கண் நின்றிடும் உதவும் ஓர் துணை என்றும் நீ அடியேற்கு யான்
படைக்க நின்று அழல் படுகர் உய்க்கும் என் பாவம் அஞ்சி உன் பாதத்தே
அடைக்கலம் புகுந்தேன் கடைக்கணி அகில லோக சர்வேசனே

#4
நஞ்சம் மல்கிய வஞ்ச வல் வினை நச்சிநச்சி என் நாள் எலாம்
கிஞ்சித்தும் பயன் இன்றி ஓய்ந்தன கெஞ்ச வந்து உனைக் கிட்டினேன்
தஞ்சம் உன் இரு கஞ்ச நாள்_மலர்ச் சரண் அலால் புக அரண் இலேன்
அஞ்சல் என்று எனை ஆதரித்து அருள் அகில லோக சர்வேசனே

#5
பை_உளேன் உனைப் பற்றிலேன் பயன்பட்டிடேன் ஒரு பாவி யான்
கையதாகிய ஜீவ_புஸ்தகக் கணக்கில் என் பெயர் காண்பதோ
துய்ய ஆவியை அருளி என் குண தோடம் யாவையும் நீக்கி ஆள்
ஐய தாரகம் யாதும் இன்று எனக்கு அகில லோக சர்வேசனே

#6
ஓர் அணுத்துணை மதி இலாது சிற்றின்பம் உண்டு உலைக் கமடமாய்க்
காரணத்தை விட்டு அலகையோடு கைகோத்து என் ஆயுள் கழிந்ததே
மாரணத் துறை நேரின் நித்திய மங்களக் கரை வாய்க்குமோ
ஆரணத் துறை காட்டி எற்கு அருள் அகில லோக சர்வேசனே

#7
துன்பு உறழ்ந்துறழ்ந்து அலசி வைகலும் சுவை மணம் பெறுகிற்கிலாப்
பொன் பொலிந்த சொல் மாலை கொண்டு உனைப் போற்றினும் பயன் என்னை யாம்
என்பு நெக்குருகிக் கணீர் சொரிந்து ஏத்தும் மெய் விசுவாசமோடு
அன்பு உறழ்ந்த சொல் பாலி என் கவிக்கு அகில லோக சர்வேசனே

#8
பற்று எலாம் விடுபட்ட போதினும் பாழ்த்த என் அகப் பற்றினும்
முற்றும் நீங்கல ஆகி நின்று எனை முரணி வைகலும் மோசம்செய்
புற்று அராவொடு நாள் கழிப்பது புண்ணியா திருவுள்ளமேல்
அற்று அது ஆகுக என் புரந்து அருள் அகில லோக சர்வேசனே

#9
உண்டுபட்ட என் மடைமையும் பலவீனமும் திருவுள்ளத்தே
கொண்டு அருள் குமரேசன் புண்ணியம் ஒன்றையே குறிக்கொண்டு எனில்
கண்ட காண்கிற காணும் என் பிழை யாவையும் கணக்கேற்றிடாது
அண்டர் நாயக பொறுத்து இரக்ஷைசெய் அகில லோக சர்வேசனே

#10
திமிரம் நீங்கும் முன் தேகம் நீங்கி என் ஜீவன் அம்மையில் சேரினும்
குமர நாயகன் திரு_அடித் துணை கூட்டி உய் அருள் கொண்டலே
எமரொடும் தடுத்தாண்ட பேர்_அருள் என்றும் வாழிய வாழிய
அமரர் நாயக வாழி வாழிய அகில லோக சர்வேசனே
** அந்திப்பலி முற்றிற்று
** 2. இடைப்பட்ட தேவாரம்

@3 ஆதி பருவம் – சுமை நீங்கு படலம் – இடைப்பட்டது
** தேவாரம் திருநாமப்பதிகம் பண் காந்தாரம்

#1
மன் உயிர்த் தொகுதி ஈடேற வானினும்
இ நிலத்தினும் பிறிது இலை என்றே மறை
பன்னி ஏத்து எடுப்பது பாவ ஜீவருக்கு
இன் அமுது ஆயது யேசு நாமமே

#2
தெருள் எலாம் தனது எனும் தெய்வ மா மறைப்
பொருள் எலாம் தனது எனப் பொலிந்து இலங்குவது
அருள் எலாம் அன்பு எலாம் அறன் எலாம் வளர்த்து
இருள் எலாம் தொலைப்பது யேசு நாமமே

#3
பன்_அரும் குணத்ததும் பவித்திரத்ததும்
துன்ன_அரும் பொருளதும் தூய்மை பூண்டுளோர்
நன்னர் நெஞ்சத்திடை நடித்து நிற்பதும்
என் உயிர்த் துணையதும் யேசு நாமமே

#4
நித்திய ஜீவனும் நெறியும் போதமும்
சத்திய நிலையமும் தான் என்று உள்ளது
பத்தியில் பரவுவோர் பரம வீடு உற
இத் தலத்து இறுத்தது யேசு நாமமே

#5
பொன்_உலகத்து உளோர் புணரி சூழ் புவி-
தன்னில் உள்ளோர் தலை தாழ்ந்து போற்றிட
மன்னிய தகையது மருவி வான் இழிந்து
இ நிலம் புரப்பது யேசு நாமமே

#6
நல் நெறி புகுத்திடும் நவையின் நீக்கிடும்
இன்னலை அகற்றிடும் இகல் செகுத்திடும்
உன்னதத்து உய்த்திடும் ஒருங்கு காத்திடும்
எ நலத்தையும் தரும் யேசு நாமமே

#7
அன்பினுக்கு உருவம் நல் அறத்துக்கு ஆலயம்
மன்பதைக்கு அருள் மழை வழங்கு பைம் புயல்
நின் பரம் என்று இனைவோர்க்கு நித்ய பேர்_
இன்ப சஞ்சீவிதம் யேசு நாமமே

#8
வஞ்சகக் கூளியை மடிக்கும் மந்திரம்
பஞ்ச இந்தியங்களைப் படுக்கும் மந்திரம்
செஞ்செவே ஜெக மருள் தீர்க்கும் மந்திரம்
எஞ்சல்_இல் மந்திரம் யேசு நாமமே

#9
கூறும் மந்திரம் மறை குணித்த வேதியர்
தேறும் மந்திரம் ஜெபத்தினுக்குச் செவ்விதின்
வேறு மந்திரம் இலை வேதனார் செவிக்கு
ஏறும் மந்திரம் கிறிஸ்து யேசு நாமமே

#10
தருமமும் ஒழுக்கமும் தவமும் ஞானமும்
கருமமும் ஈது அலால் கருதில் யாதும் ஓர்
அருமையும் பயனும் ஒன்று இல்லை ஆதலால்
இருமையும் துணை எனக்கு யேசு நாமமே

#11
நஷ்டமே தரு ஜெகம் நகைக்க நாள் எலாம்
கஷ்ட ஜீவனம் செய்து கழிப்பம் ஆயினும்
துஷ்ட வல் வினை எலாம் தொலைக்கும் தூ மன
இஷ்ட காமியம் தரும் யேசு நாமமே
** தேவாரம் முற்றிற்று

@4 ஆதி பருவம்- ஜீவபுஷ்கரிணிப் படலம் – இறுதியில்
** தேவாரம் – விசுவாசக் காட்சி பண் காந்தாரம்

#1
கள்ளம் உறும் கடையேனும் கடைத்தேறப் பெரும் கருணை
வெள்ளம் முகந்து அருள் பொழியும் விமல லோசன நிதியை
உள்ளம் உவப்புறு தேனை உயிர்க்குயிரை உலவாத
தெள் அமுதைத் தீம் கனியைச் சிலுவை மிசைக் கண்டேனே

#2
படி சாய்த்த பெரும் பாவப் பரம் சுமந்து பரமர் திரு
மடி சாய்த்த திரு_மேனி வதைந்து இழி செம் குருதி உக
முடி சாய்த்த பெருமானை மூது அலகை தலை நசுக்கிக்
கொடி சாய்த்த கொற்றவனைக் குருசின் மிசைக் கண்டேனே

#3
பொய்த் திருக்கும் வஞ்சனையும் பொல்லாங்கும் புறங்கூற்றும்
எத் திருக்கும் உடையேமை எண்ணி ஒரு பொருளாகப்
பத்து இருக்கும் பிரமாணப்படி ஒழுகி வினை முடித்த
சித்து இருக்கும் செழும் தவனைச் சிலுவை மிசைக் கண்டேனே

#4
மூ_வினைக்கு மும்முதலாய் மும்முதலும் ஒரு முதலாம்
தேவினைக் கை தொழுது ஏத்தும் திரிகரண சுத்தரும் தம்
நாவினைக்கொண்டு ஏத்த_அரிய நல் அறத்தின் தனித் தாயைத்
தீ_வினைக்கு ஓர் அரு மருந்தைச் சிலுவை மிசைக் கண்டேனே

#5
மூவாத முதலவனை முது சுருதி மொழிப் பொருளை
ஓவாத பெரும் குணத்த உத்தமனை உலகு அனைத்தும்
சாவாதபடி காக்கத் தனு எடுத்துத் துஜம் கட்டும்
தேவாதி தேவனை யான் சிலுவை மிசைக் கண்டேனே

#6
துன்_நெறி புக்கு உழல்கின்ற தூர்த்தரிலும் தூர்த்தனாய்ப்
பல் நெறி கொள் பரசமயப் படுகுழி வீழ்ந்து அழிவேற்கு
நல் நெறியின் துணிபு உணர்த்தி நயந்து இதயக் கண் திறந்து
செம் நெறி காட்டிய குருவைச் சிலுவை மிசைக் கண்டேனே

#7
அந்தர துந்துமி முழங்க அமரர் எலாம் தொழுது ஏத்தத்
தந்தை திருமுனம் மகிமைத் தவிசு இருந்த தற்பரனை
நம்-தம் வினை தொலைத்திடற்காய் நரன் ஆகி நலிந்து இரத்தம்
சிந்தி உயிர் அவஸ்தையுறச் சிலுவை மிசைக் கண்டேனே

#8
நிந்தனை செய்து இருப்பு ஆணி நிரை அழுத்திக் கொலை புரியும்
வெம் தொழிலர் செய் வினையின் விளைவு அறியார் பொறுத்து அருளும்
எந்தை என எழில் கனி வாய் இதழ் அவிழ் எம் பெருமானைச்
செம் தனிக் கோல் கொளும் தேவைச் சிலுவை மிசைக் கண்டேனே

#9
மறம் வளர்க்கும் களர் உளத்தை வளம் மலி தண் பணை ஆக்கி
அறம் வளர்க்கும் அருள் முகிலின் அன்பு மழை மாரி பெய்து
புறம் வளர்க்கும் இரக்ஷிப்பின் புகழ் அமைந்த புண்ணியத்தின்
திறம் வளர்க்கும் செழும் கிரியைச் சிலுவை மிசைக் கண்டேனே

#10
காய் ஒளியில் கதிர் பரப்பும் களங்கு_அறு நீதியின் சுடரைப்
பாய் ஒளி கொள் பசும்பொன்னைப் பணிக்க_அரும் சிந்தாமணியைத்
தூய் ஒளி கொள் நித்திலத்தைத் தூண்டாத சுடர் விளக்கைச்
சேய் ஒளி கொள் செம் மணியைச் சிலுவை மிசைக் கண்டேனே
** தேவாரம் முற்றிற்று

@5 ஆதி பருவம் – உபாதிமலைப் படலம் – இடைப்பட்டது
** தேவாரம் பண் இந்தளம்
** கிறிஸ்துவே எனக்கு எல்லாமாயிருக்கிறார்

#1
சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமியமும் இலதாய்ச்
சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாய்_அடியேன் கடைத்தேறுவன் என் பவம் தீர்ந்து
அத்தா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே

#2
எம் ஆவிக்கு உருகி உயிர் ஈந்து புரந்ததற்கு ஓர்
கைம்மாறு உண்டு-கொலோ கடைகாறும் கையடையாய்ச்
சும்மா ரக்ஷணை செய் சொல் சுதந்தரம் யாதும் இலேன்
அம்மான் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே

#3
பித்து ஏறிச் சுழலும் ஜெகப் பேய் பிடித்துப் பவத்தே
செத்தேன் உன் அருளால் பிழைத்தேன் மறுஜென்மமதாய்
எத் தோடங்களையும் பொறுத்து என்றும் இரங்குக என்
அத்தா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே

#4
துப்பு ஆர் சிந்தை_இலேன் மறைந்து ஈட்டிய தொல்_வினையும்
தப்பாதே வெளியா நடுநாள் எனைத் தாங்கிக்கொள்ள
இப் பார் உய்ய என்றே மனுக்கோலம் எடுத்த எங்கள்
அப்பா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே

#5
மை ஆர் கண் இருண்டு செவி வாய் அடைத்துக் குழறி
ஐயால் மூச்சு ஒடுங்கி உயிர் ஆக்கை விட்டு ஏகிடும் நாள்
நையேல் கை நெகிழேன் உனை நான் உண்டு அஞ்சல் என
ஐயா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே

#6
வான் தோய்ந்திட்டது அன்றோ தமியேன் புரி வல்_வினைதான்
ஏன்-தான் இ உலகில் ஜெனித்தேன் என வீடு அழிவேன்
மூன்றாய் மூன்றுமொன்றாய்த் தொழில் மூன்றும் இயற்றி நின்ற
ஆன்றோய் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே

#7
திரை சேர் வெம் பவமாம் கடல் மூழ்கிய தீயர் எமைக்
கரைசேர்த்து உய்க்க என்றே புணை ஆயினை கண்ணிலி யான்
பரசேன் பற்றுகிலேன் எனைப் பற்றிய பற்று விடாய்
அரசே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே

#8
தாயே தந்தை தமர் குரு சம்பத்து நட்பு எவையும்
நீயே எம் பெருமான் கதி வேறு இலை நிண்ணயம் காண்
ஏயே என்று இகழும் உலகோடு எனக்கு என் உரிமை
ஆயே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே

#9
என் நேர் பாவியர்-தான் உலகத்து இலை என்னினும் உன்
பொன் நேரும் கழற்கே புகலாக வந்து அடைந்தேன்
மன்னே ரக்ஷணிய அமிர்து ஊட்டி மனுப் புரக்கும்
அன்னே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே

#10
ஈண்டே என் உளத்தில் விசுவாச விளக்கு இலங்கத்
தூண்டாய் என்னில் அந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடும் காண்
மாண்டாய் எம் பிழைக்கா உயிர்த்தாய் எமை வாழ்விக்கவே
ஆண்டாய் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே
**தேவாரம் முற்றிற்று

@6 குமார பருவம் – விசிராந்திப் படலம் – இடைப்பட்டது –
** தேவாரம் கையடைப்பதிகம் பண் தக்கராகம்

#1
ஓதியே சுருதி தினம்தினம் படித்தும் உணர்வு_இலாது உலகு ஒழுக்கு உவந்து
தீதிலே பயின்று செம் நெறி இகந்த தீயனேன் உய்யும் ஆறு அறியேன்
கோது_இலா நீதிக் கொழும் கதிர்ப் பிழம்பே குணிப்பு_அரும் கருணை வாரிதியே
ஆதியே அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே

#2
பத்தனாய்ப் பாடேன் சுத்தனாய் ஒழுகேன் பகல் எலாம் பாவமே பழகி
எத்தனாய்க் கழித்தேன் இன்று உளேன் நாளை இலன் என எண்ணவும்படுவேன்
பித்தனேற்கு உனது பேர்_அருள் அல்லால் பிழைக்கும் ஆறு இல்லை ஆதலினால்
அத்தனே அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே

#3
கலைக் கணுக்கு அரிய காட்சியே சிரத்தைக் கண்ணினுக்கு எளிய கண்மணியே
புலைக் குடில் ஓம்பும் புன்_மதி அதனால் பொருவு_அரும் பொழுதை வீண் போக்கி
உலைக் கமடம் போல் உலக மாயத்தை உவந்த நின்மூடன் என்று உள_சான்று
அலைக்க நொந்து அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே

#4
மண்டலத்து எனைப் போல் பாவியும் இல்லை மற்று உனைப் பொருவது ஓர் தெய்வம்
உண்டு ஒருக்கால் என்று உணர்வு_உளார் எவரும் உரைத்திடார் உண்மை ஆதலினால்
தொண்டருக்கு இரங்கி மநு உரு எடுத்த தொல்லை மூலப் பரஞ்சுடரே
அண்டருக்கு அரசே அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே

#5
வெப்புறு பாவ விடத்தினைப் பருகி மெய் அறிவு இழந்து உனை மறந்தேன்
அப் புற உலகம் அடுக்கில் என் செய்கேன் ஆண்டு எனக்கு ஆதரவு யாரே
ஒப்புறவு உயர்ந்த ஒருதனி முதலே உணர்வு உடை ஓலத்துக்கு உருகும்
அப்பனே அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே

#6
எனாது யான் என்னும் உடல் பொருள் ஆவி இவை ஒரு மூன்றையும் இன்னே
உனாது என உனக்கே கையளித்து எளியேன் உன் அருள் பற்றையே உவந்து
மனாதி தத்துவங்கட்கு அதீதமாய் அன்பர் மனத் தவிசு உகந்து வீற்றிருக்கும்
அநாத_ரக்ஷகனே நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே

#7
படித் தொழும்பு ஆகிப் பதைத்து உழல்வேனைப் பரிந்து உனது அருள் விழி பரப்பிக்
குடித் தொழும்பு ஆக்கிக் கொண்ட கோமானே குன்றிடா விழு நிதிக் குவையே
மிடித் தொழும்பினையும் அகற்றிடாது என்னோ விநயம் ஏதும் பிறிது உளதோ
அடித் தொழும்பு அலனோ அப்பனே அடியேற்கு அஞ்சல் என்று அடைக்கலம் அருளே

#8
உருளுறு சகடம் போல என் மனமும் ஒரு வழி நிலை_இலாது உழலும்
மருளுறும் உலகோடு அலகையும் கொடிய மாயமாம் வலையிடைப் படுத்தும்
தெருளுறு பொருளே நின் அடிக்கு அன்புசெய்து நான் உய்யுமாறு எங்ஙன்
அருளுறும் எந்தாய் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே

#9
என்பு தோல் போர்த்த யாக்கையைச் சதம் என்று எண்ணி ஆத்துமத்தை எள்துணையும்
முன்_பின் எண்ணாது புரிந்த தீ_வினை என் முன்பு நின்று உடற்றலால் முதிர் பேர்_
இன்ப நாட்டு அரசே புண்ணியப் பொருப்பே இரு நிலம் புதைத்து எழுந்து ஓங்கும்
அன்பின் ஆர்கலியே நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே

#10
புறத்து ஒரு புகலும் இலை உனை அல்லால் பொய்யுறும் அலகையின் புணர்ப்பாம்
முறத்தினில் புடையுண்டு அயருவேன் கருணை முளரியை மூடுதல் முறையோ
மறத்தியோ மாறா மெய்த் திரு_வாக்கை வரதனே அபயனே வண்மை
அறத் தனி முதலே நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே

#11
மருள் மனோவாஞ்சைச் சுழலிலே உழலும் வறிய புன் திரணம் என் ஆவி
இருள் மலோததி புக்கு அழுந்திடில் அந்தோ என் செய்கேன் ஏழை நின் அடிமை
தெருள் மனோகரமே ஜீவ தாரகமே திகழ் குண மேருவே சீர் சால்
அருள் மகோததியே நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே

#12
வேதமே வேத விளக்கமே விளக்கின் விழுத் தகு ஜோதியே விமல
போதமே போதம் கடந்த மெய்ப்பொருளே பொருள் புலப்பட வெளிவந்த
நாதமே யூத குல நராதிபனே நல் நெறி பிழைத்து உலகு உழலும்
ஆதன் நான் அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே

#13
வாழி ஆரண நூல் வரம்பு எலாம் இகந்து மதி_இலாப் பேதை யான் மயங்கிக்
கீழியான் பிழைத்த பிழை எலாம் பொறுத்து உன் கிருபை தந்து அருள் எனக் கெஞ்சி
ஊழியாய் ஊழிக்கு உறையுளாய் எவையும் உலப்பினும் உலப்பு_இலாத் தரும
ஆழியாய் அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே
** தேவரம் முற்றிற்று

@7 குமார பருவம் – விசிராந்திப் படலம் – இடைப்பட்டது –
** தேவாரம் காலைத்துதி பண் காந்தாரம்

#1
எந்தையே ஸ்தோத்திரம் இகல்_இல் மன் பொதுத்
தந்தையே ஸ்தோத்திரம் சருவ லோகமும்
விந்தையாய்ப் படைத்து அருள் விமல ஸ்தோத்திரம்
அந்தணா ஸ்தோத்திரம் அனந்த ஸ்தோத்திரம்

#2
பொருள்படு பொறி புலன் ஒடுங்கிப் பொன்றல் போல்
மருள்படு துயில் கொளீஇ மறந்து இக் கங்குல்-வாய்
இருள் பெருங் கடல் குளித்தேனைக் காத்தனை
அருள் பெரும் கடல்_அனாய் அனந்த ஸ்தோத்திரம்

#3
எத்தனையோ விபத்து இரவில் தேர்கிலேன்
அத்தனையும் துரந்து அருள் விழிக்கடை
வைத்து எனக்கு ஆர்_உயிர் வழங்கிக் காத்தனை
அத்தனே நின் அடிக்கு அனந்த ஸ்தோத்திரம்

#4
எண்ண எம்மாத்திரம் ஏழை யான் உன
புண்ணிய விழித் துணை பொருந்துறாது எனைக்
கண்ணிய துயிலிடைக் காத்து அளித்தனை
அண்ணலே நின் அடிக்கு அனந்த ஸ்தோத்திரம்

#5
கன இருள் அகற்றி இக் காலை உய்த்தல் போல்
மன_இருள் அதனையும் மாற்றி நீதியின்
தினகரன் அருள் வழி செலுத்தி என்னை ஆள்
அனகனே நின் அடிக்கு அனந்த ஸ்தோத்திரம்

#6
கண்டு துயில் நீத்ததும் கருணை மைந்தனைக்
கொண்டு எனை மீட்டதும் குறிக் கொண்டு அன்பொடு
தொண்டு உனக்கு இயற்ற மெய்த் துணிவு தந்து அருள்
அண்டர் நாயக உனக்கு அனந்த ஸ்தோத்திரம்

#7
மாதிரம் யாவையும் வளைந்த வல் இருள்
போதிலே பலர் புநர்_உலகம் போகவும்
பேதையேற்கு எமரொடும் பிழைப்பை ஊட்டினை
ஆதியாய் நின் அடிக்கு அனந்த ஸ்தோத்திரம்

#8
ஐயம் மேலிட மரணாந்தகாரம் வந்து
ஒய்யென மூடி நின்று உடற்றுமாயினும்
துய்ய பங்கய முக ஜோதி காட்டி ஆள்
அய்யனே நின் அடிக்கு அனந்த ஸ்தோத்திரம்

#9
மைப்படு கங்குலைக் கடந்து உன் வண்மையால்
இப் பகல் கண்டு உனை ஏத்த நின்றனன்
எப் பரிசு யான் கைமாறு இயற்றுகேன் எனது
அப்பனே நின் அடிக்கு அனந்த ஸ்தோத்திரம்

#10
திகில் உலாம் பவ இருள் சிதையத் திவ்விய
சுகிர்தம் ஆர்தரு மொழிச் சுருதி வான் சுடர்
மகிதலம் எங்கணும் மலிய நல்குவாய்
அகில லோகேஸ்வர அனந்த ஸ்தோத்திரம்
** தேவாரம் முற்றிற்று

@8 நிதான பருவம் – சிறைப்படு படலம் – இடைப்பட்டது
** தேவாரம் வேட்கையின் விதும்பல் திருத்தாண்டகம்

#1
அம் பரம திரியேகத்துவத்து ஒன்று ஆகி அருள் திரு_வாக்கு உரு ஆகி அகிலம் ஈன்ற
நம்பரனுக்கு ஒரு மகவாய் ஜீவர் உய்ய நடுநின்ற நாயகத்தை நயந்து எந்நாளும்
உம்பர் உலகு உவந்து தொழும் மஹா தெய்வத்தை ஒன்றான ஊர்த்த கதி வழியைக் காட்டி
இம்பர் உலகம் புரந்த எம்பிரானை என்று-கொலோ கண் குளிரக் காணும் நாளே

#2
இல்லை ஒரு நாமம் நர ஜீவ ரக்ஷைக்கு யேசு திரு_நாமம் அலால் இகத்தில் என்று
தொல்லை மறை முறையிடு பேர்_இன்ப வாழ்வைத் துரிசு_அற நின்று இலங்கு பரஞ்சோதி-தன்னைப்
பொல்லை எனப் புறக்கணியாது எனை ஆட்கொண்ட பூரண புண்ணிய நிலையைப் புகழ்ச்சி ஓங்கும்
எல்லை_இலாப் பேர்_அருளின் இருப்பை நாயேன் என்று-கொலோ கண் குளிரக் காணும் நாளே

#3
அருள் பழுத்த திரு_முக மண்டலத்தினானை அளி நிறைந்த கமல லோசனத்து எம்மானைத்
தெருள் பழுத்த ஜீவ_மொழி கனி வாயானை ஜென்ம விடாய் தணித்து அருள் சீர் பாதத்தானை
மருள் பழுத்த மனத்தேனைத் தெருட்டினானை வான் கதிக்கு வழி திறந்த வலத்தினானை
இருள் பழுத்த நரகு அடைத்த எம்பிரானை என்று-கொலோ கண் குளிரக் காணும் நாளே

#4
மன்னு சுர கணங்கள் ஜெயஜெய என்று ஏத்தி வாழ்த்து எடுப்ப வீற்றிருந்த மகிமைத் தேவைப்
புன் நர கீடங்களை ஓர் பொருளாய் உன்னிப் புகல்_அரிய பெரும் பாவப் பொறை சுமந்து
தன் உயிரைப் பரிந்து அளித்த மேசியாவைச் சர்வ பரித் தியாகனை மெய்த் தரும வாழ்வை
என் உயிருக்குயிராய ஈசன்-தன்னை என்று-கொலோ கண் குளிரக் காணும் நாளே

#5
பன்_அரிய பரம பத நாடு நீங்கிப் பவித்திரமாய்க் கன்னி மரி பாலல் ஆகிப்
பின்னர் விரத்துவம் பூண்டு ஞான தீக்ஷை பெற்று விதிவிலக்கு ஓம்பிச் சீடருக்கு
நல் நெறியின் துணிபு உணர்த்தி அருளினானை நர ஜீவ தாரகனை நம்பன் சித்தம்
இ நெறியாம் எனத் தெரித்த இறைவன்-தன்னை என்று-கொலோ கண் குளிரக் காணும் நாளே

#6
ஜென்ம தரித்திரத்து அழியாச் செல்வம் ஓங்கச் சிறுமையிலே மகிமை நலம் திகழ்ந்து தோன்ற
வன் மரணம்தனில்-நின்று நித்ய_ஜீவன் மல்க அருள் நீதி முறை வழுவா வண்ணம்
தன்ம உரு எடுத்த குமரேசன்-தன்னைத் தற்பரமாய் அகில சராசரங்கள் ஒன்றும்
இன்மையிலே தோற்றுவித்த ஈசன்-தன்னை என்று-கொலோ கண் குளிரக் காணும் நாளே

#7
அலகை தலை நசுக்கிய பேர்_ஆற்றலானை அவித்தை இருள் அறுத்து ஒளிர் மெய்ஞ்ஞானத்தானை
உலக மயக்கு ஒழித்து இரக்ஷை உதவினானை உத்தம சற்குணத்தானை உலப்பு_இலானை
விலகி உயிர் உடலை விடும் அமையத்து எம்மை விலகாது விசுவாச விளக்கைத் தூண்டி
இலகு திரு_அடி நீழல் இருத்துவானை என்று-கொலோ கண் குளிரக் காணும் நாளே

#8
தம் ஆவி இனைந்து பெரும் துயரம் தாங்கித் தண் நறும் பூங்காவில் ஒரு தனி யாமத்தில்
விம்மா உள் உடையா நெட்டுயிர்ப்பு வீங்கி மெய் புழுங்கி வெம் குருதி வெயர்வை சிந்தி
அம்மானை விளித்து இறைஞ்சி அலக்கணுற்ற அரும் தவத்தின் பெருந்தகையை அருளின் வாழ்வை
எம் ஆவிக்கு இனியானை எய்தி நாயேன் என்று-கொலோ கண் குளிரக் காணும் நாளே

#9
பொல்லார் முள்முடி சூடிக் கோல் கொண்டு ஓச்சப் பொழி குருதி உடல் நனைப்பப் போதம் யாதும்
இல்லா மன்னவன் கொலைத் தீர்ப்பு இசைந்து கூற எருசலேம் நகர் கடந்து கொல்கதாவில்
செல்லா நின்று அருகு இரண்டு திருடர் நாப்பண் சிலுவை மரத்து அறையுண்டு செயல் முடிந்தது
எல்லாம் என்று ஆவிவிட்ட இறைவன்-தன்னை என்று-கொலோ கண் குளிரக் காணும் நாளே

#10
தண் அளி அங்கு உரித்து எழும்பி அன்பு மூலம் தாரணிக்குள் ஊற ஊன்றித் தயை மூடாகி
நண்ணும் இரு தத்துவக் கோடு ஆர்ந்து தூய நல் உரையாம் தழை மல்கி நன்மை பூத்துப்
புண்ணியம் காய்த்து அருள் பழுத்துப் பரமானந்தப் புத்தமுதம் கனிந்து கதி பொருந்தி நிற்கும்
எண்_அரு நித்திய_ஜீவ கற்பகத்தை என்று-கொலோ கண் குளிரக் காணும் நாளே
** தேவாரம் முற்றிற்று

@9 ஆரணிய பருவம் – விடாதகண்டப் படலம் – இடைப்பட்டது
** தேவாரம் பிழைநினைந்திரங்கல் நேரிசை

#1
நின் அடிக்கு அன்புசெய்யா நீசனேன் ஈசனே உன்
பொன் அடிக்கு அன்புசெய்யும் புண்ணியர் குழாத்துள் புக்கு
நல் நடை கற்றும் இல்லேன் நன்று எலாம் ஒருவி நின்ற
என் நடை இகந்தும் இல்லேன் என் செய்வான் தோன்றினேனே

#2
தன் உயிர் போல இந்தத் தடம் கடல் புடவி மேய
மன் உயிர்க்கு இரங்கி மேனாள் மநுமகனாகத் தோன்றி
இன் உயிர் கொடுத்து இரக்ஷை ஈட்டிய இறையை ஏத்தி
என் உயிர் ஓம்புகில்லேன் என் செய்வான் தோன்றினேனே

#3
வன்கணன் படிறன் பொல்லா வஞ்சன் என்று இகழ்ந்திடாது என்
புன்கணுக்கு இரங்கி ஓர் பூம் பொழிலிடைப் புனித மூர்த்தி
நின் கணீர் சொரிந்து செந்நீர் நிலத்து உக வியர்த்தல் கண்டும்
என் கணீர் சொரியக் காணேன் என் செய்வான் தோன்றினேனே

#4
கதிர் ஒளி மறையப் பூமி கம்பிக்கச் சிமயம் கீறிப்
பிதிர்படச் சிலுவை மீது பெருந்தகை குருதி சிந்தி
வதைபடு திரு_கோலத்தை மனக்கணால் தரிசித்து ஏத்தி
இதயம் நெக்குருகுகில்லேன் என் செய்வான் தோன்றினேனே

#5
கன்றிய காம நெஞ்சக் கள்வனேன் காமம் நீத்த
நன்றி கொள் மாந்தர் போல நடித்திடும் நடலை_உள்ளேன்
ஒன்றிய மனத்தோடு எந்தாய் உன் அருள் துணையை நாடி
என்று இனி உய்யப்போவேன் என் செய்வான் தோன்றினேனே

#6
தேசுற்ற மின்னார் மோகச் சிக்கு உளே சிக்கிச் சிந்தை
மாசு_உற்றேன் உலக மாய வாழ்க்கையை மருண்டு நச்சி
வேசுற்றேன் கவலையாலே மெலிவுற்றேன் விழைநராலும்
ஏசுற்றேன் ஈசனே யான் என் செய்வான் தோன்றினேனே

#7
அருள் உடை முகிலை அன்பர் ஆர்_உயிர்க்கு உயிராய் நின்ற
தெருள் உடை அமுதை உள்ளம் தித்திக்கும் செழும் தேன் வைப்பை
மருள் உடை அறிவிற்கு எட்டா வாழ்வினை வழுத்தி வாழேன்
இருள் உடை மனத்தேன் யானே என் செய்வான் தோன்றினேனே

#8
பொறி வழி உள்ளம் போக்கிப் புலை நெறி ஒழுகும் பொல்லேன்
அறிவிலி ஆதலாலே ஆத்துமக் கவலை கொள்ளேன்
செறி உடல் போகம் நச்சித் திரண்ட பேர்_ஆசை என்னும்
எறி கடல் குளித்து நின்றேன் என் செய்வான் தோன்றினேனே

#9
சுத்தனோ அல்லன் நன்மை சொல்ல எள்துணையும் இல்லேன்
பித்தன் நான் பெரிய பாவி பிழைக்கும் ஆறு உணர மாட்டேன்
நித்தம் நீ அருளும் ஈவை நினைகிலேன் அன்றி ஈனம்
எத்தனை இறைவனே யான் என் செய்வான் தோன்றினேனே

#10
மெய்த்திடப் பிறர்க்கு வேதம் விளம்புவன் விரித்து என் உள்ளே
உய்த்ததை உணர மாட்டேன் ஒழுக்கு_உடையவர் போல் நின்றும்
கைத்திடேன் பாவப் பிச்சைக் கடுகி நாள் கழிய வாளா
எய்த்து இளைத்து அயர்ந்தேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே

#11
அழுகிலேன் மனம் கசந்திட்டு அளியனேன் பிழையை உன்னி
விழுகிலேன் நின் பாதாரவிந்தமே கதி என்று ஏத்தித்
தொழுகிலேன் ஆவியாலே தொடர் பவத் துயிலை நீத்து இங்கு
எழுகிலேன் ஈசனே யான் என் செய்வான் தோன்றினேனே

#12
பல் முறை இதயம் என்னும் படுகரைப் பார்க்கும்-தோறும்
நன்மை ஓர் அணுவும் காணேன் நஞ்சினை அமுதா நச்சும்
புன்மையேன் போதம் இல்லேன் புவிப் பொறை ஆயது அன்றி
இன்மையேன் பயன் மற்று எந்தாய் என் செய்வான் தோன்றினேனே
** தேவாரம் முற்றிற்று

@10 இரக்ஷணிய பருவம் – இகபரசந்திப் படலம் -இடைப்பட்டது –
** தேவாரம் கடைக்கணி பண் இந்தளம்

#1
பரனே பரம் பரனே பரப் பொருளே பரஞ்ஜோதீ
உரன் நாடிய விசுவாசிகட்கு உவந்து ஆதரம் புரியும்
பெருமான் அடியேனோ பெரும் பாவி பிழைபட்டேன்
சரண் நாடி வந்து அடைந்தேன் ஒரு தமியேன் கடைக்கணியே

#2
தூலத்தை உவந்து உண்டு சுகித்துச் சுகம் பேணிக்
காலத்தையும் கழித்தேன் உயர் கதி கூட்டும் ரக்ஷணிய
மூலத் தனிமுதலே கடை மூச்சு ஓயும் முன் முடுகிச்
சீலத் திரு_முகத்து ஆர்_ஒளி திகழக் கடைக்கணியே

#3
தொடுவீரையின் மணலைத் துளிதுளி ஆக்கி முன் நீரை
இடினும் கணக்கு என் தீ_வினைக்கு இன்றே கணக்கு எந்தாய்
படுபாவி என்று எள்ளாது எனைப் பரிவாய் மன்னிப்பு அருளி
நடுநாள் உனது அடியாரொடு நணுகக் கடைக்கணியே

#4
அன்பு ஆர்கலி அருள் மா மழை அடியார்க்கு அனவரத
இன்பு ஆர்தரு கிருபாநிதி இரக்ஷண்ய புண்ணியக் குன்று
உன்-பால் சரண் புகுந்தேன் எனை ஒறுக்காய் அகத்து ஒளி தந்து
என்-பால் பிழை பொறுத்து ஆதரித்து எந்தாய் கடைக்கணியே

#5
பெற்றாருடன் பிறந்தார் தமர் பெண்டீர் மக்கள் பெரு நட்பு
உற்றாரினும் உற்றார் சிலர் உலந்தார் உயிர் உலக்கப்
பெற்றேன்_அலன் என்னோ திருவுள்ளம் பெருமானே
நற்றாயினும் இனியாய் உனை நாடக் கடைக்கணியே

#6
மரணாந்த வல் இருள் மூடி மெய் வசம் அற்று உயிர் மறுகிக்
கரணங்களும் பொறி ஆதியும் கலங்கித் திகைத்து அயரும்
தருணம் கிறிஸ்து அரசே எனை அஞ்சேல் எனத் தாங்கும்
அரணம் பிறிது இலையே உனை அல்லால் கடைக்கணியே

#7
அந்தக்கரணத்து உள்ளன அறிவாய் அடியேனில்
எந்தக் குறை உள என்னினும் எந்தாய் பொறுத்து இரங்கிச்
சிந்தைக் கவலையும் தீர்த்து எனைத் திருத்திக் குணப்படுத்தி
அந்தத் திரு_சரண் நீழல் தந்து அருளிக் கடைக்கணியே

#8
கோது ஆர் குணக்கேடன் மிகக் கொடியன் கொடும் பாவி
ஏதாகிலும் நன்று ஒன்று இலன் எனினும் புறக்கணியாது
ஆதார சர்வேசா அனவரதா அருள் நாதா
பாதாரவிந்தம் சேர்த்து எனைப் பரிவாய்க் கடைக்கணியே

#9
ஓசைக் கடல் புவிக்குள் எனை ஒப்பார் ஒரு பாவி
ஆசைக்கும் இரார் என்பது என் அகம் கண்டு அறி உண்மை
ஈசற்கு ஒரு புதல்வா எனக்கு இரக்ஷண்ய புண்ணியனே
பாசத் தளை விடுத்து எற்கு அருள்பாவி கடைக்கணியே

#10
ஒன்றாய் ஒருமூன்றாய் ஒருமூன்றும் ஒரு முதலாய்
நின்றாய் இது பரமார்த்த நிஷ்கருஷம் இந்த நெறியை
நன்று ஆய்ந்து உளம்திரும்பி உனை நாடில் கதி நாடும்
என்றாய் உனை அடைந்தேன் எனக்கு இரங்கிக் கடைக்கணியே

#11
பேர்_ஆதரம் உடையாய் பெரியோனே பெருமானே
பார் ஆதரித்து உயிர் ஈந்து இரக்ஷணை ஈட்டிய பரனே
ஓர் ஆதரம் உனை அன்று இலை உயிர் போம் பொழுது உடன் வந்து
ஆர் ஆதரம் புரிவார் எனக்கு ஐயா கடைக்கணியே

#12
கிருபாகர கருணாகர கிளர் புண்ணியப் பொருப்பே
பெருமா அடியேன் செய் பிழை பொறுத்து என் உயிர் பிரி கால்
மருவார் தரு குருசில் திகழ் வதனாம்புஜமும் உன்
திரு_நாம மந்திரமும் அகம் திகழக் கடைக்கணியே
** தேவாரம் முற்றிற்று

@11 இரக்ஷணிய பருவம் – இகபரசந்திப் படலம் -இடைப்பட்டது –
** தேவாரம் போற்றித் திருவிருத்தங்கள் – பூர்வ சுருதி

#1
ஆதி மத்யாந்த ரஹித நிஷ்களங்க அநாதி அம் கடவுளே போற்றி
ஜோதியாய் அகண்டாகாரமாய் விளங்கும் தூய சைதந்யமே போற்றி
பேதியா நிலைநின்று உலகு எலாம் தந்த பிரணவ தெய்வமே போற்றி
நீதியோடு இரக்க சமரச நெறியை நிறுவிய நிமலனே போற்றி

#2
முன்னம் ஓர் நரனால் விளைந்த தீ_வினையை முனிந்திடும் முதல்வனே போற்றி
பின்னர் அ வினை தீர்ந்து உலகு எலாம் உய்யப் பேர்_அருள் அளித்தவா போற்றி
நல் நெறி இகந்தோர் பிரளயத்து அமிழ நயத்திடு நாதனே போற்றி
மன்னு நோவாவோடு எண்மரைப் புரந்த மா பெரும் கருணையாய் போற்றி

#3
குழுமியோர் குலையப் பாஷை வேறு ஆக்கிக் குழப்பிடும் கொற்றவா போற்றி
வழிவழி சுருதி முறைமுறையாக வகுத்த வேதாந்தனே போற்றி
விழி அருள் பரப்பி ஆபிரகாமை விளித்து அருள் விமலனே போற்றி
கிழ முதிர் பருவத்து ஒரு மகவு அளித்த கேடு_இலாக் கிருபையாய் போற்றி

#4
தொண்டனை வலிந்து நகர்ப் புறம் கொடுபோய்த் துரந்த பேர்_அருளினாய்ப் போற்றி
வண்டர் ஊர் எரி வாய்மடுத்திட முனிந்த மாண்புறு நீதியாய் போற்றி
கொண்டு ஒரு மகவைப் பலியிடத் துணிந்த கொற்றவன் தெய்வமே போற்றி
பண்டு போல் மகவு ஈந்து அவற்கு நல் ஆசி பகர்ந்திடும் பகவனே போற்றி

#5
உத்தம தொழும்பற்கு உரைத்த வாக்கு அனைத்தும் உவந்து காத்து அளித்தவா போற்றி
பத்தனை அடர்க்கப் பலம் இலாது ஒல்கிப் பரிவுறும் பரமனே போற்றி
சித்தம்வைத்து அவனில் பன்னிரு மரபு திகழ்ந்திடச் செய்தவா போற்றி
வித்தகன் யோசேப்பினை நனி உயர்த்தும் விண் புல வேந்தனே போற்றி

#6
கருப்பினில் இஸ்ரேல் மக்களைக் காத்த கருணை அம் கடவுளே போற்றி
விருப்பொடு அங்கு அவரை வாரிதி மணல் போல் மிகச் செய்யும் விந்தையாய் போற்றி
திருப்ப_அரும் அடிமைத்தனத்தினால் அவரைத் திருத்திய தெய்வமே போற்றி
ஒருப்படீஇ ஓலமிடும் அவர்க்கு உருகி உறு துயர் களைந்தவா போற்றி

#7
அருளினால் செங்கோல் அளித்து மோசேயை அனுப்பிய அமலனே போற்றி
இருள் உறு மனத்தாரிடைப் பல புதுமை இயற்றிய ஈசனே போற்றி
மருள் உறும் இஸரேல் சிறை தவிர்ந்து ஏக வரம் தரும் வள்ளலே போற்றி
தெருள்_இலாப் பார்வோன் ஜனத்தொடு மடியச் செங்கடல் விடுத்தவா போற்றி

#8
மற்றவர்-தமக்கு வழித் துணை ஆகி வான் அமுது அருளினாய் போற்றி
வெற்றி அம் கிரி மீது உலகு எலாம் நடுங்க விளங்கிடும் விபுதனே போற்றி
நல் தவன் வழியே விதிவிலக்கு அருளி நடத்திடும் நம்பனே போற்றி
கொற்றமொடு இஸரேல் வளம் மிகு கானான் குடிபுக அருளினாய் போற்றி

#9
மன் அரசு உரிமை முறை நிறீஇக் குடிமை வளம் தரு மகிபனே போற்றி
அன்னை போல் கசிந்தும் தந்தை போல் கடிந்தும் ஆம் பரிசு உணர்த்தினாய் போற்றி
நல் நெறி இகந்த மன்னரைச் செகுத்து நலம் புனை நம்பனே போற்றி
செம் நெறிச் சென்றார்க்கு உறுதுணை ஆய திரியேக தெய்வமே போற்றி

#10
கோலை நீத்து ஒரு செங்கோல் இசாய் மகற்குக் கொடுத்து அருள் கொற்றவா போற்றி
சீலமாய் அவன் சொல் நயந்து சங்கீதம் செவிமடுத்து உகந்தவா போற்றி
சாலமோன் தேவாலயம் உவந்து அருளித் தரித்திடும் தற்பரா போற்றி
மேலை நாள் யூத ஜனம் சிறைப்படவும் மீளவும் அருளினாய் போற்றி

#11
திருவுளக் குறிப்பைத் தீர்க்கரால் முன்னம் தெரிந்திடும் தீர்த்தனே போற்றி
வருவர் மேஷியக்கு என்று அடியருக்கு இனிய வாக்கு அமுது ஊட்டினாய் போற்றி
பொருவு_அரும் ஆன்ம ரக்ஷை மார்க்கத்தைப் புதுக்கிய புராதனா போற்றி
சருவ லோகமும் ஈடேற ஓர் மகவைத் தந்து அருள் தந்தையே போற்றி
** உத்தர சுருதி

#12
ஆதி மெய்த் திரு_வாக்கு ஆய அகில காரணனே போற்றி
கோது_இலாக் குணங்கள் பூத்த குவலயத்து ஒளியே போற்றி
மாது வித்து ஆகி இந்த மா நிலம் புரப்பல் என்று
தாதை-பால் பரிந்து நின்ற தற்பரா போற்றி போற்றி

#13
பன்_அரும் மஹிமையோடு பண்ணவர் பரவி ஏத்த
உன்ன_அரும் பரமாகாயத்து உச்சி வீற்றிருந்தாய் போற்றி
புல் நரர்-பொருட்டுப் பாவப் புலை உலகத்து மேவிக்
கன்னி-பால் உதித்தாய் போற்றி கருணை வாரிதியே போற்றி

#14
வறிது புல்லணையில் கந்தை வனைந்து ஒரு குழவி ஆகி
அறிதுயில் அமர்ந்தாய் போற்றி அலகு_இல் பல் உயிரை ஊட்டிச்
செறி தரு பசிக்கு ஆற்றாது தேம்பி நின்று அழுதாய் போற்றி
நெறி திகழ் அறவோர் ஆயர் நேர்ந்த நின்மலனே போற்றி

#15
ஈசனார் உரை கொண்டு ஏகி எகிப்து நாடு அடைந்து மீண்டு
நாசரேத்தூர் வந்துற்ற நசரேய நம்பி போற்றி
ஆசு_அற வளர்ந்து பெற்றோர்க்கு அமைந்திடும் ஐய போற்றி
தேசிக ஞான தீக்ஷை செவ்விதின் அடைந்தாய் போற்றி

#16
அ முறை விரதம் மேற்கொண்டு ஆரணியத்து மேவிச்
செம் முறை திறம்பா வண்ணம் ஜெப_தபம் புரிந்தாய் போற்றி
மும்முறை முனிந்து பேயை முடுக்கிய முனிவா போற்றி
எம் முறைபாட்டுக்கு உள்ளம் இரங்கிடும் எந்தாய் போற்றி

#17
வந்தது பரம ராஜ்யம் மனந்திரும்புங்கள் என்று
முந்து உபதேசம் செய்த முத்தி வித்தகனே போற்றி
சிந்தனை கசிந்து ஈராறு சீஷரை அழைத்து ஆட்கொண்டு
விந்தையாய்ப் பரம ஞானம் விளம்பிய குருவே போற்றி

#18
நள்ளுநரொடு சூழுற்ற நர சமூஹங்கட்கு எல்லாம்
விள்_அரும் கருணையால் ஓர் வெற்பிடை விளங்கித் தோன்றி
எள்ள_அரும் சுவிசேஷத்தின் இரும் சுடர் விரித்து அஞ்ஞான
நள் இருள் பிழம்பு சீத்த ஞான சூரியனே போற்றி

#19
மை உறு வஞ்ச நெஞ்ச மாய வல் இயற்கை முற்றும்
கையுறு நெல்லி போலக் காண்டலால் கதியைக் கூட்டும்
மெய் உறு தருமம் யாவும் விழுத் தக விளம்பி ஆங்கு
பொய்_அறு சான்றா நின்ற புண்ணிய மூர்த்தி போற்றி

#20
பார் இடம் வியக்கத் தீய பாரிடம் துரந்து நேர்ந்த
கோர வெம் பிணி கூன் மூகை குருடு வன் செவிடு பங்கு
தீர மெய் நிமிரப் பேசத் தெரியக் கண் திறக்கச் செல்ல
ஆர்_அருள் அளித்த திவ்ய அற்புத மூர்த்தி போற்றி

#21
அன்று ஒரு சிறுமி ஏழை அமங்கலை சிறுவன் சேமத்து
ஒன்றிய தொழும்பன் இன்னோர்க்கு உருகிக் கண் கலுழி சிந்திப்
பொன்றிய உயிர் வந்து எய்தப் புண்ணியம் புரிந்தாய் போற்றி
நன்று_இலேன் சிறார்க்கும் ஜீவன் நல்கிய நம்பா போற்றி

#22
பாழி அம் கிரி மீது ஓர் கால் பரிதி போல் பொலிந்து அன்பர்க்கு
வாழிய வதனச் சேவை வழங்கிய தேவே போற்றி
ஆழி மீது உலவி ஆழி அலையினை அடக்கி ஆங்கே
சூழ் இரும் புசலை நீத்த தொல்லை எம் பரனே போற்றி

#23
விஞ்சிய அகங்காரத்தால் வினவு வேதியர் உள் நாணி
அஞ்சி வாய் அடைப்பட்டு ஏக அவிர் இதழ் அலர்ந்தாய் போற்றி
வஞ்சரால் மடியும் ஆறும் மறுத்து உயிர்த்தெழும்பும் ஆறும்
செஞ்செவே உரைத்த ஞான தேசிக மூர்த்தி போற்றி

#24
தொண்டரைத் தெருட்டி ஆங்கு ஓர் துறு மலர்ச் சோலை நண்ணி
அண்டர் நாயகன் வெம் சீற்றத்து ஆர்_அழல் குளித்தாய் போற்றி
கொண்டு ஒரு முத்தத்தாலே குறிப்பிடக் கட்டுண்டு ஏகிக்
கண்டகர் முன்றில் நின்று கடும் துயர் அடைந்தாய் போற்றி

#25
கைதவர் சினந்து தூய கமல வாள் முகத்து உமிழ்ந்து
வைதும் முள் மௌலி வேய்ந்து வாரினால் அடிப்ப மாழ்கி
வெய்துயிர்த்து இழி செம் சோரி மெய் எலாம் புதைப்ப யாங்கள்
உய் திறம் நாடி நின்ற உபசாந்த மூர்த்தி போற்றி

#26
முழுதும் நான் அறியேன் என்று மும்முறை மறுத்த சீடன்
அழுது உளம் கசக்கச்செய்யும் அருள் நோக்கம் உடையாய் போற்றி
பழுதின்மை அறிந்தும் வேந்தன் படுகொலைத் தீர்ப்புக் கூற
இழுதையர் இகழ நின்ற யேசு நாயகனே போற்றி

#27
எம் பவச் சும்மை தானோ ஹீனமாம் குருசும் தாங்கி
அம் பதம் பெயர்ப்ப மாழ்கி அணி மறுகு அணைந்து நின்ற
வம்பு அவிழ் கோதை மாதர் வாய் திறந்து அரற்ற ஆண்டு ஓர்
வெம் பரம்பு இறுத்தாய் போற்றி வினைத் தொடர் அறுத்தாய் போற்றி

#28
வேதனை குணிக்கற்பாற்றோ வெம் குருசு அறைந்து கொல்லும்
பாதகர்க்காய் மன்றாடிப் பரிந்து வாக்கு அருளிச் சோரற்கு
ஆதரம் புரிந்து ஜீவ அரும் பலி அமலற்கு ஆக்கிப்
பூதலம் உயச் சமாதி பொருந்திய தேவே போற்றி

#29
பொங்கு நீர் உலகுக்கு எல்லாம் புண்ணியம் பொலியப் பாவ
சங்கடம் தொலைய நாளும் தனி அறம் தழைப்ப வேத
மங்கல ஓசை மல்க வானவர் மகிழ மீட்டும்
இங்கு உயிர்த்தெழுந்து இரக்ஷை ஈட்டிய எந்தாய் போற்றி

#30
மலங்கிய சீடரோடு வைகல் ஈரிருபான் வைகி
நலம் கிளர் வாக்குக் கூறி நயந்து ஒரு முகில் மீது ஏகி
இலங்கும் ஐங்காயம் காட்டி எம்பிரான் திருமுன் என்றும்
வலம் கிளர் அணை மீது உற்ற மாநுவேல் அரசே போற்றி

#31
மூது உலகருக்கு ஜீவ முக்தி சாதனம் உண்டாகக்
கோது_அறு புனித ஆவிக் கொழும் கதிர்ப் பிழம்பை நல்கிக்
காதலுற்று அடைந்தோர்-தம்மைக் காப்பது கருதி என்றும்
தாதை-பால் பரிந்து பேசும் தயாபரா போற்றி போற்றி
** பரிசுத்தாவியின் பரம்

#32
திரித்துவ பராபரத்தில் திகழ் அதி பரிசுத்தாத்ம
ஒருத்துவ அநாதி நித்திய உயர் மகத்துவமே போற்றி
விரித்த முந்நீர் முகத்து விந்தையாய் விளங்கி மேனாள்
திருத் தகு புவனம் பூத்த தெய்வமே போற்றி போற்றி

#33
மறை வழிப் படரா மாந்தர் வன் மனம்-தனில் போராடி
இறை வழிப் படுத்தும் தூய எம்பெருமானே போற்றி
சிறை வழிப் பட்டோர்க்கு உள்ளம் தெளிந்த நோவாவைக் கொண்டு
முறை வழிப் போதம் ஈந்த முக்தி ஆரணனே போற்றி

#34
சுத்த மெய் விசுவாசத்தைத் துரிசு_அற விளக்கித் தூய
பத்தனாம் ஆபிராமைப் பாதுகாத்து அளித்தாய் போற்றி
நித்திய ஜீவ மார்க்க நெறி கடைப்பிடித்து நின்ற
உத்தமர்க்கு யாண்டும் நீங்கா உறுதுணை ஆனாய் போற்றி

#35
வலிந்து எனை மருவுக என்று மருட்டிய வனிதைக்கு உள்ளம்
மெலிந்து அழியாது முன் ஓர் விடலையைக் காத்தாய் போற்றி
மலிந்திடு ராஜ போகம் வரைந்து இனத்தோடு மோசே
நலிந்து உறு நிந்தை நச்ச நயந்து அருள் அளித்தாய் போற்றி

#36
கோட்டம் அற்று உளம் திருத்திக் குலவு மெய்ப் பத்தி வித்தி
நாட்டம் வைத்து அருள் நீர் பாய்ச்சி நலிவு எலாம் அகற்றி யாதும்
வாட்டம் இன்று ஆக ஓம்பி வர கதி விளைவித்து அன்பர்
ஈட்டம் ஆர்ந்து உயத் துய்ப்பிக்கும் இதய நாயகனே போற்றி
*