இரக்ஷணிய பருவம், இரட்சணிய யாத்திரிகம்


@1 தர்மக்ஷேத்திரப் படலம்

#1
உடல் உயிர் கண் இமை ஒத்த மாட்சியர்
படர் உறும் அனந்தரின் படுகர் வைப்பையும்
நடலையார் பிரபஞ்ச நச்சு வாழ்க்கையின்
கடையையும் கடந்து மெய் வாழ்வைக் கண்ணுற்றார்

#2
பல் வளங்களும் குழீஇப் பரம பாஷையின்
கல்வியும் செல்வமும் கவின் கொண்டு ஓங்கிய
நல் வள நாட்டை ஊடுருவி நம் பிரான்
மல் வள நகர் புகும் மார்க்கம் சென்றதால்

#3
புயல் நிரை பொதுளிய பொதும்பரும் பல
பயிர் வளம் செறிந்து எழில் படர்ந்த பாங்கரும்
வியன் நிலப் பரப்பு நல் விரை உய்யானமும்
மயல்_அறு காட்சியின் மயங்கும் மாலது

#4
வானமும் பூமியும் இணைந்த மாண்பது
ஞானமும் நன்மையும் நனி கதித்தது
தீனமும் ஈனமும் சேர்வு_இன்றாயது எ
ஊனமும் பாவமும் ஒழிந்த நீரது

#5
ஆரியரே குடி அமையத் தக்கது
பூரியர் அ வழி புகப்பெறாதது
சூரியன் கதிர் அனவரதம் துன்னலால்
கார் இருள் எங்கணும் காணொணாதது

#6
புனிதமே எங்கணும் பொலியும் பொற்பது
தனிதம் ஆர் அருள் மழை பொழியும் சால்பது
மனிதர் வானவர் என மருளத் தக்கது
நனி தவ ஒழுக்கத்தின் நலம் கொள் மொய்ம்பது

#7
புண்ணிய நதி வளம் பொருந்து பொற்பது
தண் அளித் தடங்களின் பெருக்கம் சான்றது
கண்ணிய பயிர் வளம் கவின் கொள் காட்சியின்
வண்ணம் இத்துணை என வகுக்கொணாதது

#8
சீலமும் ஒழுக்கமும் திகழ்ந்த செவ்வியில்
பாலொடு தேன் கலந்து ஓடும் பாலது
ஞாலம் முற்றும் தொகூஉ நன்கு அருந்தினும்
சாலவும் பயன்படும் தகைமை சான்றது

#9
கரும பூமியின் கடைக்கண்ணது ஆயது
திரு_மலைச் சாரலோடு இசைந்த சீரது
மரு மலிதரும் மலர்ச் சோலை வாய்ந்தது
தருமசேத்திரம் எனப் பெயர் தழைத்தது

#10
அத்தகு சேத்திரத்து அணி கொள் மாட்சியைச்
சத்திய நிலைபெறு தகைக் கண்ணாடியின்
பத்தியின் விழிக் கொடு பார்ப்பின் அல்லது
வித்தரிப்பு உரை இயல் விளக்கற்பாலதோ

#11
இன்னணம் தகு பரம சாதனங்களோடு இசைந்து
மன்னு ஞான நல் வளம் தரு தருமசேத்திரத்தைத்
துன்னு மாத்திரத்து ஆரணக் கிழவராம் தூயோர்
பன்_அரும் பரமானந்த பரவசர் ஆனார்

#12
பனி திகழ்ந்த வண் புது மலர்ப் பரிமளம் பரம்பித்
தனிதமாம் மதுத் துளி படு தண்டலைப் பரப்பில்
நனி தவழ்ந்து உலாம் நறும் தென்றல் மெய்யுற நணுகப்
புனிதர் ஆயினர் இருவரும் பொன் ஒளி மருவி

#13
மாயம் ஆர் பிரபஞ்சத்து மயக்கு இனி மருவாத்
தூய சேத்திரம் அடைந்தனமால் எனத் தொழுது
மேய தோத்திரம் புரிந்தனர் விண்ணுலகு ஆளும்
நாயகன் அருள் துணைமையை நன்றியோடு உள்ளி

#14
இனைய சீலராய் நல் நெறி பிடித்து இருவோரும்
தினை அனைத்து நோவு இன்றி உள் அதிசயம் சிறப்பத்
துனைவின் ஏகுழி வரம்பு_அறு காட்சியைத் தொகுத்துப்
புனையும் வேதியன் தோழற்குக் காட்டினன் புகல்வான்

#15
கூருற்று ஓங்கிய மதி_வலோய் கொற்றவன் மகிமைச்
சீருற்று ஓங்கிய திரு_நகர் அணித்துறும் செயலால்
ஏருற்று ஓங்கு பைம்பொன் மய எழில் உருப் படைத்து இப்
பாருற்று ஓங்கிய சராசரப் பகுதிகள் பாராய்

#16
நிண்ணயம் திகழ் உத்தம நிருமல அரசன்
தண் அளிப் பெருக்கு ஆர்வது இத் தருமசேத்திரம் என்று
எண்ண_அரும் பல வளம் நிறைந்து எங்கணும் மலிந்து
கண் எதிர்ப்படு காட்சியே தெரிப்பன காணாய்

#17
என் உயிர்க்கு அரும் துணைவ இத் தலத்தவர் எல்லாம்
மன்னர் கோமகன் குருதி நீர் ஆடிய மரபால்
செம் நிறத்த பொன் உரு ஒளி திகழ்ந்த மேனியராய்ப்
பன்_அரும் எழில் படைத்து உள புதுமையைப் பாராய்

#18
துனி தவிர்த்து அரும் துணை புரி தோழ இத் தேயப்
புனிதர் வாய் மலர் பொழிதரு புது மொழித் தேன் போல்
நனி திகழ்ந்த முந்திரிகையின் நறும் கொழும் குலைகள்
கனி தரும் புது நறை விரி காட்சியைக் காணாய்

#19
உரவு நீர் நிலத்து அருள் திரவியம் பெற்ற உரவோய்
இரவும் இன்று உறு துயிலும் இன்று ஆதலின் எங்கும்
புரவலன் திரு_அடிக்கு அன்பு பொருந்திய புனிதர்
பரவசத் துயில் விளைக்கின்ற புதுமையைப் பாராய்

#20
உரம் அளைந்த மெய் உத்தம இ நிலத்து உரவோர்
கரவு_இலாது அகம் புறம் எங்கும் உண்மையே கவினப்
புரவலன் சித்தம் போல் புரி புனிதமாச் செயலால்
பரம ராஜ்ஜியம் வந்து உற்ற பரிசினைப் பாராய்

#21
அற்பு மல்கிய ஆர்_உயிர்த் தோழ நம் அருமைத்
தற்பரன் சுதன் பிராட்டியோடு உலவுவான் சமைத்த
வில் பழுத்த பைம்பொன் மலர்ப் பரிமளம் வீசும்
கற்பகச் செழும் காவனத்து எழில் நலம் காணாய்

#22
மீ உயர்ந்த வான் நாட்டு இளவரசன் வீற்றிருக்கத்
தூய பொன்னொடு மின்னையும் வெயிலையும் தொகுத்து
மேய பல் மணி குயின்று விண் உற மிளிர்ந்து எங்கும்
பாய் இரும் சுடர் பரப்பு மண்டப நிலை பாராய்

#23
நம்பர் நாட்டிய நம்பிக்கை உருக் கொண்ட நண்ப
இம்பர் நாட்டிய திருச்சபை எனும் மணவாட்டிக்கு
உம்பர் நாட்டு இளவரசன் செய் ஒப்பு உடன்படிக்கைக்
கம்பம் நாட்டிய திருமணப் பந்தலைக் காணாய்

#24
புரை_இல் மெய் விசுவாச இப் புனித சேத்திரத்தின்
தரையில் வந்துவந்து ஏகின்ற சாரண விபுதர்
விரை அலர்ந்த பொன் தாமரைத் திரு_முக விளக்கம்
கரை_இல் பேர்_இன்ப மகிழ்ச்சியைத் தெரிப்பன காணாய்

#25
ஞான நண்ப பொன் நகர் அணித்து எமக்கு இனி நவிற்றில்
வானகத்து அரசன் திருவோலக்க மன்றில்
ஆனகத் தொனியோடு எழும் ஆரண கீத
கான கந்தருவம் செவிமடுப்பன காணாய்

#26
எம்பி இ நிலை ஆடியில் இணை_இல் பேர்_இன்பச்
செம்பொன் மாளிகை திரு_கடை திரு நெடு வீதி
உம்பர் ஓங்கு கோபுர மகிமைத் திரள் உயர்ந்த
பைம்பொன் இஞ்சி மா நகர் உருக் காட்டுவ பாராய்

#27
என் மனக்கு இனியாய் சருவேசுர நேசம்
நன்மை நல் குண நல் நடை நல் மன_சான்று
தன்ம பாலனம் தயை அன்பு சாந்தம் என்று இனைய
பல் மணித் திரள் புரை குண நிதிகளைப் பாராய்

#28
தெள்ளியோய் இந்தத் திவ்விய சேத்திரம் எங்கும்
உள்ளுறப் பளிங்கு எனத் தெளிந்து உறு மணம் கமழும்
வள்ள வாய் மலர்ந்து இதழ் விண்ட மதுத் துளி மல்கிப்
பள்ள நீரகத்து அலர் முக வனசங்கள் பாராய்

#29
ஜீவ நன்மையைத் தெரிந்து உளம்திரும்பிய செய்யோய்
தேவ மைந்தன் ஓர் சீர்த்தியைச் சேத்திர மடந்தை
ஆவலில் புனைந்து ஏத்து இசையாம் என அணி கொள்
காவகத்து எழு புள் ஒலி காட்டுவ காணாய்

#30
இனைய யாவையும் வயின்-தொறும் தோழனுக்கு இயம்பிச்
சினை அலர்ந்த பூம் காவகச் செழும் பொழில் நடுவண்
வனையும் பொன் திரு மா மணி மண்டபம் அடுத்தான்
நினைவில் நீங்கலா நம்பிக்கையோடும் அ நிவிர்த்தன்

#31
திருக் குலாவும் அ முன்றிலில் திவ்விய ஜோதி
இருக்க மல்கும் ஓர் சூழலில் வேதியர் இருவர்
மருக் குலாவிய மலர் செறி அசோகத்தை மருவி
உருக்கு மண்டபப் பொலிவு கண்டு உவப்புடன் இருந்தார்

#32
ஆய போழ்தத்து வன பரிபாலகர் அடுத்துத்
தூய யாத்திரைக் குறியினால் அவர் நிலை துணிந்து
நேய நல் மொழி நிகழ்த்தி நும் நெறிக்கிடை நிகழ்ந்த
சேய காரியம் தெரிக்க என வேதியன் தெரிப்ப

#33
நன்று கேட்டு உளக் களிப்பொடு நாயகன் பரவி
நின்று செவ்வியீர் பிரபஞ்ச நிருவிசாரத்து
மன்று-இருந்தும் இ வளம் படு தருமசேத்திரத்து
முன்றில் வந்தனிர் திரு_அருள் மாட்சியே முற்றும்

#34
ஐயன்மீர் இனித் துன்பம் இன்று ஆயினும் ஆண்டு ஓர்
மை இருள் படு மரணத்தை வரன்முறை நீந்தித்
துய்ய ஆய அக்கரைப் படில் சுவர்க்க பேர்_இன்பம்
கையதாகுமால் என்று உளம் கனிந்து உரையாடி

#35
வம்-மின் ஈண்டு என மலர்க் கரம் கொளுவி உய்யானத்து
எம்மருங்கினும் இசைந்து உள புதுமையைக் காட்டி
அம்ம ஈது இது என்று அமைவு எலாம் அகம் உறத் தெருட்டி
மம்மர் நீங்கிய மதி_வலீர் கேண்ம் என வகுப்பார்

#36
மரு மலிந்த இச் செழும் மலர்க் காவொடு மலிந்த
தருமசேத்திரப் பகுதியும் சருவ லோகேசன்
திரு_மகற்கு உரித்தாம் இவண் செறி பலன் யாவும்
ஒருமனத்த யாத்திரிகருக்கு உரிமையாம் உரைக்கில்

#37
மறியும் தண் புனல் மடு உண்டு நதி உண்டு வனையக்
கறை இலாத வெண் துகில் உண்டு கவின் அணி உண்டு
நறிய முப்பழக் கனி உண்டு தீம் பழ நறையும்
நிறைய உண்டு போனகம் உண்டு இ நிலத்தினில் எங்கும்

#38
தங்க மாளிகைத் தலம் உண்டு தலைவனைப் பரவப்
பொங்கு மா தவப் புரை உண்டு புத்துரை திகழ்த்த
எங்கும் வேதியக் குழுக்கள் உண்டு ஆதலின் எமரீர்
இங்கு இருந்து சில் நாள் கழி-மின் என இசைத்தார்

#39
என்ற இன் இசை வாசகம் செவிமடுத்து இறும்பூது
ஒன்றி வேதியர் இருவரும் உவப்பொடு அங்கு அவர்க்கு
நன்றி கூறி வந்தனம் சொலி நயந்து இனிது இருந்தார்
துன்று கற்பகச் சோலை-வாய் அரும் தவச் சூழல்

#40
புனித நீர் படிந்து ஆடுவர் பூம் துகில் வனைவர்
கனிதல் நீர்மையில் கடவுளைக் கை குவித்து இறைஞ்சி
இனிது போனகம் அருந்துவர் இன் இசை பயில்வார்
துனி தவிர்ந்து அனவரதமும் தோத்திரம் புரிவார்

#41
நந்தனத்து எழில் கண்டுகண்டு உலவுவர் நாளும்
சந்தனாடவிப் பொதும்பரில் தடம் துயில் கொள்வர்
விந்தையாய்ப் பல காட்சியை வியந்து உளம் களிப்பர்
முந்திரிப்பழ நறை உண்டு தேக்குவர் முறையால்

#42
துன்னு மா தவக் குழுவொடு தோழமை கொள்வார்
பன்னு வேதியரோடு சம்பாஷணை பயில்வார்
பொன் நகர்த் தொனி செவிமடுத்து உளக் களி பூப்பார்
இன்னவாறு அவண் வைகல் ஓர்சில கழிந்திடும் கால்

#43
உம்பர் மேய சீயோன் மலை உன்னத கீதம்
பம்ப வேதியன் அகத்து உறை ஆத்துமப் பன்னி
எம் பிராண நேசரைத் தலைக்கூடும் நாள் எது என்று
ஐம்புலன்களும் மயங்கி மெய் அவசமுற்று அயர்ந்தாள்

#44
தூ நலம் திகழ் காதல் நோய் சுடச்சுடத் துய்க்கும்
பால் நலம் திகழ் உணவு எதும் அருந்திலள் பதைப்பாள்
கான வேடுவர் வலைப் படு மான் எனக் கலங்கி
ஊன் அளைந்த தன் உயிர் துடித்து உள்ளமும் குலைவாள்

#45
ஆசை நாயகன் அருள் உரு வெளியினால் அயர்வாள்
தேசு உலாவிய திரு_முகத்து ஒளி அகம் திளைப்பாள்
சீசி இ உடல் சுமை என்று தீர்வல் என்று இனைவாள்
நேசம் ஆற்ற அரிதாய் மிக நெட்டுயிர்ப்பு எறிவாள்

#46
உலக பாசங்கள் ஒழிந்தும் தம் உயிர்க்குயிர் ஆகி
இலகும் ஆத்தும நேசர்-பால் ஆசை மிக்கு ஏங்கி
விலகு_இல் நேச பாசத்தினால் இறுகுற விசிப்புண்டு
அலகு_இல் ஆத்துமத் துயர் அடைந்து ஆக்கையும் தளர்வாள்

#47
அருமை நாயகன் மூட்டிய ஆசை நோய் தணியாது
எரி முகத்து உற்ற மெழுகு என இளகி உள் உடைவாள்
திரு_முகச் செவ்வி காண்குறும் செவ்வி நீளிது எனக்
கரு முகில் துளி காண்கிலாப் பயிர் எனக் கரிவாள்

#48
உத்தமம் திகழ் அன்பு மிக்கு உயிர்க்குயிர் ஆய
வித்தகன் திறத்து ஓங்கிய விரகதாபத்தால்
சித்த சஞ்சலம் கதித்தலில் தெருமரல் உழந்து
பித்தரின் திகைத்து அலமரீஇ மருண்டு பேதுறுவாள்

#49
பண்டு பாரிடச் சூழலில் மாதவிப் பாங்கர்க்
கண்டு நெஞ்சையும் கருத்தையும் கவர்ந்து உடன் மணந்து
கொண்டு வந்து ஒரு குறியிடத்து உய்த்து அருள் கனிவாய்
விண்ட மெய்த் திரு_வாக்கு எலாம் நினைத்து வெய்துயிர்ப்பாள்

#50
ஏது செய்குதிர் என் ஒரு நேசர்-பால் எனக்கு ஆம்
காதல் நோய்க்கு ஒரு மருந்தும் உண்டோ அவர் கனி வாய்ப்
போது மல்கு புத்தமுது அலால் என்று அகம் புலந்து
மீதுமீது எரி தவழ்ந்து என வெந்து புண்படுவாள்

#51
அழுதல் நெட்டுயிர்த்து அழுங்குதல் சோருதல் அவாவி
எழுதல் வீழுதல் இரங்குதல் இரு கரம் கூப்பித்
தொழுதல் ஆதிய தொழில் அலால் தொழில் இன்றித் துயர்வாள்
உழுவல் அன்பினில் கொடிது யாது உவரி சூழ் உலகில்

#52
மீக் கிளர்ந்து எழு காதலால் வெவ் இடர் பழுத்த
தீக் கொடும் சிறை மீட்டும் என் நாயகன் செறுக்கும்
ஆக்கை வெம் சிறை மீட்டு எனை அணைக்கிலர் என்னாக்
கூக்குரல் படுத்து அழுங்கித் தன் ஆர்_உயிர் குறையும்

#53
இருண்ட பாதலப் படுகர்-நின்று எடுத்த பேர்_அன்பை
உருண்ட சிந்தையின் மறந்தனனால் என உள்ளித்
தெருண்டு என் நாயகன் வர விடு தூது ஒன்று சேரின்
மருண்ட புன்மை போய் மாறும் என்று ஒரு நிலை மதிக்கும்

#54
அன்பு உலப்பு_இலான் அடித் தொழும்பு ஆற்றுதற்கு உதவாப்
புன் புலால் உடல் பொறை சுமந்து எத்தனை பொழுது
மன் புவிப் பொறையாய்த் திரிவேன் என மயங்கும்
தன் புலப் பகை அவித்த யோகியர் நிலை சாரும்

#55
பன்_அரும் பரலோக பதவி நீத்து
இ நிலத்து வந்து எய்திய ஈசனார்
மன்னும் அன்பு மயத் திரு_மேனியை
உன்னியுன்னித் தன் உள்ளம் உருகுவாள்

#56
துருவி வந்து எனைத் தொண்டுபடுத்தவும்
பொருவு_இல் பேர்_இன்ப போகத்தை ஊட்டவும்
பருவரல் கடல் நீந்திய பான்மை நெஞ்சு
உருவுகின்றது என்று ஆவி உயங்குவாள்

#57
தீங்கு மல்கிய தீக் கடன் யாவையும்
தாங்கி நின்று உத்தரித்து எனைத் தாங்கி அன்பு
ஓங்கு காதலர் ஊடினர் போலுமால்
நீங்கும் ஆறு இனி என் என நேடுவாள்

#58
பர திரித்துவ வேந்தன் பணிப்படி
வரதன் வைதிக மாட்சி வரன்முறை
விரத நோன்பு பிடித்திடும் வித்தக
சரதம் எண்ணித் தவிப்புறு நீர்மையாள்

#59
ஒரு மலைச் சிகரத்து ஒரு மூவருக்கு
இரு நிலத்துச் சுடரும் இரவி போல்
தரும ஜோதி தழைத்திடக் காட்டும் அத்
திரு_முகச் சுடர் உள்ளித் தியங்குவாள்

#60
சுத்தம் ஆக்கி வெண் தூசு அணி நல்கித் தம்
முத்தி தந்து இன்பம் ஊட்டிய காதலர்
வித்தகக் கனி வாய் இதழ் விண்ட சொல்
தித்திக்கின்றது என் சிந்தையுள் நின்று என்பாள்

#61
கள்ளம் இன்று அவர் கட்டுரை ஆயினும்
உள்ளம் முற்றும் உருக்கிக் கவர்ந்து உடன்
கொள்ளைகொள்ளும் குணம் உடைத்து என்று கண்
வெள்ளம் தோய்ந்தும் வெதுப்புறு மேனியாள்

#62
சேவடித் துணை நோவத் திசைதிசை
ஆவலித்து எனைத் தேடிய அன்பு_உளார்
கூவிக்கூவி விளிக்கக் குறிக்கொளார்
பாவியேன் பிழையே என்று பன்னுவாள்

#63
விண் கலக்கும் விழு நெறி வீசி இ
மண் கலந்த மயல் அளைந்து ஓங்கிய
எண் கலந்த எருசலைக்காய் இரு
கண் கலுழ்ந்த கருணையை உன்னுவாள்

#64
பொற்பின் ஆர்_உயிர் பொன்று உடல் கூடவும்
உற்பவத்தின் உடல் குறை நீங்கவும்
பற்பல் வெம் பிணி தீரவும் பாலித்த
அற்புதச் செயல் உன்னி அழுங்குவாள்

#65
வரு தினத்து மணத் தொழில் முற்றுவான்
குருதி வேர்த் துளி மேனியில் கோத்து உகத்
திருவுளத்துத் திருந்து அணி செய்த சீர்
கருதி ஆவி கரைந்து கலுழுவாள்

#66
மெய்ச் சிரத்தையில் பாசம் விசிக்க மெய்
பச்சிரத்தம் சொரியப் பதகர் முன்
நச்சு முள்முடி தைக்க நலிவுறும்
உச்சிதத் தனி நேசத்தை உன்னுவாள்

#67
குறு மனக் கொடியார் செய் குரூரமும்
சிறுமையும் புகல் தீச் சொலும் தாங்கி அத்
தெறும் மகத்துவர் சிந்தை சினந்திடாப்
பொறுமை உள்ளிப் புகைந்து புலம்புவாள்

#68
விருண மேனியில் வெவ் இருப்பாணி செல்
தருணம் மற்று இவர்-தம் பிழை ஓர்கிலர்
அருள் நயந்து மன்னிக்க அத்தா எனும்
கருணை உள்ளிக் கசிந்து கலுழுவாள்

#69
ஞாலம் மேவுநர் ஆத்தும நாயகன்
ஓலம் ஆர் குருசு ஒண் மடல் ஊர்ந்து அருள்
சீலமாகத் திருத்து திருமணக்
கோலம் உள்ளிக் குழைந்து உளம் தேம்புவாள்

#70
செயிர்த்த சிந்தை அத் தெவ்வர் திகைக்கவும்
அயிர்த்த தொண்டருக்கு ஆர்_உயிர் மல்கவும்
பயிர்த்த பூம் பணைப் பள்ளி நின்று ஆண்டகை
உயிர்த்தெழுந்தமை உள்ளி உள் ஊக்குவாள்

#71
ஆழியான் வலப் பாகத்து அமர்ந்துளார்
வாழிவாழி என்று ஏத்தினும் வைகல் ஓர்
ஊழியாகத் திகைத்து உள் உடைந்தனள்
ஏழை ஆத்துமப் பன்னி இங்கு என்பவே

#72
ஈது காலத்து உன் ஆன்ம இரக்ஷகர்
காதலித்து உன் பலன்களும் கைக்கொடு இங்கு
ஆதரித்து அடுக்கின்றனரால் எனக்
கோது_இல் சீயோன் குமரிக்குக் கூறு-மின்

#73
என்று ஒர் சத்தம் எழுந்தது விண்ணிடை
மன்றல் மங்களம் மல்கிய பொன் நகர்
முன்றில்-நின்று முழங்கி முறைமுறை
துன்று எக்காளம் தொனித்திடுமாறு போல்

#74
வான்-நின்று உள்ளத்து ஆர்ந்த நல் வாக்கு எனும்
தேன் உண்டு ஆர்ந்தனள் ஆத்துமச் செல்வியும்
ஊன் அளைந்த உடல் துயில் வீசினான்
ஞானம் மல்கிய மெய் மறை நாவலன்

#75
குருசு உயர்த்த குரிசில் வருகையின்
பரிசு உணர்ந்து நம்பிக்கையும் பண்ணவ
தரிசனைக்கு அருகாயது தம்பிரான்
புரிசை மா நகர் போதுவம் யாம் என்றான்

#76
நன்று எனா இருவோரும் நறும் பொழில்
மன்று_உளார் விடைபெற்று வந்தித்து உடன்
சென்று கூடினர் செவ்விய நூல் நெறி
என்றும் மாறு_இல் இறைவனை ஏத்தியே

#77
இத்தகைப்படு சம்பவம் யாவும் கை
உய்த்த நெல்லிக்கனியில் உணர்ந்து யான்
வித்தகர்ப் பின்தொடர்ந்து விளைவு இனி
எத்திறத்த தெரிவல் என்று ஏகினேன்

#78
மங்களம் செறி மா நகர் நோக்கி மன்
சிங்க ஏறு ஓர் இரண்டு உடன் சென்று எனக்
கங்குல் இன்றிக் கதிர் படு கானகப்
பொங்கரூடு நடந்தனர் போயினார்

#79
செல் நெறிக்கு எதிராய் இரு சீரியோர்
பொன்னின் ஆய உடையினர் பொற்பு உறு
மின் ஒளிக் கதிர் வீசு முகத்தினர்
முன்னர்த் தோன்றி மொழிவர் முறைமையால்

#80
எங்கு உளீர் இ நெறிக்கிடை எங்கெங்கு
தங்கி வந்தனிர் சார்ந்த விபத்து எவை
அங்கங்கு உற்ற அருள் செயல் யா எலாம்
இங்கு எடுத்துரை-மின் என்று இயம்பலும்

#81
திருவுளத்து அருள் செவ்வி இதாம் எனா
இருவரும் தம் சரிதத்து இயல்பு எலாம்
துருவி ஆதி தொடுத்து அங்கு இறு வரை
பரிவினோடும் பகர்ந்தனர் பண்பினே

#82
வந்து இறுத்த மரபும் மறையவர்
சிந்தையின் பரிபாகமும் தெள்ளிதின்
அந்தணாளர் அறிந்து அருள் ஆண்டகை
விந்தையின் செயல் ஏத்தி விளம்புவார்

#83
தொக்க பேர்_இடர்ச் சூழல் அகன்று இவண்
புக்கு வந்தனிர் தெய்வப் புணர்ப்பினால்
விக்கினப் புதர் உண்டு இனி மேற்கொளின்
மிக்க பேர்_இன்ப வீட்டு உலகு எய்துவீர்

#84
ஐயன்மீர் நும் அவாவின் வழித் துணை
செய்ய உத்தரம் இன்று திருந்து நும்
துய்ய மெய் விசுவாசத் துணிபினால்
வெய்ய துன்பினை மேற்கொள்ள வேண்டுமால்

#85
திரித்துவப் பரன் திவ்விய வாக்கை உள்
கருத்து இருத்திக் கலங்கலிராய் வரும்
வருத்தம் ஊடறுத்து ஏகி வரம்பு_இல் இன்பு
அருத்து பாங்கர் அடைகுதிரால் என்றார்

#86
அஞ்சலித்து வரன்முறை ஆரியர்
செஞ்செவே வழி பற்றினர் திவ்விய
கஞ்சுகத்தர் இருவரும் காட்சி விட்டு
எஞ்சுறாது அங்கு அவரொடும் ஏகினார்
** தர்மக்ஷேத்திரப் படலம் முற்றிற்று

@2 இகபரசந்திப் படலம்

#1
வித்தகம் திகழும் ஆன்மவிசாரி நம்பிக்கை என்ற
உத்தமர் இருவர் ஜீவ சரிதத்தை ஒருவாறாக
இத்தகைத்து என்று சொற்றாம் இனி வரும் மரணம் நீந்தி
முத்தி ராஜ்ஜியத்தை உற்ற முறைமையை மொழிதும் அன்றே

#2
பகல் ஒளி சதா நின்று ஓங்கும் பவித்திர தேசாந்தத்தில்
இகபரசந்தி என்னும் இடர் இருள் பிழம்பு தொக்கு அங்கு
அகவயில் கடுகிச் செல்லும் அடு திரை மரண ஆற்றைக்
ககன யாத்திரிகர் தத்தம் கண்களில் தெரியக் கண்டார்

#3
கண்டு உடன் மனமும் கண்ணும் கலங்கினர் கவன்றாரேனும்
உண்டு எமக்கு உறுதி என்னா உள் உளே ஊக்கித் தொண்டர்
மண்டலம் புரந்த ஜேசு மலர்_அடிப் புணையைப் பற்றி
எண் தகு தேவாரம் கொண்டு இசைத்தனர் பிணிப்பார் நெஞ்சில்

#4
பூதலம் புரிந்த பாவப் புயல் பரந்து இருண்ட நித்ய
வேதனை உத்தி மொண்டு விழுத்த நீர் வெள்ளம் பொங்கிப்
பேதை மானிடத்தை ஏனைப் பிராணியை மோதி ஈர்த்துப்
பாதலப் படுகர் உய்க்கும் பாதக மரண கங்கை

#5
ஏதென் என்று உரைக்க நின்ற எழில் நறும் துணர்ப் பூம் காவின்
ஆதியில் தோன்றி என்றும் அவனியைச் சூழ்ந்து உலாவி
வேதனைப் பயிரை ஓம்பி விநாசத்தை விளைத்து நித்ய
மா துயர்_கடலில் வீழ்ந்து மறிவது மரண கங்கை

#6
ஆசையில் பெரிது வஞ்சத்து ஆழ்ந்தது துன்பம் துக்கம்
மூசிய இடர் இவற்றின் முறி திரை புரளும் நீர்த்து
மாசு அடை இதயம் போல மலிந்து இருள் குழுமி மல்கு
பாசடை மலினம் மூடிக் கலங்கிய பான்மைத்து அம்மா

#7
தாங்க_அரும் பிணிகள் ஆய சலசரம் பயில்வது யாண்டும்
ஓங்கு தீ_வினைகள் ஆய படர் கொடி உறழ்வது ஊக்கிப்
பாங்கரில் காளி கூளி பைசாச கணங்கள் புக்கு
நீங்க_அரிது ஆகி நின்று நெடும் திகில் விளைக்கும் நீர்த்து

#8
பள்ள நீர் உலகம் எங்கும் பகைகொளக் கரந்து வைகிக்
கொள்ளும் நல் மருந்தை எல்லாம் கூட்டுண்டு குணம் கொடாமே
உள்ளுறப் பரவி ஒல்லை உயிர் வதைத்து ஒருங்கு கொல்லும்
கள்ள வெவ் விட அராவில் கிடந்தது மரண கங்கை

#9
அடுத்து உழி அழுகை மல்க அயல் எலாம் நடுங்கி அஞ்சக்
கடுத்து உறு மனம் போல் சற்றும் கண்ணோட்டம் இன்றி நாட்டைக்
கெடுத்து அழித்து அலைவுசெய்து கெழுமிய அனைத்தும் தீ வாய்
மடுத்திடும் கொடுங்கோல் வேந்தை மானுமால் மரண வாரி

#10
நினைத்திரா வேளை வந்து நிலத்திடை ஈட்டிவைத்த
அனைத்து இருநிதியும் வாரி ஆர்_உயிர்க்கு அழிவுசெய்து
மனைத்-தலை இழவு உண்டாக்கி மறைந்திடும் மரபில் கள்ள
வினைத் திறம் புரியும் வெய்யர் போல்வது அ மிருத்து நீத்தம்

#11
நாள் என வரம்பு காட்டி நரலை வாரிதி சூழ் வைப்பில்
கேளுறும் உயிருக்கு எல்லாம் நன்று போல் கேடு சூழ்ந்து
வாள் எனப் பிளந்து தள்ளி மாயமாக் குறைக்கும் வாழ்நாள்
கோளுறு காலத்தோடு கூட்டுறவாம் இ நீத்தம்

#12
காலத்தைக் கருதி நின்று உள் பகை ஆகிக் கலக்கம் காட்டிக்
கோலத்தைக் குலைத்துக் கோறிக் கூர் இருள் சூழல் உய்த்து
ஞாலத்தைக் கெடுக்கும் பொல்லா நச்சுத் தீ அலகையே போல்
சாலத்தை விளைக்கும் இந்தச் சதி புரி மரண கங்கை

#13
தேக தத்துவங்கள் குன்றும் சீர் கெடும் ஐயம் சேரும்
சோகமாம் பொறி புலன்கள் சுழன்று அந்தக்கரணம் மாயும்
ஆகமும் கிடை ஆம் மேலிட்டு ஆர்_உயிர் ஒடுங்கும் அந்தோ
மோக மா மரண கங்கை ஊடுற முடுகும் காலை

#14
பாபத்தை விளைத்தோர்க்கு உற்ற பயிரிடும் கூலி தேவ
கோபத்தின் மிகுதி இந்தக் குவலயத்து எவர்க்கும் நீங்காச்
சாபத்தின் சமைவு மோசச் சற்பனைக் கிடங்கு மாய
ஆபத்தின் குகை ஆம் இந்த அறக் கொடு மரணச் சூழல்

#15
கெடுமதி வித்தில் தோன்றி இச்சையில் கிளம்பிப் பொல்லாக்
கடு மனத்து எழும் மூவாசைக் கவடுவிட்டு அஞராய்ப் பூத்துக்
கொடு வினைத் திரளைக் காய்த்துக் குலவிய பாவ தாருப்
படு பழம் கனிந்த சாறு இப் பயம் கெழு மரண நீத்தம்

#16
புரண புண்ணியரே யார்க்கும் புகலிடம் அவர் பொன் பாத
அரணத்தைத் தேடித் தம்மை அடைக்கலப்படுத்தி அந்தக்
கரண இந்தியங்களோடு காயத்தைப் புனிதம் ஆக்கி
மரணத்தை நினைத்து வாழா மாந்தர் ஏமாந்த மாந்தர்

#17
பழி படு மரண ஆற்றைப் பாரித்துப் பகர்வது எங்ஙன்
சுழி படும் அலை வாய்ப்பட்ட துரும்பு எனத் துறைக்குள் மூழ்கி
அழிபடு ஜீவரே அ அவஸ்தையை அறிவர் அன்றி
மொழிபடுவன இப் பாங்கர் உத்தேச முறைமைத்து ஆமால்

#18
ஆயுளுக்கு எல்லையாயும் அவனிக்கு ஓர் அந்தமாயும்
மீ உயர் கதி வாயிற்கு மிக அணித்தாயும் ஊடே
பாயும் அ மரண ஆற்றின் படு கரை அடுத்து அங்கு உற்றார்
நாயகன் பதத்தை நாடும் நலம் திகழ் மறை_வலாளர்

#19
அவ்வயின் ஒளி கொள் தூதர் ஆரணர்-தம்மை நோக்கி
இ வரை காண்-மின் சொற்ற இகபரசந்தி ஆய
பௌவம் மற்று இதனை நீந்தி அக்கரைப்படுகிலீரேல்
திவ்விய நகர வாயில் சேர்ந்திடப்பெறுவீர்_அல்லீர்

#20
ஓலிடும் மரண ஆற்றிற்கு ஒரு புணையேனும் இன்று
பாலமும் இன்று நீந்தும் பரிசினால் கடத்தல் வேண்டும்
ஏலியா ஏனோக்கு என்ற இருவர் செல் வழியில் செல்ல
ஞாலம் மீது எவர்க்கும் என்று நம்பன் உத்தாரம் இன்றால்

#21
நதி நிலை வினவுவீரேல் நம்பிமீர் நவிலக் கேண்மோ
சதி புரி ஆழம் உண்டு தரி கொளும் திடரும் உண்டு எம்
அதிபதி அருள் மேல் உய்த்த விசுவாச அளவின் ஆமால்
மதி நிலை கலங்கீர் ஆகி மரணத்தைக் கடத்திர் என்றார்

#22
ஆயதே புரிவாம் என அரு மறைக் கிழவர்
மேய அ நதிப் பெருக்கினைக் கண்டு உளம் வெருண்டு
தூய அக்கரைப்படுதுமோ என நிலை துளங்கிக்
காயமும் சலித்து இனிச் செயல் என் எனக் கவன்றார்

#23
கலை நிரம்பிய மதியினன் கவன்றனன் எனினும்
நிலை வரம் கிறிஸ்து யேசு என் நித்திய_ஜீவன்
உலைவு என் சாவு நல் ஊதியம் எனக்கு என உரத்தான்
மலை துளங்கினும் மனம் துளங்காத மெய் மறையோன்

#24
நோக்கினான் விசுவாசியின் அக நிலை நுதலி
மீக் கிளர்ந்து எழும் உவகையன் நம்பிக்கை விறலோய்
பாக்கியம் அணித்து உளது காண் படுகர் ஊடுருவி
ஊக்கி அக்கரைப்படுவதே கருமம் என்று உரைத்தான்

#25
சீரிதாம் என இருவரும் திருப் பெரும் கருணை
ஆர உண்டு அகம் தேக்கினர் ஆனந்த பதவிப்
பேர்_அருள் கரை பிடித்தும் என்று ஆவலில் துணிந்து
மாரணத் துறை இறங்கினர் வஞ்சம்_இல் மறையோர்

#26
இறங்கிடும் துறை நீத்துளது ஆதலின் இறங்கி
அறம் கிளர்ந்த மெய் ஆரணன் ஆழத்தின் அமிழ்ந்திக்
கறங்கு போல் சுழன்று அக நிலை கலங்கி உள் உடைந்து
பிறங்கு நல் மதி திகைத்தனன் கால் நிலை பிசகி

#27
ஆரணத் துறை நீந்திய அருள் விசுவாசி
மாரணத் துறை முயங்கலும் வருந்தி உள் மறுகிக்
காரணத் தனி முதல்வனைக் கருத்தினால் தழுவிக்
கோரணிப்படு திரையிடை முழுகி முக்குளிப்பான்

#28
உத்தமம் திகழ் ஒண் மதி படைத்த நம்பிக்காய்
மெத்த ஆழ் கயத்து அமிழுகின்றனன் தலை மேலாய்த்
தத்து பேர்_அலை புரண்டு எனை மூடுமால் தரிப்பு_இன்று
எத்திறம் இனிக் கடைப்பிடித்து உய்வல் என்று இசைப்ப

#29
என்னைஎன்னை நீ கலங்குதி திடம்கொள் மற்று எந்தாய்
நன்னர் என் இரு கால்களும் நனி தரிப்பனவால்
முன்னரே கிருபாஸ்தம் உண்டு இங்ஙனம் முடுகிப்
பன்_அரும் திரு_அடித் துணை பற்று எனப் பகர்ந்தான்

#30
புந்தியுற்ற நம்பிக்கை சொல் கேட்டு மெய்ப் போத
அந்தணன் எனது ஆர்_உயிர்க்கு அரும் துணை ஆய
மைந்த பாவியேன் உயிர்க்கு உறு மரண பந்தங்கள்
தொந்தமாய்ப் புடை வளைந்து சூழ்ந்தன இங்கு தூயோய்

#31
ஊண் உவட்டு பால் தேனொடு பெருக்கெடுத்து ஓடும்
மாண் அரும் புது வளம் செறி மங்கல நாட்டைக்
காணியாக்குவான் கருதினன் காணவும் கிடையேன்
கோள் நிலாவும் இ நதியிடைக் குப்புறீஇ என்றான்

#32
முயங்கு கார் இருள் படலம் அவ் ஒல்லையின் முடுகப்
பயங்கரங்களும் துன்பமும் ஏக்கமும் பற்ற
இயங்கிடும் பொறி புலன்களும் இருண்டு உணர்வு இனைய
மயங்கினான் அந்தக்கரணமும் ஆரியன் மாழ்கி

#33
செய்த பாவங்கள் நினைந்து உளம் தேம்பினன் எனவும்
வெய்து துன்பம் மேலிடுதலின் விழுத் தகும் உளத்தில்
எய்தும் மாறுதல் எடுத்து இனிது இயம்பிலன் எனவும்
மெய் திகழ்ந்த முன் மொழிகளால் விளங்கிட அறிந்தேன்

#34
ஆரியன் தளர்ந்து அயர்வுழி நம்பிக்கை அடுத்து
நீரிலே தலை நிமிர்த்து மூச்சு இயங்குற நிறுவிக்
கூரியோய் கரை அணித்து எனப் பல் முறை கூவிச்
சீரியோன் சிறிது உணர்வுறத் தெருட்டுவான் ஆனான்

#35
வெய்யவன்-தனை மின்மினி ஆக்கி விண் மிளிரும்
செய்ய பொன் நகர் அலங்கமும் திரு_கடைச் சிறப்புத்
துய்யர் ஓர்சிலர் நம்-தமைக் கூட்டுவான் சுலவிக்
கையது ஆகிய காட்சியும் காண்டி ஈண்டு என்றான்

#36
ஒல்லை ஆரியன் உத்தம தோழ நின் கூட்ட
வல்ல தூதுவர் வந்து அணைகின்றனர் வாய்மை
நல்லை என்று நீ நம்பிக்கை நம்பிக்கையே இ
அல்லல் ஆற்றையும் ஆழம்_இன்று ஆக்கியது என்றான்

#37
ஆரியன் சொல ஐய நீ மெய் விசுவாசச்
சீர் இயைந்து உளை நின் உழைத் தோன்றிய சிறியேன்
பேர் இயைந்தனன் ஆதலின் பிறன்-கொலோ பெறும் பேறு
ஓரில் அந்தண பேதம் என் எம்மில் என்று உரைத்தான்

#38
எம்பி தேர்தி யான் உத்தம ஜீவியன் என்னில்
நம் பிரான் எனைக் கைவிடுவார்-கொல் நட்டாற்றில்
இம்பர் என் பெரும் பாவத்தின் நிமித்தமே என்னை
வெம்பும் இக் கொடு மரணத்துள் விடுத்தனர் என்றான்

#39
உத்தம ஆரிய உணர்தி நம் போல் உலகருக்குச்
சத்துருக்களின் பயம் இலை சாவின் வேதனையும்
அத்தனைக்கு இலை எனும் மறை ஆதலின் அடியார்க்கு
எத்தனைக்கு அரும் பாடுகள் உள்ளன எண்ணாய்

#40
மெய் விடுத்திடா வித்தக வெவ்விய மரணத்து
உய்வு அளிக்கும் நின் மெய் விசுவாசத்தின் உரத்தைத்
தெய்வம் பாங்கர் நின்று அறி திறன் அல்லது தீரக்
கைவிடுத்தமை அன்று இது பரீக்ஷிக்கும் கணக்கால்

#41
எந்தை நீ திடம்கொள் இதோ எம் கிறிஸ்து யேசு
வந்து அணைந்தனர் எம் உறு நோய் எலாம் மாய்த்து
விந்தை ஆய சிற்சுகம் தர என்றனன் விளித்தான்
அந்தணாளனும் தலை எடுத்து ஆர்_உயிர் அடைந்தான்

#42
மண்டு நீர்க் கயத்து ஆழ்ந்து உணர்வு அழிந்து உயிர் மாயக்
கண்டு நம் பிரான் திரு_பெயர்த் தொனி உளம் கவின
விண்டு நித்திய_ஜீவனை ஊட்டிய விதத்தில்
தொண்டருக்கு உயிர் கிறிஸ்துவே எனும் உண்மை துணிந்தாம்

#43
பாவ ஜீவரைப் பவித்திரம் ஆக்கி ஈடேற்றும்
தேவ மைந்தனாம் கிறிஸ்துவின் திரு_பெயர் ஒன்றே
ஆவி நீங்குவோர்க்கு ஊட்டிடும் அருமருந்து ஆய
ஜீவ தாரக_மந்திரம் என்பதும் தெளிந்தாம்

#44
திட்ப நூல் மதியோய் இங்கு என் ஜீவ நாயகனை
விண்புலத்து அரசன் திரு_மைந்தனை விளங்கக்
கண் புலத்து எதிர் காணுகின்றனன் எனக் கசிவுற்று
உள்புலம் குவிந்து ஏத்தினன் கை தலை உயர்த்தி

#45
அஞ்சல்அஞ்சல் நீ யான் உனை மீட்டனன் நன்றே
எஞ்சுறாப் பெயர் தரித்தனன் யான் உனக்கு இதனால்
செஞ்செவே எனக்கு உடையை நீ செல்லுழி எங்கும்
தஞ்சம் யான் உனக்கு உன்னுடன் இருப்பதும் சரதம்

#46
நதியில் செல்லினும் நடுங்கலை நடுக்கலை அமையும்
கொதி அழற்கிடை நடப்பினும் கொளுத்திடாது உன்னை
அதிபன் ஆகிய ஆண்டகைத் தெய்வமும் நினக்குக்
கதி நலம் தரும் இரக்ஷணைக் கடவுளும் யானே

#47
என்று தம்பிரான் உரைத்த மெய் வாக்கு உளத்து எழலும்
நன்று உரம் கொடு நம்பிக்கைக்கு இ உரை நவிற்ற
அன்று அலர்ந்த வாரிசம் என அகம் முகம் கவினி
நின்று உரத்தனர் இருவரும் திடம்கொண்டு நிமிர்ந்தார்

#48
இகல் எலாம் புறமிட்டன இருள் பிழம்பு இரியப்
பகல் ஒளிச் சுடர் திகழ்ந்தது பார் அடிப்படுத்தி
ஜெகம் மிருத்துவா நதியினைத் தீரமோடு உருவிப்
புகர்_இல் முத்தி அம் கரை பிடித்து ஏறினர் புலவர்

#49
வெம் கொடும் பசி தாகம் வன் பிணி இடர் மேற்கொள்
அங்கி என்று இவை யாவையும் ஆற்றொடு போக்கித்
துங்க மேனி பொன் உடை பரமானந்தம் துதைய
மங்களக் கரை ஏறினர் வழு_இலா மறையோர்

#50
பத்தியோ விசுவாசமோ பகரும் மெய் அன்போ
சித்த சுத்தியோ சற்கருமத்தின் ஓர் திறனோ
முத்தியின் கரை பிடித்தது யாது எனின் மூலம்
அத்தனைக்கும் நம் ஆண்டகை கிருபையே ஆமால்

#51
பொருளும் பெண்டிரும் மக்களும் பூதலத்து உறவும்
மருள் உறுத்து வெம் பிணி கரை உடலொடு மறியும்
அருள் தந்து உய்த்த நம்பிக்கையே ஆர்_உயிர்த் துணையாய்த்
தெருள் உறுத்தி நின்று உன்னத பதவியில் சேர்க்கும்

#52
ஆன்ற வேதியன் அகத்து விஸ்வாசத்தை ஆக்கி
ஏன்று ஜீவ பாதையில் செல விடுத்ததும் இடையே
ஊன்று நம்பிக்கை உருப் புனைந்து உருப்படுத்தியதும்
மூன்று ஒன்று ஆகிய தைவிக கிருபையே முற்றும்

#53
ஜீவ முத்தி அம் கரை பிடித்து ஏறிய செல்வர்
மேவு பேர்_இன்ப தலம் புக்க விந்தயை உள்ளித்
தேவ_தேவ பராபர திரித்துவ தேவை
ஆவலில் துதித்து அன்பொடு போற்றுவான் அமைந்தார்

#54
இவ்வண்ணம் ஏகோவாவை இருதயம் கனிந்து போற்றிச்
செவ்வியர் இருவர்-தாமும் தெவிட்டிடாப் பரமானந்தப்
பௌவ வாரிதியின் மூழ்கிப் பரவசர் ஆகி நின்றார்
திவ்விய ஆக்கச் சீர்மை ஜெகத்து உரை தெரிப்பதேயோ
**இகபரசந்திப் படலம் முற்றிற்று

@3 சுவர்க்க ஆரோகணப் படலம்

#1
மதி திகழ் மறை_வலாளர் மரபினில் சென்று சேர்ந்த
துதி பெறு பரமாகாயச் சூழலில் விளங்கித் தோன்றும்
அதி பரிசுத்தம் ஆய ஆயிரத்தெட்டு மாற்று
மதி பெறு பசும்பொன் சோதிமய கிரி பரம சீயோன்

#2
சத் ஆகிச் சித்தும் ஆகித் தணப்பு_இல் ஆனந்தம் ஆகி
நித்தியம் திகழ்த்தி நிற்கும் நிருமல் திரியேகத்தின்
உத்தம கிருபை ஞான ஒளி அதி புனிதம் என்னும்
முத்தலைச் சிகரம் ஓங்கித் திகழ்வது அ முதிய குன்றம்

#3
தண் அளிப் பெருக்கத்தாலே சருவ லோகேசன் மைந்தன்
அண்ணலார் புனித நீதிக்கு ஆர்_உயிர் பலியாய் நல்கி
மண்ணுலகரை ஈடேற்ற வரன்முறை ஈட்டிவைத்த
புண்ணியத் திரளே என்னத் திகழ்வது அப் பொலன் கொள் வெற்பு

#4
தற்பரன் அருளில் தோன்றித் தயை மல்கித் தருமம் புட்பித்து
அற்புத சுகிர்தம் முற்றி அளவு_இல் புண்ணியம் பழுத்துப்
பொற்பு உறு நித்யானந்த போகத்தைக் கனியும் ஜீவ
கற்பக விருக்ஷம் ஓங்கித் திகழ்வது அக் கனகக் குன்றம்

#5
மண அணி பொதுளி நித்ய மங்கள கீதம் மல்கிக்
குண நிதிக் குவைகள் ஓங்கிக் குலவு பேர்_இன்பம் பொங்கி
இணர் ஒளி மகிமைக் கற்றை எங்கணும் பரம்ப வீசி
உணர்வினுக்கு அதீதம் ஆகி ஓங்குவது உயர் பொன் மேரு

#6
அன்பின் ஆர்கலி நீர் பொங்கி அருள் மடை திறந்தால் என்னப்
பொன் பொலி சிமயம்-நின்று ஓர் புத்தமுது அருவி போந்து
நல் பெரு மணிகள் ஆய நவ நிதி வரன்றிப் பாயும்
மன் பெரும் ஜீவ கங்கை மடுப்பது அ மக வேதண்டம்

#7
புகல்_அரும் கடவுள் வேந்தன் புகழ் மிகு புனித ஞானத்
தகவினில் உயர்வுற்று ஓங்கித் தண் அளிப் பெருக்கில் பல்கி
மகிமையில் ஜோதி வாய்ந்து வைகலின் விகற்பு இன்று ஆகிப்
பகல் ஒளி திகழ்த்தி நிற்கும் பவித்திர பரம சீயோன்

#8
தரிசன வேதி ஆய சாதரூபாசலத்தில்
பரிசனர் ஆய தூய பவித்திர வான சேனை
துரிசு_அற இமைக்கும் தாரா கணம் எனச் சுலவித் தோன்றி
விரசுவர் திகாந்தம் எங்கும் விமல வேந்து ஆணை மேவி

#9
தணிவு_அரும் ஜோதி பூத்த தடம் கிரிச் சாரல் எங்கும்
பணிவிடை புரியும் ஆவிப் பண்ணவர் தொகுதி மல்கி
அணியணியாக நின்று அங்கு அருள் திரியேக தேவைப்
பணிகுவர் பரமானந்த பரவசர் ஆகிப் போற்றி

#10
கற்பனை கடந்து நிற்கும் காரணாதீதமான
பொற்பு உறு புனித வேந்தன் பூரணானந்த வாழ்வின்
அற்புதக் காட்சி சொல்ல அருகனோ ஊழிப் போதைப்
புற்புதம் பொதிந்து காட்டப் பொருந்தினும் பொருந்தாது அன்றே

#11
மிருத்தொடு இ உலக பந்தம் வீசிய மறையோர் இன்ன
திருத் தகு சீயோன் என்னும் திரு_மலை அடிவாரத்தை
அருத்தியோடு அணைந்து முன் இட்டு ஆண்டகை திரு பொன் பாதம்
கருத்தினோடு உள்ளிப் போற்றிக் கனிந்து உவந்து ஏத்தும் காலை

#12
ஐயன்மீர் வம்-மின் வம்-மின் அமல வேந்து அடியீர் வம்-மின்
வையகம் புரந்த ஜேசு மலர்_அடித் தொழும்பீர் வம்-மின்
துய்ய நல் ஆவிக்கு என்றும் துக்கம் மூட்டாதீர் வம்-மின்
உய்யும் நூல் நெறி விடாத உத்தம தவத்தீர் வம்-மின்

#13
என்று உபசரித்துக் கிட்டி இதயத்தும் முகத்தும் அன்பு
துன்றி மன் உவகை வெள்ளம் சொரிந்து எனத் துரிசு_இல் தூதர்
மன்றல் வாசகம் மிழற்றி வந்து வேதியரை ஏற்றார்
கன்று காண் கறவையே போல் கசிந்து உளம் கரையும் நீரார்

#14
அன்பிற்கும் உண்டோ யாண்டும் அடைக்கும் தாழ் ஆர்வம் மிக்கார்
புன் கணீர் பொசிந்து போந்து பூசலைத் தரும் மற்று என்னாத்
தென்புலம் திகழ்த்தி நிற்கும் செந்தமிழ் மொழிக்குச் சான்றாப்
பொன்புலத்து உறு புத்தேளிர் பூஜிதை புரிந்தார் அன்பில்

#15
வேதியர் தாம் முன் கண்ட வித்தகர் இவரே என்னாக்
காதலோடு அளவளாவிக் கடன்முறை பரிவில் செய்து
மேதகு வியப்பினோடு விண்புலத்து அரசை வாழ்த்த
ஏதம்_இல் வான தூதர் இருவரும் இதனைச் சொன்னார்

#16
மண்ணுலகத்தின்-நின்று வரல் முறை மரணம் நீந்திப்
புண்ணிய லோகத்து எல்லை புகுந்து இரக்ஷணை பெற்று உய்ய
நண்ணிய நும் போல்வார்க்குப் பணி புரி நலம் பெற்றுள்ளேம்
அண்ணல் வானகத்து வேந்தன் ஆணையின் அடுத்தேம் நும்-பால்

#17
எண்_அரும் தவத்தீர் வம்-மின் எம்மொடு என்று அழைத்துக் கூட்டித்
தண் அளியொடு கைகோத்துத் தடம் கிரி மீது செல்வார்
மண் நரகீடங்கட்கு வானத்தை வணக்கி நின்ற
புண்ணியப் பெருக்கை யாரே புனைந்துரை செய்யற்பாலார்

#18
தூல தேகம் விட்டு அடைந்த தூய சூக்குமத் தனுச்
சீலர் ஆய வேதவாணர் சிந்தையுள் களிப்பினால்
மேலும் மேல் உயர்ந்து செல் கதிக்-கணே விடாய்த்திடார்
சால உம்பர் தம்பிரான் தயோர்ச்சிதத்தை உள்ளுவார்

#19
துன்ப நாச தேசம் ஆர் தொடர்ச்சி நின்று இழுத்து மீ
நல் புலத்து வழிநடத்தி நண்ணு விக்கினம் எலாம்
பின்படுத்தி மரண நீர்ப் பெருக்கையும் கடத்திய
அன்பின் வல்லபத்தை உன்னி ஆனந்தம் கொண்டாடுவார்

#20
வந்துவந்து உடற்று துன்பம் வறுமை துக்கம் வம்பு அவிழ்
நிந்தை மல்கு சாகரத்தின்-நின்று எடுத்து நித்திய
விந்தை ஆய சிற்சுகத்து வீட்டு வாழ்வு காட்டிய
சுந்தரக் குமாரனைத் துதித்து இறைஞ்சி வாழ்த்துவார்

#21
காயமோடு நாற்றம் மிக்க கந்தையைக் களைந்து நல்
தூய பைம்பொன் ஆடை நல்கி நேயம் மிக்க தூதரைச்
சேய் உயர்ந்த கதி வழிச் சகாயராச் செய் திவ்விய
நாயகக் கிருபா நலத்தை நனி வியந்து போற்றுவார்

#22
பண்டு இலாத புனிதம் ஆய பொறி புலன் படைத்தலில்
உண்டுபட்ட அதிசயத்தின் உள் எழுந்த உவகையும்
அண்டர் வாழ் பதம் தமக்கும் அணுக வந்த ஆக்கமும்
விண்டுவிண்டு போற்றி செய்து விமலனைப் பராவுவார்

#23
பொருவு_இலா அருள் புயல் பொழிந்த அன்பு மாரியால்
தருமம் ஆய சாலி விண் சதோதயம் விளைத்திடும்
அருமை ஆய ஜீவ போனகானந்தத்தின் அளவு_இலாத்
திரு மலிந்த செவ்வி கண்டு செம் கை கூப்பி ஏகுவார்

#24
புனித ராஜ சமுகம்-நின்று போந்து உலாவும் மா தயைப்
பனி தரும் குளிர்ச்சியோடு பாரிசுத்த அனல் வெதுப்பு
இனிது மல்கும் மகிமை ஆய விரவி அத்தம் இன்றியே
நனி திகழ்த்து நீர்மை கண்டு நம்பனைப் பழிச்சுவார்

#25
புதுமை ஆய காட்சி கண்டு நின்றுநின்று புகழுவார்
மதுர கீத கானம் மல்கும் மரபு உணர்ந்து மகிழுவார்
குதுகலத்தோடு அரசன் நாமம் வாழி என்று கூறுவார்
கதுமெனக் கதித்து எழுந்து ககனமூடு படர்குவார்

#26
முத்தி இன்பம் கருணை தர்மம் முற்று பாரிசுத்த மாண்
சத்தியம் குலாவி நிர்த்தனம் புரிந்து சந்ததம்
நித்தியானந்தத்தை நல்கும் நீர்மை கண்டு இ வேதியர்
துத்தியஞ் செய்து உவகையோடு தொழுது மீது துருவுவார்

#27
இனைய சீலராக உன்னதத்தை நாடி ஏகும் அ
வினைய வேதியர்க்கு வந்த விபுத தூதர் இருவரும்
முனைவனைப் பராய் விதேக முத்தியுற்ற மொய்ம்பு_உளீர்
நினை-மின் ஈண்டு யாம் சொல் வாசகம் எனா நிகழ்த்துவார்

#28
மாயம்_இல் மனத்தீர் இந்த மா தலம்
தூயர் ஆகித் தொழும்புபட்டார்க்கு எலாம்
தாயகம் புரையத் தரும் பேறு எலாம்
சீயொன் என்னும் திரு_மலை காண்டிரால்

#29
மாண் தகும் திரு மா மலை உச்சியில்
ஈண்டு ஜோதிப் பரம எருசலேம்
காண்தகும் திரு மா நகர்க் காட்சி-தான்
சேண் தயங்கித் திகழ்வது காண்டிரால்

#30
உத்தமத் திரு_தொண்டு அங்கு உஞற்றிடு
வித்தகம் திகழ் மெய்ப் பரிசுத்தராம்
நித்ய சூரிகள் சங்கம் நிரைநிரை
பத்தியில் திகழ்கின்றன பார்த்திரால்

#31
ஜீவ புத்தகத்துப் பெயர் தீட்டியும்
ஆவலித்த முதற்பலன் ஆகியும்
தேவ தொண்டுக்கு அமைந்த திரு_குழாம்
மேவு சங்க விலாசமும் காண்டிரால்

#32
போதம் மல்கு சம்பூரணமாய்ப் பலன்
மேதகப் பெற்ற மேம்படு வித்தக
நீதிமான்களின் ஆவி நிகழ்ந்திடும்
மா தலத்தின் மகிமையும் பார்த்திரால்

#33
உன்னதத் திரியேகர் ஒரு திருச்
சந்நிதான மகிமை தழைத்திடும்
பன்_அரும் பரலோக பவித்திரப்
பொன் நிலத்துப் புதுமையும் பார்த்திரால்

#34
இத் திருத் தகு வான இராஜ்ஜியத்து
உத்தமக் குடியாக வந்து ஊன்றினீர்
நித்ய ஜீவ விருக்கம் நிலவுறும்
சித்திரப் பரதீசு இனிச் சேருவீர்

#35
ஜீவ மா நதி ஆடியும் திவ்விய
ஜீவ நாட்டு உடை சீர் அணி தாங்கியும்
ஜீவ நாயகன் சேவடி போற்றியும்
ஜீவ மாக் கனி உண்டும் திகழுவீர்

#36
துஞ்சல் சோரல் துயருறல் இன்றி நம்
நெஞ்சு இருக்கும் நிருமல வேந்தனை
அஞ்சலித்து அங்கு அவரொடும் ஆரியீர்
சஞ்சரித்துச் சதோதயம் தங்குவீர்

#37
பெருந்தகைக்கு அன்புசெய்திடும் பெற்றியீர்
வருந்தும் மானிட தேகம் மடிந்ததால்
பொருந்துறாது மரணமும் புன்கணும்
திருந்துவீர் இனி நித்திய ஜீவியம்

#38
முந்தை ஆபிரகாம் முதல் மூவராம்
தந்தையாரொடும் தீர்க்கதரிசன
அந்தணாளரைக் கண்டு அங்கு அளவளாய்ச்
சிந்தை ஆனந்தம் கொள்ளுவிர் சேர்ந்து இனி

#39
வெம் சினக் கனலுக்கு விலக்கியும்
தஞ்சமாக்கி இரக்ஷணை தந்து மன்
செஞ்செவே முத்தி சேர்த்திடும் தெய்விக
மஞ்சனைக் கண்டு வாழ்த்தி வணங்குவீர்

#40
மாறு_இலாப் பரமானந்த வைப்பில் எம்
பேறு யா எனில் பிச்சு உலகத்து நாள்-தோறும்
நீர் துய்த்த துன்பமும் துக்கமும்
ஈறு_இல் வேந்தன் மறந்திலர் எண்ணு-மின்

#41
துன்பம் துக்கம் தொடர்வது_இன்றால் இனி
இன்பமும் சுக வாழ்வும் இயைந்து நீர்
மன் பெரும் பரலோக மகத்துவற்கு
அன்பர் ஆகி அடி நிழல் வைகுவீர்

#42
மனித ஜீவரை வானவர் ஆக்கிடும்
தனிதம் ஆர் அருள் சந்நிதி நின்று நீர்
புனித ஜீவ கிரீடம் பொறுத்து என்றும்
கனிதல் நீர்மையில் கண்டு மகிழுவீர்

#43
மானிடப் பலவீனம் வருத்தம் மற்று
ஊன் உடம்பொடு ஒருவினவால் இனிக்
கோனிடம் படும் ஊழியம் கோது_அற
வான் உடம்பின் மகிழ்ந்து செய்கிற்பிரால்

#44
விண்ணவர்க்கு அரசன் திரு_மேனியைக்
கண்ணில் கண்டு களித்திடும் கண் மலர்
அண்ணலார் திரு_வாக்கை நும் அம் செவி
உண்ணும் ஆர்_அமிர்தாக உவக்குமால்

#45
முன் இங்கு உம்மின் முயங்கிய நேசரைச்
சந்நிதானத்துக் கண்டு தளிர்ப்பிரால்
இன்னவாறு இங்கு இனி வரு தூயரை
நன்னர் ஏற்று நயந்து மகிழுவீர்

#46
அகில லோகத்து அரசன் புனிதம் ஆர்
ககன கோளத்து உலவும் அக் காலையில்
புகர்_இலா மணிப் பூண் அணி பூண்டு உடன்
மகிமையோடும் உலவி வருவிரால்

#47
காகளத் தொனி காட்டிக் கடவுளார்
மேக வாகனம் மீது விளங்கி அப்
போக பூமி நடுப்புரி போது நீர்
ஓகையோடு அங்கு அவரோடு உறுவிரால்

#48
ஈசனார் நடுத்தீர்வை இயம்ப நீ
தாசனத்தின் அமரும் அக் காலை நீர்
மா சனத் திரளுக்கு முன் வந்து அரு
காசனத்து இனிதாக அமருவீர்

#49
பூதலத்தைக் கெடுத்த பொல்லாங்கு உடைத்
தூதருக்கும் அமார்க்கத் தொகுதிக்கும்
நாதன் தண்டனைத் தீர்ப்பு நவில்கையில்
நீத சான்றுரை நீரும் நிகழ்த்துவீர்

#50
புதிய வானும் புவியும் படைத்து மேல்
விதி நிடேதம் விதித்து நம் ஆண்டகை
அதிபனா அரசாளும் அக் காலை நீர்
பதி-தொறும் பரிபாலகர் ஆகுவீர்

#51
இத் திறத்த இனி உம் அநுபவத்து
உய்த்து உணர்ந்து அறி-மின் உரையால் இதை
வித்தரித்து உரைக்கப்பெறுவேம்_அலேம்
எத்திறக் குறைவும் இலை ஈண்டு என்றார்

#52
திங்கள் வாள் முகச் செவ்வியர் செப்பிய
மங்கலத் திரு_வாக்கின் மகிழ்ச்சி உள்
பொங்கி ஆரியர் பூரிதர் ஆகி உத்
துங்க வேந்தைத் தொழுது உடன் ஏகுவார்

#53
குற்றவாளிகளாம் கொடியேமுக்கு இங்கு
அற்றம்_இல் சிற்சுகானந்த ஆக்கம் வந்து
எற்று என்று ஓர்தும் இறை அருள் பெற்றியின்
முற்றும் புண்ணியத்தால் என முந்துவார்

#54
ஆதியான் தூதரை அடுத்து இ வண்ணமா
வேதியர் இருவரும் விசும்பு இவர்ந்து போய்
மேதகு நித்திய விமல முத்தியின்
ஜோதி மா நகர்ப் புறம் துன்னினார் அரோ

#55
ஆயிடைத் திரு_நகர் அணி கொள் சேனையின்
மேய ஓர் பகுதி உள் வியந்து மேம்படு
தூயரை எதிர்கொளச் சுலவி விண்ணிடை
ஏயெனும் மாத்திரத்து இறுத்தது என்பவே

#56
அவ்வயின் பணி புரி அறவர் இ இரு
செவ்வியர் தேவனைச் சிநேகித்து ஆங்கு அவர்
திவ்விய நாமத்தின்-நிமித்தம் தீங்கு உறீஇ
எவ்வகை உரிமையும் இகந்துளார் இவர்

#57
மருள் உறு மரண நீர் நீந்தி வந்தவர்
திருவுளத்து அருள் வழி அழைத்துச் சேறுவேம்
தெருள் உறு சந்நிதி சேரும்-மட்டு எனாப்
பொருள் எலாம் புலப்படப் புகன்று காட்டினார்

#58
ஆரியர் தவ நிலை அறிந்து அ முன்னணி
பேர் உவகையினொடு வாழ்த்திப் பெட்புறும்
சீரிய திருமண விருந்தில் சேர்ந்துளார்
சேர் இரும் பாக்கியர் என்னச் செப்பினார்

#59
இறையவன் சந்நிதி-நின்றும் இன் இசை
மறை திகழ் மங்கல கீத வாத்தியர்
துறை-தொறும் துறை-தொறும் சூழ்ந்து தொக்கனர்
முறைமுறை துந்துபி முழக்கினார் அரோ

#60
கின்னரம் தம்புரு வீணை கேழ் கிளர்
இன் நரம்பு உளர் இசை எழால் மிடற்று ஒலி
மன்னிய பெரும் சுரமண்டலத் தொனி
பொன் உலகு எங்கணும் பொதுளிற்று என்பவே

#61
உத்தம கிறிஸ்தவர்க்கு ஓகை பேசி நீர்
அத் தரை உலகை விட்டு அளவு_இல் பேர்_இன்பப்
புத்துலகு அடைந்ததே புதுமையாம் எனா
வித்தக வீணையை மீட்டிப் பாடுவார்

#62
பன்_அரு மகாத்துமர் பலர் ஒருங்கு தொக்கு
அ நிலை உவந்து உபசரித்து அங்கு ஆத்துமப்
பன்னியரைக் கொடு பரம நாயகன்
சந்நிதி மணவறை சாருவேம் எனா

#63
எல்லை_இல் வான் கணம் எங்கும் ஈண்டியே
தொல்லை அம் பரன் அடி தொழுது வாழ்த்தவும்
நல் இசைக் கருவியில் நாதம் ஓங்கவும்
பல்லியம் முழங்கவும் பாடி ஏகுவார்

#64
சாது சங்கத்தவர் தம்மில் இத் தகு
மா தவர் இருவர் வந்து அடைந்த மாட்சியும்
ஆதரித்து எதிர்கொளப் பெற்ற ஆக்கமும்
காதலித்து உவகையில் கனிந்து பேசுவார்

#65
எங்கணும் தண் நிலவு எறிக்கும் பூரண
திங்களுக்கு அளவு_இலை எனினும் சிந்தையில்
பொங்கு நீர்நிலை எலாம் பூத்து அலர்ந்தன
செங்கமலங்களும் செப்பற்பாலது என்

#66
காட்சியின் புதுமையும் மதுர கானத்தின்
ஆட்சியும் கண்டு கேட்டு அறிந்த ஆரணர்
மாட்சி சால் முத்தியுள் மருவினாம் எனச்
சூழ்ச்சிசெய்து உவகையுள் துதைந்து போயினார்

#67
ஓத_அரும் இத்தகு புனித உத்தம
சாது சங்கத்துடன் தரிக்கப்பெற்றனம்
மா தயை மா தயை என மகிழ்ச்சியால்
போதம்_அற்றனர் எனப் பொருமி விம்மினார்

#68
இலகு மோக்ஷானந்தமோ இது என்-கொலாம்
உலக சிற்றின்பு எலாம் ஒழியுமே என்பர்
அலகு_இல் அ ஆனந்த அளவைக் காட்டிடற்கு
உலகில் வேறு எதை எடுத்து உவமை கூறுகேன்

#69
உன்னதானந்தம் என்று உரைப்பது அன்றி மற்று
என்ன-தான் யாவர்-தாம் எண்ணியெண்ணி மன்
சொன்ன போதினும் அணுத்துணைக்குப் போதுமோ
தன் நிகர் தம்பிரான் தருமப் பேற்றிற்கே

#70
இனைத்து என வாக்கினுக்கு அதீதம் எண்ணவும்
மனத்தினுக்கு அதீதம் அ வரம்பு_இல் ஆனந்தம்
எனைத்துணை அளவை மற்று எடுத்துக் காட்டினும்
தினைத்துணையினும் மலை பெரிது என் சீர்மையாம்

#71
பன்_அரும் பவித்திரக் குழாம் பல்லியம் துவைப்ப
மன்னர்மன்னரை எதிர்கொளும் மாண்பினும் மாண
நன்னர் வேதியர்-தமை எதிர்கொண்டு உடன் நடத்தித்
துன்னினார் முத்தி மா நகர்த் தோரண வாயில்

#72
கோ_குமாரன் செங்கோல் முறைக்கு உறையுளாய்க் குலவி
மேக்கு உயர்ந்த மா மகிமையின் கோபுரம் விளங்கிப்
பாக்கியம் பொதிந்து அனவரதானந்தம் பயிலும்
மோக்க வாயிலைக் கண்டனர் முதிர் கடைப் பிடியோர்

#73
கண்டு காதலித்து இறைஞ்சினர் கருணை அம் கடற்குப்
பண்டு உண்டாக்கிய அருள் மடையாம் எனப் பரிவில்
அண்டர் கோன் திரு_அடித் துணை அன்பொடு பரவி
விண்டு தோத்திரம் புரிந்தனர் விநயபூருவமாய்

#74
மன்னும் இத் திரு_நகர்க்குள் இ வாயிலின் வழியாய்த்
துன்னி நித்திய ஜீவ தாருவைச் சுதந்தரிக்கப்
பன்னு நல் நடை பற்றியோர் பாக்கியர் என்னாப்
பொன்னெழுத்து உறு புதுமை கண்டு உளம் மகிழ் பூத்தார்

#75
ஆங்கு அடுத்து இரு தூதரும் ஐயன்மீர் அணிகொண்டு
ஓங்கு பொன் கடை வாயிலைத் திறக்க என உரித்தில்
பாங்கொடும் விளி-மின் எனப் பணித்தலும் பனவர்
வீங்கு மெய் உணர்வொடு தட்டி விளிக்கலுற்றனரால்
** கடை திறப்பு

#76
கேடு மல்கிய நாச தேசத்து உளேம் கிருபை
நாடி வந்து எமைப் பிடித்து நல் நெறியிலே நடத்த
ஓடி வந்து இளைத்து உறு மரணத்தை ஊடுருவித்
தேடி வந்து கண்டு அடைந்துளேம் திரு_கடை திற-மின்

#77
நிருத வெம் சிறை மறிந்து உளேம் நீசரேமுக்காய்க்
குருதியின் விலைகொடுத்து எமை ஆட்கொண்ட கோமான்
சுருதி மார்க்கத்துத் தொழும்புபட்டு உளம் அவர் துணைத் தாள்
கருதி வந்தனம் கருணையீர் கடை திறந்து அருள்-மின்

#78
ஜேசுவின் மதி வதனமும் செங்கனி வாயும்
நேசமும் கருணையும் பொழி நேத்திரங்களும் நல்
தேசு உலாம் திரு_மேனியும் செம்மலர்ப் பதமும்
ஆசை அம் கனல் மூட்டுவ அருள் கடை திற-மின்

#79
பாவ தாருவின் பழம் நுகர் தீ_வினைப் பயனும்
சாவும் எம்மை விட்டு அகன்றன தற்பரன் அருளால்
வீவு_இன்று ஆகி மேனாள் முளைத்து ஓங்கி விண் படர்ந்த
ஜீவ தாருவைக் காணுமாறு அருள் கடை திற-மின்

#80
பாவமாம் சுடு பாலையில் பகல் எலாம் உழன்று
தா_அரும் கடும் தாக விடாய் கொண்டு தவித்து இங்கு
ஆவியே வழி காட்ட வந்து அடுத்தனம் அடியேம்
ஜீவ ஊற்று நீர் வேட்டனம் திரு_கடை திற-மின்

#81
இலகும் ஐந்து காயம் கொண்ட அடைக்கலத்து எழிலும்
அலகையின் தலை நசுக்கிய அரவிந்தச் சரணும்
உலகுளேமுக்கு என்று ஓங்கு அபயாஸ்தமும் உள எம்
அலகு_இல் ஆண்டகைக்கு அடியரேம் அருள் கடை திற-மின்

#82
அம்புராசி சூழ் அவனிக்கு ஈடேற்றத்தை அளிப்பான்
உம்பர்-நின்று தம் சுதனைத் தந்து உன்னத அன்பால்
எம் பிராணனுக்கு இரக்ஷணை அருள் எகோவாவாம்
தம்பிரான் அடித் தொழும்பரேம் தலைக் கடை திற-மின்

#83
அருளினால் எமை அறிந்தனம் அருள் வழிப் பட்டேம்
அருளின் ஆர்_அமுது உண்டனம் அருள் உயிர் அடைந்தேம்
அருளினால் புறம்கண்டனம் அடு பகை அனைத்தும்
அருளினால் கதி அடுத்தனம் அருள் கடை திற-மின்

#84
பாவம் மல்கு பூ_உலகுளே மறக் கொடும் பாவர்
தேவ மைந்தனார் சிலுவையின் உகுத்த செம் சோரி
மேவு புண்ணிய வசத்தில் இ வீட்டு உலகு அடைந்தேம்
ஜீவ நாயகன் தொழும்பரேம் திரு_கடை திற-மின்

#85
முத்தி சாதனம் ஆகிய சிலுவையின் மூர்த்தம்
மத்தகத்துளே மானுவேல் உயிர் கொடுத்து ஈட்டி
வைத்த மா நிதிக்கு உரியராய் வகுத்த சாதனம் எம்
கைத்தலத்து உளேம் காட்டுகேம் கடை திறந்து அருள்-மின்

#86
இவ்வண்ணம் விதேக முத்தர் இருவரும் இரந்து கூவும்
செவ் வண்ணம் அறிந்து மோசே ஆதியர் சேர்ந்து ஆங்கு உய்த்த
கைவண்ணச்சாத்தை ஏற்றுக் கருணை வேந்தருக்குக் காட்டி
அ அண்ணல் அழை-மின் என்ற அருள் பெற்று மீண்ட ஒல்லை

#87
என் மனோரதராய் என்றும் இதய பீடத்து மேய
தன்மராம் கிறிஸ்து யேசு சாமி சாமீபமாக
நன்மை சால் மெய் விஸ்வாச நராத்தும ஜீவர்க்கு உய்த்த
ஜென்மசாபலிய முத்தித் திரு_கடை திறந்தது அம்மா

#88
முத்தி மா நகர வாயில் முகப்பு வேதியருக்காக
வித்தகக் கபாடம் வல்லே திறவுண்ட விதத்தை ஓரில்
சித்தம் உள் உவந்து ஜேசு திரு_அடிக்கு அன்புசெய்யும்
பத்திமை அல்லால் வேறு பரம சம்பத்து ஒன்று உண்டோ

#89
எண்_அரும் பரம சேனை எதிர்கொண்டு இங்கு அணை-மின் என்னப்
பண்ணவர் குழுமி வாழ்த்தப் பராபரன் புதல்வன் ஈந்த
புண்ணியம் கைமாறு இல்லாப் புண்ணியம் புண்யம் என்னா
விண்ணவர்க்கு அரசை ஏத்தி வேதியர் அகத்துள் புக்கார்

#90
ஆயிடை அடுத்தான் ஆக அறிவீனன் அவனைப் பற்றித்
தூய சின்னங்கள் யாதும் இலன் எனத் துணிந்து அவ் ஒல்லை
சேய் உயர் முகப்பின்-நின்றும் சீத்து இருள் சிறையில் உய்த்தார்
வாயில் காப்பாளர் அந்தோ மதி_அற்றார் கதி_அற்றாரே

#91
சொல்_மதி தெருளான் தொல்லைத் துர்_ஆசாரம் ஒருவான் ஆய
துன்_மதி அந்தகாரச் சூழலை அடையப்பெற்றான்
பொன் மதி புகட்டி உய்க்கும் புங்கவர் வேத போத
நல் மதி படைத்தார் நித்ய நலம் தரும் நகருள் புக்கார்

#92
அகம் புகும் பேறுபெற்ற அருமறையவர் சீர் தேரில்
ஜெகம் படு செல்வம் ஆதி சிற்றின்ப நுகர்ச்சிக்கு எல்லாம்
முகம்கொடார் ஆகித் தம் மான் மொழி வழி முறையில் பற்றி
இகம் படு தொல்லை நீத்து இங்கு ஈறு_இல் பேர்_இன்பத்து உற்றார்

#93
எத்தனை துன்பம் துக்கம் எத்தனை புண்ணீர் கண்ணீர்
எத்தனை நிந்தை லஜ்ஜை எத்தனை மோச_நாசம்
எத்தனை சிறை அபாயம் எத்தனை பயங்கரங்கள்
அத்தனையும் இன்று ஆக்கி வீடு உய்த்தது அருளின் ஆக்கம்

#94
உய்த்தது இங்கு ஒன்றோ மேன்மேல் உவகை பேர்_இன்ப போகம்
நித்திய_ஜீவ நன்மை நிறை பரிசுத்த நெஞ்சம்
வித்தக விமல நேசம் மேதக்க தத்துவங்கள்
இத்தனை நலமும் நல்கிற்று இறையவன் அருளின் ஆக்கம்

#95
பொங்கு இரும் ஜோதி பூத்த பொன் நகர்ப் பரப்பில் எங்கும்
மங்கல மதுர கீதம் மலிந்த வானக முழக்கம்
எங்கணும் பொதுளத் தாக்கி இரட்டின எதிர்கொண்டு ஏற்ற
அம் கண் வானகத்துச் சேனை ஆர்ப்பு ஒலி கெழுமிற்று அன்றே

#96
பொன் நகரத்து வாணர் யாவரும் மகிழ்ச்சி பூத்து
மன் நில உலகில்-நின்று இ மாந்தரை வழிநடாத்தி
உன்னத பரமாகாயத்து உச்சியில் திகழ்த்திக் காட்டும்
தன் நிகர் ஆய வேந்தைத் தனித்தனி பரவினாரால்

#97
புக்கவர் அனந்தரம் தம் புண்ணியப் பொருளைப் போற்றி
மிக்குறு பரமானந்த விம்மிதர் ஆகி ஏத்திப்
பக்குவப்படு நெஞ்சாரப் பல்லாண்டு கூறி வாழ்த்தித்
தொக்க விண்ணவர்க்கும் செய்தார் அஞ்சலி முறையில் தூயோர்

#98
புரவு நூல் நெறியில் சென்று புண்ணிய கதியில் புக்க
உரவினார் உருவம் மாறி ஒளி திகழ் மேனி வாய்ப்ப
இரவியில் சுடரும் தூய இலங்கு எழில் முகத்தர் ஆகிப்
பரவி நின்று ஏத்தியேத்திப் பண்ணவரோடு செல்வார்

#99
அம் பரலோக ராஜன் அருள் திருமுன்பு நின்று இங்கு
உம்பர் ஓர்சிலர் வந்து ஊன்றி உத்தம கிறிஸ்தவற்கும்
நம்பிக்கை என்னும் நாம நலம் திகழ் மொய்ம்பினாற்கும்
பைம்பொனின் ஆடை சார்த்திப் பல் மணிக் கலன்கள் பூட்டி

#100
அதிபதியாம் த்ரியேக ஆண்டகை சீர் எம்மோடு
துதி பகர்ந்து இசை-மின் என்னச் சுரமண்டலங்கள் ஈந்து
கதி பெறு மரபின் ஆக்கம் கவினி மங்களமே மல்க
மதி கதிர் அனைய ஜீவ மௌலியும் புனைந்தார் வாழி

#101
முடி புனை காட்சி கண்டேன் முறை வழாது அரசன் போற்றிப்
படியினுக்கு ஈட்டிவைத்த பரம சந்தோஷம் துய்ப்பான்
கடி மணக்கோலத்தோடு இக் ககன மண்டபத்துள் தூய
வடிவு உடை எமரீர் வம்மோ வம் என்ற வாக்கும் கேட்டேன்

#102
மங்களகரமாய் எங்கும் வான துந்துமிகளோடு
சங்கையில் புனித நாத மணி ஒலி தழைத்த தாவாப்
பொங்கிய பரமானந்தப் புதுக் களியாட்டு மல்கி
அம் கண் வான் நகரம் எங்கும் அரும் கடி விழாக்கொண்டு அன்றே

#103
கதி மிகு சிறப்புப் பெற்ற காவலர் பலர் எம் கர்த்தர்
அதி பரிசுத்தர் சுத்தர் அதி பரிசுத்தர் என்னா
விதிமுறைப்படி சல்லாபம் மிழற்று இசை திகழ்த்திப் பாடிச்
சதி முறை தழுவித் தூங்கத் தகைபெறு நடனம் செய்தார்

#104
திருந்து வேதியரும் தேவ சங்கமும் சிந்தையாரப்
பெருந்தகை ஆய தேவ பிதாவுக்கும் குமரனார்க்கும்
பொருந்திய தேவாவிக்கும் புரை அறு மகிமை ஆற்றல்
அரும் துதி என்று மல்க ஆமென் என்று இசைத்தார் பல் கால்

#105
ஒழுகு ஒளி மௌலி சூடி உத்தமாத்துமிகள் தம்மோர்
அழகிய மணவாளன்-பால் அவாவொடு செல்லும் காட்சி
விழி களிப்பு உற நோக்கும் கால் விரி கதிர் அனந்தம் தொக்குப்
பொழி கதிர் உகுத்தால் என்னப் பொலிந்தது மகிமை ஜோதி

#106
ஜோதியின் பிழம்பு போர்ப்பத் துணுக்குறீஇத் துயிலாநின்ற
மீது உயர் கிரியின் சாரல் விழித்தனென் விமல ராஜன்
பாத பங்கயம் பராவிப் பவித்திர தரிசனத்தைக்
காதலாய் அகம் பொறித்துக் காட்டினேன் உலகுக்கு அம்மா

#107
சிந்தை யாத்திரையில் நேர்ந்த திவ்விய சரிதம் மற்று இ
விந்தையைக் கருத்தில் உய்த்து விழுத்தகு நோன்பு பற்றி
அந்தணர் ஆகி வேத அற நெறி வழுவார்க்கு எல்லாம்
சந்ததம் அழிவு_இல் பேறு தருவர் நம் பரம தந்தை

#108
வாழி வாழி ஓர் திரித்துவ நாமத்தின் மகிமை
வாழி மன் உயிர்க்கு இரக்ஷணை வழங்கு வண் சுருதி
வாழி மெய் அடியார் குழூஉம் திருச்சபை மரபு
வாழி மெய்க் குரு பரம்பரை ஊழிய மாண்பே

#109
மல்குக ஜீவர்க்கு எல்லா மதி நலம் தரும் மெய்ஞ்ஞானம்
புல்குக அறங்கள் எங்கும் புரை_இலாச் செங்கோல் ஓங்கி
வெல்குக மெய்மை என்றும் விளங்குக கல்வி செல்வம்
பல்குக உலகம் எங்கும் பரம்புக நன்மை மாதோ

#110
நன்று உலகு அனைத்தும் தந்து நலம் பெறு தந்தையாக
வென்றி சேர் மைந்தனாக விமலாவியாக ஒன்றும்
மன்றல் சேர் திரியேகற்கு மகிமையும் கனமும் மாறாது
என்றும் உள்ளன போல் இன்றும் என்றும் உண்டாக ஆமென்
** சுவர்க்க ஆரோகணப் படலம் முற்றிற்று
** இரக்ஷணிய பருவம் முற்றிற்று