நிதான பருவம், இரட்சணிய யாத்திரிகம்


@1 வனம் புகு படலம்

#1
வித்தக யூகி உய்த்த மெய்யுணர்ச்சி விவேகி மாது உரைத்த நல்_புத்தி
மித்திரை வளர்த்த சிரத்தை மெய்ப் பத்தி விளங்கு_இழை புகட்டிய மேலாம்
உத்தம தேவ பத்தி என்று இனைய உசித நல்_குணங்களே துணையா
முத்தி மார்க்கத்து நெறி பிசகாமே முன்னுற முடுகினன் நிவிர்த்தன்

#2
நெறி செலச்செல்ல நெருக்கமும் வழுக்கும் நேரிய இறக்கமும் நெறியின்
குறி மருண்டு அயலோர் சற்று அடி பிசகில் குணிப்பு_அரும் மோசமும் உள என்று
அறிவன் உள் அழுங்கி அவசமுற்றனன் மற்று ஆயினும் அக வயிராக்யப்
பொறி வரி வைரத் தண்டு கொண்டு ஊன்றிப் போகவும் கூடும் என்று உரைத்தான்

#3
மிடுக்குறும் பரிய கோல் பிடித்து ஊன்றி மிதித்து நின்று உரத்து அடி பெயர்த்தும்
நடுக்குறும் அமையத்து அருளுறப் பலத்து நன்மையை நனி கடைப்பிடித்தும்
இடுக்குறும் ஜீவ பாதையின் இறக்கத்து இனைவொடு மென்மெல இறங்கி
அடுக்கலின் அடிவாரத்து வந்து அணைந்தான் அறவருக்கு அரிது யாவதுவே

#4
சஞ்சல மலையைத் தாண்டி வந்து இப்பால் சாரலில் தாழ்மை என்று ஒரு பேர்
விஞ்சிய பள்ளத்தாக்கினை எதிர்ந்தான் மேதகு கிறிஸ்தவன் எவர்க்கும்
செஞ்செவே நெடு நாள் பல் பெரும் துன்பம் நுகர்ந்து பின் சிந்தனை திருந்தி
வஞ்சம்_இல் தாழ்மை வரப்பெறும் இதுவே வாரி சூழ் வையகத்து இயற்கை

#5
சீரிய தாழ்மை என்று உரைக்கும் செவ்விய
பேர்_இயல் படுகரின் பெற்றி நோக்குறின்
ஆரியர் ஆய மெய் அறிஞரே அலால்
பூரியர் யாவரும் புகப்பெறாதது

#6
அண்ணலார் கருணை ஆற்று அணி கொள் தீரத்துத்
தண் அளி நறு நிழல் படர்ந்த சார்பது
புண்ணியப் போனகம் அமைந்த பொற்பது
நண்ண_அரும் இக_பர நலம் பயப்பது

#7
கல் மனத்து ஊறும் நீர்க் கான் சுனைத்தது
பொன் முக மரை மலர் பொலியும் பொற்பது
நன் மொழி நறை கமழ் நந்தனத்தது
தன்ம மாக் கனி தரும் தருக்கள் சான்றது

#8
கோது_அறு குண வளம் குலவுமாயினும்
மா தரை மானிடம் வரையத் தக்கது
மேதகு நற்பயன் விளைக்கும் ஆயினும்
சாதகம் ஆவதற்கு அருமை சான்றது

#9
இத்தகு வழிப்படும் எம்மனோர்க்கு எலாம்
சத்துரு பயங்கரம் தவிர்க்கும் கோட்பது
வித்தக கிறிஸ்துவின் விமலச் சேவடி
உத்தம சுவடு நன்கு ஒளிரப்பெற்றது

#10
வலம் இடம் அறிகிலா வச்சை மானிடம்
நலம் இலாது இகழ் புகழ் நாடுகில்லது
குல நறும் குண மலர் குழுமி எண் திசைப்
புலம் எலாம் பரிமளம் பொலியும் பொற்பது

#11
மேதகு மெய் மனத் தாழ்மை மேவிய
சாது மார்க்கத்தவர் தடம் குலாயது
பேதையர் பலபடப் பிதற்றும் நிந்தையாம்
வேதனை கூர்த்த முள் விரவும் கோட்பது

#12
மின் எனப் புகை என வீயும் தேகருக்கு
என் ஒரு பெருமை என்று எறியும் நீரது
பன்_அரும் தாழ்வுறு படுகர் ஆயினும்
உன்னத பதவி புக்கு ஒடுங்கும் ஈட்டது

#13
பலம் திகழ் இனையது ஓர் படுகர் வைப்பினை
வலம் திகழ் வேதியன் அடைந்து வான் படர்
நலம் திகழ் கருத்தொடு நயந்து மெய்ம்மறைப்
புலம் திகழ் நெறிக் கொடு போயினான் அரோ
**வனம்புகு படலம் முற்றிற்று

@2 அழிம்பன் தோல்விப் படலம்

#1
முற்படச் செலும் நெறி முறையை நன்கு அறி
விற்பனன் நிதானியைச் சேரும் வேட்கையால்
பற்பல யோசனை படுகர் வைப்பினில்
பிற்பட விரைந்தனன் பின்தொடர்ந்து அரோ

#2
ஆயிடைத் தமியனாய் அருள் வழிச் செலும்
தூயவன் நெஞ்சகம் துணுக்குற்று ஏங்கிடக்
காய் உரும் இடித்து எனக் கதித்து ஒர் பேர்_ஒலி
ஏயெனும்மாத்திரத்து எழுந்தது எஞ்சவே

#3
பேர்_ஒலி முழக்கினால் பேதுற்று உள் உடைந்து
ஆரியன் அடிபிசகாது நின்று இவண்
மாரி இன்றாக அச்சுறுத்த வந்த இக்
காரியம் யாது எனக் கருதும் காலையில்

#4
நஞ்சமும் அவித்தையும் இருளும் நாசமும்
வஞ்சமும் கொடுமையும் மறமும் தீமையும்
செஞ்செவே திரண்டு உருத் தெரிய நின்றிடும்
அஞ்சனக் கரு நிறத்து அவுண யாக்கையன்

#5
பேயும் அஞ்சுறு பெரும் பேய் முகத்தினன்
காய் எரி பங்கியன் கடுத்துறும் கொடு
வாயினன் வக்கிர தந்தன் வன்கணன்
தீ எழு புகை என உயிர்க்கும் தீயவன்

#6
உருக்கு இயல் உலம் பொரூஉம் உரம் கொள் தோளினன்
செருக்கு ஒடுங்காத் தட மார்பன் திண்ணியன்
வெருக் கொளத் தடித்து எழு மெய்யன் வெவ்விய
தருக்குறும் இரு சிறை தழைத்த சார்பினன்

#7
முடங்கு உளை அரியின் மும்மடங்கு மொய்ம்பு_உளான்
கடம் கலுழ் கறையடிக் காலன் காழ்படும்
இடங்களில் செதிளுறும் இருப்பு மேனியன்
விடம் கவிழ் அரவு எனச் சீற்றம் மிக்கு_உளான்

#8
பின்னிடு பார்ப்பனப் பிணங்களின் குறி
மன்னு வெண்_தலைப் புழை மலிந்த மாலையன்
பன்_அரும் அவகுணப் படைக்கலத்தினான்
உன்னிய உருவெடுத்து உழலும் கூற்று அனான்

#9
பாபத்தை மணந்தவன் பழியைப் பெற்றவன்
சாபத்தைப் படைத்தவன் தரும நாயகன்
கோபத்தை அடைந்தவன் குவலயத்தினுக்கு
ஆபத்தை விளைப்பவன் அறத்தைத் தின்பவன்

#10
உயக் கொளும் நெறி வருவோரை ஒண் மதி
மயக்கி வன் சிறையிடைப் படுத்தும் வஞ்சகன்
வயக் குருசு உயர்த்த இம்மானுவேல் பதம்
நயக்குநர் யாவர்க்கும் நாச கண்டகன்

#11
இப் படுபாதகன் அழிம்பன் என்பவன்
மெய்ப்படு கிறிஸ்தவன் விழிக்கு நேர் எதிர்
கைப்படக் காண்டலும் கலங்கி உள் அழிந்து
எப்படி எனக்கு இனி உய்வு என்று எண்ணுவான்

#12
முன் எதிரூன்றிட முரண் இன்று என்ன யான்
பின்னிடுவேன் எனில் பிழைப்பு இன்றால் இவன்
வெந்நிடைச் சுடு சரம் துரந்து வீட்டுவன்
மன்னர் கோன் நன்றியை மறந்த கேடும் ஆம்

#13
போர்த் தொழில் சேவகம் புரிவன் யான் எனத்
தீர்த்தனுக்கு உடம்படி செய்து இ நாள் வரை
ஆர்த்தியில் தரும் உணவு அருந்தி வந்து இவண்
பேர்த்து அடிபிறழ்வது பெரும் துரோகமால்

#14
எனைப் பகைத்தான்_அலன் இவன் மற்று எம்பிரான்-
தனைப் பகைத்தான் எனச் சான்று உண்டு ஆதலின்
முனைப் பகை முருக்கிட முரண் தந்து ஏழையேன்
வினைப் பகை தொலைப்பதும் வேந்தன் பாலதால்

#15
அஞ்சி யான் பின்னிடல் அழகு_அன்று ஆர்_உயிர்
துஞ்சினும் அரசற்குத் துரோகி ஆகலன்
நெஞ்சுற எதிர்த்து முன் நிற்பதே நலன்
எஞ்சுறேன் என உரத்து எதிரிட்டான் அரோ

#16
உங்கரித்து அழிம்பன் வந்து உருத்து நோக்கி நின்று
எங்கு உளை எங்கு செல்கிற்றி யாரை நீ
நுங்கும் முன் புலப்பட நுவறி நொய்து என்றான்
கங்குலும் பகல் படக் கருகும் நெஞ்சினான்

#17
விளக்கு ஒளி வர இருள் விலகுமாறு போல்
இளக்க நெஞ்சு ஏழைமைய பலம் என்று இன
துளக்கு_அற அருள் பலம் துன்னி வேதியன்
உளக் களிப்பொடு துணிந்து உரைத்தல் மேயினான்

#18
நாச தேசத்து உளேன் நாச தேசத்தில்
நீச வெவ்_வினை குடி நிலவிற்று ஆதலின்
மோசமும் நாசமும் முடுகும் என்ற மெய்
வாசகம் கேட்டு அதை வரைந்து வீசினேன்

#19
வீவினை விரும்பிடா விண்புலத்து உயர்
கோவினுக்கே அடித் தொழும்பு கூடினேன்
சாவினை விளைக்க என் முதுகில் தங்கிய
தீ_வினைச் சும்மையும் தெறித்து வீழ்ந்ததால்

#20
நித்திய மங்கள நிகழ் சுகானந்த
முத்தி மா நகர் செல முடுகுகின்றனன்
எத் திறம் நும் கருத்து இராஜ பாதையின்
மத்தியில் யான் உளன் மனக்கொள் நீ என்றான்

#21
நன்று நன்று உன் நிலை நாச தேசமும்
துன்றிய குடிகளும் சொந்தமாம் எனக்கு
என்று அறி நீயும் என் தொழும்பன் இன்று எனில்
கொன்று உயிர் குடிப்பன் ஈது உளத்துக் கோடியால்

#22
கரைசெயற்கு அரிய என் காமியச் சுவை
திரை செய் தெள் கடல் புவிக்கு அருத்து தெய்வமும்
அரசனும் ஆம் எனை அறியகிற்கிலாய்
விரசுவது என் இவண் மீளுவாய் என்றான்

#23
கொல்வதும் உருத்து உளம் கொதித்துப் பொங்கி மேல்
வெல்வதும் இருக்க ஓர் பக்கம் வேறு நீ
சொல்வது மெய் எனைத் தொழும்பு கொண்டனை
செல்வதோ இளந்தையில் தீட்டு சாசனம்

#24
உள்ள நாள் முழுவதும் ஒழிவு_இன்று ஊழியம்
கொள்ளுவை நல்கு புன்_கூலி கொண்டு எவன்
பள்ள நீர் உலகில் நின்று உய்வன் பாவத்துக்கு
எள்_அரும் நித்திய மரணமேயுமால்

#25
தீமையில் திருந்தும் உன் தேச வாழ்க்கையின்
காமியச் சுவை நலம் காட்டுமே-கொலாம்
வேம் எரிக்கு இடையிடை விறகிட்டு என்னவே
மீமகீபதி சினம் விளைப்பதே அலால்

#26
செப்ப_அரும் தனி முதல் திரு_அடிக்கு யான்
ஒப்படையாய்த் தொழும்பு உஞற்ற நேர்ந்தனன்
எப் பெரும் இடர் எனக்கு இறுதி சூழினும்
தப்பு மார்க்கத்து அடிசறுக்கி வீழ்கிலேன்

#27
வீழினும் பிடித்த கை விடுக்கிலார் பகை
சூழினும் முன் நின்று துணிப்பர் ஸ்வர்க்கத்து
வாழிய நலம் தரு வள்ளலாருக்கே
பாழியம் செய்து உய ஒருப்பட்டேன் என்றான்

#28
நிண்ணயம் வேதியன் நிகழ்த்தக் கேட்டலும்
கண் அழல் கதுவிடக் கனன்று கார் இருள்_
வண்ணனும் எனை ஒரு மசகம் ஆகவும்
எண்ணலை போலும் நீ என இயம்புவான்

#29
வாழும் நன்_மதி உனக்கு இல்லை வாழ்வொடு
சூழும் இ உடல் சுகம் துய்க்க நச்சிலை
ஊழி வெம் தீ விழுந்து உடற்றும் என்ற சொற்கு
ஏழை நீ இடைந்து இடர்_கடற்குள் எய்தினாய்

#30
செய் தவறு அணுத்துணை சிமையத் தண்டனை
செய்திடும் நலம் எலாம் சிறிதும் இன்று எனச்
செய்து அருள்வசத்தினால் ஜீவ ரக்ஷை வந்து
எய்தும் என்று இசைப்பதே ஈசுராதிக்கம்

#31
உன்னத புனிதமாம் ஒள் நெருப்பினைப்
புன் நரகு ஈடங்கள் பொருந்தல் ஆவதோ
முன்னம் எத்தனையவர் முரணி முற்றும் விட்டு
என் அரசியல் முறை உவந்து இங்கு எய்தினார்

#32
மருண்டு மற்கடப் பிடிவாதமாய்ச் சிலர்
தெருண்டிலர் என் மொழி செகுக்கப்பட்டனர்
உருண்ட நேமியின் அரசு உய்க்கும் ஆண்டகை
இருண்ட புன்_மனத்தரை இரக்ஷியாதது என்

#33
பொய் வழி உழன்று நீ புரிந்த போக இ
மெய் வழி பிடித்த பின் நொதியில் வீழ்ந்தனை
உய் வழி பிறிது எனும் உரை கொண்டு ஏகினை
மை வழி வெருண்டு பின்வாங்க எண்ணினை

#34
மற்று நின் புகழ்ச்சியை விரும்பி வந்தனை
இற்றை-மட்டு எண்ணில் நீ இயற்று தீமைகள்
முற்று அறி கடவுளின் முறைமைக்கு ஏற்பவோ
எற்றவாம் இரக்ஷணை விழைதல் ஏழை நீ

#35
தஞ்சம் என்று எனை அடைந்தவர்க்குச் சாவும்-மட்டு
எஞ்சுறாத் துன்பம் வந்து இயையும் ஆயினும்
வஞ்சனையானும் பொய் வாய்மையானும் இங்கு
உஞ்சிடப் பல வகை உறுதி சூழ்வனால்

#36
ஈட்டிய நன்று தீது எதையும் நாடலேன்
கோட்டம்_இல் என் உரை குறித்து நின்றிடின்
வேட்டவர் வேட்ட சிற்றின்பம் வேண்டு-மட்டு
ஊட்டல் என் அரசியல் முறை என்று ஓர்தியால்

#37
பொற்பு உறு நாச தேசத்துப் போந்து நீ
அற்புத வளம் நுகர்ந்து ஆயுள் நாள் எலாம்
முற்படு காமியம் முழுதும் துய்த்திரு
பிற்படு கதி நினைந்து இரங்கிப் பேதுறேல்

#38
இணங்குவாய் எனில் இக சுகத்தை ஈகுவல்
பிணங்குவாய் எனில் உயிர் பிழிந்து தேக்குவல்
உணங்கியோ எது துணிபு உரைத்தி என்றனன்
நிணம் கெழு குருதி வேல் நிசாசரேசனே

#39
நஞ்சினில் தீயினில் நடுக்கம் காட்டிய
வஞ்சகப் பேய்_மகன் பிதற்றும் வாய்மொழி
அம் செவி புகப்புக அகத்தின் உள்ளுற
விஞ்சியது அருள் பலம் வேதியற்கு அரோ

#40
தைவிக அநுக்கிரக சத்தியின் உரம் கொண்டு
உய் வழி ஒழுக்கம் விலகாது எதிரில் ஊன்றி
மை வரு நிசாசர மனக்கொள் இது என்னா
மெய் வரு தவச் சுருதி வித்தகன் விரிப்பான்

#41
சித்தம் உற நன்கு அறிவன் நீ எனது ஜென்ம_
சத்துரு எனக்கு உதவு சார்பு உரிமை வாழ்வு என்று
அத்தனையும் நித்திய அனர்த்தம் எனும் ஆற்றால்
இத்தகைய நூல் நெறி பிடித்து இவண் நிறுத்தேன்

#42
மாயம் உறும் இன்ப நலம் வாழ்வு சுகம் ஆதி
ஆயவை தரத் துணிதி அம்ம அழகிற்றால்
மேய மனை-தோறும் எறி மிச்சில் விழை நாய்-கொல்
சீய முடி பெற்று அரசு எய்யும் வகை செய்யும்

#43
கொடு மதி படைத்து உலவு கோழை நரம் அல்லால்
நடு மதி படைத்தவர் உன் நச்சு மதி கொள்ளார்
அடு மதி படைத்து இழி அழிம்ப அழிவு எய்தும்
கெடு_மதி படைத்தனை கெடாப் பழி படைத்தோய்

#44
விள்_அரிய பாதக வினைச் சுமை விழுத்த
வள்ளல் அருள் சிற்சுருதி வாய்மை மதி ஒன்றே
கொள்ளுவல் புறத்து மதி கொள்ள மனம் உள்ளேன்
தெள் அமுது உகுத்து விடம் உண்பது-கொல் சீர்மை

#45
மேதகைய தொண்டரை விரோதிகள் செகுக்கும்
போது இறை கைவிட்டனர் எனாப் புகறி பொங்கும்
காதலின் இகத்து இடர் களைந்து கதி உய்க்கும்
மா தயையின் மாட்சி என எண்ணுகிலை மாற்றோய்

#46
மார்க்க வயிராகர் உடல் வார் குருதி என்றும்
பார்க்-கண் உலவாக் கரி பகர்ந்திடலின் மேலாம்
சீர்க் கதியின் மேய பர சிற்சுகம் விளங்கித்
தீர்க்கமுறும் என்பதும் மகேசபதி சித்தம்

#47
பாவ நர ஜீவ திரள் நம் பரம ராஜன்
கோவ அனல் பற்றி எரியா வகை குறித்தே
ஆவி வளி வீசி அருள் ஆழியின் மடுக்கும்
ஜீவ நதி உய்க்க வினை தீர்ந்து கதி சேரும்

#48
கேட்டி உன நாட்டிடை கெழீஇய பலவீனக்
கோட்டி மகவாய் எனை வளர்த்தனள் குயப் பால்
ஊட்டி நனி ஆதலின் உஞற்று பல தீமை
ஏட்டினில் அடங்குகில எண்ணி முடியாவால்

#49
எண்_அரிய தீ_வினை இயற்றியுளனேனும்
நண்ணிய மனத் துயரும் நாடு பெருமூச்சும்
கண் அருவி நீர் சொரி கருத்து நனி கண்டு
புண்ணியர் பொறுத்து அருள் அளிக்க மகிழ் பூத்தேன்

#50
இ மகிழ்வு அளித்து எனை ஈடேற்று சருவேசன்
செம்மல் ஒரு நட்பு இடை திரிக்க முயல்கிற்றி
அம்ம கெடுவாய் முடிவதாம்-கொல் இஃது உன்னால்
மும்மை உலகுக்கு எனினும் மொய்ம்பு_இலது காண்டி

#51
மற்று இனி உரைப்பது எவன் வந்த வழி இன்னே
பற்றுதி அணுத்துணை பயன்படுதல் இல்லாச்
செற்றமொடு எதிர்ந்து அமர்செயத் துணிதி ஆயின்
வெற்றிபெறுவாய்_அலை விரைந்திடுதி என்றான்

#52
செய்ய மறையோன் உரை செவிப்பட அழிம்பன்
நெய்யுறும் அழல் சிதை எனாச் சினம் நிமிர்ந்து
கையொடு கை எற்றி இரு கண் குருதி காட்ட
வெய்ய உரும் ஏறு என வெடித்த நகை செய்தே

#53
முத்தி அரசற்கும் அவர் மொய்ம்பின் மகிமைக்கும்
நித்த அரசாட்சி முறைமைக்கும் நெறி நிற்கும்
பத்த ஜனருக்கும் அதி கேடுகள் படுக்கும்
சத்துரு எனக்கு எதிர் தருக்கு உளை-கொலா நீ

#54
நீதி_அரசன் கொலை நினைத்தும்_இலவாய் இப்
பூதலம் எலாம் எமது புத்துரையில் நிற்ப
ஆதி முதலாய் உலகு அடக்கி அரசாள்வேம்
பேதை ஒரு நீ தனி பிணங்கில் அடரேம்-கொல்

#55
அடா சிறிய பையல் மசகத்துணையும் அல்லாய்
கெடா முதல் அருள் துணை கிடைக்கும் என நம்பிக்
கடாசலமொடே அமர் கலக்க வருகின்றாய்
படாது படுவாய் ஒரு கணத்தில் அது பார்த்தி

#56
என்று எயிறு அதுக்கி அட எங்கு அகறி என்னாக்
கொன்று உயிர் குடிக்க வரு கூற்று என மறித்துக்
குன்று என நிமிர்ந்த திரள் தோள் முருடு கொட்டி
வன் திறல் கொள் வெம் கத மடங்கல் என ஆர்த்தான்

#57
ஆர்த்து உரறி நின்றனன் அடித் துணை கண் மாறிப்
பேர்த்தனன் விரைந்து பல சாரி பெயர் பெட்பில்
பார்த் திடர் பிதிர்ந்தன பரந்த படு தூளி
போர்த்தன விசும்பு இரவி பொங்கு கதிர் நுங்கி

#58
மறம் கிளரும் வன் சிறகு அடித்து உயர வாவிக்
கறங்கு என உழன்று ககனத்திடை கரப்பன்
இறங்குவன் நிலம் கிழிய எட்டி அடி கிட்டி
அறம் கிளரும் நெஞ்சனை அடுப்பன் அறைகூவி

#59
வா என விளிப்பன் முழை வாய் மிடறு காறித்
தூ என உமிழ்ந்து பழிதூற்றி இகழ்வன் மெய்த்
தே என நினைக்க ஒரு ஜெந்தும் இல என்னாப்
பூவுலகை இன்றொடு புதுக்கிடுவன் என்பான்

#60
செத்த பிணம் நுங்கு கழுகில் சிதட மார்க்கப்
பித்து உறு பிணங்களை நுகர்ந்து உழல் பிசாசன்
இத் திறம் அநேக வித கோரணி இயற்றி
வித்தகனொடே அமர் விளைத்திடுவது ஆனான்

#61
ஆத்துமவிசாரியும் அருள் கடவுள் வேந்தன்
மாத் தகைய சேவடி மனத்திடை இருத்தித்
தீத் தொழில் அரக்கன் உயிர் சிந்த அதிர் தும்பைப்
பூத் தொடை புனைந்து அமர்புரிந்திடுவது ஆனான்

#62
நன்மை பர ஞானம் ஒளி நல்_அறம் இவற்றைத்
தின்மை அறியாமை இருள் தீ மறம் அடர்த்து
வன்மை மிகு வெம் சமம் அலைத்திடுதல் போலாம்
தொல் மறை_வலானொடு பசாசு அமர் தொடுத்தல்

#63
ஆயிடை நிசாசரன் அறக் கொடுமை பூண்ட
மாயம் உறு வெம் சிலை வளைத்து மறம் மல்கும்
காய் எரி முகத்தன கடுத்து உறு நுனித்த
சாயக சதம் பல தருக்கொடு விடுத்தான்

#64
மல் திணி தடம் புய மறை_கிழவன் வல்லே
செற்றமொடு அரக்கன் விடு தீப் பகழி தீந்து
முற்றும் அவை இற்று உக முரண் கொள் விசுவாசப்
பற்று எனும் இரும் பரிசையால் பொடிபடுத்தான்

#65
தாக்கிய அழல் பகழி சாம்பர் உறல் கண்டே
மீக் கிளர் சினத்து அவுணன் வெய்ய வசை என்னும்
தீக் கிளர் சகத்திர சிலீமுகம் விடுத்தான்
காக்குதி-கொலோ அறிவல் என்று ஒரு கணத்தில்

#66
அங்கு அவை விசைத்து அணுகி ஆத்தும விசாரன்
செம் கை உறு கேடகம் மறிந்து இடை சிதைந்து
பங்கமுறலாயின பழிப்பு_இல் அறவோர்-பால்
வெங்கணவர் சூழ் வினை விளிந்து ஒழியுமா போல்

#67
நல் முறை ஒரீஇய கெடு தோஷி நனி பொங்கித்
தொல் முறை வடிக் கணை கணிப்பு_இல துரப்பப்
பல் முறையும் நுண் துகள் படப் பரிசை கொண்டே
சொல் முறை அறிந்தவன் எதிர்ந்தவை தொலைத்தான்

#68
விஞ்ச விடுத்த நஞ்சு உகு வெம் கோல் விறல் இன்றி
எஞ்சுதல் கண்டே நெஞ்சு அழிவுற்று அங்கு இகல் வெய்யோன்
பஞ்சை முன் நிற்காய் செம் சிலை பற்றாய் பரிசைக்குள்
அஞ்சி ஒளிப்பாய் வெம் சமருக்கு ஈது அறமேயோ

#69
முந்து எதிரிக்கு ஒத்து ஏதி வழங்கல் முகம் மாறா
வெம் திறல் ஆண்மை நிராயுதனோடு அமர் வெஃகாமை
நொந்தவருக்கு உதவும் திறன் மற்று இன நூல் ஓதும்
விந்தையுறும் புய வீர இலக்கண விதியாமால்

#70
வில் தொழில் ஆதி படைக்கல வித்தைகள் வேறு ஒன்றும்
கற்றிலை யுத்தகளத்திலும் வந்து எதிர் கால்வைத்தாய்
மற்று எது செய்குதி மற்கட வன் பிடி மானக் கை
பற்றிய கேடகம் ஒன்று இறில் வளி படு பஞ்சு ஆவாய்

#71
என்று இவை வஞ்சனையாக அழிம்பன் எடுத்து ஓத
ஒன்றிய கேடகம் நெஞ்சுள் அடக்கி உரத் தொல்லை
வென்றி கொள் மானத வெம் சிலை வாகை மிலைந்து ஏற்றி
நன்று அறி வேதியன் நாண் ஒலி காட்டினன் நவை எஞ்ச

#72
நாண் ஒலி விஞ்சலும் நெஞ்சு துணுக்கென நர ஜீவர்
நீள் நிரையச் சிறையூடு அடையச் செயும் நீசப் பேய்
பேணிய கார் முக வெம் சர மா மழை பெய்து ஆர்த்தான்
மாண் ஒளி மங்கி மறைந்தது தாழ்மையின் வைப்பு எங்கும்

#73
அக்கணம் வேதியன் ஆரண மந்திர அழல் தோய்ந்த
செக்கர் பொரும் பகழித் திரள் எய்து செறுத்து ஒல்லை
மைக் கரு_வண்ணன் விடுத்த சரக் குவை மாய்வித்தான்
கக்கும் மழைத் திரள் சிந்த மடுத்து எறி கால் போலே

#74
நச்சு அரவில் சினம் மீறி நராந்தகன் நன்று என்னாக்
குச்சிதமாய கொடும் சொல் முகக் கணை கோத்து எய்யச்
சிச்சி எனப் பொறி வாயில் செறித்து ஒரு செயல் இன்றி
வச்சை_இலான் எதிர் நிற்க மறைந்தன வான் ஓடி

#75
நீசன் நினைந்து பல் சாப வடிக் கணை நின்று ஏவ
ஆசி எனும் கணை வீசி அழித்தனன் அறவோனும்
மூசிய பாச முகக் கணை மூடன் முனிந்து எய்ய
ஈசுர நேச சரம் கொடு அறுத்தனன் எதிர்_இல்லான்

#76
பல் முகமாக விரிந்து அடு கோல் பல பைசாசன்
வில் முகம் நின்று துரந்திட அங்கு அவை வேதாந்த
உன் முக ஞானி விடுத்த சினக் குறி ஊடு ஆடிச்
செல் முக வெம் கணையில் சிதைவுற்றன தீந்து எல்லாம்

#77
எய்த கொடும் கணை எத்தனை கோடிகள் எல்லாமும்
வைது குறைத்தனன் என்பதை அல்லது வரி வில்லால்
கொய்து குறைத்தனன் என்பது என் என்று கொடும் பேயன்
செய் திறம் யாது இனி என்று திகைத்து இரு தெளிவுற்றான்

#78
சத்திரமாப் படை கொண்டு இவனோடே சமராடும்
சித்திரம் வெற்றி தரும் பரிசு அன்று அது சீர்கேடாம்
அத்திரமாய அரும் படை கொண்டு இங்கு அமராடிக்
குத்திர வாகை மிலைச்சுவல் என்று குறிக் கொண்டான்

#79
சுமை உறு பொய்மைத் தூணியுள் மண்டித் தொகுமாறு
சமைய முகம் கொள் அத்திரம் வாங்கித் தனு நாணிட்டு
இமயம் முதல் தக்கணம் வரை வென்றது இது காண் என்று
அமைய விடுத்தான் வஞ்ச அழிம்ப அசுரேசன்

#80
விடுத்த வெம் படை முகம்-தொறும் பேய்க் குறி மிளிர்வ
கடுத்து உறும் புழை விழி-தொறும் சினக் கனல் கஞல்வ
மடுத்த வாய்-தொறும் புலைப்படு மொழிப் புகை மலிவ
வடுத் தழைந்த மெய் மயிர்-தொறும் கூளிகள் வதிவ

#81
மதம் கொள் துன் முகம் தனித்தனி மாறுகொண்டு அடர்த்துக்
கதம் கொள் சீற்றம் மிக்கு இகலுவ தத்தமில் கறுவி
விதம் கொள் மாந்தரைச் சிற்றின்பப் படுகரில் விழுத்தி
வதம் கொளும் பழம் கதை எடுத்து உயிர் கொளும் வலத்த

#82
எண் திசாமுகத்து எமக்கு எதிர் இன்று எனச் செருக்குக்
கொண்டு நிந்தனைக் கொடும் தழல் இறைப்ப வீண் குதர்க்கம்
விண்டு மெய்ப்படு விளக்கு ஒளி விளங்கிலதாக
மண்டு பேர்_இருள் தொடுப்ப மன்பதைக் குலம் மருள

#83
ஆய இக் கொடும் படைக்கலம் அகங்கரித்து உலம்பித்
தூய வேதியன் நெஞ்சினுக்கு எதிர் செலத் துளங்கான்
நாயகாத்திரம் தொடுத்து இது நாசமுற்று ஏக
மாய இப் படை சிதைத்திடுவேன் என மதித்தான்

#84
ஏ எனும் பொழுது ஈசுரப் படை தொழுது எடுத்தான்
மாயம் இல்லது ஓர் மானத பூசனை வகுத்தான்
தீய இப் படை செகுத்தி என்று உள்ளுறை தெரித்தான்
மேய தூ வரி வில் தொடை ஆக்கினன் விட்டான்

#85
தொண்டன் வில் தொடை ஆக்கிய சுருதியாத்திரம் இ
அண்ட கோளகை அடுக்கு அழிந்து ஒழியினும் அவியாது
எண் திசைப் புவியகத்து இருள் இரிதர விரவி
மண்டிலம் எனப் பொலிந்தது வானுற வயங்கி

#86
திவ்வியாத்திரம் தேசொடு செறுத்து எதிர் வரக் கண்டு
அவ்வியச் சமயாசுகம் வாய் மதம் அடங்கி
எவ்வயின் கரந்து உறைதும் என்று ஏங்கி உள் உடைந்து
கௌவையுற்று அறு முகங்களும் கவிழ்ந்தன கருகி

#87
புடை பரந்த மெய் ஒளியினால் புகலிடம் பெறாது அங்கு
இடையும் ஆசுரப் பகழியை எறுழ் வலிக் கலுழன்
அடையும் வெவ் விட நாகத்தை ஆர்_உயிர் குடித்தாங்கு
உடைய வன் படை ஒருங்கு உயிர் குடித்தது அ ஒல்லை

#88
மித்தை ஆய துன் முகப் படை விளிந்து நீறு ஆக
உத்தமாத்திரம் வேதியன் தூணி புக்கு ஒடுங்கி
வித்தகச் சுடர் விரித்து இனிது அமர்ந்த மெய் வேத
சத்தியத்து எதிர் நிற்குமோ புலைப்படு சமயம்

#89
அலகை வீசிய அறு சமயச் சிலீமுகத்தை
இலகு திவ்வியாத்திரம் என்பர் இயல் மதி_இல்லார்
கலகமாய் அவை ஒன்றையொன்று அடர்ப்பது கண்டும்
உலக சிற்றின்ப போகத்தை ஊட்டுவது உணர்ந்தும்

#90
காசுரம் பெறு காப்பியக் கவிஞர்கள் தீட்டும்
பாசுரத்து எழுந்து உலகிடைப் படு புறச் சமய
ஆசுரப் படை கோடிகள் அடுப்பினும் அவை எம்
ஈசுரப் படை ஆதித்தற்கு எதிரும் மின்மினியாம்

#91
குத்திரச் சமயாசுகம் தொலைந்தமை குறிக்கொண்டு
எத் திறம் இனி வாகைகொள்ளுவல் என எண்ணித்
தத்துவம் மசிப் பொருள் எடுத்து அகந்தையில் சமைத்த
அத்துவைதமாம் படை தொடுத்து ஆர்த்தனன் அழிம்பன்

#92
சொல்_அரும் பசும்பொன் அணிக்கு இடையிடை துதைந்து
வில்லிடும் பலவிதம்படு வெறும் திருட்டாந்தக்
கல் அழுத்திய கலன் நிரை கவினுறப் புனைந்தது
அல்லையும் பகலா மருட்டுவது அத்துவைதம்

#93
சித்த விர்த்தியைக் கெடுப்பது தீ_நெறி ஒழுகப்
புத்தியை மயக்கிடுவது புவன கோசரத்தை
மித்தை மித்தை என்று ஏய்ப்பது மெய்யுணர்வு_இலாரைச்
சுத்த சூனிய கதியிடைக் கவிழ்ப்பது அத்துவைதம்

#94
இனைய தீ_படை அறவன் முன் செருக்கி வந்து எதிர
முனைவன் இன் அருள் பலத்தினால் முனை முகத்து ஊன்றி
வினையமாக மெய் விதண்டவாதத் தொடை மிலைச்சிப்
புனையும் ஓர் வயிராக தண்டம் கொடு புடைத்தான்

#95
தண்ட வெள் இடி வீழ்தலும் தலை மண்டை சிதறிக்
கொண்ட கொள்கையும் மத அகங்காரமும் குலைந்து
கண்டகன் படை கரந்தது கானகம் துருவி
மண் எரிக்கு முன் தருக்குமோ வறிய புன் பதரே

#96
நாத்திகப் படை தொடுத்தனன் நராந்தகன் நலம் கொள்
ஆத்திகப் படை தொடுத்து உடன் அழித்தனன் அறவோன்
தீத் திரள்படு செம்_கணான் பிடித்த வெம் சிலையில்
கோத்த அத்திரம் யாவையும் வேதியன் குறைத்தான்

#97
சாலம் ஆர்தரு படைக்கலத் தொகுதிகள் சாம்பிப்
போலி ஆயின யாது இனிப் புரிகுவல் என வில்
கோலி வெம் சினக் கொடும் தழல் பகழி கோத்து எய்தான்
நீல மேகம் செம் தழல் மழை பொழிந்து என நிருதன்

#98
செக்கர் வான் எனத் தீக் கணை வயின்-தொறும் செருமிப்
பக்கம் எங்கணும் தீந்து உகப் படர்தலும் பனவன்
அக்கரத் திரு_மந்திரப் படை தொடுத்து அவித்தும்
தொக்கு மேனியில் சிற்சில சுடு கணை துதைந்த

#99
கொள்ளி ஆர் அழல் சுடு கணை யாக்கையில் குளிப்ப
ஒள்ளியோன் சிறிது அலமரல் உற்றமை ஓர்ந்து
துள்ளி ஓடி வந்து எதிர் உறீஇ மல் அமர் தொடுத்துத்
தள்ளி வீழ்த்தினன் நிலனுற அழிம்பனாம் சழக்கன்

#100
ஆரியன் தளர்ந்து அவனியில் படிந்து மூச்சயர்ந்து
போர் இயன்றிலன் ஆக இன்னே தலை புரட்டி
வீரியம் பெறுவேன் வெற்றி எனது என விளித்துப்
பூரியன் கெடு புணர்ப்பினால் அருகுறப் போந்தான்

#101
விளித்த கூக்குரல் செவி புக விண்புலத்து அரசன்
அளித்த மெய்ப் பலம் அகம் புக அயதியின் நெகிழ்ந்த
ஒளித்த பட்டயம் கரம் புக உணர்வு வந்து ஊன்றிக்
களித்த சிந்தையோடு எழுந்தனன் வேதியன் கடுகி

#102
அணித்து அழிம்பனைக் கண்டு நன்றாம் என அகத்தில்
குணித்து வல் விரைந்து ஒரு கையில் கேடகம் கொளுவிப்
பணித்த மந்திரப் பட்டயம் ஒரு கையில் பற்றித்
துணித்து வஞ்ச நெஞ்சு உழக்குவல் கா எனச் சொல்லி

#103
மந்திரத் தனி வாள் படை ஓங்கி வன்கண்ணன்
தந்திரத் தட மார்புறப் புகுத்தலும் தலை சாய்ந்து
அந்தரம் பட அலறினன் அழி பெரும் குருதி
சிந்தி அங்கு அவன் வெம் சினத் தீத் தழல் சிதைத்த

#104
நெஞ்சு உரம் கிழிந்து அழிம்பன் நீள் நிலத்து உறீஇ நெடிது
சஞ்சலம் படத் தடம் சிறை இரண்டையும் தடிவான்
செம் சொல் ஆரணன் மந்திர வாள் கரம் திகழ்த்த
அஞ்சி வாய் வெரீஇ மீக் கிளர்ந்து அதோகதி அடைந்தான்

#105
திரு மலிந்த இ ஜெகம் எலாம் திரளினும் ஜெயித்தற்கு
அருமை ஆய வெவ் அழிம்பனை ஆரணக் கிழவன்
ஒருமையாய்ப் பொருது ஓட்டினன் வெற்றி பெற்று உய்ந்தான்
தருமமே ஜெயம் தரும் எனல் சதோதய சரதம்

#106
மன்னு திவ்ய சர்வாயுத வருக்கத்தின் வலியும்
பொன் நிலத்து அரசன் தரு திரு_அருள் பொலிவும்
தன் இரும் துணை ஆக்கலின் அழிம்பனைச் சமரில்
வெந்நிடத் துரந்தான் திட மெய் விசுவாசி

#107
வம்பர் நிந்தனை வசைமொழி வறுமை நோய் இடுக்கண்
இம்பர் நேரினும் பகைத் திறம் எதிரினும் எல்லாம்
உம்பரே செல ஒப்படைத்து ஒரு மனமாக
நம்பினோரைக் கைவிடுவரோ நலம் புரி நம்பன்

#108
முற்றும் தன் துணையாய் அசுரேசனை முருக்கச்
செற்றம் நல்கிய திரு_அருள் செயலினைத் தேறிக்
கொற்றவன் சுதன் திரு_அடிக் கோகனகத்தில்
வெற்றி மாலையைப் புனைந்தனன் வேதியர் திலகன்

#109
கழுதின் வன் தலை நசுக்கிய கழல் துணை கருதித்
தொழுது பல் முறை தோத்திர கீதமும் பாடி
எழுது சீர்த்தியான் ஜெபித்தனனாக மற்று எனக்குள்
முழுதும் காணிய ஆசை வந்து ஈர்த்தது முடுகி
** அழிம்பன் தோல்விப் படலம் முற்றிற்று

@3 மரணச்சூழல் இறுத்த படலம்

#1
கானகத்து எதிர்ந்த நீசக் கள்வனைப் புறங்கண்டு ஊர்த்த
வானகத்து அரசன் போற்றி வண் தழை கொண்டு வாளி
ஊனகத்து உடன்ற காயம் ஒருங்கு அற அகற்றி ஜீவ
போனக ஞான பானம் துய்த்தனன் புலமை_மிக்கான்

#2
உண்டு இளைப்பாறி ஒல்லை ஒளி கொள் பட்டயத்தை ஏந்திக்
கண்டக அழிம்பன் இன்னும் கைகலந்திடுவனேனும்
அண்டர் நாயகன் உண்டு என்னா அவலம் இன்று ஆக அன்பில்
தெண்டனிட்டு இறைஞ்சி வாழ்த்தி ஜீவ_பாதையிலே சென்றான்

#3
முன் உறக் கருதி நோக்கி முடுகுவன் நெறியைப் பற்றிப்
பின்னுறத் திருமி நோக்கிப் பேருயிர்ப்பெறிவன் பேதுற்று
என் உறப்படுவதேயோ இன்னும் என்று இடைவன் கானில்
பொன் உறப் பொதிந்து செல்லும் தனி வழிப்போக்கன் போல்வான்

#4
ஓடுவன் ஓடி எய்ப்புற்று உலவுவன் விரைந்து முன்_பின்
நாடுவன் வெருண்டு நின்று நலிகுவன் நம்பன் சீர்த்தி
பாடுவன் துதிப்பன் கிட்டிப் பதாம்புஜம் பணிந்து சென்னி
சூடுவன் துணிந்து செல்வன் சுருதி நூல் நெறி விடாதே

#5
இப் பரிசாகச் சில் நாள் ஏதம்_இல் மறை_வலாளன்
ஒப்ப_அரும் தாழ்மை வைப்பை ஊடறுத்து உருவி ஏகிச்
செப்ப_அரும் மரண வாதைப் படுகரைச் சென்று சேர்ந்தான்
குப்புறீஇ விழுந்தான் வெய்யோன் குட திசைக் குன்றில் ஏறி

#6
அஞ்சுறு மரண வைப்பை அடுத்தலும் அலறி ஏங்கி
எஞ்சியோர் இருவர் ஓடி எதிர்வரக் கண்டு நீர் இச்
சஞ்சலம் அடைதற்கு என்னோ சம்பவம் எதிர்ந்தது என்றான்
உஞ்சிடுமாறு எம்மோடு திருமுக என்று உரைப்பதானார்

#7
பரம சீயோனை நாடிப் படர்ந்தனம் பதைப்பு ஒன்று இன்றிச்
சர மரணத்தைக் கிட்டிச் சார்ந்தனம் சாரச்சார
உரமுடன் நாச_மோசம் ஒருங்குடன் குழுமக் கண்டேம்
திரம்_இலேம் வெருவி ஓடித் திருமினேம் சிந்தை மாழ்கி

#8
சீரிய சீயோன் என்னும் திவ்விய கிரியின் சாரல்
கார் இருள் பிழம்பு ஒன்றேயோ கடு விடப் பாந்தள் துற்றி
மாரணப் படுகர் எங்கும் வரம்பு_இல் பேய்க் கணங்கள் மல்கிப்
பேர்_இடி முழக்கம் எஞ்சப் பிளிறி நின்று உரறும் மாதோ

#9
அதர் இரு மருங்கும் கிட்டி ஆழ்படும் குழிக்குள் மேய
சிதடர் வல் விலங்கு பூண்டு திகிலுறீஇக் கலங்கி மாழ்கிப்
பதறி நெட்டுயிர்ப்பு வீங்கிப் பதைபதைத்து அலறி ஏங்கிக்
கதறி அங்கு உழலும் காட்சி யாது எனக் கழறுகிற்போம்

#10
மன்றல் அம் கிரியின் சாரல் மழை முகில் துவன்றி எங்கும்
துன்று இருள் பரத்தலாலே விழிப்புலம் துருவிடாதால்
கொன்று உழல் மரணம் பொங்கிக் கொடும் சிறை விரித்துப் போர்த்துச்
சென்று நின்று அகவும் ஆங்கே யார் அதை ஜெயிக்கும் ஈட்டார்

#11
முன்னை ஓர் அடி பெயர்ப்பின் மோசத்தின் முழுகிப் போவேம்
பின்னையே திருமி ஆவி பிழைத்து இங்ஙன் வருவேம்_அல்லேம்
நின்னையும் காணுகில்லேம் நிகழ் பரிசு உணர்த்துகில்லேம்
என்னையே நிற்றி தாழாது எம்மொடு திருமுக என்றார்

#12
என்றலும் மறை_வலாளன் எம்பிரான் நகர் செல் மார்க்கம்
ஒன்று இதை ஒருவுவோருக்கு உய்வு_இலை உண்மை தேரின்
இன்றொடு முடிவதாய இடரினுக்கு அலசி ஓடித்
துன்று இருள் நிரையத்து என்றும் துடிப்பதோ சூழ்ச்சி என்றான்

#13
நன்றுநன்று உனது சிந்தை நாடியபடி செய் யாங்கள்
பொன்றிடத் துணியேம் நின் சொல் புத்தியும் நீயுமா முன்
சென்று அறிந்திடுக எங்கள் தெருள் உரை என்று நெஞ்சம்
கன்றிய இருவர் ஓடிக் கலந்தனர் அழிம்பன் நாட்டில்

#14
வெருவியோர் வெந்நிட்டு ஏக வித்தகன் முன்னிட்டு ஏகி
மருவினன் தமியனாக மாது உளத்து எழுந்த பாவக்
கருவில்-நின்று ஓங்கி மாயக் கரும் தழைக் காடு மல்கிப்
பருவரல் பழுத்துத் தூங்கும் மாரணப் படுகர் வைப்பை

#15
செற்றம்_இல் குணத்தான் அந்திச் செக்கர் வான் மருண்டு கங்குல்
உற்றுழி அடுத்தான் ஆக உள் உளே கவன்று நோக்கி
மற்று இதே போலும் கேட்ட மாரணப் படுகர் என்று
சற்று உளம் திகைத்து நின்று தன் உளே கவல்வதானான்

#16
பாபத்தின் திரளோ அந்தகாரத்தின் பரப்போ தேவ
சாபத்தின் செறிவோ மாய சாலத்தின் சமைவோ நித்ய
கோபத்தின் மலிவோ ஞான நாசத்தின் குவிவோ மோச
ஆபத்தின் குகையோ அந்தத்து ஆர்_இருள் படலம் அம்மா

#17
பூருவம் தொடங்கி ஊழி புடை பெயர் காலம்-காறும்
பாரகம் கெழுமும் ஜீவப் பகுதிகள்-தம்மை எல்லாம்
வாரி வாய் மடுக்கும் ஈண்டு ஓர் மாரணப் படுகர் உண்டு என்று
ஊரவர் உரைக்கக் கேட்டது உண்டு யான் கண்டது இன்றால்

#18
பொறி எலாம் மருளுமால் ஐம்புலன் எலாம் புதையுமால் நல்
நெறி எலாம் பிசகுமால் என் நினைவு எலாம் புரளுமால் விண்
குறி எலாம் குழம்புமால் என் குணன் எலாம் மழுங்குமால் மெய்
அறிவு எலாம் அடங்குமால் என் ஆர்_உயிர் அகலும்-கொல்லோ

#19
ஆவியே அகலுமேனும் ஆர்_அருள் கிறிஸ்துவே என்
ஜீவன் ஆம் தேகபந்தம் தீர்ப்பதற்கு இயல்வதாய
சாவும் ஊதியமாம் என்னச் சமைந்து உள விசுவாசத்தின்
மேவு_அரு தைரியம்-தான் உடலொடு விளிவதேயோ

#20
கொந்து அழல் அனைய துன்பம் குவைகுவையாக என் மேல்
வந்துவந்து அடர்க்குமேனும் மகத்துவ கருணை வெள்ளம்
உந்தி மேலிடும் மற்று என்னா உள் உளே ஊக்கம் தோன்றி
மந்திர வாள் கைக் கொண்டு மரண வைப்பூடு செல்வான்

#21
பட்டய ஒளியில் பக்கம் பார்த்து அருள் பாதை பற்றி
உள் தெளிவொடு கால் ஊன்றி உரத்து அடி பெயர்த்து நின்று
துட்ட வல் விலங்கு காளி கூளிகள் தொகும் அக் காட்டுள்
சிட்டன் ஓர் தமியனாக மென்மெலச் செல்லும் காலை

#22
பூ வலயத்து நீசப் புலை அநுபோகம் துய்த்து
ஜீவ நாள் கழித்துச் சிந்தை திருகியே சிதடர் ஆகித்
தா வரும் நொதிக்குள் வீழ்ந்து தத்தளித்து உயிர்ப்பு முட்டி
ஆவலம் கொட்டி வாய்விட்டு அழுதழுது அவலிப்பாரை

#23
மாதரை உலகைப் பொன்னை மதித்து அற நெறி கைவிட்ட
பாதகம் திரண்டு சாவின் படுகுழி கவிழ்ப்ப மாழ்கிப்
பூதலம் வெடித்த வாயில் பொதுளிய நிரையச் செம் தீ
மீது எழும் சுவாலை தாக்க வெந்து உளம் கருகுவாரை

#24
சாற்று நன்_மதியைத் தள்ளித் தன் மனம்போனபோக்கில்
வீற்றுவீற்றாகிச் சென்று விளைத்த தீ_வினையைச் சுட்டிக்
கூற்றம் வந்து உடற்றி நெஞ்சில் கொடும் தழல் இறைப்ப வாதை
ஆற்ற அரிது ஆகி ஆவி அழுங்கி நின்று அலறுவாரை

#25
மெய் வழி தெரிந்தார் போல விழுத் தவ வேடம் பூண்டு
பொய் வழி அலைந்து தீமை புரிந்த பேதமை வந்து ஊன்றச்
செய் வழி வகை கிட்டாது தெருமரல் உழந்து தேம்பி
உய் வழி இனி இன்று என்னா உயிர்ப்பெறிந்து உயங்குவாரை

#26
விக்கிரகத்துக்கு அந்தோ மெய்த் தெய்வ வழிபாடு ஆற்றும்
அக்கிரமத்தை உள்ளி ஆர்_உயிர் பதைப்பத் தேவ
உக்கிர கோபத் தீயின் ஒள் அழல் கிடங்கர் வீழ்ந்து
கொக்கரித்து அலறி ஏங்கிக் கூக்குரல் எழுப்புவாரை

#27
இக் கொடு மரணச் சூழல் எண்_இலர் எய்தக் கண்டும்
மக்களை மனையைப் பேணி வறும் பொருள் ஈட்டி மாயச்
சிக்குளே சிக்கி வாளாச் சிதைத்தனம் வாழ்நாள் என்னாத்
தொக்க பேர்_இடர்க்குள் மூழ்கித் துடிதுடித்து அயருவாரை

#28
உய் திறம் நாடுவார் போல் உவப்புரை பேசி ஒண் பூக்
கொய் திறம் போல மற்று ஓர் கொழு நிதி கவர நாளும்
செய்த வஞ்சனைகள் ஆய தீ முகத்து அயில் வேல் தாக்கி
நொய்து உளம் கிழிய மாழ்கி நொறுங்கி நொந்து உலம்புவாரை

#29
ஆத்தும சுகத்தைப் பேணாது அனவரதமும் நன்று ஊட்டிக்
காத்து உடுத்து அணிந்து பேணிக் கதித்த பாழ் உடலை அந்தோ
தீ_தொழில் உருவு வாய்ந்து செறிந்த வன் கிருமிக் கூட்டம்
பாத்துண்டு களிப்ப மாழ்கிப் பதைபதைத்து உழல்கின்றாரை

#30
கண் ஒளி மழுங்கல் ஆகிக் காது அடைபட்டுக் கை_கால்
தண்ணெனக் குளிர்ந்து நாடி தளர்ந்து புண்பட்டு நெஞ்சம்
துண்ணெனக் கலங்கி ஆவி துடித்து மூச்சு ஒடுங்கு காலை
பண்ணிய வினைக்கு நேர்ந்த பயன் எனப் பதைக்கின்றாரை

#31
உள்ள நாள் முழுதும் ஒல்காது உலகு இன்பம் நுகர்ந்து கூற்றம்
கொள்ளும் நாள் முத்தி வேட்டுக் குரைப்பது என் பயன் கொண்டு என்னா
எள்_அரும் ஜீவ சாக்ஷி இடித்திடித்து உடற்ற நொந்து
விள்_அரும் பிராண தாப வேதனை உழக்கின்றாரை

#32
நித்திய ஜீவ மார்க்க நிண்ணயம் தெரிந்தோர்-தம்மைப்
பித்தர் என்று இகழ்ந்து தேவ_தூஷணம் பிதற்றி வேத
சத்திய விரோதி ஆகிச் சமைத்த தீ_வினையை உள்ளி
மத்து இடு தயிரே போல மறுகி உள் உடைகின்றாரை

#33
தந்தை தாய் பெண்டு பிள்ளை தமர் பரிஜனர் எல்லாரும்
இந்தனச் சடங்குக்கு ஆவது இயற்றுவார் ஈசன் கோபம்
செம் தழல் இறைக்கும் யாண்டும் புகழ் இலை ஜீவனே என்று
அந்தரம் நோக்கிநோக்கி அகம் குலைந்து அயர்கின்றாரை

#34
நோக்க_அரும் அவநம்பிக்கை நொதிப்படு கிடங்கர் வீழ்ந்து
சாக்கு இடை ஆகிக் கூளி தலை எடாது அமிழ்த்த ஆற்றாது
ஏக்கமுற்று ஊழியூழி இருள் சிறைத் துயரை எண்ணி
ஆக்கையின் நிலை தள்ளாடி அலமரல் உறுகின்றாரை

#35
கள் உண்டு களித்தும் காமக் கடு விடம் நுகர்ந்தும் வாயால்
எள்ளுண்ட பிணி உண்டாகி இடருண்டு தவிப்புண்டு யாக்கை
துள்ளுண்டு துடித்து வாழ்நாள் தொலையுண்டு மலங்கி ஆவி
அள்ளுண்டேம் அள்ளுண்டேம் என்று ஆர்_உயிர்ப்பு அடங்குவாரை

#36
சலம் கொடு பிசாச வர்க்கம் தனித்தனி வெருட்டிச் சார
விலங்கு இனம் வெகுண்டு பீறும் வேட்கையின் எதிர நாகக்
குலங்கள் வந்து அடர்ந்து சீறிக் கொத்துவான் வளைந்துகொள்ளக்
கலங்கி நெஞ்சு அழிந்து சோர்ந்து கதழ் எரிக் கவிழ்கின்றாரை

#37
கண்டுகண்டு உருகிக் கண்ணீர் களகள வடிப்பன் அச்சம்
கொண்டு உளம் நடுங்கி ஆவி குலைகுவன் குமார வள்ளல்
உண்டு எனக்கு என்று நீங்கா ஒரு துணை என்ன உன்னித்
தெண்டனிட்டு இறைஞ்சி நிற்பன் தேறுவன் தெளிவு தோன்ற

#38
கால் அடி பெயர்க்கும் போது கலங்குவன் கலங்கிப் பாதை
மேல் அடி ஊன்றும் போது விமலனைத் துதிப்பன் மீண்டும்
மாலிடைப் படுவன் ஈண்டு ஓர் மயிர்க்கிடை விலகுமேனும்
கோலிய படுகர் ஊடு குப்புற வரும்-கொல் என்னா

#39
இத் திறமா விசாரி இருள் சிறைப் படுகர் துற்றிக்
கத்து கூக்குரலும் துன்பக் காட்சியும் கண்டு கேட்டுச்
சித்த சஞ்சலியன் ஆகத் தெய்விக சகாயத்தாலே
முத்தி நூல் நெறியைப் பற்றி முறை பிசகாது சென்றான்

#40
அங்கு ஒரு சிறையினூடே அக்கினிக் கடல் மேல் ஓங்கிப்
பொங்கியது என்னச் சீறிப் புகைந்து கந்தகத் தீ மண்டி
எங்கணும் நடுங்கி ஏங்க எரி கொடு மல பாதால
வெம் கொடு நரகு அங்காந்து விரித்த பேழ் வாயைக் கண்டான்

#41
கொந்து அழல் பருகி ஓங்கு கொடும் புகையாய கொண்மூ
அந்தரத்து எழுந்து மூடி அவிர் ஒளி ஆர மின்னி
உந்திய இரைச்சல் மேய உரும் இடியேறு தாக்கிக்
கந்தகப் புலிங்கம் மாய கனல் மழை பொழியக் கண்டான்

#42
கை உறு விளக்கைப் போக்கிக் கடும் குழி கவிழ்வார் போல
மெய் உறத் திகழ்த்தும் வேத விற்பனன் நெறி கைவிட்டு
மை இருள் படர்ந்து தொக்க மாரணப் படுகர் வீழ்வுற்று
ஐயகோ ஐயகோ என்று அலறு பேர்_ஒலியும் கேட்டான்

#43
கண்டு கேட்டு உளமும் கண்ணும் கருகின துணுக்குற்று ஏங்கிக்
கொண்ட பேர்_அச்சத்து ஆவி குலைந்து அறிவு அழிந்து யாக்கை
தண்டு என விறைத்து நின்ற தலத்திலே தரித்து நின்றது
உண்டு-கொல் உயிர் மற்று என்னாத் திகைத்தனன் உணங்கி யானும்

#44
ஆயிடை அருகர்க் கிட்டி அழிபடு நரகக் கோட்டை
வாயில் மேற்கொள்ளாது என்ற மகா திரு_மந்திரத்தைச்
சேயவன் காதில் ஊதித் தெருட்டிய செம் சொல் கேட்டேன்
தூய சரீரி-தானோ பிறிது ஒன்றோ சொலத் தேர்கில்லேன்

#45
மருண்டு அறிவு அழிந்து நின்ற மறை_வலான் உணர்வு தோன்றித்
தெருண்டனன் ஆகி ஒல்லை திவ்விய செயலைப் போற்றி
வெருண்ட போது உரம் தந்து உய்க்கும் விறல் கொள் கேடகத்தைப் பற்றி
இருண்ட கானகத்து முன்னிட்டு ஏகினான் சிறிது தூரம்

#46
அமையச்சே தீபம் தூண்டி அலர்த்துவார் போல் ஓர் வாக்குக்
கமையுற்ற தொண்டர்க்கு ஆவி காட்டிய தகைமை ஓரின்
இமயத்தை நிகர்த்த துன்பம் இடுக்கண் வந்து உறினும் ஏற்ற
சமயத்தே உதவும் அன்றோ தற்பரன் கிருபை என்றும்

#47
நித்திய ஜீவானந்த நின்மல போகம் துய்க்கும்
முத்திவீட்டு ஆசை பற்றி முன்னர் நின்று இழுக்க மூண்ட
உத்தம பத்தி பின்னின்று உந்திட ஒளி கொள் வேத
சத்திய நெறி திகழ்த்தத் தடம் பிறழாது செல்வான்

#48
கார் இருள் நிறைந்த கானில் கங்குலில் நள்ளிராவில்
பாரிடம் நிறைந்த சாவின் பயங்கரப் படுகர் வைப்பில்
ஓரடித் தடத்தை நாடி ஒரு தனி ஏக என்னில்
ஆர் இதற்கு அருகர் ஆவார் அருள் பலம்_உடையார் அன்றி

#49
துருவி நூல் நெறியில் செல்லும் வேதியன் துணுக்குற்று ஏங்க
மருவி வெம் கானம் எங்கும் எதிரொலி மடுத்து மல்கக்
கரு விளை மகளிர் கர்ப்பம் கலங்கிட அலகைக் கூட்டம்
பெரு வலித் திரள் தோள் கொட்டி ஆர்த்தன பிலத்துப் போந்து

#50
மீ உயர் மூக்கும் கண்ணும் வியன் பகு வாயும் மண்டிக்
காய் எரி தழுவிச் சுற்றக் கதழ்ந்து பேய்க் கணங்கள் தொக்குப்
பாயிரம் பலவும் கூறிப் பகைச் சினம் திருகி வல்லே
ஆயிரம் முகங்களாகச் செருக்கி வந்து அடர்ந்த மாதோ

#51
மிடுக்கு உறு பைசாசங்கள் வெருட்டுபு வெகுண்டு கிட்டிக்
கடுக்கி வந்து அடையக் கண்டும் கதித்த பேர்_இரைச்சல் கேட்டும்
கெடுக்கும் முப்பகையை வென்று கேவலம் நாடிப் போகும்
தடுக்க_அரும் வலத்தான் நின்று தன் உளே கவல்வதானான்

#52
நீசனேன் நாச தேசம் நீறுபட்டிடும் என்று அஞ்சி
ஈசனார் நகரம் வேட்டு ஈண்டு எய்தினேன் அழிம்பன் மட்டில்
மூசிய இடுக்கண் துன்பம் முழுதும் ஓர் அணுவாம் இந்த
நாச வைப்பு எதிரும் மோச_நாசங்கள் பிறங்கல் ஆமால்

#53
விரவிய விவிதமான விக்கினங்களை மேற்கொண்டு
புரவு நூல் நெறியில் பாதி போக்கினேன் புதுமையாகக்
கரவுறு மரண வைப்பைக் கலந்து இது-காறும் வந்தேன்
இரவு உழல் கிருத்திமங்கட்கு இரை அமைவதற்கு என்றேயோ

#54
வெய்ய பேய்க் கணத்துக்கு அஞ்சி வெந்நிடின் நோன்பு வீணாம்
வையகம் நகைக்கும் தூய மன_கரி வதைக்கும் கேடு
கையதாம் முன்னிட்டு ஏகி ஆர்_உயிர் கழியுமேனும்
மெய்யதா நித்ய_ஜீவ வீட்டு இன்பம் யாவும் நன்றாம்

#55
ஆதலின் துணிந்து முன் நின்று ஆற்றலே தருமம் என்னாச்
சாதகத் திரளை நோக்கித் தற்பரனாம் ஏகோவா
மேதகு திரு_நாமத்தின் விறல் கொண்டு வேத நுண் நூல்
பாதையில் படர்வேன் என்று பன்னினான் உரத்துப் பல கால்

#56
கோளரி முழக்கம் கேட்ட குஞ்சரத் தொகுதி போலும்
காளரி முழக்கம் கேட்ட கட்செவிக் குலமே போலும்
வாள் அரி மறையோன் சொற்ற வாய்மை கேட்டு அஞ்சி ஒல்லை
மூளரி அலகைப் பொம்மல் முன் நிலாது இரிந்த மாதோ

#57
பகைத் திறம் இரிந்த போதும் பயங்கரம் இரியாது ஆகித்
திகைத்து அலமந்து சிந்தை தியங்கினான் சிறிது செவ்வி
உகைத்து எழும் ஊக்கத்தோடு உள்ளுணர்வு வந்து உவகை ஓங்கிச்
சிகைத் தலம் செம் கை சேர்த்தித் திரு_அருள் பழிச்சிச் சென்றான்

#58
இன்னணம் புனிதத் தொண்டன் ஏகுழி எதிர் ஓர் சார்பில்
துன்ன_அரும் மரண பள்ளச் சூழலைத் துருவும் போதும்
என்னொடும் தேவரீரே இருக்கின்றீர் எதற்கும் நாயேன்
பின்னிடைந்து அஞ்சேன் என்று பேசிய மாற்றம் கேட்டான்

#59
இத்தகு வனப்பு வாய்ந்த இசை மொழி மிழற்ற வல்ல
உத்தம பக்தர் சில்லோர் உளர்-கொலா மரண வைப்பில்
எத்தனை மோச_நாசம் எதிரினும் இடையூறு இன்றி
வித்தக விமலன் காக்கும் விதம் இது என்று உவகை பூத்தான்

#60
தீங்கு இன்றி உயிர்பெற்று ஏகும் திவ்விய திரு_கூட்டத்தின்
பாங்கு உறில் அடியார்க்கு எல்லாம் பரிந்து அருள் புரியும் பெம்மான்
ஆங்கு எனது ஆவிக்கு ஏற்ற ஆதரம் புரியாரோ என்று
ஓங்கிய காதல் ஈர்க்க விரைந்தனன் உற்று நோக்கி

#61
துன்ன_அரும் முத்தி வேட்ட தூய யாத்திரிகர்க் கிட்டி
என் ஒரு தனிமை நீங்கப்பெறும் எனின் இகல் ஒன்று இன்றி
நல் நய மொழிகள் பேசி நடப்பது எத்தனைக்கு நன்று என்று
உன்னினன் மறையோன் உள்ளத்து உருவெளி உற்றது அன்றே

#62
விடிவுறு கங்குல் காலை வேதியன் எனது சிந்தைப்
படிவமோ வேறு ஓர் தேவ பத்தியின் உருவு வாய்ந்த
வடிவமோ முன்னர்ச் செல்வது யாது என மருண்டு தேறி
நொடி வரை நிற்றி வந்தேன் யான் என நுவன்றான் கூவி

#63
சதாநியம் கிறிஸ்து யேசு சரண பங்கயத்துக்கு அன்பன்
யதா நியமத்தன் வேத வியல் நெறி கற்று வல்ல
விதானகன் உலக பாசம் வீசிய விரத்தி எங்கும்
நிதானி என்று உரைக்கும் நாமம் நிலவுதற்கு உரிய நீரான்

#64
தன் பயந்து இனைய தக்கோன் தனி வழி துருவித் தானே
முற்பட முடுகும் காலை முறை அறி ஜீவன் முத்தன்
பிற்பட முடுகிக் கூவக் கேட்டும் ஓர் மாற்றம் பேசான்
சற்பனை இது மற்று என்னா விரைந்தனன் தன்னைப் பேணி

#65
பருவரல் தொடுத்த சாவின் பயங்கரப் படுகர் நீந்தித்
திரு_அருள் உய்யக் கொண்ட செல்வன் ஓர் திடர் வந்து உற்றான்
மருவும் அ நிசியில் தொக்க மை இருள்_கடலை நீந்தி
உரு வெளி திகழ்த்தி வெய்யோன் உதய மால் வரை வந்து உற்றான்

#66
நைவரு மரணோபாதி நனி தொகும் படுகர் வைப்பில்
கைவரு கலக்கம் நீங்கிக் கருது நூல் நெறி திகழ்த்தும்
தைவிக அருளே போல தமப் பிழம்பு இரிய நூறி
உய்வு அளித்து அருக்கன் கீழ்-பால் உதித்தனன் ஒளியை வீசி

#67
கண்டனன் உதயத் தோற்றம் என்பது என் ககனத்து ஊடே
செண்டு எனச் சுழன்று நீங்காத் தெருமரல் உழந்து தேய்வுற்று
உண்டு-கொல் இனி மற்று இங்கே உறையுள் என்று ஊசலாடும்
எண் தகும் உயிரைத் தொண்டன் எதிர்ந்தனன் என்பது அல்லால்

#68
அலகு_இலா மரணோபாதி ஆழியின் கரையைக் கண்டு ஆங்கு
உலகு எலாம் திகழத் தோன்றும் உதயத்தின் ஒளியைக் கண்டான்
விலக_அரு நாச_மோசம் விலக்கி அன்று இரவு காத்த
இலகு பேர்_அருளை எண்ணியெண்ணி அஞ்சலித்தான் ஏத்தி

#69
இருள் புலர் காலை வான் நாட்டு இறைவனைப் பரவி உள்ளம்
தெருள் உறீஇத் தான் வந்து உற்ற திடர் நின்று திருமி நோக்கி
வெருளுறும் இரவில் தொக்க வெவ் இடர்ப் படுகர் முற்றும்
மருள்_அறக் கண்டுகண்டு மலங்கினான் மறந்தான் தன்னை

#70
தேறினன் உயிர் தந்து உய்த்த திருவுளச் செயலைச் சிந்தித்து
ஆறினன் பிராண தாபம் அருள் துணை உரத்துப் பற்றி
வேறு இனிக் காலம் தாழ்த்தல் மிகு பிழை என்று வல்லே
தூறு அடர் மரண வைப்பின் சூழலைத் துருவிப் போனான்

#71
சுருங்கு நூல் வழியைப் பற்றித் தூயவன் முன் செல் காலை
மருங்கு எலாம் கண்ணி மாய வலை சுழல் பொறிகள் மல்கிப்
பெரும் கிடங்கு உளை செங்குத்துப் பிறங்கல் என்று இனைய தொக்கு
நெருங்கு பல் விலங்கு கிட்டி நின்றுநின்று உழல்வ கண்டான்

#72
புகல்_அரு நாச_மோசம் பொதுளி வீற்றிருக்கும் இந்த
இகல் உறு மரண வைப்பில் இரவு பட்டு உழலா வண்ணம்
பகல் ஒளி திகழ்த்திக் காத்த பரம காருணியம் உள்ளிக்
ககன நாயகனைப் போற்றிப் படுகரின் கடை வந்து உற்றான்

#73
மிருத்துவின் அந்தத்து உள்ள வியன் இரும் பிலத்துள் மேய் ஓர்
திருத் தகு ஜீவ பாதை சிதைத்திட முயலும் தீயர்
வருத்தி வேதியரைக் கொன்று ஊன் சுவை பெறும் மறவோர்-தம்மில்
கருத்து அழிந்து உழல் இரண்டு கள்ள வல் அரக்கர் உண்டால்

#74
இங்கு இவர் இருவரும் பண்டு எண்_இல் யாத்திரிகர் ஆவி
நுங்கியோர் உகுத்த சோரி நொதிப்படு கிடங்கும் தூய
அங்கம் வெந்து உக்க சாம்பல் குவைகளும் அகில லோகம்
எங்கணும் தெரியச் சாக்ஷி இயம்புவது இன்று-காறும்

#75
பாவியர் இருவர்-தம்மில் பகல்_குருடு ஆய தீயன்
ஜீவனுக்கு இறுதி காட்டும் சிலேட்டுமம் தொடங்கி நைவன்
கோ இயல் அழித்த மற்று ஓர் கொடியவன் ஆற்றல் குன்றிச்
சாவடிப்பட்டு யாக்கை தளர்ந்தனன் முதுமை தாக்க

#76
அடங்கினர் அனர்த்தம் செய்யும் அரக்கர் ஓர் இருவரேனும்
மடங்கல் ஏறு அனையான் கிட்ட வயோதிக வைரி ஆய
படம் கிளர் அரவு சீறிப் பணிக்கு அரும் பழிச்சொல் என்னும்
விடம் கலுழ்ந்திட எண்ணாது வேதியன் நெறியில் போனான்

#77
மல்லல் கூர் பரம சீயோன் மலைக்கு அதிபதியாம் தெய்வ
நல் அருள் துணைமையாலே நவில_அரு மரணச் சூழல்
எல்லையைக் கடந்து ஓர் கானத்து இறுத்தனன் நாச தேச
அல்லலைக் கடந்து வந்த ஆரணக் கிழவன் அம்மா

#78
அலை புரண்டு அனைய துன்பம் அடரினும் அழலைக் காலும்
மலை என மரணம் கிட்டி மலையினும் அருள் பேறாக
நிலையுறு மனத் திட்பம்-தான் நெஞ்சுறத் திகழும் ஆயில்
கலை மதிக் கதிர் முன் உற்ற இருள் எனக் கழிதல் கண்டாம்

#79
வன்பு உறு மரண வைப்பை அகன்ற பின் மறை_வலாளன்
முன்பு செல் நிதானன் நட்பை முயலுவான் நாட்டம் வைத்தான்
மன்பதை உலகில் ஆவி வதைபடு வறுமை ஆதி
துன்பு உறழ்ந்தவர்க்கே அன்றோ தோன்றும் நல் நிதான புத்தி
** மரணச்சூழல் இறுத்த படலம் முற்றிற்று

@4 நிதானி நட்புப் படலம்

#1
மெய் ஆரண வித்தகன் வெவ் இடர் சால்
மை ஆர் மரணாடவி வைப்பை ஒரீஇ
மொய் ஆர் அளி இன் இசை முற்றிய ஓர்
உய்யான வனாந்தரம் உற்றனனால்

#2
வான் நாடி வரும் பிரயாணிகள் தாம்
கான் நாடிய மெய் வழி கண்டு அறியக்
கோன் நாடி அமைத்த செய்குன்று இவரா
நூல் நாடிய வேதியன் நோக்கினன் முன்

#3
நேர் ஆறு பிடித்து நிதானி எனும்
பேராளன் நெறிப்படு பெற்றி-தனைக்
கூர் ஆர் விழி கொண்டு குணித்து அணுகிச்
சீராளன் அடுத்து இது செப்புவனால்

#4
அருமைத் துணையே இ அரோக வனத்து
ஒருமித்து வழித் துணை உற்று இயையத்
தருமக் கிருபாகரர் தந்த அருள்
பெருமைப் பிரசாத நலம் பெரிதே

#5
நம் ஆவியும் ஆக்கையும் நம் பொருளும்
அம்மான் அடிக்கு அர்ப்பணம் ஆக்கிடினும்
கைம்மாறு உகவாது கசிந்த அ அருட்கு
இ மாறு அணுவேனும் ஒர் ஈடு-கொலாம்

#6
என்று இன்னன ஓகையொடு ஈசன் அருள்
நன்று உன்னி வழுத்தலும் நன்று இது எனா
நின்று உன்னி நிதானனும் நெஞ்சம் மகிழ்ந்து
இன்று உன் துணை வாய்த்தது எனக்கு எளிதோ

#7
என்றே வழி நாடினன் என் குடி விட்டு
அன்றே விழைவுற்று உன் அரும் துணையை
இன்றே வரை நாடினன் எய்துகிலேன்
நன்றே இவண் நேர்ந்தது நான் உனையே

#8
அருளே எனை இ வழி ஆக்கி எனக்கு
அருளே உன் அரும் துணை ஆக்கியதால்
அருளே துணை முற்றும் நம் ஆர்_உயிருக்கு
அருளே அலது ஒன்று இலை ஆதரவே

#9
புத்திக்கு ஒரு போதக தந்தை இறை
பத்திக்கு ஒரு பாலனை ரக்ஷணிய
சித்திக்கு ஒரு நல் குரு தேசிகன் வான்
முத்திக்கு வழித்துணை முற்றிலும் நீ

#10
என்னா உனை நட்டனன் எம்பெருமான்
பொன் ஆர் கழல் நீழல் பொருந்தும் வரை
முன் நாடுதும் ஆரணம் முந்துக் எனாச்
சொன்னான் விநயத்தொடு சூழ்ச்சியனே

#11
வல்லார் திருவுள்ளம் மகிழ்ந்தபடி
எல்லா நலம் ஆகுக இல் ஒருவி
நல்லாய் இ வழிப் படு நாள் முதலாச்
சொல்லாய் வரலாறு தொடுத்து எனவே

#12
உள மலி உவகையின் ஒருங்கு கேள் என
வளம் மலி ஆரணக் கிழவ வான் உலைக்
களம் மலி கனல் மழை கவிழ்ப்பக் காசினித்
தளம் மலி சராசரம் சாம்பர் ஆம் எனா

#13
நாச தேசத்தவர் எவரும் நாள்-தொறும்
பேசினர் ஆயினும் பிழைப்பை நாடிலர்
மோச_நாசத்திலே முழுகிடா வகை
ஈசன் ஆர்_அருள் எனை இழுத்தது இ வழி

#14
விதி வழிப் பட்டனன் விசால வெள் இடை
நொதி வழி உறா வகை நுனித்து வந்து யான்
கதி வழிக் கடைத்தலை அடுக்கும் காலையில்
சதி வழி புகுத்தும் ஓர் தையல் தோன்றினாள்

#15
முச்சகம் மருள் மதி_முகத்தள் மோகன
நச்சு வேல் கரும்_கணி நறை வடித்து என
இச்சக மொழி இனிது இசைக்கும் ஏந்து_இழை
அச்ச நுண் மருங்குலாள் அலகைக்கு ஓர் துணை

#16
கேடு எலாம் ஒருவழித் திரண்டு கேழ் கிளர்
பீடு சால் உரு அமைந்து உழலும் பெய் வளை
நாடி உள் நினைப்பினும் கொல்லும் நஞ்சம் மிக்கு
ஆடவர் உயிர்ச் சுவை அறிந்த கூற்று அரோ

#17
நாமம் மோகாதுரி என நவிற்றும் அக்
காமினி மயல்படு கண்ணி குத்தி வந்து
ஏம நூல் நெறி இகந்து எனது மஞ்சம் உன்
சேம வைப்பாக் கொளின் செல்வர் நின்னில் யார்

#18
புவி படு சிற்றின்ப போக போக்கியம்
குவி படு மாளிகை குலவி என்னொடும்
துவிபடாது இள நலம் துய்த்தியால் உயிர்
அவிபடு-காறும் என்று அடுத்துக் கூறினாள்

#19
காதகி பகட்டிய கபட்டு நச்சுரை
ஈது இது என்று எடுத்து யான் இசைப்பதும் அதைக்
கேதம்_இல் குணத்த நீ கேட்பதும் மதி
பாதகம் மனக் கறைப்படுக்கும் என்பரால்

#20
மாம் தளிர் மேனியை மருட்டும் நோக்கினைத்
தேம் தள அரும்பினில் திகழ் புன் மூரலை
ஏந்து_இழை இச்சக மொழியை என் மனம்
நீந்த ஓர் நெடும் புணை நிகழ்ந்தது அவ்வுழி

#21
பணி விடத்து இள நலம் பகரும் பைம் தொடிக்
கணிகையர் கால் அடி கவிழ்க்கும் காம வெம்
பிணி கெழு மாந்தரைப் பிலத்து என்று ஓங்கிய
அணி கிளர் திரு_மொழி அது மற்று என்பவே

#22
நல்லுரை கடைப்பிடித்து ஐய நங்கை-பால்
செல் இரு விழிகளைத் திருகித் தீங்குரை
புல்லிடாது இரு செவி பொத்திப் பொள்ளென
வல்லிதின் விரைந்தனன் வலைக்குத் தப்பியே

#23
மாய மோகாதுரி என்னும் வம்பியே
ஏயென இகழ்ந்து அணில் ஏறவிட்ட ஓர்
நாய் எனக் குரைத்து உளம் நலிந்து நின்றனள்
சீயெனத் துரந்தனன் செலவை நோக்கியே

#24
என்ற போது ஆரியன் எம்பி மற்று இவள்
நன்று அறி விடலை யோசேப்பை நச்சிய
அன்று அவன் ஆர்_உயிர்க்கு அறுதி சூழ்ந்தனள்
வென்றி வேந்து அருளினால் விலகி உய்ந்தனன்

#25
அத் தகு திரு_அருள் ஆட்சியே உனை
இத் தலை புரந்தது என்று ஈசன் நாமத்தைத்
துத்தியம்செய்து இனிச் சொல்லுக என்றனன்
வித்தக நிதானியும் விளம்பல் மேயினான்

#26
ஆரணக் கிழவ சஞ்சல அடுக்கலின்
சார் அணவிய பொழுது ஆதி தந்தையாம்
பூரண நரை திரைக் கிழவன் போந்து பல்கு
ஓர் அணிப் படு மொழி கூறல் மேயினான்

#27
முகக்குறியால் ஒரு முத்தி யாத்திரை
உகக்குனை நூல் நெறி ஒழுகி என்பதும்
அகக் கண் நீ அருவருத்து அவனி வாழ்வு எலாம்
இகக்குனை என்பதும் எளிதில் தேர்ந்தனன்

#28
மண் உருவினை மருங்கு உறவு மண் உளை
மண் நுகர் வாழ்க்கையை மண்ணில் வைகுவை
மண்ணின்மண் ஆகுவை மரித்தி இது ஓரலை
மண்ணினை இகத்தி என் மதி கொண்ட ஏழை நீ

#29
கையக வெண்ணெயைக் கருதிடாது போய்
நெய் அகம்-தொறும் வினாய் நேடுவார் இனே
வையக வாழ்வினை வரைந்து வான் உறு
மெய்யக வாழ்வினை விழைவை நன்று அரோ

#30
பாழி அம் புவி நலம் பழுத்த என் மனைக்கு
ஊழியம் செய மனம் ஒருப்பட்டாய் எனின்
ஆழியே அனைய மூவாசை மாதரை
வாழிய நினக்கு யான் மணம் முடிப்பனால்

#31
சிற்றின்ப கருமமே அன்றிச் செய் வினை
மற்று இலை என்பது மனக்கொள் மா தவம்
முற்றி நீ மறுமையின் முத்தி மா நலம்
பெற்றிட எத்தனை ஊழி பேருமோ

#32
பூதலம் அனைத்தும் ஓர் புணர்ப்பினால் தரும்
சூது மா நகரிடைத் துன்னி யான் பெறும்
மாதரை மணந்து இறும்-மட்டும் வாழ்க எனக்
காதலித்து என் உளம் கரையப் பேசினான்

#33
தெருண்ட மேலவன் எனத் திருகி என் மனம்
மருண்டது அங்கு அவன் நய வசனத்து ஆயினும்
இருண்ட மூஞ்சியின் மறை எழுத்துக் கண்டு உடன்
வெருண்டு அகம் தெருண்டது வெறுப்புக் காட்டியே

#34
ஐய கேள் பழைய மானுடனை அங்கு அவன்
மை உறு கிரியையை வரைந்து நீங்கு எனும்
செய்ய வாசகம் அது தெரியக் காண்டலும்
சையென இகழ்ந்தனன் தகுவது அன்று எனா

#35
இச்சகம் பேசி ஆள் ஆக்கி என்னை அக்
கொச்சை வன் சிறைப்படுத்து உயிரைக் கொள்ளுவன்
நிச்சயம் என ஒரு நினைவு தோன்றலால்
குச்சிதன் முகம் குறிக் கொண்டு நோக்கியே

#36
நின்னையும் கெடுத்து நீள் நிலத்தையும் கெடுத்து
என்னையும் கெடுத்தனை எனினும் ஏழையேன்
தன்னை ஆட்கொண்டது தம்பிரான் அருள்
முன்னையன் அல்லன் என்று உணர்தி முந்த நீ

#37
ஓசை நீர் உலகு அரசுரிமை நல்கினும்
ஆசை மாதரை மணம் ஆற்றுகிற்கிலேன்
நாச நின் மனைக் கடை நச்சுவார்-கொலாம்
ஈசன் ஓர் கடைத்தலை எய்தும் எம்மனோர்

#38
வருகிலேன் முதிய நின் வழிக்கொள்வாய் எனக்
கருகிய சிந்தையான் கனன்று உன் ஆர்_உயிர்
பருக ஓர் மறவனை விடுப்பல் பார் எனத்
திருகினான் உடலை என் உயிர் தியங்கவே

#39
ஆயிடை யாக்கை நின்று அகன்றதாம்-கொல் உள்
மேய பூருவ இயல் கூறு வேந்து அருள்
சாயலைப் பிடித்து நூல் தடத்தில் ஓடினேன்
போயினன் அறக் கொடும் கிழவன் பொங்கியே

#40
வல் விரைந்து அணுகினேன் உபாதி மல்கிய
கல் வரை கண்டு உளம் கலங்கிற்று ஆயினும்
ஒல் வகை அடிபெயர்த்து ஏறி ஓங்கலின்
செல்வ நந்தனவனச் சேக்கை சேர்ந்தனன்

#41
அக்கணத்து எரி முகன் அழலும் செம்_கணான்
கொக்கரித்து உரும் எனக் குமுறி அண்மி ஓர்
உக்கிரன் பணைக் கரம் ஓச்சி ஒல்லென
மிக்கு உரத்து ஓர் அடி அடித்து வீழ்த்தினான்

#42
கண்_இலான் மும்முறை கனன்று அடித்து எனை
மண்ணுற விழுத்தி அ முதுவன் மன்று உற
எண்ணினையன்று-கொல் என்னச் சீறினான்
உள் நிலவு எனது உயிர் ஊசலாடவே

#43
கூற்றம் இ உருக் கொடு என் உயிர் குடிக்க வந்து
ஏற்றது என் வினை விளை காலம் ஈது எனா
ஆற்றலன் ஆகி நெஞ்சு அழிந்து கண் கணீர்
ஊற்றிட ஆவி நொந்து உலைந்து போற்றியே

#44
பூரியனேன் உளம் புணர்த்த தீமையை
ஆரிய பொறுத்து அருள் அளித்துக் கா என
நேர் இயல் வரன் முறை நிகழ்த்த நெய் சொரி
வீரியக் கனல் என வெகுளி மூண்டதால்

#45
அவ்வயின் தயை அளி கருணை ஆர்_அருள்
திவ்விய அன்பு எனும் குணம் திரண்ட ஓர்
செவ்வியன் அடுத்து உளம் தெருட்டிச் செம்_கணான்
வெவ்விய கரத்து எனை விலக்கிப் போயினார்

#46
வழுத்து_அரும் பெரும் புகழ் வரதன் வந்து எனை
இழுத்து அருள் அளித்திடார் என்னில் வெம் சினம்
பழுத்தவன் கொன்று உயிர் பருகுவான் அன்றேல்
தொழுத்தை ஆக்குவன் சிறைப்படுத்தித் தூய்மையோய்

#47
நிண்ணயம் இது என நிகழ்த்தும் காலை அக்
கண்_இலான் கற்பனைக் கிழவன் காண்தகு
தண் அளிக் குரிசில் எம் ஜீவ தாரக
புண்ணிய மூர்த்தி என்று அறிதி புந்தியோய்

#48
கற்பனை நெறி கதி காட்டும் ஆயினும்
சற்பனை விளைக்கும் ஓர் சற்றும் நீங்கிடில்
தற்பரன் அருள் வழி சருக்கல் ஆயினும்
பொற்பு உறு நீதி வான் கதி புகுத்துமால்

#49
சாதனம் இழந்து யான் தவித்த அவ்வயின்
நீ துயர் உழந்தமை நினையும் காலை அத்
தாது உகு நறு மலர்ச் சரளக் காவணம்
சோதனை நந்தனச் சூழல் போன்ம் என்றான்

#50
அந்தணன் உரை அகத்து அழுந்த ஆரிய
விந்தை ஐங்காயத்தை விழியில் கண்டும் என்
சிந்தனை தெருண்டிலன் ஆண்டு தெய்விக
மைந்தன் என்று உணர்ந்தனன் பின்பு வள்ளியோய்

#51
வருத்தி என் ஆர்_உயிர் வதைத்த மற்று ஒரு
விருத்தனை முன்னரே அறிவன் வீட்டகத்து
இருத்தியேல் இ மனை எரி மடுப்பல் என்று
உருத்தனன் பூருவாச்சிரமத்து உற்று அரோ

#52
ஐய நின் உரையினால் அருளின் மாட்சியும்
மை அகல் மெய் விசுவாச நீதியும்
துய்ய கற்பனை அநுட்டிப்பின் சூழ்ச்சியும்
ஐயம் இன்று ஆக என் அகம் தெருண்டதால்

#53
எந்தை அதன் மேல் வழி நிகழ்ந்தவை இனிக் கேள்
நந்தனம் விடுத்து மலையுச்சி நடை கூடி
வந்த அமையத்து இரு மடங்கல் அரி ஏறு
பந்தமொடு உறங்கு செயல் கண்டு உயிர் பதைத்தேன்

#54
மத்தியுறு நண்பகலினும் கத மடங்கல்
நித்திரை செய் நீர்மையினும் நெஞ்சு துணிவுற்றே
அத் திசை அகன்று திரு_மாளிகையை அண்மிப்
பத்தி மறுகு ஊடு திகழ் பாதை கொடு போந்தேன்

#55
சஞ்சல மலைச் சிகரி-நின்று இழி தடத்தில்
எஞ்சிய முகத்து அருள்_இலான் இதயகோட்டன்
நெஞ்சு உற அணைந்து இ நெறி நீசம் உறும் ஏழைப்
பஞ்சைகள் பயின்றிடும் ஓர் தாழ் படுகர் உய்க்கும்

#56
சீரொடு சிறப்பு இலது செல்வர் புக ஒல்கும்
பேர் உளது இகழ்ச்சி உறு பெற்றியது நீ அக்
கார் இருள் தொகும் படுகரில் கவிழ்தியேல் நம்
ஊர் அவமதித்து நகைசெய்யும் இஃது உண்மை

#57
திரு_இலிகளோடு நெறி சேர்தல் மதி_அன்றால்
கருவன் இறுமாப்பன் அகங்காரியோடு இடம்பன்
பெருமிதன் உனக்கு உறவர் ஆயவர் பிணங்கிப்
பொரு_அரிய மூடன் என எள்ளுவர் பொறாரால்

#58
நம் இன_ஜனங்கள் செலும் நல் நெறி வினாவின்
அம்ம பெருமைத் திடரின் மீது செல மார்க்கம்
எம்மவர் குழாம் கொள் அதலத்தின் இனிதின் உய்க்கும்
செம்மையுறு மேலவர் செலும் பரிசும் ஓர்தி

#59
இலகு புகழ் மேன்மை உலகு இன்ப சுகம் எல்லாம்
குலவு நெறி விட்டு இழி_குலீனர் நெறி கொள்வாய்
உலகர் உளது என்பது இலை என்னில் உலகுக்கு ஓர்
அலகை இவன் என்பர் இது அறிந்திலை-கொல் என்றான்

#60
கோணிய மனத்தன் இது கூறலும் மறுத்துச்
சேண் நிலவு பூபதி திகழ்த்து நெறி சேர்வல்
கோள் நிலைதிரிந்து உலகு குப்புறுவதேனும்
நீள் நிரையம் உய்க்கும் நெறி நேர் அடிபெயர்க்கேன்

#61
என்று அருள் வழிப்பட முயன்று உளம் இசைந்தேன்
அன்று கிளை நட்பு உரிமை ஆய உறவோர்க்குப்
பொன்றினவன் நான் அவர் எனக்கும் அது போல்வர்
இன்று அவர் வழிப்படுவது எங்ஙனம் அடுக்கும்

#62
மாய இருளோடு சுடர் வான் பரிதி காலும்
சே ஒளி மடுத்து உறவுசெய்யும் எனில் அன்றோ
பேய் அடியரோடு உயர் பெருந்தகை தொழும்பர்
ஆயவர் பரிந்து உறவுசெய்வர் எனலாமால்

#63
ஈது வலம் ஈது இடம் எனக் கை அறியாத
பேதையர் புகழ்ந்து துதி பேசிடினும் என்-கொல்
ஊதியம் இகழ்ந்திடினும் உண்டு படுமேயோ
சேதம் இலை ஊர் அவமதிப்பில் ஒரு சிந்தை

#64
கோட்டம் உறு தாழ்மை உயர் மேன்மை நிலை கூட்டும்
கேட்டிடை விழுத்தும் நனி கேதம் உறு சிந்தை
மேட்டிமை இது ஓர்ந்து மறை வேதியர் செல் தாழ்மைப்
பாட்டையை விழைந்தனன் இ மேட்டு நெறி பாரேன்

#65
என்று அறுதி கூறி அயல் ஏகு என விடுத்துத்
துன்றிய உபாதி தொகு சூழலை ஒரீஇப் பின்
வென்றி தரு தாழ்மை நிலம் மேவி விலகாமே
மன்றல் நகராதிபனை வாழ்த்தி வழி வந்தேன்

#66
மட்கி மதி குன்று அறி மடக் குடி நிலாவும்
வெட்கம் எதிர் வந்து எனை விடாப்பிடி பிடித்தே
கட்கம் என நெஞ்சு உருவி கைப்புரை தொடுத்தான்
உட்கி மறுகுற்றது ஒரு கன்னல் எனது உள்ளம்

#67
செத்த பின் வரும் பரம சிற்சுகம் எனக் கண்டு
உய்த்து உணர்கிலாது மனம் உட்கி உழல் தேவ
பத்தி நடை என்பது பயித்தியம் அலால் ஓர்
சத்தும் இலை என்பது எமர் சாசுவத கொள்கை

#68
மாசு_அறு குலத் தமரை வாழ்வை மதியாமே
நீசரொடு தாழ் படுகர் நேர்ந்து நடை கொள்ளல்
மோசம் அறியாத முழு மூட மதி அன்றிச்
சீசி அடிமைத்தனம் இது என்-கொல் இழி ஜென்மம்

#69
நாணலை குலப் பழியை நச்சு உறவின் மானம்
பேணலை நகைத்து உலகு பேசு படு நிந்தை
காணலை கழித்து எறிதி காமிய நலத்தைப்
பூணலை புவிப்படு புகழ்ச்சி சிறிதேனும்

#70
மேதினியிலே பிரபு இடீகர் அதி வீரர்
மா தகைய ஞானியர் வரம்பு_இலர் இ மார்க்கம்
மேதகையது_அன்று என வெறுத்தனர் நினைப் போல்
பேதையர் அலால் எவர் பிடித்து இழிவு பெற்றார்

#71
கேவலரோடு ஆலயம் மரீஇத் துதி கிளந்தும்
ஆவலின் வணங்கியும் அருள் குரவர் போதம்
மேவியும் உணர்ந்து இரு விழிப் புனல் சொரிந்தும்
பாவனைசெய் நாணிலி இது எத்தனை பழிப்பாம்

#72
செய் பிழை பொறுக்க என இரக்குதல் திருட்டில்
கை வரு பொருட்கு உரியர் கையுற வழங்கல்
பொய் வழி அரும் பொருள் புறத்து எறிதல் என்றும்
மெய் வழி மிடிப்படல் இது எத்தனை-கொல் வெட்கம்

#73
கானம் உழலும் கவரிமா உயிர் கழிந்தே
ஈனமுறும் ஓர் மயிர் இடர்ப்படுவதேனும்
ஊன் உடல் வளர்த்து உயிர் சுமந்து உலகு உலாவி
மானம் அழியப்பெறும் ஓர் வாழ்வும் உளதேயோ

#74
தலையின் இழிவுற்ற மயிரே அனையர் தத்தம்
நிலையின் இழிவுற்ற கடை என்று அறம் நிகழ்த்தும்
கலையை முசல் ஆக்ர மதி காட்டினை திகழ்த்திப்
புலையரொடு கூட்டுணவு இயைந்த பொழுதத்தே

#75
இத்தகைய வெட்கமும் இகழ்ச்சியும் இழுக்கும்
செத்து அனைய துன்பமும் உழக்க வரு தேவ
பத்தியை வெறுத்து உலக கேளிர் நடை பற்றிச்
சித்தம் மகிழ்க என்று பல செப்பினன் எடுத்தே

#76
இன்னவாறு இகலி வெட்கம் எனும் ஈனன் எதிரில்
துன்னி நின்று என் இதயம் சுட உரைத்த சுடு_சொல்
மன்னு ஜீவ வசனத்தினொடு மாறு கொளவும்
என் உளே நனி இனைந்து இனைய எண்ணினன் அரோ

#77
உலகர் மேன்மை என உன்னுவதை உன்னத நிலத்து
அலகு_இல் ஆதிபர் அகத்து அருவருப்பர் அற நூல்
விலகி மற்று இவன் விதிப்பது மெய் வேத விதி அன்று
அலகை துன்_மதி அளாய நர மேதை அசடால்

#78
மன்று இரக்ஷணை வழங்க வரு மா மறை கொடே
நன்று அருள் குமர நாயகன் நடுப்புரிவர் ஈது
அன்றி இ உலகு அகந்தை அறியாமை செரும் இப்
பொன்று புல் நரர்-கொல் அன்று எமை நடுப்புரிவதே

#79
வாவு கோடரம் அணங்கு உலவு மாலை மதியாது
ஓவு_இலாது உலகு வந்து தலை சூடும் உணர்வு_இல்
பாவ காரியர் பயித்தியம் எனா இகழு பத்தியைத்
தேவ பூபதி மதித்து உளம் உவப்பர் தினமும்

#80
சருவ லோகமும் ஒருங்கு எதிர் தடுத்த பொழுதும்
நிருவிகாரபதி வாக்கு நிலைநின்று நிலவும்
மருவு உயிர்ப்பு ஒருவழிப்பட மடுத்த பொழுதும்
பொரு_இல் மாருத கதிக்கு எதிர் புலப்படுவதோ

#81
வர மனோகரன் அடித் துணை மரீஇய வறியோர்
பரம செல்வம் உறு பாக்கியர் பகைத்த மறவோர்
தரம் இலாது உலக வாழ்வு உறு தருக்கர் எனினும்
உரம் இலாது உழல் அபாக்கியர் ஒருங்கு அடையவே

#82
அருளின் ஆய ஒரு செல்வம் அதி செல்வம் அதனைத்
தெருளின் ஆய பர ஞானியர் தெரிந்து திகழ்வர்
பொருளின் ஆய ஒரு பூதி இழி பூதி இதனை
மருளின் ஆய வழி பூரியர் மதித்து மகிழ்வர்

#83
மீது உறும் பரம ராஜ்ஜியம் விரும்பி முயல்வோர்
பேதை என்று உலகு இகழ்ந்து பழி பேசும் எனினும்
மேதை ஆய பர ஞானியர் எனா விபுதரே
காதலொடு புகழ்வர் நனி களிப்பு மிகவே

#84
என்று அகத்து உணர்வு எழும்பலில் எனக்கு எதிரிலே
நின்ற வெட்கி முகம் நோக்கி அட நீச_மதியோய்
இன்று உனக்கு இடமளிப்பன் எனின் ஈசன் ஒரு சேய்
அன்று எனக்கு இடமளிப்பர்-கொல் அருள் சரணிலே

#85
ஆன்ம ரக்ஷணை அழிக்க வரு சத்துரு உனை
நான் மதித்து உரை நவிற்றிடின் நலம் கொள் நடுநாள்
வான் முகத்து இரவி போல் ஒளி வழங்கும் மகிமைக்
கோன் முகத்து எதிர் விழிக்க அருள் கூடுவது-கொல்

#86
ஜீவ நூல் நெறி பிடிக்க மகி சிற்சபை முறை
ஆவலாய் அநுசரிக்க வரு காரணர் குழாத்து
ஓவு_இல் கூட்டுறவு கொள்ள உளம் ஒல்குவன் எனில்
தேவ ஆசி அருள் மல்கு வகை யாது தெரியேன்

#87
நன்மை செய்ய எனின் உட்கி மனம் நாணி நலிவை
தின்மை செய்ய எனின் முன்னிடுதி சிந்தை திருகாய்
புன்மையோய் கடிது போதி அயல் போதி என வன்
சொன்மையால் உற வெருட்டுபு துரந்தனன் அரோ

#88
நின்றிடாது படு நீச மதி நீள் நெறியில் என்
பின்தொடர்ந்து அருகு இடைக்கிடை பிதற்றி வரவும்
வன் திறல் கொடு விழுத்தினென் நிலத்து மறியத்
தென் திசைக்-கண் நெறி கூடினன் விரைந்து சிறியேன்

#89
இகல் ஒழித்து உதய எல் ஒளி தவழ்ந்து மிளிரும்
பகலில் ஆர்_உயிர் பதைக்க மரணப் படுகர் வந்து
அகில லோக சரணாலையர் அருள் துணைமையால்
சகல விக்கினமும் நீந்தினன் இது என் சரிதமால்

#90
என்ன நல் மதி நிதானி சொலி எந்தை இனி நீ
பன்னுக உன் சரிதம் என்று பணிவில் பகர்தலும்
பொன் நிலத்து உரை செவித்தொளை பொதுத்த பொழுதே
என் உளத்து உணர்வு எழுந்தது என எண்ணி மொழிவான்

#91
உரிமை நீத்து ஒளியை நாடி ஒரு மனை குறுகி ஆய்ந்து
வெரிந் உறு சும்மை வீழ்த்தி வெற்பு இடர் கடந்து இராவின்
அரமனை விருந்து உண்டு இப்பால் அழிம்பனை அமரில் போக்கி
மரண வைப்பு ஒரீஇ நின் நட்பின் வலி உற்றேன் மற்றும் கேட்டி

#92
உத்தம உபாதி ஓங்கல் சிகரி மீது ஒரு கோல் வேந்தன்
சத்திரம் அணைந்து ஓர் வைகல் தரித்துளை எனின் என் சொல்கேன்
முத்தி சாதனங்களாக முறைமுறை திகழும் காட்சி
எத்தனை அதிகம் காண்பை எத்தனை பரமானந்தம்

#93
கழிந்ததற்கு இரங்கல் என்னோ கானகத்து எதிர்ந்த நீசன்
பிழிந்து தீ விடத்தை ஊட்டும் பேய் எனப் பிடித்து நிந்தை
மொழிந்து உனைக் கெடுக்க முற்றும் முரணிய மூடக் கொள்கை
அழிந்திடச் சிதைத்த உன்றன் ஆண்மையே ஆண்மை ஆமால்

#94
துதி பெறு ஞானம் உள்ளார் சுதந்தர மகிமை ஆகும்
மதி_இலா மூடர்க்கு என்றும் வாய்ப்பது வெட்கம் என்னா
நிதி மிகப் படைத்த ஞானி நீதி வாக்கியத்தை ஓர்ந்து
சதி புரி வெட்கம் துஞ்சச் சமழ்ப்பதே தருமம் எம்பி

#95
மருள் உறு கங்குல் போது மாரணச் சூழல் நீந்த
அருள் ஒளி திகழ்த்தி என்னை ஆதரித்தது மற்று உன்னைத்
தெருள் ஒளி திகழ்த்திக் காத்த செவ்வியும் துவிதமாய
பொருள் எலாம் புரக்கும் பெம்மான் பூரண ஞானத்து ஆட்சி

#96
கோல் வழி இழுக்கா வேந்தன் குவலயாடவியில் எம்மை
நூல் வழி நடத்திக் காத்த நுவல்_அரும் கருணை நம்பி
மால் வழி விழாது வல்லே மானத தியானத்தோடு
மேல் வழி பிடித்தும் என்னா இருவரும் விரைந்து சென்றார்
** நிதானி நட்புப் படலம் முற்றிற்று

@5 அலப்பனை வரைந்த படலம்

#1
உலப்பு_இலா ஆதி மூலத்து ஒரு பரஞ்சுடரை நாடிப்
புலப் பகை களைந்த வேத புங்கவர் குழாத்தனேனும்
நிலப் பொறை ஆகி நுண் நூல் நிண்ணயம் கருத்துள் ஊன்றா
அலப்பன் என்று ஒரு பேர் பெற்ற அசடன் அங்கு அவர் முன் சென்றான்

#2
சேய்மையின் விளங்கக் கண்ட தேகந்தான் கிட்டக்கிட்டத்
தேய் மதி போலக் குன்றித் தேசு அழிந்து உரு வேறாக
நோய்மை மிக்கு உடையான்-கொல்லோ இவன் என நுனித்து நோக்கி
ஆய் மதி நிதானி ஒல்லை அலப்பனை உசாவித் தேர்வான்

#3
பூருவ தேசம் யாது பொரு_அரு நாச தேசம்
ஊர் எது சள்வாய்க்கோட்டம் உறுவது எங்கு உம்பர் நாட்டுக்கு
ஆர் உளை குமரேசன்-பால் ஆவல் என் இரக்ஷை வேண்டி
நேருமோ ஒன்றித் தேகம் நேரும் என்று உரைப்பதானான்

#4
இத் தகு துணை எனக்கு இங்கு இசைந்தது எத்தனை மகிழ்ச்சி
உத்தம வழி தோன்றாமே உவந்து செல்வதற்கு உபாயம்
பத்தி மார்க்கத்தர் ஆய பவித்திரரோடு செய்யும்
மித்திரம் கலந்த சம்பாஷணையினில் வேறு ஒன்று உண்டோ

#5
முன் முகம் அறியேன் உன்னை ஆயினும் முனிவு ஒன்று இல்லா
நின் முகம் கண்டும் நேரே வினவிய நேர்மை ஓர்ந்தும்
என் முகம் களித்த காட்சி எதிர்ந்தனை பளிங்கே போலத்
தன் முகம் காட்டும் நெஞ்சத் தன்மையை என்பர் சான்றோர்

#6
சொல் மதி தெருளார் ஆகிச் சூழ்ச்சி_அற்று உழலும் மாந்தர்
நன்மையும் பயனும் நாடார் நகைத்து உரையாடி அந்தோ
பொன்மையாக் கிடைத்த வாழ்நாள் பொழுது போக்கடிப்பர் என்-கொல்
ஜென்ம சாபலியம் ஈது என் சிந்தைக்கு ஓர் பெரிய துக்கம்

#7
என்னலும் நிதானி வீணே இறைப்பொழுதேனும் போக்கல்
கொன்னுரை வழங்கல் ஆதி கொடும் தொழில் துக்கம்துக்கம்
பொன் நிலத்து அரசன் சீர்த்தி புனைந்து உரையாடிப் போக்கும்
இ நிலத் துரிய வைகல் இருமைக்கும் உறுதி என்றான்

#8
ஆங்கு அது கேட்டு நின் சொல் அனைத்தும் நல் உணர்ச்சி மூட்டும்
பாங்கு உள நவீனச் செய்தி பயக்கும் மாந்தருக்கு இன்பு என்னின்
வீங்கு புண்ணிய லோகத்து விசேட மான்மியப் பகர்ச்சி
ஓங்கிய பரமானந்தம் ஊட்டுதற்கு ஐயம் உண்டோ

#9
இம்மையின் நிகழ்ப எல்லாம் இறுதலின் மாயையே ஆம்
அம்மையின் நிகழ்வ எல்லாம் அழிவு_இல் மெய்ப்பொருளாம் ஆயில்
செம்மை சேர் கதியைச் சேரத் திகழ் மறுஜெனனம் வேண்டும்
நம்மை ஈடேற்றொணா தானம் சுய_நீதிப் போலி

#10
முத்தி நாட்டு இளைய கோமான் முறை பிசகாது இங்கு உய்த்த
நித்திய_ஜீவன் மல்கும் நீதியே நமக்கு வேண்டும்
இத் தகு நீர்மை உள்ளி எடுத்துரையாடஆட
உத்தம தேவ பக்தி ஒளிரும் நன்கு இதயத்து ஓங்கி

#11
மெய்க் குணப்படுதல் உண்டாம் விசுவாசம் வளரும் பாவச்
சிக்கு அறும் பிரார்த்தனைக்குச் சிந்தனை திருந்தும் துன்பம்
துக்க நோய் பகையே ஆதி சோதனைக்கு இடையாது உள்ளம்
பக்குவப்படும் நம்பிக்கை பலப்படும் அருள் மெய் வாக்கின்

#12
மித்தையை நம்பி அந்தோ வீண் அவபத்தி என்னும்
பித்தம் மிக்கு அவித்தை மூடிப் பிரபஞ்சத்து உழலும் மாந்தர்
நித்திய_ஜீவ மார்க்க நெறி பிடித்து உய்ய வேத
சத்தியம் திகழ்த்தும் வாஞ்சை தழைக்கும் மெய்ப் பத்தியாலே

#13
குன்றுறா நித்ய_ஜீவன் குலவுதற்கு இருதயத்தில்
நன்று செய் கிருபை அன்பின் நனி விசுவாசம் வேண்டும்
இன்றமையாது என்று ஓராது எத்தனை ஏழை மாந்தர்
பொன்றுவர் தமக்கே சொந்தப் புண்ணியம் உள என்று ஓம்பி

#14
கோட்டம்_இல் தேவ பத்தர் கூட்டுறவு அடைந்து செய்யும்
தாட்டிகமான சம்பாஷணை பெறாமையினால் இந்தக்
கேட்டினுள் படுவர் என்னே கிளர் இரும் சிறகர் இன்றி
மோட்டு உயர் விசும்பை முட்ட முடிவதோ பறவைக்கு என்றான்

#15
தைவிக கிருபை ஒன்றே தணப்பு_இலா அவித்தை நீக்கி
மெய் விளக்கிடும் எஞ்ஞான்றும் வித்தகப் பயிற்சியேனும்
கை வரு கல்வியேனும் கதி நலம் காட்டாது என்ற
பொய் வரை புந்திக்கு ஒல்லை புகலுமால் அலப்பன் மாதோ

#16
உன்னதத்து அருள் ஒன்று இன்றேல் உறு நலம் யாதும் இன்றாம்
பன்_அரும் தூய நீதி பகர் விதி நிடேதத்தாலே
துன்னும் என்று உழல்வோர் எல்லாம் துரிய நாயகன் ஓர் செம்மல்
சந்நிதி-நின்று வீழ்ந்த சழக்கர் என்று உரைக்கும் வேதம்

#17
மற்று இதே போலும் தூய மறைமொழி அநேகம் தீரக்
கற்று அறிந்துளன் யான் என்னும் காலை நல் நிதானி நன்றாம்
எற்றி யாம் குறிக்கொண்டு இன்னே எடுத்துரையாடத் தக்க
நல் திறம் என்னலோடு நாக்கு அடிப்பு இரட்டிற்று அன்றே

#18
இக_பரம் விதி நிடேதம் எழில் இரக்ஷணிய வேதம்
மகபதி அருள் சன்மார்க்கம் வைதீக லௌகீகங்கள்
ஜெக விசேடங்கள் காலத் திரையங்கள் தெரிக்க வல்லேன்
தகவு_உளாய் விரும்பிற்று ஒன்றைச் சாற்றுதி நிகழ்த்த என்றான்

#19
அவ்வயின் தனித்துச் சென்ற அறம் கிளர் மறையோன் கிட்டிச்
செவ்விய நிதானி பேச்சுத் திறம்_உளான் இவனைத் தேரின்
இ வழி பிடித்த நங்கட்கு ஏற்ற ஓர் துணைமை போலும்
ஒவ்வும் ஒவ்வாது என்று ஊகித்து உன் கருத்து உரைத்தி என்னா

#20
தன் உயிர்_தோழன் பேச்சுச் சாதுரியத்தில் சிக்கி
இ நிலை உசாவினான் இங்கு என்பதை அகத்துள் கொண்டு
புன்னகை கோட்டி என்-கொல் மருண்டனை புலமை மிக்கோய்
பன்னுவல் கேட்டி என்னப் பகருவான் பனவன் மாதோ

#21
தெருட்டும் அடியவர் போலத் திரு_வசனம் எடுத்துரைத்து
மருட்டுவான்-தனை அறியா மனுக்கள்-தமை மனம் அடங்காத்
திருட்டு வாய்ப் பழக்க மொழித் திறம் கண்டு திகைத்தனை நீ
அருள் திறனை ஒருசற்றும் அறியாத அசடன் இவன்

#22
தன்னை இவன் அறிகின்ற தகைமையினும் பதின்மடங்கா
நன்னர் அறிகுவன் வாழ்க்கை நாச தேசத்து ஒருசார்
என் அயலூர்க் குடி தந்தை வாசாலன் இவன் அலப்பன்
இன் இசை வாய் மொழி மதுரம் இதயம் எட்டிக்கனி ஆமால்

#23
உருக் கவினிச் சேய்மையினின் உவப்பு அளிக்கும் அண்மை உற
அருக்களிப்பைத் தரும் சில சித்திரப்படங்கள் அவை போலும்
உருக்கி மனம் உவப்பிக்கும் உரை ஆதி புறக் காட்சி
அருக்களிப்பைத் தரும் இவன்-தன் அகக் காட்சி அடுப்போர்க்கே

#24
பரிகசிப்பு என்று உளம் கோடல் பரமார்த்தம் பழிப்பு_இன்றால்
தெரிகுவர் என் சிந்தையை நம் தேவர் பிரான் முறைதவறி
தரியலர் ஆயினும் குற்றம்சாற்ற மனம் துணியேன் யான்
பெரிய பிழை அந்நியர்-தம் பிழை காணும் பிழை அன்றோ

#25
ஏதம்_அறு திரு_தொண்டர்க்கு இசைய நடிப்பது போலச்
சூது பொரு கழகம் மதுக் கடை சோரர் தொக்க குழாம்
தீது அகலா விலைமாதர் சேரி இவற்று அவரவர்க்குப்
பேதம்_அற நடித்து இசையப் பேசு சமர்த்து_உளன் இவன் காண்

#26
மன்றாட்டு மனஸ்தாபம் விசுவாசம் மறுஜெனனம்
என்று ஆய உபதேச இயலை விரித்துரைப்பன் அவற்று
ஒன்றானும் தனது இதயத்து உணராக் கற்று அறி மோழை
குன்றாத தீ_கருமி குணம் காணாக் கொடும் தோஷி

#27
பண்டை மறைத் திரு_வசனம் படித்து உணர்ந்தும் பயன் அடையாச்
சண்டாள வறிய ஹிருதயம் தனக்கு யானைத்தீ
உண்டு உதிர்ந்த விளங்கனியும் உருப்படுதற்கு உதவாமே
கொண்ட கருப் பயன் இழந்த குடம்பையுமே நிகர் குணிக்கின்

#28
விண்டு இயற்று மறை வினைகள் வெளிப்படுதற்கு அஞ்சும் இவன்
அண்டர் நாயகன் எல்லாம் அறிகுவர் என்று அஞ்சுகிலான்
உண்டு சுகித்து உறங்குதலுக்கு உளம் கவல்வான் பாவி எனக்
கண்டு உணர்ந்து ஆவியில் கலங்கிக் கவலுவான்_அலன் கண்டாய்

#29
மா தகைய கிறிஸ்துவின் நூல் மார்க்கத்துக்கு இடறுகட்டை
வேதபாரகர்க்கு எல்லாம் விலக்க_அரிய பெரு நிந்தை
ஏதிலருக்கு அருவருப்பாம் இல்லவர்க்கு மனக்கசப்பு
பூதலத்துக்கு ஒரு பாரம் புலையன் இவன் நிலை தேரின்

#30
வஞ்ச மொழிக் குகை வாயில் வதிந்திருக்கும் மறை வசனம்
நெஞ்சகத்துத் தணவாமே நிலைத்திருக்கும் பைசாசம்
செஞ்செவே அவயவத்துச் செறிந்து இருக்கும் பல தீமை
சஞ்சல நித்திய நாசம் தரித்திருக்கும் இவன் அடியில்

#31
மித்திரரை உறவினரை வேலை புரி மாக்களைத் தன்
புத்திரரை மனையாளைப் புறத்தாரை அகத்தாரைச்
சித்திர மா மதி மருட்டித் தேசிகன் போல் தனைக் காட்டும்
எத்தன் இவன் இசை போய எத்தரையும் எத்துவன் காண்

#32
ஆக்கையும் ஜீவனும் வெவ்வேறு ஆயினும் ஒத்திருப்பது போல்
வாக்கொடு செய் கருமங்கள் மாறுபடாது இருத்தல் கடன்
வாக்கொடு செய் கருமங்கள் மாறுபடு வறு மாற்றம்
ஆக்கை நிலைகுலைந்து விழுந்து அழுகும் முடைப் பிண நாற்றம்

#33
பார் உலகப் புலை ஒழுக்கில் படர்ந்து அழுக்குப்படியாமே
நேர் உறு நல் நெறி ஒழுகித் தனைக் காக்கும் நிலை சீயோன்
மேரு நகராதிபதி விருப்புறு மெய்த் தேவ பத்தி
சீருறு நல் நடை காண்டி மற்று அதனில் திகழ் ஜீவன்

#34
வித்து ஆகும் திரு_வசன முளை கிளம்பி விசுவாச
உத்தம வேர் அகத்து ஊன்றி உள் அன்பு கிளைத்து ஓங்கி
சுத்த நினைவு எனும் நறும் பூம் துணர் மலிந்து உன்னதம் தோயும்
பத்தி எனும் தருவினுக்கு ஓர் நன்னடக்கை பயனாமால்

#35
மின் பிறங்கு மழை முகத்துக் குமரேசன் வியன் உலக
மன்பதைக்கு நடுத்தீர்வை வகுக்கும் கால் விசுவாச
அன்பு உறழும் கிரியைக்கே அருள் கிடைக்கும் வெறும் பேச்சுப்
புன் பதருக்கு என் கிடைக்கும் எரி நிரையப் புழை அல்லால்

#36
பத்தி எலாம் சொல்லளவில் பரிணமிக்கும் அன்றி இவன்
குத்திரம் ஆர் நெஞ்சகத்தும் குடியகத்தும் பாழ்படுமால்
எத்தனையர் என்று உரைக்கேன் தவ வேடம் பூண்டு இவன் போல்
பித்து உலக மயல் அளைந்து புறம் பொதியும் பேதையரை

#37
அருள்வசத்தால் மனம் மொழி மெய் ஆன்ம_சுத்தி அடைந்து அன்றிப்
பொருள் உணரா வறு_மொழியால் புநர்_உலகில் பெறல்_அரிய
மருள்_அறு பேர்_இன்ப நலம் வாய்க்காது என்று அருள் மறையும்
தெருளுறு நன் மன_சான்றும் தெரிக்கின்ற திறம் ஓர்தி

#38
செய்யும் வினை ஒன்றாகச் செப்பும் மொழி பிறிது ஒன்றா
வையகத்து நடிக்கின்ற மறவோர்-தம் கூட்டுறவு
பொய் ஆய கனவிடத்தும் பொல்லாங்கு தரும் என்றல்
மெய் ஆய அறம் விளக்கும் வித்தக நூல் துணிபு என்றான்

#39
நுண் அறிவு பகுத்து உணர்த்தல் நுவலுகின்ற சொல் சுவை மெய்
எண்ண நலம் இழுக்காமே அலப்பன் இயல் எடுத்துரைத்த
பண்ணவனை மனதாரப் பழிச்சி நனி பரமார்த்த
நிண்ணயத்தைக் கடைப்பிடித்த நிதானி நிகழ்த்துவதானான்

#40
விரத மா தவத்தோய் நின் விழுத் தகு சீர் மொழி ஆய
அரதந தீபத்தால் இ அலப்பன் அகத்து இயல்பு எல்லாம்
கரதலாமலகம் எனக் கண்டு அறிந்து கருத்துற்றேன்
சரதம் உணர்த்திய உனக்கு ஓர் கைம்மாறு தர உளதோ

#41
செப்பு மொழித் திறம் அன்றிச் செய்கை நலம் படையாத
தப்புளி மற்று இவன்-தனக்குச் சாமியமாம் இரை மீட்புக்
கப்படி என்று இரண்டு அன்றி ஒன்று இருந்தும் கருதுங்கால்
துப்பு_இல என்று இழிவுற்ற சூகரமும் குறுமுயலும்

#42
அசப்பிய வாக்கியன் என்பது அறியாமே வழித்துணைக்கு
வசப்படுவன் இவன் என்னா மருண்டனன் என் செவி-வாயில்
பசப்பிய வீண் அலப்பு மொழி பாரித்த மதுரம் எலாம்
கசப்பு ஆயிற்று எந்தாய் உன் கட்டுரையின் வன்மையினால்

#43
ஏர் திருத்தி ஆழ உழுது எருப் பெய்து அங்கு உவர் கழியப்
பார் திருத்திச் செழும் சாலிப் பயிர் விளைப்பர் பணி_மாக்கள்
ஓர் திருத்தம்_இலரையும் மெய்யுணர்வு எழுப்பி உளம் புதுக்கிச்
சீர்திருத்தி இரக்ஷணியப் பயிர் விளைப்பர் ஜீவன் முத்தர்

#44
அறம் காட்டும் அலப்புறு வாய் அகம் காட்டும் அவயவங்கள்
மறம் காட்டும் மனத் துணிவு மற்று இவற்கு நன்மை எலாம்
புறம் காட்டும் எனினும் யாம் பொது நீதி அருள் ஞானத்
திறம் காட்டி ஈடேறத் தெருட்டுதல் நம் கடன் அன்றோ

#45
என்று இன்ன நிதானி எடுத்தியம்புதலும் மறைவாணன்
நன்று உனது கருத்து உண்மை நவின்றாலும் நலம் தோன்றல்
இன்று இவன்-பால் மாசுணத்துக் இன் அமுதம் அளித்தாலும்
கொன்று உயிரைக் கவரும் விடம் கொடுப்பது அதன் குணம் ஆமால்

#46
போய் அலப்பன்-தனைக் கிட்டிப் புரை_அறு மெய்த் தேவ பத்தி
மேய கிரியாசாரம் விமல அருள் மெய்யுறுதி
ஆயவற்றின் நுட்பம் விரித்து அறிவுறுத்து ஒப்புரை கொண்டு
வாய் அளவோ கிரியை மனை-வயின் உளவோ என வகுப்பாய்

#47
அருள்வசத்தால் ஒருகால் உள் உடைந்து உணர்வுற்று அகம்திரும்பித்
தெருளுவன் நல் நடை கூடி வழிக்கோடல் செவ்வியதாம்
இருள்வசத்தால் இணங்கானேல் எம்பி ஒருங்கு அ நிலையே
மருள் பிடித்த அவன் உறவை வரைவதுவே மரபு என்றான்

#48
ஒக்கும் இதே சூழ்ச்சி என உவந்து அலப்பன் அருகு அணைந்து
பக்குவமாய் உரை தொடங்கிப் பரன் அருள் மானவர் உளத்தின்
சிக்கறுத்து நிலைத்து ஊன்றி ஜீவ ரக்ஷை விளைக்கும் எனின்
அக் கிரியைத் திறம் எவ்வாறு அறிகுதும் நீ உரைக்க என்றான்

#49
சுத்த_மனத்தவன் உரைக்கத் துரு மலிந்த கரு_மனத்தான்
இத்தகைய வினாவினுக்கு ஓர் இரு வகை உத்தரம் உளவாம்
அத் தகைமை சுருக்கி இனிது அறைகுவன் நல் அருள் பேற்றால்
சித்தம் ஒரு முகமாகச் செப்புவன செவிக் கோடி

#50
மகத்துவ தைவிக கிருபை மக்கள் இருதயத்து அடங்கி
அகத்து இயல் தீ_வினைப் பகையோடு அமர் மூட்டும் திறத்தானும்
மகத்துவ மெய்ச் சுவிசேஷ மறைபொருளை வகுத்து உரைக்க
அகத்து ஊட்டும் அறிவானும் அருள் கிரியை வெளிப்படுமால்

#51
உத்தரம் மற்று இவற்றை விரித்துரைக்க விருப்பு உளை ஆயின்
வித்தரிப்பல் என நிகழ்த்த விழைவானை எதிர்நோக்கி
அத்தன் அருள் தீ_வினையை அருவருப்பித்திடும் என்றல்
ஒத்திருக்கும் போராட்டம் உள எனினும் ஒவ்வாதால்

#52
திரு விளக்கும் இரக்ஷணியத் திறம் தெரித்துத் தீ_வினையை
அருவருப்பித்து உளம் புதுக்கி ஆத்துமத்தை உயிர்ப்பிக்கும்
மரு இருக்கும் நறும் பிரச மலர் மறைந்தும் புறம் போந்து
பரிமளிக்கும் அது போலும் பரன் கிருபைச் செயல் காண்டி

#53
சொந்த மதிச் சூழ்ச்சியினால் சுய_அறிவால் புறம் பொதிந்து
பந்த வினை பகைப்பார் போல் பலர் பேசிப் பகட்டிடும் இ
விந்தையினைப் பனித் துறையில் விரி பகன்றை வெறும் துணர் என்று
அந்தரங்கத்து அருவருப்பர் அருள் கிரியைத் திறம் தெரிவார்

#54
உத்தமனைப் பழிசாட்டிப் பெரும் காமம் உளத்து அடக்கிப்
பத்தினியா நடித்து உரிய கணவனுக்குப் பகை காட்டும்
குத்திரையில் புறம் பேசி அகத்து அடக்கும் கொடு_வினையர்
எத்தனையர் தகும் காலம் இடம் தேடித் திரிகின்றார்

#55
புண்ணியன் உத்தர சுருதிப் பொருளை விரித்து உரைக்க வரும்
நுண் அறிவில் அருள் கிரியை விளக்கும் என நுவல்கிற்றி
விண் நிலவு பொருள் விளக்கும் மேதினிக்குத் தூரதிட்டிக்
கண்ணடி தன் அகப் பொருளின் நிலை தேரும் கருத்து உளதோ

#56
மல்கு தேவ வரப்பிரசாதமே
நல்கு மானத பாக்கியம் நன்கு உறப்
பல்கு கல்வியின்-பால் படு கேள்வியில்
புல்கும் என்றல் புலமையின் பாலதோ

#57
நெறி திகழ்த்திய நின்மலன் இவ் எலாம்
அறிதும் என்ற அடியற்கு நும் செயல்
பிறிது உறா வகை பேணுதிர் என்ற சொல்
அறிதி அல்லை-கொலோ மற்று அயர்த்தியோ

#58
துதி பெறும் திரியேக நும் சுப்பிர
விதி நிடேத விளக்கை அலர்த்தி என்
மதி விளக்குக மற்று அது காத்து யான்
கதி வழிப்படை கொள்வல் கருத்தொடே

#59
பேதையேன் பிரபஞ்ச மயல் அறப்
போதம் நல்குக பூரண வாஞ்சையாய்
வேத நூல் நெறி பற்றி விளியும்-மட்டு
ஆதியாய் அநுட்டிப்பல் அகத்தொடே

#60
வினை அறுத்து மெய் வீடு அருள் பாதையில்
எனை நடத்துக எம்பெருமான் அது என்
மன மகிழ்ச்சி என்று இன் இசை மன்னவன்
முனம் நிகழ்த்தும் முறை மறந்தாய்-கொலோ

#61
இத் திறத்து உரை கோடலன் யான் உனோடு
எத் திறத்தும் இணங்கலன் என்றியால்
வித்தகச் சுருதிக்கும் மெய் வேதிய
உத்தமர்க்கும் ஒவ்வாது உன் உரைத் திறம்

#62
அரிய நுண்பொருள் ஆய்ந்துளை ஆயினும்
தெரியகிற்றிலை தேவ கிருபையின்
கிரியை உண்மை கிளக்குவல் கேட்டி என்று
உரிய காதலின் ஓதுவதாயினான்

#63
மூண்டு எழும் கிருபைச் செயல் மொய்ம்பினைக்
காண்டல் செய்வர் அங்கைப் படு நெல்லியில்
ஆண்டகைக்கு இதயாசனம் ஆக்கிய
மாண்ட போதனர் வாய்மை மனக் கொள் நீ

#64
எவன் உளம் குடிபுக்கது எம்மான் அருள்
அவன் உளத்து இருள் ஆக்கிய தீ_வினைப்
பவ உணர்ச்சி கதிக்கப் படர் உறீஇத்
தவனமுற்று உள் உடைந்து தவிப்புறும்

#65
சீசி மும்மலச் சேட்டையுள் சிக்கிய
நீசனேற்கு உய்வு யாது என நேடிடும்
ஈசன் கோபம் எரிக்கும் என்று ஏங்கி உள்
ஊசலாடு உயிர்ப்புற்று உளம் கைத்து அழும்

#66
ஆய காலை அகத்து உறும் ஆத்தும
நாயகன் சரண் நாடும் நலம் கிளர்
நேயம் ஆர் விசுவாசம் நிலைப்படத்
தூய சற்கருமங்கள் துணியுமால்

#67
ஜீவ ரக்ஷை திருத்திய ஜேசுவை
ஆவலாய்ப் பின்தொடர்ந்து அடியார்க்கு உறும்
தேவ வாக்கின் நலம் பெறு சிந்தையின்
ஓவல்_இன்றி முயலும் உவந்து அரோ

#68
முத்தி இச்சை முதிர்ந்து முழுப் பரி
சுத்த வாஞ்சை இதயம் துதைந்திட
நித்தியானந்த நின்மல தெய்வத்தைப்
பத்தி செய்யும் உள் அன்பு பழுக்கவே

#69
ஈண்டு சொற்ற இவற்றொடு எம்மான் அடி
பூண்ட மெய் விசுவாசம் புலப்பட
மாண் தகும் பரிசுத்த வரம்புளே
காண்தகும் நடை காட்டும் கழறல் போல்

#70
புல்_ஒழுக்கம் ஒருங்கு அறப் போக்கியே
நல்_ஒழுக்கம் நவின்று நல் நூல் வழி
இல்_ஒழுக்கு இகவாமல் இரா_பகல்
செல் ஒழுக்கம் விடா வகை செல்லுமால்

#71
கோது_இல் உண்மை குலாம் முக்கரண மெய்ப்
போதம் மல்கு புனித சம்பாஷணை
சாது சங்கம் தலைப்படு கூட்டுறவு
ஆதி காதலித்து ஆற்றி வழிபடும்

#72
தனை வெறுக்கும் தனைக் கெடுக்கின்ற தீ_
வினை வெறுக்கும் விசுவசித்து அன்பொடு
முனைவன் போற்றி முறைப்படு செய்கையில்
நினைவில் காட்டி நிறுக்கும் மெய்ந் நூல் நெறி

#73
ஆய இத்தகு சீலம் அகம் புறம்
மாயம் இன்றி மலிந்திடின் மற்று அது
தூய தேவ கிருபைச் சுகிர்தம் என்று
ஏய தொண்டர் எடுத்து இசைப்பார் அரோ

#74
விஞ்சத் தன்னை வியந்து மெய் வேத நூல்
அம் சொல் கொண்டு பகட்டும் இம்பர் தம்
கஞ்சப் புல் நடை காண்-தொறும் காசினி
வஞ்சப் புல்லர் என்று எள்ளிடும் வையுமால்

#75
மற்று இ உண்மை மறுத்திடப் பாலதேல்
சொற்றி என்னவும் சொற்றிலை ஆதலால்
கற்று அறிந்து உரையாடும் கருத்தினோய்
செற்றம் விட்டு இது செப்பு எனச் செப்புவான்

#76
உள்ளம் தேரும் நம் உன்னத தெய்வமும்
தள்_அரும் மன_சாக்ஷியும் சாக்ஷியா
வள்ளல் ஆர் அருள் சத்தி உன் வாயிலோ
தெள்ளிது உள்ளும் சிறந்தனவோ சொலாய்

#77
மெய்யதாம் அருள் பேற்றினை மேதையோடு
ஐயம் இன்றி அநுபவித்து ஆய்தியோ
செய்ய வாய் மொழி போல நின் செய்கையும்
துய்ய ஆயினவோ பிறிதோ சொலாய்

#78
பத்தி உள்ளம் பழுத்து உளதோ அலால்
கத்து வாய் மொழி மட்டில் கனிந்ததோ
எத் திறம் கருத்து யாவும் புலப்படச்
சத்தியம் புகல்வாய் எனச் சாற்றினான்

#79
திருக்கு_இல் ஆரணன் செப்பிய செம் சொலாம்
உருக்கு செம்பு அலப்பன் செவி ஊடுறீஇக்
கருக்கு சிந்தையனாய் அகம் காந்தலின்
பொருக்கெனச் சில மாற்றம் புகலுவான்

#80
கற்றது அங்கை அளவு கல்லாதவை
எற்று நீர் உலகத்து அளவு என்பர் மெய்
உற்று அறிந்தவர் நீ அஃது ஓரலை
முற்று அறிந்தனை போல் மொழிகிற்றியால்

#81
குப்பைக் கீரை கொழும் கவடு ஓச்சினும்
கப்பல் பாய்மரம் ஆகும் கணக்கதோ
செப்ப_அரும் கலை தேரினும் எம்மனோர்க்கு
ஒப்புமோ சிறியாய் உன் உரைத் திறம்

#82
பேச்சுக் காலில் பிரானை இழுப்பதும்
சாக்ஷிக்கு ஆம் மன_சான்றினைக் கொள்வதும்
மூச்சுக்கு ஆயிரம் பொய்_மொழி முந்தும் வெள்_
வீச்சுக்காரர் குணத்தினின் வேறதோ

#83
தன் குற்றங்களைத் தான் அற நீக்கிய
பின் குற்றம் தெரிவார் பிறர்-பால் எனின்
என் குற்றம் அவர்க்கு என்று உலகு ஏத்துறும்
நன்கு உற்றார் சொலும் நாடலை நம்பி நீ

#84
பாதை காட்டும் வருத்தமும் பாழ்படும்
போது போக்கும் உண்டாம் எனப் புந்தியில்
காதலித்து உரையாடக் கலந்தனன்
சாதமுற்ற தருக்கி என்று எண்ணிலேன்

#85
கனவினும் துயர் கண்டு அறியா ஒரு
பனவன் என்று பகுத்து அறியாது நீ
மனவருத்தம் விளைத்திடும் வன்_சொலால்
வினவுகிற்றி இது என்-கொல் விவேகமே

#86
உரவு நூல் நெறி ஓதி உணர்த்திய
குரவனோ_அலை கொற்றவனும்_அலை
விரவு குற்றம் பிடித்தி வெறும்_சொலில்
கரவின் என் உளம் காணுதற்கு ஆரை நீ

#87
நன்று நன்று உன் வினாத் திறம் நான் அதற்கு
ஒன்றும் உத்தரம் சொல்ல உளம் கொளேன்
என் திறத்து வினாய இவற்றினுக்கு
உன் திறத்து உறு காரணம் ஓது என்றான்

#88
காரணம் கேட்டி ஆயில் கழறுவல் கனன்றிடாதி
ஆரணப் பயன் உள் கொள்ளாது அருள் மொழி அலப்பிக் கூறி
மாரணத் தொடரின் நீங்கா வாக்கு வல்லவன் என்று உன்னைப்
பூரணமாகத் தேர்ந்தேன் புரைபடு புன்மைச் சொல்லால்

#89
மருள்படு மனத்தோய் ஞான வரம்பு இகவாது செல்ல
அருள் பயன் யாண்டும் வேண்டும் ஆரணம் பயின்று கூறும்
பொருள் பயன் அடையாச் சொல்லின் போதம் எத்துணையவேனும்
இருள்படுத்திடும் ஈது அன்றி ஈடேற்றம் இயையும்-கொல்லோ

#90
அய்யகோ சொல்லிச் செய்யா அழி_மதி_படைத்தோய் நின்னை
மை_அறு தேவ பத்தி வாய்_மொழி வகுக்கும் போதே
செய்யுறு கருமம் யாவும் தீமையைத் தெரிக்கும் என்னா
வையகம் இகழ்ந்து பேசும் வசை செவிமடுக்காய் போலும்

#91
கள் உண்டு களித்தி புந்தி காமியாய்ப் பரத்தை போகத்
தள்ளுண்டு கழித்தி வாழ்நாள் அறன்_இலாப் பொருளை நச்சி
எள்ளுண்டு தினம் பொய்_ஆணை எத்தனை இடுதி பேயால்
நள்ளுண்டு கெடுதி இன்னும் நவிலுதி நாவில் பத்தி

#92
பத்தருக்கு ஒருவா நட்டம் பவித்திரர் ஆய ஜீவன்
முத்தருக்கு இலச்சை ரக்ஷை முயலுவார்க்கு ஒரு தடுக்கல்
இத்தனை கேட்டுக்கு எல்லாம் ஏழை நீ மருட்டிக் காட்டும்
குத்திர பத்தி என்று காரணம் கூறக் கேட்டேன்

#93
சொந்த_நாயகனை நீத்துச் சோர_நாயகனைப் புல்லிச்
சந்ததம் குலத்து நிந்தை சமைத்திடும் மகளிரே போல்
வெம் தொழில் விழும நச்சி வேதியர் குழாத்துக்கு எல்லாம்
நிந்தனை பெருக்கி ஆன்ம நேசரை அகத்து நீத்தி

#94
புனித சன்மார்க்கம் ஆய பொது விதி அநுட்டித்து ஈண்டு
மனித ஜீவரை ஈடேற்ற வந்த சற்குருவைப் போற்றிக்
கனி தரும் அன்பின் நன்மை கடைப்பிடித்திடுதி ஆயின்
இனிதுறப் பயன்படும் காண் ஏழை நீ எடுத்த ஜென்மம்

#95
சிற்றறிவு_உடையனேனும் செப்புரை எனது அன்று எல்லாம்
முற்று அறி கடவுள் சொல்லே மொழிந்தனன் முனிவாய்_அல்லை
இற்று இதே இரக்ஷைக் காலம் என்ற சத்தியத்தை உள்ளி
நல் திறம் நாடி உய்தி என்றனன் நல் நிதானி

#96
தீர்க்கன் மெய் வாய்மை கேட்டுத் தெருண்டிலன் அலப்பன் சிந்தை
ஊர்க் கதை கேட்டுத் தேராது ஒல்லை நீ நடுத்தீர்க்கின்றாய்
ஆர்க்கு இது பொருந்தும் நட்புக்கு அருகன் நீ அலை என் மேன்மை
பார்க்கலை போதி என்னாப் பன்னி ஏகினன் தன்பாட்டில்

#97
புலப்படும் ஆறு கொள்ளாப் பொறி_இலி அகத்துப் பொங்கி
அலப்பி ஆங்கு அகன்ற காலை ஆரணக் கிழவன் கிட்டிச்
சொலப்படும் உண்மை யாவும் துணிந்து வற்புறுத்திப் பேசிப்
பலப்பட முயன்றாய் நம் மேல் பாரித்த கடமை ஈதால்

#98
ஐய நீ சொற்றவாறே அருள் வழிப்பட்டோர் யாரும்
கையரைக் கடிந்து கூறித் தெருட்டுதல் கடனாக் கொள்ளில்
துய்யராய்த் திகழ்வர் அன்றேல் சுடு நெருப்பு இவர் நட்பு என்னா
மை_அறத் தெருண்டு தாமே விலகுவர் வாது ஒன்று இன்றி

#99
எவ்வம்_இல் உனது சிந்தை எண்ணினுக்கு இகல் அலப்பன்
வெவ்விய நடையும் பேச்சும் விரோதமாம் அறிதி என்னா
அவ்வயின் உரைத்தேன் நேர்ந்தது அறிந்தனை ஐய ஒன்றைச்
செவ்விதின் அறிந்து தீர்தல் சீரிது என்று உரைப்பர் செய்யோர்

#100
தன் நடை இகவான் ஆய சழக்கனோடு உறவுபூண்டு
பின் நடை பிறழ்ந்து சிந்தை பிணக்குண்டு பிரிந்து போதல்
நல் நடை அன்று இன்னேயே நழுவிய செவ்வி நன்றாம்
துன்_நடையவரை முற்றும் துறத்தி என்று உரைக்கும் வேதம்

#101
என்று இன மறை_வலாளன் மகிழ்ந்து உளம் எடுத்துப் பேச
நன்று அறி நிதானி ஐய நவிற்றிய உண்மை காத்துப்
புன் தொழில் இகந்து நன்மை புரிவனேல் கதி புக்கு உய்வன்
அன்று எனில் குற்றம் எல்லாம் அவனதே எனது அன்று என்றான்
** அலப்பனை வரைந்த படலம் முற்றிற்று

@6 ஞானாசிரியனைக் கண்ணுற்ற படலம்

#1
இனிது நூல் நெறி கடைப்பிடித்து இருவரும் எழில் கூர்
புனித ஜீவிய மார்க்க சம்பாஷணை பொருந்தித்
துனி தவிர்ந்து அரோகாடவி வழிக்கொடு தொடர்ந்து
தனிதம் ஆர்_அருள் பல நுகர்ந்து இறுதியைச் சார்ந்தார்

#2
ஆயிடைச் சுவிசேஷனாம் அருள் மறைக் குரவன்
சேய பங்கயத் திரு_முகம் திகழ்ந்திடத் தோன்றி
நாயகன் பெயர் வழுத்தி ஆசிகள் பல நவிலத்
தாய் எதிர்ந்த ஆன் கன்று எனத் தனித்தனி மகிழ்ந்தே

#3
அன்பின் அஞ்சலி பல் முறை அளித்தனர் அகம் கொண்டு
என்பு நெக்கு நன்று அறி மொழி இனியன இசைத்தார்
வன் பகைப் புலம் கடத்தி மெய்வழிப்படுத்து உயர் பேர்
இன்ப ஜீவனுக்கு ஈட்டியது உள்ளி ஏத்தெடுத்தார்

#4
எந்தை நின் பிரிந்து இ நெறி எதிர்ந்ததற்கு இடையே
வந்த விக்கினம் இதுஇது மற்று அவை தணந்த
விந்தை ஈதுஇது என்று எடுத்து யாவையும் விதந்தார்
அந்தணாளனும் இனிது கேட்டு அருள் மொழி வகுப்பான்

#5
காதல் மைந்தன்மீர் நும் பலவீனத்துக் கதித்து
மீதுமீது உற்ற விபத்து எலாம் ஒருங்கு அற வெருட்டி
மேதக ஜெயம் கொண்டனிர் மிக மகிழ்சிறந்தேன்
மா தயாபரன் வரம்பு_இல் பேர்_அருள் திறன் வழுத்தி

#6
வித்தினேன் அவை சேர்த்தனிர் விழுப் பயன் அருந்தி
இத் திறத்து இருவேமும் ஒன்றித்து இருந்தே முற்று
ஒத்து உளம் களித்து ஓகையுற்றிட உறும் ஒரு நாள்
எய்த்திடாது உயிர் இறுதி-மட்டு உஞற்றி நின்றிடு-மின்

#7
ஏசு நாயகன் திரு_கரத்து இரவியே என்னத்
தேசு மல்கிய அழிவு_இலா ஜீவ கிரீடம்
மாசு_அறத் திகழ்கின்றன காணு-மின் மக்காள்
பேசினும் பொருட்டாயது ஓர் எள்துணை பிசகா

#8
முளைத்த காதலின் வெதுப்புறீஇ முனம் பலர் ஓடித்
தளைத்த பாசத்தின் பிணிப்பினால் இடைக்கிடை தடுக்கிக்
களைத்து வீழ்ந்து உயர் கதி இழந்தனர் இது கருதி
இளைத்து நின்றிடாது ஓடு-மின் தளைப்பன எறிந்தே

#9
அலகை ஓச்சு தீக் குண்டினுக்கு அகப்படாது இன்னும்
விலகினீர்_அலீர் வெம் கொடு வினைப் பகை வெறுத்துக்
கலகமிட்டு உடல் குருதி நீர் கவிழ்தரக் கறுவி
உலகிடைச் சமராடலீர் இன்று-காறு உரவீர்

#10
விண் புலத்து அரசுரிமையை விழைந்த மெய் நோக்கம்
திட்பம் ஆகுக சிந்தனை மயல்_அறத் தெருண்டு
கண் புலப்படாப் பரம காரியங்களைக் கருதி
நட்பு_உளீர் விசுவாசத்தில் நனி உரத்திடு-மின்

#11
விஞ்ச மேல் வரு சோதனை எவற்றினும் விரிந்த
நெஞ்சமும் அதன் இச்சையும் நிகழ்த்துதற்கு அரிய
வஞ்சகக் கொடும் பகைமையாம் ஆதலின் மக்காள்
செஞ்செவே தெரிந்து அகற்று-மின் மற்று அதன் திருக்கை

#12
எள் பகுப்பு அன சிறுமையது ஆயினும் என்றும்
உட்பகைத் திறத்து உள்ளதாம் கேடு என உரைக்கும்
ஒட்ப நூல் மதி உட்கொளீஇ ஒல்லையின் ஊன்றிக்
கொட்புறும் புலப் பகை தெறில் கொற்றம் உற்றிடுவீர்

#13
ஊன் பழுத்த பூ மாயம் ஒன்றானும் உள்ளுறாமே
நோன்பு பற்றி முப்பகைத் திறம் இருக்கும் இ நோன்பால்
வான் புவிப் படும் வல்லமை யாவும் நும் வசத்தாம்
கோன் புகன்ற மெய் வாக்கு இது நெஞ்சகம் கொள்-மின்

#14
இன்னும் எம் வழிக்கு எதிர் உறும் விக்கினம் எவை மற்று
அன்னவற்றை மேற்கொள்ளும் ஆறு எவன் வகுத்து அறியப்
பன்னுக என்றிரேல் அருள் மறை பரம ராஜ்ஜியம்-தான்
இன்னல் ஊடறுத்து ஏகுவார்க்கு எய்தும் என்று இசைக்கும்

#15
ஐயம் இன்று உமக்கு எதிர்ப்படும் நகர்-தொறும் அகோர
வெய்ய தீச் சிறை விலங்கு பல் விக்கினம் விரவி
மை இருள்படு மலை எனத் தொடர்ந்து எதிர் மலையும்
நொய் அதித் துணை அடைந்து அவை வருவன நுனிக்கின்

#16
கை அகன்றனிர் கானகம் துருவி மேல் கடல் சூழ்
வையகத்து மாயாபுரி நகரிடை மறிந்து
வெய்ய கானவர் வலைப்படு மான் என வெருண்டு
பொய்யர் ஈட்டு வெம் கொடுமையில் புன்கண் உற்றிடுவீர்

#17
ஆறலைத்து உமை அடித்து அபராதர் என்று அதட்டிக்
கோறலைத் துணிந்து ஆக்குவர் கொடும் சிறைப் புறத்தில்
மாறு அலைத்துறும் வம்பர் பொய் வாய்மையின் நீதிக்
கூறலைத்தவன் முன்றிலின் நிறுத்துவர் கொடியோர்

#18
மம்மர்_இல் விசுவாசத்தின் வலிய சான்றாக
நும்மிலே ஒருவன் கதி கூடுவன் நுதலில்
செம்மை உத்தமராய் இரும் ஜீவன் உள்ளளவும்
நம் மகீபதி நல்குவர் நலம் திகழ் மௌலி

#19
முன் குலாவிய நெறிப்படும் இடர் எலாம் முயங்கிப்
பொன் குலா நகர் புகுவதில் இடைப்படு புரை தீர்
வன் கொலைப்படு வாதனை வரம்பு_அறும் எனினும்
நன்கது ஆய சிற்சுகம் பெறல் எத்தனை நன்றாம்

#20
விஞ்சு பேர்_இன்ப வீட்டு உலகு உய்க்கும் மெய் நெறி-தான்
வஞ்சம் மிக்க மாயாபுரி மறுகை ஊடறுத்துச்
செஞ்செவே செலும் பிறிது ஒரு வழி இலை ஜெகத்துக்கு
அஞ்சி ஓடுவது எங்ஙனம் ஆக்கை உள்ளளவும்

#21
தம் பலக் குறை உணர்ந்து அருள் பலத்தையே சார்ந்து இங்கு
உம்பர் நூல் நெறி ஒழுகியோர்க்கு உறு பெரும் துன்பம்
வெம்பு தீ என முருக்கினும் முன் நின்று விலக்கி
நம்பன் வான_நாட்டு உயர் பதம் நல்குவர் நமர்காள்

#22
துன்பம் யாவையும் ஒருங்கு அறத் துடைப்பினும் துடைப்பர்
அன்பின் மெய் விசுவாசத்தை அவனியில் தெரிக்க
வன் பகைப் புலத் தடியரை மடிப்பினும் மடிப்பார்
என் புரிந்தனர் எம்பிரான் யாவும் நன்று எமக்கே

#23
பந்தம் நீங்கும் முப்பகை அறும் பாவ சங்கடங்கள்
நந்தும் எவ்வகை நலிவும் இன்று உயர் கதி நன்மை
முந்தும் ஆரண சாக்ஷியா முடுகி ஆர்_உயிரைச்
சிந்து தீரருக்கு உறு நலம் செப்புமாறு அரிதே

#24
தீத் தொழிற்படு மாயையூர் சேரும் அக் காலை
கோத்து உரைத்த என் வாய்மையைக் குறிக்கொடு கருதி
ஏத்த_அரும் சருவேசனார் எழில் திரு_கரத்தும்
ஆத்துமங்களைக் கையடை ஆக்கு-மின் அஞ்சீர்

#25
என்று அகத்து நல் உணர்வு எழ இன்னன தெருண்டு
கன்றினுக்கு உளம் கசிந்திடு கறவை ஆன் கடுப்ப
நன்று உளம் கொளும் சொல் மதி புகட்டினன் நவை தீர்
குன்றுறா நலம் குலவு மெய்ச் சுருதி தேர் குரவன்

#26
குரவன் வாய்மையின் ஆய சஞ்சீவி உட்கொண்டு
கரவு_இலா விசுவாசம் மெய் அன்பொடு கவினி
விரவி ஓங்கலின் வேதியர் விண் உலகு ஆளும்
புரவலன் திரு_அடித் துணை பழிச்சினர் புகல்வார்

#27
எந்தை நூல் நெறிக்கு இடையிடை எதிர்ந்து எமைத் தெருட்டி
அந்தம்_இல் பரமானந்தம் அடையுமாறு அளித்த
விந்தை ஆய பேர்_உதவியை வியந்து அனுதினமும்
சிந்தை ஆர உள்ளுவது அலால் என் செய்கேம் சிறியேம்

#28
பொய் வகுத்த பூ மாயமும் புலைமையும் போகத்
தெய்வ நிண்ணயம் தெரித்தனை ஜீவ ரக்ஷைக்கு ஆம்
மெய் வகுத்தனை மேல் விளைவன எலாம் விரித்தாய்
உய் வழிப் படுத்து உதவி மற்று இவற்றின் வேறு உளதோ

#29
ஓவு_இல் பல் பெரும் துன்பம் மிக்கு உடற்றினும் உருத்துப்
பாவ காரியர் செகுப்பினும் தீ_வழிப் படரேம்
ஜீவ ரக்ஷணை தரு கிறிஸ்து யேசுவே ஜீவன்
சாவும் ஊதியம் என்று ஒருப்பட்டனம் தக்கோய்

#30
வாழி ஐய நீ புரி திரு_பணிவிடை மல்கிப்
பாழி அம் புவி முழுவதும் இரக்ஷணைப் பயன் கொண்டு
ஊழியூழி நின்று உயர்க என்று உளம் குவிந்து ஏத்தி
ஆழியான் நகர்க்கு ஏகுதும் அருள் விடை என்றார்

#31
அண்டர் நாயகன் திரு_அருள் ஆக்கமும் அடியார்
கொண்ட நல் வயிராக்கியமும் குணித்து அருள் குரவன்
மண்டும் அன்பின் ஆசிகள் சொலி விடுத்தனன் மரபில்
தொண்டர் அஞ்சலித்து ஏகினர் சுருதி மார்க்கத்தில்

#32
இடைவிடாது மெய் வேதியர் இருவரும் இணங்கி
நடை வழிப் படூஉ நயந்து சில் நாளினில் நலம் கூர்
அடவி நீத்து வந்து அலகை தொக்கு அறம் குடிபோய
புடவி நச்சு மாயாபுரிப் புரிசை கண்ணுற்றார்
** ஞானாசிரியனைக் கண்ணுற்ற படலம் முற்றிற்று

@7 மாயாபுரிப் படலம்

#1
அரிய நூல் நெறி கடைப்பிடித்து ஆரணக் கிழவன்
பரிய கானகம் துருவி வந்து இறுத்தமை பகர்ந்தாம்
விரியும் தீ_வினைக்கு உறையுளாய் விளங்கிய மாயா
புரியின் பான்மையும் கோன்மையும் வகுத்து இனிப் புகல்வாம்

#2
இஞ்சி தோன்றலும் நிதானி என்று இசை பெறும் ஏந்தல்
அஞ்சலித்து நின்று ஐய நின் அனுபவத்து ஆய்ந்த
வஞ்சம் மிக்க மாயாபுரி மரபு உரைக்க என்னாச்
செம் சொல் ஆரணன் நன்று என இனையன தெரிப்பான்

#3
தொன்று தொல் அறம் துதைந்து எழில் குலவிய தூய
மன்று தொக்க பல் வளன் எலாம் கரவினால் வௌவிக்
கன்று வெம் சினத்து அலகை தன் கவிகையைக் கவித்தான்
அன்று-தொட்டு மாயாபுரி ஆயது இ அகிலம்

#4
தூய நன்மையும் சுகிர்தமும் ஒருங்கு அறத் துடைத்து
மா இரும் புவி முழுவதும் தனது என வளைத்த
பேயனே பகைத்து அவித்தையாம் பிறங்கலை அடுக்கி
மீ உயர்ந்த வான் கடி மதில் இட்டனன் மேனாள்

#5
மேனி வந்து எழு மௌட்டியப் புரிசையின் விரகால்
ஞான பானுவின் கதிரொடு நல் கலை மதி தோய்
தூ நலம் திகழ் சுடர் ஒளி அகத்து உறச் சுலவாது
ஈனமாய புன் சமய மின்மினிகளே இயங்கும்

#6
மட்டிலாது உயர் கடி மதில் வான் உற நிவந்து
முட்டும் என்று எழில் முத்தி மா நகர் வெளி முகட்டில்
கெட்டி நிற்கும் மற்று அகழி வாய் திறந்து இருள் நிரையம்
தொட்டு நிற்கும் ஈது அன்றி வேறு உள-கொலோ சூழ்ச்சி

#7
கடி மதில் புறத்து அகழி நீர்நிலை எனக் கருதி
நொடிவர் அன்று அது மாய மாக் கார் இருள் நுதலிப்
படியும் வானமும் வாய்மடுத்து ஓர் உழைப் பதுங்கிக்
குடிகொளும் திரு_அரங்கமே அதன் நிலை குணிக்கின்

#8
சஞ்சலம் செறி நிரைய பாதலம்-கொலோ சமைந்த
பஞ்ச_பாதகப் படுகரோ பாரகம் பொதிந்த
வஞ்சம் மல்கு கார் ஆழியோ மதில் புறம் வளைத்த
எஞ்சுறாத தொல் அகழி மற்று யாது என இசைப்பாம்

#9
குருசு உயர்த்த பெம்மான் அடிக்கு அன்பு_செய்குநர்-தம்
பரிசு இகழ்ந்து அவதூறுசெய் பாமரர் படர்ந்த
எரி சுலா நரகத்து-நின்று ஏறினும் ஏறார்
புரிசை முற்று பேர் அகழியின் இடறி வீழ் புவியோர்

#10
பண்டு கேடு சூழ் கொடு விடப் பாந்தள் வாய் முழையோ
கொண்ட மார்க்கரை விழுங்கு தீக் கும்பியின் குகையோ
மண்டு நித்திய மரணத்தின் மதகரோ அலகைத்
தொண்டைதான்-கொலோ வாயிலை என் எனத் துணிகேன்

#11
கேட்டினுக்கு எலாம் ஒரு குருபீடமாய்க் கெழுமி
மேட்டிமைத் திடர் ஆய கோபுரம் நிரை வியன் பொன்
கோட்டு இமாசலக் குடுமியின் கோ_நகர்ப் புரிசைக்
கேட்டு வாயிலில் திகழ்வன திசைதிசை கெருவி

#12
ஊழின் ஆம் என உரப்பியோர் மடமையின் ஓங்கிப்
பாழி அம் பகு வாய்-தொறும் திகழும் உப்பரிகை
ஆழி பொங்கி மேலிடின் இறுவாம் என அஞ்சிப்
பூழி மானிடம் சமைத்த கோபுரம் எனப் பொலிவ

#13
வன்மை மல்கும் மூது எயில் தலைவாயில்கள்-தோறும்
புன்மை மல்கிய பேதைமைப் பொறிகளே பொதுளித்
தின்மை யாவையும் விருப்பொடு அ நகரிடைச் செறித்து
நன்மை யாவையும் புறப்பட நலிந்து எறிந்திடுமால்

#14
மரண கண்ணிகள் வீசு தந்திர வலை மாயா
கரண வேதிகள் பாசங்கள் இனையன கஞலி
முரணி வேதியர் குழுக்களை முருக்கி யந்திரங்கள்
அரண வாயிலின் அமைந்து எதிர் அடர்ப்பன அனந்தம்

#15
மாயம் முற்றிய ஞான_சூனிய மதிள் மலிந்த
தீய யந்திரத் திரள்-கொலோ திசைதிசை செறிந்து
பேயும் பூதமும் காளியும் கூளியும் பிளிறி
ஆயிரங்களாப் படையெடுத்து அரும் கடி அமையும்

#16
மோகம் மல்கு மாயாபுரி மூது எயில் முயங்கும்
வாகை நீள் கொடிக் குலங்கள் விண் துயல்வரும் மரபு
மாகம் வேட்டு உழல் மதியிலீர் வரம்பு_இல் சிற்றின்ப
போகம் உண்டு இவண் வம்-மின் என்று அழைப்பது போலும்

#17
உரவு நீர் நிலத்து அலகை மானிடர் உரம் ஒருங்கே
கரவின் வௌவினேம் காசினி முழுவதும் ககனத்து
இரவி மண்டிலம்-காறும் எம் ஆளுகை எம்மைப்
பரவுக என்று எயில் உயர்த்திய பதாகை விண் படர்வ

#18
இகழுமாறு எரிகோ மதில் இடிந்ததற்கு இசையத்
திகழும் மெய்ச் சுருதித் தொனி திசைதிசை முழங்கின்
அகழி சுற்றும் இ வாழ் நிலைகுலையும் நம்மவர்-தம்
பகழி ஆதிய படைக்கலம் பாழ்படுத்தாவால்

#19
தீ_வினைக்கு ஒரு களஞ்சியம் தீக் குண மன்றம்
பூவினுக்கு அநுபோகம் மாளிகை புலை புரக்கும்
கோவினுக்கு அரசு இருக்கை மாந்தருக்கு ஒரு கொப்பம்
ஜீவனுக்கு எலாம் கேடு மாயாபுரிச் சிறையே

#20
பாதகத் தொழில் பயிலிடம் பாதலம் புகுத்தும்
வேதனைப் பயிர் விளைபுலம் வியன் பிரபஞ்சச்
சாதகத் திரள் குழுமிய தனிப் பெரும் கோட்டம்
சோதனைப் படு கிடங்கு மாயாபுரிச் சூழல்

#21
உலக மாய வர்த்தகம் புரி ஒரு பெரும் சந்தை
கலக வாள் விழிக் கணிகையர் காமியக் கோட்டி
அலகு_இலாத பொய்த் தேவருக்கு ஆலயம் அழிம்பற்கு
இலகுகின்ற மாயாபுரி இருதயத் தானம்

#22
நாச தேசம் என்று இசை பெறும் நானிலக் கிழத்தி
நீச மால் மதி வதனமோ நினைவினைக் கவரும்
மோச வாள் விழியோ தட மார்பிடை முயங்கும்
காசின் ஆரமோ என்-கொல் மாயாபுரி கருதின்

#23
பரிசு_இலாது உயர் இதய மாளிகை-தொறும் பயிலும்
வரிசை தப்பிய மன் அரசிருக்கையும் மன்றும்
எரி சுலாம் அநியாயம் செய் கோட்டியும் ஈனப்
புரிசை முற்றிய கோபுர நிரைகளும் பொலியும்

#24
தீமை மல்கிய ஜெய_கொடி வான் உறத் திகழும்
காமியச் சுவை பகுத்திடும் முழவு ஒலி கறங்கும்
பாமரக் குழுவே அனவரதமும் பயிலும்
சாமியைப் புறக்கணித்திடு தவ நெறி தழைக்கும்

#25
கடி மணப் பறை பிணப் பறை விழாப் பறை கறங்கக்
கொடிபடும் பொருகளப் பறை வயின்-தொறும் குளிறப்
படி புரந்து அருள் வளம் தரு பைம் புயல் முழக்கத்து
இடியின் சும்மையைச் செவிமடாது இ நகர் என்றும்

#26
தெருவின் ஒன்று பல் நூறு எனும் குறுந்தெருத் திரிய
மருவும் அ நகர் மாந்தரே வழி மயங்கிடுவர்
பொருவு_அரும் கலை கற்பினும் பொருள் நிலை குறிக்கொண்டு
ஒருவழிப்படாது உழன்றிடும் உள்ளமே போல

#27
மேதினிப் படு தேசங்கள் வியன் மறுகு ஆகக்
கோது மல்கு பல் மதங்களே குறுந்தெரு ஆக
ஜாதி_பேதங்களே பல சந்துகள் ஆகத்
தீது துற்று மாயாபுரி புகுந்தன தெரிக்கின்

#28
நானம் ஐ வகைத் திரவியம் முப்பழம் நறை செம்
தேன் உலா நறு மலர்க் குவை மயில் இனல் செறிந்து
மேனி வந்து பல் கொடி விராய் வெண் சுதை மாடம்
பால் நிலாத் தவழ் கிரி எனப் பொலிகின்ற பலவே

#29
உருக் கவின்பெறக் கை புனைந்து உண்மையை ஒருவித்
திருக்கு உலாவி உள்ளகம் புறம் கொடு வினை திருந்திப்
பெருக்கமாய டாம்பீகத்துப் பிணிப்புறும் பிணக்கர்
செருக்கின் ஓங்கிய மாடங்கள் அளப்பு_இல திகழ்வ

#30
கேடு சாலும் இ உலக கோலாகலம் கெழுமி
மாட_மாளிகை கூட_கோபுரம் பொது மன்றம்
மேடை மேனிலை அரமியத் தலம் என விரவிப்
பீடு சால் உருப் பெற்றனவோ எனப் பிறங்கும்

#31
அவ்வியத்தின் ஆணவச் சுவர் அமைத்து அகம் கெழீஇய
தெவ்வின் வன் துலாம் கிடத்தி வச்சிரத்த கால் செறிந்து
வெவ் இயல் படு மேனிலை திருத்தி வெள் ஒளி கால்
செவ்வி ஆக்கிய மாளிகை வயின்-தொறும் திகழ்வ

#32
கோது மல்கும் மாயாபுரி நகரிடைக் குழுமி
ஓத_அரும் பல பாக்கங்கள் உள்ளன அவற்றில்
ஆதி ஆயதும் அரும் பொருள் சுரப்பதும் அங்கங்கு
ஏதிலார் விழைந்திடுவதும் இந்தியப் பாக்கம்

#33
குன்றிடாது உயர் கல்வியும் கொழு நிதிக் குவையும்
மன்று தொக்கவை வகைத் திரவியங்களும் மலிந்து
தொன்று-தொட்டு உலவா நில வளங்களும் துதைந்தே
பொன் திணிந்த பொன் பேழையில் பொலியும் மற்று அதுவே

#34
நாலு வேதம் ஆறு அங்கம் பன்னெண் புராணங்கள்
கோலும் மூவிரு சமயங்கள் குலவு முத்தேவர்
சீலம் ஆர் பதினெண் புலப் பாடைகள் செருமிப்
போலி மாந்தரை மருட்டுவ இடம்-தொறும் பொதுளி

#35
வாயில் அங்கு இருள் மறைத் தொனி மார்பு நூல் குசைப் புல்
தீ இலங்கு பல் வேதிகை திரு_துழாய் மாடம்
மீ இலங்கு பல் குலக் குறி புண்டர விதங்கள்
ஆ இலங்கிய பார்ப்பனச் சேரிகள் அனந்தம்

#36
மன்னர் தொல் குலத்தவர் என வறும் பெயர் மேன்மை
பன்னி வன் மனம் செருக்கி வெம் படைத் தொழில் பயின்று
துன்னும் இ நகர் இடைக்கிடை தொடுத்து இனிது இருந்த
வன்ன மேனிலை மாடங்கள் அளப்பு_இல மலிவ

#37
ஒன்றின் ஊதியம் ஒன்பதாக் கொண்டு விற்று ஓம்பி
நன்று தீது நாடாது ஒரு காசுக்கு நஞ்சு
தின்று நீள் நிதி செருக்கிய வைசியர் செறிந்த
பொன் தழைத்த மாளிகை நிரை கோடியாப் பொலிவ

#38
எண் திசாமுகத்து இசைப்பட வர்த்தகம் இயற்றி
மண்டு காமியச் சுவைபடு மாய மாச் சரக்குக்
கொண்டு கட்டி விற்று ஊதியக் கொள்ளை கொள் வணிகர்
பண்டசாலைகள் துறை-தொறும் பெரு வளம் படைப்ப

#39
அம் கண் மா நிலம் திருத்தி ஊண் விளைத்து அனவரதம்
தங்கள் காரிய துரந்தரராக் குடி தழைப்பக்
கங்கையின் குலத்து உதித்த பூ வைசியராம் கபட்டு
வெம் கணாளர்-தம் மேனிலை மறுகு எங்கும் மிளிர்வ

#40
முந்து முக்குலத்தவர் பணித்திடு தொழில் முழுதும்
சந்ததம் புரிதந்து தம்தம் குல_தெய்வம்
அந்தணாளர் என்று அஞ்சலி ஆக்கியும் அடங்கிச்
சிந்தை கன்றிய சதுர்த்தர் வாழ் மனைகளும் திகழும்

#41
கைத்தொழில் படு மாட_கூடங்களும் கவினி
மொய்த்த யந்திரசாலையும் முறை நெறி பிறழ
வைத்த நாடகசாலையும் பொதுப்படு மன்றும்
குத்திரத்தொடு பயில்வன நகரிடைக் குழுமி

#42
இழி_குலத்தர் என்று ஏனையர் புறக்கணித்து இகழும்
கழி மடக் குடியாளர்-தம் சிந்தனை கன்றி
வழிவழிப் பகைகொண்டு வாழ் மனைச் சிறு குடிசை
பொழில் இடம்பெறு புறநகர் எங்கணும் பொலியும்

#43
திங்களைக் கரிது ஆக்குவ செழும் சுதைப் பித்தி
கங்குலைப் பகல் ஆக்குவ கணிகையர் கழகம்
மங்குலைச் சிறிது ஆக்குவ மலி புகைப் படலம்
தங்களைக் குருடாக்குவர் இந்தியத் தருக்கர்

#44
இருள்படும் மரச் சோலையும் இருதயக் குகையும்
மருள்படும் களி விழிகளும் மதத்த நூல் மரபும்
தெருள்படும் புவிக் கலைகளும் கலவியின் திருக்கும்
சுருள்படும் குல மலர்களும் துத்து வெள் அடையும்

#45
கண்ணி குத்துவர் காமுகப் புள்ளினைப் படுப்பான்
வண்ண வாள் விழிப் பரத்தையர் மறுகு எங்கும் மருட்டி
நண்ணி எத்துவர் மனை-தொறும் நயப்புரை பேசிப்
பெண் ஒழுக்கு_அறு மாதரைக் காம_பேய் பிடித்தோர்

#46
அங்க மா மத வாரணத் தொனி படும் அல்லால்
அங்கு அ மா மத ஆரணத் தொனிபடாது ஆக
எங்கும் இல் ஒழுக்கு இகந்தன என்பதை அல்லால்
எங்கும் இல்_ஒழுக்கு இகந்தன_இலை எனல் இலையால்

#47
மறம் எலாம் குடிபுகுந்து உள மானவர் உளத்தில்
அறம் எலாம் குடிபோயது அ அணி நகர் ஒருவிப்
புறம் எலாம் புலை நிரம்பின பொருவு_அரு ஞானத்
திறம் எலாம் நகைப்படுவன தீ_வினை கதிப்ப

#48
மெய்_உரைப்பவர் யாவரும் மடம் படு மிலேச்சர்
பொய்_உரைப்பவரே அதி புண்ணிய புருஷர்
கை உலோபரே மதி_உளார் கசிந்து உபகாரம்
செய்யும் மாந்தரே பயித்தியர் இ நகர்ச் செவ்வி

#49
புகழ் விரும்பி அட்டு ஊட்டுவர் புரண்ட நூலவருக்கு
இகழ்வர் ஏழையை இரங்கி ஓர் சற்று உணவு ஈயார்
திகழும் ஞான நூல் செப்புவர் திருட்டு அளவாக
அகழ்வர் ஏனையர் அரு நிதி வைப்பிடம் அறிந்தே

#50
பத்தி நூல் வழிப் போக்கர் மேல் படாப் பழி கூறிக்
கத்துவார் தெருத்தெருத்-தொறும் கத்தபம் கடுப்பக்
குத்திரத்துவ வேடர்-பால் கூட்டுண்டு களித்து
மித்திரத்துவம் பூணுவர் கொக்கு அன விரகால்

#51
பஞ்சதந்திரம் பயிலுவர் காம நூல் படிப்பர்
தஞ்சம் ஆக்கிய உடைமையைத் தமது எனச் சதிப்பர்
நஞ்சம் அன்ன தீ_வினை எலாம் நயந்து அனுட்டிப்பர்
வஞ்சம் மல்கு வாய் மொழியினால் புதைபட மறைப்பார்

#52
கடனை வாங்கியே மாற்றுவர் சிலர் சிலர் கையில்
கடனை வை எனத் தொண்டையை நெரிப்பர் கைக் கணக்கில்
கடனை ஏற்றி மல்கட்டுவர் சிலர் சிலர் கடுகிக்
கடனை அன்றி ஓர் காசு இலை எனப் பொருள் கரப்பார்

#53
கொண்ட பெண்டிரால் ஊதியம் கொண்டு உயிர் கொளுவி
உண்டு தேக்கெறிந்து உழலுவார் பாழ் வயிறு ஓம்பி
மண்டு காம வெம் பிணியினால் வரன் முறை மயங்கி
எண் தகாப் பழி பூணுவர் இக_பரம் இழந்தே

#54
அன்ன சத்திரத்து உண்டு தேக்கெறிபவர் அனந்தம்
துன்னு காம சத்திரம்-தொறும் துதைபவர் அனந்தம்
மன்னு செல்வர்-தம் மனைக் கடை வறியவர் அனந்தம்
இன்னலுற்று உளம் கசந்து அழும் ஏழைகள் அனந்தம்

#55
காளி கோட்டமும் ஊட்டமும் ஆட்டமும் கதிக்கும்
கூளி நாட்டமும் குறக் குறி ஈட்டமும் குமையும்
கோளின் ஈட்டத்து மனை-தொறும் சண்டை கொக்கரிக்கும்
தேளின் ஈட்டிய விடம் எனச் செவிக்கு இடர் செருகும்

#56
மயங்கு ஆட்டம் புரி கணிகை மட மாதர் மனம் மருட்டி
இயம் காட்டி லயம் காட்டி எழில் காட்டி விழி காட்டி
நயம் காட்டிப் பயம் காட்டி நகை காட்டிச் சிகை காட்டிக்
குயம் காட்டிக் காமுகரைக் குரங்காட்டம் ஆட்டுவரால்

#57
உண்டு ஆட்டம் அந்தணருக்கு உரை ஆட்டம் மடவார்க்குக்
கண்டு ஆட்டம் காமுகர்க்குக் களியாட்டம் குடியருக்குக்
கொண்டாட்டம் பரத்தையர்க்குக் குடி ஆட்டம் கொடுங்கோற்குத்
திண்டாட்டம் பொருள்_இலர்க்குச் சிரசாட்டம் கெருவிகட்கே

#58
தன்_நயம் கெடாது உலகு உவப்பு ஆக்கலே தருமம்
என்ன தீங்கு செய்தாயினும் ஈட்டலே பொருள் மற்று
இன்னல் இன்றியே அருந்தலும் பொருந்தலும் இன்பம்
பின்னர் ஆவதே வீடு என்பது இ நகர்ப் பிரமை

#59
நன்று உஞற்றுவார்ச் செகுப்பதே நகர்_அதிபதிக்கு
வென்றி தீது செய் வினைஞரைப் புரப்பதே வேட்கை
கன்று சிற்றின்ப போகமாம் கண்ணியைக் குத்தி
என்றும் மாந்தரைப் படுப்பதே இடையறா வேலை

#60
மன்னும் நற்குண மங்கல அணி இலா மடவார்
நன்னர் மேனியை மினுக்கியும் நல் உடை புனைந்தும்
இன் நறும் புகை ஊட்டியும் எழில் நலம் புகழ்ந்தும்
பொன் அரும் கலம் திருத்தியும் பொழுதுபோக்கடிப்பார்

#61
சதுரர் யாம் எனத் தருக்கிய ஆடவச் சழக்கர்
மது இறைச்சி உண்டு ஆடியும் வஞ்சனை இழைத்தும்
முதுவரைப் புறக்கணித்தும் வெம் சூதுப் போர் முயன்றும்
பொதுமனைத் தொழும்பு இயற்றியும் பொழுதுபோக்கடிப்பார்

#62
நீசம் மல்கும் மாயாபுரி நெடு நகரிடைச் செல்
மாசு_இல் நூல் வழிக்கு இரு மருங்கினும் பல வளம் சேர்ந்து
ஓசை பெற்ற மாயக் கடைவீதி ஒன்று உளது இ
நாச தேச மாது அமங்கலக் கழுத்திடும் நாண் போல்

#63
மீ உயர் கதியை நாடி வேத நூல் நெறியில் செல்லும்
தூயரைக் கெடுப்பான் எண்ணித் துணிந்து பேயேல்செபூலாம்
பேய் இனத்து அரசன் ஊகித்து இயற்றினன் பிறங்க மேனாள்
மாய சூனியப் பண்டங்கள் மலிந்த இ மாயச் சந்தை

#64
அலகு_அறு நிதி உத்யோகம் ஆளுகை மகிமை பட்டம்
இலகு பொன் வெள்ளி இல்லம் மிசை தன தானியங்கள்
பல கலன் வாகனாதி படைக்கலம் தவிசு டம்பம்
உலக சம்பத்து உல்லாசம் உயர் குலப் பெருமை மேன்மை

#65
பல கலை ஞானோபாயம் பகட்டுரை பஞ்சதந்த்ரம்
அலகு_இலாச் சூது வஞ்சம் அபகடம் அபத்து ஆபாசம்
கலகம் இச்சகம் ஏமாற்றம் கள்ளம் கைதவம் வாசாலம்
குல குறி அடையாளங்கள் குசோத்தியம் குதர்க்கம் கோட்டம்

#66
மந்திர வித்தை அட்டமாசித்தி மாய வித்தை
எந்திர வித்தை கண்கட்டு இந்திரசால வித்தை
தந்திர வித்தை யோகம் தரு வித்தை கருவின் வித்தை
விந்தை ஆரோப வித்தை வெகு வித விநோத வித்தை

#67
உரை விதந்து அனைய ஆய உலப்பு_இலா மாயப் பண்டம்
தரை வளம் படுக்கும் மாயச் சந்தை இத் தகைமைத்து ஒன்றோ
வரை வரை போலத் தொக்கு மலிந்த மா பாவப் பண்டம்
விரைவினில் அழிந்து தோன்றி விலைப்படும் வைகல்-தோறும்

#68
வித்தகக் கலைப் பயிற்சி மேதை ஆத்தும விசாரம்
உத்தம ஞான நன்மை உண்மை நல் உணர்ச்சி தேவ
பத்தி உள் அன்பு சாந்தம் பவித்திரம் தயை கண்ணோட்டம்
சித்த நற்குண நற்செய்கை ஜெப_தப விரதம் சீலம்

#69
முத்தி சாதனங்களாக முது மறை திகழ்த்திக் காட்டும்
இத் தகு வனப்பு வாய்ந்த இரும் பொருள் எவற்று ஒன்றேனும்
குத்திரம் பயிலும் மாயக் கடை-தொறும் கோடி செம்பொன்
வித்தினும் கொளக் கிட்டாது விடம் அன்றித் தருமோ நாகம்

#70
அவம் தரு திருவின் ஆய ஆவணத்து அணி கொள் வீதி
நிவந்து இரு பாலும் துற்றி நிலவு வர்த்தகசாலைக்குள்
நவம் திகழ் மாயசாலம் நயந்து வீற்றிருந்து எந்நாளும்
உவந்து உலகு அருந்த ஊட்டி உயிர்ப்பலி கொள்ளும் அன்றே

#71
மாண் உடை உணவு பான வருக்கம் அஞ்சனம் சுகந்தம்
பூண் அணிகலம் கர்ப்பூரப் புது நறும் கலவை மென் பூக்
காண நெஞ்சு இவரும் காட்சிக் கருப் பொருள் பலவும் ஈட்டி
நீள் நகர்க்கு உதவி என்றும் நிறை வளம் படுக்கும் மாதோ

#72
வரை கடல் நகரம் நாடு வனம் படும் அமுதத்தோடு
குரை கடல் புவியின் மேய கொழு நிதிக் குவையும் விண்மீன்
புரை நவ மணியின் ஆய பொன் குவை பலவும் பொங்கி
நிரைநிரை பொலிய எங்கும் நிருத்தனம் பயிலும் ஆயம்

#73
அகத்து இருள் இரிக்கும் அன்றோ அவிர் ஒளித் தீபம் யாண்டும்
தொகுத்த பல் மணி முத்தம் பொன் சுடர் விரி வைரம் ஆதி
மகத்து ஒளி விளைக்க நாளும் மாய வர்த்தகம் செய் மாந்தர்
அகத்து இருள் மலியும் அல்லால் அகலகிலது இதுவே ஆக்கம்

#74
பல் வளம் கெழுமும் நானா தேசத்தும் பயின்று அங்கு உள்ள
நல் வளம் ஒருவி ஜீவ நாசத்தை மலியக் கொண்டு
சொல் வளம் பெருக்கி விற்றுச் சூனியப் பொருளை ஆக்கிக்
கொல் வளம் படுக்கும் மாயக் குத்திரம் குலவும் சந்தை

#75
அங்கிலோ தேசத்து உள்ள அரும் புருஷார்த்தம் கொள்ளார்
பொங்கு டாம்பீகம் வன்கண் பொருள் ஈட்டு தந்திரங்கள்
வெம் குடிகேடு என்று ஆய விநாசத்தை விலைப்பால் ஈட்டிச்
சங்கடம் பகரும் மாயச் சந்தையின் அமலைத்து எங்கும்

#76
மா இரு ஞாலத்து உள்ள வரம்பு இறீக் குணங்கள் எல்லாம்
தீய சிற்றின்ப போகச் செவ்வியாய் உருவு வாய்ந்து
மேய இ உண்மை தேரார் விழி மருண்டு எளிதில் துய்ப்பர்
தூய ஜீவியத்தை நல்கிச் சுடர் விழு பதங்கமே போல்

#77
பார் ஈசனாகக் காட்டும் பாதகப் பசாசன் உய்த்த
மாரீசக் கடையின் சால வஞ்ச இன்பத்தை நச்சி
நேர் ஈசல் குழுவின் மொய்த்து நில உலகத்து மாந்தர்
ஓர் ஈஷத்து உணர்வு அற்று ஆன்ம ஊதியம் இழப்பர் அந்தோ

#78
ஆர் அணங்கு ஆட்ட நாடி அகம் குழைந்து இருப்பார் யாண்டும்
ஆரணம் காட்ட நாடி அகம் குழைந்து இருப்பார்_இல்லர்
தார் அணிதந்து அஞ்ஞானச் சனியனைப் பணிவார் யாண்டும்
தாரணி தந்த ஞான தம்பிரான் பணிவார்_இல்லர்

#79
மறம் கடைப்பிடித்து நின்ற வன்கணார் மறுமை நோக்கி
அறம் கடைப்பிடியார் என்னோ அழி_மதி படைத்து மாயம்
பிறங்கிய மறுகு உலாவிப் பேதுற்று வறிது மாள்வர்
கறங்கு இசை அவாவி மாயும் கேகயம் கடுப்ப-மன்னோ

#80
தெருள் கடல் படியாச் சிந்தை தீ_வினைக் கடற்குள் உய்ப்ப
அருள்_கடல் படியார் ஆகி ஆசை அம் கடற்குள் மூழ்கி
இருள்_கடல் படுவர் அந்தோ இ நகரத்து மாக்கள்
மருள்_கடல் இகந்து ஆனந்த மாக் கடல் குளிப்பது என்றோ

#81
நித்திலம் பவளம் செறி நீர்மையின்
பத்தியாய்த் திரை நாடிய பான்மையின்
கத்து உலப்பு அரிதாய கணக்கினில்
தத்து நீர்க் கடல் ஒக்கும் அச் சந்தையே

#82
படம் விரித்துப் பஃறலை தோய்ந்து பேர்
உடல் கிடத்தி உறுவனவாய் இடூஉக்
கொடு விடம் பொதிந்து ஆர்_உயிர்க் கொள்ளைகொள்
நெடிய பாந்தள் அம் நீள் கடை வீதியே

#83
என்று இலங்க விலங்கு எழில் வாய் நெகூஉ
மன்று அலர்ந்து அளி மொய்த்து மதுச் சொரிந்து
ஒன்று உளக் களி காட்டலின் ஒள் மறுகு
அன்று அலர்ந்த அரும் கடி மாலையே

#84
திசைமுகம் திகழப் பொருள் செய்தலின்
வசையின் மாயை வரம்பு_அறு பான்மையின்
நசை பிறங்க மன்று ஆடி நடித்தலின்
இசையும் அ மறுகு இந்து முத்தேவரை

#85
மூச்சுக்கு ஆயிரம் பொய்படும் முந்து பொய்ப்
பேச்சுக்கு ஆயிரம் பொன் படும் பேசும் வெள்
வீச்சுக்கு ஆயிரம் பொன் படும் வீச்ச வாய்
ஏச்சுக்கு ஆயிரம் பொன் படும் என்றுமே

#86
கோடிகோடி குவிப்பன குத்திரம்
கோடிகோடி தொகுப்பன கோள்_மொழி
கோடிகோடி திரட்டும் கொடு வினை
கோடிகோடி குவை நிதிக் கொள்ளையே

#87
கோடிகோடி குலப் பெருமை கொளும்
கோடிகோடி வெம் நோயில் குறைந்திடும்
கோடிகோடி உல்லாசத்தில் கொள்ளைபோம்
தேடி வைகலும் சேமித்த தீ நிதி

#88
கோடிகோடி குடலில் புதைந்திடும்
கோடிகோடி குடி வெறி கொண்டிடும்
கோடி கோடி சிற்றின்பக் குகை புகும்
ஓடியாடித் திரட்டிய ஊர் நிதி

#89
ஆடு அரங்கத்து அழிப பல்லாயிரம்
பாடு அரங்கம் பறிக்கும் பல்லாயிரங்
கூடு அரங்கம் குறைக்கும் பல்லாயிரம்
கேடு அரங்கம் கெடுக்கும் பல்லாயிரம்

#90
கண்ட மாயக் கடையும் கவின் கடை
தண்டு மாயச் சரக்கும் சரக்கினின்
மண்டும் இன்பமும் மாயை எனா மதி
பண்டு ஒர் ஞானி பகர்ந்தனன் உண்மையே

#91
உன்னதானந்த ஓங்கல் அரசன் முன்
இ நிலத்து வந்து இ வழிச் செல்கையில்
மன்னும் மாய இன்பத்தை வரைந்து சீ
என்ன வீசிப் புறக்கணித்து ஏகினார்

#92
தொண்டர் பன்னொருவோரும் இத் தொல் நகர்
கண்டு மாயக் கடையைக் கடிந்து மெய்
விண்டு உவர்த்து உயிர் வீடு-மட்டாய் உரம்
கொண்டு நின்று பிரான் அடி கூடினார்

#93
மாய சூனியம் மல்கிய இ நகர்த்
தீய சீலம் தெரிப்ப_அரிது என் உரைக்கு
ஆயிரம் மடங்காய் அறிவாய் எனாத்
தூய வேதியன் சொற்றனன் என்பவே
** மாயாபுரிப் படலம் முற்றிற்று

@8 நகர் புகு படலம்

#1
நாடி ஆரணன் சொற்ற சொல் நல் நிலை_
ஆடியின்-கண் அலங்கு மாயாபுரிப்
பாடு ஒருங்கு கண்டு உள்ளப் பதைப்பொடே
நீடு நீர்மை நிதானி நிகழ்த்துவான்

#2
ஜீவ நாசம் விளைக்கும் இத் தீ நகர்க்
காவலன் செயல் கட்டற நீக்குதல்
தேவ சேனையர் கோன் அருள் செவ்வியே
பாவ காரியரேம் செயற்பாலது என்

#3
அவித்தையாய அரணும் அகத்து உறக்
குவித்த மாய சிற்றின்பமும் கோள்_அறக்
கவித்து இடித்து உக்க கோளத்து அருள் முகில்
புவித் தலத்துப் பொழிவது எக் காலமே

#4
செவ்வன் நூல் நெறி சேறுதும் ஆயினும்
அ-வயின் படும் மாய அழிம்பினைக்
கௌவையுற்ற புரளியைக் கண்டு கேட்டு
எவ்வணம் சகித்து ஏகுவது எந்தையே

#5
பாவ நீதி பகர் நடுத்தீர்வையின்
ஆவது ஈது என்று அறிவு கொளுத்தும் நம்
தேவ ஆவி திரு_அருள் பெற்றியை
ஜீவருக்குத் தெரிப்பது அன்றோ கடன்

#6
நாச தேச நகரியின் நண்பொடு
நேசம் ஆர் சுவிசேஷம் நிகழ்த்திடின்
மோச_நாசம் விளைப்பர் அ மூர்க்கரேல்
ஈசன் நேசம் ஈடேற்றம் அளிக்குமால்

#7
சோதனைக்குள் விழா வகை சூழ்ச்சியோடு
ஆதி தேவன் அடி நிழல் துன்னி யாம்
காதலாய் எமைக் கையடை ஆக்கிடில்
போதம் மல்கும் அருள் துணை பூக்குமால்

#8
என்று உளம் குவிந்து இன்னன கூறலும்
நன்றுநன்று உன் கடைப்பிடி நம்பி யாம்
பொன்றினும் இடையூறு பொருந்தினும்
மன்றல் நாயகன் சித்தம் மகோத்தமம்

#9
வழும்பு பட்ட நம் ஆக்கையும் வல்_வினைத்
தழும்புபட்ட நம் ஆவியும் சார்ந்த உம்
தொழும்புபட்ட அன்றே பரமன் சுதற்கு
ஒழுங்குபட்டன ஒப்படையாகவே

#10
நம்-தமக்கு அருள் நாதன் கழல் புகும்
சிந்தையே அன்றிச் சிந்தை பிறிது இலை
முந்து வெம் கொடும் துன்பம் முருக்கினும்
இந்த ஆக்கையொடே முடிவு எய்துமால்

#11
ஈறு_இலாப் பரலோக இராஜ்ஜிய
ஆறு செல்லுதும் ஆவன ஆகுக
தேறுக ஐய எனா இத் திறத்தன
கூறினான் மறையோன் குண_குன்று_அனான்

#12
இன்னவாறு உரத்து இன் உரையாடி நம்
உன்ன தேசன் ஒரு திருவோலக்கச்
சன்னிதானத்துத் தாழ்ந்து மன்றாடியே
செல் நெறிக் கொடு போயினர் சீரியோர்

#13
நன்று பேசி நராத்தும ரக்ஷகன்
வென்றி அன்பு விழுத் தவம் வித்தகம்
என்று இவ் அன்ன இசை புனைந்து ஏத்தியே
சென்று கூடினர் மாயச் சிறைப் புறம்

#14
ஆழி அன்ன அகழை அகப்புறம்
சூழும் மேருவில் தோன்றிய இஞ்சியை
ஊழின் நோக்கி உயர் கடை வாய் ஒரீஇ
வாழி ஆரணர் புக்கனர் வஞ்சர் ஊர்

#15
வண்ண மேனிலை மாடங்கள் கூடங்கள்
எண்_இறந்து இரு பாலும் எழில் திகழ்
கண் அகன்ற கடி நகர் வீதி வாய்
நண்ணி நூல் நெறி நாடினர் போயினார்

#16
விதித்த மெய் அணி கற்பு அணி வித்தகம்
மதித்த நீதி வெண் வத்திரம் காண்கிலார்
சதித்த பொய் அணி தாங்கி மினுக்கு உடை
கதித்த பாழ் உடல் கண்டுகண்டு ஏகினார்

#17
விண் உடுச் சுடர் விக்கிரகம் களி
மண் உருக் கவியம் பிறவற்றினுக்கு
அண்ணல் பூசனை ஆற்றும் முறை எலாம்
கண்ணில் கண்டு கண்ணீர் வடித்து ஏகினார்

#18
நெறி எலாம் கள்ள நீள் நெறி நீதி செய்
துறை எலாம் அநியாயத் துறை அகப்
பொறி எலாம் தந்திரப் பொறி புல்லும் இக்
குறி எலாம் கண்டு கேட்டு உளம் குன்றினார்

#19
சென்றசென்ற திசை-தொறும் தூஷியம்
மன்றம் எங்கும் வசைப்படு வாய்மதம்
கன்று சாபக் கடும் கனல் காது உறீஇ
நின்றுநின்று திகைத்தனர் நீர்மையார்

#20
விண்டு பாழ்ங்கதை பேசுறு வீணரை
மண்டு காமச் செருக்கரை வார் மது
உண்டு உரப்பி உருண்டு அலைவார்-தமைக்
கண்டுகண்டு கருத்து அழிந்து ஏகினார்

#21
புலி வயப்படு புன் மறி போன்ம் என
வலியர் கை மறிந்து உள்ளம் மலங்கிய
மெலியர் கண் கலுழக் கண்டு வேதியர்
நலிவு கொண்டு உளம் நைந்தனர் போயினார்

#22
தூய மா தருமம் துதையாத இத்
தீய மா நகர்ச் செல்வம் எலாம் குடி
போய் ஒருங்கு அவியப் புனிதச் சினம்
தோயுமே எனச் சோகமுற்று ஏ/கினார்

#23
போக்கும் சிந்தைப் பொருமலும் போதம் ஆர்
வாக்கு நேர் செல் வழி விலகாமையும்
நோக்கி அங்கங்கு மாயம் நுனித்து உணர்
மாக்கள் தொக்கு வழுத்துதல் மேயினார்

#24
எங்கு செல்பவர் யாது குறித்துளார்
இங்கு வந்தது என்னோ என்று இயம்புவார்
துங்க யாத்திரை வேடம் சுமந்து அலை
பங்கமுற்ற பதிதர் இவர் என்பார்

#25
வளவன் ஆய நம் மன்னவன் நாட்டு இயல்
உளவறிந்து உழல் ஒற்றர் இவர் என்பார்
களவில் காதலரைக் கவர்வோர் இவர்
கிளவி ஆக்கம் கிளக்கின்றது ஈண்டு என்பார்

#26
ஒறுத்து நிந்தித்து உருத்து மண் ஓச்சினும்
பொறுத்து நம்மைப் புறக்கணிப்பார் என்பார்
நிறுத்து நீதி நிகழ்த்தும் இன்னோர் எலாம்
கறுத்த சிந்தையக் கள்ளுநரே என்பார்

#27
வாக்கில் வேறலம் வன் தடி கொண்டு யாம்
தாக்கி வேறும் சமைதிர் என்பார் சிலர்
தாக்கி வேறல் சமர்த்து அன்று சாதிக்க
வாக்கு இன்றேல் பின்னை வாய் என் என்பார் சிலர்

#28
வெய்து துன்பம் விளைப்பினும் காக்க ஓர்
பொய் சொல்லாத புலையர் என்பார் சிலர்
மெய் சிதைந்திடின் வேறும் உண்டோ ஒரு
செய் தவம் அது சீரிது என்பார் சிலர்

#29
ஆக்கம் வேண்டி அறம் திறம்பேம் எனாப்
போக்கு முட்டிய புல்லர் இவர் என்பார்
போக்கு முட்டினரேனும் நம் போல் செயார்
தீக் கொடும் தொழில் தேர்-மின் என்பார் சிலர்

#30
வழி தெரிக்கும் மதி_உடையார் நமக்கு
இழி_குலத்தர்-கொலோ என்பர் ஓர் சிலர்
இழி_குலத்தர் எவர் பழி_பாவத்தை
ஒழிகிலாதவரே என்பர் ஓர் சிலர்

#31
இன்னவாப் பெரும்பாலர் இகழவும்
மன்னி ஓர் சிலர் தட்டி மறுக்கவும்
நன்னர் நூல் நெறி நாடிய வேதியர்
துன்னினார் கொடும் சூனிய ஆவணம்

#32
கல் இனத்துள் கவினும் நவமணி
கொல் இனத்தினும் உண்டு ஒர் குணக்கியன்
சொல்ல வல்லர் துணிந்து நடுவினை
இல்லை என்று இலை இ நகரத்தினும்

#33
பொய் அளைந்த புரத்து உரைபோக்கியே
வை அளைந்த மதியினர் போயினார்
மெய் அறிந்த நல் வித்தகர் உட்கொளார்
கை_அறிந்திலர் ஏத்துரை கைப்புரை

#34
குத்திரப் பொறி கூட்டுணவு ஈட்டிய
மித்தை ஆய சிற்றின்ப விடயங்கள்
வைத்த மாயக் கடையை மதித்திடார்
கைத்த சிந்தையர் கண்டு உவர்த்து ஏகுழி

#35
ஆர்-கொலாம் இவர் ஆடை உடை_நடை
நேர்கிலார் நமரோடு நிகழ்த்தலும்
பார் குலாம் ஒரு பாஷை அன்று ஆதலின்
தேர்குவாம் வம் எனத் திரண்டார் அரோ

#36
செருக்கி வந்து அங்கு அவரவர் தீம் சுகப்
பெருக்கம் உள்ள நயம் உள பேச_அரும்
திருக் குலாம் கடை தெய்விக கற்பக
விருக்கம் கொள்ள விழைந்தது என்னோ என்றார்

#37
முன் உறக் கண்டு மோசப் படுகரைப்
பின்னிடாது கவிழ்வது என் பேதைமை
என்ன பாவம் இவர் மதி_கேடு எனா
நல் நிதானி மற்று ஈது நவிற்றுவான்

#38
மாயம் மல்கி மலிந்த மறுகு_உளீர்
தூய சத்தியமே துருவிக் கொள்வேம்
ஆயும் நல் நிதிக்கே விலை ஆக்குவேம்
ஏய எண்ணம் இது அன்றிப் பிறிது இலேம்

#39
என்று கூறலும் என் நும் கெடு_மதி
துன்று காமியமாச் சுவை துய்க்கிலீர்
பொன்று-மட்டும் இப் புன்கண் புசித்திரோ
நன்று சத்திய நாட்டம் என்று எள்ளினார்

#40
சற்று நின்ம் எனச் சாற்றி அங்கு ஓர் சிலர்
உற்று முன் வந்து உயர் தவ வேடத்தீர்
சொற்ற சத்தியம் யாது அது சொன்-மினோ
நல் திறத்தை நயக்குதும் யாம் என்றார்

#41
வினவும் மாற்றம் நன்றாம் என மெய் உணர்
பனவ இப் படுபாதகச் சேரியில்
கனவிலும் கருதுற்றிலன் இத்தகு
மன உணர்ச்சி உண்டு என்று மதி_வலோய்

#42
வஞ்ச மாயக் கிடக்கை மறிந்து கண்
துஞ்சும் மாந்தர் தொகுதியுள்ளும் சிலர்
விஞ்சு சத்திய ஆக்கம் வினாவும் நல்
நெஞ்சு_உளார் என நேருறக் கண்டனம்

#43
தீண்ட_அரும் பெரும் மாயச் செருக்கு_உளார்
மூண்டு உருத்து உயிர் மோசம் விளைப்பினும்
ஈண்டு சத்தியம் யாம் எடுத்து ஓதலே
வேண்டும் என்று துணிந்தனன் மேலையோய்

#44
அம் கண் வானத்து அரசிளங்கோமகன்
உங்களோடு உலகு உள்ளளவும் உளேன்
எங்கும் உண்மை இயம்பு-மினீர் என்ற
துங்க வாசகம் சோர்வுறுமே-கொலாம்

#45
செய்ய_அல்ல செயக் கெடும் செய்வன
செய்யலாமையினும் கெடும் தேர்க எனா
வையகத்து நல் நீதி வகுக்குமால்
ஐய நின் கருத்து யாது என அந்தணன்

#46
நன்று சொற்றனை நம்பி நிதானி நீ
என்றன் உள்ளுறையும் இதுவே எனா
முன் துனும் ஜெக மாயை முயக்கருக்கு
இன்று மெய்ம்மை இசைத்தும் என்று ஒல்லையே

#47
மா தயா திரியேக மகத்துவர்
பாத பங்கஜம் கிட்டிப் பராவினார்
ஏதம்_அற்ற இரக்ஷண்ய மா நவ
நீத சத்தியம் காட்டி நிகழ்த்துவார்
** நகர்புகு படலம் முற்றிற்று

@9 இரக்ஷணிய நவநீதப் படலம்

#1
தந்தை ஆகி உலகு அனைத்தும் தந்து மநுக்கள்-தமைப் புரக்க
மைந்தன் ஆகிப் புனிதாவி வடிவாய் ஞான வரம் அருளிப்
பந்தம்_அற நின்று இலங்கு திரியேக பரமன் பதாம்புஜத்தைச்
சிந்தை ஆரத் தொழுது ஏத்திச் சேர வாரும் ஜெகத்தீரே

#2
நீதி கருணை பரிசுத்த நேசம் சுயம்பு சாமர்த்தியம்
போதம் இனைய லக்ஷணங்கள் பரிபூரணமாய்ப் பொருந்தி அணு
ஏதம்_இலனாய்க் காமாதி எறிந்து பவத்தை எரிக்கின்ற
ஆதி தேவன் சரண நிழல் அடைய வாரும் ஜெகத்தீரே

#3
ஆதி நரனைப் படைத்து உலகம் அனைத்தும் அவனுக்கு அடிப்படுத்திப்
போதமொடு பாக்கியம் புனிதம் போத அருளி மன_சான்றும்
ஏதின் மதியும் ஈந்து சுயாதீனத்து இரு என்று இனிது உவந்த
நாதன் கருணை உள்ளி அதை நாட வாரும் ஜெகத்தீரே

#4
பாவ நரங்கள் எரிநரகில் பதையா வண்ணம் பரகதி செல்
ஜீவ வழியைத் திறந்து ஒன்றாம் செல்வ மகவைச் சிலுவையிலே
சாவக் கொடுத்து எப் பாவிகட்கும் சலியாது இரக்ஷை-தனை அருளும்
தேவ சிநேகம்-தனை நினைந்து சேர வாரும் ஜெகத்தீரே

#5
சொந்த மகவை நம்-பொருட்டுத் துணிந்து சாகக்கொடுத்த பிரான்
உம்-தம் இதயம் எமக்கு நல்கி உய்-மின் என்ன உணராமல்
சந்ததமும் பேய்க்கு இடங்கொடுத்துச் சாதல் நலமோ தயாபரற்கே
சிந்தாசனத்தைக் கையளித்துச் சேர வாரும் ஜெகத்தீரே

#6
கோது_இல் நீதி இரக்கம் எனும் குணங்கள் மாறுகொள்ளாமல்
தாதை உவப்ப மாது வித்தாய்த் தயாள உருக் கொண்டு அவதரித்து
நீதி இரக்க சமரசனா நின்று உத்தரித்த நிறை கருணை
ஆதி மூலப் பரம்பொருளை அடுக்க வாரும் ஜெகத்தீரே

#7
மண்ணை விழுங்கக் கொதித்து எழும்பி வரும் தீ ஆற்றைக் கடப்பதற்கு
வெண்ணெய்ப் பாலம் சமைப்பார் போல் வேத நாதன் வெகுளி சுய
புண்ணியத்தால் தீரும் எனப் புலம்ப வேண்டாம் புரை தீர்ந்த
அண்ணல் ஏசு குருதி முகந்து அவிக்க வாரும் ஜெகத்தீரே

#8
நீதாசனத்து அண்டையில் நிற்க நீதிமானுக்கும் அரிதேல்
கோது ஆர் பாபாத்துமங்களுக்குக் கூடுமோ கூடாது எனவே
வேதாக்ஷரங்கள் விளம்புகின்ற மெய்யைக் கருதி விரைந்து இன்னே
நாதா கிருபாசனத்து அண்டை சார வாரும் ஜெகத்தீரே

#9
நம்மைப் படைத்துக் காத்துவரும் நாதன் இதர தேவர்களை
நம்மைப் போல வணங்காதீர் நாமே கருத்தர் என நவின்ற
செம்மை மொழியைக் கருத்து இருத்தித் தெய்வப் பதரைச் சீத்துவிட்டு
வம்-மின் திரியேகப் பெருமான் மலர்த் தாள் வணங்க ஜெகத்தீரே

#10
விக்கிரகம் நம் இணை ஆக்கி விழுந்து வணங்கும் விழலரை நம்
உக்கிர கோபம் தகிக்கும் என உரைத்த கடவுள் உமை முழுதும்
நிக்கிரகம் செய்திடும் முன்னர் நீச உரு ஆராதனமாம்
அக்கிரமம் விட்டு யேசு திரு_அடியை அடை-மின் ஜெகத்தீரே

#11
தூய நினைவால் அன்றி நம் பேர் சொல்லி வழங்கும் துர்_ஜநரைக்
காயும் நமது சினம் என்ற கடவுள் உரையைக் கருதாமல்
வாயில் வந்தபடி பிதற்றி மதியாது ஒழுகல் மகா பாவம்
நேயம் மிகு மெய்ப் பத்தியுடன் நினைத்து வழுத்தும் ஜெகத்தீரே

#12
அனைத்தும் நமக்குக் கையளித்த அகண்ட பரிபூரணன்-தம்மை
நினைத்து லோக வியாபாரம் நிறுவி வணங்க வாரத்து ஓர்
தினத்தை விதித்தார் அ நாளைத் தீட்டுப்படுத்தில் தீராத
அனர்த்தம் வரும் காண் தூ மனமா அமலன் பரவும் ஜெகத்தீரே

#13
ஆயுள் நீடித்து இ உலகில் அமர்ந்து சுகிக்க உனது தந்தை
தாயைக் கனம்பண்ணுதி என்று சருவ லோக தந்தை சொன்ன
தூய விதியை நல் நெறியின் துணிபு என்று உன்னிப் பெற்றோர்க்கு
ஞாயமுடன் கீழ்ப்படிந்து யேசு நம்பன் தொழு-மின் ஜெகத்தீரே

#14
கொலை செய்யாதே எனப் பரம கோமான் கொடுத்த கற்பனைக்கு
நிலம் மீது உதித்த குமரகுரு நியாயம் இலவாச் சீறுவதும்
கொலையோடு ஒக்கும் என விதந்து கூறும் பொருளைக் குறிக்கொண்டு
தலை மீது அணிந்து அச் சற்குருவின் சரணைப் பணி-மின் ஜெகத்தீரே

#15
தீய வினையாம் விபசாரம் செய்யாதிருங்கள் என்று மகா
தூய கடவுள் வரைந்து தந்த துகள் தீர் விதியைத் தூ மனமாய்
மாயம் அறவே அநுட்டித்து மனையோடு இருந்து இல்லறம் நடத்தி
நேயம் மிகு ரக்ஷகன் சரண நிழலை அடை-மின் ஜெகத்தீரே

#16
இச்சையோடு அந்நிய மாதர் எழிலைக் கருதி நோக்கிடுவோன்
துச்சாரிகள் பங்கு அடைவன் என்ற தூயோன் அருளைத் துணைக்கொண்டு
சிச்சீ எனத் துர்_இச்சை எலாம் சேர வெறுத்துச் சீத்துவிட்டுக்
கொச்சை மதியை அகற்றி எம்மான் குணம் சார்ந்து ஒழுகும் ஜெகத்தீரே

#17
மீளா நரகுக்கு ஆளாக்கும் விபசாரத் தீ_வினை புரிந்து
வாளாப் பரமானந்த சுக வாழ்வை இழத்தல் மதியாமோ
நாள் ஆரம்பத்து அயல் தூற்ற நாணம் அழிந்து நகைக்கிடமா
மாளா முன்னே கிறிஸ்து யேசு மலர்த் தாள் வணங்கும் ஜெகத்தீரே

#18
எங்கும் தம சந்நிதியாக இருக்கும் கடவுள் களவான
பங்க வினை செய்யாதிர் எனப் பகர்ந்தது உணர்ந்து பர பொருளைச்
சிங்கி எனவே வெறுத்து அழியாச் செல்வம் வழங்கும் கிறிஸ்து எனும்
மங்காப் பொருளை அடைந்து நித்ய_வாழ்வை அடை-மின் ஜெகத்தீரே

#19
பொய்யைப் புகலாதிருங்கள் எனும் புனிதன் புனித கற்பனையை
அய்யோ நினையாது அவமதித்தீர் அல்லும்_பகலும் அனவரதம்
துய்ய மன_சாட்சியை மழுக்கித் துணிந்து முழுப்பொய் சொல்லுகின்றீர்
உய்யீர் உய்யீர் மெய் பேசி உய்ய வாரும் ஜெகத்தீரே

#20
பொய்மை தானும் வாய்மையதாம் புரை தீர் நன்மை பயக்கும் எனின்
மெய்மை ஆவது எத் தீங்கும் விளையாது உரைத்தல் எனும் குறளின்
நொய்மை உரையைத் தவிர்த்து உள்ளது உள்ளபடியே நுவலும் என்ற
தெய்வ உரையைக் கடைப்பிடித்துச் சேர வாரும் ஜெகத்தீரே

#21
நெஞ்சுத் துணிவாய்ப் பொய் பேசி நேசம் ஒருவி அந்நியரை
வஞ்சித்து ஒழுகும் மதியிலி காண் மனாதி அறியும் மகாதேவன்
கிஞ்சித்தேனும் விடாது நும்மைக் கேட்கும் காலம் கிட்டும் முனம்
அஞ்சித் தீமை அகற்றி எம்மான் அடி சார்ந்து உய்-மின் ஜெகத்தீரே

#22
விரி வெள்ளரி அம் கனிக்கு இருப்புப் பூண் கட்டிடும் அவ்விதம் போல
ஒரு பொய் நிலைக்க ஆயிரம் பொய் உரைக்க வேண்டும் உரைத்தாலும்
வருமே வெளிக்கு வரில் அதிக மானக்கேடே மறுமையினும்
எரி-வாய்ப் படுக்கும் இதை விடுத்து எம் இறையைத் தொழு-மின் ஜெகத்தீரே

#23
அனைத்தும் உடையான் பிறர் உடைமையான எதையும் ஆசையுடன்
நினைத்திடாதே என விரித்து நிகழ்த்தும் கடைசிக் கற்பனையை
மனத்துள் இருத்தி அவரவர்க்கு வகுத்த அளவின் மகிழ்ந்து சொற்பத்
தினத்தைக் கழித்து எம்மான் அருளும் ஜீவன் அடை-மின் ஜெகத்தீரே

#24
தந்தை கொடுத்த தச_விதியைத் தள்ளி அக_சாட்சியை மழுக்கிச்
சிந்தை உரக்க நன்று ஒருவித் தீமை புரிந்த நரரேம் காண்
எந்தவிதத்தும் தேவ சினம் எரிக்கும் முன்னம் எமைப் புரக்க
வந்த பரம சுதன் பாதம் வணங்க வாரும் ஜெகத்தீரே

#25
கல்லைச் செம்பைக் களிமண்ணைக் கடவுள் எனவே உருப் பிடித்துப்
புல்லைப் பூவை நறும் குழையைப் போட்டுப் பூஜை புரிவீர்காள்
தொல்லைப் பவமும் புரி பவமும் தொலையும் ஆறு கிறிஸ்து எனும்
செல்வக் குமரன் திரு_அடியைச் சேர வாரும் ஜெகத்தீரே

#26
ஏழை மதியால் துன்_மார்க்கத்து எய்தற்கு அரிய வாழ்நாளைப்
பாழாக்கிடுவீர் அந்தோ நிர்ப்பந்த முடிவு பற்றிய பின்
ஊழியூழி அழுதாலும் உய்வு உண்டாமோ உளம்திரும்பித்
தாழாது இன்னே யேசு திரு_சரணைப் பிடி-மின் ஜெகத்தீரே

#27
எல்லாம் கொடுத்த தாதாவை இறைஞ்சிப் பிழைக்க மதி குலைந்து
பொல்லாங்கு உடற்றும் பேய்க்கு அடிமை புகுந்து விலக்கும் கனி புசித்தோர்
அல்லால் அமலன் பாவ வினைக்கு ஆதி என்பது அறப்பாவம்
எல்லாப் பவமும் அறக் குமரன் இணைத் தாள் அடை-மின் ஜெகத்தீரே

#28
பொறுதி உடைய தெய்வம் என்று போக_வர நீர் புரி பவத்துக்கு
அறுதி இலையே அந்தோ நும் ஆவி இறை முன் அடுத்திடும் அ
இறுதி நாளின் பயங்கரத்துக்கு என்னோ செய்வீர் இக்கணமே
உறுதி நாடிக் கிறிஸ்துவுக்கே உளம் ஈந்து உய்-மின் ஜெகத்தீரே

#29
சர்வ ஜீவகாருணியம் தன்னால் என்றும் தமக்கு உரிய
சர்வ மகிமையும் கனமும் தள்ளி மநுவாய்ச் சஞ்சரித்து
சர்வ லோக தண்டனையும் தாமே சகித்துக் கதி திறந்த
சர்வ லோக சரணியனைச் சார வாரும் ஜெகத்தீரே

#30
பாவ அழுக்கும் ஆத்துமத்தைப் பற்றி இருப்பது அறியாமல்
ஆவலொடு சிற்சில நதி நீராடில் தொலையும் என அலைந்து
சாவீர் ஈதோ ரக்ஷணிய சைலம் சுரந்து பெருகி வரும்
ஜீவ_நதி நீராடுதற்குச் சேர வாரும் ஜெகத்தீரே

#31
கானம் புகுந்து தனை ஒறுத்துக் காயம் வருத்திக் கண் மூடி
மோனம் புரிந்து தவ யோக முயல வேண்டாம் அவரவர் தம்
தானம் இருந்து ஆத்தும பாவச் சழக்கைக் கருதித் தனைத் தாழ்த்தி
ஞான குருவின் புண்ணியத்தை நாட வாரும் ஜெகத்தீரே

#32
மனம் போம் வழியே மதி போக்கி மயங்கிப் பல பாதகம் புரிந்து
தினம் போம் வீணே நடுநாளில் திகிற்கு உள்ளாகிக் கலங்குதிரோ
இனம் போகாதீர் மதி மோசம் இன்னே எம்மான் ஏசு திரு
முனம் போய் விழுந்து கெஞ்சுதற்கு முடுகி வாரும் ஜெகத்தீரே

#33
திரணம் எனவே உமை வாரித் தீ வாய் நரகக் கடலிடத்தே
மரணச் சுழல் கொண்டு உய்க்கா முன் மனப்பூருவமாய் வழிபடுவோர்க்கு
அரணம் ஆகி ஆன்ம ரக்ஷை அருளும் ஏசு சாமி திருச்
சரணம் அடைய இது சமயம்சமயம் வாரும் ஜெகத்தீரே

#34
ஒன்றே தெய்வம் மெய் கருணை உள்ளார் உண்மை பிழை பொறுப்பார்
அன்றோ அன்று நரர்க்காக அரும் பாடு அடைந்து பிணை ஏற்று
நின்றே பலியா உயிர்கொடுத்த நிமலன் நீதி அடையீரேல்
நன்று ஈவார்-கொல் ஐயம் இலை நம்பி வாரும் ஜெகத்தீரே

#35
நாலு வேதம் உளது செவி நயனம் கண்டு கேட்டது_இலை
மால் ஆதிய முத்தேவர் உளர் மலடி பெற்ற மகார் போல்வர்
மேலும் நாலு பதவி உள விண்ணில் பூத்து விரிந்த மலர்
போலி இவை மற்று யேசு சரண் போற்ற வாரும் ஜெகத்தீரே

#36
வேதம் ஒன்றே மெய் உளங்கை நெல்லிக்கனி போல் விளங்குது இதோ
நாதன் ஒருவர் உளர் உலகம் நவிலும் சான்று நற்கதியின்
பாதை ஒன்று உண்டு அது கிறிஸ்து மார்க்கம் இதனைப் பகுத்து உணர்ந்து
கோது_இல் பரம குரு பாதம் கும்பிட்டு ஏத்தும் ஜெகத்தீரே

#37
பாவி உளத்தை ஊடுருவிப் பாயும் இரு வாய்ப் பட்டயம் நம்
ஆவிக்கு உள வெம் பவ நோயை அகற்றி அழியாப் பேர்_இன்ப
ஜீவன் அளிக்கும் தெள் அமிர்தாம் சிந்தைக்கு இனிய தீம் பாலாம்
தேவ வசனம் இதை உணர்ந்து சேர வாரும் ஜெகத்தீரே

#38
தலைகீழாக உலகு அடுக்குத் தடுமாறிடினும் வான் சுடர்கள்
நிலை மாறிடினும் பூதியங்கள் நீறுநீறாக் கரிந்திடினும்
உலவா வேதாக்ஷரங்களில் ஓர் உறுப்பும் இதை விட்டு உய் வழி வேறு
இலை ஆதலின் ஈது உணர்ந்து எம்மான் இணைத் தாள் வணங்கும் ஜெகத்தீரே

#39
பூமி பாரம் தீர்க்க வந்து பொல்லாங்கு இயற்றிப் பொய் பேசிக்
காம வெறியா ஈர்_எண்ணாயிரம் கோவியரைக் கற்பழித்த
சீமானுக்குத் தொழும்பு செய்து தீ வாய் நரகில் பதையாமல்
சாமி யேசுக் கிறிஸ்து திரு_சரணம் அடை-மின் ஜெகத்தீரே

#40
பாவ நாசம் செய வந்து பழுது ஒன்று இன்றிப் பரமார்த்த
மேவு விரதியாய் உலக வேட்கை நீத்துப் பாடுபட்டு
ஜீவகோடிகளை மீட்டுச் செல்வ மோக்ஷம் திறந்துவைத்த
தேவ மைந்தன் தொழும்பு செய்யச் சேர வாரும் ஜெகத்தீரே

#41
வெண்ணெய் திருடிக் கட்டுண்டு வெதும்ப வடிக்க விம்மிவிம்மிக்
கண்ணைக் கசக்கி அழுதுநின்ற கள்ளப் பிள்ளை கருத்தா என்று
எண்ணப்போமோ தெய்வத்துக்கு இது ஓர் விளையாட்டு எனலாமோ
நண்ணிக் கிறிஸ்து திரு_அடியை நயந்து போற்றும் ஜெகத்தீரே

#42
நீசப் புலைநர் ஆத்துமத்தை நினைந்து ஓர் பொருளாய்ப் பிணைப்பட்டு
பாசத்தாலே பிணிப்புண்டு பதைக்க வடிக்கக் குருதி சிந்தி
நேசத்தாலே உயிர் கொடுத்த நிமலன் தொழும்பு வெட்கம் எனப்
பேசில் பழுதாம் உயிர்தப்பிப் பிழைக்க வாரும் ஜெகத்தீரே

#43
தொட்டுச் சிசுவை உயிர்ப்பிக்கச் சோரன் சோர இடைச்சிகளைக்
கட்டிப்புரண்டு நட்ட மந்தைக் கற்போன் நிருவிகாரி மகா
சிட்டப் பிரமசாரி என்று தெட்டினவனைத் தெய்வம் என்று
கெட்டுப்போகாது யேசு சரண் கிட்டிப் பிழை-மின் ஜெகத்தீரே

#44
முன் மாரிசமாய் நிருவாணப் பிச்சை கேட்டு முனிப் பெண்டு
தன்மானத்தைக் கெடுக்க முயல் தாணும் மால் அயன்-கொல்லாம்
நன்_மார்க்கத்தைக் காட்டி உமை நாலாம் பதத்தில் உய்ப்பன் அந்தத்
துன்_மார்க்கத்தை விடுத்து யேசு துணைத் தாள் தொழு-மின் ஜெகத்தீரே

#45
பாசுபதனால் சலந்தரனைப் படுத்தக் காயம்-தனில் நுழைந்து
மாசு_இல் விருந்தை கற்பழித்த மாயன் மடிந்த மற்றவள்-தன்
ஆசைப் பேய் கொண்டு அலைந்து துழாய் அணிந்து காமம் தணிந்தானாம்
சீசீ நாற்றம் விடுத்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே

#46
வருவது அறியாச் சிவன் முனிக்கு வரத்தை நல்கி ஒளித்து ஓடக்
கரிய மால் மோகினி ஆகிக் காக்கக் காமம் தலைக்கொண்டு அ
இருவர் கூடிக் காரி வந்தான் என்பீர் இதுவோ தேவ முறை
தெரியவிலையோ நின்மலன் தாள் சேர வாரும் ஜெகத்தீரே

#47
பத்து முனிவர் தாசரதி சரிதம் பகர்ந்தார் பல விஷயத்து
ஒத்தது_இல்லை வான்மீகத்தொடு வாசிட்டம் உய்த்து உணர்-மின்
சுத்த சுவிசேஷகர் நால்வர் சொன்ன பரம சத்தியத்தைச்
சித்தம் செய்து கிறிஸ்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே

#48
கடலைக் குரங்கு தாவினதும் கடலைக் கணையால் தகித்ததும் பின்
கடலை அடைத்துக் கடந்ததும் பாற்கடலை மலையால் கடைந்ததும் பொய்க்
கடலைக் கடைந்த கடல் புழுகர் கட்டிவைத்த கதை காணும்
கடலை அமைத்துக் காத்த கர்த்தன் கழற்கு ஆட்படு-மின் ஜெகத்தீரே

#49
கம்ப நாகம் பொய்க் கடுவைக் கக்கி மதுரகவி என்னும்
அம் பொன் கிண்ணம் நிறைத்து வைத்தது அறியாது அமிழ்தம் என வருந்தி
வெம்பி அறிவு மாண்டீர் அ விடம் தீர்த்து உய்க்கும் கிறிஸ்து எமது
நம்பன் வசன சஞ்சீவி நயந்து உட்கொள்ளும் ஜெகத்தீரே

#50
வாய்க்கும் கொடிய வைணவர்-தம் மனை வாய் எச்சில் வாரி உண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தான் குருகூர் நின்ற நாரணன் என்று
ஏய்க்கும் கவிப் பேய் பிடித்து உழலாது எய்தற்கு அரு வீடு என மதித்துத்
தாய்க்கும் பெரிது அன்பு_உடையானைச் சார வாரும் ஜெகத்தீரே

#51
மூர்க்கமான வைணவமே முதலாம் சமய முழுப் புரட்டைப்
பார்க்கப்பார்க்கப் பாவம் அலால் பயன் ஒன்று இல்லை இரக்ஷிப்பின்
மார்க்க உபதேசங்களையும் மருவு புருஷார்த்தங்களையும்
தீர்க்கமாய் உய்த்து உணர்ந்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே

#52
பொல்லா உலகப் புரட்டர் வெறும் பொய்யை நிறைத்துக் கட்டிவைத்த
எல்லாக் கதையும் எரிநரகுக்கு இழுக்கும் பாசம் என எறிந்து
சொல்லால் பொருளால் பழுது_இல்லாச் சுருதி மொழியைக் கருத்து இருத்தி
எல்லாம் வல்ல பெருமானை இறைஞ்ச வாரும் ஜெகத்தீரே

#53
ஆறு சமயப் படுகுழி வீழ்ந்து அந்தோ அறிந்தும் அதனிடை நின்று
ஏறு சமயம் இது அன்று என்று இயம்பி அமிழ்ந்தும் ஏழைகாள்
வேறு சமயம் இலை யேசு விரும்பிவிரும்பி இரக்ஷிப்பைக்
கூறு சமயம் இது கண்டீர் கூடி வாரும் ஜெகத்தீரே

#54
பாவ பாரம் சுமந்து பிரபஞ்சாரணியத்து அலைந்து ஆத்ம
நோவுற்று இளைத்தீர் தாகித்தீர் நோக்கும் இது-தான் இரக்ஷணிய
ஜீவ ஊற்று விசுவாசச் செம் கை ஆர முகந்து அருந்தில்
சாவீர்_அல்லீர் தாகியீர் சரதம் வாரும் ஜெகத்தீரே

#55
ஒரு சின்மய சற்குரு ஆகி உலகத்து உதித்து ஜீவ ரக்ஷை
தரு சன்மார்க்க நெறி இது எனத் தம நல் ஒழுக்கம் சான்று ஆகத்
துருசு_இல் மனத்தோடு உபதேசம் சொல்லிச் சுகிர்த பலியாய் வெம்
குருசில் மடிந்த குருசிலைக் கைகூப்ப வாரும் ஜெகத்தீரே

#56
ஒலிவாசலக் கா இடை ஒரு இரா உலகோர் பவம் ஏற்று ஒரு தனியே
மெலிவாய் ஆத்துமத் துயரம் மேவி இரத்த வெயர் ஒழுக
நலிவாய்த் தேவ சினத்தாலே நணுகும் வாதை அனைத்தும் அன்பின்
மலிவால் சகித்த பெருமானை வணங்க வாரும் ஜெகத்தீரே

#57
குருசில் அறையுண்டு உரைக்கு_அடங்காக் கொடிய துன்பம் சகிக்கையில் அப்
பரிசு வருத்தும் பாதகர்க்காய்ப் பரிவோடு எந்தாய் மற்று இவர்கள்
புரி செய் வினை ஈது என அறியார் பொறு-மின் என்ற புண்ணியர்-தம்
உரைசெய் அரிய அன்பு நிலை உன்னி வாரும் ஜெகத்தீரே

#58
வானம் களிக்கப் புவி மகிழ வழுவாத் தெய்வ மறை பரம்ப
ஞானம் பெருக நல் அறங்கள் நாளும் ஓங்க நனி உயர்ந்த
தானம் நரர்க்குக் கைகூடச் சமாதி ஒருவி உயிர்த்தெழுந்து
தீனம் தொலைத்த குமரேசைச் சேர வாரும் ஜெகத்தீரே

#59
நந்தா இரக்ஷண்ணிய கிரியை நலமாய் முடித்து நர ஜீவ
பந்த வினையை அற நூறிப் பரலோகத்துக்கு எழுந்தருளித்
தந்தை வலபாரிசம் மேவிச் சார்வதா நம்-தமக்காகச்
சிந்தை கனிந்து மன்றாடும் தேவைப் பரவும் ஜெகத்தீரே

#60
ஆதி முதலாய்ப் பிறந்து இறந்தோர் அனைவோரையும் அந்தத்து நொடிப்
போதில் உயிரோடு எழுப்பி இரு புறமும் நிறுவி அவரவர்க்கு
நீதாசனத்திலிருந்து மகா நியாயத்தீர்ப்புக் கூற முகில்
மீது வருவார் கிறிஸ்து இன்னே விரைந்து வணங்கும் ஜெகத்தீரே

#61
மாய உலக மயக்கை முற்றும் வரைய வேண்டின் வஞ்சனை செய்
பேயைப் புறம்கண்டிட வேண்டில் பிடித்த துர்_இச்சை பிறங்காமல்
தேய வேண்டில் புனித மனம் சிறக்க வேண்டில் திகையாமல்
தூய பரிசுத்தாவி அருள் சுறுக்காய்த் தேடும் ஜெகத்தீரே

#62
ஈன மதியால் பவம் புரிந்தேம் இனி என் செய்வேம் இரக்ஷிப்புக்கு
ஆன வழி ஏது அஞ்சல் என அபயம் கொடுப்பார் எவர் புனித
ஞானம் உறுமாறு எவன் என்ன நாடிக் கவன்று உள் நைவீரேல்
தீனதயாள சற்குருவைச் சேர வாரும் ஜெகத்தீரே

#63
மா பாதகம் செய் துரோகிகள் யாம் வரையாது அருள் தாதாவே உம்
கோபாக்கினியைத் தாங்க எம்மால் கூடாது அய்யா குவலயத்தின்
ஆபாசத்தைத் தவிர்த்த உமது அருமைக் குமரன்-நிமித்தம் எங்கள்
பாபாத்துமத்துக்கு இரங்கும் எனப் பணிந்து வாரும் ஜெகத்தீரே

#64
பாவ உணர்ச்சி மனந்திரும்பல் பச்சாத்தாபம் பரம சுதன்
ஜீவ அவஸ்தை-தனை நினையும் சிந்தைக் கனிவு விசுவாசம்
தேவ சிநேகம் பவ வெறுப்புத் திடநம்பிக்கை இவை பரிசுத்
தாவி அருளால் பெற்று இறைவற்கு ஆட்பட்டு ஒழுகும் ஜெகத்தீரே

#65
தம் ஓர் மகவை உம்-பொருட்டுத் தந்த பரம தாதாவின்
கைம்மாறு ஒன்றும் கருதாத கருணைப் பெருக்கைக் கண்டிருந்தும்
எம்மாத்திரமும் உணராமல் எல்லா நாளும் பவம் புரிந்தால்
சும்மா போமோ பெருமானைத் துதிக்க வாரும் ஜெகத்தீரே

#66
மிக்க சம்பத்து உரிமை மனை விரும்பும் மக்கள் கிளைஞர் உற
ஒக்க ஒழியும் அல்லாமல் உயிர்போம் காலத்து உடன் வருமோ
எக்காலத்தும் உடன் இருந்து இ இகத்தும் பரத்தும் சுகம் வழங்கத்
தக்க பெருமான் ஏசு திரு_சரணைச் சாரும் ஜெகத்தீரே

#67
ஜீவ ரக்ஷை உளம் பதித்துத் தேக இச்சை-தனை முனிந்து
பாவ உலகை அருவருத்துப் பசாசைச் செயித்துப் பரமார்த்தம்
மேவு சுருதி நெறி ஒழுகி விசுவாசத்தால் திரியேக
தேவைப் பரவிக் கதிகூடச் சேர வாரும் ஜெகத்தீரே

#68
ஜென்ம வினையும் அனாதிகளால் தினமும் புரிந்த தீய கொடும்
கன்ம வினையும் கதிரவனைக் கண்ட பனி போல் கழிந்து ஓடும்
புன்மை அகலும் புதிதான புனித மனமும் பொருந்துமதால்
தன்ம உருவாகிய ஏசு சரணம் அடை-மின் ஜெகத்தீரே

#69
விசுவாசத்தால் பெரும் சூளை வெம் தீக் கிடங்கை மேற்கொண்டார்
விசுவாசத்தால் வெம் சீய விரி வாய் அடைத்தார் விறல் கொண்டார்
விசுவாசத்தால் முப்பகையை வென்றார் முது வேதியர் அதனால்
விசுவாசத்தால் கிறிஸ்து அரசை விரும்பி வணங்கும் ஜெகத்தீரே

#70
மண்ணை மணலைச் சிவலிங்க வடிவாய்ச் சமைத்து மலர் தூவி
எண்ணம் இன்றி மந்திரம் சற்று இயம்பிப் பழம் பாட்டுகள் பாடிப்
பண்ணும் பூஜை பயன்படுமோ பரவை கடக்கக் கல் புணை கொண்டு
ஒண்ணுமோ ரக்ஷணிய கலத்து உவந்து புகு-மின் ஜெகத்தீரே

#71
கசந்து பவத்தை உணர்ந்து சொரி கண்ணீர்த் திரு_மஞ்சனம் ஆட்டி
இசைந்த ஜெப மாலிகை சூட்டி இதய பீடத்து இனிது இருத்தி
அசைந்திடா மெய் விசுவாச அன்பின் கிரியை நிவேதித்துப்
பசைந்த மனமோடு ஏசு திரு_பதம் பூஜியும்-மின் ஜெகத்தீரே

#72
காலைத் துதியோடு எழுந்திருந்து கடவுள் மொழியாம் களங்கம்_அற்ற
பாலைப் பருகி ஆவலுடன் பணிவாய் முழங்காற்படியில் நின்று
மூலப் பொருளாம் குமரேசை முன்னிட்டு ஏத்தி ஜெபம் புரிந்து
சாலப் பரம தந்தை அருள் தயை பெற்று உய்-மின் ஜெகத்தீரே

#73
இரவில் தனித்து மறைத் தீபம் ஏற்றி இதயத்து இருள் நீக்கிக்
கரவு_அற்று இலங்கும் விசுவாசக் காட்சியாலே கருத்தாவைத்
தரிசித்து உலகம் தரக்கூடாச் சமாதானத்தைத் தரும்-மட்டும்
பரவி ஜெபித்து உன்னத பரமபத நாடு அடை-மின் ஜெகத்தீரே

#74
பாரமான பவம் சுமந்து படருற்று இரங்கும் பாவிகாள்
வாரும்வாரும் எனைக் கிட்டி வந்தால் ஆன்ம வருத்தம் எலாம்
தீரும் பரம பதத்து நித்ய செல்வம் தருவன் எனக் கூவும்
ஆரும் கருணைக் குமரேசை அடுக்க வாரும் ஜெகத்தீரே

#75
அய்யோ அழிவு_இல் ஆத்துமத்தை அவமே கெடுக்கல் ஆவதுவோ
பொய்யாம் உலக போகம் எலாம் போதும்போதும் உளம்திரும்பித்
துய்யோன் சரணம் அடைந்து பவத் தொடக்கை அறுத்துத் தொலையாத
மெய்யாம் பரம சுகம் அடைய விரைந்து வாரும் ஜெகத்தீரே

#76
பொய் ஆதிய பாவங்கள் எலாம் புரிதல் புகழாப் புரிந்திடுவீர்
மெய் ஆரணனார் நல் நெறியை வெறுத்து விலகி வெட்கம் என்பீர்
அய்யோ இது நல் மதியாமோ ஆலம் அமிழ்து என்று அருந்துதிரோ
உய்யா வழி விட்டு உளம்திரும்பி உய்ய வாரும் ஜெகத்தீரே

#77
வாழ்நாள் இரவு பகல் மாதம் வருடம் ஆகிப் புகையே போல்
காணாது ஒழிய மரணம் மிகக் கடுகி வருதல் கண்டிருந்தும்
நாள்நாளும் தான் உடல் போகம் நச்சி ஆன்ம நாயகனை
வீணாய் இழக்கல் ஆவதுவோ விரைந்து வாரும் ஜெகத்தீரே

#78
என்றும் உமக்கு வேண்டுவன ஈந்து ஆதரிக்கும் சருவேசன்
நன்றி அறிந்த கிரியை எனும் நறும் பூம் கனி நீர் நல்கலிர் என்று
இன்றே களைக என்றிடச் சில நாள் இன்னும் பார்ப்பம்பார்ப்பம் என
மன்றாடும் சற்குரு அருளை மறவாது ஏத்தும் ஜெகத்தீரே

#79
உலகம் முழுதும் தனிச் செங்கோல் ஓச்சி அரசு புரிந்தாலும்
இலை இலாபம் ஆத்துமத்தை இழந்தால் எவையும் இகந்து தத்தம்
சிலுவை சுமந்து என் பின்தொடரின் ஜீவன் அடைவர் திண்ணம் என்ற
அலகு_இல் கருணாகரன் வாக்கை அகம் கொண்டு உய்-மின் ஜெகத்தீரே

#80
மூழ்ந்த சுற்றம் கல்வி செல்வம் முயற்சி முதல் காரணமாகச்
சூழ்ந்த மனமேட்டிமைகள் எலாம் ஒருங்கே தொலையத் தொலைத்துவிட்டுத்
தாழ்ந்த சிந்தை அடியுறையாத் தடக் கை கூப்பித் தலை வணங்கி
ஆழ்ந்த கருணைக் கிறிஸ்து அரசை அன்போடு ஏத்தும் ஜெகத்தீரே

#81
பெருமை அடைந்தால் பொறி கலங்கும் பேதம் ஆகும் புலன்கள் எலாம்
பெருமை அடைந்தால் மனாதிகளும் பேதித்து ஒழியாப் பிரமை மிகும்
பெருமை அடைந்தால் அடையாத பிறிது ஓர் பாவம் இல்லையதால்
பெருமை அடையாது யேசு எனும் பிரானை வணங்கும் ஜெகத்தீரே

#82
எண்ணப் பெருமை எள்துணையும் இல்லாக் கிருமி_அனையோமுக்கு
உண்ணப் புசிப்பும் உடைத் தூசும் உதவி இரவு_பகலாகக்
கண் அப்புறத்துச் செல்லாமல் காக்கும் கடவுட்கு இரண்டகம் நாம்
பண்ணப் போமோ நன்றியொடு பரவ வாரும் ஜெகத்தீரே

#83
ஜாதிப் பெருமைக்கு ஆதாரம் சாசுவத நிராதாரம்
ஜாதிப் பெருமைக்கு அன்பு முற்றும் ஜந்மப் பகை சால் சத்துருவாம்
ஜாதிப் பெருமை தரும் பலன் கந்தகத் தீக் கடலில் சார் துயரம்
ஜாதிப் பெருமை விடுத்து யேசு சரணை வணங்கும் ஜெகத்தீரே

#84
தரு ஒன்று உதவு கனிகள் பல சுவையைத் தருதல் சகஜம் அதோ
கரு ஒன்றினில் உற்பவித்த நர கணங்கள்-தமிலே பல ஜாதிப்
பிரிவு ஒன்றிடுமோ வீணான பிடிவாதத்தால் கெடுவானேன்
உரு ஒன்றிய சற்குரு நடை பார்த்து உய்ய வாரும் ஜெகத்தீரே

#85
ஜாதி இரண்டே அந்நியரைத் தனைப் போல் நேசித்து ஆத்மார்த்த
போதம் அடைந்த புங்கவரே புனிதர் பிறரைப் புறக்கணித்துப்
பேதம் இயற்றிக் குலப் பிரமை பிடித்தோர் ஈனர் உமது பிடி
வாதம் வேண்டாம் கிறிஸ்து யேசு மலர்த் தாள் வணங்கும் ஜெகத்தீரே

#86
வேத நெறியைக் கடைப்பிடித்து விசுவாசத்தால் கிறிஸ்து யேசு
நாதன் தொழுது அன்பு_உடையோராய் நல்ல மன_சாக்ஷியை அடைந்து
கோது_அற்று ஒழுகிப் பரம பதம் கூடக் கருதிக் குழாம் கொண்ட
ஜாதியொடு சேர்ந்து இறைவன் அடி-தனைப் போற்றிடு-மின் ஜெகத்தீரே

#87
பண்டு இ உலகு பிரளயத்தால் பாழானதும் சோதோம் கொமரா
மண்டி எரிகந்தகத் தீயின் மழையால் மண்மேடு ஆகியதும்
மிண்டர் செய்த தீ_வினைக்கு விளைந்த பயன் என்று உணர்கிலிரோ
அண்டர் பெருமான் சீறும் முனம் அண்டிப் பிழை-மின் ஜெகத்தீரே

#88
அன்று பிரமன் எழுதியவாறாம் என்று உரைக்கும் அறிவீனம்
என்று தொலையும் நும்மை விட்டு இங்கு எல்லாம் இறைவன் செயல் ஆயின்
நன்று தீது ஏன் மோக்ஷமது ஏன் நரகம்-தான் ஏன் நாஸ்திகராய்ப்
பொன்ற வேண்டாம் புண்ணியனைப் போற்ற வாரும் ஜெகத்தீரே

#89
இதயக் கதவைத் தாள் செறித்திட்டு இக போகத்தில் இறுமாந்து
மதி_அற்று அலகை நடித்திட மெய்மறந்து களித்து மகிழ்கின்றீர்
பதுமக் கரத்தால் தட்டி எம்மான் பலகால் பரிவோடு உமைக் கூவும்
மதுரக் குரல் வந்து எட்டலையோ வல்லே திற-மின் ஜெகத்தீரே

#90
மதியைக் கெடுத்துப் பிரபஞ்ச மாய வலைக்குள் உமை மாட்டிக்
கொதியுற்று எழும்பும் எரிநரக கும்பிக்கு இடவே கூளி செயும்
சதியைக் கருதி அவன் தொழும்பைத் தள்ளி அணுச் சஞ்சலம் அணுகாக்
கதியைக் கொடுக்கும் ஏசு திரு_கழற்கு ஆட்படு-மின் ஜெகத்தீரே

#91
விழி-மின் மெய் வேதியர் எனும் குக்குடங்கள் விழித்து விளித்தனவால்
விழி-மின் சுவிசேஷக் கிரணம் வீசி எழுந்தான் நீதி ரவி
விழி-மின் விடியா நிசி வரும் முன் விரைந்து செய்வ செய வேண்டும்
விழி-மின் விழி-மின் பவத் துயிலை விடு-மின் விடு-மின் ஜெகத்தீரே

#92
தள்_அரிய நியாயம் இது-தான் என்று உணர்ந்தும் சாதனையாய்
உள்ளம் ஒன்று இங்கு உரை ஒன்றாய் உரப்பி வாதுபுரியாமல்
கள்ளம்_அறவே விதிவிலக்கைக் கருதிப் புரிந்து கருணை மிகும்
வள்ளற்கு உமையே கையளிக்க வாரும்வாரும் ஜெகத்தீரே

#93
தீங்கு என்று ஒன்றை அறிந்தவுடன் செய்யேன் என்று தேவாவி
ஓங்கும் அருளைத் துணையாக் கொண்டு உறுதியா நிண்ணயம்பண்ணி
நீங்காது அதனில் நிலைநின்று நெறி விட்டு அயலில் விலகாமல்
தாங்கும் குமரகுரு சரணம் சார வாரும் ஜெகத்தீரே

#94
வேடமான பொய்ப் பத்தி வெயில் முன் மஞ்சள் பூச்சது போல்
ஓடும் கணமும் நில்லாது இங்கு உறும் ஓர் சிறிய சோதனையில்
தோடம் அலது துகளளவும் சுகிர்தம் இலையால் இருதயத்துள்
நாடி எழும் மெய்ப் பத்தியுடன் நம்பன் பரவும் ஜெகத்தீரே

#95
ஜீவன் எமக்குக் கிறிஸ்து யேசு தேக பந்தம் தீர்க்க வரு
சாவும் எமக்கு ஆதாயம் என்று சான்றோர் உலக சாலம் எலாம்
மேவா வண்ணம் கடைப்பிடித்த விசுவாசத்தை விரைந்து அறிந்து
சாவா முன் அச்சுதன் திரு_தாள் சார வாரும் ஜெகத்தீரே

#96
அன்பு மயமாம் திரு_மேனி அருளுக்கு உறையுள் திரு_நயனம்
இன்பு தரும் மெய்ச் சஞ்சீவி எழில் வாய் கனியும் திரு_வாக்கு
மன் பூ உலகுக்கு அஞ்சல் என வழங்கும் அபய வரதாஸ்தம்
துன்பு ஏன் நுமக்கு இ எம்பெருமான் துணைத் தாள் தொழு-மின் ஜெகத்தீரே

#97
இரும்போ நெஞ்சம் இன்னும்-தான் இளகவிலையோ ஈண்டு சற்றே
திரும்பிப் பாரும் உமக்காக ஜீவன் கொடுத்த தியாகேசன்
பெரும் பாதையை விட்டு இடுக்க வழி பிரவேசியுங்கள் பிழைப்பிர் என
விரும்பி அழைத்து வருகின்றார் விரைந்து வணங்கும் ஜெகத்தீரே

#98
ஜீவன் பிழைக்க மகவு அளித்த தேவே தந்தை தியாகேசன்
பாவம் நிவிர்த்தித்து உமைப் பரம பதத்தில் கூட்டும் துணை புனித
ஆவி சுருதி அமிழ்து ஊட்டும் அன்னை மெய் வேதியர் உறவோர்
தேவ குடும்பம் இதை விரைந்து சேர வாரும் ஜெகத்தீரே

#99
ஒன்று நினை-மின் நராத்துமங்கள் ஊர்த்த கதி சேர்ந்து உய வேண்டின்
என்றும் ஏசுக் கிறிஸ்து நல்கும் இரக்ஷண்ணிய புண்ணிய பலத்தால்
அன்றி வேறு வழி இலை ஈது அனந்த தரம் சத்தியம் அதனால்
இன்றே அந்த இரக்ஷகனை இறைஞ்ச வாரும் ஜெகத்தீரே

#100
ஏழை அடியோமுக்காக இரங்கி இரக்ஷண்ணிய கிரியை
தாழ்வு_இன்று அமைத்த திரியேக சர்வ ஜீவ தயாபரற்கே
ஊழியூழி இராஜ்ஜியமும் உலவாக் கனமும் உள்ளபடி
வாழிவாழி என்று ஏத்தி வணங்க வாரும் ஜெகத்தீரே
** இரக்ஷணிய நவநீதப் படலம் முற்றிற்று

@10 சிறைப்படு படலம்

#1
அத்தகு வேதியர் ஆன்ம ரக்ஷையின்
சத்தியம் திகழ்த்திய தகைமை சாற்றினாம்
மத்த மாயாபுரி மாக்கள் மற்று அவர்க்கு
உத்த தீக் கொடும் சிறை உரைத்துமேல் அரோ

#2
வெய்ய மாயக் கடை வீதி வாய்ப்படு
மை இருள் இரிதர மறை_வலாளர் தாம்
மெய் ஒளி திகழ்த்தவும் வெகுளிக் காற்று உரத்து
ஒய்யென அவித்தது அ ஒல்லை என்பவே

#3
சீர்த் தபு பகை முகில் செறிந்து அவித்தையாம்
நீர்த் திரை முகந்து அகம் நிரைத்து மேல் வெளி
போர்த்து இடித்து உரறி மண் புழுதி போக்கி விண்
தூர்த்தன வசை மழை சொரிந்தது எங்குமே

#4
ஊக்கிய மத அகங்காரத்து ஒல்லென
தீக் கொடும் சிகைக் கனல் சிந்தை-தோறு எழப்
போக்க_அரிதாய்த் திரண்டு அடர்த்துப் பொங்கியே
கூக்குரல் விளைத்தனர் கொள்ளை மாக்களே

#5
கூடினர் குமுறினர் கொக்கரித்தனர்
ஓடினர் உறுமினர் உருட்டிப் பார்த்தனர்
சாடினர் மறித்தனர் தடுத்துக் கிட்டினார்
கோடினர் வலித்தனர் குரைத்திட்டார் அரோ

#6
வைதவர் எத்தனை மறவர் மண் மழை
பெய்தவர் எத்தனை பிசாசர் கோரணி
செய்தவர் எத்தனை தீயர் தீக் கணை
எய்தவர் எத்தனை இடும்பர் என்க யான்

#7
விலை உறு மாய சிற்றின்பம் வேட்டு உழல்
புலை உறு மாந்தருள் பொருந்திற்றில்லையால்
கலை உறு ஞானியர் பகர்ந்த கட்டுரை
சிலை உறு பந்து எனத் திரும்பிற்று என்பவே

#8
மூண்ட பேர்_இரைச்சலும் முடுகித் தத்தமில்
ஈண்டியோர் செறுத்து எதிர் இகலி ஏற்பதும்
காண்தகு அங்காடியின் தலைவன் கண்டு கேட்டு
ஆண்டு அணைந்து அளை மறி அரவில் சீறியே

#9
பூரியர் உரையினைத் தேறிப் போந்து நீர்
ஆரியர் ஆய இ அசடரைப் பிணித்து
ஊர் இயல் நீதியாதிபனுக்கு உய்த்து நம்
காரியம் திரப்படக் கழறு-மின் என்றான்

#10
கலகம் எங்கு என அரைக்கச்சை கட்டி அங்கு
உலவிய மூர்க்கர் அ உரை கொண்டு ஒல்லையே
உலகை உள் உவர்த்திடும் ஒள்ளியோர்-தமை
விலகு_அறப் பாசமிட்டு இறுக்கி வீக்கினர்

#11
வெய்து உற அடித்தனர் குருதி மேலிடப்
பொய் துறு வசை மொழி புகன்று போர்த்தனர்
மெய் திகழ் முகத்து உமிழ்ந்து உறுமி வீம்புற
வைதனர் அவமதித்து இகழ்ந்து வம்பரே

#12
இத் திற இன்னல் பற்பல இயற்றி மெய்
உத்தமர் இருவரைக் கொடு சென்று ஓங்கிய
சித்திர நீதிமன்று அணைந்து செவ்வியோய்
குத்திரம் ஆய வர்த்தகர் நும் கோல் குடி

#13
இங்கு இவர்-தமை மறுகு எதிர்ந்து கண்டனம்
பங்கம்_இல் சத்தியம் பகருவாம் என
அங்கு அது தெரித்திர் என்று அவாவிக் கேட்டனர்
நங்களில் ஒருசிலர் நவிற்சி தேர்ந்தனம்

#14
பொருவு_இல் மாயாபுரிப் புகழும் பொற்பு மெய்த்
திருவும் லௌகீக சிற்றின்பச் செவ்வியும்
மருவிய வரம்பு_அறு நிதியின் மாட்சியும்
பருவரல் படுகரில் கவிழ்த்தும் பாலவாம்

#15
கைப்படு காமியம் கருத்தின் ஈந்து அருள்
மெய்ப்படு நம்-தம் விக்கிரக தேவரும்
மைப்படு சமய நூல் மரபும் மார்க்கமும்
பொய்ப்படு கெடு முறைப் புலமைத்து ஆயவாம்

#16
கலை பொருள் புகழ் பலம் கவின் கொள் காத்திரம்
குல நலம் முதலிய யாவும் குப்பையாம்
வலை அன மனை மகார் மருங்கு வாழும் நாள்
நிலை_இலா நீர்_எழுத்து அனைய நீரவாம்

#17
இன்னவோ மனுக் குலத்து எவரும் ஈசனாம்
பொன் உலகு ஆளி சொல் போற்றிடாது தம்
துன்_நெறி ஒழுகிய தூர்த்தராம் இனி
மன்னு கோபாக்கினி மழையும் பெய்யுமாம்

#18
எத் திறம் உய்வு எனின் இகல் செய் தீ_குணம்
கைத்து அழுது உணர்வொடு கருணைக் கோமகன்
மெய்த் தொழும்பாய் விதிவிலக்கை ஓம்பிடின்
நித்திய_ஜீவ நல் நிலையும் நேருமாம்

#19
ஈது எலாம் முத்தி நாட்டு இறைவன் ஒப்பிடு
மேதகு விளம்பரம் என இ வீம்பரே
போதனை செய்தனர் புரளி போர்த்தலின்
ஊதியம் இழந்தது எம் உலப்பு_இல் வர்த்தகம்

#20
மாய வர்த்தகத்து உள மகிமை தேய்ந்தது
மேய ஊரினும் பிரிவினை உண்டாயது
நாயகத்துவங்களில் நாற்றம் மிக்கன
ஆய காமியம் அருவருக்கலாயின

#21
பஞ்ச_பாதகத்தையும் பறக்கடிக்கும் நம்
அஞ்செழுத்து எட்டெழுத்து ஆற்றல் ஓர்கிலார்
நம் செயல் நாசத்தை நனி விளைக்கும் என்று
அஞ்சுறாது இகழ்ந்து எமை அவமதித்தனர்

#22
ஆதலில் தண்டனைக்கு அருகர் என்று யாம்
நீதியாசனத்தின் முன் நிறுவினேம் எனா
ஓதினார் உரத்துரத்து உருத்துப் பல் முறை
சாதகத் திரள் எனத் தறுகணாளரே

#23
ஆங்கு அவர் உரை சுடுமுகன் என்று ஆசனத்து
ஓங்கு நீதாதிபன் உரித்தில் கேட்டனன்
வீங்கிய வெகுளியின் வெதும்பி வேதியர்
பாங்குறத் திருமி மற்று இனைய பன்னுவான்

#24
உலகு எலாம் அவமதித்து ஒழுகும் புந்தியீர்
கலக காரணர் எனக் கட்டுண்டு எய்தினிர்
பல கலை பயின்று பாழ்பட்டதே-கொலாம்
இலகு நன்_மதி இனி உய்வது எங்ஙனம்

#25
தங்கும் ஊர் யாது இவண் சார மூலம் என்
எங்கன் ஆசார வேடத்தோடு ஏகுவீர்
இங்கு வந்து இத்துணைக் கலகம் ஈட்டிய
நும் கருத்து யாது அது நுவலுவீர் என்றான்

#26
சுடு சினச் சுடுமுகன் சுடு_சொல் சுட்டிட
அடு சினக் களிறு_அனாய் அகிலத்தே பெயப்
படு சினக் கனல் மழைக்கு அஞ்சிப் பாவியேம்
கொடு சினத்து அலகை கூட்டுறவைக் கொள்கிலேம்

#27
நிரந்தர நலம் புரி நிகில நித்திய
துரந்தரர் திரு_அடித் தொழும்பு பூண்டுளேம்
வரம் தரு சுருதி மார்க்கத்து வந்தனம்
புரந்தரம் நாடிய போதுவேம் அரோ

#28
இ நகரிடை நெறி எய்த எய்தினேம்
மன்னும் மாயக் கடை வர்த்தகக் குழாம்
என்ன நும் விழைவு சத்தியம் என்றேம் அது
பன்னுதிர் என்றனர் பகரக் கேட்டனர்

#29
சம்பவம் இஃது இறை சான்று மற்று இது
வெம்புறு கலகத்தை விளைத்தற்கு என்னினும்
எம் பிரயாணத்தைத் தடுத்தற்கு என்னினும்
நம்பும் காரணம்-கொலோ நாடுக ஐய நீ

#30
கண் மயக்குறில் பொருள் காட்சி காண்கில
எண் மயக்குறின் எதிர் கேடும் எண்ணில
மண் மயக்குறின் அவர் மறுமை ஆக்கத்தின்
உண்மையைத் தெரிவரோ உலம் கொள் தோளினாய்

#31
என்று மெய்க் கிறிஸ்தவர் இயம்பக் கேட்டனன்
கன்றிய சுடுமுகன் கடும் சினத்தனாய்
நன்றுநன்று உண்மையை நவின்ற பான்மை நம்
மன்றல் மாயாபுரி மரபை மாய்க்கவோ

#32
தீர யாம் தெளிந்தனம் சேண் நகர்க்கு அதி
தூர யாத்திரை செலத் துணிந்துளார் இவர்
காரியக் கெடுதி நம் கடைக்கு நேர்ந்தன
ஆர் எனினும் நமக்கு ஆவது என்-கொலாம்

#33
ஈங்கு இவர் துணிந்து இவண் இசைத்த மாற்றமும்
பாங்கு_உளீர் அறிந்தனிர் பகர்வது என் இனி
நீங்கிடா வகை சிறைப்படுத்தும் நீதி மன்
ஓங்கு நீதாசனத்து உறு-மட்டாகவே

#34
ஆதலின் தெருத்-தொறும் அடித்துக் காட்டி இப்
பேதையர்-தமைச் சிறைப்பெய்-மினீர் எனா
ஓதினான் சேவகர்க்கு உருத்து உடன்றனர்
நீதிமன்று உழையரா நிலவும் நீசரே

#35
ஆண்டு-நின்று அகற்றி வைது அடித்து இரும்பு இயல்
கூண்டில் வல் விலங்கு கால் கொளுவிப் பெய்து ஒரு
பாண்டில் இட்டு இழுத்தனர் பரிவு_இல் பாமரர்
காண்தகு கடி நகர் இரைத்துக் காணவே

#36
இகழ்ந்து நிந்தனைசெயும் இடும்பர் ஓர் புறம்
மகிழ்ந்து உளம் களித்திடும் மறவர் ஓர் புறம்
நிகழ்ந்தது சிறிது எனும் நீசர் ஓர் புறம்
புகழ்ந்து நீதியைப் புனை புல்லர் ஓர் புறம்

#37
சத்தியம் கடைப்பிடித்தவர்க்குச் சார்வதோ
இத்தனை இடுக்கண் என்று ஏங்குவார் உளர்
அத் தலத்து ஆயினும் அழிம்பர்க்கு அஞ்சியே
சித்தம் வைத்து ஒடுங்கி வாய் திறந்து செப்பிடார்

#38
மாய வர்த்தகம் புரி மறுகில் சேறலும்
கூயினர் குதித்தனர் கொக்கரித்தனர்
சீயெனப் புறக்கணித்து இகழ்ச்சி செய்தனர்
பேய் எனச் செருக்கிய பித்தர் என்பவே

#39
கலைத் தொழில் பயின்ற அக் கள்வர் வாயினால்
கொலைத் தொழிற்கு உரியர் செங்கோன்மை காட்டி இங்கு
அலைத்தலில் என் பயன் அடங்குவார்-கொலோ
புலைத் தொழில் பதிதர் என்று உருத்துப் பொங்கினார்

#40
இன்னணம் நிகழ்வுழி இகல்_இல் வேதியர்
சொன்ன சத்தியம் கடைப்பிடித்துத் துன் நகர்
மன்னியோர் சிலர் எதிர் வந்து வாய் மதம்
என்னவாம் இவர் திறத்து என்-கொலோ பிழை

#41
பாவியர் தொகு நிருவாண பட்டணம்
கோவணி பைத்தியன் என்னும் கொள்கை போல்
ஆவணத்து அழிம்பரும் அறம் திகழ்த்திய
ஜீவன் முத்தரை இகழ்செய்வர் செவ்விதே

#42
நிறம் துரூஉம் அயில் என நிந்தைசெய்குதிர்
திறம்திறம் எத்தனை தீங்கு இழைக்குதிர்
மறந்து ஒரு கொடு_மொழி வழுத்துவார்_அலர்
அறம் திறம்பாமை என்று அறிகிலீர்-கொலோ

#43
குறுமையீர் யாது நும் குறிப்புக் குற்றம் ஓர்
சிறுமையும் இயற்றிலர் தீங்கு இயற்றுதிர்
வெறுமை கண்டு அவமதித்திடுதிர் வேதியர்
பொறுமையே இப் புரம் பொடிக்கும் காண்டிரால்

#44
இன்று நம் தீங்கினுக்கு இடர்செய்யாது இவர்
ஒன்று நன்று உஞற்றலின் உம்பரே இவர்
நன்று செய்பவர்க்கு உயிர் நலிவு செய்யும் நீர்
கொன்று உழல் விலங்கினும் கொடியிராம் அன்றோ

#45
இத் தகுவன சிலர் இயம்பி நிற்கவும்
அத் தகுவன பலர் அதட்டி ஆர்க்கவும்
மத்த மாயக் கடைத் தலைவன் மற்று இவை
உய்த்து உணர்ந்து உளம் மகிழ்ந்து உலவும் எல்லையில்

#46
பதிதருக்கா நடுப் பரிந்து பேசிய
சதிசெயும் கயவரைச் சமயம் காட்டிய
விதி தரு தண்டனை விதித்துந் தேர்க எனாப்
புதிது ஒரு விளம்பரம் புக்கது அ வழி

#47
விளம்பரத் தொனி செவி வெதுப்ப மெல்லென
உளம் பரிந்து ஒதுங்கினர் உண்மை சொற்றவர்
வளம் படு மாயையின் வலவர் தொக்கு அமர்க்
களம் படு சிலைத்து எனக் கௌவை வீங்கிற்றே

#48
அலை படு கடல் கிளர்ந்து_அனையதாம் எனப்
புலை படு மானிடம் குழுமிப் பொங்கலில்
சிலை பட எங்கணும் செலவு தீர்ந்து உராய்
மலை படக் கிடந்தது அ மாய வீதியே

#49
வெய்தினில் காவலர் விரைந்து பற்றி ஈர்த்து
எய்தினர் வேதியர் இருவரைக் கொடு
செய் திறம் யாவையும் செய்து வெம் சிறைப்
பெய்தனர் ஒள் ஒளி பிறங்கு வாளின் வாய்

#50
உறை உறப் புகுந்திடும் ஒளி கொள் வாள் எனக்
குறை_அறக் கனல் முகம் குளிக்கும் பொன் எனப்
பொறையொடும் உணர்வொடும் புகழொடும் கொடும்
சிறையிடைக் கிடந்தனர் தெள்ளியோர்களே

#51
நறை கமழ் சோலையை நயம்_இல் மன்னவன்
முறை பிறழ் முன்றிலை முரண் கல்வாரியை
இறை அகலாது உளத்து எண்ணும் நீரரை
சிறை மறி துயர் எது செய்யத் தக்கதே

#52
ஜீவ ரக்ஷணியமாச் சிறை புகுந்து இனி
ஓவல்_இல் ஆனந்த போகம் உண்பதற்கு
ஆவலித்து உடல் பொறை அற்ற நாடியோர்
நோவுறு சிறைத் துயர் நுனிக்கல்பாலரோ

#53
துன்பு உழந்து அன்றி எள்துணை இன்பு இன்று எனா
மன்பதைக்கு இகத்து இயல் வரைந்த சாசனம்
நன் புலத்து ஆக்கிய நவை_இல் வேதியர்க்கு
இன்பிலும் துன்பு இனிது என்றும் நாட்டமே

#54
பருவரல் சுவைப் பால் உண்டி படர் கணீர் பருகும் பானம்
வரும் அவமதிப்புப் பொன் பூண் வசை_மொழி மதுர கீதம்
மருவு பூ அடுக்கு மெத்தை மௌன நித்திரை வண் செல்வத்
திருவ நீள் மாடம் வெய்ய சிறைப்புறம் செவ்வியோர்க்கே

#55
தள்_அரும் துயரம் சித்த சஞ்சலம் தாபம் துக்கம்
விள்_அரும் துன்பம் மாய வேதனை உழக்கும் போதும்
எள்_அரும் விசுவாசத்தோடு இரமியம் தழுவிப் பல் கால்
உள்ளு உவந்து ஏத்திப் போற்றி ஜெபிப்பர் உன்னதத்தை நோக்கி

#56
உற்ற மெய்க் குரவன் வாய்மை உள்ளி மற்று எம்மின் முந்திக்
குற்றம்_இல் குருதி சிந்திக் குவலயத் தொல்லை நீந்தி
முற்று பேர்_இன்ப லோக முத்தி வீடு அடையத்தக்கான்
நல் தவம் உடையன் என்னா நச்சி ஏக்குறுவர் நல்லோர்

#57
கோறலுக்கு இலக்காய் நேர்தல் குறிக்கொண்டு விசுவாசத்தின்
ஆறு ஒழுக்கு இழுக்கா வண்ணம் அருள் துணை எடுத்துப் பேசி
ஊறும் மெய் அன்பினாலே ஒருவரையொருவர் ஊன்றித்
தேறுதல்புரிந்து சிந்தை தெருட்டுவர் திரு_வாக்கு ஊட்டி

#58
நாடுவர் சருவ லோக நம்பனைக் கருணைப் பௌவத்து
ஆடுவர் தெவிட்டா உண்டி அருந்துவர் ஆரக் கீதம்
பாடுவர் துதித்துப் போற்றிப் பவித்திர பதாம்புஜத்துச்
சூடுவர் அன்பில் கட்டித் தொடுத்த பைம் துணர்த் தேவாரம்
** சிறைப்படு படலம் முற்றிற்று

@11 நிதானி கதிகூடு படலம்

#1
அவ்வியம் அவித்த சிந்தை அரும் தவர் இவ்வாறாகத்
தெவ் இயல் சிறையை மேலாம் ஜெப_தபப் பள்ளி ஆக்கித்
திவ்விய வழிபாடு ஆற்றிக் கழித்தனர் சிறிது திங்கள்
இ இயல் அறிந்து அ ஊர் சூழ் வினைத் திறம் இயம்பலுற்றாம்

#2
குத்திரப் புரி உலாம் கொடிய வர்த்தக குழாம்
அத் தலத்து அரசன் மாடு அணுகி ஆரியர்-தமக்கு
எத் திறத்தினும் உயிர்க்கு இறுதிசெய்திட எமக்கு
உத்தரம் தருக எனா ஊக்கினார் மூர்க்கமாய்

#3
நன்று செய்குதும் என நவில் அறப்பகை எனும்
கன்று வெம் சின முகக் கரி_அனான் கடுகி நீர்
புன் தலைப் பதிதரைக் கொணர்க எனாப் போக்கினான்
வன் தலைப் புலையராம் வயவர் ஓர்சிலரையே

#4
ஈது அலால் வேதியர்க்கு எதிர் விரோதக் கரி
ஓதுவார் எவரெவர் ஒல்லை இங்கு உற உடன்
வீதி-தோறும் பறை அறைக எனா விண்டு தான்
ஏத நீதாசனத்து ஏறினான் சீறினான்

#5
சுடுமுகத் துணைவனும் துன்முகக் கபடனும்
கடு விடத்து அகம் முகக் கண் அலால் கண் இலா
நடுவர் பன்னிருவரும் நரை_திரைக் கிழவரும்
கொடுமையின் குலம் எனக் கூடினார் கேடினார்

#6
கிழக்கு மேற்கு இலர்-தமைக் கெடு வழித் தலைவிடுத்து
உழக்கிலே கிழக்கு மேற்கு உரைத்து உரித்து உள எலாம்
வழக்கிலே இழுக்கும் வீண் வாக்கு நையாய் இகச்
சழக்கரும் வழக்கரும் தழுவினார் குழுமினார்

#7
ஆரியப் பகைவர்-தம் ஆர்_உயிர்க்கு இறுதிசெய்
காரியப் பொறை ஒருங்கு எமது எனக் கறுவி வெம்
பூரியப் புலமை தேர் பொய்க் கரித் திரள் குழீஇ
வீரியத்துடன் அவை விரவினார் கரவினார்

#8
கொடு விடப் பற்களே குழுமியோர் அவர் உளம்
கடு விடம் கெழுமு பை கவினும் மண்டப நிலை
தொடு கடல் புடவியைத் தொல்லை வாய் வைத்த அப்
படுகொலைப் பாதகப் பாந்தள் வாய் முழையரோ

#9
துட்ட வெம் புற்கணம் தொகும் உழைப் புதரின் வாய்ப்
பட்ட மான் இனம் எனப் பருவரல் தளையொடும்
கட்டு பாசத்தொடும் கடியர் கொண்டு உய்த்திடச்
சிட்டர் ஓர் இருவரும் குறுகினார் செவ்விதே

#10
அனைய ஓலக்கமா அமை அறப்பகை முனம்
முனைவ இப் பதிதர் எம் முது கடைத் தெருவில் வந்து
இனையதே சத்தியம் என்று எடுத்து ஓதி எம்
வினை சிதைத்து ஊர்ப் பிரிவினையும் உண்டாக்கினார்

#11
உலக இன்பு ஒழியும் என்று உள் உவர்த்துச் சிலர்
இலகு மாயச் சரக்கு எதையும் நாடாது போய்
விலகினார் வர்த்தகம் வீழ்ந்தது இம்மட்டுமோ
அலகை ஆதிக்கமும் அவமதிப்பு உற்றதால்

#12
இருவர் மற்று இவரின் யாம் ஏழை யாத்திரிகராய்
மருவின் நன்று இன்று எனின் மாய வர்த்தகம் எலாம்
தெருவிலே வந்து சீசீ எனப்பட்ட பின்
பெருகு கேடே அலால் பெறுதுமோ ஊதியம்

#13
இ மறைக் கிழவர் கண் எதிர் உறும் பொழுது எலாம்
எம் உளத்து இல்லவே இல்லை என்று உள்ள ஓர்
செம் மன_கரி மிகச் சினவி நின்று உயிர் தெறும்
அம்ம கூற்றுவர் எனற்கு ஐயம் ஒன்று இன்று அரோ

#14
கொற்றவா ஓர்தி கொல்லாது கொல்லும் கொலை
கற்ற பாதகர் இவர்க் கோறலே கடன் எனாச்
செற்றம் மல்கின முறைப்பாடு எலாம் தேர்ந்து முன்
சொற்றனன் துஷ்கிருதப் பெயர்த் தூர்த்தனே

#15
சொன்ன துஷ்கிருதன் வாய் மொழி செவித்தொளை புக
நல் நிதானன் எனும் நவை_இலான் ஆங்கு எழுந்து
உன்னதாதிபன் நெறிக்கு ஒருவியோர் உறவும் மற்று
இ நகர்ச் சீலமும் அருவருப்பு எற்கு அரோ

#16
மாயசாலக் கடை மறுகு உறா மரபும் வான்
தூய யாத்திரை செலும் துணிவும் ஓர்ந்தோர் சிலர்
சேய நல் நெறி செலத் திருமினார் ஈது நன்று
ஆயதே அன்றி மற்று ஆவதோ தீமையே

#17
பொன்-கொலோ புவி படும் பொருள்-கொலோ யாவையும்
மின்-கொலோ விளிதலின் என வெறுத்துளம் எனின்
என்-கொலாம் இவர்-தமக்கு எம்மனோர் மேல் பகை
நன்கு ஒலாது என்றுமே நாச யோசனையினே

#18
உலக மாயச் செருக்கு ஒல்லை நீத்து உலகுளீர்
அலகை ஆதிக்கம் விட்டு அகறலே நலம் என
இலகு சத்தியம் இசைத்தனம் எடுத்து இது-கொலாம்
கலக காரணம் எனக் கழறினான் கலை_வலான்

#19
ஒருதலை வழக்கு நூல் ஒழுக்கினும் செவ்விதாக்
கருது அறப்பகை எனும் கண்_இலான் கறை_இலாக்
குருதி சிந்திட உளம்கொண்ட பாதகன் முனம்
சுருதி நூல் துறை_வலான் சொல் பயன்படுவதோ

#20
மெய்ப்படு நிதானி உரை கேட்டலும் வெகுண்டே
மைப்படு மனத் தருமவன்மி எனும் வஞ்சன்
கைப்படும் இவர்க்கு உறு கடும் பகையர் வந்து
பொய்ப்படுகிலாக் கரி புகன்றிடுக என்றான்

#21
ஒல்லை ஒரு மூவர் எதிரூன்றி முறையாக
இல்லை ஒரு பொய்யுரை இசைப்பது எது மெய்யே
அல்லது விழித் துணை அவிந்திடுக என்னாச்
சொல்லினர் தனித்தனி துணிந்து பிரமாணம்

#22
இப் பரிசு சத்தியம் இசைத்த பின் எரிப்பன்
தப்பிலி நிதானி இவன் என் தலை தகர்க்க
முப்பொழுது நாடுறும் முழுப் பகைவன் மாயக்
குப்பை என எள்ளுவன் இக் கோன் நகர வாழ்வை

#23
தேச நடை ஊர் நடை ஜெகத்து நடை எல்லாம்
நாச நடை என்று அதின் நடக்கு நடை கொள்ளான்
ஜேசு நடை நாடு நடை செவ்வி நடை ஒன்றே
ஈசன் நடை ஏறு நடை என்று நடை கொள்வான்

#24
எ மதமும் மெய் மதம் எனத் துணிபு இசைக்கும்
நம் மதமும் அ மதமும் நாட்டு மதம் யாவும்
சம்மதம் இலாது பரலோகபதி தந்த
தம் மதம் மெய் என்று புகல் சாதுரிய தர்க்கன்

#25
மாய பிரபஞ்ச மகராஜனை மதிக்கான்
தேய முறையைத் தழுவு சீர்மை சிறிது இல்லான்
மேய உலகத்தவர் ஒழுக்கினை விரும்பான்
ஆய குல_கோத்திரம் அறிந்து உறவு செய்யான்

#26
அண்டர் பெருமான் உலகு அடுக்கும் நெறி என்று
கண்ட நெறி புக்கு அது தன்னோடு கழியாமே
விண் தலம் விழுத் தழலின் வேம் உலகம் என்னா
மண்டலம் முழுக்கவும் இழுக்க முயல் வம்பன்

#27
மேன்மை தரும் நம் சமயம் எண் திசை விளக்கும்
கோன்மை குண தோஷம் உரையாமை புகழ் கொண்ட
பான்மை மதியாது படுபாவியர் என்று எள்ளும்
நோன்மையிலி மன் உரிமை நோக்குகிலன் என்றான்

#28
ஆயிடை அபத்தனும் அறப்பகை முன் நின்று
நாயக எனைக் கனவிலும் நணுகவொட்டாத்
தீயன் அக வாயில் அறியேன் பல திறத்தும்
மாய நகரத்தவரை வைது அவமதித்தான்

#29
வைதிக மதத்த பிரமாணம் நம எல்லாம்
பொய் திகழும் நீர அவை போற்றி ஒழுகிற்பின்
மெய் திகழ் ககோளபதி மேலை நடுநாளில்
வெய்து நிரையத்து எமை விழுத்துவது மெய்மை

#30
என்று இனைய குற்றம் விவரித்து எமை இழித்தது
ஒன்று அல அநேக வித சாபமும் உரைத்தான்
நின்ற இ நிதானி அறி நிண்ணயம் இது என்றான்
துன்று இருளடைந்த மனை-தோறும் உழல் தூர்த்தன்

#31
காள விடம் அன்ன கடு நெஞ்சன் அது காலை
மூள் அனல் எனச் சினம் முதிர்ந்து இறைவன் மொய்ம்பிற்கு
ஏளனம் உறப் பதிதர் என் சொலினர் என்னாக்
கோளனை விளித்து அறிவ கூறுக இனிது என்றான்

#32
மண்டல நியாய நெறி வல்ல துரை ராஜ
கண்டகன் நிதானி பல காலும் உரையாடி
விண்ட பல தூஷண விதங்கள் விவரிக்கின்
மண்டும் மன வேதனை இ மன்று நவை மல்கும்

#33
மன்னர் திலகன் பெயல்செபூலை இவன் வைத
இன்ன என மன்றிடை துணிந்து இனிது இசைப்பின்
என்னில் அபராதி பிறர் யாவர் புகல் எந்தாய்
உன்ன மனம் அஞ்சும் உரையும் குழறும் உண்மை

#34
மும்மல பிதாக்கள் சௌபாக்கியர் வன் மோகர்
எம் இன உலோபர் படு காமுகர் இடம்பர்
இ மகிபரைக் குடியெழுப்பிவிடுவேன் என்று
அம்ம செயும் நிந்தையும் அழிம்பும் அளவு_இன்றால்

#35
என் அனையர் ஓர்சிலர் இசைந்து உளம் இணங்கித்
தன்னொடு நல் நூல் நெறி-தனைத் தழுவி நிற்பின்
மன்னு பல மாய வளம் மல்கி இசை பெற்ற
இ நகர் இலா வகை இயற்றிடுவல் என்றான்

#36
இப் பெரிய தேசம் முழுதும் இசை பரப்பி
ஒப்பு ஒருவர் இன்றி நடு ஓதி முறைசெய்யும்
செப்பம்_உடையாய் உனையும் தேவ பயம் இல்லாத்
தப்பு உடையை என்று பழி சாற்றினன் நிதானி

#37
இற்று இது அமையா எனில் இசைப்பல் இனிது என்னாச்
செற்றமோடு அகம் கருகு தேள் அனைய கோளன்
சொற்றலும் அறப்பகை துலக்கினை விளங்க
நிற்றி என நோக்கினன் நிதானியை நிகழ்த்தும்

#38
தொல்லை மறையைப் பழுதுசொல்லி அவமாக்கும்
பொல்லை மத தூஷணி எம் அர்ச்சை முறை போற்றாது
எல்லை_அறு நிந்தனை இசைத்து இழிவு செய்த
சொல்லை அலகைக்கு உரிய ராஜ்ஜிய துரோகி

#39
இத்துணையை என்று கரியாயவர் இசைத்த
சத்தியம் அறிந்தனை சபைக்கு எமது இரக்கச்
சித்த நிலை நன்கு தெரியச் சினவிடாதே
உத்தரம் அளித்தனம் உரைப்பது உரை என்றான்

#40
இலக்கணை நீதிமன்றத்து இயற்கையும் இயலும் நீதிப்
புலக் கணைக் கெடுக்க நின்ற புல் அறப்பகையின் போக்கும்
நிலக் கணக்காயும் நீதி நிலவு நாள் என்-கொலாம் என்று
அலக்கணுற்று அருள் நிதானி அமலனைப் பரவிச் சொல்வான்

#41
இ நகர்க்கு அரசே ஜீவர்க்கு இக_பர சாதனம்-தான்
பொன் நகர்க்கு அரசன் உய்த்த பொது விதிவிலக்கத்தோடு
மன் நிலவுலகத்து ஆட்சி மறுதலைத்து எனின் வைதீகச்
செம் நெறிக்கு உதவாது என்னச் செப்பியது உண்மை தேர்தி

#42
உத்தம தேவ பத்திக்கு உயிர் விசுவாசம் ஆகும்
அத்தகு விசுவாசத்துக்கு அருள் உயிர் அருள் வந்து எய்த
மெய்த் தொழும்பு உரிமை ஆகும் மெய்த் தொழும்பு ஆவது எம்மான்
சித்தத்துக்கு அமையும் செவ்வி சித்தத்தைத் தெரிக்கும் வேதம்

#43
திரு_வசனத்துக்கு ஒவ்வாத் தெய்விக வழிப்பாடு எல்லாம்
பெரு வழி பிடித்துச் செல்லும் பிரபஞ்சச் சேட்டை பேசின்
அருவருப்பு ஆகும் தேவ சித்தத்துக்கு ஆதலாலே
பொருவு_அரு நித்திய_ஜீவன் பொருந்தாது என்றதுவும் உண்மை

#44
இ நகர்க்கு அரசும் ஏவல் பரிசனர் குடிகள் யாரும்
பன்_அரும் மல பாதாலப் படுகர் புக்கு உறைவார் அன்றி
உன்னத பதத்து எம்மோடும் ஒருங்கு பேர்_இன்பம் துய்த்து
மன்னுதற்கு உரியர் அல்லர் என்றது மறாத உண்மை

#45
சத்தியம் வினவினார்க்குச் சாற்றிய இவற்றைத் தானே
வித்தரித்து உரைத்தேன் இந்த மெய்மை தூஷணமாம்-கொல்லோ
இத்தகும் உபநியாசத்து ஏதொரு தவறு உண்டு என்னின்
உத்தம நியாயம் காட்டி ஒறுத்திடல் தருமம் என்றான்

#46
நடு இகந்து ஒருபால் கோடி நச்சு அரவு என்னச் சீறிப்
படு பொருள் உணரான் ஆய பாதகப் பசாசன் முன்னர்
வடு_அறு நிதானி நின்று வழக்கிடும் மரபை ஓரின்
தொடு கடல் உலக வேந்தன் துரும்பு அன்றோ துறவிக்கு அம்மா

#47
திருக் கிளர் ஞானச் செல்வன் செப்பிய சிதைவு_இல் மாற்றம்
உருக்கிய செம்பின் ஆகிச் செவி வழி உருவிப் புக்குக்
கருக்கிய சிந்தையாளன் அறப்பகை கதம் கொண்டு ஒல்லை
பொருக்கென உரறிப் பொங்கி இனையன புகலலுற்றான்

#48
தோம்_அறு குண நியாய துரந்தரரே இ நின்ற
பாமரற்கு எதிர் விரோதம் பகர்ந்த மெய்ச் சான்றும் பின்னர்
வேம் எரிக்கிடையே இட்ட விறகு என விரகு ஒன்று இல்லான்
கோமகற்கு இழிவு காட்டிக் கூறிய கூற்றும் கேட்டீர்

#49
ஆதி-தொட்டு அலகை ராஜ பரம்பரை அவனிக்கு உய்த்த
நீதியின் செயலும் இந்த நீள் நில வழக்குக்கு ஒத்த
ஜாதியும் சமயாசாரக் கொள்கையும் தழுவி நின்ற
காதையும் ஆய்ந்து தீர்வை கழறுதல் அழகிற்றாமால்

#50
பண்டு எங்கள் அரசற்கு ஏவல் பணி புரி பார்வோன் என்னும்
சண்டன் எம் மத விரோத தகுவர் ஆண் சிசுவை எல்லாம்
தெள் திரை ஆற்றில் பெய்து ஜீவனை வதைத்த செய்கை
மண்டலம் அறியும் இந்த மரபை நீர் மறந்திடாதீர்

#51
நீள் நிலத்து அரசுசெய்த நேபுகாத்நேச்சர் காலத்து
ஆணவச் சிலையைப் போற்றாது அழி புற மதத்தர்-தம்மைக்
கோணை வெம் நெருப்புச் சூளை குளித்திட எறிந்த கொற்றம்
சேணுறப் புகுந்தும் பாரில் திகாந்தம்-மட்டு உலாயது இன்னும்

#52
தடம் கடல் உலகம் போற்றத் தனிக் குடை நிழற்றி ஆண்ட
மடங்கல் ஏறு அனைய கொற்ற மன்னவன் தரியு ஆணைக்கு
அடங்கிடா மத விரோத அழிம்பனைப் பிணித்து வெய்ய
முடங்கு உளை வய வெம் சீய முழையிடைப் படுத்தது ஓர்-மின்

#53
இத்தகு பிரமாணங்கள் எவற்றையும் மீறி யாங்கள்
பத்திசெய் மார்க்கத்து உள்ள பழுது எலாம் பரக்கத் தூற்றி
வித்தக நினைவால் வாக்கால் கிரியையால் விரோதம்செய்யும்
குத்திரக் கலகி ராஜ துரோகி இக் கொடியன் காண்டிர்

#54
ஏதம்_இல் சான்றுக்கு ஒத்தது இங்கு இவன் வாக்குமூலம்
மேதையீர் அங்கை நெல்லிக்கனி என விளங்கிற்று எல்லாம்
ஆதலால் குற்றவாளி என்பதற்கு ஐயம் இன்றால்
ஓதுதிர் பேதியாது உம் உள் கருத்து என்றான் வெய்யோன்

#55
கிள்ளைக்கு நீதி பூஞை கிளந்திடக் கேட்டல் போலும்
புள்ளிமான் மறிக்கு நீதி புலி சொல வினவல் போலும்
தெள்ளிய நிதானி சீர்மை தெரிந்து உரைத்திடுக என்றான்
உள் அறப்பகை பொல்லாங்கின் உருப் புணர் நடுவர்-தம்மை

#56
நன்று எனத் துணிந்து ஈர்_ஆறு நடுவரும் நடு_இல் நீதி
மன்று ஒரு சூழல் உற்று மட மதச் செருக்கு விஞ்சிப்
புன் தலைப் புலமைச் சூழ்ச்சி தத்தமில் பொருந்தி வாளாக்
கொன்றிடத் துணிந்து நீதாசனிக்கு இது கூறலுற்றார்

#57
எண்ணில் துரோகம்பண்ணிய பதிதன்
திண்ணம் இது என்னாக் கண்ணிலி சொன்னான்

#58
இன்று இவனைத்-தான் கொன்று உயிர் கோடி
என்று துணிந்தே நன்றிலி விண்டான்

#59
கடியன் முகத்தைப் படியில் அகற்ற
நொடி இனிது என்றான் கொடிய குரோதி

#60
குறித்து இவன் குற்றம் பொறுத்திடல் ஆகா
ஒறுத்திடுக என்றான் கறுத்திடு காமி

#61
நாணிலி சிந்தை கோணி குலீனன்
பேணலை என்னா வீணன் விரித்தான்

#62
பிணியொடும் இத் துர்க்குணி தலை கொய்யப்
பணிதருக என்றான் துணிகரன் என்பான்

#63
நீசன் இவன் கால்காசு பெறான் என்
யோசனை என்றான் மாசுறு வம்பன்

#64
துரிய நிலத்துக்கு உரியவன் இவனை
அரி சிரம் என்றான் பெரிய விரோதி

#65
மித்திர_பேதம் விளைத்த குத்திரனைக் கொலைசெய்ய
எத்தனை யோசனை என்றான் சத்துருவாய சழக்கன்

#66
வென்றி நடுப் புரி வீர இன்று இவனைக் கழுவேற்றிப்
பொன்ற வதைப்பினும் போதாது என்று நிட்டூரன் இசைத்தான்

#67
மாநிலம் முற்றும் மயக்கி ஆனி விளைக்கும் அழிம்பன்
மேனி சிதைக்க என விண்டான் ஈனன் இருள்பிரியன் என்பான்

#68
சத்தியம் என்று உரை தந்த அத்தனையும் பொய் அபத்தம்
எத்தனை விட்டிடல் என்றான் புத்தி_இலா முழுப்பொய்யன்

#69
இன்னணம் நடுவர் பன்னிருவரும் மொழிய
என் ஒரு துணிபு மற்று இது என நுவலா
அ நிலை பழுது_அகல் அறவனை எதிர்கூய்ப்
பன்னினன் அறப்பகை படுகொலைத் தீர்ப்பு

#70
படு பொருளைத் தெரித்தி என வினவுதலில் பரமார்த்த
வடு_அறு நல் நிலை உரைத்த மா தவற்குக் கொலைத் தீர்ப்பு
நடு இகந்து நவிற்றினவால் நாசமுறு நடுமன்றம்
கொடுமையினும் கொடுமை இது குவலயத்து இக் கொடுங்கோன்மை

#71
குற்றவாளியைப் பிணித்துக் கொலைத் தொழிலர் களத்து உய்க்க
மற்று இவனைத் தளை பூட்டிச் சிறைச்சாலை மடுத்திடுக
கொற்றவன் ஆணையின் என்று கூறினான் கொடுங்கோன்மைப்
பெற்றி எலாம் நிலைநிறுத்தும் பிணக்கு உடைய குணக்கேடன்

#72
சொன்ன உரை முடியாமுன் சுருதி நூல்_வலவனைக் கொண்டு
அ நியமர் சிறைச்சாலை அடைவிக்க அரும் தவனைக்
கொல் நுனை வாள் வய வீரர் கொலைக்களத்துக் கொடுசென்று
மன்னவன் ஆணையைப் புரிந்து தெரித்தார் அ மறவனுக்கே

#73
கொலைத் தீர்வைக் கொடும் கூற்றம் குறுகி வெருட்டிடு பொழுதும்
அலைத்து ஈர்த்து விசித்து யாக்கை அரிந்து அழலில் பெய் பொழுதும்
சிலைத்தும்_இலன் ஒரு மாற்றம் ஜேசு திரு_அடித் தொழும்பின்
நிலைத் தருமம் கடைப்பிடித்து நித்திய_ஜீவனைக் கருதி

#74
புற்புத நீர் உடல் பொறையைப் பூ தூளியிடை விழுத்தி
அற்புத மெய் விசுவாசி ஆன்ம நித்தியானந்த
சிற்பரம ராஜ்ஜியத்தின் ஜேசு திரு_அடி நீழல்
பொற்புற வீற்றிருந்ததுவால் புத்தேளிர் கணம் உவப்ப

#75
அஞ்ஞான இருள் அடைந்த அகத்தே மெய் ஒளி அலர
மெய்ஞ்ஞான விசுவாச விளக்கு ஏற்றி அணையாது
பொய்ஞ்ஞானப் பொறி செறித்துப் புநர்_உலகம் புகும்-மட்டும்
சுஞ்ஞான நிலை காக்கும் தூயாவி நலம் வாழி
** நிதானி கதிகூடு படலம் முற்றிற்று
** நிதான பருவம் முற்றிற்று