குமார பருவம், இரட்சணிய யாத்திரிகம்


@1 சம்பாஷணைப் படலம்

#1
வெய்யவன் இறத்தலில் பரிந்து மேதினித்
தையலாள் துக்க வெம் தழல் சுடச்சுட
மெய் எலாம் கருகிய விதத்தை மானுமால்
வையகம் முழுவதும் புதைத்த மை இருள்

#2
செம் சுடர் அவிர் ஒளிப் பிழம்பைத் தீக்கும் ஓர்
நஞ்சு இது என்னவும் நாச தேசத்துப்
பஞ்ச_பாதகத் திரள் படர்ந்தது என்னவும்
விஞ்சியது இருள் குழாம் மேலும் கீழுமே

#3
அம் சுடர் அவித்து வந்து அகிலம் யாவையும்
வஞ்சனை உருக் கொடு கரந்து வௌவிய
அஞ்சனக் கரு நிறத்து அரக்கியே-கொலாம்
செம் செ வாய் மடுத்து உறச் செறிந்த கார் இருள்

#4
அலை கடல் புவியில் வாழ் ஆன்மகோடிகள்
நிலை தபக் கொடும் தொழில் நினையும் பேய்க் கணத்
தலைமகன் இடைக்கிடை வீசு தந்திர
வலை என இரவு இருள் வளைந்தது எங்குமே

#5
பள்ள நீர் உலகு எலாம் படிந்த வெம் நிசி
நள்ளுநர் ஆம் என நடித்து நாட_அரும்
கள்ளமும் வஞ்சமும் கலந்த கைதவர்
உள்ளமும் நரக பாதலமும் ஒத்தவே

#6
கெடுக்குநர் அடர்ந்து பல் கேடு சூழினும்
நடுக்குறு நோய் பல நலியுமேனும் கை
எடுக்குநர்க்கு இறை அருள் இலங்குமாறு போல்
உடுக்கணம் விளங்கின உம்பர் எங்குமே

#7
மருட்டு புன்_மாக்கள் செய் வஞ்சப் போதக
இருட்டுறும் இருதயத்து உணர்ச்சி ஏய்ந்திட
அருள் தகு குரவர் மெய் அன்பினால் அகம்
தெருட்டு போதனை எனத் திகழ்ந்த தாரகை

#8
ஆன்ற பேர்_அகல் விசும்பு அணவி எங்கணும்
மீன் திகழ்ந்து ஒளிர்வன விண்புலத்து நம்
கோன் திரு நந்தனம் குலவு ஜோதிய
வான் தருக் குலம் பொலி மலரை மானுமே

#9
சோதனைக்கு இடைந்திடாச் சூரசேனன் மெய்
வேதியன் என நனி வியந்து மேம்படு
தூதர் தூவிய மலர்த் தொகுதி போலுமால்
மீது உறத் திகழ்ந்து இடை மிளிரும் தாரகை

#10
அடங்கின விலங்கு புள் அடவி ஆர்ப்பு ஒலி
அடங்கின பல்லியத்து அணி கொள் பேர்_இசை
அடங்கின பணிமுறை அகில காரியம்
அடங்கின பொறி புலன் அவித்த யோகி போல்

#11
இத்திறம் முன் நிசி இருட்டொடு ஏகிய
வித்தக வேதியன் விரைந்து போய் எழில்
சத்திரப் புறக்கடைத் தலையைக் கிட்டினான்
அத் தகு காவலன் ஆரை நீ என்றான்

#12
நாச தேசத்து உளேன் நயந்து நாள்-தொறும்
பாச வெவ் வினைத் தொழில் பயின்ற பாமர
நீசன் முற்பெயர் அவபத்தன் நின்மல
ஈசனார் அருள் பிடித்து இழுத்தது இ வழி

#13
வந்தனன் உபாதி மா மலையின் மீது உள
நந்தனத்து இரும் துயில் நயந்து நல்_மதி
சிந்தினேன் அது பல தீங்கும் மோசமும்
தந்ததால் இருள் வழி தவித்து வந்தனன்

#14
இத்தகு தலத்திடை இரவு தங்கி யான்
நித்திரை தெளிந்து உதயாதி நீங்க எற்கு
உத்தரம் கிடைக்குமோ உலம் கொள் தோளினாய்
எத்திறம் நும் கருத்து இயம்புவாய் என்றான்

#15
எள்_அரும் கடைத்தலை ஏந்தல் மற்று இவன்
உள்ளமும் வாக்கும் ஒத்து உளது போலுமால்
கள்ளம்_இல் நீர்மையன் கருதுங்கால் எனா
ஒள்ளியோய் கேள் என உரைத்தல் மேயினான்

#16
அரும்பிய மெய் விசுவாசத்தால் அகம்
திரும்பி உன்னதநகர் சேர யாத்திரை
வரும் பரதேசிகள் வதிந்து போதர
விரும்பி இங்கு அமைத்தது இ விநோத மாடம் காண்

#17
வித்தக விவேகி சொல் விநய யூகி மெய்ப்
பத்தி நல் சிநேகி என்று உரைக்கும் பார்ப்பு அன
உத்தமி நால்வர் இங்கு உளர் மற்று ஒள் நிலைச்
சித்திர மாளிகை அகத்துச் செவ்வியோய்

#18
கைவரு தவ நிலை இயற்றும் கன்னியர்
தெய்விக சுருதி நன்கு உணர்ந்த செவ்வியர்
மெய் வரு நாவினர் விதேக முத்தர் போல்
ஐவரை அறுவராய் அமைத்த ஆருடர்

#19
மற்று இவர் சீலமும் மறை மெய்ஞ்ஞானமும்
பற்று அறுத்து யோகு செய் பரிசும் தெள்ளிதின்
உற்று அறி அஃது உனக்கு உறுதியாம் எனச்
சொற்று உடன் யூகியை விளித்துச் சொல்லுவான்

#20
அம்ம கேள் நாச தேசத்தனாம் இவன்
நம்ம சீயோன் மலை நணுகும் ஆசையால்
இ மலை ஏறி வந்து இடர்ப்பட்டு எஞ்சியோன்
செம்மையை அறிந்து இனிச் செய்வ செய்-மினோ

#21
என்று இனிது உரைத்திட இசைந்து வைதிக
நன்றி கொள் மடவரல் நம்பி எங்கு உளை
ஒன்றி இ வழி வர உற்றது என்னையோ
இன்று எலாம் புலப்பட இயம்புக என்றனள்

#22
தாய் எனப் பரிவுடன் வினவும் தையலாள்
சேய் உயர் மதி முகம் நோக்கிச் செவ்விய
தூயவன் தன் வரலாறு தொன்று-தொட்டு
ஏயவை சுருக்கி நன்கு இயம்பினான் அரோ

#23
கேட்டனள் யூகி என்று உரைக்கும் கேதம்_இல்
வாள் தடம் கண்ணினள் மற்றை மூவரைக்
கூட்டினள் இவன் நிலை குறி குணங்களைக்
காட்டினள் கை நெல்லிக் கனியின் வாய்மையால்

#24
காரிகை யூகி சொல் கருத்தை ஓர்ந்து அவர்
சீரியன் இவன் செயல் செவ்விது ஆதலின்
கூரிய தவ நிலை குறித்துப் பேசுதும்
ஆரிய வருக என்று அழைத்துப் போயினார்

#25
முன்பு ஒரு பற்று_இலர் முகம் கண்டோர்_இலர்
பின்பு எதும் குறித்திலர் பேணும் செய்கையோடு
என்பு நெக்குருகித் தம் இனத்தொடு ஏற்றனர்
அன்பு எதும் கருதிடாது அளிக்கும் நீரதே

#26
அற பெரும் சாலையை அடுக்குங்கால் பலர்
புறப்படூஉ எதிர்ந்து அருள் பொழியும் கண்ணினார்
மறப்ப_அரும் நல் மொழி வழங்கி வாழ்த்தினார்
சிறப்பொடு பூசனை செய்யும் செய்கையார்

#27
புவன போகங்களைப் புதைத்திட்டு ஆத்தும
கவனம் உற்று அரு நெறி கடைப்பிடித்தவன்
உவகையோடு உபசரித்து உறவுகாட்டும் அத்
தவ நிலை முதியரைத் தாழ்ந்து போயினான்

#28
ஆங்கு ஒரு சார்பினில் அழகு வீற்றிருந்து
ஓங்கிய தவள மாளிகையின் உள்ளுறப்
பூம் கொடி மடந்தையர் புகுந்து புங்கவ
ஈங்கு இனிது இருக்க என்று இருக்கை ஈந்தனர்

#29
நன்றியோடு ஆசனத்து இருந்து நம்பனை
ஒன்றிய சிந்தையோடு உவந்து இறைஞ்சினான்
துன்றிய உபாதி தொக்கு அடர்ந்த சூழலில்
பொன்றிடா வகை-தனைப் புரந்தது உள்ளியே

#30
அ வயின் சிலதியர் அடுத்து அங்கு ஏந்திய
திவ்விய பான நீர் அருந்திச் சிந்தையில்
கவ்வை இன்றாய் இருந்து அரங்கின் காட்சியைச்
செவ்விதின் நோக்கினன் திகைத்து உள் உன்னுவான்

#31
புண்ணியம் குடிபுகப் புதுக்கும் மாடமோ
கண்ணிய அரும் தவக் கழகம்தான்-கொலோ
தண் அளி உறைவதற்கு இயன்ற சாலையோ
மண்ணுலகு இறுத்த பேர்_இன்ப மாடமோ

#32
துறை-தொறும் ஆரணத் துழனி தூய நாட்டு
இறை திரு_புகழ் விளக்கு இனிய பாட்டு இசை
மறைமொழி வழாத மாடக நல் யாழ் இசை
நிறையுமால் இதுவும் ஓர் நிமல வீடு-கொல்

#33
வெண் நிலா உமிழ் சுதை மிளிர்ந்த பித்தியில்
திண்ணிய சுருதியில் தெளிந்த நீர்மைய
கண்ணடிப் படிவங்கள் ககன கோளத்தின்
வண்ணம் இத்துணை என வகுத்துக் காட்டுமால்

#34
மாயம்_இல் உளத்திடை வந்து தைவிக
தூய ஆவியின் அருள் துன்னுமாறு போல்
மேய சாளரம்-தொறும் வீசும் இ அகத்து
ஏயவர் உடல் புளகேறத் தென்றலே

#35
பொறிக்கு எலாம் நலம் தரு புனிதமாப் புலன்
செறிக்குமால் சிந்தனை தெருட்டும் மால் அற
நெறிக்கு எலாம் துணை என நிலவும் மான் நிலவு
எறிக்கும் மாளிகை இதை என் என்று உள்ளுகேன்

#36
இன்னணம் அதிசயித்து எண்ணி வேதியன்
தன்னுளே உவந்தனன் இருப்பத் தண் அளி
துன்னிய முத் தவத் தோகைமார் அவன்
முன் உற இருந்து இவை மொழிகுவார் அரோ

#37
அரசிளங்கோமகற்கு அன்புசெய்யும் மெய்ப்
பரிசு உடை ஐய எம் பக்கல் நீ வரும்
வரிசை பெற்றனம் எனும் மகிழ்ச்சி உண்டு எமக்கு
உரைசெயும் தரத்தது அன்று உண்மை நூல்_வலாய்

#38
தராதல இரக்ஷணை சமைக்கும் தன்மைய
புராதன சுருதி நன்கு உணர்ந்த புந்தியோய்
இராவுணவு இயையுமட்டாக யாம் குழீஇ
விராய் உரையாடுதும் விழைவு என் என்றனர்

#39
ஆசு_அறு மனத்தினர் அன்பினால் சொலும்
வாசகம் கேட்டு உளம் மகிழ்ந்து வேதியன்
பூசனை மொழி சில புகன்று என் அன்னைமீர்
பேசுதும் எனக்கு அது பெரிய நன்று என்றான்

#40
அத் திறம் அறிந்து அருகு அமர்ந்த ஆன்ற மெய்ப்
பத்தியாம் பவித்திரை பவள வாய் திறந்து
எத் திற எண்ணம் மற்று உன்னை இ வழி
உய்த்தது புலப்பட உரைத்தியால் என்றாள்

#41
முருந்து உறழ் மூரலாள் மொழிய முற்று உளம்
திருந்திய மறையவன் செவ்விதாம் என
அரும் தவத்தோய் பிறப்பு அவித்தையே குடி
யிருந்த தேசம் எமக்கு இறைவன் பாரிடம்

#42
ஈசன் கோபாக்கினி எரிக்கும் யான் உறு
நாச தேசத்தை என்று எழுந்த நல்லுரை
ஓசை கேட்டு அஞ்சி உள் உடைந்து உயங்கினேன்
பாச வெவ் வினை மிகு பாரம் ஆயிற்றால்

#43
வழி அறிந்து ஓடலன் ஆயின் மாண்டு உயிர்
அழிவன் என்று ஓர் உணர்வு அகத்துள் ஊன்றலால்
கழிவினுக்கு இரங்கி நாள் கழிய இ வழி
மொழி சுவிசேஷகன் முடுக்கினான் என்றான்

#44
நன்று வேதிய மறை வியாக்கியானி நல் மனையில்
நின்றது உண்டு எனில் நிகழ்ந்தது என் நிகழ்த்து என நீர்மை
குன்றுறாத பூம் கொம்பு_அனாள் வினவலும் குறித்த
மன்றில் யான் கண்டு கேட்டவை மறப்ப_அரிது தம்ம

#45
ஜென்ம சத்துருவாய் எமைக் கெடுப்பது தீரா
வன்மமுற்ற பேய் மற்று அதை அடர்க்க நம் மாட்டுத்
தன்ம ரக்ஷகர் கிருபைதந்து அருள்வர் இத் தகைமை
என் மனத்து உற ஊன்றியது அங்ஙனம் எம்மோய்

#46
நர மனாலயத்து இடம்பெறு பாவமே நாளும்
பரம நாயன் கைமாறு இன்றிப் பாலிக்கும் கிருபை
உரம் உறா வகை துரந்திடும் என்பதும் உணர்ந்தேன்
வர மனோகரம் நுனித்து உணர் மதி_வலோய் மனத்துள்

#47
மற்றும் மேலைநாள் வரும் நடுத்தீர்வையின் மரபைச்
சொற்றனன் ஒரு சொப்பனி கேட்டு உளம் துளக்கம்
உற்றது என்னினும் உடையவன் திருவுளச் செயலால்
முற்றும் எற்கு அது பெரும் பயன் ஈந்தது முதியோய்

#48
நித்தியானந்த மாடத்து நில அரமியத்தில்
பத்தர் ஓர்சிலர் வெள் உடை பரித்து உலவுவதும்
சுத்த வீரன் ஓர் தூயவன் வாயிலில் துன்னி
முத்தி வீட்டினுள் புகுந்ததும் கண்டவா முதிர்ந்தே

#49
உள்ளுறப் புக விரைந்தனென் உத்தம குரவன்
வள்ளல் உத்தரம் இன்று என மறுத்து எனை விடுத்தான்
எள்_அரும் பல காட்சியில் தெருட்டி என்று இசைத்தான்
கள்ளம்_இல் மறை வேதியன் கனம்_குழை உரைப்பாள்

#50
உலம் கொள் தோளினாய் உன் உளத்து உள்ளது உன் உரையாம்
துலங்கு கண்ணடி மயல்_அறக் காட்டிடத் துணிந்தேம்
நலம் கொள் மார்க்கத்து மற்று எதை எதிர்ந்தனை நம்பி
புலம் கொளத் தெரித்து உரை என ஆரியன் புகல்வான்

#51
குருதி சிந்தி ஓர் குன்றிடைக் குரிசில் நம் இளங்கோ
பரிதி போல் ஒளி கான்று உயிர் விடுத்திடும் பரிசைக்
கருதி நோக்கினன் நோக்கலும் கழிந்தது சும்மை
சுருதி நூல்_வலாய் தோன்றினர் மூவர் அச் சூழல்

#52
ஆய காலையில் பாவமன்னிப்பு எனக்கு அருளி
ஏய பேர் அடையாளங்கள் இவை எனக்கு ஈந்து
மீ உயர்ந்த வானகத்திடைக் கரந்தனர் விரைந்து
கூய மெய் அடியார் உளம் குடிகொண்ட கோமான்

#53
கொள்ள_அரும் துயில்கொண்டவர்க்கு அறிவினைக் கொளுத்த
எள்ளி மூவரும் துயின்றனர் எழுந்திலர் ஒருசார்
கள்ள மார்க்கத்தர் இருவர் வந்து இடையிலே கலந்து
நள்ளிருள் படு கவர் வழி பிடித்தனர் நயந்து

#54
அடர்ப்பது அன்று நீ அஞ்சிடேல் ஆள் அரியேறு
தொடர்ப்படுத்தவை என்று காவலன் சொன்ன சொல்லால்
இடர்ப்படாது இவண் இறுத்தனன் அன்று எனில் இருவர்
பிடர்ப் புறம் பிடித்து ஓடுவல் பெறும் கதி பிறவே

#55
பெண் அரும் கலத்து ஆயர்மீர் பிணி பிழைத்து ஓடி
உண்ணும் நீர் நசையால் திரிந்து உலைந்த ஓர் உழைக்குத்
தண் நறும் புனல் தடாகம் ஒன்று எதிர்ந்த போல் தமியேற்கு
எண்_அரும் குணத்து இ உழை லபித்தது இ இரவில்

#56
சாவதானி பேர்_உதவியின் தகைமையும் தழைத்த
ஆவலோடு எனக்கு ஆதரம் புரியும் உமது அன்பும்
நாவினால் அன்று என் உளத்திடை நன்றி பாராட்டித்
தேவ_தேவனைத் துதிப்பல் என்று இசைத்தனன் செய்யோன்

#57
இனிது வேதியன் வாய்மை கேட்டு அகம் களித்து எல்லாம்
புனித ஆவியின் அருள் செயலாம் எனப் போற்றிக்
கனிதல் நீர்மையில் கண் உளம் கசிந்தனள் பத்தி
வனிதை அவ்வயின் விவேகி மற்று இ உரை வகுக்கும்

#58
மக்களைத் துணை மனைவியை மருவு சம்பத்தைத்
தொக்கு அளைந்த உன் கிளைஞரைத் துறந்து வான் வழியில்
புக்கு வந்தனை மற்று அவற்று இடைக்கிடை புகுந்து
சிக்குகின்றவோ சிந்தனை செப்புதி என்றாள்

#59
புந்தி மாது இது புகறலும் புறத் தொடர்பு எல்லாம்
முந்து உவர்த்துப் பின் வேட்டு உழல்கின்ற ஓர் மூடச்
சிந்தை இன்று எனினும் பழ வாசனை சிறிது
வந்துவந்து போம் விடுபட்ட ஊசலின் வடம் போல்

#60
மாலை கண்டு அரவாம் என மயங்கிப் பின்வாங்கும்
சீலமாய் ஒரு தீங்கு உறில் திகைத்து உளம் திரும்பிப்
போலி வாழ்க்கையில் புகவருமாயினும் புகழோய்
மேலைநாள் நடுத்தீர்வையை நினைத்து உடன் மீளும்

#61
நேர்ந்ததால் பல சமயங்கள் நிருவிசாரத்தைச்
சார்ந்திடற்கு உளம் சாய்ந்திடில் எத்தனை தவறும்
ஆர்ந்த நிந்தையுமாம் ஒரு முறை அருவருத்துத்
தீர்ந்த பின் அதை விழைவதுவோ நர ஜென்மம்

#62
அநித்தம் பாவ சந்தோடங்கள் அனைத்தும் அது அன்றித்
துனித் திறம் சதோதயம் தரும் என்று அருள் துணையால்
நுனித்து உணர்ந்து பேர்_இன்ப லோகத்தையே நுதலித்
தனித்து நூல் வழி வர ஒருப்பட்டனன் தக்கோய்

#63
இனைய யாவும் மற்றொரு பக்ஷம் எம்பிரான் அன்பும்
தனையன் தண் அளியும் புனிதாவியின் தயையும்
நினையுங்கால் இந்த நீள் நிலத்து உறவினை நினைக்கும்
வினையம் என்னவாம் ஈது என்றன் முக்கிய விநயம்

#64
என்று வேதியன் தன் உளத்து இயற்கையை இயம்பத்
துன்று இரும் குழல் சுமதி என்று உரை பெறும் தோகை
நன்று நின் கருவிழி என நயந்தவை சில ஈங்கு
ஒன்றி வந்தவோ உன்னொடும் உரை என உரைப்பான்

#65
பச்சைப் பூகம்-நின்று எழு குலக் குயில் மொழிப் பாவாய்
கொச்சைப் பாமரக் குடிமையில் பழகிய கொடிய
இச்சைப் பாடுகள் சிற்சில என்னொடும் இசைந்தே
அச்சப்பாடுகள் தருவன யாண்டும் என் அகத்துள்

#66
விதிவிலக்கு இகந்து உஞற்றுதல் விருப்பம் இன்றேனும்
விதிவிலக்கு இகந்து உஞற்றுவல் ஓரொரு வேளை
விதிவிலக்கு இகந்திடுவன் யான் ஆயினும் விதித்த
விதிவிலக்கு எலாம் நன்று என விருப்புடன் ரமிப்பேன்

#67
என்ற மாத்திரத்து ஐய உன் இயல் சுபாவேச்சை
துன்றும் நல் மனோதத்துவ விரோதமாய்த் துளங்கி
நின்றது என்னில் அ இச்சையை நிலவுறாது அடக்கி
வென்றி எவ்வகை விளைத்தனை விளம்புதி எனலும்

#68
தாக்கிடப்படும் சிற்சில வேளையில் தமியேன்
தீ_குணங்கள் அ அமைதியை மயல்_அறத் தெருண்டு
நோக்கில் ஓர் பதினாயிரம் கோடி பொன் நொடியில்
ஆக்கல் போலும் மெய் மகிழ்ச்சி உண்டாம் அகத்து அணங்கே

#69
சுபாவ இச்சையைக் கெடுத்து வேரெடுத்து அறத் துடைக்கும்
உபாயம் ஐம்பொறி வாய் வழி புலனுறாது ஒருங்கே
கபாட பந்தனம் செய்வது என்பார் அது கருதில்
அபாவம் வாய்ப் பழக்கு அன்றி ஓர் பயன் இலை அம்ம

#70
குருதி காட்டிய சிலுவையை நினைப்பதும் கோது_இல்
சுருதி நூலை உய்த்து உணர்வதும் துகிலை உன்னுவதும்
வரு திறத்த மா மகிமையை மதிப்பதும் சுபாவம்
தரு துர்_இச்சையைக் களையும் மெய்ச் சாதன சதுஷ்கம்

#71
தீய சிந்தையைச் செகுப்பதும் செம்மையில் திறம்பா
மாயம்_அற்ற நல் கிரியையை வளர்ப்பதும் மயங்கி
மேய சோதனைக்கு எதிர் உற விறல் தருவதும் எற்கு
ஏய அத்தகு சாதன சதுஷ்கமே என்றான்

#72
ஆரியன் சொலக் கேட்டலும் ஆரண விவேகி
சீரிதாம் எனச் சிந்தையுள் வியந்து நீ சீயோன்
மேரு மா மலை யாத்திரை விளைந்தது என் விருப்பம்
கூரியோய் எது குறித்து உள கூறுதி என்றாள்

#73
இலகு வாள் மதி முகத்தினாய் என் உயிர்த் தோழர்
உலகு எலாம் உயக் கொண்டவர் வினைச் சுமை ஒழித்தோர்
அலகு_இலா மகிமைப் பிரதாபமோடு ஆங்கு
குலவி வீற்றிருத்தலைக் கண்டு களிப்பதோர் குறிப்பால்

#74
இம்மையே எனை ஈடு அழித்திடு பல இடுக்கண்
வெம்மை மிக்க பல் வேதனை விடயங்கள் எதுவும்
அம்மையில் புகாது அழி மரணமும் இலை ஆங்கு
செம்மை சேர்-மதி மற்று இது ஓர் சிந்தனை தெரி நீ

#75
பிணங்குறா மனப் பெருந்தகையவரொடும் பிரியாது
இணங்கி வாழ்வதும் எம்பிரான் அடி சிரத்து ஏந்திக்
குணங்களைப் புகழ்ந்து ஏத்தி இன் இசை ஒலி கூட்டி
வணங்கி நிற்பதும் எனக்கு உள மற்றொரு வாஞ்சை

#76
இத்தகைப்படு திட விசுவாசத்தை எனக்குள்
உய்த்து இம்மட்டும் ஆதரித்து நின்று உறுதுணை ஆகி
எத்திறத்தினும் பாதுகாத்து அளிப்பது எம் இறைவன்
வித்தகப் புனிதாவியின் செயல் என விண்டான்

#77
சீர்மை உற்ற மெய்க் கிறிஸ்தவன் திட விசுவாச
நீர்மை உற்று அறிந்தாம் இது நிண்ணயம் என்னாக்
கூர்மையுற்ற நல் விவேகி உள் குதுகலித்து இருப்ப
நேர்மை உற்ற சிநேகி மற்று இன்னன நிகழ்த்தும்

#78
ஐயம் இன்று அறவோய் உனக்கு ஆத்தும வாழ்வு
கையதாயது எம் ஆண்டகை கருணையின் அழைப்பும்
வைய ரக்ஷகன் மலர்_அடி ஆட்கொண்ட மாண்பும்
துய்ய ஆவி நல்கு ஆர்_அருள் பெற்றியும் துணியில்

#79
மண் பிசைந்து அருத்து ஆர்_அஞர் மலிந்த போதத்தும்
கண் பிசைந்து அழு சேய்க்கு உளம் கசியும் ஓர் தாயின்
பண்பு இசைந்த நம் பரம்பரன் பத்த பாலனத்தை
நண்பு இசைந்து இனிது ஆற்றுமாறு அறிந்தனம் நல்லோய்

#80
அரிய மித்திர இங்கு இது நிற்க நின் அன்புக்கு
உரிய காதலி மக்கள் மற்று உளர்-கொலோ உளரேல்
பிரிய விட்டு உனைப் பிரிந்து அவண் தரிப்பது என் பிரமை
தெரிய விள்ளுதி என்றனள் சிநேகியாம் தெரிவை

#81
வினவு வாசகம் கேட்டலும் விம்மி நெட்டுயிர்த்துக்
கனவு போன்றது எம் காமிய வாழ்வு எனக் கருதி
வன விழித் துணை நீர் முத்தம் உகுத்திட மறை தேர்
பனவன் உள் உடைந்து உருகி மற்று இ உரை பகர்வான்

#82
குணம் குலாவிய குயில் குரல் கோமள வல்லி
மணம் குலாவிய மனைவியோடு ஈரிரு மைந்தர்
நிணம் குலா உடற்கு உயிர் என எனக்கு உளர் நிகழ்த்தில்
கணம் குலாவிய கிளைஞரும் பலர் உண்டு கண்டாய்

#83
புலை நிரம்பிய நிருவிசாரத்தொடு புணர்ந்த
அலை நிரம்பிய கடல் புவி முழுவதும் அவிக்கும்
உலை நிரம்பிய கனலின் வான் உகு தழல் என்னாக்
கலை நிரம்பிய கட்டுரை தெரித்தனென் கவன்று

#84
உலக வாழ்க்கையை உறவினை ஊர்ப்பழக்கத்தை
அலகை மார்க்கத்தை அழல் விட அரவு என அஞ்சி
விலகி என்னொடும் திருமி இ மெய் வழி பிடித்தற்கு
இலகு நல்_மதி படைத்திலள் என் மனைக்கிழத்தி

#85
மறு_இலா மதி முகத்தினாய் மைந்தர் ஓர் நால்வர்
சிறுவர் சொல் மதி தெருண்டிடார் நன்மையில் திறம்பி
உறுவதாய சிற்றின்ப உல்லாசமே உவப்பர்
நறுவிது எள்ளி வெம் கடுத் தழை நயக்குமாப் போலும்

#86
பொறுமைத் தெய்வ வேந்து ஆணையைப் பேணலர் புகுதும்
மறுமைச் சிந்தை ஓர் சற்று இலர் இகத்து உறு வாழ்நாள்
குறுமைத்து என்பதும் கொள்ளலர் குவலய வாழ்வின்
சிறுமைப் போகம் வேட்டு உழல்வர் எம் ஊர் வரு சிதடர்

#87
பாபத்தைப் பரன் நீதியைப் பகர் நடுத்தீர்ப்பின்
ஆபத்தைக் குறித்து அறிவுறுத்து ஆவி நல் அருளாம்
தீபத்தைக் கெடுத்து இருள்படு தீ_வினை ஈட்டிச்
சாபத்தைப் பெறச் சதோதயம் முயல்வர் அச் சழக்கர்

#88
தெள்ளிது என் மனை மக்களைத் தெருட்டிய செம் சொல்
உள்ளில் அங்கணத்து உக்க தீம் பாலினை ஒத்த
வள்ளியோய் எமர்க்கு உரைத்த சொல் வல்லுளி மதியாது
எள்ளியிட்ட நித்திலத்தை ஒத்து உளது காண் இசைக்கில்

#89
சொற்றது ஓர்ந்திலர் வடித்த கண்ணீரொடு சும்மை
உற்று அடைந்த மெய் வருத்தமும் விடுத்த நெட்டுயிர்ப்பும்
சற்றும் நோக்கலர் இகழ்ந்தனர் ஆதலின் தமியேன்
முற்றும் நீத்து வந்து இ வழி பிடித்தனன் முதியோய்

#90
கறுத்த சிந்தையர் மடமையால் கனன்று உவர்த்து எள்ளி
வெறுத்து எனைப் புறக்கணித்தனர் ஆயினும் விமலன்
ஒறுத்திடாது அவர்க்கு உண்மையைத் தெரித்து அறிவுறுத்திப்
பொறுத்து இரக்ஷணை நல்க மன்றாடுவல் புகழோய்

#91
ஆக்கு தீ_வினை அருவருத்து அஞ்சும் என் மனமும்
வாக்கும் செய்கையும் மாறுகொண்டன மனை மக்கள்
போக்கினுக்கு எனை ஆதலில் பொருந்தலர் ஆகி
நீக்குமாறு ஒருப்பட்டனர் நிகழ்ந்தது ஈது என்றான்

#92
கனிதல் நீர்மையன் வாய்மையில் கனல் மெழுகு என்ன
வனிதை உள்ளம் நெக்குருகினள் மறைமொழி ஆய
புனித வித்து அவன் புந்தி நல் புலத்திடைப் பொருந்தி
இனிதின் உய்த்த வான் போகத்தை வியந்தனள் இயம்பும்

#93
பன்னு வேத பாராயண பரன் ஒரு மைந்தன்
என் நிமித்தம் மேதினி உமைப் பகைத்திடுமேனும்
பின்னிடாது சான்று ஆகுதிர் பேதுறீர் என்னாச்
சொன்ன வாசகம் உண்டு அதற்கு உண்டு-கொல் சோர்வு

#94
அன்று வேத நல் நூல் நெறி கடைப்பிடித்து ஆபேல்
மன்றுளே புரி நல் கருமத்தினால் மனது
கன்றி வெம் சினம் கதுவி அங்கு அவன்-தனைக் காயீன்
கொன்று தீர்த்தனன் இது அன்றோ குவலயக் கொள்கை

#95
திகழும் நூல் மதிச் செவ்வியோய் செவ்வியர் என்னப்
புகழுவார்க்கு அன்று நம்-தமைப் புறக்கணித்து எள்ளி
இகழுவார்க்கு நன்று இயற்றலே நம் கடன் என்றும்
அகழுவார்க்கு நன்று ஆற்றுமால் தாரணி ஐய

#96
தாயைத் தந்தையைத் தாரத்தைத் தன் துணைத் தமரைச்
சேயைச் செல்வத்தை வெறுத்து உயர் ஜீவனை விரும்பி
மாயைக்கு ஈடு அழியாது நல் வழிப்படும் மாண்பே
பேயைத் தாக்கிய பெருந்தகைக்கு ஆட்படும் பெற்றி

#97
காவலன் பெரும் கருணையில் கரை_இல் பேர்_இன்ப
ஜீவ நன்மையைத் தெரிந்தனை மற்று இதில் சீரிது
ஆவது என்-கொலோ இன்னும் அ ஆண்டகை அருளால்
வீவு_இல் ஆனந்த பதவியும் பெறுகுவை மேலோய்

#98
தேசு மல்கிய சிற்குணாலய திரியேகர்
ஆசி மல்குக அனவரதமும் உனக்கு என்னாப்
பேசி அன்பினால் பிறங்கும் மெய்ப் பத்தியை நோக்கி
ஆசு_இலா மனத்து அணங்கு_அனாள் அஞ்சலித்து உரைப்பாள்

#99
அரும் தவத்து எழில் பெற்ற மெய் ஆரணி
திருந்த ஆரியன் செப்பியது ஓர்ந்தனம்
பொருந்தும் அன்பரைக் காக்கின்ற புண்ணியப்
பெருந்தகை அருள் பெற்றியைக் கண்டனம்

#100
அன்னை உண்டு சில் நேரம் அமுது உணற்கு
இன்னும் ஆவிக்கு இனிய சம்பாஷணை
பன்னுதும் கிறிஸ்து அன்பு பழுத்தவாறு
உன்னுதும் கருத்து என் என ஓதினாள்

#101
இது சிநேகி இயம்பலும் ஏந்து_இழை
மதி மடந்தை என் வாஞ்சையும் ஈது என்றாள்
புது விருந்தினனும் மகிழ்பூத்து உடன்
அதி நலம் அடியேற்கு அம்மன்மீர் எனா

#102
ஒன்று வேண்டுவல் உன்னத கோமகன்
மன்று இரக்ஷை முடித்த வரம்பினில்
அன்று அடைந்த அரும் பெரும் பாட்டினை
இன்று இசைக்க மன்றாடுகின்றேன் என்றான்

#103
பத்தி என்னும் பவித்திரை பாங்கு_உளார்
சித்தமும் அவர் செப்பிய சீர்மையும்
உய்த்து உணர்ந்து உள் உவப்பொடும் ஒள்ளிய
வித்தகக் கனி வாய் மலர் விண்டனள்

#104
எம் உயிர்த் துணையீர் இறைவன் ஒரு
செம்மல் மேய சிலுவையின் பாடுகள்
மம்மர் நீங்கிய வானவர்க்காயினும்
அம்ம சொல்லி அளவிடற்கு ஆவதோ

#105
தரையில் யாவரும் பாவிகள் தண்டனை
நிரையம் நித்தியமா நடு நின்றவர்
ஒருவரே ஒருங்கு உத்தரித்தார் சிறு
வரையில் யாவர் அ நோவை வகுப்பரே

#106
பாரை வானப் பரப்பைப் பரவையை
வீரை வாலுகத்தை அளவிட்டிடும்
சீரர் ஆயினும் ஜேசு உத்தரித்த அக்
கோர வாதை குணித்திடற்பாலரோ

#107
வாக்கு ஒன்றிற்குள் இ வையம் அடக்கிய
கோ_குமாரன் அல்லால் இக் குவலயம்
தீக்க நின்ற சினக் கொடும் தீத் திரள்
ஆக்கை மீது உத்தரிக்க வல்லார் எவர்

#108
பாழி அம் புவி உய்யப் பரன் சுதன்
வாழி மேனி வதைப்புண்ட நீர்மையை
ஊழியூழி நினைத்து அழுது ஒண் கணீர்
ஆழியாக உகுப்பினும் ஆற்றுமோ

#109
வையம் விண்டிடும் வான் கதிர் மாய்ந்திடும்
சையமும் தகரும் தலை சாய்ந்து எனில்
ஐயன் மேய அவஸ்தையை ஆய்ந்து உரை
செய்ய யான் ஒரு சின்மதியோ தரம்

#110
நாயகன் புனிதாத்துமம் நைந்ததும்
மீ இரத்த வெயர்த் துளி வீழ்த்ததும்
ஏயது இன்னணம் என்று எடுத்து ஓத வாய்
ஆயிரம் இலை ஆயுவும் அற்பமால்

#111
பெருகும் அன்பில் பிணித்த அப் பெற்றியை
உருகும் உள்ளத்திர் யான் உரை செய்வதற்கு
அருகி_அல்லென் மற்று ஆயினும் ஆவியின்
திரு_அருள் கொடு அறிந்தன செப்புகேன்

#112
என்று பன்னி இக_பர சாதனம்
நன்று உணர்ந்த நலம் கிளர் பத்தியாம்
துன்று இரும் குணத் தோகை தன் சிந்தனை
ஒன்றி ஈசன் அருள் துணை உன்னுவாள்
** சம்பாஷணைப் படலம் முற்றிற்று

@2 இரக்ஷணிய சரிதப் படலம்
** ஸ்தோத்திரம்

#1
அகில லோகம் படைத்து அளித்து அன்பினால்
சகல மன் உயிரும் கதி சார்ந்து உய
மகவை நல்கிய மாண்புறு தாதையாம்
பகவனுக்கு இதயாஞ்சலி பண்ணுவாம்

#2
உலகம் மகிழ்ந்து ஈடேறப் பரலோகவாசிகளுக்கு உவகை ஏற
அலகை உளம் திகில் ஏற அகண்ட பரிபூரணனார் அருள் மெய்வாக்கு
விலகிலதாய் நிறைவேறத் துதி ஏற நர உருவாய் விளங்கி அன்பால்
சிலுவை மிசை ஏறிய மெய்ஞ்ஞான சூரியன் அடியைச் சிந்தை செய்வாம்

#3
துனி தரு வினை முனி தூய சிந்தனை
கனி தர நல் நெறி கடைப்பிடித்திட
இனிது உவந்து அடியவர் இதயத்து என்றும் வாழ்
புனித நல் ஆவியைப் போற்றுவாம் அரோ

#4
காவனத்திலே நிசியிடைத் தனி இருந்து உலகு எலாம் கதி சேர
ஜீவனைக் கொடுத்திட வரு திறம் நினைந்து இரத்த வேர்த் துளி சிந்தி
ஆவியில் கொடும் துயரமுற்று ஐயருக்கு அபயமிட்டதும் அ நாள்
தேவ_மைந்தனார் சகித்த வேதனையும் என் சிந்தை விட்டு அகலாவே

#5
மூசு முள்முடி முடித்திட முனிவுறா முக சரோருகப் போதும்
நேசமோடு பேதுரு மனம் கசந்து அழ நோக்கிய நெடும் கண்ணும்
தேசு குன்றி வெம் குருதி நீர் பொழிதரு செய்ய மேனியும் எம்மான்
ஏசு நாயகன் திரு_அடித் துணையும் என் இதயம் விட்டு அகலாவே

#6
பாவி என்று எனக்கு உணர்த்திய கருணையும் பாவநாசரைக் காட்டி
ஏவி என்னை அங்கு அவர்-வயின் நடத்திடும் இரும் திறமையும் எற்காய்
ஓய்வு_இலாது பிதாவை மன்றாடலில் உற்று எழு பெருமூச்சும்
தேவ_ஆவியின் புனித மாச் செயலும் என் சிந்தை விட்டு அகலாவே
** திருவிருந்து

#7
மாக வேந்தற்கு மானத பூசனை
ஓகையோடு அளித்து ஒண் பொன் வள்ளத்து உறு
பாகு உகுத்த பரிசு எனப் பத்தியாம்
தோகை இன்னன சொல்லுதல் மேயினாள்

#8
கோட்டம்_இல் மனத்தீர் இளங்கோமகன்
தீட்டு மானிடம் யாவையும் தீ_சிறை
மீட்டு மேக்கு உயர் வீட்டு உலகத்தினைக்
கூட்டுவான் உற்ற வாதை குறிக்கொளில்

#9
மற்றை நாள் மனு மக்கள் இரக்ஷணை
முற்றும் என்று முனிவு_இன்றி முற்படும்
அற்றை நாள் இரவில் அடியாரொடும்
உற்று அருந்தினர் நல் விருந்து ஓர் மனை

#10
மருந்து எனத்தகும் மந்திர அற்புத
விருந்து அருந்தும் அ வேளையில் வித்தகம்
திருந்து சிற்சில திவ்விய போதனை
பொருந்துமாறு புகன்றனர் புண்ணியர்

#11
உந்து தண் அளியால் உலகத்திடைத்
தந்தை தன்னை விடுத்ததும் தாம் வரு
விந்தையும் திருவுள்ளம் விழைந்திடும்
அந்தரங்கம் அவனிக்கு அளித்ததும்

#12
விதிவிலக்கு_இல் சுடரை விசும்பு தோய்
மதி விளக்கில் பொருத்திய மாட்சியும்
கதி புகுத்து மெய் அன்பின் கனி தரூஉ
முதிரும் மெய் விசுவாசத்தின் மொய்ம்பதும்

#13
காலம் முற்றும் கடவுள் கருத்தினுக்கு
ஏலும் நல் கருமங்கள் இயற்றிய
சீலமும் பரிவில் தெரியச் சொலி
மேலும் விள்ளுவர் ஞான விரோசனன்

#14
சருவ வல்ல திரித்துவ தற்பரத்து
ஒருவன் யான் ஒரு மூவர் ஒன்றாய் உள
நிருவிகற்ப நிலையை விசுவசித்து
ஒருவுகிற்கிலிரேல் எமக்கு உள் உளீர்

#15
தொள்ளை மாநிலம் எங்கும் துருவி நீர்
விள்ளு-மின் சுவிசேஷத்தின் மெய்ம்மையைக்
கொள்ளுமால் உலகம் பகை கொள்ளினும்
வள்ளலார் அருள் வாய்க்கும் மலங்கலீர்

#16
சொற்ற என் உரை உள் கொடு தூ நெறி
பற்றி மெய்ம்மை பகர்ந்திடு சான்றிராய்
நிற்றிர் என்னில் அ நின்மல வீடு அடைந்து
உற்று எனோடு அருகு ஆசனத்து ஓங்குவீர்

#17
எண் தரும் பரலோக இராஜ்ஜியத்து
உண்டு பற்பல தானம் அங்கு உற்று யான்
ஒண் தலம் தெரிந்து உம்-பொருட்டு அன்பினீர்
கண்டு மீள்குவன் நெஞ்சம் கலங்கல்-மின்

#18
அழிவு_இல் இன்ப உலகத்தை ஆக்கும் மெய்
வழியும் மாசு_அறு சத்திய மாண்பதும்
ஒழிவு_இல் நித்திய_ஜீவனும் உண்மையா
மொழியின் யான் அலது இன்று இதை முன்னு-மின்

#19
என்னில் வேறு_அலர் எந்தையும் எந்தையார்
தன்னில் வேறு_அலன் யானும் இத் தன்மையின்
மன்னும் என்னை மயல்_அறக் காண்டலே
உன்னதேசனைக் காண்டல் என்று உன்னு-மின்

#20
பிரிவை உள்ளிக் கலங்குதல் பெற்றி_அன்று
உரிமையோடு என் உரை பிடித்து ஒண் தவம்
புரி-மின் யான் புனிதாவியைப் புக்கு இவண்
வரவிடுப்பல் உமக்கு அருள் மல்கவே

#21
எந்தை ஆவி இரு நிலத்து எய்திடில்
பந்தம் நீதி பகர் நடுத்தீர்வை என்று
இந்த ஞேயம் எளிதில் புலப்பட
விந்தையாக மெய்ஞ்ஞானம் விளங்குமால்

#22
ஏது கேட்பினும் என் ஒரு நாமத்தில்
தாதை வேண்டுவ தந்து சதோதயம்
ஆதரிப்பர் என்று இன்னன ஆண்டகை
ஏதம்_இல் உரையாடிடும் எல்வையில்

#23
ஆத்துமத்தின் அளவில் உபாதிகள்
மீத் திரண்டு ஒருமித்து விழும் கனல்
நீத்தம் என்ன நெருங்கு புகை வரத்
தீர்த்தன் ஆவி கலங்கித் திகைத்ததே

#24
புரை_இலாப் புண்ணிய புருஷ உத்தமர்
தரையில் வாழ் நரர் உயக் கலக்கம் தாங்கியே
கரை_இலாப் பவக் கடல் கடத்திலார் எனில்
நிரைய நித்தியம் தரு கலக்கம் நீங்குமோ

#25
இறைவர் அ விருந்தினுக்கு இசை பஸ்கா எனும்
மறி உணும் அடியரின் வதனம் நோக்கி ஈண்டு
உறைதரும் உங்களில் ஒருவனே எனைச்
செறுநர் கைப் படுத்துவன் என்றும் செப்பினார்

#26
ஆங்கு அது கேட்ட மெய் அடியர் யாவன் இத்
தீங்கினை நினைத்தனன் என்னத் தேர்கிலார்
தாங்க_அரும் துக்கமும் திகிலும் தம்முளே
வீங்கிடத் தனித்தனி வினவினார் அரோ

#27
ஈண்டு உறும் துரோகி யார் எனக் கொதிப்புடன்
ஆண்டகை மடி அருகு அணைந்த அன்பனைத்
தூண்டினன் பேதுரு சமிக்கை தோன்றுற
வேண்டினன் அவனும் யார் விள்ளுக என்னவே

#28
அன்பருக்கு ஆர்_அமுது அனைய அம் சொலார்
இன்புறும் துணிக்கை ஒன்று எடுத்துத் தம் கையால்
வன்புறு மனத்தனுக்கு அளித்து மற்று அவன்
என்பதை நண்பனுக்கு இசைத்துப் பின்னரும்

#29
என்னொடும் கலத்தில் கை இடுகின்றோன் எவன்
அன்னவனே எனை அளிப்பன் தெவ்வர்க்கு
முன்னவை மொழிந்தவாறு எனக்கு மூள்வன
பின் அவற்கு உறு துயர் பேசற்பாலதோ

#30
பிறந்திடாது இருப்பனேல் பெரிய நன்மை என்று
அறைந்தனர் பேதுரு ஆதி அன்பர்க்கு
மறைந்து புள் சிமிழ்க்கும் வேட்டுவனில் வஞ்சகம்
நிறைந்தவன் மற்று இவை நிகழும் காலையில்

#31
அகத்து எழு சாக்ஷியை அடக்கி மானத்தை
உகுத்து நல் மதியினை ஒழித்து நன்றியைச்
செகுத்து வன் நெஞ்சொடு தியங்கி யான்-கொல் நீர்
வகுத்து உரைத்தவன் என வாயில் கேட்டனன்

#32
உள்ளுவார் உள்ளுவது உடன் உணர்ந்திடும்
வள்ளலார் திருமுனம் இரு மனத்தனாய்
விள்ளுவான் துணிந்தமை அறிந்த மெய்ப் பரன்
கொள்ளு நீ உரைத்தவை என்னக் கூறலும்

#33
நஞ்சு எனக் கொடியவன் உளத்து நாடிய
வஞ்சகம் வெளிப்பட வைரக்கல்லினும்
நெஞ்சகம் கடினமாய் நிறுவ நேர் பழிக்கு
அஞ்சிடான் அமலனை அகன்றிட்டான் அந்தோ

#34
எறிந்த வேல் மெய் நுழைந்து இருக்க ஆண்டை என்று
அறிந்து வால் குழைத்து வந்து அணுகும் குக்கலும்
சிறந்த பேர்_அருளொடும் செய்த நன்றியை
அறிந்திடாது அகன்றனன் யார்-கொலாம் இவன்

#35
காத்த நல் ஆவியைக் கடிந்து கண்டகச்
சாத்தனுக்கு இதயத்தைத் தானம்செய்பவர்
கூத்தர் கைக் குரங்கில் அக் குணுங்கர் ஆட்டிடத்
தீத் தொழில் முயன்று அழிந்து ஒழிதல் திண்ணமே

#36
அடுத்து நான் கெடுப்பன் என்று அறைந்த சூழ் வினை
முடித்திடும் தருணம் ஈது என்ன முன்பணம்
கொடுத்த அப் பதிதரைக் குறுகினான் கொலும்
கடுத் துறு மனத்து யூதாசு என் கள்வனே

#37
துன்_மதி போய பின் சூழ்ந்த தொண்டர்க்கு
நன்_மதி சிற்சில நவிற்ற நாயகன்
தன் மனத்து எண்ணி மேல் ததும்பும் அன்பினால்
கல்_மனம் கரைந்திடக் கழறுவார் அரோ

#38
மனு_மகனால் பிதா மகிமை ஓங்கலால்
நனி விரைந்து அவனுக்கு மகிமை நல்குவார்
இனி ஒரு சிறுபொழுது இருப்பன் உம்முடன்
கனிவொடும் பின் எனைக் கருதித் தேடுவீர்

#39
மக்களே யான் செலும் இடத்து வந்து நீர்
புக்கிடக் கூடியது_அன்று இப் போழ்திலே
மிக்க அன்புடையராய் விளங்குவீர் எனில்
தக்க என் சீடர் என்று அறியும் தாரணி

#40
ஆதலால் ஒருவரில் ஒருவர் அன்புகூர்ந்து
ஏதம்_இல் குணத்தராய் இரு-மின் ஈண்டு நும்
மீது நான் நேசத்தை விளைத்தவாறு போல்
ஈது ஒரு கற்பனை இயம்பினேன் என

#41
மூண்டு எழு துயரினால் முடுகிப் பேதுரு
ஆண்டவ எங்கு நீர் அணைகின்றீர் என
வேண்டிட இன்று அலை மேவிச் சில் பகல்
மாண்ட பின் பற்றுவை மனக்கொள்வாய் என்றார்

#42
ஏன் உமைத் தொடர்ந்திடேன் இன்று என் ஜீவனை
நான் உமக்காகவே நல்குவேன் எனத்
தானுடைப் பலத்தையே சார்ந்து பேசலும்
வானவர் கோமகன் மறுத்தும் கூறுவார்

#43
நின்னுடை ஜீவனை நீக்குவாய்-கொலோ
என்னுடை நிமித்தமாய் இடங்கொடாமல் யான்
துன்னிய பசாசினைத் துரந்து என் தந்தையை
உன் விசுவாசம் நன்று உரக்க வேண்டினேன்

#44
உரப்படும் பின்னர் நீ உன் சகோதரர்
திரப்படுமாறு சிந்தனைசெய்வாய் என
நிரப்பினர் பேதுரு நிலைக்கப் பூ மிசைப்
புரப்பது கருதி வந்து அணைந்த புண்ணியர்

#45
கேட்டவன் தன் பலக்கேடு உணர்ந்திடான்
மீட்டும் உம்முடன் சிறை மேவுவேன் தலை
நீட்டுவன் சாவிலும் எனத் தன் நேசத்தைக்
காட்டினன் வருவது கருதுவார் எவர்

#46
ஆவது கருதிய அமலன் பேதுரு
சேவல் இன்று இரவிலே தெருளக் கூவும் முன்
மூ விசை எனை மறுதலிப்பை முற்றும் நீ
மேவுற மெய்ம்மையை விளம்பினேன் என்றார்

#47
இன்னணம் நிகழ்வுழி இருந்த சீடரும்
தன்_நிகர் ஆய தற்பரனும் தம் முனம்
மன்னு பஸ்கா எனும் மறியைத் துய்த்துமே
முன் நியமப்படி முடித்திட்டார் அரோ

#48
பொங்கு பரமானந்தம் நமக்கு அருள வந்த மனுப் புதல்வர் தாமே
செம் கரத்தால் அப்பம் எடுத்து அதைப் பிட்டுத் தோத்திரித்துச் சீடர்க்கு ஈந்து ஈது
உங்களுக்காய் மரணத்துக்கு ஒப்புவிக்கும் எனது உடல் ஈது என்னை உன்னித்
தங்கிடும் நீர் இந்த வகை இயற்றி எனக் கருணையொடு சாற்றிப் பின்னும்

#49
இனிமை தரு பழரச பாத்திரம் ஏந்தி ஸ்துதி செலுத்தி இதிலே நீங்கள்
அனைவீரும் பருகு-மின் மற்று இது புதிய உடம்படிக்கைக்கு அமையச் சிந்தும்
எனது இரத்தம் பாவமன்னிப்பு இதனாலே உண்டாகும் இனி இப் பானம்-
தனை நுகரேன் என் பரமதந்தை இராஜ்ஜியம்-தனில் நீர் சாரும்-மட்டும்

#50
என்று திருவாய்மலர்ந்து அன்பு உருவாக எழுந்து அருளி யேசுநாதர்
ஒன்றிய தம் அடியரொடும் பாவிகளுக்காய் இரங்கி ஒருபேறான
தன் திரு_மைந்தனைக் கொடுத்து இவ்வளவாக உலகில் அன்பு சார்ந்த தேவை
நன்று நினைத்து ஏத்தி ஒரு தோத்திர கீதமும் இசையாய் நவிற்றினாரால்

#51
பரசமய இருள் அகலச் சுவிசேஷ விரி கிரணம் பரப்பி நின்ற
இரவி எனும் திருச்சபையில் நிலையாக வழங்கிவரும் இரண்டு ஞான
வரம் மிகு சாக்கிரமெந்தின் முன்னது ஞானஸ்நானம் மற்றொன்று இந்தப்
பரம விருந்தாம் நமது பரம குருவே இவை ஏற்படுத்தினரே

#52
முந்துற ஞானஸ்நானம் அடைவர் திருச்சபை புகுவோர் முறையில் நின்று
பந்தம் அணுகாத பராபரன் மதலை எம்முடைய பாவம் தாங்கிச்
சிந்தினர் செம் குருதி உயிர் விடுத்தனர் என்று உளம் நினைந்து சிந்தை அன்பால்
நைந்து உருகி விசுவாசத்து ஊன்றிநிற்பர் நற்கருணை நயந்து உட்கொள்ளில்
** பிரார்த்தனை

#53
ஒலி கடல் உலகம் எல்லாம் உயர் பரகதியில் சேர
மலிதரு கருணையாலே மானிட உருவம் தாங்கி
மெலியராய் வந்த மேசியா இவை விளம்பிப் பின்னர்
நலிவுறும் அடியர்க்காகச் செபத்திலே நாட்டம் வைத்தார்

#54
ஆதிமத்யாந்த ரகித நிஷ்களங்க அநாதியை அருள் பெரும் கடலை
ஓதுதற்கு அரிய மூலதத்துவத்தை ஒப்பு_அற உயர் பரஞ்சுடரை
வேதநாயகனைத் தமின் நிருவிகற்பாய் விளங்கிய விபுதர்-தம் பிரானைக்
காதல் மீதூரச் சிந்தையுள் நினைந்து முது மறை கனிந்த வாய் திறந்தார்

#55
தந்தையே நேரம் வந்தது நீர் நும் தனையனுக்கு அளித்தவர் எவரும்
உய்ந்திட நித்ய_ஜீவனை நல்கும் உரிமையை அருளினீர் உமையும்
மைந்தனாம் எனையும் அறிந்துகொள்வதுவே மாசு_அறு நித்திய_ஜீவன்
எந்தையே முன்னம் உமில் எனக்கு இருந்த மகிமையை ஈந்திட வேண்டும்

#56
எனக்கு உள யாவும் உமக்கு மற்று உமக்கு உள்ளன எனக்கு ஆதலின் இவர்-தாம்
எனக்கு நீர் அளித்தோர் ஆயினும் உமக்கே உரியவர் இவரை இ உலகில்
தனிக்க விட்டு உம்-பால் வருகின்றேன் பரம தந்தையே ஈங்கு இவர் நமைப் போல்
இனிக் கலந்து இருக்கத் திரு_அருள் துணை நீர் ஈந்திடப் பழிச்சுகின்றேனே

#57
சொற்ற மெய் வசனம் பிழையுறா வண்ணம் துன்_மதி படைத்துளான் அன்றி
மற்று இவர் தம்முள் ஒருவரும் இதயம் மருண்டு கேடு அடைந்திடார் ஆக
இற்றை ஞான்றளவும் உமது நாமத்தில் காத்தனன் யான் பிரி தருணம்
உற்றதால் என்னில் இவர் மனத்து உவகை உதித்திட இவற்றை ஈண்டு உரைத்தேன்

#58
நலனுறும் உமது திவ்விய வசனம் இவர்க்கு யான் நல்கலின் எனைப் போல்
உலகியல் இகந்து நீத்தனர் அதனால் உவரி நீர்க் கடல் புடை சூழும்
நிலவியல் உடையார் மிகப் பகைக்கின்றார் நெருங்கு பொல்லாங்கின்-நின்று என்றும்
விலகி மெய்ந்நெறியில் வழுவுறாது இவரைக் காத்து அருள் மிகத் தர வேண்டும்

#59
முன்னம் இ உலகில் என்னை நீர் விடுத்த முறைமை போல் யானும் ஈங்கு இவரை
இ நிலத்து அனுப்புகின்றனன் அதனால் இவர்க்கு உமது அரிய மெய்ப்பொருள்கள்
மன்னு தெய்வீகம் உறும் பரமார்த்த வசனத்தால் பரிசுத்தம் வழங்க
என்னையே உமக்குச் சமர்ப்பணம் செய்தேன் இரங்கி ஆண்டு அருளுக எந்தாய்

#60
பேதம்_அற்று ஒன்றாய் நாம் இருத்தலைப் போல் பேசும் இத் தொண்டர் வாய் மொழியால்
பூதல மாந்தர் என்னை நீர் விடுத்த புதுமையைப் புகர்_அற உணர்ந்து
போதமுற்று என்னின் மெய் விசுவாசம் பொருந்தி நம்முள் கலந்திருக்கத்
தாதையே உமது கிருபை ஈந்திடற்காய்த் தமியன் மன்றாடுகின்றேனே

#61
அகில லோகங்கள் அமைக்கும் முன் என்னில் அன்புகூர்ந்து ஐய நீர் அளித்த
மகிமையை நீர் எற்கு உதவிய இவர்கள் மயக்கு_அறக் கண்டு கண் களிப்புற்று
அகம் மகிழ்வு எய்தற்கு யான் இனிது இருக்கும் அத் தலத்து என்னொடும் அமர்ந்து
தகவுடன் இருக்க வேண்டும் இ அருத்தி தரித்திருக்கின்றது என் உளத்தே

#62
வையகம் அறியாது உம்மை யான் அறிவன் மற்று இவர்-தாமும் ஈங்கு என்னை
ஐய நீர் வரவிட்டதையும் நன்கு அறிந்தார் ஆதலின் அரியவும் அன்பு
மெய்யுற என்னில் விளங்குதல் போல இவருளும் விளங்குக என்று
தெய்வ மாக் குமரன் வெளிப்படையாக ஜெபித்தனர் சிந்தனை உருகி

#63
தாதையார் திருமுனம் பணிந்து சுதன் இன்னவாறு பல தண் நறும்
போது அவிழ்ந்து மது வார்ந்து எனப் புனித வாய் திறந்து இனிய புத்துரை
ஓதி மானிட உயிர்க் கணங்கள் திரியேக நாதரை உளத்து உனி
ஆதரத்தொடு ஜெபிக்குமாறு இதனை மாதிரிக்கு அருள் செய்தார் அரோ

#64
துருவ_மீனின் வழி துருவி நண்ணுவர் திரைக் கடல் துறை மரக்கலத்து
அரு வினைஞர் அருள் மூர்த்தி சிந்தனையை அமுத வாக்கை அவர் செயலை உள்
கருதி நீக்கம்_அற முன்னர் வைத்து விலகாது நல் நெறி கடைப்பிடித்து
உரிமை சேர் பரம பதம் அடைந்து நனி உய்வர் உத்தம கிறிஸ்தவர்

#65
தணிந்திடாது பரிசுத்த ஆவி அனல் தங்கு பத்தர்கள் சதோதயம்
பணிந்திடும் இதய கார்முகத்தை நனி பற்றி அன்பு நெடு நாணியும்
அணிந்து அரும் செபமொழிக் கணைக்கு நமது ஆண்டை செம் குருதி ஆட்டி உள்
துணிந்து பக்தி விசுவாசமாம் பெரிய தோள் பலம் கொடு தொடுத்துமே

#66
நெட்டுயிர்ப்பு விசை மூட்டி உன்னத நிலத்து உலாவு பரிசுத்தரும்
சிட்டரும் தொழு பிரான் இரும் செவி தொளைத்து அருள் திருவுளக் கடத்
துள் ததும்பி நிறை கருணை மா நறவு உகுக்க எய்து மகிழ் ஓங்க அ
மட்டு அருந்தி அனவரத இன்பம் எனும் மாண் களிப்பினிடை வைகுவார்

#67
அழிம்பன் ஏவு கனல் அஸ்திரங்களை அகற்று கேடகம் எ உலகமும்
தொழும் பராபரன் விரும்புகின்ற பலி துய்ய ஜீவநதி நீர் தரும்
செழும் குடம் பரம நாயகன் திருமுனம் செல் தூது செய் பவங்களால்
அழுங்குகின்ற இதயத்துள் நின்று எழு நல் ஆவி தந்த ஜெபமாம் அரோ

#68
ஆன்ம ரக்ஷை-தனை நீ விழைந்தனை-கொல் கேள் பிதாவொடு அருளாளர் இம்
மானுவேலரையும் அறிதி என்றும் நசியாத ஜீவ நிலை மருவுவாய்
ஞானதேசிகன் நவின்ற வாய்மை இஃது அன்றி வேறு வழி நாடுதல்
கானல் அம் புனல் எனத் துணிந்து அடவி ஓடி எய்ப்பது கடுக்குமால்

#69
முத்தி வீடு பெற நித்தமான ஒரு முத்தனைப் பரவும் உத்தம
பத்தி ஒன்று அமையும் என்பர் அண்ணல் பரிசுத்த நீதி-அது பான்மையை
உய்த்து உணர்ந்து அறிவுறாத மாந்தர் இஃது என்னை ஆழி நடுவுற்று உழன்று
எய்த்த அந்தகன் அடுத்த நல் புணை விடுத்து இரும் கரை இறுப்பனோ

#70
நாசமே தரு பொலாத பாதகம் நயந்து இயற்றிய பசாசன் யான்
ஈசனோ பவ நராத்துமங்களை எரிக்கும் அங்கி இனி என் செய்கேன்
ஏசுவே எனது பாவநாசர் உயிர் ஈந்த வள்ளல் இவர் என்று அறிந்து
ஆசையோடு விசுவாசியாரை நரகாக்கினிப் புழு அயின்றிடும்

#71
எவன் தனைக் கொடிய பாவி என்று உளம் மிகக் கசந்து துயர் எய்துவான்
எவன் தனக்கு வரு தேவ கோப அழல் அஞ்சி ஓட வகை எண்ணுவான்
எவன் தனக்கு அழிவு_இலாத முத்தி நலம் எய்து இச்சையது இயைந்துளான்
அவன் கிறிஸ்துவில் மெய் அன்புகூர்ந்து விசுவாசம் வைத்திடில் அடுக்குமே

#72
நாயினும் கடைய பாவியேனை எரிநரக வாயிலும் நடுக்குறும்
பேய் கொடும் கையிலும்-நின்று இழுத்து அழிவு_இல் பேறு அளித்த பெருமான் அருள்
தாயினும் சத மடங்கு நேயம் உறு தற்பரன் சரணம் அன்றி என்
வாய் மறந்து துதியாது சென்னியும் வணங்கிடாது இறுதி வரினுமே
** ஒலிவமலை

#73
மன்பதைக்கு ஒரு மருந்துமாய் மருந்து என அருந்தும்
அன்பருக்கு அழியாத பேர்_இன்பமும் ஆகி
என்பு உருக்கிடும் கருணையான் ஏக நாயகனார்
முன் பிரார்த்தனை செய்த பின் நிகழ்ந்ததை மொழிவாம்

#74
கத்துருத்துவக் கடவுளின் கற்பனை கடந்து
சத்துருத்துவம் ஆகிய தாரணியோர்க்கு
மித்துருத்துவம் பூண்டு உள மேசியா தமது
மத்தியத் தொழிலால் வரும் துயர் எலாம் மதித்தே

#75
புனித நீதியும் பரம காருணியமும் பூத்த
முனைவன் இன் அருள் வேண்டுவான் முழுது உணர் அகத்தில்
நினைவு கொண்டு ஒலிவாசலச் சாரலில் நின்ற
புனை மலர்த் தடம் சோலையை நோக்கினர் போனார்

#76
ஊசி நூல் என உடன் நிழல் எனப் பிரிவு_இன்றி
ஆசையோடு பின் தொடர்ந்திடும் அடியரோடு அமுத
வாசகம் பல பேசி இம்மானுவேல் மலினக்
காசு உறும் புனல் கீதரோன் ஆற்றையும் கடந்தார்

#77
மும்மை ஆய ஓர் முதலுக்கு நடு நின்ற மூர்த்தி
செம்மை சேர் உளம் கவன்றிடத் திரு_உருவு அடைந்த
வெம்மையைச் சிறிது ஆற்றுவல் என விரைந்து எழல் போல்
விம்மு தண் சுடர் வீசி மேல் எழுந்த வெண் திங்கள்

#78
எண்_அரும் குணத்து எம்பிரான் மனு உரு எடுத்து இ
மண்_உளோர் வினை தொலைத்தல் போல் மை இருள் தொலைத்து
விண்ணின் ஓங்கிய வெண் மதி வியன் கதி கூட்டும்
புண்ணியம் எனத் தண் நிலாத் தாரைகள் பொழிந்த

#79
இரவி-பால் ஒளி பெற்று இரு நிலம் மிசை எங்கும்
விரி நிலாக் கதிர் வீசிய மதியம் மெய்ஞ்ஞானம்
பரம சூரியன்-பால் அடைந்து உலகு எலாம் பரப்பும்
குரவராம் எனத் திகழ்ந்தது விசும்பிடைக் குலவி

#80
படைத்து நித்தமும் பாலனம் புரிகின்ற பரமன்
எடுத்த கோலமும் படும் துயரமும் நினைந்து எறி நீர்
உடுத்த வையகத்து உறு பொருள் அனைத்தும் உள் உடைந்து
சடைத்து மேல் வெளுத்து என நிலாத் தயங்கின எங்கும்

#81
ஆற்று நீர் எலாம் பால் எனல் ஆயது அ ஆற்றை
ஏற்ற வாரிதி நீர் எலாம் படிகம் ஒத்து இயைந்த
ஊற்றம் மிக்கு உயர் கிரி எலாம் வைரமே ஒத்த
தோற்றிரும் கலை நிரம்பிய மதிச் சுடர் தோய்ந்தே

#82
வேதம் வேதியர் விண்_புலத்தவர் விழைந்து ஏத்தும்
நாதன் சேவடி நடுக்குறு கல் அதர் நடத்தல்
தீது உறும் பவ வினை எலாம் தேய்க்கவும் ஜெகத்தை
ஆதி நல் அற நிலையினில் நிறுத்தவும் அன்றோ

#83
எய்தும் துன்பத்தைப் பெருமையைச் சிறுமையை எண்ணாத்
துய்ய அன்பினைப் பிறர் துயர் மேற்கொண்டு தோன்றித்
தெய்வ மாண் அடி சிவப்புறக் கானிடைச் சேறும்
ஐயன்-பால் அன்றி நமரங்காள் யாரிடத்து அறிவீர்

#84
இல்லையில்லை ஓர் இளக்கமும் பாவத்தால் இறுகி
வல் உருக்கினும் வைரத்தும் வலுத்த என் நெஞ்சக்
கல் அரக்கிய திரு_பதம் கான் வழிப் பட்ட
புல்லிதாம் பரற்கு ஒல்கும் என்று எங்ஙனம் புகல்கேன்

#85
மண்டலம் புரி பவம் சுமந்த மாட்சியால்
அண்டர் நாயகன் உளத்து ஆத்துமத் துயர்
கொண்டு பாடுகள் படக் குறித்துச் செல்லும் அத்
தண்டகாரணியத்தின் தன்மை உன்னுவாம்

#86
இருள் எலாம் கதிரவற்கு ஈடு அழிந்து போய்
ஒருவழித் தொக்கு உறைந்து என்ன ஓங்கிய
தரு நிழல் கதுவிய தண் அம் தாது உகு
விரி மலர்ப் பரிமளம் வீசும் காவனம்

#87
தண் நறும் தடங்களால் தடத்து உலாம் கொழு
வண்ண வான் மீன்களால் மலர்ந்த கொம்பரால்
விண் உற நிவந்து எழு வியன் பொதும்பரால்
கண் இணை களிப்புறும் கடி கொள் காவனம்

#88
விரும்பும் நல் குழல் யாழ் இசையும் வீழ்வுறச்
சுரும்பு இனம் முரலும் இன் இசையும் துன்னரும்
மரம் பயில் புள் குலம் வழங்கும் ஓசையும்
நிரம்பலால் செவிக்கு இன்பம் நிறைக்கும் பூம் பொழில்

#89
குளிர் தடம் தோய்ந்து அலர் குலவு வாசனை
அளவி நல் நிழல் படிந்து அசையும் தென்றலால்
இள மரக் காவின்-நின்று எறியும் சாரலால்
புளகு உற மெய் விடாய் தணிக்கும் பூம் பொழில்

#90
தெளி புனல் தரங்கமும் செறிந்த மேகமும்
வளர் தருக் குலங்களும் வசந்த வாடையும்
உளை பரி ஆதியாய் உவந்து இச் சோலை வாய்க்
குளிர் அரசிருத்தலால் கோடை நாடலா

#91
தினகரன் கதிர் ஒளி சேர்கிலாமையால்
கன இருள் நிறைந்த இக் காமர் சோலை-தான்
புனித நல் ஆவியின் கதிர் புகுந்திடா
மனம் எனல் ஆய பொய் மதமும் போன்றது

#92
உள்ளன வறியவர்க்கு உவந்து நல்கும் அ
வள்ளலுக்கு இருநிதி வளம் சுரத்தல் போல்
தெள்ளு தீம் கனி முதலாய செம் பொருள்
கொள்ளினும் வண் பயன் குன்றிடாதது

#93
வண்டுகள் மலர் குடைந்து இனிய மா நறவு
உண்டு இசை முரன்று தாலாட்ட ஒண் பொழில்
தண்டலை சினைக் கரம் அசைத்துத் தாங்குறக்
கொண்டல் அம் குழவி வந்து உறங்கும் கொள்கைத்த

#94
ஓடையும் கோடையும் ஓடும் கான் மலர்
வாடையும் வாடையும் மலியும் புள் பரி
பாடையும் பாடையும் மயங்கும் பைம் புயல்
ஆடையும் மேடையும் அணியும் தாருவே

#95
பனி மகன் மழை முழவு ஒலிக்கப் பாட்டு அளி
இனிய தேன் அமுதம் உண்டு இசைக்கக் கற்பக
நனை விரி நறும் தொடை சூட்டி நல் எழில்
வன மடந்தையை மணம்புரிவன் வைகலும்

#96
அனவரதமும் திரு_மொழியை அன்பினால்
நினைவினில் உன்னி அ நிலையில் நிற்பவர்
நனி செழித்திடுதல் போல் நறும் தெள் நீர்க் கரைப்
பனி மலர்த் தருக் குலம் பயன்கொண்டு ஓங்குமே

#97
படரும் முந்திரி கொழுகொம்பு பற்றியே
கெடல்_அரும் நறும் கனி கிடைத்த தோற்றம் மெய்த்
திட விசுவாசமோடு ஐயன் சேவடி
அடைபவர் நடையினை அடுத்துக் காட்டுமால்

#98
சந்ததம் முடங்கு தாள் தரைக்-கண் ஊன்றி நின்று
அந்தரம் நோக்கியே அலர்க் கண்ணீர் சொரி
கந்த மல்லிகை உளக் கசிவோடு அண்ணல் தாள்
வந்தனை புரிபவர் செயலை மானுமால்
** ஆத்தும் வேதனை

#99
இனையன வளம் கொண்டு ஓங்கி இறும்பு சூழ் கிடந்த அந்தப்
புனை மரக் காவின் பாங்கர் பொலன் கெழு கெதுசேம் என்னும்
நனி சிறந்து ஒப்பு இகந்த நறு மலர்ச் சோலை கண்ணுற்று
அனகனும் அன்பின் மிக்க அடியரும் ஆண்டு புக்கார்

#100
சோலை வாய் விளைந்த பாவச் சுமை சுமந்ததனால் இந்தச்
சோலை வாய் அணைந்து தேவ_சுதன் தமது ஆத்துமத்தில்
மூலகாரணமாய் நிற்கும் முழுமுதல் முனிவு தாங்கிச்
சால நோவு அடைந்து தீர்த்தல் தகுதி என்று அடைந்தார் போலும்

#101
கார் இருள் மலிந்த அந்தக் கடி பொழில் சுருங்கை-தோறும்
தாரகாபதியின் கற்றை தவழ்ந்து ஒளி தயங்க ஆங்கே
ஆர்_அருள் தரும மூர்த்தி அடுத்தமை அண்ணல் ஆவி
சீருறத் திகழும் அன்பர் சிந்தையுள் சேறல் போலும்

#102
செழு மலர்ச் சோலை ஓங்கு சினை-தொறும் நிறையப் பூத்த
கொழு முகை அவிழ்ந்து செம் தேன் குளிர் நறும் துளி வார் காட்சி
அழகிய மணவாளன் தன் அகத்து வந்து அடையும் ஆன்மக்
கழி துயர்க்கு இரங்கிச் சிந்தும் கண்ணில் நீர்த் தாரை போலும்

#103
பொழில் உறு பறவை யாவும் புண்ணிய மூர்த்தி வந்து
கழி துயர் அடைவர் என்று கருதின-கொல்லோ கங்குல்
வழி வரும் இயற்கை தானோ வாய்விடாது ஒழிந்த வண் பூம்
தழை எலாம் குழைந்து சாம்பித் தருக்களும் சடைத்த மாதோ

#104
முத்தமிழ் ஆதி பாடை முழுது உணர் கவிஞரேனும்
வித்தகன் அடைந்த ஆன்ம வேதனை இனைய என்று
வித்தரித்து உரைக்க வல்லார் அல்லர் இ மெய்மை தேர்ந்தும்
பித்தரில் பிதற்றுகின்றேன் பேதை பேர்_ஆசை கொண்டே

#105
எங்கள் நாயகன் பூந்தோட்டத்து இறுத்த பின் கருணை பூத்த
பங்கஜ விலோசனத்தால் பாங்குறும் சீடர் எண்மர்-
தங்களை நோக்கி யான் போய்த் தனி ஜெபம் புரிந்து மீள்வல்
இங்கு இரும் என்னச் செவ் வாய் இதழ் திறந்து இயம்பிப் பின்னர்

#106
கிரி மிசை முன்னர்த் தம்மைக் கேழ் கிளர் மகிமையோடு
தரிசனம்செய்த மூன்று தாஸரை உடன் கொண்டு ஏகி
ஒருசிறை உற்றுத் துன்பம் உறுவதற்கு உரியதான
நர சுபாவத்தில் பாடு நயந்து அனுபவிக்கலுற்றார்

#107
வாக்கினுக்கு அதீதமான மகிமையை இழந்தும் கன்னி
பாக்கிய வயிற்றில் கர்ப்பப்பை உளே பழங்கண் உற்றும்
ஆக்கம் அற்று ஏழை ஆகி அலைந்தும் சற்று அவியாது ஓங்கி
மீக் கிளர் தேவ_நீதி வெம் தழல் குளிப்பது ஆனார்

#108
மட்டு_அறு கருணைத் தாதை மகத்துவ புனித நீதிப்
பட்டயம் எழும்பி ஆவி பதைக்க ஊடுருவிப் போக
முட்டிய தேவ கோப முழங்கு அனல் முடுகிப் பொங்கிச்
சுட்டிடத் தூய உள்ளம் துடிதுடித்தது துண்ணென்றே

#109
தடித்திடு கரிய மேக சாலங்கள் ககன கோளத்து
இடித்து எழுந்து உகாந்த காலத்து இரவியைப் புதைத்தால் என்ன
மடித்திடும் அகோர பாவ வாதனை ஒருங்கு கூடிப்
பிடித்திட நீதாதித்தன் பேர்_ஒளி இழந்தது அம்மா

#110
பாபத்தின் கூலி நித்ய பயங்கரம் எனத் தேராது
மா பத்து விதியை மாந்தர் வரைந்திட எழுந்த தேவ
கோபத்தின் மிகுதியாலே கூடிய குரூரமான
சாபத்தின் திரள்கள் எம்மான் தலை மிசை விழுந்த அன்றே

#111
மண்ணுலகு அனைத்தும் தீக்க வானிடைக் குமுறி நின்ற
அண்ணலார் உக்கிர தண்டம் ஆகிய அசனிக் கூட்டம்
தண் அளி சுரக்கும் ஜீவ தாரகமாம் ரக்ஷண்ய
புண்ணியப் பொருப்பின் மீது பொருக்கென உரறி வீழ்ந்த

#112
வெம் துயர் என்னுந் தாபம் மிகு கனல் மூளமூளச்
சுந்தரக் குமரன் ஆவி துடித்து உளம் உடைந்து சோர்ந்து
நைந்தனன் மெழுகு போல உருகியே குடரின் நாப்பண்
சிந்தியது என்னே ஏது பாவியேம் தீமை அன்றோ

#113
அன்று ஒரு சிமயத்து உச்சி அலர் கதிர் ஞாயிறு என்னத்
துன்று ஒளி விரித்த ஜோதிச் சுடர்த் திரு_முகம் குறாவி
நன்று இலா மாந்தர் ஈட்டும் லஜ்ஜையால் நாணமுற்றுப்
பொன்றிய வதனம் போலப் பொலிவு இழந்து இருந்தது இன்றே

#114
அருள் மகோததியில் பூத்த அரவிந்தம் அமுத தாரை
சொரி தர நித்ய_ஜீவ சுருதித் தேன் துளித்த தெய்வ
மரு மலி குமுதப் போது வாய் அறப் புலர்ந்ததாலும்
உரைதர அரிதாய் மீ உற்று ஒடுங்கியது உரைக்கல்பாற்றோ

#115
அன்பு உருவான நம்பிக்கு அருந்தும் ஆகாரம் ஆன்ம
துன்பமே பருகும் பானம் சொரி கணீர் ஆதலாலே
என்பு எலாம் கட்டுவிட்டது எழில் திரு மேனி வாடித்
தன் பலம் ஓடு போலக் காய்ந்து அறச் சலித்தது அம்மா

#116
கெந்தகம் நாறிச் சாவாக் கிருமிகள் கெழுமி நித்ய
வெம் துயர்க்கு உறையுள் ஆகி மிகக் கொதித்து எழும்பும் கும்பிச்
செம் தழல் கொழுந்துவீசி ஜெகதலம் புரக்க வந்த
சுந்தரன் துய்ய மேனி துவண்டதோ அறிகிலேமால்

#117
தாங்க_அரும் பாவ பாரம் சமழ்த்திடும் ஒருபால் நீதி
ஓங்கிய கட்கம் நெஞ்சை உருவி நின்று உடற்றும் ஓர்பால்
வீங்கிய தேவ கோப வெம் கனல் வெதுப்பும் ஓர்பால்
நீங்க_அரும் மரணம் கிட்டி நெடும் திகில் விளைக்கும் ஓர்பால்

#118
பயங்கர மரண பாசம் பிணித்தலால் படருள் மூழ்கி
இயங்குறு புலன்கள் எல்லாம் ஒடுங்கின இந்தியங்கள்
மயங்கின மனாதி அந்தக்கரணங்கள் மருண்டு மாழாந்து
உயங்கின அவயவங்கள் மற்று இனி உரைப்பது என்னே

#119
முழங்கு எரி நடுவண் உய்த்த முருகு உலாம் அலங்கல் போலும்
தழங்கு வெண் திரை-வாய் உற்றுத் தளர்ந்து உழல் திரணம் போலும்
பழங்கணுக்கு உடைந்து தேம்பிப் பரிவுறீஇப் பாருக்கு இன்பம்
வழங்குவான் துணிந்து வந்த மானுவேல் வருந்தினாரால்

#120
கணம்-தொறும் இனைய துன்பம் கதித்திடக் கருணை என்னும்
குணம் குடியிருந்த சிந்தைக் குரிசில் உள் கோட்டம் இன்றி
இணங்கினர் அலமந்து ஏங்கி இடர்க் கடற்கு எல்லை காணாது
உணங்கி வெய்து உயிர்த்தார் மாந்தர் உயிர்க்குயிர் ஆகி நின்றார்

#121
ஒரு சிறு பவத்தால் நித்ய ஊழி_தீக் கடற்குள் மூழ்கிப்
பரிபவம் அடையும் ஜீவன் பார் உலகு ஆதி அந்தம்
புரி பவ வாதை எல்லாம் புனிதன் இப் பொழுதினுக்குள்
ஒரு தனி அடைய என்றால் அதன் திறம் உரைப்பார் யாரே

#122
பார் உண்ட பாவக் கொண்டல் படர்ந்து வேதனையாம் ஆழி
நீர் உண்டு பொழிந்த நீத்தம் நீடிய மரண ஆற்றில்
சீருண்ட பெருமான் எண்_இல் ஜீவரை இடுக்கி நீந்தி
ஈருண்டு தவித்தும் கைவிட்டிலர் தனி இடர்ப்பட்டாரால்

#123
நலன் உறு நித்ய செல்வம் நல்குரவதனில்-நின்றும்
அலகு_இலா நித்யானந்தம் அரிய வேதனையில்-நின்றும்
இலகு உறு நித்ய_ஜீவன் இழி மரணத்தில்-நின்றும்
குலவி வந்து உதித்தது அன்றேல் கும்பி நம் குடியாம் அன்றோ

#124
சொல்_அரு மரணோபாதிச் சுடு கனல் சுவாலை மீக்கொள்
எல்லை_இல் துன்பம் என்னும் எறி திரைக் கடலுள் மூழ்கி
அல்லலுற்று அழுங்கி அந்தோ அருள் குமரேசன் தாதை
தொல்லை அன்பு இதயத்து உள்ளித் தனித்து ஒரு சூழல் புக்கு

#125
கால் இணை முடக்கி அந்தக்கரணத்தை ஒடுக்கி அன்பின்
சீலமே திகழும் கஞ்சத் திரு_முகம் நிலத்தில் சேர்த்திக்
கோலம் ஆர் தடக் கை கூப்பிக் கும்பிட்டு விழி நீர் சோரச்
சாலவும் பணிந்து தீனதயாளர் இன் அருளை நாடி

#126
அப்பனே எல்லாம் உம்மால் ஆகும் இ அவஸ்தை ஆர்ந்த
கைப்புறு பாத்திரத்தைக் கழித்திடக் கருத்து உண்டாயின்
அப்படி ஆக அன்றேல் ஐய என் சித்தம் அன்று
மெய்ப்படும் உமது சித்தம் விழைந்ததே ஆக என்றார்

#127
இ முறையாக மேனி இரத்த வேர் ஒழுகுமாறு
செம் முறை திறம்பாத் தூய சிந்தை உள் உடைந்து தேம்பி
மும்முறை பிதாவைக் கிட்டி ஜெபித்தனர் முனிவு ஒன்று இன்றி
எம் முறைபாட்டுக்கு உள்ளம் இரங்கி ஆதரிக்கும் ஈசன்

#128
அத்தனைக் கருதிக் கூவும் அளவையில் அடுத்து ஓர் தூதன்
சித்த சஞ்சலத்தை ஆற்றித் தேற்றினன் சென்றானாக
இத் தராதலத்து மாந்தர் எவரையும் புரக்க வந்த
வித்தகப் புனித மூர்த்தி எழுந்தனர் விமலன் போற்றி

#129
உலகினுக்கு இரக்ஷை நல்கும் ஒருதனி நடுவர் ஆவிக்கு
அலகு_அறு துன்பம் ஆய கடு விடம் அருத்தி இன்னும்
விலகிலதாகி மேன்மேல் வேதனைப் பகழி சிந்தி
இலகு அருள் உருவம் மாய்க்க எதிர்ந்தது கடவுள் நீதி

#130
பேச_அரிய பெரும் துன்பப் பிரளய வெம் கனல் கொளுத்தப் பேதுற்று அந்தோ
ஆசு அகன்ற புனித மனத்து அலக்கணுறும் திரு_குமரன் அன்பை ஆய்ந்தும்
நேச ஒரு மகவு என்றும் கருதாது தகித்த பரன் நீதி கண்டும்
பாச வினைக்கு ஆளாகி நாசமுறத் துணிவது அறப் பாவம்பாவம்
** கட்டுண்டு ஏகல்

#131
ஆத்தும அவஸ்தை சிறிது ஆறி அருள் நாதன்
மாத் தகைய நம்பனை வழுத்தி வறிது ஏகி
ஆத்தரை உணர்த்தி இவண்-நின்று அகறும் என்னாத்
தீ_தொழிலர் வந்து புரி தீ_வினை தெரித்தார்

#132
அந்த அமையத்து அசடராயவர் விடுப்பப்
பந்தமொடு பல் வகைய வேதிகள் பரித்து
வெம் தறுகணாளர் பலர் வல்லிதின் விரைந்து
வந்தனர் யுதாசொடும் மருங்குற நெருங்கி

#133
நஞ்சம்_அனையான் கடுகி நம்பன் ஒரு பேறாம்
மஞ்சனை அடுத்து இரபி வாழ்க என முத்தி
வஞ்சரை உணர்த்தலும் மகா கருணை வள்ளல்
விஞ்சிய துரோகி முகம் நோக்கி இது விள்ளும்

#134
அடுக்க வரும் மித்திர அகத்து உளது என் ஈண்டு
கடுக்கி வரு வஞ்ச நெறியாளர் கையில் காட்டிக்
கொடுக்க எனை முத்தமிடுகிற்றி-கொல் குறித்து என்று
அடுக்குந எலாம் அறியும் ஆண்டகை மொழிந்தே

#135
வேடுவர் எனா உரறும் வெய்யவரை நோக்கித்
தேடுவது யாரை எனலோடு நெறி தீயர்
நாடுவம் இயேசு நசரேயனை எனா நான்
தேடலிர் வேறு ஆரும் அலன் என்று இறை தெரித்தார்

#136
நான் அவர் எனா இறை நவிற்றி முடியாமுன்
ஆனவர் ஒருங்கு உயிர் அவிந்தனர்-கொலாம் என்று
ஊன் இவர் உடல் பொறை நிலத்து உற உருண்டார்
ஏனவர் உயிர்த்து இது என் என்று திகிலுற்றார்

#137
பூரியர் விழுந்து அழிபுணர்ப்ப நடுநின்ற
காரியம் முடிக்க வரு கன்னலின் அணித்தும்
சீரிய மறைப்பொருள் தெரித்திடு கருத்தும்
ஆரியன் நினைத்தனர் அருள் திருவுளத்தே

#138
அய்யர் இஃது உள்ளலும் அநுக்கிரக சத்தி
ஒய்யென உலாய்த் துயில் ஒழித்து என உணர்த்த
வெய்யவர் எழுந்து அழல் விழிக்கடை சிவக்க
மெய் உயிரை வாதைபுரிவாம் என வெகுண்டார்

#139
ஜீவாதிபன் கருணை மல்கிய திறத்தில்
சாவாது எழுந்தமை உணர்ந்திலர் சழக்கர்
கூவா அகந்தை மொழி சிற்சில குரைத்துத்
தேவாதிபன்-தனை நெருக்கினர் செருக்கி

#140
உருத்து எதிர் பிணிக்க வரும் ஒன்னலரை உங்கள்
கருத்து எனை அடர்ப்பது எனில் இங்கு இவர் கலங்க
வருத்தலிர் விடுத்திடு-மின் என்று மறை வாய்மை
பொருத்தமுறுமாறு நமது ஆண்டகை புகன்றார்

#141
வேத_முதல் இன்னணம் விளம்பும் அமையத்தே
பாதகர் பிடித்து உடல் பிணிக்கும் வகை பாராப்
பேதுரு சினந்து எரி பிறங்கு கதிர் வாளால்
காது அற எறிந்தனன் ஓர் காதகனை வெம்பி

#142
ஆங்கு அதை அறிந்து தமது அன்பன் முகம் நோக்கி
ஈங்கு இது-கொலோ அற இயற்கை எவரேனும்
ஓங்கு சுரிகைத் தொழில் உவப்பின் அதனாலே
நீங்குவர் தம் இன் உயிரும் அன்றி நெறி இன்றால்

#143
ஆண்டகையை வேண்டிடுவனாயின் அருளார்-கொல்
ஈண்டு ஒரு கணத்தில் ஓர் இலக்கமுறு தூதர்
வேண்டுகிலன் யான் அது விழைந்து இயலுவேனேல்
காண்தகைய வேத மொழி மெய்ம்மை கவினும்-கொல்

#144
மாத் தகைய தந்தை தரு வன் துயர் மலிந்த
பாத்திரம் இதில் பருகு பான்மை தகவே என்று
ஏத்த_அரிய புண்ணியம் இழைக்கும் அருள் நாதன்
ஆத்தமுறு தொண்டரை அமைத்து இவை விளம்பும்

#145
மாண்ட நகர் ஊர் மனை மடங்கள் பொதுமன்றம்
நீண்ட மறுகு ஆலயம் இடங்கள்-தொறும் நின்றே
காண்தகைய போதனை கருத்துற இசைத்தேன்
ஆண்டு எனை விடுத்தனிர் இது என்-கொல் உமது அச்சம்

#146
நள்ளிரவிலே குழுமி நாந்தகம் விதிர்த்துக்
கொள்ளி திகழத் துருவி வந்தனிர் குறிப்பு என்
கள்ளுநர் கரந்து உறைதல் கண்டுபிடிக்கின்ற
உள்ளம் உடையீர்-கொல் என உள்ளவருமாலோ

#147
ஞாலம் மிசையே கருவியாக உமை நாடிச்
சால மிகு தீ அலகை தன் எணம் முடிக்கும்
காலம் இது ஆதலின் அடர்ந்தனிர் கடுத்து
மேல் இனி விரும்பிய விதம் புரி-மின் என்னா

#148
வேத முதல் நாதன் நனி வேதனை உழக்கும்
காதறை திறத்து அருள் கனிந்து மடல் ஒட்டி
ஆதரவு அளித்தனர் கிறிஸ்து அவ அடர்க்கும்
பாதகர் எனாது புரி பூத தயை பாராய்

#149
முத்து அருமை பன்றி அறியும்-கொல் முறை தேராப்
பித்தர் அது போல் அறியகிற்கிலர் பிரான் அங்கு
உய்த்த உதவித் திறனை ஒல்லை கொடு போனார்
வித்தக விவேசன வியோமரை விசித்தே

#150
வல்லியம் வெரீஇ இரி மடங்கல் அரியேற்றைக்
கொல்லிய வளைந்து பல குக்கல்கள் குரைத்துச்
செல்லிய எனப் புடை செருக்கி நர தேவைப்
புல்லியர் இகழ்ந்து பல பேசி நெறி போனார்

#151
மெய்ப்படு தவச் சுருதி வித்தக கிறிஸ்து
பொய்ப்படு மனக் கொடிய புல்லியர் பிணிப்பில்
கைப்படுதலும் பரவு தொண்டர்கள் கலங்கி
மைப்படு பொழிற்கிடை நுழைந்தனர் மறைந்தார்

#152
தெள் அமுத வாய்மொழிச் செவிப் புலன் நுகர்ந்தும்
கள்ளம்_இல் பல் அற்புதம் விழித் துணைகள் கண்டும்
உள் உற நன் மாதிரி உறைத்தும் அடியார்-பால்
பிள்ளைமை பிறங்கல் பிறவிக்குண பிராந்தி

#153
திருவுளம் வெதும்பின் ஓர் கணத்தினிடை தீயும்
சருவ உலகங்களும் எனும் தகைமை சான்ற
ஒருவர் உரையாடிலர் மற்று ஒன்றும் விளைவு உன்னித்
திரு_அடி வருந்த இடரோடு நெறி சென்றார்

#154
பிணித்த விதமா நம பெருந்தகையை வெய்யோர்
அணித்துற வளைந்து ஒலிவ ஆரணியம் நீத்து
மணித் தவள மாடம் நிரை மல்கு எருசலைக்குள்
குணித்த மனை நாடி மறுகூடு கொடு போனார்
** காய்பா முன்னிலை

#155
வாசாலகன் தினமும் ஆலயம் மரீஇச் செய்
பூசா கைங்கிரிய போதன் அது போழ்துக்கு
ஆசாடபூதி மறை அந்தணரின் முந்தும்
மா சாதகன் காயிபாசு எனும் ஓர் வன்மி

#156
மூர்க்கரை முகப்பர் பல மூர்க்கர் எனல் போலும்
தீர்க்கர் உரை நாடி அறியார் பலர் திரண்டு
சீர்க் குணம்_இலான் உறையுள் சேர்ந்து திரை ஆழி
தூர்க்க முயல்வாரின் வறிது யோசனை துணிந்தார்

#157
இங்கு இவர் பொலாங்கு புரி எண்ணமிடு எல்வை
நங்கள் அருள் நாதனை நராந்தகர் கொணர்ந்தே
சங்க மறவோர் எதிர் நிறுத்த ஒரு தானாம்
துங்க உலகாதிபரும் நின்றனர் சுசீல

#158
எல்லை_இல் பல் கோடி உலகங்களை இமைப்பில்
கல்லி எறிவார் மறி கழங்கு என நிலாவ
நில் என நிறுத்துவர் இயக்கிடுவர் நீறா
ஒல்லை எரியுண்டு ஒழியும் ஓர் இவர் உருப்பின்

#159
கோடி ரவி போல் ஒளி குலாவு சமுகத்தில்
நீடு புவி மாந்தர் அனைவோரையும் நிறுத்திப்
பீடு பெறு நீதி முறை பேசு குமரேசன்
பாடு உறவி நீசர் முன் நிற்கும் நிலை பார்-மின்

#160
மன்பதைகளுக்கு உருகி வான் பதம் வரைந்து
துன்பு மிடி நிந்தை சுடுசொல் சுட விழுத்தி
வன் புலையர் முன் பதம் வருந்தும் வகை விட்டது
அன்பு இதில் அறக் கொடிது யாது பிறிது அம்மா

#161
அன்பு_இலர் தமக்கு_உரியர் அன்பு_உடையர் ஆக்கை
என்பும் உரியார் பிறருக்கு என்னும் உரை எம்மான்-
தன் புடை அலாது எவரில் சான்றுபடும் ஆயின்
முன்பும் இலை பின்பும் இலை மூதுலகின் மாதோ

#162
பாசம் என உன்னலிர் பிணித்தமை பகைத்த
நீச மனு மக்களை நினைத்து உருகும் அன்பின்
நேசம் எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி
ஈசன்_மகன் நின்றனர் ஓர் ஏழை என ஓர்-மின்

#163
விண் இழி மதியம் என்ன வேத வேதாந்த மூலப்
புண்ணிய மூர்த்தி அந்தப் புல்லிய குழுவின் நாப்பண்
நண்ணிய பரிசை ஓர்ந்து நலம் இலாக் காய்பாசு என்னும்
கண்_இலான் கருதி நோக்கிக் கனன்று இது கழறுகின்றான்

#164
எண் தகு வேத நூலின் முறைமையை இகந்து அநேகர்
தொண்டு உனக்கு ஆகுமாறு துணிந்து சில் உபதேசங்கள்
விண்ட நீ அவற்றை ஈண்டு விள்ளுதி தெரிய என்று
கண்டகன் வினவக் கேட்டுக் கருணை எம் பெருமான் கூறும்

#165
புனித ஆலயத்தும் வீதிப் புறத்தினும் பொதுமன்றத்தும்
மனித ஜீவனுக்கு ஈடேற்றம் வழங்கும் மெய்ச் சுருதி வாய்மை
நனி திகழ் உபதேசத்தை நவின்றனென் எவர்க்கும் நாடி
இனிது கேட்டு உய்ய ஏதும் ரகசியத்து இசைத்தது இன்றால்

#166
மேவர என்-பால் நீவிர் வினவுவது என்னே யான் சொல்
ஜீவ வாக்கதனைக் கேட்டோர் செப்புவர் கேள்-மின் என்னாத்
தா_இல் சீர் அமலன் சாற்றும் அளவையில் தலைவன் கூற்றுக்கு
ஆவது இ விடையோ என்ன அழன்று அங்கு ஓர் அசடன் சீறி

#167
யாது என இயம்புகிற்கேன் ஏழை நா எழும்பி ஈசன்
மா தயா ரூபமான மானுவேல் வடிவம் சேப்ப
நோதக அறைந்தான் அந்தோ நோன்பு_இலேம் இழைத்த பொல்லாப்
பாதகத்து உருவம் வாய்ந்த பனை நெடு தடக் கை ஓச்சி

#168
ஆங்கு அவன் துணிந்து கண்_இன்று அநீதியாய்ப் போதம் இன்றி
ஓங்கி உள் அகங்காரத்தால் அடித்தலும் உலப்பு_இல் பெம்மான்
தீங்கு அணுகாத தூய திருப் படிவத்து நோவு
தாங்கி நின்று அருளி நோக்கிச் சமித்து மற்று இதனைச் சாற்றும்

#169
உள்ளதை உள்ளவாறே உரைத்தனன் அதில் நியாயக்
கள்ள வாசகம் உண்டேல் நீ காட்டிடல் வேண்டும் அன்றி
எள்ளி இங்கு எனை அடித்தல் நடுநிலைக்கு இசையத் தக்க
ஒள்ளிய செயலோ என்றார் உலகு எலாம் உய்ய நின்றார்

#170
நடுப் புரி நம்பன் ஈது நவிற்றலும் நாச வஞ்சக்
கடுப் பயில் மனத்தர் எல்லாம் கவன்று இனிக் குற்றம்சாட்டி
வடுப்படுத்தி இவனைக் கோறும் வகை எது என்று தம்மைக்
கெடுப்பதே கருமம் ஆகப் புறம்பு போய்க் கேடு சூழ்ந்தார்

#171
கொலைக்களப்படுத்த வல்ல குற்றங்கள் இவன்-பால் உண்டு என்று
உலைக்க_அரும் சான்று சொல்வார் எவர் என உசாவும் காலை
புலைக் குணப் பதிதர் சில்லோர் பலபடப் புகன்ற பொய்ச்சான்று
அலைக்கு அலை அழியுமா போல் ஒன்றையொன்று அழித்தது அன்றே

#172
அந்த ஓரையிலே பொல்லாங்கு அறிதும் என்று இருவர் பொங்கி
இந்த ஆலயத்தை யானே இடித்து ஒரு மூன்று நாளில்
விந்தையாய்ச் சமைப்பன் என்ன விளம்பிடக் கேட்டோம் என்றார்
தந்திரத்தவர் கொலைக்குத் தக்க சான்று இது அன்று என்றார்

#173
பற்பல உபதேசத்தைப் பலபடப் பழுது கூறி
அற்புத கிரியை யாவும் அபத்தம் என்று அழிம்பு பேசும்
கற்பிதமாய கட்டுக் கரி எலாம் கரிந்த அம்மா
எல் படு பகலைச் சில்லோர் இரவு என்றால் இயையும்-கொல்லோ

#174
சான்று வேறு இல்லை என்னத் தம்முளே கவன்று சங்கத்து
ஆன்றவர் மறுத்து முந்தை அரங்கு அணைந்து அமர அம்மான்
தோன்றலைக் காய்பாசு என்னும் துர்_ஜனத் தலைவன் கண்கள்
ஊன்றி நின்று உருத்து நோக்கி இவையிவை உரைப்பதானான்

#175
வேதியர் பலர் உனக்கு விரோதமாய் உரைத்த சான்றும்
கோது_அற இருவர் வந்து கூறிய வாய்மைக் கூற்றும்
ஈது இதுவாக நீ சொல் எதிர்மொழி ஏதும் இன்றோ
ஓதுதி உளவேல் என்றான் உரைத்திலர் அமலன் ஒன்றும்

#176
பின்னரும் சினந்து மேலாம் பெருந்தகை ஆய பெம்மான்
தன் ஒரு நாமத்து ஆணை சாற்றுதி உண்மை நீ அப்
பன்_அரும் ஜீவன் உள்ள பராபரன் புதல்வனான
உன்ன_அரும் கிறிஸ்துவோ என்று உசாவினன் கபடமாக

#177
தூய நல் உரையும் தேவ தோற்றமும் சுகிர்த மாண்பும்
நாயினும் கடைப்பட்டேமை நயந்து பாராட்டும் அன்பின்
நேயமும் எதிரில் நின்று நிகழ்த்து சான்று அமையாது என்ன
மீ_உயர் ஆணை கூறி விசாரிக்கும் முறைமை என்னோ

#178
கண்_உளார் கண்டும் காணார் காது_உளார் கேட்டும் கேளார்
எண் இருதயத்தினாலும் உணர்ந்திடார் இவர் மற்று என்ற
புண்ணிய வசனம் யாண்டும் பொய்க்குமோ அருள் ஒன்று இன்றேல்
மண்_உளார் பொறியும் அந்தக்கரணமும் மண்ணே அன்றோ

#179
பொறி புலன் ஒருங்க நோற்றுப் புதுமை செய் புலவரேனும்
வெறுமையில் திகழ்வராயில் வெறுத்து அவமதிக்கும் ஒல்லை
சிறுமை தீர்ந்து உயர்வு காணில் சேவடித் தொழும்பு செய்யும்
எறி திரைப் பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ

#180
இறைவன் மேல் ஆணை மற்று ஈது இயம்புக என்று இசைத்த மாற்றம்
மறை_முதல் கேட்டுத் தெய்வ மைந்தனாம் கிறிஸ்து நானே
தறையில் இத் தகையனேனும் தாதையின் வலப்பாகத்தும்
முறை புரி நடுநாள் கொண்மூ முற்றத்தும் விளங்கக் காண்பீர்

#181
ஒளிப்பு_அற நியாயம் உங்கட்கு உணர்த்தினும் உணரீர் யாவும்
வெளிப்படையாய போதும் விசுவாசித்திடுவீர்_அல்லீர்
அளிப்படா மனத்தீர் என்னா அறத் துறை அமுது மல்கித்
துளிப் படு குமுதச் செவ் வாய்த் துவர் இதழ் விண்டு சொன்னார்

#182
வன் மனக் காய்பாசோடு சூழுற்று மருங்கு தொக்க
கல்_மனத்தவரும் ஐயன் கழறிய செம் சொல் தேரார்
துன்_மதியாகத் தேவ_தூஷணம் சொன்னாய் என்னாப்
புன்_மொழி பலவாறாகப் புகன்றனர் வெகுளி பொங்கி

#183
எம்பிரான் உரைச் சஞ்சீவி இருந்த அப் பதிதர்க்கு எல்லாம்
வெம்பு தீ விடம் போல் ஆகச் செவித்தொளை வெதும்பிற்று என்னில்
நம்பினோர்க்கு எல்லாம் ஜீவ வாசனை நல்கும் நம்பா
வம்பருக்கு என்றும் நீங்கா மரண வாசனையாம் அன்றோ

#184
காயிபாசு என்னும் பொல்லாக் கடின வன் நெஞ்சன் வஞ்ச
மாயம் மூடிய மேலங்கி வல்லையில் கிழித்துத் துக்கம்
மேயவன் போல நின்று வேறு சான்று இனி வேண்டும்-கொல்
நீயிரே இவன் வாய் சொற்ற நிமல தூஷணம் கேட்டீரால்

#185
மற்று இனி உரைப்பது என்னே மதி_வலீர் இதனை ஒத்த
குற்றம் வேறு உளது-கொல்லோ குறித்திடில் கூறிற்று எல்லாம்
எற்று எனக் கருதுகின்றீர் ஏற்ற தண்டனை-தான் யாது
தெற்றெனப் பகர்-மின் என்றான் தீ_வினை திருத்த நின்றான்

#186
நன்று_இலான் உரைத்த மாற்றம் நடு_இலாச் சங்கம் மேய
புன் தொழில் யூதர் கேட்டுப் பொருக்கென இவனை இன்னே
கொன்று உயிர் களைவது அல்லால் குறிப்பிடு தண்டம் வேறு ஒன்று
இன்று என உரக்கக் கூவி இரைந்தனர் இகலி மாதோ

#187
உலப்பு_இலா ஆதி மூலத்து ஒரு பரம்பொருள் என்று உன்னாப்
புலைப்படு மனத்தரேனும் புரை_இலா ஒருவன் பற்றிக்
கொலைப்படுத்துக என்று இட்ட கூக்குரல் குறித்து நோக்கில்
அலப்பு நீர் உடுத்த வையத்து அழிம்பினுக்கு அவதி உண்டோ

#188
எண்ணிய எண்ணம் வாய்த்தது என்பதோர் ஏம்பல் விஞ்சிக்
கண்_இலாத் தலைவன் ஏகக் காவல்செய்திருந்த கள்வர்
புண்ணிய மூர்த்தி-தன்னைப் புறக்கணித்து அகந்தையோடும்
நண்ணி ஆகடியம் செய்ய நாடினர் நிந்தை பேசி

#189
பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி
ஏதம்_இல் கருணைப் பெம்மான் இருதயத்து ஊன்றவூன்ற
வேதனை உழந்து சிந்தை வெந்து புண்பட்டார் அல்லால்
நோதகச் சினந்து ஓர் மாற்றம் நுவன்றிலர் கருமம் நோக்கி

#190
மறுமையும் இம்மை-தானும் நோக்கிலா மடமை பூண்ட
குறுமையோர் அமலன் தூய குணத்தை எள்துணை எண்ணாது
வெறுமையை நினைத்துத் துன்பம் விளைத்தனர் மேன்மேலாகப்
பொறுமை கண்டு எள்ளல் இந்தப் பூதலத்து இயற்கை அன்றோ

#191
கறுத்திடில் உலகம் எல்லாம் கவிழ்ந்து அழிந்து ஒழியுமேனும்
பொறுத்தனர் இருந்தார் தாம் சொல் புத்துரைக்கு ஒரு சான்றாக
ஒறுத்திடும் மதுகை மிக்க உரன்_உடையாளன் உள்ளம்
பொறுத்திடும் பொறையை அன்றோ பொறை என்பர் புலமை மிக்கோர்

#192
திருந்திய செவ்வி வாய்ந்த திரு_முகத்து உமிழ்ந்தார் சில்லோர்
வருந்துற அடித்தார் சில்லோர் மலர்த் திரு_வதனம் சேப்பக்
கரும் தடம் கண்ணைப் பொத்திக் குட்டினர் சிலர் கை ஓங்கிப்
பெருந்தகாய் யாவர் என்னப் பேசுக என்று இகழ்ந்தார் சில்லோர்
** பேதுரு மறுதலித்தல்

#193
விடியும்-மட்டு இறைவன் தூய மேனி நொந்து அலசி உள்ளம்
துடிதுடித்து இவ்வாறாகத் துயர் உழந்து இடையும் காலை
கடி மனை முன்றில் நின்று கன்மலை எனப் பேர் பெற்ற
அடியவன் குளிருக்கு ஆற்றாது அனல் முகத்து அமர்ந்தான் இப்பால்

#194
ஆங்கு அவன்-தன்னைக் காணா அயல்_உளார் யாவன் நீ அத்
தேம் கமழ் சோலை-வாயில் சேசுவோடு இருந்தாய் அன்னோன்
பாங்குறும் சீடருக்குள் ஒருவன் நீ போலும் பார்க்கில்
ஈங்கு நின் உரையே சாக்ஷி இயம்புகின்றது மற்று என்றார்

#195
ஒரு முறை போல முக்கால் உசாவலும் அச்சத்தாலே
திரு முறை அறிந்த சீடன் சிந்தனை கலங்கி அந்தோ
குரு முறை நிறுத்த தூய குமரனை அறியேன் என்னா
வரும் முறை தேரான் முக்கால் மறுத்தனன் மருண்டு மன்னோ

#196
மன்னும் கருணைப் பெரு நிதிய வைப்பை அறியேன் என மறுத்துக்
கொன்னே மறம் கூர் பொய்யாணை கூறிக் கடிய கொடுமொழியால்
அன்னோ தன்னைச் சபித்திடவும் அமைந்தான் என்னில் யாவர் இனித்
துன்னும் இடருக்கு அலசாமே உண்மை மொழியும் துணிவு உள்ளார்

#197
முக்கால் கலங்கி மறுதலித்து முடிய இரண்டாம் முறை சேவல்
தக்கோய் இதுவோ விசுவாசச் சமைவும் அன்பும் தைரியமும்
எக் கால் நீங்கும் இ வசை என்று இழித்து விளிக்கும் இயல்பே போல்
கொக்கோ என்னக் கொக்கரித்துக் கூவிற்று அமலன் கூறிய போல்

#198
ஜீவ நெறியை அற மயக்கி ஜெகத்தை அகத்துப் புடை வளைந்த
பாவ நிசியை இரும் சிறகால் பறக்க அடித்துப் பகைத்து ஓட்டிப்
பூவலயத்துக்கு இரக்ஷணியம் பொலிய வரு புண்ணியப் பகலை
வா என்று உரக்க விளிப்பது போன்று எழுந்த மத வாரணத் துழனி

#199
கோழி கூவிய கூக்குரல் செவி குறுகுதலும்
தாழி மத்து உறு தயிர் என உடைந்து உளம் தளர்வுற்று
ஊழி நாயகன் உரைத்தமை உள் உளே உள்ளிப்
பாழில் நீத்தனன் ஜீவ நன்மையை எனப் பரிந்தான்

#200
அயில் கொள் வேல் என உளத்திடைக் குளித்தது எம் ஐயன்
துயில் இலாது எமைப் புரந்திடும் விழிக்கடை தொண்டன்
பயில் உள_கரி கடிந்து புண்படுத்தது பதைத்து
வெயிலிடைப் படு கிருமியில் துடித்தனன் வெதும்பி

#201
இனைய தன்மையன் ஆகி ஈட்டிய பிழை எண்ணித்
தனை வெறுத்து உரையிடற்கு_அரு மெய் மனத்தாபம்
நினைவில் ஓங்கவும் நிருமலன் அருள் திறம் நினைந்து அ
மனையின் ஓர்சிறை வறிது போய் மனம் கசந்து அழுதான்

#202
தேவ_ஆவியின் அருள் செயல் சிறக்கின்ற செய்ய
ஜீவன் முத்தரே திறம்பிய பிழையினைத் தேறித்
தாவமுற்று உளம் திரும்பி வைதிகம் தலைப்படுவர்
பாவ காரியர் லௌகிக அளற்றிலே பதிவார்

#203
அவலம் மேய தம் அன்பர் காலடி நிலை பிசகித்
தவறிப் பாவ வெம் சேற்றிடை வீழினும் தாங்கிக்
கவலையோடு எடுத்து ஆதரம் புரிவர் தாய் கடுப்பப்
புவன ரக்ஷணை சமைத்த நம் புண்ணிய மூர்த்தி

#204
அழுது நைந்து பேதுரு திரு_அருள் துணை அடைந்து
தொழுதவாறு இது சுருதி மா முதல்வனைத் துணிந்து
முழுதும் கொல்வம் என்று ஒருப்படு மனத்தராய் முடுகிப்
பழுது மல்கிய சூழ்ச்சியின் அமைந்தனர் பதிதர்
** பிலாத்து முன்னிலை

#205
எண்ணமிட்டவர் பொந்தியுப் பிலாத்து எனும் இறை முன்
அண்ணலைத் தனி நிறுவவும் ஆக்கினைத் தீர்ப்புப்
பண்ணவும் என நிண்ணயம் பண்ணினர் பகை கொண்டு
ஒண்ணுமோ வறும் கூவலுக்கு உததியை ஒடுக்க

#206
முடிந்தது அன்று இரா முன்னவன் முகம் மறைத்து ஓங்கிப்
படிந்த பாவமாம் நடுச்சுவர் அடியொடு பாழ்பட்டு
இடிந்துபோக நராத்தும ஜீவருக்கு இரக்ஷை
விடிந்ததாம் என விடிந்தது நலம் தரு வெள்ளி

#207
துரிய மா முதல் ஜீவருக்கு இரக்ஷணை தொகுத்து
விரிய வைத்த புண்ணியம் பொலி தசும்பு என விளங்கிப்
பெரியவெள்ளி என்று ஒரு பெயர் உலகு எலாம் பிறங்கற்கு
உரியதாய அப் பகற்பொழுது ஓங்கியது உவரி

#208
மதலை ஆகிய திரித்துவத்து ஒருத்துவர் மநுவாய்
முது தராதலத்திக்கு இரக்ஷணை சமைத்திடும் முறைமை
புதுமை ஈண்டு அது காண்டும் என்று ஆவலில் போந்து
கதுமெனக் குணக் குன்றின் மீது இவர்ந்தனன் கதிரோன்

#209
துதித்து யாவரும் தொழத் தகு நீத சூரியனை
மதித்திடாத புன்_மாக்கள் மேல் வஞ்சினம் திருகி
விதிர்த்து மெய் எலாம் சிவப்புற நெடும் கை வாள் வீசிக்
கதித்து எழுந்தனனாம் எனக் கதிர் கனன்று எழுந்தான்

#210
அருள்படும் கிறிஸ்து அகச் சமயத்து ஒளி அலர
இருள்படும் பல புறச் சமயங்களும் இடையே
தெருள்படும் சில கொள்கையும் சிதைந்து ஒழிந்திடல் போல்
மருள்படும் நிசியோடு வான் மீன் கணம் மறைந்த

#211
விஞ்சு ஒலித் திரள் விளைந்தன விழிக் கதவு அடைத்துத்
துஞ்சியோர் உணர்ந்து எழுந்தனர் முதல்வனைத் தொழுது
வஞ்சம்_இல் மனை மக்களோடு அளவளாய் மகிழ்ந்து
செஞ்செவே தொழில் தொடங்கினர் அற நெறி திறம்பார்

#212
ஜீவ நாசம் இன்றாக மெய்த் திருவுளம் தெரித்த
பாவநாசரைப் பிணித்ததும் படுகொலைத் தீர்ப்பு
மேவ நாச யோசனை சிலர் விளைத்ததும் வெளுக்கச்
சாவ நாசம் வந்து உற்றது என்று அணி நகர் சலித்த

#213
ஆய காலையில் பாதகம் திரண்டு உரு அமைந்த
பேயர் ஓர்சிலர் நம்பனை இறுகுறப் பிணித்து
நாய் எனாக் குரைத்து அணி நகர் வீதியில் நடத்திப்
போயினார் பதைத்து எவரும் கண் புதைத்து அழுது இரங்க

#214
ஐயனைக் கொடு பிலாத்து முன் அடுத்து இவன் கிறிஸ்தாம்
வைய வேந்து ஒரு மன்னர்க்கும் வரி ஒலாது என்ன
மெய்யுறப் பல கலகங்கள் விளைத்தனன் இவற்கு
வெய்ய வாக்கினைத் தீர்ப்பிடுக என்றனர் வெகுண்டு

#215
செற்றம்_இல் கிறிஸ்து இயேசுவின் திரு_முகக் குறிப்பும்
சொற்ற குற்றம் மெய்ப்படாமையும் யூதர்-தம் துணிவும்
தெற்றெனப் பிலாத்து அறிந்தனன் ஆயினும் திகைத்து ஈங்கு
உற்றிடும் பெரும் கலகம் என்று அஞ்சி உள் உடைந்தே

#216
வேதபாரகீர் யூத மார்க்கத்திலே விதித்த
நீத ஆக்கினை செய்துகொள்-மின் என நிகழ்த்த
ஆ தகாது எமக்கு அரசனே கோறல் ஆக்கினைக்கு
நாதன் என்று நின்-பால் கொணர்ந்தனம் என நவின்றார்

#217
மூர்க்கர் உள்ளமும் வாய்மொழி மூர்க்கமும் உணர்ந்து
பார்க்-கண் நின்ற நம் பரம்பொருள் திரு_முகம் பார்த்துத்
தீர்க்கமாய் எலாம் தெரிந்தனை நீ இனிச் செப்பும்
மார்க்கம் யாது நின் பொருட்டு என உசாவினன் மன்னன்

#218
ஒன்றும் பேசலர் உத்தமர் மற்று அதை உணர்ந்து
மன்றுளே ஒரு தனிச் சிறை வரதனை நோக்கி
வென்றி சேர் அரசன்-கொலாம் நீ என வினவ
என்றும் மாறு_இலா இறைமகன் எதிருரை இயம்பும்

#219
அரசன் யான் எனது அரசியல் உலகு அரசியல் போல்
உரை செயும் தரம் அன்று அது ஆயின் என் உழையர்
விரசி நின்று போராடுவது இலை அதால் வேந்து என்
அரசியல் உலகு அரசியல் அன்று என அறிதி

#220
இத் தராதலத்து இறுத்தனன் என்றென்றும் உலவாச்
சத்தியம் திகழ்த்துதற்கு ஒரு சான்று என அதனால்
சித்த சுத்தம்_உள்ளவன் எவன் யான் சொலும் ஜீவ
சத்தியம்-தனைக் கடைப்பிடித்து உய்குவன் சரதம்

#221
என்று நம்பன் ஈது உரைத்தலும் யூதரை எதிர்ந்து
கொன்று நீக்குதற்கு ஆவதோர் குற்றமும் இவன்-பால்
இன்று தண்டனை எங்ஙனம் இயற்றுவல் என்றான்
நன்று செய்வதற்கு அஞ்சிய நகர் அதிபதியே

#222
ஆக்கினைக்கு அருகன்_அலன் இவன் என அரசன்
மீக் கிளந்த சொல் இரு செவி வெதுப்பிட வெகுண்டு
போக்கு இன்றாக நின்று ஒருவருக்கொருவர் முன் போந்து
கூக்குரல் படுத்தார் அந்தக் கொடு மன யூதர்

#223
பொங்கு பேர்_ஒலி அவித்து அவரில் சிலர் போற்றி
இங்கு இவன் கலிலேய நாடு ஆதி இம்மட்டும்
நம் குல ஜனங்களுக்கு உபதேசத்தை நவிற்றி
வெம் கொடும் கலகத்தினை விளைத்தனன் மெய்ம்மை

#224
தன்னையே வரு கிறிஸ்துவாம் தராபதி என்றும்
பின்னை மன் இறை செலுத்துதல் பெரும் பிழை என்றும்
முன்னையே சொலி அரசற்கு முழுப் பகை ஆனான்
என்னையே தடை மரணதண்டனைக்கு என இசைத்தார்

#225
சொற்ற யாவையும் கேட்டு உடன் பிலாத்து எனும் தோன்றல்
இற்று இவன் கலிலேயனாம் அதற்கு இறை எரோது என்
கொற்றவன் அவன் இ நகரத்து உளன் குறுகி
மற்று இவன் பிழை வகுக்க என்று ஏவினன் வரைந்து
** எரோது முன்னிலை

#226
கறுத்த சிந்தையர் நன்றுநன்று எனக் கடிது ஏகி
இறுத்து எரோது எனும் இறை முனம் ஈசனை நிறுவி
வெறுத்து இராயனைப் பகைத்தவன் வேத நூல் விரோதி
ஒறுத்திடற்கு உரியான் இவன் என்றனர் உரத்து

#227
அண்ணலைக் கண்டு பேசவும் அற்புதச் செயலைக்
கண்ணினால் கண்டு களிக்கவும் கருத்து உடை எரோது என்
எண்ணம் முற்றும் என்று ஏம்பலில் பிணித்து எதிர் நின்ற
புண்ணியன்-தனை உசாவினன் புதுமையை விரும்பி

#228
ஆவலுற்று அருகு அணைந்து நின்று ஆத்திரத்தோடு
காவலன் பல முறை புகன்றிடவும் நம் கருணை
ஜீவ தாரகர் செய்ய வாய்த் துவர் இதழ் திறந்து
நா அசைத்து ஒரு மாற்றமும் நவின்றிலர் நண்ப

#229
மோனம் இத்தனையோ என முறை_இலா மன்னன்
வான நாயகன்-தனை அவமதித்து நிந்தனைசெய்து
ஈனமாய் ஒரு மினுக்கு வத்திரம் உடுத்து எழில் கூர்
மேனியில் தரிப்பித்து நின்று இ திறம் விரிப்பான்

#230
கோறலுக்கு உரியான்_அலன் இவன்-வயின் குற்றம்
தேறுகிற்கிலன் யாதும் ஓர் திறத்தினும் தெரியின்
மாறி இங்கு இவன் கொடு பிலாத்து உறையுளை மருவிக்
கூறு-மின் என விடுத்தனன் எரோது எனும் கோழை
** மரணத்தீர்ப்பு

#231
அவ்வயின் அரசவை அகன்று அம்மானொடு
வெவ் அழல் புகை என உயிர்ப்பு வீங்கிட
எவ்வகையினும் இவற்கு இறுதி இன்று எனத்
தெவ்வர் தத்தமில் உளம் செருக்கி ஏகினார்

#232
வன் திறல் பிலாத்து எனும் மன்னன் மன்று அணி
முன்றிலைக் குறுகி நம் பகவை முன் உறீஇப்
பின்றை நின்று அரசிடம் பெயர்ந்து மீண்டமை
கன்றிய மனத்தினார் கழறினார் அரோ

#233
அதிபன் அங்கு அவர் சொலை அமையக் கேட்டு உடன்
சதி புரி குரவரை ஜனத்தின் மூப்பரை
முதியரை வருக என முறையில் கூட்டிவைத்து
எதிர் எழீஇ இனையன இயம்பல் மேயினான்

#234
உலக ரக்ஷகன் என உரைக்கும் பேர் நனி
இலகிய மற்று இவன் யூத மார்க்கத்தின்
விலகிய போதனை விரித்து இ நாட்டினும்
அலகு_அறு கலகம் உண்டாக்கினான் எனா

#235
கைப்படுத்தி இவ்வயின் கட்டி வந்தனிர்
மொய்ப்படு நும் முனம் முறையில் தேர்ந்தனன்
மெய்ப்படுகிற்கில விரித்த குற்றங்கள்
மைப்படும் இருள் ஒளி மருவத் தேய்தல் போல்

#236
ஆண்டகை எரோது எனும் அரசன் ஆய்ந்து உயிர்
மாண்டுபோம் வகை புரி மரண தண்டனைக்கு
ஈண்டிய பிழை இவனிடத்துக் காண்கிலேன்
மீண்டு போ-மின் என விடுத்தது ஓருதிர்

#237
ஏதம் ஒன்று இலா உயிர்க்கு இறுதி காட்டுதல்
வேத நூல் விதிக்கு எதிர் விரோதம் வேந்தர்க்கு
நீதமும் அன்று உலகருக்கு நேர்ப்படு
போதமும் அன்று எனப் புரிவில் கூறி மேல்

#238
நடு இது எனினும் இங்கு இவனை நம் முனம்
வடு உற அடித்து இவண் வரைந்து போகு என
விடுவது துணிந்தனன் என விளம்பினான்
அடுவதே துணிவு என அசடர் பொங்கினார்

#239
பின்னரும் முறைமுறை பிலாத்து எனும் துரை
நன்னய மொழிகளால் திருத்த நாடினான்
முன் உறு நன்மையைச் சிதைக்கும் மூடர்க்குப்
பன்னும் நன்_மதி பயன் பயக்குமே-கொலாம்

#240
ஆங்கு அமைந்து இரு-மின் என்று அவரை ஏவிப் போய்த்
தாங்கு நீதாசனத்து இருந்து தன்னுளே
வீங்கிய உயிர்ப்பொடு கவன்று வேந்தனும்
ஈங்கு இனிச் செயல் என் என்று எண்ணும் காலையில்

#241
இல்லவள் விடுத்த தூது எதிர்ந்து வைகறை
புல்லிய கனா நிலை புகன்று அப் புண்ணியற்கு
அல்லல் ஏதும் செயல் ஆவது அன்று எனச்
சொல்லினள் அம்மனை என்னச் சொற்றனன்

#242
கேட்டு உளக் கலக்கமோடு எழுந்து கேதம்_இல்
நாட்டம் ஒன்று உடையனாய் நடுப்புரிந்திடு
கோட்டியை அகன்று போய்க் குழீஇய யூதரை
மீட்டு நல் விநயமாய் விளித்து விள்ளுவான்

#243
மருவு பண்டிகை-தொறும் வழக்கமாய் உமக்கு
ஒருவனைச் சிறைவிடுத்து உதவுமாறு போல்
பருவரல் அடையும் இப் பாரமார்த்திக
திருவனை விடுதலை செய்தும் என்றனன்

#244
என்ற சொல் இசை முடிவு எய்திடாமுனம்
கொன்று உயிர் களைக வெம் குருசில் ஏற்றி இ
நின்றவன்-தனைப் பரபாசை நீக்குக
வன் தொடர்ப் படு சிறை மறம் கொள் வேலினாய்

#245
மன்னர்_மன்னனுக்கு இறை வரி ஒலாது எனச்
சொன்னவன் சொல்_அரும் தேவ_தூஷணம்
பன்னியோன் இவனை நீ பாரமார்த்திகன்
என்ன நீ விடுதலை இசைப்பது என்-கொலாம்

#246
மற்று இவன்-தனை விடின் மன்னர்_மன்னனுக்கு
உற்ற நண்பினன் எனும் உரிமைப்பாடு_இலாய்
செற்றமோடு இவன் உயிர் சிதைத்தி செய் பழி
பற்றுக வழிவழி எம்மில் பார்த்திவ

#247
அஞ்சிடேல் சிலுவையில் அறைந்து கொல்க எனச்
செஞ்செவே பல முறை செவிடுபட்டிட
விஞ்சிய கூக்குரல் விளைத்திட்டார் அரோ
நஞ்சினும் கொடிய நெஞ்சு உடைய நாஸ்திகர்

#248
புரவலன் யூதர் செய் புரளி போர்த்தலில்
உரம் இலாது அஞ்சி ஆங்கு ஒருபுறம் செலீஇ
வர மனோகரரை எவ்வயின்-நின்று உற்றனை
பரமனோ தெரி எனப் பரிவில் கேட்டனன்

#249
உம்பர் நாயகன் எதிருரை கொடாமையால்
வெம்பி யான் உனைக் கொல விடுக்க ஆயினும்
இம்பர் உண்டு எனக்கு அதிகாரம் என்று நீ
நம்புதியே-கொலா நவிற்றுக என்றலும்

#250
உன்னத நியமமாய் உமக்கு இராவிடில்
என்ன ஓர் விரோதமும் இயற்றொணாது எனக்கு
அன்னது ஆகலின் உமக்கு எனை அளித்தவர்க்கு
உன்ன_அரும் பாவம் உண்டு என்ன ஓதினார்

#251
இத்தகு திரு_மொழி எம்மை ஆளுடை
வித்தகன் விளம்பலும் வேந்தன் விட்டிடற்கு
எத்தனை முயன்றும் எள்துணை நன்று இன்றியே
பித்தரில் திகைத்து உளம் பேதுற்றான் அரோ

#252
சிலுவையில் அறைஅறை என்னும் தீ_சொலாம்
வலுவயில் செவி இரு மருங்கும் தைத்தலால்
கொலு-வயின் ஆசனம் குறுகிக் கூறினான்
உலவையில் சருகு என உழலும் உள்ளத்தான்

#253
குழுமியீர் நும் உரை குறிக்கொண்டு யாதும் ஓர்
வழு_இலாற்கு ஈந்தனன் மரணதண்டனை
பழி இது என்-பால் அல என்று பாவர் முன்
கழுவினான் கரக நீர் கவிழ்த்துக் கைகளை

#254
ஏவம்_இல் ஒருவருக்கு இறுதி காட்டியே
தா_அரும் பெரும் பழி சமைப்பன் தான் உறு
ஜீவனுக்கு ஆயினும் ஜெகத்துக்கு ஆயினும்
ஆவது கருதிலான் ஆர்-கொலாம் இவன்

#255
புறத்து உறு களையினைப் போற்றிப் புண்ணியத்
திறத்தையே விளைக்கின்ற பயிரைத் தேய்த்து இகல்
மறத்தையே உலகிடை வளர்த்து மன்னிய
அறத்தை வேரறுப்பவன் ஆர்-கொலாம் இவன்

#256
பங்கம்_இல் பரம சற்குரு பவித்திர
அங்கம் நோவக் குருசறைந்து கொல்க என
வெம் கொலை நாவினால் விளம்புவான் விரைந்து
அங்கையைக் கழுவுவான் ஆர்-கொலாம் இவன்

#257
விஞ்சிய உணர்வினை வீட்டி நீதி செய்
நெஞ்சு இயல் உரத்தையும் நீத்துத் தன் மனை
வஞ்சி சொல் கனாத் திறம் மறந்து வஞ்சருக்கு
அஞ்சி நஞ்சு அருந்துவான் ஆர்-கொலாம் இவன்

#258
உலக ரக்ஷணியம் உண்டாக உன்னதர்
இலகு கைக் கருவியாய் இருந்து இயற்றியோன்
அலகு_அறு முன்குறித்தலின் அமைந்திடா
விலகிய பிலாத்து எனும் வேந்தன் காண்டியால்

#259
இத்திறம் முன்குறிப்பு இயைந்திடாத உன்
மத்தரே கருவியாய் வாய்ந்திருந்தனர்
உத்தமன் ஆக்கை உத்தரித்த பாடுகள்
அத்தனைக்கும் என அறிதி மைந்த நீ

#260
நெய் விளக்கிடில் இருள் நீங்குமாறு போல்
மெய் விளக்கிடில் வினை வீயும் அல்லது
பொய் விளிக்கிடு புறச் சமய போதத்தால்
கை விளக்கிடில் வினை கழியுமே-கொலாம்

#261
உக்கிர தீ_வினை உஞற்றி ஒண் பழிச்
சிக்கு அறக் கைகழூஉம் மதியின் தீக்ஷணம்
செக்கினை விழுங்கிப் பின் சீரணித்திடச்
சுக்கு நீர் அருந்தும் அச் சூழ்ச்சி ஒக்குமால்

#262
கள்ளனாகிய பரபாசைக் காவல் விட்டு
எள்_அரும் ஏசு நாயகனை ஈனமாய்
விள்_அரும் ஆக்கினை விதித்தல் கேட்டு உடன்
துள்ளினர் களித்தனர் துட்ட யூதரே

#263
வேந்தன் ஆக்கினை கொடு வெய்ய மள்ளர்-தாம்
போந்து புண்ணியன்-தனைப் புடை வளைந்தனர்
பாந்தளில் சீறினர் பற்றி ஈர்த்தனர்
காந்து புன்_மனத்தரும் கைகலந்தனர்

#264
புக்கனர் மாளிகைப் புறத்து அங்கு ஓர் சிறை
மக்களுள் பதடிகள் ஆய வன்கணார்
தொக்கனர் பலர் பல தூஷணம் சொலிக்
கொக்கரித்து இகழ்ந்தனர் குழுமியோர் எலாம்

#265
முன் உடை களைந்து ஒரு முருக்கு அலர்ந்து எனச்
செம் நிற அங்கி மேல் திகழச் சேர்த்தினர்
கொல் நுனை அழுந்தி வெம் குருதி பீறிடப்
பின்னிய முள்முடி சிரத்துப் பெய்தனர்

#266
கோல் எனக் கையில் ஒரு கோலை நல்கினார்
கால் இணை முடக்கி முன் நின்று காவல
மாலுறும் அரச நீ வாழ்கவாழ்க என்று
ஓலிடூஉப் பரிகசித்து உரறினார் பலர்

#267
கை துறும் கோலினைக் கவர்ந்து கண்டகர்
வெய்துறத் தலை மிசை அடித்து வேதனை
செய்தனர் உமிழ்ந்தனர் திரு_முகத்தினே
வைதனர் பழித்தனர் மறம் கொள் நீசரே

#268
மலர்ந்த செந்தாமரை அனைய வாள் முகம்
புலர்ந்து செம் குருதியால் பூசுண்டு எஞ்சியது
உலர்ந்தது தாலுவும் கருணை ஊற்று இருந்து
அலர்ந்த நேத்திரங்களும் குழிபட்டு ஆழ்ந்தவே

#269
நிந்தனை மொழி திரு_செவி நிறைந்தன
நொந்த புண்ணிடை எரி நுழைந்ததாம் எனப்
பந்தனை மேனியில் படிந்த செம் புண் நீர்
சிந்தின புண்ணியத் திவலை போன்ம் என

#270
குன்றியது உடல் பலம் குருதி கோத்து உயிர்
பொன்றியது என முகம் பொலிவு இழந்ததால்
கன்றி நொந்து உலைந்தது கனக காத்திரம்
ஒன்றிய எழில் நலம் ஒருவிப் போயதால்

#271
ஓத_அரும் வேதனை உழந்தும் ஒன்னலார்
நோதக ஒரு மொழி நுவலுவார்_அலர்
ஏதிலரோ பொறைக்கு இரங்குவாரும்_இல்
பாதகம் பாதகம் பரம பாதகம்

#272
மாரணத் தீர்ப்பிடும் மன்னனோ அலன்
கோரணிப்படுத்தும் அக் கொடியரோ அலர்
ஆரணன் பாடுகள் அனைத்தினுக்கும் முன்
காரணம் நமது தீ_கருமம் காண்டியால்

#273
வா என வந்தது இ உலகம் வந்த போல்
போ என ஒல்லையில் புவன கோசரம்
ஆவன யாவுமே அகலும் நீறி அத்
தேவு இவை சகிப்பது என் சிந்தை தேர்தி நீ

#274
வரிசை தப்பிய மன்னன் அநீதியும் வம்பர்
குரிசிலைக் குருசேற்றி உயிர்ப் பழி கொள்ளும்
பரிசும் ஓடிப் பரந்தது பற்று செம் தீயில்
புரிசை மா நகர் உள்ளம் எரிந்து புகைந்த

#275
புகர்_இலாத நம் புண்ணியர்க்கு உற்றமை மேன்மேல்
நகர மாந்தர் செவி சுடக் கேட்டலும் நைந்தே
நிகர்_இலாக் கொடும் பாதகம் நேர்ந்தது இங்கு என்னாப்
பகருவார் அங்கு அவரவர்க்கு ஒல்வன பன்னி

#276
நாசம் நம் குலத்து உற்றது இன்றோடு என நைவார்
ஈசன் மைந்தனையோ கொலைசெய்வதும் என்பார்
தேசிகன்-வயின் எப் பிழை கண்டு இது செய்தார்
நீசர் என்று நெடிதுயிர்த்து ஏங்கினர் நிற்பார்

#277
மின்னல் இன்றி விழுந்தது இ வெள் இடி என்பார்
கன்னல் ஒன்றில் இத் தொல் நகரம் சுடுகாடாய்
மன்னும் என்பர் சிலர் சிலர் வான் இருள் மல்கித்
துன்னு ஜோதிகளும் தொலையும் எனச் சொல்வார்

#278
தலைகவிழ்ந்து உலகம் தடுமாறலில் தண்ணீர்
நிலையம் மேலிடும் என்பர் சிலர் சிலர் நீண்ட
மலையும் மண்டலமும் துகளாகிடும் வானும்
குலையும் அண்டமும் குப்புறும் என்பர் கொதித்தே

#279
கண் இருண்டு கலங்குவர் ஓர் சிலர் காந்தும்
புண் உளத்தோடு அழுங்குவர் ஓர் சிலர் பொங்கித்
துண்ணென்று உட்கித் துடிப்பவர் ஓர் சிலர் சூழ்ந்தது
எண்ணியெண்ணி இரங்குவர் ஓர் சிலர் ஏங்கி

#280
கரவில் காட்டிக்கொடுத்த அக் கள்வனில் கள்ளக்
குரவரே கொடியார் என்பர் ஓர் சிலர் கூறில்
உரவு நீர் உலகத்து இதை ஒத்த நியாயம்
விரவிற்று உண்டு-கொலோ என்பர் ஓர் சிலர் வெம்பி

#281
என்-கொல் மேதினி கீண்டு வெடித்திலது என்பார்
என்-கொல் வானம் இடிந்து விழுந்திலது என்பார்
என்-கொல் வாரிதி நீர் சுவறாததும் என்பார்
என்-கொலோ முடிவு இத்துணை தாழ்த்ததும் என்பார்

#282
கண் படைத்திலமேல் இது காண்கிலம் என்பார்
மண் படைத்த பிணிக்கு இனி மாற்று இலை என்பார்
புண்படைத்த நெஞ்சோடு உயிர் போகல என்னா
எண்படைத்தவர் இன்னன பன்னிடும் எல்வை
** ஸ்காரியோத்து தற்கொலை

#283
மோசமாய் அருள் மூர்த்தியை முப்பது வெள்ளிக்
காசை நச்சி ஒன்னார் கையில் காட்டிய கள்வன்
மாசு_இலானை வதைத்து உயிர் மாய்க்க எனும் வன் சொல்
நீச நெஞ்சினில் தைத்தது நெட்டு இலை வேல் போல்

#284
இதயத்து உள்ளுற ஊன்றலும் இன்று எனல் ஆகிப்
புதையலுற்ற அக_கரி மெல்லெனப் போந்து
வதைபுரிந்து அருள் வள்ளலை மாய்க்க வகுத்தாய்
எதை விழைந்து உயிர் வாழுதி கேள் என்று இடிக்கும்

#285
பணம் விடம் கொள் பணாமுடி என்பதும் மற்று அக்
குணம் விளக்குவது ஆள்கொலி என்பதும் கொள்ளாய்
மணம் விழைந்து இறும் வண்டு எனல் ஆயினை மாளாப்
பிணம் எனத் திரிந்து ஆர்_அஞர் உற்றனை பேதாய்

#286
களவினால் பொருளைக் கவர்வான் நசை தூண்டும்
அளவில் உன்னை அதட்டினன் ஆவது கொள்ளாய்
உளவறிந்து உனக்கு உற்றுழி உண்மை உரைக்கும்
வளவனாம் எனை அற்பமும் எண்ணலை மாற்றோய்

#287
பொருளை நச்சினை போதம்_இலாய் புரை இல்லா
அருளின் வாழ்வினை ஆக்கினைத் தீர்ப்பினுள் ஆக்கி
மருளுறும் புலை மக்களோடு எரி வாய்ந்த
இருள் உறும் கொடும் பாதலத்து எய்துவை இன்றே

#288
பழிக்குப் பாவத்துக்கு அஞ்சலை பல்லவர் தூற்றும்
மொழிக்கும் நாணலை முன்பின் உற்று ஆய்ந்திலை முற்றும்
அழிக்கும் நீசப் பசாசுக்கு அடித் தொழும்பாய் நேர்
வழிக்கு வாரல்_இன்று ஆயினையால் மதி மாண்டோய்

#289
விதிவிலக்கை இகந்தவன் மெய்ந்நெறி விட்ட
பதிதரில் பதிதன் கொலைபாதகன் நட்பில்
சதிபுரிந்த சண்டாளன்-தனைத் தெரிகிற்பின்
மதியிலீ உனை அன்றி இ மா நிலத்து யார்-கொல்

#290
அறம் திறம்பிய ஆயுள் படைத்தலில் யாக்கை
இறந்து பாழ்படல் ஈனம் அன்றால் இ இகத்தில்
பிறந்திராய் எனில் நன்று எனப் பேசிய மாற்றம்
மறந்துவிட்டனையாம்-கொல் மறம்_திறம்பில்லாய்

#291
நன்றி கொன்றனை நல்_உணர்வு அற்றனை நாசம்
துன்றி நின்றனை தொல் நெறி தூர்த்தனை தூர்த்த
பொன்றினும் வசை போவது இன்றால் புவி மீதே
பின்றி நின்றுநின்று என் இனிச் செய்குவை பேதாய்

#292
மேவலாரை உவந்தனை முப்பது வெள்ளிக்கு
ஆவலாய் அருளாளனை விற்றனை அந்தோ
ஜீவ நல் அமுதத்தை உகுத்தனை தீராத்
தீ_விடத்தை அருந்தினை உய்வு இனித் தீர்ந்தாய்

#293
குற்றம்_அற்ற குருதி நிலத்து உகக் கொண்டு
விற்ற காசு எனும் வெம் தழல் உன் மடி மேவப்
பற்றவைத்தனையே கொடும் பாழ் மதி இன்னும்
உற்ற ஓர் துணை காசு என உன்னுதி போலாம்

#294
என்று அகத்து உறு சாக்ஷி இடித்திடித்து இன்ன
வன் திறல் கொடு உறுத்த மறுத்து ஒரு மாற்றம்
நன்றிகெட்ட யுதாசு நவிற்றிலன் நாடில்
என்றும் உண்மைக்கு எதிருரை இன்று எனலாமால்

#295
கடிந்து புண்படுத்தும் மன_சாக்ஷியைக் காய்ந்து
நொடிந்திடான் எனினும் புகல் முட்டினன் நொந்தான்
மடிந்துபோயிலன் ஆயின் இ வாதையை மாற்ற
முடிந்திடாது என உள்ளம் வலித்தனன் மூண்டான்

#296
வள்ளலார் திரு_கோயிலை வல் விரைந்து உற்றான்
கள்ள வேடக் குரவரைக் கண்டு எதிர் காட்டி
எள்_அரும் குணத்து இயேசுவை நும் கையில் ஈந்தேன்
வெள்ளியில் படும் முப்பது காசு இதை வெஃகி

#297
பேச_அரும் கொடும் பாதகம் பேணிய பித்தேன்
மாசு_இலாத இரத்தம் வடிந்து உக வாங்கிக்
காசு கொள்-மின் எனா அவர் கொள்ளலர் காசை
வீசி ஏகினன் பேய் பிடர் உந்திட வெம்பி

#298
எப் பெரும் கொடும் பாவிகளும் கரையேற
இப் புவிக்-கண் உதித்து அருளும் குமரேசன்
துப்பு உறழ்ந்த செம் சேவடிச் சூழலைத் துன்னான்
வெப்பு உறழ்ந்த நிரையக் கிடங்கிடை வீழ்வான்

#299
பனித்த சிந்தைய பாமரன் சென்று ஒரு பாங்கர்
தனித்த சூழலில் நாண் கொடு தற்கொலை செய்தே
அநித்த தேகத்தை வீழ்த்தினன் ஆர்_உயிர் அந்தோ
இனித் திரும்ப அரிதாகிய துர்_கதி எய்த

#300
நன்மை தீமையை நாடி நவிற்றும் நலம் கூர்
தன்ம_சாக்ஷியை மெய்த் துணை ஆக்கிய தக்கோர்
ஜென்மசாபல்லியம் அடைவார் அதைச் செற்ற
கன்மிகள் எவரும் கடைத்தேறலர் காண்டி

#301
சுடு கனல் சுடர் நச்சு பதங்கமும் தூண்டில்
இடும் இறைச்சி நுகர்ந்திடும் மீனமும் என்னா
நடு இகந்த பொருள் எனும் நஞ்சை நயப்போர்
கெடுவர் ஆர்_உயிரை உறலே பெரும் கேதம்

#302
பழியும் பாவமும் தன்னொடு பற்றவும் பாரில்
ஒழிவு_இலா வசையும் அவகீர்த்தியும் ஓங்கி
வழிவழிக்கு நிலவவும் வைத்து உயிர் மாண்டு
கழிவு_இலா இருள் கங்குலுள் புக்கனன் காரி

#303
காரி வீசி எறிந்த அக் காசு கைப்பற்றி
சோரி தோய்ந்தன என்று ஒரு துண்டு நிலத்தைப்
பூரியர் விலை கொண்டு புதைத்திடும் ஈமச்
சேரி ஆக்கினர் தீர்க்கர் முன் செப்பிய சீர் போல்
** சிலுவைப்பாடு

#304
தன் உயிர் போய் ஆக்கை தலைகீழுற விழுந்து
சென்னி தகர்ந்து குடர் சிதறிச் செத்து ஒழிந்த
துன்ன_அரிய சாமித் துரோகி செயல் இற்று ஆகப்
பன்_அரும் நம்மான் சிலுவைப் பாடுகளை உன்னுவாம்

#305
பொல்லாத யூதர்களும் போர்ச்சேவகர் குழுவும்
வல்லானை எள்ளிப் புறக்கணித்து வாய்மதமாய்ச்
சொல்லாத நிந்தை மொழி சொல்லித் துணிந்து இயற்றும்
பொல்லாங்கை எல்லாம் நம் ஈசன் பொறுத்திருந்தார்

#306
புற்று அரவில் சீறிப் புடை வளைந்து புல்லியர்-தாம்
துற்றி விளைத்த கொடும் துன்பம் தனி உழந்து
முற்றும் கிரகணத்தில் மூழ்கு தினகரன் போல்
செற்றம்_இலாத் தேவ_மைந்தன் தேசு இழந்து தேம்பினார்

#307
செவ் அங்கியைக் களைந்து தேவர் பிரான் முன் தரித்த
அ அங்கியைத் தரித்தே ஆகடியம் பல் பேசித்
தெவ்வர் குழுமிச் சிலுவை-தனைச் சுமத்திக்
கவ்வை நகர் கலுழக் கட்டிக்கொடு போனார்

#308
நோக்கில் அணு ஒவ்வொன்றும் நூறாயிரம் கோடி
மாக் கயத்தின் சும்மை மலிந்த பாவம் திரட்டி
ஆக்கு சிலுவை அமலன் சிரத்து ஏந்திக்
காக்கை கடனாகக் கல்வாரி நோக்கினார்

#309
வள்ளல் குரு ராயன் மன் உயிர்க்காய்த் தன் உயிரை
எள்ளி அவதரித்த எம்மான் சருவேசன்
கொள்ளை புரிந்து கொலைத் தீர்ப்புப் பெற்று வரு
கள்ளர் இருவரொடும் கல்வாரி நோக்கினார்

#310
மாரணத்தின் கூர் ஒடிய வன் பேய் தலை நசுங்க
ஆரணம் சொல் உண்மை அவனி மிசை விளங்கப்
பூரணமா ரக்ஷணிய புண்ணியம் கைகூடுதற்குக்
காரணமாம் செய்கை முற்றக் கல்வாரி நோக்கினார்

#311
ஈசன் சினம் நோக்கி ஈன நரரைப் பிணித்த
பாச வினை நோக்கிப் பரிந்து நடுநின்று வரும்
பேச_அரிய துன்பப் பிரளயத்தை நோக்கி இந்தக்
காசினியை நோக்கினார் கல்வாரி நோக்கினார்

#312
அற்புதமும் வானத்து அசரீரியும் புனிதச்
சொல் பயில்வும் எல்லாச் சுகுணங்களும் இவரே
தற்பரன் என்று ஓலமிடச் சண்டாளர்-தாம் இதனை
அற்பமும் எண்ணாதது அறவும் அநியாயம்

#313
தத்து நீர் வேலித் தராதலத்தோர் செய்த வினை
அத்தனையும் தாங்கி அலமந்தும் ஆங்கு அமைந்து
சத்தமிடாது ஏகும் தகனபலி மறியாம்
உத்தமரும் சாந்தமாய் ஊரூடு செல்கின்றார்

#314
கை அயர்ந்து வாய் புலர்ந்து கண் இருண்டு காது அடைத்து
வெய்ய சிலுவை சுமந்து அலசி மெய் வருந்தித்
துய்ய திரு_அடிகள் சோர்ந்து நடை தள்ளாடி
அய்யன் மறுகு ஊடு வரக் கண்டார் அணி நகரார்

#315
கல் இயல் வன் நெஞ்ச வஞ்சக் கண்_இலாப் பாதகராம்
புல்லியரே அன்றி இந்தப் பொல்லாங்கு போந்தமை கண்டு
எல்லவரும் தத்தம் உயிர்க்கு இறுதி ஏய்ந்தன போல்
அல்லல் உழந்து அலமந்து ஆக்கை நிலை தளர்ந்தார்

#316
மாதருக்குள் ஆசி பெற்ற மங்கலையாம் அன்னை மரி
காதலுனுக்கோ இக் கதி நேர்ந்தது என்று மன
வேதனைப்பட்டு ஆற்றாது மெல்_இயலார் தாம் குழுமி
வீதி இரு மருங்கும் மொய்த்தார் வாய்விட்டு அழுது

#317
காந்தள் மலர் செங்கமல மலரைப் புடைப்பப்
பூம் தண் கருங்குவளைப் போது நீர் முத்து உகுப்பத்
தேம் தளவு தொக்க நறும் சேதாம்பலை அலர்த்தி
மாம் தண்டலைக் குயிலின் மென்_மொழியார் மாழ்கினார்

#318
தீ அடைந்த வல்லி எனத் தேம்பிச் செயல் அழிந்தும்
மாயும் வகை இன்றாய் மறுகுற்று உயிர் பதைப்பப்
போய் அடைந்தது எம்மருங்கும் பொற்பு எருசலேம் நகரத்து
ஆய்_இழையார் வாய்விட்டு அழுத குரல் ஓசை

#319
கண்டார் பதைத்தார் கலுழ்ந்தார் கரைந்து அழுதார்
கொண்டார் துணுக்கம் கொதித்தார் கடு விடத்தை
உண்டார் போல் ஏங்கி உயங்கி நெடிதுயிர்த்துத்
திண்டாடி நின்று இனைய செப்புவார் ஆயினார்

#320
ஆஆ இது என்ன அறவும் அநியாயம் என்பார்
தாவா அறமோ தலைசாய்ந்து இறுவது என்பார்
மூவா முதல்வன் முனியாதது என் என்பார்
ஓவாது உழல் எம் உயிர்க்கு ஒழிவு இன்றோ என்பார்

#321
இ மைந்தன் ஆவிக்கு இறுதி வரக் கண்டு மரி
அம்மை உயிர் வாழா அவனி மிசை என்பார்
செம்மை திறம்பாத் தூய தேவ சினம் திருகி
மும்மை உலகும் முடியும் கணத்து என்பார்

#322
மாண்டார் உயிர் அளிக்கும் மா மருந்தை வேரோடு
கீண்டு எறிவார் இந்தக் கெடு தோஷிகள் என்பார்
கீண்டு எறிவார் இந்தக் கெடு தோஷிகள் எனினும்
மீண்டும் முளைக்க ஒரு வேளை வராதோ என்பார்

#323
புன்_தொழிலர்க்கு அஞ்சி நடுப் போற்றாது ஊர் பொங்கி அழ
மன்று ஓரம்சொல்லி உயிர் வாழ்வதுவோ வாழ்வு என்பார்
மன்று ஓரம்சொன்னோன் மனை பாழாய் வன் குடியும்
பொன்றி எருக்கு அலரும் பொய்யாது இது என்பார்

#324
நள்ளி நர ஜீவ ரக்ஷை நல்க வரும் ஞான குரு
வள்ளலுக்கு வன் கொலையும் மா பாதகம் புரிந்த
கள்ளனுக்குக் காவல் விடுதலையும் கட்டுரைத்து
விள்ளுவதோ நீதி புரி வேந்தருக்குச் சீலம் என்பார்

#325
கொல்லாது விட்டுவிடக் கொற்றவன் பல் கால் முயன்றும்
பொல்லாருக்கு அஞ்சிப் புகன்றான் கொலை என்பார்
பொல்லாருக்கு அஞ்சிப் பொது நீதியைப் புரட்டி
அல்லாத செய்வார்க்கு அறம் கூற்றே ஆம் என்பார்

#326
காட்டிக்கொடுத்தோன் கழுத்தில் ஒரு கயிற்றைப்
பூட்டி மன வாதையினால் பொன்றினனாம் பொல்லாங்கு
சாட்டிக் கொலை புரி சண்டாளர் மன_சாக்ஷியும் தம்
பாட்டில் கிடப்பது என்ன பாவம் அதி பாவம் என்பார்

#327
நிந்தனையாம் செம் நெருப்பு நெஞ்சைக் கொளுத்திடவும்
நொந்து ஒரு சொல் சொல்லாத நோன்மை நுனித்து உணரின்
மைந்தருக்கு இச் சாந்தம் வருமோ மகேசன் எனும்
சிந்தை செறுநருக்குச் சேராதது என் என்பார்

#328
செந்தாமரை போல் திகழும் திரு_வதனம்
அந்தோ வதங்கி அழகு குடி போயது என்பார்
நந்தாக் கருணை நறாத் துளிக்கும் கண் மலர்கள்
சிந்தாகுலம் பொதிந்து தேசு இழந்துவிட்டது என்பார்

#329
உன்னத மெய்ஞ்ஞானம் உவந்து குடிகொண்ட திருச்
சென்னி புடையுண்டு இரத்தம் சிந்துவதோ செவ்விது என்பார்
மன்னு திரு_மேனி முற்றும் வார் அடியால் கன்றி நைந்து
சின்னமுறல் ஆவதுவோ தெய்வமேயோ என்பார்

#330
பெண் நீர்மை குன்றாத பெய் வளையார் இ வண்ணம்
புண்_நீரும் தீயில் புகைந்து ஆர்_உயிர் பொடிப்பக்
கண்ணீரின் துன்பக் கடற்கு எல்லை காணாராய்
எள்_நீரராய்ச் செல்லும் எம்பெருமான் பின் சென்றார்

#331
மைத் தடம் கண் நீர் சொரிய வாய்விட்டு அழுது அரற்றிச்
சித்தம் உடைந்து தொடர்ந்து வரு சேய்_இழையார்
பத்திமையும் சிந்தைப் பருவரலும் கண்டு இரங்கி
உத்தம சற்போத உபசாந்தர் ஈது உரைப்பார்

#332
எருசலேம் புத்திரிகாள் என் பொருட்டுக் கலுழாதே
துரிசு_அற மற்று உம் பொருட்டும் சுதர் பொருட்டும் கலுழ்ந்திடு-மின்
வரிசை பெறு மகப் பெறா மலடிகள் பாக்கியர் என்னா
உரை செறியத் தகும் நாள் இங்கு உளதாம் என்பதை உணர்ந்தே

#333
அன்று புகலிடம் அரிதாய் அவரவரே துயர் விஞ்சிக்
குன்றுகளே மலைக் குலமே எமை மூடிக்கொள்ளுதிரால்
என்று உரைப்பர் பசுமரத்துக்கு இது செய்வார் எனில் அந்தோ
தொன்று உலர்ந்து படு மரத்துக்கு எது செய்யார் துணிவு ஒன்றி

#334
என்று துயருறு மடவார்க்கு இரங்கி இரும் துயரோடு
நன்று மொழிந்து அடர் சுமையால் நலிவு எய்தித் தளர்ந்து ஏகத்
துன்று சிலுவையை ஆங்கு ஓர் வழிப்போக்கன் தொடுத்து ஏந்தி
ஒன்றி வருக எனக் கொலைஞர் உத்தமரைக் கொடு போனார்

#335
பெண்டிர் எலாம் அழுது அரற்றப் பிள்ளைகள் எலாம் கதறக்
கண்டு கேட்டவர் இரங்கிக் கரைந்து உருகிக் கருத்து அழிய
மண்டு துயர் எனும் தீயால் வயிறு எரியக் கடி நகரம்
பண்டு எரி வீழ்ந்து அழி சோதோம் பதி போலப் பதைத்து ஏங்க

#336
பொருவு_அரிய பரலோகப் புத்தேளிர் புதுமை இதின்
மருவுவது எ முடிவோ என்று ஐயுற்று மறுக்கம் உறப்
பருவரல் கொண்டு ஐம்பூத பௌதிக மாத்திரையாய
சருவ சிருட்டியும் திகைத்துத் தமை மறந்து நிலைகுலைய

#337
குழல் நூலில் பிரியாத குருத்துவமார் அருள் சீடர்
அழல் அனைய துயர் நலிய அழுது கரந்து உடன் செல்லப்
பழுது_அறு மெய்ப் பரம்பொருளை மகவாக் கொள் பசும்_தோகை
தழல் இடு பூம் கொடியே போல் சாம்பி உயிர் தளர்ந்து ஏக

#338
எண்_இலா மறவோர் தம் இகல் நெஞ்சு பறையறைய
உள் நிலவு விசுவாசத்து உரவோர் நெஞ்சு உள் அழியப்
புண்ணியருக்கு உறும் கொலையின் புணர்ப்பு உன்னிப் பொருமி அழு
கண்ணீரும் பெருமூச்சும் ககன துருத்தியில் அடைய

#339
இப் பரிசு பெரும் துக்கக் குறி மல்கி எ உயிரும்
செப்ப_அரிய துயர் உழப்பச் செருசலையைப் புறம் போக்கி
ஒப்பு_அரிய முது மூலத்து ஒரு பொருளைக் கொண்டு உய்த்தார்
மைப்படு வன் மனக் கொலைஞர் வதை புரிவான் கொலைக்களத்தில்

#340
ஈண்டு இனி யான் புகல்வது எவன் எம்பெருமான் திரு_மேனி
தீண்டினார் சிலுவையொடு சேர்த்தினார் செம் கையிலும்
காண்தகு சேவடியிலும் வெவ் இருப்பாணி கடாவினார்
நீண்ட சிலுவையை எடுத்து நிறுத்தினார் நிலம் கீண்டு

#341
மற்று இரண்டு திருடரையும் வலப்புறத்தும் இடப்புறத்தும்
செற்றமொடு குருசு ஏற்றிக் கொலை மாக்கள் செயல் ஒழிய
சொற்ற மறைத் திரு_வசனம் துலக்கமுறச் சுருதி முதல்
குற்றவாளிகளோடு நடு நின்றார் குருசு மிசை

#342
தன் அரிய திரு_மேனி சதைப் புண்டு தவிப்பு எய்திப்
பன்_அரிய பல பாடு படும் போதும் பரிந்து எந்தாய்
இன்னது என அறிகில்லார் தாம் செய்வது இவர் பிழையை
மன்னியும் என்று எழில் கனி வாய் மலர்ந்தார் நம் அருள் வள்ளல்

#343
இத்தகைய அரும் பொறையும் மனநலமும் இயைந்தவரே
வித்தகனுக்கு அடித் தொழும்பர் எனத் தகு மெய்க் கிறிஸ்தவர் மற்று
இத்தகைய குணம்_இலரும் கிறிஸ்தவர் என்று இசை பெறுதல்
செத்தவரைத் துஞ்சினவர் என உரைக்கும் சீர்மைத்தால்

#344
கீண்டு இருப்பு முளை உடலைக் கிழித்து உருவி வதைப்புண்டு
மாண்டுபடும் போது இவர்க்கு மன்னியும் என்று உரைத்த மொழி
ஈண்டு இவரே உலகினுக்கு ஓர் இரக்ஷகர் என்று எடுத்துரைக்கும்
வேண்டுமோ இனிச் சான்றும் இதை விடுத்து வேறு ஒன்றே

#345
மன்றாடும் அருள் சீவ வசனத்தை வன் மறவோர்
ஒன்றாகப் பொருள்செய்யார் உடை களைந்து பங்கிட்டார்
குன்றாத நசரேயன் யூதருக்குக் குல_வேந்தன்
என்று ஆகடியமான எழுத்து இட்டார் சிலுவை மிசை

#346
கேடு அணவு தலைவரொடு கெழுமிய பல் யூதர்களும்
மாடு அணவிக் காக்குநரும் வழி வரு புன் மனத்தவரும்
பாடு அணவி வருந்தும் நம பரம சுதனைப் பழித்துத்
தூடணங்கள் பல பேசித் துணிந்து புறக்கணித்து இகழ்ந்தார்

#347
வணங்காத முரண் கழுத்தர் வல் உருக்கில் கடினம் உறீஇக்
குணம் காணாக் கொடு மனத்தர் கூறிய தீ மொழி ஒன்றோ
அணங்கு ஆரும் குருசு மரத்து அறையுண்ட ஒரு திருட்டுப்
பிணம் காணா இகழ்ந்ததுவும் பிதற்றியது பெருமானை

#348
அடும் கொலைஞர் பொருட்டு அமலன் அகம் கனிந்த அருள் திறமும்
கெடும் கொடியர் உணர்வு இன்றிக் கிளந்த பழி மொழிச் செருக்கும்
நடுங்கி உயிர் நலி சோரன் நச்சு மனத்து இயற்கையும் ஓர்ந்து
ஒடுங்கு உயிர் மற்றொரு சோரன் உளம் பொறுக்காது உரைக்கின்றான்

#349
எஞ்சுறா மரணத் தீர்ப்பு இயைந்து உழந்தும் ஏழை நீ
அஞ்சுவாய்_அலையே இ அமையத்தும் அமலனுக்கு
நஞ்சு அனைய நமக்கு ஈது நேர்ந்தது மெய் நடுநிலைமை
விஞ்சி யாம் விளைத்த கொடு வினைப் பயனை அடைகின்றேம்

#350
மற்று இதனை உணராது வன் நெஞ்சோய் மாசு_அணுகா
நல் தவனை இகழுவது நன்மையோ நன்மை அலால்
குற்றம் இவரிடத்து உளதேல் கூறுதி என்று அறக் கடிந்து
தெற்றென உள் குழைந்து உரைத்தான் ஜீவ வழித்-தலை நின்றான்

#351
உள்ள நாள் முழுதும் மறம் உஞற்றி ஆக்கினை உழக்கும்
கள்ளன் இவன் எனினும் மனம் கண்டறிந்த சத்தியத்தைத்
தெள்ளிதுடன் வெளிப்படுத்திச் சிந்தை உடைந்து உளம்திரும்பிக்
கொள்ளையிடத் துணிந்தான் நித்திய_வாழ்வைக் குறிக்கோடி

#352
சாக் குறிகள் அடுக்கா முன் தனு கரணம் தளரா முன்
மீக் கிளரும் நெடுமூச்சு விரவா முன் விழி மயங்கி
நாக் குழறி வீழா முன் நல் உணர்வுற்று அருள் கள்ளன்
நோக்கினான் தலை திருமி நுவல்_அரும் புண்ணியப் பொலிவை

#353
காண்தகைய பெரும் கருணைக் கற்பகத்தை எதிர் கண்டு
மாண் தகைய அன்பினொடு மானதாஞ்சலி வழங்கி
ஆண்டகை நும் அரசியலில் அடியேனை நினைந்து அருள
வேண்டினேன் என இரந்து வேண்டினான் மிக விரும்பி

#354
கள்ளம்_இலா அருள் கள்ளன் கசிந்து கருணையை நம்பி
உள்ளுணர்வோடு இனிது உரைத்த ஒரு மன்றாட்டு உயிர் நல்கும்
வள்ளல் திருவுளத்து அழுந்த மலங்காய் நீ பரதீசில்
உள்ளபடி இன்றே என்னுடன் இருப்பாய் என உரைத்தார்

#355
எ மாதிரமும் படுபாவி என்று எள்ளு கள்ளன்
அ மா உயிர் போம் அளவில் கதி ஆக்கம் நச்சிப்
பெம்மான் அருளுக்கு இலக்கு ஆகி மெய்ப் பேறு பெற்றான்
கைம்மாறு இல் மகா கிருபைத் திறம் காண்டி மைந்த

#356
தன் நேரில் நின்று ஏங்கி அழும் தனித் தாயை அன்பின்
முன்னாக அழுங்கு ஒரு சீடனை முற்று நோக்கி
அன்னாய் இவன் உன் மகன் மற்று உனக்கு அன்னை நண்ப
என்னா அருள் இன் உரை தந்தனர் என்றும்_உள்ளார்

#357
ஆயில் சிறந்த அறம் ஆவது இ ஆழி வைப்பில்
தாயில் சிறந்த தமர் இன்று எனத் தக்க அன்பாம்
சேயில் சிறந்த அருள் நாயகன் சிந்தை ஆர
வாயில் சிறந்த மொழி காட்டும் இ மாண்பை ஓர்தி

#358
அன்பின் தலைநின்று அருள் பெற்ற அத் தொண்டன் ஐயன்
துன்பின்-தலை நின்று கருத்தொடு சொற்ற வாய்மை
என்பு இங்கு உருகும்-மட்டு இதயத்தில் இருத்தி அன்னை
தன் பங்கினளா அவள் சொல் தலை தாங்கி நின்றான்

#359
வாழிப் பெருமானை வதைத்து உயிர் மாய்க்க மல்கும்
பாழித் துயரின் படலம் எனப் பாரை மூடி
ஊழிக் கரு மாலை வளைந்து என ஒல்லை உம்பர்
ஆழிக் கதிரைப் புதைத்து ஓங்கியது அந்தகாரம்

#360
எல்லா உலகத்தவர் பாவமும் ஏற்ற தேவ
நல் ஆடு உயர் வேதிகை மேவலும் நம்பன் நீதிச்
செல் ஆர் அழல் தீத்திட அப் பலி தீந்து எழுந்த
அல் ஆர் புகையாம் என ஓங்கியது அந்தகாரம்

#361
வாதிக்கும் அநீத அஞ்ஞான மகாந்தகாரம்
நீதிக் கதிரோனை மறைத்திடும் நீர்மை கண்டு
சாதிக்க மாட்டாது உலகுக்கு ஒளி தந்து நின்ற
ஜோதிக் கதிர் குன்றிட மை இருள் தொக்கது எங்கும்

#362
கார் ஆழி பொங்கிக் ககனம் புதைபட்டது என்கோ
பார் ஆதி அந்தம் புரி தீமைப் படாம் இது என்கோ
தீரா அனர்த்தத் திரள் கூடிச் செறிந்தது என்கோ
பேராது ஒரு யாமம் வரை துற்று இருள் பெற்றி-தன்னை

#363
மெய்யான தீபம் கிறிஸ்து இயேசு எனும் மெய்ம்மை கண்டாம்
உய்யா உயிருக்குயிராம் உயிர் ஓயும் எல்லை
மை ஆர் கண் இருண்டிட வான் ஒளி யாவும் மட்கி
வெய்யோன் ஒளியும் கரந்து ஆர் இருள் மேய ஆற்றால்

#364
மெய்யுற்ற தெய்வம் பசு பாசம் விளக்கி நாளும்
கையுற்ற நெல்லிக் கனியின் மறை காட்ட இன்னும்
ஐயுற்று அலையும் புலை மார்க்கர் அகத்தின் நஞ்சில்
மையுற்ற கூட்டில் இருள் தொக்கது மண்ணும் விண்ணும்

#365
ஊறு உற்றிடு கார் இருள் மூடி உடற்ற அஞ்சிப்
பீறுற்று உளம் உட்கி அயர்ந்து பிதற்றி யாதும்
தேறுற்றிலவாய்ச் செயலற்ற ஜெகத்து உலாம் பல்
கூறுற்ற ஜீவ வருக்கம் குலைவுற்ற மாதோ

#366
பெரும் தீப் பிழம்பும் பிறங்காது ஒளிர் பெற்றி குன்றிக்
கரும் தீ எனல் ஆயின கண் ஒளி அற்று இமைத்தல்
பொருந்தாது முழுக் குருடு ஆயின பொன்றினால் ஒத்து
இருந்தார் எவரும் எவையும் சஞ்சரித்தில்ல காண்டி

#367
ஈர்த்து அங்கு அலகை இருள் கும்பியில் இட்ட பூவை
ஆர்த்து அன்பு வடம் கொடு இழுக்கும் நம் ஐயன் ஆற்றல்
பார்த்து உம்பரூடு பல தேவ_கணங்கள் பையுள்
போர்த்து அங்கு இடைந்தார் நரகத்து இருள் போர்த்தது என்னா

#368
நளியுண்ட முந்நீர் உலகத்து நலம் பெய் கொண்மூத்
துளி உண்டு உணவு உண்டு பல் போக சுகாயுவும் உண்டு
அளி உண்டு அருள் உண்டு அறம் உண்டு இவை ஆய எல்லாம்
ஒளி உண்டு எனில் உண்டு இலதேல் இலை ஒன்றும் மன்னோ

#369
இற்றாக உச்சி தொடுத்து ஏழரை என்னும் நாழி
முற்றா முயங்கிய வல் இருள் முற்றும் எல்வை
எற்றோ கைவிடுத்தனிர் என்னை என் தேவனே என்று
உற்றார் அருள் தாதையை நோக்கி ஓர் ஓலமிட்டார்

#370
எவ்வாறு நம்மான் திருவுள்ளம் இனைந்ததேயோ
எவ்வாறு தூய திரு_மேனி இனைந்ததேயோ
எவ்வாறு தந்தை இதயம் சகித்திட்டதேயோ
எவ்வாறு என உள்ளுவல் விள்ளுவல் ஏழை யானே

#371
செற்றார் எலியாவை விளித்தனன் ஜீவ ரக்ஷை
பெற்று ஆர்வது காண்டுதும் என்று பிதற்றி நிற்க
வற்றா அருள் வாரிதி தாகம் மரீஇயது என்னச்
சொற்றார் சுருதி மொழி முன் உறச் சொற்றவாறே

#372
எல்லா உலகும் உடையார் பொருள் யாவும் உள்ளார்
தொல் ஆதி மூலப் பரஞ்சோதியர் தோற்றம் நாசம்
இல்லார் ஒரு தாகம் அநாதி-தொட்டு எய்தலாலே
கொல்லாது விடாத ஓர் தாகமும் கொண்டு இரந்தார்

#373
காதுற்று ஒரு வன் கடலாம்பியைக் காடி தோய்த்தே
ஓதுற்ற ஈசோப் எனும் கோல் கொடு உயர்த்தி நீட்டிக்
கோதுற்றிலாத குமரேசனுக்குக் கொடுத்தான்
மா துக்கதுக்கம் ஜலப் பஞ்சமும் வந்து இவற்கே

#374
பல்லாயிர கோடிய ஜீவரைப் பாவ பந்தத்து
அல் ஆர் சிறை மீட்டவர்க்கு ஓர் மிடறு ஆர உண் நீர்
இல்லாது இறும் கால் புளிம் காடி இயைந்தது அந்தோ
எல்லேமுக்காக மடிவார்க்கு உலகு ஈயும் நன்றே

#375
மருவார் அளித்த புளிம் காடியை வாங்கி அன்பின்
உரு வாய்ந்தவர் யாவும் முடிந்த என்று உய்த்து இயம்பி
ஒருவாத எந்தாய் உயிர் நல்கினன் உம் கை என்னாத்
திருவாய்மலர்ந்து தலை சாய்த்தனர் ஜீவன் விட்டார்

#376
ஜீவாதிபதி ஏக திரித்துவத்தில் ஒன்றான தேவ_மைந்தன்
தாவாத கருணையினால் பேர்_அன்பு மயமான தனுக் கொண்டு ஈண்டி
மூவாத முதல் நீதி இரக்க சமரசம் புரிவான் முதுநீர் வையம்
சாவாதபடி தானே பலியாகி ஜீவன் விட்ட தகைமை பாராய்

#377
சந்ததம் கற்பனை மீறிச் சண்டாளர் ஆகி நன்று இதனை எண்ணாமல்
புந்தி_அற்றுக் கொடும் கூளிக்கு அடித் தொழும்பு புரிந்து ஒழுகும் பொல்லாருக்காய்
அந்தரியாமிப் பொருளாய் அகிலாண்ட கோடிகளை ஆட்டுவிக்கும்
விந்தை_உளார் மனு ஆகி உயிர்விடுத்த விந்தையைப் போல் விந்தை உண்டோ

#378
தனக்கு உலவாப் பெரும் பேறு தர வந்து விழிக்கு எதிரே சான்று காட்டி
மனக்கு இனிய உபதேசம் வகுத்த சருவேசன் ஒரு மைந்தன்-தன்னைப்
பனிக்க வதைத்து உயிர் கவர்ந்த பார் உலகைத் தகிக்காமல் பரம தாதை
சினக் கனலை அவித்து எழுந்த ஜீவகாருணிய நிலை தேறற்பாற்றோ

#379
அலகு_இலாப் பரம நீதி ஆயது என் எண்ணம் என்னா
இலகு வாள் உறையில் சேர்த்தி எரிந்து எழு கோபம் மாறி
உலகினுக்கு ஒருவர் ஆகி உத்தரித்ததனை உள்ளிக்
குலவியே தாதை பக்கல் குதுகலித்து இருந்தது அம்மா

#380
பரம காருணியம் பொங்கிப் பலித்தது என் எண்ணம் என்னா
வர மனோகரரை வாழ்த்திவாழ்த்தி நாத் தழுதழுப்ப
உரம்_இலா ஆன்மகோடி உய்ந்தமை உள்ளியுள்ளித்
தரம்_இலாது உவகை ஓங்கத் தாதை-பால் சிறந்தது அன்றே

#381
ஜீவனை இழந்த இச் செகத்துக்கு ஈறு_இலா
ஜீவன் வந்து இயையவும் செறித்த நித்திய
ஜீவ வாயிலுக்கு ஒரு திறப்பு உண்டாக்கவும்
ஜீவனின் அதிபதி ஜீவன் விட்டனர்

#382
கோழை இப்பியை மணி குறித்துக் கூட்டுதற்கு
ஆழி நீர் குளித்து மூச்சு அடக்கும் மாக்கள் போல்
ஏழை நரான்மகோடிகளை ஈட்டுதற்கு
ஊழியான் மரணத்துள் ஒடுங்கினார் அரோ

#383
கண்ணிய அன்பினால் கட்டுண்டு ஓங்கிய
தண் அளிச் சலதியின் முழுகித் தாழ்வுறீஇ
உள் நிகழ் பொறையினால் உயிர்ப்பு ஒடுங்கினார்
புண்ணியம் உலகு எலாம் பொலியத் தோன்றினார்

#384
முடிந்தது சஞ்சலம் முடிந்த பாடுகள்
முடிந்தது வறுமை நோய் முடிந்த சிந்தனை
முடிந்தது தீர்க்கர் சொல் முடிந்த முன்குறி
முடிந்தது கருதிய கருமம் முற்றுமே

#385
முடிந்தது பாவ விமோசனப் பலி
முடிந்தது பழ மறைச் சடங்கு முற்றிலும்
முடிந்தது குவலயத்து இரக்ஷை மொய்ம்புற
முடிந்தது ஜீவியம் முழுதும் என்பவே

#386
இத் தகுவன எலாம் பொருந்த ஈறு_இலா
முத்தனார் முடித்தலின் முடிந்தது என்று ஒரு
வித்தக வாய்மொழி விளம்பித் தாம் உடை
அத்தனுக்கு ஆவியை அளித்த ஒல்லையே

#387
கிழிந்தது ஆலயத் திரை இரண்டு கீற்றவாய்க்
கிழிந்தது ஆசாரியர் கேடு சூழ் உளம்
கிழிந்தது முது மறைக் கிரியைச் சாஸனம்
கிழிந்தது தூடணம் கிளந்த வாய் எலாம்

#388
அதிர்ந்தது கிடுகிடு என்று ஆழி சூழ் புவி
அதிர்ந்தது பாதலத்து அரசன் ஆளுகை
அதிர்ந்தது கிறுகிறுத்து அநீத மன்றவை
அதிர்ந்தது புறமதத்து அஸ்திவாரமே

#389
பிளந்தது வயின்-தொறும் பெரும் மலைக் குலம்
பிளந்தது வஞ்சகப் பிசாசன் நெஞ்சுரம்
பிளந்தது சந்நிதி மறைத்த பித்திகை
பிளந்தது தீ விடம் பிறங்கு பைத் தலை

#390
திறந்தது தூயவர் சேம வைப்பிடம்
திறந்தது கதிக்கு உறு ஜீவ வாயிலும்
திறந்தது கருணையின் திரு விழிக்கடை
திறந்தது செறுத்து உள ஜீவ ஊற்று அரோ

#391
நல் சுதந்தரம் நமக்கு அருள நாயகன்
தன் சுதந்தர உயிர் விடுத்த தன்மையைக்
கல் சுதந்தரம் உறு கடின நெஞ்சுடை
அல் சுதந்தரர் அறிந்து அகம் கலங்கினார்

#392
நிகழ்ந்த சம்பவங்கள் காக்குநர்-தம் நெஞ்சினை
அகழ்ந்திட அஞ்சி மெய்யாக மற்று இவர்
இகழ்ந்திடற்பாலரோ ஈசன் ஓர் சுதன்
புகழ்ந்து போற்றிடத் தகும் புனிதராம் என்றார்

#393
தொக்கு நின்றவர் எலாம் துயரக் காட்சியோடு
அக் கணத்த சம்பவம் ஆய யாவையும்
சிக்கு_அறத் தெரிந்து நெட்டுயிர்த்துத் தேம்பியே
துக்கமுற்று அழுது உளம் துளங்கி ஏகினார்

#394
கிழிபடும் இதயத்துக் கெழீஇய நண்பினர்
வழிபடு கலிலெய மாதர் மற்று_உளார்
விழி புனல் சொரிதர வெதும்பிச் சேய்மையில்
கழி துயரொடு மனம் கவன்று நின்றனர்

#395
ஞானம் ஆகிய ஒரு நாதன் தாங்கிய
மானவ தேகத்தை வரைந்திட்டு ஆவியை
வான நாயகன் கரம் வழங்கக் கண்ணுறீஇத்
தானமும் வானமும் தழங்கும் வேலை வாய்

#396
கொற்றவன் உத்தரம் கொண்டு யூதர்கள்
சொற்றவாறாய் அவண் துதைந்த சேவகர்
குற்றுயிர்ச் சோரரைக் குறுகித் தொல் முறை
தெற்றெனக் கால் முறித்து உயிரைச் சிந்தினார்

#397
அன்பின் ஓர் படிவத்தை ஆவி நீத்தலில்
என்பினை முறித்திலர் எனினும் ஈட்டியால்
வன்புறத் திரு_விலா மருங்கு குத்தினான்
கொல் பயில் ஒரு மறக் கொடுங்கணாளனே

#398
அனந்தரம் உலகினுக்கு அருளி ஆண்டகை
தினம் தரும் ஆன்ம சஞ்சீவியே என
வனம் தரு திரு_உடல் வடுப்பட்டு அ வழிக்
கனம் தரு குருதியும் நீரும் கான்றதால்

#399
பாவ வெம் கோடையில் பாடுண்டு எஞ்சிய
தா_அரும் ஆத்துமப் பயிர் தழைத்திட
பூ வரு புண்ணியப் பொருப்பின் ஓர் புடை
ஜீவ நீரூற்றுக் கண் திறந்தது என்பவே

#400
ஓர்ந்திடாப் பத்தன் ஓர் அடியில் ஒண் சிலை
ஆர்ந்த நல் நீர் சுரந்து அளித்தவாறு போல்
கூர்ந்த ஈட்டியின் வழி குருதி கோத்த நீர்
ஆர்ந்தது இ ஆக்கை-நின்று அவனி உய்யவே

#401
முடிவன யாவையும் முடிய நோக்குறா
நெடிதுயிர்த்து இரங்கி உள் அழிந்து நின்ற ஓர்
அடியன் யோசேப்பு நம் ஆண்டை ஆளுகை
படி மிசை வரவு எதிர்பார்த்திருப்பவன்

#402
மிக்க சம்பத்து_உளான் யூத வேதியர்
தொக்க சங்கத்தின் ஓர் தலைமைச் சூழ்ச்சியான்
புக்கனன் அரசிடம் புனித யாக்கை என்
பக்கலில் தருக எனப் பரிந்து வேண்டினான்

#403
திகில் உடை மன்னவன் தீரத் தேர்ந்து பின்
அகில லோகேஸ்வரன் அருள் யாக்கையை
இகல்_இல் யோசேப்பினுக்கு ஈந்து நீ இனித்
தகும் முறை இயற்றுதி சமாதி போய் என்றான்

#404
உத்தரம் கிடைத்தமை வினவி உள் உளே
பத்திசெய் நிக்கதேம் எனப் பகர்ந்திடும்
உத்தமன் பரிமள உசித வர்க்கங்கள்
வித்தக உடற்கு எனக் கொண்டு மேவினான்

#405
கொலைக்களத்து இருவரும் குறுகி ஒல்லையில்
தொலைக்க_அரும் பாவ நோய் தொலைத்த யாக்கையை
நிலைக் குருசு அகற்றி மேல் நிலவச் சாத்தினார்
விலைக்கு_அரும் பூம் துகில் விரித்து மூடியே

#406
விந்தை சேர் எழில் திரு_மேனி மீது எலாம்
கந்த நல் திரவியம் புனைந்து கண் கணீர்
சிந்தி மெய் அன்பு உடை ஜீவன் முத்தர்-தாம்
தம்தம சென்னியில் தாங்கிச் சென்றனர்

#407
வனக் குறும் பரம்பின் ஓர் மருங்கு மட்டு அவிழ்
நனைக் குறு முகை விரி நந்தனத்து இது
வினைக்கு உரித்தாய யோசேப்பு வேதியன்
தனக்கெனச் சமைத்த அச் சமாதி நண்ணினார்

#408
கல் முறை அகழ்ந்த அக் காமர் வைப்பினில்
தொல் முறை விதிப்படி தூய யாக்கையைப்
பொன் முறை போற்றிடும் புலமைத்தாம் என
நல் முறை வளர்த்தினார் நலம் கொள் மொய்ம்பினார்

#409
ஆர்வம் மிக்கு உடைய மெய் அடியர் மொய்ம்பினால்
வார் விழி புனல் உக வாரிப் பெய்தனர்
தீர்வு_அரும் பரிமள திரவியங்களை
சேர்வுறு கபாடக்கல் செறித்திட்டார் அரோ

#410
உலகு எலாம் புரிந்த தீ_வினையை உத்தரித்து
அலகு_இலாப் புண்ணியம் அமைத்த ஆண்டகை
இலகு பேர்_எழில் திரு_மேனி ஈண்டு ஒரு
சிலை கெழு சமாதியும் செறிந்ததே அந்தோ

#411
தைவிகம் மானிட தனு எடுத்த நம்
தைவிக ரக்ஷகர் தணந்த மானிட
மெய் வசும் தரையிடை விரவி மீண்டு எழுந்து
உய்வது இன்றேல் புவிக்கு உய்வு இன்று ஆகுமால்

#412
நேச யோசேப்பு என நிக்கதேமு எனப்
பேசிய தொண்டரும் பிறரும் நம் பிரான்
பூ சமாதிக்கு உறு புணர்ப்பு எலாம் புரிந்து
ஈசனை மதிக்குள் வைத்து ஏத்திப் போயினார்

#413
அத்தனுக்கு அடித் தொழும்பு அமைந்த அன்பு உடைப்
பத்திமை வடிவெடுத்து அனைய பாவைமார்
சித்த சஞ்சலத்தொடு கலுழ்ந்து தேம்பியே
தத்தமது உறையுள் போய்ச் சடைத்து இருந்தனர்

#414
அஞ்சுறு காட்சி கண்டு அலமந்து ஆவி நைந்து
எஞ்சிய பாதகர் இயல் முறைப்படி
செஞ்செவே உலகு அமைந்து ஒழுகும் சீர்மை கண்டு
உஞ்சம் என்று உளம் வலித்து உரம் கொண்டார் அரோ

#415
பொங்கு அருள் நாதன் பூதல ரக்ஷை புரிவான் வந்து
அங்கம் வருந்தி ஆர்_உயிர் நல்கி அவனிக்குள்
மங்கி அடங்கக் கண்டு சகிக்க மாட்டான் போல்
வெம் கதிர் உட்கிக் குட கடலில் குப்புற வீழ்ந்தான்

#416
பாய் ஒளி மட்கிப் போயது வெள்ளிப் பகலேனும்
மீ ஒளி மல்கி மேல் திசை துற்றி விரி செக்கர்
நேயம் மிகுத்து ஓர் காயம் உகுத்த நிறை சோரி
தூய சினத் தீ மாய அடர்த்துத் தொகல் போலும்

#417
நன்றி மறந்து நட்பிடை நாளும் நயவஞ்சம்
துன்றிய கள்வர் நன்றி_இல் செல்வம் தொலைவு எய்த
ஒன்றி வருத்தும் வன் மிடி போல ஒளிர் செவ் வான்
நின்றிலதாக வந்தது மாலை நிமிர் கங்குல்

#418
பூ அணையாகக் கண்படைகொள்ளும் புனிதற்கு ஓர்
மேவு விதானம் என்ன விரிந்த மேல் வான் மீன்
ஓவு_அற எங்கும் பாய் இருள் நக்கி ஒளி காலும்
தீவம்-அதாக உதித்தது கீழத் திசை திங்கள்

#419
சித்திரமாகச் செல்வன் உறங்கும் செயல் கண்டு
நித்திரை பங்கமுறாது அமைவுற்றிடு நெறி போலும்
எத் திசையும் உள எப் பொருளும் உலகு எல்லாமும்
அத் தின ராவின் நிசத்தம்-அதாய அரும் காட்சி

#420
காலம் இதாக வன் மன யூதர் கதித்து ஓடிச்
சீலம்_இல் மன்னன்-பால் அணைவுற்றுத் திருட்டாகக்
கோலி உயிர்த்தான் என்று அவன் ஆக்கை கொடு போகிச்
சால மருட்டிச் சீடர் பல் கேடு சமைப்பாரால்

#421
ஈண்டு ஒரு மூன்று தினத்து உயிர்பெற்று எழுவேன் என்ன
மாண்டவன் ஓதியது உண்டு சமாதியை மற்று இன்னே
காண்தகு காவல் அமைக்க என ஒப்புரை கைக்கொண்டு
வேண்டியவாறு பல் வீரரை வைத்தனர் வெம் காவல்

#422
இட்டனர் முத்திரை ஏமமுறத் தனி ஈமத்தின்
முட்டி அடைத்த ஓர் கல் கதவத்தினை முற்றாக
அட்ட திகாந்தமும் அம்பரமும் இது ஓர் அங்கைக்குள்
இட்டனம் உய்வு_இலை என்பவர் போல் மதி_இல்லாரே

#423
கோலிய காவலர் ஏதிகளோடு குழீஇச் சேம
வாலிய வைப்பை வளைத்தனர் நின்றிட வாராந்தக்
காலை கடும் பகல் எற்படு காலை கடந்து அந்தி
மாலை கழிந்தது யாமமும் வந்து மரீஇயிற்றால்

#424
கைவரு லௌகிக வேலை ஒழிந்து கருத்து ஒன்றித்
தைவிக நாள் அனுசாரிகளாய் உயர் சற்போதர்
உய்வு அருள் நாதன் உயிர்த்தெழுவேன் என உய்த்திட்ட
மெய் வசனத் திறம் உள்ளி இருந்தனர் விழி துஞ்சார்

#425
மாசு_இல் மடந்தைமார் சிலர் கந்தவருக்கங்கள்
ஆசு_அற ஈட்டி ஆதி தினத்தின் அதிகாலை
ஈசன் உடற்குப் பூஜிதை செய்வாம் என எண்ணி
நேசம் வடிக்கும் கண்ணொடு இருந்தார் நிசி முற்றும்
** உயிர்த்தெழுதல்

#426
இரு நிலம் உய்யக் கொண்ட எம் பிரான் ஆக்கை ஈமம்
மருவியவாறு ஈதாக மறுத்து உயிர்த்தெழுந்த உண்மை
திரு_முறை கிளக்கும் வண்ணம் தெரிப்பல் என்று அமலன் போற்றிப்
பொருவு_அரும் பத்தி என்னும் புனிதை மேல் புகல்வதானாள்

#427
மைந்த கேள் நம் பிரான் இ மா நிலத்து உயிர்த்தெழுந்த
விந்தையைத் தரிசித்து ஏத்தும் விழைவினால் விபுதராவார்
அந்தரத்து ஈண்டிப் பல்லாண்டு அணி இசை அலர்த்துமா போல்
சிந்து நீர்ச் சுனையும் காவும் புள் ஒலி சிறந்த மாதோ

#428
விண்ணுற நிவந்த நானா வியன் சினைப் பொதும்பர் மென் பூம்
சுண்ணமும் மலரும் தீம் தேன் தொகுதியும் வானம் தூய
ஒள் நிறப் பனி நீரோடு கலந்து மென் கால் கொண்டு ஓச்சல்
புண்ணியன் எழுச்சிக் கோலம் புனைந்து எனப் பொலிந்தது அன்றே

#429
மருப் படி கமல வாவி மறி திரை முழவம் ஆர்ப்ப
அருப்பு நாள்_மலர் வாய் கிண்டி அழி பசும் தேறல் மாந்திச்
சுருப்பு இசை சுருதி காட்டப் புள் ஒலி இசையில் துன்னத்
திருப்பள்ளியெழுச்சி கூடும் செவ்வியை ஒத்தது அம்மா

#430
கோது_இலாப் புனித அன்பு குலவு நீர் அகத்து நம்மான்
பாத பங்கஜம் மலர்ந்த பரிசு எனப் பளிங்கில் தோன்றும்
சீத நீர்ப் பொய்கை எங்கும் செழும் கடி கமழும் தூய
மாதர் மென் கமலப் போது வள்ளவாய் மலர்ந்த மாதோ

#431
வையகம் புதைத்த கங்குல் வாருணி அற்றம் நோக்கித்
துய்ய தண் மதியம் என்னும் துயல்வரு சுறவத்தோடு
மை_அற விளங்கும் வான மீன் ஒளி மழுங்கி மாய
வெய்ய வலைஞன் தோன்றான் விடி வலை வீசினானால்

#432
மெய் கண்ட இடத்துப் பொய்மை வெளுத்து என வெளுத்தது இந்து
கைகண்ட களவின் ஆக்கம் கரந்து எனக் கரந்த விண்மீன்
பொய் கண்டு மருண்ட உள்ளம் போல் ஒளி இழந்த தீபம்
மை கண்ட கங்குல் வாட்டும் வைகறை கண்டு கண்டே

#433
இன்னது ஓர் அமையம்-தன்னில் இரு நில உலகுக்கு எல்லாம்
பன்_அரு நலத்தவாய பரகதிப் பயனை ஈட்டித்
துன்னிய ஜட வியோகத் துயிலுணர் சூழ்ச்சியே போல்
உன்னத தேவ_மைந்தன் உயிர்த்தெழுந்து அருளிப் போந்தார்

#434
வார்த்தையாய் நடுவர் ஆகி மன் உயிர்க்கு இரக்ஷை நல்க
மூர்த்தியாய்ச் சமாதி கூடி முறை வழாது உயிர்த்தெழுந்த
தீர்த்தனைத் தரிசித்து ஏத்தி ஜெயஜெய என்று போற்றிக்
கீர்த்தன நறும் பூ மாரி பெய்தனர் கெழுமி விண்ணோர்

#435
தன்மமும் தவமும் ஓங்கித் தழைத்தன அருள் மெய் வேத
கன்மமும் ஒழுக்கும் வல்லே கதித்தன கருணை பூத்த
நன்மையும் மெய்மை-தானும் நடம் நவின்று உலகம் எங்கும்
வன்மமும் பகையும் தேய வளர்ந்தன மருவி மாதோ

#436
அறம் தலையெடுத்தது ஒல்லை ஆரணத் துழனி ஓங்கிச்
சிறந்தது ஜென்ம தோடத் தீ_கருமத்தின் மூழ்கி
இறந்து பாழ்பட்டோர் ஆவிக்கு ஈறு_இலா ஜீவன் வந்து
பிறந்தது சுகிர்த போதம் பிறங்கியது அவனி எங்கும்

#437
ஆய பேர்_அன்பு மல்கும் ஆழியின் உதித்து மாந்தர்
மீ உயர் விண்ணோராக விளங்கு புண்ணிய வேதாந்த
ஆயிரம் கரங்கள் ஓச்சி அலர் பரஞ்சுடரைக் காண்பான்
சே ஒளி பரப்பிக் கீழ்-பால் தினகரன் உதயம் செய்தான்

#438
நிருமல மூர்த்தி ஏவ நிரைய பாதலம் புகுத்தி
வருமம் மிக்கு உரத்த பேயை வன் சிறைப் படுத்தி மீண்டும்
கரும பூமியிலே தம்மான் கழல் நிழல் கருதி வந்த
தரும சக்கரமே என்னத் தயங்கினன் தபனன் மாதோ

#439
ஜெகம் எலாம் கெடுத்த பேயைச் சிதைத்து அழல் சிறைக்குள் ஆக்கிச்
சகலமும் அடிப்படுத்த தன் ஒரு குமரேசற்குப்
பகவனாம் பரம தாதை பரிவுடன் தரித்த வெற்றி
மகிமை ஒண் மௌலி போலும் திகழ்ந்தனன் வயங்கு வெய்யோன்

#440
அலகு_இலா உயிர்கள் எல்லாம் அரும்_பெறல் மகிழ்ச்சி பூத்த
குலவு கோடு ஆதி ஆய கொழும் கடி மலர்கள் பூத்த
விலக_அரும் அவித்தை நீங்கி மெய் ஒளி உளம் திகழ்ந்தது
உலகு சூழ் கங்குல் நீங்கி உதயமும் திகழ்ந்தது எங்கும்

#441
வண்டு உண விரிந்த செந்தாமரை முகம் மலர்ச்சி காட்டித்
தண்டலை தாழ்த்தி மென் பூத் தடம் சினைக் கரத்தால் நல்கி
எண் தகு புள்ளின் ஆய இன் இசை எடுத்துப் போற்றி
மண்டல மடந்தை ஈசன்_மைந்தனை வணக்கம் செய்தாள்

#442
மயல் உறும் பாவ தோட மருங்கு அறக் கெடுத்து மாந்தர்
உய வரும் நலம் கொண்டு ஐயன் உயிர்த்தெழ ஊர்த்த நன்மை
வியன் நிலத்து எங்கும் ஓடிப் பரந்து உடன் விழாக்கொண்டு என்ன
துயிலுணர்ந்து எழுந்து ஜீவத் தொகுதிகள் களித்த மாதோ

#443
கண்ணிய நிசிக்குள் ஆய கழி பெரும் துயிலை வீசி
எண்_இலா உயிர்கள் காலை ஏம்பலோடு எழுந்த காட்சி
மண் இயல் வினையின் மாய்ந்த மன்பதை உயிர்த்தெழுந்த
புண்ணியர் தமக்குள்ளாகப் புத்துயிர் அடைந்தால் போலும்

#444
எந்தவாறு அடையும் நம்மில் ஈறு_இலா ஜீவன் என்னாச்
சிந்தனை மருளேல் நம்மான் புண்ணியம் ஜீவர்க்கு எல்லாம்
சொந்தமாம் விசுவசித்தோர் சுவர்க்க பேர்_இன்பம் துய்ப்பர்
அந்தரியாமி யேசு என்பதை அயரேல் ஐய

#445
வரைவு இன்றிக் கிருபை யார்க்கும் பொது என வழுத்தினாலும்
பரமன் முன்குறித்தோன் உள்ளம் ஒன்றிலே பழுக்கும் பத்தி
தரணி வான் கிரணம் எந்தத் தலத்தினும் தங்குமேனும்
இரவி காந்தத்தின் அன்றோ இரும் கனல் பிறக்கும் அம்மா

#446
ஒரு நரன் வழியே பாவம் உலகத்தை உடற்றாநிற்ப
ஒரு நர தேவன் ஈட்டும் புண்ணியம் உலகுக்கு அந்தப்
பருவரல் துடைத்து நித்ய பரகதிப் பயனை நல்கல்
திரு_அருள் மாட்சிக்கு ஏற்ற திவ்விய முறை என்று ஓர்தி

#447
நம் பிரான் உயிர்த்தெழுந்த நலம் பெறு முகூர்த்தம்-தன்னில்
அம்புவி அதிர அஞ்சிக் காவலர் அயர்ந்து வீழ
உம்பர்-நின்று இழிந்த தேவ_தூதர் ஓர் இருவர் ஒல்லை
இம்பரில் சேம_வைப்பை எதிர்ந்தனர் பகைவர் எஞ்ச

#448
இருள் புலர் காலை கண்ட ஏந்து_இழைமார் ஓர் மூவர்
தெருளுறீஇ எழுந்து எம் ஐயன் சேம_வைப்பு-அதனை அண்மி
மருள்_அறச் சமாதி வாயில் திறவுண்ட மரபை நோக்கி
வெருளுறீஇக் கலங்கி நின்றார் வெய்து உளம் திகைத்து மாதோ

#449
ஆயிடை அருகர் நின்றும் அவிர் ஒளி மின்னின் ஆர்ந்த
தூ உடை பரித்த தேவ_தூதர் ஓர் இருவர் தோன்றி
நீயிர் இச் சேம_வைப்பில் நேடுவது எவன்-கொல் ஜீவ
நாயகன்-தன்னை முன்னம் நவின்ற வாசகத்தை ஓர்-மின்

#450
ஈண்டு உளார்_அல்லர் ஜீவன் இயைந்து எழுந்தருளினார் அக்
காண்தகு நம்பி நும் முன் கலிலெய நாடு சேர்வர்
பூண்ட மெய் அன்பருக்குப் புகலும் இப் புதுமை என்னாச்
சேண் தலத்து எழுந்து போனார் நிகழ்ந்தவை தெரியச் செப்பி

#451
உன்னதேசன் உயிர்த்தெழுந்தார் எனச்
சொன்ன சொல் அமுதம் செவி தோய்தலும்
மன்னும் நித்திய_வாழ்வு கைவந்து எனப்
பொன்_அனார்க்குள் சிறந்தது புத்துயிர்

#452
வள்ளல் சொற்ற வசனமும் வைகறைப்
பள்ளி-நின்று எழு பான்மையும் தம்முளே
உள்ளி உள்ளத்து வட்டு எழும் ஓகையும்
தெள்ளிது அச்சமும் கொண்டு தியங்கினார்

#453
உரை_இறந்த உவகைப் பெரும் கடல்
கரைபுரண்டு கதித்த துக்காக்கினி
விரைவில் மாய்ந்திட மெல்_இயலார் எழுந்து
உரைசெய்வாம் திரு_தொண்டர்க்கு என்று ஓடினார்

#454
தூதர் சொற்ற சுமங்கல வார்த்தை கொண்டு
ஏதம்_இல்லவர் ஏகுழி எம் உயிர்
நாதன் கண் எதிர் தோன்றி நலம் கிளர்
மாதரீர் நன்கு வாழ்க என வாழ்த்தினார்

#455
அருளின் வாழ்வை அறம் கிளர் ஆரணப்
பொருளை அன்பின் புணரியைப் புங்கவர்
தெருளும் சின்மய தேசிக மூர்த்தத்தை
மருள் ஒன்று இன்றி மடந்தையர் நோக்கியே

#456
உழுவல் அன்பொடு உளம் கனிந்து ஒல்லெனக்
கழுதின் வன் தலையைத் தெறு கால் துணை
தொழுது வீழ்ந்தனர் பல் முறை தோத்திரித்து
எழுது பாவை_அன்னார் இனிது ஏத்தினார்

#457
நன்று யாவும் நலிவுறு சீடருக்கு
இன்று இயம்பி எனைக் கலிலேய நாட்டு
ஒன்ற விள்ளு-மின் உள்ளம் கலங்கல்-மின்
என்று உரைத்துக் கரந்தனர் எம்பிரான்

#458
ஓகை மா நறவு உண்டு களித்த அத்
தோகைமார் பனொரு திரு_தொண்டர்-பால்
ஏகி ஈசன் எழுச்சியும் யாவையும்
சோகம் நீங்க வகுத்தனர் சொல்லினார்

#459
அணங்கு_அனார் உரை கேட்டு மெய் ஆரணக்
குணங்கள் பூத்த குருத்துவர் ஆர்_உயிர்
உணங்கி மீண்டு இங்கு உயிர்த்தெழல் ஒல்வதோ
இணங்குறாது என எய்தினர் ஐயமே

#460
முற்று அறிந்த முழுமுதல் முன் உறச்
சொற்ற வாய்மையும் உள்ளிலர் தொக்கு உடன்
இற்று இது உண்மை இன்னே தனி ஈமத்தின்
உற்று அறிந்திடுவாம் என ஓடினார்

#461
ஒன்றும் அன்பன் உலம் பெரு பேதுரு
என்ற சீடர் இருவரும் ஈமத்தில்
சென்று அகத்து உறத் தேடினர் காண்கிலர்
மன்றல் யாக்கையைச் சிந்தை வருந்தியே

#462
திருமி ஏகினர் சீடர் மகதலேன்
ஒரு மடந்தை நம் உன்னத ஜீவனைக்
கரும பூமியில் கண்டு அருள் பெற்று உடன்
தருமசீலரைச் சார்ந்தனள் சாற்றினாள்

#463
தாயை நாடிய கன்று எனத் தற்பரன்
சேயை நாடித் தவிக்கின்ற சீடனாம்
தூயன் மூழ்கு துயர்_கடல் நீத்து உய
நாயகன் திரு_சேவையை நல்கினார்

#464
எம்மவூருக்கு அன்று ஏகிய சீடரின்
மம்மர் நீங்க மதி விளக்கு ஏற்றியும்
அம்ம அங்கு அவரோடு உணவு ஆற்றியும்
செம்மல் சிந்தை தெருட்டினர் செவ்விதின்

#465
ஈண்டு காட்சி எதிர்ந்தவர் எய்தி யாம்
மீண்டு எழுந்து அருள் வித்தகன்-தன்னை நேர்
காண்டல் செய்து உடன் உண்டு களித்தனம்
மாண்ட போதனரீர் என்று வாழ்த்தினார்

#466
தக்க சான்று இது என்னினும் தம்முளே
புக்க ஐயம் பொதிந்து புறம் செலாது
ஒக்க ஆங்கு ஒரு உறையுளின் உள்ளுறத்
தொக்கு இருந்தனர் பன்னொரு தூயரும்

#467
ஆன போழ்தத்து அடியவர் நாப்பணே
தூ நலம் திகழ் மேனியில் தோன்றி நம்
தீன ரக்ஷக தெய்வதம் மெய்ச் சமாதானம்
மல்கித் தழைக்க என்றார் அரோ

#468
அண்டர் நாயகன் தோன்றி அலர் இதழ்
விண்ட வாய்மொழி கேட்டும் விழிக்கு எதிர்
கண்டும் இன்னும் கலங்கினது அன்றி மெய்த்
தொண்டர் உள்ளம் துறந்திலது ஐயமே

#469
ஐயமும் திகிலும் கலந்து அம் புவி
உய்ய வந்து இங்கு உயிர்த்தெழுந்து உன்னத
தெய்விகம் திகழ் மேனியைத் தேர்கிலார்
வெய்ய ஆவி இது என்று வெருண்டனர்

#470
சிந்தை தேரும் திருத் தகு தெய்விக
மைந்தன் ஓர்ந்து மனம் கலங்காதிர் நீர்
எந்த ஆவியும் யான் உறு மானவ
விந்தை யாக்கை படைத்தில மெய்ம்மையால்

#471
பாரு-மின் பரிசித்து என் பதாதியை
ஓரும் முன் உரை யான் அன்றி உண்மை வேறு
ஆரும் இல்லர் மற்று ஐயுறலீர் எனாத்
தேருமாறு தெருட்டினர் சிந்தனை

#472
மேலும் மேலும் பலமுறை வித்தகக்
கோலம் காட்டிக் குரவர்க்குக் கோது_அறு
சீலம் மல்கத் தெரித்தனர் செம்பொருள்
ஞாலம் மீது ஒரு மண்டலம் நாடியே

#473
ஆதி மெய் அடியார் திறத்து அன்றியும்
பாதி_ஆயிரவர்க்கு ஒருபக்கலில்
பூதலத்தில் உயிர்த்தெழு புண்ணிய
நாதன் சேவை அளித்தனர் நன்கு உற

#474
இத் திறம் கிறிஸ்து இயேசுவின் ஈறு_இலா
மெய்த் தவத் திரு_மேனி விளங்கலில்
சித்த சஞ்சலம் நீங்கித் திகழ்ந்தனர்
சுத்த மெய் விசுவாசத்தில் தோம்_இலார்

#475
அஞ்சி நெஞ்சம் அழுங்கி அயர்ந்து வீழ்ந்து
உஞ்ச காவலர் ஓடி உலப்பு_இலான்
எஞ்சுறாத எழுச்சியும் யாவையும்
வஞ்சகக் குரவர்க்கு வகுத்தனர்

#476
பங்கமுற்ற பதிதர் பலர் குழீஇச்
சங்கம் உற்று நம் தாபதரே கரந்து
அங்கம் வௌவி அகன்றனர் என்ன அ
வெங்கணார்க்கு வெறுக்கையை வீசினார்

#477
களியர் பொய்ப்படு கட்டுரையோ புவி
தெளியும் தெய்விக மெய்ம்மை சிதைத்திடும்
அளிய புன்_மதி ஆதி அருக்கனார்
ஒளி புதைந்திடுமோ விரல் ஒன்றிலே

#478
மன்னன் அஞ்சி வறிது உளம் மாழ்கினன்
ஒன்னலார் நெஞ்சு உரம் கிழிபட்டனர்
பன்னலாம் தரம் அன்று வெம் பாழ் மதி
துன்னியோர் எவரும் துணுக்குற்றனர்

#479
பத்தர் யாரும் பவித்திர சிந்தையின்
உத்தம விசுவாசத்து உரத்தலின்
மத்தர் வாய் அடைபட்டு மறம் கிளர்
சித்தம் மாழ்கி அடங்கிய செவ்வி-வாய்

#480
உம்பர் நாயகன் உயிர்த்தெழுந்து அருளிய உண்மை
இம்பர் மெய்ப்படுத்து ஈரிருபது தினத்து இறுதி
கொம்பு இறால் இழிந்து ஒழுகு ஒலிவாசலம் குறுகி
நம்பு தொண்டர்க்கு வேதியர்க்கு இவையிவை நவிலும்

#481
நண்புளீர் உலகு எங்கணும் நர சமூஹங்கட்கு
எண் பெறும் சுவிசேஷத்தை இயம்பு-மின் இதயக்
கண்_படைத்தவன் கதி நலம் பெறுகுவன் காணும்
பண்பு_இலாதவன் ஆக்கினைத் தீர்ப்பின் உட்படுவான்

#482
கண்டு கேட்ட மெய்ச் சான்று நீர் கருதில் என் தந்தை
விண்டவாறு இனி அருள் பலம் விண் தலத்து இழிந்து
மண்டலத்து உமை மருவும்-மட்டு எருசலேம் மருவித்
தொண்டரீர் மலங்காது அவண் தரித்திரும் துன்னி

#483
ஒன்றி நும்முடன் இருப்பன் யான் உலகம் உள்ளளவும்
என்று வாய்மையின் இலகு செவ் வாய் மலர்ந்து இயம்பி
நின்று எழில் திரு_கரங்களை வானுற நிமிர்த்தி
நன்று மங்கல விடை அருள் ஆசியும் நவின்றார்

#484
ஆசி மங்கள சாதனம் அருளிய அமையம்
மாசு_இலா அருள் முகிலை ஓர் மழை முகில் வளைப்பத்
தேசு மல்கிய திரு_உருக் காண்கிலார் சீடர்
மூசு பைம் புயல் விசும்புற முடுகுதல் கண்டார்

#485
மிக்க பேர்_அதிசயத்தொடு மேலுற நோக்கித்
தொக்கு நின்ற வேதியர் மருங்கு ஓர் இரு தூதர்
புக்கு இ ஆண்டகை ஏகிய புதுமையே போல
மைக் கரும் புயல் மீது உற மீண்டு இனி வருவார்

#486
என்-கொல் வானுற நோக்கி நீர் நிற்பது இங்கு என்னா
மின் குலாவிய உடையினர் வெள்ளிடை கரப்பப்
புன்கணோடு அடியவர் எலாம் பொருப்பை விட்டு அகன்று
நன்கு ஒருப்படு மனத்தராய் நகரியில் மேவி

#487
நம் பிரான் திரு_வாக்கினில் நலம் திகழ் ஆவி
இம்பர் உற்றிடு-காறும் ஆலயம் தரித்திருந்து
பைம் புயல் திரள் நோக்கு வான் பயிர் எனக் குரவர்
உம்பர் நோக்கிய சிந்தையர் ஒருங்கு தொக்கு இருந்தார்

#488
மேக வாகனாரூடராய் விண்புலத்து உருவி
மாகம் மீதுமீது உயர் பதம் யாவையும் வரைந்து
சோகம் நீங்கிய சுர கணம் தொழுது வாழ்த்து எடுப்ப
ஏக நாயகன் சந்நிதி அடைந்தனர் எம்மான்

#489
ஒரு மகன் பர திரித்துவத்து ஒருத்துவர் உரிமைத்
திரு_மகன் தமது ஆணையின் ஒழுகிய செல்வன்
கரும பூமியில் பிரிந்து போய்க் கடும் துயர் அடைந்து
வரும் மகன் எனில் தாதையின் உவகை யார் வகுப்பார்

#490
புனிதமாய் உயர் போதமாய் விளங்கிய புத்தேள்
கனிதல் நீர்மையில் காதலற்கு உவந்து கையளித்த
தனிதம் ஆர் அருள் பொழி கிருபாசனம்-தன்னில்
இனிது வீற்றிருந்து அருளினர் கிறிஸ்துவாம் ஈசன்

#491
சந்ததம் நர ஜீவருக்கு இரக்ஷணை சமையச்
சுந்தரத் திரு_மேனியில் துலங்கும் ஐங்காயம்
தந்தையார் திரு_விழிப்படுத்தி இன் அருள் தழைப்ப
விந்தையாக மன்றாடலே நம் பிரான் வேலை

#492
மூன்று ஒன்று ஆகிய முழுமுதல் முந்து நிண்ணயம் போல்
தோன்றல் வேண்டலில் தாதையார் தூய நல் ஆவி
ஆன்ற ஜீவகோடிகள் உய மெய்யறிவு அளிப்பான்
ஏன்று வந்து அருள் உருக் கொடு மகிதலத்து இறுத்தார்

#493
கோது_இலாத் தவம் புரிந்து தேவாலயம் குழீஇய
ஆதி தேசிகரிடத்து அனல் வடிவமாய் அமர்ந்து
பூதலத்தில் நம் கிறிஸ்துவின் புண்ணியம் பொலியக்
காதலாய் வரம் அளித்தனர் கதி வழி காட்டி

#494
அன்று-தொட்டு அருள் குருபரம்பரை நியமத்தால்
இன்று-காறும் நின்று அவித்தையை இகல்_அற நூறி
ஒன்றி ஆலம் வித்து ஈண்டல் போல் உலகு எலாம் பரம்பிக்
குன்றுறாது மெய் திருச்சபை குலவுகின்றது காண்

#495
அனந்தர் நீக்கி மெய் அறிவினைக் கொளுத்தி ஆண்டகை-பால்
மனம் திருப்பி ரக்ஷணை விசுவாசத்தை வளர்த்துத்
தினம்தினம் புதிதாக்கி ஆன்மாக்களைத் தெருட்டல்
அனந்தம் மங்கள ஆவியின் அருள் செயல் அறிதி
**இரக்ஷணிய சரிதப் படலம் முற்றிற்று

@3 விசிராந்திப் படலம்

#1
இத் திற நராத்தும இரக்ஷணை முடித்த
வித்தக சரித்திரம் விரித்து இனிது உரைக்க
உத்தம கிறிஸ்தவன் உணர்ச்சியொடு கேட்டே
பத்தி முகம் நோக்கி விநயத்தொடு இவை பன்னும்

#2
ஆசு_அறு மனத்தி எனது அன்னை அருளாளன்
பேச_அரிய பாடுகள் பிறங்கு சரிதத்தை
மாசு_இல் விசுவாசம் நனி மல்கி உரமாக
நேசமொடு உணர்த்தினை என் நெஞ்சிடை அழுந்த

#3
பூவலயம் உய்ய வரு புண்ணியமும் நித்ய
ஜீவ நிலையும் இனிது சித்தி பெறும் ஆறும்
ஓவு_அற விளக்கினை இது ஓர்ந்து அளியன் ஆற்ற
ஆவது-கொல் நிற்கு ஒரு கைம்மாறு பிறிது அம்மா

#4
பண்டை மறை பல் முறை படித்துமுளனேனும்
ஒண்_தொடி நின் வாய்மொழிகள் உட்பொருள் உணர்த்தும்
எண் தகு விளக்கம் இதயத்து ஒளிரவைத்தாய்
அண்டர் உலகு எய்து வரையும் அவிவது_இன்றால்

#5
நன்மை அளியேம் உற நலம் திகழும் நம்பன்
கொல் மலிதரும் குருசிலே குருதி சிந்தித்
தன் மனம் உவந்து தலைசாய்த்த திரு_கோலம்
என் மன விழிக்கு எதிரில் என்றும் உளது எம்மோய்

#6
நொந்து வதையுண்ட திரு_மேனியும் நொறுங்கிச்
சிந்து உதிரமும் புனித ஜீவ உணவு ஆகும்
சந்ததம் நுகர்ந்து வரு சாதகம் விளைக்கும்
விந்தையுறு சிற்சுகம் இதே என் விசுவாசம்

#7
இற்றை இரவு உம்மிடம் இறுத்து அரிய போதம்
உற்றதும் மகேசன் அருள் உற்று உதவு பேறாம்
நல் தவ நலத்தி என நன்றி அறி தக்க
பெற்றியன் வணக்கமொடு பேசினன் வழுத்தி

#8
ஏனையரும் நன்றி தெரி இன் உரை இயம்ப
ஆனனம் மலர்ந்து அனைவரும் அமுதம் அன்ன
போனகம் அமைந்து வர உண்டு புதுமைத்த
தூ நறிய சிற்சுவைய பான நறை துய்த்தார்

#9
மருந்து அனைய தைவிக மகா கருணை மல்கும்
விருந்து இனிது அருந்திய பின் மெய்யுணர்வின் உள்ளம்
திருந்து அடியர் நன்றியொடு செம்மலை இறைஞ்சிப்
பொருந்து துதி தோத்திரம் முறைப்படி புகன்றார்

#10
மற்று இவை நிகழ்ந்த பின் மாண்பினர் மகிழ்ச்சி
யுற்று ஒருவருக்கொருவர் அன்பின் விடை உய்ப்ப
நல் தவனும் அங்கு அவர் நயந்து இனிது அளித்த
வில் தவழும் மாளிகையின் மேனிலை புகுந்தான்

#11
ஜீவ வசனத் திரு_விளக்கு ஒளி திகழ்ந்து
மேவு அக இருட்டு அற விளக்க விசுவாசத்து
ஆவலொடும் மாண்ட அருள் ஆசனம் அடுத்துப்
பா அலர் அடைக்கல இயல் தமிழ் படிப்பான்

#12
கையடை எனப் புனை கவின் கொள் பதிகத்தை
மெய்யுணர்வோடு உள் உருகி விண்டு மறைவாணன்
மை_அற விளக்கு விசுவாச அணை மேவிச்
செய்ய கண் முகிழ்த்து அமைதியோடு துயில் செய்தான்

#13
கண் துயில் இலாது உலகு காவல் புரிகின்ற
அண்டர் பெருமான் சரண் அடைக்கலம் அமைந்து
தண் தரள வெண்_நகையர் தத்தமது அரங்கில்
கண் துயில்வதிந்தனர் அக் கங்குல் கழி-காறும்

#14
எண்_இல் பல கோடிய பிராணிகளும் எல்லாம்
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம்
அண்ணல் அருள் ஆணையின் அரும் கடி அமைந்த
விண் நிலவு தூதர் கணம் எங்கணும் விராய

#15
பின் உறுவது ஓர்கிலர் பெரும் தன மிடுக்கர்
முன் உற இயற்றுவர் பல் தீங்கு முறை பேணார்
துன் இருளும் அப் பரிசு தொல் கவின் அழித்த
மன் உலகை என்று எதிருமாறு உணர்கிலாதே

#16
அல் புணரி சுண்டி அகிலம் திகழும் வண்ணம்
பின் புணரும் வைகறை பிறங்கியது வஞ்சர்
சற்பனையின் வெவ் இடர் சதிக்க வருமேனும்
தற்பரன் அருட்கு எதிர் தரித்து இயல்வதேயோ

#17
சூழ் இகல் இருள் பகை துமித்து அற எறிந்து
பாழி உலகத்தினை விளக்கும் ஓர் பதங்க
ஆழி அரசற்கு உரிய கட்டியம் அடுத்துக்
கோழி முதலாயின விளித்தன குலாவி

#18
சஞ்சலம் முடித் தலை தரிக்க வசம் இன்றி
எஞ்சிய இரும் சுடர் எழுந்தது குணக்கில்
நஞ்சு இருளிலே தனி நடந்த மறைவாணன்
அம் சரிதம் யாது என அடுத்து அறிகுவான் போல்

#19
வலிந்து ஒளி கிளம்பி உதயம் திகழ வல்லே
மெலிந்து இருள் இரிந்தன துயின்றன விழித்த
மலிந்தன வயின்-தொறும் வழங்கு பல வேலை
பொலிந்தன தராதலம் ஓர் புத்துலகமே போல்

#20
பத்தி மதி யூகி விசுவாசி பரமார்த்தி
வித்தகி சிநேகி தயை வேதவதி ஆதி
உத்தமிகள் உன்னத மகீபதியை உள்ளிச்
சித்தமொடு நித்திரை தெளிந்தனர் எழுந்தார்

#21
காலை எழும் முன் இரவு கண் துயில் பொருந்திச்
சால அருள் தந்து சமரக்ஷணை சமைத்த
சீலம் மிகு ஜீவபதி சேவடி பழிச்சிக்
கோல மறையோன் உணர்வு கூடினன் எழுந்தான்
** விசிராந்திப் படலம் முற்றிற்று

@4 காட்சிப் படலம்

#1
காத்து அருள் புரிந்த கருணைக் கடவுள் வேந்தன்
ஏத்த_அரிய சேவடி இறைஞ்சி இதயத்துப்
பூத்த உணர்வோடு உரிய பொற்புறு தவத்து
மாத் தகையரோடு அளவளாவினன் மகிழ்ந்தே

#2
தம் மகவு கண்டு உருகு தாயர் என அன்பின்
அ மனையரும் கசி அகத்து வகை பொங்கிச்
செம் மொழி பகர்ந்து மறையோய் சிறிது போழ்து
மம்மர் அகல் இ மனை வதிந்து அகறி என்றார்

#3
மா தவ வழிப்படு கைவல்ய வயிராக்ய
வேதினும் நன்று என விருப்புடன் விளம்ப
மேதகைய சிற்சுகம் விசித்து என விளங்கும்
போதமுறு புத்தக அரங்கு உழை புகுந்தார்

#4
வரம் குலவு புத்தகம் மலிந்து மதி தோயும்
அரங்கு லௌகீக அசடு அற்று எழில் அமைந்த
உரம் குலவி நின்றதை உணர்ந்து மறைவாணன்
பரம் குலவு ஞானம் உறை பள்ளி அறை என்றான்

#5
அரும் தவ மடந்தையர் அறப்புறம் அமைத்த
பெருந்தகை குணாதிசயம் ஆதிய பிறங்கித்
திருந்து முறை சிற்சில திறந்து இனிய செம் சொல்
விருந்தினன் உளம் கொள விரித்திடுவதானார்

#6
அலகு_இல் புவனங்களை அமைத்து இயல் அறத்தை
நிலையுற நிறுத்தி அருள் நீதி புரி சீயோன்
மலை அரசன் ஓர் குமரன் வந்து அவதரித்த
குல வரிசை ஈது என விளக்கினள் ஓர் கோதை

#7
ஆக்கு_அரிய சத்திரம் இது ஆக்கிய அநாதி
கோ_குமரன் ஈண்டு புரி கோது_இல் கிரி ஆதி
மீக் கருணை மீட்டவர் பெயர்த் திறம் விளங்க
வாக்கியம் எடுத்து இனிது உரைத்தனள் ஓர் மங்கை

#8
மீட்சியுறு மன்பதைகள் வீட்டு உலகம் மேவி
ஆட்சியுறு மாளிகை அனந்தம் அழிவு_இல்லா
நீட்சியுறு சிற்சுகம் நிறைக்க நிறைவு எய்தி
மாட்சியுறும் என்பதை வகுத்தனள் ஓர் மாது

#9
சத்துரு புறக்கொடைதரச் சமரில் வென்று
பத்தர் சிலர் ராஜ்ய பரிபாலனம் நடத்தி
முத்திநகரத்து இறை மொழிந்த திரு_வாக்குத்
தத்த வரம் உற்றபடி சாற்றினள் ஓர் தையல்

#10
அண்டர் உலகத்து அரசன் ஆணையின் அமைந்த
தொண்டர் சிலர் அங்கி எரி சூளையுள் உலாவிச்
சண்ட அரிமாவொடு தரித்ததை எடுத்து
விண்டனள் மனம் கரைய மெல்_இயல் ஒருத்தி

#11
நண்ணலர் அடர்ந்து உயிர் நடுங்கி உடல் நைய
எண்_அரிய வாதைகள் இயற்றி அடு போழ்தும்
அண்ணல் அடியார் பலர் அறத் திறம் இழுக்கா
வண்ணம் இதுஇது என்று உரை வகுத்தனள் ஓர் வல்லி

#12
வானமொடு பூமி நிலை மாறுகினும் மாறா
மேல் நிகழ்வது என்று உரைசெய் சம்பவ விதங்கள்
தானம் மிசை முற்றிமுறை சான்றுபடும் என்னா
ஞானம் மிகு தீர்க்க மொழி காட்டினள் ஓர் நாரி

#13
கொன் புலையர் பைப்பய வளர்த்து எரி கொளுத்த
என்பு கருகித் தனு எரிந்துபடு போழ்தும்
மன் புதல்வன் அன்பை உள் மதித்து இருவர் மாய்ந்த
அன்பின் வலி நன்குற விளக்கினள் ஓர் அம்மை

#14
தற்பர குமாரன் அதி சற்குண விகாசம்
அற்புத விதங்கள் பரமாச்சரிய ஞானம்
பற்பல சுகிர்த்திய பலங்கள் இவை எல்லாம்
பொற்புற விளக்கினர் பல் பூவையர்கள் மாதோ

#15
இத் திறமது அங்கி அரி அம்பு மொழி கேட்டும்
உத்தம மொழித் திறமும் உணந்து மறைவாணன்
வித்தக மறைப்பொருள் விளக்கும் இதிகாச
சத்தியம் அறிந்து மகிழ்வோடு தரிகொண்டான்

#16
போயது ஒரு நாள் மறு பகல் பொழுது போந்து
மேயது என மா தவிகள் வேதியனோடு ஏகித்
தூய திரு_மந்திர சுயம்பிரபை தோய்ந்த
ஆயுத வருக்கம் நிறை சாலையை அணைந்தார்

#17
கண் கவரும் கவின் ஆர்ந்த கனக மணி மண்டபத்துப்
பண் கவரும் மொழி மாதர் பலர் குழுமிப் பணிந்து ஏவ
விண் கவர மிளிர் பத்தி வேதியன்-தன் முகம் நோக்கி
எண் கவரும் படைக்கலங்கள் இயல் முறைமை எடுத்துரைப்பாள்

#18
பேர் ஆழி கரை புரண்டும் பிறழாமல் பவஞ்சத்தை
ஓர் ஆழி என உருட்டி உதித்து ஒடுங்கித் தினம் செய்வான்
ஏர் ஆழிக் கதிர் நிறுவி இயற்கை முறை புரிதரும் அச்
சீர் ஆழிப் படை ஈண்டு திகழ்கின்ற திறம் நோக்காய்

#19
சலம் காட்டி அழிக்காது தயைகாட்டி அரசர் பிரான்
புலம் காட்டிப் புறச்சமயப் புரை காட்டி இரக்ஷணிய
நலம் காட்டிக் குணம் காட்டி நயம் காட்டிப் பகைப்புலத்தை
வலம் காட்டி இழுக்கின்ற மணிப் பாசம் இவை காணாய்

#20
பார் உதித்த இளவரசன் பகைப்புலத்துக் கொடும் கூளி
கார் உதித்தது என எதிர்ந்து கைகலப்பக் கொழும் குருதி
வேர் உதிக்கப் பொருது அழித்து விறல் புனைந்த மேல் நாள் இக்
கூர் உதித்த படைக்கலங்கள் குறிக்கொண்டபடி காணாய்

#21
ஒருகால் நம் பெருமான் இங்கு உபவாசம் புரி காலை
அருகாக எதிரூன்றி அடர் அலகை பெரும் காற்றில்
சருகாகப் பறந்து ஓடிச் சமர் தொலையத் தனி வழங்கும்
இரு கூர்ப் பட்டயங்கள் இவை எம் துணைவ எதிர் நோக்காய்

#22
உத்தமர் கை எடுத்து உந்தி ஒரு புயங்கப் பல் தலையும்
பித்து அளைந்த கொடும் காமப் பேய்த் தலையும் பிரபஞ்சச்
சத்துருவின் பெரும் தலையும் தகர்ந்து சிதறிடப் புடைத்த
பத்திவயிராக்யம் எனும் பரும் தண்டம் இவை பாராய்

#23
வலிந்து இழுக்கஇழுக்க வளை மானத கோதண்டமொடும்
நலிந்து அனற்கு மிடையாத நார்க் கயிற்று நாணியொடும்
மலிந்து உதவும் நல் இதய மந்திராத்திரப் புட்டில்
பொலிந்து இலங்கு வன வேத புங்கவ இங்கு இவை காணாய்

#24
குத்திரம் மித்தியம் ஆதி கொடும் படைகள் பல வீசி
நித்திய சத்துருவாய நீசப் பேய் மகார் குழுமி
எத் திசையும் மலைந்தாலும் இகல் அழிக்கும் விறல் அளிக்கும்
சத்தியமாம் அரைக்கச்சை தயங்குவன தனி நோக்காய்

#25
ஏவாளை வசப்படுத்தி இகம் கெடுக்கும் கெடு தோஷி
ஓவாது படை சிதறி ஓச்சி எறிந்து உடற்றுகினும்
சாவாமல் செய் தருமம் தலை காக்கும் எனக் காக்கும்
தாவாத இரக்ஷை எனும் தலைச்சீரா இவை காணாய்

#26
கரை இகந்த பெரும் துன்பக் கடும் கூர் முள் கணையானும்
குரை பழி பொய் நிந்தை எனும் கொடும் சிலீமுகத்தானும்
வரையினையும் தரையாக்கும் வறுமைச் சாயகத்தானும்
புரைபடா நீதி எனும் பொன் கவசம் பல பாராய்

#27
குருசு உயர்த்த பெருமானைக் குறிக்கொண்டு மனந்திரும்பி
விரசு-மினோ சுவிசேஷ விபுலத்து என்று ஓலிடும் ஓர்
அரசர் பிரான் ஊழியத்துக்கு அனவரதாயத்தம் என
உரை செறியும் பாதரக்ஷை உலப்பு_இல மற்று இவை நோக்காய்

#28
பெரிய பூதரங்களையும் பெயர்த்து எறியும் பித்து அளைந்து
திரிபுவன கோசரத்தைத் திரணமாய் அவமதிக்கும்
துரிய பூமியைத் துருவிச் சுலவி வரும் அன்பினொடு
கிரியை செயும் விசுவாசக் கேடகங்கள் இவை நோக்காய்

#29
நீசன் அரசியல் தொலைத்து நிமலாவி கிறிஸ்து எனும்
ஈசன் அரசியல் நிறுவ எதிரூன்றும் ரணகளத்துப்
பாசறையில் படைவீரர் படைக்கல மந்திரம் செபித்துப்
பூசை புரி உபகரணம் பொலிந்து இலங்குவன பாராய்

#30
விண் உடுவில் குணிப்பு_அரிய படைவீரர் மிகுத்திடினும்
எண்_இறந்த படைக்கலங்கள் ஏற்றமுறும் இழுக்காவால்
கண்ணிய கூர் மழுங்காமல் கருது குறி விலகாமல்
புண்ணியம் போல் பொருது விறல் புனைவன மற்று இவை நோக்காய்

#31
வித்தக மெய்ச் சுவிசேஷ விசுவாசி இவை எல்லாம்
பத்தருக்குப் பொதுவாய படைக்கலங்கள் பர ஜீவன்
முத்தருக்கு விறல் வாகை முடி புனைந்து முனைமுகத்தில்
சத்துருவைப் புறம்கண்ட தனிப் படைகள் இவை பாராய்

#32
பங்கமுற எகிப்தில் ஒரு பது வாதை விடுத்ததுவும்
செங்கடலில் பார்வோனைச் சேனையொடு கவிழ்த்ததுவும்
கங்கை பெருக்கெடுத்து ஓடக் கருமலையைப் புடைத்ததுவும்
நம் குரவன் விதிக் கிழவன் நடுக் கைக் கோல் இது காணாய்

#33
மண்டலம் எல்லாம் திகைக்க வலம் சூழ்ந்துசூழ்ந்து உலவிப்
பண்டு எரிகோ மதில் இடிந்து பாழாகும்படி பருவக்
கொண்டல் இடி முழக்கம் எனக் கோத்த பேர்_ஒலி கிளப்பி
எண் திசையும் புகழ் படைத்த எக்காளம் இது நோக்காய்

#34
வசையாக அறுநூறு மறவோரைச் சம்கார் முன்
இசையாகப் பொருது அழித்த தாற்றுக்கோல் இது காணாய்
பிசகாது கறுவோடு பெண் ஒருத்தி பிடித்து உந்திச்
சிசராவை உயிர் கவர்ந்த ஜெய முளை மற்று இது காணாய்

#35
தொகை கண்டு சொல அரிய பெரும் சேனைத் தொகுதி எலாம்
புகை கண்டு மறைவது போல் பொருகளத்துத் தொலைவு எய்தும்
வகை கண்டு கீதேயோன் வன் கையின் வயப் படையாப்
பகை கண்டது இலை என்னப் பிடி பந்தம் பல காணாய்

#36
நமர் ஆய இஸரேற்கு நடுவனாய்ப் பகை இருட்குத்
திமிராரியாய் உலவி ஒரு தனியே திறல் காட்டி
அமராரைச் செயம் கொண்ட அந் நாளில் சிம்ஸோற்குச்
சமராடுங் கைக் கருவித் தாடையெலும்பு இது பாராய்

#37
இதம் கொண்ட அருள் தாவீது எனும் சிறுவன் எதிரூன்றி
விதம் கொண்ட பெரும் சேனைப் பெலிஸ்தியர் வெந்நிட்டு ஓட
மதம் கொண்ட பெரும் காய வல் அரக்கன் மடிந்து விழக்
கதம் கொண்டு வீசி எறி கவண்கற்கள் இவை காணாய்

#38
மங்கலத்து இன் இசை மலிந்த வான் உலகத்து இளவரசன்
அங்க ரத்தம் கொடு மீட்ட அடிமைகளைச் சூறையிட
உங்கரித்துப் பாவ நரன் உக்கிரத்தோடு எழும் நாளில்
சங்கரிக்க இனி எடுக்கும் தழல் நிறப் பட்டயம் காணாய்

#39
செய் விரவிப் பயிர் வளர்க்கும் தெள் நீர் போல் படைவீரர்
கை விரவி அறம் வளர்த்துத் தற்காக்கும் கருணையொடு
மெய் விரவி மிளிர் ஞான வியன் படைகள் வேந்தனவால்
பொய் விரவா அருள் வேத புங்கவ இங்கு உள என்றாள்

#40
என்று இனைய பத்தி எனும் ஏதம்_அறு தவக் கிழத்தி
மன்று இலங்கு வயப் படையின் வரன் முறையும் விவரணமும்
வென்றி புனை தரு மாண்பும் விரித்து உரைப்ப வியப்பினொடு
நன்று கேட்டு இனிது உவந்து வேதியன் மற்று இவை நவில்வான்

#41
அன்னாய் இப் பிரபஞ்சத்து ஆரணியத்து அருள் வழியின்
முன்னாகத் துணிந்து செல முழுதும் எனைத் தெருட்டினவால்
பொன் நாடு புரந்து அருளும் பூபதி புண்ணியத்து அமைந்த
மின் ஆரும் படைக்கலம் போல் விளங்கும் நினது அருள் மொழியே

#42
அவ்வியமே முதலாய அகத்து இருளை அறத் தொலைக்கும்
செவ்விய இ மணி அரங்கில் செறிந்து இலங்கித் திகழ்கின்ற
திவ்விய சர்வாயுதமா வருக்கத்தில் சிறிது ஒன்றே
வெவ்விய தெவ் முனை முருக்கி விறல் வாதை புனைந்திடுமால்

#43
கீர்த்தி மலி இளவரசன் கிறிஸ்துவின் போர்ச்சேவகர்கள்
ஆர்த்தியுடன் தரித்து உலவும் ஆயுதங்கள் இவை என்னில்
கூர்த்திகை கைவிடுத்து இறைஞ்சித் தொழும்பு கூடுவது அல்லால்
பார்த் திசையின் எதிர்நிற்கப் படு பகையும் உளவாம்-கொல்

#44
இருள் மேவு பகை தெற என்று இனிது அமைத்த இ எல்லாம்
பொருள் மேவு படைக்கலங்கள் ஒவ்வொன்றும் புநர்_உலகத்
தெருள் மேவு துணைபுரிந்து ஜீவ_ரக்ஷை அளிப்பனவால்
அருள் மேவு பரலோகத்து அரசன் சீர் வாழியவே

#45
என்று இன்ன பரிசு வியந்து எடுத்தியம்பும் வேதியற்கு
முன் துன்னும் மலைக்காட்சி முறை நாளை மொழிதும் எனாப்
பொன் துன்னும் எழில் மாதர் அவரவர் தம் உழை போக
நன்று உன்னி விசுவாசி தன் உறையுள் நாடினனால்

#46
வேதியனும் அன்று இரவு விழி துயின்று விடிகாலை
மா தவப் பள்ளியைக் குறுகி வரன் முறை அஞ்சலி புரிய
மேதகு நல் தவத்தியர் அ விருந்தினனைக் கொடு சென்று
மீது உயர்ந்த அணி மாட மேனிலை மண்டபத்து அணைந்தார்

#47
பண் ஆடு மொழிச்சியர் தாம் வேதாந்தப் பளிங்கு நிலைக்
கண்ணாடி வழியாக விசுவாசக் கண் கொண்டு
விண் நாடு புகும் சிகர வியன் கிரியை வேதிய நீ
உள் நாடும் கருத்து ஒன்றி நோக்குக என்று இனிது உரைத்தார்

#48
சகல கேவலம் ஆதிய தத்துவார்த்தத்தைப்
பகரும் நூல் நெறி பற்றிய பவித்திரன் நோக்கப்
புகர்_இல் ஆனந்த மால் வரை இயல்பு எலாம் பொருந்த
நிகர்_இல் பத்தியாம் நேர்_இழை நிகழ்த்துவது ஆனாள்

#49
விண் நெறிப்படும் வேதிய மாநுவேல் விளைத்த
புண்ணியம் புவி போர்த்தும் மீது ஓங்கிய புரைய
மண்ணின் மன் உயிர் வளம் பெற வழங்கும் இ மலை அம்
கண் அகல் விசும்பு அணவி நின்றிடும் நிலை காணாய்

#50
நோன்மை மிக்கு உயர் வேதிய நுவல்_அரும் அரசன்
ஆன்மகோடிகட்கு ஆக்கிய ஆனந்தம் அனைத்தும்
வான் முயங்கும் இ மலை எனத் திரண்டு உரு அமைந்த
பான்மை போல் உள காட்சியே தெரிப்பன பாராய்

#51
கெடுத்து முப்பகை தொலைத்த மெய்க் கிறிஸ்தவ முத்தி
அடுத்த தொண்டர்க்கு என்று ஆக்கிய ஆனந்த போகம்
மடுத்த நித்திய பேர்_இன்ப மாட மாளிகைகள்
கடுத்து இலங்கு பொன் சிகரங்கள் கணிப்பு_இல காணாய்

#52
அனகன் சேவடிக்கு அன்புசெய் ஆரண அமலன்
சினகரம் திகழ் புயல் தறி நிழலிடு செயல் போல்
வன கராசல நிரை பொரூஉம் கரு முகில் வளைந்து
கனக மால் வரைச் சாரலில் கவிவன காணாய்

#53
தொக்க பேர்_இடர் மலை மிதித்து ஏறிய தோன்றால்
துக்கமாய வெம் கோடையைத் திசைதிசை துரந்து
பக்கம் எங்கணும் நல் அறப் பயிர் வளம் சுரப்பக்
கக்கு தண் அருள் மழை முகில் கஞலுவ காணாய்

#54
அறம் குலாம் மனத்து அந்தண அந்தரத்து அமரர்
இறங்கி ஏற என்று ஆக்கிய ஏணி ஈது என்னப்
பிறங்கு வான் முகட்டு இழிந்து நின்று இம்பரில் பிறழ்ந்து
கறங்கு வெள் அருவித் திரள் பொலிவன காணாய்

#55
பொருள் நயம் தெரிந்து அவித்தையைப் போக்கிய புலவோய்
அருள் நயந்த மெய்ஞ்ஞானியர் அகம் எனத் தெளிந்து
தெருள் நறும் புனல் தீர்த்திகை ஜீவரைப் புரக்கும்
கருணை வெள்ளம் ஒத்து அலர்வன வயின்-தொறும் காணாய்

#56
ஊன் அளாவு துர்_குணம் கடிந்து ஒதுக்கிய உரவோய்
தேன் அளாவிய கொழு மலர்ச் செழும் பயன் செருமி
வானளாவிய ஜீவ தாருவின் நிழல் வயங்கும்
கான் அளாவு தண் நறும் சுனை மிளிர்வன காணாய்

#57
ஞான நாயகன் திரு_அடிக்கு அன்புசெய் நண்ப
மானும் வேங்கையும் ஒரு துறை நீர் உண்டு மகிழ்வ
தேன் இறால் இழி மதுவொடும் பழ நறை தேக்கிக்
கான வேழமும் சிங்கமும் களிப்பன காணாய்

#58
பிள்ளை நீர்மையில் குண நிலை பிறங்கிய பெரியோய்
கொள்ளையாடு கோணாய்த் திரள் குலப் பகை இன்றித்
துள்ளு செம்மறித் திரளொடு தொடர்பு கொண்டு உலவிக்
கள் உலாம் மலர்ப் பொதும்பரில் துயில்வன காணாய்

#59
உச்சிதற்கு இதயாசனம் நல்கிய உரவோய்
செச்சை ஆள் அரி ஊன் இரை தேர்கில தெருண்டு
கொச்சை ஆட்டொடும் கோக் குலத் திரளொடும் குழுமிப்
பச்சை நாகு இளம் புல் தழை கறிப்பன பாராய்

#60
மேம்படும் பர சிற்சுகம் விழைந்திடும் மேலோய்
தீம் பயன் கடைவாய் இழி ஆயர்-தம் சிறுவர்
தூம்பு உறழ்ந்த புற்று அரவொடும் தொகு கடுவிரியன்
பாம்பொடும் விளையாட்டு அயர் பரிசினைப் பாராய்

#61
தொல்லை ஆரண துருவை ஆன் நிரை துரூஉம் தொறுவர்
முல்லை அம் குழல் இசைக் குறி முறை வழாது ஒழுகி
மல்லல் ஓங்கு புல் ஆர உண்டு அணி நிழல் மறிந்து
கல் அளைச் சுனை நீர் உண்டு வருவன காணாய்

#62
மன்னும் நித்திய_ஜீவனை விழைந்த நல் மதியோய்
சென்னி வான் தொடு மா தவப் பள்ளியும் செறிந்த
அம் நலார் துறவு ஆச்சிரமங்களும் அறவோர்
பன்னசாலையும் முறைமுறை திகழுவ பாராய்

#63
எண் தபோதன இமக் கரு முதிர்ந்த சூல் எழிலி
விண்டு உகுத்த நித்திலம் புரை வெண் பனித் திவலை
அண்டர் கோன் படைவீரருக்கு ஆர்_உணவாகப்
பண்டு பெய்த மன்னாவினை நிகர்ப்பன பாராய்

#64
புன்மை சீத்து மெய்ப்பொருள் கடைப்பிடித்த வண் புலவோய்
நன்மையே அலால் தீமை எங்கணும் இலா நலத்தில்
தன்மம் ஆய செஞ்சாலி நீர் வளத்தினால் தந்த
பல் மணிக் குவை வயின்-தொறும் பொலிவன பாராய்

#65
சிலுவை தாங்கி நம் ஜேசுவைப் பின்தொடர் செல்வ
சுலவி வானரத் தொகுதிகள் சோலையில் துவன்றிக்
குலவு முள் புறக் கொழும் கனிச் சுளை உண்டு குதட்டிப்
பலவின் நீள் சினை துயல்வரப் பாய்வன பாராய்

#66
மடி இலாது உஞல் வேதிய வான ராஜ்ஜியத்தின்
குடிகள் செய்கையில் கொற்றவன் அரும் பெரும் குணத்தில்
படியும் வானமும் பரிமளம் பரப்பிடப் பரம்பும்
கடி கொள் நந்தனவனத்து எழில் கவினுவ காணாய்

#67
தீங்கு அகன்ற மெய்க் கிறிஸ்தவ செழித்த பூங்காவில்
மாம் குயில் குலத்து இன் இசை திசை-தொறும் மடுத்தல்
ஓங்கு பேர்_இன்ப சிற்சுகம் உண்டு இவண் வம்-மின்
பாங்குளீர் என விளிப்பது போன்றன பாராய்

#68
இடர் சுடச்சுட இலங்கு பொன் என மிளிர் எழிலோய்
அடரும் இன் சுவை தருவ ஆரோக்கியம் அமைவ
கெடல்_அரும் நறும் பாகு என கெழுமிய கிளைய
படரும் முந்திரிச் செழும் கொடித் தாறுகள் பாராய்

#69
கரவு இலாது உளம் பழுத்த மெய்ப் பத்தியில் கனிந்தோய்
உரவு மால் வரை ஓங்கிய தருக் குலம் உதவும்
விரவு தீம் சுவை விழுத் தகு கனி வருக்கங்கள்
பரவு தொண்டர் நல் கருமங்கள் புரைவன பாராய்

#70
பைம்பொன் நாட்டவர் பரவும் ஓர் பவித்திர புரியின்
செம்பொன் இஞ்சி மீது உயரிய செழு மணிக் கொடிகள்
உம்பர் ஓங்கு பைம் கழை அரவு உரிப் படாம் உறழ்ந்து
பம்பு கார் மழைப் படலத்தைப் பொதுப்பன பாராய்

#71
உத்தமக் கலை ஞான மெய்யுணர்வு நல் ஒழுக்கம்
சத்தியம் தவம் சாந்தம் நல் தருமமே தயாளம்
நித்த மங்களம் ஆகிய குணங்களால் நிமிர்ந்து
பத்தியில் திகழ் மாடங்கள் அளப்பு_இல் பாராய்

#72
பன்னு வேதபாராயண பரக்க நீ பார்க்கும்
மன்னும் ஆனந்த மலைப் பிரதேசம் மற்று இதனைத்
துன்ன_அரும் பரிசுத்த சேத்திரம் எனும் சுருதி
பொன் நிலத்து இளவரசனே சதோதயம் புரப்பர்

#73
காவலன் திரு_கருணையைக் கடைப்பிடித்துள்ள
ஜீவன் முத்தரே குடிகள் அங்கு இயல்வது செங்கோல்
பாவ தோடங்கள் யாதும் இன்று ஆதலின் பரம
ஜீவ நன்மையே கதிக்கும் அத் தேயத்துச் செய்யோய்

#74
சுமையைப் போக்கிய தூயவ ஆனந்தம் துதைந்த
சிமையத்தே நின்று தென் திசை நோக்கிடில் சீயோன்
இமையத்து ஆர் எழில் முத்தி மா நகரத்தை எதிரில்
அமையக் காண்குவை கரதலாம் அலகமாய் அருகில்

#75
என்று பத்தியா மா தவக் கிழத்தி கண் எதிரில்
தென் திசைப்படு காட்சியைத் தெள்ளிதில் தெரிக்க
மன்றல் வேதியன் மலை நிலை மயல்_அறத் தெருண்டு
நின்று பேர்_அதிசயத்தொடும் மற்று இவை நிகழ்த்தும்

#76
கண்ட காட்சியில் கதித்த ஆச்சரியமும் கருத்தை
உண்டு எழுந்த பேர்_உவகையும் உண்மையை வடித்து
விண்ட நின் உரை விசேடமும் இவ் என விதக்க
ஒண்_தொடீஇ எனக்கு உணர்ச்சி மட்டு உரை உதவு இன்றால்

#77
சக்கராதிபன் அருள் புணையால் அன்றித் தமியேன்
துக்க சாகரத்து அலறிய எறி திரைச் சுழியுள்
புக்கு நீந்தி இ ஆனந்தப் பொருப்பினைக் குறிக்கொண்டு
அக்கரைத் துறை பிடித்திடல் ஆவதோ அம்மா

#78
வழி தெரிப்பதும் வழி_துணை ஆவதும் குறித்த
வழி_நடத்தி ஆதரிப்பதும் வழியை விட்டு அயல் ஓர்
வழி புகா வகை மறிப்பதும் முடிவு-மட்டாக
வழியின் மேவு இடர் களைவதும் திரு_அருள் மாட்சி

#79
துற்று பேர்_இடர் யாவையும் ஒருங்கு அறத் துடைத்துக்
கொற்றவன் கிருபாஸ்தமே குறிக்கொண்டு காத்தது
இற்றை நாள் வரை இன்னும் என் வழி_துணை ஆகி
முற்றும் காக்கும் என்று ஒருப்படீஇ வழிக் கொள முயன்றான்

#80
உருகு காதலின் அரும் தவக் கிழத்தியர் உவந்து
வருக என்று சென்று ஆயுதசாலையை மருவி
இரு கருக்கு உள பட்டயம் ஆதிய வேதி
திருகு_இலா மறைவாணனுக்கு அளித்தனர் தெரிந்து

#81
எள்_அரும் குமரேசன் யாத்திரிகருக்கு என்ன
உள்ளி ஆக்கிய அப்பமும் உசிதமும் திரிகைத்
தெள்ளு தீம் கனி வற்றலும் கைக் கொடு செல்க
கொள்ளுக ஐய என்று உதவினர் அமைவன கொணர்ந்து

#82
மந்திராயுத வருக்கமும் மருந்து அன உணவும்
அந்தணன்-தனக்கு இன்றமையாப் பொருளாகப்
புந்தியால் உற மதித்து நன்று அறிமொழி புகன்று
சிந்தையால் உறப் புனைந்தனன் திவ்ய போர்க்கோலம்

#83
மேவும் யுத்தசன்னத்தனாய் விளங்கிய திறலோன்
பூவையர்க்கு எலாம் அஞ்சலி வரன் முறை புதுக்கி
ஆவியில் பிரியாவிடை ஆசியும் பெற்று
ஜீவ பாதையைக் கடைப்பிடித்து ஏகினன் செய்யோன்

#84
காவலாளனை வினவி அக் கதி வழி நிதானி
போவதாகிய செயல் அறிந்து உளம் மகிழ் பூப்ப
ஆவலாய் உபசரித்து வந்தனம் இனிது ஆற்றிச்
சாவதான நல் விடை கொடு போயினன் சதுரன்

#85
காதலாய் நெடும் தூரம் மெய்ப் பத்தி அங்கனையே
ஆதி மாதர் உன் ஆவியில் பிரிகலம் யாம் என்று
ஓதி மங்களசாஸன விடையினை உதவிப்
போதுவாய் என விடுத்தனர் தாயரே போல்வார்

#86
இந்த மா தவக் கிழத்தியர் குணம் செயல் எலாம் என்
சிந்தை உள்ளுறத் திகழ்ந்தன நனவுறு செயல் போல்
விந்தை அம் கனா இன்னமும் நிகழ்வுழி விரும்பி
அந்தணன்-தனைத் தொடர்ந்தனன் மேல் விளைவு அறிவான்
** காட்சிப் படலம் முற்றிற்று
** குமார பருவம் முற்றிற்று