இரட்சணிய யாத்திரிகம் – கடவுள் வாழ்த்து, பதிகம்


@1 கடவுள் வாழ்த்து

#1
பூத பௌதிகங்கள் ஆய புவன கோசரங்கட்கு எல்லாம்
ஆதியாய் முது மூலத்துக்கு அநாதியாய் அகண்டாகார
ஜோதியாய் விளங்கி நிற்கும் தூய சைதந்ய வாழ்வைக்
காதலாய்ப் பரவி நாளும் கருத்தினுள் இருத்தி வாழ்வாம்

#2
ஒன்றிலே மூன்றாய் மூன்றும் ஒன்றதாய் உலப்பு_இலாதாய்
நின்று உலகு அனைத்தும் தூய நினைவு மாத்திரையில் தந்து
நன்று என உவந்து இரக்ஷை நல்கும் மெய்ஞ்ஞானானந்தக்
குன்றினை அகத்துத் தாங்கிச் சிந்தனை கூடி வாழ்வாம்

#3
மூல காரண முதற்பொருள் எவற்றிற்கும் மும்மைக்
காலம் ஆதி ஈறு இகந்து உள அநாதி அம் கடவுள்
கோல மா மறை குணிப்பு_அரும் குணங்குறி அமைந்த
சீல நாயகன் திரு_அருள் பரவுதும் தினமே

#4
ஆதி மெய்த் திரு_வாக்கு ஒளியாய் வரும்
காதல் மைந்தனைத் தந்து கருணையால்
பூதலத்துக்கு இரக்ஷை புதுக்கிய
தாதை பாதம் தலைக்கு அணி ஆக்குவாம்

#5
கன்னி பாலனாய்க் காசினி-தனில் அவதரித்து
மன்னு ஜீவகோடிகள் எலாம் வான் கதி மருவத்
தன் உயிர்ப் பரித்தியாகமும் சிலுவையில் தந்த
என் உபாசனா_மூர்த்தியை அஞ்சலித்திடுவாம்

#6
வானமும் பூமியும் மகிழ்கொண்டு ஓங்கிட
ஞானமும் நன்மையும் நனி சிறந்திட
ஊனமும் பாவமும் ஒழியத் தோன்றிய
தீன ரக்ஷகன் பதம் சிந்தித்து ஏத்துவாம்

#7
சுருதி ஒளி அகம் திகழ்த்தி அஞ்ஞான திமிரம் அறத் துரந்து எஞ்ஞான்றும்
ஒரு தனி ரக்ஷணிய வழித் துணை ஆகி அடியோமை உய்யக் கொண்டு
கருதிய நல் கருமம் எலாம் கைகூடப் பெரும் கருணைக் கடைக்கண் நோக்கம்
தரு திரியேகத்து ஒரு நல் ஆவி திரு_அடிக் கமலம் தலை மேல் கொள்வாம்

#8
பத்த பாலனம்செய்து இருள் பாறிட
வித்தகச் சுடர் வீசி விளங்கிடும்
மெய்த் திருச்சபை மெய்த் திரு_தொண்டரைச்
சித்தம் மீது திகழ்த்தி விளம்புவாம்

#9
பூவரும் மெய் மறைத் துணிபின் பொற்பு உறழ்
ஜீவ ரக்ஷணிய யாத்திரிகச் செம்பொருள்
பா வரு செந்தமிழ்ப் பனுவல் ஆக்குவான்
ஆவலில் துணிந்தனன் அருள் துணைக் கொடே

#10
என் அனைய பாவியர் இ நில_உலகில் யாண்டும் இலர் எனினும் நாயேன்
தன்னை ஒரு பொருளாகத் தடுத்தாண்ட கிறிஸ்து இயேசு சாமி செய்ய
பொன் அனைய திரு_அடிக்குச் செந்தமிழ் மாலிகை ஒன்று புனைவான் எண்ணித்
துன்னும் நவ ரக்ஷணிய யாத்திரிக மலர் எடுத்துத் தொடுக்கலுற்றேன்

#11
வித்தக கிறிஸ்து வேத விழுத்தகு பொருளை ஆய்ந்து
நித்திய ஜீவ மார்க்க நிண்ணயம் பிடித்த தேவ
பத்தனாம் பனியன் மேனாள் பாவனா_சரிதம் ஆகச்
சத்தியம் திகழ்த்தி உய்த்த தகைமையே தகைமை ஆமால்

#12
ஆக்கிய பாஷைக்கு அன்றி அவனியில் பல பாஷைக்கும்
பாக்கியம் பயந்தது என்னப் பாசுரம் சமைந்ததாக
மேக்கு உயர் காதலால் அ வித்தக சரிதம் சொல்வான்
ஊக்கினன் தமிழில் யானும் உசித மாண் பொருளை உள்ளி

#13
ஒண் தமிழ் வலவர் வாக்கின் உரம் கொண்டு இ உலக காதை
எண் திசை புகழ நிற்கும் இரக்ஷண்ய வேத போதம்
கொண்ட பேர்_ஆற்றலாலே கூறும் இப் பனுவல் என்றும்
தெண் திரை வளாகத்து ஓங்கித் திகழ்வதற்கு எவன்-கொல் ஐயம்
**நுதலிய பொருள்

#14
வெற்று நேரப் போக்காய்ப் புகல் விநோதமும் அன்று
புற்று அரா விடம் பொதிந்த செப்பு எனக் கவி புனைந்து
சிற்றின்பத் திறம் திருத்திய காதையும் அன்று
மற்று இது ஆத்தும ரக்ஷணை வழங்கும் ஓர் மருந்தாம்
**நூற்பயன்

#15
தீ_வினை ஜலதி வீழ்ந்து அழியும் ஜீவரை
வீவு_இலாக் கதிக் கரை வீடு சேர்க்கும் ஓர்
தா_அரு புண்ணியத் தனி மரக்கலம்
ஜீவ ரக்ஷணிய யாத்திரிகம் தேர்-மினோ
**யாப்பு

#16
முதிர் கடுத் தழை நுகர்ந்திடும் ஒட்டையின் மூர்க்கர்
கதி வழுக்கிய பாழ்ம் கதை கற்று நாள் கழிப்பர்
புதிய தேன் நுகர் அளி எனப் புனிதர் யாத்திரிகம்
மதி நலம் தரும் அமிழ்து எனப் புசித்து உளம் மகிழ்வர்
**சிறப்புப் பாயிரம் முற்றிற்று

@2 பதிகம்

#1
கண்ணிய ரக்ஷணிய யாத்திரிகம் என்னக் கழறுகின்ற காவியத்தின் பொருளடக்கம்
நண்ணியதன் வரலாறு மெய்யுணர்ச்சி நலத்தகு குருதரிசனமா பரமராஜ்யம்
புண்ணிய வேந்தியல் சிருஷ்டி ராஜத்ரோகம் பூர்வவழி சுவிசேஷ புனிதமார்க்கம்
எண்ணி அருள்நெறிபிடித்தல் அவநம்பிக்கை லௌகீகம் கடைதிறப்பு மறைவிளக்கம்

#2
அரும் சுமைநீங்கியபேறு துயிலுணர்த்தல் அமார்க்கவியல் புஷ்கரிணி உபாதிஓங்கல்
விரும்பு சம்பாஷணை இரக்ஷைவிளைந்தவாறு விசிராந்தி காட்சி வனம் அழிம்பன்தோல்வி
நெருங்கும் மரணச்சூழல் நிதானிநட்பு நெறி_இல் அலப்பனைவரைதல் குருவைநேர்தல்
மருங்கு மாயாநகரி நகருள்போதல் மானவ ரக்ஷணைவகுத்தல் சிறைக்குள்ளாதல்

#3
நல் தவன் நிதானிகதி நன்னம்பிக்கை நல்வழி வேதியன்மீட்சி பொற்சுரங்கம்
செற்றமுறு விடாதகண்டச்சிறை ஆனந்தச்சிகரி விசுவாசவியல் திமிரவண்ணன்
குற்றம் மிகு சோகநிலம் அறிவீனற்குக் கூறும் முறை நிலைகேடன் தருமக்ஷேத்ரம்
முற்றும் இகபரசந்தி சுவர்க்கப்பேறு முறை வைப்பான் நிகழ் படலம் நாற்பத்தேழே
** பதிகம் முற்றிற்று