ஆரணிய பருவம், இரட்சணிய யாத்திரிகம்


@1 நம்பிக்கை நன்னெறி பிடித்த படலம்

#1
முத்தி கூடிய அரும் தவன் பத்தியின் மொய்ம்பும்
சுத்த மெய் விசுவாசமும் சுகுணமும் துகள்_இல்
வித்தகக் கலை ஞானமும் தீரமும் மிளிர
எத்திறத்தரும் விதந்து உரையாடினர் எங்கும்

#2
மாய சூனிய வர்த்தகக் குழுக்கள் யாம் வதைத்த
தூயன் தூய செம் குருதியின் கூக்குரல் சுடர் வான்
தோயின் வெம் கனல் சொரிந்து இ ஊரும் சுடுகாடாய்த்
தீயும் என் செய்தேம் என்று அகம் கலங்கினர் திகைத்து

#3
புகர்_இலா ஒரு புனிதனை வதைத்து உயிர் போக்கி
நிகர்_இலாப் பழி சுமந்தனர் இ நகர் நீசர்
ககன வேந்து ஒரு கணத்திடைக் கவிழ்ப்பர் மற்று என்னாப்
பகரும் ஜீவ சான்று அகப் பறை முழக்கி ஆர்ப்பரித்தான்

#4
அனைய சத்தமுற்று ஆய்ந்தனன் அ நகர் மாயம்
புனையும் ஆவணத்து ஒரு சிறை வர்த்தகம் புரிந்து
மனை நிரம்பிய வாழ்க்கையன் வஞ்சனை மலிந்த
வினையன் நம்பிக்கை எனப் பெயர் பெற்றிடு வெய்யோன்

#5
ஜீவ சாக்ஷியின் நல்லுரை செவிமடுத்திடலும்
ஆவது என் இனிச் செய்வல் என்று ஆவியில் கலங்கித்
தேவ வெம் சினம் தணிப்பதோ செய்யும் நல் கருமம்
கூவல் நீர் குளிர்ப்பிக்கும்-கொல் வாரிதி கொதிக்கின்

#6
பழுது_இல் வேதியர் பகர்ந்த சத்தியத்தொடு பழகி
முழுது நல் நடை திருந்திய முறைமை என் உளத்தில்
எழுதியாயது அ உண்மையைக் கடைப்பிடித்திலனேல்
கழுது மல்கு பாதலம் அலால் பிறிது உண்டோ கதியே

#7
துட்ட வல்_வினைத் தொடர்பு எலாம் எவ்வணம் தொலையும்
இட்ட காமியச் சுவை எலாம் எவ்வணம் விடுப்பல்
செட்டு வர்த்தகம் செல்லுமோ நல் நெறி சேரின்
நட்டம் ஆகுமே என்று உளம் கவன்றனன் நலிந்தான்

#8
இனைய தன்மையன் ஆகியே காந்தமுற்று இருந்தே
நினைவின் ஓங்கிய ஜீவ_சாக்ஷியை எதிர் நிறுவிப்
புனையும் நல் மொழியால் பிழை பொறுக்க எனப் புகன்று ஈண்டு
எனை அறிந்தனை இயம்புதி மதி எனக்கு என்றான்

#9
நம்பி நல்லுரை நன்று என நல் மன_சாக்ஷி
எம்பி யாம் இருவேம் அலம் ஒன்றுபட்டு என்றும்
இம்பர் மெய்ப் புருடார்த்தம் இயற்றுவம் என்னில்
உம்பர் உற்று அழியா நலம் உண்ணுவம் ஓர்தி

#10
நன்று தீது நவிற்றுதல் என் கடன் நாடி
நன்று உஞற்றின் வரும் பயன் உண்ணுவன் நானும்
நன்று இகந்தனையேல் வரு துர்_பயன் நண்ணேன்
நன்று கூறியும் மீறினை ஆதலின் நண்ப

#11
ஆதி-தொட்டு என் அரும் கடன் ஆற்றிய என்னை
ஏதிலான் என எள்ளினை என் மதி கொள்ளாய்
நீதியுற்ற நெறி பிடித்தாய்_அலை நீசப்
பாதை பற்றினை பாவியரோடு உறவாடி

#12
புனிதர் ஆய புரந்தர வேந்தினைப் போற்றாய்
மனிதர் கைப்படும் அர்ச்சையைப் போற்றுதி வாளா
நனி திகழ்ந்திடு நல் அறம் நச்சிலை நாளும்
துனி திகழ்ந்திடு தீ_வினை ஈட்டுதி தோழ

#13
உற்பவம்-தொட்டு இம்மட்டும் வந்து உணவு ஆதி
அற்பின் நல்கி அறிவு அளித்து ஆர்_இடர் போக்கி
நின் புரந்த நிருமல வேந்தை நினைத்துப்
பொற்பின் நன்றி புரிந்திலை பேய் அடி பூண்டாய்

#14
பொய் திருட்டு அநியாயம் பொறாமை பொல்லாங்கு
கைதவம் தந்திரம் கொடும் சூது வன்கண்மை
வெய்தின் ஆய வினைத் திறம் உள்ளன வேட்டுச்
செய்து தீ விடம் ஜீவனுக்கு ஈட்டினை தீயோய்

#15
தூய ஞானம் சுகிர்தம் சுசீலம் இவற்றால்
ஆய செல்வம் அடைந்திலை ஆலம் நிகர்க்கும்
மாய சூனிய வஞ்சக வர்த்தகம் பேணித்
தீய செல்வம் திருத்தினை சிந்தனை_இல்லாய்

#16
வஞ்சம் ஆதிய துர்_குணமே மனை மக்கள்
பஞ்ச_பாதகம் ஆதி பஞ்சாமிர்த பானம்
விஞ்சு பொய் முதலாயவை மெய் அணி சாந்தம்
அஞ்சுகின்றிலை தீ மடி பேணுதி அந்தோ

#17
முன்னம் வேதியர் பல் முறை மோசத்தைக் காட்டிச்
சொன்ன நல்_மதி கொள்ளலை தூய நல் ஆவி
உன் அகத்து மல்லாடியது ஓர்கிலை ஒன்றாம்
என்னையும் பகை ஆக்கினையே மதி_இல்லாய்

#18
ஈண்டு தொண்டனுக்கு ஈட்டிய இம்சையும் யாக்கை
கீண்டு அரிந்து அழலுக்கு இரையாக்கிய கேடும்
காண்டலில் கவல்கிற்றி சில் நாள் படக் காணாய்
மூண்ட இத் தகு சிந்தனை காணுவை மோசம்

#19
இற்று இது ஓரலை நீர் எழுத்து யாக்கை என்று எண்ணாய்
சுற்றம் நட்பு உரிமைத் திறம் யாவும் நின் சூழ்ந்து
பற்றும் மாய வலைத் தொடர் என்பதும் பாராய்
நிற்றி மோசப் படுகரில் நூல் நெறி நேராய்

#20
உள்ளின் ஆய உணர்ச்சி மற்று உன்னத ராஜன்
நள்ளி ரக்ஷணை நல்கிடும் நல் அடையாளம்
வள்ளல் ஆர்_அருள் மல்கிய மாண்புறு வைகல்
எள்ளுவாய்_அலை ஈது உன் இரக்ஷணை நல் நாள்

#21
நிண்ணயம் தெரி ரக்ஷணிய நவநீதம்
உண்ணில் ஆத்தும தாபித நோய் ஒருங்கு ஓடும்
நண்ணும் மெய்ப் பரமானந்த சிற்சுகம் நம்பி
புண்ணியன் பொன் திரு_அடிச் சூழலில் போதி

#22
எத்துணைப் பெரும் பாவியர் ஆயினும் எள்ளா
வித்தகக் குமரேசனை மெய் விசுவாசப்
பத்தியா இறும்-மட்டும் பராவுதி என்னின்
முத்தி வீடு புகுந்தனை முத்தனும் ஆனாய்

#23
ஆயுள் எல்லை அறிந்திலம் ஆதலின் முன்னே
மாய வாழ்வை வரைந்து நம் மானை மன்றாடித்
தூய ஆவி துணைக் கொடு நல் நெறி துன்னு என்று
ஆய சொல் மதி விண்டனன் அந்தரங்கத்தில்

#24
ஜீவ_சாக்ஷி தெருட்டு செம் சொல் அமுதத்தை
ஜீவ பாதைக்குத் திவ்விய போனகம் ஆக்கி
ஜீவ நாடி உயிர்த்த நல் ஓரையின் செவ்வி
ஜீவ பாதை செல்வான் மனம்கொண்டனன் செய்யோன்

#25
பழியும் பாவமும் மல்கும் இ ஊர் இனிப் பாழ்பட்டு
ஒழியும் என்பதற்கு எள்துணை ஐயம் ஒன்று இல்லை
அழிவு_இலாத சீயோன் மலைத் தேசத்தை ஆக்கும்
வழியை நாடுவல் யான் என உள்ளம் வலித்தான்

#26
தெருளும் சிந்தையின் முந்துறு தெய்விக வேந்தன்
அருளும் ஆர்ந்து உரமாக்கலின் ஆக்கிய எல்லாப்
பொருளும் காதல் வருக்கமும் போற்றிய புந்தி
மருளும் போக்கி நம்பிக்கை மெய் நூல் வழி வந்தான்

#27
முப் பரம் பொருள் ஆய ஓர் புண்ணிய மூர்த்தி
துப்பு உறழ்ந்த திரு_அடிச் சூழலை நாடி
இப் புவிப் படும் ஈடணை யாவும் இகத்துக்
குப்பையாய் உவர்த்து ஏகினன் கோன் முறை கொண்டு

#28
எரி விழுந்து இக் கடி நகர் நீறிடும் எல்லை
உரிய தன் மனை மக்களும் ஒக்கலும் வெந்து
கரிவரே என ஏங்கி உயிர்த்து அழு கண்ணீர்
சொரிய நின்று துடித்தனன் ஆங்கு ஒரு சூழல்

#29
இரு வகைப் பற்றின் ஆழ்ந்த எனைக் கரையேற்றத்
திருவுளத்து அருள் பூத்த திரித்துவ தெய்வம்
பொருவு_அரும் கருணை_கடல் ஆதலின் பொன்றாது
அருள்வர் அங்கு அவர்க்கும் எனத் தேறினன் ஆறி

#30
கருவில் செய்கையின் ஆய வெம் தீ_வினைக் கள்வன்
பெரு வழித் தலை பேய்பிடித்து ஓடிய பித்தன்
ஒருவரும் இலர் பாவியரில் எனை ஒப்பார்
திரு_அருள் துணை ஆயது என் என்று திகைத்தான்

#31
எண்ணின் எத்தனை ஆச்சரியம் இஃது என்னா
நிண்ணயத்தொடு இரா_பகல் ஓர் இடை நில்லான்
கண் உறக்கம் அற்று ஓர் தனியாய் நெறி கண்டு
புண்ணியக் குமரேசனை வாழ்த்தினன் போனான்
** நம்பிக்கை நன்னெறி பிடித்த படலம் முற்றிற்று

@2 கிறிஸ்தவன் கதிவழி கூடிய படலம்

#1
கதி புகுந்த மெய் நிதானியின் கொலைக்களம் கண்டு
புதிய நம்பிக்கை தெருண்டு நல் நூல் வழி போந்த
அதிசயத்தை ஆய்ந்து ஆனந்த பரவசம் அடைந்து
முதிய வேதியன் நிலையினை நாடுவான் முயன்றேன்

#2
சென்று கூடினன் யான் சிறைச்சாலையைத் திருமி
நின்று கண்டனென் இடையறாக் கனவுறு நினைவில்
மன்றல் நாயகன் திரு_அருள் மாட்சி என்று உணர்ந்தும்
தன் துணைப் பிரிவால் அகம் தளர்ந்தனன் சதுரன்

#3
புணை இழந்து நீர்நிலை உழல்வார் எனப் புகல்_அற்று
இணை இழந்த மான் இனம் எனக் கலக்கமுற்று இனைந்தும்
அணை கடந்த நீர் அழியினும் வாராது என ஆறி
உள் நைவு நீங்கினான் திரு_அருள் பலம் கொண்ட உரவோன்

#4
மாறு_இலாப் பெரும் கருணை மன் வரப்பிரசாத
வீறு பெற்று மாயாபுரி வெம் கொடு வினையின்
தூறு அடர்ந்த மாயச் சிறைத் துயர்_கடல் ஒருவி
ஏறினான் கதிக் கரை வழி இகல் கடந்து எளிதில்

#5
வழு_இல் நூல் நெறி கூடிய அருள் மறை_வாணன்
உழுவல் அன்பொடும் உளம் கனிந்து அருள் திறம் உன்னித்
தொழுவன் பல் முறை தோத்திரம் புரிந்து மன்றாடி
அழுவன் இன்னும் ஓர் வழித்துணை அமையும்-கொல் என்னா

#6
இனைய சீலனாம் வேதியன் இரவு நண்பகலும்
துனைவின் நூல் வழி துருவிட ஆங்கு ஒரு சூழல்
அனை அணைந்த வான் கன்று என நம்பிக்கை அடுத்து
வினையமோடு கை கூப்பி நின்று இனையன விளம்பும்

#7
ஐயஐய என் ஆர்_உயிர்க்கு ஆர்_உயிர் அனையாய்
பொய் அளைந்த இப் புலைக் குடில் ஓம்பிய புலையேன்
வெய்ய மும்மலச் சேட்டையின் விழும் நோய் துடைத்து ஈண்டு
உய்யும் நல் மதி ஒண் மருந்து ஊட்டினை உரவோய்

#8
விண் அடைந்த அ விடலையும் வேதியன் நீயும்
கண் அகன்ற மாயாபுரிக் கடை மறுகு அணைந்து
புண்ணியச் சுவிசேஷ மான்மிய மழை பொழி கால்
அண்ணல் சத்தியம் முளைத்தது என் அகத்தினில் அறவோய்

#9
இருவிர் நும் குண_சீலமும் ஒழுக்கமும் இறும்-மட்டு
ஒருவு_அரும் விசுவாசமும் ஊக்கமும் பொறையின்
அருமையும் கண்டு கேட்டலின் அடியனேன் உள்ளம்
திருமி மெய் வழிப்பட்டதால் அருள் செயல் செய்யோய்

#10
பொருளின் செல்வமும் பூதலத்து உரிமையும் போக்கி
அருளின் செல்வம் எற்கு ஆக்கினை அகத்து உணர்வு எழுப்பி
மருள் அறுத்தனை மற்று இதற்கு இயற்று கைம்மாறு
தெருளும் புந்தியோய் தெரிகிலேன் உளது என ஜெகத்தில்

#11
குரவனும் புநர்_ஜநந தாய்_தந்தையும் கோமான்
புரவு நூல் நெறித் துணைவனும் பொன்று நாளளவும்
உரவு நீர் நிலத்து உனை அலால் பிறர் இலேன் உண்மை
கரவு_இலோய் எனைத் தெருட்டுதல் நின் கடன் காண்டி

#12
ஏக நின்ற நீள் நெறிக்கு இருவேமும் இங்கு இணங்கி
மாக நாடு அடை-காறும் யாம் வழித்துணை இசைந்து
போக உன்னினன் திரு_அருள் கூட்டிய புதுமை
ஆக நேர்ந்தனம் ஈண்டு என உரைத்தனன் அறிஞன்

#13
ஜீவன் முத்தன் நல் நம்பிக்கை தெருளுரை திகழ்ந்த
தேவ பத்தியும் சற்குண சீலமும் தெளிவும்
தா_அரும் பரமார்த்தமும் சமைந்த நல் நிதானி
ஆவனோ இவன் என்று அகத்து உன்னுவான் ஆனான்

#14
நித்த சத்தியம் தெரித்து உயிர்விடுத்து நீறு ஆய
வித்தகத்து எழில் நிதானியே வெந்த சாம்பரின் இன்று
இத் தலத்து உயிர்த்தெழுந்து வந்தனன்-கொலோ எனது
சித்த எண்ணைமே எதிர் உறீஇத் திகழ்வது-கொல்லோ

#15
உன்ன வேறு இலன் உன்னத கிருபை மேல் உய்த்த
என் அகத்து நம்பிக்கையை எனக்கு எதிர் திகழ்த்தி
நல் நெறித் துணை ஆக்கினர் நம் பிரான் என்னாத்
தன் அகத்துள் அஞ்சலித்து வந்து இனையன சாற்றும்

#16
நம்பி நல்வரவு ஆகுக நல் வழி திகழ்த்தி
இம்பர் ஆன்ம வீடேற்றத்தின் இசைத்திடல் எல்லாம்
உம்பர் தம்பிரான் திரு_அருள் மாட்சி என்று உணர்தி
வெம்பு தீ_வினைக்கு ஈட்டுதல் அலகை செய் வினையால்

#17
அனையது ஆதலின் அகில லோகாதிபன் தொழும்பர்
வனையும் நல்_வினைக் கருவியாய் மகிதலத்து உலவி
வினை இயற்றுவர் கருவி இன்றாகியும் வேந்தன்
நினைய ஆயின சராசர நிகில லோகங்கள்

#18
ஆட்டினால் அன்றி ஆடுமோ பம்பரம் அருள் வந்து
ஈட்டினால் அன்றித் தீ_வினைத் தொடர் அறுத்து ஈர்த்துக்
கூட்டுவார்-கொலோ ஜீவரைக் கதி வழி கூறிக்
காட்டு வேதியர் சொல் பயில் கிள்ளையைக் கடுப்ப

#19
பொருள் நயம் தெரியேம் புலை வினை புரி பொல்லேம்
இருள் நயந்து எரிபாதலக் கிடங்கு அருகு இருந்தேம்
அருள் நயந்து எமைப் பிடித்து இழுத்து இ வழி ஆக்கக்
கருணை அம் கடல் வளாகத்துக் கதி கடைப்பிடித்தேம்

#20
முற்றும் எம் இடர் கடிபவர் முத்தி நாடு ஆளும்
கொற்றவன் அவர் திரு_அருள் பேற்றினைக் குறிக்கொண்டு
உற்று நோக்கி நல் நெறி பிசகாது ஒருமித்து
நல் தவம் பயில்வாம் கடை-காறும் நம்பிக்காய்

#21
ஊனும் நல் உயிரும் என ஒன்றுபட்டு இன்று
நானும் நீயும் வேறு இலை என நட்டனன் உன்னை
வானும் வையமும் சான்று என உரைத்தனன் மதுரத்
தேனும் பாலும் ஒன்று ஆய செம் சொல் மறை_வாணன்

#22
எந்தை சொற்றதே அமையும் ஆயினும் எனக்கு இனி நீ
தந்தை யான் உனக்கு ஒரு சிறு தனையன் ஆம் தயைகூர்
அந்தணாள நீ என் எஜமாநன் யான் அடியன்
சொந்தம் நிற்கு எனப் பகர்ந்தனன் தூய நம்பிக்கை

#23
எள்_அரும் குணத்து இருவரும் இவ்வணமாக
நள்ளி ரக்ஷணை நல் வழி பிடித்து உடன் நடந்தார்
தெள்ளு ஞானமும் உணர்ச்சியும் சேர்ந்தன அனையார்
உள்ளும் மெய் விசுவாசமும் ஒழுக்கமும் ஒப்பார்

#24
ஊன் முதிர்ந்து வீழ் உடல் சுக_போகத்தை உவர்த்துத்
தேன் முகந்து உணும் வண்டு எனச் சிந்தனைக்கு இனிய
நூல் முகந்து எடுத்து அநுபவ முதிர்ச்சியை நோக்கி
ஆன்ம ஞான சம்பாஷணை அருந்தி ஏகுவரால்

#25
இருவர் இப் பரிசு ஏகுழி அகந்தையின் இறுமாந்து
ஒருவன் வெள்ளிய செருப்பு அடியுண்டவன் உலவி
வருவதாகிய செயல் அறிந்து அரும் தவ மறையோன்
திருவினாய் உனைத் தெரியுமாறு இவை தெரிக்க என்னா

#26
எங்கு உளாய் பெயர் என்-கொலாம் எத் தொழில் உடையை
மங்கலம் புனை மனை மகார் உளர்-கொலோ மரபின்
நும் குலத்தவர் யார் எங்கு சேறி உன் நோக்கு என்
சங்கை தீர் விடை தருக என வினவினான் சதுரன்

#27
கேட்டி உத்தரம் கிளக்குவல் கிளர் பெரும் செல்வம்
ஈட்டும் இச்சக தேசமே என் ஜெந்ம_தேசம்
நாட்டில் உள்ளவர் தன்னயன் என ஒரு நாமம்
சூட்டினார் தொழில் எவ்வகையினும் பொருள் தொகுத்தல்

#28
போலி என்று ஒரு துரைச்சியின் புத்திரி காமி
தாலி கட்டிய மனையவள் தனையர் உல்லாச
வாலிபக் குணத்தால் எனை மதிக்கிலர் மனையாள்
சீலமும் பலர் காமிக்கு நடை உடைச் செல்வி

#29
இச்சகன் சமரசன் இருமுகன் இவர் என் தாய்
மச்சரைக்கு உடன்பிறந்தவர் அவர்க்கு யான் மருகன்
குச்சிதன் பக்கமாறி வீண்குதர்க்கி டாம்பீகன்
நச்சுவாக்கி ஆதியர் எமர் நனி நிதி_படைத்தோர்

#30
வாக்கு விஞ்சு இருநாக்கன் என்பவன் மறை ஓதிக்
கூக்குரற்படுத்து அதிகப்ரசங்கியாம் குருக்கள்
மீக் கிளர்ந்த பேர்_ஆசையால் வேதியர் வேடத்
தீக்கை பெற்றனன் யான் அவற்கு உண்மையாம் சீடன்

#31
இத் தலத்து வாழ்வினுக்கு இடையூறு ஒன்றும் இன்றி
ஒத்துவந்த-மட்டு ஒள்ளியோய் முத்தி நாடு உறும் இப்
பத்தி மார்க்கத்துப் படர்குவல் பருவரல் ஆதி
தத்து மேலிடில் நேர் வழி விலகிப் பின் சார்வல்

#32
என்று இவ்வாறு தன்னயன் விதந்து உரைத்தலும் எழில் கூர்
மன்றல் வேதியன் உண்மையே உரைத்தனை மதிக்கின்
நன்று அறிந்தனன் உன் நிலை யாவையும் நயந்து ஈண்டு
ஒன்று கூறுவல் கேட்டி என்று உரைத்தல் மேயினனால்

#33
பத்தி வேடம்கொண்டு அயல்_உளார் மருண்டிடப் பகட்டி
எத்தி நீச மண் பொருள் குவை ஈட்டுதல் இழிவாம்
குத்திரக் கொடு வினையுமாம் குறித்திடில் கொடியோய்
எத்திறத்தினும் கேடு காண் இக_பரத்து எவர்க்கும்

#34
குறித்துக் கோன் நகர் வழிப்படில் குளிர் பனி வெயிலால்
மறித்த சண்டமாருதத்தினால் வலிய நீர்ப் பெருக்கால்
செறித்த பல் பெரு மோசத்தால் தியங்கிடாது உயிரை
வெறுத்து முன் எதிரூன்றிடும் மெய்ப் பத்தி வேண்டும்

#35
களங்கம்_அற்ற மெய்ப் பத்தியோடு உழைத்திடில் ககன
வளம் கொள் முத்தியும் திரு_அருள் பயத்தினால் வாய்க்கும்
உளம் கொளாப் பத்தி வேடத்தால் உறு நரகு என்றே
விளங்க மெய் மறை ஓலிடும் இடம்-தொறும் விளித்தே

#36
இத்தகும் தெய்வ பத்தியொடு எத் துயர் வரினும்
சித்த சஞ்சலம் அடைந்து இடர்ப்படாது எதிர் செறுத்து உன்
மத்த சிந்தனை வரைந்து உடன் வருதியேல் வருக
ஒத்திடாது எனின் உவந்த செய் என எதிர்த்து உரைத்தான்

#37
மலம் நுகர்ந்து உழல் சூகரம் வான் சுவைக் கரும்பின்
நலம் விழைந்திடாவாறு போல் நச்சு உலகத்துப்
புலை இன்பம் நுகர் பொறியிலி பொருவு_இல் பேர்_இன்ப
நிலை விழைந்திடாது ஏகினன் தனி துணை நேடி

#38
உலகன் காமுகன் பேயன் என்போர் உயர் குலத்துத்
திலகர் என்று அகம் செருக்கியோர் தன்னயனோடும்
அலகு_இலாத ஆதாயவாரியில் அறப் படித்த
பலகறைப் படு லோபி-பால் பணக்கலை பயின்றோர்

#39
பலவந்தம் படு தந்திரம் இச்சகம் பத்தி
குலவு வேடம் என்று இவற்றினால் பொருள் கொள்ளை கொள்ளும்
வலவர் தன்னயன் வரவு கண்டு அவனொடு மகிழ்ந்து
கலகலத்தனர் இருவர் முன் கதித்திடல் கண்டார்

#40
ஆய காலையில் தன்னயன் அருகு அணைந்து ஐய
தூயர் போல் இரு துறவிகள் துணிந்து முன் செல்வார்
நீ அறிந்தனை எனின் அவர் நிலை நிகழ்த்து என்றான்
பேயனாம் பணப்பிரியன் தன்னயன் இது பேசும்

#41
முன் செலும் பரதேசிகள் சுருதி நூல் மொழியைப்
பொன் சொலாம் எனப் போற்றுவர் பிற உரை போற்றார்
என் சொன்னாலும் தம் சொல் பிடிவாதத்தை இகவார்
இன்_சொல் கண்டிதத்து எனை அவமதித்தனர் என்றான்

#42
கருதி வந்த பேராசையாம் காமுகன் கடுகிச்
சுருதி நீதியர் உலக நீதியர்-தமைத் துணிவுற்று
ஒருதிறத்தினும் அவமதித்து உரைத்திடல் ஒழுக்கு அன்று
இரு திறத்தும் நும்மிடை என்-கொல் விகற்பம் மற்று என்றான்

#43
எம்பி கேள் அவர் எத் துயரினும் வழி இகவார்
வெம்பு இரும் பகை சூழினும் தம் கொள்கை விடுக்கார்
இம்பர் நிந்தை தூடணம் அணி எனப் புனைந்திடுவார்
தம்பிரான் துணையாய்ச் செல்வர் தனி வழி இரவில்

#44
அடுக்கும் துன்பு எனின் அயல் வழி நுழைந்து பின் அடுப்பல்
ஒடுக்கும் வெம் பகை உறின் தக்க வேடம் கொண்டு உய்வல்
மிடுக்கினில் பொருள் பெற்றுப் பொன் பாதுகை மிலைவல்
விடுக்க_அரும் துணையாய் என்றும் பொருள் செல்வம் விளைப்பல்

#45
காண்டி வேதியர் பக்தி மெய்க் காரண பக்தி
தேண்டு காரிய பக்தி என் தெய்விக பக்தி
ஈண்டு இரண்டில் ஒன்று எது பிழை எது சரி என்னா
மாண்ட நூல் முக மதி_வலீர் வகுத்து உரைக்க என்றான்

#46
ஈது தன்னயன் இசைத்தலும் உலகன் ஆண்டு எழுந்து
கோது_இல் மெய்ப் படு காரண பக்தி செய்குநரே
தீது_இல் நித்திய_ஜீவ வாழ்வு உறும் என நம்பிக்
காதலித்து இக வாழ்வு எலாம் கசந்து கைவிடுவார்

#47
அலகு_இலாப் பொருள் யாவையும் நரனுக்கென்று ஆக்கி
உலகை வாழ்விக்கும் தெய்வத்துக்கு இவர் பக்தி உவப்பு இன்று
இலகு நல் மதி படைத்து இக வாழ்வை எள்ளாது
குலவு காரிய பக்தியே உவப்பதாம் குணிக்கின்

#48
வரைவு_இலாது பல் மலர்-தொறும் மருவி வெம் மதுவை
விரைவின் ஈட்டு தேனீ என விதிவிலக்கு இகந்தும்
தரையிலே சம்பத்து ஆக்கலும் காக்கலும் தருமம்
அரவு போல் மதி அடை-மினோ எனும் அருள் வேதம்

#49
பண்டு மிக்க சம்பத்து அபிராம் படைத்ததுவும்
எண் திசாமுகத்து இசை பெற்ற சாலமோன் இயைந்த
தெண் திரைப் பெரும் கடல் அன செல்வமும் எதனால்
உண்டுபட்டன காரிய பத்தியால் உணர்-மின்

#50
என்று துன் மதி தெருண்டு உலகன் எடுத்தியம்ப
நன்று சொற்றனை நாளும் மற்று இது என்றன் நாட்டம்
பொன்றும் காலத்துப் பொருள் அலால் துணை எது புகல்வீர்
என்றும் கைப் பொருள் இல்லவர்க்கு எவர் உறவு இகத்தில்

#51
ஆதலால் பொருள் ஈட்டுதல் மதிக்கு அழகு அதனைக்
கோது என்று எள்ளுதல் வைதிகர் பயித்தியக் கொள்கை
தீது_இலாப் பத்தி வேடமே பெரும் பொருள் சேர்க்கும்
சாதனங்களில் சிறந்த மெய்ச் சாதனம் ஆமால்

#52
இத் தலத்து உபதேசிக்கும் குருவுக்கும் இறைமை
உத்தியோகிக்கும் வணிகற்கும் உலப்பு_இலாது உழைக்கும்
கைத்தொழில் கருமிகளுக்கும் இரவலர்களுக்கும்
பத்தி வேடத்தால் வரும் பலன் பகருமாறு அரிதே

#53
பாரில் யாவரும் நம்புவர் அஞ்சுவர் பகையார்
ஊரிலே மரியாதை உண்டு உவப்பன கிடைக்கும்
சோரரும் பொருள் ஈகுவர் சொல் எங்கும் செல்லும்
ஓரில் பத்தி வேடத்தருக்கு ஒப்பு எவர் உலகில்

#54
புனையும் பத்தி வேடத்தினைப் பூதலத்து எவரும்
நினைவினால் உற மதித்தலின் நிருமலன் நாமம்
அனைவராலும் துத்தியம் பெறும் ஐயம் ஒன்று இல்லை
கனை கடல் புவி முழுவதும் நன்மையே கதிக்கும்

#55
கள்ளம் ஆய பொய்ப் பத்தியால் கருதிய கருமம்
தெள்ளிதாகவே சித்தி பெற்றிடுதலில் ஜீவ
வள்ளலார் உளம்கொண்டனர் என்பதே மரபாம்
எள்ளி இன்று எனல் பேதையர்க்கு இயல்பு என இசைத்தான்

#56
பேயன் இன்னணம் பிதற்றலும் ஏனைய பித்தர்
நாயகன் தரு சுருதிக்கும் யுத்திக்கும் நமக்கே
ஆய நேர் அனுபவத்துக்கும் ஒத்து உள அதனால்
மாயம்_அற்ற நின் கட்டுரை வன்மை என் சொல்கேம்

#57
எண்ணி நீ எடுத்தியம்பிய இ நியாயத்தை
மண்ணில் யாவரே மறுப்பவர் வான் வழி தொலைந்து
நண்ணினேம் சில யோசனை நன்றுநன்று உனது
நிண்ணயம் கடைப்பிடித்தனம் என நிகழ்த்தினரால்

#58
கண்ணும் காதும்_இலார் தமின் நேர் வழி காட்டி
நண்ணலும் சொலக் கேட்டலும் ஒக்கும் இ நால்வர்
எண்_அரும் புருடார்த்தம் மற்று அது_இது என்னா
நிண்ணயித்தலும் தம்மிலே புகழ்தலும் நினைக்கின்

#59
பேயன் சொற்ற நியாயத்தை மறுத்து எதிர் பேசத்
தூய வேதியர் எம்மிலும் நியாய சூக்குமர்-கொல்
ஆயினும் கடா விடுத்து அறிவாம் என அடுத்துப்
போயினார் அகம் செருக்கிய பூரியர் மாதோ

#60
இருவரைக் கிட்டி நால்வரும் இறுத்தனர் எதிர் கூய்ப்
பொருவு_இல் வேதிய புகறி உத்தரம் இதற்கு என்னா
மருவு தெய்விக பத்தியால் உலகத்து மலிந்த
திருவை எய்துதல் நன்று அலால் தீது அன்று தேரின்

#61
பொருளினால் நன்மை உள எனின் அப் பொருள் ஈட்டத்
தெருளும் பத்தியைத் தெரிந்திடல் தீங்கு எனப்படுமோ
மருள்_அறத் தெரிந்து உரைத்தி நீ மறை_வலோய் என்றான்
இருள் அறுத்தறுத்து இரிப்பினும் இருள்படும் உலகன்

#62
தூய ஞானத்துக் குழவியும் சொல்லும் மற்று இது போல்
மேய ஓர் பதினாயிரம் கேள்விக்கு விடை எம்
நாயகன் எனை நாடுதிர் அற்புதம் நயந்து_அன்று
ஏய உண்டியால் என்று அதை ஏழைகாள் நினை-மின்

#63
உண்டியால் உலகத்தினுக்கு உரிய சம்பத்தால்
பெண்டிரால் பெரும் புகழ்ச்சியை விரும்பு பேய்க் குணத்தால்
கொண்ட பத்தியின் கோலத்தைக் குவலயம் நகைக்கும்
அண்டர் நாயகன் அருவருப்பார் இதை அறி-மின்

#64
அலகையின் குழாம் சூனியக் கபடிகள் மார்க்கர்
உலக ஞானிகள் மாயசாலகர் கதி ஒழுக்கம்
விலகியோர்களே பத்தி வேடத்தை மேல் போர்ப்பர்
இலகு மெய்க் கிறிஸ்தவர் இதைக் கனவினும் இகழ்வார்

#65
முன்னர் மோகத்தை முனிந்திடாச் சிகேம் எனும் மூடன்
கன்னி காதலால் கடும் பொருள் ஆசையால் கடைத் தோல்
சுன்னமிட்டின ஜனத்தொடு வெட்டுண்டு தொலைந்தது
உன்னலீர்-கொலாம் பத்தி வேடப் பலத்து உரிமை

#66
நெஞ்சு அஞ்சாப் பரிசேயர் வைதவிகள்-பால் நிலவி
நஞ்சம் அன்ன தீப் பொருள் நயந்து உலகத்து நடித்த
வஞ்ச மாய பொய்ப் பத்தி மாகாதிபன் கோபம்
விஞ்சி ஆக்கிய சாபத்தை விளைவித்தது அறி-மின்

#67
அருளை நச்சி மெய்ப் பத்திசெய் அடியரோடு அமர்ந்தும்
பொருளை நச்சியே பொய்ப் பத்தி செய்த அப் புல்லன்
இருளை நச்சி நாணிட்டு இறந்து ஒழிந்தமை என்றும்
தெருளை நச்சியோர் சிந்தையுள் திகழ்வது தெரிதிர்

#68
மித்தை ஆய சம்பத்தினைக் கீர்த்தியை வேட்டு
வித்தகப் புனிதாவியை விலைக்கு உதவு என்னும்
மத்தன் ஆய சீமோன் திரு_தொண்டன் வாக்கு உதித்த
நித்த சாபத்தை அடைந்தமை நீள் நிலம் நிகழ்த்தும்

#69
பத்தி வேடத்துப் பதகரைப் பகைத்து அருவருத்து
நித்த தண்டனை விதிக்கின்ற நிருமல தெய்வம்
எத்தருக்கு அநுகூலர் என்று இசைத்தல் எத்தனையாம்
புத்தியீனம் எத்தனை கொடும் பாதகம் பொல்லீர்

#70
மெய்ப் படும் பத்தியால் நன்மை விளையுமே அன்றிப்
பொய்ப் படும் பத்தியால் நன்மை பொலிந்திடலாகா
செய்ப் படும் பயிர் செழிக்கும் தெள் நீரினால் அன்றி
அப்படும் பலன் தரு பயிர் அவியும் வெந்நீரால்

#71
மிடியன் வேந்த வேடம் தரித்து இரவில் மேம்படுவன்
விடியின் ஊர் அவமதிக்குமால் வேடம் நீத்து உழல
நொடியில் பத்தி வேடத்தர்க்கு மன்னவா நுதலிப்
படியிலே வரும் மதிப்பு அவமதிப்பும் யாம் பார்த்து

#72
ஆவின் தோல் பொதிந்து அழிவுசெய் புலி எனப் பத்தி
மேவு வேடத்தர் உலக போகங்களை மிசைவர்
நாவின் நக்கி இன்புறுத்து உயிர் உண்ணும் நச்சு ஆப் போல்
தீ_வினை நயம் காட்டியே நரகு உய்க்கும் திண்ணம்

#73
அழியும் செல்வம் வேட்டிடு தவ வேடமாம் என்றல்
பழியும் பாவமும் பாழ்த்த பேய்ப் பத்தியும் பழுதும்
இழிவும் மாய அஞ்ஞானமும் ஆம் என எள்ளி
மொழிவரால் அருள் ஞான நூல் முறை உணர் முதியோர்

#74
பத்தி அம் தரு உளத்து எழுந்து அருள் மழை பருகிச்
சத்தியம் தழைத்து ஓங்கி மெய் அற மலர் தாங்கி
உத்தமம் திகழ் கருமமாம் பலன் தொகுத்து உலவா
நித்தியானந்த ஜீவ மாக் கனி தரும் நிலவி

#75
மித்தை அங்குரித்து எழு பத்தி வேடமாம் எட்டி
குத்திரப் பொருள் தழை மல்கிக் கொடு வினை மலர்ந்து
சுத்த அக்கிரமக் கடுக் காய்ப் பலன் தொகுத்து
நித்தியக் கொடு மரணத்தைக் கனிந்திடும் நினை-மின்

#76
கருமம் நன்று எனில் கருமத்தின் பலனும் நன்று ஆகும்
கருமம் தீது எனில் கருமத்தின் பலனும் தீது ஆகும்
நிருமலன் திரு_மறையும் இ நிலத்தவர் அவர்-தம்
கருமம் போல் தக்க பலன் அடைவார் எனக் கழறும்

#77
இன்னவாகப் பூர்வோத்தர சாதனம் எடுத்து
நல் நிலைப்படு நியாய தாட்டாந்தத்தை நாட்டி
அன்னதற்கு அமையத் திருட்டாந்தமும் அடுக்கிப்
பன்னினான் மறை ஆரியன் பூரியர் பதுங்க

#78
சிறந்த பேர்_அருள் பலத்தினால் சத்தியம் திகழ்த்தும்
அறம் திறம்பிடாற்கு எதிர் சொலாது அணில் விட்ட நாய் போல்
மறம் திறம்பிடா நால்வரும் வாய் அடைபட்டுப்
புறம் திரும்பினார் முகம் கரிந்து உள்ளமும் புழுங்கி

#79
ஈண்டு வேதியன் என் அரும் துணைவ இங்கு இழி மண்
பாண்டம் ஆகிய நமக்கு எதிர் ஊமையாய்ப் பதுங்கின்
ஆண்டு தேவ நீதாசனத்து அருகு அழல் சுவாலை
மூண்ட போது இவர் நிலைமை என்னாம் என மொழிந்தான்

#80
விட்டு முந்தினர் நால்வரை இருவரும் விரைந்து
திட்டி வைத்து நூல் வழி பிசகாது செவ் ஏகி
வெட்டவெள்ளிடை ஆய ஓர் மெய் விடாய் ஆற்றி
கிட்டி ஆர்_உணவு அருந்தினர் தேறினர் கிளர்ந்தார்
** கிறிஸ்தவன் கதிவழி கூடிய படலம் முற்றிற்று

@3 சுரங்கப் படலம்

#1
மெய்க் கிறிஸ்தவர்கள் ஆய வேதியர் இருவர் தீமை
கைக்குநர் ஆகித் தூய கதி வழி துருவிச் சென்று
மைக் கரு மனத்து மல்கும் வஞ்சக மடமை ஆதி
பொய்க் குணத் திரளின் ஓங்கும் பொருள் ஆசைத் திடர் வந்து உற்றார்

#2
அத் திடர் ஏறிச் செல்லும் அளவையின் அருகு ஓர் பக்கல்
புத்தெனும் நரகம் காந்த பொறி உடைப் பேழ் வாய்-கொல்லோ
நித்திய நாசம் தொக்கு நிலவு வெம் குகையோ என்னப்
பித்துலகரை வாய்ப் பெய்யும் பெரிய ஓர் பிலத்தைக் கண்டார்

#3
சொன்ன இப் பிலத்தையே பொன் சுரங்கம் என்று உலகம் சொல்லும்
முன்னர் ஓர்சிலர் தாம் செல்லும் முறை நெறி விலகி ஏகி
அந் நிலை அறிவான் கிட்டி அடுத்தனர் அடுக்காமுன்னம்
துன் இடி விழுந்து சாய்ந்து தொலைந்து உயிர் அழிந்தார் அந்தோ

#4
அணித்து ஒரு மனிதன் நின்று ஆங்கு அருள் வழிப் போக்கர்-தம்மைக்
குணித்து இவண் வம்-மின் கொழு நிதிக் குவை ஈண்டு
கணித்து அளவிடுதற்கு ஒவ்வா காண்-மினீர் வம்-மின் வந்து
மணித் திரள் அவாவுக்கு ஏற்ப வாருதிர் வம்-மின் என்பான்

#5
ஆங்கு அவன் நெறியில் செல்லும் அறவரை விளித்து நீவிர்
ஈங்கு அணைந்து உமக்கு வேண்டும் இருநிதித் திரள் கைக் கொள்-மின்
தாங்கு பேர்_இன்ப லோகம் சார்தற்குத் தகவு ஈது அன்றோ
நீங்க_அரும் நிதி நீத்து ஏகும் நிராசை ஓர் புலமைத்து அன்றால்

#6
வடு_இலா வையத்து யாண்டு மன் புருடார்த்தம் மூன்றில்
நடுவணது எய்தும் காலை இரு தலை நலனும் எய்தும்
நடுவணது எய்தான் ஆயின் நண்ணுவன் உலையில் பெய்து ஆண்டு
அடுவது போல் துன்பு என்ற அறவுரை தெருளீர்-கொல்லோ

#7
என்று உளம் மருளக் கூவும் இரும் குரல் செவியின் முட்டி
நன்று அறிவுறு நம்பிக்கை நலம் புரி குரவ ஆண்டு
சென்று யாம் அடுத்து நோக்கித் திருமுதல் சீர்மைத்தாம்-கொல்
ஒன்றும் நின் மதி ஏது என்றான் உத்தமன் உரைப்பதானான்

#8
எம்பி நீ மருளேல் அந்த இரும் பிலத்து இயற்கை தேர்வல்
பம்பிய நாச_மோசப் படுகர் என்று அறிதி யாண்டும்
அம்புவி மானிடங்கள் ஆசைப் பேய் பிடித்துத் தள்ள
வெம்பி வீழ்ந்து இறக்கும் கோடி வேதனை உழக்கும் கோடி

#9
அற நெறி பிடித்தும் சில்லோர் அறி மடம் பூண்டு ஆண்டு ஏகி
உற வரும் நாசத்து உற்றார் உன்னதம் நோக்கிச் செல்லும்
துறவு_உளேம் விலகி ஆண்டு ஓர் அடி இடத் துணிதுமேனும்
திறவிடைக் கவிழ்த்தும் காண்டி சிறிதும் ஓர் ஐயம் இன்றால்

#10
அங்கு நின்று உரக்கக் கூவும் அழிம்பன் இ உலகத்து ஆய
பொங்கு இரும் துரோகம் பூத்த பொருள் ஆசைக் குலத்தில் உள்ளோன்
இங்கு இவன் தாதை யூதாசு எனும் குரு_துரோகி பாட்டன்
எங்கும் கேயாசு என்று ஓதும் எஜமாந_துரோகி ஆமால்

#11
வேதியர் குலத்துக்கு எல்லாம் விக்கினம் விளைக்கும் இந்தக்
காதகன் அமையும் இந்தக் கிடங்கரில் கவிழ்க்க உன்னி
ஆதரித்து அழைக்கின்றானால் அணு எல்லை கடத்தும் ஆயின்
வேதனைப் படுகர் வீழ்வேம் மெய்மை ஈது ஐய ஓர்தி

#12
ஆசைப் பேய் பிடித்த நால்வர் அடுக்கில் இ அழிம்பன் கூற்றால்
நீசப் பாழ் நிதிக் கிடங்கை நேர்ந்து உயிர் மடிவார் என்றற்கு
ஈசத்தும் ஐயம் இன்றால் என்று வற்புறுத்தி நன்கு
பேசிப் பின் விளித்து நின்ற பிசாசனுக்கு ஈது சொன்னான்

#13
விண்டு உயிர்க் கேடு சூழும் வெகு ஜநத் துரோகி என்னும்
கண்டக உனக்கு உன் தந்தை கள்ள யூதாசுக்கு உற்ற
தண்டனை வருக நின் சொல் சார்ந்து உயிர் இழவேம் என்னா
மிண்டனுக்கு உரைத்து மேலே துணையொடும் விரைந்து சென்றான்

#14
அருள் துணை அமைந்த தொண்டர் அகன்று நூல் நெறியில் சென்றார்
திருட்டு வேடத்தர் நால்வர் பொருள் ஆசைத் திடர் உற்று ஏறி
மருட்டுரை கொண்டு கிட்டி மண் இடி விழுந்து அ ஒல்லை
இருட்டு அடர் படுகர் வீழ்ந்தார் என் உற்றார் என்பது ஓரேன்

#15
அவா_இலார்க்கு இல்லாது ஆகும் துன்பம் மற்று அஃது உண்டாயின்
தவாது மேன்மேலும் துன்பம் சாரும் என்று உரைத்த நீதி
உவா_மதி உதித்தலோடும் உள் இருள் இரிந்து சிந்தத்
திவா எனத் தெருண்டு பாதை சென்று வேதியரைக் கண்டேன்

#16
உத்தமர் இருவரும் சென்று உன்னத ராஜ வீதி
வித்தக நெறி செல்வோர்க்கு விழிக்கு அறிகுறியாய் நட்ட
சித்திரச் சிலையைக் கண்டு தீட்டிய எழுத்தை வாசித்து
அத்தகு பொருளை உள்ளி ஆய்ந்து உரையாடலுற்றார்

#17
விப்பிரன் தெருண்டு நம்பி விழிக்கு எதிர் தோன்றிக் காட்சி
இப் புறம் திரும்பி நோக்காது ஏகு எனத் திரும்பி நோக்கி
உப்புத்தூண் ஆன லோத்தின் மனைவியை உள்ளுக என்னாச்
செப்பியது எமை ஆட்கொண்ட திரு_அருள் மாட்சி என்றான்

#18
திரு_அருள் எனக்குத் தந்த தேசிக என்னை யானே
அருவருக்கின்றேன் இம்மட்டு அறிவு_இலாது உளம் மயங்கிப்
பொருவு_அரும் கேட்டுக்கு ஓடிப் புகா வகை தெருட்டாய் என்னில்
ஒருவரும் லோத்து இல்லாள் போல் உப்புத்தூண் ஆதல் திண்ணம்

#19
ஆண்டகை அருளே நின் வாக்கு உருவமாய் அடியனேனை
ஈண்டிய நாச_மோச இருள் சுரங்கத்தின்-நின்று
மீண்டு இனிது உய்யுமாறு விலக்கி ஆதரித்தது எந்தாய்
தூண்டி என் ஜீவ_சாக்ஷி துடிக்கின்றது இன்னும் காண்டி

#20
கற்பனை கடந்த லோத்தின் காதலி ஒருத்தியேயோ
தற்பரற்கு எதிராய் உள்ளம் தருக்கிய கோராக்கு ஆதி
அற்பர் ஓர் இருநூற்றைம்பான் அழிம்பரும் குறிகள் ஆவார்
பொற்புறும் இவற்றை நோக்காப் புந்தியே புதுமைத்து அன்றோ

#21
ஏதம்_இல் பரலோகத்து யாத்திரிகரையே மாற்றிப்
பாதகம் புரியும் இந்தப் படு குண_தோஷி தேமாசு
ஈது எலாம் உணரான்-கொல்லோ எச்சரிப்பு அடையாது என்னே
மா துயர்_கடற்குள் வீழல் மதி-கொலோ கண்ணை மூடி

#22
என்று இவை தெருண்டு தான் தன் ஏழைமை உணர்ந்தும் ஏனோர்
பொன்றிடு மடமை உள்ளிப் பொருமியும் புகன்ற மாற்றம்
நன்று என இதயத்து உள்ளி நம்பிக்கை வதனம் நோக்கி
ஒன்று நீ கேட்டி என்னா மறை_வலான் உரைக்கலுற்றான்

#23
ஆதி நந்தனவனம் போல் அமைவரும் சிறப்பில் வைத்த
கோது_இலா வளம் கொள் சோதோம் குடிகள் நன்று எள்ளிச் செய்த
பாதக வினைக்கு நேர்ந்த படு கனல் மழையை உள்ளி
மேதினி உயுமாறு உய்த்த வியன் அடையாளம் ஈதால்

#24
தெய்வத்தை மதியார் ஆகித் தீ_வினை துணிந்து செய்யும்
மை வைத்த மனத்தார் எல்லாம் மற்றும் இத்தகைய ஆய
மெய் வைத்த குறிகள் கண்டு விரைந்து உளம் திரும்பார் ஆகில்
கை வைத்து நீதித் தண்டம் கனல் சிறைக் கடற்குள் உய்க்கும்

#25
உத்தம தேவ சித்தம் உவப்பொடு தெரிந்துகொள்ளா
அத் திறத்தவர் இன்னார் என்று அறிகிலம் ஆதலாலே
எத்திறத்தவர்க்கும் உண்மை இசைத்தனம் கடனாம் என்றும்
புத்துயிர் அளித்து ஈடேற்றல் புண்ணியப் பகுதி ஆமால்

#26
கதி வழி விலகிச் சென்று அக் கடும் குழி கவிழாது எம்மை
மதி நலன் அளித்துக் காத்த மா தயாபரனே முற்றும்
விதி வழி திகழ்த்திக் காப்பர் வித்தக விரைதி என்னாப்
பதி திரு_நாமம் போற்றித் துதியொடு பரவிச் செல்வார்
** சுரங்கப் படலம் முற்றிற்று

@4 விடாதகண்டப் படலம்

#1
ஞாலம் மீக் கதி வழி நாடி ஏகு நல்
சீல வேதியர் இருவோரும் சில் பகல்
சால வைதிக நலம் தழைத்த தண்ணிய
வாலிய நறு நிழல் வழங்கச் செல்லுவார்

#2
வேறு சில் நாள் ஒரு பாங்கர் வெவ்_வினைத்
தூறு அடர் கானகம் துருவித் தீ விலங்கு
ஊறுசெய்திடும் என உளம் கலங்கியும்
ஆறியும் தேறியும் அருளின் ஏகுவார்

#3
பருவ பேதங்களால் பல வகைப் பிணி
மருவி நின்று உடற்றினும் வருந்திச் சில் பகல்
திரு_அருள் ஆய சஞ்சீவியத் தழை
பெரு வலி அளித்தலின் பெரிது செல்குவார்

#4
கருத்தன் யாத்திரிகரைக் கருதி ஆக்கிய
திரு_தகு சத்திரத்து அணைந்து சிற்சினாள்
அருத்தும் மெய்ஞ்ஞான போனகம் உண்டு ஆவி நல்
மருத்து உறழ் செவ் வழி மகிழ்ந்து நாடுவார்

#5
பொருந்துவர் அரும் தவம் புரிவர் ஆதரம்
விருந்து வந்து ஆர் உணவு அளிப்பர் வெம்மையால்
வருந்துவர் உடன் மனம் மகிழ்வர் மெய் விடாய்த்து
இருந்து இளைப்பாறிப் பின்னே முற்று ஏகுவார்

#6
உறையுளே கதி வழி உண்மையே உறவு
இறை அருள் துணை அறம் இயற்று செய் வினை
மறை மொழி உணவு மன்றாட்டு உறக்கமாத்
துறை அறி சூழ்ச்சியர் துருவி ஏகும் நாள்

#7
உன்னதத்து அநாதி-தொட்டு ஒழுக்கம் மேவியது
இ நிலம் புரப்பதற்கு ஈண்டு உலாவியது
அ நெறி இரக்ஷணை அமைத்த நீரது
செல் நெறி எங்கும் மெய் வளம் செறிப்பது

#8
தூ நலம் பயப்பது சுகிர்தம் உள்ளது
மானவர் உயிர்க்குயிர் ஆய மாட்சியது
ஊனம்_இல் அருள் மறை ஒழுக்கின் மேலது
வானமும் பூமியும் இணைத்த மாண்பது

#9
சத்தியத் தருக் குலம் தழைய ஆர்ந்து இவண்
நித்திய பலன் விளைவிக்கும் நீரது
மித்தையின் விடத் தரு வேரொடும் கெட
இத் தலத்து அற எறிந்து இயங்க வல்லது

#10
கைத்த தீ_வினைக் களை கட்டுக் கால்-தொறும்
மெய்த் தருமப் பயிர் விளைக்கும்பாலது
பித்தளை உயிர்களின் பிறவி நோய் கெடப்
புத்துயிர் அளித்திடும் புதுமை, சான்றது

#11
அண்ணலார் கருணையின் அளவின் ஆயது
வண்ண வான் தூய்மையின் தெளிந்த மாண்பது
நண்ணும் அன்பினில் சுவை நயம் பயப்பது
புண்ணியம் பொலிந்து எனப் பொலியும் பொற்பது

#12
மூழ்குவார் தீ_வினை முருக்குமாறு வந்து
ஊழ் முறை அலை எறிந்து ஒழிக்கல் ஆன்றது
வாழ்வு உள வம்-மின் என்று அழைக்குமாறு போல்
கேழ் கிளர் திரை ஒலி கெழுமும் நீரது

#13
அருந்துவார்க்கு அழல் வினை அவிக்கும் நீரது
திருந்தும் நல் உளக் களி செறிக்கும் தேன் அது
பொருந்து வெம் பசிக்கு அமுது ஆய பொற்பு அது
பெரும் துயர்ப் பிறவி வெம் பிணி மருந்து அது

#14
தாரகத் துருவமாய்த் தரணி மேய இ
நீரகத்து உறு நர ஜீவர் நித்திய
ஏரகத்து உறு குணம் இயைந்து இலங்குவார்
பாரகத்து இயல் குணம் படைத்திடார் அரோ

#15
உலக நீர் ஒழுக்கு எலாம் உயிரைக் காப்பினும்
விலக_அரும் மிருத்துவை விலக்கற்பாலவோ
குலவும் இச் சீவ நீர் கொள்ளுவார் எனின்
இலகும் மெய் நித்திய_ஜீவன் யார்க்குமே

#16
தாகம் இன்றாம் பசி தணியும் சஞ்சல
சோகமும் ரோகமும் தொலையும் நித்திய
போக பூமியின் நலம் பொருந்தும் புல்லிய
தேகமும் புனிதம் ஆம் ஜீவ நீரினே

#17
தா_அரும் இனைய நல் தகைமை சான்றிடு
ஜீவ மா நதி எனும் தெய்வ மாண் நதி
மேவிய தீரத்தை அடுத்து விண் நகர்க்
காவலன் அருள் வழி கதித்தது என்பவே

#18
நதி இரு மருங்கு உறும் நறும் தண் பூம் பொழில்
மதி உயர் சினைத் தலை மறிய ஓங்குதல்
புதிய நீர் பருகு புண்ணிய பலத்தினால்
கதி புகுந்திட எழும் காட்சித்து ஆம் அரோ

#19
பூ அலர் கற்பகப் பொலன் பொதும்பரும்
தா_அரு நல் அறச் சாலிப் பண்ணையும்
காவலன் விரும்பு பூங்காவனங்களும்
ஜீவ நீர் பாய்தலில் செழிப்புற்று ஓங்குமே

#20
ஞால ரக்ஷகன் திரு_உருவை நாடி மெய்ச்
சீலர் கண்ணொடு மனம் தெருண்டு பற்றல் போல்
வாலிய தருக்களை வல்லி சாதகம்
கோலி நாள்_மலரொடு கொளுவித் தோன்றுமால்

#21
மேல் நனி நோக்கிய வியன் தருப் பயன்
மா நிலம் நோக்கிய மரபின் காட்சி-தான்
வான் உற நோக்கிய அடியர் மாண் நடை
பூ நலம் நோக்கிய புதுமை போலுமால்

#22
துற்று இளநீர்க் குலை சுமந்து முற்றும்-மட்டு
உற்ற நெட்டு இலைய தெங்கு ஒருங்கு தாங்குதல்
கொற்றவன் கடை வரை குறிக்கொண்டு அன்பரைப்
பற்று கை நெகிழ்ந்திடாப் பான்மை காட்டுமால்

#23
நறிய முக்கனி நறை நறும் தண் பூ நறை
சிறை அளி முரன்று மொய்த்து அருந்தித் தேக்குறல்
மறையவர் குழீஇத் துதி பகர்ந்து இம்மாநுவேல்
நிறை அருள் நுகர்ந்திடும் நீர்மை காட்டுமால்

#24
தெள்ளு நீர் வாவியில் திகழ்ந்த தெள் நறும்
வள்ள வாய்க் கமலங்கள் மலர்ந்து தோன்றுதல்
விள்_அரும் திரு_அருள் நிறைந்த வித்தக
உள்ளம் மீக் கிளர்ந்து ஒளிர் வதனம் ஒக்குமால்

#25
முதிர் சுவை முக்கனி முதல தீம் கனி
நதி வளம்படுத்த பல் நறும் செழும் பயன்
கதி வழிப் போக்கரை ஊட்டிக் காதலின்
பொதுமையா நுகர்வர் அப் புனித தீரத்தர்

#26
தருமம் ஆர்தரு செழும் சாலி வண் பயன்
அரு மறைச் சுரபி நின்று அளிக்கும் தூய பால்
கரும வான் சுவைக் கரும்பு ஈன்ற கட்டியோடு
இருமையும் நுகர்ந்து தேக்கெறிவர் எங்குமே

#27
பொன் உலகத்து வாழ் புனிதர் சாயையே
இந் நதி தீரத்தின் இரு மருங்கினும்
மன்னு மானிடங்களின் படிவம் வாய்ந்து எனத்
துன்னுவரால் திரிகரண சுத்தராய்

#28
கேவல நகர் புகக் கெழுமு பாதை இச்
சீவகங்கையை அடுத்து இனிய தேன் சொரி
காவகத்திடை செலக் கருதி ஆரியர்
பூ வரு துறக்கமே போலும் ஈது எனா

#29
புண்ணிய நதியின் மான்மியமும் பொற்பு உறு
தண்ணிய நறும் பொழில் சமைவும் தம் அகத்து
எண்ணி மன் வியந்து உரையாடி ஏம்பலோடு
அண்ணலை இறைஞ்சி மன்றாடிப் போயினார்

#30
ஜீவ நீர்க் கங்கையாம் திவ்ய தீர்த்தத்தில்
பாவ நோய் ஒருங்கு அறப் படிவர் பத்தியோடு
ஆவி ஆரோக்கியம் அடைவர் சூடுவர்
பூ அலர் நறும் தொடை புசிப்பர் தீம் கனி

#31
தீர்த்தன் ஓர் அன்பினைச் சிந்தைசெய்துசெய்து
ஆர்த்தியில் போற்றுவர் அவசம் ஆகுவர்
சீர்த்தியைப் புனைந்து உரைசெய்வர் தெய்விக
கீர்த்தனை அகக் களி கிளைப்பப் பாடுவார்

#32
பிறிது ஒரு புலன் விழையாத பெற்றியர்
பொறி நுகர்வன எலாம் புனிதம் ஆதலின்
அறிதுயில் அமர்ந்து இளைப்பாறி ஆவியில்
செறி பரமானந்தம் தேக்குகிற்பரால்

#33
இத் திற நம்பிக்கை இலகு வைதிக
வித்தகர் பல் பகல் விபத்து விக்கினம்
சித்த சஞ்சலம் ஒருசிறிதும் இன்றியே
முத்தி மார்க்கத்திலே முன்னிட்டு ஏகும் நாள்

#34
மன்றல் ஆற்று அணி கரை மருங்கு பல் வளம்
ஒன்றிய பூம் பொழில் ஒருவிச் சேய்மையில்
கன்றிய கடும் சுரம் கனலும் கானிடைச்
சென்றது அக் கதி வழி உளம் திகைக்கவே

#35
கொடிதினில் கொடிது ஆய இக் கொடும் சுடு பாலை
கொடிது எனப்படும் யாவிலும் கொடிது எனத் தேர்ந்து
கொடிதினுக்கு அந்தம் குணித்தது மூதுரைக் கூற்றேல்
கொடிது மற்று இதில் பிறிது எது குவலயப் பரப்பில்

#36
கொள்ளி ஆர் அழல் பரந்தன கொடும் சுரம் குறுகில்
துள்ளி ஆர்_உயிர் துடிக்கும் வாய் நீர் அறச் சுவறும்
உள்ளம் வேம் உதராக்கினி மிகுத்தலின் ஓடிக்
கள்ள மார்க்கத்துப் புகவரும் காலடி கடுகி

#37
பசை அறப் புலந்து உலர்ந்திடு பாழ்ந் தரைப் பரப்பில்
மிசை கரிந்து உகும் நலம் தரு தாவரம் வெந்து
வசை தழைத்து இளிவரவு எனும் கள்ளியே வளரும்
திசை நடுங்கும் அத் தீச் சுரக் கொடும் பெயர் செப்பின்

#38
கண்டுகண்டு மூவாசைப் பேய் பிடித்து அலைக்கழிக்கும்
மண்டு கானல்_நீர் வேட்டுவேட்டு ஆர்_உயிர் மறுகும்
கொண்ட மானத் தீச் சுடச்சுட உளம் கொதிகொதிக்கும்
விண்ட வாய் வரு பழிப் புகை மெய் எலாம் கருக்கும்

#39
பண்டு பல் மணித் திரள் செறி செந்தமிழ்ப் பரவை
மொண்டு கற்பனைக் கவி பொழி முகில் குலம் சிதறி
எண்திசாமுகத்து இரிந்தன இக் கொடும் சுரத்தின்
மண்டு வன் மிடிக் கொழும் கனல் பிழம்பினை மறுகி

#40
உன்னதாதிபன் ஒரு சுதன் உலவிய மேனாள்
சென்னி சாய்க்கவும் இடம் இலை எனக்கு எனத் தெருமந்து
உன்ன_அரும் கடும் துயர் உழந்தனர் எனின் உலகப்
புல் நரங்களுக்கு என்னவாம் இகத்து இடர் புணரின்

#41
மடி எனும் குப்பை மண் திடர் மதில் புடை வளைப்பப்
படியின் மேய துர்_குண கிருத்தியங்களால் படுத்த
குடி இலங்கு பாழ் உறையுள் ஒன்று உளது அவண் குணிக்கில்
கொடிய நித்திய தரித்திரை தனிப் பெரும் கோட்டம்

#42
ஆய வெம் சுரத்தூடு செல் அருள் நெறி அடைந்தார்
தூய வேதியர் இருவரும் திகைத்து உளம் துடித்தார்
மேய செம் பொருள் செல்வத்தை விழுத்தி வெவ் இடர் சால்
தீய நல்குரவு உறில் எவர் திகைத்திடார் ஜெகத்தில்

#43
வெயிலிடைப் பட்ட புழு எனத் துடித்தனர் வெம்பி
அயில் எயிற்று அரா விடம் தலைக் கொண்டு என அயர்ந்தார்
குயிலுறுத்திய மாயமோ என்று உளம் கொதித்தார்
செயலினில் பிறிது இலை எனச் சிந்தனைசெய்வார்

#44
ஆக்கை நீறுபட்டு அழியினும் அருள் நெறி விடாது இங்கு
ஊக்கி முன் உறின் நித்திய ஜீவ நாட்டு உறுவேம்
தீக் கொடும் சுரம் அஞ்சி யாம் திகைத்துப் பின்னிடையில்
மீக் கிளர்ந்து எரிபாதலக் கிடங்கரில் விழுவேம்

#45
பின்னிட்டு ஏகுதல் பிழை முன்னிட்டு ஏகுதல் பெருமான்-
தன் இட்டம் நலமாம் எனச் சமைந்தனர் தக்கோர்
முன்னிட்டு ஆர்_உயிர் முடியினும் முடிவரே அன்றி
வெந்நிட்டு ஏகுவரோ முனைமுகத்து உற்ற வீரர்

#46
வறிய பாலையினூடு மாகாதிபன் உய்த்த
குறி அணுப் பிசகாது நேர் வழி நடை கூடி
மறியும் கானல்_நீர் வயங்கிய வளாகத்தை உருவிப்
பொறி மயங்கி உள் உடைந்து மெய் உணர்வொடு போனார்

#47
தாகம் விஞ்சி நா வறண்டு உதராக்கினி தழைத்தும்
ஆக நொந்து அலசித் துணை விழி குழிந்து ஆழ்ந்தும்
ஏகக் கால் உரம்_இன்றி நின்று இளைத்து அவலித்தும்
சோகமுற்றனர் இடைக்கிடை தரித்திரை சூழல்

#48
இன்னணம் தவித்து இறுவரை காண்கிலர் ஆகி
மன்னி நின்று காலடி பெயர்த்து ஏக ஓர் மார்க்கம்
முன் உறும்-கொல் என்று ஓர் அவாச் சிந்தையுள் முதிரச்
செம் நெறிக்-கணே சென்றனர் தெருமரல் உழந்து

#49
பரிபவச் சுழல் பட்ட பஞ்சு என நெடும் தூரம்
பொரி பரல் படு சுரத்திடைப் போயினர் போம் கால்
கரி புலத்தினுக்கு அயல் உறத் தோற்றுதல் கண்டார்
விரி பசும் பயிர் வளம் கெழு மருத நீர் விபுலம்

#50
கதி வழிக்கு அருகு ஏகும் ஓர் சதி வழி கதித்துப்
பதி புகுத்து அதரோடு சேர் பாவனை தோற்றச்
சதி புகுத்தும் என்று அறிந்திடார் தரித்து அவண் நின்றார்
மதி கெடுத்திட வல்லது வறுமையே அன்றோ

#51
வாட்டமுற்று உயிர் வதங்கிய ஆரியன் மற்று இப்
பாட்டை நல் நெறி சார்ந்து சென்று இறுவரை பரம
நாட்டின் பாதையை அடுப்ப போல் தோற்றுவ நலியும்
காட்டை விட்டு இனிச் சேறும் இக் கவர் வழி என்றான்

#52
மாறு_இல் வேதியன் உரைத்திட நம்பிக்கை மரபில்
தேறுக ஐய இத் தீச் சுரம் வெருவி நேர் திரிந்து
சேறும் ஆயின் இக் கவர் வழி சிறிது சென்று அப்பால்
வேறுபட்டிடின் என்-கொலாய் விளையுமோ என்றான்

#53
நம்பி காண்டி இ நலம் கெழு நானிலப் பரப்பும்
அம்புயத் தட வாவியும் அகன் குளக் கரையும்
பைம் புல் ஆர்ந்த மென் பாதையும் பாலையூடு உருவி
உம்பர் நாடியோர்க்கு உய்த்த பேர்_உதவியே போலும்

#54
ஐய தீங்கு உளவாம் எனக் காண்கிலன் அடைந்த
வெய்ய தீ விடாய் தணிந்து மேல் விரைந்து சேறற்குச்
செய்யதாம் எனச் சீரிய மறை_வலான் செப்ப
மை அகன்ற நல் மனத்து நம்பிக்கையும் மருண்டான்

#55
வறுமையால் மதி நலம் கெடும் அறிவு போம் வாழ்நாள்
குறுமை ஆம் குண_சீலங்கள் குன்றும் மெய் குடிபோம்
சிறுமை மல்கு வெம் தீ_வினை குடிபுகும் ஜெகத்தில்
மறுமை ஆக்கமும் கெடும் எனின் மறம் பிறிது எவனோ

#56
இன்மையில் கொடிது யாது எனின் இன்மையில் கொடியது
இன்மையே எனும் இயற்றமிழ் முதுமொழி இன்னும்
இன்மை என்னும் ஓர் பாவி மற்று இக_பர நலத்தை
இன்மை ஆக்கும் என்று இனிதுற இசைக்குமால் எடுத்து

#57
சாது மார்க்கத்தர் இருவரும் பாலையைத் தணந்தார்
மீது மார்க்கத்தின் அருகு செல் நேர் வழி விரைந்தார்
தீது மார்க்கம் என்று அறிந்திலர் செவ்விது என்று உள்ளிப்
போது மார்க்கத்தின் நலம் புனைந்து உரைத்தனர் போனார்

#58
நனி கனற்று தாபம் கெட நறும் புனல் ஆடி
இனிய போனக பானம் உண்டு இருந்து இளைப்பாறித்
துனி தவிர்ந்து அவண் ஏகுழி முன் உறத் துருவித்
தனி நடக்கும் வீண்நம்பிக்கை-தனைக் கண்டு சார்ந்தார்

#59
உற்ற நம்பிக்கை உரை அகத்து ஊன்றி நின்று உறுத்த
நல் தவன் விரைந்து இ வழி எவ்வயின் நாடும்
சொற்றி என்ன வீண்நம்பிக்கை மற்று இது சுவர்க்கக்
கொற்றவன் திரு_நகரத்துக் கூட்டுவது என்றான்

#60
கேட்டி இங்கு இவன் கிளந்தமை நம்பி யாம் கேடு_இல்
வீட்டு நூல் வழி அருகு உளேம் என்பதை விளங்கக்
காட்டுமால் இனிக் கவல்கிலை என்றனன் கடுகி
மீட்டும் வெம் சிறைப்படுவதைத் தெரிகிலா விருத்தன்

#61
மதி_வலானும் நம்பிக்கையும் மன்னர்_கோன்
விதிவிலக்கை விதந்து உரையாடியே
கதி வழிக்கு அருகாய்ச் சில காவதம்
புதிய பாதையில் போயினர் என்பவே

#62
சுருதி மார்க்கம் திகழ்த்திடு தூச் சுடர்
நிருத வைப்பின் மறைந்திடும் நீர்மை போல்
பிருதிவிக்கு இருள் போக்கிய பெற்றி சால்
பரிதியும் மறைந்தான் குட பால் வரை

#63
துங்கப் பாதை அருகு உறத் தோன்றிய
பங்கப் பாதை பகலொடு பாறிடச்
சங்கைக் கோட்டத் தகுவன் சதி வழி
கங்குல் போதொடு வந்து கலந்தவே

#64
சேண் நகர்ப் பரதேசிகளைப் பிடித்து
ஊண் உவக்கும் நிருதன் உறுத்திய
கோள் நிலைப்படு கொப்பத்துக் குப்புறீஇ
வீண்நம்பிக்கை முன் சென்று விழுந்தனன்

#65
குத்திரப் படு கொப்பத்துக் குப்புறீஇ
மொத்துண்டு ஏங்கிக் கை_கால் முறிபட்டு உயிர்
கைத்து அழுங்கிக் கதறிடு கூக்குரல்
வித்தகர்க்கு வெருட்சி விளைத்ததால்

#66
என்னை என்னை என்று ஏங்கினர் வேதியர்
முன்னர் உற்றவன் மோசப் படு குழி-
தன்னுள் வீழ்ந்து தவிப்புறு சத்தம் என்று
உன்னி நின்று அங்கு உரத்து விளித்தனர்

#67
கத்து துன்பக் கடும் குரல் அன்றி ஓர்
உத்தரம் பிறிது இல் என ஓர்ந்தனர்
அத்த எங்கு உற்றனம் என ஆரண
வித்தகன் உரையாடலன் விம்முவான்

#68
மேக்கு உயர்ந்து உரும் வெள் இடி வீழ்த்து எனக்
கூக்குரல் தொனி உள்ளம் குளித்தலும்
ஆக்கை தம்பித்து அலமரல் எய்தி மேல்
போக்கு முட்டி நின்று உள்ளம் புழுங்குவான்

#69
எங்கு உற்றேன் இஃது எத்தனை துன்_மதி
சிங்க வெம் குகை போலும் தெரியினே
துங்க நூல் நெறிக்கும் அதி தூரமாம்
பொங்கு கார் இருள் கங்குலும் போர்த்ததால்

#70
அழிவு_இலாப் பரலோகம் அடுக்கும் நல்
வழி விடுத்தனன் மன் மதி வாய்மையின்
மொழி தடுத்தனன் பற்றினன் மோசமும்
பழியும் பாவமும் பற்ற இப் பாழ் வழி

#71
என்னையும் கெடுத்து என் உயிர் வான் துணை-
தன்னையும் கெடுத்தேன் தயங்கும் சுடர்
மன்னு விட்டில் அ மாண் ஒளி மாய்த்துத் தன்
இன் உயிர்க்கும் இறுதி விளைத்தல் போல்

#72
இம்மட்டும் எற்கு இரக்ஷண்ய பாதையில்
தம்மட்டில் கிருபைத் துணை தந்தவர்க்கு
எம்மட்டும் நன்றி இன்றி இங்கு எய்தினேன்
அம்மட்டுக்கும் இது எத்தனை அக்ரமம்

#73
தரித்திரச் சுரம் சார்ந்த மெய் நூல் வழி
பிரித்து வந்து இவண் பேதுற்று உயங்குவேன்
பரித்த பாழ் உடல் ஓம்பிப் பர சுகம்
இரித்துவிட்டது இங்கு எத்தனை புன்_மதி

#74
ஜீவ ரக்ஷை திருத்திய தேவர்_கோன்
ஆவலித்து அணைக்கும் கை அகற்றி இக்
கூவலில் கவிழத் துணிந்தேன் கொடும்
பாவம்பாவம் பழிப்பு உறு பாவமால்

#75
மரண பூமி மறிந்த அக் கங்குலுள்
கரணம் ஓய்ந்து உடல் கட்டு_அறு காலையில்
அரணம் ஆகி அளித்த அருள் பரி
புரணம் ஈண்டும் மேல் போர்த்திடுமே-கொலாம்

#76
இலகு நூல் நெறியைப் பிடித்து ஏகிடில்
அலகு_இலாத அருள் துணை வாய்த்திடும்
உலகு ஒழுக்கை உவந்து புறம் செலில்
விலகி நீங்கும் மெய் வித்தகம் என்பரால்

#77
ஆவதேல் தருமாபுரிக்கு ஆர்_அதர்
மேவி வெந்து உகு வேளையில் வேந்து அருள்
கூவி என்னைக் குரவன் உருக் கொடே
ஏவி நல் வழிக்கு ஈட்டியது எவ்வணம்

#78
மேட்டிமைத் திடர் ஏறி விழுந்து அழி
கேட்டினைப் பலவீனத்தின் கேதத்தைக்
காட்டிக் கை விடுக்காது கடை வரை
வீட்டில் உய்ப்பது அன்றோ வித்தக அருள்

#79
ஆதலால் இனிமேலும் அழி மதிப்
பாதை நின்று பதைக்கிலன் யான் எனாப்
போதம் மேவித் தன் புன்மையைக் கைத்து அருள்
நாதன் போற்றி நவிற்றினன் ஈது அரோ

#80
கண்ணினுக்கு என் கருவிழி ஆதி உன்
நிண்ணயச் சொலின் நீர்மை நினைந்திடாது
எண்ணம் இன்றி இயற்றினன் இப் பிழை
புண்ணியன் தொழும்பு என்று பொறுத்தியால்

#81
என்று கூற எந்தாய் உன் பிழை என
ஒன்றும் எண்ணலன் உள் உடைவாய்_அலை
இன்று நேர் விக்கினங்கள் எமக்கு எலாம்
நன்று காட்டுமால் நம்புதி நீ ஏன்றான்

#82
இத்தகும் பொறை எய்திய சற்குண
வித்தகத் துணை தந்த விமலனைச்
சித்தம் உள்ளுற ஏத்தித் தெளிவுறீஇ
உத்தமம் திகழ் வேதியன் ஓதுவான்

#83
சீலம் மல்கு திருத் தகு செவ்வியோய்
மேல் இனிச் செயல் வேறு இலை மீண்டு யாம்
பாலை மேவி நம் பாதையைக் கூடுதல்
சால நன்று எனக் கூறினன் தாபதன்

#84
நன்று இது என்று நம்பிக்கை தெருண்டனன்
சென்ற பாதையில் சிந்தை வைத்துத் திரும்பு
என்று ஓர் வாக்கும் எழுந்தது விண்ணிடை
ஒன்றி உள் உரம் உற்றனர் ஒள்ளியோர்

#85
மோசம் நேரினும் முன் எனக்கு ஆக என்று
ஏசு_இல் ஆரியன் ஏகவும் நம்பிக்கை
ஆசு_இல் உள்ளம் அலசினை ஆர்_இருள்
மூசு கானில் முன் செல்குவன் யான் என்றான்

#86
இன்னவாக இருவரில் நம்பிக்கை
முன்னர் ஏக முறை அறி ஆரியன்
பின்னர் ஏகத் திருமிப் பிரான் வழி-தன்னை
உள்ளித் தடவினர் கான் நெறி

#87
கொடிய மா திகிலும் பல் குழப்பமும்
அடியர் உள்ளத்து அமளியும் போன்ம் எனத்
தடியும் பேர்_இடியும் தலைக்கூடு கார்
படியை மூடிப் பரந்தது அ ஒல்லையே

#88
கரு முகில் கணம் ஈண்டிக் ககன மீது
உரும் இடித்து ஒலி தாக்கலும் உள் உடைந்து
அரு மறைக் கிழவன் இஃது ஆழியான்
தரும கோபம் தலைவரல் காண் என்றான்

#89
படி திகழ்த்திப் பகல்பட மின்னிடும்
கடிய கார் இருள் போர்க்கும் கணத்திடை
இடி இடித்து உரும் வீழ்த்தலின் இன்றொடு
முடியும்-கொல் உலகு என்ன முழங்குமால்

#90
ஊதை மாருதம் பொங்கி உடற்றலின்
பாதவங்கள் முறிந்து பறிந்தன
ஓத நீர் ஒருங்குண்டு உடன் கான்று எனப்
பூதலத்துப் பொழிந்த பெரு மழை

#91
வான் அடர்ந்து புடவி வளைத்து இழி
சோனை மாரி விடாது சொரிந்திடத்
தானம் எங்கும் புதைந்து தலைத்தலை
மேல் நிமிர்ந்து பரந்தது வெள்ளமே

#92
பாரிடக் குழுவாம் எனப் பம்பிய
கார் இருள் பிழம்பும் கரு மேகமும்
பேர்_இடிக் குரலும் பெரு மாரியும்
ஆரியர்க்கு உயிர் அச்சம் விளைத்தவே

#93
உய்யும் ஆறு அரிது என்று உளம் உட்கினர்
செய்யும் ஆறு அறியாது திகைத்தனர்
ஐயகோ என்ற அவமதி உள்ளினர்
வையகத்து நெறியும் மருண்டதால்

#94
வெள்ளம் மல்க வெருண்டு உயிர் மாழ்கினர்
கள்ள மாயப் பொறி செறி கார் இருள்
பள்ளம் எம்மைப் படுக்கும்-கொலோ எனத்
துள்ளி ஆவி துடித்தனர் தூய்மையார்

#95
நிலைபெயர்ந்திடின் நேரும் அபாயம் என்று
உலையும் நெஞ்சினர் மின் ஒளி ஓங்கி இருள்
வலை கிழித்திட வல்லிதின் வந்தனர்
புலை நெறிப்படு உபாதியைப் போக்கியே

#96
ஆசு அகன்ற அரும் தவர் ஆர்_உயிர்
மோசம் நேரும் என்று அஞ்சி முன்னிட்டிடார்
கேசரிப் பகு வாயின் கிடைத்த ஓர்
பாசடைப் புழையூடு உறப் பற்றினார்

#97
வீங்கு கார்_இருள் போர்த்து வெருட்டலில்
தாங்க_அரும் பல துன்பம் சமழ்த்தலில்
ஆங்கு அணைந்து தம் ஆக்கை விடாய்த்தலில்
தூங்கினார் அவர் துஞ்சினராம் என

#98
ஆண்டு வேதியர் சோகித்து அயர்வுழி
ஈண்டு நல் வழி நீங்கல் எளிது அதை
மீண்டு பற்றல் மிகக் கடினம் எனக்
காண்டல் செய்தனன் என்னுள் கவன்று அரோ

#99
அம் தாபதர் ஓர் இருவோரும் அயர்ந்து தூங்கும்
கொந்து ஆர்_இருள் துற்று புழைக்கு அருகாய குன்றில்
சந்தேகதுருக்கம் எனா ஒரு சார்பில் வாழ்வோன்
வெம் தாப விடக் கடு அன்ன விடாதகண்டன்

#100
நெறி தப்பி வரும் பிரயாணரை நேர் அடர்த்து
மறியல் சிறை இட்டு உயிர் வாதை செய் வன்கணாளன்
பொறி புக்கு உழலப் படு தீமை புணர்க்கும் வம்பன்
உறவுற்று அலகைக்கு அழி துன்_மதி ஊட்டுகிற்போன்

#101
நீசம் கையாயின் வளர்த்து ஊட்டும் நிருதி மோச
நாசம் கைவந்த தொழில் ஆரணர் ஆவி உண்ணப்
பாசம் கை வந்த படையாள் படு நீலி ஆய
ஆசங்கை என்னும் அழிம்பிக்கு அடியாம் மணாளன்

#102
இப் பாதக ராக்கதன் நாளும் எழுந்து உலாவி
வெப்பாலையை அஞ்சி மெய் நூல் நெறி விட்டு நீங்கி
அப்பால் உறுவாரை இரும் சிறை ஆக்கியாக்கி
எப்போதும் வதைத்து உயிர் ஊட்டுவன் இல்லவட்கே

#103
நெறி நீத்து இரு வேதியர் உற்றிடும் நீர்மை தேரான்
பொறி யாத்தவரை அடித்து ஆர்_உயிர் போக்கி உண்டு
வெறியாட்டின் மயங்கி நிசாசர வெம் பசாசன்
பிறியாத பெரும் துயில் கூர்ந்தனன் பேய்ச்சியோடும்

#104
அன்னோ நெறி விட்டு அயல் ஏகிய ஆத்தர் ஆனோர்க்கு
என்னோ புரிவாம் என நாடி ஈடேற்ற மார்க்கம்
இன்னே நனி காட்டுவல் என்று எழுந்து ஈண்டுவான் போல்
துன் ஆர் ஒளி வீசி எழுந்தனன் ஜோதி வெய்யோன்

#105
விடிகால் துயில் வீசி எழுந்து விடாதகண்டக்
கொடியோன் உரிமைப் பழனக் கொடு வேலி சூழ்ந்த
படி மீது நடந்து இரை தேர்வுழி ஆங்கு ஒர் பாங்கர்
அடியார் துயிலப்படு நீர்மை கண்டு ஆங்கண் அணைந்தான்

#106
கண்டான் இருவர் கதி மார்க்கம் கடைப்பிடித்த
ஒண் தாபதர் என்பதை உய்த்து உணர்ந்தான் உரப்பித்
திண் தோள் புடைத்தான் சினவிக் கறுவிச் சிரிப்புக்
கொண்டான் அவரும் விழித்தார் இது கூறலுற்றான்

#107
அஞ்சாது என் எல்லை அடிவைத்திடற்கு ஆர்-கொலாம் நீர்
எஞ்சாத சுரத்து எரியின் கொடிது என் சினத் தீ
பஞ்சாக நும்மைத் தகிக்கும் அது பற்றி ஆவி
துஞ்சாத முன்னம் சொலத் தக்கன சொற்றிர் என்றான்

#108
தீயோன் நிலை கண்டு அறவோர் உளம் தீந்து மாயப்
பேயே நிருத உருக் கொண்டு உழல் பெற்றி ஈது என்று
ஆயா நிலைநின்று அசையாது அறிவு ஆக்கை குன்றிச்
சீயோன் மலை நோக்குபு வந்தனம் செம் நெறிக்கே

#109
செல் ஆறு இழுக்கி மருண்டு இ நெறி சேர்ந்து நேற்றை
அல் ஆர் பொழுதில் புயல் வானம் அடர்ந்து பெய்த
நில்லா மழைக்கு ஒல்கி நல் நூல் நெறி நேடி ஏக
ஒல்லாது ஒதுங்கி இவண் உற்றனம் உற்றது என்றார்

#110
என்று இங்ஙனம் ஆரியர் கூறலும் ஏதடா நீர்
நன்று உற்ற பசும் புல் மிதித்து நடந்து உழக்கிக்
குன்று உற்ற எனைக் குணியாது குலாவி இப்பால்
ஒன்றித் துயிலும் விளைத்தீர் எதிர் உத்தரிப்பீர்

#111
அருளைத் துணை ஆக்கினம் என்று எமது ஆணை ஆய
இருளைப் பகைத்தீர் ஒளிக்கு ஓர் பகல் என்பது ஓரீர்
பொருளைக் கெடுத்து என்னையும் நீவிர் புறக்கணித்த
தெருளைக் கெடுத்து உம் உயிர் ஆர்குவல் திண்ணம் ஓர்-மின்

#112
மலை வாரண வாய்க் கரும்பும் புலி வாய்ப் புல்வாயும்
சிலை ஆர் உரல் புக்கு உலக்கைக்கு இடை சேர்ந்தவும் பின்
புலையீர் புறம் போந்திடுமோ உயிர் போக்கு-காறும்
உலை வாய்க் கமடத்தின் மகிழ்ந்து உயிர் ஓம்பு-மின்னே

#113
என் முன் உற ஏகுதிர் என்று எதிரே நடாத்திப்
பின் முன் விலகாது அயல் ஏகினன் பேயன் ஆண்டு
மன் முன் நெறி தப்பிய மா தவர் வாய் அடங்கி
முன் முன் உறச் சென்றனர் ஆர்_அருள் மொய்ம்பு குன்றி

#114
வெம் சீயம் இரண்டிடை ஏகிய வீரமும் கண்டு
அஞ்சாது அழிம்பர்ப் பொருது ஓட்டிய ஆற்றலும் பின்
எஞ்சா மரணத்து இருள் சூழல் புக்கு ஈண்டு மொய்ம்பும்
விஞ்சு ஆரணனை விலகித் தனி விட்ட மாதோ

#115
அந்தோ அளிது இ அற நூல் நெறி ஆக்கம் நீப்பின்
நந்தா ஒரு செல்வமும் நன்மையும் நண்ணுமேயோ
முந்து ஆர்_இருளும் பல தீமையும் மோசமும் பல்
சிந்தாகுலமும் நடுத்தீர்வையும் சேர்வது அல்லால்

#116
நல் ஆறு இகக்கும் மதி_மோசம் ஓர் நச்சு அராவின்
பொல்லா இடத்தில் புகுந்து உள்ளுறப் புத்தி மாழ்கி
எல்லா நலமும் பறிபோயது என்று ஏங்கிஏங்கிச்
சொல்லாடல் இன்றி வறிது ஏகினன் சூழ்ச்சி_மிக்கான்

#117
பம்பிப் பரவும் படு நாசப் பரப்பில்-நின்றும்
இம்பர்க் கரையேற்றி ஈடேற்றம் இசைப்பர் அல்லால்
உம்பர்க்கு அரசன் ஒறுக்கார் என உள்ளியுள்ளி
நம்பிக்கை நம்பி நடந்தான் மறை நண்பனோடே

#118
இவ்வாறு இருவோரை நடாத்தி இகழ்ந்து பேசி
வெவ் வாய் அரக்கன் வழும்பு ஊன் முடை மிக்கு நாறித்
தெவ்வாய் இருள் துற்று சிறைப்புறம் சேர்த்து அ ஒல்லை
அ வாயில் அடைத்து அரண் ஆக்கி அகன்று போனான்

#119
போனான் புலைப் பேய் மனையாட்டி-பால் போந்து என் ஆவிக்கு
ஆனா அமுதே_அனையாய் உனது ஆணை எல்லை
வான் நாட்டு அரசன் தொழும்போர் இரு மாந்தரைக் கண்டு
ஊன் ஆர எண்ணிச் சிறை உய்த்தனன் உற்றது என்றான்

#120
நன்று இங்கு இது நாயக நீ நரர் பக்கல் நாளைச்
சென்று அங்கு அவர் நோக அடித்தி சினந்து தாமே
பொன்றும் வகை ஆய துர்_போதனை போதி என்னாத்
துன்றும் கொலை_பாதக வம்பி துணிந்து சொன்னாள்

#121
தன் காதலி சொல் தலைமேல்கொடு இராத் தணந்து
வெம் கால_தண்டில் கொடும் கோலை விடாதகண்டன்
பொங்கு ஆலம் என்னச் சினவிச் சிறைச்சாலை போந்து
அங்கு ஆரணரை அடித்தான் கைய அலுக்கும்-மட்டும்

#122
தண்டித்து நின்று கெடுவீர் இனிச் சாறுகில்லீர்
பண்டு உற்ற மார்க்கம் படர்வேம் எனும் பாழ் நினைப்பைத்
துண்டித்துவிட்டுத் துணிந்து ஆர்_உயிர் சோருமாறு
தெண்டிக்கொளின் அன்றி இப் பாடு அணுத் தீர்வது இன்றால்

#123
நஞ்சு உண்டு சா-மின் மனமின்று எனில் நாணி கொண்டு
துஞ்சுண்டு போம் இன்னலது ஆவி தொலைக்கும் ஏதி
எஞ்சுண்டது இல்லை உலகத்து இனி ஈறு-காறும்
அஞ்சுண்டு அடியுண்டு உயிர் ஓம்பலின் ஆவது என்னே

#124
வெயில் உற்ற போது பனி பற்று_அற வீயுமாப் போல்
அயிலுற்று அனைய கடும் துன்பம் அடர்ந்த காலை
செயிருற்ற பத்தி நடை பற்று_அறத் தீர்ந்து பின்னும்
உயிர் உற்றனிர் வெட்கம்_இல்லீர் கதி உள்ளுதற்கே

#125
என்று இன்னன பன்னினன் வாய் செறித்து ஏகினான் அ
வன் திண் புய வல் அரக்கன் மனை மாடு நோக்கி
அன்று இன்னல் அடைந்து உயிர் கைத்து அழுது ஆக்கை நொந்து
நின்று அங்கு இனையும் இரு வேதியர் நீர்மை தேர்வாம்

#126
பற்று விடாத கண்டகன் என்னும் படு பாவி
சற்றும் இரக்கம் இன்றி வதைக்கச் சமையோடும்
முற்றும் உழந்தார் ஆக்கை தளர்ந்தார் முனிகில்லார்
சொற்றிலர் ஏதும் தம் பிழை உள்ளித் துரிசு_இல்லார்

#127
துஞ்சு இருள் பூழி நஞ்சு உகும் உண்ணி துரு_நாற்றம்
வெம் சிறை இன்ன சஞ்சலம் ஆய விடம் ஏறி
எஞ்சுவது என் நீர் அஞ்சலிர் என்பார் இலராகப்
பஞ்சரமுற்ற கிள்ளையின் மாழ்கிப் பரிவுற்றார்

#128
வேதனை ஆற்றான் வேதியன் உள்ளம் மிக நொந்து
காதகன் என்னோ ஜீவனை வாங்கக் கருதாது
நோதக விட்டுப் போயினன் யான் இ நுகர் துன்பம்
சாதலின் அன்றித் தீருவதேயோ தகவு உள்ளில்

#129
என்னேஎன்னே மன் அருள் வேண்டி எரிபாலை
பின்னே ஆக முன் நடை கூடிப் பிழையாமே
கொன்னே சோரக் குக்கலின் வன் கோல் அடியுண்டு இங்கு
இன்னே சாவாக் குற்றுயிரொடு நைந்து இறும் மோசம்

#130
என்னோடு அன்றித் தன் உயிர் என்னா எனை நட்ட
இன்னானுக்கும் கேடு விளைத்தேன் இவன் விண்ட
பொன்னே அன்ன நல்_மதி தள்ளிப் பொறி அற்றேன்
அன்னோ இன்னும் நச்சு உயிர் ஓம்பி அழிகின்றேன்

#131
சும்மை விழுத்திச் சிலுவை திகழ்த்தித் துரிசு_இல்லாச்
செம் முறை நல்கி ஏகு என உய்த்த திரியேகர்
மும்மை அருட்கு ஆளாய் இது-காறும் முடுகுற்றது
இம்மை இருட்டுத் தீச் சிறையுள் பட்டிடவேயோ

#132
இத் தரை மீதினில் என் நிகர் பாவியர் எவர் உள்ளார்
பித்துறு பேதை பெயர்த்து அடிவைத்த பெரும் பாவம்
எத்தனையோ கொடிது எத்தனையோ பெரிது இது தேரில்
நித்திய நாசம் அடுத்தது மேல் இனி நினைவு என்னே

#133
நன்றி மறந்தேன் நல் உணர்வு அற்றேன் நவையுற்றேன்
இன் துணைவன் கொண்டு இன்னல் அளக்கரிடை உய்த்தேன்
கன்றிய அரக்கன் வல் அடியுண்டு கரைகின்றேன்
பொன்றலும் இல்லேன் என் செய உள்ளேன் புலையேனே

#134
ஆன்ம சுகத்துக்காய் இக வாழ்வை அற வீசி
ஊன் மலி துன்பை ஊடுருவிப் புக்கு உயர் சீயோன்
வான் மலை முன்றில் வந்தும் விழுந்தேன் மதி_அற்று இக்
கான் முழை அந்தோ நன்று இது நன்று என் கதி நாட்டம்

#135
பூதலம் எள்ளிச் சீயென வையும் புலையேனை
மீதலமும் கொள்ளாது விடுக்கும் விசுவாச
காதகன் நீசன் என்று இனி என்னே கடை ஆய
பாதலம் ஒன்றே கொள்ள இருந்தேன் படு பாவி

#136
பேணாது ஆவி ஊன் உடல் பேணிப் பிழைபட்டேன்
வாழ்நாள் அல்கிற்று ஆர்_இருள் மூடி வதையுண்பேன்
சேண் நாடு எட்டிப் போக விடுத்தேன் திமிர் ஆர்வம்
காணா நின்றேன் புல் உயிர் பொன்றும் கடை காணேன்

#137
என்ன மனம் கைத்து இன்னன பன்னி இடருற்றான்
பொன் நகர் அந்தோ போக்கினன் என்னாப் பொருமுற்றான்
தன் நிகர் இல்லாத் தற்பர ராஜன் சமுகத்துத்
துன்னவும் நாணி மூர்ச்சையடைந்தான் துரிசு_இல்லான்

#138
ஆரியன் இவ்வாறு ஆற்றலன் ஆகி அயர்வு எய்தக்
கூரிய வை வேல் புண்படு நெஞ்சு குளித்து என்னப்
பேர்_இடர் துற்றி ஆவி அழுங்கிப் பெரிது ஏங்கிச்
சீரிய நம்பிக்கையும் உளம் உட்கித் தெருமந்தான்

#139
பின்றையும் வெய்யோன் உற்று உயிர் ஓம்பும் பிணம்_அன்னீர்
இன்று ஒருகாலும் மீட்சி நுமக்கு இங்கு இனி நீரே
கொன்றுகொளில் துன்பு ஒன்றும் இல் என்புக் குவை காண்-மின்
முன்றிலின் என்னாப் போயினன் வைது முனிவோடும்

#140
புந்தி சிறைப்பட்டு ஆர்_அழல் தீண்டிப் புகர் புல்லி
முந்து சனிக்-கண் மாலை அடைந்து முழுதும் தாம்
வெம் துயர் அன்றி வேறு உணவு ஏதும் மிசையாராய்
நைந்துறு காலை வேதியன் இன்ன நவிலுற்றான்

#141
எம்பி நின் சொல் இகந்து உள என் மதிகேடும்
தம்பிரான் நெறி விட்ட சண்டாளமும் சார்ந்து
வெம்பி ஈண்டு விடாதகண்டப் பெயர் மேவிக்
கும்பி வாதை கொடுப்பது இங்கு என் செயக் கூடும்

#142
தேவ கோன் நகர் கிட்டியது என்று செருக்கிப்
பாவகாரி இப் பாழ்ம் சிறைப்பட்டனென் அந்தோ
கோ இளங்குமரேசனைக் கூவிளிக்கொள்ள
நா எழும்புகிலாது உளம் உட்கிடும் நாணி

#143
வல் அரக்கனோடே அமராடிடும் வன்மை
நல் அருள் துணையோடு கைவிட்டது நம்பி
கொல்லவும் கருதான் புரியும் கொடு வாதைக்கு
எல்லை இல்லை இப் பாட்டினுக்கு எத்தனை வைகல்

#144
பெருக்க வாதையோடு ஆத்தும ஜீவியம் பேணி
இருக்கை தன்னிலும் ஆவியை எவ்வகையேனும்
நெருக்கி ஒல்லை விடுத்து இறவு எய்தலும் நேரே
ஒருக்கு சாவும் உவப்பு எனக்கு உண்மை இது ஓர்தி

#145
வள்ளல் உய்த்த அருள் பயனோ வறும் பாலைக்
கொள்ளையில் பறிபோயின உள்ளக் கொதிப்பே
எள்ளி என்னை அடர்த்தலின் என் உயிர் மாய்ப்பான்
உள்ளம் வைத்தனென் ஈது எனது உள்ளுறை என்றான்

#146
கரவு_இலான் உரை காதுறக் கேட்டு நம்பிக்கை
விரவு துன்பிற்கு வெந்நிடலோ நம வீரம்
பரவை வைப்புக்கு இயற்கை பல் மாறுதல் பாராய்
இரவும் உண்டு பகலும் உண்டு ஏன் உனக்கு இன்னல்

#147
சுருதி உத்தி அநுபவம் தூய சன்மார்க்கம்
கருதும் உத்தம பத்தி என்றாய கணக்கில்
ஒருதிறத்தும் ஒவ்வேன் எள்துணை உனக்கேனும்
தருதி ஈண்டு விடை சிறியேன் சில சாற்ற

#148
புரவு நூல் நெறித் தத்துவ போதத்தில் போந்த
கரவு_இலா மெய் அநுபவக் காட்சியை காணும்
உரவு நீர் உலகத்தை உவர்த்துளை உண்மைக்
குரவன் நீ எனக்கு என்றும் இது என் மனக் கொள்கை

#149
ஐய நம் அநுதாப நிலை பரம் ஆயில்
வெய்ய நிர்ப்பந்தம் வேறு இலை இத் துயர் மேவி
நையும் சீவனில் உம் மரணம் மிக நன்றாம்
மெய்யது ஆயினும் விள்ள ஒன்று உள்ளது மேலோய்

#150
மாக மா நகராதிபன் வன் கொலை செய்யாய்
ஆக என்றது அறிந்தும் அறிந்திலரே போல்
சோகம் விஞ்சி அன்னோ தற்கொலைத் தொழில் சூழ்ந்து
சாக எண்ணுதலோ தருமம் தனித் தக்கோய்

#151
ஆக்கையைத் தனி ஆவியை ஆக்கையும் ஆக்கிக்
காக்கையும் உடையார் உளர் நாம் பகை காட்டிப்
போக்கை உள்ளுவதோ புலமைத்து அன்று பொய்யா
வாக்கை உள்ளுதி வாய்த்திடுமோ நித்ய_வாழ்வு

#152
எத்துணைப் பெரும் துன்பம் உனக்கு உளவேயோ
அத்துணைப் பெரும் துன்பமும் எற்கு உளவாக
வித்தகத் திறலோய் சிறியேனினும் வெம்பிச்
சித்தம் நொந்து உயிர் தீர்வல் என்பாய் இது என் சீர்மை

#153
ஒன்றியாய் எதிர்த்து அப்பொல்லியோனையும் ஓட்டி
வென்றி கொண்டு கதித்தனை வெவ் இருள் ஆர்ந்த
பொன்று பெளவம் புகுந்து நெறிக் கொடு போந்தாய்
குன்றுகுன்று என நேரவும் குன்றிலை கொற்றம்

#154
வஞ்ச மாயக் கடைப் புரளிக்கும் வம்புக்கும்
வெம் சிறைக்கும் விலங்குக்கும் வெம் துயருக்கும்
துஞ்சலுக்கும் துளக்கம்_இல்லா மனத் தூயோய்
அஞ்சுகிற்றி-கொலாம் இ அரக்கனுக்கு ஐய

#155
கருதின் எம்மட்டுக்கும் கடுங்கோல் அதிகாரம்
நிருதனுக்குச் செலும் திருவுள்ளம் நினைப்பின்
பிருதுவிக்-கண் நின்றாம் செறுத்து எத்தனை பேரோ
பொருது மற்று இவன் கை அகன்று உய்ந்தனர் பூர்வம்

#156
எந்தை என்னை மறந்து இடர்ப்பட்டனென் இன்னே
முந்தை போல் அரக்கன் இவண் முன்னிடில் யானே
புந்தியோடு எதிரூன்றிப் புறந்தந்துபோகத்
தொந்த யுத்தத்து அடர்க்குவன் நீ மதி சோரேல்

#157
மருளின் எய்தினமால் இ மறக் கொடும் சூழல்
இருளில் நம் பலவீனத்து இயற்கையை ஈசன்
தெருளுறுத்தினர் நித்திய_ஜீவ செல்வத்தை
அருளின் ஆக்கம் அருளும் எனற்கு ஐயம் இன்றால்

#158
அந்தணர்க்கு அருள் இட்டிகையாம் அறவோய் நின்
சிந்தை மற்று இது சீரிது_அன்றால் உயிர் தீய
வெம் தழற்கு இரையாயினும் இப் படு வெட்கம்
நம்-தமைத் தொடரா வகை நாடுதி நல்லோய்

#159
என்று கூறினன் வேதியற்கு ஓர் விகற்பு_இன்றி
நன்று வான் கதிப் பற்று விடாத நம்பிக்கை
மன்றல் வாசகம் கேட்டலும் மா தவன் சிந்தை
ஒன்றி நின்று அங்கு உரத்தது மென்மெல ஊக்கி

#160
திருந்து நம்பிக்கை செம் மொழித் தேனொடு சேர்ந்த
மருந்து எனா நன்கு உணர்ந்து தன் வண் செவி வாயா
அருந்தினான் மறை_வாணன் அகத்து அருள் பூப்ப
வருந்தும் ஆவி தளிர்த்தது மாண் தழை மல்கி

#161
குளிர் நறும் பொழிலூடு குலாய பைம் தென்றல்
வளி அகச் சிறையூடும் அறிந்திட வல்லே
தெளிவு தோன்றித் திருத் தகு வேதியன் சென்றான்
அளி படர்ந்த அருள் கிருபாசனத்து அண்டை

#162
அண்டர் போற்றும் அரசிளங்கோமகன் தாளில்
வண் தமிழ்ச் சுவைத் தேன் மண மாலிகை சூட்டிக்
கண் துளித் திரு_மஞ்சனம் காதலின் ஆட்டித்
தெண்டனிட்டு விண்ணப்பம் இன்னோரன செப்பும்

#163
இன்னவாறு அகத்துத் தேம்பி எழில் மறை_வாணன் தேவ
சந்நிதி அடைந்து போற்றிச் சனி இரா விடி-மட்டாக
மன் இளங்குமரன் செய்ய மலர்_அடி வலிந்து பற்றி
அந் நிலை விடாது நின்றான் அருள் துணை அணுகும்-காறும்

#164
உலகு இருள் அகற்றி வெய்யோன் உதயத்துத் திகழா முன்னம்
அலகு_இலாக் கருணைப் பௌவத்து அருள் கதிர் அலர்ந்து தோன்றி
இலகு ஒளி பரப்பிச் சிந்தை இகல்_அற நூறிப் போர்ப்பப்
பல கலை ஞானி உள்ளம் பத்தியால் சொலித்தது அன்றே

#165
அகத்து ஒளி மலிதலாலே ஆரியன் அயர்தி நீங்கி
மகத்துவ தெய்வ வேந்தை மனம் மொழி ஆர வாழ்த்தி
மிகத் துதி பகர்ந்து போற்றி மெய் எலாம் புளகம் போர்ப்ப
முகத்து எழில் குலவி நம்பி கேள் என மொழிவது ஆனான்

#166
பொங்கு பேர்_இன்ப நாட்டுப் புரவலன் அருளே ஈண்டு
மங்கு ஒளி விளக்கைத் தூண்டி வளர்த்திய வண்ணம் நின் வாய்த்
துங்க வாக்கு உருவாய்த் தோன்றித் துயல்வரு மனச் சந்தேக
வெம் கொடு மயலின்-நின்று மீட்டு எனைப் புரந்தது இன்னே

#167
உஞ்சனம் உஞ்சம் என் இன் உயிர் அனாய் ஒல்லையே இ
வெம் சிறைக் கதவின் வன் தாள் திறந்து யாம் வெளிப்பட்டு உய்வான்
சஞ்சலம் மிகு சந்தேக துருக்கத்தைத் தணந்து போக
எஞ்சல்_இல் கருவி ஆய திறவுகோல் உளது ஒன்று என்-பால்

#168
மற்று அது பரம சீயோன் மலைக்கு அதிபதியே நல்கப்
பெற்றனென் நெறி திறம்பு பீழையால் மனக்கலக்கம்
உற்று யான் உணர்ந்தேன்_அல்லன் ஒள்ளியோய் எழுக என்னாத்
தெற்றெனக் கோலை இட்டான் திறந்தது சிறைக் கபாடம்

#169
திறந்தது சிறைக் கபாடம் செவ்வியோர் இருவர் சிந்தை
அறம் திகழ் ஜீவன் முத்தி அணி நகரத்தின் வாயில்
சிறந்த செம் பொன் கபாடம் திறந்து என உவகை பூப்ப
மறம் திகழ் சிறை ஒரீஇப் பின் மதில் தலைக்கடையைக் கிட்டி

#170
மெய்த் தகு திறவுகோலின் வியன் கடைக் கதவு மேய
சித்த சஞ்சலமும் வீசிச் செவ்வன் நூல் நெறியைச் சேர்வான்
வித்தகர் விரைந்து சென்றார் கதவு ஒலி விழிப்புக்கூட்டப்
பத்தர் கை அகன்றார் என்னாப் பரிந்து உளம் பதைத்தான் வெய்யோன்

#171
ஒல்லையின் எழுந்து பின் சென்று ஓடினான் உரப்பினான் அங்கு
அல்லை நூறு இரவி ஓங்கி அலர்தலின் கையும் காலும்
புல்லிய திமிரால் யாண்டும் போக்கு_அற்று விழுந்தான் பொங்கி
எல்லை_இல் அகங்காரத்தால் ஈடுபட்டு அழிந்தான் இப்பால்

#172
மா தவர் ஜீவ பாதை மருவும்-மட்டாக ஓடிப்
போதரீஇ விடாதகண்டப் புலைமகன் எல்லை தாண்டி
வேத நூல் நெறியில் புக்கு விண் புலத்து அரசன் செய்த
மா தயை உள்ளிப் போற்றி வணங்கினார் வழுத்திப் பல் கால்

#173
வறுமையால் நெறி திறம்பி மானத் தீக் கொளுவி ஆவி
குறுமையுற்று அயரும் காலை கொளு நிதிக் குவை தொக்கார் போல்
தெறும் அழல் பாலை அஞ்சிச் சிறை மறிந்து அயரும் காலை
பொறுமை வேந்து அருள் வந்து உய்ப்பப் பூரித்தார் உள்ளம் தூயோர்

#174
ஒளவியம் அவித்த சிந்தை ஆரியர் ஆறித்தேறிச்
செவ் வழிப் போக்கர் ஈண்டு திகைத்து உளம் மருண்டு நம் போல்
தெவ் வழி பிடித்துத் தீங்கு திளைப்பரால் என்னச் சிந்தித்து
அ வழி விலக்கி உய்ப்பான் ஆய்ந்து மற்று இதனைச் செய்தார்

#175
அரும் சுரம் அஞ்சி நேருக்கு அயல் வழிப்படில் சந்தேக
இரும் சிறைத் துருக்கம் புக்கு ஆண்டு இன்னல் செய் விடாதகண்டப்
பெரும் சழக்கனுக்கு ஆட்பட்டுப் பேதுறவரும் மற்று என்னாக்
கரும் சிலை பொறித்து ஆண்டு ஊன்றிக் கதி வழி காட்டி உய்த்தார்
**விடாதகண்டப் படலம் முற்றிற்று

@5 ஆனந்த சைலப் படலம்

#1
இனையன நிகழ்ந்த பின்னர் எமக்கு இனி நிருதன் செய்யும்
வினை எதும் இன்றாம் இந்த வித்தக ராஜ வீதி-
தனை அவன் அணுகான் என்னாத் தம்மிலே உவந்து பேசி
முனைவனைத் துதித்தார் பல் கால் முறை அறி ஜீவன் முத்தர்

#2
பானமும் இன்றி நால் நாள் பசித்தலில் ஞான ஜீவ
போனகம் திருத்தி உண்டு புத்துயிர் அடைந்து தேவ
ஆனக முழக்கம் கேட்கும் ஆனந்த சைலம் நாடி
வான் நெறி மருவிப் போனார் வான் நெறி மருவி வந்தார்

#3
காவதம் இரண்டு மூன்று கடந்து சென்றிடுதும் ஆயில்
ஜீவ ஆனந்தம் மல்கும் செழும் கிரி சேர்தும் என்னா
ஆவலித்து அறவோர் சிந்தித்து அடுத்தடுத்து ஏக வேகத்
தா_அரு வசந்த மென் கால் தவழ்ந்தது அச் சாரல்-நின்றும்

#4
குளிர் இளம் தென்றல் மேனி குளித்தலும் தளர்வு நீங்கி
இளிவரு ஜென்ம_தோடம் இரிந்து பேர்_இன்பம் மல்க
நளினம் ஒத்து அலர்ந்து செவ்வி நகை முகம் திகழத் தூயர்
களி மகிழ் சிறப்பச் சென்று கனக மால் வரை கண்ணுற்றார்

#5
புது விரை மது மலர் பொதுளிய முது சினை பொழில் உழை தழுவுவ புயல்
வதுவையின் அதிபதி பொருவு_அரு கிருபையின் மலை தலை பொழிவன மழை
அதிர் இடி முழவு எழ வரி முரல் சுருதியின் அகவும் மகளிரின மயில்
மதுரிய நறை குடம் மடி படி உகு பயம் அளவிய விளைவன வயல்

#6
மால் உறு கொடுமுடி மணி அணி என விழும் அருவிகள் பொருவன தடம்
வாலிய திரு_அருள் பொரு பெரு வளம் நனி மருவிய பெரு வர நதி
கோலிய ஜெப_தப விரதரும் வரதரும் வரன்முறை குடைவன துறை
பாலடை மலை மிலை பரிசு என விரசுவ பருவரல் ஒருவு உறைபனி

#7
மழ களிறு எழில் உளை அரி வரி உழுவைகள் உழை விழைவொடு திரி வனம்
தழல் என ஒழுகு ஒளி தழுவிய கொழு முகை தழையொடு கெழுமுவ தரு
கழுதுகள் உழுதுழுது இதழ் அவிழ் செழு மலர் களகள சொரிவன மது
பழுது_அறு கிரியையின் எழு துணர் விரி அலர் பல திசை கமழுவ கடி

#8
அடி முறை இடு தவ மகளிரின் அணி நடை பயிலுவ பிடி மட அனம்
கொடி இடையவர் மொழி இசை வழி பழகுவ குலவிய கிளியொடு குயில்
வடிவு அழகிய விரி சிகை உடை குடி குண மரபு இயல் பழகுவ மயில்
நொடிகுவது எவன் அவர் அமுது உகு கடை விழி நுதியொடு பழகுவ அருள்

#9
ஜக நெறி ஒருவிய தவ நெறி மகளிர்
முகம் என அலருவ நறை கமழ் முளரி
தகவு உடையவர் நகை தவழ்தரு துவர் வாய்
நிகர் என அலருவ நிலவுறு குமுதம்

#10
ஏந்து_இழையவர் ஒளி திகழ் எயிறு எனவே
தேம் தளவு அணி நறு முகை இணர் செறிவ
மாம் தளிர் புரை வடிவினர் கரம் மருளக்
காந்தள மலர் நனி கஞலுவ ககனம்

#11
குண அணி தழுவுவர் குல மட மகளிர்
தணிவு_அரும் அற நெறி தழுவுவர் புருடர்
மணி ஒலி தழுவுவ சினகரம் மறையின்
திணி சுடர் தழுவுவ திகழ்தரும் இதயம்

#12
மதி நலம் அருளுவ மறு_அறு சுருதி
துதி நலம் அருளுவ அடியவர் தொகுதி
நிதி நலம் அருளுவ நிறை தரு சுகிர்தம்
கதி நலம் அருளுவ கடி கமழ் சைலம்

#13
வடிவு அனம் மிடைவன மகளிரின் உலவிக்
கொடி வனம் மிடைவன துடி இடை குலவித்
தடி வனம் மிடைவன எழில் ஒளி தழுவிக்
கடி வனம் மிடைவன சினை மலர் கஞலி

#14
மனை-தொறும் திகழுவ மறை ஒளி விளக்கம்
வினை-தொறும் திகழுவ விதி தரு புனிதம்
சினை-தொறும் திகழுவ கொழும் கனித் திரள்கள்
நனை-தொறும் திகழுவ நறை நுகர் அளிகள்

#15
கொடியன மலை அலது இலை புரி கொடிய
கடியன மலர் அலது இலை உரை கடிய
இடியன முகில் அலது இலை அரசு இடியே
குடியன தவம் அலது இலை கெடு குடியே

#16
குளிப்பர் புண்ணியம் பொலி குருதி அம் தடத்தில்
களிப்பர் நற்கருணையைக் கனிவொடு பருகி
விளிப்பர் தம்முடன் மிசைகுதிர் என விருந்தை
அளிப்பர் தெள் அமுதினை அகம் முகம் மலர்ந்தே

#17
நாடு அகம் மிளிர்வன நனி மிகு தருமம்
நாடு அகம் மிளிர்வன நனி அருள் பொழில் வாய்
நாடகம் மிளிர்வன நனி தொகு மயில்கள்
நாள் தக மிளிர்வன நளிர் இள வனசம்

#18
வான் அரங்கு உதிக்கும் கலை மா மதி
வானரம் குதிக்கும் தரு மாச் சினை
வானர் அங்கம் மடுக்கும் மலர் கடி
வான் அரங்கம் அடுக்கும் மட அனம்

#19
மா தருக் குலம் மல்கும் மலைக் குடி
மாதருக்கு உலவா மனை மாட்சிமை
மா தருக்கு உலகு ஆதிய வஞ்சமும்
மாது அருக்குவர் மாசு_அறும் ஆடவர்

#20
கோட்டு_மாக் கிளை தூங்கும் கொழும் பொழில்
கோட்டு மாக் கிளை தூங்கும் கொழும் கனி
கோட்டு மால் வரை தூங்கும் குளிர் புயல்
கோட்டு மால் வரை தூங்கும் குளிர் மது

#21
மான் மதம் படு மைவரை கோளரி
மான்மதம் படு மை வரை வைப்பின் நம்
மான் மதம் படு மை வரை மா தவர்
மால் மதம்படும் ஐவரை வாட்டுவார்

#22
ஓது இமக் குலம் நாள்_மலர் ஓடையை
ஓதிமக் குலம் ஓகையில் நாடுவ
ஓதிமக் குகை ஒண் தவர் மா மறை
ஓது இமக் குடில் ஊடுற நாடுவார்

#23
ஆய மாது அரண் இவரும் ஆடவர்
ஆய மா தரணி நிதிப் பெட்டியும்
ஆய மாதர் அணிகலப் பேழையும்
ஆய மா தரணீதரன் ஆணையே

#24
சந்த நந்தம் திகழும் தடங்களில்
சந்து அனந்தம் திகழ் தடம் சாரலில்
வந்து அல் நந்து அந்தி மாலையும் காலையும்
வந்தனம் தந்து இறைவனை வாழ்த்துவார்

#25
மலை எலாம் புனிதம் செல்லும் மருங்கு எலாம் மகிழ்ச்சி தெள் நீர்
நிலை நிலை எலாம் கருணை நீத்தம் நெறி எலாம் நீதி மார்க்கம்
கலை எலாம் சுருதி பேச்சுக் கனிவு எலாம் தேவ பாஷை
தலை எலாம் ஆசீர்வாதம் சார்பு எலாம் பசும் பொன் கேணி

#26
மா தவப் பள்ளி-தோறும் வரன்முறைத் தொழும்பர் ஈட்டம்
பாதவப் புரைகள்-தோறும் சுருதி தேர் பனவர் ஈட்டம்
மேதகு கழகம்-தோறும் விழுக் கலை மழவர் ஈட்டம்
போது அலர் பொய்கை-தோறும் புகர்_அறு மகளிர் ஈட்டம்

#27
கள் அவிழ் முல்லை ஈன்ற கடி முகை அனைய மூரல்
பிள்ளைகள் விமல ஞானம் பிறங்கு தீம் குரலினோடு
வள்ளல் எம் இளங்கோ மான் செம் மலர் அடி வழுத்தி ஏத்தும்
தெள்ளிய மதுர கீதம் செவிமடுத்திடும் எப் பாலும்

#28
விருந்து எதிர்கொண்டு நாடி விழுத் தகு மரபின் ஓம்பிப்
பொருந்தும் மெய் அன்பில் தூய போனகம் அளிப்பர் பல்லோர்
வருந்துவோர்க்கு உடையைத் தாங்கும் வண் கையின் உதவி நேர்ந்து
திருந்து நல் மதிகள் சொல்லித் தெருட்டுவார் தம்மில் பல்லோர்

#29
பொருள் எலாம் பொதுமை மேய புகழ் எலாம் இறைமை நாடும்
அருள் எலாம் செல்வம் உள்ளத்து அவா எலாம் மறுமை ஆக்கம்
தெருள் எலாம் ஆன்ம போதம் செயல் எலாம் திரு_தொண்டு என்ப
மருள் எலாம் ஒழித்து நோற்கும் மலைப் பிரதேசத்தோர்க்கே

#30
பெய்வது கருணை மாரி பெருகுவது அன்பின் நீத்தம்
செய்வது தருமப் பைம் கூழ் திருந்துவது உயர் பேர்_இன்பம்
உய்வது ஜீவகோடி ஓங்குவது அமலன் சீர்த்தி
தைவிக பரமானந்த சைலப் பிரதேசத்து என்றும்

#31
வானம் தண்ணுமையா வண்டு பாண் செய மயில்கள் ஆடக்
கானம் தன் அவையாச் செய்ய கமலக் கண் களித்து நோக்கிப்
பூ நந்து நறும் தண் கொன்றைப் பொன் அணிப் பரிசு நல்கி
ஆனந்த சைல வேந்தன் அரசு வீற்றிருப்பன் மாதோ

#32
உரை நிலை கடந்து நின்று உன்னதாதிபனே மேலை
குரை கடல் புவி கூட்டுண்ணக் குவித்த பேர்_இன்பக் கொள்ளை
வரை நிலை தெருண்டு துய்க்கும் மா தவர் உணர்வார் அன்றித்
தரை_உளார் உணர்ந்து இவ் என்று சாற்றலாம் தகைமைத்தேயோ

#33
நித்திய சுக பேர்_இன்ப நில வளம் கெழுமும் ஞான
வித்தக கிரியின் மீது விசும்பு உற மிளிர்ந்த தூய
சத்திய நெறியை நாடித் தணப்பு_இல் பேர்_உவகையோடும்
முத்தி நாட்டு இறையைப் போற்றி முடுகினார் ஜீவன் முத்தர்

#34
செம்மல் தம் உரிமை யாவும் ஜீவ யாத்திரிகர் ஆய
நும்மவாக் குறித்து இங்கு உய்த்தார் நுகர்ந்து பின் சேறும் ஈண்டு
வம்-மினோ வம்-மின் என்னா மங்கலக் கொடிக் கை காட்டி
அ மலை விளிப்பதே போன்று அமைந்தன தெரியக் கண்டார்

#35
மோன நாட்டு அரசன் ஏவல் பணிவிடை முறையில் செய்யும்
வானவர் தொகுதி ஈண்டி வந்துவந்து ஏகக் கண்டார்
சேனை காவலருக்கு எல்லாச் சித்தமும் இணங்கிக் கீழ்ப்பட்டு
ஆனிக கருமம் ஆற்றும் அந்தணர் ஒழுக்கம் கண்டார்

#36
தண் அளி கவிந்து வானம் தரும் அருள் மாரி கண்டார்
புண்ணிய ஜீவ கங்கை பொங்கு நீர்ச் சுனையும் கண்டார்
நண்ணிய திசைகள்-தோறும் நன்மையும் திருவும் நட்பும்
கண்ணிய தருமத்தோடு களி நடம்புரியக் கண்டார்

#37
கொள்ளை வண்டு இமிர் இன் ஓசை கோகிலத் துவனி பூவை
கிள்ளைகள் கிளக்கும் மென் தீம் கிளவி புள் ஒலி மற்று எங்கும்
துள்ளிய மதுர கீதம் செவிப் புலம் தொகுப்ப யாவும்
வள்ளல் வண் புகழாக் கண்டு கேட்டு உளம் மகிழ்வர்-மன்னோ

#38
தீர்த்தனை ஏத்திப் போற்றி ஜெப_தபம் புரியும் செவ்வி
ஆர்த்தியில் குழுமித் தேவாராதனை புரியும் செவ்வி
கீர்த்தனை கிளக்கும் செவ்வி கேட்டு அதிசயித்துக் கிட்டிப்
பார்த்து அருள் செயலை வாழ்த்திப் பரவசர் ஆகி நிற்பார்

#39
வாவி நீராடி வாடா மது மலர் மாலை சூடி
ஓவு_இல் ஆனந்த கீதம் உளம் கனிந்து உருகிப் பாடிக்
கா எலாம் களித்து உலாவிக் கனிந்த முந்திரிகை ஆதி
ஜீவ போனகம் உண்டு உள்ளம் தெருண்டு நூல் நெறி செல் காலை

#40
வித்தகர் இருவர் செல்லும் விழுத் தகு மரபை நாடி
அத் தலத்து அறவோர் ஆய அண்டர் ஓர்சிலர் வந்து ஈண்டி
வைத்த மா நிதி கண்டார் போல் வரன்முறை குழுமி மொய்த்தார்
உத்தம தொழும்பர் அன்றோ உயிர்த் துணை உலகுக்கு அம்மா

#41
குழுமிய ஆயர் உள்ளக் குறிப்பு அவர் வனசம் அன்ன
செழும் முக மலர்ச்சி காட்டத் தெரிந்து கோல் ஊறி நின்று
விழுமிய குணத்தோன் ஆய வேதியன் விரும்பி நோக்கி
உழுவல் அன்போடு மற்று ஈது உசாவுவான் விநயமாக

#42
உன்னத பதவியோ மற்று உலகமோ உம்பர் மேய
பொன் நிலவு உலகம்-தானோ அதனொடு புவியைச் சேர்த்து
நல் நிலைநிறுப்பான் உய்த்த நர தேவ விஞ்சை நாடோ
பன்_அரு நித்திய செல்வக் களஞ்சியப் பகுதி-தானோ

#43
யாது எனத் தேறுகில்லேம் எம்மனோர் கருத்துக்கு எட்டா
மேதகு பொருளும் செல்வப் பெருக்கமும் விமல ஞான
போதகம் தரும் பல் காட்சிப் பொதும்பரும் பிறவும் எல்லாம்
ஆதரிப்பவர் ஆர் யாரது அநுபவம் அறியகில்லேம்

#44
மற்று இது-தான்-கொல் முத்தி மா நகர் புகுத்தும் மார்க்கம்
கொற்றவன் நகருக்கு இன்னும் குறிப்பிடு தூரம் எம்மட்டு
உற்று மேலிடில் துன்பேயோ உதவியோ நிகழ்வது ஓர் பால்
இற்றை நாள் இரவு தங்கி ஏக ஈண்டு அமையும்-கொல்லோ

#45
ஆய இத் திறங்கள் எல்லாம் அறிவுறுமாறு எம் பக்கல்
நேயம் வைத்து உரைக்க என்னா நிகழ்த்தலும் ஆண்டு தொக்க
தூயரில் ஒருவன் கிட்டித் தொல்லையே அகத்துள் அன்பு
மேய நண்பு இன்னோ என்ன விதந்து உரையாடலுற்றான்

#46
ஐயன்மீர் காணும் இந்த ஆனந்த சைலம் என்னும்
தெய்விக கிரியும் சேர்ந்த சிமயமும் செழும் தண் காவும்
மை_அறு பொருளும் தொக்க வளமும் மன் உயிரும் எல்லாம்
வையகம் உய்யக்கொண்ட மாநுவேல் உரிமை தேர்-மின்

#47
இத் தகு புண்ணிய க்ஷேத்திரத்தினுக்காக எம்மான்
மெய்த் திரு_மேனி சிந்தும் குருதியின் விலைப்பால் ஈட்டி
வைத்து முப்பகையை வென்று வளம்படுத்து அமலன் செங்கோல்
உய்த்து இளவரசாய் என்றும் உவந்து வீற்றிருக்கின்றாரால்

#48
பண்டு-தொட்டு இன்று-காறும் பணிவிடைக்கு அமைந்த உண்மைத்
தொண்டரை நிறுவி ராஜ்ய துரைத்தனம் நடத்தாநிற்பர்
அண்டர் கோன் நகரை நாடி அடுக்குநர் வேண்டும் எல்லாம்
உண்டு ஒரு குறையும் இல்லை உத்தரம் எமக்கும் உண்டால்

#49
மெய் வழி பிடித்து நின்றீர் விலகினீர்_அல்லீர் விண் நாட்டு
உய் வழி இதுவே ஆகும் உம்மை இத் தலம் ஈறாகப்
பொய் வழிப் படாது காத்த புண்ணிய மூர்த்தியார் செம்
கை வழி காட்டி இன்னும் கடை வரை காக்கும் அன்றோ

#50
கொற்றவன் நகர்க்கு இ மேலே குறிப்பிடு தூரம் கூறில்
பற்று_உளார்-தமக்குத் தூரம் பற்று_இலார்க்கு அண்மை என்றும்
உற்று உணர்ந்து ஊன்றி நோக்கி ஊக்குவார்க்கு இடர் ஒன்று இன்றாம்
சற்று நூல் நெறி விட்டு ஏகில் சார்ந்திடும் மோச_நாசம்

#51
சாது மார்க்கத்தீர் நும்மைத் தலைப்பெய்த வைகல் வான
தூதரை எதிர்ந்தால் அன்ன சுப தினம் ஆகக் கொண்டேம்
பேதம் இன்று எம்மில் நும்மில் பிறங்கும் இத் தலத்தில் உள்ள
கோது_அறு நிதிகள் நம் மான் குருசு உயர்த்தவர்க்கே அன்றோ

#52
வழி நடந்து இளைத்தீர் சில் நாள் வதிந்து இளைப்பாறித் தேறி
விழி நலம் திகழும் இந்த வியன் கிரி மிசை தொக்கு உள்ள
கழி பெரும் புதுமை ஆய காட்சி கண்டு அறவீர் பின்னர்
எழில் திகழ் முத்தி மார்க்கத்து எய்தும் என்று ஏம்பலோடு

#53
செம் கரம் கொளுவி நண்பீர் சேறுதும் நம் இல் வம்-மின்
இங்கு இனி நிற்றல் வேண்டா என்று அகம் மலர்ந்து கூறிப்
பொங்கு பேர்_அன்பினாலே புது விருந்தினரைக் கூட்டி
மங்கல கீதம் மல்க மனை புகூஉ வரிசை செய்தார்

#54
பல் வகை ஒரு பற்று இல்லாப் பரதேசிகளைக் கொண்டாடி
நல் வரை ஆயர் காட்டும் நண்பு எவாறு ஆயது என்னில்
செல் வழி இகந்த தீய செறுநருக்காக ஜீவன்
நல்கிய அன்பின் வாரி படிந்த மெய் நலத்தது ஆமால்

#55
ஆயரோடு அளவளாவி ஆரியர் இருவர்-தாமும்
நாயகன் கருணை உள்ளி நயந்து இனிது இருந்த காலை
மாயம் ஆர் பிரபஞ்சத்தை வரைந்து நூல் வழிபட்டு உய்ந்த
தூய யாத்திரிகம் கேட்க விருப்பு உளேம் சொல்க என்றார்

#56
நன்று என எழுந்து நின்று நலம் கிளர் மறையோன் தொக்கார்க்கு
ஒன்றும் அஞ்சலி செய்து எம்மை உவப்பொடும் இனிதின் ஏற்றுக்
கன்று காண் கறவை போலக் கசிந்து பாராட்டும் அன்பை
என்றும் உள்ளுதும் கைம்மாறு ஒன்று ஈட்டுதற்கு அருகர்_அல்லேம்

#57
தேன் நந்தும் நறும் தண் சோலை செறி தடம் காவு சூழ்ந்த
ஆனந்த சைலம் ஈது என்று அநுபவத்து உணர்வு பெற்றேம்
ஞானம் தம் மேனி ஆய நம் பிரான் தொழும்பர் நீவிர்-
தான் அந்த உணர்ச்சி எம்முள் தந்தனிர் சான்று எம் உள்ளம்

#58
செல் வழிக்-கண் ஓர் நாளில் காணினும் செவ்வியோர் தாம்
தொல் வழிக் கேண்மை உள்ளம் தோன்ற யாத்திடுவர் என்பது
ஒல்வதே என நும் செய்கை உண்மை வற்புறுத்திற்று இன்னே
நல் வழி தெருட்டும் நல்லீர் நம் செயல் கேண்-மின் என்னா

#59
விளம்பரத் தொனி கேட்டு ஒல்லை வெருண்டதும் குரவன் வாய்மை
உளம் கொளத் தெருட்டி உய்த்த உண்மையும் தவறி நேர்ந்த
பழங்கணும் மோச_நாசப் பரிபவச் சிறையும் எல்லாம்
வளம்படப் புகன்று காத்த கிருபையின் மாண்பும் செப்பி

#60
கும்பிக்கே இரையை நாடும் கொடிய மாயாபுரிக்-கண்
நம்பிக்கை தெருண்டு வந்து நல் வழி பிடித்த ஆறும்
கம்பிக்க உடலும் நெஞ்சும் கரைந்திடக் கரைந்து ஈறாக
நும்பிக்கை கொண்டேம் என்றான் நோம்பு உரு ஆய தக்கோன்

#61
பனவன் வாய் மொழிந்த செம் சொல் பாகினைப் பருகி ஆயர்
அனைவரும் அவசர் ஆகி அனல் மெழுகு ஆக உள்ளம்
கனிவுறீஇ உருகிற்று என்னக் கண்ணில் நீர் கவிழ நின்று
முனைவனை உள்ளியுள்ளி முறைமுறை துதித்தார் பல் கால்

#62
ஈங்கு இவை நிகழ்ந்த பின்னர் இருவர்க்கும் இரவு தங்கப்
பாங்குறும் பள்ளி நல்கி அவரவர் பக்கல் ஏக
ஓங்கிய உவகையோடும் ஒண் தவர் கிறிஸ்து யேசு
பூம் கழல் தொழுது வாழ்த்திக் கண் துயில் பொருந்தினாரால்

#63
குறி உடை இரவு நீங்கக் குண திசை சுடர் வந்து ஊன்ற
முறை அறி ஜீவன் முத்தர் முயங்கிய துயிலை வீசி
நிறை மொழி தெருண்டு செய்யும் நித்திய கருமம் முற்றித்
துறை-தொறும் தொழுது போற்றும் மந்திரத் துழனி கேட்டார்

#64
ஆயிடை அறிஞன் மெய்யன் அநுபவ ஞானி அன்பன்
தூயன் உச்சாகன் தீரன் சுகிர்தன் என்று இவர் வந்து ஈண்டி
ஏய வந்தனம் செய்து ஏற்று அங்கு இருவரை அழைத்தான் அந்த
மீ உயர் சைலத்து உம்பர் வளன் எலாம் விதந்து போம் கால்

#65
மெய்ப் பரிசு உணர்வீர் இந்த வெறும் குவட்டினுக்கு நாமம்
தப்பறை என்பர் ஏறிச் சிலர் இடை தவறி அப்பால்
குப்புறீஇ விழுந்து மாண்டார் குறிக்கொண்டு காண்-மின் என்னாச்
செப்பினர் உற்று நோக்கித் திரும்பி வெய்துயிர்த்தார் செய்யோர்

#66
ஆண்டு ஒரு சாவதானம் எனும் சிமயத்தை அண்மித்
தூண்டி நீர் சேய்மைத்து ஆகத் துணை விழி இழந்து சில்லோர்
மாண்டவர் தலத்து உலாவி மறிந்து வீழ்ந்து அயரும் தன்மை
காண்டிரோ எனவாம் என்ன அவர் நிலை கழறலுற்றார்

#67
நல் நெறி கடைப்பிடித்த நண்புளீர் நீவிர் வந்த
செம் நெறிக் கிடப்பாலாகச் சேரும் ஓர் கடவைப் பாதை
அ நெறி தழுவி இன்னோர் அசுரனாம் விடாதகண்டத்
துன்_நெறிப் பசாசன் உய்த்த சிறையிடைத் துடித்தார் பல் நாள்

#68
எண்_அரும் சிறைப்பட்டோரை இரக்கம்_இல்லா வன் நெஞ்சக்
கண்ணறைப் பாவி அந்தோ கண் இணை பிடுங்கி இந்த
வண்ணமா மரித்தோர் சேரும் மயான வெம் சிறையின் உய்த்தான்
புண்ணிய நெறி கைவிட்ட புலையர்-தம் கதி ஈது அன்றோ

#69
என்று எடுத்தியம்பும் ஏல்வை ஏதம்_இல் இருவர் தம்மில்
ஒன்றிய சிந்தையாக ஒருவரையொருவர் பார்த்து
நின்று உளம் கலங்கி மாழ்கி நெட்டுயிர்ப்பு எறிந்து அ ஆயர்
சென்றுழிச் சென்றார் அங்கு ஓர் செழு மலர்க் காவின் பாங்கர்

#70
அந்தணர் காணுமாறு அ ஆனந்த சைல_வாணர்
பந்தித்த கதவம் நீக்கி உள்ளுறப் பார்-மின் என்ன
விந்தை ஈது என்னோ என்று வேதியர் விரும்பிக் கிட்டி
முந்துறு படுகர் வாயில் முற்றி உள் நோக்கும் காலை

#71
கொந்து இருள் குழுமித் துற்றும் கொழும் புகைப் படலம் கண்டார்
கந்தக நாற்றம் கொண்டார் கதழ்ந்து எரி கதுவிப் பொங்கும்
செம் தழல் கடலின் ஓசை செவிமடுத்திடுவது ஓர்ந்தார்
அந்தரத்து உருமு வீழ்ந்ததாம் என அச்சமுற்றார்

#72
எழு கொழும் தழலில் வீழ்ந்தும் இறுதி காண்கிலராய் ஏங்கிக்
கழி பெரும் கூச்சலிட்டுக் கதறியும் ஆக்கை தீக்குள்
முழுகியும் ஆவி நைந்தும் முறையிட்டும் ஆற்ற மாட்டாது
அழு குரல் ஓசை மல்கி அலறு பேர்_ஒலியும் கேட்டார்

#73
அவ்வயின்-நின்று நீங்கி ஆரியர் அறவோர் ஆய
செவ்வியீர் யாங்கள் கண்ட திறம் வகுத்து உரை-மின் என்னாக்
கைவரு வஞ்ச நெஞ்சக் கள்ள ஞானியர் விரைந்து
வெவ் அழல் நிரையம் எய்த விதித்தது இக் குறுக்கு_பாதை

#74
பல் நெடு நாளா ஜீவ பாதையைப் பிடித்து வந்தும்
துன்னிய நாச_மோசம் சோதனை இடுக்கண் துய்த்தும்
இ நெடு வரை-மட்டாக எட்டியும் இகலுக்கு ஒல்கிப்
பின்னிடைபவரே இந்தப் பிலம் தலைப்படுவர் மாதோ

#75
இப் பிலத் துவாரத்து அன்றே முதல் பிறப்பு இகழ்ந்த ஏழை
விப்பிர யஜமான்-தன்னை விற்ற சாமித் துரோகி
துப்பு உறழ் சுவிசேஷத்தைத் தூஷணம் செய்த பாவி
கைப்பொருள் வெஃகிப் பொய்த்த காதகர் கவிழ்ந்தார் முன்னம்

#76
கனை குரல் பிலத் துவாரம் கள்ள ஞானியரது என்னா
இனையன விளம்பக் கேட்ட மறை_வலான் இது முன் கேட்டேம்
துனை இருள் பிழம்பு காட்டிச் சொற்ற நும் உரை கொண்டு இன்னே
தினை அளவு ஐயம் இன்றித் தெளிந்தனம் என்று செப்பும்

#77
நெறி_அலா நெறியில் செல்லும் நீர்மையும் மடமை அன்றாம்
அறிவன அறியகில்லா அனந்தரும் மடமை அன்றாம்
பிறிது எவன் கற்றும் கேட்டும் பேர்_அறிவு உடையர் ஆகிப்
பொறி வழி உள்ளம் போக்கும் புன்மையே மடமை ஆமால்

#78
மானிட ஆக்கை பெற்றும் மறை நெறி புக்கும் நேர்ந்த
ஈனதை நிந்தை துன்பம் இனையன சகித்தும் தேவ
கோன் அருள் பெற்று ஆனந்தக் குவடு கண்டு அடைந்தும் அந்தோ
மேல் நிலை வழுவி வீழின் மீட்பு உண்டோ பாவம் பாவம்

#79
போக்கு உண்டு துன்புக்கு எல்லாம் புகல் உண்டு விபத்துக்கு எம்மான்
வாக்கு உண்டு நமக்குக் கூட வரும் துணை உண்டு கெஞ்ச
நாக்கு உண்டு வீடு கூடும் நம்பிக்கை உண்டு நல்லீர்
மீக்கொண்டு நுங்கள் ஆசி விடைகொண்டு சேறும் என்றார்

#80
நெறி அறிந்து அவாவை நீக்கி நிருமல வேந்தைக் கிட்டி
முறை அறிந்து அருளை வேண்டி முன்னிட்டு முடுகல் வேண்டும்
இறை திரு_கரமே நும்மை இறு வரை காக்கும் என்று ஆங்கு
அறிய மற்றொன்று உண்டு இன்னும் வம்-மின் என்று அழைத்துப் போனார்

#81
விண் உற மிளிர்ந்து தோன்றும் வித்தகத் தெளிவு என்று ஓதும்
வண்ண வான் சிகரி அண்மி மறை_வலீர் ஆடி ஈது
புண்ணிய நகரைக் காட்டும் புதுமையைக் காண்-மின் என்னாக்
கண்ணடி வாங்கி உற்று நோக்கினர் கருத்து உள் ஊன்றி

#82
விரிதரு பரமாகாய வெளி திகழ் பரம சீயோன்
கிரி மிசை அனந்த கோடி சூரியர் கிளர்ந்தால் என்னப்
பரவிய மகிமை ஓங்கிப் பகிரண்டப் பரப்பை எல்லாம்
தெரிதர விளக்கிக் காட்டும் திவ்வியப் பிழம்பு கண்டார்

#83
மேல் நிமிர்ந்து எழுந்த ஜோதி கற்பக விருக்கம் போலும்
வான ஜோதிகளும் அண்ட கோடியும் மரத்தில் தொக்க
கான் நனை விரி பூம் கொத்துக் காய்_கனி முதல போலும்
வான் உற நிவந்து நிற்கும் மரபினைத் தெரியக் கண்டார்

#84
மொய்த்து எழும் அகண்டாகார முழுச் சுடர்ப் பிழம்பின் முந்து
பத்தியில் தமக்கு நேரே பவித்திர பரமாகாய
வித்தக வெளியைக் கண்டார் விமல சந்நிதியில் உய்க்கும்
நித்திய_ஜீவ வாயில் இது எனும் நினைவுள் கொண்டார்

#85
வானக் கண் கொள்ளாது ஓங்கு வளர் ஒளித் திரளைத் தீர்ந்த
ஞானக் கண்ணடியின் நாடிக் காணவும் நடுங்கி அஞ்சி
ஊனக் கண் வழுக்கிக் கூசி ஒல்லைத் தம் இமையை மூடித்
தானக்-கண் விழுந்து இறைஞ்சித் திசை நோக்கித் தாழ்ந்து சொன்னார்

#86
வாக்கினுக்கு அதீதம் எங்கள் மனத்துக்கும் அதீதம் ஞான
நோக்கினுக்கு அதீதம் நும்-பால் நுவலுதற்கு அதீதம் ஆக
மேக்கு உயர் முகடு முட்ட விளங்கிய பிரபை கண்டேம்
பாக்கிய நகரத்து உள்ள பகுப்பு ஒன்றும் காணுகில்லேம்

#87
அண்ணலார் புனிதம் ஆய அக்கினிப் பிழம்பு ஈது என்கோ
எண்_அரு மகிமை ஜோதி ஈது என்கோ இளங்கோ ஈட்டும்
புண்ணியப் பொலிவே என்கோ பொங்கிய பரமானந்தம்
கண்ணிய நிலையம் என்கோ யாது எனக் கழறுகிற்பேம்

#88
என்று தம் அகத்து எழுந்த உணர்ச்சியை இனிது கூறி
இன்று நீர் செய்த நன்றிக்கு எல்லையும் ஈறும் இன்றால்
வென்றி அம் கிரியீர் ஏக விடை இனித் தருக என்றார்
நன்று என ஒருவன் தீட்டு நல் வழிப் படம் ஒன்று ஈந்தான்

#89
இச்சக மொழியை நம்பாதிரும் என வற்புறுத்தி
எச்சரித்து உரைத்தும் முன்னே எதிர்ப்படும் சோக பூமி
நச்சு உறக்கத்தை நல்கும் நனவொடு கடத்திர் என்றும்
அச்சுதன் துணையை நாடி அருள் நெறி பிடித்திர் என்றும்

#90
ஏனைய பிறவும் தத்தம் அநுபவத்து இயைந்த கூறி
ஆனன மலர்ந்து அன்போடும் ஆசியும் இயம்பி வேண்டும்
போனக பானம் நல்கிப் பொருந்தும் நல் விடையும் ஈந்தார்
ஞான ஆனந்த ஓங்கல் நாடிய அண்டர் மாதோ

#91
ஆசியும் விடையும் பெற்றார் அஞ்சலி செய்தார் பல் கால்
மாசு_அறு மனத்தார் செய்த உதவியும் வருவ காட்டிப்
பேசிய மொழியும் நெஞ்சில் பிறங்கிடத் தீட்டி வைத்தார்
ஈசனை வழுத்தி ஏத்தி ஏகினார் வழியைக் கூடி

#92
வான் உற்று இழிந்து நிலன் உற்ற மரபாம் என்ன மலர்க் காவின்
தேன் உற்று அருவி குதி பாயும் சிகரித் தலை-நின்று இழிந்து கலை
மான் உற்று உலவி விளையாடும் வய வெம் சீய வரைச் சாரல்
கான் உற்று உலவி உரையாடிக் கனிவுற்று அறவோர் கடுகினார்

#93
பொழி தண் தேறல் மகரந்தப்பொடி நாள்_மலரின் விரை அளவிப்
பழகிப்பழகிப் பனி தூவித் தெள் நீர்ச் சுனையில் படிந்து வரும்
குழவித் தென்றல் உடல் அளைந்து குலவச் சிறை வண்டு இசை கிள்ளை
மழலைக் கிளவி செவிமடுப்ப மகிழ்ந்து விரைந்து வழிச் செல்வார்

#94
மயலைத் தவிர்க்கும் திரு_வசனம் வளர் தீ_வினையாம் கொந்தளித்த
புயலைத் தவிர்க்கும் குமரேசன் மேனாள் ஈட்டும் புண்ணியம் போல்
வெயிலைத் தவிர்க்குந் தண்டலையை விரித்து ஆங்காங்கு கடும் பசியின்
இயலைத் தவிர்க்கும் நறும் கனி_காய் இன் தேன் உதவி எதிர் சாரல்

#95
திருந்து கிரியின் புறம் அணைந்து திகழும் தடம் கா யாத்திரை செய்
விருந்தீர் வம்-மின் எனக் கூவி விளித்துக் களித்து முகம் மலர்ந்து ஈது
அருந்தும் பருகும் இளைப்பாறி அகலும் எனக் கையளிக்குமால்
வருந்தினோருக்கு ஆதரம் செய் மாட்சி சால் நல் மனையே போல்

#96
பொன் நாட்டு அரசன் உரிமை எலாம் புனிதத் தொண்டர்-பொருட்டு உள்ளது
என்னாச் சுருதி முறையிடுவது ஈண்டே அறிந்தாம் யாத்திரிகர்
உன்னா முன்னம் உள்ள எலாம் கரவு_இன்று உதவி உபசரிக்கும்
தன்னால் என்னில் இது அன்றோ சரதம் உலகு நிலைபெறற்கே

#97
மாகம் மீது உலாவும் மேக சாலம் மூடும் மாதவி
நாகம் ஆதி தாரும் நீழல் ஆர் நரந்தம் நாறு பூம்
சாகம் ஆர் இறால் கிழிந்து ஒழுக்கு நீர்த் தடம் குலாம்
போக பூமி போலும் நீடு பொங்கரூடு போயினார்

#98
துங்க வாவி நீர் படிந்து சுத்த வத்திரம் தரித்து
எங்கும் ஆய ஈசனைத் துதித்து இறைஞ்சி ஏத்தியே
பொங்கு ஜீவ போனகம் புசித்து எழுந்து தோத்திர
மங்கலம் புனைந்து பாடி நாடுவார் வழிக் கொடே

#99
இரவு கானகத்து ஒர் பக்கல் இலை விரித்து உறங்குவார்
விரவு இரா விடிந்திடாத முன் எழுந்து விமலனைப்
பரவி நின்று ஜீவ பாதை பற்றி நாடி ஏகுவார்
குரவர் நல்கும் நெறி வரைந்த குறி அறிந்து கொள்வரால்

#100
தங்கு வான் உடுக் கணம் தயங்கி அன்ன பொன் மலைப்
பொங்கர் பல் மலர்க் குலம் பொலிந்து இலங்கு சூழல் முற்று
எங்கும் ஓர் இடுக்கண் இன்றி ஏம்பலோடு அ வேதியர்
திங்கள் ஓர் இரண்டு மூன்று செல்ல அங்கு செல்லும் நாள்
**ஆனந்த சைலப் படலம் முற்றிற்று

@6 விசுவாச விளக்கப் படலம்

#1
எல்லை நூல் நெறிக்கு அயலில் பின்வாங்கி என்று இசைக்கும்
புல்லியன்-தனைப் பிணித்து எழு பேய் தொகூஉப் புடைத்து ஈர்த்து
அல் இயல் படுபாதலக் கிடங்கரூடு அமிழ்த்தச்
செல்லுமாறு கண்டு அஞ்சி உள் நடுங்கினார் செய்யோர்

#2
ஆய காலை மெய் ஆரணன் ஆர்_உயிர்த் துணைவ
பேயினால் பிடிபட்ட இப் பதிதன் ஊர் பேசில்
மாய பாதித்தியாபுரி நாமம் பின்வாங்கி
தூய நாட்டம் அற்றால் இருள் மூடிடும் துணிபே

#3
தூய ஆயுதம் பெற்றிலன் தோள் பலம் இல்லன்
நாயகன் துணை இழந்தனன் நாடுவது இனி என்
பேயர் கை அகப்பட்டனன் பேதுறீஇ அந்தோ
ஆய சம்பவம் ஒன்று உளது ஐய என்று அறைவான்

#4
இத் தலத்து நிட்கபடம் என்று இசை பெறும் நகரம்
அத் தலத்து அருள் தனதனாம் அற்பவிஸ்வாசி
வித்தகக் கலை அரதநம் நாணயம் மிளிர் பூண்
பத்திரத்தொடு முத்தி மார்க்கத்திடைப் படர்ந்தான்

#5
அந்தி பட்டு இரவாக அங்கு அடுத்த ஊர் அருகில்
வந்திருந்து இளைப்பாறினன் ஆங்கு அது மரண
சந்தி என்று அறிந்தான்_இலன் துயின்றனன் சாமம்
முந்தினார் கள்வர் பாதகன் முதலிய மூவர்

#6
வெய்ய பாதகர் வரவு அறிந்து இரும் துயில் வீசிப்
பொய்_இல் கேள்வியான் பொருக்கென எழுந்து போய்ப் புலையர்
கை அகன்று உய முடுகினன் ஆயினும் கடுகி
நொய்து பற்றினர் புடைத்தனர் பொருள் பறி நுதலி

#7
தீர்க்கம்_இல்லன் ஆயினும் பிடி விடுத்திலன் சினந்து
மூர்க்கர் கைத்தடியால் தலை மோதலும் மயங்கிப்
பார்க்-கண் வீழ்ந்தனன் கைப் பொருள் கவர்ந்தனர் பதறி
ஊர்க்குள் ஓடினர் வேற்று ஒலி கேட்டலும் உடைந்தே

#8
நாணயம் பறிபோயது நல் அணி எதையும்
காணுகிற்றிலர் கள்வர் என்று அறிந்து பின் தன்னைப்
பேணி வைத்ததை இழந்தமை நினைந்து பேதுற்றும்
சேண் உறும் கதி வழி பிடித்து ஏகினன் தெருண்டு

#9
நாணயம் கெடின் யாவர்க்கும் உலகத்து நடப்புக்
கோணும் அன்றி ஓர் குணம் உறாது என்னும் இக் குறிப்பைக்
காணு கையதன் கைப் பொருள் இழத்தலில் கடுகி
நாண் உழந்து ஐயம் ஏற்று உண்டு நாள் பல கழித்தான்

#10
அணிகலம் பல இருக்கவும் ஐயம் ஏற்று உண்ணத்
துணிவது என் எனச் சொற்றியேல் மற்று அவன் தொகுத்த
மணி அணிக்கு உலகம்-கொலோ விலை வரம்பு அறியும்
குணி மற்று எங்ஙனம் கொடுப்பது அ அணி பிறர் கொள்ள

#11
மெய் அணித் திரள் கள்வர் கைப் படாமையின் மேலாம்
துய்ய ஓகை அங்கு அவற்கு உளதாம் எனத் துணியேல்
ஐய தற்கு உள அணிகலப் புதுமை உற்று அறியா
நொய்ய இ விசுவாசிக்கு அது ஒல்லுமோ நுவலில்

#12
பொருள் இழப்பையே நினைத்து புண்பட்டு உளம் கவன்று
மருளி மானிடர் ஏக்குற்றுப் பலர் உயிர் மாண்டார்
தெருளின் அற்பவிஸ்வாசிக்குத் திரித்துவ தேவ
அருளுற்று உய்த்தது ஜீவனை அதிசயமாக

#13
வறுமை எய்தியும் உணவு இன்றி வருந்தியும் பிறரால்
சிறுமை எய்தியும் துக்க சஞ்சலங்களால் திகைத்தும்
மறுமை ஆக்கத்தைப் பேணினன் அற்பவிஸ்வாசி
வெறுமை ஆக்குமோ விழுத் தகு நோன்பு உளம் விளையில்

#14
என்று வேதியன் நிகழ்த்தலும் இறைஞ்சி நம்பிக்கை
ஒன்று வேண்டுவல் தெருட்டுக என்று ஒள்ளியோய் ஏசா
முன் தனக்கு உள சுதந்தரம் விற்று உண்ட முறை போல்
இன்று சொற்ற மற்று இவன் செயில் என் பிழை என்றான்

#15
அப்பம் எப்படிச் சுடப்பட்டது அதற்குள் தித்திப்பை
எப்படிப் புகச் செலுத்தினர் என்ப போல் எம்பி
தப்புறக் கருதுற்றனை தகவுற விரித்துச்
செப்புவேன் என ஆரியன் வகுத்து இவை தெரிப்பான்

#16
எம்பி கேட்டி நம் பொறி புலன்களுக்கு இலக்கு ஆகாது
அம்பரத்து உள ரகசியப் பொருள் அறிவுறுத்தும்
உம்பர் நாயகன் சுருதி அ உண்மையை நம்பி
இம்பர் நோற்றலே மெய் விசுவாசத்தின் இயற்கை

#17
தெரிவ_அரும் பர ரகசியம் யாது எனச் செப்பில்
புரவு நூல் வழி தெரித்த நம் புராதன சபையின்
குரவரே திரு_வசனத்தைத் தொகுத்து இது குணித்தார்
கரவு_இலாத அ மொழியினைக் கழறுவல் கேள் நீ

#18
வானம் பூமி எல்லா உலகங்களும் வகுத்த
மோனம் ஆகிய சருவ வல்லமை உள முதல்வன்
ஞானமே திரு_மேனியாக் கொண்ட நம் தாதை
தூ நலம் திகழ் வஸ்து உண்டு என்பது என் துணிபு

#19
தந்தை ஆகிய தற்பரற்கு ஒரு சுதன் அருளால்
மந்திராற்புதமாக் கன்னி மரி வயிற்று உதித்தோன்
இந்த மா நிலத்து இரக்ஷணை புதுக்கிய ஈசன்
பொந்தியுப் பிலாத்துழை அரும் பாடுகள் பொறுத்தோன்

#20
மாசு_இலா உயிர்ப்பலி சிலுவையில் உவந்து ஈந்தோன்
பூ சமாதி உற்று உயிர்த்தெழுந்து உன்னதம் புக்கோன்
ஈசன் ஓர் வலப் பாகத்தில் இனிது வீற்றிருப்போன்
ஏசுவாம் கிறிஸ்து இரக்ஷகன் என் விசுவாசம்

#21
மூன்று ஒன்று ஆகிய முழுமுதல் பொருளிலே முளைத்துத்
தோன்றி ஜீவரைத் தூய்மையாய்ப் பக்குவப்படுத்தும்
ஆன்ற பேர்_அருள் ஆவியின் அநுக்கிரகத்தை
ஊன்றி ஏகுவல் ஜீவனுக்கு என் மனத்து உண்மை

#22
தூய ஓர் பொதுத் திருச்சபை தூயரின் ஐக்கியம்
ஆய பாவமன்னிப்பு மீட்டு ஆக்கை பெற்று எழுதல்
ஏயும் நித்திய_ஜீவன் என்று இவை உள என்றே
மாயம் இன்றி என் மனக் கொளக் கிடந்த விஸ்வாசம்

#23
என்று உளம் குவிந்து எவன் இவண் பகிர் முகத்து இசைய
நன்று அறிக்கையிட்டு இறு வரை நல் நெறி பிடித்தே
நின்றிடில் பர கதி புகூஉம் நித்திய_ஜீவன்
ஒன்றி வாழ்குவன் உன்னதத்து ஊழியோடு ஊழி

#24
இத் தகைப் படும் மெய்ச் சுருதித் தொடர் இதுவே
சுத்த சத்திய மெய் விசுவாசத்தின் தொகுதி
உத்தமம் திகழ் ஜீவனுக்கு உறுதுணை உலவா
முத்தி வாயில் உள் புகுத்திடும் முத்திரை லிகிதம்

#25
மரண பாசத்தை மது மண மாலிகை ஆக்கும்
திரணம் ஆக்கிடும் அலகையை உலகத்தைத் திரித்து உள்
கரண சுத்த சற்கருமத்தில் கருத்தினைத் திருத்தும்
புரண புண்ணியற்கு அன்புசெய் புனித விஸ்வாசம்

#26
களங்கம்_அற்ற இச் சிரத்தை நீர்க் கயம் கடம் மதி போல்
உளம் கொளீஇச் சிலர் உழை உரம் கொண்டு நின்று ஓங்கி
விளங்கும் ஓர் சிலர் உள்ளத்து மறைபடூஉம் மெலிந்து
துளங்கி நிற்குமால் இறு வரை உயர் கதி துருவி

#27
ஒரு மகப் பலி ஊட்டிய உரிமையும் அரசின்
திருவை நீத்து இனம் தழுவிய தீரமும் சினத் தீப்
பொரும் அழற்படு சூளையை முடங்கு உளைப் புழையை
வெருவுறாது எதிர் தருக்கிய ஒள்ளிய விறலும்

#28
உலகை உள் உவர்த்து ஓட்டிய உத்தம நிலையும்
அலகையைப் புறம்கண்டு_உளார் ஆற்றலின் மாண்பும்
கலகமிட்டு உயிர் கவிழ்த்த போழ்தத்தும் உள் கலங்காது
இலகு மெய் வயிராக்கியத்து இயற்கையும் இனவும்

#29
தேரின் எம்பி மற்று இ எலாம் தீர்க்க விஸ்வாசத்து
ஆரும் செய்க என்று அறி இனி அற்ப விஸ்வாசச்
சீரும் ஈண்டு எடுத்தியம்புவல் சிறிய ஓர் இடுக்கண்
சாரும் ஆயினும் தளர்ந்திடும் குலைந்து உளம் சாம்பி

#30
பண்டு மா நிலக் கிழமையைப் பத்தியில் படைத்தும்
மண்டு சோதனைக்கு இடைந்து பின் வழுக்கி வீழ் மரபும்
ஒண்_தொடிக்கு எதிரூன்றிடாது உண்மையைப் புரட்டி
அண்டர் நாதனை மறுத்த பேர்_அவலத்தின் அமைவும்

#31
நீதிமான் தினம் எழு முறை விழுந்து எழும் நீர்மை
பேதியாது அருள் மொழி மொழி பெற்றியும் பிறவும்
சாது மார்க்கம் செல் அற்ப விஸ்வாசத்தின் சமைவாம்
ஈது நிற்க ஏசா நிலை தெருள் என இசைப்பான்

#32
மாசு_இலா விசுவாசத்தின் மாண்பு எலாம்
பேசக் கேட்டனை சொற்ற இப் பெற்றி ஓர்
ஈசத்தேனும் உண்டு என்ன எசா விசு
வாசச் செய்கை வகுத்தது உண்டோ மறை

#33
சேட்ட_பாக சுதந்தரச் செவ்வி விற்று
ஊட்டினான் பசிக்கு ஒல்கி இன்னோர் துயர்
வாட்டும் காலைத் தம் ஆத்தும வாழ்வை விற்று
ஈட்டுவார் புலை இன்பத்தைக் கூளி-பால்

#34
ஈசன் ஈந்த உரிமையை எள்துணை
ஆசை இன்றி வரைந்தனன் ஆதலில்
ஏசனுக்கு இறைவன் வயிறே அலால்
பேசு தெய்வம் பிறிது உளதோ சொலாய்

#35
தும்பி மீன் அசுணம் பதங்கம் சுரும்பு
ஐம்புலம் புசித்து ஆர்_உயிர் மாய்தல் போல்
வெம்பி மாந்தரும் ஐம்பொறி வேட்கையுற்று
இம்பரே புதைவார் கதி எண்ணிலார்

#36
சவி உலாம் பரலோக சம்பத்து அகம்
குவிய நல்குரவு ஆகுவர் கோது_இலார்
புவி சுலாய் அழி போகம் புசித்தலே
அவிசுவாசிகள் ஆக்கம் என்று ஊக்குவார்

#37
இன்னருக்குள் ஒருவன் இஸரவேல்
முன்னவன் என முன் நின்று காட்டுமால்
அன்னவன் செயல் அற்ப விஸ்வாசியில்
துன்னுறும் குண_தோடத்தைத் தூக்குவாம்

#38
கையுறும் பொருள் கட்டொடு நீங்கியும்
மெய்யுறும் பல வேதனைக்கு ஒல்கியும்
ஐயம் ஏற்று உண்டு அவமதிப்பு எய்தியும்
உய்யும் நூல் வழி நீத்து அடி உய்த்திடான்

#39
அரிய ஞான அணி மணிப் பூஷணம்
தெரியின் நித்திய ஜீவித நாட்டினுக்கு
உரியவாம் என ஒன்றும் விடுத்திலன்
பெரிது காத்து அவை பேணினன் என்பவே

#40
பீடு சாலும் பிறங்கு அணிப் பேழையை
ஈடு காட்டி இழி சுகம் கொள்ளுதல்
நீடு பேர்_இன்ப நித்திய வாழ்வு ஒரீஇக்
கேடு நாடும் கெடு மதி காண்டியால்

#41
பாவ தோடத்துக்கு அஞ்சிப் பதறியும்
தேவ தொண்டுக்குச் சிந்தை திருந்தியும்
ஆவல் மேலிட்டு அருள் பிரசாதமே
ஜீவனுக்கு அமுதாய் உண்டு தேக்கியும்

#42
எழுதல் ஏகுதல் எய்த்தல் இடறுதல்
விழுதல் உள்ளுதல் விம்முதல் வெம்புதல்
அழுதல் ஏங்குதல் அஞ்சுதல் கெஞ்சுதல்
தொழுதல் ஆற்றி மெய்ச் சொல் நெறி பற்றியும்

#43
வான் நெறிக்-கண் மயங்கியும் தன் பல
வீனம் மிக்கு வழுக்கி இழுக்கியும்
மானதத்து அழுது ஏங்கி மலங்கியும்
தீன ரக்ஷகன் சீர் கண்டு தேறியும்

#44
தம்பிரான் திரு_பாத சரோருகம்
நம்பி முன் உற நாடினன் அன்றி மற்று
இம்பர் உற்ற இடுக்கணுக்கு ஈடு அழிந்து
அம் புவிப் படு கொப்பத்தில் ஆழ்ந்திலன்

#45
வாயசங்கள் பிணம் தினும் வண்டு இனம்
தூய நாள்_மலர்த் தேத் துளி துய்த்திடும்
மாய இன்பம் நுகர்வர் மதி_இலார்
மேய பேர்_இன்பம் நாடுவர் வித்தகர்

#46
நேரும் ஆள் அரவம் என நீத்து அகல்
சோரரைப் புறம்கண்டு துரந்திட
வீரம்_இல்லன் இ வேத விஸ்வாசி என்று
ஓருகின்றனை ஓதுவல் கேட்டியால்

#47
ஆண்டகையன் இகத்து அருளப்பன் வந்து
ஈண்டு பேர்_ஒலி என்று முக் கள்வரும்
மீண்டது அன்றி விறல்_இன்மையால் எனக்
காண்டல் செய்கிலர் கைகலந்து ஏற்றவர்

#48
பெரிது_அன்றால் உரம் பேசுதல் பேசல் போல்
புரிதலே பெரிதாம் இப் புலையரை
இரிதரச் சமராடுவையே-கொல் நீ
தெரிதரும் செரு நேரின் அச் செவ்வி வாய்

#49
காதகப்படு கள்வர் ஓர் மூவரும்
பாதலத்து அதிபன் படைச் சேவகர்
நீதி மார்க்கத்து நின்று வழிப்பறி
ஏதம் செய்யும் இடும்பர் எக்காலுமே

#50
காண்தகும் படுபாதகக் கள்ளுநர்
சேண் தலம் புகு மார்க்கம் சிதைப்பவர்
தீண்டிடாதும் சுடும் கொடும் தீயவர்
மாண்ட அப் பொருள் சூறைசெய் மாற்றலர்

#51
நீச நெஞ்சர் நிட்டூரிகள் நேர் விசு
வாச காதகர் வான் கதி மார்க்கரை
மோசம்போக்கி முழுக் குருடு ஆக்கிடும்
நாசகாலர் நராந்தகராம் இவர்

#52
வேண்டுமாயின் விளிப்பர் பசாசினை
ஆண்டு அடுத்து அவனும் சமராடுவன்
ஈண்டு வேறல் எவர்க்கும் அரிது காண்
ஆண்டகை அருளப்பருக்கே அலால்

#53
இனைய வஞ்சப் பகைவர் வந்து ஈண்டிய
முனைமுகத்து முறிந்து உடைந்தோர்கள் எத்
தனையர் என்று உரையாடுவல் தக்கது அன்று
அனையர்-தம்மை அவமதித்து எ,ள்ளலே

#54
நேரும் கள்ள நிசாசரரைத் தெறும்
தீரர் என்று செம்மாந்து செருக்கி வீண்
வீரியம் புகல் வீம்பர் இன்னோரன
போரில் என்றும் புறக்கொடை ஈவர் காண்

#55
வள்ளல் ஊர் புகு மார்க்கத்து இடைக்கிடை
கள்ளர் தொக்கு அணி கைப்பொருள் ஆதிய
கொள்ளையாடும் குறி உடைத்து ஆதலின்
தெள்ளியோர் செய் திறன் சொலக் கேட்டியால்

#56
வெற்றி கொள் விசுவாசப் பரிசை கைப்
பற்றி ஏனைப் படைக்கலமும் தரித்து
அற்றம் நோக்கி அருள் துணையின் பலம்
முற்றும் நாடி முன் செல்வர் இ மொய்ம்பொடே

#57
வாதனைப்படும் மாரணச் சூழலைக்
காதகப் பகையைப் படு கள்வரைச்
சோதனைத் திரளைக் கொடும் துர்_ஜன
சாதகக் குழுவைச் சமபூமியை

#58
பண்டு இராஜபரிஜநர் ஆய மெய்த்
தொண்டர் வென்று துரந்து கடைப்பிடித்து
அண்டர் கோன் நகரத்தை அடைந்தனர்
விண் தலத்து விபுதர் கொண்டாடவே

#59
மூண்ட வெம் பகை யாவும் முருக்கிட
ஈண்டு-காறும் துணைபுரிந்து எம்பிரான்
ஆண்டு வந்த அருள் செயல் ஆய்தியேல்
வேண்டுமோ ஒரு சான்று இதின் வேறு இனி

#60
என்று மெய் விசுவாசத்து இயல்பு எலாம்
நன்று எடுத்துரையாடி நலம் திகழ்
மன்றல் மா நகரத்து வழிக் கொடு
நின்றிடாது முன் சென்றனர் நீர்மையார்
**விசுவாச விளக்கப் படலம் முற்றிற்று

@7 கார் வண்ணப் படலம்

#1
இவ்வாறாக வைதிக மார்க்கத்து இயல் பேசிச்
செவ்வே சென்றார் செல் நிழலே போல் திரிவு இன்றி
ஒவ்வா வேடத்து ஓர் அறிவீனன் உடன் ஏக
அவ்வாறு ஓராது ஏகினர் சில் நாள் அறவோரே

#2
ஏகுழி முன்னிட்டு ஆங்கு ஒரு சாரே இரு கூறாய்
மாக தலத்துப் பாதை பிரிந்த மரபு உன்னிப்
போகுவது எங்ஙன் மேல் இனி என்னாப் புகல் முட்டி
ஆகுலம் உற்றே நின்று திகைத்தார் அது போழ்தில்

#3
கோலிய பேயோ கார் இருளேயோ கொதிகொள்ளும்
ஆலம் அதேயோ பாதகமோ தீயவை எல்லாம்
சால இருந்தை போல் உரு வாய்ந்து ஓர் தநுவாக
ஞாலம் இசைக்கும் கார்வணன் என்பான் நவை_உள்ளான்

#4
நஞ்சு கலந்த பால் அமிர்தே போல் நயவஞ்சம்
விஞ்ச விளைக்கும் வாய் மொழியாளன் வினை பொல்லான்
நெஞ்சின் இருண்ட மேனி புதைப்பான் நிலவு ஈனும்
கஞ்சுகி போர்த்த கள்வன் அடுத்துக் கரைவானால்

#5
எங்கு செல்குற்றீர் ஏன் இவண் நிற்பீர் எமர் போல்வீர்
சங்கடம் என்-கொல் சாற்றுதிர் ஒல்கல் தகவு அன்றால்
பங்கம்_இலீர் என்று இன் உரையாடிப் பகர்வான் போல்
வெம் கடு நெஞ்சன் வேதியர்-தம்மை வினவும் கால்

#6
மாசு_அறு சுத்த வைதிகர்-தாமும் மதி_வல்லோய்
நாசம் விளைக்கும் தேசம் விடுத்து இ நடை கூடி
ஈசன் நகர்க்குப் போதும் இவற்றின் எது ஞான
தேசிக மார்க்கம் என்று உளம் நாடித் திகைக்கின்றேம்

#7
என்று தெரிக்க இச்சகன் என்னும் இருள்_வண்ணன்
ஒன்றிய நண்பீர் உன்னத வானத்து உயர் ஓங்கல்
மன்றல் நகர்க்கே செல்லுவல் யானும் வழி ஈது
நன்று உடன் வம்-மின் வம்-மின் எனாமுன் நடைகொண்டார்

#8
பொன்னே அன்ன புங்கவர் வேதப் பொறி குன்றி
என்னோ தேராது இன் உரை நச்சி இகல் வெய்யோன்
பின்னே சென்றார் என்னில் யாரே பிரபஞ்சத்து
ஒன்னாரைத் தேர்ந்து ஒல்லை ஒரூஉம் மெய் உரவோரே

#9
அப் புலையன் பின் ஆழ்படு கொப்பம் அறியாமே
குப்புற நாடும் கொல் சின வேழக் குலமே போல்
செப்ப_அரும் வேதச் செம் நெறி விட்டு ஜெகசாலத்
தப்பு வழிப்பட்டு ஆரணர் சென்றார் சதி தேரார்

#10
போயினர் முன்னே காவதம் வஞ்சப் பொறி மல்கிச்
சே ஒளி குன்றிக் கார் இருள் துற்றிச் சிறை-தோறும்
பேய் உழல் பாபத் தூறு அடர் கானில் பிரபஞ்ச
மாய வலைக்குள் ஆகி விழுந்தார் மறையோரே

#11
அவ்வயின் முன் செல் இச்சக வஞ்சன் அறவோர்-தாம்
தெவ் வலையில் சிக்குண்டு தியங்கும் செயல் கண்டான்
எவ்வம் மறைக்கும் போர்வையை வீசி இருள் வண்ண
வெவ்விய மேனி தோன்றிட நின்றான் வெருளுற்றார்

#12
அந்தோ அந்தோ இச்சகம் நச்சி அசுணம் போல்
முந்து ஓராதே மோச வலைக்குள் முழுகுற்ற
சந்தாபத்துக்கு என் செய்தும் என்னாத் தழல் அன்ன
வெம் தாபத்தால் சிந்தையில் நைந்தே மிகை ஓர்வார்

#13
நாயகன் நூலின் நல் நெறி காண்பான் நனி ஆய்வுற்று
ஆயர் அளித்த தூய படம் கொண்டு அறிகில்லேம்
நேயமொடு உய்த்த நல் உரை உள்ளேம் நெறி தப்பி
மாய வலைப்பட்டு ஆர்_உயிர் மாய்வேம் மதி_இல்லேம்

#14
கைப்படு தீபம் கொண்டு கிணற்றில் கவிழ்வார் போல்
மெய்ப்படு ஞான வித்தகம் உற்றும் விழி மூடிப்
பொய்ப்படு வஞ்சப் புல் நெறி புக்குப் புலை மேவி
இப் படு மோசத்து எய்தினம் எவ்வாறு இனி உய்வோம்

#15
பொற்பு உறழ் போர்வை கண்டு மருண்டேம் புலை வாயின்
சற்பனை ஓரேம் பேசிய இன்_சொல் சதுராலே
அற்புத மார்க்க விற்பனமும் போய் அறிவும் போய்க்
கற்பனையாலே கல் பிளவு எய்தக் கரைகின்றேம்

#16
மங்களம் மல்கிய வாள் முகம் வாரிச மலரேனும்
இங்கித வாய் மொழி சந்தன சீதளம் இணையேனும்
சங்கை_அறப் படு துர்_சனருக்கு இருதயம் ஓரில்
வெம் கனலின் சிவை ஆம் எனல் மேலவர் விதி அன்றோ

#17
துன்று இருள் வண்ணன் கொன்று உழல் கூற்றின் துணை உள்ளம்
கன்றிய மாயக் கள்வன் இவன் கை விடுபட்டுப்
பொன் திணி சீயோன் மன்றல் நகர்க்குள் புகுவேம்-கொல்
என்று இவை பன்னி ஆவி தளர்ந்து அங்கு இடை காலை

#18
புண்ணியத் தடம் பூத்த பொன் தாமரை வதனம்
தண் அளிக்கு அரசு இருக்கையாச் சமைந்து உள தடம் கண்
எண்_அரும் சுவைத் தெள் அமுது எழில் திரு_வசனம்
உள் நிலாவும் மெய் அன்பு ஒளி திவள் திரு_உருவம்

#19
அஞ்சல்அஞ்சல் என்று அருள் புரி தருமபயாஸ்தம்
சஞ்சலம் களைந்திட விரைதரு திரு_பாதம்
அஞ்சு காயத்தின் வடுத் திகழ் அவயவக் காட்சி
விஞ்ச வேதியர் விழிக்கு எதிர் தோன்றினர் விமலன்

#20
கண்டுகண்டு இரு கைத்தலம் சென்னியில் கவினத்
தெண்டனிட்டு உளம் கசிந்து அழுது ஏங்கினர் திகைத்தார்
உண்டு-கொல் இனி உய்வு எமக்கு எனப் பிழை உள்ளி
எண் தபோதனர் நாணினர் உரை அவிந்து இருந்தார்

#21
எந்த ஊர் எங்கு செல்குதிர் இருள் படு கானில்
வந்து இ மாய வெவ் வலையிடை மறிந்தது என் வகுத்துச்
சிந்தை உள்ளுறை தெரிபவர் தெரிக்க எனத் தெரித்தான்
முந்தை உற்றவாறு அனைத்தும் சொல் முறை அறி முதியோன்

#22
வேத்திரக் கர வித்தகன் வேதியன் விதந்த
மாத்திரத்து இனி அஞ்சல்-மின் வஞ்ச விச்சகன் வாய்ச்
சூத்திரத்தினும் தூத வேடத்தினும் தூய
பாத்திரன் என மருண்டனிர் இது பரமார்த்தம்

#23
நன்றுநன்று என நாச பாசத்தினை நறுக்கி
ஒன்றி என்னுடன் வம்-மின் என்று ஊர்த்த நூல் நெறியைச்
சென்று கூட்டினர் தெருட்டினர் செல் முறை திகழ்த்தி
நின்று வேதியர்க் கடிந்து இது புரிந்தனர் நிமலன்

#24
மறி திகழ்த்திய ஆனந்த மலைக் குலக் குரவர்
குறி திகழ்த்திய படம் தந்து கொற்றவன் நகர்க்கு
நெறி திகழ்த்திய நீர்மையை மறந்து நீள் வஞ்சப்
பொறி திகழ்த்திய கொடு வலைப் புக்கு உழன்று அயர்ந்தீர்

#25
மண்டலத்து எமராய் எமை வழிபடு மகவாய்த்
தொண்டு பட்டவர்-தம்மை யாம் குறிக்கொண்டு தொடர்ந்து
விண் தலம் புகுத்துவம் இடை விதிவிலக்கு இகப்பின்
தண்டனைப் படுத்துவம் நம ராஜ்ஜிய தருமம்

#26
செப்புமாறு இனி என் எனச் சினக் குறி மல்கிக்
குப்புறுத்தி அங்கு அவர்-தமைக் குணப்படும்-மட்டாத்
துப்பு உறழ்ந்த தம் திரு_கர வேத்திரம் துணிய
விப்பிரர்க்கு உடல் சிவப்புற அடித்து இது விளம்பும்

#27
உளம்திரும்பி மெய்ப் பத்தியோடு ஊர்த்த நூல் நெறியில்
வளம் தரும் திரு_நகரையே குறிக்கொண்டு வாழ்நாள்
அளந்த-மட்டும் நல் அறம் கடைப்பிடி-மின் என்று அன்பில்
கிளந்து செல்க என விடுத்து உடன் கரந்தனர் கிரீசன்

#28
உடை இழந்துழி உதவு தம் கை என வலைப்பட்டு
இடையும் காலை உய்த்து ஈட்டு பேர்_உதவியை எண்ணி
நடை அறிந்த மெய் ஞானியர் நன்றியோடு ஏத்தி
விடை உகந்து பெற்று ஏகினர் மேதகு நெறியில்

#29
ஆயர் செய் நன்றி அறிந்திடா இழி குண அழிம்பும்
மாய இச்சக வாய் மொழி மதித்த பேதைமையும்
தூய பாதையை விலகிய துணிகரச் செயலும்
பேயன் பின்தொடர்ந்து அவன் அடி பிடித்த பொல்லாங்கும்

#30
முற்று பேர்_இடர் மூடிய முறை அறிந்து ஈசன்
உற்று அடுத்து வந்து உயிர் அளித்து உதவிய உரித்தும்
குற்றம்_இல் மதி புகன்று உளம் தெருட்டிய குணமும்
செற்றமோடு அடித்து அருள் புரி திருவுளக் குறிப்பும்

#31
அகத்து மல்கிய ஜீவ வித்து அனைத்தும் நம் ஈசன்
முகத்து மல்கிய அருள் துளி தோய்தலின் முளைத்து
மிகத் தெருண்ட மெய் உணர்ச்சியின் விதந்து உரையாடி
மகத்துவம் புனைந்து ஏத்தினர் வழிக் கொடு போனார்
** கார் வண்ணப் படலம் முற்றிற்று

@8 சோக பூமிப் படலம்

#1
மாக நாயகன் திரு_அருள் துணைமையின் வலத்தான்
மோக இச்சக தேசத்தை முற்றும் விட்டு ஒருவித்து
ஏக தத்துவத் தளர்வினை அசதியைச் செறிக்கும்
சோகபூமி சென்று அடைந்தனர் சுருதி நூல் வலவர்

#2
மன் உயிர்க்கு எலாம் உரிமையே மறுமை யாத்திரிகம்
என்னினும் சிலர் அன்றி மற்று எவரும் இங்கு எய்தார்
பன்னு மால் உறு சோகபூமியின் நலம் பருகா
முன்னரே முடித்திடுவர் அங்கு இடைக்கிடை முறிந்து

#3
இருந்துஇருந்து இடைந்து ஏங்கலும் எழுந்து தள்ளாடி
வருந்தலும் பொறி மயங்கலும் தியங்கலும் மறுகிப்
பெருந்தகைக் குணம் பிறழ்ந்து பேதுறுதலும் பேணி
அருந்தலும் துயில் பொருந்தலும் அ நிலத்து இயற்கை

#4
முதுமை ஆகிய வாடை வந்து உடலிடை முயங்க
மதிமயங்கி வைதிக நடை தளர்ந்து கண் மருண்டு
விதி நிடேதத்து விழிப்பு உறா விதம்-தனை மறந்து
புதுமையாத் துயில் பொருந்தலே அ நிலப் புதுமை

#5
இற்றது ஆகிய படப்பையை வேதியர் எய்தி
மற்று இது ஆனந்த சைலத்து மா தவர் வகுத்துச்
சொற்ற சோக மா நிலம் எனத் தம் உடல் சோகம்
உற்றவாறு கண்டு உணர்ந்தனர் ஆண்டு உற்ற ஒல்லை

#6
துருவி ஏகினர் தூரம் ஓர் சிறிது கண் துஞ்சக்
கருவி ஆய மென் கால் தவழ்ந்து உடலிடைக் கரப்ப
ஒருவு_அரும் துயில் விழித் துணை பொதிதலும் உரவோய்
இருவரும் துயின்று எழுதும் ஓர் கடிகை என்று இசைத்தான்

#7
தூய நம்பிக்கை சொற்ற சொல் அயில் உளம் தொளைப்பக்
காயம் மிக்குற நடுங்கியும் கலங்கியும் கவன்றும்
ஆயர் சொல் திறம் மறந்தனையே-கொலாம் ஐய
மாய நச்சு உறக்கத்தினை வரைதலே மரபாம்

#8
அறம் குலாவும் நல் மதி_வலோய் ஆரணத்து ஔழ்தம்
உறங்கவோ உண்டு தெவிட்டினம் ஓட்டத்தை ஒடுக்கேல்
திறம் குலாவிய பந்தயப் பொருள் நிலை தெரிந்து ஈண்டு
இறங்கு சென்னியை நிமிர்த்து முன் இடுதியால் எம்பி

#9
ஐய கேள் அறம் பொருள் இன்பம் வீடு எனல் ஆய
மெய்யவாம் புருஷார்த்தங்கள் ஒருங்குடன் விலகும்
மையல் கூர் துயில் விளைத்திடு மானிடப் புரையில்
பொய் அளைந்த தீ_வினை எலாம் புதுக் குடி பொருந்தும்

#10
உறக்கமே இக_பர நன்மைக்கு உட்பகை ஆகும்
உறக்கமே சுய முயற்சியை ஒருங்கு அறத் துடைக்கும்
உறக்கமே பகைக்கு ஒரு துணையாய் உயிர் ஒழிக்கும்
உறக்கமே வறுமைக்கு எலாம் காரணம் உலகில்

#11
இனைய ஆதலின் எம்பி நீ கண் முகிழ்த்து உறங்க
நினையல் நித்திரை சத்துரு எனும் புவி நீதி
முனைவன் நல்கிய கலிக்கம் ஒன்று உளது அதை முடுகி
வனைவல் என்று இரு விழியினும் தீட்டினான் மறையோன்

#12
சிறக்கும் நல் மருந்து உதவலும் நம்பிக்கை தெருண்டான்
உறக்கம் காதம் போய் ஒளித்தது அங்கு ஓர் இருவோரும்
துறக்கம் கிட்டியதாம் எனத் தூ நெறி நடந்து
மறக்கொணாத் திரு_வாக்கு எடுத்துரைத்தனர் வருவார்

#13
ஆய காலை மாயாபுரிச் சந்தையில் அமர்ந்து
தீய கொண்டு விற்று ஊதியம் திரட்டும் நீ தெருண்டு
தூய யாத்திரை செய மனம் துணிந்து ஒருப்படற்கு
மேய காரணம் தெரிக்க என நம்பிக்கை விரிப்பான்

#14
உய் வழித் திறம் தெருட்டியும் உதவிசெய்து அளித்தும்
தெய்வ பத்தியில் வளர்த்து நல் வழி விடில் சினந்தும்
மெய் வழித் துணை ஆகியும் புரந்தனை மேலோய்
ஐ வகைப் பெரும் குரவனும் நீ எனக்கு அத்த

#15
கண் துயின்றிடாக் கலிங்கம் இட்டு அருள் வழிக் காத்துக்
கொண்டு அணைந்தனை இன்னும் நீ குறிக்கொண்டு கோமான்
விண் தலம் புகு-காறும் என் காப்பது உன் வேலை
தொண்டனேன் செய் கைம்மாறு உனக்கு உண்டு-கொல் துணியில்

#16
ஈது நிற்க யான் இ நெறி பிடித்த காரணம் என்
ஓதுக என்றனை இத் திறம் உணர்ந்து உரையாடிப்
போதுவேம் எனில் துயில் எமைத் தணந்து பின் போகும்
சாது மார்க்கத்துக்கு அடுத்ததாம் கேள் எனச் சாற்றும்

#17
சற்பனைக்கு எலாம் உறையுள் மாயாபுரிச் சந்தை
விற்பனைப் பொருள் யாவையும் மாயமாம் விரும்பிக்
கற்பனைப் பொருள் ஈட்டியோர் யாவரும் கவிழ்ந்தார்
நிற்பது அன்று இந்த வாழ்வு எனும் நிண்ணயம் தெரிந்தேன்

#18
நின்னில் தோன்று சன்மார்க்கத்தின் நீதி நிண்ணயமும்
பொன்னில் தோன்றிய மெய் விசுவாசத்தின் பொலிவும்
என்னில் தோன்றிய உணர்ச்சியில் பதிந்தன எந்தாய்
முன்னில் தோன்றிய ஆடியில் தோன்றிய முகம் போல்

#19
குத்திரக் குழு ஈண்டி வெம் கொலைக்களப்படுத்திச்
சித்திரக் கொலை செயப்பட்ட தீர்க்க விஸ்வாசி
பத்தி மெய் வயிராகத்தைப் பவித்திரச் செயலை
வித்தகக் கலை ஞானத்தைக் கண்டு உளம் வெருண்டேன்

#20
உண்டு எனப்படும் மெய் விசுவாசத்தின் உரத்தைக்
கண்டு கேட்டு உளம் கவன்றதும் வெருண்டதும் காண்டி
அண்டர் நாயகன் தொழும்பனாய் அவித்தையைப் போக்கிப்
பண்டு நல் நெறி பற்றி யான் படர்தற்கு மூலம்

#21
பாவி என்று உளம் கவன்றனன் முடிவு உன்னிப் பயம் கொண்டு
ஆவி நைந்தனன் ஆயினும் அகத்துள் அங்குரித்து
வீவு_இலாது எழும் உணர்வினை மென்மெலப் புதைப்பான்
ஆவலுற்று இரா_பகல் எலாம் முயன்றனன் அறவோய்

#22
நம்பன் ஆவி நின்று உளத்திடைப் பொருத்து நல் ஒளியை
எம்பி நீ அவித்திட முயன்றது என் என்று இசைத்தி
இம்பரே எனை ஆட்கொள என் உளத்து இறுத்த
உம்பர் நாயகன் கிருபை என்று உணர்ந்திடா மடமை

#23
முற்றும் பாவத்தில் முயங்கிய முயக்கம்_விட்டிடாமை
உற்று அடைந்த தீத் தோழரை ஒருவுகில்லாமை
துற்று பாவத்தின் சுமை அணுத்துணையும் தோன்றாமை
இற்று எலாம் மதியீனமும் காரணம் எந்தாய்

#24
ஜெகத்து மெய் நிழல் புதைத்திட முயல்பவர் திறம் போல்
அகத்து மெய் ஒளி அவிக்குமாறு அற முயன்றிடினும்
மகத்துவச் செயலால் அகத்து உணர்ச்சி மாயாது
மிகத் தெருண்டு எழு முறைமையை விள்ளுவல் கேட்டி

#25
சாது மார்க்கரைக் காண்டலும் தகைப்படு சுருதி
ஓது கீதை வந்து உறு செவிமடுத்தலும் ஒடுங்கா
வாதை நோய் கண்டு கலங்கலும் மலங்கலும் கடுகி
ஏது இன்றி மூச்சு ஒடுங்கல் கண்டு அஞ்சி ஏக்குறலும்

#26
மேலை நாள் நடுத்தீர்வையை நினைந்து உளம் வெருண்டு
காலை மாலையும் கவன்று உளம் நடுங்கலும் பிறவும்
சால மெய் உணர்வு எழுப்பின நல் மன_சான்றும்
கோலி மெய் மனஸ்தாபத்தை விளைத்தது குரவ

#27
மெய் உணர்ச்சியை ஒருபுறத்து ஒதுக்கினும் வெகுண்டு
துய்ய நல் மன_சான்று எனைக் கடிந்திடும் சுடு_சொல்
ஐய தாங்க_அரிது ஆதலின் மெய் மனஸ்தாபம்
உய்யுமாறு உளத்து ஊன்றி நின்று ஓங்கியது உரவோய்

#28
வைகல் சிற்சில கழியவும் இடைக்கிடை மரணம்
கைகலந்திடில் என் செய்வல் என்று உளம் கலங்கி
மை கலந்த துன்_மார்க்க சீலத்தையும் வளைந்த
பொய் கலந்த தீ நட்பையும் போக்கினன் ஒருங்கே

#29
வைதிகம் பெறு சமய சீலங்களை வழு_இல்
மெய் திகழ்ந்த வான் விதி நிடேதங்களை விழைந்து என்
கை திகழ்ந்த மெய்த் திரு_மொழி அகத்து உளே கவின
உய் திறம் கடைப்பிடித்தனன் நல் ஒழுக்கு உவந்து

#30
இனையவாத் திரிகரணம் ஒத்து இயற்றும் நல் வினைகள்
எனையவேனும் தீதொடு கலந்து அலது இலை என்னா
நினைவு மூட்டி மேன்மேலும் நெய் சொரிந்து என நிகழ்த்தி
எனை வதைத்து எரிமடுத்தது இங்கு என் மனோ_சாக்ஷி

#31
உள் உளே புகல் உள_கரி உரை எலாம் உண்மை
வள்ளலாரும் என் பிழை எலாம் வரைந்துவைத்தன் அருள்
கள்ளம் ஆய நல் கருமங்கள் கதிக்கு உரை ஏறா
எள்ளனைத்தும் நீதியும் இலை உய்குவது எங்ஙன்

#32
புதிய சீலமும் ஒழுக்கமும் புனிதமும் மருவி
விதிவிலக்கு இனி அனுட்டிப்பன் ஆயினும் மேலை
முதிய பாவத்துக்கு என் செயக் கடவன் யான் முத்திக்கு
அதிபன் ஆணையில் தீச் சிறைப்படுத்துவர் அன்றோ

#33
அன்றன்றைக் கடன் அன்றன்றைக்கு இறுப்பினும் வறியோர்
தொன்றுபட்ட அப் பெரும் கடன் தொலைக்கும் ஆறு எவன் காசு
ஒன்று மீதி இன்றாய்க் கடன் ஒருங்கு இறுப்பளவும்
துன்று வெம் சிறைப்படுத்தலே தொல் உலகு இயற்கை

#34
தீது உறாத நல் கருமம் இல்லேன் சிறிது எனினும்
நீதியும் இலன் பாவ தண்டனைக்கு எதிர் நேரே
போதுகின்றனன் புகலிடம் பிறிது எங்கும் இல்லேன்
ஏது செய்குவன் இரக்ஷணைக்கு எனக் கவன்றிடும் நாள்

#35
உத்தமம் திகழும் மேனி ஒண் மதி நிதானி என்னும்
வித்தகன் வரக் கண்டு ஒல்லை விழுத் தகு மரபின் ஏற்றுச்
சித்த சஞ்சலம் எற்கு உற்ற திறன் எலாம் தெரியச் செப்பி
எத்திறமேனும் நன்கு ஒன்று இயம்புக என்று இரந்து நின்றேன்

#36
சேய் முக வாட்டம் கண்டு சிந்தனை கசிந்து போற்றும்
தாயரின் முகம் தைவந்து தணப்பு_இல் பேர்_அன்பு உள் ஊறி
வாய் மலர்ந்து ஒழுகல் போலும் மைந்த நீ கலங்கல் என்னாத்
தூய ரக்ஷணிய போதம் தொகுத்து உரையாடலுற்றான்

#37
உன் உளத்து எழுந்த பாவ உணர்ச்சியும் உள்ள_சான்றும்
முன் உறீஇக் கடிந்த வாக்கும் முழு மனஸ்தாபம் ஆய
இன்னலும் நினை ஈடேற்ற எம்பிரான் குறிக்கொண்டு உன்-பால்
பன்_அரும் கிருபை உய்த்த பரிசு என மனத்துள் கோடி

#38
ஞான நூல் அனைத்தும் கற்று நல் கருமங்கள் ஆற்றித்
தூய் நடை பயின்ற போதும் ஜென்மத்தே தொடுத்து நின்ற
ஈனமாம் குண_தோஷங்கள் இயைதலால் யாவும் தீதாம்
கானல்_நீர் அருந்தித் தாகம் கழியுமோ கருதும் காலை

#39
கருவிலே விடம் போல் பாவம் கலந்து பின் கதித்துப் பாழ்த்த
உருவிலும் அனாதி அந்தக் கரணத்தும் ஒருவாது ஆக
மருவி நின்று உடற்றி நாளும் மரண பாதலத்தைக் காட்டித்
தெருவிலே விடுக்கும் செய்கை ஜெகம் கண்டு தெருளாது இன்னும்

#40
கற்பனை பத்தும் ஓம்பிக் கைக்கொளல் கடமையே ஆம்
கற்பனை மீறிச் செய்யும் கருமங்கள் பாவம் ஆகும்
கற்பனை காத்துமேல் நல் கருமங்கள் புரிவது அன்றோ
கற்பனைகளுக்கு மேலாக் கதித்த புண்ணியமாம் தேரில்

#41
கண்ணிய கடமைப்பாட்டைக் கருத்துறச் செய்யகில்லா
மண் இயல் மாந்தரே யாம் மாசு_அறு விதிக்கு மேலாப்
புண்ணியம் திரட்டி முத்திப் புரை_இல் பேர்_இன்பம் கூட
எண்ணிய எண்ணம் என்றும் ஏழைமைப்பாலதே ஆம்

#42
தரு விதிவிலக்கே இந்தத் தரணியை ஒருங்கு கூட்டி
வெருவரும் பாவ தோட வெம் சிறைப்படுத்திற்று அம்மான்
திருவுளம் இரங்கித் தம் ஓர் திரு_குமாரனை விடுத்துப்
பொருவு_அரும் இரக்ஷை ஈட்டி மீட்டனர் புவியை மேனாள்

#43
ஜென்ம நாள் தொடங்கி முற்றும் ஜீவ நாள் அளவும் பாவ
கன்மமாம் தீட்டு உறா முக்கரணமும் புனிதம் மேய
தன்ம ரூபன் செய்து ஆக்கும் தபோபலம் கிடைத்தால் அன்றி
நன்மையாம் ஜீவ ரக்ஷை நரருக்கு இன்று ஆகும் அன்றே

#44
பூதலப் பரப்பில் யார் இப் புண்ணிய மூர்த்தி ஆய
மா தவன் என்னில் இன்றும் வடுத் திகழ் மேனியோடு
தாதை-பால் சருவ லோக சரணியனாகத் தங்கி
மேதினிக்கு இரக்ஷை நல்கும் கிறிஸ்துவாம் விமலன் மேனாள்

#45
மனித ஜீவருக்கும் தேவ மகத்துவத்தினுக்கும் ஊடே
நனி திகழ் மத்தியஸ்த நர தேவ மூர்த்தம் கொண்டு
வனிதை-பால் தோன்றித் தூய வரன்முறை விதியை ஓம்பிப்
புனித ஜீவியத்தை உய்த்த புதுமையே புதுமை ஆமால்

#46
உலகு எலாம் சமழ்த்த பாவம் ஒருங்கு ஒருதனியே தாங்கி
விலக_அரும் சிலுவை மீது விண்-நின்று விழுத்த நீதி
அலகு_அறு தண்டம் ஏற்று இங்கு உயிர்ப்பலி அமலற்கு ஆக்கி
நில உலகருக்கு என்று உய்த்த நீதியே ஜீவ நீதி

#47
பொன்றிய புனித மேனி பூ சமாதியினும் புக்கு
நின்று மன்பதைகட்கு எல்லா நித்திய_ஜீவன் மல்க
வென்றியோடு உயிர்த்தெழுந்த விந்தையை விசுவசித்து உள்
ஒன்றும் மெய் அடியர் அன்றோ உன்னத பதம் பெற்று உய்வார்

#48
இத் திறம் பரம ராஜ்யத்து இளவரசு ஆய எம்மான்
உய்த்த ரக்ஷணிய மார்க்கத்து உண்மையை விசுவசிக்கில்
சித்த சஞ்சலம் போம் நீதி திகழ்ந்து ஒளி கிளைக்கும் நின்னை
மொய்த்த பாபாந்தகாரம் முற்றிலும் விடியும் அன்றே

#49
ஆண்டகை நீதி என்னை அடையும் ஆறு எவன்-கொல் என்னாத்
தேண்டுதி மெய் அன்போடு திகழ் விசுவாசம் உன்னில்
காண்தகக் கவினிற்று என்னில் கருணை ஆற்று ஒழுக்கு ஈது ஒன்றோ
வேண்டும் நல் நிதியம் யாவும் வியன் அகப் புலம் தந்து உய்க்கும்

#50
நன்மை சால் தேவ மைந்தன் நடுநின்று நரருக்கேயாய்
வன்மை சால் மநுட தன்ம வரம்பு அறாது ஒழுகி நீதிப்
பொன் மலை குவித்துத் தம்மைப் புகல் புகுந்தவர்க்கு நல்கும்
தன்மையை நம்பிச் சேறி சான்று மெய் அடியார் சங்கம்

#51
கடைப்படு வன்கண் நீசப் புலையனேன் கணிப்பு_இல் பாவம்
முடைத் தொழுநோயின் ஆக்கை முயங்கியேன் துணிந்து முன் சென்று
அடைக்கலம் எனலாம்-கொல்லோ அருவருக்காது என் கண்ணீர்
துடைப்பரோ புனிதர் என்னா ஐயுறீஇத் துளங்கல் கேண்மோ

#52
பொருந்து வெம் கொடிய பாவப் பொறை சுமந்து இளைத்துச் சிந்தை
வருந்துவீர் வம்-மின் வம்-மின் வந்து இளைப்பாறி என்னோடு
இருந்து உணவு அருந்து-மின் என்று எம்பிரான் விளிக்கும் இன்_சொல்
தெரிந்திலை போலும் எம்பி செவிகொடு செவிகொடு இன்னே

#53
உரைசெயற்கு அரிது எம் ஐயன் உபதேசம் ஒழுக்கம் சீலம்
விரை செறி கிரியை துன்பம் இருத்து வேதனை இவ் எல்லாம்
புரை_அற விளக்கும் இந்தப் புத்தகம் கொள் நீ என்று ஈந்து
உரை நிலை பிசகாது இந்த உலகு ஒழிந்து இறினும் என்றான்

#54
என் உளம் குவிந்ததேனும் ஈசன் ஓர் குமார வள்ளல்
சந்நிதி குறுகி ஆங்கு சாற்றும் விண்ணப்பம் ஆவது
என் என அறியகில்லேன் இயம்புக என்று இரந்தேனாகப்
பொன் எனப் போற்றும் மன்றாட்டு ஒன்று உளம் பொறித்துப் போனான்

#55
வந்தனத்தோடு நன்றி வழுத்தி யான் திருமித் தக்கோய்
சிந்தையில் பொறித்த செம் சொல் சிலை எழுத்தாக நிற்ப
நொந்து உடைந்து ஊறுபட்டு நொறுங்குண்ட இதயத்தேனாய்
அந்தரங்கத்தை நாடி அடைந்தனன் அவலித்து ஏங்கி

#56
உன்னத பரம ராஜன் ஒரு திருவோலக்கத்துச்
சந்நிதி நினைந்து கிட்டித் தாள் இணை முடக்கி நின்று
பன்_அரும் கருணை உள்ளிப் பத்தியோடு இரு கை கூப்பிச்
சென்னி தாழ்த்து இறைஞ்சி அன்பின் சிந்தனை கசிந்து போற்றி

#57
ஆதி மெய்த் திரு_வாக்கு ஆகி அவிர் ஒளிப் பிழம்பும் ஆகிப்
பூதலம் புரக்க வந்த புண்ணியப் புனித மூர்த்தி
மா தயா நிதியே ஞான வரோதய கிரியே நின் சீர்
பாத பங்கயம் பல்லாண்டு பல்லாண்டு வாழி வாழி

#58
அறக் கொடும் பாவி கல்லா அசடர்க்குள் அசடன் அஞ்சா
மறக் கொடும் புலையன் ஆய வஞ்சகப் புலையனேன் யான்
துறக்க நாட்டு அரசன் சீற்றச் சுடு தழல் சுவாலைக்கு அஞ்சிச்
சிறக்கும் நின் சரண நீழல் அடைக்கலம் சென்று சேர்ந்தேன்

#59
என் நிகர் பாவி இல்லர் எனினும் யான் ஏழைப் பாவி
இன்னலுற்று அழுங்கும் பாவ ஜீவகோடிகளுக்கு என்றும்
நின் நிகர் ஆய தஞ்சம் பிறிது இலை என்ன நேடிப்
பொன் அடி நீழல் வந்து புகுந்தனன் போதுகில்லேன்

#60
இரங்குக பாவ பார இரும் சுமை ஆற்றகில்லேன்
இரங்குக ஏழைப் பாவி எனக்கு ஒரு கதி வேறு இல்லை
இரங்குக தேவ கோப எரி விழுந்து அழிக்கா முன்னம்
இரங்குக ஜீவ ரக்ஷைக்கு என்று உருவெடுத்த தேவே

#61
என் உயிர்க்கு உயிரும் நீயே ஈடேற்றும் ஈசன் நீயே
மன்னு சற்குருவும் நீயே வழி தடுத்து எனை ஆட்கொண்ட
முன்னவன்-தானும் நீயே முற்றும் நீ சுற்றும் நீ என்று
உன்னை நன்கு அறிய நீ என் உளத்து அறிவுறுத்துக எந்தாய்

#62
மை விளை இதயம் ஆய அகல் உளே மலினம் போக்கி
மெய் விசுவாசம் என்னும் வியன் திரி கொளுவி மாறாத்
தெய்விக அருளை ஊற்றித் திவ்விய சுடரை ஏற்றி
நெய் விளக்கு அலர்த்தி என்னுள் நிலவி வீற்றிருத்தி நீண்டோய்

#63
உற்ற மெய் விசுவாசத்தால் உரிமையாம் பரம நீதி
மற்று அது பெறும் கால் ஜீவன் மல்கும் என்று உரைக்கும் வாய்மை
அற்றம்_இல் விசுவாசத்தை ஆக்கி நீதியைத் தந்து ஆக்கல்
முற்றும் நின் அருளின் செய்கை முறை அன்றோ கருணை மூர்த்தி

#64
ஆழியின் பெரிது என்பேன் நின் அருள் பெரும் கிருபை-தன்னை
வாழி நின் அன்புக்கு எல்லை யாது என வழுத்துகிற்பேன்
பாழி அம் புவியின் மிக்க பாவியேன் புரந்த அன்பு என்று
ஊழி-தோறு உலகம் எங்கும் உரை நிற்கும் என்பது அல்லால்

#65
எச்சிலே விழையும் குக்கல் என இழி தொழில் செய் ஈனக்
குச்சிதமான பாவி குவலயத்து என்னை ஒப்பார்
நிச்சயம் இல்லை இல்லை நீசனேற்கு இரங்கி ஆன்மப்
பிச்சையிட்டு அருளிப் பாவப் பிழை எலாம் பொறுத்தி எந்தாய்

#66
கிளரும் மெய்ஞ்ஞான போதம் கேடு_இல் சன்மார்க்க சித்தி
வளர் விசுவாசக் காட்சி மாசு_அறு புனித நீதி
உளம் மலி அன்பு மேலிட்டு உன் தொழும்பு உவக்கும் ஆசை
விளைய நின் ஆவி நல்கி விடாது காத்து அருள்வாய் ஆமென்

#67
என்று இவ்வாறாகப் பல் கால் இரா_பகல் இதயம் நொந்து
நின்று மன்றாடி வேண்டி நெட்டுயிர்ப்பு எறிந்து சில் நாள்
குன்றிடாக் கருணை மல்கும் கோ இளங்குமார தேவன்
என்று எனக்கு இரங்குவார்-கொல் என்று உளம் கவலச் சென்ற

#68
ஆயிடை நெஞ்சம் மாழ்கி ஆவி சோர்ந்து அயதி மல்கி
நாயகன் திருமுன் செல்ல இடைந்து உளம் நலிந்ததேனும்
ஓயகிற்கிலன் மன்றாட்டை உத்தம உரைகள் எல்லாம்
மாயம்_இல் உண்மை என்று என் மனக் கொளக் கிடந்த மாண்பால்

#69
அன்றியும் கிறிஸ்து நீதி அலது எனைப் புரக்கத் தக்கது
ஒன்றும் இன்று உலகத்து என்னும் உண்மையும் ஜெபம் இன்று ஆயின்
மன்ற மன்னிப்பும் இன்று என் வாய்மையும் மன்றாட்டு ஒன்றிப்
பொன்றினும் நலம் என்று ஓர்ந்த போதமும் காத்த எந்தாய்

#70
இன்னும் ஒன்று அறவோய் கேட்டி எம்பிரான் அருள் சகாயம்
உன்னிலே தாழ்க்குமேனும் உவந்து காத்திருத்தி ஆயின்
முன் உற வரும் தப்பாது முற்றும் நிண்ணயம் மற்று என்னாப்
பன்னிய சுருதி வாக்கு ஒன்று உளத்து உறப் பதிந்தது அ நாள்

#71
இத்தகு முறைமையால் என் இதயம் பின்னிடையாதாக
முத்தி நாட்டு அரசன் மைந்தன் முன்னிலை ஆகும்-மட்டும்
நித்தமும் திருமுன் கிட்டி நின்று மன்றாடும் இந்த
வித்தகப் பழக்கம் எற்கு விடாப்பிடி ஆயது எந்தாய்

#72
ஆங்கு ஒரு வைகல் பாவ அருவருப்பு எனக்குத் தோன்றி
நீங்க_அரும் துக்கம் மல்க நித்திய கேட்டை உள்ளி
ஓங்கிய பிராண தாபம் உள்ளுறீஇத் தகிப்ப ஆற்றாது
ஏங்கி நெட்டுயிர்த்துச் சோகித்து இன்னலுற்று இடையும் காலை

#73
இக_பரம் இரண்டினுக்கும் இறைமை பூண்டு எம்மனோர்க்குப்
புகலிடம் ஆன ஜேசு புண்ணியப் படிவத்தோடு
முக விழி கொளப் பொறாத முதிர் ஒளிப் பிழம்பினூடு என்
அக விழி களிக்கத் தோன்றும் அற்புதக் காட்சி கண்டேன்

#74
அஞ்சலை கலங்க வேண்டாம் அநாதி நித்திய பிதாவை
மஞ்சனாம் எனை நேசித்து வரன்முறை விசுவாசித்துச்
செஞ்செவே பற்றி நிற்றி திடம் கொள் என்று அமுதச் செவ் வாய்க்
கிஞ்சுகம் அனைய கோல இதழ் விண்டு கிளக்கக் கேட்டேன்

#75
என் உறு நித்திய_ஜீவன் இரு விழி களிக்கத் தோன்றி
முன்னிலைப்பட்டது என் நா மொழி திறன் அறியேன் ஆகிச்
சென்னி தாழ்த்தி இறைஞ்சி ஆண்டோய் ஜெகப் பெரும் பாவியேற்கும்
உன்ன_அரும் பாவமன்னிப்பு உறுவது-கொல்லோ என்றேன்

#76
பாவ ஜீவரைப் புரக்கப் பார் உலகு உதித்த ஜேசு
தேவன் ஓர் மைந்தன் என்றும் சிந்து செம் குருதி ஒன்றே
ஜீவனைப் புனிதம் ஆக்கும் திவ்விய அவிழ்தம் என்றும்
மேவர உயிர்த்தெழுந்த வென்றியே இரக்ஷை என்றும்

#77
உள் உணர் விசுவாசத்தால் ஊக்கி நொந்து உடைந்து என் பக்கல்
நள்ளி வந்து அடையின் பொல்லா நராந்தகப் புலையன் என்னா
எள்ளுறு பாவியேனும் இகழ்ந்து அவமதித்து ஓர் போதும்
தள்ளிடேன் நினக்குப் போதும் தந்த என் கிருபை என்றார்

#78
இத்திறம் நிகழ்ந்த பின்றை எம்பிரான் எனக்குள் உய்த்த
சத்திய வாக்கின் வண்ணம் தணப்பு_இலா விசுவாசத்தால்
முத்தி நீதியும் அ மான் மெய் முழுகு சோரியின் பிராயச்
சித்தமும் லபிக்கும் என்னாத் தெள்ளிதின் உணர்ந்தேன் மேலும்

#79
நன்றியோடு உள்ளி நாளும் நயந்து அடித் தொழும்பு பற்றி
ஒன்றிய சிந்தையாற்கே உரியவாம் கிறிஸ்து யேசு
நின்று கீழ்ப்படிந்து பார்க்கு நிருமித்த தண்டம் ஏற்றுப்
பொன்றியும் ஈட்டிவைத்த புண்ணியப் பொலிவு என்று ஓர்ந்தேன்

#80
இ மெய் வாக்கு ஒளி என் இதயத்து உற
மை மலிந்த மனத் துயர் மாய்ந்தது
மெய் மகிழ்ச்சி நிறைந்து விழி வழி
கைமிகுந்து கண்ணீர் எனக் கான்றதால்

#81
நம்-தம் ஏசுக் கிறிஸ்துவை நம்பிய
அந்தணாளரை ஆங்கு அவர் சீலத்தைச்
சிந்தையாரச் சிறக்கும் நண்பாற்றிட
இந்தியங்கள் விழைந்தன என் உளே

#82
குருசு உயர்த்த நம் கோ_குமரேசனார்
தரிசனப் பலன் சாற்றுதி என்றியேல்
பரிசு அழித்த முன் சீவிய பாவத்தைக்
கரிசு அறுத்தது உன் கண் கண்ட சாக்ஷியே

#83
மைந்தன் மாசு_அறு நீதியின் மாண்பினால்
தந்தை நீதி தரும் புவி ரக்ஷணை
சொந்த நீதி கறையுறத் தோய்தலின்
முந்தும் ஆக்கினை முற்றும் என்று ஓர்ந்தனன்

#84
உள்ள நாள் அளவும் உலகத்து இனிக்
கள்ளம்_இல் மன_சான்றினைக் காத்து நான்
வள்ளலார் திரு_நாம மகிமையை
நள்ளி நாள் விடு நாட்டம் வந்து உற்றதால்

#85
எத்திறப் பகை நேரினும் என் ஒரு
வித்தகன் கழல் விட்டிடுகிற்கிலன்
முத்தி கிட்டிலவேனும் முறைமையில்
செத்திடற்கும் ஓர் தீரம் வந்து உற்றதால்

#86
எந்தை இத்தகு சிந்தனை என் உளே
முந்து வந்து முளைக்குமதோ சொலாய்
விந்தையாய் வினையேன் தொழும்பு ஆக்கிய
அம் தண் ஆவியர் அருள் திறம் ஆண்டகாய்

#87
வன் புலத்து மடிந்து ஒழிந்தோர் சிலர்
என்பு இரும் குவைக்கு இன் உயிர் ஊட்டிய
அன்பின் ஆய அருள் தொனியே அலால்
பின்பு ஒர் ஏதுவும் இன்று எனப் பேசினான்

#88
உற்ற நம்பிக்கை என்னும் உயிர்_துணை
சொற்ற வாய்மைச் சுவை மதுரம் திகழ்
பொன் தசும்பு அமுதம் செவி போந்து உகுத்து
அற்ற ஆக அருந்தினன் ஆரியன்

#89
உண்டு தேக்கி உளக் களியுற்று நீ
தொண்டுபட்ட சரித்திரம் தோம்_அறக்
கண்டுகொண்டனன் யாவும் கருதுறில்
அண்டர் கோன் அருள் ஆக்கத்தின் ஆயவால்

#90
ஆழி சூழ் உலகு எங்கும் நம் ஆண்டகை
வாழி அம் திரு_நாம மகிமையே
ஊழியும் உலவாது நின்று ஓங்குக
வாழி வாழி என்று ஏகினர் மா தவர்
**சோக பூமிப் படலம் முற்றிற்று

@9 அறிவீன அர்ச்சிதப் படலம்

#1
மா தவத்தர் மகிழ்ச்சியோடே மறைப்
போதம் முற்று நல் புந்தி திகழ்ந்திட
மேதகக் கலை ஞானம் விதந்து உலாய்ப்
பாதை பற்றிப் படர்ந்தனர் என்பவே

#2
அரிய கேடு தொக்கு ஆர்_அஞர் மல்கு தற்
பிரியம் என்னப் பெயரிய நாட்டு உளான்
உரிய மா தவ வேடத்து ஒளித்து உளான்
தெரியும் காலை திரிதரு சிந்தையான்

#3
கானகத்து உறு கள்ள வழிக் கொடு
போனகத் தொழில் முற்று உறு புன்மையன்
கோன் அகத்துக் குறிப்பு அறியாமல் இ
வானகத்து வழி நடைப்பட்டனன்

#4
வீரியம் திகழ் வேடத் தவத்தனை
ஆரியன் நெறிக் கண்டு அறவோய் உனக்கு
ஊர் யாது இந்த ஊர்த்த நெறி வரக்
காரியம் எது கட்டுரையாய் எனா

#5
கேட்டி ஐய கிளர் தற்பிரியமாம்
நாட்டின்-நின்று துறந்து நலம் தரு
வீட்டு லோகம் புகுத விரும்பி இப்
பாட்டை பற்றிப் படர்குவன் யான் என்றான்

#6
அண்டர் கோன் கடை காவலர்க்கு அவ்வயின்
கண்டு கொள்க என உள் புகக் காட்டுவான்
உண்டு-கொல் அடையாளம் உனக்கு அது
கொண்டு அணைந்தனையோ எனக் கூறினான்

#7
பற்று இகந்த பவித்திர வேதியன்
சொற்றது ஓர்ந்து அறிவீனனும் தூயவ
முற்று அறிந்த முழுமுதல் சித்தம் யான்
தெற்றெனத் தெரிவன் அது தேர்தியால்

#8
புந்தியாய்ப் புசிப்பன் சுக_போகங்கள்
அந்தி_சந்தி ஜெபிப்பன் அறம் செயப்
பிந்துகிற்கிலன் பேணி அவரவர்
தம்தமக்குக் கொடுப்பல் தரும் பொருள்

#9
பத்தில் ஒன்று என் உரிமை பகுத்ததை
முத்தி வேண்டிக் கொடுப்பன் முறைமுறை
சித்த சுத்தி விரும்பிச் சில தினம்
உத்தமத்து உபவாசமும் ஓம்புவேன்

#10
பிறந்த நாட்டையும் பெற்றுள வாழ்வையும்
துறந்து இ மார்க்கம் புகவும் துணிந்தனன்
அறம் திறம்புகிலாத எம் ஆண்டவன்
மறந்துபோவர்-கொலோ இந்த மாண்பு எலாம்

#11
இனைய சீலங்கள் எத்தனையோ எனைப்
புனையும் பல் கலன் போல் உள ஆகவும்
நினையகிற்றிலை நீ மற்று அ நீர்மையை
எனையவோ அடையாளம் இன்று என்றியால்

#12
என்று எடுத்து அறிவீனன் இசைத்தலும்
நன்று அறிந்த நலம் திகழ் வேதியன்
ஒன்றி உன்னை உலகம் மகோத்தமன்
என்று அறிந்தனை என்னினும் கேட்டியால்

#13
நனி திகழ்ந்து ஒளி நல்கி இடுக்கு உறும்
புனித வாயில் புகுந்து அரு நூல் வழி
இனிது நாடும் எவர்க்கும் அருள்வரால்
தனிதம் ஆர் அருள் மூர்த்தி ஓர் சாதனம்

#14
முத்தி மா நகர் வாயிலின் முன் உறீஇ
இத் திருத் தகு சாதனம் ஏந்திடில்
சித்திரப் பொன் கபாடம் திறந்திடும்
உத்தமத் திரு_தொண்டர் என்று ஒல்லையே

#15
வள்ளல் உய்த்த மணிக் கடை வாயிலை
எள்ளி வந்து இங்கு இடைக்கிடை சேர்பவர்
கள்ளர் என்று இறைவன் கடை காவலர்
தள்ளி ஓச்சுவர் சாதனம் இன்மையால்

#16
ஏழை நீ கதி மார்க்கத்து இயைந்தும் என்
வாழி சாதனம் பெற்று உய் மதி இலை
பாழின் நீர் இறைத்துப் பயன் என்னை-கொல்
சூழுக என்றனன் நல் மதிச் சூழ்ச்சியான்

#17
பொருள் தரித்த புலமையர் போற்றுறும்
அருள் தரித்த மெய் ஆரணன் வாய்மையை
இருள் தரித்த மனத்தினன் எண்ணிலன்
குருடருக்கு ஒளியால் பயன் கூடுமோ

#18
வலிய வந்து சருவி வழிமறித்து
எலி_அனேனை இழுத்து வழக்கிடும்
புல் இயல் நீர் துரை மக்களும் போன்று_உளீர்
கலியின் காலக் கணக்கு இதுவே-கொலாம்

#19
முற்றும் நீர் எனக்கு அன்னியர் முன்_பின் நீர்
பற்று ஒன்றும் இலிர் பார்த்தும் இரீர் ஒரு
சற்று நேரத்தில் சாடுதிர் ஈது நீர்
பெற்ற சாதனத்தின் பெறும் பேறு அரோ

#20
செல்லு-மின் விரைந்து உம் வழி சேர்ந்து எமர்
நல்ல தேச முறைப்படி நாடுவல்
புல்லுவேம் இருவேமும் அப் பொன் நில
மல்லல் கூர் முத்தி மா நகர் வாயிலில்

#21
பேதம் என்-கொல் முன் பின்ன பின் முன்ன ஆம்
போதும் ஓர் வழிப்போக்கர் பொருட்டிலே
கேதம்_இல் குமரிக்கும் கிழவிக்கும்
காதமே வழி பார்க்கும் கணக்கிலே

#22
நெருக்க வாயில் பிடித்து இ நெறிப் படப்
பெருக்கமாம் துன்பம் நாளும் பிடிக்கும் எம்
திருக் குலாவிய தேசம்-நின்று இ வழிச்
சுருக்க நாடி வந்தேன் இதில் தோடம் என்

#23
தேரில் நும்மவர் சேர் உறு மார்க்கமே
பேர்_அருள் கதி மார்க்கம் பிற எலாம்
சோர மார்க்கம் எனத் துணிந்து எள்ளுதிர்
சீரிது அன்று உமக்கு என்றனன் சீர்_இலான்

#24
அன்ன வாசகம் கேட்டு உடன் ஆரியன்
முன் நம்பிக்கையை நோக்கி முறைமையோய்
தன்னை ஞானி என்று எண்ணும் சழக்கனில்
நன்னர் மூடனை நம்புதல் நன்று எனா

#25
அமைவதே ஐய சொற்றன ஆயினும்
சுமடன் கேட்டவை தன் உளம் தூக்குறச்
சமயம் நல்கிப் பின் சார்பு அறிந்து ஒண் மதி
கமையுடன் சொலிக் காட்டுதல் நன்று அரோ

#26
சொல் மதிக்கு இணங்காப் படு துர்_ஜநர்
நன்மை யாவும் இழப்பர் தம் நாள் உகத்
துன்_மனத்தில் துணிந்து முறுக்கிய
கன்ம பாசக் கட்டுண்டு கவிழ்வரால்

#27
தன் இட்டன் அவன் சாற்றுவது ஓர்கிலன்
முன் இட்டாலும் முறை அறிவான்_அலன்
பின்னிட்டு ஆவன பேசுதுமால் இனி
உன் இட்டம் உரை என்றனன் ஒள்ளியோன்

#28
நின் கருத்து இது என்று நிதானியாய்
நன்கு உரைத்தனை நம்பி நவின்றதே
என் கருத்து என ஏகுதும் யாம் எனாப்
பொன் குலத் தலம் நோக்கினர் போயினார்

#29
போயினார் சோகம் ஆர் பூமியோடே கதித்து
ஏய நூல் நெறி விடாது இடையிடைப் படுகரும்
சீயம் ஆர் தட மலைச் சிகரியும் அடவியும்
தாயினார் பிற்பட முற்படும் தகையினார்

#30
தாக சோகங்களால் தளருவார் சில பகல்
வேக யாத்திரையினால் மெலிகுவார் சில பகல்
தேக நோய் கண்டு உளம் தேம்புவார் சில பகல்
கோகுலத்தவரொடும் குலவுவார் சில பகல்

#31
வேத சாத்திரம் எடுத்து ஓதுவார் விரகொடே
கீத கானம் தொடுத்து உருகுவார் கிடை-தொறும்
ஏதம்_இல் கருணை துய்த்து இறை இளங்கோமகன்
பாத பங்கய மலர் பரவுவார் பல முறை

#32
என்று இ மண்ணுலகை விட்டிடுவம் என்று எள்ளுவார்
என்று யாம் வீடு அடைந்திடுவம் என்று ஏகுவார்
என்று இளங்கோமகன் காண்டும் என்று ஏங்குவார்
என்று சேவடி நிழல் புகுவம் என்று இனைகுவார்

#33
சோகபூமியின் நெறித் தொடரின் முன் உறஉறத்
தேகம் வன் பொறை உறத் தெருமரல் உறுகினும்
மாக மா நகர் அணித்து உறும் எனா மகிழ்வு கொண்டு
ஏகினார் ஊகமோடு ஏது_இல் வேதியர் அரோ

#34
சென்றுழிச் சென்றுழிச் செல்லும் மன் நிழல் என
நின்றுழி நின்றுழி நின்று அறிவீனனும்
பின்தொடர்ந்து அணுகினான் பிரிவுறான் அறிவுறான்
துன்று தீக்காய்குவார் சூழ்ச்சியில் தொடருவான்

#35
கருமமே கண் எனக் கண்டு முன் செலும் அவர்
திருமி நோக்குழி அறிவீனனைச் சேய்மை கண்டு
அருமை ஈது எமை விடாது அணுகுமாறு அறிதும் என்று
ஒரு மனத்து இருவர் நின்று ஒல்லை கூவிளி கொள

#36
வீரியத்தொடும் விரைந்து அவண் உறும் விரகு_இலாப்
பூரியன்-தனை முகப் பொலிவொடு ஏற்று உபசரித்து
ஆரியன் சுகம் வினாய் அண்டர் நாயகனொடு உன்
காரியத் திறம் எவன் கழறுக என்று உரைசெய்தான்

#37
தேசிகக் குரவ கேள் ஜீவ ரக்ஷணை எனக்கு
ஆசை உண்டு உண்டு நம்பிக்கையும் அகில லோ
கேசனைச் சிந்தைவைத்து ஈறு_இல் முத்தியை விழைந்து
ஊசலாடு உள்ளமும் உண்டு எனக்கு என்றுமே

#38
சாற்றும் இத்தகைய சாதனம் எனக்கு உண்மையின்
மாற்று_அரும் தகைய மெய் மகிழ்வு உளத்தூடு உலாய்
ஊற்றிருந்து ஒழுகலில் உலக சம்பத்து எலாம்
போற்றிடாது இ வழிப் போந்தனன் துறவியாய்

#39
என்று அறிவீனன் ஈது இயம்பக் கேட்டலும்
வென்றி அம் பகவனை விதேக முத்தியைக்
கன்றிய அலகையும் கள்ள மார்க்கரும்
என்றும் உள்குவர் கதி எய்தற்பாலரோ

#40
அரும் பெறல் மெய் விசுவாசத்து ஆட்சியின்
பெரும் பயன் நினைப்பினில் அடையப் பெட்புறும்
இரும்பு இயல் மனத்த சோம்பேறி ஆத்துமம்
விரும்பியும் பெறாது என விள்ளும் வேதமே

#41
வெறுத்தனன் உலக வாழ்வு என ஓர் வீரியம்
இறுத்தனை சான்று எது என்னில் எம்பி நீ
கறுத்திடும் இதயமே கரி என்பாய் இது
மறுத்திடற்பாலதாம் மரபு கேட்டியால்

#42
உற்பவ தோடருக்கு உலகு அவா அறல்
அற்பமோ அன்று என அறிகிலாமையில்
பற்பலர் முயன்று பாழ்பட்டுத் தாமுடைக்
கற்பித எண்ணத்துக் கவிழ்கின்றார் அரோ

#43
தன் இருதயத்தையே சார்ந்து நம்புவோன்
உன்ன_அரும் பயித்தியோன்மத்தன் என்று ஒரு
மன்னவ ஞானி சொல் மதித்துக் கொண்டவர்
பன்_அரும் கொடு விடப் பை என்று ஓர்வரால்

#44
கருதுக என்று ஆரியன் கழறக் கேட்டலும்
சுருதி தேர் பனவ பொல்லாத துர்_குணர்
இருதய நிலை எடுத்து இசைத்த வாய்மை என்
ஒரு தவறு இலா இதயத்துக்கு ஒல்லுமோ

#45
நன்று உள இதயமும் நல் நடக்கையும்
ஒன்றினுக்கொன்று சான்று ஆகி ஒத்தலால்
மன்றல் சேர் முத்தி வீட்டு இன்பம் வாய்த்திடும்
என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு ஓர்தியால்

#46
வித்தக நவமணி விளைந்து மல்கிய
அத்தகு சுரங்கம் நல் இதயம் ஆகுமால்
பத்து எனும் விதிவிலக்கு ஓம்பும் பண்பு உடைச்
சத்திய ஒழுக்கமே சாற்றும் நல் நடை

#47
வேதிய மேல் இனி விளம்பற்பாலது என்
சாதக_பாதகம் சாற்றுவாய் எனக்
கோது_இலாக் குணத்தன் நீ குறித்த கூற்றினில்
பாதகம் உளது அது பகரக் கேட்டியால்

#48
ஒள்ளிய இதயத்தின் ஒழுங்கும் உள்ளுறு
கள்ள வல் இதயத்தின் கபடும் காட்டுமால்
உள்ளதை உள்ளவாறு உரைக்கத் தக்க நம்
வள்ளலார் உரை எனும் மாற்றுக் கோடுகல்

#49
வைதிக நூல் பிரமாண மாட்சி நூல்
மெய் திகழ் அவிர் ஒளி விளக்கை ஓம்பிடார்
பொய் திகழ் இருதயப் புணர்ப்பை நம்பி வீண்
ஐதிக இருள் பிழம்பு அடைந்து மாய்வரால்

#50
நன்று செய்பவன் இலை நர சிருட்டியில்
ஒன்றிய நீதிமான் ஒருவனும் இலை
என்றும் எலா நர ஹிருதயங்களும்
கன்றிய தீ_வினைக் கழகம் என்பவே

#51
சேண் உறு நல் நெறிச் செலவு தீர்ந்து ஒரீஇக்
காண்_அரு மாறுபாடு ஆய கள்ளமும்
கோணலும் குலவிய குறுக்குத் தீ வழி
நாண் இலாது ஒழுகுதல் நர சுபாவமாம்

#52
புரை_அறு புண்ணியப் புனிதத் தே மொழி
கரை_அறு கபட்டு இருதயத்தின் கள்ளத்தை
உரைபடு நடக்கையை ஓரம் இன்றியே
வரையறைப்படுத்திய மரபு காண்டியால்

#53
இ நெறியாய் மறை இயம்பும் உண்மையைத்
தன் அகத்து உணர்ந்து எலாம் சரி என்று ஒப்பிய
நன்னர் நெஞ்சே நலம் சுரக்கும் நல் நடை
துன்னி நின்று உரப்படும் சூழ்ச்சி காண் இது

#54
தன் உறு கேட்டினை உணரத் தக்க அ
நன்னர் நெஞ்சு உன்னத நாயகன்-தனை
உன்னுறு விதம் சிறிது உரைப்பல் கேள் எனாப்
பன்னுவான் தொடங்கினன் பாரமார்த்திகன்

#55
காமுறு நினைவை உள் கருத்தின் வஞ்சத்தைத்
தீமையை இதயத்துள் திணிந்த தோடத்தை
நாம் உறு கேட்டினை நாடி நம்மினும்
கோமகன் அறிவர் என்று உளம் கொதிக்குமால்

#56
உண்டு என நினைக்கும் நம் உரிய நீதியை
மண்டு துர்க்கந்தமாய் வரைவர் அல்லது
கண்டு உளம் சகிப்பரோ கருத_அரும் பர
மண்டலாதிபர் என மனம் பதைக்குமால்

#57
கறுப்பு உறு குட்டநோய் கழுமி யாக்கையின்
உறுப்பு எலாம் அழுகிச் சீ ஒழுகி லோகரால்
வெறுப்புறு புலையனேன் அசுத்த வெவ்_வினை
பொறுப்பரோ புனிதர் என்று உள்ளம் பொங்குமால்

#58
இத் திறம் அறிகிலை எம்பி உன்னிலே
உத்தம இருதயம் உண்டு என்று உள்ளுதி
வித்தக ஒழுக்கு_உளை என வியக்குதி
எத்தனை பிழை என ஏழை ஓர்கிலாய்

#59
நீதிமான் என உனை நினைக்கும்-மட்டும் நீ
கோது_இலாக் கிறிஸ்துவின் குறைவு_இல் நீதி கொண்டு
ஆதியான் திரு_சரண் அடைகுவாய்_அலை
ஏதம்_இல் மெய் விசுவாசம் எங்கு உளை

#60
என்று மெய் உணர்வு அகத்து எழ இயம்பினான்
பொன் திகழ்ந்து என மிளிர் புகர்_இல் நல் மதி
ஒன்று இலிக் குடம் என ஒருங்கு போக்கியே
நன்று எதும் அறிகிலான் நவிற்றுவான் அரோ

#61
பாவிகட்கா நம் பரமன் ஓர் சுதன்
ஆவிவிட்டனர் அவற்கு அடங்கிக் கீழ்ப்படும்
தா_அரும் நீதியால் சாபம் போக்கி எம்
காவலர் எனை அங்கிகரிப்பர் என்பதும்

#62
புண்ணிய மூர்த்தி தம் புண்ணியத்தில் என்
கண்ணிய பத்தியின் கருமம் யாவும் ஓர்
அண்ணலுக்கு அர்ப்பணம் ஆகும் என்பதும்
திண்ணிய என் விசுவாசச் செவ்வி காண்

#63
இ விசுவாசத்தில் இயைந்த நீதியும்
செவ்விய நீதியில் ஜீவ ரக்ஷையும்
கவ்வை இன்றாய் வரு கணக்கை ஓர்கிலை
எவ்வகை திகைத்தனை இயம்புக என்றனன்

#64
எள்_அரு நல்ல வித்து இட்டு என் செய்யினும்
அள்ளல் ஓங்கு உவர் நிலம் அளிக்குமோ பயன்
ஒள்ளிய நறு விரை உண்ட போதினும்
உள்ளியின் குணம் சிறிது ஒருவற்பாலதோ

#65
எத்திறம் முடியினும் ஏழைக்கு ஈண்டு யான்
உத்தம மெய் விசுவாசத்து உண்மையின்
வித்தக முறையினை விளக்கல் நன்று எனாச்
சித்தமுற்று ஆரணன் செப்பல் மேயினான்

#66
உள் உறும் உன் விசுவாசத்து உண்மை-தான்
வெள் என வெளுத்தது உன் உரையின் மேயது உன்
பிள்ளைமை இடையில் வந்து உதித்த பேதைமை
கொள்ளும் வீண் பத்தியாய்க் குலவிற்றாம் அரோ

#67
சொந்த நல் கிரியையால் தொகுத்த புண்ணியச்
சிந்தையின் நீதிமானாகத் தேறினை
அந்தரத் தாமரை அலர்த்திக் காட்டிய
விந்தையே போலுமால் விகட வேடத்தோய்

#68
நீசராம் பாவரை நீதிமான்களாய்
மாசு_அறச் செயும் விசுவாசம் வல் விதி
வீசு தண்டனைக்கு இடை விலக்கி ஜேசுவின்
ஆசு_அறு புண்ணிய அடைக்கலத்து இடும்

#69
பாசம் ஆர் கிரியையில் பழுத்த உன் விசு
வாச வைக் கூளமோ தீர்வை வைகலில்
ஈசன் கோபாக்கினிக்கு எதிர்நின்று உய்ப்பது
பேசும் ஆக்கினை உனைப் பிடித்திடாது-கொல்

#70
நினது கீழ்ப்படிதலை நீதி ஆக்கவே
புனித நீதாதித்தன் போந்ததாம் எனின்
மனித ரக்ஷணை எலாம் மாநுவேல் அருள்
தனிதத்தால் அன்று நம் தருமத்து ஆய ஆம்

#71
இப் பெரும் அருள் பிடித்து இழுக்க ஏழை நீ
துப்புரவு உளை எனத் துணிந்து உன் நீதியாம்
தப்பறைக் கிடங்கரில் தலைகிழக்குறக்
குப்புறுகின்றனை கூறக் கேட்டியால்

#72
இத் தரை மனுக்களுக்கு இறுத்த தண்டனை
அத்தனையும் சுமந்து அரிய பாடுகள்
உத்தரித்து உயிர்ப்பலி உதவிக் கற்பனை
பத்தையும் தழுவினர் பரமன் ஓர் சுதன்

#73
ஈது காண் மெய் விசுவாச லக்ஷயம்
ஆதலின் இதை உளத்து ஆக்கி ஆண்டகை
நீதியைப் புனைந்து இவண் நிலவுவாய் எனில்
ஜோதி நாட்டு உயர் பதம் சொந்தமாம் என்றான்

#74
இச்சையாம் புரவியை இழுத்து இங்கு உய்ப்பதற்கு
உச்சித கிரியையே கலினம் உண்மையில்
குச்சிதமாம் எனில் குவலயம் எலாம்
நிச்சயம் கெடும் என நிறுவ வேண்டுமோ

#75
கிரியை நோக்காமலே கிறிஸ்து ரக்ஷகர்
புரை_தபு புண்ணியப் பொலிவின் மாட்சியால்
குரை கடல் புவிக்கு எலாம் இரக்ஷை கூடுமேல்
வரைவது என் பாவத்தை மதி_வலோய் என்றான்

#76
ஆரியன் கேட்டு அறிவீனன் உன் பெயர்
பேர்_இயல் பொருள் அணுப்பிசகுறாமல் உன்
பூரிய வாய் மொழி புலப்படுத்துமால்
நீர் இயல் நிலத்து இயல் என்னும் நீர்மை போல்

#77
கோது இயல் மாந்தரைக் கோது_இலார் என
நீதிமான் ஆக்கிடும் நீதி மாண்பையும்
வேதனார் நீதிக்கு விலக்கி நல் கதி
ஈதலின் மரபையும் இன்னும் தேர்கிலை

#78
இத்தகை என முனம் எடுத்தியம்பிய
அத் தகு மெய் விசுவாசம் ஆக்கிடும்
உத்தம பலன்களை உசிதச் செய்கையை
எத் தகுவன என யாதும் தேர்கிலை

#79
என்னினும் தெரிப்பல் எம் இருதயத்தினை
முன்னவன் கிறிஸ்துவின் மூலமாய்ப் பிரான்
சந்நிதிக்கு உய்த்திடும் தயை அன்பு ஆதிய
பன்_அரும் குணங்களைப் பாலித்து ஊட்டுமால்

#80
தனது உடல் உயிர் பொருள் தனக்கு இன்றாம் என
அனவரதாதிபற்கு ஆக்கி அன்பினால்
மனம் மொழி மெய்களின் வணங்கி வாழ்த்தியும்
தின பரவசம் உறச் செய்யுமால் அரோ

#81
சுருதியைச் சுருதியில் தோன்றும் மார்க்கத்தைக்
கருதி மெய் உணர்வொடு கலந்து அ மார்க்கத்து
வரு திரு_தொண்டரை மதித்து உள் அன்பினால்
பருவரல் சகித்திடும் பான்மை நல்குமால்

#82
சொற்ற இத்துணை-கொலோ சுகிர்தம் யாவுக்கும்
உற்ற ஓர் மூலமாய் உயிருற்று ஓங்கிய
அற்றம்_இல் மெய் விசுவாச ஆக்கத்தைப்
பெற்றவரே நித்ய_ஜீவப் பேறு உளார்

#83
கருத்தனாம் கிறிஸ்துவின் காட்சி உற்றிடு
திருத் தகு மெய் விசுவாசச் செவ்வியில்
பொருத்தமாம் அன்புறு கிரியை புண்ணியர்
அருத்துவர் கிருபை ஆர் அமிர்த போனகம்

#84
அன்பு உறு கிரியையோடு அளவளாவிடும்
பொன் புரை மெய் விசுவாசம் பூத்திடின்
மன் பெரும் துர்_இச்சையின் வாயில் பெய்வது ஓர்
கொன் பயில் கலினமாம் குறிக்கொள்வாய் என்றான்

#85
அவ்வயின் கடவுள் வேந்து அருள் குமாரனை
எவ்வகை வெளிப்படுத்தினர் இவற்கு எனச்
செவ்வியோய் வினவுக என்று உரைப்பச் சீர்_இலா
அவ்வியன் அகம் கடுத்து அறைகுவான் அரோ

#86
விண்ணுலகாளி ஓர் விபுத மைந்தனைக்
கண் எதிர் மயல்_அறக் காணவே-கொலாம்
எண்ணிய எண்ணம் நும் இருவர் வாய்மையும்
திண் அறிவீனத்தைத் தெரிக்குமால் அரோ

#87
எத்தனையாக வீண் எண்ணம் கொள்ளுதிர்
எத்தனை நுணுக்கமாய் எடுத்தியம்புதிர்
எத்தனை நும் விசுவாசம் என்னினும்
அத்தனைக்கும் குறைவு_அல்லன் யான் என்றான்

#88
இத் தலத்தவர் எலாம் இறைவன் ஓர் திருச்
சித்தம் உய்த்து உணர்கிலர் ஜென்மத் தீட்டினால்
உத்தம கிறிஸ்துவை எமக்கு இங்கு உள்ளுற
அத்தனே வெளிப்படையாக்க வேண்டுமால்

#89
தெய்விக வெளிப்படைத் தேற்றம் இன்று எனில்
உய்வு அருள்பவர் திரு_குமரன் உற்றவர்
தைவிகர் தந்தையில் உளர் எனத் தகு
மெய் வெளி வரு வகை யாது விள் எனா

#90
வேதியன் ஒல்லையே விநயமாய் விளித்து
ஆதரவோடு நம் ஆன்ம ரக்ஷணை
காதலாய் நுட்பமாய்க் கருதுறாமல் யாம்
பேதமையால் எமில் பிணங்கற்பாலதோ

#91
சிருட்டிகர் ஆகிய தேவ தந்தை தம்
அருள் துணை மைந்தனை அறியுமாறு இவண்
தெருட்டினால் அன்றி யார் தெருள வல்லவன்
பொருள் திறன் அறிந்தவன் புகன்றது உண்மை காண்

#92
புல் நர ஜீவரைப் புரக்கப் போந்த அ
மன் ஒரு சுதனை யாம் மனத்துள் உய்ப்பதற்கு
உன்னதத்து அரசனே உவந்து நம் அகத்து
இன் அருள் கிரியையை இயற்ற வேண்டுமால்

#93
மாயம்_இல் மெய் விசுவாச மாட்சியை
நீ அறிந்திலை சிறிதேனும் நின் இகல்
வாய் உரை தெரித்த மேல் வரு நிர்ப்பந்தத்தை
ஆயுதியாய் உணர்ந்து அறிதி தாழ்த்திடேல்

#94
ஜேசுவே அடைக்கலம் ஜெகத்தினுக்கு எலாம்
ஈசனும் அவர் குமரேசன் பக்கலில்
ஆசையோடே விரைந்து அடுப்பையாயில் உன்
பாச வெவ்_வினைகள் வேர் பறியும் காண்டியால்

#95
பாவ நிவாரணப் பயன் இது ஒன்று-கொல்
தேவ கோபாக்கினைத் திகிலும் நீங்கிடும்
ஜீவ ரக்ஷணையும் மெய் வாழ்வும் சித்தி ஆம்
ஆவலித்து ஓடுதி அகம் குவிந்து அரோ

#96
சொல் மதி இவ் எலாம் சுருதி கூறும் மெய்
நல் மதி ஆதலின் நயந்து உள் கொண்டு நீ
உன் மதியீனத்தை ஒருவி ஒல்லையே
செல்-மதி கிறிஸ்துவைச் சேவி என்றனன்

#97
ஒள்ளியீர் படபடத்து உரைக்குமாறு போல்
துள்ளுதிர் நடையிலும் எனக்குத் தூரமால்
மெள்ளமெள்ளத் தனி வருவல் விட்டு முன்
கொள்ளுதிர் என்றனன் குணத்தைக் கொள்கிலான்

#98
வாள் படை அனைய சொல் வழங்கக் கேட்பினும்
கோட்படா மனத்தினன் குறிக்கொண்டான்_அலன்
கேட்பினும் கேட்கிலாத் தகைய கேள்வியால்
தோட்குறாச் செவி எனும் சொல் பொய் ஆவதோ

#99
ஆரியன் தோழனை நோக்கி ஐய வீண்
காரியம் இனி இவண் காலம் போக்குதல்
சீரிய கதி வழி விரைந்து சேறலே
கூரிய மதி எமக்கு என்று கூறினான்

#100
ஆம் இதே கருமம் என்று அவனும் நேர்ந்தனன்
மீ மகீபதி திரு_அருளை வேண்டினார்
பாமரன்-தனை ஒரீஇப் பாதை பற்றினார்
கோமகன் திரு_புகழ் குறிக்கொண்டு என்பவே

#101
ஜீவ வழி செல் பொழுது தேசிகனும் ஏழைப்
பாவி அறிவீனன் முடிவு_இல் படர் உழக்கப்
போவதை நினைத்து என் உளம் புண்படுவது ஐய
ஆவது இனி யாது செயல் அகம் வழிய அந்தோ

#102
என்று பரிதாபமொடு இயம்பலும் நம்பிக்கை
ஒன்று மதி எத்தனை உரைத்தும் அறிவீனன்
பொன்றும் வழியூடு தனி போவது துணிந்தான்
நன்று அறியும் எந்தை இதில் நாம் பரிவது என்னே

#103
பித்து உலக மாய வலையூடு பிணியுண்டு
மத்தம் உறு மாயபுரியின் மறுகு-தோறும்
உய்த்து உணர்வு_இலாது படு மோசம் உறுகின்றார்
இத்தகையர் எத்தனையர் என்பன் உனக்கு என்றான்

#104
தூய சுவிசேஷ ஒளி தோற்ற_அரியது ஆகப்
பேய் அலகை ஆய பிரபஞ்ச அதிகாரி
மாய விசுவாசிகள் மனக் குருடு செய்தான்
ஆயது இ வகைத்து எனினும் ஐய இது கேண்மோ

#105
சோர வழியூடு திரி துர்_ஜநர்-தமக்கும்
பாரம் மிகு பாவ உணர்வு உண்டு பயம் உண்டு என்று
ஓரினும் இயற்கை அறிவீனம் உறலாலே
சீரடையும் மார்க்கம்_இலராய் உணர்வு தேய்வார்

#106
முற்றும் நல் உணர்ச்சியொடு மூளும் மனஸ்தாபம்
உற்றவிடை ஆத்தும நல் ஊதியம் இது என்னாத்
தெற்ற உணராதது சிதைக்க வகை செய்தே
துற்று உடலின் இச்சை வழியில் துணிவு கொள்வார்

#107
இன்ன வகை ஆய உணர்வு ஆதி இதயத்தில்
துன்னி நிலைபெற்றிடும் எனில் சுருதி கூறும்
நல் நெறி புகுத்தும் என நம்பி கருதுற்றாய்
அ நெறி தெரிப்பல் என ஆரணன் விரிப்பான்

#108
பாவ பயம் உன்னத பயம் பகர் இரண்டில்
ஓவலுறும் முன்னையது இடைக்கிடை உயிர்த்துத்
தேவ பயம் உள்ளுறும் எனில் திகழ் மெய்ஞ்ஞானம்
மேவும் அதுவே விதிவிலக்கின் வழி உய்க்கும்

#109
தீத் தொழிலை விட்டு ஒருவுக என்று மதி செப்பும்
மாத் தகைய ரக்ஷகரை நாடி வழிபட்டு உன்
ஆத்தும இரக்ஷை பெறுக என்று அறிவுறுத்தும்
தோத்திர ஜெபங்களை அகத்திடை தொகுக்கும்

#110
உத்தம நல் ஆவி அறிவூட்டும் முறை பற்றிச்
சுத்த மன ரம்மிய சுசீல சுகிர்தங்கள்
வித்தக விவேகம் இன மேவி அருள் வேத
சத்திய முறைக்கு நிலை தந்து தரிப்பிக்கும்

#111
இப் பெரும் நலம் தருவது ஏது பயம் அதுவே
செப்ப_அரிய தேவ பயம் மற்று இது தெளிந்தோர்
தப்பு_இல் விசுவாச முறை சார்ந்து இறுதி-காறும்
ஒப்பு_அரிய உத்தம ஒழுக்க நெறி நிற்பார்

#112
செவ்வி திகழ் உத்தம பயத்தின் உறு சீலம்
இ வகைய என்று துணியாத அறிவீனர்
வெவ்விய பிசாசு உளம் விளைத்தது என எண்ணி
அ இயல் கெடுத்து உளம் அடக்கி அலைவாரால்

#113
ஐய இது-காறும் அறிவீனன் இயல் பேசி
மையல் உறு சோகம் அணுகாது வழி வந்தேம்
வையக வழிக் கடையின் மல்கு பெரு வாழ்க்கை
கையுற அடுத்தனம் இதோ கடிகை தூரம்

#114
என்று அக மகிழ்ச்சியோடு இசைந்து வழி ஏகி
வென்றி புனை வேதியன் விளம்பிட வியந்து
நன்று மிக நன்று என நம்பிக்கையும் நடந்தான்
ஒன்றி இருவோரும் நெறி ஏகினர் உவந்தே
**அறிவீன அர்ச்சிதப் படலம் முற்றிற்று

@10 நிலைகேடன் ஆதியர் விவரணப் படலம்

#1
ஊசி புகும் ஆறு செலும் நூலின் ஒருவாமே
ஆசு_அறு நம்பிக்கை விசுவாசியை அடுத்துப்
பேசி நடை கூடினன் ஓர் பேதம்_இலராக
ஈசனை வழுத்தி நெறி ஏகினர் விரைந்தே

#2
அங்கண் ஒரு சூழலை அடுத்து மறை தேர்ந்த
புங்கவன் நம்பிக்கை முகம் நோக்கி மதி பூத்தோய்
கங்குல் இதயத்து நிலைகேடன் ஒரு கஞ்சன்
எங்கு உளன் அறிந்தனை-கொலோ புகறி என்றான்

#3
நன்று அறிவன் நான் அவனை நாணயபுரத்துக்கு
ஒன்றிய அமார்க்கபுரம் என்பது அவன் ஊராம்
முன் தனை உணர்ந்து பயமுற்று மனம் முட்டி
மன்றல் நகர் யாத்திரை மதித்தனன் ஒருக்கால்

#4
மாயநகரிக்கு அருகு அமார்க்கபுர வாயில்
ஆயது கொடு என்-வயின் அடுத்து நிலைகேடன்
மேய உணர்வும் பயமும் விண்டு விழி வழி நீர்
ஏய உள் அழுங்குவன் இரக்ஷையை வினாவி

#5
பண்டு பல கால் அவன் அகத்து எழு பயத்தைக்
கொண்டும் இரு கண் கலுழி கோத்திடு குறிப்பைக்
கண்டும் இவனுக்கு உயிர் இரக்ஷை பெறு கவலை
உண்டும் என நம்பி மனம் உருகியது எனக்கும்

#6
இப் பரிசு இருப்பினும் நம் ஈசன் ஒரு சித்தம்
எப் பரிசு எனா அதை அறிந்து இனிது இயற்ற
ஒப்பி நடை கொள்கிலர் கண்ணீர் நனி உகுக்கும்
அப் பரிசின் என் பயன் எனாச் சிறிது ஐயுற்றேன்

#7
எத்தனையரோ பரம நாமம் எடுத்து ஓதிக்
கத்துபவர் அல்லர் கதி காண்பவர் கருத்தன்
சித்தம் அறிவுற்றது செயற்கு உளம் மகிழ்ந்த
உத்தமர்களே எனும் உரைத் திறம் உணர்ந்தேன்

#8
ஆங்கு அவன் அகத்து அயல் தன்மீட்சியும் அறப் பின்
வாங்கியும் எனப் பெயர் வதிந்த மதிகேடர்
நீங்க_அரிய நட்பினர் இவற்கு அவர் நிகழ்த்தும்
தீங்கு மொழி கொண்டு எழும் நல் சிந்தனை தொலைத்தான்

#9
ஐய நிலைகேடன் முதலாய் அவர் திறத்து என்
நொய்ய மதியில் படு கருத்தை நுவல்வன் பின்
செய்ய மதி உள்ளுறை தெரித்தி இனிது என்னா
மை_அறு நம்பிக்கை முன் வகுத்திடுவதானான்

#10
இக் குறி படைத்தவர் தம் இன்னல் உறு பாவச்
சிக்கு உளம் எழும்ப நரகத் திகிலடைந்து
புக்கு_அரிய வான் கதி புகுந்திட விரும்பி
முக்கிய இரக்ஷை வழி செல்ல முயல்கின்றார்

#11
பின்னர் சில வைகல் ஒரு பெற்றி கழியப் போய்
அன்னர் பிறவிக்குணம் அகத்திடை எழும்பி
முன் உறும் உணர்ச்சியை ஒருங்கு அற முருக்க
நல் நெறி ஒரீஇ முன் நெறி நச்சி நுழைகின்றார்

#12
மேதகு வைதீக நடை வித்தக விவேகம்
சாது குண_சீலமொடு தர்ம நெறி யாவும்
ஓது பிறவிக்குணம் உயர்ந்திடில் ஒழிக்கும்
ஏது குணம் மேலிடும் அதற்கு அடிமை எல்லாம்

#13
ஆண்டகை கிறிஸ்துவை அறிந்த அறிவாலே
தீண்ட_அரும் அசுத்த உலகத்து நெறி சீத்து
மீண்டவர் மறுத்தும் அ இடர்க்குள் விழுவாரேல்
மூண்டு எழு பல் கேடு உறுவர் முன்னையிலும் பின்னே

#14
நீதி நெறி நீர்மையை அறிந்தும் அதின்-நின்றும்
மா தகைய கட்டளையை வல்லிதின் வரைந்து
போதலினும் முந்துற அப் போதம் அடையாமே
மேதினியினூடு அலைதல் மிக்க நலம் அன்றோ

#15
கக்கியது அயின்று கடை காத்து உயிர் கழிக்கும்
குக்கல் கழுவப்படினும் கோது பட ஒல்லை
புக்கு உளை புரண்டு அலையும் கோலம் அது போல் இ
மக்களும் சுத்த நெறியூடும் மறிவாரால்

#16
பிறவித் தீக் குணச் செயல் இது பிரபஞ்ச மயக்கின்
உறவும் அச்சமும் மேலிட நரக அச்சம் ஒடுங்கி
மறவி ஆதலின் உலகு இன்பம் நுகர்ந்து உயிர் வாழ்தல்
அற இயற்கை என்று அக_கரி மழுக்குகின்றாரால்

#17
அலகு_இல் ஆரண நூல் நெறி பிடித்தலின் அவியாது
உலக நிந்தை மேன்மேலும் உபாதி தொக்கு ஓங்கும்
கலகம் ஆம் அதால் தந்திரோபாயத்தால் கழிப்பாம்
இலகும் ஆயுள் என்று எண்ணியும் பின்னிடைகின்றார்

#18
புல நுகர்ச்சியை விழைந்து இறும் ஐந்துயிர் போலத்
தலம் அருத்து புன் போகத்துத் தலைதடுமாறிச்
சுலவு மாய இன்பங்களைத் துய்த்து அகம் துலக்கிக்
குலவு நல் உணர்வு அனைத்தையும் புதைப்பர் இக் கொடியோர்

#19
மேவும் நல் நெறியால் வரு வெட்கத்தின் இடறி
ஓவு_இல் ஆணவத் தருக்கினால் நல் உணர்வு ஒழிந்து
வீவு_இன்றாய் வரும் வேதனைக் கிடங்கர் வீழ்கின்றார்
தேவ பத்தியின் நலத்தை உற்று ஆய்கிலாச் சிதடர்

#20
சுலவு பாவமும் பயங்கரத் தொகுதியும் சூழ்ந்து
நிலவி மேல் வரும் ஆக்கினைத் தீர்ப்பை உள் நினைந்து
விலவிலத்து அகம் நடுங்கலில் விருப்பம் இன்று ஆகி
உலவுகின்றனர் பாவத்தில் ஊசலாடு உளத்தர்

#21
மூலமாய் அகத்து எழும்பு நல் உணர்ச்சியை முறையே
பாலனம்செய்து காக்கின்ற பத்திமைக் குழுக்கள்
மேலை நிர்ப்பந்த விழலிலே வீழ்ந்து அழிவதன் முன்
சாலவே அடைக்கலம் புகுந்து உய்குவர் சரதம்

#22
தந்தை கேட்டி சன்மார்க்கத்து நடுநிலை தவறி
வெம் துன்_மார்க்கத்துக் கவிழ்த்தும் ஏதுக்களை விதந்தேன்
எந்தவாறு பின்வாங்குகின்றார் என எடுத்துச்
சிந்தை ஆர நீ தெரிக்க என வேதியன் தெரிப்பான்

#23
தெள்ளியோய் நிலைகேடன் ஆதியர் அகம் தெளிந்து அங்கு
உள்ள கோது எலாம் நனி வடித்து உரைத்தனை உள்ளம்
விள்ளும் நல் உணர்வோடு எழும் மெய் மனஸ்தாபம்
கொள்ளும் நீரரே நிலை பிசகா நிற்கும் குணத்தர்

#24
நின்ற நல் நிலை தவறிப் பின்வாங்கிடு நீசர்
சென்றுசென்று துன்_மார்க்கத்துச் சிக்குணும் சீர் கேள்
நன்று தெய்வத்தை மரணத்தை நரக வெம் சிறையை
ஒன்றும் உள்கிலா மறதியே மூல உற்பாதம்

#25
வேத வைதிக ஒழுக்கு எலாம் முறைமுறை விடுதல்
சாதகம் பெறு பாவத்தை இச்சையைத் தழுவல்
பேதமைத் துணிகரம் கொடு பிரபஞ்ச மயக்கம்
ஓது சற்கருமங்களை ஒழிதலே உபயம்

#26
இனைய துர்_குணசீலங்கள் இதயத்துக் கெழுமிக்
கனவு போன்று சில் நாள் செலக் கருத்திடைக் கதித்து
நினைவின் ஓங்கிப் பின் வாக்கினும் செயலினும் நிலவி
வினையினால் வரவர வெளிப்பட்டிடும் விரகாய்

#27
மெய்க் கிறிஸ்தவர் கூட்டுறவு இழிவு என விடுவர்
பொய்க் குருக்கள் என்று இகழுவர் அறவரைப் பொதிந்து
வைக்கும் தீமைக்குப் புகல் சொல மறையவர் உள்ளங்
கைக்குளே நரை முளைத்தது என்று எள்ளுவர் கடுகி

#28
ஜெகம் தழைத்திடு சிற்றின்பப் பிரியர் உல்லாசர்
முகந்து கொள் பொருள்_ஆசையர் முழுக் குடி_வெறியர்
அகந்தையாளர் பேர்_உண்டியர் ஆய மற்று இவரோடு
உகந்து நண்பராய்க் கூட்டுண்டு களிப்பர் இங்கு உழன்றே

#29
வைகல் சிற்சில கழியவும் வரம்பு_இலாப் பாவச்
செய் கலந்து அனுபோகத்தை விளைப்பதே செயலாய்
உய்கலா நெறிக்கு ஓடியாடித் திரிந்து உலவிப்
பொய் கலந்த வாழ்நாள் இறப் பொன்றுவர் முடிவில்

#30
இத் திறத்தருக்கு இரங்கி நம் இரக்ஷணாமூர்த்தி
அத் துடக்கின்-நின்று அகற்றி உய்வு அருளிலர் ஆயின்
தத்தமக்கு வைப்பு ஆக்கிய கெடு நிதிச் சலதிக்கு
உத்தியோகம் பெற்று உழல்வரால் ஊழியோடு ஊழி

#31
என்று இவ்வாறு உரைத்து உறு நிலை கெட்டுப் பின்வாங்கித்
தன் துணைப் பெரு மீட்பு இனி உண்டு எனத் தருக்கும்
பொன்று தீக் குண இயல்பு எலாம் போகவிட்டிடுதும்
துன்று சோகபூமியினொடும் என்றனன் தூயோன்

#32
சொற்ற வாய்மை கேட்டு உளத்து உண்மை ஞானத்தைத் தொகுத்துத்
துற்று சோகபூமியில் படும் முயக்கு எலாம் தொலைய
முற்றும் நீத்தனம் எனும் குதுகலத்தொடு முடுகி
நல் தவத்தனோடு ஏகினன் நம்பிக்கை ஒருவான்
** நிலைகேடன் ஆதியர் விவரணப் படலம் முற்றிற்று
** ஆரணிய பருவம் முற்றிற்று