இரட்சணிய யாத்திரிகம் – ஆதி பருவம்


@1 வரலாற்றுப் படலம்

#1
உலகம் யாவும் புரந்து அருள் உன்னதர்
அலகு_இல் ஜோதி அருள்_கடல் ஆரணத்து
இலகு மெய்த் திரியேகர் பதத் துணை
குலவி என் நெஞ்சு இடம் குடிகொண்டவே

#2
மைக் கடல் புவிக்கு எத்துணை வான் கதிர்
தக்கது அத்துணைச் சால்பு உடைத்து உத்தம
மெய்க் கிறிஸ்தவ வேதியர் தாம் குழீஇத்
தொக்கதாய மெய்த் தூய திருச்சபை

#3
மலையுற்று ஓங்கு சுடரின் இ வையகத்து
அலையுற்று ஆன்ம இரக்ஷை தயங்கிடக்
கலையுற்று ஓங்கு கதிர் மதியின் சபை
நிலையுற்று ஓங்கிப் பெருகி நிலாவுமே

#4
சென்னி தேவ_குமாரன் திருச்சபைக்கு
இ நிலத் திரு_தொண்டர் எல்லாம் உடல்
அன்னவாப் பரிசுத்த அயிக்கியம்
மன்னி நின்று வளர்க்கும் தருமமே

#5
சத்தியம் தருமம் பொறை தயவு கண்ணோட்டம்
சித்த சுத்தி மெய்ப் பத்தி என்று இத்தகு சீல
வித்தகம் திகழ் சாதுக்கள் உளர் எனும் விரகால்
இத் தராதலம் உளது இலர் எனில் இலதாமால்

#6
பண்டு நோவையும் குடும்பமும் கலம் புகப் பரவை
மண்டலத்தை வாய்மடுத்ததே மயல்_அறு சான்றாக்
கண்டு கேட்டு அறிந்து இன்னமும் உய்வழி கருதித்
தொண்டுபட்டிடார் உலகர் இது என்-கொலோ துணிவே

#7
இனைய தன்மைய சாது சங்கத்தருக்கு என்றும்
முனைவன் ஈந்து அருள் சுருதியே முத்தி சாதனமாம்
அனைய நூல் வழிப் படர்தலே ஆன்ம ரக்ஷணிய
நினைவு கொண்டு உடன் சிந்தை யாத்திரை செயும் நீர்மை

#8
ஆய இத்தகு சிந்தை யாத்திரை பெரிது ஆற்றி
நாயகன் கிறிஸ்து யேசுவுக்கு அன்புசெய் நண்பன்
தூய ஜீவிய நடை கடைப்பிடித்த ஓர் சுகிர்தன்
மா இரும் புவி மயக்கு_அறு மாண்பு உடை ஞானி

#9
எம்பிரான் திரு_சித்தமே எனது பாக்கியம் என்று
உம்பர் நாயகன் பணிபுரிந்து ஒழுகும் அ உரவோன்
இம்பர் ஓர் சிறை இருந்துழி யோக நித்திரையில்
தம்பிரான் அருள் சமைத்தது தரிசனம் ஒன்றை

#10
தன் அகத்துளே தோன்றிய தரிசனம் தரணி
மன் உயிர்க்கு இரக்ஷணை வழி மரபினை வகுக்கும்
என்ன உன்னித் தன் இனத்தருக்கு எழுது பாசுரமாப்
பன்னுவேன் வெளிப்படையில் என்று ஊக்கினன் பகர்வான்
**வரலாற்றுப் படலம் முற்றிற்று

@2 மெய்யுணர்ச்சிப் படலம்

#1
வஞ்சமே பயில் ப்ரபஞ்ச வனத்திலே நெடு நாளாகச்
சஞ்சரித்திடும் போது ஆண்டு ஓர் தட மலைச்சாரல் வைகி
நெஞ்சு உளே நிமலன் பாதம் நிறுவி நித்திரிக்கும் காலை
விஞ்சி ஓர் கனவு கண்ட விதம்-தனைப் பகருவேனே

#2
வண்டு இனம் பயிலச் செய்ய மலர் முகை அவிழ்ந்து செந்தேன்
ஒண் துளி பிலிற்றி எங்கும் உறு மணம் கமழ ஓங்கும்
தண்டலைப் பரப்பினூடே தனித்து ஒரு மனிதன் நிற்கக்
கண்டனன் கனவில் அன்னோன் நிலை இது கழறும் காலை

#3
வாடிய முகத்தன் சென்னி வணக்கியோன் மலங்கி வார் நீர்
ஓடிய விழியன் கந்தை உடையினன் ஒருங்கு பாவம்
கூடிய சும்மை தாங்கிக் கூனுறு முதுகன் பல் கால்
வீடியல் நெறியை நாடும் விரும்பினன் வெருண்ட நெஞ்சன்

#4
கையுறு புத்தகத்தைக் கருத்துற விரித்து நோக்கி
மெய்யுற நடுங்கி விம்மி வேதனை பொறுக்கல் ஆற்றாது
ஐயகோ ஐயகோ என்று அலறி நெட்டுயிர்த்து யாது
செய்யுறு கருமம் என்று திகைத்து நின்று அயரும் நீரான்

#5
இருதலைக்கொள்ளி உற்ற எறும்பு என ஏகும் மார்க்கம்
ஒருதலையானும் காணாது உணங்கியோன் உலவையுற்ற
சருகு எனச் சுழல்வன் யாண்டும் தரிக்கிலன் மேலும் கீழும்
கருதி நோக்கிடுவன் உள்ளம் கசந்து அழுதிடுவன்-மன்னோ

#6
ஈங்கு இவன் இவ்வாறாக இரும் துயர்க்கு இறுதி காணான்
ஆங்கு ஒரு நெறியைக் கூடி அடவி நீத்து அகத்தை அண்மித்
தாங்கு_அரிதாகி நின்ற தற்பரிபவங்கள் எல்லாம்
பூம் குழல் மனை மகார்க்குப் புகன்றிடாது உளத்துக் காத்தான்

#7
அயலுறு நிழலைப் போக்க ஆவதோ அகத்துள் ஓங்கி
உய ஒரு புகல் இன்று என்னா உறுத்தி நின்று உடற்றுகின்ற
துயர் பிறர் அறியா வண்ணம் துடைத்திட முயன்றான் வாளா
வியன் அகத்து இயல் முகத்து விளங்கும் என்று உணரான் போலும்

#8
விள்_அரும் ஜீவ சாக்ஷி விளைத்திடும் உபாதிச் சும்மை
தள்_அரும் நீர்மைத்தாகச் சமழ்த்தலால் பரிந்து இல்லாளை
எள்_அரும் மகாரைக் கூவி இனிது அருகு இருத்தி என்றன்
உள் உயிர்_அனையீர் உற்றது ஒன்று யான் உரைக்கக் கேண்-மின்

#9
பரிபவம் ஒருங்கு கூடித் திரண்ட ஓர் பாரச் சும்மை
வெரிந் உறீஇ அமிழ்த்த ஆற்றேன் மிக மெலிந்து அயர்ந்தேன் மேலும்
எரிதரு தேவ கோப இரும் கனல் மாரி பெய்து
விரி திரை உலகும் யாமும் வெந்து அழிந்து ஒழிவேம் அன்றோ

#10
இத் திறம் நிகழும் என்றற்கு எள்துணை ஐயம் இல்லை
எத் திறம் தப்பி உய்தும் என்பதும் அறியேம் இன்னே
நித்திய ஜீவ மார்க்க நெறி அறிந்து ஓடேம் ஆயின்
சத்திய நரகத் தீயில் சாவது சரதம் மாதோ

#11
ஈசனார் கோபத்தாலே எரிந்து நீறு ஆகும் இந்த
நாச தேசத்தை விட்டு நடப்பதே கருமம் அன்றேல்
மோசம் வந்து அடையும் பின்னர் முயல்வது விருதா என்று
பேசினான் பல கால் தன்னைப் பிணித்த பேர்_அன்பினாலே

#12
இன்னணம் நிகழும் வேலை இனத்தவர் பலரும் கூடி
என்னவோ பித்தம் மேலிட்டு இவை எலாம் பிதற்றுகின்றாய்
உன்னது தலைசாய்த்து இன்னே உறங்குதி புலரி தோன்றும்
முன்னரே சுகமுண்டாகும் என்று இனம் மொழிந்து போனார்

#13
என்னுறு வருத்தம் தேராது இகழ்ந்து உரையாடுகின்ற
இன்னர் புன்_மதி-தான் என் என்று இரங்கி நித்திரை சற்று இன்றிப்
பன்_அரும் துயரமுற்றான் பகலிலும் பதின்மடங்காக்
கன்னல் ஓர் உகம்-அதாகக் கழிந்தன அவற்குக் கங்குல்

#14
கனை இருள் பிழம்பை நூறிக் கதிரவன் குண-பால் தோன்ற
வினை சுமந்து அலறி உள்ளம் மெலியும் ஆத்துமவிசாரி
மனை-வயின் குறுகி உய்யும் மதி_இலா நிருவிசாரர்
அனையவன் ஆத்ம சோகம் அதிகரித்ததனைக் கண்டார்

#15
கண்டனர் உண்மை தேரார் கவல்கின்றார்_அல்லர் வேரி
உண்டு வாய் உழறுவார் போல் உணர்வு இன்றி உரைக்கலுற்ற
மிண்டருக்கு இரங்கி நேரும் மெய்ம்மையைத் தெரித்தல் நன்று என்று
அண்டர் நாயகனை உள்ளி ஆத்துமவிசாரி சொல்வான்

#16
திரு_அருள் மலிந்து செங்கோல் செலுத்தி இச் சகத்தை முற்றும்
ஒரு குடை நிழல் கீழ் ஆக்கி உவந்து காத்து அளிக்கும் வேந்தன்
மருவு தம் குடை நிழல் கீழ் வாழும் மன் உயிர்கட்கு எல்லாம்
தரு பிரமாணம் பத்தாம் தனித்தனி சாற்றக் கேண்-மின்

#17
நம்மையே வணங்கல் வேண்டும் நமக்கு இணையாக வேறு ஓர்
பொம்மையைப் புனைந்து தாழ்ந்து போற்றிடாது இருங்கள் வீணே
நம்மது நாமம் செப்பில் நாசமே வரும் தப்பாது
செம்மை சேர் ஓய்வு நாளைச் சிந்தையால் தூய்மை செய்-மின்

#18
நலத்தொடு தந்தை தாயை நனி உபசரித்தல் நன்றாம்
கொலைத் திறம் துர்_இச்சை நீசம் களவு பொய்க்கூற்று என்றாய
புலைத் தொழில் புரியலாகா புறத்தவன் பொருள் யாது ஒன்றை
அலைத்து அபகரிக்க எண்ணும் ஆசையை அடர்த்தல் வேண்டும்

#19
என்று இவை சிலையில் தீட்டி எம்மனோர் கரத்து நல்கி
நன்று நீர் அடைய வேண்டின் நயந்து அநுட்டியும் இப் பத்தில்
ஒன்று மீறிடினும் அந்தோ ஒருங்கு தீ_சிறைக்கு உள்ளாவீர்
இன்று மீட்பு என்று சொன்னார் இறையவன் யானும் கேட்டேன்

#20
புவன மன் உயிர்கள் இந்தப் பொது விதிப் பிரமாணத்தை
அவமதித்து ஒழுகும் காலை அவரவர் அகத்து வாழும்
தவல்_அரும் ஜீவ சாக்ஷி தடுப்பன் அத் தடையை மீறில்
குவலயாதிபனுக்கு எல்லாம் கூறி முன் நிற்பன் மாதோ

#21
ஆதலால் பரமராஜன் அருள் தச_விதி கைக்கொண்டு
மேதகு ஜீவ சாக்ஷி விரோதம் இன்றாக ஓம்பித்
தீது ஒரீஇ நன்மை செய்து செம்_முறை திறம்பல் இன்றிக்
கோது_அறு நெறியின் நிற்றல் குடிகள்-தம் கடமை ஆமால்

#22
நாமும் நாம் வசிக்கும் இந்த நாச தேசத்து_உளாரும்
கோ_முறை வழுவாத் தூய கொற்றவன்-தனைப் போற்றாமல்
தீ_முறை துணிந்து செய்யும் ஜெகப் புலையனுக்கு ஆட்பட்டுச்
சா_முறை துணிந்து நின்று சருவ சண்டாளர் ஆனோம்

#23
நீள் நிலத்தவர் நகைக்க நினைப்பு இன்றி இறைவன் பேரை
வீணிலே உழறி அந்தோ வீணற்குள் வீணர் ஆனேம்
மாணுறும் ஓய்வுநாளை மதியாது மதியும் கெட்டேம்
பேணினோம்_இலைப் பெற்றோரைப் பேயரில் பேயர் யாமே

#24
நன்மை செய்தோமும் இல்லை நன்மை செய்வதற்குத் தக்க
தன்மையும் நமக்குள் இல்லை சார்வதா நன்றி கெட்ட
புன்மையும் களவும் சூதும் பொறாமையும் புரட்டும் பொய்யும்
வன்மமும் பகையும் உள்ளே மறத் தொழில் பயின்று வாழ்வேம்

#25
நம் பரமாக வைத்த நலனுறு பொருளைப் பேணி
இம்பர் ஊதியம் செய்யாமல் இரு நிலம் புதைத்து வைத்தேம்
அம் பரலோக ராஜன் அணுகி நம் கணக்கை ஆயில்
வம்பரில் வம்பர் என்று மா தண்டம் விதிப்பர் அன்றோ

#26
அச்சுதன் ஆய வேந்தன் அருளினால் உபகரிக்கும்
உச்சிதமான வாழ்வை உவக்கிலேம் உலர்ந்த என்பை
நச்சி இங்கு உழலும் நாய் போல் நலம்_இலா நாச தேசக்கு
உச்சித வாழ்வை நச்சிக்கொண்டு அலைகின்றேம் யாமே

#27
வென்றி சேர் அரசன் தந்த விதிவிலக்கு எவையும் மீறிக்
கன்றிய மனத்தர் ஆகிக் காமியச் சுவையை நாடிச்
சென்றனம் கடிந்து கூறும் ஜீவ சாக்ஷியையும் தேய்த்துக்
கொன்று உளே அடக்கிவைத்தேம் கொடுமை இங்கு இதில் வேறு உண்டோ

#28
மருங்கு எரி கதுவத் தூங்கும் மாசுணம் உணராது ஆங்கு
நெருங்கிய அரசன் சீற்ற நெருப்பினால் நாச தேசம்
ஒருங்கு அவிந்து ஒழியும் காலம் உற்றதை உணரேம் ஆகி
நருங்கு உடல் போகம் ஒன்றே நச்சி நாள் கழித்தல் நன்றோ

#29
நந்து நான் யார் ஏன் இங்கு நாடினேன் நலமே நல்கி
இந்தமட்டு எனைப் புரந்தாற்கு என் கடன் யா என் செய்தேன்
வந்திடும் கதி என் என்று மா விசாரஞ்செய்யாது
சிந்தை_அற்று உழலும் மாந்தர் ஜென்மமும் ஜென்மம் ஆமோ

#30
காட்சியால் கருத்தால் காணும் காசினிப் பொருள்கள் யாரது
ஆட்சி மற்றவர்க்குச் சொந்தம் ஆய காரணம் ஏது அம்மான்
மாட்சி சால் குணம் எவ்வாறு வசிப்பிடம் எது என்று இன்ன
சூழ்ச்சி_அற்று இருக்கும் மாந்தர் சுமை அன்றோ நிலத்துக்கு அம்மா

#31
தன்னைத் தன் நிலையை மேலாம் தலைவனை அவன் சித்தத்தை
முன்னைத் தான் அறிந்து பின்னர் முறை அறிந்து ஒழுகல் வேண்டும்
பின்னைத் தான் அறிதும் என்றல் பெரும் பிழை பெரிதும் மோசம்
என்னத்தான் கவலுகின்றேன் யாது நீர் கவலுகில்லீர்

#32
வித்தக அரசன் தந்த விளம்பரத் தொனி கேட்டு இன்னும்
இத் தலத்து இருந்து நாசம் எய்துதல் இனிது_அன்று என்று
சுத்த சத்தியம் உமக்குச் சொல்லி வற்புறுத்தும் என்னைப்
பித்தன் என்று இகழ்கின்றீர் நும் பேதைமை பெரிது மாதோ

#33
இழவு வந்திடும் என்று ஏங்கி ஈரைம்பதிருபான் ஆண்டு
கிழ முனி பகர்ந்த நீதி கேட்டு உணராத மூடப்
பழ உலகத்தை மேனாள் பயோதது இப் பரப்பு மேலிட்டு
அழஅழ அமிழ்த்திக் கொன்ற அற்புதம் அறிகிலீரோ

#34
தீதோடு நின்றீர் இன்னே திரும்பு-மின் வேந்தன் சீற்றம்
போதோடு இங்கு எழும்பும் என்ற புங்கவன் உரையைத் தள்ளி
வாதாடும் மூடர் பொன்ற வயங்கு அனல்_மாரி சிந்திச்
சோதோமைச் சுடுகாடு ஆக்கித் தொலைத்தமை தோன்றாது என்னே

#35
அடல் கெழும் இறை சீற்றத்தால் அகோர வாதைகள் எழும்பிப்
படர் உறீஇ எகிப்து நாடு பட்ட பாடு உணரீர்-கொல்லோ
மிடல் உடைப் பார்வோன்-தானும் சேனையும் விரைந்து கிட்டிக்
கடலிடைக் குளித்த மாற்றம் கதை எனக் கருதினீரோ

#36
வரும் முன்னர்க் காவாதார்க்கு வாழ்க்கை எத்துணையவேனும்
எரி முன்னர் உற்ற வைத்தூறு எனக் கெடும் என்பர் இன்னல்
பொரும் முன்னர் விலகி ஓடிப் புகலிடம் ஆய கோமான்
திருமுன்னர் அடையின் நித்ய_ஜீவனை அடைதல் திண்ணம்

#37
ஈண்டு நான் உரைத்த மாற்றம் யாவும் இப் புத்தகத்தது
ஆண்டகை அருளினாலே அடுத்தது என் கரத்து முன்னம்
காண்தகும் இதனை நீவிர் கருத்துற வாசித்து உய்-மின்
வேண்டுமேல் தருவல் ராஜ விளம்பரம் வெறுத்திடாதீர்

#38
ஆவது கருதுவீரேல் அரைக்கணமும் தாழாது
தீ வரவிருந்த நாச தேசத்தை ஒருவி இன்னே
ஜீவனே என்று கூவித் தீவிரித்து ஓடல் வேண்டும்
சாவது துணிந்தீர் ஆயின் தங்கும் இத் தேயத்து என்றான்

#39
இந்தவாறு உரைத்த எல்லாம் இரும் சிலை மீது தாக்கும்
பந்து எனல் ஆயது அன்றிப் பாமரர் பழுது மல்கும்
சிந்தையுள் நிலையாது ஆகச் சினந்து அவமதிக்கலுற்றார்
பந்தமே கொளுத்தினாலும் பயன் உண்டோ குருடர்க்கு அம்மா

#40
என்னைப் போல் பரம ஞானி இல்லை என்று எமை இகழ்ந்த
உன்னைப் போல் பித்தன் இந்த உலகத்தில் இல்லை என்பார்
பொன்னைத்-தான் மாதரைத்-தான் பூவைத்-தான் புறக்கணித்தால்
பின்னைத்-தான் எய்தும் இன்பம் பிறிது உண்டோ பேசுக என்பார்

#41
பதறி வாய் குழறி நீ சொல் பழங்கதை-தனை முன் சில்லோர்
கதறினார் தெருக்கள்-தோறும் கதித்து எழுந்து உருத்தி யாங்கள்
சிதறிட அடித்தோம் என்பார் செவிகொடாது இவன் வீண்பேச்சை
உதறிவிட்டு ஏகுவோம் நம் உறையுளை நாடி என்பார்

#42
ஜீவசாக்ஷியரைக் கொன்று சேமித்தோம் என்று நம் மேல்
தா வரும் பழியைச் சாட்டித் தனைச் சுத்தனாகக் காட்டும்
பாவகாரியைப் போல் யாரே பாதகர் என்பார் மேலைத்
தீ வரும்வரும் என்று எம்மைத் திகைப்பிப்பான் இவனோ என்பார்

#43
சேய் கொண்ட மனையாள் உற்ற சினேகரை வெறுப்பான் ஏதோ
பேய்கொண்டான் என்பர் ஏது பிறிது இலை பித்தம் மிக்கு
நோய்கொண்ட கோலம் என்பார் நுனித்திடும் மதி_அற்று இன்ன
வாய்கொண்ட-மட்டும் பேசி வாயடி அடித்தார் மன்னோ

#44
கண் இணை கலுழி காலக் கணவனுக்கு உள மருட்சி
நண்ணியது இனி என் செய்கோ நான் எனக் கவன்று உணைந்தாள்
நுண்ணறிவு உடைய நீரார் நூலொடு பழகித் தேராப்
பெண் அறிவு என்பது எல்லாம் பேதைமை உடைத்தாம் அன்றே

#45
பொற்றொடி இனையும் ஆறும் புறக்கணித்து அகந்தை பேசி
உற்றவர் இகழ்ந்த ஆறும் உணர்ந்த ஆத்துமவிசாரி
எற்று இவர் தன்மை அந்தோ என் இனிச் செய்வல் என்று
சற்று நின்று ஏகாந்தத்தில் தம்பிரான் திருமுன் கிட்டி

#46
சருவ லோகத்தை ஆளும் தயாபரா தமியேன் சூழ்ந்த
நிருவிசாரிகள் சன்மார்க்க நெறி அறியாது செய்யும்
பொரு_அரும் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் புரியும் தூய
திருவுளம் இரங்கி என்று ஜெபித்தனன் சிந்தை ஒன்றி

#47
அறம் கிளர் பரலோகத்துக்கு அரசனைப் பரவிப் போந்து
புறம் கிளர் வெளி உலாவிப் புத்தகச் சுருளை நாடி
இறங்கிய முகத்தன் ஆகி என் செய்கேன் இரக்ஷைக்கு என்று
கறங்கு எனச் சுழலும் நெஞ்சன் கவன்றனன் கலக்கமுற்றான்

#48
தேச நாசத்தை எண்ணித் திகில்படும் பிணித்து நின்ற
பாச வெவ் வினையின் மிக்க பாரத்தால் அழுந்தும் யாரே
நீசனேன் உய்யுமாறு நெறி தெரித்திடுவர் என்னும்
மாசு_அறும் உயிரைக் கூவி வாய் திறந்து அரற்றும் மாதோ
**மெய்யுணர்ச்சிப் படலம் முற்றிற்று

@3 குருதரிசனப் படலம்

#1
வித்தக ஆத்துமவிசாரி இவ்வணம்
தத்துறல் அடைந்து உயிர்-தன்னை நாடி இங்கு
எய்த்திடும் உடல் என இனைந்து சில் பகல்
மத்தரில் கழித்தனன் ஆண்டு ஒர் வைகல்-வாய்

#2
தண் அளி தயங்கிய முகத்துத் தாமரைக்
கண் இணை மல்கிய கருணை காட்டிட
உள் நிறை அன்பு மிக்கு ஒழுகிற்று என்னவே
வண்ணவான் மொழிச் சுவை அமிர்து வார்ந்து உக

#3
எண்_அரும் துயர்க்கு எலாம் இறுதி காட்டும் மெய்ப்
புண்ணியம் உருக் கொடு பொலிந்து இலங்கிய
வண்ணம் என்று உணர்வு_உளார் மனம் களிப்புற
நண்ணினன் இரும் சுவிசேஷ நாமத்தன்

#4
உருகி மெய் விசாரியை உற்று நோக்கி நின்று
அருகு அணைந்து யாரை நீ அவலிக்கின்றனை
பெருகும் இத் துயர் உனக்கு உற்ற பெற்றி என்
திருகல்_இல் சிந்தையாய் செப்புக என்றனன்

#5
ஐய கேள் நாச தேசத்தன் ஆங்கு அமர்
வெய்யரில் வெய்யன் யான் வெகுளித் தீ விழுந்து
ஒய்யென இவண் எலாம் ஒருங்கு அவிந்த பின்
மெய்யுற வரும் நடுத்தீர்வை வேந்தனால்

#6
ஆயிடைக் கருணை வேந்து ஆணை மீறிய
தீயரைத் தீச்சிறைப்படுத்தல் திண்ணம் என்று
ஏயும் இச் சுருதி நூல் இயம்புகின்றதை
ஆய இத் துயர்_கடல் அமிழ்ந்தினேன் அரோ

#7
நன்றி கொன்று இறைவனை மறந்து நாள்-தொறும்
புன்_தொழில் புரிந்து வீண் பொழுது போக்கிய
வன் தலைப் புலையனேன் மருவு தண்டனைக்கு
இன்று நின்று இரங்குவது யாவதாம்-கொலோ

#8
சாகவும் மனம் இலைத் தண்டனைக்கு எதிர்
போகவும் துணிவு இலைப் புறத்து_உளாரைப் போல்
ஏகவும் புகல் இலை ஈடுசெய்ய ஓர்
பாகமும் பலம் இலைப் பதைக்கின்றேன் என்றான்

#9
அம் சுவிசேஷன் நீ அறைந்த யாவையும்
வஞ்சம் இன்று உண்மையே மருவும் இம்மையில்
எஞ்சுறா வேதனை இயைதல் கண்டும் ஏன்
அஞ்சுதி சாவதற்கு அமைதி கூறு எனா

#10
ஜென்மநாள் தொடங்கி யான் செய்த தீ_வினை
என் முதுகு உளுக்குற இறுத்ததால் புலைக்
கன்மிகள் குழுமு தீ_கடல் கிடங்கிடை
அம்மையில் அமிழ்த்தும் என்று அஞ்சுகின்றனன்

#11
பல கலை கற்று உணர் பரமயோகி இ
உலக மன்னவர் எமை ஒறுத்தற்கு அஞ்சுதும்
நில_உலகு யாவையும் நிறுத்த நீதி மன்
அலகு_அறு தண்டனைக்கு அஞ்சிடேன்-கொலோ

#12
இனைய சிந்தனை எனது இதயத்து ஊன்றலால்
வனை பொலன் கழலினாய் வருந்துவேன் என
அனையவை அறிந்து அடுத்தவர்க்கு நன்மையே
நினை சுவிசேஷனும் நிகழ்த்துவான் அரோ

#13
நன்றுநன்று உன் நிலை நாச தேசத்து
நின்றுநின்று இத்துணை தாழ்த்தல் நீதியோ
பொன்று இடர் வரும் முனம் புகலிடம் பெறச்
சென்றிடாது இவண் உழல் சிந்தை என் என்றான்

#14
உய்வழி இதுஇது என்று உழறும் பல் வழி
பொய் வழி அ வழி போகுவேன் அலன்
தெய்வநாயகன் திரு_நகர்க்குச் செல் வழி
எ வழி அ வழி இன்னும் தேர்கிலேன்

#15
ஆதியான் திரு_நகர் அடுக்கும் ஜீவ நல்
பாதை நீ அறிதியேல் பகர்தியால் என
வேதியர் குரவனை வினவினான் அவன்
ஓதுவல் கேட்டி என்று உரைத்தல் மேயினான்
**குருதரிசனப் படலம் முற்றிற்று

@4 பரமராஜ்யப் படலம்
**திருநாட்டுச் சிறப்பு

#1
உன்னத பரலோகத்தில் ஒருதனிச் செங்கோல் ஓச்சி
மன் அரசாட்சி செய்யும் மகத்துவ கடவுள் வேந்தன்
பன்ன அரும் புனித நீதி பரம காருணியம் பூத்த
சன்னிதி மகிமைச் செல்வம் தழைப்பது திரு_நாடு என்றும்

#2
அருள் முகில் கிளம்பி அன்பின் ஆர்கலி அமுதம் மொண்டு
திரு மலி தரு ரக்ஷண்ய திவ்விய சிகரி போர்த்துப்
பொரு_அரும் கருணை_மாரி பொழிந்த புண்ணிய மா நீத்தம்
ஒருமுகம் ஆகி ஜீவ கங்கையாய் உலாயது அன்றே

#3
சேணுற நிவந்த மேருச் சிகரி-நின்று இழிந்து மண்ணோர்
காண்_அரும் புனித ஜீவ கற்பக மலரை ஏந்தி
மாணுறு பரம ஞான மணி அணிக் குவை வரன்றி
நீள் நிலம் செழிப்புற்று உய்ய நீத்தமாய்ப் பரந்த மாதோ

#4
முத்தலைச் சிகரி-நின்று முளைத்த இச் சீவ கங்கை
வித்தக விமல ஞான போனகம் விளைவித்து ஊட்டிப்
பித்தளை உலகைத் தூய்மை பிறங்கு பொன் உலகம் ஆக்கி
உத்தமம் திகழ்த்தும் சீர் சால் ஒழுக்கு உடைத்து இன்றும் என்றும்

#5
ஒரு நெறித்து ஆகித் தூய்தாய் உள்ளுறத் தெளிந்து பாவத்
தரு வனம் முறித்துச் சாடித் தருமச் செஞ்சாலி நீடப்
பெரு வளம் படுத்து நித்ய பேர்_இன்ப ஜலதி கூடும்
திரு உடைத்து ஆதலால் இத் தீர்த்திகை சுருதி போலும்

#6
தண் அளி மருவி ஆன்ம தாரகத்து உருவம் வாய்ந்து
விண் இழி புதுமை காட்டி விதி வரம்பு ஒழுக்கம் பூண்டு
கண் அகல் ஞாலம் உய்யக் கனிந்து உயிர் அளித்துக் காத்துப்
புண்ணியன் கிருபையேயாய்ப் பொலிந்தது ஜீவ வாரி

#7
மானிட ஜீவ தோட மலினத்தைக் கழுவித் தூய
போனகம் ஆகித் தாகம் போக்கு பானமுமாய் என்றும்
ஞான ஜீவனை வளர்த்து நற்கதிப் பயன் தந்து உய்க்கும்
மாநுவேல் குருதி போலும் மானத ஜீவ கங்கை

#8
வீற்றுவீற்று ஆகிச் சென்று ஐ_வகை நில வேறுபாட்டை
மாற்றி நல் மருத வைப்பா வளம்படுத்து அறத்தை ஓம்பி
ஏற்றமும் தாழ்வும் இன்றாய் எங்கும் ஓர் சமமாய் ஈண்டும்
ஆற்றல் சால் கடவுள் வேந்தன் ஆணையைப் பொருவும் வாரி

#9
அற்பு ஜீவ கங்கை ஆற்றிலே அகண்ட வானத்து
உற்பவித்து ஊழியூழி உலவி நின்று ஒடுங்கித் தோன்றும்
பற்பல பேதம் ஆய பகிரண்ட கோடி எல்லாம்
பொற்பு உற மிதப்பவேயாம் புற்புத சாலம் போன்றே

#10
நிறை வளம் படுக்கும் தூய நித்திய ஜீவ கங்கை
துறை-தொறும் பிரிந்து போந்து தொடு குளம் மடுத் தடாகம்
குறைவு_அற நிரப்பி உண்மை குலவு நீள் மருத வைப்பின்
கறை துடைத்து இதயம் என்னும் கழனி புக்கு அளைந்தது அன்றே

#11
நீர் வளம் கண்டு கோமான் நில வளம் படுக்கும் மாக்கள்
ஏர் வளம் பெறத் திருத்தி இறைவனை வழுத்தி ஏத்திச்
சீர் வளம் தரு நல் வித்துத் தெளித்து நீர் பாய்ச்சி நாளும்
பார் வளம் பெறச் செஞ்சாலிப் பயிர் வளம் படுப்பர் மன்னோ

#12
இரு வகைப் பவத் தூறு ஓங்கி இருண்ட பேர்_அடவி முற்றும்
கருவறச் சுருதி என்னும் கட்கம் கொண்டு எறிந்து போக்கித்
திரு வளர் புனித நித்ய ஜீவ_நீர்க் கால் கொண்டு உய்த்துப்
பொரு_அரு மருத வைப்பாப் புதுவல் பண்படுத்துவாரும்

#13
ஏர் விசுவாசம் ஆக எருது அவா ஊக்கம் ஆகச்
சேர் நுகம் கடப்பாடு ஆகச் செறி வடம் சிந்தை ஆகக்
கூர் நுதிக் கொழு எம் பெம்மான் திரு_மொழிக் கூறது ஆகப்
பார் அற உழுது செய்கால் ஆக்கி மெய்ப் பணி செய்வாரும்

#14
குளம் கரை பேணி ஜீவ_நீர் குறிக்கொண்டு உய்ப்பாரும்
வளம் கெழு மருத வைப்பா வறு நிலம் திருத்துவாரும்
விளங்கு வித்து ஒளிரக் கண்டு மேலுற வளர்க்கின்றாரும்
இளம் களை கட்டு நீர்கால் யாத்து இனிது ஓம்புவாரும்

#15
பழ நறை பருகிச் சிந்தை பரவசர் ஆகிச் செய்ய
மழ களிறு அனைய மள்ளர் வரன் முறை சுருதி கூட்டிக்
கொழு நிழல் வைகிக் கோமான் குணம் குறி விதந்து பேசி
எழும் மிடற்று இசையில் பாடி இதயம் நெக்குருகுவாரும்

#16
மேவரும் திரு_நாடு எங்கும் வித்தக உழவர் வேலை
ஓவு_அற விசுவாசத்தின் ஒண் கருப் பொதிந்து முற்றிக்
காவலன் அருளால் ஜீவ மணிக் கதிர் கஞலி ஈன்று
தா_இல் பேர்_இன்ப போகம் விளைப்பது தருமச் சாலி

#17
எண்படும் இதயம் என்னும் செறுவிடை எல் இராவாப்
பண்படுத்து ஊன்று சத்யப் பைம் கழைக் கரும்பு பல்கிக்
கண் படைத்து ஓங்கி உய்த்த நறும் சுவை கனிந்த பாகின்
விண் படு போகம் துய்ப்பார் வேதியர் குழுக்கள் மாதோ

#18
வீறு கொள் மதுரச் செந்தேன் விளைக்கும் முந்திரிகை வாய்ந்த
தாறுகள் பிதிர்ந்து சிந்தித் தலைத்தலை பெருகி ஓடும்
தேறல் புக்கு அளைதலாலே தெளித்த சித்திரப் பூம் பண்ணை
நாறுகள் குலவி ஓங்கி வளர்வுறு நலத்த நாளும்

#19
புண்ணிய நதி தீரத்துப் பொரு_அரு மருத வைப்பில்
நண்ணிய பயிர் வருக்கம் தருக் குலம் பிறவும் நல்கும்
எண்_அரும் பயனை ஈட்டி இறைவனைப் பரவித் துய்த்துக்
கண் அகல் திரு_நாடு எங்கும் கடி விழாக் கொள்ளும் அன்றே

#20
ஜீவ_நீர்த் தடங்கள்-தோறும் செழும் புனல் குடைவோர் ஈட்டம்
தா_அரும் கழனி-தோறும் தருமச் செஞ்சாலி ஈட்டம்
பூ அலர் பொய்கை-தோறும் புது மதுத் திவலை ஈட்டம்
மீவரும் எழிலி-தோறும் வேந்தன் ஓர் கருணை ஈட்டம்

#21
முத்திநாட்டு எழில் முயங்கக் காட்டலில்
நித்ய_ஜீவ நீர் நிலை அகன்றிடாது
உத்தமக் குலத்து ஓதிமக் குழாம்
பத்தி செய் தவப் பள்ளி போலுமால்

#22
மாகம் மீது நேர் கருணை_மாரி பெய்
மேகம் கண்டுகண்டு உவந்து வித்தகத்
தோகை மா மயில் அகவுஞ் சூழல்-வாய்
நாகம் மாயுமே நாகம் ஆயுமே

#23
ஆதபன் கதிர் அலரும் காலையில்
மாதர் வாள் முக வாரிசங்களும்
சீத வாவியின் செய்ய பங்கயப்
போது அலர்ந்திடும் போது அலர்ந்திடும்

#24
இன்னலுற்றவர்க்கு இரங்கி யாண்டும் மெய்
நன்னர் வாசகம் நவிற்றி ஆதரித்து
உன்னு_அரும் குணத்து உதவிசெய்திடும்
அ நலார் எலாம் அம் நலார்களே

#25
மாரிசம் களை மா தவத்தரும்
நாரி சங்கமும் நண்ணி அங்கு இரு
பாரிசங்களும் படியுங்கால் முக
வாரிசம் குலாம் வாரி சங்கமே

#26
மரு மலிந்த பூம் பொழிலின் மைந்தர்-தாம்
திரு மலிந்த மங்கையர் சிறாரொடும்
நிருமல் ஆதிபன் பணிசெய் நித்திய
கருமம் சாலுமே கரும் மஞ்சு ஆலுமே

#27
மூசு பைம் புயல் முயங்கு சோலை-வாய்
ஆசி அம் பனி அலரும் தண்டலை
காசு_இல் ஜீவபுஷ்கரிணி ஆடுவார்
தேசு மல்கு எழில் தேகம் கூடுவார்

#28
துன்று காவகச் சூழல் எங்கணும்
மன்றல் ஆர்ந்த தண் மலர்ப் பொதும்பரும்
தென்றல் வந்துவந்து உலவும் செவ்வியால்
பொன்றுவார் எலாம் அடைவர் புத்துயிர்

#29
நாடு_அரும் திரு_நாட்டு வைபவம்
ஊடு அறிந்துஅறிந்து உம்பர் இன் இசை
பாடுவார் முழுது உணரற்பாலரோ
வாடும் மானிடம் வகுப்பது எங்ஙனம்
**திருநகரச் சிறப்பு

#30
நித்தியமாய்ப் பூரணமாய் நின்மலமாய் ஆனந்த நிலையம் ஆகிச்
சத்திய ஞானம் தருமம் தயை சாந்தம் பரிசுத்தம் சர்வ_சக்தி
இத்தகைய அனந்த கலியாண குணத்து இறை மகிமை இலங்கும் தானம்
முத்திநகர் எனத் திகழ்த்தி முதிய திரு_அருள் சுருதி மொழியும் அன்றே

#31
வாக்கு மனம் எட்டாத பரம சுகானந்த பத மகத்துவத்தின்
ஆக்கம் எடுத்துரைப்பவர் ஆர் அறிபவர் ஆர் ஆரும் இலர் ஆய போழ்தும்
காக்கை மனை பிறை என்று காட்டுதல் போல் அருள் வேதம் காட்டும் கூற்றை
மீக் கிளரும் ஆசையினால் ஒருசேரத் திரட்டி இங்கு விளம்புகின்றாம்

#32
முத்திநகர் பரமபதம் திரு_நாடு திரு_நகரம் மோக்ஷம் வீடு
நித்திய ஆனந்த பத நித்திய ஜீவக் கழக நிகில மூலம்
உத்தம மங்கள ஸ்தானம் உன்னத மண்டலம் பரமாகாயத்து உச்சி
சத்யமன்றம் புனிதமன்றம் தேவாலயம் பரம சந்நிதானம்

#33
உச்சிதப் பட்டணம் பதவி ஊர்த்த கதி பொன்னகரம் உம்பர் நாடு
சச்சிதானந்தபுரி தருமபுரி அடைக்கலப்பட்டணம் சாம்ப்ராஜ்யம்
முச்சிகரி திகழ் சீயோன் முதுகுன்றம் மும்முரசம் முழங்கும் முன்றில்
அச்சுத வேந்து அரசிருக்கை திருக்குமராலயம் பரிசுத்தாவிமன்றம்

#34
புண்ணிய மா நகர் இனைய பொற்பு உறழும் திரு_நாமம் பொருந்தி நிற்கும்
நண்ணு_அரிய திரு_நகர்க்கு நால் திசையும் புடை வளைந்து மேலும் கீழும்
அண்ணல் அரசாணை வழி அநாதி நியமனமாக அகண்ட மாய
கண் அகன்ற பெருவெளியே கடி அரணாச் சூழ்ந்தது திகாந்தம்-காறும்

#35
கதி கூட்டி எமைப் புரப்பான் காதலனை உவந்து அளித்த கருணை வள்ளல்
அதி பாரிசுத்தம் எனும் அழல் பிழம்பு பரந்து திரண்டு அவியாது ஓங்கி
எதிர் ஏறு பகை துமிய எரி வீசி நீறு ஆக்கி இலங்கு ஜோதிக்
கதிர் ஏற விளங்கிநிற்கும் அகழி சூழ் தழல் அரணம் கடி நகர்க்கே

#36
ஓர் ஆழி-தனை உருட்டி உலகம் எலாம் காத்து அளிக்கும் உம்பர் நாட்டுச்
சீர் ஆழிப் படை அரசன் தீர்க்காலோசனை அறிவே செறிந்து மல்கும்
பேர்_ஆழிக் கிடங்கு ஆகி மதில் வளைந்து புறம் கிடக்கும் பெற்றியோரில்
கார் ஆழி எனத் திரண்டு வரும் பகைக்குக் கதி அதோகதி மற்று அன்றே

#37
சீர் ஆற்றுந் திரு_நகர்க்குச் சிறப்பு ஆற்றும் அரண் ஆகித் திறலும் ஆற்றிக்
கூராற்றும் படைக்கல யந்திரப் பொறிகள் பல குழுமிக் கொற்றம் முற்றி
ஏர் ஆற்றும் அகிலாண்ட கோடி எலாம் தூசி என இயங்கல் ஆற்றும்
பேர்_ஆற்றல் உடைய பிரான் பெருந்தகைமை எனப் பிறங்கும் பெரும் துருக்கம்

#38
திமிரம்_அற வரும் இரவி ஒளி மழுங்கச் சுடர் எறிக்கும் செம்பொன் இஞ்சி
சமரகித திரியேக சருவ லோகாதிபதி சருவ சக்தி
அமரர் உலகமும் அறியாது அதன் மகிமை பெருமைகளை அறிவம் என்னில்
தமர நீர்க் கடல் ஆழம் நரி வால் கொண்டு அளந்து அறியச் சமைவது ஒக்கும்

#39
புரக்க வரும் திரு_கருணைப் புத்தமுத கடமாம் பொன்னகர்க்கு நீதி
இரக்க சமரசமாய திரு_கடைக் கோபுர வாயில் எழில் கொண்டு ஓங்கி
வரக் குருதிக் கறை தோய்ந்த ஒரு சிலுவை மணித் துவசம் மலர்க் கை காட்டி
நரக்குலத்தீர் வம்-மின் என விளிப்பது போன்று அலங்குவன நாலு திக்கும்

#40
சூரியர்கள் ஒரு கோடி தொக்கு உதித்த பரிசு என்னச் சுடரும் செம்பொன்
ஏர் இயங்கு புனித திரு_மாளிகை மற்று இதுவே ரக்ஷணிய முன்றில்
சீர் இயங்கு பரலோகத்து இளவரசன் வீற்றிருக்கும் தெய்வ_வீடு
தேரில் இதே நமர் குழுமி நித்திய ஜீவானந்தம் தேக்கும் மன்றம்

#41
மருள் பழுத்த நர ஜென்ம மாய விடாய் அறத் தொலைத்து மறுமை ஆக்கி
அருள் பழுத்த குமரேசன் திரு_முக மண்டலச் சேவை அமுதை ஊட்டித்
தெருள் பழுத்துத் திகழ் நித்ய ஜீவ மணி மௌலியை நம் சென்னி சூட்டிப்
பொருள் பழுத்த பெரும் செல்வத்து எமை இருத்தி வைக்கும் இந்தப் புனித வீடு

#42
எண்_அரிய பரலோகத்து இளவரசன் பெரும் சீர்த்தி ஈட்டம் என்கோ
தண் அளி அன்பு அருள் இரக்கம் தயை ஆதிக்கு உறையுள் என்கோ தரணிக்கு ஈட்டும்
புண்ணியமாம் ரக்ஷணியம் படிவம் எடுத்து உயர்ந்து ஓங்கு புதுமைத்து என்கோ
பண்ணவர் வாழ்த்து ஒலி மடுத்து நித்திய பேர்_இன்பம் நிறை பரம_வீட்டை

#43
வான ரமியம் திகழ் மதில் வளைத்து அக்
கோன் நகர் எங்கணும் குலவு ஜோதிய
பானுவின் குழுக்களைப் பத்தி செய்து என
மேனிலை மாளிகை விதம் பல் கோடியே

#44
மின்னையும் வெயிலையும் விரவி மேதகு
பொன்னினும் மணியினும் புனைந்தவோ எனப்
பல் நிற மாடங்கள் பந்திபந்தியா
உன்னதத்து இமைப்பன உலப்பு_இல் கோடியே

#45
வயின்-தொறும் சந்நிதி மகிமை வாய்ந்து எழில்
குயின்று பல் மணிக் குலக் குவையின் ஆக்கிய
வியன் தட மாளிகைத் தலங்கள் விண் புலம்
பயின்று ஒளி கிளைப்பன பற்பல் கோடியே

#46
புண்ணிய நவமணி பொருத்திப் பொற்புறு
தண் அளிக் குருதி அன்பு அளைந்த சாந்தினே
மண்ணுலகருக்கு என வகுத்த ரக்ஷணை
கண்ணிய மாடங்கள் கவினும் கோடியே

#47
கோன் அருள் பணி குறிக்கொண்டு உஞற்றி வாழ்
ஊனம்_இல் ஆவிகட்கு உரிமை பூண்டு உயர்
வான்_உலகு ஏழ் என வகுத்துக் காட்டிய
மேனிலைக் கோபுரம் விவித கோடியே

#48
சொல்_அரும் முத்தி மா நகரும் சூழ்ந்து உள
எல்லையும் வான் சுடர் இயங்குகிற்கில
மல்லல் கூர் தம்பிரான் மகிமையின் சுடர்
புல்லி நின்று அவிர் ஒளிப் பிரபை போர்க்குமால்

#49
ஜீவ மாளிகைத் திரு_முன்றில் தேங்கிய
ஜீவ நீர்நிலை பெருக்கெடுத்துத் திவ்விய
ஜீவ மா நகரத்தைச் செழிப்பித்து ஊடுரீஇ
ஜீவகோடிகளுளுய ஜெகத்தில் பல்குமால்

#50
ஜீவபுஷ்கரிணியின் தீரத்து ஓங்கிய
ஜீவ கற்பகம் எனும் தெய்வ மாத் தரு
ஜீவ_நாயகன் அருள் பழுத்த செவ்வியில்
ஜீவ மாக் கனித் திரள் செறிந்து மல்குமே

#51
மானத வாவியில் படிந்து மாட்சி சால்
ஆனிக கருமங்கள் ஆற்றி ஆண்டகை
தூ நறு மலர்ச் சரண் தொழுது தைவிக
போனகம் நுகருவர் புலவர் தாம் குழீஇ

#52
ஆண்டகை அருள் வழி ஆவியின் கணம்
வேண்டு உரு எடுப்பர் செய் வினை வசத்தராய்க்
காண்தகும் உலகிடைக் கரந்து வைகுவர்
சேண் தலத்து இயங்குவர் செவ்விக்கு ஏற்பவே

#53
அணி கிளர் திரு_நகர்க்கு அரசன் ஆணையில்
பணி முறை புரிகுவர் பணி செய் ஆவிகள்
தணிவு_இல் பேர்_உவகையைச் சாற்றும் அங்கு அவர்
திணி சுடர் இரவியின் திகழும் வாள் முகம்

#54
மும்முரசு ஒலி அருள் மழை முழக்கு ஒலி
மம்மர்_இல் வான் கணம் வழுத்து பேர்_ஒலி
செம்மல் சீர் புனைந்து உரை திவவி யாழ் ஒலி
கைம்மிகுத்து இசைபடும் ககனம் எங்கணும்

#55
நன்மை சால் திரு_நகர் நந்தனத்து அலர்
தன்மமும் கருணையும் தயை அன்பு ஆதி சற்கன்மமும்
நறும் கடி கமழ்ந்து உலப்புறாப்
பொன் மலர்க் குவைகளாப் பொதுளும் எங்கணும்

#56
சிறை உடைத் தூதர்-தம் சேனையின் குழாம்
முறைமுறை அகிலத்து முடுகி முத்திநாட்டு
இறை திருவுளக் குறிப்பு இனிதின் உய்த்து அது
குறைவு_அற முடித்து மீண்டு அடுப்பர் கோன் நகர்

#57
தேவ உத்தரம் கொடு திகந்தத்து ஏகுவர்
மூவுலகங்களும் இமைப்பின் முந்துவர்
தாவி விண் படர்குவர் சமுகத்து எய்துவர்
வேவு அறி சதுரராம் விபுத ஒற்றரே

#58
கல்லி மூவுலகையும் கழங்கு என்று ஆட்டவும்
ஒல்லை வான் சுடர்களை ஊதி ஓட்டவும்
வல்ல வான் சேனைகள் வரம்பு_இல் கோடிகள்
தொல்லை அம் ககன மாளிகை தொக்கு உள்ளன

#59
மேலை நாள் இளவரசு உயர்த்த வெல் கொடிக்
கோலின்-நின்று உலகர்க்குக் குருதிச் சான்றுரை
ஞாலம் மீத் திகழ்த்திய நலம் கொளும் ஜெய
சீல சங்கத் தொனி திகந்தம் முட்டுமே

#60
துன்பம் யாதும் இன்றாகத் தூய் தவர்
பொன் பொலிந்த அப் புரவலன் கழற்கு
அன்புசெய்துசெய்து அழிவு இலாத பேர்
இன்பம் எய்தி வாழ்ந்திருப்பர் என்றுமே

#61
பகல் இரா எனும் பகல் இலாத அப்
புகர்_இல் வான நாட்டு அரசன் பொற்புறு
மகிமை ஒண் கதிர் வனையும் ஆடையா
நகரவாணர்க்கு நலம் பயக்குமே

#62
முத்தி மா நகர் முழுதும் தம்பிரான்
சித்தம் யாது அது செய்துநிற்பதே
நித்தியானந்த நிகர்_இல் வாழ்வு எனாப்
பத்தி செய்யுமால் பரம சிந்தையாய்

#63
அரசர் தம்பிரான் அம் பொன் சேவடி
அர சரோருகம் வழுத்தி ஏத்தி மும்முரசு
அறா விழா அணி கொள் முன்றில்-வாய்
விரசுவார் அனவரதம் விண்ணவர்

#64
அற்புத ஜீவ கங்கை ஆடுவர் அமரர் ஆவார்
பொற்புறு ராஜ சேவை பொருந்துவர் புனிதர் ஆவார்
கற்பக நிழலில் தங்கிக் களிப்பர் வான் கணங்கள் ஆவார்
தற்பரன் தொழும்பு செய்வர் தகைபெறு முத்தர் ஆவார்

#65
இறை பரலோக ராஜ்யத்து எழில் நலம் எதிர்வோர்க்கு என்றும்
பொறி பல அனந்தம் ஆகப் புலன் எலாம் புதுமைத்து ஆக
அறி-தொறும் பரமானந்த அதிசயக் காட்சி எய்தி
முறைமுறை துதித்துப் போற்றிப் புகழுவர் முனைவன் சீர்த்தி

#66
அத்தனார் அருளின் ஆக்கம் அரசிளங்குமரன் காட்சி
வித்தகப் புனித ஆவி விழுத்தகு சுமேதம் தூய
முத்திவீட்டு அறவோர் நட்பு முறை வழாத் தோத்ர கீதம்
இத்தகு பேறே அன்றோ ஈறு_இல் பேர்_இன்ப செல்வம்
**பரமராஜ்யப் படலம் முற்றிற்று

@5 அரசியற் படலம்

#1
பன்னற்கு அரிதாய பவித்திர ஞான செல்வம்
மன்னிப் பொலியும் திரு மா நகர் மன்னர்_மன்னன்
இன்னல்படு பாதலம்-நின்று எடுத்து எம்மை மீட்பான்
நன்னர்க் குமரேசனை நல்கும் மெய்ஞ்ஞான மூர்த்தி

#2
இல்லாமையிலே வெளி வான் முகட்டு எண்_இறந்த
பல்லாயிர கோடியவாம் பகிரண்ட கோளம்
எல்லாம் படைத்து ஒண் விதி காட்டி இயங்குவித்த
சொல்லாற்றல் மிகும் பரலோக துரந்தர் ஏசன்

#3
மங்காத பரஞ்சுடர் வாக்கு உருவாய மைந்தன்
பொங்கு ஓத வைப்பும் புரை_அற்று அகல் வானும் எங்கும்
செங்கோல் பிடித்துத் தனி ஆழி செலுத்த நாளும்
தம் காவலை உய்த்து அரசாட்சிசெய் சார்வ பௌமன்

#4
ஆனாத நலம் திகழ் தைவிக ஆத்துமேசன்
சேனாபதி ஆகி அறப்பகை செற்று நெஞ்சில்
மேல் நாடும் இரக்ஷணை வித்தி விளைப்ப நாளும்
வான் நாடு போற்றத் திறைகொள்ளும் மகேச வள்ளல்

#5
அந்தக் கரணங்களும் வாக்கும் அகண்ட லோகத்து
எந்தச் செயலும் பிசகாது இயலாத போதே
முந்துற்று அறிந்து முறை செய்யும் வரம்பு_இல் ஞான
விந்தைப் பெருமான் விபுதாதிபன் வேந்தர்_வேந்தன்

#6
புனிதம் திரு_மேனி முகம் திகழ் புண்ணியங்கள்
தனிதம் தரு பேர்_அருள் அம் புயம் சர்வ சக்தி
நனி துற்று மெய்ஞ்ஞானம் உயிர்ப்பு நீதாசனத்தில்
இனிது உற்று உலகு ஆட்சிசெய் ராஜவிராஜனுக்கே

#7
வல்லார் புகழும் புகழ்ச்சிக்கும் அதீதன் வானத்து
எல்லார் துதி தோத்திர எல்லை இகந்து நின்ற
நல்லான் கணிப்பு_இல் கருணை_கடல் தோற்ற நாசம்
இல்லாத அநாதி சுயம்பு உலகு எங்கும் உள்ளான்

#8
பெருமைத் திடர் ஏறிய பிச்சுறு பேய்க் கணத்தை
நிருமித்த சிறைத்-தலை உய்த்து அகல் நீள் நிலத்தில்
இருமைக்கும் நலம் தரும் இரக்ஷணை ஈட்டிவைத்த
தருமத்துரை ஆய தயோர்ச்சித சக்கரேசன்

#9
வென்று ஆழி நடத்தி அறம்படு விண்ணும் மண்ணும்
ஒன்றாக விரிந்து கவிந்து உயர்ந்து ஓங்கி உம்பர்
நின்று ஆதரம் முற்றிய தண் அளி நீடும் ஒற்றைக்
குன்றாத கொற்றக்குடை வெண் மதி மேல் நிழற்ற

#10
திருகார் வினை சிந்தி மெய்ந்நூல் முறைசெய்யும் நீதி
இரு கூர் திகழ் பட்டயம் மின் விசித்திட்டது என்ன
ஒரு-பால் சுடர்விட்டு ஒளிர் அக் கிருபாசனத்தின்
இரு-பால் அருள் வெள்ளம் எழுந்து உலகு எங்கும் மல்க

#11
பொதிர் ஏற விசும்பு நிறைந்த புத்தேளிர் ஆவார்
அதி பாரிசுத்த பரிசுத்தர் என்று ஆர்ப்பரிக்கத்
துதி தோத்திர கீதம் மலிந்து இசை துன்னி ஓங்கப்
பதி-தோறு அணவும் மறைவாணர் பல்லாண்டு கூற

#12
எங்குத் தொகு பூத சராசரத்து ஈட்டம் ஆதி
சங்கற்ப விகற்பம் இலாது இயல் சார்ந்து நின்று
துங்கப் பிரமாண வரம்பு அகச் சூழல் புக்குக்
கங்குல் பொழுதும் தவறா நடை காட்டி ஏத்த

#13
முரசம் கறங்கச் சுரமண்டலம் முந்து கீதப்
பிரசம் பொழியத் திருமுன் தருமம் பிறங்கப்
பர சங்கம் மல்கிப் பணிசெய்து பராவி நிற்ப
அருகு ஆசனத்தில் குமரேசன் அமர்ந்து இருப்ப

#14
கண்ணோட்டம் மல்கு கவின் ஆர் கருணாலயத்தின்
உள்நாட்டு நீதியொடு பேர்_அருள் ஒத்து உலாவ
மண்_நாட்டவர் வாழ்த்து ஒலி அம் செவி வாய்மடுப்ப
விண்_நாட்டு அரசன் திருச் சந்நிதி வீறும் என்றும்
**அரசியற் படலம் முற்றிற்று

@6 சிருஷ்டிப் படலம்

#1
வாக்கினுக்கு அதீதமான மகிமையின் வனப்பு வாய்ந்த
மேக்கு உயர் பரலோகத்து இ வித்தக அரசன் தம் ஓர்
கோ_குமரனுக்கு என்று இந்தக் குவலயம் புதுக்கிச் செங்கோல்
ஆக்குவான் சித்தம் செய்த அநாதி நிண்ணயம் ஒன்று உண்டால்

#2
கருத்துறு கருமம் முற்றக் கருதி ஓர் வாக்கினாலே
உருத் திகழ் குவலயத்தை ஓர் அறு திவசத்துள்ளே
திருத்தித் தம் குடைக்கீழ் ஆக்கித் தெய்விக குமரற்கு ஈந்தார்
வருத்தம் இங்கு எவனோ எல்லாம் வல்ல சித்தருக்கு மாதோ

#3
மலை கடல் ககனம் நாடு மதி கதிர் புனல் யாறு ஓடை
நிலை மடு வாவி சோலை நிலவொளி மழை பல் பண்டம்
தொலைவு_இலாப் பயிர் வருக்கம் தொக்க பல் வளங்கள் எல்லாம்
கலை மதி மாந்தர்க்கு என்றே கையளித்தனர் நம் கர்த்தன்

#4
பகுத்துணர்வு அறிவு ஞானம் பரிசுத்தம் அகத்துப் பாக்யம்
உகுக்கு_அரு மன_சான்று இன்ன உவந்து இனிது அளித்து நம் சொல்
செகுத்திடாது இரு-மின் என்னா ஜீவ வாக்கு அருளித் தேவ
மகத்துவ அரசன் வைத்தார் மாந்தரைப் புதிய வைப்பில்

#5
முன்னவன் ஆதாம் என்ற முதல் மனு_மகனை நோக்கி
இ நிலத்து உரிமை எல்லாம் ஈந்தனம் எம் கோலின் கீழ்
மன்னவன் ஆகி நீயே மனுமுறை வழுவா வண்ணம்
நன்னர் ஆண்டு இருத்தி உள்ள நலம் எலாம் துய்த்து ஈண்டு என்றார்

#6
உன்னத அரசன் சொற்ற உத்தரம் சிரம் மேல் கொண்டு
மன்னவன் மிருத்திகேயன் அத்தினி எனும் பூ மாதைத்
தன் ஒரு மனைவி ஆக்கித் தழுவி வீற்றிருந்தான் அன்றே
பன்_அரும் ஜீவ வர்க்கம் பணி புரிந்து ஏத்த மன்னோ

#7
சேத்திரம் புனிதம் ஆகச் சிந்தையும் வாக்கும் தேவ
தோத்திரம் ஆகச் செய்கை சுகிர்தமே ஆகத் தூய
பாத்திரம் ஆகத் தேகம் படு பயன் தமதே ஆகக்
காத்-தொறும் உலவி உண்டு களித்து நாள் கழிப்பர் மாதோ

#8
ஒழுக்கமே கலன்கள் ஆக உடை பரிசுத்தம் ஆக
இழுக்கு_அறு கருமம் மேனிக்கு இடும் நறும் சாந்தம் ஆகப்
பழுக்கும் மன் பத்தி அன்ன_பானமாப் பகல்கள் எல்லாம்
வழுக்கு_அறு மரபில் போக்கி மா தவம் புரிவர் நாளும்

#9
புத்து இராஜ்ஜியத்தின் ஆதி பூருவ குடிகள் ஆய
உத்தமர் அரசன் சித்தம் உவந்து இனிது அடங்கி நாளும்
மித்திரர் ஆகித் தூய விதிவிலக்கு ஓம்பிப் பிள்ளைப்
பத்தியாய் வழிபாடு ஆற்றிப் பவித்திர நெறியில் நிற்பார்

#10
சரம் எலாம் விகற்பு ஒன்று இன்றித் தத்தமில் உறவுகொண்டு
நர மனோகரமாய்க் கிட்டி நன்கு குற்றேவல் செய்யும்
தரமுறு புல்பூண்டு ஆதி தருக் குலம் பயன் தந்து ஓங்கும்
பர_உலகு இது என்று உளப் பார் எலாம் புனிதம் மல்கும்

#11
பாபமே இல்லை பாவ பயங்கரம் இல்லை தேவ
சாபமும் இல்லை சாவும் சஞ்சலத் தொடர்பும் இல்லை
கோபமும் பகையும் இல்லை குணதோஷம் இல்லை மிக்க
ஆவலும் இல்லை பூருவாச்சிர மத்தர்க்கு அம்மா

#12
அரசனைச் சிந்தை உள்ளி அநுதினம் காலை மாலை
அர சரோருகப் பொன் பாதம் வழுத்துவர் வணங்கி ஏத்தித்
திரை செறி கடல் சூழ் வைப்பின் சீர்மை கண்டு அதிசயித்து
விரசுவர் விண்ணோர்-தம்பால் வித்தகம் பயில்வர் மாந்தர்

#13
பூதலப் பொருள்கள் எல்லாம் பொது அன்றிச் சொந்தம் இல்லை
ஆதலின் கொள்வார் இல்லர் கொடுப்பவர் ஆரும் இல்லர்
போதர நிறைவே அன்றிப் புகல ஓர் குறையும் இல்லை
ஊதிய நய நஷ்டங்கள் ஒருவர்க்கும் ஒன்றும் இல்லை

#14
பிணி மூப்புச் சாக்காடு என்னப் பேச்சினும் அறியார் தம்மைத்
தணிவு_அரும் வருத்தம் துன்பம் சஞ்சலித்து அழு புன்_கண்ணீர்
புணர்வதோ என்றும் இன்றாய்ப் பொறி புலன் புனிதமாம் மெய்
உணர்வொடு பத்தி செய்வார் உம்பரும் வியக்க மாதோ

#15
அச்சுதானந்தர் ஆகி அகில லோகமும் புரக்கும்
சச்சிதானந்த வேந்தன்-தமைக் கிட்டித் தமைக் கேட்பிக்கும்
உச்சித மதுர வாக்கைச் செவிக்கு அமுதாக உண்டு
நிச்சலும் பரவிப் போந்து நிலவுவர் பணி மேற்கொண்டு

#16
பைம் கழை நிறுவி மேலாப் படர்தருச் சினை பொருத்தி
துங்க மண் சுவரை ஆக்கித் துணர்த்த பூம் கொடியால் வேய்ந்து
பொங்கரில் புதுமையாகப் புனைந்த சித்திரப் பூ மன்றில்
அம் கண் வானகம் கொண்டாட அறம் குடி புகுத்தி வாழ்வார்

#17
வருந்தி மெய் சலியார் வேலை வரன்முறை செய்துசெய்து
திருந்துவர் சுனை கான்யாறு சிந்து நீர் வாவி ஆடி
அருந்துவர் கந்த மூல பலங்களை அமரர் நாட்டின்
விருந்து எதிர்கொண்டு போற்றிப் பூசனை விருப்பில் செய்வார்

#18
கண்கவர் வனப்பின் ஆய காட்சி கண்டு அதிசயிப்பர்
பண் கவர் மிதுன கீதப் பாட்டு ஒலி செவிமடுப்பர்
விண் கவர் உலகைத் தந்த விந்தையை வியந்து பேசி
எண் கவர் அரசைப் போற்றி இறைஞ்சி வாழ்த்து எடுப்பர் மன்னோ

#19
மரு மலி துணர்ப் பூம் சோலை மா நிலக் கிழவர்-தம்மைப்
பருவரல் அணுகுறாமே பாலிக்கும் கருணைத் தாய் போல்
கருவிழிக்கு இமை போல் அன்பில் கங்குலும் பகலும் காத்துத்
திரு_அருள் கடவுள் வேந்தன் ஜெகதலம் புரக்கும் காலை
**சிருஷ்டிப் படலம் முற்றிற்று

@7 இராஜதுரோகப் படலம்

#1
நித்திய ராஜரீக நிலவு வானகத்தில் என்றும்
பக்தியாய்ப் பணி செய்து உற்ற பண்ணவர் குழாத்துள்-நின்றும்
சத்துரு ஆகிக் கீழே தள்ளுண்டு கிடந்த பேயால்
மித்திர_பேதம் என்னும் வினை இடை முளைத்தது அந்தோ

#2
விள்_அரும் அரசன் நீதி விலக்கலால் மல பாதாலத்
தள்ளுண்டு கிடந்த பேயின் அதிபதி அழிம்பன் என்னும்
கள்ளன் உள் அழன்று சீறிக் காசினி ககன வட்டத்து
உள்ளுறு மரபை ஓர்ந்து அங்கு உசாவினன் உருவம் மாறி

#3
கண்டனன் என்ப மன்னோ கருணை அம் கடல் வளாகத்து
ஒண் திறல் படைத்த கோமான் ஒருதனித் திகிரி உய்த்த
மண்டலப் பரப்பைச் சூழ்ந்த வாரிதிப் பெருக்கை வார்ந்த
தண்டலைப் பொழிலைப் பாயும் தட நதி வளத்தை எல்லாம்

#4
இடம்-தொறும் சென்று நோக்கி இப் பெரும் போகம் துய்ப்பான்
மடங்கல் ஏறு அனையார்-தம்மை வஞ்சத்தால் அடர்த்து இ வையம்
அடங்கலும் அடிப்படுத்தி அரசியல் புரிவல் என்னா
விடம் கிளர் அரவின் புக்கான் மேதையார் இருந்த சூழல்

#5
பேய் அகம் புகுந்த போதே பிரபஞ்சம் என்னும் நாமம்
ஆயது சமயம் தேடி அரிவையை மதி மருட்டி
நாயகன்-தனையும் அந்த நாரியைக் கொண்டே மாற்றிச்
சே உயர் இறைவன் ஆணை செகுக்கவும் செய்தான் பாவி

#6
தன்னையே கெடுத்தான் முன்னம் தற்பெருமையினால் அந்தோ
பின்னையும் பொறாமையாலே பிறரையும் கெடுத்தான் வாளா
மன் உயிர்த் தொகுதி கும்பி மலக் கிடங்கு அளைய வைத்தான்
என்னை ஈது என்னை என்கேன் இரு நிலத்து இறுத்த கேட்டை

#7
தன் ஒரு மகவைத் தந்த தற்பரன் அன்பு வாழி
பொன்_உலகு இழிந்து வந்த புண்ணியம் வாழி வாழி
மன் உயிர் புரக்க வந்த மனு_மகன் சரணம் வாழி
என்னை இ நிலை பாலிக்கும் எம்பிரான் கிருபை வாழி

#8
கற்பனை கடந்த போதே கற்பனை கடந்து நின்ற
தற்பரன் நீதி பொங்கித் தழல் எழச் சினவி நீட
அற்புத கருணை பொங்கி ஆர் அழல் அவிக்க நாடப்
பொற்புறு குமரன் நேர்ந்து நடுவராய்ப் புகலலுற்றார்

#9
மற்று இ மானிடங்கள் எந்தாய் வஞ்சக அலகை ஏய்த்த
சொல் தலைநின்று ராஜ_துரோகி ஆயினர் அ எல்லாக்
குற்றமும் தண்டம் யாவும் குறிக்கொண்டுத் தரிப்பல் யானே
நல் தச_விதி கைக்கொண்டு இங்கு ஈட்டுவல் நலம் கொள் நீதி

#10
நிண்ணயம் இதனை ஓர்ந்து நிரைய பாதலத்துக்கு ஏகும்
மண்ணுலகரை மன்னித்து ரக்ஷணை வழங்கிக் காத்துத்
தண் அளி புரிக யானே தராதலத்து இழிந்து அங்கு ஈட்டும்
புண்ணிய பலத்தால் ஈது என் பொருத்தனை ஆகும் ஐய

#11
குருதியைக் கொடுத்து ஜீவ_கோடியை மீட்பல் என்ன
ஒரு திரு_குமரன் அன்பின் உரை திரு_செவியில் சாரக்
கருது_அரும் கடவுள் வேந்தன் கருணையால் கருணை மைந்தன்
திருவுளம் ஆக என்று செப்பி மற்று இதனைச் செய்தார்

#12
வானகத்து அரசன்-தம் போல் வையகத்து அரசு செய்வான்
தான் என உதித்த மைந்தன்-தனைத் தனி மௌலி சூட்டி
ஞான முத்திரையும் நல்கி நனி தவ உயர்த்தி வைத்தார்
மானிடம் புரந்து பேயின் வன் தலை சிதைக்க என்றே

#13
சற்பனைப் பேச்சை நம்பிச் சதி வழி புகுந்து மக்காள்
கல் பிளவு ஒத்தீர் அந்தோ கடுகிய மரண ஆற்றின்
வற்புறு திரையின் மூழ்கி மாண்டு உடல் அழிவீர் என்றார்
தற்பதம் இழந்த மாந்தர் தலை இழி சிகையே அன்றோ

#14
சாமித் துரோகம் செய்யத் தகும் கருவிகளை மண்ணில்
சேமித்து நம் ஓர் மைந்தன் திரு_அடித் தொழும்பு பட்டு
நேமித்த நெறியைப் பற்றி நித்திய ஜீவ நாட்டைக்
காமித்து வம்-மின் தாழ்க்கின் கைவரும் மோச நாசம்

#15
மித்திர நலத்தை வீசி விதிவிலக்கு எறிந்து எமக்குச்
சத்துரு ஆகினீர் நும் தரிப்பு இனி நாச தேசம்
நித்திய ஜீவ நாட்டின் நெறி கடைப்பிடியீராயில்
அத் தலம் கோபத் தீயில் அவிவது சரதம் என்னா

#16
சாதனம் விளங்கத் தீட்டித் தரணியில் காலம்-தோறும்
மேதகையவரைக் கொண்டு விளம்பரப்படுத்தச் செய்தார்
நீதியாய் அகண்டாகார நிறைந்த பேர்_அருளாய் என்றும்
பேதியா நிருவிகாரப் பெருந்தகை பரமராஜன்
**இராஜதுரோகப் படலம் முற்றிற்று

@8 பூர்வபாதைப் படலம்

#1
புனித சேத்திரத்து அமர்ந்துள பூருவ குடிகள்
கனி தந்து ஆக்கிய தீ_வினையாம் எனக் கலித்து
மனித மாட்சியை வரைந்து அலகைக் குணம் மருவி
நனி திரிந்தனர் விலங்கு என நாச தேசத்தில்

#2
ஐந்து எனும் பொறி புலன் அந்தக்கரணம் ஆத்துமம் சேர்ந்து
இந்த மானிடப் பிறப்பும் எ நலங்களும் இயைந்தும்
பந்தமாம் கனியால் அந்த நலம் எலாம் பறிபோய்த்
தொந்தமாம் பெரும் கேட்டொடு மரணமும் சூழ்ந்த

#3
உறை கலந்து தீம் சுவை பால் ஒருங்கு_அறக் கெடல் போல்
முறையின் நீங்கிய கனிச் சுவை உலகு எலாம் முயங்கிக்
கறையின் ஆக்கி வெம் மரணத்தின் கரை_அறு துன்பச்
சிறையின் உய்த்தது ஜென்ம சஞ்சிதத்தொடு செறிந்து

#4
பாவ காரியர் திசை-தொறும் குழுமினர் பரம்பி
ஈவிரக்கம் இல் இராக்ஷதர் எனப் பெயரெடுத்துத்
தீ_வினைக்கு நட்பாளராய்ச் செருமினர்க்குள்ளும்
தேவ புத்திரர் ஆயினர் சிலர் அருள் செயலால்

#5
சேற்றில் தாமரை முளைத்து எனச் சிப்பியின்-நின்று
தோற்று வெண் தரளம் எனத் தொடு நிலக்கரியில்
ஆற்றல் சால் ஒளி வைரம் வந்து என உவர் அளற்றில்
ஊற்று இன் நீர் சுரந்து என அவண் தோன்றினர் உரவோர்

#6
மூன்று ஒன்று ஆகிய முதல் அரசாட்சியின் முறையை
ஆன்ற உண்மையைத் தருமத்தை அவனிக்கு விளக்கிச்
சான்று உரைத்து வான்_நகர் வழி சமைத்திட ஜகத்தில்
தோன்றிற்றால் ஒரு திருச்சபை துலங்கு வெண் பிறை போல்

#7
ஆலம் வித்தினில் அங்குரித்து அறுகில் வேரூன்றிக்
கோலி எங்கணும் தண் நிழல் கொளுவி விண் குலவிச்
சால வெவ் விடாய் தணித்து மேன்மேலுறத் தழைத்து
வேலை ஞாலத்தைப் போர்த்தது திருச்சபை விருக்கம்

#8
இருள் அறுத்து ஒளி பரப்பி உள்ளகம் புறம் எங்கும்
பொருள் விளக்கி மோசம் புகா வகை புறம் காத்து
மருள் அகற்றி நூல் வழி தெரித்து என்றும் வாடாது
தெருள் அளித்து ஒளி கிளைத்தது திருச்சபைத் தீபம்

#9
சத்தியம் திகழ் இத்தகு திருச்சபைத் தலைவர்
நித்தியானந்த ராஜ்ஜிய நிருமல அரசன்
புத்திரோத்தம புண்ணியர் புநர் உலகத்து
மத்தியஸ்தராய் நடுப் புரி மானுவேல் ஆமால்

#10
பாவம் மல்கிய நாச தேசத்து வெம் பரப்பில்
ஜீவ ரக்ஷணை விரும்பியோர் திவ்விய நகர்க்குப்
போவதாகிய பூருவ பாதையைப் புனையத்
தேவ உத்தரம் பெற்றனர் திருச்சபைக் குரவர்

#11
மேலை நால் முதல் மேசியா திரு_அவதாரக்
காலம்-மட்டும் அங்கங்கு தோன்றிய நமர் கருதிச்
சால நேர் பிடித்து இறை திருவுளப்படி சமைத்து
வேலை ஞாலத்து விளக்கிய பாதையை விரிக்கில்

#12
ஒற்றையே வழி ஓர் அடித் தடம் உடைத்து உம்பர்க்
கொற்றவன் திரு_நகர் செலக் குறித்தது கோணல்
அற்ற நேர் வழி அயல் அடி பிசகுறின் அந்தோ
துற்று கார் இருள் சூழல் உய்த்திடும் இது துணிபே

#13
திருத்தகும் கடை வாயிலின் செவ்வி சேர் முகப்பில்
விருத்தசேதனக் குறி உடைத்து ஆங்கு அதை விடுக்கில்
கருத்தன் மாளிகைத் தலம்-தொறும் பலிகளும் கணிப்பு_இல்
பொருத்தனைப் பொருள் குவைகளும் வயின்-தொறும் பொலிவ

#14
ஆய அ வழிப்போக்கருக்கு உரிய ஆசாரம்
மேய பல் வகைச் சடங்குகள் விரதங்கள் முதலா
ஏய வன் பெரும் சுமை சுமத்திடுவது அங்கு இளைக்கின்
காயும் தண்டனைப்படுத்துவது இன்று கண்ணோட்டம்

#15
ஐயன் எம் கிறிஸ்து யேசுவின் முன் அடையாளச்
செய்ய சோரியும் பற்பல பொருள்களும் தெருளக்
கை புனைந்தமை இடைக்கிடை கவின அக் காட்சி
துய்ய நூல் வழிப்போக்கருக்கு அக மகிழ் தொகுக்கும்

#16
இரவில் அக்கினித் தூணம் உண்டு எல் சுடு வெயிற்குப்
பரவி நின்று மேகம் தரு நிழல் உண்டு பசிக்கில்
தர மன்னா உண்டு தாகிக்கில் நீர் தரத்தக்க
உரவு கோல் உண்டு நம் பிரான் தயை என்றும் உண்டால்

#17
இனைய நூல் வழிப்போக்கருக்கு இக_பரத்து இறையாம்
முனைவன் தாதையின் கடிந்து தாய் முறைமையில் தாங்கித்
தனையராய் வழிநடத்தி ஆதரித்தனர் சாவின்
பினை அளித்தனர் தம் பதத்து உள பெரும் பேறு

#18
அண்ணல் வானகத்து அரசன் ஆதிச் சபை அடியார்
விண்ணின் ஆக்கிய விளம்பரத் தொனி செவிமடுத்துக்
கண்_இல் பேய்க் கணத் தலைமகன் கை அகன்று ஓடிப்
புண்ணியன் தனிக் கோல் குடி ஆயினர் பொருந்தி

#19
முந்து தந்தை தாய் தம்பிரான் விதியினை முரணி
நொந்து உளம் கசந்து அழுது இந்தப் பாதையை நுதலிப்
பந்தபாசங்கள் அற எறிந்து இரக்ஷகன் பழிச்சிச்
சிந்தனாதித தேவர் கோன் திரு_நகர் அடைந்தார்

#20
பண்டு இந் நூல் நெறி பற்றி ஆபேல் எனப் பகரும்
தொண்டன் மெய்ப்பொருள் உணர்ந்து தூப் பலி முறை தூவி
எண்தகும் குருதி_கரியாய் உயிர் இனிது ஈந்து
அண்டர் கோன் பதம் அடைந்தனன் பார் உலகு அறிய

#21
எஞ்சுறா விசுவாசி ஏனோக்கு யாத்திரையில்
அஞ்சல் என்று அடுத்து இரா_பகல் அவனொடு இ வழியில்
சஞ்சரித்தனர் தம்பிரான் சாவும் இன்றாகச்
செஞ்செவே கொடு போயினர் திரு_நகர்க்கு அவனை

#22
பாதை பற்றி நின்று உலகருக்கு உணர்த்திய பழுது_இல்
நீதிமான் பண்டு நிமிர் பிரளயத்தை மேற்கொண்டு
வேத ராஜ்ஜிய தருமத்தை வியல் நிலத்து ஊன்றிக்
காதலித்து வான் அடைந்தனன் மரணத்தைக் கடந்து

#23
செல் என்று ஆண்டகை திகழ்த்திய செம் மொழி செவியில்
புல்ல அக்கணத்து ஊர் உறவு உரிமையைப் போக்கி
நல்ல நூல் நெறி கடைப்பிடித்து எமர் எலாம் நயக்கும்
மல்லல் கூர் விசுவாசியின் யாத்திரை வகுக்கில்

#24
தம்பிரான் உரை தலைக் கொடு தரணி செல் மார்க்க
வெம்பு தீ விடப் பாந்தளை வெரீஇ இரிந்து ஓடி
உம்பர் நூல் நெறித் திருக் கடை வாயில் புக்கு உள் போய்ச்
செம்புனல் பலி அங்கங்கு திருத்தினன் செய்யோன்

#25
புரவு நூல் நெறிக்கு இடையிடை புண்ணியம் பொதிந்து
விரவு முற்குறி வயின்-தொறும் மிளிர்வன கண்டு
கரவு_இலாத மெய் உரம் விசுவாசம் உள் கவினிப்
பரவி ஏகினான் பகைப்புலம் மிடைந்த ஓர் படுகர்

#26
அருளினால் எதிர்த்து அலகையின் சேனையை அடர்த்து
மருளி மாக்கள் ஓர் ஐவரை வெந்நிட மடக்கி
இருள் அறுத்து ஒளிர் சுடர் என இகல் கடந்து அபிராம்
பொருள் படைத்து ஒரு தனதனாய் நெறிக் கொடு போனான்

#27
சோலை மா நிலம் துருவி நூல் நெறியினைத் தொடர்ந்து
மேலையோர் விதிவிலக்கு அநுட்டித்து விண் நாடிப்
பாலை நீத்து வந்து அடைந்தனன் சோதனைப் பரப்பை
வேலை சூழ் உலகு ஏத்தும் ஓர் மெய் விசுவாசி

#28
பெரிய நாயகன் திருவுளப்படி ஒரு பேறாம்
அரிய மைந்தனை மகப் பலியூட்டிட அலங்கு
சுரிகை ஓங்கலும் துணித்திடாய் உன் விசுவாசம்
தெரியச் செய்தனம் என விண்ணில் சிறந்ததோர் திரு_சொல்

#29
தீர்க்க மெய் விசுவாசத்தின் செயல் எலாம் தெரிந்து
பார்த்திவற்கு மெய்ப் பத்தி செய் பரிசினைப் பார்த்தும்
ஆர்த்தியில் பல ஆசிகள் வழங்கி அங்கு அவனை
ஊர்த்தலோகத்தில் புகுத்தினர் உன்னதத்து அரசன்

#30
பூர்வ பாதையைத் துலக்கி வைதிக முறை புதுக்கி
ஆர்வம் மிக்கு நல் நெறிப்படுவோர் சுமக்க_அரிய
தீர்வு_அரும் சுமை ஏற்றிய திரு_விதிக் கிழவன்
சீர் வலம் திகழ் யாத்திரை வரன்முறை தெரிக்கில்

#31
நாச தேசத்து ராஜ்ஜிய பாரத்தை நச்சான்
ஈசன் மார்க்கத்தன் இனத்தொடு நல்குரவு எய்தித்
தேச நாசத்துக்கு அகறலே நலன் எனத் தெரிந்தான்
ஆசு_இலாத் திரு_கடை புகூஉ அற நெறி பிடித்தான்

#32
பேயின் மக்கள் பின்தொடர்ந்திடச் செங்கடல் பிளந்து
வாயிடும்படி கோல் கொடும் அடித்தனன் மருங்கைக்
காயும் வெம் மணல் சுரத்திடைத் தவிப்பு_அறக் கடத்தி
நாயகன் வழிநடத்தினன் நாற்பது வருடம்

#33
வழிமறித்து எதிர்த்து அடர்த்து அமர் மலைந்த மன்னரையும்
கழி பெரும் படைத் திரளையும் கட்டறுத்து ஓட்டி
பழிபடாமல் தன் இனத்தரைத் தினம் பரிபாலித்து
எழுதும் நூல்_வலான் கடைப்பிடித்து ஏகினன் என்ப

#34
ஜீவ நாள் எலாம் திவ்விய நகர் செலும் பாதைக்கு
ஆவதாகிய திரு_பணிவிடை புரிந்து அமையத்
தா_இல் நல் அறச் சாலை மண்டபம் சுமைதாங்கி
பாவ நாச சங்கேதங்கள் அமைத்தனன் பனவன்

#35
காண்டி கால் மிதிப்பாய்_அலை கவின் கொள் கானானை
ஈண்டு என்று ஆண்டகை உரைத்தலின் மலை மிசை ஏறி
மாண் தலம் செறி வளன் எலாம் கண்டு உளம் மகிழ்ந்து
சேண் தலத்து இறை திரு_நகர் அடைந்தனன் தீர்க்கன்

#36
வஞ்சப் பேயொடு மலைந்து அமராடியும் அறிந்த
சஞ்சலப் பொருப்பு உச்சி மீது ஏறியும் தணவா
வெம் சுரத்து வீழ்ந்து அழன்றும் வெந்நிடாது முன் இட்டுத்
துஞ்சு-காறும் சென்று உயர் பதம் அடைந்தனன் ஜோபு

#37
தாவிது என்று ஒரு தரணிபன் தனி வழி புகுந்து அங்கு
ஓவல்_இல் பெரும் துன்பு உழந்து ஒண் நிலை தவறிக்
காவலன் பெரும் கருணையால் நெறி கடைப்பிடித்து
வீவு_இலாப் பதத்து எய்தினன் சுரர் கணம் வியக்க

#38
உத்தமோத்தமன் சாமுவேல் ஒண் தவன் ஜீவன்
முத்தராம் எலியா எலிசா எனும் முநிவர்
சித்தன் ஐசயா ஆதிய தீர்க்கரோர் மூவர்
வித்தகம் செறி தானியேல் ஓசியா மீகா

#39
ஆய இத்தகு குரவரும் அவர் வழி பிடித்த
தூயரும் பண்டு பூருவ பாதையைத் துலக்கிப்
பேய் அடர்ந்த இப் பிரபஞ்ச மாயத்தைப் பிளந்து
காயம் நீத்து உயர் கதி அரசாட்சியைக் கலந்தார்
**பூர்வபாதைப் படலம் முற்றிற்று

@9 சுவிசேஷமார்க்கப் படலம்

#1
தொன்று-தொட்டு உள திருச்சபைக் குரவரும் துகள் தீர்
நன்றி கொள் முது தீர்க்கரும் நலத்தகு வாழ்நாள்
சென்று போயினர் வரு திறன் தெரிப்பவர் இல்லர்
நின்று போயின அற்புதங்களும் நில_உலகில்

#2
பூர்வ பாதையை லௌகிகப் பெரும் புதர் புதைப்பத்
தீர்வு_அரும் கொடு விலங்குகள் தீ விடப் பாந்தள்
பேர்வுறாது அவண் உறைதலில் பிறங்குதல் இன்றித்
தூர்வது என்று கண்டு ஆரணர் உளம் துளக்குற்றார்

#3
தீர்க்க மெய் விசுவாசிகள் தீர்க்கர் சொல் தெருண்டோர்
பார்க்கு இரக்ஷணை ஈட்டவும் பார்த்திவன் மருமான்
மார்க்கம் இங்கு இதைப் புதுக்கவும் வருவர் மற்று என்னா
கார்க் குலம் வரக் காண்குறாப் பயிரின் உள் கரிவார்

#4
வள்ளலார் இளம் கோமகன் வரும் பதி தெரிக்கும்
வெள்ளி ஒன்று உளது என்று அதை விரும்பினர் நாடி
நள்ளி ஓர் சிலர் அடியுறை நல்லன தெரிந்து
தெள்ளிது ஓர்ந்து எதிர்ந்து இருந்தனர் பூருவ திசையில்

#5
முத்திநாட்டு அரசு ஆதிக்க முறை நனி உவந்த
பத்தரேம் எனச் செருக்கிய பனவர் மெய் வாழ்வை
நத்தி அன்று இக வாழ்வு அடைவாம் என நம்பிப்
புத்திரன் வருகைக்கு எதிர் நோக்கினர் புரத்தில்

#6
மீதலத்து இளவரசனைக் காண்குறும் விரகால்
தீது துற்றிய குணத்தரும் சிந்தையுற்று இருப்பச்
சாது மார்க்கத்தர் யாவரும் தம்பிரான் வருகை
காதலித்தனர் விடிவு எதிர் கமலமே போல

#7
கனி தரும் பழ நறை பொழி வளம் திகழ் கானான்
புனித வைப்பினில் புரவலன் ஒரு திரு_புதல்வன்
மனித தேகத்தில் வருவர் மெய் மனம் திருப்புக என்று
இனிது கூவினன் தீர்க்கர் சொல் எடுத்து ஒரு தூதன்

#8
கூறு கட்டியம் திசைதிசை செவிப் புலம் குறுகத்
தூறு அடர்ந்த கானகம் துரீஇத் தூதனை அடுத்துச்
சீறு தீ விடப் பாந்தள் கை திருகி யூதேயர்
பேறு நாடினர் மனம் திருப்பினர் நெறி பிடித்தே

#9
உம்பர் நோக்கிய மெய்த் திரு_தொண்டர் உள் உவப்பும்
இம்பர் நூல் நெறி புதையத் தூறு அடர்ந்து எழும் இயல்பும்
கும்பி பாகத்தின் அதிபதி மறக் கொடுங்கோலும்
அம்பர் ஆதிபன் திருவுளத்து எட்டிய அம்மா

#10
மனாதி தத்துவாதீதரா மகத்துவ வேந்தன்
அநாதி நிண்ணயப்படி திரு_குமரன் உள் அன்பால்
தனாது இரும் குவலயத்தினுக்கு இரக்ஷணை சமைப்பல்
எனாது உயிர்ப்பலி ஈந்து என ஏம்பலோடு எழுந்தார்

#11
வான் முயங்கு பேர்_இன்ப சம்பத்து உயர் மகிமை
கோன் முயங்கிய தைவிக துரைத்தனம் கொற்றம்
மேல் முயங்கிய அரும் பதம் யாவையும் விடுத்தார்
ஊன் முயங்கிய உடல் உவந்து எடுத்து உலகு உறுவார்

#12
ஆவல் மிக்க தம் ஒரு சுதன் அரசவை அகன்று
போவதும் அவர் புரிவதும் பொறுப்பதும் பலியாய்
வீவதும் திருவுளத்து உணர்ந்து அவனிக்கு விடுத்த
தேவ நீதியின் புனிதத்தை யாவரே தெரிப்பார்

#13
கலகம் இட்டு அலகைத் தொழும்பு ஆய் அறம் கைவிட்டு
உலகை நச்சி இங்கு உழல் நர கீடத்துக்கு உயிர் ஈந்து
இலகு வான் பதம் ஏற்ற வந்து இறுத்த நம் ஈசன்
அலகு_இல் பேர்_அன்பின் அளக்கரை அளந்து அறிபவர் யார்

#14
உன்னதாதிபன் ஒரு சுதன் உவரி நீர் உலகப்
புல் நரங்களைப் புரப்பல் என்று ஏன்றுபோம் புதுமை
என்ன என்ன என்று ஆயிரக் கால் எடுத்து ஏத்திப்
பன்_அரும் துதி பகர்ந்தனர் வான் கணம் பழிச்சி

#15
ஆழ்ந்த ஜீவ நீர் நதிப் பெருக்கு அதோமுகம் ஆகித்
தாழ்ந்த பூதலப் படுகரில் பாய்ந்ததும் தழைத்துக்
காழ்ந்த நித்திய ஜீவ கற்பகச் சினை ககனம்
போழ்ந்து பாருறப் பணிந்ததும் எத்தனை புதுமை

#16
மை ஆர் கலி புடை சூழ் புவி வளை தீ_வினை இருளும்
பொய் ஆரணப் புலையார் திமிரமும் தீ விடம் பொதிந்த
பை ஆடு அரவின் சீறு வெம் படமும் சிதைவு எய்த
மெய் ஆரணச் சுடர் மானிட விதயாம்பரம் விளங்க

#17
தருமம் தலையெடுக்கப் புடவியில் சத்தியம் தழைக்க
அருமந்த மெய்ச் சுருதித் தொனி அவனித்-தலை சிறப்ப
ஒரு மந்தையின் மறி ஆயர் உள் உவந்து ஏத்து இசை ஓங்கத்
திரு_மந்திர முறை வாழ்த்து ஒலி ஜெய பேரிகை கறங்க

#18
கள்ளம் புரி அலகைக்கு இறை கை கால் விலவிலக்க
உள்ளம் பறை அறையத் திகிலுற்று ஆர்_உயிர் நடுக்கம்
கொள்ளக் கரி முகம் குப்புறக் கொடும் தீ_வினை குலைய
அள்ளிக் கதிர் வீசும் சுடர் அருணோதயம் இது என

#19
வானோ மகி தலமோ சுடர் மதியோ வயங்கு ஒளிர் வான்
மீனோ விரி கடலோ மழை முகிலோ ஒரு விதியில்
ஆனா நெறி அமைத்து ஆக்கிய அகிலாண்டவச் சுதன் ஓர்
ஊன் ஆடிய திரு_மேனி கொண்டு உதித்தார் உலகு உவப்ப

#20
மறை ஆர்த்தது மறை ஓதிய வரம்பு ஆர்த்தது ஞானத்
துறை ஆர்த்தது சன்மார்க்க மெய்த் துணிபு ஆர்த்தது சுகிர்த
நிறை ஆர்த்தது நலம் ஆர்த்தது நிலையாய ரக்ஷணிய
முறை ஆர்த்தது கதி ஆக்கம் இ முது மா நிலத்து உறவே

#21
அந்தோ அறக் கொடும் தீ_வினைக்கு இலக்காகிய அவனி
வெந்து ஈடு அழி நரகம் புக விடுகிற்கிலன் என்னா
நந்தாது இரும் புலை மல்கிய நடலைப் பிரபஞ்சத்து
எந்தாய் அரசிளங்கோமகன் இறுத்தார் இது என்-கொல்

#22
துன்பம் படு துயர் நிந்தனை சுடு_சொல் வசை ஆதி
தன் பங்குறத் தளராது ஒருதலையாப் பிறர்-தம்மைப்
பொன் போல் பொதிந்தவர் இன் உயிர் புரந்து ஆதரம் புரிவர்
அன்பின்-தலை நின்றோர் செயும் ஆண்டன்மை இது அன்றோ

#23
தீமுகன் உய்த்த வெம் சிறைக்குள்ளாய் அயர்
பாமரத் தூறு அடர் படுகர் வைப்பு இது
கோமகன் சேவடிப் பதுமம் கோத்தலின்
பூமுகம் எனப் பெயர் பொலிந்ததாம் அரோ

#24
பேய் அடிப்படுத்திய பிரபஞ்சத்தருக்கு
ஆயது குடித்தனம் அமரர் நாட்டு என
நாயகன் இறுத்தமை குறித்து நண்பொடு
கூயினர் திசைதிசை குறிக்கொண்டு ஆரணர்

#25
ஆண்டகை வான நாட்டு அரசன் மைந்தனைக்
காண்-தொறும் காண்-தொறும் களிப்புக் கைமிகத்
தேண்டி ரக்ஷணை புரி திரு_குமாரன் என்று
ஈண்டினர் புனித சேத்திரத்தில் எங்குமே

#26
உத்தம நூல் நெறி உவந்த தொண்டர்-பால்
நித்திய ராஜ்ஜிய நிருபன் நின்மல
புத்திரன் என விசுவாசம் பூண்டு மெய்ப்
பத்தி செய்து அடித் துணை பரவி நின்றனர்

#27
தீர்த்தன் என்று அற்புதச் செயலும் தெய்விக
வார்த்தையும் உரைசெய மருண்ட மாந்தரும்
பார்த்-தலை இறுத்த ஓர் பரம சற்குரு
மூர்த்தம் என்று அருள் பெற முடுகிக் கிட்டினார்

#28
ஆயிடை அருள் விழி பரப்பி ஆண்டகை
மா இரு ஞாலத்து மாந்தர் சீர்மையும்
பேய் அரசாளுகை நடக்கும் பெற்றியும்
நாயகக் கதி வழி நடப்பு இலாமையும்

#29
மெய்ப்படு தொண்டர் மின்மினியின் தோன்றலும்
பொய்ப்படு வேடத்தர் பொலிந்து இலங்கலும்
செய்ப் படு களை மிகத் தேம்பு சாலியை
ஒப்ப நின்று உத்தமர் ஒடுங்கிப் போதலும்

#30
தூய தம் சபைச் சுடர் தூண்டிடாது ஒளி
தேயுறு சீர்மையுந் தீமை மல்கலும்
மீ உறு ஞானத்தை வெறுத்து அகம்-தொறும்
மாய அஞ்ஞானத்தை வளர்க்கும் பான்மையும்

#31
திருவுளத்து உணர்ந்து நெட்டுயிர்த்துச் சிந்தை நைந்து
இரு விழி புனல் கொள இரங்கி எந்தையார்
பொரு_அரும் திரு_அருள் புணர்ப்பின் வையகப்
பருவரல் துடைப்பல் இப் பருவத்தே எனா

#32
வித்தக திருச்சபை முறையை மேற்கொண்ட
அத்தலை ஓர் அசரீரி ஆர்வ நம்
புத்திரன் இவர் உரை போற்றி உய்ம்-மின் என்று
இத்தகை வாக்கு எழ எவரும் கேட்டனர்

#33
மித்தையை வேரற வீசி மெய் பிடித்து
உத்தம திருப்பணி உஞற்றத் தக்க மெய்ப்
பத்தர் பன்னிருவரைத் தெரிந்து பாங்குறச்
சித்தம் செய் பணி எலாம் செயலில் காட்டுவார்

#34
நித்திய ஜீவ ராஜ்ஜியத்து நேர் வழி
இத் தகுவன என இயற்றிக் காட்டும் அச்
சத்தியக் குறி பிடித்தவர்க்குச் சாமிபம்
அத் தகு ராஜ்ஜியமாம் என்று ஆண்டகை

#35
கண்டகம் கடுப் புதர் அடர்ந்த கான் வழி
கண்டு அகம் கடுப்புறக் களைந்து வேரறக்
கண்டகம் கொடு தடிந்தனர் வன் கண்டகன்
கண்டகம் சிதைத்த செங்கமலப் பாதனார்

#36
ஒப்புரவாக்கி நூல் ஒழுங்கின் நேர் உறச்
செப்பனிட்டு அருளி யாத்திரிகர் செவ் வழி
தப்பிடில் அதோகதி சார்வர் என்று அயல்
குப்புறாது இரு சுவர் குயிற்ற உன்னியே

#37
அத்தியை அடுக்கி மென் தசை செம் சோரி என்று
இத்தகு சாந்து கொண்டு இசைத்துப் பத்தி செய்
பித்தி ஈடேற்றம் என் பெயர் புனைந்து தம்
முத்திரை குயிற்றினர் முறைமையால் அரோ

#38
இடம்-தொறும் இடம்-தொறும் ஏர் கொள் மாளிகை
மடம் பல சத்திர மரபின் ஆக்குவித்து
அடங்கலும் பணி புரி அறவர்-தம்மையும்
உடம்படி வாங்கி ஊழியத்தில் உய்த்தனர்

#39
வழி விடாய் ஆற்றி வான் வழி வந்தோருக்கு என்
மொழி வழி போனகம் முறையின் ஊட்டு-மின்
அழிவுறா இருநிதி அளித்தும் யாண்டு நீர்
பழிவராக் கா-மின் மற்று எனவும் பன்னினார்

#40
தெள்ளிய நூல் வழிக்கு இடையில் சென்று சேர்
கள்ள மார்க்கங்களைத் தெரியக் காட்டுகை
ஒள்ளிய தம்பம் நட்டு உண்மை யாத்திரி
எள்ளுறாப் பொன் எழுத்து இலங்கத் தீட்டினார்

#41
மறை வியாக்கியான மாளிகையில் வைதிக
முறை அறிவுறுத்த முற்படு பல் காட்சிகள்
துறை-தொறும் அமைத்தவை விளக்கிச் சொல்ல ஓர்
நிறை மொழிக் குரவனை நிருமித்தார் அரோ

#42
இ உலகுக்கு எதிர் இடுக்க வாயில் சேர்
செவ்விய நெறிப்படு திரு_முகப்பினில்
ஔவியப் பகைஞரும் அவிக்க ஒணாத ஓர்
திவ்விய ஒளிக் குறி திகழ்த்தி வைத்தனர்

#43
மாரணப் படுகரின் மாயச் சந்தையின்
பாரிடச் சூழலின் மோசப் பாங்கரின்
கோரணி முயங்குறின் குறிக்கொண்டு ஒல்லை எம்
ஆரணருடன் அமர்ந்து அருள்தும் யாம் என்றார்

#44
மாசு_இல் சீர் மாண் சுவிசேஷ மார்க்கத்தை
ஆசு_அற விளக்கிப் பின் அலகை ஈட்டிய
பாசறைப் படைஞரைப் பரிவில் பார்த்து அருள்
நேசமோடு அழைத்து இவை நிகழ்த்தல் மேயினார்

#45
பண்ணவர் குழுமிய பரமராஜ்ஜியம்
கண்ணிய பெரு வளம் கைக்குள் ஆயதால்
எண்ணம் என் இடர்_கடல் வளாகத்து ஏக்குறும்
மண்_உளீர் தாழ்ப்பது என் மனந்திரும்பு-மின்

#46
வித்தகம் தயை பொறை விநயம் தண் அளி
சாத்தியம் புனித மெய்த் தருமம் பத்தி என்று
இத்தகு சீலர் நட்பு இனிதின் ஆற்றி நீர்
உத்தம வழித் துணையாக்கொண்டு ஓடு-மின்

#47
ஆவியில் எளியவர் அடைவர் வான்_கதி
மேவரும் துயர் உறின் மேவும் ஆறுதல்
தா_அரும் சாந்தருக்கு உலகம் தம் வசம்
ஈவிரக்கம் உளார்க்கு இரக்கம் கிட்டுமால்

#48
நீதியைப் பசித்தவர் நிறையத் தேக்குவர்
ஏதம்_இல் தூயர் கண்டு அடைவர் ஈசனை
பேதம் அற்று ஐக்கியம் பிறங்கச் செய்குநர்
காதலர் கடவுள் வேந்தருக்குக் காண்-மினோ

#49
நீக்கம்_இல் நீதியின் நிமித்தம் துன்புறில்
மேக்கு உயர் வானநாட்டு இன்பம் மேவுவார்
மீக் கிளந்தவர் எலாம் விபுத நாட்டு உள
பாக்கியம் அடைந்து உயும் பவித்திரான்மிகள்

#50
அம்பர் ஆதிபனும் பிதா அவர் அருள் நன்மை
இம்பர் நல்லர் பொல்லாருக்கும் இயைவன கண்டீர்
தம்பிரான் என நீயிரும் சற்குணம் தழுவி
வெம்பு தீமைக்கு நன்மையே விருப்பொடு விளை-மின்

#51
ஈர நீர் உலகத்தினுக்கு உப்பு என இயைவீர்
சோரவிட்டிடாது உலகரைத் தூய நல் ஒழுக்கால்
சாரம் ஏற்று-மின் அன்றெனில் தள்ளுண்டு மிதிபட்டு
ஆரும் வையகத்து அவமதிப்பு அடைவிர் ஈது அறி-மின்

#52
உலகினுக்கு ஒளி நீயிரும் உத்தம கிரியை
இலகும் என்னில் அங்கு அவர் அகத்து இருள் இரிந்து ஓடும்
விலகி வில்லிடும் ஒளியை உள் அடக்கி மேல் மூடில்
அலகறும் சுடரால் பயன் பிறிது உளவாம்-கொல்

#53
கொலை செய்யற்க என்று உரைத்த கற்பனை உண்மை குணிக்கில்
புலை செய் கோபமும் இகழ்ச்சியும் பிறர் நெஞ்சு புண்பட்டு
உலைய மீப்படில் கொலையுமாம் ஆதலின் உடையார்
நிலைமையாம் எரிநரக பாதலம் என நினை-மின்

#54
விபசரித்திடாய் என்பது விதி அதை விரிக்கில்
தபசியேனும் மற்றொருத்தி-பால் இச்சை உள் தரிக்கில்
அபசரித்தன் ஆம் ஆக்கினை அடைந்தனன் அவனை
உபசரிப்பதும் நரக பாதலம் என உணர்-மின்

#55
உள்ளதை உளது என்று உரையாடு-மின் இலதை
விள்ளு-மின் இலதே என இதனின் மேற்பட்ட
கள்ள வாசகம் யாவையும் கருது_அரும் தீங்கு என்று
எள்ளு-மின் சுவிசேஷ மார்க்கத்து இயல்பு இதுவே

#56
திருகை ஞாலத்துப் புகழ் பெறச் செயும் தருமத்தில்
வருகை ஒன்று இலை மறுமையில் புகழ் மதியாது இங்கு
ஒரு கை செய்வதை மறு கை உற்று அறிகிலாது உஞற்றில்
பெருக மாண் பயன் அளிப்பர் நும் பிதா உளம் மகிழ்ந்தே

#57
துறை-தொறும் புகழ் நச்சி வீண்_மொழிகளைத் தொகுத்துப்
பறை அறைந்து எனப் புரி ஜெபம் பயன்படாது என்றும்
அறையில் அந்தரங்கத்திலே சந்நிதி அடுத்துக்
குறை இரந்து மன்றாடு-மின் அருள்வர் நம் கோமான்

#58
செறுத்து உமக்கு மற்றவர் செயும் தீமையைச் சிந்தை
நிறுத்திடாது மன்னிப்பிரேல் நீர் செய் தீமைகளும்
பொறுத்து உமக்கு மன்னித்து அருள் புரிவர் பூதலம் முற்று
ஒறுத்திடற்கு அதிகாரியாம் உன்னதத்து அரசன்

#59
உரிய மா நிதி துறும் இடத்து உறும் உமது இதயம்
அரிய வான் நிதித் திரள் கருவூலத்தை ஆக்கித்
துரிய பூமியில் தொகு-மினோ பூச்சியும் துருவும்
திரியும் சோரரும் இல்லை அப் புனித சேத்திரத்தில்

#60
ஒருவன் ஊழியம் இரண்டு இயமாநருக்கு உஞற்றில்
ஒருவன் நட்பு ஒருவன் பகை ஆம் உலகு இயற்கை
ஒருவும் இன் உலகு ஊழியம் ஊர்த்த நாட்டு அரசன்
ஒருவர்க்கே இனிது ஊழியம் செய்-மின் உள் உவந்து

#61
வித்திடா பயிர் விளைத்திடா விளைந்தவை சேர்த்து
வைத்திடா ஒரு களஞ்சியத்து எனினும் வான் பறவைக்கு
அத்தனார் பரிந்து எத்தனையா உணவு அளித்து
நித்தமும் பரிபாலனம் செயும் அருள் நினை-மின்

#62
கானம் மல்கு பூ மலர்க் குலம் கவின் பெறு காட்சி
ஞான நாயகன் தொழில் அலால் நவில மற்று இல்லை
மேல் நலம் பெறு சாலமோன் வேந்தும் அவ்விதத்தில்
தான் அணிந்து உடை தரித்திலனால் இந்த ஜகத்தில்

#63
சொன்ன மற்று இவை துணிந்து நீர் யாம் எதைத் துய்த்தும்
இ நிலத்து எதை உடுத்தும் என்று ஏக்குறாது இரு-மின்
பொன் நிலத்து அரசன் பிதா ஆதலின் புதல்வீர்
நல் நலத்த ஊண் உடை தெரிந்து அளிப்பர் நாள்நாளும்

#64
அழிவு_இலாப் பரலோக வாழ்வு ஒன்றையே அவாவி
ஒழிவு இலாது உளம் கவலு-மின் முயலு-மின் உண்மை
வழி விடாது நேர் ஓடு-மின் மற்றவை எல்லாம்
பழிபடாது உமக்கு அருளுவர் உன்னத பரமன்

#65
உற்று நோக்கி உன் கண் உறும் உத்திரம் ஒழித்த
பிற்றை அந்நியன் கண் துரும்பு எடுத்து எறி பெற்றி
தெற்றென்று ஓர்வை ஈது அன்றி நீ பிறர் பிழை தெரிந்து உன்
குற்றம் உள்ளுறப் புதைத்திடல் கொடிய மா மாயம்

#66
எந்த நீதியில் பிறர் குற்றம் கண்டு தீர்ப்பிடுதிர்
அந்த நீதியில் நும் குற்றம் கண்டு தீர்ப்படைவீர்
எந்தவாறு எந்த நாழியில் பிறர்க்கு அளந்திடுதிர்
அந்தவாறு அளக்கப்படும் உமக்கும் என்று அறி-மின்

#67
அரிய நித்திலக் கோவை நீர் பன்றி மீது அணியில்
தெரிகிலாது அதன் அருமையைச் சீரழித்திடுமால்
உரிய மாண் பரிசுத்த ஊண் குக்கல் முன் உய்த்துச்
சொரியகிற்பினும் அன்னவாம் என்பது துணி-மின்

#68
கேட்டும் தேடியும் தட்டியும் சிந்தனை கிடைப்பர்
நாட்டு மானிடர் ஆதலின் நம்பனை அடுத்துக்
கேட்டும் தேடியும் தட்டியும் முயன்றிடில் கிடையா
வீட்டு வாழ்வு கையுறும் இது சரதமாம் விரை-மின்

#69
தீங்கு மல்கும் நீர் சிறுவர்க்கு நல்லன தெரிந்து
பாங்கின் நல்குதிர் மன் பொதுத் தந்தையாம் பரமன்
ஏங்கி நின்று மன்றாடும் உங்களுக்கு உளம் இரங்கி
ஓங்கு நல் நலம் அளிப்பர் என்பதற்கு ஐயம் உள-கொல்

#70
மற்றையோர் உமக்குச் செய மனக்கொள்வது எது-கொல்
அற்றதே பிறர்க்கு ஆக்கும் நல் அறம் என அறி-மின்
இற்று இதே நியாயப்பிரமாணமும் ஏனோர்
சொற்ற பௌஷிக தரிசனங்களும் உண்மை துணியில்

#71
ஜீவ பாதையின் இடுக்குறு திரு_கடை சேர்ந்து உள்
போவரோர் சிலர் பாதையும் புகல்_அரு நெருக்கம்
பாவம் மல்கிய பெரு வழி கேட்டின் உள் படுத்தும்
ஆவலோடு அதில் நடப்பவரும் பல அனந்தம்

#72
ஆட்டுத் தோல் பொதிந்து ஆர்_உயிர் கவரும் கோணாயின்
வீட்டுப் பாதை மற்று ஈது என்று அவனிக்கு விளக்கிக்
காட்டிக் கைப்பொருள் கவர்ந்திடு கள்ளப் போதகர் வாய்க்
கேட்டுக்கு உட்படாது அகலு-மின் கிரியையால் தெளிந்து

#73
வாயினால் எனைக் கருத்தனே என்று பேர் வழுத்தி
ஆயிரம் தரம் கூவினும் ஆவது என் அகில
நாயகன் சித்தம் அறிந்து அந்த நடை கடைப்பிடிப்போன்
தூய ராஜ்ஜிய பேர்_இன்பம் துய்ப்பவன் அறி-மின்

#74
நமரங்காள் இங்கு சொற்றவை நம் பிரான்
விமல சித்த விளம்பரம் ஆதலில்
சமர பூமி தணந்து இ நெறிப் படீஇ
அமரர் நாடு அடையத்தகும் ஆய்-மினோ

#75
மற்று இ வாய்மை மனக் கொடு வான் நெறி
பற்றி ஏகுபவன் எவன் பாறை மேல்
கொற்றி வானிட்டு வீடு குயிற்றிய
குற்றம்_அற்ற விவேகி குணித்திடில்

#76
சண்டமாருதம் வன்மையில் தாக்கியும்
கொண்டல் மின்னி இடித்துக் குமுறியும்
மண்டு வெள்ளம் மறிந்து உற மோதியும்
விண்டு இடிந்து விழாது அந்த மேனிலை

#77
உளம் படப் பகுத்து ஓதிய உன்னத
விளம்பரத்தை வெறுத்தவன் வெண் மணல்
களம்படுத்த இல் கட்டு அழிம் என்று உனா
வளம் படுத்த மதியிலி போலுமால்

#78
இத் திறத்தன ஏக சர்வேசுரன்
சித்தம் என்று திருத் தகத் தெள்ளிதின்
வித்தகக் கனி வாய் இதழ் விண்டனர்
சுத்த மெய்ச் சுவிசேஷ உத்துங்கரே

#79
சீருறும் கதி சேர் வழி ஈது என
நேரிலே உபதேசம் நிகழ்த்தி மேல்
ஓரும் பற்பல் உவமை கொடு உண்மையைத்
தேருமாறு தெரிக்கலுற்றார் அரோ

#80
மன்பதைகாள் கிருஷிகன் வெள்ளாண்மை செயத் தகும் பருவம் வாய்த்தது என்னா
நன் புலத்து வித்திடுங்கால் வழி அருகும் பார் நிலத்தும் நவைத் தூறு எஞ்சாக்
கொன் புலத்தும் சிதறுண்ட சிற்சில வித்து அதர் அருகு குளித்தவற்றைப்
புன் பறவை விரைந்து அணுகிப் பொறுக்கி நுகர்ந்தன இதனைப் புந்தி செய்-மின்

#81
பார் நிலத்துப் புதைந்த வித்து அங்கு உரித்து எனினும் வேரூன்றப் பசு மண் இன்றிக்
கூர் வெயிலில் தீந்து கரிந்தன முள் தூறுக்கிடையில் குளித்த வித்து
நேர் வளர்ந்து நெருக்குண்டு பயன்படாது ஒழிய நன்செய் நிலத்த ஓங்கிச்
சீர்பெற நன் மணி முற்றி ஒன்று நூறாய பயன் திகழ்த்திற்று ஓர்-மின்

#82
மற்றொருவன் மறுக் களைந்து நல் வித்துப் புலம் தெளித்து மறைய ஆங்கே
உற்று ஒருவன் நள்ளிரவில் களை வித்திக் கரந்து ஏக உபய வித்தும்
தெற்றென அங்கு உரித்து ஓங்கத் தெரிந்து எஜமான் மற்று இவற்றைச் சேதியாதீர்
முற்றவிடும் கொய் பருவத்து எறிந்து எரி-வாய் இடுதும் என மொழிந்தான் தேரில்

#83
வித்துபவன் யான் புலமும் உலகு ஆகும் வித்து பர ராஜ்ஜியத்தின்
புத்திரராம் களை தேரில் பொல்லாங்கன் புதல்வர் அதைப் புலம்கொண்டு உய்த்த
சத்துருவும் பைசாசம் அறுப்பு உலக முடிவு அரிவோர் தா_இல் தூதர்
உத்தமர் மேனிலை சேர்வர் களை போல்வார் எரியுண்பர் உண்மை ஓர்-மின்

#84
நுண்ணிய ஓர் கடுகு விதை நிலத்து ஊன்றி முளைத்து ஓங்கி நோன் தாள் ஊன்றி
விண் நிலவு புள் உறையும் தரு ஆகும் என்று நம்மான் விதந்ததாயில்
நண்ணு_அரிய பரலோக ராஜ்ஜியமும் ஒருவன் உளம் நண்ணி நிற்பின்
எண்_அரிய மனுக் குலங்கள் ஈடேறும் நெறித்து ஆகும் இதயத்து ஊன்றி

#85
புளித்த சிறு திரள் மாவால் அறப் பிசைந்த மா முழுதும் புளிப்பாம் என்று
தெளித்த உரைப் பொருள் தெரியில் ஓடதியால் பால் உறையும் சீர்மை என்ன
அளித்த திரு_அருள் பெற்ற அவனால் அ அருள் சாரம் அயலார்க்கு எய்தி
ஒளித் தலை வான் கதி பெறு பக்குவம் அடைவர் உண்மை வெளி உய்த்ததாமால்

#86
வைத்த நிதித் திரள் கண்டோன் மறைத்து உரிமை யாவும் விற்று வழங்கியேனும்
அத் தகு நல் நிலம் கொள்வன் அரு விலை நித்திலம் கண்டோன் அவ்வாறாகக்
கைத்தலத்த பொருள் வீசிக் கவர்வன் என்ற திரு_வசனக் கருத்தை ஓரில்
உத்தம ராஜ்ஜியம் விழைந்தோன் ஒல்லை வழிப்படுவன் உலகு ஒருங்கு உவர்த்தே

#87
முன்னீர் புக்கு உலவு சல சரங்களைத் தன் அகடு முட்ட முகந்து வாரிச்
செல் நீர்மை வலை போலும் திவ்விய ராஜ்ஜியம் வலையில் சேர்த்து அவற்றுள்
நல் நீர்மை உள தெரிந்து நவை போக்குமாறு உலக நாளாந்தத்தில்
துன் நீரர்-தமை எரியிட்டு அறவோரைத் துரிய நிலை தொகுப்பார் தூதர்

#88
தன் கடனைத் தனக்கு இரங்கித் தரணிபன் மன்னித்த பெரும் தகை ஓராத
வன்கணன் தன் கடனாளி-தனைப் பிடித்துக் குரல்வளையை வலிந்து பற்றி
என் கடனை இறு என்றான் இறைவன் அறிந்து அவனை இரும் சிறையிலிட்டான்
நன்கு பிறர் பிழை சமிக்கில் நம்பனும் நும் பிழை சமிப்பர் நலத்தை ஆய்-மின்

#89
முந்திரித் தோட்டத்து உதயம் தொடங்கி ஒத்து வேலை செய்த முறையினோர்க்கும்
நந்து பதினொன்றாய மணி-மட்டும் வந்து பணி நாடியோர்க்கும்
வந்து அதிபன் முழுக் கூலி வழங்கலும் முன்னவர் திருகி வாதுசெய்யத்
தந்தனன் சொற்படி கூலி என்னுடையது எனது இஷ்டம் சரி போம் என்றான்

#90
முழுக் காதல் உடையீராய் இப் பொருளைக் கருத்து இருத்தி முனைவன் சித்த
ஒழுக்காறு கடைப்பிடித்துக் கிடைத்ததுவே போதும் என உவந்து நாளும்
அழுக்காறு புறம் போக்கி வழிபடின் பிந்தினரும் முந்தி அமல ராஜ்யம்
இழுக்காது சென்று அடைவர் முந்தினர் பிந்தினர் ஆவர் இதயத்து ஓர்-மின்

#91
தந்தை இது செய் என்னச் செய்யேன் என்று உடன் மறுத்த தனயன் பின்னர்ச்
சிந்தை நொந்து செய்தனன் மற்றொரு தனயன் செய்வல் என்றும் செய்யான் இந்த
மைந்தரில் யார் நல்லன் எனில் தந்தை சொன்னவாறு செய்த மகனே என்பீர்
நந்து_அரு மெய்ப்பொருள் தெரிப்பல் ஒத்திருந்தும் செய்யாது நடிப்பீர் கேண்மோ

#92
சொல்லாலும் செயலாலும் துட்டராய்த் திரிந்து இராஜத்துரோகி ஆய
அல்லாரே விளம்பரம் கேட்டு உளம் திரும்பி ஊர்த்த நெறி அடுப்பார் ஆனார்
நல்லார் போல் அகத்து இருந்தும் நன்றிகெட்டுப் பிரபஞ்ச நடலை நச்சும்
பொல்லீரே எல்லீரும் என்று இனி நீர் விசுவசிப்பீர் புந்தி செய்-மின்

#93
மிக்க சம்பத்து ஒரு தலைவன் செழித்து ஓங்கு முந்திரிகை வியன் புலத்தைத்
தக்க பொறுப்புப் பேசி ஒருசிலர்-பால் விடுத்து ஏகச் சதிசெய் அன்னார்
பக்குவ காலத்து உரிமை பெற வந்தோர்-தமைக் கொன்றும் பழிக்கு அஞ்சாமல்
உக்கிரமாய்த் தலைவன் ஒரு புதல்வனையும் கொலைசெய்தார் உதிரம் சிந்தி

#94
இப் பெரிய பாதகருக்கு எப் பெரிய தண்டனை-தான் இடத் தகாது என்று
ஒப்புரைக்கின்றீர் உணர்-மின் பரலோக ராஜ்யம் இனி உம்பால்-நின்றும்
அப்புறமாய்த் தனக்கு உரிய நல் கனியைத் தருவோர்-பால் அடையும் என்றார்
செப்பு_அரிய திரியேக சர்வேசன் தர வந்த தேவ_மைந்தன்

#95
திருந்திய செங்கோல் அரசன் தன் மகற்குக் கலியாணம்செய்த காலை
பொருந்தினர்க்கு விருந்து அமைத்து நுகருவிப்பான் அழைத்துவரப் போக்கினோரை
வருந்த அடித்து உயிர்க் கொலையும் வகுத்தனர் மன்னவன் தேர்ந்து அ மறவர்-தம்மைப்
பருந்தினுக்கு விருந்தூட்டி எரி கொளுவி ஊரையும் பாழ்படுத்தான் சீறி

#96
அரையன் உழையரை ஏவி ஆண்டாண்டு திரிவோரை அழைத்துவந்து
வரைவு இன்றி யாவருக்கும் மங்கள வத்திரம் நல்கி மகிழ்ந்து ஊட்டுங்கால்
நிரையூடு அங்கு ஒருவனுக்குத் தான் அளித்த துகில் இல்லா நெறியை ஆய்ந்து
விரைவில் இருள் சிறை உய்த்தான் பலர் அழைக்கச் சிலர் தெரிந்த விதத்தை ஓர்-மின்

#97
அரும் பரமராஜ்ஜியத்துக்கு அழைக்கப்பட்டவர் எல்லாம் அருகர் அல்லர்
விரும்பி உளம் திரும்பி நெறி விலகாது முன் சென்று விபுத நாட்டுப்
பெருந்தகைக்குப் பிணக்கு இன்றி வழிபடுவோர் எவர் அவரே பெருமான் சித்தம்
தெரிந்து கொளப்பட்டவர் மற்று அவர் உலகில் சிலர் ஆவர் தெரியும் காலை

#98
அதிபதியாம் மணவாளன் கலியாண மணவறையை அடுக்கும் காலத்து
எதிர்கொள்வான் காத்திருந்த பத்துக் கன்னியரில் ஐவர் எண்ணெய் இல்லா
மதியிலிகள் கண் துயில மதியுடையார் தீவத்தி மரபின் ஏந்தி
விதிமுறையே வரவு எதிர்ந்து உள் புகுந்தனர் மற்றையர் வெளியே விடுபட்டாரால்

#99
மற்று இந்தப் பொருள் தெரியில் வான்_அரசன் நடுத்தீர்வை வழங்கும் காலம்
தெற்றன நீர் அறியகிலீர் மதியிலர் போல் விசுவாசத் தீபம் போக்கி
முற்று உலக மயல் கொண்டு துயிலாதீர் விழித்திரு-மின் மோசம்போகீர்
இற்று இது காண் பொருள் என்ன இளவரசாம் குமரேசன் இயம்பிப் பின்னும்

#100
திரு வளர்க்கும் ஒரு தனிகன் மறுதேசம் போய்வரற்குச் சிந்தையுற்று
மருவிய தன் திரவியத்தைக் காரியஸ்தர் வசமாக மரபின் ஈந்து இப்
பெரு நிதியை ஆதாயப்படுத்திவை-மின் எனப் பணித்துப் பெயர்ந்துபோனான்
வரும் அவதி-தனில் வந்தான் காரியஸ்தரிடம் கணக்கு வாங்கும் காலை

#101
ஐய இருவேம் பொருளை ஒன்று இரட்டி ஆக்கினம் என்று அளித்து நிற்ப
மெய்யர் இவர் எனக் கண்டு மேம்படுத்தி மற்றவனை விளித்து யாது என்னச்
செய்யில் விதையாது அறுக்கத் தேடும் யஜமாநன் எனத் தெரிந்து தந்த
நொய்ய நிதி புதைத்து வைத்தேன் மற்று இதனைக் கொள்க என்று நுவன்றான் ஆக

#102
தன் பொருளைப் புதைத்து நஷ்டப்படுத்திய இச் சழக்கனைக் கால் தளைந்து நீவிர்
துன்பம் மிகும் இருள் சிறையில் உய்க்க என்றான் உழையரை அச் சோம்பி ஈந்த
மன் பொருளை உள்ளவற்கு வழங்கினான் பொன் வணிகன் மரபு ஈது ஆக
என் பொருள் மற்று எனில் உள்ளோர்க்கு ஈவர் இலோர்க்கு உள்ளதும் இன்று என்றார் ஈசன்

#103
மெய்யறிவு மெய்ஞ்ஞானம் மிகு செல்வம் சொல்வன்மை மேம்பாடு ஆதி
வையகத்தில் அவரவர்க்கு வான்_அரசன் அருள் அளிக்கும் வரமாம் அன்றோ
உய்யும் நெறி உபயோகித்து ஊழியஞ்செய்திடல் கடமை உபேக்ஷிப்போரைப்
பொய் இகந்து வரும் நடுநாள் இருள் பிழம்பு புகுவிக்கும் புந்தி செய்-மின்

#104
நானிலம் காணி பூமி நன்கு உறு பயிராய் முற்றி
மேனியும் அதிகம் ஆக விளைந்தன தொகுத்துத் தோன்றும்
தானியக் குவையைக் கண்டு தகவு_இலாப் புத்தியீனன்
கோன் அருள் குறியான் ஆகித் தன் உளே குணிக்கலுற்றான்

#105
தக்க மேல் நிலைச் சேர் இன்றால் தானிய வருக்கம் சேர்த்து
வைக்க என்று எண்ணமிட்டான் வல்லையே களஞ்சியத்தை
இக் குவலயம் வியக்க இயற்றி என் சம்பத்து எல்லாம்
தொக்குவைத்து அநேக காலம் துய்த்து வாழ்ந்திருப்பன் என்னா

#106
முன் நிலை உணரான் பின்னே முடுகிடும் மறுமை ஓரான்
தன்னையும் மறந்தான் ஆகித் தடம் துயில்கொள்ளும் காலை
முன்னவன் இன்று இராவே முடியும் உன் வாழ்நாள் என்னில்
உன் இருநிதியம் பேதாய் யாரதாம் உரைத்தி என்றார்

#107
ஆதலால் பரமராஜன் அருள் திரவியத்தைப் பெற்று
தீது எலாம் அகல நோற்பின் சிந்தனை பிறிது ஒன்று இல்லை
ஈது எலாம் சோரவிட்டு இ இக போகம் நச்சி வாழ்நாள்
போது எலாம் கழிய நிற்கும் புல்லியர் கதி இது ஆய்-மின்

#108
ஒருபொழுதேனும் வாழ்வது அறிகிலார் உலக மாந்தர்
கருதுப கோடி அல்ல பல என்று கருத்தில் காட்டும்
திரு_அருள் உரையும் எண்ணார் சிற்றின்பப் படுகர் ஆழ்ந்து
பொரு_அரும் வாழ்நாள் வீணே போக்குதல் புலமைத்தாம்-கொல்

#109
ஒருவன் ஓர் திராக்ஷத்தோட்டத்து ஊன்றினன் அத்தி ஒன்றை
பெரு மரம் ஆன போதும் கனி கொடாப் பெற்றி நோக்கித்
திருவன் இ நிலம் கெடுக்கும் தரு இதைச் சிதைத்தி என்னாப்
பொரு_அரும் தோட்டப் பாதுகாவலன் புரிவில் கூறும்

#110
ஆண்டகாய் இன்னும் ஓர் ஆண்டு அளவும் யான் சுற்றிக் கொற்றி
வேண்டு உரம் இட்டுத் தக்க விதம் பல பருவம் செய்தும்
காண்தகு கனி கொடாதேல் கட்டளையிட்டவாறு
கீண்டு எறிந்திடுவன் என்று கிளந்தனன் தெளிந்து கொள்-மின்

#111
ஒருவன் அன்புடைய தந்தைக்கு ஓர் இரு புதல்வர் உள்ளார்
இருவரில் இளையான் ஐய என் ஒரு பாகம் எற்குத்
தருக என்று இரந்து கேட்பத் தந்தை தன் உரிமை யாவும்
நிருவிகற்பாகப் பங்கிட்டு உதவினன் நேர்மையாக

#112
கைப்பொருள் கண்டான் தந்தை கரைந்த சொல் பொருளைக் காணான்
மெய்ப்பொருள் அறியான் உள்ளம் விழைந்த சிற்றின்ப மாயப்
பொய்ப்பொருள் நச்சி ஓடிப் புறம்பு போய்த் தந்தை ஈந்த
அப் பொருள் இழந்தான் அந்தோ அகதி ஆயினன் சில் நாளில்

#113
அங்கு ஒரு குடும்பி-தன்னை அடுத்தவன் பன்றி மேய்த்துத்
திங்கள் ஓர் இரண்டு மூன்று செல்ல அத் தேசம் எங்கும்
வெம் கொடும் பஞ்சம் நேர்ந்து வெதுப்பிரும் பசிக்கு ஆற்றானாய்
நுங்கினான் பன்றிக் கூட்டு நொறுங்கு குற்று உமித் தவிட்டை

#114
குற்றும் இத் தவிடும் கிட்டாக் கொடும் பஞ்சம் அதிகரிக்கச்
சற்று உளம் தெளிந்தான் ஆகிச் சஞ்சலித்து அழுது என் தந்தைக்கு
உற்ற ஊழியர் அநேகர் உண்டு தேக்கெறிய யான் ஓர்
துற்று உணவு இன்றி ஆவி சோர்குவல் இது என் துற்புத்தி

#115
புகல் ஒன்றும் இல்லேன் என்னாப் புந்தியில் பிழையை உள்ளி
மிக உளமுடைந்து நைந்தான் மெய் மனஸ்தாபம் கொண்டான்
தகவு உடைத் தாதை பக்கல் சார்குவன் ஏற்றான் பெற்ற
மகன் எனப் பரிவர் அல்லால் மறுத்திடார் எனத் தேறுற்றான்

#116
ஒல்லையே எழுந்தான் தந்தை உத்தம குணம் முன் ஈர்க்க
அல்லல் செய் பசி பின் உந்த அடுத்தனன் அறிந்து தந்தை
வல்லை வந்து அணைத்து முத்தி மகிழ்ந்தனன் மக ஆசைக்கு ஓர்
எல்லையும் உளவோ மைந்தன் எத்தனை பிழை செய்தாலும்

#117
எந்தையே எந்தையே என்று ஏங்கி நெட்டுயிர்த்துக் கண்ணீர்
சிந்தி நொந்து உமக்கு முன்னும் தெய்வத்துக்கு எதிருமாகப்
புந்தி அற்று அளவு_இல் பாவம் புரிந்தனன் இனி யான் உன்றன்
மைந்தன் என்று உரைக்கத்-தானும் அபாத்திரன் மதி ஒன்று இல்லேன்

#118
ஐய மன்னிக்கச் சித்தம் ஆயின் மற்று அளியனேன் யான்
உய்யுமாறு அருளி நும்-பால் ஊழியத்து ஒருவன் ஆக்கி
வையகத்து இருத்துக என்னா வாய் திறந்து அரற்றி நிற்ப
நையல் என்று அருளில் கூட்டிச் சென்றனன் அகத்துள் நண்பால்

#119
மகன் இவன் மரித்தான் இன்னே மறுத்து உயிர்பெற்றான் ஆகத்
தகவு உடை விருந்து எமர்க்குச் சமைக்க எனப் பணித்து மைந்தற்கு
உகவையின் வஸ்திராதி உடுத்து அரும் கலமும் பூட்டிப்
புகர்_அறு மகிழ்கொண்டாடி இருந்தனன் புதல்வனோடும்

#120
ஆயிடைச் சேட்டன் வந்தான் அகக் களியாட்டுக் கண்டான்
மேயது என் என வினாவி அறிந்தனன் வெகுண்டு நின்றான்
நேயம் ஆர் தந்தை நேர்ந்து நின் ஒரு கனிட்டன் மாண்டு
போயவன் பிழைத்து வந்த புதுமையின் களி இது என்றான்

#121
மைந்த நீ என்னோடு உள்ளாய் வாழ்வு எனக்கு உள்ள யாவும்
சொந்தம் மற்று உனக்கே அன்றோ சோதரன் மதியற்று ஏகி
நொந்து வந்து அணைந்தான் மீண்டும் நுண் மதி உடைமை நீ உன்
சிந்தனை திருகல் நன்றோ சேர்ந்து உடன் களித்தி என்றான்

#122
வான நாட்டு அதிபன் தந்தை வான் வழி விடுத்தோர் புத்தி
ஈனராம் குமரர் ஆவர் இரும் சுவிசேஷ மார்க்கர்
ஆனவர் சேட்டர் ஆவர் அகக் களிப்பு அடையும் நீரார்
மோன ராஜ்ஜியத்தர் ஆவர் முறை தெரிந்து உணர்ந்துகொள்-மின்

#123
ஒரு பெரும் செல்வன் பீதாம்பர உடை உடுத்தி வாழும்
திருவினன் ராஜபோகம் சிறிது எனச் செருக்கும் போகி
அரு விலை பெறு பல் பண்டத்து அறு_சுவை அமைந்த உண்டி
பெரு வயிறு ஆரத் துய்த்துப் பேணுவான் மறுமை பேணான்

#124
அங்கு அவன் அணி கொள் மாடத்து அலர் கடை துச்சில் ஆகத்
தங்கி நாள்நாளும் ஆங்கு தணந்து எறி மிச்சில் நச்சிச்
சங்கடம் நுகரும் ஏழைத் தரித்திரம் அங்கம் முற்றும்
வெம் கொடும் பருக்கள் மிக்கு வேதனை உழக்கும் நீரான்

#125
இன்பு எலாம் தூரம் ஆக இரங்கலும் தவிப்பும் நீங்காத்
துன்பமும் சொரி கண்ணீரும் தொடர்பு அறாத் துணை நட்பு ஆக
முன்புறு நாய்கள் நக்கி முறைப் பணி புரிவோர் ஆக
என் பகருதும் அ ஏழை இலாசரு இடுக்கண் பாட்டை

#126
வறுமையும் பிணியும் யாண்டும் வருத்து பேர் அஞரைப் போக்கும்
பொறுமையும் சகிப்பும் சிந்தை பூத்து இனிது அமைய அத்தைத்
தெறு மருந்தாகக் கொண்டு ஜெகத்து நாள் கழித்த பிற்றை
மறுமையில் இராஜ போகம் மலிந்த சந்நிதி புக்கு உய்ந்தான்

#127
பெருமித வாழ்க்கை உள்ள பேதை அச் செல்வன் பொன்றி
எரி மலி கும்பி வாழ்க்கை எய்தினன் கண் ஏறிட்டுத்
திரு மலி ராஜ போகம் தெவிட்டு லாசருவைக் கண்டான்
பொரு_இல் தன் மதியீனத்தை நினைத்து இவை புகலலுற்றான்

#128
மெய் ஆரணமும் விசுவாசிகள்-தம்
பொய்யா உரையும் பொருள்செய்திலனால்
பை ஆடு அரவப் பணி வெவ் விடம் உண்டு
ஐயோ அழலூடு அமிழ்வேன் அளியேன்

#129
பாசத் தளையும் படு செல்வமும் நீள்
மோசப் படு புன்_மதியும் முடுகி
நாசப் பரவை நடு உய்த்த இனி
நீசக் கனல் நீந்துவது எ நெறியான்

#130
சாகாப் புழுவும் தணவாத் தழலும்
கூகூ என நொந்து அலறும் குரலும்
ஏகா எனை விட்டு இனி ஓர் இறையும்
போகா உயிர் பொன்றுவது என்று இனியே

#131
ஞாலத்து ஒரு சில் பகல் நன்று_இல் வினை
ஆலத்தை நுகர்ந்து எனது ஆர்_உயிரைக்
காலச் சுழல் சக்கரம் ஈர்ந்திடு பா
தாலக் கடல் வீழ்ந்து தவிப்புறுவேன்

#132
பெருமைத் திடர் ஏறிய பித்தன் என
கருமத்தை நினைந்து ககோளபதித்
தருமத் துரை நீ திதமத் திரளை
நிருமித்தது எனக்கு என் நிகழ்த்துவதே

#133
அகல் வான் அரசன் அருள் கோமகனைப்
புகல் புக்கு உய ஓர் பொழுது உண்டு-கொலோ
பகலே என் நிதிக் குவை பார் உள கொண்டு
உகவாய் அருள் நாழிகை ஒன்று உயவே

#134
அருள் ஏதும் இலேன் அகலேன் உமை விட்டு
இருளே நரகே எனை எத்தனையாய்
மருள் ஊழி செறுத்து வருத்திடினும்
பொருள் யாது உயிர் போக்கிட வல்லுதிரோ

#135
நல்லார் மதியும் நவை தீர் மறையின்
எல்லா மதியும் இதய_கரி தீங்கு
இல்லா மதியும் இகந்து இங்கு இறுத்தாய்
பொல்லா மதியே புகல் என் மதியே

#136
ஆண்டு உண்டு சுகித்தனை அன்பு உளை போல்
மாண்டு அன்றொடு ஒழிந்தனை யாம் கொன் மதி
கீண்டித் தலை கீழுற மேல் எழுவான்
ஈண்டு ஒன்று உரைப்பாய்_அலை எங்கு உளை நீ

#137
சொன்னாய் பல துன்_மதி தொல் புவியில்
பின்னா வரு பேர்_இடர் ஆழி நிலை
உன்னாது உன் உரைத்-தலை ஓடி விழுந்து
இ நாள் எரியுண்பல் இது என் கதியே

#138
கள்ளத்தை விடுத்து உள கட்டுரை கொண்டு
உள்ள_கரியே சில காலம் உளைத்து
எள்ளப்படு பாவி எனைக் கைவிடுத்து
அள்ளல்படு பாதலத்து ஆழ்த்தினையே

#139
உலகு ஆசை புகட்டி உலாச நெறி
விலகாது மருட்டி மின்னார் வலையில்
பலகாலும் விழுத்தினை பாரிடம் நீ
அலகாய் உன வஞ்சம் அறிந்திலனே

#140
அளவு_இல் சுகபோகம் அளித்து எனுடன்
இள-வாய் உள் எலாம் நுகர்ந்து இன்று இ உலைக்கள
வாழ்வும் அளித்தனை கைதவம் ஆர்
உளமே எனை விட்டு ஒழிவாய்_அலையே

#141
பொன்_நாடு புகப் பொழுது இன்று உலகு இன்று
இன்னே விடியா இருள் மூடியதால்
என்னோ மனனே எனையும் கெடுத்தாய்
அன்னோ இனி என் செயல் ஆவதுவே

#142
வாழ்நாள் இறும் முன் வள_நாடு அடையும்
கோணா நெறி கூடலையே கொடியாய்
நாள்நாளும் விதைத்தனை நச்சு வினை
காணாய் விழைவுற்றது கார் இருளே

#143
ஞாலத்து ஒரு நன்று இல் நடைப்பிணமாய்க்
காலத்தை இகந்து கடைப்படும் இ
மூலத்து அளறூடும் முயங்கிய என்
சீலத் திறன் செவ்விது செவ்விது அரோ

#144
என்று இவ்வாறு நொந்து இடர் நிரம்பு இருள் கடல் முயங்கிப்
பொன்று பேறும் அற்றேன் என ஏக்குறீஇப் புனித
மன்று இலங்கு லாசருவையும் மகப் பலி அமைந்த
வென்றி ஆபிரகாமையும் விழிக்கு எதிர் கண்டான்

#145
கண்டு பன்முறை கூவினன் அளியன் கை தவத்தால்
மண்டு கார் இருள் சூழல் உற்றனன் படு வாதைக்கு
உண்டு-கொல் முடிவு ஆற்றுகிற்கிலன் உயிர்க்கு இறுதி
தண்டல்_இல் பெரும் காதலில் தேடுவன் தமியேன்

#146
சாவும் இன்று ஒவோர் கணம்-தொறும் வேதனை தழைப்ப
நோவும் மல்கி வெய்து உயிர் துடித்து உயங்குவன் நோலேன்
வீவு_இன்றாகிய உயர் பதம் பெறு தவம் விளைத்தோய்
பாவி யான் புகல் விண்ணப்பம் பரிந்து கேட்டு அருள்தி

#147
ஐய தீயனேன் நாக் குளிரத் தகும் அளவில்
கையின் ஓர் விரல் கடை நுனி கங்கையில் தோய்த்துத்
துய்ய லாசரு இவண் தர விடுத்து அருள் சுரத்தி
மெய்யதாகிய சுகிர்தம் உண்டு உனக்கு என விண்டான்

#148
மைந்த கேட்டி உன் நற்பயன் வையகத்து அடைந்தாய்
அந்தவாறு தன் தீப்பயன் நுகர்ந்தனன் ஆங்கே
இந்த லாசரு ஈண்டு இரக்ஷணிய வீடு இசைந்தான்
நொந்து தீப்பயன் நுகர்தி ஈண்டு இத் திறம் நுணித்தி

#149
நன்மை வித்தியோர் நற்பயன் துய்ப்பது நயந்து
தின்மை வித்தியோர் தீப்பயன் நுகர்வதும் தேரில்
தன்ம வித்தக தைவிக சருவ லோகேசன்
கன்மம் நாடி அங்கு அவரவர்க் கூட்டிடும் கணக்காம்

#150
ஈசன் சித்தமே சாதனம் எம்மனோர் செயற்குப்
பேச வேறு இலை அன்றி இப் பெரும் பிளவு உருவி
நாச வல் இருள் சூழலை நாடுவது எங்ஙன்
ஆசையற்க என்று உரைத்தனன் அறவன் ஆபிரகாம்

#151
இரவு எனக்கு இனி விடிவது_இன்று எனினும் என் கிளைஞர்
உரவு நீள் நிலத்து உளர் சிலர் மெய்யுணர்வு ஒருவி
வரவு அடுப்பினும் அடுக்கும் இச் சூழலை மரபில்
புரவு உணர்த்த லாசரை அவண் போக்குக எந்தாய்

#152
செய்த குற்றமும் நீதியும் வரும் நடுத்தீர்ப்பும்
உய் திறத்த நூல் வழியும் மற்று ஈது இது என்று உலகில்
கை திகழ்த்து நெல்லியின் தினம் காட்டு மோசேயும்
மெய் திகழ்த்து பல் தீர்க்கரும் உளர் என்றி மேலோய்

#153
தக்கது ஆயினும் மரித்தவர் மீண்டு போய்த் தரணி
புக்கு உரைத்திடு புதுமை கண்டு ஓம்புவர் புவியின்
மக்கள் மற்றையர் சொற்கொளாது எள்ளுதல் மரபு என்று
ஒக்கலுக்கு உளம் பரிந்து மன்றாடினான் உரறி

#154
துன்று கார் இருள் சூழலான் சொற்றவை கேட்டு
வென்றி கூர் அரசன் திரு விளம்பரம் விளம்பும்
நன்றுளார் உரைக்கு உணர்வுறார் நம்புவார்-கொல்லோ
பொன்றியோர் உரைக்கு ஏகு என அரும்_தவன் போனான்

#155
தீக் கொடும் சிறை புகுந்தவர் தீ_வினைப் பயன் மேல்
ஊக்கி நின்று துன்பூட்டு போது உணர்ந்து உளம் திரும்பிக்
கூக்குரல் படுப்பினும் பயன் என்னை-கொல் கொண்ட
ஆக்கை வீழும் முன் அறப் பயன் கூட்டிடாது அவமே

#156
கூற்று வைகலும் கோடியா ஜீவரைக் கொள்ளை
ஆற்றி நுங்குவது அறிந்தும் மெய் ஆக்கத்தைக் கருதார்
தோற்று தீ விட ஐம்புல நுகர்ச்சியைத் துய்த்து
மாற்று_அரும் சிறை மறிவர் ஈது என்-கொலோ மடமை

#157
அருளின் செல்வமே செல்வத்துள் செல்வம் மற்று அதனைத்
தெருளும் செல்வரே உன்னத நித்திய செல்வர்
பொருளின் செல்வம் நீர்த் திரையவா மற்று அவை போற்றி
மருளும் பூரியர்க்கு உறுவது நித்திய வறுமை

#158
உலக செல்வத்து மயங்கி மெய் ஊர்த்த நூல் நெறியை
விலகுறாது அருள் செல்வம் நாடுறும்துணை விரகோடு
அலகு_இல் பேர்_அருள் ஆண்டகை அவனிக்கு அன்று அளித்த
இலகு வான் மதி இரும் சுடர் அகம் திகழ்த்திடுவாம்

#159
இவ்வண்ணம் இரக்ஷணிய நெறி புதுக்கி வானுற ஓங்கு இதயக் குன்றில்
மெய்வண்ண அற்புதமாம் திரு_விளக்கில் விசுவாசச் சுடரை ஏற்றி
உய் வண்ணம் சமைத்திடுவான் உளம்கொண்டு குமரேசன் உலகோருக்குக்
கை வண்ணம் அருள் வண்ணம் காட்டும் வண்ணம் சொல் வண்ணம் காட்டும்-கொல்லோ

#160
திரு_நோக்கால் திரு_வாக்கால் திரு_கரத்தால் திரு_அருளால் தீண்டிக் கிட்டி
ஒருவு_அரிய பிணி பிறவிக்குருடு செவிடு ஊமை முடம் உதிரப்பாடு
வெருவரு பேய்க் கோரணி சித்தப்பிரமை திமிர்வாத வியாதி ஆதி
பருவரல் உற்றோர்க்கு அருளி இக_பர நன்மையை அளித்தார் பரமன் மைந்தன்

#161
தொண்டர் இடு முறைப்பாட்டின் அறிதுயில்-நின்று எழுந்து அருள் ஓர் சுருதிச் சொல்லின்
மண்டலம் சூழ் வாரிதியின் கொந்தளிப்பும் கடும் சூறை மாருதத்தின்
உண்டுபடு நிலைப் பிறழ்வும் ஒருங்கு அமைய ஒல்லை உலகு உவந்தது அம்மா
அண்ட பகிரண்டம் எலாம் அமைத்த திரு_வாக்கினுக்கு ஈது அரிதாம்-கொல்லோ

#162
மன்றல்_இலா ஒரு சிறுமி அமங்கலையின் ஒரு சிறுவன் வாழ்நாள் முற்றிப்
பொன்றிய பின் உடல் ஈமம் புகும் முன்னர்த் தாய் தந்தை புரப்பான் வேண்டச்
சென்று இரங்கிப் போன உயிர் திரும்பி உய அருள் புரிந்த செயலை நோக்கி
நின்றவரும் கேட்டவரும் வான் நாட்டு நெறி பிடித்து நிகழ்வதானார்

#163
மாண்டு பிரேதக்குழியில் ஒரு நாலு வைகலுடன் மறிந்தும் ஆவி
ஈண்டு ஒருவி மறுமையில் புக்கு இனிது உறைந்தும் இறை மகிமை இகம் கண்டு ஏத்தக்
காண்தகைய சுவிசேஷ கதி மார்க்கம் நலம் கவினக் கருணை வாக்கின்
மீண்டு உயிர்பெற்று எழுந்து திரு_அடி தொழுதான் ஒரு தொண்டன் வெளிப்பட்டு ஐய

#164
ஒக்கல் எலாம் மற்று இவரே உன்னத நாட்டு இளவரசன் ஒருங்கு பேயின்
சிக்கறுத்துச் சிறை மீட்டு ஜீவகோடியைப் புரப்பான் ஜெகத்து வந்த
சக்கர ஈசுரன் மைந்தன் என விசுவாசம் பூண்டு சரணம் போற்றி
அக்கணமே வான் அரசற்கு ஆட்பட்டார் ஒருசிறிதும் ஐயம் இன்றி

#165
தூய சேத்திரத்தில் எங்கும் இத்தகைய அற்புதத்தின் தொனி போய் முட்டப்
பேய்_அரசாட்சியை ஒருவிப் பிரபஞ்ச மயக்கு அறுத்துப் பின் முன் ஆக
நாயகனைத் தரிசித்து நற்கதி மார்க்கத்து ஊன்றி நடைப்பட்டார் பல்
ஆயிரவர் அருணன் ஒளிக்கு எதிரூன்றி நிற்பது-கொல் அந்தகாரம்

#166
எள்_அரிய விளம்பரமும் இக_பர சாதன நடையும் எதிரில் ஈண்டும்
விள்_அரும் அற்புதச் செயலும் கண்டு கேட்டு உளம்திரும்பும் விந்தை ஓர்ந்து
வள்ளல் அருள் செயற்கு இடைந்த அ அலகை பாசறை ஊன்றும் வைரி ஆய
கள்ள வேடக் குரவ ஒன்னாரே சதி புரியும் கருத்து உள் கொண்டார்

#167
பகைப்புலத்தார் சதி வினையும் பரமசுதன் அரும் பாடும் பகையைச் சிந்தி
ஜெகப் புலையன் சிரம் சிதைத்த ஜெயப்பாடும் பரலோகத் திருவோலக்கத்
தகைப் புலவர் எடுத்து ஏத்தும் தந்தை களிகூருதலும் பிறவும் எல்லா
வகைப்பாடும் ஆண்டாண்டு கேட்டு அறிதி வழிக்கு இடையில் மைந்த என்றான்

#168
வித்தகக் கதி வழி புதுக்கி மேலை நாள்
நித்திய திரித்துவ நிருமலாதிபன்
புத்திரன் தரும் இது புரவு நூல் நெறி
சித்த சஞ்சலம் இனித் தீர்தியால் எனா

#169
மக்களை மனைவியை மனையைக் காதல் கூர்
ஒக்கலை உரிமையை உவக்கும் தேசத்தை
இக்கணம் விடுத்து யான் இயம்பு தேயத்தில்
புக்கு வாழ்ந்து இருத்தி நீ போதியால் எனா

#170
எழுதிய தோல்சுருள் எடுத்து நண்ப நீ
பழுது_இலா மொழி இது பார்த்தியோ என
உழுவல் அன்பொடு மனம் உவந்து நோக்கி ஈண்டு
எழுவல் யான் செல் வழி யாது இங்கு என்றனன்

#171
ஆங்குறு பெரு வழிக்கு அப்புறத்து ஒரு
பாங்குறு வாயிலைப் பார்த்தி அல்லையேல்
ஓங்கு இரும் சுடர் ஒளி ஒன்று காண்டி மற்று
ஈங்கு இது குறிக்கொளீஇ ஏகற்பாலையால்

#172
எட்டி நீ நடந்து சென்று இடுக்க வாயிலைக்
கிட்டி உன் கரம் கொடு கிளர் கபாடத்தைத்
தட்டுதி உனக்கு அறி தக்க யாவையும்
உள் தெளிவுற அவண் உரைக்கலாகுமால்

#173
என் உரை அணுத்துணை இகப்பை ஆயினும்
மன்னர் கோன் வள நகர் மருவுவாய்_அலை
பன்னுறு கவர் வழி பல உண்டு ஆங்கு அவை
உன்ன_அரு நரக பாதலத்தில் உய்க்குமால்

#174
நெறி பிசகாது இடை நின்றிடாது ஒளிக்
குறி பிடித்து ஏகு எனக் கோது_இல் அன்பொடு
செறியும் நல் ஆசிகள் செப்பினான் உவந்து
அறிவனும் அஞ்சலித்து அகன்று போயினான்
**சுவிசேஷமார்க்கப் படலம் முற்றிற்று

@10 யாத்திராரம்பப் படலம்

#1
இடுக்குறு வாயில் சென்று எய்திடா முனம்
தடுக்க அரும் தடை அயல் சாருமோ என
நடுக்குறும் ஆயினும் நாயினேனைக் கை
விடுக்குமோ இறை என வெருட்சி நீங்கினான்

#2
கண்_இலான் இரு விழி காணப்பெற்ற போல்
மண்ணக இருள் கெட வயங்கு மாச் சுடர்
நண்ணிடம் அறிந்து உளம் மகிழ்ந்து நாட்டம் வைத்து
எண்ணம் மற்று இன்றியே விரைவின் ஏகினான்

#3
போவது கண்டு எமைத் துறந்து போதல் நன்கு
ஆவதோ திரும்புக என்று ஆகுலத்துடன்
கூவினர் மனை மகார் குறிக்கொளாதவன்
ஜீவனே ஜீவனே என்னச் சென்றனன்

#4
மூண்டு எரி வளைந்திட முடுகி இல் புறம்
தாண்டி வீழ்ந்து ஆர்_உயிர் தப்பி நின்று பின்
வேண்டுவ முயலுவார் அலது எண்மையால்
மாண்டு அழிந்து ஒழிவரோ மனை மகாரொடும்

#5
பற்றி யாம் கொணர்வம் என்று இருவர் பன்னிப் போய்
உற்றனர் விரைந்து சென்று உவந்து வேதியன்
கொற்றவன் திரு_நகர் குறித்த கொள்கையோ
மற்று நும் கருத்து எது வழுத்துவீர் என்றான்

#6
இன்று நீ மனம் துணிந்து எமை விட்டு ஏகிடில்
ஒன்றிடும் பெரும் துயர் உண்மை ஆதலால்
சென்றிடேல் எம்முடன் திரும்புவாய் எனில்
நன்று உனக்காம் பெரு நமர்க்கு நல்லையால்

#7
அரும் பெறல் மக்களை ஆவி என்று உனை
விரும்பிய மனைவியை வெறுத்திட்டு ஏகுதல்
கரும்பு வேம்பு ஆயது ஓர் கணக்குப் போலுமால்
இரும்பு இயல் நெஞ்சினாய் இது நன்கு ஆவதோ

#8
இத் தலத்து உரிமை யாவையும் இகந்து சென்று
அத் தலத்து அழிவு_இல் பேறு அடைவன் என்றியால்
கைத்தலத்து அரும் பொருள் கழிய வீசிடும்
பித்தரோ தன_கொடி பிறங்க வாழுவார்

#9
என்று வன்னெஞ்சன் ஈது இயம்பக் கேட்டலும்
நன்று நன்று உன் உரை நாச தேசத்தில்
நின்று உயிர் அழிந்து எரி நிரையம் சேரவோ
இன்று எனைக் கூவுதி திரும்பு என்று ஏழை நீ

#10
சீலமும் ஒழுக்கமும் திறம்பு தேசத்தின்
சாலமும் மாயமும் தழுவி இன்னும் என்
காலமும் ஜீவனும் கவிழ்ப்பனே-கொலாம்
ஆலம் என்று அறிந்த பின் அருந்துவார் எவர்

#11
நிலைநிலாது அழிவது நிரையத்து உய்ப்பது
கலை_வலார் வெறுப்பது களங்கம் மிக்கது
மலைவுறு துன்ப நோய் மலியப் பெற்றது
புலை உலகத்து அநுபோக சாரமே

#12
குறைவுறா நித்தியம் குலவத் தக்கது
கறையுறா நலத்தது கருது ஒணாதது
நிறைவது வாடிடும் நீர்மைத்து அன்று காண்
இறை பரலோக பேர்_இன்ப பாக்கியம்

#13
ஆழியான் பேர்_உலகு அணுகும் இன்பத்துக்கு
ஊழி இ உலகு இருந்து உறுகண் இன்றியே
வாழினும் இஃது அணுமட்டு ஒப்பாகுமோ
பாழிலே உழலுதி பயனை ஓர்கிலாய்

#14
மகத்துவமாய பேர்_இன்ப வாழ்வினை
அகத்திடை மதிப்பவர் அலகு_இலாது வந்து
இகத்து உறு பாடு எலாம் நொய்து என்று எள்ளுவர்
ஜெகத்தையே மதிப்பவர் சிந்தை மாழ்குவர்

#15
புற்புத உடல் சுக_போகம் நச்சியே
பிற்படு குழியில் வீழ்ந்து அழிவர் பேதையர்
முற்படு துயரினை முருக்கி நித்திய
சிற்பர சுக நிலை அடைவர் செவ்வியோர்

#16
களைகணா உலகு எலாம் காக்கும் எம்பிரான்
கிளை அலால் நலம் தரு கிளை எற்கு இல்லையால்
வளையும் இக் குழு எனை மயற்கு உள்ளாக்கிடும்
தளை அலால் கிளை எனச் சாற்றல் ஒல்லுமோ

#17
மேழி கைப் பிடித்தனன் விடுக்கிலேன் இனி
நாழி ஒன்றாயினும் நாச தேசத்துத்
தாழ்_இலேன் உன் கெடு மதியைச் சார்ந்து நின்று
ஊழி_நாயகன் உரை கடக்க ஒண்ணுமோ

#18
மற்று இனி உரைப்பது என் வன்னெஞ்சோய் இவண்
சொற்றவை மெய் எனத் துணிதியேல் என் பின்
பற்றி வான் பரகதிப் பயின்று உய் இன்று எனில்
நிற்றியேல் நில் என நிகழ்த்தினான் அரோ

#19
கேட்டு வன்னெஞ்சன் ஈது அமையும் கேவல
நாட்டு வாழ்வு உவந்தனை நடத்தி நீ எனா
மீட்டு யாம் போதும் மென்னெஞ்ச வேதியன்
கூட்டுறவு இனி ஒலாது என்று கூறினான்

#20
ஓதும் மெய்ச் சுருதி நூல் உரைக்கும் நீதியும்
தீது நாம் இயற்றிய திறனும் மேல் வரும்
மா துயர்க்கு அகன்று உயும் மார்க்கம் ஆவதும்
காதலாய்த் தெரித்திடும் இவனைக் காய்தியோ

#21
வேதியன் இங்ஙனம் விதந்த வாய்மையும்
கோது_அறு செய்கையும் குணமும் ஒத்தலால்
தீது_அல இவன் வழிச் சேறல் என்று யான்
போதர இசைந்து உளம் பொருந்தினேன் என்றான்

#22
உற்ற மென்னெஞ்ச கையுற வருந்திட
வெற்று உமிக் குத்துதல் விழுமிது_அன்று காண்
சுற்றமும் காதலும் துனியில் மூழ்க நீ
பெற்றிடு பயன் ஒரு பெற்றித்து ஆகுமோ

#23
என்ன துன்_மதி உனக்கு இயைந்தது ஈங்கு இவன்
உன்ன_அரும் பைத்தியம் உனக்கும் நேர்ந்ததோ
சொன்ன அத் திரு_நகர் துன்னினார் எவர்
பன்னு சொப்பனப் பொருள் பலிக்குமே-கொலாம்

#24
ஓடிட மருந்து அயின்று உறங்கி வீழ்தல் போல்
நாடி இங்கு இவன் தர நவின்று வந்து இனே
கோடிய மனத்தினனோடு கூடி நீ
கேடு உறத் துணிந்தனை கிளக்கல் ஆவது என்

#25
மன் வழி மரபுளார் வகுத்துக் காட்டிய
முன் வழி இகப்பது முறைமை அன்று இனி
உன் வழிச் சேறியேல் சேறி ஒள்ளிய
என் வழி ஏகுவன் யான் என்று ஏகினான்

#26
ஏகு வன்னெஞ்சனுக்கு இரங்கி எம்பி நீ
போகலை எம்முடன் பொருந்துவாய் எனில்
சாகலை நித்திய சாம்பிராஜ்ஜிய
போக பூமியின் நலம் பொருந்துவாய் என்றான்

#27
பல் முறை வேதியன் பரிந்து கூவவும்
நல் முறை அறிகிலான் நாச தேசத்துச்
செல் முறை துணிந்தனன் ஜீவன் மல்கிய
சொல் முறை நிற்பரோ கேடு சூழ்ந்துளார்

#28
கல் என உரத்த வன்னெஞ்சன் கங்குலை
எல் எனக் கூறியாங்கு ஈறு_இல் துன்பத்தைச்
சொல்_அரும் சுகம் எனத் துணிந்து போதல் கண்டு
ஒல்லை மென்னெஞ்சன் ஈது உசாவுவான் அரோ

#29
உத்தம தோழ நீ உவந்து பேசிய
முத்தி மா நகர்க்கு ஒரு முதல்வன் ஆக்கிய
அத் தகு பாதை நீ அறிதியோ அஃது
எத் திசை ஏகுதும் எழுக என்றனன்

#30
துணைவ நோக்காய் இடைத் தோன்றுகின்ற ஓர்
இணை_அறு சுடர் அருகு இடுக்க வாயிலை
அணையின் மற்றவை அவண் அறியலாகும் அத்
திணி சுடர் குறிக் கொடு செல்லவேண்டுமால்

#31
பொரு_அரும் திரு_அருள் புணர்ப்பினால் யாம்
இருவரும் உடன் செல இசைந்து நின்றனம்
வெருவரல் இன்றி மேல் விரைந்து செல்வதே
கருமம் இப் பெருவெளி கடத்தும் என்றனன்

#32
வஞ்சம்_இல் வேதியன் வகுத்தல் கேட்டு மென்
னெஞ்சனும் ஒருப்படீஇ நெறியைப் பற்றினான்
எஞ்சுறாது இருவரும் விரைவின் ஏகினார்
பஞ்சரம் நீத்த பைங்கிளியின் பான்மையார்
**யாத்திராரம்பப் படலம் முற்றிற்று

@11 அவநம்பிக்கைப் படலம்

#1
இன்ன தன்மையர் இருவரும் பெருவெளி இசைந்து
மன்னில் ஓர் அடித் தடத்தை விட்டு அயல் புறம் வழுவில்
துன்னும் இன்னல் என்று அஞ்சினராய்ச் சுவிசேஷன்
சொன்ன சொற்குறி கடைப்பிடித்து ஏகினர் துணிந்து

#2
ஆய காலை மென்னெஞ்சன் இங்கு ஆரையும் காணோம்
தூய வேதிய நாம் செலத் துணிந்த காரியம் என்
போய் இனிக் குடிபுகும் இடம் யாது அவண் புகுவோர்க்கு
ஏயும் நல் சுகானந்தம் என் இயம்புதி என்றான்

#3
நன்று நின் வினா உத்தரம் சுருதியே நவிலும்
அன்றி எம்மனோர் வாக்கினுக்கு அதீதமாம் ஐயம்
ஒன்றிடாது கேட்டு உய்த்து உணர்ந்திடுக ஈது உண்மை
என்று புத்தகச்சுருள் படித்து இவையிவை இயம்பும்

#4
ஜீவ ரக்ஷையை நாடி நாம் சென்று சேர் இடம்-தான்
ஓவல்_இல் பரலோக ராஜ்ஜியம் அஃது உற்றால்
மேவரும் பரமானந்த சுக நிலை மேவும்
தா_இல் நித்திய ஜீவனைப் பெறுவதும் சரதம்

#5
துன்ப ஆழியில் மூழ்கி வெம் துயர் எலாம் துடைத்து
மன்பதைக்கு அழியாப் பதம் வழங்கிய வரதன்
அன்பு மல்கிய ஜீவ மா நதித் துறை ஆடிப்
பொன் பொலிந்த செம் சேவடிக் கற்பகம் புகுவாம்

#6
விழுத்தகும் கதிர் ஒளி திவள் வெண் துகில் புனைந்து
வழுத்துதற்கு_அரும் மகிமை ஒண் மௌலியைச் சூடிப்
பழுத்த பத்தியில் பரவசர் ஆகி நம் பரனைத்
தொழத்தகும் சுர கணங்களோடு அடி_இணை தொழுவாம்

#7
புனிதர் ஆகிய புங்கவர் புரை_இல் புத்தேளிர்
நனி திரு_பணிவிடை புரி தூதர் நம்பனுக்காய்த்
துனி சுமந்து உயிர் விடுத்து வான் கதி பெற்ற சூரர்
இனிதின் ஏத்து பல்லாண்டு இசை செவிமடுத்திடுவாம்

#8
ஜீவ தாருவின் செழும் கனித் தீம் சுவை அமிர்த
தேவ போனகம் ஆர உண்டு ஆனந்தம் தேக்கி
ஓவு_இல் அன்பொடு துதி பகர்ந்து உவந்து இனிது இருப்பாம்
பாவ சங்கடம் யாவையும் நம்முழை படரா

#9
இல்லை நோய் பசி தாகம் ஆதிய துயர் என்றும்
இல்லை முப்பகையால் வரும் உபாதிகள் என்றும்
இல்லை வேதனையுற்று அழு கண் கணீர் என்றும்
இல்லை ஓர் குறை எம்பிரான் இராஜ்ஜியத்து என்றும்

#10
வாக்கினால் மனத்தால் அளப்பு_அரிது இ மாண் கதியில்
போக்குவித்து எமைப் புரப்பது புரவலன் புதல்வன்
ஆக்கு புண்ணியம் அதற்கு எமைப் பக்குவப்படுத்திக்
காக்க வல்லது இங்கு ஆழி வேந்து ஆவியின் கருணை

#11
இன்னது ஓர்ந்து அருள் வாக்கினை மதித்து இளவரசன்-
தன்னை மெய் விசுவாசத்தினால் தனது ஆக்கிப்
பின்னம்_அற்ற நல் ஆவியின் பேர்_அருள் பேணி
நல் நெறிப்படில் இறு வரை நணுகும் அப் பேறு

#12
சுருதி நூல் படித்து இவ்வணம் கிறிஸ்தவன் சொல்லக்
கருதி ஆங்கும் மென்னெஞ்சனும் வியந்து உளம் களித்துப்
பெரிது நம் வழி தாழ்ப்பது பிழை விரைந்து ஓடி
வருதி என்றலும் வேதியன் தன் நிலை வகுப்பான்

#13
ஒன்று கேட்டி மென்னெஞ்ச என் உற்பவம் தொடங்கி
நின்ற வல்_வினை ஈட்டிய தீ_வினை நெருங்கித்
துன்றி என் முதுகு உளுக்குற நிமிரும் அத் துனியால்
பின்றுகின்றனன் நீ அது பெறுகிலாய் என்றான்

#14
இத் திறத்த சம்பாஷணை இயைந்து இருவோரும்
மித்திரத்துவம் ஆகினராய் வெட்டவெளியின்
மத்தியில் செலும் போது ஒரு மருங்கு சேர் உளையில்
சித்த சாஞ்சலியத்தினால் விழுந்தனர் திகைத்து

#15
திகைத்து வீழ்ந்து தத்தளித்து உடன் முழுவதும் சேறாய்
அகைத்து உழக்கி நின்று அடிபெயர்த்திட ஒணாது அழுந்தி
உகைத்து என் செய்வல் என்று உஞற்றிய பெரும் பிழை உன்னி
மிகைத்த சிந்தையான் வேதியன் வெருண்டு உளம் மெலிந்தான்

#16
இனையன் ஆக மென்னெஞ்சனும் சிறுபொழுது இனைந்து
புனையும் நல் மொழி புகன்று எனைத் தெருட்டிய புலவோய்
எனையது உன் நிலை இறங்கிடு துறை இ நீத்து என்றால்
பினை உறும் கதி விதந்து உரையாடவும் பெறுமோ

#17
இன்னும் எத்தனை அவதியோ துன்பமோ இடுக்கண்
என்னவோ உயிர்ச் சேதம் வந்து இயையினும் இயையும்
அன்னது ஆதலில் ஜீவனோடு அகன்று யான் அகத்தைத்
துன்னி இன்னல் அற்று இருப்பதே நலன் எனத் துணிந்தேன்

#18
நித்தியானந்த ராஜ்ஜிய நெறி கடைப்பிடித்துப்
பத்தியானது பழுத்துளை போல நீ பகர்ந்த
முத்தி மா நலம் உளை நிலம் முழுமையும் கடந்து
தத்தி ஏறி அக்கரைப்படில் பெற்றனை தக்கோய்

#19
என்று கூறிய அமைதியின் மறைந்து உடன் இயைந்து
நின்ற காமமோகிதன் பிரபஞ்சனன் நெறியைத்
தொன்று-தொட்டு அறத் துடைத்திட முயல்கின்ற தூர்த்தன்
ஒன்றி மூவரும் குதுகலித்து ஓடிவந்து உற்றார்

#20
உற்று அடைந்து மென்னெஞ்சனுக்கு உவப்புரை பேசிப்
பற்றி ஈர்த்தனர் பிடர் பிடித்து உந்தினர் பழுது
துற்று சிந்தையினானும் அங்கு அவரொடு தொடர்ந்து
நல் திறம் கெடு நாச தேசத்தை நண்ணினனால்

#21
கோது துற்றிய நிலை_இலாக் குச்சித வாழ்வைக்
காதலித்து நித்திய சுக வாழ்வினைக் கசந்தான்
ஏதம் கொண்டு நல் ஊதியம் போகவிட்டிடும் இப்
பேதைக்கு எங்ஙனம் வாய்க்கும்-கொல் பேர்_அருள் பெற்றி

#22
நிருவிசாரத்தை அடைதலும் நெறி நிலா மாக்கள்
பெரு விசாரியைப் பின்தொடர்ந்து ஏகிய பித்தன்
வரு விசாரத்தை அறிகுதும் யாம் என வல்லே
தெரு விசாலத்தை அடைத்தனர் வயின்-தொறும் திரண்டு

#23
மீண்ட காரியம் வினவி நன்று எனச் சிலர் வியந்தார்
மாண்ட போதினும் வசை அறாது எனச் சிலர் வைதார்
ஆண்டு அவஸ்தை உண்டு என்று கண்டு அச்சமுற்று அவலித்து
ஈண்டு அணைந்தனன் கோழை என்றார் சிலர் இகழ்ந்து

#24
முட்டிப் பின் குனி மூடன் என்றார் சிலர் முனிந்து
திட்டிப் போயினர் சிலர் சிலர் தீண்டலிர் இவனைக்
கிட்டிப் பேசினும் கேடு என்றார் சிலர் சிலர் கெழுமி
மட்டிக்கு ஆயிரம் சொலினும் நன் மதி வராது என்றார்

#25
மறம் குலாவிய மனத்தினர் இன்னணம் வகுத்துப்
புறம் குரைத்திட ஊசலாடு உளத்தொடும் போனான்
இறங்கு சென்னியன் ஆகி மென்னெஞ்சன் ஆண்டு இப்பால்
அறம் குலாவிய வேதியற்கு உற்றதை அறைவாம்

#26
மயல் அளற்றில் வீழ்ந்து உழல்பவன் மருவு தன் பலத்துக்கு
இயலும்-மட்டும் அக்கரைப்பட முயன்றும் எய்து அரிதாய்ச்
செயல் ஒழிந்து யான் திருமினும் தேச நாசத்தில்
அயலுளாரொடும் அவிவனே என்று அறிவு அழிந்தான்

#27
சேற்று நீள் நிலம் கடந்து நல் நெறிக் கரை சேர
ஆற்றல் இன்றி நின்று ஆகுலித்து அவசமுற்று அருகே
தோற்றும் இச் சுடர் வாயிலைத் துன்னி யான் உய்ய
மாற்று_அரும் துணை வாய்க்குமோ ஈண்டு என மலைந்தான்

#28
ஆய காலை நஞ்சு உண்டவர்க்கு ஆர்_உயிர் அளிக்கும்
சேய நல் மருந்து எதிர்ந்து எனத் தேம்பி நின்று அழு சேய்க்கு
ஆய் எதிர்ந்து என அஞ்சல் என்று ஆங்கு வந்து அடுத்தான்
நேயம் மிக்க சஹாயன் என்று உரைபெறும் நெடியோன்

#29
கிட்டி வந்து நின்று எம்பி நீ கெடு நொதி இதனுள்
பட்டு உயங்குவது என்னை நம் பார்த்திவன் அருளால்
இட்ட கற்களில் ஊன்றி நின்று இக்கரை ஏறாது
அட்ட திக்கையும் பார்ப்பது என் அவமதி என்றான்

#30
ஐய கேள் சுவிசேஷகன் ஆர்_உயிர்க்கு அரணாம்
தெய்வ வாயில் புக்கு உய்தி என்று உரைத்தனன் தெருண்டு
மெய் ஒளிக் குறி பிடித்து யான் விரைந்து வந்து அளற்றில்
வெய்ய தீ_வினை முன் நின்று வெருட்டலில் வீழ்ந்தேன்

#31
கண் இருண்டு உளம் கலங்கலால் கதித்திடும் சுமையால்
அண்ணல் வாக்கினில் அமைந்த அம் சிலை தெரியாமல்
எண்ணமிட்டு உழல்கின்றனன் இவண் என இசைத்தான்
நிண்ணயம் கடைப்பிடித்து நல்வழிப்பட்ட நிவர்த்தன்

#32
சொற்றது ஓர்ந்து அருள் சஹாயனும் துரிசு_அறும் உரைக் கல்
இற்றிது ஈது எனக் காட்டி ஆண்டு ஊன்றி நின்று என் கை
பற்றுக என்று தன் கரம் கொடு பற்றி ஈர்த்து உரம் கொள்
நல் தரைக்-கணே நிறுவி மற்று அவற்கு இவை நவில்வான்

#33
நல்ல நூல் நெறியாம் இது வாயிலை நாடிச்
செல் அயல் புறம் விலகிடில் தீங்கு உறல் திண்ணம்
புல்லரோடு உரையாடி வீண் பொழுது போக்காதி
ஒல்லை ஏகு என விடைகொடுத்து ஏவினன் உவந்து

#34
தீங்கு நேர்ந்ததும் செஞ்சுடர் முன் பனி சிதறி
நீங்குமாறு சுரேந்திரன் அருளிய நெறியும்
ஓங்கும் அன்பொடு சஹாயன் வந்து உதவிய உரித்தும்
வீங்கு காதலோடு உன்னி வேதியன் இவை விளம்பும்

#35
அரவு கௌவிய தேரையை மீட்டு என அகாதத்து
உரவு அளற்றின்-நின்று எனைக் கரை ஏற்றிய தோன்றால்
கரவு_இலாது உனைப் பழிச்சுவது அலது கைம்மாறு ஒன்று
உரவு நீள் நிலத்து உண்டு-கொல் யான் உனக்கு உதவ

#36
பன்_அரும் பல பாதகம் பயின்ற பாமரனாம்
என்னை உன்ன எம்மாத்திரம் எம்பிரான் உளத்தில்
அன்னதாக நின் அரிய பேர்_உதவி எற்கு அமைத்த
மன் இரும் பெரும் கருணைக்கும் உள-கொலோ வரம்பு

#37
பற்று யாதும் இன்றாகவும் பரிந்து மெய் அன்போடு
உற்று நேர்ந்தவர்க்கு உயிர் அளித்தாயினும் உதவி
முற்றி ஆதரம் புரிவரால் முன்னவன் அருளைக்
கற்று வல்ல சான்றோர் எனக் கேட்டு உனைக் கண்டேன்

#38
என்று பன்முறை நன்றியை வியந்து இன இயம்பித்
தன் துணைக் கரம் குவித்து வந்தனம் பல சாற்றி
முன் துனும் கடை வாயிலை நோக்கினன் முடுகிச்
சென்றனன் ஒரு தமியனாய் வேதியர் திலகன்

#39
நிகழ்ந்த சம்பவம் யாவும் கை நெல்லி அம் கனியில்
திகழ்ந்த அவ்வயின் சஹாயனை நோக்கி யான் திருமி
அகழ்ந்து வைத்தவர் யாவர் இ நொதிக் கிடங்கு அரசன்
இகழ்ந்தது என்னையோ செவ்விது ஆக்காமல் இ வழியை

#40
பரமராஜ்ஜியம் நாடியோர் படர் நொதி இதனுள்
உரம்_இலாது வீழ்ந்து உயங்கவிட்டிருப்பது என் உரிமை
தரம்_இலாது உயர் மகிபதி அருட்கு இது தகுமோ
வரம் மனோகர தெரித்தி என்று உரைத்தனன் வணங்கி

#41
நம்பி சொல்லுவல் கேட்டி மற்று இதன் திறம் நலம் சேர்
தம்பிரானொடு மாறுகொண்டிடும் ஒரு சழக்கன்
வெம்பி மானிடக் குழுக்களை நல் நெறி விலக்கிக்
கும்பி பாகத்தில் குடிபுகுத்துவது அவன் கொள்கை

#42
சேற்று நீள் நிலமாம் இது செய்த தீ_வினையைத்
தோற்றுவிப்பது பரன் அருள் மறைத்து இருள் தொகுத்து
மாற்று_அரும் திகில் விளைப்பது வன் துயர் குழுமி
வீற்றிருப்பது நொதிப்பது வெறும் மனஸ்தாபம்

#43
வஞ்ச நெஞ்சு என ஆழ்ந்தது மருவும் மூவாசை
விஞ்சினால் எனப் பரந்தது வெவ்_வினைத் திரள் போல்
செஞ்சவே செறிந்து உளது பொய் வேதியர் செயலில்
எஞ்சுறாத துர்_நாற்றம் மிக்கது புறம் எங்கும்

#44
கால் நிலைத்து நின்று ஓலிடக் கவிழ்ந்த அம் சிரத்தை
மேல் நிமிர்த்தவொட்டாது அமிழ்த்துவது இதை விறல் கொள்
ஆனி துற்றிய அழிம்பனாம் அலகை முன் அகழ்ந்தான்
நானிலத்து அவநம்பிக்கை எனப்படும் நாமம்

#45
செப்பனிட்டிட முடிவது_அன்று ஆகலின் சேற்றுக்கு
எப்புறத்தினும் இடைக்கிடை இரும் சிலை நிறுவி
ஒப்பமிட்டனர் கருணை மன் அது பிடித்து உந்தித்
தப்பி இக்கரைப்படுகிலார்க்கு உய்வு இலை தக்கோய்

#46
தே மலர்த் தொடை நரபதி ஒருவன் முன் தியங்கிக்
காமமோகிதன் எனும் ஒரு கள்வனால் கவிழ்ந்து இங்கு
ஏமம் இன்றியே தத்தளித்து இடர் உழந்து இனைந்தான்
மீமகீபதி நிறுவிய சிலை பற்றி மீண்டான்

#47
மீண்டு இரும் கரை ஏறி உய்ந்தவர் சிலர் மீளாது
யாண்டும் நீங்க அரிதாகி வெவ் இடர் உழந்து ஏங்கி
ஆண்ட நாயகன் அருள் துணை பற்றிடாது அவமே
மாண்டுபோனவர் வாரிதி மணலினும் பலரால்

#48
மண்ணில் ஆரண நூல் நெறி மயக்கு_அற விளக்கி
விண்ணில் ஆர்_அருள் ஞான_சூரியன் ஒளி வீசக்
கண்_இலார் என மருண்டு உளைப் படுவது கருதில்
அண்ணலார் பிழை அன்று இவர் அறிமடமாமால்

#49
மன்னன் ஏவலில் வரு பிரயாணிகள் வழுவி
இன்னல் எய்திடாது இராஜ_பாதையின் இரு மருங்கும்
முன்னர் ஆக்கிய பித்தி உண்டு இ வகை மோசம்
துன்னுறாது செம் நெறிக் கடை வாயிலைத் துன்னில்

#50
இன்னவாறு எனக்கு இதமுற எழில் முகம் மலர்ந்து
நன்னர் வாசகம் நவிற்றிய சஹாயற்கு நன்றி
பன்னி அஞ்சலி வரன்முறை பணிவுடன் நல்கிச்
சொன்ன வேதியன் நிலையினை நாடுவான் துணிந்தேன்
**அவநம்பிக்கைப் படலம் முற்றிற்று

@12 லௌகீகப் படலம்

#1
ஓதக் கடல் சூழ் உலகத்தை உவர்த்து நின்ற
மேதக்க நீர்மை விறல் வேதியன் வேத நுண் நூல்
போதக் கதி கொண்டு ஒளி வாயில் பொருந்த நோக்கி
நோதக்க சும்மையொடு போயினன் சிந்தை நொந்தே

#2
அ வேலை இச்சாபுரம் என்ன அடுத்து இருக்கும்
வெவ் ஊரிடை நின்று லௌகீகன் விரைந்து கிட்டி
ஒவ்வாத கடும் சுமைதாங்கியை ஒப்ப நைவாய்
எ ஊர் செல எண்ணுதி நண்ப இயம்புக என்றான்

#3
மோகாதுரன் ஆகி அறத் துறை முற்றும் நீத்த
ஆகாமியன் நான் என் அரும் சுமை ஆற்றுகில்லேன்
வாகாய செழும் சுவிசேடன் மெய் வாக்கை நம்பி
ஏகாதிபன் இன் அருள் பெற்றிட ஏகுகின்றேன்

#4
முன்னான திரு_கடை வாயிலை முற்றில் ஐய
பின்னாக அறிந்திடுவாய் வரு பெற்றி யாவும்
என்னா உரை தந்து எனை ஏவினன் என்று இ எல்லாம்
சொன்னான் அது கேட்டு லௌகீகனும் சொல்லலுற்றான்

#5
பொருள் உற்று அறியாத புன்_மாக்கள் புகன்ற சொல்லால்
மருளுற்று உரிமைத் திறன் யாவும் வரைந்து வீசி
இருளுற்று இடர் துற்றிய பாழ் நெறி ஏகினாய் என்று
அருளுற்ற நம் நாட்டவர் பேச அறிந்தது உண்டே

#6
மெய்-தான் எனினும் சுவிசேடன் விளம்பும் மார்க்கத்து
எய்தார் எவரும் கடும் மோசமோடு எண்_இல் துன்பம்
வெய்தாம் பசி தாகம் விரோதம் மிகுத்ததாலே
நொய்தாக நினைந்து துணிந்தனை நோக்குகில்லாய்

#7
இருள் உண்டு இடர் உண்டு பசாசு செய் இன்னல் உண்டு
வெருள் உண்டு இகல் உண்டு பல் விக்கினம் உண்டு துட்ட
நருள் உண்டு அரியேறு விடம் கொள் பல் நாகம் உண்டு
மருள் உண்டு தியங்க அரும் பல மார்க்கம் உண்டே

#8
துன்பு ஆர் உளை தோய்ந்தனை ஆதலில் தோழ நீ அ
வன் பாடு அணு மாத்திரம் என்ன மனக்கொள் இன்னும்
முன்பாக ஒவ்வோர் துயர் மேருவின் மும்மையாக
உன்-பால் அடையும் கணிப்பு இல்லன உண்மை ஓர்தி

#9
இன்னோரன பாடுகள் நேர்ந்து உனை ஏய்ந்த போதில்
என்னோ புரிகிற்றி என் இன் உரை எண்ணியெண்ணி
அன்னோ என நின்று அழுது ஏங்குவது அன்றி நண்ப
முன் ஓர்ந்து வரும் துயர் நீங்க முயன்றிடு இன்னே

#10
அந்தோ கெடுவாய் உன் அகத்துள் முளைத்து வீங்கும்
சந்தாபவிகாரம் அலால் சமழ்க்கின்ற பாரம்
எந்தோ புகல் தீ_வினை தீ_வினை என்று நையும்
சிந்தாகுலம் நீங்குதியேல் சுமை தீரும் மாதோ

#11
கோட்டால் முயல் கீண்டது மேனி குளித்த காயப்
பாட்டால் இனைவுற்றனன் என்று பணித்தல் போலாம்
தீட்டாகிய தீ_வினைச் சும்மை சிதைக்க ஆற்ற
மாட்டாது உழல்வேன் என நீ சொலும் மாற்றம் மன்னோ

#12
மறக்கத் தகும் ஆறு எவன் நீங்க_அரும் வன் பரத்தை
உறக்கத்தும் வருத்தும் என்றால் இஃது ஒன்று கேள் நீ
துறக்கத்தை நிகர்த்தது நல் தவர் தொக்கது ஆண்டு
சிறக்கத் தகும் ஊர் தருமாபுரி சேயது அன்றால்

#13
பல் மாண்பு உறும் அப் பதி செல் நெறி பற்றி ஏகி
இன் மாண்பன் அறக் கிழவோன் என ஏத்த நின்ற
நல் மாண்பனுக்கு இற்று இவை யாவும் நவிற்றில் அன்னோன்
சொல் மாண்பினின் நின் சுமை ஒல்லை தொலைப்பன் அன்றே

#14
உன் போல் மருளுற்று உழன்றார் பலர் உய்யும் வண்ணம்
வன் பாரம் அகற்றினன் மற்று இதின் வண்மை உண்டே
இன் பால் அடிசில் கலம் வீசி இரந்து நிற்கும்
புன்பான்மை இது யாண்டு படைத்தனை புந்தி_இல்லாய்

#15
ஈண்டே கடிது ஏகி இரும் சுமை இன்னல் போக்கி
ஆண்டே குடிபுக்கு உனை ஆர்_உயிராக அன்பு
பூண்டு ஆதரம் உற்ற பொலன் கொடியோடு வாழ்தி
மாண்டாய் எனினும் வசை அன்று இசை அன்றி மாதோ

#16
பெரு மா நிதியும் உயர் கல்வியும் பெற்றி சேர் நல்
கருமாதியும் வண் புகழும் கவினிப் பொலிந்த
தருமாபுரியைப் பொரும் என்று தராதலத்தே
ஒரு மா நகரை உரைப்பார் எவர் உண்மை தேரில்

#17
நன்று என்னில் நலம் கிளர் நல் அறம் நண்ணி உய்தி
அன்று என்னில் வினைச் சுமையோடு இடர் ஆழி நீந்திச்
சென்று அ நகர் துன்ன_அரிதால் அது தேர்தி என்றான்
நின்று உன்னி விசாரி திகைத்தனன் நெஞ்சம் வேறாய்

#18
நல்லான் இவன் வாய்மொழி யாவையும் நன்மை போலாம்
ஒல்லா வினை தாங்கி இ நூல் நெறி ஓடி உய்ய
வல்லான் அ நியாய துரந்தரன்-மாடு சேரில்
எல்லாம் நலமாம் என எண்ணி மற்று ஈது இசைப்பான்

#19
வழுக்குற்ற நிலத்து ஒரு கோல் நனி வாய்த்தது என்ன
ஒழுக்குற்ற நின் வாயுரை ஈண்டு எனக்கு உற்றது ஐய
அழுக்குற்ற மனத் துயரச் சுமை ஆற்றுகிற்பான்
இழுக்குற்ற எனக்கு உரை இல் புறம் யாண்டை என்றான்

#20
விலங்காது இ வழிக் கொடு சென்று அ விலங்கல் உற்றால்
இலங்கு ஆர் எழில் மா நகர் தோன்றும் அங்கு எய்தி வாயில்
அலங்கார நீதி அறவன் தொழும்பு ஆகு சிந்தை
மலங்காது இ நலம் பெறுவாய் என வாழ்த்தி விட்டான்

#21
தற்புத்தியும் போய்ச் சுவிசேஷன் முன் சாற்றும் உண்மைச்
சொல்புத்தியும் போய் இலௌகீகன் மன் தூண்டிவிட்ட
துற்புத்தியின் நீர்மையை வேதியன் சூழ்ச்சி அற்று
நற்புத்தி என்னாம் மருண்டு ஏகினன் நன்மை ஓரான்

#22
நல் தாபதன் எம் உயிர் நாயகன் நல்ல நீதி
பற்றாது ஒரு பத்து_விதித் துணை பற்றி முத்தி
உற்று ஆர்_உயிர் பெற்று உலவா நலம் உண்ணும் என்றல்
கற்றூண் தழுவிக் கடல் நீந்தல் கடுக்கும் மாதோ

#23
விண் நாடு அடையும் நெறியோடு மிளிர்ந்து தோன்றிக்
கண் நாடு கவின் சுடரும் கருதாது போக்கி
மண் நாடு தடத்து ஒரு சார் மலைச் சாரலூடு
புண் ஆடிய நெஞ்சொடு வேதியன் போயினானே

#24
வாழிய வான் உற நிமிர்ந்த மாண்பது
பாழி அம் குவடு ஒரு பத்து மிக்கது
தாழ் இரும் பொறை நனி சமழ்த்தலால் திரை
ஆழி சூழ் புவி முதுகு ஆற்ற ஒணாதது

#25
கரு முகில் கணம் புடை கஞலும் காட்சியது
உரும் இனம் முழுக்க மிக்கு உரறும் கோட்பது
நிருமலன் திரு_கர நீதிப் பட்டயம்
பொரும் ஒளி மின் குழாம் பொலியும் பொற்பது

#26
துப்பு உறழ் முடித் தலை கவிந்த தோற்றத்தது
எப்புறத்தினும் நனி இருந்தை ஆர்_அழல்
குப்பையை இறைப்பது குலவு நீள் நெறி
தப்பிடில் அதோகதித் தலத்தில் உய்ப்பது

#27
தன் உறு வழிப் புகூஉத் தவறினோர்-தமை
முன் உறும் இருள் சிறைப் படுக்கும் மொய்ம்பது
மன் உறு வழி கடைப்பிடித்த மாந்தர்க்கும்
பன்னுறு திகில் பல விளைக்கும் பண்பது

#28
வசை_அற விளங்கிய மாட்சித்து ஆயினும்
பசை_அறப் புலர்ந்தது பரவை மா நிலத்து
இசையுற இ வழி ஏகுவோர் தலை
மிசை உறக் கவிழ்ந்திடும் குடுமி மேலது

#29
துன்ன_அரும் நெறியது துணுக்கம் உள்ளது
பன்_அரும் தரத்தது பவித்திரத்தது
மன் ஒரு சுதன் அலால் மநுக்கள் யாரையும்
தன் அடிப்படுக்குறும் தகைமை சான்றது

#30
அதிபதி கனன்று வந்து அருளி மேலை நாள்
விதி நிடேதங்களை விதிக்கப்பெற்றது
கதியையும் நரகையும் காட்டுகிற்பது
முதிய சீனாய் என மொழி பெயர்த்தது

#31
இ மலைச் சாரலை எதிர்ந்து வேதியன்
அம்ம இது என் என அகம் திகைத்தனன்
விம்மினன் உயிர்த்தனன் வெருண்டு நின்றனன்
மும்மடங்கு ஆயது முதுகின் சும்மையும்

#32
ஓம்புக என்று உணர்த்திய ஒளியை நீத்து இவண்
கூம்பு இறு கலம் எனக் குலைந்து உயங்கினான்
தேம்பி நின்று அழுதனன் தெருமந்தான் மலைப்
பாம்பின் வாய்த் தேரையில் பரியும் பான்மையான்

#33
மலை மிசைக் குவடு இடிந்து உருண்டு வல்லையே
தலை மிசை விழுந்திடும் தப்பி உய் வழி
இலை பிறிது இனி என இனைவுற்று ஏங்கினான்
அலை மிசை தரு துரும்பு அனைய நீர்மையான்

#34
மாற்று அடி பெயர்க்கவும் மனம் துடித்தனன்
வீற்றுவீற்று உகு கனல் வெதுப்ப மாழ்கினன்
கூற்று இதுவாம் எனக் குறுகினான் உயிர்
ஆற்றல் ஓய்ந்து அறிவு இழந்து அலமந்தான் அரோ

#35
ஆயிடை முன் இவற்கு அகம் தெருட்டிய
நேயம் ஆர்தரு சுவிசேடன் நேர்ந்து நீ
தூய மெய் ஒளி திகழ் சுருதி நூல் நெறி
மேயிடாது இகந்தது என் விளம்புவாய் என்றான்

#36
கண்டனன் கருணையின் உருவைக் கண்களால்
உண்டனன் செவி வழி உரைச் சஞ்சீவியைப்
பண்டை நல் உணர்வு வந்து அணுகப் பாங்குறும்
கொண்டலை இரு கரம் குவித்து இறைஞ்சியே

#37
நொதியிடை விழுந்து உயங்கியதும் நுண்ணிய
மதி உடைச் சஹாயன் வந்து உதவும் மாட்சியும்
எதிரி லௌகீகன் வந்து இசைத்த மாற்றமும்
சதி வழி புகுந்ததும் சமையச் சாற்றி மேல்

#38
புரவலன் அருள் மொழி புகட்ட வல்ல ஓர்
குரவ மெய்யறிவினைக் கொளுத்தி ஏகு என
வர விடுத்தாய் கதி மார்க்கத்தே எனை
உரவு நீள் நிலத்து எவர் உனை ஒப்பு ஆவரே

#39
நின் உரை கடைப்பிடியாது நீசனேன்
இன்னலுக்கு இடைந்து இவண் இறுத்த என் பிழை-
தன்னையும் சமித்து எனைத் தாங்கு உன் கையடை
இன் அருள் சுரத்தி என்று இனிதின் ஏத்தினான்

#40
வேதியன் இன்னணம் விளம்ப வித்தகன்
பாதகம் பாதகம் பாரமார்த்திக
வேத நல் நூல் நெறி விழைந்திடாது ஒரு
காதகன் உரை வழிக் கவிழ்தல் காண்டியால்

#41
எவ்வம்_இல் பரமராஜ்ஜியத்தை எய்தும் முன்
தெவ் அளவு_இலாது உனைச் சேர்தல் திண்ணமால்
இவ்வளவினின் மலைந்து இடைந்து பின்னிடில்
அவ்வளவையும் எதிர்த்து அடர்ப்பையே-கொலாம்

#42
பொய் உரையாத நம் புரவலன் திரு
மெய் உரை மனக்கொளீஇ விசுவசித்திடாது
ஐயுறும் அனர்த்தமே ஆதி மூலம் மன்
செய்யுறு தீ_வினைக்கு என்பர் சீரியோர்

#43
கோது_இலா மெய் விசுவாசம் கொண்டு நல்
நீதிமான் ஆனவன் பிழைப்பன் நீத்திடும்
பேதை-பால் யான் இரேன் பிரியமாய் எனும்
ஆதி_நாயகன் உரை அறிந்து கோடியால்

#44
சருவ லோகாதிபன் சாற்றும் மாற்றமும்
திரு_அருள் அடைந்து உயும் நெறியும் தீர்ந்து நீ
பெரு வழி பிடித்தனை பேதுற்று ஆதலில்
ஒருவு_அரும் கேடு உனக்கு உறுவது உண்மையால்

#45
இன்னவாறு உரைத்த சொல் ஏது_இல் வேதியன்
தன் இரு செவித்தொளை புகுந்து தைத்திட
மின் உரும் ஏற்றினை வெருவிப் புற்று உறை
பன்னகம் பதைத்து எனப் பதைத்து வீழ்ந்தனன்

#46
ஜென்ம சஞ்சித விடம் தீண்டி மாண்டது இங்கு
என் மதி இரக்ஷணைக்கு இனி என் செய்குவேன்
முன் மய அளற்றிடை முழுகியும் இனும்
நல் மதி படைத்திலேன் நாசம் எய்தவோ

#47
மோகம் ஆர் பிரபஞ்ச மயலின் மூழ்கி லௌ
கீக மார்க்கத்திலே கெடுவலோ எனாச்
சோகமுற்று உளம் கசந்து அழுது துக்க வெம்
சாகரத்து அழுந்தினான் தரிப்பு ஒன்று இன்றியே

#48
அ வயின் குரவனும் அருளி நிற்க ஒரு
கௌவை இன்று ஆகுக கருணை எம்பிரான்
எ வகைப் பாவமும் சமிப்பர் ஏழை நீ
செவ் விசுவாசத்தில் திடம்கொள்வாய் என்றான்

#49
உற்ற இ மொழி வழி உயிர் வந்துற்று எனச்
சற்று உளம் தெளிந்து நம் இறைவன் தண் அருள்
பெற்றியை நினைந்து யான் பிழைக்கும் ஆறு இனி
இற்று என நவிற்றுக என்று இறைஞ்சி நின்றனன்

#50
இங்கு இவன் பரிவுறு நிலையும் இன்னலும்
சங்கை இன்றாக நன்கு உணர்ந்து தாபத
புங்கவன் வேதிய பொருந்தக் கேள் எனாப்
பங்கம்_இல் மதி சில பகருவான் அரோ

#51
இ நெறிப் படுத்து உனை ஏய்த்த லௌகிகன்-
தன்னை யான் முன்னரே அறிவன் சற்பனை
மன்னும் இச்சாபுரவாசி நல் நெறி
துன்னியோர்க்கு அவமதி புகலும் சூழ்ச்சியான்

#52
சாலமே மிகு தருமாபுரிக்கு வந்து
ஆலயம் புகுந்து மெய் அடியராம் எனக்
காலையும் மாலையும் பரவு கைதவன்
ஞாலம் மீது இசை அலால் நாட்டம் ஒன்று இலான்

#53
மீயுற வேதியர் வேடம் தோன்றிடும்
வாயுற மறைத் திரு_வசனம் வந்திடும்
வீ_உறா அறு வகை விகாரம் மும்மலம்
தீ உறு மனத்திடைச் செறிந்து நிற்குமால்

#54
இத் திறத்தவன் மதிக்கு இசைந்து நண்ப நீ
முத்தி மார்க்கத்தினை ஒருவி முற்றும் நம்
சத்திய வாசகர் உரையைத் தள்ளியது
எத் திறப் பாதகம் இதயத்து ஓர்தியால்

#55
எந்தை நாமத்தினால் என் நிமித்தமாய்த்
தந்தையைத் தாயைத் தம் மனையைத் தாம் பெறு
மைந்தரை உடன்பிறந்தவரை மற்று இனிச்
சொந்தமாம் ஜீவனைத் துறந்திடாவிடில்

#56
தன் ஒரு சிலுவையைத் தாங்கித் தாங்கும் என்
பின் ஒருவா நெறி பிடித்திடாவிடில்
என் ஒரு சீடன் என்று இயைபுறான் எனும்
மன் ஒரு மகன் உரை மனத்துக் கோடியால்

#57
வளம் மலி எகிப்து மா நிதிய வைப்பினைக்
களம் மலி குப்பை போல் கழிய வீசி நம்
இளவரசு உயர்த்திய சிலுவை ஏய்ந்த போழ்து
உளம் மலி காதலோடு உவக்க வேண்டுமால்

#58
இருண்டவன் மனத்து லௌகீகனின் சொலால்
மருண்டு சீயோன்மலை மார்க்கம்-நின்று இழிந்து
உருண்டனை பாதலத்து உய்க்கும் இ நெறி
தெருண்டு இதை விடுத்தியேல் பிழைத்தி சீரியோய்

#59
நல் அறக் கிழவன் ஓர் அடிமை நல்கிய
கல் இயல் நெஞ்சினன் காதல் மக்களோடு
அல்லல் கூர் இரும் சிறையகத்து உளான் அவற்கு
ஒல்லுமோ பவச் சுமை உனக்கு ஒழிக்கவே

#60
கற்பனாதீதராம் ககன வேந்தன் முன்
சற்பிரமாணத்தைத் தழுவி நின்று எவன்
பொற்புறு நீதிமான் ஆன புங்கவன்
எல் படும் உலகிடை யாண்டும் இல்லையால்

#61
முன்னரே விதிவிலக்கு இகந்து முன்_அரும்
துர்_நெறி ஒழுகியோர் தூயர் ஆவரோ
நல் நெறிப் படினும் பின் நன்கு மூழ்கினும்
பொன் நிறம் வாயசம் புணருமே-கொலாம்

#62
கள்ள ஞானியர் இவர் கழறும் வார்த்தையில்
எள்ளளவும் பயன் இலை மற்று என் மொழி
உள்ளவாறு என்பதற்கு உயர்ந்த வானமும்
பள்ள நீர் உலகமும் பகரும் சான்று அரோ

#63
சான்று என மொழிந்திடு தருணம் தம்பிரான்
தோன்றி இங்கு உரைத்த கற்பனைகள் சோர்வு_அற
ஊன்றி நின்று ஒழுகி ஈண்டு உய்வல் யான் என
ஏன்றவன் சாபமே எய்தி மாள்குவன்

#64
என்று இடியேறு என இசைத்த வாசகம்
துன்றிய கொழும் கனல் சுவாலை மீக் கொள் வெம்
குன்றின்-நின்று எழுந்து உளம் குலையும் வேதியன்-
தன் துணைச் செவி வழி புகுந்து தாக்கிற்றால்

#65
தாக்கலும் சாவு அலால் தனக்கு வேறு இனிப்
போக்கு இலை புறத்து ஒரு புகலும் இன்று எனா
வாக்கொடும் மனம் தடுமாறி வாய் வெரீஇ
மீக் கிளர் உயிர்ப்பொடும் விளம்புவான் அரோ

#66
வஞ்ச லௌகிக வாய்மொழியாம் கொடு
நஞ்சம் நுங்கி மயங்கி என் நன் மதி
துஞ்சி ஆர்_உயிர் சோர்குவனால் இனி
உய்ஞ்சு இருக்க ஒரு மருந்து உண்டு-கொல்

#67
ஈசன் கோபம் எரிக்கும் என்றே ஏழையேன்
நாச தேசம் துறந்ததும் நன் மனைப்
பாசம் வீசிய பான்மையும் இத்தனை
மோசம் எய்தி முழங்கு அனல் மூழ்கவோ

#68
மேதை_அற்ற விவேகம் மிகுத்த ஓர்
பேதை என்னின் பிறர் இலை பெட்புறும்
ஊதியத்தை ஒரீஇ உலவாப் பெரும்
சேதம் எற்கு எனக் கொண்ட திறத்தினே

#69
பாதை விட்டு நம் பார்த்திவன் ஆணையைப்
பேதை நீ பிழைத்தாய் பெரும் குற்றம் என்று
ஓதி என்னை உவர்க்கும் உள_கரி
வாதை கொண்டு உயிர் வாழ்வது எவ்வாறு இனி

#70
தம்பிரான் அருள் சார்வினைச் சார்ந்து உய்வான்
நம்பி வந்து கடைத்தலை நண்ணும் முன்
வம்பு துற்றிய வார்த்தைக்கு இணங்கியே
கொம்பு இழந்த குரங்கு எனல் ஆயினேன்

#71
மச்சை என்பு வழும்பு கொழும் தசைத்
துச்சில் நச்சி உவக்கும் துர்_இச்சையைச்
சிச்சி என்று உவர்க்காது தியங்கும் என்
கொச்சைத் துன்_மதியே கொடும் கூற்று அன்றோ

#72
ஈச நேசம் ஓர் எள்துணையும் இலேன்
நாச தேச சுகத்தினை நாடுவேன்
நீசனேன் என் நிகழ்த்துவது ஈண்டு எனாக்
கூசிக்கூசி இனையன கூறுவான்

#73
ஐயனே என் அருள் குருவே புகல்
மெய் இகந்து மருண்டு விழுந்து பின்
பொய்யின் மூழ்கிப் புலைக் குடில் ஓம்புவேற்கு
உய்யும் ஆறு இனிச் செய்வது ஒன்று உண்டு-கொல்

#74
பரவை என்னப் பரந்து பருப்பத
நிரைகள் என்ன நிமிர்ந்தது நீள் கடற்
கரை மணற்கும் அதிகம் கணக்கு யான்
தரையில் ஈட்டிய பாவ சமூஹமே

#75
ஆவி நாயகன் ஆணையை மீறிய
பாவியேற்கு ஒரு பாங்கரும் போக்கு இலை
ஜீவ வாயிலைச் சென்று நின்று ஓலிடில்
போ என்று எள்ளிப் புறம் துரப்பார்-கொலோ

#76
வள்ளலார் பிழை மன்னிக்கவே திரு_
உள்ளம் என்ன உரைத்தனை ஆயினும்
விள்_அரும் பெரும் பாவம் விளைத்த இக்
கள்ளரில் கள்ளனுக்கு அருள் காட்டுமோ

#77
உன்ன_அரும் சுமையோடும் ஓர் ஓசனை
முன்னர் நாறும் முடைத் தொழுநோயொடும்
பன்_அரும் பரிசுத்த நம் பார்த்திவன்
சந்நிதிக்கு முன் நிற்கத் தகுவதோ

#78
உள் உடைந்து உருகிக் கவன்று ஒண் கணீர்
துள்ளி கொள்ளத் துடித்து இவை வேதியன்
விள்ளலும் சுவிசேடன் விருப்பொடும்
கள்ளம் இன்று எனக் கட்டுரை கூறுவான்

#79
தம்பி கேட்டி நீ சத்திய வாசகர்
இம்பர் ஈட்டிய பாதை இகந்ததும்
நம்பி மற்றொரு மார்க்கம் நயந்ததும்
கும்பி பாகம் குடிகொளும் பாதகம்

#80
பாபம் முற்றிய பாதகர் மெய் மனத்
தாபம் முற்றித் தவிப்புறுவார் எனில்
சாப வெம் சிறையில் தளைவார்_அலர்
கோபமுள்ளவர் அல்லர் குண_கடல்

#81
நீதி ஆதிபர் நிண்ணயர் தம் மொழி
பேதியார் நம் பிரான் எனப் பேசியும்
மா தயாபர வள்ளல் எனா மறை
ஓது சீர்த்தியும் உண்மை என்று ஓர்தியால்

#82
எண்ண_அரும் குணத்து எம்பெருமான் சுதன்
புண்ணியம் திகழ் யாக்கை பொறுத்து இவண்
நண்ணி நல் அறம் நாட்டிய ஞான்று சொல்
வண்ண வாசகம் மற்று அதும் கேட்டியால்

#83
வருந்திப் பாரம் சுமக்கும் மக்காள் மனம்
திருந்தி என்-வயின் சேரு-மின் சேரு-மின்
பொருந்தும் நும் சுமை போக்கி விடாய் அகன்று
இருந்து வாழ இனிது அருள் ஈவன் யான்

#84
என்ற இத் திரு_வாக்கு உலகம் எலாம்
பொன்றும் ஆயினும் வானிடைப் போதரீஇ
நின்ற ஜோதி நிலை அற்று வீழினும்
குன்றிடாது உன் உளத்து இது கொள்க எனா

#85
மற்றும் இன்ன நல் வாக்கு வகுத்து உரைத்து
உற்று நோக்கி ஒளிர் கடை வாயிலை
முற்றி நின்று முறையிடுவாய் எனில்
குற்றம் யாவும் பொறுப்பர் நம் கொற்றவன்

#86
போதி என்று புகன்று நல் ஆசிகள்
ஓதினான் சுவிசேடனுக்கு உள் உவந்து
ஏது_இல் வேதியனும் இது நன்று எனக்
காதலோடு குவித்தனன் கை மலர்
**லௌகீகப் படலம் முற்றிற்று

@13 கடைதிறப்புப் படலம்

#1
நள்ளுண்டாலும் நலம் அஃது அன்று எனில்
எள்ளுண்டாலும் இழி புலையன் எனத்
தள்ளுண்டாலும் தயாபதி சித்தம் என்று
உள் உண்டாய ஒரு ஊக்கமோடு ஏகினான்

#2
குன்று காலும் வெம் சாபக் கொழும் கனல்
முன்றில் நின்று முடுகிச் சுரம் செலீஇ
வன் தொடர்ப் படு மான் விடுபட்டு எனச்
சென்று கூடினன் முன் விடு செம் நெறி

#3
ஊன் மனத்து இருள் ஓடத் துரந்திடும்
ஆன்ம ஞானத்து அவிர் ஒளி நாடி அக்
கானகத்து எவையும் கருதாது போய்
வான் உறும் கடை வாயிலை நண்ணினான்

#4
இடுக்க வாயில் எதிர்ந்து அதன் உள் புக
அடுக்குமோ எனக்கு ஆசையை வேரறப்
படுக்குநர்க்கும் பருமித்த தூலத்தை
ஒடுக்குநர்க்கும் அலால் என உள்ளினான்

#5
உருக்கும் ஆர்_அருள் ஓங்கிய வேந்தன் ஓர்
திரு_குமாரனைச் சிந்தை உளே தரித்து
இருக்கும் ஆரணரே இகல் யாவையும்
ஒருக்கும் ஆற்றலர் ஒல்லும் அவர்க்கு அரோ

#6
திருடர் வஞ்சகர் காமிகள் செல்வம் ஆர்
குருடர் மற்றோர் உரிமையைக் கொள்ளைகொள்
முருடர் கோபிகள் மூர்க்கர் குதர்க்கராம்
புருடர்க்கு ஈண்டு புகல் அரிதாகுமால்

#7
என்று சிந்தித்து அருகு உற ஏழைகாள்
நின்று தட்டு-மின் நீங்கிடும் நீள் கதவு
என்று பித்தி எழில் உறத் தீட்டிய
மன்றல் வாசகம் கண்டு மனக் கொளா

#8
திட்டி வைத்தனர் தேவர் பிரான் என
உள் தெளிந்து உணர்வு ஒன்றி ஒடுங்கியே
கிட்டி ஆங்கு கிளர் பொன் கபாடத்தைத்
தட்டினான் நின்று இனையன சாற்றியே

#9
மாய உலக மயக்கு அறுத்து வரையாக் கிருபை தந்து அளித்த
தூய பெருமான் திரு_அடிக்குத் தொழும்பன் கபாடம் திற-மினோ

#10
ஆசாபாசக் கொடும் சுழலில் அகப்பட்டு உலைந்தேன் அருள் அணுக
நாச தேசம் துறந்து வந்தேன் நாயேன் கபாடம் திற-மினோ

#11
உள்ளம் திரும்பிக் குணப்படு-மின் உய்வீர் என்ன உவந்து உரைத்த
வள்ளல் திரு_வாக்கு அது கேட்டு வந்தேன் கபாடம் திற-மினோ

#12
கல்லேன் சுருதி நலம் புரியக் கருதேன் பாவம் கசந்திடேன்
பொல்லேன் எனினும் வந்து அடைந்தேன் போகேன் கபாடம் திற-மினோ

#13
ஆறாக் கொடிய பசி தாகம் அடங்கத் தணிய அருள் அளிக்கும்
மாறாக் கருணை வரதன்-பால் வந்தேன் கபாடம் திற-மினோ

#14
பாவம் மீறி வளர் காடு துற்றி அலைபட்டு அழுங்கி அயர் பாவி யான்
ஜீவ மா நதியின் நீர் அருந்த அதி தேட்டம் உண்டு கடை திற-மினோ

#15
நீதி ஆதிபர் சினம் தஹிக்கும் நெறி நின்று தப்பி இ நெறிப்படீஇ
மா தயாபரன் அடித் தொழும்பு செய வந்த பாவி கடை திற-மினோ

#16
சேரும் மா கொடிய தீ_வினைத் திரள் சுமந்து இளைத்து அளி கொள் ஜீவ நல்
தாரு நீழலில் ஒதுங்கி உய்ய வரு தமியன் யான் கதவு திற-மினோ

#17
கொடியரில் கொடிய புலையரில் புலையன் ஆயினும் குமர நாயகன்
அடியருக்கு அடியனாக வந்து இவண் அடைந்தனன் கதவு திற-மினோ

#18
நிருபன் நீதியின் நிலத்து இழிந்து பலி நேர்ந்து இரக்ஷை அருள் நேமியாம்
சருவ லோக சரணியனை நம்பி வரு தமியன் யான் கதவு திற-மினோ

#19
இன்ன விதமாக உரையாடி எழில் ஆரும்
வன்ன மணி வாயில் செறி மாண் கதவு தட்டி
உன்னி நனி ஓலமிட உள் உருகி உள்ளா
மன்னு கடை காவலன் மருங்குற அணைந்தே

#20
எஞ்சல்_இல் உணர்ச்சி பரிதாபம் இதயத்தில்
விஞ்ச உள மற்று அது இவன் வாய்மொழி விளக்கும்
வஞ்சம்_இலனாம் என மனக் கொள மதித்தே
அஞ்சல் என ஒல்லையின் அருள் கடை திறந்தான்

#21
வாயில் திறவுண்டிட மலர்ந்த வனசம் போல்
நேயன் வதனம் திகழ நேயமொடு நோக்கி
ஆய் என எதிர்ந்தனை என் ஐய இவண் வெய்ய
தீயன் வர ஒல்வது-கொல் யாது உனது சித்தம்

#22
என்று வினவக் கடுகி ஈண்டு வருக என்ன
முன்றிலின் அகத்து உற இழுத்து முறையாகப்
பொன் திணி கடைத் தலை அடைத்து நனி பூட்டிப்
பின்றை இது கேள் என வியப்பினொடு பேசும்

#23
நெருக்குறு இ வாயில் புக நேடி வருவோரை
வெருக்கொள வெருட்டி விசிகம் பல விடுத்தே
முருக்கும் அலகைக்கு இறைவன் மொய்ம்பினொடு தங்கும்
துருக்கம் இதனுக்கு அருகு தோன்றுவது காண்டி

#24
இங்கு அபயமிட்ட குரல் யாது என எதிர்ந்தே
அங்கு அவன் வெகுண்டு உனை அடர்த்து உயிர் அழித்து
நுங்குவன் எனக் கருதி நொய்தினில் இழுத்தேன்
சங்கை_அற உன் நிலை-தனைப் புகறி என்றான்

#25
நேசன் உரை கேட்டு உளம் நடுங்கி இவண் நேர்ந்த
மோசம் அகலத் துணைபுரிந்த செயல் முன்னிப்
பேச_அரிய பேர்_அருள் பிறங்கு பிணி ஆய
ஈசனை வழுத்தி இது இயம்புவன் விசாரி

#26
வெய்ய அலகைக்கு எனை விலக்கி உயிர் வீயாது
உய்ய இவண் உய்த்த உதவிக்கு உதவி உண்டோ
ஐய உதவாது ஒருவர் ஆற்றும் உதவிக்கு
வையகமும் வானகமும் ஆற்றல் அரிதாமால்

#27
ஆதலின் அரும் குரவ நிற்கு உதவு கைம்மாறு
ஏதும் இலை நின் கிரியை யாவும் அறி தக்க
மா தகைய வேந்தன் அருள் மல்கிடும் உனக்கு என்று
ஓதி அளியேன் நிலை உரைப்பல் இனி என்னா

#28
விளம்பரம் அடுத்ததும் வெருண்டு மனை மக்கட்கு
உளம்பட உரைத்ததும் ஒரீஇ மதி மயங்கித்
தளம்பியதும் ஆங்கு சுவிசேஷன் உரை தந்து
வளம் பெற விடுத்ததும் இ வாயில் உறுக என்று

#29
பெரும் சுமையொடே வழி பிடித்ததும் மென்னெஞ்சன்
விரும்பி உடன் வந்து நொதி வீழ்ந்து உளம் வெரீஇப் பின்
திரும்பியதும் அன்று உதவிசெய்து கரை ஏற்றி
உரம் பயில் சஹாயன் விவரித்ததும் உணர்ந்தே

#30
உவப்பொடு வரும் பொழுது லோக விவகாரி
அவப்பயன் எனக் குறுகி ஆரணியம் உய்க்க
நிவப்புறு கிரித் தலை நெருங்கியதும் நேர்ந்த
தவப் பயன் எனச் சுருதி தந்த முனி வந்தே

#31
மீண்டு வழி பற்று என வெகுண்டு மதி சொல்லித்
தூண்டி இனி மற்று அவை துலங்க ஒளி துன்னும்
காண்தகு கடைத் தலை கழித்து அறிதி என்ன
ஈண்டியதும் இவ் என எடுத்து இனிது இயம்பி

#32
பின்னிடும் மென்னெஞ்சன் நிலை பேசுவது எவன்-கொல்
மன்னு சுவிசேஷகன் மறுத்து எதிர் வரானேல்
என் நிலை விரைந்து கெடும் எம் குரவ எல்லாம்
உன்னத அருள் துணையில் உற்ற நலம் என்றான்

#33
ஆத்துமவிசாரி வரலாறு இனிது கேட்டே
மாத் தகைய வேந்தனை வழுத்தி உள் மகிழ்ச்சி
பூத்து இனைய சொல் மதி புகட்டிடுவது ஆனான்
காத்து வழிகாட்டு கடை காவலன் அவற்கே

#34
மீக் குலவு முத்திநகரத்து இறைவன் மேனாள்
கோ_குமரனைப் பலிகொடுத்து நமை வேண்டி
வாக்கு மனம் எட்ட_அரிய மா பர சுகத்தை
ஆக்கினர் அதன் அருமை யார் புகல வல்லார்

#35
இத்தகைய சிற்சுகம் இயைந்திட விழைந்தோர்
பித்து உலக நச்சுறு பிராந்தியை விடுத்தே
செத்து ஒழியுமாறு இழி உடற்கு வரு சேதம்
எத்துணைய ஆயினும் ஓர் எள்துணையும் எண்ணார்

#36
உகப்புறு பெரும் கிளையொடே உரிமை உள்ள
இகப் பயன் எவற்றையும் இகந்து இறைவனுக்கே
அகப் பலி கொடுத்தனன் அது அன்றி ஒரு பேறாம்
மகப் பலி கொடுக்கவும் மறுத்திலன் ஓர் வள்ளல்

#37
இ நிலம் வியந்திடும் எகிப்து இறைமை பூண்ட
மன் உரிமை யாவையும் மனக் கொள வரைந்து ஆண்டு
இன்னல் உறு தன் கிளையோடு எண்_இல் பல துன்பும்
பன்_அரிய நிந்தையும் உழந்தனன் ஓர் பத்தன்

#38
துங்க உலகாதியர் துணைப் பதம் அலால் என்
அங்கம் அரியப் பெறினும் ஆவி உகுமேனும்
எம் கனவிலும் பிற இறைஞ்சுகிலன் என்னாச்
சிங்கம் உறு வெம் குகை முடங்கினன் ஓர் தீர்க்கன்

#39
இந்தனம் அடுக்கிய இரும் கொடிய சூளைக்
கொந்து அழல் மடுத்த இறை கோபம் என மூண்டு
வெந்து எரிய அத் தழலில் வீசி எறி போதும்
சிந்தனை கலங்கிலர் திடம் கொளும் முச்சித்தர்

#40
அல்லியன் மனத்தினர் அமார்க்க வெறி கொண்டு
வல்லியம் எனக் குழுமி வன் கல் மழை சிந்திக்
கொல்லிய மலைந்தும் ஒரு கோட்டம்_இலன் ஆகி
நல் இயல் மொழிந்து உயிர் விடுத்தனன் ஓர் நம்பன்

#41
நாடு நகர் காடு கடல் ஆறு பல நண்ணி
நீடு பல மோசம் அடி நிந்தை எறி காவல்
கூடம் எனும் மா கொடிய கூறு_அரிய சாவின்
பாடு பல பட்டனன் ஓர் பத்தி வயிராக்யன்

#42
அம்புவி உவந்து அலை அகந்தையர் குரைத்த
வம்பு மொழியைப் புரி உபாதியை மதிக்காது
உம்பர் மகிமைத் திறம் உவந்து உயிர் விடுத்தார்
செம்பொருள் தெரித்த குரு தேசிகர் ஜெகத்தில்

#43
கல்லெறி கடும் சிறை கசப்பு மொழி கட்கம்
நல்குரவு வாரடியில் நைந்து உயிர் நடுங்கப்
புல்_அரிய கான் புதர் பொருப்பு முழை புல்லி
எல்லை_இல் கடும் துயரம் எய்தினர் அநேகர்

#44
இன்ன விதமாக விசுவாசிகள் இகத்தில்
பன்_அரிய பாடு பல பட்டனர் பரத்தே
மன்னும் மகிமைக்கு என வதைந்து உயிர் மடிந்தார்
இ நிலம் மிசைக் குருதியே கரி இயம்பும்

#45
மற்று இதனை அற்பமும் மதித்திலன் மென்னெஞ்சன்
முற்று உலக சால அளறூடு முழுகுற்றான்
துற்றும் ஓர் நறும் கனி எனச் சுவை விழைந்தே
பற்றி எரியும் சுடர் விழும் பல பதங்கம்

#46
மிச்சில் மிசை லௌகிக விகாரம் உறு குக்கல்
சிச்சி என ஓடும் அது தேர்கிலை திகைத்திட்டு
அச்சுறு குரைப்பை நனி அஞ்சினை அமார்க்கப்
பிச்சர் என ஏகினை பிறங்கல் வழி பேணி

#47
அ நெறி பிடித்து உயிர் அவிந்தவர் அநேகர்
செம் நெறி கதித்த சிமயம் சிதறு தீயால்
தொல் நெறி விளக்கு சுவிசேஷ நெறி தூய
இ நெறி விடுத்தவர் ஈடேறும் வகை இன்றால்

#48
வெவ்விய கரா வயிறு புக்கி உயிர் மீண்ட
செவ்வியினை ஒத்து இவண் இறுத்தனை சிறாரைக்
கௌவி அலை பூசை முறை காண்டி அது போலும்
தைவிக மகா கிருபை தாங்குவது நம்மை

#49
ஆதலின் அரும் துணைவ ஆற்று_அரிய சும்மை
சோதனை அலக்கண் இடர் துற்றி அடு போதும்
ஆதி முதல்வன் திரு_அருள் துணை அவாவி
மேதகைய ஜீவ நெறி விட்டு விலகேலே

#50
என்று இனையவாறு சொலி எம்பி இது மார்க்கம்
வென்றி அரசன் பணி விதிப்படி பிதாக்கள்
நன்றி அறி தீர்க்கர் உயிர் நல்கும் நம் இளங்கோ
பின்றை அடியார் இவர் புதுக்கினர் பிறங்க

#51
நேர் வழி நெருக்க வழி நின்மல நகர்க்குச்
சேர் வழி திகைப்பு_இல் வழி ஜீவ வழி சீர் சால்
ஓர் வழி இடு அன்றி இலை உண்மை வழி கும்பிப்
பேர் வழி அது உற்று அலை பிராந்தரும் அநேகர்

#52
இக் குறி மனக் கொடு இனி ஏகுக என உள்ளம்
நெக்குருகு நேயனொடு வேதியன் நிகழ்த்தும்
தக்க நெறி சார்வல் ஐய தாங்க அரியதாம் இப்
பொக்கணம் விழுந்திலது புண்ணியம் உனக்கே

#53
வேறு நினைவு இல்லை வெரிந் மீது அறவு மேன்மேல்
ஏறு சுமையால் மிக இளைத்தனன் எனக்கு ஓர்
ஆறுதலும் இல்லை இனி அஞ்சல் என நின் போல்
தேறுதல் செய்வாரும் எதிர்வார்-கொல் தெரியேனால்

#54
யாது இனி இயற்றுவல் இரக்ஷை பெற என்னா
ஓதலும் மலங்கலை இரும் குருசு உயர்த்த
மா தலம் அடுக்கின் உன வன் சுமடு வல்லே
போதரும் அலாது ஒருவர் போக்க முடியாதால்

#55
இப் பகல் கழிந்திடும் முன் இ நெறியின் ஓர் சார்
மெய்ப்பொருள் விளக்குபவன் வீடு எதிர்வை அங்கு உற்று
அப் பனுவலாளனோடு அமர்ந்து வினவுங்கால்
எப் பரிசு நன்கு உற இசைப்பன் இயல்பு என்னா

#56
சோகம் அற நல் மொழி தொகுத்து இனைய கூறி
ஏகுக என ஆசி விடை ஈந்தனன் விசாரி
ஓகையொடும் அஞ்சலி ஒழுக்க முறை நல்கி
மாக நகர் ஆதிபனை வாழ்த்தி வழி போனான்
**கடைதிறப்புப் படலம் முற்றிற்று

@14 வியாக்கியானி அரமனைப் படலம்

#1
இந்தவாறாய் அவன் ஏகும் அ அமைதியில்
உந்தும் நல் உணர்வு முன் ஊன்றி நின்று ஈர்க்கவும்
பந்தம் ஆர் தீ_வினைப் பகுதி பின் ஈர்க்கவும்
சிந்தை நொந்து இனையன செப்புவான் ஆயினான்

#2
ஜென்மம் ஆர் கருவிலே வினை விடம் தீண்டலால்
நல் மனோதத்துவ நாசம் ஆயின எலாம்
தின்மையே செய வரும் திறன் உளேன் சிறிய ஓர்
நன்மையேனும் செயத் திறன்_இலேன் நவையினேன்

#3
நான் பிறந்ததும் உயிர்ச் சுமையினால் நலியவோ
கான் பிறங்கலின் உறும் கதழ் விடப் பாந்தளில்
ஊன் பிறங்கு உடல் வளர்த்து உழலுவேன் உணர்வு_இலேன்
ஏன் பிறந்தேன்-கொலாம் ஏழை இ உலகினே

#4
அன்னையாய் அப்பனாய் அன்று-தொட்டு இன்று-மட்டு
என்னை அன்பொடு புரந்து என்றும் நன்றே தரும்
தன்னையே நிகர்வது ஓர் தம்பிரான் தயை மறந்து
என்னையே முப்பகைக்கு ஈடு அழிந்து இனைகுவேன்

#5
கனி தரும்தரும் எனக் கவலும் நம் கருணை மன்
இனிது அரும்பாத இத் தரு எறிந்திடுக என
முனிதரும் பொழுதினே முடுகுமேல் முடுகு வெம்
துனி தரும் கனல் சுடத் துடிதுடித்து அயர்வலோ

#6
ஓர் அணுத்துணையும் நல் உணர்வு_இலேன் உலகு செய்
கோரணிக்கு உளம் உடைந்து இடையும் ஓர் கோழையான்
ஆரணத் துறை படிந்து அயர்வு உயிர்த்திலன் இனி
மாரணக் கடல் குளித்து அயர்வனோ மதி_இலேன்

#7
அண்டர் நாயகனையே அவமதித்து அலகையின்
தொண்டனாய்ச் செய்த தீ_வினை எலாம் துன்னி முன்
கொண்டலின் திரள் எனக் குழுமி நின்று உரறுமால்
கண்டிலேன் ஓடி யான் புகுத ஓர் கரவிடம்

#8
உரவு நீர் உததி சூழ் உலகு எலாம் உய்ய நம்
புரவலன் புதல்வனைப் புனித நீதியில் இவண்
வரவிடுத்தமை அறிந்தினும் எனோ மடமையான்
பரவி நின்று அருள் பெறாப் பாவம் என் பாவமே

#9
எப் பெரும் பதகரும் இதயம் நொந்து ஏங்கி வந்து
அப்பனே பிழை பொறுத்து அருளும் என்று அடையில் ஓர்
ஒப்பு_அரும் புதல்வனுக்கு உருகி மன்னிப்பம் என்று
இப் பெரும் சுருதி தந்து இறை மறந்திடுவரோ

#10
ஆற்று_அரும் சுமையினோடு அல்லல் பல் விக்கினம்
கூற்று எனக் குமுறி நின்று உயிர் தெறக் குறுகினும்
ஏற்று முன் இடுவதே கருமம் இங்கு ஏழையேற்கு
ஊற்றமாம் கடவுள் வேந்து ஒரு பெரும் கருணையே

#11
என்ன இன்னன பல இன்னல்கொண்டு இடையிடைத்
துன்னும் நல் உணர்வொடே சுமை சுமந்து அலசியும்
முன்னவன் திரு_அருள் துணைமையால் முன் செலீஇச்
சொன்ன அப் பனவன் வீடு அணுகினான் துருசு_இலான்

#12
மற்று இதே போலுமால் வாயில் காவலன் விதப்
புற்ற மெய்க் குரவன் வாழ் உறையுள் என்று உவகை பூத்து
அற்றம் என் என வினாய் அகம் நுழைந்து அவண் உறு
நல் தவக் கிழவனைக் குறுகினான் நவிலுவான்

#13
உள்ள ஓர் கடவுள் வேந்து உலக யாத்திரிகன் நான்
வள்ளல் நின் மொழியின் நான்மறை புலப்படும் வழி
தெள்ளிதின் உணர்வை அங்கு ஏகு எனச் செப்பினான்
கள்ளம்_இல் வாயில் காவலன் எனக் கழறினான்

#14
கேட்டலும் மறை வியாக்கியானி நீ கேவல
நாட்டு யாத்திரிகனோ நன்று நின் வரவு எனா
வீட்டுள் அங்கங்கு உறும் விநய பாவனை எலாம்
காட்டுவான் வேதியன் கை பிடித்து ஏகினான்

#15
வண்ண அக் கடி மனை மருங்கு அரங்கு அணைந்து
எண்_அரும் குணத்த பாவனை இயைந்த ஓர்
புண்ணிய உருக் கவின் பொலியத் தீட்டிய
கண்ணடிப் படிவத்தை அவற்குக் காட்டியே

#16
இத்தகைப் படிவம் மற்று எம்மை ஆளுடை
வித்தக நிருமல விபுத வேந்தனின்
சித்தமே சித்தம் என்று உவக்கும் தேசிகன்
உத்தம சாயல் என்று உணர்ந்து கோடியால்

#17
வான் முகம் நோக்கிய பயிரின் மன்னும் நம்
கோன் முக இன் அருள் குறித்த தோற்றமாம்
ஊன் முக நயனங்கள் உம்பர் நோக்குதல்
நூன் முகம் மதி_வலாய் நுணித்துக் காண்டியால்

#18
மெய்யுறுத்தியது எனச் சிவந்த மெல் இதழ்
கையுறு புத்தகம் கவினும் காட்சி ஈண்டு
ஐயுறும் உலகருக்கு ஆன்ம போதகம்
செய்யுறு மார்க்கம் என்று அறிதி செவ்வியோய்

#19
தூய ஓவியப் புறம் துதைந்த வல் இருள்
நாயகன் பதவியை நயந்து இ மா தவன்
மாய இப் பிரபஞ்ச வாழ்க்கை யாவையும்
சீ எனப் புறக்கணித்தமை தெரிக்குமால்

#20
சென்னி மீது உற ஒரு ஜீவ மா மணி
துன்னிய சுடர் விரி மௌலி தோன்றுதல்
பொன் நில உலகினில் பொருந்து சிற்சுக
நல் நிலை மகிமை என்று அறிதி நம்பி நீ

#21
ஆயிரமாயிரம் அரும் மகப் பெறீஇ
மா இரு ஞாலத்து வளர்த்து மன்னர் கோன்
சேய் உயர் நகர் செலத் தெருட்டி உய்த்த இத்
தூயவன் சுகிர்தம் யான் சொலும் தரத்தவோ

#22
திசை மயக்கு அறுத்து மெய் வழி தெரித்திடும்
வசை_அறு குரவன் இ மான் அலால் புவி
மிசை ஒருவனும் இலை விரிந்த கார் இருள்
பசை அறப் புலருமோ பரிதிக்கு அல்லதே

#23
என்று அதன் பொருள் விரித்து இயம்பி என்றும் இ
நன்றி கொள் மாதிரி நயந்து கொள்க எனாச்
சென்றனன் அவனொடும் சீர் சிதைந்து எழில்
குன்றி வெவ் வியன் துகள் குழுமும் மண்டபம்

#24
மாசு_அறத் துடை என ஒருவன் வந்து நின்று
ஆசு_அற விளக்கலும் அமோகமாத் துகள்
மூசி அங்கு எழும்பலின் மூச்சடைத்திடத்
தேசிகன் நறும் புனல் தெளி நங்காய் என

#25
மங்குல் ஐம்பால் உவா மதி முகம் திகழ்
பங்கஜ லோசனம் பவள வாய் தளிர்
அம் கலுழ் மேனி ஓர் அணங்கு தூய நீர்
எங்கணும் சிதறி நன்கு இயற்றினாள் அரோ

#26
கண்டனன் யாது இது காட்சியின் பொருள்
ஒண் தவக் கிழவ எற்கு உரைத்தியால் என
விண்டனன் வேதியன் விளம்பல் மேயினான்
பண் தரு மறைப்பொருள் தெரிக்கும் பண்ணவன்

#27
தோற்றும் மண்டபம் இது சுரர் குலாதிபன்
வீற்றிருப்பதற்கு என விரும்பி மேலை நாள்
மாற்று_அரும் சிறப்பினால் அமைக்க வந்து பேய்க்
காற்று அகம் புகுதலில் கவின் அழிந்ததால்

#28
தீன ரக்ஷகன் தரு சுருதித் தெய்வத
ஞானசாரத்தினால் நலம் பெறாது நம்
கோன் உடம்படிக்கையைக் குலைத்த கொள்கை சால்
மானவ இருதயமாம் இ மண்டபம்

#29
மூசி மற்று அதன் எழில் முருக்கி மொய்த்து எழு
தூசி உற்பவ வினைத் தொகுதி மற்று இதே
மாசு இயல் தீ_குணம் வளர்க்கும் தாய் புரி
ஆசு உறு வினைக்கு எலாம் ஆதி மூலமால்

#30
துன்னிய துகள்_அறத் துடைத்து நின்றவன்
மன்னிய சற்பிரமாணம் மா மதி
முன்னி நல் நீர் தெளி முத்த வாள் நகை
நல்_நுதலே சுவிசேஷ ஞானமால்

#31
ஈட்டு தீ_வினைப் பயன் இருமையும் தரு
கேட்டினை உரும் உறழ் கிரியின் சால மாக்
காட்டி வெம் கனல் குழி கவிழ்க்கும் அல்லது
வீட்டினில் புகுத்துமோ விதி நிடேதமே

#32
எண்படும் அருள் சுவிசேஷம் ஏய்ந்து நம்
புண்படும் இருதயப் புரைகள் நீக்கி நல்
பண்பொடு பவித்திரப் பத்தி வித்தி மெய்
விண்படு போகத்தை விளைக்குமால் அரோ

#33
திரு_அருளாளர்க்கு ஜீவ வாசனை
தருவது புலை நெறி தழுவியோர்க்கு மன்
வெருவரு மரண வாசனை விளைப்பது
நிருமலன் தரு சுவிசேஷ நீர்மை காண்

#34
பாவ தாருவை அறப் படுக்கும் கோடரி
ஜீவ தாருவில் எழு தெய்வ மாக் கனி
தேவ_தூதரும் வியந்து ஏத்து செம்பொருள்
பூ_உலகு உய வரு புனிதன் புத்துரை

#35
ஆன்ம நோய் அகற்று சஞ்சீவி அன்பர்க்குத்
தேனினும் இனிய தீம் சுவைய தெள் அமிர்து
ஊன் மனத்து இருள் கெட ஒளிரும் ஒண் சுடர்
வானவர் கோமகன் மதுர வாய்மொழி

#36
பாவி என்று உணர்ந்து புண்பட்ட நெஞ்சர்க்குத்
தேவ நீதியின் வரும் திகிலை மாற்றிடும்ந்
தா_அரும் நித்ய ஜீவனையும் தந்திடும்
தீ_வினை அற வரு செம்மல் வாசகம்

#37
துன்பு எனும் தீச் சுடச் சுழன்று சோர்வுறும்
அன்பருக்கு அ அனல் அவிக்கும் நித்ய பேர்_
இன்ப வாரிதி விசுவாசிக்கு இன் உயிர்
நம் பெருமான் இவண் நவின்ற வாசகம்

#38
தீர்த்தனோடு ஆதியில் திகழ்ந்து தெய்விக
வார்த்தையாய்ப் புவிக்கு ஒளி மருவ மானிட
மூர்த்தியாய் விளங்கிய முனைவன் தந்த நூல்
சீர்த்தியை யாவரே தெரிக்கும் நீர்மையார்

#39
மற்று இதை மனக்கொள் என்று உணர்த்தி மாடு ஒரு
சிற்றறை புகுந்தனன் தெரியக் காட்டினான்
புற்று உறை அரவு எனப் புழுங்கு மாத்திரன்
செற்றம்_இல் சாந்தன் என்று இருவர் சீரினை

#40
சாந்தன் என்று உரைபெறு தகைமையோன் முகம்
சேந்து ஒளிர் மரை எனத் திகழும் பான்மையும்
பூம் துணர் கரிந்து எனப் பொலிவு இழந்து அகம்
காந்தும் மாத்திரன் முகம் கரிந்த பான்மையும்

#41
கண்ணுற நோக்கினன் கருதி வேதியன்
உள் நிகழ்வன முகன் உரைக்கும் என்னினும்
எண்ணுறும் கலை_வலோய் இவர் குணாகுணம்
நிண்ணயம் புலப்பட நிகழ்த்துவாய் என்றான்

#42
வளம்படு கோன் நகர் மருவத் தீ_வினைக்
களம் படும் உலகினைக் கடிந்து காவலன்
நளம் படு மலர்ப் பதம் நயந்த நண்ப நின்
உளம்பட உரைப்பல் என்று உரைத்தன் மேயினான்

#43
இருவரும் சோதரர் எனினும் ஈங்கு இவர்
கருமமும் விநயமும் கருத்தும் வேறதாம்
மரு மலி வனசமும் வறிய ஆம்பலும்
ஒரு வழிப் பிறப்பினும் ஒக்குமே-கொலாம்

#44
அத்தனா நின்று எமக்கு அருளும் ஆண்டவன்
சித்தமே ஆக என்று அமையும் செவ்விய
உத்தமன் இவன் அவன் கனிட்டன் ஒள்ளிய
வித்தக வைதிகர்க்கு உவமை மேவியோன்

#45
இ வியல் சுடுமுகன் இயல்பு என் என்றியேல்
செவ்வியர் ஒழுக்கினைச் சிதையக் கூறி மா
வெவ் இயல் தீ_வினை விளைக்கும் மாத்திரன்
அவ்வியன் அரும் பொறைக்கு அசடனாம் இவன்

#46
நித்தனார் அருள் செயற்கு அமைந்து நின்றிடாப்
பித்தன் எத்துணைப் பொருள் பெறினும் பாழிலே
உய்த்திடு பேதை வன் மிடி வந்து ஒன்றுமேல்
மத்து உறு தயிர் என மறுகும் சிந்தையான்

#47
கல் வரைப் புறம் கடல் நாடு கான் செலீஇ
ஒல் வகைப் பொறையொடும் உஞற்றி ஒள்ளிய
பல் வகைப் பொருள் குவித்து அருத்தும் பண்பு உடைச்
செல்வரைக் கண்டுகண்டு எரியும் சிந்தையான்

#48
தாழ்வு கண்டு உவப்பதை அலது தம்மின
வாழ்வு கண்டு உவக்கிலாது எரியும் வன்கணான்
பாழ் வயிறு ஓம்புவான் அலது பாதலத்
தாழ்_வினைக்கு அகன்று உயும் ஆற்றை ஓம்பிடான்

#49
கான் முதிர் கடு அயின்று இனிய கன்னலைக்
கூன் முதுகு இரவணம் உவர்க்கும் கொள்கை போல்
நூல் முறை தெரிந்தவர் நுவலும் நோன்மை சால்
ஆன்ம போதகம் இவற்கு அருவருப்பு அரோ

#50
கைப்படு சுகம் அலால் கரை_இல் பேர்_இன்ப
மெய்ப்படு சுக நிலை மிகவும் சேய்த்து என
ஐப் படும் ஈயின் மாய்ந்து அழியும் லௌகிக
மைப் படு மனத்தரை மானுமால் இவன்

#51
ஆயுழி உளத்து அழுக்காறு எனும் புலை
மேயுழி நல் குண விபவம் ஆர் திருப்
போயுழி அறிவு அரிதாகப் போக்கிடும்
தீயுழிப் புகுத்திடும் என்பர் சீரியோர்

#52
தலைப்படும் உணர்வு_இலார் உலக சாலத்து
வலைப் படும் மான் என மறிந்து வஞ்சகப்
புலைப் படு புவன போகத்தைப் புந்தி_அற்று
உலைப்படும் ஆமையில் உவப்பர் ஒள்ளியோய்

#53
அன்பருக்கு அன்பராம் அகில லோக வேந்து
இன்ப துன்பங்களை இயைந்தவாறு தம்
மன்பதைக்கு ஊட்டுவர் மரபில் தாய் என
நல் புதல்வரின் அமைந்து ஒழுகல் நம் கடன்

#54
ஈண்டு இதை மறந்திடாது இதயத்து ஓர்தி என்று
ஆண்டு நின்று எழுந்து இளவரசற்கு ஆக்கிய
மாண் தகு கடி மனை புகுந்து மைந்த நீ
காண்தகக் கவினிய காட்சி காண் என்றான்

#55
சித்திர மாளிகை அகத்துத் திண் சுவர்ப்
பத்தி அம் கனல் பிடித்து எரியும் பான்மையும்
அத்தகு கொழும் கனல் அவிக்க ஆண்டு ஒரு
குத்திரன் விரைந்து நீர் சொரியும் கொள்கையும்

#56
அகத்து ஒளிர் இரும் கனல் அவிந்திடாது ஒரு
மகத்துவன் கரந்து எதிர் மருங்கு நின்று எரி
முகத்து அருள் எண்ணெயை உகுத்து மூட்டலும்
ஜகத்தை உள் உவர்த்தவன் சமையக் காண்குறா

#57
மாட்சி சால் அரு மறை வகுத்து மன்னர் கோன்
ஆட்சியைத் தெருட்டிடும் அறிஞ ஆய இக்
காட்சியின் பொருள் எது கழறுவாய் எனா
நீட்சி சால் மதி_வலான் நிகழ்த்துவான் அரோ

#58
நம் காவலன் திரு_அடித் துணை நயந்தோய்
மங்கா அழற்சிகை மகா புனித ஆவி
இங்கு ஆதரித்து எம் இதயத்து இனிது இயற்றும்
பொங்கு ஆர் அருள் கிரியை போலும் இது காண்டி

#59
ஆய கிரியைத் திறம் அனைத்தையும் அடர்ப்பான்
மாய அலகைக்கு இறை செய் வன் தொழிலை மானும்
மீயுற விரைந்து இடையறாது புனல் வீசிக்
காய் எரி அணைக்க முயல் காட்சி இது காண்டி

#60
கரந்து ஒருவர் எண்ணெய் சொரி காட்சி கருதுங்கால்
நிரந்தரம் அருள் குரிசில் நேர்ந்து அலகை உட்க
உரம் தரும் மகா கிருபை உள்ளுற வழங்கிப்
புரந்து அருளும் ஆறு இது எனப் புகறல் போலும்

#61
சஞ்சல விதம் தரு சழக்குறு பிசாசம்
விஞ்சு பல மாயம் இதயத்து விளைவிக்கும்
நஞ்சு அனைய தீ_வினை நயக்க நமை ஏவும்
வஞ்சனை முயன்று உலவும் என்றும் நம் மருங்கில்

#62
வேதாகமாதியை விரித்து உணர ஒட்டாது
ஏதாகிலும் உலக வேலையில் இழுக்கும்
வாதாடியாடி நம் மன_கரி மழுக்கும்
சூதா விடுக்கும் அதி துஷ்கிருத சூழல்

#63
ஈட்டு பல தீ_வினையை உள்ளுற எடுத்துக்
காட்டும் இறைவன் பெரிய கருணையை மறைக்கும்
வீட்டு உலகம் இன்று என வெருட்டுபு சந்தேகக்
கூட்டினில் அடைத்து உயிர் குடித்து இனிது உவக்கும்

#64
சீமான் அருள் குரிசில் ஜேசு திரு_நாமப்
பூமான் நமக்கு உதவு புண்ணிய நலத்துக்கு
ஏமாறி நித்திய இடுக்கண் உற எத்திக்
காமாதுரக் குழி கவிழ்த்து உற அமிழ்த்தும்

#65
இ மா நிலத்து அவதரித்த குமரேசப்
பெம்மானையும் குறுகி மும்முறை பிதற்றி
அம்மா தகைந்திட முயன்றது எனலாயில்
சும்மா விடும்-கொல் நர துர்_பல துரும்பை

#66
மல்லாடு வன்கண் நயவஞ்சம் உறும் மாயப்
பொல்லாத பேயினை முருக்குபு புறம்கண்டு
எல்லா நலம் பெற இரக்ஷை தரும் எல்லாம்
வல்லான் மகா கிருபை உள்ளுற மதித்தி

#67
மாதாவின் நின்று எமை வளர்க்கும் மதி ஊட்டித்
தாதாவின் நின்று சமரக்ஷணை சமைக்கும்
வேதாவும் ஆகி உயர் வீட்டுலகம் உய்க்கும்
நீதாதிபன் கிருபை நெஞ்சுற நினைத்தி

#68
நம் சீவியத்தினிடை எத்தனை-கொல் நாசம்
வெம் சீயமாம் அலகை எத்தனை விதத்தில்
துஞ்சீடு பாடுகள் தொகுத்தன துகைத்திட்டு
அஞ்சீர் எனா உதவிற்று ஆண்டை அருள் அன்றோ

#69
தன் இருதயத்து அருள் தரித்து இயலும் ஆறும்
பின்னர் அது நன்று நிலைபெற்று வளர் சீரும்
என்ன பரிசு என்று ஒருவன் எண்ணி இனிது ஆயில்
இன்ன பரிசு என்று அளவிடற்கு எளியது அன்றால்

#70
இத்தகைய காட்சியை உன் எண்ணிடை இருத்திப்
பத்த பரிபாலன பரஞ்சுடரை நாடி
முத்தி உலகத்து நெறி முன்னிடுக முற்றும்
சித்த சலனத்தை ஒழிக என்று இனிது செப்பும்

#71
நன்று உடன் நடத்தி இனும் நல்லுணர்வு நல்கும்
துன்று சில காட்சி உள தொக்கு அறிதி என்னாச்
சென்று எழில் குலாவும் ஒரு திவ்விய வினோத
மன்று செறி மாளிகையின் மாடு அணுகி நின்றான்

#72
பால் நிலவினால் திகழ் பருப்பதம் இது என்னத்
தூ நிலவு வெண் சுதை குயிற்றி ஒளி துன்னும்
வான் நிலவு மேனிலைய மாடம்-அது கண்டான்
கோன் நிலவு நாடு குடிகொள்ளும் மனம் உள்ளான்

#73
கண்டு மனமும் கணும் வியப்பொடு களிப்புக்
கொண்டது தனித்தனி குறித்து வரு போழ்தில்
விண் தொட நிவந்த அதன் மேல் அரமியத்தில்
வெண் துகில் புனைந்து உலவு வித்தகரை நோக்கா

#74
ஆசு_அறு குணத்தர் ஒரு சிந்தையர் அபேதர்
மாசு_அறு மெய் அன்பு_உடையர் என்று மகிழ் பூத்துத்
தேசுற மலர்ந்த முகமே நனி தெரிக்கும்
ஈசன் உலகு எய்திய இரும் குரவர் போலாம்

#75
எட்ட_அரிய மேல் நிலை இது எய்த வருமாயில்
கிட்டு_அரிய மா புனித வெண் துகில் கிடைக்கும்
சிட்டர் இவரோடு அளவளாவு நிலை சேரும்
விட்டு ஒழியும் இச் சுமை விடாய் எவையும் மேவா

#76
கூடும் எனில் நன்று என உளத்திடை குணித்து
மாடு அணுகி நின்ற மறைவாணன் முகம் நோக்கிப்
பீடு பெறு மேல் நிலை பிறங்கு அரமியத்தை
நாடி அவரோடு உரிமை நான் பெறுவதாம்-கொல்

#77
ஐய எது சித்தம் அறியேன் என வினாவக்
கையுற அணைத்து வருக என்று கடி காவல்
மை_அற விளங்கும் மணி வாயிலின் மருங்கு உற்று
ஐயம் அறவே நிகழ்வ கண்டு அறிதி என்றான்

#78
கரை_இல் பேர்_இன்ப மாளிகை அகம் புகக் கருதும்
புரை இலா மனத்தவர் பெயர் புத்தகச் சுருளில்
வரையுமாறு ஒரு துரைமகன் வாயிலின் மருங்கே
நிரையில் இட்ட பொன் ஆசனத்து இருந்தனன் நிலவி

#79
மாய ஏதிகள் ஆயிரமாயிரம் வழங்கி
ஆய இல் அகம் புகா வகை இயன்ற-மட்டு அடர்க்கத்
தீயர் ஓர்சிலர் வெம் கதம் திருகினர் செறிந்து
பேய் எனாத் திரிந்து உலவினர் வாளொடு பிறங்கி

#80
சுத்த சுப்பிர சுமங்கல சுகுணமா சுயம்பு
நித்த நின்மல நிரஞ்சன நிராமய நிருபர்
உத்தரம் இலாது உள் புகப் பெறாமையில் உலவிப்
பத்தர் ஓர்சிலர் முன்றில் வாய் நின்றனர் பரிந்து

#81
உற்ற மெய்த் திரு_வசனமாம் பட்டயம் உருவிச்
செற்றம் மிக்க அச் செறுநரைச் செறுத்திடார் தியங்கிக்
கொற்ற வாழ் மனை முன்றிலின் வயின்-தொறும் குறுகித்
தெற்றி நின்று பின் இடைந்தனர் சிலர் உளம் திகைத்து

#82
கான வேடுவர் கையகன்று அற விடாய் கதுவித்
தூ நறும் புனல் துருவி ஓர் வாவியில் துன்ன
வானகப் புலி ஆங்கு எதிர் மறித்திட மலங்கு
மான் இனத்தை ஒத்து அலம்வந்தார் சிலர்சிலர் மயங்கி

#83
கோம்பி முற்படு தோகையின் குறுகி உள் உடைந்து
பாம்பின் வாய்ப் படு தேரையின் பரிவுறீஇப் பதைத்துச்
சாம்பி உள் புகும் தருக்கு_இலர் ஆகி மெய் தளர்ந்து
தேம்பி நல் நிலை கலங்கினர் சிலர் செயல் அழிந்தே

#84
ஆய காலை எம் ஆண்டகைக்கு அன்பு அருச்சனைசெய்
தூய சிந்தையன் நெறி தவறாது செல் சூரன்
காயம் ஆதி முப்பகை அறக் கடிந்தவன் ககோள
நாயகற்கு இதயாசனம் அளித்த ஓர் நம்பன்

#85
ஜீவ ரக்ஷையைச் சென்னியில் திருத்தி மெய் என்னும்
ஓவு_இல் கச்சினை அரையில் இட்டு இறுக்கி ஒண் நீதி
மேவும் ஓர் கவசத்தினை மெய்யுறப் புனைந்து
தீ_வினைத் தொடர் தேய்த்திடு கழலையும் சேர்த்தி

#86
பயில் தரும் விசுவாசமாம் பரிசையைப் பற்றிச்
செயிர் இலாது இரு கூரொடு திகழ் திரு_மந்த்ர
வயிர வாள் படை வலக்கையில் வாங்கி மன் அருளால்
தைரியத்தொடு வாயிலின் அருகுறச் சார்ந்தான்

#87
பொறித்திருந்தவற்கு அஞ்சலி வரன் முறை புரிந்து
குறித்தி என் பெயர் ஐய புத்தகத்து எனக் கூறி
மறித்து நின்ற அ மள்ளரோடு எதிர்ந்து அமர் மலைந்தான்
வெறித்த சிந்தையார் வீசினர் வெருட்சியாம் விசிகம்

#88
குழுமி நாய்க் கணம் குரைப்பினும் கோளரிக்கு என்னோ
பழுது நேரும் ஈது அறிகிலார் பலபடப் பிதற்றிக்
கழுது நல்கிய கருவிகள் கடும் தறுகண்ணார்
முழுதும் மேல் எறிந்து ஆர்த்தனர் முறைமுறை முடுகி

#89
பொன் குலா நகர் ஆதிபன் அருளிய புனித
மின் குலாவிய படைக்கலம் வீண் எனப்படுமோ
வன் குலாமரோ வெற்றிபெற்று உய்வர் இவ் வண்ணம்
என்-கொலாம் என அயிர்த்தனர் முன்றில்-வாய் எவரும்

#90
எய்த வீசிய எறிந்தன ஏதிகள் எவையும்
நொய்து கேடகப் புறத்தினால் நூக்கினன் எனினும்
கைதவத்தினால் சிற்சில ஆக்கையில் கரந்து
செய்த காயம் என்று உணர்ந்தும் அங்கு இடைந்திலன் தீரன்

#91
காற்றுக்கு ஓடு புன் பூளையில் கருவி கை போக்கித்
தோற்றுக் கூளியும் பின்னிடும் இவர் வலி தொலைத்துக்
கூற்றுக்கே விருந்தாக்குவல் என்பது குறியா
வேற்றுக் காலம் ஒன்று இன்று என நெடும் கை வாள் விதிர்த்தான்

#92
மந்திரத் தனி வாளினை விதிர்த்தலும் மறவோர்
தந்திரம்பட எமக்கு இனித் தரிப்பு இலை என்னாச்
சிந்தி ஓடினர் இரவி முன் இருள் எனத் திகழ்ந்த
திந்தியங்களை அவித்தவன் எழில் முக இந்து

#93
வண்டர் தோல்வியும் தொண்டன் வாள் வலிமையும் மருங்கு
கண்டு நின்றவர் யாவரும் கை குவித்து இறைஞ்சி
அண்டர் நாயகன் அருள் செயல் இது என அவர் வாய்
விண்டு சிந்தினர் ஆனந்த வாரியாம் விழி நீர்

#94
கருகு சிந்தையர் உடைந்து வெந்நிட்ட அக் கணமே
பெருகு பேர்_இன்ப மனைக்குளும் பிறங்கு அரமியத்தும்
உருகு காதலின் ஒள்ளியோய் உள்ளுற வருக
வருக என்று நன் மங்கல வாழ்த்து ஒலி மலிந்த

#95
அலகை தோற்றன உட்பகை அவிந்தன ஆத்த
உலக பாசமும் ஒழிந்தன இனி ஒரு போதும்
கலகம் இன்று எனக் கை மலர் சென்னியில் கவின
அலகு_இல் ஆனந்த பரவசம் அடைந்தனன் அறிஞன்

#96
சத்தியம் கடைப்பிடித்து நம் தம்பிரான் அருளால்
பத்தி மார்க்கத்து நிலைநின்ற பவித்திரன் பவஞ்சப்
பித்தி யாவையும் புறம் நிறீஇப் பேர்_இன்பம் மல்கும்
முத்திவீட்டினுள் புகுந்தனன் ஜெயத் தொனி முழங்க

#97
இன்ப வீட்டினுள் புகுதலும் எம்பிரான் அடியர்
அன்பு மீக்கொளத் தழுவினர் ஆதரம் புரிந்தார்
நன் புலத்து வைத்து ஆசிகள் பற்பல நவின்றார்
துன்பம் இங்கு இலை இலை ஒரு சோதனை என்றார்

#98
தலையில் ஆனந்த தைலம் இட்டு ஆட்டினர் தயங்கும்
உலைவு_இலாத பீதாம்பரம் உடுத்தனர் உவந்து
விலை வரம்பு_இலா வெண் நிலை அங்கி மேல் இட்டார்
தொலைவு_இலா நலம் துய்த்து இனிது இருந்தனன் தூயோன்

#99
ஈது சம்பவம் யாவையும் வேதியன் எதிர்ந்து
காதலாய் இரு கண் கணீர் மல்கிடக் கனிந்து
வேத நாயகன் கருணையை வியந்து உளத்து ஏத்தி
ஓது சீர்த்தியாய் விடையுதவு உள் புக என்றான்

#100
காலம் காட்டிய கதிர்களும் உடுக்களும் கவினி
ஞாலம் காட்டிய பூத பௌதிகங்களும் நம்பன்
மூலம் காட்டிய இயல் விதி முறை தவறாது
சீலம் காட்டிய சீர்மையைக் கண்டனை செய்யோய்

#101
இயல் முறைக்கு அமைந்து ஒழுகல் போல் எம்மை ஈடேற்றும்
செயல் முறைக்கு அமைந்து ஒழுகலும் நம் கடன் தீய
மயல் முறைப்படும் மனம் செலும் நெறிப்படல் மதி அன்று
உயல் முறைக்கு இறை சித்தமே நலன் என ஓர்தி

#102
தமர நீர் உலகத்து அவதரித்த சற்குரு முன்
உமது சித்தமே சித்தம் என்று உவப்புடன் பணியும்
அமர நாட்டை ஒத்து அகல் நிலம் அமைக என்று அளித்த
விமல மந்திரம் ஜெபித்தும் என் வேறு ஒன்று விழைதல்

#103
பித்து அளைந்த இப் பாத்திரம் பிரித்து நீர் எடுக்கச்
சித்தமேல் அஃது ஆக என் சித்தம் அன்று என்னா
வித்தகத் திரு_மைந்தன் ஆத்துமத் துயர் மேவிக்
கெத்துசேமில் வாய் விண்டமை கேட்டிலை-கொல்லோ

#104
நல்கும் கேடு என நன்மையை ஒருவுவம் நாசம்
பல்கும் தீமையை நன்மையாப் பற்றுவம் மதி அற்று
அல்கு சிந்தையேம் ஆதலின் அளவு_இலா ஞானம்
மல்கு தந்தையார் நமக்கு அறிந்து ஊட்டலே மரபாம்

#105
சுருதி நாயகன் திருவுளம் கூட்டு நாள் தோழ
கருதி ஆங்கு வீடு அடைதலே கடன் எனக் கழறி
வருதி நீ எனச் சென்று இருள் மலிந்த ஓர் அரங்கைக்
குரு திவாகர தாஸற்குக் காட்டினன் கூறும்

#106
கூர்த்து நோக்குதி இரும்பினால் இயன்ற அக் கூட்டுள்
வேர்த்து விம்மி நெட்டுயிர்த்து உடல் விதிர்ப்புற வெருண்டு
பார்த்து இறங்கு சென்னியன் ஒரு பதிதனை வினவி
வார்த்தையாடுதி என்றனன் மறை வியாக்கியானி

#107
நன்றுநன்று எனக் கிறிஸ்தவன் நல் நிலை தவறி
வன் துயர்க் குறி மல்கிய வறு முகம் நோக்கிக்
கன்று சிந்தையாய் யாரை நீ கவலுமாறு எவன் ஈண்டு
ஒன்ற வந்த காரணம் யாது உரைத்தியால் என்றான்

#108
வினவு வாசகம் கேட்டலும் வெம் சிறை மறிந்த
வன விலங்கு எனத் தரிப்பு_இலாது உழல்பவன் மறை தேர்
பனவ யான் ஒரு கிறிஸ்தவன் பண்டு எனைப் பலரும்
கனவிலும் பிழை கண்டிலர் கண்டிலேன் யானும்

#109
பிழையை ஓர் பிழை என்று உணராக் கொடும் பிழையார்
பிழை_இலான் எனப் பிழைபடப் புகழ்ந்திடும் பிழையைப்
பிழை என்று எள்ளிடாப் பித்தன் யான் பிழைபடப் பிழைத்த
பிழை பொறுப்பரோ பிழை_இலா நீதி அம் பெருமான்

#110
வீடு அடைந்து உய விரும்பியோய் வியன் பிரபஞ்சக்
காடு அடைந்தனன் சிற்றின்பப் படுகரில் கவிழ்ந்தேன்
மாடு அடைந்து உவந்து அலகையும் கெடுத்தது வலயக்
கூடு அடைந்து கெட்டேன் இனிக் கூறுவது எவனோ

#111
பன்றி மாசு_அறப் பன்முறை கழுவவேபடினும்
சென்று சேற்றிடைப் புரள்வது போலும் வெம் தீய
வன் தொடர்ப் படு ஞமலி தான் கான்றதை மறுத்தும்
தின்று தேக்கெறிந்து உழல்வது போலும் என் சீர்மை

#112
ஐயம் இன்று ஒரு நாள் அருவருத்து எனை அயலே
வையம் தள்ளும் இம்மாநுவேல் வழி பிழைத்ததனால்
தெய்வ வானமும் சீத்திடும் யாது இனிச் செய்வல்
வெய்ய பாதலம் அலது ஒரு புகல் இலை மேலோய்

#113
போந்த பாவியர் எவரையும் புறக்கணியாத
சாந்தமூர்த்தி தண் அருள்_கடல் தயாநிதி தகை சால்
வேந்தன் ஓர் திரு_குமரன் என்று உரைப்பது மெய்ம்மை
ஆய்ந்த கேள்வியாய் ஐயம் எள்துணை இலை அதற்கே

#114
அனையது ஆயினும் நன்று_இலேன் அற நெறி திறம்பி
நினைவில் செய்கையில் ஈட்டிய நீச வெவ் வினைகள்
இனையது இத்துணை என்று உரையாடுதற்கு எளிதோ
கனை கடல் கரை மணலினுக்கு அதிகமாம் காண்டி

#115
வான நாயகன் இதய மாளிகையினில் வைத்த
ஞான தீபத்தை அணைத்தனன் நல் இளங்கோமான்
மேனி வார்ந்த செம் குருதியை மதித்திலன் வெறுத்தேன்
ஊனம்_இல் மன_சான்றையும் உள் உறப் புதைத்தேன்

#116
ஈசன் மைந்தனைத் தினம்தினம் சிலுவையில் ஏற்றி
நீச வெவ் வினை உஞற்றினன் நிமல வீட்டு உய்க்கும்
மாசு_இல் நீதியை வரைந்தனன் மகிதலத்து எவர்க்கும்
நாச காலத்து மதி விபரீதமா நல்லோய்

#117
ஆவலாய் அகத்து அமர்ந்து போராடிய அருள் கூர்
தேவ ஆவியும் முனிந்து எனை விடுத்தனர் சிதையா
ஜீவ வாக்கு எலாம் எனக்கு அல என்பது திண்ணம்
பாவகாரியேன் இதயமும் வைரக் கற்பாறை

#118
வேறு யான் இனிப் புகல்வது என் விபுத வேந்து உருத்துக்
கூறு சாபமும் கோபமும் வானிடைக் குமுறி
வீறுவீறுறக் கணம்-தொறும் கதித்து எனை வெருட்டும்
ஈறு_இல் ஜீவனுக்கு இரக்ஷை மற்று இனி இலை என்றான்

#119
கூட்டு_உளான் இனைய கூறக் கொற்றவன் அருள் பெற்று உய்யும்
வீட்டு_உளானாக நின்ற வேதியன் விரைந்து பாவத்
தீட்டு_உளாய் எனினும் நம்பன் திரு_அருள் செயல் ஓர் ஆதிக்
கேட்டுளான் ஆக உன்னைக் கெடுத்தது என் மதி கொண்டு என்றான்

#120
நல்கு மெய் மகிழ்ச்சி என்று நனி மதி மருண்டு தீமை
மல்கு சிற்றின்ப போகம் வரைவு_இன்றி நுகர்ந்து வாழ்நாள்
அல்க நின்று அயர்ந்தேன் இந்த அரும் சிறைப் பட்டேன் அந்தோ
புல்கு தீ விடத்தில் ஜீவன் போம் எனும் பொறி_இலாதேன்

#121
என் உறு மதியீனத்தால் இயைந்த துர்_கருமம் ஆய
கொல் நுனைப் பகழி மாரி உளத்திடைக் குளிப்ப ஏவி
கன்னல்_உற்றேனை வாளாக் கடிந்து புண்படுத்து என் உள்ளே
மன்னி நின்று உயிரை வாட்டும் வழு_அறு ஜீவ சாக்ஷி

#122
இலகு செம் நீதிப் பெம்மான் இரும் சிறைப்படுத்து எஞ்ஞான்றும்
விலக_அரும் தளையைப் பூட்டி விடுத்தனர் ஆதலாலே
உலகு எலாம் ஒருங்கு கூடி உஞற்றினும் மீட்டற்கு ஒல்லா
அலகு_இல் வெம் சீற்றச் செம் தீ அவிக்குமோ அளிய கீடம்

#123
இனிவரும் நியாயத்தீர்ப்புக்கு என் செய்கேன் ஈறு இன்று ஆகி
நனிவரு சதா நிர்ப்பந்த நாசத்தை உள்ளியுள்ளிப்
பனி வரும் இதயத்தேன் மற்று என் இனிப் பகர்வல் என்னாத்
துனி வரும் உயிர்ப்பன் அஞ்சித் துடிதுடித்து அலறிச் சோர்ந்தான்

#124
நல் நிலை தவறி உற்ற நடுக்கமும் திகிலும் கண்டான்
பன்னிய மாற்றம் கேட்டான் வேதியன் பரிந்து நெஞ்சில்
கல் நில எழுத்துப் போலக் காட்சியைக் கவினத் தீட்டி
மன்னிய குரவ எற்கு உன் பணி எது வழுத்துக என்றான்

#125
தொண்டரைத் தெருட்டும் தூய சுருதி நூல் வலவன் ஈண்டு
கண்டு கேட்டு அறிந்த இந்தக் காட்சியைக் கருத்துள் ஊன்றிக்
கொண்ட நல் தவத்தை ஞான சீலத்தைக் கொளுத்தும் காம
மண்டு எரி கனலாது ஐ_வாய் வழியினைச் செறித்தி மைந்த

#126
மதி நலம் கெடும் துர்_சீலம் மலியும் தீ_வினைகள் மல்கும்
பதி பகை விஞ்சும் நிந்தை பலுகும் வெம் பழியும் சேரும்
கொதி நரகமும் அங்கு ஆக்கும் குவலயம் கூவும் கூற்றைக்
கதி திருக்காப்புக் கொள்ளும் காமப் பேய் கதுவும் காலை

#127
விள்_அரும் கேட்டுக்கு எல்லாம் வித்து இது ஆதலாலே
கள்ளம் இன்று ஆகி உள்ளம் கனிந்து செய் ஜெபத்தினாலும்
உள் உறு விரதத்தாலும் ஒருங்கு_அறச் சிதைத்தல் வேண்டும்
தெள்ளியோய் பிறிது ஒன்றானும் சிதைபடாது ஆகும் அன்றே

#128
சிற்றின்பப் பயன் கை நெல்லிக் கனி எனத் தெரியக் கண்டாய்
பற்று அறுத்து யோகு செய்யும் பவித்திரான்மிகளே தூய
கொற்றவன் உலக போகம் கூட்டு உண்டு களிக்கும் நீரார்
இற்று இதை மறாது சேறி இறை வழி இறுதி-காறும்

#129
அயல் ஒரு காட்சி உண்டு அங்கு அதனையும் அணுகி ஆய்ந்து
மயல்_அறத் தெருண்டு ஜீவ மார்க்கம் நீ வழிக் கொள் என்னா
இயல் மனம் மயங்கி யாக்கை விதிர்ப்புற இரங்கி ஏங்கித்
துயருறும் ஒருவன் நின்ற சூழலைக் குறுகிச் சொல்லும்

#130
பூவலயத்தை ஆளும் புரவலன் புதல்வன் தூய
சேவடித் தொழும்பு பூண்ட செவ்வியோய் தெரியின் நின்ற
பாவகாரியை மற்று என்னாப் பணித்து மெய் பதறும் பான்மை
மேவரப் புகறி உற்ற வேதியற்கு அறிய என்றான்

#131
நலம் கிளர் குரவன் கூற நடுங்கி மெய் பதறி உள்ளம்
கலங்கி வெய்துயிர்த்துச் சென்னி கவிழ்த்து அந்தக்கரணம் யாவும்
மலங்கி உள் அழியும் அந்த மதி_இலான் மறை_வலாளன்
இலங்கு எழில் முகத்தை நோக்கி இனையன பகரலுற்றான்

#132
ஆத்துமக் கவலை கொள்ளா அறிவிலி அகோர பாவத்
தீத் தொழில் மறவன் தேவச் செயல் எலாம் இகழ்ந்து பேசும்
நாத்திகப் புலையன் அந்தோ நாச தேசத்தை நச்சி
ஆத்திக நெறியில் செல்லா அசடர்க்குள் அசடனே யான்

#133
கருதில் என் ஜீவ காலம் கமரிடைக் கவிழ்த்த பால் போல்
ஒருதிறத்தானும் ஐய பயன்படாது ஒழிந்தது உண்மைச்
சுருதி கூறியவாறு ஆகத் துயிலில் ஓர் கனவு கண்டு
வரு திகில் கணங்கள் முன் நின்று உருத்து எழ வருந்துகின்றேன்

#134
திருக் கிளர் ஞான செல்வம் திருத்தியோய் திகாந்தம்-காறும்
கருக் கிளர் மேக சாலம் கதுமெனத் திரண்டு வானத்து
உருக் கிளர் ஜோதி எல்லாம் புதைபட உயிர்கள் யாவும்
வெருக் கொளீஇ அலமந்து ஏங்க இருண்டது மேலும் கீழும்

#135
இரு நிலம் புதைப்ப மல்கிப் புயல் பரந்து இருண்ட தோற்றம்
ஒரு மகவு இன்றி ஊழி உடற்றும் நாள் உற்றது என்னாப்
பெரு நில மடந்தை உள்ளம் பேதுறீஇ இழவு காட்டும்
கரு நிறப் போர்வை போர்த்த காட்சியைக் கடுக்கும் மாதோ

#136
நஞ்சினில் கரிய ஆகி நளிர் நெடும் கடலில் பொங்கிச்
செஞ்செவே உலகை மூடித் திசை-தோறும் செறிந்த கொண்மூ
எஞ்சுறாப் புனித நீதி இறைவன் வெம் சினத் தீ யாவும்
துஞ்சிட இறுத்தது என்னாத் தடித்தது துருவம்-காறும்

#137
தடித்து ஒளி தழைக்கும்-தோறும் தமர வாரிதி நீர் சூழ்ந்த
படித்தலம் நடுங்கி ஏங்கப் பரு வரைக் குலங்கள் யாவும்
முடித்தலை தகர்ந்து சாய முடுகி மூது அண்ட கோளம்
வெடித்திட அசனிக் கூட்டம் வெய்துற இடித்தது அன்றே

#138
நெருங்கு கார் இருந்தையூடு நிலவும் மின் நெருப்பை உய்த்து
மருங்கு வந்து உலவும் ஊதைத் துருத்தியால் மலிய மூட்டி
இரும் கடை ஊழி என்னும் இகல் உறு கருமான் வேலை
ஒருங்கு உடன் தழுவலாலே உலைக்களம் ஆயது உம்பர்

#139
மைக் கரு முகில் வாய் விண்டு வயங்கு ஒளி மருவ மின்னி
ஒக்க நின்று உரறும் காட்சி உம்பர் நாயகனை நீத்துப்
பக்கமே திரிந்து சோரம் பயின்ற பாழ் உலகைப் பல்கால்
திக்கு அவமதித்துப் பேசிச் சிரிப்பது சிவணும் மாதோ

#140
அடுத்தடுத்து உலகம் அஞ்ச அசனி நின்று இடிக்கும் ஓசை
வடுத் திகழ் மேனி வள்ளல் வருகின்றார் மழையில் தோன்றி
நடுத் தர என்று வானோர் நயந்து பல்லாண்டு கூறித்
தொடுத்து இடையறாது தேவ துந்துமி முழக்கல் போலும்

#141
வரு குமரேசன் தூய மலர் அடிக்கு அன்புசெய்த
திரு_உடையாரே அன்றி ஜெகத்து_உளார் எவரும் அஞ்சி
வெருவி உள் உடைந்து சோர்ந்தார் விதி நிடேதத்தை வீசிப்
பெரு வழி துணிந்து சென்று பேதுற்றால் பிழைப்பு உண்டாமோ

#142
புத்தேள் மறை தேர் புங்கவ இப் புதுமை நிகழும் போழ்தத்தே
செத்தேன் செத்தேன் யான் என்னாச் சிந்தை கலங்கித் திடுக்கிட்டேன்
பித்து_ஏறினர் போல் வாய் உழறிப் பேதுற்று உயங்கிப் பிழை நினைந்து
கைத்தேன் அழுதேன் கதறினேன் கண்டேன் மரணக் கடும் சூழல்

#143
அடுக்கும் மரணம் நினையாத அமையத்து என்று கருதாது
கெடுக்கும் புன்மைச் சிறுமதியால் கெட்டேன் அந்தோ கிளர் எரி வாய்
மடுக்கும் கடிகை வந்தது இனி என்னே என்று வான் நோக்கி
நடுக்குற்று உலைந்தேன் திகில் காட்சி நனி விஞ்சியது கணம்-தோறும்

#144
மன்னும் கரும் கொண்மூ வயிறு வகிரப் பிடித்த பொன் நூல் ஈது
என்னத் தடித்தது ஒரு மின்னல் இடித்த ஓசை எண் திசையும்
துன்னச் சுவர்க்கவாசிகளும் துணுக்குற்று இரியத் தொலையாத
இன்னல்_கடலின் கரை காணாது இருந்தேன் இருந்த எல்லை-தனில்

#145
பேசும்படித்து அன்று உலகு நிலைபெயரப் பெருநீர் தத்தளிக்க
மாசு படிந்த மனுக் குலங்கள் வதைப்புண்டு உழல வரை இடிய
மூசும் தருக்கள் வேர் பறிந்து முறிந்து துணிய முறை பிறழ
வீசும் கொடிய பிரளயக் கால் வீங்கிற்று அண்டம் விதிர்ப்புற்ற

#146
வரும் ஓர் ஊழி மாருதமாம் வய வெம் சீயம் வந்து உலவ
உரும் ஏறு அஞ்சப் பிளிறு ஒலிய ஒளிர் மின் ஓடைப் புகர் முகத்த
கரு மா மேக காத்திரத்த கவின் கொள் யானைக் குழூஉக் கலங்கி
வெருவா நடுங்கித் திசை-தொறும் கூவிளிக்கொண்டு ஓடிச் சிதறினவால்

#147
மெய்யாய் அந்த வேளையிலே விசுவாசிகளும் மெய் பதறப்
பொய்யாமொழி கூறிய வண்ணம் புரை தீர் கடைசி எக்காளம்
மை ஆர்கலி சூழ் வையகமும் வானும் துளங்க வலிந்து தொனி
செய்யா முழங்கிற்று இனி என்னே செயல் என்று அழிந்தேன் சிறுமதியேன்

#148
இரவி-தானோ கனல் பிழம்பில் இயைந்த-கொல்லோ எழிலியிடை
விரவித் தடித்த மின் ஒளியை விசித்துச் சமைத்த விதமேயோ
கரவு ஒன்று அறியேன் பல் மணிகள் கஞலும் கனகாசன உரு ஒன்று
உரவு செழும் கொண்டலின் நாப்பண் உற்றது அமரர் உவப்பு எய்த

#149
அருளும் பொருளும் நனி தெரிக்கும் ஆன்ம போதச் சுடர் தழைப்ப
மருளும் தெருளும் விரவி அருள் மலியப் பொலியும் இதயம் போல்
வெருளும் இருளும் மின் ஒளியும் விரவி இருள் போய் விடிவு எய்தத்
தெருளும் பொருள் சேர் பொன் பீடம் திகழத் திகழ்ந்த திரு_விசும்பே

#150
ஊழிக் கதிரைப் புடை சுற்றி ஊர்கோள் வளைந்த பரிசாகத்
தாழிப் புவனம் நடுத் தீர்க்கச் சமைந்த நியாயாசனத்தை வளைத்து
ஊழிக் கனல் சேய்த்துற எழும்பி உலவாக் கோட்டையாய் அமைந்தது
ஆழிப் பெருமான் ஆசனத்தை அடுக்க அளியேற்கு ஆவது-கொல்

#151
ஆய காலை நடுப்புரிவான் அமலன் வருகை எதிர்நோக்கி
நேயம் மிகு வானவர் சேனை நெருங்கி இறைஞ்சித் தொழுது ஏத்தப்
போய் எ உலகும் திரிந்து வரு புனிதத் தூதர் போற்றி இசைப்ப
மாயம்_அறு வேதியர் குழுமி வணங்கி வழுத்தி வாழ்த்து எடுப்ப

#152
கின்னரம் தம்புரு வீணை கிளரும் சுரமண்டலம் ஆதி
நன்னர் நவிலும் இசைக் கருவி நாத கீத நயம் பொழியத்
துன்னும் அசனி இடித்தது எனத் தொனிக்கும் ஜெய பேரிகை முழங்கப்
பன்னும் சுர துந்துமியோடு பல வாச்சிய கம்பலை பம்ப

#153
தேவ_தேவ திரியேக தேவ சுதன் வந்தார் கொடிய
பாவ உலகை நடுத்தீர்க்கும் பரமன் வந்தார் பரலோக
ஜீவ பாதை திறந்துவைத்த செல்வன் வந்தார் வந்தார் என்று
ஆவலோடு கட்டியங்கூறி அடியார் சங்கம் ஆர்ப்பரிக்க

#154
ஆதி மூலப் பரம்பொருளின் அருமைச் சுதனாம் கிறிஸ்து யேசு
மாதின் வித்தாய் அவதரித்த வடிவத் திரு_மேனியில் தோன்றி
ஜோதி முக மண்டலச் சேவை தரிசித்து எவரும் தொழுது இறைஞ்ச
நீதி ஆதிபதி ஆகி நியாயாசனத்து வீற்றிருந்தார்

#155
ஆண்டு இருந்த அரசிளங்கோ முகம்
மூண்ட கோடை முதிர் கடு நண்பகல்
சேண் தயங்கிய செம் சுடர் போன்ம் எனக்
காண்டல் செய்தன் என் உள்ளுறக் கன்றியே

#156
ஆதி அம் பரம் ஜோதி அடுக்கவும்
பூதியங்கள் எரிந்து புகைந்தன
மீது இயங்கிய மீன் கணம் வீழ்ந்தன
மாதிரங்கள் குலைந்த மறுகியே

#157
பொரிவ தீவ புகைவ புழுங்குவ
எரிவ காந்துவ ஏங்குவ தேங்குவ
இரிவ சோருவ ஏகுவ மீளுவ
திரிவ நிற்ப திகைப்ப சராசரம்

#158
இருள் அடைந்த இரு சுடர் எங்கணும்
மருள் அடைந்து கலங்கின மா மறை
தெருள் அடைந்தவரும் திகைத்தார் உளம்
உருள் அடைந்திலதால் இ உலகமும்

#159
வையகத்து மடிந்தனிர் யாவரும்
நொய்து எழுந்து நுவல் நடுத்தீர்வையை
எய்து-மின் என்று யாரும் துணுக்குற
வெய்து ஒர் சத்தம் பிறந்தது விண்ணிடை

#160
திருக்கு விஞ்சிய சிந்தையினேன் செவிக்கு
உருக்கி வார்த்த செம்பு ஆயது அ ஓசை நொந்து
இருக்கும் புண்ணில் எரி நுழைந்தால் என
முருக்கி நின்றது என் உள்ளத்தை முற்றுமே

#161
ஆங்கு எழுந்த அ ஓசை அங்கங்கு உறத்
தாங்கி நிற்கும் தருக்கு_இல ஆதலின்
ஓங்கு மால் வரை உட்கி அ ஒல்லையில்
வீங்கு மெய் பிளந்து ஒக்க வெடித்தவே

#162
தேரில் ஜீவரைக் கொன்று தினம்-தொறும்
வாரிவாரி மடுத்த இ மா நிலப்
பேர் யாக்கைப் பிணம்தின்னி ஈம வெம்
சேரி வாயும் கிழிந்து திறந்தவால்

#163
தொன்று-தொட்டு உயிர் சோர்ந்து சமாதியின்
மன்று உறங்கிய மானிடர் யாவரும்
பொன்றி நீத்த புராதன யாக்கையோடு
இன்று உயிர்த்தெழுந்தார் உலகு எங்கணும்

#164
யாதும் இன்மையிலே உலகு யாவும் ஓர்
ஏது இன்றி இயற்றிய ஈசற்குப்
பூதி சாதனம் கொண்டு முன் போல் உரு
ஆதி என்ன அடாது-கொல் ஆவது

#165
பொருப்பில் கானில் புதரில் துரவினில்
நெருப்பில் ஆற்றில் முந்நீரில் நிலத்தினில்
விருப்பிற்று ஆர்_உயிர் வீடிய யாவரும்
உருப்பெற்று ஈண்டு உயிரோடு எழுந்து உற்றனர்

#166
வெள்ள வாரிதி மீக் கிளர்ந்தால் எனக்
கொள்ளை மானிடம் எங்கும் குழீஇ இரைத்து
எள் இடற்கும் இடம் இலை என்னவே
தொள்ளைப் பூமி முழுதும் துதைந்தவே

#167
கூய போது பிரேதக் குழி விண்ட
வாயின்-நின்று வல்லே மரி மானிட
மேய புற்றிடை நின்று விரைந்து எழூஉம்
ஈயல் போல் மொய்த்து இரைத்து எழுந்தார் அரோ

#168
மண்ணின்-நின்று அங்கு உயிர்த்த மனுக் கணம்
எண்_இல் கோடியர் என்பதை அல்லது
விண் நிலாவு விபுதர் கணிப்பினும்
ஒண்ணுமோ அதன் உண்மை தெரிக்கவே

#169
தூக்கம் நீங்கியவாம் எனத் தூளி-நின்று
ஆக்கை பெற்று உயிர் பெற்றவர் அந்தரம்
நோக்கி வானவர் போற்றிய நோன் கழல்
கோ_குமாரனைக் கண்டனர் கோது_அற

#170
கண்ட போது இரு கைத்தலம் சென்னியில்
கொண்டு இறைஞ்சிப் பரவசக் கூத்தராய்
மண்டு பேர்_அன்பு மல்கி வழிந்து எனப்
பண் தரும் துதி பாடினர் ஓர்சிலர்

#171
பேயும் கண்டு அறியாப் பெரு வஞ்சக
மாயம் கண்ட மனத்து எமை வாழ்வித்த
நேயம் கண்ட நிரஞ்சன மேனி ஐங்
காயம் கண்டு கரைந்திடுவார் சிலர்

#172
தொத்து இருக்கும் நறு மலர்ச் சோலை வாய்
மெய்த் திரு_குருதித் துளி வேர்த்ததும்
முத்திரைக் குருசு ஏறிய மூர்த்தமும்
இத் திரு_படிவம்-கொல் என்பார் சிலர்

#173
பால சூரியன் போல் ஒளி பம்பிய
சீலம் ஆர்ந்த திரு_முகச் சேவையே
சாலும் நித்திய சாமிபர்க்கு ஆனந்தம்
போலும் என்று உளம் பூரிப்பர் ஓர்சிலர்

#174
கண்_இலாரில் கவிழ்ந்து கடும் சிறை
நண்ணி நின்ற நமையும் திருவுளத்து
எண்ணி மீட்டு இங்கு இனிதின் ஈடேற்றிய
புண்ணியத்தைப் புகழ்ந்து உரைப்பார் சிலர்

#175
தொழுவர் ஓர்சிலர் தோத்திரம் பாடி நின்று
அழுவர் ஓர்சிலர் அண்ணல் பதாம்புஜத்து
உழுவல் அன்பு அருச்சித்து உயிரார்ப்பணக்
கிழமை பூண்ட கிறிஸ்தவர் ஆயினார்

#176
ஏனையோர் நிலை என் என்று விள்ளுவல்
வான் இலா மழை முன்றில் வயங்கிய
ஞானபாநுவின் சந்நிதி நாடிய
ஈன கீடம் எனத் துடித்து ஏங்கினார்

#177
தெய்வம் இன்று சிருட்டியும் இன்று எலாம்
ஐ வகைப் பெரும் பூதத்தில் ஆய்த்து எனப்
பொய் வம்பு ஓதிய புல்லியரும் இனிச்
செய்வது என் என்று உலைந்து தியங்கினார்

#178
மாறிமாறிப் பிறவி வரும் எனக்
கூறிக்கூறி மருட்டிய கொள்கையோர்
ஈறு_இல் துன்பத்துக்கு எங்கு அகல்வேம் எனாப்
பாறிப்பாறி நின்று உள்ளம் பதைத்தனர்

#179
அஞ்சிடாமல் அகம்ப்ரமம் என்று உரைத்து
எஞ்சிடாது மண்ணானவர் ஈசனைச்
செஞ்செவே கண்டு தீ விட நாகத்தின்
நஞ்சு_உண்டாரில் தியங்கி நடுங்கினார்

#180
உலகில் பல் வகைப் பொய் மதத்து உற்று உழன்று
அலகு_இல் தீ_வினை யாத்த அமார்க்கர்கள்
இலகு நீதி எதிர்ந்தமை கண்டு எங்கும்
விலகு மார்க்கம் இன்று ஆகி வெருண்டனர்

#181
குன்றமே மலையே குகையே புதர்
துன்று சூழல்களே எமைத் தோன்றுறாது
இன்று காக்க ஒல்லாது-கொலோ எனா
நின்று கூவி நெடிது உயிர்த்தார் அரோ

#182
ஆய காலை அருள் துற்று கிருபாசனம் ஒரீஇத்
தூய நீதி அழல் காலும் மணி துற்று அரியணை
மீ எழுந்தருளி வீற்று இனிது இருந்த விமலன்
சேய் அவிழ்த்தனர் ஓர் செம் முறை ஜெகம் குலையவே

#183
புத்தகச்சுருள் விரித்து உலகு பூத்த எவரும்
இத் தலத்து அருகு எமக்கு எதிரில் எய்துக எனா
எத் தலத்தவர் செவித்தொளையிலும் எளிது உற
வித்தகத் திரு_இதழ்ப் பவளம் விண்டனர் அரோ

#184
வார்த்தை அங்கு அது திகழ்ந்திட வயங்கு புனித
மூர்த்தி சந்நிதியின்-நின்று உடன் முளைத்து முடுகித்
தீர்த்தனுக்கும் நரருக்கும் இடை தீத் திரள் செறுத்து
ஆர்த்து நின்றது உலகத்தவர் அகம் கருகவே

#185
கோர வெம் கனல் தழைத்து எதிர் கொளுத்த அதனால்
பாரகம் குழுமு மன்பதை பதைத்து உளம் வெரீஇத்
தூர நின்று பரிவுற்று உயிர் துடித்தனர் இனிச்
சார ஓர் புகலும் இன்று என மனம் தளரவே

#186
அக்கணத்து அகில லோக சரணாலையர் தம்
பக்கம் நின்றவரை நோக்கி முதிர் கோதுமை பயன்
மிக்க நல் மணி திரட்டி நம் மேல் நிலைய சேர்
தொக்கு வைம்-மின் அஃது ஏதையும் நீர் சோர விடலீர்

#187
வறிய புன் பதரை வன் களையை வைத் திரள்களைச்
செறிய வாரி அடையக் கொதி கொள் செம் தழலிடை
எறியு-மின் என இசைத்தனர் இசைத்த பொழுதே
பொறி எழுந்தன கரிந்தன பொரிந்த புவனம்

#188
வன சரோருக மலர்ப் பதம் இறைஞ்சி மகிழ் பூத்து
அனகன் ஏவு பணியைச் சிரம் அணிந்து உழையராம்
பனவர் ஓர்சிலர் இழிந்த அது பார்த்தனன் உளம்
சினவி வந்தவர் புரிந்தமை எதும் தெரிகிலேன்

#189
பழுது_அறும் குணம் மெய் அன்பினொடு பத்தி கனியத்
தொழுது நின்றவர் எலாரையும் விசும்பு சுலவிக்
குழுமி நின்று உரறு கொண்டல் கொடு போயது இவண் மற்று
அழுதுநின்ற அனைவோரும் விடுபட்டனர் அவம்

#190
பூதலத்து விடுபட்டு அயர் பொலாத குழுவைக்
காதலித்து உடன் விழுங்குவல் எனக் கடுகி வாய்
மேதினித் திடர் பிளந்த விடரூடு விரவிப்
பாதலத்து எரி தவழ்ந்து புகை பம்பியது அரோ

#191
இன்னவாறு விடுபட்டவரிலே ஒருவன் யான்
மன் இரும் புவி பிளந்ததும் மருங்கு என் அடியின்
இன்னல் கூர் நரக பாதலமும் எட்டியது எனக்கு
உன்ன_அரும் திகில்பிடித்தது உடன் உண்மை உரவோய்

#192
மீக் கிளர்ந்த மழை முன்றிலின் விளங்கிய பிரான்
நோக்கினார் இடையறாது எனை அ நோக்கு அயில் கொள் வேல்
தாக்கினால் என இனைந்து உயிர் தளர்ந்து தமியேன்
ஆக்கையும் குலைகுலைந்து அறிவு அழிந்தனன் அரோ

#193
என் இரும் பெரிய தீ_வினைகள் யாவும் இருள் போல்
முன் அணைந்து உளம் வெருட்டுவன முற்றும் முரணிப்
பின்னிடைந்த என் அக_கரி பிறங்கி எரி போல்
துன்னி நின்று சுடு வாதை புகலும் துணையதோ

#194
சகல லோகமும் நிறைந்த சருவேசர் சநிதிக்கு
அகல ஓட எனில் எங்ஙனம் அடுக்கும் அலது ஓர்
புகலும் இல்லை உயிர் பொன்றலும் இன்று என்று பொரும
இகலி ஏகிய கனா நனவு எதிர்ந்தது எனையே

#195
கனவு உறழ்ந்த பய பீதியுறு காட்சி கணமும்
நினைவில் வந்து முன் நிகழ்ந்திடுதல் போல நிலவும்
மனது புண்பட இனைந்து உயிர் வருந்தி வசம்_இல்
தனுவும் இவ்வணம் நடுங்கும் இது காண்டி தகவோய்

#196
என்று இவாறு கனவன் சொலி இறுத்தலும் எதிர்
நின்ற வேதியனும் என்னை-கொல் பயப்படுதல் நீ
மன்றல் நாயகன் மகா கருணை வாரிதியை ஏன்
சென்று கூடலை இது என் உன் மதி செப்புதி எனா

#197
ஐய கேள் அளியன் எத்தனம் இலா அமைதியில்
வையகத்து இறுதி நாள் குறுகி வந்து பிடியாக்
கையரோடு எனை விடுத்தது என கால் அருகிலே
வெய்ய பாதலம் விழிப்பட வெடித்தது புவி

#198
நீல் நிறக் கரு முகிற்கு இடை அமர்ந்த நிருபர்
ஆனனக் கதிர் அலர்ந்த இரு நேத்திரமும் என்
ஊனகத்து உருவ நோக்கிய உருத்த முக வெம்
கானகத்து வயமாவின் இரு கண் பொறிகள் போல்

#199
ஆதலால் இனி அசாத்தியம் இரக்ஷை அளியேற்கு
ஓதலாவது உளது ஒன்றும் இலை என்றும் உலவாப்
பாதலாக்கினி எனக்கு உரிய பங்கு பரிவு என்
ஈது எலாம் அயதி ஈட்டு பயன் என்று உரைசெய்தான்

#200
கடின சித்தன் கனாத் திறம்
முடியக் கேட்டனை முன்னவற்கு
அடிய நின் மனத்து ஆயது என்
நொடிதி என்றனன் நூல்_வலான்

#201
மற்று இவன் புகல் வாய்மையால்
உற்றது என் உளத்து ஓர் பயம்
அற்று அதாயினும் ஆரிய
முற்றும் நம்பினன் முதல்வனை

#202
தீக்க வல்ல வெம் தீ_வினை
போக்க வல்லதும் புண்ணியம்
ஆக்க வல்லதும் அறுதி நாள்
காக்க வல்லதும் கருணையே

#203
என் உளத்து இயல்பு ஈது எனாப்
பன்னினான் பரமார்த்திகன்
அன்னது ஓர்ந்து அருளாளனும்
பின்னர் மற்று இது பேசுவான்

#204
கடை யுகத்து எழு காட்சி கண்டு
உடையும் நெஞ்சன் உறும் துயர்
அடைய நன்கு அறிந்தாய் வழிக்கு
இடை மறந்திடல் எம்பி நீ

#205
காட்சி தொக்க இக் கடி மனை
மாட்சி கண்டு மனத்துள் வைத்து
ஆட்சி_செய்பவர் அருள் வழி
நீட்சி என்று நினைத்திடார்

#206
அனையது ஆதலின் அன்ப இ
மனையின் மாட்சி மதித்து நல்
நினைவில் நேரும் நெறிச் செலீஇ
முனைவன் நாடடை மொய்ம்பினோய்

#207
பத்தபாலனராம் பரி
சுத்த ஆவியின் துணை உனக்கு
எத்திறத்தினும் இயையுமால்
சித்த சஞ்சலம் தீர்தி நீ

#208
ஈச நேசம் இயைந்த மெய்த்
தேசிகன் இவை செப்பியே
ஆசி கூறி அனுப்பினான்
மாசு_இலானும் வழுத்துவான்

#209
அகத்து இருள் இரிந்து ஓட அருள் மொழிச் சுடர் ஏற்றி
மகத்துவ நெறி காட்டும் வலவ இ மனை முன்றில்
இகத்தையும் இனிதாகப் பரத்தையும் எதிர் காட்டி
மிகத் தெருட்டினை ஐய விள்ளுவது அறியேனே

#210
பேர்_உதவியை உள்ளும் பெற்றிமை அலது யான் ஓர்
நேர் உதவிடு கைம்மாறு உளது-கொல் நினக்கு என்னா
ஆர்_உயிர் அனையானுக்கு அன்பின் அஞ்சலிசெய்து
சீர் உயர் கதி சேரும் செம் நெறிக்கொடு போனான்
**வியக்கியானி அரமனைப் படலம் முற்றிற்று

@15 சுமைநீங்கு படலம்

#1
விதிவிலக்கு இகந்து ஈட்டு வினைச் சுமை சுமந்து ஒல்கி
முதுகு உளுக்குறுமேனும் இடுகிய முடுக்கேனும்
சதி எதும் அணுகாமே சமைத்துள ஈடேற்ற
மதில் இரு மருங்காக வழி இனியன போனான்

#2
காவலன் அருள் சேய் செங்கமல மெல் அடி தோய்ந்த
தா_அரு நெறியூடு தனி வரும் மறைவாணன்
பா வரு திரு_நாமப் பதிகம் இங்கு இதமாக
மேவர இனிது ஓதி விரைகுவல் என உன்னா

#3
கண்ணிய நறும் தேனில் கன்னலில் மதுரிக்கும்
பண் நிலவிய கீதம் பயில் இசையொடு பாடிப்
புண்ணிய குருநாதன் பொன் அடி விழி நீரால்
மண்ணி அன்பு அலர் தூவி ஏகினன் வழிபட்டே

#4
இப் பரிசு இவன் ஏக எதிர் ஒரு சிறுகுன்றம்
ஒப்பது ஓர் உயர் பூமி உளது என அதை நாடி
அப் பனவனும் ஓடி அணுக அத் திடர் மேலே
துப்பு உறழ் குருசு ஒன்று தோன்றுவது எதிர் கண்டான்

#5
மற்று அதன் அருகு எய்தி மானத விழியாலே
கொற்றவன் ஒரு சேய் அக் குருசினில் அறையுண்டு
முற்று உகு செம் சோரி முழுகிய திரு_மேனி
குற்றுயிரொடு நையக் கண்டனன் ஒரு கோலம்

#6
அக்கணம் வெரிந் மீது உற்று அடு வினை நனி தொக்க
பொக்கணம் விழுந்து ஒல்லை பன்முறை புரண்டு ஓடிப்
பக்கலில் உறும் ஈமப் படு குழியிடை ஆழ்ந்து
புக்குழி தெரியாமல் போயது புதைபட்டே

#7
விஞ்சிய கொடும் சும்மை விழுதலும் மறைவாணன்
நெஞ்சகம் மகிழ்ந்து யாக்கை நிமிர்ந்து நின்மல தேவின்
மஞ்சன் இங்கு உதித்து ஈட்டும் வரம்பு_இல் புண்ணியத்தாலே
உஞ்சனன் அளியேன் என்று உருகி உள் உவந்து ஏத்தி

#8
மன்பதை உயிர் வாழ வரும் அருள் மணி மல்கும்
அன்பு உததியை நோக்கி ஆவியின் அனல் துற்றி
என்பு நெக்கு உளம் மாழ்கி இரு விழி புனல் கொள்ளப்
பொன் புரை சரண் நீழல் புக்கனன் புகலுற்றான்

#9
சொல் ஒன்றால் அனைத்து உலகும் தோற்றுவித்தாய் தோற்றியவை
எல்லாம் இங்கு ஒருபடித்தாய் இன்றளவும் நின்று இயல
வல்லாய் நீ ஓர் வரம்பு வைத்தாய் உன் வல்லமையைப்
புல்லேனோ சொல்லிப் புகழ்ந்து உரைக்கும் போதத்தேன்

#10
உருட்டுவாய் வையகத்தை ஒரு நொடியில் உலகினொடும்
சுருட்டுவாய் ககனத்தைச் சூழ் சுடரை நிறுத்துவாய்
திருட்டு வாய் மனத்தினரைத் திரை ஆழியிடை அமிழ்த்தித்
தெருட்டுவாய் அடியரை உன் திறஞ் செப்பற்பாலதோ

#11
ஆக்கவும் வல்லவன் நீ இங்கு ஆக்குவித்த அனவரதம்
காக்கவும் வல்லவன் நீ பின் கருதும் கால் கணப் பொழுதில்
போக்கவும் வல்லவன் நீ இப் பொல்லாங்கு பொறுத்து முடி
சாய்க்க வரும் திறன் என்னே தருமத்தின் தனி மூர்த்தி

#12
எப் பொருட்கும் இறை நீ மகேசனும் நீ என்று இருக்கச்
செப்பு_அரிய பெரும் துன்பம் உனைச் சேரும் திறன் என்னே
ஒப்பு_அரிய திரியேகத்து ஒருவா உன் உள் அன்பின்
வெப்பம் மிகும் அனல் அன்றோ இவ்வாறு விளைத்ததுவே

#13
நீதியால் மனு நாசம் நேரும் எனப் பிணை நின்று
சாதியால் எந்தாய் உன் தண் அளியின் தகையேனும்
ஆதியான் நீ படும் பாடு அத்தனையும் அறிந்து உள்ளம்
பேதியாது உனை இங்ஙன் விடுத்ததுவே பெரிது அம்மா

#14
வாழ்வாராம் நரப் புலையர் வந்து நடு நின்று ஒருவர்
தாழ்வாராம் அவர் பொருட்டுத் தாதை முறை தப்பாமல்
போழ்வாராம் பட்டையத்தால் பொன்றி ஒரு பரமசுதன்
வீழ்வாராம் ஈது என்னை வேந்தன் செங்கோல் முறைமை

#15
வான் நாடு தொழுது இறைஞ்சும் மகிமை எலாம் புறம் நிறுவிக்
கான் ஆடு மலர்க் குழல் ஓர் கன்னி கருப்பாசயத்து உற்று
ஊன் ஆடும் உடல் எடுத்து இங்கு உயிர்ப்பலி நேர்ந்து உதவினை நீ
ஆ நாடற்கு எளிதோ நின் அன்பு நிலை அச்சோவே

#16
மூன்று ஆய கவடு உடைய முது மூலத் தனிப்பொருளே
தேன் தோயும் மலர்ப் பொழில் வாய்த் திரு_உள்ளம் துயர் மேவி
ஊன் தோயும் திரு_மேனி உதிர வெயர் உகுத்ததும் போய்
ஆன்றோய் இத்தனை துயரும் வேண்டுமோ அச்சோவே

#17
பாவிகளில் பிரதான பாவி கொடும் பாவி முழுப்
பாவி துணிகரப் பாவி பகுத்தறிவு_இல் நின்மூடப்
பாவி விசுவாசம் இலாப் பாவி அதிசண்டாளப்
பாவி யான் வந்து அடைந்தேன் குமரேச பரிந்து அருளே

#18
உசுவாசம் இனி இலை என்று உயிர் ஒடுங்கி உடல் துருத்தி
நிசுவாசம் அகல்-காறும் நின் அன்பை நெகிழவிடா
விசுவாசம் எனக்கு அருளி வியன் உலக மயல் அளைந்த
பசு வாசனையை அகற்றிப் பதி உலகம் பரிந்து அருளே

#19
கைம்மாறும் உள-கொல்லோ கணிப்பு_அறு நின் பேர்_உதவிக்கு
எம் ஆவி உடல் பொருள் மற்று இவை ஒரு மூன்றையும் இனே
தம்மான் நின் அருளுக்கே தக்கணையாச் சமர்ப்பித்தேன்
வெம் மாய வினை தொலைத்து உன் வீட்டு உலகம் கூட்டுகவே

#20
ஆவலொடும் அருள் வேத அற நெறியைக் கடைப்பிடித்து
ஜீவலயம் வரும் எனினும் திரு_அடிப் பற்று ஒழியாமே
பூவலயத்திடை உனக்காய்ப் பொன்றும் ஒரு சான்றாகக்
காவல நீ அடியேனைக் கடைக்கணிக்கக் கடவாயோ

#21
இன்னன துதி பகர்ந்து இறைஞ்சும் எல்வையில்
பொன்_நிலத்தவர் ஒரு புனிதர் மூவர் போந்து
அன்னவன் விழிப்படீஇ அஞ்சல் நின்-வயின்
மன்னுக நம் சமாதான மாண்பு என்றார்

#22
மூவரில் ஒருவராம் முதல்வன் முந்தி உன்
ஜீவனுக்கு அழிவுசெய் தீய வெவ்_வினை
யாவையும் தொலைத்தனம் இடர்ப்படேல் எனாத்
தா_அரும் கருணையில் சாற்றினார் அரோ

#23
உந்து பேர்_அன்பினால் உருகி ஆங்கு அவன்
கந்தையைக் களைந்து ஒரு கவின் கொள் வெள் உடை
விந்தையாய்ப் புனைந்தனர் விசித்த வெம் கொடும்
பந்தம் இற்று உக நடு நின்ற பண்ணவன்

#24
மற்றொரு தூயவர் மகிழ்ந்து வேதியன்
நெற்றியில் ஒரு குறி நிலவக் கோட்டி விண்
பற்று செம் நெறி திகழ் பயணப் பத்திரம்
தெற்றென அருளி மற்று ஈது செப்புவார்

#25
செம் நெறி இது எனத் தெரிக்கும் ஆதலின்
உன் நெறிக்கு உறுதுணையாம் இது ஓர்ந்து நீ
நல் நெறிப்படின் வரும் நவை இன்றாம் விரைந்து
இ நெறி கடைப்பிடித்து ஏகற்பாலையால்

#26
புண்ணிய நகரை நீ பொருந்து போது அவண்
நண்ணிய வாயிலோர்க்கு இதனை நல்கிடின்
உள் நிலவிட உனை உய்ப்பராம் எனத்
திண்ணிதின் உணர்த்தி நீ சேறி என்றனர்

#27
இ வகை மூவரும் எதிர்ந்து தொண்டனுக்கு
உய் வகை உவந்து அருள் புரிந்து அ ஒல்லையில்
செவ்விதின் மறைந்தனர் சிந்தை உள் உளே
நைவரும் அடியரை நாடும் நம் பிரான்

#28
கரந்தமை வேதியன் கருதிக் கண் கணீர்
சொரிந்து இரு கரம் தலை சூடித் தோத்திரித்து
அரந்தை நீத்து அகம் களித்து அடியனேனையும்
புரந்தமையே அருள் புதுமை என்றனன்

#29
வெரிந் உறு சும்மையை விழுத்தி வெண் துகில்
பரிவொடு நல்கியோர் பயணப் பத்திரம்
தெரிவுற அருளிய சீர்மை யாவையும்
பிரிவு_அற உள்ளினன் மறப்பு_இல் பெற்றியான்

#30
இத்தகு சிலுவையை எய்தும் முன்னர் யான்
சித்த சஞ்சலச் சுமை சுமந்து தேம்பிய
அத்தனை துயரமும் அகன்றதே அஃது
எத்தனை பெரிய பாக்கியம் என்று ஏத்தினான்

#31
புல் இயல் உலகம் ஈயாத பொற்பு உறு
நல் இயல் மெய்ச் சமாதானம் நண்ணுமாறு
அல் இயல் மனத் தெளிவு அருளிக் காத்த அ
எல்லை_இல் கருணையை இதயத்து உள்ளினான்

#32
காண்தகும் இரும்பினைக் கவரும் காந்தம் ஒத்து
ஆண்டகை திரு_அருள் அகத்தை ஈர்த்திட
மாண் தகு சாதனம் வகுத்துக் காட்டிய
சேண் தரு நெறிக்கொடு திருமினான் அரோ
**சுமைநீங்கு படலம் முற்றிற்று

@16 துயிலுணர்த்து படலம்

#1
விள்_அரும் தீ_வினை விளைத்த வெம் துயர்
தள்ளுறப்படுதலில் தளர்ச்சி இன்றியே
உள் உறும் உவகை முன் உந்த உந்தலால்
கள்ளம்_இல் உணர்ச்சியான் கடிது போயினான்

#2
அருத்தியில் பற்பல் யோசனை அகன்று போய்க்
கருத்து_இல் புன்_மாக்களால் கடப்பதற்கு ஒணா
வருத்தம் என்று ஒரு தட மலையை வான் உறத்
திருத் தகு வேதியன் தெரியக் கண்டனன்

#3
அம் மலைச் சாரலை அடுத்து அங்கு ஓர் சிறை
மும்மலத் தளையொடு முடங்கிப் பாந்தள் போல்
அம்ம கேடு உணர்கிலா அசடர் மூவர்-தாம்
கைம்மிகு துயில்கொளக் கருதி நோக்கினான்

#4
ஐயகோ இவர் நிலை அளிய ஆழியான்
வெய்ய கோபாக்கினி சுலவு மேலைநாள்
உய்யவோ மதி துயில் உணர்த்தல் நன்று எனா
மெய் அவாவுடன் அடுத்து உரத்து விள்ளுவான்

#5
அந்தோ அந்தோ என் இது உறக்கம் அறிவில்லீர்
முந்து ஓராதே வந்த பின் எண்ணும் முழுமூடச்
சந்தாபத்தால் என் பயன் உண்டாம் தலை தூக்கி
நந்தா இன்ப நல் நெறி சேர்-மின் நமரங்காள்

#6
உடலை உருக்கிக் குருதி வடித்திட்டு உயிர்தந்த
கடலை நிகர்க்கும் கருணை இருப்பைக் கருதாமே
புடவி மயக்கில் சுழல விடுக்கும் புலை மார்க்க
நடலையை நச்சிச் சுடலை புகாதீர் நமரங்காள்

#7
மஞ்சன் மகாதேவற்கு ஒரு வள்ளல் மனுவேலன்
கஞ்ச மலர்த் தாள் தஞ்சம் என்று உள்ளம் கசியாமே
வஞ்ச மனப் பேய்க்கு அஞ்சலி நல்கல் மதியோ-கொல்
நஞ்சு அமுதாகக் கொள்வது நாசம் நமரங்காள்

#8
சிந்தனை இன்றிக் கண்படை கொள்வீர் தெறு காலன்
வந்து எதிர் நிற்பின் என்-கொல் செய்கிற்பீர் மதியில்லீர்
இந்த மயக்கைச் சிந்தும் இரக்ஷைக்கு இது காலம்
நந்திடும் முன்னே நம்பனை நாடும் நமரங்காள்

#9
இன்மையின்-நின்றும் ஆன்ம விவேகத்து எழில் கொண்ட
ஜென்மம் எடுத்தீர் மெய் வழி கண்டும் தெருமந்து
கன்ம வசத்தால் இன்று ஒருமிக்கக் கவிழ்கின்றீர்
நல் மதியோ இத் துன் மதி சொல்லும் நமரங்காள்

#10
செல்கலிர் இன்னே சிந்தை திரும்பும் சிற்றின்பம்
அல்கல்_இல் துன்ப ஆழி அமிழ்த்தி அடுவிக்கும்
மல்கு மெய்ஞ்ஞான சிற்சுக போகம் வரைவு இன்றி
நல்கு கிறிஸ்து எம்மான் அருள் நாடும் நமரங்காள்

#11
நின்று சுகிக்கும் ஆத்தும வாழ்வை நினைகில்லீர்
பொன்று உடல் இங்கு ஓர் புற்புதம் என்னும் பொருள் உன்னீர்
தின்று கொழுத்துத் தீச் சிறை வேட்டுத் திரிகின்றீர்
நன்று இதுவாமோ பேதையரோ நீர் நமரங்காள்

#12
வெம்பும் மிருத்தாம் ஆழி கிளம்பி விடுமா உள்
அம்பி அலைக்கச் செய்வன செய்யாது அலை கூம்பின்
கொம்பில் உறங்கும் கொள்கையர் ஆனீர் குணம் நாடில்
நம்பனை நம்பிக் கும்பிடும் கூவி நமரங்காள்

#13
தீ மலி கும்பி ஊடு புகுத்தித் தெறு தீமை
ஆம் அவை யாவும் சேர வெறுத்திட்டு அருளாளன்
கோமகன் ஏசு சாமி கிறிஸ்து குமரேசன்
நாமம் வழுத்தி நல் வழி கூடும் நமரங்காள்

#14
மேக்கு உயர் வாழ்வும் ஈடணை யாவும் விடுபட்டு இங்கு
ஆக்கை தளர்ந்தே சாக்கிடை ஆகி அலமந்து
மீக் கிளர் மூச்சும் விக்குளும் மேவி விழி குன்றி
நாக் குழறா முன் நம்பனை வாழ்த்தும் நமரங்காள்

#15
கலங்கலிர் வஞ்சப் பேய் இடுவித்த கடும் மாய
விலங்கை அறுக்கத் தக்கது இது என் கை மிளிர் கட்கம்
இலங்கு அருள் வேந்தன் ஆணை தலைக்கொண்டு எழுந்து உள்ளம்
மலங்கலிர் ஆகிச் சேசுவை நம்பி வழிக்கொள்-மின்

#16
காலம் விரைந்து தூமம் நிகர்ப்பக் கடிது ஓடும்
சீலம் அறிந்து சிந்தை திரும்பித் திரு_உள்ளம்
சால மதித்து மெய் வழி கூடில் தகை சான்ற
மேல்_உலகத்தைச் சேருவிர் என்றும் விளிவு இன்றால்

#17
உலகை மயக்கிக் கலகம் விளைத்திட்டு உயிர் மாய்க்கும்
அலகை கருச்சித்து அடரும் நெருக்குற்று அரியேறு
சுலவுவதைப் போன்று இதை உணர்வு அற்றுத் துயில்கின்றீர்
விலகி உயற்குத் தருணம் விழித்து விரை-மின்னோ

#18
இத்தகையான வித்தக போதம் எடுத்து ஓதிப்
பத்தன் விளிக்க நித்திரை பங்கப்படுமாறு
கத்துவது என் நீ சொற்றவை முற்றும் கனவு என்னாப்
பித்துறு பேதை விண்டு துயின்றான் பிணமாக

#19
எஞ்சாது எம்பி ஏன் இரைகின்றாய் இரு கண் போல்
துஞ்சாவாய் மற்று யாண்டு படைத்தாய் துயர் உண்டு என்று
அஞ்சேல் செல் நீ தூங்குவல் சற்று இங்கு அயர்ந்து என்னா
விஞ்சா நின்ற தூக்கம் விளைத்தான் மிகு சோம்பன்

#20
ஏங்கி இரங்கிக் கூ விளி கொண்டு இங்கு எமை உய்யத்
தாங்குதி போலாம் எப் பொருளும் தம் தானத்தில்
ஊங்கு தரிக்க உற்று அறியும் கண்டு உணர்க என்னாப்
பாங்கு உணர்வு_இல்லாத் துணிகரனும் கண்படை கொண்டான்

#21
மற்று இவர் சொன்ன வாசகமும் தீ வரும் என்று
சொற்றவை கொள்ளாத் துணிகரமும் கண் துயில் கொள்ளும்
பெற்றிமையும் கண்டு உன்னத இன்பம் பெற நாடும்
நல் தவன் நெஞ்சில் தன் வழி கூடி நவில்வானால்

#22
என்னே என்னே கைவரும் மோசம் எதிர்காட்டி
முன்னேயாகச் செம் நெறி கூடி முடுகும்-மின்
இன்னே என்னப் பன்னிய செம் சொல் இயல்பு எல்லாம்
கொன்னே போக்கி நித்திரை கொள்ளும் குணம் அம்மா

#23
தேகம் எடுத்து என் ஆயுள் படைத்து என் திகழ் செல்வ
போகம் அடுத்து என் பல் கலை கற்றுப் புகழ் பெற்று என்
மாக தலத்து ஜீவ சுகத்தை மதியாமே
ஊகம் விடுத்துச் சாகும் மனித்தர் உலகூடே

#24
காவலன் ஆணை பேணலர் ஜீவ கதி மார்க்கம்
மேவலர் சொற்ற மெய் உரை கொள்ளார் விழி துஞ்சிச்
சாவை விளிப்பார் இவரை உணர்த்தும் தகவு ஓரில்
கூவல் இறைத்து வீண் விழல் உய்க்கும் கொள்கைத்தால்

#25
வகுத்துவகுத்துச் சொல்லிய வாய்மை மதிகேடர்
பகுத்து உணர்வு இல்லார் ஆதலின் அன்றோ பழுது என்னா
உகுத்தனர் எல்லாம் கவிழ்த்த குடத்தின் உழுந்தே போல்
அகத்து உறல் இன்றிப் போயது இவர்க்கு உய்வு அரிது அம்மா

#26
இன்னம் நினைத்தே பச்சை மரத்து ஏறிடும் ஆணி
என்னும் வகைத்தாய்த் தெய்விக போதம் இகல் இன்றித்
தன்னுள் அழுந்தத் தண் அருள் தந்து தனி ஆவி
மன்னும் நலத்தை உன்னி வழுத்தி வழி போனான்
**துயிலுணர்த்து படலம் முற்றிற்று

@17 அமார்க்கப் படலம்

#1
ஆயிடை ஒருபால்-நின்று மடுத்த ஓர் வழிவந்து அண்மி
ஏய பேர்_அழகு வாய்ந்த ஈடேற்ற மதிலைத் தாண்டி
மாய சாலகனும் பூண்ட மாய வேடனும் என்று ஓது
தீயர் ஓர் இருவர் ஜீவ பாதையில் திருமி நின்றார்

#2
அங்கு அவர்-தம்மைக் காணா ஆத்துமவிசாரி நீவிர்
எங்கு உறைகின்றீர் நும் பேர் யா எது குறித்துச் செல்வீர்
பங்கம்_இல் அடுக்க வாயில் வழி வராப் பான்மை என்னீர்
அம் கண் வானகத்து வேந்தன் ஆணையை அறியீர் போலும்

#3
சேய் உயர் கதியைக் கூட்டும் செம் நெறி முகப்பு வாய்ந்த
வாயிலை விடுத்து வேறு ஓர் வழி நுழைபவர் எல்லாரும்
மாயம் ஆர் திருடர் என்று மறைமொழி வகுத்துக் கூற
நீயிர் அ நியமம் மீறிப் புகுவது நீர்மைத்து அன்றால்

#4
என்ன ஆண்டு உரைத்தலோடும் இருண்ட வன் மனத்தர் யாங்கள்
மின் என மிளிர்ந்து குன்றும் வீண் மகிமையிலே தோன்றி
மெல் நடை பயின்று மேலாம் விழுத் தவ வேடம் பூண்டேம்
தொல் நெறி விடாது பற்றிச் சுருதி மார்க்கத்து வந்தேம்

#5
எட்டிரண்டு அறியார் போலும் எண்ணம் ஒன்று இன்றி வாயில்
விட்டு இடை வழியில் சேர்வோர் விண்புலத்து அமரர் கோமான்
கட்டளை இகந்து நின்ற கள்ள மார்க்கத்தர் ஆய
துட்டர் என்று இகழ்ந்து பேசத் துணிந்தனை தருமம் அன்றால்

#6
சருக்கரை தின்று பித்தம் சாந்தம் ஆம் என்னில் கைத்த
கருக் கிளர் வேம்பு தின்று கழித்திடக் கருதுவோர் யார்
சுருக்கம் இக் குறுக்கு மார்க்கம் என்பது துணிந்து வந்தேம்
நெருக்குறும் வாயில் சுற்றிச் சுழல்வதே நீர்மைத்து அன்றால்

#7
உற்பவ பேதமான உபநதி பல ஓர் ஆற்றில்
பொற்பு உறப் பொருந்தி ஏகிப் புணரியில் கலக்குமா போல்
அற்பத்தில் பேதமான அரு நெறி அநேகம் வேத
விற்பத்தி நெறியைக் கூடி வீட்டுலகு அடையும் அன்றே

#8
மார்க்கம் இங்கு எதுவானாலும் மனம் மொழி மெய்களாலே
பார்க்கு ஒரு முதலாய் நின்ற பரமநாயகனைப் போற்றிப்
போர்க்கு மெய்ஞ்ஞான வேட புராதன முறை சாதிக்கும்
தீர்க்கரே அன்றோ மேலாம் சிற்சுக போகம் துய்ப்பார்

#9
மரம் பயில் குரங்கு போல மார்க்கங்கள்-தோறும் வாவித்
திரம் பயிலாத சிந்தை திரிய விட்டிடாது செவ்வே
உரம் பயில் உடுமு போலும் ஒருதலையாக முன்னோர்
பரம்பரை நெறியைப் பற்றில் பயன்படும் இம்மை மாதோ

#10
கண்ணையே கண்ணாக் கொண்டு காக்கின்ற இமையைப் போலப்
புண்ணிய மூர்த்தி எல்லாப் புவனமும் புரக்கும் மாட்சி
எண்ணலை போலும் எம் ஊர் ஒழுக்கினுக்கு இசைய நின்ற
பண்ணவர் ஆய எம்மை ஒறுப்பரோ பரிவு_இலார் போல்

#11
வெவ் இடர் உழத்தல் இன்றி வேறு அதர் பிடித்து உன்னோடும்
ஒவ்வ வந்து உற்றேம் என்னா உள்ளுளே புழுங்குகின்றாய்
அவ்வியம் இரும்பைத் தேய்க்கும் அரம் என அரிதில் பெற்ற
செவ்விய ஆக்கம் எல்லாம் சிதைக்கும் என்று அறியாய்-கொல்லோ

#12
இ நின்ற நிலையில் எம்மோடு இணை அன்றி ஏற்றம் இல்லாய்
முன் நின்ற வழியும் எம்மின் முடுகுவாய்_அல்லை என்னாக்
கல் நின்ற நெஞ்ச வஞ்சக் கள்வர்-தாம் புகலக் கேட்டு
வெந் நின்ற சுமடு நீத்த வேதியன் விளம்பலுற்றான்

#13
கண்_இலான் கருத்து_இலான் ஓர் சித்திரம் கவினத் தீட்டும்
வண்ணமாம் புலவர் நீதி வாக்கியம் எடுத்துக் காட்டிப்
புண்ணிய பாவம் துய்க்கும் பலாபலம் புலப்படுத்தி
நுண்ணிய தரும நீவிர் நுவலுதல் அழகிற்று அம்மா

#14
தலப் பெருமையும் நீர் பூண்ட தவப் பெருமையும் ஜந்மித்த
குலப் பெருமையும் வீண் செல்வக் குப்பையால் மலிந்த கோலா
கலப் பெருமையும் என்று இன்ன கனாத் திறம் கருதில் கங்குல்
உலப்புற ஒழியுமா போல் ஒருங்கு அவிந்து ஒழியும் அன்றே

#15
அயில் எயிற்று அரவு உள் ஈட்டும் அழல் விடம் அனைய நெஞ்சீர்
குயிலும் இ மாய சால கோலத்தின் குணங்கள் எல்லாம்
வெயில் முனம் மஞ்சள் போல் வெளிறுமால் கால தண்டம்
பயிலும் அப்பொழுது என் செய்வீர் ஏழைகாள் பாவம்பாவம்

#16
கள்ளம்_இல் நெஞ்சும் நெஞ்சில் கலந்த மெய்ச் சொல்லும் சொல் ஒத்து
எள்_அரும் ஒழுக்கும் தத்தம் உள_கரிக்கு இசைந்துளாரே
வள்ளல் எம் இளங்கோமான் செம் மலர்_அடிச் சுவடு தோய்ந்த
ஒள்ளிய நெறி சென்று அந்தத்து உயர் பர கதியில் சேர்வார்

#17
முறைத் திறம் பிறழா நித்தம் முத்தி சாதனமாய் உள்ள
அறத் திறம் பயின்று தூயர் ஆதல் விட்டு அகத்தை மூடிப்
புறத் தவ வேடம் பூண்டு நடித்தலால் தோலைப் போர்த்து
மறத் திறம் பயிலும் வேங்கை வன் தொழில் மானும் அன்றே

#18
வேட்டுவன் புதல் மறைந்து விடாது புள் சிமிழ்த்தல் போலக்
காட்டும் இத் தவ வேடத்தில் கரந்து உலகு இன்பம் கௌவும்
கேட்டுளீர் சுருதி உண்மை கிளப்பினும் உணரீர் நன்மை
வீட்டுதிர் என்று நீங்கா விழுமமே விழைந்து நின்றீர்

#19
மருள் பரம்பரையினோடும் மறை நெறி மயங்கும் ஆயின்
இருள் நனி இயங்கும் வானத்து இரும் கதிர் இரவி முன்னர்த்
தெருள்_இலா மனத்தீர் நுங்கள் தீ_செயல் ஒருவீர் ஆகி
அருள் வழிப் பட்டேம் என்றல் அகந்தையின் மடமையாமால்

#20
இ நிலம் புரந்து நிற்கும் இரக்ஷண்ய கிரியில் தோன்றி
மன்னு பல் நதியும் ஒன்றாய் மருவி ஓர் முகமாய் ஓடி
உன்ன_அரும் பரமானந்த உததி புக்கு ஒடுங்கும் நீர் சொல்
அன்னிய கான்யாறு எல்லாம் அளறு புக்கு அழுந்தும் அன்றே

#21
எதிரெதிராகச் செல்லும் இடை நெடும் தூரம் உள்ள
நதி நதம் ஒருங்கு கூடா கூடினும் நாமம் வேறாம்
கதி_அறு மார்க்கத்தோடு கதழ் எரிக் கவிழ்த்து மார்க்கம்
எதிர் உறீஇப் பொருந்தும் என்றல் ஏழமைப்பாலதே ஆம்

#22
வேத மார்க்கத்தின் மேய வேதியர் ஒழுக்கம் வேதம்
ஓதற நெறியைப் பற்றி உற்பவ தோடத்தாலே
சாதகமான பாவம் சருவிடாது அகற்றி ஒல்லும்
தீது_இல் நல் கருமம் யாவும் சிந்தையால் செய்தல் வேண்டும்

#23
அகில காரணராம் தூய ஆண்டகைக்கு அடங்காது ஈட்டு
சகல பொல்லாங்கும் உள்ளிச் சஞ்சலித்து அழுது உள் நைந்து
புகலிடமான யேசு புண்ணிய பலத்தை நாடி
இகலி முப்பகையை வென்று இங்கு இடை நிலாது ஓடல் வேண்டும்

#24
ஒளிக் குறி வாயிலூடு புகுந்து ஒருவழிப்பட்டு உள்ளம்
தெளிக்கும் நல் உரை கேட்டு ஆன்ம தீக்கை பெற்று அளவு_இல் இன்பம்
அளிக்கும் நற்கருணை ஆய ஆர்_அமிர்து உண்டு வேந்தன்
விளிக்கும் நாளளவும் தூய விதிவிலக்கு ஓம்பல் வேண்டும்

#25
ஜீவன் முத்தருக்கு நல்கும் திவ்விய சிந்தை ஞானம்
மேவரும் குணங்கள் தீர்க்க விசுவாசம் விரதம் சீலம்
தா_அரும் நலங்கள் எல்லாம் தந்து அருள் புரிந்து காக்கும்
தேவ நல் ஆவி உள்ளம் திகழ்தர ஜெபித்தல் வேண்டும்

#26
இ வகை ஜீவ மார்க்கத்து இயல்வதே ஜீவன் முக்தர்
செவ்வி என்று அறி-மின் ஈண்டு செப்பிய இவற்று ஒன்றேனும்
ஒவ்வல்_இன்று உம்-பால் இந்த உண்மை வற்புறுத்தும் என்னை
அவ்வியன் என்று தூறும் அவமதி அழகிற்று அம்மா

#27
கண்டிலிரோ என் நெற்றி கவினும் ஓர் ராஜ சின்னம்
பண்டைய கந்தை நீக்கிப் பரிவின் நல்கிய இத் தூய
வெண் துகில் கையில் ஈதோ விளங்கு சாஸனம் இ எல்லாம்
அண்டர் நாயகனே பாலித்து அருளிய அருள் பேறாமால்

#28
மிருத்து எனும் நதியைத் தாண்டி வியன் திரு_நகர வாயில்
அருத்தியில் கண்டு சேரும் அளவை இ அடையாளத்தால்
திருத் தகு பரமராஜன் திரு_அடித் தொழும்பன் என்னாக்
கருத்துற அறிந்து உள் உய்ப்பர் கணிப்பு_அரும் கடைகாப்பாளர்

#29
இத் திற அடையாளங்கள் எவர்க்கு இலை அவர்-தாம் ஈசன்
முத்தி மா நகர வாயில் முகப்பு உற அடுத்த போதும்
வித்தக விமலன் சொற்ற விதிவிலக்கு ஓம்புகில்லாப்
பித்தர் என்று எரிபாதால பிலத்திடைப் புகுத்துவாரால்

#30
ஆரணம் சொன்னவாறு இங்கு அடுத்தனன் அளியனேன் யான்
சோர மார்க்கத்து வந்து சுவர் ஏறிக் குதித்தீர் நீவிர்
காரணம் கருதி என்னைக் கடைக்கணித்து அருள்வர் நும்மைக்
கோர வெம் சிறையில் உய்ப்பர் முடிவு_இல் எம் கொற்ற வேந்தன்

#31
வேதியர் அல்லீர் கள்ள உள்ளத்தீர் விபுத ராயன்
ஆதரம் பெற்றீர் என்றற்கு அடையாளம் யாதும் இல்லீர்
கோது ஒரீஇ நன்மை கூடும் குணமும் இன்று ஆதலாலே
வேதனை உழக்க நின்றீர் வேறு இனிப் புகல்வது என்னே

#32
பொருள் இலார்க்கு இல்லை இந்தப் பூ_உலகு அது போல் யாண்டும்
அருள் இலார்க்கு இல்லாது ஆகும் அ உலகு என்ன ஆன்றோர்
தெருள் உரையேனும் கொண்டு தேடலீர் அருளை வாளா
இருள்_உளார் ஒளியைப் பேணார் என்பது சரதம் ஆமால்

#33
மறம் குலாம் மனத்தீர் இன்னே திரும்பு-மின் மரபின் ஞானத்
திறம் குலாம் அநுமானத்தின் திரவியம் கொள்-மின் போர்த்த
புறம் குலாம் தவ வேடத்தைப் போக்கு-மின் புனித மார்க்கத்து
அறம் குலாம் விரத சீலம் அகத்து உற அநுட்டித்து உய்ம்-மின்

#34
காயத்தை விடும் முன் உள்ளக் கள்ளத்தை ஒருவி மேற்கொள்
மாயத்தை உதறித் தூய வளம் மலி பரம கானான்
தேயத்தை நோக்கிச் சென்று ஜீவ மா நதியின் புண்ய
தோயத்தைப் பருகி என்றும் தொலைவு_இலா இன்பம் துய்ம்-மின்

#35
இற்று இதே அமையுமேனும் இட்டம் என்று இயம்பி வேத
நல் தவன் வழியைக் கூடி நனி விரைந்து ஏகலோடும்
சொல் திறம் அறியார் ஆய சோர மார்க்கத்தர் தம்மில்
எற்று இவன் துணிவு என்று எள்ளி எதிர் உரையாது சென்றார்

#36
குக்கல் வால் மட்டை கட்டி நிமிர்ப்பினும் கோணல் தீரத்
தக்கதோ மூடர் உள்ளத் தன்மையும் அன்னதேயாம்
பக்குவ நிலத்தில் அன்றிப் பாழ்படு கருங்கல் பாறை
உக்கவை நல் வித்தேனும் பயன்படாது ஒழியும் அன்றே

#37
களங்கம்_இல் மதியைக் காணும் கண்_இலாவவர் தம்பாட்டில்
விளங்கு முள்பன்றி போல விடாப்பிடியாக ஓடி
வளம் கெழு தடத்தை நீங்கி வருத்தம் என்று உரைபெற்று ஓங்கு
துளங்கல்_இல் கிரியைக் கிட்டி ஏங்கினர் துணுக்கமுற்றார்

#38
வெருவரும் காட்சித்தாய வெற்பு இதன் மீது செல்லும்
அரு நெறி பிடித்து யார் இ அவஸ்தையை அடைவர் என்னாப்
பெரு வழி பிரண்டு பாலும் பிரிந்து போவதைக் கண்டு அந்தோ
இருவரும் பிரிந்து சென்று அங்கு இடைவழிப் பிணமாய்ப் போனார்

#39
பிரிந்த அப் பெரு வழிக்குப் பெயர் நாசம் மோசம் என்பர்
விரிந்த மோசத்தின் மாய சாலகன் விழுந்தான் வேடம்
புரிந்தவன் நாசம் எய்திப் புதை இருள் மலிந்த கானில்
திரிந்து இடர் உழந்தான் பின்னர்த் திரும்பினார்_இல்லை யாண்டும்

#40
பேச_அரும் வருத்தம் துன்பம் பிறங்கினும் பிதாவின் சித்தம்
ஈசனார் செயல் எல்லாம் என் ஈடேற்றத்து இசையும் என்னா
நேசமோடு அமைய வேண்டும் நிலை பிசகிடுவர் ஆயின்
நாசம் மோசம் பொல்லாங்கு நரகும் வாய் திறக்கும் அன்றே

#41
இடையில் வந்து இடையில் போன இருவர்-தம் கதி ஈது ஆக
உடையவன் திரு_வாக்கு ஒன்றே உறுதுணையாகக் கொண்டு
நடை வழி பிடித்துச் சென்ற நலம் கிளர் மறை_வலாளன்
மிடை தரு வருத்தம் என்னும் வியன் கிரி அருகர் வந்தான்
** அமார்க்கப் படலம் முற்றிற்று

@18 ஜீவபுஷ்கரிணிப் படலம்

#1
அங்கண் ஓர் சிறை மீக் கிளர்ந்து உயர் விசும்பு அணவி
மங்குல் தோய்ந்து எழில் மறிதரத் தண் நிழல் மருவிக்
கொங்கு உயிர்த்து வான் மீன் எனப் பன் மலர் குழுமும்
பொங்கர் ஒன்று உளது ஆதுலர் புகலிடம் போலும்

#2
வேங்கை சந்தனம் கார் அகில் தேக்கொடு மிடைந்த
கோங்கு சண்பகம் மாப் பலா அத்தி குங்குலிகம்
ஓங்கும் ஏழில் ஐம்பாலை குங்குமம் புல ஓமை
பூம் குருந்து அசோகம் தமரத்தை பூம் கடம்பு

#3
வன்னி பாதிரி இலவங்கம் வன்மரை வகுளம்
புன்னை வாதுமை இருப்பை வான் தொடு மடல் பூகம்
தென்னை ஆமலகம் கடுத் தான்றி திந்திருணி
பொன் இணர்ப்படு கொன்றை அச்சுவத்தம் ஆல் புன்கு

#4
புலம் தொகுத்த பல் ஜாதிய விருக்கங்கள் பொதுளி
நலம் தொகுத்த பன் மலர்க் குவை நால் திசை கமழ
நிலம் தொகுத்த மன்பதைக்கு எலாம் அகம் மகிழ் நிலவப்
பலம் தொகுத்து உதவிடுவது ஓர் பைம் பொழில் பழுவம்

#5
பொங்கு ஜீவபுஷ்கரிணியின் புதுப் புனல் தேக்கி
அங்கு உரித்த புல் பூண்டு தண்டலைக் குலம் அனைத்தும்
கொங்கு உலாய் வரும் வசந்தம் மென் கால் படும் கோட்பால்
பங்கம்_இல் பசும்பொன் மயம் ஆயது அப் பழுவம்

#6
அண்ணல் வானகத்து அரசன் இ அகல் இடம் புரக்கும்
தண் அளிக் குடை கவிந்தனவாம் எனத் தயங்கிக்
கண் அகன்ற எப் பாங்கரும் கவினுறக் கவிந்து
நண்ணுவார்க்கு உறு வெப்ப நோய் தணிக்கும் அ நறும் கா

#7
முந்து முத்தலைச் சிகரியின் முளைத்து மூதுலகின்
பந்தம் நூறிடு ஜீவ மா நதி முகம் படிந்து
விந்தையாய் நர ஜீவர்க்கு விழும நோய் துடைக்கும்
மந்தமாருதம் மலிந்தது அ மது மலர்ச் சோலை

#8
அலர்ந்த செவ்வியில் அகத்து எழும் அளிய மென் குரலில்
புலர்ந்து அடைந்தவர் விடாய் தணித்து உள்ள எப் பொருளும்
உலர்ந்த வான் பயிர்க்கு உதவும் ஓர் மழை என உதவி
மலர்ந்த செய்கையில் வள்ளலைப் பொருவும் மாண் பொதும்பர்

#9
மண் தலத்து உற முடங்கு தாள் ஊன்றி வாய் மலர்ந்து
விண்டு தூ மலர்க் கள் துளி வடித்து மெய் அரும்பித்
தண் தளிர்க் கரம் விரித்து உயர் சினைத் தலை தாழ்த்திக்
கொண்ட செவ்வியில் பரவு தொண்டரைப் பொரூஉம் கொழும் கா

#10
புண்ணியன் திரு_அடி மலர்க்கு அன்புசெய் புனிதர்
உள் நிகழ்ந்த மெய்ப் பத்தியின் ஒள்ளிய செயல் போல்
வண்ண வான் தருக் குல மலர் நறு மணம் மலிந்து
கண் அகன் புவி முழுவதும் நறும் கடி கமழும்

#11
பொன்_நிலத்து அரசன் திருவோலக்கப் பொதுவின்
மன்னு பல்லியம் கலித்து எனச் சினை-தொறும் வதிந்த
பல் நிறத்த புள் இனம் சிலம்பிய ஒலி பம்பித்
துன்னுவோர் உளம் களிப்புறச் செவிக்கு இன்பம் தொகுக்கும்

#12
வனம் அடங்கலும் போது அகம் வரி அளி மருவும்
வன மடங்கலும் போதகக் குருளையும் மயங்கும்
கனம் அடங்கலும் போது அகவும் களி மயில்கள்
கன மடங்கலும் போதகம் தரும் பல காட்சி

#13
அமரர் யாவரும் கை புனைந்து இயற்றிய ஆதி
குமர நாயகன் திருமணப் பந்தலோ குறிக்கில்
தமர நீர் உலகத்து வாழ் சபை எம் பிராட்டி
விமல லீலை உய்யானமோ யாது என விரிப்பாம்

#14
இனைய கற்பகப் பொதும்பரின் நடுவணது இயைந்த
நனை மலர்த் தட வாவியைச் சிந்தையுள் நாடில்
கனை கடல் புவி முழுவதும் கதிக் கரை ஏறும்
புனையும் வாசகம் அன்று இது புராதன சுருதி

#15
ஆழி நாயகன் ஞானத்தில் அருளில் தூய்மையினில்
வாழி அன்பினில் ஆழ்ந்து நீர் நிறைந்து நிர்மலமாய்ப்
பாழி அம் புவி ஆத்துமப் பயிர் வளம் சுரப்ப
ஊழியூழி பாய்ந்து உறுவது ஜீவ நீர் உதகம்

#16
ஜீவனுக்கு உலவா ஒரு நித்திய ஜீவன்
நாவினுக்கு அமுதச் சுவை நினைவிற்கு நறும் தேன்
தீ_வினைக்கு ஒரு மருந்து வண் சிறை அளி முரல் பைம்
காவினுக்கு அணி ஆயது இச் சீவ நீர்க் கங்கை

#17
புனிதம் ஆயது புண்ணியம் பொலிவது பாவத்
துனி தவிர்ப்பது சுகிர்தத்தை விளைப்பது துய்க்கும்
மனித ஜீவரை வானவர் ஆக்கிடும் வலத்தது
இனிதின் எங்கணும் சுரப்பது நாடுவோர் எவர்க்கும்

#18
பாசம் வீசிய பான்மைய பளிங்கு எனத் தெளிந்த
தேசு உலாம் முழுமதிக் கதிர் ஒருவழித் திரண்டு
மாசு_இலா மடு எனப் பெயர் வதிந்தன அனைய
ஆசு_இல் வெண் மணல் குவால் பொரூஉ மலை புரள் கரைய

#19
ஜீவ மா நதி தீரத்தை அடுத்தலில் செழிப்புற்று
ஓவு_இலாதது சுரப்பது அத் தூய நீரூற்றாம்
ஆவி வேட்டு வந்து அருந்துவோர்க்கு ஆன்ம நோய் அகலும்
தா_இல் நித்திய சாம்பிராஜ்ஜியம் வந்து சாரும்

#20
வான் இழிந்து வந்து இம்பரை மருவிய மதுர
மான பான நீராக இங்கு அமைந்த தெள் அமுதம்
ஞான போனக நராத்தும ஜீவ சஞ்சீவி
தீன ரக்ஷணை அருள்வது ஓர் செழும் சுவைத் தீம் பால்

#21
நிருமலாதிபன் தொன்று-தொட்டு உலவ ஓர் நியமத்
தரும வேலியிட்டு உவப்புடன் தரணியில் சமைத்த
மரு மலிந்த நந்தனவனம் வளம் பெற நாளும்
திரு மலிந்த இச் சீவபுஷ்கரிணி நீர் தேக்கும்

#22
மழை இலாது இலை மா இரு ஞாலத்தின் மரபு
விழையும் ஜீவ ஊற்று இலது எனில் இலை உள் வேரூன்றித்
தழையும் அன்பு நல் தருமமும் தானமும் தவமும்
பிழை_இல் ஞானமும் மெய் விசுவாசமும் பேசில்

#23
மூன்றொருத்துவ தெய்விகம் ஒருங்குடன் முயன்றே
ஆன்ற ரக்ஷணியச் செயல் முடியும் இங்கு அது போல்
வான் தருக் குலம் வசந்த மென் கால் நறு வாவி
மூன்று நல்கும்-மன் நோக்கிய முயன்று அடுப்பவர்க்கே

#24
தண் நிழல் புகப் புறம் சுடு தாபிதம் தணியும்
உள் நிலாவும் மென் கால் பட வேற்றுரு உறழும்
புண்ணியம் பொலி மானத வாவி நீர் புசிக்கில்
நிண்ணயம் பசி தாக சங்கடம் சதா நீங்கும்

#25
காணினும் கலி தீரும் இ வாவியைக் கருதில்
சேண் உலாவிய ஜீவனும் உள் உளே சேரும்
மாண் அரும் புகழ் வழுத்தில் நித்யானந்தம் மருவும்
ஊண் அது ஆக்குவோர்க்கு உறு பயன் உரைக்குமாறு அரிதே

#26
இன்ன தன்மைய எழில் மலர்ச் சோலையை எதிர்ந்தும்
மன்னு ஜீவபுஷ்கரிணியைக் கண்டு உளம் மகிழ்ந்தும்
வன்ன மா குயில் இன் இசைக் குரல் செவிமடுத்தும்
நன்னர் வேதியன் தன் உளம் நயந்து இவை நவில்வான்

#27
கருத்தன் ஆதியில் ஆதமோடு ஏவையைக் கருதி
அருத்தியில் குடி அமைத்த ஏதேன் எனும் அணி கொள்
மருத் தழைத்த கா வனம் இதை மானும் என்று உரைக்கில்
பொருத்தம் இன்று அது தீமையை விளைத்த ஓர் புணர்ப்பால்

#28
பொறி நுகர்ந்திடு புலன் எலாம் புனிதம் ஆதலினும்
செறியும் ஜீவபுஷ்கரிணியின் திறத்தினும் சிந்தை
மறியும் அன்பின் மன் உயிர்க்கு எலாம் நண்பு வாய்ந்ததினும்
நெறியுளார் புகும் உயர் பரதீசு ஒன்றே நிகர்க்கும்

#29
கரை_இல் பேர்_இன்ப லோக யாத்திரிகர்க்குக் கருணை
அரையன் மெய் விடாய் ஆற்றி என்று அமைத்த ஈது ஆயில்
புரை இலாத அப் புரவலன் பொங்கு பேர்_அன்பை
உரையிடற்கு எளிதோ சுவர்க்கத்து உரவோர்க்கும்

#30
தனிதம் ஆர் மது மலர்ப் பொழில் சிறப்பு எலாம் சமைந்த
புனித ஜீவபுஷ்கரிணியின் புண்ணியப் பொலிவு என்று
இனிதின் உள்ளி மற்று இவண் சிறிது இருந்து இளைப்பாறித்
துனி தவிர்ந்து செல்வேன் எனச் சோலையுள் புகுந்தான்

#31
சீர்மையுற்ற செம் கால் வெள்ளை அன்னங்கள் செவிய
நீர்மையுற்ற செவ் வாய் மட மஞ்ஞைகள் நிலவிக்
கூர்மையுற்ற தம் இனத்தொடும் வாவி நீர் குடித்து
நேர்மையுற்றமை கண்டுகண்டு உவந்தனன் நிவிர்த்தன்

#32
மேவி வந்து தீத் தொழில் புரி வெய்ய கோணாய்கள்
ஜீவ கங்கையைப் பருகலும் செம்மறியாடாய்த்
தா_இல் சாந்த நண்பு ஆதிய சற்குணம் தழுவிப்
போவதாகிய புதுமை கண்டு அதிசயம் பூத்தான்

#33
பாதவங்களில் பழுத்த தீம் பழ நறை பருகி
வேத சாகையின் இறால் இழி மிக மதுரிக்கும்
கோது அகன்ற அக் கொழு நறை குழீஇக்குழீஇ நுகர்ந்து
மா தவங்கள் செய்வார் நிலை கண்டு உளம் மகிழ்ந்தான்

#34
பக்கம்-நின்று பேய்க்காற்று அகம் நுழைந்து பாழ்படுக்காது
அக்கரப் படை பற்பல அங்கங்கு நிறுவித்
திக்கு பந்தனம் செய்த அத் திறத்தினைத் தெரிந்து
மிக்கு உரத்து இறை அருள் பராமரிப்பினை வியந்தான்

#35
துங்க வாவியின் துறை-தொறும் வலம்புரி சுப்ர
சங்க மாத் தொனி முழங்கலின் செவித்தொளை தாக்கி
அங்கங்கே துயில் உணர்ந்து எழுந்தவர் பலர் அன்பு
பொங்கி மெய்த் திருப்பணி புரி புதுமையும் கண்டான்

#36
கண்ணும் உள்ளமும் களிப்புறக் கடி கமழ் காவின்
எண்_அரும் பல காட்சி கண்டு இதயம் நெக்குருகிப்
புண்ணியம் பொலி ஜீவபுஷ்கரிணியின் புனிதத்
தண் நறும் புனல் அருந்துவான் வேட்டு அவண் சார்ந்தான்

#37
ஆரணத் துறை அணைந்து நின்று ஆழ்ந்த அ மடுவின்
காரணத்தையும் காவலன் கருணையின் நிறைந்த
பூரணத்தையும் நித்திய ஜீவனில் பொருத்தி
மாரணத் தொடர் அறுத்திடும் மாண்பையும் மதித்தே

#38
சங்கை இன்றி உள் தழைத்த பத்தியின் விசுவாசச்
செம் கை ஆர அத் திவ்விய தீர்த்தத்தை முகந்து
பொங்கும் ஆவலில் பருகினன் அன்பு உளம் பூப்பத்
திங்களில் திகழ்ந்தது முகம் செழித்தது ஜீவன்

#39
மாகம் தீர்ந்து இவண் மருவிய ஜீவ நீர் மாந்தி
ஆகம் தோய்தலும் ஆத்தும விடாய் தணிந்து ஆறாத்
தாகம் தீர்ந்தது தீர்ந்தது பசிப் பிணி சமழ்த்த
சோகம் தீர்ந்தது தீர்ந்தது நர ஜென்ம தோடம்

#40
அருந்தும் நீர் எனத் தெளிந்தது சித்தம் அங்கு அவற்குப்
பொருந்து அகப் புறக் கருவிகள் புனிதமாய்ப் பொலிந்த
வருந்து சாவும் இன்று ஆயது புத்துயிர் மருவித்
திருந்தினான் மறைவாணன் மற்று யாது இனித் தெரிப்பாம்

#41
இனைய சீலனாய் ஆங்கு ஒரு தரு நிழல் இருந்து
சினை அலர்ந்த பூ நறு விரை அளைந்து உலாம் தென்றல்
வினையமோடு தன் மேனியில் படிய விண்ணவர்_கோன்
புனை மலர்க் கழல் தொழுது தோத்திரம் பல புரிந்தே

#42
இத்தனைக்கு நான் அருகனோ என்னை ஈடேற்றச்
சித்தம் வைத்தனர் தம்பிரான் சிந்தனை இனி என்
வித்தகத் திரு வாவி நீர் அருத்திய விதத்தில்
எத்தனைக்கதிகம் நலம் பெற்றனன் என்னா

#43
வள்ளல் நம் குரு ராயனைச் சிலுவை மண்மேட்டில்
கள்ளம்_இல் அகக்கண் கண்ட காட்சியைக் கருதி
அள்ளி அன்பு அலர் தொடுத்து இனிது அமைத்த தேவாரம்
பிள்ளை நீர்மையில் புனைந்தனன் திரு_அடி பிறங்க
** ஜீவபுஷ்கரிணிப் படலம் முற்றிற்று

@19 உபாதிமலைப் படலம்

#1
கஞ்ச மலர்ப் பாதம் இரு கண் கலுழியால் கழுவிச்
செம் சொல் மலர்ப் பாமாலைத் தேம் தொடையலைச் சேர்த்தி
அஞ்சலித்துப் போற்றி அருள் வேண்டி நின்று அங்கு ஆவலுடன்
நெஞ்சாரப் புல்லி வழி கூடினான் நேர் கருதி

#2
கார் ஆர் பூங்கா அகத்தின் கண் ஆர் நிழல் சுகமும்
சீர் ஆர் நறும் சுனையின் தேம் படு தெள் நீர்ப் பயனும்
ஏர் ஆரும் தூய இளம் காலின் தேற்றரவும்
நேராய் உளத்தில் பொறித்து நெறி கூடினான்

#3
செல்வான் வழிமறித்துச் சீறி விட முள் எயிற்றுக்
கொல் வாள் அரவம் குறுக்கு எதிர்ந்த கொள்கை போல்
தொல் வாரிதிப் புவியில் தொக்க பெரும் துன்பம் எலாம்
மல் வாய்த்து நின்ற மலை அடிவாரத்து அணைந்தான்

#4
அ அசலம்-தன்னை அறியாதார் யாரும் இலை
கௌவை நீர் வேலி புடை வளைந்த காசினியில்
ஒவ்வொருவர் உள்ளத்து உயர்வே உயர்வு அன்றிச்
செவ்வே மட்டிட்டு அளவு செப்ப_அரிது தேரும்கால்

#5
தொன்மை உலகில் பாவம் தோன்றிய நாள் தோன்றி எங்கும்
தின்மை பெருகப்பெருக ஓங்கிச் செருக்கு அடைந்து
வன்மை மிகு துன்பம் மனக்கவலை துக்கம் எனும்
தன்மைத் தனிச் சிகரம் மூன்று தடித்தனவால்

#6
கல்லாய் இளக்கம் இன்றித் தீய வினைக் காடு செறிந்து
எல்லோன் சுடர் விளக்கம் இன்று ஆகி எப்புறமும்
அல்லாய் இருள் குழுமித் துர்_குண முள் பூண்டு அளவிப்
பொல்லாத வல் இதயம் போன்று உளது அப் பூதரமே

#7
வட்டமிடும் கிட்டி வரும் வந்துவந்து அச்சுறுத்தும்
கட்டம் விளைக்கும் கடுகடுக்கும் கௌவி உயிர்
நட்டம் செயும் பொல்லார் நல்லார் என்று ஓராத
துட்ட விலங்கு அனந்தம் தொக்கது அந்தச் சூழலே

#8
வான் அளவி நிற்பது எனக் கண்டு மயங்கி மதி
ஈனர் இடர்ப்பட்டு இரிவர் எள்துணையும் எண்ணாது
ஞானம் உறு மாந்தர் நகைத்து எள்ளி மேற்போவர்
கானம் உறு இ விலங்கல் காட்சி அது பல் வகைத்தால்

#9
தீர்க்க விசுவாசிகளே அன்றிச் செகத்து உழல் பொய்
மார்க்கர் எவரேனும் இந்த மா மலையைக் கிட்டி வரில்
பார்க்கவே உள் நடுங்கி மெய் பதறிப் பாழ்ங்குழியில்
சேர்க்கும் மார்க்கம் புகுவர் என்றும் திரும்பாரால்

#10
அண்ட பகிரண்டம் எலாம் போய்ப்போய் அரைநொடியில்
கண்டு வரும் பொல்லாத கல் மனவன் பேய்_குரங்கு
மண்டு பெரும் துன்ப மலை இதன் பேர் கேட்டாலும்
தெண்டனிட்டுக் குன்றித் தியங்கி உயிர் தேயுமால்

#11
செம் தழல் போலக் கொளுத்தும் சிந்தனையை ஜீவியத்தை
எந்த விதம் என்னினும் கை எட்டியைப் போல் ஆக்குவிக்கும்
வெம் தறுகண் பாம்பின் விடம் போல் மதி கெடுக்கும்
இந்த இடுக்கண் மலையின் சாரல் எதிர்வோர் எவர்க்கும்

#12
ஒற்றைச் சுடர்த் திகிரி ஓச்சி உலகு ஆண்ட முடிக்
கொற்றவரும் துன்ப மலைக் கோடு எதிர் கண்டு ஏங்குவர் உள்
பற்று அற்ற ஞான பரிபாகரும் தாம் பார்த்தவுடன்
சற்று உள் கலங்குவர் ஈது என்னே தருக்கு அம்மா

#13
செப்பில் உலகத்து நர ஜென்மம் எடுத்தோர் எவரும்
இப் பெரிய சாரல் புகுந்து ஈடு அழிந்தார் அல்லாது
தப்பினார் இல்லை இது தாண்டின் மகிழ்ச்சி தரும்
ஒப்பு_இல் ஆனந்த மலை ஒன்று அங்கு முன் உளதால்

#14
அஞ்சும் வெவ் இடர் துற்றி அலமரல் தரும் இந்தச்
சஞ்சல மலை முன்றில் நின்று ஒரு தனியாக
வஞ்சம் இல் மறைவாணன் மனம் மிக மறுகுற்று
நஞ்சு அட இனைவார் போல் நைந்து இவை நவில்கின்றான்

#15
எவ்வளவு அதிகம்-கொல் என் உறு பலவீனம்
அவ்வளவு அதிகம் இ அசலமது உயர்வு ஆயின்
எவ்வகை நெடும் தூர ஏற்றம் இங்கு இதை ஏறி
அ வயின் உறு சாரல் அடைகுவன் எளிது அன்றால்

#16
பொன் நகர் புகும் மார்க்கம் பூதர நடுவாக
மின் ஒளி என நேரின் மிளிர்வது மிதி_கொம்பும்
உன்ன ஓர் பிடி_கொம்பும் உளது என அறிகில்லேன்
என் இனிப் புரிகிற்பேன் யாதும் ஓர் துணை_இல்லேன்

#17
பின்னிடைகுவன் ஆயின் உறழ்வது பெரும் மோசம்
நல் நெறி பிசகாமே நனி கடைப்பிடித்து ஏறி
முன்னிடுகுவன் ஆயின் முறை இறை பிறழாத
மன்னவன் ஒரு கை தந்து உதவவும் வருவாரால்

#18
முன் அரி முழை ஒன்றோ எரி கனல் முதிர் சூளை
துன்னினர் அடியர்க்காய்த் துணை புரிதரு தெய்வ
மன்னவன் அஃது ஓரில் வளர் இடர் மலை ஏறிப்
பொன் நில உலகூடு புக அருள் புரியார்-கொல்

#19
அடர் கடுவன தீமை அளவளவிய பூத
உடல் இது விழு-காறும் இடையிடை உறு துன்பம்
இடர் பல உழவாமே இயல்வது முறை அன்றால்
சுடர் உலகு உறின் அன்றோ வருவது சுக நித்யம்

#20
எட்டி மல்கிடு காடோ இன் சுவைக் கனி ஈயும்
துட்ட வெம் சிறை வீட்டில் சோடச உபசாரம்
கிட்டில எனலாமோ கேடு உறும் உலகத்தே
மட்டு_அறு சுக_போகம் விழைவது மடமைத்தால்

#21
அடியவர் உணர்வு_உள்ளார் அசடு_இலர் அவர் மேலே
படிவன பல துன்பம் எனின் உறு பயன் தேரின்
முடிவினில் நலமேயா முறைமுறை அனல் மூழ்கப்
படின் ஒளி நனி மல்கிப் பசுமையுற்றிடு பொன் போல்

#22
ஆதலின் இடையாமே அணி திகழ் பரலோக
நாதனது அருள் ஒன்றே நல் துணை எனக் கொண்டு
போதருகுவன் என்னாப் பொறி ஒரு புலன் ஆகப்
பூதரம் மிசை ஏறிப் போயினன் வழி கூடி

#23
ஓடுவன் நடை கூடி விரைகுவன் ஒரு கீதம்
பாடுவன் மேல் நோக்கிப் பார்த்து உளம் பதைத்து ஏங்கி
வாடுவன் இளைப்பாகி மலங்குவன் இனவாகக்
கோடு உயர் நெறி சேர் செங்குத்து அடி குறுகுற்றான்

#24
கண்டனன் இனி ஏற்றம் கடினம் இ நிமிர் குன்றில்
உண்டு என மலைந்து உள்ளம் முயங்கி நெட்டுயிர்த்து அந்தோ
கொண்டனன் திகிலேனும் குறுகுறு நின்று ஒல்லை
அண்டர்-தம் பெருமானை உள்ளினன் அவலித்தே

#25
விளக்கு உற இருள் ஓடும் விதம் என அருள் துன்னி
உளக் கவலையை நீக்கி உரம் கொடு கால் ஊன்றத்
துளக்கு_அறு திடம் நல்கத் துணிவு வந்து அருள் நாதன்
வளக் கருணையை வாழ்த்தி ஏறினன் மலை முன்றில்

#26
தைவிக கிருபாஸ்தம் தனை முனம் ஈர்த்து ஏக
ஐயம்_இல் விசுவாசம் அன்பு பின் அணைந்து உந்த
மை_அறு திரு_வாக்காம் வச்சிர தண்டு ஊன்றி
மெய்யுறு பலத்தால் அ விலங்கலின் மிசை போனான்

#27
பொறி அயல் விலகாமல் புலன் எதும் விழையாமல்
குறியது தவறாமல் குண நிலை வழுவாமல்
பிறிது எதும் நினையாமல் பிறங்கலின் மிசை செல்லும்
நெறியது பிசகாமல் சென்றனன் நெடும் தூரம்

#28
அடிக்கடி முழந்தாள் நின்று அடருவன் அருள் பற்றிப்
பிடிக்குவன் உரத்து உன்னிப் பெயர்குவன் இனவாகப்
படிக்கு இரக்ஷணை நல்கும் பரன் இயற்றிய செம் தேன்
வடிக்கும் ஒண் மலர் நந்தவனத்தினில் இனிது உற்றான்

#29
கோன் நகர் புக வரும் கொள்கைத்தாய எ
மானவரையும் வழி வருத்தம் மாற்றிடும்
பான்மையில் தாயகம் புரையும் பண்பு உளது
ஊனம்_இல் காட்சியது உவகை பூப்பது

#30
சஞ்சல முடித்தலை தயங்கும் ஆதலில்
விஞ்சிய சுகத்தினை விளைக்குமால் அது
வஞ்சம்_இல் மலர் முகம் காட்டி வாய்த்த தேன்
செஞ்செவே தரும் அன்பர் செவ்வி போன்றது

#31
மன்னு நந்தனவனத்து எழில் மரக்கிளை
பின்னியும் வல்லிகள் பிணைத்தும் பெட்புற
நல் நறும் தழைக் கொடி படர்த்தி நாட்டிய
பன்னகசாலை ஒன்று உளது அப் பாங்கரில்

#32
வருந்திய வேதியன் நிறுத்து அ மாண் எழில்
திருந்திய சாலையில் புகுந்து செவ்விதின்
இருந்து இளைப்பாறினன் இறைவன் பாதத்தில்
பொருந்தும் அன்பு அருச்சனை புரிந்து போற்றினான்

#33
பரமன் அன்று அருளிய பயணப் பத்திர
வர மனோகரத்தினை வாசித்து ஆய்ந்து தன்
கர மலர் சென்னியில் கவின வெண் துகில்
நர மகிபதி தரும் நலமும் உள்ளினான்

#34
அருகனே அல்லன் இத்தனைக்கும் ஆண்டகை
திரு_அருள் மலிந்த அச் செயலின் செவ்வி என்று
உருகினன் துதித்தனன் உவகை மா மதுப்
பருகினன் களித்தனன் அயர்வு பல்கவே

#35
மறந்து உளக் களிப்பினால் மயங்கிச் சோர்வடைந்து
அறம் தவா விப்பிரன் அயர்ந்து தூங்கினான்
இறந்த ஓர் வெகுளியில் தீது என்று எள்ளுவர்
சிறந்த உள் மகிழ்ச்சியின் சோர்வைச் செவ்வியோர்

#36
தூங்கிய வேதியன் துயில் உணர்ந்திலன்
ஓங்கு இரவியும் கதிர் ஒடுக்குவான் எனா
ஆங்கு ஒரு புண்ணியன் அடுத்து உணர்த்துவான்
நீங்க_அரும் அன்பினால் நிகழ்த்துவான் அரோ

#37
வழிபிடித்து இத்துணை வருந்தி வந்து நீ
கழி துயில் விளைப்பது கருமம் அன்று காண்
பழிபடும் மடி குடி கெடுக்கும் பாலது
விழிவிழி ஓடுதி விரைந்து எழுந்து அரோ

#38
ஆம் பரிசு உணர்கிலா அசடராம் எனச்
சோம்பி நீ துயிலும் இத் துணிவு நன்கதோ
போம் பகல் இருள் படாம் போர்க்கும் போது சொல்
மேம்படு நூல் நெறி விளங்கற்பாலதோ

#39
நித்திரை சத்துரு என்னும் நீர்மையை
உய்த்து உணர்ந்திலை-கொலாம் உயிருக்கு உட்பகை
வித்தக விருத்தியைக் கெடுக்கும் வெவ் விடம்
சித்த நோவினுக்கு ஒரு செவிலித்தாய் அரோ

#40
துற்றிய துயில் உணர்ந்து எழுந்து சோம்பு அறும்
சிற்றெறும்பு ஆதியின் சீலம் ஓர்ந்து நீ
கற்று உணர்வு அடை கடைத்தேறுவாய் எனா
உற்ற பேர்_ஆசையோடு உரத்துக் கூவினான்

#41
மீக் கிளர் துடிப்பொடு விளித்த வாசகக்
கூக்குரல் செவித்துளை குறுகி ஒல்லெனத்
தாக்கலும் வேதியன்-தனும் நடுக்கு உறத்
தூக்கம் விட்டு எழுந்தனன் துணுக்குற்று ஓடினான்

#42
பொழுதுபட்டிடும் வரை துயின்ற புன்மையை
அழுதழுது உளம் நினைந்து அழுங்கி ஏங்கினான்
பழுது_அறத் துணை புரி பரம சாஸனம்
முழுது உணர் வேதியன் அவலம் மூடியே

#43
பார்த்திலன் அயல் புறம் பரபரப்புடன்
கூர்த்த செம் நெறிக் கொடு குன்றத்து உச்சியை
வேர்த்து உடல் விதிர்ப்பு உற விரைந்து அடுத்தனன்
சீர்த் தபு மாலையும் செறிந்தது என்பவே

#44
அது பொழுது அச்சனும் அறச்சந்தேகியும்
எதிர்முகமாய் விரைந்து ஓடி ஏங்கி மெய்
விதிர்விதிர்த்து அலறி உள் வெருண்டு மீ உறக்
கதுமென வருவதைக் கண்ணுற்றான் அரோ

#45
அங்கு அவர் அருகு உற அணைந்து தோழன்மீர்
வெம் கொடும் பயங்கரம் விளைந்த மூலம் என்
எங்கு செல்கின்றனீர் எது குறித்து உளீர்
சங்கடம் எவன்-கொலோ சாற்றுவீர் என்றான்

#46
ஆரியன் வினவல் கேட்டு அச்சன் என்னும் அப்
பூரியன் ஐய கேள் புனித யாத்திரை
வீரியம் தரும் என விரும்பி வந்து இவண்
காரியம் பிறிது எனக் கண்டு கொண்டனம்

#47
நாச தேசத்து உளேம் நாங்கள் நல் வழி
ஈசனார் பதி இனிது ஈட்டும் என்று இதில்
ஊசலாடு உளத்தொடும் உலவி வந்தனம்
மோசம் இத்துணை என முன் உணர்ந்திலேம்

#48
உன்ன_அரும் கதி புகுத்து உண்மை நூல் வழி
பின்னி நம் காலடி பிசகிச் சற்று அயல்
மன்னிடில் அதோகதி மடுத்து வல்லிதில்
சின்னபின்னம் படச் சிதைக்கும் காண்டியால்

#49
தா_அரும் உபாதி மா மலையின் தன்மையை
யாவரே தெரிப்பர் உன் இதயம் தேர்ந்ததால்
கேவலர் தம்மில் அக் கிள்ளிக்கீரையாப்
பாவனை செய்வர் வாய்ப் பழக்கம் மட்டிலே

#50
முன் உற முடுகினேம் முறை பிறழ்ந்திடாச்
செல் நெறி செலச்செலத் திகிலும் அச்சமும்
பன்_அரும் துன்பமும் பதைப்புமே அலால்
என் எனும் சஹாயம் ஒன்று எதிர்ந்தது_இல்லையால்

#51
சூல் உறு முகில் மழை துவன்றிப் பெய்து என
மால் உறு திகில் பல வளைந்து துன்பம் மேன்
மேலுற இழுத்தலின் வெருண்டு யாங்கள் இப்
பால் உறத் திருமினேம் பட்டது ஈது என்றான்

#52
அச்சன் ஈது உரைத்திட அறச்சந்தேகியாம்
குச்சிதன் ஆண்டு இரு கோர சிங்கங்கள்
உச்சிதமாய்ப் படுத்து உறங்கக் கண்டனம்
நிச்சயம் தெரிகிலம் விழித்த நீரவோ

#53
அடுத்தனம் ஆயின் எம் அங்கம் பீறி வாய்
மடுத்திடும் கூற்றவன் மறந்து எம் ஆவியை
விடுத்தனனோ எங்கள் மேலையோர் தவம்
கொடுத்தவோ எமக்கு உயிர் யாது கூறுகேம்

#54
என்று உளக் கலக்கமோடு இயம்பினான் இருள்
துன்றிய மனத்து இருவோரும் தொல்_வினை
பின்றை நின்று உந்திடப் பேய்கொண்டார் எனக்
குன்று அதோமுகம் உறக் குப்புற்று ஏகினார்

#55
வெருவியோர் உரைத்த அ வெருட்சி வார்த்தை நெஞ்சு
உருவிட உள் உடைந்து உயங்கி வேதியன்
புரிவது என் இனி அவர் புறமிட்டு ஓடுதல்
கருமம் அன்றால் எனக் கருத்துள் உன்னுவான்

#56
வெறுத்த நாசப் படப்பை விரும்பி யான்
மறுத்து நாடின் மகேசன் சினத் தழல்
இறுத்து ஒருங்கு அற யாவையும் வாய்மடுத்து
ஒறுத்த காலை மற்று உய்குவது எங்ஙனம்

#57
மொழியும் பல் வகை மோசங்கள் முன் உள
வழியிலேனும் நம் மன் அருள் வாய்க்குமேல்
ஒழியும் அங்கு அவை யாண்டு உறின் உன்னத
அழிவு_இல் பேர்_இன்ப ஜீவன் அடுக்குமால்

#58
திருமித் தீக்கு இரையாவதின் சீரிய
தருமப் பாதை பிடிப்பது-தான் நலம்
வரும் அப் பால வருவ வரட்டும் என்று
ஒருமைப்பாட்டுடன் சென்று இவை உள்ளுவான்

#59
அலக்கணுக்கு ஒர் அரு மருந்தாகி உள்
கலக்கம் நீக்கும் கருணைப் பிரான் தரும்
இலக்கணத் திரு_வாக்கின் எழில் சுருள்
புலக் கணைத் தெளிவிக்கும் புதுமைத்தால்

#60
என்ன உன்னி இலங்கு அருள் சாஸனம்-
தன்னை நாடினன் தன்-வயின் காண்கிலன்
பன்_அரும் திகிலோடும் பதைபதைத்து
என் உயிர்க்குயிரை இழந்தேன் எனா

#61
எண்ணியெண்ணி இரங்கும் இடர்ப்படும்
துண்ணென்று ஏங்கும் துடிக்கும் மெய் சோர்வுறும்
புண்ணியப் பொருளின் பொலிவை இனும்
கண்ணில் கண்டு களிப்பன்-கொலோ எனும்

#62
பாதை காட்டி நடத்தும் பவித்திர
சாதனத்தைத் தவறவிட்டேன் எனாக்
காதலோடு பிணங்கும் கரைந்து அழும்
ஏது எனக்கு இனி ரக்ஷை என்று ஏங்கிடும்

#63
சிந்தை மாழ்கும் ஓர் ஜென்ம தரித்திரன்
விந்தையாகப் படைத்த விழு நிதி
புந்தி இன்மையில் போக்கி உலைந்து என
நொந்து இவ்வாறு நுணங்கிய காலையில்

#64
மீ வணக்கிய கொம்பரின் வேய் நறும்
பூ வணக் கொடி பின்னிய பொற்பு உறு
காவணத் துயிலே கவர்ந்திட்டது என்
ஆவணத்தை என்று உள்ளினன் ஆரியன்

#65
ஒல்லையில் தன் உறக்கப் பிழை நினைந்து
எல்லை_இல் பெருமூச்சின் இருதயக்
கல்லை நூறிக் கரைந்து மன்றாடினான்
தொல்லை அம்பரன் சந்நிதி துன்னியே

#66
ஆய போதின் அருள் வழி ஆவியில்
மேயது ஓர் சிறிது ஆறுதல் மீண்டு இனிப்
போய் அவண் துருவிக்கொடு பூதரம்
காயின் அல் படு முன் கடப்பேன் எனா

#67
அறம் குலாம் மனத்து அந்தணன் நந்தனப்
புறம் குலாம் மலர்க் காவணம் போதர
இறங்குவான் விரைந்து இன்னலொடே மனம்
கறங்கு போல் சுழலக் கரைவான் அரோ

#68
ஆவிக்கு ஆறுதல் நல்க என்று ஆக்கு பூங்காவில்
கண் துயின்று ஊன் பொதி காயத்தைப்
பூவில் போற்றிய புல்லியன் ஆகும் இப்
பாவிக்கு எங்ஙனம் வாய்க்கும் பர சுகம்

#69
புவன போகப் புலாலைப் புசிக்கவே
தவனமுற்ற தநுகரணங்களோடு
அவனி சுற்றி அழி மதிக்கு ஆத்தும
கவனம் என்று வரும் கடைத்தேறவே

#70
சாந்தனைக்கும் துணைபுரி சாஸனம்
சோர்ந்து வீழச் சுவரணை இன்றி ஓர்
பாந்தள் போல் துயில் கொண்ட பயித்தியம்
மாந்தருக்குள் உண்டாம்-கொல் இ வையத்தே

#71
ஆக்கை பேணியும் ஆவன ஈட்டியும்
காக்கையே கடனாக் கொண்டு காப்பினும்
போக்கி என்னைப் புறக்கணித்து ஒல்லை மண்
சேக்கை சேரும் அன்று என் செயத் தக்கதே

#72
துட்ட மும்மலச் சேட்டை துதைந்த மெய்
ஒட்டி நிற்பினும் உள் உவர்த்து ஒட்டு_இலார்
சிட்டர் வாவிச் செழும் கமலத்து இலைப்
பட்டு அலங்கு தெள் நீரது பான்மை போல்

#73
ஆன்ம ஊதியம் நாடிலன் ஆகி இ
ஊன் மலிந்த உடல் சுகம் நச்சிய
பான்மை எத்தனை பாழ்படு புன்_மதி
கோன் முறைக்கு இது அணுத்துணை கொள்ளுமோ

#74
நாட்டைச் சேரும் நசை உளரேனும் ஊன்
கூட்டைப் பேண் இஸரேலின் குழாம் முனம்
காட்டைச் சுற்றித் திரிந்து கழிந்த அப்
பாட்டைப் போன்று உளது என் உறு பாடு அரோ

#75
இம்மட்டாக முன்னேறிச் செல்வேன் எனில்
எம்மட்டோ சென்றிருப்பன் அங்கு எட்பக
அம்மட்டு ஓர் உணர்வு அற்று அயர்வு எய்தலால்
மும்மட்டு இ வழிச் செல் துயர் மூண்டதால்

#76
என்று உளக் கசப்போடு அழுது ஏங்கியும்
நன்று அதர்க்கு இரு பாங்கரும் நாடியும்
மன்றல் ஆர்ந்த மது மலர்க் காவணம்
சென்று இறுத்து அவண் தேடினன் செவ்வியோன்

#77
கள் இணர்ப்படு தாது உகு காவணத்து
உள்ளுறப் புகுந்து ஒள் நிதி வைப்பினைத்
தெள்ளிதில் துருவித் துயில்செய்த அப்
பள்ளி உற்று அதன் கீழுறப் பார்க்கையில்

#78
தன் உயிர்க்குயிராய சம்பத்தினை
மன் உயிர்க்குயிராகும் மருந்தினை
என் உயிர்க்கும் இனிய சஞ்சீவியைப்
பொன் உயிர்க்கும் பொலன் சுரங்கத்தினை

#79
விதிவிலக்கின் விளக்கை விசும்பு தோய்
மதியை மண்ணுலகுக்கு என வைத்த மா
நிதியைக் காட்டி நிலவு அஞ்சனத்தினைக்
கதியைக் காட்டும் ஓர் கை வழிகாட்டியை

#80
எண்_அரும் பொருள் ஈது எனக் கண்டெடுத்து
உள் நிகழ்ந்த உரிமையின் முத்தமிட்டு
அண்ணல் நாடு அடைந்தான் என ஆனந்தக்
கண்ணின் நீர் வடித்தான் உள் கசிந்து அரோ

#81
மாண்ட யாக்கை மறுத்து உயிர் பெற்று எனக்
காண்டல் செய்து இரு கைத்தலம் சென்னியில்
பூண்டு நல் உணர்வோடு புரந்தர
ஆண்டகைக்கு இதயாஞ்சலி ஆக்கினான்

#82
இற்று இதே எனக்கு ஈறு_இல் மெய் ஜீவனும்
கொற்றவன் திரு_கோபுர வாயிலுக்கு
உற்ற சான்றும் என்று ஓகையோடு ஒள் நெறி
பற்றி ஏகினன் கோன் முறை பற்றியே

#83
கங்குலூடு இரை தேர்கொடும் கான் விலங்கு
எங்கணும் திரியும் கண் எதிர்ப்படில்
நுங்கும் என்னையும் என்று நுனித்து உணர்
புங்கவன் இடை நின்றிலன் போயினான்

#84
அஞ்சியஞ்சி அலக்கணுற்று ஆரியன்
மஞ்சு உலாம் மலையுச்சி வரா முனம்
எஞ்சி அத்தத்து இறுத்தனன் வான் கதிர்
சஞ்சலத்தில் தரிப்பு அரிது என்னவே

#85
திக்கு அனைத்தும் விளக்கிய செம் கதிர்
மைக் கரும் கடலூடு மறைதலில்
செக்கர் வான் ஒளி தேயும் முன் தீவிரித்து
அக் கிரித் தலை மீது வந்து அண்மினான்

#86
பொழுது பட்டு இருள் பட்டது என் போக்கு இனிப்
பழுதுபட்டிடும் என்னும் பயத்தினால்
அழுது நொந்து அவலத்தொடும் அண்ணல் தாள்
தொழுது நோக்கினன் முற்படு தொல் நெறி

#87
முற்பட நோக்கும் காலை முறைப்படு நெறியின் பாங்கர்
கற்பக உலகை உள்ளங்கை நெல்லிக் கனியில் காட்டும்
அற்புத உருக்-கொல் ஈது என்று அதிசயம் பயக்குமாறு
பொற்பு உற விளங்கித் தோன்றும் புனித மாளிகை கண்ணுற்றான்

#88
தெள்ளிய நறிய தூய செழும் சுதை மிளிரத் தீற்றி
வெள்ளியங்கிரியில் தோன்றும் வியன் நிலை மாடம்-நின்றும்
எள்_அரு மகர யாழின் எழால் மிடற்று ஒலியோடு ஒன்றித்
துள்ளிய மதுர கீதம் செவித்தொளை தொகுத்தது அன்றே

#89
கண்டு கேட்டு உளமும் கண்ணும் களிப்புறீஇக் ககோள நாதன்
மண்டல வனத்து அலைந்து வான் வழி பிடித்துச் செல்லும்
தொண்டருக்கு ஆக்குவித்த துரிசு_இல் மாளிகை ஈது என்ன
ஒண் தவன் கருதி வல்லே உறுவது கருமம் என்னா

#90
பொருக்கென ஏகும் காலை புறத்து உலாம் செக்கர் மாண்டு
கருக்கல் வந்து உற்றதாகக் கானகத்து உழல் விலங்கின்
வருக்கம் நின்று உரற்றும் ஓசை செவித்தொளை மறிதலோடும்
வெருக் கொளீஇக் கலக்கமுற்று வேதியன் கவலலுற்றான்

#91
புந்தி_அற்று அயர்ந்து தூங்கிப் பொழுது வீண் போக்கடித்துக்
கொந்து இருள் படலம் போர்ப்பக் கொடு விலங்கு உழலும் காட்டில்
வந்து இடர்ப்படுவன் பாவ மயல் துயில் விளைத்த மோசம்
இந்தவாறு ஆயது உய்வுக்கு என் இனிச் சூழ்ச்சி மாதோ

#92
என் உறு மதியீனத்தால் இப் பெரும் திகிற்கு உள்ளாகிச்
சின்னபின்னங்களாகச் சிதைவல் என்று அழுங்குகின்றேன்
முன் உறக் காவான் ஆகி இழுக்கியான் பிழையை முன்னிப்
பின்னர் நூறு இரங்கும் என்ற தெருள் உரை பிழையாம்-கொல்லோ

#93
இருண்ட கான் நெறி முன் செல்லாது எதிர் இடையூறுக்கு அஞ்சி
வெருண்டு பின்னிடைவன் ஆகில் விடும்-கொலோ வேந்தன் கோபம்
தெருண்ட மேலவர்-தம் ஜீவன் சிதையினும் அறம் திறம்பி
மருண்டு வையகத்து வாழ்வை மதிப்பரோ மதி_அற்றார் போல்

#94
சந்தேகி அச்சன் என்ற சழக்கர் போல் திரும்பி ஏகில்
வெந்தே நீறு ஆதல் வேண்டும் விண்-நின்று விழு வெம் தீயில்
முந்தே மற்று இதை உற்று ஆய்ந்து முடுகி இ நெறியைப் பற்றி
வந்தேன் இங்கு இடையூறு அஞ்சி மலங்குதல் மடமையாமால்

#95
மறம் எலாம் குடிகொள் நாச தேசத்தை மரு_இல் ஞானத்
திறம் எலாம் அழியும் சிந்தைச் செறிவு எலாம் நெகிழ்ந்து தேயும்
அறம் எலாம் சிதையும் தீரா அனர்த்தமே விளையும் அன்றிப்
புறம் எலாம் நகைசெய்து ஏசும் பின்னிடல் புலமைத்து அன்றால்

#96
திடுக்குறும் இடுக்கண் சேரில் சித்திர தீபம் போல
நடுக்கம் இன்று ஆகி நிற்பர் நல்லுணர்வு உடைய நீரார்
அடுக்குந அடுக்கும் என்றும் ஆண்டகை சித்தம் அன்றிக்
கெடுக்குந எவை மற்று இந்தக் கிளர் நில உலகத்து அம்மா

#97
ஆவது கருதிப் பார்க்கில் அழிவு_இலா ஜீவனோடு
மேவு சாமீப முத்திவீட்டு இன்பம் முதல ஆய
தேவ போகங்கள் எல்லாம் சிறக்க முன் உண்டு பின்னே
சாவொடு கவிழ்க்கும் செம் தீச் சாகரம் உண்டு மாதோ

#98
துனி எலாம் ஒருங்கு கூடி மலை எனத் தொடருமேனும்
பனி எனப் படுமால் தூய பார்த்திவன் அருள் உண்டாயின்
இனி இடைந்து ஏகல் நன்று அன்று இயலும்-மட்டாக முன்னே
தனி எதிரூன்றிப் போதல் தகவு அதே தருமம் ஆமால்

#99
என்று இனவா விசாரி எண்ணமிட்டு இருண்ட கானில்
பொன்று இடர் வருவதேனும் புரவலன் புரப்பர் என்னா
ஒன்றியாய்ச் செல்லும் காலை ஒரு திருத் தேவாரத்தை
நன்றியோடு உள்ளிப் பண்ணோடு இசை பெற நவின்று போனான்

#100
இன் இசை பாடி ஏகும் ஏல்வையின் இரண்டு பாலும்
துன்னிய புதரினூடே சுருங்கிய நெறியின் பாங்கர்
மன் இரு கோர சிங்கம் மறிந்திடும் நிலை கண்டு ஏங்கித்
தன் நிலை கலங்கி நெஞ்சம் துணுக்குறீஇத் தமியன் தேர்வான்

#101
ஆங்கு அவர் கண்டு சொற்ற அடும் திறல் வய வெம் சீயம்
ஈங்கு இவை போலும் என் கண் எதிர்ப்படும் இரண்டும் எஞ்சித்
தூங்குவ அல்ல நின்று துயல்வருகின்ற யாண்டும்
பாங்குற அகலத்தக்க பரிசு எதும் இன்று பார்க்கில்

#102
ஆற்று எதிர்ப்பட்ட துன்புக்கு அளவு_இலை அவற்றால் யான் ஓர்
காற்று எதிர்ப்பட்ட பூளை ஆயினன் கருணை வேந்தன்
தேற்று எதிர்ப்பட்டதால் ஓர் தீங்கு இன்றி வந்தேன் ஈண்டு இக்
கூற்று எதிர்ப்பட்டேன் வாழ்நாள் இன்றொடும் குறுகிற்றேயோ

#103
நேர் உறத் துணிந்து செல்லின் நினைப்பதன் முன்னம் பீறிக்
கோர வெம் பகு வாய் ஆர விழுங்கிடும் கொள்கைத்து அம்மா
ஆர் இவற்று இடையில் சென்று இங்கு ஆவி பெற்று உய்வர் இந்தக்
காரியம் கண்டு அன்றோ அ இருவரும் கடுகி மீண்டார்

#104
உயப்படும் மார்க்கமாம் இ ஓரடித்தடத்தை விட்டு இங்கு
அயல் புறம் விலகி ஏகின் ஆவது அன்று அதோமுகம் கொள்
மயல் படு குழியுள் வீழ்ந்து மடிவது திண்ணம் என்னே
செயப்படும் உபாயம் ஈண்டு திருமுதல் சீரிது_அன்றால்

#105
பண்டு கோளரி வாய் கட்டிப் பத்தனைப் பாதுகாத்த
அண்டர் நாயகன் அலால் இ ஆபத்துக்கு உதவுவார் யார்
உண்டு எனக்கு உறுதி என்னா உள்ளி உள் ஊக்கம் தோன்றித்
தெண்டனிட்டு உரக்கக் கூவி ஜெபித்தனன் சிந்தை ஒன்றி

#106
ஆகுலத்துடன் வான் நோக்கி அழுது மன்றாடிக் கூவும்
காகுளி வானம் எட்டக் கதித்த பேர்_ஓசை கேட்டுக்
கோகுல மாட வீதிப் புறக்கடை குலவிக் காக்கும்
சோகம்_இல் சாவதானி தன் உளே சூழும் காலை

#107
மேக்கு உயர் பரலோகத்து விபுத ராயனை விளித்த
வாக்கு இது வய வெம் சீயம் மறிதல் கண்டு அஞ்சி இட்ட
கூக்குரல் இது என்று ஓர்ந்து என் வார்த்தையைக் குறிக்கொள் என்னா
மீக் கிளர் சத்தத்தோடும் விளித்து மற்று இதனைக் கூறும்

#108
வெம் சின மடங்கற்கு அஞ்சி விளித்தனை போலும் எம்பி
அஞ்சிடேல் அஞ்சிடேல் நீ அரும் தளை காலில் பூட்டிச்
செஞ்செவே தொடரின் மாட்டிச் சிறையிடுவித்ததுண்டால்
விஞ்சி ஓர் தீங்கு செய்ய விறல் இன்று இ விநயம் ஓர்தி

#109
கால் வழி பிசகாது உள்ளம் கலங்காது கடவுள் வேந்தன்
கோல் வழி இழுக்கா வண்ணம் குறிக்கொளீஇ அமைத்த வேத
நூல் வழி உரத்து மத்தி நுனித்து அடி பெயர்த்து வந்து இப்
பால் வழி பிடித்தி நெஞ்சில் பதி இது பரமார்த்தம் காண்

#110
தீயினும் கொடிய கோடி துன்பங்கள் செறினும் ஆவி
மாயினும் ஜீவ மார்க்க வரம்பு நீ இகப்பாய்_அல்லை
ஆயினும் நடு இகந்து ஓர் அணுத்துணை பிசகி ஓர் பால்
சாயினும் தீங்கு வந்து சாரும் என்று அறிதி தக்கோய்

#111
என்று அவன் இசைத்த வார்த்தை எனும் சுவை அமுதத்தோடு
சென்று நின்று உழலும் ஜீவன் செவி வழி புகுதத் தேறி
வென்றி சேர் அரசன் உய்த்த விழுத் திரு_வாக்கு ஈது என்ன
நன்றியோடு உள்ளிப் போற்றித் துதித்து இது நயந்து செய்தான்

#112
கச்சையை இறுக்கிக் கட்டிக் கால் நிலைத்து ஊன்றிக் கையில்
வச்சிர தண்டு ஒன்று ஏந்தி நடுநிலை வழுவா வண்ணம்
உச்சித விசுவாசத்தின் உரம் கொண்டு அங்கு உற்று நோக்கி
நிச்சய நுண் நூல் மார்க்க நெறி கடைப்பிடித்து நின்றே

#113
வான நாயகனை உள்ளி மானதாஞ்சலி வழங்கி
மோனமாய் முன்னிட்டு ஏக முயன்று அடி பெயர்க்கும் போழ்தில்
கானகத்து உழல் விலங்கின் கணம் நிலைகுலைந்து சாயத்
தான வாரணங்கள் ஏங்க முழங்கின தறுகண் சீயம்

#114
முதிர் சினம் திருகிக் கான முடங்கு உளை மடங்கல் எங்கும்
அதிர்பட முழங்கிப் பொங்கி அடுத்தடுத்து உரறி ஆர்ப்ப
எதிரொலி எழும்பி நால் வாய் இரும் களிற்றியானை மூளை
பிதிர்பட உருமின் ஓசை பிறங்கியது அடவி எங்கும்

#115
தெற்றென மறையோன் உள்ளம் துணுக்குற்றுத் திகைத்ததேனும்
நல் தவம் பயின்றதாலே நடுநிலை தவறான் ஆகி
மற்று எதிரூன்றி முன்னே வைத்த கால் பின்வாங்காமல்
வெற்று ஒலி இது என்று எள்ளி நடந்தனன் விறல் கொள் வீரன்

#116
இருட்டை ஊடறுத்து முன் சென்று எதிர் உற அணைந்து சீறி
வெருட்டு வெம் மடங்கல் வாயுள் புக்கு உடன் மீண்டான் என்ன
அருள் துணையாலே அந்த ஆபத்துக்கு அகன்று போனான்
திருட்டு வாய் அலகைக்கு உண்டோ தொண்டனைச் செயிக்கும் தீரம்

#117
பாம்பின் வாய்த் தேரை மீண்ட பரிசு எனப் படருள் மூழ்கித்
தூம்பு உறழ் பகு வாய்ச் சீயச் சுவட்டிடை மறிந்து போந்து
மேம்படு தலத்தின் மேய வேதியற்கு உற்ற வெற்றி
ஓம்படையாகக் காத்த உன்னதத்து ஒருவர் பாற்றே

#118
பொருள் திறன் அறியார் சொல்லும் பொய்யுரைக்கு ஒருகால் சற்று
மருட்டி முன் நின்று மெய்யை மறைக்கும் ஓர் வலி உண்டேனும்
அருள் திறன் உடைய நீரார் அவலத்தோடு உரைக்கும் மெய்மை
தெருட்டுவார் அறினும் தானே திகழ்ந்திடும் செவ்வி உண்டால்

#119
கடும் கத மடங்கல் ஏற்றின் கை தப்பி அகன்று போன
அடும் களிறு அனையான் சித்தம் அமைதலுற்று ஆறி ஜீவன்
நடுங்குற எதிர்ந்த மோச நாசத்தில் உயிர் தந்து உய்த்த
ஒடுங்கல்_இல் கருணைத் தேவை நன்றியோடு உள்ளியுள்ளி

#120
அஞ்சலித்து ஓகைக் கண்ணீர் அவிழ்ந்து தன் அங்கம் போர்ப்பத்
துஞ்சுறா அன்பில் பல்கால் தொழுது தோத்திரித்துப் பாடி
உஞ்சனன் அளியனேன் என்று உவந்து தன் நெறியில் சென்றான்
எஞ்சிய கருக்கல் மாயக் கார் இருள் இறுத்தது அன்றே
**உபாதி மலைப் படலம் முற்றிற்று
** ஆதிபருவம் முற்றிற்று