புறப்பொருள் வெண்பாமாலை

** ஐயனாரிதனார்

@0 பாயிரம்
** கடவுள் வாழ்த்து
** யானைமுகன்

#1
நடையூறு சொல் மடந்தை நல்குவது நம் மேல்
இடையூறு நீங்குவது எல்லாம் – புடையூறும்
சேனை முகத்து ஆள் இரியச் சீறும் முகத்து ஊறும் மதத்து
யானை முகத்தானை நினைத்தால்

#2
எண்ணிய எண்ணியாங்கு எய்துப கண்_நுதல்
பவள மால் வரை பயந்த
கவள யானையின் கழல் பணிவோரே
** நீலகண்டன்

#3
கண் அவனைக் காண்க இரு காது அவனைக் கேட்க வாய்ப்
பண் அவனைப் பாடப் பதம் சூழ்க – எள் நிறைந்த
நெய் ஒத்து நின்றானை நீல_மிடற்றானை என்
கை ஒத்து நேர் கூப்புக
** வெண்தாமரையாள்

#4
தவளத் தாமரைத் தாது ஆர் கோயில்
அவளைப் போற்றுதும் அரும் தமிழ் குறித்தே
** சிறப்புப் பாயிரம்

#5
மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை இருந்த சீர் சால் முனிவரன்
தன்-பால் தண் தமிழ் தா_இன்று உணர்ந்த
துன்ன_அரும் சீர்த்தித் தொல்காப்பியன் முதல்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிருபடலமும் பழிப்பு_இன்று உணர்ந்தோன்
ஓங்கிய சிறப்பின் உலகம் முழுது ஆண்ட
வாங்கு வில் தடக்கை வானவர் மருமான்
ஐயனாரிதன் அகல் இடத்தவர்க்கு
மை_அறு புறப்பொருள் வழால்_இன்று விளங்க
வெண்பா மாலை எனப் பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன் பான்மையின் தெரிந்தே
**நூல்

@1 வெட்சிப் படலம்
** இதனுள் வருவன

#1
வெட்சி வெட்சிஅரவம் விரிச்சி செலவு
வேயே புறத்திறை ஊர்கொலை ஆகோள்
பூசன்மாற்றே புகழ் சுரத்துஉய்த்தல்
தலைத்தோற்றம்மே தந்துநிறை பாதீடு
உண்டாட்டு உயர் கொடை புலனறிசிறப்பு
பிள்ளைவழக்கே பெரும் துடிநிலையே
கொற்றவைநிலையே வெறியாட்டு உளப்பட
எட்டிரண்டு ஏனை நான்கொடு தொகைஇ
வெட்சியும் வெட்சித் துறையும் ஆகும்
** இதன் வகை

#2
வெட்சி என்பது இரு வகைத்து மன்னுறு
தொழிலும் தன்னுறு தொழிலும் என
**(ஓர் உள்வகை)

#3
** கொளு : 1
வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பு இன்றியும்
சென்று இகல் முனை ஆ தந்தன்று

#4
அவற்றுள்
மன்னுறு தொழில் வருமாறு

#5
** வெண்பா : 1
மண்டும் எரியுள் மரம் தடிந்து இட்டு அற்றாக்
கொண்ட கொடும் சிலையன் கோல் தெரியக் – கண்டே
அடையார் முனை அலற ஐ இலை வேல் காளை
விடை ஆயம் கொள்க என்றான் வேந்து

#6
இனித்
தன்னுறு தொழில் வருமாறு

#7
** வெண்பா : 2
அறாஅ நிலைச் சாடி ஆடுறு தேறல்
மறாஅல் மழைத் தடம் கண்ணி – பொறாஅன்
கடுங்கண் மறவன் கழல் புனைந்தான் காலை
நெடும் கடைய நேரார் நிரை
** வெட்சித் துறைகள்

#8
**(வெட்சி அரவம் இன்னது)
** கொளு : 2
கலவார் முனை மேல்
செலவு அமர்ந்தன்று

#9
** வெண்பா : 3
நெடிபடு கானத்து நீள் வேல் மறவர்
அடிபடுத்து ஆர் அதர் செல்வான் – துடி படுத்து
வெட்சி மலைய விரவார் மணி நிரைக்
கட்சியுள் காரி கலுழ்ம்

#10
**(விரிச்சி இன்னது)
** கொளு : 3
வேண்டிய பொருளின் விளைவு நன்கு அறிதற்கு
ஈண்டு இருள் மாலைச் சொல் ஓர்த்தன்று

#11
** வெண்பா : 4
எழு அணி சீறூர் இருள் மாலை முன்றில்
குழுவினம் கைகூப்பி நிற்பத் – தொழுவில்
குடக் கள் நீக் கொண்டுவா என்றாள் குனி வில்
தடக்கையாய் வென்றி தரும்

#12
**(செலவு இன்னது)
** கொளு : 4
வில் ஏர் உழவர் வேற்றுப் புலம் உன்னிக்
கல் ஏர் கானம் கடந்து சென்றன்று

#13
** வெண்பா : 5
கூற்று இனத்து அன்னார் கொடு வில் இடன் ஏந்திப்
பாற்று இனம் பின் படர முன்பு அடர்ந்து – ஏற்று இனம்
நின்ற நிலை கருதி ஏகினார் நீள் கழைய
குன்றம் கொடு வில்லவர்

#14
**(வேய் இன்னது)
** கொளு : 5
பற்றார்-தம் முனைப் படு மணி ஆயத்து
ஒற்று ஆராய்ந்த வகை உரைத்தன்று

#15
** வெண்பா : 6
நிலையும் நிரையும் நிரைப் புறத்து நின்ற
சிலையும் செரு முனையுள் வைகி – இலை புனைந்த
கள் அவிழ் கண்ணிக் கழல் வெய்யோய் சென்று அறிந்து
நள் இருள் வந்தார் நமர்

#16
**(புறத்திறை இன்னது)
** கொளு : 6
நோக்கு_அரும் குறும்பின் நூழையும் வாயிலும்
போக்கு_அற வளைஇப் புறத்து இறுத்தன்று

#17
** வெண்பா : 7
உய்ந்து ஒழிவார் ஈங்கு இல்லை ஊழிக்-கண் தீயே போல்
முந்து அமருள் ஏற்றார் முரண் முருங்கத் – தம் தமரின்
ஒற்றினால் ஆய்ந்து ஆய்ந்து உரவோர் குறும்பினைச்
சுற்றினார் போகாமல் சூழ்ந்து

#18
**(ஊர்க்கொலை இன்னது)
** கொளு : 7
விரை பரி கடவி வில் உடை மறவர்
குரை அழல் நடப்பக் குறும்பு எறிந்தன்று

#19
** வெண்பா : 8
இகலே துணையா எரி தவழச் சீறிப்
புகலே அரிது என்னார் புக்குப் – பகலே
தொலைவு_இலார் வீழத் தொடு கழல் ஆர்ப்பக்
கொலை விலார் கொண்டார் குறும்பு

#20
**(ஆகோள் இன்னது)
** கொளு : 8
வென்று ஆர்த்து விரல் மறவர்
கன்றோடும் ஆ தழீஇயன்று

#21
** வெண்பா : 9
கொடுவரி கூடிக் குழுஉக்கொண்டு அனைத்தால்
நெடு வரை நீள் வேய் நரலும் – நடுவூர்க்
கண நிரை கைக்கொண்டு கை அகலார் நின்ற
நிணம் நிரை வேலார் நிலை

#22
**(பூசல்மாற்று இன்னது)
** கொளு : 9
கணம் பிறங்கக் கைக்கொண்டார்
பிணம் பிறங்கப் பெயர்த்திட்டன்று

#23
** வெண்பா : 10
சூழ்ந்த நிரை பெயரச் சுற்றித் தலைக்கொண்டார்
வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்கு உணியத் – தாழ்ந்த
குலவுக் கொடும் சிலைக் கைக் கூற்று அனையார் எய்த
புலவுக் கணை வழிப் போய்ப் புள்

#24
**(சுரத்துய்த்தல் இன்னது)
** கொளு : 10
அரும் சுரத்தும் அகல் கானத்தும்
வருந்தாமல் நிரை உய்த்தன்று

#25
** வெண்பா : 11
புல் மேய்ந்து அசைஇப் புணர்ந்து உடன் செல்க என்னும்
வில் மேல் அசைஇய கை வெல்_கழலான் – தன் மேல்
கடு வரை நீரின் கடுத்து வரக் கண்டும்
நெடு வரை நீழல் நிரை

#26
**(தலைத்தோற்றம் இன்னது)
** கொளு : 11
உரம் வெய்யோன் இனம் தழீஇக்
வரவு உணர்ந்து கிளை மகிழ்ந்தன்று

#27
** வெண்பா : 12
மொய் அணல் ஆன்_நிரை முன் செல்லப் பின் செல்லும்
மை அணல் காளை மகிழ் துடி – கை அணல்
வைத்த எயிற்றியர் வாள் கண் இடனாட
உய்த்தன்று உவகை ஒருங்கு

#28
**(தந்துநிறை இன்னது)
** கொளு : 12
வார் வலந்த துடி விம்ம
ஊர் புகல நிரை உய்ந்தன்று

#29
** வெண்பா : 13
தண்டா விருப்பினள் தன்னைத் தலைமலைந்த
வண்டு ஆர் கமழ் கண்ணி வாழ்க என்று – கண்டாள்
அணி நிரை வால் முறுவல் அம் மா எயிற்றி
மணி நிரை மல்கிய மன்று

#30
**(பாதீடு இன்னது)
** கொளு : 13
கவர் கணைச் சுற்றம் கவர்ந்த கண நிரை
அவரவர் வினை-வயின் அறிந்து ஈந்தன்று

#31
** வெண்பா : 14
ஒள் வாள் மலைந்தார்க்கும் ஒற்று ஆய்ந்து உரைத்தாற்கும்
புள் வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் – விள்வாரை
மாறு அட்ட வென்றி மறவர் தம் சீறூரில்
கூறிட்டார் கொண்ட நிரை

#32
**(உண்டாட்டு இன்னது)
** கொளு : 14
தொட்டு இமிழும் கழல் மறவர்
மட்டு உண்டு மகிழ் தூங்கின்று

#33
** வெண்பா : 15
இளி கொண்ட தீம் சொல் இள மா எயிற்றி
களி கொண்ட நோக்கம் கவற்றத் – தெளி கொண்ட
வெம் கள் மலிய விளிவது-கொல் வேற்றார் மேல்
செம் கண் மறவர் சினம்

#34
**(கொடை இன்னது)
** கொளு : 15
ஈண்டிய நிரை ஒழிவு_இன்றி
வேண்டியோர்க்கு விரும்பி வீசின்று

#35
** வெண்பா : 16
அம் கண் கிணையன் துடியன் விறலி பாண்
வெம் கட்கு வீசும் விலையாகும் – செம் கண்
செருச் சிலையா மன்னர் செரு முனையில் சீறி
வரிச் சிலையால் தந்த வளம்

#36
**(புலன்அறிசிறப்பு இன்னது)
** கொளு : 16
வெம் முனை நிலை_உணர்த்தியோர்க்குத்
தம்மினும் மிகச் சிறப்பு ஈந்தன்று

#37
** வெண்பா : 17
இறும் முறை எண்ணாது இரவும் பகலும்
செறு முனையுள் சென்று அறிந்து வந்தார் – பெறு முனையின்
அட்டுக் கனலும் அயில் வேலோய் ஒன்றிரண்டு
இட்டுக் கொடுத்தல் இயல்பு

#38
**(பிள்ளைவழக்கு இன்னது)
** கொளு : 17
பொய்யாது புள்_மொழிந்தார்க்கு
வையாது வழக்கு உரைத்தன்று

#39
** வெண்பா : 18
புல்லார் நிரை கருதி யாம் செல்லப் புள் நலம்
பல்லார் அறியப் பகர்ந்தார்க்குச் – சொல்லால்
கடம் சுட்ட வேண்டா கடும் சுரை ஆன் நான்கு
குடம் சுட்டு இனத்தால் கொடு

#40
**(துடிநிலை இன்னது)
** கொளு : 18
தொடு கழல் மறவர் தொல் குடி மரபில்
படு கழல் இமிழ் துடிப் பண்பு உரைத்தன்று

#41
** வெண்பா : 19
முந்தை முதல்வர் துடியர் இவன் முதல்வர்
எந்தைக்கும் தந்தை இவன் எனக்கு – வந்த
குடியொடு கோடா மரபினாற்கு இன்னும்
வடியுறு தீம் தேறல் வாக்கு

#42
**(கொற்றவைநிலை இன்னது)
** கொளு : 19
ஒளியின் நீங்கா விறல் படையோள்
அளியின் நீங்கா அருள் உரைத்தன்று

#43
** வெண்பா : 20
ஆளி மணிக் கொடிப் பைங்கிளிப் பாய் கலைக்
கூளி மலிப் படைக் கொற்றவை – மீளி
அரண் முருங்க ஆகோள் கருதின் அடையார்
முரண் முருங்கத் தான் முந்துறும்

#44
**(வெறியாட்டு இன்னது)
** கொளு : 20
வால் இழையோர் வினை முடிய
வேலனொடு வெறியாடின்று

#45
** வெண்பா : 21
காணில் அரனும் களிக்கும் கழல் மறவன்
பூண் இலங்கு மென் முலைப் போது அரிக் கண் – வாள்_நுதல்
தான் முருகு மெய்ந்நிறீஇத் தாமம் புறம் திளைப்ப
வேல் முருகற்கு ஆடும் வெறி

@2 கரந்தைப் படலம்
** இதனுள் வருவன

#1
கதம் மலி கரந்தை கரந்தைஅரவம்
அதரிடைச்செலவே அரும் போர்மலைதல்
புண்ணொடுவருதல் போர்க்களத்துஒழிதல்
ஆளெறிபிள்ளை பிள்ளைத்தெளிவே
பிள்ளையாட்டொடு கையறுநிலையே
நெடுமொழிகூறல் பிள்ளைப்பெயர்ச்சி
வேத்தியல்மலிபே மிகு குடிநிலை என
அரும் கலை உணர்ந்தோர் அவை பதினான்கும்
கரந்தையும் கரந்தைத் துறையும் என்ப

#2
**(கரந்தைத்திணை இன்னது)
** கொளு : 21
மலைத்து எழுந்தோர் மறம் சாயத்
தலைக்கொண்ட நிரை பெயர்த்தன்று

#3
** வெண்பா : 22
அழுங்கல் நீர் வையகத்து ஆர்_உயிரைக் கூற்றம்
விழுங்கிய பின் வீடு கொண்டற்றால் – செழும் குடிகள்
தார் ஆர் கரந்தை தலை மலைந்து தாம் கோடல்
நேரார் கைக்கொண்ட நிரை
** கரந்தைத்துறைகள்

#4
**(கரந்தை அரவம் இன்னது)
** கொளு : 22
நிரைகோள் கேட்டுச் செய் தொழில் ஒழிய
விரைவனர் குழுவும் வகை உரைத்தன்று

#5
** வெண்பா : 23
கால் ஆர் கழலார் கடும் சிலையார் கைக்கொண்ட
வேலார் வெருவந்த தோற்றத்தார் – காலன்
கிளர்ந்தாலும் போல்வார் கிணைப் பூசல் கேட்டே
உளர்ந்தார் நிரைப் பெயர்வும் உண்டு

#6
**(அதரிடைச்செலவு இன்னது)
** கொளு : 23
ஆற்றார் ஒழியக் கூற்று எனச் சினைஇப்
போற்றார் போகிய நெறியிடை ஏகின்று

#7
** வெண்பா : 24
சங்கும் கரும் கோடும் தாழ் பீலிப் பல்லியமும்
எங்கும் பறையோடு எழுந்து ஆர்ப்ப – வெம் கல்
அழல் சுரம் தாம் படர்ந்தார் ஆன் சுவட்டின் மேலே
நிழல் கதிர் வேல் மின்ன நிரைத்து

#8
**(போர் மலைதல் இன்னது)
** கொளு : 24
வெட்சியாரைக் கண்ணுற்று வளைஇ
உட்குவரத் தாக்கி உளர் செருப் புரிந்தன்று

#9
** வெண்பா : 25
புலிக் கணமும் சீயமும் போர்க் களிறும் போல்வார்
வலிச் சினமும் மானமும் தேசும் – ஒலிக்கும்
அரு முனை வெம் சுரத்து ஆன் பூசற்கு ஓடிச்
செரு மலைந்தார் சீற்றம் சிறந்து

#10
**(புண்ணொடு வருதல் இன்னது)
** கொளு : 25
மண்ணொடு புகழ் நிறீஇப்
புண்ணொடு தான் வந்தன்று

#11
** வெண்பா : 26
வெம் குருதி மல்க விழுப்புண் உகுத்தொறூஉம்
இங்குலிகம் சேரும் வரை ஏய்க்கும் – பைம் கண்
இனம் போக்கி நின்றார் இகல் வாட்டி வேந்தன்
மனம் போல வந்த மகன்

#12
**(போர்களத்து ஒழிதல் இன்னது)
** கொளு : 26
படைக்கு ஓடா விறல் மறவரைக்
கடைக்கொண்டு களத்து ஒழிந்தன்று

#13
** வெண்பா : 27
உரைப்பின் அது வியப்போ ஒன்னார் கைக்கொண்ட
நிரைப் பின் நெடுந்தகை சென்றான் – புரைப்பு இன்றி
உளப்பட்ட வாய் எல்லாம் ஒள் வாள் கவரக்
களப்பட்டான் தோன்றான் கரந்து

#14
**(ஆள்எறிபிள்ளை இன்னது)
** கொளு : 27
வருவாரை எதிர் விலக்கி
ஒருதான் ஆகித் ஆள் எறிந்தன்று

#15
** வெண்பா : 28
பிள்ளைக் கடுப்பப் பிணம் கறங்க ஆள் எறிந்து
கொள்ளை கொள ஆயம் தலைக்கொண்டார் – எள்ளிப்
பொருது அழிந்து மீளவும் பூம் கழலான் மீளான்
ஒருதனியே நின்றான் உளன்

#16
**(பிள்ளைத் தெளிவு இன்னது)
** கொளு : 28
கண் மகிழ்ந்து துடி விம்மப்
புண் மகிழ்ந்து புகன்று ஆடின்று

#17
** வெண்பா : 29
மேவார் உயிர் உணங்க மேல் முடித்த பிள்ளையன்
பூ வாள் உறைகழியாப் போர்க்களத்துள் – ஓவான்
துடி இரட்டி விம்மத் தொடு கழலார் முன் நின்று
அடி இரட்டித்திட்டு ஆடும் ஆட்டு

#18
**(பிள்ளை ஆட்டு இன்னது)
** கொளு : 29
கூடலர் குடர்_மாலை சூட்டி
வேல் திரித்து விரும்பி ஆடின்று

#19
** வெண்பா : 30
மாட்டிய பிள்ளை மறவர் நிறம் திறந்து
கூட்டிய எஃகம் குடர்_மாலை – சூட்டிய பின்
மாறு இரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட
வேல் திரிய விம்மும் துடி

#20
**(கையறுநிலை இன்னது)
** கொளு : 30
வெருவரும் வாள் அமர் விளிந்தோன் கண்டு
கருவி_மாக்கள் கையறவு உரைத்தன்று

#21
** வெண்பா : 31
நாப் புலவர் சொல்_மாலை நண்ணார் படை உழக்கித்
தாப் புலி ஒப்பத் தலைக்கொண்டான் – பூப் புனையும்
நல் குலத்துள் தோன்றிய நல் இசை யாழ்த் தொல் புலவீர்
கல்-கொலோ சோர்ந்தில எம் கண்

#22
**(நெடுமொழி கூறல் இன்னது)
** கொளு : 31
மன் மேம்பட்ட மதிக் குடையோற்குத்
தன் மேம்பாடு தான் எடுத்துரைத்தற்று

#23
** வெண்பா : 32
ஆள் அமர் வெள்ளம் பெருகின் அது விலக்கி
வாளொடு வைகுவேன் யான் ஆக – நாளும்
கழி மகிழ் வென்றிக் கழல் வெய்யோய் ஈயப்
பிழி மகிழ் உண்பார் பிறர்

#24
**(பிள்ளைப் பெயர்ச்சி இன்னது)
** கொளு : 32
போர் தாங்கிப் புள் விலங்கியோனைத்
தார் வேந்தன் தலையளித்தன்று

#25
** வெண்பா : 33
பிணங்கு அமருள் பிள்ளைப் பெயர்ப்பப் பெயராது
அணங்கு அஞர் செய்து ஆள் எறிதல் நோக்கி – வணங்காச்
சிலை அளித்த தோளான் சின விடலைக்கு அன்றே
தலையளித்தான் தண்ணடையும் தந்து

#26
**(வேத்தியல் மலிவு இன்னது)
** கொளு : 33
தோள் வலிய வய வேந்தனை
வாள் வலி மறவர் சிறப்புரைத்தன்று

#27
** வெண்பா : 34
அங்கையுள் நெல்லி அதன் பயம் ஆதலால்
கொங்கு அலர் தாரான் குடை_நிழல் கீழ்த் – தங்கிச்
செயிர் வழங்கும் வாள் அமருள் சென்று அடையார் வேல் வாய்
உயிர் வழங்கும் வாழ்க்கை உறும்

#28
**(குடிநிலை இன்னது)
** கொளு : 34
மண் திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
கொண்டு பிறர் அறியும் குடி வரவு உரைத்தன்று

#29
** வெண்பா : 35
பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் – கை அகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
முன் தோன்றி மூத்த குடி

@3 வஞ்சிப் படலம்
** இதனுள் வருவன

#1
வாடா வஞ்சி வஞ்சிஅரவம்
கூடார்ப் பிணிக்கும் குடைநிலை வாள்நிலை
கொற்றவைநிலையே கொற்றவஞ்சி
குற்றம்_இல் சிறப்பின் கொற்றவள்ளை
பேராண்வஞ்சி மாராயவஞ்சி
நெடுமொழிவஞ்சி முதுமொழிவஞ்சி
உழபுலவஞ்சி மழபுலவஞ்சி
கொடையின்வஞ்சி குறுவஞ்சிய்யே
ஒருதனிநிலையொடு தழிஞ்சிப் பாசறை
பெருவஞ்சிய்யே பெரும்சோற்றுநிலையொடு
நல்லிசைவஞ்சி என நாட்டினர் தொகுத்த
எஞ்சாச் சீர்த்தி இருபத்தொன்றும்
வஞ்சியும் வஞ்சித் துறையும் ஆம்

#2
**(வஞ்சித் திணை இன்னது)
** கொளு : 35
வாடா வஞ்சி தலை மலைந்து
கூடார் மண் கொளல் குறித்தன்று

#3
** வெண்பா : 36
செம் கண் மழ விடையின் தண்டிச் சிலை மறவர்
வெம் கள் மகிழ்ந்து விழவு அயர – அம் குழைய
வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டு ஆர்ப்பக்
குஞ்சி மலைத்தான் எம் கோ
** வஞ்சித் துறைகள்

#4
**(வஞ்சிஅரவம் இன்னது)
** கொளு : 36
வள் வார் முரசமொடு வயக் களிறு முழங்க
ஒள் வாள் தானை உருத்து எழுந்தன்று

#5
** வெண்பா : 37
பௌவம் பணை முழங்கப் பற்றார் மண் பாழ் ஆக
வௌவிய வஞ்சி வலம் புனையச் – செவ் வேல்
ஒளிரும் படை நடுவண் ஊழித்தீ அன்ன
களிறும் களித்து அதிரும் கார்

#6
**(குடைநிலை இன்னது)
** கொளு : 37
பெய் தாமம் சுரும்பு இமிரப் பெரும் புலவர் புகழ் பாடக்
கொய் தார் மன்னவன் குடை நாள்கொண்டன்று

#7
** வெண்பா : 38
முன்னர் முரசு இரங்க மூரிக் கடல் தானைத்
துன்ன_அரும் துப்பின் தொழுது எழா – மன்னர்
உடை நாள் உலந்தனவால் ஓத நீர் வேலிக்
குடை நாள் இறைவன் கொள

#8
**(வாள் நிலை இன்னது)
** கொளு : 38
செற்றார் மேல் செலவு அமர்ந்து
கொற்ற வாள் நாள்கொண்டன்று

#9
** வெண்பா : 39
அறிந்தவர் ஆய்ந்த நாள் ஆழித் தேர் மன்னன்
எறிந்து இலகு ஒள் வாள் இயக்கம் – அறிந்து இகலிப்
பின்பகலே அன்றியும் பேணார் அகநாட்டு
நன் பகலும் கூகை நகும்

#10
**(கொற்றவை நிலை1 இன்னது)
** கொளு : 39
நீள் தோளான் வென்றி கொள்க என நிறை மண்டை வலன் உயரிக்
கூடாரைப் புறம் காணும் கொற்றவை நிலை உரைத்தன்று

#11
** வெண்பா : 40
அணங்கு உடை நோலை பொரி புழுக்கல் பிண்டி
நிணம் குடர் நெய்த்தோர் நிறைத்துக் – கணம் புகலக்
கை இரிய மண்டைக் கணம் மோடி காவலற்கு
மொய் இரியத் தான் முந்துறும்

#12
**(கொற்றவை நிலை2 இன்னது)
** கொளு : 40
மைந்து உடை ஆடவர் செய் தொழில் கூறலும்
அந்தம்_இல் புலவர் அது என மொழிப

#13
** வெண்பா : 41
தமருள் தலை ஆதல் தார் தாங்கி நிற்றல்
எமருள் யாம் இன்னம் என்று எண்ணல் – அமரின்
முடுகு அழலின் முந்துறுதல் முல்லைத் தார் வேந்தன்
தொடு கழல் மைந்தர் தொழில்

#14
**(கொற்ற வஞ்சி இன்னது)
** கொளு : 41
வையகம் வணங்க வாள் ஓச்சினன் எனச்
செய் கழல் வேந்தன் சீர் மிகுத்தன்று

#15
** வெண்பா : 42
அழல் அடைந்த மன்றத்து அலந்து அயராநின்றார்
நிழல் அடைந்தேம் நின்னை என்று ஏத்தி – கழல் அடையச்
செற்றம் கொண்டாடிச் சிலைத்து எழுந்தார் வீந்து அவியக்
கொற்றம்கொண்டு எஃகு உயர்த்தான் கோ

#16
**(கொற்ற வள்ளை இன்னது)
** கொளு : 42
மன்னவன் புகழ் கிளந்து
ஒன்னார் நாடு அழிபு இரங்கின்று

#17
** வெண்பா : 43
தாழ் ஆரம் மார்பினான் தாமரைக் கண் சேந்தனவால்
பாழாய்ப் பரிய விளிவது-கொல் – யாழ் ஆய்ப்
புடைத் தேன் இமிர் கண்ணிப் பூம் கண் புதல்வர்
நடைத்தேர் ஒலி கறங்கும் நாடு

#18
**(பேராண் வஞ்சி1 இன்னது)
** கொளு : 43
கேள்_அல்லார் முனை கெடுத்த
மீளியாளர்க்கு மிக உய்த்தன்று

#19
** வெண்பா : 44
பலி பெறு நல் நகரும் பள்ளி இடனும்
ஒலி கெழு நான்மறையோர் இல்லும் – நலிவு ஒரீஇப்
புல்லார் இரியப் பொருதார் முனை கெடுத்த
வில்லார்க்கு அருள் சுரந்தான் வேந்து

#20
**(பேராண் வஞ்சி2 இன்னது)
** கொளு : 44
அரும் திறை அளப்ப ஆறிய சினத்தொடு
பெரும் பூண் மன்னன் பெயர்தலும் அதுவே

#21
** வெண்பா : 45
கூடி முரசு இரங்கக் கொய் உளை_மா முன் உகள
பாடி பெயர்ந்திட்டான் பல்_வேலான் – கோடி
நிதியம் திறை அளந்தார் நேராரும் தன் கீழ்
முதியம் என்று ஆறி முரண்

#22
**(மாராய வஞ்சி இன்னது)
** கொளு : 45
மற வேந்தனில் சிறப்பு எய்திய
விறல் வேலோர் நிலை உரைத்தன்று

#23
** வெண்பா : 46
நேர் ஆரம் பூண்ட நெடுந்தகை நேர் கழலான்
சேரார் முனை நோக்கிக் கண் சிவப்பப் – போரார்
நறவு ஏய் கமழ் தெரியல் நண்ணார் எறிந்த
மற வேல் இலை முகந்த மார்பு

#24
**(நெடுமொழி வஞ்சி இன்னது)
** கொளு : 46
ஒன்னாதார் படை கெழுமித்
தன் ஆண்மை எடுத்துரைத்தன்று

#25
** வெண்பா : 47
இன்னர் என வேண்டா என்னோடு எதிர் சீறி
முன்னர் வருக முரண் அகலும் – மன்னர்
பருந்து ஆர் படை அமருள் பல்லார் புகழ
விருந்தாய் அடைகுறுவார் விண்

#26
**(முதுமொழி வஞ்சி இன்னது)
** கொளு : 47
தொல் மரபில் வாள் குடியில்
முன்னோனது நிலை கிளந்தன்று

#27
** வெண்பா : 48
குளிறு முரசம் குணில் பாயக் கூடார்
ஒளிறு வாள் வெள்ளம் உழக்கிக் – களிறு எறிந்து
புண்ணொடு வந்தான் புதல்வர்க்குப் பூம் குழலோய்
தண்ணடை நல்கல் தகும்

#28
**(உழபுல வஞ்சி இன்னது)
** கொளு : 48
நேராதார் வள நாட்டைக்
கூர் எரி கொளீஇயன்று

#29
** வெண்பா : 49
அயில் அன்ன கண் புதைத்து அஞ்சி அலறி
மயில்_அன்னார் மன்றம் படரக் – குயில் அகவ
ஆள் திரிய வண்டு இமிரும் செம்மல் அடையார் நாட்டு
ஓடு எரியுள் வைகின ஊர்

#30
**(மழபுல வஞ்சி இன்னது)
** கொளு : 49
கூடார் முனை கொள்ளை சாற்றி
வீடு அறக் கவர்ந்த வினை மொழிந்தன்று

#31
** வெண்பா : 50
களமர் கதிர் மணி காலேகம் செம்பொன்
வள மனை பாழாக வாரிக் – கொளல் மலிந்து
கண் ஆர் சிலையார் கவர்ந்தார் கழல் வேந்தன்
நண்ணார் கிளை அலற நாடு

#32
**(கொடை வஞ்சி இன்னது)
** கொளு : 50
நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கிப்
பாடிய புலவர்க்குப் பரிசில் நீட்டின்று

#33
** வெண்பா : 51
சுற்றிய சுற்றமுடன் மயங்கித் தம் வயிறு
எற்றி மடவார் இரிந்து ஓட – முற்றிக்
குரிசில் அடையாரைக் கொண்ட கூட்டு எல்லாம்
பரிசில் முகந்தன பாண்

#34
**(குறுவஞ்சி1 இன்னது)
** கொளு : 51
மடுத்து எழுந்த மற வேந்தர்க்குக்
கொடுத்து அளித்து குடி ஓம்பின்று

#35
** வெண்பா : 52
தாள் தாழ் தடக்கை தனி மதி வெண்குடையான்
வாள் தானை வெள்ளம் வரவு அஞ்சி – மீட்டான்
மலையா மற மன்னன் மால் வரையே போலும்
கொலை யானை பாய்_மாக் கொடுத்து

#36
**(குறுவஞ்சி2 இன்னது)
** கொளு : 52
கட்டூரது வகை கூறினும்
அத் துறைக்கு உரித்தாகும்

#37
** வெண்பா : 53
அவிழ் மலர்க் கோதையர் ஆட ஒருபால்
இமிழ் முழவம் யாழோடு இயம்பப் – கவிழ் மணிய
காய் கடா யானை ஒருபால் களித்து அதிரும்
ஆய் கழலான் கட்டூர் அகத்து

#38
**(ஒருதனிநிலை இன்னது)
** கொளு : 53
பொரு படையுள் கற்சிறை போன்று
ஒருவன் தாங்கிய நிலை உரைத்தன்று

#39
** வெண்பா : 54
வீடு உணர்ந்தோர்க்கும் வியப்பு ஆமால் இ நின்ற
வாடல் முதியாள் வயிற்றிடம் – கூடார்
பெரும் படை வெள்ளம் நெரிதரவும் பேரா
இரும் புலி சேர்ந்த இடம்

#40
**(தழிஞ்சி இன்னது)
** கொளு : 54
அழிகுநர் புறக்கொடை அயில் வாள் ஓச்சாக்
கழி தறுகண்மைக் காதலித்து உரைத்தன்று

#41
** வெண்பா : 55
கான் படு தீயில் கலவார் தன் மேல் வரினும்
தான் படை தீண்டா தறுகண்ணன் – வான் படர்தல்
கண்ணிய பின் அன்றிக் கறுத்தார் மறம் தொலைதல்
எண்ணிய பின் போக்குமோ எஃகு

#42
**(பாசறை நிலை இன்னது)
** கொளு : 55
மதிக் குடைக் கீழ் வழிமொழிந்து மன்னர் எல்லாம் மறம் துறப்பவும்
பதிப் பெயரான் மற வேந்தன் பாசறை இருந்தன்று

#43
** வெண்பா : 56
கரும்பொடு காய் நெல் கனை எரி ஊட்டிப்
பெரும் புனல் வாய் திறந்த பின்னும் – கரும்பின்
தொகை மலிந்த தண் குவளைத் தூ மலர்த் தாரான்
பகை மெலியப் பாசறை உளான்

#44
**(பெருவஞ்சி இன்னது)
** கொளு : 56
முன் அடையார் வள நாட்டைப்
பின்னரும் உடன்று எரி கொளீஇயன்று

#45
** வெண்பா : 57
பீடு உலாம் மன்னர் நடுங்கப் பெரும் புகை
ஊடு உலாய் வானத்து ஒளி மறைப்ப – நாடு எல்லாம்
பின்னும் பிறங்கு அழல் வேய்ந்தன பெய் கழல் கால்
மன்னன் கனல மறம்

#46
**(பெறும்சோற்றுநிலை இன்னது)
** கொளு : 57
திருந்தார் தெம் முனை தெறுகுவர் இவர் எனப்
பெரும் சோறு ஆடவர் பெறு முறை வகுத்தன்று

#47
** வெண்பா : 58
இயவர் புகழ எறி முரசு ஆர்ப்பக்
குய வரி வேங்கை அனைய – வயவர்
பெறு முறையால் பிண்டம் கோள் ஏவினான் பேணார்
இறுமுறையால் எண்ணி இறை

#48
**(நல்இசை வஞ்சி1 இன்னது)
** கொளு : 58
ஒன்னாதார் முனை கெட இறுத்த
வென் வேல் ஆடவன் விறல் மிகுத்தன்று

#49
** வெண்பா : 59
மடங்கலின் சீறி மலைத்து எழுந்தார் மண் மேல்
இடம் கெடச் சென்று இருத்த பின்னும் – நுடங்கு எரி போல்
வெல்லப் பெருகும் படையாற்கு வேந்தர் மேல்
செல்லப் பெருகும் சினம்

#50
**(நல்இசை வஞ்சி2 இன்னது)
** கொளு : 59
இறுத்த பின் அழிபு இரங்கல்
மறுத்து உரைப்பினும் அத் துறை ஆகும்

#51
** வெண்பா : 60
குரை அழல் மண்டிய கோடு உயர் மாடம்
சுரையொடு பேய்ப்பீர்க்கும் சுமந்த – நிரை திண் தேர்ப்
பல் இசை வென்றிப் படைக் கடலான் சென்று இறுப்பக்
நல் இசை கொண்டு அடையார் நாடு

@4 காஞ்சிப் படலம்
** இதனுள் வருவன

#1
காஞ்சி காஞ்சிஅதிர்வே தழிஞ்சி
பெரும் படைவழக்கொடு பெருங்காஞ்சிய்யே
வாள்செலவு என்றா குடையதுசெலவே
வஞ்சினக்காஞ்சி பூக்கொள்நிலையே
புகழ் தலைக்காஞ்சி தலைமாராயம்
தலையொடுமுடிதல் மறப்பெயர்க்காஞ்சி
மாற்ற_அரும் பேய்நிலை பேய்க்காஞ்சிய்யே
தொட்டகாஞ்சி தொடாக்காஞ்சிய்யே
மன்னைக்காஞ்சி கட்காஞ்சிய்யே
ஆஞ்சிக்காஞ்சி மகட்பால்காஞ்சி
முனைகடிமுன்னிருப்பு உளப்படத் தொகைஇ
எண்ணிய வகையான் இருபத்திரண்டும்
கண்ணிய காஞ்சித் துறை என மொழிப

#2
**(காஞ்சித் திணை இன்னது)
** கொளு : 60
வேம் சின மாற்றான் விடுதர வேந்தன்
காஞ்சி சூடி கடி மனை கடிந்தின்று

#3
** வெண்பா : 61
அரு வரை பாய்ந்து இறுதும் என்பார் பண்டு இன்று இப்
பெரு வரை சீறுர் கருதிச் – செரு வெய்யோன்
காஞ்சி மலையக் கடைக்கணித்து நிற்பதோ
தோம் செய் மறவர் தொழில்
** காஞ்சித் துறைகள்

#4
**(காஞ்சி அதிர்வு இன்னது)
** கொளு : 61
மேல் வரும் படை வரல் மிகவும் ஆற்றா
வேல் வல் ஆடவன் விறல் மிகுத்தன்று

#5
** வெண்பா : 62
மன் மேல் வரும் என நோக்கான் மலர் மார்பின்
வென் வேல் முகந்த புண் வெய்து உயிர்ப்பக் – தன் வேல்
பிடிக்கலும் ஆற்றாப் பெருந்தகை ஏவத்
துடிக்-கண் புலையன் தொடும்

#6
**(தழிஞ்சி இன்னது)
** கொளு : 62
பரந்து எழுதரு படைத் தானை
வரம்பு இகவாமை சுரம் காத்தன்று

#7
** வெண்பா : 63
குலாவும் சிலையார் குறும்பு கொள வெஃகி
உலாவும் உழப்பு ஒழிக வேந்தன் – கலாவும்
இன வேங்கை அன்ன இகல் வெய்யோர் காவல்
புன வேய் நரலும் புழை

#8
**(படைவழக்கு1 இன்னது)
** கொளு : 63
முத்து அவிர் பூண் மற வேந்தன்
ஒத்தவர்க்குப் படை வழங்கின்று

#9
** வெண்பா : 64
ஐயம் களைந்திட்டு அடல் வெம் கூற்று ஆலிப்ப
ஐ இலை எஃகம் அவை பலவும் – மொய்யிடை
ஆள் கடி வெல் களிற்று அண்ணல் கொடுத்து அளித்தான்
வாள் குடி வன்கணவர்க்கு

#10
**(படைவழக்கு2 இன்னது)
** கொளு : 64
கொடுத்த பின்னர்க் கழல் மறவர்
எடுத்துரைப்பினும் அத் துறை ஆகும்

#11
** வெண்பா : 65
துன்ன_அரும் துப்பின் தொடு கழலார் சூழ்ந்திருப்பத்
தன் அமர் ஒள் வாள் என் கை தந்தான் – மன்னற்கு
மண்ணகமோ வைகின்று மாலை நெடும் குடைக் கீழ்
விண்ணகமும் வேண்டும்-கொல் வேந்து

#12
**(பெரும் காஞ்சி இன்னது)
** கொளு : 65
தாங்கு திறல் மறவர் தத்தம் ஆற்றல்
வீங்கு பெரும் படையின் வெளிப்படுத்தன்று

#13
** வெண்பா : 66
வில்லார் குறும்பிடை வேறுவேறு ஆர்த்து எழுந்த
கல்லா மறவர் கணை_மாரி – ஒல்லா
வெருவி மற வேந்தர் வெல் களிறு எல்லாம்
இருவி வரை போன்ற இன்று

#14
**(வாள்செலவு இன்னது)
** கொளு : 66
அரு முனையான் அறைகூவின பின்
செரு முனை மேல் வாள் சென்றன்று

#15
** வெண்பா : 67
உணங்கு புலவு அறா ஒன்னார் குரம்பை
நுணங்கு அரில் வெம் முனை நோக்கி – அணங்கிய
குந்தம் மலியும் புரவியான் கூடாதார்
வந்த பின் செல்க என்றான் வாள்

#16
**(குடை செலவு இன்னது)
** கொளு : 67
முது குடி மறவர் முன் உறச் சூழக்
கொதி அழல் வேலோன் குடை சென்றன்று

#17
** வெண்பா : 68
தெம் முனை தேயத் திறல் விளங்கு தேர்த் தானை
வெம் முனை வென்றி விறல் வெய்யோன் – தம் முனை
நாட்டிப் பொறி செறிந்து நண்ணார் மேல் செல்க என்று
கூட்டி நாள் கொண்டான் குடை

#18
**(வஞ்சினக் காஞ்சி இன்னது)
** கொளு : 68
வெம் சின வேந்தன் வேற்றவர் பணிப்ப
வஞ்சினம் கூறிய வகை மொழிந்தன்று

#19
** வெண்பா : 69
இன்று பகலோன் இறவாமுன் ஒன்னாரை
வென்று களம் கொள்ளா வேல் உயர்ப்பின் – என்றும்
அரண் அவியப் பாயும் அடையார் முன் நிற்பேன்
முரண் அவிய முன் முன்மொழிந்து

#20
**(பூக்கோள் நிலை இன்னது)
** கொளு : 69
கார் எதிரிய கடல் தானை
போர் எதிரிய பூக்கொண்டன்று

#21
** வெண்பா : 70
பருதி செல் வானம் பரந்து உருகி அன்ன
குருதி ஆறு ஆவது-கொல் குன்றூர் – கருதி
மறத் திறத்தின் மாறா மறவரும் கொண்டார்
புறத்து இறுத்த வேந்து இரியப் பூ

#22
**(தலைக்காஞ்சி இன்னது)
** கொளு : 70
மைந்து உயர மறம் கடந்தான்
பைந்தலைச் சிறப்பு உரைத்தன்று

#23
** வெண்பா : 71
விட்டிடின் என் வேந்தன் விலையிடின் என் இ உலகின்
இட்டுரையின் எய்துவ எய்திற்றால் – ஒட்டாதார்
போர் தாங்கி மின்னும் புல வாள் உறைகழியா
தார் தாங்கி வீழ்ந்தான் தலை

#24
**(தலை மாராயம் இன்னது)
** கொளு : 71
தலை கொடு வந்தான் உள் மலியச்
சிலை உடை வேந்தன் சிறப்பு ஈந்தன்று

#25
** வெண்பா : 72
உவன் தலை என்னும் உறழ்வு இன்றி ஒன்னார்
இவன் தலை என்று ஏத்த இயலும் – அவன் தலை
தந்தாற்கு நல்கல் வியப்போ கிளந்து ஏத்தி
வந்தார்க்கு உவந்து ஈயும் வாழ்வு

#26
**(தலையடு முடிதல் இன்னது)
** கொளு : 72
மண்டு அமருள் மாறா மைந்தின்
கொண்டான் தலையோடு கோல் வளை முடிந்தன்று

#27
** வெண்பா : 73
கொலை ஆனாக் கூற்றம் கொடிதே கொழுநன்
தலை ஆனாள் தையலாள் கண்டே – முலையால்
முயங்கினாள் வாள் முகம் சேர்த்தினாள் ஆங்கே
உயங்கினாள் ஓங்கிற்று உயிர்

#28
**(மறக் காஞ்சி 1 இன்னது)
** கொளு : 73
இலைப் பொலி தார் இகல் வேந்தன்
மலைப்பு ஒழிய மறம் கடாயின்று

#29
** வெண்பா : 74
கரும் தலையும் வெள் நிணமும் செம் தடியும் ஈராப்
பருந்தோடு எருவை படர – அரும் திறல்
வேறாய மன்னர் வியப்பக் கடாயினான்
மாறா மறவன் மறம்

#30
**(மறக் காஞ்சி 2 இன்னது)
** கொளு : 74
மண் கெழு மறவன் மாறு நிலை நோனான்
புண் கிழித்து முடியினும் அத் துறை ஆகும்

#31
** வெண்பா : 75
நகை அமர் ஆயம் நடுங்க நடுங்கான்
தொகை அமர் ஓட்டிய துப்பின் – பகைவர் முன்
நுங்கிச் சினவுதல் நோனான் நுதி வேலால்
பொங்கிப் பரிந்திட்டான் புண்

#32
**(பேய்நிலை இன்னது)
** கொளு : 75
செரு வேலோன் திறம் நோக்கி
பிரிவு இன்றிப் பேய் ஓம்பின்று

#33
** வெண்பா : 76
ஆயும் அடு திறலாற்கு அன்பு இலார் இல் போலும்
தோயும் கதழ் குருதி தோள் புடைப்பப் – பேயும்
களம் புகலச் சீறிக் கதிர் வேல் வாய் வீழ்ந்தான்
உளம் புகல ஓம்பல் உறும்

#34
**(பேய்காஞ்சி இன்னது)
** கொளு : 76
பிணம் பிறங்கிய களத்து வீழ்ந்தார்க்கு
அணங்கு ஆற்ற அச்சுறீஇயன்று

#35
** வெண்பா : 77
கொட்கும் நிமிரும் குறுகும் குடர் சூடிப்
பெட்ப நகும் பெயரும் பேய்_மகள் – உட்கப்
புனலம் குருதிப் புலால்-வாய்க் கிடந்து
கனல விழிப்பவர்க் கண்டு

#36
**(தொட்ட காஞ்சி இன்னது)
** கொளு : 77
வியன் மனை விடலை புண் காப்பத்
துயல் முலைப் பேழ் வாய்ப் பேய் தொட்டன்று

#37
** வெண்பா : 78
கொன்று உருத்த கூர் வேலவன் குறுகிக் கூர் இருள்-வாய்
நின்று உருத்து நோக்கி நெருப்பு உமிழாச் – சென்று ஒருத்தி
ஒட்டார் படை இடந்த ஆறாப் புண் ஏந்து அகலம்
தொட்டாள் பெருகத் துயில்

#38
**(தொடாக் காஞ்சி இன்னது)
** கொளு : 78
அடல் அஞ்சா நெடுந்தகை புண்
தொடல் அஞ்சித் துடித்து நீங்கின்று

#39
** வெண்பா : 79
ஐயவி சிந்தி நறை புகைத்து ஆய் மலர் தூய்க்
கொய்யாக் குறிஞ்சி பல பாடி – மொய் இணர்ப்
பூப் பெய் தெரியல் நெடுந்தகைப் புண் யாம் காப்பப்
பேய்ப் பெண் பெயரும் வரும்

#40
**(மன்னைக் காஞ்சி இன்னது)
** கொளு : 79
வியல் இடம் மருள விண்_படர்ந்தோன்
இயல்பு ஏத்தி அழிபு இரங்கின்று

#41
** வெண்பா : 80
போர்க்குப் புணை-மன் புரையோர்க்குத் தாணும்-மன்
ஊர்க்கும் உலகிற்கும் ஓர் உயிர்-மன் – யார்க்கும்
அறம் திறந்த வாயில் அடைத்ததால் அண்ணல்
நிறம் திறந்த நீள் இலை வேல்

#42
**(கள் காஞ்சி இன்னது)
** கொளு : 80
நற மலியும் நறும் தாரான்
மற மைந்தற்கு மட்டு ஈந்தன்று

#43
** வெண்பா : 81
ஒன்னா முனையோர்க்கு ஒழிக இனித் துயில்
மன்னன் மறவர் மகிழ்ந்தூங்கா – முன்னே
படலைக் குரம்பைப் பழங்கண் முதியாள்
விடலைக்கு வெம் கள் விடும்

#44
**(ஆஞ்சிக் காஞ்சி 1 இன்னது)
** கொளு : 81
காதல் கணவனொடு கனை எரி மூழ்கும்
மாதர் மெல் இயல் மலிபு உரைத்தன்று

#45
** வெண்பா : 82
தாங்கிய கேளோடு தானும் எரி புகப்
பூம்_குழை ஆயம் புலர்க என்னும் – நீங்கா
விலாழிப் பரித் தானை வெம் திறலார் சீறூர்ப்
புல் ஆழித் தலைக்கொண்ட புண்

#46
**(ஆஞ்சிக் காஞ்சி 2 இன்னது)
** கொளு : 82
மன் உயிர் நீத்த வேலின் மனையோள்
இன் உயிர் நீப்பினும் அத் துறை ஆகும்

#47
** வெண்பா : 83
கவ்வை நீர் வேலிக் கடிதே காண் கற்புடைமை
வெவ் வேல் வாய் வீழ்ந்தான் விறல் வெய்யோன் – அ வேலே
அம்பின் பிறழும் தடம் கண் அவன் காதல்
கொம்பிற்கும் ஆயிற்றே கூற்று

#48
**(மகட்பால் காஞ்சி இன்னது)
** கொளு : 83
ஏந்து இழையாள் தருக என்னும்
வேந்தனொடு வேறு நின்றன்று

#49
** வெண்பா : 84
அளிய கழல் வேந்தர் அம் மா அரிவை
எளியள் என்று எள்ளி உரைப்பின் – குளியாவோ
பண் போல் கிளவி இப் பல்_வளையாள் வாள் முகத்த
கண் போல் பகழி கடிது

#50
**(முனைகடி முன்னிருப்பு இன்னது)
** கொளு : 84
மன்னர் யாரையும் மறம் காற்றி
முன் இருந்த முனை கடிந்தன்று

#51
** வெண்பா : 85
கடி கமழ் வேரிக் கடை-தொறும் செல்லக்
கொடி மலி கொல் களிறு ஏவித் – துடி மகிழ
ஆர்த்திட்டு அமருள் அடையாரை அ முனையில்
பேர்த்திட்டான் பெய் கழலினான்

@5 நொச்சிப் படலம்
** இதனுள் வருவன

#1
நுவல்_அரும் காப்பின் நொச்சி ஏனை
மறனுடைப்பாசி ஊர்ச்செரு என்றா
செருவிடைவீழ்தல் திண் பரிமறனே
எயிலதுபோரே எயில்தனைஅழித்தல்
அழிபடைதாங்கல் மகள்மறுத்துமொழிதல் என
எச்சம் இன்றி எண்ணிய ஒன்பதும்
நொச்சித் திணையும் துறையும் ஆகும்

#2
**(நொச்சித் திணை இன்னது)
** கொளு : 85
ஏப்புழை ஞாயில் ஏந்து நிலை அரணம்
காப்போர் சூடிய பூப் புகழ்ந்தன்று

#3
** வெண்பா : 86
ஆடு அரவம் பூண்டான் அழல் உணச் சீறிய
கூடு அரணம் காப்போர் குழாம் புரையச் – சூடினார்
உச்சி மதி வழங்கும் ஓங்கு மதில் காப்பான்
நொச்சி நுதி வேலவர்
**( நொச்சித் துறைகள்)

#4
**(மறனுடைப்பாசி இன்னது)
** கொளு : 86
மறப் படை மற வேந்தர்
துறக்கத்துச் செலவு உரைத்தன்று

#5
** வெண்பா : 87
பாயினார் மாயும் வகையால் பல காப்பும்
ஏயினார் ஏய இகல் மறவர் – ஆயினார்
ஒன்றியவர் அற ஊர்ப் புலத்துத் தார் தாங்கி
வென்றி அமரர் விருந்து

#6
**(ஊர்ச்செரு இன்னது)
** கொளு : 87
அரு மிளையோடு கிடங்கு அழியாமைச்
செரு மலைந்த சிறப்பு உரைத்தன்று

#7
** வெண்பா : 88
வளையும் வயிரும் ஒலிப்ப வாள் வீசி
இளையும் கிடங்கும் சிதையத் – தளை பரிந்த
நோனார் படை இரிய நொச்சி விறல் மறவர்
ஆனார் அமர் விலக்கி ஆர்ப்பு

#8
**(செருவிடை வீழ்தல் இன்னது)
** கொளு : 88
ஆழ்ந்து படு கிடங்கோடு அரு மிளை காத்து
வீழ்ந்த வேலோர் விறல் மிகுத்தன்று
** வெண்பா : 89
ஈண்டு அரில் சூழ்ந்த இளையும் எரி மலர்க்
காண்தகு நீள் கிடங்கும் காப்பாராய் – வேண்டார்
மடங்கல் அனைய மற வேலோர் தத்தம்
உடம்பொடு காவல் உயிர்

#9
**(குதிரை மறம் இன்னது)
** கொளு : 89
ஏ மாண்ட நெடும் புரிசை
வாம் மான்-அது வகை உரைத்தன்று

#10
** வெண்பா : 90
தாங்கல்-மின் தாங்கல்-மின் தானை விறல் மறவிர்
ஓங்கல் மதிலுள் ஒரு தனி மா – ஞாங்கர்
மயிர் அணியப் பொங்கி மழை போன்று மாற்றார்
உயிர் உணிய ஓடி வரும்

#11
**(எயில் போர் இன்னது)
** கொளு : 90
அயில் படையின் அரண் காக்கும்
எயில் படைஞர் இகல் மிகுத்தன்று

#12
** வெண்பா : 91
மிகத் தாய செம் குருதி மேவரு மார்பின்
உகத் தாம் உயங்கியக்-கண்ணும் – அகத்தார்
புறத்திடைப் போதந்து அடல் புரிந்தார் பொங்கி
மறத்திடை மானம் மேற்கொண்டு

#13
**(எயில்தனை அழித்தல் இன்னது)
** கொளு : 91
துணிவு உடைய தொடு கழலான்
அணி புரிசை அழிவு உரைத்தன்று

#14
** வெண்பா : 92
அகத்தன ஆர் கழல் நோன் தாள் அரணின்
புறத்தன போர் எழில் திண் தோள் – உறத் தழீஇத்
தோட்கு உரிமை பெற்ற துணை வளையார் பாராட்ட
வாள் குரிசில் வான் உலகினான்

#15
**(அழிபடை தாங்கல் இன்னது)
** கொளு : 92
இழிபு உடன்று இகல் பெருக
அழி படை அரண் காத்தன்று

#16
** வெண்பா : 93
பரிசை பல கடந்து பற்றார் எதிர்ந்தார்
எரி செய் இகல் அரணம் கொள்மார் – புரிசை
அகத்து அடி உய்யாமை அம் சுடர் வாள் ஓச்சி
மிகத் தடிந்தார் மேல் நின்றவர்

#17
**(மகள் மறுத்து மொழிதல் இன்னது)
** கொளு : 93
வெம் முரணான் மகள் வேண்ட
அம் மதிலோன் மறுத்து உரைத்தன்று

#18
** வெண்பா : 94
ஒள் வாள் மறவர் உருத்து எழுந்து உம்பர் நாள்
கள் வார் நறும் கோதை காரணமாக் – கொள்வான்
மருங்கு எண்ணி வந்தார் மழ களிற்றின் கோடு இக்
கரும்_கண்ணி வெண் கட்டில் கால்

@6 உழிஞைப் படலம்
** இதனில் வருவன

#1
உழிஞை ஓங்கிய குடைநாள்கோளே
வாள்நாள்கோளே முரசஉழிஞை
கொற்றஉழிஞையோடு அரசஉழிஞை
கந்தழி என்றா முற்றுழிஞையே
காந்தள் புறத்திறை ஆர்எயில் உழிஞையொடு
தோல்உழிஞை குற்றுழிஞைய்யே
கோள் புறத்துஉழிஞை பாசிநிலையே
ஏணிநிலையே இலங்கு எயில்பாசி
முதுஉழிஞையே முந்து அகத்துழிஞை
முற்றுமுதிர்வே யானைகைக்கோளே
வேற்றுப்படைவரவே உழுதுவித்திடுதல்
வாள்மண்ணுநிலையே மண்ணுமங்கலமே
மகள்பால்இகலே திறைகொண்டுபெயர்தல்
அடிப்படஇருத்தல் தொகைநிலை உளப்பட
இழும் என் சீர்த்தி இருபத்தொன்பதும்
உழிஞை என்மனார் உணர்ந்திசினோரே

#2
**(உழிஞைத்திணை இன்னது)
** கொளு : 94
முடி மிசை உழிஞை சூடி ஒன்னார்
கொடி நுடங்கு ஆர் எயில் கொளக் கருதின்று

#3
** வெண்பா : 95
உழிஞை முடி புனைந்து ஒன்னாப் போர் மன்னர்
விழு மதில் வெல் களிறு பாயக் – கழி மகிழ்வு
எய்தாரும் எய்தி இசை நுவலும் சீர்த்தியனே
கொய் தார் அம் மார்பின் எம் கோ
** உழிஞைத் துறைகள்

#4
**(குடைநாள் கோள் இன்னது)
** கொளு : 95
செற்று அடையார் மதில் கருதிக்
கொற்ற வேந்தன் குடை நாள்கொண்டன்று

#5
** வெண்பா : 96
நெய் அணிக செவ் வேல் நெடும் தேர் நிலை புகுக
கொய் உளை_மா கொல் களிறு பண் விடுக – வையகத்து
முற்றக் கடி அரணம் எல்லாம் முரண் அவிந்த
கொற்றக் குடை நாள்கொள

#6
**(வாள்நாள்கோள் இன்னது)
** கொளு : 96
கலந்து அடையார் மதில் கருதி
வலம் தரு வாள் நாள்கொண்டற்று

#7
** வெண்பா : 97
வாள் நாள்கொளலும் வழிமொழிந்து வந்து அடையாப்
பேணார் பிறை தொடும் பேம் மதில் – பூண் ஆர்
அணி கொள் வன முலையார் ஆடரங்கம் ஏறிப்
பிணி கொள் பேய் ஆடும் பெயர்த்து

#8
**(முரச உழிஞை இன்னது)
** கொளு : 97
பொன் புனை உழிஞை சூடி மறி அருந்தும்
திண் பிணி முரச நிலை உரைத்தன்று

#9
** வெண்பா : 98
கதிர் ஓடை வெல் களிறு பாயக் கலங்கி
உதிரா மதிலும் உள-கொல் – அதிருமால்
பூக்கள் மலி தார்ப் புகழ் வெய்யோன் கோயிலுள்
மாக் கண் முரசம் மழை

#10
**(கொற்ற உழிஞை இன்னது)
** கொளு : 98
அடையாதார் அரண் கொள்ளிய
படையோடு பரந்து எழுந்தன்று

#11
** வெண்பா : 99
வெள் வாள் கரும் கழல் கால் வெம் சுடர் வேல் தண் அளியான்
கொள்வான் கொடித் தானை கொண்டு எழுந்தான் – நள்ளாதார்
அஞ்சு வரு வாயில் அரு மிளைக் குண்டு அகழி
மஞ்சு இவரும் ஞாயில் மதில்

#12
**(அரச உழிஞை இன்னது)
** கொளு : 99
தொழில் காவல் மலிந்து இயலும்
பொழில் காவலன் புகழ் விளம்பின்று

#13
** வெண்பா : 100
ஊக்கம் முரண் மிகுதி ஒன்றிய நல் சூழ்ச்சி
ஆக்கம் அவன்-கண் அகலாவால் – வீக்கம்
நகப்படா வென்றி நலம் மிகு தாராற்கு
அகப்படா இல்லை அரண்

#14
**(கந்தழி இன்னது)
** கொளு : 100
மா உடைத் தார் மணி_வண்ணன்
சோ உடைத்த மறம் நுவலின்று

#15
** வெண்பா : 101
அன்று எறிந்தானும் இவனால் அரண் வலித்து
இன்று இவன் மாறா எதிர்வார் யார் – என்றும்
மடை ஆர் மணிப் பூண் அடையாதார் மார்பில்
சுடர் ஆழி நின்று எரியச் சோ

#16
**(முற்றுழிஞை இன்னது)
** கொளு : 101
ஆடு இயல் அவிர் சடையான்
சூடிய பூச் சிறப்பு உரைத்தன்று

#17
** வெண்பா : 102
மயங்காத தார்ப் பெருமை மற்று அறிவார் யாரோ
இயங்கு அரணம் மூன்றும் எரித்தான் – தயங்கு இணர்ப்
பூக் கொள் இதழிப் புரி செம் சடையானும்
மாக் கொள் உழிஞை மலைந்து

#18
**(காந்தள் இன்னது)
** கொளு : 102
கரும் கடலுள் மாத் தடிந்தான்
செழும் காந்தள் சிறப்பு உரைத்தன்று

#19
** வெண்பா : 103
குருகு பெயரிய குன்று_எறிந்தானும்
உரு கெழு காந்தள் மலைந்தான் – பொரு கழல்
கார் கருதி வார் முரசம் ஆர்க்கும் கடல் தானை
போர் கருதி யார் மலையார் பூ

#20
**(புறத்திறை இன்னது)
** கொளு : 103
மறத் துறை மலிந்து மண்டி மாற்றார்
விறல் கொடி மதிலின் புறத்து இறுத்தன்று

#21
** வெண்பா : 104
புல்லார் புகலொடு போக்கு ஒழியப் பொங்கினனாய்ப்
பல்லார் மருளப் படை பரப்பி – ஒல்லார்
நிறத்து இறுத்த வாள் தானை நேரார் மதிலின்
புறத்து இறுத்தான் பூம் கழலினான்

#22
**(ஆர் எயில் உழிஞை இன்னது)
** கொளு : 104
வாஅள் மறவர் வணங்காதார்
நீஇள் மதிலின நிலை உரைத்தன்று

#23
** வெண்பா : 105
மயில் கணத்து அன்னார் மகிழ் தேறல் ஊட்டக்
கயில் கழலார் கண் கனல் பூப்ப – எயில்-கண்ணார்
வீயப் போர் செய்தாலும் வென்றி அரிது அரோ
மாயப் போர் மன்னன் மதில்

#24
**(தோல் உழிஞை இன்னது)
** கொளு : 105
வென்றியோடு புகழ் விளைக்கும் எனத்
தொன்று வந்த தோல் மிகுத்தன்று

#25
** வெண்பா : 106
நின்ற புகழ் ஒழிய நில்லா உயிர் ஓம்பி
இன்று நாம் வைகல் இழிவு ஆகும் – வென்று ஒளிரும்
பாண்டில் நிரை தோல் பணியார் பகை அரணம்
வேண்டின் எளிது என்றான் வேந்து

#26
**(குற்றுழிஞை 1 இன்னது)
** கொளு : 106
கருதாதார் மதில் குமரி மேல்
ஒருதான் ஆகி இகல் மிகுத்தன்று

#27
** வெண்பா : 107
குளிறும் முரசினான் கொண்டான் அரணம்
களிறும் கதவு இறப் பாய்ந்த – ஒளிறும்
அயில் துப்பு அடைந்த அணி எழு எல்லாம்
எயிற்றுப் படையால் இடந்து

#28
**(குற்றுழிஞை 2 இன்னது)
** கொளு : 107
வளை ஞரல வயிர் ஆர்ப்ப
மிளை கடத்தலும் அத் துறை ஆகும்

#29
** வெண்பா : 108
அந்தரம் தோயும் அமை ஓங்கு அரு மிளை
மைந்தர் மறிய மறம் கடந்து – பைம் தார்
விரை மார்பின் வில் நரல வெம் கணை தூவார்
வரை மார்பில் வைகின வாள்

#30
**(குற்றுழிஞை 3 இன்னது)
** கொளு : 108
பாடு_அரும் தோல் படை மறவர்
ஆடலொடு அடையினும் அத் துறை ஆகும்

#31
** வெண்பா : 109
நிறை பொறி வாயில் நெடு மதில் சூழி
வரை புகு புள் இனம் மான – விரைபு அடைந்தார்
வேல் ஏந்து தானை விறலோன் விறல் மறவர்
தோல் ஏந்தி ஆடல் தொடர்ந்து

#32
**(புறத்துழிஞை இன்னது)
** கொளு : 109
விண் தோயும் மிளை கடந்து
குண்டு அகழி புறத்து இறுத்தன்று

#33
** வெண்பா : 110
கோள் வாய் முதலைய குண்டு அகழி நீராக
வாள் வாய் மற வேந்தன் வந்து இறுத்தான் – நீள் வாயில்
ஓங்கல் அரணத்து ஒளி வளையார் வெய்து உயிர்ப்ப
ஆம்-கொல் அரிய அமர்

#34
**(பாசி நிலை இன்னது)
** கொளு : 110
அடங்காதார் மிடல் சாயக்
கிடங்கிடைப் போர் மலைந்தன்று

#35
** வெண்பா : 111
நாவாயும் தோணியும் மேல்கொண்டு நள்ளாதார்
ஓவார் விலங்கி உடலவும் – பூ ஆர்
அகழி பரந்து ஒழுகும் செம் குருதிச் சேற்றுப்
பகழி வாய் வீழ்ந்தார் பலர்

#36
**(ஏணி நிலை இன்னது)
** கொளு : 111
தொடு கழல் மறவர் துன்னித் துன்னார்
இடு சூட்டு இஞ்சியின் ஏணி சாத்தின்று

#37
** வெண்பா : 112
கற்பொறியும் பாம்பும் கனலும் கடி குரங்கும்
விற்பொறியும் வேலும் விலக்கவும் – பொற்பு உடைய
பாணி நடைப் புரவிப் பல் களிற்றார் சாத்தினார்
ஏணி பலவும் எயில்

#38
**(எயில் பாசி இன்னது)
** கொளு : 112
உடல் சினத்தார் கடி அரணம்
மிடல் சாய மேல் இவர்ந்தன்று

#39
** வெண்பா : 113
சுடுமண் நெடு மதில் சுற்றிப் பிரியார்
கடு முரண் எஃகம் கழிய – அடு முரண்
ஆறினார் அன்றி அரவும் உடும்பும் போல்
ஏறினார் ஏணி பலர்

#40
**(முதுஉழிஞை 1 இன்னது)
** கொளு : 113
வேய் பிணங்கிய மிளை அரணம்
பாய் புள்ளின் பரந்து இழிந்தன்று

#41
** வெண்பா : 114
கோடு உயர் வெற்பின் நிலம் கண்டு இரை கருதும்
தோடு கொள் புள்ளின் தொகை ஒப்பக் – கூடார்
முரண் அகத்துப் பாற முழவுத் தோள் மள்ளர்
அரண் அகத்துப் பாய்ந்து இழிந்தார் ஆர்த்து

#42
**(முதுஉழிஞை 2 இன்னது)
** கொளு : 114
செரு மதிலோர் சிறப்பு உரைத்தலும்
அரு முரணான் அத் துறை ஆகும்

#43
** வெண்பா : 115
அறியார் வயவர் அகத்து இழிந்த பின்னும்
நெறி ஆர் நெடு மதிலுள் நேரார் – மறியாம்
கிளியொடு நேர் ஆம் கிளவியார் வாள் கண்
களி உறு காமம் கலந்து

#44
**(அகத்து உழிஞை இன்னது)
** கொளு : 115
முரண் அவியச் சினம் சிறந்தோர்
அரண் அகத்தோரை அமர் வென்றன்று

#45
** வெண்பா : 116
செம் கண் மறவர் சினம் சொரி வாள் சென்று இயங்க
அம் கண் விசும்பின் அணி திகழும் – திங்கள்
முகத்தார் அலற முகில் உரிஞ்சும் சூழி
அகத்தாரை வென்றார் அமர்

#46
**(முற்று முதிர்வு இன்னது)
** கொளு : 116
அகத்தோன் காலை அதிர் முரசு இயம்பப்
புறத்தோன் வெம் சினப் பொலிவு உரைத்தன்று

#47
** வெண்பா : 117
காலை முரசம் மதில் இயம்பக் கண் கனன்று
வேலை விறல் வெய்யோன் நோக்குதலும் – மாலை
அடுகம் அடிசில் என அ மதிலுள் இட்டார்
தொடு கழலார் மூழை துடுப்பு

#48
**(யானைக்கோள் இன்னது)
** கொளு : 117
மாறுகொண்டார் மதில் அழிய
ஏறும் தோட்டியும் எறிந்து கொண்டன்று

#49
** வெண்பா : 118
ஏவல் இகழ் மறவர் வீய இகல் கடந்து
காவலும் யானையும் கைக்கொண்டான் – மா_வலான்
வம்பு உடை ஒள் வாள் மறவர் தொழுது ஏத்த
அம்பு உடை ஞாயில் அரண்

#50
**(வேற்றுப்படை வரவு இன்னது)
** கொளு : 118
மொய் திகழ் வேலோன் முற்று விட்டு அகலப்
பெய் தார் மார்பின் பிறன் வரவு உரைத்தன்று

#51
** வெண்பா : 119
உவன் இன்று உறு துயரம் உய்யாமை நோக்கி
அவன் என்று உலகு ஏத்தும் ஆண்மை – இவன் அன்றி
மற்று யார் செய்வார் மழை துஞ்சு நீள் அரணம்
முற்றியார் முற்று விட

#52
**(உழுது வித்திடுதல் இன்னது)
** கொளு : 119
எண்ணார் பல் எயில் கழுதை ஏர் உழுவித்து
உண்ணா வரகொடு கொள் வித்தன்று

#53
** வெண்பா : 120
எழுது எழில் மாடத்து இடன் எல்லாம் நூறிக்
கழுதை ஏர் கை ஒளிர் வேல் கோலா – உழுததன் பின்
வெள்வரகு கொள் வித்திடினும் விளியாதால்
கள் விரவு தாரான் கதம்

#54
**(வாள்மண்ணு நிலை இன்னது)
** கொளு : 120
புண்ணிய நீரில் புரையோர் ஏத்த
மண்ணிய வாளின் மறம் கிளந்தன்று

#55
** வெண்பா : 121
தீர்த்த நீர் பூவொடு பெய்து திசை விளங்கக்
கூர்த்த வாள் மண்ணிக் கொடித் தேரான் – பேர்த்தும்
இடி ஆர் பணை துவைப்ப இ மதிலுள் வேட்டான்
புடையார் அறையப் புகழ்

#56
**(மண்ணு மங்கலம் இன்னது)
** கொளு : 121
வணங்காதார் மதில் குமரியொடு
மணம் கூடிய மலிபு உரைத்தன்று

#57
** வெண்பா : 122
எம் கண் மலர எயில் குமரி கூடிய
மங்கல நாள் யாம் மகிழ்தூங்கக் – கொங்கு அலர் தார்ச்
செய் சுடர்ப் பூண் மன்னவன் சேவடிக் கீழ் வைகினவே
மொய் சுடர்ப் பூண் மன்னர் முடி

#58
**(மகள்பால் இகல் இன்னது)
** கொளு : 122
மயில் சாயல் மகள் வேண்டிய
கயில் கழலோன் நிலை உரைத்தன்று

#59
** வெண்பா : 123
அம் தழை அல்குலும் ஆடு அமை மென் தோளும்
பைம் தளிர் மேனியும் பாராட்டித் – தந்தை
புற மதில் வைகும் புலம்பே தருமே
மற மதில் மன்னன் மகள்

#60
**(திறைகொண்டு பெயர்தல் இன்னது)
** கொளு : 123
அடு திறல் அரணத்து அரசு வழிமொழியப்
படு திறை கொண்டு பதிப்பெயர்ந்தன்று

#61
** வெண்பா : 124
கோடும் வயிரும் இசைப்பக் குழு மிளை
ஓடு எரி வேய உடன்று உலாய்ப் – பாடி
உயர்ந்து ஓங்கு அரணகத்து ஒன்னார் பணியப்
பெயர்ந்தான் பெருந்தகையினான்

#62
**(அடிப்பட இருத்தல் இன்னது)
** கொளு : 124
பேணாதார் மறம் கால
ஆணை கொண்டு அடிப்பட இருந்தன்று

#63
** வெண்பா : 125
ஒன்றியவர் நாடு ஒருவழித்தாய் கூக்கேட்ப
வென்றி விளையா விழு மதிலோர் – என்றும்
பருந்து ஆர் செரு மலையப் பாடி பெயராது
இருந்தான் இகல் மறவர் ஏறு

#64
**(தொகைநிலை இன்னது)
** கொளு : 125
எ மதிலின் இகல் வேந்தரும்
அ மதிலின் அடி அடைந்தன்று

#65
** வெண்பா : 126
நாவல் பெயரிய ஞாலத்து அடி அடைந்து
ஏவல் எதிராது இகல் புரிந்த – காவலர்
வில் நின்ற தானை விறல் வெய்யோற்கு அ மதிலின்
முன் நின்று அவிந்தார் முரண்

@7 தும்பைப் படலம்
** இதில் வருவன

#1
துன்ன_அரும் கடும் போர்த் தும்பை தும்பைஅரவம்
தன் நிகர் இல்லாத் தானைமறமே
யானைமறத்தொடு குதிரைமறமே
தார்நிலை தேர்மறம் பாணதுபாட்டே
இருவரும்தபுநிலை எருமைமறமே
ஏமஎருமை நூழில் என்றா
நூழிலாட்டே முன்தேர்க்குரவை
பின்தேர்க்குரவை பேய்க்குரவையே
களிற்றுடன்நிலையே ஒள்வாள்அமலை
தானைநிலையே வெருவருநிலையே
சிருங்காரநிலையே உவகைக்கலுழ்ச்சி
தன்னைவேட்டல் தொகைநிலை உளப்பட
நன் பொருள் தெரிந்தோர் நாலிருமூன்றும்
வண் பூம் தும்பை வகை என மொழிப

#2
**(தும்பைத் திணை இன்னது)
** கொளு : 126
செம் களத்து மறம் கருதிப்
பைம் தும்பை தலை மலைந்தின்று

#3
** வெண்பா : 127
கார் கருதி நின்று அதிரும் கௌவை விழுப் பணையான்
சோர் குருதி சூழா நிலம் நனைப்பப் – போர் கருதித்
துப்பு உடைத் தும்பை மலைந்தான் துகள்_அறு சீர்
வெப்பு உடைத் தானை எம் வேந்து
** தும்பைத் துறைகள்

#4
**(தும்பை அரவம் இன்னது)
** கொளு : 127
பொன் புனைந்த கழல்_அடியோன்
தன் படையைத் தலையளித்தன்று

#5
** வெண்பா : 128
வெல் பொறியும் நாடும் விழுப் பொருளும் தண்ணடையும்
கொல் களிறும் மாவும் கொடுத்து அளித்தான் – பல் புரவி
நல் மணித் தேர் நயவார் தலை பனிப்பப்
பல் மணிப் பூணான் படைக்கு

#6
**(தானைமறம் 1 இன்னது)
** கொளு : 128
தாம் படைத்தலைக் கொள்ளாமை
ஓம்படுத்த உயர்பு கூறின்று

#7
** வெண்பா : 129
கழுது ஆர் பறந்தலை கண்ணுற்றுத் தம்முள்
இழுது ஆர் வேல் தானை இகலின் – பழுது ஆம்
செயிர் காவல் பூண்டு ஒழுகும் செங்கோலார் செல்வம்
உயிர் காவல் என்னும் உரை

#8
**(தானை மறம் 2 இன்னது)
** கொளு : 129
பூம் பொழில் புறம் காவலனை
ஓம்படுத்தற்கும் உரித்து என மொழிப

#9
** வெண்பா : 130
வயிர் மேல் வளை ஞரல வை வேலும் வாளும்
செயிர் மேல் கனல் விளைப்பச் சீறி – உயிர் மேல்
பல கழியுமேனும் பரி மான் தேர் மன்னர்க்கு
உலகு அழியும் ஓர்த்துச் செயின்

#10
**(தானை மறம் 3 இன்னது)
** கொளு : 130
வேல் தானை மறம் கூறி மாற்றார்-அது அழிபு இரங்கினும்
ஆற்றின் உணரின் அத் துறை ஆகும்

#11
** வெண்பா : 131
மின் ஆர் சினம் சொரி வேல் மீளிக் கடல் தானை
ஒன்னார் நடுங்க உலாய் நிமிரின் – என்னாம்-கொல்
ஆழித் தேர் வெல் புரவி அண்ணல் மத யானைப்
பாழித் தோள் மன்னர் படை

#12
**(யானை மறம் இன்னது)
** கொளு : 131
எழும் அரவக் கடல் தானையான்
மழ களிற்றின் மறம் கிளந்தன்று

#13
** வெண்பா : 132
அடக்க_அரும் தானை அலங்கு தார் மன்னர்
விடக்கும் உயிரும் மிசையக் – கடல் படையுள்
பேயும் எருவையும் கூற்றும் தன் பின் படரக்
காயும் கழலான் களிறு

#14
**(குதிரை மறம் இன்னது)
** கொளு : 132
எறி படையான் இகல் அமருள்
செறி படை மான் திறம் கிளந்தன்று

#15
** வெண்பா : 133
குந்தம் கொடு வில் குருதி வேல் கூடாதார்
வந்த வகை அறியா வாள் அமருள் – வெம் திறல்
ஆர் கழல் மன்னன் அலங்கு உளை_மா வெம் சிலை
வார் கணையின் முந்தி வரும்

#16
**(தார்நிலை 1 இன்னது)
** கொளு : 133
முன் எழுதரு படை தாங்குவன் என
மன்னவர்க்கு மறம் கிளந்தன்று

#17
** வெண்பா : 134
உறு சுடர் வாளோடு ஒருகால் விலங்கின்
சிறு சுடர் முன் பேர்_இருளாம் கண்டாய் – எறி சுடர் வேல்
தேம் குலாம் பூம் தெரியல் தேர் வேந்தே நின்னொடு
பாங்கு அலா மன்னர் படை

#18
**(தார்நிலை 2 இன்னது)
** கொளு : 134
ஒரு குடை மன்னனைப் பல குடை நெருங்கச்
செருவிடை தமியன் தாங்கற்கும் உரித்தே

#19
** வெண்பா : 135
காலால் மயங்கிக் கதிர் மறைத்த கார் முகில் போல்
வேலான் கை வேல் பட வீழ்ந்தனவே – தோலா
இலை புனை தண் தார் இறைவன் மேல் வந்த
மலை புரை யானை மறிந்து

#20
**(தேர் மறம் இன்னது)
** கொளு : 135
முறி மலர்த் தார் வய வேந்தன்
செறி மணித் தேர்ச் சிறப்பு உரைத்தன்று

#21
** வெண்பா : 136
செரு மலி வெம் களத்து செம் குருதி வெள்ளம்
அரு முரண் ஆழி தொடர – வரும் அரோ
கட்டு ஆர் கமழ் தெரியல் காவலன் காமர் தேர்
ஒட்டார் புறத்தின் மேல் ஊர்ந்து

#22
**(பாண் பாட்டு இன்னது)
** கொளு : 136
வெண் கோட்ட களிறு எறிந்து செம் களத்து வீழ்ந்தார்க்குக்
கைவல் யாழ்ப்பாணர் கடன் இறுத்தன்று

#23
** வெண்பா : 137
தளர் இயல் தாய் புதல்வர் தாம் உணராமைக்
களரிக் கனல் முழங்க மூட்டி – விளரிப்பண்
கண்ணினார் பாணர் களிறு எறிந்து வீழ்ந்தார்க்கு
விண்ணினார் செய்தார் விருந்து

#24
**(இருவரும் தபுநிலை இன்னது)
** கொளு : 137
பொரு படை களத்து அவிய
இரு வேந்தரும் இகல் அவிந்தன்று

#25
** வெண்பா : 138
காய்ந்து கடும் களிறு கண் கனலக் கைகூடி
வேந்தர் இருவரும் விண் படர – ஏந்து
பொரு படை மின்னப் புறங்கொடா பொங்கி
இரு படையும் நீங்கா இகல்

#26
**(எருமை மறம் இன்னது)
** கொளு : 138
வெயர் பொடிப்பச் சினம் கடைஇப்
பெயர் படைக்குப் பின் நின்றன்று

#27
** வெண்பா : 139
கடுங்கண் மறவன் கனல் விழியாச் சீறி
நெடும்_கைப் பிணத்திடையே நின்றான் – நடுங்கு அமருள்
ஆள் வெள்ளம் போகவும் போகான் கை வேல் ஊன்றி
வாள் வெள்ளம் தன் மேல் வர

#28
**(ஏம எருமை இன்னது)
** கொளு : 139
குடை மயங்கிய வாள் அமருள்
படை மயங்கப் பாழி கொண்டன்று

#29
** வெண்பா : 140
மருப்புத் தோள் ஆக மதர் விடையின் சீறிச்
செருப் புகன்று செம் கண் மறவன் – நெருப்பு இமையாய்க்
கைக் கொண்ட எஃகம் கடும் களிற்றின் மேல் போக்கி
மெய்க் கொண்டான் பின்னரும் மீட்டு

#30
**(நூழில் இன்னது)
** கொளு : 140
கழல் வேந்தர் படை விலங்கி
அழல் வேல் திரித்து ஆட்டு அமர்ந்தன்று

#31
** வெண்பா : 141
ஆடல் அமர்ந்தான் அமர் வெய்யோன் வீழ் குடர்
சூடல் மலைந்த சுழல் கண் பேய் – மீடல்
மறந்த வேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம்
திறந்த வேல் கையில் திரித்து

#32
**(நூழில் ஆட்டு இன்னது)
** கொளு : 141
களம் கழுமிய படை இரிய
உளம் கிழித்த வேல் பறித்து ஓச்சின்று

#33
** வெண்பா : 142
மொய்யகத்து மன்னர் முரண் இனி என்னாம்-கொல்
கையகத்துக் கொண்டான் கழல் விடலை – வெய்ய
விடு சுடர் சிந்தி விரை அகலம் போழ்ந்த
படு சுடர் எஃகம் பறித்து

#34
**(முன்தேர்க் குரவை இன்னது)
** கொளு : 142
எழு உறழ் திணி தோள் வேந்தன் வெல் தேர்
முழு வலி வயவர் முன் ஆடின்று

#35
** வெண்பா : 143
ஆனா வயவர் முன் ஆட அமர்க்களத்து
வான் ஆர் மின் ஆகி வழி நுடங்கும் – நோனாக்
கழு மணிப் பைம் பூண் கழல் வெய்யோன் ஊரும்
குழு மணித் திண் தேர்க் கொடி

#36
**(பின்தேர்க் குரவை இன்னது)
** கொளு : 143
கரும் கழல் மறவரொடு வெள் வளை விறலியர்
பெருந்தகை தேரின் பின் ஆடின்று

#37
** வெண்பா : 144
கிளை ஆய்ந்து பண்ணிய கேள்வி யாழ்ப்பாணும்
வளையா வயவரும் பின்னர்க் – கொளை ஆய்ந்து
அசை விளங்கும் பாடலொடு ஆட வருமே
திசை விளங்கும் தானையான் தேர்

#38
**(பேய்க் குரவை இன்னது)
** கொளு : 144
மன்னன் ஊரும் மறம் மிகு மணித் தேர்ப்
பின்னும் முன்னும் பேய் ஆடின்று

#39
** வெண்பா : 145
முன்னரும் பின்னரும் மூரிக் கடல் தானை
மன்னன் நெடும் தேர் மறன் ஏத்தி – ஒன்னார்
நிணம் கொள் பேழ் வாய நிழல் போல் நுடங்கிக்
கணம் கொள் பேய் ஆடும் களித்து

#40
**(களிற்றுடனிலை இன்னது)
** கொளு : 145
ஒளிற்று எஃகம் பட வீழ்ந்த
களிற்றின் கீழ்க் கண்படுத்தன்று

#41
** வெண்பா : 146
இறுவரை வீழ இயக்கு அற்று அவிந்த
தறுகண் தகை அரிமாப் போன்றான் – சிறு கண்
பெரும் கைக் களிறு எறிந்து பின் அதன் கீழ்ப் பட்ட
கரும் கழல் செவ் வேலவன்

#42
**(ஒள்வாள் அமலை இன்னது)
** கொளு : 146
வலி கெழு தோள் வாள் வயவர்
ஒலி கழலான் உடன் ஆடின்று

#43
** வெண்பா : 147
வாளை பிறழும் கயம் கடுப்ப வந்து அடையார்
ஆள் அமர் வென்றி அடுகளத்துத் – தோள் பெயராக்
காய்ந்து அடு துப்பின் கழல் மறவர் ஆடினார்
வேந்தொடு வெள் வாள் விதிர்த்து

#44
**(தானை நில இன்னது)
** கொளு : 147
இரு படையும் மறம் பழிச்சப்
பொருகளத்துப் பொலிவு எய்தின்று

#45
** வெண்பா : 148
நேரார் படையின் நிலைமை நெடுந்தகை
ஓரான் உறைகழியான் ஒள் வாளும் – தேரார்க்கும்
வெம் பரி மா ஊர்ந்தார்க்கும் வெல் களிற்றின் மேலார்க்கும்
கம்பமா நின்றான் களத்து

#46
**(வெருவரு இன்னது)
** கொளு : 148
விலங்கு அமருள் வியன் அகலம் வில் உதைத்த கணை கிழிப்ப
நிலம் தீண்டா வகை பொலிந்த நெடுந்தகை நிலை உரைத்தன்று

#47
** வெண்பா : 149
வெம் கண் முரசு அதிரும் வேல் அமருள் வில் உதைப்ப
எங்கும் மருமத்திடைக் குளிப்பச் – செம் கண்
புல வாள் நெடுந்தகை பூம் பொழில் ஆகம்
கலவாமல் காத்த கணை

#48
**(சிருங்கார நிலை இன்னது)
** கொளு : 149
பகை புகழக் கிடந்தானை
முகை முறுவலார் முயக்கு அமர்ந்தன்று

#49
** வெண்பா : 150
எம் கணவன் எம் கணவன் என்பார் இகல் வாடத்
தம் கணவன் தார் தம் முலை முகப்ப – வெம் கணை சேர்
புண் உடை மார்பம் பொருகளத்துப் புல்லினார்
நுண் இடை பேர் அல்குலார்

#50
**(உவகைக் கலுழ்ச்சி இன்னது)
** கொளு : 150
வாள் வாய்த்த வடு ஆழ் யாக்கைக்
கேள் கண்டு கலுழ்ந்து உவந்தன்று

#51
** வெண்பா : 151
வெம் தொழில் கூற்றமும் நாணின்று வெம் களத்து
வந்த மறவர் கை வாள் துமிப்பப் – பைம் தொடி
ஆடு அரிமா_அன்னான் கிடப்ப அகத்து உவகை
ஓடு அரிக் கண் நீர் பாய் உக

#52
**(தன்னை வேட்டல் 1 இன்னது)
** கொளு : 151
தம் இறைவன் விசும்பு அடைந்து என
வெம் முரணான் உயிர் வேட்டன்று

#53
** வெண்பா : 152
வானம் இறைவன் படர்ந்து என வாள் துடுப்பா
மானமே நெய்யா மறம் விறகாத் – தேன் இமிரும்
கள் அவிழ் கண்ணிக் கழல் வெய்யோன் வாள் அமர்
ஒள் அழலுள் வேட்டான் உயிர்

#54
**(தன்னை வேட்டல் 2 இன்னது)
** கொளு : 152
காய் கதிர் நெடு வேல் கணவனைக் காணிய
ஆய்_இழை சேறலும் அத் துறை ஆகும்

#55
** வெண்பா : 153
கற்பின் விழுமியது இல்லை கடை இறந்து
இல் பிறப்பும் நாணும் இடை ஒழிய – நல் போர்
அணங்கிய வெம் களத்து ஆர்_உயிரைக் காண்பான்
வணங்கு இடைத் தானே வரும்

#56
**(தொகை நிலை இன்னது)
** கொளு : 153
அழிவு இன்று புகழ் நிறீஇ
ஒழிவு இன்று களத்து ஒழிந்தன்று

#57
** வெண்பா : 154
மண்டு அமர்த் திண் தோள் மறம் கடைஇ மண் புலம்பக்
கண் திரள் வேல் மன்னர் களம் பட்டார் – பெண்டிர்
கடிது எழு செம் தீ கழுமினார் இன்னும்
கொடிதே காண் ஆர்ந்தின்று கூற்று

@8 வாகைப் படலம்
** இதனுள் வருவன

#1
சீர்சால் வாகை வாகைஅரவம்
அரசவாகை முரசவாகை
மறக்களவழியொடு களவேள்விய்யே
முன்தேர்க்குரவை பின்தேர்க்குரவை
பார்ப்பனவாகை வாணிகவாகை
வேளாண்வாகை பொருநவாகை
அறிவன்வாகை தாபதவாகை
கூதிர்ப்பாசறை வாடைப்பாசறை
அரசமுல்லை பார்ப்பனமுல்லை
அவையமுல்லை கணிவன்முல்லை
மூதின்முல்லை ஏறாண்முல்லை
வல்லாண்முல்லை காவல்முல்லை
பேராண்முல்லை மறமுல்லையே
குடைமுல்லையொடு கண்படைநிலையே
அவிப்பலி என்றா சால்புமுல்லை
கிணைநிலை ஏனைப் பொருளொடுபுகறல்
அருளோடுநீங்கல் உளப்படத் தொகைஇ
மூன்று தலையிட்ட மூவீரைந்தும்
வான் தோய் வாகை திணையது வகையே

#2
**(வாகைத் திணை இன்னது)
** கொளு : 154
இலை புனை வாகை சூடி இகல் மலைந்து
அலை கடல் தானை அரசு அட்டு ஆர்த்தன்று

#3
** வெண்பா : 155
சூடினான் வாகைச் சுடர்த் தெரியல் சூடுதலும்
பாடினார் வெல் புகழைப் பல் புலவர் – கூடார்
உடல் வேல் அழுவத்து ஒளி திகழும் பைம் பூண்
அடல் வேந்தன் அட்டு ஆர்த்து அரசு
** வாகைத் திணைத் துறைகள்

#4
**(வாகை அரவம் இன்னது)
** கொளு : 155
வெண் கண்ணியும் கரும் கழலும்
செம் கச்சும் தகை புனைந்தன்று

#5
** வெண்பா : 156
அனைய அமருள் அயில் போழ் விழுப்புண்
இனைய இனிக் கவலை இல்லை – புனைக
அழலோடு இமைக்கும் அணங்கு உடை வாள் மைந்தர்
கழலொடு பூம் கண்ணி கச்சு

#6
**(அரச வாகை இன்னது)
** கொளு : 156
பகல் அன்ன வாய்மொழி
இகல் வேந்தன் இயல்பு உரைத்தன்று

#7
** வெண்பா : 157
காவல் அமைந்தான் கடல் உலகம் காவலால்
ஓவல் அறியாது உயிர்க்கு உவகை – மேவரும் சீர்
ஐந்தொழில் நான்மறை முத்தீ இருபிறப்பு
வெம் திறல் தண் அளி எம் வேந்து

#8
**(முரச வாகை இன்னது)
** கொளு : 157
ஒலி கழலான் அகல் நகருள்
பலி பெறு முரசின் பண்பு உரைத்தன்று

#9
** வெண்பா : 158
மதி ஏர் நெடும் குடை மன்னர் பணிந்து
புதிய புகழ்_மாலை வேய – நிதியம்
வழங்கும் தடக்கையான் வான் தோய் நகருள்
முழங்கும் அதிரும் முரசு

#10
**(மறக்கள வழி இன்னது)
** கொளு : 158
முழவு உறழ் திணி_தோளானை
உழவனாக உரை மலிந்தன்று

#11
** வெண்பா : 159
அஞ்சு வரு தானை அமர் என்னும் நீள் வயலுள்
வெம் சினம் வித்திப் புகழ் விளைக்கும் – செம் சுடர் வேல்
பைம் கண் பணைத் தாள் பகட்டு உழவன் நல்கலான்
எங்கட்கு அடையா இடர்

#12
**(களவேள்வி இன்னது)
** கொளு : 159
அடு திறல் அணங்கு ஆர
விடு திறலான் களம் வேட்டன்று

#13
** வெண்பா : 160
பிடித்தாடி அன்ன பிறழ் பல் பேய் ஆரக்
கொடித் தானை மன்னன் கொடுத்தான் – முடித் தலை
தோளொடு வீழ்ந்த தொடிக் கை துடுப்பு ஆக
மூளை அம் சோற்றை முகந்து

#14
**(முன்தேர்க் குரவை இன்னது)
** கொளு : 160
வென்று ஏந்திய விறல் படையோன்
முன் தேர்க்-கண் அணங்கு ஆடின்று

#15
** வெண்பா : 161
உலவா வளம் செய்தான் ஊழி வாழ்க என்று
புல வாய புன் தலைப் பேய் ஆடும் – கலவா
அரசு அதிர நூறி அடுகளம் வேட்டான்
முரசு அதிர வென்ற தேர் முன்

#16
**(பின்தேர்க் குரவை இன்னது)
** கொளு : 161
பெய் கழலான் தேரின் பின்
மொய் வளை விறலியர் வயவரொடு ஆடின்று

#17
** வெண்பா : 162
வஞ்சம் இலாக் கோலானை வாழ்த்தி வயவரும்
அம் சொல் விறலியரும் ஆடுபவே – வெம் சமரில்
குன்று ஏர் மழ களிறும் கூந்தல் பிடியும் போல்
பின் தேர்க் குரவை பிணைந்து

#18
**(பார்ப்பன வாகை)
** கொளு : 162
கேள்வியால் சிறப்பு எய்தியானை
வேள்வியான் விறல் மிகுந்தன்று

#19
** வெண்பா : 163
ஓதம் கரை தவழ் நீர் வேலி உலகினுள்
வேதம் கரைகண்டான் வீற்றிருக்கும் – ஏதம்
சுடு சுடர் தான் ஆகிச் சொல்லவே வீழ்ந்த
விடு சுடர் வேள்வி அகத்து

#20
**(வாணிக வாகை இன்னது)
** கொளு : 163
செறு தொழிலின் சேண் நீங்கியான்
அறு தொழிலும் எடுத்து உரைத்தன்று

#21
** வெண்பா : 164
உழுது பயன் கொண்டு ஒலி நிரை ஓம்பிப்
பழுது_இலாப் பண்டம் பகர்ந்து – முழுது உணர
ஓதி அழல் வழிபட்டு ஓம்பாத ஈகையான்
ஆதி வணிகர்க்கு அரசு

#22
**(வோளான் வாகை இன்னது)
** கொளு : 164
மேல் மூவரும் மனம் புகல
வாய்மையான் வழி ஒழிகின்று

#23
** வெண்பா : 165
மூவரும் நெஞ்சு அமர முற்றி அவரவர்
ஏவல் எதிர்கொண்டு மீண்டு உரையான் – ஏவல்
வழுவான் வழி நின்று வண்டு ஆர் வயலுள்
உழுவான் உலகுக்கு உயிர்

#24
**(பொருந வாகை இன்னது)
** கொளு : 165
புகழொடு பெருமை நோக்கி யாரையும்
இகழ்தல் ஓம்பு என எடுத்து உரைத்தன்று

#25
** வெண்பா : 166
வெள்ளம் போல் தானை வியந்து விரவாரை
எள்ளி உணர்தல் இயல்பு அன்று – தெள்ளியார்
ஆறுமேல் ஆறிய பின் அன்றித் தம் கைக் கொள்ளார்
நீறு மேல் பூத்த நெருப்பு

#26
**(அறிவன் வாகை இன்னது)
** கொளு : 166
புகழ் நுவல முக்காலமும்
நிகழ்பு அறிபவன் இயல்பு உரைத்தன்று

#27
** வெண்பா : 167
இ மூவுலகில் இருள் கடியும் ஆய் கதிர் போல்
அ மூன்றும் முற்ற அறிதலால் – தம்மின்
உழறா மயங்கி உறழினும் என்றும்
பிறழா பெரியார் வாய்ச்சொல்

#28
**(தாபத வாகை இன்னது)
** கொளு : 167
தாபத முனிவன் தவத்தொடு முயங்கி
ஓவுதல் அறியா ஒழுக்கு உரைத்தன்று

#29
** வெண்பா : 168
நீர் பலகால் மூழ்கி நிலத்து அசைஇச் தோல் உடீஇச்
சோர் சடை தாழச் சுடர் ஓம்பி – ஊர் அடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத்து உய்க்கும் வழி

#30
**(கூதிர்ப் பாசறை இன்னது)
** கொளு : 168
கூற்று அனையான் வியன் கட்டூர்க் கூதிர் வான் துளி வழங்க
ஆற்றாமை நனி பெருகவும் அயில் வேலோன் அளி துறந்தன்று

#31
** வெண்பா : 169
கவலை மறுகில் கடுங்கண் மறவர்
உவலை செய் கூரை ஒடுங்கத் – துவலை செய்
கூதிர் நலியவும் உள்ளான் கொடித் தேரான்
மூதில் மடவாள் முயக்கு

#32
**(வாடைப் பாசறை இன்னது)
** கொளு : 169
வெம் திறலான் வியன் பாசறை வேல் வயவர் விதிர்ப்பு எய்த
வந்து உலாய்த் துயர் செய்யும் வாடை-அது மலிபு உரைத்தன்று

#33
** வெண்பா : 170
வாடை நலிய வடுக் கண்ணான் தோள் நசை
ஓடை மழ களிற்றான் உள்ளான்-கொல் – கோடல்
முகையோடு அலம்வர முற்று எரி போல் பொங்கிப்
பகையொடு பாசறை_உளான்

#34
**(அரச முல்லை இன்னது)
** கொளு : 170
செரு முனை உடற்றும் செம் சுடர் நெடு வேல்
இரு நிலம் காவலன் இயல்பு உரைத்தன்று

#35
** வெண்பா : 171
செயிர்க்-கண் நிகழாது செங்கோல் உயரி
மயிர்க் கண் முரசம் முழங்க – உயிர்க்கு எல்லாம்
நாவல் அகலிடத்து ஞாயிறு அனையனாய்க்
காவலன் சேறல் கடன்

#36
**(பார்ப்பன முல்லை இன்னது)
** கொளு : 171
கான் மலியும் நறும் தெரியல் கழல் வேந்தர் இகல் அவிக்கும்
நான்மறையோன் நலம் பெருகும் நடுவுநிலை உரைத்தன்று

#37
** வெண்பா : 172
ஒல் என் நீர் ஞாலத்து உணர்வோ விழுமிதே
நல் இசை முச் செம் தீ நான்மறையோன் – செல்லவும்
வென்று அன்றி மீளா விறல் வேந்தர் வெம் பகை
என்று அன்றி மீண்டது இலர்

#38
**(அவைய முல்லை இன்னது)
** கொளு : 172
நவை நீங்க நடுவு கூறும்
அவை மாந்தர் இயல்பு உரைத்தன்று

#39
** வெண்பா : 173
தொடை விடை ஊழாத் தொடை விடை துன்னித்
தொடை விடை ஊழ் இவை தோலாத் – தொடை வேட்டு
அழிபு அடல் ஆற்றால் அறிமுறை என்று எட்டின்
வழிபடர்தல் வல்லது அவை

#40
**(கணிவன் முல்லை இன்னது)
** கொளு : 173
துணிபு உணரும் தொல் கேள்விக்
கணிவன்-அது புகழ் கிளந்தன்று

#41
** வெண்பா : 174
புரிவு இன்றி யாக்கை போல் போற்றுவ போற்றிப்
பரிவு இன்றி பட்டாங்கு அறியத் – திரிவு இன்றி
விண் இ உலகம் விளைக்கும் விளைவு எல்லாம்
கண்ணி உரைப்பான் கணி

#42
**(மூதின் முல்லை இன்னது)
** கொளு : 174
அடல் வேல் ஆடவர்க்கு அன்றியும் அ இல்
மடவரல் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று

#43
** வெண்பா : 175
வந்த படை நோனாள் வாயில் முலை பறித்து
வெம் திறல் எஃகம் இறைக் கொளீஇ – முந்தை
முதல்வர் கல் தான் காட்டி மூதில் மடவாள்
புதல்வனைச் செல்க என்றாள் போர்க்கு

#44
**(ஏறாண் முல்லை இன்னது)
** கொளு : 175
மாறு இன்றி மறம் கனலும்
ஏறு ஆண் குடி எடுத்து உரைத்தன்று

#45
** வெண்பா : 176
கல் நின்றான் எந்தைக் கணவன் களப்பட்டான்
முன் நின்று மொய் அவிந்தார் என் ஐயர் – பின் நின்று
கைபோய் கணை உதைப்பக் காவலன் மேல் ஓடி
எய் போல் கிடந்தான் என் ஏறு

#46
**(வல்லாண் முல்லை இன்னது)
** கொளு : 176
இல்லும் பதியும் இயல்பும் கூறி
நல் ஆண்மையை நலம் மிகுத்தன்று

#47
** வெண்பா : 177
வில் முன் கணை தெரியும் வேட்டைச் சிறு சிறார்
முன்முன் முயல் உகளும் முன்றிற்றே – மன் முன்
வரை மார்பில் வேல் மூழ்க வாள் அழுவம் தாங்கி
உரை_மாலை சூடினான் ஊர்

#48
**(காவல் முல்லை 1 இன்னது)
** கொளு : 177
தவழ் திரை முழங்கும் தண் கடல் வேலிக்
கமழ் தார் மன்னவன் காவல் மிகுத்தன்று

#49
** வெண்பா : 178
பெரும் பூண் சிறுதகைப் பெய்ம் மலர்ப் பைம் தார்க்
கரும் கழல் வெண் குடையான் காவல் – விரும்பான்
ஒரு நாள் மடியின் உலகின் மேல் நில்லா
இரு_நால் வகையார் இயல்பு

#50
**(காவன் 2 முல்லை இன்னது)
** கொளு : 178
தக்காங்கு பிறர் கூறினும்
அத் துறைக்கு உரித்து ஆகும்

#51
** வெண்பா : 179
ஊறு இன்றி உவகையுள் வைக உயிர் ஓம்பி
ஆறில் ஒன்று ஆனாது அளித்து உண்டு – மாறு இன்றி
வான் காவல் கொண்டான் வழிநின்று வைகலும்
தான் காவல் கொண்டல் தகும்

#52
**(பேராண் முல்லை இன்னது)
** கொளு : 179
உளம் புகல மற வேந்தன்
களம் கொண்ட சிறப்பு உரைத்தன்று

#53
** வெண்பா : 180
ஏந்து வாள் தானை இரிய உறைகழித்துப்
போந்து வாள் மின்னும் பொரு சமத்து – வேந்தர்
இரும் களிற்று யானை இனம் இரிந்து ஓடக்
கரும் கழலான் கொண்டான் களம்

#54
**(மற முல்லை இன்னது)
** கொளு : 180
வெள் வாள் வேந்தன் வேண்டியது ஈயவும்
கொள்ளா மறவன் கொதிப்பு உரைத்தன்று

#55
** வெண்பா : 181
வில் நவில் தோளானும் வேண்டிய கொள்க என்னும்
கல் நவில் திண் தோள் கழலானும் – மன்னன் முன்
ஒன்றான் அழல் விழியான் ஒள் வாள் வலன் ஏந்தி
நின்றான் நெடிய மொழிந்து

#56
**(குடை முல்லை இன்னது)
** கொளு : 181
மொய் தாங்கிய முழு வலித் தோள்
கொய் தாரான் குடை புகழ்ந்தன்று

#57
** வெண்பா : 182
வேயுள் விசும்பு விளங்கு கதிர் வட்டம்
தாய புகழான் தனிக் குடைக்குத் – தோயம்
எதிர் வழங்கு கொண்மூ இடை போழ்ந்த சுற்றுக்
கதிர் வழங்கு மா மலைக் காம்பு

#58
**(கண்படைநிலை இன்னது)
** கொளு : 182
மண் கொண்ட மற வேந்தன்
கண்படை நிலை மலிந்தன்று

#59
** வெண்பா : 183
கொங்கு அலர் தார் மன்னரும் கூட்டு அளப்பக் கூற்று அணங்கும்
வெம் கதிர் வேல் தண் தெரியல் வேந்தற்குப் – பொங்கும்
புனல் ஆடையாளும் புனை குடைக் கீழ் வைகக்
கனலா துயில் ஏற்ற கண்

#60
**(அவிப்பலி இன்னது)
** கொளு : 183
வெள் வாள் அமருள் செஞ்சோறு அல்லது
உள்ளா மைந்தர் உயிர்ப்பலி கொடுத்தன்று

#61
** வெண்பா : 184
சிறந்தது இது எனச் செஞ்சோறு வாய்ப்ப
மறம் தரு வாள் அமர் என்னும் – பிறங்கு அழலுள்
ஆர்_உயிர் என்னும் அவி வேட்டார் ஆங்கு அஃதால்
வீரியர் எய்தற்பால வீடு

#62
**(சால்பு முல்லை இன்னது)
** கொளு : 184
வான் தோயும் மலை அன்ன
சான்றோர்-தம் சால்பு உரைத்தன்று

#63
** வெண்பா : 185
உறை ஆர் விசும்பின் உவாமதி போல்
நிறையா நிலவுதல் அன்றிக் – குறையாத
வங்கம் போழ் முந்நீர் வளம் பெறினும் வேறாமோ
சங்கம் போல் வான்மையார் சால்பு

#64
**(கிணைநிலை இன்னது)
** கொளு : 185
தண்பணை வயல் உழவனைத்
தெண்கிணைவன் திருந்து புகழ் கிளந்தன்று

#65
** வெண்பா : 186
பகடு வாழ்க என்று பனி வயலுள் ஆமை
அகடு போல் அம் கண் தடாரித் – துகள் துடைத்துக்
குன்று போல் போர்வில் குரிசில் வளம் பாட
இன்று போம் எங்கட்கு இடர்

#66
**(பொருளடு புகறல் இன்னது)
** கொளு : 186
வையகத்து விழைவு அறுத்து
மெய் ஆய பொருள் நயந்தன்று

#67
** வெண்பா : 187
ஆம் இனி மூப்பும் அகன்றது இளமையும்
தாம் இனி நோயும் தலைவரும் – யாம் இனி
மெய் ஐந்தும் மீது ஊர வைகாது மேல் வந்த
ஐ_ஐந்தும் ஆய்வது அறிவு

#68
**(அருளடு நீங்கல் இன்னது)
** கொளு : 187
ஒலி கடல் வையகத்து
நலிவு கண்டு நயப்பு அவிந்தன்று

#69
** வெண்பா : 188
கயக்கிய நோயவாய்க் கையிகந்து நம்மை
இயக்கிய யாக்கை இறாமுன் – மயக்கிய
பண்பு அடா வைகும் பயன் ஞால நீள் வலை
உள் படாம் போதல் உறும்

@9 பாடாண் படலம்
** இதில் வருவன

#1
பாடாண் பாட்டே வாயில்நிலையே
கடவுள்வாழ்த்தொடு பூவைநிலையே
பரிசில்துறையே இயன்மொழிவாழ்த்தே
கண்படைநிலையே துயிலெடைநிலையே
மங்கலநிலையொடு விளக்குநிலையே
கபிலைகண்ணிய புண்ணியநிலையே
வேள்விநிலையொடு வெள்ளிநிலையே
நாடுவாழ்த்தொடு கிணையதுநிலையே
களவழிவாழ்த்தே
வீற்று இனிது இருந்த பெருமங்கலமே
குடுமி களைந்த புகழ்சாற்றுநிலையே
மணமங்கலமே பொலிவுமங்கலமே
நாள்மங்கலமே பரிசில்நிலையே
பரிசில்விடையே ஆள்வினைவேள்வி
பாணாற்றுப்படையே கூத்தராற்றுப்படையே
பொருநராற்றுப்படையொடு விறலியாற்றுப்படையே
வாயுறைவாழ்த்தே செவியறிவுறூஉக்
குடைமங்கலமொடு வாள்மங்கலமே
மண்ணுமங்கலமே ஓம்படை ஏனைப்
புறநிலைவாழ்த்தும் உளப்படத் தொகைஇ
அமர்-கண் முடியும் அறு வகை ஆகிய
கொடிநிலை கந்தழி வள்ளி குணம் சால்
புலவரை அவர்-வயின் புகழ்ந்தாற்றுப்படுத்தல்
புகழ்ந்தனர்பரவல் பழிச்சினர்பணிதல்
நிகழ்ந்த காமப் பகுதியுள் தோன்றிய
கைக்கிளை வகையும் பெருந்திணை வகையும்
நல் துனி நவின்ற பாடாண்பாட்டும்
கடவுள் பக்கத்தும் ஏனோர் பக்கத்தும்
மடவரல் மகளிர் மகிழ்ந்த பக்கமும்
மாதர் மகிழ்ந்த குழவியும் ஊரின்
கண்ணே தோன்றிய காமப் பகுதியொடு
ஆங்கு அவாறு எண் பகுதிப் பொருளும்
பாங்குற உரைப்பது பாடாண் பாட்டே

#2
**(பாடாண் படலம் இன்னது)
** கொளு : 188
ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்
அளியும் என்று இவை ஆய்ந்து உரைத்தன்று

#3
** வெண்பா : 189
மன்னர் மடங்கல் மறையவர் சொல்_மாலை
அன்ன_நடையினார்க்கு ஆர்_அமுதம் – துன்னும்
பரிசிலர்க்கு வானம் பனி மலர்ப் பைம் தார்
எரி சின வேல் தானை எம் கோ
** பாடாண்திணைத் துறைகள்

#4
**(வாயில் நிலை இன்னது)
** கொளு : 189
புரவலன் நெடும் கடை குறுகிய என் நிலை
கரவு இன்றி உரை எனக் காவலர்க்கு உரைத்தன்று

#5
** வெண்பா : 190
நாட்டிய வாய்மொழி நாப் புலவர் நல் இசை
ஈட்டிய சொல்லான் இவன் என்று – காட்டிய
காயல் ஓங்கு எஃகு இமைக்கும் கண் ஆர் கொடி மதில்
வாயிலோய் வாயில் இசை

#6
**(கடவுள் வாழ்த்து இன்னது)
** கொளு : 190
காவல் கண்ணிய கழலோன் கைதொழும்
மூவரில் ஒருவனை எடுத்து உரைத்தன்று

#7
** வெண்பா : 191
வைய மகளை அடிப்படுத்தாய் வையகத்தார்
உய்ய உருவம் வெளிப்படுத்தாய் – வெய்ய
அடும் திறல் ஆழி அரவு அணையாய் என்றும்
நெடுந்தகையாய் நின்னையே யாம்

#8
**(பூவை நிலை இன்னது)
** கொளு : 191
கறவை காவலன் நிறனொடு பொரீஇ
புறவு அலர் பூவைப்பூப் புகழ்ந்தன்று

#9
** வெண்பா : 192
பூவை விரியும் புது மலரின் பூம் கழலோய்
யாவை விழுமிய யாம் உணரேம் – மேவார்
மறத்தொடு மல்லர் மறம் கடந்த காளை
நிறத்தொடு நேர் தருதலான்

#10
**(பரிசில் துறை இன்னது)
** கொளு : 192
மண்ணகம் காவல் மன்னர் முன்னர்
எண்ணிய பரிசில் இது என உரைத்தன்று

#11
** வெண்பா : 193
வரிசை கருதாது வான் போல் தடக்கைக்
குரிசில் நீ நல்க யாம் கொள்ளும் – பரிசில்
அடுகளம் ஆர்ப்ப அமர் ஓட்டித் தந்த
படு களி நால்வாய்ப் பகடு

#12
**(இயல்மொழி வாழ்த்து 1 இன்னது)
** கொளு : 193
இன்னோர் இன்னவை கொடுத்தார் நீயும்
அன்னோர் போல அவை எமக்கு ஈக என
என்னோரும் அறிய எடுத்து உரைத்தன்று

#13
** வெண்பா : 194
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லை நீர் ஞாலத்து இசை விளங்கத் – தொல்லை
இரவாமல் ஈந்த இறைவர் போல் நீயும்
கரவாமல் ஈகைக் கடன்

#14
**(இயல்மொழி வாழ்த்து 2 இன்னது)
** கொளு : 194
மயல்_அறு சீர்த்தி மான் தேர் மன்னவன்
இயல்பே மொழியினும் அத் துறை ஆகும்

#15
** வெண்பா : 195
ஒள் வாள் அமருள் உயிர் ஓம்பான் தான் ஈயக்
கொள்வார் நடுவண் கொடை ஓம்பான் – வெள் வாள்
கழியாமே மன்னர் கதம் காற்றும் வேலான்
ஒழியாமே ஓம்பும் உலகு

#16
**(கண்படைநிலை இன்னது)
** கொளு : 195
நெடும் தேர் தானை நீறுபட நடக்கும்
கடும் தேர் மன்னவன் கண்படை மலிந்தன்று

#17
** வெண்பா : 196
மேலார் இறை அமருள் மின் ஆர் சினம் சொரியும்
வேலான் விறல் முனை வென்று அடக்கி – கோலால்
கொடிய உலகில் குறுகாமை எம் கோன்
கடிய துயில் ஏற்ற கண்

#18
**(துயிலெடை நிலை இன்னது)
** கொளு : 196
அடு திறல் மன்னரை அருளிய எழுக எனத்
தொடு கழல் மன்னனைத் துயில் எழுப்பின்று

#19
** வெண்பா : 197
அளந்த திறையார் அகல் இடத்து மன்னர்
வளம் தரும் வேலோய் வணங்கக் – களம் தயங்கப்
பூ மலர் மேல் புள் ஒலிக்கும் பொய்கை சூழ் தாமரை
தூ மலர்க் கண் ஏற்க துயில்

#20
**(மங்கல நிலை 1 இன்னது)
** கொளு : 197
கங்குல் கனை துயில் எழுந்தோன் முன்னர்
மங்கலம் கூறிய மலிவு உரைத்தன்று

#21
** வெண்பா : 198
விண் வேண்டின் வேறு ஆதல் மங்கலம் வேந்தர்க்கு
மண் வேண்டின் கைகூப்பல் மங்கலம் – பெண் வேண்டின்
துன்னல் மடவார்க்கு மங்கலம் தோலாப் போர்
மன்னன் வரை புரையும் மார்பு

#22
**(மங்கல நிலை 2 இன்னது)
** கொளு : 198
மன்னிய சிறப்பில் மங்கல மரபில்
துன்னினன் என்றலும் அத் துறை ஆகும்

#23
** வெண்பா : 199
தீண்டியும் கண்டும் பயிற்றியும் தன் செவியால்
வேண்டியும் கங்குல் விடியலும் – ஈண்டிய
மங்கலம் ஆய நுகர்ந்தான் மற மன்னர்
வெம் களத்து வேல் உயர்த்த வேந்து

#24
**(விளக்கு நிலை 1 இன்னது)
** கொளு : 299
அளப்ப_அரும் கடல் தானையான்
விளக்கு நிலை விரித்து உரைத்தன்று

#25
** வெண்பா : 200
வளி துரந்தக்-கண்ணும் வலம் திரியாப் பொங்கி
ஒளி சிறந்து ஓங்கி வரலால் – அளி சிறந்து
நல் நெறியே காட்டும் நலம் தெரி கோலோற்கு
வெல் நெறியே காட்டும் விளக்கு

#26
**(விளக்கு நிலை 2 இன்னது)
** கொளு : 200
அடர் அவிர் பைம் பூண் வேந்தன்-தன்னைச்
சுடரொடு பொருவினும் அத் துறை ஆகும்

#27
** வெண்பா : 201
வெய்யோன் கதிர் விரிய விண் மேல் ஒளி எல்லாம்
மையாந்து ஒடுங்கி மறைந்தாங்கு – வையகத்துக்
கூத்து அவை ஏத்தும் கொடித் தேரான் கூடிய பின்
வேத்தவையுள் மையாக்கும் வேந்து

#28
**(கபிலை கண்ணிய புண்ணிய நிலை இன்னது)
** கொளு : 201
அண்ணல் நான்மறை அந்தணாளர்க்குக்
கண்ணிய கபிலை நிலை உரைத்தன்று

#29
** வெண்பா : 202
பருக் காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக்
குருக் கண் கபிலை கொடுத்தான் – செருக்கொடு
இடி முரசத் தானை இகல் இரிய எம் கோன்
கடி முரசம் காலைச் செய

#30
**(வேள்வி நிலை இன்னது)
** கொளு : 202
அந்தம்_இல் புகழான் அமரரும் மகிழச்
செம் தீ வேட்ட சிறப்பு உரைத்தன்று

#31
** வெண்பா : 203
கேள்வி மறையோர் கிளை மகிழ்தல் என் வியப்பாம்
வேள்வி விறல் வேந்தன் தான் வேட்ப – நீள் விசும்பின்
ஈர்ம் தார் இமையோரும் எய்தி அழல் வாயால்
ஆர்ந்தார் முறையால் அவி

#32
**(வெள்ளி நிலை இன்னது)
** கொளு : 203
துயர் தீரப் புயல் தரும் என
உயர் வெள்ளி நிலை உரைத்தன்று

#33
** வெண்பா : 204
சூழ் கதிர் வான் விளக்கும் வெள்ளி சுடர் விரியத்
தாழ் புயல் வெள்ளம் தரும் அரோ – சூழ் புரவித்
தேர் வில் தார் தாங்கி திகழ்ந்து இலங்கு வேலோய் நின்
மார்பில் தார் கோலி மழை

#34
**(நாடு வாழ்த்து இன்னது)
** கொளு : 204
தாள் தாழ் தடக்கையான்
நாட்டது வளம் உரைத்தன்று

#35
** வெண்பா : 205
எண்ணின் இடர் எட்டும் இன்றி வயல் செந்நெல்
கண்ணின் மலரக் கருநீலம் – விண்ணின்
வகைத்தாய் வளனொடும் வைகின்றே வென் வேல்
நகைத் தாரான் தான் விரும்பும் நாடு

#36
**(கிணை நிலை இன்னது)
** கொளு : 205
திருக் கிளரும் அகன் கோயில்
அரிக் கிணைவன் வளம் உரைத்தன்று

#37
** வெண்பா : 206
வெள்ளி முளைத்த விடியல் வயல் ஆமை
அள் அகட்டு அன்ன அரிக்கிணை – வள்ளியோன்
முன்கடை தட்டிப் பகடு வாழ்க என்னாமுன்
என்-கடை நீங்கிற்று இடர்

#38
**(களவழி வாழ்த்து இன்னது)
** கொளு : 206
செம் களத்து செழும் செல்வம்
வெண்துறை யாழ்ப்பாணர் விளம்பின்று

#39
** வெண்பா : 207
ஈண்டி எருவை இறகு உளரும் வெம் களத்து
வேண்டி யாம் கொண்ட விறல் வேழம் – வேண்டாள்
வளைகள் வயிர் இயம்பும் வாள் தானை வேந்தே
விளை கள் பகர்வாள் விலை

#40
**(வீற்று இனிது இருந்த பெருமங்கலம் இன்னது)
** கொளு : 207
கூற்று இருந்த கொலை வேலான்
வீற்றிருந்த விறல் மிகுந்தன்று

#41
** வெண்பா : 208
அழல் அவிர் பைம் கண் அரிமான் அமளி
நிழல் அவிர் பூண் மன்னர் நின்று ஏத்தக் – கழல் புனைந்து
வீ மலி தார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கு ஒலி நீர்ப்
பூ மலி நாவல் பொழிற்கு

#42
**(குடுமி களைந்த புகழ்சாற்று இன்னது)
** கொளு : 208
நெடு மதில் எறிந்து நிரை தார் மன்னன்
குடுமி களைந்த மலிவு உரைத்தன்று

#43
** வெண்பா : 209
பூம் தாமரையில் பொடித்துப் புகல் விசும்பின்
வேந்தனை வென்றான் விறல் முருகன் – ஏந்தும்
நெடு மதில் கொண்டு நிலம்_மிசையோர் ஏத்தக்
குடுமி களைந்தான் எம் கோ

#44
**(மணமங்கலம் இன்னது)
** கொளு : 209
இகல் அடு தோள் எறி வேல் மன்னன்
மகளிரொடு மணந்த மங்கலம் கூறின்று

#45
** வெண்பா : 210
அணக்கு_அரும் தானையான் அல்லி அம் தார் தோய்ந்தோள்
மணக்கோல மங்கலம் யாம் பாட – வணக்க_அரும் சீர்
ஆர் எயில் மன்னன் மட மகள் அம் பணைத் தோள்
கூர் எயிற்றுச் செவ் வாய்க் கொடி

#46
**(பொலிவு மங்கலம் இன்னது)
** கொளு : 210
வேல் வேந்தன் உள் மகிழப்
பாலன் பிறப்பு பலர் புகழ்ந்தன்று

#47
** வெண்பா : 211
கரும் கழல் வெண் குடைக் காவலர்க்குச் செவ் வாய்ப்
பெரும் கண் புதல்வன் பிறப்பப் – பெரும் பெயர்
விண்ணார் மகிழ்ந்தார் வியல் இடத்தார் ஏத்தினார்
எண்ணார் அவிந்தார் இகல்

#48
**(நாள் மங்கலம் இன்னது)
** கொளு : 211
அறம் தரு செங்கோல் அருள் வெய்யோன்
பிறந்த நாள் சிறப்பு உரைத்தன்று

#49
** வெண்பா : 212
கரும் பகடும் செம்பொன்னும் வெள்ளணி நாள் பெற்றார்
விரும்பி மகிழ்தல் வியப்போ – சுரும்பு இமிழ் தார்
வெம் முரண் வேந்தரும் வெள் வளையார் தோள் விழைந்து
தம் மதில் தாம் திறப்பார் தாள்

#50
**(பரிசில் நிலை இன்னது)
** கொளு : 212
புரவலன் மகிழ்தூங்க
இரவலன் கடைக்கூடின்று

#51
** வெண்பா : 213
வெல் புரவி பூண்ட விளங்கு மணித் திண் தேர்
நல்கிய பின்னும் நனி நீடப் – பல் போர்
விலங்கும் கடல் தானை வேற்றார் முனை போல்
கலங்கும் அளித்து என் கடும்பு

#52
**(பரிசில் விடை இன்னது)
** கொளு : 213
வேந்தன் உள் மகிழ வெல் புகழ் அறைந்தோர்க்கு
ஈந்து பரிசில் இன்புற விடுத்தன்று

#53
** வெண்பா : 214
படை நவின்ற பல் களிறும் பண் அமைந்த தேரும்
நடை நவின்ற பாய்_மாவும் நல்கிக் – கடை இறந்து
முன் வந்த மன்னர் முடி வணங்கும் சேவடியால்
பின் வந்தான் பேர்_அருளினான்
**(ஆள்வினை வேள்வி இன்னது)
** கொளு : 214
வினை முற்றிய கனை கழலோன்
மனை வேள்வி மலிவு உரைத்தன்று

#54
** வெண்பா : 215
நின்ற புகழொடு நீடு வாழ்க இ உலகில்
ஒன்ற உயிர் களிப்ப ஓம்பலால் – வென்று அமருள்
வாள் வினை நீக்கி வருக விருந்து என்னும்
ஆள்வினை வேள்வி அவன்

#55
**(பாணாற்றுப்படை இன்னது)
** கொளு : 215
சேண் ஓங்கிய வரை அதரில்
பாணனை ஆற்றுப்படுத்தன்று

#56
** வெண்பா : 216
இன் தொடை நல் இசை யாழ்ப்பாண எம்மைப் போல்
கன்று உடை வேழத்த கான் படர்ந்து – சென்று அடையின்
காமரு சாயலாள் கேள்வன் கயம் மலராத்
தாமரை சென்னி தரும்

#57
**(கூத்தர் ஆற்றுப்படை இன்னது)
** கொளு : 216
ஏத்திச் சென்ற இரவலன்
கூத்தரை ஆற்றுப்படுத்தன்று

#58
** வெண்பா : 217
கொலை வில் புருவத்துக் கொம்பு_அன்னார் கூத்தின்
தலைவ தவிராது சேறி – சிலை குலாம்
காரினை வென்ற கவி_கையான் கை வளம்
வாரினைக் கொண்டு வரற்கு

#59
**(பொருநர் ஆற்றுப்படை இன்னது)
** கொளு : 217
பெரு நல்லான் உழையீர் ஆக எனப்
பொருநனை ஆற்றுப்படுத்தன்று

#60
** வெண்பா : 218
தெருவில் அலமரும் தெள் கண் தடாரிப்
பொருவு_இல் பொருந நீ செல்லின் – செருவில்
அடும் தடக்கை நோன் தாள் அமர் வெய்யோன் ஈயும்
நெடும் தடக்கை யானை நிரை

#61
**(விறலி ஆற்றுப்படை இன்னது)
** கொளு : 218
திறல் வேந்தன் புகழ் பாடும்
விறலியைப் ஆற்றுப்படுத்தன்று

#62
** வெண்பா : 219
சில் வளைக் கை செவ் வாய் விறலி செருப் படையான்
பல் புகழ் பாடிப் பகர்தியேல் – நல் அவையோர்
ஏத்த இழை அணிந்து இன்னே வருதியால்
பூத்த கொடி போல் பொலிந்து

#63
**(வாயுறை வாழ்த்து இன்னது)
** கொளு : 219
பின் பயக்கும் எம் சொல் என
முன் படர்ந்த மொழி மிகுத்தன்று

#64
** வெண்பா : 220
எம் சொல் எதிர்கொண்டு இகழான் வழிநிற்பின்
குஞ்சர வெல் படையான் கொள்ளானோ – எஞ்சும்
இகல் இடன் இன்றி எறி முந்நீர் சூழ்ந்த
அகல் இடம் அங்கை அகத்து

#65
**(செவி அறிவுறூஉ இன்னது)
** கொளு : 220
மறம் திரிவு இல்லா மன் பெரும் சூழ்ச்சி
அறம் தெரி கோலாற்கு அறிய உரைத்தன்று

#66
** வெண்பா : 221
அந்தணர் சான்றோர் அரும் தவத்தோர் தம் முன்னோர்
தந்தை தாய் என்று இவர்க்குத் தார் வேந்தே – முந்தை
வழிநின்று பின்னை வயங்கு நீர் வேலி
மொழி நின்று கேட்டல் முறை

#67
**(குடை மங்கலம் இன்னது)
** கொளு : 221
நால் திசையும் புகழ் பெருக
வீற்றிருந்தான் குடை புகழ்ந்தன்று

#68
** வெண்பா : 222
தன் நிழலோர் எல்லோர்க்கும் தண் கதிராம் தன் சேரா
வெம் நிழலோர் எல்லோர்க்கும வெம் கதிராம் – இன் நிழல் வேல்
மூவா விழுப் புகழ் முல்லைத் தார்ச் செம்பியன்
கோவாய் உயர்த்த குடை

#69
**(வாள் மங்கலம் இன்னது)
** கொளு : 222
கயக்கு_அரும் கடல் தானை
வயக் களிற்றான் வாள் புகழ்ந்தன்று

#70
** வெண்பா : 223
கொங்கு அவிழ் ஐம்பால் மடவார் வியன் கோயில்
மங்கலம் கூற மறம் கனலும் – செங்கோல்
நிலம் தரியச் செல்லும் நிரை தண் தார்ச் சேரன்
வலம் தரிய ஏந்திய வாள்

#71
**(மண்ணு மங்கலம் இன்னது)
** கொளு : 223
எண்_அரும் சீர்த்தி இறைவன் எய்தி
மண்ணும் மங்கல மலிவு உரைத்தன்று

#72
** வெண்பா : 224
கொங்கு அலர்க் கோதை குமரி மட நல்லாள்
மங்கலம் கூற மலிபு எய்திக் – கங்கையாள்
பூம் புனல் ஆகம் கெழீஇயினான் போர் அடு தோள்
வேம்பு ஆர் தெரியல் எம் வேந்து

#73
**(ஓம்படை இன்னது)
** கொளு : 224
இன்னது செய்தல் இயல்பு என இறைவன்
முன் நின்று அறிவன் மொழி தொடர்ந்தன்று

#74
** வெண்பா : 225
ஒன்றில் இரண்டு ஆய்ந்து மூன்று அடக்கி நான்கினால்
வென்று களம் கொண்ட வேல் வேந்தே – சென்று உலாம்
ஆழ் கடல் சூழ் வையகத்துள் ஐந்து வென்று ஆறு அகற்றி
ஏழ் கடிந்து இன்புற்று இரு

#75
**(புறநிலை வாழ்த்து இன்னது)
** கொளு : 225
வழிபடும் தெய்வம் நின் புறம் காப்ப
வழிவழி சிறக்க என வாய் மொழிந்தன்று

#76
** வெண்பா : 226
கொடிபடு முத் தலை வேல் கூற்றக் கணிச்சிக்
கடி படு கொன்றையான் காப்ப – நெடிது உலகில்
பூ மலி நாவல் பொழில் அகத்துப் போய் நின்ற
மா மலை போல் மன்னுக நீ

#77
**(கொடிநிலை இன்னது)
** கொளு : 226
மூவர் கொடியுள்ளும் ஒன்றொடு பொரீஇ
மேவரு மன்னன் கொடி புகழ்ந்தன்று

#78
** வெண்பா : 227
பூம் கண் நெடு முடி பூவைப்பூ மேனியான்
பாம்பு உண் பறவைக் கொடி போல – ஓங்குக
பல் யானை மன்னர் பணியப் பனி மலர்த் தார்
கொல் யானை மன்னன் கொடி

#79
**(கந்தழி இன்னது)
** கொளு : 227
சூழும் நேமியான் சோ எறிந்த
வீழாச் சீர் விறல் மிகுத்தன்று

#80
** வெண்பா : 228
மாயவன் மாயம் அதுவால் மணி நிரையுள்
ஆயனா எண்ணல் அவன் அருளால் – காயக்
கழல் அவிழ கண் கனலக் கை வளையார் சோரச்
சுழல் அழலுள் வைகின்று சோ

#81
**(வள்ளி இன்னது)
** கொளு : 228
பூண் முலையார் மனம் உருக
வேல் முருகற்கு வெறி ஆடின்று

#82
** வெண்பா : 229
வேண்டுதியால் நீயும் விழைவோ விழுமிதே
ஈண்டு இயம் விம்ம இன வளையார் – பூண் தயங்கச்
சூலமொடு ஆடும் சுடர்ச் சடையான் காதலற்கு
வேலனொடு ஆடும் வெறி

#83
**(புலவர் ஆற்றுப்படை இன்னது)
** கொளு : 229
இரும் கண் வானத்து இமையோருழைப்
பெரும் புலவனை ஆற்றுப்படுத்தன்று

#84
** வெண்பா : 230
வெறி கொள் அறை அருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும் – பொறிகட்கு
இருள் ஈயும் ஞாலத்து இடர் எல்லாம் நீங்க
அருள் ஈயும் ஆழியவன்

#85
**(புகழ்ந்தனர் பரவல் இன்னது)
** கொளு : 230
இன்னது ஒன்று எய்துதும் இரு நிலத்து யாம் எனத்
துன்ன_அரும் கடவுள் தொடு கழல் தொழுதன்று

#86
** வெண்பா : 231
சூடிய வான் பிறையோய் சூழ் சுடலை நீற்று அரங்கத்து
ஆடி அசையா அடி இரண்டும் – பாடி
உரவு நீர் ஞாலத்து உயப் போக என்று
பரவுதும் பல்கால் பணிந்து

#87
**(பழிச்சினர் பணிதல் இன்னது)
** கொளு : 231
வயங்கிய புகழ் வானவனைப்
பயன் கருதி பழிச்சினர்ப் பணிந்தன்று

#88
** வெண்பா : 232
ஆடல் அமர்ந்தான் அடி அடைந்தார் என் பெறார்
ஓடு அரி உண்கண் உமை ஒருபால் – கூடிய
சீர் சால் அகலத்தைச் செம் கண் அழல் நாகம்
தாராய் தழுவப் பெறும்

#89
**(கைக்கிளை இன்னது)
** கொளு : 232
தண்டாக் காதல் தளர்_இயல் தலைவன்
வண் தார் விரும்பிய வகை உரைத்தன்று

#90
** வெண்பா : 233
மங்குல் மனம் கவர மால் மாலை நின்றேற்கு
பொங்கும் அருவிப் புனல் நாடன் – கங்குல்
வருவான்-கொல் வந்து என் வன முலை மேல் வைகித்
தருவான்-கொல் மார்பு அணிந்த தார்

#91
**(பெருந்திணை இன்னது)
** கொளு : 233
பெய் கழல் பெருந்தகை பேணா முயக்கு இவர்ந்து
மல்கு இருள் செல்வோள் வகை உரைத்தன்று

#92
** வெண்பா : 234
வயங்கு உளை_மான் தென்னன் வரை அகலம் தோய
இயங்கா இருளிடைச் செல்வேன் – மயங்காமை
ஓடு அரிக் கண்ணாய் உறைகழி வாள் மின்னிற்றால்
மாட மருகின் மழை

#93
**(புலவி பொருளாகத் தோன்றிய பாடாண்பாட்டு இன்னது)
** கொளு : 234
வில் ஏர் நுதலி விறலோன் மார்பம்
புல்லேம் யாம் எனப் புலந்து உரைத்தன்று

#94
** வெண்பா : 235
மலை படு சாந்தம் மலர் மார்ப யாம் நின்
பலர் படி செல்வம் படியேம் – புலர் விடியல்
வண்டு இனம் கூட்டுண்ணும் வயல் சூழ் திருநகரில்
கண்டனம் காண்டற்கு இனிது

#95
**(கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம் இன்னது)
** கொளு : 235
இமையா நாட்டத்து இலங்கு இழை மகளிர்
அமையாக் காதல் அமரரை மகிழ்ந்தன்று

#96
** வெண்பா : 236
நல்கு எனின் நா_மிசையாள் நோம் என்னும் சேவடி மேல்
ஒல்கு எனின் உச்சியாள் நோம் என்னும் – மல்கு இருள்
ஆடல் அமர்ந்தாற்கு அரிதால் உமையாளை
ஊடல் உணர்த்துவது ஓர் ஆறு

#97
**(கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்)
** கொளு : 236
முக்கணான் முயக்கம் வேட்ட
மக்கள் பெண்டிர் மலிவு உரைத்தன்று

#98
** வெண்பா : 237
அரி கொண்ட கண் சிவப்ப அல்லின் என் ஆகம்
புரி கொண்ட நூல் வடுவாப் புல்லி – வரி வண்டு
பண் நலம் கூட்டுண்ணும் பனி மலர்ப் பாசூர் என்
உள் நலம் கூட்டுண்டான் ஊர்

#99
**(குழவிக் கண் தோன்றிய காமப் பகுதி இன்னது)
** கொளு : 237
இள மைந்தர் நலம் வேட்ட
வள மங்கையர் வகை உரைத்தன்று

#100
** வெண்பா : 238
வரிப்பந்து கொண்டு ஒளித்தாய் வாள் வேந்தன் மைந்தா
அரிக் கண்ணி அஞ்சி அலற – எரிக் கதிர் வேல்
செங்கோலன் நும் கோச் சினக் களிற்றின் மேல் வரினும்
எம் கோலம் தீண்டல் இனி

#101
**(ஊரின் கண் தோன்றிய காமப் பகுதி இன்னது)
** கொளு : 238
நீங்காக் காதல் மைந்தரும் மகளிரும்
பாங்குறக் கூடும் பதி உரைத்தன்று

#102
** வெண்பா : 239
ஊடிய ஊடல் அகல உளம் நெகிழ்ந்து
வாடிய மென் தோள் வளை ஒலிப்பக் – கூடிய பின்
யாமம் நீடு ஆக என்ன யாழ்_மொழியார் கைதொழூம்
ஏம நீர்க் கச்சி என் ஊர்

@10 பொதுஇயல் படலம்
** பொதுஇயல் பால
** இதனில் வருவன

#1
சீர் சால் போந்தை வேம்பொடு ஆரே
உன்னநிலையே ஏழகநிலையே
கழல்நிலை கற்காண்டல்லே
கற்கோள்நிலையே கல்நீர்ப்படுத்தல்
கல்நடுதல்லே கல்முறை பழிச்சல்
இற்கொண்டுபுகுதல் என்ற பன்னிரண்டும்
பொதுவியல் பால என்மனார் புலவர்

#2
**(போந்தை இன்னது)
** கொளு : 239
கலவா மன்னர் கண்ணுறு ஞாட்பின்
புல வேல் வானவன் பூப் புகழ்ந்தன்று

#3
** வெண்பா : 240
குடை அலர்க் காந்தள் தன் கொல்லிச் சுனை-வாய்த்
தொடை அவிழ் தண் குவளை சூடான் – புடை திகழும்
தேர் அதிரப் பொங்கும் திருந்து வேல் வானவன்
போர் எதிரின் போந்தையாம் பூ

#4
**(வேம்பு இன்னது)
** கொளு : 240
விரும்பார் அமரிடை வெல் போர் வழுதி
சுரும்பு ஆர் முடி மிசைப் பூப் புகழ்ந்தன்று

#5
** வெண்பா : 241
தொடி அணி தோள் ஆடவர் தும்பை புனையக்
கொடி அணி தேர் கூட்டு அணங்கும் போழ்தின் – முடி அணியும்
காத்தல் சால் செங்கோல் கடு மான் நெடு வழுதி
ஏத்தல் சால் வேம்பின் இணர்

#6
**(ஆர் இன்னது)
** கொளு : 241
விறல் படை மறவர் வெம் சமம் காணின்
மறப் போர்ச் செம்பியன் மலை பூ உரைத்தன்று

#7
** வெண்பா : 242
கொல் களிறு ஊர்வர் கொலை மலி வாள் மறவர்
வெல் கழல் வீக்குவர் வேல் இளையர் – மல்கும்
கலங்கல் ஒலி புனல் காவிரி நாடன்
அலங்கல் அமர் அழுவத்து ஆர்

#8
**(உன்ன நிலை இன்னது)
** கொளு : 242
துன்ன_அரும் சிறப்பின் தொடு கழல் மன்னனை
உன்னம் சேர்த்தி உறு புகழ் மலிந்தன்று

#9
** வெண்பா : 243
துன்ன_அரும் தானைத் தொடு கழலான் துப்பு எதிர்ந்து
முன்னர் வணங்கார் முரண் முருங்க – மன்னரும்
ஈடு எலாம் தாங்கி இகல் அவிந்தார் நீயும் நின்
கோடு எலாம் உன்னம் குழை

#10
**(ஏழக நிலை 1 இன்னது)
** கொளு : 243
ஏழகம் ஊரினும் இன்னன் என்று அவன்
தாழ்வு_இல் ஊக்கமொடு தகை புகழ்ந்தன்று

#11
** வெண்பா : 244
எம் மனை யாம் மகிழ ஏழகம் மேல் கொளினும்
தம் மதில் தாழ் வீழ்த்திருக்கும்மே – தெம் முனையுள்
மானொடு தோன்றி மறலுங்கால் ஏழகத்
தானொடு நேராம் அரசு

#12
**(ஏழக நிலை 2 இன்னது)
** கொளு : 244
ஏந்து புகழ் உலகின் இளமை நோக்கான்
வேந்து நிற்றலும் ஏழக நிலையே

#13
** வெண்பா : 245
வேண்டார் பெரியர் விறல் வேலோன் தான் இளையன்
பூண்டான் பொழில் காவல் என்று உரையாம் – ஈண்டு
மருளன்-மின் கோள் கருதும் மால் வரை யாளிக்
குருளையும் கொல் களிற்றின் கோடு

#14
**(கழல் நிலை இன்னது)
** கொளு : 245
அடு முரண் அகற்றும் ஆள் உகும் ஞாட்பில்
கடு முரண் வயவன் கழல் புனைந்தன்று

#15
** வெண்பா : 246
வாள் அமரின் முன் விலக்கி வான் படர்வார் யார்-கொலோ
கேள்_அலார் நீக்கிய கிண்கிணிக் கால் – காளை
கலங்கு அழல் வாயில் கடுத் தீற்றி அற்றால்
பொலம் கழல் கால் மேல் புனைவு

#16
**(கற்காண்டல் இன்னது)
** கொளு : 246
ஆனா வென்றி அமரில் வீழ்ந்தோற்குக்
கானம் நீள் இடைக் கல் கண்டன்று

#17
** வெண்பா : 247
மிகை அணங்கு மெய்ந்நிறீஇ மீளி மறவர்
புகை அணங்கப் பூ_மாரி சிந்திப் – பகை அணங்கும்
வீளைக் கடும் கணையால் வேறு ஆகி விண் படர்ந்த
காளைக்குக் கண்டு அமைத்தார் கல்

#18
**(கற்கோள் நிலை இன்னது)
** கொளு : 247
மண் மருளத் துடி கறங்க
விண் மேயார்க்கு கல் கண்டன்று

#19
** வெண்பா : 248
பூவொடு நீர் தூவிப் பொங்க விரை புகைத்து
நாவு உடை நல் மணி நன்கு இயம்ப – மேவார்
அழல் மறம் காற்றி அவிந்தார்க்கு என்று ஏத்திக்
கழல் மறவர் கைக்கொண்டார் கல்

#20
**(கல்நீர்ப் படுத்தல் 1 இன்னது)
** கொளு : 248
வண்டு சூழ் தாமம் புடையே அலம்வரச்
கண்டு கொண்ட கல் நீர்ப்படுத்தன்று

#21
** வெண்பா : 249
காடு கனலக் கனலோன் சினம் சொரியக்
கூடிய வெம்மை குளிர்கொள்ளப் – பாடி
நயத்தக மண்ணி நறு விரை கொண்டு ஆட்டி
கயத்து-அகத்து உய்த்திட்டார் கல்

#22
**(கல்நீர்ப் படுத்தல் 2 இன்னது)
** கொளு : 249
ஓங்கிய கல் உய்த்து ஒழுக்கல்
ஆங்கு எண்ணினும் அத் துறை ஆகும்

#23
** வெண்பா : 250
கணன் ஆர்ந்து உவப்பக் கடுங்கண் மறவர்
பிணன் ஆர்ந்து பேய் வழங்கு ஞாட்பின் – நிணன் ஆர்
விழுக்கினால் வேய்ந்த விறல் வேலோர் கல்லை
ஒழுக்கினார் ஒன்று ஒருவர் முன்

#24
**(கல் நடுதல் இன்னது)
** கொளு : 250
அவன் பெயர் கல் மிசைப் பொறித்துக்
கவின்பெறக் கல் நாட்டின்று

#25
** வெண்பா : 251
மாலை துயல மணி எறிந்து மட்டு உகுத்துப்
பீலி அணிந்து பெயர் பொறித்து – வேல் அமருள்
ஆண் தக நின்ற அமர் வெய்யோற்கு ஆக என்று
காண்தக நாட்டினார் கல்

#26
**(கல்முறை பழிச்சல் இன்னது)
** கொளு : 251
நிழல் அவிர் எழில் மணிப் பூண்
கழல் வெய்யோன் கல் வாழ்த்தின்று

#27
** வெண்பா : 252
அடும் புகழ் பாடி அழுதழுது நோனாது
இடும்பையுள் வைகிற்று இருந்த – கடும்பொடு
கைவண் குரிசில் கல் கைதொழூஉச் செல் பாண
தெய்வமாய் நின்றான் திசைக்கு

#28
**(இல் கொண்டு புகுதல் இன்னது)
** கொளு : 252
வேத்து அமருள் விளிந்தோன் கல் என
ஏத்தினர் துவன்றி இல் கொண்டு புக்கன்று

#29
** வெண்பா : 253
வாள் புகா ஊட்டி வடி மணி நின்று இயம்பக்
கோள் புலி அன்ன குரிசில் கல் – ஆள் கடிந்து
வில் கொண்ட வென்றி விறல் மறவர் எல்லோரும்
இல் கொண்டு புக்கார் இசைந்து

@11 சிறப்பில் பொதுவியல் பால
** இதனுள் வருவன

#1
முதுபாலையே சுரநடை ஏனைத்
தபுதாரநிலையே தாபதநிலையே
தலைப்பெய்நிலையே பூசல்மயக்கே
மாலைநிலையே மூதானந்தம்
ஆனந்தம்மே ஆனந்தப்பையுள்
கையறுநிலை உளப்பட பதினொன்றும்
மை_அறு சிறப்பின் பொதுவியல் பால

#2
**(முதுபாலை இன்னது)
** கொளு : 253
காம்பு உயர் கடத்திடைக் கணவனை இழந்த
பூம் கொடி மடந்தை புலம்பு உரைத்தன்று

#3
** வெண்பா : 254
நீர் மலி கண்ணொடு நின்றேன் நிலை இரங்காய்
தார் மலி மார்பன் தகை அகலம் – சூர் மகளே
வெள்ளில் விளைவு உதிரும் வேய் ஓங்கும் வெம் சுரத்து
கொள்ளல் நீ கோடல் கொடிது

#4
**(சுரநடை இன்னது)
** கொளு : 254
மூது அரில் நிவந்த முது கழை ஆர் இடைக்
காதலி இழந்த கணவன் நிலை உரைத்தன்று

#5
** வெண்பா : 255
உரவு எரி வேய்ந்த உருப்பு அவிர் கானுள்
வரவு எதிரின் வை வேல் வாய் வீழ்வாய் – கரவினால்
பேதையைப் பெண்_இயலைப் பெய்_வளையை என் மார்பில்
கோதையைக் கொண்டு ஒளித்த கூற்று

#6
**(தபுதார நிலை இன்னது)
** கொளு : 255
புனை இழை இழந்த பின் புலம்பொடு வைகி
மனையகத்து உறையும் மைந்தன் நிலை உரைத்தன்று

#7
** வெண்பா : 256
பைம் தொடி மேலுலகம் எய்தப் படர் உழந்த
மைந்தன் குரிசில் மழை வள்ளல் – எந்தை
தபுதாரத்து ஆழ்ந்த தனி நிலைமை கேளாச்
செவிடாய் ஒழிக என் செவி

#8
**(தாபத நிலை இன்னது)
** கொளு : 256
குருந்து அலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்து எனக்
கரும் தடக் கண்ணி கைம்மை கூறின்று

#9
** வெண்பா : 257
கலந்தவனைக் கூற்றம் கரப்பக் கழியாது
அலந்து இனையும் அம் வளைத் தோளி – உலந்தவன்
தாரொடு பொங்கி நிலன் அசைஇத் தான் மிசையும்
கார் அடகின் மேல் வைத்தாள் கை

#10
**(தலைப் பெயல் இன்னது)
** கொளு : 257
இன் கதிர் முறுவல் பாலகன் என்னும்
தன் கடன் இறுத்த தாய் தபுநிலை உரைத்தன்று

#11
** வெண்பா : 258
இடம்படு ஞாலத்து இயல்போ கொடிதே
தடம் பெரும் கண் பாலகன் என்னும் – கடன் கழித்து
முள் எயிற்றுப் பேதையாள் புக்காள் முரண் அவியா
வள் எயிற்றுக் கூற்றத்தின் வாய்

#12
**(பூசல் மயக்கு 1 இன்னது)
** கொளு : 258
பல் இதழ் மழைக் கண் பாலகன் மாய்ந்து எனப்
புல்லிய பெரும் கிளைப் பூசல் கூறின்று

#13
** வெண்பா : 259
அலர் முலை அம் சொல் அவண் ஒழிய அ இல்
குல முதலைக் கொண்டு ஒளித்தல் அன்றி – நிலம் உறப்
புல்லிய பல் கிளைப் பூசல் பரியுமோ
கொல்லிய வந்து ஒழியாக் கூற்று

#14
**(பூசல் மயக்கு 2 இன்னது)
** கொளு : 259
வேந்தன் மாய்ந்து என வியல் இடம் புலம்பினும்
ஆய்ந்த புலவர் அது என மொழிப

#15
** வெண்பா : 260
எண்ணின் இகல் புரிந்தோர் எய்யாதது இல் போலும்
கண்ணின் ஒளிர் வேலான் கரந்த பின் – அண்ணல்
புகழொடு பூசல் மயங்கிற்றால் பொங்கும்
அகழ் கடல் வேலி அகத்து

#16
**(மாலை நிலை இன்னது)
** கொளு : 260
கதிர் வேல் கணவனொடு கனை எரி மூழ்க
மதி ஏர் நுதலி மாலை நின்றன்று

#17
** வெண்பா : 261
சோலை மயில்_அன்னாள் தன் கணவன் சொல்லிய சொல்
மாலை நிலையா மனம் கடைஇக் – காலைப்
புகை அழல் வேலோன் புணர்ப்பு ஆகி நின்றாள்
அகை அழல் ஈமத்து அகத்து

#18
**(மூதானந்தம் 1 இன்னது)
** கொளு : 261
கயல் ஏர் கண்ணி கணவனொடு முடிய
வியன் நெறிச்செல்வோர் வியந்து உரைத்தன்று

#19
** வெண்பா : 262
ஓர் உயிராக உணர்க உடன் கலந்தார்க்கு
ஈர் உயிர் என்பர் இடை தெரியார் – போரில்
விடன் ஏந்தும் வேலோற்கும் வெள் வளையினாட்கும்
உடனே உலந்தது உயிர்

#20
**(மூதானந்தம் 2 இன்னது)
** கொளு : 262
கொடியான் கூர்ம் கணை குளிப்பத் தன் தொழில்
முடியான் அவிதலும் மூதானந்தம்

#21
** வெண்பா : 263
முந்தத் தான் மாவொடு புக்கு முனை அமருள்
சிந்தத் தான் வந்தார் செரு விலக்கிக் – குந்தத்தால்
செல் கணை மாற்றிக் குரிசில் சிறை நின்றான்
கொல் கணை வாய் வீழ்தல் கொடிது

#22
**(ஆனந்தம் 1 இன்னது)
** கொளு : 263
ஆடு அமைத் தோளி விரிச்சியும் சொகினமும்
வேறுபட அஞ்சி விதுப்புற்றன்று

#23
** வெண்பா : 264
வேந்து ஆர்ப்ப வெம் சமத்து வேல் அழுவம் தாங்கினான்
சாந்து ஆர் அகலத்துத் தாழ் வடுப் புண் – தாம் தணியா
மன்னா சொகினம் மயங்கின வாய்ப்புளும்
என்னாம்-கொல் பேதை இனி

#24
**(ஆனந்தம் 2 இன்னது)
** கொளு : 264
தவப் பெரிய வெம் சமம் குறுகும்
அவற்கு இரங்கினும் அத் துறை ஆகும்

#25
** வெண்பா : 265
இன்னா சொகினம் இசையா விரிச்சியும்
அன்னா அலம்வரும் என் ஆர்_உயிரும் – என்னாம்-கொல்
தொக்கார் மற மன்னர் தோலாத் துடி கறங்கப்
புக்கான் விடலையும் போர்க்கு

#26
**(ஆனந்தப் பையுள் இன்னது)
** கொளு : 265
விழுமம் கூர வேய்த் தோள் அரிவை
கொழுநன் வீயக் குழைந்து உயங்கின்று

#27
** வெண்பா : 266
புகழ் ஒழிய வையகத்துப் பூம் கழல் காளை
திகழ் ஒளிய மா விசும்பு சேர – இகழ்வார் முன்
கண்டே கழி காதல் இல்லையால் கை சோர்ந்தும்
உண்டே அளித்து என் உயிர்

#28
**(கையறு நிலை 1 இன்னது)
** கொளு : 266
செய் கழல் மன்னன் மாய்ந்து எனச் சேர்ந்தோர்
கையறவு உரைத்துக் கை சோர்ந்தன்று

#29
** வெண்பா : 267
தாய்_அன்னான் தார் விலங்கி வீழத் தளர்வொடு
நீ என்னாய் நின்றாய் என் நெஞ்சு அளியை – ஈ என்றார்க்கு
இல் என்றல் தேற்றா இகல் வெய்யோன் விண் படரப்
புல் என்ற நாப் புலவர் போன்று

#30
**(கையறு நிலை 2 இன்னது)
** கொளு : 267
கழிந்தோன் தன் புகழ் காதலித்து உரைப்பினும்
மொழிந்தனர் புலவர் அத் துறை என்ன

#31
** வெண்பா : 268
நின்று நிலம்_மிசையோர் ஏத்த நெடு விசும்பில்
சென்று கழிந்தான் செரு வெய்யோன் – என்றும்
அழலும் கதிர் வேல் அவன் புகழ் பாடி
உழலும் உலகத்து உயிர்

@12 காஞ்சிப் பொது இயல் பால
** இதனுள் வருவன

#1
மூதுரை பொருந்திய முதுமொழிக்காஞ்சி
பெருங்காஞ்சிய்யே பொருள்மொழிக்காஞ்சி
புலவர் ஏத்தும் புத்தேள் நாட்டொடு
முதுகாஞ்சிய்யொடு காடுவாழ்த்து உளப்பட
மை_அறு சீர்த்தி வரும் இரு_மூன்றும்
பொய் தீர் காஞ்சிப் பொதுவியல் பால

#2
**(முதுமொழிக் காஞ்சி இன்னது)
** கொளு : 268
பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள் முடிபு உணரக் கூறின்று

#3
** வெண்பா : 269
ஆற்றின் உணரின் அருள் அறமாம் ஆற்றார்க்குப்
போற்றார் வழங்கின் பொருள் பொருளாம் – மாற்றிப்
புகலாது ஒழுகும் புரி வளையார் மென் தோள்
அகலாது அளித்து ஒழுகல் அன்பு

#4
**(பெருங்காஞ்சி இன்னது)
** கொளு : 269
மலை ஓங்கிய மா நிலத்து
நிலையாமை நெறி உரைத்தன்று

#5
** வெண்பா : 270
ஆயாது அறிவு அயர்ந்து அல்லாந்து அகல் இடத்து
மாயா நிதியம் மனைச் செறீஇ – ஈயாது
இறுகப் பொதியன்-மின் இன்றொடு நாளைக்
குறுக வரும் அரோ கூற்று

#6
**(பொருள் மொழிக் காஞ்சி இன்னது)
** கொளு : 270
எரிந்து இலங்கு சடைமுடி முனிவர்
புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று

#7
** வெண்பா : 271
ஆய பெருமை அவிர் சடையோர் ஆய்ந்து உணர்ந்த
பாய நெறி மேல் படர்ந்து ஒடுங்கித் – தீய
இருளொடு வைகாது இடம் படு ஞாலத்து
அருளொடு வைகி அகல்

#8
**(புலவர் ஏத்தும் புத்தேள் நாடு இன்னது)
** கொளு : 271
நுழைபுலம் படர்ந்த நோய்_அறு காட்சி
விழை புலம் கடந்தோர் வீடு உரைத்தன்று

#9
** வெண்பா : 272
பொய்_இல் புலவர் புரிந்து உறையும் மேலுலகம்
ஐயம் ஒன்று இன்றி அறிந்து உரைப்பின் – வெய்ய
பகல் இன்று இரவு இன்று பற்று இன்று துற்று இன்று
இகல் இன்று இளிவரவும் இன்று

#10
**(முதுகாஞ்சி இன்னது)
** கொளு : 272
தலைவரும் பொருளைத் தக்காங்கு உணர்த்தி
நிலை நிலையாமை நெறிப்பட உரைத்தன்று

#11
** வெண்பா : 273
இளமை நிலை தளர மூப்போடு இறைஞ்சி
உளமை உணராது ஒடுங்கி – வளமை
வியப்பு ஓவல்_இல்லா வியல் இடத்து வெஃகாது
உயப் போகல் எண்ணின் உறும்

#12
**(காடு வாழ்த்து இன்னது)
** கொளு : 273
பல்லவர்க்கு இரங்கும் பாடு இமிழ் நெய்தல்
கல்லென ஒலிக்கும் காடு வாழ்த்தின்று

#13
** வெண்பா : 274
முன் புறம்-தான் காணும் இ உலகம் இ உலகில்
தம் புறம் கண்டு அறிவார்-தாம் இல்லை – அன்பின்
அழுதார் கண் நீர் விடுத்த ஆறு ஆடிக் கூகை
கழுது ஆர்ந்து இர வழங்கும் காடு

@13 முல்லைப் பொதுவியல் பால
** இதனுள் வருவன

#1
சீர் சால் முல்லையொடு கார்முல்லை என்றா
தேர்முல்லையொடு நாள்முல்லை என்றா
இல்லாள்முல்லையொடு பகட்டுமுல்லை என்றா
பால்முல்லையொடு கற்புமுல்லை என்று ஆங்கு
இரு_நால் முல்லையும் பொதுவியல் பால

#2
**(முல்லை இன்னது)
** கொளு : 274
தட வரை மார்பன் தன் அமர் காதல்
மடவரல் புணர்ந்த மகிழ்ச்சி நிலை உரைத்தன்று

#3
** வெண்பா : 275
ஊதை உளர ஒசிந்து மணம் கமழும்
கோதை போல் முல்லைக் கொடி மருங்குல் – பேதை
குவைஇ இணைந்த குவி முலை ஆகம்
கவைஇக் கவலை இலம்

#4
**(கார் முல்லை இன்னது)
** கொளு : 275
அரும் திறல் கட்டூரவர் வாரா முன்
கரும் கடல் முகந்து கார் வந்தன்று

#5
** வெண்பா : 276
புனையும் பொலம் படைப் பொங்கு உளை_மான் திண் தேர்
துனையும் துனை படைத் துன்னார் – முனையுள்
அடல் முகந்த தானையவர் வாரா முன்னம்
கடல் முகந்து வந்தன்று கார்

#6
**(தேர் முல்லை இன்னது)
** கொளு : 276
உருத்து எழு மன்னர் ஒன்னார்-தம் நிலை
திருத்திய காதலர் தேர் வரவு உரைத்தன்று

#7
** வெண்பா : 277
தீர்ந்து வணங்கித் திறை அளப்பக் தெம் முனையுள்
ஊர்ந்து நம் கேள்வர் உழை வந்தார் – சார்ந்து
பரி கோட்டம் இன்றி பதவு ஆர்ந்து உகளும்
திரி கோட்ட மா இரியத் தேர்

#8
**(நாள் முல்லை இன்னது)
** கொளு : 277
செறுநர் நாணச் சே இழை அரிவை
வறு மனை வைகித் தற்காத்தன்று

#9
** வெண்பா : 278
கொய் தார் அம் மார்பின் கொழுநன் தணந்த பின்
பெய் வளையாட்குப் பிறிது இல்லை – வெய்ய
வளி மறையும் இன்றி வழக்கு ஒழியா வாயில்
நளி மனைக்கு நல் துணை நாண்

#10
**(இல்லாள் முல்லை 1 இன்னது)
** கொளு : 278
கழுமிய காதல் கணவனைப் பழிச்சி
இழும் என் சீர்த்தி இல் மலிபு உரைத்தன்று

#11
** வெண்பா : 279
கல்லென் நீர் வேலிக் கணவன் கழல் வாழ்த்தி
ஒல்லும் வகையால் விருந்தோம்பி – செல்லும் தம்
இல் செல்வம் அன்றி இரந்தவர்க்கு ஈகல்லாப்
புன் செல்வம் பூவா புகழ்

#12
**(பகட்டு முல்லை இன்னது)
** கொளு : 279
வயல் மிகு சிறப்பின் வருத்தமும் நோன்மையும்
வியன் மனைக் கிழவனைப் பகட்டொடு பொரீஇயன்று

#13
** வெண்பா : 280
உய்த்தல் பொறுத்தல் ஒழிவு இன்று ஒலி வயலுள்
எய்த்தல் அறியாது இடையின்றி – வைத்த
படு நுகம் பூண்ட பகட்டொடு மானும்
நெடுமொழி எம் கணவன் நேர்

#14
**(பால் முல்லை இன்னது)
** கொளு : 280
அரி பாய் உண்கண் ஆய்_இழைப் புணர்ந்தோன்
பரிவு அகல் உள்ளமொடு பால் வாழ்ந்தின்று

#15
** வெண்பா : 281
திங்கள் விளங்கும் திகழ்ந்து இலங்கு பேர்_ஒளி
அம் கண் விசும்பின் அகத்து உறைக – செம் கண்
குயில் அனைய தேம் மொழிக் கூர் எயிற்றுச் செவ் வாய்ப்
பயில் வளையை நல்கிய பால்

#16
**(கற்பு முல்லை 1 இன்னது)
** கொளு : 281
பொன் திகழ் சுணங்கின் பூம் கண் அரிவை
நன்று அறி கொழுநனை நலம் மிகுத்தன்று

#17
** வெண்பா : 282
நெய் கொள் நிணம் தூ நிறைய அமைத்திட்ட
குய் கொள் அடிசில் பிறர் நுகர்க – வைகலும்
அம் குழைக் கீரை அடகு மிசையினும்
எம் கணவன் நல்கல் இனிது

#18
**(கற்பு முல்லை 2 இன்னது)
** கொளு : 282
மேவரும் கணவன் தணப்பத் தன்-வயின்
காவல் கூறினும் அத் துறை ஆகும்

#19
** வெண்பா : 283
மௌவல் விரியும் மணம் கமழ் மால் மாலைத்
தௌவல் முது குரம்பைத் தான் தமியள் – செவ்வன்
இறை காக்கும் இ உலகில் இல் பிறந்த நல்லாள்
நிறை காப்ப வைகும் நிறை

#20
**(கற்பு முல்லை 3 இன்னது)
** கொளு : 283
திரு வளர் நல் நகர் அடைந்த கொழுநன்
பெரு வளம் ஏத்தினும் அத் துறை ஆகும்

#21
** வெண்பா : 284
ஊழிதோறூழி தொழப்பட்டு உலைவு_இன்றி
ஆழி சூழ் வையத்து அகம் மலிய – வாழி
கரு வரை மார்பின் எம் காதலன் நல்க
வரு விருந்து ஓம்பும் வளம்

@14 கைக்கிளைப் படலம்
** ஆண்பால் கூற்று
** இதனுள் வருவன

#1
காட்சி ஐயம் துணிவே உட்கோள்
பயந்தோர்ப்பழிச்சல் நலம்பாராட்டல்
நயப்புற்றிரங்கல் புணராஇரக்கம்
வெளிப்படஇரத்தல் என இ ஒன்பதும்
ஆண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்

#2
**(காட்சி இன்னது)
** கொளு : 284
சுரும்பு இவர் பூம் பொழில் சுடர் வேல் காளை
கரும் தடம் கண்ணியைக் கண்டு நயந்தன்று

#3
** (வெண்பா) : 285
கரும் தடம் கண் வண்டு ஆகச் செவ் வாய் தளிரா
அரும்பு இவர் மெல் முலை தொத்தாப் – பெரும் பணைத் தோள்
பெண் தகைப் பொலிந்த பூம்_கொடி
கண்டேம் காண்டலும் களித்த எம் கண்ணே

#4
**(ஐயம் இன்னது)
** கொளு : 285
கல் நவில் தோளான் கண்ட பின் அவளை
இன்னள் என்று உணரான் ஐயமுற்றன்று

#5
** (வெண்பா) : 286
தாமரை மேல் வைகிய தையல்-கொல் தாழ் தளிரின்
கா மருவும் வானோர்கள் காதலி-கொல் – தேம் மொழி
மை அமர் உண்கண் மடந்தை கண்
ஐயம் ஒழியாது ஆழும் என் நெஞ்சே

#6
**(துணிவு இன்னது)
** கொளு : 286
மா நிலத்து இயலும் மாதராம் எனத்
தூ மலர்க் கோதையை துணிந்து உரைத்தன்று

#7
** (வெண்பா) : 287
திரு நுதல் வேர் அரும்பும் தேம் கோதை வாடும்
இரு நிலம் சேவடியும் தோயும் – அரி பரந்த
போகு இதழ் உண்கணும் இமைக்கும்
ஆகும் மற்று இவள் அகல் இடத்து அணங்கே

#8
**(உள்கோள் இன்னது)
** கொளு : 287
இணர் ஆர் கோதை என் நெஞ்சத்து இருந்தும்
உணராள் என்னை என உள் கொண்டன்று

#9
** (வெண்பா) : 288
கவ்வை பெருகக் கரந்து என் மனத்து இருந்தும்
செவ் வாய்ப் பெரும் தோள் திரு நுதலாள் – அம் வாயில்
அம் சொல் மாரி பெய்து அவியாள்
நெஞ்சம் பொத்தி நிறை சுடும் நெருப்பே

#10
**(பயந்தோர்ப் பழிச்சல் இன்னது)
** கொளு : 288
இவள் பயந்து எடுத்தோர் வாழியர் நெடிது என
அவள் பயந்தோரை ஆனாது புகழ்ந்தன்று

#11
** (வெண்பா) : 289
கல் அருவி ஆடிக் கரும் களிறு கார் அதிரும்
மல்லல் அம் சாரல் மயில் அன்ன – சில் வளைப்
பல ஒலி கூந்தலைப் பயந்தோர்
நிலவரை மலிய நீடு வாழியரோ

#12
**(நலம் பாராட்டல் இன்னது)
** கொளு : 289
அழி படர் எவ்வம் கூர ஆய்_இழை
பழி தீர் நல் நலம் பாராட்டின்று

#13
** (வெண்பா) : 290
அம் மென் கிளவி கிளி பயில ஆய்_இழை
கொம்மை வரி முலை கோங்கு அரும்ப – இ மலை
நறும் பூம் சாரல் ஆங்கண்
குறும் சுனை மலர்ந்தன தடம் பெரும் கண்ணே

#14
**(நயப்புற்றுஇரங்கல் இன்னது)
** கொளு : 290
கொய் தழை அல்குல் கூட்டம் வேண்டி
எய்துதல் அருமையின் இறப்பப் புகழ்ந்தன்று

#15
** (வெண்பா) : 291
பெரு மட நோக்கின் சிறு நுதல் செவ் வாய்க்
கரு மழைக் கண் வெண் முறுவல் பேதை – திரு முலை
புல்லும் பொறி இலேன் உழை
நில்லாது ஓடும் என் நிறை_இல் நெஞ்சே

#16
**(புணரா இரக்கம் இன்னது)
** கொளு : 291
உணரா எவ்வம் பெருக ஒளி_இழைப்
புணரா இரக்கமொடு புலம்புதர வைகின்று

#17
** (வெண்பா) : 292
இணர் ஆர் நறும் கோதை எல் வளையாள் கூட்டம்
புணராமல் பூசல் தரவும் – உணராது
தண்டா விழுப் படர் நலியவும்
உண்டால் என் உயிர் ஓம்புதற்கு அரிதே

#18
**(வெளிப்பட இரத்தல் இன்னது)
** கொளு : 292
அம் தழை அல்குல் அணி நலம் புணரா
வெம் துயர் பெருக வெளிப்பட இரந்தன்று

#19
** (வெண்பா) : 293
உரவு ஒலி முந்நீர் உலாய் நிமிர்ந்து அன்ன
கரவு_அரு காமம் கனற்ற – இரவு எதிர
முள் எயிறு இலங்கு முகிழ் நகை
வெள் வளை நல்காள் விடும் என் உயிரே

@15 கைக்கிளைப் படலம்
**பெண்பால் கூற்று
** இதனுள் வருவன

#1
காண்டல் நயத்தல் உட்கோள் மெலிதல்
மெலிவொடுவைகல் காண்டல்வலித்தல்
பகல்முனிவுரைத்தல் இரவுநீடுபருவரல்
கனவின்அரற்றல் நெஞ்சொடுமெலிதல்
பெண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்

#2
**(காண்டல் இன்னது)
** கொளு : 293
தேம் பாய் தெரியல் விடலையைத் திரு நுதல்
காம்பு ஏர் தோளி கண்டு சோர்ந்தன்று

#3
** (வெண்பா) : 294
கடை நின்று காமம் நலியக் கலங்கி
இடைநின்ற ஊர் அலர் தூற்றப் – புடை நின்ற
என் கண்டிலன் அ நெடுந்தகை
தன் கண்டனென் யான் கண்ட ஆறே

#4
**(நயத்தல் இன்னது)
** கொளு : 294
கல் நவில் திணி தோள் காளையைக் கண்ட
நல் நுதல் அரிவை நயப்பு உரைத்தன்று

#5
** (வெண்பா) : 295
கல் நவில் தோளானைக் காண்டலும் கார்க் குவளை
அன்ன என் கண்ணுக்கு அமுதமாம் – என்னை
மலை மலிந்து அன்ன மார்பம்
முலை மலிந்து ஊழூழ் முயங்குங்காலே

#6
**(உட்கோள் இன்னது)
** கொளு : 295
வண்டு அமர் குஞ்சி மைந்தனை நயந்த
ஒண் தொடி அரிவை உட்கொண்டன்று

#7
** (வெண்பா) : 296
உள்ளம் உருக ஒளி வளையும் கை நில்லா
கள் அவிழ் தாரானும் கைக்கு அணையான் – எள்ளிச்
சிறு புன் மாலைத் தலைவரின்
உறு துயர் அவலத்து உயலோ அரிதே

#8
**(மெலிதல் இன்னது)
** கொளு : 296
ஒன்றார் கூறும் உறு பழி நாணி
மென் தோள் அரிவை மெலிவொடு வைகின்று

#9
** (வெண்பா) : 297
குரும்பை வரி முலை மேல் கோல நெடும் கண்
அரும்பிய வெண் முத்து உகுப்பக் – கரும்பு உடைத் தோள்
காதல் செய் காமம் கனற்ற
ஏதிலாளற்கு இழந்தனென் எழிலே

#10
**(மெலிவொடு வைகல் இன்னது)
** கொளு : 297
மணி வளை நெகிழ மாண் நலம் தொலைய
அணி_இழை மெலிவின் ஆற்றல் கூறின்று

#11
** (வெண்பா) : 298
பிறை புரை வாள் நுதல் பீர் அரும்ப மென் தோள்
இறை புனை எல் வளை ஏக – நிறை புணையா
யாம நெடும் கடல் நீந்துவேன்
காம ஒள் எரி கனன்று அகம் சுடுமே

#12
**(காண்டல் வலித்தல் இன்னது)
** கொளு : 298
மை வரை நாடனை மடந்தை பின்னரும்
கை வளை சோர காண்டல் வலித்தன்று

#13
** (வெண்பா) : 299
வேட்டவை எய்தி விழைவு ஒழிதல் பொய் போலும்
மீட்டும் மிடை மணிப் பூணானைக் – காட்டு என்று
மாமை பொன் நிறம் பசப்ப
தூ மலர் நெடும் கண் துயில் துறந்தனவே

#14
**(பகல்முனி உரைத்தல் இன்னது)
** கொளு : 299
புரி வளை நெகிழப் புலம்பொடு நின்றோள்
பருவரல் உள்ளமொடு பகல் முனிவு உரைத்தன்று

#15
** (வெண்பா) : 300
தன்-கண் அளி அவாய் நின்றேற்குத் தார் விடலை
வன்கண்ணன் நல்கான் என வாடும் – என்-கண்
இடரினும் பெரிதால் எவ்வம்
படரினும் பெரிதால் பாவி இப் பகலே

#16
**(இரவுநீடு பருவரல் இன்னது)
** கொளு : 300
புலம்பொடு வைகும் பூம்_குழை கங்குல்
கலங்கினேன் பெரிது எனக் கசிந்து உரைத்தன்று

#17
** (வெண்பா) : 301
பெண் மேல் நலிவு பிழை என்னாய் பேதுறீஇ
விண் மேல் இயங்கும் மதி விலக்கி – மண் மேல்
நினக்கே செய் பகை எவன்-கொல்
எனக்கே நெடியை வாழியர் இரவே

#18
**(கனவில் அரற்றல் 1 இன்னது)
** கொளு : 301
ஒண் தொடி மடந்தை உரு கெழு கங்குலில்
கண்டவன் கரப்பக் கனவில் அரற்றின்று

#19
** (வெண்பா) : 302
அயர்வொடு நின்றேன் அரும் படர் நோய் தீர
நயம் வரும் பள்ளி மேல் நல்கிக் – கயவா
நனவிடைத் தமியேன் வைகக்
கனவிடைத் தோன்றிக் கரத்தல் கொடிதே

#20
**(கனவில் அரற்றல் 2 இன்னது)
** கொளு : 302
பெய்_வளை அவனொடு பேணிய கங்குல்
உய்குவன் வரின் என உரைப்பினும் அதுவே

#21
** (வெண்பா) : 303
தோடு அவிழ் தார் யானும் தொடர அவனும் என்
பாடகச் சீறடியின் மேல் பணிய – நாடகமா
வைகிய கங்குல் தலைவரின்
உய்குவன் உலகத்து அளியேன் யானே

#22
**(நெஞ்சொடு மெலிதல் 1 இன்னது)
** கொளு : 303
அம் சொல் வஞ்சி அல் இருள் செலீஇய
நெஞ்சொடு புகன்று நிலை உரைத்தன்று

#23
** (வெண்பா) : 304
மல் ஆடு தோளான் அளி அவாய் மால் இருள்-கண்
செல்லாம் ஒழிக செலவு என்பாய் – நில்லாய்
புனை இழை இழந்த பூசல்
நினையினும் நினைதியோ வாழி என் நெஞ்சே

#24
**(நெஞ்சொடு மெலிதல் 2 இன்னது)
** கொளு : 304
வரி வளை நெகிழ்த்தோன் முன் செல வலித்தேன்
அரிவையர் அறிக என உரைப்பினும் அதுவே

#25
** (வெண்பா) : 305
நல் வளை ஏக நலம் தொலைவு காட்டிய
செல்லல் வலித்து எனச் செம்மல் முன்பு – இல்லாத
வம்ப உரையொடு மயங்கிய
அம்பல் பெண்டிரும் அறைக எம் அலரே

@16 பெருந்திணைப் படலம்
** பெண்பால் கூற்று
** இதனில் வருவன

#1
வேட்கைமுந்துறுத்தல் பின்நிலைமுயறல்
பிரிவிடைஆற்றல் வரவுஎதிர்ந்துஇருத்தல்
வாராமைக்குஅழிதல் இரவுத்தலைச்சேரல்
இல்லவைநகுதல் புலவியுள்புலம்பல்
பொழுதுகண்டுஇரங்கல் பரத்தையைஏசல்
கண்டுகண்சிவத்தல் காதலில்களித்தல்
கொண்டுஅகம்புகுதல் கூட்டத்துக்குழைதல்
ஊடலுள்நெகிழ்தல் உரைகேட்டுநயத்தல்
பாடகச்சீறடி பணிந்தபின்இரங்கல்
பள்ளிமிசைத்தொடர்தல் செல்கஎனவிடுத்தல் என
ஒன்பதிற்று இரட்டியோடு ஒன்றும் உளப்படப்
பெண்பால் கூற்றுப் பெருந்திணைப் பால

#2
**(வேட்கை முந்துறுத்தல் இன்னது)
** கொளு : 305
கை ஒளிர் வேலவன் கடவக் காமம்
மொய் வளைத் தோளி முந்துற மொழிந்தன்று

#3
** வெண்பா : 306
எழுது எழில் மார்பம் எனக்கு உரித்தாக என்று
அழுதழுது வைகலும் ஆற்றேன் – தொழுது இரப்பல்
வல்லியம் அன்ன வய வேலோய் வாழ்க என
அல்லி அம் தார் நல்கல் அறம்

#4
**(பின்நிலை முயறல் இன்னது)
** கொளு : 306
முன் இழந்த நலம் நசைஇப்
பின் நிலை மலைந்தன்று

#5
** வெண்பா : 307
மல் கொண்ட திண் தோள் மற வேல் நெடுந்தகை
தன் கொண்டு மாமை தகை இழந்த – என் காணப்
பெய் களி யானைப் பிணர் எருத்தில் கண்டு யான்
கைதொழுதேன் தான் கண்டிலன்

#6
**(பிரிவிடை ஆற்றல் இன்னது)
** கொளு : 307
இறை வளை நெகிழ இன்னாது இரங்கிப்
பிறை நுதல் மடந்தை பிரிவிடை ஆற்றின்று

#7
** வெண்பா : 308
ஓடுக கோல் வளையும் ஊரும் அலர் அறைக
தோடு அவிழ் தாழை துறை கமழக் – கோடு உடையும்
பூம் கானல் சேர்ப்பன் புலம்புகொள் மால் மாலை
நீங்கான் என் நெஞ்சத்துள் நின்று

#8
**(வரவு எதிர்ந்து இருத்தல் இன்னது)
** கொளு : 308
முகை புரை முறுவல் முள் எயிற்று அரிவை
வகை புனை வள மனை வரவு எதிர்ந்தன்று

#9
** வெண்பா : 309
காம நெடும் கடல் நீந்துங்கால் கை புனைந்த
பூ மலி சேக்கைப் புணை வேண்டி – நீ மலிந்து
செல்லாய் சிலம்பன் வருதற்குச் சிந்தியாய்
எல் ஆக நெஞ்சம் எதிர்

#10
**(வாராமைக்கு அழிதல் இன்னது)
** கொளு : 309
நெடு வேய்த் தோளி நிமித்தம் வேறுபட
வடி வேல் அண்ணல் வாராமைக்கு அழிந்தன்று

#11
** வெண்பா : 310
நுடங்கு அருவி ஆர்த்து இழியும் நோக்கு_அரும் சாரல்
இடங்கழி மால் மாலை எல்லைத் – தடம் பெரும் கண்
தார் ஆர் மார்பன் தமியேன் உயிர் தளர
வாரான்-கொல் ஆடும் வலம்

#12
**(இரவுத்தலைச் சேறல் இன்னது)
** கொளு : 310
காண்டல் வேட்கையொடு கனை இருள் நடுநாள்
மாண்ட சாயல் மனை இறந்தன்று

#13
** வெண்பா : 311
பணையாய் அறை முழங்கும் பாய் அருவி நாடன்
பிணை ஆர மார்பம் பிணையத் – துணையாய்க்
கழி காமம் உய்ப்பக் கனை இருள்-கண் செல்கேன்
வழி காண மின்னுக வான்

#14
**(இல்லவை நகுதல் இன்னது)
** கொளு : 311
இல்லவை சொல்லி இலங்கு எயிற்று அரிவை
நல் வயல் ஊரனை நகை மிகுத்தன்று

#15
** வெண்பா : 312
முற்றா முலையர் முயங்க இதழ் குழைந்த
நல் தார் அகலம் நகைதரலின் – நல் தார்
கலவேம் என நேர்ந்தும் காஞ்சி நல் ஊர
புலவேம் பொறுத்தல் அரிது

#16
**(புலவியுள் புலம்பல் இன்னது)
** கொளு : 312
நல் வளை மடந்தை நல் தார் பரிந்து
புலவி ஆற்றாள் புலம்பிற்றன்று

#17
** வெண்பா : 313
ஓங்கிய வேலான் பணியவும் ஒள்_இழை
தாங்காள் வரை மார்பின் தார் பரிந்து – ஆங்கே
அடும் படர் மூழ்கி அமை மென் தோள் வாட
நெடும் பெரும் கண் நீந்தின நீர்

#18
**(பொழுதுகண்டு இரங்கல் இன்னது)
** கொளு : 313
நிற்றல் ஆற்றாள் நெடிது உயிர்த்து அலமரும்
பொன் தொடி அரிவை பொழுது கண்டு இரங்கின்று

#19
** வெண்பா : 314
இறையே இறந்தன எல் வளை உண்கண்
உறையே பொழிதலும் ஓவா – நிறையைப்
பருகாப் பகல் கரந்த பையுள் கூர் மாலை
உருகா உயங்கும் உயிர்

#20
**(பரத்தையர் ஏசல் இன்னது)
** கொளு : 314
அணி வயல் ஊரனொடு அப்பு விழவு அமரும்
பணி மொழி அரிவை பரத்தையை ஏசின்று

#21
** வெண்பா : 315
யாம் உயங்கும் மெல் முலையால் யாணர் வயல் ஊரன்
தேம் முயங்கு பைம் தார் திசை முயங்க – யாம் முயங்க
எவ்வையர் சேரி இரவும் இமைபொருந்தாக்
கவ்வை கருதில் கடை

#22
**(கண்டு கண் சிவத்தல் இன்னது)
** கொளு : 315
உறு வரை மார்பன் ஒள் இணர் நறும் தார்
கறுவொடு மயங்கிக் கண் சிவந்தன்று

#23
** வெண்பா : 316
கூடிய கொண்கன் குறுகக் கொடி மார்பின்
ஆடிய சாந்தின் அணி தொடர்ந்து – வாடிய
தார்க் குவளை கண்டு தரியா இவள் முகத்த
கார்க் குவளை காலும் கனல்

#24
**(காதலில் களித்தல் இன்னது)
** கொளு : 316
மை வரை நாடன் மார்பகம் பொருந்திக்
கைவிடல் அறியா காதலில் களித்தன்று

#25
** வெண்பா : 317
காதல் பெருகி களிசெய்ய அக் களியால்
கோதை தாரும் இடை குழைய – மாதர்
கலந்தாள் கலந்து கடைக்கண்ணால் கங்குல்
புலந்தாள் புலரியம் போது

#26
**(கொண்டு அகம் புகுதல் இன்னது)
** கொளு : 317
காதல் பெருகக் கணவனைக் கண்ணுற்றுக்
கோதையால் பிணைத்துக்கொண்டு அகம் புக்கன்று

#27
** வெண்பா : 318
கண்டு களித்துக் கயல் உண்கண் நீர் மல்கக்
கொண்டு அகம் புக்காள் கொடி_அன்னாள் – வண்டு இனம்
காலை யாழ் செய்யும் கரு வரை நாடனை
மாலையால் மார்பம் பிணித்து

#28
**(கூட்டத்துக் குழைதல்)
** கொளு : 318
பெய் தார் அகலம் பிரிதல் ஆற்றாக்
கொய் தழை அல்குல் கூட்டத்துக் குழைந்தன்று

#29
** வெண்பா : 319
மயங்கி மகிழ் பெருக மால் வரை மார்பில்
தயங்கு புனல் ஊரன் தண் தார் – முயங்கியும்
பேதைப் புலம்பப் பிரிதியோ நீ என்னும்
கோதை சூழ் கொம்பில் குழைந்து

#30
**(ஊடலுள் நெகிழ்தல் இன்னது)
** கொளு : 319
நள் இருள் மாலை நடுங்கு அஞர் நலிய
ஒள் வளைத் தோளி ஊடலுள் நெகிழ்ந்தன்று

#31
** வெண்பா : 320
தெரிவு இன்றி ஊடத் தெரிந்து நம் கேள்வர்
பிரிவு இன்றி நல்கினும் பேணாய் – திரிவு இன்றித்
துஞ்சோம் என மொழிதி தூங்கு இருள் மால் மாலை
நெஞ்சே உடையை நிறை

#32
**(உரை கேட்டு நயத்தல் இன்னது)
** கொளு : 320
துயரொடு வைகிய சூழ் வளைத் தோளி
உயர் வரை நாடன் உரை கேட்டு நயந்தன்று

#33
** வெண்பா : 321
ஆழ விடுமோ அலரொடு வைகினும்
தாழ் குரல் ஏனல் தலைக்கொண்ட – நூழில்
விரையால் கமழும் விறல் மலை நாடன்
உரையால் தளிர்க்கும் உயிர்

#34
**(பாடகச் சீறடி பணிந்த பின் இரங்கல் இன்னது)
** கொளு : 321
கோடு உயர் வெற்பன் கூப்பிய கையொடு
பாடகச் சீறடி பணிந்த பின் இரங்கின்று

#35
** வெண்பா : 322
அணிவரும் பூம் சிலம்பு ஆர்க்கும் அடி மேல்
மணி வரை மார்பன் மயங்கிப் – பணியவும்
வற்கென்ற நெஞ்சம் வணங்காய் சிறு வரை
நிற்கு என்றி வாழியர் நீ

#36
**(பள்ளிமிசைத் தொடர்தல் இன்னது)
** கொளு : 322
மா இரும் கங்குல் மா மலை நாடனைப்
பாயல் நீவிப் பள்ளி மிசைத் தொடர்ந்தன்று

#37
** வெண்பா : 323
யானை தொடரும் கொடி போல யான் உன்னைத்
தானை தொடரவும் போதியோ – மானை
மயக்கு அரிய உண்கண் மடந்தை தோள் உள்ளி
இயக்கு_அரும் சோலை இரா

#38
**(செல்க என விடுத்தல் இன்னது)
** கொளு : 323
பாய் இருள் கணவனை படர்ச்சி நோக்கிச்
சே இழை அரிவை செல்க என விடுத்தன்று

#39
** வெண்பா : 324
விலங்குநர் ஈங்கு இல்லை வெல் வேலோய் சென்றீ
இலங்கு_இழை எவ்வம் நலியக் – கலங்கிக்
குறியுள் வருந்தாமைக் குன்று சூழ் சோலை
நெறியுள் விரிக நிலா

@17 இருபால் பெருந்திணை
** இதனுள் வருவன

#1
சீர் செலவழுங்கல் செழும் மடலூர்தல்
தூதிடைஆடல் துயர்அவர்க்குரைத்தல்
கண்டுகைசோர்தல் பருவம்மயங்கல்
ஆண்பால்கிளவி பெண்பால்கிளவி
தேம் கமழ் கூந்தல் தெரிவை வெறியாட்டு
அரிவைக்கு அவள் துணை பாண்வரவுரைத்தல்
பரி புரச் சீறடிப் பரத்தைகூறல்
விறலிகேட்பத்தோழிகூறல்
வெள் வளை விறலிதோழிக்குவிளம்பல்
பரத்தைவாயில் பாங்கிகண்டுரைத்தல்
பிறர்மனைத்துயின்றமை விறலிகூறல்
குற்றிசை ஏனைக் குறுங்கலி உளப்பட
ஒத்த பண்பின் ஒன்று தலைஇட்ட
ஈர்_எண் கிளவியும் பெருந்திணைப் பால

#2
**(செலவு அழுங்கல் இன்னது)
** கொளு : 324
நிலவு வேல் நெடுந்தகை நீள் கழை ஆற்றிடைச்
செலவு முன் வலித்துச் செலவு அழுங்கின்று

#3
** வெண்பா : 325
நடுங்கி நறு நுதலாள் நல் நலம் பீர்பூப்ப
ஒடுங்கி உயங்கல் ஒழியக் – கடும் கணை
வில் ஏர் உழவர் விடர் ஓங்கும் மா மலைச்
செல்லேம் ஒழிக செலவு

#4
**(மடல் ஊர்தல் இன்னது)
** கொளு : 325
ஒன்று அல்ல பல பாடி
மன்றிடை மடல் ஊர்ந்தன்று

#5
** வெண்பா : 326
இன்று இப் படரோடு யான் உழப்ப ஐங்கணையான்
வென்றிப் பதாகை எடுத்தானாம் – மன்றில்
தனி மட மான் நோக்கித் தகை நலம் பாராட்டிக்
குனி மடல்மாப் பண்ணி மேல் கொண்டு

#6
**(தூதிடை ஆடல் இன்னது)
** கொளு : 326
ஊழி மாலை உறு துயர் நோக்கித்
தோழி நீங்காள் தூதிடை ஆடின்று

#7
** வெண்பா : 327
வள்வு ஆய்ந்து பண்ணுக திண் தேர் வடிக் கண்ணாள்
ஒள் வாள் போல் மாலை உயல் வேண்டும் – கள் வாய
தாதொடு வண்டு இமிரும் தாம வரை மார்ப
தூதொடு வந்தேன் தொழ

#8
**(துயர் அவர்க்கு உரைத்தல் இன்னது)
** கொளு : 327
மான்ற மாலை மயில்_இயல் வருத்தல்
தோன்றக் கூறித் துயர் அவர்க்கு உரைத்தன்று

#9
** வெண்பா : 328
உள்ளத்து அவலம் பெருக ஒளி வேலோய்
எள்ளத் துணிந்த இருள் மாலை – வெள்ளத்துத்
தண் தார் அகலம் தழூஉப் புணையா நீ நல்கின்
உண்டாம் என் தோழிக்கு உயிர்

#10
**(கண்டு கை சோர்தல் இன்னது)
** கொளு : 328
போது ஆர் கூந்தல் பொலம் தொடி அரிவை
காதல் கைம்மிகக் கண்டு கை சோர்ந்தன்று

#11
** வெண்பா : 329
ஆம்பல் நுடங்கும் அணி வளையும் ஏகின
கூம்பல் மறந்த கொழும் கயல் கண் – காம்பின்
எழில் வாய்ந்த தோளி எவன் ஆம்-கொல் கானல்
பொழில் எல்லாம் ஈயும் புலம்பு

#12
**(பருவம் மயங்கல் 1 இன்னது)
** கொளு : 329
உருவ வால் வளை உயங்கத் தோழி
பருவம் மயங்கிப் படர் உழந்தன்று

#13
** வெண்பா : 330
பெரும் பணை மென் தோள் பிரிந்தார் எம் உள்ளி
வரும் பருவம் அன்று-கொல் ஆம்-கொல் – சுரும்பு இமிரும்
பூ மலி கொன்றை புறவு எல்லாம் பொன் மலரும்
மா மயிலும் ஆலும் மலை

#14
**(பருவம் மயங்கல் 2 இன்னது)
** கொளு : 330
ஆங்கு அவர் கூறிய பருவம் அன்று எனத்
தேம் கமழ் கோதை தெளிதலும் அதுவே

#15
** வெண்பா : 331
பொறி மயில் ஆலின பொங்கர் எழிலி
சிறு துவலை சிந்தின சிந்த – நறிய
பவர் முல்லை தோன்றிப் பரியாமல் ஈன்ற
அவர் வரும் காலம் ஈது அன்று

#16
**(ஆண்பால் கிளவி இன்னது)
** கொளு : 331
காமுறு காமம் தலை பரிந்து ஏங்கி
ஏமுற்று இருந்த இறைவன் உரைத்தன்று

#17
** வெண்பா : 332
கயல் கூடு வாள் முகத்தாள் கண்ணிய நெஞ்சம்
முயல்கூடு முன்னதாக் காணின் – உயல் கூடும்
காணா மரபில் கடும் பகலும் கங்குலும்
நாள்நாளும் மேயா நகை

#18
**(பெண்பால் கிளவி இன்னது)
** கொளு : 332
வெள் வளை நெகிழவும் எம் உள்ளாத
கள்வனைக் காணாது இ ஊர் எனக் கிளந்தன்று

#19
** வெண்பா : 333
வானத்து இயலும் மதி-அகத்து வைகலும்
கானத்து இயலும் முயல் காணும் – தானத்தின்
ஒள் வளை ஓடவும் உள்ளான் மறைந்து உறையும்
கள்வனைக் காணாது இ ஊர்

#20
**(வெறியாட்டு இன்னது)
** கொளு : 333
தேம் கமழ் கோதை செம்மல் அளி நினைந்து
ஆங்கு அ நிலைமை யாய் அறியாமை
வேங்கை அம் சிலம்பற்கு வெறி ஆடின்று

#21
** வெண்பா : 334
வெய்ய நெடிது உயிரா வெற்பன் அளி நினையா
ஐயம் நனி நீங்க ஆடினாள் – மையல்
அயல் மனைப் பெண்டிரொடு அன்னை சொல் அஞ்சி
வியன் மனையுள் ஆடும் வெறி

#22
**(பாண்வரவு உரைத்தல் இன்னது)
** கொளு : 334
மாண்_இழைக்கு வயல் ஊரன்
பாண் வரவு பாங்கி மொழிந்தன்று

#23
** வெண்பா : 335
அம் சொல் பெரும் பணைத் தோள் ஆய் இழையாய் தாம் நொடியும்
வஞ்சம் தெரியா மருள் மாலை – எம் சேரிப்
பண் இயல் யாழொடு பாணனார் வந்தாரால்
எண்ணியது என்-கொலோ ஈங்கு

#24
**(பரத்தை கூறல் இன்னது)
** கொளு : 335
தேம் கமழ் சிலம்பன் தார் எமக்கு எளிது எனப்
பாங்கவர் கேட்ப பரத்தை மொழிந்தன்று

#25
** வெண்பா : 336
பல உரைத்துக் கூத்தாடிப் பல் வயல் ஊரன்
நிலவு உரைக்கும் பூணவர் சேரிச் – செலவு உரைத்து
வெம் கள் களியால் விறலி விழாக்கொள்ளல்
எங்கட்கு அவன் தார் எளிது

#26
**(விறலி கேட்பத் தோழி கூறல் இன்னது)
** கொளு : 336
பேணிய பிறர் முயக்கு ஆர்_அமுது அவற்கு என
பாணன் விறலிக்குப் பாங்கி மொழிந்தன்று

#27
** வெண்பா : 337
அரும்பிற்கும் உண்டோ அலரது நாற்றம்
பெரும் தோள் விறலி பிணங்கல் – சுரும்போடு
அதிரும் புனல் ஊரற்கு ஆர்_அமிர்தம் அன்றோ
முதிரும் முலையார் முயக்கு

#28
**(விறலி தோழிக்கு விளம்பல் இன்னது)
** கொளு : 337
ஆங்கு அவன் மூப்பு அவர்க்கு அரும் களி தரும் எனப்
பாங்கி கேட்ப விறலி பகர்ந்தன்று

#29
** வெண்பா : 338
உளைத்தவர் கூறும் உரை எல்லாம் நிற்க
முளைத்த முறுவலார்க்கு எல்லாம் – விளைத்த
பழம் கள் அனைத்தாய்ப் படு களி செய்யும்
முழங்கு புனல் ஊரன் மூப்பு

#30
**(பரத்தை வாயில் பாங்கி கண்டு உரைத்தல் இன்னது)
** கொளு : 338
உம் இல் அரிவை உரை மொழி ஒழிய
எம் இல் வலவனும் தேரும் வரும் எனப்
பரத்தை வாயிற்குப் பாங்கி பகர்ந்தன்று

#31
** வெண்பா : 339
மாண் நலம் கொள்ளும் மகிழ்நன் தணக்குமேல்
பேணலம் பெண்மை ஒழிக என்பார் – காணக்
கலவ மயில் அன்ன காரிகையார் சேரி
வலவன் நெடும் தேர் வரும்

#32
**(பிறர் மனை துயின்றமை விறலி கூறல் இன்னது)
** கொளு : 339
மற்று அவர் சேரியில் மைந்தன் உறைந்தமை
இற்று என விறலி எடுத்துரைத்தன்று

#33
** வெண்பா : 340
தண் தார் அணி அவாம் தையலார் சேரியுள்
வண்டு ஆர் வயல் ஊரன் வைகினமை – உண்டால்
அறியேன் அடி உறை ஆய்_இழையால் பெற்றேன்
சிறியேன் பெரிய சிறப்பு

#34
**(குற்றிசை இன்னது)
** கொளு : 340
பொன் தார் அகலம் புல்லிய மகளிர்க்கு
அற்றாங்கு ஒழுகாது அறம் கண்மாறின்று

#35
** வெண்பா : 341
கரிய பெரும் தடம் கண் வெள் வளைக்கையாளை
மரிய கழி கேண்மை மைந்த – தெரியின்
விளிந்து ஆங்கு ஒழியினும் விட்டு அகலார்-தம்மைத்
தெளிந்தாரில் தீர்வது தீது

#36
**(குறுங்கலி இன்னது)
** கொளு : 341
நாறு இரும் கூந்தல் மகளிரை நயப்ப
வேறுபடு வேட்கை வீயக் கூறின்று

#37
** வெண்பா : 342
பண் அவாம் தீம் சொல் பவளத் துவர்ச் செவ் வாய்
பெண் அவாம் பேர் அல்குல் பெய் வளை – கண் அவாம்
நல் நலம் பீர்பூப்ப நல்கார் விடுவதோ
தொல் நலம் உண்டார் தொடர்பு

@18 ஒழிபு
** வென்றிப் பெருந்திணை
** இதனுள் வருவன

#1
பாடாண் பகுதியுள் தொல்காப்பிய முதல்
கோடா மரபின் குணனொடு நிலைஇக்
கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்
விடுத்தல் அறியா விறல் புரி வாகையுள்
வாணிகவென்றியும் மல்லவென்றியும்
நீள் நெறி உழவன் நிலன் உழு வென்றியும்
இகல் புரி ஏறொடு கோழியும் எதிர்வன்
தகருடன் யானை தணப்பு_இல் வெம் பூழொடு
சிவல் கிளி பூவை செழும் பரி தேர் யாழ்
இவர் தரு சூதிடை ஆடல் பாடல்
பிடி என்கின்ற பெரும் பெயர் வென்றியொடு
உடையன பிறவும் உளப்படத் தொகைஇ
மெய்யின் ஆர் தமிழ் வெண்பா மாலையுள்
ஐயனாரிதன் அமர்ந்து உரைத்தனவே
** கொடுப்போர் ஏத்திக கொடார் பழித்தல் இன்னது

#2
** வெண்பா : 343
சீர் மிகு நல் இசை பாடிச் செலவு அயர்தும்
கார் முகில்_அன்னார் கடை நோக்கி – போர் மிகு
மண் கொண்ட வேல் மற மன்னரே ஆயினும்
வெண்கொண்டல்_அன்னாரை விட்டு

#3
** வாணிப வென்றி இன்னது
** வெண்பா : 344
காடும் கடும் திரை நீர்ச் சுழியும் கண்ணஞ்சான்
சாடும் கலனும் பல இயக்கி – நீடும்
பலிசையால் பண்டம் பகர்வான் பரியான்
கலி கையால் நீக்கல் கடன்

#4
** மல் வென்றி இன்னது
** வெண்பா : 345
கண்டான் மலைந்தான் கதிர் வானம் காட்டியே
கொண்டான் பதாகை மற மல்லன் – வண்டு ஆர்க்கும்
மாலை துயலும் அருவிய மா மலை
போலும் திரள் தோள் புடைத்து

#5
** உழவன் வென்றி இன்னது
** வெண்பா : 346
மண் பதம் நோக்கி மலி வயலும் புன்செய்யும்
கண்பட ஏர் பூட்டிக் காலத்தால் – எண் பதனும்
தத்து நீர் ஆர்க்கும் கடல் வேலித் தாயர் போல்
வித்தித் தருவான் விளைவு

#6
** ஏறுகொள் வென்றி இன்னது
** வெண்பா : 347
குடை வரை ஏந்திய நம் கோவலனே கொண்டான்
அடை அவிழ் பூம்_கோதை அஞ்சல் – விடை அரவம்
மன்றம் கறங்க மயங்கப் பறை படுத்து
இன்று நமர் விட்ட ஏறு

#7
** கோழி வென்றி இன்னது
** வெண்பா : 348
பாய்ந்தும் எறிந்தும் படிந்தும் பலகாலும்
காய்ந்தும் வாய்க் கொண்டும் கடும் சொல் ஆர் – ஆய்ந்து
நிறம் கண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப்
புறங்கண்டும் தான் வருமே போர்க்கு

#8
** தகர் வென்றி இன்னது
** வெண்பா : 349
அருகு ஓடி நீங்காது அணைதலும் இன்றித்
திரி கோட்ட மா இரியச் சீறிப் – பொருகளம்
புக்கு மயங்கப் பொருது புறவாயை
நக்குமாம் நல்ல தகர்

#9
** யானை வென்றி இன்னது
** வெண்பா : 350
கஞ்சுகம் வாய்த்த கவளம் தன் கைக் கொண்ட
குஞ்சரம் வென்ற கொலை வேழம் – துஞ்சாது
உழலையும் பாய்ந்து இறுத்து ஓடாது தான் தன்
நிழலையும் தாள் சுளிக்கும் நின்று

#10
** பூழ் வென்றி இன்னது
** வெண்பா : 351
சொல்லும் சுவட்டவர் சொல்லுக சொல்லுங்கால்
சொல்லும் பல உள சொன்ன பின் – வெல்லும்
நலம் வர நாடி நடுங்காது நூல்-கண்
புலவரால் ஆய்ந்து அமைத்த பூழ்

#11
** சிவல் வென்றி இன்னது
** வெண்பா : 352
ஒட்டியார் எல்லாம் உணரார் புடைத்த பின்
விட்டு ஓட வேண்டுமோ தண்ணுமை – விட்ட
சுவடு ஏற்குமாயின் சுடர் இழாய் சோர்ந்து
கவடு ஏற்க ஓடும் களத்து

#12
** கிளி வென்றி இன்னது
** வெண்பா : 353
இல நாம் உரைப்பு அதன்-கண் எல் வளை நாணப்
பல நாள் பணி பதமும் கூறிச் – சில நாளுள்
பொங்கு அரி உண்கணாள் பூவைக்கு மாறாகப்
பைங்கிளியைக் கற்பித்தாள் பாட்டு

#13
** பூவை வென்றி இன்னது
** வெண்பா : 354
புரிவொடு நாவினால் பூவை புணர்த்துப்
பெரிய அரியவை பேசும் – தெரி வளை
வெள் எயிற்றுச் செவ் வாய் வரி உண்கணாள் வளர்த்த
கிள்ளை கிளந்தவை கீண்டிட்டு

#14
** குதிரை வென்றி இன்னது
** வெண்பா : 355
ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும்
கந்து மறமும் கறங்கு உளை_மா – முந்து உற
மேல் கொண்டு அவை செலீஇ வெல் வேலான் மேம்பட்டான்
வேல் கொண்ட கண்ணாளை மீட்டு

#15
** தேர் வென்றி இன்னது
** வெண்பா : 356
ஒலி மணித் திண் தேர்_உடையாரை வெல்லும்
கலி மணித் திண் தேரால் காளை – கலி_மாப்
பல உடன் பூட்டிப் படர் சிறந்து ஐந்து
செலவொடு மண்டிலம் சென்று

#16
** யாழ் வென்றி இன்னது
** வெண்பா : 357
பாலை படுமலை பண்ணி அதன் கூட்டம்
கோலம் செய் சீறியாழ் கொண்ட பின் – வேலைச்
சுவை எல்லாம் தோன்ற எழீஇயினாள் சூழ்ந்த
அவை எல்லாம் ஆக்கி அணங்கு

#17
** சூது வென்றி இன்னது
** வெண்பா : 358
கழகத்து இயலும் கவற்றின் நிலையும்
அளகத் திரு நுதலாள் ஆய்ந்து – புழகத்து
பாய வகையால் பணிதம் பல வென்றாள்
ஆய வகையும் அறிந்து

#18
** ஆடல் வென்றி இன்னது
** வெண்பா : 359
கை கால் புருவம் கண் பாணி நடை தூக்குக்
கொய் பூம் கொம்பு_அன்னாள் குறிக்கொண்டு – பெய் பூப்
படு களி வண்டு ஆர்ப்பப் பயில்_வளை நின்று ஆடும்
தொடு கழல் மன்னன் துடி

#19
** பாடல் வென்றி இன்னது
** வெண்பா : 360
வண்டு உறையும் கூந்தல் வடிக் கண்ணாள் பாடினாள்
வெண்துறையும் செந்துறையும் வேற்றுமையாய்க் – கண்டு அறியக்
கின்னரம் போலக் கிளை அமைந்த தீம் தொடை யாழ்
அ நரம்பும் அச் சுவையும் ஆய்ந்து

#20
** பிடி வென்றி இன்னது
** வெண்பா : 361
குவளை நெடும் தடம் கண் கூர் எயிற்றுச் செவ் வாய்
அவளொடு மாமை ஒப்பான – இவளொடு
பாணியும் தூக்கும் நடையும் பெயராமைப்
பேணிப் பெயர்ந்தாள் பிடி

@19 திணைகளின் தொகுப்பு வகைகள்

#1
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
உட்கொடை உழிஞை நொச்சி தும்பை என்று
இத் திறம் ஏழும் புறம் என மொழிப
வாகை பாடாண் பொதுவியல் திணை எனப்
போகிய மூன்றும் புறப்புறம் ஆகும்
கைக்கிளை பெருந்திணை ஆம் இ இரண்டும்
அகப்புறம் ஆம் என அறைந்தனர் புலவர்
*