எழுத்ததிகாரம்


@1 எழுத்து

#1
ஆவி அகரம் முதல் ஆறு_இரண்டாம் ஆய்தம் இடை
மேவும் ககர முதல் மெய்களாம் மூ_ஆறும்
கண்ணு முறைமையால் காட்டிய முப்பத்தொன்று
நண்ணு முதல் வைப்பாகும் நன்கு

#2
ஆன்ற உயிர் ஈர்_ஆறும் ஐம் குறில் ஏழ் நெடிலாம்
ஏன்ற மெய் மூ_ஆறும் எண்ணுங்கால் ஊன்றிய
வன்மையே மென்மை இடைமை ஆம் வாள்_கண்ணாய்
தொன்மை முயற்சியால் தொக்கு

#3
ஓங்கு உயிர்கள் ஒற்றின் மேல் ஏறி உயிர்மெய் ஆய்
ஆங்கு இருநூற்றொருபத்தாறு ஆகும் பாங்குடைய
வல்_ஒற்று மெல்_ஒற்று வர்க்கம் அளபெடைகள்
சொல் ஒற்றி நீட்டத் தொகும்

#4
தொடர் நெடில் கீழ் வன்மை மேல் உகரம் யப் பின்பு
அடைய வரும் இகரம் அன்றி மட நல்லாய்
மும்மை இடத்து ஐ ஔவும் குன்றும் முன் ஒற்று உண்டேல்
செம்மை உயிர் ஏறும் செறிந்து

#5
குறில் நெடில்கள் ஒன்று இரண்டு மூன்று அளவு காலாம்
குறுகு ம ஆய்தம் உயிர்மெய் பெறும் உயிரே
மெய் ஆய்தம் இ உக் குறுக்கம் அரை மென்_மொழியாய்
ஐ ஔ அளவு ஒன்றரை

#6
உந்தியில் தோன்றும் உதானவளிப் பிறந்து
கந்தம் மலி நெஞ்சு தலை கண்டத்து வந்த பின்
நாசி நா அண்ணம் இதழ் எயிறு மூக்கு எனப்
பேசும் எழுத்தின் பிறப்பு

#7
காட்டும் உயிரும் க ச த ந ப ம வரியும்
ஈட்டிய வ வரியின் எட்டு எழுத்தும் ஈட்டு
ஞ யவின்-கண் மும்மூன்றும் நல் மொழிக்கு முன் என்று
அயர்வு_இலார் கட்டுரைத்தார் ஆய்ந்து

#8
உயிரின்-கண் ஒன்பான் உடன் மென்மையின் மூன்று
அயர்வு_இல் இடையினங்கள் ஆறும் நயன் உணர்ந்து
நல் மொழிகட்கு ஈற்றெழுத்தாம் என்று உரைப்பர் ஞாலத்துச்
சொல் முடிவு கண்டோர் துணிந்து

#9
ஆதி உயிர் வ இயையின் ஔ ஆம் அஃது அன்றி
நீதியினால் ய இயையின் ஐ ஆகும் ஏதம்_இலா
எ ஒ மெய் புள்ளி பெறும் என்ப ச ஞ ய முன்
அ ஐ ஆம் ஆதி இடை

#10
அகரத்திற்கு ஆவும் இகரத்திற்கு ஐயும்
உகரத்திற்கு ஔவும் இருவிற்கு அகல்வு_அரிய
ஆரும் ஆம் ஏ ஆம் இகரத்திற்கு ஓ ஆகிச்
சேரும் உகரத்தின் திறம்

#11
நேர்ந்த மொழிப் பொருளை நீக்க வரும் நகரம்
சார்ந்தது உடல் ஆயின் தன் உடல் போம் சார்ந்ததுதான்
ஆவி ஏற்று அன் ஆவி முன் ஆகும் ஐ ஔவாம்
மேவிய ஏவும் விரைந்து

#12
மெய் ஈறு உயிர் ஈறு உயிர் முதல் மெய் முதலா
எய்தும் பெயர் வினையும் இவ் வகையே செய்து அமைத்தால்
தோன்றல் திரிதல் கெடுதல் எனத் தூ_மொழியாய்
மூன்று என்ப சந்தி முடிவு

#13
மூன்றும் நான்கு ஒன்பான் உயிர்ப் பின்னும் அல்லாத
ஆன்ற உயிர்ப் பின்னும் ஆவி வரின் தோன்றும்
யகர வகரம் இறுதி இடத்து ஓரோர்
மகரம் கெட வகரம் ஆம்

#14
குற்றுகரம் ஆவி வரில் சிதையும் கூறிய வல்
ஒற்று முன் தோன்றுதலும் உண்டாகும் முன் தோன்றும்
மென்மையதன் வல்லெழுத்தாம் வேல்_கண்ணாய் முற்றுகரத்
தன்மையும் போம் ஆவியினைச் சார்ந்து

#15
குற்றொற்று இரட்டும் உயிர் வந்தால் ய ர ழக்-கண்
நிற்கப் பின் வல்லெழுத்து நேருமேல் ஒற்றாம்
பிணைந்த வருக்கம் பெயர்த்து இயல்பு சந்தி
இணைந்தபடியே முடியும் ஏய்ந்து

#16
வாய்ந்த உயிர்ப் பின் வரும் எழுத்தின் வர்க்கத்து ஒற்று
ஏய்ந்து புகுதும் இயல்புமாம் ஆய்ந்த
இறுதி வரும் எழுத்தாம் ஈறு அர் ஆம் ஓரோர்
மறுவில் பதம் கெட்டு வரும்

#17
வன்மை வரினே ள ண ல ன மாண் ட ற ஆம்
மென்மை வரினே ள ல ண ன ஆம் த நக்கள்
முன்பின் ஆம் தப்பி ன ண இயல்பாத் த ட ற ஆம்
ஒன்று அழிந்து போதலும் உண்டு

#18
மகரம் தான் வன்மை வரின் வர்க்கத்து ஒற்று ஆகும்
புகர் இலா மென்மை வரின் பொன்றும் நிகர்_இல்
வகரம் வந்தால் குறுகும் வ அழிந்து ம ஆம்
மகரம் த வ ய ஆம் வந்து

#19
உரி வரின் நாழியின் ஈற்று உயிர்மெய் ஐந்தாம்
வரும் உயிர் ஒன்று ஒன்பான் மயங்கும் தெரியத்
திரிந்தும் விகாரங்கள் தேர்ந்து ஆறு முன்றும்
பொருந்தும் இடம் கண்டு புகல்

#20
நின்ற முதல் குற்றுயிர் தான் நீளும் முதல் நெட்டுயிர் தான்
குன்றும் உயிர் உயிர்மெய் கூடுமேல் ஒன்றிய எண்
பத்தின் இடை ஆய்தமும் ஆம் ப நீண்டும் நீளாதும்
மற்றவை போய் ஈறு வரும்

#21
ஒன்பானொடு பத்து நூறு அதனை ஓதுங்கால்
முன்பாம் தகரம் ண ள முன்பு இரட்டும் பின்பான
எல்லாம் கெட்டு ஆறு இரண்டு ஆவியின் பின் வல்_உகரம்
நல்லாய் இரம் ஈறாய் நாட்டு

#22
மேய இரு சொல் பொருள் தோன்ற வேறு இருத்தி
ஆய இடைச்சொல் அடைவித்தால் தூய சீர்
ஆவி போம் ஒற்றுப் போம் ஆங்கு உயிர்மெய் போம் அன்றி
மேவிய சுட்டு ஆங்கே மிகும்

#23
உற்ற ஆகாரம் அகரம் ஆய் ஓங்கு உகரம்
பெற்றிடும் நீ ஆ மாவின் பின் இறுதி ஒற்று அணையும்
சாவ அகம் என்புழிச் சார்ந்த இறுதியிடைப்
போவது உயிர்மெய் என்றே போற்று

#24
ஐந்து ஆறு ஆம் ஆறு பதினாறு ஆம் ஒற்றும் மிகும்
வந்து உறழும் ம ன வ ய ன லக்கள் சந்திகளின்
அல்லாதனவும் அடக்கும் வாய் கண்டு அடக்க
எல்லாம் முடியும் இனிது
*