நீதி நூல்கள்

தேவையான நூலின்
மேல் சொடுக்கவும்

1.ஆத்திசூடி – ஔவையார்
2.கொன்றைவேந்தன் – ஔவையார்
3.மூதுரை(வாக்குண்டாம்)ஔவையார்
4.நல்வழி – ஔவையார்
5.வெற்றி வேற்கை (நறுந்தொகை) – அதிவீரராம பாண்டியர்
6.உலக நீதி – உலகநாதர்
7.நீதிநெறி விளக்கம் – ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
8.அறநெறிச்சாரம் – முனைப்பாடியார்
9.நீதி நூல் – முனிசீப் வேதநாயகம் பிள்ளை
10.நன்னெறி – சிவப்பிரகாச சுவாமிகள்
11.நீதி சூடாமணி (இரங்கேச வெண்பா) – பிறசை சாந்தக் கவிராயர்
12.சோமேசர் முதுமொழி வெண்பா — சிவஞான முனிவர்
13.விவேக சிந்தாமணி
14.ஆத்திசூடி வெண்பா – இராம பாரதியார்
15.நீதி வெண்பா–
16.நன்மதி வெண்பா — எம்ஆர் ஸ்ரீநிவாசய்யங்கார்
17.அருங்கலச்செப்பு
18.முதுமொழிமேல் வைப்பு – கமலை வெள்ளியம்பலவாண முனிவர்
19.புதிய ஆத்திசூடி – மகாகவி பாரதியார்
20.இளையார் ஆத்திசூடி – பாவேந்தர் பாரதிதாசன்
21.திருக்குறள் குமரேச வெண்பா – ஜெகவீரபாண்டியனார்


&1 ஆத்திசூடி – ஔவையார்

@0 கடவுள் வாழ்த்து

#1
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

@1 நூல்
** உயிர் வருக்கம்

#1
அறம் செய விரும்பு

#2
ஆறுவது சினம்

#3
இயல்வது கரவேல்

#4
ஈவது விலக்கேல்

#5
உடையது விளம்பேல்

#6
ஊக்கமது கைவிடேல்

#7
எண் எழுத்து இகழேல்

#8
ஏற்பது இகழ்ச்சி

#9
ஐயம் இட்டு உண்

#10
ஒப்புரவு ஒழுகு

#11
ஓதுவது ஒழியேல்

#12
ஔவியம் பேசேல்

#13
அஃகம் சுருக்கேல்
** உயிர்மெய் வருக்கம்

#14
கண்டொன்று சொல்லேல்

#15
ஙப் போல் வளை

#16
சனி நீராடு

#17
ஞயம்பட உரை

#18
இடம்பட வீடு எடேல்

#19
இணக்கம் அறிந்து இணங்கு

#20
தந்தை தாய்ப் பேண்

#21
நன்றி மறவேல்

#22
பருவத்தே பயிர்செய்

#23
மண் பறித்து உண்ணேல்

#24
இயல்பு அலாதன செய்யேல்

#25
அரவம் ஆட்டேல்

#26
இலவம் பஞ்சில் துயில்

#27
வஞ்சகம் பேசேல்

#28
அழகு அலாதன செய்யேல்

#29
இளமையில் கல்

#30
அரனை மறவேல்

#31
அனந்தல் ஆடேல்
** ககர வருக்கம்

#32
கடிவது மற

#33
காப்பது விரதம்

#34
கிழமைபட வாழ்

#35
கீழ்மை அகற்று

#36
குணமது கைவிடேல்

#37
கூடிப் பிரியேல்

#38
கெடுப்பது ஒழி

#39
கேள்வி முயல்

#40
கைவினை கரவேல்

#41
கொள்ளை விரும்பேல்

#42
கோதாட்டு ஒழி

#43
கௌவை அகற்று
** சகர வருக்கம்

#44
சக்கர நெறி நில்

#45
சான்றோர் இனத்து இரு

#46
சித்திரம் பேசேல்

#47
சீர்மை மறவேல்

#48
சுளிக்கச் சொல்லேல்

#49
சூது விரும்பேல்

#50
செய்வன திருந்தச் செய்

#51
சேரிடம் அறிந்து சேர்

#52
சையெனத் திரியேல்

#53
சொல் சோர்வுபடேல்

#54
சோம்பித் திரியேல்
** தகர வருக்கம்

#55
தக்கோன் எனத் திரி

#56
தானமது விரும்பு

#57
திருமாலுக்கு அடிமை செய்

#58
தீவினை அகற்று

#59
துன்பத்திற்கு இடம்கொடேல்

#60
தூக்கி வினை செய்

#61
தெய்வம் இகழேல்

#62
தேசத்தோடு ஒட்டி வாழ்

#63
தையல் சொல் கேளேல்

#64
தொன்மை மறவேல்

#65
தோற்பன தொடரேல்
** நகர வருக்கம்

#66
நன்மை கடைப்பிடி

#67
நாடு ஒப்பன செய்

#68
நிலையில் பிரியேல்

#69
நீர் விளையாடேல்

#70
நுண்மை நுகரேல்

#71
நூல் பல கல்

#72
நெற்பயிர் விளைவு செய்

#73
நேர்பட ஒழுகு

#74
நைவினை நணுகேல்

#75
நொய்ய உரையேல்

#76
நோய்க்கு இடம்கொடேல்
** பகர வருக்கம்

#77
பழிப்பன பகரேல்

#78
பாம்பொடு பழகேல்

#79
பிழைபடச் சொல்லேல்

#80
பீடு பெற நில்

#81
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

#82
பூமி திருத்தி உண்

#83
பெரியாரைத் துணைக் கொள்

#84
பேதைமை அகற்று

#85
பையலோடு இணங்கேல்

#86
பொருள்-தனைப் போற்றி வாழ்

#87
போர்த் தொழில் புரியேல்
** மகர வருக்கம்

#88
மனம் தடுமாறேல்

#89
மாற்றானுக்கு இடம்கொடேல்

#90
மிகைபடச் சொல்லேல்

#91
மீதூண் விரும்பேல்

#92
முனைமுகத்து நில்லேல்

#93
மூர்க்கரோடு இணங்கேல்

#94
மெல்லி நல்லாள் தோள் சேர்

#95
மேன்மக்கள் சொல் கேள்

#96
மை_விழியார் மனை அகல்

#97
மொழிவது அற மொழி

#98
மோகத்தை முனி
** வகர வருக்கம்

#99
வல்லமை பேசேல்

#100
வாது முன் கூறேல்

#101
வித்தை விரும்பு

#102
வீடு பெற நில்

#103
உத்தமனாய் இரு

#104
ஊருடன் கூடி வாழ்

#105
வெட்டெனப் பேசேல்

#106
வேண்டி வினை செயேல்

#107
வைகறைத் துயில் எழு

#108
ஒன்னாரைத் தேறேல்

#109
ஓரம் சொல்லேல்
** ஆத்திசூடி முற்றும்

மேல்

&2 கொன்றை வேந்தன் – ஔவையார்

@0 கடவுள் வாழ்த்து

#1
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே

@1 நூல்
** உயிர் வருக்கம்

#1
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

#2
ஆலயம் தொழுவது சாலவும் நன்று

#3
இல்லறம் அல்லது நல்லறம் அன்று

#4
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்

#5
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு

#6
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

#7
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்

#8
ஏவா மக்கள் மூவா மருந்து

#9
ஐயம் புகினும் செய்வன செய்

#10
ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு

#11
ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

#12
ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு

#13
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
**ககர வருக்கம்

#14
கற்பெனப்படுவது சொல் திறம்பாமை

#15
காவல்தானே பாவையர்க்கு அழகு

#16
கிட்டாதாயின் வெட்டென மற

#17
கீழோர் ஆயினும் தாழ உரை

#18
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

#19
கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்

#20
கெடுவது செய்யின் விடுவது கருமம்

#21
கேட்டில் உறுதி கூட்டும் உடைமை

#22
கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி

#23
கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி

#24
கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு

#25
கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை
** சகர வருக்கம்

#26
சந்தக்கு அழகு வந்தி செய்யாமை

#27
சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு

#28
சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு

#29
சீரைத் தேடின் ஏரைத் தேடு

#30
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

#31
சூதும் வாதும் வேதனை செய்யும்

#32
செய் தவம் மறந்தால் கைதவம் ஆளும்

#33
சேமம் புகினும் யாமத்து உறங்கு

#34
சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்

#35
சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்

#36
சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
** தகர வருக்கம்

#37
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

#38
தாயில் சிறந்தொரு கோயிலும் இல்லை

#39
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

#40
தீராக் கோபம் போரா முடியும்

#41
துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு

#42
தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்

#43
தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்

#44
தேடாது அழிக்கின் பாடாய் முடியும்

#45
தையும் மாசியும் வை_அகத்து உறங்கு

#46
தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது

#47
தோழனோடும் ஏழைமை பேசேல்
** நகர வருக்கம்

#48
நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும்

#49
நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை

#50
நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

#51
நீரகம் பொருந்திய ஊரகத்து இரு

#52
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி

#53
நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு

#54
நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை

#55
நேரா நோன்பு சீராகாது

#56
நைபவர் எனினும் நொய்ய உரையேல்

#57
நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்

#58
நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை
** பகர வருக்கம்

#59
பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்

#60
பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்

#61
பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்

#62
பீரம் பேணி பாரம் தாங்கும்

#63
புலையும் கொலையும் களவும் தவிர்

#64
பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்

#65
பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்

#66
பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்

#67
பையச் சென்றால் வையம் தாங்கும்

#68
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்

#69
போனகம் என்பது தான் உழந்து உண்டல்
** மகர வருக்கம்

#70
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

#71
மாரி அல்லது காரியம் இல்லை

#72
மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை

#73
மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது

#74
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

#75
மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்

#76
மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு

#77
மேழிச் செல்வம் கோழைபடாது

#78
மை_விழியார்-தம் மனை அகன்று ஒழுகு

#79
மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

#80
மோனம் என்பது ஞான வரம்பு
** வகர வருக்கம்

#81
வளவன் ஆயினும் அளவறிந்து அளித்து உண்

#82
வானம் சுருங்கின் தானம் சுருங்கும்

#83
விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

#84
வீரன் கேண்மை கூர் அம்பு ஆகும்

#85
உரவோர் என்கை இரவாது இருத்தல்

#86
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

#87
வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை

#88
வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை

#89
வைகல்-தோறும் தெய்வம் தொழு

#90
ஒத்த இடத்து நித்திரை கொள்

#91
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்
** கொன்றை வேந்தன் முற்றும்

மேல்

&3 மூதுரை – (வாக்குண்டாம்) – ஔவையார்

@0 கடவுள் வாழ்த்து

#1
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

@1 நூல்

#1
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும்-கொல் என வேண்டா நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்

#2
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல் மேல் எழுத்துப் போல் காணுமே அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்

#3
இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் இன்னாத
நாளல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக்கு அழகு

#4
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

#5
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா

#6
உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ கற்றூண்
பிளந்திறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்

#7
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்

#8
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

#9
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது

#10
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்-பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

#11
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கு ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்

#12
மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகிவிடும்

#13
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவை அல்ல நல்ல மரங்கள் அவை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன் மரம்

#14
கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி

#15
வேங்கை வரிப் புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால் போல் பாங்கறியாப்
புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்

#16
அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா மடைத்தலையில்
ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு

#17
அற்ற குளத்தில் அறு நீர்ப் பறவை போல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் அக் குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு

#18
சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும் சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும் என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக்கால்

#19
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ் கடல் நீர்
நாழி முகவாது நால் நாழி தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்

#20
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி உடன்பிறவா
மா மலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அ மருந்து போல்வாரும் உண்டு

#21
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ் இல்
புலி கிடந்த தூறாய்விடும்

#22
எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே
கருதியவாறு ஆமோ கருமம் கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை

#23
கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடும் சினத்துப்
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே வில் பிடித்து
நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்

#24
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தால் போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்

#25
நஞ்சுடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத்தவர்

#26
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு

#27
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்

#28
சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று

#29
மருவினிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம் திருமடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும் அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்

#30
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் மாந்தர்
குறைக்குந்தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்
** மூதுரை – (வாக்குண்டாம்) முற்றும்

&4 நல்வழி – ஔவையார்

மேல்

@0 கடவுள் வாழ்த்து

#1
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா

@1 நூல்

#1
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்

#2
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ளபடி

#3
இடும்பைக்கு இடும்பை இயல் உடம்பு இதன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு

#4
எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய் ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்து போது அல்லால் கண்ணில்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆம் காலம் ஆகும் அவர்க்கு

#5
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போ-மின் என்றால் போகா இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்

#6
உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்
கடல் ஓடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு

#7
எல்லாப்படியாலும் எண்ணினால் இவ் உடம்பு
பொல்லாப் புழு மலி நோய் புன் குரம்பை நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு

#8
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேள்-மின்
தரியாது காணும் தனம்

#9
ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அ நாளும் அவ் ஆறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் ஏற்றவர்க்கு
நல்ல குடி பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து

#10
ஆண்டாண்டு-தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் வேண்டா
நமக்கும் அது வழியே நாம் போம் அளவும்
எமக்கு என் என்று இட்டு உண்டு இரும்

#11
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது

#12
ஆற்றங்கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு

#13
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர் ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய் அம்புவியதன் மேல்

#14
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

#15
சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய்விடும்

#16
தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி

#17
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்

#18
பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேர் உலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார் மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்

#19
சேவித்தும் சென்று இரந்தும் தெண்ணீர்க் கடல் கடந்தும்
பாவித்தும் பார் ஆண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்

#20
அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய்விடும்

#21
நீரும் நிழலும் நிலம் பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் ஊரும்
வரும் திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்

#22
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்

#23
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே மூதேவி
சென்று இருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்று ஓரம்சொன்னார் மனை

#24
நீறில்லா நெற்றி பாழ் நெய்யில்லா உண்டி பாழ்
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் மாறில்
உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை

#25
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ் பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

#26
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்

#27
ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்று ஆகும்
அன்றி அது வரினும் வந்து எய்தும் ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனை ஆளும் ஈசன் செயல்

#28
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்

#29
மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி
இரந்து அழைப்பார் யாவரும் அங்கு இல்லை சுரந்து அமுதம்
கற்றா தரல் போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத்தவர்

#30
தாம்தாம் முன் செய்த வினை தாமே அனுபவிப்பார்
பூந்தாமரையோன் பொறி வழியே வேந்தே
ஒறுத்தாரை என் செயலாம் ஊர் எல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி

#31
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கு அஞ்சாத்
தாரத்தின் நன்று தனி

#32
ஆறு இடும் மேடும் மடுவும் போலாம் செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து

#33
வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்குவிடும்

#34
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயில் சொல்

#35
பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே தூவா
விரைத்தாலும் நன்று ஆகா வித்து எனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு

#36
நண்டு சிப்பி வேய் கதலி நாசம் உறும் காலத்தில்
கொண்ட கரு அளிக்கும் கொள்கை போல் ஒண்_தொடீ
போதம் தனம் கல்வி பொன்ற வரும் காலம் அயல்
மாதர் மேல் வைப்பார் மனம்

#37
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை நினைப்பது எனக்
கண்ணுறுவதல்லால் கவலைப்படேல் நெஞ்சே மெய்
விண்ணுறுவார்க்கு இல்லை விதி

#38
நன்று என்றும் தீது என்றும் நான் என்றும் தான் என்றும்
அன்று என்றும் ஆம் என்றும் ஆகாதே நின்ற நிலை
தான் அது ஆம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்

#39
முப்பதாம் ஆண்டு அளவில் மூன்று அற்று ஒரு பொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் செப்பும்
கலை அளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலை அளவே ஆகுமாம் மூப்பு

#40
தேவர் குறளும் திரு நான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனி மொழியும் கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்
** நல்வழி முற்றும்

மேல்

&5 அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றி வேற்கை (நறுந்தொகை)

@0 முன்னுரை
** கடவுள் வாழ்த்து

#1
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே
** நூல் பயன்

#2
வெற்றிவேற்கை வீரராமன்
கொற்கையாளி குலசேகரன் புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை-தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலாதவரே
** வாழ்த்து

#3
வாழிய நலனே வாழிய நலனே

@1 நூல்

#1
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

#2
கல்விக்கு அழகு கசடற மொழிதல்

#3
செல்வர்க்கு அழகு செழும் கிளை தாங்குதல்

#4
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்

#5
மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை

#6
வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்

#7
உழவர்க்கு அழகு ஏர் உழுது ஊண் விரும்பல்

#8
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்

#9
தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை

#10
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்

#11
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்

#12
குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்

#13
விலைமகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்

#14
அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்

#15
வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை

#16
தேம்படு பனையின் திரள் பழத்து ஒரு விதை
வானுற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவற்கு இருக்க நிழல் ஆகாதே

#17
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெண்ணீர் கயத்துச் சிறு மீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணி தேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே

#18
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

#19
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்

#20
பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்

#21
உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்

#22
கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்

#23
அடினும் ஆவின் பால் தன் சுவை குன்றாது

#24
சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

#25
அரைக்கினும் சந்தனம் தன் மணம் மாறாது

#26
புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது

#27
கலக்கினும் தண் கடல் சேறு ஆகாது

#28
அடினும் பால் பெய்து கைப்பு
அறாது பேய்ச் சுரைக்காய்

#29
ஊட்டினும் பல் விரை உள்ளி கமழாதே

#30
ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை
இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே

#31
நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசி போல் வேர்கொள்ளாதே

#32
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

#33
சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்
பெரியோராயின் பொறுப்பது கடனே

#34
சிறியோர் பெரும் பிழை செய்தனராயின்
பெரியோர் அப் பிழை பொறுத்தலும் அரிதே

#35
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே

#36
கல்லா ஒருவன் குல நலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே

#37
நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலனாயின் கீழ் இருப்பவனே

#38
எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக் குடிக் கற்றோரை மேல் வருக என்பர்

#39
அறிவுடை ஒருவனை அரசும் விரும்பும்

#40
அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலின் அக் குடி
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று

#41
யானைக்கு இல்லை தானமும் தருமமும்

#42
பூனைக்கு இல்லை தவமும் தயையும்

#43
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்

#44
சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும்

#45
முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும்

#46
அச்சமும் நாணமும் அறிவில்லோர்க்கு இல்லை

#47
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை

#48
கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை

#49
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா

#50
குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர்

#51
சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக் கூழ்ச் சாலை அடையினும் அடைவர்

#52
அறத்து இடு பிச்சை கூவி இரப்போர்
அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர்

#53
குன்றத்தனை இருநிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்

#54
எழு நிலை மாடம் கால் சாய்ந்து உக்கு
கழுதை மேய் பாழ் ஆயினும் ஆகும்

#55
பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப் பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி
நெல் பொலி நெடு நகர் ஆயினும் ஆகும்

#56
மண அணி அணிந்த மகளிர் ஆங்கே
பிண அணி அணிந்து தம் கொழுநரைத் தழீஇ
உடுத்த ஆடை கோடியாக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்

#57
இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே

#58
இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே

#59
நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
எல்லாம் இல்லை இல் இல்லோர்க்கே

#60
தறுகண் யானை தான் பெரிது ஆயினும்
சிறு கண் மூங்கில்கோற்கு அஞ்சும்மே

#61
குன்றுடை நெடும் காடூடே வாழினும்
புன் தலைப் புல்வாய் புலிக்கு அஞ்சும்மே

#62
ஆரையாம் பள்ளத்தூடே வாழினும்
தேரை பாம்புக்கு மிக அஞ்சும்மே

#63
கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டின்
கடும் புலி வாழும் காடு நன்றே

#64
சான்றோர் இல்லாத் தொல் பதி இருத்தலின்
தேன் தேர் குறவர் தேயம் நன்றே

#65
காலையும் மாலையும் நான்மறை ஓதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே

#66
குடி அலைத்து இறந்து வெங்கோலோடு நின்ற
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே

#67
முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து
அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே

#68
வித்தும் ஏரும் உளவாய் இருப்ப
எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே

#69
தன் மனையாளைத் தாய் மனைக்கு அகற்றிப்
பின்பு அவள் பாராப் பேதையும் பதரே

#70
தன் மனையாளைத் தன் மனை இருத்திப்
பிறர் மனைக்கு ஏகும் பேதையும் பதரே

#71
தன் ஆயுதமும் தன் கையில் பொருளும்
பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே

#72
வாய் பறையாகவும் நாக் கடிப்பாகவும்
சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேள்-மின்

#73
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே

#74
மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே

#75
இருவர்-தம் சொல்லையும் எழு தரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையானாயின்
மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தாம்
மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வது ஓர் வாள் ஆகும்மே

#76
பழியா வருவது மொழியாது ஒழிவது

#77
சுழியா வரு புனல் இழியாது ஒழிவது

#78
துணையோடு அல்லது நெடு வழி போகேல்

#79
புணை மீது அல்லது நெடும் புனல் ஏகேல்

#80
எழில் ஆர் முலை வரி விழியார் தந்திரம்
இயலாதன கொடு முயல்வு ஆகாதே

#81
வழியே ஏகுக வழியே மீளுக

#82
இவை காண் உலகிற்கு இயலாமாறே
** வெற்றி வேற்கை (நறுந்தொகை) முற்றும்

மேல்

&6 உலக நீதி – ஆசிரியர்: உலகநாதர்

@0 காப்பு

#1
உலகநீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு

@1 நூல்

#1
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடம்-தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம்சொல்லித் திரிய வேண்டாம்
வாகு ஆரும் குறவருடை வள்ளிபங்கன்
மயில் ஏறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே

#2
நெஞ்சாரப் பொய்-தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சு ஆரும் குறவருடை வள்ளிபங்கன்
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#3
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#4
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#5
வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வு ஆரும் குறவருடை வள்ளிபங்கன்
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#6
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக்காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளிபங்கன்
திருக் கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே

#7
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்-தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இரு தாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியோரை எதிரிட்டுக்கொள்ள வேண்டாம்
குருகு ஆரும் புனம் காக்கும் ஏழைபங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே

#8
சேராத இடம்-தனிலே சேர வேண்டாம்
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வார் ஆரும் குறவருடை வள்ளிபங்கன்
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#9
மண்ணில் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்
மனம் சலித்து சிலுகிட்டுத் திரிய வேண்டாம்
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
புறம்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எம் கோன்
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#10
மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்-தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம் பேசி வாழ்கின்ற வள்ளிபங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே

#11
அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்-தன் கூலி
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவு-தனைத் தீர்த்த மருத்துவன்-தன் கூலி
இன்சொலுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் தானே

#12
கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டை மேல் பூத் தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளிபங்கன்
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#13
ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி
அரும் தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்-தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ள அளவும் வாழ்வர் தாமே
** உலக நீதி முற்றும்

மேல்

&7 நீதிநெறி விளக்கம் – ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது

@0 காப்பு

#1
நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
நீரில் சுருட்டு நெடும் திரைகள் நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று

@1 நூல்

#1
அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல் இசையும் நாட்டும் உறும் கவல் ஒன்று
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கு இல்லை
சிற்றுயிர்க்கு உற்ற துணை

#2
தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடும் காமம்
முன் பயக்கும் சின்னீர இன்பத்தின் முற்று_இழாய்
பின் பயக்கும் பீழை பெரிது

#3
கல்வியே கற்புடைப் பெண்டிர் அப் பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே ஈர்ம் கவியாச் சொல் வளம்
மல்லல் வெறுக்கையா மாண் அவை மண்ணுறுத்தும்
செல்வமும் உண்டு சிலர்க்கு

#4
எத்துணைய ஆயினும் கல்வி இடம் அறிந்து
உய்த்துணர்வு இல் எனில் இல் ஆகும் உய்த்துணர்ந்தும்
சொல்வன்மை இன்று எனின் என் ஆம் அஃது உண்டேல்
பொன் மலர் நாற்றம் உடைத்து

#5
அவை அஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவை அஞ்சா ஆகுலச் சொல்லும் நவை அஞ்சி
ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இல் நலமும்
பூத்தலின் பூவாமை நன்று

#6
கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வான் மலரவன் செய்
வெற்றுடம்பு மாய்வன போல் மாயா புகழ் கொண்டு
மற்று இவர் செய்யும் உடம்பு

#7
நெடும்பகல் கற்ற அவையத்து உதவாது
உடைந்துளார் உட்குவரும் கல்வி கடும்பகல்
ஏதிலான்-பால் கண்ட இல்லினும் பொல்லாதே
தீது என்று நீப்பு அரிதால்

#8
வருந்தித் தாம் கற்றன ஓம்பாது மற்றும்
பரிந்து சில கற்பான் தொடங்கல் கரும் தனம்
கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட்டு அரிப்பு அரித்தாங்கு
எய்த்துப் பொருள்செய்திடல்

#9
எனைத்துணையவேனும் இலம்பாட்டார் கல்வி
தினைத்துணையும் சீர்ப்பாடு இலவாம் மனைத்தக்காள்
மாண்பிலள் ஆயின் மணமகன் நல்லறம்
பூண்ட புலப்படா போல்

#10
இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினும் ஒன்று இல்லானேல்
வன்சொல்லின் அல்லது வாய் திறவா என் சொலினும்
கைத்துடையான் கால் கீழ் ஒதுங்கும் கடல் ஞாலம்
பித்துடைய அல்ல பிற

#11
இவறன்மை கண்டும் உடையாரை யாரும்
குறையிரந்தும் குற்றேவல் செய்ப பெரிதும் தாம்
முற்பகல் நோலாதார் நோற்றாரைப் பின்செல்லல்
கற்பு அன்றே கல்லாமை அன்று

#12
கற்றோர்க்குக் கல்வி நலனே கலன் அல்லால்
மற்று ஓர் அணிகலம் வேண்டாவாம் முற்ற
முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டா யாரே
அழகுக்கு அழகு செய்வார்

#13
முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதூஉம்
கற்றனம் என்று களியற்க சிற்றுளியால்
கல்லும் தகரும் தகரா கனங்குழாய்
கொல் உலைக் கூடத்தினால்

#14
தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடைமை
அம்மா பெரிது என்று அகம் மகிழ்க தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்து அழிக கற்றது எல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று

#15
கல்வியுடைமை பொருளுடைமை என்று இரண்டு
செல்வமும் செல்வம் எனப்படும் இல்லார்
குறையிரந்து தம் முன்னர் நிற்ப போல் தாமும்
தலை வணங்கித் தாழப் பெறின்

#16
ஆக்கம் பெரியார் சிறியார் இடைப்பட்ட
மீச்செலவு காணின் நனி தாழ்ப தூக்கின்
மெலியது மேன்மேல் எழச் செல்லச்செல்ல
வலிது அன்றே தாழும் துலைக்கு

#17
விலக்கிய ஓம்பி விதித்தனவே செய்யும்
நலத்தகையார் நல்வினையும் தீதே புலப் பகையை
வென்றன நல் ஒழுக்கில் நின்றேம் பிற என்று
தம்பாடு தம்மின் கொளின்

#18
தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நல் நீர் சொரிந்து வளர்த்து அற்றால் தன்னை
வியவாமை அன்றே வியப்பாவது இன்பம்
நயவாமை அன்றே நலம்

#19
பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாமே நோற்பது ஒன்று உண்டு பிறர்பிறர்
சீர் எல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்

#20
கற்றுப் பிறர்க்கு உரைத்துத் தாம் நில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக்கு உண்டு ஓர் வலியுடைமை சொற்ற நீர்
நில்லாதது என் என்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன்
சொல்லாமே சூழ்ந்து சொலல்

#21
பிறர்க்குப் பயன்படத் தாம் கற்ற விற்பார்
தமக்குப் பயன் வேறு உடையார் திறப்படூஉம்
தீவினை அஞ்சா விறல் கொண்டு தென்புலத்தார்
கோவினை வேலைகொளல்

#22
கற்பன ஊழ் அற்றார் கல்விக் கழகத்து ஆங்கு
ஒற்கம் இன்று ஊத்தைவாய் அங்காத்தல் மற்றுத் தம்
வல் உரு அஞ்சன்-மின் என்பவே மா பறவை
புல்லுரு அஞ்சுவ போல்

#23
போக்கறு கல்வி புலம் மிக்கார்-பால் அன்றி
மீக்கொள் நகையினார்-வாய்ச் சேரா தாக்கணங்கும்
ஆண் அவாம் பெண்மை உடைத்து எனினும் பெண் நலம்
பேடு கொளப்படுவது இல்

#24
கற்றன கல்லார் செவி மாட்டிக் கையுறூஉம்
குற்றம் தமதே பிறிது அன்று முற்றுணர்ந்தும்
தாம் அவர் தன்மை உணராதார் தம் உணரா
ஏதிலரை நோவது எவன்

#25
வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறு சிலர்
காத்து அது கொண்டு ஆங்கு உகப்பு எய்தார் மாத் தகைய
அந்தப்புரத்தது பூஞை புறங்கடைய
கந்து கொல் பூட்கைக் களிறு

#26
குலமகட்குத் தெய்வம் கொழுநனே மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும் அறவோர்க்கு
அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம்
இலை முகப் பைம் பூண் இறை

#27
கண்ணில் சொலிச் செவியின் நோக்கும் இறைமாட்சி
புண்ணியத்தின்-பாலதே ஆயினும் தண்ணளியால்
மன்பதை ஓம்பாதார்க்கு என் ஆம் வயப் படை மற்று
என் பயக்கும் ஆணல்லவர்க்கு

#28
குடி கொன்று இறை கொள்ளும் கோமகற்குக் கற்றா
மடி கொன்று பால் கொளலும் மாண்பே குடி ஓம்பிக்
கொள்ளுமா கொள்வோற்குக் காண்டுமே மா நிதியம்
வெள்ளத்தின் மேலும் பல

#29
இன்று கொளல்-பால நாளைக் கொளப் பொறான்
நின்று குறையிரப்ப நேர்படான் சென்று ஒருவன்
ஆவன கூறின் எயிறு அலைப்பான் ஆறலைக்கும்
வேடு அலன் வேந்தும் அலன்

#30
முடிப்ப முடித்துப் பின் பூசுவ பூசி
உடுப்ப உடுத்து உண்ப உண்ணா இடித்திடித்துக்
கட்டுரை கூறின் செவிக்கொளா கண் விழியா
நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம்

#31
ஒற்றின் தெரியாச் சிறைப்புறத்து ஓர்தும் எனப்
பொன் தோள் துணையாத் தெரிதந்தும் குற்றம்
அறிவு அரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை சென்று
முறையிடினும் கேளாமை அன்று

#32
ஏதிலார் யாதும் புகல இறைமகன்
கோது ஒரீஇக் கொள்கை முதுக்குறைவு நேர் நின்று
காக்கை வெளிது என்பார் என் சொலார் தாய்க் கொலை
சால்புடைத்து என்பாரும் உண்டு

#33
கண்கூடாப் பட்டது கேடு எனினும் கீழ்மக்கட்கு
உண்டோ உணர்ச்சி மற்று இல் ஆகும் மண்டு எரி
தான் வாய்மடுப்பினும் மாசுணம் கண் துயில்வ
பேரா பெருமூச்செறிந்து

#34
நட்புப் பிரித்தல் பகை நட்டல் ஒற்று இகழ்தல்
பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் தக்கார்
நெடுமொழி கோறல் குணம் பிறிதாதல்
கெடுவது காட்டும் குறி

#35
பணியப்படுவார் புறங்கடையராகத்
தணிவு_இல் களிப்பினால் தாழ்வார்க்கு அணியது
இளையாள் முயக்கு எனினும் சேய்த்து அன்றே மூத்தாள்
புணர் முலைப் போகம் கொளல்

#36
கண்ணோக்கு அரும்பா நகை முகமே நாள்_மலரா
இன்மொழியின் வாய்மையே தீம் காயா வண்மை
பலமா நலம் கனிந்த பண்புடையார் அன்றே
சலியாத கற்பதரு

#37
வாங்கும் கவளத்து ஒருசிறிது வாய் தப்பின்
தூங்கும் களிறோ துயருறா ஆங்கு அது கொண்டு
ஊரும் எறும்பு இங்கு ஒரு கோடி உய்யுமால்
ஆரும் கிளையோடு அயின்று

#38
மாகம் சிறுகக் குவித்து நிதிக் குவை
ஈகையின் ஏக்கழுத்தம் மிக்கு உடைய மா கொல்
பகை முகத்த ஒண் வேலான் பார்வையில் தீட்டும்
நகை முகத்த நன்கு மதிப்பு

#39
களைகணாத் தம் அடைந்தார்க்கு உற்றுழியும் மற்று ஓர்
விளைவு உன்னி வெற்றுடம்பு தாங்கார் தளர் நடையது
ஊன் உடம்பு என்று புகழுடம்பு ஓம்புதற்கே
தான் உடம்பட்டார்கள் தாம்

#40
தம்முடை ஆற்றலும் மானமும் தோற்றுத் தம்
இன் உயிர் ஓம்பினும் ஓம்புக பின்னர்ச்
சிறுவரை ஆயினும் மன்ற தமக்கு ஆங்கு
இறுவரை இல்லை எனின்

#41
கலன் அழிந்த கற்புடைப் பெண்டிரும் ஐந்து
புலன் ஒருங்கப் பொய் கடிந்தாரும் கொலை ஞாட்பின்
மொய்ம்புடை வீரரும் அஞ்சார் முரண் மறலி
தும்பை முடிச் சூடினும்

#42
புழு நெளிந்து புண் அழுகி யோசனை நாறும்
கழி முடை நாற்றத்தவேனும் விழலர்
விளிவு உன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப் பயன் கொண்டார்
சுளியார் சுமை போடுதற்கு

#43
இகழின் இகழ்ந்து ஆங்கு இறைமகன் ஒன்று
புகழினும் ஒக்கப் புகழ்ப இகல் மன்னன்
சீர் வழிப்பட்டதே மன்பதை மற்று என் செய்யும்
நீர் வழிப்பட்ட புணை

#44
செவி சுடச் சென்று ஆங்கு இடித்து அறிவுமூட்டி
வெகுளினும் வாய் வெரீஇப் பேரா கவுள் மதத்த
கைம்மா வயத்தவே பாகு மற்று எத்திறத்தும்
அ மாண்பினவே அமைச்சு

#45
கைவரும் வேந்தன் நமக்கு என்று காதலித்த
செவ்வி தெரியாது உரையற்க ஒவ்வொருகால்
எண்மையனேனும் அரியன் பெரிது அம்மா
கண்ணிலன் உள் வெயர்ப்பினான்

#46
பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார்
கிழமை பிறிது ஒன்றும் கொள்ளார் வெகுளின் மன்
காதன்மை உண்டே இறை மாண்டார்க்கு ஏதிலரும்
ஆர்வலரும் இல்லை அவர்க்கு

#47
மன்னர் புறங்கடை காத்தும் வறிதே ஆம்
எ நலம் காண்டும் என்று எள்ளற்க பல் நெடுநாள்
காத்தவை எல்லாம் கடைமுறைபோய்க் கைகொடுத்து
வேத்தவையின் மிக்குச் செயும்

#48
உறுதி பயப்ப கடைபோகாவேனும்
இறுவரை-காறும் முயல்ப இறும் உயிர்க்கும்
ஆயுள் மருந்து ஒழுக்கல் தீது அன்றால் அல்லன போல்
ஆவனவும் உண்டு சில

#49
முயலாது வைத்து முயற்றின்மையாலே
உயலாகா ஊழ்த் திறத்த என்னார் மயலாயும்
ஊற்றம்_இல் தூ விளக்கம் ஊழுண்மை காண்டும் என்று
ஏற்றார் எறி கால் முகத்து

#50
உலையா முயற்சி களைகணா ஊழின்
வலி சிந்தும் வன்மையும் உண்டே உலகு அறியப்
பால் முளை தின்று மறலி உயிர் குடித்த
கான்முளையே போலும் கரி

#51
காலம் அறிந்து ஆங்கு இடம் அறிந்து செய் வினையின்
மூலம் அறிந்து விளைவு அறிந்து மேலும் தாம்
சூழ்வன் சூழ்ந்து துணைமை வலி தெரிந்து
ஆள்வினை ஆளப்படும்

#52
மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்

#53
சிறிய பகை எனினும் ஓம்புதல் தேற்றார்
பெரிதும் பிழைபாடு உடையர் நிறை கயத்து
ஆழ் நீர் மடுவில் தவளை குதிப்பினும்
யானை நிழல் காண்பு அரிது

#54
புறப் பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார்
அகப் பகை ஒன்று அஞ்சிக் காப்ப அனைத்து உலகும்
சொல் ஒன்றின் யாப்பார் பரிந்து ஓம்பிக் காப்பவே
பல்காலும் காமப் பகை

#55
புறம் நட்டு அகம் வேர்ப்பார் நச்சுப் பகைமை
வெளியிட்டு வேறாதல் வேண்டும் கழி பெரும்
கண்ணோட்டம் செய்யார் கருவியிட்டு ஆற்றுவார்
புண் வைத்து மூடார் பொதிந்து

#56
நட்பிடைக் குய்யம் வைத்து எய்யா வினை சூழ்ந்து
வட்கார் திறத்தராய் நின்றார்க்குத் திட்பமாம்
நாள் உலந்தது அன்றே நடுவன் நடுவின்மை
வாளா கிடப்பன் மறந்து

#57
மனத்த கறுப்பு எனின் நல்ல செயினும்
அனைத்தெவையும் தீயவே ஆகும் எனைத்துணையும்
தீயவே செய்யினும் நல்லவாக் காண்பவே
மாசு_இல் மனத்தினவர்

#58
இனியவர் என் சொலினும் இன்சொல்லே இன்னார்
கனியும் மொழியும் கடுவே அனல் கொளுந்தும்
வெங்காரம் வெய்து எனினும் நோய் தீர்க்கும் மெய் பொடிப்பச்
சிங்கிக் குளிர்ந்தும் கொலும்

#59
பொய் குறளை வன்சொல் பயனில என்று இ நான்கும்
எய்தாமை சொல்லின் வழுக்காது மெய்யில்
புலம் ஐந்தும் காத்தும் மனம் மாசு அகற்றும்
நலம் அன்றே நல்லாறு எனல்

#60
நல்லாறு ஒழுக்கின்-தலை நின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற்கு ஒருப்படார் பல் பொறிய
செம் கண் புலி ஏறு அறப் பசித்தும் தின்னாவாம்
பைங்கண் புனத்த பைங்கூழ்

#61
குலம் விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் வாய்மை
நலம் விற்றுக் கொள்ளும் திருவும் தவம் விற்று ஆங்கு
ஊன் ஓம்பும் வாழ்வும் உரிமை விற்று உண்பதூஉம்
தான் ஓம்பிக் காத்தல் தலை

#62
இடை தெரிந்து அச்சுறுத்து வஞ்சித்து எளியார்
உடைமை கொண்டு ஏமாப்பார் செல்வம் மட நல்லார்
பொம்மல் முலை போல் பருத்திடினும் மற்று அவர்
நுண் இடை போல் தேய்ந்துவிடும்

#63
பெற்ற சிறுகப் பெறாத பெரிது உள்ளும்
சிற்றுயிர்க்கு ஆக்கம் அரிது அம்மா முற்றும்
வரவர வாய்மடுத்து வல் விராய் மாய
எரி தழல் மாயாது இரா

#64
தத்தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே
ஒத்த கடப்பாட்டில் தாள் ஊன்றி எய்த்தும்
அறங்கடையில் செல்லார் பிறன் பொருளும் வெஃகார்
புறங்கடையது ஆகும் பொருள்

#65
பொதுமகளே போல்வ தலையாயார் செல்வம்
குலமகளே ஏனையோர் செல்வம் கலன் அழிந்த
கைம்மையார் பெண்மைநலம் போல் கடையாயார்
செல்வம் பயன்படுவது இல்

#66
வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின் மற்றையோன்
நல்குரவே போலும் நனி நல்ல கொன்னே
அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று
பலரால் இகழப்படான்

#67
ஈகை அரிது எனினும் இன்சொலினும் நல்கூர்தல்
ஓஒ கொடிது கொடிது அம்மா நா கொன்று
தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட்டு இடப்படின் மற்று
ஆஆ இவர் என் செய்வார்

#68
சொல்வன்மை உண்டு எனில் கொன்னே விடுத்து ஒழிதல்
நல்வினை கோறலின் வேறு அல்ல வல்லைத் தம்
ஆக்கம் கெடுவது உளது எனினும் அஞ்சுபவோ
வாக்கின் பயன் கொள்பவர்

#69
சிறு முயற்சி செய்து ஆங்கு உறு பயன் கொள்ளப்
பெறும் எனில் தாழ்வரோ தாழார் அறனல்ல
எண்மைய ஆயினும் கைவிட்டு அரிது எனினும்
ஒண்மையில் தீர்ந்து ஒழுகலார்

#70
செயக்கடவ அல்லனவும் செய்தும்-மன் என்பார்
நயத்தகு நாகரிகம் என் ஆம் செயிர்த்து உரைப்பின்
நெஞ்சு நோம் என்று தலை துமிப்பான் தண்ணளி போல்
எஞ்சாது எடுத்துரைக்கற்பாற்று

#71
அல்லன செய்யினும் ஆகுலம் கூழாக் கொண்டு
ஒல்லாதார் வாய்விட்டு உலம்புப வல்லார்
பிறர்பிறர் செய்ப போல் செய்தக்க செய்து ஆங்கு
அறிமடம் பூண்டு நிற்பார் ஆர்

#72
பகை இன்று பல்லார் பழி எடுத்து ஓதி
நகை ஒன்றே நன்பயனாக் கொள்வான் பயம் இன்று
மெய் விதிர்ப்புக் காண்பான் கொடிறு உடைத்துக் கொல்வான் போல்
கை விதிர்த்து அஞ்சப்படும்

#73
தெய்வம் உளது என்பார் தீய செயப் புகின்
தெய்வமே கண் இன்று நின்று ஒறுக்கும் தெய்வம்
இலது என்பார்க்கு இல்லைத் தம் இன் புதல்வர்க்கு அன்றே
பலகாலும் சொல்வார் பயன்

#74
தீய செயல் செய்வார் ஆக்கம் பெருகினும்
தீயன தீயனவே வேறல்ல தீயன
நல்லன ஆகாவாம் நா இன்புற நக்கிக்
கொல்லும் கவயமாப் போல்

#75
நன்மக்கள் செந்நாத் தழும்பு இருக்க நாள்-வாயும்
செந்நெறிச் செல்வாரில் கீழல்லர் முன்னைத் தம்
ஊழ் வலி உன்னிப் பழி நாணி உள்ளுடைவார்
தீய செயினும் சில

#76
பிறன் வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
அறன் அன்றே ஆயினும் ஆக சிறுவரையும்
நல் நலத்தது ஆயினும் கொள்க நலம் அன்றே
மெய் நடுங்க உள் நடுங்கும் நோய்

#77
கருமம் சிதையாமே கல்வி கெடாமே
தருமமும் தாழ்வுபடாமே பெரிதும் தம்
இன் நலமும் குன்றாமே ஏர் இளம் கொம்பு_அன்னார்
நல் நலம் துய்த்தல் நலம்

#78
கொலை அஞ்சார் பொய் நாணார் மானமும் ஓம்பார்
களவு ஒன்றோ ஏனையவும் செய்வார் பழியோடு
பாவம் இஃது என்னார் பிறிது மற்று என் செய்யார்
காமம் கதுவப்பட்டார்

#79
திருவினும் நல்லாள் மனைக்கிழத்தியேனும்
பிறன்மனைக்கே பீடு அழிந்து நிற்பர் நறுவிய
வாயினவேனும் உமிழ்ந்து கடுத் தின்னும்
தீய விலங்கின் சிலர்

#80
கற்பு உடுத்து அன்பு முடித்து நாண் மெய்ப் பூசி
நற்குணம் நற்செய்கை பூண்டாட்கு மக்கட்பேறு
என்பது ஓர் ஆக்கமும் உண்டாயின் இல் அன்றே
கொண்டாற்குச் செய் தவம் வேறு

#81
ஏந்து எழில் மிக்கான் இளையான் இசைவல்லான்
காந்தையர் கண் கவர் நோக்கத்தான் வாய்ந்த
நயனுடை இன்சொல்லான் கேள் எனினும் மாதர்க்கு
அயலார் மேல் ஆகும் மனம்

#82
கற்பு_இல் மகளின் நலம் விற்று உணவு கொளும்
பொற்றொடி நல்லார் நனி நல்லர் மற்றுத் தம்
கேள்வற்கும் ஏதிலர்க்கும் தங்கட்கும் தம் கிளைஞர்
யாவர்க்கும் கேடு சூழார்

#83
முறையும் குடிமையும் பான்மையும் நோக்கார்
நிறையும் நெடு நாணும் பேணார் பிறிதும் ஒரு
பெற்றிமை பேதைமைக்கு உண்டே பெரும் பாவம்
கற்பின் மகளிர் பிறப்பு

#84
பெண்மை வியவார் பெயரும் எடுத்து ஓதார்
கண்ணொடு நெஞ்சு உறைப்ப நோக்குறார் பண்ணொடு
பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார்
வீடு_இல் புலப் பகையினார்

#85
துயில் சுவையும் தூ நல்லார் தோள் சுவையும் எல்லாம்
அயில் சுவையின் ஆகுவ என்று எண்ணி அயில் சுவையும்
பித்து உணாக் கொள்ப போல் கொள்ப பிறர் சிலர் போல்
மொத்துணா மொய்ம்பினவர்

#86
அன்பொடு அருள் உடையரேனும் உயிர்நிலை மற்று
என்பு இயக்கம் கண்டும் புறந்தரார் புன் புலால்
பொய்க் குடில் ஓம்புவரோ போதத்தால் தாம் வேய்ந்த
புக்கில் குடிபுகுதுவார்

#87
சிற்றின்பம் சின்னீரது ஆயினும் அஃது உற்றார்
மற்று இன்பம் யாவையும் கைவிடுப முற்றும் தாம்
பேரின்ப மாக் கடல் ஆடுவார் வீழ்பவோ
பார் இன்பப் பாழ் கும்பியில்

#88
எவ்வினையரேனும் இணைவிழைச்சு ஒன்று இலரேல்
தெவ்வும் திசை நோக்கிக் கைதொழூஉம் அவ் வினை
காத்தல் இலரேல் எனைத்துணையர் ஆயினும்
தூர்த்தரும் தூர்ப்பார் அலர்

#89
பரபரப்பினோடே பலபல செய்து ஆங்கு
இரவு பகல் பாழுக்கு இறைப்ப ஒருவாற்றான்
நல்லாற்றின் ஊக்கின் பதறிக் குலைகுலைப
எவ்வாற்றான் உய்வார் இவர்

#90
இளையம் முது தவம் ஆற்றுதும் நோற்று என்று
உளைவு இன்று கண்பாடும் ஊழே விளிவு இன்று
வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் காண்பாரும்
தாழாமே நோற்பார் தவம்

#91
நல்லவை செய்யத் தொடங்கினும் நோனாமே
அல்லன அல்லவற்றில் கொண்டு உய்க்கும் எல்லி
வியல் நெறிச் செல்வாரை ஆறலைத்து உண்பார்
செலவு பிழைத்து உய்ப்ப போல்

#92
நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப் போர்வை
கஞ்சுகம் அன்று பிறிது ஒன்றே கஞ்சுகம்
எப்புலமும் காவாமே மெய்ப் புலம் காக்கும் மற்று
இப் புலமும் காவாது இது

#93
வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தேம் என்று மகிழன்-மின் வஞ்சித்த
எங்கும் உளன் ஒருவன் காணும்-கொல் என்று அஞ்சி
அங்கம் குலைவது அறிவு

#94
மறை வழிப் பட்ட பழிமொழி தெய்வம்
பறை அறைந்தாங்கு ஓடிப் பரக்கும் கழி முடைப்
புன் புலால் நாற்றம் புறம் பொதிந்து மூடினும்
சென்று தைக்கும் சேயார் முகத்து

#95
மெலியார் விழினும் ஒருவாற்றான் உய்ப
வலியார் மற்று ஒன்றானும் உய்யார் நிலை தப
நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்
உய்யுமால் உய்யா பிற

#96
இசையாத போலினும் மேலையோர் செய்கை
வசை ஆகா மற்றையோர்க்கு அல்லால் பசு வேட்டுத்
தீ ஓம்பி வான் வழக்கம் காண்பாரை ஒப்பவே
ஊன் ஓம்பி ஊன் தின்பவர்

#97
எவரெவர் எத்திறத்தர் அத் திறத்தராய் நின்று
அவரவர்க்கு ஆவன கூறி எவரெவர்க்கும்
உப்பாலாய் நிற்ப மற்று எம் உடையார் தம் உடையான்
எப்பாலும் நிற்பது என

#98
மெய்யுணர்ந்தார் பொய் மேல் புலம் போக்கார் மெய்யுணர்ச்சி
கைவருதல் கண்ணாப் புலம் காப்பார் மெய்யுணர்ந்தார்
காப்பே நிலையாப் பழி நாணல் நீள் கதவாச்
சேர்ப்பார் நிறைத் தாழ் செறித்து

#99
கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள்
பெற்றுக்கொடுத்த தலைமகன் போல் முற்றத்
துறந்தார்க்கு மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம்
இறந்த எலாம் துன்பம் அலாது இல்

#100
கற்றாங்கு அறிந்து அடங்கித் தீது ஒரீஇ நன்று ஆற்றிப்
பெற்றது கொண்டு மனம் திருத்திப் பற்றுவதே
பற்றுவதே பற்றிப் பணி அற நின்று ஒன்று உணர்ந்து
நிற்பாரே நீள் நெறிச் சென்றார்

#101
ஐயம் திரிபு இன்று அளந்து உத்தியில் தெளிந்து
மெய்யுணர்ச்சிக் கண் விழிப்பத் தூங்குவார் தம் உளே
காண்பதே காட்சி கனவு நனவாகப்
பூண்பதே தீர்ந்த பொருள்
** நீதிநெறி விளக்கம் முற்றிற்று

மேல்

&8 முனைப்பாடியார் அருளிய அறநெறிச்சாரம்

@1 நூல்

#1
தா இன்றி எப்பொருளும் கண்டு உணர்ந்து தாமரைப்
பூவின் மேல் சென்றான் புகழ் அடியை நாவின்
தரித்து ஈண்டு அறநெறிச்சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருங்க விரைந்து

#2
மற உரையும் காமத்து உரையும் மயங்கிப்
பிற உரையும் மல்கிய ஞாலத்து அறவுரை
கேட்கும் கருத்துடையோரே பிறவியை
நீக்கும் திருவுடை யார்

#3
உரைப்பவன் கேட்பான் உரைக்கப்படுவது
உரைத்ததனால் ஆய பயனும் புரைப்பு இன்றி
நான்மையும் போலியை நீக்கி அவை நாட்டல்
வான்மையின் மிக்கார் வழக்கு

#4
அறம் கேட்டு அருள் புரிந்து ஐம்புலன்கள்-மாட்டும்
இறங்காது இருசார் பொருளும் துறந்து அடங்கி
மன் உயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல்
பன்னுதற்குப் பாற்பட்ட வன்

#5
பிள்ளை பேய் பித்தன் பிணியாளன் பின்நோக்கி
வெள்ளை களி விடமன் வேட்கையான் தெள்ளிப்
புகைக்கப் பொருள் உணர்வான் என்று இவரே நூலை
உரைத்தற்கு உரிமையிலாதார்

#6
தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான்
வடுமாற்றம் அஞ்சித் தற்காப்பான் படும் ஆற்றால்
ஒப்புரவு செய்து ஆண்டு உறுதிச்சொல் சேர்பவன்
தக்கான் தரும உரைக்கு

#7
தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடி பிணக்கன்
புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் இன்சொல்லை
ஏன்றிருந்தும் கேளாத ஏழை என இவர்கட்கு
ஆன்றவர்கள் கூறார் அறம்

#8
வினை உயிர் கட்டு வீடு இன்ன விளக்கி
தினையனைத்தும் தீமை இன்றாகி நினையுங்கால்
புல்லறத்தைத் தேய்த்து உலகினோடும் பொருந்துவதாம்
நல்லறத்தை நாட்டுமிடத்து

#9
ஆவட்டை போன்று அறியாதாரை மயக்குறுத்திப்
பாவிட்டார்க்கு எல்லாம் படுகுழியாய்க் காவிட்டு
இருமைக்கும் ஏமம் பயவாதனவே
தருமத்துப் போலிகள் தாம்

#10
புல்ல உரைத்தல் புகழ்தல் பொருள் ஈதல்
நல்லர் இவர் என்று நட்பாடல் சொல்லின்
அறம் கேள்வியால் ஆம் பயன் என்று உரைப்பார்
மறம் கேள்வி மாற்றியவர்

#11
காட்சி ஒழுக்கொடு ஞானம் தலைநின்று
மாட்சி மனைவாழ்தல் அன்றியும் மீட்சி_இல்
வீட்டுலகம் எய்தல் என இரண்டே நல்லறம்
கேட்டதனால் ஆய பயன்

#12
மெய்ம்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம்
செம்மை ஒன்றின்மை துறவுடைமை நன்மை
திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன
அறம் பத்தும் ஆன்ற குணம்

#13
தனக்குத் துணையாகித் தன்னை விளக்கி
இனத்துள் இறைமையும் செய்து மனக்கு இனிய
போகம் தருதலால் பொன்னே அறத் துணையோடு
ஏகமாம் நண்பு ஒன்றும் இல்

#14
ஈட்டிய ஒண் பொருளும் இல் ஒழியும் சுற்றத்தார்
காட்டு-வாய் நேரே கலுழ்ந்து ஒழிவர் மூட்டும்
எரியின் உடம்பு ஒழியும் ஈர்ம் குன்ற நாட
தெரியின் அறமே துணை

#15
நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
நோற்பவருக்குச் சார்வாய் அறம் பெருக்கி யாப்புடைக்
காழும் கிடுகும் போல் நிற்கும் கயக்கு இன்றி
ஆழி சூழ் வையத்து அறம்

#16
இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொல் களை கட்டு வாய்மை எரு அட்டி
அன்பு நீர் பாய்ச்சி அறக் கதிர் ஈன்றது ஓர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்

#17
காலைச் செய்வோம் என்று அறத்தைக் கடைப்பிடித்துச்
சாலச் செய்வாரே தலைப்படுவார் மாலைக்
கிடந்தான் எழுதல் அரிதால் மற்று என்-கொல்
அறம் காலைச் செய்யாதவாறு

#18
சென்ற நாள் எல்லாம் சிறு விரல்வைத்து எண்ணலாம்
நின்ற நாள் யார்க்கும் உணர்வு அரிது என்று ஒருவன்
நன்மை புரியாது நாள் உலப்ப விட்டிருக்கும்
புன்மை பெரிது புறம்

#19
கோட்டுநாள் இட்டுக் குறை உணர்ந்து வாராதால்
மீட்டு ஒரு நாள் இடையும் தாராதால் வீட்டுதற்கே
வஞ்சஞ்செய் கூற்றம் வருதலால் நன்று ஆற்றி
அஞ்சாது அமைந்திருக்கற்பாற்று

#20
இன்று உளார் இன்றேயும் மாய்வர் அவர் உடைமை
அன்றே பிறர் உடைமை ஆயிருக்கும் நின்ற
கருமத்தர் அல்லாத கூற்றின் கீழ் வாழ்வார்
தருமம் தலைநிற்றல் நன்று

#21
மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து
பின்னை அறிவென் என்றல் பேதைமை தன்னைத்
துணித்தானும் தூங்காது அறம் செய்க கூற்றம்
அணித்தாய் வருதலும் உண்டு

#22
மூப்பொடு தீப் பிணி முன் உறீஇப் பின் வந்து
கூற்ற அரசன் குறும்பு எறியும் ஆற்ற
அற அரணம் ஆராய்ந்து அடையின் அஃது அல்லால்
பிற அரணம் இல்லை உயிர்க்கு

#23
திருத்தப்படுவது அறக் கருமம் தம்மை
வருத்தியும் மாண்புடையார் செய்க பெருக்க
வரவும் பெரும் கூற்றம் வன்கண் ஞமன் கீழ்த்
தரவு அறுத்து மீளாமை கண்டு

#24
முன்னே ஒருவன் முடித்தான் தன் துப்பு எலாம்
என்னே ஒருவன் இகழ்ந்திருத்தல் முன்னே
முடித்த படி அறிந்து முன்முன் அறத்தைப்
பிடிக்க பெரிதாய் விரைந்து

#25
குறைக் கருமம் விட்டு உரைப்பின் கொள்ள உலவா
அறக் கருமம் ஆராய்ந்து செய்க பிறப்பிடைக்கு ஓர்
நெஞ்சு ஏமாப்பு இல்லாதான் வாழ்க்கை நிரயத்துத்
துஞ்சாத் துயரம் தரும்

#26
அறம் புரிந்து ஆற்றுவ செய்யாது நாளும்
உறங்குதல் காரணம் என்னை மறந்து ஒருவன்
நாட்டு விடக்கு_ஊர்தி அச்சு இறும் காலத்துக்
கூட்டும் திறம் இன்மையால்

#27
பாவம் பெருகப் பழி பெருகத் தன் ஓம்பி
ஆவது ஒன்று இல்லை அறன் அழித்துப் பாவம்
பொறாஅ முறைசெய் பொரு_இல் ஞமன் கீழ்
அறா உண்ணும் ஆற்றவும் நின்று

#28
முன் செய் வினையின் பயன் துய்த்து அது உலந்தால்
பின் செய் வினையின் பின் போகலால் நற்செய்கை
ஆற்றுந்துணையும் அறம் மறவேல் நல் நெஞ்சே
கூற்றம் குடில் பிரியா முன்

#29
திரை அவித்து நீராடல் ஆகா உரைப்பார்
உரை அவித்து ஒன்றும் சொல் இல்லை அரைசராய்ச்
செய்தும் அறம் எனினும் ஆகாது உளவரையால்
செய்வதற்கே ஆகும் திரு

#30
கல்லா ஒருவனைக் காரணம் காட்டினும்
இல்லை மற்று ஒன்றும் அறன் உணர்தல் நல்லாய்
நறு நெய் நிறைய முகப்பினும் மூழை
பெறுமோ சுவை உணருமாறு

#31
வைகலும் நீருள் கிடப்பினும் கல்லிற்கு
மெல்லென்றல் சால அரிதாகும் அஃதே போல்
வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்கட்குக்
கல்லினும் வல்லென்னும் நெஞ்சு

#32
கயத்திடை உய்த்திடினும் கல் நையாது என்றும்
பயற்றுக் கறி வேவாது அற்றால் இயற்றி
அறவுரை கேட்டவிடத்தும் அனையார்
திறவுரை தேறாதவர்

#33
அற்ற பொழுதே அறம் நினைத்து யாதொன்றும்
பெற்ற பொழுதே பிற நினைத்தி எற்றே
நிலைமை_இல் நல் நெஞ்சே நின்னொடு வாழ்க்கை
புலை மயங்கி அன்னது உடைத்து

#34
ஒருபால் திருத்த ஒருபால் கிழியும்
பெரு வாழ்க்கை முத்தாடை கொண்ட திருவாளா
வீணாள் படாமை நீ துன்னம் பொய்யே ஆக
வாணாள் படுவது அறி

#35
உள்ள நாள் நல்லறம் செய்க என்னும் சாற்று அன்றோ
இல்லை நாள் போய் ஏன்று இடம் கடிந்து தொல்லை
இடைக் கடையும் ஆற்றார் இரந்தார்க்கு நின்றார்
கடைத்தலை வைத்து ஈயும் பலி

#36
ஒரு நாளும் நீ தரியாய் உண் என்று சொல்லி
இரு நாளைக்கு ஈந்தாலும் ஏலாய் திருவாளா
உன்னோடு உறுதி பெரிது எனினும் இவ் உடம்பே
நின்னோடு வாழ்தல் அரிது

#37
கட்டளை கோடித் திரியின் கருதிய
இட்டிகையும் கோடும் அது போலும் ஒட்டிய
காட்சி திரியின் அறம் திரியும் என்று உரைப்பர்
மாட்சியின் மிக்கவர் தாம்

#38
தலைமகனும் நூலும் முனியும் பொருளும்
தொலைவின் துணிவொடு பக்கம் மலைவு இன்றி
நாட்டி இவ் ஆறும் உரைப்பரே நன்னெறியைக்
காட்டி அறம் உரைப்பார்

#39
இறந்தும் பெரிய நூல் எம்மதே தெய்வம்
அறம்தானும் இஃதே சென்று ஆற்றத் துறந்தார்கள்
தம்பாலே வாங்கி உரைத்ததனால் ஆராய்ந்து
நம்புக நல்ல அறம்

#40
ஒன்றோடொன்று ஒவ்வாத பாசண்டத்துள் எல்லாம்
ஒன்றோடொன்று ஒவ்வாப் பொருள் தெரிந்து ஒன்றோடொன்று
ஒவ்வா உயிர் ஓம்பி உள் தூய்மை பெற்றதே
அவ்வாயது ஆகும் அறம்

#41
நிறுத்து அறுத்துச் சுட்டு உரைத்துப் பொன் கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால் பிறப்பு அறுக்கும்
மெய்ந்நூல் தலைப்படல் ஆகும் மற்று ஆகாதே
கண் ஓடிக் கண்டதே கண்டு

#42
காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருள்-கண்
ஆய்தல் அறிவுடையோர்-கண்ணதே காய்வதன்-கண்
உற்ற குணம் தோன்றாததாகும் உவப்பதன்-கண்
குற்றமும் தோன்றாக் கெடும்

#43
துறந்தார் துறந்திலர் என்று அறியல் ஆகும்
துறந்தவர் கொண்டு ஒழுகும் வேடம் துறந்தவர்
கொள்ப கொடுப்பவற்றால் காணலாம் மற்று அவர்
உள்ளம் கிடந்த வகை

#44
இந்தியக்கு ஒல்கா இரு_முத் தொழில் செய்தல்
சிந்தை தீரப் அப்பியத்தின் மேல் ஆக்கல் பந்தம்
அரிதல் இவை எய்துமாறு ஒழுகுவார்க்கே
உரிதாகும் உம்பர் உலகு

#45
அழல் அடையப்பட்டான் அதற்கு மாறு ஆய
நிழல் ஆதி-தன் இயல்பே நாடும் அழலது போல்
காமாதியால் ஆம் கடுவினைக் கட்டு அழித்துப்
போமாறு செய்வார் புரிந்து

#46
வெப்பத்தால் ஆய வியாதியை வெல்வதூஉம்
வெப்பமே என்னார் விதி அறிவார் வெப்பம்
தணிப்பதூஉம் தட்பமே தான் செய் வினையைத்
துணிப்பதூஉம் தூய ஒழுக்கு

#47
தத்தமது இட்டம் திருட்டம் என இவற்றோடு
எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர் பித்தர் அவர்
நூல்களும் பொய்யே அ நூல் விதியின் நோற்பவரும்
மால்கள் என உணரற்பாற்று

#48
குருட்டுச் செவிடர்கள் கோல் விட்டுத் தம்முள்
தெருட்டி வழி சொல்லிச் சேறல் திருட்டேட்டம்
மாறுகொளக் கிடந்த மார்க்கத்தால் நற்கதியில்
ஏறுதும் என்பார் இயல்பு

#49
அற்றறிந்த காரணத்தை ஆராய்ந்து அறவுரையைக்
கற்றறிந்த மாந்தர் உரைப்பவே மற்று அதனை
மாட்சி புரிந்த மதியுடையாளரே
கேட்பர் கெழுமியிருந்து

#50
உருவும் ஒழுக்கமும் நூலும் பொருளும்
பொரு_இல் தலைமகனோடு இன்ன ஒருவாது
கண்டு கருதிக் கயக்கு அறத் தேர்ந்த பின்
கொண்டு வீடு ஏற்க அறம்

#51
நூல் உணர்வு நுண் ஒழுக்கம் காட்டுவிக்கும் நொய்யவாம்
சால்பின்மை காட்டும் சவர்ச் செய்கை பால் வகுத்துப்
பட்டிமையால் ஆகா பரமார்த்தம் பற்றின்மை
ஒட்டுவான் உய்ந்துபோவான்

#52
புனை படை கண்டு அஞ்சித் தற்காப்பான்-தன்னை
வினை கடியும் என்று அடி வீழ்தல் கனை இருள்-கண்
பல் எலி தின்னப் பறைந்திருந்த பூனையை
இல் எலி காக்கும் என்றற்று

#53
மாடமும் மண்ணீடும் கண்டு அடக்கமில்லாரைக்
கூடி வழிபடும் கோள் அமை ஆடரங்கின்
நோவகமாய் நின்றான் ஓர் கூத்தினை ஊர் வேண்டிச்
சேவகமாய் நின்றது உடைத்து

#54
நாற்றம் ஒன்று இல்லாத பூவொடு சாந்தினை
நாற்றம் தான் வேண்டியது போலும் ஆற்ற
மறு அறு சீலமும் நோன்பும் இல்லாரை
உறு பயன் வேண்டிக்கொளல்

#55
மால் கடல் சூழ் வையத்து மை ஆ தாம் காத்து ஓம்பிப்
பால் கருதி அன்னது உடைத்து என்பர் மேல் வகுத்து
மன்னிய நற்குணம் இல்லாரைத் தாம் போற்றிப்
புண்ணியம் கோடும் எனல்

#56
உடங்கு அமிழ்தம் கொண்டான் ஒருவன் பலரும்
விடம் கண்டு நன்று இதுவே என்றால் மடம்கொண்டு
பல்லவர் கண்டது நன்று என்று அமிழ்து ஒழிய
நல்லவனும் உண்ணுமோ நஞ்சு

#57
தன்னையும் தன்னின் பொருளையும் பட்டாங்கின்
பன்னி அறம் உரைக்க வல்லாரை மன்னிய
துட்டர் எனச் சிட்டன் தோற்றுவது அல்லாரைச்
சிட்டர் என்று ஏத்தல் சிதைவு

#58
எத்துணை கற்பினும் ஏகான்மவாதிகள்
புத்தியும் சொல்லும் பொலிவு இலவாய் மிக்க
அறிவன் நூல் கற்றார் அல எனவே நிற்கும்
எறி கதிர் முன் நீள் சுடரே போன்று

#59
அவ்விநயம் ஆறும் மும்மூடம் எண்மயமும்
செவ்விதின் நீக்கிச் சினம் கடிந்து கவ்விய
எட்டுறுப்பின் ஆய இயல்பின் நற்காட்சியார்
சுட்டு அறுப்பர் நாற்கதியில் துன்பு

#60
அச்சமே ஆசை உலகிதம் அன்புடைமை
மிக்க பாசண்டமே தீத்தெய்வம் மெச்சி
வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட
குணங்களில் குன்றாதவர்

#61
மன்னனுடன் வயிறு மாண்புடைத் தாய் தந்தை
முன்னி முடிக்கும் முனி ஆசான் பன்னி அங்கு
ஆய குரவர் இவர் என்ப வையத்துத்
தூய குலம் சாதியார்க்கு

#62
கண்டதனைத் தேறாதவனும் கனாக் கண்டு
பெண்டிரைப் பேதுற்றுக் கொன்றானும் பண்டிதனாய்
வாழ்விப்பக் கொண்டானும் போல்வரே வையத்துக்
கோள் விற்பக் கொள்ளாநின்றார்

#63
தோல் காவி சீரைத் துணி கீழ் விழ உடுத்தல்
கோல் காக் கரகம் குடை செருப்பு வேலொடு
பல் என்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்
நல்லவரால் நாட்டப்படும்

#64
ஆவரணம் இன்றி அடு வாளும் ஆனை தேர்
மா அரணம் இன்றி மலைவானும் தா_இல்
கழுதையில் அண்டம் சுமந்தானும் போலப்
பழுதாகும் பாசண்டியார்க்கு

#65
அறிவுடைமை மீக்கூற்றம் ஆன குலனே
உறு வலி நல் தவம் ஓங்கிய செல்வம்
பொறி வனப்பின் எம்போல்வார் இல் என்னும் எட்டும்
இறுதிக்-கண் ஏமாப்பு இல

#66
உழந்துழந்து கொண்ட உடம்பினைக் கூற்று உண்ண
இழந்திழந்து எங்கணும் தோன்றச் சுழன்று உழன்ற
சுற்றத்தார் அல்லாதார் இல்லையால் நல் நெஞ்சே
செற்றத்தால் செய்வது உரை

#67
உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளிச்
செயிரும் சினமும் கடிந்து பயிரிடைப்
புல் களைந்து நெல் பயன் கொள்ளும் ஒருவன் போல்
நற்பயன் கொண்டு இருக்கற்பாற்று

#68
ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை
செய் பழி நீக்கல் நிறுத்துதல் மெய்யாக
அன்புடைமை ஆன்ற அற விளக்கம் செய்தலோடு
என்று இவை எட்டாம் உறுப்பு.

#69
மக்கள் உடம்பு பெறற்கு அரிது பெற்ற பின்
மக்கள் அறிவும் அறிவு அரிது மக்கள்
அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார்
நெறி தலைநின்று ஒழுகுவார்

#70
பிறந்த இடம் நினைப்பின் பேர்த்து உள்ளல் ஆகா
மறந்தேயும் மாண்பு ஒழியும் நெஞ்சே சிறந்த
ஒழுக்கத்தோடு ஒன்றி உயப்போதி அன்றே
புழுக்கூட்டுப் பொச்சாப்பு உடைத்து

#71
தேசும் திறன் அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து
மாசு மனத்தகத்து இல்லாமை ஆசு இன்றிக்
கற்றல் கடன் அறிதல் கற்றார் இனத்தராய்
நிற்றல் வரைத்தே நெறி

#72
எப்பிறப்பாயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கள் பிறப்பின் பிறிது இல்லை அப் பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்-கண்
நிற்றலும் கூடப் பெறின்

#73
கற்றதுவும் கற்று ஒருபால் நிற்பக் கடைப்பிடியும்
மற்றொருபால் போக மறித்திட்டுத் தெற்றென
நெஞ்சத்துள் தீமை எழுதருமேல் இன்னாதே
கஞ்சத்துள் கல் பட்டால் போன்று

#74
விதிப்பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை நீக்கிக்
கதிப்பட்ட நூலினைக் கையிகந்து ஆக்கிப்
பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்தில் பட்ட மறு

#75
பற்றொடு செற்றம் பயம் இன்றிப் பல பொருளும்
முற்ற உணர்ந்தான் மொழிந்தன கற்றும்
கடையாய செய்து ஒழுகும் காரறிவினாரை
அடையார் அறிவுடையார்

#76
நல்வினைப் பின் அல்லால் நறும் தாமரையாளும்
செல்லாள் சிறந்தார் பின் ஆயினும் நல்வினைதான்
ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள் வழி
நீத்தல் ஒருபொழுதும் இல்

#77
தன்னில் பிறிது இல்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான் நெறி நில்லானேல் தன்னை
இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான்

#78
அஞ்சினாயேனும் அடைவது அடையும் காண்
துஞ்சினாய் என்று வினை விடா நெஞ்சே
அழுதாய் எனக் கருதிக் கூற்று ஒழியாது ஆற்றத்
தொழுதேன் நிறை உடையை ஆகு

#79
பல கற்றோம் யாம் என்று தன் புகழ வேண்டா
அலர் கதிர் ஞாயிற்றைக் கைக் குடையும் காக்கும்
சில கற்றார்-கண்ணும் உளவாம் பல கற்றார்க்கு
அச்சாணி அன்னது ஓர் சொல்

#80
தன்னை ஒருவன் இகழ்ந்து உரைப்பின் தான் அவனைப்
பின்னை உரையாப் பெருமையான் முன்னை
வினைப் பயனும் ஆயிற்றாம் என்று அதன்-கண் மெய்ம்மை
நினைத்து ஒழிய நெஞ்சில் நோய் இல்

#81
எள்ளிப் பிறர் உரைக்கும் இன்னாச்சொல் தன் நெஞ்சில்
கொள்ளி வைத்தால் போல் கொடிது எனினும் மெள்ள
அறிவு என்னும் நீரால் அவித்து ஒழுகல் ஆற்றின்
பிறிது ஒன்று வேண்டா தவம்

#82
நம்மைப் பிறர் சொல்லும் சொல் இவை நாம் பிறரை
எண்ணாது சொல்லும் இழுக்கு இவை என்று எண்ணி
உரைகள் பரியாது உரைப்பாரில் யாரே
களைகணது இல்லாதவர்

#83
பிறர்க்கு இன்னா செய்தலின் பேதைமை இல்லை
பிறர்க்கு இன்னாது என்று பேரிட்டுத் தனக்கு இன்னா
வித்தி விளைத்து வினை விளைப்பக் காண்டலின்
பித்தும் உளவோ பிற

#84
முன் நின்று ஒருவன் முகத்தினும் வாயினும்
கல் நின்று உருகக் கலந்து உரைத்துப் பின் நின்று
இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்து இமையார் நின்ற நிலை

#85
பொய் மேல் கிடவாத நாவும் புறனுரையைத்
தன் மேல் படாமைத் தவிர்ப்பானும் மெய் மேல்
பிணிப் பண்பு அழியாமை பெற்ற பொழுதே
தணிக்கும் மருந்து தலை

#86
ஒளியும் ஒளி சான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடையர் என்று உரைக்கும் தேசும் களி என்னும்
கட்டுரையால் கோதப்படுமேல் இவை எல்லாம்
விட்டொழியும் வேறாய் விரைந்து

#87
ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
மேதை எனப்படும் மேன்மையும் சூது
பொரும் என்னும் சொல்லினால் புல்லப்படுமேல்
இருளாம் ஒருங்கே இவை

#88
தனக்குத் தகவல்ல செய்து ஆங்கு ஓர் ஆற்றால்
உணற்கு விரும்பும் குடரை வனப்பு அற
ஆம்பல் தாள் வாடலே போல அகத்து அடக்கித்
தேம்பத் தாம் கொள்வது அறிவு

#89
அறனும் அறன் அறிந்த செய்கையும் சான்றோர்
திறனுடையன் என்று உரைக்கும் தேசும் பிறன் இல்
பிழைத்தான் எனப் பிறரால் பேசப்படுமேல்
இழுக்காம் ஒருங்கே இவை

#90
சாவாய் நீ நெஞ்சமே சல்லிய என்னை நீ
ஆவதன்-கண் ஒன்றானும் நிற்க ஒட்டாய் ஓவாதே
கட்டு அழித்துக் காமக் கடற்கு என்னை ஈர்ப்பாயே
விட்டு எழுங்கால் என் ஆவாய் சொல்

#91
பழியொடு பாவத்தைப் பாராய் நீ கன்றிக்
கழி பெரும் காமநோய் வாங்கி வழிபடாது
ஓடும் மனனே விடுத்து என்னை விரைந்து நீ
நாடிக்கொள் மற்று ஓர் இடம்

#92
மக்களும் மக்களல்லாரும் என இரண்டு
குப்பைத்தே குண்டு நீர் வையகம் மக்கள்
அளக்கும் கருவி மற்று ஒண் பொருள் ஒன்றோ
துளக்குறு வெள் வளையார் தோள்

#93
இம்மை அடக்கத்தைச் செய்து புகழ் ஆக்கி
உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் மெய்ம்மையே
பட்டாங்கு அறம் உரைக்கும் பண்புடையாளரே
நட்டார் எனப்படுவார்

#94
நட்டார் எனப்படுவார் நாடுங்கால் வையத்துப்
பட்டாம் பல பிறப்புத் துன்பம் என்று ஒட்டி
அறநெறி கைவிடாது ஆசாரம் காட்டிப்
பிற நெறி போக்கிற்பவர்

#95
நட்டாரை வேண்டின் நறு மென் கதுப்பினாய்
விட்டாரை அல்லால் கொளல் வேண்டா விட்டார்
பொறி சுணங்கு மென் முலைப் பொன்_அன்னாய் உய்ப்பர்
மறிதரவு இல்லாக் கதி

#96
காலொடு கை அமுக்கிப் பிள்ளையை வாய் நெறித்துப்
பாலொடு நெய் பெய்யும் தாய் அனையர் சால
அடக்கத்தை வேண்டி அறன் வலிது நாளும்
கொடுத்து மேற்கொண்டு ஒழுகுவார்

#97
கழியும் பகல் எல்லாம் காலை எழுந்து
பழியொடு பாவம் படாமை ஒழுகினார்
உய்க்கும் பொறியாரை நாடி உழிதருமே
துய்க்கும் பொருள் எல்லாம் தொக்கு

#98
காய உரைத்துக் கருமம் சிதையாதார்
தாயரோடு ஒவ்வாரோ தக்கார்க்கு வாய் பணிந்து
உள்ளம் உருக உரைத்துப் பொருள் கொள்வார்
கள்ளரோடு ஒவ்வாரோ தாம்

#99
அறுதொழில் நீ?த்தாரை மெச்சாது அவற்றோடு
உறுநரைச் சார்ந்து உய்யப்போதல் இறுவரை மேல்
கண் இல் முடவன் துணையாக நீள் கானம்
கண்ணிலான் சென்றது உடைத்து

#100
குற்றத்தை நன்று என்று கொண்டு குணம் இன்றிச்
செற்றம் முதலா உடையவரைத் தெற்ற
அறிந்தார் என்று ஏத்துமவர்களைக் கண்டால்
துறந்து எழுவர் தூய்க் காட்சியார்

#101
கொன்று ஊன் நுகரும் கொடுமையை உள் நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல் என்றும்
இடுக்கண் என உண்டோ இல்வாழ்க்கைக்குள்ளே
படுத்தானாம் தன்னைத் தவம்

#102
தம் புண் கழுவி மருந்திடுவர் தாம் பிறிதின்
செம் புண் வறுத்த வறை தின்பர் அந்தோ
நடுநின்று உலக நயன் இலா மாந்தர்
வடு அன்றோ செய்யும் வழக்கு

#103
அறம் கூறும் நா என்ப நாவும் செவியும்
புறங்கூற்றுக் கேளாத என்பர் பிறன் தாரத்து
அற்றத்தை நோக்காத கண் என்ப யார்-மாட்டும்
செற்றத்தைத் தீர்ந்ததாம் நெஞ்சு

#104
பெண் விழைவார்க்கு இல்லை பெரும் தூய்மை பேணாது ஊன்
உண் விழைவார்க்கு இல்லை உயிர் ஓம்பல் எப்பொழுதும்
மண் விழைவார்க்கு இல்லை மறமின்மை மாணாது
தம் விழைவார்க்கு இல்லை தவம்

#105
கல்லான் கடை சிதையும் காமுகன் கண் காணான்
புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும் நல்லான்
இடுக்கணும் இன்பமும் எய்தியக்-கண்ணும்
நடுக்கமும் நன் மகிழ்வும் இல்

#106
தானத்தின் மிக்க தருமமும் தக்கார்க்கு
ஞானத்தின் மிக்க உசாத்துணையும் மானம்
அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம் இல்லை
பழியாமல் வாழும் திறம்

#107
தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்
ஆய பொழுது ஆற்றும் ஆற்றலும் காயவிடத்து
வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும் இ மூன்றும்
சாற்றுங்கால் சாலத் தலை

#108
வெம்மை உடையது அடிசில் விழுப்பொருள்-கண்
செம்மை உடையதாம் சேவகம் தம்மைப்
பிறர் கருதி வாழ்வதாம் வாழ்க்கை இ மூன்றும்
உற வருவது ஓர்வதாம் ஓர்ப்பு

#109
ஒறுப்பாரை யான் ஒறுப்பன் தீயார்க்கும் தீயேன்
வெறுப்பார்க்கும் நான் மடங்கேன் என்பர் ஒறுத்தியேல்
ஆர்வம் மயக்கம் குரோதம் இவை மூன்றும்
ஊர் பகை நின்-கண் ஒறு

#110
குலத்துப் பிறந்தார் வனப்புடையார் கற்றார்
நினைக்குங்கால் நின்றுழியே மாய்வர் வினைப்பயன்-கொல்
கல்லார் குலமில்லார் பொல்லார் தறுகட்பம்
இல்லார் பின் சென்ற நிலை

#111
வேட்டு அவாய்க் கேட்பர் விரைந்து ஓடி ஞாலத்தார்
கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால் கோட்டு இல்லா
ஓது-மின் ஓதி அடங்கு-மின் என்னும் சொல்
கூதற்குக் கூதிர் அனைத்து

#112
இறை இறையின் சந்தித்து என்பொடு ஊன் சார்த்தி
முறையின் நரம்பு எங்கும் யாத்து நிறைய
அவாப் பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன்
புகாச் சுருக்கில் பூட்டா விடும்

#113
ஆசையும் பாசமும் அன்பும் அகத்து அடக்கி
பூசிப் பொதிந்த புலால் உடம்பு ஊசல்
கயிறு அற்றால் போலக் கிடக்குமே கூற்றத்து
எயிறுற்று இடை முரிந்தக்கால்

#114
மறந்து ஒருவன் வாழும் இ மாயமாம் வாழ்க்கை
அறிந்து ஒருவன் வாழுமேல் இல்லை செறிந்து ஒருவன்
ஊற்றம் இறந்து உறுதிகொள்ளாக்கால் ஓ கொடிதே
கூற்றம் இடைகொடுத்த நாள்

#115
தோற்றமும் சம்பிரதம் துப்புரவும் சம்பிரதம்
கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம் தோற்றம்
கடைப்பட்டவாறு அறிந்து கற்றறிந்தார் துஞ்சார்
படைப் பட்ட நாயகனே போன்று

#116
தெரிவு_இல் இளமையும் தீப் பிணியும் மூப்பும்
பிரிவும் துயிலும் உறீஇப் பருவந்து
பத்தெட்டுநாளைப் பயன் இலா வாழ்க்கைக்கு
வித்துக் குற்று உண்பார் பலர்

#117
பிறப்பு இறப்பு மூப்புப் பிணி என்று இ நான்கும்
மறப்பர் மதியிலா மாந்தர் குறைக்கூடாச்
செல்வம் கிளை பொருள் காமம் என்று இ நான்கும்
பொல்லாப் பொறியறுக்கப்பட்டு

#118
மூப்புப் பிணியே தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடும் எல்லாம் சலம் இலவாய் நோக்கீர்
பருந்துக்கு இரை ஆம் இவ் யாக்கையைப் பெற்றால்
மருந்து மறப்பதோ மாண்பு

#119
நீக்க அரு நோய் மூப்புத் தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடு என்று ஐந்து களிறு உழக்கப் போக்க அரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்து எய்தும்
இன்பத்து இயல்பு அறியாதார்

#120
எக்காலும் சாதல் ஒருதலையே யான் உனக்குப்
புக்கில் நிறையத் தருகிலேன் மிக்க
அறிவனை வாழ்த்தி அடவி துணையாத்
துறத்தல் மேல் சார்தல் தலை

#121
அங்கம் அற ஆடி அங்கே பட மறைந்து
அங்கே ஒரு வண்ணம் கோடலால் என்றும்
அரங்கு ஆடு கூத்தனே போலும் உயிர்தான்
சுழன்றாடு தோற்றப் பிறப்பு

#122
இ காலத்து இவ் உடம்பு செல்லும் வகையினால்
பொச்சாவாப் போற்றித்தாம் நோற்பாரை மெச்சாது
அலந்து தம் வாய் வந்த கூறும் அவரின்
விலங்குகள் நல்ல மிக

#123
எண்ணற்கு அரிய இடையூறு உடையதனைக்
கண்ணினால் கண்டும் கருதாதே புண்ணின் மேல்
வீக் கருவி பாய இருந்து அற்றால் மற்று அதன்-கண்
தீக் கருமம் சோரவிடல்

#124
நெடும் தூண் இரு காலா நீள் முதுகு தண்டாக்
கொடும் கோல் விலா என்பு கோலி உடங்கிய நல்
புன் தோலால் வேய்ந்த புலால் வாய்க் குரம்பையை
இன்புறுவர் ஏழையவர்

#125
என்பு கால் ஆக இரு தோளும் வேயுளா
ஒன்பது வாயிலும் ஊற்று அறாத் துன்பக்
குரம்பை உடையார் குடி போக்கு நோக்கிக்
கவர்ந்து உண்ணப் போந்த கழுகு

#126
ஒரு பாகன் ஊரும் களிறு ஐந்தும் நின்ற
இரு கால் நெடும் குரம்பை வீழின் தரு காலால்
பேர்த்து ஊன்றலாகாப் பெரும் துன்பம் கண்டாலும்
ஓர்த்து ஊன்றி நில்லாது உலகு

#127
நீத்து ஒழிந்த ஆறு ஐந்து அடக்கிப் பின் நிச்சயமே
வாய்த்து அமைந்த வாயில் பெண் ஆனையும் கூத்தற்கு
வாள் ஏறோடு ஓசை விளைநிலம் இவ் அல்லால்
கேளாய் உடன் வருவது இல்

#128
வாழ்நாளில் பாகம் துயில் நீக்கி மற்றவற்றின்
வீழ் நாள் இடர் மூப்பு மெய் கொள்ளும் வாழ்நாளுள்
பல் நோய் கவற்றப் பரிந்து குறை என்னை
அன்னோ அளித்து இவ் உலகு

#129
உடம்பும் கிளையும் பொருளும் பிறவும்
தொடர்ந்து பின் செல்லாமை கண்டும் அடங்கித்
தவத்தோடு தானம் புரியாது வாழ்வார்
அவத்தம் கழிகின்ற நாள்

#130
போற்றியே போற்றியே என்று புதுச் செல்வம்
தோற்றியார்-கண் எல்லாம் தொண்டே போல் ஆற்றப்
பயிற்றிப்பயிற்றிப் பல உரைப்பது எல்லாம்
வயிற்றுப் பெருமான்-பொருட்டு

#131
புகா உண்பார் அல் உண்ணார் போகும் துணைக்-கண்
தவா வினை வந்து அடையக் கண்டும் அவாவினைப்
பற்றுச்செய்து என்னை பயம் இன்றால் நல் நெஞ்சே
ஒற்றி உடம்பு ஓம்புதற்கு

#132
புழுப் போல் உவர்ப்பு ஊறிப் பொல்லாங்கு நாறும்
அழுக்கு உடம்பு-தன்னுள் வளர்ந்தாய் விழுத்து உமிழ்ந்து
இன்ன நடையாய் இறக்கும் வகையினை
நல் நெஞ்சே நாடாய் காண் நற்கு

#133
ஒழுக்கமிலன் ஆகி ஓர்த்துடையனேனும்
புழுப் பொதிந்த புண்ணில் கொடிதாம் கழுக்கு இரையை
ஓம்பின் மற்று என்னை உறுதிக்-கண் நில்லாக்கால்
தேம்பிவிடுதலே நன்று

#134
முடை உடை அங்கணம் நாள்-தோறும் உண்ட
கடை முறை வாய் போதரக் கண்டும் தடுமாற்றில்
சாவாப் பிறவா இச் சம்பிரத வாழ்க்கைக்கு
மேவாதாம் மெய்கண்டார் நெஞ்சு

#135
வயிறு நிறைக்குமேல் வாவின் மிக்கு ஊறிச்
செயிரிடைப் பாடு எய்துமாம் சீவன் வயிறும் ஓர்
பெற்றியால் ஆர்த்திப் பெரும் பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன்

#136
புலன்கள் பொருட்டாகப் பொச்சாந்து நெஞ்சே
சலங்களைச் சாரா ஒழுகல் புலங்கள்
ஒறுக்கும் பருவத்து உசாத்துணையும் ஆகா
வெறுத்து நீ உண்டல் கடன்

#137
புகாப் பெருக ஊட்டின் புலன்கள் மிக்கு ஊறி
அவாப் பெருகி அற்றம் தருமால் புகாவும் ஓர்
பெற்றியான் ஊட்டிப் பெரும் பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன்

#138
ஒறுக்கிலேன் ஊர் பசை என்-கண் பிறரை
ஒறுக்கிற்பேன் என்று உரைப்பையாகில் கறுத்து எறிந்த
கல் கறித்துக் கல் கொண்டு எறிந்தாரைக் காய்கல்லாப்
பல் கழல் நாய் அன்னது உடைத்து

#139
உள்ளப் பெரும் குதிரை ஊர்ந்து வயப்படுத்திக்
கள்ளப் புலன் ஐந்தும் காப்பு அமைத்து வெள்ளப்
பிறவிக்-கண் நீத்தார் பெரும் குணத்தாரைத்
துறவித் துணை பெற்றக்கால்

#140
பரிந்து எனக்கு ஓர் நன்மை பயப்பாய் போல் நெஞ்சே
அரிந்து என்னை ஆற்றவும் தின்னல் புரிந்து நீ
வேண்டுவ வேண்டுவேன் அல்லேன் விழுக்குணம்
பூண்டேன் பொறியிலி போ

#141
தன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின்
பின்னைத் தான் எய்தா நலன் இல்லை தன்னைக்
குடி கெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவேல் செய்தல்
பிடி படுக்கப்பட்ட களிறு

#142
உள்ளூர் இருந்தும் தம் உள்ளம் அறப் பெற்றாரேல்
கள் அவிழ் சோலையாம் காட்டு உளார் காட்டுள்ளும்
உள்ளம் அறப் பெறுகல்லாரேல் நாட்டுள்ளும்
நண்ணி நடுவூர் உளார்

#143
நின்னை அறப் பெறுகிற்கிலேன் நல் நெஞ்சே
பின்னை யான் யாரைப் பெறுகிற்பேன் நின்னை
அறப் பெறுகிற்பேனேல் பெற்றேன் மற்று ஈண்டே
துறக்கம் திறப்பது ஓர் தாழ்

#144
ஆதன் பெரும் களியாளன் அவனுக்குத்
தோழன்மார் ஐவரும் வீண் கிளைஞர் தோழர்
வெறுப்பனவும் உண்டு எழுந்து போனக்கால் ஆதன்
இறுக்குமாம் உண்ட கடன்

#145
தன் ஒக்கும் தெய்வம் பிறிது இல்லை தான் தன்னைப்
பின்னை மனம் அறப் பெற்றானேல் என்னை
எழுத்து எண்ணே நோக்கி இருமையும் கண்டு ஆங்கு
அருள்-கண்ணே நிற்பது அறிவு

#146
தடுமாற்றம் அஞ்சிய தன்மை உடையார்
விடு மாற்றம் தேர்ந்து அஞ்சித் துஞ்சார் தடுமாற்றம்
யாதும் அறியாரும் துஞ்சார் தம் ஐம்புலனும்
ஆரும் வகை யாதாம்-கொல் என்று

#147
ஆர்வில் பொறி ஐந்திற்கு ஆதி இரு வினையால்
தீர்வு இல நீ கோதாதி சேர்விக்கும் தீர்வு_இல்
பழி இன்மை எய்தின் பறையாத பாவம்
வழியும் வருதலும் உண்டு

#148
அலை புனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற
இலையின்-கண் நீர் நிலாது ஆகும் அலைவின்
புலன்களில் நிற்பினும் பொச்சாப்பு இலரே
மலம் கடிவு ஆளா தவர்க்கு

#149
பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின்
பற்றின்-கண் நில்லாது அறம் செய்க மற்று அது
பொன்றாப் புகழ் நிறுத்திப் போய்ப் பிறந்த ஊர் நாடிக்
கன்றுடைத் தாய் போல் வரும்

#150
பேறு அழிவு சாவு பிறப்பு இன்பம் துன்பம் என்று
ஆறு உள அந்நாள் அமைந்தன தேறி
அவையவை வந்தால் அழுங்காது விம்மாது
இவையிவை என்று உணரற்பாற்று

#151
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி

#152
செய் வினை அல்லால் சிறந்தார் பிறர் இல்லை
பொய் வினை மற்றைப் பொருள் எல்லாம் மெய் வினவில்
தாய் யார் மனைவி யார் தந்தை யார் மக்கள் ஆர்
நீ யார் நினை வாழி நெஞ்சு

#153
உயிர் திகிரியாக உடம்பு மண்ணாகச்
செயிர் கொள் வினை குயவனாகச் செயிர் தீரா
எண் அரு நல் யாக்கைக் கலம் வனையும் மற்று அதனுள்
எண்ணரு நோய் துன்பம் அவர்க்கு

#154
முற்பிறப்பில் தாம் செய்த புண்ணியத்தின் நல்லது ஓர்
இல் பிறந்து இன்புறாநின்றவர் இப் பிறப்பே
இன்னும் கருதுமேல் ஏதம் கடிந்து அறத்தை
முன்னி முயன்று ஒழுகற்பாற்று

#155
அம்மைத் தாம் செய்த அறத்தினை வரு பயனை
இம்மைத் துய்த்து இன்புறாநின்றவர் உம்மைக்கு
அறம் செய்யாது ஐம்புலனும் ஆற்றல் நல் ஆக்
கறந்து உண்டு அஃது ஓம்பாமையாம்

#156
இறந்த பிறப்பில் தாம் செய்த வினையைப்
பிறந்த பிறப்பால் அறிக பிறந்திருந்து
செய்யும் வினையால் அறிக இனிப் பிறந்து
எய்தும் வினையின் பயன்

#157
தாய் தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தா
ராய் வந்து தோன்றி அருவினையால் மாய்வதன்-கண்
மேலைப் பிறப்பும் இது ஆனால் மற்று என்னை
கூலிக்கு அழுத குறை

#158
வினை காத்து வந்த விருந்து ஓம்பி நின்றான்
மனை வாழ்க்கை நன்று தவத்தின் புனை கோதை
மெல் இயல் நல்லாளும் நல்லள் விருந்து ஓம்பிச்
சொல் எதிர் சொல்லாள் எனில்

#159
கொண்டான் குறிப்பு ஒழுகல் கூறிய நாணுடைமை
கண்டது கண்டு விழையாமை விண்டு
வெறுப்பன செய்யாமை வெஃகாமை நீக்கி
உறுப்போடு உணர்வுடையாள் பெண்

#160
மடப்பதூஉம் மக்கள் பெறுவதூஉம் பெண் பால்
முடிப்பதூஉம் எல்லாரும் செய்வர் படைத்ததனால்
இட்டு உண்டு இல்வாழ்க்கை புரிந்து தாம் நல்லறத்தே
நிற்பாரே பெண்டிர் என்பார்

#161
வழிபாடு உடையாளாய் வாழ்க்கை நடாஅய்
முனியாது சொல்லிற்றுச் செய்து ஆங்கு எதிர் உரையாது
ஏத்திப் பணியுமேல் இல்லாளை ஆண்மகன்
போற்றிப் புனையும் புரிந்து

#162
தலைமகனில் தீர்ந்து உறைதல் தான் பிறர் இல் சேர்தல்
நிலைமை_இல் தீப்பெண்டிர்ச் சேர்தல் கலன் அணிந்து
வேற்றூர்ப் புகுதல் விழாக் காண்டல் நோன்பு இடுதல்
கோல் தொடியாள் கோள் அழியும் ஆறு

#163
அயலூர் அவன் போக அம் மஞ்சள் ஆடிக்
கயல் ஏர் கண் ஆர எழுதிப் புயல் ஐம்பால்
வண்டு ஓச்சி நின்று உலாம் வாள் ஏர் தடம் கண்ணாள்
தண்டு ஓச்சிப் பின் செல்லும் கூற்று

#164
மருவிய காதல் மனையாளும் தானும்
இருவரும் பூண்டு உய்ப்பின் அல்லால் ஒருவரால்
இல்வாழ்க்கை என்னும் இயல்பு உடைய வான் சகடம்
செல்லாது தெற்றிற்று நின்று

#165
பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறன் தாரம்
நிச்சலும் நோக்காது பொய் ஒரீஇ நிச்சலும்
கொல்லாமை காத்துக் கொடுத்து உண்டு வாழ்வதே
இல்வாழ்க்கை என்னும் இயல்பு

#166
விருந்து புறந்தரான் வேளாண்மை செய்யான்
பெரும் தக்கவரையும் பேணான் பிரிந்து போய்க்
கல்லான் கடுவினை மேற்கொண்டு ஒழுகுமேல்
இல்வாழ்க்கை என்பது இருள்

#167
அட்டு உண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்
அட்டு உண்ணா மாட்சி உடையவர் அட்டு உண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை

#168
நொறுங்கு பெய்து ஆக்கிய கூழ் ஆர உண்டு
பிறங்கு இரு கோட்டொடு பன்றியும் வாழும்
அறம் செய்து வாழ்வதே வாழ்க்கை மற்று எல்லாம்
வெறும் பேழை தாழ்க்கொளீஇ அற்று

#169
உப்புக் குவட்டின் மிசை இருந்து உண்ணினும்
இட்டு உணாக் காலத்துக் கூராதாம் தொக்க
உடம்பும் பொருளும் உடையான் ஓர் நன்மை
தொடங்காக்கால் என்ன பயன்

#170
பெற்ற நாள் பெற்ற நாள் பெற்றதனுள் ஆற்றுவது ஒன்று
இற்றை நாள் ஈத்து உண்டு இனிது ஒழுகல் சுற்றும்
இதனில் இலேசுடை காணோம் அதனை
முதல் நின்று இடை தெரியுங்கால்

#171
கொடுத்துக் கொணர்ந்த அறம் செல்வம் கொடாது
விடுத்துத் தம் வீறு அழிதல் கண்டார் கொடுப்பதன்-கண்
ஆற்ற முடியாது எனினும் தாம் ஆற்றுவார்
மாற்றார் மறுமை காண்பார்

#172
பட்டார்ப் படுத்துப் படாதார்க்கு வாள் செறிந்து
விட்டு ஒழிவது அல்லால் அவ் வெம் கூற்றம் ஒட்டிக்
கலாய்க் கொடுமை செய்யாது கண்டது பாத்துண்டல்
புலால் குடிலால் ஆய பயன்

#173
தண்டாமம் பொய் வெகுளி பொச்சாப்பு அழுக்காறு என்று
ஐந்தே கெடுவார்க்கு இயல்பு என்ப பண்பாளா
ஈதல் அறிதல் இயற்றுதல் இன்சொல் கற்று
ஆய்தல் அறிவார் தொழில்

#174
நீத்தாற்றின் நின்ற நிலையினோர் உண்டக்கால்
ஈத்து ஆற்றினாரும் உயப்போவார் நீத்தாற்றின்
பெற்றிப் புணை_அன்னார் பேர்த்து உண்ணா விட்டக்கால்
எற்றான் உயப்போம் உலகு

#175
கொடுத்து உய்யப்போமாறு கொள்வான் குணத்தில்
வடுத்தீர்ந்தார் உண்ணில் பெறலாம் கொடுத்தாரைக்
கொண்டு உய்யப்போவார் குணமுடையார் அல்லாதார்
உண்டு ஈத்து வீழ்வார் கிழக்கு

#176
அடங்கினார்க்கு ஈதல் தலையே அடங்காது
அடங்கினார்க்கு ஈதல் இடையே நுடங்கு_இடையாய்
ஏற்பானும் தானும் அடங்காக்கால் அஃது என்ப
தோல்பாவைக் கூத்தினுள் போர்

#177
வாழ்நாள் உடம்புவலி வனப்புச் செல்கதியும்
தூ மாண் நினைவு ஒழுக்கம் காட்சியும் தாம் மாண்ட
உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண் கொடையோடு
ஒன்றும் கொடை ஒப்பது இல்

#178
பரப்பு நீர் வையகத்துப் பல் உயிர்கட்கு எல்லாம்
இரப்பாரின் வள்ளல்களும் இல்லை இரப்பவர்
இம்மைப் புகழும் இனிச் செல் கதிப் பயனும்
தம்மைத் தலைப்படுத்தலால்

#179
செல்வத்தைப் பெற்றார் சினம் கடிந்து செவ்வியராய்ப்
பல் கிளையும் வாடாமல் பாத்துண்டு நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃது என்பார்
வானகத்து வைப்பது ஓர் வைப்பு

#180
ஒன்றாக நல்லது உயிர் ஓம்பல் ஆங்கு அதன் பின்
நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் என்று இரண்டும்
குன்றாப் புகழோன் வருக என்று மேலுலகம்
நின்றது வாயில் திறந்து

#181
சோரப் பசிக்குமேல் சோற்றூர்திப் பாகன் மற்று
ஈரப்படினும் அது ஊரான் ஆரக்
கொடுத்துக் குறைகொள்ளல் வேண்டும் அதனால்
முடிக்கும் கருமம் பல

#182
ஈவாரின் இல்லை உலோபர் உலகத்தில்
யாவரும் கொள்ளாதவாறு எண்ணி மேவு அரிய
மற்றுடம்பு கொள்ளும் பொழுது ஓர்ந்து தம் உடைமை
பற்று விடுதல் இலர்

#183
இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலி மரீஇப்
பட்ட வழங்காத பான்மையார் நட்ட
சுரிகையாற்கானும் சுலாக்கோலாற்கானும்
சொரிவதாம் ஆ போல் சுரந்து

#184
கொடுப்பான் பசை சார்ந்து கொள்வான் குணத்தில்
கொடுக்கப்படுதல் அமையின் அடுத்தடுத்துச்
சென்று ஆங்கு அடைந்து களைவினை என்பரே
வென்றார் விளங்க விரித்து

#185
கொடுப்பான் வினை அல்லன் கொள்வானும் அல்லன்
கொடுக்கப்படும் பொருளும் அன்றால் அடுத்தடுத்து
நல்லவை யாதாம்-கொல் நாடி உரையாய் நீ
நல்லவர் நாப்பண் நயந்து

#186
அறிவு மிகப் பெருக்கி ஆங்காரம் நீக்கிப்
பொறி ஐந்தும் வெல்லும் வாய் போற்றிச் செறிவினான்
மன் உயிர் ஓம்பும் தகைத்தே காண் நல் ஞானம்-
தன்னை உயக்கொள்வது

#187
சோறு யாரும் உண்ணாரோ சொல் யாரும் சொல்லாரோ
ஏறு யாரும் வையத்துள் ஏறாரோ தேறி
உரியது ஓர் ஞானம் கற்று உள்ளம் திருத்தி
அரிய துணிவதாம் மாண்பு

#188
பாம்பு உண்ட நீர் எல்லாம் நஞ்சாம் பசு உண்ட
தேம்படு தெள் நீர் அமுதமாம் ஓம்பற்கு
ஒளியாம் உயர்ந்தார்-கண் ஞானம் அது போல்
களியாம் கடையாயார்-மாட்டு

#189
கெடுக்கப்படுவது தீக்கருமம் நாளும்
கொடுக்கப்படுவது அருளே அடுத்தடுத்து
உண்ணப்படுவது நல் ஞானம் எப்பொழுதும்
எண்ணப்படுவது வீடு

#190
இந்தியக் குஞ்சரத்தை ஞான இரும் கயிற்றால்
சிந்தனைத் தூண் பூட்டிச் சேர்த்தியே பந்திப்பர்
இம்மைப் புகழும் இனிச் செல் கதிப் பயனும்
தம்மைத் தலைப்படுத்துவார்

#191
உணர்ச்சி அச்சாக உசா வண்டியாகப்
புணர்ச்சிப் புலன் ஐந்தும் பூட்டி உணர்ந்து அதனை
ஊர்கின்ற பாகன் உணர்வுடையன் ஆகுமேல்
பேர்கின்றதாகும் பிறப்பு

#192
தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
உறுதிக்குறுதி உயிர் ஓம்பி வாழ்தல்
அறிவிற்கறிவாவது எண்ணின் மறுபிறப்பு
மற்று ஈண்டு வாரா நெறி

#193
உயிர் வித்தி ஊன் விளைத்துக் கூற்று உண்ணும் வாழ்க்கைச்
செயிர் வித்திச் சீலம் தின்று என்னை செயிரினை
மாற்றி மறுமை புரிகிற்பின் காணலாம்
கூற்றம் குறுகா இடம்

#194
இருளே உலகத்து இயற்கை இருள் அகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை கைவிளக்கின்
நெய்யே தன் நெஞ்சத்து அருளுடைமை நெய் பயந்த
பால் போல் ஒழுக்கத்தவரே பரிவில்லா
மேலுலகம் எய்துபவர்

#195
ஆர்வமும் செற்றமும் நீக்கி அடங்குதல்
சீர்பெறு வீட்டுநெறி என்பார் நீர் புகப்
பட்டிமை புக்கான் அடங்கினன் என்பது
கெட்டார் வழி வியக்குமாறு

#196
அருளால் அறம் வளரும் ஆள்வினையால் ஆக்கம்
பொருளால் பொருள் வளரும் நாளும் தெருளா
விழைவின்பத்தால் வளரும் காமம் அக் காம
விழைவின்மையால் வளரும் வீடு

#197
பண் அமை யாழ் குழல் கீதம் என்று இன்னவை
நண்ணி நயப்ப செவி அல்ல திண்ணிதின்
வெட்டெனச் சொல் நீக்கி விண்ணின்பம் வீட்டொடு
கட்டுரை கேட்ப செவி

#198
புண்ணாகப் போழ்ந்து புலால் பழிப்பத் தாம் வளர்ந்து
வண்ணப் பூண் பெய்வ செவி அல்ல நுண்ணூல்
அறவுரை கேட்டு உணர்ந்து அஞ்ஞானம் நீக்கி
மறவுரை விட்ட செவி

#199
கண்டவர் காமுறூஉம் காமரு சீர்க் காதில்
குண்டலம் பெய்வ செவி அல்ல கொண்டு உலகில்
மூன்றும் உணர்ந்து அவற்றின் முன்னது முட்டு இன்றிச்
சூன்று சுவைப்ப செவி

#200
பொருள் எனப் போழ்ந்து அகன்று பொன் மணி போன்று எங்கும்
இருள் அறக் காண்பன கண் அல்ல மருள் அறப்
பொய்க் காட்சி நீக்கிப் பொரு_அறு முக்குடையான்
நற்காட்சி காண்பன கண்

#201
சாந்தும் புகையும் துருக்கமும் குங்குமமும்
மோந்து இன்புறுவன மூக்கு அல்ல வேந்தின்
அலங்கு சிங்காதனத்து அண்ணல் அடிக் கீழ்
இலங்கு இதழ் மோப்பதாம் மூக்கு

#202
கைப்பன கார்ப்புத் துவர்ப்புப் புளி மதுரம்
உப்பு இரதங்கொள்வன நா அல்ல தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டு வந்து எப்பொழுதும்
நின்று துதிப்பதாம் நா

#203
கொல்வதூஉம் கள்வதூஉம் அன்றிப் பிறர் மனையில்
செல்வதூஉம் செய்வன கால் அல்ல தொல்லைப்
பிறவி தணிக்கும் பெரும் தவர்-பால் சென்று
அறவுரை கேட்பிப்ப கால்

#204
குற்றம் குறைத்துக் குறைவு இன்றி மூவுலகின்
அற்றம் மறைத்து ஆங்கு அருள் பரப்பி முற்ற
உணர்ந்தானைப் பாடாத நா அல்ல அல்ல
சிறந்தான் தாள் சேரா தலை

#205
உடன் பிறந்த மூவர் ஒருவனைச் சேவித்து
இடங்கொண்டு சின்னாள் இருப்பர் இடம் கொண்ட
இல்லத்து இருவர் ஒழிய ஒருவனே
செல்லும் அவன் பின் சிறந்து

#206
கட்டெனச் சொல்லியக்கால் கல் பிளப்பில் தீயே போல்
பொட்டப் பொடிக்கும் குரோதத்தை வெட்டெனக்
காய்த்து வரக் கண்டக்கால் காக்கும் திறலாரே
மோக்க முடிவு எய்துவார்

#207
நல்வினை நால் கால் விலங்கு நவை செய்யும்
கொல் வினை அஞ்சிக் குயக்கலம் நல்ல
உறுதியும் அல்லவும் நாள் பேர் மரப் பேர்
இறுதியில் இன்ப நெறி

#208
பறவை அரும் பொருள் இன்சொல் முதிரை
உறுதிக்-கண் ஊன் உண் விலங்கு சிறியன
நீர்ப்புள் குயக்கலம் புல் அவை ஊர்வது
பேர்த்து ஈண்டு வாரா நெறி

#209
உட்கப்படும் எழுத்து ஓர் இரண்டு ஆவதே
நட்கப்படும் எழுத்தும் அத்துணையே ஒட்டி
இழுக்கா எழுத்து ஒன்று இமிழ் கடல் தண் சேர்ப்ப
விழுச்சார்வு வேண்டுபவர்க்கு

#210
முப்பெயர் மூன்றும் உடன் கூட்டி ஓர் இடத்துத்
தப்பிய பின்றை தம் பேர் ஒழித்து அப்பால்
பெறு பெயரைக் காயப் பெறுபவேல் வையத்து
உறும் அவனை எல்லாம் ஒருங்கு

#211
ஆற்றாமை ஊர அறிவு இன்றி யாதொன்றும்
தேற்றான் எனப்பட்டு வாழ்தலின் மாற்றி
மனையின் அகன்று போய் மா பெரும் காட்டில்
நனை_இல் உடம்பு இடுதல் நன்று

#212
நல்லறம் எந்தை நிறை எம்மை நன்கு உணரும்
கல்வி என் தோழன் துணிவு எம்பி அல்லாத
பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ பொருளாய
இச் சுற்றத்தாரில் எனக்கு

#213
மக்களே பெண்டிர் மருமக்கள் தாய் தந்தை
ஒக்க உடன்பிறந்தார் என்று இவர்கள் மிக்க
கடும் பகையாக உழலும் உயிர்தான்
நெடும் தடுமாற்றத்துள் நின்று

#214
அளற்றகத்துத் தாமரையாய் அம் மலர் ஈன்றாங்கு
அளற்று உடம்பாம் எனினும் நன்றாம் அளற்று உடம்பின்
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்றவை
தன்னால் தலைப்படுதலான்

#215
தேற்றம் இல்லாத ஒருவனைப் பின் நின்று ஆங்கு
ஆற்ற நலிவர் இரு_நால்வர் ஆற்றவும்
நல்லார் போல் ஐவர் பகை வளர்ப்பார் மூவரால்
செல்லும் அவன் பின் சிறந்து

#216
அருவினையும் ஆற்றுள் வரு பயனும் ஆக்கும்
இரு வினையும் நின்ற விளைவும் திரிவு இன்றிக்
கண்டு உணர்ந்தார்க்கு அல்லது காட்டு அதரும் நாட்டு அதரும்
கொண்டு உரைப்பான் நிற்றல் குதர்

#217
ஆதியின் தொல் சீர் அறநெறிச்சாரத்தை
ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்குச் சோதி
பெருகிய உள்ளத்தராய் வினைகள் தீர்ந்து
கருதியவை கூடல் எளிது

#218
எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என் செய்யும்
பொய் நூல் அவற்றின் பொருள் தெரிந்து மெய் நூல்
அறநெறிச்சாரம் அறிந்தான் வீடு எய்தும்
திற நெறிச் சாரம் தெளிந்து

#219
அவன்-கொல் இவன்-கொல் என்று ஐயப்படாதே
சிவன்-கண்ணே செய்ம்-மின்கள் சிந்தை சிவன்தானும்
நின்று கால் சீக்கும் நிழல் திகழும் பிண்டிக் கீழ்
வென்றிச் சீர் முக்குடையான் வேந்து

#220
முனைப்பாடியானைச் சூர் முக்குடைச் செல்வன்-
தனைப் பாடி வந்தேற்குத் தந்த பரிசில்
வினைப்பாடு கட்டு அழித்து வீட்டு இன்பம் நல்கி
நினைப் பாடி வந்தோர்க்கும் நீம் ஈக என்றான்
நிறைவிளக்குப் போல் இருந்து
** பிற்சேர்க்கை

#221
அருள் வட்டமாக அறிவு கதிராய்ப்
பொருள் வட்டம் எல்லாம் விளக்கி இருள் வட்டம்
மாற்றும் அறிவான ஞான வளர் ஒளியான்
வேற்று இலிங்கம் தோன்றும் வென்று

#222
மாமாங்கம் ஆடல் மணல் குவித்தல் கல் இடுதல்
தாம் ஓங்கு உயர் வரை மேல் சா வீழ்தல் காமம்கொண்டு
ஆடோடு எருமை அறுத்தல் இவை உலக
மூடம் என உணரற்பாற்று

#223
சக்கரன் நான்முகன் சங்கரன் பூரணன்
புத்தன் கபிலன் கணாதரன் என்று எத்திறத்து
ஏகாந்த வாதிகள் எண் கேட்ட ஆதன் போல்
ஆகாதாம் ஆதன் துணிவு

#224
கடம்பன்தான் தன்னொடு காம்படு தோள் வள்ளி
உடம்பினும் கூட்டம் அது உவந்து கேட்பர்
கொடுத்து உண்-மின் கொண்டு ஒழுக்கம் காணு-மின் என்பார் சொல்
அடுப்பு ஏற்றி ஆமை தீந்து அற்று

#225
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்று இவை
தன்னால் முடித்து அறான் இல்லையேல் பொன்னே போல்
ஆவட்டம் செய்த அணிகலம் தேயகில் போல்
ஆய் வட்டம் நில்லாது உடம்பு

#226
நால் இறகில் கண் இலதே எனினும் நல் பொருளின்
பேர் இறையான் உண் பெயரில் பின் சிறக்குமோரும்
இரு கண் உளதே எனினும் அதனை
வெருண்டு விலங்காமல் கா
** அறநெறிச்சாரம் முற்றும்

மேல்

&9 நீதி நூல்
** முனிசீப் வேதநாயகம் பிள்ளை அவர்கள்

@0 காப்பு

#1
** படைத்துக் காக்கும் பண்பினன் பரமன்
ஆதிநூல் ஒன்றும் அரும் பயன் யாரும் தெளிவான்
நீதிநூல் ஒன்று நிகழ்த்தவே மாதிரமோ
இத் தரை அனைத்தையும் இயற்றி இனிதில் திதிசெய்
கத்தன் மலர் ஒத்த கழல் காப்பு

#2
** ஆதிக் கடவுள் அடியிணை போற்றி
மாதிரம்-தனில் வாழ்பவர் யாவரும்
தீது இகந்து அறச் செய்கை முயலுவான்
நீதிநூலை நிகழ்த்த நிகர் இலா
ஆதி தேவன் அடி இணை ஏத்துவாம்

@1 அவையடக்கம்

#1
** வெயிலுக்கு இடும்விளக்குப் போலும்யான் நீதிநூல் கூறல்
வெயிலினைச் சோதிசெய்வான் விளக்கிடல் போலும் காகம்
குயிலினுக்கு இசை உணர்த்தும் கொள்கையே போலும் நட்டம்
மயிலினுக்கு உணர்த்தும் கானவாரணம் எனவும் யாவும்
பயில் உலகிற்கு நீதி பகர யான் துணிவுற்றேனால்

#2
** ஆன்றோர் அறிவித்தவற்றையே அவர் முன் கூறுவேன்
பானுவின் கதிரை உண்ட பளிங்கு ஒளிசெய்தல் போலும்
வான் உலாம் கொண்டல் பெய்யும் மழையினைத் தழையில் தாங்கித்
தானும் பெய் தருவைப் போலும் தமிழ் ஒரு மூன்றும் ஆராய்ந்து
ஆனுவார் கவி சொல்வோர் முன் அறிவிலேன் பாடலுற்றேன்

#3
** ஊமையர் பாடலை ஒக்கும் என் பாட்டும்
முடவரே ஆட அந்தர் முன் நின்று பார்த்து உவக்கத்
திடமொடு மூகர் பாடச் செவிடர் கேட்டு அதிசயிக்கக்
கடல் உலகினில் கண்டு என்னக் கனவினும் கலையைத் தேரா
மடமையேன் உலகநீதி வகுத்திடத் துணிந்தேன்-மன்னோ

#4
** பசுவை நோக்காது பாலைக் கொள்வதுபோல்
** பாட்டை நோக்காது பயனைக் கொள்க
பயன்கொள்வோர் அதனை நல்கும் பசு உரு இலது என்று ஓரார்
வியன் சினை வளைவு நோக்கார் விளைந்த தீம் கனி பறிப்போர்
கயம் கொள் சேறு அகற்றித் தெள் நீர் கைக் கொள்வார் என்ன நூலின்
நயன் கொள்வது அன்றிப் பாவின் நவையை நோக்கார் மேலோரே

#5
** கடலுக்கு நீர் தரும் மழைபோல் கற்பித்தாரிடத்தே
** ஒப்புவித்தேன்
வேலை-வாய் உண்ட நீரை மேகம் சிந்தினுமே சிந்தும்
காலிடைக் கொண்ட நீரைக் கழனி அக் காற்கு நல்கும்
பாலர் கற்றவை ஆசான்-பால் பகர்வர் யான் நால் உணர்ந்த
சீலர்-பால் கற்றது அன்னோர் செவியுற நவின்றேன் அம்மா

#6
** முறையைப் பழிப்பதாம் என் பாட்டைப் பழிப்பது
கோவிலைப் பழிக்கின் ஓர் எண்_குணனையும் பழித்தது ஒப்பாம்
காவினைப் பழிக்கின் ஆண்டு ஆர் கடி மலர்ப் பழித்தது ஒப்பாம்
வாவியைப் பழிக்கின் கொண்ட வண் புனல் பழித்ததாம் என்
பாவினைப் பழிக்கின் நீதிப் பயனையும் பழித்தது ஆமே

@2 அதிகாரம் 1 – தெய்வமுண்டெனல்

#7
** ஏதுக்களால் தெய்வம் உண்டென இசைத்தல்
மண்டபமாதி கண்டோர் மயன் உளன் என்னல் போலும்
குண்டலம் முதல் கண்டோர் பொற்கொல்லன் உண்டு என்னல் போலும்
ஒண் துகில் கண்டோர் நெய்தோன் ஒருவன் உண்டு என்னல் போலும்
அண்டம் மற்று அகண்டம் செய்தோன் உளன் என அறிவாய் நெஞ்சே

#8
தீட்டுவோன் இன்றி ஆமோ சித்திரம் திகழ் பொன் பாவை
ஆட்டுவோன் இன்றித் தானே ஆடுமோ திவவி யாழின்
மீட்டுவோன் இன்றிக் கீதம் விளையுமோ சராசரங்கள்
நாட்டுவோன் ஒருவன் இன்றி நன்கு அமைந்து ஒழுகும்-கொல்லோ

#9
மரம் முதல் அசைதலால் கால் உளது என மதிப்பார் எங்கும்
பரவிய புகையால் செம் தீ உளது எனப் பகர்வார் சுற்றும்
விரவிய மணத்தால் பாங்கர் வீ உளது என்று தேர்வார்
பரன் உளன் எனும் உண்மைக்குப் பார் எலாம் சான்று மன்னோ

#10
நாதன் இல்லாத வீடு நாளுமே நடவாது என்னில்
வேதநாயகன் இலானேல் விரி கதிர் மீன் உதித்தல்
சீத நீர் பெயல் தருக்கள் சீவராசிகள் கதித்தல்
பூத பௌதீகம் எல்லாம் புரை அற ஒழுகற்பாற்றோ

#11
பூதம் யாவுக்கும் ஏணாய்ப் பொருந்திய விசும்பைக் காற்றை
வேதநூலதனை மண்ணோர் மெய் உறை உயிரை நெஞ்சை
ஏதம்_இல் அறத்தைக் கண்ணால் பார்த்திலோம் எனினும் உண்டு என்று
ஓதல் போல் தெய்வம்தான் ஒன்று உளது எனல் தேற்றம் அம்மா

#12
வாசம் மூக்கு அறியுமன்றி வாய் செவி விழி மெய் தேரா
பேச வாய் அறியுமன்றிப் பின்னை ஓர் புலன் தேராது
நேசம் ஆர் தொண்டர் ஞான நேத்திரம் கொண்டு காணும்
ஈசனை முகத்தின் கண்ணால் இகத்தில் யார் காண வல்லார்

#13
வான் இன்றி மழையும் இல்லை வயல் இன்றி விளைவும் இல்லை
ஆன் இன்றிக் கன்றும் இல்லை அரி இன்றி ஒளியும் இல்லை
கோன் இன்றிக் காவல் இல்லை குமரர் தாய் இன்றி இல்லை
மேல் நின்ற கடவுள் இன்றி மேதினி இல்லை மாதோ

#14
கதிரவற்கு ஒளி இன்று என்னக் கண்ணிலார் கழறல் போலும்
வதிரர் பேராழி ஓசை மாறியது என்னல் போலும்
எதிருறு பொருளைக் காணாது இடருறு பித்தர் போலும்
மதியிலார் தேவு இன்று என்ன மருளொடும் இயம்புவாரே

#15
அத்தன் தாய் முன்னோர்-தம்மை அறிகிலான் இலர் என்பானோ
சத்தம் இன்சுவை கந்தத்தைத் தரிசியான் இலன் என்பானோ
நித்தனைக் கண்ணில் காணா நீர்மையால் இலன் என்று ஓதும்
பித்தரில் பித்தர் பாரில் பேசிட உளரோ அம்மா

#16
தேவனே இலனேல் மோக்கம் தீ நரகு இல்லை வேதம்
பாவ புண்ணியங்கள் இல்லை பரன் இலை என்போன் இல்லின்
மேவலர் தீயிட்டு அன்னான் விபவம் எல்லாம் சிதைத்துச்
சீவனை வதைசெய்தால் என் செய்குவன் சிதடன்தானே

@3 அதி. 2 – தெய்வத்தன்மையும் வாழ்த்தும்

#17
**பிறப்பு இறப்பு இல்லாப் பெரியோனை வாழ்த்து
ஆதி ஈறு இல்லான் தன்னை அமைத்த காரணம் ஒன்று இல்லான்
கோது இலான் கணத்துள் அண்டம் கோடி செய்து அழிக்க வல்லான்
ஓதிடும் ஒப்பு ஒன்று இல்லான் உரு இலான் இரு விண் தங்கும்
சோதி தன் நிழலாக் கொண்ட சோதியைத் துதியாய் நெஞ்சே
** காணரும் வடிவினன் கடவுள்

#18
ஆண் அலன் பெண்ணும் அல்லன் அஃறிணை அலன் பார் அல்லன்
சேண் அலன் புனல் கால் அல்லன் தீ அலன் ஐம்புலத்தால்
காணரும் வடிவன் நித்தன் கத்தனம் மத்தன் சுத்தன்
மாண் அறம் உருக்கொண்டு அன்ன மாட்சியான் கடவுள் நெஞ்சே
** எப்பொருளினும் நீக்கமின்றி நிற்போன் இறைவன்

#19
தரை எலாம் உளன் துரும்பு-தன்னினும் உளன் அண்டாண்ட
நிரை எலாம் உளன் மெய் ஆவி நெஞ்சுளும் உளன் இயம்பும்
உரை எலாம் உளன் தான் மேவி உறை பொருள் கெடக் கெடாதான்
புரை தபு தன்னைத் தானே பொருவுவோன் ஒருவன் அன்றே
** உலகியல் விதித்தோன் கடவுள்

#20
உடுக் கணம் யாவும் வெவ்வேறு உதயனாம் ஒவ்வொன்றிற்கும்
நடுக்கண் பூவலயம் சோம நபமொடும் வரம்பு_இல் கோடி
அடுக்கடுக்காச் செய்து எல்லாம் அந்தரத்து அமைந்து நிற்க
இடுக்கண் ஒன்று இன்றிக் காக்கும் எம்பிரான் பெரியன் அன்றோ
** முட்டியுல கழியாது முடிப்பவன் கடவுள்

#21
பண்ணிய புவனம் எல்லாம் படர் கையில் பரிக்கும் ஏகன்
நண்ணிய கரம் சற்று ஓயின் நழீஇ ஒன்றோடொன்று மோதித்
திண்ணிய அகில கோடி சிதைந்து உகும் என அறிந்தும்
புண்ணிய மனுவால் தேவைப் போற்றிடாவாறு என் நெஞ்சே
** அடிமுடி எவர்க்கும் அறியொணான் கடவுள்

#22
இதயம் தன் வேகத்தோடும் எண்_இல் அவ்வியத்த காலம்
கதமொடு மீச்சென்றாலும் கடவுள் மெய் நடுவை அன்றி
இதர அங்கத்தைக் காணாது எனின் முடி எவண் பொன் ஒக்கும்
பதம் எவண் அகண்டாகாரப் பராபரற்கு உரையீர் பாரீர்
** ஆராலும் வாழ்த்தற் கரியவன் கடவுள்

#23
விலக அரும் அருளின் மீக்கூர் விமலனை வாழ்த்த வேண்டின்
அலகு_இல் கற்பங்களே நம் ஆயுளாய் மும்மைத்தாய
உலகம் ஓர் உடம்பாய் அந்த உடம்பு எலாம் வாயாய் நித்தம்
பல கவி மாலை சூட்டிப் பரவினும் முடியும்-கொல்லோ
** உடலூண் உணர்வெலாம் உதவுவோன் கடவுள்

#24
உரு_இல் சூனியமாய் யாதும் உணர்வு இலாது இருந்த நம்மைத்
திரு உடலோடு ஞானச் சீவனாகப் படைத்துச்
சருவ நன்மையுமே தந்து தன்னையும் தந்த நாதன்
மரு மலர் அடிக்கு நம்மை வழங்குதல் பெரிதோ நெஞ்சே
** எல்லாம் அருளும் இறைக்கொப்பின்று

#25
பூமி நம் இல்லாம் மற்றைப் பூதங்கள் பணிசெய்வோராம்
சோமன் மீன் கதிர் விளக்காம் சூழ் மரம் பயிர் ஆகாரச்
சேம வைப்பாம் நமக்கு இத் திரவியம் யாவும் நல்கும்
சாமியை உவமித்து ஏத்தச் சாமியம் யாது நெஞ்சே
** தெய்வப் புணையிலார் சேரிட மில்லார்

#26
தோன்று அகலிடமது என்னும் துன்ப சாகரத்தில் அத்தன்
தேன் தரு மலர்த் தாள் தெப்பம் சேர்கிலாது அகன்று நிற்போர்
வான்-தனைப் பிரிந்த புள்ளும் வாழும் நீர் நீத்த மீனும்
கான்-தனை அகல் விலங்கும் காவல் தீர் நகரும் ஒப்பார்
** இறையருள் உண்டேல் அச்சம் இன்று

#27
பார் எலாம் பகைசெய்தாலும் பராபரன் கருணை உண்டேல்
சாரும் ஓர் துயரும் உண்டோ தாயினும் இனிய ஐயன்
சீர் அருள் இன்றேல் எண்_இல் தேர் கரி பரி பதாதிப்
பேரணி உடையமேனும் பிழைக்குமாறு எவன்-கொல் நெஞ்சே
** கடவுளை அறியாது காலங் கழித்தனை

#28
இருநிதி பெற்ற தீனர் எண்ணிடாது இகழ்ந்தது ஒப்ப
அருவமாய் உருவமாய் நம் ஆருயிர்க்கு உயிராய் அண்டம்
பெரு நிலம் எங்கும் இன்பம் பெருக்கெடுத்து ஓங்கிநிற்கும்
கருணை அம் கடல் ஆடாது கழித்தனை வாழ்நாள் நெஞ்சே
** கடவுளை நினைக்க நினைக்க நேரும்பே ரின்பம்

#29
முன்னவன்-தனை உளத்து முன்னமுன்னத் தெவிட்டாக்
கன்னலோ அமுதோ பாகோ கற்கண்டோ எனத் தித்திக்கும்
இன்னல் மேவாது அவன்தான் எங்கணும் நிறைந்திருந்தும்
அன்னையை நீத்த சேய் போல் ஐயனை நீத்தாய் நெஞ்சே
** கடவுளைத் தொழாது காலம் கழித்தல் நன்றன்று

#30
ஆயுள்நாள் சில வெம் காமம் அனந்தர் நோய் சோம்பு கொண்ட
காயமே வளர்க்க என்னில் கருமங்கள் செயல் இவ்வாறே
தேயும் நாள் கழிய நிற்கும் சேடநாள் அற்பம் ஆகும்
தூய நாதனைத் தொழாமல் தொலைக்கின்றாய் அழியும் நெஞ்சே
** கடவுளை அகத்தில் காண்பதே காட்சி

#31
பொங்கு அலை ஆழி தாண்டிப் பொருப்புகள் கடந்து ஓயாமல்
அங்குமிங்கும் திரிந்தே அழிந்துபோம் உடலைக் காப்பாய்
எங்கணும் உள்ளோன் தாள் உன் இருக்கையின் இருந்து போற்றிப்
பங்கம்_இல் சுகம் பெற்று உய்யப் பாரம் என் பகராய் நெஞ்சே
** கடவுளைத் தொழுவோர் காண்பர்பே ரின்பே

#32
மாசறு கடவுள் பாத மலரினைத் தினமும் போற்றிப்
பாசம்_இல் சுகம் பெறாமல் பவஞ்சத்தூடு உழலல் பைம்பொன்
ஆசனம்-தன்னில் ஏறி அரசுசெய் தகைமை நீத்துக்
காசனக் கழுவில் ஏறும் கயமையே கடுக்கும் மாதோ
** கடவுளைத் தொழா உறுப்புக் கல்மண்தீ யாமே

#33
போதநாயகனை உன்னாப் புந்தியே வெம் தீ ஒப்பாம்
தாது அலர் அடி வணங்காத் தலை குலை சிலையாம் சீர் சால்
மாதலத்தவனை வாழ்த்தா வாயது தூயது அன்று
காதல் அன்பொடு நீர் தூவாக் கண்களே புண்கள் ஆமால்
** எல்லாம் இன்பெய்தக் கடவுளை ஏத்தும்

#34
கதிரவன் கிரணக் கையால் கடவுளைத் தொழுவான் புட்கள்
சுதியொடும் ஆடிப் பாடித் துதிசெயும் தருக்கள் எல்லாம்
பொதி அலர் தூவிப் போற்றும் பூதம் தம் தொழில் செய்து ஏத்தும்
அதிர் கடல் ஒலியால் வாழ்த்தும் அகமே நீ வாழ்த்தாது என்னே
** எல்லாம் காக்கும் இறையே மேலாம்

#35
அறிவிலார் அரசர் என்றற்கு அமைச்சரே சான்றாம் அன்னோர்
செறி பெரும் தானையான் மெய்த் திறலிலார் என அறிந்தோம்
வறியர் என்று இறை இரக்கும் வாய்மையால் அறிந்தோம் என்றும்
நெறி வழாது உலகம் தாங்கும் நிருபனைத் துதியாய் நெஞ்சே
** எங்குந் தங்கி இயற்றுவோன் கடவுள்

#36
இரவினும் மற்றோர் பாரா இடையினும் பாவம் செய்வாய்
கரதலாமலகம் போல் முக்காலமும் உணர்வோன் எங்கும்
தரமொடு வீற்றிருக்கும் தன்மை எள்ளளவும் ஓராய்
பரன் இலா இடம் ஒன்று உண்டேல் பவம் அவண் செய் நீ நெஞ்சே

@4 அதி. 3 – அரசியல்பு
** துன்பம் நீக்கி இன்பம் ஆக்குவோன் மன்னன்

#37
எந்த வேளையினும் நொந்தவர் துயர் கேட்டு இடர் இழைப்பவன் தனது ஏக
மைந்தனே எனினும் வதைத்திட ஒல்கான் மாக்களின் சுக நலம் அன்றிச்
சிந்தனை மற்று ஓர் பொருளினில் செலுத்தான் தீமொழி கனவிலும் புகலான்
தந்தை போல் தாய் போல் எவரையும் ஓம்பும் தன்மையனே இறை அன்றோ
** மன்னுயிர் எல்லாம் தன்னுயிரா மதிப்போன் மன்னன்

#38
மன் உயிர் அனைத்தும் தன் உயிர் என்ன மகிழ்வொடு தாங்கி யாரேனும்
இன்னலுற்று அயர்ந்தோம் எனக் கலுழ்ந்திடில் தன் இரு விழி நீரினை உகுப்பான்
அன்ன வெம் துயரை நீக்கும் முன் தான் ஒன்று அயின்றிடான் துயின்றிடான் எவரும்
நல் நகர் எங்கும் உளன் எனப் பகர நாள்-தொறும் இயங்குவோன் கோனே
** நல்லோரால் அரசு நடத்துவோன் மன்னன்

#39
தாய் அறியாத சேய் இருந்தாலும் தான் அறியாதவர் இல்லை
ஆய தன்மையினால் அறவழி நிற்கும் அறிஞரை அறிந்து அவர்க்கு உரிய
தேய ஆதிக்கம்தந்து நல் நீதிசெலுத்தி எங்கணும் மருந்தினுக்கும்
தீயவர் இலர் என்று இசையுற அடக்கும் திறலுளோன் பூதல வேந்தே
** தானும் குடிகளும் சமனென்போன் வேந்தன்

#40
தன் புகழ் கருதி மருவலரோடும் சமர்புரிந்து உயிர்களை மாய்த்துத்
துன்பமே செய்ய இயைந்திடான் முற்போர் தொடுத்திடான் தன் உயிர் அனைய
மன்பதைக்கு இடுக்கண் யாவரே செயினும் வாள் அமர் இயற்றி நீக்கிடுவான்
இன்பதுன்பங்கள் தனக்கும் மற்றவர்க்கும் ஏகம் என்று எண்ணுவோன் வேந்தே
** நெறிமுறை நடந்து நடத்துவோன் நீள்மன்னன்

#41
தான் இனிது இயற்றும் மனுநெறிப்படி முன் தான் நடந்து அறவழி காட்டி
ஞான நற்குணத்தின் மேன்மையால் எவர்க்கும் நாயகன் தான் எனத் தெரிந்துத்
தானமும் தயையும் மெய்ம்மையும் தவமும் தற்பரன் வணக்கமும் பொறையும்
மானமும் மிகுத்து நரர் எலாம் செழிக்க மகிழ் அரசு அளிப்பவன் மன்னே
** வாய்ப்பெல்லாம் இயற்றி ஆள்வோன் மன்னன்

#42
சத்திரம் சோலை சாலைகள் குளங்கள் தண் நதி மதகொடு ஆலயங்கள்
வித்தியாசாலை மாடகூடங்கள் வேறுவேறு அமைத்து வேளாண்மை
சத்தியம் அகலா வாணிகமாதி சகல நல் தொழில் அவரவர்கள்
நித்தியம் உயல்வித்து இசை புரக்கும் நிருபனே நிருபனாம் அன்றோ
** கடவுளை பன்முறை கேட்டு முறைசெயல் பண்பு

#43
காது இறைவனுக்குக் கண் எனலான் மெய் காண்குறான் எனும் மொழி மாற்றி
வாதிகள் சாட்சி சாதகம் எல்லாம் வகைவகை இனிது கேட்டு அமைந்த
மேதினிக் கிழமை நீங்கிடும் தன்மை விளையினும் நடுவின் நீங்காது
பாதியா அணுவும் பகுந்து தீர்ப்பதுவே பார்த்திபன் கடமையாம் அன்றோ
** செங்கோல் ஒன்றே சேர்க்கும் வலியினை

#44
மன்னவன் வலி செங்கோலினால் அன்றி வாளினால் சேனையால் இல்லை
நன்னெறி வழுவா மன்னவன்-தனக்கு நாடு எலாம் பேர் அரண் உலகின்
மன் உயிர் எல்லாம் அவன் படை அன்னோர் மனம் எலாம் அவன் உறை பீடம்
இன்ன தன்மையனா அரசு அளிப்பவனை இகல்செயும் தெறுநரும் உளரோ
** தன்னைத் தொண்டனாத் தருவோன் மன்னன்

#45
கைப்புரை ஏற்றுப் பொய்ப்புகழ் ஏலாக் காதினன் அருள் பொழி கண்ணன்
தப்புரை வழங்கா நாவினன் புவியோர் தாசன் தான் என உணர் மனத்தன்
செப்பு அயல் மடவார் காணரும் உரத்தன் திருந்தலர் காணரும் புறத்தன்
எப்பொழுதினும் சென்று யாரும் காண் முகத்தன் ஈசன் அன்புடையவன் இறையே
** கொடுங்கோ லரசன் அடுந்தன் உயிரும்

#46
கொடிய மன்னவர்க்குக் குடிகளே ஒன்னார் கோட்டையே அமர்க்களம் அவர்-தம்
அடிகள் தோய் நிலம் எங்கணும் படுகுழியாம் அயின்றிடும் அன்னமும் விடமாம்
நெடிய ஆசனமே காசன மேடை நிமிர் உழையோர் நமன் தூதர்
கடி மனை மயானக் காடு எனில் கொடுங்கோல் காரணர் உய்யுமாறு உளதோ

@5 அதி. 4 – குடிகளியல்பு
** அரசின்றேல் உலக ஒழுக்கம் அழியும்

#47
வேந்தனே இல்லாவிடின் உலகத்து மேலது கீழதா மணம்செய்
காந்தனுக்கு அடங்கிக் களத்திரம் நடவாள் காதலர் தந்தை சொல் கேளார்
மாந்தர் வேளாண்மை முதல் தமக்கு உரிய வளமை கூர் தொழில்களின் முயலார்
சாந்தரும் தீயர் ஆவரேல் தீயர் தன்மையைச் சாற்றுமாறு எவனோ
** மன்னன் இன்றேல் குடிகள் மனைசெல்வம் இன்றி மாள்வர்

#48
நம் மனை மைந்தர் கிரகவாழ்வு எல்லாம் நரபதியால் அவன் இலனேல்
அ மனை தீயர் கைவசம் ஆவள் அரு நிதி கொள்ளையாம் நாளும்
வெம்மையோடு ஒருவர் ஒருவரை உண்பார் மேலவர் அசடரால் மெலிவர்
அம்ம ஈது எல்லாம் உணர்ந்து அரசு ஆணைக்கு அமைதல் நற்குடிகளின் இயல்பே
** அடங்காக் குடிகள் வளங்குன்றி அழியும்

#49
நதியினும் உயர் பணை நந்தும் கார் உலாம்
கதியினும் உயர் வரைத் தருக்கள் காயுமால்
பதியினும் உயர் தடம் காப் பைஞ்ஞீலங்கள்
விதி செயல் சிதைந்து அகம் மெலிந்து நையுமே
** உடலுக்குத் தலை போலும் உலகினுக் கரசன்

#50
தரை எனும் உடற்கு ஒரு தலைவனே தலை
நரர் பல உறுப்புகள் நலம்கொள் மெய்யது
சிரமுறும் பொறி வழிச் செல்லும் தன்மை போல்
உர அரசனுக்கு அமைந்து ஒழுகும் வையமே
** நயம்செய் மன்னவன் ஞாயிறு போல்வன்

#51
பானு வெப்புடையவன் எனினும் பானுவே
வான் நிலவான் எனில் வையம் உய்யுமோ
கோன் அரும் கொடியனே எனினும் கோன் இன்றி
மானவர் உய்ய ஓர் வழியும் இல்லையே
** வரிகொளல் மக்களை வாழ்வித் தற்கே

#52
படியின் மன் உயிர்க்கு எலாம் பாதுசெய்கின்ற
நெடிய மா சேனையை நெறிசெய் மாந்தரைக்
கடியொடும் தாங்க ஊர்க் காரியம் செயக்
குடி இறை இறையவன் கொள்ளும் கொள்கையே
** மன்னனைக் குடிகள் உழைப்பால் காப்பர்

#53
கோ அரிய சீவன் குடிகள் உடல் ஆவார்
சீவன் சும்மா இருக்கத் தேகம் உழைத்து ஓம்புதல் போல்
பூவலயம் மீதினில் தம் பூட்சிகளினால் உழைத்துக்
காவலனைக் காக்கக் கடனாம் குடிகளுக்கே

@6 அதி. 5 – ஞானாசிரியன் பெருமை
** இறைவனை உணர்த்தி இன்பருள்வோன் ஆசான்

#54
அக இருள் அகல ஞான விளக்கினை அருளின் ஏற்றிச்
சகலமும் நல்கும் கேள்வித் தனத்தினை நல்கி ஆதிப்
பகவன்-தன் சொரூபம் காட்டிப் பவம் அறம் இரண்டும் காட்டிச்
சுக நிலை காட்டும் தியாகத் தோன்றலை மறவாய் நெஞ்சே
** அழியா ஞான உடம்பளித்தோன் ஆசான்

#55
கானல் எனப்படு காயம் இது அப்பன்
தான் அவமே புவி தங்க அளித்தான்
ஈனம்_இல் ஆரியன் என்றும் ஒருங்கா
ஞான உடம்பினை நல்கினன் அன்றோ
** ஆசானா லன்றி அறியொணா நூற்பயன்

#56
நாட்டம் இன்றி ஒளி எப் பயனை நல்கும் மனையில்
பூட்டு பொன் திறவுகோலினை அலாது புகுமோ
வேட்டகத்து அரிய நூல்கள் உளவேனும் இனிதாக்
காட்டு அருள் குரவன் இன்றி எவர் காண்பர் பயனே
** ஆசானா லன்றி யார்க்கும் பிறப்ப றாது

#57
ஞான சூரியன் எனும் குரவன் இன்றி நரர் தம்
ஈன வெம் பவ இராவை அகலார் எவருமே
கானம் வாழ் மிருகம் ஆவர் கதி வாயில் பொதியும்
மானவர்க்கு உறையுளாய் நிரயம் வாய்விரியுமே
** தெய்வநூல் ஓதுவோன் சிறந்தமெய் ஆசான்

#58
மண் இறைக்கு அடியராய் உயிர் வளர்ப்பர் பலரும்
விண் இறைக்கு அடியராய் எவரும் வீடு பெறவே
புண்ணியத் திருமறைப் பொருளை ஓது புனிதர்
எண்ணிடற்கு அரிய பெற்றியை இயம்பல் எளிதே
** ஆசான் அரும்புகழ் அளவிடற் கரிதே

#59
ஐம்புலக் கதவு அடைத்து மன மாவை அறிவாம்
கம்பம் வீக்கி அஞரும் சுகம் எனக் கருதியே
செம்பொனைத் திரணமா மதித்திடத் தகுதியோர்
தம் பெரும் புகழ் இயம்புதற்கும் தரமதோ
** மெய்யுணர்ந்தார் துன்புறினும் விலகார் பெருந்தகைமை

#60
தலைகீழுறச் செய்யினும் தீபம் விண்-தன்னை நோக்கும்
கலை தேயினும் தண் கதிர் வீசும் அக் கங்குல் திங்கள்
விலை மா மணியைப் பொடிசெய்யினும் மின் அறாது
நிலை நீங்குவரோ துயர் மேவினும் நீர்மையோரே
** இன்மொழியா லறமுரைத்து ஈடேற்றுவன் ஆசான்

#61
கைத்திட்ட மருந்தில் அக்காரம் கலந்து கூட்டி
மத்தித்து அருள் பண்டிதர் போல் மற நோய் தவிர்ப்பான்
எத்திக்கினும் கேட்பவர் காது உளம் இன்பம் மேவித்
தித்தித்திட ஆரியர் நன்மறை செப்புவாரே
** பலர்க்கும் விளங்கப் பகுத்துரைப்போன் ஆசான்

#62
சிறு வாய்க் கலத்துள் துளியாகச் செலுத்தும் நீர் போல்
அறியாச் சிறுவர்க்கும் உணர்ந்து அறியாதவர்க்கும்
வறியார்க்கும் விளங்கிடவே தெளிவா வகுத்து
நெறியைத் தெரிவிப்பர் நல் நூல் நெறி நின்ற மேலோர்
** இயைந்தெல் லார்க்கும் இன்புறுத்துவோன் ஆசான்

#63
வைவார்-தமை வாழ்த்தியும் நெஞ்சில் வருத்தமுற்று
நைவாருடன் நைந்து அழுதும் தமை நண்ணித் துன்பம்
செய்வார் உறு பீழை நினைத்தும் சிந்தை நொந்து
மெய் மா மறையின் பயன் ஓதுவர் மேன்மையோரே
** கீழோர்க்குப் போதிக்கினும் மெய்யுணர்ந்தார் கேடுறார்

#64
பரிதியின் கிரணம் அங்கணமதில் படியினும்
அரிதின் மாசு அணுகுறாது அகலல் போல் இனிய நல்
சரிதம் இல்லவர் குழாம் சார்ந்து போதிக்கினும்
துரித வெம் பவம் உறார் தொல் மறைக் கிழவரே

@7 அதி. 6 – பொய்க்குருவின் தன்மை
** அருளில் நெஞ்சத்தான் ஆசான் ஆகான்

#65
திருடன் பொருள் காவலன் ஆதலும் செல் வழிக்குக்
குருடன் குருடன்-தனையே துணைக்கொள்ளல் போலும்
இருள் தங்கு உள மாந்தரை வான் கதி ஏற்ற என்னா
அருள் தங்கிய நெஞ்சமிலான் குரு ஆயவாறே
** குற்றமிலான் உரையையே கொள்வர் உலகோர்

#66
பெரு வெம் பிணியாளன் மற்றோர் பிணி பேரும் வண்ணம்
திருமந்திரம் சொல்வன் என்று ஓதிடின் திண்மை ஆமோ
தருமம்-தனை நாட்ட வந்தோன் குறை தான் உளானேல்
இரு மண்டலம் மீது அவன் சொல் எவர் ஏற்பர் மாதோ
** பேராசை ஆசானைப் பேருலகோர் கொள்ளார்

#67
பாவச் சலதிக்குள் உறா வகை பாருளோர்க்குக்
காவல் துணையாம் குரவன் குணம் கல்வி இன்றி
ஆவல் தளை பூண்டவனே எனில் ஆரும் கொள்ளார்
ஏவத் தெரியான் திமில் மீது எவர் ஏறுவாரே
** அடக்க மிலாதவர் ஆசிரியர் ஆகார்

#68
பழி தீர் கலை யாவும் உணர்ந்தும் பலர்க்கு உரைத்தும்
இழிவே உறத் தாம் அடங்கா மதியீனர் ஆர்க்கும்
வழி காட்டிட நாட்டு மரத்தையும் வையம் ஏச
விழியற்றவன் கையினில் வைத்த விளக்கும் நேர்வார்
** பொருளாசை யுள்ளான் அருளாசான் ஆகான்

#69
சொன்னத் திருடன் சிறு கள்வனைத் தூரி ஏசல்
என்னப் பொருளாசையுளான் பிறர் இச்சை தீர்ந்து
மன்னத் திருஞானம் உரைத்தல் மற்றோர் துறக்கும்
பொன்னைக் கவரச் செயும் வஞ்சனை போலும் மாதோ
** சிறுவரும் தன்உளமும் சிரிக்கும் கொடியனை

#70
வாயில் தேனும் தன் வாலில் கொடுக்கும் சேர்
ஈயின் வாயினில் இங்கிதச் சொல்லொடும்
தீயசெய்கையுளானைத் தினம் சிறு
சேயும் எள்ளும் தன் சிந்தையும் எள்ளுமே
** இம்மைப்பற் றில்லானே ஆசானுக் கேற்றவன்

#71
இகத்தின் வாழ்வினில் இச்சையறான்-தனை
சகத்தினில் குருசாமி என்று ஓதுதல்
சுகத்தை நீங்கித் துயரம் செறி நரர்
அகத்தை வீடு என்று அறைதல் சிவணுமே
** உணர்ந்து நெறிபிழைத்தோர் உய்யார் ஒருநாளும்

#72
ஆதி தேவன் அறிவில்லவர் செயும்
கோதினைக் கமை கொண்டு பொறுக்கினும்
நீதிநூலை உணர்ந்து நெறி தவிர்
வேதியர்க்கு விமோசனம் இல்லையே
** அறிவில் ஆசான் ஆட்டுத்தோல் புலியே

#73
ஒருமையாய்த் தன் உதரம் நிமித்தமே
தரும வேடம் தரிக்குதல் வெம் புலி
புருவை-தன்னைப் புசிக்கப் புருவையின்
சருமம் பூண்டு அங்குச் சார்தல் நிகர்க்குமே

@8 அதி. 7 – தாய் தந்தையரை வணங்கல்
** தாய் தந்தைக்கு ஈடெங்கும் இல்லை

#74
சின்ன ஓர் பொருள் தந்தோரைச் சீவன் உள்ளளவும் உள்ளத்து
உன்னவே வேண்டும் என்ன உரைத்தனர் பெரியோர் தேகம்-
தன்னை ஆருயிரைச் சீர் ஆர் தரணியின் வாழ்வைத் தந்த
அன்னை தந்தைக்குச் செய்யும் அரும் கைம்மாறு உளதோ அம்மா
** ஈன்று புறந்தந்த தாயினை ஏத்து

#75
கடவுளை வருந்திச் சூலாய்க் கைப்பு உறை உண்டு அனந்தம்
இடர்களுற்று உதரம்-தன்னில் ஈர்_ஐந்து திங்கள் தாங்கிப்
புடவியில் ஈன்று பல் நாள் பொன் தனப் பாலை ஊட்டித்
திடமுற வளர்த்துவிட்ட செல்வியை வணங்காய் நெஞ்சே
** கண்காண் தந்தைதாய்க் கொப்பிலை கண்டீர்

#76
எப்புவிகளும் புரக்கும் ஈசனைத் துதிக்கவேண்டின்
அப்பனே தாயே என்போம் அவரையே துதிக்கவேண்டின்
ஒப்பனை உளதோ வேலை உலகில் கட்புலனில் தோன்றும்
செப்ப அரும் தெய்வம்_அன்னார் சேவடி போற்றாய் நெஞ்சே
** தாய் தந்தையரைப் போற்றாரைத் தண்டிப்பான் ஆண்டவன்

#77
வைத்தவர் உளம் உவப்ப மலர் நிழல் கனி ஈயாத
அத் தருத்-தன்னை வெட்டி அழலிடுமா போல் ஈன்று
கைத்தலத்து ஏந்திக் காத்த காதல் தாய் பிதாவை ஓம்பாப்
பித்தரை அத்தன் கொன்று பெரு நரகு அழல் சேர்ப்பானே
** ஈன்றார் வன்சொல் இனியநற் பாகே

#78
ஈன்றவர் நம்மால் உற்ற எண்ணரும் இடர்கட்கு ஆன்ற
மூன்று உலகமும் ஒப்பு ஆமோ மூப்பினால் இளைப்பால் அன்னார்
கான்ற வன்சொற்கள் கன்னல் கான்றவன் பாகு எனக் கொண்டு
ஊன்றுகோல் என்னத் தாங்கி ஊழியம்செய்யாய் நெஞ்சே
** எதிர்நோக்கா அன்புதவி ஈன்றாரே செய்வர்

#79
ஈங்கு எதிருதவி வெஃகாது எவரும் ஓர் உதவிசெய்யார்
ஓங்கும் சேய் வாழும் வீயும் உடல் எய்க்கும் பொழுது தம்மைத்
தாங்கிடும் தாங்காது என்னும் தன்மை நோக்காது பெற்றோர்
பாங்குடன் வளர்க்கும் அன்பு பரவலாம் தகைமைத்து அன்றே
** ஈன்றார்க்கு நினைவுசெயல் எய்தும் மகப்பொருட்டு

#80
மண்ணினில் அன்னை தந்தை மறம் அறம் செயினும் நோன்பு
பண்ணினும் உடல் வருந்தப் பணிபுரியினும் மருந்து ஒன்று
உண்ணினும் களிக்கினும் துன்புற்று அயரினும் மனத்து ஒன்று
எண்ணினும் தம்-பொருட்டு அன்று ஈன் சுதர்-பொருட்டால் அன்றோ
** எல்லாம் பழக்கிவளர் ஈன்றார்க்கு ஒப்பாரியார்

#81
ஐய மெய் அம்மணத்தோடு அழுவதை அன்றிப் பேசச்
செய்ய ஒன்று அறியா நொய்ய சிற்றுடல் சேய் வளர்ந்து இங்கு
உய்ய வேண்டுவன செய்து ஆருயிரினும் இனிதாக் காக்கும்
பொய்_இல் அன்புடைத் தாய் தந்தை போல்பவர் உளரோ நெஞ்சே
** எல்லாம் பெறலாம் ஈன்றார்ப் பெறலரிது

#82
மனையவள் வீயின் வேறு ஓர் மனைவியைக் கொளலாம் பெற்ற
தனையர் ஆதியர் இறப்பில் தனித்தனி பெறலாம் பின்னும்
புனை பொருள் நீங்கின் மற்று ஓர் பொருளையும் பெறலாம் அத்தன்
அனை இறந்திடின் வேறு அத்தன் அனை வருவாரோ நெஞ்சே
** தாங்கொணாத் துன்பினும் தந்தைதாயைக் காக்க

#83
ஒருத்தி பஞ்சகாலத்தில் தாதைக்குத் தன் முலைப்பால் ஊட்டிக் காத்தாள்
எருத்தம் மிசைத் தந்தையினைச் சுமந்து ஓடி ஒருவன் ஒன்னார் இடரைத் தீர்த்தான்
ஒருத்தன் தன் தந்தைக்கே உயிர் கொடுத்தான் எனப் பலவா உரோமை நாட்டின்
சரித்திரம் சொல்வதை அறிவாய் நெஞ்சமே ஈன்றோரைத் தாங்குவாயே

@9 அதி. 8 – மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும்
** சேயர்க்குத் தீயவர் சேர்க்கை விலக்குக

#84
அயல் பொருள் நிறம் கவர் ஆதனங்கள் போல்
செயப் பிறிது அறிகிலாச் சேயர் சுற்றுளோர்
கயப்புறும் தீச்செயல் கற்கையால் அவர்
நயப்புறும் சேர்க்கையை விலக்கல் நன்று அரோ
** நலமெலாம் பாலர்க்கு நண்ணும் இளமையில்

#85
வளை இளமரம்-தனை நிமிர்த்தல் வாய்க்கும் பொன்
இளகிய பொழுது அணி இயற்றல் ஆகுதல்
வளமுறு கேள்வி நூல் மாண்பு நற்குணம்
இளமையில் அன்றி மூப்பு எய்தின் எய்துமோ
** கல்லா மக்கள் காலனை ஒப்பர்

#86
மாலினால் இருவரும் மருவி மாசிலாப்
பாலனைப் பயந்த பின் படிப்பியாது உயர்
தாலம் மேல் செல்வமா வளர்த்தல் தங்கட்கு ஓர்
காலனை வளர்க்கின்ற காட்சி போலுமே
** சேயர்முன் தீமைசெய் பெற்றோர் தீப்பகை

#87
தீது நன்று அறிகிலாச் சேயர் என் செய்வார்
கோது_அற அவரை நன்னெறியில் கூட்டிடாது
ஏதங்கள் அவர் முன் செய்து இழிவைக் கற்பிக்கும்
தாதை தாய் புதல்வர்க்குச் சத்துருக்களே
** படிப்பே பிள்ளைகட்குப் பயன்பெரி தளிக்கும்

#88
சுகமுறு வாழ்வு இல எனினும் தோன்றற்குச்
சகம் மகிழ் கலை அறம்-தனைப் பயிற்றுதல்
அகம் நினைந்தது தரும் அரதனம்-தனை
இகபரம் இரண்டினை ஈதல் ஒக்கும்
** கல்வியில் செல்வம் பிள்ளையுயிர்க் காலன்

#89
கலை பயிற்றாது காதலர்க்கு மா நிதி
நிலை என அளிக்குதல் நெறி_இல் பித்தர்க்குக்
கொலை செய் வாள் ஈவதும் குழவி-தன்னை மா
மலையின் ஓரத்து வைப்பதுவும் மானுமே
** தந்தைதாய் துன்பத்தைத் தகையும் பிள்ளைகள்

#90
பயிர் களையெடுத்திடப் பலன் அளித்தல் போல்
செயிரினைக் கடிந்து நற்செயல் வியந்தரும்
தயையொடும் சேயினை வளர்க்கும் தந்தை தாய்
துயருறா வண்ணம் அத் தோன்றல் காக்குமே
** கல்வியே முறையுயர் வீடு காட்டுமால்

#91
நிதி செலவாய்க் கெடும் நீசர் வவ்வுவர்
மதியினை மயக்கி வெம் மறம் விளைத்திடும்
கொதி அழல் நரகு இடும் குணமும் கல்வியும்
விதி தரும் பதி தரும் வீடும் நல்குமே
** கல்லாமை கடிவாளமில் குதிரைஏறல் ஒக்கும்

#92
புவிநடை கடவுள் மெய்ப் போதம் அன்பு அறம்
செவியின் ஓதாது ஒரு சேயைப் பார் விடல்
அவி என ஊருமாறு அறிகிலான்-தனைக்
கவியம்_இல் புரவி வைத்து ஓட்டும் காட்சியே
** பிள்ளைகட்காம் இன்பதுன்பம் பெற்றோர் நடத்துவதால்

#93
தீயராய் வறியராய்ச் சிலர் வருந்தலும்
தூயராய்ச் சிலர் புவி துதிக்க வாழ்தலும்
தாயினால் தந்தையால் சமைந்த தன்மையால்
சேயரை நன்னெறிச் செலுத்தல் மேன்மையே

@10 அதி. 9 – மாதரைப் படிப்பித்தல்
** பெண்கட்கும் கல்வியே பெருந்துணை யாகும்

#94
கல்வியே அறவழி காட்டும் ஆண்மகன்
செல் வழி அறிந்திடான் வித்தை தேறும் முன்
அல் வளர் கூந்தலார் அரிய நூல் இன்றி
நல்வழி உணர்ந்து அதில் நடக்கற்பாலரோ
** கண்பறித்தலாம் பெண்பால் கல்வி கொடாமை

#95
பெண்மகள் கெடுவள் என்று அஞ்சிப் பெற்றவன்
உண்மை நூல் அவட்கு உணர்த்தாமை தன் மனைக்
கண் மறு புருடரைக் காணும் என்று அதை
எண்மையாய்த் தவன் பறித்து எறிதல் ஒக்குமே
** நூலுணர்ந்தார் அயலானை நோக்கவும் அஞ்சார்

#96
காவலன் பயத்தினால் கற்பைக் காக்கின்ற
பாவையர் அரிய நூல் பயன் தெரிந்திடில்
பாவ புண்ணிய நெறி அறியும் பண்பினால்
சீவன் நீங்கினும் அயலாரைச் சேர்வரோ
** மருந்துபோல் கல்வி பெண் மாண்பு தந்திடும்

#97
பொருந்தும் நல் கலை தெரி பூவை கற்பது
திருந்தியே மிகும் அலால் தேய்ந்து போம் எனல்
வருந்திடாது உயிர் தரும் மருந்தை மானிடர்
அருந்திடில் சாவர் என்று அறைதல் ஒக்குமே
** கல்லாப்பெண் நன்னெறி காணகில் லாளே

#98
முடவரே நடக்கினும் மூங்கை பேசினும்
திடமொடு அந்தகர் வழி தெரிந்து செல்லினும்
மட மயில்_அனையர் நூல் வாசியார் எனில்
அடம்_இல் நன்னெறி தெரிந்து அமையற்பாலரோ
** விளக்கை மறைப்பதாம் பெண்கல்வி விளக்காமை

#99
அரிவையர் நேசமும் ஆர அல்லினில்
விரி சுடர் விளக்கு என விளங்குவார் அவர்க்கு
உரிய நல் நூல் உணர்த்தாமை கூடையால்
எரி ஒளி விளக்கினை மறைத்தல் ஒக்குமே
** படிப்பிலாப் பெண்ணேல் பாதியுடற் கழகிலை

#100
நீதி நூல் மைந்தர்க்கு நிகழ்த்தி மென் மலர்
ஓதியர்க்கு ஓதிடாது ஒழித்தல் மெய்யினில்
பாதியையே அலங்கரித்துப் பாதி மெய்
மீதினில் அணி இன்றி விடுத்தல் ஒக்குமே
** கண்போற் பெண்களும் காணிற் சமமே

#101
இக்கு இனை நகும் மொழி எழில் மின்னாரின் ஆண்
மக்கள் மிக்கோர் எனல் மடமையாம் இரண்டு
அக்கமும் ஒக்குமே அன்றி நல்ல கண்
எக் கண் மற்று எக் கணே இழிவுடைக் கணே
** கல்லாப்பெண் குடும்பழுத்தல் நீந்தறியான் கடலழுத்தல்

#102
கலை உணர்ந்து அறியாத ஓர் கன்னியை
உலை உறும் சமுசாரத்தின் உய்க்குதல்
நிலை உணர்ந்து அறல் நீந்து அறியான்-தனை
அலை கடல்-கண் அமிழ்த்தலை ஒக்குமே
** கல்லாப் பெண் உயிர் இல்லா உடலே

#103
நல்லறிவே அணி நன்னுதலார்க்கு அஃது
இல்லவரோடும் இயைந்து கலத்தல்
புல் உயிர் நீங்கு புழுக் கொள் சவத்தைக்
கல் உருவைப் புணர் காமம் நிகர்த்தே

@11 அதி. 10 – உடன் பிறந்தாரியல்பு
** உடன்பிறந்தார்க்குத் தந்தைதாய் வீடொன்றே

#104
தந்தை தாய் ஒருவர் தம்மைத் தாங்கிய உதரம் ஒன்று
முந்த இன் பால் அருந்தும் முலை ஒன்று வளரும் இல் ஒன்று
இந்தவாறு எல்லாம் ஒன்றாய் இயைந்த சோதரர் அன்புற்றுச்
சிந்தையும் ஒன்றிப் பாலும் தேனும் போல் விளங்கல் நன்றே
** எல்லோரும் உடன்பிறப்பேல் இயைந்தாருக் களவெவன்

#105
ஆ தரை மிசை நரராய யாவரும்
சோதரர் என மிகத் துன்னல் நன்று என
வேதமே ஓதுமால் விளக்கும் சோதரர்
மீது அமை நட்பினை விளம்பல் வேண்டுமோ
** குடும்பம் பேணாரைக் கொள்ளார் உயர்ந்தோர்

#106
பயந்தவர் சோதரர் தமரைப் பண்பொடு
வியந்து பேணாதவன் வேறுளோர்களை
இயைந்து பேணான் என எண்ணி நீக்குவர்
உயர்ந்தவர் அவனொடும் உறவு-தன்னையே
** ஒற்றுமைசேர் உடன்பிறப்பை ஒருவரும் வெல்லார்

#107
ஒற்றை ஒண் சுடரினை ஒழிக்கும் மெல் வளி
கற்றையாப் பல சுடர் கலப்பின் மா வளி
சற்றும் வெல்லாது சூழ் தமர் சகோதரர்
பற்றொடு மருவிடின் படருறார்களே
** அமைஉடன் பிறப்பை வெல்லார் அனைவரும்

#108
ஓர் இழை அறுத்திடல் எளிது ஒன்றாகவே
சேர் இழை பல உறத் திரித்த தாம்பினை
யாருமே சிதைத்திடார் அமை சகோதரர்
சீரொடு பொருந்திடில் திறல்கொள்வார் அரோ

@12 அதி. 11 – கணவ மனைவியரியல்பு
** உடலுயிர்ச் சண்டையாம் காதலர் பிணக்கம்

#109
ஆவி இன்றி உடல் இல்லை உடல் இன்றி ஆவி இலை அதுபோல் பத்தா
தேவி எனும் இருவர் சேர்ந்து ஓர் உருவாம் செழு மலரும் தேனும் போல
மேவி அவர் இருவருமே நள்ளாது முரண்செய்யில் விளங்கு மெய்யும்
சீவனும் ஒன்றோடொன்று போராடி அழிந்தது ஒக்கும் செப்புங்காலே
** காதலர் ஒற்றுமை கணக்கிலாப் பெரும்பொருள்

#110
மணியும் ஒளியும் போல் ஆண்மகனும் மனைவியும் பொருந்தி வாழுவாரேல்
பிணியுறும் ஆதுலர் எனினும் பெரும் செல்வர் நகுலமும் வெம் பெரும் பாம்பும் போல்
தணியாத பகையுற்று நள்ளாரேல் உயிர் அற்ற சவத்தின் மீது
பணிகள் மிகப் பூட்டி அலங்கரித்தல் ஒக்கும் அவர் செல்வப் பயன்தான் அம்மா
** பெண்களுந் தொழுதெய்வம் பெருங்கற் புடையாள்

#111
தந்தை தாய் சோதரர் உற்றாரை எலாம் கைவிடுத்துத் தன்னைச் சார்ந்த
பைம்_தொடியை அனையவர் போல் ஆதரிக்கக் கணவனுக்கே பரமாம் ஆதி
அந்தமிலான் முதல் தெய்வம் பதி இரண்டாம் தெய்வம் என அன்பினோடு
சிந்தை-தனில் நினைந்து உருகும் சே_இழை பூவையர்க்கு எல்லாம் தெய்வம் ஆமால்
** மணத்தின்பின் குணங்குற்றம் மனங்கொளாது வாழ்க

#112
தவன் ஆட்டி இருவரில் நற்குணமுளார் இலர் என்னும் தன்மை நோக்கல்
நவமணம் செய் முன் அன்றிப் பின் உன்னில் பயன் உளதோ நாவாய்-தன்னை
உவர் ஆழி நடுவில் நன்றன்று எனக் கைவிடத் தகுமோ உடல் பல் நோய் சேர்ந்து
அவயவங்கள் குறைந்தாலும் அதை ஓம்பாது எறிவாரோ அவனி மீதே
** ஒருவரையொருவர் இன்சொலால் நல்வழி உய்க்க

#113
கொழுநன் ஆயினும் மனை ஆயினும் இயல்பில்லார் என்னில் கூறு இன்சொல்லால்
செழுமை நெறியினில் திருப்ப வேண்டும் இதத்தால் வசமாம் சின விலங்கும்
அழல்வதினால் துன்பம் மிகும் அல்லாது பயன் உளதோ அரும் நோயுற்ற
விழி மிசை நல் மருந்து இடாது அழல் பிழம்பை விடில் அ நோய் விலகும்-கொல்லோ
** எல்லாரினும் சிறந்த கணவனோ டிகலல்பழி

#114
தந்தை தாய் சோதரரை நீங்கி மின்னார் ஒருவன் கை-தன்னைப் பற்றிப்
பந்தமுறலால் அவர் எல்லாரினும் மிக்கு உரிமையுளான் பத்தா அன்றோ
இந்த நிலை உணராமல் அவனை இகல்செயும் ஏழை இகபரத்தை
நிந்தையுற அழித்தலால் தன்னைத்தான் கொலைசெய்தல் நிகர்க்கும் மாதோ
** செம்மையிலாக் காதலரைச் செம்பொருள் காயும்

#115
பொய்யான நாடகத்தில் பதி மனை போல் வேடமுற்றோர் பூண்ட கன்மம்
செய்யாரேல் நகைக்கிடமாம் உலகு அறிய மணவாளன் தேவி என்ன
மெய்யா உற்றோர் தம்முள் நட்பிலரேல் பிரபஞ்ச விநோதக் கூத்தைக்
கையால் கொண்டு ஆட்டுவிக்கும் பரன் அவரை அழல் புகுத்திக் காய்வான் அம்மா
** மனங்கலவாக் காதலரை வலவன் வருத்தும்

#116
பரவு சமுசாரம் எனும் பண்டியில் வாழ்வு எனும் பொருளைப் பரப்பிப் பூண்ட
புரவிகள் போல் காந்தனும் காந்தையும் அமைந்தார் மனம் ஒத்து ஓர் போக்கை நாடி
விரைவொடும் ஏகார் என்னின் ஊர்தியொடு அப் பொருள் விளியும் விண் புரக்கும்
பரமன் எனும் சாரதி அப் பரிகள் மேல் சினமுற்றுப் படர் செய்வானே
** சிற்றுயிரைப் பார்த்தேனும் ஒற்றுமையன் புறல் சிறப்பு

#117
உறவினர் எல்லாம் கூடி மணவிழாச் செய்து உரியோன் உரிமை என்னப்
பெறலரும் பேர் பெற்றும் ஒருவரையொருவர் பேணாரேல் பெருமை என்னோ
அறம் அறிவு இலா எனினும் விடா நகைப்புற்று ஆண் பெண்ணும் அமைந்து வாழும்
பறவை மிருகங்களைப் பார்த்தாயினும் நல் நேயம் அன்னோர் பயிலல் நன்றே
** கற்பிலாள் தாலி கழுத்துறு சுருக்கே

#118
தாங்கு பொருள் சுட்டு அழித்துத் தானும் அழியும் கனல் போல் தலைவன் நெஞ்சைத்
தீங்குகளால் சுடும் மனைவி தன் வாழ்வைக் கெடுத்தலால் செழும் கண்டத்தில்
தூங்கு திருநாணினால் என்ன பயன் அதைக் கழுத்தில் சுருக்கிக்கொண்டு
தேங்கும் உயிர்ப் பொறை நீக்கில் பூமகள்-தன் பெரும் பொறையும் தீரும் அன்றே
** உழைப்பால் தளர்மனையை ஓம்பல் பெருங்கடன்

#119
அனை தந்தை இல்லத்தும் சுகம் இல்லை நமக்கு உரியள் ஆன பின்னர்
மனை தாங்கல் சூதகம் சூல் சேய் பெறுதல் வளர்த்தலொடு மாமன் மாமி
இனையவரை உபசரித்தல் விருந்தோம்பல் நம் பணிகள் இயற்றல் என்னும்
வினைகளினால் அயர் மனையைப் பரிவுடன் ஆதரவுசெய்ய வேண்டும் நெஞ்சே
** பின்தூங்கி முன்னுணரும் பெண்ணே பெரும்பொருள்

#120
தம் துணைவர் வடிவு இலா முடவர் எனினும் திருவின் தனையன் ஒப்பார்
அந்தமுளார் அயல் குமரர் எனினும் விடம் அனையராம் அரு மணாளர்
வந்து அமுது உண்டு உறங்கிய பின் தாம் உண்டு துயின்று முனம் வல் எழுந்து
பந்தமுறும் கருமம் எலாம் முடிப்பர் கற்பின் அணி பூண்ட படைக் கண்ணாரே
** எப்பணிசெய் தாலுமில்லாள் எழிற்கணவன் நினைப்பொழியாள்

#121
வினைப்பகை தீர் பெரியர் இல்வாழ்வினில் கலந்துநின்றாலும் வேதநாதன்-
தனைப் பரவி நினைத்தல் என்றும் ஒழியார் போல் கற்பின் மிக்க தையலார் தம்
மனைப் பணிகள் செய்தாலும் துயின்றாலும் கனவினும் தம் மணாளர்-மாட்டு
நினைப்பு ஒழியார் கணவருடன் அவர் மனம் ஒன்றாய்க் கலந்துநிற்கும் மாதோ
** இணைபிரியா திருக்கநல்கும் இடம்பொருள் பேரின்பே

#122
ஏந்தலாம் தந்தையைத் தாய் சகியர் கோயிலை விட்டு ஓர் எளியர் சிற்றில்
சார்ந்தனன் என்று இகழும் இன்னே சிற்றில்லால் அவர் அருகே தங்கப்பெற்றேன்
சேர்ந்த மிடியால் அவர்-தம் பணி யாவும் என் கையால் செய்யப்பெற்றேன்
பாம் தவம் ஈது அன்றி எந்தை அன்னையை வேறாக்கும் நிதி பாழ்த்தது அன்றோ
** துணைவனுடன் வாழ்வதே சொல்லொணாப் பேரின்பம்

#123
முதல்வி இவள் துணைவனே தெய்வம் என்றாள் அவன் சிற்றில் மோக்கம் என்றாள்
அதில் அவனோடு உறைதல் சாலோக சாமீபம் என்றாள் அவன் கை தீண்டி
மதமொடுமே அடித்தல் சாரூப சாயுச்சியம் என்றாள் மயல் பேய் கொண்டாள்
பதவி எலாம் ஈன்றோர்-பால் இருக்க நண்பனொடு மெலிந்தாள் பசி நோயுற்றே
** காரிகைசெய் அழகெலாம் கணவன் கண்டுவக்க

#124
உண்ணல் பூச்சூடல் நெஞ்சு உவத்தல் ஒப்பனை
பண்ணல் எல்லாம் அவர் பார்க்கவே அன்றோ
அண்ணல்-தன் பிரிவினை அறிந்தும் தோழி நீ
மண்ண வந்தனை இது மடமை ஆகுமே
** மனைமுகத் தாமரை மலரும் கணவனால்

#125
கதிரவன் அனைய தம் கணவர் ஏர் முகம்
எதிர் உற மலரும் மற்று ஏதிலார் முக
மதியம் நோக்கிட இதழ் வாடிக் கூம்புமால்
சதியர் வாள் முகம் எனும் சலசப்பூ அரோ
** அரசும் அரசுறுப்பும் ஆம்நற் கணவனே

#126
மிடியுளார் கேள்வர் என்று உரைத்த மின்_அனாய்
கடி நகர் சிறு குடில் காந்தர் வேந்தராம்
அடியளே குடி அவர் அன்பு எண் செல்வமாம்
குடி இறை என் நிறை குறை உண்டோ சொலாய்
** கணவனுறை நெஞ்சில்வேறு கருத இடம் ஏது

#127
தோழி கேள் உனக்கும் ஓர் துணைவன் உண்டு அவன்
வாழ் இதயத்தினான் மற்ற மைந்தரைப்
பாழ் இனி நினைக்கின்றாய் பாவி நெஞ்சு உனக்கு
ஆழி சூழ் உலகினில் அனந்தமே சொலாய்
** பொருள்தேடப் போங்கணவனுடன் போம் நெஞ்சுயிர்

#128
இங்கு இரு பொருள்-வயின் ஏகுவேன் என்றீர்
தங்குவது உடல் ஒன்றே தளர் நெஞ்சோடு உயிர்
அங்கு உறும் நாசம் மேய பல மெய் இதன்
பங்கதாம் அழிவு நும் பங்கது ஆகுமே
** கணவனை அகலாக் கற்பினள் எதற்கும் கலங்காள்

#129
விரி உலகு அழியினும் மிறைகள் சூழினும்
சுரி குழல் கற்பினார் துணைவன் நேயமும்
பிரிவு இலா வாழ்க்கையும் பெறுவரேல் அவர்
பரிவு எலாம் இரவி முன் பனியின் நீங்குமே
** தலைவன் பின் தூதாய்த் தலைவியுயிர் சாரும்

#130
தினம் வினை செய அகல் செல்வ முன்னம் தூது
அனம் வரும் அதினொடும் அடைகிலாய் எனின்
மனம் வரும் உயிர் வரும் வராத மெய் விலங்கு
இனம் உறு வனம் உறும் இனம் வருந்தவே
** மணமகன் உடலுயிர் மனைவியின் உடைமை

#131
இந்த உடல் உளம் ஐம்பொறி இன்னுயிர் யாவும் மணஞ்செயும்
அந்த நல் நாளினில் இல்லவட்கு அன்பொடு அளித்தனன் யான் பொதுப்
பைம்_தொடியே உனைச் சேர்ந்திடப் பாரில் எனக்கு உடல் வேறு இலை
சிந்தை புலன்களும் வேறு இலை சீவனும் வேறு இலை செல்வையே
** நெடுவழித் துன்பெலாம் நீங்கலவர் புன்னகையால்

#132
அந்த நாள் நடந்திலாத யான் அகன்ற நெடு வழி
எந்தவாறு சென்றது என்ன எனை வினவு சிலதி கேள்
பந்த ஊர்தி ஏறியே படர்ந்தனன் படர்ந்த நாள்
வந்த பீழை யாவும் அன்பர் மந்தகாசம் தீர்த்ததே
** அருவொப்புக் கழுதவள் உருவப்பேர்க் குயிர்விடும்

#133
திரு_அனாய் எனப் புகழ்ந்து தேவியை விளிக்க மா
மரு மலர் துறந்து நெஞ்சின் வாழ்ந்தது என் என்று அழுதனள்
அருவ மாதை ஒப்பு உரைக்க அழுது வாடும் நங்கை யாம்
உருவ மாதர் பெயர் உரைக்கின் உயிர் துறப்பள் நெஞ்சமே
** கணவனல்லா ஆண்களைக் காணக்கண் ணிலாள்மனை

#134
பூண் அலங்கல் மார்பினாரை அன்றி வேறு புருடனைக்
காண நோக்கிலேன் நினைந்து கழற நெஞ்சு வாய் இலேன்
பாண வேறு பொறி இலேனை நடனம் பார்க்க வா எனா
நாணம் இன்றியே உரைத்த நண்பர் வம்பரே-கொலாம்
** சீரிய கற்பால் சித்திரமும் பாரார்

#135
ஓவியர் நீள் சுவர் எழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்
தேவியை யாம் அழைத்திட ஆண் சித்திரமேல் நான் பாரேன்
பாவையர்-தம் உரு எனின் நீர் பார்க்க மனம் பொறேன் என்றாள்
காவி விழி மங்கை இவள் கற்பு வெற்பின் வற்பு உளதால்
** அன்பர்பொருட் ககலுதலால் அக்காளென் பதுதகும்

#136
திரு என்ன எனை நினையார் சீர்கேடி என நினைந்து
பொருள்-வயின் ஏகிடச் சீவன் போல்வாரே உன்னுதலால்
ஒரு தரமோ பல தரம் நீ ஓ அக்காள் அக்காள் என்று
இருவினையேன்-தனை அழைத்தல் இழுக்கு அன்று பைங்கிளியே
** கணவனே மனைவியின் காப்புயிர் ஆகும்

#137
நள்ளிரவில் தமயந்தி நளன்-தனையே பிரிந்த பின்னும்
தெள் உயிர் நீங்கிலள் என்னச் சேடி நீ பொய் உரைத்தாய்
உள் உயிரே பத்தாவா உடைய கற்பினார்க்கு அவன்தான்
தள்ளி அகன்றால் வேறு தனி உயிர் ஏது உரையாயே
** கற்புடையார் மன்னன்கை வாளுக்கும் அஞ்சார்

#138
நரபதி நீ ஆனாலும் நண்பரின் பாதத் துகட்கு உன்
சிர மகுடம் நிகர் ஆமோ சேர்கிலையேல் கொல்வன் எனக்
கர வாளை உருவி நின்றாய் கற்பினுக்கு ஓர் குறைவு இன்றித்
தரமா நீ எனைக் கொல்லின் தந்தை தாய் குரு நீயே
** இன்ப துன்பம் இருவருக்கும் ஒன்றே

#139
அன்பர் உண்ணில் என் பசி போம் அவர் களிக்க யான் களிப்பேன்
துன்பம் அவர் உறில் யானும் துன்புறுவேன் ஆதலினால்
என் படல் வேறு எனினும் எமக்கு இன்னுயிர் ஒன்று என அறிந்தேன்
பின்பு அவர்தாம் என்னை விட்டுப் பிரிவது எவ்வாறு உரை சகியே
** நாற்குணமே நல்லணியாம் நாதன் மகிழ்வே நகையாம்

#140
பொன் நகை இலாய் எனச் சொல் பொன்_தொடியே பரத்தையர்க்கே
அ நகைகள் உரியவையாம் அச்சம் நாண் மடம் பயிர்ப்பும்
இன்னகையாம் கற்பினர்க்கு மேதினியுள் நீ சொலும் அப்
புன் நகையும் நண்பரின் ஓர் புன்னகைக்கு நிகர் ஆமோ
** கணவரை நீங்கில் கற்புடையார் வாழார்

#141
செழும் முளரி புனல் நீங்கில் செழிக்குமோ படர் கொடிகள்
கொழு கொம்பை பிரியின் வளங்கொண்டு உய்யுமோ கணவர்
அழுது அயர வைதாலும் அரந்தை பல இயற்றிடினும்
தொழுதகு கற்புடையார் தன் துணைவரை விட்டு அகல்வாரோ
** காதலர் நெஞ்சுயிர் மாறிக் கலந்தன

#142
பேதைமதி உற்றனை என்று எனை இகழும் பெருந்தகை என்
காதலியைப் பிரிந்தது இந்தக் காயம் ஒன்றே உயிரும் நெஞ்சும்
மாது அவள்-பால் உறையும் அன்னாள் மனம் உயிர் என்-பால் உறையும்
ஆதலின் நான் பேதைமதி ஆயினன் என்பது நிசமால்
** தலைவி தலையசைப்பால் தலைவற்காம் பெருமிதம்

#143
உரனொடு மா மதுகையினை உலகம் எலாம் துதித்தாலும்
பெருமிதம்கொள்ளேம் அறியாப் பேதை எனும் நம் துணைவி
ஒரு சிரக் கம்பிதம் செய்யின் உடல் எலாம் பரவசமாம்
பருவமதில் சிறியாள் இவ் வசியம் எவண் படித்தனளால்
** படம்வேண்டாள் என்றென்றும் பக்கமுறைவே வேண்டும்

#144
என் உருவைப் படத்து எழுதி இது நானே பேதம் இலை
நல்_நுதலே இதைக் கோடி நல்கு எனக்கு விடை என்ன
அன்னது நீரே ஆயின் பொருளீட்ட அது செல்க
மன்னி இவண் உறை-மின் என்றாள் மறுசெயல் யாது அறியேமால்
** அன்புடையர் பொருள்சுற்றம் அவரேபோல் காக்க

#145
வேதனன்பர் அவற்கு உரிய விமானம் முதல் யாவையும் மிக்கு
ஆதரமோடு ஓம்புவரால் ஆர்வலன்-பால் அன்புடைய
மாதர் அவன் அனை தந்தை தமர்-மாட்டும் அன்புறுவார்
காதலியின் தமரிடத்துக் கணவனும் அத் தன்மையனால்
** பயிலுமிடம் நோக்கிப் பரிவாள் தலைவி

#146
போனவர்தாம் இருக்குமிடம் புசிக்குமிடம் துயிலுமிடம்
மான்_அனையாள் நோக்குபு நோக்குபு வருந்தும் வல் ஏகு என்று
ஈனம்_இல் நாளைத் தொழும் மன் ஏகும் வழி பார்த்து அழுமால்
மானவர் சென்று ஒருதினமே மறுதினம் போம் வகை எவனால்
** உடலுயிர்க்காம் இருதலைவர்* எவர்க்குமுளர் உண்மையே

#147
கேள்வர் இலாவிடத்து ஒர் பிழைசெயின் அறியார் எனக் கிளக்கும்
வாள்_விழி என் அகத்து உறையும் மகிழ்நர் இருவரில் ஒருவர்
மூள்வினையால் பிரியினும் மற்றொருவர் சகம் முழுதும் நிறை
கோள்வினையார் அவர் அறியாச் செயல் உளதோ கூறுவையே
** உயிர்த்தலைவர் படைத்தளிக்கும் ஒப்பில் முழுமுதல்வர்

#148
இரு துணைவர் தனக்கு உளர் என்று இறைவி சொல ஐயமுற்று இங்கு
ஒரு துணை யான் அறிகுவன் மற்றொரு துணை யார் என வினவப்
பெருமகனை உன்னை என்னைப் பேரண்டங்களை அமைத்தான்
தருமநிலை மூர்த்தி என்றாள் சதி இவட்கு ஓர் குறை உளதோ
** மனையவள் நகைப்பஞ்சிவாள் வெல்லலே வலிமை

#149
வினையில் வென்றி இலாது இங்கு மீண்டதற்கு
இனன் முனிந்திடும் என்று அஞ்சிலேம் வசை-
தனையும் எண்ணிலம் தாரம் திறல் இலேம்
என நகின் செய்வது என் சொல் இதயமே
** எப்பெருந் துன்பும் ஏகும் மனைநோக்கால்

#150
இரிஞரால் உறும் எவ்வமும் தேகம் ஆர்
பெரிய புண்களும் பேசரும் துன்பமும்
உரிமை வாள்_முகம் நோக்க ஒழிதலால்
பிரியை நோக்கம் பெரு மருந்தாம் அரோ
** இல்லவள் முகத்துக்கு ஈடின்று திங்களும்

#151
எழிலிலாள் இல்லவள் எனும் வேசி தேன்_
மொழி முகத்தை மதியை முன் நான்முகன்
சுழி தராசினில் தூக்கத் தட்டோடு உம்பர்
எழும் நிசாபதி இன்னும் இங்கு எய்திலான்
** தலைவியோடு உறையின் தருங்கேடு இன்று

#152
ஓவி யாரும் ஒழிக உறுவல்கள்
மேவி நாளும் விளைக நம் செல்வியை
ஆவியை அமுதத்தை அனத்தினைத்
தேவியைப் பிரியோம் சிதைவு என் நெஞ்சே
** தலைவற்குக் கால்கண்ணாம் தலைவிமிகு பேறுடையாள்

#153
ஏலும் கால் கண்ணிலார் கொண்கர் என்னும் வேல்
போலும் கண்ணி புனிதரைத் தாங்கிடக்
காலும் நான் இரு கண்களும் நான் எனில்
மேலும் எற்கு இனிப் பாக்கியம் வேண்டுமோ
** அகமென்மை மாதரை அருளொடும் காக்க

#154
மென்மையாகும் விழி முதல் யாவையும்
நன்மையா இடர் இன்றி நன்கு ஓம்பல் போல்
வன்மை_இல் மட மாதர்கள்-பால் கொடும்
தன்மை இன்றித் தயையுற வேண்டுமால்
** காதலர்க்கெம் மெலிவினைக் கதிர்க்காற்றே யுரைமின்

#155
ஈண்டு இவண் வருவல் எனும் இறை வருகிலர் அவரைத்
தீண்டிய கிரணமதால் தீண்டுதி எனை வெயிலே
தாண்டிய வளி அவர் மெய் தடவி என் உடல் படர்வாய்
மீண்டிலரிடம் எனது மெலிவினை உரை முகிலே
** இல்வாழ்வார் இருவரும் இயற்கையில் ஒருவரே

#156
ஒரு தரு மற்றொரு தருவின் உதவி இன்றிக் காய்க்கும்
உயர் ஆண் பெண் சேர்க்கை இன்றி ஒரு மகவு உண்டாமோ
இருமை இன்றி இருவருமே நம் மனை நம் பொருள் நம்
இகுளை நம் சேய் எனப் பொதுவின் இயம்பு உரிமையாலும்
உருவம் ஒன்றால் ஆண் பெண்ணை அமைத்தனன் முன் பரன் என்று
உயர்ந்தோர் சொல்வது நிசமாம் உரியோன் இல் என்னும்
இருவர்கள் தம் நயம் துயரம் ஏகம் எனக் கருதி
இட்டமொடு பெட்டு அமரின் கட்டம் அவர்க்கு உளதோ

@13 அதி. 12 – பரத்தமை (கற்பு நிறை அழிவு)
** முறைகடந்து புணர்வோரைத் தண்டிக்கும் முழுமுதல்

#157
பண்டு ஓர் ஆண் பெண் அமைத்து அவ் இருவருக்கும் மணம் இயற்றிப் பரன் இரக்கம்
கொண்டு அளித்த முறை கடந்து கள்ளவழிப் புணர்ச்சிசெயும் கொடியோர்-தம்மை
மண்டலமே வாய் பிளந்து விழுங்காயோ அவர் தலை மேல் வான் உலாவும்
கொண்டலே பேரிடியை வீழ்த்தாயோ இது செய்யில் குற்றம் உண்டோ
** கண்மூடும் பூனையொக்கும் கரவயலா னைக்கூடல்

#158
ஒருவரும் அறிகிலார் என ஓர் ஒள்_நுதல்
கரவு அயல் குமரரைக் கலத்தல் பூசை தன்
இரு விழி மூடி மற்று எவர்கள் பார்வையும்
தெரிகிலாது எனப் பயன் திருடல் ஒக்குமே
** கள்வர் சொல் ஒக்கும் கற்பிலார் சொல்லும்

#159
அன்னியர் எம் இயைபு அன்றிச் சேர்ந்தனர்
என்ன மின்_இடையவர் இயம்பல் சோரர்கள்
பொன்னை யாம் வவ்விலேம் பொருள் வந்து எங்களை
முன்னை வவ்வியது என மொழிதல் ஒக்குமே
** அயலான் அன்புரையால் அழியுங் கற்பு

#160
மன மகிழ்வாய் அயல் மைந்தர்-தம்மொடும்
தினம் உரையாடிடும் தெரிவை கற்பது
புனல் உறும் உப்பினைப் போலும் மென் மெழுகு
அனல் உறல் என்னவும் அழிவது உண்மையே
** ஆடவன் செயலெலாம் ஆற்றல் பெண் பழிப்பாம்

#161
வலதுகை துணைவனாம் மற்றொர் கை மனை
தலைவன் செய் தொழில் எலாம் தாரம் ஆற்றுதல்
தொலைவு இலா வலக்கையின் தொழில் இடக்கரம்
நிலம் மிசைச் செய்து என நிந்தை மேவுமே
** பரத்தையர் பெருநஞ்சு பாம்பினுங் கொடிதே

#162
உண்டவர்-தமைக் கொலும் ஓத வெவ் விடம்
அண்டினோர்-தமைக் கொலும் ஆளி கையினால்
தண்டினோர்-தமைக் கொலும் சற்பம் தையலார்
கண்டவர் நினைப்பவர்-தமைக் கொல் காலமே
** சிற்றின்பால் செய்பாவம் வீட்டில் தீயிடலாம்

#163
நிலை_இல் சிற்றின்பத்தின் நேயத்தால் தினம்
அலைவுசெய் பவம்-தனை ஆற்றல் கொள்ளியால்
தலையினைச் சொறிதலும் தகிக்கும் தீயினை
எலியினுக்கு அஞ்சி இல் இடலும் ஏய்க்குமே
** காமத்தீக்குச் சுள்ளி பரத்தையைக் காண்டல்

#164
மின் எரி மூட்டிடு விறகு போல் சுவைக்
கன்னலைப் பழித்த சொல்லாரைக் காணலும்
துன்னலும் உன்னலும் சுடு வெம் காமத்தீ-
தன்னையே மூட்டிடும் சமிதை போலுமே
** பிறர்மனை சேர்வோர் பெருங்கே டுறுவர்

#165
உணர்வு அறும் செல்வமும் உயர்வுமே அறும்
குணம் அறும் குலம் அறும் கொடிய நோய் எலாம்
அணவுறும் நரகு உறும் ஆயுள் தேயுமால்
கணம் அறு மாதர் தோள் கலக்கும் தூர்த்தர்க்கே
** கற்பிலார்க் காத்தல் களவின்பின் காத்தலாம்

#166
உவந்து தன் உளத்து ஓங்கிய கற்பு இலாச்
சிவந்த வாயுடைச் சே_இழையைப் பதி
இவர்ந்து சேமம்செய்து எய்க்குதல் பட்டிகள்
கவர்ந்த பின் பொருள் காவலை ஒக்குமே
** கற்பிலார்க் கெதிராமை கடன்சேர் வெற்றி

#167
ஓயப் பாரில் உறும் தெவ்வர்-தம்மொடும்
ஏயப் போரில் எதிர்ந்திட வென்றியாம்
மாயப் போர் செய் மடந்தையர்க்குப் புற
மா அப்பால் செல வென்றி அமையுமே
** பிறனைச் சேர்வாள் பெரும்பழி சேர்வாள்

#168
கொழுநன் அறியில் உயிர்க் கொலையாம் கோவாக்கினையாம் பெரும் பழியாம்
அழல் போல் நெஞ்சைச் சுடும் பயத்தோடு அயல் ஆடவரை ஒரு பேதை
தழுவி இன்பமுறல் மதமா தான் உண்டு அகல் வாயிடை ஒழுகும்
கழையின் சாற்றை விழைந்து அதன்-பால் கடுகி நக்கல் ஏய்க்குமால்
** பிறனைச்சேர் மாது பேரிருள் அடைவள்

#169
மற்றொருவனைச் சேர் மாது இறந்தாலும் வசை நிற்கும் உலகம் உள்ளளவும்
சுற்றமும் வாழ்வும் துணையுமே நீங்கும் சோரநாயகனுமே மதியான்
பெற்ற சந்ததியும் இழிவுறும் மாண்ட பின் அவியா எரி நரகாம்
சற்றுநேரம் கொள் சுகத்தினால் விளையும் தன்மை ஈது அரிவையீர் உணர்வீர்
** கணவன் நிறையழியின் மனைவியுங் கற்பழிபவள்

#170
ஓர் பிழை குருவே செய்யின் ஒன்பது பிழைகள் செய்ய
நேர் சிறு சீடர் என்ன நிதம் பதி பல மின்னார் தோள்
சேர்வது காணும் இல்லாள் தினம் பல புருடர்ச் சேர்தல்
சீர் என உன்னி அன்னான் செலவு பார்த்திருப்பள் மாதோ
** அயலான் மனையன்னை அரும்பிறப் பாவாள்

#171
தன்னைப் போல் பிறரை எண்ணல் தகுதியாம் தான் மணந்த
மின்னைப் போல் இடையினாளை விழியினால் நோக்குவோரைத்
தின்னல் போல் முனிவு கொள்வோர் அயலவன் தேவி-தன்னை
அன்னை சோதரி போல் எண்ணாது அணைந்திட விரும்பல் என்னே
** பரத்தைமைச் செயல்கள் பலவாம் என்ப

#172
விதவையைக் கன்னி-தன்னை வேசையைப் பிறன் இல்லாளை
இதமொடு சேர்தல் சேர இச்சித்தல் ஆண் புணர்ச்சி
மதனநூலாதி கேட்டல் வாசித்தல் தகாத செய்கை
விதவிதம் தானே செய்தல் விபசார வினைகளாமே
** பரத்தையர் அழகுண்டார் பதங்கம்போல் மாள்வர்

#173
விட்ட மின்னோடு ஆங்கு எய்தும் வெடி எனத் தீமை செய்யும்
கட்டழகினை அவாவிக் காம சாகரத்தின் ஆழ்வோர்
கிட்ட அரும் சுடரை மேவிக் கேடுறும் பதங்கம் போலும்
தொட்ட கொப்பத்து வீழ் மா என்னவும் துயர் சார்வாரால்

@14 அதி. 13 – உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல்
** தொழிலாள ரின்றேல் தொல் உலகு அழிவுறும்

#174
வாழ் அகமும் புனை தூசு அணியும் பல வாகனம் மஞ்சமொடும்
சூழ் பொருளும் சுவை சேர் அமுதும் கமழ் சோலையும் மா சுகமும்
கீழவரால் அவர்தாம் இலரேல் மிகு கேவலமாய் உலகம்
பாழதுவாம் அதனால் அருள்தான் அவர்-பால் உறுவாய் மனனே
** ஆண்டவன் தருபொருள் அனைத்துயிர்க்கும் பொதுவே

#175
நாதனே உயர்வாம் தந்தை நரர் எலாம் அன்னான் சேயர்
பூதலப் பொருள்கள் யார்க்கும் பொதுமை அல்லாது சொந்தச்
சாதனப் பொருள் போல் செப்புச் சாசனம் பெற்றோர் இல்லை
ஆதலில் தாழ்ந்தோர்-தம்மை அரும் செல்வர் தாங்கல் மாண்பே
** முறைநலம் கல்வியுளோர் மூத்தோ ராவர்

#176
நயம் அறம் கல்வி இன்றி நனி நிதியால் குலத்தால்
வயதினால் பெரியர் என்னல் மைந்தர் தந்தையின் தோள் ஏறி
இயலித் தாம் பெரியோர் என்ன இயம்பலும் காலை மாலை
உயர் நிழல் உள்ளோர் தம்மை உயர்ந்தவர் எனலும் ஒப்பே
** செல்வமும் வறுமையும் மறி மாறிச் செல்லும்

#177
ஏல் இராட்டின ஊசல்-கண் ஏறியே சுற்றுங்காலை
மேலவர் கீழும் கீழோர் மேலுமாய்ச் சுழலல் போல
ஞாலம் மீது இன்று உயர்ந்தோர் நாளையே வறியர் ஆவர்
சீல நெஞ்சினர் கீழோரைச் சினந்து இகழார்கள் மாதோ
** எல்லோரும் உடன்பிறப்பே இயலு கருமுறையால்

#178
மக்கள் யாவரும் ஓர் அன்னை வயிற்றிடை உதித்ததால் இச்
சக்கரம்-தனில் எல்லாரும் சகோதரர் ஆவர் சீரின்
மிக்கவர் தாழ்ந்தோர் என்னல் வெறும் பொய்யாம் மேன்மை என்பது
ஒக்கவே பிறப்பு இறப்பில் உறும்-கொலோ உரையாய் நெஞ்சே
** ஏவலரை இகழ்வோர் எய்தார் இறையடி

#179
சிலதரும் நரரே அங்கம் சீவன் நெஞ்சு அவர்க்கும் உண்டாம்
நலம் நவை இன்ப துன்பம் நானிலத்து உள அவர்க்கும்
நிலம் மிசை அவரைச் செய்தோன் நித்தனே அவரை ஏதும்
புலன் இலாப் பொருள் போல் எள்ளும் புல்லர் வீடு இல்லர் மாதோ
** எல்லாரும் உழைத்து வாழ்வதே இயல்பு

#180
கொற்றவர் நரர்க்கு உழைத்துக் கூலியாம் இறையைக் கொள்வர்
மற்றவர் எவரும் தம் மெய் வருந்தவே உழைப்பர் செல்வம்
பெற்றவர்களும் உழைப்பர் பின்னவர்க்கு உழைப்பர் சேடர்
உற்ற இத் தன்மை உன்னின் உழையர் ஆர் தலைவர் ஆரே
** எல்லோர்க்கும் ஈயவே இறைசெல்வம் அருளினன்

#181
உடல் உறுப்புகள் மேல் கீழ் என்று உன்னிடாது ஓம்பல் போலும்
தட மலை கொண்ட நீரைத் தாழ் தரைக்கு அளித்தல் போலும்
தொடர்புறு மேலோர் தம் கைத் தோய் நிதி யாவும் தாழ்ந்தோர்க்கு
இட எனக் கடவுள் ஈந்தது என நினைந்திடுவர் மாதோ
** உழையரை வருத்துவோர் உயர்ந்தோர் ஆகார்

#182
என்றும் மெய் வருந்த வேலை இயற்றுவோர்க்கு உயர்ந்தோர் அற்பப்
பொன்-தனை ஈவர் செட்டுப்புரிகின்ற வணிகர் என்ன
ஒன்று கொண்டு ஒன்றை ஈவோர் உழையரில் தாம் உயர்ந்தோர்
என்று கொள் எண்ணம் திண்ணம் என்னல் எவ்வண்ணம் அம்மா
** உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று உரைப்பது மயக்கே

#183
ஒளி முடியொடும் பிறந்தே உலகம் ஆண்டவரும் இல்லை
எளியராய் ஓடு ஒன்று ஏந்தி இங்கு உதித்தவரும் இல்லை
குளிர் கடல் உடுத்த பாரில் குறைந்தவர் மேலோர் என்னல்
வெளி மயக்கு அன்றிச் சற்றும் மெய் அல உணர்வாய் நெஞ்சே
** அறவோரைத் தக்கோர் அனைவருந் தாங்குவர்

#184
அமலனே எவர்க்கும் கத்தன் அவற்கு அரசரும் இல்லாரும்
சமம் அலால் பேதம் இல்லை தரித்திரர் அறத்தோர் ஆயின்
அமரர் ஆகுவர் அன்னார் தாள் பொடியையும் அரசர் ஒவ்வார்
தமர் எனத் தாழ்ந்தோர்-தம்மைத் தகையினர் தாங்குவாரால்
** பகலவன்போற் செல்வர் பலர்க்கும் பயனாவர்

#185
சுடரவன் விளங்கில் பூமி சோதியாம் விளங்கிலானேல்
புடவியும் இருளாம் அன்னவாறு போல் திருவோர் செல்லும்
நடவையின் தாழ்ந்தோர் மேவி நடத்தலால் வரை மேல் ஏற்றும்
அடர் சுடர் விளக்கின் செல்வர் அறத்தராய்ச் சிறத்தல் நன்றே
** வறியவர்போல் துன்பெலாம் வருமே செல்வர்க்கும்

#186
தாழ்ந்தவர் எனச் செல்வர்க்கும் சாப் பிணி மடமை அச்சம்
சூழ்ந்த பேரிடர்கள் பாவம் துஞ்சி மண்ணாதல் அள்ளல்
வீழ்ந்து அவலித்தல் ஆதி மிகை எலாம் எய்தும் இவ்வாறு
ஆழ்ந்த அவ் இருதிறத்தார்க்கு ஆகும் வேற்றுமை யாது அம்மா
** சிறந்தோர் தாழ்ந்தோரைப் பேணுதல் செல்வம்

#187
பதி முதல் அதிகாரத்தோர் பண்ணவர் உழவர் மேலோர்
மதியுறு பரதர் நூலோர் மருத்துவர் முதலோர் தத்தம்
விதி வழி ஒழுகித் தம்மை மேவுறு தாழ்ந்தோர்-தம்மை
அதி தயையொடு நன்கு ஓம்பி ஆண்டிடக் கடனாம் மாதோ

@15 அதி.14 – தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல்
** படைப்பெலாம் பார்க்கில் பெரிதும் சிறிதுமாம்

#188
விரி சுடர்க் கதிரோன் மதி தாரகை விலங்கு பக்கி மரம் மலை யாவினும்
பெரிது சின்னது என்று ஆகிய தன்மை போல் பிழை இலான் வகுத்திட்ட உலகியல்
திரிதல் இன்றி நடப்பதற்காகவே சிறியர் மேலவர் என்ன இங்கு ஆயினார்
உரிய இ முறையின்படி தாழ்ந்தவர் உயர்ந்தவர்க்குள் அடங்கல் ஒழுக்கமே
** காப்போர் சொல்லுக்கு அடங்கல் கடமை

#189
குடிகள் சீடர் குடிப்பணி செய்குவோர் கொல்லர் தச்சர் நாவிதர் காழியர்
அடியரே முதல் பல் தொழிலாளர்கள் அனைவரும் தமை ஆதரித்து ஆளுபாக்கு
ஒடிவு_இல் கங்கணம் பூண்டுகொள் மேலவர் உரைக்கு அமைந்து தம் மாது தொழில் எலாம்
குடிலம் இன்றி இயற்றிடில் இம்மையும் கோது_இல் அம்பரமும் பெறுவார் அரோ
** உணவு தருவோர்க்கே உடம்பு பொருளாம்

#190
ஐயனது அருளால் மெய்மை அனை தந்தை ஈந்தார் அ மெய்
உய்ய ஊண் யசமானன் தான் உதவலால் அவற்கே தம் மெய்
ஐயம்_இல் பொருள் என்று உன்னி அன்பொடும் ஏவலாளர்
மை அறு பணிகள் யாவும் மகிழ்வொடும் புரிவர் மாதோ
** இணங்காத் தலைவனைவிட் டேகல் நன்று

#191
தலைவன் தீயவனேல் அன்னான்-தனை விடுத்து ஏகல் நன்றாம்
விலை தரும் அவன்-பால் வைகி விரவுறுங்காறும் சேடர்
உலைவு_இல் தம் வாழ்நாள் அன்னாற்கு உரியது என்று உனி அவன் சொல்
நிலையுறப் பணிகள் செய்து நெறி வழி நிற்றல் சீரே
** எல்லா நலமும் இயைந்தவர் ஏவலர்

#192
அறநெறி அலாத செய்கை ஆண்டகை சொல்லின் கேளார்
புறமுற அவன் குற்றத்தைப் புகன்றிடார் பொய் கரத்தல்
மறம் இலார் அவனை அன்னை தந்தை போல் மதிக்கும் நீரார்
இறவு இலாக் கடவுள் வாழும் இதயத்தார் சேடர் அம்மா
** தலைவன் பகைநண்பு தமக்கும் பகைநண்பே

#193
அண்ணல்-தன் தமரை அண்ணல் என்னவும் அவன் ஒன்னாரை
நண்ணலர் எனவும் அன்னான் நண்பரை இனியர் என்றும்
எண் அற அன்னோன் கொண்ட பொருள் எலாம் சீவன் என்றும்
திண்ணமா எண்ணிப் போற்றும் சேடர் விண்_நாடர் ஆவார்
** குறிப்பின்வழி யியற்றுங் குணமிக்கான் ஏவலன்

#194
நா இயல் உணவில் ஏனை நல்வினைகளில் நம்பிக்கு
மேவிய விருப்பினோடும் வெறுப்பின் நல் குறிப்பு அறிந்து
தா இயலாது தக்க ததியில் யாவும் செய் சேடர்
ஆவியோ விழியோ எய்தற்கு அரும் பொனோ மணியோ யாதோ

@16 அதி. 15 – பொய்
** மெய்யே உரைக்கின் மேவா இடர்கள்

#195
முன்னம் ஓர் பொய் உரைக்க அப் பொய் வெளியாகாமல் மூடும் வண்ணம்
பின்னும் ஓர் பொய் உரைக்க அதையும் நிலைநிறுத்த ஓர் பெரும் பொய் சொல்ல
இன்ன வகை கைதவம் ஒன்று இருநூறு கைதவத்துக்கு இடமாம் வாய்மை-
தன்னையே முன் பகரில் சங்கடம் ஒன்று இலை அதுவே தகைமை நெஞ்சே
** பொல்லாங்கு எவைக்கும் பொய்யே பிறப்பிடம்

#196
இழுதை சொல்லி மறைக்கலாம் எனும் திடத்தால் பாதகங்கள் எல்லாம் தீயர்
பொழுதெலாம் புரிதலால் குற்றங்கள் யாவுக்கும் பொய் பிதாவாம்
வழுது ஒன்றை நீக்கிடில் தீவினைகள் எலாம் நீங்கிடும் நல் வாய்மை ஒன்றே
முழுதும் உணர் அறிஞர்க்குத் தோழனாம் அவர்க்கு அதனால் மோசம் உண்டோ
** பொய்யர் மறந்துமெய் புகலினும் மதியார்

#197
அங்கதமே பொருள் என்னக் கைக்கொண்டோர் மறந்து ஒரு மெய் அறைந்திட்டாலும்
இங்கு அதனை எவரும் நம்பார் துணைவியர்புத்திரர் தமரும் இகழ்ச்சிசெய்வார்
அம் கண் உலகு எங்கணுமே வசை ஆகும் நரர் எலாம் அகிதர் ஆவார்
பங்கமுறும் பொய்யரைப் பொய்யரும் சேரார் தம் உளமும் பழிக்கும் அன்றோ
** அரும்பொய் வெளிப்படும் அழியும் அடைபயன்

#198
ஏதேனும் பயன் வேண்டிப் பொய் சொல்லின் அப் பொய்தான் எவ்விதத்தும்
மா தரையில் வெளியாகும் அப்பொழுது அப் பயன் அழியும் வளரும் துன்பம்
சாதலின்மை வேண்டி விடம் உண்ணல் ஒக்கும் பயன் கருதி சலம் உரைத்தல்
ஆதலினால் உண்மை-தனைத் துணைக்கொள்ளின் எப்பயனும் அடைவோம் நெஞ்சே
** பொய்யரை நம்பார் செல்லாப் பொருளுங்கொடார்

#199
மெய்யர் எனப் பெயர் பூண்டார் வறிஞரே எனினும் நிதி மிகவும் அன்னார்
கை-அதனில் கொடுத்துவைக்க எவரும் அஞ்சார் பொய்யர் எனக் கவ்வை பூண்டார்
செய்ய பொருள் மிக உளார் எனினும் அவர் கையில் ஒரு செல்லாக்காசும்
ஐயம் இன்றி ஒருவர் கொடார் எனில் படிறின் தன்மை-தனை அறைவது என்னே
** பேச்சால் உயர்மக்கள் பேசுபொய் யாற்கடையர்

#200
விலங்கு பறவையினும் நரர் வாக்கு ஒன்றால் சிறப்புடையர் விளங்கும் திண்மை
இலங்கு வாயால் உரையாது அவத்தம் உரைப்போர் உலகம் இகழ் விலங்கின்
குலங்களினும் கடையராம் சாணமதை அமுது வைக்கும் கோலச் செம்பொன்
கலங்களின் வைத்தலை ஒக்கும் மெய்க்கு உரிய வாயால் பொய் கழறல் அன்றே
** பொய்யர்க்கு இடுக்கு வழியே பொருந்தும்

#201
பழியிலார் ஒருவர்க்கும் அஞ்சாது நேர்வழியே படர்வார் வவ்வும்
தொழிலுளார் பகற்கு அஞ்சும் துரிஞ்சில் போல் இட்டிகையில் தொடர்ந்து செல்வார்
இழிவுளார் என்பதற்குப் பொய்த்தலே சான்று ஆகும் ஏசு_இல் தூய
வழியுளார் என்பதற்குச் சரதமே சாட்சியாம் மகியின்-கண்ணே
** புரையிலா நன்மைக்காம் பொய்மையும் வாய்மையே

#202
அயலார் செய் குற்றங்கள் கூறாமல் மறைத்தலே அறமாம் அன்னார்
துயருறா வண்ணம் நாம் பொய்த்தாலும் பிழை அன்று சொந்தமாவோர்
பயன் வேண்டிச் சிறியது ஓர் பொய் சொலினும் பெரும் பழியாம் பார் மேல் கீழாய்
அயர்வாகப் புரண்டாலும் பிறர்க்கு இன்னா தரும் பொய்யை அறையல் நெஞ்சே
** பழியும் பாவமும் பயப்பன பொய்யே

#203
பாரினில் பொய்த்திடல் பொய்க்க உன்னுதல் பொய்யினைப் பிறர்க்குப் பயிற்றல் யாதோர்
காரியம் செய்வேன் என்னச் சொலித் தவிர்தல் தனக்கு ஏலாக் கருமம்-தன்னை
வீரியமாய்ச் செய்வன் எனல் அற்பரையே துதித்தல் பொய்யை வியந்து கொள்ளல்
சீரியரை இகழ்தல் பிறர் மீது ஒருவன் சொலும் பழியைச் செவியில் கோடல்
** உலகோர் ஒவ்வா துஞற்றுவ பொய்யே

#204
தற்புகழ்தல் புறங்கூறல் மிக இருணம் வாங்குதல் பொய்ச்சான்று உரைத்தல்
பற்பலவாக் கண்சாடை சிர கர கம்பிதம் செய்து பசுமை பொய் போல்
பின் பயன் தோன்றிடச்செய்தல் மெய் உரைக்க அஞ்சி வாய் பேசிடாமல்
சற்பனையாய் இருத்தல் பொய்க்கதை கூறல் கேட்டல் எலாம் சலங்கள் ஆமே
** ஆண்டவனுக்குக் கஞ்சாரே அறைவர் முழுப்பொய்

#205
வியன் உலகு எங்கணும் வீற்றிருக்கும் ஓர்
வயம் உளான் முனிவிற்கு அஞ்சாது மாக்கட்குப்
பயமொடும் அநுத்தமே பகர்தல் தேவினும்
கயவுளார் நரர் எனக் கருதல் போலுமே

@17 அதி. 16 – களவு
** நினைத்தல் செய்தல் நிறையிற் குறைவுங் களவே

#206
களவு செய்குதல் மனத்தினில் நினைக்குதல் கவர் என்று
உளம் மகிழ்ந்து உபதேசித்தல் உதவிசெய்து ஒழுகல்
வளம் இலாப் பொருள் மாறுதல் மிகு விலை வாங்கல்
அளவினும் நிறை-தனினும் வஞ்சித்து அபகரித்தல்
** பேராசை கூலி குறைத்தல் பெருங் களவே

#207
கண்டெடுத்த ஓர் பொருள் அனுபவித்தலும் களவின்
பண்டம் வாங்கலும் வாங்கிய கடன் கொடாப் பழியும்
மண்டும் வண் பொருளாசையால் பொய்வழக்கிடலும்
தொண்டு செய்பவர் கூலியைக் குறைக்கின்ற தொழிலும்
** கொடுவட்டி சூதுபொருள் இழப்பித்தல் களவே

#208
நட்டமே பிறர்க்கு எய்திடச்செய்தலும் நம்பி
இட்டர் வைத்த நல் பொருள் அபகரித்தலும் இறப்ப
வட்டம் வட்டிகள் வாங்கலும் சூதில் பொன் பெறலும்
இட்ட வேலை செய்யாது கைக்கூலி கொள் இயல்பும்
** கன்னம் பொய்காசு கைக்கூலி களவே

#209
கன்னம் வைத்தல் செல்லாப்பணம் வழங்குதல் கள்ளம்
மன்னு சீட்டை உண்டாக்குதல் கை லஞ்சம் வாங்கல்
என்னும் யாவுமே களவதாம் இத் தொழிற்கு இயைவோர்
மன்னர் ஆக்கினை வசை நரகு அடைந்து வாடுவரால்
** களவால் விலங்கு சிறை காதற் பிரிவுண்டாம்

#210
திலக வாள் நுதல் தேவியைச் சேயரைப் பிரிந்து
கலகல் என்னவே ஒலிசெய் மா விலங்கு கால் பூண்டு இவ்
உலகம் ஏசிடச் சிறையகத்து உற்று மண் சுமந்து
சிலுகு எலாம் உறல் சிறிது பொன் திருடலால் அன்றோ
** பழிகுலத் தாழ்வினும் களவுபே ரிழிவே

#211
தள்ள அரும் பெரும் பழியுளார் என்னினும் தரையில்
எள்ளல் சோழி குலத்தரே என்னினும் ஏசிக்
கள்ளர் என்று அவர்ப் பழித்திடப் பொறார் எனில் களவிற்கு
உள்ள பேர் அவமானத்தை உரைப்பது என் உளமே
** அச்சமெலாங் கள்வர் உள்ளத் தமர்ந்தன

#212
அரி முழை நுழைதல் போல அயலகம் புகும் போது அச்சம்
பொருள் திருடும் போது அச்சம் புறப்பட்டு ஏகுங்கால் அச்சம்
தெருவினில் எவர்க்கும் அச்சம் கவர்ந்தன திளைக்க அச்சம்
உரும் உருக் கொண்டு கள்வர் உளம் குடிகொண்ட போலும்
** எத்துன்பம் வந்தாலும் களவுசெய இசையேல்

#213
நிரந்தரம் பல நோயுற்று நெடிது அயரினும் கையேந்தி
இரந்து உணப் பெரும் நிரப்பே எய்தினும் பகர ஒண்ணா
அரந்தை சூழினும் பொன் வவ்வும் அத் தொழிற்கு இயையா வண்ணம்
வரம் தர வேண்டும் என்னக் கடவுளை வழுத்தாய் நெஞ்சே

@18 அதி. 17 – கொலை
** கொல்ல நினைத்தலும் கொடுமொழியும் கொலையே

#214
உயிரினை வதைத்திடல் வதைக்க உன்னுதல்
அயில் எனக் கொடிய சொல் அறைதல் எற்றல் வெண்
தயிர் உடை மத்து எனத் தாபம் பல் புரிந்து
அயலவர் ஆயுள்நாட்கு அழிவு உண்டாக்குதல்
** கருவழித்தல் துன்பம் களையாமை கொலையே

#215
கருவினை அழிக்குதல் கயம் இங்கு ஏனையார்
மருவிட விரும்புதல் மற்று அன்னோர் இடர்
ஒருவிட வகைசெயாது ஒழிதல் வெவ் விடம்
சருவினில் இடல் கொடும் சமர்க்கு உடன்படல்
** செருக்கு கள் காமம் தீ தற்கொலை கொலையே

#216
முனைவு கள் காமம் வெம் முரண் முதல் கொலை
வினையினுக்கு ஏதுவாம் வினைக்கு அமைந்திடல்
மனையினில் தீயிடல் மண்ணில் தற்கொலல்
இனைய யாவும் கொலை என்னும் வேதமே
** கொலைஞர்க்கு உலகெலாம் கூறும் இயமனாம்

#217
பெறல் அரும் உயிர் தரும் பிறப்பு இலான் அதை
அற ஒரு வழி செய ஆண்மை பூண்டனன்
பறவையை நரர் விலங்கினைப் படுக்கும் ஓர்
மறவனுக்கு உலகு எலாம் மறலி என்பவே
** கொலையொறுப்புச் செய்யுரிமை மன்னற்கே கொள்வர்

#218
கொலைபுரிவோரையும் குடி வருந்தவே
அலைவு செய்பவரையும் ஆவி நீக்கிடத்
தலை முடி தரித்தவர் தமக்கு நீதியாம்
இலை கொலை செயும் முறை இதரர் ஆர்க்குமே
** குருதிக் கறையாடை கூறும் கொலைஞனை

#219
சுதமுறு முகத்தொடு சொல்லும் மாற்றமும்
பதமுறு கறைக் கறை படிந்த ஆடையும்
வதனையே காட்டலால் வதை மறைக்குதல்
உதயனைக் கரத்தினால் மறைத்தல் ஒக்குமே
** அரியது நிகழினும் கொலைஞன் உயர்தலரிது

#220
பவம் அறம் ஆயினும் பவர்க்கம் முத்தியாய்ச்
சிவம் உறப் பொலியினும் சிதைந்து அழிந்த ஓர்
சவம் உயிர் மேவினும் தகை_இல் காதகர்
அவனியில் உயர்ந்திடல் அரிது நெஞ்சமே
** குடும்பம் முற்றுங் கோறலாம் தலைவற் கோறல்

#221
பத்தினி சேயரும் பரிசனங்களும்
தத்தம நிலைகெடத் தலைவனைச் சமன்
ஒத்து அவனியில் கொலல் ஒருவன்-தன்னை அன்று
அத்தனை பேரையும் அடுதல் போலுமே
** கொலைஞனை விருப்பாய்க் கூடுவான் எமன்

#222
தீயிடை மூழ்கினோன் சிங்கி உண்டவன்
மாய்வு இலாது உய்யினும் வதன் உய்யான் நமன்
ஆய தன் தொழில்புரிவோனை அன்பொடு
மேய தன் உலகினுக்கு ஈண்டு அழைக்குமே
** கொலையே பெரும்பாவம் விழுங்கும் கொடுநரகம்

#223
சீவனை வதைசெயல் சிறந்தது ஆயுங்கால்
பாவம் ஓர் ஐந்தினும் கொலைசெய் பாவியைப்
பூவலயம் பொறாது எரியும் பூதிதான்
ஆ என வாய் திறந்து அவனை நுங்குமே
** யார்க்கும் கொலைசெயும் உரிமை யின்று

#224
அகம்-தனை உடையவன் அழித்தல் நீதி எண்
இகந்த பல் உயிர் எலாம் இயற்றினோற்கு அன்றிச்
சகம்-தனில் அவைகளைத் தம்மைக் கொன்றிட
உகந்த பேர் உரிமை ஈங்கு ஒருவர்க்கு இல்லையால்
** தடுக்க முடியாவிடில் தானுங் கொல்லுக

#225
தனை எனினும் பிறர்-தம்மை என்னினும்
முனையொடு கொல வரும் முசுண்டன்-தன் உயி
ரினை வதைசெயல் அலால் உபாயம் வேறு இன்றேல்
அனையனைக் கொல்க நல் தீர்வும் ஆற்றுக

@19 அதி. 18 – மது
** அறியாமை நோய் மறதி கட்குடியால் ஆம்

#226
ஞானம் மெய்ச்சுகம் புகழ் நலம் பெறத் தனம்
தானமே செய்குவர் தகுதியோர் அறிவு
ஈனம் மெய்மறதி நோய் இழிவு உறப் பொருள்
வான் என வழங்குவர் மது உண்போர்களே
** நஞ்சனைய கள்ளுண்பார் நாடுமனை மகவிழந்தார்

#227
மருந்தம் நேர் மது உண்போர் மாண்ட பான்மையால்
அரும் தவப் பாலருக்கு அப்பன் இல்லையால்
பொருந்திய மனையவள் பூண்ட நாண் களத்து
இருந்ததே என்னினும் இழந்தது ஒக்குமே
** அறிவிழப்புச் சாவால் கள் நஞ்சினுங் கொடிதாம்

#228
சித்தமும் அவசமாம் செயல் விகற்பமாம்
நித்தமும் மரணமாம் நெடிய துன்பமாம்
அத்தமும் நாசமாம் அவிழ்தம் இன்மையால்
பித்தினும் நஞ்சினும் பெரிது கள் அரோ
** கள்ளுண்போர் கழிவுண்ணும் ஈயினை ஒப்போர்

#229
பாலினைத் தேனை இன்பாகை நீத்து வெண்
மாலியை மாந்துவோர் மலர்க் கள் நீத்து மெய்த்
தோல் இரணம்-தனைச் சூதகம்-தனைக்
கோலி உண்டு உவக்கும் மீக்கூட்டம் ஒப்பரே
** யாரையும் மருவச்செய் கள் மிக இழிவே

#230
சீ என இகழ்தரு தேன் உண்போர்களை
நாய் எனக் கோகு என ஆக்கும் நாள்-தொறும்
ஆயினை மகளை இல் ஆக்கும் தான் கொண்ட
சே_இழையையும் விலைசெய்யச் செய்யுமால்
** தீமையை நன்மையெனத் திரிப்பது கள்ளே

#231
மலம்-தனை அமுது என மாந்தச்செய்திடும்
மலர்ந்த பூ என அனல் அள்ளச்செய்யும் வெம்
சலம் தரும் பகைவர் கை தனக்கு உள்ளாக்கும் நல்
நலம்-தனை அழித்திடும் நறவு நெஞ்சமே
** கள்ளுண்பார்க் குலகம் கடுநர காகும்

#232
அலர் உற ஈ எறும்பு அரவு தேளொடும்
பல விலங்கு அணுகுறப் படுத்த பாயலின்
மல சல வாந்தியும் மயக்கும் கோடலால்
நிலமது நரகமாம் நிதம் கள் உண்பார்க்கே
** கள்ளில் பிறப்பன கடுவினை பேராசை

#233
கொஞ்சமும் சுவை இலை குளத்தைக் கோணியே
நஞ்சு என நுகர்வர் மெய் நலிய மூப்புற
விஞ்சிய ஆவல் தீவினைகள் யாவுமே
குஞ்சுகள் கள் எனும் கொடிய பக்கிக்கே
** களவு மயக்கம் காமம் தருங் கள்

#234
வறுமையால் களவுசெய்வர் மையலால் காமத்து ஆழ்வர்
குறுமை சேர் பகையினால் வெம் கொலைசெய்வர் வசையினோடும்
சிறுமை தந்து உயிர் இருந்தும் செத்தவர் ஆக்கி இம்மை
மறுமையை அழிக்கும் கள்ளை மாந்தல் எப்பயன் வேட்டு அம்மா
** வழிநடைப் பிணமாகும் வரும் இழிவு கள்ளால்

#235
நரி நாய் பறவை சூழ வழி நடுவில் கிடந்த சவமதனை
உரியார் இலர் என்று இடுகாட்டுக்கு உடன் கொண்டு ஏகிக் கட்டையில் வைத்து
எரியாநின்றேன் பிணம் விழித்து இஃது இன்தேன் மயக்கு என்று இயம்பி மெய் கொள்
அரியை அவிக்கும் முன்னம் எழுந்து அயல் கள் கடையுள் புகுந்ததுவே
** மயக்கும் பொருளால் விரைவில் மாளுவர்

#236
அரக்கும் அரக்கும் மது கஞ்சம் ஆதியாக அறியாமை
சுரக்கும் சரக்கைச் செய்தல் விற்றல் துணிந்து கொள்ளல் நுகர்தல் எலாம்
பரக்கும் பழியைப் பாவத்தைப் பயக்கும் அத் தீத்தொழிற்கு இசைவோர்க்கு
இரக்கும் தொழிலும் ஆயுள் குறைந்து இறக்கும் தொழிலும் எய்துமால்

@20 அதி.19 – சூது
** சித்திரப் பெண்போல் செல்வம் சேரா சூதில்

#237
வித்தமே மிகும் என வெஃகிச் சூதினில்
அத்தம் ஆர் அத்தமும் அழித்தல் தீட்டிய
சித்திர மாது எழில் நம்பிச் சேர்ந்த தன்
பத்தினி-தனை அகல் பான்மை ஒக்குமே
** கல்லாது சூதினிற் காலம் போக்கல் இழிவே

#238
வையம் மேல் மானிடர் வாழும் நாள் சில
ஐயம்_இல் கேள்விதான் அளவு இல ஆருயிர்
உய்ய நல்வினைகளை உஞற்றிடாது நாள்
பொய் அமர் சூதினில் போக்கல் புன்மையே
** புண்ணியமிலாதார் சூதால் போது போக்குவர்

#239
ஓத அரு விசையொடும் ஓடும் நாள் என
மேதையர் தம் தொழில் விடாது செய்குவர்
போது நீட்டித்து எனப் பொறி இலார் அதைச்
சூது எனும் வாள் கொடு துணிக்க நேர்வரே
** அளவிலாத் தீமையை ஆற்றும் சூது

#240
வளம் மலி நிடதநாடு அளிக்கும் மாண்பு சேர்
நளனையும் அலைவுசெய் நாசச் சூதுதான்
களவு பொய் சினம் பகை காமம் யாவையும்
அளவு அறப் பயிற்றிடும் ஐயன் போலுமே
** மனைவி மாளினும் சூதன் மனமகிழ்ந்தாடுவான்

#241
கவறினை ஆடுவோன் காந்தை வீயினும்
சவமது இவ் வழி செலும் என்று தான் எழான்
அவள் புனை தாலி பந்தயத்துக்கு ஆம் என
உவகைபூத்து ஆடுவான் உயர்வுறான் அரோ
** அளவில் ஆசையாற் பொருளெலாம் சூதிலிழப்பர்

#242
வட்ட மா நிலம் மீது மன்னார் விடம்
இட்ட பாலை இனிது அளித்தால் எனக்
கட்டம் மேவும் கழகத்தில் வென்று கொள்
ஒட்டம் கையினில் ஒட்டம் அளிக்குமால்
** கவலை தரலால் சூதுக்கு கவறெனும் பேர் காரணப்பேர்

#243
இவறலே தந்து இழிவையும் தந்து பின்
தவறு யாவையும் தந்து நெஞ்சம்-தனைக்
கவறு என் ஏவிக் கலக்கம் கொடுத்தலால்
கவறு எனும் பெயர் காரணம் நாமமே
** போர்க்கும் பழிக்கும் புகலிடம் சூதே

#244
பந்தயம்-தனைப் பற்றி வெம் சூதினோடு
எந்த ஆடற்கு எனினும் இயைபவர்
வந்த சீர் நலம் மாறி வயாவுக்கும்
நிந்தனைக்கும் நிலையமது ஆவரால்

@21 அதி. 20 – கைக்கூலி
** கைக்கூலி வாங்குவோர் காணார் நடுநிலை

#245
வலியினால் இலஞ்சம் கொள் மாந்தர்-பால் சென்று
மெலியவர் வழக்கினை விளம்பல் வாடிய
எலிகள் மார்ச்சாலத்தினிடத்தும் மாக்கள் வெம்
புலியிடத்தினும் சரண்புகுதல் ஒக்குமே
** கைக்கூலி வாங்குவோரைக் கொன்றாலும் போதாது

#246
அல்லினில் களவுசெய்பவரை வெம் சிறை
யில் இடும் பண்பினுக்கு இயைந்த மாக்களே
எல்லினில் எவரையும் ஏய்த்து வவ்வலால்
கொல்லினும் போதுமோ கொடியர்-தம்மையே
** உலகிய லழிப்பர்பால் உறும்பழி பாவம்

#247
கொலைஞரும் சோரரும் கொடிய வஞ்சரும்
நிலைபெற அவர் கையில் நிதியைக் கொண்டு தண்
அலை கடல் உலகியல் அழிக்கும் தீயர்-பால்
மலை எனப் பாவமும் பழியும் மண்டுமே
** கனலுறும் வெண்ணெய்போல் கைக்கூலி அழியும்

#248
பயிரினை வேலிதான் மேய்ந்த பான்மை போல்
செயிருற நீதியைச் சிதைத்து ஓர் தீயன் சாண்
வயிறினை வளர்த்திட வாங்கும் மா நிதி
வெயிலுறு வெண்ணெய் போல் விளியும் உண்மையே
** கைக்கூலி வாங்குவோன் கயவரின் அடிமை

#249
ஆசையால் வாங்கிடும் அவனை ஈந்தவர்
கேசமா மதிப்பர் அக் கீழ்நன் சென்னி தம்
ஆசனம் ஆக்குவர் அடிமை நான் எனச்
சாசனம் அவர்க்கு அவன் தந்தது என்னவே
** கடையனாம் வேசையினும் கைக்கூலி பெறுவோன்

#250
காசு அதிகம்-தனைக் கருதி வாதம் தீர்த்து
ஏசு அற ஏழைகட்கு இடர்செய்வோன் தனம்
மீசரம் குறைவு பாராது மேவிடும்
தாசியரினும் இழிதகவுளான் அன்றோ
** வழக்கிடாது மனமொத்துப் பங்கிடல் மாண்பு

#251
எனது உனது என ஒரு பொருட்கு இரண்டு பேர்
சினமொடு வாதித்தோர் தீயன்-பால் செலின்
தனது என அப் பொருள்-தனைக் கொள்வான் அவர்
மனது ஒருமித்து அதை வகிர்தல் மாண்பு அரோ
** கைக்கூலிப் பழிசொலக் காணா வோர்வாய்

#252
பசியினால் எளியன் ஓர் பகல் இரப்பினும்
அசியுறும் எங்கணும் ஆக்கம் உள்ளவர்
நிசி பகல் பலரிடம் நிதமும் ஏற்கின்ற
வசையினைச் சொல்ல ஓர் வாயும் போதுமோ
** ஈந்தோர்க்கெலாம் கைக்கூலி ஏற்போன் பிள்ளை

#253
பெற்றவன் கைப்பொருள் பிள்ளைக்கே அலால்
மற்றவர்க்கு இலை எனல் மனுவின் நீதியாம்
குற்றம் மேவிட நிதி கோடி பேர் கையில்
பற்றுவோன் அவர்க்கு எலாம் பாலன் போலுமே
** மானமழியாது தொண்டுசெய்து வாழ்வதே மதிப்பு

#254
மண்டலீகன்-தன் தண்டனை நரகு அவமானம்
கண்டபேர்க்கு எலாம் பயம் பெரும் பகையொடும் கவ்வை
பண்டம் இவ் வகை ஈட்டலின் அனுதினம் பலரை
அண்டி மானமாத் தொண்டுசெய்து உயிர் உயல் அழகே
** இருகையும் கைக்கூலி ஏற்றல் முழுக்கொள்ளை

#255
இருவரிடத்தும் விவாத நிதிக்கு இரட்டி கொள்வர் தகாது என்னின்
அருமை சயம் என்பார் தோல்வியடைந்தோன் தந்த நிதி கேட்பின்
வெருவ அவன் மேல் பொய்வழக்கை மெய் போல் கற்பித்து இடர் இழைத்துச்
சருவ கொள்ளை அடிப்பர் பரிதானம் வாங்கும் பாதகரே
** கைக்கூலியால் முறைசெயல் களவுப்பொருள் விலையொக்கும்

#256
பொய்வாதியர்-பால் பொருள் கொண்டு வழக்கைப் புரட்டல் அநீதி பொருள்
மெய்வாதியர்-பால் கொண்டு அவர்க்கு விவாதம் தீர்க்கும் நிலை எற்றேல்
உய்வார் பொருளைக் கவர்ந்து அதற்கு விலை கொண்டு உவர்க்கு உஃது இடல் போலும்
பெய் வான் மழைக்கு வரி வாங்கிப் பிழைக்கும் கொடுங்கோன் போலுமால்
** நன்றாய் வின்மையும் நண்ணுங்கைக் கூலிபால்

#257
வரும் வாதியரோடு உறவு பற்றுவரவு முதல் செய்குதல் விரைவில்
கருவி விவாதம் தீர்க்காது காலங்கழித்தல் சோம்பலினால்
உருவ வழக்கின் நிலையினை நன்கு உணராத் தன்மை பொது நீங்கல்
பொரு_இல் இவை ஆதிய புரைகள் இலஞ்சமதனைப் பொருவுமால்
** மேல்கீழ் மிகுபொருள் எண்ணல் கைக்கூலியே

#258
நேயர் பற்சர் தீனர் நிதியோர் எனச் சொல் பேதமதையே நினைத்து அநீதிபுரிதல்
மாயமுற்ற பேர்கள் சொலையே மதித்து அடாத பக்க வாதம் உற்று நீதி தவிர்தல்
தீய அத்தம் ஆதியோடு லோக ரத்ந ராசி பல தேயம் முற்றும் ஆர் பொருள் எலாம்
தேய முற்றி ஏலல் அவை காதலித்தல் ஆதி பரிதானம் ஒத்த தீதுகள் அரோ

@22 அதி. 21 – புறங்கூறல்
** பழியஞ்சும் பண்பினர் பகரார் புறங்கூறல்

#259
சாம் பிணம் இடுவனம் சாரும் துன்மணம்
பூம் பொழில் பரிமளம் பொருந்தி நாறிடும்
தாம் பழியுளர் அலால் தகுதியோர் பிறர்
நோம்படி அவர் குறை நுவலுவார்களோ
** புறங்கூறுவோன் குலநலம் பொருந்தாப் புன்மையன்

#260
நலத்தின் மிக்கார் சொலார் நயம்_இல் சொல்லையே
சொலத் தகாப் பழி பிறர் மீது சொல்லுவோன்
குலத்தினும் நலத்தினும் குறையுளான் எனத்
தலத்தவன் வாய்மொழி சாட்சி ஆகுமே
** புறங்கூற லாலுள்ளப் புன்மை வெளியாம்

#261
உள்ள அங்கணம் கசிந்து ஓடல் போல் ஒரு
கள்ள நெஞ்சினன் புறங்கழறல் அன்னவன்
உள்ளம் ஆர் புரை எலாம் ஒழுகி வாய் வழி
வெள்ளமாய் வழிகின்ற விதத்தை மானுமே
** மெய்யே புறங்கூறினும் வேண்டாப்பொய் ஆகும்

#262
இன்னலே ஏதிலார்க்கு இழைக்கும் அச் சொலே
முன்ன மெய் என்னினும் முழுப்பொய் போலுமாம்
அன்னவர் குறையினை அறிந்தும் இன்று எனப்
பன்னு பொய் மெய்யினும் பாடு உடைத்து அரோ
** சான்றினில் குற்றம் கூறுதல் தகுமால்

#263
ஆட்சியாம் உலகு அரசன் முன்
சாட்சிசொல் சமையத்து அலால்
மாட்சியோர் பிறர் மறுவினை
நீட்சியா நிகழ்த்தார்களே
** புறங்கூறார் கடமை பொன்றாப் புலவர்

#264
மதி இலார் செய் வடு அவர்
எதிரில் நின்று இயம்பினும்
முதுகில் நின்று மொழிவரோ
விதி உணர்ந்த விபுதரே
** புறங்கூறுவோனைப் புறத்தாக்கல் கோன்முறை

#265
ஒருவன் ஒருவன் குறையை உரைத்திடவே அதனைக் கேட்டோர்கள்
பெருகு அபத்தம் கலந்து பல பேருக்கு உரைக்க இவ்வாறே
மருவி எங்கும் பரவுதலால் மண்ணின் முன்னம் தூற்றும் அவன்
குருநோய் ஒப்பான் அவனைக் கோன் ஊர்விட்டு அகற்றல் நன்றேயாம்
** புறங்கூற்றாளர் பொல்லாப் பகைஞர்

#266
வாள்படை வாங்குவர் இலரேல் மாறுவர் ஆர் புறங்கூற்றைக்
கேட்பவர்தாம் இலர் என்னில் கிளப்பவர் ஆர் பிறன் பழியை
வேட்பொடு சொல்வோர் அவற்கு மேவலர் என்று உனி அதனைக்
கோட்புறல் இலாது சினம் கொண்டு அகற்றல் நெறியாமே

@23 அதி. 22 – பெரியோரைத் தூறல்
** பெரியோர் புகழை மாசுறப் பேசல் பெரும்பிழை

#267
அரிய குணம் சேர் பெரியர்-தமக்கு அமையக் கடல் சூழ் புவனம் எங்கும்
விரியும் இசை மாசுற அவர் மேல் விளம்பும் பொய்ச்சொல் அண்டம் மிசைத்
திரியும் பானுக் கிரணமதைத் திரட்டிப் பற்றி அதன் மீது
கரியைப் பூச வேண்டும் எனக் கருதும் தன்மை பொருவுமால்
** பெரியோரைப் பழிப்போன்மேல் பெய்யும் அப்பழி

#268
காற்றின் எதிரே நின்று ஒருவன் காறி உமிழும் உச்சிட்டம்
மாற்றி அவன் மேல் வந்து விழும் வாய்மை போல் இத் தாரணியில்
தோற்றி ஒழியும் வாழ்வதனைத் துறந்த மேலோர் மீது ஒருவன்
தூற்றிக் கூறும் வசைச்சொற்கள் சொன்னோன் மீதே தோயுமால்
** ஆன்றோர்மேல் சொல்பழியை அறிவுடையார் கொள்ளார்

#269
கடல் அனலுற்று எரிந்தது என்றும் கதிர் குளிர்நோய் உற்றது என்றும்
தட வரையே சாய்ந்தது என்றும் சாற்றும் மொழி நம்புவர் ஆர்
திடமுடைய சான்றோர் மேல் செப்பும் அவதூறதனைப்
புடவி மிசை வாழ் அறிஞர் பொய் எனவே தள்ளுவரால்
** தீயோர் தூயோரைத் தேறுவர் தம்போல்

#270
வாய் கைக்கும் நோயினர்க்கே மா மதுவும் கைப்பு ஆகும்
காய் வெயிலும் மஞ்சள் நிறம் காமாலைக் கண்ணருக்கே
சாய் நிழலும் சுடு வெயிலாம் தாபச் சுரத்தினர்க்கே
தீயவர்க்குத் தூயவரும் தீயவர் போல் தோன்றுவரே
** கீழோர் தம்பழியைப் பிறர்மேல் சாற்றுவர்

#271
கஞ்சனத்தில் தம் முகமே காணுவது போல் கயவர்
தம் செயிரைப் பிறர் செயிர் போல் தாம் எண்ணித் தூறுவர் ஓர்
வஞ்சகனை நம்பி ஒரு மாசிலான் இன்னலொடும்
எஞ்சலுறா வண்ணம் அவன் இழிவுரைத்தல் முறையாமே

@24 அதி. 23 – கடும்பற்று
** பொன்னைப் புதைத்துப் புல்லன் மண்கொள்வான்

#272
பொன்னினைப் புதைத்திடப் புவியைத் தோண்டுவோன்
தன்னிடம் தொட்ட மண்-தனை இழுத்தலான்
உன்னுடையது நிதி உலகமே இ மண்
என்னுடையது என இயம்பல் ஒக்குமே
** பொன்னைப் புதைப்பார் வாயில் மண்ணே புதையும்

#273
பொன்னை மா நிலத்தில் யான் புதைக்கும் ஏல்வையின்
அன்னையே அனைய பார் அருளின் நோக்கி நல்
சொன்னம் என் வாயிடைச் சொரியும் உன்றன் வாய்க்கு
என்னையே இடுவன் என்று இசைத்திட்டாள் அரோ
** பாத்துண்டலும் பலர்க்கீதலும் இல்லான்பொன் பாழே

#274
பொலி வளம் தங்கிய புவியில் தான் உண்டும்
பலி பிறர்க்கு இட்டுமே பயன் துவ்வான் பொருள்
வலி இலாப் பேடி கை வாள்-கொல் ஆண் என
அலியினை மேவிய அரம்பையே-கொலோ
** பயன்பெறாச் செல்வன் பாரந்தாங்கியும் கழுதையுமொப்பான்

#275
நித்தியம் அனுபவியாது நீள் நிதி
பத்திரம்செய்குவோன் பாரம் தாங்க ஊர்
மத்தியில் புதைத்த கல் மாசில் தூசர்க்கு
வத்திரம் சுமக்கும் வாலேயம் ஒப்பனே
** புதைக்கும் புல்லரை பொருள் குடி கெடுக்கும்

#276
செல்ல ஓர் போக்கு இன்றிச் செறிந்த நீர் கனல்
இல்லமே அழித்து எழுந்து ஏகல் போல் செலவு
இல்லை என்று அடைத்த பொன் எழுந்து தன்னைக் கொள்
புல்லரைக் குடிகெடுத்து அகன்று போகுமே
** செல்வச் சுமையினர் இரங்கார் சிறிதும்

#277
வேம்பு தேன் ஈயுமோ வெயில் தண் ஆகுமோ
பாம்பு அமுது அளிக்குமோ பரிவு_இல் பூரியர்
தாம் பொதியாள் எனத் தாங்கும் பொன்னினைத்
தேம்பும் ஆதுலர்க்கு உளம் சிறந்து அளிப்பரோ
** ஈயாச் செல்வன் சாவையே எவரும் விரும்புவர்

#278
ஈகை இல்லாது பொன் ஈட்டுவோன் கொண்ட
தோகையும் மைந்தரும் தொலைகிலான் என
ஓகையாய் அரு விடம் உணவில் இட்டு அவன்
சாகையே கருதி மா தவம் செய்வார்களே
** நன்றியில் செல்வக்காப்பு நச்சுமரக் காப்பாம்

#279
அனுபவம் ஒன்றே பொன்னால் ஆய நல் பயன் அஃது இன்றேல்
புனல் இலாத் தடத்தைப் பெய்யாப் புயலினைப் பொருவும் அப் பொன்
தினமுமே நுகர்தல் இன்றித் தீனர்க்கும் வழங்கல் இன்றித்
தனமதைக் காத்தல் நச்சுத் தருவினைக் காத்தல் போலாம்
** எல்லாரும் தமதென்பர் இவறியான் பொருளை

#280
தமது என உலோபர் ஈட்டும் தனத்தினைக் கொடுங்கோல் மன்னர்
எமது என இருப்பர் கள்வர் எமது என்பர் கிளைஞர் எல்லாம்
உமது எமது என வாதிப்பர் உலகு எனது என்னும் யாமும்
நமது என்போம் பாரம் தாங்கி நலிவது என் பிசினர் அம்மா
** ஏழைக்கு இடாமல் செல்வர்க்கு வழங்குதல் இழிவு

#281
மெலியும் ஏழைக்கு இடாமல் விளை பொன்னை
மலியும் செல்வர்க்கு வாரி வழங்குதல்
நலி இலார்க்கு அருள் நல் மருந்தும் பெருகு
ஒலி கடல் பெய் உறையையும் ஒக்குமே
** ஈயாக் கயமை இனம்விழை விலங்கினும் இழிவு

#282
வனவிலங்கும் விண் வாழ் பக்கியும் தம்தம்
இனமோடு அன்றி எடா இரை ஏழைகட்கு
அனம் இடாது தம் ஆகமது ஒன்றையே
மனம் உவந்து வளர்ப்பர் கயவரே
** பழம் உதிரா மரம்போல் பறிபடுவர் கயவர்

#283
தான் நல் கனி சிந்தாது உயர் தருவைச் சிலை கழியால்
ஊனப்பட மோதிப் பழம் உதிர்ப்பார் என உலகில்
தீனர்க்கு வழங்காது உறை தீயன் பசியுளரால்
மானத்தை இழந்தே பொருள் வவ்வப்படுவானே
**கொடாக் கண்டனுயிர் கொள்வரப் பணத்தால்

#284
சாம்காலை ஓர் பிசினன் பொருள் தானம்செய உன்னித்
தேம் கான் மொழி மனை மைந்தரை விளித்தான் அவர் தெரிந்தே
ஆங்கு ஆயவன் உரையா விதம் அவன் மேல் விழுந்து அழுதார்
தாங்காதவன் உயிர் தீர்ந்தனன் தனம் போல் பகை உளதோ

@25 அதி. 24 – சோம்பல்
** மடியராய் உழையாதார் மரம் சவம் ஆவரே

#285
சிற்றெறும்பு ஆதியாச் சீவகோடிகள்
முற்றும் மெய் உழைத்து உயிர் முறையில் காக்குமால்
சற்றும் மெய் அசைவு இலாச் சழக்கர் ஆருயிர்
அற்ற ஓர் சவம்-கொல் மற்று அசரமே-கொலோ
** உழையாது சோம்புவோர் ஒரு பெருந் தீயரே

#286
விடக்கு உறும் சடம் பல வேலை செய்தற்கா
நடக்கவும் ஓடவும் நனி உறுப்புகள்
மடக்கவும் நீட்டவும் வாய்ந்ததால் சும்மா
கிடக்கும் மெய்ச் சோம்புளோர் கேடுளார்களே
** குடும்பம் பேணுவோர் சோம்பலை கொள்ளார்

#287
தெளிவுற நூல் பல தினமும் வாசித்து
மிளிர் உடல் வருந்தியும் வெறுக்கை ஈட்டி நல்
கிளி மொழி மனைவியைக் கிளைஞரைப் பல
எளியரைத் தாங்குவோர்க்கு இல்லை மந்தமே
** வறுமை பாவம் துன்பம் சோம்பலால் வரும்

#288
மடி சேருமவர்க்கு ஒரு நாளும் மறல்
விடியாது அவர் நெஞ்சிடை வெம் துயரே
குடியாகும் மறம் தொடர் குற்றம் எலாம்
நெடிதாக வளர்ந்திடும் நிச்சயமே
** கொடுமையும் களவும் கொள்வர் சோம்பரே

#289
பார் எல்லாம் ஆள் வேந்தரும் நூல் தேர் பண்போரும்
சீர் எல்லாம் சூழ் செல்வரும் மந்தம் சேராரே
நேர் இல்லா மா பாதகர் தீனர் நெடும் சோரம்
ஊர் எல்லாம் செய்து உய்பவர் மா சோம்புடையாரால்
** உழையாச் சோம்பர் பெருவசை உறுவர்

#290
எய்யா அம்பே வல் விசை மாறி இறும் என்று
மொய்யா விரதம் ஆழியொடும் கெட்டு ஒழியும் தம்
மெய்யானதுவே வியர்வையுறப் பல் வினை கையால்
செய்யாதவரே நோய் பல உற்றுத் தேய்வாரே
** உடல் அசையார் உறுவர் பெரும்வசைப்

#291
அசையும் வளி புவி அசையும் அனல் சலம் அசையும் மரம் விளை பயிர் எலாம்
விசையினொடும் அவை அசைவது இலை எனில் விளியும் எனல் நிசம் நரர்கள் தம்
தசை கொள் உடல் நிதம் அசைய வினை பல தரணி மிசை புரிகிலர் எனில்
இசையும் வலி கெடும் நலிகள் அடுமுறும் இசையின் மிசையொடு வசையுமே

@26 அதி. 25 – சினம்
** மெலியரைச் சினப்போர் ஆழ்வர் மீளாநரகில்

#292
வலியரைச் சினப்போர் வரையினில் மோதும் மண்கலம் என உடைந்து அழிவார்
பொலிவுறத் தமை ஒப்பவர்களைச் சினப்போர் புலி இரண்டு ஒன்றையொன்று அடித்து
மெலிவொடு இரண்டும் கெடுவ போல் கெடுவார் மெலியரை வெகுளுவோர் வேங்கை
எலியினை எதிர்த்த தன்மை போல் இழிவுற்று எரி நரகிடை அமிழ்ந்துவரே
** மெலியர்பால் சினம் வேண்டுமென்றே கொள்வர்

#293
எம்மையும் தெரியாமல் இச் சினம் வந்தது என்பீர்
உம்மை நோய்செயும் வலியரை வெகுண்டிடாது ஒளிப்பீர்
இம்மை வாழ்வு இலா எளியர்-பால் தினம் உமக்கு எய்தும்
வெம்மை நீர் அறிந்தோ அறியாமலோ விளம்பீர்
** சினங்கொள்வார் நெஞ்சுடற் சேருந் துன்பம்

#294
கண் சிவந்திட மெய் எலாம் நடுங்கிடக் காலால்
மண் சிதைந்திட உதைத்து நாக் கடித்து இதழ் மடக்கி
எண் சிதைந்திடச் சினம்கொள்வீர் நும் மெயோடு இதயம்
புண் சுமந்தது அலால் பிறர்க்கு என் குறை புகல்வீர்
** தன்னுருவம் தான்தேறாத் தகைசினத் தால்வரும்

#295
கோட வாள் முகம் சுழித்து இதழ் மடித்து எழில் குலையச்
சேடன் மீது யான் சினமுற்ற பொழுது எதிர் திகழும்
ஆடி நோக்க யான் யான்-கொல் மற்றார்-கொல் என்று அயிர்த்துத்
தேடி நோக்க ஓர் குரூபமே கண்டு உளம் திகைத்தேன்
** சினமுளோன் இறக்கின் சேர்ந்தாரும் மகிழ்வர்

#296
சினமுளோன் மனை மைந்தர்கள் அவன் வெளிச்செல்லும்
தினம் எலாம் திருவிழவு கொண்டாடுவர் செல்லாது
இனையன் தங்கும் நாள் இழவுகொண்டாடுவர் இறப்பின்
மனையில் ஓர் பெரு மணவிழா வந்து என மகிழ்வார்
** சினமுளார் நச்சுயிர்சேர் துன்புறுவர்

#297
நாளும் நாம் கொளும் துயர்க்கு எலாம் காரணம் நாடின்
மூளும் சீற்றத்தின் விளைவு அதாம் முனிவு அகம் உடையோர்
தேளும் பாம்பும் வெம் சின விலங்கினங்களும் நனி வாழ்ந்து
ஆளும் கானில் வாழ்பவர் எனத் தினம் அஞர் அடைவார்
** அறிவிலா வேலையாளைச் சினப்பது அறமன்று

#298
தழையும் செல்வத்துள் பிறந்து நல்லோர் அவை சார்ந்து
பிழை_இல் நூல் எலாம் உணர்ந்து நீ வைகலும் பிழைத்தாய்
இழையும் தீனராய்ப் பிறந்து கற்றிட வகை இல்லா
உழையர் செய் பிழைக்கா முனிந்தனை இது என் உளமே
** கடுஞ்சினம் கோடல் கல்அம்பைக் கடிதலாம்

#299
பைதலே எய்தல் ஆதிப் பரன் செயலாம் அப் பைதல்
செய்தவர்-தமைச் சினத்தல் சினவரா தன் மேல் கல்லைப்
பெய்தவன்-தனை விட்டு அக் கல் பிளந்திடப் பொரலும் கையால்
எய்தவன்-தனை விட்டு அம்பை முனிதலும் ஏய்க்குமாலோ
** விலங்கோ டறிவில் சிறார்பித்தர் கிழவர் வெகுள்வர்

#300
தெருள் அறு விலங்கினுக்கும் தெளிவு அறியாச் சிறார்க்கும்
மருளுறு பித்தருக்கும் மட விருத்தருக்கும் கோபம்
பொருள் அலால் அயலோர்க்கு இல்லை புகன்ற இ நால்வரேயோ
அருள் அறு சினம் மீக்கொள்வார் அனையருள் ஒருவரேயோ
** சினத்தால் வெற்றி பகைக்கே சேரும்

#301
பெற்ற தன் நாட்டை ஆளான் பிறர் நாட்டை ஆள்வான்-கொல்லோ
உற்ற தன் சீற்றம் மாற்றி உரத்தொடு தனைத்தான் வெல்லக்
கற்று அறியான் ஒன்னாராம் கனலிக்கு ஓர் வையே ஆவன்
கொற்றம் அவ் ஒல்லார் கொள்வார் கோபம் போல் தாபம் உண்டோ
** செய்வோரைத் திருத்தவே செய்கையிற் சினமுறல்

#302
உருமினை அஞ்சி யாரும் இகழுவர் அன்றி ஆய ஒலி தருகின்ற காரை முனிவரோ
தரு உறைகின்ற தீய முயிறுகள் அன்றி ஆய தருவை வெகுண்டு சீறல் தகுதியோ
அரு மறம் மீது பகைசெயல் அன்றி நாளும் அவை புரிகின்ற தீய அசடர்-பால்
பெரும் முனை கொண்டு காய்தல் அழகு அல என்று கோது_இல் பெரியவர் என்றும் ஆள்வர் கலரையே

@27 அதி. 26 – பொறாமை
** பேராசை யுள்ளோர் பெருங்கே டெய்துவர்

#303
மாங்கனி வாயில் கவ்வி மரத்திடை இருக்கும் மந்தி
பாங்கர் நீர் நிழலை வேறு ஓர் பழம் உணும் குரங்கு என்று எண்ணித்
தாங்க அரும் அவாவில் தாவிச் சலத்திடை இறந்தது ஒப்ப
நீங்க அரும் பொறாமையுள்ளோர் நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே
** பொய்இன்ப துன்பைப் பொறாமையான் கொள்வன்

#304
தாரணியில் எவரேனும் துயருறின் தன் தலையின் முடி தரித்தது ஒப்பாம்
சீர் அணியும் செல்வம் அவர் படைத்திடில் தன் தாய் மனை சேய் செத்தது ஒப்பாம்
காரணமே ஒன்றும் இன்றிச் சுகதுக்கம் தன் வலியால் கணத்துக்குள்ளே
பூரணமா ஆக்கிடுவோன் பொறாமையுளோன் அன்றி எவர் புவியின்-கண்ணே
** பொறாமையால் பயன்வாரா பொருந்தும் பெரும்பாவம்

#305
வவ்விடலே முதலாய வினையால் ஒவ்வோர் பயன் கைவந்து கூடும்
அவ் வினைகள் இயற்ற வெவ்வேறு இடம் கருவி சமையமும் வந்து அமைய வேண்டும்
எவ்விடத்தும் எப்பொழுதும் ஒழியாமல் எரி என்ன இதயம்-தன்னைக்
கவ்வி உண்ணும் அவ்வியத்தால் கடுகளவு பயன் உளதோ கருதுங்காலே
** பொறாமைத் துன்பத்தால் பொருந்திடா தப்பொருள்

#306
ஆண்டு எலாம் பிறர் ஆக்கம் நோக்கியே
மீண்டும்மீண்டும் நெட்டுயிர்ப்பு வீங்கினும்
தாண்டி அவர் தனம் தாழ்ந்து உன் கை மிசை
ஈண்டுச் சேருமோ இதயமே சொலாய்
** பொறாமைத் துன்பம் போகா தொருநாளும்

#307
மக்கள் பலர் உளார் மகி விசாலமாம்
பக்கம் அவர் தினம் படைப்பர் ஓர் நலம்
ஒக்க அது பொறாது உள்ளம் நைந்திடில்
துக்கம் ஓயுமோ சொல் என் நெஞ்சமே
** அவ்வியம் கொள்ளார் அறிவு மாண்புடையார்

#308
நிறையும் நீர்க்கு அசைவு இல்லை நீள் நிலத்து
அறையும் கல்வியில் அறிவின் மேன்மையில்
குறையுளார்க்கு அலால் கோது_இல் மாண்பினார்க்கு
இறையும் அவ்வியம் இல்லை இல்லையே
** தீமைக்கு வருந்துவோர்ச் சேரும் பெருந்துன்பம்

#309
அறம் உளார்கள் போல் அறிஞர் போல் புகழ்
பெற வருந்துதல் பெருமை ஆயினும்
புறம் உளார்கள் போல் பொருள் இலேம் என
உறும் அவ் உறுகணே உறுகண் ஈயுமே
** கொள்ளும் பொறாமையால் கூடும் புதுத்துன்பம்

#310
பூட்டும் அரிகண்டம் புனைந்து அழுங்குவார் போலும்
தோட்டியினைத் தானே சுமந்து கெடும் கயம் போலும்
வாட்டும் துயர்கள் பல வையம் மிசை இருக்கக்
கோட்டமுளோர் வேறு ஆகுலம் தமக்கு உண்டாக்குவரே

@28 அதி. 27 – கல்விச் செருக்கு
** கல்வியால் செருக்குறக் காரணம் இல்லை

#311
என்ன நீ வருந்திக் கவி பாடினும் எடுத்த கற்பனை முன்னோர்
சொன்னதே அலால் நூதனம் ஒன்று இலைத் தொன்மை நூல் பல ஆகும்
முன் அ நூல் எலாம் தந்தவன் நீ இலை முற்று உணர்ந்தனை அல்லை
உன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால் உள்ளமே செருக்கு என்னே
** எல்லாம் உணர்ந்தோம் என்று இறுமாத்தல் தீது

#312
தருக்கநூல் அறிவோர் வியாகரணநூல் தகவு அறியார் தேர்ந்தோர்
இருக்கு இலக்கியம் முதல் அறியார் பலர் இன் கவி செயக் கல்லார்
சுருக்கமாக ஓர் நூலினில் சிறிது அலால் துகள் அற எந்நூலும்
பெருக்கமா உணர்ந்தோர் இலைத் தருக்குறல் பேதைமை நீர் நெஞ்சே
** யார்க்கும் முழுதுணர இயலா; செருக்கலென்

#313
அத்திரங்கள் செய்வோர் தாம் எய்தல் தேரார்
ஆய்ந்து எய்ய அறிந்தோர் அம்பு இயற்றல் தேரார்
சித்திரங்கள் பொறிப்பவர் தாம் கருவி செய்யார்
திகழ் கருவி செய்பவர் சித்திரித்தல் கல்லார்
வத்திரங்கள் பூண்போர் நெய்து அறியார் இன்ன
வாய்மை போல் ஒன்று அறிவோர் ஒன்று கல்லார்
சத்தியமாச் சகலமும் நன்கு உணர்ந்தோர் போலத்
தருக்குற்றார் பெருக்கற்றார் திருக்குற்றாரே
** நூல்கற்றுச் செய்யுள் நுவல்வதால் செருக்கலென்

#314
பருத்தி விதைத்து எடுத்து நூல் ஆக்கி ஆடை
பண்ணி அளித்தால் உடுத்தல் பாரம் ஆமோ
திருத்தி மண்ணில் செந்நெல் விதைத்து அரிசி ஆக்கித்
தீம் சோறு அட்டு ஊட்டில் உண்ணச் செவ் வாய் நோமோ
அருத்தமொடும் இலக்கணங்கள் இலக்கியங்கள்
அரிய நூல் பல முன்னோர் அளித்ததாலே
கருத்தே அ நூல்கள் சில கற்று உணர்ந்து
கவி சொல்லல் வியப்பு அன்று கர்வம் என்னே
** வெயில்முன் கல்லார் விளக்குமின் மினியே

#315
இயலொடு தமிழ் மூன்றும் எள்ளளவும் தேராய்
அயர்வு அறு கலை ஞானம் அறுபதினோடு நான்கும்
பயனொடு தேர்வாரே பலர் உளர் அவர் முன் நீ
வெயிலின் முன் இடு தீபம் மின்மினியாம் நெஞ்சே
** உண்மை யுணராது செருக்கல் ஒவ்வாது

#316
எறும்பு தன் பிலத்தைத் தன்னை யாவும் என்று உனல் போல் அண்டத்து
உறும் புவனங்கள் எண்ணில் உவை முன்னம் நரரும் பாரும்
இறும்பு முன் அணுவோ வாழி எதிர் ஒரு துளியோ நில்லாது
அரும் படிவத்தின் மாக்கள் அகம் அகம் மிகல் தகாதால்

@29 அதி. 28 – அழகாற் செருக்கல்
** ஆடையணி நீக்கின் அழகொன்றும் இன்று

#317
எழில் உளேம் எனச் செருக்குறு நெஞ்சமே இழை துகில் நீத்து அங்கம்
கழுவிடாது உற நோக்குதி முகம்-தனைக் கஞ்சம்-தனில் நோக்கின்
எழு நிலத்திடை உன்னின் மிக்கார் உளர் என அறிவாய் ஈமத்து
அழியும் வெண்டலை உன் தலை போல் இருந்து அவண் உற்றது அறிவாயே
** உறுப்புடல் அழகெலாம் எலும்புமாய் ஒழியும்

#318
தோல் வாசம் துறந்து இறந்துகிடந்த அழகியைக் காணச் சுடலை சென்றோம்
கோல் போன்ற வெள் என்பின் குவை ஒன்றே கண்டனம் செம் குமுத வாயும்
நூல் போன்ற இடையும் அன நடையும் அணி தனமும் மதி நுதலும் வாய்ந்த
சேல் போன்ற விழியும் பால் மொழியும் காணாமல் உளம் திகைத்தோம் அன்னோ
** நாறுட லழகால் செருக்குறார் நல்லோர்

#319
நோக்கதனில் பீளை இரு செவிகளிலும் குறும்பி அனம் நுகர் வாய் எச்சில்
மூக்கதனில் சளி தலையில் பேன் வெயர்வை மலசலங்கள் மூளும் நாற்றம்
போக்க ஒரு நாள் கழுவாவிடில் அழுக்கு மிகத் திரண்டு புழுத்து நாறும்
ஆக்கம் இலாத் தேகம் இதை அழகு என்னச் செருக்கல் அறியாமையாமே
** உடலுள் அழுக்கை உன்னில் செருக்குறார்

#320
கட்புலன்-தனையே கவர்ந்திடு கவின் உளேம் என அனுதினம்
பெட்புறப் புவியில் செருக்குதல் பெருமை அன்று ஒளிர் பேர் உடல்
உட்புறத்தினையே திருப்பிடில் ஓங்கலாம் மலக் காடு சூழ்
மண் புறச் சுவர் தீட்டு சித்திரம் மானும் நம் எழில் நெஞ்சமே
** நயனிலான் உடலழகை நல்லோர் நயவார்

#321
மண்ணில் செய் பாவை மீது வயங்கு பொன் பூச்சோ தண் பூம்
கண்ணியை மாற்றில் சூடும் காட்சியோ பழம் பாண்டத்தில்
பண்ணிய கோலமோ நற்பண்பொடு ஞானம் கல்வி
புண்ணியம் ஏதும் இல்லான் பூண்ட பேர் எழில் உடம்பே

@30 அதி. 29 – செல்வச் செருக்கு
** அழுக்கோ டழிபொருளால் அகங்கொளல் வீணே

#322
மணிகள் பல வகைக் கல்லாம் பொன் முதல் உலோகம் மின்னும் மண்ணாங்கட்டி
துணி பட்டாடைகள் பருத்திநூல் பூச்சிக் குடர் நாயின் தோல் உரோமம்
அணி புழுகு கத்தூரி முதலிய பூனையின் மலம் பால் ஆ இரத்தம்
தணிவு_இல் தேன் வண்டு எச்சில் இவை செல்வம் எனச் செருக்கல் தகுமோ நெஞ்சே
** தேரின் மணியுங்கல் செருக்குறல் வீணே

#323
செம் கல் வெண் கல் கரும் கல்லை நவமணிகள் எனச் செல்வர் சேர்ப்பார் யாமும்
செங்கல் வெண்கல் கருங்கல்லைச் சேர்த்திட்டோம் இருவர் கல்லும் சீர்தூக்குங்கால்
நம் கல்லே இடை அதிகம் எங்கணும் உண்டு எதிர்ப்போரை நாசம் செய்யும்
பங்கமுறச் செல்வர் நம்மின் மிக்கோர் என்று அகங்கரிக்கும் பான்மை என்னே
** சுமை எருதுபோல் செல்வச் செருக்குறல் துரிசே

#324
இடையில் கோவணமும் இன்றி இங்கு உதித்தோம் அவ்வாறே
கடையில் வெறுங்கையோடும் கழிகுவம் நடுவில் சேரும்
உடைமையால் பெருமை என்னோ ஊர்க்கு எலாம் பொதி சுமக்கும்
விடை தருக்குற்றது என்ன வீண் செருக்குற்றாய் நெஞ்சே
** மாறிவரும் செல்வத்தால் செருக்குறல் வசையே

#325
சுழல் சகடக் கால் போலும் தோன்றியே அழி மின் போலும்
அழல் மன வேசை போலும் அரு நிதி மேவி நீங்கும்
பழமை போல் அதனை நம்பிப் பழியுறச் செருக்கல் மேக
நிழலினை நம்பிக் கைக் கொள் நெடும் குடை நீத்தல் ஒப்பே
** செல்லும்பேர்ச் செல்வத்தால் செருக்குறல் நெறியன்று

#326
தரித்திரம் தரித்திரம் என்னும் தாரணி
சிரித்திடச் செல்வமே செல்வம் என்னும் இச்
சரித்திரம் உணர்ந்துமே தரையில் பொன் எமக்கு
உரித்து எனச் செருக்குதல் உரன் அன்று உள்ளமே
** செருக்குவருங்கால் செல்வம் அழியும்

#327
நாசமாம் காலமே நண்ணும் முன் இறகு
ஈசலுக்கு எய்தலும் இரியும் முன்னமே
தேசது மிகுத்து ஒளிர் தீபம் போலவும்
நீசர்-தம் செருக்கினால் நிதி இழப்பரே
** செல்வம் அகன்றபின் செருக்கினர் நிலையென்

#328
செழித்திடும் நாளினில் செருக்குற்றாய்
கழித்து உனை மா நிதி கைநீங்கில்
பழித்திடும் உலகின் முன் பரிவு இன்றி
விழித்திடல் எப்படி வினை நெஞ்சே

@31 அதி. 30 – தீயரைச் சேராமை
** தீயவர் பலரும் தீயரைச் சேர்வர்

#329
செழு மலரிடை மது சிறை அளி நுகரும்
முழு விடமது பெறும் முனிவுடை அரவம்
பழுது அறும் அறநிலை பயிலுவர் சிலரே
வழு அயலவரிடம் மருவுவர் பலரே
** சாரினும் கீழ்கள் தம்நிலை மாறா

#330
கரி நிறம் உறும் வெளிறு உடை கரி அணுகின்
சொரி கரி கலை உறு சுசியினை உறுமோ
பெரியவர் குணநிலை பெறல் அரிது அறமே
இரி கலரொடு கலவுற உறும் இழிபே
** சேரிடத்தில் சிறப்பிழிபு யாரையும் சேரும்

#331
மனிதர் கோள் மருவுநர்-தமைக் கொண்டு ஓதுவர்
புனிதம்_இல் இடையின் வீழ் பொரு_இல் வாசத் தீம்
கனியையும் தள்ளுவர் கயவர்-தம்மைச் சேர்
இனிய நற்குணத்தரும் இகழ்ச்சி கொள்வரே
**இழிந்தாரைச் சேரின் இழிவென்றும் நீங்கா

#332
மண மனை சேர் மண மாலை மாண்புறும்
பிணவனத்து ஆர் இழிவு எய்தும் பெற்றியார்
கணமதில் சேர்ந்தவர் கனம் கொண்டு ஓங்குவர்
குணமிலார் இனம் உறல் குறை உண்டாக்குமே
** தாழ்ந்தோர் உயர்ந்தோர் எனும்பேர் சார்பாலுண்டாம்

#333
மண் இயல்பால் குணம் மாறும் தண் புனல்
கண்ணிய பொருள் மணம் கலந்து வீசுங்கால்
புண்ணியர் ஆதலும் புல்லர் ஆதலும்
நண்ணு இனத்து இயல்பு என நவிலல் உண்மையே
** நல்லார் பொல்லார் எனும்பேர் சார்பால் நண்ணும்

#334
பாரினில் பிறந்த போது எவரும் பண்பினார்
பூரியர் எனப் பெயர் பூண்டது இல்லையால்
சீரியர் என்னலும் தீயர் என்னலும்
சேர் இனத்து இயல்பினால் சேர்ந்த நாமமே
** கயவரைச் சார்வதால் கணக்கிலாத் தீமையாம்

#335
கயவரைச் சேர்ந்தவன் கலந்த போது அவர்
செயலினை எண்ணுவன் தினம் செலச்செல
மயல் மிகுந்து அவர் செயல் மகிழ்ந்து அனுட்டிப்பன்
இயவரைச் சேர்தல் போல் இல்லைத் தீமையே

@32 அதி. 31 – பிழை பொறுத்தல்
** நின்போற் பிறர் செய்யிற் சினப்பது நெறியோ

#336
எப் பிழைக்கா நீ பிறரைச் சினந்து அவர்க்கு இன்னா இயற்ற எண்ணினாயோ
அப் பிழை நீ செய்திலையோ உன்னைப் போல் அவர் பிழைக்கலாகாதோ மா
வெப்பம் உற நாண் இலையோ நீ ஒருவன் பிழை புரிய விண் வேந்தன் கை
யொப்பமுடன் அதிகாரம் பெற்றனையோ மனமே நீ உரைசெய்வாயே
** ஒப்பில்லாக் கடவுள் ஒருவனே பிழையிலான்

#337
பிழை இலான் கடவுள் அன்றி மக்களில் தப்பு இல்லாதார் பிறரும் உண்டோ
மழையினுமே அசனி உண்டு மதிக்கும் ஓர் மறு உண்டு மலர்க்கு முள்ளாம்
கழையினுமே சக்கை உண்டு கனியினும் தோல் கொட்டை உண்டு கதிக்கும் காம
விழைவினால் மறம் புரிதல் நரர்க்கு இயல்பு ஆதலின் அவரை வெறுக்கொண்ணாதே
** குற்றத்தைப் பொறுத்தல் அறிவோர் குணமே

#338
நாவையே கடித்தது எனப் பல் தகர்க்கும் பேர் உளரோ நடக்கும் வேளை
பூவையே பொருவு கழல் சருக்கியது என்று அதைக் களைவோர் புவியில் உண்டோ
காவை ஆர் உலகம் எனும் பேர் உடலின் அவயவம் போல் கலந்த சீவர்
தாவையே செய்யினும் மிக்கு அறிவுடையோர் கமைசெய்தல் தகுதியாமால்
** இகழ்ந்தார் தமக்கும் இனியவே இயற்றுக

#339
உனை ஒருவர் இகழ்ந்தனரேல் ஏதுக்கா இகழ்ந்தனர் என்று உன்னி உன்-பால்
தினை அளவு தப்பு உளதேல் அதை நீக்காய் தப்பு இன்றேல் சினமுறாதே
கனை கழையை வேம்பு என்னில் கழைக்கும் ஓர் குறை உண்டோ கல்லில் மோதித்
தனை உடைப்போர்க்கு உணவு தரும் தேங்காய் போல் எவர்க்கும் நன்மை-தனைச் செய் நெஞ்சே
** தீங்கு செய்வோர்க்கும் நன்மையே செய்க

#340
தீது ஒருவர் செய்தனர் என்று அதற்கு எதிராய் நீ அவர்க்கு ஓர் தீங்கு செய்யின்
சாது நீ அவர் தீயர் என்பதற்குக் கரி என்ன சக்கு இலாதார்
ஓத விடம் உண்ணின் விழியுடையாரும் உண்ணுவரோ உலப்பு_இல் செந்நெல்
சேதமுற அவைத்திடுவோர்க்கு உணவு ஆதல் போல் நலமே செய்வாய் நெஞ்சே
** தெய்வம் இரங்கல் நோக்கித் தீயவர்க்கு இரங்குக

#341
நல்லவர் தீயவர் என்னாது எவரையுமே புவி தாங்கும் நனி நீர் நல்கும்
செல் அருணன் ஒளி பரப்பும் கால் வீசும் அந்தரமும் சேரும் ஒப்பு ஒன்று
இல்லாதான் தீயவர்க்கா இரங்கி மனுவேடம் உற்றான் எனில் அன்னார்-பால்
செல்லாது உன் சினம் மனமே பொறுமையே பெருமை அன்றோ செப்புங்காலே
** பிழைபொறார் பிழையைப் பெருமானும் பொறான்

#342
இன்னல் எமக்கு இழைத்ததனால் வீடு இழந்து நரகு ஆழ்வார் என நினைந்து
பன்ன அரிய பெரியர் பிழை பொறுப்பர் பொறார்-தம் பிழையைப் பரமன் ஆற்றான்
முன் ஒருவன் செய்தனன் என்று அவற்கு இறப்பச் செயும் இடர் அ முறை இலான் சேய்
பன்னி தமரையும் சேரும் அவர் நமக்கு எப் பிழைசெய்தார் பகராய் நெஞ்சே
** அறிவுக்குறைவால் நல்லோர் அல்லோர்போல் தோன்றுவர்

#343
வெருட்சியுளோர்க்கு எங்கணும் பேய் உருத் தோன்றும் எழில் முகத்தை விகற்பம் ஆக்கித்
தெருட்சி_இல் கண்ணடி காட்டும் அவை போல் தீது இயற்றாரும் தீயர் போலப்
பொருள் சிதைவால் தோன்றுவர் தீது என அறமும் தோன்றும் அவர் புரி பிழைக்கு
மருட்சியில் பல் காரணங்கள் உளவாம் என்று உனிப் பொறுப்பர் மாண்பினாரே

@33 அதி. 32 – இனியசொற் கூறல்
** இசைநன்மை நண்பெலாம் தருவது இன்சொல்

#344
வட்ட உலகு எட்டும் இசை மட்டு அற நிரப்பும்
வெட்ட வரு துட்டரை விலக்கி வசமாக்கும்
நட்டம் இலை எள்தனையும் நட்டு நரர் எல்லாம்
இட்டமுறு கட்டு உதவும் இன்மொழியது அன்றோ
** எல்லாக் கேட்டையும் தருவ திழிசொல்

#345
இக் குவலயக்-கண் இழிவுக்கு இடமதாகும்
பக்கரொடு மக்கள் பகை புக்க வழிபண்ணும்
துக்கமும் விளைக்கும் ஒரு துக்கமும் விளைக்கும்
குக்கனை நிகர்க்கும் அவர் கக்கும் இழிகூற்றே
**நலம்பொலம் அவரவர் வாய்மொழி நவிலும்

#346
சந்தம் நிறை செப்பு இறைவை சாணம் உளது என்னக்
கந்தமது எவர்க்கும் நனி காட்டிவிடல் போலும்
நிந்தனை உளார் இனிய நீர்மையினர் என்ன
முந்து அவவர் வாய்மொழி மொழிந்துவிடும் அன்றோ
** இல்லாப் பெயரையும் இயற்றும் வாய்ச்சொல்

#347
நன்மை புரியார்களும் நயம் தவிர் கொடுஞ்சொல்
இன்மை எனின் அல்லவர் எனப் புகழ் படைப்பார்
தின்மை புரியார்களும் வழங்கும் உரை தீதேல்
புன்மையுறு தீயர் என எள்ளும் உயர் பூவே
** கடுஞ்சொற் கூறுவோர் கயவரே யாவர்

#348
வன்மொழி உரைக்கின் எதிர் வன்மொழி கிடைக்கும்
இன்மொழி உரைக்கின் வரும் இன்மொழி எமக்கும்
நன்மொழிகளே பல இருக்க நவிலாமல்
புன்மொழி உரைப்பவர்கள் பூரியர்கள் அன்றோ
** அறிவிற் பெரியோர் அனைவரையும் பணிவர்

#349
தே மலி சுவைக் கனி பல செறிந்து உயர்
கா மரம் வளைதல் போல் கலை உணர்ந்திடு
தூ மன மாட்சியோர் தொழுவர் யாரையும்
பாமரர் எவரையும் பணிந்திடார்களே
** இருக்கை இன்சொல் வரவேற்பால் எய்துவது அன்பு

#350
எதிர்சென்று முகமன் கூறி இருக்கையும் நல்கி உண்டே
அதிசயம் என வினாவி அன்பொடு முகம் மலர்ந்து
துதி புரிந்து உபசரிக்கும் தொழிலினால் செலவு ஒன்று இல்லை
அதிர் கடல் உலகுளோர் தம் அன்பு எலாம் வரவாம் மாதோ
** துன்பொழித் தின்பம் சுரக்கும் இன்சொல்

#351
உருமை மின்னினைத் தன்-பால் கொண்டு உதகம் மன் உயிர்க்கு நல்கும்
கரு முகில் எனக் கண்ணால் என் காணினும் கேட்பினும் சூழ்
பருவரல் ஏதிலார்க்குப் பயக்கும் வன்சொல்லை நீத்து
மருவிய நலம் கலந்த வசனமே பகர்வர் நல்லோர்
** உற்றிடத்து நல்லன உரைப்ப தின்சொல்

#352
நதி முதல் புகுவது எல்லாம் நன்கு அகட்டிடை அடக்கும்
அதிர் கடல் எனவும் ஈயார் அருத்த மஞ்சிகையே போலும்
வதி செவி நுழைவது எல்லாம் மனத்தினுள் அடக்கித் தக்க
ததி அறிந்து உரைப்பது அன்றிச் சகலர்க்கும் உரையார் மிக்கோர்

@34 அதி. 33 – பிறர்க்குத் தீங்கு செய்யாமை
** துன்புசெய்வானையே துன்பம் முதற்கொலும்

#353
விடதரம் பற்றி வேறொருவன் மேல் இடும்
அடலுளோன்-தன்னை முன் அது கடித்தல் போல்
இடர் பிறர்க்கு இழைத்திடும் இயவன்-தன்னை முன்
மிடலொடும் அவ் இடர் மேவிச் சாடுமே
** நற்பண்பு உள்ளாரையே மக்களென நவில்வர்

#354
படியின் மானிடர் மிகு பண்புளோர் அலால்
கொடியரை நரர் எனக் கூறல் பார் எலாம்
இடி எனக் கொலைத் தொழில் இயற்றும் தீ வெடிப்
பொடியினை மருந்து எனப் புகலல் ஒக்குமே
** இடர்செய்வான் துன்ப இடையினில் நைவன்

#355
உரவு நீர்க் கரும் கடல் உடுத்த பார் மிசைப்
பரர் வருந்திட இடர்பண்ணுவோன்-தனை
நரர் எலாம் பகைசெய்வர் நண்ணும் ஆயிரம்
அரவு சூழ்கின்ற ஓர் தேரை ஆவனே
** கெடுவான் கேடு நினைப்பான்

#356
கயலில் பாய் சிரல் கால் சிக்கிக்கொண்டு எழ
வயம் இலாது உயிர் மாய்கின்ற தன்மை போல்
அயலவர்க்கு அழிவாக ஓர் அந்தரம்
செய நினைத்தவர்க்கே வந்து சேருமே
** தீங்கு செய்வாரைக் காட்டிற்குச் செலுத்துதல் சிறப்பு

#357
புயகமதைத் தேள் புலியைப் பொல்லாத விலங்கை எலாம்
அயர்வாக அடித்து ஓட்டல் அவைகள் குணத்தால் அன்றோ
இயல்பு இன்றி எந்நாளும் ஏதிலார்க்கு இடர் இழைக்கும்
கயவனையே வைது அடித்துக் கான் ஓட்டல் நன்றாமே

@35 அதி. 34 – நெடுந்துயில்
** சிற்றுயிர் உணர்த்தியும் துயிலெழார் சிறப்பென்

#358
விடியலில் பறவை மிருகம் யாவும் முன் விரைந்து எழுந்து பல வினை செயும்
கடி மலர்ப் பொழில் கண்மலரும் ஆர்வமொடு கடல் எழுந்து கரை தாவிடும்
படியின் மன் உயிர் எலாம் எழுந்து தொழில் பல இயற்றிட எழாமலே
தடி எனத் துயிலுவோன் நரன்-கொல் ஒரு தாவரம்-கொல் அறியேம் அரோ
** பகலும் தூங்குவர் படிப்பிலா மூடர்

#359
தம் கருமங்கள் செய்யத் தனிப் பகல் போதாது என்ன
இங்கு அறிவுடையோர் தூங்கார் இரவினும் மூடர் துஞ்சக்
கங்குலும் போதாது என்னப் பகலும் கண்படுவர் யாவும்
புங்கமாத் தேர்ந்து வேறோர் புரை இலார் போலும் மாதோ
** கதிரவன் கணக்கால் காலன் வருவான்

#360
வான் உலாம் அருணன் என்னும் மக்கள் ஆயுளின் கணக்கன்
தான் எழு முன் எழாரைச் சகத்திரக் கரத்தால் தட்டும்
ஏன் என எழார் வாழ்நாளை எண் குறைத்து எழுதிக்கொள்வான்
ஆனது கண்டு காலன் அவரிடம் அணுகுவானே
** சிறு துயிலற்றுப் பெருந்துயில் ஏற்பதே சாவு

#361
உறங்குவது போலும் சாக்காடு என்ன உரைத்தார்
இறங்கல்_இல் சீர் வள்ளுவனார் போலும் எனல் மிகையே
நிறம் குலவு சிறுதுயில் அற்றேல் நெடிய துயிலை
மறம் குலவு மரணமே எனக் கூறல் வழக்கே

@36 அதி. 35 – பேருண்டி
** பேருண்டி நோய்பிணி பெருக்குந் தூதன்

#362
நனி நிழல் புனல் கொள் பைங்கூழ் நாசமாம் மிகவே உண்ணும்
இனிய மா மருந்தும் நஞ்சாம் இன்பமும் மிகில் துன்பு ஆகும்
பனி பிணி மடமை மந்தம் பழி எலாம் வம்-மின் என்னக்
கனிவொடும் அழைக்கும் தூதாம் கழிய பேருண்டி மாதோ
** அளவிலா உண்டியால் ஆற்ற லழியும்

#363
கொள் அரு நீரைக் கொண்ட குளம் கரைபுரண்டு முன்னம்
உள்ள நீரையும் இழக்கும் உண்மை போல் பேர் அகட்டின்
பள்ளம் மேடாக உண்ணும் பதம் உடல் வளத்தைப் போக்கும்
எள்ளல்_இல் சிற்றுணா வற்று உடல் எங்கும் இயங்குமாலோ
** பயன் மிகுந்தது பட்டினி யிருத்தல்

#364
பாரணம் இன்றிச் சில் நாள் பசித்திருந்தாலும் நன்றாம்
சீரணம் இன்றி உண்ணும் தீனி நோய் செயும் அதற்கு ஓர்
சூரணம் இலை மெய்த் தன்மைது உணாத் தன்மை ஏனைக்
காரண காரியங்கள் கண்டு உண்பார் அறிஞர் அம்மா
** பொருந்தும் உணவால் திருந்தும் அகமும்

#365
தக உணும் அனம் உண்டோனைத் தாங்குமால் வயிறு கீள
மிக உணும் அனத்தை உண்டோன் விறலொடு தாங்க வேண்டும்
அகம் உறும் அவனைப் பல்லோர் அனுதினம் சுமக்க வேண்டும்
இகம் உறும் அவனைப் பூமாது எவ்வணம் சுமப்பாள் அம்மா
** அற்றதறிந்து அளவூண் கொள்ளுதல் ஆக்கம்

#366
மாந்த அனம் அழிந்து தக்க மலசலம் கழிந்து ஊண் ஆவல்
சார்ந்த பின் உணும் சிற்றுண்டி சபலமாம் மீதூண் உண்டு
சோர்ந்திட அதைத் தான் தாங்கிச் சுமக்குதல் தன்னைத் தூக்க
நேர்ந்த மாவினைத் தான் தூக்கி நெஞ்சம் புண்ணாதல் போலும்
** அகட்டில் பல்லுணவு அடைப்போன் அழிவன்

#367
புட்களும் விலங்கும் ஒவ்வோர் இரையையே புசிக்கும் மாந்தர்
உட்கல் இலாது யாவும் உண்பர் அன்றியும் சற்றேனும்
வெட்கம் இல்லாத கட்டின் மிகமிக அடைப்பர் உப்பு ஆர்
மண்கலம் என அன்னார் மெய் மட்கலாம் வட்கலாமால்

@37 அதி. 36 – தற்புகழ்
** பிறரால் புகழப் பெறுவதே பெருமை

#368
தன் துதி பிற சொலத் தகும் அன்னோர் புகழ்
இன்றியே தன்னைத்தான் ஏத்தல் ஊர்தியில்
ஒன்றும் மா பூட்டிடாது ஒருவன் உள்ளுறூஉம்
மன்றவே நடத்துவான் வலித்தல் மானுமே
** நேரில் புகழ்வது நினைக்கில் வைவாம்

#369
ஒருவன் காணாவிடத்து உவனை மெச்சலே
தருமமாம் முகத்துதி சாற்றல் வைதலாம்
பெரும் முறை ஈது எனில் பிறர் முன் தன்னைத்தான்
பொருள் என மெச்சல் போல் புன்மை வேறு உண்டோ
** பல்லக்கைத் தான் சுமக்கும் பண்பே தற்புகழ்தல்

#370
தன் துதி பிறர் சொலத் தகும் தன் வாயினால்
ஒன்று உறத் தன் துதி ஓதல் ஊர்ந்து தான்
சென்றிடும் ஊர்தியைச் சிவிகையார் இன்றித்
துன்று தன் தோளினால் சுமத்தல் போலுமே
** மழைப்பயிர் வளம்போல் மன்னும் நற்புகழ்

#371
நீரினால் பயிர் வளம் நிலைத்தல் போல் குணச்
சீரினால் புகழ்ப் பயிர் செழிக்க வேண்டும் நல்
பேர் இலான் தற்புகழ் பிடித்து இழுத்து அரு
மாரி_இல் பயிரினை வளர்த்தல் மானுமே
** நல்லொ ழுக்கமே நற்புகழ் பெறும்வழி

#372
தற்புகழ்வோன்-தனைப் பழிக்கும் தாரணி
சொல் புகழ் விரும்பிடான் தனைத் துதித்திடும்
நற்புகழ் பெறு வழி நல் நடக்கையோடு
அற்பமும் தற்புகழாமை ஆகுமே
** தன்னை நெடிதாக்கத் தான் தூக்கல் தற்புகழ்தல்

#373
துதி பெற ஆதரம் மிகலாலே தூயவர் ஆகுவர் கலை தேறி
மதியினர் ஆகுவர் அரி போல வலியினர் ஆகுவரேயேனும்
அதி துதி பிறர் சொலின் அழகு ஆகும் அமைவொடு தன் துதி தான் கூறல்
கதி தனது உடல் உயர்வுறவே தன் கைகொடு தூக்கிட உனல் போலும்
** தன்னைத்தான் புகழில் இகழ்வே சாரும்

#374
சடமதைக் கழுவ உன்னிச் சகதியில் தோய்தல் போலும்
சுடரினைத் தூண்ட வேண்டி ஊதியே தொலைத்தல் போலும்
மடமையால் தன்னைத்தானே புகழுவோன் வசைகள் எல்லாம்
புடவியே எடுத்துரைக்கப் பூணுவன் நிந்தை அம்மா
** தற்புகழ்வோர் துரும்புபோல் தாந்திரிந் துழல்வர்

#375
குல மணி வெளியுறாது ஆழ் குரவையூடு ஒளித்திருக்கும்
சலம் மிசை எவரும் காணச் சஞ்சரித்திடும் துரும்பு
கலம் என மானம் பூண்ட கலைவலோர் அடங்கி நிற்பர்
புலன்_இல் சீத்தையர் தமைத்தாம் புகழ்ந்து எங்கும் திரிவர் மாதோ

@38 அதி. 37 – புகழும் இகழும் மதியாமை
** உலகோர் புகழிகழ் உள்ளவா றாகா

#376
தன் துணை இலானே உள்ளத் தன்மையை அறிவான் பூமி
இன்று ஒருவனைத் துதிக்கும் ஏசிடும் அவனைப் பின்னும்
நன்றினைத் தீது என்று உன்னும் தீதை நன்று என்ன உன்னும்
பொன்றும் மானிடர் புகழ்ச்சி புனலின் மேல் எழுத்துக்கு ஒப்பே
** பிறர் சொலால் துன்புறுத்தும் நெஞ்சம் நஞ்சொக்கும்

#377
வசையும் மீக்கூற்றும் மற்றோர் வாய் வரு வாயு அல்லால்
பசை உளதோ அக் காற்றைப் பாரில் ஓர் பொருள் என்று எண்ணி
இசையினால் மகிழ்வும் பேசும் இகழ்வினால் துயரும் உற்று
நசையினால் கொல்லும் நெஞ்சம் நஞ்சமே ஒக்கும் மாதோ
** நாய்கழுதை புள்ளொலிபோல் நாடிடுக கொடுஞ்சொல்லை

#378
சுணங்கன் ஓர்பால் குரைக்கும் சூழ் கரம் கத்தும் ஓர்பால்
பிணங்கியே புள் ஒலிக்கும் பெரும் பறை ஓர்பால் ஆர்க்கும்
இணங்கி இவ் ஒலிகள் எல்லாம் ஏற்கின்ற செவி ஓர் தீயன்
குணம் கெடக் கூறும் வன்சொல் கொண்டிடில் குறை என் நெஞ்சே
** தொழும் அருள் இலார்புகழ் துன்பமேற் பூச்சே

#379
பகவனது அருளும் நெஞ்சும் பழிச்சலும் நிலையாம் தன்னை
அகம் முனிந்து அனல் போல் தீக்க அறம் என்பது ஒருபால் சீறச்
சகம் எலாம் புகழ்தல் மெய் மேல் சைத்திய உபசாரங்கள்
சுகம் இலாக் கொடிய தாபச் சுரத்தினார்க்கு இயற்றல் போலும்
** குணங்கொள்ளிற் குறைவிலாப் புகழ்கை கூடும்

#380
மங்கல்_இல் சீர்த்தி வேட்டாய் மடம் சினம் உலோபம் மோகம்
அங்கதம் முதல் யாவிற்கும் விடைகொடுத்து அறிவு அன்பு ஈகை
பங்கம்_இல் குணங்கள் யாவும் வாழும் ஓர் பதி நீ ஆயின்
சிங்கல்_இல் புகழ் கொள்வாய் உன் சிரத்தின் மேல் ஆணை நெஞ்சே
** உள்ளும் புறமும் ஒவ்வாச்சொல் உண்மையன்று

#381
அத்தி சூழ் உலகில் சில்லோர் அகத்து ஒன்றும் வாக்கில் ஒன்றும்
வைத்து இதம் சொல்லால் யாவும் வனச் செவி ஏற்பது அன்றிச்
சத்தியம் எனக் கொண்டு ஏகல் சக்கினை மூடி நீண்ட
பித்திகை ஏறிச் செல்லும் பேதைமை நிகர்க்கும் மாதோ
** பகைவர்சொல் ஆய்வால் பயன்பெரி துண்டாம்

#382
தன்னைத் தன் குணத் தன்மையைத் தேரவே
உன்னுகின்றவன் ஓங்கிய நட்பினோர்
நல் நயச் சொல் நம்பாமல் நள்ளார் தினம்
பன்னும் மாற்றங்கள் நம்பில் பயன் அரோ

@39 அதி.38 – கைம்மாறு கருதா உதவி
** ஊண்மனை மருந் தின்பம் உறவாதல் உதவி

#383
அனமிலார்க்கு அனமாய் வாழ அகமிலார்க்கு அகமாய்த் துன்ப
மனமுளார்க்கு உவப்பாய் நோயின் வருந்துவோர்க்கு அரு மருந்தாய்த்
தனமிலார்க்கு அரும் பொன்னாய் நற்றாய் தந்தையிலார்க்கு அன்னாராய்
இனமிலார்க்கு இனமாய் யார்க்கும் யாவுமாய் இசைதல் அன்பே
** ஏழைகட்கு உதவாது இருப்பது இழுக்கு

#384
அருந்தவே கூழும் பூண ஆடையும் வீடும் இன்றி
வருந்துவோர் எண்ணிலார் நம் மருங்குளார் என அறிந்தும்
விருந்திடாய் மணி மாடத்து மேவி நீ ஒருவன் வாழப்
பொருந்தினாய் மனமே மக்கள்போலி நீ விலங்கு ஆனாயே
** ஊண் உடையின் மிச்சமெலாம் உதவுவோர் வீடடைவர்

#385
ஏவல்செய்வோர்க்குக் கூலி இடைத் துகில் உணவாம் யாம் ஓர்
காவலன் எனினும் சோறு கலை அன்றி ஒன்றும் காணோம்
ஆவலாய்ப் பொருளை ஈட்டி அயலவர்க்காச் சுமந்தோம்
ஈவதை மேற்கொண்டேமேல் இணை_இல் வீடு அடைவோம் நெஞ்சே
** கையேந்தும் ஏழைபோல் கடவுளும் வருவன்

#386
சாந்தம் ஆர் வறியர் போலத் தற்பரன் வருவான் தா என்று
ஏந்து கை வீடு கொள் என்று ஏந்து கையாம் அக் கையில்
ஈந்த பொன் விலை போல் வீட்டுக்கு இட்ட பொன் ஆம் அன்னாரைக்
காய்ந்து இலை என்போர் வேண்டோம் கதி என்பார் போலும் மாதோ
** ஈவோர்க் கின்பும் ஈயார்க்குத்துன்பும் ஈவர் இரப்போர்

#387
இரவலர்-தம்மை எள்ளும் ஏழைகாள் இயம்பக் கேளீர்
நரகை மோக்கத்தை விற்க நண்ணிய வணிகர் அன்னார்
பரகதி அவரைத் தாங்கும் பண்பினார்க்கு ஈவர் அள்ளல்
கரவுளார்க்கு ஈவர் என்னின் அவர் கதை கழறல் என்னே
** புகழும் நாடாது செய்வதே புண்ணியம்

#388
பிறர் புகழினைக் கைம்மாற்றைப் பேணியே உதவிசெய்வோர்
அறமுளார் அல்லர் நித்தன் அருட்குமே அருகர் அல்லர்
திற வலக்கரம் செய் நன்றைத் திகழ் இடக்கரம் காணாமல்
வறியர் பாத்திரம் அறிந்து வழங்குவோர் மாட்சியோரே
** உற்றிடத் துதவி உலகினும் பெரிது

#389
மக்கள்-தம் பொறையைத் தாங்கும் மகிக்கும் அன்னாரைக் காக்க
மிக்க நீர் பொழியாநின்ற விண் முகிலினுக்கும் செய்யத்
தக்க ஓர் எதிர்நன்று உண்டோ சமயத்து ஓர் பயனும் வேண்டாது
ஒக்கவே செய்த நன்றி உலகினும் பெரிதாம் மாதோ
** உயிரும் ஈந்து பிறர்க்கு உதவுவர் நல்லோர்

#390
மன்னிய கனி காய் நீழல் மற்று எலாம் உதவிப் பின்னும்
தன்னையும் உதவாநின்ற தரு எனத் தம் கை ஆர்ந்த
பொன் எலாம் உதவிப் பின்னும் பூட்சியால் உழைத்திட்டேனும்
இன் உயிர் உதவியேனும் இடுக்கண் தீர்ப்பார் நல்லோரே
** பகைவர்க்குச் செய்யும் உதவிக்குப் பேரின்பம் பயன்

#391
நள்ளுநர்-தமக்கும் என்றும் நன்று எமக்கு இயற்றுவோர்க்கும்
உள் உவந்து இயற்றுகின்ற உதவிதான் அரியது அன்று
புள்ளுவம் இழைக்காநின்ற பொருந்தலர்க்கு ஆற்றும் நன்றி
விள்ளும் வீட்டு இன்பம்-தன்னை விளைக்கின்ற வித்தாம் நெஞ்சே
** அளவிலார் உதவியால் ஆவி வாழும்

#392
ஊட்டி நீர் கறி உடை பணி விறகு இல் உரிய யாவையும் நாம் பெறுவான் பல்
நாட்டில் காட்டில் பொன் சுரங்கத்தில் கடலின் அகத்தில் எண்ணிறந்தவர் நமக்கு உழைப்பார்
சூட்டி வைகலும் ஆயிரம் பேர்-தம் துணை இலாது உயிர் உயல் நமக்கு அரிதாம்
ஆட்டி இத்தனை பேர் பணிகொளும் நாம் அன்பு இலாது இருப்பது தகாது உளமே
** பிறர்க்குள்ளன நமக்கென்று உதவுவோர் பேரன்பர்

#393
சீவ அன்பு சுகுணங்களின் முதலாம் தீது_இல் அன்பையுடையோர் பிறர் துயர் தமது
ஆவது என்ன அயர்வார் பிறர் சுகமும் தம்மது என்ன மகிழ்வார் தினம் வணிகர்
மேவலோடு கொளுவோர் வரவு உன்னும் விதம் எனத் தம சகாயமது உறவே
யாவர் சார்வர் என ஆசையின் நோக்கி ஏன்றமட்டும் நலமே புரிவாரால்
** அன்பின்றேல் பேரின்பம் அடையார் யாரும்

#394
எவ் வருணர் எச் சமயர் எப் பதியர் எத் தொழிலர் எனினும் நாணோடு
அவ்வவர்கள் எவ்வம் உரையா முனம் உணர்ந்து உதவல் அன்பின் நிலையாம்
இவ் அரிய அன்புடைமை இன்றி நிருவாணம் உற எண்ணி விழைதல்
பௌவ உலகத்து உருள்_இல் தேரினை நடாத்த உனு பான்மை நிகரால்
** துன்பந் துடைப்போர் கலைதேர் தூயோராவர்

#395
கலை தேர் கழகமோடு அனம் நீர் தரும் மனை கயம் மா மதகுகள் வழி சாலை
நிலை ஆலயம் நலியினர் வாழிடம் முதல் நிருமாணமது உற நெறி மேவி
உலைவால் வருபவர் துயரே கெட அவர் உளமானது மகிழ்வொடு தேறக்
கலை ஊண் அகம் முதல் இனிது ஈகுவர் வளர் கலையோர் நிலையுறு தலையோரே
** ஆண்டவன் அருள் பொருள் அனைவர்க்கும் பொதுவே

#396
எல்லோரும் கொளவே பரமன் எண்_இல் பொருள் ஈந்தான்
சில்லோர் யாவும் வவ்வி ஒளிக்குபு தீமைகள் செய்தலினால்
பல்லோர் இல்லோராய்ப் பசிப்பிணி பாய்ந்து உளம் நைவார்கள்
சொல்லோர் நல்லோர் தாம் இல்லோரைக் கைதூக்கி அளிப்பாரால்
** உளமுவந் தீபவை உயிர்க்குறுதி யாகும்

#397
துய்க்கும் பொருள்களுமே நமது அல துய்த்தல் இல்லாது சும்மா
வைக்கும் பொருள்களுமே நமது அல மாண்ட பின் கூட வரா
எய்க்கும் வறுமையினார்க்கு அனுதினம் ஈயும் பொருள் நமது
கைக்குள் உறு பொருளாம் இதனைக் கண்டு உணராய் மனமே
** பெருந்துன்புற்றும் பெரியோர் பிறர்நோய் ஒழிப்பார்

#398
நூல் நுழைந்த நுவல் அரும் சீலர் தம்-
பால் நுழைந்த படர் மதியார் பிறர்
கால் நுழைந்த கடுவும் தம் கண்ணில் வை
வேல் நுழைந்து என முன்னி மிறைப்பரே
** பிறர்துயர் போக்கிப் பேணுக புகழுடல்

#399
புறம் வருந்திடப் பூத உடம்பினை
மற உடம்பை வளர்ப்பர் அறிவிலார்
உற இடும்பை உறா வண்ணம் ஈந்து நல்
அற உடம்பை வளர்ப்பர் அறிஞரே
** தேடிநல் உதவிசெய்வோர் பெரியோர்

#400
ஓடி எங்கும் உலரும் பைங்கூழ்களை
நாடி மை முகில் நல் மழை பெய்தல் போல்
வாடி நையும் வறிஞர் இருக்கையைத்
தேடி மேலவர் செய்வர் உதவியே
** இரந்தும் ஏழைகளுக்கு ஈவர் நல்லோர்

#401
காரிடத்து இரந்தேனும் கயம் நதி
நீரினைப் பணை எங்கும் நிறைத்தல் போல்
யாரிடத்து இரந்தேனும் அறமுளார்
பாரிடத்துப் பகுப்பர் வறிஞர்க்கே
** ஆல்போல் பிறர்க்கு நன்மை ஆற்றுவர் நல்லோர்

#402
சாடு வெம் கோடையைத் தலையில் தாங்கியும்
மாடுளோர்க்கு அரு நிழல் வழங்கும் ஆல் எனக்
கேடு தம்-பால் மிகக் கிளைக்கினும் குணப்
பீடுளோர் நன்மையே பிறர்க்குச் செய்வரால்
** பிறர்க்குதவி இன்பம் பெறுவர் மேலோர்

#403
இதம் இலா உலோபர் தம் பொருளை எண்ணியே
மதமொடு நாள்-தொறும் மகிழ்வர் மேலவர்
பதவி தீர் மிடியர்க்குப் பரிவின் தாம் செயும்
உதவியை உனும்-தொறும் உளம் களிப்பரே
** பிறர்க்குதவி செய்வோர் பேரின்பம் பெறுவர்

#404
காமமே இன்பங்கள் கணத்தில் நீங்கிப் பின்
தீமையே விளைத்திடும் பிறர்க்குச் செய்கின்ற
சேம நல் உதவியால் சேரும் இன்பம்தான்
நேம வீட்டு இன்பு என நிகரும் மற்று அதே

@40 அதி. 39 – பொருளாசை யொழித்தல்
** தன்பெயர் எழுதாப்பொருள் தனதெனல் எங்ஙனம்

#405
என் பொருள் என் பொருள் என்று சீவன்விடும் மனமே ஒன்று இயம்பக் கேளாய்
உன் பொருளானால் அதன் மேல் உன் நாமம் வரைந்துளதோ உன்றனோடு
முன் பிறந்து வளர்ந்தது-கொல் இனி உனை விட்டு அகலாதோ முதிர்ந்து நீ தான்
பின்பு இறக்கும் போது அதுவும் கூட இறந்திடும்-கொல்லோ பேசுவாயே
** துன்பெலாம் பெருக்குபொருள் தூயபொருள் ஆகா

#406
ஒப்பு அரு நற்குணத்தவர்க்கும் கொலை காமம் கள் களவை உபதேசிக்கும்
அப்பனாய் நட்பினர்க்குள் பகை விளைக்கும் சத்துருவாய் அகிலத்து உற்ற
செப்ப அரிய துயர்க்கு எல்லாம் மாதாவாய்த் தீவினைக்கு ஓர் செவிலி ஆய
இப் பொருளை நற்பொருள் என்று எப்படி நீ ஒப்புகின்றாய் ஏழை நெஞ்சே
** உடற்பயனை ஒழிக்கும் பொருள் உயர்பொருளாகா

#407
நோக்கு இருந்தும் அந்தகராக் காது இருந்தும் செவிடரா நோய் இல்லாத
வாக்கு இருந்தும் மூகையரா மதி இருந்தும் இல்லாரா வளரும் கை கால்
போக்கு இருந்தும் முடவரா உயிர் இருந்தும் இல்லாத பூட்சியாரா
ஆக்கும் இந்தத் தனமதனை ஆக்கம் என நினைத்தனை நீ அகக்குரங்கே
** செல்வர்பால் கூற்றுவன் சேர்வது இன்றோ

#408
நிறை செல்வம் உடையாரை நோய் துன்பு அணுகாவோ நினைத்தது எல்லாம்
குறை இன்றிப் பெறுவரோ புவிக்கு அரசு செலுத்துவரோ குறித்த ஆயுள்
பிறை என்ன வளருமோ இயமன் வர அஞ்சுவனோ பேரின்பத்துக்கு
உறையுளோ அவர் கிரகம் இவை எலாம் மனமே நீ உன்னுவாயே
** களவுங் கூத்தும்போல் அழியும் வாழ்வு

#409
கனவதனில் கண்ட பொருள் செலவுக்கு ஆமோ குனிக்கும் கங்குல் கூத்தில்
இனர் அமைச்சர் என வேடம் புனைந்தவர்-தம் ஆணை எங்கும் ஏகுமோ விண்
கனம் மின் போல் ஒழியும் அந்தப் புவி வாழ்வு நிலை என்னக் கருதிக் கோடி
நினைவுற்றாய் உடல் வீழின் என் செய்வாய் அறிவு இல்லா நெஞ்சக் கல்லே
** வெள்ளி பொன் பொருளெலாம் வெறுமண் குவியலே

#410
பஞ்சபூதங்களை விண் தாரகையைத் தண் மதியைப் பானுத்-தன்னைக்
கொஞ்சமும் நம் பொருள் என உன்னாமல் வெள்ளி பொன் எனும் மண் குப்பை-தன்னைத்
தஞ்சமாம் பொருள்கள் என நினைத்து அதன் மேல் ஆசையுற்றுத் தயங்குகின்றாய்
நெஞ்சமே உனைப் போலும் அறிவீனர் தேடினும் இ நிலத்தில் உண்டோ
** எல்லா மக்களும் சுற்றம் இவ்வுலகம் வீடே

#411
பூதலம் நம் இல்லம் வான் மேல் பந்தர் சசி கதிர் மீன் பொன் தீபங்கள்
சீத நீர்க் கடல் விருட்சாதி கணம் பூம் பொழில் உலகின் செல்வம் எல்லாம்
வீதமா நமது மக்கள் யாவரும் நம் சுற்றம் என வியந்து உன்னாமல்
பேதம்செய்து உழல்கின்றாய் நெஞ்சமே உனைப் போலும் பித்தர் உண்டோ
** செல்வம் ஐம்பூதம் ஆண்டான் திருத்தந்தை

#412
பூதமதின் ஒன்று நமைத் தாங்கும் அன்னை ஒன்று நாம் புசிக்கும் உண்டி
மா தரையில் ஒன்று உரிய சமையலாள் ஒன்று நம் மெய் வளச் சாந்தாற்றி
பேதம் இன்றி மற்றொன்று நாம் ஊரும் வாகனமாம் பின்னும் ஆதி
நாதனே தந்தை எனில் செல்வம் இது போலும் உண்டோ நவிலாய் நெஞ்சே
** ஊண் உடைமேல் உள்ளபொருள் ஒல்லாச் சுமை மயக்கே

#413
மண்டு பெரும் தனம் இருந்தும் கண்டு மகிழுவது அல்லால் மயல் போல் முற்றும்
உண்டுவிட ஒண்ணுமோ நினைவிற்கும் பஞ்சமோ உலகம்-தன்னில்
கண்ட பொருள் அத்தனையும் எமது செல்வர் அப் பொருளைக் காத்து எமக்குத்
தொண்டுசெய்வோர் என உன்னி மகிழ்வுற்றால் தலை போமோ சொல்லாய் நெஞ்சே
** நம்மைவிட் டகல்பொருளை நல்லார்க்குக் கொடுத்தல் நலம்

#414
எத்தனை பேர் கையில் முன்னம் இப் பொருள்தான் இருந்தது அவர் எல்லாம் தத்தம்
அத்தம் என நம்பினார் அவர்களை விட்டு அகன்று உன் கை அமர்ந்தது இன்னும்
சத்தம் இன்றி உனை மோசம்செய்து அனந்தம் பேர் கரத்தில் சாரும் சொன்னேன்
சித்தமே அது செல்லும் முன் நீ சற்பாத்திரத்தில் செலவிடாயே
** செல்வமெனப் பெயரிடலால் சிலர் வறுமைப் பேர்பெற்றார்

#415
கதிரவனால் ஒளியுறும் பல் வகைக் கல்லை மணி என்றும் காமர் மண்ணை
நிதி வெள்ளி உலோகம் என்றும் பெயரிட்டும் விலையிட்டும் நிகழ் அ மண்ணால்
சதியான காசு பணம் எனச் செய்தும் தரையின் மிடி-தனை அமைத்தோர்
மதி இலா நரர் அன்றிக் கடவுளோ சொல்லுவாய் மருள் சேர் நெஞ்சே
** தேவைக்குமேல் செல்வமெலாம் சேர்ப்ப தெதன்பொருட்டு

#416
தரை எலாம் நமது எனினும் இருப்பிடம் ஓர் முழமே நல் தானியங்கள்
வரை என்னக் குவிந்துகிடந்தாலும் உண்பது அரை நாழி வளர் அவாவால்
திரை கடல் எலாம் பருக உன்னும் நாய் என நமக்குத் தேவையில்லாக்
கரை_இல் நிதி காணி தானியங்கள் நீ வேட்டது என்ன கருத்தே சொல்லாய்
** மிகுபொருள் படைத்தோர்க்குத் துன்பம் மிகுமே

#417
பொலம் மிக உள்ளார்க்கு உணவின் சுவை இன்று பசி இன்று புசிக்கும் அன்னம்
அலமாய் அறாது ஓயாக் கவலை பிணி பிடகர் பலர் அருகில் வேண்டும்
பலர் உடலைத் தாங்கினுமோ சுமக்க அரிது ஊர்ப் பகை பயம் இப் பையுள் எல்லாம்
இலர் உறுகணாளர் எனில் செல்வர் எவர் மிடியர் எவர் இயம்பாய் நெஞ்சே
** பெற்றவை கொண்டு மனநிறைதல் பேரின்பம்

#418
பறவையும் விலங்கும் தீனி பசித்த பின் தேடும் நாளைக்
குறை எனுங் கவலை இல்லை உணவு இன்றி இறந்தது இல்லை
வறியர் எம்மில் பல்லோர் இவ் வையகத்து உளர் தேவு ஈந்த
சிறிதுமே பெரிது என்று எண்ணிச் சிந்தையே மகிழ்ந்துகொள்ளே

@41 அதி. 40 – யாக்கை நிலையாமை
** பொழுதுநாள் ஆண்டெனப் போகும் வாழ்நாள்

#419
நெருநலோ அகன்றது இன்று விடிந்து பகல் ஆயிற்று நிமிடம்-தன்னில்
அருணனே அத்தமிப்பன் நிசி வரும் பின்போ மறுநாளாம் இவ் வண்ணம்
ஒரு நாளாப் பல நாளாத் திங்களா ஆண்டுகளா உருவுகொண்டு இங்கு
அரு நாளாம் ஆயுள் நாள் கழிவதனை உணராயோ அவல நெஞ்சே
** மறைந்த கூற்றை மனங்கொண்டு வாழ்க

#420
வையால் செய் புணை நம்பி அனல் ஆழி கடக்க உன்னும் மதி இலார் போல்
பொய்யால் செய் மெய் நம்பி ஏதேதோ நினைவுற்றாய் புரை சேர் நெஞ்சே
பைய ஓர் புள் பிடிக்கக் ககனம் மிசை வட்டமிடும் பருந்து போல
ஐயோ கூற்று உனைப் பிடிக்க அற்றம் பார்த்து ஒளித்துநின்றது அறிகிலாயோ
** மலமிகும் உடலை மதிப்பது மயக்கே

#421
தினமும் விரேசனம் கொளினும் ஓயாமல் மலமாரி திரளாப் பெய்யும்
கனம் போலும் தேகம் இதைப் பிரித்து நோக்கிடின் மலம் நீர் கசியும் செந்நீர்
இன மாலை தோல் என்பு தசை நரம்பு குடர் அன்றி இனி வேறு உண்டோ
மனமே நீ இதையும் ஒரு பொருள் என்ன உன்ன என்ன மருளுற்றாயே
** உயிர்நீங்கின் மக்களுடல் ஒன்றுக்கும் பயனாகா

#422
மாடு ஆடு விலங்கு இறப்பின் தசை மயிர் தோல் கொம்பு உதவும் மண்கலம்தான்
ஓடாக உடையின் ஒன்றுக்கு உதவும் வீழ் மரம் கல்லும் உபயோகம்தான்
வீடானது இடியின் மேல் பொருள் உதவும் காடு அழியின் விறகாம் மாயக்
கூடாகும் தேகம் இது வீழின் எதற்கு உதவும் நீ கூறாய் நெஞ்சே
** மரஞ்செடிக்குச் சொல்காலம் மக்களுடற் கின்றாம்

#423
காடு சேர் மரம் செடி பார்த்து இத்தனை நாள் நிற்கும் எனக் கணிக்கலாம் சீர்
நாடு நீர்த்தடம் நோக்கி இத்தனை நாள் புனல் என்ன நவிலலாம் ஓர்
வீடுதான் இத்தனை நாள் நிற்கும் என விளம்பலாம் மெய் என்னும் பொய்க்
கூடுதான் இத்தனை நாள் நிற்கும் எனப் புவியில் எவர் கூறற்பாலார்
** நம்முயிர் கொள்ளக் காலம் நாடிடான் நமனே

#424
நெல் அறுக்க ஓர் காலம் மலர் கொய்ய ஓர் காலம் நெடிய பாரக்
கல் அறுக்க ஓர் காலம் மரம் அறுக்க ஓர் காலக் கணிதம் உண்டு
வல் அரக்கன் அனைய நமன் நினைத்த போது எல்லாம் நம் வாழ்நாள் என்னும்
புல் அறுக்க வருவன் எனில் நெஞ்சமே மற்று இனி யாம் புகல்வது என்னே
** யாக்கை இறப்பதற்கு எல்லையில்லை

#425
முற்றிய பின் கனி உதிரும் பழுப்புற்றுத் தழை உதிரும் முழுதுமே நெய்
வற்றிய பின் விளக்கு அவியும் என்ன ஓர் திடம் உண்டு மக்கள் காயம்
பற்றிய அக் கருப்பத்தோ பிறக்கும் போதோ பாலப் பருவத்தோ மூப்
புற்ற பின்போ வீழ்வது என நிலை இன்றேல் இதன் பெருமை உரைப்பது என்னே
** இறப்பகற்ற அறியார்செய் வியப்பால் என்பயன்

#426
புகைவண்டி ஊர்ந்து உலகை நொடிக்குள்ளே சுற்றுவோம் புகைக்கூண்டு ஏறிக்
ககனம் மிசைப் பறவை எனப் பறப்போம் ஓர் புகைக்கலத்தால் கடல் கடப்போம்
வகையாய் மின்னஞ்சலினால் எத்திசை உள்ளாரோடும் வார்த்தை சொல்வோம்
மிகையான புதுமை செய்வோம் மரணமதை விலக்க அறியோம் வியப்பு ஈது அன்றோ
** ஆக்கை மாளுநாட் கடையாள மறியோம்

#427
அண்டாண்டங்களின் தூர நிலை அளவு கூறுவோம் அருக்கன் திங்கட்கு
உண்டாகும் கிராணமதை முன்சொலுவோம் கடிகாரத்து உதவிகொண்டு
தண்டாத காலமதை அளவிடுவோம் இன்னும் மிகு சமர்த்தும் செய்வோம்
கொண்டாடும் தேகம் இது வீழ் காலம் அறிவதற்கு ஓர் குறிப்பு இன்று அம்மா
** உலகியற் பொருளெலாம் கூற்றுவன் உறுபசை

#428
மண்டலத்தார் உயிர்வாங்க நமன் கொண்ட ஆயுதத்தின் வகுப்பை நோக்கில்
கொண்டல் இடி மின் நீர் கால் அனல் மரம் கல் மண் நோய் மீன் கொடிய புட்கள்
உண்டி விலங்கு இன்பதுன்பம் பகை அச்சம் ஊர்வன பேய் உலகில் இன்னும்
கண்டது எல்லாம் அவன் கை ஆயுதம் என்னில் தப்பும் வகை காணோம் நெஞ்சே
** இறப்போர்க் கண்டும் மெய் எண்ணாய் நெஞ்சே

#429
விரி ஆழி நுண்மணலைத் தாரகையை எண்ணிடினும் வீந்தோர்-தம்மைச்
சரியா எண்ணிடத் தகுமோ இன்னமும் நம் கண் முன்னம் சாவோர்-தம்மைத்
தெரியாது போல் தினமும் வீண்காலம் கழிக்கின்றாய் திடமாய் என்று
மரியாமை உற்றனையோ அறியாமை பெற்றனையோ வழுத்தாய் நெஞ்சே
** நீளச் சுமக்குமுடல் நீர்க்குமிழிபோற் கெடும்

#430
அனம் மிகிலோ வாயு குறையில் சூடு உண்ணாவிடில் இன் ஆவி நீங்கும்
கனமான வெய்யில் மழை பனி உதவாது அவை இன்றேல் கணம் நில்லாது
தினமும் ஆயிரம் கண்டம் இமைப்போதாகிலும் அதன் மேல் சிந்தை இன்றேல்
புனல் மொக்குள் என அழியும் நெஞ்சமே நாம் சுமக்கும் பூட்சிதானே
** உறுதியற்ற வாழ்நாட்கு உள்ளமே செய்வதென்

#431
பொன்றும் நாள் இன்னது என நிலை உண்டேல் ஆழி சூழ் புவியோர் ஆயுள்
ஒன்றிரண்டு நாள் எனினும் போதும் நூறாண்டு என்று ஓர் உரை உண்டேனும்
இன்றோ இக் கணமோ பின் உறும் கணமோ மாலையோ இரவோ சாவது
என்றோ என்று ஓர் உறுதி இல்லாத ஆயுள் இதற்கு என் செய்வோமே
** ஆடு மாடு நெல்லால் ஆமுடற்கு அப்பெயர்

#432
தொல் உலகில் புல் இலை உண் ஆடு முதல் உயிர்களை நல் சுரபிப் பாலை
நெல்லுடன் பல் தானியத்தைக் காய் கனியைக் கிழங்கு இலையை நிதமும் உண்டு
மல்லுறவே வளரும் இந்தக் காயத்தை மரம் என்றும் மாடு ஆடு என்றும்
புல் என்றும் நெல் என்றும் செடி என்றும் கொடி என்றும் புகலலாமே
** உணவின் வழியே உருக்கொண்ட துடம்பு

#433
ஆதியில் புல் இலை கனி காய்த் தானியமாய் மீன் பறவை ஆடு மாடாய்
மேதினியில் இருந்து தாய் தந்தை உடல் சேர்ந்து ஒருநாள் வெளியே வந்து அங்கு
ஓதிய பண்டங்கள் தின்று பெருத்து இறந்து பல செந்துக்கு உணவாய்ப் பஞ்ச
பூதியமாய் நாசமாய்ப் போம் நெஞ்சே நாம் சுமக்கும் பூட்சிதானே
** உடல் பிணமாயின் நெருங்கார் ஒருவரும்

#434
எமது எனும் மெய் பிறக்கும் முன் எங்கு இருந்தது இன்னம் சில காலத்து எங்கே செல்லும்
அமர் உயிர் நீங்கிய பின் ஓர் கணமும் அனை சேயர் இதன் அருகே நில்லார்
தமர் சவம் என்று எடுத்து எறிவார் பறவை விலங்கினம் கூடித் தத்திக் கொத்தி
அமர்செய்து புசிக்கும் அப்போது என் என்று கேட்பவர் ஆர் அறிவு_இல் நெஞ்சே

@42 அதி. 41 – துன்பம்
** கொடுந்துயர்க் கஞ்சல்மீன் குளிர்க்கஞ் சுதலாம்

#435
பாரில் யார்க்கும் பழங்கண் சகசமாம்
வீரியம் கெட வெம் துயர்க்கு அஞ்சுதல்
போரில் நேர்ந்தவன் பொன்றலுக்கு அஞ்சலும்
நீரில் மீன் குளிர்க்கு அஞ்சலும் நேருமே
** இறக்கும் வரை உள்ள துன்பம் எண்ணி மகவு அழும்

#436
பிறந்த சேய் உடனே அழும் பீழைதான்
சிறந்த மா நிலம் சேர்ந்து பின் ஆருயிர்
இறந்துபோம் அளவும் துயர் என்பதை
அறிந்து நீர் விட்டு அனுங்கலை ஒக்குமே
** நிலைத்த இன்பம் நீளுலகில் இன்று

#437
கோடி பொன் உடையவர் எனினும் கோ முடி
சூடிய வேந்தரே எனினும் துன்பொடும்
கூடிய வாழ்க்கையர் அன்றிக் கூறுங்கால்
நீடிய சுகம் உளோர் நிலத்தின் இல்லையே
** பொருளிழப்பால் கீழோர் பொறாது பொன்றுவர்

#438
பாக்கிய நிலை எனும் பதகர் ஓர் துயர்
தாக்கிடல் பொறாது உயிர்-தன்னைப் போக்குவர்
ஆக்கிய ஆக்கமும் அஞரும் ஒன்று என
நோக்கிய சீலரை நோய் என் செய்யுமே
** இன்பமும் துன்பமும் ஏற்பர் இயைந்தே

#439
ஒளியினோடு இருள் நிழலொடு வெயில் பொழி உதகத்
துளியினோடு மின் அசனி மா மலையையும் சுழற்றும்
வளியினோடு இளம் தென்றலும் வருதல் போல் மாக்கள்
களியினோடு அரும் துயரமும் கொள்ளுவர் கலந்தே
** அழுது வருந்தினாரே அடைவர் பேரின்பம்

#440
உழுது பண்செயப் புன்செயும் நன்செயாம் உயர் பொன்
முழுதும் தீயினில் சுடச்சுட ஒளிருமால் மொழியும்
பழுது_இல் மா மணி தேய்பட ஒளி மிகும் படர்கொண்டு
அழுது நொந்தவர்க்கு அன்றி மற்றவர்க்கு அறம் அரிதே
** உழைப்பூணுறக்கம் கூடக் குறைய நோயுறும்

#441
ஓங்கு காமத்தால் சோம்பினால் உணவினால் ஊங்கு
தூங்கலால் துயில் இன்மையால் சினத்தினால் துவக்கு
தாங்கொணாத் தொழில் செயல் முதல் ஏதுவால் சடம் நோய்
ஆங்கு உறும் சடம் செய்தவன் கைப்பிழை அன்றால்
** உலக அழிவும் உய்வுக்கே வருமால்

#442
பலர் உய்வான் சிலர்ப் படுத்திடும் பதி எனப் பரன் பார்ச்
சலனம் தீவரை இடி பெரும் கால் முதல் தாபம்
கலவுறச் செயும் காரணம் யாதெனில் கணக்கு_இல்
உலக கோடி சம்பந்தத்தால் என உணர் உளமே
** பத்தரை ஆளவே பரன்துன் பருள்வன்

#443
பத்தர் அன்பினைச் சோதனைபண்ணவும் பார் மேல்
வைத்த வாஞ்சையை மாற்றவும் பேரின்ப வாழ்வில்
சித்தம் எய்தவும் அன்னரைத் துயர்செயும் தெய்வம்
அத்தன் சேயரை அடித்து அறிவுறுத்தல் போல் அம்மா
** வழியாம் உலகுறு மின்பத் துன்பம் மனங்கொளார்

#444
அயல் ஒர் ஒண் பதிக்கு ஏகுவார் வழித் துயர்க்கு அஞ்சார்
வயவை-தன்னில் காண் பொருளையும் வாஞ்சியார் வசுதை
உயர் பெரும் கதிக்கு ஏகுமாறு என்னலால் உலகின்
துயரை இன்பினை மதித்திடார் துகள் அறு நீரார்
** தந்தவன் கொண்டானென்று தாளிணை தொழுவர் நல்லோர்

#445
மனைவி சேய் தமர் தம் முனம் மாளினும் மகியில்
புனையும் சீர் எலாம் ஒழியினும் துன்பம் என்பு உகினும்
அனைய சீர் எலாம் அளித்தவன் கொண்டனன் என்ன
வினையமோடு இனி அவன் அடி பரசுவர் மேலோர்
** ஓட்டைக் குடநீர்போல் உடலுயிர் உறல் வியப்பு

#446
பல் துளைக் கடம் பாணியைத் தாங்குவது அரிதே
எஃகு பல் துளைச் சடத்து உயிர் இருக்கையும் இயை சீர்
அஃகிப் பல் படர் அணுகுறாமையும் அதிசயமாம்
இஃது உனார் துயர்க்கு இடைந்து உறுவார் இறும்பூதே
** வேண்டுவார்க்கு வேண்டுவ தருள்வோன் மெய்ப்பொருள்

#447
நில்லாத செல்வம் அறவோர் வெறுக்கும் நிலையாலும் வான்கதியை அவ்
வல்லார் விரும்பும் வகையாலும் அற்ப மகி வாழ்வு அவர்க்கு இறை தரான்
வில் ஆரும் முத்தி விழையாதவர்க்கு விழல் அன்ன வாழ்வை அருள்வான்
ஒல்லார் விரும்பு பொருள் தந்து வெல்லும் ஒரு நீதி வேந்தன் அனையான்
** துன்பிடைத் தூய்மை சுடர்விடும் பொன்போல்

#448
அறம் என்பதற்கும் அறிவுக்கும் மூலம் அஞர் ஆகும் உலகு இன்பமே
மறம் என்பதற்கும் மடமைக்கும் வித்து மக இச்சை ஆறொழுகல் கண்டு
இறையும் தகப்பன் முனியாமை சீற்ற ஏற்றத்தின் நீர்மை எனல் போல்
உறு புன்கண் இன்றி ஒருவன் சுகங்கள் உறல் ஈசன் முனிவு ஆகுமால்

@43 அதி. 42 – அறஞ்செயல்
** சாங்காலத் தறம் செய்தல் யார்க்குமே சாலாது

#449
பசி மிகுந்த பின் நெல்லை விதைப்பது போல் வீட்டில் தீப் பற்றிக்கொண்டு
நசியும் போது அதை அவிக்க ஆறு வெட்டல் போலும் போர் நடக்குங்காலை
விசிகநூல் கற்க முயல்வது போலும் கபம் மிஞ்சி விக்கிச் சிக்கி
இசிவு கொண்டு சாங்காலத்து எப்படி நீ அறம் புரிவாய் இதயப் பேயே
** முற்பழக்கம் இன்றேல் முடியாது எதுவும்

#450
எத்தொழிலும் முற்பழக்கம் இன்றி எய்தாது அறம் என்னும் இணை ஒன்று இல்லா
அத் தொழில் முற்பழக்கம் இன்றிச் சாங்காலத்து அமையுமோ வரும் மன்றற்கு
வத்திரம் வேண்டின் பருத்தி விதைத்து முன்னம் நெய்யாமல் மணம்செய் காலத்து
ஒத்த துகில் வேண்டும் என எத்தனை பேர் முயன்றாலும் உறுமோ நெஞ்சே
** படித்துப் பழகியபின் கைக்கொளல் எளிதாம்

#451
சிற்பநூல் இலக்கணநூல் வைத்தியநூல் மரக்கலநூல் செருநூல் இன்னம்
பற்பல நூல் உணர்வதினும் புண்ணியநூல் அரிதாமோ பகர் அ நூல்கள்
கற்பதன் முன் அரிது எனினும் பின் எளிதாம் அது போல் நற்கருமம் என்னும்
அற்புதநூல் முயலுவோர்க்கு எளிதாகும் அதை அடைவாய் அறிவின் நெஞ்சே
** நாள் செல வென்பது நம்முயிர்ச் செலவே

#452
தினங்கள் செலச்செல ஏதோ பெற்றது போல் மகிழும் நெஞ்சே தினங்களோடும்
கனம்கொளும் உன் ஆயுள்நாள் கழிவது உணராய் உயிர் தீர் காயம் சேரும்
வனம் கடுகி வா என்ன விளித்து உன்-பால் தினம் நெருங்கும் வன்மை உன்னி
முனம் கொள் அறியாமையை நீ இனங்கொள்ளாது அறம் செய்ய முயலுவாயே
** எல்லையறியா வாழ்நாளதனால் இயற்றுக விரைந்தறம்

#453
இன்று அருணோதயம் கண்டோம் உயர் ககன முகட்டின் மிசை இந்தப் பானு
சென்றடைய நாம் காண்பது ஐயம் அதைக் காண்கினும் மேற்றிசை இருக்கும்
குன்று அடையும் அளவும் நாம் உயிர் வாழ்வது அரிது அதன் முன் குறுகும் கூற்றம்
என்று அச்சத்துடன் மனமே மறவாமல் அறவழியின் ஏகுவாயே
** இறைநினைப் போடறம் இயற்றுதற்கு வருத்தமென்

#454
சிற்று உதர போசணைக்கா மலை ஏறிக் கடல் கடந்து தேயம் எல்லாம்
சுற்றி அனுதினம் அலைவாய் நித்திய பேரின்ப சுகம் தோய வேண்டிச்
சற்றும் உடல் வருந்தல் இன்றி அலைதல் இன்றி ஓரிடத்தே தங்கி மூளும்
பற்றினையே துறந்து சும்மா இருந்து அறம் செய்வதில் என்ன பாரம் நெஞ்சே
** தோற்றத்தே தீமையைத் தொலைத்தல் செம்மை

#455
கலம் ஊறும் சிறு நீரை விரைவின் இறையாவிடின் அக் கலம்தான் மிக்க
சலம் ஊறி அழுந்தும் அது போல் பவத்தை விரைவுற்றுத் தள்ளிடாமல்
நிலம் மீதில் யாம் வாளா இருப்போமேல் பாவங்கள் நிறைந்து மோக்க
நலம் நீங்கி நரகம் எனும் பேராழியிடை வீழ்ந்து நலிவோம் நெஞ்சே
** உடனொழிக் காவிடிற் பாவம் ஒழியாது

#456
பெரு வெள்ளம் சேர்ந்த பின்னர் அதைத் திருப்ப ஒண்ணுமோ பெருத்து நீண்ட
தருவின் கோணலை நிமிர்க்கத் தகுமோ பாவங்களை நீ தள்ளி மேலாம்
கருமமதில் முயல் என்றால் பின்னை ஆகட்டும் என்றாய் கசடு விஞ்சி
ஒரு மலை போல் ஆன பின் எவ்வாறு அதை நீ சாம் பருவத்து ஒழிப்பாய் நெஞ்சே
** தீ நினைப்பால் தீ நோக்கால் பெரும்பாவம் சேரும்

#457
ஏதிலார் பொருள் நோக்கி இச்சையுறல் கவர்ந்தது ஒப்பாம் எழில் மின்னாரைக்
காதலாய் நோக்குதலே கலந்தது ஒப்பாம் பிறர் கேட்டைக் கருதல் அன்னார்
வேதையுறக் கொன்றது ஒப்பாம் இவ்வாறு ஓர் பயன் இன்றி மேவும் பாவம்
ஆதலின் ஐம்பொறி வழியே மனம் செலாது அடக்குவார் அறிவுளோரே
** உயிர்க்கறஞ் செய்யாமல் உடலோம்பல் வீணாம்

#458
பரியூர்வோன்-தனை மறந்து பரிக்கு உபசாரங்கள் மிகப் பண்ணல் போலும்
பெரிய கடவுளைப் பணியாது ஆலயத்தை அலங்கரிக்கும் பித்தர் போலும்
அரிய பொருள் வெளியிட்டுச் செப்பினைக் காத்திடல் போலும் ஆன்மாவுக்கே
உரிய அறம் புரியாமல் உடலினை நீ ஓம்புகின்றாய் உள்ளப் பேயே
** இறந்தவர்க்காய் யாரும் இறந்திடல் செய்யார்

#459
ஓர் உயிர் ஈர் உடல் என்ன நட்ட மைந்தர் மாதர் நமது உயிர் நீங்கில் தம்
ஆருயிரைத் துறப்பரோ அழுவதும் தம் உணவு வைக்க அமைந்த பாண்டம்
பேருலகில் உடைந்தது என அழுவது அன்றி நமக்கு இரங்கும் பேர் இங்கு உண்டோ
சாரும் இவர் நேயமதால் பவம் செய்து வீடு இழத்தல் தகுமோ நெஞ்சே
** ஆண்டவன் அன்போ டுயிர்காத்தல் பேரறம்

#460
முந்தை இறைக்கு அன்பு பின்பு தன் உயிர் போல் மன் உயிரை முறையின் ஓம்பல்
இந்த இரு விதிகளினுள் வேதம் எலாம் அடங்கும் மனம் இன்பம் மேவ
வந்த இகபரம் அளிக்கும் அறம் ஒன்றே அரும் திருவாம் அதன் முன் ஆயின்
சிந்தனை சிந்தனையுறச் செய் புவித் திரு ஏட்டிடை வரைந்த திரு ஒப்பாமால்
** நஞ்சனைய பாவம் நவின்றியற்றல் வருத்தம்

#461
உளது இலை என்ன உரைப்பதே வருத்தம் உண்மை கூறிடல் எளிதாகும்
களவு கள் காமம் கொலைசெயல் வருத்தம் காவலன் தண்டம் ஊர்ப் பகை ஆம்
உளமதை வருத்தும் இகபரம் கெடுக்கும் உண்மையா இவை எலாம் உன்னில்
களம் நிகர் பாவம் செய்தலே கட்டம் கருது அறம் செயல் எளிது அன்றோ
** அறமுடை யாரை அனைவரும் புகழ்வர்

#462
ஒருவனைப் புதிதாக் காணினும் அவனோடு உறவுசெய்யினும் பணிகொளினும்
பெருமையோன் தீயன் என அறியா முன் பேசிடார் தீயனேல் பெயர்வார்
தரும நற்குணத்தைக் தீயரும் புகழ்வார் சழக்கினைச் சழக்கரும் இகழ்வார்
இருமை தீர் அறத்தின் பெருமையும் மறத்தின் இழிவும் ஈது உன்னுவாய் மனனே
** பாவத்தால் நரகுறல் பகரொணாத் துன்பே

#463
பலர் கழல் வருட மாதர்கள் ஆடிப் பாடுவோர் பகல் எலாம் அனிச்ச
மலரணை கிடத்தல் வருத்தமாம் அன்றோ வார்த்த வெந்நீர் பொறா உடலம்
அலகு அறு காலம் நரக வெம் தழல் ஆழ்ந்து அயர்வுற ஒண்ணுமோ அவியாப்
புலவையே விளைக்கும் பவத்தை வேரறுத்துப் புண்ணியம் புரிந்திடாய் மனனே
** துன்புக் கஞ்சில் துணையறம் கிட்டா

#464
சூல் துயர்க்கு அஞ்சுவாட்குச் சுதர் இலைப் பயன் ஒன்று இல்லைக்
காற்றினுக்கு அஞ்சாநின்ற கலத்தினுக்கு அவிழ்தம் கைப்பு என்று
ஏற்றிட அஞ்சின் ஆரோக்கியம் இலை இன்னற்கு அஞ்சின்
சாற்ற அரும் அறமும் இல்லைத் தனிப் பரகதியும் இன்றே
** நயந்தறஞ் செய்யார் நாய்த்தொழில் செய்வார்

#465
இந்து மீன் பருதி பக்கி இன விலங்குகள் மரங்கள்
ஐந்து பூதங்கள் ஏனை யாவும் ஓவாது எஞ்ஞான்றும்
தம் தொழில் செய்து வாழும் தனி அறம் புரிதல் என்னும்
நம் தொழில் புரிகிலேம் யாம் நாய்த் தொழில் உடைய நெஞ்சே
** அறமே நல்லோர்க்கு அழியா வாழ்வு

#466
இன் அமுதத்தின் முன் வேறு இனிமையும் உளதோ பானு
முன்னம் ஓர் சுடரும் உண்டோ மோக்கத்தின் சுகம் வேறு உண்டோ
துன் அறமே நல்லோர்க்குத் துகள் அறு செல்வம் ஆகும்
அன்னதை அன்றி வேறோர் ஆக்கமும் வேண்டும்-கொல்லோ
** அறஞ்செய்வார்க்கே ஆண்டவன் இன்புண்டு

#467
மன் உளனேல் உண்டு ஆணை மகிழகம் சிறையும் உண்டாம்
முன்னு தேவு உளனேல் பாவம் புண்ணியம் மோக்கம் அள்ளல்
என்னும் யாவையும் உண்டு ஒப்பு_இல் ஏண் உளான் கோபம் தாங்கி
மன்னுவோர் யாவர் நெஞ்சே மறம் ஒழித்து அறஞ் செய்வாயே
** எல்லா வாழ்வும் இயைப்ப தறமே

#468
அணி இலார்க்கு அணியாம் வாய்ந்த அழகு இலார்க்கு அழகாம் நீண்ட
பிணியினார்க்கு எக்களிப்பாம் பேறு இலார்க்கு அன்னதாம் உள்
துணிவு இலார்க்கு உணர்வு எல்லாமாம் துப்பு இலார்க்கு ஒப்பு_இல் துப்பாம்
தணிவு_இல் பாக்கியங்கள் எல்லாம் தருமம் அல்லது வேறு உண்டோ
** எல்லாரும் வணங்கும் ஏற்றம் அறம் தரும்

#469
நாம் பணிவோர்கள் எல்லாம் நமைத் தொழச்செய்யும் தேவர்
ஆம் பணி நல்கும் விண்ணும் அகிலமும் வணங்கச்செய்யும்
சாம் பணி இல்லா ஈசன் தாள் இணை மருவச்செய்யும்
தேம் பணி தருமம் அல்லால் செல்வம் வேறு உளதோ நெஞ்சே
** கடல்நீர் வற்றினும் கடவுள் நிலை அழியாது

#470
சூழ் பல உகங்கட்கு ஒவ்வோர் துளிதுளியாக் கழிந்து ஈங்கு
ஆழ் கடல் முழுதும் வற்றி அழியினும் பழியினார் வீழ்
பாழ் நரகினுக்கு ஈறு இல்லைப் பரகதி நிலையும் அற்றால்
தாழ் நரகு அற வீடு எய்தத் தருமத்தைத் துணைக்கொள் நெஞ்சே
** அறவழியிற் செல்வார் விரும்பார் அழிபொருள்

#471
தாகமே உடையார் வேலைச் சலம் அருந்தினும் பொன் மீது
மோகமே உடையார் மண் கல் முதல் கரம்கொளினும் தேவ
போகமே புரிந்து இல்லாமை பூண்ட புண்ணியர் வானத்து ஊர்
மேகம் ஆர் மின்னின் நில்லா விருத்தி மேல் அருத்திகொள்ளார்
** பிறவாப் பெருஞ்சாவால் பெரும்பொருள் உருத்தோன்றும்

#472
அறப் பெரும் கடல்_அன்னான்-தன் அடி மலர் காணா வண்ணம்
மறைப்பதே உடல் படாமாம் மரணத்தால் அதனைப் பாரில்
துறப்பவர்க்கு உடனே அத்தன் சொரூபமே தோன்றலால் இங்கு
இறப்பது பிறப்பினும்தான் இனிது அறவர்க்கு மாதோ
** தக்கோன் அடக்கம் சால்பற மாகும்

#473
விறலி கற்பதுவே கற்பு கூன் உடல் விருத்தை கற்பு அரிது அன்று கலை எலாம்
அற உணர்ந்த தக்கோர் நொறிலே நொறில் அஞ்ஞை கொண்ட அடக்கம் கதழ்வு அன்று
திறலினார் பொறையே பொறை அற்பமும் திறல் இலார்-தம் பொறுமை தலை அன்று
மறலுளார் கொடையே கொடை சீர் எலாம் வாய்த்த செல்வர் கொடை பெரிது அன்று அரோ

@44 அதி. 43 – கணிகையரியல்பு
** பொருளற்ற விடத்துப் பொய்ப்போக்குரைப்பர் பொதுமாதர்

#474
பூவை இவட்கு அளித்த நிதி கணக்கிலை ஓர் கடன்காரன் புலி போல் நம்மைச்
சாவடிக்கே இழுக்க மயிலே இடர் தீர் என்று இவள்-தன் தாளில் வீழ்ந்தேம்
பூவில் வைத்த நிதியை ஓர் கிழப் பூதம் காத்து இனிய பூபா உன்னைச்
சீவபலியிடின் ஈவேன் என்றது என்றாள் என் செய்வாள் தெரிவைதானே
** உடன்சாவேன் என்றவள் உடைகோவணம் வேண்டல்

#475
நேர்_இழை நம்முடன் இறப்பன் என முன்னம் உரைசெய்தாள் நிருபன் நம்மை
ஈர எனக் கொலைக்களத்திற்கு இழுக்க அடி பற்றிப் பின் இரங்கி வந்த
காரிகையை நோக்கினோம் மிஞ்சிய ஓர் கோவணத்தைக் கருதி வந்தேன்
ஓர் உயிர் நம் இருவர்க்கும் நீர் வீயின் நான் இறந்தது ஒக்கும் என்றாள்
** பொட்டணிந் துணர்த்தினாள் போற்றுமெய் அறிவு

#476
மனை தாலி முதல் வேசைக்கு ஈந்து வேறொன்றும் இன்றி மயங்கும் வேளை
புனைய ஓர் அணி இலாது இருந்த இல்லாள் கழுத்தினில் ஓர் பொட்டைக் கண்டு
மனம் மகிழ்வுற்று ஏது என்றேன் பரத்தையர் போல் எனக்கும் அருள் வாய்க்க வேண்டி
இனமாப் பொட்டு அணிந்துகொண்டு தாசி ஆயினன் என்ன இயம்பினாளே
** பொதுமகளுக்கு ஆண்பஞ்சம் புகல்வது வீணே

#477
ஆவி_அனையாளை ஓர்பொழுது பிரிந்து அவள் இல்லம் அணுகுங்காலை
மேவு பாங்கியைக் கண்டு ஆண் துணை இன்றி வருந்தினளோ மின்னாள் என்றேன்
நாவிதனுக்கு உண்டோ காண் மயிர்ப் பஞ்சம் மலப் பஞ்சம் நாய்க்கும் உண்டோ
தேவி-தனக்கு உண்டோ ஆண் பஞ்சம் என்றாள் அதன் பொருளைத் தெரிகிலேனே
** பொருளிழந்து மூதேவியைப் பொருந்தவரும் வெறுப்பு

#478
செவ்வையுறு பொருள் கவர்ந்த பின்னர் எனைக் கைவிட்ட தேனை நோக்கிக்
கொவ்வை வாய் மயிலே இச் சினம் ஏது என்றேன் வனசக் கோயில் மேவும்
அவ்வையை முன் சேர்ந்த பிழை பொறுத்து அவளை என் அகத்துக்கு அழைத்தேன் அன்னாள்
தவ்வையையும் மருவினீர் இனிப் பொறேன் என் ஊடிச் சலம்கொண்டாளே
** பொதுமகட்குப் பொன்னீயில் போடுவாள் வாய்மண்

#479
உண்ணாமல் இரவலர்க்கும் ஈயாமல் பூமி-தனில் ஒளித்த பொன்னைக்
கண்ணானாள்-தனக்கு ஈய வேண்டி அதைத் தோண்டுகின்ற காலம்-தன்னில்
மண்ணானாள் எனை நோக்கி எனக்கு ஈந்த பொருளை இனி வாங்காநின்ற
பெண்ணானாள் எனை உன் வாய் கொட்டுவள் என்றே நகைத்துப் பேசினாளே
** ஈயாதானை ஏசியடித்து உதைத்துமிழ்வள் பொதுமகள்

#480
முனங்காலை வருடும் அவள் கரம் கோல் போல் முதுகின் மேல் மோதப் பூ மேல்
அனம் கான மயில் என்ன நடம்செய்த கழல் நம் மேல் ஆடித் தாக்கத்
தினம் கானரசம் உதவு வாய் ஏசி உமிழ இந்தச் செய்கை கண்டும்
இனம் காதலாய் அவள் இல் ஏகுதியோ நிற்றியோ இயம்பாய் நெஞ்சே
** ஆடவரை ஆண்கோலம் என்றறைவள் கிழவி

#481
ஆவலால் அவகாலத்து அவள் இல் நான் புகச் சிலபேர் அங்கிருந்து
மேவி ஓடினர் சினமுற்று இவர் ஆர் என்றேன் மாமி விரைவாய் வந்து
பூவை இவள் நின் பிரிவு ஆற்றாது அழப் பாங்கியர்க்கு உனைப் போல் புருடவேடம்
தா அறவே தரித்து அவட்குக் காட்டினன் வேறு அன்று என்று சாதித்தாளே
** செல்வப் பொருளீந்தார்க்குச் சேர்ப்பள் பல அல்லல்

#482
பொருள் ஒன்று நாம் தந்தது இவட்கு அதற்கு இல்லாமை பிணி பொய் புரட்டு
மருள் ஒன்றும் கள் காமம் கொலை களவு சூது வசை மரணத்தோடும்
இருள் ஒன்றும் நரகம் இன்னும் இவள்-பால் நாம் கொண்டதற்கு ஓர் இலக்கம் உண்டோ
தெருள் ஒன்றும் பாரில் நம் போல் சமர்த்தாக் கொண்டு எவர் வணிகம் செய்ய வல்லார்
** கணவன் நிறைகெடின் மனைவியும் கற்பழிவள்

#483
இரதி_அனையார்-பால் போய் நாம் வரும் முன் எங்குச் சென்றாய் என இல்லாளைப்
பொருதி வினவிட இரதி புருடன்_அனையார்-பால் போய்ப் புணர்ந்தேன் என்றாள்
விரதம் உள்ளாய் எங்கு இதை நீ கற்றது என்றோம் உம்மிடத்தும் விருப்பாய் உம்மைச்
சுரதம்செய்பவரிடத்தும் கற்றது என்றாள் வேறு இனி நாம் சொல்வது என்னே
** பொதுமகட் சேர்வோர் பொல்லா விலங்கொப்பர்

#484
சுவை உணவுதான் இருக்க மலம் தேடி ஓடுகின்ற சுணங்கன் போலும்
குவை-அதனில் கிடந்து உறும் நல் இடம் நீங்கித் திரிகின்ற கோகு போலும்
நவை தீர் தண் நதித் தூ நீர் அருந்தாது அங்கண நீரை நாடல் போலும்
சிவை அனைய காந்தையரை வெறுத்து அசடர் வேசையரைச் சேர்வார் மாதோ
** கள்ளூன் களவாடாவிடில் கயிறுகொண்டு தூக்கிடுக

#485
கோடும் உடல் மாமி எனை மதுவுடன் புலால் திருடிக் கொணர்தி என்றாள்
பாடுபெறும் பார்ப்பான் நான் என்றேன் மற்று அவை உண்ணப் பவம் போம் என்றாள்
நாடும் வசை உயிர் உய்யேன் என்றேன் நீ மாய்ந்திடின் முன் நான் கொடுத்த
ஓடு மற்ற மருகர்க்கு ஆம் நான்றுகொள் நீ எனக் கயிறு ஒன்று உதவினாளே
** பசிமண் ஓடு பற்றலால் முத்தேவர் பாங்கானோம்

#486
பசை அற எம் ஆவி_அன்னாள் கைப்பொருள் எலாம் பறிக்கப் பசியால் நான்கு
திசை முகமும் நோக்கலால் திசைமுகன் ஆனோம் வாயில் தீயாள் இட்ட
வசையான மண் உண்டு மாயன் ஆனோம் கையில் வாங்கும் ஓட்டால்
இசை மேவும் ஈசன் ஆனோம் புவியில் நமை ஒப்பார் எவர்தாம் அம்மா
** பொதுமக ளிடஞ்செயல் பொன்றுவித்தால் புகழ்வம்

#487
விடம்_உண்டான் கூற்று_உதைத்தான் அலகை_வென்றான் புரம்_எரித்தான் விடையோன் என்னக்
கடல் உலகில் சைவர் அவன் புகழ் விரிப்பார் கணிகையர் கண் கடுவை உண்டு
குட முலையாம் கூற்று உதைத்துத் தாய்க்கிழவி எனும் பேயைக் கொன்று அன்னார் வாழ்
இடம் என்னும் புரம் எரித்தான் எனில் யாமும் அவன் புகழை இயம்புவோமே
** என்றும் பொதுமகள்வீட் டிருப்பர் பலர்மறைவாய்

#488
கொடியாள் அன்பற்ற பின்னர் பலர் நம்-பால் வந்து உன்னைக் கூடிக்கொண்ட
மிடி என்றும் வாழ்க என்றார் ஏன் என்றேம் உயிர்க்கு இனியாள் வீட்டில் நீ வந்து
அடிவைத்த போது எல்லாம் கூடை உறி பரண் கட்டிலடி அடுக்கு
நெடிய சிறை இருந்தோம் அச் சிறையை உன்றன் வறுமை வந்து நீக்கிற்று என்றார்
** மாண்டார் காலில் புரிகட்டி இழுக்க வுரைப்பள்

#489
தெரிவையின் நட்பு அறிவான் மாண்டு எனக் கிடந்தேம் மாமி வந்த சிலரை நோக்கி
உரிய பாடையில் இவனை எடும் என்றாள் வீண்செலவு ஏன் உலைந்தோன் காலில்
புரி வீக்கி இழும் என்று அன்னம் பணித்தாள் அது செய்யப் புகுந்தோர்-தம்மைத்
தெரியாமல் உயிர்தப்பி ஓடிவந்தோம் அங்கு உறில் எம் சீவன் போமே
** பொதுமகள் புகழ்வது பொன்பெறற் பொருட்டே

#490
சாமி உனைப் பிரியேன் என்று உரைத்துப் பின் அகன்ற மின்னாள்-தன்னை நோக்கித்
தோம் இலா நின் மாற்றம் திறம்பியது ஏது என்றேன் நீ தொகுப்பால் தந்த
சாமியை நீங்கேன் என்றேன் உனைச் சொன்னது அன்று நீ சாமி ஆனால்
பூமியில் உன் மாற்று என்ன எடை என்ன விலை என்ன புகல்வாய் என்றாள்
** அழுக்கே உருவாம் பொதுமகளை அடைவார் யாரே

#491
ஒருவன் உண்ட கலத்து உண்ண ஒருவன் உடையினை உடுக்க ஒருவன் தூங்கும்
திரு அமளி துயில மனம் பொருந்தாது பலர் எச்சம் சேர் படிக்கம்
பொருவு வேசியர் வாய் எச்சிலை உண்ணப் பலபேரைப் புணர்ந்து அசுத்தம்
உருவுகொண்டதனை அவர் தோள் சேரவே எவர்க்கும் மனம் ஒன்றும்-கொல்லோ
** எல்லாம் பறித்துப் பிச்சை எடுக்கவைப்பாள் பொதுமகள்

#492
பொருளின் சேடத்தை இவட்கு அளித்தோம் வாய்ச் சேடம் எனும் பொருள் அளித்தாள்
தருமம் எனத் தனம் அளித்தோம் எமக்கு இவளும் தருமம் எனத் தனம் அளித்தாள்
அருமையாம் பலி அளித்தோம் இவள் எமக்குப் பலி அளித்தாள் ஆழி சூழ்ந்த
இரு நிலத்தின் ஈது அன்றி இன்னும் இவள் என் செய்வாள் எமக்குத்தானே
** கொலைபுலையின் மிக்ககுற்றம் புரிபவள் பொதுமகள்

#493
கொலைஞர்-தமைக் கொலைசெய்து கள்வரை வெம் சிறையிலிட்டுக் குற்றம் செய்யும்
புலைஞரைத் தண்டித்து அடக்கும் நம் இங்கிலீசு மன்னர் புருடர் ஆவிக்கு
உலைவைக்கும் தன்மையளாய்ப் பாதகம் எலாம் திரண்டு ஓர் உருவாய் வந்த
விலைமாதைக் கொல்லாமல் உலகம் மிசை யாது செய விடுத்தார் அம்மா
** பூங்கணைக் கஞ்சாள் பொன்கணைக் கஞ்சுவள்

#494
பணயமே திரணம் அன்பு பெரிது என்ற பாவை பொருள் பறித்த பின்னர்
அணையேன் என்றாள் அனங்கன் உனக்கு இலையோ என்றேம் அவ் அறிவிலான் பூம்
கணைகளையே விடுத்தான் நான் அஞ்சுவனோ காணம் எனும் கதிரம் கொண்டு என்
இணை முலை மேல் தெறித்திடின் வெல்வான் என்றாள் இவள் மனம் வல் இரும்போ அம்மா
** பொல்லாங் குருவே பொதுமகள் உருவம்

#495
வடிவு மிகு கொழுநர்-தமை வேசியர் வவ்விட வருந்தும் வாள் கண் நல்லீர்
கடின மனம் கணக்கிலா ஆடவர் சம்போகம் உயிர் கவர்தல் வஞ்சம்
குடிகெடுக்கும் தொழில் உங்கட்கு இல்லை என வெறுத்தனர் அக் குணங்கள் எல்லாம்
படியில் உமக்கு அமையுமேல் கணவர் திருவருள் உமக்கும் பலிக்கும் அன்றே
** விற்றதை மீட்டும் விலைமாதர் விற்பர்

#496
பகரும் வங்கம் பலசரக்குத் தரகு செலவு ஆள்கள் முதல் பணம் கூட்டு இன்றி
அகல் நிதம்பச் சரக்கு ஒன்றைப் பலருக்கும் தினந்தினம் விற்று அரும் பொன் வாங்கிப்
புகலும் இந்தச் சரக்கும் கை நீங்காது வணிகம்செய் பொது மின்னார் போல்
சகம்-அதனில் பேரறிவினோடு வாணிபம்செய்யும் சமர்த்தர் உண்டோ
** இருமனத்தால் பிணமாதல் இயையும் பொதுமகட்கே

#497
கலவிசெய்த மாது என்னை விலை கேட்டாள் உடன் ஒக்கக் கலந்து காம
நலம் உண்ட உனக்கு விலை ஏது என்றேன் சவம் அனைய நான் சுகிக்க
இலை என்றாள் பொய் என்றேன் வள்ளுவர் கூறிய குறளாம் இனிய நூலில்
விலைமாதைச் சேர்தல் பிணம் தழுவியதை ஒக்கும் என்றார் வீணோ என்றாள்
** தந்தையைக் கொல்லவும் பொதுமகள் சாற்றுவள்

#498
தையல் இல்லம் புகும் போது என் சுதன் குரலைக் கேட்டு ஒதுங்கித் தாழ்வாரத்தில்
பைய ஒன்றிச் செவிகொடுத்தேன் பாலனைப் பார்த்து அக் கோதை பணம் ஈ என்றாள்
ஐயன் இறந்திடில் எல்லாம் உனது என்றான் அவன் தூங்கும் சமையம் பார்த்து ஓர்
சையம் எடுத்து அவன் தலை மேல் போடுவாய் போடும் முன் நான் தழுவேன் என்றாள்
** பலர்க்கிணங்கும் பொதுமகள் பார்க்கிலினத் தலைமணியே

#499
ஒரு மாது தன் துணைவன் சீடனை மற்றொரு மாது அவ் உம்பர்_கோனை
ஒரு மாது சோதரர் ஐவரைச் சேர்ந்து கன்னியர் என்று உயர் பேர் கொண்டார்
அருமையா எமைச் சேயர் சோதரர் சீடரை இம்பர்க்கு அரசைச் சேரும்
பொருள்மாது அக் கன்னியர்க்கு எலாம் சிரோமணி என்னப் புகலலாமே
** பொதுமகட்குக் கடவுள் பொன்னவனே யாவன்

#500
விதி முதல் மூவரில் எவர் உன் கடவுள் எனச் சிற்றிடையை வினவப் பூ வாழ்
எதிர்_இல் தமனியன் என்றாள் அரன் கோயில் தாசி உனக்கு இயல்போ என்றேன்
நிதியுடன் மைந்தரைப் படைத்து அன்னார் அதை என் காலில் வைத்து நிதமும் வீழ
மதி படைத்துத் தமனியப் பேர் தான் படைத்த விதிக்கு இணை யார் மகிப என்றாள்
** பொதுமகள் புணர்வு பொன்னால் ஆகும்

#501
அந்தமுளாள் உரிமையா அத்தமுளார் வாலியா அவன் பின் தோன்றி
வந்தவன் நான் ஆயினேன் மூவரில் ஓர் அரி அரியின் மகனை அன்னாள்
பந்தமுறச் செய்தனன் நம் இருவரை யார் சேர்த்துவைப்பார் பாவாய் என்றேன்
ஐந்து உலோகங்களுள் ஓர் அரி நமை ஓர் அரி சேர்க்கும் அறி நீ என்றாள்
** அத்தை சொக்குத்தூள் அடிக்குப் பொன் தூளாம்

#502
இனியாளை நோக்கி அத்தை சக்கிரிக்குச் சொக்குத்தூள் இடுவாய் என்ற
தொனி கேட்டுச் சினந்து நான் குயவனோ எனை மயக்கத் தூளோ என்றேன்
தனி அரசாம் சக்கிரி நீ ஆகையின் நின் அடி மலர் தோய் தானம் எல்லாம்
நனியே சொக்கு எனும் கனகப் பொடி இறை என்றேன் முனிதல் நன்றோ என்றாள்
** இருதிங்களில் மகப்பெறுதல் இயற்றிய தவப்பயன்

#503
எனை அன்றி மற்றோரைச் சேர்ந்து அறியேன் என்ற கன்னி இரு திங்கட்குள்
தனையன் ஈன்றாள் புதுமை என் என்றேன் நினை உம்மை தழுவி இச் சேய்
சினையாய் எண் மதியில் இறந்தேன் இகத்தும் உனைப் புணரச் செய்த நோன்பால்
முனை அல்கும் இரு மாதம் நிறைந்து உடன் இ மகவு ஈன்றேன் முதல்வ என்றாள்
** தாய்க்கிழவிப் பேய்தடுத்தாள் தன் மகளும் ஆங்கிலளே

#504
சிலர் மயில் வீடு உற்றனர் என்று அறிந்து உண்மை அறிய அங்குச் செல்லுங்காலை
புலன் இழந்து நூறாண்டும் கடந்த கூனுடன் மாமி பூபா மாரன்
மலர் வாளி விடுத்தனன் சேர் எனை என்ன நெருங்கி வழிமறித்தாள் அப் பேய்
கலவி-தனக்கு அஞ்சி மீண்டு ஓடினேன் அவள் சுதையைக் கண்டிலேனே
** பொருளீவோர் ஈயார்மேல் கீழ்ச்சாதி பொதுமகட்கு

#505
கைத்தனம் நாம் இழந்த பின் கூன் முடவர் அந்தகர் நோயர் கடைக்குலத்தர்
நித்தம் மருவிட உள்ளம் உவந்த மின்னை நோக்கி இது நெறியோ என்றேம்
அத்தமதில் குருடு ஊனம் சாதி இழிவு உளதோ அஃது அளிப்போர் மேலோர்
இத் தரையில் எனக்கு ஈயார் கீழ்க்குலத்தர் சாதி இவை இரண்டு என்றாளே
** அளவிலா நோயை அளிப்பள் பொதுமகள்

#506
கனை கடல் மணலை எணினும் வேசியர் சேர் ஆடவர்க்கு ஓர் கணிதம் உண்டோ
அனைய நீர் அளவிடினும் அவர் உட்கொள் சுக்கிலத்துக்கு அளவு உண்டோ அவ்
வினையவர் மெய் உரோமத்தை எண்ணினும் நோய்த் திரள் எண்ண விதானம் உண்டோ
இனையவரைச் சேர்தல் பெரும் தீயினிடை மூழ்குதலை ஏய்க்கும் மாதோ
** தாள்வெட்டல் பயனின்று தலைவெட்டென்பாள் பொதுமகள்

#507
விலைமகட்கென்று அயலகத்தில் கன்னமிட்டுத் துளை வழி உள் விட்ட தாளைக்
கொலை வாளால் தறித்தனர் கூகூ என்றேன் வேசை என்-பால் குறுகி உக்கக்
கலை சோதித்து ஒன்றும் இலாச் சினத்தால் அவ் அகத்தாரைக் கதறிக் கள்வன்
தலை துமியும் தாள் துமித்து என் பலன் என்றாள் வெருவி உடல் சாண் ஆனேனே
** உமிழ்ந்து திட்டி உதைத்தகற்றுவள் பொதுமகள்

#508
திரு எலாம் கொள்ளைகொண்டாள்-தனை நோக்கிச் செவ் அதரத் தேன் ஈ என்றேன்
பெரு வாய் எச்சிலை உமிழ்ந்தாள் பேசு என்றேன் கொடும் சொற்கள் பேசலுற்றாள்
மருவு என்றேன் உதைக்குபு கையால் இடித்துக் கடித்து இனிய மதனநூலாம்
இரு பாத தாடனம் ஆலிங்கனம் மெல் இதழ் சுவைத்தல் என்றாள் அம்மா
** பொதுமகட்குக் குலதெய்வம் பொன்னளிப் போரே

#509
தரணியின் மிக்க எழில் மாதை உனது குலதெய்வம் எது சாற்றாய் என்றேன்
இரணியன் என் தெய்வம் என்றாள் விட்டுணு ஓர் நரசிம்மம் எனவே வந்தான்
முரணுற ஒண்ணாது என்றேன் இரணியாசுரன் அன்று முராரி மெய் மேல்
கிரண உடை எனைப் புனைந்த இரணியன் என் தெய்வம் என்றாள் கிளி_அன்னாளே
** பொதுமகட்காகக் களவுசெய்யப் போயினவே இருகையும்

#510
பொய் ஏந்து மன வேசைக்காத் திருடிக் கை இரண்டும் போக்கிக்கொண்டே
மை ஏந்து விழி மனையாட்கு இடை ஏந்தும் துகில் இன்றி மானம்-தன்னைக்
கை ஏந்தும் இரக்கவோ கை இலாள் ஆனாள் எக் கையை ஏந்திச்
செய் ஏந்தும் உலகத்தில் பலி ஏந்தி உண்ணுவம் யாம் செப்பாய் நெஞ்சே
** வேடிக்கைக் குரல்விலங்காய் மெய்ப்பண்பாய் மாறினரே

#511
சே_இழையின் சேடியர் முன் எமக்கு இதம்செய்வான் புலி வெம் சின மா கோகு
நாய் ஓரி கரடி எனக் கத்தி மகிழ்விப்பர்கள் நாம் நலிந்த பின் அத்
தீய விலங்கினச் செய்கை நம்-கண்ணே செயத் தொடுத்தார் திருவை ஒப்பாள்
ஆய மிருகங்கட்கு ஓர் அரசு ஆனாள் அவட்கு இரை நாம் ஆயினோமே
** கன்னத்தில் கண்டவுரு நின்உருவே கள்வனன்று

#512
வண்ண மலர் அமளியின் மேல் இருக்கையில் ஓர் பரபுருடன் வரவு நோக்கிப்
பண் அமரும் மொழி மின்னாள் விளையாடல் போல் தன் கைப் பதுமத்தால் என்
கண்ணதனை மூடிவிட்டேன் என நகைத்தாள் வேற்றாளார் கள்ளீ என்றேன்
கண்ணடி போல் திகழும் என்றன் கபோலமதில் உன் உருவைக் கண்டாய் என்றாள்
** கரவில்வந்தான் தனைக்கொன்றேன் கண்டேன் என்மகன் என்றே

#513
இரவினில் என்னுடன் துயின்ற கோதை அடிக்கடி வெளியே ஏகி மீண்டாள்
கரவு அறிவான் பின்தொடர்ந்தேன் கொல்லையிலே காளையொடும் கலந்துநின்றாள்
அரவம் எனச் சீறி அவ் ஆள் மேல் வீழ்ந்து தாக்க உயிரற்று வீழ்ந்த
உருவை உற்றுப்பார்க்க என்றன் ஒரு சேய் என்று அறிந்து நெஞ்சம் உருகினேனே

@45 அதி. 44 – விலங்கினத்துக் கிடர் செய்யாமை
** உயிரும் உணர்வும் உள்ளமும் விலங்கிற்கும் உண்டு

#514
விலங்கினங்கட்கு வாக்கும் வினை உணர் ஞானத்தோடு
நலங்களும் இலை என்றாலும் நரரைப் போல் சீவன் மெய் ஐம்
புலன்களும் இன்ப துன்பப் புணர்ப்பு அறி நெஞ்சினோடும்
துலங்கிடும் விலங்கை வாட்டித் துயர்செய்வோர் நரகத்து ஆழ்வார்
** வாய்பேசா விலங்கைக் கொல்வோன் வன்பேயாவன்

#515
மானிடர் துயரைச் சொல்வர் மற்றுளோர் அதனைத் தீர்ப்பர்
ஆனவர் உறு நோய் நீக்க அனந்தமாம் பரிகாரங்கள்
மோனமாய் இடுக்கண் தாங்கி முறையிட அறியாது அல்லல்
தான் உறு விலங்கைக் கொல்வோன் தருமனோ பேயோ அம்மா
** ஊன்உண் பழக்கத்தால் உண்பர் மக்களையும்

#516
கொடிய வெவ் விலங்கை எல்லாம் கோறலே முறை என்றாலும்
அடிமை போல் நரர்க்கு உழைத்து ஈண்டு அயர் விலங்கினை மாசில்லாக்
குடிஞையை அடித்து உதைத்துக் கொன்று உண்போர் சமயம் வாய்க்கில்
படியின் மக்களையும் உண்பர் பழக்கம் போல் தீயது உண்டோ
** விலங்கினை வாட்டுவோர் மக்களையும் வாட்டுவர்

#517
ஊமரைப் பித்துளாரை உணர்வு_இல் சேயரை மின்னாரைப்
பாமரர்-தம்மை மிக்க பரிவொடும் காத்தல் போல
நாம் அற விலங்கைக் காப்பர் நல்லவர் அதை வருத்தும்
தீ மனம் உடையோர் துன்பம்செய்வர் மானிடர்க்கும் அம்மா
** புலாலுண்போர் தெய்வத் தண்டனை அடைவர்

#518
காய் இலை கிழங்கே தக்க கறியதாம் அதனை உண்போர்
ஆயுள்நாள் வளரும் ஊழ்த்தல் அருந்துவோர் உயிர்கட்கு எல்லாம்
தாய் எனும் ஒரு கருத்தன் சாபத்தைப் பரிப்பார் என்னில்
பேயினும் கொடிய அன்னார் பிழைக்குமாறு எவன்-கொல் அம்மா
** இரக்கமிலாது விலங்குக்கு இடர்விளைப்போன் நெஞ்சம் இரும்புகல்

#519
பற்றி நோய்செயப் பின்பற்றும் பதகரை வெரீஇ விலங்கு
சுற்றியே ஓடும் கத்தும் துன்புறும் வயிற்றைக் காலால்
எற்றி வீழ்ந்து எழும் மயங்கும் என் செயும் இவ் விலங்கை
முற்றிய சினத்தில் பற்றும் மூர்க்கர் நெஞ்சு இரும்போ கல்லோ
** ஊனுண்போர் தமைப்புலி உண்ண ஒப்புவரோ

#520
எமக்கு உண விலங்கைப் புள்ளை இறை செய்தான் எனக் கொன்று அட்டுச்
சுமக்க அரிதாக உண்டு பாழ்ங்குழி தூர்க்காநின்றீர்
தமக்கு உண நும்மை ஈசன் சமைத்தனன் எனப் புல் சீயம்
அமர்க்கு அரி ஆதி உம்மை அடித்து உணின் என் செய்வீரால்

@46 அதி. 45 – பன்னெறி
** வேதாந்தம்
** கற்பனை பத்தும் கைக்கொள்வோர் கடவுளைச் சார்வர்

#521
ஈசனையே துதித்தல் அவன் திருநாமத்தொடு திருநாளினைக் கொண்டாடல்
நேசம் ஆர் அனை தந்தை வணங்கல் கொலை செய்யாமை நிதம் காமத்தை
நாசமாக்குதல் களவு பொய் நீக்கல் பிறன் இல் மது நயந்திடாமை
மாசறும் இவ் விதி பத்தும் வேதாந்தம் எனக் கடவுள் வகுத்திட்டானால்
** எல்லா நெறியினும் சிறந்தது இறைநினைவே

#522
முன்னவன் பொன் பதம் முன்னம் உன்னலும்
தன் உயிர் எனப் பல உயிரைத் தாங்கலும்
பன்னெறி யாவினும் பளகு இலா அரு
நல் நெறியாம் என நவிலும் வேதமே
** வாழி

#523
ஆதிநூல் என்றும் வாழ்க அநுதினம் தருமம் வாழ்க
வேதியர் நாளும் வாழ்க மெய்யடியார்கள் வாழ்க
தீது_இல் ஆங்கிலேய மன்னர் செங்கோல் எஞ்ஞான்றும் வாழ்க
நீதிநூல் படிப்போர் கேட்போர் நித்தமும் வாழ்க மாதோ

@47 இணைப்பு
** பின்கிடைத்த வேறு படிகளில் காணப்பெறும் பாடல்கள்
** பாயிரம்
** பாட்டறு நூறும் பகர்ந்தேன் எனக்கே

#524
தனக்குத்தான் ஒருவன் போதம் சாற்றிடில் குறை பிறர்க்கு என்
எனக்கு அவிர் நீதி நூல் நாற்பத்துநான்கு அதிகாரங்கள்
இனக் கவி அறுநூறு ஆய இனைய நூல் அயலார்க்கு அன்று என்
மனக்கு யான் உணர்த்துகின்றேன் மற்று எனை முனிவர் யாரே

#525
மண் கவி மாந்தர் யாரும் மறைவு இன்றி உணரும் வண்ணம்
வெண்கவி புனைந்தேன் என்னை வெகுளுதல் இருளை வேட்டு
விண் கவி மதியைப் பாலை வெள்ளியை வெண் படாத்தைக்
கண் கவி வயிர முத்தைக் கவுரம் என்று உடற்றல் போலும்
** மாசகற்றி மாண்புறுத்தல் மதியுடையார் மாண்பே

#526
வழு ஒழித்து ஆளல் மேலோர் வழக்கு எனலால் இ நூலைத்
தழுவு-மின் என அன்னோரைத் தாழ்ந்திடல் மிகை கீழோரைத்
தொழுது இரப்பினும் மாசு ஒன்றே தூற்றுவர் அவரை வாளா
அழுது இரத்தலின் பேறு இல்லை ஆதலின் மௌனம் நன்றால்
** நூற்பொருள் வைப்பால் விழுப்பொருள் நுகர்வர்

#527
தான் கண்ட நிட்சேபத்தைத் தமர்க்கு எலாம் அறிவிப்பான் போல்
வான் கண்ட இங்கிலீயம் மருவு பல் நூல் பூமிக்குள்
யான் கண்ட நிட்சேபத்தை யாவரும் தெரிவான் செய்தேன்
தேன் கண்ட இ நூல் ஈட்டல் செய்குவார் உய்குவாரே
** அதி 1 – தெய்வமுண்டெனல்
** கற்றார் உற்றுரை கைக்கொளல் கடமை

#528
நீள் வியன் உலகம் எங்கும் நிகழ்வன பலவும் பாரார்
கேள்வியின் அறிவார் கற்ற கேள்வியும் கேள்வி அன்றோ
ஆள் வினை உடையான் உண்டு என்று அரு மதம் யாவும் கூறும்
கோள் வினை கோளுறாரைக் கோள் வினை கோளுறும் காண்
** கடவுளில் லென்போர் இல்லா ராகியே கழிவர்

#529
இவரிய தருவைக் கைவிட்டு இகழ்ந்து கீழ் வீழ்வார் போலும்
இவவுறத் தம் தாய் வந்தி என்பவர் போலும் பைங்கூழ்
அவனியை நீத்தல் போலும் அகிலம் ஆள் கோவைத் தேவைத்
தவ நிதியினை இன்று என்போர் தாமுமே இலர் ஆவாரே
** அதி 2 – தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
** கண்முதல் உறுப்பெலாம் தந்தவன் கடவுள்

#530
அண்ட பேரண்டம் எல்லாம் அளந்து அறி விழியும் கந்தம்
கொண்டு அறி மூக்கும் ஓசை கொழும் சுவை பரிசம் எல்லாம்
கண்டு அறி செவி நா மெய்யும் கழறும் ஐம்புலன்கட்கு ஏன்ற
பண்டம் என்பன அனைத்தும் பண்ணியோன் திண்ணியோனே
** உலகுடல் உறுப்புழைப்பு உதவினோன் கடவுள்

#531
மன் உயிர்க்கு இசைந்த பூத வகைகளும் அவைக்கு இசைந்த
கொன் உடலமும் அவ் அங்கம் குனிந்திட நிமிரச் செல்லத்
துன்னுபு தங்க ஓடத் தொழில் பல இயற்றத் தக்க
தென் உறுப்புகளும் செய்தோன் தேவனோ யாவனேயோ
** என்றும் புதிதாய் உலகியற்றினோன் கடவுள்

#532
என்றுமே பழைமை எய்தாது இலகு உலகமும் யாவுள்ளும்
துன்றிய தழலும் யாங்கண் தோண்டினும் ஊறும் நீரும்
ஒன்றினை அசைக்கின் மேவும் உலவையும் குலவி எங்கும்
நின்ற அந்தரமும் தந்த நிராமயற்கு எவன் கைம்மாறே
** உயிர்கனி காய்காலம் உதவினோன் கடவுள்

#533
வேறுவேறான சீவ விகற்பமும் நிறம் பல் வாய்ந்து
நாறு பூ இலை காய் ஆர்ந்த நளிர் தரு இனமும் குன்றும்
ஊறு நீர்த் தொகையும் சீவர் உய்ந்திடக் கார் முன்னாக
மாறு காலப் பகுப்பும் வகுப்பவன் சகப் பிரானால்
** ஒன்பான் துளையுடலில் உயிர்நிறுத்தோன் கடவுள்

#534
காற்றினைப் பல துவாரக் கடத்தினுள் அடைத்தல் போல
ஏற்றிடும் நவ துவாரம் எண்ணிலா மயிர்த் துவாரம்
தோற்றிய சடக் கடத்துள் துன் உயிர்க் காற்று அடைத்து
நால் திசை மிசைப் பல் ஆண்டு நடத்துவோன் திடத்தினானே
** என்பு இறைச்சி குருதியுடல் இயற்றினோன் கடவுள்

#535
கொன் புலால் சுவரை நீராம் குருதி தோய்த்து எழீஇச் சுவேத
என்பு எனும் கழி பரப்பி இரச்சமாம் நரம்பால் வீக்கி
ஒன்பது வாயில் விட்டு இங்கு உரி எனும் கூரை வேய்ந்து
மன் பெற வீடு ஒன்றால் மா மன் பெற இசைத்தான் மன்னோ
** கருவின்றி உலகாக்கிக் காப்போன் கடவுள்

#536
மணல் ஒன்றால் மலை செய்வோனை நோக்கிடின் மா வியப்பாம்
அணு ஒன்றும் இல்லாது அண்டம் அனைத்தும் செய்து இரும் தேகங்கள்
துணை_இல் சுக்கிலவு இரத்தச் சிறு துளியான் அமைத்துப்
புணர் சிறு வித்தால் பார மரம் எலாம் புரிந்தோன் தேவே
** ஞாயிற்றை நடுநிலையில் நாட்டினோன் கடவுள்

#537
பகல் புவியினும் பல் கோடி பங்கு மிக்கதுவாம் பூமிக்கு
இகல் அணித்தாயின் யாவும் எரிந்துபோம் சேணாயின் பார்
தக ஒளி பெறாது என்று உன்னித் தக்க கண் நிறுவிச் சுற்றும்
நிகழ் புவனங்கள் காந்தியுறச் செய்தோன் நிகரி.லானால்
** திங்களைத் திகழ்வுறச் செய்தோன் கடவுள்

#538
மதி புவி என ஓர் கோள வடிவமாம் அஃது காந்தி
கதிரிடம் பெறும் அச் சோமன் புவியைச் சுற்றுங்கால் என்றூழ்க்கு
எதிர் உறாது ஒளித்தலாலே இருளுறும் மீண்டும் சோதி
பதிவுறும் இனைய திங்கள் பண்ணினோன் விண்ணின்_கோனே
** உலகுருண்டு சுற்றக் காலம் உறுவித்தோன் கடவுள்

#539
பார் இரு புறத்தும் சோதி பட அப் பார் தினம் புரண்டு
சூரியற்கு எதிராய்ப் பின்னும் சுழன்று விண் சென்று ஓர் ஆண்டில்
பேர் இரவியையே சுற்றக் கால பேதங்களாம் இச்
சார் இயல் பார் செய்தோன் தாள் தலையுறார் நிலையுறாரே
** வளப்பமொடு மென்மை வன்மை நிலம் வகுத்தோன் கடவுள்

#540
தருவின் வேர் பயிர் வேர் உள் சென்று உலாவ மென்மையதாய்த் தங்கும்
இரு மலை சீவர் இல்லம் யாவும் உள் அழுந்தா வண்ணம்
ஒருவு_இல் வன்மையதாய் எண்_இல் ஆண்டு ஒழியினும் வளப்பம்
மருவுபு பலன் அளிக்கும் வையம் ஐயன் செய்தானால்
** கரைதாங்க லின்றிமழை கடல்தந்தோன் கடவுள்

#541
நீரினைக் கலங்கள் இன்றி நிறுத்தல் போல் நீர் திரண்ட
காரினைக் கீழ் விழாது ககனத்தில் நிறுவி நொய்ய
மாரியே பெய்யச்செய்து மறித்திடு கரை ஒன்று இன்றி
வாரியை நிறுத்தும் இன்ப_வாரியைச் சாராய் நெஞ்சே
** உயிர்வாழ் காற்றிங் குதவினோன் கடவுள்

#542
மா தலம் சுழலலாலும் மா மதி சுழலலாலும்
ஆதவன் கிரணத்தாலும் அந்தரம் அசைவுற்றாகும்
ஊதல் அஃது இன்றேல் சீவர் உய்ந்திடார் பெரும் கால் மாகம்
மீது அமர் விடத்தை நீக்கும் வியந்து இக் கால் தந்தோன் யாரே
** இடிமின்னால் நஞ்சகற்றி மழையீந்தோன் கடவுள்

#543
அகல் இடத்திருந்து பல் நீராவியைப் பானு கையால்
ககனம் மீது ஈர்க்கக் காராம் கடினத்தால் இடியாம் பல் கார்
இகலொடு பொருத மின்னாம் இடித்தல் வான் விடம் அகற்றும்
சகலமும் உய்யப் பெய்யும் சலதரம் ஈந்தோன் யாரே
** தீயும் காற்றும் சீர்பெற அமைத்தோன் தேவன்

#544
வாயு வல் விசையோடு எய்தின் மகியினோடு உயிர்கள் யாவும்
வீயும் என்று அக் கால் மெல்ல வீசச்செய்து உலகு எங்கும் சார்
தேயு மேல் எழுந்து நிற்கின் செகம் உய்யாது என அத் தீயை
வேயும் பல் பொருட்குள் வைத்து வேட்டவாறு அளிப்போன் யாரோ
** மனத்துக்கு வரம்பில் வலி வகுத்தோன் கடவுள்

#545
ககனம் மண் சராசரங்கள் கலைகள் உன்னுள் அடக்கிப்
பகர் ஒரு நொடிக்குள் அண்டப் பரப்பு எலாம் உலாவித் துன்பம்
சுகம் அறம் மறம் ஓர்ந்து ஆவி தூங்கினும் தூங்காது ஓங்கி
அகலுறும் உன்னைச் செய்தோன் அவன்-கொல் மற்று எவன்-கொல் நெஞ்சே
** மயிர்தோல் வலுவாய் வகுத்தோன் கடவுள்

#546
அறிவு இலா விலங்கு போர்வை அகம் செய அறியாது என்னச்
செறி மயிர் பெரும் தோல் செய்து சீத உட்டண நோய் தீர்த்தான்
மறி கவசங்கள் இல்லம் வனைந்திட அறிந்த மாக்கள்
பொறி உடல்களை மென் தோலால் போர்த்தினோன் சீர்த்தியோனே
** உறுப்பினில் படைவலி உறுத்தினோன் கடவுள்

#547
ஆயுதம் செய அறிந்த நரர் மெய்யில் ஆயுதங்கள்
தோய்தரச் செய்யான் அன்ன தொழில் இலா விலங்கின் பல்லில்
சாய்தரும் உகிரில் மூக்கில் தலையினில் காலில் வாலில்
ஏய்தரு படைக்கலங்கள் இயற்றினோன் வயத்தினோனே
** சிற்றுயிர்க்கும் செய்தொழில் சேர்த்தோன் கடவுள்

#548
உயிர் உயத் தகும் உபாயம் ஒருவரையொருவர் பார்த்துப்
பயிலுவோம் இயற்கையாப் புள் பல விலங்கு உரிய ஊண் கண்டு
அயிலல் வாழ் உறையுள் செய்தல் அணைந்து இனம் பல்கல் மற்றைச்
செயிர் அறு தொழில்கள் எல்லாம் செயப் படிப்பித்தோன் யாரே
** எட்டா வெளியாய் இன்பமாய் இலங்குவோன் கடவுள்

#549
முத்தர் பேரின்ப வாழ்வை மொழி மனக்கு அகோசரத்தைப்
பத்தர் பாக்கியத்தைப் பாவப் பகையினைத் தகையின் வைப்பை
வித்தக ஒளியை இன்ப விளைவினை அருள்_பௌவத்தை
உத்தம குணாகரத்தை உளம்கொளார் வளம் கொளாரால்
** அகலா அறுகுணம் அமைந்தோன் கடவுள்

#550
தனவயத்து ஆதல் மூலம்தான் இன்மை சடலம் இன்மை
இன நலம் எல்லாம் கோடல் எங்கணும் நிறைந்திருத்தல்
வனமுறு பொருள் யாவிற்கும் வாய்ந்த காரணனே ஆதல்
என அறு_குணத்தோன் எங்கும் இயல் அருள் மணத்தோன் நெஞ்சே
** பெண்ணும் பொன்னும்போற் கடவுளைப் பேணாதது என்னே

#551
மாதரை விழைந்தோன் என்றும் மாதரை நினைப்பன் பொன் மீது
ஆதரம் உளோன் அப் பொன்னை அனுதினம் ஓர்வன் ஈசன்
பாதம் மீது அன்பு உளேமேல் பகல் இரவினும் ஓவாது
நாதனை உன்னேம் கொன்னே நாள் கழித்திடல் என் நெஞ்சே
** துன்பந் தருதல் தூய்மைக் கென்ப

#552
நலன்கள் யா உறினும் தந்த நாதனைத் துதிமோ நோய் நாம்
கலங்கவே உறினும் தந்தை காதலர்ச் சினவல் போல் பின்
பலன்கள் நாம் பெற அத் துன்பம் பணித்தனன் இறை என்று உன்னி
விலங்கிடாது அவன் தாள் நெஞ்சே விரைவில் நீ பரவி உய்யே
** உடம்பகப் பொறியை உய்ப்போன் கடவுள்

#553
நாம் அறியாது உயிர்ப்பு கணம்-தொறும் நடக்க மெய்யுள்
தோம் அறும் இயந்திரங்கள் தொழில் பல இயற்ற உண்ணும்
சேம ஊண் சீரணித்துத் தேகம் எங்கணும் உலாவக்
காமர் ஆருயிரைக் காக்கும் கடவுள்-பால் நடவாய் நெஞ்சே
** ஈந்தானை மறந்து பொருள் எண்ணல் இழிவாம்

#554
தனம் தந்தான்-தனை இகழ்ந்து தனத்தினைத் தொழில் போல் ஈசன்
அனம் தந்தான் வாழ்வு தந்தான் ஆவியும் உடலும் தந்தான்
இனம் தந்தான் இன்பம் தந்தான் யாவும் தந்தானை நீங்கி
முனம் தந்த பொருள் அவாவும் மூடர் உன் சீடர் நெஞ்சே
** கருவியின்றியே கடவுள் காண்பன்

#555
கண் இணை செவிகள் ஈந்தோன் காணான்-கொல் கேளான்-கொல் நெஞ்சு
எண்ணிய ஈந்தோன் அத் தீது எண்ணான்-கொல் செங்கோல் ஓச்சும்
திண்ணியன் தண்டியான்-கொல் தீதிலான் தீதைச் சீறாது
அண்ணிடுவான்-கொல் நெஞ்சே அவன் அடி வழிபடாயே
** அன்பொன்றே நாடி ஆண்டானைத் தொழு

#556
தடியடிக்கு அஞ்சி ஈவோன் தருமனோ கற்பைக் காந்தன்
கொடியன் என்று அஞ்சிக் காப்பாள் சதி-கொலோ ஈசன்-மாட்டுப்
படிறு அறும் அன்பே அன்பாம் பயத்தினால் நயத்த ஆவான்
முடிவிலான்-பால் கொள் பத்தி முத்தியில் உய்த்திடாதால்
** எல்லாப் பொழுதினும் இறையை எண்ணுக

#557
உண்ணும் வேலையினும் அல்லின் உறங்கும் வேலையினும் வேலை
பண்ணும் வேலையினும் துன்பம் படரும் வேலையினும் இன்பம்
நண்ணும் வேலையினும் பாரில் நடக்கும் வேலையினும் ஒன்றைக்
கண்ணும் வேலையினும் தேவைக் கண்ணும் வேலையைச் செய் நெஞ்சே
** எல்லாம் அறியும் இயல்பினன் கடவுள்

#558
தினையினும் புகுந்து நிற்கும் தெய்வநாயகன்தான் யாவர்
நினைவையும் அறிவான் யாங்கண் நிகழ்வதும் அறிவான் செய்யும்
வினையையும் அறிவான் பேசும் விதங்களும் அறிவான் அன்பு ஆர்
அனை அனையனை அலாது ஓர் அணுவுமே அசையும்-கொல்லோ
** சிற்றுயிரும் ஓம்பலிறை சிறந்த திருத்தொண்டு

#559
தன் பணி செயற்கு வாய்ந்த மக்கள்-தம் பணி இயற்ற
மின் பணி சுடர்கள் பூத விரிவு எலாம் விமலன் ஈந்தான்
நன் பணி அவைகள் நாளும் நம் பணி ஆற்றும் ஐயன்
நன் பணி இயற்றுகில்லேம் நன் பணி அனையம் நெஞ்சே
** ஆண்டவன் வேண்டும் அறம்புரிந்து வாழ்க

#560
நரன் அருள் புரிந்தோர் அன்னோன் மனோரதம் நாடிச் செல்வர்
பரன் அருள் பெற அவன் சொல் மறை வழி பற்றி அன்னான்
திரமுறப் பகைக்கும் பாவச் சிக்கு அறுத்து அவன் விரும்பும்
தரம் அறு தருமம்-தன்னைச் சார்ந்து இடர் தீர்ந்து உய் நெஞ்சே
** சிற்றுயிர்க் கன்பிலார் செம்பொருட்கும் அன்பிலார்

#561
கண்ட மன் உயிரைப் பேணான் காண் ஒணாப் பரன்-பால் நேசம்
கொண்டனன் எனல் பொய்யாம் செங்கோல் வழி நிலார் கோன் சேயர்க்கு
அண்டலர் கோனுக்கு அன்பர் ஆவரோ நற்குணங்கள்
விண்டவர் பிறர்க்கு அன்பு இல்லார் விமலர்க்கும் அன்பு இலாரால்
** பகரொணா இன்பவளம் பத்தர்க்கு அருள்வன்

#562
நலம் இலா நரர்க்குத் தேவன் நல்கிய சராசரங்கள்
பல வளம் உளவேல் அன்னான் பத்தர்கள் பெறும் பேரின்பத்
தல வளம் எற்றோ பாவச் சலதியுள் மூழ்குவோர் சார்
புலவின் நோய் எத்தன்மைத்தோ புந்தியே சிந்தி நீயே
** நல்லாரை நீக்கின் நண்ணும் பழியே

#563
ஆலயம் தன்-பால் வாழும் அரசு ஒரீஇ அவற்கு ஒன்னாரைச்
சாலவே ஏற்றல் போலத் தனக்கு உனைப் பீடமாச் செய்
மூலகாரணனை நீத்து இங்கு அகங்காரம் முதல் பாவங்கள்
ஏல நீ உன்-கண் ஏற்றாய் இதயமே சிதைவை நீயே
** வளர்த்தோர்க்குதவும் மாமரம்போல் வகுத்தானை வணங்கு

#564
விருகமும் தனை வளர்த்தோர் வியப்புற வேலை செய்யும்
தருவொடு பயிர் வைத்தோர்க்குத் தனிப் பயன் நல்கும் நம்மை
ஒரு பொருள் எனச் சிருட்டித்து உலகமும் மற்ற யாவும்
தரும் ஒரு முதலைப் போற்றாத் தன்மையோர் புன்மையோரே
** கடவுளை எய்தார் கடவார் பிறப்பு

#565
கரும்பு உணக் கூலி கேட்கும் கருமம் போல் வறுமையாளர்க்கு
அரும் பொருளினைத் துன்புற்றோர்க்கு ஆனந்த சாகரத்தை
வரும் பிணிக்கு ஒரு மருந்தை மனத்தின்-கண் ஒளிர் தீபத்தை
விரும்புவோர் மனோகரத்தை மேவுறார் கோ உறாரே
** பரமனை வணங்குநாள் பயனுடைத் திருநாள்

#566
எவ் அஞர் உறினும் ஞாங்கர் இறை உளன் என்னத் தேறின்
அவ் அஞர் வருத்தும்-கொல்லோ ஐயனை உன்னிப் போற்றிச்
செவ்வழி நிற்கும் நாளே சீவன் உய்கின்ற நாளாம்
ஒவ்வரும் இறைவன் போற்றாது ஒழியும் வாழ் நாள் பாழ் நாளே
** அடியரை இகழ்தல் ஆண்டானை இகழ்தலே

#567
தெய்வ நாத்திகம் அத் தெய்வம் யாவினும் சிறந்தது என்ன
உய் வகை பத்திசெய்யாது ஒழிதல் நல்லொழுக்கம் இன்மை
பொய் வளர் தெய்வம் போற்றல் புனிதரைத் தளியை எள்ளல்
மெய் வளர் வேத நிந்தை விமல தூடணங்கள் ஆமால்
** எல்லாமாம் இறைவனை இடைவிடாது ஏத்து

#568
குரு இறை சீடன் நாம் நம் கோன் அவன் குடி நாம் அன்னான்
ஒரு பிதா நாம் சேய் ஆண்டான் உவன் வழித்தொண்டன் நாம் அவ்
உரு இலான் உடையானாமே உடைமையன் அவனே தாதா
மருவு இரவலன் நாம் என்ன மதி மதி மதி_இல் நெஞ்சே
** ஆண்டான் அடிபோற்ற ஆகும் பெருமகிழ்வு

#569
கற்பினார் கணவர்-தம்மைக் காண்-தொறும் களித்தல் போலும்
பொற்புறு சிறார் தாய் கையில் பொருந்துபு மகிழல் போலும்
அற்புத உவகையோடும் அடிகளை அடிகள் போற்றாது
உற்பவ உவர்ப்போடு ஏத்தும் உள்ளத்தார் கள்ளத்தாரே
** தாயினும் பிழைபொறுத்துத் தாங்குவோன் கடவுள்

#570
புகர் சில இயற்றில் தாயும் பொறுப்பள்-கொல் மனத்தால் வாக்கால்
இகழுறு செயலால் நாம் செய் ஏதம் எண்_இல என்றாலும்
சகம் மிசைத் தண்டியாது சாம்தனையும் பொறுத்துச்
சுகம் எலாம் ஈயும் தேவைத் துதித்து உன்-பால் பதித்து உய் நெஞ்சே
** அடியிணை பிடித்தென்றும் அகலாமை அன்பு

#571
உற்ற சஞ்சீவினியை உண்ணாது ஒழியும் மதி
யற்றவர் போல் மாதாவாய் அப்பனாய் ஆருயிராய்ச்
சுற்றமாய் வாழ்வாய்த் துணையாய் நம்-பால் உறையும்
கொற்றவனைப் போற்றிக் குறையிரந்து பல் வரமும்
உற்ற நல்காயாயின் விடேன் என்று முறை கால் பூண்டு எவ்
அற்றமும் ஏத்தோம் இனி வேறு ஆர் உதவி சொல் மனமே
** ஆண்டான் அடிநினைத்து ஆடாய் நீபாடாய்

#572
வீடாத முத்தொழிலோன் விண்ணவர்கோன் மண்ணவர்கோன்
கோடாத செங்கோலான் குற்றம் இல்லான் நித்தம் உனை
வீடாகக் கொண்டு உறையும் மேன்மையுற்றாய் இவ் அருளை
நாடாய் அளி நீடாய் நாத் தழும்பப் போற்றி நிதம்
பாடாய் உருகாய் பரவசம் மீக்கூர்ந்து நனி
ஆடாய் கொண்டாடாய் வேறு ஆர் உதவி சொல் மனமே
** பொருள்சேர் புகழ் புகன்று போற்றுதல் கடனே

#573
சிந்தாகுலம் தீர்க்கும் செல்வமே நல் வளமே
நந்தா அற விளக்கே நாயகமே தாயகமே
எந்தாயே கண்ணே இனிய உயிரே நலங்கள்
தந்து ஆளும் கற்பகமே தற்பரமே அற்புதமே
கந்தாம் மணியே கதிநிலையே ஆரமுதே
அம் தாயே என்று ஏத்தாய் ஆர் உதவி சொல் மனமே
** பெரியானைச் சிறியானைப் பிரியானைப் பேசு

#574
அடர்ந்த மணல் எனக் கணக்கு_இல் அண்ட பகிரண்டம் எலாம்
கடந்து நின்ற பெரியானைக் கடுகில் நுழை சிறியானைத்
தொடர்ந்த அன்பர்க்கு உரியானைத் துகள் உடையோர்க்கு அரியானைப்
படர்ந்தவர் உள் பிரியானைப் பழிச்சாயோ நாவே
பரமசுகோதய நிலையைப் பழிச்சாயோ நாவே
** தொண்டர்க்கு எல்லாமாம் துணைவனைத் தொழு

#575
தொண்டர் எனும் பயிர் தழையச் சொரி முகிலை அவர் இதய
முண்டகங்கள் நெகிழ்த்து ஒளியை மும்மலம் வேரற வீசும்
சண்டவளியினைப் பாவத் தழல் அவிக்கும் தண் புனலைக்
கண்டவர்-தம் சுகநிலையைக் கருதாயோ மனமே
காண் அரிய பரஞ்சுடரைக் கருதாயோ மனமே
** அறிவாற்றல் அன்பாம் ஆண்டவனைத் தொழு

#576
ஒன்று ஆகி மூன்று ஆகி உயிர்த்துணையாய் ஒப்பு_இலதாய்
நன்று ஆகி நின்ற தனிநாயகனைத் துதி மனமே
நாயகனைத் துதிபுரியில் நன்மை உறும் தின்மை அறும்
தீயகம் போம் மெய் துறும் காண் தேவர் பெறும் பேறே
** சீலத்தார் சிவனடியைச் சென்றுசேர்ந் தின்புறுவர்

#577
தீயர்-தமைச் சுடும் தழலைச் சீலர்-தமக்கு ஒரு நிழலை
ஆய அரிய பரம்பொருளை ஆவலின் ஏத்தாய் மனமே
ஆவலின் நீ ஏத்துவையேல் அல்லல் கரையேறி
மேவரும் பேரானந்த வெள்ளமதில் தோய்வாயே
** மேலோனை நூலோனைத் தொழுதலே விழுப்பயன்

#578
ஐம்புலனும் தானாய் அவை நுகரும் இன்பமுமாய்
வெம் புல நோய் மா மருந்தாம் மேலோனை நூலோனை
நம்புமவர்க்கு அடைக்கலத்தை நாடீர் நமரங்காள்
** அதி. 4 – குடிகளியல்பு
** இறைப்பணத்தால் குடிகளே இன்பம் எய்துவர்

#579
வேர் உறு நீர் மரம் எங்கும் விரவும் உதரம் கொள் சுவை
ஆர் உணவு தேகம் எலாம் மண்ணுறும் கோன் கொள்ளும் இறை
பார் உயிர்க்கு எலாம் பின்பு பயன்படலால் தகும் பருவத்து
ஏர் உறவே தக்க இறை இனிது ஈவர் குடிகள் அரோ
** உயிராம் வேந்தை உள்ளன்புடன் காப்பர்

#580
தருவினொடு கிளைகளும் சார் வல்லியும் சாய்ந்து அழிதல் எனப்
பெருமகன் ஓர் இடர் எய்தின் பிழைக்கும் வகை பிறர்க்கு உண்டோ
மருவலரால் மற்றொன்றால் மகிபன் அயர்வு எய்தாமல்
ஒருமையொடு மன்னானை உயர் குடிகள் ஓம்புவரால்
** மன்னன் செயலை மதித்தே நடப்பர்

#581
அல் ஆரும் மழை எவர்க்கும் அமுது எனினும் காலம் உணர்ந்து
எல்லாரும் நலம் பெறச்செய்திடும்-கொல்லோ ஒரு நிருபன்
பல்லாரும் மகிழ்வுறவே பண்ணல் அசாத்தியம் எனலால்
நல்லார் அன்னோன் செயலை நயம் எனக் கொண்டு ஒழுகுவரால்
** அதி. 5 – ஞானாசிரியன் தன்மை
** மேலோர் நடப்பதே ஏனோர்க்கும் விதியாம்

#582
மகவின் கரம் பற்றி முன் தான் நடந்து வளம் மேவும் நடை காட்டி மகிழ் அன்னை போலும்
தக முன்பு தாம் ஆடி நடனம் பயிற்றும் தகையோர்கள் போலும் சகத்தோர் செவிக்-கண்
புகவே நல்வழி ஓது புரை அற்ற புனிதர் பொறை சீலம் அன்பு ஈகை புகழ் வாய்மை விரதம்
பகர்கின்ற சுகுணங்கள் யாவிற்கும் அவர் ஓர் பதி ஆகி விதி ஆகி மதி ஓதுவாரால்
** எல்லார்க்கும் இனியராய் இயல்பவர் மேலோர்

#583
அயலார் மதத்தைக் குணத்தைப் பழிக்கார் அறம் ஈது மறம் ஈது எனச் சொல்வர் பொதுவாச்
சுயவூதியம்-தன்னை நட்டத்தை மதியார் சூழ்ந்தோர்கள் ஈடேறுமாறு என்றும் முயல்வார்
இயல் செல்வர் மிடியாளர் நல்லார்கள் அல்லார் என் பேதம் ஓரார் யாவர்க்கும் இனியார்
பயன் ஒன்று விழைவோரை மறை-தன்னில் ஏலார் பழி அற்ற மொழி பெற்ற வழி உற்ற மேலோர்
** அதி. 6 – பொய்க்குருவின் தன்மை
** இழிகுரவர் எந்நாளும் இயல்நெறி ஒழுகார்

#584
ஒளியை வால்புறம் போக்கி ஓர் செவ்வுரு
நளி இருட்டில் நகருதல் போல் கற்ற
தெளிவு எலாம் ஒருபாங்கர் எறீஇச் செல்வர்
இளி கொள் தீ நெறி ஈனக் குரவரே
** ஓதியவழி நில்லார் ஊதியம் எய்தார்

#585
உணர்ந்தும் தாம் பிறர்க்கு ஓதியும் நல்வழி
தணர்ந்துளோர் சுடர் தாங்கித் தன் மேல் இருள்
புணர்ந்த தம்பம்-கொல் புத்தகம் தாங்கிய
கொணர்ந்த சட்டம்-கொல் பால் கொள்கலம்-கொலோ
** அதி. 7 – தாய்தந்தையரை வணங்கல்
** ஈன்றார் கடுஞ்சொல் ஏற்றலே கடனாம்

#586
தளர்வுறு மூப்பால் ஈன்றோர் சாற்றும் வன்மொழி பொறாது
கிளர்வு அறு சினம் மீக்கொள்ளும் பாவி கேள் அவர் உன்னால் உன்
இளமையில் உறும் துன்பங்கட்கு இடைந்து சற்று உனை ஓம்பாரேல்
வளருவாய்-கொல் நீ இன்னே வாழ்வை-கொல் முனிவை-கொல்லோ
** ஈன்றார் உடன்பிறந்தார் இவர்ப்பேணல் எழிலாம்

#587
உரியவர் யாவரினும் அனை தந்தை உறவே முன்னாம் உவர்தாம் நம்மில்
பெரியவராய் நம் பயன் ஒன்றே கருதும் பெற்றியினால் பெட்பின் அன்னார்
பிரியம் வெறுப்பினை உணர்ந்து அவ்வாறு ஒழுகி அவரோடும் பிறந்த மைந்தர்
அரிவையர் அவ் அனை தந்தை அனையர் என நினைத்து ஓம்பல் அழகாம் நெஞ்சே
** அதி. 8 – மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும்
** ஈன்ற மகவோம்பார்க் கிருதிணையும் இன்றாம்

#588
படு தொழில் விலங்கும் தன் பறழ் வளர்ந்து உடல்
நெடுமையாம்காறும் நன்கு ஓம்பி நிற்குமால்
தொடும் உயர்திணை மரீஇச் சுதர்க்-கண் அன்பு இலாக்
கொடுமையோர்க்கு ஒரு திணை கூற இன்று அரோ
** திருந்தா மக்களைத் தெய்வமும் ஒறுக்கும்

#589
முறை_இல் சேயரைத் தன்னம் முனிய அஞ்சுவீர்
கறை மிகும் அவரைப் பார் காக்கும் வேந்தனும்
இறைவனும் தண்டனை இயற்றுவார் இனித்
தரையில் எவ்வாறு அதைச் சகித்து உய்வீர்களே
** தொழுதுணர்த்தி மக்களைத் தொழுதுழைக்கச் செய்க

#590
முத்தொழில் பரன் தொழும் முறையும் மன்னவன்
கைத்தொழில் பொருள் இலக்கணமும் தத்தமக்கு
எத் தொழில் எவ் ஒழுக்கு இயைந்த ஆகுமோ
அத் தொழில் வண்மையும் அறைக பாலர்க்கே
** கல்லாதார் செய்குற்றம் ஈன்றாரைக் கட்டுறுத்தும்

#591
பச்சைமண் கொடு நினைத்தபடி பல கலம் செய்வார் போல்
விச்சையும் அறமும் மூப்பு மேவும் முன் தம் மகார்க்குப்
பிச்சைகொண்டெனினும் ஓதல் பெற்றவர் கடனாம் அன்றேல்
இச்சை சேர் பழி பாவங்கள் ஈன்றவர்க்கு எய்துமாலோ
** அதி. 9 – மாதரைப் படிப்பித்தல்
** அறிவாற்றல் பெருமைகளால் ஆண்பெண் ஒப்பே

#592
நூல் எலாம் மைந்தரே நுவன்றதால் அவர்
வேல் எனும் விழியர்க்கு ஓர் விகற்பம் கூறுவர்
பால் எனும் வேற்றுமை அன்றிப் பங்கம் என்
மால் எனும் மைந்தர்க்கும் மடந்தையர்க்குமே
** மங்கையர்க்கு நன்குணர்த்தல் ஈன்றோர் மாண்பு

#593
தீது அறத் தன்மையும் தெய்வ நேயமும்
ஓது அரிதான இல்லற ஒழுக்கமும்
காதலர் வளர்த்தலும் காந்தர்ப் பேணலும்
மாதருக்கு உணர்த்தல் ஈன்றோர்க்கு மாண்பு அரோ
** பெண்பாலார் கல்வியெலாம் ஆண்பாற்குப் பெரும்பொருளாம்

#594
வாணி உமை கமலை ஔவை முதலியவர் மாதர் அன்றோ மைந்தர் நாவைக்
காணிகொள்வாள் தனைப் போன்ற மடந்தையர் நாச் சேராளோ கதிரோன் இல் பார்
சேண் நிகரும் கல்வி இலா மாதர் அகம் படித்து உணரத் தீட்டப் பாடப்
பூண் இழையார் அறிகுவரேல் நிதியமது போலும் உண்டோ புருடர்க்கு அம்மா
** அதி. 10 – உடன்பிறந்தாரியல்பு
** முன்பின் பிறந்தார் தந்தைதாய் மக்களாமுன்

#595
முன்னவன் சிறுபிதா முன்னை அன்னையாம்
பின்னவன் நேயனாம் பின்னை புத்திரி
பன்ன அரும் சோதரர் பன்னிமார்கள் ஈங்கு
உன்ன அரும் சோதரம் போலும் உள்ளமே
** கிளைஇலைபோல் உடன்பிறந்தார் கெழுமுதல் பண்பே

#596
கொம்பர் உள் உலர்ந்திடக் கூட வாடும் இலைகளும்
பம்பியக் கொம்பு ஓங்கிடப் பன்னமும் செழிக்குமால்
தம்பி அண்ணன் என்னவே சார்ந்துளோர்-தம் இன்பமும்
வெம்பு துன்பும் ஒன்று என மேவி வாழ்தல் மேன்மையால்
** உடைமையிற்பங் கில்பிறப்பை ஓம்பல்பிறப் பாண்கடனே

#597
உடன்பிறந்த சோதரிக்கு ஒத்த பாகம் இலை பிறப்
பிடம் துறந்து நாளை ஓர் ஏழை இல்கிழத்தியாய்த்
தொடர்ந்து செல்வள் ஆதலால் தொடர்புறும் சகோதரர்
அடர்ந்த அன்போடு அவளை நன்கு ஆதரிக்க வேண்டுமால்
** எல்லார்க்கும் அன்புசெய ஈந்தான் இவ்வுடல்

#598
நாடு வேறு குலமொடு நலமும் வேறு உளாரையும்
நீடு நாரொடு ஓம்புதல் நீதி என்னின் ஒருவயிற்று
ஊடு போந்த சோதரர் ஒத்து வாழ்கிலார் எனின்
வீடு மூடும் வாய் நலம் வீடும் கேடும் கூடுமே
** தந்தை தாயின் உடன்பிறப்புச் சார்மக்கள் பேணலறம்

#599
தந்தையோடு தாயொடு தாம் பிறந்த சோதரர்
மைந்தரானும் தந்தை கொள் மறுமனை வயிற்றிடை
வந்த பேர்கள் ஆயினும் மற்று உளோர்கள் ஆயினும்
முந்து காதலோடும் நட்பு உவந்து வாழ்தல் நன்று அரோ
** தெய்வநிலை அண்டங்கள் தெரிக்கும கல்லில்

#600
சிறுவரைப் போது ஓர் கல்லைச் சேணிடை நிறுவுவோனை
அறு_குணன் என்போம் பார் மேல் அன்னதன் கீழ் எப்பாலும்
துறுவிய அண்ட கோளத் தொகைகள் எண்ணிறந்த வானின்
நிறுவுவோன்-தன்னை இன்னே நெஞ்சமே உன்னாது என்னே
** நீதிநூல் முற்றிற்று

மேல்

&10 சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நன்னெறி

@0 கடவுள் வாழ்த்து

#1
மின் எறி சடாமுடி விநாயகன் அடி தொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே

@1 நூல்

#1
என்றும் முகமன் இயம்பாதவர்-கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர் துன்று சுவை
பூவின் பொலி குழலாய் பூம் கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து

#2
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிது என்க ஈசற்கு
நல்லோன் எறி சிலையோ நல்_நுதால் ஒண் கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு

#3
தங்கட்கு உதவிலர் கைத் தாம் ஒன்று கொள்ளின் அவர்
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க தங்க நெடும்
குன்றினால் செய்து அனைய கொங்கையாய் ஆவின் பால்
கன்றினால் கொள்ப கறந்து

#4
பிறர்க்கு உதவிசெய்யார் பெரும் செல்வம் வேறு
பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறாம் பிறர்க்கு உதவி
செய்யாக் கரும் கடல் நீர் சென்று புயல் முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு

#5
நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர் பெருமை நொய்து ஆகும் பூக்_குழலாய்
நெல்லின் உமி சிறிது நீங்கிப் பழமை போல்
புல்லினும் திண்மை நிலை போம்

#6
காதல் மனையாளும் காதலனும் மாறு இன்றித்
தீது_இல் ஒரு காமம் செய்பவே ஓது கலை
எண்_இரண்டும் ஒன்றும் மதி என் முகத்தாய் நோக்கல்தான்
கண் இரண்டும் ஒன்றையே காண்

#7
கடலே அனையம் யாம் கல்வியால் என்னும்
அடல் ஏறு அனைய செருக்கு ஆழ்த்தி விடலே
முனிக்கு அரசு கையால் முகந்து முழங்கும்
பனிக் கடலும் உண்ணப்படும்

#8
உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடம் கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு

#9
மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர்-தமைத் தாம் மருவில் பலி ஏல்
கடவுள் அவிர் சடை மேல் கட்செவி அஞ்சாதே
படர் சிறையப் புள் அரசைப் பார்த்து

#10
தம் குறை தீர்வு உள்ளார் தளர்ந்து பிறர்க்கு உறூஉம்
வெம் குறை தீர்க்கிற்பார் விழுமியோர் திங்கள்
கறை இருளை நீக்கக் கருதாது உலகின்
நிறை இருளை நீக்கும் மேல் நின்று

#11
பொய்ப் புலன்கள் ஐந்தும் நோய் புல்லியர்-பால் அன்றியே
மெய்ப்புலவர்-தம்பால் விளையாவாம் துப்பின்
சுழற்றும்-கொல் கற்றூணைச் சூறாவளி போய்ச்
சுழற்றும் சிறு புல் துரும்பு

#12
வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை திருந்து_இழாய்
சீத நீர் பொள்ளல் சிறு குடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு

#13
பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் சுரக்கும்
மலை அளவு நின்ற முலை மாதே மதியின்
கலை அளவு நின்ற கதிர்

#14
தொலையாப் பெரும் செல்வத் தோற்றத்தோம் என்று
தலையாயவர் செருக்குச் சார்தல் இலையால்
இரைக்கும் வண்டு ஊதும் மலர் ஈர்ம் கோதாய் மேரு
வரைக்கும் வந்தன்று வளைவு

#15
இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல் மற்று
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் நல்லாய்
மொழி இலார்க்கு ஏது முதுநூல் தெரியும்
விழி இலார்க்கு ஏது விளக்கு

#16
தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து உயர்ந்தோர்
தம்மை மதியார் தமை அடைந்தோர் தம்மின்
இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல்

#17
எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்று அவன்
மைந்தர் தம் ஈகை மறுப்பரோ பைம்_தொடீ
நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ்
கன்றும் உதவும் கனி

#18
இன்சொலால் அன்றி இரு நீர் வியன் உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே பொன் செய்
அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண் என்
கதிர் வரவால் பொங்கும் கடல்

#19
நல்லோர் வரவால் நகை முகம் கொண்டு இன்புறீஇ
அல்லோர் வரவால் அழுங்குவர் வல்லோர்
திருந்தும் தளிர் காட்டி தென்றல் வரத் தேமா
வருந்தும் சுழற்கால் வர

#20
பெரியவர் தம் நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க தெரி_இழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பைக்
கண்டு கலுழுமே கண்

#21
எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்து அறிவார்க் காணின் இலையாம் எழுத்து அறிவார்
ஆயும் கடவுள் அவிர் சடை முன் கண்ட அளவில்
வீயும் சுர நீர் மிகை

#22
ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க நீக்கு
பவர் யார் அரவின் பரு மணி கண்டு என்றும்
கவரார் கடலின் கடு

#23
பகர்ச்சி மடவார் பயில நோன்பு ஆற்றல்
திகழ்ச்சி தரும் நெஞ்சத் திட்பம் நெகிழ்ச்சி
பெறும் பூரிக்கின்ற முலைப் பேதாய் பல்கால்
எறும்பு ஊரக் கல் குழியுமே

#24
உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ்
கொண்டு புகல்வது அவர் குற்றமே வண்டு மலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்-வாய் வேம்பு அன்றோ
காக்கை விரும்பும் கனி

#25
கல்லா அறிவின் கயவர்-பால் கற்று உணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே வில் ஆர்
கணையின் பொலியும் கரும் கண்ணாய் நொய்தாம்
புணையில் புகும் ஒண் பொருள்

#26
உடலின் சிறுமை கண்டு ஒண் புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் மடவரால்
கண் அளவாய் நின்றதோ காணும் கதிர் ஒளிதான்
விண் அளவு ஆயிற்றோ விளம்பு

#27
கைம்மாறு உகவாமல் கற்று அறிந்தோர் மெய் வருந்தித்
தம்மால் இயல் உதவி தாம் செய்வர் அம்மா
முளைக்கும் எயிறு முதிர் சுவை நாவிற்கு
விளைக்கும் வலியன தாம் மென்று

#28
முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளம்
கனிவினும் நல்கார் கயவர் நனி விளைவு_இல்
காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து
ஆயினும் ஆமோ அறை

#29
உடற்கு வரும் இடர் நெஞ்சு ஓங்கு பரத்து உற்றோர்
அடுக்கும் ஒரு கோடி ஆக நடுக்கமுறார்
பண்ணின் புகலும் பனி_மொழியாய் அஞ்சுமோ
மண்ணில் புலியை மதி மான்

#30
கொள்ளும் கொடும் கூற்றம் கொள்வான் குறுகுதல் முன்
உள்ளம் கனிந்து அறம் செய்து உய்கவே வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணை கோலி வையார்
பெருகுதல்-கண் என் செய்வார் பேசு

#31
பேரறிஞர் தாக்கும் பிறர் துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் நேர்_இழாய்
மெய் சென்று தாக்கும் வியன் கோல் அடி தன் மேல்
கை சென்று தாங்கும் கடிது

#32
பன்னும் பனுவல் பயன் தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலி இலவே நல்_நுதால்
காழ் ஒன்று உயர் திண் கதவு வலி உடைத்தோ
தாழ் ஒன்று இலதாயில் தான்

#33
எள்ளாது இருப்ப இழிஞர் போற்றற்கு உரியர்
விள்ளா அறிஞர் அது வேண்டாரே தள்ளாக்
கரை காப்பு உளது நீர் கட்டு குளம் அன்றிக்
கரை காப்பு உளதோ கடல்

#34
அறிவுடையார் அன்றி அது பெறார் தம்-பால்
செறி பழியை அஞ்சார் சிறிதும் பிறை_நுதால்
வண்ணம் செய் வாள் விழியே அன்றி மறை குருட்டுக்
கண் அஞ்சுமோ இருளைக் கண்டு

#35
கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர் தாம் என்றும் மதியாரே வெற்றி நெடும்
வேல் வேண்டும் வாள் விழியாய் வேண்டா புளிங்காடி
பால் வேண்டும் வாழைப்பழம்

#36
தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல் என்று
மிக்கார்க்கு உதவார் விழுமியோர் எக்காலும்
நெல்லுக்கு இறைப்பதே நீர் அன்றிக் காட்டு முளி
புல்லுக்கு இறைப்பாரோ போய்

#37
பெரியார் முன் தன்னைப் புகழ்ந்து உரைத்த பேதை
தரியாது உயர்வு அகன்று தாழும் தெரியாய்-கொல்
பொன் உயர்வு தீர்த்த புணர் முலையாய் விந்தமலை
தன் உயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து

#38
நல்லார் செய்யும் கேண்மை நாள்-தோறும் நன்று ஆகும்
அல்லார் செய்யும் கேண்மை ஆகாதே நல்லாய் கேள்
காய் முற்றின் தின் தீம் கனி ஆம் இளம் தளிர் நாள்
போய் முற்றின் என் ஆகிப்போம்

#39
கற்று அறியார் செய்யும் கடு நட்பும் தாம் கூடி
உற்றுழியும் தீமை நிகழ்வு உள்ளதே பொன்_தொடீஇ
சென்று படர்ந்த செழும் கொடி மென் பூ மலர்ந்த
அன்றே மணமுடையது ஆம்

#40
பொன் அணியும் வேந்தர் புனையாப் பெரும் கல்வி
மன்னும் அறிஞரைத் தாம் மற்று ஒவ்வார் மின்னும் அணி
பூணும் பிற உறுப்புப் பொன்னே அது புனையாக்
காணும் கண் ஒக்குமோ காண்
** நன்னெறி முற்றும்

மேல்

&11 பிறசை சாந்தக் கவிராயர் இயற்றிய
** இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி

@0 முன்னுரை
** கடவுள் வணக்கம்

#1
சீர் கொண்ட காவிரி சூழ் தென் அரங்கத்து எம்பிரான்
பார் கொண்ட தாளைப் பரவியே ஏர் கொண்ட
ஓங்கு புகழ் வள்ளுவனார் ஓது குறள் மூதுரையாப்
பாங்குபெறச் சொல்வேன் பரிந்து
** நூற் பெயர்

#2
சொற்ற அதிகாரம்-தோறும் ஒரு குறளில்
உற்ற பொருளுக்கு உதாரணமா முற்று கதை
யால் நீலவண்ணன் அடி பரவலால் இ நூல்
மா நீதி சூடாமணி
** அவையடக்கம்

#3
பிறைசை வரு சாந்தப் பெயரவன் சொல் வெண்பா
குறை உளது நீக்கிக் குறையா நிறை மொழியாச்
சொல் தமிழோர் கொள்வர் சுடரோனால் வெண் பிறைதான்
உற்ற மதி ஆவதனை ஓர்ந்து

@1 நூல்
** அறத்துப்பால்
** பாயிர இயல்

#1
** கடவுள் வாழ்த்து
சொன்ன கம்பத்தே மடங்கல் தோன்றுதலால் அன்பர் உளத்து
இன் அமுதம் ஆகும் இரங்கேசா மன்னும்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

#2
** வான் சிறப்பு
கொண்டல் உறையூர்க் கச்சிக் கோ நகரில் செய் குணத்தால்
எண் திசையும் போற்றும் இரங்கேசா மண்டிக்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

#3
** நீத்தார் பெருமை
மன்னன் மகமும் காதி மைந்தன் தனை அடைந்தோன்
இன் உயிரும் காத்தான் இரங்கேசா சொன்னால்
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து

#4
** அறன்வலி யுரைத்தல்
கானக் குரங்கு எழலால் கங்கை சுதன் முதலோர்
ஈனப்படலால் இரங்கேசா ஆன
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு

#5
** இல்லற இயல் இல்வாழ்க்கை
பத்துடன் நான்கு இல்லம் பரகதி கொண்டு ஏகினான்
இத் தலம் மேல் ஆள்வான் இரங்கேசா நித்தம்
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

#6
** வாழ்க்கைத் துணைநலம்
மாண்டவியார் சாபத்தை வல் இருளால் மாற்றினாள்
ஈண்டு ஓர் மடந்தை இரங்கேசா நீண்ட புகழ்ப்
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு என்னும்
திண்மை உண்டாகப் பெறின்

#7
** புதல்வரைப் பெறுதல்
வேதம் புகழ் நதியை மேதினியில் தந்து குலத்து
ஏதம் கெடுத்தான் இரங்கேசா ஓதும்
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்காப்
பண்பு உடை மக்கள் பெறின்

#8
** அன்புடைமை
வெற்பின் சிறகு அரிய வெந் என்பு அளித்து முனி
இப் புவியைக் காத்தான் இரங்கேசா நல் புகழாம்
அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

#9
** விருந்தோம்பல்
தேசு பெறு மாறன் தெளித்த முளை அமுது இட்டு
ஈசனுடன் போந்தான் இரங்கேசா பேசுங்கால்
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு

#10
** இனியவை கூறல்
வன் சமர் நட்பால் வென்று மா நிலம் ஆளத் தருமன்
இன்சொல்லால் பெற்றான் இரங்கேசா பொன் செய்
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

#11
** செய்நன்றி அறிதல்
நாடிச் சிறைக் கருடன் நாகக் கொடும் கணையை
ஈடழித்தான் அன்றோ இரங்கேசா நாடுங்கால்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

#12
** நடுவு நிலைமை
வேத விதி வீமா விலங்கிற்கு உடல் பாதி
ஈதல் அழகு என்றான் இரங்கேசா ஓதுங்கால்
நன்றே தரினும் நடு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல்

#13
** அடக்கமுடைமை
ஆன்ற சபையில் அடங்காச் சிசுபாலன்
ஏன்று இரந்தான் அன்றோ இரங்கேசா சான்றோர்கள்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊஉங்கு இல்லை உயிர்க்கு

#14
** ஒழுக்கமுடைமை
வேட வான்மீகர் பின்பு வேதியரின் மேல் ஆனார்
ஏடு அவிழ் தார் சூடும் இரங்கேசா நாடில்
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும்

#15
** பிறனில் விழையாமை
அம்பிகையை நோக்கி அளகேசன் கண் இழந்தான்
இம்பர் பரவும் இரங்கேசா நம்பிப்
பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு

#16
** பொறையுடைமை
முந்தும் மரம் தரித்த மூர்க்கன் சொல்கேட்டும் அவன்
எந்தை பிரான் என்றான் இரங்கேசா கொந்தி
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

#17
** அழுக்காறாமை
வெள்ளி கொடுத்தல் விலக்கி விழி தோற்று உலகில்
எள்ளலுற்றான் அன்றோ இரங்கேசா உள்ளத்து
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது

#18
** வெஃகாமை
முன்னோனைப் போரில் முடுக்கி விமானத்தை
என்னோ கைக்கொண்டான் இரங்கேசா அன்னோ
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின்ற குடி பொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

#19
** புறங்கூறாமை
தக்க துரியோதனன்-பால் சார்ந்த சகுனியைப் போல்
இக் குவலயத்தில் இரங்கேசா மிக்குப்
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச் சொல்லி
நட்பாடல் தேற்றாதவர்

#20
** பயனில சொல்லாமை
வேந்தை வதிட்டன் வியத்தல் பழுது என்ற முனி
ஏந்து தவம் தோற்றான் இரங்கேசா ஆய்ந்தக்கால்
சீ£ர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல
நீர்மையுடையார் சொலின்

#21
**தீவினை அச்சம்
காளமுனி பாண்டவர் மேல் ஏவும் கடி விழுங்க
ஏளிதம் ஆனான் இரங்கேசா நாளும்தான்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்

#22
** ஒப்புரவறிதல்
அந்தணர் மேன்மை அறியாமல் சர்ப்ப என்றே
இந்திரன் பாம்பு ஆனான் இரங்கேசா முந்தவே
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
விற்றுக் கோள் தக்கது உடைத்து

#23
** ஈகை
அங்கியும் குண்டலமும் ஆகண்டலர்க்கு அளித்தான்
இங்கிதமாக் கன்னன் இரங்கேசா மங்கியே
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை

#24
** புகழ்
மும்மை உலகும் முசுகுந்தனைத் துதிக்கும்
எம்மை ஆட்கொண்ட இரங்கேசா செம்மையாத்
தோன்றில் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

#25
** துறவற இயல் அருளுடைமை
வஞ்சப் புறவினுடன் வான் துலையில் ஏறினான்
இன்சொல் சிவி முன் இரங்கேசா எஞ்சாமல்
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை

#26
** புலான் மறுத்தல்
அந்தணனைக் கன்மாடபாதன் அருந்தினான்
இந்த உலகத்து இரங்கேசா வந்த
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு

#27
** தவம்
வேந்து அந்தணர் குலத்து மேல் ஆகிய தகைமை
ஏந்து தவத்து ஏய்ந்தான் இரங்கேசா மாந்தர்க்கு
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய் தவம்
ஈண்டு முயலப்படும்

#28
** கூடா வொழுக்கம்
சந்யாசியாய் விஜயன் தார்_குழலைக் கொண்டு அகன்றான்
இ நானிலம் போற்றும் இரங்கேசா சொன்னால்
வலி_இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று

#29
** கள்ளாமை
உத்தங்கன் ஓலை ஒளித்த நாகக் குலங்கள்
இற்ற புகையால் இரங்கேசா மற்று உலகில்
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்

#30
** வாய்மை
மூவர் அரிச்சந்திரற்கு முன் நின்ற காட்சி போல்
ஏவர் பெற்றார் மேனாள் இரங்கேசா பூவில்
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய்வாரின் தலை

#31
** வெகுளாமை
தாக்கி நிமி வதிட்டர் சாபத்தால் தம் உடல் விட்டு
ஏக்கமுற்றார் அன்றோ இரங்கேசா நோக்கினால்
செல்லா இடத்துச் சினம் தீது செல் இடத்தும்
இல் அதனின் தீய பிற

#32
** இன்னா செய்யாமை
பாந்தள் முனி மேல் படுத்த பரிச்சித்தன் தான்
ஏந்து துன்பம் உற்றன் இரங்கேசா மாந்தர்
பிறர்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்

#33
** கொல்லாமை
சொல் ஆர் முனிக்கு இறுதி சூழ் கார்த்தவீரன் குலம்
எல்லாம் இறந்தது இரங்கேசா கொல்லவே
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை

#34
** நிலையாமை
அட்டகோணத்தன் உடல் அத்திரம் என்றான் திசைகள்
எட்டும் பரவும் இரங்கேசா மட்டினால்
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை

#35
** துறவு
பீடு பெறு பட்டினத்துப்பிள்ளையைப் போலே துறவார்க்கு
ஈடு தருமோ இரங்கேசா நீடு உலகில்
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

#36
** மெய்யுணர்தல்
கர்ப்பத்திலே சுகனார் கேடு_இல் பொருளைக் குறித்தார்
இப் புதுமைக்கு அன்பு ஆம் இரங்கேசா உற்பத்தி
ஐயுணர்வு எய்தியக்-கண்ணும் பயன் இன்றே
மெய் உணர்வு இல்லாதவர்க்கு

#37
** அவா அறுத்தல்
தேசம் சொல் பத்ரகிரி சிந்தையின் மூவாசை விட்டான்
ஈசன் பரவும் இரங்கேசா பாச
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான் வேண்டும் ஆற்றான் வரும்

#38
** ஊழ்
சிந்துபதி தந்தையொடு தேர் விசயனால் இறந்தான்
இந்து தவழ் இஞ்சி இரங்கேசா முந்தி வரும்
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும்

#39
** பொருட்பால் – அரசியல் – இறைமாட்சி
ஒன்றி மறித்தான் உரோணி சகடைச் செளரி
என்றும் புகாமல் இரங்கேசா நன்று
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்

#40
** கல்வி
மல்லல் வியாகரணம் மாருதி கற்கக் கருதி
எல்லவன் பின் போந்தான் இரங்கேசா நல்ல
ஒருமைக்-கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து

#41
** கல்லாமை
ஞானசம்பந்தருடன் நன்றாய்ச் சமணர் எதிர்த்து
ஈனமுற்றார் அன்றோ இரங்கேசா ஆன
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய
நூல் இன்றிக் கோட்டி கொளல்

#42
** கேள்வி
பாகவதம் கேட்டுப் பரிச்சித்தன் முத்தி பெற்றான்
ஏக உருவாம் இரங்கேசா சோக
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்

#43
** அறிவுடைமை
சீதரனைப் பார்த்தன் அன்று சேர்ந்தான் அரவு_உயர்த்தோன்
யாதவரைச் சேர்ந்தான் இரங்கேசா ஓதில்
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃது அறிகல்லாதவர்

#44
** குற்றங் கடிதல்
கை அரிந்தான் மாறன் கதவு இடித்த குற்றத்தால்
எய்யும் சிலைக் கை இரங்கேசா பையத்
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழி நாணுவார்

#45
** பெரியாரைத் துணைக்கோடல்
யோகமுனி ராகவனை உற்று அரக்கர் போர் களைந்தே
யாகம் முடித்தான் இரங்கேசா ஆகையால்
தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்

#46
** சிற்றினஞ் சேராமை
துன்னு சகுனி கன்னன் சொல் கேட்டு அரவு_உயர்த்தோன்
என்ன பயன் பெற்றான் இரங்கேசா மன்னிய
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்துவிடும்

#47
** தெரிந்து செயல்வகை
வீடணன் வன்மம் விளம்ப இலங்கைநகர்
ஈடு அழிந்தது அன்றோ இரங்கேசா கூடத்
தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
அரும் பொருள் யாதொன்றும் இல்

#48
** வலி அறிதல்
பைதல் எனக் கருதிப் பார்க்கவராமன் சிலையோடு
எய்து தவம் தோற்றான் இரங்கேசா வையத்து
உடைத் தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்-கண் முரிந்தார் பலர்

#49
** காலம் அறிதல்
ஆண்டு பதின்மூன்று அரவு_உயர்த்தோன் செய்த எல்லாம்
ஈண்டு பொறுத்து ஆண்டான் இரங்கேசா வேண்டிய
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருதுபவர்

#50
** இடனறிதல்
சார்ந்து பறை கீறிச் சராசந்தன்-தன் உடலை
ஈர்ந்து வென்றான் வீமன் இரங்கேசா தேர்ந்தக்கால்
எண்ணியார் எண்ணம் இழப்பார் இடன் அறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

#51
** தெரிந்து தெளிதல்
கன்னன் தெளிந்து ஆசான் காதலனை ஐயமுற்றான்
இன்னல் பொலிந்தான் இரங்கேசா முன்னமே
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

#52
** தெரிந்து விளையாடல்
சல்லியனைத் தேருக்குச் சாரதியாய்க் கொண்டதனால்
எல்லாவன்_சேய் தோற்றான் இரங்கேசா சொல்லில்
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்-கண் விடல்

#53
** சுற்றந்தழால்
வில்லுக்கு அதிபன் விரகினால் ஐவர் அரக்கு
இல் உற்றும் உய்ந்தார் இரங்கேசா நல்ல
விருப்பு அறாச் சுற்றம் இயையின் அருப்பு அறா
ஆக்கம் பலவும் தரும்

#54
** பொச்சாவாமை
தண் ஆர் சடை முடியைத் தக்கன் இழந்தான் அரனை
எண்ணாமல் அன்றோ இரங்கேசா மண்ணோர்
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

#55
** செங்கோன்மை
கண் கொண்டான் பொன்னிக் கரை கட்ட வாரானை
எண் கொண்ட சோழன் இரங்கேசா மண் கொண்ட
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல் அதூஉம் கோடாது எனின்

#56
** கொடுங்கோன்மை
துன்று புவிக்கு இடும்பை சூழ்ந்து புரவேந்தர்
இன்றி எறிந்தார் இரங்கேசா கன்றியே
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

#57
** வெருவந்த செய்யாமை
தாடகை-தன் மைந்தர் தவ முனியை அச்சுறுத்தி
ஈடு அரக்கர் ஆனார் இரங்கேசா நாடி
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

#58
** கண்ணோட்டம்
சொல்லுக என்று அங்கதனைத் தூது ஏவி மாதை விடல்
இல்லை அவன் என்றான் இரங்கேசா மெல்ல
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை

#59
** ஒற்றாடல்
மேகநாதன் செய்த வேள்வி-தனை ஒற்றினால்
ஏகி அழித்து உய்ந்தார் இரங்கேசா சேகரித்த
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொளக் கிடந்தது இல்

#60
** ஊக்கமுடைமை
வீசு புகழ் விசயன் வில் தழும்பு சென்னியின் மேல்
ஈசன் தரித்தான் இரங்கேசா ஆசையால்
ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும் அசைவு இலா
ஊக்கம் உடையான் உழை

#61
** மடியின்மை
துஞ்சு விழிக் கும்பகன்னன் துண்டம் செவி இழந்தும்
எஞ்சுதலை உற்றான் இரங்கேசா விஞ்சும்
மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும்

#62
** ஆள்வினை யுடைமை
செய்து சிவ பூசை சிரஞ்சீவி ஆம் அபயம்
எய்தினன் மார்க்கண்டன் இரங்கேசா நொய்தாக
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்
தாழாது உஞற்றுபவர்

#63
** இடுக்கண் அழியாமை
விற்ற மனையாளை வெட்டுதலும் உற்ற துயர்
இற்றது மன்னற்கு இரங்கேசா அற்று உலகில்
இன்னாமை இன்பம் எனக் கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு

#64
** அமைச்சியல் – அமைச்சு
மானவன் மால் தேவர் வனசரராம் மாதை விடாய்
ஈனம் உறும் என்றான் இரங்கேசா ஞானத்து
அறி கொன்று அறியான் எனினும் உறுதி
உழை இருந்தான் கூறல் கடன்

#65
** சொல்வன்மை
சோழன் சிவாற்பரச் சொல் தோற்றமைதான் இந்த உலகு
எழும் அறிந்த இரங்கேசா தாழாமல்
சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச் சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து

#66
** வினைத் தூய்மை
தன் மகிணன் தோற்றாள் தரணி முழுதும் கைகை
என் மகற்கு நல்கு என்று இரங்கேசா நன்மை
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்

#67
** வினைத்திட்பம்
ஆர்க்கும் கடல் நீர் அருந்த ஒரு கரத்தில்
ஏற்க அடங்கிற்று இரங்கேசா பார்க்கும்
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

#68
** வினை செயல்வகை
தொட்டது எரிப்போன் சுடர் முடி மேல் அங்கை வைப்பித்
திட்டு அவனைச் செற்றாய் இரங்கேசா முட்ட
வினையான் வினை ஆக்கிக் கோடல் நனை கவுள்
யானையால் யானை யாத்து அற்று

#69
** தூது
அக்கன் முதல் அரக்கர் ஆவி-தனை வாங்கி ஊர்
எக்கியனுக்கு ஈந்தான் இரங்கேசா மிக்க
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது

#70
** மன்னரைச் சேர்ந்தொழுகல்
அட்சன் நிதியோற்கு அபசாரம் செய்ததனால்
எட்சன் பிரிந்தான் இரங்கேசா பட்சம்
பழையம் எனக் கருதி பண்பு அல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்

#71
** குறிப்பறிதல்
பார்வை கண்டு இராமன் பரன் வில் ஒடித்து அணங்கை
ஏர்வையாக் கொண்டான் இரங்கேசா நீர்மையொடும்
ஐயப்படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்

#72
** அவை அறிதல்
தேவர் குழாத்தினிடைத் தென்-பால் அகத்தியனை
ஏவின் நிகர் என்றான் இரங்கேசா பூவில்
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர்

#73
** அவை அஞ்சாமை
ஆன்ற சங்கர் போற்ற ஒன்றை ஐ_இரண்டா மாநிலத்தார்க்கு
ஈன்றவரின் சொன்னார் இரங்கேசா தோன்றவே
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்
கற்ற செலச் சொல்லுவார்

#74
** அங்க இயல் – நாடு
சீரிது ஆம் எண்ணம் உற்ற தேசத்தில் தென் திருக் கா
வேரி சூழ் சோணாடு இரங்கேசா ஆரப்
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

#75
** அரண்
சிந்து இடை ஏழு மதில் சேர்ந்த இலங்கைநகர்
எந்த வகை போயது இரங்கேசா முந்தும்
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
இல்லார்க்-கண் நில்லாது அரண்

#76
** பொருள் செயல்வகை
நட்டுவன் ஆம் பற்குணன்தான் நாடு ஆளக் கண்டு திசை
எட்டும் பணிந்தது இரங்கேசா கிட்டு பொருள்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

#77
** படை மாட்சி
மொய் கொள் கடல் போலும் மூல பலம் மடிய
எய்து வென்றது ஓர் வில் இரங்கேசா வையத்து
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலிப் பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்

#78
** படைச் செருக்கு
மார்பத்து அழுந்து கணை வாங்கி விடுத்தான் கரங்கள்
ஈர்_பத்தன் மைந்தன் இரங்கேசா ஆர்வத்தால்
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும்

#79
** நட்பு
வாசவன் தட்சன் மகம் புகாவாறு உற்றான்
ஈசன் அயன் போற்று இரங்கேசா நேசன்
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

#80
** நட்பாராய்தல்
தேசு பெறும் மார்த்தாண்டன் செல்வன் முடி சூடி இலங்
கேசனை வென்றான் இரங்கேசா மாசில்
குடிப் பிறந்து தன்-கண் பழி நாணுவானைக்
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு

#81
** பழைமை
தானவர் வேந்தைச் சடாயு பொருது இறந்தான்
ஏன உருவாம் இரங்கேசா மாநிலத்தில்
எல்லைக்-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்-கண் நின்றார் தொடர்பு

#82
** நட்பு
மாய மாரீசன் மடிந்தோன் கவுசிகன்தான்
ஏய தவம் உற்றான் இரங்கேசா ஆயதனால்
பேதை பெரும் கெழீ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்

#83
** கூடாநட்பு
சார்ந்து திதி கர்ப்பம் சதகிருது ஏழ் கண்டமா
ஈர்ந்தனன் அன்றோ இரங்கேசா சேர்ந்தார் போல்
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
தீங்கு குறித்தமையான்

#84
** பேதைமை
மாதா பிதாவை மதியாமலே சிறையில்
ஏதாக வைத்தான் இரங்கேசா மேதினியில்
ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்றக் கடை

#85
** புல்லறிவாண்மை
தாதை சிலை ஒடிப்பத் தான் மொழிந்தான் தீதாக
ஈது அடையார் செய்யார் இரங்கேசா ஓதில்
அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது

#86
** இகல்
சொன்ன நிறத்தான் சுதனே அரும் பகையாய்
இன் உயிரைக் கொன்றான் இரங்கேசா மன்னும்
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு

#87
** பகைமாட்சி
சித்திரசேனன் கையில் சிக்கினான் மன்னவர் மன்
இத் தரணி போற்றும் இரங்கேசா சுத்த
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது

#88
** பகைத்திறந் தெரிதல்
தெவ்வை இளந்தை என்று செப்பியே விக்கிரமன்
எவ்வம் மிக உற்றான் இரங்கேசா வவ்வி
இளைதாக முள் மரம் கொல்க களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து

#89
** உட்பகை
இவ் உலகை ஆளாது இராமனைக் கான் போக்கினாள்
எவ்வ மனக் கூனி இரங்கேசா அவ்வியம் சேர்
எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு

#90
** பெரியாரைப் பிழையாமை
சொல் வல் அகத்தியர்க்குச் சூழ்ச்சிசெய்த வாதாவி
வில்வலனும் மாய்ந்தார் இரங்கேசா மல் வல்ல
கூற்றத்தைக் கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்

#91
** பெண்வழிச் சேரல்
சந்தநு வேந்து ஏழு தனையர் உயிர் இழந்தான்
இந்து நுதல் கங்கை இரங்கேசா அந்தோ
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
வேண்டாப் பொருளும் அது

#92
** வரைவின் மகளிர்
தொண்டரடிப்பொடியைத் தோள் இறுக வீக்குதலால்
எண் திசையும் போற்றும் இரங்கேசா கண்டிருந்தும்
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கிப்
புன் நலம் பாரிப்பார் தோள்

#93
** கள்ளுண்ணாமை
தக்க குரு மைந்தன் என்பு சார்ந்த மது உண்ட சுங்கன்
எக் கருமம் செய்தான் இரங்கேசா மிக்க
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்

#94
** சூது
தன்மர் துரியோதனனுடன் சூதாடி
இன்மையுற்றார் அன்றோ இரங்கேசா நன்மைப்
பொருள் கொடுத்துப் பொய் மேற்கொளீஇ அருள் கொடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது

#95
** மருந்து
அம்பருடன் வேள்வி நுகர்ந்து அக்கினிக்கு மந்தமுற்றது
என்பது அறிந்தும் இரங்கேசா தன் பசியின்
தீ அளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின்
நோய் அளவு இன்றிப் படும்

#96
** ஒழிபியல் – குடிமை
தூடணம் ஆம் ஐவருடன் துன்னுதல் என்றே கன்னன்
ஈடு அனையை நீத்தான் இரங்கேசா நீட
அடுக்கிய கோடி பெறினும் குடிப் பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்

#97
** மானம்
ஆகம் குறைந்து உரு வேறு ஆனான் இல்லாளை விடுத்து
ஏகி நளவேந்தன் இரங்கேசா கையினால்
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்

#98
** பெருமை
மண் பரவு சக்கரத்தை மால் எடுப்ப வீட்டுமனார்
எண் புகழாக் கொண்டார் இரங்கேசா பண்பால்
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்

#99
** சான்றாண்மை
புத்தன் எறி கற்கும் புராரி பதம் அளித்தான்
இத் தரணி போற்றும் இரங்கேசா மெத்தவே
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு

#100
** பண்புடைமை
துன்பமுறும் தங்கை எனச் சொல்லி யுதிட்டிரனார்
இன்பமுற்றார் அன்றோ இரங்கேசா அன்பின்
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்பு உள பாடு அறிவார்-மாட்டு

#101
** நன்றியில் செல்வம்
செப்பும் இரு நிதிகள் சேர்ந்தும் குபேரனுக்கு
எப் பொருளால் என் ஆம் இரங்கேசா கைப்பொருள்
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று

#102
** நாணுடைமை
வாவி புகுந்த மகிபன் தனது உயிரை
ஈவதற்குப் போந்தான் இரங்கேசா ஆவதனால்
நாணால் உயிரைத் துறப்பார் உயிர்ப் பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர்

#103
** குடிசெயல் வகை
அன்னை அடிமைக்கு அமுது கொணர்ந்து எள்ளலுடன்
இன்னல் துடைத்தான் இரங்கேசா உன்னுங்கால்
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான் பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்

#104
** உழவு
வன் பாரதத்து அலம் கை வைத்தார்க்கு எதிர் இல்லை
என்பார் அதனால் இரங்கேசா முன்பார்
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

#105
** நல்குரவு
காவலனாம் பாஞ்சாலன் கண்டு துரோணரை நீர்
ஏவர் என்றான் அன்றோ இரங்கேசா தா_இல்
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன் போல நோக்கப்படும்

#106
** இரவு
அங்கி உம்பர்கோன் கா அருந்த நினைந்து அர்ச்சுனன்-பால்
இங்கிதமாப் பெற்றான் இரங்கேசா மங்காது
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார்-மாட்டு

#107
** இரவச்சம்
சென்று பலி பக்கல் செம் கை விரித்து ஏற்றல் பழுது
என்று குன்றி நின்றாய் இரங்கேசா நன்றி தரும்
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்

#108
** கயமை
தேன் இருந்த சொல்லாளைத் தேர் வேந்தர் காண உடை
ஏன் உரிந்தான் மேனாள் இரங்கேசா ஆனதனால்
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
நெஞ்சத்து அவலம் இலர்
** காமத்துப் பால் – களவியல் – (ஆண்பாற் கிளவிகள்)

#109
** தகையணங் குறுத்தல்
சுந்தரமாம் அகலி தோள் தோய்ந்து பத்து_நூறு
இந்திரன் கண் பெற்றான் இரங்கேசா இந்து முறி
ஒள்_நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு

#110
** குறிப்பறிதல்
மேதை விலோசனமும் மேவும் இணை நோக்கும்
ஏது கலவிக்கு இரங்கேசா ஆதலால்
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல

#111
** புணர்ச்சி மகிழ்தல்
உம்பரில் துன்முகனார் உள்ள கங்கை தோள் தோய
இம்பர் வந்தார் அன்றோ இரங்கேசா அன்பாகத்
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு

#112
** நலம்புனைந் துரைத்தல்
ஒண் கயல் கண் பாரதியை ஓது மறை நாவில்
எண்_கண்ணன் வைத்தான் இரங்கேசா பண்பில்
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

#113
** காதர் சிறப்புரைத்தல்
சேர்ந்து திருமகளைத் தெள் அமுதை உம்பருக்கே
ஈந்த உதாரம் இரங்கேசா தேர்ந்தக்கால்
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
வால் எயிறு ஊறிய நீர்

#114
** நாணுத் துறவுரைத்தல்
கீசகன் பாஞ்சாலியின் மேல் கேவல மால் கொண்டு உயிர் தோற்று
ஏசுதலை உற்றான் இரங்கேசா ஆசை எனும்
காமக் கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை

#115
** அலரறிவுறுத்தல்
நீந்து கடல் மூழ்கி நெடுநாள் கெளதமனார்
ஏந்து அகலி தோய்ந்தார் இரங்கேசா மாந்தி
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம்
வெளிப்படும்-தோறும் இனிது
** கற்பியல் (பெண்பாற் கிளவிகள்)

#116
** பிரிவாற்றாமை
தன் பதியின் செல்கையினால் தா_இல் நதி ஆயினாள்
என்பர் கவுசி இரங்கேசா அன்பினால்
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
வல் வரவு வாழ்வார்க்கு உரை

#117
** படர்மெலிந் திரங்கல்
குன்று_எடுத்தான் மார்பு குடிகொண்டு இருந்தாள் செம் கமலை
என்றும் பிரியாது இரங்கேசா நன்றி கூர்
இன்பம் கடல் மற்றுக் காமம் அஃது அடுங்கால்
துன்பம் அதனின் பெரிது

#118
** கண்விதுப் பழிதல்
காதல் அருச்சுனனைக் கண்டு ஊர்வசி அடைந்தது
ஏதம் அன்றோ மேனாள் இரங்கேசா ஓதில்
கதுமெனத் தாம் நோக்கித் தாமே கலுழும்
இது நகத் தக்கது உடைத்து

#119
** பசப்புறு பருவரல்
மன்னும் அகலி கல்லாய் மாநிலத்திலே கிடந்தாள்
என்னும் மொழி கேட்டாய் இரங்கேசா துன்னப்
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர் என்பார் இல்

#120
** தனிப்படர் மிகுதி
தக்க சுவாகாவைத் தருமன் விழுங்க அவள்
எக்கியனை உண்டாள் இரங்கேசா மிக்க
ஒருதலையான் இன்னாது காமம் காப் போல
இருதலையானும் இனிது

#121
** நினைந்தவர் புலம்பல்
சுந்தோபசுந்தர் இகல் சூழ்ந்து பொருது இறந்தது
எந்த வகை மேனாள் இரங்கேசா சிந்தையால்
உள்ளினும் தீராப் பெரு மகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது

#122
** கனவுநிலை யுரைத்தல்
செய் தவம் சேர் வாணனது செல்வி கனா நிலையில்
எய்தினான் அன்றோ இரங்கேசா பைய
நனவினான் நல்காதவரைக் கனவினான்
காண்டலின் உண்டு என் உயிர்

#123
** பொழுதுகண் டிரங்கல்
காக்கும் பதி அகலக் காட்டில் சலர்க்காரி
ஏக்கமுற்றாள் அன்றோ இரங்கேசா நோக்கில்
பனி அரும்பிப் பைதல்கொள் மாலை துனி அரும்பித்
துன்பம் வளர வரும்

#124
** உறுப்பு நலனழிதல்
மங்கை உமை ஓர் பங்கு வாங்கி மகிணன்-பால்
இங்கிதமுற்றாள் இரங்கேசா செம் கை
முயக்கிடைத் தண் வளி போழப் பயப்புற்ற
பேதை பெரு மழைக் கண்

#125
** நெஞ்சொடு கிளத்தல்
முன்னம் இரதிக்கு மொழிந்த பதி தந்தது
இன் நலம் அன்றோ இரங்கேசா துன்ன
நினைத்து ஒன்று சொல்வாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும்
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து

#126
** நிறை அழிதல்
பின்னைக்கு இனிய மொழி பேசி வென்ற மாயவன் போல்
என்னைத் தொண்டாளும் இரங்கேசா முன் நின்ற
பல் மாயக் கள்வன் பணி மொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை

#127
** அவர்வயின் விதும்பல்
வஞ்சி உருக்குமணி மா மால் வரு வழி பார்த்து
எஞ்சும் உளம் போலும் இரங்கேசா பஞ்சணையில்
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளிக்
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு

#128
** அன்பியல் – குறிப்பறிவுறுத்தல்
செட்டி வள்ளியம்மைச் சிறுமுறுவல் கண்டு உளத்தின்
இட்டம் அறிந்தான் இரங்கேசா மட்டு ஆர்
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு

#129
** புணர்ச்சி விதும்பல்
காந்தன் துகில் அரிந்து கானத்து அகன்ற தன்மை
ஏந்தி மறந்தாள் இரங்கேசா காந்தி
எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து

#130
** நெஞ்சொடு புலத்தல்
காங்கையர் மீது ஆசை கரவாமல் அம்பை உளம்
ஏங்கி எரி வீழ்ந்தாள் இரங்கேசா ஆங்கே
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்தது என் நெஞ்சு

#131
** புலவி
அன்பர் திருநீலகண்டர் அணி_இழை-பால்
இன்பம் துறந்தார் இரங்கேசா முன்பாக
ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்து அற்று

#132
** புலவி நுணுக்கம்
சேர்ந்து மணம்செய்ய மறுசென்மம் உனி பக்கல் வரும்
ஏந்து_இழையைப் போலும் இரங்கேசா வாய்ந்து உம்மை
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண் நிறை நீர் கொண்டனள்

#133
** ஊடலுவகை
சத்தியபாமா ஊடல் தணிப்பக் கற்பகத்தை
இத் தலத்தில் தந்தான் இரங்கேசா சித்தசற்கும்
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
கூடி முயங்கப் பெறின்
** இரங்கேசவெண்பா என்னும் நீதிசூடாமணி முற்றிற்று

மேல்

&12 சிவஞான முனிவர் இயற்றிய சோமேசர் முதுமொழி வெண்பா

@0 காப்பு

#1
மது வளரும் பூம் சடில மல்கு சோமேசர்
முதுமொழிவெண்பாவை மொழியப் பொதுளும்
மடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீடு அளிக்கும்
கடம் பொழி முக்கண் களிறு

@1 நூல்

#1
** கடவுள் வாழ்த்து
சீர் கொள் இறை ஒன்று உண்டு அத் தெய்வம் நீ என்று ஒப்பால்
சோர்வு_இல் அடையால் தெளிந்தோம் சோமேசா ஓரில்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

#2
** வான்சிறப்பு
நேய புகழ்த்துணையார் நீராட்டும் கை தளர்ந்து உன்
தூய முடி மேல் வீழ்ந்தார் சோமேசா ஆயுங்கால்
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின்

#3
** நீத்தார் பெருமை
அத்திர வாக்கால் புத்தன் சென்னி அறுத்தார் சண்பைச்
சுத்தனார்-தம் அன்பர் சோமேசா நித்தம்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும்

#4
** அறன்வலியுறுத்தல்
தக்கனார் வேள்வித் தவத்தை மேற்கொண்டிருந்தும்
தொக்க அறம் ஆயிற்றோ சோமேசா மிக்க
அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

#5
** இல்வாழ்க்கை
இல் வாழ் தருமன் இயல் சந்திரசேனன்
தொல் வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா நல்ல
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

#6
** வாழ்கைத்துணை நலம்
மூவர் தடுப்பவும் கொண்மூவைப் பணிகொண்டாள்
தூய அனுசூயை சோமேசா மேவு பிற
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை

#7
** புதல்வரைப் பெறுதல்
பாடினர் மூ ஆண்டினில் சம்பந்தர் என யாவோரும்
சூடும் மகிழ்ச்சி மெய்யே சோமேசா நாடி இடில்
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது
** அன்புடைமை

#8
தோன்றா வகை கரந்தும் தோன்றலைக் கண்டு உள் நெகிழ்ந்து
தோன்ற நின்றான் முன்பு நளன் சோமேசா தோன்றுகின்ற
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும்

#9
** விருந்தோம்பல்
பொன்னனையாள் அன்பருக்கே போனகம் ஈந்து உன் அருளால்
சொன்னம் மிகப் பெற்றாளே சோமேசா பன்னில்
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

#10
** இனிவை கூறல்
இன்சொல் இராமன் இயம்ப இரேணுகை சேய்
துன்பம் மொழியே புகன்றான் சோமேசா அன்புடைய
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன்சொல் வழங்குவது

#11
** செய்நன்றி அறிதல்
பன்னும் அசதி நன்றி பாராட்டிக் கோவை நூல்
சொன்னாளே ஔவை முன்பு சோமேசா மன்னாத்
தினைத் துணை நன்றி செயினும் பனைத் துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்

#12
** நடுவு நிலைமை
வேதியன் ஆளாமே என்று எள்ளாது வெண்ணைநல்லூர்ச்
சோதி வழக்கே புகழ்ந்தார் சோமேசா ஓதில்
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு பால்
கோடாமை சான்றோர்க்கு அணி

#13
** அடக்கமுடைமை
எல்லாம் உணர்ந்தும் வியாதன் இயம்பிய அச்
சொல்லாலே நா அயர்ந்தான் சோமேசா வல்லமையால்
யா காவார் ஆயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு

#14
** ஓழுக்கமுடைமை
தீயனவே சொல்லும் சிசுபாலன் முன்பு கண்ணன்
தூயது அலாச் சொல் உரையான் சோமேசா ஆயின்
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்

#15
** பிறனில் விழையாமை
ஆன்ற எழில் சீதையை வேட்டு ஐ_நான்கு திண் கரத்தான்
தோன்று பழி மாறிலனே சோமேசா ஏன்ற
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவாவாம் இல் இறப்பான்-கண்

#16
** பொறையுடைமை
ஒட்டலன் செய் தீமைக்கு ஒறாது நமர் என்று உரைத்தார்
சுட்டிய சீர் மெய்ப்பொருளார் சோமேசா முட்ட
ஓறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்

#17
** அழுக்காறாமை
அன்பரைக் கண்டு அழுக்காறு ஆம் சமணர் தம் வாயால்
துன்பமுற்றார் வெம் கழுவில் சோமேசா வன்பாம்
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது

#18
** வெஃகாமை
நின் அபிடேகப் பழத்தை நீள் மறையோர்க்கு ஈந்த இறை
துன்னு குடியோடு அழிந்தான் சோமேசா பன்னில்
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

#19
** புறங்கூறாமை
கூனி இராமன் பிரிந்து போமாறே கூறினளே
தூ நறும் பூ கொன்றை அணி சோமேசா தானே
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச் சொல்லி
நட்பாடல் தேற்றாதவர்

#20
** பயனில சொல்லாமை
சேக்கிழார் சிந்தாமணிப் பயிற்சி தீது எனவே
தூக்கி உபதேசித்தார் சோமேசா நோக்கின்
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல்

#21
** தீவினையச்சம்
குற்று ஒருவர்க் கூறை கொண்டு கொன்றது இம்மையே கூடல்
சொற்றது கைகண்டோமே சோமேசா அற்றான்
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு

#22
** ஒப்புரவறிதல்
பண்டை நினைவு எண்ணி நொந்தார் பாகம் செய் மாறராம்
தொண்டர் மனைவியர் சோமேசா கண்டோம்
நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர
செய்யாது அமைகலா ஆறு

#23
** ஈகை
மீள் என்று உரைப்பளவும் மிக்கு உவகை பெற்றிலர் வன்
தோளர் இயற்பகையார் சோமேசா நீள் உலகில்
இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு

#24
** புகழ்
போசன் கவிஞருக்கே போதப் பரிந்து அளித்துத்
தூசு இலாக் கீர்த்தி கொண்டான் சோமேசா ஆசையுடன்
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

#25
** அருளுடைமை
மூர்த்தி-பால் வன்கண்மை மூண்ட வடுகரசன்
சூர்த் திறந்தான் உய்ந்தானோ சோமேசா கூர்த்த
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது

#26
** புலால் மறுத்தல்
மச்சம் சுமந்து உய்ப்ப வானோர் பணிகொண்டான்
துச்சனாம் சூரபன்மன் சோமேசா நிச்சயமே
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

#27
** தவம்
ஏர் மண நல்லூர்ச் சுடருள் யாரும் அணுகச் சிலர்தாம்
தூர நெறி நின்று அயர்ந்தார் சோமேசா ஓரில்
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது

#28
** கூடாவொழுக்கம்
மாயன் அவ் வேடம்கொண்டே வன் சலந்தரன்_கிழத்தி
தூய நலம் கவர்ந்தான் சோமேசா ஆயின்
வலி_இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று

#29
** கள்ளாமை
நாய் வால் களவினால் ஞாலம் இகழப்பட்டான்
தூயனாம் காதி_மகன் சோமேசா ஆயதனால்
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு

#30
** வாய்மை
பிள்ளை உடன் உண்ணப் பேசி அழைத்தார் அன்பு
துள்ளு சிறுத்தொண்டர் சோமேசா உள்ளுங்கால்
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

#31
** வெகுளாமை
பல்லவர் கோன் வந்து பணியக் கருணைசெய்தார்
தொல்லை நெறி வாகீசர் சோமேசா கொல்ல
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று

#32
** இன்னா செய்யாமை
பிள்ளையார் வைப்பினில் தீப் பெய்வித்த மீனவன் தீத்
துள்ளு வெப்பு நோய் உழந்தான் சோமேசா எள்ளிப்
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்

#33
** கொல்லாமை
வேந்து மகன் தேர்க்கால் விடல் அஞ்சி மந்திரிதான்
சோர்ந்து தனது ஆவி விட்டான் சோமேசா ஆய்ந்து உணர்ந்தோர்
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை

#34
** நிலையாமை
ஆக்கையும் ஆயிரத்தெட்டு அண்டங்களும் நிலையாத்
தூக்கி அழிந்தான் சூரன் சோமேசா நோக்கியிடில்
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை

#35
** துறவு
கோவணம் ஒன்று இச்சிப்பக் கூடினவே பந்தம் எல்லாம்
தூவணம் சேர் மேனியாய் சோமேசா மேவில்
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து

#36
** மெய்யுணர்தல்
காரிகையாரைப் பொன்னைக் காட்டவும் காமாதி மும்மைச்
சோர்வு இழந்து உய்ந்தார் அரசர் சோமேசா ஓருங்கால்
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய்

#37
** அவாவறுத்தல்
தாய் கருவில் வாழ் குழவிதாம் எல்லாம் வேண்டுவது
தூய பிறவாமை ஒன்றே சோமேசா ஆயதனால்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

#38
** ஊழ்
முன்னர் அமண் மதத்து மூண்டு அரசர் பின் சைவம்
துன்னியதும் என் வியப்போ சோமேசா உன்னுங்கால்
பேதைப் படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
ஆகல்_ஊழ் உற்றக் கடை

#39
** இறைமாட்சி
பார் சீதை சீலம் பழித்து உரைத்தும் காகுத்தன்
சோர்வுற முன் சீறிலனே சோமேசா தேரின்
செவி கைப்பச் சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவிகைக் கீழ் தங்கும் உலகு

#40
** கல்வி
சம்பந்தர் நாவரசர்-பால் கண்டோம் சார்ந்து உவப்பதும்
பிரிவின் உள்ளுவதும் சோமேசா நம்பி
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

#41
** கல்லாமை
மெய்த்த திருவள்ளுவனார் வென்று உயர்ந்தார் கல்வி நலம்
துய்த்த சங்கத்தார் தாழ்ந்தார் சோமேசா உய்த்து அறியின்
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு

#42
** கேள்வி
ஊனுக்கு ஊன் என்னும் உரை கண்டு உவந்தனரே
தூ நல் சீர்க் கண்ணப்பர் சோமேசா ஆனதனால்
கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவர்க்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை

#43
** அறிவுடைமை
அன்று அமணர் தீவைப்ப அஞ்சியது என் என்னன்-மின்
துன்றிய சீர்ச் சம்பந்தர் சோமேசா நன்றேயாம்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

#44
** குற்றங்கடிதல்
ஈர்_ஐந்து தலையான் அணுகிய பின் ஏகலுற்றுச்
சூரம் தொலைந்தானே சோமேசா ஓரின்
வரும் முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போலக் கெடும்

#45
** பெரியோரைத் துணைகோடல்
எத்திறமும் ஏயர் கோன் நட்பு ஆமாறு எண்ணினரே
சுத்த நெறி ஆரூரர் சோமேசா வைத்த
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

#46
** சிற்றினஞ் சேராமை
அற்கா அமண் மொழி கேட்டு அல்லலுற்றான் மாறன் இல்லாள்
சொல்கேட்டு நோய் தீர்ந்தான் சோமேசா தற்காக்கும்
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல்

#47
** தெரிந்து செயல்வகை
சானகியை இச்சித்துத் தன் உயிரும் போக்கினனே
தூ நீர் இலங்கையர் கோன் சோமேசா ஆனதனால்
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
ஊக்கார் அறிவுடையார்

#48
** வலியறிதல்
சக்கரத்தை ஏற்பன் சலந்தரன் நான் என்று எடுத்துத்
துக்கமுற்று வீடினனே சோமேசா ஒக்கும்
உடைத் தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்-கண் முரிந்தார் பலர்

#49
** காலமறிதல்
வீமன் அவை முன் மனையை வேட்டானைக் கண்டும் ஒரு
தூ மொழியேனும் புகலான் சோமேசா ஆம் என்றே
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து

#50
** இடனறிதல்
காட்டு முயலும் கதக் கரியைக் கொல்லுமால்
தோட்டு அலர் நீர்க் கச்சியினுள் சோமேசா நாட்டி இடின்
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
போற்றார்-கண் போற்றிச் செயின்

#51
** தெரிந்து தெளிதல்
தேர் அரும் ஆனந்தனை முன் தேறிப் பழி பூண்டான்
சூரியசன்மா என்பான் சோமேசா தாரணி மேல்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

#52
** தெரிந்து வினையாடல்
தேசிகனாக் கொண்ட சுரர் இறைக்குத் தீங்கு இழைத்தான்
தூசு ஆர் துவட்டாச் சேய் சோமேசா பேசில்
எனை வகையால் தேறியக்-கண்ணும் வினை வகையான்
வேறாகும் மாந்தர் பலர்

#53
** சுற்றந்தழால்
ஆர் வீடணனோடு அளவளாவாது அரக்கன்
சோர்வு இலா வாழ்வு இழந்தான் சோமேசா நேரே
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளாக்
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று

#54
** பொச்சாவாமை
முப்புரத்தோர் வேவ உடன் இருந்த மூவரே
துப்பினால் கண்டறிந்தார் சோமேசா வெப்பால்
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

#55
** செங்கோன்மை
மைந்தன் எனாமல் அசமஞ்சன்-தனை வெறுத்தான்
சுந்தரச் செங்கோல் சகரன் சோமேசா முந்தும்
குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்
வடு அன்று வேந்தன் தொழில்

#56
** கொடுங்கோன்மை
ஐவர்_இல்லாள் அழுத அன்றே கண்டு ஏக்குற்றார்
துய்ய கங்கை_சேய் முதலோர் சோமேசா மெய்யே ஆம்
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

#57
** வெருவந்த செய்யாமை
வெய்து உரையால் அக்கணமே வீந்தான் சிசுபாலன்
தொய்யில் முலை உமை பால் சோமேசா உய்யாக்
கடும்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும்

#58
** கண்ணோட்டம்
மாலான் முதல் இகழ்ந்த வானவர் தீங்கும் பொறுத்துத்
தோலா விடம் உண்டாய் சோமேசா சால
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை

#59
** ஓற்றாடல்
வேதன் இல்லாள் வீந்த திறம் மீனவற்கு நீ தெரித்தாய்
சோதி பழி அஞ்சும் சோமேசா பூதலத்தின்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல் அறிதல் வேந்தன் தொழில்

#60
** ஊக்கமுடைமை
வெம் கரியைப் பாகரை முன் வீட்டினார் ஏகராய்த்
துங்க எறிபத்தர் சோமேசா அங்கம்
பரியது கூர்ம் கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின்

#61
** மடியின்மை
பொன்மலையின் வேங்கை பொறித்து மீண்டான் சென்னி
தொன்மை வலி ஆண்மையினால் சோமேசா பன்னின்
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

#62
** ஆள்வினையுடைமை
கூற்றுவர் மூவேந்தர் நிலமும் கைக்கொண்டாரே
தோற்றும் தாளாண்மையினால் சோமேசா சாற்றும்
முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை
இன்மை புகுத்திவிடும்

#63
** இடுக்கண்ணழியாமை
என்றும் ஒரு மீனே வந்து இன்மை மிகவும் தளரார்
துன்று ஏர் அதிபத்தர் சோமேசா மன்ற
அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்

#64
** அமைச்சு
கால்_சேய் கதிர்_சேயைக் காத்து அரசன் நட்பு உதவித்
தூல முடி சூட்டுவித்தான் சோமேசா சாலப்
பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு

#65
** சொல்வன்மை
நித்தியத்துவம் கேட்பான் நித்திரை என்றே மயக்கம்
துய்த்தனனாம் கும்பகன்னன் சோமேசா எத்திறத்தும்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு

#66
** வினைத்தூய்மை
தக்கன் உனை எள்ளி மகம் சாடும் போது எண்ணியெண்ணித்
துக்கமுற்றான் ஆவது என்னே சோமேசா எக்காலும்
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்று அன்ன செய்யாமை நன்று

#67
** வினைத்திட்பம்
செவ்வேளைப் பாலன் என எள்ளித் திறல் அழிந்தான்
துவ்வாத வெம் சூரன் சோமேசா அவ்வாறு
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

#68
** வினைச்செயல்வகை
வெள்ளி வெற்பை எண்ணாது எடுப்பன் என வீறு எய்தித்
துள்ளி அழிந்தான் அரக்கன் சோமேசா மெள்ள
முடிவும் இடையூறும் முற்றி ஆங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்

#69
** தூது
தன் துயரம் நோக்கான் தனை விடுத்தோர்க்கே உறுதி
துன்ற மொழிந்தான் நிடதன் சோமேசா என்றும்
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு
உறுதி பயப்பதாம் தூது

#70
** மன்னரைச் சேர்ந்தொழுகல்
மாமன் நான் என்னும் மதத்தால் உனை இகழ்ந்து
தோமுற்றார் தக்கனார் சோமேசா ஆமே
பழையம் எனக் கருதிப் பண்பு அல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்

#71
** குறிப்பறிதல்
அப்பூதியார் மறைத்தும் வாகீசர் அக் கரவைத்
துப்பான் அறிந்தனரே சோமேசா இப் புவியில்
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்

#72
** அவையறிதல்
ஓர் சங்கத்தார் கல்வி ஊமைச்சேய்க்குக் காட்டிச்
சோர்வு நலம் தேர்ந்தனரே சோமேசா ஓருங்கால்
கற்று அறிந்தார்க் கல்வி விளங்கும் கசடு அறச்
சொல் தெரிதல் வல்லாரகத்து

#73
** அவையஞ்சாமை
வாழ் வாதவூரர் வளவன் அவை முன் எதிர்த்துச்
சூழ் தேரரை வென்றார் சோமேசா தாழ்வு அகல
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
மாற்றம் கொடுத்தல்-பொருட்டு

#74
** நாடு
மேல் வளம் எல்லாம் அமைந்தும் வீரமகேந்திரம்தான்
தோல்வியுற்று மாய்ந்ததே சோமேசா ஞாலம் மிசை
ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே
வேந்து அமைவு இல்லாத நாடு

#75
** அரண்
வல் அதிகன்-தன் அரணம் வாள் வளவன் சேனை செலத்
தொல்லை வலி மாண்டதே சோமேசா நல்ல
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
இல்லார்க்-கண் இல்லது அரண்

#76
** பொருள் செயல்வகை
உக்கிரனார் மேருவை வென்று ஒண் நிதியம் பெற்றமையால்
தொக்க குடி காத்தனர் காண் சோமேசா மிக்கு உயர்ந்த
குன்று ஏறி யானைப் போர் கண்டு அற்றால் தன் கைத்து ஒன்று
உண்டாகச் செய்வான் வினை

#77
** படைமாட்சி
நீ நகைப்ப முப்புரமும் நீறு ஆகி மாய்ந்ததே
தூ நகையாள் பால் அமரும் சோமேசா வானின்
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலிப் பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்

#78
** படைச்செருக்கு
மன்மதன் நின்னோடு எதிர்த்து வீறு அழிந்து மாண்டாலும்
துன்னு புகழே பெற்றான் சோமேசா புல் நெருங்கும்
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது

#79
** நட்பு
வாக்கரசர் பிள்ளாய் என வலித்து மாற்றலுற்றார்
தூக்கு பிள்ளையார் செலவைச் சோமேசா நோக்கி
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண்
மேற்சென்று இடித்தல்-பொருட்டு

#80
** நட்பாராய்தல்
போற்றும் சுசீலன் புயபெலனை நீத்து அகன்றான்
தோற்று இறைவி தும்மிடவும் சோமேசா ஏற்றதே
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்

#81
** பழைமை
இல்லாளைப் பற்றி மூழ்கு என்றிடவும் அன்பு குன்றார்
தொல்லை நெறி நீலகண்டர் சோமேசா ஒல்லாது
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்
வழிவந்த கேண்மையவர்

#82
** தீநட்பு
ஆம் காரியம் தடுத்த அங்கனை சொல்கேட்டு இறந்தான்
தூங்காத் தசரதன்தான் சோமேசா ஈங்கு இதனால்
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல்

#83
** கூடாநட்பு
தாய் தீண்டத் தூசு உடுத்துச் சார் எனும் சொல் தீது என்றாள்
தூய சுயோதனற்குச் சோமேசா வாயதனால்
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
ஒல்லை உணரப்படும்

#84
** பேதைமை
வன் சமணர்-தம் பிரிவால் வாகீசர்க்கு இன்பம் இன்றித்
துன்பம் என்பது இல்லையோ சோமேசா நன்காம்
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல்

#85
** புல்லறிவாண்மை
இல்லாள் மறுப்பவும் சென்று ஏகிச் சலந்தரன்தான்
தொல் வலி போய் மாண்டனனே சோமேசா வல்லமையால்
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ் உயிர்
போஒம் அளவும் ஓர் நோய்

#86
** இகல்
எத்திறத்தும் கெட்டான் இகலான் சுயோதனன் சீர்
துய்த்தனன் நட்பால் தருமன் சோமேசா மொய்த்த
இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம்
நன்னயம் என்னும் செருக்கு

#87
** பகைமாட்சி
ஏனையார்-பால் வெற்றிகொண்டான் நின்னோடு எதிர்த்து இறந்தான்
தூ நறும் பூ வாளியான் சோமேசா மானம்
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை

#88
** பகைதிறந் தெளிதல்
நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடு அறியும்
சுந்தரம் சேர் தென்குளத்தூர்ச் சோமேசா சந்ததமும்
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை

#89
** உட்பகை
மாற்றார் முடியும் வளமையும் கொண்டு ஏக நலம்
தோற்றான் வழுதி மகன் சோமேசா ஆற்றல் இலா
எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு

#90
** பெரியாரைப் பிழையாமை
கொன் படைகள் நீறு ஆகக் கோசிகனார் சாபத்தால்
துன்பமுற்றார் நால் வேந்தர் சோமேசா இன்பு உதவும்
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
வேந்தனும் வேந்து கெடும்

#91
** பெண்வழிச் சேரல்
கற்பின்மை இல்லாள்-பால் கண்டு மயலுற்று அழிந்தான்
சொல் புண்டரீகாக்கன் சோமேசா பொற்பு எண்ணி
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்

#92
** வரைவின் மகளிர்
வேண்டும் உருப்பசியைப் பார்த்தன் வெறுத்தனனே
தூண்டு மறைப் பரியாய் சோமேசா யாண்டும்
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
மாண்ட அறிவினவர்

#93
** கள்ளுண்ணாமை
தக்கன்-பால் ஞானத் ததீசி உபதேசம் எல்லாம்
தொக்கதனால் ஆனது என்னே சோமேசா மிக்குக்
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ் நீர்க்
குளித்தானைத் தீத் துரீஇ அற்று

#94
** சூது
முன் பணயத்தால் பின்னும் மூண்டு இழந்தார் சூதரொடு
சொற்படும் சூதாடினோர் சோமேசா அற்பமாம்
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு

#95
** மருந்து
நல்ல திலகவதியார் மொழியை நம்பி வெம் நோய்
சொல்லரசர் தீர்ந்து உய்ந்தார் சோமேசா புல்லிய
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்

#96
** குடிமை
மங்கலியம் விற்றும் வழாது பணி செய்துவந்தார்
துங்க மறை தேர் கலயர் சோமேசா அங்கண்
வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று

#97
** மானம்
அச்சுவத்தாமாப் பட்டான் என்ன அமர் துறந்தான்
துச்சில் துரோணன் என்பான் சோமேசா நச்சும்
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்

#98
** பெருமை
தண்டியடிகள் இரு தாள் இணை பேணாது அழிந்தார்
தொண்டராம் பேய்ச் சமணர் சோமேசா மிண்டும்
சிறியார் உணர்ச்சியுள் இல்லைப் பெரியாரைப்
பேணிக் கொள்வோம் என்னும் நோக்கு

#99
** சான்றாண்மை
வன்மைச் சுயோதனற்கும் வானோர் சிறை மீட்டான்
தொன்மை நெறித் தருமன் சோமேசா பல் முறையும்
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு

#100
** பண்புடைமை
உன் பணிக்கு என்று ஓதி நல்காச் செல்வம் உத்தியுறத்
துன்பமுற்றார் நால் வணிகர் சோமேசா அன்பு மிகும்
பண்பிலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
கலம் தீமையால் திரிந்து அற்று

#101
** நன்றியில் செல்வம்
எல்லாம் மறையவர்க்கு ஈந்தே வறியன் போல் ஆனான்
சொல் ஆரும் கீர்த்தி ரகு சோமேசா நல்லதே
சீர் உடைச் செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்து அனையது உடைத்து

#102
** நாணுடைமை
புண்ணொடு உயிர் வாழ நாணி உயிர் போக்கினான்
துண்ணெனவே வாலி முனம் சோமேசா எண்ணி இடின்
நாணால் உயிரைத் துறப்பார் உயிர்ப்-பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர்

#103
** குடிச்செயல்வகை
மல் திருதராட்டிரன் சந்தானம் எலாம் மாய்ந்ததே
சுற்று நீர் தென்குளத்தூர்ச் சோமேசா பற்றும்
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி

#104
** உழவு
வேள்வித் தொழிற்கும் உழு தொழில் முன் வேண்டுமால்
சூழி சூழ் தென்குளத்தூர்ச் சோமேசா வாழும்
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கு நிலை

#105
** நல்குரவு
நல் தருமன் வெற்றியினை நாடி விராடன் எதிர்
சொற்ற மொழி சோர்ந்ததே சோமேசா கற்றறிவால்
நல் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும்

#106
** இரவு
கஞ்சாறர் சோபனப் பெண் கூந்தல் கடிது அளிக்கத்
துஞ்சு மகிழ்சிகொண்டாய் சோமேசா நெஞ்சின்
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து

#107
** இரவச்சம்
எண்ணெய் இரப்பு அஞ்சி உடலே வருத்தித் தீபம் இட்டார்
துண்ணென் கணம்புல்லர் சோமேசா கண்ணியிடில்
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்

#108
** கயமை
ஏற்ற துரோணனை அன்று எள்ளித் துருபதன் பின்
தோற்று விசயர்க்கு அளித்தான் சோமேசா போற்றிடினும்
ஈர்ம் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு

#109
** தகையணங்குறுத்தல்
வாய்ந்த தமயந்தி உரு மாண் நலம் கண்டு இன்புற்றான்
தோய்ந்த புகழ் ஆளும் நளன் சோமேசா ஆய்ந்து உரைக்கின்
உண்டார்-கண் அல்லது அடு நறாக் காமம் போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று

#110
** குறிப்பறிதல்
காங்கேயன் வேண்ட வெறுத்து உரைத்தாள் கானவர்_மின்
தூங்கா வளக் குளத்தூர் சோமேசா ஆங்கண்
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல்
ஒல்லை உணரப்படும்

#111
** புணர்ச்சி மகிழ்தல்
மெய் தவத்தைக் காசிபனும் விட்டு ஒழிந்து மாயை-பால்
சுத்த மனம் வைத்தானே சோமேசா இத் தலத்தில்
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு

#112
** நலம்புனைந்துரைத்தல்
ஈன்றான் திலோத்தமையை இச்சிக்கில் ஆங்கு அவள் மெய்
தோன்றும் எழில் என் சொல்வேன் சோமேசா ஆன்ற
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேய்த் தோளவட்கு

#113
** காதற் சிறப்புரைத்தல்
கான் நடந்தும் சீதை கலப்பால் களித்தான் பின் அயர்ந்தான்
தூ நீர் அயோத்தியர்க் கோன் சோமேசா ஆனதனால்
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து

#114
** நாணுத்துறவுரைத்தல்
காமம் மிக உழந்தும் தூதைக் கடிந்துவிட்டாள்
சோமன் நுதல் பரவை சோமேசா ஆமே
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணின் பெரும் தக்கது இல்

#115
** அலரறிவுறுத்தல்
ஓர் நாள் அகலியையை வேட்டு இன்றும் உம்பர்_இறை
சோராப் பழி பூண்டான் சோமேசா ஆராயின்
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டு அற்று

#116
** பிரிவாற்றாமை
வாழ்வு இழந்த இன்னலினும் வாசவர்கோன் மிக்கு நொந்தான்
சூழ்ச்சியை முன் பிரிந்து சோமேசா வீழ்வார்கட்கு
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனிலும்
இன்னாது இனியார்ப் பிரிவு

#117
** படர்மெலிந்திரங்கல்
இன்பமுற்றான் மாயை தோள் தோய்ந்து பின் எண் மடங்கு
துன்பமுற்றான் காசிபன்தான் சோமேசா அன்புடையார்க்கு
இன்பம் கடல் மற்றுக் காமம் அஃது அடுங்கால்
துன்பம் அதனின் பெரிது

#118
** கண்விதுப்பழிதல்
தாதை அன்றித் தானே துச்சந்தனைச் சேர்ந்து இன்னலுற்றாள்
சூது_இல் சகுந்தலைதான் சோமேசா ஓதின்
கதுமெனத் தாம் நோக்கித் தாமே கலுழும்
இது நகத் தக்கது உடைத்து

#119
** பசப்புறு பருவல்
கேழ்வரைச் சேடியர் சொல் கீழ்மைக்கு இயற்படும் சொல்
சூழ்ப மின்னார் துன்பத்தும் சோமேசா தாழ்வு_இல்
பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்

#120
** தனிப்படர்மிகுதி
பல் முநிவர் பன்னியர்கள் பண்டு உன்னைக் காமுறவும்
துன்னி அருள்செய்திலையே சோமேசா அன்னதே
நாம் காதல்கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
தாம் காதல்கொள்ளாக் கடை

#121
** நினைந்தவர் புலம்பல்
தன்னையே உன்னும் தமயந்தி மாதை நளன்
துன்னார் போல் நீத்திருந்தான் சோமேசா அன்னதே
தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல்

#122
** கனவுநிலை யுரைத்தல்
அல்லமனை மாயை கனவில் அணைந்ததனால்
சொல் அரிய இன்பமுற்றாள் சோமேசா நல்ல
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது

#123
** பொழுது கண்டிரங்கல்
வானவர்கோன் காமநோய் மாலை வர மிக்கதே
தூ நீர்ப் புளினத்தின் சோமேசா ஆனதே
காலை அரும்பிப் பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இ நோய்

#124
** உறுப்பு நலனழிதல்
ஓதா நாள் ஓது கலை ஒத்து இளைத்தாள் சீதை என்றான்
சூது ஆரா வான்மீகி சோமேசா கோது_இல்
பணை நீங்கிப் பைம் தொடி சோரும் துணை நீங்கித்
தொல் கவின் வாடிய தோள்

#125
** நெஞ்சொடு கிளத்தல்
அன்பன் துறப்பவும் நாளாயினி தேடித்
துன்பம் தலைக்கொண்டாள் சோமேசா முன்பே
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
பைதல் நோய் செய்தார்-கண் இல்

#126
** நிறையழிதல்
கோல் தொடி விற்பாய் போன்று கூடல் வணிக மின்னார்
தோற்று நிறை அழித்தாய் சோமேசா சாற்றுங்கால்
பல் மாயக் கள்வன் பணி மொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை

#127
** அவர்வயின் விதும்பல்
சந்திரசேனன் வரவு நோக்கி உயிர் தாங்கினளால்
சுந்தரச் சீமந்தினிதான் சோமேசா முந்தும்
உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல் நசைஇ இன்னும் உளேன்

#128
** குறிப்பறிவுறுத்தல்
சங்கிலி-பால் ஆரூரர் ஊழி கணம்தான் ஆகத்
துங்கம் மிகும் அன்புவைத்தார் சோமேசா பொங்கப்
பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல் அரிது ஆற்றி
அன்பு இன்மை சூழ்வது உடைத்து

#129
** புணர்ச்சி விதும்பல்
யோசனை கந்தியினைக் காண்டலும் பேர் ஓகைகொண்டான்
தூசு அணையாச் சந்தனுத்தான் சோமேசா நேசமுடன்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு

#130
** நெஞ்சொடு புலத்தல்
விக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றும் தேடி நொந்தாள்
தொக்க உருப்பசி மின் சோமேசா ஒக்கும்
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது

#131
** புலவி
கொண்ட பரவை கொடும் புலவி எல்லாம் வன்
தொண்டர்க்குப் பேரழகே சோமேசா தண்டா
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத் தகை
பூ அன்ன கண்ணார் அகத்து

#132
** புலவி நுணுக்கம்
சீவகன் மஞ்சரியைத் தாழ்த்து உரைப்பச் சீறினளே
தூ வாய் குணமாலை சோமேசா ஆவகையே
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும் நீர்
இ நீரர் ஆகுதிர் என்று

#133
** ஊடலுவகை
காயும் புலவியில் வன்தொண்டர் கடைப்பட்டுத்
தோயும் இன்பின் மேலானார் சோமேசா ஆயுங்கால்
ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலில் காணப்படும்
** இரங்கேசவெண்பா என்ற சூடாமணி முற்றிற்று

மேல்

&13 விவேக சிந்தாமணி

@0 காப்பு நேரிசை வெண்பா

#1
அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம் நல்ல
குணம் அதிகம் ஆம் அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக்கால்

@1 நூல்
** அறுசீரடியாசிரிய விருத்தம்

#1
ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும் பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குரு மொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயன் இல்லை ஏழும்தானே

#2
பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான்
கள்ளின் நல் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள்
தெள் அற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார்

#3
குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்துவைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகு மணம் செய்தாலும் தான்
அக் குலம் வேறதாமோ அதனிடம் புனுகு உண்டாமோ
குக்கலே குக்கல் அல்லால் குலம்-தனில் சிறந்தது ஆமோ

#4
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பு இலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிழ்தம் ஆகும்
முப்பழமொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும் பசி ஆகும்தானே

#5
கதிர் பெறு செந்நெல் வாடக் கார்க் குலம் கண்டு சென்று
கொதி நிரைக் கடலில் பெய்யும் கொள்கை போல் குவலயத்தே
மதி தனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தைப் பாரார்
நிதி மிகப் படைத்தோர்க்கு ஈவார் நிலை இலார்க்கு ஈயமாட்டார்

#6
ஆலிலே பூவும் காயும் அளி தரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம் தன் குடி என்றே வாழும்
வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடாகோடி
ஆல் இலை ஆதிபோனால் அதன் அடி இருப்பார் உண்டோ

#7
** அறுசீரடியாசிரிய விருத்தம்
பொருட்பாலை விரும்புவர்கள் காமப்பாலிடை மூழ்கிப் புரள்வர் கீர்த்தி
அருள் பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்பார்கள் அறிவொன்றில்லார்
குருப்-பால் அக் கடவுளர்-பால் வேதியர்-பால் புரவலர்-பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து ஈவார்

#8
** வேறு
தண் தாமரையின் உடன் பிறந்தும் தண் தேன் நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடை இருந்து வந்தே கமல மது உண்ணும்
பண்டே பழகியிருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்து அங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே

#9
** கலி விருத்தம்
வானரம் மழை-தனில் நனையத் தூக்கணம்
தான் ஒரு நெறி சொலத் தாண்டி பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே

#10
** அறுசீர் விருத்தம்
வண்டு மொய்த்து அனைய கூந்தல் மதனபண்டாரவல்லி
கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளி மொழி வாயின் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ கனியொடு கலந்த பாகோ
அண்டர் மா முனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே

#11
கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்
விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்
இப் புவி-தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளி போல்
அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா

#12
** எண்சீரடியாசிரிய விருத்தம்
ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்
கோல மா மத யானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே

#13
** அறுசீர் விருத்தம்
சங்கு வெண்தாமரைக்குத் தந்தை தாய் இரவி தண்ணீர்
அங்கு அதைக் கொய்துவிட்டால் அழுகச் செய்து அ நீர் கொல்லும்
துங்க வண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்
தங்களின் நிலைமை கெட்டால் இப்படித் தயங்குவாரே

#14
** எண்சீர் விருத்தம்
நாய் வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின்
நல் தமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ
பேய் வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்
பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடது ஆமோ
தாய் வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்
சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான்
ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான்
எழு பிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே

#15
** அறுசீர் விருத்தம்
வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல் விழுந்து அழுவாள் பொய்யே
தம்பலம் தின்பாள் பொய்யே சாகிறேன் என்பாள் பொய்யே
அம்பிலும் கொடிய கண்ணாள் ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடை ஆவாரே

#16
** எண்சீர் விருத்தம்
கெற்பத்தால் மங்கையருக்கு அழகு குன்றும்
கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம்
துற்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்
சொல்கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம்
நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார்
நன்மை செய்யத் தீமை உடன் நயந்து செய்வார்
அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும்
அரிய தவம் கோபத்தால் அழிந்துபோமே

#17
** அறுசீர் விருத்தம்
தன்னுடன் பிறவாத் தம்பி தனைப் பெறாத் தாயார் தந்தை
அன்னியரிடத்துச் செல்வம் அரும் பொருள் வேசி ஆசை
மன்னிய ஏட்டின் கல்வி மறுமனையாட்டி வாழ்க்கை
இன்னவாம் கருமம் எட்டும் இடுக்கத்துக்கு உதவாது அன்றே

#18
** எண்சீர் விருத்தம்
ஒரு நான்கும் ஈர்_அரையும் ஒன்றே கேளாய்
உண்மையாய் ஐ_அரையும் அரையும் கேட்டேன்
இரு நான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
பெரு நான்கும் அறு_நான்கும் பெறுவாய் பெண்ணே
பின்னே ஓர் மொழி புகல வேண்டாம் இன்றே
சரி நான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே
சகிக்க முடியாது இனி என் சகியே மானே

#19
** எழுசீரடியாசிரிய விருத்தம்
தேன் நுகர் வண்டு மது-தனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான் அதைச் சம்புவின் கனி என்று தடம் கையில் எடுத்து முன் பார்த்தாள்
வானுறு மதியும் வந்தது என்று எண்ணி மலர்க் கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது எனப் புகன்றாள்

#20
** எண்சீர் விருத்தம்
கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்
கணக்கு அறிந்து பேசாதான் கசடன் ஆகும்
ஒரு தொழிலும் இல்லாதான் முகடி ஆகும்
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்
பெரியோர்கள் முன் நின்று மரத்தைப் போலும்
பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும்
பரிவு சொலித் தழுவின் அவன் பசப்பன் ஆகும்
பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே

#21
** அறுசீர் விருத்தம்
தாங்கொணா வறுமை வந்தால் சபை-தனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூம் கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகு எலாம் பழிக்கும்தானே

#22
** கலி விருத்தம்
அரும்பு கோணிடில் அது மணம் குன்றுமோ
கரும்பு கோணிடில் கட்டியும் பாகும் ஆம்
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்
நரம்பு கோணிடில் நாம் அதற்கு என் செய்வோம்

#23
** அறுசீர் விருத்தம்
அன்னையே அனைய தோழி அறம்-தனை வளர்க்கும் மாதே
உன்னை ஓர் உண்மை கேட்பேன் உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையோ புணருவோர்கள் எனக்கும் ஓர் இன்பம் நல்கிப்
பொன்னையும் கொடுத்துப் பாதப் போதினில் வீழ்வது ஏனோ

#24
பொம்மெனப் பணைத்து விம்மிப் போர் மதன் மயங்கி வீழும்
கொம்மை சேர் முலையினாளே கூறுவேன் ஒன்று கேண்மோ
செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் சிதற வேண்டி
நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே

#25
பொன்னொடு மணி உண்டானால் புலைஞனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியில் மணமும் செய்வார்
மன்னராய் இருந்த பேர்கள் வகை கெட்டுப்போவார் ஆகில்
பின்னையும் யாரோ என்று பேசுவார் ஏசுவாரே

#26
வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை
நீதி மன்னர் நெறியனுக்கு ஓர் மழை
மாதர் கற்பு உடை மங்கையர்க்கு ஓர் மழை
மாதம் மூன்று மழை எனப் பெய்யுமே

#27
அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை
புருடனைக் கொன்ற பூவையர்க்கு ஓர் மழை
வருடம் மூன்று மழை எனப் பெய்யுமே

#28
** அறுசீர் விருத்தம்
திருப்பதி மிதியாப் பாதம் சிவன் அடி வணங்காச் சென்னி
இரப்பவர்க்கு ஈயாக் கைகள் இனிய சொல் கேளாக் காது
புரப்பவர்-தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத் தேகம்
இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லைதானே

#29
தன் உடலினுக்கு ஒன்று ஈந்தால் தக்கதோர் பலமது ஆகும்
மின் இயல் வேசிக்கு ஈந்தால் மெய்யிலே வியாதி ஆகும்
மன்னிய உறவுக்கு ஈந்தால் வருவது மயக்கமாகும்
அன்னிய பரத்துக்கு ஈந்தால் ஆருயிர்க்கு உதவி ஆமே

#30
** பதினான்குசீர் விருத்தம்
படியின் அப்பொழுதே வதைத்திடும் பச்சைநாவியை நம்பலாம்
பழி நமக்கு என வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம்
கொடும் மதக் குவடு என வளர்ந்திடு குஞ்சரத்தையும் நம்பலாம்
குலுங்கப் பேசி நகைத்திடும் சிறுகுமரர்-தம்மையும் நம்பலாம்
கடை இலக்கமும் எழுதிவிட்ட கணக்கர்-தம்மையும் நம்பலாம்
காக்கை போல் விழி பார்த்திடும் குடி காணியாளரை நம்பலாம்
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும் நகை நகைத்திடும் மாதரை
நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே

#31
** கலி விருத்தம்
வண்டுகள் இருந்திடின் மதுவை உண்டிடும்
தண் தமிழ் இருந்திடின் சங்கம் சேர்ந்திடும்
குண்டுணி இருந்திடின் கோள்கள் மிஞ்சிடும்
பெண்டுகள் இருந்திடின் பெரிய சண்டையே

#32
** அறுசீரடியாசிரிய விருத்தம்
கற்புடை மாதர் கொங்கை கவரிமான் மயிரின் கற்றை
வெற்புறு வேங்கையின் தோல் வீரன் கை வெய்ய கூர் வேல்
அற்பர்-தம் பொருள்கள்-தாமும் அவரவர் இறந்த பின்னே
பற்பலர் கொள்வார் இந்தப் பாரினில் உண்மைதானே

#33
வீணர் பூண்டாலும் தங்கம் வெறும் பொய்யாம் மேற்பூச்சு என்பார்
பூணுவார் தராப் பூண்டாலும் பொருந்திய தங்கம் என்பார்
காணவே பனைக் கீழாகப் பால் குடிக்கினும் கள்ளே என்பார்
மாண் உலகத்தோர் புல்லர் வழக்கினை மெய் என்பாரே

#34
** கலி விருத்தம்
ஓரியே மீன் உவந்து ஊன் இழந்தையோ
நாரியே கண் பிழை நாட்டில் இல்லையோ
பாரியே கணவனைப் பழுதுசெய்து நீ
நீரிலே இருப்பது நிலைமை அல்லவே

#35
** அறுசீரடியாசிரிய விருத்தம்
சம்புவே என்ன புத்தி சலம்-தனில் மீனை நம்பி
வம்புறு வடத்தைப் போட்டு வானத்தைப் பார்ப்பது ஏனோ
அம்புவி மாதே கேளாய் அரசனை அகலவிட்டு
வம்பனைக் கைப்பிடித்தவாறு போல் ஆயிற்று அன்றே

#36
மூப்பு இலாக் குமரி வாழ்க்கை முனை இலா அரசன் வீரம்
காப்பு இலா விளைந்த பூமி கரை இலாது இருந்த ஏரி
கோப்பு இலான் கொண்ட கோலம் குரு இலான் கொண்ட ஞானம்
ஆப்பு இலாச் சகடு போலே அழியும் என்று உரைக்கலாமே

#37
** சந்தக் கலி விருத்தம்
பொன்னின் மணி கிண்கிணி சிலம்பு ஒலி புலம்ப
மின்னு மணி மேகலைகள் மெல்லென ஒலிப்பச்
சின்ன மலர் கொண்டு சில சேடியர்கள் சூழ
அன்னம் என அல்ல என அம் என உரைத்தார்

#38
** அறுசீரடியாசிரிய விருத்தம்
கானலை நீர் என்று எண்ணிக் கடுவெளி திரியும் மான் போல்
வானுறும் இலவு காத்த மதி இலாக் கிள்ளையே போல்
தேனினை உண்டு தும்பி தியங்கிய தகைமையே போல்
நான் உனை அரசன் என்று எண்ணி நாளையும் போக்கினேனே

#39
** குருங்கழிநெடில் விருத்தம்
சங்கு முழங்கும் தமிழ்நாடன்-தன்னை நினைத்த போது எல்லாம்
பொங்கு கடலும் உறங்காது பொழுது ஓர் நாளும் விடியாது
திங்கள் உறங்கும் புள் உறங்கும் தென்றல் உறங்கும் சில காலம்
எங்கும் உறங்கும் இராக் காலம் என் கண் இரண்டும் உறங்காதே

#40
** அறுசீரடியாசிரிய விருத்தம்
அரவினை ஆட்டுவாரும் அரும் களிறு ஊட்டுவாரும்
இரவினில் தனிப்போவாரும் ஏரி நீர் நீந்துவாரும்
விரை செறி குழலியான வேசையை விரும்புவாரும்
அரசனைப் பகைத்திட்டாரும் ஆருயிர் இழப்பர் தாமே

#41
வாழ்வது வந்த போது மனம்-தனில் மகிழ வேண்டாம்
தாழ்வது வந்ததானால் தளர்வரோ தக்கோர் மிக்க
ஊழ்வினை வந்ததானால் ஒருவரால் விலக்கப்போமோ
ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டிலீரோ

#42
** அறுசீர் விருத்தம்
பருப்பதங்கள் போல் நிறைந்திடும் நவமணிப் பதங்களைக் கொடுத்தாலும்
விருப்பம் நீங்கிய கணவரைத் தழுவதல் வீணதாம் விரை ஆர்ந்த
குருக்கு சந்தனக் குழம்பினை அன்பொடு குளிர் தர அணிந்தாலும்
செருக்கு மிஞ்சிய அற்பர்-தம் தோழமை செப்பவும் ஆகாதே

#43
** கலி விருத்தம்
பெருத்திடு செல்வமாம் பிணி வந்து உற்றிடில்
உருத் தெரியாமலே ஒளி மழுங்கிடும்
மருந்து உளதோ எனில் வாகடத்து இலை
தரித்திரம் என்னும் ஓர் மருந்தில் தீருமே

#44
** அறுசீரடியாசிரிய விருத்தம்
அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கைதானும்
பித்தர்-தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதம்தானும்
அத்தன் மால் பிரம்மதேவனால் அளவிடப்பட்டாலும்
சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லை கண்டீர்

#45
சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழ்வார் புல்லர்
நல்லவர் விசாரியாமல் செய்வாரோ நரி சொல்கேட்டு
வல்லியம் பசுவும் கூடி மாண்டதோர் கதையைப் போலப்
புல்லியர் ஒருவராலே போகுமே யாவும் நாசம்

#46
கதலி வீரர் களத்திடை வையினும்
குதலை வாயில் குழவிகள் வையினும்
மதன லீலையின் மங்கையர் வையினும்
இதமுறச் செவிக்கு இன்பம் விளையுமே

#47
புத்திமான் பலவான் ஆவான் பலமுளான் புத்தி அற்றால்
எத்தனை விதத்தினாலும் இடரது வந்தே தீரும்
மற்று ஒரு சிங்கம்-தன்னை வரு முயல் கூட்டிச் சென்றே
உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலே

#48
மானம் உள்ளோர்கள் தங்கள் மயிர் அறின் உயிர் வாழாத
கானுறு கவரி மான் போல் கனம் பெறு புகழே பூண்பார்
மானம் ஒன்று இல்லார் தாமும் மழுங்கலாய்ச் சவங்கள் ஆகி
ஈனமாம் கழுதைக்கு ஒப்பாய் இருப்பர் என்று உரைக்கலாமே

#49
** கலி நிலைத் துறை
கழுதை கா எனக் கண்டு நின்று ஆடிய அலகை
தொழுது மீண்டும் அக் கழுதையைத் துதித்திட அதுதான்
பழுது இலா நமக்கு ஆர் நிகராம் எனப் பகர்தல்
முழுதும் மூடரை மூடர் கொண்டாடிய முறை போல்

#50
** அறுசீரடியாசிரிய விருத்தம்
ஆசாரம் செய்வாராகில் அறிவொடு புகழும் உண்டாம்
ஆசாரம் நன்மையானால் அவனியில் தேவர் ஆவார்
ஆசாரம் செய்யாராகில் அறிவொடு புகழும் அற்றுப்
பேசார் போல் பேச்சும் ஆகிப் பிணியொடு நரகில் வீழ்வார்

#51
செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிது பேணார்
சொல்வதை அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் பேணார்
வெல்வதே கருமம் அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார்
வல்வினை விளைவும் பாரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர்

#52
** கலி விருத்தம்
யானையைச் சலம்-தனில் இழுத்த அக்கரா
பூனையைக் கரை-தனில் பிடிக்கப் போகுமோ
தானையும் தலைவரும் தலம் விட்டு ஏகினால்
சேனையும் செல்வமும் தியங்குவார்களே

#53
** அறுசீர் விருத்தம்
கொண்ட நல் கலைகளோடு குணம் இலாக் கோதைமாரைக்
கண்டு விண்டு இருப்பது அல்லால் கனவிலும் புல்ல ஒண்ணாது
உண்டென மதுவை உண்ண ஓவியப் பூவில் வீழ்ந்த
வண்டினம் பட்ட பாடு மனிதரும் படுவர் தாமே

#54
மயில் குயில் செம் கால் அன்னம் வண்டு கண்ணாடி பன்றி
அயில் எயிற்று அரவு திங்கள் தவன் ஆழி கொக்கோடு
உயரும் விண் கமலப் பன்மூன்று உறு குணமுடையோர்-தம்மை
இயலுறு புவியோர் போற்றும் ஈசன் என்று எண்ணலாமே

#55
** கலி விருத்தம்
தெருள் இலாக் கலையினார் செருக்கும் ஆண்மையும்
பொருள் இலா வறியர்-தம் பொறி அடக்கமும்
அருள் இலா அறிஞர்-தம் மௌன நாசமும்
கரு இலா மங்கையர் கற்பும் ஒக்குமாம்

#56
மங்குல் அம்பதினாயிரம் யோசனை மயில் கண்டு நடமாடும்
தங்கு பானு நூறாயிரம் யோசனை தாமரை முகம் விள்ளும்
திங்கள் ஆதவற்கு இரட்டி யோசனையுறச் சிறந்திடும் அரக்கு ஆம்பல்
எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம் விட்டு அகலாரே

#57
சந்திரன் இல்லா வானம் தாமரை இல்லாப் பொய்கை
மந்திரி இல்லா வேந்தன் மத கரி இல்லாச் சேனை
சுந்தரப் புலவர் இல்லாத் தொல் சபை சுதர்_இல் வாழ்வு
தந்திகள் இல்லா வீணை தனம் இலா மங்கை போலாம்

#58
** கலி விருத்தம்
குரை கடல் வறுமையும் குறத்தி உண்மையும்
நரை அற மருந்தை உண்டு இளமை நண்ணலும்
விரை செறி குழலினாள் வேசை ஆசையும்
அரையர் அன்பு அமைவதும் அஞ்சும் இல்லையே

#59
** அறுசீரடியாசிரிய விருத்தம்
முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும்
தட வரை முலை மாதே இத் தரணியில் உள்ளோர்க்கு எல்லாம்
மடவனை அடித்த கோலும் வலியனை அடிக்கும் கண்டாய்

#60
பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லை புண்ணியம் இல்லை என்றும்
மருவிய கீர்த்தி இல்லை மைந்தரில் பெருமை இல்லை
கருதிய கருமம் இல்லை கதி பெற வழியும் இல்லை
பெரு நிலம்-தனில் சஞ்சாரப் பிரேதமாய்த் திரிகுவாரே

#61
தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றிச் சுடர் கொடாது
பாம்புக்கு பால் வார்த்து என்றும் பழகினும் நன்மை தாரா
வேம்புக்கு தேன் வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா
தாம் பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார்

#62
கல்லாத மாந்தரையும் கடும் கோபத் துரைகளையும் காலம் தேர்ந்து
சொல்லாத அமைச்சரையும் துயர்க்கு உதவாத் தேவரையும் சுருதி நூலில்
வல்லா அந்தணர்-தமையும் கொண்டவனோடு எந்நாளும் வலது பேசி
நல்லார் போல் அருகு இருக்கும் மனைவியையும் ஒருநாளும் நம்பொணாதே

#63
தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்த பேரை
மீளவே கொடுக்கினாலே வெய்துறக் கொட்டலே போல்
ஏளனம் பேசித் தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும்
கோளினர்-தமக்கு நன்மை செய்வது குற்றமாமே

#64
அறிவுளோர்-தமக்கு நாளும் அரசரும் தொழுது வாழ்வார்
நிறையொடு புவியில் உள்ளோர் நேசமாய் வணக்கம் செய்வார்
அறிவுளோர்-தமக்கு யாதோர் அசடது வருமே ஆகில்
வெறியர் என்று இகழார் என்றும் மேதினியுள்ளோர் தாமே

#65
குரு உபதேசம் மாதர் கூடிய இன்பம் தன்-பால்
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம்
அரிய மந்திரம் விசாரம் ஆண்மை இங்கு இவைகள் எல்லாம்
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே

#66
இடுக்கினால் வறுமையாகி ஏற்றவர்க்கு இசைந்த செல்வம்
கொடுப்பதே மிகவும் நன்று குற்றமே இன்றி வாழ்வார்
தடுத்து அதை விலக்கினோர்க்குத் தக்க நோய் பிணிகள் ஆகி
உடுக்கவே உடையும் இன்றி உண் சோறும் வெல்லம் ஆமே

#67
மெய்யதை சொல்வாராகில் விளங்கிடும் மேலும் நன்மை
வையகம் அதனைக் கொள்வார் மனிதரில் தேவர் ஆவார்
பொய்யதை சொல்வாராகில் போசனம் அற்பம் ஆகும்
நொய்யர் இவர்கள் என்று நோக்கிடார் அறிவுள்ளோரே

#68
** சந்தக் கலி விருத்தம்
தந்தை உரை தட்டினவன் தாய் உரை இகழ்ந்தோன்
அந்தமுறு தேசிகர்-தம் ஆணையை மறந்தோன்
சந்தமுறு வேத நெறி தாண்டின இ நால்வர்
செம் தழலின் வாயினிடைச் சேர்வது மெய் கண்டீர்

#69
** அறுசீரடியாசிரிய விருத்தம்
நாரிகள் வழக்கது ஆயின் நடு அறிந்து உரைத்தார் சுத்தர்
ஏரி போல் பெருகி மண் மேல் இரு கணும் விளங்கி வாழ்வார்
ஓரமே சொல்வார் ஆகில் ஓங்கிய கிளையும் மாண்டு
தீரவே கண்கள் இரண்டும் தெரியாது போவர்தாமே

#70
துப்புறச் சிவந்த வாயாள் தூய பஞ்சணையின் மீதே
ஒப்புறக் கணவனோடே ஓர் லீலை செய்யும் போது
கற்பகம் சேர்ந்த மார்பில் கன தனம் இரண்டும் தைத்தே
அப்புறம் உருவிற்று என்றே அங்கையால் தடவிப் பார்த்தாள்

#71
ஏரி நீர் நிறைந்த போது அங்கு இருந்தன பட்சி எல்லாம்
மாரி நீர் மறுத்த போது அப் பறவை அங்கு இருப்பதுண்டோ
பாரினை ஆளும் வேந்தன் பட்சமும் மறந்த போதே
யாருமே நிலையில்லாமல் அவரவர் ஏகுவாரே

#72
** சந்தக் கழிநெடில் விருத்தம்
மண் ஆர் சட்டி கரத்து ஏந்தி மரநாய் கௌவும் காலினராய்
அண்ணாந்து ஏங்கி இருப்பாரை அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா
பண் ஆர் மொழியார் பால் அடிசில் பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட
உண்ணாநின்ற போது ஒருவர்க்கு உதவா மாந்தர் இவர்தாமே

#73
மண்டலத்தோர்கள் செய்த பாவம் மன்னவரைச் சேரும்
திண் திறல் மன்னர் செய்த தீங்கு மந்திரியைச் சேரும்
தொண்டர்கள் செய்த தோடம் தொடர்ந்து தம் குருவைச் சேரும்
கண்டு அன மொழியாள் செய்த கன்மமும் கணவர்க்கு ஆமே

#74
நற்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று
பொற்பு உடை மகளிரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று
பற்பலரோடு நல் நூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று
சொல் பெறும் இவைகள் மூன்றும் இம்மையில் சொர்க்கம்தானே

#75
** வேறு
நிட்டையிலே இருந்து மனத் துறவடைந்த பெரியோர்கள் நிமலன் தாளைக்
கிட்டையிலே தொடுத்து முத்திபெறும் அளவும் பெரிய சுகம் கிடைக்கும் காம
வெட்டையிலே மதி மயங்கிச் சிறுவருக்கு மணம்பேசி விரும்பித் தாலி
கட்டையிலே தொடுத்து நடுக் கட்டையிலே கிடத்தும்-மட்டும் கவலைதானே

#76
** எழுசீர் விருத்தம்
அன்னம் பழித்த நடை ஆலம் பழித்த விழி அமுதம் பழித்த மொழிகள்
பென்னம்பெருத்த முலை கன்னங்கறுத்த குழல் சின்னஞ்சிறுத்த இடை பெண்
என் நெஞ்சு உருக்க அவள் தன் நெஞ்சு கற்ற கலை என் என்று உரைப்பது இனி நான்
சின்னஞ்சிறுக்கி அவள் வில்லங்கம் இட்டபடி தெய்வங்களுக்கு அபயமே

#77
** எண்சீரடியாசிரிய விருத்தம்
ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ அகத்தினள் நோய்-தனில் வருந்த அடிமை சாவ
மா ஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ளக்
கோ வேந்தர் உழுது உண்ட கடமை கேட்கக் குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவி பாடிப் பரிசு கேட்கப் பாவிமகன் படும் துயரம் பார்க்கொணாதே

#78
** அறுசீரடியாசிரிய விருத்தம்
தாய் பகை பிறர் நட்பு ஆகில் தந்தை கடன்காரன் ஆகில்
மாய் பகை மனைவியாரும் மா அழகு உற்ற போது
பேய் பகை பிள்ளைதானும் பெருமை நூல் கல்லாவிட்டால்
சேய் பகை ஒருவர்க்கு ஆகும் என்றனர் தெளிந்த நூலோர்

#79
நிலைதளர்ந்திட்ட போது நீள் நிலத்து உறவும் இல்லை
சலம் இருந்து அகன்ற போது தாமரைக்கு அருக்கன் கூற்றம்
பல வனம் எரியும் போது பற்று தீக்கு உறவாம் காற்று
மெலிவது விளக்கே ஆகில் மீண்டும் அக் காற்றே கூற்றம்

#80
மடுத்த பாவாணர் தக்கோர் மறையவர் இரப்போர்க்கு எல்லாம்
கொடுத்து யார் வறுமை உற்றார் கொடாது வாழ்ந்தவர் ஆர் மண் மேல்
எடுத்து நாடு உண்ட நீரும் எடாத காட்டகத்து நீரும்
அடுத்த கோடையிலே வற்றி அல்லதில் பெருகும் தானே

#81
** வேறு
உணங்கி ஒரு கால் முடமாகி ஒரு கண் இன்றிச் செவி இழந்து
வணங்கு நெடு வால் அறுப்புண்டு மன்னும் முதுகில் வயிறு ஒட்டி
அணங்கு நலிய மூப்பு எய்தி அகல் வாயோடு கழுத்து ஏந்திச்
சுணங்கன் முடுவல் பின் சென்றால் யாரைக் காமன் துயர் செய்யான்

#82
** எழுசீரடியாசிரிய விருத்தம்
கல் மனப் பார்ப்பார்-தங்களைப் படைத்துக் காகத்தை என் செயப் படைத்தாய்
துன்மதி வணிகர்-தங்களைப் படைத்துச் சோரரை என் செயப் படைத்தாய்
வன்மன வடுகர்-தங்களைப் படைத்து வானரம் என் செயப் படைத்தாய்
நல் மனை-தோறும் பெண்களைப் படைத்து நமனையும் என் செயப் படைத்தனையே

#83
** கலி விருத்தம்
உண்ணல் பூச்சூடல் நெஞ்சு உவத்தல் ஒப்பனை
பண்ணல் எல்லாம் அவர் பார்க்கவே அன்றோ
அண்ணல்-தம் பிரிவினை அறிந்தும் தோழி நீ
மண்ண வந்தனை இது மடமை ஆகுமால்

#84
** அறுசீரடியாசிரிய விருத்தம்
கோளரி அடர்ந்த காட்டில் குறங்கில் வைத்து அமுதம் ஊட்டித்
தோளினில் தூக்கிவைத்துச் சுமந்து பேறா வளர்த்த
ஆளனைக் கிணற்றில் தள்ளி அழகு இலா முடவன் சேர்ந்தாள்
காளம் நேர் கண்ணினாரைக் கனவிலும் நம்பொணாதே

#85
** கொச்சகக் கலிப்பா
சேய் கொண்டாரும் கமலச் செம்மலுடனே அரவப்
பாய் கொண்டாரும் பணியும் பட்டீசுரத்தானே
நோய் கொண்டாலும் கொளலாம் நூறு வயது ஆம் அளவும்
பேய் கொண்டாலும் கொளலாம் பெண் கொள்ளல் ஆகாதே

#86
** எழுசீரடியாசிரிய விருத்தம்
நானம் என்பது மணம் கமழ் பொருளது நாவில் உண்பதுவோ சொல்
ஊன் உணங்குவோய் மடந்தையர் அணிவதே உயர் முலைத் தலைக் கோட்டில்
ஆனது அங்கு அது பூசினால் வீங்குவது அமையுமோ எனக் கேட்க
கான வேட்டுவச் சேரி விட்டு அகன்றனர் கடி கமழ் விலை வாணர்

#87
** கலி நிலைத் துறை
கொண்டு விண் படர் கருடன் வாய்க் கொடு வரி நாகம்
விண்ட நாகத்தின் வாயினில் வெகுண்ட வன் தேரை
மண்டு தேரையின் வாயினில் அகப்படு வண்டு
வண்டு தேன் நுகர் இன்பமே மானிடர் இன்பம்

#88
** அறுசீரடியாசிரிய விருத்தம்
கற்பூரப் பாத்திகட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக் கமழ் நீர் பாய்ச்சிப்
பொற்பு ஊர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்
சொல் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக வரும் எனவே சொல்லினாலும்
நல் போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும்தானே

#89
** கலி விருத்தம்
தண்டு உலாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முகத்து அருகு ஏந்தினாள்
கெண்டை கெண்டை எனக் கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்

#90
மருவு சந்தனக் குழம்பொடு நறும் சுவை நலம் பெற அணிந்தாலும்
சருவ சந்தேக மனம் உள மாதரைத் தழுவலும் ஆகாதே
பருவதங்கள் போல் பலபல நவமணிப் பைம்பொனை ஈந்தாலும்
கெருவம் மிஞ்சிய மானிடர் தோழமை கிட்டலும் ஆகாதே

#91
** வேறு
நிலைத்தலை நீரில் மூழ்கி நின்றவள்-தன்னை நேரே
குலைத்தலை மஞ்ஞை கண்டு கூ எனக் காவில் ஏக
முலைத் தலை அதனைக் கண்டு மும்மதக் கரி வந்து உற்ற
தலைத்தலைச் சிங்கம் என்று அக் களிறு கண்டு ஏகிற்று அம்மா

#92
கரி ஒரு திங்கள் ஆறு கானவன் மூன்று நாளும்
இரி தலைப் புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈது என்று
விரி தலை வேடன் கையில் வில் குதை நரம்பைக் கவ்வி
நரி அனார் பட்ட பாடு நாளையே படுவர் மாதோ

#93
** வேறு
பூதலத்தில் மானிடராய்ப் பிறப்பது அரிது எனப் புகல்வர் பிறந்தோர் தாமும்
ஆதி மறை நூலின் மறை அருள் கீர்த்தியாம் தலங்கள் அன்பாய்ச் சென்று
நீதி வழுவாத வகை வழக்குரைத்து நல்லோரை நேசம்கொண்டு
காத வழி பேர் இலார் கழுதை எனப் பாரில் உள்ளோர் கருதுவாரே

#94
** வேறு
ஆரம் பூண்ட மணி மார்பா அயோத்திக்கு அரசே அண்ணா கேள்
ஈரம் இருக்க மரம் இருக்க இலைகள் உதிர்ந்தவாறு ஏது
வாரம் கொண்டு வழக்குரைத்து மண் மேல் நின்று வலி பேசி
ஓரம் சொன்ன குடியது போல் உதிர்ந்து கிடக்கும் தம்பியரே

#95
** அறுசீரடியாசிரிய விருத்தம்
வல்லியம்-தனைக் கண்டு அஞ்சி மரம்-தனில் ஏறும் வேடன்
கொல்லிய பசியைத் தீர்த்து ரட்சித்த குரங்கைக் கொன்றான்
நல்லவன்-தனக்குச் செய்த நலமது மிக்கது ஆகும்
புல்லர்கள்-தமக்குச் செய்தால் உயிர்-தனைப் போக்குவாரே

#96
தன் மானம் குல மானம் தன்னை வந்து அடைந்த உயிர்-தங்கள் மானம்
என் மானம் ஆகில் என்ன எல்லவரும் சரி எனவே எண்ணும் போது
நல் மானம் வைத்து எந்த நாளும் அவர்-தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி அடைந்தோரைக் காக்கின்ற வள்ளல் என வழுத்தலாமே

#97
தன்னைத் தான் புகழ்வோரும் தன் குலமே பெரிது எனவே தான் சொல்வோரும்
பொன்னைத்தான் தேடி அறம் புரியாமல் அவை காத்துப் பொன்றினோரும்
மின்னலைப் போல் மனையாளை வீட்டில் வைத்து வேசை சுகம் விரும்புவோரும்
அன்னை பிதா பாவலரைப் பகைப்போரும் அறிவு இலாக் கசடர் ஆமே

#98
பெண்டுகள் சொல்கேட்கின்ற பேயரேனும் குணம் மூடப் பேடி லோபர்
முண்டைகளுக்கு இணை இலா முனை வீரர் புருடர் என மொழியொணாதே
உண்டு உலகம் உதிப்பாருள் கீர்த்தி அறம் இன்னது என உணர்வேயில்லார்
அண்டினவர்-தமைக் கெடுப்பார் அழி வழிக்கே செய்வது அவர் அறிவுதானே

#99
பொல்லார்க்குக் கல்வி வரில் கருவம் உண்டாம் அதனோடு பொருளும் சேர்ந்தால்
சொல்லாதும் சொல்லவைக்கும் சொல் சென்றால் குடிகெடுக்கத் துணிவர் கண்டாய்
நல்லோர்க்கு இ மூன்று குணம் உண்டாகில் அருள் அதிக ஞானம் உண்டாய்
எல்லார்க்கும் உபகாரராய் இருந்து பரகதியை எய்துவாரே

#100
** வேறு
உந்தியின் சுழியின் கீழ் சேர் உரோமமாம் கரிய நாகம்
சந்திரன் எனவே எண்ணித் தையலாள் முகத்தை நோக்க
மந்தரகிரிகள் விம்மி வழிமறித்திடுதல் கண்டு
சிந்துரக் கயல் கண் ஓடிச் செவி-தனக்கு உரைத்தது அம்மா

#101
** இதுவுமது
மாக மா மேடை மீதில் மங்கை நின்று உலாவக் கண்டு
ஏகமா மதி என்று எண்ணி இராகு வந்து உற்ற போது
பாகு சேர் மொழியினாளும் பற்றியே பாதம் வாங்கத்
தோகை மா மயில் என்று எண்ணித் தொடர்ந்து அரா மீண்டது அன்றே

#102
** வேறு
சலதாரை வீழும் நீரும் சாகரம்-தன்னைச் சார்ந்தால்
குலம் என்றே கொள்வது அல்லால் குரை கடல் வெறுத்தது உண்டோ
புலவர்கள் சபையில் கூடிப் புன் கவியாளர் சார்ந்தால்
நலம் என்றே கொள்வது அல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம்

#103
கார் எனும் குழல்கள் தப்பிக் கடும் சிலை வாளி தப்பி
மேரு என வளர்ந்து நின்ற வேழத்தின் கோடு தப்பித்
தாருறு கரிய ரோமச் சங்கிலி வழியே சென்று
சீரியது என வளர்ந்த செல்வன் அல்குலில் கை வைத்தான்

#104
உண்டதை ஒழிக்கும் வாசல் ஓரம் நீர் ஒழித்து மேலே
வண்டலும் அழுக்கும் சேரும் உதிரமும் மாறா வாசல்
உண்டு அதன் இருப்பைக் கண்டு பெரும் களி உள்ளம் கொண்டு
கண்டனர் இளைஞர் எல்லாம் கதி எனக் கருதுவாரே

#105
** வேறு
கரந்து ஒருவன் கணை தொடுக்க மேல் பறக்கும் இராசாளி கருத்தும் கண்டே
உரந்து சிறு கானகத்தில் உயிர்ப் புறா பேடு-தனக்கு உரைக்கும்காலை
விரைந்து விடம் தீண்ட உயிர்விடும் வேடன் கணையால் வல்லூறும் வீழ்ந்தது
தரன் செயலே ஆவது அல்லால் தன் செயலால் ஆவது உண்டோ அறிவுள்ளோரே

#106
கொல் உலை வேல் கயல் கண் கொவ்வை அம் கனி வாய் மாதே
நல் அணி மெய்யில் பூண்டு நாசிகாபரணம் மீதில்
சொல் அரில் குன்றி தேடிச் சூடியது என்னோ என்றான்
மெல்_இயல் கண்ணும் வாயும் புதைத்தனள் வெண் முத்து என்றாள்

#107
** கலி விருத்தம்
அருகில் இவள் அருகில் இவள் அருகில் வர உருகும்
கரிய குழல் மேனி இவள் கான மயில் சாயல்
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே

#108
** வேறு
அலகு வாள் விழி ஆய்_இழை நல் நுதல்
திலகம் கண்டு எதிர் செம் சிலை மாரனும்
கலகமே செய்யும் கண் இதுவாம் என
மலர் அம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான்

#109
** கலி நிலைத் துறை
குரங்கு நின்று கூத்தாடிய கோலத்தைக் கண்டே
அரங்கு முன்பு நாய் பாடிக் கொண்டாடிய அது போல்
கரங்கள் நீட்டியே பேசிய கசடரைக் கண்டு
சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் அறிவிலார் செய்கை

#110
** அறுசீரடியாசிரிய விருத்தம்
வில்லது வளைந்தது என்றும் வேழமது உறங்கிற்று என்றும்
வல்லியம் பதுங்கிற்று என்றும் வளர் கடா பிந்திற்று என்றும்
புல்லர்-தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் பெரியோர் என்று
நல்லது என்று இருக்க வேண்டா நஞ்சு எனக் கருதலாமே

#111
சலம்-தனில் கிடக்கும் ஆமை சலத்தை விட்டு அகன்ற போது
கொலை புரி வேடன் கண்டு கூரையில் கொண்டு செல்ல
வலுவினால் அவனை வெல்ல வலு ஒன்றும் இல்லை என்றே
கலை எலி காகம் செய்த கதை என விளம்புவாயே

#112
நிலமதில் குணவான் தோன்றின் நீள் குடித்தனரும் வாழ்வார்
தலம் எலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம்
நலம் இலாக் கயவன் தோன்றின் குடித்தனம் தேசம் பாழாம்
குலம் எலாம் பழுது செய்யும் கோடரிக் காம்பு நேராம்

#113
** எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
உயிர்_அனையானுடன் கலந்த உளவு அறிந்து ஈண்டு எனை மணந்தோன் உடன்று இச் செய்கை
செயல் எனை என்று இலைமறைகாய் எனத் தணவாது அவ் இரு வகையும் தீது என்று
அயல் விழியாய் மயல் பொது ஊழ் வலிது அதினும் பெண்மதியேன் அதுவும் ஊழின்
இயல் என வள்ளுவர் உரைத்தார் சான்று நீ எனப் புகன்றேன் இன்புற்றானே

#114
நட்பிடைக் குய்யம் வைத்தார் பிறர் மனை நலத்தைச் செய்வார்
கற்பு உடை காமத் தீ ஆர் கன்னியை விலக்கினோரும்
அட்டு உடன் அஞ்சுகின்றோர் ஆயுளும் கொண்டு நின்று
குட்டநோய் நரகில் வீழ்ந்து குளிப்பவர் இவர்கள் கண்டாய்

#115
மதி இலா மறையோன் மன்னர் மடந்தையை வேட்கையாலே
ருதுவது காலம்-தன்னில் தோடம் என்று உரைத்தே ஆற்றில்
புதுமையாய் எடுத்த போது பெட்டியில் புலி வாயாலே
அதிருடன் கடியுண்டு அன்றே அரு நரகு அடைந்தான் மாதோ

#116
மையது வல்லியம் வாழ் மலைக்குகை-தனில் புகுந்தே
ஐயமும் புலிக்குக் காட்டி அடவியில் துரத்தும்காலை
பையவே நரி கோளாலே படுபொருள் உணரப்பட்ட
வெய்ய அம் மிருகம் தானே கொன்றிட வீழ்ந்த்தது அன்றே

#117
** வேறு
மங்கை கைகேசி சொல்கேட்டு மன்னர் புகழ் தசரதனும் மரணமானான்
செங்கமலச் சீதை சொல்லை சீராமன் கேட்டவுடன் சென்றான் மான் பின்
தங்கையவள் சொல்கேட்ட இராவணனும் கிளையோடு தானும் மாண்டான்
நங்கையர் சொல்கேட்பது எல்லாம் கேடு வரும் பேர் உலகோர் நகைப்பர் தாமே

#118
** வேறு
ஆதியாம் இருவர் நட்புக்கு அவமதிப்புற்று அவர்க்குள்
சூதினால் கபடம் செய்து துணை பிரிந்திடுவது என்றால்
வேதியன் பவனவாயில் வேசை தாய் பச்சைநாவி
ஊதிய கதை போல் ஆகி உறு நரகு எய்துவாரே

#119
அருமையும் பெருமையும்தானும் அறிந்து உடன்படுவர்-தம்மால்
இருமையும் ஒருமை ஆகி இன்புறற்கு ஏது உண்டாம்
பரிவு இலாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள்-தம்பால்
ஒருமையின் நிரயம் எய்தும் ஏதுவே உயரும் மன்னோ

#120
ஒருவனே இரண்டு யாக்கை ஊன் பொதியான நாற்றம்
உருவமும் புகழும் ஆகும் அதற்குள் நீ இன்பமுற்று
மருவிய யாக்கை இங்கே மாய்ந்திடும் மற்று யாக்கை
திறமதாய் உலகம் ஏத்தச் சிறந்து பின் நிற்கும் அன்றே

#121
** கலி விருத்தம்
வேலியானது பயிர்-தனை மேய்ந்திட விதித்தால்
காலனானவன் உயிர்-தனைக் கவர்ந்திட நினைத்தால்
ஆலம் அன்னையர் பாலகர்க்கு அருத்துவரானால்
மேல் இது ஓர்ந்து உடன் யார்-கொலோ விலக்குவர் வேந்தே

#122
** அறுசீரடியாசிரிய விருத்தம்
அறம் கெடும் நிதியும் குன்றும் ஆவியும் மாயும் காலன்
நிறம் கெடும் மதியும் போகி நீண்டதோர் நரகில் சேர்க்கும்
மறம் கெடும் மறையோர் மன்னர் வணிகர் நல் உழவோர் என்னும்
குலம் கெடும் வேசை மாதர் குணங்களை விரும்பினோர்க்கே

#123
** கட்டளைக் கலித்துறை
அரவிந்த நண்பன் சுதன் தம்பி மைத்துனன் அண்ணன் கையில்
வரம் முந்தி ஆயுதம் பூண்டவன் காணும் மற்று அங்கு அவனே
பரமன் திகிரியை ஏந்திய மைந்தன் பகைவன் வெற்பை
உரம் என்று எடுத்தவன் மாற்றான்-தன் சேவகன் ஒண்_தொடியே

#124
சங்கரன் தேவி தமையன் மனைவி-தனக்கு மூத்தாள்
அங்கு அவள் ஏறிய வாகனம் காணும் மற்று அங்கு அவளோ
கொங்கைகள் ஈர்_ஐந்து உடையவளாய் இக் குவலயத்தில்
எங்கு திரியும் வையிரவர் ஊர்தி என்றே நினையே

#125
** அறுசீரடியாசிரிய விருத்தம்
இந்திர பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும்
மந்தர நிலைகள் பேர மறுகு அயல் வறுமை ஆகும்
சந்திரன் கதிரோன் சாயும் தரணியில் தேசு மாளும்
அந்தணர் கருமம் குன்றின் யாவரே வாழ்வர் மண்ணில்

#126
** எழுசீரடியாசிரிய விருத்தம்
என் அனைக்கு அன்று முத்து அனைக் குனிக்கும் இறை அனை அனைக்குமே அன்று
மன் அனைக்கு அன்று பின் அனைக்கு உதவா வன் புளால் வருந்தி வாடுவனோ
முன்னனைக் கொன்று பின்னனைப் புரந்த முது பகை அவன் பிதா உறாமல்
கன்னனைக் கொன்று விசயனைப் காத்த கவத்துவ இராமகிருட்டிணனே

#127
** நேரிசை வெண்பா
பண்புளருக்கு ஓர் பறவை பாவத்திற்கு ஓர் இலக்கம்
நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி திண் புவியை
ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்கு அரவம்
நீள் வாகனம் நல் நிலம்

#128
சிறுவன் அளைபயறு செந்நெல் கடுகு
மறி திகிரி தண்டு மணி நூல் பொறி அரவம்
வெற்று ஏறு புள் அன்னம் வேதன் அரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி

#129
சிரம் பார்த்தான் ஈசன் அயன் தேவி-தனைப் பார்த்தான்
கரம் பார்த்தான் செங்கமலக் கண்ணன் உரம் சேர்
மலை வளைத்த திண் புயத்து வண்ணான் சீராமன்
கலை வெளுத்த நேர்த்தி-தனைக் கண்டு

#130
** கட்டளைக் கலித்துறை
கரி ஒன்று பொன்மிகும்பை ஏறக் கற்றவர் சூழ்ந்து தொழ
எரி என்னும் செல்வன் துலாத்தினில் ஏற இருண்ட மஞ்சு
சொரிகின்ற நாகமின் சோற்றினில் ஏறித் தொடர்ந்து வர
நரி ஒன்று சொந்தக் கனல் ஏறி வந்தது நம் களத்தே

#131
ஒரு பாதி மால் கொள மற்று ஒரு பாதி உமையவள் கொண்டு
இரு பாதியாலும் இறந்தான் புராரி இரு நிதியோ
பெரு வாரிதியில் பிறை வானில் சர்ப்பம் பிலத்தில் கற்ப
தருவான போச கொடை உன் கை ஓடு என் கை தந்தனனே

#132
கம்ப மத கட களிற்றான் தில்லை வாழும்
கணபதி-தன் பெரு வயிற்றைக் கண்டு வாடி
உம்பர் எலாம் விழித்திருந்தார் அயில் வேல் செம் கை
உடைய அறுமுகவனும் கண்ணீர் ஆறு ஆனான்
பம்பு சுடர்க் கண்ணனுமோ நஞ்சு உண்டான் மால்
பயம் அடைந்தான் உமையும் உடல் பாதி ஆனாள்
அம்புவியைப் படைத்திடுதல் அவமதே என்று
அயனும் அன்னம் இறங்காமல் அலைகின்றானே

#133
காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம்
காமமே தரித்திரங்கள் அனைத்தையும் புகட்டி வைக்கும் கடாரம்
காமமே பரகதிக்குச் செல்லாமல் வழி அடைக்கும் கபாடம்
காமமே அனைவரையும் பகை ஆக்கிக் கழுத்து அரியும் கத்திதானே

#134
** கலி நிலைத் துறை
தடாரி தண்ணுமை பேரிகை சல்லரி இடக்கை
கடாகம் எங்கணும் அதிர்ந்திட ஒலித்திடக் காணல்
விடாத நாண் அகன்று அன்னிய புருடனை விழைந்தே
அடாது செய்த மங்கையர் வசை ஒலித்தல் போலாமே

#135
** பதினான்குசீர் விருத்தம்
தண்டுலம் மிளகின்தூள் புளி உப்பு தாளிதம் பாத்திரம் இதேஷ்டம்
தாம்பு நீர் தேற்றம் ஊன்றுகோல் ஆடை சக்கிமுக்கிக் கைராந்தல்
கண்டகம் காண்பான் பூசை முஸ்தீபு கழல் குடை ஏவல் சிற்றுண்டி
கம்பளி ஊசி நூல் அடைக்காய் இலை கரண்டகம் கண்ட மேல் தங்கி
துண்டம் ஊறியகாய் கரண்டி நல்லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி
சொல்லிய எல்லாம் குறைவறத் திருத்தித் தொகுத்துப் பல்வகையின் இனிது அமைத்துப்
பெண்டுகள் துணையோடு எய்து வாகனனாய்ப் பெருநிலை நீர் நிழல் விறகு
பிரஜையும் தங்குமிடம் சமைத்து உண்டு புறப்படல் யாத்திரைக்கு அழகே
** விவேக சிந்தாமணி முற்றிற்று

மேல்

&14 இராம பாரதியார் இயற்றிய ஆத்திசூடி வெண்பா

@0 தெய்வ வணக்கம் விநாயகர் துதி

#1
உலகம் புகழ் பாகை ஓங்கு தொண்டைநாட்டின்
திலகன் கணபதி மால் செல்வன் நலம் மிகுந்த
வாழ்வாகும் புன்னைவனநாதன் நல் தமிழ்க்குச்
சூழ் ஆத்திசூடி துணை
* ஆத்திசூடி விநாயகர்

@1 நூல்

#1
** அறஞ்செய விரும்பு கபிலை கதை
அருள் ஆர் கபிலை அறமே சயம் என்று
இருள் அகல வேங்கைக்கு இயம்பும் பெருமையினால்
மா வளரும் புன்னைவன நாதா மெய்த் துணையா
மேவி அறஞ் செய்ய விரும்பு

#2
** ஆறுவது சினம் சடபரதர் கதை
ஆதி சவ்வீரன் சிவிகைக்கு ஆளாய்ச் சடபரதர்
தீது பொறுத்துச் சிறப்புற்றார் சோதிப்
புய மா வளர்கின்ற புன்னைவன நாதா
செயம் ஆறுவது சினம்

#3
** இயல்வது கரவேல் அரிச்சந்திரன் கதை
இந்துமதி விற்றும் அலைந்து ஈனனுக்கு ஆள் ஆகி அரிச்
சந்திரனே தன் நிலைமை தப்பாதான் அந்த
மனுநெறி தேர் புன்னைவன நாதா பூமி
யினில் இயல்வது கரவேல்
* இந்துமதி சந்திரமதி

#4
** ஈவது விலக்கேல் சுக்கிரன் கதை
மாவலியை மாலுக்கு மண் உதவாமல் தடுத்த
காவலினால் சுக்கிரனும் கண் இழந்தான் ஆவதனால்
நல் நீதி புன்னைவன நாத மகிபா உலகத்
தின் ஈவது விலக்கேல்

#5
** உடையது விளம்பேல் சடாயுவின் கதை
உள்ளபடி தன் சிறகில் உண்டு பலம் என்று ஒரு சொல்
விள்ளும் சடாயு முனம் வீழ்ந்தது பார் வள்ளல்
தனபதியே புன்னைவனத் தாடாளா ஒன்னார்க்கு
இனது உடையது விளம்பேல்

#6
** ஊக்கமது கைவிடேல் பகாசூரன் கதை
ஊரின் நரபலிக்கா ஊர் சகடம் மேல் வீமன்
தீரன் பகாசூரன் தீது அடக்கும் காரணம் பார்
தேக்கு புகழ் புன்னைவன தீரனே யா உறினும்
ஊக்கமது கைவிடேல்

#7
** எண்எழுத்து இகழேல் துருவன் கதை
எண் அரிய கோள் உடுக்கள் எல்லாம் ஒருமையதாத்
திண்ணத் துருவர் கையில் சேர்ந்ததனால் மண் உலகில்
போற்றும் தமிழ்ப் பாகை புன்னைவன பூபா கேள்
ஏற்று எண் எழுத்து இகழேல்
* உடுக்கள் நக்ஷத்திரங்கள்

#8
** ஏற்பது இகழ்ச்சி திருமால் சரித்திரம்
மாவலி-பால் மண் இரக்க மாதவனே வாம உரு
ஆம் என்றான் மற்றவர்க்கு அஃது ஆகுமோ மூவுலகில்
பேர் பரவும் புன்னைவனப் பேரரசே எவ்வகையால்
சீர் பெறினும் ஏற்பது இகழ்ச்சி

#9
** ஐயம் இட்டுண் பிரமராக்ஷதன் கதை
வன் பிரமராக்கதன்தான் மங்கிலியப் பிச்சை அருள்
என்பவளுக்கே கொடுத்து ஈடேறினான் அன்பதனால்
வள்ளல் எனும் புன்னை வனநாதா வஞ்சம் இலாது
உள்ளத்திலே ஐயம் இட்டு உண்

#10
** ஒப்புற வொழுகு தாரணியின் தன்மை
தாரணி போல் எவ்வுயிரும் தாங்கும் தகைமையதாச்
சீர் அணிந்து நாளும் சிறந்து ஓங்க ஆரம்
தழைந்த புகழ்ப் புன்னைவனத் தாடாளா யார்க்கும்
குழைந்து ஒப்புறவு ஒழுகு

#11
** ஓதுவது ஒழியேல் வேதவியாசர் கதை
மச்சகந்தி-தன் வயிற்றில் வந்து உதித்தும் ஓதலினால்
விச்சை பெற்ற வேத வியாசனைப் பார் நிச்சயமே
பன்னு தமிழ்ப் புன்னைவன பார்த்திபா உண்மை நூ
லின் ஓதுவது ஒழியேல்
* பார்த்திபன் – அரசன்

#12
** ஔவியம் பேசேல் உத்தரன் கதை
மாதர் முன்னே உத்தரனும் மா பலவான் போல் உரைத்து
காது அமரில் அர்ச்சுனனால் கட்டுண்டான் ஆதலினால்
வண்மை பெறு புன்னைவன நாதா சீர் உடைய
திண்மை உன்னி ஔவியம் பேசேல்
* ஔவியம் – பொறாமை

#13
** அக்கஞ் சுருக்கேல் சிட்டுக் கதை
மைக் கடல் கொள் முட்டை-தனை வாங்குவோம் என்று சிட்டு
புக்கு அதனை வென்றது தன் புத்தியினால் அக் கதை போல்
வேளாளர் புன்னைவன மேகமே உண்மை எனக்
கேளாய் அக்கம் சுருக்கேல்
* மை – நீர்

#14
** கண்டொன்று சொல்லேல் சத்தியவிரதன் கதை
கள்ளம் இன்றி முன்னே கன சத்தியவிரதன்
உள்ளது சொல்லிக் கலந்தான் ஓர் வழியைத் தெள்ளிமையோய்
மா தனதா புன்னைவன வள்ளலே மேல் எண்ணா
ஏதும் கண்டு ஒன்று சொல்லேல்

#15
** ஙப்போல் வளை காக்கைகளின் இயல்பு
தீது_இல் அரிட்டங்கள் செய்ய உணவைக் கொள்ள
மேதினியில் தம் இனத்தை மேவுதலால் நீதிநெறி
போற்று புகழ்ப் புன்னைவன பூபால உற்றாரை
மால் திரு மெய் ஙப் போல் வளை

#16
** சனி நீராடு
ஞாயிறு உயிர்க்கு ஈறு திங்கள் நம்பர் அருள் செய்கிலர் செவ்
வாய் பிணி துக்கம் குருநாள் வாழ்வு போம் தூய வெள்ளி
போடு இவைகள் புன்னைவன பூபாலா மிக்க புத
னோடு சனி நீராடு

#17
** ஞயம்பட உரை பட்டினத்துப்பிள்ளை இயல்பு
தொட்டு அடித்தோன் நன்றி செய்த தூயோன் இருவருக்கும்
பட்டினத்துப்பிள்ளை பகர்ந்தது பார் மட்டு உலவும்
தென் பாகை புன்னைவன தீரனே யாரிடத்தும்
அன்பாய் ஞயம்பட உரை
* மட்டு தேன்

#18
** இடம்பட வீடிடேல்
நித்தியமாம் வீட்டு நெறியில் இடம் பாடு அல்லால்
பொய்த்த இன்ப வீட்டில் பொருள் அடையாது அத்தம்
நடை அறியும் புன்னைவன நாதனே பூமி
யிடை இடம்பட வீடு இடேல்

#19
** இணக்கம் அறிந்து இணங்கு விக்கிரமாதித்தன் கதை
செய்ய புகழ் விக்கிரமாதித்தன் ஒரு தட்டாரப்
பையல் உறவு பற்றிப் பட்டதனால் வையம்
மணக்கும் சீர்ப் புன்னைவன நாதா நீயும்
இணக்கம் அறிந்து இணங்கு

#20
** தந்தைதாய்ப் பேண் கருடன், அந்தணன் ஆகியவர்களின் கதை
அனை இடர் தீர்த்தான் கருடன் அந்தணன் செங்கந்தை-
தனை எடுத்துச் சாவு தவிர்த்தான் இனையவர் போல்
சீர் ஆரும் புன்னைவன தீரனே நாள்-தோறும்
பேர் ஆரும் தந்தை தாய்ப் பேண்

#21
** நன்றி மறவேல்
உன் நாட்டார் நன்றால் உயிர் காத்துக் கோத்திரத்தில்
எந்நாளும் வாழ்ந்தே இருப்பதனால் பல் நாளும்
பூதலத்தில் மேன்மை பெறு புன்னைவன நாதனே
ஏதம் அற நன்றி மறவேல்

#22
** பருவத்தே பயிர்செய் வேளாளர் கதை
உன் நாட்டில் பொற்களந்தை ஊரர் நல் நாள் செய்த பயிர்
பொன்னே விளையப் புகழ் பெற்றார் ஒன்னார்
பயந்திடு வேல் புன்னைவன பார்த்திபா நீயும்
செய்யும் பருவத்தே பயிர்செய்

#23
** மண்பறித்து உண்ணேல் கூதைசகடன் கதை
கூற வழக்கு எண்ணாத கூதைசகடற்கு வண்டில்
ஏற முன் போல் வாராதிருந்ததனால் தேறி என்றும்
மா திலகா புன்னைவன மன்னா கேள் பூமியதில்
ஏதிலன் மண் பறித்து உண்ணேல்
* ஏதிலன் அயலான்

#24
** இயங்கித் திரியேல்
மன்னவனுக்கு உன் நாட்டார் வந்து முடிசூட்ட
முன் அனலில் மூழ்கி முதன்மை பெற்றார் அன்னவர் போல்
நன்று அறியும் புன்னைவன நாதனே வையகத்தில்
என்றும் இயங்கித் திரியேல்

#25
** அரவம் ஆட்டேல் பரிசித்து கதை
இருடி மேல் செத்தபாம்பு ஏற்றிப் பரிச்சித்து
அரவினால் பட்டது அறிந்தே திரைக் கடல் சூழ்
மண்ணுலகில் புன்னைவன மன்னவா பாவம் இது என்று
எண்ணி அரவம் ஆட்டேல்
* அரவம் பாம்பு

#26
** இலவம்பஞ்சியில் துயில்
அன்னத்தின் தூவி பொங்கர் ஆகும் அரசற்குப்
பன்னும் பருத்திதான் பாங்கு அலவே அன்னதனால்
மன்னன் எனும் புன்னைவன நாதா மை இரவில்
துன் இலவம் பஞ்சில் துயில்
* தூவி இறகு

#27
** வஞ்சகம் பேசேல் தூருவாசர் கதை
மாயனார்-தம் மக்கள் மா முனியைக் கேட்ட கெற்பம்
ஏய் அவரைக் கொல்லும் இருப்புலக்கை ஆயதனால்
மாரன் எனும் புன்னைவன நாதா வையத்தில்
சீருறா வஞ்சகம் பேசேல்
* மாரன் மன்மதன்

#28
** அழகலாதன செயேல் வாணாசுரன் கதை
வாணன் சிவனை வணங்கி வசம்செய்து உலகோர்
காண நின்று தன் வாயில் காக்கவைத்துப் பாணி எலாம்
போனதனால் புன்னைவன பூபாலா யாரிடத்தும்
தான் அழகு அலாதன செய்யேல்

#29
** இளமையில் கல் காளிதாசன் கதை
கல்வி இளமைக்குள் இலாக் காளிதாசன் மனையாள்
வல் வசையால் பொல்லா மரணமுற்றுச் செல்லலுற்றாள்
நல் தாமா புன்னைவன நாதா இதை அறிந்து
கற்றால் இளமையில் கல்

#30
** அறனை மறவேல் பத்திரகிரியார், சனகன், விதுரன்
** ஆகியவர்களின் இயல்பு
பத்திரகிரிராசன் பகர் சனகன் மெய் விதுரன்
சித்த பரிசுத்தம் செலுத்தியதால் இத் தரையில்
மன்னன் எனும் புன்னைவன நாதா யா உறினும்
இன்பாம் அறனை மறவேல்

#31
** அனந்தல் ஆடேல்
காலை துயில் சீலம் போம் கண்ட பகல் ஆக்கம் போம்
மாலை துயில் நோயாம் வகையறிந்து ஞாலமதில்
புண்ணியம் எலாம் தெரிந்த புன்னைவன நாதா
எண்ணி அனந்தல் ஆடேல்
* அனந்தல் தூக்கம்

#32
** கடிவது மற இரணியன் கதை
இரணியனும் ஆங்காரத்து எண்ணாது உரைத்து
நரஹரியால் இற்றான் முன் நாளில் சுரதருவைப்
போலே கொடுக்கின்ற புன்னைவன நாதா
மாலே கடிவது மற
* நரஹரி – நரசிங்கம்
* சுரதரு – கற்பகம்

#33
** காப்பது விரதம் சிலாதன் கதை
துய்ய சிலாதன் செய் துங்க விரதங்கள் எலாம்
செய்ய நந்தியாகச் சிறப்புற்றான் பொய் அலவே
தேன் கால் சொல் புன்னைவன தீரனே ஐம்புலனைத்
தான் காப்பது விரதம்

#34
** கிழமை படவாழ் தொண்டைமண்டலத்தார் கதை
தண் தமிழ்க்காக் கம்பருக்குத் தாம் அடிமை என்று தொண்டை
மண்டலத்தார் ஏட்டில் வரைந்தது போல் எண் திசைக்கும்
பொன்னான புன்னைவன பூபாலா தென் பாகை
மன்னா கிழமைபட வாழ்
* கிழமை உரிமை

#35
** கீழ்மை அகற்று
பெண்கேட்ட வேந்தனுக்குப் பெண் நாயைப் பந்தரிலே
கண் காண நின் குலத்தார் கட்டிவைத்த பண்பது பார்
நன் பாகை புன்னைவன நாதனே அப்படிப் போல்
துன்பான கீழ்மை அகற்று

#36
** குணமது கைவிடல்
நீர் கலந்த பாலை அன்னம் நீர் பிரித்துக் கொள்வது போல்
சீர் கலந்தார் நற்குணமே தேர்ந்து கொள்வார் ஏர் கொள்
புகழாளா புன்னைவன பூபாலனே மிக்
க குணமது கைவிடேல்

#37
** கூடிப் பிரியேல் அருச்சுனன் கதை
அர்ச்சுனன் மால் சார்பு இழந்த அன்றே கருதலர்த் துன்
கைச் சிலை வெற்பாக் கனத்துக் கை தளர்ந்தான் நிச்சயமே
மன்றல் சூழ் புன்னைவன நாதா தக்கோரை
என்றும் கூடிப் பிரியேல்

#38
** கெடுப்பது ஒழி இராமன் கதை
வாலி கெட ராமன் ஒரு வாளி தொட்ட வெம் பழிக்கா
மேல் ஒரு சன்மத்தில் அன்னோன் மீண்டு கொன்றான் ஞாலமதில்
வல்லவனே புன்னைவன நாதா யாரெனினும்
ஒல்லை கெடுப்பது ஒழி

#39
** கேள்வி முயல் பகவத்கீதை மான்மியம்
முன் பகவற்கீதை முனி உரைக்கக் கன்னிமரம்
தன்படியே கேட்டு உலகில் தார்வேந்தா அன்புறல் போல்
மாதவனே புன்னைவன நாதா நன்மையுற
மூதறிவோர்க் கேள்வி முயல்

#40
** கைவினை கரவேல் இந்திரன் கதை
இந்திரன் வாள் வைக்க எடுத்து முன்னே மா தவத்தோர்
தம் தருமம் விட்டுத் தவம் அழிந்தார் சந்ததமும்
பாகையில் வாழ் புன்னைவன பார்த்திபா ஆகையினா
லே கைவினை கரவேல்

#41
** கொள்ளை விரும்பேல் துரியோதனன் கதை
கொட்டமிட்டே உத்தரத்தில் கோக் கொள்ளையாட வந்து
துட்டன் அரவக்_கொடியோன் தோற்று இடுக்கண்பட்டதனால்
நீதிபரா புன்னைவன நேயனே ஏதெனினும்
பேதைமையாக் கொள்ளை விரும்பேல்

#42
** கோதாட்டொழி செம்பியன் கதை
நம்பனுக்கு ஆம் செவ்வந்தி நல் மலர் வேசிக்கு அளித்த
செம்பியனும் மண்மழையால் சீர் அழிந்தான் அம் புவியில்
எவ்வாறும் புன்னைவனத்து ஏந்தலே நீ நீதிக்கு
ஒவ்வாத கோதாட்டு ஒழி
* கோதாட்டு குற்றமான செய்கை

#43
** சக்கரநெறி நில் தண்டன் கதை
மண்டலத்தில் செங்கோல் வழியில் செலுத்தாமல்
தண்டகன் என்னும் ஒருவன் தான் மடியக் கண்டதனால்
வேள் புரையும் புன்னைவன வித்தகா எந்நாளும்
நீள் சக்கர நெறி நில்
* வேள் மன்மதன்

#44
** சான்றோர் இனத்திரு அகத்தியர் கதை
ஈசன் உமை மணத்திலே வட திக்கு ஆழ்ந்தது எனக்
காசினி சீராகக் கலசமுனி வாசமதால்
செய்தது பார் புன்னைவன தீரனே அப்படிச் சீர்
எய்திடச் சான்றோர் இனத்து இரு
* கலசமுனி அகஸ்தியர்

#45
** சித்திரம் பேசேல் சூர்ப்பநகி கதை
சீதை பண்பு இராவணற்குச் செப்பிக் குலம் கெடுத்த
பாதகி மூக்கு அன்று இழந்த பங்கம் பார் ஆதலினால்
தாரணிக்குள் புன்னைவனத் தாடாளா தன்னை எண்ணாச்
சேரலர்க்குச் சித்திரம் பேசேல்

#46
** சீர்மை மறவேல் கங்கைகோத்திரன் கதை
உற்ற தொடைப்புண்ணுக்கு உடை கீறிக் கட்டி நின்றான்
கொற்றவன் முன் உன் கங்கை_கோத்திரத்தான் வெற்றி புனை
மன்னான புன்னைவன வள்ளலே ஆதலினால்
எந்நாளும் சீர்மை மறவேல்

#47
** சுளிக்கச் சொல்லேல் சகுனி கதை
சகுனி துரியோதனற்குச் சற்பனையாக் கேடு
மிக உரைத்துத் தன் உயிரும் ஈந்த தகை பார்
மனுநெறி தேர் புன்னைவன நாதா யாவர்
எனினும் சுளிக்கச் சொல்லேல்

#48
** சூது விரும்பேல் பாண்டவர் கதை
தோராத நூற்றுவரும் தோற்ற பஞ்சபாண்டவரும்
பாரே அகன்று பட்ட பாரதம் பார் பேராண்மை
வற்றாத புன்னைவன மா கடலே மிக்க செல்வம்
பெற்றாலும் சூது விரும்பேல்

#49
** செய்வினை திருந்தச் செய் தக்கன் கதை
வேள்விக்கு மூவருமே வேண்டும் என்று எண்ணாமல்
தாழ்வு செய்து தக்கன் தலை இழந்தான் ஏழுலகும்
வீசு புகழ்ப் புன்னைவன வித்தகா செய்கை அறிந்
தே செய் வினை திருந்தச் செய்

#50
** சேர்விடம் அறிந்து சேர் மார்க்கண்டன் கதை
இருமைக்கும் மெய்த் துணை ஆம் என்று மார்க்கண்டன்
அரன் அடியைச் சேர்ந்தான் அவன் போல் அருள் பெருகும்
பூசாபலா பாகை புன்னைவனமே மனம் ஒத்
தே சேர்விடம் அறிந்து சேர்
* பூசாபலம் தேவபூசையின் பலன்

#51
** சையெனத் திரியேல் மாரீசன் கதை
தூய ரகுராமன்-பால் சோரம் உனி மாரீசன்
மாயமானாய்த் திரிந்து மாய்ந்தது பார் ஞாயம் அன்று
வீசு புகழ் புன்னைவன மேகமே இத் தலத்தி
லே சையெனத் திரியேல்
* சையென சீ என்று அருவருக்கும்படி

#52
** சொற்சோர்வு படேல் கும்பகர்ணன் கதை
நித்தியத்தைக் கேட்கப் போய் நித்திரை என்றே குளறிப்
புத்தி அற்ற கும்பகர்ணன் பொன்றினன் பார் மத்த மத
குன்றம் போல் புன்னைவனக் கொற்றவா பாகை மன்னா
என்றும் சொல் சோர்வுபடேல்

#53
** சோம்பித் திரியேல் நளன் கதை
நளன் இருதுபன்னன் தேர் நாள் ஒன்றில் வீமன்
வள நகரில் சேர்த்து மனையாள் உளம் மகிழ
நின்றது பார் புன்னைவன நேயனே தன் முயற்சி
என்றும் சோம்பித் திரியேல்

#54
** தக்கோனெனத் திரி திருஞானசம்பந