பாயிரம், நன்னூல்


@0 சிறப்புப்பாயிரம்

#0
மலர் தலை உலகின் மல்கு இருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியின் ஒருதான் ஆகி முதல் ஈறு
ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த
அற்புத மூர்த்தி-தன் அலர்தரு தன்மையின்
மன இருள் இரிய மாண் பொருள் முழுவதும்
முனிவு_அற அருளிய மூ_அறு மொழியுளும்
குண_கடல் குமரி குடகம் வேங்கடம்
எனும் நான்கு எல்லையின் இரும் தமிழ்க் கடலுள்
அரும் பொருள் ஐந்தையும் யாவரும் உணரத்
தொகை வகை விரியின் தருக எனத் துன்னார்
இகல்_அற நூறி இரு நிலம் முழுவதும்
தனது எனக் கோலித் தன் மத வாரணம்
திசை-தொறும் நிறுவிய திறல் உறு தொல் சீர்க்
கரும் கழல் வெண்குடைக் கார் நிகர் வண் கைத்
திருந்திய செங்கோல் சீய கங்கன்
அரும் கலை வினோதன் அமர் ஆபரணன்
மொழிந்தனன் ஆக முன்னோர் நூலின்
வழியே நன்னூல் பெயரின் வகுத்தனன்
பொன் மதில் சனகைச் சன்மதி முனி அருள்
பன்ன_அரும் சிறப்பின் பவணந்தி
என்னும் நாமத்து இரும் தவத்தோனே
** பொதுப் பாயிரம் (1-55)

@1 பொதுப் பாயிரம் (1-3)

#1
முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்

#2
பாயிரம் பொதுச் சிறப்பு என இரு பாற்றே

#3
நூலே நுவல்வோன் நுவலும் திறனே
கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்
எல்லா நூற்கும் இவை பொதுப்பாயிரம்
** நூலினது வரலாறு (4-25)

#4
நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்
நால் பொருள் பயத்தோடு எழு மதம் தழுவி
ஐ_இரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு
எண்_நான்கு உத்தியின் ஓத்துப் படலம்
என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே

#5
முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும்

#6
அவற்றுள்,
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்_நூல் ஆகும்

#7
முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
அழியா மரபினது வழி_நூல் ஆகும்

#8
இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபு வேறு உடையது புடை_நூல் ஆகும்

#9
முன்னோர் மொழி_பொருளே அன்றி அவர் மொழியும்
பொன்னே போல் போற்றுவம் என்பதற்கும் முன்னோரின்
வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும்
கூறு பழம் சூத்திரத்தின் கோள்

#10
அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே

#11
எழு வகை மதமே உடன்படல் மறுத்தல்
பிறர்-தம் மதம் மேல் கொண்டு களைவே
தாஅன் நாட்டித் தனாது நிறுப்பே
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
பிறர் நூல் குற்றம் காட்டல் ஏனைப்
பிறிதொடு படாஅன் தன் மதம் கொளலே

#12
குன்றக்கூறல் மிகைபடக்கூறல்
கூறியதுகூறல் மாறுகொளக்கூறல்
வழூஉச்சொல் புணர்த்தல் மயங்கவைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை
என்று இவை ஈர்_ஐம் குற்றம் நூற்கே

#13
சுருங்கச்சொல்லல் விளங்கவைத்தல்
நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல்
ஓசை உடைமை ஆழமுடைத்து ஆதல்
முறையின் வைப்பே உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது
ஆகுதல் நூலிற்கு அழகு எனும் பத்தே

#14
நுதலிப் புகுதல் ஓத்து முறைவைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டல் முடிவிடம் கூறல்
தான் எடுத்து மொழிதல் பிறன் கோள் கூறல்
சொல் பொருள் விரித்தல் தொடர்ச் சொல் புணர்த்தல்
இரட்டுறமொழிதல் ஏதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தல் மாடு எறிந்து ஒழுகல்
இறந்தது விலக்கல் எதிரது போற்றல்
முன் மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல்
உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்
ஒருதலை துணிதல் எடுத்துக் காட்டல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்னது அல்லது இது என மொழிதல்
எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல்
பிற நூல் முடிந்தது தான் உடன்படுதல்
தன் குறி வழக்கம் மிக எடுத்து உரைத்தல்
சொல்லின் முடிவின் அப் பொருள் முடித்தல்
ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல்
உய்த்து உணர வைப்பு என உத்தி எண்_நான்கே

#15
நூல் பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
ஏற்புழி அறிந்து இதற்கு இவ் வகை ஆம் எனத்
தகும் வகை செலுத்துதல் தந்திர உத்தி

#16
நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
ஓத்து என மொழிப உயர் மொழிப் புலவர்

#17
ஒரு நெறி இன்றி விரவிய பொருளால்
பொதுமொழி தொடரின் அது படலம் ஆகும்

#18
சில் வகை எழுத்தில் பல் வகைப் பொருளைச்
செவ்வன் ஆடியின் செறித்து இனிது விளக்கித்
திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்

#19
ஆற்றொழுக்கு அரிமாநோக்கம் தவளைப்பாய்த்து
பருந்தின்வீழ்வு அன்ன சூத்திர நிலை

#20
பிண்டம் தொகை வகை குறியே செய்கை
கொண்டு இயல் புறனடைக் கூற்றன சூத்திரம்

#21
பாடம் கருத்தே சொல் வகை சொல் பொருள்
தொகுத்துரை உதாரணம் வினா விடை விசேடம்
விரிவு அதிகாரம் துணிவு பயனோடு
ஆசிரிய வசனம் என்று ஈர்_ஏழ் உரையே

#22
கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினா விடை ஆக்கலானும்
சூத்திரத்து உள் பொருள் தோற்றுவ காண்டிகை

#23
சூத்திரத்து உள் பொருள் அன்றியும் ஆண்டைக்கு
இன்றியமையா யாவையும் விளங்கத்
தன் உரையானும் பிற நூலானும்
ஐயம் அகல ஐம் காண்டிகை உறுப்பொடு
மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி

#24
பஞ்சி தன் சொல்லாப் பனுவல் இழை ஆகச்
செம் சொல் புலவனே சேய்_இழையா எஞ்சாத
கையே வாய் ஆகக் கதிரே மதி ஆக
மை இலா நூல் முடியும் ஆறு

#25
உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை
புரத்தின் வளம் முருக்கிப் பொல்லா மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்கும் நூல் அஃதே போல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு
** 12 ஆசிரியனது வரலாறு (26-35)

#26
குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர் குணம் இனையவும்
அமைபவன் நூல் உரை ஆசிரியன்னே

#27
தெரிவு_அரும் பெருமையும் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி அளவின் பயத்தலும்
மருவிய நல் நில மாண்பு ஆகுமே

#28
அளக்கல்_ஆகா அளவும் பொருளும்
துளக்கல்_ஆகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளம் தரும் வண்மையும் மலைக்கே

#29
ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
மெய் நடுநிலையும் மிகும் நிறைகோற்கே

#30
மங்கலம் ஆகி இன்றியமையாது
யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகம் மலர்வு உடையது பூவே

#31
மொழி குணம் இன்மையும் இழி_குண இயல்பும்
அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும்
கழல் குடம் மடல் பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங்கு ஒப்பு என முரண்கொள் சிந்தையும்
உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதலே

#32
பெய்த முறை அன்றிப் பிறழ உடன் தரும்
செய்தி கழல் பெய் குடத்தின் சீரே

#33
தானே தரக் கொளின் அன்றித் தன்-பால்
மேவிக் கொளப்படா இடத்தது மடல் பனை

#34
அரிதின் பெயக் கொண்டு அப் பொருள் தான் பிறர்க்கு
எளிது ஈவு இல்லது பருத்திக் குண்டிகை

#35
பல் வகை உதவி வழிபடு பண்பின்
அல்லோர்க்கு அளிக்கும் அது முடத்தெங்கே
** 13 பாடஞ் சொல்லலினது வரலாறு (36-37)

#36
ஈதல் இயல்பே இயம்பும் காலை
காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து
கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளம் கொளக்
கோட்டம்_இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப

#37
தன் மகன் ஆசான் மகனே மன் மகன்
பொருள் நனி கொடுப்போன் வழிபடுவோனே
உரை கோளாளற்கு உரைப்பது நூலே
** 14 மாணாக்கனது வரலாறு (38-39)

#38
அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலை இடை கடை மாணாக்கர்

#39
களி மடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொல்_நூற்கு_அஞ்சித்
தடுமாறு_உளத்தன் தறுகணன் பாவி
படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே
** 15 பாடங் கேட்டலின் வரலாறு (40-46)

#40
கோடல் மரபே கூறும் காலை
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
குணத்தொடு பழகி அவன் குறிப்பில் சார்ந்து
இரு என இருந்து சொல் எனச் சொல்லிப்
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்
சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச்
செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆகக்
கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்துப்
போ எனப் போதல் என்மனார் புலவர்

#41
நூல் பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்
அ மாண்பு_உடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை
கடனாக் கொளினே மடம் நனி இகக்கும்

#42
ஒரு குறி கேட்போன் இரு கால் கேட்பின்
பெருக நூலில் பிழைபாடு இலனே

#43
முக்கால் கேட்பின் முறை அறிந்து உரைக்கும்

#44
ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்
கால் கூறு அல்லது பற்றலன் ஆகும்

#45
அவ் வினையாளரொடு பயில் வகை ஒரு கால்
செவ்விதின் உரைப்ப அவ் இரு காலும்
மை_அறு புலமை மாண்பு உடைத்து ஆகும்

#46
அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி
நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு
எத் திறத்து ஆசான் உவக்கும் அத் திறம்
அறத்தின் திரியாப் படர்ச்சி வழிபாடே
** 16 சிறப்புப்பாயிர இலக்கணம் (47-55)

#47
ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூல் பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோடு ஆய் எண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே

#48
காலம் களனே காரணம் என்று இ
மூ வகை ஏற்றி மொழிநரும் உளரே

#49
முதல்_நூல் கருத்தன் அளவு மிகுதி
பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும்
இடுகுறியானும் நூற்கு எய்தும் பெயரே

#50
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு
எனத் தகும் நூல் யாப்பு ஈர்_இரண்டு என்ப

#51
தன் ஆசிரியன் தன்னொடு கற்றோன்
தன் மாணாக்கன் தகும் உரைகாரன் என்று
இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே

#52
தோன்றாத் தோற்றித் துறை பல முடிப்பினும்
தான் தற்புகழ்தல் தகுதி அன்றே

#53
மன் உடை மன்றத்து ஓலைத் தூக்கினும்
தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும் புலவோற்கே

#54
ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே

#55
மாடக்குச் சித்திரமும் மா நகர்க்குக் கோபுரமும்
ஆடு அமைத் தோள் நல்லார்க்கு அணியும் போல் நாடி முன்
ஐது உரையாநின்ற அணிந்துரையை எ நூற்கும்
பெய்து உரையா வைத்தார் பெரிது
*