மூவருலா

** கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா

@1 விக்கிரம சோழன் உலா

#1
சீர் தந்த தாமரையாள் கேள்வன் திரு உருக்
கார் தந்த உந்திக் கமலத்துப் பார் தந்த

#2
ஆதிக் கடவுள் திசைமுகனும் ஆங்கு அவன்றன்
காதல் குலமைந்தன் காசிபனும் மேதக்க

#3
மையறு காட்சி மரீசியும் மண்டிலம்
செய்ய தனி அழித் தேரோனும் மையல் கூர்

#4
சிந்தனை ஆவிற்கு முற்றத் திருத் தேரில்
மைந்தனை ஊர்ந்த மறவோனும் பைம் தடத்து

#5
ஆடு துறையில் அடு புலியும் புல்வாயும்
கூட நீர் ஊட்டிய கொற்றவனும் நீடிய

#6
மாக விமானம் தனி ஊர்ந்த மன்னவனும்
போகபுரி புரிந்த பூபதியும் மாகத்துக்

#7
கூற அரிய மனுக் கொணர்ந்து கூற்றுக்குத்
தேற வழக்குரைத்த செம்பியனும் மாறு அழிந்து

#8
ஓடி மறலி ஒளிப்ப முதுமக்கள்
சாடி வகுத்த தராபதியும் கூடார்-தம்

#9
தூங்கும் எயில் எறிந்த சோழனும் மேல்கடலில்
வீங்கு நீர் கீழ்கடற்கு விட்டோனும் ஆங்குப்

#10
பிலமதனில் புக்குத் தன் பேரொளியால் நாகர்
குலமகளைக் கைப்பிடித்த கோவும் உலகு அறியக்

#11
காக்கும் சிறு புறவுக்காகக் களி கூர்ந்து
தூக்கும் துலை புக்க தூயோனும் மேக்கு உயரக்

#12
கொள்ளும் குடகக் குவடு ஊடறுத்து இழியக்
தள்ளும் திரைப் பொன்னி தந்தோனும் தெள் அருவிச்

#13
சென்னிப் புலி ஏறு இருத்திக் கிரி திரித்துப்
பொன்னிக் கரை கண்ட பூபதியும் இன் அருளின்

#14
மேதக்க பொய்கை கவி கொண்டு வில்லவனைப்
பாதத் தளை விட்ட பார்த்திவனும் மீது எலாம்

#15
எண் கொண்ட தொண்ணூற்றின் மேலும் இருமூன்று
புண் கொண்ட வென்றிப் புரவலனும் கண்கொண்ட

#16
கோதிலாத் தேறல் குனிக்கும் திருமன்றம்
காதலால் பொன் வேய்ந்த காவலனும் தூதற்காப்

#17
பண்டு பகல் ஒன்றில் ஈரொன்பது சுரமும்
கொண்டு மலைநாடு கொண்டோனும் தண்டு ஏவிக்

#18
கங்காநதியும் கடாரமும் கைக்கொண்டு
சிங்காதனத்து இருந்த செம்பியனும் வங்கத்தை

#19
முற்றும் முரண் அடக்கி மும்மடி போய்க் கல்யாணி
செற்ற தனி ஆண்மைச் சேவகனும் பற்றலரை

#20
வெப்பத்து அடுகளத்து வேழங்கள் ஆயிரமும்
கொப்பத்து ஒரு களிற்றால் கொண்டோனும் அப் பழ நூல்

#21
பாடு அரவத் தென் அரங்கம் மேயாற்குப் பல் மணியால்
ஆடு அரவப் பாயல் அமைத்தோனும் கூடல

#22
சங்கமத்துக் கொள்ளும் தனிப் பரணிக்கு எண்ணிறந்த
துங்க மத யானை துணித்தோனும் அங்கு அவன் பின்

#23
காவல் புரிந்து அவனி காத்தோனும் என்று இவர்கள்
பூவலயம் முற்றும் புரந்ததன் பின் மேவலர்-தம்

#24
சேலைத் துரந்து சிலையைத் தடிந்து இரு கால்
சாலைக் களம் அறுத்த தண்டினான் மேலைக்

#25
கடல் கொண்டு கொங்கணமும் கன்னடமும் கைக்கொண்டு
அடல் கொண்ட மாராட்டு அரசை அடலை

#26
இறக்கி வட வரையே எல்லையாத் தொல்லை
மறக் கலியும் சுங்கமும் மாற்றி அறத் திகிரி

#27
வாரிப் புவனம் வலமாக வந்து அளிக்கும்
ஆரில் பொலி தோள் அபயற்குப் பார் விளங்கத்

#28
தோன்றிய கோன் விக்கிரமசோழன் தொடைத் தும்பை
மூன்று முரசு முகில் முழங்க நோன் தலைய

#29
மும்மைப் புவனம் புரக்க முடி கவித்துச்
செம்மைத் தனிக் கோல் திசை அளப்பத் தம்மை

#30
விட உட்படுத்து விழுக் கவி கை எட்டுக்
கடவுள் களிறு கவிப்பச் சுடர் சேர்

#31
இணைத் தார் மகுடம் இறக்கி அரசர்
துணைத் தாள் அபிடேகம் சூடப் பணைத்து ஏறு

#32
நீர் ஆழி ஏழும் நில ஆழி ஏழும் தன்
போர் ஆழி ஒன்றால் பொது நீக்கிச் சீர் ஆழி

#33
மேய திகிரி விரி மேகலை அல்குல்
தூய நிலமடந்தை தோள்களினும் சாயலின்

#34
ஓதும் உலகங்கள் ஏழும் தனித்து உடைய
கோது_இல் குலமங்கை கொங்கையினும் போதில்

#35
நிறைகின்ற செல்வி நெடும் கண்களினும்
உறைகின்ற நாளில் ஒரு நாள் அறை கழல் கால்

#36
தென்னர் திறையளந்த முத்தில் சில பூண்டு
தென்னர் மலை ஆரச் சேறு அணிந்து தென்னர்

#37
வரவிட்ட தென்றல் அடி வருட வாள் கண்
பொரவிட்ட பேராயம் போற்ற விரவிட்ட

#38
நித்திலப் பந்தர்க் கீழ் நீள் நிலாப் பாயலின் மேல்
தொத்து அலர் மாலைத் துணைத் தோளும் மைத் தடம்

#39
கண்ணும் முலையும் பெரிய களி அன்னம்
எண்ணும் உலகங்கள் ஏழுடைய பெண் அணங்கு

#40
பெய்த மலர் ஓதிப் பெண் சக்ரவர்த்தியுடன்
எய்திய பள்ளி இனிது எழுந்து பொய்யாத

#41
பொன்னித் திருமஞ்சனம் ஆடிப் பூசுரர் கைக்
கன்னித் தளிர் அறுகின் காப்பு அணிந்து முன்னை

#42
மறைக் கொழுந்தை வெள்ளிமலைக் கொழுந்தை மோலிப்
பிறைக் கொழுந்தை வைத்த பிரானைக் கறைக் களத்துச்

#43
செக்கர்ப் பனி விசும்பைத் தெய்வத் தனிச் சுடரை
முக்கண் கனியை முடி வணங்கி மிக்கு உயர்ந்த
** அலங்காரங்கள் செய்துகொள்ளுதல்

#44
தானத் துறை முடித்துச் சாத்தும் தகைமையன
மானக் கலன்கள் வர அருளித் தேன் மொய்த்துச்

#45
சூழும் மலர் முகத்துச் சொல்மாமகளுடனே
தாழும் மகரக் குழை தயங்க வாழும்

#46
தட முலைப் பார்மடந்தை-தன்னுடனே தோளில்
சுடர் மணிக் கேயூரம் சூழப் படரும்

#47
தணிப்பு_இல் பெரும் கீர்த்தித் தையலுடனே
மணிக் கடகம் கையில் வயங்கப் பிணிப்பின்

#48
முயங்கும் திருவுடனே முந்நீர் கொடுத்த
வயங்கு மணி மார்பின் மல்க உயங்கா

#49
அரும் கொற்றம் ஆக்கும் அணங்கினுடனே
மருங்கில் திரு உடை வாள் வாய்ப்பப் பொருந்திய

#50
அண்ணல் படிவத்து அரும் பேரணி அணிந்து
வண்ணத்து அளவு_இல் வனப்பு அமைந்து கண்_நுதலோன்

#51
காமன் சிலை வணங்க வாங்கிய கட்டழகு
தாமம் முடி வணங்கத் தந்து அனைய காமரு பூம்
** பட்டத்து யானை

#52
கோலத்தொடும் பெயர்ந்து கோயில் புறம் நின்று
காலத்து அதிரும் கடாக் களிறு ஞாலத்துத்

#53
தானே முழங்குவது அன்றித் தனக்கு எதிர்
வானே முழங்கினும் அவ் வான் தடவி வானுக்கு

#54
அணியும் மருப்பும் அடல் கையும் இன்மை
தணியும் யமராசதண்டம் தணியாப்

#55
பரிய பொரும் கோடு இணைத்துப் பணைத்தற்கு
அரியது ஒரு தானே ஆகிக் கரிய

#56
மலைக் கோடு அனைத்தும் மடித்து இடியக் குத்தும்
கொலைக் கோட்டு வெம் கால கோபம் அலைத்து ஓட

#57
ஊறும் மதம் தனதே ஆக உலகத்து
வேறு மதம் பொறா வேகத்தால் கூறு ஒன்றத்

#58
தாங்கிப் பொறை ஆற்றாத் தத்தம் பிடர்-நின்றும்
வாங்கிப் பொது நீக்கி மண் முழுதும் ஓங்கிய

#59
கொற்றப் புயம் இரண்டால் கோமான் அகளங்கன்
முற்றப் பரித்ததன் பின் முன்பு தாம் உற்ற

#60
வருத்தம் அற மறந்து மாதிரத்து வேழம்
பருத்த கடாம் திறந்து பாயப் பெருக்கத்து

#61
உவற்று மதுரச் சுவடி பிடித்து ஓடி
அவற்றின் அபரம் கண்டு ஆறி இவற்றை

#62
அளித்தனன் எம் கோமான் ஆதலால் இன்று
களித்தன என்று உவக்கும் காற்று நெளித்து இழிய

#63
வேற்றுப்புலத்தை மிதித்துக் கொதித்து அமரில்
ஏற்றுப் பொரும் மன்னர் இன் உயிரைக் கூற்றுக்கு

#64
அருத்தும் அயிராபதம் நின்றதனை
இருத்தும் பிடி படியா ஏறித் திருத் தக்க

#65
கொற்றக் கவிகை நிழற்றக் குளிர்ந்து இரட்டைக்
கற்றைக் கவரி இளங்கால் அசைப்ப ஒற்றை

#66
வலம்புரி ஊத வளைக் குலம் ஆர்ப்ப
சிலம்பும் முரசம் சிலம்ப புலம்பெயர்ந்து

#67
வாள் படை கொட்ப மற மன்னவர் நெருங்கக்
கோள் புலிக் கொற்றக் கொடி ஓங்கச் சேண் புலத்துத்
** உடன் வருவோர்

#68
தென்னரும் மாளுவரும் சிங்களரும் கொங்கணத்து
மன்னரும் தோற்க மலைநாடு முன்னம்

#69
குலையப் பொருது ஒரு நாள் கொண்ட பரணி
மலையத் தரும் தொண்டைமானும் பலர் முடி மேல்

#70
ஆர்க்கும் கழல் காலனகன்-தனது அவையுள்
பார்க்கும் மதி மந்த்ரபாலகரில் போர்க்குத்

#71
தொடுக்கும் கமழ் தும்பை தூசினொடும் சூடக்
கொடுக்கும் புகழ் முனையர்கோனும் முடுக்கரையும்

#72
கங்கரையும் மாராட்டரையும் கலிங்கரையும்
கொங்கரையும் ஏனைக் குடகரையும் தம் கோன்

#73
முனியும் பொழுது முரி புருவத்தோடு
குனியும் சிலைச் சோழகோனும் சனபதி-தன்

#74
தோளும் கவசமும் சுற்றமும் கொற்றப் போர்
வாளும் வலியும் மதி அமைச்சும் நாளுமா

#75
மஞ்சைக் கிழித்து வளரும் பொழில் புரிசைக்
கஞ்சைத் திரு மறையோன் கண்ணனும் வெம் சமத்துப்

#76
புல்லாத மன்னர் புலால் உடம்பைப் பேய் வாங்க
ஒல்லாத கூற்றம் உயிர் வாங்கப் புல் ஆர்வம்

#77
தாங்கு மட மகளிர் தத்தம் குழை வாங்க
வாங்கு வரி சிலைக் கை வாணனும் வேங்கையினும்

#78
கூடார் விழிஞத்தும் கொல்லத்தும் கொங்கத்தும்
ஓடா இரட்டத்தும் ஒட்டத்தும் நாடாது

#79
அடியெடுத்து வெவ்வேறு அரசு இரிய வீரக்
கொடி எடுத்த காலிங்கர்கோனும் கடி அரணச்

#80
செம்பொன் பதணம் செறி இஞ்சிச் செஞ்சியர்கோன்
கம்பக் களி யானைக் காடவனும் வெம்பிக்

#81
கலக்கிய வஞ்சக் கலி-அதனைப் பாரில்
விலக்கிய வேணாடர் வேந்தும் தலைத் தருமம்

#82
வாரிக் குமரி முதல் மந்தாகினி அளவும்
பாரித்தவன் அனந்தபாலனும் பேர் அமரில்

#83
முட்டிப் பொருதார் வட மண்ணை மும்மதிலும்
மட்டித்த மால் யானை வத்தவனும் அட்டை எழக்

#84
காதிக் கருநாடர் கட்டு அரணம் கட்டு அழித்த
சேதித் திரு நாடர் சேவகனும் பூதலத்து

#85
முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய் கழல்
கட்டியகாரனை காவலனும் ஒட்டிய

#86
மான அரசர் இரிய வட கலிங்கத்
தானை துணித்த அதிகனும் மீனவர்-தம்

#87
கோட்டாறும் கொல்லமும் கொண்ட குடை நுளம்பன்
வாட்டார் மத யானை வல்லவனும் மோட்டு அரணக்

#88
கொங்கை குலைத்துக் குடகக் குவடு இடித்த
செம் கைக் களிற்றுத் திகத்தனும் அங்கத்து

#89
வல்லவனும் கோசலனும் மாளுவனும் மாகதனும்
வில்லவனும் கேரளனும் மீனவனும் பல்லவனும்

#90
என்னும் பெரும் போர் இகல் வேந்தர் மண்டலிகர்
முன்னும் இரு மருங்கும் மொய்த்து ஈண்டப் பல் மணி சேர்
** குழாங்கள்

#91
சோதி வயிர மடக்கும் சுடர்த் தொடியார்
வீதி குறுகுதலும் மேல் ஒரு நாள் மா தவத்தோன்

#92
சார்ந்த பொழுது அனகன்-தன்னை அறிவித்த
பூம் துவரை அந்தப்புரம் போன்றும் ஏந்திப்

#93
பரக்கும் கலை அல்குல் பாவையரே ஆணை
புரக்கும் திரு நாடு போன்றும் வரக் கருதா

#94
ஏனை முனிக் குறும்பு கொல்ல இகல் மாரன்
சேனை திரண்ட திரள் போன்றும் கானல் அம்

#95
கண்டல் மணல் குன்றத்து அன்னக் கணம் போன்றும்
கொண்டலின் மின்னுக் குழாம் போன்றும் மண்டும்

#96
திரை-தொறும் தோன்றும் திருக் குழாம் போன்றும்
வரை-தொறும் சேர் மயில்கள் போன்றும் விரைவினராய்

#97
இந்து நுதல் வெயர்ப்ப எங்கணும் கண் பரப்பிச்
சிந்தை பரப்பித் தெரு எங்கும் வந்து ஈண்டி

#98
உத்தி சுடர ஒளி மணிச் சூட்டு எறிப்பப்
பத்தி வயிரம் பரந்து எறிப்ப முத்தின்

#99
இணங்கும் அமுத கலசங்கள் ஏந்தி
வணங்கு தலையினராய் வந்து கணம்கொண்டு

#100
பார்க்கும் கொடும் நோக்கு நஞ்சு உறைப்பக் கிஞ்சுக வாய்
கூர்க்கும் எயிறு வெறும் கோள் இழைப்ப வேர்க்க

#101
வரை கொள் நெடு மாடக் கீழ் நிலையின் மல்கி
உரக அரமகளிர் ஒப்பார் விரல் கவரும்

#102
வீணையும் யாழும் குழலும் விசி முழவும்
பாணி பெயர்ப்பப் பதம் பெயர்த்துச் சேண் உயர்

#103
மஞ்சு இவரும் வெண் பளிக்கு மாடத்து இடைநிலையில்
விஞ்சையர் மாதர் என மிடைவார் அஞ்சன வேல்

#104
கண்ணில் சிறிதும் இமையாத காட்சியும்
மண்ணில் பொருந்தா மலர் அடியும் தண் என்ற

#105
வாடா நறும் செவ்வி மாலையும் கொண்டு அழகு
வீடா நிலாமுற்ற மேல்நிலையில் கூடி

#106
உருவின் ஒளியின் உணர்வின் உரையின்
பொருவு_இல் அரமகளிர் போல்வார் அருகு அணைந்து
** குழாங்களின் கூற்று

#107
சீர் அளவில்லாத் திருத் தோள் அயன் படைத்த
பார் அளவு அல்ல பணைப்பு என்பார் பாரு-மின்

#108
செய்ய ஒரு திருவே ஆளும் சிறுமைத்தோ
வையம் உடைய பிரான் மார்பு என்பார் கை இரண்டே

#109
ஆன போது அந்த முருகவேள் அல்லன் இவன்
வேனில்வேள் கண்டீர் என மெலிவார் யான் எண்ணும்

#110
எண்ணுக்கு இசைய வருமே இவன் என்பார்
கண்ணில் கருணைக் கடல் என்பார் மண் அளிக்கும்

#111
ஆதி மனு குலம் இவ் அண்ணலால் மேம்படுகை
பாதியே அன்றால் எனப் பகர்வார் தாது அடுத்த

#112
கொங்கை பசப்பார் கோல் வளை காப்பார் போல்
செம் கை குவிப்பார் சிலர் செறிய அங்கு ஒருத்தி
** பேதை

#113
வந்து பிறந்து வளரும் இளம் திங்கள்
கொந்து முகிழாக் கொழும் கொழுந்து பைம் தழைத்

#114
தோகை தொடா மஞ்ஞை சூடுண்டு தோற்றவன் மேல்
வாகை புனைய வளர் கரும்பு கோகுலத்தின்

#115
பிள்ளை இள அன்னப் பேடை பிறந்து அணிய
கிள்ளை பவளம் கிளைத்த கிளை கள்ளம்

#116
தெரியாப் பெரும் கண் சிறு தேறல் தாயர்ப்
பிரியாப் பருவத்துப் பேதை பரிவோடு

#117
பாவையும் மானும் மயிலும் பசும் கிளியும்
பூவையும் அன்னமும் பின் போதக் காவலன்

#118
பொன்னிப் புகார் முத்தின் அம்மனையும் தென் நாகை
நல் நித்திலத்தின் நகைக் கழங்கும் சென்னி-தன்

#119
கொற்கைக் குளிர் முத்த வல்சியும் சோறு அடுகை
கற்கைக்கு வேண்டுவன கைப்பற்றிப் பொன் கொடியார்

#120
வீதி புகுந்து விளையாடும் எல்லைக்-கண்
ஆதி யுகம் வந்து அடிக்கொள்ள மேதினி மேல்

#121
ஊன்று கலி கடிந்த உத்துங்க துங்கன்-தன்
மூன்று முரசம் முகில் முழங்க வான் துணைத்

#122
தாயர் வர வந்து தாயர் தொழத் தொழுது
தாயர் மொழிந்தனவே தான் மொழிந்தாள் சேயோன்

#123
படி_இல் மதியும் பகலவனும் தோற்கும்
முடியில் ஒருகாலும் மூளா வடிவில்

#124
மகிழ்ந்து மலராள் மலர்க் கண்ணும் நெஞ்சும்
நெகிழ்ந்த திரு நோக்கில் நேரா முகிழ்ந்து

#125
சிரிக்குந் திருப் பவளச் சே ஒளி ஊடாடா
விரிக்கும் திரு நிலவின் வீழா பரிக்கும்

#126
உலகம் பரவும் திருப் புருவத்து ஓரா
திலக முகாம்புயத்துச் சேரா பலவும்

#127
திசையை நெருக்கும் திருத் தோளில் செல்லா
இசையும் திரு மார்பத்து எய்தா வசை இலாக்

#128
கை மலரில் போகா அடி மலரில் கண்ணுறா
மெய் மலர்ப் பேரொளியின் மீது உறா அ மகள்

#129
கண்ணும் மனமும் கழுநீர்க் குலம் முழுதும்
நண்ணும் தொடையல் மேல் நாள்செய்ய உள் நெகிழா

#130
வம்-மின்கள் அன்னைமீர் மாலை இது வாங்கித்
தம்-மின்கள் என்று உரைப்பத் தாயரும் அம்மே

#131
பெருமானை அஞ்சாதே பெண் அமுதே யாமே
திரு மாலை தா என்று செல்வேம் திரு மாலை

#132
யாம் கொள்ளும் வண்ணம் எளிதோ அரிது என்னத்
தேம் கொள்ளும் இன் சொல் சிறியாளும் ஆங்குத் தன்

#133
மார்வத்துக் கண்ணின் நீர் வாரப் பிறர் கொள்ளும்
ஆர்வத்துக்கு அன்றே அடியிட்டாள் சேர

#134
இருத்தி மணற்சோறு இளையோரை ஊட்டும்
அருத்தி அறவே அயர்த்தாள் ஒருத்தி
** பெதும்பை

#135
மழலை தனது கிளிக்கு அளித்து வாய்த்த
குழலின் இசைக் கவர்ந்துகொண்டாள் நிழல் விரவு

#136
முன்னர் நகை தனது முல்லை கொள முத்தின்
பின்னர் நகை கொண்ட பெற்றியாள் கன்னி

#137
மட நோக்கம் தான் வளர்த்த மானுக்கு அளித்து
விட நோக்கம் வேல் இரண்டில் கொண்டாள் சுடர் நோக்கும்

#138
தானுடைய மெய் நுடக்கம் தன் மாதவிக்கு அளித்து
வானுடைய மின் நுடக்கம் வாங்கினாள் பூ நறும்

#139
பாவைகள் பைம் குரவு ஏந்தப் பசும் கிளியும்
பூவையும் ஏந்தும் பொலிவினாள் மேவும்

#140
மட நடை அன்னப் பெடை பெறக் கன்னிப்
பிடி நடை பெற்றுப் பெயர்வாள் சுடர் கனகக்

#141
கொத்துக் குயின்ற கொடிப் பவளப் பந்தத்தின்
முத்துப் பொதி உச்சி முச்சியாள் எத்திறத்தும்

#142
வீரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர் மேல்
மாரவேள் கண் சிவப்ப வாய் சிவப்பாள் நேர் ஒத்த

#143
கோங்க முகை அனைய கொங்கையாள் தன் கழுத்தால்
பூம் கமுகை இப்போது பொற்பு அழிப்பாள் பாங்கியரும்
** கனாக் கூறுதல்

#144
தாயரும் போற்றாமே தானே துயில் எழுந்து
பாயல் புடைபெயர்ந்து பையச் சென்று யாயே

#145
தளரும் இடை ஒதுங்கத் தாழும் குழைத்தாய்
வளரும் ஒரு குமரி வல்லி கிளரும்

#146
கொழுந்தும் அளவிறந்த கொந்தும் கவினி
எழுந்து கிளை கலிப்ப ஏறித் தொழும் தகைய

#147
கொங்கு உடைய பொன் அடரும் சென்னிக் கொழும் கோங்கின்
பங்கு உடைய மூரிப் பணை அணைந்து தங்கு உடைய

#148
வண்டு முரல மணம் நாற வைகுவது
கண்டு மகிழ்ந்தேன் கனவில் எனக் கொண்டு

#149
வருக வருக மடக் கிள்ளை முத்தம்
தருக தருக எனத் தாயர் பெருக

#150
விரும்பினர் புல்லி விரைய முலை வந்து
அரும்பின ஆகத்து அணங்கே பெரும் புயங்கள்

#151
புல்லி விடாத புது வதுவை சென்னியுடன்
வல்லி பெறுதி என வழுத்தும் எல்லை

#152
அரசன் அபயன் அகளங்கன் எம் கோன்
புரசை மத வரை மேல் போத முரசம்

#153
தழங்கும் மறுகில் தமரோடும் ஓடி
முழங்கும் முகில் மாட முன்றில் கொழும் கயல் கண்

#154
பொன் என எல்லா அழகும் புனைவது ஒரு
மின் என வந்து வெளிப்பட்டு மன்னர் உயிர்

#155
உண்டு ஆற்றிய வேங்கை வைக்க ஒரு திருக்கைச்
செண்டால் கிரி திரித்த சேவகனைத் தண்டாத

#156
வேகம் கெடக் கலி வாய் வீழ்ந்து அரற்றும் பார்மகளைச்
சோகம் கெடுத்து அணைத்த தோளானை ஆகத்துக்

#157
கொங்கை பிரியாத வீறோடும் கோகனக
மங்கை பிரியாத மார்பானை அம் கமலக்

#158
கையும் மலர் அடியும் கண்ணும் கனி வாயும்
செய்ய கரிய திருமாலைத் தையலும்

#159
கண்ட கண் வாங்காள் தொழ முகிழ்ந்த கை விடாள்
மண்டு மனம் மீட்கும் மாறு அறியாள் பண்டு அறியாக்

#160
காமம் கலக்கக் கலங்கிக் குழல் சரியத்
தாமம் சரியத் தனி நின்றாள் நாம வேல்

#161
சேரனும் மீனவனும் சேவிப்பச் செம்பியரில்
வீரனும் அவ் எல்லை விட்டு அகன்றான் மாரனும்

#162
தக்குத் தகாதாளை எய்து தரைப்படுத்தப்
புக்குத் தொடை மடக்கிப் போயினான் மைக் குழல்
** மங்கை

#163
மங்கைப் பருவத்து ஒருத்தி மலர் பொதுளும்
கங்கைப் புளினக் களி அன்னம் எம் கோனை

#164
மன்னனை மன்னர்பிரானை வரோதயனை
தென்னனை வானவனைச் செம்பியனை முன் ஒரு நாள்

#165
கண்ட பெதும்பைப் பருவத்தே தன் கருத்தால்
கொண்ட பரிவு கடைக்கூட்ட புண்டரிகச்

#166
செய்ய அடி முதலாச் செம்பொன் முடி அளவும்
மையல் அகல மனத்து இழைத்துக் கையினால்

#167
தீட்டும் கிழியில் பகல் கண்டு இரவு எல்லாம்
காட்டும் கனவு தரக் கண்டு நாட்டம் கொண்டு

#168
யாதொன்றும் காணாதிருப்பாள் பொரு களிற்றுத்
தாது ஒன்றும் தொங்கல் சயதுங்கன் வீதி

#169
வருகின்றான் என்று மணி அணிகள் யாவும்
தருக என்றாள் வாங்கித் தரித்தாள் விரி கோதை

#170
சூடினாள் பைம்பொன் துகில் உடுத்தாள் சந்தனச் சேறு
ஆடினாள் தன் பேரணி அணிந்தாள் சேடியர்
** மங்கை தன்னையே ஐயுறுதல்

#171
காட்டும் படிமக்கலத்தில் கமலத்தை
ஓட்டும் வதனத்து ஒளி மலர்ந்து கேட்டு

#172
விடை போம் அனங்கன் போல் வேல் விழிகள் தாமும்
படை போய் வருவன போல் பக்கம் கடை போய்

#173
மறித்து மதர்மதர்த்து வார் கடிப்பு வீக்கி
எறிக்கும் குழைக் காதிற்கு ஏற்றும் நெறிக்கும்

#174
அளக முதலாக ஐம் பால் படுத்த
வளர் கரும் கூந்தல் மலிந்தும் கிளர

#175
அரியன நித்திலத்தின் அம் பொன் தொடித் தோள்
பரியன காம்பில் பணைத்தும் தெரியல்

#176
சுவடு படு களபத் தொய்யில் சூழ் கொங்கை
குவடு பட எழுச்சிகொண்டும் திவடர

#177
முந்தும் கலை அல்குல் மூரித் தடம் அகன்றும்
நொந்து மருங்குல் நுடங்கியும் வந்து

#178
மிடையும் புது வனப்பு விண்ணோரும் வீழ
அடையும் தனது உருக் கண்டு அஞ்சிக் கொடை அனகன்

#179
பண்டு அறியும் முன்னைப் பருவத்து உருவத்துக்
கண்டு அறியும் அவ் வடிவு காண்கிலேன் பண்டு அறியும்

#180
முன்னை வடிவும் இழந்தேன் முகம் நோக்கி
என்னை அறிகலன் யான் என் செய்கேன் தன்னை

#181
வணங்கி வருவது அறிவன் என வந்து
இணங்கும் மகளிரிடை நின்று அணங்கும்

#182
இறைவன் அகளங்கன் எம் கோன் குமரித்
துறைவன் நிருப குல துங்கன் முறைமையால்

#183
காக்கும் கடல் கடைந்த கை மலரும் உந்தி மலர்
பூக்கும் உலகு அளந்த பொன் கழலும் நோக்கும்

#184
திருக் கொள்ளும் மார்பமும் தெவ் வேந்தர் எல்லாம்
வெருக்கொள்ளும் மூரித் தோள் வெற்பும் உருக்கும்

#185
மகரக் குழைக் காதும் மாதரார் மாமை
நுகரப் புடைபெயரும் நோக்கும் துகிர் ஒளியை

#186
வௌவிய கோல மணி வாயும் எப்பொழுதும்
செவ்வி அழியாத் திரு முகமும் எவ்வுருவும்

#187
மாறுபடா வண்ணமும் தன் வண்ணப் படிவத்து
வேறுபடு வனப்பும் மெய் விரும்பித் தேறிப்

#188
பிறையாம் பருவத்துப் பேருவகை ஆம்பல்
நிறையா மதிக்கு நெகிழ்ந்தாங்கு இறைவனைக்

#189
கண்டு மனமும் உயிரும் களிப்பு அளவு_இல்
கொண்டு பெயர்ந்தது கொல் யானை பண்டு

#190
நனவு கிழியில் பகல் கண்டு நல்ல
கனவு தர இரவில் கண்டு மனம் மகிழ்வாள்

#191
தீட்ட முடியாத செவ்வி குறிக்கொள்ளும்
நாட்டம் உறங்காமையும் நல்க மீட்டுப்

#192
பெயர்ந்தாள் தமர்-தம் பெரும் தோள்களில் வீழ்ந்து
அயர்ந்தாள் அவள் நிலை ஈது அப்பால் சயம் தொலைய
** மடந்தை

#193
வெந்து வடிவு இழந்த காமன் விழிச் சிவப்பு
வந்து திரண்டு அனைய வாயினாள் அந்தம்_இல்

#194
ஓலக் கடல் ஏழும் ஒன்றாய் உலகு ஒடுக்கும்
காலக் கடை அனைய கண்கடையாள் ஞாலத்தை

#195
வீட்டி வினைமுடிக்க வெம் கால தூதுவர் போல்
கோட்டி இருக்கும் குவி முலையாள் நாட்ட

#196
வடிவின் மருங்குலாள் மாரனைப் போல் மேலோர்
முடிவு_இல் உணர்வை முடிப்பாள் கடிது ஓடிப்

#197
போகாது ஒழியாது இடை என்று போய் முடியல்
ஆகாமை கைவளரும் அல்குலாள் பாகு ஆய
** பந்தாடுதல்

#198
சொல்லி ஒரு மடந்தை தோழியைத் தோள் வருந்தப்
புல்லி நிலாமுற்றம் போய் ஏறி வல்லி நாம்

#199
சேடியர் ஒப்ப வகுத்துத் திரள் பந்து
கோடியர் கண்டு உவப்பக் கொண்டு ஆடி ஆடினால்

#200
என் மாலை நீ கொள்வது யாம் கொள்வது எம் கோமான்
தன் மாலை வாங்கித் தருக என்று மின்_அனையாள்

#201
வட்டித்து அளகமும் கொங்கையும் வார் தயங்கக்
கட்டிக் கன பந்து கைப் பற்றி ஒட்டிப்

#202
பொரு திறத்துச் சேடியர்-தம் போர் தொலையத் தானே
இரு திறத்துக் கந்துகமும் ஏந்திப் பெரிதும்

#203
அழுந்து தரளத்தவை தன்னைச் சூழ
விழுந்தும் எழுந்தும் மிடைய எழுந்து வரி

#204
சிந்த விசிறு திரையின் நுரையூடு
வந்த வனசமகள் ஏய்ப்ப முந்திய

#205
செங்காந்தள் அங்கை சிவக்கும் சிவக்கும் என்று
அங்காந்து தோள்வளைகள் ஆர்ப்பெடுப்பத் தங்கள்

#206
நுடங்கும் கொடி மருங்குல் நொந்து ஒசிந்தது என்று என்று
அடங்கும் கலாபம் அரற்றத் தொடங்கி

#207
அரிந்த குரலினவா அம் சீறடிக்குப்
பரிந்து சிலம்பு பதைப்ப விரிந்து எழும்

#208
கைக்கோ இடைக்கோ கமல மலர் அடிக்கோ
மைக் கோல ஓதியின் மேல் வண்டு இரங்க அக் கோதை

#209
பந்து ஆடி வென்று பருதி அகளங்கன்
சந்து ஆடு தோள் மாலை தா என்று பைம் துகில்

#210
தானை பிடித்து அலைக்கும் போதில் தனிக் குடைக் கீழ்
யானை மேல் வெண்சாமரை இரட்டச் சேனை

#211
மிடையப் பவளமும் நித்திலமும் மின்ன
அடையப் பணிலங்கள் ஆர்ப்ப புடைபெயர

#212
வார்ந்து மகர வய மீன் குலம் முழுதும்
போந்து மறுகு புடை பிறழச் சேர்ந்து

#213
பதலை முழங்கப் பகட்டு ஏற்றிவிட்ட
மதலை கண் முன்னர் மலிய விதலையராய்த்

#214
தாழும் தொழிலின் கிளை புரக்கத் தன் அடைந்து
வாழும் பரதர் மருங்கு ஈண்ட வீழ் உந்திக்

#215
கன்னியும் நன்மதையும் கங்கையும் சிந்துவும்
பொன்னியும் தோயும் புகார் விளங்க மன்னிய

#216
செங்கோல் தியாகசமுத்திரம் நண்ணுதலும்
தம் கோ மறுகில் தலைப்பட்டுத் தங்களில்

#217
ஒட்டிய ஒட்டம் உணராதே தோள்வளையும்
கட்டிய மேகலையும் காவாதே கிட்டித்

#218
தொழுதாள் அயர்ந்தாள் துளங்கினாள் சோர்ந்தாள்
அழுதாள் ஒரு தமியள் ஆனாள் பழுது இலாக்

#219
காக்கும் துகிலும் இலங்கு பொலன் கலையும்
போக்கும் நிதம்பம் புனைக என்று வீக்கும்

#220
மணிக் கச்சும் தம்முடைய வான் தூசும் கொங்கை
பணிக்கக் கடைக்கண் பாரா அணிக்கு அமைந்த

#221
குன்றாத நித்திலக் கோவையும் பொன் நிறத்த
பொன்றாத பட்டும் புனைக என்று நின்று

#222
கொடுத்தன கொங்கைகளும் கொண்டன தானும்
அடுத்தனர் தோள் மேல் அயர்ந்தாள் கடுத்துக்

#223
கவரும் அனங்கனுடன் கைகலந்தது அன்றித்
தவறும் முது கிளவித் தாயரவர் எங்கும்

#224
கூசினார் சந்தம் பனி நீர் குழைத்து இழைத்து
பூசினார் ஆலி பொழிந்து ஒழிந்தார் வீசினார்

#225
இட்டார் நிலவில் இளம் தென்றலும் கொணர்ந்து
சுட்டார் குளரி தொகுத்து எடுத்தார் விட்டாரோ

#226
பள்ளம்-அதனில் படரும் பெரும் புனல் போல்
உள்ளம் உயிரை உடன்கொண்டு வள்ளல் பின்

#227
ஓதை மறுகில் உடன் போன போக்கால் இப்
பேதை நடுவே பிழைத்து ஒழிந்தாள் மாதரில்
** அரிவை

#228
வாரி படும் அமுதம் ஒப்பாள் மதுகரம் சூழ்
வேரி கமழ் கோதை வேறு ஒருத்தி மூரித் தேர்த்

#229
தட்டும் சிறுகப் பெருகி மரகதத்தால்
கட்டும் கன பொன் கலாபாரம் பட்டும்

#230
துகிலும் கரப்பச் சுடர் பரப்பக் கைபோய்
அகல்கின்ற அல்குல் அரிவை இகலி

#231
ஒருக்கி மருங்கு கடிந்து ஒன்றினை வந்து ஒன்று
நெருக்கிய மாமை நிரம்பித் தருக்கி

#232
இடம்கொண்டு மின்னுக்கொடி ஒன்று இரண்டு
குடம் கொண்டு நின்றது எனக் கூறத் தடம்கொண்டு

#233
இணைத்துத் ததும்பி இளையோர்கள் நெஞ்சம்
பிணைத்துத் தட முகட்டில் பெய்து பணைத்துப்

#234
பெருமை உவமை பிறங்கு ஒலி நீர் ஞாலத்து
அருமை படைத்த தனத்து அன்னம் கருமை

#235
எறித்துக் கடை போய் இரு புடையும் எல்லை
குறித்துக் குழை அளவும் கொண்டு மறித்து

#236
மதர்த்து வரி பரந்து மைந்தர் மனங்கள்
பதைத்து விழ நிறத்தில் பட்டுத் ததைத்த

#237
கழுநீர் மலரின் கவின் அழித்து மானின்
விழி நீர்மை வாய்த்த விழியாள் முழுதும்

#238
நெறிந்து கடை குழன்று நெய்த்து இருண்டு நீண்டு
செறிந்து பெரும் முருகு தேக்கி நறும் துணர்

#239
வார்ந்து கொழுந்து எழுந்த வல்லியாய் மாந்தளிர்
சோர்ந்து மிசை அசைந்த சோலையாய்ச் சேர்ந்து

#240
திரு இருந்து தாமரையாய்ச் சென்றடைந்த வண்டின்
பெரு விருந்து பேணும் குழலாள் பொரு களிற்றின்

#241
வந்து மறுகில் ஒரு நாள் மனு குலத்தோன்
தந்த பெரிய தனிமைக்-கண் செந்தமிழ்க்

#242
கோனே கவர்ந்து எம்மைக் கொண்டனன் வந்து எமக்குத்
தானே தரில் தருக என்பன போல் பூ நேர்

#243
இணைக் கையும் தோளும் இடு தொடிகள் ஏந்தா
துணைக் கண் துயிற்றத் துயிலா மணிக் கூந்தல்

#244
போது மறந்தும் புனையா பொலம் கச்சு
மீது படத் தரியா வெம் முலைகள் சோதி

#245
அடுக்கும் கன பொன் துகில் பேணாது அல்குல்
கொடுக்கும் தெருள் நெஞ்சு கொள்ளாது எடுக்கும்

#246
கருப்புச் சிலை அனங்கன் கை அம்பால் வீழும்
நெருப்புக்கு உருகி நிறை போய் இருப்புழிப்

#247
பாடிய பூவைக்கும் யாதும் பரிவு இன்றி
ஆடிய தோகைக்கும் அன்பு இன்றிக் கூடிய

#248
கிள்ளைக்கும் தம்மில் கிளரும் இள அன்னப்
பிள்ளைக்கும் ஆற்றாள் பெயர்ந்து போய்க் கொள்ளை

#249
பயக்கும் மலர்க் குரவப் பந்தர்ப் படப்பை
நயக்கும் இள மரக் கா நண்ணி வயக் களிற்று

#250
மன்னன் குலப் பொன்னி வைகலும் ஆடுதிரால்
அன்னங்காள் நீர் என்று அழிவுற்றும் சென்னி

#251
பெருகும் புகார் அடையப்பெற்றீரால் மற்றைக்
குருகுகாள் என்று குழைந்தும் கருகிய

#252
நீலக் குயில் இனங்காள் நீர் போலுஞ் சோணாட்டுச்
சோலைப் பயில்வீர் எனத் துவண்டும் பீலிய

#253
பேர் இயல் மஞ்ஞை பெறுதிரால் கொல்லியும்
நேரியும் சேர என நெகிழ்ந்தும் நேரியன்

#254
தண் துணர்ப் பேர் ஆரம் பலகாலும் தைவந்து
வண்டுகாள் வாழ்வீர் என மருண்டும் தொண்டிக்கோன்

#255
மன்றல் மலயத்து வாள் அருவி தோய்ந்து அன்றே
தென்றல் வருவது எனத் திகைத்தும் நின்று அயர் கால்

#256
மன்னர்க்கு மன்னன் வளவன் அகளங்கன்
முன்னர்ப் பணிலம் முழங்குதலும் மின்னின் போய்

#257
பேணும் திரு மடனும் என்றும் பிரியாத
நாணும் பெரு விருப்பால் நல்கூரக் காணும் கால்

#258
ஏய்ப்ப எதிர்வந்து இரவி உருவ ஒளி
வாய்ப்ப முக பங்கயம் மலர்ந்தாள் போய்ப் பெருகும்

#259
மீது ஆர் அகல் அல்குல் வீழ்கின்ற மேகலையும்
போதாத வண்ணம் புடைபெயர்ந்தாள் சோதி

#260
குழைய நடு ஒடுக்கும் கொங்கையும் தோளும்
பழையபடியே பணைத்தாள் பிழையாத

#261
பொன்னித் துறைவன் பொலம் தார் பெறத் தகுவார்
தன்னில் பிறர் இன்மை சாதித்தாள் சென்னிக்குப்

#262
பாராள் முலையாலும் பங்கயத்தாள் தோளாலும்
வாரா விருப்பு வருவித்தாள் ஓராங்கு
** தெரிவை

#263
கோது விரவாக் கொழும் பாகு கொய் தளிர் ஈன்
போது புலராப் பொலம் கொம்பு மீது

#264
முயலால் அழுங்கா முழுத் திங்கள் வானில்
புயலால் அழுங்காப் புது மின் இயல் கொண்டு

#265
எழுதாத ஓவியம் ஏழிசைய வண்டு
கொழுதாத கற்பகத்தின் கொம்பு முழுதும்

#266
இருளாக் கலாபத்து இளம் தோகை என்றும்
தெருளாக் களி அளிக்கும் தேறல் பொருளால்

#267
வருந்தக் கிடையாத மாணிக்கம் யார்க்கும்
அருந்தத் தெவிட்டா அமுதம் திருந்திய

#268
சோலைப் பசும் தென்றல் தூது வர அந்தி
மாலைப் பொழுது மணி மண்டபத்து வேலை

#269
விரிந்த நிலாமுன்றில் வீழ் மகரப் பேழ் வாய்
சொரிந்த பனிக் கற்றை தூங்கப் பரிந்து உழையோர்

#270
பூசிய சாந்தம் கமழப் பொறி வண்டு
மூசிய மௌவல் முருகு உயிர்ப்பத் தேசிகப்

#271
பேரிசை யாழ்ப்பாணன் பேதை விறலியொடும்
சேர இனிது இருந்த செவ்விக்-கண் நேரியும்
** தசாங்கம்

#272
கோழியும் வேங்கையும் முப்பணையும் கோரமும்
பாழி அயிராபதப் பகடும் ஆழியான்

#273
சூடிய ஆரமும் ஆணையும் சோணாடும்
காடு திரைத்து எறியும் காவிரியும் பாடுக என

#274
கூனல் யாழ் எடுத்தான் பாணன் கொதித்து எழுந்து
வேனல்_அரசனும் தன் வில் எடுத்தான் தேன் இமிர்

#275
தந்திரி யாழ்ப்பாணன் தைவந்தான் தைவந்தான்
வெம் திறல் மாரனும் தன் வில்லின் நாண் முந்த

#276
நிறை நரம்பு பண்ணி நிலை தெரிந்தான் பாணன்
திறன் மதனும் அம்பு தெரிந்தான் விறலியொடும்

#277
பாணன் ஒரு பாணி கோத்தான் பல கோத்தான்
தூணி தொலையச் சுளிந்து வேள் மாண

#278
இசைத்தன பாணன் யாழ்ப் பாணி எய்து
விசைத்தன வேனிலான் பாணி விசைத்து எழுந்த

#279
வீணை இசையாலோ வேனிலான் அம்பாலோ
வாள்_நுதல் வீழா மதி மயங்காச் சேண் உலாம்

#280
வாடை அனைய மலையாநிலம்-தனையும்
கோடை இது என்றே கூறினாள் நீடிய

#281
வாரை முனிந்த வன முலை மேல் விட்ட பனி
நீரை இதுவோ நெருப்பு என்றாள் ஊர் எலாம்

#282
காக்கும் துடியை அழிக்கும் கணை மாரன்
தாக்கும் பறை என்றே சாற்றினாள் சேக்கை-தொறும்

#283
வாழும் உலகத்து எவரும் மனம் களிப்ப
வீழும் நிலவை வெயில் என்றாள் கோழிக்கோன்

#284
எம் கோன் அகளங்கன் ஏழ் உலகும் காக்கின்ற
செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கு என்றாள் கங்குல்

#285
புலரும்தனையும் புலம்பினாள் ஆங்குப்
பலரும் பணிந்து பரவக் குல கிரி சூழ்

#286
ஆழிப் புவனம் அடைய உடைய பிரான்
சூழிக் கடா யானை தோன்றுதலும் யாழின்
** யானையை நோக்கிக் கூறுதல்

#287
இழைக்கும் இசை முதலாம் எப்பகைக்கும் ஆற்றாது
உழைக்கும் உயிர் தழைப்ப ஓடிப் பிழைத்தனளாய்

#288
முட்டும் திகிரி கிரியின் முது முதுகில்
கட்டும் கடவுள் கடா யானை எட்டும்

#289
தரிக்கும் உலகம் தனி தரித்த கோனைப்
பரிக்கும் அயிராபதமே செருக்கிப்

#290
பொருந்த நினையாத போர்க் கலிங்கர் ஓடி
இருந்த வட வரைகள் எல்லாம் திருந்தா

#291
விதையம் பொருது அழிந்த விந்தமே போலப்
புதைய நடந்த பொருப்பே சிதையாத

#292
திங்கள் குலத்திற்கும் தெய்வப் பொதியிற்கும்
அம் கண் பழம் குமரி ஆற்றிற்கும் தங்கள்

#293
படிக்கும் பொரு நிருப பன்னகங்கள் வீழ
இடிக்கும் தனி அசனி ஏறே கடிப்பு அமைந்த

#294
யாம முரசால் இழந்த நிறை நினது
தாம முரசு தரப் பெற்றேன் நாம

#295
விடை மணி ஓசை விளைத்த செவிப் புண்ணின்
புடை மணி ஓசைப் புலர்ந்தேன் தட முலை மேல்

#296
ஆறா மலயக்கால் சுட்ட சூடு உன் செவியில்
மாறாப் பெரும் காற்றால் மாற்றினேன் வேறாகக்

#297
கூசும் பனித் திவலை கொண்டுபோம் என் உயிர் நீ
வீசும் மதத் திவலையால் மீட்டேன் மூசிய

#298
கார் உலாம் ஓதக் கடல் முழங்க வந்த துயர்
நேர் இலா நீ முழங்க நீங்கினேன் பேர் இரவில்

#299
என் மேல் அனங்கன் பொர வந்த இன்னல் எல்லாம்
நின் மேல் அனகன் வர நீங்கினேன் இன்னும்

#300
கடை போக என் உயிரைக் காத்தியேல் வண்டு
புடை போகப் போதும் பொருப்பே விடை போய் நீர்

#301
ஆட்டும் தடம் கலக்கின் மாரற்கு அயில் வாளி
காட்டும் தடமே கலக்குவாய் கேட்டு அருளாய்

#302
கார் நாணும் நின் கடத்து வண்டு ஒழியக் காமனார்
போர் நாணின் வண்டே புடைத்து உதிர்ப்பாய் பார் நாதன்

#303
செம் கைக் கரும்பு ஒழியத் தின் கைக்கு அனங்கனார்
வெம் கைக் கரும்பே விரும்புவாய் எங்கட்கு

#304
உயிராய் உடலாய் உணர்வு ஆகி உள்ளாய்
அயிராபதமே நீ அன்றே பெயராது

#305
நில் கண்டாய் என்று இரந்து நின்றாள் நுதலாக
வில் கொண்ட பேரிளம்பெண் வேறு ஒருத்தி கொற்கையர்கோன்
** பேரிளம் பெண்

#306
மல்லல் புயத்து அனகன் மால் யானைக் கை போலக்
கொல்லத் திரண்ட குறங்கினாள் எல்லை_இல்

#307
கோடும் கொலை குயின்ற சேடன் குரு மணி வேய்ந்து
ஆடும் படம் அனைய அல்குலாள் சேடியாய்த்

#308
தம்மை எடுக்கும் இடை கடிந்த தம் பழிக்குக்
கொம்மை முகம் சாய்த்த கொங்கையாள் செம்மை

#309
நிறையும் அழகால் நிகர் அழித்துச் செய்யாள்
உறையும் மலர் பறிப்பாள் ஒப்பாள் நறை கமழும்

#310
மாலை பல புனைந்து மான்மதச் சாந்து எழுதி
வேலை தரும் முத்தம் மீது அணிந்து சோலையில்

#311
மானும் மயிலும் அனைய மடந்தையரும்
தானும் அழகுதர இருப்பத் தேன் இமிர்

#312
ஊறல் இளம் பாளை உச்சிப்படு கடும்
தேறல் வழிந்து இழிந்த செவ்விக்-கண் வேறாக

#313
வாக்கி மடல் நிறைத்து வண்டும் அதில் நுரையும்
போக்கி ஒருத்தி புகழ்ந்து தர நோக்கி

#314
வருந்திச் சிறு துள்ளி வள் உகிரால் எற்றி
அருந்தித் தமர் மேல் அயர்ந்தாள் பொருந்தும்

#315
மயக்கத்து வந்து மனு துங்க துங்கன்
நயக்கத் தகும் கனவு நல்கும் முயக்கத்து

#316
மிக்க விழைவும் மிகு களிப்பும் அத் துயிலும்
ஒக்க இகல உடன் எழுந்து பக்கத்து

#317
வந்து சுடரும் ஒரு பளிக்கு வார் சுவரில்
தந்த தனது நிழல் தான் நோக்கிப் பைம் துகிர்க்

#318
காசு சூழ் அல்குல் கலையே கலையாகத்
தூசு புடைபெயர்ந்து தோள் நெகிழ்ந்து வாசம் சேர்

#319
சூடிய மாலை பரிந்து துணை முலை மேல்
ஆடிய சாந்தின் அணி சிதைந்து கூடிய

#320
செவ் வாய் விளர்ப்பக் கரும் கண் சிவப்பு ஊர
வெவ் வாள் நுதலும் வெயர் அரும்ப இவ்வாறு

#321
கண்டு மகிழ்ந்த கனவை நனவாகக்
கொண்டு பலர்க்கும் குலாவுதலும் வண்டு சூழ்

#322
வேரிக் கமழ் கோதை வேறாகத் தன் மனத்தில்
பூரித்த மெய் உவகை பொய்யாகப் பாரித்த

#323
தாமக் கவிகை நிழற்றச் சயதுங்கன்
நாமக் கடாக் களிற்று நண்ணுதலும் தே_மொழியும்

#324
கண்டதும் கெட்டேன் கனவை நனவாகக்
கொண்டதும் அ மதுச் செய் கோலமே பண்டு உலகில்

#325
செய்த தவம் சிறிதும் இல்லாத தீவினையேற்கு
எய்த வருமோ இவை என்று கை தொழுது

#326
தேறி ஒருகாலும் தேறாப் பெருமையால்
ஏறி இரண்டாவதும் மயங்கி மாறு இலாத்

#327
தோழியர் தோள் மேல் அயர்ந்தாள் அத் தோழியரும்
ஏழ் உயர் யானை எதிர் ஓடி ஆழியாய்

#328
மாடப் புகாருக்கும் வஞ்சிக்கும் காஞ்சிக்கும்
கூடற்கும் கோழிக்கும் கோமானே பாடலர்

#329
சாரும் திகிரி-தனை உருட்டி ஓர் ஏழு
பாரும் புரக்கும் பகலவனே சோர்வு இன்றிக்

#330
காத்துக் குடை ஒன்றால் எட்டுத் திசை கவித்த
வேத்துக் குல கிரியின் மேருவே போர்த் தொழிலால்

#331
ஏனைக் கலிங்கங்கள் ஏழனையும் போய்க் கொண்ட
தானைத் தியாகசமுத்திரமே மானப் போர்

#332
இம்பர் எழு பொழில் வட்டத்து இகல் வேந்தர்
செம்பொன் மவுலிச் சிகாமணியே நம்ப நின்

#333
பாரில் படுவன பல் மணியும் நின் கடல்
நீரில் படுவன நித்திலமும் நேரிய நின்

#334
வெற்பில் வயிரமும் வேந்த நின் சோணாட்டுப்
பொற்பின் மலிவன பூம் துகிலும் நின் பணியக்

#335
கொண்டாய் இவள்-தனது கொங்கைக் கொழும் சுணங்கும்
தண்டா நிறையும் தளிர் நிறமும் பண்டைத்

#336
துயிலும் கவர்ந்தது நின் தொல் குலத்து வேந்தர்
பயிலும் திரு நூற்படியோ புயல் வளவ

#337
மன்னிய தொண்டை வள நாடு வாளியும்
பொன்னி வள நாடு பூம் சிலையும் கன்னித்

#338
திரு நாடு தேரும் குறை அறுப்பச் செய்தால்
திரு நாண் மட மகளிர்-தம்மை ஒரு நாள் அவ்

#339
வேனற்கு அரசன் விடுமே அவன் சினம் இப்
பானல் கண் நல்லாள் உயிர்ப் பரமே ஆனக்கால்

#340
குன்றே எனத் தகும் நின் கோபுரத்தில் தூங்கும் மணி
ஒன்றே உலகுக்கு ஒழியுமே என்று இனைய

#341
கூறி வணங்கிடும் இவ்வளவும் கோதையர் மேல்
சீறி அனங்கன் சிலை வளைப்ப மாறு அழியக்

#342
குத்தும் கடாக் களிற்றுப் போந்தான் கொடைச் சென்னி
உத்துங்க துங்கன் உலா.
** வெண்பா

#343
கையும் மலர் அடியும் கண்ணும் கனி வாயும்
செய்ய கரிய திருமாலே வையம்
அளந்தாய் அகளங்கா ஆலிலை மேல் பள்ளி
வளர்ந்தாய் தளர்ந்தாள் இ மான்.
** விக்கிரம சோழனுலா முற்றிற்று
** கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா

@2 குலோத்துங்க சோழன் உலா

#1
தேர் மேவு பாய் புரவிப் பாசடைச் செங்கமலம்
போர் மேவு பாற்கடல் பூத்து_அனையோன் பார் மேல்

#2
மருளப் பசு ஒன்றின் மம்மர் நோய் தீர
உருளும் திருத் தேர் உரவோன் அருளினால்

#3
பேராப் பெரும் பகை தீரப் பிற வேந்தர்
ஊராக் குலிச விடை_ஊர்ந்தோன் சோராத்

#4
துயில் காத்து அரமகளிர் சோர் குழை காத்து உம்பர்
எயில் காத்த நேமி இறையோன் வெயில் காட்டும்

#5
அவ் வானவர்கோன் ஒரு மணியாசனத்தில்
ஒவ்வாமல் ஏத்த உடன் இருந்தோன் கவ்வை

#6
எழக் குரைக்கும் பேழ் வாய் இரும் கூற்றுக்கு ஏற்ப
வழக்குரைக்கும் செங்கோல் வளவன் பழக்கத்தால்

#7
போந்த புலியுடனே புல்வாய் ஒரு துறை நீர்
மாந்த உலகு ஆண்ட மன்னர்பிரான் காந்து எரியில்

#8
வெந்து ஆருயிர் பெற்று உடல் பெற்று விண் ஆள
மந்தாகினி கொணர்ந்த மன்னர்கோன் முந்திப்

#9
பொரு தேர்கள் ஈரைந்தின் ஈரைவர் போர் பண்டு
ஒரு தேரால் வென்ற உரவோன் கருதி

#10
மலை பத்தும் வெட்டும் உருமின் மறவோன்
தலை பத்தும் வெட்டும் சரத்தோன் நிலை தப்பா

#11
மீளி தலை கொண்ட தண்டத்தான் மீளிக்குக்
கூளி தலை பண்டு கொண்ட கோன் நாளும்

#12
பதுமக் கடவுள் படைப்பு அடையக் காத்த
முதுமக்கள்சாடி முதலோன் பொது மட்க

#13
வாங்கு எயில் நேமி வரையாக மண் ஆண்டு
தூங்கு எயில் கொண்ட சுடர் வாளோன் ஓங்கிய

#14
மால் கடல் பள்ளி வறிதாக மண் காத்து
மேல்கடல் கீழ்கடற்கு விட்ட கோன் கோல் கொன்று

#15
அலை எறியும் காவேரி ஆற்றுப்படைக்கு
மலை எறியும் மன்னர்க்கு மன்னன் நிலை அறியாத்

#16
தொல் ஆர்கலி வலையம் தோள்வலையம் முன் திருந்த
வில்லால் நடு உள்ள வெற்பு எடுத்தோன் ஒல்லைக்

#17
கொலை ஏறு உடம்பு அடையக் கொய்தாலும் எய்தாத்
துலை ஏறி வீற்றிருந்த தோன்றல் தலை ஏறு

#18
மண் கொண்ட பொன்னிக் கரை காட்ட வாராதாள்
கண் கொண்ட சென்னிக் கரிகாலன் எண் கொள்

#19
பணம் புணர்ந்த மோலியான் கோமகளைப் பண்டு
மணம்புணர்ந்த கிள்ளிவளவன் அணங்கு

#20
படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன் அடுத்தடுத்துச்

#21
சீறும் செருவில் திரு மார்பில் தொண்ணூறும்
ஆறும் படு தழும்பின் ஆகத்தோன் ஏறப்

#22
பிரம அரக்கன் அகலம் பிளந்து
பரமர் திருத்தில்லை பார்த்தோன் நரபதியர்

#23
தாழ முன் சென்று மதுரைத் தமிழ்ப் பதியும்
ஈழமும் கொண்ட இகலாளி சூழவும்

#24
ஏறிப் பகல் ஒன்றில் எச்சுரமும் போய் உதகை
நூறித் தன் தூதனை நோக்கினான் வேறாகக்

#25
கங்காநதியும் கடாரமும் கைவரச்
சிங்காதனத்து இருந்த செம்பியர்கோன் எம் கோன்

#26
புவி ராசராசர் மனு முதலோர் நாளில்
தவிராத சுங்கம் தவிர்த்தோன் கவிராசர்

#27
போற்றும் பெரியோன் இவன் பின்பு பூதலங்கள்
ஆற்றும் திருத் தோள் அகளங்கன் வேற்றார்

#28
விரும்பு அரணில் வெம் களத் தீ வேட்டுக் கலிங்கப்
பெரும் பரணி கொண்ட பெருமான் தரும் புதல்வன்

#29
கொற்றக் குலோத்துங்கசோழன் குவலயங்கள்
முற்றப் புரக்கும் முகில் வண்ணன் பொன் துவரை

#30
இந்து மரபில் இருக்கும் திருக் குலத்தில்
வந்து மனு குலத்தை வாழ்வித்த பைம் தளிர்க் கை

#31
மாதர்ப் பிடி பெற்ற வாரணம் அவ் வாரணத்தின்
காதல் பெயரன் கனகளபன் யாதினும்

#32
தீட்டற்கு அரிய திருவே திரு மாலை
சூட்டத் திரு மகுடம் சூடிய பின் நாட்டு

#33
முறை விட்ட வேற்று முடி மன்னர் தத்தம்
சிறை விட்டு அரசு அருளிச்செய்து கறை விட்டு

#34
மை ஞாகம் எட்டும் மத நாகம் ஓர் எட்டும்
பை ஞாகம் எட்டும் பரம் தீர இ ஞாலம்

#35
தாதைக்குப் பின்பு தபனற்கும் தோலாத
போதத் திமிரப் பொறை நீக்கி மாதரில்

#36
ஒக்க அபிடேகம் சூடும் உரிமைக்-கண்
தக்க தலைமைத் தனித் தேவி மிக்க

#37
புவனி முழுதுடைய பொன்-தொடியும் தானும்
அவனி சுரர் சுருதி ஆர்ப்ப நவ நிதி தூய்
** தில்லையிற் செய்த திருப்பணிகள்

#38
ஏத்தற்கு அரும் கடவுள் எல்லை_இல் ஆனந்தக்
கூத்துக் களி கூரக் கும்பிட்டுப் போத்தின் மேல்

#39
தில்லைத் திரு மன்ற முன்றில் சிறுதெய்வத்
தொல்லைக் குறும்பு தொலைத்து எடுத்து மல்லல்

#40
தசும்பு வளர் கனித் தண் பெரு நாவல்
அசும்பு பசும்பொன் அடுக்கிப் பசும்பொன்

#41
அலகை இகந்த அசல குல வச்ரப்
பலகை ததும்பப் பதித்து மலர் கவிகைக்

#42
காக்கும் கடல் ஏழின் முத்தும் வர கங்கை
தூக்கும் அருவியின் சூழ் போக்கி நோக்கம்

#43
தொடுக்கும் சிரச் சேடன் சூடாமணி கொண்டு
எடுக்கும் திருத் தீபம் ஏற்றி அடுக்கிய

#44
தூய வயிரத்தால் வாவியாய்ச் சூழ் கடந்த
பாய மரகதத்தால் பாசடையாய்த் தூய

#45
பரு முத்தா ஆலியாய்ப் பற்பராகத்தால்
திரு மிக்க செந்தாமரையாய்ப் பெரு வர்க்க

#46
நீலத்தால் வண்டின் நிரையாய் உரை இகந்த
கோலத்தால் கோயில் பணி குயிற்றிச் சூலத்தான்

#47
ஆடும் திருப் பெரும் பேரம்பலமும் கோபுர
மாடம் பரந்து ஓங்கு மாளிகையும் கூடிப்

#48
பொலம் கோட்டு மா மேருப் பூதரமும் போய
வலம் கோள் திகிரியும் மானத் தலம் கொள்

#49
நிலை ஏழு கோபுரங்கள் நேரே நெருங்க
மலை ஏழும் என்ன வகுத்துத் தலையில்

#50
மகரம் கொள் கோபுரங்கள் மாக விமானச்
சிகரங்கள் ஆகித் திகழ நிகர்_இல்

#51
எரி பொன் படர் பாறை என்னலாய் எங்கும்
விரி பொன் திரு முற்றம் மின்னச் சொரி பொன்

#52
கடாரப் பனி நீர் கவினிக் கன பொன்
தடாகங்கள் ஆகித் ததும்ப விடாது நின்று

#53
அல் பகல் ஆக அனந்த சத கோடி
கற்பக சாதி கதிர் கதுவப் பொன் பூண்

#54
வர மகளிர் தத்தம் பணி முறைக்கு வந்த
சுரமகளிர் ஆகித் துறும ஒரு தான்

#55
பிறக்கும் இமயப் பெரும் கடவுள் குன்றம்
மறக்கும்படி செல்வம் மல்கச் சிறக்கும்

#56
இருக்கு ஆதி எம்மறையும் எவ்வுலகும் ஈன்றாள்
திருக்காமக்கோட்டம் திகழ்வித்து அருக்கர்

#57
புனையா மணியாலும் பொன்னாலும் மின்ன
மனையால் ஓரோர் தேர் வகுத்து முனைவன்

#58
திரு வீதி ஈரிரண்டும் தேவர்கோன் மூதூர்ப்
பெரு வீதி நாணப் பிறக்கி வரும் நாளில்

#59
பொங்கு ஆர்கலி சூழ் புவனம் பதினாலும்
கங்காபுரி புகுந்து கண்டு உவப்பத் தங்கள்

#60
புவனி பெற வந்த பூபாலர்க்கு எல்லாம்
பவனி எழுச்சி பணித்துக் கவினும்

#61
மட மயில் ஒக்க மகுடம் கவித்தாள்
உடன் உறை பள்ளி உணர்ந்து தட முகில்

#62
அஞ்சன சைலத்து அபிடேகம்செய்வது என
மஞ்சனம் ஆடி வழி முதல் செம் சடை

#63
வானவன் பொன் தாள் வணங்கி மறையவர்க்குத்
தானம் அனைத்தும் தகைபெறுத்தி வானில்

#64
கிளைக்கும் சுடர் இந்த்ரநீலக் கிரியை
வளைக்கும் இளநிலா மானத் திளைக்கும்

#65
உருவு உடை ஆடை தவிர்த்து ஒரு வெள்ளைத்
திரு உடை ஆடை திகழ்த்தி ஒரு புடைப்

#66
பச்சை உடைவாள் விசித்தது ஒரு பசும்பொன்
கச்சை நவரத்னக் கட்டு எறிப்ப வச்ர

#67
வெருவுதர எல்லா விரவிகளும் வீழத்
திரு உதரபந்தனம் சேர்த்தித் திரு மார்பில்

#68
கார்க் கடல் மீதே கதிர் முத்தத் தாமங்கள்
பாற்கடல் போர்த்தது எனப் பரப்பிப் பாற்கடல்

#69
வந்த வனசமகளே போல் மற்று அது
தந்த கடவுள் மணி தயங்கப் பந்தச்

#70
சுரகனகத் தோள்வலையச் சூட்டுக் கவித்த
உரக பணா மணி ஒப்ப விரவி

#71
மகரக் குழை தோள் மேல் வந்து அசைவ மேருச்
சிகரச் சுடர் போல் திகழ நிகர்_இல்

#72
முடியின் மணி வெயிலும் முத்தக் குடையில்
வடியும் நிலவும் மலையப் படி_இல்

#73
வயங்கு கடக மகுடாதி மின்னத்
தயங்கு பெரும் போதி சாத்தி முயங்கிய

#74
செவ்வி நுதலின் திருநீற்றுப் புண்டரம்
வவ்வி மகளிர் மனம் கவற்ற நொவ்விய

#75
நாவியும் மான்மதச் சாந்தும் நறை அகில்
ஆவியும் ஆகண்டமும் அளப்பத் தீவிய

#76
தோள் மாலை வாசக் கழுநீர் சுழல் சோதிக்
கோள் மாலை கூசக் குளிர் கொடுப்ப நாள் மாலை

#77
வேந்தர் தொழுது இறைஞ்ச வேதியர் ஏத்து எடுப்பப்
போந்து புறம் நின்ற போர்க் களிற்றை வேந்தரில்

#78
மாக் காதல் யாதவனும் மாறு அழித்த மீனவனும்
வீக்காமல் எங்கு உள்ள மெய் முகிற்கும் கோக் கடவுட்கு

#79
எட்டாத வச்சிரமும் எல்லா உருமேறும்
வெட்டாமல் எங்கு உள்ள வெற்பினுக்கும் முட்டா

#80
முது வாய் வடவையும் முந்நான்கு கோளும்
கதுவாமல் எல்லாக் கடற்கும் பொதுவாய்

#81
அபயம்கொடுக்கும் அயிராபதத்தை
உபய வயக் கோட்டு உருமை விபவ

#82
நிருத்தம் தரும் ஓர் நிதிப் பொருப்பைக் கண்ணுற்று
எருத்தம் திருக் கவின ஏறித் திருத் தக்க

#83
பள்ளித் திருத்தொங்கல் சோலை பகல் விலக்க
வெள்ளிக் கவிகை மிசை ஓங்க ஒள்ளிய

#84
ஒற்றை வலம்புரி ஊத அதன் பின்பு
மற்றை அலகு_இல் வளை கலிப்பக் கற்றைக்

#85
கவரி இரட்டக் கடவுள் முரசு ஆர்த்து
உவரி உவா ஆடி ஒப்ப அவிர் வாளும்

#86
சங்கும் திகிரியும் சார்ங்கமும் தண்டமும்
எங்கும் சுடர்விட்டு இருள் களையக் கொங்கத்து

#87
வில் கொடியும் மீனக் கொடியும் கொடுவரிப்
பொன் கொடி ஒன்றின் புடை போதத் தெற்கின்

#88
மலையானிலம் வரவே வார் பூம் கருப்புச்
சிலையான் வரவு தெரியத் தொலையாது

#89
வீசும் திவலை விசும்பு கூர் மங்குலால்
வாசவன் வந்த வரவு அறியக் கூசாதே

#90
யாவர் ஒழிவார் இவன் வரவே மற்று உள்ள
தேவர் வருவர் எனத் தெளிய யாவர்க்கும்

#91
பின்னர் வழங்கும் முழங்கு பெரும் களிற்றுத்
தென்னர் முதலானோர் சேவிப்ப முன்னர்ப்

#92
பரவி உலகில் பல மண்டலீகர்
புரவி மிசை கொண்டு போத அருவி போல்

#93
விட்டு மதம் பொழியும் வேழம் திசை_வேழம்
எட்டும் ஒழியப் புகுந்து ஈண்டக் கட்டி

#94
இரவிக்கு நிற்பன ஏழும் ஒழியப்
புரவிக் குலம் முழுதும் போத விரவி

#95
உடைய நிதிக் கடவுள் ஊர்தி ஒழிய
அடைய நர வெள்ளம் ஆர்ப்ப இடையே

#96
எழுந்த துகள் உருவ ஏறியும் சுண்ணம்
விழுந்த துகள் உருவ வீழ்ந்தும் தொழும் தகைய

#97
விண்ணுலகு மண்ணுலகு ஆகி விளங்க இ
மண்ணுலகு பொன்னுலகாய் மாறாட எண்ணரிய

#98
மாகதரும் மங்கலப் பாடகரும் விஞ்சையர்
பூகதர் ஆயினார் போல் பரவ நாகர்

#99
கொழுந்து எழு கற்பக சாதி குவித்துத்
தொழும்-தொறும் மன்னர் சொரிய எழுந்து உள

#100
கை மழை என்னக் கனகப் பெயல் தூர்த்தும்
மை மழை மாட மறுகு அணைந்தான் தம்முடைய

#101
சாலை-தொறும் திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார்
மேலை நிலாமுற்றம் மேல் தொகுவார் மாலை தாழ்

#102
தெற்றி அடைய மிடைவார் சிலர் பலர்
நெற்றி சுருங்க நெருங்குவார் பொன் தொடியார்

#103
மாளிகையில் ஏறுவார் மண்டபத்தின் மண்டுவார்
சூளிகை மாடம்-தொறும் துறுவார் நீளும்

#104
இரண்டு மருங்கினும் இப்படி மொய்ப்பத்
திரண்டு பலர் எதிரே சென்று புரண்ட

#105
கரும் புருவ வல் வில்லும் கண் மலர் அம்பும்
பெரும் புவன எல்லை பிடிப்பச் சுரும்பு

#106
நிரைக்கு நிரை முரல நீலக் குழாங்கள்
இரைப்பின் மொகுமொகு என்ன விரைச் சுருள்

#107
மேகாளகங்கள் மிஞிறு வாய்வைத்து ஊதக்
காகாளம் என்னும்படி கலிப்பப் போகத்

#108
தகரம் கமழ் கதுப்பில் தாழ் குழை தோடு ஆழ்
மகரம் பிறழ் கொடியின் வாய்ப்ப இகல் அனங்கன்

#109
சேனாசமுகம் தெரிப்ப அதன் எதிர்
சேனாபராகம் எனத் திகழப் பூ நாறும்

#110
சுண்ணம் எதிர் தூய் உடனே தொடியும் தூஉய்
வண்ணம் இழப்பார் மனம் இழப்பார் மண்ணுலகில்

#111
இன்னல் பகைவன் இவன் காண் அகளங்கன்
மன்னர்க்கு மன்னன் மகன் என்பார் முன்னர்

#112
முது குல மன்னர் முடி வணங்க வந்த
விதுகுலநாயகி சேய் என்பார் குதுகலத்தால்

#113
கண் மரும் செவ்விக் கடவுள் திசாதேவர்
எண்மரும் காணும் இவன் என்பார் மண்ணவர்க்கும்

#114
தேவர்க்கும் நாகர்க்கும் தெய்வ முனிவர்க்கும்
யாவர்க்கும் காவல் இவன் என்பார் தீவிய

#115
மாதவியும் செங்கழுநீரும் வலம்புரியும்
தாதகியும் கொள்ளத் தரின் என்பார் மாதை

#116
ஒறுக்கும் மிதிலை ஒரு வில்லைத் தொல்லை
இறுக்குமவன் இவன் என்பார் மறுக்காமல்

#117
சென்று கனை கடல் தூர்த்துத் திருக் குலத்து
நின்ற பழி துடைப்பாய் நீ என்பார் இன்றளவும்

#118
துஞ்சும் துயில் இழந்த தண்டர் குழல் துளையில்
நஞ்சும் குமிழி எழும் நாள் என்பார் பஞ்சவனே

#119
வாடையினும் தண் என்னும் மந்தாநிலம் எமக்குக்
கோடையினும் தீது கொடிது என்பார் கூடி

#120
முருகு வார் கூந்தலார் மொய்த்து அலர்ந்த கண்ணால்
பருகுவார் போல் வீழ்ந்து பார்ப்பார் பொரு மதனன்

#121
பார்த்தானோ புங்கானுபுங்கம் படப் பகழி
தூர்த்தானோ யாது என்று சொல்லுகேம் ஆர்த்தான்

#122
உளைத்தான் சிலை இக்கு ஒரு கோடிகோடி
வளைத்தான் அரும்பு உலகின் மாய்த்தான் இளைத்தார்
** பேதை

#123
இனையர் பலர் நிகழ ஈங்கு ஒருத்தி முத்தில்
புனையும் சிறு தொடிக் கைப் பூவை கனை முகில் நேர்

#124
ஆடாத தோகை அலராத புண்டரிகம்
பாடாத பிள்ளைப் பசும் கிள்ளை சூடத்

#125
தளிராத சூதம் தழையாத வஞ்சி
குளிராத திங்கள்_குழவி அளிகள்

#126
இயங்காத தண் கா இறக்காத தேறல்
வயங்காத கற்பக வல்லி தயங்கு இணர்க்

#127
கூழைச் சுருள் முடிக்கக் கூடுவதும் கூடாதாம்
ஏழைப் பருவத்து இளம் பேதை சூழும்

#128
நிலைத்தாய வெள்ளம் நெருங்க மருங்கே
முலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்பத் தலைத் தாமம்

#129
தொக்க கவிகைக் குலோத்துங்கசோழனை
மிக்க பராந்தகனை மீனவனைப் புக்கார்

#130
வணங்க வணங்கி வழுத்த வழுத்தி
அணங்க அணங்காள் அகலாள் குணம் காவல்

#131
மன்னன் புனையும் திரு முத்த மாலையை
அன்னம் படிந்து ஆட ஆறு என்னும் பின்னவன்

#132
கோவைத் திருப்பள்ளித் தொங்கல் குழாம் கிளிக்கும்
பூவைக்கும் நல்ல பொழில் என்னும் பாவை

#133
அயிர்க்கும் இரு கோட்டு அயிராபதத்தை
மயிற்கு மலை என்று மன்னும் குயில் கிளவி

#134
தேன் வாழும் தாமம் சூழ் தெய்வக் கவிகையை
மான் வாழ மாசு_இல் மதி என்னும் கோனுடையப்

#135
பாங்கு வளை ஆழிப் பார் மடந்தை தன்னுடைய
பூம் குவளை மாலை புனைக என்னும் தேம் கமலத்து

#136
அற்புதவல்லி அவளே பிறந்து உடைய
கற்பக மாலையைக் காதலிக்கும் பொற்பு ஆர்

#137
பொலம் புரி காஞ்சிப் புகழ்மகட்கே தக்க
வலம்புரி மாலைக்கு மாழ்கும் பொலன் தொடி

#138
போர் ஆரவாரப் பொலன் கொடி பெற்றுடைய
பேர் ஆர மாலைக்குப் பேதுறும் நேரியன்

#139
ஏந்து இழை மாதர் எவர்க்கும் பொதுவாய
பூம் துழாய் மாலை புனைக என்னும் வேந்தன் முன்

#140
இ வகை அல்லது இலங்கு_இழையார் மால் கூரும்
அ வகை கூராள் அயல் ஒருத்தி எவ்வுலகும்

#141
முற்ற முடிக்க முடிக் காமவேள் சூட்டும்
கொற்ற முடி அனைய கொண்டையாள் அற்றை நாள்

#142
சாத்தும் அபிடேகத் தாரை போல் தாழ்கின்ற
கோத்த பரு முத்தக் கோவையாள் தேத்து

#143
விடம் போல் பணிகட்கு வேழங்கட்கு எல்லாம்
கடம் போல் கொலை ஊறும் கண்ணாள் அடங்கா

#144
வயிர்ப்பான் மறலி மகள் உருக்-கொல் ஈது என்று
அயிர்ப்பார் அயிர்க்கும் அழகாள் உயிர்ப் பாவை

#145
கொல்லிக்கும் உண்டு உயிர் உண்மை த்ரிகூடத்துச்
சொல்லிக் கிடக்கும் துணை மணிக்கும் வல்லி

#146
இதற்கு நடை வாய்த்து உயிர் வாய்த்தது என்ன
மதர்க்கும் ஒரு திரு மாது முதல் தன்

#147
பணி வாயில் ஆயம் பரந்து அகலக் கிள்ளைக்கு
அணி வாயின் முத்தம் அருளி மணி வாயால்

#148
சொல்லாய் எனக்கு அன்னை சொல்லாயோ நீ அன்றே
வல்லாய் பிற அறிய வல்லவோ கல் அரணக்

#149
கோழித் திரு நகரக் கொற்றவற்கு வெற்றிப் போர்
ஆழித் தடக் கை அபயற்கு வாழியாய்

#150
காக்கும் கடல் ஏழும் ஆடும் கடாரமோ
ஆக்கும் நதி ஏழும் ஆரமோ தேக்கிய

#151
பண் ஏழும் கன்னாவதங்கிசமோ பண்டு அளந்த
மண் ஏழும் வாகுவலயமோ தண் நறும்

#152
தூவல் நறவப் பொழில் ஏழும் தொங்கலோ
காவல் மலை ஏழும் கந்துகமோ ஏவலால்

#153
செய்யும் நலன் உடைய கோள் ஏழும் தீபமோ
பெய்யும் முகில் ஏழும் பேர் இயமோ வையகம்

#154
கூறுமவை இவை என்று குறும்_தொடி
வேறு தனி வினவும் வேலைக்-கண் சீறும்

#155
ஒரு தன் அடியின் மடிய உபய
மருது பொருத வயவன் விருதன்

#156
விலை_இல் அமுதம் மதன விமலை
முலையின் முழுகு முருகன் வலைய

#157
கனக சயில எயிலி கணவன்
அனகன் அதுலன் அமலன் தினகரன்

#158
வாசவன் தென்னன் வருணன் அளகேசன்
கேசவன் பூ சக்ர கேயூரன் வாசிகை

#159
ஆழிப் பெருமான் அபயன் அனபாயன்
சூழிக் கடா யானை தோன்றுதலும் தாழாது

#160
சென்றாள் திருமுன்பு செம் தளிர்க் கை குவித்து
நின்றாள் இனி வறிதே நிற்குமே என்றாலும்

#161
கோடு கழல் கண்டல் கொண்டற்கு மாலதி
ஓடு நகாதே உடையாதே பீடுற

#162
வந்து தொடும் குன்ற வாடைக்கு இளம் கொன்றை
நொந்து தொடாதே குழையாதே செந்தமிழ்த்

#163
தென்றல் எதிர்கொண்ட தேமா கொழும் கன்று
மன்றல் கமழாதே வாழாதே என்று போய்

#164
சூதளவு அல்ல துணை முலை தூய கண்
காதளவு அல்ல கடந்தன போய் மாதர்

#165
உருவத்து அளவு அன்று ஒளி ஓக்கம் ஆக்கம்
பருவத்து அளவு அன்று பாவம் தெருவத்து

#166
உடைவது உடையாதாம் உள்ளம் உறவு ஓர்ந்து
அடைவது அடையாதாம் அச்சம் கடை கடந்து

#167
சேயினும் நல்ல பெருமாள் திருத் தடம் தோள்
தோயினும் தோய மனம் துணியும் ஆயினும்

#168
ஏந்து தடம் தோள் இணைப் பணைப்புக் கண்டிலன்
காந்து தன தடம் கண்டிலன் பூம் தடம்

#169
தேரின் அகலும் திருந்து அல்குல் கண்டிலன்
காரின் நெகிழ் அளகம் கண்டிலன் மாரவேள்

#170
எய்யும் ஒரு கருப்பு வல் வில் எடுத்தானோ
கொய்யும் மலர் அம்பு கோத்தானோ தையல் மால்

#171
மந்தாகினிக்கோன் திருப் புருவ வார் சிலையும்
செந்தாமரைக் கண்ணும் செய்தது என நொந்தார்

#172
வளைத் தளிர்ச் செம் கை மடுத்து எடுத்து வாசக்
கிளைத் தளிர்ப் பாயல் கிடத்தி துளைத் தொகை

#173
ஆய்க் குழல் என்றால் அதுவும் அவன் ஊதும்
வேய்க் குழல் என்று விளம்பியும் தீக் கோள்

#174
நிகழ் நிலா அன்று நிருப குல துங்கன்
புகழ் நிலா என்று புகழ்ந்தும் இகலிய

#175
பல்லியம் அன்று பரராச கேசரி
வல்லியம் என்று மருட்டியும் மெல்லிய

#176
கல்லாரம் அன்று கதிரோன் திரு மருமான்
மெல் ஆரம் என்று விளம்பியும் நல்லார்

#177
அருத்தி அறிவார் அவை இவை என்று
திருத்திவிட விடாய் தீர்ந்தாள் ஒருத்தி
** மங்கை

#178
உருவ வரிக் கண் ஒழுகஒழுகப்
புருவம் உடன் போதப்போத வெருவி

#179
வன முலை விம்மி வளரவளரப்
புனை தோள் புடை போதப்போத வினைவர்

#180
அரும் கலை அல்குல் அகலஅகல
மருங்கு போய் உள் வாங்கவாங்க நெருங்கு

#181
பரவரராச பயங்கரன் மேல் வேட்கை
வரவர ஆற்றாத மங்கை பொர வரு

#182
தேம் இரைக்கும் காலையின் ஞாயிற்று இளம் செவ்வி
தாமரைக்கே சாலும் தரத்ததோ காமர்

#183
அமுத மதியத்து அலர் நிலா முற்றும்
குமுத நறு முகைக்கே கூறோ நமது கார்

#184
கானின் மட மயிற்கே காணியோ தண் இள
வேனில் குயிற்கே விதித்ததோ தேன் இமிர்

#185
தண் தாமரையாள் தலைவனை யாமும் போய்
கண்டால் என் என்னும் கடைப்பிடியாள் பண்டை

#186
ஒளி ஆர் அணங்கு ஆதல் தம்மைத் தாம் ஒன்றும்
தெளியாதவாறே தெளிந்தும் களி அன்னம்

#187
வாவிக் கரையில் வர நீரரமகளிர்
சேவிக்க நின்று ஆடும் செவ்வியாள் காவில்

#188
புகுதில் வன தெய்வப் பூம்_குழை ஆயத்
தொகுதி புடை பரந்து சூழ்வாள் மிகு தேன்

#189
நிரை அரவம் தரு செய்குன்றம் நீங்கா
வரையரமாதரின் வாய்ப்பாள் பெரு விலைய

#190
முத்தில் விளங்கின் முளரித் தவளப் பூம்
கொத்தின் அணங்கு அனைய கோலத்தாள் பத்திய

#191
பச்சை மரகதம் பூணில் பணை முலை சூழ்
கச்சை நிலமகள் போல் காட்சியாள் நிச்சம்

#192
உரக பண மணி கொண்டு ஒப்பிக்கில் ஒப்பு_இல்
வர கமலை அன்ன வனப்பாள் நரபதி

#193
மை முகில் வண்ணத்து வானவன் மீனவன்
கைம்முகில் மேல் வரக் கண்டதன் பின் மொய் மலர்

#194
நீலமே வேய்ந்து எடுக்க நீலமே பூண்டு உடுக்க
நீலமே அன்றி நினையாதாள் நீலமே

#195
முன் உடைய செம் கேழ் எறிக்கும் முறிக் கோலம்
தன்னுடைய மாமை தழீஇக்கொள்ளப் பின்னர்

#196
நெருங்கு கழுநீரும் நீலோற்பலமும்
ஒருங்கு மலர் தடம் ஒத்தும் மருங்கே

#197
இறங்கிய கற்பகவல்லியும் ஏறி
உறங்கிய தும்பியும் ஒத்தும் பிறங்க

#198
வயங்கு தளிர் ஈனும் மாங்கொம்பர் பூக் கொண்டு
உயங்கு கருவிளை ஒத்தும் தயங்குவாள்

#199
கோலத் தார் மௌலிக் குலோத்துங்கசோழற்கு
ஞாலாத்தார் எல்லார்க்கும் நாயகற்கு நீலத்தின்

#200
காசும் கலாபமும் மேகலையும் காஞ்சியும்
தூசும் துகிலும் தொடியும் நான் கூசேன்

#201
வெளியே தருவேன் விரை ஆரத் தொங்கல்
கிளியே தருமேல் நீ கேளாய் அளியே நீ

#202
தாது கடி கமழ் தாதகித் தாமத்தின்
போது கொழுதப் புறப்படாய் ஓதிமமே

#203
எங்கள் பெருமாளை இங்கே தர வா நீ
உங்கள் பெருமானுழைச் செல்வாய் பைம் கழல் கால்

#204
சேயை நினைந்து ஏகின் நம்முடைய சேக்கையான்
சாயல் மயிலே தலைப்படாய் பாயும்

#205
கட மானே போல்வார்க்கு நீ நின்னைக் காட்டின்
மட மானே தானே வரும் காண் கடிது என்று

#206
கொள்ளைகொள் காமன் கொடும் பகைக்குக் கூசித் தன்
பிள்ளைகளோடு இருந்து பேசுவாள் உள்ள

#207
அலகு_இல் குல நீல ரத்னாபரணம்
விலகி வெயிலை விலக்க உலகில்

#208
பெரிய பெருமாள் பெரும் பவனி வீதி
இரிய எதிரேற்று இழந்தாள் வரி வளை

#209
ஆயத்தார் என்னில் அளியத்தார் எல்லாரும்
நேயத்தார் அல்லரே நிற்பாரே தேயத்தார்

#210
மன்னனை அஞ்சாதே வாரணத்தை அஞ்சாதே
மின்_அனையாளையும் மீது ஊரா முன்னர்

#211
கடம் ஆக்கும் தெய்வக் களிறு விரும்பும்
இடம் ஆதும் யாம் என்பார் போலப் படமாய்

#212
இரைப்பச் சுரும்போடு இருள் அளகபாரம்
நிரைத்து வனம் ஆகி நிற்பார் விரைப் பூண்

#213
முலையாய் வளரும் முரண் குவடு கொண்டு
மலையாய் நெருங்க வருவார் தொலையாத

#214
பாய பரு முத்தின் மாலை பல தூக்கித்
தூய அருவியாய்த் தோன்றுவார் சாயல்

#215
கொடியாய் அடி சுற்றிக் கொள்வார் புரக்கும்
பிடியாய் நறும் துகள் பெய்வார் விடுதுமோ

#216
யாழாய் மிடற்றால் வணக்குதும் யாம் என்பார்
தோழாய் வளைத்து எங்கும் சூழ் போவார் ஆழிக் கைத்

#217
தியாகனை மானதனைத் திக்கு ஆனை எட்டுக்கும்
பாகனையே பின் சென்று பற்றுவார் தோகையார்

#218
நல் துகில் கொண்ட நறும் துழாய் மார்பா நின்
பொன் துகில் தந்தருளிப் போது என்பார் மற்று இவள்-

#219
தன் சங்கம் கொண்ட தடம் தாமரைக்கண்ணா
நின் சங்கம் தந்தருளல் நேர் என்பார் மின் கொள்ளும்

#220
இன் துயிற்கு எல்லாம் எறி பாற்கடல் கொள்ளும்
நின் துயில் தந்தருள் நீ என்பார் என்றுஎன்று

#221
மானும் மயிலும் அனையார் வளைத்து உளைப்பத்
தானும் களிறும் தடையுண்ட கோனும்

#222
தடுத்த கொடிக்குச் சத மடங்கு வேட்கை
அடுத்த திரு நோக்கு அருளாக் கொடுத்த

#223
திரு நகை மூரல் திகழ்ந்தான் அணங்கும்
ஒரு நகை கூர்ந்து ஒருவாறு உய்ந்தாள் பெரு நகை

#224
எய்தி அனங்கன் எழப் போனான் மாதரும்
உய்து சிறந்தாள் உழைச் சென்றார் நொய்தில்

#225
தொடுக்கும் புறஞ்சொல் தொடாமே முலை மீது
அடுக்கும் பசலை அடாமே உடுக்கும்

#226
துகிலும் சரியாமே சுற்றத்தார் எல்லாம்
புகிலும் புகாமே பொராமே அகில் நாறும்

#227
பள்ளியில் செல்லாள் பருவ முருகன் தோய்
வள்ளியின் சால வயங்கினாள் ஒள்_இழை
** மடந்தை

#228
பின்னர் ஒருத்தி பெருமைக்கு அரமகளிர்
முன்னர் உரைக்கும் முதன்மையாள் சென்னியில்

#229
வண்டலிடு நாவி வார் குழற்கு மாறுடைந்து
கொண்டல் சொரி முத்தின் கொண்டையும் பண்டு வந்து

#230
ஏற்றுப் பணை பணைக்கும் மென் தோள் இரண்டுக்கும்
தோற்றுச் சொரி முத்தின் சூழ் தொடியும் ஆற்றல்

#231
கலம் புரி செல்வக் கழுத்திற்குத் தோற்ற
வலம்புரி முத்தின் வடமும் பொலம் பூண்

#232
எதிர்க்கும் முலைக்கு இரிந்த திக்கயக் கோடு இட்ட
கதிர்க்கும் நகை முத்தின் கச்சும் அதிர்க்கும்

#233
அடல் விடும் அல்குல் பரவைக்கு உடைந்து
கடல் விடு முத்தின் கலையும் உடலி மேல்

#234
ஏந்தும் இனைய இளநிலா விட்டு எறிப்பப்
போந்து மறுகு புகுந்து ஒழிந்தாள் வேந்தனும்

#235
சட்கோடி மாணிக்கம் ஒன்றும் சமந்தகமும்
உள் கோடு கேயூரத்து ஊடு எறிப்பக் கொட்கும்

#236
கடல் சேப்ப வந்த கவுத்துவம் ஒன்றும்
அடல் சேக்கும் மார்பிற்கு அமைய உடலி

#237
அனந்த பணா மவுலி ஆயிரமும் ஒற்றை
நனம் தலை மௌலிக்கு நாண இனம் கொள்

#238
முறுகு கதிரின் முகம் திரிய ஏற்று
மறுகு திரு மலர வந்தான் குறுகும்

#239
நடையாய வெள்ளமும் நாள் நிரம்பு திங்கள்
குடையாய வெள்ளமும் கூடி அடைய

#240
மதி உதயம் என்று வணங்க வனச
பதி உதயம் என்று பணிய துதி_இல்

#241
ஒருவரும் ஒவ்வா உருவம் மீக்கூறும்
இருவரும் எய்திய எல்லைத் தெருவில்

#242
நெருங்க மகளிர் நிறம் திறக்க எய்து
மருங்கு வருகின்ற மாரன் திருந்திய

#243
பாய பகடு அல்குல் பாரா அதன் பரப்பின்
போய மருங்குல் புறம் நோக்காச் சாயா

#244
முலையின் கதிர்ப்பும் முருகு கெழு தோள்
நிலையின் பணைப்பும் நினையாக் கொலையால்

#245
உடைக்கும் உலகு அடைய ஊடாடு கண்ணின்
கடைக்கும் முடிவின்மை காணாக் கிடைக்கும்

#246
பருவக் கொடி வதன பங்கேருகத்தின்
புருவக் கொடி முடியப் போகா உருவக்

#247
களிக்கும் புடவி சத கோடி கற்பம்
அளிக்கும் பெருமானை அஞ்சா குளிர்க்கும்

#248
கடும் கால் கொடும் தேரை முட்டக் கடாவிக்
கொடும் கால் சிலையைக் குனித்து நடுங்கா

#249
முகுந்தன் இவன் என்று முன்பு எய்த ஏவில்
புகுந்தது இது என்று போனான் திகந்தம்

#250
முழுது ஆள் அபயனை முகிழ் நகையும் தோளும்
தொழுதாள் ஒரு தானே தோற்றாள் அழுதாள்

#251
திரிந்தாள் கலை நிலையும் செம்பொன் துகிலும்
சரிந்தாள் துணைவியர் மேல் சாய்ந்தாள் பரிந்தார்

#252
முடைக் கை எதிர்க் குரவை கோத்தாய் முரல் யாழ்
கடைக் கை தொடுக்கை நகையோ விடைப் பேர்

#253
இனம் தழுவிப் பின்னையைக் கொள்வாய் இவளைத்
தனம் தழுவிக்கொள்கை தவறோ அனந்தம்

#254
கரும் துகிலக் கோவியரைக் கொள்வாய் கமலை
தரும் துகில் நோக்கத் தகாதோ விருந்து

#255
துளவ முகிற்கு இது வந்தது தூய
வளவர் திருக் குலத்து அந்தோ அளவிறந்த

#256
வன்கண் இவள் அளவும் கண்டேம் மடவரல்
புன்கண் அடியேம் பொறேம் என்றும் மின்-கண்

#257
இவையிவை சொல்லிப்போய் இன் அமளி ஏற்றக்
கவிர்_இதழ் பின்னும் கலங்கத் துவரின்

#258
வியக்கும் துகிர் இனைய மேம்பட்டு உலகை
மயக்கும் திரு வாய் மலர்க்கும் நயக்கும்

#259
பொருப்பு உருவத் தோளின் புதுமைக்கு நேரே
திருப் புருவம் செய்த செயற்கும் பரப்பு அடையக்

#260
செம் கேழ் எறித்து மறிக்கும் திரு நயன
பங்கேருகம் சூழ் படு கொலைக்கும் அங்கே

#261
தரிக்குமே தென்றலும் சந்த்ரோதயமும்
பரிக்குமே கண்கள் படுமே புரிக் குழலார்

#262
பால் இருத்தி மம்மர் படப்படப் பையப் போய்
மால் இருத்தி உள்ளம் மயங்கினாள் மேல் ஒருத்தி
** அரிவை

#263
தாளை அரவிந்தச் சாதி தலைவணங்கத்
தோளை உரகர் தொழ இருப்பாள் நாளை

#264
வளவர் பெருமான் வரும் பவனி என்று
கிளவி விறலியர் வாய்க் கேட்டாள் அளவு உடைத்து

#265
ஓர் இரா அன்று அம்ம இவ் இரா ஓதிமத்தோன்
பேர் இரா என்று பிணங்கினாள் பேர் இரா

#266
என்று விடியும்-கொல் என்றாள் விடிவு அளவும்
நின்று சுடும்-கொல் நிலவு என்றாள் நின்றார்

#267
அடுத்தடுத்து ஏந்திய திவ்யாபரணம்
எடுத்தெடுத்து ஒப்பித்து எழுந்து சுடர்க் கதிரோன்

#268
மாலைப் பகைவியைப் போக்கி வருவித்த
காலைத் துணைவியைக் கண்டு எழுந்தாள் காலையோன்

#269
சேமித்த பூம் கோயில் எல்லாம் திரு என்று
காமித்து இதழின் கடை திறப்ப நேமி

#270
மணக்கத் துணை அன்றில் வாய் அலகு வாங்கித்
தணக்கக் கடி காவில் சார்ந்தாள் கணக் கதிர்

#271
வந்து பொருவதொரு மாணிக்கச் செய்குன்றில்
இந்து சிலாதலத்தில் ஏறினாள் குந்திக்

#272
கடப்பன கன்னி மான் நோக்கியும் அன்னம்
நடப்பன பார்த்தும் நயந்தும் தொடக்கிக்

#273
களிக்கும் மயில் குலம் கூத்தாடக் கண்டும்
கிளிக் குலம் பாட்டு எடுப்பக் கேட்டும் பளிக்கு உருவப்

#274
பாவை மணக்கோலம் பார்த்தும் பல நகை
பூவை பகரப் புறம் சாய்ந்தும் கோவை

#275
அளிக் களியாட்டம் அயர்ந்தும் கபோத
விளிக் களி கூர்ந்து வியந்தும் களிக்கப்

#276
பழிச்சி வணங்கிப் பெருமாள் பவனி
எழுச்சி முரசு ஓர்ந்திருந்தாள் கழல் செழியர்

#277
தென் சங்கம் கொண்டான் திருச் சங்கம் செய்குன்றின்-
தன் சங்கம் ஆகி எதிர் தழங்க மின் சங்கம்

#278
போல விழுந்தும் எழுந்தும் புடை ஆயம்
கோல மறுகு குறுகுவாள் ஞாலம்

#279
எடுக்கும் பணி_மன்னன் மின் என்று இறைஞ்சிக்
கொடுக்கும் சுடிகைக் குதம்பை கடுக்கும்

#280
மயில் வேண்டும் சாயல் வதனாம்புயத்து
வெயில் வேண்ட வேண்டி விளைப்ப பயில் கதிர்

#281
வெல்லாது தோள் சுடிகை மேகாளக இருள் மேல்
எல்லாப் பருதியும் போல் எறிப்ப கொல் குயத்து

#282
வீழ் சோதி சூழ் கச்சு மேரு கிரிச் சிகரம்
சூழ் சோதிச் சக்ரம் தொலைவிப்பக் கேழ் ஒளிய

#283
பைம்பொன் கடி தடம் சூழ் மேகலை பார் சூழ்ந்த
செம்பொன் திகிரி எனத் திகழ அம் பொன்

#284
புறவும் சகோரமும் பூவையும் மானும்
பிறவும் இனம் என்று பெட்ப உறவாய்

#285
அடர்ந்த பொலன் கேழ் அடிச் சிலம்புக்கு அன்னம்
தொடர்ந்து மறுமாற்றம் சொல்ல நடந்துபோய்

#286
மானவற்குப் புக்க துறை வல்லவற்கு வில்லவற்கு
மீனவற்குச் சென்று வெளிப்பட்டாள் தானே

#287
அலரும் முகமும் குவி கையும் ஆகி
மலரும் முகுளமும் மானப் பலர் காணத்

#288
தேனும் அமுதும் கலந்து அனைய தீம் கிளவி
மானும் அடைய மனம் கொடுத்தாள் கோனும்

#289
தடாதே தடுத்தாளைத் தன் கடைக்கண் சாத்தி
விடாதே களிறு அகல விட்டான் படா முலை மேல்

#290
ஒத்து இலங்கு வேர் வந்து உறைப்ப நறைக் கழுத்து
நித்திலம் கால் சங்கநிதி நிகர்ந்தாள் எத்திசையும்

#291
சோர்கின்ற சூழ் தொடிக் கைச் செம்பொன் தொடி வலயம்
நேர்கின்ற பற்பநிதி நிகர்த்தாள் தேரின்

#292
அரிவை துகில் நெகிழ அல்குல் அரவின்
உரிவை விடும் படமும் ஒத்தாள் சொரி தளிர்

#293
மாங்கொம்பர் என்ன வருவாள் சுர மரப்
பூம் கொம்பர் என்னப் புறங்கொடுத்தாள் பாங்கியரும்

#294
ஒற்றை உடைவாள் ஒரு புடையாள் கொற்றவையேல்
மற்றை அருகு இவளை வைத்திலனே பெற்றுடைய

#295
வாரத் தரணியாள் வாழ் தோள் எதிர் மற்றை
ஆரத் திருத் தோள் அளித்திலனே நேர் ஒத்த

#296
பூம் தாமரையாள் எதிரே இப் பொன்_தொடிக்கும்
ஏந்து ஆர மார்பம் இசைந்திலனே வேந்தர்கோன்

#297
அன்னங்காள் நீர் சென்று அரற்றீர் கபோதங்காள்
இன்னம் அபயம் புக்கு எய்திடீர் நல் நுதல்

#298
பாவைகாள் கொல் யானைப் பா அடிக் கீழ்ப் பணியீர்
பூவைகாள் செங்கோன்மை போற்றி செய்யீர் தாவிப் போய்ப்

#299
பேதை மட மான் பிணைகாள் வளைத்து உளையீர்
கோதை மதுகரங்காள் கூப்பிடீர் யாது எல்லை

#300
என்னா இதற்கு என்று இரங்கி இலங்கு_இழை-
தன் ஆர்வம் மாற்று எதிர் சாற்றினார் பின்னர்ப்
** தெரிவை

#301
பொருவு_இல் ஒருத்தி புறங்காக்கும் மாதர்
இரு விலிடை நின்று இறைஞ்சித் திரு உலாப்

#302
போதும் பெருமாள் புகுதும் அளவும் இங்கு
யாதும் பயிலாது இருத்துமோ சூதாடேம்

#303
பந்தாடுதும் நாம் பசும்பொன் குழை சென்று
வந்து ஆடு கண்ணாய் வருக என்று சந்து ஆடும்

#304
கொம்மை வரு முலையும் தோளும் குறியாதே
அம் மென் மருங்குல் பார்த்து அஞ்சாதே தம்முடனே

#305
கொண்டார் அருகு இருந்த பாணரும் கோடியரும்
கண்டார் எவரும் கடுகினார் மண்டி

#306
எடுத்தார் எடுத்தன யாவும் எவரும்
கொடுத்தார் ஒரு தானே கொண்டாள் அடுத்தடுத்து

#307
முன்னம் எறி பந்தின் மு மடங்கு நான் மடங்கு
இன்னம் எறிய வருக என்றாள் அன்னம்

#308
அடியும் இரு கையும் அம்புயம் என்று
படியும் ஒழுங்கில் பயில முடியும்

#309
தொடை இடை போய சுழல் கூந்தல் பந்தர்க்கு
இடையிடை நின்ற கால் ஏய்ப்ப அடைய

#310
விழுந்தன பார் கடவாவாறு போல் மேல் போய்
எழுந்தன கை கடவா என்னக் கொழும் தளிரால்

#311
ஏற்றுதி விண் கொளா அம்மனை எம் அனை
ஆற்றுதி ஈது இங்கு அரிது என்னப் போற்று அரும்

#312
கையோ பதயுகமோ கண்ணோ கடுகினவை
ஐயோ அறிதல் அரிது என்னப் பொய்யோ

#313
திலக நுதலில் திருவே என்று ஓதி
உலகு வியப்ப என்று ஓத அலகிறந்த

#314
பந்தாட்டு அயர்ந்து பணை முலையார் பாராட்ட
வந்து ஆட்டும் நீராட்டு மண்டபத்து விந்தை

#315
பெருமான் அனபாயன் பேர் இயம் மூன்றும்
தரும் ஆரவாரம் தழங்க ஒரு மாதர்

#316
ஏந்து துகில் ஒன்று உடுத்தாளோ இல்லையோ
போந்து மறுகு புகுந்து ஒழிந்தாள் மாந்தளிரும்

#317
தாதும் தமனிய மாலையும் தண் கழுநீர்ப்
போதும் பிறவும் புறம் புதையா ஓதிக்குச்

#318
சென்னி யமுனைத் தரங்கமும் தீம் புனல்
பொன்னி அறலும் புறங்கொடுப்பப் பின்னர்

#319
ஒழுங்காய சே அரிக் கண்ணூடு ஒட்டும் மையால்
மழுங்காது கைபோய் மதர்ப்பச் செழும் கழுத்து

#320
ஒன்று புனைந்தது ஒரு சங்கம் மாணிக்கம்
இன்று பயந்தது என விளங்க நின்று இலங்கும்

#321
உச்சக் கலன் அணியாத் தோள் இணைக்கு ஓர் இரண்டு
பச்சைப் பசும் காம்பு பாடு அழிய நிச்சம்

#322
அசும்பு பொலன் கச்சின் அற்றத்தே கொங்கை
விசும்பு குடிவாங்க வீங்கப் பசும் சுடர்க்

#323
கோல வயிறு உதரபந்தனக் கோள் நீங்கி
ஆலின் வளர் தளிரின் ஐது ஆகி மேல் ஓர்

#324
இழியும் ஒரு சாமரேகையும் உந்திச்
சுழியும் வெளி வந்து தோன்றக் கெழிய

#325
இசையின் கலாபாரம் யாப்புறா அல்குல்
திசையின் புடை அடையச் செல்ல மிசையே

#326
பொறை புரி கிம்புரி பூட்டாத் துடை தூசு
உறையின் மரகதம் ஒப்ப அறையும்

#327
சிலம்பு சுமவாத செந்தாமரை போய்
உலம்பு குரல் அஞ்சாது ஓடக் கலம் பல

#328
தாங்கி உலகம் தரிப்பத் தரி என்று
பாங்கியர் எம்மருங்கும் பாராட்டப் பூம் கேழ்

#329
உருவில் ஒளி போய் உலகு அடையக் கோப்பத்
தெருவில் எதிர்கொண்டு சென்றாள் பெருமாளும்

#330
கொற்றக் குடைக் கீழ் வட மேருக் குன்று அனைய
வெற்றிக் களி யானை மேல் வந்தான் பற்றி

#331
இருவரும் தம்மில் எதிரெதிர் நோக்க
ஒருவர் என வேட்கை ஒத்தார் குருசில்

#332
மறந்த கடல் கடைய வந்தாள் மேல் அன்பு
சிறந்த திரு உள்ளம் செல்லச் சிறந்தவள்

#333
ஆக நகத்து இருந்தாளாகத் திரு உள்ளக்
கோகனகத்தில் கொடு சென்றான் நாகு இள

#334
நவ்வி மட நோக்கான் ஞாலத்தை ஓர் அடியால்
வவ்வி இரு தோளில் வைத்த மால் செவ்வி

#335
முருகு கமழ முகந்துமுகந்து
பருகும் மட மகளைப் பாரா அருகு

#336
மடுத்து முயங்கி மயங்கிய தாயர்
எடுத்து மலரணை மேல் இட்டார் அடுத்து ஒருவர்

#337
நொய்யாத கற்பகப் பூமாலை கொண்டைக்கும்
நெய்யாத பொன் துகில் நீவிக்கும் செய்யாத

#338
தொங்கல் துளைக் கோவை அல்குற்கும் சூழ் கனகத்
துங்கப் பணி வலையம் தோளுக்கும் கொங்கைக்குப்

#339
பொன்னிப் புகாரின் பொலன் குழம்பும் வல்லத்தின்
கன்னிப் பனந்தோடு காதிற்கும் சென்னி

#340
அளிப்பக் கொணர்ந்தனம் யாம் அன்னமே என்று
தெளிப்பச் சிறிதே தெளிந்தாள் கிளி_கிளவி
** பேரிளம்பெண்

#341
மற்றொருத்தி செந்தாமரை மலர் மேல் என்னுடனே
செற்று ஒருத்தி வாழும் எனச் செறுவாள் சுற்றவும்

#342
தெட்டுத் தசும்பு அசும்பு தெங்கின் இளம்பாளை
மட்டுத் தமனிய வள்ளத்து விட்டு

#343
மறித்து வயிர மடல் ஒன்றின் வாக்கித்
தெறித்து ஞிமிறு ஓப்பிச் செவ்வி குறித்துக்கொண்டு

#344
ஏந்தி முகமன் இயம்பி இருந்து ஒரு
காந்தி மதிவதனி கைக் கொடுப்ப மாந்தி

#345
குதலை குழறிக் குயிற்கும் கிளிக்கும்
விதலை உலகில் விளைத்து நுதலை

#346
வியரால் அலங்கரியா வேந்தன் கொடுமை
அயரா வெளிவிடா அஞ்சாப் பெயரா

#347
அருகு இருந்த பாணனை நோக்க அவனும்
குருசில் வரு தமரம் கூறப் பரிபுரக்

#348
காலும் நிதம்பமும் கையும் திருக் கழுத்தும்
கோலும் மதாணிக் குலம் எல்லாம் மேலோன்

#349
குரகதம் ஏழும் முழுகிக் குளிப்ப
மரகத சோதி வயங்கப் புருவ

#350
இடை போய்க் குமிழின் மலர் வந்து இறங்கப்
புடை போய்க் கருவிளை பூப்ப இடையாக

#351
ஏகம் முருக்கு மலர இளம்பாளைப்
பூகம் மிடறு வரப் பொதிய போகப்

#352
பெரும்பெரும் தெங்கிளநீர் தாழ்ந்து பிறங்கப்
பரும் பெரும் காம்பு பணைப்ப விரும்பிய

#353
நறும் துணர் மாந்தளிர் வார்ந்து நளியக்
குறும் தொடிக் காந்தள் குலைப்பச் செறிந்து

#354
சலித்துத் தனி இளவஞ்சி தளரக்
கலித்துக் கதலி கவின ஒலித்தே

#355
அளிக்கும் சகோரமும் அன்னமும் மானும்
களிக்கும் மயூர கணமும் விளிக்கும்

#356
புறவும் தொடர்ந்து உடனே போத அவையே
பிறவும் இனம் என்று பெட்பச் சுறவுயர்த்தோன்

#357
காலை புகுந்து காப்பது ஒரு பசும் பொன்
சோலை என வந்து தோன்றினாள் ஞாலத்தோர்

#358
தெய்வப் பெருமாளும் சேவடி முன் குவித்துக்
கை வைத்து நின்றவளைக் கண்ணுற்றான் தையல்

#359
வெருவ முன் சூர் தடித்த வேளே நயக்கும்
பருவமும் மார்பில் பணைப்பும் புருவமும்

#360
செந்தாமரைக் கண்ணும் மா மேருவைச் சிறிய
பந்தாகக் கொள்ளும் பணைத் தோளும் உந்தியும்

#361
உய்ய இரு காதும் மூக்கும் உடுபதியை
நைய வெறிக்கும் நகை நிலவும் செய்ய

#362
பவளத் துவர் வாயும் பாதாம்புயமும்
கவளக் களிற்று எளிதில் கண்டு குவளைக்

#363
கரு நெடும் கண் களிப்ப உள்ளம் களிப்பப்
பரு நெடும் தோளும் பணைப்ப ஒரு நின்

#364
சிலம்புகள் ஓர் ஏழும் சென்றடைந்து நோலேன்
அலம்பு கடல் ஏழும் ஆடேன் வலம் புவனம்

#365
ஏழும் செலவு அயரேன் எம் கோவே நின் குடைக் கீழ்
வாழும் திரு எனக்கு வாய்க்குமே தாழி

#366
முடை தழுவு தோளும் முலையும் தழுவ
விடை தழுவு தாமரைக் கை வீரா கட கரியைக்

#367
கை தழுவிக் கோரத்தைக் கால் தழுவி நின் புலியை
மெய் தழுவிக்கொள்ள விடுவாயோ மொய் திரை சூழ்

#368
ஞாலம் மறிக்கவும் நாயக நின் புகல் வில்
கால உததி கலக்கவும் சால

#369
வருந்தா வகை வருந்த வாழி பெயரும்
பெருந்தேவியார்க்குப் பெறலாம் திருந்திய

#370
குந்தம் ஒசித்ததுவும் கொற்றத் திருத் தோளால்
வந்த விடை ஏழும் மாய்த்ததுவும் முந்துறக்

#371
கோவிய மாதர்க்கே உள்ளம் குறை கிடந்த
ஆவியே மாதாக அஞ்சுமே ஓவிய

#372
சேரன் சிலையினும் சீரிதே சென்று ஒசிய
மாரன் சிலையை வணக்காயால் சேரன்-தன்

#373
முன்றில் பனை தடிந்தாய் முட்டாது இரவு ஒறுக்கும்
அன்றில் பனை தடிதல் ஆகாதோ கன்றி

#374
மலைக்கும் செழியர் படைக் கடலை மாய்த்தாய்
அலைக்கும் கடல் மாய்த்து அருளாய் மலைத்தவர்-

#375
தங்கள் புகழ் நிலவை மாய்த்தாய் அரி மரபின்
திங்களின் தண் நிலவு தீராயால் பொங்கு ஒலி நீர்த்

#376
தெவ் முனை யாழ் தடிந்தாய் எங்கள் செவி கவரும்
எம் முனை யாழ் தடிந்தால் என் செய்யும் செம் மணியின்

#377
செம் சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின்
வெம் சோதி கண்டால் விலக்காயால் வெம் சமத்துக்

#378
காதி விடை பண்டு காடவன் முன் தடிந்தாய்
வீதி விடை தடிய வேண்டாவோ யாது-கொல்

#379
வன் பல்லவம் துகைத்த வாள் தானை இன்று இந்த
மென் பல்லவம் துகையா மேம்பாடு தன் பூம்

#380
கருப்புச் சிலை கொண்டு மோதும் கழுத்தில்
சுருப்பு நாண் புக்கு அழுந்தத் தூக்கும் நெருப்பு உமிழ்

#381
அப்புக் கழு ஏற்றும் ஆறாப் பெரும் கோப
வெப்புப் படுத்து எங்கள் மெய் உருக்கும் தப்பா

#382
உடல் பிளவோட ஒரு தேரிட்டு ஊரும்
அடல் மகர போசனம் ஆக்கும் விடு தூதால்

#383
அக் கால தண்டம் அகற்றி உலகு அளித்தாய்
இக் காம தண்டம் எளிது அன்றே மைக் கோல

#384
வண்ணா வளர்ந்த மகராலயம் மறந்த
கண்ணா அநங்கன் போர் காவாயேல் மண்ணுலகில்

#385
எப்படி ஆவார் இளம் பிடியார் என்றுஎன்று
மைப் படியும் கண்ணாள் வருந்தினாள் இப்படியே

#386
தையலார் பொன் தோகைச் சாயலார் கையகலா
மையலார் பேர் அலராய் மன்று ஏற வையம்

#387
பெருகு உடையாம் நீர் ஏழும் பார் ஏழும் பேணும்
ஒரு குடையான் போந்தான் உலா.
** வெண்பா

#388
என்று இனி மீள்வது அரிதின் இரணியனை
அன்று இரு கூறாய் அடர்த்து அருளிக் கன்றுடனே
ஆவின் பின் போன அனகன் அனபாயன்
மாவின் பின் போன மனம்.
** கட்டளைக் கலித்துறை

#389
ஆடும் கடை மணி நா அசையாமல் அகிலம் எல்லாம்
நீடும் குடையில் தரித்த பிரான் என்பர் நித்தநித்தம்
பாடும் கவிப் பெருமாள் ஒட்டக்கூத்தன் பதாம்புயத்தைச்
சூடும் குலோத்துங்கசோழன் என்றே எமைச் சொல்லுவரே.
** குலோத்துங்க சோழனுலா முற்றிற்று
** கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா

@3 இராசராச சோழன் உலா

#1
புயல்_வண்ணன் பொன் பதுமப் போதில் புவனச்
செயல் வண்ணம் காட்டிய சேயோன் உயிர் அனைத்தும்

#2
காட்டும் பதின்மரினும் காசிபன் ஏழ் புரவி
பூட்டும் தனி ஆழிப் பொன் தேரோன் ஓட்டி

#3
அற ஆழி மைந்தன் மேல் ஊர்ந்தோன் அவனி
புற ஆழி முட்டப் புரந்தோன் மறையோற்குப்

#4
பூவின் கிழத்தியையும் பூமிக் கிழத்தியையும்
நாவின் பழுது அஞ்சி நல்கினோன் வாவியில்

#5
புக்க துறையில் பகைப் புலியும் புல்வாயும்
ஒக்க ஒருகாலத்து ஊட்டினோன் புக்கால்

#6
மறான் நிறை என்று சரணடைந்த வஞ்சப்
புறா நிறை புக்க புகழோன் அறா நீர்த்

#7
தரங்கக் கடல் ஏழும் தன் பெயரே ஆகத்
துரங்கப் பசு நாடித் தொட்டோன் வரம் கொள்

#8
சுரநதி தன் பெயர் ஆகச் சுருதி
வரன் அதி சாபத்தை மாய்த்தோன் தரணிபர்

#9
மல்லல் மரபை ரகுவின் மரபு என்று
சொல்ல உலகு அளித்த தொல்லையோன் செல்லலால்

#10
வந்து இரந்த வானவர்க்குத் தானவர்-தம் போர் மாய
இந்திரனை ஏறு ஆக்கி ஏறினான் முந்தும்

#11
ஒரு தேரால் ஐயிரண்டு தேர் ஓட்டி உம்பர்
வரு தேரால் வான் பகையை மாய்த்தோன் பொருது

#12
சிலையால் வழிபடு தெள் திரையைப் பண்டு
மலையால் வழிபடவைத்தோன் நிலையாமே

#13
வாங்கும் திருக் கொற்ற வாள் ஒன்றின் வாய் வாய்ப்பத்
தூங்கும் புரிசை துணிந்த கோன் வீங்கு

#14
குடகடற்குச் சார்பு குணகடலே ஆக்கும்
வடகடற்கும் தென்கடற்கும் மன்னன் முடுகிக்

#15
கரை எறிந்த பொன்னி கடல் ஏழும் கோப்ப
வரை எறிந்த மன்னர்க்கு_மன்னன் தரையின்

#16
பெரு மகளைத் தீவேட்ட பின்னரும் சேடன்
திரு மகளைக் கல்யாணம்செய்தோன் பர நிருபர்

#17
கல் மலை மார்பும் கடவுள் வட மேருப்
பொன் மலை மார்பும் புலி பொறித்தோன் சொல் மலைய

#18
நல்லவன் பொய்கை களவழிநாற்பதுக்கு
வில்லவன் கால் தளையை விட்ட கோன் புல்லார்

#19
தொழும்பு உடைய ஆகத்துத் தொண்ணூறும் ஆறும்
தழும்பு உடைய சண்டப்ரசண்டன் எழும் பகல்

#20
ஈழம் எழுநூற்றுக் காதமும் சென்று எறிந்து
வேழம் திறைகொண்டு மீண்ட கோன் சூழி

#21
மத கயத்தால் ஈரொன்பது சுரமும் மட்டித்து
உதகையைத் தீத்த உரவோன் முது வானக்

#22
கங்கையும் நன்மதையும் கௌதமியும் காவிரியும்
மங்கையுடன் ஆடும் மரபினோன் பொங்கி

#23
அலை வீசி வேலை அனைத்தினும் போய்த் தெவ் மீன்
வலை வீசி வாரிய மன்னன் கொலை யானை

#24
பப்பத்து ஒரு பசிப் பேய் பற்ற ஒரு பரணி
கொப்பத்து ஒரு களிற்றால் கொண்ட கோன் ஒப்பு ஒருவர்

#25
பாட அரிய பரணி பகடு ஒன்றின்
கூடலசங்கமத்துக் கொண்ட கோன் நாடும்

#26
கலகமும் சுங்கமும் காய் கலியும் மாற்றி
உலகை முன் காத்த உரவோன் பலவும்

#27
தரணி ஒரு கவிகை தங்கக் கலிங்கப்
பரணி புனைந்த பருதி முரண்_இல்

#28
புரந்தரன் நேமி பொருவும் அகில
துரந்தரன் விக்கிரமசோழன் பரந்தபன் என்று

#29
ஆய பெயர் கொண்டு அகிலாண்டமும் புரந்து
சேய பெரிய திருக் குலத்து நாயகன்

#30
சிற்றம்பலமும் திருப் பெரும் பேரம்பலமும்
மற்றும் பலபல மண்டபமும் சுற்றிய

#31
மாளிகையும் பீடிகையும் மாடமும் கோபுரமும்
சூளிகையும் எத்தெருவும் தோரணமும் ஆளுடையான்

#32
கோயில் திருக்காமக் கோட்டமும் அக் கோயில்
வாயில் திருச்சுற்றுமாளிகையும் தூய செம்

#33
பொன்னில் குயிற்றிப் புறம்பில் குறும்பு அனைத்தும்
முன்னில் கடல் அகழின் மூழ்குவித்த சென்னி

#34
திருமகன் சீராசராசன் கதிரோன்
மருமகன் ஆகி மறித்தும் திரு நெடுமால்

#35
ஆதிப் பிறவி அனைத்தினும் உம்பர்க்குப்
பாதிப் பகை தடிந்து பாதிக்கு மேதினியில்

#36
செந்தாமரையாள் திரு மார்பில் வீற்றிருக்க
வந்தான் மனு வம்ச மா மேரு முந்தி

#37
உடுத்த திகிரிப் பதினால் உலகும்
அடுத்த வர ராசராசன் அடல் திகிரிக்

#38
கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும்
தண்ணென் கவிகைச் சனநாதன் எண்ணும்

#39
தவன குல திலகன் தன் பெருந்தேவி
புவனம் முழுதுடைய பூவை அவனியில்

#40
எண் பெரு மாதிரத்தும் ஏறும் உடன் ஆணைப்
பெண்பெருமாள் அந்தப்புரப்பெருமாள் மண் பரவ

#41
ஓகை விளைக்கும் உபய குல ரத்னத்
தோகையுடனே துயில் எழுந்து ஆகிய

#42
மூர்த்தத்து அனந்த முரசு ஆர்ப்பக் காவிரித்
தீர்த்தத்து அபிடேகம்செய்து அருளிப் போர்த் திகிரி

#43
மேலைக் குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும்
காலைக் கடவ கடன்கழித்து மூலப்

#44
பெரும் பேர் அணி தம் பிதாமகன் காலை
வரும் பேர் அணி என்ன வாய்ப்ப நிரம்பப்

#45
பவளச் சடையோன் பணித்தபடியே
தவள த்ரிபுண்டரம் சாத்திக் குவளைப் பூம்

#46
கார்க் கோலம் ஆடியில் காண்பான் மகன் காமன்
போர்க்கோலம் காண்பானே போல் கொண்டு பார்த்திபர்-தம்

#47
தொல்லைத் திருமரபுக்கு எல்லாம் தொழு குலமாம்
தில்லைத் திருநடனம் சிந்தித்து வல்லவர்

#48
சூழச் சுருதி அனைத்தும் தொகுத்து எடுப்ப
வேழப் பெருமானை மேல் கொண்டு வாழி

#49
அரச வலம்புரி ஆர்ப்ப அதன் பின்
முரசு ஒரு மூன்று முழங்கத் திரையின்

#50
சுடர் பொன் கவரி எழப் பொங்கர்த் தொங்கல்
கடவுள் கவிகை கவிப்ப புடவியின்

#51
மீட்டும் குறை அவுணர் போர் கருதி விண்ணவர்கோன்
தீட்டும் கொடிப்புலியாய்ச் சேவிப்ப வாள் தானைத்

#52
தென்னரும் சேரலரும் சிங்களரும் கொங்கணத்து
மன்னரும் மாளவரும் மாகதரும் பின்னரும்

#53
காந்தாரர் காலிங்கர் கௌசலர் உள்ளிட்ட
பூம் தார் நரபாலர் முன் போத வேந்தர்

#54
பொருவாத பூபால கோபாலன் என்னும்
திருநாமம் நின்று சிறக்க வரும் நாளில்

#55
தென்மாடக்கூடல் சிறைவிட்ட கார் புகார்ப்
பொன் மாட வீதிப் பொடி அடக்கத் தன் மீது

#56
கல்மாரி பெய்யும் பிழையால் கடவுளர்கோன்
பொன்மாரி பெய்யும் புயல் ஏவப் பின்னரும்

#57
காமாரி சேய் என்றே காக்கும் எழுவரினும்
பூமாரி கௌமாரி முன் பொழிய யாமம் தீர்

#58
காலை வெயில் ஒதுங்கக் கார்களால் கார்களும் போய்
மாலை வெயிலால் மறித்து ஒதுங்கக் கோலப்

#59
பெரும் குற்றுடைவாள் அப் பேரொளி மேரு
மருங்கின் பெரும் புலி மான நெருங்கிய

#60
கோளின் ஒழுங்கு மழுங்கக் குல ரத்ன
ஓளி மகர ஒளி எறிப்பத் தோளில்

#61
இரு பொறை தீரும் இரு பாப்பரசும்
இரு தொடி ஆய-கொல் என்ன வர ரத்னம்

#62
தாமே குயின்று தடம் கோளும் நாளும் சூழ்
மா மேரு என்ன முடி வயங்கப் பூ மேல்

#63
புடை நிலவும் தங்கள் புகழ் நிலவின் மேலே
குடை நிலவும் சக்ரகிரி கோல உடைய தன்

#64
கை வைத்து அருளாமே தாமே கடன்கழிக்கும்
தெய்வப் படை ஐந்தும் சேவிப்பப் பெய் கணைத்

#65
தூணிப் புறத்தோடும் தோளில் சிலையோடும்
பூணித்து அனங்கவேள் முன் போத மாணிக்கக்

#66
கோவையான் முக்குவட்டுக் குன்றாய் ஒரு திருப்
பாவையால் கொல்லிப் பனி வரையாய் ஓவாது

#67
செய்ய தமிழ் முழங்கத் தெய்வப் பொதியிலாய்
வெய்ய புலி முழங்க மேருவாய் வையகம் சூழ்

#68
கோரம் உடன் போத நேமிப் பொலன் குன்றாய்
வார் கவரியால் இமய மால் வரையாய் வேரி

#69
விடும் குழை ஆர் சென்னி மிலைச்சிய சென்னி
கொடும் குழையார் வீதி குறுக நடுங்காமல்
** குழாங்கள்

#70
விண் நாடு காத்து முசுகுந்தன் மீண்ட நாள்
மண் நாடு கண்ட மடந்தையரும் நண்ணார் மேல்

#71
சோழன் பரி சார்ந்தே சூழ வரும் சக்ர
வாள கிரி அரமங்கையரும் தோள் இணையால்

#72
கோழியின் சோழ குலத்து ஒருவன் முன் கடைந்த
ஆழியின் கொண்ட அரம்பையரும் ஊழியின்

#73
சீத்த வரையின் திருக் கொற்ற வில் ஒன்றால்
வாய்த்த வரையரமாதரும் போய்த் தனியே

#74
கோதண்டம் கொண்டு இரு சேடியுடன் கொண்ட
வேதண்டலோக விமலையரும் காதலால்

#75
தந்த பணிபதி-தன் மகளைச் சேவித்து
வந்த கடவுள் மடந்தையரும் பந்து ஆடும்

#76
மேரு வரையில் புலி பொறித்து மீண்ட நாள்
வாரும் வரையரமாதரும் வீர வேள்

#77
வாங்கு அயிலின் கூரிய கண்ணார் ஒரு வளவன்
தூங்கெயிலில் கைக்கொண்ட தோகையரும் பாங்கின்

#78
நிதியோடும் கூட நிதியோன் அளகைப்
பதியோடும் கொண்டார் பலரும் முதலாய

#79
சாயல் அரமகளிர் தந்தந் திரு மரபில்
கோயில் உரிமைக் குழாம் நெருங்கி வாயிலும்

#80
மாளிகையும் சாலையும் ஆலயமும் மண்டபமும்
சூளிகையும் எம்மருங்கும் தோரணமும் சாளரமும்

#81
தெற்றியும் மாடமும் ஆடரங்கும் செய்குன்றும்
சுற்றிய பாங்கரும் தோன்றாமே பற்றி

#82
மயங்கி மறுகில் பிணங்கி வணங்கி
உயங்கி ஒருவர்க்கொருவர் தயங்கு இழையீர்
** குழாங்களின் கூற்று

#83
தன் கோடி ஓர் இரண்டு கொண்டு சதகோடி
கல் கோடி செற்ற சிலை காணீர் முன் கோலி

#84
வட்ட மகோததி வேவ ஒரு வாளி
விட்ட திருக் கொற்ற வில் காணீர் வெட்டிச்

#85
சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழிவிட்ட வாள் காண வாரீர் ஒழிய

#86
மதி எறிந்து வல் ஏற்று வான் எறிந்து தூங்கும்
பதி எறிந்த கொற்ற வாள் பாரீர் உதியர்

#87
இடப்புண்ட பேர் இஞ்சி வஞ்சியில் இட்ட
கடப்ப முது முரசம் காணீர் கொடுப்பத்

#88
தரை கொண்ட வேற்று அரசர் தம் சென்னிப் பொன்னிக்
கரை கொண்ட போர் முரசம் காணீர் சரதப்

#89
பவித்ர விசயப் படைப் பரசுராமன்
கவித்த அபிடேகம் காணீர் தவித்து உலகில்

#90
மூவெழு கால் எக்கோக்களையும் முடித்து அவனி
மூவெழு கால் கொண்ட முடி பாரீர் தாவி

#91
வரப்பு மலை சூழ்வர ஆயிரம் கண்
பரப்பும் ஒரு வேங்கை பாரீர் புரக்க நின்று

#92
ஊடு அம்பரம் அடங்க ஓங்கி உயர் அண்ட
கூடம் பொருவும் குடை பாரீர் கூடல்

#93
பெரும்பெருமாள் எவ்வேந்தும் முன் போதப் பின்பு
வரும் பொருமாள் வந்தனன் வாரீர் இரும் கடல்

#94
தோன்று அருக்கமண்டலமும் தோற்க உலகங்கள்
மூன்றுக்கும் சூடி முடி பாரீர் தோன்ற

#95
அணைத்து அருகு ஆயிரமாயிரமாகப்
பணைத்த பணி வலயம் பாரீர் அணைக்-கண்

#96
சிரித்த சுரேசனை வென்று ஒரு தென்னன்
பரித்த மணி ஆரம் பாரீர் தரித்து அருள

#97
வேண்டிய நாளின் முனிவுண்டு வெட்டுண்ட
பாண்டியன் கட்டுவடம் பாரீர் மீண்டும்

#98
திருந்து மதனன் திருத் தாதை செவ்வி
இருந்த படி பாரீர் என்பார் பெரும் தேவர்

#99
முக் கொடி முப்பத்துமூவர்க்கு முன் உயர்த்த
எக்கொடியும் முன்னர் எடுத்துளவால் அக் கொடியால்

#100
தொல் ஆரணம் அனைத்தும் சொல்லும் சுர அரசர்
எல்லாரும் காணும் இவன் என்பார் புல்லிய

#101
நீர்ப்பூ புதல்பூ முடி அன்றி நேராதார்
போர்ப்பூ முடி தடிந்து போக்கிய பின் போர்ப்பூவில்

#102
மேதகு கொற்றவைக்கு வேந்தர் பிரான் உவந்த
தாதகி ஒன்றுமே சார்பு என்பார் மீது

#103
பரந்த அவுணர் சிறைப்படுமது எண்ணி
இரந்தன கொண்டன என்று புரந்து

#104
தனிச் சேவகம் பூமி தன்னதே ஆக
இனிச் சேவடி விடாள் என்பார் பனிச் சாரல்

#105
மண்டு மலையால் வருந்தா வகை வருந்திப்
பண்டு கலக்கிய பாற்கடலுள் கொண்டது ஓர்

#106
செம் கோகனகை திருமார்பில் அன்றியே
எங்கோ இருப்பாள் இனி என்பார் நங்காய்

#107
திருப் பதுமாபதி இத் திருமார்பில்
இருப்பது காட்டு-மின் என்பார் சிரித்து எதிரே

#108
அம் கண் கமலை அமலன் பெருந்தேவி
நம் கண் புலனாயின் நன்று என்பார் நங்கைமீர்

#109
கண் ஆகும் தாமரையும் கை தொழுதேம் எம்மறையும்
பண் ஆகும் செந்தாமரை பணிந்தேம் வண்ணத்

#110
தொடித் தாமரையும் தொழுதனம் நாபிக்
கடித் தாமரை தொழுவேம் காட்டீர் பிடித்து என்ன

#111
அத் தாமரை தன் அடித் தாமரைக்கு அன்றி
மைத் தாமரைக்கு எளிதோ மற்று என்பார் உய்த்தால்

#112
ஒரு பெரும் தாதகி தோய் சுரும்பை ஓட்டற்கு
இரு பெரும் சாமரையும் என்பார் அருவி

#113
அருகு எய்தவொட்டா அயிராபதத்தின்
இரு கன்ன சாமரையும் என்பார் தெருவத்துத்

#114
தங்களின் மாறாடி உள்ளம் தடுமாறித்
திங்கள் நுதலார் தெருமரலும் அங்கு அவரில்
** பேதை

#115
பேதைக் குழாத்து ஒரு பேதை சில பழம்
காதல் குழாத்தோர்-தம் கையடையாள் மீது

#116
பிறந்து அணிய கிள்ளை பெறாத் தாயர் கொங்கை
மறந்து அணிய செவ்வி மட மான் புறம் தணியத்

#117
தோகை தொடா மஞ்ஞை தோற்றத்தால் சுற்றத்தார்க்கு
ஓகை விளைக்கும் ஒரு கரும்பு பாகைத்

#118
தொடை போய முல்லைத் தொடையலே போல
இடை போய தூய எயிற்றாள் உடையோன்

#119
செறிந்து விடாத திருத்தோற்றம் முற்றும்
அறிந்து பிறந்த அறிவோ நெறிந்த குழல்

#120
எம் பாவை எம் கொல்லிப் பாவை எனப் பாடும்
அம்பாவை பாடும் படி அறிவாள் உம்பர்

#121
வெருவக் கரையை மிகும் பொன்னி அன்றிப்
பருவத்து வேறு படியாள் உருவக்

#122
குறைவனை என்று எழுதும் கோலத்து ஞாலத்து
இறைவனை அல்லால் எழுதாள் இறைவன்

#123
முழங்கு ஏழ் கடல் கொடுத்த முத்து ஏழும் அல்லால்
கழங்கு ஏழும் ஆடக் கருதாள் வழங்கிய

#124
முற்றில் எடுத்துக் கொழித்து முழு முத்தால்
சிற்றில் இழைக்கின்ற செவ்விக்-கண் சுற்றும்

#125
பனி நீங்கத் தோன்றும் பகலவன் போல் வையம்
துனி நீங்கத் தோன்றிய தோன்றல் முனியும்

#126
பொறை விட்டு எயில் விட்டுப் பொய்கை கவிக்குச்
சிறை விட்ட சோளேந்த்ர சிங்கம் நறை விட்ட

#127
அம் தாமச் செங்கழுநீர் மார்பன் அழகிய
செந்தாமரைக் கண் திரு நெடுமால் வந்தானை

#128
ஓகையர் ஆகி உலப்பு_இல் பல கோடித்
தோகையர் ஓடத் தொடர்ந்து ஓடித் தாகம்

#129
தணியத் தணியத் தமரும் பிறரும்
பணியப் பணியப் பணிந்தாள் மணி மார்பில்

#130
ஆரம் தான் கண்டாள் அயிராபதம் தொழுதாள்
கோரம் தெரியவும் கும்பிட்டாள் வீரன்

#131
படாகைப் பெரும் புலியும் பார்த்து ஒழிந்தாள் அண்ட
கடாகத்து அதிர் முரசும் கண்டாள் அடாதனவும்

#132
சொல்லி அறியாது ஒழிந்தாள் சுருப்பு நாண்
வில்லி அறியாது விட்டதே நல்லார் சூழ்
** பெதும்பை

#133
மற்றும் ஒருத்தி வலம்புரி ஆயிரம்
சுற்றும் சலஞ்சலம் போல் தோன்றுவாள் கற்று உடன்

#134
அன்னம் நடக்க நடந்தாள் அரும் கிள்ளை
பின்னர் உடன் பேசப் பேசினாள் இன் இசை யாழ்

#135
பாட அதனுடனே பாடினாள் பைம் தோகை
ஆட அதனுடனே ஆடினாள் கூடிய

#136
நல் இள மான் நோக்க நோக்கினாள் நாள் நிரம்பி
முல்லை முகிழ்க்க நகை முகிழ்த்தாள் கொல்லும்

#137
மழ களிற்றின் கோடு எழுச்சி என்றும் அரவின்
குழவி எயிறு எழுச்சி என்றும் பழகி

#138
எறியும் மழை எழுச்சி என்றும் உலகம்
அறியும் முலை எழுச்சி அன்னம் செறியும்

#139
வரை ஏழில் உள்ள வயிரமும் வாங்கும்
திரை ஏழின் முத்தின் திரளும் தரை ஏழின்

#140
பொன்னும் பிலன் ஏழில் போகா இருள் போக
மின்னும் சுடிகை வெயில் மணியும் பின்னும்

#141
பொழில் ஏழில் போதும் புனையப் புனைவாட்கு
எழில் ஏறும் நாளையே என்னாக் கழிய

#142
உழப்போம் இனி என்று உடல் உள்ள போழ்தே
எழப் போக எண்ணும் இடையாள் மழைத்துப்

#143
புடை போய் அளகம் பொதுக்குவதன் முன்னே
கடை போய் உலகு அளக்கும் கண்ணாள் உடைய தன்

#144
சேரிச் சிறுசோறும் சிற்றிலும் போய்ச் சில்லணி போய்ப்
பேரில் பெருஞ்சோற்றுப் பேரணியாள் ஓரையில்

#145
தன் ஆயம் நிற்பத் தனி நாயகன் கொடுத்த
மின் ஆயம் சேவிப்ப வீற்றிருப்பாள் மென் மலர்

#146
மேய சிறு முல்லைப் பந்தர் விட எடுக்கும்
பாய பரு முத்தின் பந்தராள் நாயக

#147
உச்சியில் கொண்டை முடிப்பின் உலகுடையோன்
முச்சியில் சூட்டும் முடிக்கு உரியாள் நிச்சமும்

#148
நல் உயிர்ப் பாவை துணை பெற நாயகன்
கொல்லியின் பாவை கொள விருப்பாள் மெல் இயல்

#149
பாங்கிக்கு நம் கோமான் விந்தைப் பசும் கிளியை
வாங்கித்தரப் போய் வணங்கு என்பாள் ஆங்கு ஒருத்தி

#150
மாயமான் வேண்ட மறாதானை வான் மதியின்
மேய மான் வேண்டி விடப் பெறுவாள் சேய ஒளி

#151
தென்பால் இலங்கை வாழ் தெய்வ மணி பணிப்பீர்
என் பாவை பூண இனிது என்பாள் அன்பால்

#152
உயிர்த் துணைப் பாங்கி ஒரு நோன்பு உணர்த்த
எயில் புறத்து எல்லாரும் சூழ அயில் படை

#153
வீரனை எய்த வியன் காவில் சென்று எய்தி
மாரனை நோக்கி வழிபட மாரன்

#154
படி_இல் கடவுள் பணை முழங்க வென்றிக்
கொடியில் மகரம் குமுற நெடிய

#155
அலகு_இல் அசோகம் நிழற்ற அடைய
உலகில் மதுகரம் ஊதக் கலகித்து

#156
அலங்கல் அடவிக் குயில் குலம் ஆர்ப்ப
விலங்கல் மலயக்கால் வீசக் கலந்து எழும்

#157
ஆவி அகிலொடு நீரோடு அரமகளிர்
தூவிய தண் நறும் சுண்ணமும் காவில்

#158
விடவிட வந்து உயிர் மீது அடுத்துப் போன
வடிவும் பழம்படியே வாய்ப்பக் கொடி_இடை

#159
எண்ணிய எண்ணம் முடிப்ப அவள் எய்தும்
புண்ணியம் போலப் பொழில் புகுந்தான் அண்ணல்

#160
சரம் போலும் கண்ணி-தனக்கு அனங்கன் தந்த
வரம் போல் வள மறுகில் வந்தான் வரும் போதில்

#161
ஏன்று மதனன் இயம் இயம்பவே அனகன்
மூன்று முரசும் முழங்கின தோன்றாத

#162
வாரிக் களிறு முழங்கவே மானதன்
மூரிக் களிறும் முழங்கியது வேரித் தார்

#163
கற்கும் அசோகம் நிழற்றவே பார் கவித்து
நிற்கும் கவிகை நிழற்றியது முற்கொண்டு

#164
மற்றை அலகு_இல் மதுகரம் ஊதவே
ஒற்றை வலம்புரி ஊதியது முற்றாத

#165
சொல் குதலைக் கோகுலங்கள் ஆர்க்கவே சோளேசன்
அற்க மணிக் காகளங்கள் ஆர்த்தன தெற்கு எழுந்த

#166
மல்லல் மலயக்கால் வீசவே மானதன்
மெல்லென் கவரிக் கால் வீசியது மெல்_இயலும்

#167
காமன் பெரு நோன்பு கைவந்தது என்று எதிரே
கோமைந்தன் வேழம் குறுகினாள் கோமகனும்

#168
மல்கும் உவகைக் கலுழி வரவரப்
பில்கும் மதர்வைப் பெரும் பரப்பு அல்குலும்

#169
கொங்கைப் புதுவரவும் தோளும் குறை நிரம்ப
மங்கைப் பருவத்தை வாங்கினாள் மங்கை

#170
திருக் கொள்ளும் மார்பற்குக் காமவேள் செவ்வேள்
வெருக்கொள்ளும் செவ்வி விளைத்தாள் பெருக்க

#171
ஒருவர் ஒருவர்க்கு உருகியுருகி
இருவரும் ஈடு அழிய நோக்கி வரு காமன்

#172
செம் சாயல் வல்லியையும் செந்தாமரைத் தடம் கண்
மஞ்சாய கோல மணாளனையும் அஞ்சாதே

#173
கொய்யும் பகழி கரும்பில் சுரும்பில் கோத்து
எய்யும் தரமே எழப் போனான் தையல்
** மங்கை

#174
ஒருத்தி தரளம் இரு நிரை கொண்டு ஒப்பித்து
இருத்தி அனைய எயிற்றாள் கருத்தில்

#175
நிலையில் சிறந்த நிகர் இலா மேரு
மலையில் பிறந்த வயிரம் அலையில்

#176
பழக்கச் சலஞ்சலம் பாற்கடலே போல
முழக்கக் கருவுயிர்த்த முத்தம் தொழத் தகும்

#177
முன்னை உலகம் முழுதும் தரும் உரக
மன்னன் அபிடேக மாணிக்கம் முன்னவன்

#178
பாற்கடல் நீங்கும் நாள் நீங்கப் பழம்படியே
நால் கடல் நாயகனை நண்ணுவாள் மேல் கவின

#179
பண்டு கடல் கடைந்தும் பார் எடுத்தும் வில் இறுத்தும்
கொண்ட துணைவியரும் கூசுவாள் புண்டரிகத்து

#180
ஆடும் பொழுதினும் அன்னப் பெடை அயிர்ப்பப்
பாடும் மழலைப் பரிபுரத்தாள் நீடிய

#181
தூசுகள் வெள்ளென்று தூயன சேயன
கோசிகம் ஆக்கும் குறங்கினாள் கூசிப்

#182
பணியும் அரசுப் பணிச் சுடிகையே கோத்து
அணியும் அரைப்பட்டிகையாள் துணியும் கால்

#183
அற்று உண்டு இலது என்றும் அ மருங்குல் இன்று எமக்குப்
பற்று உண்டு எனும் உதரபந்தனத்தாள் கொற்றவன்

#184
சங்கநிதி முத்தத் தாமத்தாள் பத்மநிதி
துங்க நவரத்னத் தோள்வளையாள் புங்கம்

#185
தொடுக்கும் மலரோன் சுறவுக்கு உறவு
கொடுக்கும் மகரக் குழையாள் அடுத்துப்

#186
பணி தந்து அலகு_இல் பராவு எடுத்துத் சிந்தா
மணி தந்த சூளாமணியாள் அணியே

#187
பரவி விறலியரும் பாணரும் தன் சூழ்ந்து
இரவி புகார் பாடும் எல்லை வரவரக்

#188
கொங்கைக்கும் தோள் இணைக்கும் ஆற்றாக் கொடி மருங்குல்
நங்கைக்கு வந்து ஒருத்தி நாயகியே கங்கைத்

#189
துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு
இறைவன் திருப்பவனி என்றாள் பிறை_நுதலும்

#190
வேனிற்கு அணிய குயில் போன்றும் வீழ் தாரை
வானிற்கு அணிய மயில் போன்றும் தானே

#191
வரவே நினையும் மனக் களியால் இற்றை
இரவே நமக்கு இடையூறு என்றாள் இரவில்

#192
செயிர்க் கரங்கள் வேண்டாள் திருக்குலத்து வெய்யோன்
வெயில் கரங்கள் ஊடாட வேண்டும் உயிர்க் கொலை சூழ்

#193
தென் மலயத் தென்றலை ஓட்டிப் புலி இருந்த
பொன் மலைய வாடாய் புகுது என்னும் முன் மலைந்த

#194
கார்க் கடல் வாய் அடங்க நாயகன் கண்வளர்ந்த
பாற்கடல் வாராய் பரந்து என்னும் மேல் பரந்து

#195
கார் பாடும் புள் வாய்க் கடுப் பெய்து அமுது இறைவன்
பேர் பாடும் புள் வாயில் பெய்க என்னும் ஈர் குரல்

#196
அன்றிற்கு ஒழிய மகன்றிற்கே ஆக்கும் இ
முன்றில் பனையும் என மொழியும் இன்று இரவை

#197
ஊழிக் குயில் காய்ந்து ஒரு புலரி கூவிய
கோழிக்கே சோலை கொடீர் என்னும் வாழிய

#198
பள்ளி எழுச்சி பவனி எழுச்சி தரும்
வெள்ளி எழுச்சி என விளம்பும் நள்ளிருள்

#199
கங்குல் கடற்கு எல்லை இவ்வாறு கண்டு உவந்த
மங்கைப் பருவத்து வாள்_நுதலும் பொங்கு ஒலி நீர்

#200
வையகம் காவலற்குப் பெய்யும் மலர்மழைக்குக்
கொய் பொழில் சென்று குறுகினாள் செய்ய

#201
கொடும் குழை மின்னக் குயில் கொழுதக் கோத
விடும் குழை தேமாவின் மின்ன நெடும் குழை

#202
வல்லிக் கொடியும் முறுவலிப்ப வந்து எதிர்
முல்லைக் கொடியும் முறுவலிப்ப மெல்_இயல்

#203
பாந்தளும் தோற்கும் பகட்டு அல்குல் கை மலரக்
காந்தளும் நின்று எதிர் கை மலரப் போந்தார்

#204
பரவும் மரப்பாவை கொள்ளப் பயந்த
குரவும் மரப் பாவை கொள்ளப் புரி குழல்

#205
சோலையின் மான்மதம் சூழ்வர ஏழிலைம்
பாலையின் மான் மதம் பாரிப்பச் சோலையின்

#206
வாங்கும் புது மது வாள்_நுதல் கொப்புளிப்பக்
கோங்கு மது எதிர் கொப்புளிப்ப ஆங்குத்

#207
திரு அஞ்சு கோலத்தாள் செவ்வியால் எல்லாம்
பருவம்செய் சோலை பயப்பப் பெரு வஞ்சி

#208
கொய்தன கொய்தன யாவும் பல கூறு
செய்தனர் செய்தனர் பின் செல்லக் கொய்யாத

#209
பொன் மலர் ஆயம் பொழியப் பொழில் கொண்ட
மென் மலர் கொண்டு வெளிப்பட்டாள் மன்னனும்

#210
எப்போதில் போதும் ஒருபோதில் ஏந்து_இழை
கைப் போதில் பெய்தன கண்டு அருளா அப்போதே

#211
செம் கை தடவந்தும் சீறடி தீண்டியும்
கொங்கை சுணங்கு எறிந்தும் கொப்பளித்தும் மங்கை

#212
பரிசில் உருவம் பயந்தன என்று
குரிசில் எதிர் கவர்ந்து கொண்டான் தெரிவு அரிய

#213
தூசும் துகிலும் தொடியும் கடி தடம் சூழ்
காசும் பல கால் கவர்ந்ததற்குக் கூசி

#214
இலகும் சுடர் முடியும் யானையும் ஈரேழ்
உலகும் கொடுப்பானே ஒப்பப் பல கால்

#215
கொடாத திரு நோக்கம் முற்றும் கொடுத்து
விடாது களிறு அகல விட்டான் அடாதான்-பால்
** மடந்தை

#216
ஈர் அடியால் மூ உலகும் கொண்டானை எப்பிறப்பும்
ஓர் அடியும் நீங்காதாள் ஓர் அணங்கு சீர் உடைய

#217
மானும் கலையும் வளர உடன் வளர்ந்து
தானும் மதியம் எனத் தகுவாள் பால் நின்று

#218
அனலும் குழை மகரம் அஞ்சப் புடை போய்க்
கனலும் கயல் அனைய கண்ணாள் மினலால்

#219
இருள் உடைய மேல் நின்று எறி சுடிகைப் பாப்புச்
சுருளுடைய வீங்கிய தோளாள் அருளொடும்

#220
தம் புறம் சூழ் போதத் தாயரே வீக்கிய
வம்பு அற வீங்கும் வன முலையாள் பைம்பொனின்

#221
பண் நிறக் காஞ்சியும் கட்டிய பட்டிகையும்
கண் இறப் போய கடி தடத்தாள் தண் நறும் தார்

#222
மின் மணி மோலியான் வீதி வரவேற்றுத்
தன் மணி மாளிகைத் தாழ்வரையில் பொன் உருவில்

#223
தைத்துத் துகிரும் மரகதமும் தாறாக
வைத்துக் கமுக வளஞ்செய்து முத்தின்

#224
பொலன் தோரணம் நிரைத்துப் பொன் அடுத்த மேக
தலம் தோய் விசால தலத்து மலர்ந்த பூம்

#225
கற்ப தரு நிரைக் கற்ப லதை படர்ந்து
பொற்ப மிசை அடுத்த பூம்பந்தர் நிற்பப்

#226
புகர் அற்ற ரத்ன விதானம் மேல் போக்கி
நகை வச்ர மாலையே நாற்றி பகல் விளங்கா

#227
மை விளக்கு வையாதே மாணிக்க வர்க்கமே
எவ்விளக்குமாக எதிர் எடுத்து நொவ்விய

#228
பூ நறும் சுண்ணப்பொடி அடங்க வீசிய
நான நறு நீர்த் தளி நளிய மேல்நிலையில்

#229
கங்கையின் நீர் முகந்தோ காவிரியின் நீர் கொணர்ந்தோ
கொங்கை இணை நீர்க் குடம் நிரைத்து எங்கும்

#230
அசும்பு பொலன் கொடியால் அவ் எல்லை உள்ள
விசும்பு தவிர விலக்கிப் பசும்பொன் யாழ்

#231
முட்ட முயன்ற விறலியர் முன் இருப்ப
இட்ட தவிசின் மிசை இருந்து பட்டினம் சூழ்

#232
பொன்னிக்கும் கோதாவிரிக்கும் பொருநைக்கும்
கன்னிக்கும் கங்கைக்கும் காவலனைச் சென்னியை

#233
தானைப் பெருமானை நல்ல சகோடம் கொண்டு
யானைப் பெருமானை ஏத்தெடுப்பாள் மேனாள்
** யானையின் பெருமை

#234
உகந்த பிடியுடனே ஓர் எண் பிடியும்
திகந்த களிறு எட்டும் சென்று முகந்து

#235
துறக்கும் கடல் முதல் ஏழும் சொரியச்
சிறக்கும் அபிடேகம்செய்து விறக்கும்

#236
உயிர் காவல் மேற்கொண்டு உலகை வலஞ்செய்யும்
அயிராபத மத யானை உயரும்

#237
கட நாகம் எட்டும் கட நாகம் எட்டும்
பட நாகம் எட்டும் பரம் தீர்த்து உடனாகத்

#238
தென்னர் வலம்புரியும் சேரலர் சாமரையும்
கன்னாவதங்கிசமாக் கைக்கொண்டு பின் அவர்

#239
வாள் அகை மௌலி இரண்டும் இரு கோட்டுக்
கோளகையாகக் கொண்ட கோக் களிறு மாளிகை

#240
தாக்குண்ட வாயில்கள்-தோறும் தனி தூங்கித்
தூக்குண்ட கண்டை தொடருடனே வீக்குண்டு அங்கு

#241
ஆராத நாளைக்குப் போதக் கிடந்து ஆர்ப்பத்
தாராகக் கொண்ட மதாசல நீர் வாரா

#242
நதிக்கும் மலைக்கும் அடவிக்கும் நாளும்
குதிக்கும் மதச் சுவடு கோத்து மதிக்கும்

#243
பிடி விடாக் காதல் பெரும் களிறும் கன்றும்
அடி விடாது அவ்வாறு அடையப் படி விடாது

#244
ஈட்டும் பெரு வாரி ஏழ் என்பார் எட்டு என்னக்
கூட்டும் பெரும் கடவுள் கொல் யானை நாட்டில்

#245
பணி கொண்ட பூதம் படை நான்கும் பற்றப்
பணி கொண்ட பௌவம் பரக்க பணி கொண்ட

#246
கார் முற்றும் பேரிடி வீழ்ப்பக் கௌரியர்
ஊர் முற்றும் செற்றது ஒரு கூற்றம் சேரர்

#247
கனக்கும் அனீகக்களம்-தொறும் கைக்கொண்டு
இனக்கும் அரசுவா எல்லாம் தனக்குத்

#248
துணிக்கும் கழைக் கரும்பு நெல்லும் சுமக்கப்
பணிக்கும் கடவுள் பகடு தணிப்பு அரிய

#249
பூ கங்கை தாள் தோயச் செம் கை புயல் வானின்
மா கங்கை தோயப் போய் மா மேரு நாகம் கைக்

#250
கொண்டு தனித் தங்கள் கோள் வேங்கை வீற்றிருப்பக்
கண்டு களிக்கும் களி யானை வண்டு அலம்ப

#251
நின்று குதிக்கும் மதத்தின் நிலம் நெகிழ்ந்து எக்
குன்றும் ஒளித்துக் குளிப்ப முன் சென்று அழுத்திப்

#252
பண்டு வெளி_இல் மகதத்தைப் பா அடியால்
செண்டுவெளி கண்ட செம் கை மாக் கண்ட

#253
மதிலே அகழ் ஆக வாங்கி அகழே
மதிலா எழா நிற்கவைத்துப் புது மலர் செய்

#254
வாவியைச் செய்குன்றம் ஆக்கி அச் செய்குன்றை
வாவியது ஆக என வகுத்துத் தாவு மான்

#255
வெள்ளிடை கோநகர் ஆக்கி அக் கோநகர்
வெள்ளிடை ஆக உடன் விதித்துத் தெள்ளிப்

#256
புரப்பார் இரப்பாராய்ப் போத இரப்பார்ப்
புரப்பாரே ஆக்கும் புகர்மாத் திருக் குலத்துக்

#257
கண்டன் அயிராபதம் மதம் கால் காலத்துக்
கொண்டது ஒரு சுவடு மேல்கொண்டு வண்டு

#258
கடியும் களிறும் களிறு ஆமே காதம்
பிடியும் பிடி ஆமே பின்னர்க் கடி மதில்

#259
மாற்றும் அருமணம் வங்காள பாகத்து
வேற்று மதமா மருகமதத்தைப் போற்றார்

#260
வயிராகரம் எறிந்த மானதன் கண்டன்
அயிராபத மதமே ஆக்கிச் செயிர் தீர்ந்த

#261
காதல் பிடி தேற்றத் தேறாக் கடாக் களிறு என்று
ஓதப் பெயரும் ஒரு பொருப்புப் பாதையில்

#262
கச்சியில் கற்றளியில் கல்லில் கலிங்கத்தில்
கொச்சியில் கோதாவிரிக் குளத்தில் விச்சியில்

#263
வல்லூரில் கொல்லாபுரத்தில் மணலூரில்
நெல்லூரில் புத்தூரில் நெட்டூரில் செல்லூரில்

#264
கோட்டாற்றில் கொங்கில் குடக்கூரில் கொப்பத்தில்
வாட்டாற்றில் காம்பிலியில் மண்ணையில் வேட்டுத்

#265
தரணி கவர்ந்து தமிழ் வேந்தர் பாடும்
பரணி புனைந்த பகடு சரண் என்று

#266
வாடா மதுர யாழ் வாங்கி மடவரல்
பாடா இருந்த பருவத்து நீடாப்

#267
பரிசிலுடனே பணிப்பது போல் யானை
குரிசிலுடன் வந்து கூடத் தெருவில்

#268
வர வந்தான் மன்னர் பிரான் என்று மாரன்
பொர வந்தான் கை வாங்கிப் போனான் விரல் கவரும்

#269
வீணைக்கு அகப்பட வேழம் மிடற்றுக்கும்
ஆணைப் பெருமாள் அகப்பட வாள்_நுதல்

#270
ஐந்து சுரர் தருவும் ஐந்து திருமாலை
தந்து தொழ எழுந்து சாத்தினாள் மைந்தனும்

#271
பண்ணுக்கே தோற்பான் பணை முலைக்கும் அல்குலுக்கும்
கண்ணுக்கும் தோலானே கைக் கொண்டான் வண்ணமும்

#272
வெண் துகிலும் காஞ்சியும் மேகலையும் தோள்வளையும்
கொண்டவற்றின் மாறு கொடுப்பான் போல் பண்டை

#273
முடியும் சிங்காதனமும் முத்தக் குடையும்
படியும் அரசும் பணித்தான் பிடியும்

#274
சிவிகையும் நிற்ப அச் சே_இழை வீதி
கவிகையும் தானும் கடந்தான் குவி முலை
** அரிவை

#275
ஏனை அரிவை ஒருத்தி இகல் மாரன்
சேனை திரண்டு அனைய செவ்வியாள் வானில்

#276
விடு சுடர்க் செக்கர் வியாழமும் தோற்கும்
படு சுடர்க் செம்பொன் படியாள் வடிவு

#277
நெடிது ஓர்க்கில் ஒக்கும் நிறைமதியம் நேரே
படி தோற்கும் முத்தின் படியாள் முடிவு_இல்

#278
குல பதும ராக பதி குதி கொள்ளும்
பல பதுமராகப் படியாள் அலை கடலில்

#279
முன் தாமரையாள் முகத் தாமரையாள் அப்
பொன் தாமரையாள் அப் போதுவாள் அற்றை நாள்
** நீர் விளையாட்டு

#280
தண்ணென் கழுநீர்த் தடம் பொய்கை நாம் எலாம்
அண்ணல் வருமளவும் ஆடுதும் என்று எண்ணிப்

#281
புணைக்கும் ஒரு தன் புறம் காவலாயத்
துணைக்கும் தடம் சுருங்கத் தோயப் பணைத்துப்

#282
புடைக்கும் விசும்பிடம் போதா முலைக்கும்
நடைக்கும் முதல் பகை நாம் என்று உடைப்புண்டு

#283
பின்னர்ப் பெரும் சக்ரவாகப் பெரும் குலமும்
அன்னக் குலமும் அலம்வரப் பின்னரும்

#284
காற்கும் கரும் கட்கும் உட்காதே கைவகுத்து
ஏற்கும் தரமே நாம் என்று போய்த் தோற்கின்ற

#285
வாவியில் உள்ள வரால்களும் சேல்களும்
தாவி விழுந்து தடுமாறத் தீவிய

#286
பொம்மென் சிலம்பு புலம்பு புறவடிக்கும்
அம் மென் கழுத்துக்கும் ஆற்றாது மம்மர்ப்பட்டு

#287
எங்கும் தரியாது இரியல்போய் ஆமையும்
சங்கும் தடத்தை விடத் தவழ நங்கை-தன்

#288
செவ் வாயும் காதும் செயிர்த்தன என்று ஒதுங்கி
எவ்வாயும் காணாது எதிரே நின்று அவ் வாய

#289
கொள்ளைக் குமுத மலரும் குழை இள
வள்ளைக் கொடியும் உடன் மயங்க வெள்ளம் போல்

#290
பெய்யும் மத யானைக் கோடும் பெரு நெடும்
கையும் புடைப்பக் கலுழ்ந்தன போல் தொய்யில் சூழ்

#291
தாம முலையாலும் தோளாலும் தாக்குண்டு
காமர் தடமும் கரைகடப்பக் கோமகன்

#292
உள்ளம் பெருகப்பெருக உலாக் கொண்டு
கள்ளம் பெருகும் கரு நெடும் கண் வெள்ளம்

#293
படிய வரும் சிவப்பு வள்ளப் பசும் தேன்
வடிய வரும் சிவப்பின் வாய்ப்ப நெடிது

#294
திளைக்கும் திருமகளை வாவியில் சேவித்து
இளைக்கும் கொடி இடையார் ஏத்தித் திளைத்துழித்

#295
தம்மைக் கமல மலர்க்கு அளித்துத் தாம் அவற்றின்
செம்மை கவர்ந்த திருக் கண்ணும் மெய்ம்மையே

#296
மெய் போய ஐய மருங்குலும் மேகலை போய்க்
கைபோய் அகன்ற கடிதடமும் பை போய்

#297
நெறிக்கும் பணி வலையம் நீங்கிய வேய்த் தோள்
எறிக்கும் பெரும் பேரெழிலும் நெறிப்படக்

#298
கொண்டுபோந்து ஏறிய கோமகள் பேரழகு
பண்டு போல் நோக்கப் பயப்படுவார் கண்டு

#299
கலன்கலன் கண்ணெச்சிற்கு என்று கடிதில்
பொலன் கலன் கொண்டு பொதிந்தார் இலங்கு_இழை

#300
யானைப்பெருமாள் அயிராபதத்து இருந்த
தானைப் பெருமாளைச் சந்தித்தாள் மேனி

#301
பொருவிற்கே எல்லா அரம்பையரும் போதாத்
திருவிற்கே குற்றேவல் செய்வான் பொரு வில் கை

#302
வானின்கோன் அஞ்ச வருவானை அஞ்சாதே
வேனில்கோனே பரவ மேற்செல்வான் வானத்து

#303
எடுக்கும் கொடி மகர ராசித் தொடையின்
தொடுக்கும் மகரம் போல் தோற்ற அடுத்து எய்யும்

#304
மன்றல் மலர் அம்பு வில் கரும்பு வண்டு நாண்
தென்றல் தேரால் அனங்கன் செற்றது என மென் தோளி

#305
பாங்கி எடுத்த படாகைப் பசும்பொன் பூ
வாங்கி எதிர் தூய் வணங்கினாள் தாங்கி

#306
எடுப்ப எழுவாள் இரு திருத் தோள் மாலை
கொடுப்ப இறையவனும் கொண்டான் கொடுத்தவற்றுள்

#307
பொன் மாலை போதகத்தைச் சூட்டிப் பொலன் குவளை
நன் மாலை சாத்தினான் நாயகனும் தன் மார்பில்

#308
ஆர் மாலை கோமான் அருளினான் அ மாலை
கார் மாலை உள்கொண்டு கைக் கொண்டாள் பார் மாலே
** அரிவையின் முறையீடு

#309
மூது அண்டம் காக்கும் முது தண்டம் மாரவேள்
கோதண்டத் தீம் சாறு கொள்ளாதோ மா தண்டம்

#310
முற்றக் கடல் கிடந்து வேவ முனிந்து இன்னம்
கொற்றத் தனி வில் குனியாதோ நல் தடத்துள்

#311
ஏறு முதலை எறி திகிரி வேள் மகர
ஏறு முறிய எறியாதோ மாறாது

#312
காந்தும் முழுமதியை ஓரோர் கலையாக
ஏந்து சுடர் வடி வாள் ஈராதோ பாந்தள் மேல்

#313
வையம் உடையான் வலம்புரியில் வைகறைவாய்
உய்ய ஒரு குரல் வந்து ஊதாதோ ஐயம்

#314
தணியும் தகைத்தோ தமியன் மால் என்று
பணியும் மட_கொடியைப் பாரா அணிய

#315
உருத் தந்த தோற்றங்கள் ஒன்றினும் தப்பா
வருத்தம் திரு மனத்து வைத்தே திருத் தடம்

#316
தோளும் திரு மார்பும் நீங்காத் துணைவியரில்
நாளும் பிரியாமை நல்கினான் மீள

#317
ஒரு மகள் கண்டன் ஒரு பெரும் பேர் ஆகம்
திருமகள் போலத் திளைப்பாள் இரு நிலம்

#318
தாளால் அளந்து தரும் பெரியோன் தாதகித்
தோளால் அளந்த துணை முலையாள் நாளும்

#319
திரையரமாதரும் சேவிப்பாள் மேரு
வரையரமாதரின் வாய்ப்பாள் கரை_இல்

#320
விருப்பு அவனி கூர வருகின்ற மீளி
திருப்பவனி முன் விரைந்து செல்வாள் உருப்ப

#321
அணந்த பணி வலைய அண்ணல் முதல் நாள்
மணந்த மணச் செவ்வி வாய்ப்பக் கொணர்ந்து அணிந்த

#322
சூடாமணியும் பணி வளையும் சூடகமும்
கோட மணி மகர குண்டலமும் ஆடிய

#323
சச்சையும் மாலையும் ஆரமும் தாமமும்
கச்சையும் மேகலையும் காஞ்சியும் பச்சென்ற

#324
பட்டும் குறங்கணியும் பட்டிகையும் நூபுரமும்
கட்டும் கன வயிரக் காறையும் இட்ட

#325
திலகமும் மான்மதமும் செஞ்சாந்தும் எல்லா
உலகமும் தோற்கும் உருவும் கலகமும்

#326
மாரனும் தானும் வருவாளை மன்னரில்
வீரனும் காணா வெருவராப் பார் அனைத்தும்

#327
தேறும் திருவைத் திரு அவதாரங்கள்-
தோறும் பிரியாத் தொடர்பாலும் ஏறும் கண்

#328
வாளாலும் வார் புருவ வில்லாலும் வாங்கு அமைத்
தோளாலும் மீளத் துவக்குண்டு நீளிய

#329
மை விடா நோக்கி திருக் கை மலரணை
கைவிடா ஆர்வம் கடைப்பிடித்துத் தெய்வப்

#330
புவனி விலையாய பொன் துகிற்கு எல்லாம்
அவனி முழுதும் அளித்தான் போல் கவினிய

#331
அற்புத மாலை அணியப் பணிசெய்யும்
கற்பகம் ஒன்று கடைக்கணித்தான் பொன் படிக்குப்

#332
பாதங்கள் ஆதி முடி அளவும் பாரிப்ப
மாதங்கராசி திருவாய்மலர்ந்தான் ஓதி

#333
முடிக்குத் தலைக்கோலம் போல்வன முத்தின்
படிக்குச் சலாபம் பணித்தான் வடிப் பலகை

#334
அச் சிராபரணம் அனைத்திற்கும் தன் வட
வச்சிராகரமே வழங்கினான் பச்சை

#335
மணிக்குத் தலையாய மாணிக்க ரத்னப்
பணிக்கு த்ரிகூடம் பணித்தான் தணிப்பு_இல்

#336
பெரும் பேருவகையள் ஆகிப் பெருமாள்
விரும்பு ஏர் மலர்க் கண்ணி மீண்டாள் பெரும் போர்

#337
வெருவரும் பார் வேந்தர் வேந்தனைப் போற்றும்
பொருநரும் பாணரும் புக்கார் தெரிவைக்குப்

#338
பாடிக் குழல் ஊதிப் பாம்பின் படக் கூத்தும்
ஆடிக் குடக் கூத்தும் ஆடினார் பாடியில்

#339
ஆன் நிரையும் ஆமான் நிரையும் போல் ஆனுலகில்
கோ நிரையும் மீளக் குழாம்கொண்டு மீன் நிரையின்

#340
மீதும் புடையும் மிடைய விழ எழ வேய்
ஊதும் திருப்பவளம் உள் கொண்டு சீதக்

#341
கடம் தூர வந்து ககனதலமும்
இடம் தூர வந்தும் இணையக் குடங்கள்

#342
எழஎழ மேன்மேல் எழுந்தும் குடங்கள்
விழவிழ மேன்மேல் விழுந்தும் பழகிய

#343
தோள் இரண்டும் தாள் இரண்டும் சோளேசன் தாள் இரண்டும்
தோள் இரண்டும் என்றுஎன்று சொல்லியும் கோள் ஒளிய

#344
நின் வேய் தவிர்க என்று நேரியன் மேருவில்
பொன் வேய்ங்குழல் ஒன்று போக்கினாள் முன்னே

#345
தசும்பிற்கு மாறாகத் தம் கோமான் நாவல்
பசும்பொன் தசும்பு பணித்தாள் ஒசிந்து போய்

#346
நாடகப் பாம்பிற்கு நல் கற்பகம் கொடுத்த
ஆடகப் பாம்பு ஒன்று அருளினாள் பாடுநர் மேல்

#347
வற்றாத மானத வாவியில் வாடாத
பொன் தாமரையே புனைக என்றாள் கொற்றவன்

#348
கொந்து ஆர மாலை கொள விளைத்த மாலைக்கு
மந்தார மாலை வருக என்றாள் நந்தாத

#349
பேறும் திரு அருளும் எய்தி அவர் பெயர
ஏறும் தவிசு தர ஏறினாள் வேறு ஒருத்தி
** பேரிளம் பெண்

#350
கச்சை முனியும் கன தனமும் குங்குமச்
சச்சை கமழும் தடம் தோளும் நிச்சம் உரு

#351
ஏந்த உளது என்று இருந்த மலர்-நின்றும்
போந்த திருமகள் போல் இருப்பாள் வேந்தர்

#352
பணியும் தட மகுடம் பல் நூறு கோடி
அணியும் திருத் தாள் அபயன் பணி வலய

#353
வீக்கிலே வீங்கிய தோள் மேரு கிரிச் சிகரத்
தாக்கிலே சாய்ந்த தட முலையாள் பூக் கமழும்

#354
ஆர் ஏற்ற பொன் தோள் அபயனை ஆயிரம்
பேர் ஏற்ற தெய்வப் பெருமாளைக் கார் ஏற்று

#355
அடல் போர் அடு திகிரி அண்ணலைத் தன்-பால்
கடல் போல் அகப்படுத்தும் கண்ணாள் மடல் விரி

#356
தெங்கினும் ஏற்கும் தசும்பினும் தேர்ந்து அளி
பொங்கும் நுரையினும் போய்ப் புகா தங்கு

#357
நறவு குவளை நறு மலர் தோய்த்து உண்ணும்
இறவு கடைக்கணித்து எய்தச் சுறவுக்

#358
கொடியோனை நோக்குவாள் கண்டாள் போல் கொற்கை
நெடியோனை நேமிப் பிரானைப் படியோனைக்

#359
கண்டனை மேதினியாள் காந்தனை வந்து உய்யக்
கொண்டனை என்று குறுகுவாள் கண்டு

#360
மலர் கண் வெளுப்புச் சிவப்பு ஊர மற்று அத்
திலகம் குறுவியரால் தேம்பப் பல குதலை

#361
மாற்றம் தடுமாற்றம் எய்த மனத்து உள்ள
தேற்றம் பித்தேற்றம் சிதைவிப்ப ஏற்று

#362
துகில் அசைந்து நாணும் தொலைய அளக
முகில் அசைந்து நோவு இடைக்கு முற்ற அகிலமும்

#363
சேனையும் மன்னரும் தெய்வப் பெருமாளும்
யானையும் நிற்க எதிர் நின்று கோனே

#364
சத யுகமேனும் தரணிபர் மக்கள்
பதயுகம் அல்லது பாரார் உதயாதி

#365
காந்த நின் கைத்தலத்தைப் பார் மடந்தை கற்பாந்தத்து
ஏந்தும் அரவரசு என்று இகவாள் பூம் தொடி

#366
நல் போர் மடந்தை திருத் தோளை நாமுடைய
வெற்பு ஓர் இரண்டு என்று வீற்றிருக்கும் பொற்பில்

#367
கலந்து ஆளும் சொற்கிழத்தி கன்ன துவயம் என்
பொலம் தாமரை என்று போகாள் நிலம் தாரா

#368
அம் தாமரையாள் அருள் கண்ணைத் தன் இரண்டு
செந்தாமரை என்று செம்மாக்கும் முந்துற்ற

#369
மல்லாபுரேச சில காலம் மற்று இவை
எல்லாம் தனித்து உடையோம் யாம் அன்றே அல்லாது

#370
மேகோதகம் இரந்த சாதகம் வெற்பை நிறை
ஏகோதகம் பொழிந்தால் என் செய்யும் மாகத்துக்

#371
காலை வெயில் கொண்டும் தாமரைக்குக் கற்பாந்த
வேலை வெயில் எறிக்க வேண்டுமோ மாலைச்

#372
சிலாவட்டம் சிற்சில நின்று உருகும் என்றால்
நிலா வட்டம் நின்று எறிக்க நேரோ குலா வலைஞர்

#373
சேல் தாக்கால் மீளும் திரு நாடா நீ தரும் மால்
ஆற்றாக்கால் மேன்மேல் அளிப்பரே கோல் தொடியார்

#374
நீங்க அரிய மேகமே எம்போல்வார் நீ அளித்தால்
தாங்க அரிய வேட்கை தவிப்பாரே யாங்களே

#375
தண்மை அறியா நிலவினேம் சந்ததமும்
உண்மை அறியா உணர்வினேம் வெண்மையினில்

#376
செல்லாத கங்குலேம் தீராத ஆதரவேம்
பொல்லாத வெம் பசலைப் போர்வையேம் நில்லாத

#377
வாம் மேகலையேம் முலை வீக்கா வம்பினேம்
யாமேயோ இப்போது எளிவந்தேம் யாமுடைய

#378
நன்மை ஒருகாலத்து உள்ளது ஒருகாலத்து
இன்மை உணராயோ எம் கோவே மன்னவ நீ

#379
முன்பு கருடன் முழுக் கழுத்தில் ஏறுவது
பின்பு களிற்றின் பிணர்க் கழுத்தே மின் போல்

#380
இமைக்கும் கடவுள் உடையினை பண்டு இப்போது
அமைக்கும் துகிலினை அன்றே அமைத்ததோர்

#381
பாற்கடல் சீபாஞ்சசன்னியம் பண்டு இப்போது
கார்க் கடல் சென்று கவர் சங்கே சீர்க்கின்ற

#382
தண் அம் துழாய் பண்டு சாத்தும் திருத் தாமம்
கண்ணியின் தாரின் கவட்டு இலையே தண்ணென்ற

#383
பள்ளியறை பாற்கடலே பண்டு திருத் துயில்கூர்
பள்ளியறை இன்று பாசறையே வெள்ளிய

#384
முத்தக் குடை கவித்தும் முன் கவித்த மாணிக்கக்
கொத்துக் குடை ஒக்கக் கூடுமே இத் திறத்தால்

#385
எண்ணற்கு அரிய பெரியோன் நீ எங்களையும்
அண்ணற்கு இகழ அடுக்குமே விண்ணப்பம்

#386
கொண்டு அருளுக என்ன முகிழ்த்த குறுமுறுவல்
தண் தரளக் கொற்றத் தனிக் குடையோன் பண்டு அறியா

#387
ஆரமும் மாலையும் நாணும் அருங்கலா
பாரமும் மேகலையும் பல் வளையும் ஊரும்

#388
பிடியும் சிவிகையும் தேரும் பிறவும்
படியும் கடாரம் பலவும் நெடியோன்

#389
கொடுத்தன கொள்ளாள் கொடாதன கொண்டாள்
அடுத்தனர் தோள் மேல் அயர்ந்தாள் எடுத்துரைத்த

#390
பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக
மாதர் மனம் கொள்ளா மால் கொள்ளச் சோதி

#391
இலகு உடையான் கொற்றக்குடை நிழற்றும் ஈரேழ்
உலகு உடையான் போந்தான் உலா.
** வெண்பா

#392
அன்று தொழுத அரிவை துளவு அணிவது
என்று துயில் பெறுவது எக்காலம் தென் திசையில்
நீர் அதிரா வண்ணம் நெடும் சிலையை நாண் எறிந்த
வீரதரா வீரோதயா
***