மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

** குமரகுருபரர் அருளிய
** மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

@0 காப்பு
** விநாயகக்கடவுள்

#1
கார் கொண்ட கவுள் மதக் கடை வெள்ளமும் கண் கடைக் கடைக்கனலும் எல்லை
கடவாது தடவுக் குழைச் செவி முகந்து எறி கடைக்கால் திரட்ட எம் கோன்
போர் கொண்ட எண் தோள் பொலன் குவடு பொதியும் வெண்பொடி துடி அடித் துவைத்துப்
புழுதி ஆட்டு அயரா ஒர் அயிராவணத்து உலவு போர்க் களிற்றைத் துதிப்பாம்
தார் கொண்ட மதி முடி ஒருத்தன் திருக்கண் மலர் சாத்தக் கிளர்ந்து பொங்கித்
தவழும் இளவெயிலும் மழ நிலவும் அளவளவலால் தண்ணென்று வெச்சென்று பொன்
வார் கொண்டு அணிந்த முலை மலைவல்லி கர்ப்பூரவல்லி அபிராமவல்லி
மாணிக்கவல்லி மரகதவல்லி அபிடேகவல்லி சொல் தமிழ் தழையவே

@1 காப்புப்பருவம்
** திருமால்

#2
மணி கொண்ட நெடு நேமி வலயம் சுமந்து ஆற்று மாசுணச் சூட்டு மோட்டு
மால் களிறு பிடர் வைத்த வளர் ஒளி விமானத்து வால் உளை மடங்கல் தாங்கும்
அணி கொண்ட பீடிகையின் அம் பொன் முடி முடி வைத்து எம் ஐயனொடு வீற்றிருந்த
அம் கயல் கண் அமுதை மங்கையர்க்கு அரசியை எம் அம் அனையை இனிது காக்க
கணி கொண்ட தண் துழாய்க் காடு அலைத்து ஓடு தேம் கலுழி பாய்ந்து அளறுசெய்யக்
கழனி படு நடவையில் கமலத்து அணங்கு அரசு ஒர் கை அணை முகந்து செல்லப்
பணி கொண்ட முடவுப் படப் பாய்ச் சுருட்டுப் பணைத் தோள் எருத்து அலைப்பப்
பழ மறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசும் கொண்டலே
** சிவபெருமான்

#3
சிகர வடவரை குனிய நிமிர்தரு செருவில் ஒரு பொரு வில் எனக் கோட்டினர்
செடி கொள் பறி தலை அமணர் எதிரெதிர் செல ஒர் மதலை சொல் வைகையில் கூட்டினர்
திருவும் இமையவர் தருவும் அர ஒலி செய வலவர் கொள நல்குகைத் தீட்டினர்
சிறிய எனது புன்மொழியும் வடி தமிழ் தெரியும் அவர் முது சொல் எனச் சூட்டினர்
பகரும் இசை திசை பரவ இருவர்கள் பயிலும் இயல் தெரி வெள் வளைத் தோட்டினர்
பசிய அறுகொடு வெளிய நில விரி பவள வனம் அடர் பல் சடைக் காட்டினர்
பதும_முதல்வனும் எழுத அரியது ஒர் பனுவல் எழுதிய வைதிகப் பாட்டினர்
பரசும் இரசத சபையில் நடமிடு பரத பத யுகம் உள்ளம் வைத்து ஏத்துதும்
தகரம் ஒழுகிய குழலும் நிலவு உமிழ் தரள நகையும் எம் ஐயனைப் பார்த்து எதிர்
சருவி அமர் பொரு விழியும் மறுகு இடை தளர வளர்வது ஒர் செவ்வி முற்றாக் கன
தனமும் மனன் உற எழுதி எழுதரு தமது வடிவையும் எள்ளி மட்டு ஊற்றிய
தவள மலர் வரும் இளமின்னொடு சததளமின் வழிபடு தையலைத் தூத் திரை
மகரம் எறி கடல் அமுதை அமுது உகு மழலை பழகிய கிள்ளையைப் பேட்டு அனம்
மடவ நடை பயில் பிடியை விரை செறி வரை செய் புய மிசை வையம் வைத்து ஆற்றிய
வழுதியுடைய கண்மணியொடு உலவு பெண்மணியை அணி திகழ் செல்வியைத் தேக் கமழ்
மதுரம் ஒழுகிய தமிழின் இயல் பயில் மதுரை மரகதவல்லியைக் காக்கவே
** சித்திவிநாயகக்கடவுள்

#4
கைத்தலமோடு இரு கரடக் கரைத் திரை கக்கு கடாம் உடைக் கடலில் குளித்து எமர்
சித்தம் அது ஆம் ஒரு தறியில் துவக்குறு சித்திவிநாயகன் இசையைப் பழிச்சுதும்
புத்தமுதோ அருள் தழையத் தழைத்தது ஒர் பொன் கொடியோ என மதுரித்து உவட்டு எழு
முத்தமிழ் தேர்தரு மதுரைத் தலத்து உறை முத் தனம் மேவு பெண் அரசைப் புரக்கவே
** முருகக்கடவுள்

#5
பமரம் அடுப்பக் கடாம் எடுத்து ஊற்றும் ஓர் பகடு நடத்திப் புலோமசைச் சூல் புயல்
பருகியிடக் கற்பகாடவிப்-பால் பொலி பரவையிடைப் பத்ம மாது எனத் தோற்றிய
குமரி இருக்கக் கலா மயில் கூத்து அயர் குளிர் புனம் மொய்த்திட்ட சாரலில் போய்ச் சிறு
குறவர் மகட்குச் சலாமிடற்கு ஏக்கறு குமரனை முத்துக்குமாரனைப் போற்றுதும்
இமிழ் திரை முற்றத்து மேரு மத்து ஆர்த்து முள் எயிறு உகு நச்சுப் பணாடவித் தாம்பு இசைத்து
இறுக இறுக்கித் துழாய் முடித் தீர்த்தனொடு எவரும் மதித்துப் பராபவத் தீச் சுட
அமுது செய்வித்திட்ட போனகத்தால் சுடர் அடரும் இருட்டுக் கிரீவம் மட்டு ஆக்கிய
அழகிய சொக்கற்கு மால்செயத் தோட்டு இகல் அமர்செய் கயல் கண் குமாரியைக் காக்கவே
** பிரமதேவர்

#6
மேகப் பசுங்குழவி வாய்மடுத்து உண்ணவும் விண்புலம் விருந்து அரவும்
வெள் அமுதம் வீசும் கரும் திரைப் பைம் துகில் விரித்து உடுத்து உத்தி விரியும்
நாகத்து மீச் சுடிகை நடுவண் கிடந்த மட நங்கையைப் பெற்று மற்று அ
நாகணைத் துஞ்சு தன் தந்தைக்கு உவந்து உதவு நளினக் குழந்தை காக்க
பாகத்து மரகதக் குன்று ஒன்று ஒர் தமனியக் குன்றொடு கிளைத்து நின்ற
பவளத் தடம் குன்று உளக்-கண்ணது என்று அப் பரஞ்சுடர் முடிக்கு முடி மூன்று
ஆகத்து அமைத்துப் பின் ஒரு முடி தன் முடி வைத்து அணங்கு அரசு வீற்றிருக்கும்
அபிடேகவல்லியை அளிக் குலம் முழக்கு குழல் அம் கயல் கண் அமுதையே
** தேவேந்திரன்

#7
சுழியும் கரும் கண் குண்டு அகழி சுவற்றும் சுடர் வேல் கிரி திரித்த
தோன்றற்கு அளித்துச் சுறவு உயர்த்த சொக்கப்பெருமான் செக்கர் முடி
பொழியும் தரங்கக் கங்கை விரைப் புனல் கால் பாய்ச்சத் தழைந்து விரி
புவனம் தனிப் பூத்து அருள் பழுத்த பொன் அம் கொடியைப் புரக்க வழிந்து
இழியும் துணர்க் கற்பகத்தின் நறவு இதழ்த் தேன் குடித்துக் குமட்டி எதிர்
எடுக்கு சிறை வண்டு உவட்டுற உண்டு இரைக்கக் கரைக்கும் மதக் கலுழிக்
குழியும் சிறு கண் ஏற்று உருமுக் குரல் வெண் புயலும் கரும் புயலும்
குன்றம் குலைய உகைத்து ஏறும் குலிசத் தடக் கைப் புத்தேளே
** திருமகள்

#8
வெம் சூட்டு நெட்டு உடல் விரிக்கும் படப் பாயல் மீமிசைத் துஞ்சும் நீல
மேகத்தின் ஆகத்து விடு சுடர்ப் படலை மணி மென் பரல் உறுத்த நொந்து
பஞ்சு ஊட்டு சீறடி பதைத்தும் அதன் வெம் கதிர்ப் படும் இளவெயிற்கு உடைந்தும்
பைம் துழாய்க் காடு விரி தண் நிழல் ஒதுங்கும் ஒர் பசுங்கொடியை அஞ்சலிப்பாம்
மஞ்சு ஊட்டு அகட்டு நெடு வான் முகடு துருவும் ஒரு மறை ஓதிமம் சலிக்க
மறி திரைச் சிறை விரியும் ஆயிர முகக் கடவுள் மந்தாகினிப் பெயர்த்த
செம் சூட்டு வெள் ஓதிமம் குடியிருக்கும் வளர் செம் சடைக் கரு மிடற்றுத்
தேவுக்கு முன் நின்ற தெய்வத்தை மும் முலைத் திருவைப் புரக்க என்றே
** கலைமகள்

#9
வெள்ளித் தகட்டு நெட்டு ஏடு அவிழ்த்து இன் இசை விரும்பும் சுரும்பர் பாட
விளை நறவு கக்கும் பொலன் பொகுட்டு அலர் கமல வீட்டுக் கொழித்து எடுத்துத்
தெள்ளித் தெளிக்கும் தமிழ்க் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல்
தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம்
கிள்ளைக்கு மழலைப் பசும் குதலை ஒழுகு தீம் கிளவியும் களி மயிற்குக்
கிளர் இளம் சாயலும் நவ்விக்கு நோக்கும் விரி கிஞ்சுகச் சூட்டு அரசு அனப்
பிள்ளைக்கு மட நடையும் உடன் ஆடு மகளிர்க்கு ஒர் பேதைமையும் உதவி முதிராப்
பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளும் ஒரு பாண்டிப்பிராட்டியைக் காக்க என்றே
** துர்க்கை

#10
வடிபட்ட முக் குடுமி வடி வேல் திரித்திட்டு வளை கரும் கோட்டு மோட்டு
மகிடம் கவிழ்த்துக் கடாம் கவிழ்க்கும் சிறு கண் மால் யானை வீங்க வாங்கும்
துடிபட்ட கொடி நுண் நுசுப்பிற்கு உடைந்து எனச் சுடு கடைக்கனலி தூண்டும்
சுழல் கண் முடங்கு உளை மடங்கலை உகைத்து ஏறு சூர் அரிப் பிணவு காக்க
பிடி பட்ட மட நடைக்கு ஏக்கற்ற கூந்தல் பிடிக் குழாம் சுற்ற ஒற்றைப்
பிறை மருப்பு உடையது ஒர் களிற்றினைப் பெற்று எந்தை பிட்டு உண்டு கட்டுண்டு நின்று
அடிபட்ட திருமேனி குழையக் குழைத்திட்ட அணி மணிக் கிம்புரிக் கோடு
ஆகத்தது ஆகக் கடம்பாடவிக்குள் விளையாடும் ஒர் மடப் பிடியையே
** சத்தமாதர்கள்

#11
கட களிறு உதவு கபாய் மிசைப் போர்த்தவள் கவி குவி துறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல் வயிறு எரிய ஒள் வேலினைப் பார்த்தவள் கடி கமழ் தரு மலர் தார் முடிச் சேர்த்தவள்
இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள்
எயிறு கொடு உழுது எழு பாரினைப் பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடிச் சூட்டுதும்
குடமொடு குடவியர் பாணி கைக் கோத்திடு குரவையும் அலது ஒர் பணா முடிச் சூட்டு அருள்
குதிகொள நடமிடும் ஆடலுக்கு ஏற்ப ஒர் குழல் இசை பழகு அளி பாடிடக் கேட்டு உடை
மடல் அவிழ் துளபம் நறா எடுத்து ஊற்றிட மழ களிறு என எழு கார் முகச் சூல் புயல்
வர வரும் இளைய குமாரியைக் கோட்டு எயில் மதுரையில் வளர் கவுமாரியைக் காக்கவே
** முப்பத்துமூவர்

#12
அமரில் வெந்இடும் அவ் உதியர் பின் இடும் ஒர் அபயர் முன்னிடு வனத்து ஒக்க ஓடவும்
அளவும் எம்முடைய திறை இது என்ன முடி அரசர் எண்ணிலர் ஒர் முற்றத்து வாடவும்
அகில மன்னர் அவர் திசையின் மன்னர் இவர் அமரர் என்னும் உரை திக்கு எட்டும் மூடவும்
அமுத வெண்மதியின் மரபை உன்னிஉனி அலரி அண்ணல் முழு வெப்பத்து மூழ்கவும்
குமரி பொன்னி வைகை பொருநை நல் நதிகள் குதிகொள் விண் நதியின் மிக்குக் குலாவவும்
குவடு தென்மலையின் நிகரதின்மை சுரர் குடிகொள் பொன்மலை துதித்துப் பராவவும்
குமரர் முன் இருவர் அமரர் அன்னை இவள் குமரி இன்னமும் எனச் சித்தர் பாடவும்
குரவை விம்ம அரமகளிர் மண்ணில் எழில் குலவு கன்னியர்கள் கைக்கு ஒக்க ஆடவும்
கமலன் முன்னிவிடும் அரச அன்னம் எழுகடலில் அன்னமுடன் நட்புக் கை கூடவும்
கரிய செம்மலொடும் இளைய செம்மல் விடு கருடன் மஞ்ஞையொடு ஒர் கட்சிக்குள் ஊடவும்
கடவி விண்ணரசு நடவும் வெம் முனைய களிறு கைம்மலை செல் கொப்பத்து வீழவும்
கனக மன்னு தட நளினி துன்னி இரு கமல மின்னும் ஒரு பத்மத்துள் மேவவும்
இமயம் என்ன மனுமுறை கொள் தென்னரும் எம் இறையை நல் மருகு எனப் பெற்று வாழவும்
எவர்-கொல் பண்ணவர்கள் எவர்-கொல் மண்ணவர்கள் எது-கொல் பொன்னுலகு எனத் தட்டுமாறவும்
எழில் செய் தென்மதுரை தழைய மும் முலையொடு எழும் என் அம்மனை வனப்புக்கு ஒர் காவலர்
இருவர் எண்மர் பதினொருவர் பன்னிருவர் எனும் அவ் விண்ணவர்கள் முப்பத்துமூவரே

@2 செங்கீரைப்பருவம்

#13
நீராட்டி ஆட்டு பொன் சுண்ணம் திமிர்ந்து அள்ளி நெற்றியில் தொட்டு இட்ட வெண்
நீற்றினொடு புண்டரக் கீற்றுக்கும் ஏற்றிட ஒர் நித்திலச் சுட்டி சாத்தித்
தார் ஆட்டு சூழியக் கொண்டையும் முடித்துத் தலைப் பணி திருத்தி முத்தின்
தண் ஒளி ததும்பும் குதம்பையொடு காதுக்கு ஒர் தமனியக் கொப்பும் இட்டுப்
பாராட்டு பாண்டிப் பெருந்தேவி திருமுலைப் பால் அமுதம் ஊட்டி ஒரு நின்
பால் நாறு குமுதம் கனிந்து ஊறு தேறல் தன் பட்டாடை மடி நனைப்பச்
சீராட்டி வைத்து முத்தாடும் பசுங்கிள்ளை செங்கீரை ஆடி அருளே
தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே

#14
உள் நிலா உவகைப் பெரும் களி துளும்ப நின்று உன் திருத்தாதை நின்னை
ஒரு முறை கரம் பொத்தி வருக என அழைத்திடும் முன் ஓடித் தவழ்ந்து சென்று
தண் உலாம் மழலைப் பசுங்குதலை அமுது இனிய தாய் வயிறு குளிர ஊட்டித்
தட மார்பம் நிறை குங்குமச் சேறு அளைந்து பொன் தாள் தோய் தடக் கை பற்றிப்
பண் உலாம் வடி தமிழ்ப் பைம் தாமம் விரியும் பணைத் தோள் எருத்தம் ஏறிப்
பாசொளிய மரகதத் திருமேனி பச்சைப் பசும் கதிர் ததும்ப மணி வாய்த்
தெள் நிலா விரிய நின்று ஆடும் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே
தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே

#15
சுற்று நெடு நேமிச் சுவர்க்கு இசைய எட்டுச் சுவர்க்கால் நிறுத்தி மேருத்
தூண் ஒன்று நடு நட்டு வெளி முகடு மூடி இரு சுடர் விளக்கு இட்டு முற்ற
எற்று புனலில் கழுவு புவனப் பழம் கலம் எடுத்து அடுக்கிப் புதுக் கூழ்
இன் அமுதமும் சமைத்து அன்னை நீ பல் முறை இழைத்திட அழித்துஅழித்து ஓர்
முற்ற வெளியில் திரியும் மத்தப் பெரும் பித்தன் முன் நின்று தொந்தம் இடவும்
முனியாது வைகலும் எடுத்து அடுக்கிப் பெரிய மூது அண்ட கூடம் மூடும்
சிற்றில் விளையாடும் ஒரு பச்சிளம் பெண்பிள்ளை செங்கீரை ஆடி அருளே
தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே

#16
மங்குல் படு கந்தரச் சுந்தரக் கடவுட்கு மழ கதிர்க் கற்றை சுற்றும்
வாள் நயனம் மூன்றும் குளிர்ந்து அமுத கலை தலைமடுப்பக் கடைக்கண் நோக்கும்
பொங்கும் மதர் நோக்கில் பிறந்த ஆனந்தப் புதுப் புணரி நீத்தம் ஐயன்
புந்தித் தடத்தினை நிரப்ப வழி அடியர்-பால் போக சாகரம் அடுப்ப
அம் கண் நெடு ஞாலத்து வித்து இன்றி வித்திய அனைத்து உயிர்களும் தளிர்ப்ப
அருள் மடை திறந்து கடை வெள்ளம் பெருக்கெடுத்து அலை எறிந்து உகள உகளும்
செம் கயல் கிடக்கும் கரும் கண் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே
தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே

#17
பண் அறா வரி மிடற்று அறுகால் மடுப்பப் பசும் தேறல் ஆறு அலைக்கும்
பதும பீடிகையும் முது பழ மறை விரிந்து ஒளி பழுத்த செம் நாவும் இமையாக்
கண் அறா மரகதக் கற்றைக் கலாம் மஞ்ஞை கண முகில் ததும்ப ஏங்கும்
கார் வரையும் வெள் என ஒர் கன்னிமாடத்து வளர் கற்பூரவல்லி கதிர் கால்
விண் அறா மதி முயல் கலை கிழிந்து இழி அமுத வெள் அருவி பாய வெடிபோய்
மீளும் தகட்டு அகட்டு இளவாளை மோத முகை விண்டு ஒழுகும் முண்டகப் பூம்
தெள் நறா அருவி பாய் மதுரை மரகதவல்லி செங்கீரை ஆடி அருளே
தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே

#18
முக மதி ஊடு எழு நகை நிலவு ஆட முடிச் சூழியம் ஆட
முரி புருவக் கொடி நுதல் இடு சுட்டி முரிப்பொடு அசைந்து ஆட
இகல் விழி மகரமும் அ மகரம் பொரும் இரு மகரமும் ஆட
இடு நூபுர அடி பெயரக் கிண்கிண் எனும் கிண்கிணி ஆடத்
துகிலொடு சோர்தரு கொடி நுண் மருங்குல் துவண்டுதுவண்டு ஆடத்
தொந்தி சரிந்திட உந்தி கரந்து ஒளிர் சூலுடை ஆல் அடை மற்று
அகில சராசரம் நிகிலமோடு ஆடிட ஆடுக செங்கீரை
அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை

#19
தசைந்திடு கொங்கை இரண்டு அல என உரைதரு திருமார்பு ஆடத்
தாய் வருக என்பவர் பேதமை கண்டு ததும்பு புன்னகை ஆடப்
பசைந்திடு ஞாலம் மலர்ந்தமை வெளிறி ஒர் பச்சுடல் சொல்லவும் ஒர்
பைம் கொடி ஒல்கவும் ஒல்கி நுடங்கிய பண்டி சரிந்து ஆட
இசைந்திடு தேவை நினைந்தன என்ன இரங்கிடு மேகலையோடு
இடுகு இடை ஆட இயற்கை மணம் பொதி இதழ் வழி தேறலினோடு
அசைந்து ஒசிகின்ற பசும் கொடி என இனிது ஆடுக செங்கீரை
அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை

#20
பரிமளம் ஊறிய உச்சியின் முச்சி பதிந்து ஆடச் சுடர் பொன்
பட்டமுடன் சிறு சுட்டியும் வெயிலொடு பனி வெண் நிலவு ஆடத்
திருநுதல் மீது எழுகுறு வெயர்வு ஆடத் தெய்வ மணம் கமழும்
திருமேனியின் முழு மரகத ஒளி எண் திக்கும் விரிந்து ஆடக்
கருவிளை நாறு குதம்பை ததும்பிய காது தழைந்து ஆடக்
கதிர் வெண் முறுவல் அரும்ப மலர்ந்திடு கமலத் திருமுகம் நின்
அருள் விழியொடும் வளர் கருணை பொழிந்திட ஆடுக செங்கீரை
அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை

#21
குரு மணி வெயில் விட மரகத நிழல் விரி குன்றே நின்று ஊதும்
குழல் இசை பழகிய மழை முகில் எழ எழு கொம்பே வெம் பாசம்
மருவிய பிணி கெட மலை தரும் அருமை மருந்தே சந்தானம்
வளர் புவனமும் உணர்வு அரும் அரு மறையின் வரம்பே செம் போதில்
கருணையின் முழுகிய கயல் திரி பசிய கரும்பே வெண் சோதிக்
கலை மதி மரபில் ஒர் இளமயில் என வளர் கன்றே என்று ஓதும்
திருமகள் கலைமகள் தலைமகள் மலைமகள் செங்கோ செங்கீரை
தெளி தமிழ் மதுரையில் வளரும் ஒர் இளமயில் செங்கோ செங்கீரை

#22
சங்கு கிடந்த தடம் கை நெடும் புயல் தங்காய் பங்காய் ஓர்
தமனிய மலை படர் கொடி என வடிவு தழைந்தாய் எந்தாய் என்று
அம் கண் நெடும் புவனங்கள் தொழும்-தொறும் அஞ்சேல் என்று ஓதும்
அபயமும் வரதமும் உபயமும் உடைய அணங்கே வெம் கோபக்
கங்குல் மதம் கயம் மங்குல் அடங்க விடும் காமன் சேமக்
கயல் குடிபுகும் ஒரு துகிலிகை என நின கண் போலும் சாயல்
செம் கயல் தங்கு பொலன் கொடி மின்கொடி செங்கோ செங்கீரை
தெளி தமிழ் மதுரையில் வளரும் ஒர் இளமயில் செங்கோ செங்கீரை

@3 தாலப்பருவம்

#23
தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் அரும்பத் தீ அரும்பும்
தேமா நிழல்-கண் துஞ்சும் இளஞ் செம் கண் கய வாய்ப் புனிற்று எருமை
இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று உள்ளி மடித்தலம்-நின்று
இழி பால் அருவி உவட்டு எறிய எறியும் திரைத் தீம் புனல் பொய்கைப்
பொன் அம் கமலப் பசும் தோட்டுப் பொன் தாது ஆடிக் கற்றை நிலாப்
பொழியும் தரங்கம் பொறை உயிர்த்த பொன் போல் தொடுதோல் அடிப் பொலன் சூட்டு
அன்னம் பொலியும் தமிழ் மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ
அருள் சூல் கொண்ட அம் கயல் கண் அமுதே தாலோ தாலேலோ

#24
வீக்கும் சிறு பைம் துகில் தோகை விரியும் கலாபம் மருங்கு அலைப்ப
விளையாட்டு அயரும் மணல் சிற்றில் வீட்டுக் குடிபுக்கு ஓட்டி இருள்
சீக்கும் சுடர் தூங்கு அழல் மணியின் செம் தீ மடுத்த சூட்டு அடுப்பில்
செழும் தாள் பவளத் துவர் அடுக்கித் தெளிக்கும் நறும் தண் தேறல் உலை
வாக்கும் குடக் கூன் குழிசியில் அம் மது வார்த்து அரித்த நித்திலத்தின்
வல்சி புகட்டி வடித்து எடுத்து வயல் மா மகளிர் குழாம் சிறுசோறு
ஆக்கும் பெரும் தண் பணை மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ
அருள் சூல் கொண்ட அம் கயல் கண் அமுதே தாலோ தாலேலோ

#25
ஓடும் படலை முகில் படலம் உவர் நீத்து உவரி மேய்ந்து கரு
ஊறும் கமம் சூல் வயிறு உடைய உகைத்துக் கடவுள் கற்பகப் பூம்
காடும் தரங்கக் கங்கை நெடும் கழியும் நீந்தி அமுது இறைக்கும்
கலை வெண் மதியின் முயல் தடவிக் கதிர் மீன் கற்றை திரைத்து உதறி
மூடும் ககன வெளிக் கூட முகடு திறந்து புறம் கோத்த
முந்நீர் உழக்கிச் சின வாளை மூரிச் சுறவினோடும் விளை
யாடும் பழனத் தமிழ் மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ
அருள் சூல் கொண்ட அம் கயல் கண் அமுதே தாலோ தாலேலோ

#26
ஊறும் கரடக் கடத்து முகந்து ஊற்றும் மத மா மடவியர்-நின்று
உதறும் குழல் பூந்துகள் அடங்க ஓட விடுத்த குங்குமச் செம்
சேறு வழுக்கி ஓட்டு அறுக்கும் திரு மா மறுகில் அரசர் பெரும்
திண் தேர் ஒதுங்கக் கொடுஞ்சி நெடும் சிறுதேர் உருட்டும் செம் கண் மழ
ஏறு பொரு வேல் இளைஞர் கடவு இவுளி கடைவாய் குதட்ட வழிந்து
இழியும் விலாழி குமிழி எறிந்து இரைத்துத் திரைத்து நுரைத்து ஒரு பேர்
ஆறு மடுக்கும் தமிழ் மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ
அருள் சூல் கொண்ட அம் கயல் கண் அமுதே தாலோ தாலேலோ

#27
வார்க் குன்று இரண்டு சுமந்து ஒசியும் மலர்க் கொம்பு_அனையார் குழல் துஞ்சும்
மழலைச் சுரும்பர் புகுந்து உழக்க மலர்த் தாது உகுத்து வான் நதியைத்
தூர்க்கும் பொதும்பில் முயல் கலை மேல் துள்ளி உகளும் முசுக்கலையின்
துழனிக்கு ஒதுங்கிக் கழினியின் நெல் சூட்டுப் படப்பை மேய்ந்து கதிர்ப்
போர்க் குன்று ஏறும் கரு முகிலை வெள் வாய் மள்ளர் பிணையலிடும்
பொரு கோட்டு எருமைப் போத்தினொடும் பூட்டி அடிக்க இடிக் குரல் விட்டு
ஆர்க்கும் பழனத் தமிழ் மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ
அருள் சூல் கொண்ட அம் கயல் கண் அமுதே தாலோ தாலேலோ

#28
காரில் பொழி மழை நீரில் சுழி எறி கழியில் சிறு குழியில்
கரையில் கரை பொரு திரையில் தலை விரி கண்டலில் வண்டலின் நெற்
போரில் களம் நிறை சேரில் குளம் நிறை புனலில் பொரு கயலில்
பொழிலில் சுருள் புரி குழலில் கணிகையர் குழையில் பொரு கயல் போய்த்
தேரில் குமரர்கள் மார்பில் பொலிதரு திருவில் பொரு_இல் வரிச்
சிலையில் திரள் புய மலையில் புலவி திருத்திட ஊழ்த்த முடித்
தாரில் பொருதிடும் மதுரைத் துரைமகள் தாலோ தாலேலோ
சங்கம் வளர்ந்திட நின்ற பொலன் கொடி தாலோ தாலேலோ

#29
சேனைத் தலைவர்கள் திசையில் தலைவர்கள் செருவில் தலைவர்களால்
சிலையில் தட முடி தேரில் கொடியொடு சிந்தச் சிந்தியிடும்
சோனைக் கணை மழை சொரியப் பெருகிய குருதிக் கடலிடையே
தொந்தமிடும் பல் கவந்தம் நிவந்து ஒரு சுழியில் பவுரிகொள
ஆணைத் திரளொடு குதிரைத் திரளையும் அப் பெயர் மீனை முகந்து
அம்மனை ஆடு கடல் திரை போல அடல் திரை மோத எழும்
தானைக் கடலொடு பொலியும் திருமகள் தாலோ தாலேலோ
சங்கம் வளர்ந்திட நின்ற பொலன் கொடி தாலோ தாலேலோ

#30
அமரர்க்கு அதிபதி வெளிறு அக் களிறு எதிர் பிளிறக் குளிறியிடா
அண்டம் மிசைப் பொலி கொண்டல் உகைத்திடும் அமரில் தமரினொடும்
கமரில் கவிழ்தரு திசையில் தலைவர்கள் மலையின் சிறகு அரியும்
கடவுள் படையொடு பிறகிட்டு உடைவது கண்டு முகம் குளிராப்
பமரத் தரு மலர் மிலையப்படு முடி தொலையக் கொடுமுடி தாழ்
பைம்பொன் தட வரை திரியக் கடல் வயிறெரியப் படை திரியாச்
சமரில் பொரு திருமகனைத் தரு மயில் தாலோ தாலேலோ
சங்கம் வளர்ந்திட நின்ற பொலன் கொடி தாலோ தாலேலோ

#31
முதுசொல் புலவர் தெளித்த பசும் தமிழ் நூல் பாழ்போகாமே
முளரிக் கடவுள் படைத்த வசுந்தரை கீழ்மேல் ஆகாமே
அதிரப் பொருது கலிப் பகைஞன் தமிழ் நீர் நாடு ஆளாமே
அகிலத்து உயிர்கள் அயர்த்தும் அறங்கடை நீள்நீர் தோயாமே
சிதைவுற்று அரசியல் நல் தருமம் குடிபோய் மாய்வாகாமே
செழியர்க்கு அபயரும் ஒப்பு என நின்று உணராதார் ஓதாமே
மதுரைப் பதி தழையத் தழையும் கொடி தாலோ தாலேலோ
மலயத்துவசன் வளர்த்த பசும் கிளி தாலோ தாலேலோ

#32
தகரக் கரிய குழல் சிறு பெண்பிள்ளை நீயோ தூயோன் வாழ்
சயிலத்து எயிலை வளைப்பவள் என்று எதிர் சீறா வீறு ஓதா
நிகரிட்டு அமர்செய் கணத்தவர் நந்திபிரானோடே ஓடா
நிலைகெட்டு உலைய உடற்ற உடைந்து ஒர் ஆன் ஏறு ஆகாமே
சிகரப் பொதிய மிசைத் தவழும் சிறுதேர் மேலே போய் ஓர்
சிவனைப் பொருத சமர்த்தன் உகந்து அருள் சேல் போல் மாயாமே
மகரத் துவசம் உயர்த்த பொலன் கொடி தாலோ தாலேலோ
மலயத்துவசன் வளர்த்த பசும் கிளி தாலோ தாலேலோ

@4 சப்பாணிப்பருவம்

#33
நாள வட்டத் தளிம நளினத்தொடும் துத்தி நாகணையும் விட்டு ஒர் எட்டு
நாட்டத்தனும் பரம வீட்டத்தனும் துஞ்சும் நள் இருளின் நாப்பண் அண்ட
கோள வட்டம் பழைய நேமி வட்டத்தினொடு குப்புற்று வெற்பு எட்டும் ஏழ்
குட்டத்தினில் கவிழ மூது அண்ட வேதண்ட கோதண்டமோடு சக்ர
வாள வட்டம் சுழல மட்டித்து நட்டமிடு மதுமத்தர் சுத்த நித்த
வட்டத்தினுக்கு இசைய ஒற்றிக் கனத்த தன வட்டத்தை ஒத்திட்டது ஓர்
தாள வட்டம் கொட்டு கைப்பாணி ஒப்ப ஒரு சப்பாணிகொட்டி அருளே
தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே

#34
பொய்வந்த நுண் இடை நுடங்கக் கொடிஞ்சிப் பொலம் தேரொடு அமரகத்துப்
பொன் மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்று அம்மை பொம்மல் முலை மூன்றில் ஒன்று
கைவந்த கொழுநரொடும் உள்ளப் புணர்ச்சிக் கருத்தான் அகத்து ஒடுங்கக்
கவிழ் தலை வணக்கொடு முலைக்கண் வைத்திடும் ஒரு கடைக்கண் நோக்கு அமுதம் ஊற்ற
மெய்வந்த நாணினொடு நுதல் வந்து எழும் குறுவெயர்ப்பினொடு உயிர்ப்பு வீங்கும்
விம்மிதமுமாய் நின்ற உயிர் ஓவம் என ஊன்று வில் கடை விரல் கடை தழீஇத்
தைவந்த நாணினொடு தவழ்தந்த செம் கை கொடு சப்பாணிகொட்டி அருளே
தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே

#35
பூ மரு வெடிப்ப முகை விண்ட தண்டலை ஈன்ற புனை நறும் தளிர்கள் கொய்தும்
பொய்தல் பிணாக்களொடு வண்டல் கலம் பெய்து புழுதி விளையாட்டு அயர்ந்தும்
காமரு மயில் குஞ்சு மட அனப் பார்ப்பினொடு புறவு பிறவும் வளர்த்தும்
காந்தள் செங்கமலத்த கழுநீர் மணந்து எனக் கண் பொத்தி விளையாடியும்
தே மரு பசும் கிள்ளை வைத்து முத்தாடியும் திரள் பொன் கழங்கு ஆடியும்
செயற்கையான் அன்றியும் இயற்கைச் சிவப்பு ஊறு சே இதழ் விரிந்த தெய்வத்
தாமரை பழுத்த கைத் தளிர் ஒளி துளும்ப ஒரு சப்பாணிகொட்டி அருளே
தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே

#36
விண் அளிக்கும் சுடர் விமானமும் பரநாத வெளியில் துவாதசாந்த
வீடும் கடம்பு பொதி காடும் தடம் பணை விரிந்த தமிழ்நாடும் நெற்றிக்
கண் அளிக்கும் சுந்தரக் கடவுள் பொலியும் அறு கால் பீடமும் எம்பிரான்
காமர் பரியங்கக் கவின் தங்கு பள்ளி அம் கட்டிலும் தொட்டிலாகப்
பண் அளிக்கும் குதலை அமுது ஒழுகு குமுதப் பசும் தேறல் ஊறல் ஆடும்
பைங்குழவி பெருவிரல் சுவைத்து நீ பருகிடப் பைம் தேறல் ஊறு வண் கைத்
தண் அளிக் கமலம் சிவப்பூற அம்மை ஒரு சப்பாணிகொட்டி அருளே
தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே

#37
சேல் ஆட்டு வாள் கண் கரும் கடல் கடைமடை திறந்து அமுதம் ஊற்று கருணைத்
தெள் திரை கொழித்து எறிய வெண் திரை நெருப்பூட்டு தெய்வக் குழந்தையைச் செம்
கோல் ஆட்டு நின் சிறு கணைக்கால் கிடத்திக் குளிப்பாட்டி உச்சி முச்சிக்
குஞ்சிக்கு நெய் போற்றி வெண்காப்பும் இட்டு வளர் கொங்கையில் சங்கு வார்க்கும்
பால் ஆட்டி வாய் இதழ் நெரித்து ஊட்டி உடலில் பசும் சுண்ணமும் திமிர்ந்து
பைம்பொன் குறங்கினில் கண்வளர்த்திச் சிறு பரூஉ மணித் தொட்டில் ஏற்றித்
தாலாட்டி ஆட்டு கைத் தாமரை முகிழ்த்து அம்மை சப்பாணிகொட்டி அருளே
தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே

#38
வானத்து உருமொடு உடுத் திரள் சிந்த மலைந்த பறந்தலையில்
மண்ணவர் பண்ணவர் வாளின் மறிந்தவர் மற்றவர் பொன் தொடியார்
பானல் கணையும் முலைக் குவடும் பொரு படையில் பட இமையோர்
பைம் குடர் மூளையொடும் புதிது உண்டு பசும் தடி சுவை காணாச்
சேனப் பந்தரின் அலகைத் திரள் பல குரவை பிணைத்து ஆடத்
திசையில் தலைவர்கள் பெரு நாண் எய்தச் சிறு நாண் ஒலிசெய்யாக்
கூனல் சிலையின் நெடும் கணை தொட்டவள் கொட்டுக சப்பாணி
குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி

#39
சமரில் பிறகிடும் உதியரும் அபயரும் எதிரிட்டு அமராடத்
தண்டதரன் செல் கரும் பகடு இந்திரன் வெண் பகடோடு உடையாத்
திமிரக் கடல் புக வருணன் விடும் சுறவு அருணன் விடும் கடவுள்
தேரின் உகண்டு எழ வார் வில் வழங்கு கொடும் கோல் செங்கோலா
இமயத்தொடும் வளர் குல வெற்பு எட்டையும் எல்லைக்கல்லின் நிறீஇ
எண் திசையும் தனி கொண்டு புரந்து வடாது கடல் துறை தென்
குமரித் துறை என ஆடும் மடப் பிடி கொட்டுக சப்பாணி
குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி

#40
சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியின் ஆளி எனச்
செரு மலை செம்மலை முதலியர் சிந்தச் சிந்திட நந்திபிரான்
நின்றிலன் ஓடலும் முன்னழகும் அவன் பின்னழகும் காணா
நிலவு விரிந்திடு குறுநகை கொண்டு நெடும் கயிலைக் கிரியின்
முன்றிலின் ஆடல் மறந்து அமராடி ஒர் மூரிச் சிலை குனியா
முரி புருவச் சிலை கடை குனியச் சில முளரிக் கணை தொட்டுக்
குன்ற_விலாளியை வென்ற தடாதகை கொட்டுக சப்பாணி
குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி

#41
ஒழுகிய கருணை உவட்டெழவைத்த அருள் பார்வைக்கு
உளம் நெகிழ் அடியர் பவக் கடல் வற்ற அலைத்து ஓடிக்
குழையொடு பொருது கொலைக் கணையைப் பிணையைச் சீறிக்
குமிழொடு பழகி மதர்த்த கயல் கண் மடப் பாவாய்
தழை கெழு பொழிலில் முசுக்கலை மைப் புயலில் பாயத்
தவழ் இளமதி கலை நெக்கு உகு புத்தமுதத்தோடே
மழை பொழி இமய மயில் பெடை கொட்டுக சப்பாணி
மதுரையில் வளரும் மடப் பிடி கொட்டுக சப்பாணி

#42
செழு மறை தெளிய வடித்த தமிழ்ப் பதிகத்தோடே
திருவருள் அமுது குழைத்து விடுத்த முலைப்பாலால்
கழுமல மதலை வயிற்றை நிரப்பி மயில் சேயைக்
களிறொடும் வளர வளர்த்த அருள் செவிலித்தாயே
குழல் இசை பழகி முழுப் பிரசத்து இரசத்தோடே
குதிகொளும் நறிய கனிச் சுவை நெக்க பெருக்கே போல்
மழலையின் அமுது உகு சொல் கிளி கொட்டுக சப்பாணி
மதுரையில் வளரும் மடப் பிடி கொட்டுக சப்பாணி

@5 முத்தப்பருவம்

#43
காலத்தொடு கற்பனை கடந்த கருவூலத்துப் பழம் பாடல்
கலை மாச் செல்வர் தேடிவைத்த கடவுள் மணியே உயிர் ஆல
வாலத்து உணர்வு நீர் பாய்ச்சி வளர்ப்பார்க்கு ஒளி பூத்து அருள் பழுத்த
மலர்க் கற்பகமே எழுதாச்சொல் மழலை ததும்பு பசுங்குதலைச்
சோலைக் கிளியே உயிர்த் துணையாம் தோன்றாத்துணைக்கு ஓர் துணையாகித்
துவாதசாந்தப் பெருவெளியில் துரியம் கடந்த பரநாத
மூலத் தலத்து முளைத்த முழுமுதலே முத்தம் தருகவே
முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே

#44
உருகி உருகி நெக்கு நெக்கு உள் உடைந்து கசிந்திட்டு அசும்பு ஊறும்
உழுவல் அன்பின் பழ அடியார் உள்ளத் தடத்தில் ஊற்றெடுத்துப்
பெருகு பரமானந்த வெள்ளப் பெருக்கே சிறியேம் பெற்ற பெரும்
பேறே ஊறு நறைக் கூந்தல் பிடியே கொடி நுண் நுசுப்பு ஒசிய
வரு குங்குமக் குன்று இரண்டு ஏந்து மலர்ப் பூம் கொம்பே தீம் குழலின்
மதுரம் கனிந்த பசுங்குதலை மழலை அரும்பச் சேதாம்பல்
முருகு விரியும் செம் கனி வாய் முத்தம் தருக முத்தமே
முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே

#45
கொழுதி மதர் வண்டு உழக்கு குழல் கோதைக்கு உடைந்த கொண்டலும் நின்
குதலைக் கிளி மென் மொழிக்கு உடைந்த குறும் கண் கரும்பும் கூன் பிறைக் கோடு
உழுத பொலன் சீறடிக்கு உடைந்த செந்தாமரையும் பசும் கழுத்துக்கு
உடைந்த கமம் சூல் சங்கும் ஒழுகு ஒளிய கமுகும் அழகு தொய்யில்
எழுது தடம் தோட்கு உடைந்த தடம் பணையும் பணை மென் முலைக்கு உடைந்த
இணை மா மருப்பும் தரு முத்து உன் திரு முத்து ஒவ்வா இகபரங்கள்
முழுதும் தருவாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே
முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே

#46
மத்த மதமாக் கவுட்டு ஒரு நால் மருப்புப் பொருப்பு மிசைப் பொலிந்த
வானத்து அரசு கோயில் வளர் சிந்தாமணியும் வடபுலத்தார்
நத்தம் வளர அளகையர்_கோன் நகரில் வளரும் வான் மணியும்
நளினப் பொகுட்டில் வீற்றிருக்கும் நங்கை மனைக்கு ஓர் விளக்கம் எனப்
பைத்த சுடிகைப் படப் பாயல் பதுமநாபன் மார்பில் வளர்
பரிதி மணியும் எமக்கு அம்மை பணியல் வாழி வேய் ஈன்ற
முத்தம் உகந்த நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே
முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே

#47
கோடும் குவடும் பொரு தரங்கக் குமரித் துறையில் படு முத்தும்
கொற்கைத் துறையில் துறைவாணர் குளிக்கும் சலாபக் குவால் முத்தும்
ஆடும் பெரும் தண் துறைப் பொருநை ஆற்றில் படு தெள் நிலா முத்தும்
அம் தண் பொதியத் தடம் சாரல் அருவி சொரியும் குளிர் முத்தும்
வாடும் கொடி நுண் நுசுப்பு ஒசிய மடவ மகளிருடன் ஆடும்
வண்டல் துறைக்கு வைத்து நெய்த்து மணம் தாழ் நறு மென் புகைப் படலம்
மூடும் குழலாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே
முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே

#48
பை வைத்த துத்திப் பரூஉச் சுடிகை முன்றில் பசும் கொடி உடுக்கை கிழியப்
பாய் இருள் படலம் கிழித்து எழு சுடர்ப் பரிதி பரிதிக் கொடிஞ்சி மான் தேர்
மொய் வைத்த கொய் உளை வயப் புரவி-வாய்ச் செல்ல முள்கோல் பிடித்து நெடு வான்
முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில் கொடி முனைக் கணை வடிம்பு நக்கா
மை வைத்த செம் சிலையும் அம்புலியும் ஓட நெடு வான் மீன் மணந்து உகந்த
வடவரை முகந்த நின் வயக் கொடி எனப் பொலியும் மஞ்சு இவர் வளாக நொச்சித்
தெய்வத் தமிழ்க் கூடல் தழையத் தழைத்தவள் திருப் பவள முத்தம் அருளே
சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திருப் பவள முத்தம் அருளே

#49
பின்னல் திரைக் கடல் மதுக் குடம் அறத் தேக்கு பெய் முகில் கார் உடல வெண்
பிறை மதிக் கூன் குயக் கைக் கடைஞரொடு புடைபெயர்ந்து இடை நுடங்க ஒல்கு
மின்னல் தடித்துக் கரும் பொன் தொடிக் கடைசி மெல்லியர் வெரீஇப் பெயர வான்
மீன் கணம் வெருக்கொள்ள வெடி வரால் குதிகொள்ளும் விண் புலம் விளை புலம் எனக்
கன்னல் பெரும் காடு கற்பகக் காட்டு வளர் கடவுள் மா கவளம் கொளக்
காமதேனுவும் நின்று கடைவாய் குதட்டக் கதிர்க் குலை முதிர்ந்து விளையும்
செந்நெல் படப்பை மதுரைப் பதி புரப்பவள் திருப் பவள முத்தம் அருளே
சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திருப் பவள முத்தம் அருளே

#50
சங்கு ஓலிடும் கடல் தானைக்கு வெந்இடு தராபதிகள் முன்றில் தூர்த்த
தமனியக் குப்பையும் திசை_முதல்வர் தட முடித் தாமமும் தலைமயங்கக்
கொங்கு ஓலிடும் கைக் கொடும் கோலொடும் திரி குறும்பன் கொடிச் சுறவும் நின்
கொற்றப் பதாகைக் குழாத்தினொடும் இரசதக் குன்றினும் சென்று உலாவப்
பொங்கு ஓல வேலைப் புறத்தினொடு அகத்தின் நிமிர் போர் ஆழி பரிதி இரதப்
பொங்கு ஆழி மற்றப் பொருப்பு ஆழியில் திரி புலம்பைப் புலம்புசெய்யச்
செங்கோல் திருத்திய முடிச் செழியர் கோமகள் திருப் பவள முத்தம் அருளே
சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திருப் பவள முத்தம் அருளே

#51
பரு அரை முது பல அடியினில் நெடு நிலம் நெக்க குடக் கனியின்
படு நறை படு நிறை கடம் உடை படுவ கடுப்ப உவட்டு எழவும்
விரி தலை முதலொடு விளைபுலம் உலைய உழக்கிய முள் சுறவின்
விசையினின் வழி நறை மிடறு ஒடி கமுகின் விழுக் குலை நெக்கு உகவும்
கரை எறி புணரியின் இரு மடி பெருகு தடத்து மடுத்த கடக்
களிறொடு பிளிறிட இகலிய முகிலின் இரட்டி இரட்டிய மும்
முரசு அதிர் கடி நகர் மதுரையில் வளர் கிளி முத்தம் அளித்து அருளே
முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே

#52
புதை இருள் கிழிதர எழுதரு பரிதி வளைத்த கடல் புவியில்
பொது அற அடிமைசெய்திடு வழி அடியர் பொருட்டு அலர் வட்டணையில்
ததை மலர் பொதுளிய களி அளி குமிறு குழல் திருவைத் தவளச்
சததள முளரியின் வனிதையை உதவு கடைக்கண் மடப் பிடியே
பதுமமொடு ஒழுகு ஒளி வளையும் நின் நளின முகத்தும் மிடற்றும் உறப்
பனி மதியொடு சுவை அமுதமும் நுதலொடு சொல் குதலைக்-கண் நிறீஇ
முது தமிழ் உததியில் வரும் ஒரு திருமகள் முத்தம் அளித்து அருளே
முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே

@6 வருகைப்பருவம்

#53
அம் சிலம்பு ஓலிட அரிக் குரல் கிண்கிணி அரற்று செம் சீறடி பெயர்த்து
அடியிடும்-தொறும் நின் அலத்தகச் சுவடு பட்டு அம்புவி அரம்பையர்கள்-தம்
மஞ்சு துஞ்சு அளகத்து இளம்பிறையும் எந்தை முடி வளர் இளம்பிறையும் நாற
மணி நூபுரத்து அவிழும் மென் குரற்கோ அசையும் மட நடைக்கோ தொடர்ந்து உன்
செம் சிலம்பு அடி பற்று தெய்வக் குழாத்தினொடு சிறை ஓதிமம் பின் செலச்
சிற்றிடைக்கு ஒல்கி மணிமேகலை இரங்கத் திருக்கோயில் என என் நெஞ்சக்
கஞ்சமும் செம் சொல் தமிழ்க் கூடலும் கொண்ட காமர் பூங்கொடி வருகவே
கற்பகாடவியில் கடம்பாடவிப் பொலி கயல் கண் நாயகி வருகவே

#54
குண்டுபடு பேர் அகழி வயிறு உளைந்து ஈன்ற பைங்கோதையும் மதுரம் ஒழுகும்
கொழி தமிழ்ப் பனுவல் துறைப் படியும் மட நடைக் கூந்தல் அம் பிடியும் அறுகால்
வண்டு படு முண்டக மனைக் குடிபுகச் சிவ மணம் கமழ விண்ட தொண்டர்
மானதத் தட மலர்ப் பொன் கோயில் குடிகொண்ட மாணிக்கவல்லி வில் வேள்
துண்டுபடு மதி நுதல் தோகையொடும் அளவில் பல தொல் உரு எடுத்து அமர்செயும்
தொடு சிலை எனக் ககன முகடு முட்டிப் பூம் துணர்த் தலை வணங்கி நிற்கும்
கண்டு படும் கன்னல் பைம் காடு படு கூடல் கலாப மா மயில் வருகவே
கற்பகாடவியில் கடம்பாடவிப் பொலி கயல் கண் நாயகி வருகவே

#55
முயல் பாய் மதிக் குழவி தவழ் சூல் அடிப் பலவின் முள் பொதி குடக் கனியொடு
முடவுத் தடம் தாழை முப் புடைக் கனி சிந்த மோதி நீர் உண்டு இருண்ட
புயல் பாய் படப்பைத் தடம் பொழில்கள் அன்றி ஏழ் பொழிலையும் ஒருங்கு அலைத்துப்
புறம் மூடும் அண்டச் சுவர்த் தலம் இடித்து அப் புறக் கடல் மடுத்து உழக்கிச்
செயல் பாய் கடல் தானை செங்களம் கொள அம்மை திக்குவிசயம் கொண்ட நாள்
தெய்வக் கயல் கொடிகள் திசைதிசை எடுத்து எனத் திக்கு எட்டும் முட்ட வெடிபோய்க்
கயல் பாய் குரம்பு அணை பெரும் பணைத் தமிழ் மதுரை காவலன் மகள் வருகவே
கற்பகாடவியில் கடம்பாடவிப் பொலி கயல் கண் நாயகி வருகவே

#56
வடம் பட்ட நின் துணைக் கொங்கைக் குடம் கொட்டு மதுர அமுது உண்டு கடைவாய்
வழியும் வெள் அருவி என நிலவு பொழி கிம்புரி மருப்பில் பொருப்பு இடித்துத்
தடம் பட்ட பொன் தாது சிந்துரம் கும்பத் தலத்து அணிவது ஒப்ப அப்பிச்
சலராசி ஏழும் தடக் கையில் முகந்து பின் தான நீரால் நிரப்பி
முடம்பட்ட மதி அங்குசப் படை எனக் ககன முகடு கை தடவி உடுமீன்
முத்தம் பதித்திட்ட முகபடாம் என எழு முகில் படாம் நெற்றி சுற்றும்
கடம் பட்ட சிறு கண் பெரும் கொலைய மழ இளங்களிறு ஈன்ற பிடி வருகவே
கற்பகாடவியில் கடம்பாடவிப் பொலி கயல் கண் நாயகி வருகவே

#57
தேன் ஒழுகு கஞ்சப் பொலன் சீறடிக்கு ஊட்டு செம்பஞ்சியின் குழம்பால்
தெள் அமுது இறைக்கும் பசுங்குழவி வெண் திங்கள் செக்கர் மதியாக் கரை பொரும்
வான் ஒழுகு துங்கத் தரங்கப் பெரும் கங்கை வாணி நதியாச் சிவபிரான்
மகுட கோடீரத்து அடிச்சுவடு அழுத்தியிடு மரகதக் கொம்பு கதிர் கால்
மீன் ஒழுகு மா இரு விசும்பில் செலும் கடவுள் வேழத்தின் மத்தகத்து
வீற்றிருக்கும் சேயிழைக்கும் பசும் கமுகு வெண் கவரி வீசும் வாசக்
கான் ஒழுகு தட மலர்க் கடி பொழில் கூடல் வளர் கவுரியன் மகள் வருகவே
கற்பகாடவியில் கடம்பாடவிப் பொலி கயல் கண் நாயகி வருகவே

#58
வடக் குங்குமக் குன்று இரண்டு ஏந்தும் வண்டல் மகளிர் சிறு முற்றில்
வாரிக் குவித்த மணிக் குப்பை வான் ஆறு அடைப்ப வழி பிழைத்து
நடக்கும் கதிர் பொன் பரிசிலா நகு வெண் பிறை கைத் தோணியதா
நாள்மீன் பரப்புச் சிறு மிதப்பா நாப்பண் மிதப்ப நால் கோட்டுக்
கடக் குஞ்சரத்தின் மத நதியும் கங்கா நதியும் எதிர்கொள்ளக்
ககன வெளியும் கற்பகப் பூங்காடும் கடந்து கடல் சுருங்க
மடுக்கும் திரைத் தண் துறை வைகை வள நாட்டு அரசே வருகவே
மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே

#59
சுண்ணம் திமிர்ந்து தேன் அருவி துளைந்து ஆடு அறுகால் தும்பி பசும்
தோட்டுக் கதவம் திறப்ப மலர்த் தோகை குடிபுக்கு ஓகைசெயும்
தண் அம் கமலக் கோயில் பல சமைத்த மருதத் தச்சன் முழு
தாற்றுக் கமுகு நாற்றியிடும் தடம் கா வணப் பந்தரில் வீக்கும்
விண்ணம் பொதிந்த மேக படாம் மிசைத் தூக்கிய பல் மணிக் கொத்து
விரிந்தால் எனக் கால் நிமிர்ந்து தலை விரியும் குலை நெல் கற்றை பல
வண்ணம் பொலியும் பண்ணை வயல் மதுரைக்கு அரசே வருகவே
மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே

#60
தகரக் குழலின் நறையும் நறை தரு தீம் புகையும் திசைக்களிற்றின்
தடக் கை நாசிப் புழை மடுப்பத் தளரும் சிறு நுண் மருங்குல் பெரும்
சிகரக் களபப் பொம்மல் முலைத் தெய்வ மகளிர் புடை இரட்டும்
செம் கைக் கவரி முகந்து எறியும் சிறுகாற்கு ஒசிந்து குடிவாங்க
முகரக் களி வண்டு அடைகிடக்கும் முளரிக் கொடிக்கும் கலைக் கொடிக்கும்
முருந்து முறுவல் விருந்திடு புன்மூரல் நெடு வெண் நிலவு எறிப்ப
மகரக் கரும் கண் செம் கனி வாய் மட மான் கன்று வருகவே
மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே

#61
தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறை பழுத்த
துறைத் தீம் தமிழின் ஒழுகு நறும் சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர் சிமய
இமயப் பொருப்பில் விளையாடும் இள மென் பிடியே எறி தரங்கம்
உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திரு உள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமே மதுகரம் வாய்
மடுக்கும் குழல் காடு ஏந்தும் இள வஞ்சிக் கொடியே வருகவே
மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே

#62
பெரும் தேன் இறைக்கும் நறைக் கூந்தல் பிடியே வருக முழு ஞானப்
பெருக்கே வருக பிறை மௌலிப் பெம்மான் முக்கண் சுடர்க்கு இடு நல்
விருந்தே வருக மும்முதற்கும் வித்தே வருக வித்து இன்றி
விளைக்கும் பரமானந்தத்தின் விளைவே வருக பழ மறையின்
குருந்தே வருக அருள் பழுத்த கொம்பே வருக திருக் கடைக்கண்
கொழித்த கருணைப் பெரு வெள்ளம் குடைவார் பிறவிப் பெரும் பிணிக்கு ஓர்
மருந்தே வருக பசுங்குதலை மழலைக் கிளியே வருகவே
மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே

@7 அம்புலிப்பருவம்

#63
கண்டு படு குதலைப் பசும் கிளி இவட்கு ஒரு கலாபேதம் என்ன நின்னைக்
கலை மறைகள் முறையிடுவ கண்டோ அலாது ஒண் கலாநிதி எனத் தெரிந்தோ
வண்டு படு தெரியல் திருத் தாதையார் மரபின் வழிமுதல் எனக் குறித்தோ
வளர் சடை முடிக்கு எந்தை தண் நறும் கண்ணியா வைத்தது கடைப்பிடித்தோ
குண்டு படு பாற்கடல் வரும் திருச்சேடியொடு கூடப்பிறந்தது ஓர்ந்தோ
கோமாட்டி இவள் நின்னை வம் எனக் கொம் எனக் கூவிடப் பெற்றாய் உனக்கு
அண்டு படு சீர் இது அன்று ஆதலால் இவளுடன் அம்புலீ ஆட வாவே
ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே

#64
குலத்தோடு தெய்வக் குழாம் பிழிந்து ஊற்றிக் குடித்துச் சுவைத்து உமிழ்ந்த
கோது என்றும் அழல் விடம் கொப்பளிக்கின்ற இரு கோளின் உச்சிட்டம் என்றும்
கலைத் தோடு மூடிக் களங்கம் பொதிந்திட்ட கயரோகி என்றும் ஒருநாள்
கண்கொண்டு பார்க்கவும் கடவது அன்று எனவும் கடல் புவி எடுத்து இகழ விண்
புலத்து ஓடும் உடுமீன் கணத்தோடும் ஓடும் நின் போல்வார்க்கு மா பாதகம்
போக்கும் இத் தலம் அலது புகல் இல்லை காண் மிசைப் பொங்கு புனல் கற்பகக் காடு
அலைத்து ஓடு வைகைத் துறைப்படி மடப் பிடியொடு அம்புலீ ஆட வாவே
ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே

#65
கீற்று மதி என நிலவு தோற்று பருவத்தில் ஒளி கிளர் நுதல் செவ்வி வவ்விக்
கெண்டைத் தடம் கணார் எரு இட்டு இறைஞ்சக் கிடந்ததும் உடைந்து அமுதம் விண்டு
ஊற்று புது வெண் கலை உடுத்து முழுமதி என உதித்த அமையத்தும் அம்மை
ஒண் முகத்து ஒழுகு திரு அழகைக் கவர்ந்துகொண்டு ஓடினது நிற்க மற்றை
மாற்றவளொடும் கேள்வர் மௌலியில் உறைந்ததும் மறந்து உனை அழைத்த பொழுதே
மற்று இவள் பெரும் கருணை சொற்றிடக் கடவதோ மண் முழுதும் விம்மு புயம் வைத்து
ஆற்று முடி அரசு உதவும் அரசிளங்குமரியுடன் அம்புலீ ஆட வாவே
ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே

#66
விண்தலம் பொலியப் பொலிந்திடுதியேல் உனது வெம் பணிப் பகை விழுங்கி
விக்கிடக் கக்கிடத் தொக்கு இடர்ப்படுதி வெயில் விரியும் சுடர்ப் பரிதியின்
மண்டலம் புக்கனை இருத்தியெனின் ஒள் ஒளி மழுங்கிட அழுங்கிடுதி பொன்
வளர் சடைக் காட்டு எந்தை வைத்திடப் பெறுதியேல் மாசுணம் சுற்ற அச்சம்
கொண்டு கண் துஞ்சாது இருப்பதும் மருப் பொங்கு கோதை இவள் சீறடிகள் நின்
குடர் குழம்பிடவே குமைப்பதும் பெறுதியேல் கோமாட்டி-பால் அடைந்தால்
அண்ட பகிரண்டமும் அகண்டமும் பெறுதியால் அம்புலீ ஆட வாவே
ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே

#67
எண்_இல் பல புவனப் பெரும் தட்டை ஊடுருவி இவள் பெரும் புகழ் நெடு நிலா
எங்கணும் நிறைந்திடுவது அங்கு அதனில் மெள்ள நீ எள்ளளவு மொண்டுகொண்டு
வெண் நிலவு பொழிவது கிடைத்தனை மடுத்து இவள் விழிக்கடை கொழித்த கருணை
வெள்ளம் திளைத்து ஆடு பெற்றியால் தண் அளி விளைப்பதும் பெற்றனை-கொலாம்
மண்ணில் ஒண் பைம் கூழ் வளர்ப்பது உன்னிடத்து அம்மை வைத்திடும் சத்தியே காண்
மற்று ஒரு சுதந்தரம் நினக்கு என இலைக் கலை மதிக் கடவுள் நீயும் உணர்வாய்
அண்ணல் அம் களி யானை அரசர் கோமகளுடன் அம்புலீ ஆட வாவே
ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே

#68
முன்பு உம்பர் அரசு செய் பெரும் பாவமும் போக மூரி மாத் தொடர் சாபமும்
மும்மைத் தமிழ்ச் செழியன் வெப்பொடு கொடும் கூனும் மோசித்த இத் தலத்தின்
தன் பெருந்தன்மையை உணர்ந்திலை-கொல் சிவ ராசதானியாய்ச் சீவன் முத்தித்
தலமுமாய்த் துவாதசாந்தத் தலமும் ஆனது இத் தலம் இத் தலத்து அடைதியேல்
மன் பெரும் குரவன் பிழைத்த பாவமும் மற்றை மா மடிகள் இடு சாபமும்
வளர் இளம் பருவத்து நரை திரையும் முதிர் கூனும் மாற்றிடப்பெறுதி கண்டாய்
அன்பர் என்பு உருகக் கசிந்திடு பசும் தேனொடு அம்புலீ ஆட வாவே
ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே

#69
கும்பம் சுமந்த மத வெள்ள நீர் கொட்டும் கொடும் களிறு இடும் போர்வையான்
குடில கோடீரத்து இருந்துகொண்டு அம் நலார் கொய் தளிர்க் கை வருடவும்
செம்பஞ்சு உறுத்தவும் பதைபதைத்து ஆர் அழல் சிகை எனக் கொப்பளிக்கும்
சீறடிகள் கன்றிச் சிவந்திடச்செய்வதும் திருவுளத்து அடையாது பொன்
தம்பம் சுமந்து ஈன்ற மானுட விலங்கின் தனிப் புதல்வனுக்கு வட்டத்
தண் குடை நிழற்று நினை வம் என அழைத்தனள் தழைத்திடு கழைக் கரும்பு ஒன்று
அம்பு அஞ்சுடன் கொண்ட மகரக் கொடிக் கொடியொடு அம்புலீ ஆட வாவே
ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே

#70
துளி தூங்கு தெள் அமுத வெள் அருவி பொழியும் நின் தொல் மரபு தழைய வந்து
தோன்றிடும் கௌரியர் குலக்கொழுந்தைக் கண்டு துணை விழியும் மனமும் நின்று
களி தூங்க அளவளாய் வாழாமல் உண் அமுது கலையொடும் இழந்து வெறு மண்
கலத்திடு புதுக் கூழினுக்கு இரவு பூண்டு ஒரு களங்கம் வைத்தாய் இது அலால்
ஒளி தூங்கு தெளி விசும்பினில் நின்னொடு ஒத்தவன் ஒருத்தன் கரத்தின் வாரி
உண்டு ஒதுக்கிய மிச்சில் நள் இருளில் அள்ளி உண்டு ஓடுகின்றாய் என் செய்தாய்
அளி தூங்கு ஞிமிறு எழுந்து ஆர்க்கும் குழல் திருவொடு அம்புலீ ஆட வாவே
ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே

#71
மழைக் கொந்தளக் கோதை வம்-மின் என்றளவில் நீ வந்திலை எனக் கடுகலும்
வாள் முகச் செவ்விக்கு உடைந்து ஒதுங்கின் அவன் எதிர்வர ஒல்கியோ பணிகள் கோள்
இழைக்கும்-கொல் பின்தொடர்ந்து என அஞ்சியோ தாழ்த்து இருந்தனன் போலும் என யாம்
இத்துணையும் ஒருவாறு தப்புவித்தோம் வெகுளில் இனி ஒரு பிழைப்பு இல்லை காண்
தழைக்கும் துகில் கொடி முகில் கொடி திரைத்து மேல் தலம் வளர் நகில் கொடிகளைத்
தாழ் குழலும் நீவி நுதல் வெயர்வும் துடைத்து அம்மை சமயம் இது என்று அலுவலிட்டு
அழைக்கும் தடம் புரிசை மதுரைத் துரைப்பெணுடன் அம்புலீ ஆட வாவே
ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே

#72
ஏடகத்து எழுதாத வேதச் சிரத்து அரசு இருக்கும் இவள் சீறடிகள் நின்
இதயத் தடத்தும் பொலிந்தவா திருவுளத்து எண்ணி அன்றே கபடமா
நாடகத்து ஐந்தொழில் நடிக்கும் பிரான் தெய்வ நதியொடு முடித்தல் பெற்றாய்
நங்கை இவள் திருவுளம் மகிழ்ச்சிபெறில் இது போல் ஒர் நல் தவப் பேறு இல்லை காண்
மாடகக் கடை திரித்து இன் நரம்பு ஆர்த்து உகிர் வடிம்பு தைவரும் அம் நலார்
மகரயாழ் மழலைக்கும் மரவங்கள் நுண் துகில் வழங்கக் கொழும் கோங்கு தூங்கு
ஆடகப் பொற்கிழி அவிழ்க்கும் மதுரைத் திருவொடு அம்புலீ ஆட வாவே
ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே

@8 அம்மானைப்பருவம்

#73
கரைக்கும் கடாம் இரு கவுள் குடம் உடைந்து ஊற்று களிறு பெரு வயிறு தூர்ப்பக்
கவளம் திரட்டிக் கொடுப்பது எனவும் சூழ்ந்து ஒர் கலை மதிக் கலச அமுதுக்கு
இரைக்கும் பெரும் தேவர் புன்கண் துடைத்திட எடுத்த அமுத கலசம் வெவ்வேறு
ஈந்திடுவது எனவும் முழு முத்து இட்டு இழைத்திட்ட எறிபந்தின் நிரை என்னவும்
விரைக்கும் தளிர்க் கைக் கொழும் தாமரைத் துஞ்சி மீது எழுந்து ஆர்த்த பிள்ளை
வெள் ஓதிமத் திரள் இது எனவும் கரும் பாறை மீமிசைச் செஞ்சாந்து வைத்து
அரைக்கும் திரைக் கை வெள் அருவி வைகைத் துறைவி அம்மானை ஆடி அருளே
ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே

#74
திங்கள்_கொழுந்தைக் கொழுந்துபடு படர் சடைச் செருகு திரு மணவாளன் மேல்
செழு மணப் பந்தரில் எடுத்து எறியும் அமுத வெண் திரளையில் புரளும் அறுகால்
பைம் கண் சுரும்பு என விசும்பில் படர்ந்து எழும் பனி மதி மிசைத் தாவிடும்
பருவ மட மான் என என் அம்மனை நின் அம்மனைப் படை விழிக் கயல் பாய்ந்து எழ
வெம் கண் கடும் கொலைய வேழக் குழாம் இது என மேகக் குழாத்தை முட்டி
விளையாடு மழ களிறு கடைவாய் குதட்ட முகை விண்ட அம்பு ஐந்து கோத்த
அம் கண் கரும்பு ஏந்தும் அபிடேகவல்லி திரு அம்மானை ஆடி அருளே
ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே

#75
கள் ஊறு கஞ்சக் கரத்து ஊறு சே ஒளி கலப்பச் சிவப்பு ஊறியும்
கருணைப் பெருக்கு ஊற அமுது ஊறு பார்வைக் கடைக்கண் கறுப்பு ஊறியும்
நள் ஊறு மறு ஊறு அகற்று முக மதியில் வெண் நகை ஊறு நிலவு ஊறியும்
நல் தரள அம்மனை ஒர் சிற்குணத்தினை மூன்று நற்குணம் கதுவல் காட்ட
உள் ஊறு களி துளும்பக் குரவர் இருவீரும் உற்றிடு துவாதசாந்தத்து
ஒரு பெரு வெளிக்கே விழித்து உறங்கும் தொண்டர் உழுவல் அன்பு என்பு உருக நெக்கு
அள் ஊற உள்ளே கசிந்து ஊறு பைம் தேறல் அம்மானை ஆடி அருளே
ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே

#76
குலைப்பட்ட காந்தள் தளிர்க் கையில் செம் மணி குயின்ற அம்மனை நித்திலம்
கோத்த அம்மனை முன் செலப் பின் செலும் தன்மை கோகனக மனையாட்டி-பால்
கலைப்பட்ட வெண் சுடர்க் கடவுள் தோய்ந்து ஏக அது கண்டுகொண்டே புழுங்கும்
காய் கதிர்க் கடவுளும் பின்தொடர்வது ஏய்ப்பக் கறங்கு அருவி தூங்க ஓங்கும்
மலை பட்ட ஆரமும் வயிரமும் பிறவுமாம் மா மணித் திரளை வாரி
மறி திரைக் கையால் எடுத்து எறிய நால் கோட்டு மத களிறு பிளிறி ஓடும்
அலை பட்ட வைகைத் துறைச் சிறை அனப் பேடை அம்மானை ஆடி அருளே
ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே

#77
தமரான நின் துணைச் சேடியரில் ஒருசிலர் தடக் கையின் எடுத்து ஆடும் நின்
தரள அம்மனை பிடித்து எதிர் வீசிவீசி இடசாரி வலசாரி திரியா
நிமிரா முன் அம்மனை ஒர் ஆயிரம் எடுத்து எறிய நிரைநிரையவாய்க் ககன மேல்
நிற்கின்றது அம்மை நீ பெற்ற அகிலாண்டமும் நிரைத்து வைத்தது கடுப்ப
இமிரா வரிச் சுரும்பு ஆர்த்து எழப் பொழிலூடு எழுந்த பைம் தாது உலகு எலாம்
இருள்செயச்செய்து நின் சேனாபராகம் எனும் ஏக்கம் அளகாபுரிக்கும்
அமராவதிக்கும் செய் மதுராபுரித் தலைவி அம்மானை ஆடி அருளே
ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே

#78
உயிராய் இருக்கின்ற சேடியரில் மலர் மீது உதித்தவள் எதிர்த்து நின்னோடு
ஒட்டி எட்டிப் பிடித்திட்ட அம்மனை தேடி ஓடி ஆடித் திரிய நீ
பெயராது இருந்து விளையாடுவது கண்டு எந்தை பிறை முடி துளக்க முடி மேல்
பெருகு சுர கங்கை நுரை பொங்கல் அம்மானை அப் பெண்கொடியும் ஆடல் மான
வெயரா மனம் புழுங்கிடும் அமரர் தச்சனும் வியப்பச் செயும் தவள மா
மேடையும் தண் தரள மாடமும் தெள் நிலா வீசத் திசைக்களிறு எலாம்
அயிராவதத்தினை நிகர்க்கும் மதுரைத் தலைவி அம்மானை ஆடி அருளே
ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே

#79
முத்தம் அழுத்திய அம்மனை கைம் மலர் முளரி மணம் கமழ
மொய் குழல் வண்டு நின் மை விழி வண்டின் முயங்கி மயங்கியிடக்
கொத்து மணித் திரளில் செயும் அம்மனை குயிலின் மிழற்றிய நின்
குழலின் இசைக்கு உருகிப் பனி தூங்கு குறும் துளி சிந்தியிட
வித்துருமத்தில் இழைத்தவும் நின் கை விரல் பவளத் தளிரின்
விளை தரும் ஒள் ஒளி திருடப் போவதும் மீள்வதுமாய்த் திரிய
அத்தன் மனத்து எழுதிய உயிர் ஓவியம் ஆடுக அம்மனையே
அழகு தழைந்த கல்யாண சவுந்தரி ஆடுக அம்மனையே

#80
விளரி மிழற்று அளி குமிறு குழல் கொடி வீசிய அம்மனை போய்
விண்ணில் நிரைத்து எழுவது ககனம் திருமேனியது ஆனவருக்கு
இளநிலவு உமிழ்தரு முத்தின் கோவை எடுத்து அவர் திருமார்புக்கு
இடுவ கடுப்பவும் அப்பரிசே பல மணியின் இயற்றியிடும்
வளர் ஒளி விம்மிய அம்மனை செல்வது வானவில் ஒத்திடவும்
மனன் நெக்கு உருகப் பரமானந்தம் மடுத்த திருத்தொண்டர்க்கு
அளி கனியத் திருவருள் கனியும் கனி ஆடுக அம்மனையே
அழகு தழைந்த கல்யாண சவுந்தரி ஆடுக அம்மனையே

#81
கைம் மலரில் பொலி கதிர் முத்து அம்மனை நகை முத்து ஒளி தோயக்
கண்டவர் நிற்கப் பிறர் சிலர் செம் கைக் கமலச் சுடர் கதுவச்
செம் மணியில் செய்து இழைத்தன எனவும் சிற்சிலர் கண்கடையின்
செவ்வியை வவ்விய பின் கருமணியில் செய்தன-கொல் எனவும்
தம் மனம் ஒப்ப உரைப்பன மற்றைச் சமயத்து அமைவு பெறார்
தத்தமில் நின்று பிதற்றுவ பொருவத் தனிமுதல் யாம் என்பார்க்கு
அம்மனை ஆயவர்-தம் மனை ஆனவள் ஆடுக அம்மனையே
அழகு தழைந்த கல்யாண சவுந்தரி ஆடுக அம்மனையே

#82
ஒள் ஒளி மரகதமும் முழு நீலமும் ஒண் தரளத் திரளும்
ஒழுகு ஒளி பொங்க இழைத்திடும் அம்மனை ஒரு மூன்று அடைவில் எடாக்
கள் அவிழ் கோதை விசும்புற வீசுவ கண்_நுதல்-பால் செல நின்
கையில் வளர்த்த பசும் கிளியும் வளர் காமர் கரும் குயிலும்
பிள்ளை வெள் ஓதிமமும் முறைமுறையால் பெருகிய காதலை மேல்
பேச விடுப்ப கடுப்ப அணைத்து ஒரு பெடையோடு அரச அனம்
அள்ளல் வயல் துயில் மதுரைத் துரைமகள் ஆடுக அம்மனையே
அழகு தழைந்த கல்யாண சவுந்தரி ஆடுக அம்மனையே

@9 நீராடற் பருவம்

#83
வளை ஆடு வண் கைப் பொலன் சங்கொடும் பொங்கு மறி திரைச் சங்கு ஓலிட
மதர் அரிக் கண் கயல் வரிக் கயலொடும் புரள மகரந்தம் உண்டு வண்டின்
கிளை ஆடு நின் திருக் கேசபாரத்தினொடு கிளர் சைவலக் கொத்து எழக்
கிடையாத புது விருந்து எதிர்கொண்டு தத்தம் இல் கேளிர்கள் தழீஇக்கொண்டு எனத்
தளை ஆடு கறை அடிச் சிறு கண் பெரும் கைத் தடம் களிறு எடுத்து மற்று அத்
தவளக் களிற்றினொடு முட்டவிட்டு எட்டு மத தந்தியும் பந்து அடித்து
விளையாடும் வைகைத் தடம் துறை குடைந்து புது வெள்ள நீர் ஆடி அருளே
விடைக் கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே

#84
நிரை பொங்கிடும் செம் கை வெள் வளை கலிப்ப நகை நிலவு விரி பவளம் வெளிற
நீலக் கருங்குவளை செங்குவளை பூப்ப அறல் நெறி குழல் கற்றை சரியத்
திரை பொங்கு தண் அம் துறைக் குடைந்து ஆடுவ செழும் தரங்கக் கங்கை நுண்
சிறு திவலையாப் பொங்கும் ஆனந்த மாக் கடல் திளைத்து ஆடுகின்றது ஏய்ப்பக்
கரை பொங்கு மறி திரைக் கையால் தடம் பணைக் கழனியில் கன்னியர் முலைக்
களபக் குழம்பைக் கரைத்துவிட்டு அள்ளல் கரும் சேறு செம் சேறதாய்
விரை பொங்கிடத் துங்க வேகவதி பொங்கு புது வெள்ள நீர் ஆடி அருளே
விடைக் கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே

#85
பண் நாறு கிளி மொழிப் பாவை நின் திருமேனி பாசொளி விரிப்ப அம் தண்
பவளக் கொடிக் காமர் பச்சிளம் கொடியதாய்ப் பரு முத்தம் மரகதமதாய்த்
தண் நாறும் மல்லல் துறைச் சிறை அனம் களி தழைக்கும் கலா மஞ்ஞையாய்ச்
சகலமும் நின் திருச் சொருபம் என்று ஓலிடும் சதுர்மறைப் பொருள் வெளியிடக்
கள் நாறு குழலியர் குடக் கொங்கை பொங்கு செம் களபமும் கத்தூரியும்
கப்புரமும் ஒக்கக் கரைத்து ஓடி வாணியும் காளிந்தியும் கங்கையாம்
விண் ஆறும் அளவளாய் விளையாடு புது வைகை வெள்ள நீர் ஆடி அருளே
விடைக் கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே

#86
தூங்கு சிறை அறுகால் உறங்கு குழல் நின் துணைத் தோழியர்கள் மேல் குங்குமம்
தோயும் பனித் துறைச் சிவிறி வீசக் குறும் துளி எம்மருங்கும் ஓடி
வாங்கு மலை_வில்லியார் விண் உரு நனைத்து அவர் வனைந்திடு திகம்பரம் செவ்
வண்ணமாச் செய்வது அச் செவ்வான_வண்ணரொடு மஞ்சள் விளையாடல் ஏய்ப்பத்
தேங்கு மலை அருவி நெடு நீத்தத்து மாசுணத் திரள் புறம் சுற்றி ஈர்ப்பச்
சின வேழம் ஒன்று ஒரு சுழிச் சுழலல் மந்தரம் திரை கடல் மதித்தல் மானும்
வீங்கு புனல் வைகைத் தடம் துறை குடைந்து புது வெள்ள நீர் ஆடி அருளே
விடைக் கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே

#87
துளிக்கும் பனித் திவலை சிதறிக் குடைந்து ஆடு துறையில் துறைத் தமிழொடும்
தொல் மறை தெளிக்கும் கலைக் கொடி எனும் துணைத் தோழி மூழ்கிப் புனல் மடுத்து
ஒளிக்கும் பதத்து மற்றவள் என அனப் பேடை ஓடிப் பிடிப்பது அம்மை
ஒண் பரிபுரத் தொனியும் மட நடையும் வௌவினது உணர்ந்து பின்தொடர்வது ஏய்ப்ப
நெளிக்கும் தரங்கத் தடம் கங்கையுடன் ஒட்டி நித்திலப் பந்து ஆடவும்
நிரை மணித் திரளின் கழங்கு ஆடவும் தன் நெடும் திரைக் கை எடுத்து
விளிக்கும் பெரும் தண் துறைக் கடவுள் வைகை நெடு வெள்ள நீர் ஆடி அருளே
விடைக் கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே

#88
துங்க முலைப் பொன் குடம் கொண்டு தூ நீர் நீந்தி விளையாடும்
துணைச் சேடியர்கள் மேல் பசும்பொன் சுண்ணம் எறிய அறச் சேந்த
அம் கண் விசும்பில் நின் குழல் காட்டு அறுகால் சுரும்பர் எழுந்து ஆர்ப்பது
ஐயன் திருமேனியில் அம்மை அருள் கண் சுரும்பு ஆர்த்து எழல் மானச்
செம் கண் இளைஞர் களிக் காமத் தீ மூண்டிடக் கண்டு இளமகளிர்
செழு மென் குழற்கு ஊட்டு அகில் புகையால் திரள் காய்க் கதலி பழுத்து நறை
பொங்கு மதுரைப் பெருமாட்டி புது நீர் ஆடி அருளுகவே
பொருநைத் துறைவன் பொன் பாவாய் புது நீர் ஆடி அருளுகவே

#89
இழியும் புனல் தண் துறை முன்றில் இது எம்பெருமான் மண் சுமந்த
இடம் என்று அலர் வெண் கமலப் பெண் இசைப்பக் கசிந்து உள் உருகி இரு
விழியும் சிவப்ப ஆனந்த வெள்ளம் பொழிந்து நின்றனையால்
மீண்டும் பெருக விடுத்து அவற்கு ஓர் வேலை இடுதல் மிகை அன்றே
பிழியும் நறைக் கற்பகம் மலர்ந்த பிரச மலர்ப் பூந்துகள் மூழ்கும்
பிறைக் கோட்டு அயிராவதம் கூந்தல் பிடியோடு ஆடத் தேன் அருவி
பொழியும் பொழில் கூடலில் பொலிவாய் புது நீர் ஆடி அருளுகவே
பொருநைத் துறைவன் பொன் பாவாய் புது நீர் ஆடி அருளுகவே

#90
மறிக்கும் திரைத் தண் புனல் வைகை வண்டலிடும் மண் கூடை கட்டி
வாரிச் சுமந்தோர் அம்மை துணை மணிப் பொன் குடத்தில் கரைத்து ஊற்றும்
வெறிக் குங்குமச் சேறு எக்கரிடும் விரைப் பூம் துறை மண் பெறின் ஒருத்தி
வெண் பிட்டு இடவும் அடித்து ஒருவன் வேலை கொளவும் வேண்டும் எனக்
குறிக்கும் இடத்தில் தடம் தூ நீர் குடையப்பெறின் அக் கங்கை திருக்
கோடீரத்துக் குடியிருப்பும் கூடா போலும் பொலன் குவட்டுப்
பொறிக்கும் சுறவக் கொடி உயர்த்தாய் புது நீர் ஆடி அருளுகவே
பொருநைத் துறைவன் பொன் பாவாய் புது நீர் ஆடி அருளுகவே

#91
சொல்_கொடியோடு மலர்_கொடி கொய்து தொடுத்த விரைத் தொடையும்
சுந்தரி தீட்டிய சிந்துரமும் இரு துங்கக் கொங்கைகளின்
வில் கொடி கோட்டிய குங்குமமும் குடை வெள்ளம் கொள்ளைகொள
வெளியே கண்டு நின் வடிவழகு ஐயன் விழிக்கு விருந்துசெய
இல்_கொடியோடு கயல் கொடி வீரன் எடுத்த கருப்பு விலும்
இந்திர தனுவும் வணங்க வணங்கும் இணைப் புருவக் கொடி சேர்
பொன்_கொடி இமய மடக் கொடி வைகைப் புது நீர் ஆடுகவே
பொருநைத் துறையொடு குமரித் துறையவள் புது நீர் ஆடுகவே

#92
கொள்ளை வெள் அருவி படிந்திடும் இமயக் கூந்தல் மடப் பிடி போல்
கொற்கைத் துறையில் சிறை விரியப் புனல் குடையும் அனப் பெடை போல்
தெள் அமுதக் கடல் நடுவில் தோன்று செழும் கமலக் குயில் போல்
தெய்வக் கங்கைத் திரையூடு எழும் ஒரு செம்பவளக் கொடி போல்
கள் அவிழ் கோதையர் குழலில் குழல் இசை கற்றுப் பொன் தருவில்
களி நறவு உண்ட மடப் பெடையோடு கலந்து முயங்கி வரிப்
புள் உறை பூம் பொழில் மதுரைத் துரைமகள் புது நீர் ஆடுகவே
பொருநைத் துறையொடு குமரித் துறையவள் புது நீர் ஆடுகவே

@10 ஊசற்பருவம்

#93
ஒள் ஒளிய பவளக் கொழும் கால் மிசைப் பொங்கும் ஒழுகு ஒளிய வயிர விட்டத்து
ஊற்றும் செழும் தண் நிலாக் கால் விழுந்து அனைய ஒண் தரள வடம் வீக்கியே
அள்ளிட வழிந்து செற்று ஒளி துளும்பும் கிரண அருண ரத்னப் பலகை புக்கு
ஆடும் நின் தோற்றம் அப் பரிதி மண்டலம் வளர் அரும் பெரும் சுடரை ஏய்ப்பத்
தெள்ளு சுவை அமுதம் கனிந்த ஆனந்தத் திரைக் கடல் மடுத்து உழக்கும்
செல்வச் செருக்கர்கள் மனக் கமலம் நெக்க பூம் சேக்கையில் பழைய பாடல்
புள் ஒலி எழக் குடிபுகுந்த சுந்தரவல்லி பொன் ஊசல் ஆடி அருளே
புழுகு நெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே

#94
வில் பொலிய நிலவு பொழி வெண் நித்திலம் பூண்டு விழுதுபட மழ கதிர்விடும்
வெண் தரள ஊசலின் மிசைப் பொலிவ புண்டரிக வீட்டில் பொலிந்து மதுரச்
சொல் பொலி பழம் பாடல் சொல்லுகின்றவளும் நின் சொருபம் என்பதும் இளநிலாத்
தூற்று மதி மண்டலத்து அமுதமாய் அம்மை நீ தோன்றுகின்றதும் விரிப்ப
எல் பொலிய ஒழுகு முழு மாணிக்க மணி முகப்பு ஏறி மழை முகில் தவழ்வது அவ்
எறி சுடர்க் கடவுள் திருமடியில் அவன் மட மகள் இருந்து விளையாடல் ஏய்க்கும்
பொன் புரிசை மதுராபுரிப் பொலி திருப்பாவை பொன் ஊசல் ஆடி அருளே
புழுகு நெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே

#95
உருகிய பசும்பொன் அசும்ப வெயில் வீசு பொன் ஊசலை உதைந்து ஆடலும்
ஒண் தளிர் அடிச்சுவடு உறப் பெறும் அசோகு நறவு ஒழுகு மலர் பூத்து உதிர்வது உன்
திருமுன் உருவம் கரந்து எந்தையார் நிற்பது தெரிந்திட நமக்கு இது எனாச்
செம் சிலைக் கள்வன் ஒருவன் தொடை மடக்காது தெரி கணைகள் சொரிவது ஏய்ப்ப
எரி மணி குயின்ற பொன் செய் குன்று மழ கதிர் எறிப்ப எழு செம் சோதியூடு
இளமதி இமைப்பது உன் திருமுகச் செவ்வி வேட்டு எழுநாத்-தலைத் தவம் அவன்
புரிவது கடுக்கும் மதுராபுரி மடக் கிள்ளை பொன் ஊசல் ஆடி அருளே
புழுகு நெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே

#96
கங்கை முடி மகிழ்நர் திருவுளம் அசைந்து ஆடக் கலந்து ஆடு பொன் ஊசல் அக்
கடவுள் திரு நோக்கத்து நெக்கு உருகியிட நின் கடைக்கண் நோக்கத்து மற்று அச்
செம் கண் விடையவர் மனமும் ஒக்கக் கரைந்து உருகு செய்கை அவர் சித்தமே பொன்
திரு ஊசலா இருந்து ஆடுகின்றாய் எனும் செய்தியை எடுத்துரைப்ப
அம் கண் நெடு நிலம் விடர்படக் கிழித்து ஓடு வேர் அடியில் பழுத்த பலவின்
அளி பொன் சுளைக் குடக் கனி உடைந்து ஊற்று தேன் அருவி பிலம் ஏழும் முட்டிப்
பொங்கி வரு பொழில் மதுர மதுரைநாயகி திருப் பொன் ஊசல் ஆடி அருளே
புழுகு நெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே

#97
சேர்க்கும் சுவைப் பாடல் அமுது ஒழுக ஒழுகு பொன் திரு ஊசல் பாடி ஆடச்
சிவபிரான் திருமுடி அசைப்ப முடி மேல் பொங்கு செம் கண் அரவு அரசு அகிலம் வைத்து
ஆர்க்கும் பணாடவி அசைப்பச் சராசரமும் அசைகின்றது அம்மனை அசைந்து
ஆடலால் அண்டமும் அகண்ட பகிரண்டமும் அசைந்து ஆடுகின்றது ஏய்ப்பக்
கார்க் கொந்தளக் கோதை மடவியர் குழற்கு ஊட்டு கமழ் நறும் புகை விண் மிசைக்
கை பரந்து எழுவது உரு மாறு இரவி மண்டலம் கைக்கொள இருள் படலம் வான்
போர்க்கின்றது ஒக்கும் மதுராபுரி மடக் கிள்ளை பொன் ஊசல் ஆடி அருளே
புழுகு நெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே

#98
தேர்க் கோலமொடு நின் திருக் கோலமும் கண்டு சிந்தனை புழுங்கு கோபத்
தீ அவிய மூண்டு எழும் காமானலம் கான்ற சிகை என எழுந்து பொங்கும்
தார்க் கோல வேணியர் தம் உள்ளம் எனவே பொன் தடம் சிலையும் உருகி ஓடத்
தண் மதி முடித்ததும் வெள் விடைக்கு ஒள் மணி தரித்ததும் விருத்தமாகக்
கார்க் கோல நீலக் கரும் களத்தோடு ஒருவர் செங்களத்து ஏற்று அலமரக்
கண் கணை துரக்கும் கரும் புருவ வில்லொடு ஒரு கை வில் குனித்து நின்ற
போர்க்கோலமே திருமணக்கோலம் ஆன பெண் பொன் ஊசல் ஆடி அருளே
புழுகு நெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே

#99
குழியும் பசும் கண் முசுக்கலை வெரீஇச் சிறு குறும் பலவின் நெடிய பாரக்
கொம்பு ஒடிபடத் தூங்கு முள் புறக் கனியின் குடம் கொண்டு நீந்த மடைவாய்
வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர்க் கரு விரல் கூன்
மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மரக் கோடு பாய வயிறு
கிழியும் கலைத் திங்கள் அமுது அருவி தூங்குவ கிளைத்த வண்டு உழு பைம் துழாய்க்
கேசவன் கால் வீச அண்ட கோளகை முகடு கீண்டு வெள் அருவி பொங்கிப்
பொழியும் திறத்தினை நிகர்க்கும் மதுரைத் தலைவி பொன் ஊசல் ஆடி அருளே
புழுகு நெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே

#100
ஒல்கும் கொடிச் சிறு மருங்குற்கு இரங்கி மெல் ஓதி வண்டு ஆர்த்து எழப் பொன்
ஊசலை உதைந்து ஆடும் அளவின் மலர்_மகள் அம்மை உள் அடிக் கூன் பிறை தழீஇ
மல்கும் சுவட்டினை வலம்புரிக் கீற்று இது-கொல் வாணி என் அசதியாடி
மணி முறுவல் கோட்ட நின் வணங்கா முடிக்கு ஒரு வணக்கம் நெடு நாண் வழங்கப்
பில்கும் குறும் பனிக் கூதிர்க்கு உடைந்து எனப் பிரசம் நாறு ஐம்பாற்கு இளம்
பேதையர்கள் ஊட்டும் கொழும் புகை மடுத்து மென் பெடையொடு வரிச் சுரும்பர்
புல்கும் தடம் பணை உடுத்து மதுரைத் தலைவி பொன் ஊசல் ஆடி அருளே
புழுகு நெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே

#101
கொன் செய்த செழு மணித் திரு ஊசல் அரமகளிர் கொண்டாட ஆடும்-தொறும்
குறுமுறுவல் நெடு நிலவு அருந்தும் சகோரமாய்க் கூந்தல் அம் கற்றை சுற்றும்
தென் செய்த மழலைச் சுரும்பராய் மங்கை நின் செம் கைப் பசும் கிள்ளையாய்த்
தேவதேவன் பொலிவதும் எவ் உருவுமாம் அவன் திருவுருவின் முறை தெரிப்ப
மின் செய்த சாயலவர் மேல் தலத்து ஆடிய விரைப் புனலின் அருவி குடையும்
வெள் ஆனை குங்குமச் செம் சேறு நாற மட மென் பிடியை அஞ்சி நிற்கும்
பொன் செய்த மாடம் மலி கூடல் பெரும் செல்வி பொன் ஊசல் ஆடி அருளே
புழுகு நெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே

#102
இரு பதமும் மென் குரல் கிண்கிணியும் முறையிட்டு இரைத்திடும் அரிச் சிலம்பும்
இறும் இறும் மருங்கு என்று இரங்குமே கலையும் பொன் எழுது செம்பட்டு வீக்கும்
திரு இடையும் உடைதாரமும் ஒட்டியாணமும் செம் கைப் பசும் கிள்ளையும்
திரு முலைத் தரள உத்தரியமும் மங்கலத் திருநாணும் அழகு ஒழுக நின்று
அருள் பொழியும் மதி முகமும் முக மதியின் நெடு நிலவு அரும்பு குறுநகையும் ஞா
னானந்த மாக் கடல் குடைந்து குழை மகரத்தொடு அமராடும் ஓடு அரிக் கண்
பொரு கயலும் வடிவழகு பூத்த சுந்தரவல்லி பொன் ஊசல் ஆடி அருளே
புழுகு நெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே
***