குசேலோபாக்கியானம்

**வல்லூர் தேவராச பிள்ளை இயற்றிய
** குசேலோபாக்கியானம்

@0 பாயிரம்
** காப்பு
** கடவுள் வாழ்த்து
** எழுசீரடி ஆசிரிய விருத்தம்

#1
கடல் உடைப் புவி வாழ் உயிர் எலாம் களிக்கக் காத்து அருள் கண்ணனோடு அரு நூல்
அடலுறப் பயின்று பின் அவன் அருளால் அரும் திருப் பெறு குசேலன்-தன்
மிடல் உடைக் காதை விளம்பிட ஊறு விரவிடாது அளித்து அருள்புரியும்
மடல் உடைக் கடுக்கைச் சடை முடிக் கபோல மதக் கய மழ இளம் கன்றே

#2
குடத்தியர் துகிலைக் கவர்ந்தவன் முனிவர் கோதையர் மூரல் பண்ணியங்கள்
இடக் களித்து உண்டோன் இந்திரன் ஏவ எழிலிகள் பொழிந்த கல்மழையைத்
தடப் பெரும் கோவர்த்தனம் கரத்து ஏந்தி தடுத்தவன் கமலை வாழ் மார்பன்
வடப் பசும் தளிரின் இனிது உறை கண்ணன் மலர் தலை உலகு எலாம் காக்க

#3
வேய்ங்குழல் இசையாம் வலிய மந்திரத்தின் மேன்மை சால் யாதவர் குலத்துப்
பூம் குழல் மடவார்-தம்மைத் தன்வசமாப் புரிந்து வேள் நூற்படி கலவி
ஆங்கு அவர்-பால் பல் நாள் இயற்றிய சீர் ஆழி அம் கரதலக் கொண்டல்
வாங்கு நீர்ப் பரவை உலகு உயிர்க்கு என்றும் வழங்குக திருவொடும் ஆயுளுமே

#4
மலர் விழித் தேவகிக்கு நல் மகனாய் மகிதலத்து அவதரித்து அதன் பின்
பலர் புகழ்ந்து ஏத்தும் நந்தகோபாலன் பனி மதி ஆனன அசோதை
அலர் மனம் களிப்ப ஆடுறூஉம் பாலன் ஆகிய ஐயனே நல் நா
வலர் பராவுறப் பல் வளங்களும் உயிர்க்கும் வழங்கி ஆண்டு அருள்செய்வன் அன்றே

#5
குடம் புரை செருத்தல் கோவும் அந்தணரும் குறைவறு சுகம் பெற என்றும்
இடம் கொள் பல் உலகும் மிகு சுகம் உறுக என்றும் ஆரியரும் மோனியரும்
திடம்பட எண்ணும் எண் புரந்திடுக திரைக் கடல் கிழிய மத்து எறிந்து
மடம்படும் அவுணர்ச் சவட்டி ஒள் அமுதம் வானவர்க்கு ஊட்டிய முதலே

#6
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்
விரும்பும் யாம் வணங்கும் பதக் கடவுளே விளங்கும் ஆவினை மிக்க
பெரும் புகழ்ச்சி சால் மறையவர் குழாத்தினைப் பேணுக என வேதம்
அரும்பும் வாக்கியமும் தொழில் ஆறினோர் அறையும் ஆசிகள் ஓங்கிப்
பரம்ப எண்ணுறூஉம் பெரியவர் எண்ணமும் பாலிக்க நெடுமாலே

#7
இள மழக் கன்றை ஊட்டி எஞ்சிய தீம் பால் வெள்ளம்
வளம் மலி கான வைப்பு மருத வைப்பாகப் பெய்யும்
தளர்வறு செருத்தல் ஆக்கள்-தம் குரச் செந்தூள் குஞ்சி
அளவற அடைந்து சேப்ப அவற்றினைப் புரந்தோன் வாழ்க

#8
** எழு சீரடி ஆசிரிய விருத்தம்
இமைத்தல்_இல் விண்ணோர் மடந்தையர் சமழ்ப்ப இலங்குறும் இள நல எழில் ஆர்
அமைத் தட மென் தோள் ஆய்ச்சியர் விழியாம் அம்புயத் தே மலர் மலரச்
சமைத்த பூண் மார்பன் தேவகி ஈன்ற தனயன் போர் ஏற்ற வன் மல்லைக்
குமைத்து அருள் கண்ணன் பேசரும் சீர் இக் குரை கடல் உலகில் வாழியவே

#9
** கலிவிருத்தம்
தா அகிச் சிரத்தினில் சரண் வைத்து ஆடினோன்
பூ அகில் கரும் புகை போர்த்த பொன் குழல்
மா வகிர்க் கரும் கண் வேய் வாட்டும் தோள் துணைத்
தேவகி தனயனைச் சிந்தைசெய்குவாம்

#10
** எழு சீரடி ஆசிரிய விருத்தம்
ஏழிரண்டு என்னும் புவனம் காத்து அளிப்போன் எழில் வசுதேவன்-தன் மைந்தன்
வீழி அம் கனி வாய்க் கொடி அழல் மகட்கு மென் துகில் அளித்த பைம் கொண்டல்
தாழ் இரும் கூந்தல் பூதனை உயிரைச் சவட்டினோன் தவா நலம் உண்டோன்
பாழி அம் புயத்துச் சேதிபன் துணித்த பண்ணவன் மலர் அடி பணிவாம்

#11
** கலிவிருத்தம்
மா தவர் பன்னியர் மனம் என் தாமரைப்
போது அகத்து அனம் எனப் பொலிந்த மாண்பினான்
ஆதவர் கோடியர் அழுங்கு காந்தியான்
பாத தாமரை மலர் பணிந்து போற்றுவாம்

#12
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்
ஆர்ந்த தழல் இறைக்கும் மதில் புரத்து அரசு கரக் கொடிகட்கு அரிவாள் ஆகிக்
கூர்ந்த மதி_இலாக் கஞ்சன் தூசு கொடுவரும் ஈரங்கொல்லி வாழ்நாள்
தீர்ந்திடச்செய் விதி ஆகிக் கன்று ஆக்கட்கு உரிஞ்சு செறி தறியும் ஆகி
வார்ந்த குழல் ஆய்ச்சியர்க்கு ஓர் வேள் ஆகி நின்றானை வழுத்தல் செய்வாம்

#13
** ஆசிரிய வணக்கம்
சீர் ஆரும் திரிசிராமலையின் வளர்ந்து எக்காலும் சிறப்பின் ஓங்கும்
ஏர் ஆரும் கலைக் கடல் முற்று உண்டு ஆங்கு நின்று எழீஇ என் விவேக
வார் ஆரும் தடம் நிரம்ப மனப் பறம்பின் இனிய தமிழ் மாரி பெய்த
பேர் ஆரும் மீனாட்சிசுந்தர தேசிக முகிலைப் பேணி வாழ்வாம்

#14
** எழுசீரடி ஆசிரிய விருத்தம்
சிவ பரஞ்சுடரின் இணை அடி மலரைத் திரிகரணத்தினும் வழாது
பவம் அறத் தினமும் வழிபடு குணாளன் பகர் திரிசிரபுரத் தலைவன்
சிவமுறு தென் சொல் ஐந்திலக்கணத்தில் தெளிவுறச் சிறியனேற்கு அருளும்
நவமுறு புகழ் மீனாட்சிசுந்தர வேள் நாள்மலர் அடி முடி புனைவாம்

#15
** நூல் வரலாறு
மறை முழுது உணர்ந்த வியாத மா முனிவன் மைந்தனாம் சுகப் பெயர் முனிவன்
கறை தபு செங்கோல் பரீட்சித்து மன்னன் களிப்பொடு கேட்டிடப் புகன்ற
நிறை புகழ்ப் பாகவதத்தில் ஓர் கதையாய் நிலவிய குசேலன் மாக் கதையைத்
துறை கெழு செம் சொல் தீம் தமிழ்ப் பாவால் சொற்றிடலுற்றனென் மன்னோ

#16
** அவையடக்கம்
கனை கடல் முகிலைப் பார்த்து என் நீர் உவரைக் கழிப்பி மன் உயிர்க்கு எலாம் இனிதாப்
புனை எனக் கேளாது எனினும் அ முகிலே புரியும் என் செய்யுளின் புகரை
நினைவரு முழு நூல் உணர்ந்தவர் அகற்றி நீடு உலகினுக்கு இனிது ஆக்க
அனையரை யான் கேளாது இருந்திடினும் அது புரிந்திடல் அவர்க்கு இயல்பே

#17
** சிறப்புப் பாயிரம்
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்
மா மேவு மணி மார்பன் மலர் அடிகள் மருவு திரு மனத்தினோன் பொன்
கோ மேவு பொழில் திருவூர் அதிபதி சீர்க் கருணீகர் குல விசேடன்
பா மேவு பெரும் சீர்த்தி மிகு நாராயண வள்ளல் பயந்த மைந்தர்
தே மேவு மலர் மாலைக் கோவிந்த முகில் சீனிவாசச் செம்மல்

#18
இருவரும் நல் குசேல முனி சரித்திரத்தை உலகுள்ளோர் இன்பம் எய்த
ஒருவரு இன் சுவைத் தமிழில் பாடி அருளுக என உள் உவந்து கேட்பப்
பொருவரு செம் சொல் சுவையும் பொருள் சுவையும் அணி நலமும் பொலிய ஆர்த்தி
மருவரு காப்பிய உறுப்பும் வயங்க உறும் ஈரைந்து வழுவும் வீட்டி

#19
இனிது அமிர்தச் சுவையினும் மிக்கஃது இதன் இன் சுவை அது என இயற்றினானால்
தனித நிரை தவழ் மனை வல்லூர் வீராச்சாமி அண்ணல் தந்த மைந்தன்
கனி தருமம் நல்லொழுக்கம் குணம் அனைத்தும் ஓர் உருக்கொள் காட்சி போல்வான்
புனிதம் மிகு கலை உணர்ச்சித் தேவராசக் குரிசில் புலவர் ஏறே

#20
** எண்சீரடி ஆசிரிய விருத்தம்
ஏர் ஆரும் சகாத்தம் ஆயிரத்து எழுநூற்று எழுபத்திரண்டில் நிகழ் சௌமிய நல் ஆண்டு தனுத் திங்கள்
வார் ஆரும் இருபத்துநான்காம் நாள் பரிதிவாரம் ஒன்பான் திதி சோதி சிங்க இலக்கினத்தில்
பேர் ஆரும் குசேல முனி-தனது சரித்திரத்தைப் பெட்பின் இனிது அரும் தமிழின் இயல் செறியப் பாடித்
தார் ஆரும் புயத் தேவராச வள்ளல் ஆன்றோர் தழைத்து உவகை பூப்ப அரங்கேற்றினன் உள் மகிழ்ந்தே

#21
** எழுசீரடி ஆசிரிய விருத்தம்
சீர் வளர் குசேலோபாக்கியானத்தைச் செந்தமிழ்ப் பாவினில் செய்க என்று
ஆர் வளர் திருவூர்ச் சீனிவாசேந்த்ரன் ஆர்வம் மிக்கு ஊர்தரப் புகலக்
கார் வளர் வல்லூர்த் தேவராசப் பேர்க் கவிச்சக்ரவர்த்தி செய்து அளித்தான்
ஏர் வளர் இயல் முற்று உணர்ந்த நல் புலவர் இன்பு உளம்கொண்டிட மாதோ
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்

#22
தாமம் நறு முளரி துயல்வரு தடம் தோள் எழில் வீராச்சாமி ஈன்ற
காமரு சீர்த் தேவராசப் பெரியோன் பல கலை தேர் கவிஞர் உள்ளம்
ஏமமுறக் குசேல சரிதம் பகரும் நல் திறன் முன் எண்ணி அன்றே
வாமனன் திண் தோள் ககுபம் தாவ உடல் பூரித்தான் வையத்தீரே

#23
** எழுசீரடி ஆசிரிய விருத்தம்
அரு மறை நான்கும் அன்புடன் ஏத்த அரவணை-தனில் விழி வளர்வோன்
திருவருள் பெற்ற குசேல மா முனிதன் சீர் வளர் சரித நன்கு உரைத்தான்
பெரு வளம் ஓங்கும் தொண்டை நல் நாட்டில் பிறங்கும் வல்லூரினில் வாழ்வோன்
மரு வளர் மாலைத் தேவராசேந்த்ரன் வயங்கு பல் கலை உணர்ந்தவனே

#24
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்
பார் புகழும் குசேல முனி சரிதமதைத் தமிழ்ப் பாவின் பகர்ந்தான் தூய
நீர் தவழும் நெடும் சடிலச் சிவபிரான் பத யுகளம் நிலவும் நெஞ்சன்
கார் பொலியும் சோலை புடை உடுத்து ஒளிர் வல்லூர் ஆளி கவிஞர் போற்றும்
சீர் திகழும் கருணீகர் குலத்து உதித்த தேவராசேந்த்ரன் மன்னோ

#25
** எழுசீரடி ஆசிரிய விருத்தம்
சந்ததம் உற்ற விருந்தினை ஓம்பும் தக்க வேங்கடகிருட்டினப் பேர்க்
கந்தவேள் பின் வந்து உதித்தவன் திருவூர்க் காவலன் முள் பொதி பசும் தாள்
கந்த நல் கமல மாலை சூழ் தோளான் கலை உணர் சீனிவாசப் பேர்
இந்திரன் வேண்ட எழில் திரு மார்பன் இணை அடிப் பூசனை இயற்றி

#26
இல்லறத்து இருந்தும் புளிம்பழம் ஏய்ப்ப இயைந்த உள் துறவு அடை குசேலன்
நல்ல தீம் சரிதம் நாவலர் உள்ளம் நனி மகிழ்தரத் தமிழ்ப் பாவால்
பல்லவச் சோலை சூழ் வல்லூராளி பகரரும் தேவராசப் பேர்
வல்லவன் புரிந்த திறத்தை இற்று என்ன வகுப்பவர் உலகினில் எவரே
** பாயிரம் முற்றிற்று

@1 குசேலர் மேல்கடலடைந்தது
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்

#1
உலகு எலாம் புகழ நாளும் உயர் மதிக் குலத்தில் தோன்றி
அலகு_இல் பல் உயிரும் இன்பம் அடைய ஒண் குடை நிழற்றி
இலகு செங்கோல் கைக் கொண்ட எழில் பரீட்சித்து வேந்தே
நலமுறு இக் கதை கேள் என்று நல் தவச் சுகன் சொல்வானால்

#2
குத்தரம் குடிகொண்டாங்குக் கொழும் பொன் மாளிகைகள் ஓங்கிச்
சுத்தர் அங்கு அளவிலார்கள் தொகுப்புற இன்பம் நல்கி
இத் தரங்கம் சூழ் பூமிக்கு எழில் முகம் ஆகி என்றும்
உத்தரமதுரை என்னும் ஒரு நகர் விளங்காநிற்கும்

#3
அ நெடு நகரின் பாங்கர் அ நலார் ஊடி நீத்த
தம் நெடு மணிக் கலங்கள் தட மறுகு உற்று முற்றத்
துன்னிய இருளை மேயத் துறக்கம் என்று அமரர் நாளும்
மன்னிய இமைக்கும் சீர்த்தி மா நகர் அவந்தி உண்டால்.

#4
செந்தமிழ் பழுத்த நாவின் தீம் சுவைப் புலவரானும்
அந்தம்_இல் சேடனாலும் அறைதர முடியாச் சீரச்
சுந்தர நகர் வளப்பம் சொல எனக்கு அடங்காவேனும்
சிந்தையில் களிப்புத் தூண்டச் சிறிது அணிந்து உரைப்பல் கேண்மோ

#5
துறைதுறை-தோறும் சங்கம் சூல் முதிர்ந்து உயிர்த்த முத்தம்
அறை புனல் வாரி எக்கர் ஆக்கிட வரப்பில் ஏற்றித்
தறை சமம்செய்து வித்தித் தண் புனல் மள்ளர் பாய்ச்சக்
கறை_அடி மாய்க்கும் செந்நெல் கதிர்க் குலைச் செறுக்கள் சூழும்

#6
** கலிநிலைத்துறை
வாவி மல்கிய வனச மா மலர் பொழி தேனும்
காவில் மல்கிய கரிசறு மலர் கொழி மதுவும்
பூவில் மல்கிய நதி எனப் புரண்டு மால் என்னத்
தாவி வான் அளாம் சாற்றரும் நெல் வயல் வளர்க்கும்

#7
** அறுசீரடி யாசிரிய விருத்தம்
செம்பொனால் வெண்பொனால் வில் செறி பல மணிகளால் செய்து
அம் பொன் மா நகரத்துள்ளார் அமைத்தனர் வேண்டார் அற்றால்
நம்பு நாம் புறத்தே நிற்றல் நன்று எனக் கொண்டால் போலும்
பம்பு வார் கதலி கந்தி பைம் கழை பொலியும் காட்சி

#8
நெய்க் கரும் கூந்தல் மின்னார் நீர் குடைந்து அகற்றும் நானம்
மெய்க் கவின் மறைத்த சாந்தம் விண் உலாம் நதியும் நாறச்
செய்க் கருங்குவளை மேய்ந்த திண் மருப்பு எருமை பாய
வைக் கழுக்கடையே போல் மேல் வாளை பாய் வாவி மல்கும்

#9
** கலிநிலைத்துறை
புள் அவாம் மலர்க் கணையினான் அன்ன பொற்பினரும்
எள்ளரும் புகழ் இரதியை ஏய்க்கும் மாதர்களும்
உள்ளம் மிக்கு உவந்து உடங்கு கை கோத்தனர் சென்று
வெள்ள நீர் துளைந்து ஆடுறூஉம் எழில் வளம் மேவும்

#10
** அறுசீரடி யாசிரிய விருத்தம்
மேதினி முளைத்த ஆற்றால் விண்ணவர்த் தெறுபாக்கு உற்று அங்கு
ஓது வில் பத்திரம் கொண்டு உறு தளிரால் சிவந்து
தாது இவர் தண் பூம் கற்பத் தருக் குலம் விதிர்விதிர்ப்பத்
தீதறு சுவர்க்க நாட்டைத் தினமும் சென்று உரிஞ்சும் சோலை

#11
பொங்கு பல்லவப் பூம் சோலை புது மதுக் கனிகள் காய்கள்
தெங்கு இளநீர்கள் மற்றும் தேவரும் அரம்பைமாரும்
அங்கிருந்து அயில நாளும் அளித்திடும் நல்லூழ் உற்றோர்
எங்கு இருப்பினும் தாம் வேட்ட யாவையும் துய்ப்பர் அன்றே

#12
** கலிநிலைத்துறை
வண்டர் பாண்செய மது மலர் அசும்பு பூம் பொழிலில்
வண்டலாட்டு அயர் மகளிர்-தம் வளம் பொதி கிளவி
வண் தளிர்ச் சினை மா குயில் பயிலுறும் மயில் அவ்
வண்டு அலர்ந்த கையார் உருச் சாயலை வௌவும்

#13
** கலிவிருத்தம்
மஞ்சு இனம் என மட மாதர் ஓதி கண்டு
அம் சிறை மயில் அகம் களி கொண்டு ஆடுவ
விஞ்சு இருள் பூம் பொழில் மேவு கோகிலம்
அஞ்சி வாய் திறந்திடாது அழுங்கிச் சாம்புமால்

#14
ஏ உலாம் இரு விழி இபத்தின் மெல் நடைப்
பூ அலர் கரும் குழல் பொன்_அனார் பயில்
பா உளர் வண்டு இனம் பருகத் தேன் பொழி
காவு சூழ் வனப்பினைக் கணிக்கல் ஆகுமோ

#15
** எழுசீரடியாசிரிய விருத்தம்
வெண் மணி கொழிக்கும் கடல் நெடு நகர் மேல் வெகுண்டு முற்றியது என ஒளிரும்
தண் மதுப் பிலிற்றும் தாமரை ஆதி ததைந்த தாழ் கிடங்கும் மற்று அதனை
அண்மையில் நகர் கண்டு அஞ்சி உள் செல்லாது ஆற்றிய பெரும் தடை கடுக்க
ஒண் மயில் ஆதி யவனர் செய் பொறிகள் உறு பெரு மதிலும் சூழ்ந்தனவால்

#16
** கலிநிலைத்துறை
மாதர் பண் பயின்று ஆடுறூஉம் மணி அரங்கு அவண
காதளாவிய குழையினார் கண் வலை கடந்த
மா தவத்தினார் மன்னுறு மடங்களும் அவண
ஓத நீர் உலகு ஓதுறு சாலையும் அவண

#17
** கலி விருத்தம்
வண்டு இமிர் குழலினார் வதனப் பேரெழிற்கு
எண்தகு முழுமதி எதிரற்று ஏகுதல்
கண்டு மை தீட்டு அறி குறியைக் காசினி
மண்டிய களங்கு என மயங்கி ஓதுமால்

#18
ஒழுங்குறு சுடர்களை உற்று விக்குற
விழுங்குறு பாப்பு இனம் விட்டு ஒளித்திடல்
செழும் கதிர் மாடம் மேல் சென்று உலாம் மயில்
அழுங்கிய சாயலார்க்கு அஞ்சிப் போலுமால்

#19
கிஞ்சுகம் அ நலார் கிளக்கும் தே மொழிக்கு
அஞ்சிடாது எதிர்த்தலின் அவற்றை நாள்-தொறும்
வெம் சிறை இட்டு என விளங்கு பல் மணிப்
பஞ்சரத் திருவினார் பாவை_அன்னவர்

#20
வெம் சிறைப் பட்டவர்-தமக்கு வேண்டிய
அம் சுவை உணா அற அரசு அளித்தல் போல்
வஞ்சியர் அச் சுவாகதங்கள் வாய் மடுத்து
உஞ்சிடக் கனி முதல் உணாக்கள் நல்குவார்

#21
** அறுசீரடி யாசிரிய விருத்தம்
சிறைபடு தம்மை நீத்தல் செய்தல் நல் அறனாம் என்னாக்
கறை தபு மொழியின் வேண்டல் கடுப்பப் பைம் சிறைய கிள்ளை
நிறை மலர்க் குழலார் உள்ளம் நெகிழ்தர இனிய தீம் சொல்
அறைதரும் அவரும் நீக்கி அம் கையின் ஏந்துவாரே

#22
** கலிநிலைத்துறை
விண் தேவர் இமைத்திலர் நோக்க விளங்கு பொற்பின்
பண்டங்கள் நிவந்து உயர் பற்பல ஆவணத்தின்
தண்டாத பெரும் புகழ் இற்று எனச் சாற்ற வல்லோர்
ஒண் தாரணியில் இலை என்னில் உரைப்பது என்னே

#23
** அறுசீரடியாசிரிய விருத்தம்
துறவறத்து அடைந்தோர் இல்லம் துறந்தமைக்கு இரங்க இல்லத்து
உற இருக்கின்ற மாந்தர் உள்ளன எல்லாம் ஈந்து
பிறர் நகை பொறாமல் அந்தப் பெரும் துறவு அடையப் போகம்
திறமுற விற்கும் மின்னார் செறிதரும் தெருக்கள் பல்ல

#24
வருவிருந்து எதிர்கொண்டு ஏற்று மலர் முகம் இனிது காட்டி
அருமை சால் முகமன் கூறி அறு சுவை உணா நன்கு ஊட்டித்
திரு மலி கவி முனோர்க்குச் செம்பொன் முன் ஆன நல்கிப்
பெருமை சான்று ஒழுகும் பின்னோர் பெருகி வாழ் தெருக்கள் பல்ல

#25
அன்னியர் பொருளும் தத்தம் அரும் பொருள் என்ன உள்ளத்து
உன்னி ஒன்று அனந்தமாக உஞற்றும் வல்லபத்தால் கண்ட
என்னரும் இறும்பூது எய்தும் எழில் மிகும் வணிகர் என்றும்
மன்னி வாழ்வு எய்தும் மிக்க மறுகுகள் பல வயங்கும்

#26
தேசினில் சிறந்தோர் செல்வத் திறத்தினில் உயர்ந்தோர் ஆற்றும்
பூசலில் வென்றி கொள்ளும் போர்ப் புலி அன்னார் தூய
வாசம் ஆர் மாலை மார்பர் மழை என இரவலாளர்க்கு
ஆசறு தானம் ஈயும் அரசர் வாழ் மறுகும் ஓர்பால்

#27
மறுவறு முத்தீ என்றும் வளர்ப்பவர் ஐந்து என்று ஓதும்
தெறு புலன் அவித்த மேலோர் செய்ய மால்-தனாது செம் கேழ்
நறு மலர் உந்தி பூத்த நாதனே அனைய தூயர்
அறுதொழிலாளர் வீதி அவண் பல வயங்கும் மன்னோ

#28
தேர் ஒலி புழைக்கை_மாக்கள் சீறு இசை பரி மா ஓதை
வார் இயை கழல் கால் வீரர் மணிப் புயம் தட்டும் ஆர்ப்பு
நாரியர் சிலம்பின் சும்மை நரப்பு யாழ் அரவம் இன்ன
சேர ஒன்றாகி ஏழு திரைகள் வாய் அடக்கும் அன்றே

#29
** கலிநிலைத்துறை
அளகை வேந்தனை அனந்தனை மதனனை அரிய
பளகு_இல் செல்வத்தால் குறைவறு கல்வியால் பகர
அளவு_இல் மேனியின் வனப்பினால் வென்ற மற்று அவர்-தம்
தளர்வு_இல் சீர்த்தியைச் சாற்றிட வல்லன் அல்லேனே

#30
** அறுசீரடி யாசிரிய விருத்தம்
வெள்ளிய கோட்டு வேழ வென்றி வன் திருகு கோட்டுத்
துள்ளிய தகரின் வென்றி துணர்க் கவிர்ச் சூட்டு முள் கால்
புள்ளிய சேவல் வென்றி புகர் இலாக் குறும்பூழ் வென்றி
உள்ளிய பிறவும் நாளும் உலப்பறு வீரர் கொள்வார்

#31
** கொச்சகக்கலிப்பா
தோடு அலர் நந்தனவனங்கள் துறை மலர் பல் மலர் வாவி
நீடு ஒளிய கோபுரங்கள் நெடு மதில் பொன் மாளிகைகள்
நாடவர்கள் துதி முழக்கம் நாள்-தொறும் இன்னிய முழக்கம்
ஆடலொடு பாடல் அறா ஆலயங்கள் பல ஆங்கண்

#32
** கலிநிலைத்துறை
தரங்க வாரிதி துயில் பரந்தாமனை மாந்தர்
இரங்கும் வெண் திரை வாவியின் மூழ்கி நந்தனத்தில்
குரங்க வார் சினை மல்கிய கொழு மலர் நாளும்
கரம் கொடு அன்புடன் அருச்சிப்பர் காலங்கள்-தோறும்

#33
** கொச்சகக்கலிப்பா
இன்ன வளம் படைத்து எவரும் இறும்பூது கொண்டு அடையப்
பன்ன அரிய உத்தமத்தில் பயிலும் நால் வகைக் குடியும்
துன்னு புறக் குடி மூன்றும் தொக்கு உறைய விளங்கிடும் அப்
பொன் நகருக்கு அணித்தாகப் பொலி பெரும் காடு ஒன்று உளதால்

#34
மந்தாரம் கச்சோலம் வாகை சே வெட்பாலை
சந்து ஆர் பிடா வகுளம் சண்பகம் கூவிளம் நாகம்
நந்தாத வேங்கை ஞெமை நமை வருக்கை முருக்கு அகில் யா
சிந்தாத வழை புன்னை சிந்துவாரம் செருந்தி

#35
சிந்துரம் மா மரா அரசு செங்கடம்பு ஏழிலைப்பாலை
குந்தம் மாதுளை ஞாழல் குங்குமம் முந்திரிகை ஆர்
கந்தி களா விளா தென்னை கடுக்கை தேக்கு ஓமை முதல்
அந்தில் பல செழும் தருக்கள் அடர்ந்து ஒளிரும் அவ் வனமே

#36
மலரின் இழி கொழும் தேனும் வைத்த இறால் செழும் தேனும்
அலகு_இல் பல கனித் தேனும் அறை கலுழிப் பெரும் புனலும்
உலவை இரண்டு உடைய களிற்று ஊறிய மும்மதப் புனலும்
சலசல என்று ஓட்டெடுத்துத் தடம் கடலோ எனப் பெருகும்

#37
விளங்கனியும் மாங்கனியும் மிளிர் பாகல் செழும் கனியும்
களங்கனியும் விளங்கு அருணக்கனியும் நரந்தக்கனியும்
வளம் கனியும் இவை முதல வானோரும் வாய் ஊறி
உளம் கனியும் வகை பழுத்த ஒண் சினைய தருக்கள் எலாம்

#38
சந்த நறு மலர்ச் சேக்கைச் சதுமுகனார் உகும் நாளும்
இந்த வனக்கு அழிவு இன்று என்று யாவரும் நன்கு எடுத்துரைப்பக்
கந்த மலர் தளிர் துறுமிக் காய் கனி பிஞ்சுகள் தூங்க
மந்திகளும் அறியாத மரங்கள் பல ஓங்கியவால்

#39
** கலிவிருத்தம்
இறவு பாய் கடல் ஏறு உவர் நீங்குற
நறவு பாயும் நறு மலர்க் கொம்பர் விண்
உறவு கொண்டிட உற்ற அக் கானிடைக்
குறவரும் மருள் குன்றம் ஒன்று உண்டு அரோ

#40
மஞ்சு உலாவும் அ மா மலைச் சாரலில்
விஞ்சு வில் தொழில் மேவிய வேட்டுவர்-
தம் சிறாரும் தரக்கின் பறழ்களும்
குஞ்சரக் குழக் கன்றும் குழுமுமால்

#41
உன்னும் நல் கனி கந்த உணா உண்டும்
பன்னு தோல் உடுத்தும் படரும் குழல்
துன்னும் ஆறு தொடர்தரக் கட்டியும்
மன்னு வேடரும் மா தவர் போல்வரால்

#42
சிங்கம் யானை வெம் சீற்றப் புலி உழை
மங்க அரும் திறல் மன்னு குடாவடி
துங்க யாளி துறுமி எழுப்புறும்
பொங்கும் ஓதை புவனம் பொதியுமால்

#43
வாரணத்தின் மருப்பு உகு முத்தமும்
கார் உலாவும் கழை உகு முத்தமும்
சீர் அளாவித் திகழ் கதிர் வார் கடல்
பார் எலாம் இருள் ஓப்பிப் பரக்குமே

#44
பரு மணிச் சுடிகைப் பஃறலை அரவம் படர் ஒளி மேருவைப் பொதிந்தாங்கு
இருள் அற இமைக்கும் கதிர் ஒளி சமழ்ப்ப எறி கதிர் மணி பல ஏந்தி
மருவு வெள் அருவி பொதிதர வான் தோய் மால் வரை செறிய மிக்கு உயர்ந்த
பெரு வரை முடியில் உள்ளது ஒன்று அளவாப் பெரும் தவ முனிவர்-தம் சேரி

#45
** எழுசீரடி யாசிரிய விருத்தம்
அரு மறை முழக்கும் வினை தபும் யாக அழல்-கண் நல் மந்திர முழக்கும்
பெருமை சால் சுரரைக் கூய் அவி அளிக்கும் பெரு முழக்கமும் அவர் ஏற்கும்
செரு மலி முழக்கும் உண்ட பின் ஆசி செப்பிடும் முழக்கமும் ஒன்றிக்
கரு நிறக் கரை கொன்று இரங்கு எறி தரங்கக் கடல் முழக்கு எழா வகை அடக்கும்

#46
தருப்பை கொய்குநரும் சமிதை தேடுநரும் தழைந்த மா இலை பறிக்குநரும்
விருப்பொடு நல் ஆன் ஐந்து கூட்டுநரும் வியன் பவித்திரம் முடிகுநரும்
அருப்பு மென் மலர் நந்தனவனம்-தன்னை அடைந்து எடுக்குநரும் நூல் ஆய்ந்த
திருப் பொலி பெரியோர்க்கு உபசரிக்குநரும் செறிதர விளங்கும் அச் சேரி

#47
சரியையர் ஒருபால் கிரியையர் ஒருபால் சார்ந்த யோகத்தினர் ஒருபால்
பெரிய ஞானத்தில் நிற்பவர் ஒருபால் பெட்பொடு போதிப்பார் ஒருபால்
விரிதரும் ஓத்துக் கற்பவர் ஒருபால் மெய்ப்பொருள் பொய்ப்பொருள் இரண்டும்
தெரிதர விசாரம்செய்பவர் ஒருபால் திகழ்தரப் பொலியும் அச் சேரி

#48
ஆங்கு அதில் குசேலப் பெயரினோன் முனிவர் அரும் குலத்து இனிய பாற்கடலில்
பாங்குறு மதி போல் தோன்றினோன் வண்டர் பாண்செய மணம் நறாக் கொழிக்கும்
பூம் கமலத்தில் வாழ் பொறி இலகும் பொருப்பு அன நிறத்து மால் பதத்தைத்
தாங்குறும் உளத்தன் பொறிகள் தீச்செயலில் சார்வுறாது அடக்குறும் மேலோன்

#49
தன் உயிர் போல மன் உயிர் புரத்தல் சான்றவர்க்கு உறுதி என்று என்றும்
மன்னிய மறை நூல் மொழிந்திடும் அது-மன் வாய்மையே என்று உணர்ந்தவனாய்த்
துன்னிய உலகில் இரு திணை உயிரும் தூங்கிய மகிழ்ச்சி மீக்கூர
நன்மையே புரிவான் தன்னமும் உளத்தில் நாடிடான் தீமை செய்தலையே

#50
அடக்கமும் பொறையும் கருணையும் நண்பும் அழுக்கறுது_இலாமையும் என்றும்
விடற்கு அரும் தவத்தோடு ஒருங்குற வளர்ப்போன் வெகுளியும் காமமும் மயக்கும்
கடக்க அரும் தீமை நாள்-தொறும் விளைக்கும் கயவர்கள் தொடர்ச்சியும் தன்னைத்
தொடற்கு அரிதாக அடியறக் காய்ந்தோன் தூயர்க்கும் தூயவன் மாதோ

#51
படி இலா மறை நூல் முற்று உணர்ந்து அடுத்தோர் பக்குவத் திறன் மதித்து அறியா
ஒடிவறு சரியை ஆதியாம் நான்கும் உற்றுறப் பயிற்று சாந்தீபன்
அடி மலர் அடையா இருக்கு முன் மூன்றும் ஐயம் முன் மூன்றும் விட்டு ஓடக்
கடி கெழு காயாம்பூ கதிர் மேனிக் கண்ணனோடு அமர்ந்து கற்றனனே

#52
கொழுந்துவிட்டு எரியும் பசித் தழல் அவித்துக் கோது_இல் வைராக்கியம் மிக்குற்று
அழுந்துபட்டிடாத சாந்திராயணம் முன் அளப்பரும் செயற்கு அரு விரதம்
எழுந்துவிட்டு ஒளிரப் பல் பகல் ஆற்றி என்பொடு நரம்புகள் தோன்றிச்
செழும் தசை வற்றி இளைத்த யாக்கையனாய்த் திகழ்ந்தனன் சீர்த்தி அந்தணனே

#53
கதிரவன் உதயகிரி மிசை வரும் முன் கன்னல் ஐந்து எனத் துயில் ஒழிந்து
விதி வழி மலம் நீர் விடுத்து ஒளிர் கரக மென் புனலால் சுத்தி அமைத்து
மதி செய் பல் கறை தீர்த்து அறலினுள் நானம் வயங்குறச் செய்து நல் சந்தி
அதிகமாம் செபம் வந்தனை முதல் நியதி அறாது இயற்றிடும் தொழில் அமைந்தோன்

#54
ஒன்று மெய் வாய் கண் நாசி காது என்ன உரைத்திடும் பொறி வழி ஊறு
துன்றிய சுவை ஒள் ஒளி மணம் சத்தம் சொல்லும் இவ் ஐம்புலன் என்றும்
ஒன்றுபட்டு உள்ளக் குறிப்பறிந்து ஒழுக ஒழுக்கிய தவ வலியினனாய்
நின்றுளான் இவனைப் புகழ்ந்திடார் எவரே நீடிய பவத் தொடக்கு அறுப்பார்

#55
ஒளவியம் அவித்த பெரும் தவத்தினர்கள் அகம் புறம் எனும் பகுப்பு இறந்து
முவ்வுலகமும் தம் இடமதா வசிப்பர் என மறை மொழிவதற்கு இசையச்
செவ்விய மனத்தன் வீடு காடு என்னத் தெரிந்து உறை பகுப்பு இலான் சினந்த
தெவ் உடல் பனிப்ப வெள் ஒளி நெடு வேல் செறி தடறு அகற்றுபு விதிர்ப்போய்

#56
மெத்திய பற்பல் கிழி துணி இயைத்து மெல் இழைச் சரட்டினால் பொல்லம்
பொத்திய சிதரே நல் உடையாகப் புனைந்த காரணத்தினால் கடல் சூழ்
எத்திசையவரும் குசேலன் என்று ஒரு பேர் அழைப்பர்கள் மதக் கலுழி
தத்திய கரடத் தறுகண் மால் யானைத் தரியலர் கூற்று எனப் பொலிவோய்

#57
மால் கடல் கடந்த மனத்தனாய் வேத வரம்பு கண்டு இலங்கும் இக் குசேலன்
பாற்கடல் மிசை ஓர் கார்க் கடல் போலப் பை அரவணை மிசைத் துயில்வோன்
சேல் கரு நெடும் கண் திருமகள் வருடச் சிவந்து காட்டிடு மரை மலர்த் தாள்
ஏற்கும் என்று உள்ளத்து இருவி எந்நாளும் இயற்ற அரும் பூசனை இயற்றும்

#58
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்
திறல் இயை தவத்து இவ்வாறு திகழ்ந்திடும் குசேலன் என்பான்
உறல் இயை அத் தவத்திற்கு உதவிசெய்பாக்கு நாளும்
அறல் இயை கதுப்பினாள் ஓர் அணங்கினை வதுவைசெய்தான்
மறலிய மன்னர் சென்னி மணி முடி இடறும் தாளோய்

#59
மணமகன் உடம்பு போற்ற வல்லவள் மனைவியே என்று
உணர்வினார் மொழியும் மாற்றம் உவள் செயல் நோக்கிப் போலும்
தணவறும் அன்பும் சாந்தத் தன்மையும் நன்மையான
குணமும் ஓர் உருவம் கொண்டு ஓர் குடிப்பிறந்து அனைய நீராள்

#60
மாசிலாக் குலத்து வந்தாள் வருவிருந்து உவப்ப ஊட்டும்
நேசம் மிக்கு உடையாள் கொண்கன் நினைப்பு அறிந்து ஒழுகும் நீராள்
தேசுறு வாய்மை உள்ளாள் சினந்திடல் என்றும் இல்லாள்
பேசு திண் கற்பு வாய்த்தாள் பெற்றதே கொண்டு உவப்பாள்

#61
அருள் மகப் பெறுகிலாருக்கு அணை கதி நாத்தி என்று
தெருள் மறை செப்பலானும் சிறந்த தன் குலம் நீடித்துப்
பொருள் முயங்கிடுமாறு எண்ணும் புந்தியன் ஆதலானும்
இருள் மருள் குழல்_அன்னாளோடு இரும் தவக் குசேலன் சேர்ந்தான்

#62
சேர்தலும் நரம்பு பைத்துச் சேல் விழி குழிந்து காட்ட
வார் முகம் கிழிக்கும் கொங்கை மருவு பால் சுரந்து காட்ட
சார்தரு வயாவு நீடித் தணப்பு_இல் பல் சுவை நாக் காட்ட
நேர்_இழை கருப்பம் வாய்ந்து நிரம்பும் நாள் மைந்தன் ஈன்றாள்

#63
பின்பு சில் நாட்கள் செல்லப் பெய் வளை மக்கட்பேற்றின்
அன்புறும் ஆர்வம் மீட்டும் அடரத் தன் முயற்சியாலே
கொன் பெறு கணவன் கூடிக்கூடி நன்கு உயிர்த்து உயிர்த்திட்டு
இன்புறப் பெற்று நின்றாள் இருபத்தேழ் மைந்தர் சேர

#64
மலையிட்ட செல்வத்தார்கள் மகிழ ஓர் மகவும் தாரான்
அலை இட்ட முள் தாள் செய்ய அம்புயத் துறைவோன் ஓர் ஏழ்
தலையிட்ட இருபான் மைந்தர்த் தந்தனன் பெருமை அன்றோ
சிலையிட்ட தழும்பு வாய்ந்த தெரியல் அம் தடம் தோள் வேந்தே

#65
தன் குல விருத்திக்காகத் தன் மனை எண்ணம் வாய்ப்ப
நன் குல மறையோன் கூடி நலம் கொள் இ மைந்தர்ப் பெற்றான்
புன்புலத்தவர்கள் காம இச்சையால் புணர்ந்து பெற்றான்
என்பரால் நிற்க அன்னாற்கு இயை மிடி வெளிக்கொண்டன்றே

#66
பல் எலாம் தெரியக் காட்டிப் பருவரல் முகத்தில் கூட்டிச்
சொல் எலாம் சொல்லி நாட்டித் துணைக் கரம் விரித்து நீட்டி
மல் எலாம் அகல ஓட்டி மானம் என்பதனை வீட்டி
இல் எலாம் இரத்தல் அந்தோ இழிவு இழிவு எந்தஞான்றும்

#67
இரு நிலத்து யாவர்-கண்ணும் ஏற்பதை இகழ்ச்சி என்ன
ஒருவிய உளத்தான் காட்டில் உதிர்ந்து கொள்வாரும் இன்றி
அருகிய நீவாரப் புல் தானியம் ஆராய்ந்தாராய்ந்து
உருவ ஒண் நகத்தால் கிள்ளி எடுத்து உடன் சேரக் கொண்டு

#68
வந்து தன் மனை கை நீட்ட வாங்கி மற்று அவற்றைக் குற்றி
அந்த மெல்_இயல் பாகம்செய்து அதிதிக்கு ஓர் பாகம் வைத்துத்
தந்த தன் பங்கு அயின்று தவலரும் உவகை பூத்து
மந்திர மறைகட்கு எட்டா மால் அடி நினைந்து இருப்பான்

#69
இற்று இவன் வாழ்க்கைத் தன்மை இருபத்தேழ் மைந்தருக்கும்
மற்ற அப் பாகக் கஞ்சி மண் குழிசியைப் பால் வைத்துப்
பற்று கோரி கையால் மொண்டு வாக்கிப் பற்றாமை கண்டு
வெற்றுடம்பு ஆகி நிற்பள் மெலிவள் பின் என் செய்வாளால்

#70
** மேற்படி வேறு
ஒரு மகவுக்கு அளித்திடும் போது ஒரு மகவு கை நீட்டும் உந்தி மேல் வீழ்ந்து
இரு மகவும் கை நீட்டும் மு மகவும் கை நீட்டும் என் செய்வாளால்
பொருமி ஒரு மகவு அழும் கண் பிசைந்து அழும் மற்றொரு மகவு புரண்டு வீழாப்
பெரு நிலத்தில் கிடந்து அழும் மற்றொரு மகவு எங்ஙனம் சகிப்பாள் பெரிதும் பாவம்

#71
அந்தோ என் வயிற்று எழுந்த பசி அடங்கிற்றில்லை என அழுமால் ஓர் சேய்
சிந்தாத கஞ்சி வாக்கிலை எனக்கு அன்னாய் எனப் பொய் செப்பும் ஓர் சேய்
முந்து ஆர்வத்து ஒரு சேய் மிசையப் புகும் போதினில் ஓர் சேய் முடுகி ஈர்ப்ப
நந்தா மற்று அச் சேயும் எதிர் ஈர்ப்பச் சிந்துதற்கு நயக்கும் ஓர் சேய்

#72
இவ்வண்ணம் கலாம் விளைக்கும் மைந்தர்களை நனி நோக்கி இரங்கி ஏங்கிச்
செவ்வண்ணக் கரதலத்தால் அணைத்து மடித்தலத்து இருத்திச் சிறப்புச்செய்து
மை வண்ணக் கண்ணீரைத் துடைத்து முகம் வெரிந் புறம் தைவந்தும் ஆம்பல்
அவ்வண்ண வாய் முத்தம் கொண்டும் நயந்து ஓர்விதத்தில் ஆற்றல் செய்வாள்

#73
அடுத்த மனைச் சிறான் ஒருவன் இன்று நுமது அகம் கறி என் அட்டார் என்று
தொடுத்து வினாயினனால் அச் சொல் பொருள் யாது அதுதான் எச் சுவைத்து அன்னாய் நீ
எடுத்துரை என்றிடும் மழவுக்கு உரைக்கில் அது செய் எனில் என் செய்வாம் என்று
மடுத்த அஃது அறிந்திலேன் என மற்றொன்று உரைத்து அதனை மறக்கச்செய்வாள்

#74
வேறு மனைச் சிறான் அயின்ற பக்கணம் கண்டு ஓடி வந்து விழி நீர் வாரச்
சீறுதல் இலாத அனை முகம் பார்த்து இன்னான் இன்ன தின்றான் என் வாய்
ஊறுதலால் இப்பொழுதே செய்து அளித்தி என உடுத்த உடை தொட்டு ஈர்க்கும்
தேறுதல்_இல் சிறு மகவை எடுத்து மார்பிடை அணைத்துச் சிந்தை நோவாள்

#75
குண்டலம் மோதிரம் கடகம் சுட்டி அயல் மனையார் தம் குழவிக்கு இட்டார்
புண்டரிகக் கண் அன்னாய் எனக்கு நீ இடாதிருக்கும் பொறாமை என்னே
கண்டு எடுத்து இப்போது இடு எனக் கரை மதலைக்கு இல்லாதான் கடன் தந்தானுக்கு
எண் தபச் சொல் வார்த்தை என நாளைக்கு நாளைக்கு என்று இயம்பிச் சோர்வாள்

#76
பருப்போடு குளம் அளித்தி எனக்கு என்றும் எனக்கு இனிய பால் வெண்ணெய்யும்
விருப்போடு தருதி என்றும் மக்கள் அழும் போதெல்லாம் விள்ளாள் ஒன்றும்
நெருப்போடு புகை உயிர்க்கும் நிரியாணக் கரட மத நெடும் கை யானைப்
பொருப்போடு செறுநர் படை முழுது உழக்கிச் சவட்டி வரும் புகர் வேல் வேந்தே

#77
சிறிய சிதமணிப் பூணே அன்றி வேறு ஒரு பூண் அச் சேய்கட்கு இல்லை
வறிய மர நார் உரியே உடை அன்றி மற்று உடைகள் மருவல் இல்லை
வெறிய பொழில் தழைத்த இலை உண்கலம் அல்லாது கலம் வேறு ஒன்று இல்லை
குறிய மனை-வயின் புகும் ஓர் எறும்பினுக்கும் ஆங்கு உணவு கொடுத்தற்கு இல்லை

#78
நண்பு கூர்தரும் அன்னப்பால் சிறிது அல்லாமல் மற்றோர் நல் பால் இல்லை
பண்பு கூர்தரு தனயர்க்கு எஞ்ஞான்றும் பசி தீர்ந்த பாடும் இல்லை
கண் புகா இவ் வறுமை கண்டு மறையவனும் உளம் கவற்சி இல்லை
எண் புகாப் புகழ் அவன்-தன் செயல் கண்டு மனைவி விருப்பு இகத்தல் இல்லை

#79
வருவாய் மிக்கு உடையராய் அளவிறந்த செல்வத்தின் வளம் உள்ளார்க்கும்
ஒருவா அன்பு ஒரு மதலை எண்ணியவாறு அளித்து ஓம்பல் ஒல்லாது ஆகும்
பொருவா வெம் கடும் கூற்றாய்க் கொடு விடமாய் வடவையாய்ப் புகுந்து வாட்டத்து
இருவா நின்றிடும் மிடியில் பல் மகவுள்ளாள் செய்கை எற்றே எற்றே

#80
இவ்வாறு மிடி என்னும் பெரும் கடலுள் அழுந்தியும் தற்கு இனிமை சான்ற
செவ் வாய்மை அந்தணனை வெறுத்து உரையாள் அலர் மொழிகள் சிறிதும் செப்பாள்
துவ்வாமை மைந்தர்கள்-பால் மறந்தும் இயற்றாள் அவள்-தன் சுகுணம் என்னே
எவ்வாறு இத் துயர்க் கடல் நீந்துவம் எனும் ஓர் எண்ணம் உளத்து என்றும் உண்டால்

#81
கற்புடைய அருந்ததியே முதல் மடவார் புகழ வரும் கற்பின் மிக்காள்
பொற்பு அமையா மிடி என்னும் சாகரத்துள் அழுந்தி மனம் புண்ணே ஆகிப்
பற்பல நாள் செல ஒரு நாள் அமையம் அறிந்து உளம் துணிந்து பண்பில் போற்றிச்
சொல் பெரு நல் புகழ்க் கணவன் முகம் நோக்கி எண்ணியவை சொல்லலுற்றாள்

#82
** எழுசீரடி ஆசிரிய விருத்தம்
காமம் வெம் குரோதம் உலோபம் தீமோகம் கரை மதம் மாற்சரியம் எனும்
தீமை சேர் ஆறு பகையினைச் செற்றோய் செம் மணி கொழிக்கும் வெண் தரங்கப்
பாம மா கடலும் காமுறும் மேனிப் பண்ணவன் மலர் அடித் துணையைத்
தோமற உள்ளத்து உள்கி ஏத்தெடுப்போய் துரிசறு மறை முழுது உணர்ந்தோய்

#83
உரைக்க அரும் சிங்கம் சரபம் வெம் புலிகள் உலவை ஓர் இரண்டு உடை வேழம்
நிரைப்படச் சரிக்கும் கானத்தில் அணுகி நிகழ் சருகு அறல் வளி அருந்தித்
திரைக் கடல் வினைக்கு ஓர் ஆகரம் ஆகும் தேகத்தை வாட்டும் மெய்த் தவத்தோய்
நரைத்த ஓதிமத்தை உயர்த்து அருள் கமல நான்முகன் அனைய தூயவனே

#84
துணிபடு கந்தை சூழ்ந்த மெய்யினரில் துணை இலா நல் தவ முனிவ
அணிபடு மனையாள் மக்களில் அருத்தி அமைக்கிலாய் என்றும் அன்னியர்-பால்
நணி இரந்து ஏற்றல் ஒழித்தனை அடிகேள் நான் அஃது உணர்ந்துளேன் எனினும்
பிணிபடும் உளத்தில் புகலும் என் மொழியைப் பெட்பொடு கேட்டி என்று இயம்பும்

#85
கொழுந்துவிட்டு எரியும் முத்தழல் வளர்க்கும் கோது இலா முனிவ நம் சிறார்கள்
அழுந்தபட்டு ஏங்க எழும் பசி ஒழிக்க அனம் இலாது உயங்கினர் அந்தோ
முழங்கும் ஈரொன்பான் புராணம் நன்கு ஓர்ந்தோர் மூரலால் உயிர் நிற்கும் என்னா
வழங்குவர் அச் சொல் மறி திரைக் கடல் சூழ் மண்ணிடத்து உண்மையே ஆமே

#86
நான்மறை உவரிக் கடல் புடை உடுத்த நானிலத்து உயிர் எலாம் இன்பத்
தால் மனம் மகிழூஉ வாழ்க நன்கு என்னாச் சாற்றிடும் அதற்கு மாறு இன்றிக்
கான் வழிந்து ஒழுகும் கற்பக மாலைக் கடவுளர் பராவும் நல் புகழோய்
தேன் வழிந்து அன்ன மழலை வாய் மைந்தர் சிறப்புற அருளுதல் கடனே

#87
நித்திலம் கோட்டில் கொழிக்கும் வெண் தரங்க நெடும் கடல் புடை உடுத்து அகன்ற
தத்து ஒளி மணிச் சூட்டு உச்சியில் அரவம் தாங்கும் இ நில வலயத்தில்
எத்தகையினரும் வெருவரும் நிரப்பே இசைந்தவர் பாவியர் செல்வம்
ஒத்துற இயைந்தோர் புண்ணியர் அன்றோ உம்பரும் தொழத்தகு மேலோய்

#88
தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கிச் சரீரத்தை உலர்தர வாட்டும்
தரித்திரம் அளவாச் சோம்பலை எழுப்பும் சாற்ற அரும் உலோபத்தை மிகுக்கும்
தரித்திரம் தலைவன் தலைவியர்க்கு இடையே தடுப்ப அரும் கலாம் பல விளைக்கும்
தரித்திரம் அவமானம் பொய் பேராசை தரும் இதில் கொடியது ஒன்று இலையே

#89
தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம்
தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்றத் தக்க பேர் ஆகரம் என்ப
தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும் தழை வனம்-தனக்கு அழல் தழலாம்
தரித்திரம் கொடிய எவற்றினும் கொடிது அத்தகையதை ஒழித்தல் நன்றாமே

#90
யாதவர் குலத்தில் தோன்றிய அரசர் யாவர்க்கும் அதிபனாம் இணை_இல்
மாதவனுடன் நீ பல கலைக் கடலை வாய்மடுத்தனை என வகுப்பார்
ஆதலின் அப் பீதாம்பரன் மருங்கில் அணைந்து அவன்-பால் பெரும் செல்வம்
தீதறக் கொண்டு கொடுத்து நம் சிறுவர் செல்லல் நோய் தவிர்க்குதல் வேண்டும்

#91
இளமையில் நின்னோடு இரும் கலை கற்ற எழிலி போல் வண்ணன் நின் கண்ட
அளவையே எல்லாப் பேச அரு வளமும் அளிக்குவன் ஐயம் அது இன்றால்
பளகறு நேசன் ஒருவனை படைத்தல் பருத் தனப் பொதி பெற்றால் போன்ம் என்று
உளம் மிகத் தெளிந்தோர் புகலும் நல் மாற்றம் உண்மையாம் பொய்ம்மை ஆகாதே

#92
உலகம் ஓர் மூன்றும் வெருவரக் கொடிய உஞற்றிய கஞ்சன் ஆதியர்க் கொன்று
அலகு_இல் நன்னெறியோர் இன்புற அளிப்போன் ஆதலின் ஆங்கு அவன்-பால் சென்று
இலகுறும் செல்வம் வேண்டிடின் நினக்கும் ஈகுவன் மற்று அவன் மறுக்கின்
குலவு அவன் பாதம் காண்டலே அமையும் கோதறு வீடும் எய்தலினே

#93
கண்ணனைத் துளப மாலிகை நிறத்தில் கமலை வாழ்தர அருள்புரிந்த
மண்ணிய மணியைத் தினம்தினம் போற்றும் மாசறு தவத்தினர் உள்ளத்து
எண்ணிய எண்ணியாங்கு அளிப்பவனை எய்தி நம் சிறார் உயச் செல்வம்
நண்ணி வா என்னா நங்கை சொற்றிடலும் நல் தவக் குசேலன் ஈது உரைக்கும்

#94
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்
மக்களுக்கு இரங்கி வாடும் மடத்தகை அணங்கு கேட்டி
தக்க முன் பவத்தில் ஆன்ற தருமம் நன்கு இயற்றினோர்கள்
ஒக்க இப் பவத்தில் இன்பம் ஒருங்கு அனுபவிப்பர் இன்றேல்
மிக்க வெம் துயரத்து ஆழ்வர் இதற்கு உளம் மெலிதல் என்னே

#95
துப்பு இதழ் மடந்தை நல்லாய் தோன்றிய சீவர் எல்லாம்
இப் புவியிடத்துச் சால எண்ணுவர் எண்ணியாங்கே
எப்படி முற்றும் முற்றாது எம்பிரான் ஒருவற்கு அன்றி
அப்படி முற்றில் கீழ் மேல் ஆம் பகுப்பு இரண்டு உண்டாமோ

#96
தேற்ற முன் பவத்தில் செய்த தீங்கு நன்கு எனும் இரண்டும்
ஆற்றல் சால் கருமம் என்பர் அக் கருமத்தை நோக்கிச்
சாற்றும் இப் பிறப்பில் தக்க தரித்திரம் செல்வம் நல்கிப்
போற்றுவன் உயிரை எல்லாம் பொலி சுடர்த் திகிரி வள்ளல்

#97
மைந்தர்கள்-தம்மைப் போற்ற வள நிதி வேண்டும் என்றாய்
நந்திய பறவை கானம் நயந்து உறை விலங்கு முன்னா
வந்த பல் உயிர்க்குச் சேமவைப்பு உண்டோ வருவாய் உண்டோ
எந்திடத்தேனும் போய் ஒன்று இரப்பதுதானும் உண்டோ

#98
அல்லது நாளைக்கு என் செய்வாம் எனும் கவலை உண்டோ
எல்லை_இல் ஒன்றினால் ஒன்று இடிப்புண்டு வாழ்தல் உண்டோ
ஒல்லும் அவ் உயிர்கள் தம்முள் உணவு இலாது இறந்தது உண்டோ
சொல் அரி பரந்த உண்கண் துடி இடைப் பேதை மாதே

#99
கல்லினுள் சிறு தேரைக்கும் கருப்பை அண்டத்து உயிர்க்கும்
புல் உணவு அளித்துக் காக்கும் புனத் துழாய்க் கண்ணி அண்ணல்
ஒல்லும் நின் மைந்தர்க் காவாது ஒழிவனோ ஒழியான் உண்மை
மெல்_இயல் கொண்ட துன்பம் விடுவிடு மறந்தும் எண்ணல்

#100
உரைத்த கல் முதல் இடப் பல் உயிர்க்கு எலாம் உணவே இன்று
வரைத்த அவ் உயிர் அவ்வாறு வழங்குதல் இயல்பே என்னில்
தரைத் தலைவந்த ஞான்றே சல மலம் விடுத்தல் உண்டே
விரைத்த பூம் குழலாய் துய்க்கும் உணவு இன்றி மேவுமே-கொல்

#101
அலரவன் தீட்டிவைத்த ஆயுளின் அளவை-காறும்
விலகிலா வினைக்குத் தக்க விருப்புணா வெறுப்புணாவும்
இலக உண்டு இன்றேல் இன்றாம் இன் உயிர் உடம்பின் வாழ்தல்
மலர் தலை உலகத்து என்று வகுப்பர் நூல் உணர்ந்த வல்லோர்

#102
ஆதலின் நினது மைந்தர்க்கு ஆயுள் உள் அளவை-காறும்
ஓது இருவினைக்குத் தக்க உணவு உண்டு புந்தி மாழ்கேல்
ஏது வந்தாலும் ஊழால் என நினைந்து இருத்தல் வேண்டும்
மாதர் வாள் முத்த மூரல் மயில் மருள் நடைப் பூம்_கொம்பே

#103
வள நிதி படைத்தோம் என்றும் வடிவ இல் உடையோம் என்றும்
அளவு_இல் சேய் ஈன்றோம் என்றும் அனுபவத்து அமைந்தோம் என்றும்
இளமையில் சிறந்தோம் என்றும் எழில் நலம் உடையோம் என்றும்
உளம் மகிழ் கூர்வர் சற்றும் உண்மை நூல் உணர்ச்சி_இல்லார்

#104
உயிர்க் கொலை புரிதல் உண்ணும் உணவு மாறாட்டம் செய்தல்
அயிர்ப்பு இலா நண்பர்-மாட்டும் அமைதரக் குய்யம் செய்தல்
பயிர்ப்பு மிக்குற நல்லோரைப் பழித்தல் பொய்க்கரி உரைத்தல்
செயிர்ப்பு_இல் ஆலயத்திடத்தும் சென்று பட்டிமை இயற்றல்

#105
இவை முதல் பலவும் மாந்தர் இயற்றி நாள் கழியா நிற்பர்
அவை எலாம் பொருள் நிமித்தம் ஆகும் அப் பொருளைப் பெற்றால்
குவையுறப் புதைத்துவைத்துக் குதுகுதுப்பு அடைந்து காத்து
நவையுறு பணப்பேய் என்னும் நாமமும் பெறுவர் மாதோ

#106
ஒரு சிறு தருமமேனும் உஞற்றிடார் இரப்போர் வந்து
தரு நிகர் கரத்தாய் என்று சாற்றினும் கொள்ளார் ஆகிக்
கருணை சற்று இன்றி எல்லை கடந்திடத் துரந்து மீள்வர்
மருவு பல் கிளையும் ஓம்பார் வளம் படைத்து என் பெற்றாரால்

#107
முறை தவிர் கொடுங்கோல் மன்னர் முனிவிற்கு நனியும் அச்சம்
கறை கெழு கரவு செய்வார் கரத்திற்கும் அழற்கும் அச்சம்
மறைவறு தாய மாக்கள் வௌவுவர் என்றும் அச்சம்
அறை பொருள் பெற்றார் அல்லர் அச்சமே பெற்றார் போலும்

#108
ஒல் ஒழுக்கினரைத் தீய ஒழுக்கர் என்று உரைக்கச்செய்யும்
புல் ஒழுக்கினரைத் தூய புலத்தர் என்று உரைக்கச்செய்யும்
நல்ல கற்புடைய மாதர் நலத்தை அஞ்சாமை செய்யும்
பல் வகைத் துயரும் செய்யும் பாழ்ம் பொருள் பற்று_உளார்க்கே

#109
கோடி பொன் அளிப்பன் இன்றே கோடிர் ஓர் மாத்திரைக்குள்
ஊடிய கிளைக்கு ஓர் வார்த்தை உரைத்து அடைகுவன் என்றாலும்
தேடிய கால தூதர் சிமிழ்த்தல் விட்டு ஒழிவரே-கொல்
வாடிய மருங்குல் நங்காய் மாண் பொருள் பயன் கண்டாயோ

#110
பொருவறு பந்தம் எல்லாம் புணர்த்திடும் தெய்வ சிந்தை
ஒருவ மேலிட்டு நிற்கும் உறக்கமும் இறக்கச் செய்யும்
கருவினுள் புகுத்தும் இன்ன கரிசு கண்டதனால் அன்றோ
இரு நிலத்திடை வெறுக்கை என்மனார் புலமை சான்றோர்

#111
சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம் வந்துற்ற ஞான்றே
வறிய புன் செருக்கு மூடி வாய்_உள்ளார் மூகர் ஆவர்
பறி அணி செவி_உளாரும் பயில்தரு செவிடர் ஆவர்
குறி பெறு கண்_உளாரும் குருடராய் முடிவர் அன்றே

#112
பல் கதிர் விரித்துத் தோன்றிப் பாடுசெய் கதிரே போல
மல்லல் நீர் உலகில் தோன்றி மறைந்திடும் நும்மை விட்டுச்
செல்வம் என்று உறுவதற்கும் செல்வம் என்று உரைக்கும் பேர் நன்று
அல்லலை விளைப்பது ஆகாது அரும் பெறல் செல்வம் பாவாய்

#113
மது மடை உடைத்துப் பாயும் வனத் துழாய்க் கண்ணி வேய்ந்து
விது முகப் பதுமை செம் கை மெல்லென வருடச் சேந்து
கதுமெனக் கருதும் அன்பர் கருத்தினுள் புகுந்து வாழும்
முது மறைப் பெருமான் பாதம் பெறுதலே மூரிச் செல்வம்

#114
கைப் பொருள் பெற்ற ஞான்றே கடவுள் ஆலயத்திற்கு ஈந்தும்
மெய்ப்படு புராண நூல்கள் விருப்பொடு கேட்டு உவந்தும்
வைப்பு என இரப்போர்க்கு ஈந்தும் வருபவர் உளரேல் கூற்ற
மொய்ப் புயத் தண்டம் தப்பி முன்னவன் இன்பத்து ஆழ்வார்

#115
குடரும் நெய்த்தோரும் என்பும் கொழுவும் வார் வழும்பும் தோலும்
தொடரும் நாடிகளும் வைத்துச் சுமத்திய தடியும் கொண்டு
படர்தரச் செய்த பவ்வீப் பாண்டமாம் மடந்தை நல்லார்
இடர் உடை வடிவம் அந்தோ இதற்கும் உள் மயங்கா நிற்பர்

#116
கோதுற அமைத்த பவ்வீக் குழம்பு பல் துவாரம்-தோறும்
மோதுற வழியும் கும்பம் மூத்திர பாத்திரம் கை
யாது பல் கிருமிக் குப்பை அடர்ந்த தீ நாற்றக் கூடு இ
மாதர் மெய் வடிவம் கண்டு மாழ்குவார் மாழ்கி நிற்க

#117
முன்னம் எத்தனை பேர் மைந்தர் முறைமை பாராட்டினாரோ
இன்னம் எத்தனை பேர் மைந்தர் முறை கொள இருக்கின்றாரோ
அன்ன மைந்தரைத் தம் மைந்தர் எனல் அறியாமை ஆகும்
மெல் நடைக் கரிய வாள் கண் விரைக் கரும் தாழ் குழாலே

#118
மதலையைப் பெறும் நாள் துன்பம் வளர்த்திடும் நாளும் துன்பம்
விதலை நோயடையின் துன்பம் வியன் பருவத்தும் துன்பம்
கதமுறு காலர் வந்து கைப்பற்றில் கணக்கு_இல் துன்பம்
இதமுறல் எந்நாள் சேயால் எற்றைக்கும் துன்பமானால்

#119
இளமையில் இயற்றும் தண்டம் ஏற்றும் எவ் வெறுப்பு உய்த்தாலும்
உளம் நடுநடுங்கிப் பின்னி உற்றுறப் பற்றி நிற்பார்
தளர்வறு பருவம் சார்ந்தால் தந்தை தாய் நடுங்கச் சீறி
அளமரு தம் மனம் செல் அவ் வழி ஒழுகிநிற்பார்

#120
சாருறு தந்தையாரும் தாயரும் அனந்தம் சன்ம
ஊரும் ஓர் அனந்தம் வாய்த்த உறவும் ஓர் அனந்தம் பெற்ற
பேரும் ஓர் அனந்தம் கன்மப் பெருக்கமும் அனந்தம் கொண்ட
சீரும் ஓர் அனந்தம் இன்னும் சேர்வதும் அனந்தமாமால்

#121
அத்தகு மைந்தர் ஆர் நீ ஆர் இஃது உரைக்கும் நான் ஆர்
இத் தரையிடைக் காப்பாற்றற்கு யான் திரு நெடுமால் அல்லன்
கொத்துறு மைந்தர் ஆசைக் கோட்பட்டு வருந்துகின்றாய்
பித்து_உளார் செய்கை ஈது பெரியர் இ மயக்கம் பூணார்

#122
நல்_வினை அடைந்த காலை நனி நலம் திளைப்பர் நன்மை
அல்_வினை அடைந்த காலை அல்லல்_இல் துளைவர் எல்லாம்
தொல்_வினை வழியது ஆகும் தோன்று அனுபவங்கள் தாம் தம்
புல்_வினையால் என்று எண்ணல் புலமையோரிடத்து இன்றாமால்

#123
இம்மையில் தருமம் தானம் எழில்பெற இயற்றினோர்கள்
அம்மையில் தேவர் ஆகி அமிர்த முன் ஆன போகம்
செம்மையில் துய்ப்பர் துய்த்துத் தீர்ந்த பின் புவியின் மீட்டும்
தம் ஐயர் தாயர் என்று ஏதிலர்த் தழீஇப் பிறப்பர் அன்றே

#124
தழை விரி கற்ப நாடு சார்தலும் புவியில் யாரும்
விழைதரு போகம் துய்த்து மேவலும் நல்லூழாமால்
பிழைபட நிரயத்து ஆழ்ந்து பெரும் துயருறலும் மண் மேல்
குழை மிடி ஆதித் துன்பு கூர்தலும் தீயூழ் அன்றே

#125
இத்தகு துன்பம் இன்பம் எய்திடார் அறிவு சான்றோர்
பத்தியின் வழாது நின்று பகர் அருச்சனை இயற்றிக்
கைத்து முன் செயல் எலாம் நிட்காமியம் ஆக்கி என்றும்
பைத்த கார் வண்ணத்து எம்மான் பதம் அடைந்து இன்பத்து ஆழ்வார்

#126
சளசள என வாய் ஊறல் தடை இன்றி ஒழுகப் பல் போய்த்
தளர்வொடு மெலிந்து கூனித் தசையற வற்றி முற்றிக்
கிளர் நடை ஒழிந்து பாயல் கிடைகொளும் கிழவுத் தன்மை
அளவு கண்டிலர்-கொல் உற்ற இளமை ஏர்க்கு அகம் களிப்பார்

#127
** வேறு
பாவம் மிகையால் பூதத்து உற்பவிப்பர் நரகர் புண்ணியங்கள்
மேவும் மிகையால் பூத சாரத்தின் விண்ணோர் உதித்திடுவர்
பூவினிடத்து அவ் வினை இரண்டால் பூத பரிணாமத்து உயிர்கள்
ஆவ வியன் மானிடம் விருகம் அனைத்தும் பையுள் ஆவனவே

#128
பறவை உரகம் முதலாய பலவும் அண்டத்து உதித்திடுமால்
உற உற்று உதிக்கும் கசிவினில் கீடாதி உருவம் வித்திட மண்
அறல் கால் வெயிலுற்றிட உதிக்கும் அறுகால் பொறி அம் சிறை வண்டர்
நறவு உண்டு இசை பாடிட மலரும் நறிய தருக்கள் முதல் பலவும்

#129
அவ் வித்து உயிர்ப்ப அவற்று அரிய யவை முன் செந்நெல் ஈறான
செவ்விப் பலத்தில் நசித்திடும் அச் சிறந்த பலம் மானிடர்க்கு உணவாய்
எவ்வத்து அகற்றி வளர்க்கும் அகத்து இட்ட உணவு நீர் இவற்றை
ஒவ்வப் பருவம் அடுப்ப அறல் கீழா உணவு மேலாக

#130
பகுக்கும் பிராணன் பின் வளிபின் பகுக்கும் சாரம் துரால் இரண்டா
வகுக்கும் அழல் இதயம் சாரம் வதிந்து சமானனால் பயிலும்
தொகுக்கும் நாடி எலாம் மற்றைத் துரால் பன்னிரண்டாய் வெளிக்கொள்ளும்
மிகுக்கும் சாரம் என்பதும் அத்துணைத்தாம் விரைப் பூம் குழல் மாதே

#131
இயக்கம் இரண்டாய் மிடற்று வழுக்காய் மூக்கு இளகு சளி நீராய்
நயக் கண் பீளையாய்ச் செவி நா நகம் பல் குய்யம் குதம் அழுக்காய்க்
கயக்கு உரோமத் துளை-தோறும் கசியும் வேராய்த் துரால் கழியும்
வியக்கும் அரும் கற்புடையாரும் விரும்பும் மேன்மை மெல்_இயலே

#132
சாரம் அதனில் துவக்கு அதனில் உதிரம் அதனில் ததை நிணம் ஊன்
சேரும் தசையில் நரம்பு மயிர் செறியும் நரம்பினிடை நாடி
ஓரும் அதில் என்பு அதில் மூளை உகிர் மூளையில் சுக்கிலம் அதனில்
சாரும் கரு இங்ஙனம் ஈராறு ஆகிப் பயிலும் தன்மைத்தே

#133
** கலிநிலைத்துறை
பாயும் வெண்புனல் செம்புனலினும் மிகப் பரவின்
ஏயும் ஆண் சுரோணிதம் மிகில் பெண் நிகர்த்து இரண்டும்
தோயுமேல் அலி ஆம் பிதா நுகர் சுவை பற்றிப்
போய் உள் வெண்புனல் பட்டு உயிர் அனை கருப் புகுதும்

#134
உயிர் படும் கரு அற்றை நாள் குன்றியை ஒக்கும்
இயலும் ஐந்தில் புற்புதம் ஒக்கும் ஏழின் மெல் ஊன் ஆம்
பயில்தரும் பதினான்கில் செந்நீர் பரவு ஊன் ஆம்
செயிர்_இல் ஐயைந்தில் பீசம் உற்றிடும் சிறிதாக

#135
சிரம் களம் புறம் என்பு நாள் முப்பதில் செறியும்
கரங்கள் தாள் அடி மருங்கு முன் இரு மதி காணும்
தரம்கொள் சந்திகள் வடிவில் மு மதியிடைச் சாரும்
வரம் கொள் மாதராய் விரல்கள் நால் மதியிடை மருவும்

#136
நாசி ஆனனம் நகம் கன்னம் குய்யம் நல் நகை ஊன்
பேசும் ஐந்தில் ஆறினில் கன்னத் துளை பெறும் ஏழில்
ஆசு இலாத பல் குறிகளும் விளங்கிட அமையும்
நேசமாய்க் குதம் உந்தி மற்று அங்கமும் நிரம்பி

#137
ஓங்கிடும் பிராணன் முதல் வளிகளும் உற்றுத்
தேங்கிடும் மதி எட்டில் நல் தாய் நுகர் செறி ஊண்
பாங்குறும் சுவை உந்தி வாய் அகட்டுறும் பற்றி
வாங்கும் இன்ப துன்பங்களும் மனாதியால் நுகரும்

#138
உற்றிடும் கருப்பாசயப் பை உறுத்துதல் முன்
சொற்றிடும் துயர் அழுந்தி முன் நிகழ்ச்சியும் தோன்றப்
பற்றிடும் புவிப் பிறந்து நல் நெறி நின்று பவ நீர்
வற்றிடச் செய்வாம் என்று உள்ளிப் பிறக்கும் பின் மறக்கும்

#139
** அறுசீரடி யாசிரிய விருத்தம்
இவ்விதம் இன்ப முத்தி எய்திடும்-காறும் மாறாது
எவ்வ நோயுறும் பிறக்கும் இறக்கும் இத் துயரம் ஓர்ந்த
செவ்விய மனத்தர் மாயன் திருவடிப் புணையால் சென்மப்
பௌவம் ஏழையும் கடப்பர் பரிந்து சோகாப்பர் மற்றோர்

#140
நாடிகள் உரோமம் தந்தம் நகங்கள் வீரியமே பித்தம்
நீடிய கபம் நிணம் தோல் நெய்த்தோர் ஊன் மூளை இன்ன
கூடிய இரண்டு_ஐந்நூறு தொடி எனக் கூறும் நூல்கள்
ஓடிய இரண்டு இயக்கக்கு உறுத்திய அளவை இன்றே

#141
புலைத் தொழில் பயின்ற இந்தப் புன் புலால் சுமையை நாளும்
நிலைத்தது என்று எண்ணியெண்ணி நேயம்வைத்து உறு காப்பு ஆற்றி
மலைத்து அலைந்து உழல்வது எல்லாம் மடமையோர் செய்கை ஆகும்
சிலைத் தொழில் விளக்கியாங்குச் செறி கரும் புருவப் பாவாய்

#142
தரித்திரம் என்று பல்கால் சாற்றினை எதிர்மறுத்தல்
பரித்திடும் அச் சொல் தம்மைப் பன்மை முற்று ஆக வல்லோர்
விரித்து உரை பொருள் நீ சற்றும் விளங்கிட உணர்ந்தாய் அல்லை
அரித் தடம் கரும் கண் மாதே ஆதலின் நிலைத்தது அன்றால்

#143
பாற்கடல் அடுத்த மீன் அப் பால் விரும்பாது மற்ற
ஏற்குமா விரும்பினால் போல் எம்பிரான் திருமுன் சார்ந்து
நாற்கதி கடக்கும் இன்பச் செல்வத்தை நண்ணிடாமல்
சேல் கரும் கண்ணாய் துன்பச் செல்வமோ நண்ணுவேன் யான்

#144
மானம் அற்று இழிவு பூண்டு வள மனைக் கடை-தோறு எய்தி
ஈனமுற்று இரந்திரந்து இவ் உடல் பருத்திடச்செய்தாலும்
தூ நகைக் கரிய வாள் கண் சுடர்த் தொடீ நிலைப்பது அன்று
பேனம் ஆர் வெள்ள நீரில் பிறந்திடும் குமிழி போலும்

#145
நன்றி_இல் உடலைப் போற்றல் நன்று_உளார் செய்கை அன்று
வன்றிகள் மலத்து அழுந்தி மா சுகம் என்றால் போல
ஒன்றும் இக் குடும்பச் சேற்றில் உழன்றிடேன் உழன்றிடேன் யான்
என்று உரைத்து இறுத்தான் பற்று_இல் இரும் தவர் ஏறு போல்வான்

#146
அந்தணன் உரைத்த மாற்றம் அனைத்தும் அம் செவியில் ஏற்று
நந்தல்_இல் உண்மை ஈது என்று உணர்ந்தும் தான் நயந்து பெற்ற
மைந்தர்-பால் வைத்த ஆசை மயக்கு_அறாள் ஆகிப் பின்னும்
புந்தியின் விரும்பிப் பாதம் போற்றி நின்று இதனைக் கூறும்

#147
** எழுசீரடி ஆசிரிய விருத்தம்
கலை முழுது ஓர்ந்து கரிசு எலாம் அறுத்த காந்தனே பரு மணி அரவத்
தலை கிடந்து இமைக்கும் தாத்திரி அதனில் சாற்ற அரும் தக்க நல் முயற்சி
உலைவு அறப் புரியா ஒருவனுக்கு எங்ஙன் உற்றிடும் செல்வம் நல் நிலத்தை
நிலைபெற உழுது வித்திலான்-தனக்கு நீள் பயன் உற்றிடும்-கொல்லோ

#148
மானிடன் ஒருவன் தனக்கு அரும் செல்வம் வாய்க்க என்று அனுதினம் முயற்சி
தான் உஞற்றுவனேல் கடவுளும் அதனைத் தந்து அளிக்குறும் அதால் அன்றோ
ஆன பேரறிஞர் திருவினை முயற்சி ஆக்கும் அ முயற்சி இல்லாமை
ஈனம் ஆர் இன்மை புகுத்திடுமால் என்று யாரும் நன்கு உணர்தர நவில்வார்

#149
மக்களே தேவர் நரகர் என்று அறிஞர் வகுக்குறும் உயர்திணை ஆதி
தக்க பல் உயிர்க்கும் சக்கரம் முதலாச் சாற்றும் ஐம்படை கரத்து ஏந்தும்
மைக் கடல் மேனி வள்ளல் வேண்டிய ஈவான் என வாய்மலர்ந்தனையால்
மிக்க பல் முயற்சிபுரிகிலார்-தமக்கு அவ் விண்ணவன் யாங்ஙனம் அருளும்

#150
செயத்தகும் முயற்சி செய்திடில் செயிர் தீர் செய்யவள் மணாளனும் இரங்கி
வியத்தக வேண்டும் யாவையும் அளிப்பன் விளம்புறு முயற்சிசெய்யானேல்
நயத்தகு போகம் அளித்திடான் என்னா நானிலத்து அறிஞர் நன்கு உரைப்பர்
உயத்தகு நெறி மால் அடி உனல் என்றே ஓர்ந்த மா தவப் பெரும் கடலே

#151
முன்பு நல்_வினை செய்தவர் முயற்று இன்றி முன்னிய எலாம் உண்பர் என்னில்
இன்ப வால் அரியே முதல் உபகரணம் எலாம் இனிது உடையவரேனும்
வன்புறும் அடுதல் இல்லாமை வயிற்று எழு பசித் தழல் அவிய
நல் பதம் ஆமோ மறை முழுது உணர்ந்த நல் தவக் குணப் பெரும் குன்றே

#152
கடவுள் ஈகுவன் என்று எண்ணி நித்தியமும் கருதுறும் முயற்சிசெய்யானேல்
அடலுறு செல்வம் அடைகுவனே-கொல் அரும் கலத்து இட்ட பால் அடிசில்
மிடல் உடைக் கரத்தால் எடுத்து உணாது எங்ஙன் வீங்கும் வெம் பசிப் பிணி ஒழிப்பன்
உடல் பவம் தனக்கு ஓர் ஆகரம் ஆகும் உடல் நனி வாட்டும் மெய்த் தவத்தோய்

#153
முன்பு ஒரு கராவால் மொய் வலி சிந்தும் மும்மதக் கறை அடிக் கயமும்
வன்பு உடைப் பொன்னன் புரி கொடுமையினால் மனம் மெலி பிரகலாதன்னும்
அன்பினோடு ஏத்தி அழைத்தலான் அன்றே அலை கடல் வண்ணன் வந்து ஆண்டான்
என்பர் ஆதலினால் முயற்சிசெய்பவருக்கு எய்து அரும் பொருளும் ஒன்று உளதோ

#154
கமலம்_மேலவனைத் தோற்றிய உந்திக் கமலன் வெம் தொடர் எனப் பகரும்
மு மல வேர் அறுத்த முனிவர் வேண்டாமல் எங்ஙனம் முயல் திரு அளிப்பன்
விமல வேதிய நீ உளத்தின் வேண்டுவையேல் வேண்டுவ வேண்டியாங்கு அளிக்கும்
அமல நால் வேதம் ஆறு சாத்திரம் நன்கு ஆய்ந்தவர்-தமில் சிறந்தவனே

#155
முன்னரும் பற்பல் முனிவரர் பல் நாள் முயல அரும் அரும் தவம் முயன்று
பன்ன அரும் பேறு மாதவன் அளிப்பப் படைத்தனர் பவள வாய்ச் செம் கால்
அன்ன ஏறு உயர்த்த நான்மறை முனிவன் அனைய நல் பெரும் தவர் ஏறே
உன்ன அரும் செல்வம் அன்ன மால் ஈயவுறின் புகழ் அன்றி வேறு இலையே

#156
அப் பரந்தாமன் இணை அடி அன்றி ஆதரவு இலை என அறிந்தாய்
செப்ப அரும் ஆசை பொய் கொடும் சீற்றம் செற்றுளாய் எனினும் விண் ஆளும்
நப் புரந்தரன் ஆதியர் தொழும் அன்னான் நண்ணுறும் துவாரகை அணுகி
ஒப்பு_இல் பல் வளனும் தருதி என்று இரக்கில் உறும்-கொலோ தாழ்வு அதின் உணர்ந்தோய்

#157
மாசறு கற்பின் மடவரல்-தனக்கு வகுக்க அரும் கொழுநனே உலகம்
ஆசறத் துதிக்கும் கடவுளாம் என்னா அரிய நான்மறை சொலும் அதனால்
பாசமுற்று இரியப் பல கலை ஒருங்கு பளகறத் தேர்ந்த நீ எனக்குப்
பேச அரும் கடவுளாம் எளியேனைப் பெட்பொடு புரத்தல் நின் கடனே

#158
மடமையேன்-தனக்குக் கடவுளும் நீயே வகுக்க அரும் இறைவனும் நீயே
அடருறு தானம் தவம் முதல் யாவும் ஆற்றும் நின் பணிவிடை அன்றோ
மடல் அவிழ் துளப மாலிகை புனைந்த வாசுதேவன் பத மலரைத்
திடமுற நெஞ்சத்து உன்னி வல்_வினையைச் சிதர்தரச் செகுத்த மா மறையோய்

#159
வெண் திரை வீசும் கரும் கடல் புடவி விண்ணகம் பாதலம் இவற்றுள்
மண்டிய உயிர்கள் எவற்றையும் கமலை மார்பினன் புரப்பனே எனினும்
அண்டர்கள் புகழும் ஐய நீ உயிர்த்த அரிய மக்களையும் என்றனையும்
பண்டை நூற்கு இயையப் பாதுகாத்து அளித்தல் பகரும் நின் கடன் எனப் பகர்ந்தாள்

#160
** கலிநிலைத்துறை
இடம்பாடு இலாமை முகன் சாம்பி இரங்கிக் கூறும்
திடம்பாடு கொண்ட பெரும் கற்பினள் தே மொழிக்கு
மடம்பாடு அறுத்துக் கலை முற்று உணர் வாய்மை சான்றோன்
உடம்பாடு இலாமை உடையான் அலன் ஆயினானே

#161
கண்ணன்-தனைக் கண்ணுறின் கண்ணும் கதியும் நன்கு
நண்ணும் சிறு மைந்தர்களால் உளம் நையும் இன்னாள்
எண்ணும் நிரம்பும் எனச் சில் பொழுது உள்ளத்து எண்ணி
ஒண்ணும் மனையாள் முகம் நோக்கி உரைக்கலுற்றான்

#162
தெய்வம் குரவன் அரசன் திருமுன்னர்ச் செல்வோர்
மெய் வந்த அன்னார் அருள் வேண்டி விரும்பு எதேனும்
கைவந்த பெற்றுச் செலீஇக் காண்குவர் கண்ணன் முன்பு
மை வந்த கண்ணாய் இனிது என் கொடு வல்லை செல்வல்

#163
** அறுசீரடியாசிரிய விருத்தம்
தெறும் நிரப்பு_உளோர் வாழ்ந்திடு செல்வர்-பால் செல்வரேல் மதியார்கள்
மறுவுறுத்து அவமானமும் இயற்றுவர் மானம்_உள்ளவர் ஆயின்
குறுகும் அவ் அவமானத்தால் உயிர்விடு கொள்கையில் தலைநிற்பார்
நறு மலர்க் குழால் ஆதலால் அவரிடை நண்ணல் நன்று என எண்ணல்

#164
இரும் கடல் புவியிடத்தின் இல்லாரை எல்லாரும் எள்ளுவர் என்னா
ஒருங்கு உணர்ந்த முன்னோர் உரைத்திட்ட அது உண்மை என்று உளம்கொள் நீ
நெருங்கு பற்றுறு தாய் தந்தையரும் நிரப்புறுநரை வெறுப்பாரேல்
சுருங்கும் அன்பின் மற்று எவர் வெறுத்திடாதவர் தூ நகை மலர்_கொம்பே

#165
ஒன்றும் வேண்டலராயினும் செல்வர்-பால் உறு மிடியவர் சார்ந்தால்
இன்று வந்தமை யாதினைக் கருதி மற்று இவர் என உளத்து எண்ணிக்
கன்றுமாறு பல் குறிப்புரை நவிற்றுவர் காதலின் அவர்-பால் போய்
மன்ற வந்தது சிறுமையே இவர்க்கு அன்றி மற்று இலை அறி பாவாய்

#166
இந்தவாறு இவன் உரைத்தல் என் என உளத்து எண்ணிடேல் எக்காலும்
பந்த மானிடர் தன்மை இற்று எனப் பகர்ந்தேன் பரம்பொருளாய
சந்த மா மறைத் தலைவன்-பால் உறுவது தகாது என்றேன் அலன் கண்டாய்
எந்தவாறு கையுறை இலாது ஐயன் முன் யான் படர்குவன் மாதே

#167
எழுகடற்கு ஒரு புல் நுனிப் பனித் துளி என் உவகையைச் செய்யும்
கொழு மலைத் துணைத் தேவுக்கு அ மலைத் துணை கொண்டு போற்றிடல் உண்டோ
செழு மதிக்குச் சில் நூல் இழை பறித்திட்டுச் சிந்தித்தது உறல் போல
முழுமுதற்கும் ஏதாவது கையுறை கொண்டு முன் உறல் வேண்டும்

#168
** வேறு
என்று உரைத்த கொழுநன் உரை கேட்டு மகிழ்ந்து இதற்கு என்னோ செயல் என்று எண்ணி
அன்று முதல் உபவாசம் தான் இருந்து மா முனிவன் அரிதில் தேடி
நன்று அளிக்கும் நெல்லினில் தன் ஒரு பாகம் வேறு எடுத்து நலக்கச் சேர்த்துத்
துன்றிய அந் நெல்லை ஒரு தினத்து அறலில் நனைத்து வறுத்தெடுத்துத் தூய்தா

#169
கறை இட்டு நனி காண உலக்கை கொடு மிக்கு இடித்துக் கரிசு போக்கி
நிறையிட்ட அவல் ஆக்கிக் குசேல முனி கந்தையினில் நேடி ஓர் பால்
மறையிட்ட ஒழுங்குடையாள் முடிந்து கொடுத்து இனிது போய்வருக என்றாள்
சிறையிட்ட பவம் நீங்கும் வழி கண்டோன் வழி தேடிச் செல்லலுற்றான்

#170
முன்னம் நெடும் தூர வழி நடந்து அறியான் தோள்கோப்பு முதல் ஆதாரம்
தன்னமும் இலான் பதிகர்-தமை வினவி வழி தேர்ந்து தடை இலாது
பன்னெடும் காவதம் போகிக் கவர் வழி கண்டு உளம் மயங்கிப் பரிந்து நின்று அங்கு
உன்னி மதிப்பால் இது செல் வழி எனத் தேர்ந்து அவண்-நின்றும் உற்றுச் செல்வான்

#171
** எழுசீரடி யாசிரிய விருத்தம்
வாங்கு வில் கரும் கார் மருங்கு உற மருண்டு மையல் அம் பிடி என அணைத்த
தேங்கு மும்மதம் பெய் களிற்றினைக் கண்டு சிறு பிடி ஊட அக் களிறு
பாங்குறப் போகி அடிக்கடி வணங்கிப் பகிர்ந்து பைம் கற்பகம் தளிர்த்த
பூம் குழை ஊட்டிப் புலவி தீர்த்து அணைக்கும் பொருப்புகள் பற்பல கடந்தான்

#172
மிக்க செம் தழலின் சிகைக் கொழுந்து எழுந்து மெய் வெதுப்புறும் என அஞ்சித்
தக்க பொன்னுலகத்து உறைகுநர் முகிலைத் தடை என நவின்று கீழ்த் தாழ்த்தி
ஒக்கலோடு ஒளிர் கற்பக நிழல் மருந்து உண்டு உயிரை ஓம்புறக் கடும் கொடுமை
தொக்க நீள் பரப்பு நிரப்புறும் முரப்புச் சூழல்கள் பற்பல கடந்தான்

#173
ஆறலைத்து உயிர் உண்டு உடல் கவர்ந்து ஒளிக்கும் அவர்க்கும் அவ் உடல் கருதாது
கோறலைக் குறித்த குடாவடி சீயம் கொடு வரி வேங்கை எய் ஆமான்
மாறலைத்து எழும் போதக முதலாம் பல் மாக்கட்கும் இடமதாய்க் கொடுமை
கால் தலைச் செய்யாது அடர்ந்து உயர்ந்து இருண்ட காடுகள் பற்பல கடந்தான்

#174
மாங்கனி உதிரப் புலி அடிப் பைம் காய் வாழை கூன் குலை பல முறியத்
தேம் கனிந்து ஒழுகும் வருக்கைகள் கிழியச் செறி கமுகு அம் பழம் சிதறத்
தாங்கும் முப்புடைக்காய் உடைதரப் பகட்டுத் தகட்டு அகட்டு இள வரால் பாயும்
வீங்கு நீர்ப் பழனம் உடுத்த தேயங்கள் மென்மெலப் பற்பல கடந்தான்

#175
காமனும் பெண்மை அவாவுறப் பொலிந்த காளையர் மார்பிடை வயிரத்
தோமறு பூணில் தம் நிழல் வேற்றுத் தோகையர் என நினைந்து ஊடிக்
கோமள மடவார் மறுகிடை எறிந்த குரூஉ மணிப் பூண் அவண் குறுகும்
நாம நீள் இருளை நக்கி வாள் எறிக்கும் நகரங்கள் பற்பல கடந்தான்

#176
துன்னிய வஞ்சம் அழுக்கறல் வெகுளி தோன்றிடா வகை உளத்து ஒடுக்கி
நன்னயம்_உடையார் போல் வெளிக்காட்டி நாட்டிய திறையும் நன்கு உய்த்துச்
சென்னி மேல் இரு கை குவித்து நன்கு ஒழுகிச் செயிருறு சமயம் உற்று அறிந்து
மன்னரை அலைக்கும் கொலைத் தொழில் குறும்பர் வாழ் நகர் பற்பல கடந்தான்

#177
கந்த மென் மலரும் வயிரமும் பொன்னும் கரிப் பெரு மருப்பும் வெண் முத்தும்
சந்தனக் குறடும் காழ் அகில் துணியும் ததை மயில் பீலியும் எடுத்துச்
சிந்து வெண் தரங்கக் கரங்களால் இரு பால் செறி குலை உடைத்து வார் பரவை
நந்தல்_இல் வயிறு கிழிதரப் பாயும் நல் நதி பற்பல கடந்தான்

#178
** கொச்சகக் கலிப்பா
மெய்த் தசை இலாது ஒடுங்கி மேலாய தவத்து ஒடுங்கான்
எய்த்து இனி நாம் மற்றை வழி எவ்வாறு கடப்பது என
உய்த்து உணர்ந்து மென்மெலச் செல்லுறு பொழுது மறுகும் வகை
மொய்த்து எழு தீ வெப்பு உடற்றும் முதிர்வேனில் வந்ததுவால்

#179
மண் கொதிப்ப அறல் கொதிப்ப வளி கொதிப்ப எண்ணுவார்
எண் கொதிப்ப நறு நீழல் இயை மனை விட்டு அகலார்க்கும்
கண் கொதிப்பக் கரம் கொதிப்பக் கால் கொதிப்பக் கற்பகம் சார்
விண் கொதிப்ப அவ் வேனில் வெம் பருவம் மேவியதால்

#180
குலவு தனை விழுங்கு உவகை கொண்ட கோட்கு இனமாகி
இலகு அரவ நாடு அனைத்தும் இது சமயம் எனப் பரிதி
பல கதிரும் புகுந்து உடற்றப் பண்ணிய செவ் வழி போலும்
நிலமகள் தன் உடல் வெடிப்ப நேர் தோன்றும் பெரும் கமர்கள்

#181
நலக் கதிர் செய் நம் பகையை நான்மறையோர் இது கொண்டே
விலக்குவர் நாம் கொண்டிருப்பின் மேவாது எப் பகையும் எனப்
புலத்து அமைத்துக் கவர்ந்தான் போல் பொய்கை குளம் கால் நதி முன்
நிலத்து அமைத்த நீர் எல்லாம் நெடும் பரிதி கவர்ந்தனனால்

#182
தெள்ளு புனல் நசை மிக்குத் திரி மருப்பின் இரலை எலாம்
நள் அரிய பேய்த்தேரின் பின்தொடர்ந்து நலிந்திடுமால்
வள்ளல் என வெளிக்காட்டி வஞ்சிக்கும் உலோபர்கள் முன்
எள்ளு வறுமைப் பிணியோர் தொடர்ந்துதொடர்ந்து இளைப்பது போல்

#183
புறங்கொடாத் திறல் வீரர் பூம் போர்வை நெகிழ்த்து அகற்றிப்
பிறங்கு சாந்தாற்றிவிடு வளிக்கு அளித்துப் பெரிது உவப்பார்
அறம் கொள் மாதரும் கணவர் அங்கை அன்றித் தடவுதல்_இல்
மறம் கொள் குயம் சிவிறிவிடு வளி தடவ வம்பு அவிழ்ப்பார்

#184
கால் ஓடை வாவி குளம் முதலாய கணக்கு_இல் அவல்
மேல் ஓடும் புனல் வறப்ப அவற்று உறை மென் பறவைகள் நற்
பாலான ஒருவனிடம் பற்றி இனிது உண்ட கிளை
ஏலாத் துன்பு அவன் உறுங்கால் இரிவது என இரிந்தனவால்

#185
வாவிகாள் குளங்காள் நீர் வற்றினீர் முன் அளித்த
மேவிய இன் சுவைப் புனலால் வீங்கினேம் இதுபொழுது
பாவிய அப் புனல் அளிப்பேம் பற்றும் எனக் கால்வது போல்
பூ இயல் மக்கள் உடம்பு பொங்கு வெயர் நீர் காலும்

#186
நண் அரும் இக் கொடும் பருவம் நகைதரு வெள் ஒளி காட்டி
எண்ணும் மனம் கரைந்து உருக இந்தியமும் உடன் உருகத்
துண்ணெனும் வெம் தீ வெப்பம் தொகு மைந்தர்க்கு உறுத்துதலால்
வண்ண மணி நகைத் துவர் வாய் மட நல்லார்-தமைப் பொருவும்

#187
வாங்கு கடல் அகம் புகுந்து வடவை வதிவதை அறிந்தோம்
ஓங்கு கடல் சுவற்ற என உலகு உரைத்தல் அது பொய்யே
தேங்கிய இப் பருவத்தால் செறி வெப்பிற்கு ஆற்றாமை
ஆங்கு குளிர் இடம் தேடி அஞ்சி ஒளித்தது போலும்

#188
இத்தகைய வேனிலிடை இரும் பசியால் அற மெலிந்தும்
பைத்த தரு நிழல் இருந்தும் பள்ளம் எலாம் ஆராய்ந்தும்
தத்து புனல் கிடையாமைத் தாகத்தால் வாய் புலர்ந்தும்
சுத்த விரதத் தவம் நல் துறை நின்றோன் சொல்லுமால்

#189
சுடர் மறைய ஊர் அகத்துத் துயில்வதற்கு ஆர் இடம் கொடுப்பார்
படர் வழிச் செல் நமக்கு இவ் ஊர்ப் பழக்கமுடையார் இலர் என்று
இடருடைய மனத்தினனாய் எதிர் கோயில் முன் உறங்கி
அடர் கதிரோன் எழும் முன் எழுந்து ஆறு உணர்ந்து நடந்திடுமால்

#190
கான வேல் முள் தைத்துக் கால் ஊன்ற முடியாமல்
ஈனம் ஆர் முள்வாங்கும்கருவியும் அங்கு இல்லாமல்
மானம் ஆர் பெரும் தவத்தோன் மனம் மெலிந்து முகம் புலந்து ஓர்
தானம் மேவுற இருந்து உள் ததைய இவை எண்ணுவான்

#191
செறிதரு தன் மனப்படியே செய்தல் ஒருவற்கு இனிதாம்
அறிவுறுக்கும் குரு மொழி கேட்டு ஆக்கல் அஃதினும் சிறப்பாம்
முறிதரும் ஏதிலர் சொல் கேட்டு உஞற்றல் முனி துயர் மனையாள்
வறிய உரை கேட்டு உஞற்றல் மண் இறல் நேர் கெடுதியுறும்

#192
இது தெரிந்தும் மனையாட்டி இயம்பிய சொற்கு உடம்பட்டு
முது வெயிலால் உடல் வருந்தி மூர்ச்சித்து மெலிகின்றேன்
கதுமெனப் பல் காவதங்கள் கடந்தேன் வண் துவரைநகர்
எது எனக் கேட்டிடில் எவரும் இன்னும் நெடும் தூரம் என்பார்

#193
மற்றை வழியும் கடக்க வலி இன்று ஓர் விதத்தினால்
உற்றிடினும் கரும் கடல் யார் உதவி கொடு கடந்திடுவேன்
பொற்ற அது கடப்பினும் அப் புரத்தில் எனை யார் மதிப்பார்
சற்றும் உணராது வழி தலைப்பட்டேன் என் செய்தேன்

#194
மா மகுட முடி மன்னர் நனி வந்து காத்திருக்கும்
கோமகன்-தன் தலை வாயில் எவ்வாறு குறுகுவல் யான்
பூ மலியும் அவ் வாயில் புகினும் அவன் திருச்சேவை
ஏமமுற ஏழையேற்கு எளிது கிடைத்திடும்-கொல்லோ

#195
கற்பகத்தைச் சார்ந்தும் வறும் காய் கேட்கத் துணிவார் போல்
பொற்புடைய எம்பிரான் திருமுன் அரிதில் புகுந்தும்
அற்பமுறு திரு வேட்டல் அறிவே-கொல் என உளத்துப்
பற்பலவும் எண்ணி அயர்வு உயிர்த்தான் அப் பனவனே

#196
என்ன துயர் இனி உறினும் இது-காறும் வந்தமையான்
முன்னம் மனைக்கு உரைத்தபடி முற்றும் போய் வருவல் எனத்
தன் உளத்தில் எண்ணி எழீஇத் தனி நடந்து சில் நாளில்
மின் உமிழ் கார் முகில் பயிலும் மேல் கடலின் கரை இறுத்தான்

#197
என்ன எடுத்துரைத்த சுகமுனிவன் இணை அடி வணங்கி
மன்னர் மணி முடி இடறும் வார் கழல் கால் வய வேந்தன்
நன்னர் கொள் மற்றைக் கதையும் நடத்துக என நனி இரப்ப
இன்னல் இலாது உயர்ந்த முனி இன்புற வாய்மலர்கின்றான்

@2 குசேலர் துவாரகை கண்டு தம் நகர்ப்புறம் அடைந்தது
** கடவுள் வணக்கம்
** பஃறொடை வெண்பா

#198
பூ மேவும் நான்முகத்தோன் போற்றித் துதிப்பதுவும்
தே மேவு பைம் துளவம் சேரக் கமழ்வதுவும்
மா மேவும் மா மறைகள் வாழ்த்தப் பொலிவதுவும்
தா மேவும் வஞ்சச் சகடம் உதைத்ததுவும்
தீ மேவும் ஆரணியம் சென்று திரிந்ததுவும்
தூ மேவும் அன்பர் உளம் தோன்றப் பயில்வதுவும்
பா மேக வண்ணன் பதம்

#199
** ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்த ஆசிரியத் தாழிசை
நீர் ஆர் பைம் கொண்டல் நிகர் திரு மேனிப் பெருமான்
பார் ஆர நின்ற செழும் பங்கயச் செம் போது அடிகள்
தேர்வார் வினை இருட்குச் செங்கதிரோன் என்பரால்
காயாம்பூ ஒத்த கதிர்த் திரு மேனிப் பெருமான்
பாய் ஆரணம் மணக்கும் பங்கயச் செம் போது அடிகள்
ஆய்வார் வினை வாரிக்கு ஆர் வடவை என்பரால்
வற்றாக் கடல் நேர்வரு திரு மேனிப் பெருமான்
பற்று ஆர் கழல் ஒலிக்கும் பங்கயச் செம் போது அடிகள்
உற்றார் வினை அரவுக்கு ஓர் உவணம் என்பரால்

#200
** வெள்ளொத்தாழிசை
திண்ணம் என்று தீய தீர
எண்ணம் ஒன்றி என்றும் உள்வர்
கண்ணன் கமலக் கழல்

#201
** ஒருபொருள் மேல் மூன்றடுக்கிவந்த வெள்ளொத்தாழிசை
பற்றில் பழுது இயற்றும் பந்தத்து உழல் நெஞ்சே
செற்றச் சகடு உதைத்தான் தாள் குறியாது என்-கொலோ
முற்ற ஒழிந்து விடல்
துன்று பவம் விளைக்கும் பந்தத்து உழல் நெஞ்சே
கன்று குணில் கொண்டான் தாள் குறியாது என்-கொலோ
என்றும் ஒழிந்து விடல்
நந்தும் வினைக்கு இடனாம் பந்தத்து உழல் நெஞ்சே
உந்தி மருது இடம்தான் தாள் குறியாது என்-கொலோ
அந்தோ ஒழிந்து விடல்

#202
** வெளி விருத்தம்
வேதம் தெரித்தானும் வேதத்திற்கு உள்ளானும் கண்ணன் போலும்
போதம் தருவானும் போந்து ஒளியாய் நிற்பானும் கண்ணன் போலும்
ஏதம் தவிர்ப்பானும் எவ்வுயிரும் காப்பானும் கண்ணன் போலும்

#203
** அறுசீரடி யாசிரிய விருத்தம்
முற்றா இள மென் தளிர்க் கரத்தால் முனிவு இலாது மெல்லெனச் செம்
பொற்றாமரையில் குடியிருக்கும் பூவை வருடும்-தொறும் சேக்கும்
வில் தார் அணி நல் பதம் இரண்டும் வியன் மா நிலம் தீண்டிட நடந்து
கற்றா மேய்த்த சிற்றாயன் காமர் சீர்த்தி வாழியவே

#204
** வேறு
பல தலை அனந்தனோடு எண் பகடும் எய்ப்பு ஆறி நிற்ப
மலர் தலை உலகம் தாங்கும் மாலை அம் தடம் தோள் வேந்தே
குல மறை உணர்ச்சி மிக்க குசேலன் சென்று இறுக்கப்பட்ட
நலம் மலி நெய்தல் சார்ந்த நளிர் கடல் வளம் மிக்கு அன்றே

#205
சீர் உறு சங்கம் வாய்ந்து செழும் குவலயம் உண்டாக்கி
ஓர் உறு கமடம் மீனம் உருவம் கொண்டு உயிர்கள் ஓம்பி
ஏர் உறு பவளச் செவ் வாய் இயைந்து பொன் புணர்ந்து தண்ணென்
கார் உறு நிறமும் காட்டிக் கண்ணனைத் துணையும் வாரி

#206
வாங்கு தெண் கடலில் மீனம் முதல் உயிர் மருவலாலே
வீங்கிய புலவு மாற்றி மிளிர்தரப் பூத்த நெய்தல்
தேங்கிய மணம் கான்று ஆன்ற சிறப்பினைச் செய்யும் தம்மைத்
தாங்குறு களைகண் ஆனோர் தம் பழி மறைப்பார் போல

#207
அலை எறி மணியும் முத்தும் அலகும் பல் மீனும் மற்றும்
தலைமயக்குற்று முன்றில் சார்தரு குப்பையாகக்
குலை மருங்கு இயற்றும் பெண்ணை மடல் புனை குரம்பை-தோறும்
வலை வளத் தொழில் மேற்கொண்டு வாழ்வன பரதச் சாதி

#208
அயில் விழிப் பகையாம் என்பது அறிந்து உயிர் செகுப்பார் போலக்
குயில் மொழிப் பரவ மாதர் குரை கடல் மீன்கள் போழ்ந்து
வெயிலிடை உணக்கிப் பின்னும் விற்று உளம் மகிழ்வார் யாரே
செயிருறு சீற்றத் தெவ்வைச் சிதைத்து உளத்து உவகை செய்யார்

#209
இணங்கு கைத் தோணி ஏறி எறி வலை வீசும் ஆர்ப்பும்
அணங்குறப் பட்ட பல் மீன் அரும் கரை உய்க்கும் ஆர்ப்பும்
உணங்கல் மீன் கவர் புள் ஓப்பும் ஆர்ப்பும் மிக்கு ஓசை போக்கி
வணங்கும் நுண்ணிடையார் அ மீன் மாறிடும் ஆர்ப்பும் மல்கும்

#210
மீன் விலைக்கொள அச் சேரி விருப்பொடு புகுந்த மைந்தர்
வானவில் போலும் நெற்றி வலைச்சியர் கண் மீன் பாய
மான மால் கொண்டு அன்னார் சொல் வரம்பினைக் கடவார் ஆகி
ஈனம் மிக்குறப் பொன் எல்லாம் ஈந்து அளித்தவையே கொள்வார்

#211
கொழும் சுறாக் கொழு மீனோடு கூட்டி நன்கு அருந்த ஆங்காங்கு
எழும் கரும் பெண்ணை-தோறும் இறக்கு கள் மாறப் புக்கார்
செழும் கதிர் தரளக் குப்பை சே ஒளிப் பவளம் சால
அழுங்கல்_இல் பரத மாக்கள் எடைக்கெடை அளிப்பக் கொள்வார்

#212
பெருகிய செல்வருள்ளும் பயன்_இலார் உளரால் பேணி
அருகிய செல்வருள்ளும் பயன்_உளார் உளர் என்று ஆய்ந்து
பெரியவர் சொலும் சொல் தேற்றும் பெரிய நீர்க் கடலும் ஆங்காங்கு
உரிய வெண் மணல் சிற்றூறல் கேணியும் உரிய நீரால்

#213
சிற்றிடை வலைச்சிமார்கள் தெருத்-தொறும் கூறி விற்கும்
வற்றல் மீன் நாற்றம் போக்கும் அலர் மணிக் குழல் தாழம்பூ
பற்றுபு பரதர் கோட்டில் பரப்பும் மீன் நாற்றம் போக்கும்
மற்று அவர் திணி தோள் வேய்ந்த நெய்தல் அம் கண்ணி மாதோ

#214
மருங்கு இலாப் பரத்திமார்கள் மட நடை கற்பான் வேண்டி
ஒருங்கு வந்து அடைந்தால் போல உயர் கரும் புன்னைச் சேக்கை
அரும் குலப் பார்ப்பினோடும் பெடையொடும் அன்னம் துஞ்சும்
கரும் கொடி அடம்பு சூழ்ந்த கைதை அம் கானல் வேலி

#215
தினை முதல் வரகு முன் செஞ்சாலி முன் விளைக்கும் மூன்று
வனை புகழ் நிலத்தார் நன்கு மழை வளம் வேண்டிநிற்பார்
பனை செறி இ நிலத்துப் படும் உப்பு விளைப்போர் என்றும்
வினை தவாது உஞற்ற மிக்க வெயில் வளம் வேண்டி நிற்பார்

#216
இவ்வகை வளங்கள் எல்லாம் இனிது கண் விட்டு நோக்கிச்
செவ்விய இறும்பூது எய்திச் சீரகம் துளிப்பத் தன் மெய்
ஒவ்வ மெல் வளி தண்ணென்ன வருட ஓர் புன்னை நீழல்
ஒளவியம் அவித்த மேலோன் சற்று இருந்து அயர்வு உயிர்த்தான்

#217
இக் கலம் உகைப்பார்க்குப் பொன் இம்மியும் ஈதற்கு இல்லேன்
மிக்கவன் கேளாது உய்ப்ப விரும்புறு சிறப்பும் இல்லேன்
நக்க செங்கமலக் கண்ணன் சேவைக்கு நடக்கிறேன் என்று
ஒக்க மெய் உரைத்திட்டாலும் உண்மை என்று உள்ளம்கொள்ளான்

#218
என் செய்வாம் நன் சொல் கூறி இரப்பதே துணிவு என்று எண்ணிப்
பொன் செய்த மலர்ப் பூம் புன்னை நிழலில்-நின்று எழுந்து போந்து
வன் செயல் மீகான் சார்ந்து மனம் இரங்கு உரை பல் கூறி
நன் செயல் ஏறி நின்றான் நடைக் கலம் ஏறினானே

#219
கூம்பு உடைக் கலம் மீகானால் குரை கடல் கிழிய ஓடித்
தேம்பல்_இல் துவாரகைக்குச் செல் துறை இறுத்தலோடும்
பாம்பணைக் கடவுள் பாத பங்கயம் உள்ளத்து உள்வோன்
ஓம்பலுற்று இறங்குவாரோடு இறங்கினான் உவகை எய்தி

#220
** கலி விருத்தம்
பானல் அம் துவரைப் பன் மினார் கண் வா
யால் நலந்து உவரைப் பற்றுறாதவன்
வான் நலந்து உவரைப் படுப்போன் பின் வாழ்
கானல் அம் துவரைப் பதி கண்ணுற்றான்

#221
தருமம் தன் அகம் தங்கிப் பொலிவுறத்
தெருமந்து அல் நகு பாவம் சிதைதர
அருமந்து_அன்னவன் வைகலின் ஆர் அஞர்க்
கருமம் தன்னமும் இன்று அக் கடி நகர்

#222
கொடிய விஞ்சி வட்காரைக் குனித்து அடும்
கொடிய இஞ்சி வண் காரைக் குனித்து அடும்
கடி அகற்சிக் கிடங்கு அராக் காலுறும்
கடிய கல் சிக்கு இடங்கர் ஆக் காலுறும்

#223
குவலையம் கமலம் குல ஆம்பல் மல்
கு அலை அங்கு அ மலங்கு குதிக்கும் முன்
குவலையம் கம் அலங்குறத் தோற்றி நன்
கு வலையம் கமலம் குயிற்று அ நகர்

#224
இன்ன மா நகர் காண்டலும் ஏர் முகில்
அன்ன மேனியன் காண்டல் ஒப்பா மகிழ்ந்து
இன்னல் தீர்தர எட்டி விசை கொளீஇ
நன்னர் நெஞ்சன் நடக்கத் தொடங்கினான்

#225
பரிக்கு ஒதுங்கியும் பாய்தரு மும்மதக்
கரிக்கும் தேர்க்கும் ஒதுங்கியும் கார்க் குழல்
அரிக் கண் மாதர்க்கு ஒதுங்கியும் ஆழ் வினை
பரிக்கலாதான் படருகின்றான் அரோ

#226
முன்னும் பார்க்கும் முதிர் ஒலி தோன்றலால்
பின்னும் பார்க்கும் பெரு நிலத்து ஊர் உயிர்
உன்னும் பார்க்கும் உறுவர் குழாம் எலாம்
இன்னும் பார்க்க எழுதிடும் சீர்த்தியான்

#227
சீத நீழல் செலின் சிற்றுயிர் தொகை
போதச் சாம்பும் என்று எண்ணிய புந்தியான்
ஆதவம் தவழ் ஆறு நடந்திடும்
காதல் அங்கை விரித்துக் கவித்து அரோ

#228
** எழுசீரடி யாசிரிய விருத்தம்
நாகு வண்டு ஒலிப்பப் படும் கடச் செருக்கால் நாள்-தொறும் இன் பிடி ஊட்டும்
பாகு உடல் குமைக்கும் கறை அடிக் களிறு பாவிய கூடமும் கடும் கால்
ஏகு வாம் பரி மந்திரங்களும் வாள் போர் இலகு கல்லூரியும் விண்ணில்
போகு உயர் இரத நிலைகளும் மிகுத்த புடை வளப் பெரு நகர் கடந்தான்

#229
கூந்தல் அம் பிடியும் கோணை மாக் களிறும் கூடி ஆட்டு அயர்ந்து என மணிப் பூண்
ஏந்து எழில் இள மங்கையரும் மைந்தரும் பொன் இயைதரு சிவிறியும் பந்தும்
சேந்த கைத்தலம் கொண்டு ஒள் அறல் இறைத்துச் செறி களி இன்பு உவந்து ஆடும்
பூம் தடம் மலிந்து பல வளம் நிறைந்து பொலி தரும் இடை நகர் கடந்தான்

#230
செப்பு அரும் அரு நூல் மடம் தபு தேர்ச்சிச் செந்தமிழ்ப் புலவர் தம் தூக்கின்
திப்பிய அணியும் பல பொருள் வாய்ப்பும் தெளிதரு நீர்மையும் சீரும்
தப்பு_இல் ஆழமும் கொண்டு அலர் மணம் உடைத்தாய்ச் சாற்று-தோறு அகலமுற்று எவரும்
ஒப்பு அரும் குரைத்து என்று உரைத்திடப் பொலியும் உள் நகர் அகழியைக் கடந்தான்

#231
படம் கிளர் அரவப் பாய் உடைப் பகவன் பார் அளந்திட்ட நாள் வளர்ந்து ஆங்கு
இடம் கொள் விண்ணுலகம் போழ்ந்து மேல் வளரா எதிர் தரியலர் உயிர் மடங்க
முடங்கு உளை மடங்கல் அடங்க அரும் உழுவை முதல் கொடும் பொறி பல உடைத்தாய்த்
தடம் கொளீஇ நின்ற மதில் பெரு வாயில் தடையையும் தடை அறக் கடந்தான்

#232
உள் புகும் அரசை முன் புகுந்திருந்த ஓர் அரசு எதிர்கொளும் காலை
விண் புலம் புகழும் மற்றும் ஓர் அரசு விரைவின் உள் புகுவது காணூஉ
நட்பு உடை இவ் ஈர் அரசும் நன்கு எதிர நடப்ப இவ்வாறு அறாது உறலால்
கண் புலம் புகாதாம் நெருக்கிடை ஒதுங்கிக் கரங்கள் மேல் தூக்கி உள் புகுந்தான்

#233
விடம் படு வடி வாள் மள்ளருக்கு ஒதுங்கின் விரைவின் அவ் ஒதுங்கிடம் வளி போல்
திடம்படு பரிகள் தாவிடம் அதற்கும் திரிந்து ஒதுங்கிடும் இடம் சீறிக்
கடம் படு களிறு பாயிடம் அதற்கும் கண்டு ஒதுங்கிடும் இடம் கொடிஞ்சி
இடம் படும் இரதம் முன்பின் ஊரிடம் மற்று எவ்விடம் இவன் நடந்திடுவான்

#234
போதரும் இடங்கள்-தொறும் நெருக்குறலால் பொன் வரை அனைய தோள் மைந்தர்
மேதகு மார்பத்து இலங்கு மாலைகளும் விரை கெழு கலவையும் இளமை
மாதர் மெய்ப் பூசும் குங்குமச் சேறும் மான்மதம் அளாவி ஐந்நூற்றுக்
காதம் நாறிடு செம் சந்தமும் குசேலன் கந்தையும் நாறின மாதோ

#235
வெளிவருவாரும் உள்புகுவாரும் வீதியில் கலாம் விளைப்பாரும்
அளி மலர் மாலை சாந்தம் முன் கொடு போய் அலங்கரிப்பாரும் முன் வாயில்
ஒளி பெறு கதவம் தட்டி நிற்பாரும் உழலுகின்றாருமாய் மைந்தர்
களிதரப் பயிலப் போகம் விற்று உண்ணும் கணிகையர் சேரியைக் கடந்தான்

#236
சங்கு அரிந்து எடுத்தால் போன்ற வால் அரியால் சமைத்திடப்படு புழுக்கலும் தீம்
பொங்கு பால் குழம்பும் அளையும் ஆச்சியமும் பொருவு_இல் பல் சுவைக் கறிகளும் தேன்
தங்கு முக்கனியும் அமைத்து உண்பார்க்கு உதவத் தக்க பொன் முதல் உள்ளன என்று
எங்கும் ஆராய்வுற்று அழைத்திடும் பின்னோர் இரும் தெரு நோக்கி உள் மகிழ்ந்தான்

#237
குரு மலர் வெண்பொன் கட்டி மூன்று அமைத்த குமுதத்தில் பொன் கலம் செறித்துப்
பொருவறு பனி நீர் உலையில் முத்து அரிசி புகட்டி ஒள் மணித் தழல் இட்டுத்
திருகு_இல் வித்துரும இந்தனம் அடுக்கித் திரு மலி வணிகர்-தம் தெருவில்
அருமை சால் சிறிய பிணாக்கள் பண்ணையினும் அடும் தொழில் கற்பது கண்டான்

#238
ஆப்பியால் மெழுகி முத்த நுண் துகளால் அவிர்தரு கோலமும் இயற்றிப்
பூப் புனை கூந்தல் பார்ப்பன மகளிர் பொலி மற்றைப் பணி தலைநிற்பத்
தூப் பயில் உபகரணம் கொடு மறையோர் துணர்த் தழல் வளர்த்து அவி அமரர்க்
கூப்பிடுபு அளிக்கும் பல் மகச்சாலைக் கூட்டம் ஆங்காங்கு கண்டு உவந்தான்

#239
கறை தபு கலைத் தோல் முடிந்த பூணூலர் கவின்தரு முஞ்சி நாண் அரையில்
நிறைதரு தானைச் சொருக்கு முன் தூங்க நீள விட்டவர் குழாம் கூடி
மறை பல கற்கும் கிடைகளும் நடை தேர் மாண்பு உடை ஆசிரியன் சொல்
குறைவற உணர்த்தும் பெருமையும் கண்டும் கேட்டும் உள் உவகை கூர்ந்தனனால்

#240
சீதளப் பளிக்கு மாடம் மேல் மடவார் செறிதரு புலவியில் வெறுத்த
தீதறு மணிப் பொன் தரள மாலிகைகள் செல்பவர் காலுறப் பின்னி
மாதர் மேல் மைந்தர் மைந்தர் மேல் மாதர் மாறி வீழ்தர அடிக்கடி செய்
ஏதம்_இல் அரச வீதியில் புகுந்தான் இரும் தவக் குசேல மா முனிவன்

#241
மணிகள் கால் யாத்த மாளிகை-தோறும் மருவிய புலவி தீர்பாக்குப்
பணிதரு மைந்தர் சென்னியில் புயத்தில் பதம் எடுத்து ஓச்சிடும் மாதர்
அணி கிளர் சிலம்பின் ஒலியும் பின் எழு பொன் அவிர்தரு காஞ்சியின் ஒலியும்
குணில் பொரு முரசம் முதலிய மடங்கக் குமுறுதல் கேட்டு உளே நகைத்தான்

#242
வரை மிசை முளைத்த கழை நுனிக் கழன்ற மாசுண உரி அசைந்தால் போல்
நிரைபடு மாடச் சிகை நடு பதாகை நெடு மரத் துகில் அசைவதுவும்
புரை தபச் செறித்துக் கட்டிய மணியால் புனைந்த தோரணங்களின் மீது
திரை நரை மூப்பு_இல் அமரர் ஊர் விமானம் சிக்குண்டு கிடப்பதும் கண்டான்

#243
பாற்று இனம் சுழலும் வசி நுதி நெடு வேல் பார்த்திபர் முன் கடிப்பு ஓச்சும்
ஏற்று உரி முரச வேற்று இடி முழக்கம் எழுதலும் வெளில் தபுத்து எழுந்து
கூற்றும் உள் நடுங்க எதிர் பரிக்காரர் குறுகிடா வகை செலும் களிறு
காற்று வெம் பரி விலாழி நீர்ச் சேற்றில் கால் பதிந்து எழா வகை கண்டான்

#244
தம்மிடை ஏற்றார் அவரிடைச் சிறந்த தரணி மன்னவரும் வந்து ஏற்பச்
செம்மையின் கொடுக்கும் பொருளுடன் ஒழுக்கும் செழும் கரகப் புனல் பெருகி
மும்மை நல் உலகும் வியப்ப நீள் நதியாய் முடுகிடக் கதிரவன் உறுத்தும்
வெம்மை தீர்பாக்குச் சிறுவர் கைத் தோணி விட்டு உலாய் ஆடுதல் கண்டான்

#245
தெள்ளிய தரளம் நீற்றிய சுண்ணம் தீற்றிய மாட வாய்-தோறும்
வெள்ளியால் பொன்னால் பதுமராகத்தால் வித்துருமத்தினால் மற்றை
ஒள்ளிய மணியால் அமைத்த கந்திகள் மீ உயர் கதலிகள் பசும் கழைகள்
உள்ளிய வானத்து அலமர நிறுத்தி உறுத்த பல் அணிகளும் கண்டான்

#246
தம்மை ஊர் இறைவன் நகர் வளம் கண்ட சலதரக் குலம் அவன் பின்னோன்
செம்மை ஆர் அரசுபுரி நகர் வளத்தின் சிறப்பு நோக்கிடல் குறித்து ஆங்குத்
தும்மு தீப் பொறிய வேல் இள மைந்தர் துணைவியரோடு இன்பு அமரும்
விம்மு வான் செல்வ மாடமாளிகையின் மேல் தவழ்ந்திடுவன கண்டான்

#247
மன்னர்-தம் பவளக் கால் குடை பிச்சம் வரைந்திடு கேதனம் ஒலியல்
நன்னர் கொள் சிவிறி ஆலவட்டங்கள் நனி துவன்றா இருள் பரப்பப்
பன்னக மணியும் வயிரமும் முத்தும் பதித்த பொன் மகுடமும் குழையும்
மின்னல்செய் வாகுவலயமும் வாளும் வெயிலுறப் பரப்புதல் கண்டான்

#248
வெண்மையில் திகழ்ந்த மேல் நிலை மாட வியல் உபரிகையிடை இருந்து
நுண்மையில் புனையப் புகுந்த ஓர் மைந்தன் நுவல் அரும் காமத்தால் மயங்கிப்
பண்மையில் பொலிந்தாள் வழக்கு அறுத்து அமர்க்கும் படர் அரிக் கண்ணி-தன் நுதல் என்று
அண்மையில் செறிந்த சிறு பிறையிடைப் பொட்டு அணிந்து வெள்கிடுவது கண்டான்

#249
பொற்றை நல் மாடத்து உம்பர் ஓர் மடந்தை புரி குழல் தரள வெண் பிறையும்
மற்றொரு மாடத் து உம்பரில் தங்கும் மங்குலில் செறிந்த வெண் பிறையும்
கற்றவர் புகழும் பெரும் தவ முனிவன் கண்டு இரு பிறைகள் உள்ளனவோ
உற்ற இத் தன்மை என் என மயங்கி உண்மை தேர்ந்து உள் நகை கொண்டான்

#250
நவமணி மாட மீமிசை இட்ட நறும் பரியங்கத்தில் நன்கு
துவள் இடை மடவாரொடு நலன் நுகர்ந்த தோள் வலி மைந்தர்கள் அவர் பூ
இவர் குழல் சேர்த்துக் கட்டிடக் கதிர் நாண் எடுத்தனர் மயங்குபு அண்மையில் தாழ்
உவர் குடி குயினில் கட்டினர் அதனை உறும் மின்னே என்ன உட்கொண்டான்

#251
பாய் ஒளி விரிக்கும் பொன் தகடு இணங்கப் பதித்து நன்கு இயற்றிய மறுகில்
மேயின அரசர் வில்லிடும் மகுடம் மிடைதலின் ஒன்றொடொன்று உரிஞச்
சேய பல் மணியும் வயிரமும் மற்றும் சிதர்தர உதிர்ந்து தங்குவதால்
காயும் வெம் பரல் போல் செல்லுகின்றார்-தம் காலிடை உறுத்துதல் கண்டான்

#252
மாம் குயில் மருட்டும் மழலை அம் கிளவி மதர்த்து அரி படர்ந்து மை தோய் கண்
பூம் குழல் மட மாதர்களொடும் கண்ணன் பொன்னுலகோர் அழுக்கறுப்பப்
பாங்குறப் புரியும் இன்ப நல் கலவிப் பகுப்பு எலாம் கைவலான் கொண்டு
தேங்கும் அ நகரார் தங்கள் மாளிகை முன் சித்திரித்திருப்பன கண்டான்

#253
தரை மிசைக் கொடுங்கோல் நடவிய கஞ்சன் சாளவனே சிசுபாலன்
வரை நிகர் தோள் காலயவனன் ஆதி மாற்றலர்ச் செகுத்த போர்க் கண்ணன்
விரை கெழு வென்றிப் பெரும் புகழ் யாப்பின் மேவர இயைத்து இடம்-தோறும்
திரை செறி கடல் சூழ் உலகினர் வியப்பத் தித்திக்கப் பாடுதல் கேட்டான்

#254
தன் வயிற்று உலகம் முழுவதும் அடக்கித் தந்து மீட்டு அளித்திடு பிரானை
மின்-வயின் பொலிய உயர்ந்த மாளிகை என் வியன் வயிற்று அடக்கி மீட்டு உமிழும்
பொன்-வயின் பொலிந்த இ நகர் வளப்பம் புகலுதல் சேடற்கும் அரிதாம்
முன்-வயின் காணல் இந்திரன்-தனக்கும் முடிவு அரிதால் என மதித்தான்

#255
மாம் தளிர் மேனி இலக்குமி மணாளன் மலர் தலைப் புவி வகுக்குறுங்கால்
தேம் தட மலராற்கு அணி நகர் இ மாதிரி கைசெய் எனத் தெரிவிப்பச்
சேந்த தன் நான்கு கரங்களால் சிருட்டி செயப்படு மா நகர் போலும்
வேந்தர்கள் நெருங்கும் முரசு கண்படா இவ் வியன் நகர் எனவும் உட்கொண்டான்

#256
சிறந்த அ நகரின் வளத்தில் இவ்வாறு சிறிது அறிந்து அற்புதமுறலால்
விறந்த பல் காத வழி நடந்ததனால் மேவிய வருத்தமும் இளைப்பும்
பறந்தன பசியும் ஒழிந்தது நாவில் பைம் புனல் ஊறியது உறவும்
அறம் தழை மனத்தான் உடலமும் சிறிது தளிர்த்ததால் அதிசயம் பயப்ப

#257
ஐந்து துந்துபியின் முழக்கமும் மன்னர் அவிர் கழல் ஒலியும் வாம் பரியின்
நந்தல்_இல் ஆர்ப்பும் கந்து அடு களிற்றின் நரலலும் தேர் அரவமும் சேர்ந்து
அந்தில்-நின்று எழுந்து விண் முகடு உடைக்க அளவு_இல் பல் வளத்தவாய்ப் பொலியும்
சந்தம் ஆர் கண்ணபிரான் திருக்கோயில் தனித் தலை வாயிலைச் சார்ந்தான்

#258
கண்டனன் தலைவாயில் பெரும் சிறப்பைக் கழியவும் உள்ளத்துத் திகைப்புக்
கொண்டனன் அடங்கிலா இறும்பூதும் கொண்டனன் எண்ணிடுதற்கும்
விண்ட சிற்றிடமும் இன்று ஒரு கற்பம் மேவி நாம் காத்திருந்திடினும்
தண்டல்_இல் நெருக்கம் தவிர்ந்திடாது உள்ளால் சார்வது எவ்வாறு என நினைத்து

#259
கன்னல் பல் கழிதல் கண்டு பாணித்தல் காரியம் அன்று இனித் துணிந்து இ
மன்னிய நெருக்கில் புகுந்திடில் நமக்கு வருவன வருக என்று ஓர்ந்து
துன்னினான் அங்கு ஓர் அரசனைச் சூழ்ந்த சுடர்ந்த கஞ்சுகப் படிவு_உடையார்
மின்னிய வாளால் பற்பலர் துரப்ப வெரீஇயினான் சேயிடை அகன்றான்

#260
மீட்டும் உள் துணியா அணி கொள் ஆங்கு ஒருசார் மென்மெல மேவினன் ஆங்குத்
தாள் துணை பணிந்து கண்ணனுக்கு அளக்கும் தயங்கு செம்பொன் பொதி குவித்த
மோட்டிடம் அதனால் காவலர் பலரும் முடுக்கினார் வாள் உறை கழித்துத்
தீட்டரும் புகழோன் என் செய்வான் நடுங்கித் தியங்கி ஓட்டம்பிடித்து உய்ந்தான்

#261
பின்னர் எங்ஙனம் யாம் புகுவது என்று உளத்துப் பெரிதும் ஆராய்ந்து நின்றிடும் போது
உன்ன அரும் கடவுள் கண்ணனது அருள் போல் ஓவரும் தானை தன் சூழ
மன்னன் ஆங்கு ஒருவன் அடைந்தனன் கண்டான் மற்றவன் சேனையுள் புகுந்தான்
பன்ன அரும் வருத்தம் உடங்குறல் யாவும் பரித்தனன் மென்மெல நடந்தான்

#262
நெருக்கினுள் படலால் உடல் அரைபட்டு நீள் இடைக் கால் நிலத்து உறாமல்
வெருக்கொளச் சென்றும் கரங்கள் மேல் எடுத்தும் விடாது கை இடிப்புண்டும் வளைந்தும்
பெருக்குறு வெயரில் மூழ்கியும் இரண்டாம் பிறப்பு இது நமக்கு என உணர்ந்து
திருக் கிளர் துவாரபாலர் நிற்கின்ற செவ்விய இடத்தினை அடைந்தான்

#263
நெடியவன் அடியார் இவர் என எவரும் நிகழ்த்திடத் தகும் அடையாளம்
படியறப் புனைந்து பொலிவுறும் துவாரபாலரைக் கண்டனன் மகிழ்ந்தான்
மடிவு_இல் வைணவ சிகாமணிகள் ஆகும் மற்று இவர் வைகுந்தத்து உறையும்
கடிதல்_இல் சயவிசயர்களே இவரைக் கடுப்பவர் இலர் என நினைந்தான்

#264
முகத்திடை நீண்ட உரோமம் மிக்கவன் எண் முடிதற்கும் இடம் அற யாரும்
நகத்தகு பற்பல் துளை உடைக் கந்தை நயந்துகொண்டவன் மதிப்பு இலாமை
மிகத் தரும் யாக்கை உடையவன் துவாரம் மேவும் அப் பாலர் முன் குறுகி
இகத்தல்_இல் குணத்தீர் கேட்டு அருள்வீர் என்று இயம்புறத் தொடங்கினன் அன்றே

#265
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்
மக்களுள் மிக்கீர் நீலவண்ணனுக்கு அடியீர் தூய்தாத்
தொக்க புண்ணியத்தீர் பாவம் தொலைத்த மா தவரும் செய்ய
நக்க பூம் கமலத்தோனும் நண் அரும் புகழ் பெற்றுள்ளீர்
எக்கலைகளினும் வல்லீர் இயம்பும் என் ஆசி கொள்-மின்

#266
உங்களை நோக்கும்-தோறும் உவரியும் வெஃகும் மேனிச்
செம் கண் மால்-தனைக் கண்டாங்குச் செறிந்திடும் உவகை அந்தக்
கொங்கு அவிழ் கமலச் சேக்கைக் கோமளவல்லி மார்பன்
துங்க நல் சேவை ஆற்றித் தூயர் ஆதலினால் அன்றே

#267
** எழுசீரடி ஆசிரிய விருத்தம்
எளியனேன் மறையோர்-தம் குலத்து உதித்தேன் என் பெயர் குசேலன் மிக்கு ஒலிக்கும்
நளி கொள் வெண் தரங்கப் பாற்கடல் நாப்பண் நாகணைத் துயில் ஒழிந்து அடியார்க்கு
அளிசெய்து அல்லார்க்கு ஈறு உறுத்திட அவதாரம் செய்த கண்ணபிரானோடு
இளமையில் பற்பல் கலை பயின்றுள்ளேன் இசைக்கும் முக்குற்றமும் அகல

#268
கத்து வெண் தரங்கக் கடலை மீகானால் கடந்து வண் கரை படர் ஒருவன்
செத்து மண்டிய பல் நெருக்கு உடை வாயில் செழும் கடல்-தன்னை நல் அருளே
பொத்தும் நெஞ்சகம் நும்மால் கடந்து அடியார் பொருள் பெறும் உததி அம் கரை என்று
ஒத்து மா மறைகள் சொலப்படும் கண்ணனிடை அடைதர உளம் நினைந்தேன்

#269
வச்சிரத் தடக் கை வாசவன் ஏவ மஞ்சு இனம் பொழிந்த கல்மழையை
நச்சும் விண் உரிஞ்சும் போகு உயர் குவட்டு ஓர் நாகம் ஏந்தித் தடுத்தருளும்
அச்சுதன்-பால் சென்று ஏழையேன் வருகை அறிவித்து என்றனை அவண் சேர்த்தல்
மெச்சும் நும் கடன் என்று உரைத்தனன் எவரும் விரும்புறு குசேல மா தவனே

#270
இன்னணம் வாயில்காப்பவர்-தம்மோடு ஈங்கு இவன் புகல் மொழி கேளா
அன்னவர் பக்கல் உறும் சிலர் மடமையால் அடரப்படும் மனத்தார்
உன்ன அரு மறை நன்கு ஓர்ந்த இக் குசேலன் ஒளிர் முகத்து இணை விழி பரப்பிப்
பன்ன அரும் இழிசொல் புகலலுற்றாரால் பரவை சூழ் உலகு எலாம் புரப்போய்

#271
** அறுசீரடி யாசிரிய விருத்தம்
வகுத்த பல் உலகும் போற்ற மாற்றலர் கூற்றூர் மேவச்
செகுத்து அரசாளும் கண்ணச் செம்மல் எங்கே நீ எங்கே
இகுத்த பல் துவாரக் கந்தை ஏழைப் பார்ப்பானே சற்றும்
பகுத்து அறிந்திடல் அற்றாய்-கொல் பயன்_இல் மூப்பு அடைந்தாய் போலும்

#272
மின்மை செய் பகைஞர் மோலி மிதித்திடு கழல் கால் கண்ணன்
தன்மையும் ஏழையாம் நின் தன்மையும் தெரிந்து நோக்கில்
வன்மை செய் புழைக் கை மாவும் மசகமும் போலும் வாரிக்
கொன்மை செய் நீரும் ஆவின் குளப்பு அடி நீரும் போலும்

#273
கனக மால் வரையும் மண்ணங்கட்டியும் போலும் செம் கேழ்த்
தினகர ஒளியும் ஓர் கத்தியோதத்தின் ஒளியும் போலும்
அனகம் ஆர் தருவும் புன் சீழ்கம்புலும் போலும் சேடப்
பனகமும் சிறு நாங்கூழும் போலும் பாய் மிடிப் பார்ப்பானே

#274
பொருள் நனி உளன் என்று யாரும் புகலும் ஓர் வார்த்தை வேண்டும்
இரு கையும் கடகம் வேண்டும் இலங்கு குண்டலங்கள் வேண்டும்
வரு விரல் ஆழி வேண்டும் மார்பிடை மதாணி வேண்டும்
உருவ முத்தாரம் வேண்டும் உயர்ந்த பட்டாடை வேண்டும்

#275
சிவிகை முன் ஊர்தி வேண்டும் செழும் பொருள் செலவு வேண்டும்
குவிகை ஏவலரும் வேண்டும் கோலம் ஆர்ந்து இருக்க வேண்டும்
கவிகை தாங்குநரும் வேண்டும் கையுறை சிறப்ப வேண்டும்
அவிகை_இல் விளக்கம் வேண்டும் அரசவை குறுகுவார்க்கே

#276
சிறப்புறச் செல்வர் ஆகில் சிறப்புறு முகமன் செய்வர்
பெறப்படும் மிடியர் ஆகில் பிடர் பிடித்து உந்துவார்கள்
வறப்பு_இல் உன் முன் நாள் நட்பை மறந்திடாது இருக்கின்றான்-கொல்
இறப்ப நேற்று உண்ட கூற்றை இன்று யாம் மறப்பம் ஆகில்

#277
இலகுமோர் நகரச் செல்வரிடத்தினும் செல்வர் நட்பே
நிலவுற நிற்கும் ஏழை நீர்மையர் நட்பு நில்லாது
அலகு_இல் செல்வத்தன் ஆகி அரசர் யாவரும் தன் போற்ற
மலர் தலை உலகம் காக்கும் மன்னன்-மாட்டு உன் நட்பு எற்றே

#278
நிலத் திரு வேட்டு நாட்டும் நெடும் புகழ்த் தும்பை சூடி
உலப் பெரும் திணி தோள் மாற்றார் உயிர் தப உடற்றும் காலை
நலப்படும் தந்தை மைந்தர் நந்து முன்னோர் பின்னோர் தன்
குலப்படும் மற்றோரேனும் கொல்பவர் நட்பு என் ஆமால்

#279
மாற்றலர்ச் செற்ற ஞான்றே மற்றவர் நகரம் முற்றும்
வேற்று வண் கழுதை ஏரின் விரைதர உழுவித்து உண்ணப்
போற்றல்_இல் வரபு கொள் முன் பொலிதர விதைப்பித்துப் பின்
சீற்றம் மாற்றிடுவார் நட்போ சிறந்தது மிடிக் கோள்பட்டாய்

#280
ஆவும் ஆன் இயல் பார்ப்பீரும் ஆடு அமைத் தோளினீரும்
மேவு நோய்க் கோள்பட்டீரும் மிளிர் பிதிர்க் கருமம்செய்யப்
பூவில் நல் மகப்பேறு உள்ளும் புந்தியினீரும் அம்பு
தூவு முன் அரணம் சேர்-மின் என்பர் பின் தோன்ற ஆயார்

#281
கோதறு கல்வி சால் ஊர்க் குடியிருந்து அறியானேனும்
ஓது அரும் செல்வம் மிக்கோன் ஒருவனோ சிறந்தோன் ஆவன்
காதலின் வேதம் முன்னாம் கலைகள் கற்று உணர்ந்தோனேனும்
தீது அமை மிடியன் ஆயின் சிறந்திடான் வேத்தவைக்கே

#282
காமமே வெகுளியே உள் கலந்திடும் மயக்கமே என்று
ஆம் அவை அமையப்பட்டோர் அவற்று ஒரோவொன்று தோன்றின்
மா மறை முழங்கிக் கூறி வரு விதி விலக்கு அயர்ப்பர்
தோமறும் அமைச்சு இடித்துச் சொல்வதும் கொள்ளார் அம்மா

#283
கலை பயில் நாள் நட்பு என்று கரைந்தனை அந்த நட்பு இச்
சிலை_வலாற்கு இருக்குமாயின் சென்ற பற்பல ஆண்டிற்குள்
உலைவறு முடங்கல் தீட்டி ஒன்றிரண்டு அனுப்பலாமே
மலைவறு தூது உய்த்து உன்னை வருக என்று அழைக்கலாமே

#284
அந்த நாள் தகுதிக்கு ஏற்ப ஆக்கினன் போலும் நின் நட்பு
இந்த நாள் தகுதி வானத்து இறைவனும் அணுகொணாது அ
முந்தை நாள் நட்பை எண்ணி முடுகி நீ செலக் கூடாதால்
எந்த நாளினும் பூபாலர் யாவர்க்கும் நண்பர் அல்லர்

#285
அல்லது மிகு நட்பே என்று அற்றம் நோக்காது செல்லின்
ஒல்லையில் நினக்கு உண்டாயிற்று உறும் அவமானம் மெய்யே
நல்ல தன் மனையின் வாக்கும் நறு நெய் உண்டு ஒளிர்வதே என்று
எல் அடர் சுடரை முத்தமிடில் சுடாது அமைவது உண்டோ

#286
பழி_இல் உன் குலத்தோர் செய்யப்படு தொழில் நன்கு இயற்றி
இழிவற உண்டு உடுத்தல் இன்றி மிக்கு எண்ணம் கொண்டு
வழி நடந்து இளைத்தாய் மெய்யும் வாடினாய் அந்தோ வானில்
கழி மதி வருக என்று உள் கசிந்து அழும் மகவு போன்றாய்

#287
மாத் திருந்து அளகை வேந்தும் வான் அரசு அளிக்கும் வேந்தும்
பாத் திருந்திய சீர் கேட்டுப் பரிவுறப் போகம் துய்க்கும்
ஏத் திருந்திய வில்_வல்லான் சேவைக்கு வந்து இவ் வாயில்
காத்திருக்கின்ற மன்னர்க் கண்டிலை போலுமாலோ

#288
இந்திர திருவன் என்ன ஈங்கு நிற்கின்ற வள்ளல்
பந்தியின் மட நல்லார் பொன் பந்து எறிந்து ஆடல் நோக்கி
நந்திய பொழிலில் தேமா நறும் கனி பறித்துக்கொண்டு
மந்தியும் ஆடல் செய்யும் மகதநாடு ஆளும் மன்னன்

#289
படும் கடக் கரி போன்று ஆங்கு ஓர் பரிக்கு அருகா நிற்கின்றோன்
ஒடுங்கல்_இல் வருக்கை நையா ஒழுகுறு செழும் தேன் ஓடி
அடும் கருப்பு ஆலை வீழ்த்தி அடர் புலி அடிப் பசும் காய்க்
கொடும் குலைக் கதலி சாய்க்கும் கொங்கணநாட்டு வேந்தன்

#290
ஒளிர் நுதி வடி வாள் ஏந்தி ஊங்கு எழில்தர நிற்கின்றோன்
அளி செறி மலர் நீர் வாவி அடர் மருப்பு எருமை பாயக்
களி தரு செருக்கினோடு கால் விசைத்து எழுந்து வாளை
குளிர் மதி கிழியப் பாயும் கூர்ச்சரநாட்டு வேந்தன்

#291
மலை எடுத்து அனைய திண் தோள் வலயம் வில்லிட நிற்கின்றோன்
குலையெடுத்து இருக்கும் வாழைக் கூன் குலை முறிந்து சாய
நிலையெடுத்து உறையும் கந்தி நெடும் கழுத்து இறப் பல் முத்தம்
அலை எடுத்து எறியும் வாவி அங்கநாடு ஆளும் வேந்தன்

#292
மேவரு மதனன் என்ன வெண் குடை நிழல் நிற்கின்றோன்
தாவரு நகர்கள் எல்லாம் தயங்கு பொன் மனைகள்-தோறும்
மா வகிர்க் கண்ணார் ஆக்கும் மண்டு குய்ப் புகை எண்ணூற்றுக்
காவதம் கமழும் செல்வக் காம்போசநாட்டு மன்னன்

#293
வாகை வேல் வலத்தின் ஏந்தி மடங்கல் ஏறு என நிற்கின்றோன்
ஓகை அம் களிப்பு மீக்கொண்டு ஒளி வளர் அரங்கு-தோறும்
பாகை நேர் மொழியார் ஆடப் பைம் தளிர்ச் சோலை-தோறும்
தோகை மா மயில்கள் ஆடும் துளுவநாடு ஆளும் மன்னன்

#294
காளையர் சூழ மோலி கதிர் எறித்திட நிற்கின்றோன்
வாளை பாய் நீத்தம் வந்த வலம்புரி கமுகில் ஏறி
வேளை வாய்த்திடப் பல் முத்தம் விருப்பொடு காண்போர் கந்தி
பாளை ஈன்றது என ஈனும் பல்லவநாட்டு மன்னன்

#295
வயிர ஒண் குழை மதாணி வாள் எறித்திட நிற்கின்றோன்
பயிருறு களை கட்டு ஓம்பும் பால் மொழி உழத்திமார் தம்
செயிரறு வதனம் கண்டு திங்கள் என்று எண்ணி எல்லும்
கயிரவம் மலரும் பண்ணைக் கலிங்கநாடு ஆளும் மன்னன்

#296
அளவு_இல் பல் சேனை சூழ அமர் அணி கொடு நிற்கின்றோன்
வளம் மலி நறும் பூ மல்கும் வாவியில் தூண்டில் வாய் நின்று
உளம் வலித்து எழுந்த வாளை ஒய்யெனக் கற்பகத்தின்
கிளர் கழுத்து ஒடியப் பாயும் கேகயநாட்டு வேந்தன்

#297
கொழு நிணம் தின்று சோரி குடிக்கும் வேலொடு நிற்கின்றோன்
எழு கதிர்ப் பரி வாய்க் கௌவ எழுந்த செஞ்சாலிச் செய்யில்
குழுமு பல் கயல் மெய் கீளக் குதித்து என்றும் பாய்தலாலே
செழு முகில் பொழிவு அறாத சிங்களநாட்டு மன்னன்

#298
பாய சீர்ப் போர்வை போர்த்துப் படர் கதிர் என நிற்கின்றோன்
மேய பூம் பொய்கை வெண்தாமரையை மென் சேவல் அன்னம்
நேயமோடு அணைப்பக் கண்டு நெறி பிழைத்தாய் என்று ஊடித்
தூய பேடு ஒதுங்கி மாழ்கும் சோனகநாட்டு மன்னன்

#299
குஞ்சரக் குழாத்து நாப்பண் கோள் அரி போல் நிற்கின்றோன்
கஞ்சம் மட்டு ஒழுகப் பூத்த கழனி கால் ஓடைக்-கண் நின்று
அம் சிறை உகுத்த கூர் வாய்ப் பெரும் கிழ நாரை ஆரல்
வஞ்சனைத் துயில்கொண்டு உண்ணும் வங்கநாடு ஆளும் மன்னன்

#300
பொத்திய கவசம் மெய்யில் பொலிய நிற்கின்ற காளை
கத்திகைக் குழலார் ஆடும் காமரு மஞ்சள் நீர் பாய்ந்து
எத்திகையினும் வளர்ந்த கதலியின் குருத்து எல் மாவை
மத்திகை எனப் புடைக்கும் மராடநாடு ஆளும் வேந்தன்

#301
அயல் எலாம் சேனை சூழ அணிந்து நிற்கின்ற சிங்கம்
கயல் எலாம் வெருவும் கண்ணார் களை அரிக் கழுநீர் ஓடிச்
செயல் எலாம் செயும் படப்பைச் செழும் கரும்பு ஓங்கப் பாய்ந்து
வயல் எலாம் விளைக்கும் செல்வ மச்சநாடு ஆளும் மன்னன்

#302
கருகு இருள் மோலி மேயக் கடாக் களிறு என நிற்கின்றோன்
வரு விறல் மடங்கல் மன்னன் வருடை தேள் அதிபன் முன்னும்
பெரு விடை துலாக்கோன் பின்னும் பிரிவு இன்றிச் செலச் செல் காலும்
குரு முகில் முழங்கிப் பெய்யும் குடகநாடு ஆளும் வேந்தன்

#303
கையுறையொடு நிற்கின்றோன் கவின் முழுச் சலராசிக்-கண்
ஐய மா மதி நின்று அன்னாற்கு ஐந்து ஏழு ஒன்பானில் ஓர் கண்
செய் புகரேனும் வெய்யோன் சேயேனும் நிற்கும் நாள் போல்
பெய் முகில் என்றும் மாறாப் பெருமைக் காந்தார வேந்தன்

#304
இத்தனை மன்னர்-தம்முள் யாரை நீ ஒப்பாய் கந்தை
பொத்திய மேனியோய் எண்ணிரட்டி ஆயிரம் பொன் அன்னார்
மெத்திய மனத்தர் ஆகி மேவுறப் பொலியும் கண்ண
வித்தகன் சேவை வாய்த்தல் எண்மையில் மேவும்-கொல்லோ

#305
முடங்கு கை கால் ஓர் பேதை மூரி வான் அணவும் கோட்டின்
இடம்படு தேத்து இறாலுக்கு இச்சைவைத்ததனைப் போலும்
தொடங்கிய சிரார்த்த இல்லம்-தோறும் சென்று இரத்தல் நீத்து
விடம் கொள் வாள் மன்னன் காண விருப்பு வைத்தஃது மாதோ

#306
இத் தலை வாய் நிற்கின்ற இவர்க்கு எலாம் இரும் பொன் உண்டு
மெத்திய ஏவலாளர் மிகவும் உண்டு ஆதலாலே
எத்தனை பற்பல் நாள் காத்திருக்கினும் குற்றம் இல்லை
பொத்து நோய் மிடிக் கோள் பட்ட நினக்கு இது பொருந்தாது ஆகும்

#307
ஆதலின் வந்த ஆற்றை அறிந்து நின் ஊர்க்குப் போதல்
மேதகு கருமம் என்று அ மடமையோர் விளம்பலோடும்
தீதறு குணத்தான் மாண்ட செழும் தவக் குசேல மேலோன்
ஏதம் மிக்குறத் தன் உள்ளத்து இவையிவை எண்ணுவானால்

#308
மின் செய்த மதாணியாம் முத்தாரமாம் விளங்கு பட்டாம்
பொன் செய்த ஊர்தியாம் இப்போது யாம் பெறுவது எங்கே
நன் செயல் நம் மூதாதை நாளினும் கேட்டது இன்றால்
என் செய்வாம் எண்ணாது ஒன்றை இயற்றுதல் என்றும் தீதே

#309
கந்தையில் பொதிந்த நம்தம் கையுறை கண்டார் ஆகில்
நந்தல்_இல் இகழ்ச்சி பொங்க நகைப்பரே என உள் சாம்பி
அந்தில் நின்று உயங்கும் கால் அவ் அடர் மடமையரை நோக்கிச்
சுந்தர அறிவின் மாண்ட துவாரபாலகர் சொல்வாரால்

#310
யார் என நினைத்தீர் இந்த இரும் தவத் தலைவன்-தன்னைச்
சேருறு பொய்மை இல்லன் செறிந்த நோன்பு உழந்த நல்லன்
வாருறு மறைகள் வல்லன் மற்று எங்கும் செல்வான் அல்லன்
ஏருறும் இனிய சொல்லன் என்னவே யாம் உள் கோடும்

#311
உலகினில் மானுடப் பிறப்பே அரியது இழிகுலம் ஒருவி உயர்ந்த பின்னோர்
குலம் உறுதல் அரியது அதனினும் வசியர் குலம் அரிது கொற்ற வேந்தர்
நிலவு பெரும் குலம் அரியது அதனினும் மற்று அஃதினும் மிக்கு அரிய நீரால்
பலர் புகழ் அந்தணர் குலத்துத் தோன்றிடல் என்று அரு மறைகள் பகரும் அன்றே

#312
அந்தணரே அரசர் முதல் மூவருக்கும் ஆசிரியர் அருள் ஆர் தெய்வம்
அந்தணரே மறைக் கிழவன் முதலாய தேவரினும் ஆற்றல் சான்றோர்
அந்தணரே ஆவதற்கும் அழிவதற்கும் காரணமாய் அமைந்த நீரார்
அந்தணரே தெய்வம் எனக்கு என்று கண்ணன் உரைக்கவும் யாம் அயிர்த்தல் என்னே

#313
மறையவருக்கு உயர் தெய்வத் தலங்களிடத்து அமர் மாடம் வகுத்துளோரும்
நிறையும் உபநயன மணம் மகம் ஆதி புரிதரப் பொன் நேர்ந்துளோரும்
குறைவறு பால் செருத்தல் ஆன் நிலன் முதல் பல் வகைத் தானம் கொடுத்துளோரும்
அறையும் அறுசுவை உணவு விலாப்புடை வீங்கிட உணுமாறு அளித்துளோரும்

#314
தீய புலி முதல் விருகத்தால் கொடுங்கோல் மன்னவரால் தீயால் நீரால்
மேய கொடும் கள்வரால் மற்று எவைகளாலும் இடர் விளைந்த போதில்
ஆய இடர்க்கு அந்தோ என்று உளம் இரங்கி விரைந்து பொருள் ஆதி நல்கி
நேயமுறப் பேருதவி புரிந்து இன்னும் காப்பம் என நிகழ்த்துவோரும்

#315
இம்மையில் பல் பெரும் செல்வம் இடையறாது உறப் பெருக ஈன்ற மைந்தர்
செம்மையில் செய் வினை நல்லோர்-தமைச் சூழச் செழும் போகம் சிறப்பத் துய்த்திட்டு
அம்மையில் கற்பகநாடு களி தூங்கத் தேவராய் அரம்பை மாதர்
கொம்மை வரி முலைப் போகம் சேண் நாள் துய்த்து அதன் பின் முத்தி கூடுவாரால்

#316
இத்தகைய மறையவரை எளியர் என நினைப்பது எவன் இவண் நிற்கின்ற
வித்தக மா மறைத் தலைவன்-தன்னை முழு ஞானி என விளம்பல் வேண்டும்
எத்தகைமையால் எனின் மெய்ஞ்ஞானியர் தம் குணம் குறியும் இகத்தில் ஆசைச்
சித்தம் ஒருவாது உழல் பொய்ஞ்ஞானியர்-தம் குணம் குறியும் செப்பக் கேள்-மின்

#317
கம்மாலும் செயற்கு அரிய செயல் தலைநின்று ஒரு வழி நால் கரணம் செல்ல
அம் ஆலும் மறைப் பொருளின் இலக்கு உறுத்தி அயில்_கணார் ஆசை முன்னா
எ மாலும் கடந்தார்க்கு மணியாலும் பொன்னாலும் எந்த வேந்தர்-
தம்மாலும் உம்மாலும் எம்மாலும் ஆம் பயன் என் சாற்றுவீரே

#318
வலம் கொள் செழு முகில் உரறி உருமேறு பல உதிர வழங்கினாலும்
விலங்கலை வேரோடு பறித்து ஒன்றினையொன்று அடர வளி வீசினாலும்
கலங்கலை ஆர் எழு கடலும் நிலை பெயர உலகம் நிலை கலங்கினாலும்
நலம் கிளர் தம் நிலை பெயரார் உள் நடுங்கார் அவை கண்டு நகையாநிற்பார்

#319
புகழ்ந்து நறு விரைக் கலவை பூசிடினும் புல்லியரைப் போல நோக்கி
இகழ்ந்து பல பேசிடினும் விருப்பு வெறுப்பு என்ப அவர்க்கு என்றும் இல்லை
அகழ்ந்த மலக் கிழங்கினராய்ப் பசி வேளை கிடைத்தவற்றை அமுதாத் துய்த்துத்
திகழ்ந்திடுவர் சிறிதேனும் நாளைக்கு வேண்டும் எனச் சிந்தைசெய்யார்

#320
விண்ணிடை ஏகுதல் மீளப் பாதலத்தில் புகல் மீட்டுப் புவியின் மேவல்
அண்ணிய பல் பரகாயப் பிரவேசம் செயல் உறையும் அவ்விடத்தே
எண்ணிய எலாம் வரச்செய்திடல் முதல் செய் சித்திகளை என்றும் வேண்டார்
புண்ணிய பாதகம் இலார் பெருமை இலார் சிறுமை இலார் பொய் மெய் இல்லார்

#321
ஆடுவார் உன்மத்தர் போல் திரிவார் நகைத்திடுவர் அங்கை கொட்டிப்
பாடுவார் இன்று இருந்த இடம் நாளை இருக்க மனம் பற்றார் சுற்றிக்
கூடுவார் தமில் கூடார் கந்தை அன்றி வேறு உடுக்கை கொள்ளார் அன்னார்
நீடு வார் புகழ்ப் பெருமை இற்று என்று மதிப்பவர் ஆர் நிகழ்த்துவார் ஆர்

#322
உற்ற தலைமயிர் பறித்துப் பீலி கரத்திடைக் கொடு பாய் உடை புனைந்து
கற்ற தவம் போல் அவமே பெருக்குவது ஞானம் அன்று கந்தம் ஐந்தும்
வற்ற நெடும் சீவரம் போர்த்து ஒளிர்வதுவும் ஞானம் அன்று மற்றோர் போல
நல் தவம் வேண்டிலம் நாமே பிரமம் என நவில்வதுவும் ஞானம் அன்று

#323
ஓங்கு பெரு ஞானியர் போல் பேசுவார் அவர் உண்மை வேடம் போலப்
பாங்குபெற உடல் புனைவார் சற்கருமம் செய்வோர்-தம் பக்கம் ஏகின்
நீங்குக என்று ஒழிப்பார் இ நிலை மேலாம் பிரமத்தின் நிலையே என்பார்
ஈங்கு இவர்கள் தாம் கெடுவது அன்றி மற்றோரையும் கெடுக்கும் எண்ணம் பூண்டார்

#324
பொன் முதல் பல் பொருளிடத்தும் இச்சை அற்றார் போல் துறவுபூண்டு பின்னர்
வன்மை செறி மனத்து அபக்குவர்க்கு உபதேசமும் நவிற்றி வருவது எல்லாம்
நன்மை தரும் முன்னோர் எண்கு ஆறு ஒழுகப் பள்ளை என நயந்து ஓர் ஆயன்
புன்மையுறப் பற்றி அதனுடன் அழிந்தான் என்ற கதை போலுமாலோ

#325
மிக்க அறிவுடையாரைப் போன்றும் உடல் பற்று அனைத்தும் விடுத்தார் போன்றும்
தக்க வழக்கிடத்தின் உயர்திணை வினை அஃறிணை வினையாய்ச் சமையச் சொற்றும்
தொக்க படர்க்கைப் பெயர் முன்னிலைப் பெயர் ஆகிட உரைத்தும் சுழல்வது எல்லாம்
பக்குவம்_இல் மடவோரை மயக்கி அவர் கைப்பொருளைப் பறித்தற்கு அன்றே

#326
சிறப்புறும் இல்லறத்து இனிது உண்டு உடுத்து மனை மக்களொடும் செறிந்தாரேனும்
பெறப்படும் அப் பற்று அடையார் மெய்ஞ்ஞான நெறி உணர்ந்த பெரிய நீரார்
அறப் பெரிய துறவறம் சார்ந்தவர்க்கும் இவர் அதிகம் என அறையும் நூல்கள்
விறப்புறும் அஞ்ஞானியர் எவ் அறத்தினும் எவ் வகைச் சிறப்பும் மேவிடாரால்

#327
இ மறையோன் முழு ஞானியாய் இருந்தும் சற்கருமம் இழந்தான் அல்லன்
செம்மைபெறும் அக் கருமத்தால் இளைத்தது இவன் உடம்பு திண்ணம் ஈதே
மும்மை உலகிடத்தும் ஒரு ஞானி அரியவன் என்றே முழங்கும் நூல்கள்
எம்மை இனிது ஆண்டருள எழுந்தருளினான் என்றே எண்ணம் கோடும்

#328
ஆதியில் நல் கலை உணரும் நாள் பழக்கம் என்று உரைத்தது அமைய மெய்யே
நீதிய நம் அரசனைக் கண்டிடும் விருப்பம் மீக்கூர நேடி வந்தான்
ஓதிய இவ் அன்றி இவன் அரசரிடைப் பெரும் கருமம் ஒன்றும் இன்றால்
காதிய தீவினை உடையேம் ஆதலினால் யாம் இன்று காணப் பெற்றேம்.

#329
ஆஆ இ மறையோனைக் காண்-தொறும் உள்ளகத்து உவகை அரும்பாநின்றது
ஓவாது மெய்யினிடைப் புளகம் எழுகின்றது கண் உருகாநின்ற
நாவாரத் துதிப்பதற்குத் துடிதுடிக்கின்றது விரைந்து நாம் போய் இன்னே
தேவாதிதேவனுக்கு இத் தவன் வரவை விண்ணப்பம் செய்ய வேண்டும்

#330
** கலிவிருத்தம்
என்று அறியாமையின் இகழ்ந்து கூறிய
வன் திணி மனத்தினார் வாய் அடங்கிடக்
கன்றல்_இல் உரை பல கரைந்து மா தவக்
குன்று_அனான் திரு முகம் நோக்கிக் கூறுவார்

#331
மறை எலாம் உணர்ந்து மெய் வாய்ந்து வெம் பவச்
சிறை எலாம் கடந்த மாச் செல்வ வேதிய
தறை எலாம் புகழும் நின் வருகைத் தன்மையால்
குறை எலாம் தவிர்ந்தனம் கூர்ந்தனம் களி

#332
ஆய்ந்த நின் பெரும் கலை அருமைப்பாடும் சீர்
வாய்ந்த மா தவம் வளர் மறாத செல்வமும்
தோய்ந்த உள் தூய்மையும் துகள்_இல் தன்மையும்
பாய்ந்த மால் உலகமோ பகுத்து அறிந்திடும்

#333
சிறியவர் மடமையின் செறித்த வார்த்தையைக்
குறி பெற நின் திருவுளத்துக் கொண்டிடேல்
அறிதரும் உளத்திடைக் கொள்ளின் அம்மவோ
மறிவரும் பீழை நோய்க் கடல்-கண் மாய்வரே

#334
கங்கையே முதல் நதி களிப்பின் ஆடியும்
பொங்கும் மா தானங்கள் புரிந்தும் இட்டிகள்
இங்கு பற்பல செய்தும் எய்தும் பேறு எலாம்
துங்க நின் தரிசனம் ஒன்றில் தோன்றுமே

#335
காலம் மூன்றையும் அறி கருத்த போற்றி நல்
சீலம் ஆர்தரு மறைச் செல்வ போற்றி மெய்
வால் அறிவு உடையவ வரத போற்றி எம்-
பால் அருள் சுரந்து அருள் பனவ போற்றியே

#336
சற்று நீ இவ்விடம் இருக்கின் சார்ந்து யாம்
கொற்றம் ஆர் கண்ணற்கு உன் வரவு கூறுபு
முற்றுவம் என்று அவன் முன் வணங்குபு
பொற்ற அவ்விடம்-நின்றும் போயினார் அரோ

#337
** கலிநிலைத்துறை
திரண்ட மா மணி குயிற்றுபு செம்பொன் செய் எழுபத்
திரண்டு வாயிலும் விரைவினில் கடந்தனர் இலங்கி
முரண் தவா முடி மன்னவர் மொய்த்திடும் செல்வ
அரண் தவாத் திருவோலக்கம் அடைந்தனர் காணார்

#338
அந்திடத்து அமர்வாரை நம் அரசு அமர்கின்றது
எந்திடத்து என வினாவினர் இலங்கு எழில்தரு பொன்
பந்து அடுத்த கையாரொடும் பயில் மணிச் சிகரத்து
இந்து அடுத்த பேர் உவளகத்து என அவர் இறுத்தார்

#339
கேட்ட காலையில் ஞெரேலெனக் கிளர் உவளகப்-பால்
ஓட்டம் ஈது எனப் படர்ந்தனர் ஒளிர் நுதி வடி வேல்
கூட்டம் யாவையும் குமைத்து மை தோய்ந்து பொன் குழை பாய்
நாட்ட மாதரார் காவல்செய் வாயில் நண்ணினரால்

#340
நெடிய நீர்மை இத் துவாரபாலகர் செயல் நிற்க
படி இலா வளம் பரந்த அவ் உவளகப் பண்பை
முடிய யாவரே எடுத்துரைப்பவர் நசை முளைத்துத்
துடிதுடித்து நா எழுதலின் சிறிது சொற்றிடுவாம்

#341
பொன்னினால் செய்து மணிகள் கால் யாத்த வண் புரிசை
மின்னினால் பொலியப்படும் முகில் விராய்த் துயில்வ
உன்னினால் கடல் உலகு சொல் கண்ணன் ஒண் நிறத்தை
மன்னினால் பெறலாம் என மதித்தன போலும்

#342
மண்ணகம் தவப் பதி தர நீல மால் வரை சாய்த்து
எண் அகம் தபக் கொணர்ந்த கல் அடுக்கி மேல் எழுப்பிக்
கண் அகம் கவர் வேதி செய்து இரு புறம் கதிர்ப்பப்
பண் அகம் பொலி வயிர யாளிப் படி அமைத்து

#343
இலங்கு வெண்பொன் இட்டிகைகளால் சுவர்த் தலம் எழுப்பி
நலம் கொள் பல் மணி பதித்த பொன் நிலைகளும் நாட்டித்
துலங்கும் மா மரகதப் பல சாளரம் தொகுத்து
வலம் கொள் வச்சிர இரு நிலைக் கதவமும் வயக்கி

#344
நிறையும் மேதகத்தால் பல தூண் அடி நிலை வைத்து
உறையும் மேல் பல மணி கடை தூணங்கள் உறுத்தி
அறையும் அப் பல தூண் எருத்தத்து உற அணிந்த
தறை புகழ்ந்திடு செம் துகிர்ப் போதியும் சார்த்தி

#345
அன்ன போதி மேல் வெண்பொன் உத்தரம் இயைத்து அடுப்ப
நன்னர் ஆக்கிய விடங்கமும் உறுத்தி மேல் நயப்பப்
பன்னு பொன் தகடு அடுக்கி வேய்ந்து அதற்கு மேல் பரிதி
மன்னும் மா மணிக் குடம் நிறீஇ அமைத்தன மாடம்

#346
ஓங்கு சந்திரகாந்த மாளிகைகளை உரைக்கோ
வீங்கும் நாசி சோபான வண்மையை விரித்திடுகோ
தேங்கு சூளிகைச் சிறப்பினை இற்று எனத் தெரிக்கோ
பாங்கு இயற்றிய சித்திரத் தொகுதியைப் பணிக்கோ

#347
மற்றும் நாற்றிய பல் மணி மாலையை வகுக்கோ
சுற்றும் நாற்றிய பொன் மலர்ப் பிணையலைச் சொல்கோ
கற்றை அம் கதிர்ச் சாமரைத் தூக்கினைக் கரைகோ
இற்ற என்று உரைத்திட எளியன அல யார்க்கும்

#348
தங்கும் மேல் நிலை மாடம் மேல் வெள்ளிடை தணப்ப
எங்கும் வார் கமம் சூல் முகில் குழாம் பொலி இயக்கம்
சிங்கல் அற்ற விண்ணவர்கள் கண் ஊறு சேராமைப்
பொங்கும் நீல் நிறக் கஞ்சுகம் செறித்தது போலும்

#349
அன்றியும் குடஞ்சுட்டு இனம் புரந்த அ நாளில்
மன்ற வேய்ங்குழல் கோவலர் மகிழ்தரக் கொண்ட
வென்றி வார் குடையாகிய விலங்கல் அம் குவட்டில்
துன்றிடும் தடித்தொடு செறிந்தமையையும் துணையும்

#350
தீத் திரள் பொறி காரணம் இன்றியும் சிதறக்
காத்து மேல் நிலை விழித்து நிற்பவர் கை வாள் ஒளியும்
தூத் துளிப் படு குயின் குழாம் மின் தொகும் ஒளியும்
பாத்து அறிந்திடத் தேவர்க்கும் யாவர்க்கும் படாவால்

#351
சிறந்த தன் குலத்து உதித்தவன் செல்வத்தின் உறையும்
உறந்த பல் மணி மாளிகை தனக்கு மிக்கு உரித்து என்று
அறம் தவாது எழு மதி விசும்பு ஆறு செல் வருத்தம்
துறந்திடும்படி சற்று உறைந்து அகலும் நாள்-தோறும்

#352
திரு வில் கான்றிடு சோமகாந்தச் செழும் சிகரம்
உருவச் சந்திரன் எழுதலும் உகுத்த நீர் பெருகி
மருவிக் கால் என வழி அருவியும் அவண் வயங்கும்
பருவக் கோவை முத்தாரமும் பகுத்திடல் அரிதே

#353
மேய மேல் நிலை மாடங்கள் வெள் ஒளி விரித்துப்
பாய தாரகைக் கணத்தொடு பயிலுறு காட்சி
தூய பாற்கடல் சங்கம் நாள்-தொறும் தன்-பால் துறந்த
நேய முத்தொடு பொங்கி மேல் எழுந்து என நிலவும்

#354
ஐய நுண் இடை அயில் அலைத்து அமர்த்திடும் அரிக் கண்
மையல் மாதரார் பற்பலர் தனித்தனி மருவச்
செய்ய கால் பரியங்கம் மெல் அணையொடு செறிந்த
வெய்யவன் தொடு சிகை அளவு_இல் அறை விளங்கும்

#355
வருக்கை வாழை தேமாக் கமுகு அறாப் பலத் தென்னை
முருக்கு நாரம் முள் மாதுளை மொய்த்த முந்திரிகை
பருக்கும் இன் சுவைக் கனி உடை மற்றைப் பாதவங்கள்
பெருக்கி என்றும் நல் வளம் தரு சோலைகள் பிறங்கும்

#356
கண்ணன் ஆவயின் வரும்-தொறும் களி மயில் கூட்டம்
விண்ணின் மேல் பயில் மேகம் இ மண் விரவியது என்று
எண் இடக் கடை இலாத் தழை கோலி இன்பு அகவும்
பெண் அணங்கு அனையாரைத் தம் இனம் என்று பெட்கும்

#357
குழை கிழித்து அயில் தடற்றுறத் துரந்து நேர் குறுகும்
உழை கிழித்து ஒளிர் நோக்கினார் ஊசலாட்டு உவப்பும்
பிழை கிழித்த பொன் கந்துக ஆடலின் பெருக்கும்
மழை கிழித்த அச் சோலையின் மறாது என்றும் வயங்கும்

#358
கோங்கு மாதவி பாடலம் குரா வழை புன்னை
தேங்கு சண்பகம் குங்குமம் சந்தனம் செருந்தி
ஓங்கு கைதை மந்தாரம் மாலதி ஒளிர் கற்பு
வீங்கு சாதி முன் பல உள விரைத்த உய்யானம்

#359
சால மெய்யில் பெண்குறியினனாய்ப் பழி தழைந்தோன்-
பால் அமர்ந்திடல் தகாது என நீங்கிய பண்பே
போல மன்றல் அம் கற்பகம் ஆயிடைப் பொலிந்து
கோலம் ஆர்ந்து அளவிடற்கு அரு வளம் கொழித்து உறையும்

#360
அன்றியும் பல நாள்கள் முன்னோனிடத்து அமர்ந்தாம்
ஒன்று பின்னவனிடத்தும் அவ்வாறு உற உறைவாம்
என்று வந்து உறைகின்றமையும் பொரூஉம் இலங்கித்
துன்று பைம் தரு ஐந்தும் ஆவயின் பொலி தோற்றம்

#361
ஈர்ந்து எடுத்த வெண்பளிங்கினை நிலனுற இருத்திச்
சார்ந்த நால் புறம் வெண்பொனால் படித்தலம் சமைத்துக்
கூர்ந்த முத்த வெண் மணல் அடிப் பரப்பி மேல் குலவ
வார்ந்த தண் புனல் நிரப்பிய தடங்களும் வயங்கும்

#362
நீண்ட வாள் கரும் கண் இளையாரொடும் நீதி
பூண்ட மா மணி நிறத்தவன் ஆடல்செய் பொய்கை
வேண்டுமேல் புனல் பெருகவும் சுருங்கவும் விளைக்கும்
சேண் துலங்கிய தூம்புகள் பற்பல செறியும்

#363
செய்ய தாமரை பற்பல வாவியில் செறிந்த
ஐய செம் மணிப் படி ஒளி கதிர்த்தலால் அல்லும்
மை_இல் செம் சுடர் கண்டு என மலரும் மற்று ஆங்கு
நையல் இன்றி அஞ்சம் பல பயில்தரும் நாளும்

#364
குலவு பூம் தடம் நடு அமர் குடுமி மா மாடம்
நிலவு வெள் ஒளி விரித்தலால் தன் அரை நிரம்பச்
சுலவு பாசடை சுற்ற நின்றிடுதலால் சுடர்விட்டு
உலவு வெண்பளிக்கு உருவ நீல் உடைப் பிரான் உறழும்

#365
மருவு இடம்புரி வலம்புரி சலஞ்சலம் வயிற்றுக்
கரு உளைந்து சோபானத்தில் கான்ற பல் முத்தம்
திரு_அனார் அடிப்படும்-தொறும் உறுத்தும் அச் செல்லல்
ஒருவுமா சிறிது அத் தலைப் படிந்த பூ உஞற்றும்

#366
பெருமை சேர் புகழ்க் கண்ணன் ஒண் கயல் எனப் பிறழும்
கருமை தீட்டிய கண்ணினார் பலரொடும் கவின
ஒருமை அன்பின் வீற்றிருக்கும் அத் தன்மையை உணரின்
அருமை உற்ற வைகுந்தமும் அதற்கு இணை ஆமோ

#367
நல் நயத்த பல் வளம் பெறும் உவளக நடையில்
என்ன சொற்றனன் சிறிதும் விண்டேன் அலன் இனிமேல்
பன்னகத் துயில் பகவன் வீற்றிருக்கும் அப் பண்பில்
தன்னம் விண்டு விள்ளாத சீர்க் கதை சொலச் சமைந்தேன்

#368
துன்று சந்திரகாந்தத்தின் அமைத்த ஒண் சுவர்க்-கண்
ஒன்றுமாறு செம் சந்தனம் கருப்புரம் ஒருவாது
என்றும் நாறிய மான்மதம் குங்குமம் இன்னும்
நின்ற பல் விரை வருக்கமும் நிறைதரக் கூட்டி

#369
விரை துவன்றிய மென் பனி நீரிடைக் குழைத்துப்
புரை அகன்றிடப் பூசி ஒண் கார் அகில் புகைத்துத்
தரை செறிந்திட நறு மயிர்ப் படாம் தவ விரித்து
வரைவு_இல் பல் மணிக் கம்பலம் மேல் உற வயக்கி

#370
அமைத்த சீர் மணி மாளிகை நாப்பண் வாள் அவிரச்
சமைத்த பல் மணி அழுத்திய தடப் பரியங்கத்து
இமைத்த மூ வகைப் பஞ்சு இயல் மயிர் அனத் தூவி
குமைத்து இயற்றிய ஐந்து அணை அடுக்கி மீக் குலவ

#371
உரக மெல் உரி பரல் எனக் குழையும் வெள் ஒளிப் பட்டு
இரவு எழும் சுடர்க் கதிர் தவழ்ந்து என விரித்து இயக்கி
அரவ மேகலையார் அமைத்திட்ட அப் படுக்கை
விரவு பாற்கடல் படுக்கையின் சிறப்புற மேவி

#372
அரும்பு சீதளப் பாற்கடல் துயிலும் நாள் அவிரும்
விரும்பு செம் துகிரோடு அலைக் கொழுந்து எழீஇ விழல் போல்
கரும்பு போன்ம் எனக் கரையும் அம் சொல்லினார் கவரி
இரும் பொன் கால் பிடித்து ஏக்கழுத்தம் பெற இரட்ட

#373
அல் இரிக்கும் முத்து ஓரம் வைத்து அலங்கு சாந்தாற்றி
மெல் இயல் கவின் ஒருத்தி கைப் பற்றுபு வீச
வல்லியின் பொலி ஒரு மகள் மாடகம் திரித்து
நல் இயல் படு வீணையின் நரப்பு ஒலி எழுப்ப

#374
குலவு கப்புரம் இலவங்கம் ஏலம் முன் கூட்டி
நிலவு வெண் நகை ஒருத்தி மென் பாகு அடை நீட்டக்
கலவ மா மயில் வெருவுறு சாயல் அம் கரும் கண்
இலவு இதழ்க் கொடி ஒருத்தி பொன் படியகம் ஏந்த

#375
வண்டு வார் குழலார் உளம் மயக்கும் நின் உருவம்
கண்டு பார் என ஒருத்தி நேர் கண்ணடி காட்ட
விண்டு மென் பனி நீர் உறைத்திடும் இதின் விரை மிக்கு
உண்டு கொண்டிடு என்று ஒருத்தி பூம் செண்டு கை உதவ

#376
இழை இடைக் கொடி ஒருத்தி பொன் சிரகம் நீர் ஏந்தத்
தழை ஒளிச் செழும் பாதுகை ஒருத்தி கைத் தாங்க
வழை மலர்த் தொடை வண்டு அரற்றிட நற வாக்கும்
மழை முகில் குழல் ஒருத்தி மெல் விரைப் புகை வயக்க

#377
பிணி அவிழ்ந்து மட்டு ஊற்றி வண்டு அடர்தரப் பிறங்கும்
கணி வளைந்த ஒண் கரும் குழல் வெண் நகைக் கனி வாய்
அணி சிறந்து அரி படர்ந்த கண் அணங்கு எனும் உருக்கு
மணி வளம் கெழு கவான் மிசை முடித் தலை வைத்து

#378
ஆதரத்தின் அன்பு உஞற்றுவார்க்கு அருள் மலர் அடிகள்
காதரம் கொளக் கூற்றொடும் பொரும் கொலைக் கரும் கண்
மாதர் சத்தியபாமை தன் கவான் மிசை வைத்துச்
சீதரப்பிரான் படுத்திருந்தனன் களி சிறந்தே

#379
ஆய வேலையில் துவாரபாலகர் அழகு அமைந்த
வாயில் காவல்செய் மாதரார் வாள் முகம் நோக்கிப்
போய் உரைத்திடும் எம் வரவு இறைக்கு எனப் புகன்றார்
நேய மாதரும் விரைந்து சென்று அது நிகழ்த்தினரால்

#380
மன்னர் ஏறு கேட்டு எழுந்திருந்து அவர் வருக என்றான்
அன்ன மாதரும் செலவிட நடந்தனர் அடைந்தார்
மின்னு தாரகைக் குழாத்திடை விளங்கு ஒளி மதி போல்
துன்னும் மாதருள் தோன்றிடுந் தோன்றலைக் கண்டார்

#381
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்
சிந்தையுள் மகிழ்ச்சி பொங்கச் சிரம் மிசைக் கரங்கள் கூப்பிச்
சந்தம் ஆர் நிலத்தின் வீழ்ந்து தாழ்ந்து எழீஇக் குடந்தம்பட்டு
முந்து தானையும் ஒடுக்கி முன்னர் நிற்பாரை நோக்கி
வந்த காரியம் என் என்றான் வகுத்து உரையாடலுற்றார்

#382
மா மறைத் தலைவா போற்றி மதிக் குல விளக்கே போற்றி
காமர் இந்திரன் முன் ஆனோர் காண்பதற்கு அரியாய் போற்றி
தாமரைக் கண்ணா போற்றி தரியலர் ஏறே போற்றி
தோமறு செல்வம் வாய்ந்த துவாரகைக்கு இறைவா போற்றி

#383
ஆதி நாள் ஐய நின்னோடு அரும் கலை கற்றுளானாம்
போதவும் சிறந்த நட்புப் பூண்டு கொண்டவனாம் கந்தை
மேதகக் கொண்ட நீரான் மெய் மறையவர் குலத்தான்
கோதறு குணத்தின் மிக்கான் குசேலன் என்று இயம்பினான் பேர்

#384
வற்றி என்பு எழுந்த யாக்கை மா தவன் நின் மேல் வைத்த
பற்றினை எம்_அனோரோ பகுத்து அறிந்து அளக்க வல்லார்
இற்றை நாள் வந்து வாயில் இருக்கின்றான் எதிர்ந்த போரில்
வெற்றி கொள் கழல் கால் வேந்தே விண்ணப்பம் இதுவே என்றார்

#385
என்றலும் உவகை விம்ம எழில் முகம் மலர்ச்சி காட்டப்
பொன்றல்_இல் கருணை பொங்கிப் பொழிதர விரைவினில் சென்று
இன்று நம் வாயில் வந்த இரும் தவத் தலைவன்-தன்னை
மன்ற இங்கு அழைப்பீர் என்று வாய்மலர்ந்து அருளினானே

#386
கேட்டனர் துவாரபாலர் கிளர்ந்து எழு களிப்புத் துள்ள
வாட்டம்_இல் மனத்தர் ஆகி வாயில்கள் பலவும் நீத்து
நாட்டு தம் காவல் வாயில் நண்ணினர் ஆங்கு இருக்கும்
கோட்டம்_இல் மனத்துச் செய்ய குசேல மா முனியைச் சார்ந்தார்

#387
ஆதரம் பெருக நெற்றி அணி நிலம் தோயத் தாழ்ந்து
மா தவர் ஏறே போற்றி மறைக் குலச் சுடரே போற்றி
காதரம் பெருக்கும் சன்மக் கடல் கடந்தவனே போற்றி
நாதனுக்கு இனிமை மிக்க நண்பு உடையவனே போற்றி

#388
என்று பல் துதி முழக்கி யாங்கள் பல் வாயில் நீந்தித்
துன்றிய கதுப்பின் மாதர் சொற்படி உவளகம் போய்
ஒன்று பல் பிடிகள் சூழ உறும் கடக் களிறு போன்று
மின் திகழ் மடவார் சூழ வீற்றிருந்தானைக் கண்டு

#389
நின்னுடை வரவு உரைத்தேம் நிருபனுக்கு அப்போழ்து உற்ற
பன்ன அரும் களிப்பை யாமோ பகர்ந்திட வல்லம் ஐய
முன்னம் அங்கு இருந்த இன்பம் முழுவதும் மறந்து நின்றான்
நன்னர் நெஞ்சு உடைய நீரார் நட்பினில் சிறந்தது உண்டோ

#390
தாயது வருகை கேட்ட தனி இளம் குழவி போன்று
நேயம் மிக்கு உடையன் ஆகி நெஞ்சினுள் உவகை பூப்பப்
போய் அழைத்திடு-மின் இன்னே போய் அழைத்திடு-மின் இன்னே
போய் அழைத்திடு-மின் இன்னே என விரை பொருளில் சொற்றான்

#391
இலக்கணம் இன்மை நோக்கி இதற்கு மேல் சொற்றான் அல்லன்
மலக் குறும்பு அறுத்து உயர்ந்த மா தவத் தலைவர் ஏறே
பலப்பல சொல்லி என்னை பாணித்தல் கருமம் அன்று
நலக்க நீ விரைவின் எய்தாவிடின் அவன் நண்ணும் இங்ஙன்

#392
ஆதலின் எம்பிரானுக்கு அகத்து மிக்கு உவகை உய்ப்ப
ஏதம்_இல் முனிவர் ஏறே எழுந்தருளுக என்று அங்கைப்
போதகம் கூப்பினார்கள் பொருக்கென எழுந்து செம்மை
வேதம் முற்று உணர்ந்த ஐயன் விரைதர நடக்கலுற்றான்

#393
அன்னது கண்டு முன்னர் அறிவிலாது உரைத்த நீரார்
என்ன காரியம் செய்தேம் இப் பெரியனை எளியன் என்று
சொன்ன தீங்கு உரைகள் எல்லாம் சுடுகின்ற நம் உளத்தை
மன்னவன் அறிவானாகில் வாராத தீங்கும் உண்டோ

#394
அருள் மிகப் படைத்த சிந்தை அந்தணன் ஆதலாலே
தெருள் மிகப் படைத்த மன்னன் செவி அறிவுறுப்பான் அல்லன்
பொருள் மிகப் படைத்த வேந்தர் போற்றிடும் சிறப்புற்றான் என்று
இருள் மிகப் படைத்த நெஞ்சர் இன்னவாறு இயம்பி நிற்க

#395
மன்னனைக் காணும் அன்பும் வாயில் காவலரும் முன்னே
நன்னயத்துடன் நடப்ப நடப்பவன் ஆங்காங்கு உள்ள
பன்ன அரும் வளங்கள் எல்லாம் பார்த்தனன் இறும்பூதுற்றான்
பொன் நகர் சிறந்தது என்பார் புல்லியர் என உள் கொண்டான்

#396
பல் மணி வாயில் எல்லாம் பின்னிடும்படி கடந்து
நல் மணி மோலி வேந்தர் நயந்த பேரவையும் நீந்தி
அல் மணி விளர்க்கும் வண்ணன் அணங்கு_அனாரொடும் இருக்கும்
பொன் மணி வாயில் அந்தப்புரத்தினுக்கு அணியன் ஆனான்

#397
ஓவியத் தொழில் வல்லாருக்கு ஒண் பொருள் வெறுப்ப வீசி
நாவி அல் கரும் மென் கூந்தல் நங்கைமார் எழுதிவைத்த
பூ இயல் படம் ஆங்காங்கு பொலிவது காணும்-தோறும்
கோ இயல் கண்ணன் என்று உள் கொண்டு பின் தெளிவன் அம்மா

#398
ஈங்கு இவன் இவ்வாறு எய்த இன்னம் வந்திலன் என்று ஐயன்
பூம் கதிர் வரவு பார்க்கும் பொற்ற புண்டரிகம் போலும்
தீம் கதிர் வரவு பார்க்கும் செவ்வரக்கு ஆம்பல் போலும்
ஓங்கு மை வரவு பார்க்கும் ஒண் தழை மஞ்ஞை போலும்

#399
பொருந்து தாய் வரவு பார்க்கும் புனிற்று இளம் கன்று போலும்
திருந்து தன் வரவு பார்க்கும் செம் மனத்து ஒருவன் போலும்
அருந்து நீர் வரவு பார்க்கும் அறல் நசை உடையான் போலும்
கரும் துழாய்க் கண்ணி அண்ணல் கமழ் நறும் சேக்கை மீதே

#400
வளர் மறை உணர்ச்சி மிக்கான் வரவு பார்த்து இருப்ப அந்த
அளவிடற்கு அரிய மேலோன் ஆடு அமைத் தோளின் நல்லார்
கிளர்தர நின்று காக்கும் கேடு_இல் வாயிலும் கடந்து
தளர்வு_இல் பல் மாதர் சூழும் தனியிடத்து அணுகும் காலை

#401
வருந்தும் ஓர் மிடியன் சேமவைப்பு எதிர் கண்டால் போலும்
அருந்து உணவு இழந்தோன் விண்ணோர் அமுது எதிர் கண்டால் போலும்
பரிந்து வெப்பு உழலுவோன் கற்பகம் எதிர் கண்டால் போலும்
சரிந்த பற்றினன் மெய் ஆசான்-தனை எதிர் கண்டால் போலும்

#402
எண் அனைக்கு இலங்கு மார்பம் ஈந்து அருள் பிரானை நீல
வண்ணனைத் திகிரி சங்கம் வலம் இடம் உறக் கொண்டானை
மண் அனைத்தும் புரக்கும் வாசுதேவனை மணக்கும்
கள் நனைத் துளவத் தாமக் கண்ணனைக் கண்ணில் கண்டான்

#403
காண்டலும் உவகை பூத்துக் கால் விசை கொடு நடந்தான்
ஆண்டகை அவனும் கண்ணுற்று அணை உடைத்து எழும் நீத்தம் போல்
நீண்ட பூம் பள்ளி நீத்து நிலவு பேரன்பு பொங்கப்
பூண்ட மா தவன் முன் சென்று பொன் அடி வணங்கினானால்

#404
திலகம் மண் தோய ஐயன் திருவடி வணங்கிப் பின்னர்
நிலவும் மெய்ப் புளகம் போர்த்து நிரம்புறத் தழுவிக்கொண்டான்
குல மறைத் தலைவன் என்றும் கூர்ந்த மெய் நட்பன் என்றும்
மலர் தலை உலகம் கூறும் வாய்மை காத்து அருளினானே

#405
பாக்கியம் உற்றது இ நாள் பாக்கியம் உற்றது இ நாள்
ஆக்கிய அறம் பலித்த ஆக்கிய அறம் பலித்த
யோக்கியம் அடைந்தது இந்த மனையும் என்று உரைத்துரைத்துத்
தேக்கிய புகழினான் கொண்டாடினான் சிலை_வலோயே

#406
அங்கு ஒரு மாடத்து உள்ளால் அரதன பீடத்து உம்பர்
மங்கல மறை_வலாளன் மகிழ்ந்து எழுந்தருளப்பண்ணிப்
பொங்கு பொன் குடம் பூரித்த புதிய மஞ்சன நீர் ஆட்டித்
திங்கள் அம் கதிரே என்னத் திகழ்ந்த ஒற்று ஆடை சாத்தி

#407
கதிர் எனக் கதிர்க்கும் செம்பொன் கவின்செய் பட்டாடை சாத்திப்
பிதிர் கருப்பூரம் நானம் பெய் விரைச் சாந்தம் சாத்தி
முதிர் ஒளி விரிக்கும் தண்ணென் முத்த அக்கதையும் சாத்தி
அதிர்தர வண்டும் தேனும் அலங்கு பூம் தொடையல் சாத்தி

#408
விரை தரு தூமம் காட்டி மேவு நெய் விளக்கம் கோட்டி
உரை பெறு பளித நீராசனக் கலம் ஒளிரச் சுற்றித்
திரை செய் நல் அமுதம் அன்ன தீம் சுவை உணவு நல்கி
கரையறு தவத்தோன் வாயும் கையும் ஒள் அறலின் பூசி

#409
பாகு அடை சிறப்ப நல்கிப் பயன்பெறு முகமன் கூறிப்
போகு உயர் மாடத்து இட்ட பொற்ற தன் படுக்கை ஏற்றி
மோகம் மிக்கு அருகு இருந்து முதுகு தைவந்து பின்னும்
கோகனகப் பூம் கையால் குளிர் செய் பொன் கவரி வீசி

#410
வழி நடந்து இளைத்தவே இ மலர் அடி இரண்டும் என்று
கழி மகிழ் சிறப்ப மெல்ல வருடினான் கமலக்கண்ணன்
பழி_இல் பல் உபசாரங்கள் பண்ணவும் தெரியான் ஆகி
ஒழிவறு தவக் குசேலன் ஒன்றும் பேசாது இருந்தான்

#411
பித்தர் உன்மத்தர் பாலர் பிசாசர்-தம் குணத்தராவர்
நத் தவ ஞான யோகர் என மறை நவிலும் ஆற்றால்
சித்தம் விட்டு அகலாது ஐயன் திருவுருத் தியானம்செய்து
புத்தமுது ஊறும் இன்பின் புணர்ந்து அசைவற்று இருந்தான்

#412
வழு_இல் பைம் குளவி ஓசை அன்றி மற்றொன்றும் தேராப்
புழு என இருக்கும் தன்மை பூண்ட மற்று இவனோ பொங்கும்
பழுது_இல் கற்புடையாள்-தன் சொற்படி வறும் செல்வம் வேண்டும்
கொழு நிணம் குதட்டி மாற்றார்க் குமைத்து எழும் வடி வேல் வேந்தே

#413
உருவினைக் கண்டும் கண்டத்து ஒளிர் வன மணம் கவர்ந்தும்
அருமை சால் முகமன் கேட்டும் அமைந்த மெய் பரிசம் உற்றும்
வெருவு_இல் நல் திருநாமங்கள் விருப்பினுள் துதித்தும் ஐந்தும்
பொருவு_இல் ஆனந்தம் எய்தப் பொலி கடத் தீபம் போன்றான்

#414
நீருறும் உப்புப் போலும் நெருப்புறு பளிதம் போலும்
ஏருறு வடிவத்து அண்ணலிடத்துத் தன் மனம் கலப்பப்
பேருறு பவஞ்ச வாழ்க்கைப் பிணிப்பு ஒழிந்து அகலக் கஞ்சத்
தார் உறும் மார்பத்து ஐயன்-தன்னையும் மறந்திருந்தான்

#415
இன்னணம் இவன் இருப்ப இவன் வரவு அனைத்தும் சொல்லா
முன்னரே உணர்ந்துகொண்ட முழுமுதல் கண்ணன் என்பான்
மன்னிய உவகை பூத்து வழிதரு மனத்தன் ஆகி
அன்னவன் வதனம் நோக்கி அமைய இன்னன சொல்வானால்

#416
** கொச்சகக் கலிப்பா
மன் உடைய மறை அனைத்தும் வகுத்து உணர்ந்த மாதவனே
உன்னுடைய தரிசனத்தால் உடம்பு பூரித்தனன் யான்
மின் உடைய விளங்கு ஒளி வேல் வேந்தருளும் தேவருளும்
என்னுடைய பெறல் அரும் பேறு யார் பெற்றார் யார் பெறுவார்

#417
பூன்ற தயை என்னிடத்து எப்போதும் நீ வைத்தருள்க
ஆன்ற எனது உளத்தினை விட்டு அகன்றிலை இந்நாள்-காறும்
சான்ற குணத்தாய் இன்னும் சந்ததமும் நினைந்திருப்பேன்
தோன்ற அனேகம் பெறினும் தொல் நட்பில் சிறந்தனவோ

#418
ஆயின் மறை முதல் கலைகள் அனைத்தும் உணர்ந்து அறம் மறம் பாத்
தே இனிது நன்று இது தீது என்று உணர்த்துமவர் நட்பை
வீயினும் தாம் மறப்பர்களோ மேதையோர் மறப்பரேல்
நாயினும் கீழ்ப்பட்டவர்கள் அவர் காண் இ நானிலத்தே

#419
நல்லார் சொல் விரும்புவதும் நல்லாரைக் காண்பதுவும்
நல்லார்க்கு ஒன்று உதவுவதும் நல்லாரைப் புகழ்வதுவும்
நல்லார் நன்று என்று உரைப்ப நவிற்றிய இவ் எலாம் அடங்க
நல்லார் நட்பு என்றும் உறல் நன்றன்றோ நான்மறையோய்

#420
பொன் உள்ளான் பூமி உள்ளான் புந்தி உள்ளான் ஆயிடினும்
என் உள்ளான் ஆவன் அவன் இரும் தவர் நட்பு இல்லானேல்
பொன் இல்லான் பூமி இல்லான் புந்தி இல்லான் ஆயிடினும்
என் இல்லான் ஆவன் அவன் இரும் தவர் நட்பு உள்ளானேல்

#421
பேயோடு பழகுறினும் பிரிவது அரிதரிது என்று
தூயோர்கள் மொழிவரால் தூயோரும் புகழ் தூயோர்
ஆயோர்கள் பெரு நட்பை அரும் தவத்தால் பெறல் அன்றி
ஏயோ எண்மையின் கிடைப்பின் இகழ்வரோ இகழ்வு_இல்லார்

#422
சமையம் வரின் இடித்துரைப்பார் தக்க வழி செலச்செய்வார்
இமையவர்-தம் உலகு உறவும் இருள் உலகம் பகையுமாய்
அமைய அறிவுறுத்துவார் அந்தோ நூல் கற்று உணர்ந்த
கமை உடையார் நட்பு எவர்க்குக் காண் கிடைக்கும் அரிதரிது

#423
கூடுதற்குக் கூடாத கூட்டத்துப் படும் நட்பு
வீடுதற்குத் தக்கதாய் நாள்-தோறும் மெலிந்து ஒழியும்
நீடுதற்குத் தக்கது நல் நெறி நின்றோர் நட்பு ஒன்றே
தேடுதற்குக் கிடையாத திரவியமும் அஃதாமால்

#424
முத்திக்கு வித்து ஆகும் முழுது உணர்ந்தோர் பெரு நட்பே
தித்திக்கும் நாள்-தோறும் தேவர் பெறற்கு அரும் திருவும்
சித்திக்கும்படி அருளும் செப்ப அரிதால் அது நிற்க
எத்திக்கும் புகழும் நினக்கு இயல் மணம் நன்கு ஆயிற்றே

#425
நின்னுடைய மனைக்கிழத்தி நிரம்பு பெரு நீர்மையளே
மன் உடைய சொல் காத்துச் சோர்விலா மாண்பினளே
தன்னுடைய உயிரா நின்றனைப் பேணும் தன்மையளே
உன்னுடைய வருவாய்க்குத் தக்க செலவு உஞற்றுவளே

#426
சொன்ன காரியம் அனைத்தும் சொன்னபடி இயற்றுவளே
என்ன மிடி வரினும் வெளி எடுத்தியம்பா இயலினளே
தன்னமும் நாயகன் பழி தூற்றாது அமையத் தக்கவளே
பன்ன அரு மா மறை உணர்ந்த பளகறு நல் குணக்குன்றே

#427
பைம் குதலை வாய் மைந்தர் பலர் பிறக்க வேண்டுமே
எங்கும் அரும் புகழ் உடையாய் எத்தனை மைந்தர்கள் பிறந்தார்
அங்கு அவரைப் பேரவையோர் அணிதரச் செய் செயல் அனைத்தும்
சிங்கலறப் புரிந்தனையோ செய்ததையோ உபநயனம்

#428
இவர் தந்தை என் நோற்றான் என்று அறிஞர் உரைக்கும் வகை
இவர்கின்ற மனத்தினராய் இரும் கலை கற்று உணர்வரே
உவர் கொண்ட கடல் ஆடை புடை உடுத்த உலகம் எலாம்
உவர் கொண்ட குணம் எவர்க்கு உண்டு என மொழிய உயர்வரே

#429
நிறைகின்ற சிறு மைந்தர் நினைத்தவை எலாம் கொடுத்துக்
குறைவின்றி நடத்திவருகின்றனையே கொடும் பகலில்
உறைகின்ற பசி வருத்தத்து உறுநர் மால் எனச் சுருதி
அறைகின்றதால் அவருக்கு அன்னம் இடுகின்றனையே

#430
நான முதல் சந்தி செபம் நன்கு நடக்கின்றனவே
ஆன இவை செய மெய் திடமாகி இருக்கின்றதே
மானமுறு மறைப் பொருளில் வைத்த தியானம் சிதறாது
ஈனமற நிற்கின்றதே எவரும் சொலற்கு அரியாய்

#431
சீர் ஆர் நின் ஊர்-நின்று சேர இவண் வருவாரால்
நீர் ஆர் நின் தன்மை எலாம் நென்னல் வரைக்கும் தவறாது
ஆராய்ந்துகொண்டிருந்தேன் அகன்ற பல நாள்களின் பின்
ஏர் ஆர் இன்பம் சிறப்ப இருவேமும் கூடினேம்

#432
நள்ளார்கள் அண்மைக்-கண் இருந்தாலும் நட்புறுத்தார்
விள்ளார்கள் சேய்மைக்-கண் இருந்தாலும் விருப்பு ஒழியார்
தள்ளாத பல் பொருள்கள் தனைச் சூழ இருந்தாலும்
உள் ஆதவன் கதிரை உற நோக்கும் நெருஞ்சியே

#433
மடமையார் உறு நட்பே மருவு பெரும் சுகம் காணும்
திடமுற எவ்வாறு என்னின் செப்பக் கேள் செழு மறையோய்
உடன் உறைதல் ஒருவுமிடத்து ஒரு துன்பும் உறல் இன்று
படர்தலும் இன்று ஒருவேளை பகர்தலும் இன்று ஆகுமால்

#434
ஐய நீ குடியிருக்கும் அணி நாட்டில் அதிக மழை
பெய்யும் மழை இன்மை கிளி விட்டில் முதல் பெரும் கேடு
வெய்ய கொடும் கள்வர் வன விருகம் முதல் பல கேடு
நைய இனிது உயிர் எலாம் நன்கு தழைக்கின்றனவே

#435
இருவேமும் முன் நாளில் இலக்கு சாந்தீப முனி
வரு காமர் அடி வணங்கி மா மறை கற்று உணர்ந்திடும் நாள்
பெருகு ஆர்வத்தொடும் பேசிக்கொண்டிருந்த பேச்சு எல்லாம்
திருகு ஆரா உளத்து நினைத்திருக்கின்றாயோ சிறப்ப

#436
கொள்ளை மறை உணர்ச்சி மிகு குருராயன் பத்தினியாம்
தள்ளை நமைப் பார்த்து அமுது சமைப்பதற்கு இந்தனம் இன்று இன்று
எள்ளரு நல் மைந்தர்காள் கொடு வாரும் என ஏவ
விள்ள அரும் ஓர் பெரும் காட்டுள் விறகு ஒடித்துத் திரிந்தனமே

#437
** கலிவிருத்தம்
ஆய காலை விண் ஆறு எழு வெண் முகில்
நேய நெய்தல் நிறை வளம் நோக்குவான்
பாய அன்னம் பறந்தன போன்ம் எனத்
தோய மாக் கடல் துன்னுபு சென்றவே

#438
நீல் நிறக் கடல் வற்றிட நீரம் வா
யால் நிரப்பு அவியப் பருகுற்று எழீஇ
வானிடைப் படர் மஞ்ஞைக் குழாம் என
மேனி பைத்து விரைவினில் மீண்டவே

#439
பெட்டு நீர் மழை பெய்து வளர்த்திடும்
மட்டு நீங்கு பைம் கூழ் மரம் ஆதிகள்
பட்டு நீங்க வெப்பம்புரி கோடையை
வெட்டும் வாள் என மின்னல் விதிர்த்தவே

#440
எமர் உணற்கு இடமாய இரும் கடல்
அமர்தல் கொண்டு அறலைச் சுவற்றும் தழல்
சமர் தணிப்பம் இன்னே எனச் சாற்றல் போல்
தமரம் விண்ணும் சலிப்ப எழுந்தவே

#441
மேதினிப் பகை மேல் அம்பு தூற்றிடச்
சாதி நல் மலர்க் கற்ப தருவினான்
காதி வாங்கிய கார்முகம் என்று உலகு
ஓதி நிற்க ஒரு வில் விண் தோன்றிற்றே

#442
நம்மை ஊர் இறைவன் பகை நாகங்கள்-
தம்மை யாம் என்றும் சாரல் தகாது இவண்
வெம்மை தீர் இடம் என்று விராய போல்
கம்மை மேகம் அக் காட்டை வளைந்தவே

#443
விரவு மின்னின் ஒளிக்கும் வெருவு இடி
உரவு ஒலிக்கும் உளம் பதைத்து அஞ்சுபு
பரவு தம் இறை-பால் சரண் சார்தல் போல்
அரவம் யாவும் அளை புக்கு ஒளித்தவே

#444
இடி முழக்கம் முழவம் இயைதர
நெடிய கான அரங்கம் நிலவுற
வடிவ மஞ்ஞை எனும் மட மாதரார்
அடி பெயர்த்திடும் ஆடல் மலிந்ததே

#445
பெட்டு நூல் பெருகப் பயிலாதவர்
ஒட்டு செய்யுள் நினைத்து நினைத்து உளம்
கட்டுறுத்திக் கரைவது போன்ம் என
விட்டுவிட்டு உறை மென்மெல வீழ்ந்தவே

#446
ஆன்ற கல்வி அறிவின் நிரம்பிய
சான்ற தன்மையர் சற்றும் தடை இன்றித்
தோன்ற யாப்பு அடங்கத் தொகச் சொற்றல் போல்
கான்றவே பெரும் தாரைக் கண மழை

#447
பாய மாவும் பறவையும் அஞ்சுற
மேய கானும் பனிப்புற வெண்மையது
ஆய நீறு உடல் ஆர்தர வீங்கிய
காய் நிகர்ப்பக் கனோபலம் வீழ்ந்தவே

#448
மன்றல் அம் குருந்தத்து அடி வைகியும்
கொன்றை மூலம் குறுகியும் மற்று உள
துன்று சிற்றிலைப் பாதவத்து ஊர்-தொறும்
சென்றும் தெய்ய திகைத்து நின்றேம் அன்றே

#449
கொய் மலர்த் தருத்-தோறும் குறுகியும்
மொய் சிகைத் தலை முன் நனைந்து ஆனனம்
கை நனைந்து இரு கால் நனைந்து அம்மவோ
மெய் நனைந்து விறகும் நனைந்ததே

#450
மேலும் மேலும் விடா மழை ஆகலான்
சாலும் நீர் புறந்தாள் அளவாய்க் கணைக்
காலும் ஆய் முழங்கால் அளவாய்ப் பினும்
ஆலும் நீத்தம் அரை அளவு ஆயிற்றே

#451
வான் நிலாவும் மதி முடி அண்ணல் போல்
தேன் நிலாவு கடுக்கை திகழ்தர
மான் நிலாவுற ஏந்தி வயம் கொடு
கான்யாறு கலித்து நடந்ததே

#452
ஊற்று மாரி ஒழிதல் இன்று என் இனி
ஆற்றல் என்று இருவேமும் உள் ஆய்தரல்
ஏற்ற காலை எழுந்து ஓர் கொடும் குளிர்க்
காற்று வந்து கடுகிச் சுழன்றதே.

#453
மோது காற்றின் முளி சினை மா மரத்து
ஓது சாகை உலோலித்து ஒலித்திடல்
மீது கை அமைத்து அவ் வனம் விண் மழை
போதும் நில் எனல் போல இருந்ததே

#454
அன்ன காலை இடி ஒலி ஆர் முகில்
நென்னல்-காறும் நிரம்பிய வெப்பு எலாம்
இன்னல் தீர இரிந்தனவோ என
மன்னக் கேட்பது மான இருந்ததே

#455
காலும் மின்னு விளக்கம் இக் காட்டினுக்கு
ஏலும் மா மழை இன்னமும் வேண்டும்-கொல்
சாலும் ஈதின் தழைந்த-கொல் என்று மை
ஆலும் தீபம் கொண்டு ஆய்வதை ஒத்ததே

#456
உள்ள யாவும் உதவிப் புகழ்ப் படாம்
கொள்ளும் நல் கொடையாரின் குயின் குழாம்
அள்ளல் நீர் முழுதும் அளித்து ஆம் புகழ்
விள்ளல் இன்றிக் கொண்டு என்ன விளர்த்தவே

#457
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்
மாற்று விதம் இல் பறவை எலாம் வாய் தாழ்க்கொண்டு மரம்-தோறும்
போற்று குடம்பைப் புக்கு ஒளிப்பப் பொரு மா அனைத்தும் போந்து ஒளிப்பக்
காற்றுக் குளிருக்கு ஆற்றான் போல் கரங்கள் யாவும் தொக முடக்கிப்
பாற்றி இருளைப் பகல் செய்யும் பரிதி மேல் பால் மறைந்தனனே

#458
ஒருவா அன்பின் தணந்தார்கள் உற்றுநோக்கி வெய்து உயிர்த்து
வெருவா நின்று கண் பனிப்ப விளங்கும் நெடியோன் திருமார்பில்
பொருவா விரைக் குங்குமம் குழைத்துப் பூசி வைத்தால் போல் தோன்றும்
கரு வான் எழுந்த செவ் வானம் கடல் சூழ் உலகு வளைந்ததே

#459
நிலை சேர் வான மகள் கூந்தல் நீள விரித்துவிட்டால் போல்
கலை ஆர் உணர்ச்சியொடு கேள்வி கழித்து நிற்பார் உள்ளம் போல்
உலையாது உலகில் பரக்கும் ஆறு ஊற்று கருமைக் குழம்பே போல்
கொலை சூழுநர்-தம் தீவினை போல் குருட்டும் கங்குல் செறிந்ததே

#460
ஒருவர் கரம் மற்றொருவர் பிடித்து உறும் மேடு அவல் என்று உணராமல்
மருவும் குளிர் காற்றால் நடுங்கி மயங்கிக் காலால் வழி தடவி
இருள் போம் அளவும் இவண் உறைவோம் என்று ஓர் இடம் உற்று இருந்தனமே
குரு மா முல்லை நமைக் கண்டு கொண்ட நகை போல் மலர்ந்தவே

#461
மாட்டும் விறகு தேடப் போய் மயங்கி இருந்த நமக்கு இரங்கிக்
காட்டு மரங்கள் அல்லாது கண்ணீர் உகுப்பார் ஆங்கு இல்லை
வாட்டும் ஈரப் பதம் இன்றி வயிற்றில் செறிக்கும் பதம் இல்லைப்
பாட்டு முழக்கும் ஊமன் அன்றிப் பார்ப்பார்களும் மற்று இல்லையே.

#462
இந்தவாறு தவ மயங்கி இருக்கும் காலை நம் குலத்து
வந்த மைந்தன் நட்போடும் வருந்த வருத்தும் இவ் இருள் போய்ச்
சிந்தச் சிதைப்பல் எனச் சினந்து செழு வான் முகட்டில் எழுவான் போல்
சந்தக் கதிர்கள் உறப் பரப்பித் தண் அம் கதிரோன் உதித்தனனே

#463
வானில் எழுந்த செழு மதியம் வயங்கப் பொழி வெண் கதிரால் அக்
கானின் மிடை கார் களிறு எல்லாம் காமர் அயிராவதம் எனவும்
ஆன களவின் கனி எல்லாம் அமை வெண் நாவல் கனி எனவும்
மானம் உறு புல் இனம் எல்லாம் மடங்கல் எனவும் விளங்கியவே

#464
திருவம் ஒருவற்கு உறல் தெரியச் சிற்சில் குறி முன் தோன்றுதல் போல்
மருவும் உலகுக்கு இருள் ஒதுக்கி வயங்கு கதிரோன் வரல் தெரியப்
பருவச் சில புள் எழுப்பு ஒலியும் பாய கீழைத் திசை விளர்ப்பும்
குரு விட்டு ஒழி தாரா கணமும் குறியாய் முன்னர்த் தோன்றினவே

#465
இருவர் சிறுவர் மழையில் நனைந்து இளைத்து இக் காடு கோட்பட்டார்
மருவும் அவர் என் உற்றார் என்று எட்டிப்பார்க்க வருவான் போல்
பருவ மரைகள் முகம் மலரப் பற்று அற்று இருளும் போய் ஒளிப்ப
வெருவும் நாமும் களி தூங்க வெய்யோன் குண பால் எழுந்தனனே

#466
கல்வி அறிவு மேலிடலும் கரிசு_இல் பல்லோர் இயற்றிய நூல்
சொல்லும் பொருளும் வெளிப்படையாய்த் தோன்ற விளங்குவன போல
அல்லை அனுக்கும் இரவி எழ ஆங்காங்கு அமரும் அரும் பொருள்கள்
ஒல்லை இன்னயின்ன என உணருமாறு விளங்கினவே

#467
வெய்யோன் எழுந்த அப்பொழுதே விமல ஆசாரியனான
செய்யோன் மறைச் சாந்தீப முனி தேடி நம்மை முகம் புலரா
ஐயோ பிரமசாரிகள் எங்கு அடைந்தார் என் உற்றனர்-கொல் என
நை ஓகையின் வந்து அக் காட்டுள் நண்ண நாமும் கண்டனமே

#468
கண்டு வணக்கம் செய்து நின்ற காலை அளவு_இல் கருணையனாய்த்
தொண்டு புரி மாணாக்கர்களில் தூயீர் நும்மைப் போல்பவர் ஆர்
மண்டு மறை சொல் என் நிமித்தம் மழையில் நனைந்தீர் வருத்தம் மிகக்
கொண்டு நின்றீர் கற்ற கடன் கொடுத்தீர் விடுத்தீர் கோது அனைத்தும்

#469
சீர் ஆர் நுமக்குக் கல்வி போல் செல்வப் பொருளும் செழும் தொடையல்
கார் ஆர் கூந்தல் மனைவியரும் கனி வாய் மழலை மைந்தர்களும்
நார் ஆர்தரு சுற்றமும் வாழும் நாளும் அதிகம் ஆகுக என்று
ஏர் ஆர்தரு நல் ஆசி பகர்ந்து இல்லில் நமைக் கொண்டு ஏகினனே

#470
இன்ன எல்லாம் உளத்து நினைந்திருக்கின்றாயோ நீ என்னப்
பன்ன அரிய மறை கதறும் பகவன் உண்மை தோற்றாமல்
உன்ன அரிய கைதவனாய் ஒரு மானுடவன்-தனைப் போல
நன்னர் வினவிப் பின்னும் இது நயந்து கூறத் தொடங்கினனால்

#471
** வேறு
பந்தனை அகன்ற மேலோய் பற்பல நாட்குப் பின்பு
வந்தனை எனக்கு என் கொண்டுவந்தனை அதனை இன்னே
தந்தனை ஆயின் நன்று தரு சுவைப் பக்கணத்து என்
சிந்தனை நின்றது என்றான் தெரிவு அரும் வஞ்சக் கள்வன்

#472
இனிய சிற்றுணவு ஏதேனும் இன்றி நீ வருவாய்-கொல்லோ
இனிய நின் உள்ளம் இன்றோ எண்ணி யான் அறிதல் வேண்டும்
இனிய நின் மனைவி வாளா ஏகிவா என்பளோ மற்று
இனிய எற்கு அன்றி யார்க்குக் கொண்டுவந்திருக்கின்றாயே

#473
திருந்த இங்கு அளித்தி என்று செம் கரம் அலர்த்தி நீட்டப்
பொருந்த இன் பால் உண்பான்-பால் புளித்த காடியைக் கொடுத்திட்டு
அருந்திடு என்று உரைத்தல் போல் இவ் அவல் கொடை என்று வாளா
இருந்தனன் குசேல மேலோன் இவன் உளம் அறிந்த கண்ணன்

#474
நடலை தீர்ந்தவன் மெய்ப் போர்த்த நாள் பல கண்ட கந்தைப்
படர் தலைச் சுருக்கி வாங்கிப் பாங்கு வைத்து இனிதின் ஆய்ந்து
விடல் அரும் கற்பு வாய்த்த மின்_அனார் வணங்கும் தெய்வம்
திடமுற முடிந்து வைத்த சிறு பொதி கண்டுகொண்டான்

#475
மலிதரும் அன்பின் வந்த வண் பொதி அவிழ்த்து நோக்கி
வலிதரும் அவற்றுள் நன்று வாய்த்தது நமக்கு இது என்னா
ஒலிதரு கழல் கால் ஐயன் ஒரு பிடி அவலைக் காதல்
பொலிதர எடுத்து வாயில் போகட்டுக்கொண்டான் மாதோ

#476
செறிதரு சுவைத்து ஈது என்றும் தேவர்க்கும் அரியது ஆகும்
அறிதரு விருப்பின் இல்லின் அமைத்ததே பழைதும் அன்று
குறிதரு விலைப்-பால் சென்று கோடல் இவ் வளத்ததோ என்று
உறி அளை வாரி உண்டோன் ஒரு பிடி அவல் தின்றானே

#477
முன்னும் இவ் அவல் ஒன்றேனும் முனை முறித்ததுவும் இன்று
பன்னும் முட்டையும் இன்று ஆகும் பட்ட அங்கையும் மணக்கும்
கொன்னும் வாய் செறிப்பின் அம்ம குளமும் வேண்டுவது இன்று என்னா
உன்னு பல் உலகும் உண்டோன் ஒரு பிடி அவல் தின்றானே

#478
பாங்கு இரு கொடிற்று ஒதுக்கிப் பதமுறச் சற்று இருத்தித்
தேங்குற மென்றுமென்று சிரம் பல தரம் அசைத்துக்
கோங்கு இள முலைப் பூம் கோதை குமுத வாய்ப் பைம் தேன் ஊறல்
ஓங்கும் இன் சுவை கொள் வாயன் ஒரு பிடி அவல் தின்றானே

#479
நாட்டும் இவ் அவல் விருப்பம் நமக்கு மிக்கு உள்ளது என்று
கேட்டுளாய்-கொல்லோ முன்னும் கிளந்திருப்பதும் அன்றே என்று
ஏட்டு மென் மலர்ப் பூம் தொங்கல் இமையவர்க்கு அமிர்தம் முன் நாள்
ஊட்டிய புகழின் மேலோன் ஒரு பிடி அவல் தின்றானே

#480
அரிய அன்பினில் கொடுத்தல் இழிந்தது ஆயினும் சிறந்தது
இரியும் அன்பினில் கொடுத்தல் இழிந்ததே சிறந்ததேனும்
பெரியவர் புகழப்பட்ட பெரும் தவக் குசேல மேலோன்
உரிய அன்பினையும் கூட்டி ஒரு பிடி அவல் தின்றானே

#481
மற்றொரு பிடி எடுத்து வாய் இடப்போகும் காலை
முற்று இழைத் திரு உருக்குமணி எனும் முத்த மூரல்
பொன் தொடிப் பூம் கொம்பு_அன்னாள் பொருக்கென ஓடி வந்து
கற்றவர் புகழ் தன் கேள்வன் கரத்தினைப் பிடித்துக்கொண்டாள்

#482
நெய் அடை கவளம் கொள்ளும் நெடும் கடக் களிற்றின் கையைத்
தெய்ய ஆர்த்து ஓடிவந்து ஓர் சிறு பிடி பிடித்தல் போன்றது
ஐய நுண் இடைக் கலாபம் அடிச் சிலம்பு அலம்ப ஓடிப்
பொய்_இலான் கையைத் தேவி பொருக்கெனப் பிடித்த தோற்றம்

#483
** கலிவிருத்தம்
இரும் கிளிப் பெயர் இருடி இன்னவாறு
ஒருங்கு கூறலும் உவந்து தாழ்ந்து எழீஇப்
பரும் கை மால் வரைப் பகை உழக்குபு
பொரும் கை வேலினான் புகறல் மேயினான்

#484
என்ன அற்புதம் எடுத்துரைத்தனை
பன்னும் நாயகன் பரிவின் துய்த்திடல்-
தன்னை ஊறுறத் தடுக்கும் மாதரார்
நன்னர் நீரரோ நவை_இல் கேள்வியாய்

#485
கடுத்த கார் விடம் கயிலைக் கண்_நுதல்
எடுத்து உண் காலையும் இடத்து மேவிய
தொடுத்த பூம் குழல் தோகை மா மயில்
தடுத்தது இல்லையே சாற்றும் மேன்மையோய்

#486
கணவன் துய்த்திடக் கருது எவற்றையும்
இணர் மென் கூந்தலார் எடுத்தெடுத்து அளித்து
அணவ நின்று உபசரிப்பது அல்லது
குணம்_இலார் எனத் தடுத்தல் கொள்கையே

#487
வாயு முன் பிணி வகுத்து அறிந்திடும்
ஆயுள் வேதியர் அகற்றும் ஒன்றனை
நாயகன் கொள நயந்து நிற்பனேல்
தீயது என்பர் பின் சிந்தை நோவரே

#488
கண்டன் வேறு ஒரு கருமம் நெஞ்சகம்
கொண்டு மற்றைய குறைத்திருப்பினும்
அண்டும் அன்பின் யாதானும் வைத்துக்கொண்டு
உண்டுபார் எனா ஊட்டும் நீரரே

#489
ஆர் அமைச்சு நேர் மதி அமைந்து மிக்கு
ஓர் அடிச்சியாய்ப் பணியில் ஊண் இடச்
சாரில் அன்னையாய்ச் சமைவர் கற்புடை
நாரிமார் என நவில்வர் நல்லவர்

#490
கோல் தொடிக் கரும் கூந்தல் மாதராள்
மாற்றலார் கெட மாட்டும் வை நுதிக்
கூற்றம் அன்ன வாள் குரிசில் எண் தப
மாற்றி நின்றது என் வழங்குவாய் என்றான்

#491
சேரலார் முடி தேய்க்கும் ஒண் கழல்
வீரன் இங்ஙனம் வினவிடக் குறு
மூரல் கொண்டு அருள் முகத்தன் ஆகிய
ஈர மா தவன் இறை கொடுக்குமே

#492
** வேறு
சொல் பிறங்கிய நல் குலத் தோற்றத்தாள்
கற்பினுக்கு அரசாய கனம் குழை
வில் பிறங்கிய வாள் நுதல் மெல் இயல்
பொற்பினுக்கு ஒரு பொற்பு எனும் தன்மையாள்

#493
நிலவு வெண் திரைப் பாற்கடல்-நின்று எழு
கலவ மா மயில் அன்ன கரும் குழல்
குலவு மா மகள் கூற்றினில் தோன்றினாள்
அலகு_இல் நல் குணங்கட்கு எல்லை ஆயினாள்

#494
இலக்கணங்கள் நிரம்பிய ஏற்றத்தாள்
விலக்க அரும் புகழ் வாய்ந்த விளங்கு_இழை
நலக்கும் அன்பற்கு நன்மை இல்லாது ஒன்று
கலக்கச் செய்குவளோ புவி காவலோய்

#495
மேவும் அன்பன் மனக்கு விரோதமாய்
யாவும் செய்யகிலாள் அயர்ந்தாவது
நாவினாலும் நவிற்றுகிலாள் உளம்
பாவுமாறு படர்தலும் செய்கிலாள்

#496
** கொச்சகக் கலிப்பா
பல கலைகள் முற்று உணர்ந்த பளகு இலாத் தவ மறையோற்கு
உலகம் இறும்பூது அடைய ஒழியாத பெரும் செல்வம்
நிலம் மிசை உண்டாக என நினைந்து அவல் ஓர் பிடி எடுத்து
நலமுறத் தின்றனன் என்றும் அறிந்தாள் அ நல்_நுதலே

#497
தகத் தின்ற பிடி அவற்கே சகம் கொள்ளாப் பெரும் செல்வம்
மிகத் துன்றும் அஃது அன்றி மீட்டும் ஒரு பிடி எடுத்து
நகத் தின்றுவிடுவானேல் நாள் பலவும் அன்னவர்க்குத்
தொகத் துன்றும் அடிமையாய்ச் சொல் பணிகள் கடவானாய்

#498
தாம் அமர வேண்டும் எனும் தக்க கருத்து உளத்து அமரக்
கான் அமரும் கரும் கூந்தல் கதிர் அமரும் மதி வதனக்
கூன் அமரும் வில் புருவக் குயில் அமரும் மென் மொழியாள்
தேன் அமரும் தார் மார்பன் செம் கை பிடித்துத் தடுத்தாள்

#499
அன்றியும் அத் தொழு_குலத்தான் அணி மனைக்கு வேண்டுவது
துன்றிய சீர்ச் செல்வமே துன்னலார் முடி உரிஞ்சும்
வென்றி அமர் கரும் கழல் கால் வெள் ஒளிய வேல் வேந்தே
மின் திகழும் மணி மார்பன் பணி செயல் வேண்டுவது இன்றே

#500
ஆதலின் தன் நாயகனுக்கு அமைந்த இதம் ஆகும் விதம்
காது அமர் பொன் குழை கிழித்துக் கருங்குவளைக் குலம் சவட்டி
மோது அடு கூற்றொடும் பொருத முடங்கல் விடும் தடம் கரும் கண்
மாதர் புரிந்ததை அன்றி மற்றொன்று புரிந்திலளே

#501
வன்பு உடை மாற்றலர் நெய்த்தோர் வாய்மடுத்துத் தசை குதட்டி
இன்பு உடை ஈருளும் சுவைத்திட்டு எழும் கதிர் வாள் கண்ணபிரான்
அன்பு உடையார்க்கு இது கொடுத்தல் ஆகும் இது ஆகாது என்று
தன் புடை ஆயினும் எண்ணத்தக்கவனோ தார் வேந்தே

#502
வாரிதி சூழ் உலகின் ஒரு மானுடவன் அறியாது
சீர் இயலச் செய்த அறம் சிறிதேனும் அப் பயனால்
பேர் இயலும் சுவர்க்கத்தில் பெரிது இன்பம் துய்ப்பன் எனில்
கூர் இயலும் வடி வேலாய் குசேல முனிக்கு இஃது அரிதோ

#503
நீடு புகழ்ப் பகவன் அடி நீங்காது வளர் உளத்தான்
ஓடு பொறிச் சேட்டை எலாம் ஒடுக்கிய மா தவன் அன்றே
ஏடு செறி மலர் மார்பா இ மறையோன் எனப் புகன்றிட்டு
ஆடு புகழ்ப் பெரும் தவத்தோன் அப்பாலும் சொலப் புக்கான்

#504
தேவியால் தடைபட்டுச் செறிதரக் கைக் கொளும் அவலைப்
பாவிய வண் புகழான் அப் பழம் கந்தை-தனில் முடிந்து
மேவிய ஓர் பிடி அவலின் மிக மகிழ்ச்சி உடையானாய்
நா இயலும் துதி முழக்கி நல் முகமன் பல சொற்றான்

#505
அன்று இரவு ஓர் மென் படுக்கை அணிந்து உதவ அதில் மேவி
மன் திகழ் அவ் உவளகத்து வளம் பலவும் கண்டதனால்
துன்றிய பேரானந்தம் ஒழியாது தோன்றி எழக்
கன்றிய தீப் பொறி அவித்தோன் கண்படைகொண்டு அருளினான்

#506
கதிர் உதிக்கும் காலை எழீஇக் கடன் பலவும் முற்றி அடர்
முதிர் புலன் செற்று அரு ஞானம் முயன்று அடைந்தோன் ஆதலினால்
மதி குலத்து மன்னவன்-பால் வாய் திறந்து ஒன்றும் கேளான்
நிதியம் மிகப் பெற்றவனாய் நினைந்து ஊர்க்கு வழிக்கொண்டான்

#507
அக்காலைக் கண்ணனும் தன் அணி வாயில் வரை வந்து
மிக்கு ஆர்வத்தொடும் அடியில் வீழ்ந்து வணங்கிட மகிழ்ந்து
தொக்க ஆசி பல கூறித் துவாரபாலகர் வாயில்
எக்காலும் இன்பம் அறான் கடந்து அப்பால் ஏகிடுங்கால்

#508
விண்டார்-தம் மணி மௌலி மிதித்து உழக்கும் கரும் கழல் கால்
வண்டு ஆடும் நறும் துளப மாலை துயல்வரு தடம் தோள்
கொண்டாடும் புகழ்க் கண்ணன் களி கூர்ந்து கோயில் புகக்
கண்டார்கள் ஆங்கு இருக்கும் கார்க் குழல் மின்னார் பலரும்

#509
மலர் வதனம் சாய்க்குநரும் மணி அதரம் பிதுக்குநரும்
சிலதியரைச் சினக்குநரும் திருமி நடப்பவருமாய்க்
குலவு மறையவற்கு ஒன்றும் கொடுத்திலன் போ என்றான் என்று
இலவ இதழ்ச் செய்ய வாய் இயன்றன எலாம் உரைப்பார்

#510
** கலி நிலைத்துறை
தாய் எதிர்வுற்ற சேய் என உள்ளம் தழைவுற்றான்
போய் எதிர்கொண்டான் காலில் விழுந்தான் புனைவித்தான்
நேயம் உளான் என்று ஊர் அறிவித்தான் நீங்கு என்றான்
சேய்மையன் ஒத்தான் நன்று இது என்றார் சில மாதர்

#511
பார்த்திபர் பல்லோர் காத்தனர் நிற்கப் பாரானாய்க்
கூர்த்த மதிப் பூசுரன் எதிர்கொண்டான் கொண்டாடிப்
பூர்த்தி மிகுந்தான் அந்தோ வாளா போக என்றான்
சீர்த்தி மிகுந்தான் நன்றே என்றார் சில மாதர்

#512
துன்றிய அன்பின் கட்டியணைத்தான் தொழுதிட்டான்
பொன் திகழ் பள்ளி மீது அமர்வித்தான் புகழ்ந்திட்டான்
ஒன்றும் அளித்திட்டான் அலன் உதயத்து உன் ஊர்க்குச்
சென்றிடுக என்றான் நன்று இது என்றார் சில மாதர்

#513
எளியோன் பாவம் இத்தனை தூரம் ஏன் வந்தான்
அளி ஆர் தேனே பாலே என இனிதாப் பேசிக்
களியாநின்று ஓர் காசும் ஈயான் கழிக என்றான்
தெளியார் நல்லோர் இவன் உரை என்றார் சில மாதர்

#514
காடும் நாடும் நீந்தினன் ஆகிக் கழி அன்பின்
நீடும் நிரப்பும் நீங்கிடும் என்னும் நினைவு உள்ளம்
சூடுபு வந்தான் இங்கு ஒருவேளைச் சோற்றுக்கே
தேடுவர் சான்றோர் இவன் புகழ் என்றார் சில மாதர்

#515
குன்றால் அன்று மாரி தடுத்த கோமான் மற்று
ஒன்றாம் நண்பன் என்று இவண் வந்தான் உறவு உள்ளம்
அன்றானாய் அன்னான் கொடுவந்ததையும் வாரித்
தின்றான் ஒன்றும் ஈந்திலன் என்றார் சில மாதர்

#516
ஒழுங்குறும் முன் தவம் இல்லவர் யார் நட்பு உற்றால் என்
விழுங்கும் மிடித் துயர் தீர் அரும் நீரினர் மெய் ஈதால்
அழுங்கல் இலாது உலகு ஆள்பவர் தேவியர் ஆனாலும்
செழும் கை தரிப்பது மண் வளை என்றார் சில மாதர்

#517
** அறுசீரடி யாசிரிய விருத்தம்
இங்கு இவன் அ மறையோன்-பால் வைத்த தயை எலாம் அறிந்தோம் என்னேயென்னே
கங்கணம் கண்ணுறுவதற்குக் கண்ணடியும் வேண்டும்-கொல் கரும் கண்ணீர்காள்
துங்கமுடன் ஒருவேளைச் சோறு உண்டது உயர்ந்த வரை துளைத்துப் போகி
அங்கு வரு சிகரி ஒன்று பிடித்தது போல் ஆயிற்று என்று அறைந்தார் சில்லோர்

#518
நரபதி-பால் வேண்டுவன பெற்றுவரும் தலைவன் என நடவை பார்த்துப்
பரவு புகழ் மனை இருக்கும் அந்தோ நல் மைந்தரும் அப் பரிசே நிற்பர்
விரவில் இவன் என் செய்வான் சிந்து பழம் கந்தை அன்றி வேறொன்று இல்லான்
புரவுடையான் என்பன் ஒரு கலையும் அளித்திலன் என்று புகன்றார் சில்லோர்

#519
எத்துணைய செல்வம் மிகுத்து இருந்தாலும் ஈத்து உவத்தல் இவன்-பால் இல்லை
மெத்து நய மொழிகளால் மயங்கி ஒன்றும் கேளானாய் விரைந்து போனான்
பித்துறு மா மறையவனும் இவனும் மகிழ்ந்து ஆறு அனுப்பிப் பெயர்ந்து வந்தான்
கொத்துறும் இ நட்பு இருந்து என் இராது ஒழிந்தால் என் என்று குயின்றார் சில்லோர்

#520
அ மறையோன் ஒரு பொருளும் கேளானாய்ச் சென்றதை யாம் அறிந்தோம் மன்ற
மம்மர் தபுத்து ஈத்து உவப்பார்க் காணில் அன்றோ கேட்பவர்க்கு வாய் உண்டாகும்
விம்மலுறும் நசையினரும் இவனிடத்துக் கேட்பதற்கு மேவார் என்றால்
தம்மை உணர்ந்து உயர்ந்தவரோ கேட்கத்தக்கவர் என்றார் தடம் கண் சில்லோர்

#521
என் நினைத்து வந்தானோ அவன் இவனும் யாது நினைத்திருக்கின்றானோ
பன்ன அரிய இவன் செய்யும் மாயை எவரால் அறியப்படும் வாய் வந்த
இன்னன எலாம் பேச அறிவு அன்று நமக்கு என வண்டு இரங்கும் கூந்தல்
மின் அனைய நுண் இடைப் பேர் அமர்க் கண் மட மாதர் சிலர் விளம்பினாரே

#522
சிற்றிடைப் பேர் அமர்க் கண் மட மாதர் பலர் இவை முதலாச் செப்பிநிற்கக்
கற்றவர் ஏத்தெடுக்கும் முனி துவரை நெடும் தெருப் பலவும் கடந்து போகி
வற்றுதல்_இல் பெரும் கடலும் நீங்குபு தன் ஊர்க்கு ஏகும் வழியைக் கூடி
நல் தவமாம் தன் இலக்கில் சிந்தையுற மிக மகிழ்ந்து நடக்கும் காலை

#523
அரும் தவர்கள் புகழ் சீர்த்தி அமைந்த திருக் கண்ணபிரான் அருளினாலே
பொருந்து விரதாதிகளால் மிக்கு இளைத்த தன் உடம்பு பூரிப்புற்றது
இருந்த பழம் கந்தை செழும் பொன்னாடை ஆயிற்றால் இலங்கும் கண்டப்
பெரும் துளப மணி ஆரம் பெரு விலை முத்தாரமாப் பிறங்கிற்றாலோ

#524
செவி அணி புல்லிய பொருள்கள் அரதன குண்டலம் ஆகித் திகழ்ந்த ஆன்ற
சவி அணி கை விரல் தருப்பைப் பவித்திரம் பொன் ஆழியாய்த் ததைந்தது ஓங்கும்
புவி அணியும் கட்டழகு காமனும் காமுறு சிறப்பில் பொலிந்தது அம்ம
கவி அணியும் மதக் களிற்றுக்கு அதிகமாம் வலியும் உடல் கலந்தது அன்றே

#525
பாய பெரும் மிடி முன்னே தனக்கு ஒழிந்த அவித்தை எனப் பாறி மாய்ந்தது
ஏய வழி நடை இளைப்பு முதலிய எலாம் சற்றும் இன்றாய்விட்ட
காய வெயில் குளிர்ந்தது பாலையும் நீர் ஊறிற்று இள மென் காலும் வீசிற்று
ஆய இவை அனைத்தும் உணர்ந்து இறும்பூது மிகக் கொண்டான் அன்ன காலை

#526
** சந்தக் கலிவிருத்தம்
ஒழுகும் கட வரையும் கதிர் உறழ் செம்பொன் இரதமும்
எழு வெம் கதி உளை பொங்கிய இயல் தங்கிய பரியும்
கொழு நின்ற வை அயில் கொண்டவர் குழுவும் பல குழுமப்
பழுது என்பது இலவர் மன்னவர் பலர் வந்து எதிர்கொண்டார்

#527
மணி வார் முடி மண் தோய்தர மறை மா முனி தாளில்
பணிவார் சிலர் துதிப்பார் சிலர் படர் அன்பினில் வழிபட்டு
அணிவார் சிலர் பார்ப்பார் சிலர் ஆர்ப்பார் சிலர் ஆகிக்
கணி வார் புய விறல் வேந்தர்கள் கழலாக் களிப்புற்றார்

#528
பொன் ஆர் வடவரை மேல் கதிர்ப் புத்தேள் எனப் பொலிய
மின் ஆர் கதிர் உமிழும் ஒரு வியன் மா மணித் தேர் மேல்
முன் ஆர் மறையோனைப் பல முகமன் புகன்று ஏற்றி
நல் நாரொடு பெரு வேந்தர்கள் சூழா நடந்தனரால்

#529
மண் என்பது தெரியா வகை வானத்திடை அமரர்
கண் என்பது நுழையா வகை கற்பத் தரு மலரை
எண் என்பதும் இன்றாம் வகை இறைத்தார் களித்து ஆர்த்தார்
புண் என்பது பொலி வேலவர் பூத்தார் இறும்பூது

#530
கடல் மேல் எழுந்து ஆர்த்தால் எனக் கடல் நீர் உறப் பருகி
உடன் மேகங்கள் ஆர்த்தால் என உயர் வான் முகடு அதிர
மடல் மேல் எழு தார் வானவர் வண் துந்துபி ஐந்தும்
விடல் மேல் உளது ஆகா வகை மேலும் பெரிது ஆர்த்த

#531
** கலிநிலைத்துறை
அளவிலா மகிழ் தலை சிறந்து ஓங்கிட அவிர்ந்து
பளகிலாது உயர் தருப் படர் கொடி அசைந்து என்ன
வளம் நிலாவிய மின்னுகள் நடித்து என மணி வாய்த்
தளவ மூரல் விண் மடந்தையர் நடித்தனர் தயங்க

#532
பிரகலாதனன் பராசரன் பெரும் சவுனகன் சீர்
வர வியாதன் அம்பரீடன் புண்டரிகன் முன் மற்றோர்
கரவு இலாத உள்ளத்தராய்க் கழி மகிழ் சிறப்ப
விரவி நின்று தோத்திரம் எடுத்தியம்பினர் மேன்மேல்

#533
இன்ன பல் வகை அதிசயம் எதிருறக் கண்டு
நன்னர் மா மறைக் குலத்தவன் நாயகன் பாதத்து
உன்னும் நெஞ்சகம் பெயர்த்திலன் உறுவன எல்லாம்
பன்னும் எம்பிரான் அருள் என நினைத்தனன் படர்வான்

#534
அரசரே முதலாயினார் அனைவரும் அடுத்துப்
பரசி ஏவலர் போல் பிரியார் பின்பு படரப்
புரசை மால் கரி பரி முதல் படைகளும் பொலியத்
தரை செய் பேறு என விளங்கு தன் ஊர்ப்புறம் சார்ந்தான்

#535
பரியும் நீள் பழம் கந்தை கொள் உடையன் இப் பரிசு
பெரிய மா தவர் வேந்தர்கள் முதலியோர் பெரிதும்
தெரியுமா புகழ்ந்து ஏத்திடச் சிறந்தனன் என்னில்
உரியது ஆகிய தவத்தினில் உயர்ந்தது ஒன்று உண்டோ

#536
என்று உரைத்த மா முனிவரன் இணை அடி இறைஞ்சி
நன்று சொற்றனை மற்றது நடத்துக என்று அடையார்க்
கொன்று இரத்தம் வாய்மடுத்திடும் வாள் படைக் குரிசில்
துன்றும் அற்பொடு கேட்டலும் சுகமுனி சொல்வான்

@3 குசேலர் வைகுந்தம் அடைந்தது
** கடவுள் வணக்கம்
** இன்னிசை வெண்பா

#537
ஒரு திடம்தான் கதிக்-கண் உய்க்கும் எனச் சொல்ப
கருதிடம் தானவன் காமர் குலத்தான்
பொருதிடம் தானவர் பொன்ற அமர்த்தான்
மருது இடம்தான் அடி அவா

#538
** வேற்றொலி வெண்டுறை
கரும் கடலின் நடுவண் எழு கதிர் எனக் கார் நிறத்து மணி கதிர்ப்பக் காமர்
பெரும் கனக வரை எனச் செம்பொன் ஆடை நான்ற புயம் பிறங்கப் பாயல்
வென்றி வாள் அரவமும் தொடர மென் தாமரைத்
துன்று மா மங்கையும் தொடர வாய்விட்டு எழீஇ
மன்ற வேதங்களும் தொடர வான் சுவை அமிர்து
ஒன்று செந்தமிழ் தொடர் ஒருவர் பின் தொடர்தரச்
சென்றவன் திருவடி தேருவார் யாருமே

#539
** கலித்தாழிசை
காமர் நறு விரைத் துளபக் கண்ணியனைப் புண்ணியனை
மாமகள்-தன் கொழுநனை வழுத்துவீர் மானிடர்காள்
மாமகள்-தன் கொழுநனை வழுத்துவீர் ஆமாகில்
தாமரைப் பெரு முதலும் சாரற்கு அரிய கதி சார்வீரே

#540
** ஒருபொருண்மேல் மூன்றடுக்கிவந்த வஞ்சித்தாழிசை
மாதர்களின் வருந்தாமே போதமுறப் புரிந்திடுவீர்
சீத மலர்த் திரு_மார்பன் கோதறு சீர் குறிப்பீரே
மங்கையரின் வருந்தாமே பொங்கமுறப் புரிந்திடுவீர்
செங்கமலத் திரு_மார்பன் கொங்கு அலர் சீர் குறிப்பீரே
வனிதையரின் வருந்தாமே புனிதமுறப் புரிந்திடுவீர்
கனி மொழிச் செம் திரு_மார்பன் இனிய சீர் குறிப்பீரே

#541
** ஒப்புமைபற்றிவந்த ஆறடித்தரவு கொச்சகக்கலிப்பா
வண்டு ஆடு பூம் துளப மாலையனை வானோர்கள்
கொண்டாடும் சீர்த்தியனைக் கோவலர் பாடித் தயிர் நெய்
உண்டு ஆடு சீதரனை ஒப்பிலா அற்புதனைக்
கண்டு ஆடும் அன்பர் உளம் காதலிக்கும் புண்ணியனைத்
தொண்டு ஆள் துவன்றி எனச் சொல்லித் துதி முழக்கி
ஒண் தாள் துணைக் கொண்டு உயர்வீர் உலகீரே

#542
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்
மின் திகழ் பிறழ் பல் கூற்றம் விலாப் புடை வீங்க உண்ண
வென்றி கொள் செறுநர்ச் சாய்த்து விருந்திடும் வெள் வேல் வேந்தே
ஒன்றிய புகழ்க் குசேலன் ஊர்ப்புறம் சார்ந்த காலை
நன்றி மிக்குறும் அச் சீறூர் நலப் பெரு நகர் ஆயிற்றே

#543
மல் படு கானம் எல்லாம் மாடமாளிகையே ஆகிச்
சொல் படு புலவரானும் சொலற்கு அரும் சிறப்பு வாய்ந்து
வில் படும் அமரர் நாடு வீழ்ந்து மண் இறைகொண்டால் போல்
அல் படுத்து ஒளிர்ந்தது ஐயன் அருளினில் சிறந்தது உண்டோ

#544
இமைக்கும் அ நகரம் காணூஉ எறுழ் வலிக் காதி_மைந்தன்
சமைத்த வேற்றுச் சிருட்டி-தனில் தயித்தியரைச் சாயக்
குமைத்து அரும் போகம் துய்த்துக் குலவு நம் நகர்க்கு மாறா
அமைத்த பொன் நகரோ என்ன அமரர் உள் மயங்கினாரே

#545
அறன் கடை நயக்கும் வெம் சூர் ஆர் உயிர் சவட்டி வாங்கித்
திறன்படு சுரர் கால் யாப்புச் செறி கழல் வித்துச் சீர்த்தி
நிறம் கிளர் வெள் வேல் ஐயன் நிறை குடியேற்றும் நாளில்
பிறங்கிய துறக்க நாட்டின் பெற்றி அ நகரின் பெற்றி

#546
அரு நிதி தவம் என்று ஆராய்ந்து அமைதர ஈட்டியீட்டித்
தரு நிதி அனைய கண்ணன்-தன் அருள் பெற்ற மேலோன்
பெரு நிதி நகரம் நோக்கில் பிறங்கிய செல்வம் வாய்ந்த
இருநிதிக் கிழவன் வாழ்க்கை எழில் நகர் சிற்றூராமால்

#547
நயம் தரு நடுவுள்ளானை நல் அறம் சூழ்ந்தால் போலப்
பயம் கெழு நகரம் சூழ்ந்து பாசம் நீத்து அறிவின் மேலாய்
உயர்ந்தவர்க்கு இனிது செய்த உதவி போல் உயர்ந்து மிக்க
வயம் கொளப் பொலிந்தன்று எஞ்சா மஞ்சு சூழ் இஞ்சி மாதோ

#548
கொன் பெறும் அமிர்தம் கொள்ளைகொண்டுளார் நகரை மோது என்று
இன்புறு கீர ஆழி இனிய நீர்க் கடலை ஏவ
வன்புறும் அது இதே வானவர் நகர் என்னச் சூழ்ந்து
மன் பெறப் பொருதல் போன்றது அகழி நீர் மதிலை மோதல்

#549
பற்பல அடுக்கு மாடம் பரந்த விண் தாங்கல் நோக்கி
அற்புறும் நம்தம் பொன் நாடு அந்தரம் நிற்றலாலே
வில் பட நிலத்து எவ் வேலை வீழுமோ என்று உள் கொண்ட
கற்பக மாலைத் தேவர் காதரம் ஒழிந்தது அன்றே

#550
பற்றை ஆர்ந்து உயர்ந்த ஓங்கல் பரிசு அன்ன பைம்பொன் மாடத்து
எற்றை யான் புனைவல் வான் ஆற்று இரு புறம் நெருங்கி நிற்கும்
கற்றை ஆர்ந்து எழுந்த மாடம் கவிழ்தர ஒட்டா என்னா
ஒற்றை ஆர் உருளைத் தேரை நடத்துவோன் உவகை பூத்தான்

#551
இந்திர நீல மேடை எழும் கதிர்க் கற்றை மீப் போய்க்
கந்து அடு வெண் களிற்றைக் கரும் களிறு ஆக்கல் நோக்கி
முந்தை நாள் சாபம் மீட்டும் முளைத்தது-கொல் என்று அஞ்சித்
சிந்தையுள் ஆய்ந்து பின்னர் இது எனத் தெளியுமாலோ

#552
வஞ்சி நுண் இடையினார் மேல் மாட மேடையின் இருந்து
வெம் சினப் புலவி மூள மணி வடம் வெறுத்த தோளில்
அஞ்சும் ஊடலின் விண் மாதர் எறிந்த முத்தாரம் வீழ
விஞ்சை வல்லவன் நம் கேள்வன் என உளம் வியந்துகொள்வார்

#553
சுதை பயில் மாடம்-தோறும் சுடர் மதி தவழும் தோற்றம்
குதை வரிச் சிலையை வாட்டும் கோடிய புருவம் நுண் கூர்ப்
புதை இகல் கண்ணினார் அம்போருகம் முகத்தை நேரத்
ததை உடல் களங்கம் தேய்த்துக் கழிப்பது தகையும் அன்றே

#554
மணி நிலா முற்றம் மேவி மாதரார் வயங்கு கண்கட்கு
அணி நிலா உறும் மை தீட்ட அதிக மை உகிரில் கோத்துத்
துணி நிலா விசும்பில் துள்ளத் தெறித்திடு-தோறும் ஆங்குத்
தணி நிலா மெய்யில் சார்ந்து தயங்கிடும் களங்கம் என்ன

#555
வெள்ளிய மாடம்-தோறும் விளங்கு எழில் மணிப் பூண் நல்லார்
அள் ஒளிக் கற்றை வீச அணிந்து நிற்கின்ற தோற்றம்
தெள்ளு வெண் திரை சுருட்டும் சிறந்த பாற்கடலின் நாப்பண்
எள்ளள்-இல் பவள வல்லி எழுந்து நின்றிடுதல் ஏய்க்கும்

#556
இரசிதத்து அமைத்த மாடம் எறி செறி திரைப் பால் ஆழி
வர அதன் மீது துஞ்சும் மஞ்சு மால் தடித்து மாவாம்
விரவு செம் மேகக் கற்றை விளங்கிடு செம்பொன் ஆடை
உரவு வெண் பிறை வெண் சங்கம் உடுக்கள் அச் சங்கு ஈன் முத்தம்

#557
விலங்கல் விண் உயர்ந்த மாடம் வியன் கொடி முடங்கல் ஆங்கண்
இலங்குறும் மதியம் அம் தேத்து இறால் மட மாதர் மஞ்ஞை
நலம் கொள் அம் மதியம் கண்டு நகை நிலா மணி பெய் தெள் நீர்
கலங்கல்_இல் அருவி ஈட்டம் கார் கடக் களி நல் யானை

#558
அண்ணல் அம் களி நல் யானை ஆர்ப்பும் வாம் பரி முழக்கும்
ஒண் நல் அம் கொடிஞ்சித் திண் தேர் ஓதையும் வயவர் ஆர்ப்பும்
பண் நலம் கனிந்த தீம் சொல் பாவையர் கலன்கள் ஆர்ப்பும்
மண் நலம் புனைந்த ஆடை வாரி வாய் அடைக்கும் மாதோ

#559
மறை பயில் சிறார்-தம் கூட்டம் வயங்கிய கிடையும் மற்றைக்
கறையறு கல்வி கற்கும் காமர் சாலையும் கார்க் கூந்தல்
நறை ஒழுகு அலங்கல் மாதர் நடம் நவில் சாலையும் பொன்
நிறை பல அறமும் ஓங்கும் நெடிய சாலைகளும் பல்ல

#560
பரி நிரை செண்டு போகும் பைம்பொன் வார் மறுகும் நீள் கைக்
கரி நிரை கடம் பெய்து ஏகும் காமரு மறுகும் செம்பொன்
விரி மணி உருளைத் திண் தேர் விரைந்து செல் மறுகும் வீரர்
அரி இனம் அஞ்ச வாள் ஆட்டு ஆடிடும் மறுகும் பல்ல

#561
கழிந்த காமுகர்-தம் நெஞ்சம் கனிந்த சீர் அணங்கு_அனார்-பால்
எழுந்து செல் கதியும் தோற்பத் துனைவினின் ஏகும் பாய்மா
வழிந்திடும் நீர்மை முட்ட வாவுவ விண்ணும் வாயு
அழுந்துறச் செல்வம் என்னா அறிதரத் தெருட்டல் போன்ற

#562
வில் தவழ் சூழி யானை மிகப் பொழி தானம் பாய்ந்து
முற்றவும் வழுக்கலுற்ற வீதியில் முனியும் ஊடல்
பொன் தொடியவர் எறிந்த மணிக் கலன் பொலிதலாலே
உற்ற கால் வழுக்கி வீழ்தல் ஒழிந்தனர் நடப்பார் யாரும்

#563
கொல் நுனை மருப்பு யானைக் குழாம் பொழி தானம் வாவும்
துன்னு உளைப் பரி விலாழி துலங்கும் அ நகரம்-நின்றும்
பன்னும் மண் உலகம் எங்கும் பரத்தலால் வழுக்கும் என்று
நல் நிலம் கால் தோயாமல் நடக்கின்றார் துறக்கவாணர்

#564
நயக்கும் மாதர்கள்-தம் கூந்தற்கு இடும் நறும் புகை விண் மாதர்
வயக்கும் மெய் சூழ்தல் நோக்கார் மணம் அவர்க்கு இயற்கை என்பர்
இயற்கையைச் செயற்கையாகச் செயற்கையை இயற்கையாக
மயக்கும் மற்றவரைக் கேட்கின் இலக்கணை வகையாம் என்பர்

#565
மங்கலப் பொலிவு மிக்க மாடமாளிகையும் வாசத்
தொங்கல் அம் கூந்தல் நல்லார் தொகுதியும் விருந்தை ஊட்டும்
பொங்கிய களிப்பும் ஈகைப் புகழ்ச்சியும் நல்லோர் வாழ்த்தும்
பங்கம்_இல் மக்கட்பேறும் பண்பும் மிக்கு உளது அ மூதூர்

#566
பணை புகை மிகுதியாலே படர் தழல் மிகுதிதான் இத்
துணையது என்று உணர்வார் போலச் சொற்ற இச் சிறப்பினாலே
மணம் மலி புகழ்க் குசேலன் மனைச் சிறப்பினையும் ஓர்தி
அணவுறும் அஃது எற்று என்று வினவற்க அரசர் ஏறே

#567
ஊர்ப்புறம் அரசர் முன்னோர் உடங்குற இறுத்த வேதச்
சீர்ப் புகழ்க் குசேலன் என்பான் சேய்மையே நகரம் நோக்கித்
தார்ப் பொலி மார்பக் கண்ணன்-தன் அருள் வலியால் இன்னும்
பார்ப்பன பல உண்டு என்னாப் படர்ந்தனனாகிச் சென்று

#568
பெரு மதில் வாயில் எய்தப் பிறங்கும் அ நகரத்து_உள்ளார்
அருமை சால் களிப்புப் பொங்க அமைந்த கையுறைகளோடும்
திரு மலி மங்கலங்கள் சிறப்புற ஏந்திக் காரும்
வெருவு பல்லியம் இயம்ப விரைந்து எதிர்கொள்ள வந்தார்

#569
வாழ்ந்தனம் வாழ்ந்தேம் என்னா மலர் முகம் கொடு மண் தோயத்
தாழ்ந்தனர் தேர் மேல் வந்த சாந்தனை அந்தகாரம்
போழ்ந்து ஒளிர் சிவிகை ஏற்றிப் பொலம் குடை நீழல் செய்ய
ஆழ்ந்த அன்புடையர் ஆகி அமைதரக் கொண்டு செல்வார்

#570
பல்லியம் இயம்பச் சில்லோர் பைம்பொன் கால் கவரி வீசச்
சில்லி அம் தடம் தேர் முன் பல் சேனையும் மிடைந்து சூழ
நல் இயல் மங்கலங்கள் நான்மறையவர்கள் பாட
அல்லி அம் கமலக் கண்ணற்கு அன்பு_உளான் வீதி சார்ந்தான்

#571
இரு புறத்து உள்ள மாடத்து இலங்கு சாளரங்கள்-தோறும்
மருவுற வதனம் வைத்து மங்கைமார் மகிழ்ந்து நோக்கிப்
பொருவு_இல் இ மறையோன் செய்த புண்ணியம் எற்றோ இந்த
இருமை சால் சிறப்பை உற்றான் என்று பற்பல சொல்வாரால்

#572
கிள்ளுபு பற்றுதற்கும் கெழுமுறு தசை இலா மெய்
எள்ளுபு கழிக்கும் கீறல் இயை பழம் கந்தை என்றும்
கொள்ளுபு திரிவோன் அம்மா குனி சிலை மாரன் ஒப்பும்
தள்ளுபு பழிக்கும் மெய்யன் சார்ந்தனன் பாரீர் என்பார்

#573
கந்த மூலம் புசித்தும் கான் முதல் இடம் வதிந்தும்
பந்தமது ஒழித்தும் சாலப் பண்ணுவர் தவம் பல்லோர்கள்
தந்து நேர் ஒசி மருங்குல் தாம வார் கரும்_குழாலே
இந்த மா மறையோன்-தன் பேறு யாவரே பெற்றார் என்பார்

#574
அருமை சால் அறம் விருத்தி ஆகுக என்றும் என்று
பெரு மறை முழங்கும் அன்றே பேரறம் பற்பல் நாளும்
ஒருமை அன்பினில் உஞற்றி வந்தனன் உதன் விருத்தி
இருமை இச் செல்வம் கண்டீர் இன்னும் என் பெறுமோ என்பார்

#575
ஏவர் எவ்வுயிரிடத்தும் இலங்கு அருள் செலுத்திநிற்போர்
தேவரில் உயர்ந்தோர் அன்னோர் என மறை செப்புமாற்றால்
மூவரும் புகழ் குசேலன் மூதருள் உடைமைக்கு இந்தப்
பூ வரும் உயர்வோ இன்னும் பொலிவு வேறு உண்டால் என்பார்

#576
மனம் மொழி காயம் என்ன வகுத்திடு கரணம் மூன்றும்
கனம் விளர்ப்பு எனக் கறுத்த கண்ணன்-தன் அடிக்கே ஆக்கித்
தினமும் நல் நெறியில் நிற்கும் செயிர் இலாச் சீர்த்தியான் இப்
பனவனுக்கு இதுவோ செல்வம் பகர் அரிது இனும் உண்டு என்பார்

#577
புயல் நிகர் வண்ணத்து அண்ணல் பொருவு_இல் அம்போருகக் கண்
நயனுறச் செல்லுமாறே நல் திருமகளும் செல்வாள்
பயனுறு இப் பனவன் மேல் அப் பார்வை மிக்கு ஆயிற்று அந்தச்
செயலினுக்கு ஏற்குமாறு அத் திருவும் வந்து உற்றாள் என்பார்

#578
பைத்த கானகம் வதிந்தும் பருப்பதக் குகை வதிந்தும்
எத்துணை நல் தவங்கள் இயற்றி நன்கு உயர்ந்தாரேனும்
தத்தும் நீர் உடை மண் ஆளும் தன்மை வந்து உற்றதாகின்
மெத்திய மனத்தர் ஆகி விரும்பிடார் யாவர் என்பார்

#579
குமைத்த பற்று இகந்தாரேனும் கடவுளால் கொடுக்கப்பட்டது
அமைத்திடும் நன்றே ஆக அல்லது தீங்கே ஆக
இமைத்திடும் அளவே ஆக எக்காலும் ஆக இன் தேன்
சமைத்த மென் மொழியீர் சற்றும் தள்ளுவார் உளரோ என்பார்

#580
கரிசறு மனைவி பல் கால் வேண்டிடக் கண்ணன்-பால் சென்று
உரிய அன்போடும் தன்னால் உதவியது அளித்துக் கண்டு
வரிசைகள் மிதப்பப் பெற்று வளர் பெறும் திருவும் பெற்று இப்
பரிசு வந்தனன் நம் போல்வார் பாக்கியம் அனையான் என்பார்

#581
சான்றவர் திரு உற்றாலும் தகுதியின் மிடி உற்றாலும்
ஆன்ற தம் நீர்மை குன்றார் அடல் வலிச் சனகன் என்பான்
ஏன்ற செந்தண்மை வெம்மையிடைச் சமம் கொண்டால் போலத்
தோன்றுவர் மயக்கம் பூணார் துடி இடை மடவீர் என்பார்

#582
பற்று அறத் துறந்தோனுக்குப் படர் பெரும் திருவும் மற்றை
முற்று இழையவர் முயக்கும் நன்று-கொல் என்பார் முன்னர்
நல் தவச் சிவனன் என்பான் நயம் தரும் இளமை வாய்த்துப்
பொன் தொடிப் போகம் பல் நாள் புரிந்திருந்திலனோ என்பார்

#583
** கொச்சகக்கலிப்பா
என்று உரைத்த சுகமுனிவன் இணை அடித் தாமரை வணங்கித்
துன்று அலர்த் தார் துயல்வரு திண் தோள் வேந்தன் சிவனன் எனும்
இன் தவத்தன் யார் இளமை எங்ஙன் அடைந்தான் மடவாள்
மன்றல் உற்றது எவ்வாறு வகுத்துரைத்தி என உரைப்பான்

#584
பேருலகு கொண்டாடும் பிருகு எனும் பெரும் தவத்தோன்
சீருறு நல் திரு மைந்தன் சிவனன் எனும் பெயர் உடையான்
தார் உருவப் பூண் மார்பா தயங்கு இமயகிரிப்-பால் ஓர்
வார் உலவைப் பூம் கானம் வதிந்து தவம் புரிந்தனனே

#585
பற்பல நாள் இருக்கை எழாப் பரிசு இருந்து தவம்புரியும்
பொற்புறு மா தவன் உடம்பைப் புற்று மூடியது அதன் மேல்
கற்பு முதல் கொடி படர்ந்து காமரு பல் அரும்பு ஈன்று
சொல் பெறு மா மலர் பரப்பித் துதைந்தனவால் அ நாளில்

#586
நையாது இவ் உலகு உயிர்க்-கண் நாள்-தோறும் அருள் சுரப்போன்
பொய் ஆதி கடிந்த தவப் புனிதர் அடி முடிக் கொள்வோன்
மெய் ஆதி நல் குணங்கள் விரும்பி அடைதரப் பொலிவோன்
சையாதி எனும் நாமம் தரித்த ஒரு தார் வேந்தன்

#587
அன்னவன்-தன் மகள் வானத்து அணங்கினர்க்கும் அணங்கு அனையாள்
கொல் நவில் வேல் விழியினாள் கோதறு தே மொழியினாள்
துன்னும் நறும் குழலினாள் சுகன்னி எனும் பெயர் உடையாள்
மன்னு சில தியரொடும் பூக் கொய்வான் அவ் வனம் வந்தாள்

#588
பாங்கியர்கள் தன் சூழப் பாங்கு எங்கும் தவ மலர்ந்த
பூம் கொம்பர் போல் நடந்து பொலி விரைப் பல் மலர் கொய்வாள்
தேங்குற வெள் எனப் பூத்துத் திகழ் முல்லை சூழப்பட்டு
ஆங்கு உயர் வன்மீகம் கண்டு ஆர்வத்தின் வந்து அடுத்தாள்

#589
மாதர் நறும் கொடி படர் வன்மீகத்து உள் இருப்பதுதான்
யாது அதனை அறிவாம் என்று இல்லி வழி நோக்குதலும்
தீது அகல் நல் தவப் பெரியோன் செய்ய விழி தோன்ற இறும்
பூது உடையள் ஆகி இது பொன்வண்டோ என நினைந்து

#590
ஒரு சிறிய திரணம் எடுத்து உறச் சுலவிச் சூன்றிடலும்
மருவு பெரும் தவ யோகம் கழிதர இ மணிப் புற்றின்
அருகுற வந்து யார் இது செய்தார் அறிவல் எனப் பார்த்தான்
கரு நறு மென் குழலாளைக் கண்ணுற்றான் மா தவனே

#591
தாமரையில் வாழும் ஒரு தையலோ அயிராணி
மா மகளோ இரதியோ மற்று இவள் என்று உள் நினைந்தான்
காமனும் ஆங்கு அஃது அறிந்து கழை குழைத்து நாண் பூட்டித்
தே மலர் வாளிகள் பலவும் சிந்தினான் மேன்மேலும்

#592
பொங்கி எழு பெரும் காமப் புலிங்கத் தீக் கொழுந்து ஓடி
மங்குதல் இலாது அழற்ற ஆற்றானாய் மா தவத்தோன்
தங்கிய புற்றுச் சிதர்ந்து தரை வீழக் கரம் நீட்டிக்
கொங்கு அலர் மென் குழல் மடவாள் கோல் தொடிக் கை பற்றினான்

#593
வெருக்கொண்டு பதைபதைத்து விதிர்த்து உதறிக் கரம் பறித்துக்
குருக் கொண்ட சிலம்பு அலம்பக் கோல வளையும் புலம்பத்
தருக்கு என்றும் அவிந்த இடைத் தயங்கு மேகலை அரற்றப்
பொருக்கென்று பாங்கியர்-பால் போய்விழுந்தாள் பொன்_கொடியே

#594
வாய் புலர்ந்து கண் சாம்பி மயங்கினாள் செயல் நோக்கிப்
பாய வனத்து என் கண்டோ பயந்தாள் மற்று இவள் என்று
தேயும் இடைப் பாங்கியர்கள் சிவிறியால் வீசி உடல்
தோய் புழுதி துடைத்து மிக உபசரிப்பத் துயர் தீர்ந்தாள்

#595
அன்ன பொழுது அடல் பரி ஊர்ந்து அரசன் சையாதி என்பான்
பொன் அனைய மனைவியர் நாலாயிரவர் புடைசூழ
மின் அவிர் அப் பூம் சோலை வினோதம் நிமித்தமதாகத்
துன்னினான் பரி இழிந்து சூழும் வளம் பார்த்து உவப்பான்

#596
மன் புற்றின்-நின்று வெளி வந்து நின்றான்-தனைக் காணூஉ
அன்புற்றுக் கொண்டாடி அடி பணிந்தான் உரு நோக்கி
இன்புற்ற விழியிடை நீர் வார இது செய்தவர் எவ்
வன்புற்ற மனத்தர் என வனம் முழுவதும் ஆராய்வான்

#597
இலகு பெரும் பாங்கியரோடு இருந்த மகள்-தனைக் கண்டான்
அலகு_இல் தவ முனிக்கு இடுக்கண் ஆர் செய்தீர் எனக் கேட்டான்
சிலதியர் யாம் செய்திலோம் என்று ஒழிந்தார் செய்த மகள்
நிலவுற வந்து அடி வணங்கி நிகழ்ந்தன எலாம் உரைப்ப

#598
என் செய்தாய் பேதாய் என்று இரங்கி விரைந்து ஆங்கு எய்தி
மன் செய்த முனிவன் அடி வணங்கி அடியேன் புதல்வி
புன்செய்கை-தனைப் பொறுக்கவேண்டும் எனப் புகன்று இரப்ப
நன் செய்கை உன் செய்கை என்று நவில்வான் முனிவன்

#599
இப்பொழுதே உன் மகளை எழில் மன்றல் முடித்து எனக்குத்
தப்பற நீ தருவாயேல் பொறுத்திடுவன் தாராயேல்
வெப்புறும் என் சாபத்தால் வீடிடும் நின் குலம் என்றான்
ஒப்பு_இல் புகழ் மன்னவனும் உடன்பட்டான் மகட்கொடைக்கு

#600
அணி முடங்கல் திசைதிசை உய்த்து யாவரையும் வரவழைத்துத்
தணிவு_இல் மகிழ் தலைசிறப்பத் தழல் முன்னர் விதிப்படியே
கணிதம்_இல் வண் புகழ் மன்னன் கலியாண வினை முடித்து
மணி நகை வாய்ப் பசும்_கொடியை மா தவன் கைக் கொடுத்தனனே

#601
சீலம் மிகு சிவனன் எனும் திரு முனிவன் சுகனி எனும்
கோல மடவரல் கூடிக் கொடும் துயர் நீத்து உளம் களித்தான்
ஏல நறும் குழல் மாதும் இரும் கற்பில் சிறந்தனளாய்ச்
சாலவும் மெய்ப் பணி எவையும் தலைக்கொண்டு வாழ்ந்திடும் நாள்

#602
ஆன்ற சிறப்பு அவ் வனத்தில் அசுவினி தேவர்கள் ஒருநாள்
தோன்றினர்கள் எதிர்நிற்கும் சுகனி திரு உருக் கண்டு
மான்ற உளத்தினர் ஆகி மாரவேள் கணைக்கு இலக்காய்
ஊன்று பெரும் காமத்தின் உள் உடைந்து மொழிவாரால்

#603
கற்பகத்தின் பூம் கொம்பே காமரு பூம் பசும் கொடியே
பொற்பு அவிரும் மதிக் கொழுந்தே பொலி இரதச் செங்கரும்பே
சொல் பெறு நின் பெறு தந்தை யாவன் மணித் தூ முறுவல்
வில் புருவப் பைங்கிளி நின் பெயர் யாது விளம்புவையால்

#604
அமரர் உடல் பிணி தவிர்க்கும் அசுவினி தேவர்கள் யாங்கள்
சமரம் மிகு வேள் ஆற்றல் தவிர்த்து எமை ஆள் என்று இரப்பத்
தமரம் மிகு கரும் கழல் கால் தரியலர் கூற்று எனப் பொலி வேல்
பமரம் மிகு தார்ப் பெருமான் பார் ஆள் சையாதி மகள்

#605
என் பெயர் யாது எனில் சுகனி இரும் தவத்து மேலானாய்
மன் பெறு மா முனி சிவனன் மனைக்கிழத்தி ஆதலினால்
கொன் பெறும் நும் உளத்து எண்ணம் கூடாது இவ்வாறு நினைந்து
என் பெற வல்லீர் போம் என்று எடுத்தெறிந்து பேசினளால்

#606
புற அடி நோக்குபு மொழிந்த பொன்_அனையாள் சொல் கேளா
இறவு உள தன்மையர் ஆகி எழில் பொலிவு மிக வாய்த்த
அற வடிவத்து எம் போகம் போல நரை திரை அமைந்த
துறவி தரும் போகமோ சுகன்னிக்குத் தக்கதே

#607
மலர் பொதுள் இத் தீர்த்தத்து உன் மகிழ்நனும் யாமும் படியில்
குலவு வனப்புற வாய்த்துக் குலையாத இளமையொடு
நிலவுவம் அவ் உரு மூன்றில் நினக்கு இயைந்த சீர் உருவைத்
திலக நுதல் மட மாதே சேர்ந்து தழுவிக் கோடி

#608
என்று உரைத்த வார்த்தை-தனக்கு இலவ வாய் நெகிழாளாய்ச்
சென்று மகிழ்நனுக்கு உரைப்பத் திரை நரை மூப்பு இவையாலே
துன்றி எழு வருத்தம் இறத் தொலையாத இளமை பெறல்
நன்று இயலும் காரியம் என்று உளத்து ஓர்ந்தான் நல் தவனும்

#609
மங்கை திரு முகம் நோக்கி மற்று அவர் சொற்கு உடம்படு எனப்
பங்கமறு தவன் மனையை முன் போக்கிப் பின் படர்ந்தான்
அங்கு அவரும் மகிழ்ந்து முனிவரனொடும் அத் தடம் படிந்து
பொங்கும் இளமையும் வனப்பும் பொலிவுற்றார் வெளி வந்தார்

#610
செங்கதிரோன் உதயம் எனத் திகழ் மூவர் உரு நோக்கி
மங்கையர் சூளாமணிதான் வடுவுறாது ஒழிதர என்
பொங்கு இயல் கற்பினுக்கு என்னாப் பொருக்கெனத் தன் மகிழ்நன் உரம்
கொங்கை ஞெமுங்குறத் தழுவிக்கொண்டு மகிழ் கூர்ந்தனளே

#611
மா தவனும் களி கூர்ந்து மனம் சமழ்ப்ப முகம் சாம்பிப்
போத அஞர்க் கடல் அழுந்தும் புலவர் இருவரை நோக்கி
மேதகையீர் மூப்பு அகன்று விரும்பு இளமை பெறப் புரிந்த
ஏதம்_இல் நல் உதவியை நான் என்றும் மறவேன் என்றான்

#612
அருள் செய் மகம் ஒன்று இயற்றி அவிப் பாகம் பகிர்ந்து அளித்துப்
பொருள் செய் அவர் மனம் மகிழப் பொலிவித்துப் போக்கிய பின்
தெருள் செய் உள முனி வேந்தன் சீர் வேந்தன் பயந்த இருள்
மருள் செய் குழலொடு கூடி வாழ்ந்திருந்தான் அது நிற்க

#613
மாதர் பலர் இவ்வாறு வகுத்துரைப்ப மணிச் சிவிகை
மீது புரந்தரன் உலவும் விழவு மிகச் சமழ்ப்பு அடைய
ஆதரவில் பல்லோரும் அகம் மகிழ்ச்சியுறச் சென்று
தாது அவிழ் தாமரை_மார்பன் தன் மனை வாயிலை அடைந்தான்

#614
** எழுசீரடி யாசிரிய விருத்தம்
வாயிலை அடைந்த மறைக் குலத் தலைவன் மா மணி யானம்-நின்று இழிந்து
மேய தன் முன்னர்க் கந்தை போல் துவாரம் மிக்க சிற்றிலைக் குடில் திரிந்து
தூய செம்பொன்னால் அமைத்திடப்பட்ட சுடர்ப் பெரு மாளிகை ஆகிப்
பாய பல் வளனும் நிறைதரப் பொலியும் பண்பினை நோக்கினன் நின்றான்

#615
மனைக்கு உரி மரபின் தனக்கு இணை இல்லா மட நடைக் கற்புடையாட்டி
கனைக்கும் ஒண் முகிலைக் கிழித்து எழு செம் கேழ்க் கதிர் எனக் கவின் குடியிருந்த
நனைக் குழல் அணி செம் மணித் தகட்டு அணியும் நாடும் இந்திரவில் அம் மங்குல்-
தனைக் குழுமுற்றுச் சூழ்ந்து எனப் பல வீத் தண் நறும் தொடையலும் பொலிய

#616
அ முகில்-நின்று வழுக்கி ஓர் மின்னல் அவிர் பிறை மேல் கிடந்தாங்குத்
தெம் முனை மழுங்க வளையும் வில் புருவச் செம்பொன் செய் பட்டமும் கதிர்கள்
விம்மும் அப் பிறையின் உரோகணி உள்வாய் வீற்றிருந்து என வியன் கற்றை
பம்மும் ஒள் வயிரப் பொட்டும் மற்று அணிந்த பல் கதிர்ப் பணிகளும் விளங்க

#617
இலவு இதழ் உள்வாய்க் கற்பினது அரும்பை இணைத்து என வாயகத்து இணைந்து
நிலவு பல் அழகைக் காண நிற்பது போல் நிற்கும் மூக்கு அணிப் பரு முத்தும்
அலர் இதழ்ச் செந்தாமரை-கொல் இ முகம் என்று அறிதரக் கதிர் இரண்டு இரு பால்
குலவவுற்று இருந்தால் எனச் செவி அணிந்த குரு மணி ஓலையும் பொலிய

#618
வலம்புரிக் கழுத்தைக் கண்டம் என்று அடுத்த மாதரும் சொலா வகை மறைத்த
நலம் புரி பதக்கம் கோத்த பல் மணிச் சில் நல் அணிகளும் எழில் வாய்ந்த
பொலம் கெழு குவட்டில் பல் நிற அருவி பொலிந்து எனக் கொங்கை மேல் ததும்பும்
இலங்கு வெண் தரளம் பவளம் மாணிக்கம் எரி பொன் மாலையும் நனி ஒளிர

#619
தோள் அடி நிலையில் அரதனத் தொடியும் சுடர்தரு முன்கை வெள் வளையும்
வாள் அவிர் வயிரக் கடகமும் செம்பொன் இடைக்கிடை வைத்த செம் துப்பும்
நீள் சுடர்த் தொடரும் அமைந்த சூடகமும் நிரை விரல்-தொறும் எழு கதிரை
ஆள் சுடர் மணி வைத்து இழைத்த ஆழிகளும் அந்தகாரம் குடி ஓட்ட

#620
பெரு விலைச் செம்பட்டு உடுத்திய இடையில் கவ்விய ஒட்டியாணமும் பேர்
உருவ எண் கோவைக் காஞ்சியும் செம் கேழ் உமிழ் எழு கோவை மேகலையும்
பொருவறும் ஈரெட்டு இரட்டிய கோவை புரி கலாபமும் விரி சிகையும்
மருவு செம் பரிதி மின்மினி ஆக வழங்கு ஒளி திசை எலாம் போர்ப்ப

#621
கால் அணி செம்பொன் சதங்கை அம் தொடரும் கதிர் மணித் தண்டையும் சிலம்பும்
சாலவும் ஒளிர்ந்து கலின்கலின் என்னத் தகைந்த பூம் கற்பகக் கொம்ப
ரால் என நடந்து மங்கலம் ஏந்தி அளவறு பாங்கியராய
கோல மா மடவார் சூழ்ந்தனர் நடப்பக் கொழுநனை எதிர்கொள்வான் வந்தாள்

#622
வந்தனைபுரிந்து பைம்பொன் ஆதனத்தில் மகிழ்நனை நிறுத்தி உள் மகிழ்ந்து
சந்த மென் மடவார் செம் மணிச் சிரகத் தண் புனல் வாக்கிடத் தன் பொன்
செம் தளிர்க் கரத்தால் திருவடி விளக்கிச் சிறந்த வெண்பட்டினால் ஒற்றிக்
கந்த நல் வருக்கம் பூசி மென் மலரால் கட்டிய மாலையும் சாத்தி

#623
விரை கெழு தூமம் கமழ்தரக் கோட்டி மிளிர்தரு விளக்கமும் காட்டிக்
கரை_இல் பல் மணி நீராஞ்சனம் வளைத்துக் கடிது இரு பாலினும் எறிந்து
புரை_இல் கற்புடையாள் வணங்கினள் நிற்பப் புயல் எனப் பல்லியம் குளிற
வரை எனப் பணைத்துக் கதிர் ஒளி மழுக்கும் மாளிகைக்கு எழுந்தருளினனே

#624
இரசிதக் குவையும் காஞ்சனக் குவையும் இலகுறு செம் மணிக் குவையும்
தரள வெண் குவையும் வச்சிரக் குவையும் சாற்றரு மரகதக் குவையும்
பரவிய கிரணச் செம் துகிர்க் குவையும் பாய மேதகப் பெரும் குவையும்
அரதன வகையின் மற்று உள குவையும் அறை-தொறும் கிடப்பன கண்டான்

#625
பொன் கலப் பேழை மணிக் கலப் பேழை புரை_இல் வெண்பொன் கலப் பேழை
வில்படு விசேடக் கலன் நிறை பேழை மேவிய இருபத்தேழ் மகாரும்
அற்புற அணியத் தனித்தனி வகுத்த அணிகலப் பேழை பல் நிறத்த
சொல் பெறு விலைப் பட்டு அடுக்கிய பேழை தொகை இலாது இருப்பன கண்டான்

#626
குரு மலர் செம்பொன் கலம் எதிர் வைத்துக் கோதறு வெள்ளிய மூரல்
பருகுதற்கு அமைந்த இன் சுவைக் குழம்புப் பால் விராய் உபசரித்து ஊட்டத்
திருகுபு வேண்டா என்மரும் அதனைத் திருமிப் பாராது செல்குநரும்
அருகிய பசியும் இல்லை என்மருமாய் அணி மகார் செருக்குதல் கண்டான்

#627
வயிர ஒண் சுட்டி நுதல் மிசைப் பொலிய மார்பிடை ஐம்படை விளங்கக்
கயில் செறி தொடரும் கடகமும் கரத்தில் காதில் அம் பொன் குழை தயங்கச்
செயிரறு பொன் நாண் அரை மிசைக் கதிர்ப்பச் சிறு சிலம்பு அடிகளில் கவினப்
பயில்தரு மைந்தர் கலகலகல எனப் பண்பின்-நின்று ஆடுதல் கண்டான்

#628
தளவு அரும்பு அனைய கரிசு_இல் வால் அரியும் தயங்கு செம்பொன் நிறப் பருப்பும்
வளம் மிகு குறையாக் கறிகளும் குறைந்த மாண் கறிக் குப்பையும் மற்றைக்
கிளர்தரும் உபகரணங்களும் உலோகம் ஏழினும் கெழுமுறச் செய்த
பளகறு கலங்கள் பல்லவும் அடும் இல் பரப்பு எலாம் பொலிவன கண்டான்

#629
** கலி நிலைத்துறை
கரை_இல் பல் வளம் சென்று உலாய் நோக்கும் அக் காலைப்
புரை_இல் கற்புடை மனைவியார் விரைய முன் போந்து
விரை நறும் செழும் தயிலக்காப்பு இடுபு என் உள் விரும்ப
உரை சிறந்திடு நானம் செய்தருளும் என்று உரைப்ப

#630
அங்கு ஒர் ஆதனம் இட்டனள் ஒருத்தி வந்து அதன் மேல்
துங்க மா மறைத் தலைமையோன் இருந்தனன் துனைந்து ஓர்
மங்கை பொன் செய்த வள்ளத்துத் தைலம் முன் வைத்தாள்
செம் கை பற்றி ஓர் நங்கை பொன் சிவிறியை வீச

#631
மாம் தளிர்க் கரத்து அ நறும் தயிலத்தை வாக்கிப்
பூம் தடம் கண் ஓர் மடக் கொடி சென்னியில் பூசி
வாய்ந்த அங்கத்தும் அப்பினள் வயங்கு பாசனங்கள்
ஆய்ந்த நீர் நிறை ஆடிடம் புகுந்தனன் அம்மா

#632
ஆங்கு மாதர்கள் குழுமி நெய் அகற்றி வெப்பு அடு நீர்
பாங்கின் வாக்கிட மூழ்கி மெய் ஈரமும் பாற்றி
ஓங்கு வேறு உடை உடீஇ நியதிக் கடன் உவகை
தேங்குமா முடித்தனன் புகுந்தனன் உணும் தேஎத்து

#633
இந்திரன் திசை நோக்கினனாய் உவந்திருந்தான்
நந்து அரம்பை அம் பேர் இரும் பாசிலை நயக்க
முந்து அரிந்த வாய் வலம்பட முன்பு போகட்டார்
சிந்தை அன்பொடு கரக நீர் புரோக்கித்துத் திருத்தி

#634
நிலவும் மெய்ப் பணி மாதரார் எடுத்துக் கை நீட்டக்
கலவ மா மயில் சாயல் அம் கற்புடை மனையாள்
குலவு தன் கையால் குய் கமழ் கருனை நல் வறையல்
பலவும் இன் புளி விரவிடாப் பாய தீம் கறியும்

#635
அறையை நேர் ததி ஐயவி அளாவிய கறியும்
முறையின் முற்ற வேவாது அடு முதிர் சுவைக் கறியும்
குறைவு_இல் புல் நிலப் பயறொடு கூட்டிய கறியும்
நிறையு நெய்ப் பசை அறா நிகரறு புளிங்கறியும்

#636
கதிக்கும் மற்றைய கறிகளும் ஊறிய காயும்
உதிக்கும் நோலையும் அடையும் மற்று உள்ள சிற்றுணவும்
விதிக்கும் சித்திர அனங்களும் மேவு பாளிதமும்
பதிக்கும் அன்பொடு பேர் இலை புதைபடப் படைத்து

#637
முல்லை வீயினை நிகர்தரு மூரலும் படைத்து
வல்ல பொன் நிறப் பருப்பு அடு திரளையும் வைத்து
நல்ல ஆன நெய்க் குடம் கவிழ்த்து இவ் வகை நயப்ப
எல்லை_இல் மறையவர்க்கும் மைந்தருக்கும் பாங்கு இயற்றி

#638
உவந்து முன்னர் நின்று உண்கமா என்று உபசரிப்பத்
தவம் தழைத்த மா மறையவன் தகுவன உண்ணா
இவர்ந்த ஆசையின் விலாப் புடை வீங்க உண்டு எழுந்த
நிவந்த வேதியர் குழாத்தொடும் எழுந்து அவண் நீந்தி

#639
வளம் கொள் நீரில் வாய்பூசினன் நியதியின் வகையும்
களங்கம்_இல் மறையவரொடும் இயற்றினன் கந்தம்
தளம் கொள் பூம் தொடை விரை கெழு பாகு அடை தாங்கி
விளங்கு மன்னர் முன் யாவர்க்கும் இவ் வகை விரும்பி

#640
விருந்துசெய்தனன் சாந்தம் பூம் பாகு வெள்ளிலையும்
திருந்த நல்கினன் அவரவர் இடம் புகச் செலுத்திப்
பொருந்தும் இவ் வகைப் போகத்தில் சிற்சில் நாள் போகக்
கரும் துழாய் கமழ் சேவடி கமழ் தரும் உளத்தான்

#641
ஒரு தினத்தினில் உவளக வரைப்பினை உற்றுக்
கருதும் மக்களும் மனைவியும் உறா வகை கழிப்பி
இரு கவாடத்தை நூக்குபு தாழக்கோல் இறுக்கி
மருவு ஒருத்தனாய் இருந்தனன் இன்னன வலிப்பான்

#642
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்
இம்மை-தனில் மற்று இரும் பொருளை ஈட்டல் காத்தல் இழத்தல் என
வெம்மை புரி மூ வகைத் துயரும் விளையாநிற்கும் பாவத்தால்
அம்மை நிரையத் துயரும் உறும் அந்தோ சீசீ இப் பொருளைச்
செம்மையுடையோர் வேண்டும் எனச் சிந்தித்திடுவரோ மறந்தும்

#643
ஊழின் வலியால் பெரும் செல்வம் உறினும் காலம் உண்டாக
வாழும் கருத்தராய்த் துணிவுற்று அடங்கத் துறப்பர் அறிவுடையோர்
தாழும் அஞர் போய் ஒழிதல் அன்றித் தகும் இம்மையின் கரணம் மூன்றும்
வாழி இலக்கில் சிதறாமை மருவப்பெறும் பேரின்பத்தால்

#644
உடல் முன் பொறிகள் தமக்கு உரிய ஊறு முதல் ஐம்புலன்களையும்
அடல் நல் தொழில் அப் புலன் நிமித்தம் ஆகப் படைத்த அனைத்தினையும்
விடல் மிக்கதுவால் எவற்றினுக்கும் விருப்பின் சில உள்ளனவேனும்
படரும் மனம் மற்று அவ் வழியே பயக்கும் அளவு_இல் பவத் தொடர்ச்சி

#645
பரு வந்திடச்செய் பவத் தொடர்ச்சி பாற்றத் துணிந்த பண்பினர்க்கு
மருவு இந்திரிய உணர்வினொடும் வழங்கும் பிராணவாயுவொடும்
ஒருவு_இல் காம வினை விளைவினோடும் கூடும் மன உடம்பும்
உருவ உடம்பும் மிகையானால் தொடர்ப்பாடு இன்னும் உளவே-கொல்

#646
தான்_அல் உடலை யான் என்றும் தன்னோடு உரிமை அல்லாமை
ஈனமுறு பல் பொருள் அனைத்தும் என்னது என்றும் உற நினைத்து
மான அயர் பற்றினுக்கு ஏது மயக்கம் அதனை மாய்ப்பவனே
வானவரும் செல்லரும் உலகம் புகுவான் என்னும் மறை நூல்கள்

#647
பற்றல் ஆகா இரு வேறு பற்றை இறுகப் பற்றினரைப்
பற்றல் ஆகாது என அஞர்கள் பரிந்து கண்ணோட்டம் செயுமே
பற்றல் எல்லாம் அறத் துறந்த பண்பினாரே தலைப்பட்டார்
பற்றலுடையார் எஞ்ஞான்றும் காண்பார் நிலை_இல் பல்லவையும்

#648
பொருவு_இல் தேவும் இரு பயனும் பொய்யாது அணுகும் மறுபிறப்பும்
மருவும் முயலின் கோடு ஆமை மயிர்க் கம்பலம் விண் மலர் எனும் நூல்
ஒருவும் மதி அற்று உறப் பற்றல் உறும் அஞ்ஞானம் விபரீதம்
இருவும் பிறப்பில் எஞ்ஞான்றும் அதனால் ஒழிதல் இன்பமே

#649
பகரும் தெய்வம் அம்மை வினைப் பயன் உண்டோ இன்றோ என்னும்
புகர் கொண்டிடு சங்கையின் நீங்கிப் பொலியும் ஞான அனுபவத்தால்
நிகர்_இல் உண்மை அறிந்திடுதல் நீளும்-தொறும் அவ் அனுபவம் அற்று
இகவு_இல் பழைய உலக ஆசார ஞானம் இரிந்திடுமே

#650
முதல் வெம் பவத்துக்கு எனும் மடமை முற்று ம் ஒழியச் செம்பொருளைச்
சுதம் என்பது அற நினைத்தலே தூய சமாதி என்பார் அவ்
விதம் நின்றிடின் பல் நாள் உடலை விடும் கால் வேறு எண் கலவாது
மதம் ஒன்று உற வேறு எண் கலப்பின் வருமே அதற்குத் தகு பிறப்பு

#651
அன்றே உள்ள அவித்தை எனல் அஞ்ஞானம் பல் விதம் மதித்து யான்
என்றே எழுதல் அகங்காரம் இது வேண்டுவது என்று எழுதல் அவா
சென்றே அது பற்றுதல் ஆசை மறுப்பில் சேறல் சினம் ஐந்தும்
நின்று ஏகிட நோய் ஒழியும் என நிகழ்த்தாநிற்கும் நிரம்பிய நூல்

#652
எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் எழுமைப் பவமும் ஈன்றிடும் வித்து
ஒல்லா அவாவே அப் பவத்தின் உறு துன்பு அறிந்தோன் உதியாமை
அல்லால் மற்றும் வேண்டுமோ வேண்டானால் அவ் உதியாமை
சொல் ஆர்ந்து இலங்கும் வேண்டாமை-தன்னை வேண்டத் துனைவின் வரும்

#653
அன்னோ அன்னோ வேண்டாமை அன்ன மேன்மைப் பெரும் செல்வம்
என்னோ காணப்படும் ஈண்டும் இன்று கேட்கப்படும் சிறப்பின்
மின் ஆர் ஆண்டும் அஃது ஒப்பது இன்றால் எனின் அவ் விழுச் செல்வம்
தன் ஆதரவில் பெறுவாற்குச் சாற்றும் உவமை உளதே-கொல்

#654
அற்றான் என்று சொலப்படுவான் ஆசை அற்றான் ஒருவனே
மற்று ஆதரவின் அஃது ஒன்றும் வைத்துப் பிற ஏதுக்கள் எலாம்
செற்றான் எனினும் அவை ஆக்கும் செயிர்த் துன்பு அகன்றானே அன்றி
உற்றார் வணங்கும் அவன் போல ஒழிந்தான்-கொல்லோ உறு பிறவி

#655
மெய்யை உணர்தல் முடிவாக வேண்டும் கருவி எலாம் பெற்றுச்
செய்ய முத்தி அடைவதற்குச் சிறந்துளோனை மறவி வழிப்
பைய நுழைந்து பவம் மீட்டும் பாய்த்திக் கெடுக்க வல்லது அவா
ஐய அதனுக்கு உளம் நடுங்கி அஞ்சிக் காத்தல் அறிஞர் தொழில்

#656
ஆதலால் இ மனை வாழ்க்கை அகத்தே இருந்து முத்தி-தனைப்
போத அடையத் துணிவதுதான் புணையா மஞ்சு துயில் பொருப்பைப்
காதல் மிகுதியால் பெயர்த்துக் கத்தும் தரங்கக் கடலிடை இட்டு
ஏதம் அகல அது பற்றி ஒருவன் கரை ஏறுதல் போலும்

#657
மனையில் பெரும் செல்வத்து உறைவோன் மருவு தியானமுறச் சிறிது
நினையின் காண வருவாரை நேர் சென்று அழைத்துத் தழுவிடவும்
வினயத்தினும் வினோதத்தினும் விரும்பிப் பேசிடவும் அவர்கள்
நினையப்பட்டது அளித்திடவும் பொழுது கழியும் நினைப்பு அழியும்

#658
ஒன்றும் பெறுதல் இலர் எனினும் உற்ற பெரும் செல்வத்தினர்-பால்
சென்று கொளும் நட்புடையர் எனத் தேயம் சொலற்கே சிலர் சூழ்வார்
மன்ற என்றாயினும் ஒர் பயன் வழங்கலாகும் என மூடல்
துன்றும் நறு நெய்க் குடத்து எறும்பு சூழ்தல் போலும் சிலர் சூழ்வார்

#659
பொறை இன்றேனும் பொறையுடையாய் புகழ் இன்றேனும் புகழுடையாய்
நிறை இன்றேனும் நிறையுடையாய் நீதியுடையாய் இன்றெனும் நல்
துறை இன்றெனும் நல் துறையுடையாய் என்று சூழ்வர் கேட்டவர்கள்
அறைகின்றனர் பல்லோரும் நமக்கு அமைந்த எலாம் என்று அகம் களிப்பர்

#660
களியின் தெய்வ சிந்தனையும் கழிந்தே நிற்கும் அது கழிய
அளியின் சிறந்த நல் அறமும் அகன்றே நிற்கும் அஃது அகல
ஒளி இற்றிட வந்து இருள் அடைந்தாங்கு உடற்றும் பாவம் வந்து அடையும்
விளியின் கொடிய நிரையம் எலாம் புகுந்து கிடக்கும் வேலை மிகும்

#661
அந்த நிரயக் கொடும் துன்பம் ஆரோ படுவார் நினைத்திடினும்
வெந்து புழுங்காநின்றது உளம் மேவும் இவைக்குக் காரணம் இப்
பந்தம் உறுக்கும் செல்வம் எனப் பயந்தானாய் இன்னன நினைந்தான்
இந்த வருத்தம் இறத் துதிப்பேன் எம்பிரானை எனத் துதிப்பான்

#662
** மச்சாவதாரம்
** எழுசீரடி யாசிரிய விருத்தம்
எழுத அரு மறையைக் கவர்ந்தனன் ஆகி எறி திரைக் கடல் புகுந்து ஒளித்த
முழு வலிச் சோமகாசுரன் உயிரை முனை கெழு மீனமாய்ச் சவட்டிப்
பழுது_இல் அ மறையை உலகிடை விரித்துப் பளகு அறுத்து உயிர் எலாம் புரந்தாய்
கொழுதி வண்டு உழக்கும் நறும் துழாய்ப் படலைக் கொற்றவ நின் அடி போற்றி

#663
** கூர்மாவதாரம்
எறி செறி தரங்கப் பாற்கடல் நடுவண் எறுழ் வரை மத்து எனக் கூட்டித்
தறி என மதியை நாட்டி வெண் பிறைப் பல் தழல் விழி அரவ நாண் பூட்டி
மறி தொழில் மறியச் சுரர் கடை கால் அ மந்தரம் கடல் அழுந்தாது
முறிவு_இல் மோட்டு ஆமை உருக் கொடு பரித்த முன்னவ நின் அடி போற்றி

#664
** வராகவவதாரம்
மலர் தலைப் புவியைப் பாயலாச் சுருட்டி மயங்கு பாதலத்திடைக் கரந்த
இலகு பொன் கண்ணன் உயிர் குடிப்பதற்கும் இமைப்பின் அப் புவி விரிப்பதற்கும்
நிலவு வெண் பிறைக் கோட்டு அடல் வலிக் கேழல் நிமிர் உருக் கொண்ட எம் பெரும
அலர் மகள் குடிகொண்டு உறை மறு மார்பத்து அச்சுத நின் அடி போற்றி

#665
** நரசிங்காவதாரம்
மலைத் தட நிறத்து முன்னவன் உயிரை மாட்டிய பழி கொளக் கருதி
அலைத்து அடல் தொலைத்துச் சுரர் முதல் யார்க்கும் அச்சுறுத்திட்டதும் அன்றிப்
புலைத் தொழில் உணர்வால் தன் பெயர் வழுத்திப் போற்றவும் புரிந்த பொல்லானைக்
கொலைத் தொழில் புரியத் தூண் கிழித்து எழுந்த கோளரி நின் அடி போற்றி

#666
** வாமனாவதாரம்
பெருகிய தவத்துக் காசிபன் அதிதி பிறங்குறு தந்தை தாய் ஆகத்
திருகறத் தோன்றி மமதையில் படிந்த திறல் கெழு மாவலி-பால் சென்று
உருகிய மனத்தின் மூ அடி மண் கொண்டு ஓர் அடிக்கு இடம் பெறாமையினால்
மருவு அவன் சிரத்தில் வைத்து உயிர் புரந்த வாமன நின் அடி போற்றி

#667
** பரசுராமாவதாரம்
மாண் உடைச் சமதக்கினி இரேணுகைக்கு மகன் எனத் தோன்றி மா மறையோர்ப்
பேண் உடைத்து உலக நடை நெறி இகந்து பெயர்ப்ப அரும் செருக்கினில் மூழ்கும்
கோண் உடைக் குரிசில் குலம் அறச் சவட்டிக் குலவும் அ மறையவர்ப் புரந்த
ஏண் உடைப் பரசிராம ஐம்படைக் கை இறையவ நின் அடி போற்றி

#668
** இராமாவதாரம்
தட நெடு மாடமாளிகை அயோத்தித் தசரதன் கோசலை மகவா
அடல் கெழு பாயல் சங்கு சக்கரமும் தம்பியராய் அடி பரவத்
திடனுறத் தோன்றிக் கடும் தொழில் அரக்கி சேயொடும் இறச் சிலை வாங்கி
மடன் இகு முனிவன் மகத்தினைக் காத்து ஓர் மாது கல் உருவினை அகற்றி

#669
பெரு வள மிதிலை நகர் அகம் புகுந்து பெயர்க்க அரும் கார்முகம் இறுத்துக்
குரு மலர் நிறையப் பூத்த கொம்பு அன்ன கோதையை மணந்து மீட்டு அயோத்தித்
திருநகர் அடைந்து தாய் உரை தாங்கித் தேவியும் தம்பியும் தொடர
மருவிய களிப்பின் அ நகர் நீங்கி மாண்பின் ஓர் கிராதனை நட்டு

#670
தவப் பெரு முனிவர் குடிகொளும் பன்னசாலைகள் கடந்து விண் தடவ
நிவப்புறு குடுமிச் சித்திரகூடம் அடைந்து அவண் நேயத்தின் இறுத்த
கவற்சி மிக்கு உடைய பரதனுக்கு இனிய கழறிப் பாதுகை கொடுத்து அனுப்பி
உவப்புற எவரும் தண்டகம் புகுந்து அங்கு உடன்று எழு விராதனை மாட்டி

#671
திகழ் சரபங்கன் கருத்தினை முடித்துச் செந்தமிழ் மணம் கமழ் செவ் வாய்ப்
புகழ் முனி இருக்கை அடைந்து அவண் ஒருவிப் பொலி பஞ்சவடித் தலம் அடையா
இகழ்வறும் எருவை இறைக்கு உளம் மகிழ்வித்து இராவணற்கு இளையவள் கலாம் கண்டு
அகழ்தரப் போந்த கரன் முதலோரை அடு தொழில் கூற்று உண நல்கி

#672
மாயையின் அடைந்த உழை உயிர் போக்கி மாதினைக் கவர்ந்து எழும் அரக்கன்
பாய ஒள் வாளால் சிறை அறுப்புண்ட படர் புகழ்த் தாதையைக் கண்டு
மேய பல் கடனும் விதியுளி முடித்து விலக்க அரும் கொடும் தொழில் கவந்தன்
ஆயவன் தொலைத்துச் சவரி பூசனை கொண்டு அகன்று போய் மதங்க வெற்பு அடைந்து

#673
கதிரவன் பயந்த மதலையை நட்டுக் கனம் தவழ் மராமரம் துளைத்து
முதிர் ஒளிக் குலிசப் படையினான் மகனை முனிந்து அடல் புரிந்து உலகு அடங்க
அதிர்தரத் திரியும் சேனை தன் சூழ அனுமனால் அறிவதை அறிந்திட்டு
எதிர் அறு கடல்-கண் ஒரு சரம் புகுத்தி இயங்குற நடவை உண்டாக்கி

#674
இலங்கையுள் புகுந்து தசமுகனவனுக்கு இளவல் விண் இறையவன் பகை முன்
பொலம் கழல் மைந்தர் மற்றையோரையும் வெம் போர்க்களத்து அவித்து வீடணற்கு
நலம் கெழும் உரிமை அரசு அளித்து உலகில் நாட்டு கற்பரசியை மீட்டு
நிலம் புகழ் அயோத்தி அடைந்து அரசு அளித்த இராகவ நின் அடி போற்றி

#675
** பலராமாவதாரம்
மல்லல் அம் புவனம் புகழ் வசுதேவன் மயில் இயல் தேவகி பிறருக்கு
ஒல் அரும் வனப்பின் உரோகிணி இவர்கட்கு ஒரு மகவா அவதரித்துக்
கொல்லுமா குறித்த பிரலம்பன் முதலோர்க் கூற்று உணக் கொடுத்து உயிர் புரக்கும்
சொல் அரும் சீர்த்திப் பளிக்கு உரு அமைந்த தூயவ நின் அடி போற்றி

#676
** கிருஷ்ணவதாரம்
பா அடிக் களிற்றுப் படை உடைக் கஞ்சன் பரித்து உறை மதுரை மா நகரில்
ஆவணித் திங்கள் நள்ளிருள் பக்கத்து அட்டமி-தனில் அரும் கற்பின்
மா வகிர்க் கரும் கண் தேவகி வயிறு வாய்த்திடக் கால் செறி கழன்று
மேவுறப் பணிந்த புகழ் வசுதேவன் மென் மலர்த் தடம் கரம் அடைந்து

#677
காவல் செய் புதவும் யமுனையும் நடவை கடிது இனிது இருளிடை உதவக்
கோவலர் பாடி நந்தகோன் மனையில் கோது_இல் கற்பு அசோதை ஈன்றெடுத்த
மா அலர் கதுப்பின் மாயை தான் பிறந்த மனையுறப் போக்குபு புகுந்து
தா அரு மகிழ்ச்சி யாவரும் அடையத் தடை அற வளர்தரு நாளில்

#678
மாயையின் அறிந்த மாதுலன் விடுக்க வந்த பூதனை உயிர் சவட்டிப்
பாய மென் சுவைய பண்ணிகாரம் பெய் பண்டி நுண் துகள்பட உதைத்து
வாயுவின் சுழன்று கொண்டு செல் அரக்கன் மாய்தர நிலத்திடை வீழ்த்தி
ஆய் தொடிப் புகழ்த் தாய் காணிய தன் உள் அடங்கலும் காட்டுபு மறைத்து

#679
நந்தகோன் தடக் கை பற்றுபு குறும் தாள் பெயர்த்து மென்மெல நடந்து உலவிச்
சந்தம் ஆர் தாதை சொற்படி வந்த வேதியன் தரு பெயர் பெற்றுச்
செம் துவர்க் கனி வாய் அன்னை பால் அருந்தச் சேர்த்துபு வெண் தயிர் உடைக்கும்
அந்த வேலையில் பால் பொங்குபு வழிதல் ஆற்றுவான் அகன்றமை நோக்கி

#680
அவ்விடத்து இருந்த வெண் தயிர்க் குழிசி அனைத்தையும் மத்தினால் உடைத்துச்
செவ்விய அளையைத் திரட்டி உண்டு அடுத்த செழு மனைப் புகுந்து உறி வெண்ணெய்
வவ்வுதற்கு உரல் மேல் நின்று கல் மோதி வாய்ப் பெய்து பூசைக்கும் கொடுத்துக்
கொவ்வை அம் கனி வாய் அன்னை மென் தாம்பால் குழி செறி கறையொடு பிணிப்ப

#681
மருது இரண்டு ஒடிய ஈர்த்து இடைத் தவழ்ந்து மற்று அவை மாற்றிய பின்னர்க்
கருதுறு பிருந்தாவனம் அடைந்து உகளும் கற்று இனம் மேய்த்திடும் நாளில்
ஒரு கரும் கன்று கொடு விள எறிந்து அங்கு உற்ற புள் வாய் கிழித்து அரவப்
பெருகிய சாபம் தொலைத்து இடைச் சிறார்கள் பெட்புற ஆற்று உணா உண்டு

#682
மலர்_மகன் கவர்ந்த கற்று இனம் சிறுவர் மாயையில் பண்டு போல் ஆக்கிக்
கலவிய விட நீர் உண்டு உடல் துறந்த உயிர்கள் உய்ந்திடக் கடைக்கண் பார்த்து
அலகு_இல் தீக் கொடுமைக் கட்செவிப் பணத்தில் அடித்தலம் நிறுத்துபு நடித்துக்
குலவுறு தந்தை ஆய்ச் சிறார்-தம்மை வளை வனக் கொழும் தழல் அயின்று

#683
பனி நிலா முறுவல் ஆய்ச்சியர் மயங்கப் பவள வாய் வேய்ங்குழல் வைத்துக்
கனி நலத்தவர் நீராட்டு அயர் காலைக் கலை எலாம் கவர்ந்து இணர்க் குருந்தின்
இனிதுற ஏறிக் கரை மிசை இவர்ந்தோர்க்கு எடுத்தெடுத்து அம் துகில் ஈந்து
நனி மலர்ச் சோலை அகம் புறம் உருவம் பல கொடு அன்னவர் நலம் உண்டு

#684
தவம் பயில் முனிவர் பன்னியர் அளித்த சமைந்த இன் சுவை உணாவினை உண்டு
உவந்து வாசவன் கொள் பூசையைத் தான் கொண்டு உறு மழை வரை கொடு தடுத்துச்
சிவந்த கண் அசுரன் கொடு செலும் தந்தை திருமுற மீட்டு மற்று அவனும்
நிவந்த அண்டர்களும் காண வைகுந்தம் காட்டுபு ஞெரேலென மறைத்து

#685
இரும் பசுக் காவல்செய்யும் ஆவயின் நல் இராதை-தன் எழில் நலம் கவர்ந்து
விரும்பு பல் மாதர் குழாத்தொடும் பாடி மேவுபு தந்தையைக் கவரும்
அரும்பு பல் அரவைக் கால் மிதித்து அகற்றி அமைதரு கானம் மீட்டு அடைந்து
வரும் பெரும் சங்கசூடனை மாய்த்து மணியினை முன்னவற்கு அளித்து

#686
நாரத முனிவன் சொல் கொடு கஞ்சன் செலுத்திட நண்ணிய கேசி
ஆர்தரு மற்றோர் உயிர் குடித்து அன்னான் அமர்தரு மதுரையை அடைந்து
சார்தரும் ஈரம் கொல்லியைத் தடியா எழில் கலன் தந்தவற்கு உதவி
ஈர் மதுக் கண்ணி அன்புடன் அளித்தாற்கு இனிய தன் இன்ப வீடு அளித்து

#687
சாந்தம் நன்கு அளித்த கூனியை அணங்காச் சமைத்து உடன் வேத்தவை புகுந்து
காந்து எரி கவிழ்க்கும் கண் கடைக் களிறு கல் அடு திணி புய மல்லர்
நாந்தக ஆண்மைக் கஞ்சனை முன்னோர் நடுங்கி உள் உயிர்விடக் கடிந்து
வாய்ந்த நல் பெரும் சீர் உக்கிரசேனற்கு அரசுரிமைத் திறம் வகுத்து

#688
தந்தை உள் மகிழ்ந்து நூல் கடி முதலாம் சடங்குகள் இயற்றுவித்திடலும்
மைந்து உடை உணர்ச்சிச் சாந்திபன் சார்ந்து மறை முதல் கலை எலாம் உணர்ந்து
வெம் திறல் அவுணன் வரை நிறம் கிழித்து விரி கதிர்ச் சங்கம் ஒன்று எடுத்து
முந்தை நாள் இறந்த மதலையை மீட்டு ஆசாரியன் தேவி முன் வைத்து

#689
கோவியர்த் தேற்ற உத்தவன் போக்கிக் கூனி-தன் இள நலம் நுகர்ந்திட்டு
ஏவு இயல் சாபத் திரிதராட்டிரன்-பால் இலகும் அக் குரூரனைப் போக்கி
மா இயல் தானைச் சராசந்தன் ஓட மண்டு அமர் பதினெழு முறை செய்து
ஓவியப் புரிசை மதுரையை முனிவன் உந்து காலயவனன் வளைப்ப

#690
ஆர் திரைப் புணரி நடுவண் வண் துவரை அணி நகர் ஒன்று உளது ஆக்கிப்
போரினுக்கு ஆற்றான் போல் விரைந்து ஓடிப் பொங்கு சீர் முசுகுந்தன் உறங்கும்
ஓர் வரைக் குகை உள் புகுந்து அவனால் தெவ்வு உடல் பொடிப்பித்து முன்னவனோடு
ஏர் கெழு மதுரை-நின்று வண் துவரைக்கு ஏகுழிச் சராசந்தன் வளைப்ப

#691
அவற்கும் அஞ்சினன் போல் முன்னோடும் ஆங்கு ஓர் அணி வரை இவர்ந்து அழல் சூழக்
கவற்சி இன்று ஆகி விரைந்து குப்புற்றுக் கடி மதில் துவரையை அடைந்து
நவத் தளிர்ப் பொழில் சூழ் விதர்ப்பநாட்டு அரசன் நங்கை முன்னோன் உரைக்கு அஞ்சி
நிவப்புற விடுத்த தூது கண்டு ஆங்கு ஞெரேலெனத் தேர் மிசைச் சென்று

#692
வரம் தரு கவுரி திருவடி வணங்கி மா மலர்ச் சோலையில் நின்ற
பரந்த பேர் உண்கண் கன்னியைக் கவர்ந்து பகைத்த மன்னவர்களை ஓட்டி
அரம் தடி நெடு வேல் உருக்குமன் குடுமி அரிந்து வண் துவரையை அடைந்து
சுரந்து அருள் உருக்குமணி பெறு மைந்தன் தொடு கடல் மீன் வயிறு அடைந்து

#693
இரதியைச் சார்ந்து வளர்ந்து அவள் நலன் உண்டு ஏற்று இகல் சம்பரன் தொலைத்துக்
குரவு அலர் குழலியொடு துவாரகையில் புகுந்திடப் பெரு மகிழ்கூர்ந்து
பரவு சத்திராசித்து இரவி-பால் பெறு பொன் பயந்திடு மணி பிரசேனன்
கரம் மலர் அளிப்பக் கோளரி கவரப் பின்னர் ஓர் கரடிகைக் கவர்ந்து

#694
பிலத்திடை அடைந்து மகள் துயிலிடத்து வைத்திடப் பெரும் பழி தனக்கு
நிலத்திடை வருதல் நோக்கி அப் பிலத்தை நேர்ந்து சாம்பவனொடு பொருது
வெலத் தகு வாகையொடும் அவன் மகளை மணியினைக் கைக்கொடு மீண்டு
வலத்தவனாய சத்திராசித்துக்கு அ மணி நல்கிட மகிழ்ந்து

#695
எழில் நலம் கனிந்த சத்தியபாமை-தனை மணியொடும் உவந்து ஈயக்
கழி மகிழ்சிறந்து மணியை அ மாமன் கையளித்து அறன் மகன் முதலோர்
ஒழிவுறத் துயரம் அன்னவர்-பால் சென்று உறையும் நாள் மாமனைக் கடிந்து ஆங்கு
அழிவு_இல் அம் மணி கைக்கொள் சததனுவா ஆருயிர் இறத் தொலைத்து அகற்றி

#696
மழை வளம் சுரப்ப அக்குரூரன் செம் மணியொடு வந்து கண்டிடலும்
தழை மகிழ் சிறந்து அ மணியினை அவற்கே தரு செழும் பொன் திரள் எல்லாம்
உழை மருள் நயனச் சத்தியபாமைக்கு உதவுக என்று இனிது அளித்து
விழை கள் வார் கூந்தல் சுபத்திரை-தன்னை மேகவாகனன் மகற்கு ஈந்து

#697
எரி மணி மாட இந்திரப்பிரத்தம் எய்துபு தனஞ்செயனோடும்
அரில்படு கானில் வேட்டம் ஆடிடும் கால் அமிழ்து என இன் இசை பாடும்
வரி நெடும் தடம் கண் காளிந்தி இன்பம் மருவி வண் துவரையை அடைந்து
விரி பெரும் புகழ் சால் அவந்தி மன் அளித்த மித்திரவிந்தையைக் கவர்ந்து

#698
அரவு உயர் கொடியோன் ஆதியோர் உள்ளம் அச்சுற வில் வளைத்து அமர்த்துப்
புரவு பூண்டு உயரும் கோசலத்து அரசன் போர் விடை ஏழையும் தழுவிக்
குரவு வார் கூந்தல் சத்தியை மணந்து குலவுறு கேகயத்து அரசன்
உரவு உளத்தவனாய் மன்றல்செய்து அளிப்ப உற்ற பத்திரை நலம் நுகர்ந்து

#699
இலங்கும் மத்திரத்தில் கயல் குறி தப்பாது எய்து இலக்கணை மணம் புணர்ந்து
வலம் கொளும் நரகன் கொன்று வச்சிரத்தோன் மனக் குறை முடித்து இனிது அருளிப்
பிலம் கொள் ஆங்கு இருந்த ஒரு பதினாறாயிரம் மடவார் பெரும் போகம்
துலங்குற விரும்பிச் சத்தியபாமை தொழுதிட ஐம் தரு நல்கி

#700
ஆம்பல் அம் குதலை வாய் மொழி மைந்தர் அளவிலர் தோன்றிடக் களித்துத்
தேம்பல்_இல் மைந்தன் மகன் சிறை புரிந்த திறலினன் கைத்தலம் சிதைத்துக்
கோம்பியாய்க் கிடந்தோன் பாதகம் தவிர்த்துக் குலவிய காசி மன்னனையும்
பாம்பணைப் பரன் யானே எனத் தோன்றும் பவுண்டர வாசுதேவனையும்

#701
உயிர் குடித்து அந்த வாரணவாசி ஒன்னலன் மகன் விடு பூதம்
செயிருறத் துரத்து சுயோதனன் கன்னி செழு நலம் நுகர்ந்து இருள் கவர்ந்த
வயிர வாள் சாம்பன் சிறையை முன்னோன் போய் மீட்டு வந்திட மகிழ்சிறந்து
பயிலும் யாழ் முனிவன் கண்டிடப் பதினாறாயிரம் திருவுருக் காட்டி

#702
மல் உயர் திணி தோள் சராசந்தன் உடலம் வகிர்ந்திடு கால் மகன் அறியப்
புல்லினைக் கிழித்துப் பற்பல் நாள் வருந்து புரவலர் சிறை விடுவித்து
நல் அற மைந்தன் இராசசூயத்தில் நடை பிறழ் சேதிபன் தடிந்து
வல்ல சாலுவனைத் தந்தவக்கிரனை வலம் கெழு படையொடும் செகுத்து

#703
விறல் மிகு விசயன் வாவு மான் தடம் தேர்ப் பாகனாய் நடத்தி வீடுமன் முன்
திறல் மிகு வேந்தர் ஐவரால் மடியச் செய்து பூ பாரமும் கழிப்பி
அறன் மகற்கு அரசு நல்கி என் கந்தை அகம் பொதி அவலும் தின்று அளித்த
நிறம் மிகு கமலக் கண்ணுடைக் கண்ண நின்மல நின் அடி போற்றி

#704
** கலிகாவதாரம்
இமையவர் துதிக்கப் படியிடைப் பரியாய் இனி வரும் எம்பிரான் போற்றி
அமைதரும் மறையும் காணொணாப் பொருளாய் அகிலமும் ஆயவ போற்றி
இமையளவினில் கைவரை முறையிடச் சென்று இனிது அருள் சுரந்தவ போற்றி
கமைதரும் அன்பர் எண்ணியாங்கு அளிக்கும் கமலை நாயக அடி போற்றி

#705
எனத் துதி முழக்கிக் கண் கணீர் அரும்ப இரு கரம் சென்னி மேல் குவியக்
கனத் திருமறை நூல் உணர்ச்சி மிக்கு உடைய காமரு குசேல மா முனிவன்
உனற்கு அரியவன் என்றனக்கு இனிது அருள உறும்-கொலோ என்று நெக்குருகி
மனக் கசிவுறும் கால் மனத்தினும் கடுகி மா மறைப் பிரான் வெளிவருமால்

#706
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்
பொன் ஆரும் மணி மகுடம் பசிய வரை முகட்டு எழு செம்பொன்னை ஏய்ப்ப
மின் ஆரும் இரு செவியின் மணி மகர குண்டலம் வில் வீசி ஆட
ஒன்னார்-தம் உயிர் குடிக்கும் எறுழ் வலித் தோள் அங்கதச் செவ் ஒளி மேல் ஓங்கத்
தென் ஆர் அக் கதிர் கீழும் பாய்ந்தது என உத்தரியம் திகழாநிற்க

#707
காமரு நல் நெறி நடப்ப அறம் தழைப்ப எவ்வுயிரும் களிப்பில் மேவ
மா மறையை வடித்து விரித்து இனிது உரைத்த திரு மலர்ச் செவ் வாய்க்கு உண்டாய
தோமறு வண் பெரும் புகழில் சிறிது வெளிப்பட்டு உலவு தோற்றம் ஏய்ப்ப
ஏமமுறு குறுமூரல் வெள் என்று சிறிது அரும்பி இலகாநிற்க

#708
கொங்கு அவிழும் நறு மலர் கொண்டு அருச்சித்தும் உளம் நினைந்தும் குடந்தம்பட்டுப்
பங்கமறு பல் துதிகள் முழக்கியும் இவ்வாறு வழிபடல் ஓவாது
கங்குல் பகல் நிற்போர்கள் நனி மூழ்கி இன்பு அடையக் கமலக் கண்கள்
பொங்கும் அருள் பெரு வெள்ளம் திரை எறிந்து கரைபுரளப் பொழியாநிற்க

#709
தங்கள் குலம் விளக்கிய பேர் இரும் கருணை தெரிந்து உவகை தழைப்ப நாளும்
மங்குதல்_இல் இவன்-பாலே உறைவம் எனப் பகல் இரவு மருவத் தோன்றும்
செங்கதிரும் வெண்கதிரும் வலத்தும் இடத்தினும் அமர்ந்த செவ்வி ஏய்ப்பப்
பொங்கு கதிர்த் திகிரியும் சங்கமும் இரு கைத்தலத்தும் நனி பொலியாநிற்க

#710
மன்பதைகள் முறையிடாது அஞ்சல் என எடுத்து அபயம் வழங்கும் கையும்
கொன் பரவும் உலகம் எலாம் உள் அடி ஓர் புறத்து உற நீள் குளிர் பூம் தாளில்
அன்புறுக என வரதம் காட்டும் ஒரு திருக்கையும் அப்போது பூத்த
தென் பரவும் நல் பவள அம்புயமும் சமழ்ப்ப எழில் சிறவாநிற்க

#711
அரிய தவம் குயின்று நெடும் காலம் வயிறு உளைந்து ஈன்ற அணங்கை ஈந்து
விரி அதிர் வெண் திரைத் திருப்பாற்கடல் அளித்த வரிசையைப் பால் விலகாராலும்
தெரிய அரும் சிற்றிடை அத் திருவுறையுள் அமைத்தல் பெரும் சீர்த்தி என்று
கரிய நிறத்திடை அமைத்த கவுத்துவ மா மணிக் கற்றை கஞலாநிற்க

#712
ஆடு அமைத் தோள் செம் கனி வாய்க் கரும் கூந்தல் அயில் அனுக்கி அம்பு அலைக்கும்
ஓடு அரிக் கண் திருமடந்தை மணி காலும் வெயில் வருத்தமுறாது ஒதுங்க
நீடு அமைத்த இளம் சோலை எனத் தழைந்து மணம் கான்று நிலவும் மென் பூம்
தோடு அமைத்த பசும் துளபத் தொடையல் அளிக் குலம் உணத் தேன் துளியாநிற்க

#713
நிலம் காவலொருவன் விடு களி யானைக் கோட்டினுக்கும் நிதமும் எண்_இல்
அலங்கார மட மாதர் உழுது உழக்கிக் கலக்கி அமராட உய்க்கும்
இலங்கு ஆரம் அணிந்து பணைத்து இறுகி அண்ணாந்து எழுந்த முலை இரும் கோட்டிற்கும்
கலங்காத நிறப் பிரதாபம் போலச் செஞ்சாந்து கஞலா நிற்க

#714
திரு அரையில் கொய்து விரித்து அலங்காரம் பெற உடுத்த செம்பொன் ஆடை
உரு கெழு செங்கதிர் உதரபந்தனம் பொன் இரட்டை நாண் ஒளிராநிற்க
இரு புடையும் கரும் குழல் வெண் நகைச் செவ் வாய்த் தேவியர் எண்மர்களும் சூழக்
கரு முகில் ஒன்று ஒளிர் மின்னல் காடு வளாய் எதிர் காட்சி கதியாநிற்க

#715
வயம் கெழு துந்துபி ஐந்தும் காரும் நெடும் கடலும் என வாய்விட்டு ஆர்ப்ப
நயம் கெழு பூ மழை அமரர் பொழிதர விண் அரமகளிர் நடியாநிற்க
மயம் கெழு நல் அறம் தழைப்ப உலகு குதுகலிப்ப வெளி வந்து நின்றான்
பயம் கெழு மா மறைப் பொருளாய் அ மறைக்கும் எட்டாத படிவத்து அண்ணல்

#716
** வேறு
காண்டலும் விரைந்து எழுந்து கரை உடைத்து எழு நீத்தம் போல்
மாண்ட தாய் வரவு கண்ட மழ இளம் கோதனம் போல்
தூண்டு தன் மனமும் பிந்தத் துனைவினின் ஓடி அன்பு
பூண்டவர்க்கு உரிய தாள் மேல் பொள்ளென வீழ்ந்து எழுந்து

#717
முடி மிசைக் கரம் கூப்பா மும்முறைப் பிரதக்கணம்செய்து
அடி மிசை அன்பு பொங்க ஆனந்தக் கண்ணீர் வாரப்
படி மிசைக் கிடத்தும் தண்டின் பரிசு என மீட்டும் வீழ்ந்து
நொடி மிசை எழுந்து துள்ளி நோற்றுளோம் யாமே என்று

#718
பூசனை சிறப்பின் செய்து பொருந்து பாத்தியம் முன் ஈந்து
நேசம் மிக்கு ஊன்றிப் பொங்க நேர்நின்று குடந்தம்பட்டு
வாசம் நல் கங்கை பங்கன் வதியிடம் வந்தது ஒத்தது
ஆசறு நினது காட்சி ஐய என்று இனைய சொல்வான்

#719
அறம் மிகு தலங்கள் சார்ந்தும் ஆரணியங்கள் சார்ந்தும்
நிறம் மிகு வரைகள் சார்ந்தும் நெடிய நாள் இருந்து ஊண் இன்றி
மறம் மிகு பொறியை வாட்டி வளர் தவம் புரிவார்க்கு அன்றிப்
புறம் மிகும் பாவியேற்கும் கிடைத்ததே புகழ் சால் காட்சி

#720
இலகு நான்மறைகள் ஓலம் ஓலம் என்று எண்ணி நாள்கள்
அலறி வாய் இளைத்தும் காண்டற்கு அரிய நின் அணி கூர் காட்சி
கலகம் ஆர் வினைக் கோள்பட்டுக் கலங்குபு மருளின் மூழ்கும்
புலன் இலா யானும் காணக் கிடைத்தது புதுமை ஐய

#721
என்று இனிது அருளிச் செய்ய எழுந்தருள்வான்-கொல் என்று
பொன்றல்_இல் தவத்தின் மேலாய்ப் புண்ணியம் பழுத்த மேலோர்
துன்றி நிற்கின்றார் எல்லாம் நிற்க உள் அகத் தூய்து அன்மை
கொன்றிலேன் பொருளாக் கொண்ட கருணையைக் குறிக்கொணாதே

#722
பழைய நான்மறையும் ஓர்ந்த பங்கயத்தவனும் காணாத்
தழையும் இக் காட்சி காணப்பெற்று உளத் தண்மை பூண்டோர்
விழையும் ஓர் இன்பம் பெற்றேன் விருப்பின் நீ பெறல் என்-பால் என்
மழை பெறும் பொருளும் உண்டோ வையத்து வாழ்வார்-மாட்டு

#723
தழல் அராத் தலையில் வைத்து நடித்தும் வெம் சகடு உதைத்தும்
நிழல்_இல் கான் நடந்தும் முன்னம் பழக்கினை நின் பொன் தாளை
அழல் செயும் அடியேன் நெஞ்சத்து அமைத்திடும் நிமித்தம்-கொல்லோ
கழல் தரா வினையினேன் இன்று அறிந்தனன் கடவுள் ஏறே

#724
புன் தொழில் அடியேன் உள் அம்போருகப் பாதம் வைப்பின்
கன்றுதல் இன்றி முன்னைப் பழக்கத்தால் கலங்காது ஆற்றும்
மென் தளிர் மேனிப் பூ மேல் விளங்கு இழைத் தாயர் கைகட்கு
ஒன்றும் அப் பாத வெப்பம் உறும் என அஞ்சுகின்றேன்

#725
என்று பற்பலவும் பேசி இரும் தழல் இட்ட வெண்ணெய்
ஒன்றிய கருங்கல் என்ன உள்ளம் நெக்குருக நேரே
நின்ற அந்தணனை நோக்கி நெடிய மால் கருணை பூத்து
வென்றி மா தவத்தர் ஏறே வேட்டது என் நுவறி என்றான்

#726
அடியனேன் உய்ந்தேன் என்னா அங்கைகள் இரண்டும் கூப்பி
முடி மிசை ஏற்றி நின்று மூதறிவுடையோர் கொள்ளாக்
கொடிய இச் செல்வம் ஒன்றே குணிப்பு அரும் பவத்திற்கு ஏது
படிறு அற ஆயின் இன்பம் பயப்பது எள்துணையும் இன்றால்

#727
மனம் மொழி உடலம் என்ன வகுத்திடு கரணம் மூன்றும்
தினமும் நின் திருவடிக்கே செலுத்தும் நாயடியேன் இந்தக்
கனவு எனும் செல்வத்து ஆழ்ந்தோ களித்து நாள் கழியாநிற்பன்
உனது அடியவர் பூம் தாளில் உறப் பணிந்து உய்தல் நீக்கி

#728
முன்னரே வெறுத்து வேண்டா இது என முனிந்து செல்வம்
பின்னர்க் கைக்கொள்வேன் ஆகில் பேரறிவு உடையன் அன்றே
அன்னதும் அன்றிக் கொண்ட விரதமும் அழித்தான் ஆனேன்
நன்னர் நெஞ்சு உடைய நீரார் நகைக்கும் நாணாது நின்றேன்

#729
உடல் அழுக்கு அகற்றத் தூ நீர் உற்றவன் அள்ளல் வாரி
இடனுறப் பூசிக் கொள்வான்-கொல் இரு காலும் யாத்த
தொடர் செய் பொன் நிகளம் சீக்கத் துணிந்தவன் இரும்பால் செய்யப்
படு பெரு நிகளம் பூண்டுகொள்வனோ பாரிடத்து

#730
ஆதலால் ஐய இந்த அநித்தியச் செல்வம் வேண்டேன்
மேதக முன் இருந்த மிடியதே இன்னும் வேண்டும்
காதலின் அடியார் வேண்டும் காரியம் அளித்துக் காக்கும்
நீ தயைபுரிந்து என் உள்ளக் கருத்தினை நிரப்புக என்றான்

#731
அல்கல்_இல் அன்பன் வார்த்தை அனைத்தையும் செவிமடுத்து
மல்கும் மா மறைகட்கு எட்டா மாயவன் முறுவல் பூத்துப்
பல்கும் நல் பொருள் வேண்டாது பயன் இன்றிக் கழிந்த தீய
நல்குரவு அளித்தி என்ற காரணம் நவிற்றுக என்றான்

#732
தெள்ளு காரணம்தான் முன்னர்ச் செய்த விண்ணப்பத்தாலே
வெள் இடை விலங்கல் போல விளங்குபு கிடந்தது ஐய
உள்ளுதல் முதல யாவும் இயல்பினின் உணராநிற்கும்
வள்ளல் நீ அறியான் போல வினாவுதல் மாட்சித்தேயோ

#733
செய்ய நின் அடித் தியானம் செய்து நாள் கழியாநிற்பேற்கு
ஐய ஈது இடையூறு ஆகி அடைந்தது இங்கு இதனைப் போற்றிப்
பொய்படு பவஞ்ச வாழ்க்கைப் புலைத் தொழில் பாரம் பூண்டு
நைபடும் உள்ளத்தேனாய் நாள்-தொறும் கழிதல் நன்றோ

#734
எம்பிரான் கருணைசெய்க என்று இரந்து அடியில் வீழ்ந்தான்
வெம்புறேல் கவலை எல்லாம் விடுதி என்று உடலம் தைவந்து
உம்பரார்க்கு அரிய இன்பம் உறுவை என்று உரைக்கலுற்றான்
தும்பி கால் உழக்க மட்டுத் துளித்திடும் துளபத் தாரான்

#735
திருவம் நன்கு அளித்தது உன்னைச் சேர்ந்தவர் நிமித்தம் கண்டாய்
ஒருவும் நின் உளம் போல் அன்னார் உள்ளமும் துறவிற்றேயோ
மருவி நின் சார்ந்தார் துன்பின் வயங்குதல் அழகிது ஆமோ
பொருவு இலா முனிவர் ஏறே அஃது எண்ணிப் புந்தி மாழ்கேல்

#736
மெய்ப்பொருள் உணர்ந்த தூயோர் மேவி எங்கு உறைவரேனும்
பொய்ப் பொருள் பற்றுவாரோ பொய்ப் பொருளேனும் வந்து
கைப்படப் பற்றும்-கொல்லோ அவரை அஃது அசத்துக் கண்டாய்
வைப்பு என நமது பூசை வாஞ்சித்து வயங்கும் மேலோய்

#737
நின்னை அச் செல்வம் என்னோ செய்யும் நேர் அதகத்தோடு
பன்னும் மந்திரம் உள்ளாரைப் பாம்பின் வாய் விடம் என் செய்யும்
மன்னு செங்கதிரோன்-தன்னை மயங்கு இருள் குழாம் என் செய்யும்
உன் நிலை தவறாது என்றும் ஒருபடித்தாய் நிற்பாயால்

#738
சாற்றும் மெய் அறிவினோர்கள் தகு தொழில் இயற்றும் காலை
மாற்றுதல் இன்றாய்த் தாம் தாமரை இலை நீர் போல் நிற்பர்
போற்றும் நின்றனக்கு இப் பந்தம் பொருந்தாது பல் நாள் வாழ்வுற்று
ஈற்று நம் உலகம் சார்ந்து இன்பு எய்திட வரம் தந்தேமால்

#739
திகழ்தர இருத்தி மீட்டும் செல்வம் வேண்டுவது இன்று என்னின்
புகழ் தரு நம்தம் காதல் பொன்னை நீ இகழ்ந்தோன் ஆனாய்
இகழ்வினுக்கு அஞ்சி அன்னாள் இரிதர இரிவம் யாமும்
அகழ் வினைத் தவத்தின் மேலோய் அழுத்திடு இவ் உரையை உள்ளம்

#740
என்று அவன் மறாத வண்ணம் இனைய பல் வார்த்தை கூறி
ஒன்ற அரும் பேறு நல்கி மறைந்தனன் உவணப் பாகன்
வென்றி அம் கழல் கால் வேந்தே மேதினியிடத்து யார்க்கேனும்
மன்ற உண்டாகும் தெய்வ வலிக்கு எதிர் வலியும் உண்டோ

#741
பாம்பணைப் பள்ளி மேவும் பண்ணவன் மறைதலோடும்
தேம்பலின் தவிர்ந்த சிந்தைத் தெய்வ மா முனிவர் கோமான்
ஓம்படைப் பெருமான் உள்ளம் உற்றது இவ்வாறோ என்று
கூம்பலின் பெயராக் கையனாய்க் களி கூர்ந்து இருந்தான்

#742
நீர் உறப் பயின்றும் உள் அ நீர் உறாக் கிடையே போலப்
பார் உறவு உற்றும் சற்றும் பற்றிலான் ஆகி அன்பர்க்கு
ஏர் உறவாய கண்ணன் இணை அடிக்கு உறவுபூண்டு
தார் உறவு உற்ற தோளாய் சால நாள் கழிய வாழ்ந்தான்

#743
ஒப்பிலா முனிவன் பின்னர் ஒருதினம் வானநாடர்
வெப்பு இலாக் கற்பகப்பூ விரை கெழு மாரி பெய்ய
வைப்பின் மெய் அடியார்க்கு ஆய வைகுந்த உலகம் சார்ந்து
திப்பிய உருவ மாயன் சேவை செய்து இன்புற்றானே

#744
** நூற்பயன்
எதிர் பொரும் அரசர் ஏறே இக் கதை எழுதிவைப்போர்
பொதி தரும் அன்பில் கேட்போர் பூசிப்போர் படிப்போர் யாரும்
கதிர் தரு செல்வம் பெற்றுக் கால்முளை பல்க வாழ்ந்து
மதி நலம் படைத்துப் பின்னர் வான் கதி அடைந்து வாழ்வார்

#745
** நூன்முடிவு
** கலிவிருத்தம்
என்று உரைத்த முனிவன் இணை அடி
ஒன்றும் அன்பின் வணங்கி உவந்து எழீஇத்
துன்றும் இக் கதை கேட்டு இன்பம் தோய்ந்தனன்
மன்ற என்று உரைத்தான் புவி மன்னவன்

#746
** வாழ்த்து
மன்னும் மா மறை வாழி மறையவர்
பன்னும் மால் முகில் வாழி நல் பார்த்திபர்
மின்னும் நீதியும் வாழி மிகு நலம்
என்னும் இக் கதை இன் தமிழ் வாழியே
** குசேலோபாக்கியானம் முற்றிற்று