குமரேச சதகம்

** குருபாத தாசர் அருளிய குமரேச சதகம்
**காப்பு

#1
பூ மேவு புல்லைப் பொருந்து குமரேசர் மேல்
தேம் மேவிய சதகம் செப்பவே கோ மேவிக்
காக்கும் சரணவத்தான் கம்ப கும்பத்து ஐந்துகரக்
காக்கும் சரவணத்தான் காப்பு
**அவையடக்கம்
**ஆசிரிய விருத்தம்

#2
மாரிக்கு நிகர் என்று பனி சொரிதல் போலவும் மனைக்கு நிகர் என்று சிறுபெண்
மணல்வீடு கட்டுவது போலவும் சந்திரன் முன் மருவும் மின்மினி போலவும்
பாருக்குள் நல்லோர் முனே பித்தர் பல மொழி பகர்ந்திடும் செயல் போலவும்
பச்சை மயில் ஆடுதற்கு இணை என்று வான்கோழி பாரில் ஆடுதல் போலவும்
பூரிக்கும் இனிய காவேரிக்கு நிகர் என்று போது வாய்க்கால் போலவும்
புகல் சிப்பி முத்துக்கு நிகராப் பளிங்கைப் பொருந்தவைத்தது போலவும்
வாரிக்கு முன் வாவி பெருகல் போலவும் இன்சொல்வாணர் முன் உகந்து புல்லை
வால குமரேசர் மேல் சதகம் புகன்றனன் மனம் பொறுத்து அருள்புரிகவே
**நூல்
**1 முருகன் திருவிளையாடல்

#3
பூமிக்கு ஒரு ஆறுதலையாய் வந்து சரவணப்பொய்கை-தனில் விளையாடியும்
புனிதற்கு மந்த்ர உபதேசமொழி சொல்லியும் பாதனைச் சிறையில் வைத்தும்
தேம் மிக்க அரி அரப் பிரமாதிகட்கும் செகுக்க முடியா அசுரனைத்
தேகம் கிழித்து வடிவேலினால் இரு கூறுசெய்து அமரர் சிறை தவிர்த்தும்
நேமிக்குள் அன்பர் இடருற்ற சமயம்-தனில் நினைக்கும் முன் வந்து உதவியும்
நிதமும் மெய்த் துணையாய் விளங்கலால் உலகில் உனை நிகரான தெய்வம் உண்டோ
மா மிக்க தேன் பருகு பூம் கடம்பு அணியும் மணி_மார்பனே வள்ளி_கணவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**2 அந்தணர் இயல்பு

#4
குறையாத காயத்ரி ஆதி செப மகிமையும் கூறு சுருதிப் பெருமையும்
கோதிலா ஆகம புராணத்தின் வளமையும் குலவு யாகாதி பலவும்
முறையா நடத்தலால் சகல தீவினைகளையும் முளரி போலே தகிப்பார்
முதன்மை பெறு சிலை செம்பு பிருதுவிகளில் தெய்வ மூர்த்தம் உண்டாக்குவிப்பார்
நிறையாக நீதி நெறி வழுவார்கள் ஆகையால் நீள் மழை பொழிந்திடுவதும்
நிலமது செழிப்பதும் அரசர் செங்கோல் புரியும் நிலையும் மா தவர் செய் தவமும்
மறையோர்களாலே விளங்கும் இவ் உலகத்தின் மானிடத் தெய்வம் இவர் காண்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**3 அரசர் இயல்பு

#5
குடி படையில் அபிமானம் மந்திராலோசனை குறிப்பறிதல் சத்ய வசனம்
கொடை நித்தம் அவரவர்க்கு ஏற்ற மரியாதை பொறை கோடாத சதுர் உபாயம்
படி விசாரணையொடு ப்ரதானி தளகர்த்தரைப் பண்பு அறிந்தே அமைத்தல்
பல்லுயிர் எலாம் தன் உயிர்க்கு நிகர் என்றே பரித்தல் குற்றங்கள் களைதல்
துடி பெறு தனக்கு உறுதியான நட்பு அகமின்மை சுகுணமொடு கல்வி அறிவு
தோலாத காலம் இடம் அறிதல் வினை வலி கண்டு துட்ட நிக்ரக சௌரியம்
வடிவு பெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு வழுவாத முறைமை இது காண்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**4 வணிகர் இயல்பு

#6
கொண்டபடி போலும் விலைபேசி லாபம் சிறிது கூடி வர நயம் உரைப்பார்
கொள்ளும் ஒரு முதலுக்கு மோசம்வராதபடி குறுகவே செலவுசெய்வார்
வண்டப் புரட்டர் தாம் முறி தந்து பொன் அடகுவைக்கினும் கடன் ஈந்திடார்
மருவு நாணயமுளோர் கேட்டு அனுப்புகினும் அவர் வார்த்தையில் எலாம் கொடுப்பார்
கண்டு எழுது பற்றுவரவினில் மயிர் பிளந்தே கணக்கில் அணுவாகிலும் விடார்
காசு வீணில் செலவிடார் உசிதமானதில் கன திரவியங்கள் விடுவார்
மண்டலத்தூடு கன வர்த்தகம் செய்கின்ற வணிகர்க்கு முறைமை இது காண்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**5 வேளாளர் இயல்பு

#7
நல்ல தேவாலயம் பூசனைநடப்பதும் நாள்-தோறும் மழை பொழிவதும்
நாடிய தபோதனர்கள் மா தவம் புரிவதும் நவில் வேத வேதியர் எலாம்
சொல் அரிய யாகாதி கருமங்கள் செய்வதும் தொல் புவி செழிக்கும் நலமும்
சுபசோபனங்களும் கொற்றவர்கள் செங்கோல் துலங்கு மனுநெறி முறைமையும்
வெல் அரிய சுகிர்தமொடு வர்த்தகர் கொள்விலையும் விற்பனையும் அதிக புகழும்
மிக்க அதிகாரமும் தொழிலாளர் சீவனமும் வீர ரண சூர வலியும்
வல்லமைகள் சகலமும் வேளாளர் மேழியின் வாழ்வினால் விளைவ அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**6 பிதாக்கள்

#8
தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதல் பிதா தனை வளர்த்தவன் ஒரு பிதா
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒரு பிதா சார்ந்த சற்குரு ஒரு பிதா
அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா நல்ல ஆபத்துவேளை-தன்னில்
அஞ்சல் என்று உற்ற துயர்தீர்த்துளோன் ஒரு பிதா அன்பு உள முனோன் ஒரு பிதா
கவளம் இடு மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா கலி தவிர்த்தவன் ஒரு பிதா
காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதி ஆகும்
மவுலி-தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**7 ஒன்றை ஒன்று பற்றியிருப்பவை

#9
சத்தியம் தவறாது இருப்பவரிடத்தினில் சார்ந்து திருமாது இருக்கும்
சந்ததம் திருமாது இருக்கும் இடம்-தனில் தனது பாக்கியம் இருக்கும்
மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடம்-தனில் விண்டுவின் களை இருக்கும்
விண்டுவின் களை பூண்டிருக்கும் இடம்-தனில் மிக்கான தயை இருக்கும்
பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடம்-தனில் பகர் தருமம் மிக இருக்கும்
பகர் தருமம் உள்ளவர் இடம்-தனில் சத்துரு பலாயனத் திறல் இருக்கும்
வைத்து இசை மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன்னுயிர் சிறக்கும் அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**8 இவர்க்கு இவர் தெய்வம்

#10
ஆதுலர்க்கு அன்னம் கொடுத்தவர்களே தெய்வம் அன்பான மாணாக்கருக்கு
அரிய குருவே தெய்வம் அஞ்சினோர்க்கு ஆபத்து அகற்றினோனே தெய்வமாம்
காதல் உறு கற்புடைய மங்கையர்-தமக்கு எலாம் கணவனே மிக்க தெய்வம்
காசினியில் மன்னுயிர்-தமக்கு எலாம் குடிமரபு காக்கும் மன்னவர் தெய்வமாம்
ஓதரிய பிள்ளைகட்கு அன்னை தந்தையர் தெய்வம் உயர்சாதி மாந்தர் யார்க்கும்
உறவின்முறையார் தெய்வம் விசுவாசம் உள்ள பேர்க்கு உற்ற சிவபக்தர் தெய்வம்
மா தயையினால் சூர் தடிந்து அருள்புரிந்ததால் வானவர்க்குத் தெய்வம் நீ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**9 இவர்க்கு இதில் நினைவு

#11
ஞான நெறியாளர்க்கு மோக்ஷத்திலே நினைவு நல்லறிவுளோர்-தமக்கு
நாள்-தோறும் தருமத்திலே நினைவு மன்னர்க்கு இராச்சியம்-தன்னில் நினைவு
ஆன காமுகருக்கு மாதர் மேலே நினைவு அஞ்சாத் திருடருக்கு இங்கு
அனுதினம் களவிலே நினைவு தன வணிகருக்கு ஆதாயம் மீது நினைவு
தானம் மிகு குடியாளருக்கு எலாம் வேளாண்மை-தனில் நினைவு கற்பவர்க்குத்
தரு கல்வி மேல் நினைவு வேசியர்க்கு இனிய பொருள் தருவோர்கள் மீது நினைவு
மான பரனுக்கு மரியாதை மேல் நினைவு எற்கு மாறாது உன் மீது நினைவு
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**10 இவர்க்கு இது இல்லை

#12
வேசைக்கு நிசம் இல்லை திருடனுக்கு உறவு இல்லை வேந்தர்க்கு நன்றி இல்லை
மிடியர்க்கு விலைமாதர் மீது வங்கணம் இலை மிலேச்சற்கு நிறையது இல்லை
ஆசைக்கு வெட்கம் இலை ஞானியான் அவனுக்குள் அகம் இல்லை மூர்க்கன்-தனக்கு
அன்பு இல்லை காமிக்கு முறை இல்லை குணம்_இலோர்க்கு அழகு இல்லை சித்தசுத்தன்
பூசைக்கு நவில் அங்கசுத்தி இலை யாவும் உணர் புலவனுக்கு அயலோர் இலை
புல்லனுக்கு என்றும் முசிதான் உசிதம் இல்லை வரு புலையற்கு இரக்கம் இல்லை
மாசைத் தவிர்த்த மதி முக தெய்வயானையொடு வள்ளிக்கு இசைந்த அழகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**11 இப்படிப்பட்டவர் இவர்

#13
ராய நெறி தவறாமல் உலக பரிபாலனம் நடத்துபவனே அரசனாம்
ராச யோசனை தெரிந்து உறுதியாகிய செய்தி நவிலுமவனே மந்திரி
நேயமுடனே தன் சரீரத்தை எண்ணாத நிர்வாகியே சூரனாம்
நிலைபெறும் இலக்கணம் இலக்கியம் அறிந்து சொலும் நிபுண கவியே கவிஞனாம்
ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும் அறியும் மதியோன் வைத்தியன்
அகம் இன்றி மெய் உணர்ந்து ஐம்புலன் ஒழித்துவிட்டவனே மெய்ஞ்ஞானி எனலாம்
மாயவர் சகோதரி மனோன்மணிக்கு அன்பான வரபுத்ர வடிவேலவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**12 விரைந்து அடக்குக

#14
அக்கினியை வாய் முந்து துர்ச்சனரை வஞ்ச மனையாளை வளர் பயிர் கொள் களையை
அஞ்சா விரோதிகளை அநியாயம் உடையோரை அகிர்த்தியப் பெண்கள் ஆர்ப்பைக்
கைக்கு இனிய தொழிலாளியைக் கொண்ட அடிமையைக் களவுசெய்யும் திருடரைக்
கருதிய விசாரத்தை அடக்கமில் பலிசையைக் கடிதான கோபம்-தனை
மெய்க்கு இனிது அலாப் பிணியை அவை உதாசீனத்தை வினை மூண்டிடும் சண்டையை
விடம் ஏறு கோரத்தை அன்று அடக்குவது அலால் மிஞ்சவிடல் ஆகாது காண்
மைக்கு இனிய கண்ணி குற வள்ளி தெய்வானையை மணம்செய்த பேரழகனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**13 இவர்க்கு இது துரும்பு

#15
தாராளமாகக் கொடுக்கும் தியாகிகள்-தமக்கு நற்பொருள் துரும்பு
தன் உயிரை எண்ணாத சூரனுக்கு எதிராளி தளம் எலாம் ஒரு துரும்பு
பேரான பெரியருக்கு அற்பரது கையினில் பிரயோசனம் துரும்பு
பெரிதான மோக்ஷ சிந்தனையுள்ளவர்க்கு எலாம் பெண் போகம் ஒரு துரும்பு
தீராத சகலமும் வெறுத்த துறவிக்கு விறல் சேர் வேந்தன் ஒரு துரும்பு
செய்ய கலை நாமகள் கடாக்ஷம் உள்ளோர்க்கு எலாம் செந்தமிழ்க் கவி துரும்பாம்
வார் ஆரும் மணி கொள் முலை வள்ளி தெய்வானையை மணம் புணரும் வடிவேலவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**14 இதனை விளக்குவது இது

#16
பகல் விளக்குவது இரவி நிசி விளக்குவது மதி பார் விளக்குவது மேகம்
பதி விளக்குவது பெண் குடி விளக்குவது அரசு பரி விளக்குவது வேகம்
இகல் விளக்குவது வலி நிறை விளக்குவது நலம் இசை விளக்குவது சுதி ஊர்
இடம் விளக்குவது குடி உடல் விளக்குவது உண்டி இனிய சொல் விளக்குவது அருள்
புகழ் விளக்குவது கொடை தவம் விளக்குவது அறிவு பூ விளக்குவது வாசம்
பொருள் விளக்குவது திரு முகம் விளக்குவது நகை புத்தியை விளக்குவது நூல்
மகம் விளக்குவது மறை சொல் விளக்குவது நிசம் வாவியை விளக்குவது நீர்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**15 பிறப்பினால் மட்டும் நன்மையில்லை

#17
சிங்கார வனமதில் உதிப்பினும் காகமது தீம் சொல் புகல் குயில் ஆகுமோ
திரை எறியும் வாவியில் பூத்தாலுமே கொட்டி செங்கஞ்ச மலர் ஆகுமோ
அம் கானகத்தில் பிறந்தாலும் முயலானது ஆனையின் கன்று ஆகுமோ
ஆண்மையாகிய நல்ல குடியில் பிறந்தாலும் அசடர் பெரியோர் ஆவரோ
சங்கு ஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாலக்கிராமம் ஆமோ
தடம் மேவு கடல் நீரிலே உப்பு விளையினும் சார சர்க்கரை ஆகுமோ
மங்காத செந்தமிழ்க் குறுமுனிக்கு உபதேசம் வைத்த மெய்ஞ்ஞான குருவே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**16 பலர்க்கும் பயன்படுவன

#18
கொண்டல் பொழி மாரியும் உதார சற்குணம் உடைய கோவும் ஊருணியின் நீரும்
கூட்டமிடும் அம்பலத்து உறு தருவின் நீழலும் குடியாளர் விவசாயமும்
கண்டவர்கள் எல்லாம் வரும் பெரும் சந்தியில் கனி பல பழுத்த மரமும்
கருணையுடனே வைத்திடும் தணீர்ப்பந்தலும் காவேரி போல் ஊற்றமும்
விண் தலத்து உறை சந்திராதித்த கிரணமும் வீசும் மாருத சீதமும்
விவேகி எனும் நல்லோரிடத்தில் உறு செல்வமும் வெகுசனர்க்கு உபகாரமாம்
வண்டு இமிர் கடப்ப மலர் மாலை அணி செங்களப மார்பனே வடிவேலவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**17 தாம் அழியினும் தம் பண்பு அழியாதவை

#19
தங்கமானது தழலில் நின்று உருகி மறுகினும் தன் ஒளி மழுங்கிடாது
சந்தனக் குறடுதான் மெலிந்து தேய்ந்தாலுமே தன் மணம் குன்றிடாது
பொங்கம் மிகு சங்கு செந்தழலில் வெந்தாலுமே பொலி வெண்மை குறைவுறாது
போதவே காய்ந்து நல் பால் குறுகினாலும் பொருந்து சுவை போய்விடாது
துங்க மணி சாணையில் தேய்ந்துவிட்டாலும் துலங்கு குணம் ஒழியாது பின்
தொன்மை தரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது தூய நிறை தவறு ஆகுமோ
மங்கள கல்யாணி குற மங்கை சுரகுஞ்சரியை மருவு திண் புய வாசனே
மயில் ஏறி விளையாடு குகனே புல் வயல் நீடு மலை மேவு குமரேசனே
**18 நரகில் வீழ்வோர்

#20
மன்னரைச் சமரில் விட்டு ஓடினவர் குரு மொழி மறந்தவர் கொலைப் பாதகர்
மாதா பிதாவை நிந்தித்தவர்கள் பரதாரம் மருவித் திரிந்த பேர்கள்
அன்னம் கொடுத்தபேருக்கு அழிவை எண்ணினோர் அரசு அடக்கிய அமைச்சர்
ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர் அரும் தவர்-தமைப் பழித்தோர்
முன் உதவியாய்ச் செய்த நன்றியை மறந்தவர் முகத்துதி வழக்குரைப்போர்
முற்று சிவ பத்தரை நடுங்கச் சினந்தவர்கள் முழுதும் பொய் உரை சொல்லுவோர்
மன் ஒருவர் வைத்த பொருள் அபகரித்தோர் இவர்கள் மா நரகில் வீழ்வர் அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**19 உடல்நலம்

#21
மாதத்து இரண்டு விசை மாதரைப் புல்குவது மறுவறு விரோசனம்தான்
வருடத்து இரண்டு விசை தைலம் தலைக்கு இடுதல் வாரத்து இரண்டு விசையாம்
மூதறிவினொடு தனது வயதினுக்கு இளைய ஒரு மொய்_குழலுடன் சையோகம்
முற்று தயிர் காய்ச்சு பால் நீர்மோர் உருக்கு நெய் முதிரா வழுக்கை இளநீர்
சாதத்தில் எவளாவானாலும் புசித்த பின் தாகம்-தனக்கு வாங்கல்
தயையாக உண்ட பின் உலாவல் இவை மேலவர் சரீர சுகம் ஆம் என்பர் காண்
மா தவ குமாரி சாரங்கத்து உதித்த குற வள்ளிக்கு உகந்த சரசா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**20 விடாத குறை

#22
தேசு பெறு மேரு ப்ரதக்ஷணம் செய்தும் மதி தேக வடு நீங்கவில்லை
திருமால் உறங்கிடும் சேடனுக்கு உவணன் செறும் பகை ஒழிந்ததில்லை
ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரை வேறு இலாமலே வாயு ஆகும்
இனிய கண் ஆகிவரு பரிதியானவனுக்கு இராகுவோ கன விரோதி
ஆசிலாப் பெரியோரிடத்தினில் அடுக்கினும் அமைத்தபடி அன்றி வருமோ
அவரவர்கள் அனுபோகம் அனுபவித்திடல் வேண்டும் அல்லால் வெறுப்பது எவரை
வாசவனும் உம்பரனை வரும் விசய சய என்று வந்து தொழுது ஏத்து சரணா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**21 சிறவாதவை

#23
குரு இலா வித்தை கூர் அறிவு இலா வாணிபம் குணம் இலா மனைவி ஆசை
குடி நலம் இலா நாடு நீதி இல்லா அரசு குஞ்சரம் இலாத வெம் போர்
திரு இலா மெய்த் திறமை பொறை இலா மா தவம் தியானம் இல்லாத நிட்டை
தீபம் இல்லாத மனை சோதரம் இலாத உடல் சேகரம் இலாத சென்னி
உரு இலா மெய் வளமை பசி இலா உண்டி புகல் உண்மை இல்லாத வசனம்
யோசனை இலா மந்த்ரி தைரியம் இலா வீரம் உதவி இல்லாத நட்பு
மரு இலா வண்ண மலர் பெரியோர் இலாத சபை வையத்து இருந்து என் பயன்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**22 ஆகாப்பகை

#24
அரசர் பகையும் தவம்புரி தபோதனர் பகையும் அரிய கருணீகர் பகையும்
அடுத்துக்கெடுப்போர் கொடும் பகையும் உள்பகையும் அருள் இலாக் கொலைஞர் பகையும்
விரகு மிகும் ஊரிலுள்ளோருடன் பகையும் மிகு விகட ப்ரசங்கி பகையும்
வெகுசனப் பகையும் மந்திரவாதியின் பகையும் விழை மருத்துவர்கள் பகையும்
உரம் மருவு கவிவாணர் பகையும் ஆசான் பகையும் உறவின்முறையார்கள் பகையும்
உற்ற திரவியமுளோர் பகையும் மந்திரி பகையும் ஒருசிறிதும் ஆகாது காண்
வர நதியின் மதலை என இனிய சரவணம் மிசையில் வரு தருண சிறு குழவியே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**23 வசையுறும் பேய்

#25
கடன் உதவுவோர் வந்து கேட்கும் வேளையில் முகம் கடுகடுக்கின்ற பேயும்
கனம் மருவு பெரிய தனம் வந்தவுடன் இறுமாந்து கண் விழிக்காத பேயும்
அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்து அகப்பட்டு உழன்ற பேயும்
ஆசை மனையாளுக்கு நேசமாய் உண்மை மொழியானதை உரைத்த பேயும்
இடர் இலா நல்லோர்கள் பெரியோர்களைச் சற்றும் எண்ணாது உரைத்த பேயும்
இனிய பரிதானத்தில் ஆசைகொண்டு ஒருவற்கு இடுக்கண் செய்திட்ட பேயும்
மட மனை இருக்கப் பரத்தையைப் புணர் பேயும் வசைபெற்ற பேய்கள் அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**24 இனத்தில் உயர்ந்தவை

#26
தாருவில் சந்தனம் நதியினில் கங்கை விரதத்தினில் சோமவாரம்
தகை பெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம் தலத்தினில் சிதம்பர தலம்
சீர் உலவு ரிஷிகளில் வசிட்டர் பசுவில் காமதேனு முனிவரில் நாரதன்
செல்வ நவ மணிகளில் திகழ் பதுமராக மணி தே மலரில் அம்போருகம்
பேர் உலவு கற்பினில் அருந்ததி கதித்திடு பெலத்தில் மாருதம் யானையில்
பேசில் ஐராவதம் தமிழினில் அகத்தியம் பிரணவம் மந்திரத்தில்
வாரிதியிலே திருப்பாற்கடல் குவட்டினில் மா மேரு ஆகும் அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**25 வலிமை

#27
அந்தணர்க்கு உயர் வேதமே பலம் கொற்றவர்க்கு அரிய சௌரியமே பலம்
ஆன வணிகர்க்கு நிதியே பலம் வேளாளர்க்காயின் ஏர் உழவே பலம்
மந்திரிக்குச் சதுர் உபாயமே பலம் நீதிமானுக்கு நடுவே பலம்
மா தவர்க்குத் தவசு பலம் மடவியர்க்கு நிறை மானம் மிகு கற்பே பலம்
தந்திரம் மிகுத்த கன சேவகர்-தமக்கு எலாம் சாமி காரியமே பலம்
சான்றவர்க்குப் பொறுமையே பலம் புலவோர்-தமக்கு நிறை கல்வி பலமாம்
வந்தனைசெயும் பூசைசெய்பவர்க்கு அன்பு பலம் வால வடிவான வேலா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**26 இருந்தும் பயனில்லை

#28
தருணத்தில் உதவி செய்யாத நட்பாளர் பின் தந்து என தராமல் என்ன
தராதரம் அறிந்து முறை செய்யாத மன்னரைச் சார்ந்து என்ன நீங்கில் என்ன
பெருமையுடன் ஆண்மை இல்லாத ஒரு பிள்ளையைப் பெற்று என பெறாமல் என்ன
பிரியமாய் உள்ளன்பு இலாதவர்கள் நேசம் பிடித்து என விடுக்கில் என்ன
தெருளாக மானம் இல்லாத இரு சீவனம் செய்து என செயாமல் என்ன
தேகி என வருபவர்க்கு ஈயாத செல்வம் சிறந்து என முறிந்தும் என்ன
மருவு இளமை-தன்னில் இல்லாத கன்னிகை பின்பு வந்து என வராமல் என்ன
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**27 பயன் என்ன

#29
கடல் நீர் மிகுந்து என்ன ஒதிதான் பருத்து என்ன காட்டு இலவு மலரில் என்ன
கருவேல் பழுத்து என்ன நாய்ப்பால் சுரந்து என்ன கானில் மழை பெய்தும் என்ன
அடர் கழுதை லத்தி நிலம் எல்லாம் குவிந்து என்ன அரிய குணம் இல்லாத பெண்
அழகாய் இருந்து என்ன ஆஸ்தான கோழை பல அரிய நூல் ஓதி என்ன
திடம் இனிய பூதம் வெகு பொன் காத்து இருந்து என்ன திறல் மிகும் கரடிமயிர்தான்
செறிவாகி நீண்டு என்ன வஸ்த்ர பூஷணம் எலாம் சித்திரத்து உற்றும் என்ன
மடம் மிகுந்து எவருக்கும் உபகாரம் இல்லாத வம்பர் வாழ்வுக்கு நிகராம்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**28 மக்கட்பதர்

#30
தன் பெருமை சொல்லியே தன்னைப் புகழ்ந்த பதர் சமர் கண்டு ஒளிக்கும் பதர்
தக்க பெரியோர் புத்தி கேளாத பதர் தோழர்-தம்மொடு சலிக்கும் பதர்
பின்பு காணா இடம்-தன்னிலே புறணி பல பேசிக் களிக்கும் பதர்
பெற்ற தாய் தந்தை துயர்பட வாழ்ந்திருந்த பதர் பெண்புத்தி கேட்கும் பதர்
பொன் பணம் இருக்கவே போய் இரக்கின்ற பதர் பொய்ச்சாட்சி சொல்லும் பதர்
புவியோர் நடத்தையை இகழ்ந்த பதர் தன் மனைவி புணர்தல் வெளியாக்கும் பதர்
மன் புணரும் வேசையுடன் விபசரிக்கின்ற பதர் மனிதரில் பதர் என்பர் காண்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**29 காணாத துறை

#31
இரவி காணா வனசம் மாரி காணாத பயிர் இந்து காணாத குமுதம்
ஏந்தல் காணா நாடு கரைகள் காணா ஓடம் இன்சொல் காணா விருந்து
சுரபி காணாத கன்று அன்னை காணா மதலை சோலை காணாத வண்டு
தோழர் காணா நேயர் கலைகள் காணாத மான் சோடு காணாத பேடு
குரவர் காணாத சபை தியாகி காணா வறிஞர் கொழுநர் காணாத பெண்கள்
கொண்டல் காணாத மயில் சிறுவர் காணா வாழ்வு கோடை காணாத குயில்கள்
வரவு காணாத செலவு இவை எலாம் புவி மீதில் வாழ்வு காணா இளமையாம்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**30 நோய்க்கு வழிகள்

#32
கல்லினால் மயிரினால் மீதூண் விரும்பலால் கருதிய விசாரத்தினால்
கடு வழி நடக்கையால் மலசலம் அடக்கையால் கனி பழம் கறி உண்ணலால்
நெல்லினால் உமியினால் உண்ட பின் மூழ்கலால் நித்திரைகள் இல்லாமையால்
நீர் பகையினால் பனிக் காற்றின் உடல் நோதலால் நீடு சருகிலை ஊறலால்
மெல்லி நல்லார் கலவி அதிகம் உள் விரும்பலால் வீழ் மலம் சிக்குகையினால்
மிகு சுமை எடுத்தலால் இளவெயில் காய்தலால் மெய் வாட வேலை செயலால்
வல் இரவிலே தயிர்கள் சருகாதி உண்ணலால் வன் பிணிக்கு இடம் என்பர் காண்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**31 இறந்தும் இறவாதவர்

#33
அனைவர்க்கும் உபகாரம் ஆம் வாவி கூபம் உண்டாக்கினோர் நீதி மன்னர்
அழியாத தேவாலயம் கட்டிவைத்துளோர் அகரங்கள் செய்த பெரியோர்
தனை ஒப்பிலாப் புதல்வனைப் பெற்ற பேர் பொருது சமர் வென்ற சுத்த வீரர்
தரணி-தனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத தருமங்கள் செய்த பேர்கள்
கன வித்தை கொண்டவர்கள் ஓயாத கொடையாளர் காவியம் செய்த கவிஞர்
கற்பினில் மிகுந்த ஒரு பத்தினி மடந்தையைக் கடிமணம் செய்தோர்கள் இம்
மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத மனிதர் இவர் ஆகும் அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**32 இருந்தும் இறந்தோர்

#34
மாறாத வறுமையோர் தீராத பிணியாளர் வரு வேட்டகத்தில் உண்போர்
மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர் மன்னும் ஒரு ராச சபையில்
தூறாக நிந்தைசெய்து உய்குவோர் சிவிகைகள் சுமந்தே பிழைக்கின்ற பேர்
தொலையா விசாரத்து அழுந்துவோர் வார்த்தையில் சோர்வுபடல் உற்ற பெரியோர்
வீறாக மனையாள்-தனக்கு அஞ்சி வந்திடு விருந்தினை ஒழித்து விடுவோர்
வீம்புடன் செல்லாத விவகாரம் அது கொண்டு மிக்க சபை ஏறும் அசடர்
மாறாக இவர் எலாம் உயிருடன் செத்த சவம் ஆகி ஒளி மாய்வர் கண்டாய்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**33 சிறிதும் பயன் அற்றவர்

#35
பதராகிலும் கன விபூதி விளைவிக்கும் பழைமை பெறு சுவராகிலும்
பலருக்கும் மறைவாகும் மாடு உரிஞ்சிடும் மலம் பன்றிகட்கு உபயோகம் ஆம்
கதம் மிகு கடா என்னில் உழுது புவி காக்கும் வன் கழுதையும் பொதி சுமக்கும்
கல் எனில் தேவர்களும் ஆலயமும் ஆம் பெரும் கான் புற்று அரவ மனை ஆம்
இதம் இலாச் சவமாகிலும் சிலர்க்கு உதவிசெய்யும் இழிவுறு குரங்காயினும்
இரக்கப் பிடித்தவர்க்கு உதவிசெயும் வாருகோல் ஏற்ற மாளிகை விளக்கும்
மதமது மிகும் பரம லோபரால் உபகாரம் மற்றொருவருக்கும் உண்டோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**34 ஈயாதவர் இயல்பு

#36
திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல் பணம் தேடிப் புதைத்துவைப்பார்
சீலை நலமாகவும் கட்டார்கள் நல் அமுது செய்து உணார் அறமும் செயார்
புரவலர் செய் தண்டம்-தனக்கும் வலுவாகப் புகும் திருடருக்கும் ஈவார்
புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார் புராணிகர்க்கு ஒன்றும் உதவார்
விரகு அறிந்தே பிள்ளை சோறு கறி தினும் அளவில் வெகு பணம் செலவாகலால்
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என மிகு செட்டி சொன்ன கதை போல்
வரவு பார்க்கின்றதே அல்லாது லோபியர்கள் மற்றொருவருக்கு ஈவரோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**35 திருமகள் வாழ்வு

#37
கட வாரணத்திலும் கங்கா சலத்திலும் கமலாசனம்-தன்னிலும்
காகுத்தன் மார்பிலும் கொற்றவரிடத்திலும் காலியின் கூட்டத்திலும்
நடமாடு பரியிலும் பொய் வார்த்தை சொல்லாத நல்லோரிடம்-தன்னிலும்
நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும்
அடர் கேதனத்திலும் சுயம்வரம்-தன்னிலும் அரும் துளசி வில்வத்திலும்
அலர் தரு கடப்ப மலர்-தனிலும் இரதத்திலும் அதிக குணமான ரூப
மடவாரிடத்திலும் குடிகொண்டு திருமாது மாறாது இருப்பள் அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**36 மூதேவி வாழ்வு

#38
சோர மங்கையர்கள் நிசம் உரையார்கள் வாயினில் சூதகப் பெண்கள் நிழலில்
சூளையில் சூழ்தலுறு புகையில் களேபரம் சுடு புகையில் நீசர் நிழலில்
காரிரவில் அரசு நிழலில் கடா நிழலினொடு கருதிய விளக்கு நிழலில்
காமுகரில் நிட்டை இல்லாதவர் முகத்தினில் கடும் சினத்தோர் சபையினில்
ஈரம் இல்லாக் களர் நிலத்தினில் இராத் தயிரில் இழியும் மதுபானர் பாலில்
இலை வேல் விளா நிழலில் நிதம் அழுக்கடை மனையில் ஏனம் நாய் அசம் கரம் தூள்
வாரிய முறத் தூள் பெருக்கு தூள் மூதேவி மாறாது இருப்பள் என்பர்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**37 திருந்துமோ

#39
கட்டி எரு இட்டுச் செழும் தேனை வார்க்கினும் காஞ்சிரம் கைப்பு விடுமோ
கழுதையைக் கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும் கதி பெறும் குதிரை ஆமோ
குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடு விடம் அலாது தருமோ
குக்கல் நெடு வாலுக்கு மட்டையைக் கட்டினும் கோணாமலே நிற்குமோ
ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயம் இலா யோனி கண் ஆகிவிடுமோ
உலவு கன கர்ப்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ
மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில் மார்க்க மரியாதை வருமோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**38 அறியலாம்

#40
மனத்தில் கடும் பகை முகத்தினால் அறியலாம் மாநிலப் பூடுகள் எலாம்
மழையினால் அறியலாம் நல்லார் பொலார்-தமை மக்களால் அறியலாகும்
கனம் மருவு சூரரைச் சமரினால் அறியலாம் கற்ற ஒரு வித்துவானைக்
கல்வி ப்ரசங்கத்தினால் அறியலாம் குணங்களை நடையினால் அறியலாம்
தனது அகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம் சாதி சொல்லால் அறியலாம்
தரு நீதி கேள்வியால் அறியலாம் பிணிகளைத் தாதுக்களால் அறியலாம்
வனச விகசித வதன பரிபூரணானந்த வால வடிவான வேலா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**39 மாறாதது

#41
குணம் இலாத் துட்ட மிருகங்களையும் நய குணம் கொண்டு உட்படுத்திவிடலாம்
கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்துத் திருப்பிவிடலாம்
உணர்வு இலாப் பிரமராட்சசி முதல் பேய்களை உகந்து கூத்தாட்டிவிடலாம்
உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் உயிர் பெறப்
பிணமதை எழுப்பலாம் அக்கினி சுடாமல் பெரும் புனல் எனச் செய்யலாம்
பிணியையும் அகற்றலாம் காலதூதுவரையும் பின்பு வருக என்று சொலலாம்
மணலையும் கயிறாத் திரிக்கலாம் கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**40 மக்களில் விலங்குகள்

#42
தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளிச் செய்வோர் குரங்கு
சபையில் குறிப்பறியமாட்டாமல் நின்றவர் தாம் பயன் இலாத மரமாம்
வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்கும் ஒரு வெறியர் குரை ஞமலி ஆவர்
மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மை இல்லாத கழுதை
சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும் தூங்கலே சண்டிக் கடா
சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும் துட்டனே கொட்டு தேளாம்
மாம்பழம்-தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**41 அற்பருக்கு வாழ்வு

#43
அற்பர்க்கு வாழ்வு சற்று அதிகமானால் விழிக்கு யாவர் உருவும் தோற்றிடாது
அண்டி நின்றே நல்ல வார்த்தைகள் உரைத்தாலும் அவர் செவிக்கு ஏறிடாது
முன் பக்ஷம் ஆன பேர் வருகினும் வாரும் என மொழியவும் வாய் வராது
மோதியே வாதப் பிடிப்பு வந்தது போல முன் காலை அகல வைப்பார்
விற்பனம் மிகுந்த பெரியோர் செய்தி சொன்னாலும் வெடுவெடுத்து ஏசி நிற்பார்
விருதா மகத்துவப் பேயது சவுக்கடி விழும் போது தீரும் என்பார்
மல் புயம்-தனில் நீப மாலை அணி லோலனே மார்பனே வடிவேலவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**42 மக்களில் தீய கோள்கள்

#44
அன்னை தந்தையர் புத்தி கேளாத பிள்ளையோ அட்டமச் சனி ஆகுவான்
அஞ்சாமல் எதிர் பேசி நிற்கும் மனையாள் வாக்கில் அங்காரகச் சன்மமாம்
தன்னை மிஞ்சிச் சொன்ன வார்த்தை கேளா அடிமை சந்திராஷ்டகம் என்னலாம்
தன் பங்கு தா என்று சபை ஏறு தம்பியோ சார்ந்த சன்மச் சூரியன்
நன்னயம் இலாத வஞ்சனைசெய்த தமையன் மூன்றாம் இடத்தே வியாழம்
நாள்-தொறும் விரோதமிடு கொண்டோன் கொடுத்துளோன் ராகு கேதுக்கள் எனலாம்
மன் அயனை அன்று சிறை-தனில் இட்டு நம்பற்கு மந்திரம் உரைத்த குருவே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**43 நல்லினஞ் சேர்தல்

#45
சந்தன விருக்ஷத்தை அண்டி நிற்கின்ற பல தருவும் அவ் வாசனை தரும்
தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும் சாயல் பொன் மயமே தரும்
பந்தம் மிகு பாலுடன் வளாவிய தணீர் எலாம் பால் போல் நிறம் கொடுக்கும்
படிக மணிகட்கு உளே நிற்கின்ற வடமும் அப்படியே குணம் கொடுக்கும்
அந்தம் மிகு மரகதக் கல்லைத் தரித்திடில் அடுத்ததும் பசுமை ஆகும்
ஆன பெரியோர்களொடு சகவாசம் அது செயின் அவர்கள் குணம் வரும் என்பர் காண்
மந்தர நெடும் கிரியின் முன் கடல் கடைந்த அரி மருக மெய்ஞ்ஞான முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**44 ஊழின் பெருவலி

#46
அன்று முடிசூடுவது இருக்க ரகுராமன் முன் அரும் காடு அடைந்தது என்ன
அண்டர் எல்லாம் அமிர்தம் உண்டிடப் பரமனுக்கு ஆலம் லபித்தது என்ன
வென்றி வரு தேவர் சிறை மீட்ட நீ களவில் வேடிச்சியை சேர்ந்தது என்ன
மேதினி படைக்கும் அயனுக்கு ஒரு சிரம் போகி வெம் சிறையில் உற்றது என்ன
என்றும் ஒரு பொய் சொலா மன்னவன் விலைபோனது என்ன காண் வல்லமையினால்
எண்ணத்தினால் ஒன்றும் வாராது பரமசிவன் எத்தனப்படி முடியுமாம்
மன்று-தனில் நடனமிடு கங்காதரன் பெற்ற வரபுத்ர வடிவேலவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**45 பெரியோர் சொற்படி நடந்தவர்

#47
தந்தை தாய் வாக்ய பரிபாலனம் செய்தவன் தசரத குமார ராமன்
தமையன் அருள் வாக்கிய பரிபாலனம் செய்தோர்கள் தருமனுக்கு இளைய நால்வர்
சிந்தையில் உணர்ந்து குரு வாக்ய பரிபாலனம் செய்தவன் அரிச்சந்திரன்
தேகி என்றோர்க்கு இல்லை எனா வாக்ய பாலனம் செய்தவன் தான கன்னன்
நிந்தை தவிர் வாக்ய பரிபாலனம் செய்தவன் நீள் பலம் மிகுந்த அனுமான்
நிறைவுடன் பத்தாவின் வாக்ய பரிபாலனம் நிலத்தினில் நளாயினி செய்தாள்
மந்தை வழி கோயில் குளமும் குலவு தும்பி_முகன் மகிழ்தர உகந்த துணைவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**46 தன் அளவே தனக்கு

#48
வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒரு காசு மட்டு அன்றி அதிகம் ஆமோ
வான் ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி வண்ணப் பருந்து ஆகுமோ
கங்காசலம்-தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரை ஆகுமோ
கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின் காணுமோ நால் நாழிதான்
ஐங்காதம் ஓடினும் தன் பாவம் தன்னோடே அடையாமல் நீங்கிவிடுமோ
ஆரிடம் சென்றாலும் வெகு தொலைவு சுற்றினும் அமைத்தபடி அன்றி வருமோ
மங்காத செந்தமிழ் கொண்டு நக்கீரர்க்கு வந்த துயர் தீர்த்த முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**47 இறுமாப்பு

#49
சூரபதுமன் பலமும் இராவணன் தீரமும் துடுக்கான கஞ்சன் வலியும்
துடியான இரணியன் வரப்ரசாதங்களும் தொலையாத வாலி திடமும்
பாரம் மிகு துரியோதனாதி நூற்றுவரது பராக்ரமும் மதுகைடவர்
பாரிப்பும் மாவலி-தன் ஆண்மையும் சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும்
ஏர் அணவு கீசகன் கனதையும் திரிபுரர் எண்ணமும் தக்கன் எழிலும்
இவர்களது சம்பத்தும் நின்றவோ அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ
மாரனைக் கண்ணால் எரித்து அருள் சிவன் தந்த வரபுத்ர வடிவேலவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**48 நல்லோர் நட்பு

#50
மா மதியில் முயலானதது தேயவும் தேய்ந்து வளரும் அப்போது வளரும்
வாவி-தனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர் வற்றில் வற்றிடும் பெருகில் உயரும்
பூ மருவு புதல் பூடு கோடையில் தீய்ந்திடும் பொங்கு காலம் தழைக்கும்
புண்டரிகம் இரவி போம் அளவில் குவிந்திடும் போது உதயம் ஆகில் மலரும்
தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும் அது தேறில் உயிரும் சிறக்கும்
சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர் சிநேகம் அப்படி ஆகுமே
வாமன சொரூப மத யானை_முகனுக்கு இளைய வால குருபர வேலவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**49 பயன்தரும்

#51
பருவத்திலே பெற்ற சேயும் புரட்டாசி பாதி சம்பா நடுகையும்
பலம் இனிய ஆடி-தனில் ஆனை வால் போலவே பயிர் கொண்டு வரு கரும்பும்
கருணையொடு மிக்க நாணயமுளோர் கையினில் கடனிட்டு வைத்த முதலும்
காலமது நேரில் தனக்கு உறுதியாக முன் கற்று உணர்ந்திடு கல்வியும்
விருது அரசரைக் கண்டு பழகிய சிநேகமும் விவேகிகட்கு உபகாரமும்
வீண் அல்ல இவை எலாம் கைப்பலனதாக அபிவிர்த்தியாய் வரும் என்பர் காண்
மரு உலாவிய நீப மாலையும் தண் தரள மாலையும் புனை மார்பனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**50 காலத்தில் உதவாதவை

#52
கல்லாது புத்தகம்-தனில் எழுதி வீட்டினில் கட்டிவைத்திடு கல்வியும்
காலங்களுக்கு உதவ வேண்டும் என்று அன்னியன் கையில் கொடுத்த பொருளும்
இல்லாளை நீங்கியே பிறர் பாரி சதம் என்று இருக்கின்ற குடி வாழ்க்கையும்
ஏறுமாறாகவே தேசாந்தரம் போய் இருக்கின்ற பிள்ளை வாழ்வும்
சொல்லானது ஒன்றும் அவர் மனமானது ஒன்றுமாச் சொல்லும் வஞ்சகர் நேசமும்
சுகியமாய் உண்டு என்று இருப்பது எல்லாம் தருண துரிதத்தில் உதவாது காண்
வல்லான கொங்கை மட மாது தெய்வானை குற வள்ளி பங்காள நேயா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**51 திரும்பாதவை

#53
ஆடு அரவின் வாயினில் அகப்பட்ட தவளையும் ஆனை வாயில் கரும்பும்
அரிதான கப்பலில் பாய்மரக் காற்றினில் அகப்பட்டு மெலி காக்கையும்
நாடு அறியவே தாரைவார்த்துக் கொடுத்ததும் நமன் கைக்குள் ஆன உயிரும்
நலமாகவே அணை கடந்திட்ட வெள்ளமும் நாய் வேட்டை பட்ட முயலும்
தேடி உண்பார் கைக்குள் ஆன பல உடைமையும் தீ வாதையான மனையும்
திரள் கொடுங்கோல் அரசர் கைக்கு ஏறு பொருளும் திரும்பி வாரா என்பர் காண்
மாடம் மிசை அன்னக்கொடித் திரள் கொள் சோணாடு வாழ வந்திடு முதல்வனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**52 நன்று

#54
கடுகடுத்து ஆயிரம் செய்குவதில் இன்சொலால் களி கொண்டு அழைத்தல் நன்று
கன வேள்வி ஆயிரம் செய்வதில் பொய்யுரை கருத்தொடு சொலாமை நன்று
வெடுவெடுக்கின்றதோர் அவிவேகி உறவினில் வீணரொடு பகைமை நன்று
வெகுமதிகள் ஆயிரம் செய்வதின் அரைக்காசு வேளை கண்டு உதவல் நன்று
சடுதியில் பக்குவம் சொல்லும் கொடைக்கு இங்கு சற்றும் இலை என்னல் நன்று
சம்பத்துடன் பிணியில் மெலிகுவதில் நோயற்ற தாரித்திரியம் நன்று காண்
மடுவினில் கரி ஓலம் என்ன வந்து அருள்செய்த மால் மருகன் ஆன முதல்வா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**53 ஈடாகுமோ

#55
தாரகைகள் ஒரு கோடி வானத்து இருக்கினும் சந்திரற்கு ஈடாகுமோ
தாருவில் கொடி தொனிகள் பல கூடினாலும் ஒரு தம்பட்ட ஓசை ஆமோ
கோரம் மிகு பன்றியின் குட்டி பல கூடின் ஒரு குஞ்சரக் கன்று ஆகுமோ
கொட்டி மலர் வாவியில் பல கூடினாலும் ஒரு கோகனக மலர் ஆகுமோ
பாரம் மிகு மா மலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மக மேரு ஆமோ
பலன் இலாப் பிள்ளைகள் அநேகம் பிறந்தும் விற்பனன் ஒருவனுக்கு நிகரோ
வாரணக் கொடி ஒரு கரத்தில் பிடித்து ஒன்றில் வடிவேல் அணிந்த முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**54 அறியமுடியுமோ

#56
மணமாலை அருமையைப் புனைபவர்களே அறிவர் மட்டிக் குரங்கு அறியுமோ
மக்களுடை அருமையைப் பெற்றவர்களே அறிவர் மலடிதான் அறிவது உண்டோ
கணவருடை அருமையைக் கற்பான மாது அறிவள் கணிகையானவள் அறிவளோ
கருதும் ஒருசந்தியின் பாண்டம் என்பதை வரும் களவான நாய் அறியுமோ
குணமான கிளி அருமை-தனை வளர்த்தவர் அறிவர் கொடிய பூனையும் அறியுமோ
குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர் கொடு மூடர் தாம் அறிவரோ
மணவாளன் நீ என்று குற வள்ளி பின்தொடர வனமூடு தழுவும் அழகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**55 தீச்சார்பு

#57
மடுவினில் கஞ்ச மலர் உண்டு ஒருவர் அணுகாமல் வன் முதலை அங்கு இருக்கும்
மலையினில் தேன் உண்டு சென்று ஒருவர் கிட்டாமல் மருவி அதில் வண்டு இருக்கும்
நெடுமை திகழ் தாழை மலர் உண்டு ஒருவர் அணுகாமல் நீங்காத முள் இருக்கும்
நீடு பல சந்தன விருக்ஷம் உண்டு அணுகாது நீள் அரவு சூழ்ந்திருக்கும்
குடி மல்கி வாழ்கின்ற வீட்டினில் செல்லாது குரை நாய்கள் அங்கு இருக்கும்
கொடுக்கும் தியாகி உண்டு இடையூறு பேசும் கொடும் பாவி உண்டு கண்டாய்
வடுவையும் கடுவையும் பொருவும் இரு கண்ணி குற வள்ளிக்கு உகந்த கணவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**56 வேசையர்

#58
பூவில் வேசிகள் வீடு சந்தைப் பெரும் பேட்டை புனை மலர் படுக்கை வீடு
பொன் வாசல் கட்டில் பொது அம்பலம் உடுத்த துகில் பொருவில் சூதாடுசாலை
மேவலாகிய கொங்கை கை ஆடு திரள் பந்து விழி மனம் கவர் தூண்டிலாம்
மிக்க மொழி நீர் மேல் எழுத்து அதிக மோகம் ஒரு மின்னல் இரு துடை சர்ப்பமாம்
ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்குமிடம் அதிக படம் ஆம் மனது கல்
அமிர்த வாய் இதழ் சித்ரசாலை எச்சில் குழி அவர்க்கு ஆசைவைக்கலாமோ
மா வடிவு கொண்டே ஒளித்த ஒரு சூரனை வதைத்த வடிவேலாயுதா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**57 கலிகாலக் கொடுமை

#59
தாய் புத்தி சொன்னால் மறுத்திடும் காலம் உயர் தந்தையைச் சீறு காலம்
சற்குருவை நிந்தைசெய் காலம் மெய்க் கடவுளைச் சற்றும் எண்ணாத காலம்
பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம் புரட்டருக்கு ஏற்ற காலம்
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம் நல் பெரியர் சொல் கேளாத காலம்
தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம் மிகு சிறியவன் பெருகு காலம்
செருவில் விட்டு ஓடினார் வரிசை பெறு காலம் வசை செப்புவோர்க்கு உதவு காலம்
வாய் மதம் பேசிடும் அநியாயகாரர்க்கு வாய்த்த கலிகாலம் ஐயா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**58 உற்ற கடமை

#60
கல்வியொடு கனமுறச் சபையின் மேல்வட்டமாக் காணவைப்போன் பிதாவாம்
கற்று உணர்ந்தே தனது புகழால் பிதாவை ப்ரகாசம் செய்வோன் புத்திரன்
செல்வம் மிகு கணவனே தெய்வம் என்று அனுதினம் சிந்தைசெய்பவள் மனைவியாம்
சிநேகிதன் போலவே அன்புவைத்து உண்மை மொழி செப்புமவனே சோதரன்
தொல் வளம் மிகுந்த நூல் கரை தெரிந்து உறுதிமொழி சொல்லும் அவனே குரவன் ஆம்
சொன்ன நெறி தவறாமல் வழிபாடுசெய்து வரு துய்யனே இனிய சீடன்
வல் விரகம் மிஞ்சு சுரகுஞ்சரியுடன் குறவர் வஞ்சியை மணந்த கணவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**59 பண்பினாலே பெருமை

#61
சேற்றில் பிறந்திடும் கமல மலர் கடவுளது திருமுடியின் மேல் இருக்கும்
திகழ் சிப்பி உடலில் சனித்த முத்து அரசரது தேகத்தின் மேல் இருக்கும்
போற்றி இடு பூச்சியின் வாயின் நூல் பட்டு என்று பூசைக்கு நேசம் ஆகும்
புகலரிய வண்டு எச்சிலான தேன் தேவர்_கோன் புனித அபிடேகம் ஆகும்
சாற்றிய புலாலொடு பிறந்த கோரோசனை சவாது புழுகு அனைவர்க்கும் ஆம்
சாதியீனத்தில் பிறக்கினும் கற்றோர்கள் சபையின் மேல்வட்டம் அன்றோ
மாற்றிச் சுரத்தினை விபூதியால் உடல் குளிர வைத்த மெய்ஞ்ஞான முதலே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**60 செயத் தகாதவை

#62
தான் ஆசரித்து வரு தெய்வம் இது என்று பொய்ச்சத்தியம் செயின் விடாது
தன் வீட்டில் ஏற்றிய விளக்கு என்று முத்தம்-தனைக் கொடுத்தால் அது சுடும்
ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனது என்று அடாது செய்யில் கெடுதியாம்
ஆனைதான் மெத்தப் பழக்கம் ஆனாலும் செய்யாது செய்தால் கொன்றிடும்
தீனானது இனிது என்று மீதூண் விரும்பினால் தேக பீடைகளே தரும்
செகராசர் சூனு என ஏலாத காரியம் செய்தால் மனம் பொறார் காண்
வானாடு புகழும் ஒரு சோணாடு தழைய இவண் வந்து அவதரித்த முதலே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**61 நடுவுநிலைமை

#63
வந்த விவகாரத்தில் இனிய பரிதானங்கள் வரும் என்றும் நேசர் என்றும்
வன் பகைஞர் என்றும் அயலோர் என்றும் மிக்க தனவான் என்றும் ஏழை என்றும்
இந்த வகையைக் குறித்து ஒரு பக்ஷபாதம் ஓர் எள்ளளவு உரைத்திடாமல்
எண்ணமுடனே லிகித புத்தியொடு சாக்ஷிக்கும் ஏற்கச் சபா சமதம் ஆம்
முந்த இரு தலையும் சமன்செய்த கோல் போல் மொழிந்திடின் தர்மம் அது காண்
முனை வீமன் உடல் பாதி மிருகம் தனக்கு என்று முன் தருமர் சொன்னது அலவோ
மைந்தன் என அன்று உமை முலைப்பால் கொடுத்திட வளர்ந்து அருள் குழந்தை வடிவே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**62 ஓரம் சொல்லேல்

#64
ஓர விவகாரமா வந்தவர் முகம் பார்த்து உரைப்போர் மலைக் குரங்காம்
உயர் வெள்ளெருக்குடன் முளைத்துவிடும் அவர் இல்லம் உறையும் ஊர் பாழ் நத்தம் ஆம்
தாரணியில் இவர்கள் கிளை நெல்லியிலை போல் உகும் சமானமா எழு பிறப்பும்
சந்ததி இலாது உழல்வர் அவர் முகத்தினில் மூத்த தையலே குடியிருப்பாள்
பாரம் இவர் என்று புவி மங்கையும் நடுங்குவாள் பழித்த துர்மரணம் ஆவார்
பகர் முடிவிலே ரவுரவாதி நரகத்து அனுபவிப்பர் எப்போதும் என்பார்
வாரமுடன் அருணகிரிநாதருக்கு அனுபூதி வைத்து எழுதி அருள் குருபரா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**63 ஒன்று வேண்டும்

#65
கொங்கை இல்லாதவட்கு எத்தனைப் பணியுடைமை கூடினும் பெண்மை இல்லை
கூறு நிறை கல்வி இல்லாமல் எத்தனை கவிதை கூறினும் புலமை இல்லை
சங்கை இல்லாதவர்க்கு எத்தனை விவேகம் தரிக்கினும் கனதை இல்லை
சட்சுவை பதார்த்த வகை உற்றாலும் நெய் இலாச் சாதமும் திருத்தி இல்லை
பங்கயம் இலாமல் எத்தனை மலர்கள் வாவியில் பாரித்தும் மேன்மை இல்லை
பத்தி இல்லாமல் வெகு நியமமாய் அர்ச்சனைகள் பண்ணினும் பூசை இல்லை
மங்கையர் இலா மனைக்கு எத்தனை அரும் செல்வம் வரினும் இல்வாழ்க்கை இல்லை
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**64 அளக்க இயலாதவை

#66
வாரி ஆழத்தையும் புனல் எறியும் அலைகளையும் மானிடர்கள் சனனத்தையும்
மன்னவர்கள் நினைவையும் புருடர் யோகங்களையும் வானின் உயர் நீளத்தையும்
பாரில் எழு மணலையும் பல பிராணிகளையும் படி ஆண்ட மன்னவரையும்
பருப்பதத்தின் நிரையும் ஈசுரச் செயலையும் பனி மாரி பொழி துளியையும்
சீரிய தமிழ்ப் புலவர் வாக்கில் எழு கவியையும் சித்தர்-தமது உள்ளத்தையும்
தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வளவு எனும்படி தெரிந்து அளவிடக் கூடுமோ
வாரிச மடந்தை குடிகொண்ட நெடுமாலுக்கு மருகன் என வந்த முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**65 பிறர் மனைவியை நயவாதே

#67
தம் தாரம் அன்றியே பரதாரம் மேல் நினைவு-தனை வைத்த காமுகர்க்குத்
தயை இல்லை நிசம் இல்லை வெட்கம் இலை சமரினில் தைரியம் சற்றும் இல்லை
அம் தாரம் இல்லை தொடர் முறை இல்லை நிலை இல்லை அறிவு இல்லை மரபும் இல்லை
அறம் இல்லை நிதி இல்லை இரவினில் தனிவழிக்கு அச்சமோ மனதில் இல்லை
நந்தாத சனம் இல்லை இனம் இல்லை எவருக்கும் நட்பு இல்லை கனதை இல்லை
நயம் இல்லை இளமை-தனில் வலிமை இலை முத்தி பெறும் ஞானம் இலை என்பர் கண்டாய்
மந்தார பரிமள சுகந்தாதி புனையும் மணி மார்பனே அருளாளனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**66 மானம் காத்தல்

#68
கன பாரம் ஏறினும் பிளந்திடுவது அன்றியே கற்றூண் வளைந்திடாது
கருதலர்களால் உடைந்தாலும் உயிர் அளவிலே கன சூரன் அமரில் முறியான்
தினமும் ஓர் இடுக்கண் வந்துற்றாலும் வேங்கை தோல் சீவன் அளவில் கொடாது
திரமான பெரியோர்கள் சரீரங்கள் போகினும் செப்பும் முறை தவறிடார்கள்
வனம் ஏறு கவரிமான் உயிர் போகும் அளவும் தன் மயிரின் ஒன்றும் கொடாது
வாராத ஆபத்து வருகினும் கற்புடைய மாது நிறை தவறி நடவாள்
மனதார உனது அடைக்கலம் என்ற கீரற்கு வன் சிறை தவிர்த்த முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**67 திருவருட் சிறப்பு

#69
திருமகள் கடாக்ஷம் உண்டானால் எவர்க்கும் சிறப்பு உண்டு கனதை உண்டு
சென்ற வழி எல்லாம் பெரும் பாதை ஆய்விடும் செல்லாத வார்த்தை செல்லும்
பொருளொடு துரும்பும் மரியாதை ஆம் செல்வமோ புகல் பெருக்கு ஆறு போல் ஆம்
புவியின் முன் கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவார்
பெருமையொடு சாதியில் உயர்ச்சி தரும் அனுதினம் பேரும் ப்ரதிஷ்டை உண்டாம்
பிரியமொடு பகையாளி கூட உறவு ஆகுவான் பேச்சினில் பிழை வராது
வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**68 நட்புநிலை

#70
கதிரவன் உதிப்பது எங்கே நளினம் எங்கே களித்து உளம் மலர்ந்தது என்ன
கார் மேகம் எங்கே பசும் தோகை எங்கே கருத்தில் நட்பானது என்ன
மதியம் எங்கே பெரும் குமுதம் எங்கே முகம் மலர்ந்து மகிழ் கொண்டது என்ன
வல் இரவு விடிவது எங்கே கோழி எங்கே மகிழ்ந்து கூவிடுதல் என்ன
நிதி அரசர் எங்கே இருந்தாலும் அவர்களொடு நேசம் ஒன்றாய் இருக்கும்
நீதி மிகு நல்லோர்கள் எங்கு இருந்தாலும் அவர் நிறை பக்ஷம் மறவார்கள் காண்
மதிலுடன் கோபுரமும் வாவியும் புடை சூழ மருவு சோணாட்டு அதிபனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**69 காலம் அறிதல்

#71
காகம் பகல் காலம் வென்றிடும் கூகையைக் கனக முடி அரசர்தாமும்
கருது சய காலமது கண்டு அந்த வேளையில் காரியம் முடித்துவிடுவார்
மேகமும் பயிர் காலம் அது கண்டு பயிர் விளைய மேன்மேலும் மாரி பொழியும்
மிக்கான அறிவுளோர் வரு தருண காலத்தில் மிடியாளருக்கு உதவுவார்
நாகரிகம் உறு குயில் வசந்த காலத்திலே நலம் என்று உகந்து கூவும்
நல்லோர் குறித்ததைப் பதறாமல் அந்தந்த நாளையில் முடிப்பர் கண்டாய்
வாகு அனைய காலை கல் மாலை புல் எனும் உலக வாடிக்கை நிசம் அல்லவோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**70 இடம் அறிதல்

#72
தரையதனில் ஓடு தேர் நீள் கடலில் ஓடுமோ சலதி மிசை ஓடு கப்பல்
தரை மீதில் ஓடுமோ தண்ணீரில் உறு முதலை-தன் முன்னே கரி நிற்குமோ
விரை மலர் முடிப் பரமர் வேணி அரவினை வெல்ல மிகு கருடனால் ஆகுமோ
வேங்கைகள் இருக்கின்ற காடு-தனில் அஞ்சாமல் வேறொருவர் செல்ல வசமோ
துரைகளைப் பெரியோரை அண்டி வாழ்வோர்-தமைத் துஷ்டர் பகை என்ன செய்யும்
துணை கண்டு சேரிடம் அறிந்து சேர் என்று ஔவை சொன்ன கதை பொய் அல்லவே
வரை ஊதும் மாயனை அடுத்தலால் பஞ்சவர்கள் வன் போர் செயித்தது அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**71 யாக்கை நிலையாமை

#73
மனு நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லோரும் மண் மேல் இருந்து வாழ்ந்து
மடியாது இருந்த பேர் இல்லை அவர் தேடியதை வாரி வைத்தவரும் இல்லை
பனியதனை நம்பியே ஏர் பூட்டு கதை எனப் பாழான உடலை நம்பிப்
பார் மீதில் இன்னும் வெகு நாள் இருப்போம் என்று பல் கோடி நினைவை எண்ணி
அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல் அன்பாக நின் பதத்தை
அர்ச்சித்து முத்திபெறல் வேண்டும் என்று எண்ணார்கள் ஆசை வலையில் சுழலுவார்
வனிதையர்கள் காம விகாரமே பகை ஆகும் மற்றும் ஒரு பகையும் உண்டோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**72 வேட்டக நிலை

#74
வேட்டகம்-தன்னிலே மருகன் வந்திடும் அளவில் மேன்மேலும் உபசரித்து
விருந்துகள் சமைத்து நெய் பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார்
ஊட்டம் மிகு வர்க்க வகை செய்திடுவர் தைலம் இட்டு உறுதியாய் முழுகுவிப்பார்
ஓயாது தின்னவே பாக்கு இலை கொடுத்திடுவர் உற்ற நாள் நால் ஆகிலோ
நாட்டம் ஒரு படி இரங்குவது போல் மரியாதை நாளுக்குநாள் குறைவுறும்
நகை செய்வர் மைத்துனர்கள் அலுவல் பார் போ என்று நாணாமல் மாமி சொல்வாள்
வாட்ட மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள் அவன் மட்டியிலும் மட்டி அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**73 செல்வம் நிலையாமை

#75
ஓடம் இடும் இடமது மணல் சுடும் சுடும் இடமும் ஓடம் மிகவே நடக்கும்
உற்றதோர் ஆற்றின் நடு மேடு ஆகும் மேடு எலாம் உறு புனல் கொள் மடு ஆயிடும்
நாடு காடு ஆகும் உயர் காடு நாடு ஆகிவிடும் நவில் சகடு மேல்கீழதாய்
நடையுறும் சந்தை பல கூடும் உடனே கலையும் நல் நிலவும் இருளாய்விடும்
நீடு பகல் போய பின் இரவு ஆகும் இரவு போய் நிறை பகல் போதாய்விடும்
நிதியோர் மிடித்திடுவர் மிடியோர் செழித்திடுவர் நிசம் அல்ல வாழ்வு கண்டாய்
மாடு மனை பாரி சனம் மக்கள் நிதி பூஷணமும் மருவு கனவு ஆகும் அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**74 பிறந்தோர் பெறவேண்டிய பேறு

#76
சடம் ஒன்று எடுத்தால் புவிக்கு நல்லவன் என்று தன் பேர் விளங்க வேண்டும்
சதிருடன் இது அல்லாது மெய்ஞ்ஞானி என்று அவதரிக்கவே வேண்டும் அல்லால்
திடம் இனிய ரண சூர வீரன் இவன் என்னவே திசை மெச்ச வேண்டும் அல்லால்
தேகி என வருபவர்க்கு இல்லை என்னாமலே செய்யவே வேண்டும் அல்லால்
அடைவுடன் பல கல்வி ஆராய்ந்து வித்துவான் ஆகவே வேண்டும் அல்லால்
அறிவினால் துரை மக்கள் ஆக வர வேண்டும் இவர் அதிக பூபாலர் ஐயா
வட குவடு கிடுகிடென எழு கடலும் அலை எறிய மணி உரகன் முடிகள் நெரிய
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**75 வேசையர்

#77
தேடித் தம் வீட்டில் பணக்காரர் வந்திடின் தேக சீவன் போலவே
சிநேகித்த உம்மை ஒரு பொழுது காணாவிடின் செல்லுறாது அன்னம் என்றே
கூடிச் சுகிப்பர் என் ஆசை உன் மேல் என்று கூசாமல் ஆணையிடுவார்
கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்து இதழ் கொடுப்பர் சும்பனம் உகப்பர்
வேடிக்கை பேசியே கைம்முதல் பறித்த பின் வேறுபட நிந்தைசெய்து
விடவிடப் பேசுவர் தாய் கலகம் மூட்டியே விட்டுத் துரத்திவிடுவார்
வாடிக்கையாய் இந்த வண்டப் பரத்தையர் மயக்கத்தை நம்பலாமோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**76 உறுதி

#78
கைக்கு உறுதி வேல் வில் மனைக்கு உறுதி மனையாள் கவிக்கு உறுதி பொருளடக்கம்
கன்னியர்-தமக்கு உறுதி கற்புடைமை சொற்கு உறுதி கண்டிடில் சத்ய வசனம்
மெய்க்கு உறுதி முன்பின் சபைக்கு உறுதி வித்வ சனம் வேசையர்க்கு உறுதி தேடல்
விரகருக்கு உறுதி பெண் மூப்பினுக்கு உறுதி ஊண் வீரருக்கு உறுதி தீரம்
செய்க்கு உறுதி நீர் அரும் பார்க்கு உறுதி செங்கோல் செழும் படைக்கு உறுதி வேழம்
செல்வம்-தனக்கு உறுதி பிள்ளைகள் நகர்க்கு உறுதி சேர்ந்திடும் சர்ச்சனர்களாம்
மைக்கு உறுதி ஆகிய விழிக் குற மடந்தை சுரமங்கை மருவும் தலைவனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**77 வறுமை

#79
வறுமைதான் வந்திடின் தாய் பழுது சொல்லுவாள் மனையாட்டி சற்றும் எண்ணாள்
வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும்
சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது சிந்தையில் தைரியம் இல்லை
செய்ய சபை-தன்னிலே சென்று வர வெட்கம் ஆம் செல்வரைக் காணில் நாணும்
உறுதி பெறு வீரமும் குன்றிடும் விருந்து வரின் உயிருடன் செத்த பிணமாம்
உலகம் பழித்திடும் பெருமையோர் முன்பு சென்று ஒருவர் ஒரு செய்தி சொன்னால்
மறு வசனமும் சொலார் துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**78 தீய சார்பு

#80
ஆனை தண்ணீரில் நிழல் பார்த்திடத் தவளை சென்று அங்கே கலக்கி உலவும்
ஆயிரம் பேர் கூடி வீடு கட்டிடில் ஏதம் அறை குறளும் உடனே வரும்
ஏனை நல் பெரியோர்கள் போசனம் செயும் அளவில் ஈக் கிடந்து இசை கேடதாம்
இன்பம் மிகு பசுவிலே கன்று சென்று ஊட்டுதற்கு இனிய கோன் அது தடுக்கும்
சேனை மன்னவர் என்ன கருமம் நியமிக்கினும் சிறியோர்களால் குறைபடும்
சிங்கத்தையும் பெரிய இடபத்தையும் பகைமை செய்தது ஒரு நரி அல்லவோ
மானையும் திகழ் தெய்வயானையும் தழுவும் மணி மார்பனே அருளாளனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**79 இடுக்கண் வரினும் பயன்படுபவை

#81
ஆறு தண்ணீர் வற்றிவிட்டாலும் ஊற்று நீர் அமுத பானம் கொடுக்கும்
ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும் அப்போதும் உதவிசெய்வன்
கூறு மதி தேய்பிறையதாகவே குறையினும் குவலயத்து இருள் சிதைக்கும்
கொல்லைதான் சாவிபோய்விட்டாலும் அங்கு வரு குருவிக்கு மேய்ச்சல் உண்டு
வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும் மிக நாடி வருபவர்க்கு
வேறு வகை இல்லை என்று உரையாது இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான்
மாறுபடு சூரசங்கார கம்பீரனே வடிவேல் அணிந்த முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**80 இவர்க்கு இது இல்லை

#82
சார்பு இலாதவருக்கு நிலை ஏது முதல் இலாதவருக்கு இலாபம் ஏது
தயை இலாதவர்-தமக்கு உறவு ஏது பணம் இலாதார்க்கு ஏது வேசை உறவு
ஊர் இலாதவர்-தமக்கு அரசு ஏது பசி வேளை உண்டிடார்க்கு உறுதி நிலை ஏது
உண்மை இல்லாதவர்க்கு அறம் ஏது முயல்விலார்க்கு உறுவது ஒரு செல்வம் ஏது
சோர்வு இலாதவருக்கு மற்றும் ஒரு பயம் ஏது சுகம் இலார்க்கு ஆசை ஏது
துர்க்குணம் இலாதவர்க்கு எதிராளி ஏது இடர் செய் துட்டருக்கு இரக்கம் ஏது
மார்பு உருவ வாலி மேல் அத்திரம் விடுத்த நெடுமால் மருகனான முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**81 இதனினும் இது நன்று

#83
பஞ்சரித்து அருமை அறியார் பொருளை எய்தலின் பலர் மனைப் பிச்சை நன்று
பரிவாக உபசாரம் இல்லா விருந்தினில் பட்டினியிருக்கை நன்று
தஞ்சம் ஒரு முயலை அடு வென்றி-தனில் யானையொடு சமர்செய்து தோற்றல் நன்று
சரச குணம் இல்லாத பெண்களைச் சேர்தலில் சன்னியாசித்தல் நன்று
அஞ்சலார்-தங்களொடு நட்பாய் இருப்பதனில் அரவினொடு பழகுவது நன்று
அந்தணர்க்கு ஆபத்தில் உதவாது இருப்பதனில் ஆருயிர் விடுத்தல் நன்று
வஞ்சகருடன் கூடி வாழ்தலில் தனியே வருந்திடும் சிறுமை நன்று
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**82 நிலையற்றவை

#84
கொற்றவர்கள் ராணுவமும் ஆறு நேர் ஆகிய குளங்களும் வேசை உறவும்
குணம்_இலார் நேசமும் பாம்பொடு பழக்கமும் குலவு நீர் விளையாடலும்
பற்று_அலார் தமதிடை வருந்து விசுவாசமும் பழைய தாயாதி நிணறும்
பரதார மாதரது போகமும் பெருகி வரு பாங்கான ஆற்று வரவும்
கற்றும் ஒரு துர்ப்புத்தி கேட்கின்ற பேருறவும் நல்ல மத யானை நட்பும்
நாவில் நல்லுறவும் ஒரு நாள் போல் இரா இவைகள் நம்பப்படாது கண்டாய்
மற்றும் ஒரு துணை இல்லை நீ துணை எனப் பரவும் வானவர்கள் சிறை மீட்டவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**83 நற்புலவர் தீப்புலவர் செயல்

#85
மிக்கான சோலையில் குயில் சென்று மாங்கனி விருப்பமொடு தேடி நாடும்
மிடை கரும் காகங்கள் எக்கனி இருந்தாலும் வேப்பங்கனிக்கு நாடும்
எக்காலும் வரி வண்டு பங்கேருகத்தினில் இருக்கின்ற தேனை நாடும்
எத்தனை சுகந்த வகை உற்றாலும் உருள் வண்டு இனம் துர்மலத்தை நாடும்
தக்கோர் பொருள் சுவை நயங்கள் எங்கே என்று தாம் பார்த்து உகந்து கொள்வார்
தாழ்வான வன்கண்ணர் குற்றம் எங்கே என்று தமிழில் ஆராய்வர் கண்டாய்
மைக் காவி விழி மாது தெய்வானையும் குறவர் வள்ளியும் தழுவு தலைவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**84 தாழ்வில்லை

#86
வேங்கைகள் பதுங்குதலும் மா முகில் ஒதுங்குதலும் விரி சிலை குனிந்திடுதலும்
மேடமது அகன்றிடலும் யானைகள் ஒடுங்குதலும் வெள் விடைகள் துள்ளி விழலும்
மூங்கில்கள் வணங்குதலும் மேலவர் இணங்குதலும் முனிவர்கள் நயந்துகொளலும்
முதிர் படை ஒதுங்குதலும் வினையர்கள் அடங்குதலும் முதலினர் பயந்திடுதலும்
ஆங்கு அரவு சாய்குதலும் மகிழ் மலர் உலர்ந்திடலும் ஆயர் குழல் சூடுபடலும்
அம்புவியில் இவை காரியங்களுக்கு அல்லாமல் அதனால் இளைப்பு வருமோ
மாங்கனிக்கா வரனை வலமது புரிந்து வளர் மத_கரிக்கு இளைய முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**85 தெய்வச் செயல்

#87
சோடாய் மரத்தில் புறா ரெண்டு இருந்திடத் துறவு கண்டே வேடுவன்
தோலாமல் அவை எய்ய வேண்டும் என்று ஒரு கணை தொடுத்து வில் வாங்கி நிற்க
ஊடாடி மேலே எழும்பிடில் அடிப்பதற்கு உலவு ராசாளி கூட
உயரப் பறந்துகொண்டே திரிய அப்போது உதைத்த சிலை வேடன் அடியில்
சேடாக வல் விடம் தீண்டவே அவன் விழச் சிலையில் தொடுத்த வாளி
சென்று இராசாளி மெய் தைத்து விழ அவ் இரு சிறைப் புறா வாழ்ந்த அன்றோ
வாடாமல் இவை எலாம் சிவன் செயல்கள் அல்லாது மனச் செயலினாலும் வருமோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**86 செய்யுளின் இயல்

#88
எழுத்து அசைகள் சீர் தளைகள் அடி தொடைகள் சிதையாது இருக்கவே வேண்டும் அப்பா
ஈரைம் பொருத்தமொடு மதுரமாய்ப் பளபளப்பு இனிய சொற்கு அமைய வேண்டும்
அழுத்தம் மிகு குறளினுக்கு ஒப்பாகவே பொருள் அடக்கமும் இருக்க வேண்டும்
அன்பான பா இனம் இசைந்துவரல் வேண்டும் முன் அலங்காரம் உற்ற துறையில்
பழுத்து உளம் உவந்து ஓசை உற்றுவரல் வேண்டும் படிக்கும் இசை கூடல் வேண்டும்
பாங்காக இன்னவை பொருந்திடச் சொல் கவிதை பாடில் சிறப்பு என்பர் காண்
மழுத் தினம் செங்கை-தனில் வைத்த கங்காளன் அருள் மைந்தன் என வந்த முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**87திருநீறு வாங்கும் முறை

#89
பரி-தனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர் பலகையில் இருந்தும் மிகவே
பாங்கான அம்பலம்-தனிலே இருந்தும் பருத்த திண்ணையில் இருந்தும்
தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ் நிற்க மேல் நின்று திருநீறு வாங்கி இடினும்
செங்கை ஒன்றாலும் விரல் மூன்றாலும் வாங்கினும் திகழ் தம்பலத்தினோடும்
அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும் அசுத்த நிலமான அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும் அவர்க்கு நரகு என்பர் கண்டாய்
வரி விழி மடந்தை குற வள்ளி நாயகி-தனை மணந்து மகிழ் சகநாதனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**88 திருநீறு அணியும் முறை

#90
பத்தியொடு சிவசிவா என்று திருநீற்றைப் பரிந்து கையால் எடுத்தும்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு பருத்த புயம் மீது ஒழுக
நித்தம் மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடு வினை அணுகாது தேக பரிசுத்தம் ஆம் நீங்காமல் நிமலன் அங்கே
சத்தியொடு நித்தம் விளையாடுவன் முகத்திலே தாண்டவம் செய்யும் திரு
சஞ்சலம் வராது பரகதி உதவும் இவரையே சத்தியும் சிவனும் என்னலாம்
மத்து இனிய மேரு என வைத்து அமுதினைக் கடையும் மால் மருகன் ஆன முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**89 பயனற்ற உறுப்புக்கள்

#91
தேவாலயம் சுற்றிடாத கால் என்ன கால் தெரிசியாக் கண் என்ன கண்
தினமுமே நின் கமல பாதத்தை நினையாத சிந்தைதான் என்ன சிந்தை
மேவு ஆகமம் சிவபுராணம் அவை கேளாமல் விட்ட செவி என்ன செவிகள்
விமலனை வணங்காத சென்னி என் சென்னி பணிவிடை செயாக் கை என்ன கை
நாவார நினை ஏத்திடாத வாய் என்ன வாய் நல் தீர்த்தம் மூழ்கா உடல்
நானிலத்து என்ன உடல் பாவியாகிய சனனம் நண்ணினால் பலன் ஏது காண்
மா ஆகி வேலை-தனில் வரு சூரன் மார்பு உருவ வடிவேலை விட்ட முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**90 நற்பொருளுடன் தீயபொருள்

#92
கோகனக_மங்கையுடன் மூத்தவள் பிறந்து என்ன குலவும் ஆட்டின்-கண் அதர்தான்
கூடப் பிறந்து என்ன தண்ணீரினுடனே கொடும் பாசி உற்றும் என்ன
மாகர் உணும் அமுதினொடு நஞ்சம் பிறந்து என்ன வல் இரும்பில் துருத்தான்
வந்தே பிறந்து என்ன நெடு மரம்-தனில் மொக்குள் வளமொடு பிறந்து என்ன உண்
பாகம் மிகு செந்நெலொடு பதர்தான் பிறந்து என்ன பன்னும் ஒரு தாய் வயிற்றில்
பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்து என்ன பலன் ஏதும் இல்லை அன்றோ
மா கனக மேருவைச் சிலை என வளைத்த சிவன் மைந்தன் என வந்த முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**91 கோடரிக்காம்பு

#93
குலமான சம்மட்டி குறடு கைக்கு உதவியாய்க் கூர் இரும்புகளை வெல்லும்
கோடாலி-தன் உளே மரமது நுழைந்து தன் கோத்திரம் எலாம் அழிக்கும்
நலமான பார்வை சேர் குருவியானது வந்து நண்ணு பறவைகளை ஆர்க்கும்
நட்புடன் வளர்த்த கலைமான் ஒன்று சென்று தன் நவில் சாதி-தனை இழுக்கும்
உலவு நல் குடி-தனில் கோளர்கள் இருந்துகொண்டு உற்றாரை ஈடழிப்பர்
உளவன் இல்லாமல் ஊர் அழியாது எனச் சொலும் உலகமொழி நிசம் அல்லவோ
வலமாக அந்தரனிடத்தினில் கனி கொண்ட மத யானை-தன் சோதரா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**92 வீணுக்குழைத்தல்

#94
குயில் முட்டை தனது என்று காக்கை அடைகாக்கும் குணம் போலும் ஈக்கள் எல்லாம்
கூடியே தாம் உண்ண வேண்டும் என்றே தினம் கூடு உய்த்த நறவு போலும்
பயில் சோரருக்குப் பிறந்திடத் தாம் பெற்ற பாலன் என்று உட்கருதியே
பாராட்டி முத்தமிட்டு அன்பாய் வளர்த்திடும் பண்பு இலாப் புருடர் போலும்
துயில் இன்றி நிதிகளைத் தேடியே ஒருவர்-பால் தொட்டுத் தெரித்திடாமல்
தொகைபண்ணி வைத்திடுவர் கைக்கொண்டுபோக வரு சொந்தமானவர் வேறு காண்
வயிரமொடு சூரனைச் சங்காரமே செய்து வானவர்க்கு உதவு தலைவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**93 வீணாவன

#95
அழலுக்குளே விட்ட நெய்யும் பெருக்கான ஆற்றில் கரைத்த புளியும்
அரிதான கமரில் கவிழ்த்திட்ட பாலும் வரும் அலகைகட்கு இடு பூசையும்
சுழல் பெரும் காற்றினில் வெடித்த பஞ்சும் மணல் சொரி நறும் பனி நீரும் நீள்
சொல்லரிய காட்டுக்கு எரித்த நிலவும் கடல் சுழிக்குளே விடு கப்பலும்
விழலுக்கு இறைத்திட்ட தண்ணீரும் முகம் மாய வேசைக்கு அளித்த பொருளும்
வீணருக்கே செய்த நன்றியும் பலன் இல்லை விருதா இது என்பர் கண்டாய்
மழலைப் பசும்கிள்ளை முன்கை மலை_மங்கை தரு வண்ணக் குழந்தை முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**94 கைவிடத்தகாதவர்

#96
அன்னை சுற்றங்களையும் அற்றை நாள் முதலாக அடுத்துவரு பழையோரையும்
அடு பகைவரில் தப்பி வந்த ஒரு வேந்தனையும் அன்பான பெரியோரையும்
தன்னை நம்பினவரையும் ஏழையானவரையும் சார்ந்த மறையோர்-தம்மையும்
தருணம் இது என்று நல் ஆபத்து வேளையில் சரணம்புகுந்தோரையும்
நன்னயமதாக முன் உதவிசெய்தோரையும் நாளும் தனக்கு உறுதியாய்
நத்து சேவகனையும் காப்பது அல்லாது கைநழுவவிடல் ஆகாது காண்
மன் அயிலும் இனிய செம் சேவலும் செங்கை மலர் வைத்த சரவண பூபனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**95 தகாத செயல்கள்

#97
அண்டிவரும் உற்றார் பசித்து அங்கு இருக்கவே அன்னியர்க்கு உதவுவோரும்
ஆசு தபு பெரியோர் செய் நேசத்தை விட்டுப் பின் அற்பரை அடுத்த பேரும்
கொண்ட ஒரு மனையாள் இருக்கப் பரத்தையைக் கொண்டாடி மருவுவோரும்
கூறு சற்பாத்திரம் இருக்க மிகு தானமது குணம் இலார்க்கு ஈந்த பேரும்
கண்டு வரு புதியோரை நம்பியே பழையோரைக் கைவிட்டு இருந்த பேரும்
கரி வாலை விட்டு நரி வால் பற்றி நதி நீர் கடக்கின்ற மரியாதை காண்
வண்டு அடர் கடப்ப மலர் மாலிகாபரணம் அணி மார்பனே அருளாளனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**96 நல்லோர் முறை

#98
கூடியே சோதரர்கள் வாழ்தலாலும் தகு குழந்தை பல பெறுதலாலும்
குணமாகவே பிச்சையிட்டு உண்கையாலும் கொளும் பிதிர்க்கு இடுதலாலும்
தேடியே தெய்வங்களுக்கு ஈதலாலும் தியாகம் கொடுத்தலாலும்
சிறியோர்கள் செய்திடும் பிழையைப் பொறுத்துச் சினத்தைத் தவிர்த்தலாலும்
நாடியே தாழ்வாய் வணங்கிடுதலாலும் மிக நல் வார்த்தை சொல்லலாலும்
நன்மையே தரும் அலால் தாழ்ச்சிகள் வரா இவை நல்லோர்கள் செயும் முறைமை காண்
வாடி மனம் நொந்து தமிழ் சொன்ன நக்கீரன் முன் வந்து உதவி செய்த முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**97 அடைக்கலம் காத்தல்

#99
அஞ்சல் என நாயின் உடல் தருமன் சுமந்து முன் ஆற்றைக் கடத்துவித்தான்
அடைக்கலம் எனும் கயற்காக நெடுமாலுடன் அருச்சுனன் சமர்புரிந்தான்
தஞ்சம் என வந்திடு புறாவுக்கு முன் சிபி சரீரம்-தனைக் கொடுத்தான்
தட மலைச் சிறகு அரிந்தவனை முன் காக்கத் ததீசி முதுகென்பு அளித்தான்
இன்சொலுடனே பூத தயவுடையர் ஆயினோர் எவருக்கும் ஆபத்திலே
இனிய தம் சீவனை விடுத்தாகிலும் காத்து இரங்கி ரட்சிப்பர் அன்றோ
வஞ்ச கிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன் வளர் சூரன் உடல் கீண்டவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**98 தக்கவையும் தகாதவையும்

#100
பாலினொடு தேன் வந்து சேரில் ருசி அதிகமாம் பருகு நீர் சேரின் என்னாம்
பவளத்தினிடை முத்தை வைத்திடில் சோபிதம் படிக மணி கோக்கின் என்னாம்
மேல் இனிய மன்னர்-பால் யானை சேர்வது கனதை மேடமது சேரின் என்னாம்
மிக்கான தங்கத்தில் நவமணி உறின் பெருமை வெண்கல் அழுத்தின் என்னாம்
வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின் நலம் வளை கிழவர் சேரின் என்னாம்
மருவு நல்லோரிடம் பெரியோர் வரின் பிரியம் வரு கயவர் சேரின் என்னாம்
மாலிகை தரித்த மணி மார்பனே தெய்வானை வள்ளிக்கு வாய்த்த கணவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**99 சான்றோர் தன்மை

#101
அன்னதானம் செய்தல் பெரியோர் சொல் வழி நிற்றல் ஆபத்தில் வந்த பேர்க்கு
அபயம் கொடுத்திடுதல் நல் இனம் சேர்ந்திடுஎல் ஆசிரியன் வழி நின்று அவன்
சொன்ன மொழி தவறாது செய்திடுதல் தாய் தந்தை துணை அடி அருச்சனைசெயல்
சோம்பல் இல்லாமல் உயிர் போகினும் வாய்மை மொழி தொல் புவியில் நாட்டி இடுதல்
மன்னரைச் சேர்ந்து ஒழுகல் கற்புடைய மனைவியொடு வைகினும் தாமரை இலை
மருவு நீர் என உறுதல் இவை எலாம் மேலவர்-தம் மாண்பு என்று உரைப்பர் அன்றோ
வன்ன மயில் மேல் இவர்ந்து இவ் உலகை ஒரு நொடியில் வலமாக வந்த முருகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே
**100 நூலின் பயன்

#102
வன்ன மயில் எறி வரு வேலாயுதக் கடவுள் மலை மேல் உகந்த முருகன்
வள்ளிக் கொடிக்கு இனிய வேங்கை மரம் ஆகினோன் வானவர்கள் சேனாபதி
கன்னல் மொழி உமையாள் திருப் புதல்வன் அரன் மகன் கங்கை பெற்ற அருள் புத்திரன்
கணபதிக்கு இளைய ஒரு மெய்ஞ்ஞான தேசிகக் கடவுள் ஆவினன்குடியினான்
பன்னரிய புல்வயலில் வான குமரேசன் மேல் பரிந்து குருபாததாசன்
பாங்கான தமிழாசிரிய விருத்தத்தின் அறை பாடல் ஒரு நூறும் நாடி
நன்னயமதாகவே படித்த பேர் கேட்ட பேர் நாள்-தொறும் கற்ற பேர்கள்
ஞான யோகம் பெறுவர் பதவி யாவும் பெறுவர் நன் முத்தியும் பெறுவரே
** குமரேசசதகம் முற்றும்