காவடிச் சிந்து

**அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய
** காவடிச் சிந்து

@1 விநாயகர் துதி

#1
திருவுற்று இலகு கங்க வரையில் புகழ் மிகுந்து
திகழத் தினம் உறைந்த வாசனை மிகு
மகிமைச் சுகிர்த தொண்டர் நேசனை பல
தீய பாதகக்காரராகிய சூரர் யாவரும் மாளவே செய்து
சிகரக் கிரி பிளந்த வேலனை உமை
தகரக் குழல் கொள் வஞ்சி பாலனை
மருவுற்று இணர் விரிந்து மதுபக் குலம் முழங்க
மது மொய்த்து இழி கடம்ப ஆரனை விக
சித சித்ர சிகி உந்து வீரனை எழில்
மாக நாககுமாரியாகிய மாதினோடு கிராத நாயகி
மருவப் புளகு அரும்பு தோளனை எனை
அருமைப் பணிகொளும் தயாளனை
தெரிதற்கு அரிய மந்திரமதைத் தனது தந்தை
செவியில் புக மொழிந்த வாயனை இள
ரவியில் கதிர் சிறந்த காயனை அகல்
தேவநாடு கெடாது நீடிய சேனை காவலனாகவே வரு
திறலுற்ற சிவகந்த நாதனை விரி
மறையத்து ஒளிருகின்ற பாதனை
மருளற்றிட நினைந்து மனதில் களி சிறந்து
மதுரக் கனிவு வந்து கூடவே பல
விதமுற்று இலகு சிந்து பாடவே விரி
வாரி நீரினை வாரி மேல் வரு மாரி நேர்தரு மா மதாசல
வதனப்பன் இரண்டு தாளையே நயம்
உதவப் பணிவம் இந்த வேளையே

@2 முருகன் துதி

#1
சீர் வளர் பசும் தோகை மயிலான் வள்ளி
செவ் இதழ் அலாது இனிய தெள் அமுதும் அயிலான்
போர் வளர் தடம் கை உறும் அயிலான் விமல
பொன் அடியை இன்னல் அற உன்னுதல்செய்வாமே

#2
குஞ்சர வணங்கு ஆவல் வீடாதபடி
கொஞ்சி மருவும் சரச ரஞ்சித விசேடா
பைம் சரவணம் காவல் வீடா வளரும்
பாலன் என மாலையொடு காலை நினைவாமே

#3
வல் அவுணர் வழி யாதும் விட்டு வெருள
வன் சமர்செய் கந்தனிடம் வழியடிமைப்பட்டு
நல்ல உணர்வு அழியாது மட்டு மிஞ்சு
ஞான பரமானந்த மோனம் அடைவாமே

#4
ஒரு தந்த மாதங்க முகத்தான் மகிழ
உத்தம கனிட்டன் என உற்றிடும் மகத்தான்
வரு தந்த மா தங்க முகத்தான் எவரும்
வாழ்த்து குகநாயகனை ஏத்துதல் செய்வாமே

@3 கழுகுமலை நகர்

#1
தெள்ளு தமிழுக்கு உதவு சீலன் துதி செப்பு அணாமலைக்கும் அனுகூலன் வளர்
செழிய புகழ் விளைத்த கழுகுமலை வளத்தைத் தேனே சொல்லுவேனே
வெள்ளிமலை ஒத்த பல மேடை முடி மீதினிலே கட்டு கொடி ஆடை அந்த
வெய்யவன் நடத்தி வரு துய்ய இரதப் பரியும் விலகும் படி இலகும்

#2
வீதி-தொறும் ஆதி மறை வேதம் சிவ வேதியர்கள் ஓது சாமகீதம் அதை
மின்னு மலர்க் காவதனில் துன்னு மடப் பூவையுடன் விள்ளும் கிள்ளைப் புள்ளும்
சீதள முகிற்கு உவமை கூறும் நிறச் சிந்துரங்கள் சிந்து மதத்து ஆறும் உயிர்ச்
சித்திரம் நிகர்ந்த மின்னார் குத்து முலைக் குங்குமச் செம் சேறும் காதம் நாறும்

#3
நித்தம் நித்தமும் கணவரோடும் காம லீலையில் பிணங்கி மனம் வாடும் கரு
நீல விழியார் வெறுத்த கோல மணி மாலை ரத்னம் நெருங்கும் எந்த மருங்கும்
கத்து கடல் ஒத்த கடை வீதி முன்பு கட்டு தரளப் பந்தலின் சோதி எங்கும்
காட்டுவதால் ஈரிரண்டு கோட்டு மத யானையில் பல் களிறும் நிறம் வெளிரும்

#4
முத்தமிழ் சேர் வித்வ சனக் கூட்டம் கலை முற்றிலும் உணர்ந்திடும் கொண்டாட்டம் நெஞ்சில்
முன்னுகின்ற போது-தொறும் தென்மலையில் மேவு குறுமுனிக்கும் அச்சம் சனிக்கும்
எத்திசையும் போற்று அமரர் ஊரும் அதில் இந்திரன் கொலுவிருக்கும் சீரும் மெச்சும்
இந்த நகரம்-தனை அடைந்தவர்க்கு அதுவும் வெறுத்து இருக்கும் அருவருக்கும்

#5
துள்ளி எழும் வெள்ளை அலை அடங்கும்படி சுற்றிலும் வளைந்த அகழ்க் கிடங்கும் பல
சொன்ன மலை போல் மதிலும் மின்னுவதினாலே புகழ் தோன்றும் லோகம் மூன்றும்
கள் அவிழ் கடப்பமலர் வாகன் குறக் கன்னியை அணைக்கும் அதி மோகன் வளர்
கழுகுமலை நகரின் வளம் முழுமையும் என் நாவில் அடங்காதே மட மாதே

@4 கோயில் வளம்

#1
சென்னிகுள நகர் வாசன் தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் செப்பும்
செகம் மெச்சிய மதுரக்கவி-அதனைப் புய வரையில் புனை தீரன் அயில் வீரன்
வன்ன மயில் முருகேசன் குறவள்ளி பதம் பணி நேசன் உரை
வரமே தரு கழுகாசலபதி கோயிலின் வளம் நான் மறவாதே சொல்வன் மாதே

#2
கோபுரத்துத் தங்கத் தூவி தேவர் கோபுரத்துக்கு அப்பால் மேவி கண்கள்
கூசப் பிரகாசத்து ஒளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும்
நூபுரத்துத் தொனி வெடிக்கும் பத நுண் இடை மாதர்கள் நடிக்கும் அங்கே
நுழைவார் இடு முழவு ஓசைகள் திசை மாசுணம் இடியோ என நோக்கும்படி தாக்கும்

#3
சந்நிதியில் துஜஸ்தம்பம் விண்ணில் தாவி வருகின்ற கும்பம் எனும்
சல ராசியை வடிவார் பல் கொடி சூடிய முடி மீதிலே தாங்கும் உயர்ந்து ஓங்கும்
உன்னதமாகிய இஞ்சி பொன் நாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி மிக
உயர்வானது பெறலால் அதில் அதி சீதள புயல் சாலவும் உறங்கும் மின்னிக் கறங்கும்

#4
அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம் பல
அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும்
கருணை முருகனைப் போற்றித் தங்கக் காவடி தோளின் மேல் ஏற்றிக் கொழும்
கனல் ஏறிய மெழுகாய் வருபவர் ஏவரும் இகமே கதி காண்பார் இன்பம் பூண்பார்

@5 கழுகுமலை வளம்

#1
பொன் உலவு சென்னிகுள நல் நகர் அண்ணாமலை-தன்
புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன் முந்தி வெம் திறல் அரக்கர்களை வென்றவன் மயில்
போல ஏனலின் மீது உலாவு கிராத மாது முன் ஏகியே அடி
பூவையே உனது தஞ்சம் என்றவன் அவள் ஈயும் மாவினையும் மென்று தின்றவன்
மின் உலவு சொன்ன முடி சென்னி அணி விண்ணவர் தே
வேந்திரனும் சித்தர்களும் துன்னியே கதி வேண்டியே அகத்தில் அன்பு மன்னியே பணி
வேலவன் கிருபாகரன் குகன் மேவிடும் கழுகாசலம்-தனில்
மிஞ்சிய வளங்களை நான் உன்னியே சொல்ல ரஞ்சிதமாக் கேளடி விற்பன்னியே

#2
மூசு வண்டு வாசம் மண்டு காவில் மொண்டு தேனை உண்டு
மோகன முகாரி ராகம் பாடுமே மையலாகவே பெடையுடனே கூடுமே அலை
மோதி வாரிதி நீரை வாரி விண் மீது உலாவிய சீதளாகர
முகில் பெரும் சிகரம் முற்றும் மூடுமே கண்டு மயில் இனம் சிறகை விரித்து ஆடுமே
தேசு கொண்ட பார தந்த வீர தும்பி ராசி அண்டர்
தேவதாருவைக் கரத்தால் பிடிக்குமே சுற்றும் மேவிய கிளையை வளைத்து ஒடிக்குமே ஒளிர்
சேய சந்திரனோடு உரிஞ்சு பலாமரங்களிலே நெருங்கிய
தீம் கனி மது ரசத்தை வடிக்குமே மந்தி பாங்கில் நின்று அதனை அள்ளிக் குடிக்குமே

#3
அந்தரம் உருவி வளர்ந்து இந்திரன் உலகு கடந்து
அப்புறம் போய் நின்று அசையும் சந்தனமரம் தப்பிதம் இலாது கையால் வந்தனம் எங்கள்
ஆறு மா முக நாதனுக்கு இடுமாறு போல விசாலமுற்ற கொம்பு
அத்தனையும் நின்று தலை சாய்க்குமே அண்டப் பித்திகை-தனிலும் சென்று தேய்க்குமே
கந்தரம்-தொறும் கிடந்து கந்தரம் பயந்து ஒதுங்கக்
கர்ச்சனை புரியும் திறல் சிங்கமே நெஞ்சில் அச்சமுற விண் உறை மாதங்கமே தடம்
காவிலே சில தாவிலே வளர் மா இறால் நடுவே கிராதர்கள்
கார் முகம் எயும் கணைகள் ஏறுமே அதில் வார் மதுவால் வாரி உவர் மாறுமே

#4
கால வடிவேல் நெடிய வாள் கொடிய நாகம் உமிழ்
காரி பிணை வாரி கணை பானலே அன்ன கூர் நயன வேடம் மின்னார் ஏனலே காக்கும்
காலை மேல் எறி போதுவார் கவணோடு மா மணி தேசு வீசவே
கதிரவன் தனது முகம் சுழிக்குமே அவன் குதிரையும் கண்ணைச் சுருக்கி விழிக்குமே
ஓலம் மலி கோல நீல வேலை சூழும் ஞாலம் மீதில்
உற்றவர் இன்பத்துடனே வானமே செல்ல வைத்த பல சித்திர சோபானமே என்ன
ஓங்கு கோங்கு அகில் நாங்கு இலாங்கலி பாங்கு நீங்கு கருவேங்கை பூம் கழை
ஒன்றோடொன்று வம்புகொண்டு நீளுமே கோள்கள் சென்றுசென்று நின்றுநின்று மீளுமே

@6 வாவி வளம்

#1
புள்ளிக் கலாப மயில் பாகன் சத்தி புதல்வனான கன யோகன் மலை
போலத் தான் திரண்ட கோலப் பன்னிரண்டு வாகன் நல் விவேகன்
வள்ளிக்கு இசைந்த முருகேசன் அண்ணாமலைக் கவிராசன் மகிழ் நேசன் என்றும்
வாழும் கழுகுமலை வாவி வளம் சொல்வேன் மாதே கேள் இப்போதே

#2
வெள்ளை நாரை கொத்தும் வேளை தப்பி மேற்கொண்டு எழுந்து சின வாளை கதி
மீறிப் பாயும்-தொறும் சீறிச் சாயும் தென்னம்பாளையுடன் தாழை
தெள்ளும் பிள்ளை அன்னப் பேடும் இளம் சேவலானதுவும் ஊடும் பின்பு
தே மலர்த் தவிசில் காமம் முற்ற வந்து கூடும் உறவாடும்

#3
மின்னிக் குலவி மதி மானும் வரி வெள்ளைப் பணில ராசி தானும் மட
மின்னார் விழிகள் என்ன மன்னு கெண்டை முத்தம் ஈனும் மட மானும்
வன்னத் தாமரையைக் கண்டு வாயில் மதுர ராகம் பாடிக்கொண்டு மதி
மயங்கிப் பேட்டினுடன் முயங்கியே கிடக்கும் வண்டு கள்ளை உண்டு

#4
அந்தரத்து மின் போல் கூடிக் கொங்கையாலே நீந்தி விளையாடிச் செல்லும்
அம் நல்லார் நடக்கும் நல் நடைக்கு உருகி அன்னம் செல்லும் பின்னம்
மந்த மேதி உள்ளே எட்டும் சினை வராலும் மேல் எழுந்து முட்டும் போது
மடி சுரந்து கன்று-தனை நினைந்து கண்ட மட்டும் பாலைக் கொட்டும்

@7 துதி

#1
மரகத விகசித ஒளி தவழ் இரு சிறை
மருவிய மயில் மிசை அனுதினம் உறைதரு வாசன் பவ நாசன்
குரகத சுகமணி வளி ரதம் நடவிய
குவலய சரதரன் எனும் மதனனும் மகிழ் கோலன் பரை பாலன்

#2
பரிபுர அணி கலகலவென ஒலிபுரி
பரிதி உதயமதில் அவிழ் மரை மலர் நிகர் பாதன் குக நாதன்
திரிபுரமவை ஒரு நொடி-தனில் எரிகொடு
சிதைவுற நகைபுரி சிவன் மனம் மகிழ் உபதேசன் முருகேசன்

#3
பதும நிதியினொடு பணில நிதியும் எழில்
பரவிய சுரபியும் உறு சுரபுரன் மகள் பாகன் கன யோகன்
சத தள நளின தவிசு மிசை வதி ஒரு
சதுர்முக விதி சிறையதில் உற நிறுவு விசாகன் தட வாகன்

#4
குரை திரை வரை நிரை புரைதர உலவிய
குரவையின் நடுவுற நிருதரை முடுகிய கோபன் கமழ் நீபன்
பரை சிவை பகவதி உதவிய சரவண
பவன் அறுமுக குகன் மிசை மதுரித கவி பாடும் சுகம் நாடும்

@8 துதி

#1
பவணக்கிரியதனுள் தானே மன்னுவானே பல
பாழிலே அலையாமல் இன்புற
நாளுமே அருள் மேவு கண் கொடு பாராய் இன்னல் தீராய்
அவுணப் பகையை முடித்தோனே புண்யவானே கதி
யாருமே தருவாரும் இங்கு இலை
ஆதலால் அருள் வாய் இனம் புரியாதே பண்ணும் சூதே

#2
விரகப் பெருவிதனத்தாலே மண்ணின் மேலே மனம்
வீணிலே உழலாது கந்த வி
சாகனே புரி நீயும் வஞ்சம் என் மீதே எண்ணிடாதே
நரகச் சமன் வரும் அப்போதே பின் நில்லாதே பல
நாளுமே மறவாது நின் சிறு
பாதமாகிய சீத பங்கயம் நானே உன்னினேனே

#3
நிமலப் பெருமிதச் செவ்வேளே கன்னல் வேளே தொடு
நீடு பாணமதால் மருண்டு இடை
வாடு மாதரிடம் கொடா வகை நீயே பண்ணுவாயே
குமரிக்கு அதிக பரல் கானே நண்ணினானே இகழ்
கோதிலாத தபோபலம் பெறு
நீதர்பால் அகலாது உறைந்து அருள் கோவே என்னுள் வாவே

#4
கடல் சுற்றிய உலகு அப்பாலே மின்னல் போலே வரு
காயமாகிய தீயவன் பிணி
மேவியே தவியாமல் அன்பொடு காவே என் ஐயாவே
திடமற்றவனினுடைச் சேயே என்னை நீயே திவ்ய
சேவையே செயும் ஞானபண்டிதர்
நாவினூடு இனிதா விளைந்திடு தேனே பொன்_அனானே

@9 துதி

#1
செந்தில் மாநகர் வாழ் கந்தநாதன் இரு
செய்ய பாத கஞ்சமே நமக்கு
உய்ய மேவு தஞ்சமே இன்று
செப்புவது கொஞ்சமே கேட்கத்
தீய பாதக விரோத மாயம் விட்டுத்
திரும்புவாயே நெஞ்சமே
பந்தபாசம் இதை எந்த வேளையினும்
பார்க்கும் போது தொல்லையே அல்லால்
ஆர்க்கும் ஆவது இல்லையே ஒரு
பார மேரு வில்லையே கையில்
பற்று நாதன் மாது பெற்ற நீதன் மீது
பனுவல் சூடு வல்லையே

#2
மங்கைமார்கள் இரு கொங்கை துங்க மத
வாரணம் கொள் கும்பமே முகம்
பூர்ணசந்திர விம்பமே பட
மாசுணம் நிதம்பமே தொடை
மார வேள் அரசு மண்டபத்து அருகில்
வைத்த ரண்டு கம்பமே
செங்கை சூரியோதயம் குலாவ மலர்
சீத பத்ம தளமே வாயில்
ஓது சொற்கள் குளமே இதழ்
திவ்ய பொற்ப வளமே என்று
சிந்தித்தால் குமரன் கந்தப் பாத மலர்
சேர்வது எவ்வாறு உளமே

#3
வன்னமான விழி மின்னவே கடையில்
வக்ரதந்த சிங்கமே கொண்ட
உக்ர துங்க சிங்கமே என்ன
மறலி தூதர் பொங்கமே உற்று
வந்த வேளை நெஞ்சே கந்த வேளை நினை
மருவுறாது பங்கமே
சென்னை மாநகர் அண்ணாமலைக் கவிஞன்
தேசம் எங்கும் இசையே பெறப்
பேசு சந்தம் இசையே சற்றும்
தீர்ந்திடாத நசையே வைத்துச்
சேவலாளி பதம் ஆவலோடு பணி
தினமும் நூறு விசையே

@10 சுரம் போக்கு நற்றாய் இரங்கல்

#1
பாதிராத்திரி வேளையில் வீட்டுப்
பக்கத்தில் வந்து மேவிப் பஞ்ச
பாதகன் ஒரு பாவி சிறு
பாவையை மெள்ளக் கூவிக் கையைப்
பற்றிக் கூட்டிக்கொண்டு ஏகினான் பதை
பதைக்குதே என்றன் ஆவி
சோதனைப் பிரகாரமாய் என்னைத்
தொடர்ந்ததே பெரும் தோஷம் எவர்
சூதினால் வந்த மோசம் இனித்
தொலையுமோ பிள்ளைப் பாசம் இதைச்
சுற்றத்தார் அறிந்தால் எனக்கு முன்
சொல்வரே பரிகாசம்

#2
தேன் இலங்கிய காவனம் திகழ்
சென்னி மாநகர் வாசன் துதி
செய் அண்ணாமலை தாசன் செப்பும்
செந்தமிழ்க்கு அருள் நேசன் தினம்
சிந்தனைசெய்யும் தொண்டர் தீவினை
தீர்த்திடும் முருகேசன்
நானிலம் புகழ் கழுகு மா மலை
நாயகன் பாண்டிநாட்டில் நெஞ்சில்
நாணம் விட்டுத் தன்பாட்டில் வெப்பம்
நண்ணிய பாலைக் காட்டில் மகள்
நடக்க வேண்டி முன் அடக்கமாய்த் தெய்வம்
லிபித்ததோ மண்டை ஓட்டில்

#3
மையல்கொண்டு ஒரு பையல் பின் செல
வயது மீறின மாதோ இந்த
மார்க்கம் தோன்றினது ஏதோ சென்ம
வாசனைப் பலன் ஈதோ ஐயோ
மாதம் பத்தும் சுமந்து பெற்ற என்
வயிறும்தான் எரியாதோ
செய்ய பஞ்சணையும் பொறாது
சிவந்து கொப்பளம் ஆகும் நெரிஞ்சிப்
பழம் என்று நோகும் அவள்
சீர் அடிகளும் வேகும்படி
தீயும் கானலில் காயும் வேனிலாம்
தீயில் எப்படிப் போகும்

#4
தேடினும் கிடையாதது ஆகிய
திரவியக் கருவூலம் போலே
செனித்த பெண்ணுக்குச் சீலம் வேறே
திரும்பினது என்ன காலம் கொங்கை
திரண்டிடா முன்னம் மருண்டிடற்கு எவன்
செய்தானோ இந்த்ரசாலம்
காடு சேர்கையில் கரடி வேங்கைகள்
காட்டுமே ஆரவாரம் அதைக்
காதில் கேட்க விசாரம் வைத்துக்
கலங்குவாள் அந்த நேரம் என்றன்
காதலி-தன்னை ஆதரித்து உயிர்
காப்பது வேலன் பாரம்

@11 தலைவி இரங்கல்

#1
நேமமாய்ப் பணி அண்ணாமலைக்கு உதவு நீதனைக்
கழுகுமலை நாதனை நெஞ்சில்
நினைக்க நினைக்க மீறி எனைக் கொல்லுதே காம வேதனை
கோமளக் கடலிலே மிகுத்த திரைக் கூட்டமே
மன்மதனும் போராட்டமே செய்து
கோரமே விளைத்தால் தீருமோ எனக்கு வாட்டமே

#2
வெள்ளத் திரையின் மேலே துள்ளித் திரியும் சுறா மீனமே
இனியும் உண்டோ மானமே கொங்கை
வீக்கம் கொண்டதனால் ஏற்குதில்லை அன்னபானமே
அள்ளல் கழிக்கரையுள் மெள்ளக் குலவி வரும் ஆமையே
கொடிய காமத் தீமையே நாளும்
அதிகரித்திடலால் அவமதிக்குது இந்தச் சீமையே

#3
பொங்கு மது மலர்கள் எங்கும் பரிமளிக்கும் புன்னையே
பெற்று வளர்த்த அன்னையே எந்தப்
போதும் வைதுவைது மோதுகிறாள் பாவி என்னையே
தங்கு நித்திலம் புரி இங்கித வலம்புரிச் சங்கமே
தென்றலும் ஒரு சிங்கமே போலத்
தாக்கவே மயங்கி ஏக்கமாய் மெலிந்தேன் அங்கமே

#4
மங்கைமார்கள் அதரங்கள் நேர் பவள வல்லியே
பிரியேன் என்று சொல்லியே போன
வாசக் கடம்பன் வர நேசத்துடன் சொல்லுமோ பல்லியே
அம் கயத்தில் நிறை பங்கயத்துள் உறை அன்னமே
பிரியம் வைத்து முன்னமே கட்டி
அணைத்த வேல் முருகன்-தனைக் கண் காணேன் ஐயோ இன்னமே

@12 தலைவியின் ஊடல்

#1
ஆறுமுக வடிவேலவனே கலியாணமும் செய்யவில்லை சற்றும்
அச்சம் இல்லாமலே கைச்சரசத்துக்கு அழைக்கிறாய் என்ன தொல்லை
மீறிய காமம் இல்லாத பெண்ணோடே விளம்பாதே வீண்பேச்சு சும்மா
வெள்ளைத்தனமாகத் துள்ளுகிறாய் நெஞ்சில் வெட்கம் எங்கே போச்சு

#2
மேட்டிமை என்னிடம் காட்டுகிறாய் இனி வேறு இல்லையோ சோலி இதை
வீட்டில் உள்ளார் கொஞ்சம் கேட்டுவிட்டால் அது மெத்தமெத்தக் கேலி
தாட்டிகம் சேர் கழுகாசல மாநகர் தங்கும் முருகோனே இந்த்ர
சாலத்தினால் என்னைக் காலைப் பிடித்தாலும் சம்மதியேன் நானே

#3
அக்கரைக்காரர்க்குப் புத்தி கொஞ்சம் என்பார் ஆரும் பழமொழியே நீயும்
அப்படி என்னைப் பலாத்காரம் செய்திடில் ஆச்சுது பெண்பழியே
சர்க்கரைக்கட்டி போல் வள்ளி தெய்வானையாம் தையல் உனக்கு இலையோ இரு
தையலரைச் சேரும் மையல் உனக்கு என்ன தானும் ஒரு நிலையோ

#4
அம்புவி மேல் சிறு பெண்களில் மேல் உனக்கு ஆசை ஏன் காணுது ஐயா நீர்
ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறாதவராகவே தோணுது ஐயா
நம்பும் அண்ணாமலை தாசன் பணியும் நளின மலர்ப் பாதா கொஞ்ச
நாளைக்கு மேல் ஒரு வேளைக்கு லீலை நடத்தினால் ஆகாதா

@13 பாங்கி தலைவி நிலைமை கூறி தலைவனை அழைத்தல்

#1
கண் ஆயிரம் படைத்த விண்ணூரிடம் தரித்த
கன வயிரப்படையவன் மகளைப் புணர் கத்தனே திருக்
கழுகுமலைப் பதி அனுதினம் உற்றிடு சுத்தனே
அண்ணாமலைக்கு இடர்கள் நண்ணாது ஒழித்து மிக
அகம் மகிழத் தனது அருளை அளித்திடும் ஐயனே திசை
அரவமும் வெட்குற மயிலை நடத்திய துய்யனே

#2
மின்னோ கமல மலர்ப் பொன்னோ எனப் புகல
விகசித ரத்தின நகைகள் தரித்து ஒளிர் மெய்யினாள் கதிர்
விரவிய சித்திர வளையல் அடுக்கிய கையினாள்
எந்நேரமும் மனதில் உன் மீதில் மையல்கொண்டு
எழுதிய சித்திரம் என மவுனத்தினில் இருக்கிறாள் வள்ளத்து
இடுகிற புத்தமுதினையும் வெறுத்து அருவருக்கிறாள்

#3
கும்பத்தினைச் சினந்து வம்பைப் பிதிர்த்து எழுந்து
கொடி இடை முற்றிலும் ஒடிய வளைத்தது கொங்கையே மணம்
குலவு கடப்பினில் நினைவது வைத்தனள் மங்கையே
செம்பொன் சிலம்புகள் புலம்பப் பெரும் தெருவில்
திகழ்தரு சிற்றில்கள் புரிவதை விட்டவள் தியங்கினாள் உன்றன்
திருவழகைக் கரு விழியுள் இருத்தியே மயங்கினாள்

#4
போராடுதற்கு உரிய கூர் ஆர் மலர்க் கணை எய்
புகழ்பெறு சித்தச தனுவதனைப் பொரு புருவத்தாள் தவம்
புரிபவரைத் தனது அடியில் விழப்புரி பருவத்தாள்
சீராக மெத்தை-தனில் நேராக வைத்து உனது
திரு அதரக் கனி அமுதை அருத்தியே சேர் ஐயா இந்தத்
தெரிவை உளத்து உனை அலது பிடித்தவர் ஆர் ஐயா

@14 தலைவி பாங்கியைத் தூது விடுதல்

#1
பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கு ஓர் துணை ஆனவன்
மயில் வானவன் ஒரு கானவன் எனப்
புனத்தைக் காக்கும் வள்ளி
தனத்தைப் பார்க்க மெல்லப் போனவன்
சேமமுற்ற கழுகாசலேசனையே தேடுதே
மனம் வாடுதே கால் தள்ளாடுதே இரு
செங்கை தங்கி நின்ற
சங்கு இனங்கள் கழன்று ஓடுதே

#2
தென்றலான புலி வந்து கோபமொடு சீறுதே
தடுமாறுதே இதழ் ஊறுதே மெத்தத்
தீமையாம் இருளில்
காம லாகிரியும் மீறுதே
குன்றமான முலை ரண்டும் மார்பில் விம்மிக் கொண்டுதே
தேமல் மண்டுதே வெப்பும் கண்டுதே மலர்க்
கொம்பு போல மென் ம
ருங்குலானதும் துவண்டுதே

#3
உள்ளம் மெல்லமெல்ல லீலை செய்ய நினைந்து உருகுதே
முத்தம் கருகுதே கண்ணீர் பெருகுதே என்றன்
உச்சிக்கு ஏறிக் காமப்
பித்தம் கிறுகிறென்று வருகுதே
வள்ளம் மேவும் பசும்பாலும் தேனும் அருவருக்குதே
கசந்து இருக்குதே துன்பம் பெருக்குதே வன்ன
வாரும் தாறுமாறாய்க்
கீறவே தனமும் பருக்குதே

#4
பாரமான கொங்கை ஓரம் வேடன் அம்பு பாயுதே
உடல் தேயுதே மலர் தீயுதே கொடும்
பாவியான மதி
ஆவி சோர வந்து காயுதே
மார வேளினாலே கோரமான காம வாதையே
எனும் தீதையே தீரத் தூதையே சொல்லி
வாட்டம் தீர் குகனைக்
கூட்டி வாடி அடி கோதையே

@15 பாங்கி தலைவியின் அவயவத்து அருமை சாற்றல்

#1
சந்த வரை வந்த குகநாதா பரை
அந்தரி மனோன்மணியாம் மாதா தந்த
சண்முக சடாட்சர விநோதா
குழைத் காதா சூரர் வாதா வன
சஞ்சரி வெண் குஞ்சரி சமேதா
செந்தமிழ் அண்ணாமலையை ஆளாக் கொண்ட
கந்த அரவிந்த மலர்த் தாளா கள் க
சிந்திடும் கடம்பு அணியும் தோளா
நெடுநாளா மறவாளா உனைத்
தேடு ஓர் குயில் பேடு உருவம் கேளா

#2
சுந்தரம் மிகுந்த குழல் மேகம் அவள்
சொந்த நுதல் இந்துவில் ஓர் பாகம் தி
ருந்தும் புருவம் வில்லோடு சிநேகம்
தவ யோகம் வென்ற நேகம் வஞ்சம்
துஞ்சு விழி நஞ்சினிலும் வேகம்
சந்தம் மலிகின்ற முகம் இந்து வள்ளைத்
தண்டு செவி என்பதுவே தந்து கன்னம்
சாணை நுனி நாசி இன்ப சுந்து
மதுச் சிந்துதல் பொருந்து சிறு
சண்பகம் துப்பாம் இதழ் சிவந்து

#3
செங்குமுத புட்பமதை ஒத்து மொழித்
தேன் உதவும் வாய் நகையோ முத்து கண்டம்
சீதரனார் ஊது வர நத்து
சொல் திதித்துப் பாகைக் கைத்துவிடச்
செய்யும் என உன்னலாம் உளத்து
குங்கும ஆகம் கச கோதண்டம் முன்கை
கோ மகரயாழ் உவமை விண்டம் கையைக்
கோகனகமோ என மருண்டம்
ஆழி மண்டம் குலி கண்டம் நெருங்
கும் கெளிறு சிறு கிளித் துண்டம்

#4
கட்டு கதிர் பட்டு மணி வம்பு கிழி
பட்டு வழிவிட்டிட எழும்புகிற
கட்டழகாம் வட்ட முலை செம்பு
யானைக் கொம்பு சிவ சம்பு குடங்
கைக்கும் வளையாத பொன் பறம்பு
மட்டு உமிழ் பசும் துளப மாலே செங்கண்
வளருகிற தவிசு எனும் ஓர் ஆலே சிறு
வயிறு மயிர் சிற்றெறும்பு போலே
விரைவாலே வெள்ளம் மேலே சுற்றி
வந்த சுழி உந்தி இடை நூலே

#5
தாம் அரவ படம் என் அல்குல் உண்டு தொடை
தங்க நிறச் செங்கதலித் தண்டு முழந்
தாட்கு உவமை கேட்கில் அவை நண்டு
சினை கொண்டு வளர் பெண்டு வரால்
தானே கணைக் கால் எனும் இரண்டு
பரடு தராசு உயர் குதி கந்துகமே அணி
பரவு புற அடி இணை புத்தகமே கடல்
பவளம் அதி தச விரல்கள் நகமே
அம்போருகமே பத யுகமே மயில்
பண்ணும் இளம் சாயலை யாசகமே

#6
மேனகையோடு உருவசி இந்த்ராணி செல்வம்
மிக்க திரு முக்ய கலைவாணி இந்த
மின் அரசி-தன் உருவம் காணில்
நெஞ்சு நாணி மலர்ப் பாணி தலை
மீது குவித்துத் தொழுவார் பேணி
சேனையொடு வந்து கரும் காவி அம்பைச்
செய்ய கருப்புச் சிலை வைத்து ஏவி சண்டை
செய்யும் ஒரு மன்மதனாம் பாவி
எங்கள் தேவி உடல் ஆவி-தனைத்
தீர்க்கும் முனம் காத்திடுவாய் மேவி

@16 தலைவன் வருத்தம் சாற்றல்

#1
வன்னத் தினைமாவைத் தெள்ளியே உண்ணும்
வாழ்க்கைக் குறக் குல வள்ளியே உயிர்
வாங்கப் பிறந்திட்ட கள்ளியே இரு
வட மேருவை நிகராகிய புயம் மீது அணி பல மா மணி
மாலை படீர் எனத் துள்ளியே விழ
வான் மதி வீசும் தீ அள்ளியே

#2
கன்னத்தினில் குயில் சத்தமே கேட்கக்
கன்றுது பார் என்றன் சித்தமே மயக்
கம் செய்யுதே காமப் பித்தமே உடல்
கனல் ஏறிய மெழுகு ஆயினது இனியாகிலும் அடி பாதகி
கட்டி அணைத்து ஒரு முத்தமே தந்தால்
கைதொழுவேன் உன்னை நித்தமே

#3
வாடியிருப்பது வஞ்சமோ பொல்லா
வன் கருங்கல்லோ உன் நெஞ்சமோ கொண்ட
மையல் பயித்தியம் கொஞ்சமோ சிலை
மதன் ஆகம முது காவியம் அதிலே மொழி சுக லீலையின்
மார்க்கம் உனக்கு என்ன நஞ்சமோ ஒரு
வார்த்தை உரைக்கவும் பஞ்சமோ

#4
தேடக் கிடையாத சொன்னமே உயிர்ச்
சித்திரமே மட அன்னமே அரோ
சிக்குது பால் தயிர் அன்னமே பொரு
சிலை வேள் கணை கொலை வேல் என விரி மார்பினில் நடுவே தொளை
செய்வது கண்டிலை இன்னமே என்ன
செய்தேனோ நான் பழி முன்னமே

@17 தலைவி பாங்கிக்குக் கூறல்

#1
செந்தில் மாநகரம்-தனில் மேவிய
தேசிகனாம் முருகேசன் மயில்
வாசியில் ஏறும் உல்லாசன் சிறு
திங்களும் பண சங்க மாசுண
மும் துலங்கிய கங்கை ஆறொடு
செஞ்சடாடவி மீது அணிவார் செவி
சேர முன் ஓது உபதேசன் அடி
யார்-தமை ஆள் விசுவாசன்
எந்தநேரமும் வந்தனை செய்து அடி
எண்ணும் அண்ணாமலை தாசன் துதி
பண்ணும் மெய்ஞ்ஞான விலாசன் என்னோடு
இந்து எழுந்து தயங்கு மாலையில்
வந்து வண்டு முழங்கு சோலையில்
இன்ப சாகரமாகிய லீலைகள்
அன்புடனே செய்தான் மானே அந்தச்
சம்ப்ரமம் என்ன சொல்வேனே

#2
மங்கைமார் பலரும் புடை சூழ்தர
மா மலர் கொய்திடச் சென்றேன் அங்கு ஓர்
பூ மரத்தே தனி நின்றேன் சந்த்ர
மண்டலங்களை வென்ற ஆனனம்
ஐந்தொடு ஒன்று மிகுந்து வார் மது
வண்டலோடு கடம்பு எனும் ஆரமும்
வாரமும் தோன்றிடச் சேர்ந்தான் எனது
ஏரும் பார்த்தே களிகூர்ந்தான்
பங்கயாசனம் மேல் உறை நான்குகப்
பாதகனும் மலர்க் கை தான் கொண்டு உன்
சோதியை எப்படிச் செய்தான் அடி
பஞ்சு உரஞ்சினும் அஞ்சு சீர் அடி
கொஞ்சு ரஞ்சித வஞ்சியே புவி
பட்டு நீ நிலைநிற்க ஒண்ணாது என்று
பல் மலர் மெத்தை ஒன்று இட்டான் பின்பு
மென்மெல வந்து என் கை தொட்டான்

@18 துதி

#1
கன்னல் சூழ் பழனம் புடை சூழ் கழு
காசலம்-தனில் வாழ் பிரதாபனே கன
வாசம் எங்கும் கமழ்கின்ற நீபனே வளர்
காதலோடு இரு போதிலும் பல
போதினால் பணிவார் மனத்து உறை
காரிருள் குவை நீக்கிய தீபனே அதி
சூரபத்மனைத் தாக்கிய கோபனே
சென்னி மாநகர் வாழும் அண்ணாமலை
செப்பும் செந்தமிழ்க்கு அதி நேசனே சிவ
சுப்பிரமண்யன் எனும் பிரகாசனே கொடும்
சிந்தை நைந்து புலம்பி நின் திரு
மந்திரம்-தனில் வந்து அடைந்து உனைச்
சேவிக்கும் குணம் என்று எனக்கு ஆகுமோ மிகு
பாவிக்கும் துயர் எப்படிப் போகுமோ

#2
வந்தவர்க்குப் பழம் புளிக் காடியே
தந்திடச் சகியார்-தமைத் தேடியே பிர
பந்தம் எத்தனை எத்தனை கோடியே குலை
வாழையின் பழமோ கனிந்திடும்
மாழையின் கனியோ எனும்படி
மதுரிதம் பெறவே நிதம் பாடியே ஒரு
விதப் பரிசும் பெறாது உளம் வாடியே
வெம் தரைக்குள் வெடிப்பிடைப் பாலையே
சிந்து பித்தரைப் போல் வெறும் வேலையே செய்யும்
வீணன் நான் விளங்கு உன் தண்டைக் காலையே எந்த
வேளையும் துதி கூறவும் துயர்
நீளும் வெம் பவம் மாறவும் புரி
வில்வ வேணி சேர் கற்பக வாலையே தரு
செல்வனே எனும் கற்பகச் சோலையே

@19 தலைவியின் ஊடல்

#1
செந்தூர் வளர் முருக நாதா அருணோதயச்
செந்தாமரை நிகரும் பாதா திகழ்
சிந்தையில் அண்ணாமலை செய்
நிந்தையை எண்ணாது அருள்செய்
சித்திர வேல் கர விநோதா உனது வஞ்சச்
செய்கை இன்னமும் தெரியாதா
சந்தோசமாகவே போய் வீடுவீடுகள்-தோறும்
சரசம் கொண்டாடுவதே பாடு வந்து உன்
றன்னுடனே சேர் பிரியக்
கன்னியர்கள் பேர் வரியச்
சகஸ்திரம் வேணுமே வெள் ஏடு தனித்து ஓர் இடம்
தங்கியே மேயுமோ வெள்ளாடு

#2
வேசையர் வாசலிலே சென்று தம்பலங்களை
வெட்கம் இல்லாமல் வாங்கி மென்று தின்று
மெத்தப் பயித்தியம் கொண்டு
சுற்றித் திரிந்தே மருண்டு
வீடு தேடி வந்தாயே இன்று தொடவே மாட்டேன்
வேணும் என்றாலும் போடு கொன்று
ஆசை கொண்டவருக்கு ரோசம் கிடையாது என்பார்
அப்படிக்காகில் விசுவாசம் வைக்கும்
அந்த விலைப்பெண்டுகளைச்
சொந்தம் எனக் கொண்டனையே
ஆனாலும் உனைப் போல மோசம்போனவர் உண்டோ
ஆரும் செய்கிறாரே பரிகாசம்

#3
கந்தா செய்யாதே பலவந்தம் புது மலரைக்
கசக்கி அறிவார்களோ கந்தம் சற்றும்
காதல் இலாமல் சினந்த
மாதை வலியப் பிடித்துக்
கலந்தால் வருமோ சுகானந்தம் உனக்கு எனக்கும்
கனவிலும் இல்லை இனித் தொந்தம்
எந்தப் பிறப்பினுமே வல்லி உனை அல்லாமல்
எவளையும் சேரேன் என்று சொல்லி ஊரில்
எத்தனை பரத்தையையோ
நித்தமும் அணைத்தனையோ
இப்படிக் காசி காஞ்சி டில்லி கன்யாகுமரி
எங்குப் பார்த்தாலும் இல்லை சல்லி

#4
கங்குகரை இல்லையே சாடை சொல்லி வைபவர்
கட்டுகிறாயே எதற்கு ஆடை மானம்
காக்க அல்லவா என்-பாலே
சேர்க்கை இலாதே அன்பாலே
காத்தாயே வேசை மாதர் மேடை கைவசம் ஆமோ
கலப் புல்லுத் தின்றாலுமே காடை
குங்குமம் சந்தனம் சவ்வாது சுக கதம்பம்
குமுகும் என்றே புயத்தின் மீது வாசம்
கொட்டுது எழில் நெற்றி சந்தப்
பொட்டொடு பகட்டுது இந்தக்
கோலம் புதிதாய் வந்தது ஏது நடந்தது எல்லாம்
கொஞ்சம் சொல்வாய் பண்ணாதே சூது

@20 தலைவி வருந்தல்

#1
பாளை வாய் கமுகில் வந்து ஊர் வாளை பாய் வயல் சூழ் செந்தூர்
பாலனம்புரிய வந்த புண்ணியா போகம்
காலையும் செய்கிறாய் முன்பின் எண்ணியா
வேளையோ விடிந்தது ஐயா நாளை வாறேன் இன்று கையை
விட்டிடு என்றாலும் விடாமல் பிடிக்கிறாய் பாலை
ஒட்டவே மடி அரிந்து குடிக்கிறாய்

#2
நித்தமும் அண்ணாமலை செய் குற்றம் எண்ணா வேலா கண்டோர்
நின் இதழ்ப் பவளங்களில் வெள்ளை ஏது என்றால்
என்ன சொல்வேன் நான் ஒரு பெண்பிள்ளையே
மத்தக நிகர் தனத்தில் மெத்த நக ரேகை பட்டு
மாலைப் பிறை போல் அனந்தம் தோணுதே இது
கேலித் துறை ஆகும் என்று நாணுதே

#3
உன்னையும் விவாகமில்லா என்னையுமே அன்னை கண்டால்
ஒன்றும் சொல்லிடாளோ அட பாவியே இன்று
தின்றிடுவேன் என்பாள் பச்சைநாவியே
சன்னைசாடையாக வந்து என்றன்னை அணைவாய் நீ என்று
சாற்றிடும் என் உண்மையான சொல்லையே விட்டுக்
கூற்றுவன் போல் வந்தாய் என்ன தொல்லையே

#4
சாறு சேர் கரும்பு ருசியாய் இருந்தாலும் வேரோடே
தான் பறித்துத் தின்னுவது ஞாயமோ முழு
ஆண்பிள்ளைக்கு இதுதான் சம்ப்ரதாயமோ
நூறு தரம் மாறிமாறி வேறுவேறு லீலைசெய்தால்
நோகுமோ நோகாதோ எனக்கு உள்ளமே கொண்டு
போகுமோ கிணற்று நீரை வெள்ளமே

@21 நற்றாய் இரங்கல்

#1
என்னடி நான் பெற்ற மங்கை இரு கொங்கைகளில் சங்கை எண்ண
எத்தனை கோடியோ செங்கை
விரலிடமே வளர் நக ரேகைகள் மிகவே படு வகை தோகையில்
ஏய்ந்த முருகவேள் கிள்ளி உனைத்
தோய்ந்ததோ சொல்லடி கள்ளி
அன்ன வயல் செந்தூர் வாசன் மந்த காசன் அன்பர் நேசன் நாளும்
அண்ணாமலைக் கவிராசன் பாடும்
அமுதச் சுவை தரும் முத்தமிழ் களபத்தொடு கமழ் பொன் புய
அற்புத வேலன் செய் சாலம் தன்னால்
கற்பழிந்தாயோ இக் காலம்

#2
சித்தசன் கொக்கோக நூலை அந்தி மாலையொடு காலை வைத்துச்
சிந்திப்பதாச்சுது உன் வேலை சிமிழ்ச்
சின்னத்தன மட வஞ்சியே உன்னைப் பணிவொடு கெஞ்சியே
சேவற்கொடியோன் பூஞ்சோலை-தனில்
தேடிப் புரிந்தானோ லீலை
மெத்தப் பிரமை கொண்டு ஏங்கி கொங்கை வீங்கி நேசப் பாங்கிமாரை
விட்டுத் தனியாக நீங்கி வடி
வேலுக்கு அதிபதி மையலே மேலிட்டல் அறிய தையலே
வெட்கத்தைப் போகடித்தாயோ காம
வேசைத்தனம் படித்தாயோ

#3
இன்னம் விவாகமே இல்லை கமழ் கொல்லை வெடி முல்லை குழல்
எங்கும் சிங்காரித்து வில்லை சந்தம்
இனிதாகிய களபம் தன கன மேருவில் அணிகின்றனை
இப்படியும் தலை விதியோ பெண்ணே
செப்படியே இது மதியோ
சன்னதமாய்க் காமப் பேயே பிடித்தாயே வேப்பங்காயே போலச்
சாதம் வெறுத்தாயே நீயே பெரும்
சண்டாளியே கண்டோர் திரள் கொண்டே பழி விண்டார் நம
சாதிக்கு எல்லாம் ஒரு வடுவே வரத்
தான் பிறந்தாய் வந்து நடுவே

#4
வண்ணப் பயிரவி தோடி ராகம் பாடி உறவாடி
மஞ்சத்திலே சென்று கூடி உன்றன்
வன்னப் படிகம் போல் ஒளிர் கன்னத்தினிலும் தேன் இதழ்
வாயிலும் கொஞ்சம் பல் குறியோ வைத்தான்
வாலை மகனுக்கும் வெறியோ
எண்ணம் குமரவேள்-பாலே சென்றதாலே இனிமேலே வயிறு
எப்படியாகிலும் சூலே வரும்
என்றே எனது உளம் அஞ்சுது நன்றே சொலில் என் வஞ்சகம்
இல்லை கிழவன் சொல் வீணைக்காரர்க்கு
ஏற்காது என்றாலும் கண் ஆணை

@22 காலம் நீடத் தலைவி வருத்தல்

#1
மஞ்சு நிகர் குந்தள மின்னே
சத தளங்கள் விகசிதம்செய்
வாரிசாதனத்தில் வாழ் பொன்னே செய்ய
வன்னமே ஒளிர் சொன்னமே நடை
அன்னமே இடை பின்னமே பெற
வந்த தன பார வஞ்சியே
அதி விருப்பத்துடன் உரைக்கும்
வார்த்தையைக் கேள் ஆசை மிஞ்சியே
அஞ்சு வயதான பருவம்-தனில்
எனது சிறுமனை முன்
அங்கசவேள் போல உருவம் பெற்றே
அன்று வந்து நயந்து மாலையில்
நெஞ்சு அழிந்து மயங்கவே புணர்
ஆறுமுக வேலவனையே
நினைவு கொண்டே மதி மருண்டே
ஆறுதில்லை என்ன வினையே

#2
என் இரண்டு கண்ணும் தேடுதே
கனவினிலும் மனது நினைந்து
ஏக்கமுற்று அலைந்து வாடுதே முன்னம்
என்றன் ஆகமது ஒன்றவே புணர்ந்து
அன்று போன குகன்-தன் ஆவலை
எண்ணியெண்ணி என்ன பயனே
உருகி நிதம் மறுகி விழ
இப்படி விதித்தான் அயனே
சென்னிகுளம் மேவிய வாசன்
இனிய துதி அனுதினமும்
செய்திடும் அண்ணாமலை தாசன் பாடும்
சிந்து மீது மிகுந்த மோகமு
றும் சுசீல குகன் சரோருக
திவ்விய முகங்கள் ஆறுமே
கண்களில் கண்டால் பெண்களுக்கு எல்லாம்
செவ் இதழும் வாயும் ஊறுமே

@23 பாலனைப் பழித்தல்

#1
அங்கத்தில் பசப்பு ஆச்சே அழகு
அவ்வளவும் குடிபோச்சே முந்தி
ஆதி பிரமா வகுத்த சோதனையினால் உதித்தது
ஐயோ இதும் பொய்யோ
தங்கக் கிண்ணங்கள் போலே மின்னும்
தனங்களும் சாய்ந்ததாலே கந்தன்
தன்னை மருவிச் சுகித்த கன்னியர்க்குள் எல்லாம் மெத்தத்
தாழ்ந்தேன் நொந்து வீழ்ந்தேன்

#2
சாமம் நாலினும் பிரியான் என்னைத்
தனிக்கவிட்டு எங்கும் திரியான் கர்ப்பம்-
தன்னை அறிந்து என்னையும் விட்டு அன்னியராம் கன்னியரைச்
சார்ந்தான் ஆசை தீர்ந்தான்
காமம் மீறுது என்று அழுவான் பின்னும்
காலிலே வந்து விழுவான் அவன்
காசு-தனில் ஆசை மிகும் வேசையர்கள் மீதினிலே
கடந்தான் அங்கே நடந்தான்

#3
கோடிச்சேலைக்கு ஒரு வெள்ளை இளம்
குமரி-தனக்கு ஒரு பிள்ளை என்று
கூறுகின்ற வார்த்தை நெஞ்சில் தேறி எனக்கானது என்று
கொண்டேன் மனம் விண்டேன்
வேடிக்கை எல்லாம் விடுத்தேன் பஞ்சு
மெத்தையும் தள்ளிப் படுத்தேன் கோடி
மின்னல் ஒளி போல் இருந்த என் நிறம் எல்லாம் மெலிந்து
வெளுத்தேன் பிஞ்சில் பழுத்தேன்

#4
சென்னி மாநகர் வாசன் துதி
செயும் அண்ணாமலை தாசன் தர்ம
சிந்தையில் இருந்து நித்தம் வந்த துயரம் தவிர்க்கும்
சீலன் உமை பாலன்
கன்னி மா மதில் சூழும் திருக்
கழுகு மா மலை வாழும் மயில்
கந்தன் ஒரு மைந்தன் நீ பிறந்த போது உலைந்தது எண்ணிக்
கழித்தான் மெட்டை அழித்தான்

#5
அந்தரப் பிழைப்பு ஆச்சே நட்
டாற்றுக் கோரையாப் போச்சே இங்கே
ஆறுமுகநாதன் மனை தேடி வரும் வேளை தனி
ஆச்சே பெருமூச்சே
சந்தனம் பன்னீர் வில்லை பூசச்
சம்மதம் இப்போது இல்லை சிவ
சண்முகக் குமாரவேளுக்கு இன்னமும் என் மீதில் ஆசை
தருமோ மோகம் வருமோ

#6
அழுதாலும் துயர் போமோ இந்த
ஆபத்தும் வரலாமோ தோழன்
ஆறுமுகனைப் பிரிந்து போகமே நினைந்து உருகுது
ஆவி அடா பாவி
பழுதில்லாத கொக்கோகம்-தனில்
பகரும் காமசை யோகம் அந்த
பச்சமுற்ற வேலவனை இச் சணத்திலே பிரித்தாய்
பாலா எம காலா

@24 தலைவனிடம் செவிலித்தாய் கூறுவது

#1
கந்தம் சேர்தரு பொழில் திகழ் கழுகாசல மாநகர் வாழ் முருகா
கஞ்சம்தான் என ஒளிர் விகசித கரதல மாதவன் மால் மருகா
கருதும் அண்ணாமலை தேசிகனே அருணை உண்ணாமுலையாள் மகனே
கங்குல் பொருந்தும் குழல் தங்கும் சிறுபெண்ணும் தினமும்
கண்டு மயங்கினள் அணைவாயே

#2
தொந்தம்தோம் தொதிங்கண என்று துலங்கும் அரம்பையர் ஆடிடவே
துன்றும் தே மழை என வீணைகள் தும்புரு நாரதர் பாடிடவே
சுடர் மரகதம் நிகர் தோகையிலே திடமொடு பவனி நீ போகையிலே
தொங்கல்களும் சங்கினமும் பொன் கலையும் சிந்தினள் உன்
சொந்தம் எனும் கனி அணைவாயே

#3
அண்டம் பாதலமதிலும் கிடையாத சவுந்தர ரூபவதி
அஞ்சு அம்பால் அனுதினம் அமர்புரி அங்கச ராசன் அடைந்த நிதி
அகிலமும் அருள் பிரகாச மயில் மிக மதுரித மொழி பேசு குயில்
அன்றிலும் இந்தும் கடலும் கண்டு மருண்டு அஞ்சுதல் கொண்டு
அங்கம் மெலிந்தனள் அது பாராய்
****