காசிக் கலம்பகம்

** குமரகுருபரர் இயற்றிய காசிக் கலம்பகம்

@1 காப்பு
** நேரிசை வெண்பா

#0
பாசத் தளை அறுத்துப் பாவக் கடல் கலக்கி
நேசத் தளைப்பட்டு நிற்குமே மாசற்ற
கார் ஆர் வரை ஈன்ற கன்னிப் பிடி அளித்த
ஓர் ஆனை வந்து என் உளத்து

@2 நூல்
** மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா
** தரவு

#1
நீர் கொண்ட கடல் ஆடை நிலமகளுக்கு அணியான
கார் கொண்ட பொழில் காசிக் கடி நகரம் குளிர் தூங்க
இட மருங்கில் சிறு மருங்குல் பெரும் தடம் கண் இன் அமிர்தும்
சடை மருங்கில் நெடும் திரைக் கைப் பெண் அமிர்தம் தலைசிறப்பக்
கண் கதுவு கடவுள் மணி தெரிந்து அமரர் கம்மியன் செய் 5
விண் கதுவு பொலம் குடுமி விமானத்தின் மிசைப் பொலிந்தோய்
நிற்பனவும் தவழ்வனவும் நடப்பனவுமாய் நிலத்துக்
கற்பம் அளவில கண்டும் உறு களைகண் காணாமே
பழங்கண் உறும் உயிர்கள் துயர்க் கடல் நீந்திப் பரம் கருணை
வழங்கு பரமானந்த மாக் கடலில் திளைத்து ஆட 10
உரையாத பழமறையின் முதல் எழுத்தின் ஒண் பொருளை
வரையாது கொடுத்திடும் நின் வள்ளன்மை வாழ்த்துதுமே
** தாழிசை
நீர் எழுத்துக்கு ஒத்த உடல் நீத்தார்க்கு நீ நவில்வது
ஓர் எழுத்தே முழுதும் அவர் எவ் வண்ணம் உணர்வதுவே
என்பு அணிவது உடுப்பது தோல் எம்பிரான் தமர்கள் அவர் 15
முன் பணியும் பேறுடையார் திசைமுகனும் முகுந்தனுமே
செடி கொள் முடைப் புழுக்கூடே சிற்றடியோம் இடு திறை மற்று
அடிகள் அடியார்க்கு அளிப்பது ஆனந்தப் பெரு வாழ்வே
பல் பகல் நோற்று அரும் தவரும் பெறற்கு அரிய பரந்தாமம்
என்பு உடல் விட்டு அடியேமும் கொளப்பெறுவது இறும்பூதே 20
நிணம் புணர் வெண்_தலைக் கலன்-கொல் நேர்_இழை முத்தித் திருவை
மணம் புணர்வார்க்கு ஐயன் அருள் மணவாளக் கோலமே
முடைத் தலையில் பலி கொள்வான் மூவுலகும் அவரவர்தம்
கடைத்தலையில் திரிவது-கொல் யாம் பெறும் நின் காணியே
** அராகம்
உளது என இலது என ஒருவர் ஒர் அளவையின் 25
அளவினில் அளவிடல் அரியதொரு உருவினை
இது எனல் அருமையின் எழுதரு மொழிகளும்
அது அல எனும் எனில் எவர் உனை அறிபவர்
அவன் அவள் அது எனும் அவைகளின் உளன் அலன்
எவன் அவன் இவன் என எதிர்தரு தகைமையை 30
அறிபவர் அறிவினுள் அறிவு கொடு அறிவுறும்
நெறி அலது ஒருவரும் அறிவு அரும் நிலைமையை
** நாற்சீரோரடி அம்போதரங்கம்
ஆணொடு பெண் உரு அமைத்து நின்றனை
பூண் முலை கலந்தும் ஐம்புலனை வென்றனை
எண் வகை உறுப்பின் ஓர் உரு எடுத்தனை 35
தொல் மறைப் பனுவலின் தொடை தொடுத்தனை
** முச்சீரோரடி அம்போதரங்கம்
வடவரை குழைய வளைத்தனை
மலை_மகள் முலைகள் திளைத்தனை
விடம் அமிர்து அமர விளைத்தனை
விசயனொடு அமர்செய்து இளைத்தனை 40
வரி சிலை மதனை எரித்தனை
மத கரி உரிவை தரித்தனை
அரு மறை தெரிய விரித்தனை
அலகு_இல் பல் கலைகள் தெரித்தனை
** இருசீரோரடி அம்போதரங்கம்
அழல் விழித்தனை பவம் ஒழித்தனை 45
ஆறு அணிந்தனை மால் தணிந்தனை
மழு வலத்தினை முழு நலத்தினை
மா நடத்தினை மான் இடத்தினை
அலகு இறந்தனை தலைசிறந்தனை
அருள் சுரந்தனை இருள் துரந்தனை 50
உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை
ஒன்றும் ஆயினை பலவும் ஆயினை
** தாழிசை
அலகு_இல் பல புவனங்கள் அடங்கலும் உண்டு ஒழிப்பாய்க்குக்
கொலை விடம் உண்டனை என்று கூறுவது ஒர் வீறாமே
பயில் மூன்று புவனமும் கண் பொறிக்கு இரையாப் பாலிப்பாய்க்கு 55
எயில் மூன்றும் எரிமடுத்தாய் என்பதும் ஓர் இசையாமே
அடியவரே முக்குறும்பும் அற எறிந்தார் எனில் அடிகள்
விடு கணை வில் காமனை நீ வென்றதும் ஓர் வியப்பாமே
இக் கூற்றின் திருநாமத்து ஒரு கூற்றுக்கு இலக்கு என்றால்
அக் கூற்றம் குமைத்தனை என்று இசைப்பதும் ஓர் அற்புதமே 60
** தனிச்சொல்
என ஆங்கு
** சுரிதகம்
உலகு சூல்கொண்ட தலைவியும் நீயும்
மலை பக எறிந்த மழ இளம் குழவியை
அமுதம் ஊற்று இருக்கும் குமுத வாய்த் தேறல்
வண் துகில் நனைப்ப மடித்தலத்து இருத்திக் 65
கண்களில் பருகி அக் காமரு குழவி
எழுதாக் கிளவி இன் சுவை பழுத்த
மழலை நாறு அமிர்தம் வாய்மடுத்து உண்ணச்
செம் சொல் நிறைந்த நும் அம் செவிக்கு அடிகள் என்
புன்மொழிக் கடுக் கொளப் புகட்டினன் 70
இன் அருள் விழைகுவாய் இறும்பூது உடைத்தே
** நேரிசை வெண்பா

#2
உடையாள் அகிலேசர்க்கு ஓங்கு முலைக் கோட்டின்
அடையாளம் இட்டு வையாளானால் கடையில் அவர்
செவ் வண்ணம் பெற்றார் திரளொடு நிற்கின்றாரை
எவ்வண்ணம் கண்டு இறைஞ்சுவேம்

@3 தூது
** கட்டளைக் கலித்துறை

#3
இறை வளைக்கு ஆகம் பரிந்து அளித்தார் அகிலேசர் கொன்றை
நறை வளைக்கும் முடியார் அடிக்கே கங்கை நல் நதியின்
துறை வளைக்கும் குருகீர் உருகீர் என்று தூ_மொழி கைக்கு
உறை வளைக்கும் உங்கள் பேரிட்டதால் சென்று கூறிடுமே

@4 புயவகுப்பு
** சந்த விருத்தம்

#4
இடம் அற மிடைதரு கடவுளர் மடவியர்
எறிதரு கவரி நிழல்-கண் துயின்றன
இன வளை கொடு மதன் இடு சய விருது என
இறையவள் எழுது சுவட்டுக்கு இசைந்தன
இருவரும் நிகர் என வரி சிலை விசயனொடு 5
எதிர் பொரு சமரின் இளைப்புற்று இருந்தன
இணை அடி பரவிய மலடி முன் உதவிய
இடியலின் உணவு ஒரு தட்டைப் பரிந்தன
பட அரவு உமிழ்தரும் மணி வெயில் விட வளர்
பருதியொடு எழும் உதயத்தில் பொலிந்தன 10
பருகும் இன் அமிர்து என உருகு இரு கவிஞர்கள்
பனுவலின் மதுர இசைக்குக் குழைந்தன
படர் ஒளிவிடு சுடர் வலயமது என ஒரு
பரு வரை நெடு வில் எடுத்துச் சுமந்தன
பரர் புரம் எரியொடு புகை எழ மலர்_மகள் 15
பணை முலை தழுவு சரத்தைத் துரந்தன
மடல் அவிழ் தட மலர் இதழியின் இழிதரு
மது மழை அருவி குளித்துக் கிளர்ந்தன
வழிதர உதிரமும் நிணமொடு குடர்களும்
வர நரகரியின் மதத்தைத் தடிந்தன 20
மத கரி உரி அதள் குல கிரி முதுகினில்
மழை முகில் தவழ்வது எனப் பொற்பு அமைந்தன
மலி புகழ் நிலவொடும் அடு திறல் வெயில் எழ
மதி கதிர் வலம்வரு வெற்பு ஒத்து நின்றன
குட வளை துறை-தொறும் உடு நிரை என விரி 25
குளிர் நிலவு எழ உமிழ் முத்தைத் தடம் கரை
குலவிய படர் சிறை மட அனமொடு சில
குருகுகள் சினையொடு அணைத்துத் துயின்றிடு
குரை புனல் வர நதி சுரர் தரு முருகு அவிழ்
கொழு மலர் சிதறு அவி முத்தத்து விண் தொடு 30
குல கிரி உதவிய வளர் இள வன முலை
கொழுநர்-தம் அழகிய கொற்றப் புயங்களே
** நேரிசை வெண்பா

#5
புயல் ஆர் பொழில் காசிப் பூம் கோயில் மேய
கயல் ஆர் தடம்_கணாள் காந்தன் செயல் ஆவி
உய்யத் துதியார் உதிப்பார் துதிப்பாரேல்
வையத்து உதியார் மறுத்து
** கட்டளைக் கலித்துறை

#6
மறைக் கோலம் கொண்ட அகிலேசரே இன்று மாதர் முன்னே
பிறைக் கோலம் கொண்டு புறப்பட்டவா முன் பிறை முடித்த
இறைக்கு ஓலம் ஓலம் எனத் தேவர் ஓலமிட இருண்ட
கறைக் கோலம் கொண்டு நும் கண்டத்து ஒளித்த கனல் விடமே
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#7
விடுத்த வாளிக்கும் விரகு இலாக் கருப்பு வில் வீணன் மீளவும் வாளாத்
தொடுத்த வாளிக்குமே பகை மூண்டது இத் தூய நல்_மொழிக்கு என் ஆம்
அடுத்த நான்மறை முனிவரர் நால்வர்க்கும் அ மறைப் பொருள் கூற
எடுத்த கோலமாய் ஆனந்த வனத்தும் எம் இதயத்தும் இருந்தோனே
** கட்டளைக் கலித்துறை

#8
இருப்பார் அவி முத்தத்து எங்கே கண் மூடுவர் என்றும் வெள்ளிப்
பொருப்பாளர் ஓடித் திரிவது அல்லால் இப் புவனங்களை
உருப் பாதியில் படைத்து ஓர் பாதியில் துடைத்து ஊழி-தொறும்
விருப்பு ஆர் உயிர்களின் மேல் வைத்துத் தாம் செயும் வேலை கண்டே
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#9
கண் ஒன்று திருநுதலில் கனல் உருவமாப் படைத்த காசி நாதா
தண் ஒன்றும் நறை இதழித் தார் என்றாள் நெட்டுயிர்த்தாள் தரை மேல் வீழ்ந்தாள்
எண் ஒன்றும் உணராமே கிடக்கின்றாள் இது கண்டால் எழுத்து ஒன்று ஓதத்
துண்ணென்று வருவர் எனத் துணிந்தனளோ அறியேன் இத் தோகைதானே
** நேரிசை வெண்பா

#10
தோகை உயிர் முடிப்பான் தும்பை முடித்தான் மதவேள்
வாகை முடித்திடவும் வல்லனே ஆ கெடுவீர்
காமாந்தகர் காசிக் கண்_நுதலார்க்கு ஓதீர் மற்று
ஏமாந்து இராமல் எடுத்து
** கட்டளைக் கலித்துறை

#11
எடுக்கச் சிவந்த சிலம்பு அடியார் அகிலேசர் நறைக்
கடுக்கைச் சடைமுடியார் அடியார்க்குக் கலைகள் கொய்து
கொடுக்கக்கொடுக்க வளர்கின்றவா வெறும் கூட்டில் எரி
மடுக்கக் குறை உயிர் மாதரைத் தேடு மதி_கொழுந்தே
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#12
கொழுதி வரி வண்டு உழுது உழக்கும் குழலீர் நறும் கள் கோதை இவள்
அழுத விழி நீர் முந்நீரை உவர் நீர் ஆக்கும் அது கூறீர்
எழுத அரிய திருமார்பில் இளம் சேய் சிறு சேவடிச் சுவடும்
முழுதும் உடையாள் முலைச் சுவடும் உடையார் காசி முதல்வர்க்கே
** நேரிசை வெண்பா

#13
வரை வளைக்கும் பொன் தடம் தோள் மைந்தர்க்கு இவர் ஆர்
நிரை வளைக் கையார் நகைக்கு நேராக் கரையில்
குவி முத்தம் வெண்ணிலவு கொப்புளிக்கும் கங்கை
அவி முத்தம் சென்று இறைஞ்சாதார்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#14
ஆர்க்கும் படை வேள் அரசு இருப்பு என்று அஞ்சாது அடிகள் அருள் காசி
ஊர்க்கும் புதுத் தோரணம் வைத்தால் உமக்கு இங்கு இவள் பேச்சு உரைப்பார் ஆர்
வார்க் குங்குமப் பூண் முலைச் சுவட்டை வளை என்று ஓடி வளைந்து சுற்றிப்
பார்க்கும் துளை முள் எயிற்று உரகப் பணியீர் மோகம் தணியீரே

@5 பிச்சியார்
** கட்டளைக் கலிப்பா

#15
தண் உலாம் பொழில் காசித் தெருவில் நீர் தரித்திடும் தவக் கோலமும் சூலமும்
பெண்ணொடு ஆடும் அப் பிச்சனுக்கு ஒத்தலால் பிச்சியார் எனும் பேர் தரித்து ஆடுவீர்
வெண்ணிலா முகிழ்க்கும் குறு மூரலால் வீணிலே எம் புரத்து எரியிட்ட நீர்
கண்ணினாலும் இக் காமனைக் காய்ந்திடில் கடவுள் நீர் என்று இறைஞ்சுதும் காணுமே

#16
காணும் காணும் நதிகள் எல்லாம் புனல் கங்கையே அங்கு உள தெய்வம் யாவையும்
தாணு எங்கள் அகிலேசரே மற்றைத் தலங்கள் யாவும் தட மதில் காசியே
பூணும் ஆசை மற்று ஒன்றே உடல் விடும் போது நல் மணி கர்ணிகைப் பூம் துறை
பேணுமாறு பெற வேண்டும் அப்புறம் பேயொடு ஆடினும் ஆடப் பெறுதுமே

#17
பெற்றம் ஊர்வதும் வெண்_தலை ஓட்டினில் பிச்சை ஏற்றுத் திரிவதும் பேய்களே
சுற்றமாகச் சுடலையில் வாழ்வதும் தோல் உடுப்பதும் தொண்டர்க்கு அரிது அன்றால்
கற்றை வார் சடைக் காசிப் பதியுளீர் கற்பம்-தோறும் கடை நாள் உலகு எலாம்
செற்று மீளப் படைக்கவும் வேண்டுமே தேவரீர் பதம் சிந்திப்பது இல்லையே
** நேரிசை வெண்பா

#18
இல்லாளே முப்பத்திரண்டு அறமும் செய்திருப்பச்
செல் ஆர் பொழில் காசிச் செல்வனார் மெல்லப்
பரக்கின்ற புண்_நீர்ப் படுதலை கொண்டு ஐயம்
இரக்கின்றவாறு என் சொல்கேன்
** கொச்சகக் கலிப்பா

#19
சொல் ஆவதும் மறையே சொல்லுவது நல் அறமே
இல் ஆவதும் முத்திக்கு ஏதுவாம் இத் தலமே
அல் ஆர் குழல் அளவுமா-கொல் மனம் வயிரக்
கல்லா இருந்தவா காசிப் பிரானார்க்கே
** கட்டளைக் கலித்துறை

#20
பிரான் என்றவர்க்கு ஒரு பெண்ணோடும் ஓடிப் பெரும் கருணை
தராநின்ற காசித் தடம் பதியார் வந்து என்றன் அகத்தே
இராநின்றனர் ஐம்புலக் கள்வர் கொள்ளையிட்டு ஏகுதற்கே
வராநின்ற போது உள்ள மா தனம் காத்து வழங்குதற்கே

@6 கொற்றியார்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#21
வழுத்துமவர்க்கு ஆனந்த வாழ்வை அருள்வார் காசி வளமை எல்லாம்
கொழுத்த தமிழால் பாடித் துளசி மணி தரித்து ஆடும் கொற்றியாரே
பழுத்த தவக் கோலமும் கைச் சங்கமும் ஆழியும் கண்டு பணிந்தே மாசு_இல்
முழுத் தவத்தால் யாமும் மால் ஆயினேம் கூடி முயங்குவீரே
** கட்டளைக் கலித்துறை

#22
முயலாமலே தவம் முத்தித் திருவை முயங்க நல்கும்
கயல் ஆர் பெரும் தடம்_கண்ணி பங்கார் அருள் காசியிலே
செயலாவது ஒன்று இலை வாளா நெடும் துயில்செய்யுமுங்கள்
பயலாகவே பணிசெய்வார் புவனம் படைப்பவரே
** கட்டளைக் கலிப்பா

#23
படுத்த பாயுடனே பிணி மூழ்கினும் பல் விழுந்து நரைத்து அற மூப்பினும்
அடுத்தது இங்கு இவர்க்கே பெரு வாழ்வு எனும் அப் பெரும் பதி எப் பதி என்பிரேல்
விடுத்துவிட்டு இந்திர திருவும் புவி வெண்குடைக்குள் இடும் அரசாட்சியும்
கடுத் ததும்பு களத்தரைத் தேடுவார் காதலித்து வரும் திருக் காசியே
** கட்டளைக் கலித்துறை

#24
திருக்கோலம் கொண்ட நல் தேன்மொழியாள் எண் திசையினும் நின்
உருக் கோலமே கண்டும் கண்டிலன் போலும் ஒழுகும் நறை
மருக் கோல நீலக் குழல் சேர் அவிமுத்த_வாண தொல்லை
இருக்கு ஓலமிட்டு உணராய் எங்குமாகி இருப்பதுவே

#25
இரு குங்குமக் குன்றும் பீர் பூப்பக் காம எரியினில் நின்று
உருகும் பசும்பொன்னுக்கு ஓர் மாற்று உண்டேல் உரையாய் தொடுத்துச்
செருகும் நறும் கொன்றை தேன் பிழிந்து ஊற்றச் சிறைச் சுரும்பர்
பருகும் பொலம் சடையாய் காசி வாழ் முக்கண் பண்ணவனே
** கலிநிலைத்துறை

#26
பண் நேர் வேதம் பாடிய காசிப் பதியாய் இப்
பெண் நேர் ஒருவன் எய் கணை ஐந்தும் பெய்தானால்
உள் நேர் நின்றாய் இன் அருளால் என் உயிர்_அன்னாள்
கண் நேர் நிற்றற்கு ஒல்கி ஒழிந்த கழுநீரே
** கட்டளைக் கலித்துறை

#27
கழியும் தலைக் கலன் பூண்டு ஆடும் காசிக் கடவுள் நுதல்
விழியும் இடக்கண்ணும் வெள் நெருப்பே அவ் விழி இரண்டில்
பொழியும் கனல் விழி காமனைக் காய்ந்தது அப் போரில் உடைந்து
ஒழியும் படைகள் என்றா எமைக் காயும் மற்று ஓர் விழியே
** மடக்கு
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#28
விழைகுவது அன்பர் அகம் சுகமே வெம் கரியின் உரி கஞ்சுகமே
தொழில் அடிகட்கு உள மாலயமே தூ முனிவோர் உளம் ஆலயமே
அழகு அமரும் பணி என்பு அணியே ஆட்கொள மேற்கொள்வது என் பணியே
மழ களிறு ஈன்றவள் அம் பதியே வாழ்வது காசி வளம் பதியே
** மடக்கு
** கட்டளைக் கலிப்பா

#29
வண்ண மேனி அரும் புவனங்களே வாசம் வாசம் அரும்பு வனங்களே
நண்ணும் ஆலயம் மா தவர் அங்கமே ஞாலம் ஏழ் தரு மாது அவர் அங்கமே
தண்ணென் மாலை தரும் மருக் கொன்றையே தருவது ஐயர் தருமருக்கு ஒன்றையே
கண்ணில் நிற்பர் மனத் திருக்கு ஓயிலே காசியே அவர்க்கு ஓர் திருக் கோயிலே
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#30
திருகு சினக் கூற்றின் எயிற்றிடைக் கிடந்தும் கடை நாளில் திரை ஏழ் ஒன்றாய்ப்
பெருகும் முழு நீத்தத்தில் திளைத்து ஆடப் புணை தேடும் பேதை நெஞ்சே
உருகிலை நெக்கு உடைந்திலை மொண்டு ஆனந்தவனத் தேனை ஓடியோடிப்
பருகிலை கண் அரும்பிலை மெய் பொடித்திலை மற்று உனக்கு என்ன பாவம்தானே
** ஊர்
** நேரிசை வெண்பா

#31
பாவலரும் நாவலரும் பண் மலரக் கள் மலரும்
கா அலரும் ஏடு அவிழ்க்கும் காசியே தீ வளரும்
கஞ்சக் கரத்தான் கலை மறைக்கு நாயகமாம்
அஞ்சு அக் கரத்தான் அகம்

#32
அகமே அவிமுத்தம் ஐயர் இவர்க்கு ஆகம்
சகம் ஏழும் ஈன்றெடுத்த தாயே மிக மேவும்
எண் அம்பரமே எமக்கு அளித்தல் முச்சுடரும்
கண் அம்பரமே கலை

@7 அம்மானை
** தாழிசை

#33
கலை மதியின் கீற்று அணிந்த காசி அகிலேசர்
சிலை மதனைக் கண் அழலால் செற்றனர் காண் அம்மானை
சிலை மதனைக் கண் அழலால் செற்றனரே ஆமாகில்
மலை_மகட்குப் பாகம் வழங்குவது ஏன் அம்மானை
வழங்காரோ அப்பாலும் மால் ஆனால் அம்மானை
** கட்டளைக் கலித்துறை

#34
அம்மனை தம் மனையாத் திருக்கோயில் அவிமுத்தமா
எம் அனையாய்த் தந்தையாய் இருந்தார் அடிக் கீழ் இறைஞ்சீர்
நம் மனை மக்கள் என்று ஏக்கறுப்பீர் உங்கள் நாள் உலந்தால்
சொம்மனை வைத்து எப்படி நடப்பீர் யமன் தூதரொடே
** கட்டளைக் கலிப்பா

#35
தூது கொண்டும் தமைத் தோழமை கொண்ட தொண்டர் தண் தமிழ்ச் சொல் கொண்ட குண்டலக்
காது கொண்டு எம் கவிதை கொண்டு ஆட்கொண்ட காசி நாதர் கருத்து ஏது அறிகிலேம்
போது கொண்டு ஒரு பச்சிலை கொண்டு தாம் பூசை செய்திலர் புண்டரிகப் பதம்
ஏது கொண்டு கொடுப்பர் கொடுப்பரேல் இருவருக்கும் மற்று என் படும் நெஞ்சமே

@8 சித்து
** நேரிசை வெண்பா

#36
ஏடு அவிழ் பொன் கொன்றை அகிலேசர் அன்பர்க்கே இருப்பை
ஆடகம் ஆக்கிக் கொடுத்தோம் அவ்வளவோ நீடு திறல்
காட்டும் இமையோர்க்கு இருப்புக் கல் கனகம் ஆக்கி அண்டம்
ஓட்டினையும் பொன் ஆக்கினோம்
** நேரிசை ஆசிரியப்பா

#37
பொன் உருக்கு அன்ன பூம் துணர்க் கொன்றையும் 5
வெள்ளி முளை அன்ன விரி நிலா_கொழுந்தும்
காந்தள் மலர்ந்து அன்ன பாந்தளின் நிரையும்
திரை சுழித்து எறியும் பொரு புனல் கங்கையில்
வெள் இதழ்க் கமலம் வள்ள வாய் விரித்து என
முழு நகை முகிழ்க்கும் கழி முடை வெண்_தலை 10
தோல் அடிச் செம் கால் பால் புரை வரிச் சிறைக்
கிஞ்சுகம் மலர்ந்த செம் சூட்டு எகினத்து
உருவெடுத்து அகல் வான் துருவியும் காணாத்
தொல் மறைக் கிழவ நின் சென்னி மற்று யானே
கண்டுகொண்டனன் இக் கடவுள் மா முடி எனப் 15
பெரு மகிழ் சிறப்பக் குரவையிட்டு ஆர்த்து
வெள் எயிறு இலங்க விரைவில் சிரித்து எனப்
பெரு வியப்பு இழைக்கும் எரி புரை சடையோய்
ஆள் வழக்கு அறுக்கும் வாள் அமர்த் தடம் கண்
மின் இழை மருங்குல் சில் மொழி மகளிர் 20
ஒழுகு ஒளி மிடற்றின் அழகு கவர்ந்து உண்டு எனக்
கயிறு கொண்டு ஆர்க்கும் காட்சித்து என்ன
மரகதம் காய்த்துப் பவளம் பழுக்கும்
கமம் சூல் கமுகின் கழுத்து இற யாத்து
வீசு ஒளிப் பசும்பொன் ஊசலாட்டு அயர்தரப் 25
பரு மணிக் கமுகின் பசும் கழுத்து ஒடிந்து
திரை படு குருதித் திரள் தெறித்து என்ன
முழுக் குலை முரிந்து பழுக்காய் சிதறும்
மங்குல் கண்படுக்கும் மது மலர்ப் பொதும்பர்
கங்கை சூழ் கிடந்த காசி_வாணா 30
ஐ வளி பித்து எனும் அவை தலையெடுப்ப
மெய் விட்டு ஐவரும் கைவிடும் ஏல்வையில்
மா முதல் தடிந்த காமரு குழவியும்
பொழி மதம் கரையும் மழ இளம் களிறும்
மூண்டு எழும் மானம் பூண்டு அழுக்கறுப்ப 35
இடக்கையின் அணைத்து நின் மடித்தலத்து இருத்தி
உலகம் ஓர் ஏழும் பல முறை பயந்தும்
முதிரா இள முலை முற்று இழை மடந்தை
ஒண் தொடித் தடக் கையின் வீசு நுண் துகில்
தோகையில் பிறந்த நாகு இளம் தென்றல் 40
மோகமும் தளர்ச்சியும் தாகமும் தணிப்ப
மறை முதல் பொருளின் நிறை சுவை அமுதினை
அம் செவி மடுத்து உணவு ஊட்டி நின்
குஞ்சித அடிக் கீழ்க் குடியிருத்துகவே
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#38
குடியிருக்கும் புன் குரம்பை குலைந்திடும் நாள் கொலைக் கூற்றம் குமைத்த செம்பொன்
அடி இருக்கும் பரந்தாமப் புக்கில் புகுந்து ஆனந்த அமுதம் மாந்திக்
கடி இருக்கும் நறைக் குழல் முத்தித் திருவை முயங்கிடவும் கடவேன்-கொல்லோ
துடி இருக்கும் இடையவளோடு அவிமுத்தத்து இருந்த பரஞ்சோதியானே

@9 களி
** பதினான்கு சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#39
சோதி ஒன்றில் ஒருபாதி சக்தி ஒருபாதியும் பரமசிவம் எனத்
தொகுத்துவைத்த அவிமுத்த நாயகர் துணைப் பதம் பரவு களியரேம்
ஓதியோதி இளைப்பர் வேதம் உணர்த்து தத்துவம் உணர்கிலார்
உணரும் வண்ணம் அனுபவத்தில் வந்திடும் ஒர் உண்மை வாசகம் உணர்த்துகேம்
ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினைப் படுத்து அனல் வளர்த்திடும்
யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார்
ஆதியார் அறிவர் அதுகிடக்க மது அருந்தில் அப்பொழுதிலே பெறற்
கரியது ஓர் பரம சுகம் விளைந்திடுவது அது மறுத்த எவை இல்லையே
** கட்டளைக் கலித்துறை

#40
இல்வாழ்வை விட்டு கதி வேட்டு அடைபவர்க்கு ஏழை_பங்கன்
நல் வாழ்வையே தரும் காசிப் பிரான் நறும் பூம் கடுக்கை
வல் ஆர் முலைக் கொம்பு_அனாய் தந்தை தாள் மழுவால் எறிந்து
கொல்வார் ஒருவருக்கு அல்லாது எவர்க்கும் கொளற்கு அரிதே
** ஆறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#41
கொள்ளையிடச் சிலர்க்கு முத்திச் சரக்கறையைத் திறந்து கொடுத்து அனந்த கோடிப்
பிள்ளைகள் பெற்றுடைய பெரு மனைக் கிழத்திக்கே குடும்பம் பேணுக என்னா
உள்ளபடி இரு நாழி கொடுத்து அதில் எண்_நான்கு அறமும் ஓம்புக என்றார்
அள்ளல் வள வயல் காசி ஆண்டகையார் பெருந்தகைமை அழகு இதாமே

@10 குறம்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#42
அழகு துயில் குங்குமக் கொங்கை அணங்கே எங்கள் அருள் காசிக்
குழகர் மகற்கு மகட்கொடுத்த குடியில் பிறந்த குறமகள் யான்
ஒழுகு தொடிக் கைக் குறியும் முகக் குறியும் தரும் ஒள் வளைக் குறியும்
புழுகு முழுகு முலை குறியும் உடையார் அவர் பொன் புயம்தானே
** கட்டளைக் கலித்துறை

#43
புயல் வண்ணக் கண்ணற்கு ஒளித்த அக் கள்வன் புணர்ப்பை எண்ணாள்
கயல் வண்ணக் கண்ணி தன் கண்ணின் உள் புக்கது கண்டிருந்தும்
செயல் வண்ணம் கண்டிலள் வாளாப் புறத்து எங்கும் தேடுகின்றாள்
வயல் வண்ணப் பண்ணை அவிமுத்தத்தானை மனத்துள் வைத்தே

@11 மறம்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#44
வையம் முழுது ஒருங்கு ஈன்ற இடப்பாகர் ஆனந்தவனத்தில் வாழும்
வெய்ய தறுகண் மறவர் குலக்கொடியை வேட்டு அரசன் விடுத்த தூதா
கையில் அவன் திருமுகமோ காட்டு இரு கண் தொட்டு முட்டைக் கதையில் தாக்கிச்
செய்ய கொடிறு உடைத்து அகல் வாய் கிழித்து அரிவோம் நாசியொடு செவியும்தானே
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#45
தாக்கு படை வேள் கணை மழைக்குத் தரியாது இரு கண் மழை அருவி
தேக்கும் இவட்கு ஆனந்தவனத்து இருந்தார் உள்ளம் திருந்தார்-கொல்
காக்க அரிய இள வாடைக் காற்றுக்கு உடைந்து கரந்து வச்சை
மாக்கள் எனவே முட அலவன் வளை வாய் அடைக்கும் மழை நாளே

@12 தழை
** கட்டளைக் கலித்துறை

#46
மழை வளைக்கும் பொழில் காசிப் பிரான் வெற்பில் வண்டு அறை பூம்
தழை வளைக் கைக் கொடுத்தேன் கண்ணில் ஒற்றித் தளர் இடை தன்
இழை வளைக்கும் கொங்கையூடு அணைத்தாள் இத் தழையின் உள்ளே
கழை வளைக்கும் சிலை வேள்_அனையாய் இதைக் கண்டுகொள்ளே
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#47
கண் இருக்கும் திரு நுதலும் கனல் இருக்கும் திருக் கரமும் கலந்து ஓர் பேதைப்
பெண் இருக்கும் இடப்பாலும் பிறை இருக்கும் மவுலியுமாய்ப் பிரிக்கலாகா
எண் இருக்கும் கணத்தொடும் ஆனந்தவனத்து இருப்பாரை எங்கே காண்பார்
பண் இருக்கும் மறைகளும் எண்_கண்ணனும் கண்ணனும் அமரர் பலரும்தானே
** கட்டளைக் கலித்துறை

#48
பல் ஆண்டு தம்மைப் படைத்த அத் தேவரைப் பாரப் பைம்பொன்
வில் ஆண்ட தோள் கொட்டி ஏமாப்பர் கோல விடம் பழுத்த
அல் ஆண்ட கண்டத்து எம் ஆதிப் பிரான் அவிமுத்தத்திலே
சில் ஆண்டு இருந்து சிவமாய்ச் செலும் சிறு செந்துக்களே
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#49
செந்தேன் ஒழுகும் பொழில் காசி சிறு நுண் நுசுப்பின் பெரும் தடம் கண்
பைந்தேன் ஒழுகும் இடப்பாகர் படைவீடு என்பது உணராய்-கொல்
வந்து ஏன் வளைத்தாய் எனைப் பாவி மதனா வீணே விளைந்த போர்
உய்ந்து ஏகுவது இங்கு அரிது அனல் கண்_உடையார் மழு வாள் படையாரே

@13 மதங்கியார்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#50
படலை நறும் கடுக்கை முடிப் பரஞ்சுடரார் இசை பாடிப் பசும் தேன் பில்கி
மடல் அவிழ் பூம் பொழில் காசி மணி மறுகில் விளையாடு மதங்கியாரே
உடலும் எமக்கு உயிரும் ஒன்றே ஓடு அரிக் கண் வாள் இரண்டும் ஒழிய என்னே
தொடலை வளைத் தடக் கையின் வாள் இரண்டு எடுத்து வீசிட நீர் தொடங்கும் ஆறே

@14 ஊசல்
** கலித்தாழிசை

#51
தொடங்காமே பனி மலரும் தூவாமே நல்கும்
கடம் கால் களிற்று உரியார் காசி வளம் பாடி
விடம் கான்று அகன்று குழை மேல் போய்க் குடங்கைக்கு
அடங்காத உண்கணீர் ஆடுக பொன் ஊசல்
அம் பொன் மலர்க் கொம்பு_அன்னீர் ஆடுக பொன் ஊசல்
** நேரிசை வெண்பா

#52
பொன் அம் தாது என்ன மலர்ப் பூம் துறையில் புண்டரிகத்து
அன்னம் தாதாடும் அவிமுத்தர் இன் அமிர்தா
முன்னம் கடுக் கை முகந்து உண்டார் நல்காரே
இன்னம் கடுக்கை இவட்கு
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#53
குன்று இரண்டு சுமந்து ஒசியும் கொடி_அன்னீர் அவிமுத்தம் குடிகொண்டு ஆகம்
ஒன்று இரண்டு வடிவு ஆனார் திரள் புயத்து மார்பகத்தும் உமிழ் தேன் பில்கி
மின் திரண்டது எனப் புரளும் பொலம் கடுக்கைத் தாமத்தின் விரைத் தாதாடிப்
பொன் திரண்டது என இருக்கும் பொறி வண்டு செய் தவம் என் புகலுவீரே
** கொச்சகக் கலிப்பா

#54
புகுமே மதி_கொழுந்தும் புன் மாலைப் போதும்
நகுமே கிளையும் நகைத்தால் நமக்கு என் ஆம்
உகுமேல் உயிர் காசி உத்தமரைக் காணத்
தகுமே அப்போது இதழித் தாரும் பெறலாமே

#55
ஆமோ அவிமுத்தத்து ஐயரே பெண்பழி வீண்
போமோ வயிரவர்-தம் சாதனமும் பொய் ஆமோ
தேம் மோது கொன்றைச் செழும் தாமம் நல்கா நீர்
தாமோ தருவீர் உமது பரந்தாமமே
** கலிநிலைத்துறை

#56
பரந்தாமத்தைப் பல் உயிர்கட்கும் பாலிப்பார்
வரம் தாமத்தைத் தருவதை நீர் பின் வழங்காரோ
புரம் தாம் அத்தில் பொலிதரு காசிப் புரம் ஆனார்
திரம் தாம் அத்தை எனப் புகலீர் ஏந்திழையீரே

@15 பாணாற்றுப்படை
** நேரிசை ஆசிரியப்பா

#57
இழும் என் மழலை இன் அமுது உறைப்பப்
பிழி தேன் ஒழுக்கின் ஒழுகும் இன் நரம்பின்
வள் உகிர் வடிம்பின் வரன்முறை வருடத்
தெள் விளி எடுக்கும் சீறியாழ்ப் பாண
வாழிய கேள்-மதி மாற்றம் ஒன்று யானும் 5
ஏழ் இசைப் பாணன் மற்று இறை மகன் அலனே
பலருடன் பழிச்சுவது ஒழிக மற்று அம்ம
சில பகல் யானும் நின் நிலைமையன் ஆகி
நலம்பாடு அறியா இலம்பாடு அலைப்ப
நீர் வாய்ச் சிதலையும் நூல் வாய்ச் சிலம்பியும் 10
சில இடம் மேய்ந்த சிறு புன் குரம்பையில்
மசகமும் உலங்கும் வாய்ப் படைக் குடவனும்
பசை இல் யாக்கைத் தசை கறித்து உண்ண
அரும் பசிக்கு உணங்கியும் பெரும் பிணிக்கு உடைந்தும்
சாம்பல் கண்டு அறியாது ஆம்பி பூத்த 15
எலி துயில் அடுப்பில் தலைமடுத்து ஒதுங்கிச்
சிறு சிறார் அலறப் பெரு மனைக் கிழத்தி
குடங்கையில் தாங்கிய கொடிற்றினள் குடங்கைக்கு
அடங்கா உண்கண் ஆறு அலைத்து ஒழுக
அழு குரல் செவி சுட விழும நோய் மிக்குக் 20
களைகண் காணாது அலமரும் ஏல்வையின்
கடவுள் நல்லூழ் பிடர் பிடித்து உந்தக்
குரை புனல் கங்கைக் கரை வழிச் சென்று ஆங்குத்
தேம் பழுத்து அழிந்த பூம் பொழில் படப்பையில்
கடவுள் கற்பகக் கொடி படர்ந்து ஏறி 25
வான் தொடு கமுகின் மடல் தலை விரிந்து
நான்றன திசை-தொறும் நறு நிழல் கதலித்
தேம் கனி பழுத்த பூம் குலை வளைப்ப
அ மலர்க் கொடியில் செம் முக மந்தி
முடவுப் பலவின் முள் புறக் கனியைப் 30
புன் தலைச் சுமந்து சென்றிடும் காட்சி
குடம் மிசைக் கொண்டு ஒரு கூன் மிடை கிழவன்
நெடு நிலைக் கம்பத்தின் வடம் மிசை நடந்து என
இறும்பூது பயக்கும் நறும் பணை மருதக்
கன்னி மதில் உடுத்த காசி மா நகரம் 35
பெரு வளம் சுரக்க அரசு வீற்றிருக்கும்
மழு வலன் உயர்த்த அழல் நிறக் கடவுள்
பொன் அடி வணங்கி இன் இசை பாடலும்
அ நிலைக்-கண்ணே அகல் விசும்பு ஒரீஇச்
சுரபியும் தருவும் பெரு வளம் சுரப்ப 40
இருமையும் பெற்றனன் யானே நீயும் அத்
திருநகர் வளமை பாடி இரு நிலத்து
இருநிதிக் கிழவன் ஏக்கறுப்பத்
திருவொடும் பொலிக பெரு மகிழ் சிறந்தே
** வண்டுவிடு தூது
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#58
சிறை விரிக்கும் மதுகரங்காள் தேம் பிழி பூம் பொழில் காசித் திருநாடு ஆளும்
மறை விரிக்கும் சிலம்பு_அடியார் திரள் புயத்துப் புரளும் நறு மலர்ப் பூம் கொன்றை
நறை விரிக்கும் இதழ்க் கரத்தால் ஊட்டும் மது விருந்து உண்டு நயந்து மற்று என்
குறை விரித்து ஓர் இருவர் இசை கூட்டுண்ணும் திருச் செவிக்கே கூறுவீரே
** கட்டளைக் கலித்துறை

#59
கூற்று அடிக்கு அஞ்சிக் குலையும் நெஞ்சே அஞ்சல் கோச் செழியன்
மாற்று அடிக்கு அஞ்சும் இடப்பாகனை மள்ளர் கொன்ற கரும்
சேற்று அடிக் கஞ்ச மலர் வயல் காசிச் சிவ_கொழுந்தைப்
போற்று அடிக்கு அஞ்சலிசெய் பற்று வேறு புகல் இல்லையே
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#60
இலை முகம் குழைத்த பைம் பூண் ஏந்து இள முலையோடு ஆடும்
மலை முகம் குலைத்த காசி வரதர் கண்டிலர்-கொல் மாரன்
சிலை முகக் கணைக்கு எம் ஆவி செகுத்து உண இருந்த திங்கள்
கலை முகம் போழ்ந்த காயம் களங்கமாய் விளங்கும் ஆறே
** கட்டளைக் கலித்துறை

#61
விளம் கனி ஒன்று எறி வெள் விடையோடும் விழிக்-கண் நுழைந்து
உளம் கனியப் புகுந்தாய் விரகால் நல் நலத்துற்றது என் ஆம்
வளம் கனி பண்ணை வயல் சூழ் அவிமுத்த_வாண நறும்
களங்கனி என்று உமை கைக் கிளி பார்க்கும் கறைக் கண்டனே
** ஆசிரியவிருத்தம்

#62
கண்டம் மட்டும் இருண்டு பாதி பசந்து பாதி சிவந்து உளார்
காசி நாதர் கரத்து வைத்த கபாலம் ஒன்று அலது இல்லையால்
உண்டு கோடியின் மேலும் ஐயர் பதம் பெறக் கடவார் அவர்க்கு
ஒவ்வொருத்தர் கரத்தில் ஒவ்வொர் கபாலம் வேண்டும் அதற்கெலாம்
பண்டு இருந்த விரிஞ்சன்மார் தலை மாலையும் செலவாய்விடின்
பாரம் என் தலை மேல் வரும்-கொல் எனும் கவற்சியினால் பசும்
கொண்டல் வண்ணர் துயில்கொள்ளவும் துயிலார் பிதாமகனார் எனும்
கொள்கை கண்டும் விழைந்தவா அவர் பதம் சமீரகுமாரனே
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#63
கும்பம் இரண்டு சுமந்து ஒசியும் கொடி நுண் மருங்குல் இறுமுறும் என்று
அம் பொன் பசும் கொம்பு_அன்னாளை ஆகத்து அணைத்த அகிலேசர்
செம்பொன் இதழித் தெரியலையே சிந்தித்து இருப்பத் திரள் முலையும்
பைம்பொன் உருவும் பீர் பூத்த பவளச் செவ் வாய்ப் பசுங்கிளிக்கே
** கட்டளைக் கலித்துறை

#64
கிள்ளைக்கு அமிர்த மொழி சாற்றிடும் கிஞ்சுக இதழ்ப் பெண்
பிள்ளைக்கு இடம் தந்த காசிப் பிரான் பிறையோடு முடிக்
கொள்ளைச் சிறை வண்டு கூட்டுணும் கொன்றையும் கூட வைத்தார்
வள்ளக் கலச முலைக் கங்கையாள் உயிர் வாழ்வதற்கே
** கலிவிருத்தம்

#65
வாள் தடம் கண் மழைப் புனல் மூழ்கியே
சேட்டு இளம் கொங்கை செய் தவம் ஓர்கிலார்
தோட்டு இளம் கொன்றை சூடிப் பொன் அம்பலத்து
ஆட்டு உவந்த அவிமுத்த_வாணரே
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிடியவிருத்தம்

#66
நரை முதிர்ந்தன கண்கள் பஞ்சார்ந்தன நமன் தமர் வழிக்கொண்டார்
திரை முதிர்ந்து உடல் திரங்கினது இரங்கலை செயல் இது மட நெஞ்சே
உரை முதிர்ந்தவர் குழாத்தொடும் அடைதியால் ஒழுகு ஒளி முடிக் கங்கைக்
கரை முதிர்ந்திடாக் கலை மதி முடித்தவர் காசி நல் நகர்தானே
** வஞ்சித்துறை

#67
நகரமாய் மறைச் சிகரம் ஆனதால்
மகரம் ஆயினான் நிகர்_இல் காசியே
** கட்டளைக் கலித்துறை

#68
இல் ஒன்று என என் இதயம் புக்காய் மதன் எய் கணைகள்
வல் ஒன்று பூண் முலை மார்பகம் போழ்வன மற்று என் செய்கேன்
அல் ஒன்று கூந்தல் அணங்கு அரசோடும் ஒர் ஆடகப் பொன்
வில் ஒன்று கொண்டு அவிமுத்தத்திலே நின்ற விண்ணவனே

@16 கைக்கிளை
** மருட்பா

#69
விண் அமிர்து நஞ்சாம் விடமும் அமிர்தமாம்
உண் அமிர்தம் நஞ்சோடு உதவலால் தண் என்
கடலொடு பிறந்தன போலும் தட மலர்க்
கடி நகர் காசியுள் மேவும்
மடல் அவிழ் கோதை மதர் நெடும் கண்ணே
** வஞ்சிவிருத்தம்

#70
கண்ணொடு ஆவி கருத்துமாய்
உள் நிறைந்தது ஒர் ஒண் பொருள்
நண்ணும் மா நகர் ஆனதால்
அண்ணல் ஆர் அவிமுத்தமே
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#71
முத்தாடி மடித்தலத்து ஓர் இளம் சேயை உலகு ஈன்ற முதல்வியோடும்
வைத்து ஆடுவீர் பொதுவில் நின்று ஆடும் உமக்கு இந்த வாரம் என்னே
கொத்து ஆடு சடையொடும் ஆனந்தவனத்தே குறும் தாள் நெடும் பூதத்தோடு
ஒத்து ஆடுவீர் அடிகட்கு எல்லோமும் பிள்ளைகள் என்று உணர்ந்திடீரே

@17 சம்பிரதம்
** ஆசிரிய விருத்தம்

#72
உண்டு அகில கோடியும் உமிழ்ந்திடுவன் முகில் ஏழும் ஒக்கப் பிழிந்து கடல் ஏ
ழுடன் வாய் மடுத்திடுவன் வட மேரு மூலத்தொடும் பிடுங்கிச் சுழற்றி
அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய்
அடைவடைவு அடுக்கிய அடுக்கைக் குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம்
கொண்டல் மணி_வண்ணனும் முண்டகக் கண்ணனும் குஞ்சிதச் செம் சரணமும்
குடில கோடீரமும் தேடி அதலமும் அண்ட கோளமும் துருவி ஓடப்
பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசிப்
பதியில் அடையாமல் இப் பல் உயிர்த் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#73
விரை குழைக்கும் மழை முகில்காள் விண்டு அலர் தண் துழாய்ப் படலை விடலை என்ன
அரை குழைக்கும் பொழில் காசி அணி நகருக்கு அணுதிரேல் அறல் மென் கூந்தல்
வரை குழைக்கும் முலை குழைப்பக் குழை திரள் தோள் அழகு முடி வணங்கிது என்னக்
கரை குழைக்கும் மலை குழைத்த கண்_நுதற்கு என் பேதை திறம் கழறுவீரே
** கட்டளைக் கலித்துறை

#74
கழைக் கரும்பைக் குழைத்தான் மதவேள் அக்கணத்தில் அம் பொன்
குழைக் கரும்பும் குழைந்திட்டது அந்தோ குளிர் தூங்கு துளி
மழைக்கு அரும்பும் பொழில் காசிப் பிரான் மலையாள் முலை போழ்
முழைக் கரும் புற்று அரவு ஆட நின்று ஆடிய முக்கணனே

#75
கண் அஞ்சனத்தைக் கரைத்து ஓடும் நீர் கடல் செய நின்றாள்
உண் நஞ்சு அனத்துக்கும் அஞ்சவைத்தார் உம்பர் ஓட்டெடுப்பப்
பண் அஞ்ச நச்சம் அமிர்தாக் கொண்ட காசிப் பரமர்ப் பச்சைப்
பெண் அஞ்ச நச்சு அரவு ஆர்த்துநின்று ஆடும் அப் பிஞ்ஞகரே
** கட்டளைக் கலிப்பா

#76
கருகு கங்குல் கரும் பகடு ஊர்ந்து வெண் கலை மதிக் கொலைக் கூற்றம் கவர்ந்து உயிர்
பருகுதற்குக் கரத்தால் விரி நிலாப் பாசம் வீசி வளைத்தது இங்கு என் செய்கேன்
முருகு நாறு குழல் பொலம் கொம்பு_அனீர் முத்தர் வாழ் அவிமுத்தமும் நெக்கு உடைந்து
உருகு பத்தர்-தம் சித்தமும் கோயிலா உடைய நாதற்கு உரைத்திடுவீர்களே
** ஊர்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#77
உரைத்த நான்மறைச் சிரத்தும் ஐந்து_அவித்தவர் உளத்தும் வண்டு ஒரு கோடி
நிரைத்த பூம் குழல் நிரை வளையவளொடும் நின்றவர் உறை கோயில்
குரைத்த தெள் திரைக் கங்கை மங்கையர் துணைக் கொங்கை மான்மதச் சேற்றைக்
கரைத்து இரும் கடல் கரும் கடலாச் செயும் காசி மா நகர்தானே
** கட்டளைக் கலிப்பா

#78
மானம் ஒன்று நிறை ஒன்று நாண் ஒன்று மதியம் ஒன்று குயில் ஒன்று தீம் குழல்
கானம் ஒன்று கவர்ந்து உணும் மா மதன் கணைக்கு இலக்கு என் உயிர் ஒன்றுமே-கொலாம்
வானம் ஒன்று வடிவு அண்ட கோளமே மவுலி பாதலம் ஏழ் தாள் மலை எட்டும்
நானம் ஒன்று புயம் முச்சுடருமே நயனமாப் பொலியும் அகிலேசனே
** நேரிசை வெண்பா

#79
அகிலாண்டமாய் அகண்டம் ஆன அகிலேசா
முகில் ஆண்ட சோலை அவிமுத்தா நகில் ஆண்ட
சின்னஇடைப்பாகா திரு நயனம் செங்கமலம்
அன்ன விடைப் பாகா அருள்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#80
அருகு மதன் குழைத்த கழை தெறித்த முத்து ஏறுண்டு எழு வண்டு அரற்றும் ஓசை
பெருகு சிறு நாண் ஒலி என்று அறிவழிந்து பேதுறும் இப் பேதைக்கு என் ஆம்
உருகு பசும்பொன் அசும்பு தசும்பு விசும்பு இரவி என உடைந்து கஞ்சம்
முருகு உயிர்க்கும் பொலம் குடுமி விமானத்தில் பொலிந்த அவிமுத்தனாரே
** கட்டளைக் கலித்துறை

#81
முத்திக்கு வேட்டவர் மோட்டு உடல் பாரம் முடைத் தலை ஓடு
அத்திக்கும் சாம்பற்கும் ஓம்பினரால் இவை அன்றி அப்பால்
சித்திப்பது மற்று இலை போலும் காசிச் சிவபெருமான்
பத்திக்குக் கேவலமே பலமாகப் பலித்ததுவே
** கலிநிலைத்துறை

#82
பல்வேறு உருவாய் நின்று அருள் காசிப் பதி_உள்ளீர்
வில் வேறு இல்லை பூ அலது அம்பும் வேறு இல்லை
அல் வேறு அல்லாப் பல்_குழலாரை அலைக்கின்றான்
சொல் வேறு என்னே பாரும் அனங்கன் தொழில்தானே
** கட்டளைக் கலித்துறை

#83
தான் என்றவர் முன் ஒளித்து ஓடித் தன்னை இழந்தவர் முன்
யான் என்று சென்றிடும் காசிப் பிரான் உடம்பு என்பது என்போடு
ஊன் என்று விட்டு ஒழிந்தார் களிப்பார் உவட்டாத இன்பத்
தேன் என்று அடைந்தவர்க்கு உண்ணக் கிடைப்பது தீ விடமே
** கட்டளைக் கலிப்பா

#84
தீ விடம் கொடுத்தே அமுது உண்ட அத் தேவருக்கு ஒளித்துத் திரிகின்ற நீர்
பாவிடும் மலர்ப் பஞ்சணை மேல் இவள் பவள வாய் அமிர்து உண்டால் பழுது உண்டோ
நா இடம் கொண்டு ஒருவன் முகங்கள் ஓர் நான்கினும் நடிக்கும் துரகத்தை விட்டு
ஆ இடம் கொண்டு அருள் காசி வீதிக்கே ஆடல்செய்திடும் ஆனந்தக் கூத்தரே
** நேரிசை வெண்பா

#85
ஆனந்த வல்லியுடன் ஆனந்தக் கானகத்தே
ஆனந்தக் கூத்து ஆடு அருள் கடலை ஆனந்தம்
கொள்ளத் திளைத்து ஆடும் கூடாதேல் இப் பிறவி
வெள்ளத்து இளைத்து ஆடுவீர்
** கலிவிருத்தம்

#86
வீரம் என்பது வில் மதற்கே குணம்
கோரம் என்பது கொண்டிருந்து ஆவது என்
ஈரம் என்பது இலை இவர்க்கு என்றதால்
வாரம் என் பதி வாழ் அவிமுத்தரே
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#87
முத்து நிரைத்த குறுநகையீர் முளரி_கணையான் கணை கடிகைப்
பத்தும் நிரைத்தான் இனித் தொடுக்கில் பாவைக்கு ஒரு திக்கு இலை போலும்
ஒத்து நிரைத்த உடு நிரையோடு ஒன்றோ பலவோ என வரும் பூங்
கொத்து நிரைத்த பொழில் காசிக் குழகற்கு ஒருவர் கூறீரே
** கட்டளைக் கலித்துறை

#88
கூற்று அடிக்கு அஞ்சி முறையோ எனக் குலம் நான்மறையும்
போற்று அடிக் கஞ்சம் புகல் அடைந்தேம் உனைப் போல வைத்தால்
சேற்று அடிக் கஞ்ச வயல் காசி நாத செருப்படிக்கும்
மாற்றடிக்கும் தொண்டர் வில்லடிக்கும் புகல் மற்று இல்லையே
** கட்டளைக் கலிப்பா

#89
இல்லை என்பது இலையோர் மருங்கு இல் ஏய் எவ் அறங்களும் உண்டு ஓர் மருங்கிலே
கொல்லுகின்றது எழுதரும் கூற்றமே கூறும் மாற்றம் எழுது அரும் கூற்றமே
வில்லும் ஏற்றிடும் நாணும் பொன் நாகமே விடு கணைக்கு உண்டு நாணும் பொன் ஆகமே
மல்லல் மார்பின் மணி முத்தம் என்பு அதே வாசம் ஐயர்க்கு அவிமுத்தம் என்பதே
** கலிவிருத்தம்

#90
என் பணிக்கும் பணி என்று இரந்த போது
என்பு அணிக்கும் பணி திக்கு மேக்கு என்றார்
என் பணிக்கும் பணியாய் இருந்தது ஓர்
என் பணிக்கும் இன்பு ஆம் அகிலேசர்க்கே
** நேரிசை வெண்பா

#91
கேயூரம் ஊரக் கிளர் தோள் அகிலேசர்
மாயூரம் ஊரும் ஒரு மைந்தற்குத் தீ ஊரும்
அவ் வேலை ஈந்தார் அடித் தொழும்பு செய்து ஒழுகும்
இவ் வேலை ஈந்தார் எமக்கு
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#92
குருகை விடுத்தாள் எனக் குருகே கூறாய் சுகத்தை விடுத்தாள் என்று
அருகு வளரும் சுகமே சென்று அறையாய் நிறை நீர் தெரிந்து பால்
பருகும் அனமே அனம் விடுத்த படி சென்று உரையாய் படிவர் உளத்து
உருகு பசும்பொன் மதில் காசி உடையார் வரித் தோல் உடையார்க்கே

#93
உடுத்த கலையும் மேகலையும் ஒழுகும் பணியும் விரும்பு அணியும்
தொடுத்த வளையும் கைவளையும் துறந்தாள் ஆவி துறந்தாலும்
அடுத்தது உமது பரந்தாமம் அதனால் இதழிப் பரந்தாமம்
விடுத்து விடுவாள் அலள் எனப் போய் விளம்பீர் காசி வேதியர்க்கே
** நேரிசை வெண்பா

#94
வேதத் துரகர் விரகர் அகிலேசர்
பாதத்து உரகப் பரிபுரத்தார் நாதர் இவர்
சேவடிக்கு அண்டாரே திறம் பிழைத்துத் தென்புலத்தார்
கோ அடிக் கண்டாரே குலைந்து
** கட்டளைக் கலித்துறை

#95
குலை வளைக்கும் பழுக்காய் முழுத் தாறு கொழும் கமுகின்
தலை வளைக்கும் பொழில் காசிப் பிரான் தடம் கோட்டுப் பைம்பொன்
மலை வளைக்கும் புயத்து ஆண்மை என் ஆம் தெவ் வளைந்து கழைச்
சிலை வளைத்துத் தன் படைவீடு அமர்க்களம் செய்திடினே
** ஆசிரியவிருத்தம்

#96
இட மருங்கினில் மருங்கிலாத அவள் குடியிருக்கவும் முடியில் வேறு
இவள் ஒருத்தியை இருத்திவைத்தும் மதி மோக மோகினியின் உருவமாய்
நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர்
நம் குலத் திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ
குடம் உடைந்தது என ஆன் இனங்கள் மடி மடை திறந்து பொழி பாலொடும்
கொழு மடல் பொதி அவிழ்ந்து கைதை சொரி சோறும் இட்டு அணி திரைக் கையால்
கடல் வயிற்றினை நிரப்புகின்ற சுர கங்கை குண்டு அகழியா நெடும்
ககனம் நீள் குடுமி மதில்கள் ஏழ் உடைய காசி மேவும் அகிலேசரே

@18 இரங்கல்
** மடக்கு
** பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

#97
சரியோடு ஒழுகும் கர வளையே சரக்கோடு ஒழுகும் கர வளையே
தையற்கு அனமே தீ விடமே தவழும் கனமே தீவு இடமே
சொரிவது அடங்காக் கண்ணீரே துளிக்கும் தடம் காக் கள் நீரே
துயரே வதிதல் நம் தினமே சூரல் கழுத்தின் நந்து இனமே
கருகிப் புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே
கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே
அரிவை இவளுக்கு உருகீரே அனத்தோடு உறங்கும் குருகீரே
அளியார் இதழி வனத் தாரே அருள் ஆனந்த வனத்தாரே
** சந்த விருத்தம்

#98
வனத்தினும் ஒர் பொன் பொது முகப்பினும் நினைப்பவர் மனத்தினும் நடித்து அருள்செய்வார்
சினக் கயல் விழிக் கடை கருக்கொள் கருணைக்கொடி திளைத்த மருமத்தர் இடம் ஆம்
நனைக் கமல நெக்கு உடைதரக் குடை துறைச் சுர நதிக் கரையில் முட்டை-கொல் எனாக்
கனத்த பரு முத்தினை அணைத்து அனம் இனத்தொடு களிக்கும் அவிமுத்த நகரே
** வேறு

#99
கரு முகில் வெளுப்ப அற இருளும் அளகத்தின் இவள் கதிர் முலை முகட்டு அணைய அணை மீதே
வருகிலர் எனில் செவியில் ஒரு மொழி சொல் அச்சமயம் வருக என அழைக்கின் உடன் வருவார் காண்
சுர நதி சுருட்டும் விரி திரைகள் ஒரு முத்தி மகள் துணை முலை திளைக்கும் அவர் மணநாளில்
முரசொடு முழக்கு குடமுழவு என இரைக்க வளை முரலும் அவிமுத்த நகர் உடையாரே
** நேரிசை ஆசிரியப்பா

#100
உடை திரைக் கங்கை நெடு நதித் துறையின்
வலம்புரி என்ன ஆங்கு இடம் புரி திங்கள்
வெள்ளி வீழ் அன்ன விரி நிலாப் பரப்பும்
பொன் வீழ் அன்ன புரி சடைக் கடவுள்
முடவுப் படத்த கடவுள் பைம்பூண் 5
கறங்கு எனச் சுழலும் கால் விசைக்கு ஆற்றாது
உமிழ்தரு குருதித் திரள் தெறித்தாங்குத்
திசை-தொறும் தெறித்த திரள் மணிக் குலங்கள்
வான் ஏறு கடுப்ப வெரிநில் தாக்கலும்
கை எடுத்து எண் திசைக்களிறும் வீறிடத் 10
தெய்வ நாடகம்செய் வைதிகக் கூத்தன்
வரை பகப் பாயும் வானரக் குழாத்து ஒரு
கரு முக மந்தி கால் விசைத்து எழுந்து
பழுக்காய்க் கமுகின் விழுக் குலை பறித்துப்
படர்தரு தோற்றம் சுடரோன் செம்மல் 15
தசமுகத்து ஒருவன் திரள் முடி பிடுங்கி
விசையில் பாய்ந்து என விம்மிதம் விளைக்கும்
தட மலர்ப் படப்பைத் தண்டலைக் காசிக்
கடி நகர் புரக்கும் கண்_நுதல் செல்வன்
வேம்பும் கடுவும் தேம் பிழியாகச் 20
செம் செவி கைப்ப யான் தெரித்த சில் மொழி
அம் செவி மடுத்து ஆங்கு அளித்தனன் அதனால்
வேத்தவை வியப்ப விரைத் தேன் பில்கும்
தேத் தமிழ் தெளிக்கும் செந்நாப் புலவீர்
மண்மகள் கவிகைத் தண் நிழல் துஞ்சப் 25
புரவு பூண்டு இந்திர திருவொடும் பொலிந்து
முடிவினும் முடியா முழு நலம் கொடுக்கும்
செம் நெறி வினவுதிராயின் இன் இசைப்
பாத் தொடுத்து அடுத்த பரஞ்சுடரை
நாத் தழும்பு இருக்க ஏத்து-மின் நீரே 30
** காசிக் கலம்பகம் முற்றிற்று