யுத்த காண்டம் 4 – கம்பராமாயணம்

32. வேல் ஏற்ற படலம்
33. வானரர் களம்காண் படலம்
34. இராவணன் களம்காண் படலம்
35. இராவணன் தேர் ஏறு படலம்
36. இராமன் தேர் ஏறு படலம்
37. இராவணன் வதைப் படலம்
38. மண்டோதரி புலம்புறு படலம்
39. வீடணன் முடிசூட்டுப் படலம்
40. பிராட்டி திருவடி தொழுத படலம்
41. மீட்சிப் படலம்
42. திருமுடி சூட்டுப் படலம்

32 வேல் ஏற்ற படலம்


#1
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பெயர்ந்துபோய் நாம்
விரும்பினம் வாழ்க்கை என்றால் யார் இடை விலக்கல்-பாலார்
வரும் பழி துடைத்தும் வானின் வைகுதும் யாமும் என்னா
இரும் கடல் பெயர்ந்தது என்ன தானையும் மீண்டது இப்பால்

#2
சில்லி ஆயிரம் சில் உளை பரியொடும் சேர்ந்த
எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு இமைக்கும்
செல்லும் தேர்-மிசை சென்றனன் தேவரை தொலைத்த
வில்லும் வெம் கணை புட்டிலும் கொற்றமும் விளங்க

#3
நூறு கோடி தேர் நொறில் பரி நூற்று இரு கோடி
ஆறு போல் மத மா கரி ஐ_இரு கோடி
ஏறு கோள் உறு பதாதியும் இவற்று இரட்டி
சீறு கோள் அரி_ஏறு அனானுடன் அன்று சென்ற

#4
மூன்று வைப்பினும் அ புறத்து உலகினும் முனையின்
ஏன்று கோளுறும் வீரர்கள் வம்-மின் என்று இசைக்கும்
ஆன்ற பேரியும் அதிர் குரல் சங்கமும் அசனி
ஈன்ற காளமும் ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப

#5
அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை அவுணர்
வினைய வானவர் வெவ் வினை பயத்தினை வீரர்
நினையும் நெஞ்சினை சுடுவது ஓர் நெருப்பினை நிமிர்ந்து
கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினை கண்டார்

#6
கண்டு கைகளோடு அணி வகுத்து உரும் உறழ் கற்கள்
கொண்டு கூற்றமும் நடுக்குற தோள் புடை கொட்டி
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற ஆர்த்தார்
மண்டு போரிடை மடிவதே நலம் என மதித்தார்

#7
அரக்கன் சேனையும் ஆர் உயிர் வழங்குவான் அமைந்த
குரக்கு வேலையும் ஒன்றொடு ஒன்று எதிர் எதிர் கோத்து
நெருக்கி நேர்ந்தன நெருப்பு இமை பொடித்தன நெருப்பின்
உருக்கு செம்பு என அம்பரத்து ஓடினது உதிரம்

#8
அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து அண்டத்து
ஒற்ற வானகம் உதய மண்டிலம் என ஒளிர
சுற்றும் மேகத்தை தொத்திய குருதி நீர் துளிப்ப
முற்றும் வையகம் போர் களம் ஆம் என முயன்ற

#9
தூவி அம் பெடை அரி இனம் மறிதர சூழி
தூவி அம்பு எடை சோர்ந்தன சொரி உடல் சுரிப்ப
மே வியம் படை படப்படர் குருதியின் வீழ்ந்த
மேவி அம் படை கடலிடை குடரொடு மிதந்த

#10
கண் திறந்தனர் கணவர்-தம் முகத்த அவர் முறுவல்
கண்டு இறந்தனர் மடந்தையர் உயிரொடும் கலந்தார்
பண்டு இறந்தன பழம் புணர்வு அகம் புக பன்னி
பண் திறந்தன புலம்பு ஒலி சிலம்பு ஒலி பனிப்ப

#11
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும்
ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற உடற்றும்
நூழில் வெம் சமம் நோக்கி அ இராவணன் நுவன்றான்
தாழ் இல் என் படை தருக்கு அறும் என்பது ஓர் தன்மை

#12
மரமும் கல்லுமே வில்லொடு வாள் மழு சூலம்
அரமும் கல்லும் வேல் முதலிய அயில் படை அடக்கி
சிரமும் கல் என சிந்தலின் சிதைந்தது அ சேனை
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு-பால்

#13
அழலும் கண் களிற்று அணியொடும் துணி படும் ஆவி
சுழலும் பல் பரி தேரொடு புரவியும் சுற்ற
கழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடை கலக்கும்
குழலும் நூலும் போல் அனுமனும் தானும் அ குமரன்

#14
வில்லும் கூற்றுவற்கு உண்டு என திரிகின்ற வீரன்
கொல்லும் கூற்று என குறைக்கும் இ நிறை பெரும் குழுவை
ஒல்லும் கோள் அரி உரும் அன்ன குரங்கினது உகிரும்
பல்லும் கூர்க்கின்ற கூர்க்கில அரக்கர்-தம் படைகள்

#15
கண்டு நின்று இறை பொழுது இனி காலத்தை கழிப்பின்
உண்டு கைவிடும் கூற்றுவன் நிருதர் பேர் உயிரை
மண்டு வெம் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே
கொண்டு மீள்குவென் கொற்றம் என்று இராவணன் கொதித்தான்

#16
ஊதை போல்வன உரும் உறழ் திறலன உருவி
பூதலங்களை பிளப்பன அண்டத்தை பொதுப்ப
மாதிரங்களை அளப்பன மாற்ற_அரும் கூற்றின்
தூது போல்வன சுடு கணை முறை முறை துரந்தான்

#17
ஆளி போன்று உளன் எதிர்ந்த போது அமர் களத்து அடைந்த
ஞாளி போன்று உள என்பது என் நள் இருள் அடைந்த
காளி போன்றனன் இராவணன் வெள்ளிடை கரந்த
பூளை போன்றது அ பொரு சினத்து அரிகள்-தம் புணரி

#18
இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி
திரியும் மாருதி தோள் எனும் தேர்-மிசை சென்றான்
எரியும் வெம் சினத்து இராவணன் எதிர் புகுந்து ஏற்றான்

#19
ஏற்று கோடலும் இராவணன் எரி முக பகழி
நூற்று கோடியின்-மேல் செல சிலைகொடு நூக்க
காற்றுக்கு ஓடிய பஞ்சு என திசை-தொறும் கரக்க
வேற்று கோல்-கொடு விலக்கினன் இலக்குவன் விசையால்

#20
விலக்கினான் தடம் தோளினும் மார்பினும் விசிகம்
உலக்க உய்த்தனன் இராவணன் ஐந்தொடு ஐந்து உருவ
கலக்கம் உற்றிலன் இளவலும் உள்ளத்தில் கனன்றான்
அலக்கண் எய்துவித்தான் அடல் அரக்கனை அம்பால்

#21
காக்கல் ஆகலா கடுப்பினில் தொடுப்பன கணைகள்
நூக்கினான் கணை நுறுக்கினான் அரக்கனும் நூழில்
ஆக்கும் வெம் சமத்து அரிது இவன்-தனை வெல்வது அம்மா
நீக்கி என் இனி செய்வது என்று இராவணன் நினைந்தான்

#22
கடவுள் மா படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க
விடவும் ஆற்றவும் வல்லனேல் யாரையும் வெல்லும்
தடவும் ஆற்றலை கூற்றையும் தமையனை போல
சுடவும் ஆற்றும் எ உலகையும் எவனுக்கும் தோலான்

#23
மோக மா படை ஒன்று உளது அயன் முதல் வகுத்தது
ஆகம் அற்றது கொற்றமும் சிவன்-தனை அழிப்பது
ஏகம் முற்றிய விஞ்சையை இவன்-வயின் ஏவி
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின்

#24
என்பது உன்னி அ விஞ்சையை மனத்திடை எண்ணி
முன்பன்-மேல் வர துரந்தனன் அது கண்டு முடுகி
அன்பின் வீடணன் ஆழியான் படையினின் அறுத்தி
என்பது ஓதினன் இலக்குவன் அது தொடுத்து எய்தான்

#25
வீடணன் சொல விண்டுவின் படைக்கலம் விட்டான்
மூடு வெம் சின மோகத்தை நீக்கலும் முனிந்தான்
மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட வந்த
கேடு நம்-தமக்கு என்பது மனம்-கொண்டு கிளர்ந்தான்

#26
மயன் கொடுத்தது மகளொடு வயங்கு அனல் வேள்வி
அயன் படைத்துளது ஆழியும் குலிசமும் அனையது
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது உருமின்
சயம்-தனை பொரும் தம்பியை உயிர் கொள சமைந்தான்

#27
விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும்
பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும்
வட்ட வேல்-அது வலம்-கொடு வாங்கினன் வணங்கி
எட்ட நிற்கலா தம்பி-மேல் வல் விசைத்து எறிந்தான்

#28
எறிந்த காலையில் வீடணன் அதன் நிலை எல்லாம்
அறிந்த சிந்தையன் ஐய ஈது என் உயிர் அழிக்கும்
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை என்றலும் பெரியோன்
அறிந்து போக்குவல் அஞ்சல் நீ என்று இடை அணைந்தான்

#29
எய்த வாளியும் ஏயின படைக்கலம் யாவும்
செய்த மா தவத்து ஒருவனை சிறு தொழில் தீயோன்
வைத வைவினில் ஒழிந்தன வீடணன் மாண்டான்
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார்

#30
தோற்பென் என்னினும் புகழ் நிற்கும் தருமமும் தொடரும்
ஆர்ப்பர் நல்லவர் அடைக்கலம் புகுந்தவன் அழிய
பார்ப்பது என் நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம்
ஏற்பென் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்ந்தான்

#31
இலக்குவற்கு முன் வீடணன் புகும் இருவரையும்
விலக்கி அங்கதன் மேற்செலும் அவனையும் விலக்கி
கலக்கும் வானர காவலன் அனுமன் முன் கடுகும்
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ

#32
முன் நின்றார் எலாம் பின் உற காலினும் முடுகி
நின்-மின் யான் இது விலக்குவென் என்று உரை நேரா
மின்னும் வேலினை விண்ணவர் கண் புடைத்து இரங்க
பொன்னின் மார்பிடை ஏற்றனன் முதுகிடை போக

#33
எங்கு நீங்குதி நீ என வீடணன் எழுந்தான்
சிங்க_ஏறு அன்ன சீற்றத்தான் இராவணன் தேரில்
பொங்கு பாய் பரி சாரதியோடும் பட புடைத்தான்
சங்க வானவர் தலை எடுத்திட நெடும் தண்டால்

#34
சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று இராவணன் சீறி
பாய் கடும் கணை பத்து அவன் உடல் புக பாய்ச்சி
ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி
போயினன் செரு முடிந்தது என்று இலங்கை ஊர் புகுவான்

#35
தேடி சேர்ந்த என் பொருட்டினால் உலகுடை செல்வன்
வாடி போயினன் நீ இனி வஞ்சனை மதியால்
ஓடி போகுவது எங்கு அடா உன்னொடும் உடனே
வீடி போவென் என்று அரக்கன்-மேல் வீடணன் வெகுண்டான்

#36
வென்றி என் வயம் ஆனது வீடண பசுவை
கொன்று இனி பயன் இல்லை என்று இராவணன் கொண்டான்
நின்றிலன் ஒன்றும் நோக்கிலன் முனிவு எலாம் நீத்தான்
பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான்

#37
அரக்கன் ஏகினன் வீடணன் வாய் திறந்து அரற்றி
இரக்கம்தான் என இலக்குவன் இணை அடி தலத்தில்
கரக்கல் ஆகலா காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான்
குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடை குளித்தார்

#38
பொன் அரும்பு உறு தார் புய பொருப்பினான் பொன்ற
என் இருந்து நான் இறப்பென் இ கணத்து எனை ஆளும்
மன் இருந்து இனி வாழ்கிலன் என்றவன் மறுக
நில் நில் என்றனன் சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும்

#39
அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ
நினையும் அத்துணை மாத்திரத்து உலகு எலாம் நிமிர்வான்
வினையின் நல் மருந்து அளிக்கின்றான் உயிர்க்கின்றான் வீரன்
தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான்

#40
மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி
இருத்தியோ கடிது ஏகலை இளவலை இங்ஙன்
வருத்தம் காணுமோ மன்னவன் என்னலும் அன்னான்
கருத்தை உன்னி அ மாருதி உலகு எலாம் கடந்தான்

#41
உய்த்து ஒரு திசை-மேல் ஓடி உலகு எலாம் கடக்க பாய்ந்து
மெய் தகு மருந்து-தன்னை வெற்பொடும் கொணர்ந்த வீரன்
பொய்த்தல்_இல் குறி கெடாமே பொது அற நோக்கி பொன்-போல்
வைத்தது வாங்கி கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ

#42
தந்தனன் மருந்து-தன்னை தாக்குதல் முன்னே யோகம்
வந்தது மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால்
நொந்தவர் நோவு தீர்க்க சிறிது அன்றோ நொடிதல் முன்னே
இந்திரன் உலகம் ஆர்க்க எழுந்தனன் இளைய வீரன்

#43
எழுந்து நின்று அனுமன்-தன்னை இரு கையால் தழுவி எந்தாய்
விழுந்திலன் அன்றோ மற்று அ வீடணன் என்று விம்மி
தொழும் துணையவனை நோக்கி துணுக்கமும் துயரும் நீக்கி
கொழுந்தியும் மீண்டாள் பட்டான் அரக்கன் என்று உவகை கொண்டான்

#44
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனி பொருள்-தன்னை இன்னே
கருமம் என்று அனுமன் ஆக்கி காட்டிய தன்மை கண்டால்
அருமை என் இராமற்கு அம்மா அறம் வெல்லும் பாவம் தோற்கும்
இருமையும் நோக்கின் என்னா இராமன்-பால் எழுந்து சென்றார்

#45
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று
குன்றுகள் பலவும் சோரி குரை கடல் அனைத்தும் தாவி
சென்று அடைந்து இராமன் செம் பொன் திருவடி வணக்கம் செய்தார்
வென்றியின் தலைவர் கண்ட இராமன் என் விளைந்தது என்றான்

#46
உற்றது முழுதும் நோக்கி ஒழிவு_அற உணர்வு உள் ஊற
சொற்றனன் சாம்பன் வீரன் அனுமனை தொடர புல்லி
பெற்றனன் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும்
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான்

#47
புயல் பொழி அருவி கண்ணன் பொருமலன் பொங்குகின்றான்
உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவ தம்பி
துயர் தமக்கு உதவி மீளா துறக்கம் போய் வந்த தொல்லை
தயரதன் கண்டால் ஒத்த தம்முனை தொழுது சார்ந்தான்

#48
இளவலை தழுவி ஐய இரவி-தன் குலத்துக்கு ஏற்ற
அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை
துளவு இயல் தொங்கலாய் நீ அன்னது துணிந்தாய் என்றால்
அளவு இயல் அன்று செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே

#49
புறவு ஒன்றின் பொருட்டா யாக்கை புண் உற அரிந்த புத்தேள்
அறவனும் ஐய நின்னை நிகர்க்கிலன் அப்பால் நின்ற
பிற வினை உரைப்பது என்னே பேர் அருளாளர் என்பார்
கறவையும் கன்றும் ஒப்பார் தமர்க்கு இடர் காண்கில் என்றான்

#50
சாலிகை முதல ஆன போர் பரம் தாங்கிற்று எல்லாம்
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கை கொடுத்து கொண்டல்
மேல் நிறை குன்றம் ஒன்றில் மெய்ம் மெலிவு ஆற்றலுற்றான்

#51
ஆய பின் கவியின் வேந்தும் அளப்ப_அரும் தானையோடும்
மேயினன் இராமன் பாதம் விதி முறை வணங்கி வீந்த
தீயவர் பெருமை நோக்கி நடுக்கமும் திகைப்பும் உற்றார்
ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர் நாணம் உற்றார்

#52
மூண்டு எழு சேனை வெள்ளம் உலகு ஒரு மூன்றின் மேலும்
நீண்டு உள அதனை ஐய எங்ஙனம் நிமிர்ந்தது என்ன
தூண் திரண்டு அனைய திண் தோள் சூரியன் புதல்வன் சொல்ல
காண்டி நீ அரக்கர்_வேந்தன் தன்னொடும் களத்தை என்றான்

33 வானரர் களம் காண் படலம்


#1
தொழுதனர் தலைவர் எல்லாம் தோன்றிய காதல் தூண்ட
எழுக என விரைவின் சென்றார் இராவணற்கு இளவலோடும்
கழுகொடு பருந்தும் பாறும் பேய்களும் கணங்கள் மற்றும்
குழுவிய களத்தை கண்ணின் நோக்கினர் துணுக்கம் கொண்டார்

#2
ஏங்கினார் நடுக்கமுற்றார் இரைத்து இரைத்து உள்ளம் ஏற
வீங்கினார் வெருவலுற்றார் விம்மினார் உள்ளம் வெம்ப
ஓங்கினார் மெள்ள மெள்ள உயிர் நிலைத்து உவகை ஊன்ற
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார்

#3
ஆயிரம் பருவம் கண்டும் காட்சிக்கு ஓர் அளவிற்று அன்றால்
மேயின துறைகள்-தோறும் விம்மினார் நிற்பது அல்லால்
பாய் திரை பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன
நீ இருந்து உரைத்தி என்றார் வீடணன் நெறியின் சொல்வான்

#4
காக பந்தர் செம் களம் எங்கும் செறி கால
ஓகத்து அம்பின் பொன்றினவேனும் உடல் ஒன்றி
மேக சங்கம் தொக்கன வீழும் வெளி இன்றி
நாக குன்றின் நின்றன காண்-மின் நமரங்காள்

#5
வென்றி செம் கண் வெம்மை அரக்கர் விசை ஊர்வ
ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்க
பொன்றி சிங்கம் நாக அடுக்கல் பொலிகின்ற
குன்றில் துஞ்சும் தன்மை நிகர்க்கும் குறி காணீர்

#6
அளியின் பொங்கும் அங்கணன் ஏவும் அயில் வாளி
களியில் பட்டார் வாள் முகம் மின்னும் கரை இல்லா
புளின திட்டின் கண் அகன் வாரி கடல் பூத்த
நளின காடே ஒப்பன காண்-மின் நமரங்காள்

#7
ஒழுகி பாயும் மு மத வேழம் உயிரோடும்
எழுகிற்கில்லா செம்புனல் வெள்ளத்திடை இற்ற
பழகிற்று அல்லா பல் திரை தூங்கும் படர் வேலை
முழுகி தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர்

#8
பூ வாய் வாளி செல் எறி காலை பரி பொன்ற
கோ ஆர் விண்-வாய் வெண் கொடி திண் பாயொடு கூட
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை
நாவாய் மான செல்வன காண்-மின் நமரங்காள்

#9
கட கார் என்ன பொங்கு கவந்தத்தொடு கைகள்
தொடக்காநிற்கும் பேய் இலயத்தின் தொழில் பண்ணி
மடக்கோ இல்லா வார் படிம கூத்து அமைவிப்பான்
நட கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள்

#10
மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர்
குழுவின் கொண்டார் நாடி துடிக்க பொறி கூடி
தழுவி கொள்ள கள்ள மன பேய் அவை-தம்மை
நழுவி தள்ளி போவன காண்-மின் நமரங்காள்

#11
பொன்னின் ஓடை மின் பிறழ் நெற்றி புகர் வேழம்
பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணையுற்ற
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர்

#12
நாம திண் போர் முற்றிய கோப நகை நாறும்
பாம தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள்
தூமத்தோடும் வெம் கனல் இன்னும் சுடர்கின்ற
ஓம குண்டம் ஒப்பன பல் வேறு இவை காணீர்

#13
மின்னும் ஓடை ஆடல் வய போர் மிடல் வேழ
கன்னம் மூலத்து அற்றன வெண் சாமரை காணீர்
மன்னும் மா நீர் தாமரை மானும் வதனத்த
அன்னம் பூவில் துஞ்சுவ ஒக்கின்றவை பாரீர்

#14
ஓளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண் கோடு
ஆளின் முற்றா செம் புனல் வெள்ளத்தவை காணீர்
கோளின் முற்றா செக்கரின் மேக குழுவின்-கண்
நாளின் முற்றா வெண் பிறை போலும் நமரங்காள்

#15
கொடியும் வில்லும் கோலொடு வேலும் குவி தேரும்
துடியின் பாத குன்றின்-மிசை தோல் விசியின் கட்டு
ஒடியும் வெய்யோர் கண் எரி செல்ல உடன் வெந்த
தடி உண்டு ஆடி கூளி தடிக்கின்றன காணீர்

#16
சகரம் முந்நீர் செம்புனல் வெள்ளம் தடுமாறா
மகர நன் மீன் வந்தன காணா மனம் உட்கி
சிகரம் அன்ன யானை-கொல் என்ன சில நாணி
நகரம் நோக்கி செல்வன காண்-மின் நமரங்காள்

#17
விண்ணில் பட்டார் வெற்பு உறழ் காயம் பல மேன்மேல்
மண்ணில் செல்வார் மேனியின் வீழ மடிவுற்றார்
எண்ணின் தீரா அன்னவை தீரும் மிடல் இல்லா
கண்ணில் தீயார் விம்மி உளைக்கும் படி காணீர்

#18
அச்சின் திண் தேர் ஆனையின் மா-மேல் அகல் வானில்
மொய்க்க சென்றார் மொய் குருதி தாரைகள் முட்ட
உச்சி சென்றான் ஆயினும் வெய்யோன் உதயத்தின்
குச்சி சென்றான் ஒத்துளன் ஆகும் குறி காணீர்

#19
கால் தோய் மேனி கண்டகர் கண்டப்படு காலை
ஆறோ என்ன விண் படர் செம் சோரியது ஆகி
வேறாய் நின்ற வெண் மதி செம் கேழ் நிறம் விம்மி
மாறு ஓர் வெய்யோன் மண்டிலம் ஒக்கின்றது காணீர்

#20
வான் நனைய மண் நனைய வளர்ந்து எழுந்த பெரும் குருதி மகர வேலை
தான் நனைய உற்று எழுமாறு அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி
மீன் அனைய நறும் போதும் விரை அரும்பும் சிறை வண்டும் நிறம் வேறு எய்தி
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின்

#21
வரை பொருத மத யானை துணை மருப்பும் கிளர் முத்தும் மணியும் வாரி
திரை பொருது புறம் குவிப்ப திறம் கொள் பணை மரம் உருட்டி சிறை புள் ஆர்ப்ப
நுரை குடையும் வெண் குடையும் சாமரையும் என சுமந்து பிணத்தின் நோன்மை
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின்

#22
கை குன்ற பெரும் கரைய நிருதர் புய கல் செறிந்த கதலி கானம்
மொய்க்கின்ற பரி திரைய முரண் கரி கை கோள் மாவ முளரி கானின்
நெய்க்கின்ற வாள் முகத்த விழும் குடரின் பாசடைய நிண-மேல் சேற்ற
உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின்

#23
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரம்பின் இன மள்ளர் பரந்த கையில்
படும் கமல மலர் நாறும் முடி பரந்த பெரும் கிடக்கை பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே என பொலியும் தகையும் காண்-மின்

#24
வெளிறு ஈர்ந்த வரை புரையும் மிடல் அரக்கர் உடல் விழவும் வீரன் வில்லின்
ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்_ஏறு பல படவும் உலகம் கீண்டு
நளில் தீர்த்த நாகபுரம் புக்கு இழிந்த பகழி வழி நதியின் ஓடி
களிறு ஈர்த்து புக மண்டும் கடும் குருதி தடம் சுழிகள் காண்-மின் காண்-மின்

#25
கைத்தலமும் காத்திரமும் கரும் கழுத்தும் நெடும் புயமும் உரமும் கண்டித்து
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால்
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின்

#26
குமுதம் நாறும் மதத்தன கூற்றன
சமுதரோடு மடிந்தன சார்தரும்
திமிர மா அன்ன செய்கைய இ திறம்
அமிர்தின் வந்தன ஐ_இரு கோடியால்

#27
ஏறு நான்முகன் வேள்வி எழுந்தன
ஊறும் மாரியும் ஓங்கு அலை ஓதமும்
மாறும் ஆயினும் மா மதமாய் வரும்
ஆறு மாறில ஆறு_இரு கோடியால்

#28
உயிர் வறந்தும் உதிரம் வறந்து தம்
மயர் வறந்தும் மதம் மறவாதன
புயலவன் திசை போர் மத ஆனையின்
இயல் பரம்பரை ஏழ்_இரு கோடியால்

#29
கொடாது நிற்றலின் கொற்ற நெடும் திசை
எடாது நிற்பன நாட்டம் இமைப்பு இல
வடாது திக்கின் மதவரையின் வழி
கடாம் முகத்த முளரி கணக்கவால்

#30
வானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஆன வர்க்கம் ஒர் ஆயிர கோடியும்
தானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஏனை வர்க்கம் கணக்கு_இல இ எலாம்

#31
பாற்கடல் பண்டு அமிழ்தம் பயந்த நாள்
ஆர்த்து எழுந்தன ஆயிரம் ஆயிரம்
மால் கண பரி இங்கு இவை மாறு இவை
மேற்கின் வேலை வருணனை வென்றவால்

#32
இரு நிதி கிழவன் இழந்து ஏகின
அரிய அ பரி ஆயிரம் ஆயிரம்
விரி சினத்து இகல் விஞ்சையர் வேந்தனை
பொருது பற்றிய தாமரை போலுமால்

#33
என்று காணினும் காட்டினும் ஈது இறை
குன்று காணினும் கோள் இலது ஆதலால்
நின்று காணுதும் நேமியினானுழை
சென்று காண்டும் என்று ஏகினர் செவ்வியோர்

#34
ஆரியன் தொழுது ஆங்கு அவன் பாங்கரும்
போர் இயற்கை நினைந்து எழு பொம்மலார்
பேர் உயிர்ப்பொடு இருந்தனர் பின்பு உறும்
காரியத்தின் நிலைமை கழறுவாம்

34 இராவணன் களம் காண் படலம்


#1
பொருந்து பொன் பெரும் கோயிலுள் போர் தொழில்
வருந்தினர்க்கு தம் அன்பினின் வந்தவர்க்கு
அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான்
விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான்

#2
வான நாட்டை வருக என வல் விரைந்து
ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார்
ஆன நாட்டு அந்த போகம் அமைத்திர் மற்று
ஊனம் நாட்டின் இழத்திர் உயிர் என்றான்

#3
நறவும் ஊனும் நவை_அற நல்லன
பிறவும் ஆடையும் சாந்தமும் பெய்ம் மலர்
திறமும் நான புனலொடு சேக்கையும்
புறமும் உள்ளும் நிறைய புகுந்தவால்

#4
நானம் நெய் நன்கு உரைத்து நறும் புனல்
ஆன கோது_அற ஆட்டி அமுதொடும்
பானம் ஊட்டி சயனம் பரப்புவான்
வான நாடியர் யாவரும் வந்தனர்

#5
பாடுவார்கள் பயில் நடம் பாவகத்து
ஆடுவார்கள் அமளியில் இன்புற
கூடுவார்கள் முதலும் குறைவு அற
தேடினார் என பண்ணையின் சேர்ந்ததால்

#6
அரைசர் ஆதி அடியவர் அந்தமா
வரை செய் மேனி இராக்கதர் வந்துளார்
விரைவின் இந்திர போகம் விளைவுற
கரை இலாத பெரு வளம் கண்ணினார்

#7
இன்ன தன்மை அமைந்த இராக்கதர்
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார்
அன்ன சேனை களம் பட்ட ஆறு எலாம்
துன்னு தூதர் செவியிடை சொல்லுவார்

#8
நடுங்குகின்ற உடலினர் நா உலர்ந்து
ஒடுங்குகின்ற உயிர்ப்பினர் உள் அழிந்து
இடுங்குகின்ற விழியினர் ஏங்கினார்
பிடுங்குகின்ற உணர்வினர் பேசுவார்

#9
இன்று யார் விருந்து இங்கு உண்பார் இகல் முகத்து இமையோர் தந்த
வென்றியாய் ஏவ சென்ற ஆயிர வெள்ள சேனை
நின்றுளார் புறத்தது ஆக இராமன் கை நிமிர்ந்த சாபம்
ஒன்றினால் நான்கு மூன்று கடிகையின் உலந்தது என்றார்

#10
வலி கடன் வான் உளோரை கொண்டு நீ வகுத்த போகம்
கலி கடன் அளிப்பென் என்று நிருதர்க்கு கருதினாயேல்
பலி கடன் அளிக்கல்-பாலை அல்லது உன் குலத்தின் பாலோர்
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார்

#11
ஈட்ட_அரும் உவகை ஈட்டி இருந்தவன் இசைத்த மாற்றம்
கேட்டலும் வெகுளியோடு துணுக்கமும் இழவும் கிட்டி
ஊட்டு அரக்கு அனைய செம் கண் நெருப்பு உக உயிர்ப்பு வீங்க
தீட்டிய படிவம் என்ன தோன்றினன் திகைத்த நெஞ்சன்

#12
என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார்
உன்னினும் உலப்பு இலாதார் உவரியின் மணலின் மேலார்
பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் என்று சொன்ன
இ நிலை இதுவோ பொய்ம்மை விளம்பினீர் போலும் என்றான்

#13
கேட்டு அயல் இருந்த மாலி ஈது ஒரு கிழமைத்து ஆமோ
ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ உலகம் யாவும்
வீட்டுவது இமைப்பின் அன்றே வீங்கு எரி விரித்த எல்லாம்
மாட்டுவன் ஒருவன் அன்றே இறுதியில் மனத்தால் என்றான்

#14
அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன்
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம்
கிளப்பது கேட்டும் அன்றே அரவின்-மேல் கிடந்து மேல்_நாள்
முளைத்த பேர் இராமன் என்ற வீடணன் மொழி பொய்த்து ஆமோ

#15
ஒன்று இடின் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத
நின்றன எல்லாம் பெய்தால் உடன் நுங்கு நெருப்பும் காண்டும்
குன்றொடு மரனும் புல்லும் பல் உயிர் குழுவும் கொல்லும்
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ

#16
பட்டதும் உண்டே உன்னை இந்திர செல்வம் பற்று
விட்டது மெய்ம்மை ஐய மீட்டு ஒரு வினையம் இல்லை
கெட்டது உன் பொருட்டினாலே நின்னுடை கேளிர் எல்லாம்
சிட்டது செய்தி என்றான் அதற்கு அவன் சீற்றம் செய்தான்

#17
இலக்குவன்-தன்னை வேலால் எறிந்து உயிர் கூற்றுக்கு ஈந்தேன்
அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனை கண்டால்
உலக்குமால் இராமன் பின்னர் உயிர் பொறை உகவான் உற்ற
மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான்

#18
ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர் ஐய மெய்யே
மீண்டது அ அளவின் ஆவி மாருதி மருந்து மெய்யில்
தீண்டவும் தாழ்த்தது இல்லை யாரும் அ செங்கணானை
பூண்டனர் தழுவி புக்கார் காணுதி போதி என்றார்

#19
தேறிலன் ஆதலானே மறுகுறு சிந்தை தேற
ஏறினன் கனகத்து ஆரை கோபுரத்து உம்பர் எய்தி
ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம்
காறின உள்ளம் நோவ கண்களால் தெரிய கண்டான்

#20
கொய் தலை பூசல் பட்டோர் குலத்தியர் குவளை தோற்று
நெய்தலை வென்ற வாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட
கை தலை வைத்த பூசல் கடலொடு நிமிரும்-காலை
செய்தலை உற்ற ஓசை செயலதும் செவியின் கேட்டான்

#21
எண்ணும் நீர் கடந்த யானை பெரும் பிணம் ஏந்தி யாணர்
மண்ணின் நீர் அளவும் கல்லி நெடு மலை பறித்து மண்டும்
புண்ணின் நீர் ஆறும் பல் பேய் புது புனல் ஆடும் பொம்மல்
கண்ணின் நீர் ஆறும் மாறா கரும் கடல் மடுப்ப கண்டான்

#22
குமிழி நீரோடும் சோரி கனலொடும் கொழிக்கும் கண்ணான்
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனி சிலை வழங்க சாய்ந்தார்
அமிழ் பெரும் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின் தேக்கி
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்ற கண்டான்

#23
விண்களில் சென்ற வன் தோள் கணவரை அலகை வெய்ய
புண்களில் கைகள் நீட்டி புது நிணம் கவர்வ நோக்கி
மண்களில் தொடர்ந்து வானில் பிடித்து வள் உகிரின் மான
கண்களை சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான்

#24
விண் பிளந்து ஒல்க ஆர்த்த வானரர் வீக்கம் கண்டான்
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான்
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான்
புண் பிளந்து-அனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான்

#25
நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய் நக்க
புகை பிறக்கின்ற மூக்கன் பொறி பிறக்கின்ற கண்ணன்
மிகை பிறக்கின்ற நெஞ்சன் வெம் சின தீ-மேல் வீங்கி
சிகை பிறக்கின்ற சொல்லன் அரசியல் இருக்கை சேர்ந்தான்

35 இராவணன் தேர் ஏறு படலம்


#1
பூதரம் அனைய மேனி புகை நிற புருவ செம் தீ
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி
ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை
யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான்

#2
எற்றின முரசினோடும் ஏழ்_இரு_நூறு கோடி
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது கொடி திண் தேரும்
சுற்றுறு துளை கைம் மாவும் துரகமும் பிறவும் தொக்க
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக

#3
ஈசனை இமையா மு கண் இறைவனை இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து திரு மறை புகன்ற தானம்
வீசினன் இயற்றி மற்றும் வேட்டன வேட்டோர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி ஒல்கா போர் தொழிற்கு அமைவது ஆனான்

#4
அருவி அஞ்சன குன்றிடை ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும் கட்டி
செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும் சேர்த்தான்

#5
வாள் வலம்பட மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின்
தாள் வலந்து ஒளிர் தமனிய கச்சொடும் சார்த்தி
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை
மீள்வு_இல் கிம்புரி மணி கடி சூத்திரம் வீக்கி

#6
மறை விரித்து-என்ன ஆடுறு மான மா கலுழன்
சிறை விரித்து-என்ன கொய்சகம் மருங்கு உற சேர்த்தி
முறை விரித்து-என்ன முறுக்கிய கோசிக மருங்கில்
பிறை விரித்து அன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து

#7
மழை குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து
முழை கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ
தழைக்கும் மின் ஒளி பொன் மலர் சதங்கையும் சாத்தி

#8
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம் வான் உலகின்
இரு நிலத்திடை எ உலகத்திடை யாரும்
புரிதர படும் பொலம் கழல் இலங்குற பூட்டி
சரியுடை சுடர் சாய் வலம் சார்வுற சாத்தி

#9
நால்_அஞ்சு ஆகிய கரங்களில் நனம் தலை அனந்தன்
ஆலம் சார் மிடற்று அரும் கறை கிடந்து-என இலங்கும்
கோலம் சார் நெடும் கோதையும் புட்டிலும் கட்டி
தாலம் சார்ந்த மாசுணம் என கங்கணம் தழுவ

#10
கடல் கடைந்த மால் வரையினை சுற்றிய கயிற்றின்
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின்
சுடர் தயங்குற குண்டலம் செவியிடை தூக்கி

#11
உதய குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின்
துதையும் குங்கும தோளொடு தோளிடை தொடர
புதை இருள் பகை குண்டலம் அனையவை பொலிய
சிதைவு_இல் திங்களும் மீனும்-போல் முத்து_இனம் திகழ

#12
வேலை_வாய் வந்து வெய்யவர் அனைவரும் விடியும்
காலை உற்றனர் ஆம் என கதிர் குலம் காலும்
மாலை பத்தின்-மேல் மதியம் முன் நாளிடை பலவாய்
ஏல முற்றிய அனைய முத்த குடை இமைப்ப

#13
பகுத்த பல் வள குன்றினில் முழை அன்ன பகு வாய்
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம்
மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை தசும்பூடு
உகுத்த செக்கரின் பிறை குலம் முளைத்தன ஒக்க

#14
ஒத்த தன்மையின் ஒளிர்வன தரளத்தின் ஒக்க
தத்துகின்றன வீர பட்ட தொகை தயங்க
முத்த ஓடைய முரண் திசை முழு மத யானை
பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க

#15
புலவி மங்கையர் பூம் சிலம்பு அரற்று அடி போக்கி
தலைமை கண்ணினர் தாழ்கிலா மணி முடி தலங்கள்
உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற

#16
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த
பாகம் மூன்றையும் வென்று கொண்டு அமரர் முன் பணித்த
வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி
தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி

#17
அகழும் வேலையை காலத்தை அளக்கர் நுண் மணலை
நிகழும் மீன்களை விஞ்சையை நினைப்பது என் நின்ற
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும் இறுதிசெல்லா தன்
புகழ் என சரம் தொலைவு இலா தூணி பின் பூட்டி

#18
வருக தேர் என வந்தது வையமும் வானும்
உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும் உச்சி
சொருகு பூ அன்ன சுமையது துரகம் இன்று எனினும்
நிருதர் கோமகன் நினைந்துழி செல்வது ஓர் இமைப்பில்

#19
ஆயிரம் பரி அமுதொடு வந்தவும் அருக்கன்
பாய் வய பசும் குதிரையின் வழியவும் படர் நீர்
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின்
நாயகற்கு வந்து உதித்தவும் பூண்டது நலத்தின்

#20
பாரில் செல்வது விசும்பிடை செல்வது பரந்த
நீரில் செல்வது நெருப்பிடை செல்வது நிமிர்ந்த
போரில் செல்வது பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன்
ஊரில் செல்வது எ உலகினும் செல்வது ஓர் இமைப்பின்

#21
எண் திசை பெரும் களிற்றிடை மணி என இசைக்கும்
கண்டை ஆயிர கோடியின் தொகையது கதிரோன்
மண்டிலங்களை மேருவில் குவித்து-என வயங்கும்
அண்டம் விற்கும் நன் காசினால் குயிற்றியது அடங்க

#22
முனைவர் வானவர் முதலினர் அண்டத்து முதல்வர்
எனைவர் ஈந்தவும் இகலினில் இட்டவும் இயம்பா
வினையின் வெய்யன படைக்கலம் வேலை என்று இசைக்கும்
சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது தொக்க

#23
கண்ணன் நேமியும் கண்ணுதல் கணிச்சியும் கமலத்து
அண்ணல் குண்டிகை கலசமும் அழியினும் அழியா
திண்மை சான்றது தேவரும் உணர்வு அரும் செய்கை
உண்மை ஆம் என பெரியது வென்றியின் உறையுள்

#24
அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி
இனையர் என்பது ஓர் கணக்கு_இலா மறையவர் எவர்க்கும்
வினையின் நல் நிதி முதலிய அளப்ப_அரும் வெறுக்கை
நினையின் நீண்டது ஓர் பெரும் கொடை அரும் கடன் நேர்ந்தான்

#25
ஏறினான் தொழுது இந்திரன் முதலிய இமையோர்
தேறினார்களும் தியங்கினார் மயங்கினார் திகைத்தார்
வேறு தாம் செயும் வினை இலை மெய்யின் ஐம் புலனும்
ஆறினார்களும் அஞ்சினார் உலகு எலாம் அனுங்க

#26
மன்றல் அம் குழல் சனகி தன் மலர் கையான் வயிறு
கொன்று அலந்தலை கொடு நெடும் துயரிடை குளித்தல்
அன்று இது என்றிடின் மயன் மகள் அ தொழில் உறுதல்
இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென் தலைப்படின் என்றான்

#27
பல களம் தலை மௌலியோடு இலங்கலின் பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான்

#28
விசும்பு விண்டு இரு கூறுற கல் குலம் வெடிப்ப
பசும் புண் விண்டு-என புவி பட பகலவன் பசும் பொன்
தசும்பின் நின்று இடை திரிந்திட மதி தகை அமிழ்தின்
அசும்பு சிந்தி நொந்து உலைவுற தோள் புடைத்து ஆர்த்தான்

#29
நணித்து வெம் சமம் என்பது ஓர் உவகையின் நலத்தால்
திணி தடம் கிரி வெடித்து உக சிலையை நாண் தெறித்தான்
மணி கொடும் குழை வானவர் தானவர் மகளிர்
துணுக்கம் எய்தினர் மங்கல நாண்களை தொட்டார்

#30
சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர் சுரிப்பு உற வீங்க
இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய
பரித்திலன் புவி படர் சுடர் மணி தலை பலவும்
விரித்து எழுந்தனன் அனந்தன்-மீது என்பது ஓர் மெய்யான்

#31
தோன்றினான் வந்து சுரர்களோடு அசுரரே தொடங்கி
மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய
ஊன்றினான் செரு என்று உயிர் உமிழ்தர உதிரம்
கான்று நாட்டங்கள் வட_அனற்கு இரு மடி கனல

#32
உலகில் தோன்றிய மறுக்கமும் இமைப்பிலர் உலைவும்
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும்
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும்
தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார்

#33
பீறிற்றாம் அண்டம் என்பது ஓர் ஆகுலம் பிறக்க
வேறிட்டு ஓர் பெரும் கம்பலை பம்பி மேல் வீங்க
மாறி பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம்
ஏறிற்று உற்றுளது என்னை-கொலோ என எழுந்தார்

#34
கடல்கள் யாவையும் கல் மலை குலங்களும் காரும்
திடல் கொள் மேருவும் விசும்பிடை செல்வன சிவண
அடல் கொள் சேனையும் அரக்கனும் தேரும் வந்து ஆர்க்கும்
கடல் கொள் பேர் ஒலி கம்பலை என்பதும் கண்டார்

#35
எழுந்து வந்தனன் இராவணன் இராக்கத தானை
கொழுந்து முந்தியது உற்றது கொற்றவ குலுங்குற்று
அழுந்துகின்றது நம் பலம் அமரரும் அஞ்சி
விழுந்து சிந்தினர் என்றனன் வீடணன் விரைவான்

36 இராமன் தேர் ஏறு படலம்


#1
தொழும் கையொடு வாய் குழறி மெய்ம் முறை துளங்கி
விழுந்து கவி சேனை இடு பூசல் மிக விண்ணோர்
அழுந்து பணி-மீது அமளி அஞ்சல் என அ நாள்
எழுந்தபடியே கடிது எழுந்தனன் இராமன்

#2
கட களிறு என தகைய கண்ணன் ஒரு காலன்
விட கயிறு என பிறழும் வாள் வலன் விசித்தான்
மட_கொடி துயர்க்கும் நெடு வானின் உறைவோர்-தம்
இடர் கடலினுக்கும் முடிவு இன்று என இசைத்தான்

#3
தன் அக வசத்து உலகு தங்க ஒரு தன்னின்
பின்னக அசத்த பொருள் இல்லை பெரியோனை
மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ
இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனலாமால்

#4
புட்டிலொடு கோதைகள் புழுங்கி எரி கூற்றின்
அட்டில் எனலாய் அமலன் அங்கையின் அடங்க
கட்டி உலகின் பொருள் என கரை_இல் வாளி
வட்டில் புறம் வைத்து அயல் வயங்குற வரிந்தான்

#5
மூண்ட செரு இன்று அளவில் முற்றும் இனி வெற்றி
ஆண்தகையது உண்மை இனி அச்சம் அகல்வுற்றீர்
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலம் தேர்
ஈண்ட விடுவீர் அமரில் என்று அரன் இசைத்தான்

#6
தேவர் அது கேட்டு இது செயற்கு உரியது என்றார்
ஏவல் புரி இந்திரனும் அற்று என இசைத்தான்
மூ_உலகும் முந்தும் ஒர் கணத்தின்-மிசை முற்றி
கோவில் புரிகேன் பொரு இல் தேர் கொணர்தி என்றான்

#7
மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும்
பூதலம் எழுந்து படர் தன்மைய பொலம் தேர்
சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண்
பாதம் என நின்றது படர்ந்தது விசும்பில்

#8
குல கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும்
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும்
கலக்கு அற வகுத்தது கதத்து அரவம் எட்டின்
வல கயிறு கட்டியது முட்டியது வானை

#9
ஆண்டினொடு நாள் இருது திங்கள் இவை என்று
மீண்டனவும் மேலனவும் விட்டு விரி தட்டில்
பூண்டு உளது தாரகை மணி பொரு இல் கோவை
நீண்ட புனை தாரினது நின்றுளது குன்றின்

#10
மாதிரம் அனைத்தையும் மணி சுவர்கள் ஆக
கோது_அற வகுத்தது மழை குழுவை எல்லாம்
மீது உறு பதாகை என வீசியது மெய்ம்மை
பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா

#11
மரத்தொடு தொடுத்த துகில் யாவும் உள வாரி
தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது சங்க
கரத்தொடு தொடுத்த கடல் மீது நிமிர் காலத்து
உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை

#12
பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தை
புண்டரிக மொட்டு அனைய மொட்டினது பூதம்
உண்டன வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன்
அண்டச மணி சயனம் ஒப்பது அகலத்தின்

#13
வேதம் ஒரு நாலும் நிறை வேள்விகளும் வெவ்வேறு
ஓதம் அவை ஏழும் மலை ஏழும் உலகு ஏழும்
பூதம் அவை ஐந்தும் எரி மூன்றும் நனி பொய் தீர்
மா தவமும் ஆவுதியும் ஐம் புலனும் மற்றும்

#14
அரும் கரணம் ஐந்து சுடர் ஐந்து திசை நாலும்
ஒருங்கு அரணம் மூன்றும் உழல் வாயு ஒரு பத்தும்
பெரும் பகலும் நீள் இரவும் என்று இவை பிணிக்கும்
பொரும் பரிகள் ஆக நனி பூண்டது பொலம் தேர்

#15
வந்ததனை வானவர் வணங்கி வலியோய் நீ
எந்தை தர வந்தனை எமக்கு உதவுகிற்பாய்
தந்தருள்வை வென்றி என நின்று தகை மென் பூ
சிந்தினர்கள் மாதலி கடாவி நன் சென்றான்

#16
வினை பகை விசை கொடு விசும்பு உருவி மான
மனத்தின் விசை பெற்றுளது வந்தது என வானொடு
அனைத்து உலகமும் தொழ அடைந்தது அமலன்-பால்
நினைப்பும் இடை பிற்பட நிமிர்ந்தது நெடும் தேர்

#17
அலரி தனி ஆழி புனை தேர் இது எனில் அன்றால்
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால்
நிலைகொள் நெடு மேரு கிரி அன்று நெடிது-அம்மா
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ

#18
என்னை இது நம்மை இடை எய்தல் என எண்ணா
மன்னவர்-தம் மன்னன் மகன் மாதலியை வந்தாய்
பொன்னின் ஒளிர் தேர் இது கொடு ஆர் புகல என்றான்
அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான்

#19
மு புரம் எரித்தவனும் நான்முகனும் முன்_நாள்
அ பகல் இயற்றி உளது ஆயிரம் அருக்கர்க்கு
ஒப்பு உடையது ஊழி திரி நாளும் உலைவு இல்லா
இ பொரு இல் தேர் வருவது இந்திரனது எந்தாய்

#20
அண்டம் இது போல்வன அளப்பு_இல அடுக்கி
கொண்டு பெயரும் குறுகும் நீளும் அவை கோளுற்று
உண்டவன் வயிற்றினையும் ஒக்கும் உவமிக்கின்
புண்டரிக நின் சரம் என கடிது போமால்

#21
கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால்
உண்ணும் விசையால் உணர்வு பின் படர ஓடும்
விண்ணும் நிலனும் என விசேடம் இலது அஃதே
எண்ணும் நெடு நீரினும் நெருப்பிடையும் எந்தாய்

#22
நீரும் உளவே அவை ஒர் ஏழு நிமிர்கிற்கும்
பாரும் உளவே அதின் இரட்டி அவை பண்பின்
பேரும் ஒரு காலை ஒரு காலும் இடை பேரா
தேரும் உளதே இது அலால் உலகு செய்தோய்

#23
தேவரும் முனி தலைவரும் சிவனும் மேல்_நாள்
மூ_உலகு அளித்த அவனும் முதல்வ முன் நின்று
ஏவினர் சுரர்க்கு இறைவன் ஈந்துள இது என்றான்
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி வலித்தான்

#24
ஐயன் இது கேட்டு இகல் அரக்கர் அகல் மாய
செய்கை-கொல் என சிறிது சிந்தையில் நினைந்தான்
மெய் அவன் உரைத்தது என வேண்டி இடை பூண்ட
மொய் உளை வய பரி மொழிந்த முது வேதம்

#25
இல்லை இனி ஐயம் என எண்ணிய இராமன்
நல்லவனை நீ உனது நாமம் நவில்க என்ன
வல் இதனை ஊர்வது ஒரு மாதலி என பேர்
சொல்லுவர் என தொழுது நெஞ்சினொடு சொன்னான்

#26
மாருதியை நோக்கி இள வாள் அரியை நோக்கி
நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் என நின்றான்
ஆரியனை வணங்கி அவர் ஐயம் இலை ஐயா
தேர் இது புரந்தரனது என்றனர் தெளிந்தார்

#27
விழுந்து புரள் தீவினை நிலத்தொடு வெதும்ப
தொழும் தகைய நல்வினை களிப்பினொடு துள்ள
அழுந்து துயரத்து அமரர் அந்தணர் கை முந்துற்று
எழுந்து தலை ஏற இனிது ஏறினன் இராமன்

37 இராவணன் வதை படலம்


#1
ஆழி அம் தடம் தேர் வீரன் ஏறலும் அலங்கல் சில்லி
பூழியில் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத
ஊழி வெம் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார்
வாழிய அனுமன் தோளை ஏத்தினார் மலர்கள் தூவி

#2
எழுக தேர் சுமக்க எல்லோம் வலியும் புக்கு இன்றே பொன்றி
விழுக போர் அரக்கன் வெல்க வேந்தர்க்கு வேந்தன் விம்மி
அழுக பேர் அரக்கிமார் என்று ஆர்த்தனர் அமரர் ஆழி
முழுகி மீது எழுந்தது என்ன சென்றது மூரி திண் தேர்

#3
அன்னது கண்ணின் கண்ட அரக்கனும் அமரர் ஈந்தார்
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான்
பின் அது கிடக்க என்னா தன்னுடை பெரும் திண் தேரை
மின் நகு வரி வில் செம் கை இராமன்-மேல் விடுதி என்றான்

#4
இரிந்த வான் கவிகள் எல்லாம் இமையவர் இரதம் ஈந்தார்
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல் என்று அஞ்சார்
திரிந்தனர் மரமும் கல்லும் சிந்தினர் திசையோடு அண்டம்
பிரிந்தன-கொல் என்று எண்ண பிறந்தது முழக்கின் பெற்றி

#5
வார் பொலி முரசின் ஓதை வாய்ப்புடை வயவர் ஓதை
போர் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல் ஓதை
ஆர்த்தலின் யாரும் பார் வீழ்ந்து அடங்கினர் இருவர் ஆடல்
தேர் குரல் ஓதை பொங்க செவி முற்றும் செவிடு செய்த

#6
மாதலி வதனம் நோக்கி மன்னர்-தம் மன்னன் மைந்தன்
காதலால் கருமம் ஒன்று கேட்டியால் களித்த சிந்தை
ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை என்-தன்
சோதனை நோக்கி செய்தி துடிப்பு இலை என்ன சொன்னான்

#7
வள்ளல் நின் கருத்தும் மாவின் சிந்தையும் மாற்றலார்-தம்
உள்ளமும் மிகையும் உற்ற குற்றமும் உறுதி-தானும்
கள்ளம் இல் கால பாடும் கருமமும் கருதேன் ஆகில்
தெள்ளிது என் விஞ்சை என்றான் அமலனும் சீரிது என்றான்

#8
தோன்றினன் இராமன் எந்தாய் புரந்தரன் துரக தேர்-மேல்
ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது இடையே யான் ஓர்
சான்று என நிற்றல் குற்றம் தருதியால் விடை ஈண்டு என்றான்
வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை

#9
அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு
தும்பியை தொலைத்தது என்ன தொலைக்குவென் தொடர்ந்து நின்ற
தம்பியை தடுத்தியாயின் தந்தனை கொற்றம் என்றான்
வெம்பு இகல் அரக்கன் அஃதே செய்வென் என்று அவனின் மீண்டான்

#10
மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா முன்னம்
ஆண்தகை தெய்வ திண் தேர் அணுகியது அணுகும்-காலை
மூண்டு எழு வெகுளியோடும் மகோதரன் முனிந்து முட்ட
தூண்டுதி தேரை என்றான் சாரதி தொழுது சொல்லும்

#11
எண்_அரும் கோடி வெம் கண் இராவணரேயும் இன்று
நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ கிடப்பது அல்லால்
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன
கண்ணனை ஒழிய அ பால் செல்வதே கருமம் என்றான்

#12
என்றலும் எயிற்று பேழ் வாய் மடிந்து அடா எடுத்து நின்னை
தின்றனென்-எனினும் உண்டாம் பழி என சீற்றம் சிந்தும்
குன்று அன தோற்றத்தான்-தன் கொடி நெடும் தேரின் நேரே
சென்றது அ இராமன் திண் தேர் விளைந்தது திமில திண் போர்

#13
பொன் தடம் தேரும் மாவும் பூட்கையும் புலவு உண் வாள் கை
கல் தடம் திண் தோள் ஆளும் நெருங்கிய கடல்கள் எல்லாம்
வற்றின இராமன் வாளி வட_அனல் பருக வன் தாள்
ஒற்றை வன் தடம் தேரொடும் மகோதரன் ஒருவன் சென்றான்

#14
அசனி_ஏறு இருந்த கொற்ற கொடியின்-மேல் அரவ தேர்-மேல்
குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல்
விசை உறு பகழி மாரி வித்தினான் விண்ணினோடும்
திசைகளும் கிழிய ஆர்த்தான் தீர்த்தனும் முறுவல் செய்தான்

#15
வில் ஒன்றால் கவசம் ஒன்றால் விறலுடை கரம் ஓர் ஒன்றால்
கல் ஒன்று தோளும் ஒன்றால் கழுத்து ஒன்றால் கடிதின் வாங்கி
செல் ஒன்று கணைகள் ஐயன் சிந்தினான் செப்பி வந்த
சொல் ஒன்றாய் செய்கை ஒன்றாய் துணிந்தனன் அரக்கன் துஞ்சி

#16
மோதரன் முடிந்த வண்ணம் மூ-வகை உலகத்தோடும்
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான்
சேதனை உண்ண கண்டான் செல விடு செல விடு என்றான்
சூதனும் முடுகி தூண்ட சென்றது துரக திண் தேர்

#17
பனி படா நின்றது என்ன பரக்கின்ற சேனை பாறி
தனிப்படான்-ஆகின் இன்னம் தாழ்கிலன் என்னும் தன்மை
நுனி படா நின்ற வீரன் அவன் ஒன்று நோக்கா-வண்ணம்
குனி படாநின்ற வில்லால் ஒல்லையின் நூறி கொன்றான்

#18
அடல் வலி அரக்கற்கு அ போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும்
கடல்களும் வற்ற வெற்றி கால் கிளர்ந்து உடற்றும்-காலை
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று
சுடர் மணி வலயம் சிந்த துடித்தன இடத்த பொன் தோள்

#19
உதிர மாரி சொரிந்தது உலகு எலாம்
அதிர வானம் இடித்தது அரு வரை
பிதிர வீழ்ந்தது அசனி ஒளி பெறா
கதிரவன்-தனை ஊரும் கலந்ததால்

#20
வாவும் வாசிகள் தூங்கின வாங்கல் இல்
ஏவும் வெம் சிலை நாண் இடை இற்றன
நாவும் வாயும் உலர்ந்தன நாள்_மலர்
பூவின் மாலை புலால் வெறி பூத்ததால்

#21
எழுது வீணை கொடு ஏந்து பதாகை-மேல்
கழுகும் காகமும் மொய்த்தன கண்கள் நீர்
ஒழுகுகின்றன ஓடு இகல் ஆடல் மா
தொழுவில் நின்றன போன்றன சூழி மா

#22
இன்ன ஆகி இமையவர்க்கு இன்பம் செய்
துன்னிமித்தங்கள் தோன்றின தோன்றவும்
அன்னது ஒன்றும் நினைந்திலன் ஆற்றுமோ
என்னை வெல்ல மனித்தன் என்று எண்ணுவான்

#23
வீங்கு தேர் செலும் வேகத்து வேலை நீர்
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகு-போல்
தாங்கல் ஆற்றகிலார் தடுமாறி தாம்
நீங்கினார் இரு பாலும் நெருங்கினார்

#24
கருமமும் கடைக்கண் உறு ஞானமும்
அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும்
பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலா
தருமமும் என சென்று எதிர் தாக்கினார்

#25
சிரம் ஒர் ஆயிரம் தாங்கிய சேடனும்
உரவு கொற்றத்து உவணத்து அரசனும்
பொர உடன்றனர் போல பொருந்தினர்
இரவும் நண்பகலும் எனல் ஆயினார்

#26
வென்றி அம் திசை யானை வெகுண்டன
ஒன்றை ஒன்று முனிந்தன ஒத்தனர்
அன்றியும் நரசிங்கமும் ஆடக
குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார்

#27
துவனி வில்லின்-பொருட்டு ஒரு தொல்லை_நாள்
எவன் அ ஈசன் என்பார் தொழ ஏற்று எதிர்
புவனம் மூன்றும் பொலம் கழலால் தொடும்
அவனும் அ சிவனும் எனல் ஆயினார்

#28
கண்ட சங்கரன் நான்முகன் கை தலம்
விண்டு அசங்க தொல் அண்டம் வெடித்திட
அண்ட சங்கத்து அமரர்-தம் ஆர்ப்பு எலாம்
உண்ட சங்கம் இராவணன் ஊதினான்

#29
சொன்ன சங்கினது ஓசை துளக்குற
என்ன சங்கு என்று இமையவர் ஏங்கிட
அன்ன சங்கை பொறாமையினால் அரி-தன்ன
வெண் சங்கு தானும் முழங்கிற்றால்

#30
ஐயன் ஐம் படை-தாமும் அடி தொழில்
செய்ய வந்து அயல் நின்றன தேவரில்
மெய்யன் அன்னவை கண்டிலன் வேதங்கள்
பொய் இல் தன்னை புலன் தெரியாமை-போல்

#31
ஆசையும் விசும்பும் அலை ஆழியும்
தேசமும் மலையும் நெடும் தேவரும்
கூச அண்டம் குலுங்க குலம் கொள் தார்
வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான்

#32
துமில வாளி அரக்கன் துரப்பன்
விமலன் மேனியின் வீழ்வதன் முன்னமே
கமல வாள் முக நாடியர் கண் கணை
அமலன் மேனியில் தைத்த அனந்தமால்

#33
சென்ற தேர் ஒர் இரண்டினும் சேர்த்திய
குன்றி வெம் கண் குதிரை குதிப்பன
ஒன்றை ஒன்று உற்று எரி உக நோக்கின
தின்று தீர்வன போலும் சினத்தன

#34
கொடியின்-மேல் உறை வீணையும் கொற்ற மா
இடியின் ஏறும் முறையின் இடித்தன
படியும் விண்ணும் பரவையும் பண்பு அற
முடியும் என்பது ஒர் மூரி முழக்கினால்

#35
ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம்
வீழி வெம் கண் இராவணன் வில் ஒலி
ஆழி நாதன் சிலை ஒலி அண்டம் விண்டு
ஊழி பேர்வுழி மா மழை ஒத்ததால்

#36
ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம்
வீங்கு வெம் சின வீரர் விழுந்தனர்
ஏங்கி நின்றது அலால் ஒன்று இழைத்திலர்
வாங்கு சிந்தையர் செய்கை மறந்துளார்

#37
ஆவது என்னை-கொலாம் என்று அறிகிலார்
ஏவர் வெல்வர் என்று எண்ணலர் ஏங்குவார்
போவர் மீள்வர் பதைப்பர் பொருமலால்
தேவரும் தங்கள் செய்கை மறந்தனர்

#38
சேண அந்தரம் நோக்கலும் திண் சரம்
பூண முந்தின சிந்தின பூ மழை
காண வந்த கடவுளர் கை எலாம்
ஆணவம் துணை யார் உளர் ஆவரோ

#39
நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில்
பூண்டு இரண்டு எதிர் நின்றவும் போன்றன
ஆண்ட வில்லி-தன் வில்லும் அரக்கன்-தன்
தீண்ட வல்லர் இலாத சிலையுமே

#40
அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும் அ
பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு என்ப-போல்
குரைக்கும் வேலையும் மேக குழாங்களும்
இரைத்து இடிக்கின்ற இன்றும் ஒர் ஈறு இலா

#41
மண்ணில் செல்வன செல்லினும் மாசு_அற
எண்ணின் சூல் மழை இல்ல இராவணன்
கண்ணின் சிந்திய தீ கடு வேகத்த
விண்ணில் செல்வன வெந்தன வீழ்வன

#42
மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம்
நால் கலங்க நகும்-தொறும் நாவொடு
கால் கலங்குவர் தேவர் கண மழை
சூல் கலங்கும் இலங்கை துளங்குமால்

#43
இ கணத்தும் எறிப்ப தடித்து என
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என
பக்கம் வீசும் படை சுடர் பல் திசை
புக்கு போக பொடிப்பன போக்கு இல

#44
கொற்ற வில் கொடு கொல்லுதல் கோள் இலா
சிற்றையாளனை தேவர்-தம் தேரொடும்
பற்றி வானில் சுழற்றி படியின்-மேல்
எற்றுவேன் என்று உரைக்கும் இரைக்குமால்

#45
தடித்து வைத்து அன்ன வெம் கணை தாக்கு அற
வடித்து வைத்து அன்ன மானுடன் தோள் வலி
ஒடித்து தேரை உதிர்த்து ஒரு வில்லொடும்
பிடித்து கொள்வென் சிறை என பேசுமால்

#46
பதைக்கின்றது ஓர் மனமும் இடை படர்கின்றது ஒர் சினமும்
விதைக்கின்றன பொறி பொங்கின விழியும் உடை வெய்யோன்
குதிக்கின்றன நிமிர் வெம் சிலை குழைய கொடும் கடும் கால்
உதைக்கின்றன சுடர் வெம் கணை உரும்_ஏறு என எய்தான்

#47
உரும் ஒப்பன கனல் ஒப்பன ஊற்றம் தரு கூற்றின்
மருமத்தினும் நுழைகிற்பன மழை ஒப்பன வானோர்
நிருமித்தன படை பற்று அற நிமிர்வுற்றன அமிழ்த
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய

#48
துண்டப்பட நெடு மேருவை தொளைத்து உள் உறை தங்காது
அண்டத்தையும் பொதுத்து ஏகும் என்று இமையோர்களும் அயிர்த்தார்
கண்ட தெறு கணை காற்றினை கருணை கடல் கனக
சண்ட சர மழை கொண்டு அவை இடையே அற தடுத்தான்

#49
உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற
இடையூறு உற சிதைந்தாங்கு-என சரம் சிந்தின விறலும்
தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்து அவை துரந்தான்
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான்

#50
விண் போர்த்தன திசை போர்த்தன மலை போர்த்தன விசை ஓர்
கண் போர்த்தன கடல் போர்த்தன படி போர்த்தன கலையோர்
எண் போர்த்தன எரி போர்த்தன இருள் போர்த்தன என்னே
திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான்

#51
அல்லா நெடும் பெரும் தேவரும் மறை வாணரும் அஞ்சி
எல்லார்களும் கரம் கொண்டு இரு விழி பொத்தினர் இருந்தார்
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை
வில்லாளனும் அது கண்டு அவை விலக்கும் தொழில் வேட்டான்

#52
செம் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன் சிறுவிலை நாள்
முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின முதல்வன்
வந்து ஈந்தன வடி வெம் கணை அனையான் வகுத்து அமைத்த
வெம் தீவினை பயன் ஒத்தன அரக்கன் சொரி விசிகம்

#53
நூறு_ஆயிரம் வடி வெம் கணை நொடி ஒன்றினின் விடுவான்
ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான்
கூறு ஆயின கனல் சிந்துவ குடிக்க புனல் குறுகி
சேறு ஆயின பொடி ஆயின திடர் ஆயின கடலும்

#54
வில்லால் சரம் துரக்கின்றவற்கு உடனே மிடல் வெம் போர்
வல்லான் எழு மழு தோமரம் மணி தண்டு இருப்பு உலக்கை
தொல் ஆர் மிடல் வளை சக்கரம் சூலம் இவை தொடக்கத்து
எல்லாம் நெடும் கரத்தால் எடுத்து எறிந்தான் செரு அறிந்தான்

#55
வேல் ஆயிரம் மழு ஆயிரம் எழு ஆயிரம் விசிக
கோல் ஆயிரம் பிற ஆயிரம் ஒரு கோல் பட குறைவ
கால் ஆயின கனல் ஆயின உரும் ஆயின கதிய
சூல் ஆயின மழை அன்னவன் தொடை பல் வகை தொடுக்க

#56
ஒத்து செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை உடனே
பத்து சிலை எடுத்தான் கணை தொடுத்தான் பல முகில்-போல்
தொத்து படு நெடும் தாரைகள் சொரிந்தால்-என துரந்தான்
குத்து கொடு நெடும் கோல் படு களிறு ஆம் என கொதித்தான்

#57
ஈசன் விடு சர மாரியும் எரி சிந்துறு தறுகண்
நீசன் விடு சர மாரியும் இடை எங்கணும் நெருங்க
தேசம் முதல் ஐம் பூதமும் செரு கண்டனர் நெருக்க
கூசிம் மயிர் பொடிப்பு அற்றன அனல் ஆயின கொடிய

#58
மந்தர கிரி என மருந்து மாருதி
தந்த அ பொருப்பு என புரங்கள் தாம் என
கந்தருப்பம் நகர் விசும்பில் கண்டு-என
அந்தரத்து எழுந்தது அ அரக்கன் தேர்-அரோ

#59
எழுந்து உயர் தேர்-மிசை இலங்கை காவலன்
பொழிந்தன சர மழை உருவி போதலால்
ஒழிந்ததும் ஒழிகிலது என்ன ஒல்லென
கழிந்தது கவி குலம் இராமன் காணவே

#60
முழவு இடு தோளொடு முடியும் பல் தலை
விழ விடுவேன் இனி விசும்பு சேமமோ
மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர்
எழ விடு தேரை என்று இராமன் கூறினான்

#61
அந்து செய்குவென் என அறிந்த மாதலி
உந்தினன் தேர் எனும் ஊழி காற்றினை
இந்து மண்டிலத்தின்-மேல் இரவி மண்டிலம்
வந்து-என வந்தது அம் மான தேர்-அரோ

#62
இரிந்தன மழை குலம் இழுகி திக்கு எலாம்
உரிந்தன உடு குலம் உதிர்ந்து சிந்தின
நெரிந்தன நெடு வரை குடுமி நேர் முறை
திரிந்தன சாரிகை தேரும் தேருமே

#63
வலம் வரும் இடம் வரும் மறுகி வானொடு
நிலம் வரும் இடம் வலம் நிமிரும் வேலையும்
அலம்வரு குல வரை அனைத்தும் அண்டமும்
சலம் வரும் குய_மகன் திகிரி தன்மை-போல்

#64
எழும் புகழ் இராமன் தேர் அரக்கன் தேர் இது என்று
உழுந்து உருள் பொழுதின் எ உலகும் சேர்வன
தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர்
பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார்

#65
உக்கிலா உடுக்களும் உருள்கள் தாக்கலின்
நெக்கிலா மலைகளும் நெருப்பு சிந்தலின்
வக்கிலா திசைகளும் உதிரம் வாய் வழி
கக்கிலா உயிர்களும் இல்லை காண்பன

#66
இந்திரன் உலகத்தார் என்பர் ஏன்றவர்
சந்திரன் உலகத்தார் என்பர் தாமரை
அந்தணன் உலகத்தார் என்பர் அல்லரால்
மந்தர மலையினார் என்பர் வானவர்

#67
பாற்கடல் நடுவணார் என்பர் பல் வகை
மால் கடல் ஏழுக்கும் வரம்பினார் என்பர்
மேல் கடலார் என்பர் கிழக்கு உளார் என்பர்
ஆர்ப்பு இடை இது என்பர் அறிந்த வானவர்

#68
மீண்டனவோ என்பர் விசும்பு விண்டு உக
கீண்டனவோ என்பர் கீழவோ என்பர்
பூண்டன புரவியோ புதிய காற்று என்பர்
மாண்டன உலகம் என்று உரைக்கும் வாயினார்

#69
ஏழுடை கடலினும் தீவு ஓர் ஏழினும்
ஏழுடை மலையினும் உலகு ஓர் ஏழினும்
சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா
ஊழியில் காற்று என திரிந்த ஓவில

#70
உடை கடல் ஏழினும் உலகம் ஏழினும்
இடை படு தீவினும் மலை ஒர் ஏழினும்
அடைக்கல பொருள் என அரக்கன் வீசிய
படைக்கலம் மழை படு துளியின் பான்மைய

#71
ஒறுத்து உலகு அனைத்தையும் உழலும் ஓட்டிடை
இறுத்தில இராவணன் எறிந்த எய்தன
அறுத்ததும் தடுத்ததும் அன்றி ஆரியன்
செறுத்து ஒரு தொழிலிடை செய்தது இல்லையால்

#72
விலங்களும் வேலையும் மேலும் கீழரும்
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும்
கலங்குற திரிந்தது ஓர் ஊழி காற்று-என
இலங்கையை எய்திய இமைப்பின் வந்த தேர்

#73
உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை
மொய்த்தது கடலிடை மணலின் மும்மையால்
வித்தகர் கடவிய விசய தேர் பரி
எய்த்தில வியர்த்தில இரண்டு பாலவும்

#74
இந்திரன் தேரின்-மேல் உயர்ந்த ஏந்து எழில்
உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை
சந்திரன் அனையது ஓர் சரத்தினால் தரை
சிந்தினன் இராவணன் எரியும் செம் கணான்

#75
சாய்ந்த வல் உருமு போய் அரவ தாழ் கடல்
பாய்ந்த வெம் கனல் என முழங்கி பாய்தலும்
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுற
தோய்ந்த நீர் ஆம் என சுருங்கிற்று ஆழியே

#76
எழுத்து என சிதைவு இலா இராமன் தேர் பரி
குழுக்களை கூர்ம் கணை குப்பை ஆக்கி நேர்
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை
அழுத்தினன் கொடும் சரம் ஆறொடு ஆறு-அரோ

#77
நீல் நிற நிருதர்_கோன் எய்த நீதியின்
சால்புடை மாதலி மார்பில் தைத்தன
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ்
வேலினும் வெம்மையே விளைத்த வீரற்கு

#78
மண்டில வரி சிலை வானவில்லொடும்
துண்ட வெண் பிறை என தோன்ற தூவிய
உண்டை வெம் கடும் கணை ஒருங்கு மூடலால்
கண்டிலர் இராமனை இமைப்பு இல் கண்ணினார்

#79
தோற்றனனே இனி என்னும் தோற்றத்தால்
ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார்
வேற்றவர் ஆர்த்தனர் மேலும் கீழுமாய்
காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே

#80
அங்கியும் தன் ஒளி அடங்கிற்று ஆர்கலி
பொங்கில திமிர்த்தன விசும்பில் போக்கு இல
வெம் கதிர் தண் கதிர் விலங்கி மீண்டன
மங்குவின் நெடு புயல் மழை வறந்ததால்

#81
திசை நிலை கட கரி செருக்கு சிந்தின
அசைவு இல வேலைகள் ஆர்க்க அஞ்சின
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசன் என மேருவும் குலுக்கம் உற்றதே

#82
வானர தலைவனும் இளைய மைந்தனும்
ஏனை அ தலைவனை காண்கிலேம் என
கானக கரி என கலங்கினார் கடல்
மீன் என கலங்கினார் வீரர் வேறு உளார்

#83
எய்தன சரம் எலாம் இமைப்பின் முந்துற
கொய்தனன் அகற்றி வெம் கோலின் கோவையால்
நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன
செய்தனன் இராகவன் அமரர் தேறினார்

#84
தூணுடை நிரை புரை கரம் அவை-தொறும் அ
கோணுடை மலை நிகர் சிலை இடை குறைய
சேணுடை நிகர் கணை சிதறினன் உணர்வொடு
ஊணுடை உயிர்-தொறும் உறைவுறும் ஒருவன்

#85
கயில் விரிவு அற வரு கவசமும் உருவி
பயில் விரி குருதிகள் பருகிட வெயிலொடு
அயில் விரி சுடு கணை கடவினன் அறிவின்
துயில்வுழி உணர்தரு சுடர் ஒளி ஒருவன்

#86
திசை உறு துகிலது செறி மழை சிதறும்
விசை உறு முகிழது விரிதரு சிரனொடு
இசை உறு கருவியின் இனிது உறு கொடியை
தசை உறு கணை-கொடு தரை உற விடலும்

#87
படை உக இமையவர் பருவரல் கெட வந்து
இடை உறு திசை திசை இழுகுற இறைவன்
அடையுறு கொடி-மிசை அணுகினன் அளவு_இல்
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன்

#88
பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவை
கண் அகன் உலகினை வலம்வரு கலுழன்
நண்ணலும் இமையவர் நமது உறு கருமம்
எண்ணலம் முனிவினின் இவறினன் எனவே

#89
ஆயது ஒர் அமைதியின் அறிவினின் அமைவான்
நாயகன் ஒருவனை நலிகிலது உணர்வான்
ஏயினன் இருள் உறு தாமதம் எனும் அ
தீவினை தரு படை தெறு தொழில் மறவோன்

#90
தீ முகம் உடையன சில முகம் உதிரம்
தோய் முகம் உடையன சுரர் முகம் உடைய
பேய் முகம் உடையன பிலமுகம் நுழையும்
வாய்முகம் வரி அரவு அனையன வருவ

#91
ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும்
இரு திசை எயிறு உற வருவன பெரிய
கருதிய கருதிய புரிவன கனலும்
பருதியை மதியொடு பருகுவ பகழி

#92
இருள் ஒரு திசை ஒரு திசை வெயில் விரியும்
சுருள் ஒரு திசை ஒரு திசை மழை தொடரும்
உருள் ஒரு திசை ஒரு திசை உரும் முரலும்
மருள் ஒரு திசை ஒரு திசை சிலை வருடம்

#93
இனையன நிகழ்வுற எழு வகை உலகும்
கனை இருள் கதுவிட அமரர்கள் கதற
வினை உறு தொழிலிடை விரவலும் விமலன்
நினைவுறு தகையினன் நெறியுறு முறையின்

#94
கண்ணுதல் ஒருவனது அடு படை கருதி
பண்ணவன் விடுதலும் அது நனி பருக
எண்ணுறு கனவினொடு உணர்வு என இமையில்
துண்ணெனும் நிலையினின் எறி படை தொலைய

#95
விரிந்த தன் படை மெய் கண்ட பொய் என வீய்ந்த
எரிந்த கண்ணினன் எயிற்றிடை மடித்த வாயினன் தன்
தெரிந்த வெம் கணை கங்க வெம் சிறை அன்ன திறத்தான்
அரிந்தமன் திரு மேனி-மேல் அழுத்தி நின்று ஆர்த்தான்

#96
ஆர்த்து வெம் சினத்து ஆசுர படைக்கலம் அமரர்
வார்த்தை உண்டது இன் உயிர்களால் மறலிதன் வயிற்றை
தூர்த்தது இந்திரன் துணுக்குறு தொழிலது தொடுத்து
தீர்த்தன்-மேல் வர துரந்தனன் உலகு எலாம் தெரிய

#97
ஆசுர பெரும் படைக்கலம் அமரரை அமரின்
ஏசுவிப்பது எ உலகமும் எவரையும் வென்று
வீசு வெற்பு இற துரந்த வெம் கணையது விசையின்
பூசுரர்க்கு ஒரு கடவுள்-மேல் சென்றது போலாம்

#98
நுங்குகின்றது இ உலகை ஓர் நொடி வரை என்ன
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப
மங்குல் வல் உருமேற்றின்-மேல் எரி மடுத்து-என்ன
அங்கி தன் நெடும் படை தொடுத்து இராகவன் அறுத்தான்

#99
கூற்று கோடினும் கோடல கடல் எலாம் குடிப்ப
நீற்று குப்பையின் மேருவை நூறுவ நெடிய
காற்று பின் செல செல்வன உலகு எலாம் கடப்ப
நூற்று கோடி அம்பு எய்தனன் இராவணன் நொடியில்

#100
என்ன கை கடுப்போ என்பர் சிலர் சிலர் இவையும்
அன்ன மாயமோ அம்பு அல என்பர் அ அம்புக்கு
இன்னம் உண்டு-கொல் இடம் என்பர் சிலர் சிலர் இகல் போர்
முன்னம் இத்தனை முயன்றிலனாம் என்பர் முனிவர்

#101
மறை_முதல் தனி நாயகன் வானினை மறைத்த
சிறையுடை கொடும் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் திரிய
பொறை சிகை பெரும் தலை-நின்றும் புங்கத்தின் அளவும்
பிறை முக கடு வெம் சரம் அவை கொண்டு பிளந்தான்

#102
அயன் படைத்த பேர் அண்டத்தின் அரும் தவம் ஆற்றி
பயன் படைத்தவர் யாரினும் படைத்தவன் பல் போர்
வியன் படைக்கலம் தொடுப்பென் நான் இனி என விரைந்தான்
மயன் படைக்கலம் துரந்தனன் தயரதன் மகன்-மேல்

#103
விட்டனன் விடு படைக்கலம் வேரொடும் உலகை
சுட்டனன் என துணுக்கமுற்று அமரரும் சுருண்டார்
கெட்டனம் என வானர தலைவரும் கிழிந்தார்
சிட்டர்-தம் தனி தேவனும் அதன் நிலை தெரிந்தான்

#104
பாந்தள் பல் தலை பரப்பு அகன் புவியிடை பயிலும்
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு என வருகின்ற அதனை
காந்தர்ப்பம் எனும் கடும் கொடும் கணையினால் கடந்தான்
ஏந்தல் பல் மணி எறுழ் வலி திரள் புயத்து இராமன்

#105
பண்டு நான்முகன் படைத்தது கனகன் இ பாரை
தொண்டு கொண்டது மது எனும் அவுணன் முன் தொட்டது
உண்டு இங்கு என்-வயின் அது துரந்து உயிர் உண்பென் என்னா
தண்டு கொண்டு எறிந்தான் ஐந்தொடு ஐந்துடை தலையான்

#106
தாருகன் பண்டு தேவரை தகர்த்தது தனி மா
மேரு மந்தரம் புரைவது வெயில் அன்ன ஒளியது
ஓர் உகம்-தனின் உலகம் நின்று உருட்டினும் உருளா
சீர் உகந்தது நெரித்தது தானவர் சிரத்தை

#107
பசும் புனல் பெரும் பரவை பண்டு உண்டது பனிப்புற்று
அசும்பு பாய்கின்றது அருக்கனின் ஒளிர்கின்றது அண்டம்
தசும்பு-போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர
விசும்பு பாழ்பட வந்தது மந்தரம் வெருவ

#108
கண்டு தாமரை கடவுள் மா படை என கழறா
அண்டர் நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா
புண்டரீகத்தின் மொட்டு அன்ன புகர் முக கணையால்
உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான்

#109
தேய நின்றவன் சிலை வலம் காட்டினான் தீரா
பேயை என் பல துரப்பது இங்கு இவன் பிழையாமல்
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய
மாயையின் படை தொடுப்பென் என்று இராவணன் மதித்தான்

#110
பூசனை தொழில் புரிந்து தான் முறைமையின் போற்றும்
ஈசனை தொழுது இருடியும் சந்தமும் எண்ணி
ஆசை பத்தினும் அந்தர பரப்பினும் அடங்கா
வீசி மேற்செல வில் விசை தொடை கொண்டு விட்டான்

#111
மாயம் பொத்திய வய படை விடுதலும் வரம்பு_இல்
காயம் எத்தனை உள நெடும் காயங்கள் கதுல
ஆயம் உற்று எழுந்தார் என ஆர்த்தனர் அமரில்
தூய கொற்றவர் சுடு சரத்தால் முன்பு துணிந்தார்

#112
இந்திரற்கு ஒரு பகைஞனும் அவற்கு இளையோரும்
தந்திர பெரும் தலைவரும் தலை தலையோரும்
மந்திர சுற்றத்தவர்களும் வரம்பு_இலர் பிறரும்
அந்தரத்தினை மறைத்தனர் மழை உக ஆர்ப்பார்

#113
குட பெரும் செவி குன்றமும் மற்றுள குழுவும்
படைத்த மூல மா தானையும் முதலிய பட்ட
விடைத்து எழுந்தன யானை தேர் பரி முதல் வெவ்வேறு
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து அ வழி அடைய

#114
ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த
காய் சின பெரும் கடற்படை கள பட்ட எல்லாம்
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன
தேசம் முற்றவும் செறிந்தன திசைகளும் திசைக்க

#115
சென்ற எங்கணும் தேவரும் முனிவரும் சிந்த
வென்றதும் எங்களை-போலும் யாம் விளிவதும் உளதோ
இன்று காட்டுதும் எய்து-மின் எய்து-மின் என்னா
கொன்ற கொற்றவர்-தம் பெயர் குறித்து அறைகூவி

#116
பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய
பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய
பேர் இடம் கதுவ அரிது இனி விசும்பு என பிறந்த
பேர் இடங்கரின் கொடும் குழை அணிந்தன பேய்கள்

#117
தாமசத்தினில் பிறந்தவர் அறம் தெறும் தகையர்
தாம் அசத்தினில் செல்கிலா சதுமுகத்தவற்கும்
தாமசத்தினை தொடர்ந்தவர் பரிந்தன தாழ்ந்தார்
தாம சத்திரம் சித்திரம் பொருந்திய தயங்க

#118
தாம் அவிந்து மீது எழுந்தவர்க்கு இரட்டியின் தகையர்
தாம இந்துவின் பிளவு என தயங்கு வாள் எயிற்றர்
தாம் அவிஞ்சையர் கடல் பெரும் தகையினர் தரள
தாம விஞ்சையர் துவன்றினர் திசை-தொறும் தருக்கி

#119
தாம் மடங்கலும் முடங்கு உளை யாளியும் தகுவார்
தாம் அடங்கலும் நெடும் திசை உலகொடும் தகைவார்
தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் தகையார்
தாம் மடங்கலும் கொடும் சுடர் படைகளும் தரித்தார்

#120
இனயை தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன்
வினையம் மற்று இது மாயமோ விதியது விளைவோ
வனையும் வன் கழல் அரக்கர்-தம் வரத்தினோ மற்றோ
நினைதியாம்-எனின் பகர் என மாதலி நிகழ்த்தும்

#121
இருப்பு கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி
விருப்பின் கோடியால் விலைக்கு எனும் பதடியின் விட்டான்
கருப்பு கார் மழை வண்ண அ கடும் திசை களிற்றின்
மருப்பு கல்லிய தோளவன் மீள அரு மாயம்

#122
வீக்கு வாய் அயில் வெள் எயிற்று அரவின் வெவ் விடத்தை
மாய்க்குமா நெடு மந்திரம் தந்தது ஓர் வலியின்
நோய்க்கும் நோய் தரு வினைக்கும் நின் பெரும் பெயர் நொடியின்
நீக்குவாய் உனை நினைக்குவார் பிறப்பு என நீங்கும்

#123
வரத்தின் ஆயினும் மாயையின் ஆயினும் வலியோர்
உரத்தின் ஆயினும் உண்மையின் ஆயினும் ஓட
துரத்தியால் என ஞான மா கடும் கணை துரந்தான்
சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தேடவும் சேயோன்

#124
துறத்தல் ஆற்று உறு ஞான மா கடும் கணை தொடர
அறத்து அலாது செல்லாது நல் அறிவு வந்து அணுக
பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புற தம்மை
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அ மாயை

#125
நீலம் கொண்டு ஆர் கண்டனும் நேமி படையோனும்
மூலம் கொண்டார் கண்டகர் ஆவி முடிவிப்பான்
காலம் கொண்டார் கண்டன முன்னே கழிவிப்பான்
சூலம் கொண்டான் அண்டரை எல்லாம் தொழில் கொண்டான்

#126
கண்டா குலம் முற்று ஆயிரம் ஆர்க்கின்றது கண்ணில்
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது வீரர்
கண் தா குலம் முற்றும் சுடும் என்று அ கழல் வெய்யோன்
கண் தாகுதல் முன் செல்ல விசைத்துள்ளது கண்டான்

#127
எரியாநிற்கும் பல் தலை மூன்றும் எரி சிந்தி
திரியாநிற்கும் தேவர்கள் ஓட திரள் ஓட
இரியாநிற்கும் எ உலகும் தன் ஒளியே ஆய்
விரியா நிற்கும் நிற்கிலது ஆர்க்கும் விழி செல்லா

#128
செல்வாய் என்ன செல்ல விடுத்தான் இது தீர்த்தற்கு
ஒல்வாய் நீயே வேறு ஒருவர்க்கும் உடையாதால்
வல் வாய் வெம் கண் சூலம் எனும் காலனை வள்ளால்
வெல்வாய் வெல்வாய் என்றனர் வானோர் மெலிகின்றார்

#129
துனையும் வேகத்தால் உரும்_ஏறும் துண்ணென்ன
வனையும் காலின் செல்வன தன்னை மறவாதே
நினையும் ஞான கண் உடையார்-மேல் நினையாதார்
வினையம் போல சிந்தின வீரன் சரம் வெய்ய

#130
எய்யும் எய்யும் தேவருடை திண் படை எல்லாம்
பொய்யும் துய்யும் ஒத்து அவை சிந்தும் புவி தந்தான்
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான்
ஐயன் நின்றான் செய் வகை ஒன்றும் அறிகில்லான்

#131
மறந்தான் செய்கை மற்று எதிர் செய்யும் வகை எல்லாம்
துறந்தான் என்னா உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார்
அறம்தான் அஞ்சி கால் குலைய தான் அறியாதே
பிறந்தான் நின்றான் வந்தது சூலம் பிறர் அஞ்ச

#132
சங்காரத்து ஆர் கண்டை ஒலிப்ப தழல் சிந்த
பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் ஓடி புகலோடும்
வெம் காரத்தான் முற்றும் முனிந்தான் வெகுளி பேர்
உங்காரத்தால் உக்கது பல் நூறு உதிர் ஆகி

#133
ஆர்ப்பார் ஆனார் அச்சமும் அற்றார் அலர் மாரி
தூர்ப்பார் ஆனார் துள்ளல் புரிந்தார் தொழுகின்றார்
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை
பேர்ப்பாய் போலாம் என்றனர் வானோர் உயிர் பெற்றார்

#134
வென்றான் என்றே உள்ளம் வெயர்த்தான் விடு சூலம்
பொன்றான் என்னின் போகலது என்னும் பொருள் கொண்டான்
ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு ஓடுதல் காணா
நின்றான் அ நாள் வீடணனார் சொல் நினைவுற்றான்

#135
சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் மெய் வரம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோதான் அ வேத முதல் காரணன் என்றான்

#136
யாரேனும் தான் ஆகுக யான் என் தனி ஆண்மை
பேரேன் இன்றே வென்றி முடிப்பென் பெயர்கில்லேன்
நேரே செல்வென்-கொல் என் அரக்கன் நிமிர்வு எய்தி
வேரே நிற்கும் மீள்கிலென் என்னா விடலுற்றான்

#137
நிருதி திக்கில் நின்றவன் வென்றி படை நெஞ்சில்
கருதி தன்-பால் வந்தது அவன் கைக்கொடு காலன்
விருதை சிந்தும் வில்லின் வலித்து செலவிட்டான்
குருதி செம் கண் தீ உக ஞாலம் குலைவு எய்த

#138
வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச
பெய்யும் கோடி பல் தலையோடும் அளவு இல்லா
மெய்யும் வாயும் பெற்றன மேரு கிரி சால
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப

#139
வாய் வாய்-தோறும் மா கடல் போலும் விட வாரி
போய் வாழ்கின்ற பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற
மீவாய் எங்கும் வெள்ளிடை இன்றி மிடைகின்ற
பேய் வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற

#140
கடித்தே தீரும் கண் அகன் ஞாலம் கடலோடும்
குடித்தே தீரும் என்று உயிர் எல்லாம் குலைகின்ற
முடித்தான் அன்றோ வெம் கண் அரக்கன் முழு முற்றும்
பொடித்தான் ஆகும் இப்பொழுது என்ன புகைகின்ற

#141
அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால்
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான்
எல் வாய்-தோறும் எய்தின என்னா எதிர் எய்தான்
தவ்வா உண்மை காருடம் என்னும் படை-தன்னால்

#142
எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து_இனம் என்ன
பவணத்து அன்ன வெம் சிறை வேக தொழில் பம்ப
சுவண கோல துண்டம் நகம் தொல் சிறை வெல் போர்
உவண புள்ளே ஆயின வானோர் உலகு எல்லாம்

#143
அளக்க_அரும் புள்_இனம் அடைய ஆர் அழல்
துளக்க_அரும் வாய்-தொறும் எரிய தொட்டன
இளக்க_அரும் இலங்கை தீ இடுதும் ஈண்டு என
விளக்கு_இனம் எடுத்தன போன்ற விண் எலாம்

#144
குயின்றன சுடர் மணி கனலின் குப்பையின்
பயின்றன சுடர் தர பதும நாளங்கள்
வயின்-தொறும் கவர்ந்து-என துண்ட வாள்களால்
அயின்றன புள்_இனம் உகிரின் அள்ளின

#145
ஆயிடை அரக்கனும் அழன்ற நெஞ்சினன்
தீயிடை பொடிந்து எழும் உயிர்ப்பன் சீற்றத்தன்
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அற
தூயினன் சுடு சரம் உருமின் தோற்றத்த

#146
அங்கு அ வெம் கடும் கணை அயிலின் வாய்-தொறும்
வெம் கணை பட பட விசையின் வீழ்ந்தன
புங்கமே தலை என புக்க போலுமால்
துங்க வாள் அரக்கனது உரத்தில் தோற்றல

#147
ஒக்க நின்று எதிர் அமர் உடற்றும் காலையில்
முக்கணான் தட வரை எடுத்த மொய்ம்பற்கு
நெக்கன விஞ்சைகள் நிலையின் தீர்ந்தன
மிக்கன இராமற்கு வலியும் வீரமும்

#148
வேதியர் வேதத்து மெய்யன வெய்யவற்கு
ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான்
சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையை தள்ளினான்
பாதியின் மதி முக பகழி ஒன்றினால்

#149
மேருவின் கொடுமுடி வீசு கால் எறி
போரிடை ஒடிந்து போய் புணரி புக்கு-என
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை
நீரிடை விழுந்தது நெருப்பொடு அன்று போய்

#150
குதித்தனர் பாரிடை குன்று கூறுற
மிதித்தனர் வடகமும் தூசும் வீசினார்
துதித்தனர் பாடினர் ஆடி துள்ளினார்
மதித்தனர் இராமனை வானுளோர் எலாம்

#151
இறந்தது ஓர் உயிருடன் தருமத்து ஈட்டினால்
பிறந்துளதாம் என பெயர்த்தும் அ தலை
மறந்திலது எழுந்தது மடித்த வாயது
சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ

#152
கொய்தது கொய்திலது என்னும் கொள்கையின்
எய்த வந்து அ கணத்து எழுந்தது ஓர் சிரம்
செய்த வெம் சினத்துடன் சிறக்கும் செல்வனை
வைதது தெழித்தது மழையின் ஆர்ப்பினால்

#153
இடந்தது கிரி குவடு என்ன எங்கணும்
படர்ந்தது குரை கடல் பருகும் பண்பது
விடம் தரு விழியது முடுகி வேலையில்
கிடந்ததும் ஆர்த்தது மழையின் கேழது

#154
விழுத்தினன் சிரம் எனும் வெகுளி மீக்கொள
வழுத்தின உயிர்களின் முதலின் வைத்த ஓர்
எழுத்தினன் தோள்களின் ஏழொடு ஏழு கோல்
அழுத்தினன் அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான்

#155
தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என
நிலை உறு நேமியான் அறிந்து நீசனை
கலை உறு திங்களின் வடிவு காட்டிய
சிலை உறு கையையும் நிலத்தில் சேர்த்தினான்

#156
கொற்ற வெம் சரம் பட குறைந்து போன கை
பற்றிய கிடந்தது சிலையை பாங்குற
மற்று ஓர் கை பிடித்தது போல வவ்வியது
அற்ற கை பிறந்த கை யார் அது ஓர்குவார்

#157
பொன் கயிற்று ஊர்தியான் வலியை போக்குவான்
முன்கையில் துறு மயிர் முள்ளின் துள்ளுற
மின் கையில் கொண்டு-என வில்லை விட்டிலா
வன் கையை தன் கையின் வலியின் வாங்கினான்

#158
விளங்கு ஒளி வயிர வாள் அரக்கன் வீசிய
தளம் கிளர் தட கை தன் மார்பில் தாக்கலும்
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி
துளங்கினன் வாய் வழி உதிரம் தூவுவான்

#159
மா மரத்து ஆர் கையால் வருந்துவானை ஓர்
தோமரத்தால் உயிர் தொலைப்ப தூண்டினன்
தாம் அரத்தால் பொரா தகை கொள் வாள் படை
காமரத்தால் சிவன் கரத்து வாங்கினான்

#160
மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு என
மூண்ட வெம் தழல் சிந்த முடுக்கலும்
ஆண்ட வில்லி ஓர் ஐம் முக வெம் கணை
தூண்டினான் துகளானது தோமரம்

#161
ஓய்வு அகன்றது ஒரு தலை நூறு உற
போய் அகன்று புரள பொரு கணை
ஆயிரம் தொடுத்தான் அறிவின் தனி
நாயகன் கை கடுமை நடத்தியே

#162
நீர் தரங்கங்கள்-தோறும் நிலம்-தொறும்
சீர்த்த மால் வரை-தோறும் திசை-தொறும்
பார்த்த பார்த்த இடம்-தொறும் பல் தலை
ஆர்த்து வீழ்ந்த அசனிகள் வீழ்ந்து-என

#163
தகர்ந்து மால் வரை சாய்வுற தாக்கின
மிகுந்த வான்-மிசை மீனம் மலைந்தன
புகுந்த மா மகர குலம் போக்கு அற
முகந்த வாயின் புணரியை முற்றுற

#164
பொழுது சொல்லினும் புண்ணியம் போன பின்
பழுது சொல்லும் அன்றே மற்றை பண்பு எலாம்
தொழுது சூழ்வன முன் இன்று தோன்றியே
கழுது சூன்ற இராவணன் கண் எலாம்

#165
வாளும் வேலும் உலக்கையும் வச்சிர
கோளும் தண்டும் மழு எனும் கூற்றமும்
தோளின் பத்திகள்-தோறும் சுமந்தன
மீளி மொய்ம்பன் உரும் என வீசினான்

#166
அனைய சிந்திட ஆண்தகை வீரனும்
வினையம் என் இனி யாது-கொல் வெல்லுமா
நினைவென் என்ன நிசாசரன் மேனியை
புனைவென் வாளியினால் என பொங்கினான்

#167
மஞ்சு அரங்கிய மார்பினும் தோளினும்
நஞ்சு அரங்கிய கண்ணினும் நாவினும்
வஞ்சன் மேனியை வார் கணை அட்டிய
பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான்

#168
வாய் நிறைந்தன கண்கள் மறைந்தன
மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன
தோய்வுறும் கணை செம்புனல் தோய்ந்தில
போய் நிறைந்தன அண்ட புறம் எலாம்

#169
மயிரின் கால்-தொறும் வார் கணை மாரி புக்கு
உயிரும் தீர உருவின ஓடலும்
செயிரும் சீற்றமும் நிற்க திறல் திரிந்து
அயர்வு தோன்ற துளங்கி அழுங்கினான்

#170
வாரி நீர் நின்று எதிர் மகரம் படர்
சோரி சோர உணர்வு துளங்கினான்
தேரின்-மேல் இருந்தான் பண்டு தேவர்-தம்
ஊரின்-மேலும் பவனி உலாவினான்

#171
ஆர்த்துக்கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார்
வேர்த்து தீவினை வெம்பி விழுந்தது
போர்த்து பொய்த்தனன் என்று பொலம் கொள் தேர்
பேர்த்து சாரதி போயினன் பின்றுவான்

#172
கை துறந்த படையினன் கண் அகல்
மெய் துறந்த உணர்வினன் வீழ்தலும்
எய் திறம் தவிர்ந்தான் இமையோர்களை
உய் திறம் துணிந்தான் அறம் உன்னுவான்

#173
தேறினால் பின்னை யாதும் செயற்கு அரிது
ஊறுதான் உற்ற-போதே உயிர்-தனை
நூறுவாய் என மாதலி நூக்கினான்
ஏறு சேவகனும் இது இயம்பினான்

#174
படை துறந்து மயங்கிய பண்பினான்
இடை பெறும் துயர் பார்த்து இகல் நீதியின்
நடை துறந்து உயிர் கோடலும் நன்மையோ
கடை துறந்தது போர் என் கருத்து என்றான்

#175
கூவிரம் செறி பொன் கொடி தேரொடும்
போவர் அஞ்சினர் அன்னது ஓர் போழ்தினின்
ஏவர் அஞ்சலியாதவர் எண்ணுடை
தேவர் அஞ்ச இராவணன் தேறினான்

#176
உறக்கம் நீங்கி உணர்ச்சியுற்றான் என
மற கண் வஞ்சன் இராமனை வான் திசை
சிறக்கும் தேரொடும் கண்டிலன் சீற்ற தீ
பிறக்க நோக்கினன் பின்னுற நோக்கினான்

#177
தேர் திரித்தனை தேவரும் காணவே
வீர விற்கை இராமற்கு வெண் நகை
பேர உய்த்தனையே பிழைத்தாய் எனா
சாரதி பெயரோனை சலிப்புறா

#178
தஞ்சம் நான் உனை தேற்ற தரிக்கிலா
வஞ்ச நீ பெரும் செல்வத்து வைகினை
அஞ்சினேன் என செய்தனை ஆதலால்
உஞ்சு போதி-கொலாம் என்று உருத்து எழா

#179
வாள் கடைக்கணித்து ஓச்சலும் வந்து அவன்
தாள் கடைக்கு அணியா தலை தாழ்வுறா
மூள் கடை கடும் தீயின் முனிவு ஒழி
கோள் கடை கணித்து என்று அவன் கூறுவான்

#180
ஆண்_தொழில் துணிவு ஓய்ந்தனை ஆண்டு இறை
ஈண்ட நின்றிடின் ஐயனே நின் உயிர்
மாண்டது அ கணம் என்று இடர் மாற்றுவான்
மீண்டது இ தொழில் எம் வினை மெய்ம்மையால்

#181
ஓய்வும் ஊற்றமும் நோக்கி உயிர் பொறை
சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால்
மாய்வு நிச்சயம் வந்துழி வாளினால்
காய்வு தக்கது அன்றால் கடை காண்டியால்

#182
என்று இறைஞ்சலும் எண்ணி இரங்கினான்
வென்றி அம் தடம் தேரினை மீட்க என
சென்று எதிர்ந்தது தேரும் அ தேர்-மிசை
நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா

#183
கூற்றின் வெம் கணை கோடியின் கோடிகள்
தூற்றினான் வலி மு மடி தோற்றினான்
வேற்று ஓர் வாள் அரக்கன் என வெம்மையால்
ஆற்றினான் செரு கண்டவர் அஞ்சினார்

#184
எல் உண்டாகின் நெருப்பு உண்டு எனும் இது ஒர்
சொல் உண்டாயது-போல் இவன் தோளிடை
வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம் எனா
செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான்

#185
நாரணன் படை நாயகன் உய்ப்புறா
பார் அணங்கினை தாங்குறும் பல் வகை
வாரணங்களை வென்றவன் வார் சிலை
ஆர் அணங்கை இரு துணி ஆக்கினான்

#186
அயன் படைத்த வில் ஆயிரம் பேரினான்
வியன் படைக்கலத்தால் அற்று வீழ்தலும்
உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரும்
பயன் படைத்தனம் பல் கவத்தால் என்றார்

#187
மாறி மாறி வரி சிலை வாங்கினான்
நூறு நூறினொடு ஐ_இருநூறு-அவை
வேறு வேறு திசை உற வெம் கணை
நூறி நூறி இராமன் நுறுக்கினான்

#188
இருப்புலக்கை வேல் தண்டு கோல் ஈட்டி வாள்
நெருப்பு உலக்க வரும் நெடும் கப்பணம்
திரு புலக்க உய்த்தான் திசை யானையின்
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான்

#189
அவை அனைத்தும் அறுத்து அகன் வேலையில்
குவை அனைத்தும் என குவித்தான் குறித்து
இவை அனைத்தும் இவனை வெல்லா எனா
நவை அனைத்தும் துறந்தவன் நாடினான்

#190
கண்ணினுள் மணியூடு கழிந்தன
எண்ணின் நுண் மணலின் பல வெம் கணை
புண்ணினுள் நுழைந்து ஓடிய புந்தியோர்
எண்ணின் நுண்ணிய என் செயல்-பாற்று எனா

#191
நாரணன் திரு உந்தியில் நான்முகன்
பார வெம் படை வாங்கி இ பாதகன்
மாரின் எய்வென் என்று எண்ணி வலித்தனன்
ஆரியன் அவன் ஆவி அகற்றுவான்

#192
முந்தி வந்து உலகு ஈன்ற முதல் பெயர்
அந்தணன் படை வாங்கி அருச்சியா
சுந்தரன் சிலை நாணில் தொடுப்புறா
மந்தரம் புரை தோள் உற வாங்கினான்

#193
புரம் சுட பண்டு அமைந்தது பொன் பணை
மரம் துளைத்தது வாலியை மாய்த்துளது
அரம் சுட சுடர் நெஞ்சன் அரக்கர்_கோன்
உரம் சுட சுடரோன் மகன் உந்தினான்

#194
காலும் வெம் கனலும் கடை காண்கிலா
மாலும் கொண்ட வடி கணை மா முகம்
நாலும் கொண்டு நடந்தது நான்முகன்
மூல மந்திரம் தன்னொடு மூட்டலால்

#195
ஆழி மால் வரைக்கு அப்புறத்து அப்புறம்
பாழி மா கடலும் வெளி பாய்ந்ததால்
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புற
வாழி வெம் சுடர் பேர் இருள் வாரவே

#196
அ கணத்தின் அயன் படை ஆண்தகை
சக்கர படையோடும் தழீஇ சென்று
புக்கது அ கொடியோன் உரம் பூமியும்
திக்கு அனைத்தும் விசும்பும் திரிந்தவே

#197
முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்_நாள்
எ கோடியாராலும் வெலப்படாய் என கொடுத்த வரமும் ஏனை
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் தின்று மார்பில்
புக்கு ஓடி உயிர் பருகி புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி

#198
ஆர்க்கின்ற வானவரும் அந்தணரும் முனிவர்களும் ஆசி கூறி
தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி
தேர் குன்ற இராவணன்-தன் செழும் குருதி பெரும் பரவை திரை-மேல் சென்று
கார்_குன்றம் அனையான் தன் கடும் கணை புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா

#199
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும்
தார் நின்ற மலை-நின்றும் பணி குலமும் மணி குலமும் தகர்ந்து சிந்த
போர் நின்ற விழி-நின்றும் பொறி-நின்று புகையோடும் குருதி பொங்க
தேர்-நின்று நெடு நிலத்து சிரமுகம் கீழ் பட விழுந்தான் சிகரம் போல்வான்

#200
வெம் மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க மனம் அடங்க வினையம் வீய
தெவ் மடங்க பொரு தட கை செயல் அடங்க மயல் அடங்க ஆற்றல் தேய
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா நிலை அடங்க சாய்த்த நாளின்
மு மடங்கு பொலிந்தன அ முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா

#201
பூதலத்தது ஆக்குவாயாக இனி பொலம் தேரை என்ற போதில்
மாதலி பேரவன் கடவ மண் தலத்தின் அ பொழுதே வருதலோடும்
மீது அலைத்த பெரும் தாரை விசும்பு அளப்ப கிடந்தான் தன் மேனி முற்றும்
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான்

#202
தேரினை நீ கொடு விசும்பில் செல்க என்ன மாதலியை செலுத்தி பின்னர்
பாரிடம்-மீதினின் அணுகி தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற
போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடா போர் வீரன் பொருது வீழ்ந்த
சீரினையே மனம் உவப்ப உரு முற்றும் திருவாளன் தெரிய கண்டான்

#203
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன்
சிலை மேவும் கடும் கணையால் படு களத்தே மன தீமை சிதைந்து வீழ்ந்தான்
புலை-மேலும் செலற்கு ஒத்து பொது நின்ற செல்வத்தின் புன்மை தன்மை
நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே

#204
தோடு உழுத நறும் தொடையல் தொகை உழுத கிளை வண்டின் சுழிய தொங்கல்
பாடு உழுத படர் வெரிநின் பணி உழுத அணி நிகர்ப்ப பணை கை யானை
கோடு உழுத நெடும் தழும்பின் குவை தழுவி எழு மேக குழுவின் கோவை
காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தன-போல் கிடக்க கண்டான்

#205
தளிர்_இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன்-தன்
கிளர் இயல் உருவினோடும் கிழிப்புற கிளர்ந்து தோன்றும்
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும் மருவ நின்ற
முளரி அம் கண்ணன் மூரல் முறுவலன் மொழிவதானான்

#206
வென்றியான் உலகம் மூன்றும் மெய்ம்மையால் மேவினாலும்
பொன்றினான் என்று தோளை பொது அற நோக்கும் பொற்பு
குன்றி ஆசுற்றது அன்றே இவன் எதிர் குறித்த போரில்
பின்றியான் முதுகில் பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா

#207
கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான் என்ன கற்கும்
வார்த்தை உண்டு அதனை கேட்டு நாணுறு மனத்தினேற்கு
போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடை தழும்பும் போலாம்
நேர்த்ததும் காணலுற்ற ஈசனார் இருக்கை நிற்க

#208
மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது
ஊண் தொழில் உகந்து தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண
பூண் தொழில் உடைய மார்பா போர் புறங்கொடுத்தோர் போன்ற
ஆண்_தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று என்றான்

#209
அ உரைக்கு இறுதி நோக்கி வீடணன் அருவி கண்ணன்
வெவ் உயிர்ப்போடு நீண்ட விம்மலன் வெதும்பும் நெஞ்சன்
செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ என்னா
எ உயிர் பொறையும் நீங்க இரங்கி நின்று இனைய சொன்னான்

#210
ஆயிரம் தோளினானும் வாலியும் அரிதின் ஐய
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த மெய்ம்மை
தாயினும் தொழ தக்காள்-மேல் தங்கிய காதல் தன்மை
நோயும் நின் முனியும் அல்லால் வெல்வரோ நுவலல்-பாலார்

#211
நாடு உளதனையும் ஓடி நண்ணலார் காண்கிலாமல்
பீடு உள குன்றம் போலும் பெரும் திசை எல்லை யானை
கோடு உளதனையும் புக்கு கொடும் புறத்து எழுந்த புண் கோள்
பாடு உளது அன்றி தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும்

#212
அ பணை அனைத்தும் மார்புக்கு அணி என கிடந்த வீர
கை பணை முழங்க மேல்_நாள் அமரிடை கிடைத்த காலன்
துப்பு அணை வயிர வாளி விசையினும் காலின் தோன்றல்
வெப்பு அணை குத்தினாலும் வெரிநிடை போய அன்றே

#213
அ வடு அன்றி இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன்-வயின் செல்லின் தேவ
வெவ் விடம் ஈசன்-தன்னை விழுங்கினும் பறவை வேந்தை
அ விட நாகம் எல்லாம் அணுகினும் அணுகல் ஆற்றா

#214
வென்றியாய் பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம் ஆண்டு ஓர்
பன்றியாய் எயிற்று கொண்ட பரம்பரன் முதல பல்லோர்
என்று யாம் இடுக்கண் தீர்வது என்கின்றார் இவன் இன்று உன்னால்
பொன்றினான் என்ற போதும் புலப்படார் பொய்-கொல் என்பர்

#215
அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கி
தன்ன தோள் இணையை நோக்கி வீடணா தக்கது அன்றால்
என்னதோ இறந்துளான்-மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்ட
சொன்னது ஓர் விதியினாலே கடன் செய துணிதி என்றான்

38 மண்டோ தரி புலம்புறு படலம்


#1
அ வகை அருளி வள்ளல் அனைத்து உலகங்களோடும்
எ வகை உள்ள தேவர் யாவரும் இரைத்து பொங்கி
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார்-தம்மை காண
செவ்வையின் அவர் முன் சென்றான் வீடணன் இதனை செய்தான்

#2
போழ்ந்து-என அரக்கன் செய்த புன் தொழில் பொறையிற்று ஆமால்
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன
தாழ்ந்தது ஓர் கருணை-தன்னால் தலைமகன் அருள தள்ளி
வீழ்ந்தனன் அவன்-மேல் வீழ்ந்த மலையின்-மேல் மலை வீழ்ந்து-என்ன

#3
ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் இரங்கி ஏங்க
தேவரும் முனிவர்-தாமும் சிந்தையின் இரக்கம் சேர
தா_அரும் பொறையினான்-தன் அறிவினால் தகைய தக்க
ஆவலும் துயரும் தீர அரற்றினான் பகு வாய் ஆர

#4
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர் நீயும் கள பட்டாயே
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனி தான் எண்ணுதியோ எண் இல் ஆற்றல்
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்-தம் பிரளயமே அமரர் கூற்றே

#5
ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல்
தீராத வசை என்றேன் எனை முனிந்த முனிவு ஆறி தேறினாயோ
போர் ஆசைப்பட்டு எழுந்த குலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற
பேர் ஆசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசை கரி இரிய புருவம் பேர்த்தாய்

#6
அன்று எரியில் விழு வேதவதி இவள் காண் உலகுக்கு ஓர் அன்னை என்று
குன்று அனைய நெடும் தோளாய் கூறினேன் அது மனத்துள் கொள்ளாதே போய்
உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே
பொன்றினையே இராகவனார் புய வலியை இன்று அறிந்து போயினாயே

#7
மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும் வரங்கள் ஈந்த
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற
இன்றுதான் உணர்ந்தனையே இராமனார் யாவர்க்கும் இறைவன் ஆதல்

#8
வீர நாடு உற்றாயோ விரிஞ்சனாம் யாவர்க்கும் மேலாம் முன்பன்
பேரன் நாடு உற்றாயோ பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான்

#9
கொல்லாத மைத்துனனை கொன்றாய் என்று அது குறித்து கொடுமை சூழ்ந்து
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பார பழி தீர்ந்தாளோ
நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் நம்பி நம்மோடு
எல்லாரும் பகைஞரே யார் முகத்தே விழிக்கின்றாய் எளியை ஆனாய்

#10
போர்_மகளை கலை_மகளை புகழ்_மகளை தழுவிய கை பொறாமை கூர
சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின்
பேர்_மகளை தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா பின்னை
பார்_மகளை தழுவினையோ திசை யானை பணை இறுத்த பணைத்த மார்பால்

#11
என்று ஏங்கி அரற்றுவான் தனை எடுத்து சாம்பவனும் எண்கின் வேந்தன்
குன்று ஓங்கு நெடும் தோளாய் விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகி
சென்று ஓங்கும் உணர்வினர் போல் தேறாது வருந்துதியோ என்ன தேறி
நின்றான் அப்புறத்து அரக்கன் நிலை கேட்டள் மயன் பயந்த நெடும் கண் பாவை

#12
அனந்தம் நூறு_ஆயிரம் அரக்கர் மங்கைமார்
புனைந்த பூம் குழல் விரித்து அரற்றும் பூசலார்
இனம் தொடர்ந்து உடன் வர ஏகினாள் என்ப
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்

#13
இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு இன் உயிர்
புரக்கும் நன் குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர்
பரக்கழி ஆம் என பரந்து நீண்டதால்
அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே

#14
நூபுரம் புலம்பிட சிலம்பு நொந்து அழ
கோபுரம்-தொறும் புறம் குறுகினார் சிலர்
ஆ புரந்தரன் பகை அற்றது ஆம் எனா
மா புரம் தவிர்ந்து விண் வழி சென்றார் சிலர்

#15
அழைப்பு ஒலி முழக்கு எழ அழகு மின்னிட
குழை பொலி நல் அணி குலங்கள் வில்லிட
உழை பொலி உண் கண் நீர் தாரை மீது உக
மழை பெரும் குலம் என வான் வந்தார் சிலர்

#16
தலை-மிசை தாங்கிய கரத்தர் தாரை நீர்
முலை-மிசை தூங்கிய முகத்தர் மொய்த்து வந்து
அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன்
மலை-மிசை தோள்கள்-மேல் வீழ்ந்து மாழ்கினார்

#17
தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும்
எழு உயர் புயங்களும் மார்பும் எங்கணும்
குழுவினர் முறை முறை கூறு கூறு கொண்டு
அழுதிலர் உயிர்த்திலர் ஆவி நீத்திலார்

#18
வருத்தம் ஏது எனின் அது புலவி வைகலும்
பொருத்தமே வாழ்வு என பொழுது போக்கினார்
ஒருத்தர்-மேல் ஒருத்தர் வீழ்ந்து உயிரின் புல்லினார்
திருத்தமே அனையவன் சிகர தோள்கள்-மேல்

#19
இயக்கியர் அரக்கியர் உரகர் ஏழையர்
மயக்கம் இல் சித்தியர் விஞ்சை மங்கையர்
முயக்கு இயல் முறை கெட முயங்கினார்கள் தம்
துயக்கு இலா அன்பு மூண்டு எவரும் சோரவே

#20
அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை
மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய்_மலர்
திறந்திலை விழித்திலை அருளும் செய்கிலை
இறந்தனையோ என இரங்கி ஏங்கினார்

#21
தரங்க நீர் வேலையில் தடித்து வீழ்ந்து-என
உரம் கிளர் மதுகையான் உரத்தின் வீழ்ந்தனள்
மரங்களும் மலைகளும் உருக வாய் திறந்து
இரங்கினள் மயன் மகள் இனைய பன்னினாள்

#22
அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறு அரக்கர்_வேந்தன்
பின்னேயோ இறப்பது முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ
முன்னேயோ விழுந்ததுவும் முடி தலையோ படி தலைய முகங்கள்-தானோ
என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம்

#23
வெள் எருக்கம் சடை முடியான் வெற்பு எடுத்த திரு மேனி மேலும் கீழும்
எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ
கள் இருக்கும் மலர் கூந்தல் சானகியை மன சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் என கருதி உடல் புகுந்து தடவினவோ ஒருவன் வாளி

#24
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் என திறந்து இ உலகுக்கு அப்பால்
தூரம் போயின ஒருவன் சிலை துரந்த சரங்களே போரில் தோற்று
வீரம் போய் உரம் குறைந்து வரம் குறைந்து வீழ்ந்தானே வேறே கெட்டேன்
ஓர் அம்போ உயிர் பருகிற்று இராவணனை மானுடவன் ஊற்றம் ஈதோ

#25
காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும் அவர்-தம் கற்பும்
ஏந்து புயத்து இராவணனார் காதலும் அ சூர்ப்பணகை இழந்த மூக்கும்
வேந்தர் பிரான் தயரதனார் பணி-தன்னால் வெம் கானில் விரதம் பூண்டு
போந்ததுவும் கடைமுறையே புரந்தரனார் பெரும் தவமாய் போயிற்று அம்மா

#26
தேவர்க்கும் திசை கரிக்கும் சிவனார்க்கும் அயனார்க்கும் செம் கண் மாற்கும்
ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன்
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற
காவற்கும் வலியான் ஓர் மானுடவன் உளன் என்ன கருதினேனோ

#27
அரை கடை இட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு பேர் அறிஞர்க்கேயும்
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும்
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன்

#28
ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்து விண் புக்கார் கண் புக்க வேழ வில்லால்
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே வரத்தினாலே

#29
என்று அழைத்தனள் ஏங்கி எழுந்து அவன்
பொன் தழைத்த பொரு_அரு மார்பினை
தன் தழை கைகளால் தழுவி தனி
நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர் நீங்கினாள்

#30
வான மங்கையர் விஞ்சையர் மற்றும் அ
தான மங்கையரும் தவ பாலவர்
ஆன மங்கையரும் அரும் கற்புடை
மான மங்கையர் தாமும் வழுத்தினார்

#31
பின்னர் வீடணன் பேர் எழில் தம்முனை
வன்னி கூவி வரன்முறையால் மறை
சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து
இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான்

#32
கடன்கள் செய்து முடித்து கணவனோடு
உடைந்து போன மயன் மகளோடு உடன்
அடங்க வெம் கனலுக்கு அவி ஆக்கினான்
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான்

#33
மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து
உற்ற தீ கொடுத்து உண்குறு நீர் உகுத்து
எற்றையோர்க்கும் இவன் அலது இல் எனா
வெற்றி வீரன் குரை கழல் மேவினான்

#34
வந்து தாழ்ந்த துணைவனை வள்ளலும்
சிந்தை வெம் துயர் தீருதி தெள்ளியோய்
முந்தை எய்தும் முறைமை இது ஆம் எனா
அந்தம்_இல் இடர் பாரம் அகற்றினான்

39 வீடணன் முடி சூட்டு படலம்


#1
வருந்தல் நீதி மனு நெறி யாவையும்
பொருந்து கேள்வி புலமையினோய் எனா
அரும் தவ பயனால் அடைந்தாற்கு அறைந்து
இரும் தவத்து இளையோற்கு இது இயம்பினான்

#2
சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று
ஏது இல் வானர வீரரொடு ஏகி நீ
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடு முடி சூட்டுவாய்

#3
என்று கூறி இளவலோடு ஆரையும்
வென்றி வீரன் விடை அருள் வேலையில்
நின்ற தேவர் நெடும் திசையோரொடும்
சென்று தம்தம செய்கை புரிந்தனர்

#4
சூழ் கடல் புனலும் பல் தோயமும்
நீள் முடி தொகையும் பிற நீர்மையும்
பாழி துற்று அரி பற்றிய பீடமும்
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர்

#5
வாச நாள் மலரோன் சொல மான்முகன்
காசும் மா நிதியும் கொடு கங்கை சூடு
ஈசனே முதலோர் வியந்து ஏத்திட
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன்

#6
மெய் கொள் வேத விதி முறை விண்ணுளோர்
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட
ஐயன் ஆணையினால் இளம் கோளரி
கையினால் மகுடம் கவித்தான்-அரோ

#7
கரிய குன்று கதிரினை சூடி ஓர்
எரி மணி தவிசில் பொலிந்து-என்னவே
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு
அரியணை பொலிந்தான் தமர் ஆர்த்து எழ

#8
தேவர் பூ_மழை சித்தர் முதலினோர்
மேவு காதல் விரை மலர் வேறு இலா
மூவரோடு முனிவர் மற்று யாவரும்
நாவில் ஆசி நறை மலர் தூவினார்

#9
முடி புனைந்த நிருதர் முதலவன்
அடி வணங்கி இளவலை ஆண்டை அ
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து
இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினான்

#10
விலங்கல் நாண மிடைதரு தோளினாய்
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை நீ
கலங்கலா நெடும் காவல் இயற்று எனா
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான்

#11
குரக்கு வீரன் அரசு இளம் கோளரி
அரக்கர்_கோமகனோடு அடி தாழ்தலும்
பொருக்கென புகல் புக்கவன் புல்லி அ
திரு கொள் மார்பன் இனையன செப்பினான்

#12
உரிமை மூ_உலகும் தொழ உம்பர்-தம்
பெருமை நீதி அறன் வழி பேர்கிலாது
இருமையே அரசாளுதி ஈறு இலா
தரும சீல என்றான் மறை தந்துளான்

#13
பன்னும் நீதிகள் பல் பல கூறி மற்று
உன்னுடை தமரோடு உயர் கீர்த்தியோய்
மன்னி வாழ்க என்று உரைத்து அடல் மாருதி
தன்னை நோக்கினன் தாயர் சொல் நோக்கினான்

40 பிராட்டி திருவடி தொழுத படலம்


#1
இ புறத்து இன எய்துறு காலையில்
அ புறத்ததை உன்னி அனுமனை
துப்பு உற செய்ய வாய் மணி தோகை-பால்
செப்புறு இப்படி போய் என செப்பினான்

#2
வணங்கி அந்தம்_இல் மாருதி மா மலர்
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என
கணங்கு தோய் முலையாட்கு இவை சொல்லுவான்

#3
ஏழை சோபனம் ஏந்து_இழை சோபனம்
வாழி சோபனம் மங்கல சோபனம்
ஆழி ஆன அரக்கனை ஆரிய
சூழி யானை துகைத்தது சோபனம்

#4
பாடினான் திரு நாமங்கள் பல் முறை
கூடு சாரியில் குப்புற்று கூத்து நின்று
ஆடி அங்கை இரண்டும் அலங்குற
சூடி நின்றனன் குன்று அன்ன தோளினான்

#5
தலை கிடந்தன தாரணி தாங்கிய
மலை கிடந்தன போல் மணி தோள் நிரை
அலை கிடந்து-என ஆழி கிடந்தன
நிலை கிடந்தது உடல் நிலத்தே என்றான்

#6
அண்ணல் ஆணையின் வீடணனும் மற
கண் இலாதவன் காதல் தொடர்தலால்
பெண் அலாது பிழைத்துளதாகும் என்று
எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால் என்றான்

#7
ஒரு கலை தனி ஒண் மதி நாளொடும்
வரு கலைக்குள் வளர்வது மானுற
பொரு கலை குலம் பூத்தது போன்றனள்
பருகல் உற்ற அமுது பயந்த நாள்

#8
ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட
தேம்பும் நுண் இடை நோவ திரள் முலை
ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள்
பாம்பு கான்ற பனி மதி பான்மையாள்

#9
புந்தி ஓங்கும் உவகை பொருமலோ
உந்தி ஓங்கும் ஒளி வளை தோள்-கொலோ
சிந்தி ஓடு கலையுடை தேர்-கொலோ
முந்தி ஓங்கின யாவை முலை-கொலோ

#10
குனித்த கோல புருவங்கள் கொம்மை வேர்
பனித்த கொங்கை மழலை பணி_மொழி
நுனித்தது ஒன்று நுவல்வது ஒன்று ஆயினாள்
கனித்த இன் களி கள்ளினின் காட்டுமோ

#11
அனையள் ஆகி அனுமனை நோக்கினாள்
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர்
நினைவு இலாது நெடிது இருந்தாள் நெடு
மனையின் மாசு துடைத்த மனத்தினாள்

#12
யாது இதற்கு ஒன்று இயம்புவல் என்பது
மீது உயர்ந்த உவகையின் விம்மலோ
தூது பொய்க்கும் என்றோ என சொல்லினான்
நீதி வித்தகன் நங்கை நிகழ்த்தினாள்

#13
மேக்கு நீங்கிய வெள்ள உவகையால்
ஏக்கமுற்று ஒன்று இயம்புவது யாது என
நோக்கி நோக்கி அரிது என நொந்துளேன்
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ

#14
முன்னை நீக்குவென் மொய் சிறை என்ற நீ
பின்னை நீக்கி உவகையும் பேசினை
என்ன பேற்றினை ஈகுவது என்பதை
உன்னி நோக்கி உரை மறந்து ஓவினேன்

#15
உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும் உன்னினென் மேல் அவை
நிலை இலாமை நினைந்தனென் நின்னை என்
தலையினால் தொழவும் தகும் தன்மையோய்

#16
ஆதலான் ஒன்று உதவுதல் ஆற்றலேன்
யாது செய்வது என்று எண்ணி இருந்தனென்
வேத நல் மணி வேகடம் செய்து அன்ன
தூத என் இனி செய் திறம் சொல் என்றாள்

#17
எனக்கு அளிக்கும் வரம் எம்பிராட்டி நின்
மன களிக்கு மற்று உன்னை அம் மானவன்
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ
புன களி குல மா மயில் போன்றுளாய்

#18
என உரைத்து திரிசடையாள் எம் மோய்
மனவினில் சுடர் மா முக மாட்சியாள்
தனை ஒழித்து இல் அரக்கியர்-தங்களை
வினையினில் சுட வேண்டுவென் யான் என்றான்

#19
உரை அலா உரை உன்னை உரைத்து உராய்
விரைய ஓடி விழுங்குவம் என்றுளார்
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து
இரை செய்வேன் மறலிக்கு இனி என்னுமால்

#20
குடல் குறைத்து குருதி குடித்து இவர்
உடல் முருக்கியிட்டு உண்குவென் என்றலும்
அடல் அரக்கியர் அன்னை நின் பாதமே
விடலம் மெய் சரண் என்று விளம்பலும்

#21
அன்னை அஞ்சன்-மின் அஞ்சன்-மின் நீர் எனா
மன்னும் மாருதி மா முகம் நோக்கி வேறு
என்ன தீமை இவர் இழைத்தார் அவன்
சொன்ன சொல்லினது அல்லது தூய்மையோய்

#22
யான் இழைத்த வினையினின் இ இடர்
தான் அடுத்தது தாயினும் அன்பினோய்
கூனியின் கொடியார் அலரே இவர்
போன அ பொருள் போற்றலை புந்தியோய்

#23
எனக்கு நீ அருள் இ வரம் தீவினை
தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர்
மனக்கு நோய் செயல் என்றனள் மா மதி-தனக்கு
மா மறு தந்த முகத்தினாள்

#24
என்ற போதின் இறைஞ்சினன் எம்பிரான்
தன் துணை பெரும் தேவி தயா எனா
நின்ற காலை நெடியவன் வீடண
சென்று தா நம் தேவியை சீரொடும்

#25
என்னும் காலை இருளும் வெயிலும் கால்
மின்னும் மோலி இயற்கைய வீடணன்
உன்னும் காலை கொணர்வென் என்று ஓத அ
பொன்னின் கால் தளிர் சூடினன் போற்றினான்

#26
வேண்டிற்று முடிந்தது அன்றே வேதியர் தேவன் நின்னை
காண்டற்கு விரும்புகின்றான் உம்பரும் காண வந்தார்
பூண் தக்க கோலம் வல்லை புனைந்தனை வருத்தம் போக்கி
ஈண்ட கொண்டு அணைதி என்றான் எழுந்தருள் இறைவி என்றான்

#27
யான் இவண் இருந்த தன்மை இமையவர் குழுவும் எங்கள்
கோனும் அ முனிவர்-தங்கள் கூட்டமும் குலத்துக்கு ஏற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி
மேல் நினை கோலம் கோடல் விழுமியது அன்று வீர

#28
என்றனள் இறைவி கேட்ட இராக்கதர்க்கு இறைவன் நீல
குன்று அன தோளினான்-தன் பணியினின் குறிப்பு இது என்றான்
நன்று என நங்கை நேர்ந்தாள் நாயக கோலம் கொள்ள
சென்றனர் வான நாட்டு திலோத்தமை முதலோர் சேர

#29
மேனகை அரம்பை மற்றை உருப்பசி வேறும் உள்ள
வானக நாட்டு மாதர் யாரும் மஞ்சனத்துக்கு ஏற்ற
நான நெய் ஊட்ட பட்ட நவை இல கலவை தாங்கி
போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கி புக்கார்

#30
காணியை பெண்மைக்கு எல்லாம் கற்பினுக்கு அணியை பொற்பின்
ஆணியை அமிழ்தின் வந்த அமிழ்தினை அறத்தின் தாயை
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன
வேணியை அரம்பை மெல்ல விரல் முறை சுகிர்ந்து விட்டாள்

#31
பாகு அடர்ந்து அமுது பில்கும் பவள வாய் தரள பத்தி
சேகு அற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை
வேகடம் செய்யுமா-போல் மஞ்சன விதியின் வேதத்து
ஓகை மங்கலங்கள் பாடி ஆட்டினர் உம்பர் மாதர்

#32
உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டது-என்ன
மரு விளை கலவை ஊட்டி குங்குமம் முலையின் ஆட்டி
கரு விளை மலரின் காட்சி காசு அறு தூசு காமன்
திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவ செய்தார்

#33
சந்திரன் தேவிமாரின் தகை உறு தரள பைம் பூண்
இந்திரன் தேவிக்கு ஏற்ப இயைவன பூட்டி யாணர்
சிந்துர பவள செ வாய் தேம் பசும் பாகு தீற்றி
மந்திரத்து அயினி நீரால் வலம்செய்து காப்பும் இட்டார்

#34
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து-என்ன மானம்
கொண்டனர் ஏற்றி வான மடந்தையர் தொடர்ந்து கூட
உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட
அண்டர் நாயகன்-பால் அண்ணல் வீடணன் அருளின் சென்றான்

#35
இ புறத்து இமையவர் முனிவர் ஏழையர்
துப்பு உற சிவந்த வாய் விஞ்சை தோகையர்
மு புறத்து உலகினும் எண்ணில் முற்றினோர்
ஒப்புற குவிந்தனர் ஓகை கூறுவார்

#36
அரும் குல கற்பினுக்கு அணியை அண்மினார்
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய்
நெருங்கினர் நெருங்குழி நிருதர் ஓச்சலால்
கரும் கடல் முழக்கு என பிறந்த கம்பலை

#37
அ வழி இராமனும் அலர்ந்த தாமரை
செவ்வி வாள் முகம்-கொடு செயிர்த்து நோக்குறா
இ ஒலி யாவது என்று இயம்ப இற்று எனா
கவ்வை_இல் முனிவரர் கழறினார்-அரோ

#38
முனிவரர் வாசகம் கேட்புறாத-முன்
நனி இதழ் துடித்திட நகைத்து வீடணன்
தனை எழ நோக்கி நீ தகாத செய்தியோ
புனித நூல் கற்று உணர் புந்தியோய் என்றான்

#39
கடும் திறல் அமர் களம் காணும் ஆசையால்
நெடும் திசை தேவரும் நின்ற யாவரும்
அடைந்தனர் உவகையின் அடைகின்றார்களை
கடிந்திட யார் சொனார் கருது நூல் வலாய்

#40
பரசுடை கடவுள் நேமி பண்ணவன் பதுமத்து அண்ணல்
அரசுடை தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ
கரை செயற்கு அரிய தேவர் ஏனையோர் கலந்து காண்பான்
விரசுறின் விலக்குவாரோ வேறு உளார்க்கு என்-கொல் வீர

#41
ஆதலான் அரக்கர்_கோவே அடுப்பது அன்று உனக்கும் இன்னே
சாதுகை மாந்தர்-தம்மை தடுப்பது என்று அருளி செம் கண்
வேதநாயகன் தான் நிற்ப வெய்து உயிர்த்து அலக்கண் எய்தி
கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன் குணங்கள் தூயோன்

#42
அருந்ததி அனைய நங்கை அமர் களம் அணுகி ஆடல்
பருந்தொடு கழுகும் பேயும் பசி பிணி தீருமாறு
விருந்திடு வில்லின் செல்வன் விழா அணி விரும்பி நோக்கி
கரும் தடம் கண்ணும் நெஞ்சும் களித்திட இனைய சொன்னாள்

#43
சீலமும் காட்டி என் கணவன் சேவக
கோலமும் காட்டி என் குலமும் காட்டி இ
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறா
காலமும் காட்டும்-கொல் என்தன் கற்பு என்றாள்

#44
எச்சில் என் உடல் உயிர் ஏகிற்றே இனி
நச்சு இலை என்பது ஓர் நவை_இலாள் எதிர்
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய்
கை சிலை ஏந்தி நின்றானை கண்ணுற்றாள்

#45
மான-மீது அரம்பையர் சூழ வந்துளாள்
போன பேர் உயிரினை கண்ட பொய் உடல்
தான் அது கவர்வுறும் தன்மைத்து ஆம் எனல்
ஆனனம் காட்டுற அவனி எய்தினாள்

#46
பிறப்பினும் துணைவனை பிறவி பேர் இடர்
துறப்பினும் துணைவனை தொழுது நான் இனி
மறப்பினும் நன்று இனி மாறு வேறு வீழ்ந்து
இறப்பினும் நன்று என ஏக்கம் நீங்கினாள்

#47
கற்பினுக்கு அரசினை பெண்மை காப்பினை
பொற்பினுக்கு அழகினை புகழின் வாழ்க்கையை
தன் பிரிந்து அருள் புரி தருமம் போலியை
அற்பின் அ தலைவனும் அமைய நோக்கினான்

#48
கணங்கு உறு துணை முலை முன்றில் தூங்கிய
அணங்கு உறு நெடும் கணீர் ஆறு பாய்தர
வணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை
பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா

#49
ஊண் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண்
மீண்டது என் நினைவு எனை விரும்பும் என்பதோ

#50
உன்னை மீட்பான்-பொருட்டு உவரி தூர்த்து ஒளிர்
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேரற
பின்னை மீட்டு உறு பகை கடந்திலேன் பிழை
என்னை மீட்பான்-பொருட்டு இலங்கை எய்தினேன்

#51
மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை
அருந்தினையே நறவு அமைய உண்டியே
இருந்தனையே இனி எமக்கும் ஏற்பன
விருந்து உளவோ உரை வெறுமை நீங்கினாய்

#52
கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு
நலத்தின் நின் பிறந்தன நடந்த நன்மை சால்
குலத்தினில் பிறந்திலை கோள் இல் கீடம்-போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய்-அரோ

#53
பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்
திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்

#54
அடைப்பர் ஐம் புலன்களை ஒழுக்கம் ஆணியா
சடை பரம் புனைந்து ஒளிர் தகையின் மா தவம்
படைப்பர் வந்து இடை ஒரு பழி வந்தால் அது
துடைப்பர் தம் உயிரொடும் குலத்தின் தோகைமார்

#55
யாது யான் இயம்புவது உணர்வை ஈடு அற
சேதியாநின்றது உன் ஒழுக்க செய்தியால்
சாதியால் அன்று எனின் தக்கது ஓர் நெறி
போதியால் என்றனன் புலவர் புந்தியான்

#56
முனைவரும் அமரரும் மற்றும் முற்றிய
நினைவு_அரு மகளிரும் நிருதர் என்று உளார்
எனைவரும் வானரத்து எவரும் வேறு உளார்
அனைவரும் வாய் திறந்து அரற்றினார்-அரோ

#57
கண் இணை உதிரமும் புனலும் கான்று உக
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்
புண்ணினை கோல் உறுத்து அனைய பொம்மலால்
உள் நினைப்பு ஓவி நின்று உயிர்ப்பு வீங்கினாள்

#58
பருந்து அடர் சுரத்திடை பருகு நீர் நசை
வருந்து அரும் துயரினால் மாளலுற்ற மான்
இரும் தடம் கண்டு அதின் எய்துறா-வகை
பெரும் தடை உற்று-என பேதுற்றாள்-அரோ

#59
உற்று நின்று உலகினை நோக்கி ஓடு அரி
முற்றுறு நெடும் கண் நீர் ஆலி மொய்த்து உக
இற்றது போலும் யான் இருந்து பெற்ற பேறு
உற்றதால் இன்று அவம் என்று என்று ஓதுவாள்

#60
மாருதி வந்து எனை கண்டு வள்ளல் நீ
சாருதி ஈண்டு என சமைய சொல்லினான்
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ
சோரும் என் நிலை அவன் தூதும் அல்லனோ

#61
எ தவம் எ நலம் என்ன கற்பு நான்
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்
பித்து எனல் ஆய் அறம் பிழைத்ததாம் அன்றே
உத்தம நீ மனத்து உணர்ந்திலாமையால்

#62
பார்க்கு எலாம் பத்தினி பதுமத்தானுக்கும்
பேர்க்கல் ஆம் சிந்தையள் அல்லள் பேதையேன்
ஆர்க்கு எலாம் கண்ணவன் அன்று என்றால் அது
தீர்க்கல் ஆம் தகையது தெய்வம் தேறுமோ

#63
பங்கயத்து ஒருவனும் விடையின் பாகனும்
சங்கு கை தாங்கிய தருமமூர்த்தியும்
அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும்
மங்கையர் மன நிலை உணர வல்லரோ

#64
ஆதலின் புறத்து இனி யாருக்காக என்
கோது அறு தவத்தினை கூறி காட்டுகேன்
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே
வேத நின் பணி அது விதியும் என்றனள்

#65
இளையவன்-தனை அழைத்து இடுதி தீ என
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களைகணை தொழ அவன் கண்ணின் கூறினான்

#66
ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன்
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும்
ஆங்கு எரி விதி முறை அமைவித்தான் அதன்
பாங்குற நடந்தனள் பதும போதினாள்

#67
தீயிடை அருகுற சென்று தேவர்க்கும்
தாய் தனி குறுகலும் தரிக்கிலாமையால்
வாய் திறந்து அரற்றின மறைகள் நான்கொடும்
ஓய்வு இல் நல் அறமும் மற்று உயிர்கள் யாவையும்

#68
வலம்வரும் அளவையில் மறுகி வான் முதல்
உலகமும் உயிர்களும் ஓலமிட்டன
அலம்வரல் உற்றன அலறி ஐய இ
சலம் இது தக்கிலது என்ன சாற்றின

#69
இந்திரன் தேவியர் முதல ஏழையர்
அந்தர வானின்-நின்று அரற்றுகின்றவர்
செம் தளிர் கைகளால் சேயரி பெரும்
சுந்தர கண்களை எற்றி துள்ளினார்

#70
நடுங்கினர் நான்முகன் முதல நாயகர்
படம் குறைந்தது படி சுமந்த பாம்பு வாய்
விடம் பரந்துளது என வெதும்பிற்றால் உலகு
இடம் திரிந்தன சுடர் கடல்கள் ஏங்கின

#71
கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின்
சினத்தினால் சுடுதியால் தீ செல்வா என்றாள்
புன துழாய் கணவற்கும் வணக்கம் போக்கினாள்

#72
நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் என
பாய்ந்தனள் பாய்தலும் பாவின் பஞ்சு என
தீந்தது அ எரி அவள் கற்பின் தீயினால்

#73
அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து
எழுந்தனன் அங்கி வெந்து எரியும் மேனியான்
தொழும் கர துணையினன் சுருதி ஞானத்தின்
கொழுந்தினை பூசலிட்டு அரற்றும் கொள்கையான்

#74
ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும்
வாடிய இல்லையால் உணர்த்துமாறு உண்டோ
பாடிய வண்டொடும் பனித்த தேனொடும்
சூடின மலர்கள் நீர் தோய்த்த போன்றவால்

#75
திரிந்தன உலகமும் செவ்வன நின்றன
பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல்
புரிந்தனர் நாணமும் பொறையும் நீங்கினார்

#76
கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் தீயினால்
நினைந்திலை என் வலி நீக்கினாய் என
அநிந்தனை அங்கி நீ அயர்வு இல் என்னையும்
முனிந்தனை ஆம் என முறையிட்டான்-அரோ

#77
இன்னது ஓர் காலையில் இராமன் யாரை நீ
என்னை நீ இயம்பியது எரியுள் தோன்றி இ
புன்மை சால் ஒருத்தியை சுடாது போற்றினாய்
அன்னது ஆர் சொல்ல ஈது அறைதியால் என்றான்

#78
அங்கி யான் என்னை இ அன்னை கற்பு எனும்
பொங்கு வெம் தீ சுட பொறுக்கிலாமையால்
இங்கு அணைந்தேன் எனது இயற்கை நோக்கியும்
சங்கியாநிற்றியோ எவர்க்கும் சான்றுளாய்

#79
வேட்பதும் மங்கையர் விலங்கினார்-எனின்
கேட்பதும் பல் பொருட்கு ஐயம் கேடு அற
மீட்பதும் என்-வயின் என்னும் மெய்ப்பொருள்
வாள் பெரும் தோளினாய் மறைகள் சொல்லுமால்

#80
ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇ
கையுறு நெல்லி அம் கனியின் காட்டும் என்
மெய்யுறு கட்டுரை கேட்டும் மீட்டியோ
பொய் உறா மாருதி உரையும் போற்றலாய்

#81
தேவரும் முனிவரும் திரிவ நிற்பவும்
மூ-வகை உலகமும் கண்கள் மோதி நின்று
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டு கொண்டியோ

#82
பெய்யுமே மழை புவி பிளப்பது அன்றியே
செய்யுமே பொறை அறம் நெறியில் செல்லுமே
உய்யுமே உலகு இவள் உணர்வு சீறினால்
வையுமேல் மலர்-மிசை அயனும் மாயுமே

#83
பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று
ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ
சூடு உறும் மேனிய அலரி தோகையை
மாடு உற கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான்

#84
அழிப்பு இல சான்று நீ உலகுக்கு ஆதலால்
இழிப்பு இல சொல்லி நீ இவளை யாதும் ஓர்
பழிப்பு இலள் என்றனை பழியும் இன்று இனி
கழிப்பிலள் என்றனன் கருணை உள்ளத்தான்

#85
உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று காலம் வந்துளதால்
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று அவை உணரா
இணர் துழாய் தொங்கல் இராமற்கு என்று இமையவர் இசைப்ப
தணப்பு இல் தாமரை சதுமுகன் உரை-செய சமைந்தான்

#86
மன்னர் தொல் குலத்து அவதரித்தனை ஒரு மனிதன்
என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை
சொன்ன நான்மறை முடிவினில் துணிந்த மெய் துணிவு
நின் அலாது இல்லை நின்னின் வேறு உளது இலை நெடியோய்

#87
பகுதி என்று உளது யாதினும் பழையது பயந்த
விகுதியால் வந்த விளைவு மற்று அதற்கு-மேல் நின்ற
புகுதி யாவர்க்கும் அரிய அ புருடனும் நீ இ
மிகுதி உன் பெரு மாயையினால் வந்த வீக்கம்

#88
முன்பு பின்பு இரு புடை எனும் குணிப்பு அரு முறைமை
தன் பெரும் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள்
மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம்
அன்ப நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா

#89
எனக்கும் எண் வகை ஒருவற்கும் இமையவர்க்கு இறைவன்
தனக்கும் பல் பெரு முனிவர்க்கும் உயிருடன் தழீஇய
அனைத்தினுக்கும் நீயே பரம் என்பதை அறிந்தார்
வினை துவக்குடை வீட்ட_அரும் தளை நின்று மீள்வார்

#90
என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும்
முன்னை தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி
தன்னை தான் அறியாமையின் சலிப்ப அ சலம் தீர்ந்து
உன்னை தாதை என்று உணர்குவ முத்தி வித்து ஒழிந்த

#91
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின்
மெய் எஞ்சா-வகை மேல் நின்ற நினக்குமேல் யாதும்
பொய் எஞ்சா இலது என்னும் ஈது அரு மறை புகலும்
வையம் சான்று இனி சான்றுக்கு சான்று இலை வழக்கால்

#92
அளவையால் அளந்து ஆம் அன்று என்று அறிவுறும் அமைதி
உளவை யாவையும் உனக்கு இல்லை உபநிடத்து உனது
களவை ஆய்ந்து உற தெளிந்திலது ஆயினும் கண்ணால்
துளவை ஆய் முடியாய் உளை நீ என துணியும்

#93
அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல்
கரணம் அ அறிவை கடந்து அகல்வு அரிது ஆக
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன்
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை அன்னவை தவிர்ப்பான்

#94
தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை நின்-கணே தோற்றும்
ஆற்றல் சால் முதல் பகுதி மற்று அதனுள் ஆம் பண்பால்
காற்றை முன்னுடை பூதங்கள் அவை சென்று கடைக்கால்
வீற்று வீற்று உற்று வீவுறும் நீ என்றும் விளியாய்

#95
மின்னை காட்டுதல் போல் வந்து விளியும் இ உலகம்
தன்னை காட்டவும் தருமத்தை நாட்டவும் தனியே
என்னை காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கும்
உன்னை காட்டலை ஒளிக்கின்றும் இலை மறை உரையால்

#96
என் உரு கொடு இல் உலகினை ஈனுதி இடையே
உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி உமை_கோன்
தன் உருக்கொடு துடைத்தி மற்று இது தனி அருக்கன்
முன் உருக்கொடு பகல் செயும் தரத்தது முதலாய்

#97
ஓங்கார பொருள் தேருவோர்தாம் உனை உணர்வோர்
ஓங்கார பொருள் என்று உணர்ந்து இரு வினை உகுப்போர்
ஓங்கார பொருள் ஆம் அன்று என்று ஊழி சென்றாலும்
ஓங்கார பொருளே பொருள் என்கலா உரவோர்

#98
இனையது ஆகலின் எம்மை மூன்று உலகையும் ஈன்று இ
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா
முனையல் என்று அது முடித்தனன் முந்து நீர் முளைத்த
சிலையின் பந்தமும் பகுதிகள் அனைத்தையும் செய்தோன்

#99
என்னும் மாத்திரத்து ஏறு அமர் கடவுளும் இசைத்தான்
உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால் உரவோய்
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ மூ-வகை உலகின்
அன்னை சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள்

#100
துறக்கும் தன்மையள் அல்லளால் தொல்லை எ உலகும்
பிறக்கும் பொன் வயிற்று அன்னை இ பெய்வளை பிழைக்கின்
இறக்கும் பல் உயிர் இறைவ நீ இவள் திறத்து இகழ்ச்சி
மறக்கும் தன்மையது என்றனன் மழுவலான் வழுத்தி

#101
பின்னும் நோக்கினான் பெரும் தகை புதல்வனை பிரிந்த
இன்னலால் உயிர் துறந்து இரும் துறக்கத்துள் இருந்த
மன்னவன் சென்று கண்டு நின் மைந்தனை தெருட்டி
முன்னை வன் துயர் நீக்குதி மொய்ம்பினோய் என்றான்

#102
ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன்
காதல் மைந்தனை காணிய உவந்தது ஓர் கருத்தால்
பூதலத்திடை புக்கனன் புகுதலும் பொரு இல்
வேத வேந்தனும் அவன் மலர் தாள் மிசை விழுந்தான்

#103
வீழ்ந்த மைந்தனை எடுத்து தன் விலங்கல் ஆகத்தின்
ஆழ்ந்து அழுந்திட தழுவி கண் அருவி நீராட்டி
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற மன்னன்
போழ்ந்த துன்பங்கள் புறப்பட நின்று இவை புகன்றான்

#104
அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல்
இன்று-காறும் என் இதயத்தினிடை நின்றது என்னை
கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குல பூண்
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க

#105
மைந்தரை பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார்
சுந்தர பெரும் தோளினாய் என் துணை தாளின்
பைம் துகள்களும் ஒக்கிலர் ஆம் என படைத்தாய்
உய்ந்தவர்க்கு அரும் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன்

#106
பண்டு நான் தொழும் தேவரும் முனிவரும் பாராய்
கண்டு கண்டு எனை கைத்தலம் குவிக்கின்ற காட்சி
புண்டரீகத்து புராதனன் தன்னொடும் பொருந்தி
அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை அழக

#107
என்று மைந்தனை எடுத்து எடுத்து இறுகுற தழுவி
குன்று போன்று உள தோளினான் சீதையை குறுக
தன் துணை கழல் வணங்கலும் கருணையால் தழுவி
நின்று மற்று இவை நிகழ்த்தினான் நிகழ்த்த அரும் புகழோன்

#108
நங்கை மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட
அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல்
சங்கை உற்றவர் தேறுவது உண்டு அது சரதம்
கங்கை நாடுடை கணவனை முனிவுற கருதேல்

#109
பொன்னை தீயிடை பெய்வது அ பொன்னுடை தூய்மை
தன்னை காட்டுதற்கு என்பது மன கொளல் தகுதி
உன்னை காட்டினன் கற்பினுக்கு அரசி என்று உலகில்
பின்னை காட்டுவது அரியது என்று எண்ணி இ பெரியோன்

#110
பெண் பிறந்தவர் அருந்ததியே முதல் பெருமை
பண்பு இறந்தவர்க்கு அரும் கலம் ஆகிய பாவாய்
மண் பிறந்தகம் உனக்கு நீ வான் நின்றும் வந்தாய்
எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால்

#111
என்ன சொல்லி அ ஏந்து_இழை திரு மனத்து யாதும்
உன்ன செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான்
பின்னை செம்மல் அ இளவலை உள் அன்பு பிணிப்ப
தன்னை தான் என தழுவினன் கண்கள் நீர் ததும்ப

#112
கண்ணின் நீர் பெரும் தாரை மற்று அவன் சடை கற்றை
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர தழீஇ நின்று மைந்த
எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த
புண்ணும் நீக்கினை தமையனை தொடர்ந்து உடன் போந்தாய்

#113
புரந்தான் பெரும் பகைஞனை போர் வென்ற உன் தன்
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும்
நிரந்தரம் புகல்கின்றது நீ இந்த உலகின்
அரந்தை வெம் பகை துடைத்து அறம் நிறுத்தினை ஐய

#114
என்று பின்னரும் இராமனை யான் உனக்கு ஈவது
ஒன்று கூறுதி உயர் குணத்தோய் என உனை யான்
சென்று வானிடை கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன்
இன்று காண பெற்றேன் இனி பெறுவது என் என்றான்

#115
ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று உரை என அழகன்
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக என தாழ்ந்தான்
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம் வழுத்தி

#116
வரத கேள் என தயரதன் உரை செய்வான் மறு இல்
பரதன் அன்னது பெறுக தான் முடியினை பறித்து இ
விரத வேடம் மற்று உதவிய பாவி-மேல் விளிவு
சரதம் நீங்கலதாம் என்றான் தழீஇய கை தளர

#117
ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை
வான் பிழைக்கு இது முதல் எனாது ஆள்வுற மதித்து
யான் பிழைத்தது அல்லால் என்னை ஈன்ற எம் பிராட்டி
தான் பிழைத்தது உண்டோ என்றான் அவன் சலம் தவிர்ந்தான்

#118
எ வரங்களும் கடந்தவன் அ பொருள் இசைப்ப
தெவ் வரம்பு அறு கானிடை செலுத்தினாட்கு ஈந்த
அ வரங்களும் இரண்டு அவை ஆற்றினாற்கு ஈந்த
இ வரங்களும் இரண்டு என்றார் தேவரும் இரங்கி

#119
வரம் இரண்டு அளித்து அழகனை இளவலை மலர்-மேல்
விரவு பொன்னினை மண்ணிடை நிறுத்தி விண்ணிடையே
உரவு மானம் மீது ஏகினன் உம்பரும் உலகும்
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து உறு புகழ் படைத்தோன்

#120
கோட்டு வார் சிலை குரிசிலை அமரர்-தம் குழாங்கள்
மீட்டும் நோக்குறா வீர நீ வேண்டுவ வரங்கள்
கேட்டியால் என அரக்கர்கள் கிளர் பெரும் செருவில்
வீட்ட மாண்டுள குரங்கு எலாம் எழுக என விளம்பி

#121
பின்னும் ஓர் வரம் வானர பெரும் கடல் பெயர்ந்து
மன்னு பல் வனம் மால் வரை குலங்கள் மற்று இன்ன
துன் இடங்கள் காய் கனி கிழங்கோடு தேன் துற்ற
இன் உண் நீர் உளவாக என இயம்பிடுக என்றான்

#122
வரம் தரும் முதல் மழுவலான் முனிவரர் வானோர்
புரந்தராதி மற்று ஏனையோர் தனி தனி புகழ்ந்து ஆங்கு
அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக நினது அருளால்
குரங்கு_இனம் பெறுக என்றனர் உள்ளமும் குளிர்ப்பார்

#123
முந்தை_நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த
அந்த வானரம் அடங்கலும் எழுந்து உடன் ஆர்த்து
சிந்தையோடு கண் களிப்புற செரு எலாம் நினையா
வந்து தாமரை கண்ணனை வணங்கின மகிழ்ந்து

#124
கும்பகன்னனோடு இந்திரசித்து வெம் குல போர்
வெம்பு வெம் சினத்து இராவணன் முதலிய வீரர்
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப
உம்பர் யாவரும் இராமனை பார்த்து இவை உரைத்தார்

#125
இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து எயில் இலங்கை
புடை அவாவுற சேனையை வளைப்பு உற போக்கி
படை அவாவுறும் அரக்கர்-தம் குலம் முற்றும் படுத்து
கடை உவாவினில் இராவணன் தன்னையும் சுட்டு

#126
வஞ்சர் இல்லை இ அண்டத்தின் எனும் படி மடித்த
கஞ்ச நாள்_மலர் கையினாய் அன்னை சொல் கடவா
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த
பஞ்சமி பெயர் படைத்துள திதி இன்று பயந்த

#127
இன்று சென்று நீ பரதனை எய்திலை என்னின்
பொன்றுமால் அவன் எரியிடை அன்னது போக்க
வென்றி வீர போதியால் என்பது விளம்பா
நின்ற தேவர்கள் நீங்கினார் இராகவன் நினைந்தான்

41 மீட்சி படலம்


#1
ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும்-ஆயின்
மாண்டதாம் இனி என் குலம் பரதனே மாயின்
ஈண்டு போக ஓர் ஊர்தி உண்டோ என இன்றே
தூண்டு மானம் உண்டு என்று அடல் வீடணன் தொழுதான்

#2
இயக்கர் வேந்தனுக்கு அரு மறை கிழவன் அன்று ஈந்த
துயக்கு இலாதவர் மனம் என தூயது சுரர்கள்
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு என்றே
மயக்கு_இலான் சொல கொணருதி வல்லையின் என்றான்

#3
அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து ஆயிரம் அருக்கர்
விண்டது ஆம் என விசும்பிடை திசை எலாம் விளங்க
கண்டை ஆயிர கோடிகள் மழை என கலிப்ப
கொண்டு அணைந்தனன் நொடியினின் அரக்கர்-தம்_கோமான்

#4
அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு இனி நம்
வினையம் முற்றியது என்று கொண்டு ஏறினன் விண்ணோர்
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர் ஆசிகள் புகன்றே

#5
வணங்கு நுண் இடை திரிசடை வணங்க வான் கற்பிற்கு
இணங்கர் இன்மையாள் நோக்கி ஓர் இடர் இன்றி இலங்கைக்கு
அணங்குதான் என இருத்தி என்று ஐயன்-மாட்டு அணைந்தாள்
மணம் கொள் வேல் இளம் கோளரி மானம் மீ படர்ந்தான்

#6
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து அனிலன்
சண்ட வேகமும் குறைதர நினைவு எனும் தகைத்தாய்
விண்தலம் திகழ் புட்பக விமானமாம் அதன்-மேல்
கொண்ட கொண்டல் தன் துணைவரை பார்த்து இவை குணித்தான்

#7
வீடணன்-தனை அன்புற நோக்குறா விமலன்
தோடு அணைந்த தார் மவுலியாய் சொல்வது ஒன்று உளது உன்
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி நீள் அரசின்
நாடு அணைந்தவர் புகழ்ந்திட வீற்றிரு நலத்தால்

#8
நீதி ஆறு என தெரிவுறு நிலைமை பெற்று உடையாய்
ஆதி நான்மறை கிழவன் நின் குலம் என அமைந்தாய்
ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள் இனி நீ
போதியால் என புகன்றனன் நான் மறை புகன்றான்

#9
சுக்கிரீவ நின் தோளுடை வன்மையால் தெசம் தொகு
அக்கிரீவனை தடிந்து வெம் படையினால் அசைந்த
மிக்க வானர சேனையின் இளைப்பு அற மீண்டு ஊர்
புக்கு வாழ்க என புகன்றனன் ஈறு_இலா புகழோன்

#10
வாலி சேயினை சாம்பனை பனசனை வய போர்
நீலன் ஆதிய நெடும் படை தலைவரை நெடிய
காலின் வேலையை தாவி மீண்டு அருளிய கருணை
போலும் வீரனை நோக்கி மற்று அ மொழி புகன்றான்

#11
ஐயன் அ மொழி புகன்றிட துணுக்கமோடு அவர்கள்
மெய்யும் ஆவியும் குலைதர விழிகள் நீர் ததும்ப
செய்ய தாமரை தாள் இணை முடி உற சேர்த்தி
உய்கிலேம் நினை நீங்கின் என்று இனையன உரைத்தார்

#12
பார மா மதில் அயோத்தியின் எய்தி நின் பைம் பொன்
ஆர மா முடி கோலமும் செவ்வியும் அழகும்
சோர்வு இலாது யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து
பேரவே அருள் என்றனர் உள் அன்பு பிணிப்பார்

#13
அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும் அவர்கள்
துன்பம் எய்திய நடுக்கமும் நோக்கி நீர் துளங்கல்
முன்பு நான் நினைந்திருந்தது அ பரிசு நும் முயற்சி
பின்பு காணுமாறு உரைத்தது என்று உரைத்தனன் பெரியோன்

#14
ஐயன் வாசகம் கேட்டலும் அரி_குலத்து அரசும்
மொய் கொள் சேனையும் இலங்கையர் வேந்தனும் முதலோர்
வையம் ஆளுடை நாயகன் மலர் சரண் வணங்கி
மெய்யினோடு அரும் துறக்கம் உற்றார் என வியந்தார்

#15
அனையது ஆகிய சேனையோடு அரசனை அனிலன்
தனயன் ஆதியாம் படை பெரும் தலைவர்கள் தம்மை
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை வந்து இங்கு
இனிதின் ஏறு-மின் விமானம் என்று இராகவன் இசைத்தான்

#16
சொன்ன வாசகம் பிற்பட சூரியன் மகனும்
மன்னு வீரரும் எழுபது வெள்ள வானரரும்
கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும்
துன்னினார் நெடும் புட்பக-மிசை ஒரு சூழல்

#17
பத்து_நால் என அடுக்கிய உலகங்கள் பலவின்
மெத்து யோனிகள் ஏறினும் வெற்றிடம் மிகுமால்
முத்தர் ஆனவர் இதன் நிலை மொழிகிவது அல்லால்
இ தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே

#18
எழுபது வெள்ளத்தாரும் இரவி கான்முளையும் எண்ணின்
வழு இலா இலங்கை வேந்தும் வான் பெரும் படையும் சூழ
தழுவு சீர் இளைய_கோவும் சனகன் மா மயிலும் போற்ற
விழுமிய குணத்து வீரன் விளங்கினன் விமானத்து உம்பர்

#19
அண்டமே போன்றது ஐயன் புட்பகம் அண்டத்து உம்பர்
எண் தரும் குணங்கள் இன்றி முதல் இடை ஈறு இன்று ஆகி
பண்டை நான்மறைக்கும் எட்டா பரஞ்சுடர் பொலிவதே-போல்
புண்டரீக கண் வென்றி புரவலன் பொலிந்தான்-மன்னோ

#20
குட திசை மறைந்து பின்னர் குண திசை உதயம் செய்வான்
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப மானம்
தடை ஒரு சிறிது இன்று ஆகி தாவி வான் படரும் வேலை
படை அமை விழியாட்கு ஐயன் இனையன பகரலுற்றான்

#21
இந்திரற்கு அஞ்சி மேல்_நாள் இரும் கடல் புக்கு நீங்கா
சுந்தர சயிலம் தன்னை கண்டவர் வினைகள் தீர்க்கும்
கந்தமாதனம் என்று ஓதும் கிரி இவண் கிடப்ப கண்டாய்
பைம்_தொடி அடைத்த சேது பாவனம் ஆயது என்றான்

#22
கங்கையோடு யமுனை கோதாவரி நருமதை காவேரி
பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா
சங்கு எறி தரங்க வேலை தட்ட இ சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே

#23
நெற்றியின் அழலும் செம் கண் நீறு அணி கடவுள் நீடு
கற்றை அம் சடையில் மேவு கங்கையும் சேது ஆக
பெற்றிலம் என்று கொண்டே பெரும் தவம் புரிகின்றாளால்
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது மலர்-கண் வந்தாய்

#24
தெவ் அடும் சிலை கை வீரன் சேதுவின் பெருமை யாவும்
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கரும் கண் செ வாய்
நொவ் இடை மயில் அனாட்கு நுவன்றுழி வருணன் நோனாது
இ இடை வந்து கண்டாய் சரண் என இயம்பிற்று என்றான்

#25
இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம் முன் தோன்று
உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும்
அது திகழ் அனந்த வெற்பு என்று அருள் தர அனுமன் தோன்றிற்று
எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான்

#26
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ்
வேலையை கடக்க பாயும் விறல் உடையவனை வீட்டி
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர்
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது என்றான்

#27
கிட்கிந்தை இதுவேல் ஐய கேட்டியால் எனது பெண்மை
மட்கும்தான் ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி வானோர்
உட்கும் போர் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின்
கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து என்றாள்

#28
அ மொழி இரவி மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப அன்னான்
மெய்ம்மை சேர அனுமன்-தன்னை நோக்கி நீ விரைவின் வீர
மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி என்ன
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன் சென்று மன்னோ

#29
வரிசையின் வழாமை நோக்கி மாருதி மாதர் வெள்ளம்
கரை செயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன் கணத்தின் முன்னம்
விரை செறி குழலினார் தம் வேந்தனை வணங்கி பெண்மைக்கு
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது நின்றார்

#30
மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும்
அங்கு அவர் வைத்து பெண்மைக்கு அரசியை தொழுது சூழ
நங்கையும் உவந்து வேறு ஓர் நவை இலை இனி மற்று என்றாள்
பொங்கிய விமானம் தானும் மனம் என எழுந்து போன

#31
போதா விசும்பில் திகழ் புட்பகம் போதலோடும்
சூது ஆர் முலை தோகையை நோக்கி முன் தோன்று சூழல்
கோதாவரி மற்று அதன் மாடு உயர் குன்று நின்னை
பேதாய் பிரிவு துயர் பீழை பிணித்தது என்றான்

#32
சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை கேள் இது நீள்
தரத்து உவாசவர் வேள்வியர் தண்டகம் அதுதான்
வரத்து வாசவன் வணங்குறு சித்திரகூடம்
பரத்துவாசவன் உறைவிடம் இது என பகர்ந்தான்

#33
மின்னை நோக்கி அ வீரன் ஈது இயம்பிடும் வேலை
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து தன் அகத்தின்
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா
துன்னு மா தவர் சூழ்தர எதிர் கொள்வான் தொடர்ந்தான்

#34
ஆதபத்திரம் குண்டிகை ஒரு கையின் அணைத்து
போதம் முற்றிய தண்டு ஒரு கையினில் பொலிய
மா தவ பயன் உருவு கொண்டு எதிர் வருமா-போல்
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன் நெடியோன்

#35
எண் பக தினை அளவையும் கருணையோடு இசைந்த
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி மா மேரு
விட்பு அகத்து உறை கோள் அரி என பொலி வீரன்
புட்பகத்தினை வதிகென நினைந்தனன் புவியில்

#36
உன்னும் மாத்திரத்து உலகினை எடுத்து உம்பர் ஓங்கும்
பொன்னின் நாடு வந்து இழிந்து-என புட்பகம் தாழ
என்னை ஆளுடை நாயகன் வல்லையின் எதிர் போய்
பன்னு மா மறை தபோதனன் தாள்-மிசை பணிந்தான்

#37
அடியின் வீழ்தலும் எடுத்து நல் ஆசியோடு அணைத்து
முடியை மோயினன் நின்றுழி முளரி அம் கண்ணன்
சடில நீள் துகள் ஒழிதர தனது கண் அருவி
நெடிய காதல் அம் கலசம்-அது ஆட்டினன் நெடியோன்

#38
கருகும் வார் குழல் சனகியோடு இளவல் கை தொழாதே
அருகு சார்தர அரும் தவன் ஆசிகள் வழங்கி
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன் உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து உளம் களித்தனன் பரிவால்

#39
வானரேசனும் வீடண குரிசிலும் மற்றை
ஏனை வீரரும் தொழும்-தொறும் ஆசிகள் இயம்பி
ஞான நாதனை திருவொடு நன் மனை கொணர்ந்தான்
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே

#40
பன்னசாலையுள் புகுந்து நீடு அருச்சனை பலவும்
சொன்ன நீதியின் புரிந்த பின் சூரியன் மருமான்-தன்னை
நோக்கினன் பல் முறை கண்கள் நீர் ததும்ப
பின் ஒர் வாசகம் உரைத்தனன் தபோதரின் பெரியோன்

#41
முனிவர் வானவர் மூ_உலகத்துளோர் யாரும்
துனி உழந்திட துயர் தரு கொடு மன தொழிலோர்
நனி மடிந்திட அலகைகள் நாடகம் நடிப்ப
குனியும் வார் சிலை குரிசிலே என் இனி குணிப்பாம்

#42
விராதனும் கரனும் மானும் விறல் கெழு கவந்தன்-தானும்
மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும்
இராவணன் உரமும் கும்பகருணனது ஏற்றம்-தானும்
அராவ_அரும் பகழி ஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய

#43
இன்று நாம் பதி போகலம் மாருதி ஈண்ட
சென்று தீது இன்மை செப்பி அ தீமையும் விலக்கி
நின்ற காலையின் வருதும் என்று ஏயினன் நெடியோன்
நன்று எனா அவன் மோதிரம் கை கொடு நடந்தான்

#44
தந்தை வேகமும் தனது நாயகன் தனி சிலையின்
முந்து சாயக கடுமையும் பிற்பட முடுகி
சிந்தை பின் வர செல்பவன் குகற்கும் அ சேயோன்
வந்த வாசகம் கூறி மேல் வான் வழி போனான்

#45
இன்று இசைக்கு இடம் ஆய இராகவன்
தென் திசை கரும செயல் செப்பினாம்
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில்
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம்

#46
நந்தியம்பதியின் தலை நாள்-தொறும்
சந்தி இன்றி நிரந்தரம் தம்முனார்
பந்தி அம் கழல் பாதம் அருச்சியா
இந்தியங்களை வென்றிருந்தான்-அரோ

#47
துன்பு உருக்கவும் சுற்றி உருக்க ஒணா
என்பு உருக்கும் தகைமையின் இட்டது ஆய்
முன்பு உரு கொண்டு ஒரு வழி முற்றுறா
அன்பு உரு கொண்டது ஆம் எனல் ஆகுவான்

#48
நினைந்தவும் தரும் கற்பக நீரவாய்
நனைந்த தண்டலை நாட்டு இருந்தேயும் அ
கனைந்த மூலமும் காயும் கனியும் அ
வனைந்த அல்ல அருந்தல்_இல் வாழ்க்கையான்

#49
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்
ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்து உளான்
வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர்
போக்கி போக்கி உழக்கும் பொருமலான்

#50
உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன்
எண்ணும் கீர்த்தி இராமன் திரு முடி
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி
கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான்

#51
அனையன் ஆய பரதன் அலங்கலின்
புனையும் தம்முனார் பாதுகை பூசனை
நினையும் காலை நினைத்தனனாம்-அரோ
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள்

#52
யாண்டு வந்து இங்கு இறுக்கும் என்று எண்ணினான்
மாண்ட சோதிட வாய்மை புலவரை
ஈண்டு கூய் தருக என்ன வந்து எய்தினார்
ஆண்தகைக்கு இன்று அவதி என்றார்-அரோ

#53
என்ற போதத்து இராமன் வனத்திடை
சென்ற போதத்தது அ உரை செல்வத்தை
வென்ற போதத்த வீரனும் வீழ்ந்தனன்
கொன்ற போதத்த உயிர்ப்பு குறைந்துளான்

#54
மீட்டு எழுந்து விரிந்த செம் தாமரை
காட்டை வென்று எழு கண் கலுழி புனல்
ஓட்ட உள்ளம் உயிரினை ஊசல் நின்று
ஆட்டவும் அவலத்து அழிந்தான்-அரோ

#55
எனக்கு இயம்பிய நாளும் என் இன்னலும்
தனை பயந்தவள் துன்பமும் தாங்கி அ
வனத்து வைகல் செய்யான் வந்து அடுத்தது ஓர்
வினை கொடும் பகை உண்டு என விம்மினான்

#56
மூ-வகை திருமூர்த்தியர்-ஆயினும்
பூவகத்தில் விசும்பில் புறத்தினில்
ஏவர் கிற்பர் எதிர் நிற்க என்னுடை
சேவகற்கு என ஐயமும் தேறினான்

#57
என்னை இன்னும் அரசியல் இச்சையன்
அன்னன் ஆகின் அவன் அது கொள்க என்று
உன்னினான்-கொல் உறுவது நோக்கினான்
இன்னதே நலன் என்று இருந்தான்-அரோ

#58
அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக
வனத்து இருக்க இ வையம் புகுதுக
நினைத்து இருந்து நெடும் துயர் மூழ்கிலேன்
மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன்

#59
என்ன பன்னி இளவலை என்னுழை
துன்ன சொல்லுதிர் என்னலும் தூதர் போய்
உன்னை கூயினன் உம்முன் எனா முனம்
முன்னர் சென்றனன் மூவர்க்கும் பின் உளான்

#60
தொழுது நின்ற தன் தம்பியை தோய் கணீர்
எழுது மார்பத்து இறுக தழுவினான்
அழுது வேண்டுவது உண்டு ஐய அ வரம்
பழுது_இல் வாய்மையினாய் தரல்-பாற்று என்றான்

#61
என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல்
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்
மன்னன் ஆதி என் சொல்லை மறாது என்றான்

#62
கேட்ட தோன்றல் கிளர் தட கைகளால்
தோட்ட தன் செவி பொத்தி துணுக்குறா
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான்
நாட்டமும் மனமும் நடுங்காநின்றான்

#63
விழுந்து மேக்கு உயர் விம்மலன் வெய்து உயிர்த்து
எழுந்து நான் உனக்கு என்ன பிழைத்துளேன்
அழுந்து துன்பத்தினாய் என்று அரற்றினான்
கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான்

#64
கான் ஆள நில_மகளை கைவிட்டு போனானை காத்து பின்பு
போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது
யானாம் இ அரசு ஆள்வென் என்னே இ அரசாட்சி இனிதே அம்மா

#65
மன்னின் பின் வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும்
சொல் நிற்கும் என்று அஞ்சி புறத்து இருந்தும் அரும் தவமே தொடங்கினாயே
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும்
உன்னின் பின் இருந்ததுவும் ஒரு குடை கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான்

#66
முத்து உரு கொண்டு அமைந்தனைய முழு வெள்ளி கொழு நிறத்து முளரி செங்கண்
சத்துருக்கன் அஃது உரைப்ப அவன் இங்கு தாழ்க்கின்ற தன்மை யான் இங்கு
ஒத்திருக்கலால் அன்றே உலந்ததன்-பின் இ உலகை உலைய ஒட்டான்
அ திருக்கும் கெடும் உடனே புகுந்து ஆளும் அரசு எரி போய் அமைக்க என்றான்

#67
அப்பொழுதின் அ உரை சென்று அயோத்தியினின் இசைத்தலுமே அரியை ஈன்ற
ஒப்பு எழுத_ஒண்ணாத கற்புடையாள் வயிறு புடைத்து அலமந்து ஏங்கி
இப்பொழுதே உலகு இறக்கும் யாக்கையினை முடித்து ஒழிந்தால் மகனே என்னா
வெப்பு எழுதினால் அனைய மெலிவுடையாள் கடிது ஓடி விலக்க வந்தாள்

#68
மந்திரியர் தந்திரியர் வள நகரத்தவர் மறையோர் மற்றும் சுற்ற
சுந்தரியர் என பலரும் கை தலையில் பெய்து இரங்கி தொடர்ந்து செல்ல
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி ஏத்த
அந்தர மங்கையர் வணங்க அழுது அரற்றி பரதனை வந்து அடைந்தாள் அன்றே

#69
விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஒசிய மேனி தள்ள
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து
சொரிவு அமைப்பது அரிது ஆய மழை கண்ணாள் தொடருதலும் துணுக்கம் எய்தா
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான் அவள் புகுந்து பற்றிக்கொண்டாள்

#70
மன் இழைத்ததும் மைந்தன் இழைத்ததும்
முன் இழைத்த விதியின் முயற்சியால்
பின் இழைத்ததும் எண்ணில் அ பெற்றியால்
என் இழைத்தனை என் மகனே என்றாள்

#71
நீ இது எண்ணினையேல் நெடு நாடு எரி
பாயும் மன்னரும் சேனையும் பாய்வரால்
தாயர் எம் அளவு அன்று தனி அறம்
தீயின் வீழும் உலகும் திரியுமால்

#72
தரும நீதியின்-தன் பயன் ஆவது உன்
கருமமே அன்றி கண்டிலம் கண்களால்
அருமை ஒன்றும் உணர்ந்திலை ஐய நின்
பெருமை ஊழி திரியினும் பேருமோ

#73
எண்_இல் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ

#74
இன்று வந்திலனே-எனின் நாளையே
ஒன்றும் வந்து உனை உன்னி உரைத்த சொல்
பின்றும் என்று உணரேல் பிழைத்தான்-எனின்
பொன்றும் தன்மை புகுந்தது போய் என்றாள்

#75
ஒருவன் மாண்டனன் என்று கொண்டு ஊழி வாழ்
பெரு நிலத்து பெறல் அரும் இன் உயிர்
கருவும் மாண்டு அற காணுதியோ கலை
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய்

#76
இறக்கையும் சிலர் ஏகலும் மோகத்தால்
பிறக்கையும் கடன் என்று பின் பாசத்தை
மறக்கை காண் மகனே வலி ஆவது என்
துறக்கை-தானும் என்றாள் மனம் தூய்மையாள்

#77
மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் எனல்
எந்தை மெய்ம்மையும் இ குல செய்கையும்
நைந்து போக உயிர் நிலை நச்சிலேன்
முந்து செய்த சபதம் முடிப்பெனால்

#78
யானும் மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய்
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ

#79
தாய் சொல் கேட்டலும் தந்தை சொல் கேட்டலும்
பாசத்து அன்பினை பற்று அற நீக்கலும்
ஈசற்கே கடன் யான் அஃது இழைக்கிலேன்
மாசு அற்றேன் இது காட்டுவென் மாண்டு என்றான்

#80
என்று தீயினை எய்தி இரைத்து எழுந்து
ஒன்று பூசலிடும் உலகோருடன்
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு
குன்று போல் நெடு மாருதி கூடினான்

#81
ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன்
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்
உய்யுமே அவன் என்று உரைத்து உள் புகா
கையினால் எரியை கரி ஆக்கினான்

#82
ஆக்கி மற்று அவன் ஆய் மலர் தாள்களை
தாக்க தன் தலை தாழ்ந்து வணங்கி கை
வாக்கின் கூட புதைத்து ஒரு மாற்றம் நீ
தூக்கி கொள்ள தகும் என சொல்லினான்

#83
இன்னம் நாழிகை எண்_ஐந்து உள ஐய
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள்
இன்னது இல்லை-எனின் அடி நாயினேன்
முன்னம் வீழ்ந்து இ எரியில் முடிவெனால்

#84
ஒன்றுதான் உளது உன் அடியேன் சொலால்
நின்று தாழ்த்தருள் நேமி சுடர் நெடும்
குன்று தாழ்வளவும் இது குன்றுமேல்
பொன்றும் நீயும் உலகமும் பொய்_இலாய்

#85
எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான்
பங்கயத்து பரத்துவன் வேண்டலால்
அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ
இங்கண் நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால்

#86
அண்டர் நாதன் அருளி அளித்துளது
உண்டு ஒர் பேர் அடையாளம் உனக்கு அது
கொண்டு வந்தனென் கோது அறு சிந்தையாய்
கண்டு கொண்டருள்வாய் என காட்டினான்

#87
காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும்
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு
ஊட்டிய நல் மருந்து ஒத்த தாம்-அரோ
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும்

#88
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன
தொழுகின்ற கை எலாம் காலின் தோன்றலை

#89
மோதிரம் வாங்கி தன் முகத்தின்-மேல் அணைத்து
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ எனா
ஓதினர் நாண் உற ஓங்கினான் தொழும்
தூதனை முறை முறை தொழுது துள்ளுவான்

#90
ஆதி வெம் துயர் அலால் அருந்தல் இன்மையால்
ஊதுற பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய்
ஏதிலன் ஒருவன்-கொல் என்னல் ஆயது
மாதிரம் வளர்ந்தன வயிர தோள்களே

#91
அழும் நகும் அனுமனை ஆழி கைகளால்
தொழும் எழும் துள்ளும் வெம் களி துளக்கலால்
விழும் அழிந்து ஏங்கும் போய் வீங்கும் வேர்க்கும் அ
குழுவொடும் குனிக்கும் தன் தட கை கொட்டுமால்

#92
ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால்
ஓடு-மின் ஓடு-மின் என்னும் ஓங்கு இசை
பாடு-மின் பாடு-மின் என்னும் பாவிகாள்
சூடு-மின் சூடு-மின் தூதன் தாள் எனும்

#93
வஞ்சனை இயற்றிய மாய கைகையார்
துஞ்சுவர் இனி என தோளை கொட்டுமால்
குஞ்சித அடிகள் மண்டிலத்தில் கூட்டுற
அஞ்சன குன்றின் நின்று ஆடும் பாடுமால்

#94
வேதியர்-தமை தொழும் வேந்தரை தொழும்
தாதியர்-தமை தொழும் தன்னை தான் தொழும்
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும் நிற்குமால்
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே

#95
அ திறத்து ஆண்தகை அனுமன்-தன்னை நீ
எ திறத்தாய் எமக்கு இயம்பி ஈதியால்
மு திறத்தவருளே ஒருவன் மூர்த்தி வேறு
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன் என்றான்

#96
மறையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை
இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென்
துறை எனக்கு யாது என சொல்லு சொல் என்றான்
அறை கழல் அனுமனும் அறிய கூறுவான்

#97
காற்றினுக்கு அரசன் பால் கவி_குலத்தினுள்
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து நும் முனாற்கு
ஏற்றிலா அடி தொழில் ஏவலாளனேன்
மாற்றினென் உரு ஒரு குரங்கு மன்ன யான்

#98
அடி தொழில் நாயினேன் அருப்ப யாக்கையை
கடி தடம் தாமரை கண்ணின் நோக்கு எனா
பிடித்த பொய் உருவினை பெயர்த்து நீக்கினான்
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான்

#99
வெம் சிலை இருவரும் விரிஞ்சன் மைந்தனும்
எஞ்சல் இல் அதிசயம் இது என்று எண்ணினார்
துஞ்சிலது ஆயினும் சேனை துண்ணென
அஞ்சினது அஞ்சனை சிறுவன் ஆக்கையால்

#100
ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அ
தூங்கு இரும் குண்டல செவியில் சூழ்வர
ஓங்கல ஆதலின் உலப்பு இல் யாக்கையை
வாங்குதி விரைந்து என மன்னன் வேண்டினான்

#101
சுருக்கிய உருவனாய் தொழுது முன் நின்ற
அருக்கன் மாணாக்கனை ஐயன் மேயினன்
பொருக்கென நிதியமும் புனை பொன் பூண்களின்
வருக்கமும் வரம்பு_இல நனி வழங்கினான்

#102
கோவொடு தூசு நல் குல மணி குழாம்
மாவொடு கரி திரள் வாவு தேர்_இனம்
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன்
எவரும் சிலை வலான் யாவும் நல்கினான்

#103
அன்னது ஓர் அளவையின் விசும்பின் ஆயிரம்
துன் இரும் கதிரவர் தோன்றினார் என
பொன் அணி புட்பக பொரு இல் மானமும்
மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினார்

#104
அண்ணலே காண்டியால் அலர்ந்த தாமரை
கண்ணனும் வாரை கடலும் கற்புடை
பெண் அரும் கலமும் நின் பின்பு தோன்றிய
வண்ண வில் குமரனும் வருகின்றார்களை

#105
ஏழ்_இரண்டு ஆகிய உலகம் ஏறினும்
பாழ் புறம் கிடப்பது படி இன்றாயது ஓர்
சூழ் ஒளி மானத்து தோன்றுகின்றனன்
ஊழியான் என்று கொண்டு உணர்த்தும்-காலையே

#106
பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர்
மின் ஒளிர் மேகம் போல் வீரன் தோன்றலும்
அ நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு இராவணன்
தென் நகர்க்கு அ புறத்து அளவும் சென்றதால்

#107
ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடை தந்தையார் வரவு கண்டு-என
கானிடை போகிய கமலக்கண்ணனை
தானுடை உயிரினை தம்பி நோக்கினான்

#108
ஈடுறு வான் துணை இராமன் சேவடி
சூடிய சென்னியன் தொழுத கையினன்
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன்
பாடு உறு பெரும் புகழ் பரதன் தோன்றினான்

#109
தோன்றிய பரதனை தொழுது தொல் அற
சான்று என நின்றவன் இனைய தம்பியை
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை
ஈன்றவள் பகைஞனை காண்டி ஈண்டு எனா

#110
காட்டினன் மாருதி கண்ணின் கண்ட அ
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லும்-கால்
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார்
கூட்டு உரு கண்டு அன்ன தன்மை கூடினான்

#111
ஆனது ஓர் அளவையின் அமரர்_கோனொடும்
வானவர் திரு நகர் வருவது ஆம் என
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும்
தான் உயர் புட்பகம் நிலத்தை சார்ந்ததால்

#112
தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான்
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான்
ஆய் இளையார்க்கு கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான்
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான்

#113
எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்
ஒளி வர பிறந்தது ஒத்தான் உலகினுக்கு ஒண்_கணார்க்கு
தெளிவு அரும் களிப்பு நல்கும் தேம் பிழி தேறல் ஒத்தான்

#114
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க
காவி அம் கழனி நாடும் நகரமும் கலந்து வாழும்
மா இயல் ஒண்_கணாரும் மைந்தரும் வள்ளல் எய்த
ஓவியம் உயிர் பெற்று-என்ன ஓங்கினர் உணர்வு பெற்றார்

#115
சுண்ணமும் சாந்தும் நெய்யும் சுரி வளை முத்தும் பூவும்
எண்ணெயும் கலின மா விலாழியும் எண்_இல் யானை
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும் ஓடி கடலையும் கடந்த அன்றே

#116
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாக சேர்த்தி
பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனை பொருமி விம்மி
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் நின்ற நம்பி
ஆவியும் உடலும் ஒன்ற தழுவினன் அழுது சோர்வான்

#117
தழுவினன் நின்ற-காலை தத்தி வீழ் அருவி சாலும்
விழு மலர் கண்ணீர் மூரி வெள்ளத்தால் முருகின் செவ்வி
வழுவுற பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை
கழுவினன் உச்சி மோந்து கன்று காண் கறவை அன்னான்

#118
அனையது ஓர் காலத்து அம் பொன் சடை முடி அடியது ஆக
கனை கழல் அமரர்_கோமான் கட்டவன் படுத்த காளை
துனை பரி கரி தேர் ஊர்தி என்று இவை பிறவும் தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர் தாளின் வீழ்ந்தான்

#119
பின் இணை குரிசில் தன்னை பெரும் கையால் வாங்கி வீங்கும்
தன் இணை தோள்கள் ஆர தழுவி அ தம்பிமாருக்கு
இன் உயிர் துணைவர் தம்மை காட்டினான் இருவர் தாளும்
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் வணக்கம் செய்தார்

42 திருமுடி சூட்டு படலம்


#1
நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றை
தம்பியரோடு தானும் தண் புனல் படிந்த பின்னர்
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்ப செய்தார்

#2
ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின்
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த
பாழிய மற்றை தம்பி பால் நிற கவரி பற்ற
பூழியை அடக்கும் கண்ணீர் பரதன் கோல் கொள்ள போனான்

#3
தேவரும் முனிவர்-தாமும் திசை-தொறும் மலர்கள் சிந்த
ஓவல் இல் மாரி ஏய்ப்ப எங்கணும் உதிர்ந்து வீங்கி
கேவல மலராய் வேறு ஓர் இடம் இன்றி கிடந்த ஆற்றால்
பூ எனும் நாமம் இன்று இ உலகிற்கு பொருந்திற்று அன்றே

#4
கோடையில் வறந்த மேக குலம் என பதினால் ஆண்டு
பாடு உறு மதம் செய்யாத பணை முக பரும யானை
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி
ஓடின உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததே-போல்

#5
துருவ தார் புரவி எல்லாம் மூங்கையர் சொல் பெற்று-என்ன
அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற
பருவத்தால் பூத்த என்ன பூத்தன பகையின் சீறும்
புருவத்தார் மேனி எல்லாம் பொன் நிற பசலை பூத்த

#6
ஆயது ஓர் அளவில் செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி
தாயரை வணங்கி தங்கள் இறையொடு முனியை தாழ்ந்து
நாயக கோயில் எய்தி நானில கிழத்தியோடும்
சேயொளி கமலத்தாளும் களி நடம் செய்ய கண்டான்

#7
வாங்குதும் துகில்கள் என்னும் மனம் இலர் கரத்தின் பல்-கால்
தாங்கினர் என்ற போதும் மைந்தரும் தையலாரும்
வீங்கிய உவகை மேனி சிறக்கவும் மேன்மேல் துள்ளி
ஓங்கவும் களிப்பால் சோர்ந்தும் உடை இலாதாரை ஒத்தார்

#8
வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற வெற்றி
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்து சுற்ற
வாசம் மென் கலவை சாந்து என்று இனையன மயக்கம்-தன்னால்
பூசினர்க்கு இரட்டி ஆனார் பூசலார் புகுந்துளோரும்

#9
இறை பெரும் செல்வம் நீத்த ஏழ்_இரண்டு ஆண்டும் யாரும்
உறைப்பு இலர் ஆதலானே வேறு இருந்து ஒழிந்த மின்னார்
பிறை கொழுந்து அனைய நெற்றி பெய் வளை மகளிர் மெய்யை
மறைத்தனர் பூணின் மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற

#10
விண் உறைவோர்-தம் தெய்வ வெறியோடும் வேறுளோர்-தம்
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால்
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும்
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே

#11
இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற
மந்திர விதியினாரும் வசிட்டனும் வரைந்து விட்டார்
சந்திர கவிகை ஓங்கும் தயரத_ராமன் தாம
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும் தூக்கி

#12
அடுக்கிய உலகம் மூன்றும் ஆதர தூதர் கூற
இடுக்கு ஒரு பேரும் இன்றி அயோத்தி வந்து இறுத்தார் என்றால்
தொடுக்குறு கவியால் மற்றை துழனியை இறுதி தோன்ற
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ

#13
நான்முகத்து ஒருவன் ஏவ நயன் அறி மயன் என்று ஓதும்
நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன் வணங்கு நெஞ்சன்
கோல் முகத்து அளந்து குற்றம் செற்று உலகு எல்லாம் கொள்ளும்
மான் முகத்து ஒருவன் நல் நாள் மண்டபம் வயங்க கண்டான்

#14
சூழ் கடல் நான்கின் தோயம் எழு வகை ஆக சொன்ன
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி அன்றே
ஏழ் திசை நீரும் தந்தான் இடர் கெட மருந்து தந்தான்

#15
தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய
ஐயம் இல் சிந்தையான் அ சுமந்திரன் அமைச்சரோடும்
நொய்தினின் இயற்ற நோன்பின் மாதவர் நுனித்து காட்ட
எய்தின இயன்ற பல் வேறு இந்திரற்கு இயன்ற என்ன

#16
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்த
பரதன் வெண் குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி

#17
வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதி முறை மெய்யின் கொண்ட
ஒள்ளிய நாளின் நல்ல ஓரையின் உலகம் மூன்றும்
துள்ளின களிப்ப மோலி சூடினான் கடலின் வந்த
தெள்ளிய திருவும் தெய்வ பூமியும் சேரும் தோளான்

#18
சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர் தெய்வ நன்னூல்
வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியது எனினும் மேன்மை
ஒத்த மூ_உலகத்தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின்
தம்தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது அ தாம மோலி

#19
பல் நெடும் காலம் நோற்று தன்னுடை பண்பிற்கு ஏற்ற
பின் நெடும் கணவன் தன்னை பெற்று இடை பிரிந்து முற்றும்
தன் நெடும் பீழை நீங்க தழுவினாள் தளிர் கை நீட்டி
நல் நெடும் பூமி என்னும் நங்கை தன் கொங்கை ஆர

#20
விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை நோக்கி
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி
பரதனை தனது செங்கோல் நடாவுற பணித்து நாளும்
கரை தெரிவு இலாத போக களிப்பினுள் இருந்தான் மன்னோ

#21
உம்பரோடு இம்பர்-காறும் உலகம் ஓர் ஏழும் ஏழும்
எம் பெருமான் என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய
தம்பியரோடும் தானும் தருமமும் தரணி காத்தான்
அம்பரத்து அனந்தர் நீங்கி அயோத்தியில் வந்த வள்ளல்