யுத்த காண்டம் 2 – கம்பராமாயணம்

படலங்கள்

15. முதற்போர்புரி படலம்
16. கும்பகருணன் வதைப் படலம்
17. மாயா சனகப் படலம்
18. அதிகாயன் வதைப் படலம்
19. நாகபாசப் படலம்

15 முதற் போர் புரி படலம்


#1
பூசலே பிறிது இல்லை என புறத்து
ஆசை-தோறும் முரசம் அறைந்து என
பாசறை படையின்னிடம் பற்றிய
வாசல்-தோறும் முறையின் வகுத்திரால்

#2
மற்றும் நின்ற மலையும் மரங்களும்
பற்றி வீரர் பரவையின் மு முறை
கற்ற கைகளினால் கடி மா நகர்
சுற்றும் நின்ற அகழியை தூர்த்திரால்

#3
இடு-மின் பல் மரம் எங்கும் இயக்கு அற
தடு-மின் போர்க்கு வருக என சாற்று-மின்
கடு-மின் இப்பொழுதே கதிர் மீச்செலா
கொடி மதில் குடுமி தலைக்கொள்க என்றான்

#4
தடம் கொள் குன்றும் மரங்களும் தாங்கியே
மடங்கல் அன்ன அ வானர மா படை
இடங்கர் மா இரிய புனல் ஏறிட
தொடங்கி வேலை அகழியை தூர்த்ததால்

#5
ஏய வெள்ளம் எழுபதும் எண் கடல்
ஆய வெள்ளத்து அகழியை தூர்த்தலும்
தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என
வாயிலூடு புக்கு ஊரை வளைந்ததே

#6
விளையும் வென்றி இராவணன் மெய் புகழ்
முளையினோடும் களைந்து முடிப்ப-போல்
தளை அவிழ்ந்த கொழும் தடம் தாமரை
வளையம் வன் கையில் வாங்கின வானரம்

#7
இகழும் தன்மையன் ஆய இராவணன்
புகழும் மேன்மையும் போயினவாம் என
நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால்
அகழி-தானும் அழுவது போன்றதே

#8
தண்டு இருந்த பைம் தாமரை தாள் அற
பண் திரிந்து சிதைய படர் சிறை
வண்டு இரிந்தன வாய்-தொறும் முட்டையை
கொண்டு இரிந்தன அன்ன குழாம் எலாம்

#9
ஈளி தாரம் இயம்பிய வண்டுகள்
பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய
தாள தாமரை அன்னங்கள் தாவிட
வாளை தாவின வானரம் தாவவே

#10
தூறு மா மரமும் மலையும் தொடர்
நீறு நீர் மிசை சென்று நெருக்கலான்
ஏறு பேர் அகழ்-நின்றும் எனை பல
ஆறு சென்றன ஆர்கலி மீது-அரோ

#11
இழுகு மா கல் இடும்-தொறு இடும்-தொறும்
சுழிகள்-தோறும் சுரித்து இடை தோன்று தேன்
ஒழுகு தாமரை ஒத்தன ஓங்கு நீர்
முழுகி மீது எழு மாதர் முகத்தையே

#12
தன்மைக்கு தலையாய தசமுகன்
தொன்மை பேர் அகழ் வானரம் தூர்த்ததால்
இன்மைக்கும் ஒன்று உடைமைக்கும் யாவர்க்கும்
வன்மைக்கும் ஒர் வரம்பும் உண்டாம்-கொலோ

#13
தூர்த்த வானரம் சுள்ளி பறித்து இடை
சீர்த்த பேர் அணை-தன்னையும் சிந்தின
வார்த்தது அன்ன மதிலின் வரம்பு-கொண்டு
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே

#14
வட்ட மேரு இது என வான் முகடு
எட்ட நீண்ட மதில் மிசை ஏறி விண்
தொட்ட வானரம் தோன்றின மீ தொக
விட்ட வெண் கொடி வீங்கின என்னவே

#15
இறுக்க வேண்டுவது இல்லை எண் தீர் மணி
வெறுக்கை ஓங்கிய மேரு விழு கலால்
நிறுக்க நேர்வரும் வீரர் நெருக்கலால்
பொறுக்கலாது மதிள் தரை புக்கதால்

#16
அறைந்த மா முரசு ஆனை பதாகையால்
மறைந்தவால் நெடு வானகம் மாதிரம்
குறைந்த தூளி குழுமி விண்ணூடு புக்கு
உறைந்தது ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே

#17
கோடு அலம்பின கோதை அலம்பின
ஆடல் அம் பரி தாரும் அலம்பின
மாடு அலம்பின மா மணி தேர் மணி
பாடு அலம்பின பாய் மத யானையே

#18
அரக்கர் தொல் குலம் வேரற அல்லவர்
வருக்கம் யாவையும் வாழ்வுற வந்தது ஓர்
கரு கொள் காலம் விதி-கொடு காட்டிட
தருக்கி உற்று எதிர் தாக்கின தானையே

#19
பல் கொடும் நெடும் பாதவம் பற்றியும்
கல் கொடும் சென்றது அ கவியின் கடல்
வில் கொடும் நெடு வேல்-கொடும் வேறு உள
எல் கொடும் படையும் கொண்டது இ கடல்

#20
அம்பு கற்களை அள்ளின அம்பு எலாம்
கொம்பு உடை பணை கூறு உற நூறின
வம்பு உடை தட மா மரம் மாண்டன
செம் புகர் சுடர் வேல் கணம் செல்லவே

#21
மா கை வானர வீரர் மலைந்த கல்
தாக்கி வஞ்சர் தலைகள் தகர்த்தலால்
நாக்கினூடும் செவியினும் நாகம் வாழ்
மூக்கினூடும் சொரிந்தன மூளையே

#22
அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்-தம்
விற்கள் ஓடு சரம் பட வெம் புணீர்
பற்களோடும் சொரிதர பற்றிய
கற்களோடும் உருண்ட கவிகளே

#23
நின்று மேரு நெடு மதில் நெற்றியின்
வென்றி வானர வீரர் விசைத்த கல்
சென்று தீயவர் ஆர் உயிர் சிந்தின
குன்றின் வீழும் உருமின் குழுவினே

#24
எதிர்த்த வானரம் மா கையொடு இற்றன
மதில் புறம் கண்டு மண்ணில் மறைந்தன
கதிர் கொடும் கண் அரக்கர் கரங்களால்
விதிர்த்து எறிந்த விளங்கு இலை வேலினே

#25
கடித்த குத்தின கையின் கழுத்து அற
பிடித்த வள் உகிரால் பிளவு ஆக்கின
இடித்த எற்றின எண்_இல் அரக்கரை
முடித்த வானரம் வெம் சினம் முற்றின

#26
எறிந்தும் எய்தும் எழு முளை தண்டு கொண்டு
அறைந்தும் வெவ் அயில் ஆகத்து அழுத்தியும்
நிறைந்த வெம் கண் அரக்கர் நெருக்கலால்
குறைந்த வானர வீரர் குழுக்களே

#27
செப்பின் செம்_புனல் தோய்ந்த செம்பொன் மதில்
துப்பின் செய்தது போன்றது சூழ் வரை
குப்புற்று ஈர் பிண குன்று சுமந்துகொண்டு
உப்பின் சென்றது உதிரத்து ஒழுக்கமே

#28
வந்து இரைத்த பறவை மயங்கின
அந்தரத்தில் நெருங்கலின் அங்கு ஒரு
பந்தர் பெற்றது போன்றது பற்றுதல்
இந்திரற்கும் அரிய இலங்கையே

#29
தங்கு வெம் கனல் ஒத்து தயங்கிய
பொங்கு வெம் குருதி புனல் செக்கர் முன்
கங்குல் அன்ன கவந்தமும் கையெடுத்து
அங்கும் இங்கும் நின்று ஆடினவாம்-அரோ

#30
கொன் நிற குருதி குடை புட்களின்
தொல் நிற சிறையில் துளி தூவலால்
பல் நிறத்த பதாகை பரப்பு எலாம்
செம் நிறத்தனவாய் நிறம் தீர்ந்தவே

#31
பொழிந்து சோரி புது புனல் பொங்கி மீ
வழிந்த மா மதில் கைவிட்டு வானரம்
ஒழிந்த மேருவின் உம்பர் விட்டு இம்பரின்
இழிந்த மா கடல் என்ன இழிந்ததே

#32
பதனமும் மதிலும் படை நாஞ்சிலும்
கதன வாயிலும் கட்டும் அட்டாலையும்
முதல யாவையும் புக்குற்று முற்றின
விதன வெம் கண் இராக்கதர் வெள்ளமே

#33
பாய்ந்த சோரி பரவையில் பற்பல
நீந்தி ஏகும் நெருக்கிடை செல்வன
சாய்ந்து சாய்ந்து சரம் பட தள்ளலுற்று
ஓய்ந்து வீழ்ந்த சில சில ஓடின

#34
தழிய வானர மா கடல் சாய்தலும்
பொழியும் வெம் படை போர் கடல் ஆர்த்தவால்
ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து
அழியும் மா கடல் ஆர்ப்பு எடுத்து என்னவே

#35
முரசும் மா முருடும் முரல் சங்கமும்
உரை செய் காளமும் ஆகுளி ஓசையும்
விரைசும் பல்_இயம் வில் அரவத்தொடும்
திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே

#36
ஆய காலை அனைத்து உலகும் தரும்
நாயகன் முகம் நாலும் நடந்து என
மேய சேனை விரி கடல் விண் குலாம்
வாயிலூடு புறப்பட்டு வந்ததே

#37
நெடிய காவதம் எட்டும் நிரம்பிய
படிய வாயில் பருப்பதம் பாய்ந்து என
கொடியொடும் கொடி சுற்ற கொடுத்த தண்டு
ஒடிய ஊன்றின மு மத ஓங்கலே

#38
சூழி யானை மதம் படு தொய்யலின்
ஊழி நாள் நெடும் கால் என ஓடுவ
பாழி ஆள் வயிர படி பல் முறை
பூழி ஆக்கின பொன் நெடும் தேர்களே

#39
பிடித்த வானரம் பேர் எழில் தோள்களால்
இடித்த மா மதில் ஆடை இலங்கையாள்
மடுத்த மா கடல் வாவும் திரை எலாம்
குடித்து கால்வன போன்ற குதிரையே

#40
கேள் இல் ஞாலம் கிளத்திய தொல் முறை
நாளும் நாளும் நடந்தன நள் இரா
நீளம் எய்தி ஒரு சிறை நின்றன
மீளும் மாலையும் போன்றனர் வீரரே

#41
பத்தி வன் தலை பாம்பின் பரம் கெட
முத்தி நாட்டின் முகட்டினை முற்றுற
பித்தி பிற்பட வன் திசை பேர்வுற
தொத்தி மீண்டிலவால் நெடும் தூளியே

#42
நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால்
குரக்கு_இன பெரும் தானை குலைந்து போய்
அருக்கன் மா மகன் ஆர் அமர் ஆசையால்
செருக்கி நின்றவன் நின்றுழி சென்றவால்

#43
சாய்ந்த தானை தளர்வும் சலத்து எதிர்
பாய்ந்த தானை பெருமையும் பார்த்து உற
காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன்
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான்

#44
வாரணத்து எதிர் வாசியின் நேர் வய
தேர் முகத்தினில் சேவகர் மேல் செறுத்து
ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று உயர்
தோரணத்து ஒருவன் என தோன்றினான்

#45
களிறும் மாவும் நிருதரும் கால் அற
ஒளிறு மா மணி தேரும் உருட்டி வெம்
குளிறு சோரி ஒழுக கொதித்து இடை
வெளிறு இலா மரமே கொண்டு வீசினான்

#46
அன்ன காலை அரி குல வீரரும்
மன்னன் முன் புக வன் கண் அரக்கரும்
முன் உழந்த முழங்கு பெரும் செரு
தன்னில் வந்து தலைமயக்குற்றனர்

#47
கல் துரந்த களம் பட வஞ்சகர்
இற்று உலந்து முடிந்தவர் எண்_இலர்
வில் துரந்தன வெம் கணையால் உடல்
அற்று உலந்த குரங்கும் அனந்தமே

#48
கற்கள் தந்து நிமிர்ந்து கடும் செரு
மற்கடங்கள் வலிந்து மலைந்திட
தற்கு அடங்கி உலந்தவர்-தம் உயிர்
தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால்

#49
பாடுகின்றன பேய் கணம் பல் விதத்து
ஆடுகின்ற அறு குறை ஆழ் கடற்கு
ஓடுகின்ற உதிரம் புகுந்து உடல்
நாடுகின்றனர் கற்பு உடை நங்கைமார்

#50
யானை பட்ட அழி புனல் யாறு எலாம்
பானல் பட்ட பல கணை மாரியின்
சோனை பட்டது சொல்ல_அரும் வானர
சேனை பட்டது பட்டது செம் புண்ணீர்

#51
காய்ந்த வானர வீரர் கரத்தினால்
தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம் புண்ணீர்
பாய்ந்த தானை படு களம் பாழ்பட
சாய்ந்ததால் நிருத கடல் தானையே

#52
தங்கள் மா படை சாய்தலும் தீ எழ
வெம் கண் வாள் அரக்கன் விரை தேரினை
கங்க சாலம் தொடர கடல் செலூஉம்
வங்கம் ஆம் என வந்து எதிர் தாக்கினான்

#53
வந்து தாக்கி வடி கணை மா மழை
சிந்தி வானர சேனை சிதைத்தலும்
இந்திராதியரும் திகைத்து ஏங்கினார்
நொந்து சூரியன் கான்முளை நோக்கினான்

#54
நோக்கி வஞ்சன் நொறில் வய மா பரி
வீக்கு தேரினின் மீது எழ பாய்ந்து தோள்
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து அவன்
யாக்கையும் சிதைத்துவிட்டு எழுந்து ஏகினான்

#55
மலை குலைந்து என வச்சிரமுட்டி தன்
நிலை குலைந்து விழுதலின் நின்றுளார்
குலை குலைந்து கொடி நகர் நோக்கினார்
அலை கிளர்ந்து என வானரம் ஆர்த்தவே

#56
வீழி வெம் கண் இராக்கதர் வெம் படை
ஊழி ஆழி கிளர்ந்து என ஓங்கின
கீழை வாயிலில் கிட்டலும் முட்டினர்
சூழும் வானர வீரர் துவன்றியே

#57
சூலம் வாள் அயில் தோமரம் சக்கரம்
வாலம் வாளி மழையின் வழங்கியே
ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும்
காலும் வாலும் துமிந்த கவி_குலம்

#58
வென்றி வானர வீரர் விசைத்து எறி
குன்றும் மா மரமும் கொடும் காலனின்
சென்று வீழ நிருதர்கள் சிந்தினார்
பொன்றி வீழ்ந்த புரவியும் பூட்கையும்

#59
தண்டு வாள் அயில் சக்கரம் சாயகம்
கொண்டு சீறி நிருதர் கொதித்து எழ
புண் திறந்து குருதி பொழிந்து உக
மண்டி ஓடினர் வானர வீரரே

#60
எரியின் மைந்தன் இரு நிலம் கீழுற
விரிய நின்ற மராமரம் வேரொடும்
திரிய வாங்கி நிருதர் வெம் சேனை போய்
நெரிய ஊழி நெருப்பு என வீசினான்

#61
தேரும் பாகரும் வாசியும் செம் முக
காரும் யாளியும் சீயமும் காண் தகு
பாரின் வீழ புடைப்ப பசும் புணின்
நீரும் வாரி அதனை நிறைத்ததே

#62
அரக்கர் சேனை அடு களம் பாழ்பட
வெருக்கொண்டு ஓடிட வெம் பட காவலர்
நெருக்க நேர்ந்து கும்பானு நெடும் சரம்
துரக்க வானர சேனை துணிந்தவே

#63
கண்டு நின்ற கரடியின் காவலன்
எண் திசாமுகம் எண்ணும் இடும்பன் ஓர்
சண்டமாருதம் என்ன தட வரை
கொண்டு சீறி அவன் எதிர் குப்புறா

#64
தொடுத்த வாளிகள் வீழும் முன் சூழ்ந்து எதிர்
எடுத்த குன்றை இடும்பன் எறிதலும்
ஒடித்த வில்லும் இரதமும் ஒல்லென
படுத்த வாசியும் பதாகையும் பாழ்பட

#65
தேர் அழிந்து சிலையும் அழிந்து உக
கார் இழிந்த உரும் என காய்ந்து எதிர்
பார் கிழிந்து உக பாய்ந்தனன் வானவர்
போர் கிழிந்து புறம் தர போர் செய்தான்

#66
தத்தி மார்பின் வயிர தட கையால்
குத்தி நின்ற கும்பானுவை தான் எதிர்
மொத்தி நின்று முடி தலை கீழ் உற
பத்தி வன் தடம் தோள் உற பற்றுவான்

#67
கடித்தலத்து இரு கால் உற கைகளால்
பிடித்து தோளை பிறங்கலின் கோடு நேர்
முடித்தலத்தினில் எற்றிட மூளைகள்
வெடித்து இழிந்திட வீந்தனனாம்-அரோ

#68
தன் படைத்தலைவன் பட தன் எதிர்
துன்பு அடைத்த மனத்தன் சுமாலி சேய்
முன் படைத்த முகில் அன்ன காட்சியன்
வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான்

#69
வாங்கி வார் சிலை வானர மா படை
ஏங்க நாண் எறிந்திட்டு இடையீடு இன்றி
தூங்கு மாரி என சுடர் வாளிகள்
வீங்கு தோளினன் விட்டனனாம்-அரோ

#70
நூறும் ஆயிரமும் கணை நொய்தினின்
வேறு வேறு படுதலின் வெம்பியே
ஈறு இல் வானர மா படை எங்கணும்
பாற நீலன் வெகுண்டு எதிர் பார்ப்புறா

#71
குன்றம் நின்றது எடுத்து எதிர் கூற்று என
சென்று எறிந்து அவன் சேனை சிதைத்தலும்
வென்றி வில்லின் விடு கணை மாரியால்
ஒன்று நூறு உதிர்வுற்றது அ குன்றமே

#72
மீட்டும் அங்கு ஓர் மராமரம் வேரொடும்
ஈட்டி வானத்து இடி என எற்றலும்
கோட்டும் வில்லும் கொடியும் வய பரி
பூட்டும் தேரும் பொடி துகள் ஆயவே

#73
தேர் இழந்து சிலையும் இழந்திட
கார் இழிந்த உரும் என காந்துவான்
பார் இழிந்து பரு வலி தண்டொடும்
ஊர் இழந்த கதிர் என ஓடினான்

#74
வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உக
போய் அடித்தலும் நீலன் புகைந்து எதிர்
தாய் அடுத்து அவன்-தன் கையின் தண்டொடும்
மீ எடுத்து விசும்பு உற வீசினான்

#75
அம்பரத்து எறிந்து ஆர்ப்ப அரக்கனும்
இம்பர் உற்று எரியின் திரு மைந்தன் மேல்
செம்_புனல் பொழிய கதை சேர்த்தினான்
உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே

#76
அடித்தலோடும் அதற்கு இளையாதவன்
எடுத்த தண்டை பறித்து எறியா இகல்
முடித்தும் என்று ஒரு கைக்கொடு மோதினான்
குடித்து உமிழ்ந்து என கக்க குருதியே

#77
குருதி வாய்-நின்று ஒழுகவும் கூசலன்
நிருதன் நீலன் நெடு வரை மார்பினில்
கருதலாத முன் குத்தலும் கைத்து அவர்
பொருத பூசல் புகல ஒண்ணாததே

#78
மற்று நீலன் அரக்கனை மாடு உற
சுற்றி வால் கொடு தோளினும் மார்பினும்
நெற்றி மேலும் நெடும் கரத்து எற்றலும்
இற்று மால் வரை என்ன விழுந்தனன்

#79
இறந்து வீழ்ந்தனனே பிரகத்தன் என்று
அறிந்து வானவர் ஆவலம் கொட்டினார்
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர்
முறிந்து தத்தம் முது நகர் நோக்கினார்

#80
தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர்
மல் குலாவு வய புயத்து அங்கதன்
நிற்கவே எதிர் நின்றிலர் ஓடினார்
பொன் குலாவு சுபாரிசன் பொன்றவே

#81
நூற்று இரண்டு எனும் வெள்ளமும் நோன் கழல்
ஆற்றல் சால் துன்முகனும் அங்கு ஆர்த்து எழ
மேல் திண் வாயிலில் மேவினர் வீடினார்
காற்றின் மா மகன் கை எனும் காலனால்

#82
அன்ன காலை அயிந்திர வாய் முதல்
துன்னு போர் கண்ட தூதுவர் ஓடினார்
மன்ன கேள் என வந்து வணங்கினார்
சென்னி தாழ்க்க செவியிடை செப்பினார்

#83
வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும்
குடக்கு வாயிலில் துன்முக குன்றமும்
அடக்க_அரும் வலத்து ஐம்பது வெள்ளமும்
பட சிதைந்தது நம் படை என்றனர்

#84
வென்றி வேல் கை நிருதர் வெகுண்டு எழ
தென் திசை பெரு வாயிலில் சேர்ந்துழி
பொன்றினான் அ சுபாரிசன் போயினார்
இன்று போன இடம் அறியோம் என்றார்

#85
கீழை வாயில் கிளர் நிருத படை
ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின்
ஆழி அன்ன அனீக தலைமகன்
பூழியான் உயிர் புக்கது விண் என்றார்

#86
என்ற வார்த்தை எரி புகு நெய் என
சென்று சிந்தை புகுதலும் சீற்ற தீ
கன்று கண்ணின்-வழி சுடர் கான்றிட
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ

#87
மறித்தும் ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான்
இறுத்து கூறும் என்றான் இசை எங்கணும்
நிறுத்தும் நீலன் நெடும் பெரும் சேனையை
ஒறுத்து மற்று அவனோடும் வந்து உற்றனன்

#88
உற்ற போதின் இருவரும் ஒன்று அல
கற்ற போர்கள் எலாம் செய்த காலையில்
நெற்றி மேல் மற்று அ நீலன் நெடும் கையால்
எற்ற வீந்தனன் என்ன இயம்பினார்

#89
அன்னவன்னொடும் போன அரக்கரில்
நல் நகர்க்கு வந்தோம் ஐய நாங்களே
என்ன என்ன எயிற்று அகல் வாய்களை
தின்ன தின்ன எரிந்தன திக்கு எலாம்

#90
மாடு நின்ற நிருதரை வன்கணான்
ஓட நோக்கி உயர் படையான் மற்று அ
கோடு கொண்டு பொருத குரங்கினால்
வீடினான் என்று மீட்டும் விளம்பினான்

#91
கட்டது இந்திரன் வாழ்வை கடைமுறை
பட்டது இங்கு ஒர் குரங்கு படுக்க என்று
இட்ட வெம் சொல் எரியினில் என் செவி
சுட்டது என்னுடை நெஞ்சையும் சுட்டதால்

#92
கருப்பை-போல் குரங்கு எற்ற கதிர் சுழல்
பொருப்பை ஒப்பவன் தான் இன்று பொன்றினான்
அருப்பம் என்று பகையையும் ஆர் அழல்
நெருப்பையும் இகழ்ந்தால் அது நீதியோ

#93
நிற்க அன்னது நீர் நிறை கண்ணினான்
வற்கம் ஆயின மா படையோடும் சென்று
ஒற்கம் வந்து உதவாமல் உறுக என
வில் கொள் வெம் படை வீரரை ஏவியே

#94
மண்டுகின்ற செருவின் வழக்கு எலாம்
கண்டு நின்று கயிலை இடந்தவன்
புண் திறந்தன கண்ணினன் பொங்கினான்
திண் திறல் நெடும் தேர் தெரிந்து ஏறினான்

#95
ஆயிரம் பரி பூண்டது அதிர் குரல்
மா இரும் கடல் போன்றது வானவர்
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல்
சாய இந்திரனே பண்டு தந்தது

#96
ஏற்றி எண்ணி இறைஞ்சி இட கையால்
ஆற்றினான் தன் அடு சிலை அன்னதின்
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும்
கூற்றினாரையும் ஆர் உயிர் கொண்டதே

#97
மற்றும் வான் படை வானவர் மார்பிடை
இற்றிலாதன எண்ணும் இலாதன
பற்றினான் கவசம் படர் மார்பிடை
சுற்றினான் நெடும் தும்பையும் சூடினான்

#98
பேரும் கற்றை கவரி பெரும் கடல்
நீரும் நீர் நுரையும் என நின்றவன்
ஊரும் வெண்மை உவா மதி கீழ் உயர்
காரும் ஒத்தனன் முத்தின் கவிகையான்

#99
போர்த்த சங்க படகம் புடைத்திட
சீர்த்த சங்க கடல் உக தேவர்கள்
வேர்த்து அசங்கிட அண்டம் வெடித்திட
ஆர்த்த சங்கம் அறைந்த முரசமே

#100
தேரும் மாவும் படைஞரும் தெற்றிட
மூரி வல் நெடும் தானையில் முற்றினான்
நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள்
மேரு மால் வரை என்ன விளங்கினான்

#101
ஏழ் இசை கருவி வீற்றிருந்தது என்னினும்
சூழ் இரும் திசைகளை தொடரும் தொல் கொடி
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும்
ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே

#102
வேணு உயர் நெடு வரை அரக்கர் வேலைக்கு ஓர்
தோணி பெற்றனர் என கடக்கும் தொல் செரு
காணிய வந்தவர் கலக்கம் கைம்மிக
சேண் உயர் விசும்பிடை அமரர் சிந்தவே

#103
கண் உறு கடும் புகை கதுவ கார் நிறத்து
அண்ணல் வாள் அரக்கர்-தம் அரத்த பங்கிகள்
வெண் நிறம் கோடலின் உருவின் வேற்றுமை
நண்ணினர் நோக்கவும் அயிர்ப்பு நல்கவே

#104
கால் நெடும் தேர் உயர் கதலியும் கரத்து
ஏனையர் ஏந்திய பதாகை ஈட்டமும்
ஆனையின் கொடிகளும் அளவி தோய்தலால்
வான யாறொடு மழை ஒற்றி வற்றவே

#105
ஆயிரம் கோடி பேய் அங்கை ஆயுதம்
தூயன சுமந்து பின் தொடர சுற்று ஒளிர்
சேயிரு மணி நெடும் சேம தேர் தெரிந்து
ஏயின ஆயிரத்து_இரட்டி எய்தவே

#106
ஊன்றிய பெரும் படை உலைய உற்று உடன்
ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ
தோன்றினன் உலகு என தொடர்ந்து நின்றன
மூன்றையும் கடந்து ஒரு வெற்றி முற்றினான்

#107
ஓதுறு கரும் கடற்கு ஒத்த தானையான்
தீது உறு சிறு தொழில் அரக்கன் சீற்றத்தால்
போது உறு பெரும் களம் புகுந்துளான் என
தூதுவர் நாயகற்கு அறிய சொல்லினார்

#108
ஆங்கு அவன் அமர் தொழிற்கு அணுகினான் என
வாங்கினென் சீதையை என்னும் வன்மையால்
தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற
வீங்கின இராகவன் வீர தோள்களே

#109
தொடையுறு வற்கலை ஆடை சுற்றி மேல்
புடை உறு வயிர வாள் பொலிய வீக்கினான்
இடை உறு கருமத்தின் எல்லை கண்டவர்
கடை உறு நோக்கினின் காணும் காட்சியான்

#110
ஒத்து இரு சிறு குறள் பாதம் உய்த்த நாள்
வித்தக அரு மறை உலகை மிக்கு மேல்
பத்து உள விரல் புடை பரந்த பண்பு என
சித்திர சேவடி கழலும் சேர்த்தினான்

#111
பூ உயர் மின் எலாம் பூத்த வான் நிகர்
மேவரும் கவசம் இட்டு இறுக்கி வீக்கினன்
தேவியை திரு மறு மார்பின் தீர்ந்தனன்
நோ இலள் என்பது நோக்கினான்-கொலோ

#112
நல் புற கோதை தன் நளின செம் கையின்
நிற்புற சுற்றிய காட்சி நேமியான்
கற்பக கொம்பினை கரிய மாசுணம்
பொற்பு உற தழுவிய தன்மை போன்றதால்

#113
புதை இருள் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி
சிதைவு அரு நாள் வர சிவந்த தாமரை
இதழ்-தொறும் வண்டு வீற்றிருந்ததாம் என
ததைவு உறு நிரை விரல் புட்டில் தாங்கினான்

#114
பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து
எல்லை_இல் நூல் கடல் ஏற நோக்கிய
நல் இயல் நவை அறு கவிஞர் நா வரும்
சொல் என தொலைவு இலா தூணி தூக்கினான்

#115
கிளர் மழை குழுவிடை கிளர்ந்த மின் என
அளவு_அறு செம் சுடர் பட்டம் ஆர்த்தனன்
இள வரி கவட்டிலை ஆரொடு ஏர் பெற
துளவொடு தும்பையும் சுழிய சூடினான்

#116
ஓங்கிய உலகமும் உயிரும் உட்புறம்
தாங்கிய பொருள்களும் தானும் தான் என
நீங்கியது யாவது நினைக்கிலோம் அவன்
வாங்கிய வரி சிலை மற்றொன்றே-கொலாம்

#117
நால் கடல் உலகமும் விசும்பும் நாள்_மலர்
தூர்க்க வெம் சேனையும் தானும் தோன்றினான்
மால் கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும்
பாற்கடலோடும் வந்து எதிரும் பான்மை போல்

#118
ஊழியின் உருத்திரன் உருவுகொண்டு தான்
ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என
வாழிய வரி சிலை தம்பி மா படை
கூழையின் நெற்றி நின்றானை கூடினான்

#119
என்புழி நிருதராம் ஏழு வேலையும்
மின் பொழி எயிறு உடை கவியின் வெள்ளமும்
தென் புல கிழவனும் செய்கை கீழ்ப்பட
புன் புல களத்திடை பொருத போலுமால்

#120
துமிந்தன தலை குடர் சொரிந்த தேர் குலம்
அவிந்தன புரவியும் ஆளும் அற்றன
குவிந்தன பிண குவை சுமந்து கோள் நிலம்
நிமிர்ந்தது பரந்தது குருதி நீத்தமே

#121
கடும் குரங்கு இரு கையால் எற்ற கால் வய
கொடும் குரம் துணிந்தன புரவி குத்தினால்
ஒடுங்கு உரம் துணிந்தனர் நிருதர் ஓடின
நெடும் குரம்பு என நிறை குருதி நீத்தமே

#122
தெற்கு இது வடக்கு இது என்ன தேர்கிலார்
பல் குவை பரந்தன குரக்கு பல் பிணம்
பொன் குவை நிகர்த்தன நிருதர் போர் சவம்
கல் குவை நிகர்த்தன மழையும் காட்டின

#123
அவ்வழி இராவணன் அமரர் அஞ்ச தன்
வெவ் விழி நெருப்பு உக வில்லின் நாணினை
செ வழி கோதையின் தெறிக்க சிந்தின
எவ்வழி மருங்கினும் இரிந்த வானரம்

#124
உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து
இரியலுற்றன சில இறந்தவால் சில
வெருவலுற்றன சில விம்மலுற்றன
பொரு களத்து உயிரொடும் புரண்டு போம் சில

#125
பொர கரு நிற நெடு விசும்பு போழ்பட
இரக்கம் இல் இராவணன் எறிந்த நாணினால்
குரக்கு_இனம் உற்றது என் கூறின் தன் குலத்து
அரக்கரும் அனையது ஓர் அச்சம் எய்தினார்

#126
வீடணன் ஒருவனும் இளைய வீரனும்
கோடு அணை குரங்கினுக்கு அரசும் கொள்கையால்
நாடினர் நின்றனர் நாலு திக்கினும்
ஓடினர் அல்லவர் ஒளித்தது உம்பரே

#127
எடுக்கின் நானிலத்தை ஏந்தும் இராவணன் எறிந்த நாணால்
நடுக்கினான் உலகை என்பார் நல்கினான் என்னல்-பாற்றோ
மிடுக்கினால் மிக்க வானோர் மேக்கு உயர் வெள்ளம் மேல்_நாள்
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்பு கேட்டனர் என்ன கேட்டார்

#128
ஏந்திய சிகரம் ஒன்று அங்கு இந்திரன் குலிசம் என்ன
காந்திய உருமின் விட்டான் கவி_குலத்து அரசன் அ கல்
நீந்த_அரு நெருப்பு சிந்தி நிமிர்தலும் நிருதர்க்கும் எல்லாம்
வேந்தனும் பகழி ஒன்றால் வெறும் துகள் ஆக்கி வீழ்த்தான்

#129
அண்ணல் வாள் அரக்கன் விட்ட அம்பினால் அழிந்து சிந்தி
திண் நெடும் சிகரம் நீறாய் திசைதிசை சிந்தலோடும்
கண் நெடும் கடும் தீ கால கவி குலத்து அரசன் கையால்
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கி கொண்டான்

#130
கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால் காட்ட தக்க
கண்டம் ஆயிரத்தின் மேலும் உள என கண்டம் கண்டான்
விண்ட வாள் அரக்கன் மீது விசும்பு எரி பறக்க விட்டான்
பண்டை மால் வரையின் மிக்கது ஒரு கிரி பரிதி மைந்தன்

#131
அ கிரிதனையும் ஆங்கு ஓர் அம்பினால் அறுத்து மாற்றி
திக்கு இரிதர போர் வென்ற சிலையினை வளைய வாங்கி
சுக்கிரீவன்-தன் மார்பில் புங்கமும் தோன்றா-வண்ணம்
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான்

#132
சுடு கணை படுதலோடும் துளங்கினான் துளங்கா-முன்னம்
குட திசை வாயில் நின்ற மாருதி புகுந்த கொள்கை
உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா-முன்னர்
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான்

#133
பரிதி சேய் தேறா-முன்னம் பரு வலி அரக்க பல் போர்
புரிதியோ என்னோடு என்னா புகை எழ விழித்து பொங்கி
வருதியேல் வா வா என்பான் மேல் மலை ஒன்று வாங்கி
சுருதியே அனைய தோளால் வீசினான் காலின் தோன்றல்

#134
மீ எழு மேகம் எல்லாம் வெந்து வெம் கரியின் சிந்தி
தீ எழ விசும்பினூடு செல்கின்ற செயலை நோக்கி
காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புற தொடுத்து கண்டித்து
ஆயிரம் கூறு செய்தான் அமரரை அலக்கண் செய்தான்

#135
மீட்டு ஒரு சிகரம் வாங்கி வீங்கு தோள் விசையின் வீசி
ஓட்டினான் ஓட்ட வானத்து உருமினும் கடுக ஓடி
கோட்டு வெம் சிலையின் வாளி முன் சென்று கொற்ற பொன் தோள்
பூட்டிய வலயத்தோடும் பூழியாய் போயிற்று அன்றே

#136
மெய் எரிந்து அழன்று பொங்கி வெம் கணான் விம்மி மீட்டு ஓர்
மை வரை வாங்குவானை வரி சிலை வளைய வாங்கி
கையினும் தோளின் மேலும் மார்பினும் கரக்க வாளி
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான்

#137
யார் இது செய்யகிற்பார் என்று கொண்டு இமையோர் ஏத்த
மாருதி பின்னும் அங்கு ஓர் மராமரம் கையின் வாங்கி
வேரொடும் சுழற்றி விட்டான் விடுதலும் இலங்கை வேந்தன்
சாரதி தலையை தள்ளி சென்றது நிருதர் சாய

#138
மாறி ஓர் பாகன் ஏற மறி திரை பரவை பின்னும்
சீறியது அனையன் ஆன செறி கழல் அரக்கன் தெய்வ
நூறு கோல் நொய்தின் எய்தான் அவை உடல் நுழைதலோடும்
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கண் உற்றான்

#139
கல் கொண்டும் மரங்கள் கொண்டும் கை கொண்டும் களித்து நும் வாய்
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளி
பல் கொண்டும் மலைகின்றாரின் பழி கொண்டு பயந்தது யான் ஓர்
வில் கொண்டு நின்ற போது விறல் கொண்டு மீள்திர் போலாம்

#140
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர்
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமு போல
ஒன்றின் ஒன்று அதிகம் ஆக ஆயிர கோடி உய்த்தான்
சென்றது குரக்கு சேனை கால் எறி கடலின் சிந்தி

#141
கலக்கிய அரக்கன் வில்லின் கல்வியும் கவிகள் உற்ற
அலக்கணும் தலைவர் செய்த தன்மையும் அமைய கண்டான்
இலக்குவன் என் கை வாளிக்கு இலக்கு இவன் இவனை இன்று
விலக்குவென் என்ன வந்தான் வில் உடை மேரு என்ன

#142
தேயத்தின் தலைவன் மைந்தன் சிலையை நாண் எறிந்தான் தீய
மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை முடிவின் மாரி
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம் யானை
சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர் செறுநர் எல்லாம்

#143
ஆற்றல் சால் அரக்கன்-தானும் அயல் நின்ற வயவர் நெஞ்சம்
வீற்று வீற்று ஆகி உற்ற தன்மையும் வீரன் தம்பி
கூற்றின் வெம் புருவம் அன்ன சிலை நெடும் குரலும் கேளா
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா

#144
கட்டு அமை தேரின் மேலும் களி நெடும் களிற்றின் மேலும்
விட்டு எழு புரவி மேலும் வெள் எயிற்று அரக்கர் மேலும்
முட்டிய மழையின் துள்ளி முறை இன்றி மொய்க்குமா போல்
பட்டன பகழி எங்கும் பரந்தது குருதி பவ்வம்

#145
நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும்
முகங்களில் புக்க வாளி அபரத்தை முற்றி மொய்ம்பர்
அகங்களை கழன்று தேரின் அச்சினை உருவி அப்பால்
உகங்களின் கடை சென்றாலும் ஓய்வு இல ஓடலுற்ற

#146
நூக்கிய களிறும் தேரும் புரவியும் நூழில் செய்ய
ஆக்கிய அரக்கர் தானை ஐ_இரு கோடி கையொத்து
ஊக்கிய படைகள் வீசி உடற்றிய உலகம் செய்த
பாக்கியம் அனைய வீரன் தம்பியை சுற்றும் பற்றி

#147
உறு பகை மனிதன் இன்று எம் இறைவனை உறுகிற்பானேல்
வெறுவிது நம்-தம் வீரம் என்று ஒரு மேன்மை தோன்ற
எறி படை அரக்கர் ஏற்றார் ஏற்ற கைம் மாற்றான் என்னா
வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்று என்ன

#148
அறுத்தனன் அரக்கர் எய்த எறிந்தன அறுத்து அறாத
பொறுத்தனன் பகழி மாரி பொழிந்தனன் உயிரின் போகம்
வெறுத்தனன் நமனும் வேலை உதிரத்தின் வெள்ளம் மீள
மறித்தன மறிந்த எங்கும் பிணங்கள் மா மலைகள் மான

#149
தலை எலாம் அற்ற முற்றும் தாள் எலாம் அற்ற தோளாம்
மலை எலாம் அற்ற பொன்_தார் மார்பு எலாம் அற்ற சூலத்து
இலை எலாம் அற்ற வீரர் எயிறு எலாம் அற்ற கொற்ற
சிலை எலாம் அற்ற கற்ற செரு எலாம் அற்ற சிந்தி

#150
தேர் எலாம் துமிந்த மாவின் திறம் எலாம் துமிந்த செம் கண்
கார் எலாம் துமிந்த வீரர் கழல் எலாம் துமிந்த கண்ட
தார் எலாம் துமிந்த நின்ற தனு எலாம் துமிந்த தத்தம்
போர் எலாம் துமிந்த கொண்ட புகழ் எலாம் துமிந்து போய

#151
அரவு இயல் தறுகண் வன் தாள் ஆள் விழ ஆள் மேல் வீழ்ந்த
புரவி மேல் பூட்கை வீழ்ந்த பூட்கை மேல் பொலன் தேர் வீழ்ந்த
நிரவிய தேரின் மேன்மேல் நெடும் தலை கிடந்த நெய்த்தோர்
விரவிய களத்துள் எங்கும் வெள்ளிடை அரிது வீழ

#152
கடுப்பின்-கண் அமரரேயும் கார்முகத்து அம்பு கையால்
தொடுக்கின்றான் துரக்கின்றான் என்று உணர்ந்திலர் துரந்த வாளி
இடுக்கு ஒன்றும் காணார் காண்பது எய்த கோல் நொய்தின் எய்தி
படுக்கின்ற பிணத்தின் பம்மல் குப்பையின் பரப்பே பல் கால்

#153
கொற்ற வாள் கொலை வேல் சூலம் கொடும் சிலை முதல ஆய
வெற்றி வெம் படைகள் யாவும் வெம் தொழில் அரக்கர் மேற்கொண்டு
உற்றன கூற்றும் அஞ்ச ஒளிர்வன ஒன்று நூறு ஆய்
அற்றன அன்றி ஒன்றும் அறாதன இல்லை அன்றே

#154
குன்று அன யானை மான குரகதம் கொடி தேர் கோப
வன் திறல் ஆளி சீயம் மற்றைய பிறவும் முற்றும்
சென்றன எல்லை_இல்லை திரிந்தில சிறிது போதும்
நின்றன இல்லை எல்லாம் கிடந்தன நெளிந்து பார் மேல்

#155
சாய்ந்தது நிருதர் தானை தமர் தலை இடறி தள்ளுற்று
ஓய்ந்தது ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக அன்றே
வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரி வில் வெம்பி
காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ

#156
காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி கண்ணுற்று
ஏற்றனன் இலங்கை வேந்தன் எரி விழித்து இராமன் தம்பி
கூற்று மால் கொண்டது என்ன கொல்கின்றான் குறுக சென்றான்
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சிறிதும் பாதம்

#157
காக்கின்ற என் நெடும் காவலின் வலி நீக்கிய கள்வா
போக்கு இன்று உனக்கு அணித்தால் என புகன்றான் புகை உயிர்ப்பான்
கோக்கின்றன தொடுக்கின்றன கொலை அம்புகள் தலையோடு
ஈர்க்கின்றன கனல் ஒப்பன எய்தான் இகல் செய்தான்

#158
எய்தான் சரம் எய்தா-வகை இற்றீக என இடையே
வைதால் என ஐது ஆயின வடி வாளியின் அறுத்தான்
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார்
பெய்தால் என சர மாரிகள் சொரிந்தான் துயில் பிரிந்தான்

#159
ஆம் குஞ்சரம் அனையான் விடும் அயில் வாளிகள் அவைதாம்
வீங்கும் சரம் பருவத்து இழி மழை போல்வன விலக்கா
தூங்கும் சர நெடும் புட்டிலின் சுடர் வேலவற்கு இளையான்
வாங்கும் சரம் வாங்கா-வகை அறுத்தான் அறம் மறுத்தான்

#160
அப்போதையின் அயர்வு ஆறிய அனுமான் அழல் விழியா
பொய் போர் சில புரியேல் இனி என வந்து இடை புகுந்தான்
கை போதகம் என முந்து அவன் கடும் தேர் எதிர் நடந்தான்
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான்

#161
வென்றாய் உலகு ஒரு மூன்றையும் மெலியா நெடு வலியால்
தின்றாய் செறி கழல் இந்திரன் இசையை திசை திரித்தாய்
என்றாலும் இன்று அழிவு உன்-வயின் எய்தும் என இசையா
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான்

#162
எடுத்தான் வல தட கையினை இது போய் உலகு எல்லாம்
அடுத்தான் குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான்
மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம்
கடுத்தான் என கொடியாற்கு எதிர் காண்பாய் என காட்டா

#163
வில் ஆயுதம் முதல் ஆகிய வய வெம் படை மிடலோடு
எல்லாம் இடை பயின்றாய் புயம் நால் ஐந்தினொடு இயைந்தாய்
வல்லாய் செரு வலியாய் திறல் மறவோய் இதன் எதிரே
நில்லாய் என நிகழ்த்தா நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான்

#164
நீள் ஆண்மையினுடனே எதிர் நின்றாய் இஃது ஒன்றோ
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும்
தாளாண்மையும் நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும் இனி நின்
தோளாண்மையும் இசையோடு உடன் துடைப்பேன் ஒரு புடைப்பால்

#165
பரக்க பல உரைத்து என் படர் கயிலை பெரு வரைக்கும்
அரக்குற்று எரி பொறி கண் திசை கரிக்கும் சிறிது அனுங்கா
உர குப்பையின் உயர் தோள் பல உடையாய் உரன் உடையாய்
குரக்கு தனி கரத்தின் புடை பொறை ஆற்றுவை-கொல்லாம்

#166
என் தோள் வலி அதனால் எடுத்து யான் எற்றவும் இறவா
நின்றாய் எனின் நீ பின் எனை நின் கை தல நிரையால்
குன்றே புரை தோளாய் மிடல்-கொடு குத்துதி குத்த
பொன்றேன் எனின் நின்னோடு எதிர் பொருகின்றிலென் என்றான்

#167
காரின் கரியவன் மாருதி கழற கடிது உகவா
வீரற்கு உரியது சொற்றனை விறலோய் ஒரு தனியேன்
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின்
பேருக்கு உலகு அளவே இனி உளவோ பிற என்றான்

#168
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும்
கொன்றாய் உயர் தேர் மேல் நிமிர் கொடு வெம் சிலை கோலி
வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து நின் வலியால்
நின்றாயொடு நின்றார் இனி நிகரோ உரை நெடியோய்

#169
மு தேவர்கள் முதலாயினர் முழு மூன்று உலகிடையே
எ தேவர்கள் எ தானவர் எதிர்வார் இகல் என் நேர்
பித்து ஏறினர் அல்லால் இடை பேராது எதிர் மார்பில்
குத்தே என நின்றாய் இது கூறும் தரம் அன்றால்

#170
பொரு கைத்தலம் இருபத்து உள புகழும் பெரிது உளதால்
வரு கைத்தல மத வெம் கரி வலி கெட்டு என வருவாய்
இரு கைத்தலம் உடையாய் எதிர் இவை சொற்றனை இனிமேல்
தருகைக்கு உரியது ஒர் கொற்றம் என் அமர் தக்கதும் அன்றால்

#171
திசை அத்தனையையும் வென்றது சிதைய புகழ் தெறும் அ
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை
அசைய தரை அரைவித்தனை அழி செம்_புனல் அதுவோ
பசை_அற்றிலது ஒரு நீ எனது எதிர் நின்று இவை பகர்வாய்

#172
பூணித்து இவை உரை-செய்தனை அதனால் உரை பொதுவே
பாணித்தது பிறிது என் சில பகர்கின்றது பழியால்
நாணி தலை இடுகின்றிலென் நனி வந்து உலகு எவையும்
காண கடிது எதிர் குத்துதி என்றான் வினை கடியான்

#173
வீர திறம் இது நன்று என வியவா மிக விளியா
தேரின் கடிது இவரா முழு விழியின் பொறி சிதறா
ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக அவன் மா
மார்பில் கடிது எதிர் குத்தினன் வயிர கரம் அதனால்

#174
அயிர் உக்கன நெடு மால் வரை அனல் உக்கன விழிகள்
தயிர் உக்கன முழு மூளைகள் தலை உக்கன தரியா
உயிர் உக்கன நிருத குலம் உயர் வானரம் எவையும்
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம்

#175
வில் சிந்தின நெடு நாண் நிமிர் கரை சிந்தின விரி நீர்
கல் சிந்தின குல மால் வரை கதிர் சிந்தின சுடரும்
பல் சிந்தின மத யானைகள் படை சிந்தினர் எவரும்
எல் சிந்திய எரி சிந்தின இகலோன் மணி அகலம்

#176
கை குத்து அது படலும் கழல் நிருதர்க்கு இறை கறை நீர்
மை குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிர தட மார்பில்
திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை செருவில்
புக்கு இற்றன போகாதன புறம் உக்கன புகழின்

#177
அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன திசை போய்
விள்ளா நெடு முழு மீன் என விழி வெம் பொறி எழ நின்று
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் அறம் வலித்தான்

#178
ஆர்த்தார் விசும்பு உறைவோர் நெடிது அனுமான் மிசை அதிகம்
தூர்த்தார் நறு முழு மென் மலர் இசை ஆசிகள் சொன்னார்
வேர்த்தார் நிருதர்கள் வானரர் வியந்தார் இவன் விசயம்
தீர்த்தான் என உவந்து ஆடினர் முழு மெய் மயிர் சிலிர்த்தார்

#179
கற்று அங்கியின் நெடு வாயுவின் நிலை கண்டவர் கதியால்
மற்று அங்கு ஒரு வடிவு உற்று அது மாறாடுறு காலை
பற்று அங்கு அருமையின் அன்னது பயில்கின்றது ஒர் செயலால்
உற்று அங்கு அது புறம் போய் உடல் புகுந்தால் என உணர்ந்தான்

#180
உணரா நெடிது உயிரா உரை உதவா எரி உமிழா
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய்
அணையாய் இனி எனது ஊழ் என அடரா எதிர் படரா
பணை ஆர் புயம் உடையானிடை சில இ மொழி பகர்வான்

#181
வலி என்பதும் உளதே அது நின் பாலது மறவோய்
அலி என்பவர் புறம் நின்றவர் உலகு ஏழினும் அடைத்தாய்
சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால் இறை சலியேன்
மெலிவு என்பதும் உணர்ந்தேன் எனை வென்றாய் இனி விறலோய்

#182
ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை
குன்றின் மிசை கடை நாள் விழும் உரும் ஏறு என குத்த
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ
இன்றும் உளை என்றும் உளை இலை ஓர் பகை என்றான்

#183
என்றான் எதிர் சென்றான் இகல் அடு மாருதி எனை நீ
வென்றாய் அலையோ உன் உயிர் வீடாது உரை செய்தாய்
நன்றாக நின் நிலை நன்று என நல்கா எதிர் நடவா
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க என கொடுத்தான்

#184
உறுக்கி தனி எதிர் நின்றவன் உரத்தில் தனது ஒளிர் பல்
இறுக்கி பல நெடு வாய் மடித்து எரி கண்-தொறும் இழிய
முறுக்கி பொதி நிமிர் பல் விரல் நெரிய திசை முரிய
குறுக்கி கரம் நெடும் தோள் புறம் நிமிர கொடு குத்த

#185
பள்ள கடல் கொள்ள படர் படி பேரினும் பதையா
வள்ளல் பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான்
கள்ள கறை உள்ளத்து அதிர் கழல் வெய்யவன் கரத்தால்
தள்ள தளர் வெள்ளி பெரும் கிரி ஆம் என சலித்தான்

#186
சலித்த காலையின் இமையவர் உலகு எலாம் சலித்த
சலித்ததால் அறம் சலித்தது மெய் மொழி தகவும்
சலித்தது அன்றியும் புகழொடு சுருதியும் சலித்த
சலித்த நீதியும் சலித்தன கருணையும் தவமும்

#187
அனைய காலையின் அரி குல தலைவர் அ வழியோர்
எனையர் அன்னவர் யாவரும் ஒரு குவடு ஏந்தி
நினைவின் முன் நெடு விசும்பு ஒரு வெளி இன்றி நெருங்க
வினை இது என்று அறிந்து இராவணன் மேல் செல விட்டார்

#188
ஒத்த கையினர் ஊழியின் இறுதியின் உலகை
மெத்த மீது எழு மேகத்தின் விசும்பு எலாம் மிடைய
பத்து நூறு கோடிக்கு மேல் பனி படு சிகரம்
எத்த மேல் செல எறிந்தனர் பிறிந்தனர் இமையோர்

#189
தருக்கி வீசிட விசும்பு இடம் இன்மையின் தம்மின்
நெருக்குகின்றன நின்றன சென்றில நிறைந்த
அருக்கனும் மறைந்தான் இருள் விழுங்கியது அண்டம்
சுருக்கம் உற்றனர் அரக்கர் என்று இமையவர் சூழ்ந்தார்

#190
ஒன்றின் ஒன்று பட்டு உடைவன இடித்து உரும் அதிர
சென்ற வன் பொறி மின் பல செறிந்திட தெய்வ
வென்றி வில் என விழு நிழல் விரிந்திட மேன்மேல்
கன்றி ஓடிட கல் மழை நிகர்த்தன கற்கள்

#191
இரிந்து நீங்கியது இராக்கத பெரும் படை எங்கும்
விரிந்து சிந்தின வானத்து மீனொடு விமானம்
சொரிந்த வெம் பொறி பட கடல் சுவறின தோற்றம்
கரிந்த கண்டகர் கண் மணி என் பல கழறி

#192
இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த
கறுத்த சிந்தையன் இராவணன் அனையது கண்டான்
ஒறுத்து வானவர் புகழுண்ட பார வில் உளைய
அறுத்து நீக்கினன் ஆயிர கோடி மேல் அம்பால்

#193
காம்பு எலாம் கடும் துகள் பட களிறு எலாம் துணிய
பாம்பு எலாம் பட யாளியும் உழுவையும் பாற
கூம்பல் மா மரம் எரிந்து உக குறும் துகள் நுறுங்க
சாம்பர் ஆயின தட வரை சுடு கணை தடிய

#194
உற்றவாறு என்றும் ஒன்று நூறு ஆயிரம் உருவா
இற்றவாறு என்றும் இடிப்புண்டு பொடி பொடி ஆகி
அற்றவாறு என்றும் அரக்கனை அடு சிலை கொடியோன்
கற்றவாறு என்றும் வானவர் கைத்தலம் குலைந்தார்

#195
அடல் துடைத்தும் என்று அரி குல வீரர் அன்று எறிந்த
திடல் துடைத்தன தசமுகன் சரம் அவை திசை சூழ்
கடல் துடைத்தன களத்தின் நின்று உயர்தரும் பூழி
உடல் துடைத்தன உதிரமும் துடைத்தது ஒண் புடவி

#196
கொல்வென் இ கணமே மற்று இ வானர குழுவை
வெல்வென் மானிடர் இருவரை என சினம் வீங்க
வல் வன் வார் சிலை பத்து உடன் இட கையின் வாங்கி
தொல் வன் மாரியின் தொடர்வன சுடு சரம் துரந்தான்

#197
ஐ_இரண்டு கார்முகத்தினும் ஆயிரம் பகழி
கைகள் ஈர்_ஐந்தினாலும் வெம் கடுப்பினில் தொடுத்துற்று
எய்ய எஞ்சின வானமும் இரு நில வரைப்பும்
மொய் கொள் வேலையும் திசைகளும் சரங்களாய் முடிந்த

#198
அந்தி வானகம் ஒத்தது அ அமர் களம் உதிரம்
சிந்தி வேலையும் திசைகளும் நிறைந்தன சரத்தால்
பந்தி பந்தியாய் மடிந்தது வானர பகுதி
வந்து மேகங்கள் படிந்தன பிண பெரு மலை மேல்

#199
நீலன் அம்பொடு சென்றிலன் நின்றிலன் அனிலன்
காலனார் வயத்து அடைந்திலன் ஏவுண்ட கவயன்
ஆலம் அன்னது ஓர் சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான்
சூலம் அன்னது ஓர் வாளியால் சோம்பினன் சாம்பன்

#200
மற்றும் வீரர்-தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப
கொற்ற வீரமும் ஆண்_தொழில் செய்கையும் குறைந்தார்
சுற்றும் வானர பெரும் கடல் தொலைந்தது தொலையாது
உற்று நின்றவர் ஓடினர் இலக்குவன் உருத்தான்

#201
நூறு கோடிய நூறு நூறு_ஆயிர கோடி
வேறு வேறு எய்த சரம் எலாம் சரங்களால் விலக்கி
ஏறு சேவகன் தம்பி அ இராவணன் எடுத்த
ஆறு நாலு வெம் சிலையையும் கணைகளால் அறுத்தான்

#202
ஆர்த்து வானவர் ஆவலம் கொட்டினர் அரக்கர்
வேர்த்து நெஞ்சமும் வெதும்பினார் வினை அறு முனிவர்
தூர்த்து நாள்_மலர் சொரிந்தனர் இராவணன் தோளை
பார்த்து உவந்தனன் குனித்தது வானரம் படியில்

#203
நன்று போர் வலி நன்று போர் ஆள் வலி வீரம்
நன்று நோக்கமும் நன்று கை கடுமையும் நன்று
நன்று கல்வியும் நன்று நின் திண்மையும் நலனும்
என்று கை மறித்து இராவணன் ஒருவன் நீ என்றான்

#204
கானின் அன்று இகல் கரன் படை படுத்த அ கரியோன்
தானும் இந்திரன்-தன்னை ஓர் தனு வலம்-தன்னால்
வானில் வென்ற என் மதலையும் வரி சிலை பிடித்த
யானும் அல்லவர் யார் உனக்கு எதிர் என்றும் இசைத்தான்

#205
வில்லினால் இவன் வெலப்படான் என சினம் வீங்க
கொல்லும் நாளும் இன்று இது என சிந்தையில் கொண்டான்
பல்லினால் இதழ் அதுக்கினன் பரு வலி கரத்தால்
எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் எடுத்து எறிந்தான்

#206
எறிந்த கால வேல் எய்த அம்பு யாவையும் எரித்து
பொறிந்து போய் உக தீ உக விசையினின் பொங்கி
செறிந்த தாரவன் மார்பிடை சென்றது சிந்தை
அறிந்த மைந்தனும் அமர் நெடும் களத்திடை அயர்ந்தான்

#207
இரியலுற்றது வானர பெரும் படை இமையோர்
பரியலுற்றனர் உலைந்தனர் முனிவரும் பதைத்தார்
விரி திரை கடற்கு இரட்டி கொண்டு ஆர்த்தனர் விரவார்
திரிகை ஒத்தது மண்தலம் கதிர் ஒளி தீர்ந்த

#208
அஞ்சினான் அலன் அயன் தந்த வேலினும் ஆவி
துஞ்சினான் அலன் துளங்கினான் என்பது துணியா
எஞ்சு இல் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வென் என்று எண்ணி
நஞ்சினால் செய்த நெஞ்சினான் பார் மிசை நடந்தான்

#209
உள்ளி வெம் பிணத்து உதிர நீர் வெள்ளத்தின் ஓடி
அள்ளி அம் கைகள் இருபதும் பற்றி பண்டு அரன் மா
வெள்ளி அம் கிரி எடுத்தது வெள்கினான் என்ன
என் இல் பொன் மலை எடுக்கலுற்றான் என எடுத்தான்

#210
அடுத்த நல் உணர்வு ஒழிந்திலன் அம்பரம் செம்பொன்
உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே
தொடுத்த எண் வகை மூர்த்தியை துளக்கி வெண் பொருப்பை
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையான்

#211
தலைகள் பத்தொடும் தழுவிய தசமுக தலைவன்
நிலை கொள் மா கடல் ஒத்தனன் கரம் புடை நிமிரும்
அலைகள் ஒத்தன அதில் எழும் இரவியை ஒத்தான்
இலை கொள் தண் துழாய் இலங்கு தோள் இராமனுக்கு இளையான்

#212
எடுக்கல் உற்று அவன் மேனியை ஏந்துதற்கு ஏற்ற
மிடுக்கு இலாமையின் இராவணன் வெய்து_உயிர்ப்பு உற்றான்
இடுக்கில் நின்ற அ மாருதி புகுந்து எடுத்து ஏந்தி
தடுக்கலாதது ஓர் விசையினின் எழுந்து அயல் சார்ந்தான்

#213
தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான்
தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனி துணை அதனால்
அகவு காதலால் ஆண்தகை ஆயினும் அனுமன்
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான்

#214
மையல் கூர் மனத்து இராவணன் படையினால் மயங்கும்
செய்ய வாள் அரி ஏறு அனான் சிறிதினில் தேற
கையும் கால்களும் நயனமும் கமலமே அனைய
பொய் இலாதவன் நின்ற இடத்து அனுமனும் போனான்

#215
போன காலையில் புக்கனன் புங்கவன் போர் வேட்டு
யானை மேல் செலும் கோள் அரி_ஏறு அது என்ன
வானுளோர் கணம் ஆர்த்தனர் தூர்த்தனர் மலர் மேல்
தூ நவின்ற வேல் அரக்கனும் தேரினை துரந்தான்

#216
தேரில் போர் அரக்கன் செல சேவகன் தனியே
பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன் பரிந்தான்
சீரில் செல்கின்றது இல்லை இ செரு எனும் திறத்தால்
வாரின் பெய் கழல் மாருதி கதுமென வந்தான்

#217
நூறு பத்துடை நொறில் பரி தேரின் மேல் நுன்முன்
மாறு இல் பேர் அரக்கன் பொர நிலத்து நீ மலைதல்
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும்
ஏறு நீ ஐய என்னுடை தோளின் மேல் என்றான்

#218
நன்று நன்று எனா நாயகன் ஏறினன் நாம
குன்றின் மேல் இவர் கோள் அரி_ஏறு என கூடி
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர் ஈன்ற
கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான்

#219
மாணியாய் உலகு அளந்த நாள் அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்
காணி ஆக பண்டு உடையனாம் ஒரு தனி கலுழன்
நாணினான் மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான்

#220
ஓதம் ஒத்தனன் மாருதி அதன் அகத்து உறையும்
நாதன் ஒத்தனன் என்னினோ துயில்கிலன் நம்பன்
வேதம் ஒத்தனன் மாருதி வேதத்தின் சிரத்தின்
போதம் ஒத்தனன் இராமன் வேறு இதின் இலை பொருவே

#221
தகுதியாய் நின்ற வென்றி மாருதி தனிமை சார்ந்த
மிகுதியை வேறு நோக்கின் எ வண்ணம் விளம்பும் தன்மை
புகுதி கூர்ந்துள்ளார் வேதம் பொதுவுற புலத்து நோக்கும்
பகுதியை ஒத்தான் வீரன் மேலை தன் பதமே ஒத்தான்

#222
மேருவின் சிகரம் போன்றது என்னினும் வெளிறு உண்டாமால்
மூரி நீர் அண்டம் எல்லாம் வயிற்றிடை முன்னம் கொண்ட
ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலம்-அது ஆக
சாரிகை திரியல் ஆன மாருதி தாம பொன் தோள்

#223
ஆசி சொல்லினர் அருந்தவர் அறம் எனும் தெய்வம்
காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை
ஈசன் நான்முகன் என்று இவர் முதலிய இமையோர்
பூசல் காணிய வந்தனர் அந்தரம் புகுந்தார்

#224
அண்ணல் அஞ்சன வண்ணனும் அமர் குறித்து அமைந்தான்
எண்ண_அரும் பெரும் தனி வலி சிலையை நாண் எறிந்தான்
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய் பெய்து
உண்ணும் காலத்து அ உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை

#225
ஆவி சென்றிலர் நின்றிலர் அரக்கரோடு இயக்கர்
நா உலர்ந்தனர் கலங்கினர் விலங்கினர் நடுங்கி
கோவை நின்ற பேர் அண்டமும் குலைந்தன குலையா
தேவதேவனும் விரிஞ்சனும் சிரதலம் குலைந்தார்

#226
ஊழி வெம் கனல் ஒப்பன துப்பு அன உருவ
ஆழி நீரையும் குடிப்பன திசைகளை அளப்ப
வீழின் மீச்செலின் மண்ணையும் விண்ணையும் தொளைப்ப
ஏழு வெம் சரம் உடன் தொடுத்து இராவணன் எய்தான்

#227
எய்த வாளியை ஏழினால் ஏழினோடு ஏழு
செய்து வெம் சரம் ஐந்து ஒரு தொடையினில் சேர்த்தி
வெய்து கால வெம் கனல்களும் வெள்குற பொறிகள்
பெய்து போம் வகை இராகவன் சிலை நின்று பெயர்ந்தான்

#228
வாளி ஐந்தையும் ஐந்தினால் விசும்பிடை மாற்றி
ஆளி மொய்ம்பின் அ அரக்கனும் ஐ_இரண்டு அம்பு
தோளில் நாண் உற வாங்கினன் துரந்தனன் சுருதி
ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான்

#229
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர்
செறுத்து விட்டன படை எல்லாம் கணைகளால் சிந்தி
இறுத்து வீசிய கிரிகளை எரி உக நூறி
ஒறுத்து மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான்

#230
மீன் உடை கரும் கடல் புரை இராக்கதர் விட்ட
ஊன் உடை படை இராவணன் அம்பொடும் ஓடி
வானர கடல் படா வகை வாளியால் மாற்றி
தான் உடை சரத்தால் அவர் தலைமலை தடிந்தான்

#231
இம்பரான் எனில் விசும்பினன் ஆகும் ஓர் இமைப்பில்
தும்பை சூடிய இராவணன் முகம்-தொறும் தோன்றும்
வெம்பு வஞ்சகர் விழி-தொறும் திரியும் மேல் நின்றான்
அம்பின் முன் செலும் மனத்திற்கும் முன் செலும் அனுமன்

#232
ஆடுகின்றன கவந்தமும் அவற்றொடும் ஆடி
பாடுகின்றன அலகையும் நீங்கிய பனை கை
கோடு துன்றிய கரிகளும் பரிகளும் தலைக்கொண்டு
ஓடுகின்றன உலப்பு இல உதிர ஆறு உவரி

#233
அற்ற ஆழிய அறுப்புண்ட அச்சின அம்போடு
இற்ற கொய் உளை புரவிய தேர் குலம் எல்லாம்
ஒற்றை வாளியோடு உருண்டன கரும் களிற்று ஓங்கல்
சுற்றும் வாசியும் துமிந்தன அமர்_களம் தொடர்ந்த

#234
தேர் இழந்து வெம் சிலைகளும் இழந்து செம் தறுகண்
கார் இழந்து வெம் கலின மா கால்களும் இழந்து
சூர் இழந்து வன் கவசமும் இழந்து துப்பு இழந்து
தார் இழந்து பின் இழந்தனர் நிருதர் தம் தலைகள்

#235
அரவ நுண் இடை அரக்கியர் கணவர்-தம் அற்ற
சிரமும் அன்னவை ஆதலின் வேற்றுமை தெரியா
புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்தி
கரவு_இல் இன் உயிர் துறந்தனர் கவவுற தழுவி

#236
ஆர்ப்பு அடங்கின வாய் எலாம் அழல் கொழுந்து ஒழுகும்
பார்ப்பு அடங்கின கண் எலாம் பல வகை படைகள்
தூர்ப்பு அடங்கின கை எலாம் தூளியின் படலை
போர்ப்பு அடங்கின உலகு எலாம் முரசு எலாம் போன

#237
ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடும் தலை உருட்டி
சென்று தீர்வு இல எனை பல கோடியும் சிந்தி
நின்ற தேரொடும் இராவணன் ஒருவனும் நிற்க
கொன்று வீழ்த்தினது இராகவன் சரம் எனும் கூற்றம்

#238
தேரும் யானையும் புரவியும் அரக்கரும் தெற்றி
பேரும் ஓர் இடம் இன்று என திசை-தொறும் பிறங்கி
காரும் வானமும் தொடுவன பிண குவை கண்டான்
மூரி வெம் சிலை இராவணன் அரா என முனிந்தான்

#239
முரண் தொகும் சிலை இமைப்பினில் முறையுற வாங்கி
புரண்டு தோள் உற பொலன் கொள் நாண் வலம்பட போக்கி
திரண்ட வாளிகள் சேவகன் மரகத சிகரத்து
இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட எய்தான்

#240
முறுவல் எய்திய முகத்தினன் முளரி அம் கண்ணன்
மறு இலாதது ஓர் வடி கணை தொடுத்து உற வாங்கி
இறுதி எய்தும் நாள் கால் பொர மந்தரம் இடையிட்டு
அறுவது ஆம் என இராவணன் சிலையினை அறுத்தான்

#241
மாற்று வெம் சிலை வாங்கினன் வடிம்பு உடை நெடு நாண்
ஏற்றுறா முனம் இடை அற கணைகளால் எய்தான்
காற்றினும் கடிது ஆவன கதிர் மணி நெடும் தேர்
ஆற்று கொய் உளை புரவியின் சிரங்களும் அறுத்தான்

#242
மற்றும் வெம் படை வாங்கினன் வழங்குறா-முன்னம்
இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான்
கொற்ற வெண்குடை கொடியொடும் துணிபட குறைந்தான்
கற்றை அம் சுடர் கவசமும் கட்டு அற கழித்தான்

#243
மாற்று தேர் அவண் வந்தன வந்தன வாரா
வீற்று வீற்று உக வெயில் உமிழ் கடும் கணை விட்டான்
சேற்று செம்_புனல் படு கள பரப்பிடை செம் கண்
கூற்றும் கை எடுத்து ஆடிட இராவணன் கொதித்தான்

#244
மின்னும் பல் மணி மவுலி-மேல் ஒரு கணை விட்டான்
அன்ன காய் கதிர் இரவி-மேல் பாய்ந்த போர் அனுமன்
என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று அவன் தலையில்
பொன்னின் மா மணி மகுடத்தை புணரியில் வீழ்த்த

#245
செறிந்த பல் மணி பெருவனம் திசை பரந்து எரிய
பொறிந்தவாய் வய கடும் சுடர் கணை படும் பொழுதின்
எறிந்த கால் பொர மேருவின் கொடு முடி இடிந்து
மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது அ அரக்கன்-தன் மகுடம்

#246
அண்டர் நாயகன் அடு சிலை உதைத்த பேர் அம்பு
கொண்டு போக போய் குரை கடல் குளித்த அ கொள்கை
மண்டலம் தொடர் வயங்கு வெம் கதிரவன்-தன்னை
உண்ட கோளொடும் ஒலி கடல் வீழ்ந்ததும் ஒக்கும்

#247
சொல்லும் அத்தனை அளவையில் மணி முடி துறந்தான்
எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த
அல்லும் ஒத்தனன் பகலும் ஒத்தனன் அமர் பொருமேல்
வெல்லும் அத்தனை அல்லது தோற்றிலா விறலோன்

#248
மாற்ற_அரும் தட மணி முடி இழந்த வாள் அரக்கன்
ஏற்றம் எ உலகத்தினும் உயர்ந்துளன் எனினும்
ஆற்றல் நல் நெடும் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப
போற்ற_அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும் போன்றான்

#249
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான்
இறங்கு கண்ணினன் எல் அழி முகத்தினன் தலையன
வெறும் கை நாற்றினன் விழுது உடை ஆல் அன்ன மெய்யன்

#250
நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை இவனை
கொன்றல் உன்னிலன் வெறும் கை நின்றான் என கொள்ளா
இன்று அவிந்தது போலும் உன் தீமை என்று இசையோடு
ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான்

#251
அறத்தினால் அன்றி அமரர்க்கும் அரும் சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி
பறத்தி நின் நெடும் பதி புக கிளையொடும் பாவி
இறத்தி யான் அது நினைக்கிலென் தனிமை கண்டு இரங்கி

#252
உடை பெரும் குலத்தினரொடும் உறவொடும் உதவும்
படைக்கலங்களும் மற்றும் நீ தேடிய பலவும்
அடைத்து வைத்தன திறந்துகொண்டு ஆற்றுதி ஆயின்
கிடைத்தி அல்லையேல் ஒளித்தியால் சிறு தொழில் கீழோய்

#253
சிறையில் வைத்தவள்-தன்னை விட்டு உலகினில் தேவர்
முறையில் வைத்து நின் தம்பியை இராக்கதர் முதல் பேர்
இறையில் வைத்து அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் இன்னும்
தறையில் வைக்கிலென் நின் தலை வாளியின் தடிந்து

#254
அல்லையாம் எனின் ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற
வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு
நில் ஐயா என நேர் நின்று பொன்றுதி எனினும்
நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல்

#255
ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடு உடை வள்ளல்

16 கும்பகருணன் வதை படலம்


#1
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறும் கையே மீண்டு போனான்

#2
கிடந்த போர் வலியார்-மாட்டே கெடாத வானவரை எல்லாம்
கடந்து போய் உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன்
தொடர்ந்து போம் பழியினோடும் தூக்கிய கரங்களோடும்
நடந்து போய் நகரம் புக்கான் அருக்கனும் நாகம் சேர்ந்தான்

#3
மாதிரம் எவையும் நோக்கான் வள நகர் நோக்கான் வந்த
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான்
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அ
பூதலம் என்னும் நங்கை-தன்னையே நோக்கி புக்கான்

#4
நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம்
வாள் ஒத்த மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன்
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்கு தொடர்கிலாமை

#5
மந்திர சுற்றத்தாரும் வாள்_நுதல் சுற்றத்தாரும்
தந்திர சுற்றத்தாரும் தன் கிளை சுற்றத்தாரும்
எந்திர பொறியின் நிற்ப யாவரும் இன்றி தான் ஓர்
சிந்துர களிறு கூடம் புக்கு என கோயில் சேர்ந்தான்

#6
ஆண்டு ஒரு செம்பொன் பீடத்து இருந்து தன் வருத்தம் ஆறி
நீண்டு உயர் நினைப்பன் ஆகி கஞ்சுகி அயல் நின்றானை
ஈண்டு நம் தூதர் தம்மை இவ்வழி தருதி என்றான்
பூண்டது ஓர் பணியன் வல்லை அனையரை கொண்டு புக்கான்

#7
மன_கதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இ
வினை அறி தொழிலர் முன்னா ஆயிரர் விரவினாரை
நினைவதன் முன்னம் நீர் போய் நெடும் திசை எட்டும் நீந்தி
கனை கழல் அரக்கர் தானை கொணருதிர் கடிதின் என்றான்

#8
ஏழ் பெரும் கடலும் சூழ்ந்த ஏழ் பெரும் தீவும் எண்_இல்
பாழி அம் பொருப்பும் கீழ்-பால் அடுத்த பாதாளத்துள்ளும்
ஆழி அம் கிரியின் மேலும் அரக்கர் ஆனவரை எல்லாம்
தாழ்வு இலிர் கொணர்திர் என்றான் அவர் அது தலைமேல் கொண்டார்

#9
மூ-வகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல் செய்வார்
பாவகம் இன்னது என்று தெரிகிலர் பதைத்து விம்ம
தூ அகலாத வை வாய் எஃகு உற தொளை கை யானை
சேவகம் அமைந்தது என்ன செறி மலர் அமளி சேர்ந்தான்

#10
பண் நிறை பவள செ வாய் பைம் தொடி சீதை என்னும்
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர்
கண் இறை கோடல் செய்யான் கையறு கவலை சுற்ற
உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான்

#11
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிர தோளான்
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான்
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்

#12
ஆங்கு அவன்-தன் மூதாதை ஆகிய மூப்பின் யாக்கை
வாங்கிய வரி வில் அன்ன மாலியவான் என்று ஓதும்
பூம் கழல் அரக்கன் வந்து பொலம் கழல் இலங்கை வேந்தை
தாங்கிய அமளி-மாட்டு ஓர் தவிசு உடை பீடம் சார்ந்தான்

#13
இருந்தவன் இலங்கை வேந்தன் இயற்கையை எய்த நோக்கி
பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா
வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான்

#14
கவை உறு நெஞ்சன் காந்தி கனல்கின்ற கண்ணன் பத்து
சிவையின் வாய் என்ன செம் தீ உயிர்ப்பு உற திறந்த மூக்கன்
நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும்
சுவை அற புலர்ந்த நாவான் இனையன சொல்லலுற்றான்

#15
சங்கம் வந்து உற்ற கொற்ற தாபதர்-தம்மோடு எம்மோடு
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே
கங்கம் வந்து உற்ற செய்ய களத்து நம் குலத்துக்கு ஒவ்வா
பங்கம் வந்துற்றது அன்றி பழியும் வந்துற்றது அன்றே

#16
முளை அமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வர் ஆக
கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன் கிடைத்தவேனும்
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின்
இளையவன் தனக்கும் ஆற்றாது என் பெரும் சேனை நம்ப

#17
எறித்த போர் அரக்கர் ஆவி எண்_இலா வெள்ளம் எஞ்ச
பறித்த போது என்னை அந்த பரிபவம் முதுகில் பற்ற
பொறித்த போது அன்னான் அந்த கூனி கூன் போக உண்டை
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை

#18
மலை உற பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை
நிலையுற செறிந்த வெள்ளம் நூற்று இரண்டு எனினும் நேரே
குலை உற குளித்த வாளி குதிரையை களிற்றை ஆளை
தலை உற பட்டது அல்லால் உடல்களில் தங்கிற்று உண்டோ

#19
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால்
ஓயும் என்று உரைக்கலாமோ ஊழி சென்றாலும் ஊழி
தீயையும் தீய்க்கும் செல்லும் திசையையும் தீய்க்கும் சொல்லும்
வாயையும் தீய்க்கும் முன்னின் மனத்தையும் தீய்க்கும் மன்னோ

#20
மேருவை பிளக்கும் என்றால் விண் கடந்து ஏகும் என்றால்
பாரினை உருவும் என்றால் கடல்களை பருகும் என்றால்
ஆருமே அவற்றின் ஆற்றல் ஆற்றுமேல் அனந்தகோடி
மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும் அன்றே

#21
வரி சிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும்
தெரிகிலர் அமரரேயும் ஆர் அவன் செய்கை தேர்வார்
பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக என்று
கருதவே உலகம் எங்கும் சரங்களாய் காட்டும் அன்றே

#22
நல் இயல் கவிஞர் நாவில் பொருள் குறித்து அமர்ந்த நாம
சொல் என செய்யுள் கொண்ட தொடை என தொடையை நீக்கி
எல்லையில் சென்றும் தீரா இசை என பழுது இலாத
பல் அலங்கார பண்பே காகுத்தன் பகழி மாதோ

#23
இந்திரன் குலிச வேலும் ஈசன் கை இலை மூன்று என்னும்
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன்
அந்தரம் நீளிது அம்மா தாபதன் அம்புக்கு ஆற்றா
நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார்

#24
பேய் இரும் கணங்களோடு சுடு களத்து உறையும் பெற்றி
ஏயவன் தோள்கள் எட்டும் இந்திரன் இரண்டு தோளும்
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன்
ஆயிரம் தோளும் அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா

#25
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அ
கார்த்தவீரியனை நேர்வார் உளர் என கருதல் ஆற்றேன்
பார்த்த போது அவனும் மற்று அ தாபதன் தம்பி பாதத்து
ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான் ஆர் அவற்கு ஆற்றகிற்பார்

#26
முப்புரம் ஒருங்க சுட்ட மூரி வெம் சிலையும் வீரன்
அற்புத வில்லுக்கு ஐய அம்பு என கொளலும் ஆகா
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம்
தப்பின-போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா

#27
உற்பத்தி அயனே ஒக்கும் ஓடும்-போது அரியே ஒக்கும்
கற்பத்தின் அரனே ஒக்கும் பகைஞரை கலந்த காலை
சிற்பத்தின் நம்மால் பேச சிறியவோ என்னை தீரா
தற்பத்தை துடைத்த என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ

#28
குடக்கதோ குணக்கதேயோ கோணத்தின் பாலதேயோ
தடத்த பேர் உலகத்தேயோ விசும்பதோ எங்கும்-தானோ
வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில்
இடத்ததோ வலத்ததோ என்று உணர்ந்திலேன் யானும் இன்னும்

#29
ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமை பாலது அன்றே
ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல்
காற்றையே மேற்கொண்டானோ கனலையே கடாவினானோ
கூற்றையே ஊர்கின்றானோ குரங்கின் மேல் கொண்டு நின்றான்

#30
போய் இனி தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும்
வேய் என தகைய தோளி இராகவன் மேனி நோக்கி
தீ என கொடிய வீர சேவக செய்கை கண்டால்
நாய் என தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம்

#31
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி
நாசம் வந்து உற்ற போதும் நல்லது ஓர் பகையை பெற்றேன்
பூசல் வண்டு உறையும் தாராய் இது இங்கு புகுந்தது என்றான்

#32
முன் உரைத்தேனை வாளா முனிந்தனை முனியா உம்பி
இன் உரை பொருளும் கேளாய் ஏது உண்டு எனினும் ஓராய்
நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட
மின் உரைத்தாலும் ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய்

#33
உளைவன எனினும் மெய்ம்மை உற்றவர் முற்றும் ஓர்ந்தார்
விளைவன சொன்ன-போதும் கொள்கிலை விடுதி கண்டாய்
கிளைதரு சுற்றம் வெற்றி கேண்மை நம் கல்வி செல்வம்
களைவு_அரும் தானையோடும் கழிவது காண்டி என்றான்

#34
ஆயவன் உரைத்தலோடும் அ புறத்து இருந்தான் ஆன்ற
மாயைகள் பலவும் வல்ல மகோதரன் கடிதின் வந்து
தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான்

#35
நன்றி ஈது என்று கொண்டால் நயத்தினை நயந்து வேறு
வென்றியே ஆக மற்று தோற்று உயிர் விடுதல் ஆக
ஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமர்க்கு உரியது ஒல்கி
பின்றுமேல் அவனுக்கு அன்றோ பழியொடு நரகம் பின்னை

#36
திரிபுரம் எரிய ஆங்கு ஓர் தனி சரம் துரந்த செல்வன்
ஒருவன் இ புவனம் மூன்றும் ஓர் அடி ஒடுக்கி கொண்டோன்
பொருது உனக்கு உடைந்து போனார் மானிடர் பொருத போர்க்கு
வெருவுதி போலும் மன்ன கயிலையை வெருவல் கண்டாய்

#37
வென்றவர் தோற்பர் தோற்றோர் வெல்குவர் எவர்க்கும் மேலாய்
நின்றவர் தாழ்வர் தாழ்ந்தோர் உயர்குவர் நெறியும் அஃதே
என்றனர் அறிஞர் அன்றே ஆற்றலுக்கு எல்லை உண்டோ
புன் தவர் இருவர் போரை புகழ்தியோ புகழ்க்கு மேலோய்

#38
தேவியை விடுதி-ஆயின் திறல் அது தீரும் அன்றே
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ
தா அரும் பெருமை அம்மா நீ இனி தாழ்த்தது என்னே
காவல விடுதி இன்று இ கையறு கவலை நொய்தின்

#39
இனி இறை தாழ்த்தி-ஆயின் இலங்கையும் யாமும் எல்லாம்
கனி உடை மரங்கள் ஆக கவி குலம் கடக்கும் காண்டி
பனி உடை வேலை சில் நீர் பருகினன் பரிதி என்ன
துனி உழந்து அயர்வது என்னே துறத்தியால் துன்பம் என்றான்

#40
முன் உனக்கு இறைவர் ஆன மூவரும் தோற்றார் தேவர்
பின் உனக்கு ஏவல் செய்ய உலகு ஒரு மூன்றும் பெற்றாய்
புல் நுனை பனி நீர் அன்ன மனிசரை பொருள் என்று உன்னி
என் உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது எந்தாய்

#41
ஆங்கு அவன்-தன்னை கூவி ஏவுதி-என்னின் ஐய
ஓங்கலே போல்வான் மேனி காணவே ஒளிப்பர் அன்றே
தாங்குவர் செரு முன் என்னின் தாபதர் உயிரை தானே
வாங்கும் என்று இனைய சொன்னான் அவன் அது மனத்து கொண்டான்

#42
பெறுதியே எவையும் சொல்லி பேர் அறிவாள் சீரிற்று
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ
உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான்
இறுதியே இயைவது ஆனால் இடை ஒன்றால் தடை உண்டாமோ

#43
நன்று இது கருமம் என்னா நம்பியை நணுக ஓடி
சென்று இவண் தருதிர் என்றான் என்றலும் நால்வர் சென்றார்
தென் திசை கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார்

#44
திண் திறல் வீரன் வாயில் திறத்தலும் சுவாத வாதம்
மண்டுற வீரர் எல்லாம் வருவது போவதாக
கொண்டுறு தட கை பற்றி குலம் உடை வலியினாலே
கண் துயில் எழுப்ப எண்ணி கடிது ஒரு வாயில் புக்கார்

#45
ஓதநீர் விரிந்தது என்ன உறங்குவான் நாசி காற்றால்
கோது இலா மலைகள் கூடி வருவது போவதாக
ஈது எலாம் கண்ட வீரர் ஏங்கினர் துணுக்கமுற்றார்
போதுவான் அருகு செல்ல பயந்தனர் பொறி கொள் கண்ணார்

#46
இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு மெய் துணுக்கமுற்றார்
அங்கைகள் தீண்ட அஞ்சி ஆழ் செவி-அதனினூடு
சங்கொடு தாரை சின்னம் சமைவுற சாற்றலுற்றார்

#47
கோடு இகல் தண்டு கூடம் குந்தம் வல்லோர்கள் கூடி
தாடைகள் சந்து மார்பு தலை எனும் இவற்றில் தாக்கி
வாடிய கையர் ஆகி மன்னவற்கு உரைப்ப பின்னும்
நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும் விரைவின் என்றான்

#48
கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான
விட்டு உற நடத்தி ஓட்டி விரைவு உள சாரி வந்தார்
தட்டுறு குறங்கு போல தடம் துயில் கொள்வதானான்

#49
கொய்ம் மலர் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி ஐய
உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும்
கய் எலாம் வலியும் ஓய்ந்த கவன மா காலும் ஓய்ந்த
செய்யலாம் வகை வேறு உண்டோ செப்புதி தெரிய என்றார்

#50
இடை பேரா இளையானை இணை ஆழி மணி நெடும் தேர்
படை பேரா வரும்-போதும் பதையாத உடம்பானை
மடை பேரா சூலத்தால் மழு வாள் கொண்டு எறிந்தானும்
தொடை பேரா துயிலானை துயில் எழுப்பி கொணர்க என்றான்

#51
என்றலுமே அடி இறைஞ்சி ஈர்_ஐஞ்ஞூற்று இராக்கதர்கள்
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி
நின்று இரண்டு கதுப்பும் உற நெடு முசலம் கொண்டு அடிப்ப
பொன்றினவன் எழுந்தால்-போல் புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான்

#52
மூ-வகை உலகும் உட்க முரண் திசை பணை கை யானை
தாவரும் திசையின் நின்று சலித்திட கதிரும் உட்க
பூவுளான் புணரி மேலான் பொருப்பினான் முதல்வர் ஆய
யாவரும் துணுக்குற்று ஏங்க எளிதினின் எழுந்தான் வீரன்

#53
விண்ணினை இடறும் மோலி விசும்பினை நிறைக்கும் மேனி
கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும்
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன்
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான்

#54
உறக்கம் அ வழி நீங்கி உண தகும்
வறைக்கு அமைந்தன ஊனொடு வாக்கிய
நறை குடங்கள் பெறான் கடை நக்குவான்
இறக்க நின்ற முகத்தினை எய்துவான்

#55
ஆறு நூறு சகடத்து அடிசிலும்
நூறு நூறு குடம் களும் நுங்கினான்
ஏறுகின்ற பசியை எழுப்பினான்
சீறுகின்ற முகத்து இரு செங்கணான்

#56
எருமை ஏற்றை ஓர் ஈர்_அறுநூற்றையும்
அருமை இன்றியே தின்று இறை ஆறினான்
பெருமை ஏற்றது கோடும் என்றே பிறங்கு
உருமை_ஏற்றை பிசைந்து எரி ஊதுவான்

#57
இருந்த போதும் இராவணன் நின்றென
தெரிந்த மேனியன் திண் கடலின் திரை
நெரிந்தது அன்ன புருவத்து நெற்றியான்
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான்

#58
உதிர வாரியொடு ஊனொடு எலும்பு தோல்
உதிர வாரி நுகர்வது ஒர் ஊணினான்
கதிர வாள் வயிர பணை கையினான்
கதிர வாள் வயிர கழல் காலினான்

#59
இரும் பசிக்கு மருந்து என எஃகினோடு
இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான்
வரும் களிற்றினை தின்றனன் மால் அறா
அரும் களில் திரிகின்றது ஓர் ஆசையான்

#60
சூலம் ஏகம் திருத்திய தோளினான்
சூல மேகம் என பொலி தோற்றத்தான்
காலன்-மேல் நிமிர் மத்தன் கழல் பொரு
காலன் மேல் நிமிர் செம் மயிர் கற்றையான்

#61
எயில் தலை தகர தலத்து இந்திரன்
எயிறு அலைத்த கரதலத்து எற்றினான்
அயில் தலை தொடர் அங்கையன் சிங்க ஊன்
அயிறலை தொடர் அங்கு அகல் வாயினான்

#62
உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர்
குடல் கிடந்து அடங்கா நெடும் கோளினான்
கடல் கிடந்தது நின்றதன்-மேல் கதழ்
வட கடும் கனல் போல் மயிர் பங்கியான்

#63
திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட
மிக்கு அடங்கிய வெம் கதிர் அங்கிகள்
புக்கு அடங்கிய மேரு புழை என
தொக்கு அடங்கி துயில்தரு கண்ணினான்

#64
காம்பு இறங்கும் கன வரை கைம்மலை
தூம்பு உறங்கும் முகத்தின் துய்த்து உடல்
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினான்
பாம்பு உறங்கும் படர் செவி பாழியான்

#65
கூயினன் நும் முன் என்று அவர் கூறலும்
போயினன் நகர் பொம்மென்று இரைத்து எழ
வாயில் வல்லை நுழைந்து மதி தொடும்
கோயில் எய்தினன் குன்று அன கொள்கையான்

#66
நிலை கிடந்த நெடு மதிள் கோபுரத்து
அலை கிடந்த இலங்கையர் அண்ணலை
கொலை கிடந்த வேல் கும்பகருணன் ஓர்
மலை கிடந்தது போல வணங்கினான்

#67
வன் துணை பெரும் தம்பி வணங்கலும்
தன் திரண்ட தோள் ஆர தழுவினான்
நின்ற குன்று ஒன்று நீள் நெடும் காலொடும்
சென்ற குன்றை தழீஇ அன்ன செய்கையான்

#68
உடன் இருத்தி உதிரத்தொடு ஒள் நறை
குடன் நிரைத்தவை ஊட்டி தசை கொளீஇ
கடல் நுரை துகில் சுற்றி கதிர் குழாம்
புரை நிரைத்து ஒளிர் பல் கலன் பூட்டினான்

#69
பேர விட்ட பெரு வலி இந்திரன்
ஊர விட்ட களிற்றொடும் ஓடு நாள்
சோர விட்ட சுடர் மணி ஓடையை
வீரபட்டம் என நுதல் வீக்கினான்

#70
மெய் எலாம் மிளிர் மின் வெயில் வீசிட
தொய்யில் வாச துவர் துதைந்து ஆடிய
கையின் நாகம் என கடல் மேனியில்
தெய்வம் நாறு செம் சாந்தமும் சேர்த்தினான்

#71
விடம் எழுந்தது-போல் நெடு விண்ணினை
தொட உயர்ந்தவன் மார்பிடை சுற்றினான்
இடபம் உந்தும் எழில் இரு நான்கு தோள்
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான்

#72
அன்ன காலையின் ஆயத்தம் யாவையும்
என்ன காரணத்தால் என்று இயம்பினான்
மின்னின் அன்ன புருவமும் விண்ணினை
துன்னு தோளும் இடம் துடியாநின்றான்

#73
வானர பெரும் தானையர் மானிடர்
கோ நகர் புறம் சுற்றினர் கொற்றமும்
ஏனை உற்றனர் நீ அவர் இன் உயிர்
போனக தொழில் முற்றுதி போய் என்றான்

#74
ஆனதோ வெம் சமம் அலகில் கற்பு உடை
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ்
போனதோ புகுந்ததோ பொன்றும் காலமே

#75
கிட்டியதோ செரு கிளர் பொன் சீதையை
சுட்டியதோ முனம் சொன்ன சொற்களால்
திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வண்ணமே

#76
கல்லலாம் உலகினை வரம்பு கட்டவும்
சொல்லலாம் பெரு வலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது சீதை மேனியை
புல்லலாம் என்பது போலுமால் ஐயா

#77
புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு
குலத்து இயல்பு அழிந்தது கொற்றம் முற்றுமோ
வலத்து இயல் அழிவதற்கு ஏது மை அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால்

#78
கொடுத்தனை இந்திரற்கு உலகும் கொற்றமும்
கெடுத்தனை நின் பெரும் கிளையும் நின்னையும்
படுத்தனை பல வகை அமரர்-தங்களை
விடுத்தனை வேறு இனி வீடும் இல்லையால்

#79
அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால் அதன்
திறம் முனம் உழத்தலின் வலியும் செல்வமும்
நிறம் உனக்கு அளித்தது அங்கு அதனை நீக்கி நீ
இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார்

#80
தஞ்சமும் தருமமும் தகவுமே அவர்
நெஞ்சமும் கருமமும் உரையுமே நெடு
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம்
உஞ்சுமோ அதற்கு ஒரு குறை உண்டாகுமோ

#81
காலினின் கரும் கடல் கடந்த காற்றது
போல்வன குரங்கு உள சீதை போகிலன்
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன
கோல் உள யாம் உளேம் குறை உண்டாகுமோ

#82
என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு
ஒன்று உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல்
நன்று அது நாயக நயக்கிலாய் எனின்
பொன்றினை ஆகவே கோடி போக்கு இலாய்

#83
தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின்
ஐயறு தம்பியோடு அளவளாவுதல்
உய் திறம் அன்று எனின் உளது வேறும் ஓர்
செய் திறம் அன்னது தெரிய கேட்டியால்

#84
பந்தியில் பந்தியில் படையை விட்டு அவை
சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல்
மந்திரம் அன்று நம் வலி எலாம் உடன்
உந்துதல் கருமம் என்று உணர கூறினான்

#85
உறுவது தெரிய அன்று உன்னை கூயது
சிறு தொழில் மனிதரை கோறி சென்று எனக்கு
அறிவு உடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை
வெறுவிது உன் வீரம் என்று இவை விளம்பினான்

#86
மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை
இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும்
உறங்குதி போய் என உளைய கூறினான்

#87
மானிடர் இருவரை வணங்கி மற்றும் அ
கூன் உடை குரங்கையும் கும்பிட்டு உய் தொழில்
ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன்
யான் அது புரிகிலேன் எழுக போக என்றான்

#88
தருக என் தேர் படை சாற்று என் கூற்றையும்
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும்
இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும்
பொருக வெம் போர் என போதல் மேயினான்

#89
அன்னது கண்டு அவன் தம்பியானவன்
பொன் அடி வணங்கி நீ பொறுத்தியால் என
வல் நெடும் சூலத்தை வலத்து வாங்கினான்
இன்னம் ஒன்று உரை உளது என்ன கூறினான்

#90
வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன் விதி
நின்றது பிடர் பிடித்து உந்த நின்றது
பொன்றுவென் பொன்றினால் பொலன் கொள் தோளியை
நன்று என நாயக விடுதி நன்று-அரோ

#91
இந்திரன் பகைஞனும் இராமன் தம்பி கை
மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்
தந்திரம் காற்று உறு சாம்பல் பின்னரும்
அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய்

#92
என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல
உன்னை வென்று உயருதல் உண்மை ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை
நன்கு அளிப்பது தவத்தின் பாலதே

#93
இற்றை_நாள் வரை முதல் யான் முன் செய்தன
குற்றமும் உள எனின் பொறுத்தி கொற்றவ
அற்றதால் முகத்தினில் விழித்தல் ஆரிய
பெற்றனென் விடை என பெயர்ந்து போயினான்

#94
அ வழி இராவணன் அனைத்து நாட்டமும்
செ வழி நீரொடும் குருதி தேக்கினான்
எ வழியோர்களும் இரங்கி ஏங்கினார்
இ வழி அவனும் போய் வாயில் எய்தினான்

#95
இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக
பெரும் படை இளவலோடு என்ற பேச்சினால்
வரும் படை வந்தது வானுளோர்கள் தம்
சுரும்பு அடை மலர் முடி தூளி தூர்க்கவே

#96
தேர் கொடி யானையின் பதாகை சேண் உறு
தார் கொடி என்று இவை தகைந்து வீங்குவ
போர் கொடும் தூளி போய் துறக்கம் பண்புற
ஆர்ப்பன துடைப்பன போன்ற ஆடுவ

#97
எண்ணுறு படைக்கலம் இழுக எற்றிட
நண்ணுறு பொறிகளும் படைக்கு நாயகர்
கண்ணுறு பொறிகளும் கதுவ கண் அகல்
விண்ணுறு மழை எலாம் கரிந்து வீழ்ந்தவால்

#98
தேர் செல கரி செல நெருக்கி செம் முக
கார் செல தேர் செல புரவி கால் செல
தார் செல கடை செல சென்ற தானையும்
பார் செலற்கு அரிது என விசும்பில் பாய்ந்ததால்

#99
ஆயிரம் கோள் அரி ஆளி ஆயிரம்
ஆயிரம் மத கரி பூதம் ஆயிரம்
மா இரு ஞாலத்தை சுமப்ப வாங்குவது
ஏய் இரும் சுடர் மணி தேர் ஒன்று ஏறினான்

#100
தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு
வாம வில் வல்லையம் கணையம் மற்று உள
சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால்

#101
நறை உடை தசும்பொடு நறிதின் வெந்த ஊன்
குறைவு_இல் நல் சகடம் ஓர் ஆயிரம் கொடு
பிறை உடை எயிற்றவன் பின்பு சென்றனர்
முறை முறை கைக்கொடு முடுகி நீட்டுவார்

#102
ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை
பின்ற அரும் பிலனிடை பெய்யுமாறு போல்
வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே
சென்றனன் யாவரும் திடுக்கம் எய்தவே

#103
கணம் தரு குரங்கொடு கழிவது அன்று இது
நிணம் தரு நெடும் தடிக்கு உலகு நேருமோ
பிணம் தலைப்பட்டது பெயர்வது எங்கு இனி
உணர்ந்தது கூற்றம் என்று உம்பர் ஓடினார்

#104
பாந்தளின் நெடும் தலை வழுவி பாரொடும்
வேந்து என விளங்கிய மேரு மால் வரை
போந்தது போல் பொலம் தேரில் பொங்கிய
ஏந்தலை ஏந்து எழில் இராமன் நோக்கினான்

#105
வீணை என்று உணரின் அஃது அன்று விண் தொடும்
சேண் உயர் கொடியது வய வெம் சீயமால்
காணினும் காலின் மேல் அரிய காட்சியன்
பூண் ஒளிர் மார்பினன் யாவன் போலுமால்

#106
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின்
நாள் பல கழியுமால் நடுவண் நின்றது ஓர்
தாள் உடை மலை-கொலாம் சமரம் வேட்டது ஓர்
ஆள் என உணர்கிலேன் ஆர்-கொலாம் இவன்

#107
எழும் கதிரவன் ஒளி மறைய எங்கணும்
விழுங்கியது இருள் இவன் மெய்யினால் வெரீஇ
புழுங்கும் நம் பெரும் படை இரியல்போகின்றது
அழுங்கல் இல் சிந்தையாய் ஆர்-கொலாம் இவன்

#108
அரக்கன் அ உரு ஒழித்து அரியின் சேனையை
வெரு கொள தோன்றுவான் கொண்ட வேடமோ
தெரிக்கிலேன் இ உரு தெரியும்-வண்ணம் நீ
பொருக்கென வீடண புகறியால் என்றான்

#109
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன் எனக்கு முன்னோன்
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும்
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான்

#110
தவன் நுணங்கியரும் வேத தலைவரும் உணரும் தன்மை
சிவன் உணர்ந்து அலரின் மேலை திசைமுகன் உணரும் தேவன்
அவன் உணர்ந்து எழுந்த காலத்து அசுரர்கள் படுவது எல்லாம்
இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர் எந்தாய்

#111
ஆழியாய் இவன் ஆகுவான்
ஏழை வாழ்வு உடை எம்முனோன்
தாழ்வு இலா ஒரு தம்பியோன்
ஊழி நாளும் உறங்குவான்

#112
காலனார் உயிர் காலனால்
காலின் மேல் நிமிர் காலினான்
மாலினார் கெட வாகையே
சூலமே கொடு சூடினான்

#113
தாங்கு கொம்பு ஒரு நான்கு கால்
ஓங்கல் ஒன்றினை உம்பர்_கோன்
வீங்கு நெஞ்சன் விழுந்திலான்
தூங்க நின்று சுழற்றினான்

#114
கழிந்த தீயொடு காலையும்
பிழிந்து சாறு கொள் பெற்றியான்
அழிந்து மீன் உக ஆழி நீர்
இழிந்து காலினின் எற்றுவான்

#115
ஊன் உயர்ந்த உரத்தினான்
மேல் நிமிர்ந்த மிடுக்கினான்
தான் உயர்ந்த தவத்தினான்
வான் உயர்ந்த வரத்தினான்

#116
திறம் கொள் சாரி திரிந்த நாள்
கறங்கு அலாது கணக்கு_இலான்
இறங்கு தாரவன் இன்று-காறு
உறங்கலால் உலகு உய்ந்ததால்

#117
சூலம் உண்டு அது சூர் உளோர்
காலம் உண்டது கை கொள்வான்
ஆலம் உண்டவன் ஆழி-வாய்
ஞாலம் உண்டவ நல்கினான்

#118
மின்னின் ஒன்றிய விண்ணுளோர்
முன் நில் என்று அமர் முற்றினார்-என்னில்
என்றும் அ எண்_இலார்
வென்னில் அன்றி விழித்திலான்

#119
தருமம் அன்று இதுதான் இதால்
வரும் நமக்கு உயிர் மாய்வு எனா
உருமின் வெய்யவனுக்கு உரை
இருமை மேலும் இயம்பினான்

#120
மறுத்த தம்முனை வாய்மையால்
ஒறுத்தும் ஆவது உணர்த்தினான்
வெறுத்தும் மாள்வது மெய் எனா
இறுத்து நின் எதிர் எய்தினான்

#121
நன்று இது அன்று நமக்கு எனா
ஒன்று நீதி உணர்த்தினான்
இன்று காலன் முன் எய்தினான்
என்று சொல்லி இறைஞ்சினான்

#122
என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று
கொன்று ஒரு பயனும் இல்லை கூடுமேல் கூட்டிக்கொண்டு
நின்றது புரிதும் மற்று இ நிருதர்_கோன் இடரும் நீங்கும்
நன்று என நினைந்தேன் என்றான் நாதனும் நயன் இது என்றான்

#123
ஏகுதற்கு உரியார் யாரே என்றலும் இலங்கை வேந்தன்
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம்
சேகு அற தெருட்டி ஈண்டு சேருமேல் சேர்ப்பென் என்றான்
மேகம் ஒப்பானும் நன்று போக என்று விடையும் ஈந்தான்

#124
தந்திர கடலை நீந்தி தன் பெரும் படையை சார்ந்தான்
வெம் திறலவனுக்கு ஐய வீடணன் விரைவில் உன்-பால்
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து
சிந்தையால் களிக்கின்றான்-தன் செறி கழல் சென்னி சேர்ந்தான்

#125
முந்தி வந்து இறைஞ்சினானை முகந்து உயிர் மூழ்க புல்லி
உய்ந்தனை ஒருவன் போனாய் என மனம் உவக்கின்றேன்-தன்
சிந்தனை முழுதும் சிந்த தெளிவு_இலார் போல மீள
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான்

#126
அவயம் நீ பெற்றவாறும் அமரரும் பெறுதல் ஆற்றா
உவய லோகத்தினுள்ள சிறப்பும் கேட்டு உவந்தேன் உள்ளம்
கவிஞரின் அறிவு மிக்கோய் காலன் வாய் களிக்கின்றேம்-பால்
நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ

#127
குலத்து இயல்பு அழிந்ததேனும் குமர மற்று உன்னை கொண்டே
புலத்தியன் மரபு மாயா புண்ணியம் பொருந்திற்று என்னா
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை
உலத்தினை திரிய வந்தாய் உளைகின்றது உள்ளம் அந்தோ

#128
அற பெரும் துணைவர் தம்மை அபயம் என்று அடைந்த நின்னை
துறப்பது துணியார் தங்கள் ஆர் உயிர் துறந்த போதும்
இறப்பு எனும் பதத்தை விட்டாய் இராமன் என்பளவும் மற்று இ
பிறப்பு எனும் புன்மை இல்லை நினைந்து என்-கொல் பெயர்ந்த வண்ணம்

#129
அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும்
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ
பிறர் மனை நோக்குவேமை உறவு என பெறுதி போலாம்

#130
நீதியும் தருமம் நிறை நிலைமையும் புலமை-தானும்
ஆதி அம் கடவுளாலே அரும் தவம் ஆற்றி பெற்றாய்
வேதியர் தேவன் சொல்லால் விளிவு இலா ஆயு பெற்றாய்
சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும் தக்கோய்

#131
ஏற்றிய வில்லோன் யார்க்கும் இறையவன் இராமன் நின்றான்
மாற்ற_அரும் தம்பி நின்றான் மற்றையோர் முற்றும் நின்றார்
கூற்றமும் நின்றது எம்மை கொல்லிய விதியும் நின்ற
தோற்ற எம் பக்கல் ஐய வெவ் வலி தொலைய வந்தாய்

#132
ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே
உய்கிலை-என்னின் மற்று இ அரக்கராய் உள்ளோர் எல்லாம்
எய் கணை மாரியாலே இறந்து பாழ் முழுதும் பட்டால்
கையினால் எள் நீர் நல்கி கடன் கழிப்பாரை காட்டாய்

#133
வருவதும் இலங்கை மூதூர் புலை எலாம் மாண்ட பின்னை
திருவுறை மார்பனோடும் புகுந்து பின் என்றும் தீரா
பொருவ_அரும் செல்வம் துய்க்க போதுதி விரைவின் என்றான்
கருமம் உண்டு உரைப்பது என்றான் உரை என கழறலுற்றான்

#134
இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன்
அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும்
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே

#135
எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம்
நினக்கு நான் தருவென் தந்து உன் ஏவலின் நெடிது நிற்பென்
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன்
மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி

#136
போதலோ அரிது போனால் புகலிடம் இல்லை வல்லே
சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய்
ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய
வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும்

#137
தீயவை செய்வர் ஆகின் சிறந்தவர் பிறந்த உற்றார்
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார்
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ
தூயவை துணிந்த போது பழி வந்து தொடர்வது உண்டோ

#138
மக்களை குரவர்-தம்மை மாதரை மற்றுளோரை
ஒக்கும் இன் உயிர் அன்னாரை உதவி செய்தாரோடு ஒன்ற
துக்கம் இ தொடர்ச்சி என்று துறப்பரால் துணிவு பூண்டோர்
மிக்கது நலனே ஆக வீடுபேறு அளிக்கும் அன்றே

#139
தீவினை ஒருவன் செய்ய அவனொடும் தீங்கு இலாதோர்
வீவினை உறுதல் ஐய மேன்மையோ கீழ்மை-தானோ
ஆய் வினை உடையை அன்றே அறத்தினை நோக்கி ஈன்ற
தாய் வினை செய்ய அன்றோ கொன்றனன் தவத்தின் மிக்கான்

#140
கண்ணுதல் தீமை செய்ய கமலத்து முளைத்த தாதை
அண்ணல்-தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே
புண் உறு புலவு வேலோய் பழியொடும் பொருந்தி பின்னை
எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ

#141
உடலிடை தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றி
சுடல் உற சுட்டு வேறு ஓர் மருந்தினால் துயரம் தீர்வர்
கடலிடை கோட்டம் தேய்த்து கழிவது கருமம் அன்றால்
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ

#142
காக்கலாம் நும் முன்-தன்னை எனின் அது கண்டது இல்லை
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை
தீ கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம் செருவில் ஆவி
போக்கலாம் புகலாம் பின்னை நரகு அன்றி பொருந்திற்று உண்டோ

#143
மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை மண்ணின் மேலா
இறங்கினை இன்று-காறும் இளமையும் வறிதே ஏக
உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது ஐயா

#144
திரு மறு மார்பன் நல்க அனந்தரும் தீர்ந்து செல்வ
பெருமையும் எய்தி வாழ்தி ஈறு இலா நாளும் பெற்றாய்
ஒருமையே அரசு செய்வாய் உரிமையே உனதே ஒன்றும்
அருமையும் இவற்றின் இல்லை காலமும் அடுத்தது ஐயா

#145
தேவர்க்கும் தேவன் நல்க இலங்கையில் செல்வம் பெற்றால்
ஏவர்க்கும் சிறியை அல்லை யார் உனை நலியும் ஈட்டார்
மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார் அறத்தை முற்றும்
காவற்கு புகுந்து நின்றார் காகுத்த வேடம் காட்டி

#146
உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும்
என் மக்கள் ஆகி உள்ளார் இ குடிக்கு இறுதி சூழ்ந்தான்
தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே
புன் மக்கள் தருமம் பூணா புல மக்கள் தருமம் பூண்டால்

#147
முனிவரும் கருணை வைப்பர் மூன்று உலகத்தும் தோன்றி
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா
துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர்
கனி வரும் காலத்து ஐய பூ கொய்ய கருதலாமோ

#148
வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி விட்டான்
காதலால் என்-மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே
ஆதலால் அவனை காண அறத்தொடும் திறம்பாது ஐய
போதுவாய் நீயே என்ன பொன் அடி இரண்டும் பூண்டான்

#149
தும்பி அம் தொடையல் மாலை சுடர் முடி படியில் தோய
பம்பு பொன் கழல்கள் கையால் பற்றினன் புலம்பும் பொன் தோள்
தம்பியை எடுத்து மார்பில் தழுவி தன் தறுகணூடு
வெம் புணீர் சொரிய நின்றான் இனையன விளம்பலுற்றான்

#150
நீர் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்து பின்னை
போர் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன்
தார் கோல மேனி மைந்த என் துயர் தவிர்த்தி-ஆகின்
கார் கோல மேனியானை கூடிதி கடிதின் ஏகி

#151
மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால் நீ
உலைவு இலா தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய்
தலைவன் நீ உலகுக்கு எல்லாம் உனக்கு அது தக்கதேயால்
புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால்

#152
கருத்து இலா இறைவன் தீமை கருதினால் அதனை காத்து
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீராது-ஆயின்
பொருத்து உறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்கு உரியர் ஆகி
ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா

#153
தும்பி அம் தொடையல் வீரன் சுடு கணை துரப்ப சுற்றும்
வெம்பு வெம் சேனையோடும் வேறு உள கிளைஞரோடும்
உம்பரும் பிறரும் போற்ற ஒருவன் மூ_உலகை ஆண்டு
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்-மேல்

#154
அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெரும் கிரி நெருங்க பேர்த்த
பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப கூசி
துணை இன்றி சேரல் நன்றோ தோற்றுள கூற்றின் சூழல்

#155
செம்பு இட்டு செய்த இஞ்சி திரு நகர் செல்வம் தேறி
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி
அம்பு இட்டு துன்னம் கொண்ட புண் உடை நெஞ்சோடு ஐய
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன்

#156
அனுமனை வாலி சேயை அருக்கன் சேய்-தன்னை அம் பொன்
தனு உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன்-தன்னை
கனி தொடர் குரங்கின் சேனை கடலையும் கடந்து மூடும்
பனி துடைத்து உலகம் சுற்றும் பரிதியின் திரிவென் பார்த்தி

#157
ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட
சூலம் கொண்டு ஓடி வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற
நீலம் கொள் கடலும் ஓட நெருப்பொடு காலும் ஓட
காலம் கொள் உலகும் ஓட கறங்கு என திரிவென் காண்டி

#158
செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வர்-ஆகின்
கரு வரை கனக குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம்
ஒருவரும் திரிய ஒட்டேன் உயிர் சுமந்து உலகில் என்றான்

#159
தாழ்க்கிற்பாய் அல்லை என் சொல் தலைக்கொள தக்கது என்று
கேட்கிற்பாய்-ஆகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை
வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று
சூழ்க்கிற்பாய் அல்லை யாரும் தொழ நிற்பாய் என்ன சொன்னான்

#160
போதி நீ ஐய பின்னை பொன்றினார்க்கு எல்லாம் நின்ற
வேதியர் தேவன்-தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை
ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி
மா துயர் நரகம் நண்ணா-வண்ணமும் காத்தி-மன்னோ

#161
ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்தி
போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்
சேகு அற தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்

#162
என்று அவன்-தன்னை மீட்டும் எடுத்து மார்பு இறுக புல்லி
நின்று நின்று இரங்கி ஏங்கி நிறை கணால் நெடிது நோக்கி
இன்றொடும் தவிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான்
வென்றி வெம் திறலினானும் அவன் அடித்தலத்து வீழ்ந்தான்

#163
வணங்கினான் வணங்கி கண்ணும் வதனமும் மனமும் வாயும்
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை-செய்து இன்னும்
பிணங்கினால் ஆவது இல்லை பெயர்வது என்று உணர்ந்து போந்தான்
குணங்களால் உயர்ந்தான் சேனை கடல் எலாம் கரங்கள் கூப்ப

#164
கள்ள நீர் வாழ்க்கையேமை கைவிட்டு காலும் விட்டான்
பிள்ளைமை துறந்தான் என்னா பேதுறும் நிலையன் ஆகி
வெள்ள நீர் வேலை-தன்னில் வீழ்ந்த நீர் வீழ வெம் கண்
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான்

#165
எய்திய நிருதர் கோனும் இராமனை இறைஞ்சி எந்தாய்
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம்
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென் பெயரும் தன்மை
செய்திலன் குலத்து மானம் தீர்ந்திலன் சிறிதும் என்றான்

#166
கொய் திற சடையின் கற்றை கொந்தள கோல கொண்டல்
நொய்தினில் துளக்கி ஐய நுன் எதிர் நும்முனோனை
எய்து இற துணித்து வீழ்த்தல் இனிது அன்று என்று இனைய சொன்னேன்
செய் திறன் இனி வேறு உண்டோ விதியை யார் தீர்க்ககிற்பார்

#167
என இனிது உரைக்கும் வேலை இராக்கதர் சேனை என்னும்
கனை கடல் கவியின் தானை கடலினை வளைந்து கட்டி
முனை தொழில் முயன்றதாக மூ-வகை உலகும் முற்ற
தனி நெடும் தூளி ஆர்த்தது ஆர்த்தில பரவை தள்ளி

#168
ஓடின புரவி வேழம் ஓடின உருளை திண் தேர்
ஓடின மலைகள் ஓட ஓடின உதிர பேர் ஆறு
ஓடின கவந்த பந்தம் ஆடின அலகை மேல்மேல்
ஓடின பதாகை ஓங்கி ஆடின பறவை அம்மா

#169
மூளையும் தசையும் என்பும் குருதியும் நிணமும் மூரி
வாளொடும் குழம்பு பட்டார் வாள் எயிற்று அரக்கர் மற்று அ
ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள் அம் பொன்
தோளொடு மரனும் கல்லும் சூலமும் வேலும் தாக்க

#170
எய்தனர் நிருதர் கல்லால் எறிந்தனர் கவிகள் ஏந்தி
பெய்தனர் அரக்கர் பற்றி பிசைந்தனர் அரிகள் பின்றா
வைதனர் யாதுதானர் வலித்தனர் வானரேசர்
செய்தனர் பிறவும் வெம் போர் திகைத்தனர் தேவர் எல்லாம்

#171
நீரினை ஓட்டும் காற்றும் காற்று எதிர் நிற்கும் நீரும்
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி
தேரினை ஓட்டி வந்தான் திருவினை தேவர் தங்கள்
ஊரினை நோக்கா-வண்ணம் உதிர வேல் நோக்கியுள்ளான்

#172
ஊழியில் பட்ட காலின் உலகங்கள் பட்டால் ஒப்ப
பூழியில் பட்டு செந்நீர் புணரியில் பட்டு பொங்கும்
சூழியில் பட்ட நெற்றி களிற்றொடும் துரந்த தேரின்
ஆழியில் பட்ட அன்றே அவனியில் பட்ட எல்லாம்

#173
குன்று கொண்டு எறியும் பாரில் குதிக்கும் வெம் கூலம் பற்றி
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும் உதைக்கும் விட்டு உழக்கும் வாரி
தின்று தின்று உமிழும் பற்றி சிரங்களை திருகும் தேய்க்கும்
மென்று மென்று இழிச்சும் விண்ணில் வீசும் மேல் பிசைந்து பூசும்

#174
வாரியின் அமுக்கும் கையால் மண்ணிடை தேய்க்கும் வாரி
நீரிடை குவிக்கும் அப்பால் நெருப்பிடை நிமிர வீசும்
தேரிடை எற்றும் எட்டு திசையினும் செல்ல சிந்தும்
தூரிடை மரத்து மோதும் மலைகளில் புடைக்கும் சுற்றி

#175
பறைந்தனர் அமரர் அஞ்சி பல் பெரும் பிணத்தின் பம்மல்
நிறைந்தன பறவை எல்லாம் நெடும் திசை நான்கும் நான்கும்
மறைந்தன பெருமை தீர்ந்த மலை குலம் வற்றி வற்றி
குறைந்தன குரக்கு வெள்ளம் கொன்றனன் கூற்றும் கூச

#176
மற்று இனி ஒருவர்-மேல் ஓர் மரனொடும் கற்கள் வீச
பெற்றிலம் ஆதும் அன்றே இன்றொடும் பெறுவது ஆமே
அற்றன தீங்கும் என்னா அரி குல தலைவர் பற்றி
எற்றின எறிந்த எல்லாம் இணை நெடும் தோளின் ஏற்றான்

#177
கல்லொடு மரனும் வேரும் கட்டையும் காலில் தீண்டும்
புல்லொடு பிறவும் எல்லாம் பொடி பொடி ஆகி போன
இல்லை மற்று எறிய தக்க எற்றுவ சுற்றும் என்ன
பல்லொடு பல்லு மென்று பட்டன குரங்கும் உட்கி

#178
குன்றின் வீழ் குரீஇ குழாத்தின் குழாம் கொடு குதித்து கூடி
சென்று மேல் எழுந்து பற்றி கை தலம் தேய குத்தி
வன் திறல் எயிற்றால் கவ்வி வள் உகிர் மடிய கீளா
ஒன்றும் ஆகின்றது இல்லை என்று இரிந்து ஓடி போன

#179
மூலமே மண்ணில் மூழ்கி கிடந்தது ஓர் பொருப்பை முற்றும்
காலம் மேல் எழுந்த கால் போல் கையினால் கடிதின் வாங்கி
நீலன் மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு என திரிந்து விட்டான்
சூலமே கொண்டு நூறி முறுவலும் தோன்ற நின்றான்

#180
பெயர்ந்து ஒரு சிகரம் தேடின் அச்சம் ஆம் பிறர்க்கும் என்னா
புயங்களே படைகள் ஆக தேர் எதிர் ஓடி புக்கான்
இயங்களும் கடலும் மேகத்து இடிகளும் ஒழிய யாரும்
பயம் கொள கரங்கள் ஓச்சி குத்தினான் உதைத்தான் பல் கால்

#181
கைத்தலம் சலித்து காலும் குலைந்து தன் கருத்து முற்றான்
நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன்-தன்னை
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான் இடது கையால்
மெய்த்தலை சூலம் ஓச்சான் வெறும் கையான் என்று வெள்கி

#182
ஆண்டு அது நோக்கி நின்ற அங்கதன் ஆண்டு சால
நீண்டது ஓர் நெடும் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்த
தூண்டினன் அதனை அன்னான் ஒரு தனி தோளின் ஏற்றான்

#183
ஏற்ற போது அனைய குன்றம் எண்ண_அரும் துகளது ஆகி
வீற்று வீற்று ஆகி ஓடி விழுதலும் கவியின் வெள்ளம்
ஊற்றம் ஏது எமக்கு என்று எண்ணி உடைந்தது குமரன் உற்ற
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சென்று பாதம்

#184
இட கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிர தண்டு
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது தருக்கின் வாங்கி
மடக்குவாய் உயிரை என்னா வீசினன் அதனை மைந்தன்
தட கையால் பிடித்து கொண்டான் வானவர்-தன்னை வாழ்த்த

#185
பிடித்தது சுழற்றி மற்று அ பெரு வலி அரக்கன்-தன்னை
இடித்து உரும் ஏறு குன்றத்து எரி மடுத்து இயங்குமா-போல்
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி
கொடி தடம் தேரின் முன்னர் குதித்து எதிர் குறுகி நின்றான்

#186
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர நோக்கி
பொன்ற வந்து அடைந்த தானை புரவலன் ஒருவன் தானோ
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை
வென்றவன் தானோ யாரோ விளம்புதி விரைவின் என்றான்

#187
நும்முனை வாலின் சுற்றி நோன் திசை நான்கும் தாவி
மு முனை நெடு வேல் அண்ணல் முளரி அம் சரணம் தாழ்ந்த
வெம் முனை வீரன் மைந்தன் நின்னை என் வாலின் வீக்கி
தெம் முனை இராமன் பாதம் வணங்கிட செல்வென் என்றான்

#188
உந்தையை மறைந்து ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்கு
பந்தனை பகையை செற்றுக காட்டலை என்னின் பாரோர்
நிந்தனை நின்னை செய்வர் நல்லது நினைந்தாய் நேரே
வந்தனை புரிவர் அன்றே வீரராய் வசையின் தீர்ந்தார்

#189
இத்தலை வந்தது என்னை இராமன்-பால் வாலின் ஈர்த்து
வைத்தலை கருதி அன்று வானவர் மார்பின் தைத்த
மு தலை அயிலின் உச்சி முதுகு உற மூரி வால்-போல்
கைத்தலம் காலும் தூங்க கிடத்தலை கருதி என்றான்

#190
அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து அசனி குன்றத்து
உற்றது போலும் என்னும் ஒலிபட உலகம் உட்க
பொன் தடம் தோளின் வீசி புடைத்தனன் பொறியின் சிந்தி
இற்றது நூறு கூறாய் எழு முனை வயிர தண்டு

#191
தண்டு இற தட கை ஓச்சி தழுவி அ தறுகணானை
கொண்டு இறப்புறுவென் என்னா தலையுற குனிக்கும்-காலை
புண் திறப்புற வலாளன் கையினால் புகைந்து குத்த
மண் திறப்பு எய்த வீழ்ந்தான் மாருதி இமைப்பின் வந்தான்

#192
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில்
குறித்துற எறியலுற்ற காலையில் குன்றம் ஒன்று
பறித்து அவன் நெற்றி முற்ற பரப்பிடை பாகம் உள்ளே
செறித்து என சுரிக்க வீசி தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான்

#193
தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றது அன்ன
மலையினை கையின் வாங்கி மாருதி வயிர மார்பின்
உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப
குலை உறு பொறிகள் சிந்த வீசி தோள் கொட்டி ஆர்த்தான்

#194
அவ்வழி வாலி சேயை அரி_குல வீரர் அஞ்சார்
வவ்வினர் கொண்டு போனார் மாருதி வானை முற்றும்
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று இனைய சொன்னான்

#195
எறிகுவென் இதனை நின்-மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல்
மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை
அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன்
பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும் புகழ் பெறுதி என்றான்

#196
மாற்றம் அஃது உரைப்ப கேளா மலை முழை திறந்தது என்ன
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை
ஏற்றனென் ஏற்ற காலத்து இறை அதற்கு ஒற்கம் எய்தின்
தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான்

#197
மாருதி வல்லை ஆகின் நில் அடா மாட்டாய் ஆகின்
பேருதி உயிர்கொண்டு என்று பெரும் கையால் நெருங்க விட்ட
கார் உதிர் வயிர குன்றை காத்திலன் தோள் மேல் ஏற்றான்
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது எ உலகும் உட்க

#198
இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து இவனது ஆற்றல்
அளக்குறல்-பாலும் ஆகா குலவரை அமரின் ஆற்றா
துளக்குறும் நிலையன் அல்லன் சுந்தர தோளன் வாளி
பிளக்குமேல் பிளக்கும் என்னா மாருதி பெயர்ந்து போனான்

#199
எழுபது வெள்ளத்துள்ளோர் இறந்தவர் ஒழிய யாரும்
முழுவதும் மாள்வர் இன்றே இவன் வலத்து அமைந்த மு சூழ்
கழுவினில் என்று வானோர் கலங்கினார் நடுங்கினாரால்
பொழுதினின் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம் பொங்கி

#200
தாக்கினார் தாக்கினார்-தம் கைத்தலம் சலித்தது அன்றி
நூக்கினார் இல்லை ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை
ஆக்கினான் களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றி
போக்கினான் ஆண்மையாலே புதுக்கினான் புகழை அம்மா

#201
சங்கத்து ஆர் குரங்கு சாய தாபதர் என்ன தக்கார்
இங்கு உற்றார் அல்லரோதான் வேறும் ஓர் இலங்கை உண்டோ
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து இமையோர் அஞ்ச
துங்க தோள் கொட்டி ஆர்த்தான் கூற்றையும் துணுக்கம் கொண்டான்

#202
பறந்தலை அதனின் வந்த பல் பெரும் கவியின் பண்ணை
இறந்தது கிடக்க நின்ற இரிதலின் யாரும் இன்றி
வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை
குறைந்துளது உவாவுற்று ஓதம் கிளர்ந்து மீக்கொண்டது என்ன

#203
குன்றும் கற்களும் மரங்களும் குறைந்தன குரங்கின்
வென்றி அம் பெரும் சேனை ஓர் பாதியின் மேலும்
அன்று தேய்ந்தது என்று உரைத்தலும் அமரர் கண்டு உவப்ப
சென்று தாக்கினன் ஒரு தனி சுமித்திரை சிங்கம்

#204
நாண் எறிந்தனன் சிலையினை அரக்கியர் நகு பொன்
பூண் எறிந்தனர் படியிடை பொடித்து என்ன
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன அலகை
தூண் எறிந்தன கையெடுத்து ஆடின துணங்கை

#205
இலக்குவன் கடிது ஏவின இரை பெறாது இரைப்ப
சிலை கடும் கணை நெடும் கணம் சிறையுடன் செல்வ
உலை கொடும் கனல் வெதும்பிட வாய் எரிந்து ஓடி
குல கயங்களில் குளித்தன குடித்தன குருதி

#206
அலை புடைத்த வாள் அரக்கரை சில கழுத்து அரிவ
சில சிரத்தினை துணித்து அவை திசைகொண்டு செல்வ
கொலை படைத்த வெம் களத்திடை விழா கொடு போவ
தலை படைத்தன போன்றனவால் நெடும் சரங்கள்

#207
உரு பதங்கனை ஒப்பன சில கணை ஓடை
பொருப்பதங்களை உருவி மற்று அப்புறம் போவ
செரு பதம் பெறா அரக்கர்-தம் தலை பல சிந்தி
பருப்பதங்கள் புக்கு ஒளிப்பன முழை புகு பாம்பின்

#208
மின் புகுந்தன பல் குழுவாம் என மிளிர்வ
பொன் புகுந்து ஒளிர் வடிம்பின கடும் கணை போவ
முன்பு நின்றவர் முகத்திற்கும் கடை குழை முதுகின்
பின்பு நின்றவர் பிடர்க்கும் இ விசை ஒக்கும் பிறழா

#209
போர்த்த பேரியின் கண்ணன காளத்தின் பொகுட்ட
ஆர்த்த வாயன கையன ஆனையின் கழுத்த
ஈர்த்த தேரன இவுளியின் தலையன எவர்க்கும்
பார்த்த நோக்கன கலந்தன இலக்குவன் பகழி

#210
மருப்பு இழந்தன களிறு எலாம் வால் செவி இழந்த
நெருப்பு உகும் கண்கள் இழந்தன நெடும் கரம் இழந்த
செரு புகும் கடும் காத்திரம் இழந்தன சிகரம்
பொருப்பு உருண்டனவாம் என தலத்திடை புரண்ட

#211
நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின் திசை எங்கும் நிறைந்த
சரம் தலைத்தலை பட பட மயங்கின சாய்ந்த
உரம் தலத்துற உழைத்தவால் பிழைத்தது ஒன்று இல்லை
குரம் தலத்தினும் விசும்பினும் மிதித்திலா குதிரை

#212
பல்லவ கணை பட படு புரவிய பல் கால்
வில் உடை தலையாளொடு சூதரை வீழ்த்த
எல்லை_அற்ற செம் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால்
செல்லகிற்றில நின்றில கொடி நெடும் தேர்கள்

#213
பேழை ஒத்து அகல் வாயன பேய் கணம் முகக்கும்
மூழை ஒத்தன கழுத்து அற வீழ்ந்தன முறை சால்
ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன உதிர
தாழி ஒத்த வெம் குருதியில் மிதப்பன தலைகள்

#214
ஒட்டி நாயகன் வென்றி நாள் குறித்து ஒளிர் முளைகள்
அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன அழிந்து
நட்டவாம் என வீழ்ந்தன துடிகளின் நவை தீர்
வட்ட வாய்களில் வதிந்தன வருண சாமரைகள்

#215
எரிந்த வெம் கணை நெற்றியில் படு-தொறும் யானை
அரிந்த அங்குசத்து அங்கையின் கல்வியின் அமைவால்
திரிந்த வேகத்த பாகர்கள் தீர்ந்தன செருவில்
புரிந்த வானர தானையில் புக்கன புயலின்

#216
வேனிலான் அன்ன இலக்குவன் கடும் கணை விலக்க
மான வெள் எயிற்று அரக்கர்-தம் படைக்கல வாரி
போன போன வன் திசை-தொறும் பொறி குலம் பொடிப்ப
மீன் எலாம் உடன் விசும்பின்-நின்று உதிர்ந்து என வீழ்ந்த

#217
கரம் குடைந்தன தொடர்ந்து போய் கொய் உளை கடு மா
குரம் குடைந்தன வெரிநுற கொடி நெடும் கொற்ற
தரம் குடைந்தன அணி நெடும் தேர் குலம் குடைந்த
அரம் குடைந்தன அயில் நெடு வாளிகள் அம்மா

#218
துரக்கம் மெய்யுணர்வு இரு வினைகளை எனும் சொல்லின்
கரக்கும் வீரதை தீமையை எனும் இது கண்டோம்
இரக்கம் நீங்கினர் அறத்தொடும் திறம்பினர் எனினும்
அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர் விரும்பி

#219
மற கொடும் தொழில் அரக்கர்கள் மறுக்கிலா மழை-போல்
நிற கொடும் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர
இறக்கம் எய்தினர் யாவரும் எய்தினர் எனின் அ
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது என சொல்லேம்

#220
ஒருவரை கரம் ஒருவரை சிரம் மற்று அங்கு ஒருவர்
குரை கழல் துணை தோள் இணை பிற மற்றும் கொளலால்
விரவலர் பெறா வெறுமைய ஆயின வெவ்வேறு
இரவு கற்றன போன்றன இலக்குவன் பகழி

#221
சிலவரை கரம் சிலவரை செவி சிலர் நாசி
சிலவரை கழல் சிலவரை கண் கொளும் செயலால்
நிலவரை தரு பொருள்-வழி தண் தமிழ் நிரப்பும்
புலவர் சொல் துறை புரிந்தவும் போன்றன சரங்கள்

#222
அறத்தின் இன் உயிர் அனையவன் கணை பட அரக்கர்
இறத்தும் இங்கு இறை நிற்பின் என்று இரியலின் மயங்கி
திறத்திறம் பட திசை-தொறும் திசை-தொறும் சிந்தி
புறத்தின் ஓடினர் ஓடின குருதியே போல

#223
செருவில் மாண்டவர் பெருமையும் இலக்குவன் செய்த
வரி வில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான்
திரிபுரம் செற்ற தேவனும் இவனுமே செருவின்
ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான்

#224
படர் நெடும் தட தட்டிடை திசை-தொறும் பாகர்
கடவுகின்றது காற்றினும் மனத்தினும் கடியது
அடல் வயம் கொள் வெம் சீயம் நின்று ஆர்க்கின்றது அம் பொன்
வட பெரும் கிரி பொருவு தேர் ஓட்டினன் வந்தான்

#225
தொளை கொள் வான் நுக சுடர் நெடும் தேர் மிசை தோன்றி
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெம் செரு தொழில் மலைய
கிளை கொளாது இகல் என்று எண்ணி மாருதி கிடைத்தான்
இளைய வள்ளலே ஏறுதி தோள் மிசை என்றான்

#226
ஏறினான் இளம் கோளரி இமையவர் ஆசி
கூறினார் எடுத்து ஆர்த்தது வானர குழுவும்
நூறு பத்து உடை பத்தியின் நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது அ அனுமன்-தன் தடம் தோள்

#227
தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள் மேல்
துன்னு பேர் ஒளி இலக்குவன் தோன்றிய தோற்றம்
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசை பொலிந்தது
என்னுமாறு அன்றி பிறிது எடுத்து இயம்புவது யாதோ

#228
ஆங்கு வீரனோடு அமர் செய்வான் அமைந்த வாள் அரக்கன்
தாங்கு பல் கணை புட்டிலும் தகை பெற கட்டி
வீங்கு தோள் வலிக்கு ஏயது விசும்பில் வில் வெள்க
வாங்கினான் நெடு வட_வரை புரைவது ஓர் வரி வில்

#229
இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம்
பொரா நின்றேம் இது காணிய வந்தனர் புலவோர்
பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து
விராவு நல் அமர் விளைக்குதும் யாம் என விளம்பா

#230
பெய் தவத்தினோர் பெண்_கொடி எம்முடன் பிறந்தாள்
செய்த குற்றம் ஒன்று இல்லவள் நாசி வெம் சினத்தால்
கொய்த கொற்றவ மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த
கை தலத்திடை கிடத்துவென் காக்குதி என்றான்

#231
அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர
மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்-பால்
வில்லினால் சொல்லின் அல்லது வெம் திறல் வெள்க
சொல்லினால் சொல கற்றிலம் யாம் என சொன்னான்

#232
விண் இரண்டு கூறு ஆயது பிளந்தது வெற்பு
மண் இரண்டு உற கிழிந்தது என்று இமையவர் மறுக
கண் இரண்டினும் தீ உக கதிர் முக பகழி
எண் இரண்டினோடு இரண்டு ஒரு தொடை தொடுத்து எய்தான்

#233
கொம்பு நால் உடை குல கரி கும்பத்தில் குளித்த
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய உரும் என செல்வ
வெம்பு வெம் சினத்து இராவணற்கு இளையவன் விட்ட
அம்பு பத்தினோடு எட்டையும் நான்கினால் அறுத்தான்

#234
அறுத்த காலையின் அரக்கனும் அமரரை நெடு நாள்
ஒறுத்தது ஆயிரம் உருவது திசைமுகன் உதவ
பொறுத்தது ஆங்கு ஒரு புகர் முக கடும் கணை புத்தேள்
இறுத்து மாற்று இது வல்லையேல் என்று கோத்து எய்தான்

#235
புரிந்து நோக்கிய திசை-தொறும் பகழியின் புயலால்
எரிந்து செல்வதை நோக்கிய இராமனுக்கு இளையான்
தெரிந்து மற்ற அது-தன்னை ஓர் தெய்வ வெம் கணையால்
அரிந்து வீழ்த்தலும் ஆயிரம் உரு சரம் அற்ற

#236
ஆறு_இரண்டு வெம் கடும் கணை அனுமன்-மேல் அழுத்தி
ஏறு வெம் சரம் இரண்டு இளம் குமரன்-மேல் ஏற்றி
நூறும் ஐம்பதும் ஒரு தொடை தொடுத்து ஒரு நொடியில்
கூறு திக்கையும் விசும்பையும் மறைத்தனன் கொடியோன்

#237
மறைத்த வாளிகள் எவற்றையும் அவற்றினால் மாற்றி
துறை தலம்-தொறும் தலம்-தொறும் நின்று தேர் சுமக்கும்
பொறைக்கு அமைந்த வெம் கரி பரி யாளி மா பூதம்
திற திறம் பட துணித்து அவன் தேரையும் சிதைத்தான்

#238
தேர் அழிந்தது செம் கதிர் செல்வனை சூழ்ந்த
ஊர் அழிந்தது போல் துரந்து ஊர்பவர் உலந்தார்
நீர் அழிந்திடா நெடு மழை குழாத்திடை நிமிர்ந்த
பார வெம் சிலை அழிந்து என துமிந்தது அ பரு வில்

#239
செய்த போரினை நோக்கி இ தேரிடை சேர்ந்த
கொய் உளை கடும் கோள் அரி முதலிய குழுவை
எய்து கொன்றனனோ நெடு மந்திரம் இயம்பி
வைது கொன்றனனோ என வானவர் மயர்ந்தார்

#240
ஊன்று தேரொடு சிலை இலன் கடல் கிளர்ந்து ஒப்பான்
ஏன்று மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று உலகம்
மூன்றும் வென்றமைக்கு இடு குறி என்ன மு சிகைத்தாய்
தோன்றும் வெம் சுடர் சூல வெம் கூற்றினை தொட்டான்

#241
இழிய பாய்ந்தனன் இரு நிலம் பிளந்து இரு கூறா
கிழிய பாய் புனல் கிளர்ந்து என கிளர் சினத்து அரக்கன்
பழி அப்பால் இவன் பதாதி என்று அனுமன்-தன் படர் தோள்
ஒழிய பார்-மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான்

#242
உற்ற காலையின் இராவணன் தம்பி மாடு உதவ
இற்ற தானையின் இரு மடி இகல் படை ஏவ
முற்றி அன்னது முழங்கு முந்நீர் என முடுகி
சுற்றி ஆர்த்தது சுமித்திரை சிங்கத்தை தொடர்ந்து

#243
இரிந்து வானவர் இரியலின் மயங்கினர் எவரும்
சொரிந்த வெம் படை துணிந்திட தடுப்ப_அரும் தொழிலால்
பரிந்த அண்ணலும் பரிவிலன் ஒரு புடை படர
புரிந்த அ நெடும் சேனை அம் கரும் கடல் புக்கான்

#244
முருக்கின் நாள்_மலர் முகை விரிந்தாலன முரண் கண்
அரக்கர் செம் மயிர் கரும் தலை அடுக்கலின் அணைகள்
பெருக்கினான் பெரும் கனலிடை பெய்து பெய்து எருவை
உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட

#245
கரியின் கைகளும் புரவியின் கால்களும் காலின்
திரியும் தேர்களின் சில்லியும் அரக்கர்-தம் சிரமும்
சொரியும் சோரியின் துறை-தொறும் துறை-தொறும் கழிப்ப
நெரியும் பல் பிண பெரும் கரை கடந்தில நீத்தம்

#246
கொற்ற வாள் எழு தண்டு வேல் கோல் மழு குலிசம்
மற்றும் வேறு உள படைக்கலம் இலக்குவன் வாளி
சுற்றும் ஓடுவ தொடர்ந்து இடை துணித்திட தொகையாய்
அற்ற துண்டங்கள் பட பட துணிந்தன அனந்தம்

#247
குண்டலங்களும் மவுலியும் ஆரமும் கோவை
தண்டை தோள்_வளை கடகம் என்று இனையன தறுகண்
கண்ட கண்டங்களொடும் கணை துரந்தன கதிர் சூழ்
மண்டலங்களை மாறுகொண்டு இமைத்தன வானில்

#248
பரந்த வெண்குடை சாமரை நெடும் கொடி பதாகை
சரம் தரும் சிலை கேடகம் பிச்சம் மொய் சரங்கள்
துரந்து செல்வன குருதி நீர் ஆறுகள்-தோறும்
நிரந்த பேய்_கணம் கரை-தொறும் குவித்தன நீந்தி

#249
ஈண்டு வெம் செரு இனையன நிகழ்வுழி எவர்க்கும்
நீண்ட வெள் எயிற்று அரக்கன் மற்றொரு திசை நின்றான்
பூண்ட வெம் செரு இரவி கான்முளையொடு பொருதான்
காண்தகும் என இமையவர் குழுக்கொண்டு கண்டார்

#250
பொறிந்து எழு கண்ணினன் புகையும் வாயினன்
செறிந்து எழு கதிரவன் சிறுவன் சீறினான்
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள் என
எறிந்தனன் விசும்பில் மா மலை ஒன்று ஏந்தியே

#251
அ மலை நின்று வந்து அவனி எய்திய
செம் மலை அனைய வெம் களிறும் சேனையின்
வெம் மலை வேழமும் பொருத வேறு இனி
எ மலை உள அவற்கு எடுக்க ஒணாதன

#252
இ-வகை நெடு மலை இழிந்த மாசுணம்
கவ்விய நிருதர்-தம் களிறும் கட்டு அற
அ வகை மலையினை ஏற்று ஓர் அங்கையால்
வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார்

#253
ஏற்று ஒரு கையினால் இது-கொல் நீ அடா
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான்
நீற்று இயல் நுணுகுற பிசைந்து நீங்கு எனா
தூற்றினன் இமையவர் துணுக்கம் எய்தினார்

#254
செல்வெனோ நெடும் கிரி இன்னும் தேர்ந்து எனா
எல்லவன் கான்முளை உணரும் ஏல்வையில்
கொல் என எறிந்தனன் குறைவு இல் நோன்பினோர்
சொல் என பிழைப்பு இலா சூலம் சோர்வு இலான்

#255
பட்டனன் பட்டனன் என்று பார்த்தவர்
விட்டு உலம்பிட நெடு விசும்பில் சேறலும்
எட்டினன் அது பிடித்து இறுத்து நீக்கினான்
ஒட்டுமோ மாருதி அறத்தை ஓம்புவான்

#256
சித்திர வன முலை சீதை செவ்வியால்
முத்தனார் மிதிலை ஊர் அறிவு முற்றிய
பித்தன் வெம் சிலையினை இறுத்த பேர் ஒலி
ஒத்தது சூலம் அன்று இற்ற ஓசையே

#257
நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே
கருதவும் இயம்பவும் அரிது உன் கை வலி
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும்
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான்

#258
என்னொடு பொருதியேல் இன்னும் யான் அமர்
சொன்னன புரிவல் என்று அரக்கன் சொல்லலும்
முன் இனி எதிர்க்கிலேன் என்று முற்றிய
பின் இகல் பழுது என பெயர்ந்து போயினான்

#259
அற்றது காலையில் அரக்கன் ஆயுதம்
பெற்றிலன் பெயர்ந்திலன் அனைய பெற்றியில்
பற்றினன் பாய்ந்து எதிர் பருதி கான்முளை
எற்றினன் குத்தினன் எறுழ் வெம் கைகளால்

#260
அரக்கனும் நன்று நின் ஆண்மை ஆயினும்
தருக்கு இனி இன்றொடும் சமையும் தான் எனா
நெருக்கினன் பற்றினன் நீங்கொணா-வகை
உருக்கிய செம்பு அன உதிர கண்ணினான்

#261
திரிந்தனர் சாரிகை தேவர் கண்டிலர்
புரிந்தனர் நெடும் செரு புகையும் போர்த்து எழ
எரிந்தன உரும் எலாம் இருவர் வாய்களும்
சொரிந்தன குருதி தாம் இறையும் சோர்ந்திலார்

#262
உறுக்கினர் ஒருவரை ஒருவர் உற்று இகல்
முறுக்கினர் முறை முறை அரக்கன் மொய்ம்பினால்
பொறுக்கிலா-வகை நெடும் புயங்களால் பிணித்து
இறுக்கினான் இவன் சிறிது உணர்வும் எஞ்சினான்

#263
மண்டு அமர் இன்றொடு மடங்கும் மன் இலா
தண்டல் இல் பெரும் படை சிந்தும் தக்கது ஓர்
எண் தரு கருமம் மற்று இதனின் இல் என
கொண்டனன் போயினன் நிருதர்_கோ நகர்

#264
உரற்றின பறவையை ஊறு கொண்டு எழ
சிரற்றின பார்ப்பினின் சிந்தை சிந்திட
விரல் துறு கைத்தலத்து அடித்து வெய்து_உயிர்த்து
அரற்றின கவி குலம் அரக்கர் ஆர்த்தனர்

#265
நடுங்கினர் அமரரும் நா உலர்ந்து வேர்த்து
ஒடுங்கினர் வானர தலைவர் உள் முகிழ்த்து
இடுங்கின கண்ணினர் எரிந்த நெஞ்சினர்
மடங்கினவாம் உயிர்ப்பு என்னும் அன்பினார்

#266
புழுங்கிய வெம் சினத்து அரக்கன் போகுவான்
அழுங்கல் இல் கோள் முகத்து அரவம் ஆயினான்
எழும் கதிர் இரவி-தன் புதல்வன் எண்ணுற
விழுங்கிய மதி என மெலிந்து தோன்றினான்

#267
திக்கு உற விளக்குவான் சிறுவன் தீயவன்
மை கரு நிறத்திடை மறைந்த தன் உரு
மிக்கதும் குறைந்ததும் ஆக மேகத்து
புக்கதும் புறத்தும் ஆம் மதியும் போன்றனன்

#268
ஒருங்கு அமர் புரிகிலேன் உன்னொடு யான் என
நெருங்கிய உரையினை நினைந்து நேர்கிலன்
கரும் கடல் கடந்த அ காலன் காலன் வாழ்
பெரும் கரம் பிசைந்து அவன் பின்பு சென்றனன்

#269
ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர்
நாயகர் எமக்கு இனி யாவர் நாட்டினில்
காய் கதிர் புதல்வனை பிணித்த கையினன்
போயினன் அரக்கன் என்று இசைத்த பூசலார்

#270
தீயினும் முதிர்வுர சிவந்த கண்ணினான்
காய் கணை சிலையொடும் கவர்ந்த கையினான்
ஏ எனும் அளவினில் இலங்கை மா நகர்
வாயில் சென்று எய்தினான் மழையின் மேனியான்

#271
உடை பெரும் துணைவனை உயிரின் கொண்டு போய்
கிடைப்ப_அரும் கொடி நகர் அடையின் கேடு என
தொடை பெரும் பகழியின் மாரி தூர்த்து உற
அடைப்பென் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம்

#272
மாதிரம் மறைந்தன வயங்கு வெய்யவன்
சோதியின் கிளர் நிலை தொடர்தல் ஓவின
யாதும் விண் படர்கில இயங்கு கார் மழை
மீது நின்று அகன்றன விசும்பு தூர்த்தலால்

#273
மனத்தினும் கடியது ஓர் விசையின் வான் செல்வான்
இன கொடும் பகழியின் மதிலை எய்தினான்
நினைந்து அவை நீக்குதல் அருமை இன்று என
சின கொடும் திறலவன் திரிந்து நோக்கினான்

#274
கண்டனன் வதனம் வாய் கண் கை கால் என
புண்டரீக தடம் பூத்து பொன் சிலை
மண்டலம் தொடர்ந்து மண் வயங்க வந்தது ஓர்
கொண்டலின் பொலிதரு கோலத்தான்-தனை

#275
மடித்த வாய் கொழும் புகை வழங்க மாறு இதழ்
துடித்தன புருவங்கள் சுறுக்கொண்டு ஏறிட
பொடித்த தீ நயனங்கள் பொறுக்கலாமையால்
இடித்த வான் தெழிப்பினால் இடிந்த குன்று எலாம்

#276
மா கவந்தனும் வலி தொலைந்த வாலி ஆம்
பூ கவர்ந்து உண்ணியும் போலும் என்று எனை
தாக்க வந்தனை இவன்-தன்னை இன் உயிர்
காக்க வந்தனை இது காண தக்கதால்

#277
உம்பியை முனிந்திலேன் அவனுக்கு ஊர்தியாம்
தும்பியை முனிந்திலேன் தொடர்ந்த வாலி-தன்
தம்பியை முனிந்திலேன் சமரம் தன்னில் யான்
அம்பு இயல் சிலையினாய் புகழ் அன்று ஆதலால்

#278
தேடினென் திரிந்தனென் நின்னை திக்கு இறந்து
ஓடியது உன் படை உம்பி ஓய்ந்து ஒரு
பாடு உற நடந்தனன் அனுமன் பாறினன்
ஈடுறும் இவனை கொண்டு எளிதின் எய்தினேன்

#279
காக்கிய வந்தனை என்னின் கண்ட என்
பாக்கியம் தந்தது நின்னை பல் முறை
ஆக்கிய செரு எலாம் ஆக்கி எம்முனை
போக்குவென் மனத்துறு காதல் புன்கண் நோய்

#280
ஏதி வெம் திறலினோய் இமைப்பிலோர் எதிர்
பேது உறு குரங்கை யான் பிணித்த கை பிணி
கோதை வெம் சிலையினால் கோடி வீடு எனின்
சீதையும் பெயர்ந்தனள் சிறை நின்றாம் என்றான்

#281
என்றலும் முறுவலித்து இராமன் யானுடை
இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும்
குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின்
பின்றினென் உனக்கு வில் பிடிக்கிலேன் என்றான்

#282
மீட்டு அவன் சரங்களால் விலங்கலானையே
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில்
வாள் தலை பிடர்த்தலை வயங்க வாளிகள்
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான்

#283
சுற்றிய குருதியின் செக்கர் சூழ்ந்து எழ
நெற்றியின் நெடும் கணை ஒளிர நின்றவன்
முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து வந்து
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன்

#284
குன்றின் வீழ் அருவியின் குதித்து கோத்து இழி
புன் தலை குருதி நீர் முகத்தை போர்த்தலும்
இன் துயில் உணர்ந்து என உணர்ச்சி எய்தினான்
வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான்

#285
நெற்றியில் நின்று ஒளி நெடிது இமைப்பன
கொற்றவன் சரம் என குறிப்பின் உன்னினான்
சுற்றுற நோக்கினன் தொழுது வாழ்த்தினான்
முற்றிய பொருட்கு எலாம் முடிவுளான்-தனை

#286
கண்டனன் நாயகன்-தன்னை கண்ணுறா
தண்டல் இல் மானமும் நாணும் தாங்கினான்
விண்டவன் நாசியும் செவியும் வேரொடும்
கொண்டனன் எழுந்து போய் தமரை கூடினான்

#287
வானரம் ஆர்த்தன மறையும் ஆர்த்தன
தான் அர_மகளிரும் தமரும் ஆர்த்தனர்
மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன
வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே

#288
காந்து இகல் அரக்கன் வெம் கரத்துள் நீங்கிய
ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய
வேந்தனும் சானகி இலங்கை வெம் சிறை
போந்தனளாம் என பொருமல் நீங்கினான்

#289
மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ
வித்தகன் சரம் தொட மெலிவு தோன்றிய
சித்திரம் பெறுதலின் செவியும் மூக்கும் கொண்டு
அ திசை போயினன் அல்லது ஒண்ணுமோ

#290
அ கணத்து அறிவு வந்து அணுக அங்கை-நின்று
உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும்
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம்
புக்கதும் உணர்ந்தனன் உதிர போர்வையான்

#291
தாது ராக தடம் குன்றம் தாரை சால்
கூதிர் கால் நெடு மழை சொரிய கோத்து இழி
ஊதையோடு அருவிகள் உமிழ்வது ஒத்தனன்
மீது உறு குருதி யாறு ஒழுகும் மேனியான்

#292
எண் உடை தன்மையன் இனைய எண்_இலா
பெண் உடை தன்மையன் ஆய பீடையால்
புண் உடை செவியொடு மூக்கும் பொன்றலால்
கண் உடை சுழிகளும் குருதி கால்வன

#293
ஏசியுற்று எழும் விசும்பினரை பார்க்கும் தன்
நாசியை பார்க்கும் முன் நடந்த நாள் உடை
வாசியை பார்க்கும் இ மண்ணை பார்க்குமால்
சீ சீ உற்றது என தீயும் நெஞ்சினான்

#294
என் முகம் காண்பதன் முன்னம் யான் அவன்-தன்
முகம் காண்பது சரதம்தான் என
பொன் முகம் காண்பது ஓர் தோலும் போரிடை
வல் முகம் காண்பது ஓர் வாளும் வாங்கினான்

#295
ஆயிரம் பேய் சுமந்து அளித்தது ஆங்கு ஒரு
மா இரும் கேடகம் இடத்து வாங்கினான்
பேய் இரண்டாயிரம் சுமந்து பேர்வது ஓர்
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான்

#296
விதிர்த்தனன் வீசினன் விசும்பின் மீன் எலாம்
உதிர்த்தனன் உலகினை அனந்தன் உச்சியோடு
அதிர்த்தனன் ஆர்த்தனன் ஆயிரம் பெரும்
கதிர் தலம் சூழ் வட_வரையின் காட்சியான்

#297
வீசினன் கேடகம் முகத்து வீங்கு கால்
கூசின குரக்கு வெம் குழுவை கொண்டு எழுந்து
ஆசைகள்-தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும்
ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால்

#298
தோல் இடை துரக்கவும் துகைக்கவும் சுடர்
வேல் உடை கூற்றினால் துணிய வீசவும்
காலிடை கடல் என சிந்தி கை கெட
வால் உடை நெடும் படை இரிந்து மாய்ந்ததால்

#299
ஏறுபட்டதும் இடை எதிர்ந்துளோர் எலாம்
கூறுபட்டதும் கொழும் குருதி கோத்து இழிந்து
ஆறுபட்டதும் நிலம் அனந்தன் உச்சியும்
சேறுபட்டதும் ஒரு கணத்தில் தீர்ந்தவால்

#300
இடுக்கு இலை எதிர் இனி இவனை இ வழி
தடுக்கிலையாம்-எனின் குரங்கின் தானையை
ஒடுக்கினை அரக்கரை உயர்த்தினாய் எனா
முடுக்கினன் இராமனை சாம்பன் முன்னியே

#301
அண்ணலும் தானையின் அழிவும் ஆங்கு அவன்
திண் நெடும் கொற்றமும் வலியும் சிந்தியா
நண்ணினன் நடந்து எதிர் நமனை இன்று இவன்
கண்ணிடை நிறுத்துவென் என்னும் கற்பினான்

#302
ஆறினோடு ஏழு கோல் அசனி ஏறு என
ஈறு_இலா விசையன இராமன் எய்தனன்
பாறு உகு சிறை என விசும்பில் பாறிட
நூறினான் வாளினால் நுணங்கு கல்வியான்

#303
ஆடவர்க்கு அரசனும் தொடர அ வழி
கோடையின் கதிர் என கொடிய கூர்ம் கணை
ஈடு உற துரந்தனன் அவையும் இற்று உக
கேடக புறத்தினால் கிழிய வீசினான்

#304
சிறுத்தது ஓர் முறுவலும் தெரிய செம் கணான்
மறித்து ஒரு வடி கணை தொடுக்க மற்று அவன்
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை
அறுத்தது கலுழனின் அமரர் ஆர்க்கவே

#305
அற்றது தட கை வாள் அற்றது இல் என
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான்
முற்றினென் முற்றினென் என்று முன்பு வந்து
உற்றனன் ஊழி தீ அவிய ஊதுவான்

#306
அ நெடு வாளையும் துணித்த ஆண்தகை
பொன் நெடும் கேடகம் புரட்டி போர்த்தது ஓர்
நல் நெடும் கவசத்து நாம வெம் கணை
மின்னொடு நிகர்ப்பன பலவும் வீசினான்

#307
அந்தரம் அன்னது நிகழும் அ வழி
இந்திரன் தமரொடும் இரியல் எய்திட
சிந்துவும் தன் நிலை குலைய சேண் உற
வந்தது தசமுகன் விடுத்த மா படை

#308
வில் வினை ஒருவனும் இவனை வீட்டுதற்கு
ஒல் வினை இது என கருதி ஊன்றினான்
பல் வினை தீயன பரந்த போது ஒரு
நல்வினை ஒத்தது நடந்த தானையே

#309
கோத்தது புடை-தொறும் குதிரை தேரொடு ஆள்
பூத்து இழி மதமலை மிடைந்த போர் படை
காத்தது கருணனை கண்டு மாய மா
கூத்தனும் வருக என கடிது கூவினான்

#310
சூழி வெம் கட கரி புரவி தூண்டு தேர்
ஆழி வெம் பெரும் படை மிடைந்த ஆர்கலி
ஏழ் இரு கோடி வந்து எய்திற்று என்பரால்
ஊழியின் ஒருவனும் எதிர் சென்று ஊன்றினான்

#311
காலமும் காலனும் கணக்கு_இல் தீமையும்
மூலம் மூன்று இலை என வகுத்து முற்றிய
ஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும்
சூலம் ஒன்று அரக்கனும் வாங்கி தோன்றினான்

#312
அரங்கு இடந்தன அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும்
மரம் கிடந்தன மலை குவை கிடந்தன வாம் என மாறாடி
கரம் கிடந்தன காத்திரம் கிடந்தன கறை படும்படி கவ்வி
சிரம் கிடந்தன கண்டனர் கண்டிலர் உயிர்-கொடு திரிவாரை

#313
இற்ற அல்லவும் ஈர்ப்புண்ட அல்லவும் இடை இடை முறிந்து எங்கும்
துற்ற அல்லவும் துணிபட்ட அல்லவும் சுடு பொறி தொகை தூவி
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும் வேறு ஒன்று நூறு ஆகி
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக

#314
படர்ந்த கும்பத்து பாய்ந்தன பகழிகள் பாகரை பறிந்து ஓடி
குடைந்து வையகம் புக்குற தேக்கிய குருதியால் குடர் சோர
தொடர்ந்து நோயொடும் துணை மருப்பு இழந்து தம் காத்திரம் துணி ஆகி
கிடந்த அல்லது நடந்தன கண்டிலர் கிளர் மதகிரி எங்கும்

#315
வீழ்ந்த வாளன விளிவுற்ற பதாகைய வெயில் உமிழ் அயில் அம்பு
போழ்ந்த பல் நெடும் புரவிய முறை முறை அச்சொடும் பொறி அற்று
தாழ்ந்த வெண் நிணம் தயங்கு வெம் குழம்பிடை தலைத்தலை மாறாடி
ஆழ்ந்த அல்லது பெயர்ந்தன கண்டிலர் அதிர் குரல் மணி தேர்கள்

#316
ஆடல் தீர்ந்தன வளை கழுத்து அற்றன அதிர் பெரும் குரல் நீத்த
தாள் துணிந்தன தறுகண் வெம் கரி நிரை தாங்கிய பிணத்து ஓங்கல்
கோடு அமைந்த வெம் குருதி நீர் ஆறுகள் சுழி-தொறும் கொணர்ந்து உந்தி
ஓடல் அன்றி நின்று உகள்வன கண்டிலர் உரு கெழு பரி எல்லாம்

#317
வேதநாயகன் வெம் கணை வழக்கத்தின் மிகுதியை வெவ்வேறு இட்டு
ஓதுகின்றது என் உம்பரும் அரக்கர் வெம் களத்து வந்து உற்றாரை
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும்
மாதர் வெள்ளமே கண்டனர் கண்டிலர் மலையினும் பெரியாரை

#318
பனி பட்டால் என கதிர் வர படுவது பட்டது அ படை பற்றார்
துனிப்பட்டார் என துளங்கினர் இமையவர் யாவர்க்கும் தோலாதான்
இனி பட்டான் என வீங்கின அரக்கரும் ஏங்கினர் இவன் அந்தோ
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன்

#319
ஏதியோடு எதிர் பெரும் துணை இழந்தனை எதிர் ஒரு தனி நின்றாய்
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் நின் உயிர் நினக்கு ஈவென்
போதியோ பின்றை வருதியோ அன்று எனின் போர் புரிந்து இப்போதே
சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி சமைவுற தெரிந்து அம்மா

#320
இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் யான் உனை இளையோனால்
அழைத்த போதினும் வந்திலை அந்தகன் ஆணையின் வழி நின்றாய்
பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொடு பெரும் துயில் நெடும் காலம்
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான்

#321
மற்று எலாம் நிற்க வாசியும் மானமும் மறத்துறை வழுவாத
கொற்ற நீதியும் குலமுதல் தருமமும் என்று இவை குடியாக
பெற்ற நுங்களால் எங்களை பிரிந்து தன் பெரும் செவி மூக்கோடும்
அற்ற எங்கை-போல் என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா

#322
நோக்கு இழந்தனர் வானவர் எங்களால் அ வகை நிலை நோக்கி
தாக்கு அணங்கு அனையவள் பிறர் மனை என தடுத்தனென் தக்கோர் முன்
வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால்
மூக்கு இழந்த பின் மீளல் என்றால் அது முடியுமோ முடியாதாய்

#323
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகை செய்ய
செங்கை தாங்கிய சிரத்தொடும் கண்ணின் நீர் குருதியினொடு தேக்கி
எங்கை-போல் எடுத்து அழைத்து நான் வீழ்வெனோ இராவணன் எதிர் அம்மா

#324
ஒருத்தன் நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும் பழி ஓரும்
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ சேவகர் கடன் ஓராய்
செரு திண் வாளினால் திற திறன் உங்களை அமர் துறை சிரம் கொய்து
பொருத்தினால் அது பொருந்துமோ தக்கது புகன்றிலை போல் என்றான்

#325
என்று தன் நெடும் சூலத்தை இடக்கையின் மாற்றினன் வல கையால்
குன்று நின்றது பேர்த்து எடுத்து இரு நில குடர் கவர்ந்து என கொண்டான்
சென்று விண்ணொடும் பொறியொடும் தீச்செல சேவகன் செனி நேரே
வென்று தீர்க என விட்டனன் அது வந்து பட்டது மேல் என்ன

#326
அனைய குன்று எனும் அசனியை யாவர்க்கும் அறிவு அரும் தனி மேனி
புனையும் நல் நெடு நீறு என நூறிய புரவலன் பொர வென்று
நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை
தினையும் மாத்திரை துணிபட முறைமுறை சிந்தினன் சரம் சிந்தி

#327
அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக
உண்ணகிற்பன உருமையும் சுடுவன மேருவை உருவி போய்
விண்ணகத்தையும் கடப்பன பிழைப்பு இலா மெய்யன மேல் சேர்ந்த
கண்ணுதல் பெரும் கடவுள்-தன் கவசத்தை கடந்தில கதிர் வாளி

#328
தாக்குகின்றன நுழைகில தலையது தாமரை தடம் கண்ணான்
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி
வீக்கு இழந்தது வீழ்ந்தது வரை சுழல் விரி சுடர் வீழ்ந்து என்ன

#329
காந்து வெம் சுடர் கவசம் அற்று உகுதலும் கண்-தொறும் கனல் சிந்தி
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர்
வாய்ந்த வல் நெடும் தண்டு கைப்பற்றினன் வானர படை முற்றும்
சாந்து செய்குவனாம் என முறை முறை அரைத்தனன் தரையொடும்

#330
பறப்ப ஆயிரம் படுவன ஆயிரம் பகட்டு எழில் அகல் மார்பம்
திறப்ப ஆயிரம் திரிவன ஆயிரம் சென்று புக்கு உருவாது
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடி கணை என்றாலும்
பிறப்ப ஆயிடை தெழித்துற திரிந்தனன் கறங்கு என பெரும் சாரி

#331
தண்டு கைத்தலத்து உளது எனின் உளதன்று தானை என்று அது சாய
கொண்டல் ஒத்தவன் கொடும் கணை பத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான்
கண்டம் உற்றது மற்று அது கரும் கழல் அரக்கனும் கனன்று ஆங்கு ஓர்
மண்டல சுடராம் என கேடகம் வாங்கினன் வாளோடும்

#332
வாள் எடுத்தலும் வானர வீரர்கள் மறுகினர் வழி-தோறும்
தாள் எடுத்தனர் சமழ்த்தனர் வானவர் தலை எடுத்திலர் தாழ்ந்தார்
கோள் எடுத்தது மீள என்று உரைத்தலும் கொற்றவன் குன்று ஒத்த
தோள் எடுத்தது துணித்தி என்று ஒரு சரம் துரந்தனன் சுரர் வாழ்த்த

#333
அலக்கணுற்றது தீவினை நல்வினை ஆர்த்து எழுந்தது வேர்த்து
கலக்கமுற்றனர் இராக்கதர் கால வெம் கரும் கடல் திரை போலும்
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும்
இலக்கை அற்றது அ இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி

#334
மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது-அரோ மறத்தொழில் இவன் மாடு
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும்
அற்று வீழ்ந்த கை அறாத வெம் கையினால் எடுத்து அவன் ஆர்த்து ஓடி
எற்ற வீழ்ந்தன எயிறு இளித்து ஓடின வானர குலம் எல்லாம்

#335
வள்ளல் காத்து உடன் நிற்கவும் வானர தானையை மற கூற்றம்
கொள்ளை கொண்டிட பண்டையின் மும் மடி குமைகின்ற படி நோக்கி
வெள்ளம் இன்றொடும் வீந்துறும் என்பதோர் விம்மலுற்று உயிர் வெம்ப
உள்ள கையினும் அற்ற வெம் கரத்தையே அஞ்சின உலகு எல்லாம்

#336
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி
ஆறு விண் தொடும் பிணம் சுமந்து ஓட மேல் அமரரும் இரிந்து ஓட
கூறு கூறு பட்டு இலங்கையும் விலங்கலும் பறவையும் குலைந்து ஓட
ஏறு சேவகன்-மேல் எழுந்து ஓடினன் மழை குலம் இரிந்து ஓட

#337
ஈற்று கையையும் இ கணத்து அரிதி என்று இமையவர் தொழுது ஏத்த
தோற்று கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும் தோன்றாத
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட நெடும் கொற்றவன் கொலை அம்பால்
வேற்று கையையும் வேலையில் இட்டனன் வேறும் ஓர் அணை மான

#338
சந்திர பெரும் தூணொடும் சார்த்தியது அதில் ஒன்றும் தவறு ஆகாது
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில்
சுந்தர தடம் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள்

#339
சிவண வண்ண வான் கரும் கடல் கொடு வந்த செயலினும் செறி தாரை
சுவண வண்ண வெம் சிறை உடை கடு விசை முடுகிய தொழிலானும்
அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும் அயில் வாளி
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள்

#340
பழக்க நாள் வரும் மேருவை உள்ளுற தொளைத்து ஒரு பணை ஆக்கி
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி
முழக்கினால் என முழங்கு பேர் ஆர்ப்பினான் வானர முந்நீரை
உழக்கினான் தசை தோல் எலும்பு எனும் இவை குருதியொடு ஒன்றாக

#341
நிலத்த கால் கனல் புனல் விசும்பு இவை முற்றும் நிருதனது உரு ஆகி
கொல தகாதது ஓர் வடிவு கொண்டால் என உயிர்களை குடிப்பானை
சலத்த காலனை தறுகணர்க்கு அரசனை தருக்கினின் பெரியானை
வலத்த காலையும் வடித்த வெம் கணையினால் தடிந்தனன் தனு வல்லான்

#342
பந்தி பந்தியின் பல் குலம் மீன் குலம் பாகுபாடு உற பாகத்து
இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர்
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி
குந்தி வந்தனன் நெடு நிலம் குழி பட குரை கடல் கோத்து ஏற

#343
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி
சூறை மாருதம் ஆம் என சுழித்து மேல் தொடர்கின்ற தொழிலானை
ஏறு சேவகன் எரி முக பகழியால் இரு நிலம் பொறை நீங்க
வேறு காலையும் துணித்தனன் அறத்தொடு வேதங்கள் கூத்தாட

#344
கை இரண்டொடு கால்களும் துணிந்தன கரு வரை பொருவும் தன்
மெய் இரண்டு நூறு_ஆயிரம் பகழியால் வெரிந் உற தொளை போன
செய்ய கண் பொழி தீ சிகை இரு மடி சிறந்தன தெழிப்போடும்
பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம்

#345
பாதம் கைகளோடு இழந்தனன் படியிடை இருந்து தன் பகு வாயால்
காதம் நீளிய மலைகளை கடித்து இறுத்து எடுத்து வெம் கனல் பொங்கி
மீது மீது தன் அகத்து எழு காற்றினால் விசை-கொடு திசை செல்ல
ஊத ஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன

#346
தீயினால் செய்த கண்ணுடையான் நெடும் சிகையினால் திசை தீய
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி
பேயின் ஆர்ப்பு உடை பெரும் களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும்
வாயினால் செல வீசினன் வள்ளலும் மலர் கரம் விதிர்ப்புற்றான்

#347
அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர் அந்தோ யான்
கையும் கால்களும் இழந்தனென் வேறு இனி உதவல் ஆம் துணை காணேன்
மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான்

#348
சிந்துர செம் பசும் குருதி திசைகள்-தொறும் திரை ஆறா
எந்திர தேர் கரி பரி ஆள் ஈர்த்து ஓட பார்த்திருந்த
சுந்தர பொன் கிரி ஆண்மை களிறு அனையான் கண் நின்ற
சுந்தர பொன் தோளானை முகம் நோக்கி இவை சொன்னான்

#349
புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாக துலை புக்க
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர்
இ கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய
கைக்கு அடைந்தான் உயிர் காக்க கடவீர் என் கடைக்கூட்டால்

#350
நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி
ஆதியாய் உனை அடைந்தான் அரசர் உருக்கொண்டு அமைந்த
வேதியா இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன்

#351
வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன் வேரோடும்
கல்லுமா முயல்கின்றான் இவன் என்னும் கறுவுடையான்
ஒல்லுமாறு இயலுமேல் உடன்பிறப்பின் பயன் ஓரான்
கொல்லுமால் அவன் இவனை குறிக்கோடி கோடாதாய்

#352
தம்பி என நினைந்து இரங்கி தவிரான் அ தகவு இல்லான்
நம்பி இவன்-தனை காணின் கொல்லும் இறை நல்கானால்
உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமனைத்தான் ஒரு பொழுதும்
எம்பி பிரியானாக அருளுதி யான் வேண்டினேன்

#353
மூக்கு இலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய் நீக்கிய பின் நெடும் தலையை கரும் கடலுள்
போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான்

#354
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி
உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா
சிரம் கொண்டான் கொண்டதனை திண் காற்றின் கடும் படையால்
அரம் கொண்ட கரும் கடலின் அழுவத்துள் அழுத்தினான்

#355
மா கூடு படர் வேலை மறி மகர திரை வாங்கி
மேக்கூடு கிழக்கூடு மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு கவித்து இரு கண் செவியூடும் புகை உயிர்க்கும்
மூக்கூடும் புக புக்கு மூழ்கியது அம் முக குன்றம்

#356
ஆடினார் வானவர்கள் அர_மகளிர் அமுத இசை
பாடினார் மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார்
கூடினார் படைத்தலைவர் கொற்றவனை குடர் கலங்கி
ஓடினார் அடல் அரக்கர் இராவணனுக்கு உணர்த்துவான்

17 மாயா சனக படலம்


#1
அவ்வழி கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம்
செல்வழி உணர்வு தோன்ற செப்பினம் சிறுமை தீரா
வெவ் வழி மாயை ஒன்று வேறு இருந்து எண்ணி வேட்கை
இவ்வழி இலங்கை வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம்

#2
மாதிரம் கடந்த தோளான் மந்திர இருக்கை வந்த
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி
சீதையை எய்தி உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை
யாது எனக்கு உணர்த்தி இன்று என் இன் உயிர் ஈதி என்றான்

#3
உணர்த்துவென் இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி மாயை
புணர்த்துவென் சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி
கணத்து வன் சனகன்-தன்னை கட்டினென் கொணர்ந்து காட்டின்
மண தொழில் புரியும் அன்றே மருத்தனை உருவம் மாற்றி

#4
என அவன் உரைத்தலோடும் எழுந்து மார்பு இறுக புல்லி
அனையவன்-தன்னை கொண்டு ஆங்கு அணுகுதி அன்ப என்னா
புனை மலர் சரள சோலை நோக்கினன் எழுந்து போனான்
வினைகளை கற்பின் வென்ற விளக்கினை வெருவல் காண்பான்

#5
மின் ஒளிர் மகுட கோடி வெயில் ஒளி விரித்து வீச
துன் இருள் இரிந்து தோற்ப சுடர் மணி தோளில் தோன்றும்
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப
நல் நெடும் களி மால் யானை நாணுற நடந்து வந்தான்

#6
விளக்கு ஒரு விளக்கம் தாங்கி மின் அணி அரவின் சுற்றி
இளைப்புறும் மருங்குல் நோவ முலை சுமந்து இயங்கும் என்ன
முளை பிறை நெற்றி வான மடந்தையர் முன்னும் பின்னும்
வளைத்தனர் வந்து சூழ வந்திகர் வாழ்த்த வந்தான்

#7
பண்களால் கிளவி செய்து பவளத்தால் அதரம் ஆக்கி
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட
எண்களால் அளவு ஆம் மான குணம் தொகுத்து இயற்றினாளை
கண்களால் அரக்கன் கண்டான் அவனை ஓர் கலக்கம் காண்பான்

#8
இட்டதோர் இரண பீடத்து அமரரை இருக்கை நின்றும்
கட்ட தோள் கானம் சுற்ற கழல் ஒன்று கவானின் தோன்ற
வட்ட வெண் கவிகை ஓங்க சாமரை மருங்கு வீச
தொட்டது ஓர் சுரிகையாளன் இருந்தனன் இனைய சொன்னான்

#9
என்றுதான் அடியனேனுக்கு இரங்குவது இந்து என்பான்
என்றுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவது என்-பால்
என்றுதான் அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது
என்று தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டான்

#10
வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட
நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன் நாளும் தேய்ந்த
நெஞ்சு நேரானது உம்மை நினைப்பு விட்டு ஆவி நீக்க
அஞ்சினேன் அடியனேன் நும் அடைக்கலம் அமுதின் வந்தீர்

#11
தோற்பித்தீர் மதிக்கு மேனி சுடுவித்தீர் தென்றல் தூற்ற
வேர்ப்பித்தீர் வயிர தோளை மெலிவித்தீர் வேனில் வேளை
ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம்
தீர்ப்பித்தீர் இன்னம் என் என் செய்வித்து தீர்திர் அம்மா

#12
பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து
அண்ணல் எய்வானும் ஆக்கி ஐம் கணை அரிய தக்க
புண் எலாம் எனக்கே ஆக்கி விபரீதம் புணர்த்து விட்டீர்

#13
ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆக
கூச மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன் வீர கோட்டி
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் பெண்-பால் வைத்த
ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மைதான் மாசுணாதோ

#14
நோயினை நுகரவேயும் நுணங்கி நின்று உணங்கும் ஆவி
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை
பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்து பகுத்த பத்தி
ஆயிரம் அல்ல போன ஐ_இரண்டு என்பர் பொய்யே

#15
அறம் தரும் செல்வம் அன்னீர் அமிழ்தினும் இனியீர் என்னை
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேர் எழில் மானம் கொல்ல
மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால்
இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார்

#16
அந்தரம் உணரின் மேல்_நாள் அகலிகை என்பாள் காதல்
இந்திரன் உணர்ந்த நல்கி எய்தினாள் இழுக்குற்றாளோ
மந்திரம் இல்லை வேறு ஓர் மருந்து இல்லை மையல் நோய்க்கு
சுந்தர குமுத செ வாய் அமுது அலால் அமுத சொல்லீர்

#17
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல
குன்று உரைத்தாலும் நேரா குவவு தோள் நிலத்தை கூட
மின் திரைத்து அருக்கன்-தன்னை விரித்து முன் தொகுத்த போலும்
நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான்

#18
வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று
மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள்
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னா
புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினன் புகல்வதானாள்

#19
பழி இது பாவம் என்று பார்க்கிலை பகர தக்க
மொழி இவை அல்ல என்பது உணர்கிலை முறைமை நோக்காய்
கிழிகிலை நெஞ்சம் வஞ்ச கிளையொடும் இன்று-காறும்
அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம்

#20
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின்
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால்
தான் உள பத்து பேழ் வாய் தகாதன உரைக்க தக்க
யான் உளென் கேட்க என்றால் என் சொலாய் யாது செய்யாய்

#21
வாசவன் மலரின் மேலான் மழுவலான் மைந்தன் மற்று அ
கேசவன் சிறுவர் என்ற இந்த தன்மையோர்-தம்மை கேளாய்
பூசலின் எதிர்ந்தேன் என்றாய் போர்க்களம் புக்க போது என்
ஆசையின் கனியை கண்ணின் கண்டிலை போலும் அஞ்சி

#22
ஊண் இலா யாக்கை பேணி உயர் புகழ் சூடாது உன் முன்
நாண் இலாது இருந்தேன் அல்லேன் நவை அறு குணங்கள் என்னும்
பூண் எலாம் பொறுத்த மேனி புண்ணியமூர்த்தி-தன்னை
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய்

#23
சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால் செருவில் செம்பொன்
குன்று நின்று அனைய தம்பி புறக்கொடை காத்து நிற்ப
கொன்று நின் தலைகள் சிந்தி அரக்கர்-தம் குலத்தை முற்றும்
வென்று நின்றருளும் கோலம் காணிய கிடந்த வேட்கை

#24
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால்
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி
கன கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி ஆர்க்கும்
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய்

#25
என்றனள் என்றலோடும் எரி உகு கண்ணன்-தன்னை
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான்
வென்று எனை இராமன் உன்னை மீட்ட பின் அவனோடு ஆவி
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான்

#26
இனத்து உளார் உலகத்து உள்ளார் இமையவர் முதலினார் என்
சினத்து உளார் யாவர் தீர்ந்தார் தயரதன் சிறுவன்-தன்னை
புன துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன்
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ

#27
வளைத்தன மதிலை வேலை வகுத்தன வரம்பு வாயால்
உளைத்தன குரங்கு பல்-கால் என்று அகம் உவந்தது உண்டேல்
இளைத்த நுண் மருங்குல் நங்காய் என் எதிர் எய்திற்று எல்லாம்
விளக்கு எதிர் வீழ்த்த விட்டில் பான்மைய வியக்க வேண்டா

#28
கொற்ற வாள் அரக்கர்-தம்மை அயோத்தியர் குலத்தை முற்றும்
பற்றி நீர் தருதிர் அன்றேல் பசும் தலை கொணர்திர் பாரித்து
உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன் உந்தை மேலும்
வெற்றியர் தம்மை செல்ல சொல்லினென் விரைவின் என்றான்

#29
என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு
ஒன்றும் இங்கு அரியது இல்லை என்பது ஓர் துணுக்கம் உந்த
நின்று நின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள் நெருப்பை மீள
தின்று தின்று உமிழ்கின்றாரின் துயருக்கே சேக்கை ஆனாள்

#30
இ தலை இன்ன செய்த விதியினார் என்னை இன்னும்
அ தலை அன்ன செய்ய சிறியரோ வலியர் அம்மா
பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும் என்னா
கைத்தனள் உள்ளம் வெள்ள கண்ணின் நீர் கரை இலாதாள்

#31
ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனை சனகன் ஆக்கி
வாய் திறந்து அரற்ற பற்றி மகோதரன் கடிதின் வந்து
காய் எரி அனையான் முன்னர் காட்டினன் வணங்க கண்டாள்
தாய் எரி வீழ கண்ட பார்ப்பு என தரிக்கிலாதாள்

#32
கைகளை நெரித்தாள் கண்ணில் மோதினாள் கமல கால்கள்
நெய் எரி மிதித்தால் என்ன நிலத்திடை பதைத்தாள் நெஞ்சம்
மெய் என எரிந்தாள் ஏங்கி விம்மினாள் நடுங்கி வீழ்ந்தாள்
பொய் என உணராள் அன்பால் புரண்டனள் பூசலிட்டாள்

#33
தெய்வமோ என்னும் மெய்ம்மை சிதைந்ததோ என்னும் தீய
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும்
உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள்
தையலோ தருமமேயோ யார் அவள் தன்மை தேர்வார்

#34
எந்தையே எந்தையே இன்று என் பொருட்டு உனக்கும் இ கோள்
வந்ததே என்னை பெற்று வாழ்ந்தவாறு இதுவோ மண்ணோர்
தந்தையே தாயே செய்த தருமமே தவமே என்னும்
வெம் துயர் வீங்கி தீ வீழ் விறகு என வெந்து வீழ்ந்தாள்

#35
இட்டு உண்டாய் அறங்கள் செய்தாய் எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம்
கட்டுண்டாய் உயர்ந்த வேள்வி துறை எலாம் கரையும் கண்டாய்
மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள்
கட்டுண்டாய் என்னே யானும் காண்கின்றேன் போலும் கண்ணால்

#36
என்று இன பலவும் பன்னி எழுந்து வீழ்ந்து இடரில் தோய்ந்தாள்
பொன்றினள் போலும் என்னா பொறை அழிந்து உயிர்ப்பு போவாள்
மின் தனி நிலத்து வீழ்ந்து புரள்கின்றது அனைய மெய்யாள்
அன்றில் அம் பேடை போல வாய் திறந்து அரற்றலுற்றாள்

#37
பிறை உடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இல் கடன்கள் செய்ய
இறை உடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர்
சிறை உடை காண நீரும் சிறையொடும் சேர்ந்தவாறே
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே

#38
வன் சிறை பறவை ஊரும் வானவன் வரம்பு_இல் மாய
புன் சிறை பிறவி தீர்ப்பான் உளன் என புலவர் நின்றார்
என் சிறை தீர்க்குவாரை காண்கிலேன் என்னின் வந்த
உன் சிறை விடுக்கல்-பாலார் யார் உளர் உலகத்து உள்ளார்

#39
பண் பெற்றாரோடு கூடா பகை பெற்றாய் பகழி பாய
விண் பெற்றாய் எனினும் நன்றால் வேந்தராய் உயர்ந்த மேலோர்
எண் பெற்றாய் பழியும் பெற்றாய் இது நின்னால் பெற்றது அன்றால்
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் யார் இன்ன பேறு பெற்றார்

#40
சுற்றுண்ட பாச நாஞ்சில் சுமையொடும் சூடுண்டு ஆற்ற
எற்றுண்டும் அளற்று நீங்கா விழு சிறு குண்டை என்ன
பற்றுண்ட நாளே மாளா பாவியேன் உம்மை எல்லாம்
விற்று உண்டேன் எனக்கு மீளும் விதி உண்டோ நரகில் வீழ்ந்தால்

#41
இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு அளவு_இல் இன்பம்
பொருந்தினேன் அல்லேன் எம் கோன் திருவடி புனைந்தேன் அல்லேன்
வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால்
அருந்தினேன் அயோத்தி வந்த அரசர்-தம் புகழை அம்மா

#42
கொல் என கணவற்கு ஆங்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன் எந்தை
கல் என திரண்ட தோளை பாசத்தால் கட்ட கண்டேன்
இல் என சிறந்து நின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன்
அல்லெனோ எளியெனோ யான் அளியத்தேன் இறக்கலாதேன்

#43
இணை அறு வேள்வி மேல்_நாள் இயற்றி ஈன்று எடுத்த எந்தை
புணை உறு திரள் தோள் ஆர்த்து பூழியில் புரள கண்டேன்
மண_வினை முடித்து என் கையை மந்திர மரபின் தொட்ட
கணவனை இனைய கண்டால் அல்லது கழிகின்றேனோ

#44
அன்னைமீர் ஐயன்மீர் என் ஆர் உயிர் தங்கைமீரே
என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்று
முன்னம் நீர் உணர்ந்திலீரோ உமக்கு வேறு உற்றது உண்டோ
துன்ன_அரு நெறியின் வந்து தொடர்ந்திலீர் துஞ்சினீரோ

#45
மேருவின் உம்பர் சேர்ந்து விண்ணினை மீக்கொண்டாலும்
நீர் உடை காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால்
போரிடை கொண்டாரேனும் வஞ்சனை புணர்ந்தாரேனும்
ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால்

#46
சரதம் மற்று இவனை தந்தார் தவம் புரிந்து ஆற்றல் தாழ்ந்த
பரதனை கொணர்தற்கு ஏதும் ஐயுறவு இல்லை பல் நாள்
வரதனும் வாழ்வான் அல்லன் தம்பியும் அனையன வாழான்
விரதம் உற்று அறத்தில் நின்றார்க்கு இவை-கொலாம் விளைவ மேன்மேல்

#47
அடைத்தது கடலை மேல் வந்து அடைந்தது மதிலை ஆவி
துடைத்தது பகையை சேனை என சிலர் சொல்லச்சொல்ல
படைத்தது ஓர் உவகை-தன்னை வேறு ஒரு வினயம் பண்ணி
உடைத்தது விதியே என்று என்று உளைந்தனள் உணர்வு தீர்வாள்

#48
ஏங்குவாள் இனைய பன்ன இமையவர் ஏற்றம் எல்லாம்
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி
தாங்குவாள் அல்லள் துன்பம் இவளையும் தாங்கி தானும்
ஓங்குவான் என்ன உன்னி இனையன உரைக்கலுற்றான்

#49
காரிகை நின்னை எய்தும் காதலால் கருதலாகா
பேர் இடர் இயற்றலுற்றேன் பிழை இது பொறுத்தி இன்னும்
வேர் அற மிதிலையோரை விளிகிலேன் விளிந்த போதும்
ஆர் உயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம் அன்னாய்

#50
இமையவர் உலகமேதான் இ உலகு ஏழுமேதான்
அமைவரும் புவனம் மூன்றில் என்னுடை ஆட்சியே தான்
சமைவுற தருவென் மற்று இ தாரணி மன்னற்கு இன்னல்
சுமை உடை காம வெம் நோய் துடைத்தியேல் தொழுது வாழ்வேன்

#51
இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து வேறு இடத்து இருந்து வாழ்வேன்
நலம் கிளர் நிதி இரண்டும் நல்குவென் நாம தெய்வ
பொலம் கிளர் மானம்-தானே பொது அற கொடுப்பென் புத்தேள்
வலம் கிளர் வாளும் வேண்டில் வழங்குவென் யாதும் மாற்றேன்

#52
இந்திரன் கவித்த மௌலி இமையவர் இறைஞ்சி ஏத்த
மந்திர மரபின் சூட்டி வானவர் மகளிர் யாரும்
பந்தரின் உரிமை செய்ய யான் இவன் பணியில் நிற்பேன்
சுந்தர பவள வாய் ஓர் அருள் மொழி சிறிது சொல்லின்

#53
எந்தை-தன் தந்தை தாதை இ உலகு ஈன்ற முன்னோன்
வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும் மற்றை
அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால் அமிழ்தின் வந்த
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும்

#54
தேவரே முதலா மற்றை திண் திறல் நாகர் மண்ணோர்
யாவரும் வந்து நுந்தை அடி தொழுது ஏவல் செய்வார்
பாவை நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால்
மூ_உலகு ஆளும் செல்வம் கொடுத்து அது முடித்தி என்றான்

#55
இ திரு பெறுகிற்பானும் இந்திரன் இலங்கை நுங்கள்
பொய் திரு பெறுகிற்பானும் வீடணன் புலவர் கோமான்
கை திரு சரங்கள் உன்-தன் மார்பிடை கலக்கல்-பால
மை திரு நிறத்தான் தாள் என் தலை மிசை வைக்கல்-பால

#56
நகுவன நின்னோடு ஐயன் நாயகன் நாம வாளி
புகுவன போழ்ந்து உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம்
தகுவன இனிய சொல்ல தக்கன சாப நாணின்
உகுவன மலைகள் எஞ்ச பிறப்பன ஒலிகள் அம்மா

#57
சொல்லுவ மதுர மாற்றம் துண்டத்தால் உண்டு உன் கண்ணை
கல்லுவ காகம் வந்து கலப்பன கமலக்கண்ணன்
வில் உமிழ் பகழி பின்னர் விலங்கு எழில் அலங்கல் மார்பம்
புல்லுவ களிப்பு கூர்ந்து புலவு நாறு அலகை எல்லாம்

#58
விரும்பி நான் கேட்பது உண்டால் நின்னுழை வார்த்தை வீரன்
இரும்பு இயல் வயிர வாளி இடறிட எயிற்று பேழ் வாய்
பெரும் பியல் தலைகள் சிந்தி பிழைப்பிலை முடிந்தாய் என்ன
அரும்பு இயல் துளவ பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள்

#59
புன் மகன் கேட்டி கேட்டற்கு உரியது புகுந்த போரின்
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள்

#60
வெய்யவன் அனைய கேளா வெயில் உக விழித்து வீர
கை பல பிசைந்து பேழ் வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி
தையல்-மேல் ஓடலோடும் மகோதரன் தடுத்தான் ஈன்ற
மொய் கழல் தாதை வேண்ட இசையும் நீ முனியல் என்றான்

#61
அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி
பொன்றினன் ஆகும் என்ன தரையிடை கிடந்த பொய்யோன்
இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும்
கொன்றனை ஆதி என்னா இனையன கூறலுற்றான்

#62
பூவின்-மேல் இருந்த தெய்வ தையலும் பொதுமை உற்றாள்
பாவி யான் பயந்த நங்கை நின் பொருட்டாக பட்டேன்
ஆவி போய் அழிதல் நன்றோ அமரர்க்கும் அரசன் ஆவான்
தேவியாய் இருத்தல் தீதோ சிறையிடை தேம்புகின்றாய்

#63
என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி ஈண்டு
நல் நெடும் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி நாளும்
உன்னை வெம் சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உக பொருமுகின்றான்

#64
அ உரை கேட்ட நங்கை செவிகளை அமைய பொத்தி
வெவ் உயிர்த்து ஆவி தள்ளி வீங்கினள் வெகுளி பொங்க
இ உரை எந்தை கூறான் இன் உயிர் வாழ்க்கை பேணி
செவ்வுரை அன்று இது என்னா சீறினள் உளைய செப்பும்

#65
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற
மறம் கெட மெய்ம்மை தேய வசை வர மறைகள் ஓதும்
திறம் கெட ஒழுக்கம் குன்ற தேவரும் பேண தக்க
நிறம் கெட இனைய சொன்னாய் சனகன்-கொல் நினையின் ஐயா

#66
வழி கெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் மார்பம்
கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும் ஆன்றோர் கூறும்
மொழிகொடு வாழ்வது அல்லால் முறை கெட புறம் நின்று ஆர்க்கும்
பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ பாவம்

#67
நீயும் நின் கிளையும் மற்று இ நெடு நில வரைப்பும் நேரே
மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிர திண் தோள்
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன்
நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி

#68
வரி சிலை ஒருவன் அல்லால் மைந்தர் என் மருங்கு வந்தார்
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ அரசுக்கு ஏற்ற
அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்கு தின்னும்
நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே

#69
அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன்
வில்லையே வாழ்த்தி மீட்கின் மீளுதி மீட்சி என்பது
இல்லையேல் இறந்து தீர்தி இது அலால் இயம்பல் ஆகா
சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்ன சொன்னாள்

#70
வன் திறல் அரக்கன் அன்ன வாசகம் மனத்து கொள்ளா
நின்றது நிற்க மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க நின் முன்
நின்றவன் அல்லன் போலாம் சனகன் இ கணத்தினின் முன்
கொன்று உயிர்குடிப்பென் என்னா சுரிகை வாள் உருவி கொண்டான்

#71
என்னையும் கொல்லாய் இன்னே இவனையும் கொல்லாய் இன்னும்
உன்னையும் கொல்லாய் மற்று இ உலகையும் கொல்லாய் யானோ
இன் உயிர் நீங்கி என்றும் கெடா புகழ் எய்துகின்றேன்
பின்னையும் எம் கோன் அம்பின் கிளையொடும் பிழையாய் என்றாள்

#72
இரந்தனன் வேண்டிற்று அல்லால் இவன் பிழை இழைத்தது உண்டோ
புரந்தரன் செல்வத்து ஐய கொல்கை ஓர் பொருளிற்றோதான்
பரந்த வெம் பகையை வென்றால் நின்-வழி படரும் நங்கை
அரந்தையன் ஆகும் அன்றே தந்தையை நலிவதாயின்

#73
என்று அவன் விலக்க மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின்-கண்
குன்று என நீண்ட கும்பகருணனை இராமன் கொல்ல
வன் திறல் குரங்கின் தானை வான் உற ஆர்த்த ஓதை
சென்றன செவியினூடு தேவர்கள் ஆர்ப்பும் செல்ல

#74
உகும் திறல் அமரர் நாடும் வானர யூகத்தோரும்
மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண் ஒலியும் விஞ்ச
தகும் திறன் நினைந்தேன் எம்பிக்கு அமரிடை தனிமைப்பாடு
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின்

#75
புறந்தரு சேனை முந்நீர் அரும் சிறை போக்கி போத
பறந்தனர் அனைய தூதர் செவி மருங்கு எய்தி பைய
திறம் திறம் ஆக நின்ற கவி பெரும் கடலை சிந்தி
இறந்தனன் நும்பி அம்பின் கொன்றனன் இராமன் என்றார்

#76
ஊரொடும் பொருந்தி தோன்றும் ஒளியவன் என்ன ஒண் பொன்
தாரொடும் புனைந்த மௌலி தரையொடும் பொருந்த தள்ளி
பாரொடும் பொருந்தி நின்ற மராமரம் பணைகளோடும்
வேரொடும் பறிந்து மண் மேல் வீழ்வதே போல வீழ்ந்தான்

#77
பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும்
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான்
எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற

#78
தம்பியோ வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும்
தும்பியோ நான்முகத்தோன் தொல் மரபின் தோன்றாலோ
நம்பியோ இந்திரனை நாம பொறி துடைத்த
எம்பியோ யான் உன்னை இ உரையும் கேட்டேனோ

#79
மின் இலைய வேலோனே யான் உன் விழி காணேன்
நின் நிலை யாது என்னேன் உயிர் பேணி நிற்கின்றேன்
உன் நிலைமை ஈது ஆயின் ஓடை களிறு உந்தி
பொன்னுலகம் மீள புகாரோ புரந்தரனார்

#80
வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால்
இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார்
மின் அஞ்சும் வேலோய் விழி அஞ்ச வாழ்கின்றார்
தம் நெஞ்சம் தாமே தடவாரோ தானவர்கள்

#81
கல் அன்றோ நீராடும் காலத்து உன் கால் தேய்க்கும்
மல் ஒன்று தோளாய் வட மேரு மானுடவன்
வில் ஒன்று நின்னை விளிவித்துளது என்னும்
சொல் அன்றோ என்னை சுடுகின்றது தோன்றால்

#82
மாண்டனவாம் சூலமும் சக்கரமும் வச்சிரமும்
தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம் தெறித்து
மீண்டனவாம் மானிடவன் மெல் அம்பு மெய் உருவ
நீண்டனவாம் தாம் இன்னம் நின்றாராம் தோள் நோக்கி

#83
நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும் இ நொய்து இலங்கை
போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும் என் பின் பிறந்தாள்
மூக்கு அறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலை கிடந்த
ஏக்கறவால் இன்னம் இரேனோ உனை இழந்தும்

#84
தன்னைத்தான் தம்பியைத்தான் தானை தலைவனைத்தான்
மன்னைத்தான் மைந்தனைத்தான் மாருதத்தின் காதலைத்தான்
பின்னை கரடிக்கு இறையைத்தான் பேர் மாய்த்தாய்
என்னத்தான் கேட்டிலேன் என் ஆனவாறு இதுவே

#85
ஏழை மகளிர் அடி வருட ஈர்ம் தென்றல்
வாழும் மணி அரங்கில் பூம் பள்ளி வைகுவாய்
சூழும் அலகை துணங்கை பறை துவைப்ப
பூழி அணை-மேல் துயின்றனையோ போர்க்களத்தே

#86
செம் தேன் பருகி திசைதிசையும் நீ வாழ
உய்ந்தேன் இனி இன்று நானும் உனக்கு ஆவி
தந்தேன் பிரியேன் தனி போக தாழ்க்கிலேன்
வந்தேன் தொடர மத களிறே வந்தேனால்

#87
அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து
பண்டை தன் நாமத்தின் காரணத்தை பாரித்தான்
தொண்டை கனிவாய் துடிப்ப மயிர் பொடிப்ப
கெண்டை தடம் கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள்

#88
வீங்கினாள் கொங்கை மெலிந்த மெலிவு அகல
ஓங்கினாள் உள்ளம் உவந்தாள் உயிர் புகுந்தாள்
தீங்கு இலா கற்பின் திருமடந்தை சேடி ஆம்
பாங்கினாள் உற்றதனை யாரே பகர்கிற்பார்

#89
கண்டாள் கருணனை தன் கண் கடந்த தோளானை
கொண்டாள் ஒரு துணுக்கம் அன்னவனை கொற்றவனார்
தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை
உண்டாள் உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள்

#90
தாவ அரிய பேர் உலகத்து எம்பி சவத்தோடும்
யாவரையும் கொன்று அருக்கி என்றும் இறவாத
மூவரையும் மேலை நாள் மூவா மருந்து உண்ட
தேவரையும் வைப்பேன் சிறை என்ன சீறினான்

#91
அ கணத்து மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி
இ கணத்து மானிடவர் ஈர குருதியால்
மு கை புனல் உகுப்பென் எம்பிக்கு என முனியா
திக்கு அனைத்தும் போர் கடந்தான் போயினான் தீ விழியான்

#92
கூறோம் இனி நாம் அ கும்பகருணனார்
பாறு ஆடு வெம் களத்து பட்டார் என பதையா
வேறு ஓர் சிறை இவனை வை-மின் விரைந்து என்ன
மாறு ஓர் திசை நோக்கி போனார் மகோதரனார்

#93
வரி சடை நறு மலர் வண்டு பாடு இலா
துரிசு அடை புரி குழல் சும்மை சுற்றிய
ஒரு சடை உடையவட்கு உடைய அன்பினாள்
திரிசடை தெருட்டுவாள் இனைய செப்புவாள்

#94
உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான்
அந்தம் இல் கொடும் தொழில் அரக்கன் ஆம் எனா
சிந்தையன் உணர்த்தினள் அமுதின் செம்மையாள்

#95
நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள்
சங்கையும் இன்னலும் துயரும் தள்ளினாள்
இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன்
அங்கு நின்று இயற்றியது அறைகவாம்-அரோ

18 அதிகாயன் வதை படலம்


#1
கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற
எழுந்து எரி வெகுளியான் இரு மருங்கினும்
தொழும் தகை அமைச்சரை சுளித்து நோக்குறா
மொழிந்தனன் இடியொடு முகிலும் சிந்தவே

#2
ஏகுதிர் எம் முகத்து எவரும் என்னுடை
யோக வெம் சேனையும் உடற்றும் உம்முடை
சாகர தானையும் தழுவ சார்ந்து அவர்
வேக வெம் சிலை தொழில் விலக்கி மீள்கிலீர்

#3
எடுத்தவர் இருந்துழி எய்தி யாரையும்
படுத்து இவண் மீடும் என்று உரைத்த பண்பினீர்
தடுத்தலீர் எம்பியை தாங்ககிற்றிலீர்
கொடுத்தலீர் உம் உயிர் வீர கோட்டியீர்

#4
உம்மையின் நின்று நான் உலகம் மூன்றும் என்
வெம்மையின் ஆண்டது நீர் என் வென்றியால்
இம்மையில் நெடும் திரு எய்தினீர் இனி
செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால்

#5
ஆற்றலம் என்றிரேல் என்-மின் யான் அவர்
தோற்று அலம்வந்து உக துரந்து தொல் நெடும்
கூற்று அலது உயிர் அது குடிக்கும் கூர்த்த என்
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால்

#6
அல்லதும் உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர்
வெல்லுதும் என்றிரேல் மேல் செல்வீர் இனி
வல்லது மடிதலே என்னின் மாறுதிர்
சொல்லும் நும் கருத்து என முனிந்து சொல்லினான்

#7
நதி காய் நெடு மானமும் நாணும் உறா
மதி காய் குடை மன்னனை வைது உரையா
விதி காயினும் வீரம் வெலற்கு அரியான்
அதிகாயன் எனும் பெயரான் அறைவான்

#8
வான் அஞ்சுக வையகம் அஞ்சுக மாலான்
அஞ்சு முகத்தவன் அஞ்சுக மேல்
நான் அஞ்சினேன் என்று உனை நாணுக போர்
யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ

#9
வெம்மை பொரு தானவர் மேல் வலியோர்
தம்மை தளையில் கொடு தந்திலெனோ
உம்மை குலைய பொரும் உம்பரையும்
கொம்மை குய வட்டணை கொண்டிலெனோ

#10
காய்ப்புண்ட நெடும் படை கை உளதா
தேய்ப்புண்டவனும் சில சில் கணையால்
ஆய்ப்புண்டவனும் அவர் சொல் வலதால்
ஏய்ப்புண்டவனும் என எண்ணினையோ

#11
உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனை
கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல்
நம்பிக்கு ஒரு நன் மகனோ இனி நான்

#12
கிட்டி பொருது அ கிளர் சேனை எலாம்
மட்டித்து உயர் வானரர் வன் தலையை
வெட்டி தரை இட்டு இரு வில்லினரை
கட்டி தருவென் இது காணுதியால்

#13
சேனை கடலோடு இடை செல்க எனினும்
யான் இப்பொழுதே தனி ஏகு எனினும்
தான் ஒத்தது சொல்லுதி தா விடை என்றான்
இ திறம் உன்னி அரக்கர் பிரான்

#14
சொன்னாய் இது நன்று துணிந்தனை நீ
அன்னான் உயிர் தந்தனையாம் எனின் யான்
பின் நாள் அ இராமன் எனும் பெயரான்
தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால்

#15
போவாய் இது போது பொலம் கழலோய்
மூவாயிர கோடியரோடு முரண்
கா ஆர் கரி தேர் பரி காவலின் என்று
ஏவாதன யாவையும் ஏவினனால்

#16
கும்ப கொடியோனும் நிகும்பனும் வேறு
அம் பொன் கழல் வீரன் அகம்பனும் உன்
செம்பொன் பொலி தேர் அயல் செல்குவரால்
உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர்

#17
ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம்
வார் ஏறு வய பரி ஆயிரம் வன்
போர் ஏறிட ஏறுவ பூணுறு திண்
தேர் ஏறுதி தந்தனென் வெம் திறலோய்

#18
ஆம் அத்தனை மா உடை அத்தனை தேர்
சேமத்தன பின் புடை செல்ல அடும்
கோ மத்த நெடும் கரி கொடியாடும்
போம் அத்தனை வெம் புரவி கடலே

#19
என்றே விடை நல்க இறைஞ்சி எழா
வன் தாள் வயிர சிலை கை கொடு வாள்
பொன் தாழ் கவசம் புகுதா முகிலின்
நின்றான் இமையோர்கள் நெளிந்தனரால்

#20
பல்வேறு படைக்கலம் வெம் பகலோன்
எல் வேறு தெரிப்ப கொடு ஏகினனால்
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற மா
வில் வேறு தெரிப்புறும் மேனியினான்

#21
இழை அஞ்சன மால் களிறு எண்_இல் அரி
முழை அஞ்ச முழங்கின மு முறை நீர்
குழை அஞ்ச முழங்கின நாண் ஒலி கோள்
மழை அஞ்ச முழங்கின மா முரசே

#22
ஆர்த்தார் நெடு வானம் நடுங்க அடி
பேர்த்தார் நில_மா_மகள் பேர்வள் என
தூர்த்தார் நெடு வேலைகள் தூளியினால்
வேர்த்தார் அது கண்டு விசும்பு உறைவோர்

#23
அடியோடு மத களி யானைகளின்
பிடியோடு நிகர்த்தன பின் புறம் முன்
தடியோடு துடங்கிய தாரைய வெண்
கொடியோடு துடங்கிய கொண்மு எலாம்

#24
தாறு ஆடின மால் கரியின் புடை தாழ்
மாறாடின மா மதம் மண்டுதலால்
ஆறு ஆடின பாய் பரி யானைகளும்
சேறு ஆடின சேண் நெறி சென்ற எலாம்

#25
தேர் சென்றன செம் கதிரோனொடு சேர்
ஊர் சென்றன-போல் ஒளி ஓடைகளின்
கார் சென்றன கார் நிரை சென்றன-போல்
பார் சென்றில சென்றன பாய் பரியே

#26
மேருத்தனை வெற்பு_இனம் மொய்த்து நெடும்
பாரில் செலுமாறு பட படரும்
தேர் சுற்றிடவே கொடு சென்று முரண்
போர் முற்று களத்திடை புக்கனனால்

#27
கண்டான் அ இராமன் எனும் களி மா
உண்டாடிய வெம் களன் ஊடுருவ
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உற
திண்டாடினன் வந்த சின திறலோன்

#28
மலை கண்டன-போல் வரு தோளோடு தாள்
கலை கண்ட கரும் கடல் கண்டு உளவாம்
நிலை கண்டன கண்டு ஒரு தாதை நெடும்
தலை கண்டிலன் நின்று சலித்தனனால்

#29
மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான்
திடல் அன்று திசை களிறு அன்று ஒரு திண்
கடல் அன்று இது என் எந்தை கட கரியான்
உடல் என்று உயிரோடும் உருத்தனனால்

#30
எல்லே இவை காணிய எய்தினனோ
வல்லே உளராயின மானுடரை
கொல்லேன் ஒரு நான் உயிர் கோள் நெறியில்
செல்லேன் எனின் இ இடர் தீர்குவெனோ

#31
என்னா முனியா இது இழைத்துளவன்
பின்னானையும் இப்படி செய்து பெயர்த்து
அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் என்று
உன்னா ஒருவற்கு இது உணர்த்தினனால்

#32
வா நீ மயிடன் ஒரு வல் விசையில்
போ நீ அ இலக்குவனில் புகல்வாய்
நான் ஈது துணிந்தனென் நண்ணினெனால்
மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய்

#33
அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும்
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான்
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான்
வந்தான் என முன் சொல் வழங்குதியால்

#34
கோளுற்றவன் நெஞ்சு சுட குழைவான்
நாள் உற்ற இருக்கையில் யான் ஒருவன்
தாள் அற்று உருள கணை தள்ளிடுவான்
சூளுற்றதும் உண்டு அது சொல்லுதியால்

#35
தீது என்று அது சிந்தனை செய்திலெனால்
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ
தூது என்று இகழாது உன சொல் வலியால்
போது என்று உடனே கொடு போதுதியால்

#36
செரு ஆசையினார் புகழ் தேடுறுவார்
இருவோரையும் நீ வலி உற்று எதிரே
பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர்
வருவோரை எலாம் வருக என்னுதியால்

#37
சிந்தாகுலம் எந்தை திரித்திடுவான்
வந்தான் என என் எதிரே மதியோய்
தந்தாய் எனின் யான் அலது யார் தருவார்
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம்

#38
வேறே அ இலக்குவன் என்ன விளம்பு
ஏறே வருமேல் இமையோர் எதிரே
கூறே பல செய்து உயிர் கொண்டு உனையும்
மாறே ஒரு மன் என வைக்குவெனால்

#39
விண் நாடியர் விஞ்சையர் அம் சொலினார்
பெண் ஆர் அமுது அன்னவர் பெய்து எவரும்
உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு
எண்ணாயிரம் ஆயினும் ஈகுவெனால்

#40
உறைதந்தன செம் கதிரோன் உருவின்
பொறை தந்தன காசு ஒளிர் பூண் இமையோர்
திறை தந்தன தெய்வ நிதி கிழவன்
முறை தந்தன தந்து முடிக்குவெனால்

#41
மாறா மத வாரிய வண்டினொடும்
பாறு ஆடு முகத்தன பல் பகலும்
தேறாதன செம் கண வெம் களி மா
நூறு_ஆயிரம் ஆயினும் நுந்துவெனால்

#42
செம்பொன்னின் அமைந்து சமைந்தன தேர்
உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழா
பம்பும் மணி தார் அணி பாய் பரிமா
இம்பர் நடவாதன ஈகுவெனால்

#43
நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும்
பொதியின் மிளிர் காசு பொறுத்தனவும்
மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும்
அதிகம் சகடு ஆயிரம் ஈகுவெனால்

#44
மற்றும் ஒரு தீது இல் மணி பணி தந்து
உற்று இன் நினைவு யாவையும் உந்துவெனால்
பொன் திண் கழலாய் நனி போ எனலோடு
எற்றும் திரள் தோளவன் ஏகினனால்

#45
ஏகி தனி சென்று எதிர் எய்தலுறும்
காகுத்தனை எய்திய காலையின்-வாய்
வேகத்தொடு வீரர் விசைத்து எழலும்
ஓகை பொருள் உண்டு என ஓதினனால்

#46
போதம் முதல் வாய்மொழியே புகல்வான்
ஏதும் அறியான் வறிது ஏகினனால்
தூதன் இவனை சுளியன்-மின் எனா
வேதம் முதல் நாதன் விலக்கினனால்

#47
என் வந்த குறிப்பு அது இயம்பு எனலும்
மின் வந்த எயிற்றவன் வில் வல உன்
பின் வந்தவனே அறி பெற்றியதால்
மன் வந்த கருத்து என மன்னர்பிரான்

#48
சொல்லாய் அது சொல்லிடு சொல்லிடு எனா
வில்லாளன் இளங்கிளையோன் வினவ
பல் ஆயிர கோடி படை கடல் முன்
நில்லாய் என நின்று நிகழ்த்தினனால்

#49
உன்-மேல் அதிகாயன் உருத்துளனாய்
நல் மேருவின் நின்றனன் நாடி அவன்
தன் மேல் எதிரும் வலி தக்குளையேல்
பொன் மேனிய என்னொடு போதுதியால்

#50
சைய படிவத்து ஒரு தந்தையை முன்
மெய் எப்படி செய்தனன் நும் முன் விரைந்து
ஐயப்படல் அப்படி இ படியில்
செய்யப்படுகிற்றி தெரித்தனெனால்

#51
கொன்றான் ஒழிய கொலை கோள் அறியா
நின்றானொடு நின்றது என் நேடி எனின்
தன் தாதை படும் துயர் தந்தையை முன்
வென்றானை இயற்றுறும் வேட்கையினால்

#52
வானோர்களும் மண்ணினுளோர்களும் மற்று
ஏனோர்களும் இ உரை கேண்-மின் இவன்
தானே பொருவான் அயலே தமர் வந்து
ஆனோரும் உடன் பொருவான் அமைவான்

#53
எழுவாய் இனி என்னுடன் என்று எரியும்
மழு வாய் நிகர் வெம் சொல் வழங்குதலும்
தழுவா உடன் ஏகுதி தாழல் என
தொழுவார் தொழு தாள் அரி சொல்லுதலும்

#54
எல்லாம் உடன் எய்திய பின் இவனே
வில்லானொடு போர் செய வேண்டும் எனா
நல்லாறு உடை வீடணன் நாரணன் முன்
சொல்லாடினன் அன்னவை சொல்லுதுமால்

#55
ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான்
தேவாசுரர் ஆதியர் செய் செருவில்
சாவான் இறையும் சலியா வலியான்
மூவா முதல் நான்முகனார் மொழியால்

#56
கடம் ஏய் கயிலை கிரி கண்ணுதலோடு
இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை
திடமே உலகில் பல தேவரொடும்
வட மேரு எடுக்க வளர்த்தனனால்

#57
மாலாரொடு மந்தரம் மாசுணமும்
மேலாகிய தேவரும் வேண்டும் எனா
ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய
காலால் நெடு வேலை கலக்கிடுமால்

#58
ஊழிக்கும் உயர்ந்து ஒரு நாள் ஒருவா
பாழி திசை நின்று சுமந்த பணை
சூழி கரி தள்ளுதல் தோள் வலியோ
ஆழி கிரி தள்ளும் ஓர் அங்கையினால்

#59
காலங்கள் கணக்கு இற கண் இமையா
ஆலம் கொள் மிடற்றவன் ஆர் அழல்வாய்
வேல் அங்கு எறிய கொடு விட்டது நீள்
சூலம்-கொல் என பகர் சொல் உடையான்

#60
பகை ஆடிய வானவர் பல் வகை ஊர்
புகை ஆடிய நாள் புனை வாகையினான்
மிகை ஆர் உயிர் உண் என வீசிய வெம்
தகை ஆழி தகைந்த தனு தொழிலான்

#61
உயிர் ஒப்புறு பல் படை உள்ள எலாம்
செயிர் ஒப்புறும் இந்திரர் சிந்திய நாள்
அயிர் ஒப்பன நுண் துகள்-செய்து அவர்-தம்
வயிர படை தள்ளிய வாளியினான்

#62
கற்றான் மறை நூலொடு கண்ணுதல்-பால்
முற்றாதன தேவர் முரண் படைதாம்
மற்று ஆரும் வழங்க வலார் இலவும்
பெற்றான் நெடிது ஆண்மை பிறந்துடையான்

#63
அறன் அல்லது நல்லது மாறு அறியான்
மறன் அல்லது பல் பணி மற்று அணியான்
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான்
உறல் நல்லது பேர் இசை என்று உணர்வான்

#64
காயத்து உயிரே விடு காலையினும்
மாயத்தவர் கூடி மலைந்திடினும்
தேயத்தவர் செய்குதல் செய்திடினும்
மாய தொழில் செய்ய மதித்திலனால்

#65
மது கைடவர் என்பவர் வானவர்-தம்
பதி கைகொடு கட்டவர் பண்டு ஒரு நாள்
அதி கைதவர் ஆழி அனந்தனையும்
விதி கைம்மிக முட்டிய வெம்மையினார்

#66
நீர் ஆழி இழிந்து நெடுந்தகையை
தாராய் அமர் என்றனர் தாம் ஒரு நாள்
ஆர் அழிய அண்ணலும் அஃது இசையா
வாரா அமர் செய்க என வந்தனனால்

#67
வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும்
நல்லார் முறை வீசி நகும் திறலார்
மல்லால் இளகாது மலைந்தனன் மால்
அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால்

#68
தன் போல்பவர் தானும் இலாத தனி
பொன்-போல் ஒளிர் மேனியனை புகழோய்
என் போல்பவர் சொல்லுவது எண் உடையார்
உன் போல்பவர் யார் உளர் என்று உரையா

#69
ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம்
இருவோமொடு நீ தனி இத்தனை நாள்
பொருவோமொடு நேர் பொருதாய் புகழோய்
தருவோம் நின் மனத்தது தந்தனமால்

#70
ஒல்லும்படி நல்லது உனக்கு உதவ
சொல்லும்படி என்று அவர் சொல்லுதலும்
வெல்லும்படி நும்மை விளம்பும் என
கொல்லும்படியால் அரி கூறுதலும்

#71
இடையில் படுகிற்கிலம் யாம் ஒரு நின்
தொடையில் படுகிற்றும் என துணியா
அடைய செயகிற்றி அது ஆணை எனா
நடையில் படு நீதியா நல்குதலும்

#72
விட்டான் உலகு யாவையும் மேலொடு கீழ்
எட்டா ஒருவன் தன் இட தொடையை
ஒட்டாதவர் ஒன்றினர் ஊழ்வலியால்
பட்டார் இது பட்டது பண்டு ஒருநாள்

#73
தனி நாயகன் வன் கதை தன் கை கொளா
நனி சாட விழுந்தனர் நாள் உலவா
பனியா மது மேதை பட படர் மேதினி
ஆனது பூவுலகு எங்கணுமே

#74
விதியால் இ உகம்-தனில் மெய் வலியால்
மது ஆனவன் எம்முன் மடிந்தனனால்
கதிர்தான் நிகர் கைடவன் இ கதிர் வேல்
அதிகாயன் இது ஆக அறைந்தனெனால்

#75
என்றான் அ இராவணனுக்கு இளையான்
நன்று ஆகுக என்று ஒரு நாயகனும்
மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா
நின்றான் இது கூறி நிகழ்த்தினனால்

#76
எண்ணாயிர கோடி இராவணரும்
விண் நாடரும் வேறு உலகத்து எவரும்
நண்ணா ஒரு மூவரும் நண்ணிடினும்
கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால்

#77
வான் என்பது என் வையகம் என்பது என் மால்
தான் என்பது என் வேறு தனி சிலையோர்
யான் என்பது என் ஈசன் என் இமையோர்
கோன் என்பது என் எம்பி கொதித்திடுமேல்

#78
தெய்வ படையும் சினமும் திறலும்
மை அற்று ஒழி மா தவம் மற்றும் எலாம்
எய்தற்கு உளவோ இவன் இ சிலையில்
கை வைப்பு அளவே இறல் காணுதியால்

#79
என் தேவியை வஞ்சனை செய்து எழுவான்
அன்றே முடிவான் இவன் அன்னவள் சொல்
குன்றேன் என ஏகிய கொள்கையினால்
நின்றான் உளன் ஆகி நெடும் தகையாய்

#80
ஏகாய் உடன் நீயும் எதிர்த்துளனாம்
மாகாயன் நெடும் தலை வாளியொடும்
ஆகாயம் அளந்து விழுந்ததனை
காகாதிகள் நுங்குதல் காணுதியால்

#81
நீரை கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே
தீர கொடியாரொடு தேவர் பொரும்
போரை கொடு வந்து புகுந்தது நாம்
ஆரை கொடு வந்தது அயர்த்தனையோ

#82
சிவன் அல்லன் எனில் திருவின் பெருமான்
அவன் அல்லன் எனில் புவி தந்தருளும்
தவன் அல்லன் எனில் தனியே வலியோன்
இவன் அல்லன் எனில் பிறர் யார் உளரோ

#83
ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம்
வன் தானையர் வந்து வளைந்த எலாம்
கொன்றான் இவன் அல்லது கொண்டு உடனே
நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ

#84
கொல்வானும் இவன் கொடியோரை எலாம்
வெல்வானும் இவன் அடல் விண்டு என
ஒல்வானும் இவன் உடனே ஒரு நீ
செல்வாய் என ஏவுதல் செய்தனனால்

#85
அ காலை இலக்குவன் ஆரியனை
மு காலும் வலம் கொடு மூதுணர்வின்
மிக்கான் அடல் வீடணன் மெய் தொடர
புக்கான் அவன் வந்து புகுந்த களம்

#86
சேனை கடல் சென்றது தென் கடல்-மேல்
ஏனை கடல் வந்தது எழுந்தது எனா
ஆனை கடல் தேர் பரி ஆள் மிடையும்
தானை கடலோடு தலைப்படலும்

#87
பசும் படு குருதியின் பண்டு சேறுபட்டு
அசும்பு உற உருகிய உலகம் ஆர்த்து எழ
குசும்பையின் நறு மலர் சுண்ண குப்பையின்
விசும்பையும் கடந்தது விரிந்த தூளியே

#88
தாம் இடித்து எழும் பணை முழக்கும் சங்கு_இனம்
ஆம் இடி குமுறலும் ஆர்ப்பின் ஓதையும்
ஏம் உடை கொடும் சிலை இடிப்பும் அஞ்சி தம்
வாய் மடித்து ஒடுங்கின மகர வேலையே

#89
உலை-தொறும் குருதி நீர் அருவி ஒத்து உக
இலை துறு மரம் என கொடிகள் இற்று உக
மலை-தொறும் பாய்ந்து என மான யானையின்
தலை-தொறும் பாய்ந்தன குரங்கு தாவியே

#90
கிட்டின கிளை நெடும் கோட்ட கீழ் உகு
மட்டின அருவியின் மதத்த வானரம்
விட்டன நெடு வரை வேழம் வேழத்தை
முட்டின ஒத்தன முகத்தின் வீழ்வன

#91
இடித்தன உறுக்கின இறுக்கி ஏய்ந்தன
தடித்தன எயிற்றினால் தலைகள் சந்து அற
கடித்தன கவி குலம் கால்கள் மேற்பட
துடித்தன குருதியில் துரக ராசியே

#92
அடைந்தன கவி குலம் எற்ற அற்றன
குடைந்து எறி கால் பொர பூட்கை குப்பைகள்
இடைந்தன முகில்_குலம் இரிந்து சாய்ந்து என
உடைந்தன குல மருப்பு உகுத்த முத்தமே

#93
தோல் பட துதைந்து எழு வயிர தூண் நிகர்
கால் பட கை பட கால பாசம் போல்
வால் பட புரண்டனர் நிருதர் மற்று அவர்
வேல் பட புரண்டனர் கவியின் வீரரே

#94
மரவமும் சிலையொடு மலையும் வாள் எயிற்று
அரவமும் கரிகளும் பரியும் அல்லவும்
விரவின கவி குலம் வீச விம்மலால்
உர வரும் கான் என பொலிந்தது உம்பரே

#95
தட வரை கவி குல தலைவர் தாங்கின
அடல் வலி நிருதர்-தம் அனிக ராசி-மேல்
விடவிட விசும்பிடை மிடைந்து வீழ்வன
படர் கடல் இன மழை படிவ போன்றவே

#96
இழுக்கினர் அடிகளின் இங்கும் அங்குமா
மழுக்களும் அயில்களும் வாளும் தோள்களும்
முழுக்கினர் உழக்கினர் மூரி யாக்கையை
ஒழுக்கினர் நிருதரை உதிர ஆற்றினே

#97
மிடல் உடை கவி குலம் குருதி வெள்ள நீர்
இடை இடை நீந்தின இயைந்த யானையின்
திடரிடை சென்று அவை ஒழுக்க சேர்ந்தன
கடலிடை புக்கன கரையும் காண்கில

#98
கால் பிடித்து ஈர்த்து இழி குருதி கண்ண கண்
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும்
கோல் பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம்-போல்
வால் பிடித்து ஒழுகின கவியின் மாலையே

#99
பாய்ந்தது நிருதர்-தம் பரவை பல் முறை
காய்ந்தது கடும் படை கலக்கி கை-தொறும்
தேய்ந்தது சிதைந்தது சிந்தி சேண் உற
சாய்ந்தது தகை பெரும் கவியின் தானையே

#100
அ துணை இலக்குவன் அஞ்சல் அஞ்சல் என்று
எ துணை மொழிகளும் இயம்பி ஏற்றினன்
கைத்துணை வில்லினை காலன் வாழ்வினை
மொய்த்து எழு நாண் ஒலி முழங்க தாக்கினான்

#101
நூல் மறைந்து ஒளிப்பினும் நுவன்ற பூதங்கள்
மேல் மறைந்து ஒளிப்பினும் விரிஞ்சன் வீயினும்
கால் மறைந்து ஒளிப்பு இலா கடையின் கண் அகல்
நான்மறை ஆர்ப்பு என நடந்தது அ ஒலி

#102
துரந்தன சுடு சரம் துரந்த தோன்றல
கரந்தன நிருதர்-தம் கரை இல் யாக்கையின்
நிரந்தன நெடும் பிணம் விசும்பின் நெஞ்சு உற
பரந்தன குருதி அ பள்ள வெள்ளத்தின்

#103
யானையின் கரம் துரந்த இரத வீரர்-தம்
வான் உயர் முடி தலை தடிந்து வாசியின்
கால் நிரை அறுத்து வெம் கறைக்கண் மொய்ம்பரை
ஊன் உடை உடல் பிளந்து ஓடும் அம்புகள்

#104
வில் இடை அறுத்து வேல் துணித்து வீரர்-தம்
எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து எறி
கல் இடை அறுத்து மா கடிந்து தேர் அழீஇ
கொல் இயல் யானையை கொல்லும் கூற்றினே

#105
வெற்றி வெம் கரிகளின் வளைந்த வெண் மருப்பு
அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின
முற்று அரு மு பகல் திங்கள் வெண் முளை
உற்றன விசும்பிடை பலவும் ஒத்தன

#106
கண்டகர் நெடும் தலை கனலும் கண்ணன
துண்ட வெண் பிறை துணை கவ்வி தூக்கிய
குண்டல மீன் குலம் தழுவி கோள் மதி
மண்டலம் விழுந்தன போன்ற மண்ணினே

#107
கூர் மருப்பு இணையன குறைந்த கையன
கார் மத கன வரை கவிழ்ந்து வீழ்வன
போர்முக குருதியின் புணரி புக்கன
பார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன

#108
புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற
கண் அகன் தேர் குலம் மறிந்த காட்சிய
எண் உறு பெரும் பதம் வினையின் எஞ்சிட
மண் உற விண்ணின் வீழ் மானம் போன்றன

#109
அட கரும் கவந்தம் நின்று ஆடுகின்றன
விடற்கு அரும் வினை அற சிந்தி மெய் உயிர்
கடக்க_அரும் துறக்கமே கலந்தவாம் என
உடல் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன

#110
ஆடுவ கவந்தம் ஒன்று ஆறு எண்ணாயிரம்
வீடிய பொழுது எனும் பனுவல் மெய்யதேல்
கோடியின் மேல் உள குனித்த கொற்றவன்
பாடு இனி ஒருவரால் பகரல்-பாலதோ

#111
ஆனையின் குருதியும் அரக்கர் சோரியும்
ஏனை வெம் புரவியும் உதிரத்து ஈட்டமும்
கானினும் மலையினும் பரந்த கால் புனல்
வான யாறு ஆம் என கடல் மடுத்தவே

#112
தாக்கிய சரங்களின் தலைகள் நீங்கிய
ஆக்கைய புரசையோடு அணைந்த தாளன
மேக்கு உயர் அங்குச கைய வெம் கரி
நூக்குவ கணிப்பு இல அரக்கர் நோன் பிணம்

#113
கோள் உடை கணை பட புரவி கூத்தன
தோள் உடை நெடும் தலை துமிந்தனும் தீர்கில
ஆள் உடை குறைத்தலை அதிர ஆடுவ
வாள் உடை தட கைய வாசி மேலன

#114
வைவன முனிவர் சொல் அனைய வாளிகள்
கொய்வன தலைகள் தோள் குறைத்தலை குழாம்
கை வளை வரி சிலை கடுப்பின் கைவிடா
எய்வன எனை பல இரத மேலன

#115
தாதையை தம்முனை தம்பியை தனி
காதலை பேரனை மருகனை களத்து
ஊதையின் ஒரு கணை உருவ மாண்டனர்
சீதை என்று ஒரு கொடும் கூற்றம் தேடினார்

#116
தூண்டு_அரும் கணை பட துமிந்து துள்ளிய
தீண்ட_அரு நெடும் தலை தழுவி சேர்ந்தன
பூண்டு எழு கரதலம் பொறுக்கலாதன
ஆண்டலை நிகர்த்தன எருவை ஆடுவ

#117
ஆயிர ஆயிர கோடியாய் வரும்
தீ உமிழ் நெடும் கணை மனத்தின் செல்வன
பாய்வன புகுவன நிருதர் பல் உயிர்
ஓய்வன நமன் தமர் கால்கள் ஓயவே

#118
விளக்கு வான் கணைகளால் விளிந்து மேருவை
துளக்குவார் உடல் பொறை துணிந்து துள்ளுவார்
இளக்குவார் அமரர் தம் சிரத்தை ஏன் முதுகு
உளுக்குவாள் நில_மகள் பிணத்தின் ஓங்கலால்

#119
தாருகன் என்று உளன் ஒருவன் தான் நெடு
மேருவின் பெருமையான் எரியின் வெம்மையான்
போர் உவந்து உழக்குவான் புகுந்து தாங்கினான்
தேரினன் சிலையினன் உமிழும் தீயினன்

#120
துரந்தனன் நெடும் சரம் நெருப்பின் தோற்றத்த
பரந்தன விசும்பிடை ஒடுங்க பண்டுடை
வரம்-தனின் வளர்வன அவற்றை வள்ளலும்
கரந்தனன் கணைகளால் முனிவு காந்துவான்

#121
அண்ணல்-தன் வடி கணை துணிப்ப அற்று அவன்
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என
விண்ணிடை ஆர்த்தது விரைவில் மெய் உயிர்
உண்ணிய வந்த வெம் கூற்றும் உட்கவே

#122
காலனும் குலிசனும் காலசங்கனும்
மாலியும் மருத்தனும் மருவும் ஐவரும்
சூலமும் கணிச்சியும் கடிது சுற்றினார்
பாலமும் பாசமும் அயிலும் பற்றுவார்

#123
அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம்
துன்ன_அரும் படைக்கலம் துணித்து தூவினன்
நல் நெடும் தலைகளை துணித்து நால் வகை
பல் நெடும் தானையை பாற நூறினான்

#124
ஆண்டு அதிகாயன்-தன் சேனை ஆடவர்
ஈண்டின மதகிரி ஏழ் எண்ணாயிரம்
தூண்டினர் மருங்கு உற சுற்றினார் தொகை
வேண்டிய படைக்கலம் மழையின் வீசுவார்

#125
போக்கு இலா வகை புறம் வளைத்து பொங்கினார்
தாக்கினார் திசை-தொறும் தட கை மால் வரை
நூக்கினார் படைகளால் நுறுக்கினார் குழம்பு
ஆக்கினார் கவிகள் தம் குழுவை ஆர்ப்பினார்

#126
எறிந்தன எய்தன எய்தி ஒன்றொடு ஒன்று
அறைந்தன அசனியின் விசையின் ஆசைகள்
நிறைந்தன மழை என நெருக்கி நிற்றலால்
மறைந்தன உலகொடு திசையும் வானமும்

#127
அ படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து அவர்
துப்பு உடை தட கைகள் துணித்து சுற்றிய
மு புடை மதமலை குலத்தை முட்டினான்
எ புடை மருங்கினும் எரியும் வாளியான்

#128
குன்று அன மதகரி கொம்பொடு கரம் அற
வன் தலை துமிதர மஞ்சு என மறிவன
ஒன்று அல ஒருபதும் ஒன்பதும் ஒரு கணை
சென்று அரிதர மழை சிந்துவ மதமலை

#129
ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணை பட
இரு தொடை புரசையொடு இறுபவர் எறி படை
விருது உடை நிருதர்கள் மலை என விழுவர்கள்
பொருது உடைவன மத மழையன புகர் மலை

#130
பருமமும் முதுகு இடு படிகையும் வலி படர்
மருமமும் அழிபட நுழைவன வடி கணை
உருமினும் வலியன உருள்வன திசைதிசை
கரு மலை நிகர்வன கதமலை கனல்வன

#131
இறுவன கொடியவை எரிவன இடை இடை
துறுவன சுடு கணை துணிவன மதகரி
அறுவன அவை அவை கடவினர் தடி தலை
வெறுமைகள் கெடுவன விழி குழி கழுதுகள்

#132
மிடலொடு விடு கணை மழையினும் மிகை உள
படலொடும் உரும் எறி பரு வரை நிலையன
உடலொடும் உருள் கரி உதிரமது உரு கெழு
கடலொடு பொருதது கரியொடு கரி என

#133
மேலவர் படுதலின் விடும் முறை இல மிடல்
ஆலமும் அசனியும் அனையன அடு கரி
மால் உறு களியன மறுகின மதம் மழை
போல்வன தம தம எதிர் எதிர் பொருவன

#134
கால் சில துணிவன கரம் அறுவன கதழ்
வால் சில துணிவன வயிறுகள் வெளி பட
நால்வன குடர் சில அன நகழ்வன சில வரு
தோல் சில கணை பல சொரிவன மழை என

#135
முட்டின முட்டு அற முரண் உறு திசை நிலை
எட்டினும் எட்ட_அரு நிலையன எவை அவன்
விட்டன விட்டன விடு கணை படு-தொறும்
பட்டன பட்டன படர் பணை குவிவன

#136
அறுபதின் முதல் இடை நால் ஒழி ஆயிரம்
இறுதிய மத கரி இறுதலும் எரி உமிழ்
தறுகணர் தகை அறு நிலையினர் சலம் உறு
கறுவினர் அவன் எதிர் கடவினர் கடல் என

#137
எல்லை_இல் மத கரி இரவினது இனம் நிகர்
செல்வன முடிவு_இல தெறு தொழில் மறவனை
வில்லியை இனிது உற விடு கணை மழையினர்
கொல்லுதி என எதிர் கடவினர் கொடியவர்

#138
வந்தன மத கரி வளைதலின் மழை பொதி
செம் தனி ஒரு சுடர் என மறை திறலவன்
இந்திரதனு என எழு சிலை குனிவுழி
தந்தியின் நெடு மழை சிதறின தரையின

#139
மையல் தழை செவி முன் பொழி மழை பெற்றன மலையின்
மெய் பெற்றன கடல் ஒப்பன வெயில் உக்கன விழியின்
மொய் பெற்று உயர் முதுகு இற்றன முகம் உக்கன முரண் வெம்
கை அற்றன மதம் முற்றிய கணிதத்து இயல் கத மா

#140
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால்
எண்ணின் தலைநிமிர்கின்றன இகல் வெம் கணை இரணம்
பண்ணின் படர் தலையில் பட மடிகின்றன பல ஆம்
மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா

#141
பிறை பற்றிய எனும் நெற்றிய பிழை அற்றன பிறழ
பறை அற்றம் இல் விசை பெற்றன பரிய கிரி அமரர்க்கு
இறை அற்றைய முனிவில் படை எறிய புடை எழு பொன்
சிறை அற்றன என இற்றன சினம் முற்றிய மதமா

#142
கதிர் ஒப்பன கணை பட்டுள கதம் அற்றில கதழ் கார்
அதிர தனி அதிர்கை கரி அளவு_அற்றன உளவா
எதிர்பட்டு அனல் பொழிய கிரி இடறி திசை எழு கார்
உதிரத்தொடும் ஒழுகி கடல் நடு உற்றவும் உளவால்

#143
கண்ணின் தலை அயில் வெம் கணை பட நின்றன காணா
எண்ணின் தலை நிமிர் வெம் கதம் முதிர்கின்றன இனமா
மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன மலை-போல்
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால்

#144
ஓர் ஆயிரம் அயில் வெம் கணை ஒரு கால் விடு தொடையின்
கார் ஆயிரம் விடு தாரையின் நிமிர்கின்றன கதுவுற்று
ஈராயிரம் மத மால் கரி விழுகின்றன இனி மேல்
ஆராய்வது என் அவன் வில் தொழில் அமரேசரும் அறியார்

#145
தேரும் தெறு கரியும் பொரு சின மள்ளரும் வய வெம்
போரின் தலை உகள்கின்றன புரவி குலம் எவையும்
பேரும் திசை பெறுகின்றில பணையின் பிணை மத வெம்
காரின் தரு குருதி பொரு கடல் நின்றன கடவா

#146
நூறு_ஆயிரம் மத வெம் கரி ஒரு நாழிகை நுவல
கூறு ஆயின பயமுற்று ஒரு குலைவு ஆயின உலகம்
தேறாதன மலை நின்றன தெரியாதன சின மா
வேறு ஆயின அவை யாவையும் உடனே வர விட்டான்

#147
ஒரு கோடிய மத மால் கரி உள வந்தன உடன் முன்
பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய பொழி மத யாறு
அருகு ஓடுவ வர உந்தினர் அசனி படி கணை கால்
இரு கோடு உடை மத வெம் சிலை இள வாள் அரி எதிரே

#148
உலகத்து உள மலை எத்தனை அவை அத்தனை உடனே
கொல நிற்பன பொருகிற்பன புடை சுற்றின குழுவாய்
அலகு_அற்றன சினம் முற்றிய அனல் ஒப்பன அவையும்
தலை அற்றன கரம் அற்றன தனி வில் தொழில் அதனால்

#149
நாலாயின நவ யோசனை நனி வன் திசை எவையும்
மால் ஆயின மத வெம் கரி திரிகின்றன வரலும்
தோல் ஆயின உலகு எங்கணும் என அஞ்சினர் துகளே
போல் ஆயின வய வானமும் ஆறானது புவியே

#150
கடை கண்டில தலை கண்டில கழுதின் திரள் பிணமா
இடை கண்டன மலை கொண்டு என எழுகின்றன திரையால்
புடை கொண்டு எறி குருதி கடல் புணர்கின்றன பொறி வெம்
படை கொண்டு இடை படர்கின்றன மத யாறுகள் பலவால்

#151
ஒற்றை சரம் அதனோடு ஒரு கரி பட்டு உக ஒளிர் வாய்
வெற்றி கணை உரும் ஒப்பன வெயில் ஒப்பன அயில்-போல்
வற்ற கடல் சுடுகிற்பன மழை ஒப்பன பொழியும்
கொற்ற கரி பதினாயிரம் ஒரு பத்தியில் கொல்வான்

#152
மலை அஞ்சின மழை அஞ்சின வனம் அஞ்சின பிறவும்
நிலை அஞ்சின திசை வெம் கரி நிமிர்கின்றன கடலில்
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும்
கொலை அஞ்சுதல் புரிகின்றது கரியின் படி கொளலால்

#153
கால் ஏறின சிலை நாண் ஒலி கடல் ஏறுகள் பட வான்
மேல் ஏறின மிசையாளர்கள் தலை மெய்-தொறும் உருவ
கோல் ஏறின உரும் ஏறுகள் குடியேறின எனலாய்
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய

#154
இ வேலையின் அனுமான் முதல் எழு வேலையும் அனையார்
வெவ் வேலவர் செல ஏவிய கொலை யானையின் மிகையை
செவ்வே உற நினையா ஒரு செயல் செய்குவென் என்பான்
தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் என தகையான்

#155
ஆர்த்து அங்கு அனல் விழியா முதிர் மத யானையை அனையான்
தீர்த்தன் கழல் பரவா முதல் அரி-போல் வரு திறலான்
வார் தங்கிய கழலான் ஒரு மரன் நின்றது நமனார்
போர் தண்டினும் வலிது ஆயது கொண்டான் புகழ் கொண்டான்

#156
கரும் கார் புரை நெடும் கையன களி யானைகள் அவை சென்று
ஒருங்கு ஆயின உயிர் மாய்ந்தன பிறிது என் பல உரையால்
வரும் காலனும் பெரும் பூதமும் மழை மேகமும் உடனா
பொரும் காலையில் மலை-மேல் விழும் உரும் ஏறு என புடைத்தான்

#157
மிதியால் பல விசையால் பல மிடலால் பல இடறும்
கதியால் பல தெழியால் பல காலால் பல வாலின்
நுதியால் பல நுதலால் பல நொடியால் பல பயிலும்
குதியால் பல குமையால் பல கொன்றான் அறம் நின்றான்

#158
பறித்தான் சில பகிர்ந்தான் சில வகிர்ந்தான் சில பணை போன்று
இறுத்தான் சில இடந்தான் சில பிளந்தான் சில எயிற்றால்
கறித்தான் சில கவர்ந்தான் சில கரத்தால் சில பிடித்தான்
முறித்தான் சில திறத்து ஆனையின் நெடும் கோடுகள் முனிந்தான்

#159
வாரி குரை கடலில் புக விலகும் நெடு மரத்தால்
சாரித்து அலைத்து உருட்டும் நெடும் தலத்தில் படுத்து அரைக்கும்
பாரில் பிடித்து அடிக்கும் குடர் பறிக்கும் படர் விசும்பின்
ஊரில் செல எறியும் மிதித்து உழக்கும் முகத்து உதைக்கும்

#160
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா
மேல் ஆளொடு பிசையும் முழு மலை-மேல் செல விலக்கும்
ஆலாலம் உண்டவனே என அகல் வாயின் இட்டு அதுக்கும்
தோல் ஆயிரம் இமைப்போதினின் அரி_ஏறு என தொலைக்கும்

#161
சையத்தினும் உயர்வுற்றன தறுகண் களி மதமா
நொய்தின் கடிது எதிர் உற்றன நூறு_ஆயிரம் மாறா
மையல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய
தொய்யல் படர் அழுவ கொழும் சேறாய் உக துகைப்பான்

#162
வேறாயின மத வெம் கரி ஒரு கோடியின் விறலோன்
நூறு_ஆயிரம் படுத்தான் இது நுவல்-காலையின் இளையோன்
கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான்
தேறாதது ஓர் பயத்தால் நெடும் திசை காவலர் இரிந்தார்

#163
இரிந்தார் திசைதிசை எங்கணும் யானை பிணம் எற்ற
நெரிந்தார்களும் நெரியாது உயிர் நிலைத்தார்களும் நெருக்கால்
எரிந்தார் நெடும் தடம் தேர் இழிந்து எல்லாரும் முன் செல்ல
திரிந்தான் ஒரு தனியே நெடும் தேவாந்தகன் சினத்தான்

#164
உதிர கடல் பிண மால் வரை ஒன்று அல்லன பலவாய்
எதிர கடு நெடும் போர் களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான்
கதிர் ஒப்பன சில வெம் கணை அனுமான் உடல் கரந்தான்
அதிர கடல் நெடும் தேரினன் மழை_ஏறு என ஆர்த்தான்

#165
அப்போதினின் அனுமானும் ஓர் மரம் ஓச்சி நின்று ஆர்த்தான்
இப்போது இவன் உயிர் போம் என உரும் ஏறு என எறிந்தான்
வெப்போ என வெயில் கால்வன அயில் வெம் கணை விசையால்
துப்போ என துணியாம் வகை தேவாந்தகன் துரந்தான்

#166
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானர குலத்தோர்க்கு
ஏறு ஆங்கு அதும் எறியாத-முன் முறியாய் உக எய்தான்
கோல் தாங்கிய சிலையானுடன் நெடு மாருதி கொதித்தான்
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான்

#167
பறித்தான் நெடும் படை வானவர் பலர் ஆர்த்திட பலவா
முறித்தான் அவன் வலி கண்டு உயர் தேவாந்தகன் முனிந்தான்
மறித்து ஆங்கு ஓர் சுடர் தோமரம் வாங்கா மிசை ஓங்கா
செறித்தான் அவன் இட தோள் மிசை இமையோர்களும் திகைத்தார்

#168
சுடர் தோமரம் எறிந்து ஆர்த்தலும் கனல் ஆம் என சுளித்தான்
அடல் தோமரம் பறித்தான் திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான்
புடைத்தான் அவன் தடம் தேரொடு நெடும் சாரதி புரண்டான்
மடல் தோகையர் வலி வென்றவன் வானோர் முகம் மலர்ந்தார்

#169
சூல படை தொடுவான்-தனை இமையாத முன் தொடர்ந்தான்
ஆலத்தினும் வலியானும் வந்து எதிரே புகுந்து அடர்த்தான்
காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின்
மூலத்திடை புடைத்தான் உயிர் முடித்தான் சிரம் மடித்தான்

#170
கண்டான் எதிர் அதிகாயனும் கனல் ஆம் என கனன்றான்
புண்தான் என புனலோடு இழி உதிரம் விழி பொழிவான்
உண்டேன் இவன் உயிர் இப்பொழுது ஒழியேன் என உரையா
திண் தேரினை கடிது ஏவு என சென்றான் அவன் நின்றான்

#171
அன்னான் வரும் அளவின் தலை நிலைநின்றன அனிகம்
பின் ஆனதும் முன் ஆனது பிறிந்தார்களும் செறிந்தார்
பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர் புக்கான்
சொன்னான் இவை அதிகாயனும் வட மேருவை துணிப்பன்

#172
தேய்த்தாய் ஒரு தனி எம்பியை தலத்தோடு ஒரு திறத்தால்
போய் தாவினை நெடு மா கடல் பிழைத்தாய் கடல் புகுந்தாய்
வாய்த்தானையும் மடித்தாய் அது கண்டேன் எதிர் வந்தேன்
ஆய்த்து ஆயது முடிவு இன்று உனக்கு அணித்தாக வந்து அடுத்தாய்

#173
இன்று அல்லது நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன்
ஒன்று அல்லது செய்தாய் எமை இளையோனையும் உனையும்
வென்று அல்லது மீளாத என் மிடல் வெம் கணை மழையால்
கொன்று அல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன்

#174
பிழையாது இது பிழையாது என பெரும் கைத்தலம் பிசையா
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான்
முழை வாள் அரி அனையானையும் எனையும் மிக முனிவாய்
அழையாய் திரிசிரத்தோனையும் நிலத்தோடும் இட்டு அரைப்பான்

#175
ஆம் ஆம் என தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து அடர்ந்தான்
கோமான் தனி பெரும் தூதனும் எதிரே செரு கொடுத்தான்
காமாண்டவர் கல்லாதவர் வல்லீர் என கழறா
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான்

#176
தேர்-மேல் செல குதித்தான் திரிசிரத்தானை ஓர் திறத்தால்
கார் மேல் துயில் மலை போலியை கரத்தால் பிடித்து எடுத்தான்
பார்-மேல் படுத்து அரைத்தான் அவன் பழி மேற்பட படுத்தான்
போர்-மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என போனான்

#177
இமையிடையாக சென்றான் இகல் அதிகாயன் நின்றான்
அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான் அருவியோடு அழல் கால் கண்ணான்
உமை_ஓரு_பாகனேனும் இவன் முனிந்து உருத்த போது
கமையிலன் ஆற்றல் என்னா கதத்தொடும் குலைக்கும் கையான்

#178
பூணிப்பு ஒன்று உடையன் ஆகி புகுந்த நான் புறத்து நின்று
பாணித்தல் வீரம் அன்றால் பரு வலி படைத்தோர்க்கு எல்லாம்
ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா
தூணி பொன் புறத்தான் திண் தேர் இளவல்-மேல் தூண்ட சொன்னான்

#179
தேர் ஒலி கடலை சீற சிலை ஒலி மழையை சீற
போர் ஒலி முரசின் ஓதை திசைகளின் புறத்து போக
தார் ஒலி கழல் கால் மைந்தன் தானையும் தானும் சென்றான்
வீரனும் எதிரே நின்றான் விண்ணவர் விசையம் வேண்ட

#180
வல்லையின் அணுக வந்து வணங்கினன் வாலி மைந்தன்
சில்லி அம் தேரின் மேலான் அவன் அமர் செவ்விது அன்றால்
வில்லியர் திலதம் அன்ன நின் திருமேனி தாங்க
புல்லியன் எனினும் என் தோள் ஏறுதி புனித என்றான்

#181
ஆம் என அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்-மேல்
தாமரை சரணம் வைத்தான் கலுழனின் தாங்கி நின்ற
கோ_மகன் ஆற்றல் நோக்கி குளிர்கின்ற மனத்தர் ஆகி
பூ மழை பொழிந்து வாழ்த்தி புகழ்ந்தனர் புலவர் எல்லாம்

#182
ஆயிரம் புரவி பூண்ட அதிர் குரல் அசனி திண் தேர்
போயின திசைகள் எங்கும் கறங்கு என சாரி போமால்
மீ எழின் உயரும் தாழின் தாழும் விண் செல்லின் செல்லும்
தீ எழ உவரி நீரை கலக்கினான் சிறுவன் அம்மா

#183
அ தொழில் நோக்கி ஆங்கு வானர தலைவர் ஆர்த்தார்
இ தொழில் கலுழற்கேயும் அரிது என இமையோர் எல்லாம்
கைத்தலம் குலைத்தார் ஆக களிற்றினும் புரவி-மேலும்
தைத்தன இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி

#184
முழங்கின முரசம் வேழம் முழங்கின மூரி திண் தேர்
முழங்கின முகர பாய்_மா முழங்கின முழு வெண் சங்கம்
முழங்கின தனுவின் ஓதை முழங்கின கழலும் தாரும்
முழங்கின தெழிப்பும் ஆர்ப்பும் முழங்கின முகிலின் மும்மை

#185
கரி பட காலாள் வெள்ளம் களம் பட கலின கால
பரி பட கண்ட கூற்றும் பயம் பட பைம் பொன் திண் தேர்
எரிபட பொருத பூமி இடம் பட எதிர்ந்த எல்லாம்
முரிபட பட்ட வீரன் முரண் கணை மூரி மாரி

#186
மன்னவன் தம்பி மற்று அ இராவணன் மகனை நோக்கி
என் உனக்கு இச்சை நின்ற எறி படை சேனை எல்லாம்
சின்னபின்னங்கள் பட்டால் பொருதியோ திரிந்து நீயே
நல் நெடும் செரு செய்வாயோ சொல்லுதி நயந்தது என்றான்

#187
யாவரும் பொருவர் அல்லர் எதிர்ந்துள யானும் நீயும்
தேவரும் பிறரும் காண செருவது செய்வ எல்லாம்
காவல் வந்து உன்னை காப்பார் காக்கவும் அமையும்
கூவியது அதனுக்கு அன்றோ என்றனன் கூற்றின் வெய்யோன்

#188
உமையனே காக்க மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க
இமையவர் எல்லாம் காக்க உலகம் ஓர் ஏழும் காக்க
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு என்று தன் சங்கம் ஊதி
அமை உரு கொண்ட கூற்றை நாண் எறிந்து உருமின் ஆர்த்தான்

#189
அன்னது கேட்ட மைந்தன் அரும்பு இயல் முறுவல் தோன்ற
சொன்னவர் வாரார் யானே தோற்கினும் தோற்க தக்கேன்
என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா
மின்னினும் மிளிர்வது ஆங்கு ஓர் வெம் சரம் கோத்து விட்டான்

#190
விட்ட வெம் பகழி-தன்னை வெற்பினை வெதுப்பும் தோளான்
சுட்டது ஓர் பகழி-தன்னால் விசும்பிடை துணித்து நீக்கி
எட்டினோடு எட்டு வாளி இலக்குவ விலக்காய் என்னா
திட்டியின் விடத்து நாகம் அனையன சிந்தி ஆர்த்தான்

#191
ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி
வேர்த்து ஒலி வயிர வெம் கோல் மேருவை பிளக்கல்-பால
தூர்த்தனன் இராமன் தம்பி அவை எலாம் துணித்து சிந்தி
கூர்த்தன பகழி கோத்தான் குபேரனை ஆடல் கொண்டான்

#192
எய்தனன் எய்த எல்லாம் எரி முக பகழியாலே
கொய்தனன் அகற்றி ஆர்க்கும் அரக்கனை குரிசில் கோபம்
செய்தனன் துரந்தான் தெய்வ செயல் அன்ன கணையை வெம் கோல்
நொய்து அவன் கவசம் கீறி நுழைவன பிழைப்பு இலாத

#193
நூறு கோல் கவசம் கீறி நுழைதலும் குழைவு தோன்ற
தேறல் ஆம் துணையும் தெய்வ சிலை நெடும் தேரின் ஊன்றி
ஆறினான் அது-காலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம்
கூறுகூறாக்கி அம்பால் கோடியின் மேலும் கொன்றான்

#194
புடை நின்றார் புரண்டவாறும் போகின்ற புங்க வாளி
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான்
இடை நின்ற மயக்கம் தீர்ந்தான் ஏந்திய சிலையன் காந்தி
தொடை நின்ற பகழி மாரி மாரியின் மும்மை தூர்த்தான்

#195
வான் எலாம் பகழி வானின் வரம்பு எலாம் பகழி மண்ணும்
தான் எலாம் பகழி குன்றின் தலை எலாம் பகழி சார்ந்தோர்
ஊன் எலாம் பகழி நின்றோர் உயிர் எலாம் பகழி வேலை
மீன் எலாம் பகழி ஆக வித்தினன் வெகுளி மிக்கோன்

#196
மறைந்தன திசைகள் எல்லாம் வானவர் மனமே போல
குறைந்தன சுடரின் மும்மை கொழும் கதிர் குவிந்து ஒன்று ஒன்றை
அறைந்தன பகழி வையம் அதிர்ந்தது விண்ணும் அஃதே
நிறைந்தன பொறியின் குப்பை நிமிர்ந்தன நெருப்பின் கற்றை

#197
முற்றியது இன்றே அன்றோ வானர முழங்கு தானை
மற்று இவன்-தன்னை வெல்ல வல்லனோ வள்ளல் தம்பி
கற்றது காலனோடோ கொலை இவன் ஒருவன் கற்ற
வில் தொழில் என்னே என்னா தேவரும் வெருவலுற்றார்

#198
அங்கதன் நெற்றி-மேலும் தோளினும் ஆகத்துள்ளும்
புங்கமும் தோன்றா-வண்ணம் பொரு சரம் பலவும் போக்கி
வெம் கணை இரண்டும் ஒன்றும் வீரன்-மேல் ஏவி மேக
சங்கமும் ஊதி விண்ணோர் தலை பொதிரெறிய ஆர்த்தான்

#199
வாலி சேய் மேனி-மேலும் மழை பொரு குருதி வாரி
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான்
கோல் ஒரு பத்து_நூற்றால் குதிரையின் தலைகள் கொய்து
மேலவன் சிரத்தை சிந்தி வில்லையும் துணித்தான் வீரன்

#200
மாற்று ஒரு தடம் தேர் ஏறி மாறு ஒரு சிலையும் வாங்கி
ஏற்ற வல் அரக்கன்-தன்-மேல் எரி முக கடவுள் என்பான்
ஆற்றல் சால் படையை விட்டான் ஆரியன் அரக்கன் அம்மா
வேற்றுள தாங்க என்னா வெய்யவன் படையை விட்டான்

#201
பொரு படை இரண்டும் தம்மில் பொருதன பொருதலோடும்
எரி கணை உருமின் வெய்ய இலக்குவன் துரந்த மார்பை
உருவின உலப்பு இலாத உளைகிலன் ஆற்றல் ஓயான்
சொரி கணை மழையின் மும்மை சொரிந்தனன் தெழிக்கும் சொல்லான்

#202
பின் நின்றார் முன் நின்றாரை காணலாம் பெற்றித்து ஆக
மின் நின்ற வயிர வாளி திறந்தன மேனி முற்றும்
அ நின்ற நிலையின் ஆற்றல் குறைந்திலன் ஆவி நீங்கான்
பொன் நின்ற வடிம்பின் வாளி மழை என பொழியும் வில்லான்

#203
கோல் முகந்து அள்ளி அள்ளி கொடும் சிலை நாணில் கோத்து
கால்முகம் குழைய வாங்கி சொரிகின்ற காளை வீரன்-பால்
முகம் தோன்ற நின்று காற்றினுக்கு அரசன் பண்டை
நான்முகன் படையால் அன்றி சாகிலன் நம்ப என்றான்

#204
நன்று என உவந்த வீரன் நான்முகன் படையை வாங்கி
மின் தனி திரண்டது என்ன சரத்தொடும் கூட்டி விட்டான்
குன்றினும் உயர்ந்த தோளான் தலையினை கொண்டு அ வாளி
சென்றது விசும்பினூடு தேவரும் தெரிய கண்டார்

#205
பூ மழை பொழிந்து வானோர் போயது எம் பொருமல் என்றார்
தாம் அழைத்து அலறி எங்கும் இரிந்தனர் அரக்கர் தள்ளி
தீமையும் தகைப்பும் நீங்கி தெளிந்தது குரக்கு சேனை
கோ_மகன் தோளின்-நின்றும் குதித்தனன் கொற்ற வில்லான்

#206
வெம் திறல் சித்தி கண்ட வீடணன் வியந்த நெஞ்சன்
அந்தர சித்தர் ஆர்க்கும் அமலையும் கேட்டான் ஐயன்
மந்திரசித்தி அன்ன சிலை தொழில் வலி இது ஆயின்
இந்திரசித்தனார்க்கும் இறுதியே இயைவது என்றான்

#207
ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன் என்று நீ நின்
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி
போம் தகைக்கு உரியது அன்றால் போகலை போகல் என்னா
நாந்தகம் மின்ன தேரை நராந்தகன் நடத்தி வந்தான்

#208
தேரிடை நின்று கண்கள் தீ உக சீற்றம் பொங்க
பாரிடை கிழிய பாய்ந்து பகலிடை பரிதி என்பான்
ஊரிடை நின்றான் என்ன கேடகம் ஒரு கை தோன்ற
நீர் உடை முகிலின் மின் போல் வாளொடு நிமிர வந்தான்

#209
வீசின மரமும் கல்லும் விலங்கலும் வீற்று வீற்றா
ஆசைகள்-தோறும் சிந்த வாளினால் அறுத்து மாற்றி
தூசியும் இரண்டு கையும் நெற்றியும் சுருண்டு நீர்-மேல்
பாசியின் ஒதுங்க வந்தான் அங்கதன் அதனை பார்த்தான்

#210
மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய் மடித்து உருத்து வள்ளல்
சரம் ஒன்றின் கடிது சென்று தாக்கினான் தாக்கினான்-தன்
கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனை தன் கை
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான்

#211
அ இடை வெறும் கை நின்ற அங்கதன் ஆண்மை அன்றால்
இ இடை பெயர்தல் என்னா இமையிடை ஒதுங்கா முன்னர்
வெவ் விடம் என்ன பொங்கி அவனிடை எறிந்த வீச்சு
தவ்விட உருமின் புக்கு வாளொடும் தழுவி கொண்டான்

#212
அ தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி ஆர்த்தார்
இ தொழில் இவனுக்கு அல்லால் ஈசற்கும் இயலாது என்பார்
குத்து ஒழித்து அவன் கைவாள் தன் கூர் உகிர் தட கை கொண்டான்
ஒத்து இரு கூறாய் வீழ வீசி வான் உலைய ஆர்த்தான்

#213
கூர்மத்தின் வெரிநின் வைத்து வானவர் அமுதம் கொண்ட
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான் நிறை மத்த மதுவை தேக்கி
ஊர் மத்தம் உண்டால் அன்ன மயக்கத்தான் உருமை திண்பான்
போர்மத்தன் என்பான் வந்தான் புகர் மத்த பூட்கை மேலான்

#214
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம்
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம்
சீற்றம் தான் அன்றேல் சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை

#215
வேகமா கவிகள் வீசும் வெற்பு_இனம் விழுவ மேன்மேல்
பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும் பற்றா
மாக மா மரங்கள் எல்லாம் கடாத்திடை வண்டு சோப்பி
ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால்

#216
காலிடைப்பட்டும் மான கையிடைப்பட்டும் கால
வாலிடைப்பட்டும் வெய்ய மருப்பிடைப்பட்டும் மாண்டு
நாலிடைப்பட்ட சேனை நாயகன் தம்பி எய்த
கோலிடைப்பட்டது எல்லாம் பட்டது குரக்கு சேனை

#217
தன் படை உற்ற தன்மை நோக்கினான் தரிக்கிலாமை
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான்
பின் படை செல்ல நள்ளார் பெரும் படை இரிந்து பேர

#218
சேறலும் களிற்றின் மேலான் திண் திறல் அரக்கன் செவ்வே
ஆறு இரண்டு அம்பினால் அ நெடு மரம் அறுத்து வீழ்த்தான்
வேறு ஒரு குன்றம் நீலன் வீசினான் அதனை விண்ணில்
நூறு வெம் பகழி-தன்னால் நுறுக்கினான் களிறு நூக்கி

#219
பின் நெடும் குன்றம் தேடி பெயர்குவான் பெயரா-வண்ணம்
பொன் நெடும் குன்றம் சூழ்ந்த பொறி வரி அரவம் போல
அ நெடும் கோப யானை அமரரும் வெயர்ப்ப அங்கி
தன் நெடு மகனை பற்றி பிடித்தது தட கை நீட்டி

#220
ஒடுங்கினன் உரமும் ஆற்றல் ஊற்றமும் உயிரும் என்ன
கொடும் படை வயிர கோட்டால் குத்துவான் குறிக்கும் காலை
நெடும் கையும் தலையும் பிய்யா நொய்தினின் நிமிர்ந்து போனான்
நடுங்கினர் அரக்கர் விண்ணோர் நன்று நன்று என்ன நக்கார்

#221
தறைத்தலை உற்றான் நீலன் என்பது ஓர் காலம் தன்னில்
நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன
குறை தலை வேழம் வீழ விசும்பின்-மேல் கொண்டு நின்றான்
பிறை தலை வயிர வாளி மழை என பெய்யும் கையான்

#222
வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி
வீங்கிய விசையின் நீலன் அரக்கன்-மேல் செல்ல விட்டான்
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து ஓர் அம்பால்
ஓங்கல்-போல் புயத்தினான்-தன் உரத்திடை ஒளிக்க எய்தான்

#223
எய்த அது காலமாக விளிந்திலது யானை என்ன
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான்
வெய்யவன் அவனை-தானும் மேற்கொளா வில்லினோடு
மொய் பெரும் களத்தின் இட்டான் மு மத களிற்றின் முன்னர்

#224
இட்டவன் அவனி-நின்றும் எழுவதன் முன்னம் யானை
கட்டு அமை வயிர கோட்டால் களம் பட வீழ்த்தி காலால்
எட்டி வன் தட கை-தன்னால் எடுத்து எங்கும் விரைவின் வீச
பட்டிலன் தானே தன் போர் கரியினை படுத்து வீழ்த்தான்

#225
தன் கரி தானே கொன்று தட கையால் படுத்து வீழ்த்தும்
மின் கரிது என்ன மின்னும் எயிற்றினான் வெகுளி நோக்கி
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக நீலன் புக்கான்
வன் கரம் முறுக்கி மார்பில் குத்தினன் மத்தன் மாண்டான்

#226
மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற
வன்மத்தை கண்டும் மாண்ட மத மத்தமலையை பார்த்தும்
சன்மத்தின் தன்மையானும் தருமத்தை தள்ளி வாழ்ந்த
கன்மத்தின் கடைக்கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான்

#227
பொய்யினும் பெரிய மெய்யான் பொருப்பினை பழித்த தோளான்
வெய்யன் என்று உரைக்க சால திண்ணியான் வில்லின் செல்வன்
பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ பிறங்கு பல் பேய்
ஐ_இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலான்

#228
ஆர்க்கின்றான் உலகை எல்லாம் அதிர்க்கின்றான் உருமும் அஞ்ச
பார்க்கின்றான் பொன்றினாரை பழிக்கின்றான் பகழி மாரி
தூர்க்கின்றான் குரங்கு சேனை துரக்கின்றான் துணிபை நோக்கி
ஏற்கின்றார் இல்லை என்னா இடபன் வந்து அவனோடு ஏற்றான்

#229
சென்றவன்-தன்னை நோக்கி சிரித்து நீ சிறியை உன்னை
வென்று அவம் உம்மை எல்லாம் விளிப்பெனோ விரிஞ்சன் தானே
என்றவன் எதிர்ந்த போதும் இராவணன் மகனை இன்று
கொன்றவன்-தன்னை கொன்றே குரங்கின்-மேல் கொதிப்பென் என்றான்

#230
வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு பலி உண் வாழ்க்கை
பேய் கொண்டு வெல்ல வந்த பித்தனே மிடுக்கை பேணி
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ நின் நோன்மை எல்லாம்
ஓய்கின்றாய் காண்டி என்னா உரைத்தனன் இடபன் ஒல்கான்

#231
ஓடுதி என்ன ஓடாது உரைத்தியேல் உன்னோடு இன்னே
ஆடுவென் விளையாட்டு என்னா அயில் எயிற்று அரக்கன் அம் பொன்
கோடு உறு வயிர போர் வில் காலொடு புருவம் கோட்டி
ஈடு உற இடபன் மார்பத்து ஈர்_ஐந்து பகழி எய்தான்

#232
அசும்பு உடை குருதி பாயும் ஆகத்தான் வேகத்தால் அ
தசும்பு உடை கொடும் தேர்-தன்னை தட கையால் எடுத்து வீச
பசும் கழல் கண்ண பேயும் பறந்தன பரவை நோக்கி
விசும்பிடை செல்லும் காரின் தாரை-போல் நான்ற மெய்யான்

#233
தேரொடும் கடலின் வீழ்ந்து சிலையும் தன் தலையும் எல்லாம்
நீரிடை அழுந்தி பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான்
பாரிடை குதியா-முன்னம் இடபனும் பதக நீ போய்
ஆரிடை புகுதி என்னா அந்தரத்து ஆர்த்து சென்றான்

#234
அல்லினை தழுவி நின்ற பகல் என அரக்கன்-தன்னை
கல்லினும் வலிய தோளால் கட்டியிட்டு இறுக்கும் காலை
பல் உடை பில வாயூடு பசும் பெரும் குருதி பாய
வில் உடை மேகம் என்ன விழுந்தனன் உயிர் விண் செல்ல

#235
குரங்கினுக்கு அரசும் வென்றி கும்பனும் குறித்த வெம் போர்
அரங்கினுக்கு அழகு செய்ய ஆயிரம் சாரி போந்தார்
மரம் கொடும் தண்டு கொண்டும் மலை என மலையாநின்றார்
சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர் கண்ட தேவர்

#236
கிடைத்தார் உடலில் கிழி சோரியை வாரி
துடைத்தார் விழியில் தழல் மாரி சொரிந்தார்
உடை தாரொடு பைம் கழல் ஆர்ப்ப உலாவி
புடைத்தார் பொருகின்றனர் கோள் அரி போல்வார்

#237
தண்டம் கையில் வீசிய தக்க அரக்கன்
அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான்
கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான்
விண்டு அங்கு அது தீர்ந்தது மன்னன் வெகுண்டான்

#238
பொன்ற பொருவேன் இனி என்று பொறாதான்
ஒன்ற புகுகின்றது ஒர் காலம் உணர்ந்தான்
நின்று அ பெரியோன் நினையாத-முன் நீலன்
குன்று ஒப்பது ஒர் தண்டு கொணர்ந்து கொடுத்தான்

#239
அ தண்டு கொடுத்தது கைக்கொடு அடைந்தான்
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான்
பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான்
சித்தங்கள் நடுங்கி அரக்கர் திகைத்தார்

#240
அடியுண்ட அரக்கன் அரும் கனல் மின்னா
இடியுண்டது ஓர் மால் வரை என்ன விழுந்தான்
முடியும் இவன் என்பது ஓர் முன்னம் வெகுண்டான்
ஒடியும் உன தோள் என மோதி உடன்றான்

#241
தோளில் புடையுண்டு அயர் சூரியன் மைந்தன்
தாளில் தடுமாறல் தவிர்ந்து தகைந்தான்
வாளி கடு வல் விசையால் எதிர் மண்டு
ஆளி தொழில் அன்னவன் மார்பின் அறைந்தான்

#242
அடி ஆயிர கோடியின் மேலும் அடித்தார்
முடிவு ஆனவன் யார் என வானவர் மொய்த்தார்
இடியோடு இடி கிட்டியது என்ன இரண்டும்
பொடியாயின தண்டு பொருந்தினர் புக்கார்

#243
மத்த சின மால் களிறு என்ன மலைந்தார்
பத்து திசையும் செவிடு எய்தின பல் கால்
தத்தி தழுவி திரள் தோள்-கொடு தள்ளி
குத்தி தனி குத்து என மார்பு கொடுத்தார்

#244
நிலையில் சுடரோன் மகன் வன் கை நெருங்க
கலையில் படு கம்மியர் கூடம் அலைப்ப
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க
மலையின் பிளவுற்றது தீயவன் மார்பம்

#245
செய்வாய் இகல் என்று அவன் நின்று சிரித்தான்
ஐ வாய் அரவம் முழை புக்கு என ஐயன்
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க
பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான்

#246
அக்காலை நிகும்பன் அனல் சொரி கண்ணன்
புக்கான் இனி எங்கு அட போகுவது என்னா
மிக்கான் எதிர் அங்கதன் உற்று வெகுண்டான்
எக்காலமும் இல்லது ஓர் பூசல் இழைத்தார்

#247
சூல படையானிடை வந்து தொடர்ந்தான்
ஆலத்தினும் வெய்யவன் அங்கதன் அங்கு ஓர்
தால படை கை கொடு சென்று தடுத்தான்
நீல கிரி-மேல் நிமிர் பொன்_கிரி நேர்வான்

#248
எறிவான் உயர் சூலம் எடுத்தலும் இன்னே
முறிவான் இகல் அங்கதன் என்பதன் முன்னே
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான்
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான்

#249
தடை ஏதும் இல் குலம் முனிந்து சலத்தால்
விடையே நிகர் அங்கதன்-மேல் விடுவானை
இடையே தடைகொண்டு தன் ஏடு அவிழ் அம் கை
புடையே கொடு கொன்று அடல் மாருதி போனான்

#250
நின்றார்கள் தடுப்பவர் இன்மை நெளிந்தார்
பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார்
வன் தாள் மரம் வீசிய வானர வீரர்
கொன்றார் மிகு தானை அரக்கர் குறைந்தார்

#251
ஓடி புகு வாயில் நெருக்கின் உலந்தார்
கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர் குத்தால்
பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார்
பாடித்தலை உற்றவர் எண்_இலர் பட்டார்

#252
தண்ணீர் தருக என்றனர் தாவுற ஓடி
உண் நீர் அற ஆவி உலந்தனர் உக்கார்
கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர் காலால்
மண் ஈரம் உற கடிது ஊர் புக வந்தார்

#253
விண்-மேல் நெடிது ஓடினர் ஆர் உயிர் விட்டார்
மண்-மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார்
எண் மேலும் நிமிர்ந்துளர் ஈருள் தயங்க
புண் மேல் உடை மேனியினார் திசை போனார்

#254
அறியும்மவர்-தங்களை ஐய இ அம்பை
பறியும் என வந்து பறித்தலும் ஆவி
பிறியும் அவர் எண்_இலர் தம் மனை பெற்றார்
குறியும் அறிகின்றிலர் சிந்தை குறைந்தார்

#255
பரி பட்டு விழ சிலர் நின்று பதைத்தார்
கரி பட்டு உருள சிலர் கால்-கொடு சென்றார்
நெரி பட்டு அழி தேரிடையே பலர் நின்றார்
எரி பட்ட மலை-கண் இருந்தவர் என்ன

#256
மண்ணின் தலை வானர மேனியர் வந்தார்
புண் நின்ற உடல் பொறையோர் சிலர் புக்கார்
கண் நின்ற குரங்கு கலந்தன என்னா
உள் நின்ற அரக்கர் மலைக்க உலந்தார்

#257
இரு கணும் திறந்து நோக்கி அயல் இருந்து இரங்குகின்ற
உருகு தம் காதலோரை உண்ணும் நீர் உதவும் என்றார்
வருவதன் முன்னம் மாண்டார் சிலர் சிலர் வந்த தண்ணீர்
பருகுவார் இடையே பட்டார் சிலர் சிலர் பருகிப்பட்டார்

#258
மக்களை சுமந்து செல்லும் தாதையர் வழியின் ஆவி
உக்கனர் என்ன வீசி தம்மை கொண்டு ஓடி போனார்
கக்கினர் குருதி வாயால் கண்மணி சிதற காலால்
திக்கொடு நெறியும் காணார் திரிந்து சென்று உயிரும் தீர்ந்தார்

#259
இன்னது ஓர் தன்மை எய்தி இராக்கதர் இரிந்து சிந்தி
பொன் நகர் புக்கார் இப்பால் பூசல் கண்டு ஓடி போன
துன்ன அரும் தூதர் சென்றார் தொடு கழல் அரக்கர்க்கு எல்லாம்
மன்னவன் அடியில் வீழ்ந்தார் மழையின் நீர் வழங்கு கண்ணார்

#260
நோக்கிய இலங்கை வேந்தன் உற்றது நுவல்-மின் என்றான்
போக்கிய சேனை-தன்னில் புகுந்துள இறையும் போதா
ஆக்கிய போரின் ஐய அதிகாயன் முதல்வர் ஆய
கோ குல குமரர் எல்லாம் கொடுத்தனர் ஆவி என்றார்

#261
ஏங்கிய விம்மல் மானம் இரங்கிய இரக்கம் வீரம்
ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை ஒன்றற்கு ஒன்று
தாங்கிய தரங்கம் ஆக கரையினை தள்ளி தள்ளி
வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான்

#262
திசையினை நோக்கும் நின்ற தேவரை நோக்கும் வந்த
வசையினை நோக்கும் கொற்ற வாளினை நோக்கும் பற்றி
பிசையுறும் கையை மீசை சுறுக்கொள உயிர்க்கும் பேதை
நசையிடை கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும்

#263
மண்ணினை எடுக்க எண்ணும் வானினை இடிக்க எண்ணும்
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும்
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி
புண்ணிடை எரி புக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும்

#264
ஒருவரும் உரையார் வாயால் உயிர்த்திலர் உள்ளம் ஓய்வார்
வெருவரும் தகையர் ஆகி விம்மினர் இருந்த வேலை
தரு வனம் அனைய தோளான்-தன் எதிர் தானிமாலி
இரியலிட்டு அலறி ஓயா பூசலிட்டு ஏங்கி வந்தாள்

#265
மலை குவட்டு இடி வீழ்ந்து என்ன வளைகளோடு ஆரம் ஏங்க
முலை குவட்டு எற்றும் கையாள் முழை திறந்து அன்ன வாயாள்
தலை குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள்

#266
வீழ்ந்தனள் அரக்கன் தாள்-மேல் மென்மை தோள் நிலத்தை மேவ
போழ்ந்தனள் பெரும் பாம்பு என்ன புரண்டனள் பொருமி பொங்கி
சூழ்ந்தனை கொடியாய் என்னா துடித்து அரும் துயர வெள்ளத்து
ஆழ்ந்தனள் புலம்பலுற்றாள் அழ கண்டும் அறிந்திலாதாள்

#267
மாட்டாயோ இ காலம் வல்லோர் வலி தீர்க்க
மீட்டாயோ வீரம் மெலிந்தாயோ தோள் ஆற்றல்
கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ
காட்டாயோ என்னுடைய கண்மணியை காட்டாயோ

#268
இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள் என்று
அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன்
மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன்
உந்து சிலை பகழிக்கு உண்ண கொடுத்தேனே

#269
அக்கன் உலந்தான் அதிகாயன் தான் பட்டான்
மிக்க திறத்து உள்ளார்கள் எல்லாரும் வீடினார்
மக்கள் இனி நின்று உளான் மண்டோ தரி மகனே
திக்குவிசயம் இனி ஒருகால் செய்யாயோ

#270
ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய் எண்_இறந்த
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரை கூவாயோ
பேதை ஆய் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ
சீதையால் இன்னம் வருவ சிலவேயோ

#271
உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய்
நம்பி குல கிழவன் கூறும் நலம் ஓராய்
கும்பகருணனையும் கொல்வித்து என் கோ_மகனை
அம்புக்கு இரை ஆக்கி ஆண்டாய் அரசு ஐய

#272
என்று பலப்பலவும் பன்னி எடுத்து அழைத்து
கன்று பட பதைத்த தாய்-போல் கவல்வாளை
நின்ற உருப்பசியும் மேனகையும் நேர்ந்து எடுத்து
குன்று புரையும் நெடும் கோயில் கொண்டு அணைந்தார்

#273
தானை நகரத்து தளர தலைமயங்கி
போன மகவுடையார் எல்லாம் புலம்பினார்
ஏனை மகளிர் நிலை என் ஆகும் போய் இரங்கி
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார்

#274
தார் அகலத்து அண்ணல் தனி கோயில் தாசரதி
பேர உலகு உற்றது உற்றதால் பேர் இலங்கை
ஊர் அகலம் எல்லாம் அரந்தை உவா உற்ற
ஆர்கலியே ஒத்தது அழுத குரல் ஓசை

19 நாகபாச படலம்


#1
குழுமி கொலை வாள் கண் அரக்கியர் கூந்தல் தாழ
தழுவி தலை பெய்து தம் கை-கொடு மார்பின் எற்றி
அழும் இ தொழில் யாது-கொல் என்று ஓர் அயிர்ப்பும் உற்றான்
எழிலி தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான்

#2
எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் இன்றும் ஈடு
பட்டான்-கொல் அது அன்று எனின் பட்டு அழிந்தான்-கொல் பண்டு
சுட்டான் இ அகன் பதியை தொடு வேலையோடும்
கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான்

#3
கேட்டான் இடை உற்றது என் என்று கிளத்தல் யாரும்
மாட்டாது நடுங்கினர் மாற்றம் மறந்து நின்றார்
ஓட்டா நெடும் தேர் கடிது ஓட்டி இமைப்பின் உற்றான்
காட்டாதன காட்டிய தாதையை சென்று கண்டான்

#4
கண்டான் இறை ஆறிய நெஞ்சினன் கைகள் கூப்பி
உண்டாயது என் இவ்வுழி என்றலும் உம்பிமாரை
கொண்டான் உயிர் காலனும் கும்ப நிகும்பரோடும்
விண்தான் அடைந்தான் அதிகாயனும் வீர என்றான்

#5
சொல்லாத முன்னம் சுடரை சுடர் தூண்டு கண்ணான்
பல்லால் அதரத்தை அதுக்கி விண் மீது பார்த்தான்
எல்லாரும் இறந்தனரோ என ஏங்கி நைந்தான்
வில்லாளரை எண்ணின் விரற்கு முன் நிற்கும் வீரன்

#6
ஆர் கொன்றவர் என்றலுமே அதிகாயன் என்னும்
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன் பின்பு நின்றார்
ஊர் கொன்றவனால் பிறரால் என உற்ற எல்லாம்
தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன் தான் உரைத்தான்

#7
கொன்றார் அவரோ கொலை சூழ்க என நீ கொடுத்தாய்
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா
என்றானும் எனை செல ஏவலை இற்றது என்னா
நின்றான் நெடிது உன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான்

#8
அக்க பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை
விக்கல் பொரு வெவ் உரை தூதுவன் என்று விட்டாய்
புக்க தலைப்பெய்தல் நினைந்திலை புந்தி இல்லாய்
மக்கள் துணை அற்றனை இற்றது உன் வாழ்க்கை மன்னோ

#9
என் இன்று நினைந்தும் இயம்பியும் எண்ணியும்தான்
கொன் நின்ற படைக்கலத்து எம்பியை கொன்றுளானை
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால்
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன்

#10
வெம் கண் நெடு வானர தானையை வீற்று வீற்றாய்
பங்கம் உற நூறி இலக்குவனை படேனேல்
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத
செம் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க என்னை

#11
மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்-தன்
ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல்
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்_இரு கால் எனக்கே
தோற்றான் தனக்கு என் நெடும் சேவகம் தோற்க என்றான்

#12
பாம்பின் தரு வெம் படை பாசுபதத்தினோடும்
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி
ஓம்பி திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல்
சோம்பி துறப்பென் இனி சோறும் உவந்து வாழேன்

#13
மருந்தே நிகர் எம்பி-தன் ஆர் உயிர் வவ்வினானை
விருந்தே என அந்தகற்கு ஈகிலென் வில்லும் ஏந்தி
பொரும் தேவர் குழாம் நகைசெய்திட போந்து பாரின்
இருந்தேன்-எனின் நான் அ இராவணி அல்லென் என்றான்

#14
ஏகா இது செய்து எனது இன்னலை நீக்கிடு எந்தைக்கு
ஆகாதனவும் உளவோ அவர்க்கு ஆற்றலாமே
மா கால் வரி வெம் சிலையோடும் வளைத்த போது
சேகு ஆகும் என்று எண்ணி இ இன்னலின் சிந்தை செய்தேன்

#15
என்றானை வணங்கி இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு
ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும்
பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி
வன் தாள் வயிர சிலை வாங்கினன் வானை வென்றான்

#16
வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்-கண் வந்தான்
செயிர் ஒன்றும் உறா வகை இந்திரற்கு என்று செய்த
உயர் வெம் சிலை அ சிலை பண்டு அவன்-தன்னை ஓட்டி
துயரின் தலை வைத்து இவன் கொண்டது தோற்றம் ஈதால்

#17
தோளில் கணை புட்டிலும் இந்திரன் தோற்ற நாளே
ஆளி திறல் அன்னவன் கொண்டன ஆழி ஏழும்
மாள புனல் வற்றினும் வாளி அறாத வன்கண்
கூளி கொடும் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ

#18
பல்லாயிர கோடி படைக்கலம் பண்டு தேவர்
எல்லாரும் முனைத்தலை யாவரும் ஈந்த மேரு
வில்லாளன் கொடுத்த விரிஞ்சன் அளித்த வெம்மை
அல்லால் புரியாதன யாவையும் ஆய்ந்து கொண்டான்

#19
நூறு_ஆயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து
ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப
மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது வானுளோரும்
தேறாதது மற்று அவன் ஏறிய தெய்வ மா தேர்

#20
பொன் சென்று அறியா உவண தனி புள்ளினுக்கும்
மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும் மேல்_நாள்
பின் சென்றது அல்லது ஒரு பெரும் சிறப்பு உற்ற போதும்
முன் சென்று அறியாதது மூன்று உலகத்தினுள்ளும்

#21
ஏயா தனி போர் வலி காட்டிய இந்திரன்-தன்
சாயா பெரும் சாய் கெட தாம்புகளால் தடம் தோள்
போய் ஆர்த்தவன் வந்தனன் வந்தனன் என்று பூசல்
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடும் கொடி பெற்றது அம்மா

#22
செதுகை பெரும் தானவர் ஊனொடும் தேய்த்த நேமியது
கை திசை யானையை ஓட்டியது என்னலாமே
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன்
முதுகை தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது அம்மா

#23
அ தேரினை ஏறியது ஒப்பன ஆயிரம் தேர்
ஒத்து ஏய்வன சேமமதாய் வர உள்ளம் வெம் போர்
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று
எ தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான்

#24
அன்னானொடு போயின தானை அளந்து கூற
என்னால் அரிதேனும் இயம்பு வான்மீகன் என்னும்
நல் நான்மறையான் அது நாற்பது வெள்ளம் என்ன
சொன்னான் பிறர் யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார்

#25
தூம கண் அரக்கனும் தொல் அமர் யார்க்கும் தோலா
மாபக்கனும் அ நெடும் தேர் மணி ஆழி காக்க
தாம குடை மீது உயர பெரும் சங்கம் விம்ம
நாம கடல் பல்_இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப

#26
தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல
போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத
தார் ஆர் புரவி கடல் பின் செல தானை வீர
பேர் ஆழி முகம் செல சென்றனன் பேர்ச்சி இல்லான்

#27
நின்றனன் இலக்குவன் களத்தை நீங்கலன்
பொன்றினன் இராவணன் புதல்வன் போர்க்கு இனி
அன்று அவன் அல்லனேல் அமரர் வேந்தனை
வென்றவன் வரும் என விரும்பும் சிந்தையான்

#28
யார் இவன் வருபவன் இயம்புவாய் என
வீர வெம் தொழிலினான் வினவ வீடணன்
ஆரிய இவன் இகல் அமரர் வேந்தனை
போர் கடந்தவன் இன்று வலிது போர் என்றான்

#29
எண்ணியது உணர்த்துவது உளது ஒன்று எம்பிரான்
கண் அகன் பெரும் படை தலைவர் காத்திட
நண்ணின துணையொடும் பொருதல் நன்று இது
திண்ணிதின் உணர்தியால் தெளியும் சிந்தையால்

#30
மாருதி சாம்பவன் வானரேந்திரன்
தாரை சேய் நீலன் என்று இனைய தன்மையார்
வீரர் வந்து உடன் உற விமல நீ நெடும்
போர் செய்த குருதியால் புகழின் பூணினாய்

#31
பல் பதினாயிரம் தேவர் பக்கமா
எல்லை_இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன்
ஒல்லையின் உடைந்தனன் உயிர் கொண்டு உய்ந்துளான்
மல்லல் அம் தோளினாய் அமுதின் வன்மையால்

#32
இனி அவை மறையுமோ இந்திரன் புய
பனி வரை உள நெடும் பாச பல் தழும்பு
அனுமனை பிணித்துளன் ஆன-போது இவன்
தனு மறை வித்தகம் தடுக்கல்-பாலதோ

#33
என்று அவன் இறைஞ்சினன் இளைய வள்ளலும்
நன்று என மொழிதலும் நணுகினான்-அரோ
வன் திறல் மாருதி இலங்கை கோ மகன்
சென்றனன் இளவல்-மேல் என்னும் சிந்தையான்

#34
கூற்றமும் கட்புலம் புதைப்ப கோத்து எழு
தோற்றமும் இராவணி துணிபும் நோக்குறா
மேல் திசை கீழ் திசை விட்டு வெம் கடும்
காற்று என அணுகினர் கடிதின் காக்கவே

#35
அங்கதன் முன்னரே ஆண்டையான் அயல்
துங்க வன் தோளினார் எவரும் சுற்றினார்
செம் கதிரோன் மகன் முன்பு சென்றனன்
சங்க நீர் கடல் என தழீஇய தானையே

#36
இரு திரை பெரும் கடல் இரண்டு திக்கினும்
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்து பொங்கின
வருவன போல்வன மனத்தினால் சினம்
திருகின எதிரெதிர் செல்லும் சேனையே

#37
கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தெரிந்து
எண்ணினால் பெறு பயன் எய்தும் இன்று எனா
நண்ணினார் இமையவர் நங்கைமாரொடும்
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே

#38
ஒத்து இரு தானையும் உடற்ற உற்றுழி
அத்தனை வீரரும் ஆர்த்த அ ஒலி
நத்து ஒலி முரசு ஒலி நடுக்கலால் தலை
பொத்தினர் செவிகளை புரந்தராதியர்

#39
எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும்
முற்றுறு கடையுகத்து இடியின் மு மடி
பெற்றன பிறந்தன சிலையின் பேர் ஒலி

#40
கல் பட மரம் பட கால வேல் பட
வில் படு கணை பட வீழும் வீரர்-தம்
எல் படும் உடல் பட இரண்டு சேனையும்
பிற்பட நெடு நிலம் பிளந்து பேருமால்

#41
எழு தொடர் மரங்களால் எற்ற முற்றிய
விழு தலை முழுவதும் சிதறி வீழ்ந்தன
அழுத்திய பெரும் சினத்து அரக்கர் ஆக்கைகள்
கழுத்து உள தலை இல களத்தின் ஆடுவ

#42
வெட்டிய தலையன நரம்பு வீச மேல்
முட்டிய குருதிய குரங்கின் மொய் உடல்
சுட்டு உயர் நெடு வனம் தொலைந்த பின் நெடும்
கட்டைகள் எரிவன போன்று காட்டுவ

#43
பிடித்தன நிருதரை பெரிய தோள்களை
ஒடித்தன கால் விசைத்து உதைத்த உந்தின
கடித்தன கழுத்து அற கைகளால் எடுத்து
அடித்தன அரைத்தன ஆர்த்த வானரம்

#44
வாள்களின் கவி_குல வீரர் வார் கழல்
தாள்களை துணித்தனர் தலையை தள்ளினர்
தோள்களை துணித்தனர் உடலை துண்ட வன்
போழ்களின் புரட்டினர் நிருதர் பொங்கினார்

#45
மரங்களின் அரக்கரை மலைகள் போன்று உயர்
சிரங்களை சிதறின உடலை சிந்தின
கரங்களை கழல்களை ஒடிய காதின
குரங்கு என பெயர் கொடு திரியும் கூற்றமே

#46
சுடர்த்தலை நெடும் பொறி சொரியும் கண்ணன
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன
உடர்த்தலை வைர வேல் உருவ உற்றவர்
மிடற்றினை கடித்து உடன் விளிந்து போவன

#47
அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு என
தொடர்ந்தன மழை பொழி தும்பி கும்பங்கள்
இடந்தன மூளைகள் இனிதின் உண்டன
கடந்தன பசி தழல் கரடி காதுவ

#48
கொலை மத கரியன குதிரை மேலன
வல மணி தேரன ஆளின் மேலன
சிலைகளின் குடுமிய சிரத்தின் மேலன
மலைகளின் பெரியன குரங்கு வாவுவ

#49
தண்டு கொண்டு அரக்கர் தாக்க சாய்ந்து உகு நிலைய சந்தின்
துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலை தூவி
கொண்டு எழும் அலைகளோடும் குரக்கு_இன பிணத்தின் குப்பை
மண்டு வெம் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ

#50
பனி வென்ற பதாகை என்றும் பல் உளை பரிமா என்றும்
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும்
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை
அனுமன் கை வயிர குன்றால் அரைப்புண்ட அரக்கர் தானை

#51
பொங்கு தேர் புரவி யானை பொரு கழல் நிருதர் என்னும்
சங்கையும் இல்லா-வண்ணம் தன் உளே தழுவி கூற்றம்
எங்கு உள உயிர் என்று எண்ணி இணை கையால் கிளைத்தது என்ப
அங்கதன் மரம் கொண்டு எற்ற அளறுபட்டு அழிந்த தானை

#52
தாக்கிய திசைகள்-தோறும் தலைத்தலை மயங்கி தம்மில்
நூக்கிய களிறும் தேரும் புரவியும் நூழில் செய்ய
ஆக்கிய செருவை நோக்கி அமரரோடு அசுரர் போரை
தூக்கினர் முனிவர் என்னை இதற்கு அது தோற்கும் என்றார்

#53
எடுத்தது நிருதர் தானை இரிந்தது குரங்கின் ஈட்டம்
தடுத்தனர் முகங்கள் தாங்கி தனித்தனி தலைவர் தள்ளி
படுத்தனர் அரக்கர் வேலை பட்டதும் படவும் பாரார்
கடுத்தனர் கடுத்த பின்னும் காத்தனர் கவியின் வீரர்

#54
சூலமும் மழுவும் தாங்கி தோள் இரு நான்கும் தோன்ற
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன
நீலன் நின்றுழியே நின்றான் நிரந்தரம் கணங்களோடும்
காலன் என்று ஒருவன் யாண்டும் பிரிந்திலன் பாச கையான்

#55
காற்று அலன் புனலோ அல்லன் கனல் அல்லன் இரண்டு கையால்
ஆற்றலன் ஆற்றுகின்ற அரும் சமம் இதுவே ஆகில்
ஏற்றம் என் பலவும் சொல்லி என் பதம் இழந்தேன் என்னா
கூற்றமும் குலுங்கி அஞ்ச வெம் கத குமுதன் கொன்றான்

#56
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன
செறி பணை மரமே நின்ற மரங்களில் தெரிய செப்பும்
குறி உடை மலைகள் தம்மில் குல வரை குலமே கொள்ளா
எறிதலோடு அறைதல் வேட்ட இடவன் அன்று இடந்திலாத

#57
வாம் பரி மதமா மான் தேர் வாள் எயிற்று அரக்கர் மான
பாம்பினும் வெய்யோர் சால படுகுவர் பயம் இன்று இன்றே
தூம்பு உறழ் குருதி மண்ட தொடர் நெடு மரங்கள் சுற்றி
சாம்பவன் கொல்ல சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார்

#58
பொரும் குல புரவி ஆன திரைகளும் கலம் பொன் தேரும்
இரும் களி யானை ஆன மகரமும் இரியல் போக
நெருங்கிய படைகள் ஆன மீன் குலம் நெரிந்து சிந்த
கரும் கடல் கலக்கும் மத்தின் பனசனும் கலக்கி புக்கான்

#59
மயிந்தனும் துமிந்தன் தானும் மழை குலம் கிழித்து வானத்து
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார்
கயம் குடைந்து ஆடும் வீர களிறு ஒத்தான் கவயன் காலின்
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான்

#60
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பிணத்தின் குப்பை
வரம்பு இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் வந்துற்று
இரிந்தன கவியும் கூடி எடுத்தன எடுத்தலோடும்
சரிந்தது நிருதர் தானை தாக்கினன் அரக்கன் தானே

#61
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர அடல் வலி
தூண் எறிந்து அனைய விரல்கள் கோதையொடு சுவடு எறிந்தது ஒரு தொழில் பட
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை செவிடு எறிந்து உடைய மிடல் வலோன்
நாண் எறிந்து முறைமுறை தொடர்ந்து கடல் உலகம் யாவையும் நடுக்கினான்

#62
சிங்க_ஏறு கடல்-போல் முழங்கி நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா
அங்கத ஆதியர் அனுங்க வானவர்கள் அஞ்ச வெம் சின அனந்தன் மா
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார்
வெம் கண் நாகம் என வேகமாய் உருமு வெள்க வெம் கணைகள் சிந்தினான்

#63
சுற்றும் வந்து கவி வீரர் வீசிய சுடர் தடம் கல் வரை தொல் மரம்
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன எழுந்து சேணிடை இழிந்த-போல்
வெற்றி வெம் கணை பட பட தலைகள் விண்ணினூடு திசை மீது போய்
அற்று எழுந்தன விழுந்து மண்ணிடை அழுந்துகின்றன அனந்தமால்

#64
சிலை தடம் பொழி வய கடும் பகழி செல்ல ஒல்கினர் சினத்தினால்
உலைத்து எறிந்திட எடுத்த குன்று-தொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார்
நிலைத்து நின்று சினம் முந்து செல்ல எதிர் சென்று சென்று உற நெருக்கலால்
மலை தடங்களொடு உர தலம் கழல ஊடு சென்ற பல வாளியே

#65
முழுத்தம் ஒன்றில் ஒரு வெள்ள வானரம் முடிந்து மாள்வன தடிந்து போய்
கழுத்த கைய நிமிர் கால வால பல கண்டமானபடி கண்டு நேர்
எழு தொடர்ந்த படர் தோள்களால் எறிய எற்ற அற்றன எழுந்து மேல்
விழுத்த பைம் தலைய வேணு மால் வரைகள் வீசி வீசி உடன் வீழுமால்

#66
அற்ற பைம் தலை அரிந்து சென்றன அயில் கடும் கணை வெயில்கள்-போல்
புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால்
வெற்ற வெள்ளிடை விரைந்து போவது ஒரு மேடு பள்ளம் வெளி இன்மையால்
உற்ற செம் குருதி வெள்ளம் உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால்

#67
விழிக்குமேல் விழிய நிற்கின் மார்பிடைய மீளுமேல் முதுக மேனிய
கழிக்குமேல் உயர ஓடுமேல் நெடிய கால வீசின் நிமிர் கைய வாய்
தெழிக்குமேல் அகவும் நாவ சிந்தையின் உன்னுமேல் சிகரம் யாவையும்
பழிக்கும் மேனிய குரங்கின்-மேல் அவன் விடும் கொடும் பகழி பாயவே

#68
மொய் எடுத்த கணை மாரியால் இடை முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார்
எய்விடத்து எறியும் நாணின் ஓசை-அலது யாதும் ஒன்று செவி உற்றிலார்
மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும் விழுந்து போன எனும் விம்மலால்
கை எடுத்தன குரங்கின் ஓடும் முறை கண்டு தேவர்கள் கலங்கினார்

#69
கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அ
கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய்
கண்ட காலையில் விலங்கினான் இரவி காதல் காதுவது ஓர் காதலால்
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான்

#70
உடைந்து தன் படை உலைந்து சிந்தி உயிர் ஒல்க வெல் செரு உடற்றலால்
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான்
இடைந்து சென்றவனை எய்தி எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான்
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர வீசினான் நிருதர் கூசினார்

#71
சுற்றும் நின்ற படை சிந்தி ஓட ஒரு மரா மரம் கொடு துகைத்துளான்
வெற்றி கண்டு வலி நன்று நன்று என வியந்து வெம் கணை தெரிந்து அவன்
நெற்றியின் தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான்
பற்றி வந்த மரம் வேறுவேறு உற நொறுக்கி நுண் பொடி பரப்பினான்

#72
அ கணத்து அனுமன் ஆலகாலம் எனலாயது ஓர் வெகுளி ஆயினான்
புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா
இ கணத்து அவன் இறக்கும் என்பது ஒரு குன்று எடுத்து மிசை ஏவினான்
உக்கது அ கிரி சொரிந்த வாளிகளின் ஊழ் இலாத சிறு பூழியாய்

#73
நில் அடா சிறிது நில் அடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான்
வில் எடாமை நினது ஆண்மை பேசி உயிரோடு நின்று விளையாடினாய்
கல் அடா நெடு மரங்களோ வரு கருத்தினேன் வலி கடக்கவோ
சொல் அடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான்

#74
வில் எடுக்க உரியார்கள் வெய்ய சில வீரர் இங்கும் உளர் மெல்லியோய்
கல் எடுக்க உரியானும் நின்றனன் அது இன்று நாளையிடை காணலாம்
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார்
புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில போர் எடுத்து எதிர் புகுந்துளோம்

#75
என்னொடே பொருதியோ அது என்று எனின் இலக்குவ பெயரின் எம்பிரான்
தன்னொடே பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம்
மன்னொடே பொருதியோ உரைத்தது மறுக்கிலோம் என வழங்கினான்
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு பொரு படா உயர் புயத்தினான்

#76
எங்கு நின்றனன் இலக்குவ பெயர் அ ஏழை எம்பி அதிகாயனாம்
சிங்கம் வந்தவனை வென்று தன் உயிர் எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான்
அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும்
உங்கள் தன்மையின் அடங்குமோ உலகு ஒடுக்கும் வெம் கணை தொடுக்கினே

#77
யாரும் என் படைஞர் எய்தல் இன்றி அயல் ஏக யானும் இகல் வில்லும் ஓர்
தேரின் நின்று உமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பென் இது திண்ணமால்
வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வர சொலும்
போரும் இன்று ஒரு பகல்-கணே பொருது வெல்வென் வென்று அலது போகலேன்

#78
என்று வெம் பகழி ஏழு நூறும் இருநூறும் வெம் சிலை-கொடு ஏவினான்
குன்று நின்று-அனைய வீர மாருதி-தன் மேனி-மேல் அவை குழுக்களாய்
சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன்
குறு நின்றது பறித்து எடுத்து அவனை எய்தி நொய்தின் இது கூறினான்

#79
தும்பி என்று உலகின் உள்ள யாவை அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள்
வெம்பு வெம் சின மடங்கல் ஒன்றின் வலி-தன்னை நின்று எளிதின் வெல்லுமோ
நம்பி தம்பி எனது எம்பிரான் வரு துணை தரிக்கிலை நலித்தியேல்
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால்

#80
செரு பயிற்றிய தட கை ஆளி செல விட்ட குன்று திசை யானையின்
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என கடிது ஒடிந்து இடிந்து திசை போயதால்
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற நீறு பட்டது நிகர்த்ததால்

#81
விலங்கல்-மேல் வர விலங்கல் வீசிய விலங்கல் நீறுபடு வேலையில்
சலம் கை-மேல் நிமிர வெம் சினம் திருகி வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான்
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான்

#82
ஒன்று போல்வன ஓராயிரம் பகழி ஊடு போய் உருவ ஆடக
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை குலுங்க நின்று அனைய கொள்கையான்
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான்

#83
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தட கையின் இடந்து நேர்
மேல் எழுந்து எரி விசும்பு செல்வது ஒரு வெம்மையோடு வர வீசலும்
சூலம் அந்தகன் எறிந்தது அன்னது துணிந்து சிந்த இடை சொல்லுறும்
காலம் ஒன்றும் அறியாமல் அம்பு கொடு கல்லினான் நெடிய வில்லினான்

#84
ஊகம் எங்கு உயிரொடு நின்றனவும் ஓட வானவர்கள் உள்ளமும்
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால்
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய்
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான்

#85
மேரு மேரு என அல்ல அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம்
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான்
சேருமே அவை தனு கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும்
பேருமே கொடிய வாளியால் முறி பெறுக்கலா-வகை நுறுக்கினான்

#86
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும்
புற்றினூடு நுழை நாகம் அன்ன புகை வேக வாளிகள் புக புக
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற மயங்கினான் நிலம் முயங்கினான்

#87
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல்
கொற்ற வெம் கணை உலக்க எய்தவை குளிப்ப நின்று உடல் குலுங்கினார்
இற்று அவிந்தன பெரும் பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்த அ
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான்

#88
பிழைத்தது கொள்கை போத பெரும் படை தலைவர் யாரும்
உழைத்தனர் குருதி வெள்ளத்து உலந்ததும் உலப்பிற்று அன்றே
அழைத்து இவன்-தன்னை யானே ஆர் உயிர் கொளப்படாதே
இழைத்தது பழுதே அன்றோ வீடண என்ன சொன்னான்

#89
ஐய ஈது அன்னதேயால் ஆயிர கோடி தேவர்
எய்தினர் எய்தினார்கள் ஈடுபட்டு இரிந்தது அல்லால்
செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால்
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான்

#90
என்பது சொல்ல கேட்ட இந்திரவில்லினோடும்
பொன் புரை மேகம் ஒன்று வருவது போல்கின்றானை
முன்பனை முன்பு நோக்கி இவன்-கொலாம் பரதன் முன்னோன்
தன் பெரும் தம்பி என்றான் ஆம் என சாரன் சொன்னான்

#91
தீயவன் இளவல்-தன்-மேல் செல்வதன் முன்னம் செல்க என்று
ஏயினர் ஒருவர் இன்றி இராக்கத தலைவர் எங்கள்
நாயகன் மகனை கொன்றாய் நண்ணினை நாங்கள் காண
போய் இனி உய்வது எங்கே என்று எரி விழித்து புக்கார்

#92
கோடி நூறு அமைந்த கூட்டத்து இராக்கதர் கொடி திண் தேரும்
ஆடல் மா களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி
மூடினார் மூடினாரை முறைமுறை துணித்து வாகை
சூடினான் இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி

#93
அதிர்ந்தன உலகம் ஏழும் அனல் பொறி அசனி என்ன
பிதிர்ந்தன மலையும் பாரும் பிளந்தன பிணத்தின் குன்றத்து
உதிர்ந்தன தலைகள் மண்டி ஓடின உதிர நீத்தம்
விதிர்ந்தன அமரர் கைகள் விளைந்தது கொடிய வெம் போர்

#94
விட்டனன் விசிகம் வேகம் விடாதன வீரன் மார்பில்
பட்டன உலகம் எங்கும் பரந்தன பதாகை காட்டை
சுட்டன துரக ராசி துணித்தன பனை கைம்மாவை
அட்டன கூற்றம் என்ன அடர்ந்தன அனந்தம் அம்மா

#95
உலக்கின்றார் உலக்கின்றாரை எண்ணுவான் உற்ற விண்ணோர்
கலக்குறு கண்ணர் ஆகி கடையுற காணல் ஆற்றார்
விலக்க_அரும் பகழி மாரி விளைக்கின்ற விளைவை உன்னி
இலக்குவன் சிலை கண்டேயோ எழு மழை பயின்றது என்றார்

#96
ஓளி ஒண் கணைகள்-தோறும் உந்திய வேழம் ஒற்றை
வாளியின் தலைய பாரில் மறிவன மலையின் சூழ்ந்த
ஆளியின் துப்பின வீரர் பொரு களத்து ஆர்த்த ஆழி
தூளியின் தொகைய வள்ளல் சுடு கணை தொகையும் அம்மா

#97
பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு உழலும் பெற்றி
சிறையன என்ன நோக்கி தேவரும் திகைப்ப தேற்றி
துறை-தொறும் தொடர்ந்து வானம் வெளி அற துவன்றி வீழும்
பறவையின் பெரிது பட்டார் பிணத்தின்-மேல் படிவ மாதோ

#98
திறம் தரு கவியின் சேனை செறி கழல் நிருதன் சீற
இறந்தன கிடந்த வெள்ளம் எழுபதின் பாதி மேலும்
பறந்தலை முழுதும் பட்ட வஞ்சகர் படிவம் மூட
மறைந்தன குருதி ஓடி மறி கடல் மடுத்திலாத

#99
கை அற்றார் காலன் அற்றார் கழுத்து அற்றார் கவசம் அற்றார்
மெய் அற்றார் குடர்கள் சோர விசை அற்றார் விளிவும் அற்றார்
மையல் தார் கரியும் தேரும் வாசியும் மற்றும் அற்றார்
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார்

#100
வற்றிய கடலுள் நின்ற மலை என மருங்கின் யாரும்
சுற்றினர் இன்றி தோன்றும் தசமுகன் தோன்றல் துள்ளி
தெற்றின புருவத்தோன் தன் மனம் என செல்லும் தேரான்
உற்றனன் இளைய கோவை அனுமனும் உடன் வந்து உற்றான்

#101
தோளின்-மேல் ஆதி ஐய என்று அடி தொழுது நின்றான்
ஆளி-போல் மொய்ம்பினானும் ஏறினன் அமரர் ஆர்த்தார்
காளியே அனைய காலன் கொலையன கனலின் வெய்ய
வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார்

#102
இடித்தன சிலையின் நாண்கள் இரிந்தன திசைகள் இற்று
வெடித்தன மலைகள் விண்டு பிளந்தது விசும்பு மேன்மேல்
பொடித்த இ உலகம் எங்கும் பொழிந்தன பொறிகள் பொங்கி
கடித்தன கணைகளோடு கணைகள் தம் அயில் வாய் கவ்வி

#103
அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க மற்று அறுக்கிலாத
வெம் பொறி கதுவ விண்ணில் வெந்தன கரிந்து வீழ்ந்த
உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார் உலகம் யாவும்
கம்பமுற்று உலைந்த வேலை கலம் என கலங்கிற்று அண்டம்

#104
அரி இனம் பூண்ட தேரும் அனுமனும் அனந்த சாரி
புரிதலின் இலங்கை ஊரும் திரிந்தது புலவரேயும்
எரி கணை படலம் மூட இலர் உளர் என்னும் தன்மை
தெரிகிலர் செவிடு செல்ல கிழிந்தன திசைகள் எல்லாம்

#105
என் செய்தார் என் செய்தார் என்று இயம்புவார் இனைய தன்மை
முன் செய்தார் யாவர் என்பார் முன் எது பின் எது என்பார்
கொன் செய்தார் வீரர் இன்ன திசையினார் என்றும் கொள்ளார்
பொன் செய் தார் மவுலி விண்ணோர் உணர்ந்திலர் புகுந்தது ஒன்றும்

#106
நாண் பொரு வரி வில் செம் கை நாம நூல் நவின்ற கல்வி
மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம்
சேண் பெரிது என்று சென்ற தேவரும் இருவர் செய்கை
காண்பு அரிது என்று காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ

#107
ஆயிர கோடி பல்லம் அயில் எயிற்று அரக்கன் எய்தான்
ஆயிர கோடி பல்லத்து அவை துணித்து அறுத்தான் ஐயன்
ஆயிர கோடி நாக கணை தொடுத்து அரக்கன் எய்தான்
ஆயிர கோடி நாக கணைகளால் அறுத்தான் அண்ணல்

#108
கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு அரக்கன் கோத்தான்
கோட்டியின் தலைய கோடி கோடியால் குறைத்தான் கொண்டல்
மீட்டு ஒரு கோடி கோடி வெம் சினத்து அரக்கன் விட்டான்
மீட்டு ஒரு கோடி கோடி கொண்டு அவை தடுத்தான் வீரன்

#109
கங்கபத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான்
கங்கபத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான்
திங்களின் பாதி கோடி இலக்குவன் தெரிந்து விட்டான்
திங்களின் பாதி கோடி தொடுத்து அவை அரக்கன் தீர்த்தான்

#110
கோரையின் தலைய கோடி கொடும் கணை அரக்கன் கோத்தான்
கோரையின் தலைய கோடி தொடுத்து அவை இளவல் கொய்தான்
பாரையின் தலைய கோடி பரப்பினான் இளவல் பல் கால்
பாரையின் தலைய கோடி அரக்கனும் பதைக்க எய்தான்

#111
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த
தாம் வர துரந்து முந்தி தசமுகன் தனயன் ஆர்த்தான்
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த
தாம் வர தடுத்து வீழ்த்தான் தாமரை_கண்ணன் தம்பி

#112
வச்சிர பகழி கோடி வளை எயிற்று அரக்கன் எய்தான்
வச்சிர பகழி கோடி துரந்து அவை அனகன் மாய்த்தான்
மு சிர பகழி கோடி இலக்குவன் முடுக விட்டான்
மு சிர பகழி கோடி தொடுத்து அவை தடுத்தான் முன்பன்

#113
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து இகல் அரக்கன் எய்தான்
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து அவை அறுத்தான் ஐயன்
குஞ்சரக்கன்னம் கோடி இலக்குவன் சிலையில் கோத்தான்
குஞ்சரக்கன்னம் கோடி தொடுத்து அவை அரக்கன் கொய்தான்

#114
எய்யவும் எய்த வாளி விலக்கவும் உலகம் எங்கும்
மொய் கணை கானம் ஆகி முடிந்தது முழங்கு வேலை
பெய் கணை பொதிகளாலே வளர்ந்தது பிறந்த கோபம்
கைம்மிக கனன்றது அல்லால் தளர்ந்திலர் காளை வீரர்

#115
வீழியின் கனி-போல் மேனி கிழிபட அனுமன் வீர
சூழ் எழு அனைய தோள்-மேல் ஆயிரம் பகழி தூவி
ஊழியின் நிமிர்ந்த செம் தீ உருமினை உமிழ்வது என்ன
ஏழ் இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான்

#116
முற்கொண்டான் அரக்கன் என்னா முளரி வாள் முகங்கள் தேவர்
பின் கொண்டார் இளைய கோவை பியல் கொண்டான் பெரும் தோள் நின்றும்
கல் கொண்டு ஆர் கிரியின் நாலும் அருவி-போல் குருதி கண்டார்
வில் கொண்டான் இவனே என்னா வெரு கொண்டார் முனிவர் எல்லாம்

#117
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன் சிலை கை வாளி
நூறு நூறு ஏவி வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும்
வேறு வேறு இயற்றி வீர கொடியையும் அறுத்து வீழ்த்தி
ஆறு நூறு அம்பு செம்பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான்

#118
காளமேகத்தை சார்ந்த கதிரவன் என்ன காந்தி
தோளின்-மேல் மார்பின்-மேலும் சுடர் விடு கவசம் சூழ
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன
வாளிவாய்-தோறும் வந்து பொடித்தன குருதி வாரி

#119
பொன் உறு தடம் தேர் பூண்ட மடங்கல் மா புரண்ட போதும்
மின் உறு பதாகையோடு சாரதி வீழ்ந்த போதும்
தன் நிறத்து உருவ வாளி தடுப்பு இல சார்ந்த போதும்
இன்னது என்று அறியான் அன்னான் இனையது ஓர் மாற்றம் சொன்னான்

#120
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல்
பின் அரன் பிரமன் என்பார் பேசுக பிறந்து வாழும்
மன்னர் நம் பதியின் வந்து வரி சிலை பிடித்த கல்வி
இ நரன்-தன்னோடு ஒப்பார் யார் உளர் ஒருவர் என்றான்

#121
வாயிடை நெருப்பு கால உடல் நெடும் குருதி வார
தீயிடை நெய் வார்த்து அன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும்
ஓய்விடம் இல்லான் வல்லை ஓர் இமை ஒடுங்கா-முன்னம்
ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான்

#122
ஆசை எங்கணும் அம்பு உக வெம்பு போர்
ஓசை விம்ம உருத்திரரும் உடல்
கூச ஆயிர கோடி கொலை கணை
வீசி விண்ணை வெளி இலது ஆக்கினான்

#123
அ திறத்தினில் அனகனும் ஆயிரம்
பத்தி பத்தியின் எய்குவ பல் கணை
சித்திரத்தினில் சிந்தி இராவணன்
புத்திரற்கும் ஓர் ஆயிரம் போக்கினான்

#124
ஆயிரம் கணை பாய்தலும் ஆற்ற அரும்
காய் எரித்தலை நெய் என காந்தினான்
தீயவன் பெரும் சேவகன் சென்னி-மேல்
தூய வெம் கணை நூறு உடன் தூண்டினான்

#125
நெற்றி-மேல் ஒரு நூறு நெடும் கணை
உற்ற போதினும் யாதும் ஒன்று உற்றிலன்
மற்று அ வன் தொழிலோன் மணி மார்பிடை
முற்ற வெம் கணை நூறு முடுக்கினான்

#126
நூறு வெம் கணை மார்பின் நுழைதலின்
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர
தேறல் ஆம் துணையும் சிலை ஊன்றியே
ஆறி நின்றனன் ஆற்றலில் தோற்றிலான்

#127
புதையும் நல் மணி பொன் உருள் அச்சொடும்
சிதைய ஆயிரம் பாய் பரி சிந்திட
வதையின் மற்றொரு கூற்று என மாருதி
உதையினால் அவன் தேரை உருட்டினான்

#128
பேய் ஓர் ஆயிரம் பூண்டது பெய் மணி
ஏய தேர் இமைப்பின்னிடை ஏறினான்
தூயவன் சுடர் தோள் இணை-மேல் சுடர்
தீய வெம் கணை ஐம்பது சிந்தினான்

#129
ஏறி ஏறி இழிந்தது அல்லால் இகல்
வேறு செய்திலன் வெய்யவன் வீரனும்
ஆறு கோடி பகழியின் ஐ_இரு
நூறு தேர் ஒரு நாழிகை நூறினான்

#130
ஆசி கூறினர் ஆர்த்தனர் ஆய் மலர்
வீசி வீசி வணங்கினர் விண்ணவர்
ஊசல் நீங்கினர் உத்தரிகத்தொடு
தூசு வீசினர் நல் நெறி துன்னினார்

#131
அ கணத்தின் ஓர் ஆயிரம் ஆயிரம்
மிக்க வெம் கண் அரக்கர் அ வீரனோடு
ஒக்க வந்துற்று ஒரு வழி நண்ணினார்
புக்கு முந்தினர் போரிடை பொன்றுவான்

#132
தேரர் தேரின் இவுளியர் செம் முக
காரர் காரின் இடிப்பினர் கண்டையின்
தாரர் தாரணியும் விசும்பும் தவழ்
பேரர் பேரி முழக்கு அன்ன பேச்சினார்

#133
பார்த்த பார்த்த திசை-தொறும் பல் மழை
போர்த்த வானம் என இடி போர்த்து எழ
ஆர்த்த ஓதையும் அம்பொடு வெம் படை
தூர்த்த ஓதையும் விண்ணினை தூர்த்தவால்

#134
ஆளி ஆர்த்தன வாள் அரி ஆர்த்தன
கூளி ஆர்த்தன குஞ்சரம் ஆர்த்தன
வாளி ஆர்த்தன தேர் இவர் மண்தலம்
தூளி ஆர்த்திலதால் பிணம் துன்னலால்

#135
வந்து அணைந்தது ஓர் வாள் அரி வாவு தேர்
இந்திரன்-தனை வென்றவன் ஏறினான்
சிந்தினன் சர மாரி திசைதிசை
அந்தி_வண்ணனும் அம்பின் அகற்றினான்

#136
சுற்றும் வந்து படர்ந்து தொடர்ந்தவர்
எற்றுகின்றன எய்த எறிந்தன
அற்று உதிர்ந்தன ஆயிரம் வன் தலை
ஒற்றை வெம் கணையொடும் உருண்டவால்

#137
குடர் கிடந்தன பாம்பு என கோள் மத
திடர் கிடந்தன சிந்தின தேர் திரள்
படர் கிடந்தன பல் படை கையினர்
கடர் கிடந்தன போன்ற களத்தினே

#138
குண்டலங்களும் ஆரமும் கோவையும்
கண்டநாணும் கழலும் கவசமும்
சண்ட மாருதம் வீச தலத்து உகும்
விண் தலத்தினின் மீன் என வீழ்ந்தவால்

#139
அரக்கன் மைந்தனை ஆரியன் அம்பினால்
கரக்க நூறி எதிர் பொரு கண்டகர்
சிர கொடும் குவை குன்று திரட்டினான்
இரக்கம் எய்தி வெம் காலனும் எஞ்சவே

#140
சுற்றும் வால்-கொடு தூவும் துவைக்கும் விட்டு
எற்றும் வானின் எடுத்து எறியும் எதிர்
உற்று மோதும் உதைக்கும் உறுக்குமால்
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே

#141
பார்க்கும் அஞ்ச உறுக்கும் பகட்டினால்
தூர்க்கும் வேலையை தோள் புடை கொட்டி நின்று
ஆர்க்கும் ஆயிரம் தேர் பிடித்து அம் கையால்
ஈர்க்கும் ஐயன் அன்று ஏறிய யானையே

#142
மாவும் யானையும் வாள் உடை தானையும்
பூவும் நீரும் புனை தளிரும் என
தூவும் அள்ளி பிசையும் துகைக்குமால்
சேவகன் தெரிந்து ஏறிய சீயமே

#143
உரகம் பூண்ட உருளை பொருந்தின
இரதம் ஆயிரம் ஏ எனும் மாத்திரை
சரதம் ஆக தரை பட சாடுமால்
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே

#144
அ இடத்தினில் ஆய் மருந்தால் அழல்
வெவ் விடத்தினை உண்டவர் மீண்டு என
எ இடத்தினும் வீழ்ந்த இனத்தலை
தெவ் அடங்கும் அ வலியவர் தேறினார்

#145
தேறினார் கண் நெருப்பு உக சீறினார்
ஊறினார் வந்து இளவலை ஒன்றினார்
மாறு மாறு மலையும் மரங்களும்
நூறும் ஆயிரமும் கொடு நூறினார்

#146
விகடம் உற்ற மரனொடு வெற்பு இனம்
புகட உற்ற பொறுத்தன போவன
துகள் தவ தொழில் செய் துறை கம்மியர்
சகடம் ஒத்தன தார் அணி தேர் எலாம்

#147
வாலி மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான்
காலின் வந்த அரக்கனை கா இது
போலும் உன் உயிர் உண்பது புக்கு எனா
மேல் நிமிர்ந்து நெருப்பு உக வீசினான்

#148
ஏர் அழித்தது செய்தவன் ஈண்டு எழில்
சீர் அழித்தவன் ஆம் என தேவர்கள்
ஊர் அழித்த உயர் வலி தோளவன்
தேர் அழித்து ஓர் இமைப்பிடை சென்றதால்

#149
அந்த வேலையின் ஆர்த்து எழுந்து ஆடினார்
சிந்தை சால உவந்தனர் தேவர்கள்
தந்தை தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம்
எந்தை தீர்த்தனன் என்பது ஓர் ஏம்பலால்

#150
அழிந்த தேரின்-நின்று அந்தரத்து அ கணத்து
எழுந்து மற்று ஓர் இரதம் உற்று ஏறினான்
கழிந்து போகலை நில் என கை கணை
பொழிந்து சென்றனன் தீ என பொங்கினான்

#151
இந்திரன் மகன் மைந்தனை இன் உயிர்
தந்து போக என சாற்றலுற்றான்-தனை
வந்து மற்றைய வானர வீரரும்
முந்து போர்க்கு முறைமுறை முற்றினார்

#152
மரமும் குன்றும் மடிந்த அரக்கர்-தம்
சிரமும் தேரும் புரவியும் திண் கரி
கரமும் ஆளியும் வாரி கடியவன்
சரமும் தாழ்தர வீசினர் தாங்கினார்

#153
அனைய காலையில் ஆயிரம் ஆயிரம்
வினைய வெம் கண் அரக்கரை விண்ணவர்
நினையும் மாத்திரத்து ஆர் உயிர் நீக்கினான்
மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினான்

#154
ஆனையும் தடம் தேரும் தன் ஆர் உயிர்
தானையும் பரியும் படும் தன்மையை
மான வெம் கண் அரக்கன் மன கொளா
போன வென்றியன் தீ என பொங்கினான்

#155
சீர் தடம் பெரும் சில்லி அம் தேரினை
காத்து நின்ற இருவரை கண்டனன்
ஆர்த்த தம் பெரும் சேனை கொண்டு அண்டமேல்
ஈர்த்த சோரி பரவை நின்று ஈர்த்தலால்

#156
நேர் செலாது இடை நின்றனர் நீள் நெடும்
கார் செலா இருள் கீறிய கண் அகல்
தேர் செலாது விசும்பிடை செல்வது ஓர்
பேர் செலாது பிணத்தின் பிறக்கமே

#157
அன்று தன் அயல் நின்ற அரக்கரை
ஒன்று வாள் முகம் நோக்கி ஒரு விலான்
நன்று நம் படை நாற்பது வெள்ளமும்
கொன்று நின்றபடி என கூறினான்

#158
ஆய வீரரும் ஐய அமர்த்தலை
நீயும் நாற்பது வெள்ள நெடும் படை
மாய வெம் கணை மாரி வழங்கினை
ஓய்வு_இல் வெம் செரு ஒக்கும் என்று ஓதினார்

#159
வந்து நேர்ந்தனர் மாருதி-மேல் வரும்
அந்தி_வண்ணனும் ஆயிரம்_ஆயிரம்
சிந்தினான் கணை தேவரை வென்றவன்
நுந்த நுந்த முறைமுறை நூறினான்

#160
ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும்
நூறும் ஆயிரமும் கணை நூக்கி வந்து
ஊறினாரை உணர்வு தொலைத்து உயிர்
தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான்

#161
கதிரின் மைந்தன் முதலினர் காவலார்
உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும்
எதிரில் நின்ற இராவணி ஈடுற
வெதிரின் காட்டு எரி-போல் சரம் வீசினான்

#162
உளைவு தோன்ற இராவணி ஒல்கினான்
கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும்
அளவு_இல் சேனை அவிதர ஆரியற்கு
இளைய வீரன் சுடு சரம் ஏவினான்

#163
தெரி கணை மாரி பெய்ய தேர்களும் சிலை கைம்மாவும்
பரிகளும் தாமும் அன்று பட்டன கிடக்க கண்டார்
இருவரும் நின்றார் மற்றை இராக்கதர் என்னும் பேர்கள்
ஒருவரும் நின்றார் இல்லை உள்ளவர் ஓடி போனார்

#164
ஓடினர் அரக்கர் தண்ணீர் உண் தசை உலர்ந்த நாவர்
தேடின தெரிந்து கையால் முகிலினை முகந்து தேக்கி
பாடு உறு புண்கள்-தோறும் பசும் புனல் பாய பாய
வீடினர் சிலவர் சில்லோர் பெற்றிலர் விளிந்து வீழ்ந்தார்

#165
வெம் கணை திறந்த மெய்யர் விளிந்திலர் விரைந்து சென்றார்
செம் குழல் கற்றை சோர தெரிவையர் ஆற்ற தெய்வ
பொங்கு பூம் பள்ளி புக்கார் அவர் உடல் பொருந்த புல்லி
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார்

#166
பொறி கொடும் பகழி மார்பர் போயினர் இடங்கள் புக்கார்
மறி கொளும் சிறுவர் தம்மை மற்று உள சுற்றம் தம்மை
குறிக்கொளும் என்று கூறி அவர் முகம் குழைய நோக்கி
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார்

#167
தாமரை கண்ணன் தம்பி தன்மை ஈது-ஆயின் மெய்யே
வேம் அரை கணத்தின் இ ஊர் இராவணி விளிதல் முன்னம்
மா மர கானில் குன்றில் மறைந்திரும் மறைய வல்லே
போம் என தமரை சொல்லி சிலர் உடல் துறந்து போனார்

#168
வரை உண்ட மதுகை மேனி மருமத்து வள்ளல் வாளி
இரை உண்டு துயில் சென்றார் வாங்கிடின் இறப்பம் என்பார்
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற பிறர் முன் சொல்லா
உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார்

#169
தேரிடை செல்லார் மான புரவியில் செல்லார் செம் கண்
காரிடை செல்லார் காலின் கால் என செல்லார் காவல்
ஊரிடை செல்லார் நாணால் உயிரின்-மேல் உடைய அன்பால்
போரிடை செல்லார் நின்று நடுங்கினர் புறத்தும் போகார்

#170
நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி
வெய்தினின் கொன்று வீழ்ப்பல் என்பது ஓர் வெகுளி வீங்கி
பெய்துழி பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின்
கையினின் பெரிய அம்பால் கவசத்தை கழித்து வீழ்த்தான்

#171
கவசத்தை கழித்து வீழ்ப்ப காப்புறு கடன் இன்று ஆகி
அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீர
துவசத்தின் புரவி திண் தேர் கடிதுற தூண்டி யாம் இ
திவசத்தின் முடித்தும் வெம் போர் என சினம் திருகி சென்றார்

#172
மாருதி-மேலும் ஐயன் மார்பினும் தோளின்-மேலும்
தேரினும் இருவர் சென்றார் செம் தழல் பகழி சிந்தி
ஆரியன் வாகை வில்லும் அச்சு உடை தேரும் அ தேர்
ஊர்குவார் உயிரும் கொண்டான் புரவியின் உயிரும் உண்டான்

#173
இருவரும் இழந்த வில்லார் எழு முனை வயிர தண்டார்
உரும் என கடிதின் ஓடி அனுமனை இமைப்பின் உற்றார்
பொரு கனல் பொறிகள் சிந்த புடைத்தனர் புடைத்தலோடும்
பரு வலி கரத்தினால் தண்டு இரண்டையும் பறித்து கொண்டான்

#174
தண்டு அவன் கையது ஆன தன்மையை தறுகணாளர்
கண்டனர் கண்டு செய்யலாவது ஒன்றானும் காணார்
கொண்டனன் எறிந்து நம்மை கொல்லும் என்று அச்சம் கொண்டார்
உண்ட செஞ்சோறும் நோக்கார் உயிருக்கே உதவி செய்தார்

#175
காற்று வந்து அசைத்தலாலும் காலம் அல்லாமையாலும்
கூற்று வந்து உயிரை கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும்
தேற்றம் வந்து எய்தி நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார்
ஏற்றமும் வலியும் பெற்றார் எழுந்தனர் வீரர் எல்லாம்

#176
அங்கதன் குமுதன் நீலன் சாம்பவன் அருக்கன் மைந்தன்
பங்கம்_இல் மயிந்தன் தம்பி சதவலி பனசன் முன்னா
சிங்க_ஏறு அனைய வீரர் யாவரும் சிகரம் ஏந்தி
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார்

#177
அத்தனையோரும் குன்றம் அளப்பு_இல அசனி ஏற்றோடு
ஒத்தன நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார்
இத்தனை போலும் செய்யும் இகல் எனா முறுவல் எய்தி
சித்திர வில் வலோனும் சின்ன பின்னங்கள் செய்தான்

#178
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து
நெருங்கினார் நெருங்க கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும்
சரங்களும் துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி
இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான்

#179
வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும்
வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே
ஆழி அம் கமல கையான் ஆதி அம் பரமன் என்னா
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம்

#180
நாகமே அனைய நம்ப நாழிகை ஒன்று நான்கு
பாகமே காலம் ஆக படுத்தியேல் பட்டான் அன்றேல்
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின் வஞ்சன்
ஏகுமேல் வெல்வன் என்பது இராவணற்கு இளவல் சொன்னான்

#181
அத்தனை வீரர் மேலும் ஆண்தகை அனுமன் மேலும்
எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்ற
வித்தக வில்லினானை கொல்வது விரும்பி வீரன்
சித்திர தேரை தெய்வ பகழியால் சிதைத்து வீழ்ந்தான்

#182
அழித்த தேர் அழுந்தா-முன்னம் அம்பொடு கிடந்து வெம்பி
உழைத்து உயிர் விடுவது அல்லால் உறு செரு வென்றேம் என்று
பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா
விழித்து இமையாத முன்னம் வில்லொடும் விசும்பில் சென்றான்

#183
பொன் குலாம் மேனி மைந்தன்-தன்னொடும் புகழ்தற்கு ஒத்த
வன் கலாம் இயற்றி நின்றான் மற்றொரு மனத்தன் ஆகி
மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த தன்மை
என்-கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல்போனார்

#184
தாங்கு வில் கரத்தன் தூணி தழுவிய புறத்தன் தன்னுள்
ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன் உயிர்ப்பன் தீயன்
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன் மாய செல்வன்
வீங்கு இருள் பிழம்பின் உம்பர் மேகத்தின் மீதின் ஆனான்

#185
தணிவு அற பண்டு செய்த தவத்தினும் தருமத்தாலும்
பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும் பிறப்பினானும்
மணி நிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினானும்
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான்

#186
வாங்கினான் மலரின் மேலான் வானக மணி நீர் கங்கை
தாங்கினான் உலகம் தாங்கும் சக்கரத்தவன் என்றாலும்
வீங்கு வான் தோளை வீக்கி வீழ்த்து அலால் மீள்கிலாத
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனி படையை உன்னி

#187
ஆயின காலத்து ஆர்த்தார் அமர்_தொழில் அஞ்சி அப்பால்
போயினன் என்பது உன்னி வானர வீரர் போல்வார்
நாயகற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து நக்கான்
மாயையை தெரிய உன்னார் போர் தொழில் மாற்றி நின்றார்

#188
அது கணத்து அனுமன் தோள் நின்று ஐயனும் இழிந்து வெய்ய
கது வலி சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி
முதுகு உற சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி
விதுவிதுப்பு ஆற்றலுற்றான் விளைகின்றது உணர்ந்திலாதான்

#189
விட்டனன் அரக்கன் வெய்ய படையினை விடுத்தலோடும்
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரிய ஓடி
கட்டினது என்ப மன்னோ காகுத்தற்கு இளைய காளை
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி

#190
இறுகுற பிணித்தலோடும் யாவையும் எதிர்ந்த போதும்
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன்
உறு குறை துன்பம் இல்லான் ஒடுங்கினன் செய்வது ஓரான்
அறு குறை களத்தை நோக்கி அந்தரம் அதனை நோக்கும்

#191
மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து
சுற்றின வயிர தூணின் மலையினின் பெரிய தோள்கள்
இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம்
தெற்றென உடைய வீரர் இருந்தனர் செய்வது ஓரார்

#192
கால் உடை சிறுவன் மாய கள்வனை கணத்தின்-காலை
மேல் விசைத்து எழுந்து நாடி பிடிப்பென் என்று உறுக்கும் வேலை
ஏல்புடை பாசம் மேல்_நாள் இராவணன் புயத்தை வாலி
வால் பிணித்து என்ன சுற்றி பிணித்தது வயிர தோளை

#193
மலை என எழுவர் வீழ்வர் மண்ணிடை புரள்வர் வானில்
தலைகளை எடுத்து நோக்கி தழல் எழ விழிப்பர் தாவி
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை
சிலையவற்கு இளைய கோவை நோக்குவர் உள்ளம் தீவர்

#194
வீடணன் முகத்தை நோக்கி வினை உண்டே இதனுக்கு என்பர்
மூடின கங்குல் மாலை இருளினை முனிவர் மொய்ம்பின்
ஈடுற தக்க போலாம் நம் எதிர் என்னா ஏந்தல்
ஆடக தோளை நோக்கி நகை செய்வர் விழுவர் அஞ்சார்

#195
ஆர் இது தீர்க்க வல்லார் அஞ்சனை பயந்த வள்ளல்
மாருதி பிழைத்தான்-கொல்லோ என்றனர் மறுகி நோக்கி
வீரனை கண்டு பட்டது இது-கொலாம் என்று விம்மி
வார் கழல் தம்பி தன்மை காணுமோ வள்ளல் என்பார்

#196
என் சென்ற தன்மை சொல்லி எறுழ் வலி அரக்கன் எய்தான்
மின் சென்றது அன்ன வானத்து உரும் இனம் வீழ்வ என்ன
பொன் சென்ற வடிம்பின் வாளி புகையொடு பொறியும் சிந்தி
முன் சென்ற முதுகில் பாய பின் சென்ற மார்பம் உற்ற

#197
மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத
தலைத்தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும்
கொலை_தலை வாளி பாய குன்று அன குவவு தோளார்
நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார் நிமிர்ந்தது குருதி நீத்தம்

#198
ஆயிர கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு
போயின போதும் ஒன்றும் துடித்திலன் பொடித்து மான
தீ எரி சிதறும் செம் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான்

#199
வேறு உள வீரர் எல்லாம் வீழ்ந்தனர் உருமின் வெய்ய
நூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய சோரி
ஆறு போல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி
ஏறிய மெய்யனேனும் இருந்தனன் இடைந்திலாதான்

#200
கதிரவன் காதல் மைந்தன் கழல் இளம் பசும் காய் அன்ன
எதிர் எதிர் பகழி தைத்த யாக்கையன் எரியும் கண்ணன்
வெதிர் நெடும் கானம் என்ன வேகின்ற மனத்தன் மெய்யன்
உதிர வெம் கடலுள் தாதை உதிக்கின்றான்-தனையும் ஒத்தான்

#201
வெப்பு ஆரும் பாசம் வீக்கி வெம் கணை துளைக்கும் மெய்யன்
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான்
இ பாசம் மாய்க்கும் மாயம் யான் வல்லென் என்பது ஓர்ந்தும்
அ பாசம் வீச ஆற்றாது அழிந்த நல் அறிவு போன்றான்

#202
அம்பு எலாம் கதிர்கள் ஆக அழிந்து அழிந்து இழியும் ஆக
செம்_புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறி
பம்பு பேர் ஒளிய நாகம் பற்றிய படிவத்தோடும்
உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான்

#203
மயங்கினான் வள்ளல் தம்பி மற்றையோர் முற்றும் மண்ணை
முயங்கினார் மேனி எல்லாம் மூடினான் அரக்கன் மூரி
தயங்கு பேர் ஆற்றலானும் தன் உடல் தைத்த வாளிக்கு
உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான்

#204
சொற்றது முடித்தேன் நாளை என் உடல் சோர்வை நீக்கி
மற்றது முடிப்பென் என்னா எண்ணினான் மனிசன் வாழ்க்கை
இற்றது குரங்கின் தானை இறந்தது என்று இரண்டு பாலும்
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப இராவணன் கோயில் புக்கான்

#205
ஈர்க்கு அடை பகழி மாரி இலக்குவன் என்ன நின்ற
நீர் கடை மேகம்-தன்னை நீங்கியும் செருவின் நீங்கான்
வார் கடை மதுகை கொங்கை மணி குறு முறுவல் மாதர்
போர் கடை கரும் கண் வாளி புயத்தொடு பொழிய புக்கான்

#206
ஐ இரு கோடி செம்பொன் மணி விளக்கு அம் கை ஏந்தி
மை அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டு
பை அரவு அல்குலாரும் பலாண்டு இசை பரவ தங்கள்
தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ சார்ந்தான்

#207
தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம்
சிந்தையின் உணர கூறி தீருதி இடர் நீ எந்தாய்
நொந்தனென் ஆக்கை நொய்தின் ஆற்றி மேல் நுவல்வென் என்னா
புந்தியில் அனுக்கம் தீர்வான் தன்னுடை கோயில் புக்கான்

#208
இ தலை இன்னல் உற்ற வீடணன் இழைப்பது ஓரான்
மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன் மயங்குகின்றான்
அ தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான்
செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான்

#209
பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்ட படியை கண்டு
நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் யான் ஒரு தமியென் நின்றேன்
தேசத்தார் என்னை என்னே சிந்திப்பார் என்று தீயும்
வாச தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான்

#210
கொல்வித்தான் உடனே நின்று அங்கு என்பரோ கொண்டு போனான்
வெல்வித்தான் மகனை என்று பகர்வரோ விளைவிற்கு எல்லாம்
நல் வித்தாய் நடந்தான் முன்னே என்பரோ நயந்தோர் தத்தம்
கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரை கண்-போல்

#211
போர் அவன் புரிந்த போதே பொரு அரு வயிர தண்டால்
தேரொடும் புரண்டு வீழ சிந்தி என் சிந்தை செப்பும்
வீரம் முன் தெரிந்தேன் அல்லேன் விளிந்திலேன் மெலிந்தேன் இஞ்ஞான்று
ஆர் உறவு ஆக தக்கேன் அளியத்தேன் அழுந்துகின்றேன்

#212
ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம்
கைத்தலை நெல்லி போல காட்டிலேன் கழிந்தும் இல்லேன்
அ தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற
இ தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலை சூலம் போல்வேன்

#213
அனையன பலவும் பன்னி ஆகுலித்து அரற்றுவானை
வினை உள பலவும் செய்யத்தக்கன வீர நீயும்
நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ நீத்தி என்னா
இனையன சொல்லி தேற்றி அனலன் மற்று இனைய செய்தான்

#214
நீ இவண் இருத்தி யான் போய் நெடியவற்கு உரைப்பென் என்னா
போயினன் அனலன் போய் அ புண்ணியவன் பொலன் கொள் பாதம்
மேயினன் வணங்கி உற்ற வினை எலாம் இயம்பி நின்றான்
ஆயிரம் பெயரினானும் அரும் துயர் கடலுள் ஆழ்ந்தான்

#215
உரைத்திலன் ஒன்றும்-தன்னை உணர்ந்திலன் உயிரும் ஓட
கரைத்திலன் கண்ணின் நீரை கண்டிலன் யாதும் கண்ணால்
அரைத்திலன் உலகம் எல்லாம் அம் கையால் பொங்கி பொங்கி
இரைத்திலன் உளன் என்று எண்ண இருந்தனன் விம்மி ஏங்கி

#216
விம்மினன் வெதும்பி வெய்துற்று ஏங்கினன் இருந்த வீரன்
இ முறை இருந்து செய்வது யாவதும் இல் என்று எண்ணி
பொம்மென விம்மலோடும் பொருக்கென விசையின் போனான்
தெவ் முறை துறந்து வென்ற செங்கள மருங்கில் சேர்ந்தான்

#217
இழிந்து எழும் காளமேகம் எறி கடல் அனைய மற்றும்
ஒழிந்தன நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்க
பிழிந்து அது காலம் ஆக காளிமை பிழம்பு போத
பொழிந்தது போன்றது அன்றே பொங்கு இருள் கங்குல் போர்வை

#218
ஆர் இருள் அன்னது ஆக ஆயிர நாமத்து அண்ணல்
சீரிய அனலி தெய்வ படைக்கலம் தெரிந்து வாங்கி
பாரிய விடுத்தலோடு பகை இருள் இரிந்து பாற
சூரியன் உச்சி உற்றால்-ஒத்தது அ உலகின் சூழல்

#219
படை உறு பிணத்தின் பம்மல் பருப்பதம் துவன்றி பல் வேறு
இடை உறு குருதி வெள்ளத்து எறி கடல் எழு நீர் பொங்கி
உடை உறு தலை கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும்
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான்

#220
பிண பெரும் குன்றினூடும் குருதி நீர் பெருக்கினூடும்
நிண பெரும் சேற்றினூடும் படைக்கல நெருக்கினூடும்
மண பெரும் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில்
கணத்தினும் பாதி போதில் தம்பியை சென்று கண்டான்

#221
ஐயன்தான் அவன்-மேல் வீழ்ந்தான் அழுந்துற மார்பின் புல்லி
உய்யலன் என்ன ஆவி உயிர்த்து உயிர்த்து உருகுகின்றான்
பெய் இரு தாரை கண்ணீர் பெரும் துளி பிறங்க வானின்
வெய்யவன்-தன்னை சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான்

#222
உழைக்கும் வெய்து உயிர்க்கும் ஆவி உருகும் போய் உணர்வு சோரும்
இழைக்குவது அறிதல் தேற்றான் இலக்குவா இலக்குவா என்று
அழைக்கும் தன் கையை வாயின் மூக்கின் வைத்து அயர்க்கும் ஐயா
பிழைத்தியோ என்னும் மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான்

#223
தாமரை கையால் தாளை தைவரும் குறங்கை தட்டும்
தூ மலர் கண்ணை நோக்கும் மார்பிடை துடிப்பு உண்டு என்னா
ஏமுறும் விசும்பை நோக்கும் எடுக்கும் தன் மார்பின் எற்றும்
பூமியில் வளர்த்தும் கள்வன் போய் அகன்றானோ என்னும்

#224
வில்லினை நோக்கும் பாச வீக்கினை நோக்கும் வீயா
அல்லினை நோக்கும் வானத்து அமரரை நோக்கும் பாரை
கல்லுவென் வேரோடு என்னும் பவள வாய் கறிக்கும் கற்றோர்
சொல்லினை நோக்கும் தன் கை பகழியை நோக்கும் தோளான்

#225
வீரரை எல்லாம் நோக்கும் விதியினை பார்க்கும் வீர
பார வெம் சிலையை நோக்கும் பகழியை நோக்கும் பாரில்
யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும்
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான்

#226
எடுத்த போர் இலங்கை வேந்தன் மைந்தனோடு இளைய கோவுக்கு
அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம்
தொடுத்த கை தலையினோடும் துணித்து உயிர் குடிக்க என்னை
கெடுத்தனை வீடணா நீ என்றனன் கேடு இலாதான்

#227
அ உரை அருள கேட்டான் அழுகின்ற அரக்கன் தம்பி
இ வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த-போதும்
வெவ் வழியவனே தோற்கும் என்பது விரும்பி நின்றேன்
தெய்வ வன் பாசம் செய்த செயல் இந்த மாய செய்கை

#228
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட
வெற்றியன் ஆய வீரன் மீண்டிலன் இலங்கை மேல்_நாள்
பெற்றவன் எய்தும் என்னும் பெற்றியை உன்னி பிற்போது
உற்றனன் மைந்தன் தானை நாற்பது வெள்ளத்தோடும்

#229
ஈண்டு நம் சேனை வெள்ளம் இருபதிற்று_இரட்டி மாள
தூண்டினன் பகழி மாரி தலைவர்கள் தொலைந்து சோர
மூண்டு எழு போரில் பாரில் முறைமுறை முடித்தான் பின்னர்
ஆண்தகையோடும் ஏற்றான் ஆயிரம் மடங்கல்_தேரான்

#230
அனுமன்-மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய
தனு வலம் காட்டி பின்னை நாற்பது வெள்ள தானை
பனி எனப்படுவித்து அன்னான் பலத்தையும் தொலைத்து பட்டான்
இனி என வயிர வாளி எண்_இல நிறத்தின் எய்தான்

#231
ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான்
தூவுண்ட தானை முற்றும் பட ஒரு தமியன் சோர்வான்
போவுண்டது என்னின் ஐய புணர்க்குவன் மாயம் என்று
பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென் பரிதி பட்டான்

#232
மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம் வஞ்சன் வானில்
போய் அ தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து பொய்யின்
ஆயத்தார் பாசம் வீசி அயர்வித்தான் அம்பின் வெம்பும்
காயத்தான் என்ன சொல்லி வணங்கினான் கலுழும் கண்ணான்

#233
பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும்
இன் உயிர் துறந்தார் இல்லை இறுக்கிய பாசம் இற்றால்
புல் நுனை பகழிக்கு ஓயும் தரத்தரோ புலம்பி உள்ளம்
இன்னலுற்று அயரல் வெல்லாது அறத்தினை பாவம் என்றான்

#234
யார் இது கொடுத்த தேவன் என்னை ஈது இதனை தீர்க்கும்
காரணம் யாது நின்னால் உணர்ந்தது கழறி காண் என்று
ஆரியன் வினவ அண்ணல் வீடணன் அமல சால
சீரிது என்று அதனை உள்ள பரிசு எலாம் தெரிய சொன்னான்

#235
ஆழி அம் செல்வ பண்டு இ அகலிடம் அளித்த அண்ணல்
வேள்வியில் படைத்தது ஈசன் வேண்டினன் பெற்று வெற்றி
தாழ்வு உறு சிந்தையோற்கு தவத்தினால் அளித்தது ஆணை
ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது ஊற்றம் ஈதால்

#236
அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானை
பின் உற வயிர திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி
என் இனி அனுமன் தோளை இறுக்கியது இதனால் ஆண்டும்
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது புலவர் எல்லாம்

#237
தான் விடின் விடும் இது ஒன்றே சதுமுகன் முதல்வர் ஆய
வான் விடின் விடாது மற்று இ மண்ணினை எண்ணி என்னே
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை
தேன் விடு துளவ தாராய் இது இதன் செய்கை என்றான்

#238
ஈந்துள தேவர்-மேலே எழுகெனோ உலகம் யாவும்
தீந்து உக நூறி யானும் தீர்கெனோ இலங்கை சிந்த
பாய்ந்து அவர் சுற்றம் முற்றும் படுப்பெனோ இயன்ற பண்போடு
ஏய்ந்தது பகர்தி என்றான் இமையவர் இடுக்கண் தீர்ப்பான்

#239
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து
இரங்கிட தக்கது உண்டேல் இகழ்கிலென் இல்லை என்னின்
உரம் கெடுத்து உலகம் மூன்றும் ஒருவன் ஓர் அம்பின் சுட்ட
புரங்களின் தீய்த்து காண்பென் பொடி ஒரு கடிகை போழ்தின்

#240
எம்பியே இறக்கும் என்னில் எனக்கு இனி இலங்கை வேந்தன்
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை
நம்பியே என்னை சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் உதவி பார்த்தால்

#241
என்று கொண்டு இயம்பி ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய
வென்று இவண் உலகை மாய்த்தல் விதி அன்றால் என்று விம்மி
நின்று நின்று உன்னி உன்னி நெடிது உயிர்த்து அலக்கணுற்றான்
தன் துணை தம்பி-தன்-மேல் துணைவர்-மேல் தாழ்ந்த அன்பான்

#242
மீட்டும் வந்து இளைய வீரன் வெற்பு அன்ன விசய தோளை
பூட்டுறு பாசம்-தன்னை பல் முறை புரிந்து நோக்கி
வீட்டியது என்னின் பின்னை வீவென் என்று எண்ணும் வேத
தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணை கைம்மால் யானை அன்னான்

#243
இ தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய்
எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய்
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால்
சித்தம் கலங்கும் இது தீர மெள்ள இருளூடு வந்து தெரிவான்

#244
அசையாத சிந்தை அரவால் அனுங்க அழியாத உள்ளம் அழிவான்
இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான்
விசையால் அனுங்க வட மேரு வையம் ஒளியால் விளங்க இமையா
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க நிறை கால் வழங்கு சிறையான்

#245
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ
கேதங்கள் கூர அயர்கின்ற வள்ளல் திரு மேனி கண்டு கிளர்வான்
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான்
வேதங்கள் பாட உலகங்கள் யாவும் வினை சிந்த நாகம் மெலிய

#246
அல்லை சுருட்டி வெயிலை பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா
வில்லை செலுத்தி நிலவை திரட்டி விரிகின்ற சோதி மிளிர
எல்லை குயிற்றி எரிகின்ற மோலி இடை நின்ற மேரு எனும் அ
தொல்லை பொருப்பின் மிசையே விளங்கு சுடரோனின் மும்மை சுடர

#247
நன் பால் விளங்கு மணி கோடியோடு நளிர் போது செம்பொன் முதலா
தன்-பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ
மின்-பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன்
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய

#248
பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால்
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க வெயில் கால்
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க வன மாலை மார்பு புரள
தொல் நாள் பிரிந்த துயர் தீர அண்ணல் திரு மேனி கண்டு தொழுவான்

#249
முடி-மேல் நிமிர்ந்த முகிழ் ஏறு கையன் முகில்-மேல் நிமிர்ந்த ஒளியான்
அடி-மேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான்
கொடி-மேல் இருந்து இ உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய்
படி-மேல் எழுந்து வருவான் விரைந்து பல கால் நினைந்து பணிவான்

#250
வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம்
தாதை தாதை இறைவா பிறந்து விளையாடுகின்ற தனியோய்
சிந்தாகுலங்கள் களைவாய் தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ
எந்தாய் வருந்தல் உடையாய் வருந்தல் என இன்ன பன்னி மொழிவான்

#251
தேவாதிதேவர் பலராலும் முந்து திருநாமம் ஓது செயலோய்
மூவாது எ நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா
மேவாத இன்பம் அவை மேவி மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய்
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார்

#252
எழுவாய் எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி எங்கும் உளையாய்
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய்
தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து துயரால்
அழுவாய் ஒருத்தன் உளை-போலும் ஆர் இ அதிரேக மாயை அறிவார்

#253
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி ஒருவர்க்கும் உண்மை உரையாய்
முன் ஒக்க நிற்றி உலகு ஒக்க ஒத்தி முடிவு ஒக்கின் என்றும் முடியாய்
என் ஒக்கும் இன்ன செயலோ இது என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய்
அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார்

#254
வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய்
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய்
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய்
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார்

#255
தான் அந்தம் இல்லை பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனம் தொடர்ந்த ஒளியால்
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார்

#256
மீளாத வேதம் முடிவின்-கண் நின்னை மெய்யாக மெய்யின் நினையும்
கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான்
மாளாத நீதி இகழாமை நின்-கண் அபிமானம் இல்லை வறியோர்
ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இ அதிரேக மாயை அறிவார்

#257
சொல் ஒன்று உரைத்தி பொருள் ஆதி தூய மறையும் துறந்து திரிவாய்
வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி மிளிர் சங்கம் அங்கை உடையாய்
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன்
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார்

#258
மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம்
துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி ஒரு தன்மை சொல்ல அரியாய்
பிறந்தாயும் ஒத்தி பிறவாயும் ஒத்தி பிறவாமல் நல்கு பெரியோய்
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார்

#259
வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி அவை எய்தி என்றும் விளையா
நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா
முனைவர்க்கும் ஒத்தி அமரர்க்கும் ஒத்தி முழு மூடர் என்னும் முதலோர்
அனைவர்க்கும் ஒத்தி அறியாமை ஆர் இ அதிரேக மாயை அறிவார்

#260
எறிந்தாரும் ஏறுபடுவாரும் இன்ன பொருள் கண்டு இரங்குபவரும்
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி பிறியாது நிற்றி பெரியோய்
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார்

#261
பேர் ஆயிரங்கள் உடையாய் பிறந்த பொருள்-தோறும் நிற்றி பிரியாய்
தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய்
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல்
ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார்

#262
என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய்
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு நின்ற புகழோன்
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிர
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினான் இ உலகு ஏழும் மூடு சிறையான்

#263
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும்
தேசம் கலந்த மறைவாணர் செம் சொல் அறிவாளர் என்று இ முதலோர்
பாசம் கலந்த பசி-போல் அகன்ற பதகன் துரந்த உரகம்

#264
பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்து படர் கால்
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும்

#265
தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவி புணர்ந்த தகையால்
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின்
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள்
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலை நின்ற தெய்வ நெறியால்

#266
இளையான் எழுந்து தொழுவானை அன்பின் இணை ஆர மார்பின் அணையா
விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளி வந்தது என்ன வியவா
கிளையார்கள் அன்ன துணையோரை ஆவி கெழுவா எழுந்து தழுவா
முளையாத திங்கள் உகிரான் முன் வந்து முறை நின்ற வீரன் மொழிவான்

#267
ஐய நீ யாரை எங்கள் அரும் தவ பயத்தின் வந்து இங்கு
எய்தினை உயிரும் வாழ்வும் ஈந்தனை எம்மனோரால்
கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை மீட்சி
செய் திறம் இலையால் என்றான் தேவர்க்கும் தெரிக்க ஒணாதான்

#268
பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ புந்தி
தெருளினை உடையர் ஆயின் செயல் அரும் கருணை செல்வ
மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால்
அருளினை என்னின் எய்த அரியன உளவோ ஐய

#269
கண்டிலை முன்பு சொல்ல கேட்டிலை கடன் ஒன்று எம்-பால்
கொண்டிலை கொடுப்பது அல்லால் குறை இலை இது நின் கொள்கை
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே
பண்டு இலை நண்பு நாங்கள் செய்வது என் பகர்தி என்றான்

#270
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் பழைய நின்னோடு
உறவு உள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கனோடு அ
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாய
பிறவியின் பகைஞ நல்கு விடை என பெயர்ந்து போனான்

#271
ஆரியன் அவனை நோக்கி ஆர் உயிர் உதவி யாதும்
காரியம் இல்லான் போனான் கருணையோர் கடமை ஈதால்
பேர் இயலாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார்
மாரியை நோக்கி கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான்

#272
இறந்தனன் இளவல் என்னா இறைவியும் இடுக்கண் எய்தும்
மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி மீள
பிறந்தனர் என்று கொண்டு ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே
அறம் தரு சிந்தை ஐய ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான்

#273
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சி
குழைவுற அனந்தன் உச்சி குன்றின்-நின்று அண்ட_கோளம்
எழ மிசை உலகம் மேல் மேல் ஏங்கிட இரிந்து சிந்தி
மழை விழ மலைகள் கீற மாதிரம் பிளக்க மாதோ

#274
பழிப்பு_அறு மேனியாள்-பால் சிந்தனை படர கண்கள்
விழிப்பு இலன் மேனி சால வெதும்பினன் ஈசன் வேலும்
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற உயிர்ப்பு வீங்கி கிடந்த வாள் அரக்கன் கேட்டான்

#275
தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன் தரும மூர்த்தி
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும்
சீதையும் அவளை உன்னி சிந்தனை தீர்ந்தும் தீரா
பேதையும் அன்றி அ ஊர் யார் உளர் துயில் பெறாதார்

#276
சிங்க_ஏறு அசனி_ஏறு கேட்டலும் சீற்ற சேனை
பொங்கியது என்ன மன்னன் பொருக்கென எழுந்து போரில்
மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது என்னா
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான்

#277
இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது இராமன் போர் வில்
வெடிக்கின்றது அண்டம் என்ன படுவது தம்பி வில் நாண்
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு
பிடிக்கின்றது உலகம் எங்கும் பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி

#278
அங்கதன் அவனும் ஆர்த்தான் அந்தரம் ஆர்க்கின்றானும்
வெம் கத நீலன் மற்றை வீரரும் வேறுவேறு
பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன
சங்கை ஒன்று இன்றி தீர்ந்தார் பாசத்தை தருமம் நல்க

#279
என்பது சொல்லி பள்ளி சேக்கை-நின்று இழிந்து வேந்தன்
ஒன்பது கோடி வாள் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற
பொன் பொதி விளக்கம் கோடி பூம் குழை மகளிர் ஏந்த
தன் பெரும் கோயில் நின்றும் மகன் தனி கோயில் சார்ந்தான்

#280
தாங்கிய துகிலார் மெள்ள சரிந்து வீழ் குழலார் தாங்கி
வீங்கிய உயிர்ப்பார் விண்ணை விழுங்கிய முலையார் மெல்ல
தூங்கிய விழியார் தள்ளி துளங்கிய நடையார் வல்லி
வாங்கிய மருங்குல் மாதர் அனந்தரால் மயங்கி வந்தார்

#281
பானமும் துயிலும் கண்ட கனவும் பண் கனிந்த பாடல்
கானமும் தள்ள தள்ள களியொடும் கள்ளம் கற்ற
மீனினும் பெரிய வாள் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக
வானவர் மகளிர் போனார் மழலை அம் சதங்கை மாழ்க

#282
மழையினை நீலம் ஊட்டி வாசமும் புகையும் ஆட்டி
உழை உழை சுருட்டி மென் பூ குவித்து இடைக்கு இடையூறு என்னா
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செ வாய்
இழை அணி மகளிர் சூழ்ந்தார் அனந்தரால் இடங்கள்-தோறும்

#283
தேனிடை கரும்பில் பாலில் அமுதினில் கிளவி தேடி
மானிடை கயலில் வாளில் மலரிடை நயனம் வாங்கி
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார்

#284
தொடங்கிய ஆர்ப்பின் ஓசை செவிப்புலம் தொடர்தலோடும்
இடங்கரின் வய போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும்
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார் மாதர்
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார்

#285
அரக்கனும் மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்து மாடம்
பொருக்கென சென்று புக்கான் புண்ணினில் குமிழி பொங்க
தரிக்கிலன் மடங்கல் ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து போன
கரு கிளர் மேகம் அன்ன களிறு அனையானை கண்டான்

#286
எழுந்து அடி வணங்கல் ஆற்றான் இரு கையும் அரிதின் ஏற்றி
தொழும் தொழிலானை நோக்கி துணுக்குற்ற மனத்தன் தோன்றல்
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான்
புழுங்கிய புண்ணினானும் இனையன புகலலுற்றான்

#287
உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்ற
பருகின அளப்பு_இலாத பகழிகள் கவசம் பற்று அற்று
அருகின பின்னை சால அலசினென் ஐய கண்கள்
செருகின அன்றே யானும் மாயையின் தீர்ந்திலேனேல்

#288
இந்திரன் விடையின் பாகன் எறுழ் வலி கலுழன் ஏறும்
சுந்தரன் அருக்கன் என்று இ தொடக்கத்தார் தொடர்ந்த போரில்
நொந்திலென் இனையது ஒன்றும் நுவன்றிலென் மனிதன் நோன்மை
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ

#289
இளையவன் தன்மை ஈதால் இராமனது ஆற்றல் எண்ணில்
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால்
விளைவு கண்டு உணர்தல் அல்லால் வென்றி மேல் விளையும் என்ன
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான்

#290
வென்றது பாசத்தாலும் மாயையின் விளைவினாலும்
கொன்றது குரக்கு வீரர்-தம்மொடு அ கொற்றத்தோனை
நின்றனன் இராமன் இன்னும் நிகழ்ந்தவா நிகழ்க மேன்மேல்
என்றனன் என்ன கேட்ட இராவணன் இதனை சொன்னான்

#291
வார் கழல் கால மற்று அ இலக்குவன் வயிர வில்லின்
பேர் ஒலி அரவம் விண்ணை பிளந்திட குரங்கு பேர்ந்த
கார் ஒலி மடங்க வேலை கம்பிக்க களத்தின் ஆர்த்த
போர் ஒலி ஒன்றும் ஐய அறிந்திலை போலும் என்றான்

#292
ஐய வெம் பாசம்-தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்ன
பெய்யும் வெம் சரத்தால் மேனி பிளப்புண்டார் உணர்வு பேர்ந்தார்
உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ ஒழிக்க ஒன்றோ
செய்யும் என்று எண்ண தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா

#293
ஈது உரை நிகழும் வேலை எய்தியது அறிய போன
தூதுவர் விரைவின் வந்தார் புகுந்து அடி தொழுதலோடும்
யாது அவண் நிகழ்ந்தது என்ன இராவணன் இயம்ப ஈறு இன்று
ஓதிய கல்வியாளர் புகுந்துளது உரைக்கலுற்றார்

#294
பாசத்தால் பிணிப்புண்டாரை பகழியால் களப்பட்டாரை
தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே
ஏசத்தான் இரங்கி ஏங்கி உலகு எலாம் எரிப்பென் என்றான்
வாச தார் மாலை மார்ப வான் உறை கலுழன் வந்தான்

#295
அன்னவன் வரவு காணா அயில் எயிற்று அரவம் எல்லாம்
சின்னபின்னங்கள் ஆன புண்ணொடும் மயர்வு தீர்ந்தார்
முன்னையின் வலியர் ஆகி மொய் களம் நெருங்கி மொய்த்தார்
இன்னது நிகழ்ந்தது என்றார் அரக்கன் ஈது எடுத்து சொன்னான்

#296
ஏத்த அரும் தடம் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம்
காற்றிடை கழித்து தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின்
வார்த்தை ஈது-ஆயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை
மூத்தது கொள்கை போலாம் என்னுடை முயற்சி எல்லாம்

#297
உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம்
கொண்டவன் என்னோடு ஏற்ற செருவினில் மறுக்கம் கொண்டான்
மண்டலம் திரிந்த-போதும் மறி கடல் மறைந்த-போதும்
கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால்

#298
கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும்
புரங்களும் அழிய போன பொழுதில் என் சிலையின் பொங்கி
உரங்களில் முதுகில் தோளில் உறையுறு சிறையில் உற்ற
சரங்களும் நிற்கவே-கொல் வந்தது அ அருணன் தம்பி

#299
ஈண்டு அது கிடக்க மேன்மேல் இயைந்தவாறு இயைக எஞ்சி
மீண்டவர்-தம்மை கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே
ஆண்தகை நீயே இன்னும் ஆற்றுதி அருமை போர்கள்
காண்டலும் நாணும் என்றான் மைந்தனும் கருத்தை சொன்னான்

#300
இன்று ஒரு பொழுது தாழ்த்து என் இகல் பெரும் சிரமம் நீங்கி
சென்று ஒரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ
வென்றி வெம் படையினால் உன் மன துயர் மீட்பென் என்றான்
நன்று என அரக்கன் போய் தன் நளிர் மணி கோயில் புக்கான்