மிகைப் பாடல்கள், யுத்த காண்டம்-3 – கம்பராமாயணம்

@20. படைத் தலைவர் வதைப் படலம்

#1
அளப்ப அரும் வெள்ள சேனை நமர் திறத்து அழிந்தது அல்லால்
களப்பட கிடந்தது இல்லை கவி படை ஒன்றதேனும்
இளைப்புறும் சமரம் மூண்ட இற்றை நாள்வரையும் என்னே
விளைப்ப அரும் இகல் நீர் செய்து வென்றது விறலின் மிக்கீர் 1-1

#2
இகல் படை தலைவர் ஆய எண்பது வெள்ளத்து எண் இல்
தொகைப்பட நின்றோர் யாரும் சுடர் படை கரத்தின் ஏந்தி
மிகைப்படும் தானை வெள்ளம் ஈர்-ஐந்தோடு ஏகி வெம் போர்
பகை பெரும் கவியின் சேனை படுத்து இவண் வருதிர் என்றான் 1-2

#3
மன்னவர் மன்னவ மற்று இது கேண்மோ
துன்னும் அரக்கரின் வீரர் தொகைப்பட்டு
உன்னிய நாற்பது வெள்ளமும் உற்று ஆங்கு
அ நரன் அம்பினில் ஆவி அழிந்தார் 16-1

#4
மத்த மத கரியோடு மணி தேர்
தத்துறு வாசி தணப்பு இல காலாள்
அத்தனை வெள்ளம் அளப்பு இல எல்லாம்
வித்தக மானிடன் வாளியின் வீந்த 16-2

#5
இ படையோடும் எழுந்து இரவின்வாய்
வெப்பு உறு வன் கவி வீரர்கள் ஓதை
எ புறமும் செவிடு உற்றதை எண்ணி
துப்புறு சிந்தையர் வீரர் தொடர்ந்தார் 20-1

#6
தேர் நிரை சென்றது திண் கரி வெள்ள
கார் நிரை சென்றது கால் வய வாசி
தார் நிரை சென்றது தாழ்வு அறு காலாள்
பேர் நிரை சென்றது பேசுவர் யாரே 22-1

#7
ஐய கேள் சிவன் கை வாள் கொண்டு அளப்ப அரும் புவனம் காக்கும்
வெய்யவன் வெள்ள சேனை தலைவரின் விழுமம் பெற்றோர்
கை உறும் சேனையோடும் கடுகினார் கணக்கிலாதோர்
மொய் படை தலைவர் என்று ஆங்கு அவர் பெயர் மொழியலுற்றான் 29-1

#8
இன்னவர் ஆதியர் அளப்பிலோர் இவர்
உன்ன அரும் தொகை தெரிந்து உரைக்கின் ஊழி நாள்
பின்னரும் செல்லும் என்று ஒழிய பேசினான்
அன்ன போர் அரக்கரும் களத்தை அண்மினார் 35-1

#9
கொடுமரத்திடை இராகவன் கோத்த வெம் பகழி
அடல் அரக்கர் என்று உரைத்திடும் கானகம் அடங்க
கடிகை உற்றதில் களைந்தது கண்டு விண்ணவர்கள்
விடியலுற்றது நம் பெரும் துயர் என வியந்தார் 58-1

#10
வெற்றி வெம் படை தலைவர் என்று உரைத்திடும் வெள்ளத்து
உற்ற போர் வலி அரக்கர்கள் ஒரு தனி முதல்வன்
கொற்ற வெம் சரம் அறுத்திட அளப்பு இலர் குறைந்தார்
மற்றும் நின்றவர் ஒரு திசை தனி தனி மலைந்தார் 67-1

#11
தேர் போய் அழிவுற்றது என தெளியா
போர் மாலி பொருந்து தரைப்பட முன்
ஓர் மா மரம் நீலன் உரத்தொடு கொண்டு
ஏர் மார்பிடை போக எறித்தனனால் 81-1

#12
அ போது அழல் வேள்வி அடல் பகைஞன்
வெப்பு ஏறிய வெம் கனல் போல வெகுண்டு
இ போர் தருக என்ற இலக்குவன்மேல்
துப்பு ஆர் கணை மாரி சொரிந்தனனால் 85-1

#13
சொரி வெம் கணை மாரி தொலைத்து இரதம்
பரி உந்திய பாகு படுத்து அவன் வெம்
பொரு திண் திறல் போக இலக்குவன் அங்கு
எரி வெம் கணை மாரி இறைத்தனனால் 85-2

#14
முடிவுற்றனன் மாருதி மோதுதலால்
கொடு வச்சிர எயிற்றன் எனும் கொடியோன்
விடம் ஒத்த பிசாசன் விறற் பனச-
னொடும் உற்று இருவோரும் உடன்றனரால் 92-1

#15
பொர நின்ற பணை புய வன் பனசன்
நிருதன் களமீது நெருக்கி அதில்
பரி வெள்ளம் அளப்பு இல பட்டு அழிய
தரு அங்கை கொடே எதிர் தாக்கினனால் 92-2

#16
பனசன் அயர்வுற்று ஒருபால் அடைய
தனி வெம் பரி தாவு நிசாசரன் வெம்
கனல் என்ன வெகுண்டு கவி படையின்
இனம் எங்கும் இரிந்திட எய்தினனால் 93-1

#17
விசை கண்டு உயர் வானவர் விண் இரிய
குசை தங்கிய கோள் என அண்டமொடு எண்
திசை எங்கணும் நின்று திரிந்துளதால் –
பசை தங்கு களத்து ஒரு பாய் பரியே 96-1

#18
மற்றும் படை வீரர்கள் வந்த எலாம்
உற்று அங்கு எதிரேறி உடன்று அமர்வாய்
வில் தங்கும் இலக்குவன் வெம் கணையால்
முற்றும் முடிவு எய்தி முடிந்தனரால் 100-1
@21. மகரக்கண்ணன் வதைப் படலம்

#1
இந்திரியத்தத இகழ்ந்தவன் அந்தோ
மந்திர வெற்றி வழங்க வழங்கும்
இந்திரம் அற்றது என கடிதிகொல்
வந்தது என் வில் தொழிலை கொலை மான 5-1

#2
அம்புய கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி
தம்பிதன் கவசமீதே இரட்டி சாயகங்கள் தாக்கி
வெம்பு இகல் அனுமன்மீதே வெம் கணை மாரி வித்தி
உம்பர் தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான் 19-1

#3
இந்திரன் பகைஞன் போல இவனும் ஓர் மாய வீரன்
தந்திர குரக்கு சேனை உளது எலாம் தரையின் வீழ்த்தான்
எந்திரம் ஆகி பார்த்த இடம் எலாம் தானே ஆனான்
அந்தரம் அவனோடு ஒப்பார் ஆர் என அமலன் சொன்னான் 29-1

#4
மற்று அவன் இறத்தலோடும் மறைகளும் தேடி காணா
கொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ள
பற்றி அங்கு அரக்கர் தானை வெள்ளம் அத்தனையும் பாரில்
அற்றவை அழிந்து சிந்த அறுத்து ஒரு கணத்தில் மாய்த்தான் 31-1

#5
மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிர தோளான்
தொடர்ந்தனர் அரக்கர் பின்னும் தொடர்ந்தவர் தம்மை எல்லாம்
கடந்தனர் கவியின் வீரர் களத்திடை கணத்தில் மாய்த்தார்
நெடும் திரை பரவைமீது நிறைந்தது குருதி நீத்தம் 38-1
@22. பிரமாத்திரப் படலம்

#1
பண் தரு கிளவி செவ்வி பல்லியத்து ஒழுகு தீம் தேன்
கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல்
வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம் வானத்து
அண்டர்தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே 7-1

#2
இமைப்பதன் முன்னம் வந்த இராக்கத வெள்ளம் தன்னை
குமை தொழில் புரிந்த வீரர் தனு தொழில் குறித்து இன்று எம்மால்
அமைப்பது என் பிறிது ஒன்று உண்டோ மேரு என்று அமைந்த வில்லான்
உமைக்கு ஒரு பாகன் எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த 21-1

#3
தலைகளை நோக்கும் தான் தன் சரங்களை நோக்கும் தன் கை
சிலையினை நோக்கும் செம் பொன் தேரினை நோக்கும் செய்த
கொலைகளை நோக்கும் கொன்ற கொற்றவர் தம்மை நோக்கும்
அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய நோக்கும் 25-1

#4
ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில்
சீர்த்த வீரியன் இளையவன் இராமன்மேல் செறிய
தூர்த்த வாளியன் சிலையொடும் விசும்பினை தொடர்ந்தான் 77-1

#5
இன்னது இவ் வழி நிற்க மற்று இரும் சமர்க்கு உடைந்தே
துன்னு வான் வழி இலங்கையில் போகின்ற தோன்றல்
பொன்னின் வார் சிலை கரத்தொடும் பொருகென புகுந்து
தன்னை ஈன்றிடும் ஒரு தனி தந்தையை கண்டான் 88-1

#6
மாண்டனன் அகம்பன் மண்மேல் மடிந்தன நிருதர் சேனை
மீண்டனர் குரக்கு வீரர் விழுந்தன சின கை வேழம்
தூண்டின கொடி தேர் அற்று துணிந்தன தொடுத்த வாசி-
ஆண் தகை இளைய வீரன் அடு சிலை பொழியும் அம்பால் 137-1

#7
அரும் திறல் அகம்பன் ஆதி அரக்கரோடு அளவு இல் ஆற்றல்
பொரும் திறல் களிறு காலாள் புரவி தேர் அளப்பு இல் கோடி
இரிந்திட கொன்று தான் அங்கு ஒரு திசை யாரும் இன்றி
பொருந்திய இருளின் பொம்மல் பொலிய மாருதியும் நின்றான் 140-1

#8
மான வேல் அரக்கர் விட்ட படைக்கலம் வான மாரி
ஆன வன் பகழி சிந்த திசைதொறும் பொறியோடு அற்று
மீன் இனம் விசும்பின் நின்றும் இருள் உக விழுவ போல
கானகம் தொடர்ந்த தீயின் சுடுவன பலவும் கண்டான் 143-1

#9
தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்துமின் என்ன சொன்னான்
ஓடினார் சாரர் வல்லை உணர்த்தினர் துணுக்கம் எய்தா
ஆடவர் திலகன் யாண்டையான் இகல் அனுமன் ஏனோர்
வீடணன் யாங்கண் உள்ளார் உணர்த்துமின் விரைவின் என்றான் 157-1

#10
தந்தை இறந்தும் தாயர் பிரிந்தும் தலம் விட்டும்
பின் தனி மேவும் மாது பிரிந்தும் பிரிவு இல்லா
எம் துணை நீ என்று இன்பம் அடைந்தேன் இது காணேன்
வந்தனென் எம்பி வந்தனென் எந்தாய் இனி வாழேன் 202-1
@23. சீதை களம் காண் படலம்

#1
அயன் சிவன் அறிவுறா ஆதி நாயகன்
வியன் கர நேமி அம் படை அவ் வெற்பினை
நியங்கொடு தாங்கி விண் நின்றதால் அதில்
இயங்கிய ஊதை வெம் களத்தின் எய்தவே 99-1

#2
வந்த நல் மருந்தினை மருத்து வானவன்
சிந்தையில் பெரு மகிழ் சிறப்ப சேர்ந்து உறீஇ
அந்தரத்து அருக்கன் மா மகனோடு ஆயவர்
வந்து இரைந்து ஆர்த்து எழும்வகை செய்தான் அரோ 99-2
@25. களியாட்டுப் படலம்

#1
வடித்திடும் அமுத தேறல் மாந்தினர் எவரும் உள்ளம்
பிடித்தது களிப்பின் பெற்றி பிறந்தது காம வேகம்
எடுத்தனர் மகர யாழின் இன் இசை இனிமையோடு
நடித்தனர் நங்கைமார்கள் நாடக தொகையின் பேதம் 3-1
@26. மாயா சீதைப் படலம்

#1
அரக்கரில் சிறந்த வீரர் ஆயிர வெள்ளம் என்னும்
திரை கடல் அரக்கர் யாரும் சிதைந்தனர் திண் தேர் யானை
சுருக்கம் இல் இவுளி காலாள் எனும் தொகை அளப்பு இல் வெள்ளம்
உரைக்கு அடங்காதது எல்லாம் உலந்தது அங்கு இருவர் வில்லால் 5-1

#2
என்று மாலியவான் கூற பிறை எயிற்று எழிலி நாப்பண்
மின் தெரிந்தென்ன நக்கு வெருவுற உரப்பி பேழ் வாய்
ஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து நீ உரைத்த மாற்றம்
நன்று நன்று என்று சீறி உரைத்தனன் நலத்தை ஓரான் 8-1

#3
என்றனன் மாருதி இந்திரசித்தும்
ஒன்று உரை கேள் எனது எந்தையும் ஊரும்
பொன்றுதல் தீரும் இதின் புகழ் உண்டே
நன்று உரை என்று பின் நக்கு உரைசெய்தான் 35-1

#4
எந்தை உவந்த இலங்கு இழையாளை
தந்திடில் இன்று தரும் புகழ் உண்டோ
சிந்துவென் எந்தை தியங்கிய காம
வெம் துயர் தீரும் விழுப்பமும் உண்டால் 36-1

#5
கண்டு தன் கருத்தில் கொண்ட கவலையை கடந்து அங்கு ஆவி
உண்டு என தெளிந்து தேறல் வீடணன் உற்றது எல்லாம்
கொண்டு தன் அகத்தில் உன்னி குலவிய உவகை தூண்ட
தொண்டை வாய் மயில் அன்னாளை மனத்தொடும் தொழுது நின்றான் 91-1
@27. நிகும்பலை யாகப் படலம்

#1
நூறு ஆகிய வெள்ளம் நுனித்த கணக்கு
ஆறாதன சேனை அரக்கர் உடற்கு
ஏறாதன இல்லை – இலக்குவன் வில்
தூறா நெடு வாளி துரந்திடவே 42-1

#2
சிர நிரை அறுத்து அவர் உடலை சிந்தி மற்று
உர நிரை அறுத்து அவர் ஒளிரும் வெம் படை
கர நிரை அறுத்து வல் அரக்கர் கால் எனும்
தர நிரை அறுப்பது அங்கு இலக்குவன் சரம் 51-1

#3
ஆயின பொழுதில் அங்கு அளவு இல் மந்திரம்
ஓய்வு இலது உரைத்தனன் ஓம ஆகுதி
தீயிடை நெய் சொரிந்து இயற்றும் திண் திறல்
தீயவன் என் என திகைத்து நோக்கினான் 52-1

#4
ஆங்கு அது கிடக்க நான் மனிதர்க்கு ஆற்றலேன்
நீங்கினென் என்பது ஓர் இழிவு நேர் உற
ஈங்கு நின்று யாவரும் இயம்ப என் குலத்து
ஓங்கு பேர் ஆற்றலும் ஒழியும் ஒல்குமால் 64-1

#5
நான் உனை இரந்து கூறும் நயமொழி ஒன்றும் கேளாய்
சானகிதன்னை வாளால் தடிந்ததோ தனதன் தந்த
மானமேல் சேனையோடும் வடதிசை நோக்கி மீது
போனதோ – கோடி கோடி வஞ்சமும் பொய்யும் வல்லாய் 69-1

#6
சூர் எலாம் திரண்ட பொன்-தோள் தாபதர்க்கு இளைய தோன்றல்
நீர் எலாம் மறந்தீர் போலும் யான் செரு ஏற்று நின்று
கார் எலாம் சொரிவது என்னும் கணைகளால் கவியின் வெள்ளம்
போர் எலாம் மடிந்து நூறி இறத்தலும் இருகால் பெற்றீர் 84-1

#7
விடு வாளிகள் கடிது ஓடுவ வீற்று ஆகுவ வீயா
நெடு நாணிடை சிதையாதவர் நேர் ஏவிய விசிகம்
தொடு கார் விசை நுழையா எதிர் மீளாது இடை சோரா
எடு பாணமும் அழியா முதுகு இடு தூணியை அறுத்தான் 126-1

#8
அரு ஆகியும் உரு ஆகியும் அழியா முழுமுதல் ஆம்
கரு ஆகியும் எமை ஆளுறு கருணாகர வடிவாம்
பொருள் ஆகியும் இருள் ஆகியும் ஒளி ஆகியும் பொலியும்
திருமார்பினன் நெடு மாயையை யாரே தெரிந்து அறிவார் 142-1

#9
ஈது அங்கு அவை நெடு வானிடை நிகழ்கின்றது இப்பாலில்
காதும் கொலை அரக்கன் அது கண்டான் தகை மலர்மேல்
போதன் தரு படை போக்கினன் போலாம் என புகைந்தான்
ஏது இங்கு இவன் வலி நன்று மற்று இது காண்பென் என்று இசைப்பான் 144-1

#10
உமை பற்றிய பாகன் முதல் இமையோர் பல உருவம்
சமைவுற்றது தான் அல்லது ஓர் பொருள் வேறு இலது எனவே
அமைவுற்றது பகிரண்டமும் அழிகாலம் இது எனவே
குமைவுற்றிட வடவை பொறி கொழிக்கின்றது எவ் உலகும் 145-1
@28. இந்திரசித்து வதைப் படலம்

#1
என்று அவன் இகழ்ந்தது எல்லாம் இந்திரசித்து கேளான்
நன்று நம் ஆணை என்னா நகைசெய்யா அவனை பார்த்து
கொன்று நான் இருவர்தம்மை குரக்கு இனத்தோடும் மாய்த்து
வென்று நான் வருவன-எந்தாய்-கேள் என விளம்பலுற்றான் 10-1

#2
வாச குழலாள் மயில் சீதையை நீ
ஆசைப்படுகின்றது நன்று அல காண்
நாசத்தை உறும் உயிர் போய் நானே
நேசப்படுகின்றனன் என்றனனே 10-2

#3
சிறியோர் செயல் துன்மதி செய்தனை நீ
வெறி ஆர் குழல் சீதையை விட்டு அகல
செறி ஆர் மணி மாளிகை சேர் தரு நின்
அறியாமையினால் அழிவானதுவே 10-3

#4
வண்டு ஆர் குழலார் மலர்மாதினை நீ
கண்டே மனம் வைப்பது கற்பிலகாண்
விண்டே எதிர் வாலிதன் மார்பு உருவ
கண்டோ ன் அவனே கணை ஒன்றதனால் 10-4

#5
ஆரே பிறர் தாரம் உறுப்பு அதனில்
நேரே நினைகின்றவர் நீ நினைவாய்
பாரே இழிவு ஆனது தான் நிலையின்
பேரே ஒழிவு ஆனது என்று சொன்னான் 10-5

#6
வட்ட மா மதி முகத்து எம் மங்கையை மூக்கு அரிந்த
கட்ட மானிடவர் தங்கள் கை வலி காட்டினாலும்
இட்ட நாள் எல்லைதன்னை யாவரே விலக்க வல்லார்
பட்டு நான் விழுந்தால் அன்றி பாவையை விடுவது உண்டோ 11-1

#7
பழுது இலா வடிவினாளை பால் அன்ன மொழியினாளை
தழுவினால் அன்றி ஆசை தவிருமோ தவம் இலாதாய்
முழுதும் வானவரை வென்றேன் மூவர் என் முன் நில்லார்கள்
அழிவுதான் எனக்கும் உண்டோ ஆண் அலாய் பேடி என்றான் 11-2

#8
சிறு தொழிற்கு உரியர் ஆகி தீவினைக்கு உறவாய் நின்ற
எறி படை அரக்கர் என்னும் எண் இலா வெள்ள சேனை
மறி திரை கடலின் போத வான் முரசு இயம்ப வல்லே
தெறு சினத்து அரக்கன் வானோர் திகைத்து உளம் குலைய சென்றான் 16-1

#9
அச்சு எனலாக முன்பின் தோன்றலும் அறாத மெய்யன்
தச்சன பகழி மாரி எண்ணல் ஆம் தகவும் தத்தி
பச்செனும் மரத்தவாறு பெருக்கவும் பதையாநின்றான்
நிச்சயம் போரில் ஆற்றல் ஓய்வு இலன் நெஞ்சம் அஞ்சான் 30-1

#10
வான் தலை எடுக்க வேலை மண் தலை எடுக்க வானோர்
கோன் தலை எடுக்க வேத குலம் தலை எடுக்க குன்றா
தேன் தலையெடுக்கும் தாராய் தேவரை வென்றான் தீய
ஊன் தலை எடுத்தாய் நீ என்று உரைத்தனர் உவகை மிக்கார் 62-1

#11
கம்ப மதத்து களி யானை காவல் சனகன் பெற்றெடுத்த
கொம்பும் என்பால் இனி வந்து குறுகினாள் என்று அகம் குளிர்ந்தேன்
வம்பு செறிந்த மலர் கோயில் மறையோன் படைத்த மா நிலத்தில்
தம்பி உடையான் பகை அஞ்சான் என்னும் மாற்றம் தந்தனையால் 67-1
@29. இராவணன் சோகப் படலம்

#1
தொழும்பு செய்து உளர் ஆம் தேவர் துயரினர் போல தாமும்
பழங்கண் உற்று உடைய வேந்தன் இணை அடி விடாது பற்றி
உளம் களிப்புறுவோர் ஓயாது அழுதனர் மைந்தன் ஆவி
இழந்தனன் என்ன கேட்டு ஆங்கு இடி உறும் அரவை ஒத்தாள் 43-1

#2
உம்பரின் உலவும் தெய்வ உருப்பசி முதல ஆய
ஐம்பது கோடி தெய்வ தாதியர் அழுது சூழ்ந்தார்
தும்பியின் இனத்தை எல்லாம் தொலைத்திடும் குருளை மாய
கம்பம் உற்று அரியின் பேடு கலங்கியது என்ன சோர்ந்தாள் 43-2

#3
பத்து எனும் திசையும் வென்று கயிலையில் பரனை எய்தி
அ தலை அமர் செய்து ஆற்றான் அவன் இடத்து உமை அன்பால் தன்
கைத்தல கிளி நிற்கு ஈய கவர்ந்து எனக்கு அளித்து நின்ற
வித்தக களிறே இன்னும் வேண்டினேன் எழுந்திராயே 50-1

#4
மஞ்சு அன மேனி வள்ளல் வளரும் நாள் மன்னர் தோள் சேர்
நஞ்சு அன விழியால் அன்றி நகை மணி புதல்வர் நல்லோர்
செம் சிலை மலரால் கோலி திரிந்தவா என்னில் செல்லும்
வெம் சமர் இன்னும் காண வல்லனோ விதி இலாதேன் 52-1
@30. படைக் காட்சிப் படலம்

#1
தொல்லை சேர் அண்ட கோடி தொகையில் மற்று அரக்கர் சேனை
இல்லையால் எவரும் இன்னே எய்திய இலங்கை என்னும்
மல்லல் மா நகரும் போதா வான் முதல் திசைகள் பத்தின்
எல்லை உற்றளவும் நின்று அங்கு எழுந்தது சேனை வெள்ளம் 2-1

#2
மேய சக்கர பொருப்பிடை மேவிய திறலோர்
ஆயிர தொகை பெரும் தலை உடையவர் அடங்கா
மாயை கற்றவர் வரத்தினர் வலியினர் மற போர்
தீயர் இ திசை வரும் படை அரக்கர் – திண் திறலோய் 22-1

#3
சீறு கோள் அரி முகத்தினர் திறற் புலி முகத்து ஐஞ்-
ஞூறு வான் தலை உடையவர் நூற்றிதழ் கமலத்து
ஏறுவான் தரும் வரத்தினர் ஏழ் பிலத்து உறைவோர்
ஈறு இலாத பல் அரக்கர் மற்று எவரினும் வலியோர் 25-1

#4
சாலும் மா பெரும் தலைவர்கள் தயங்கு எரி நுதற் கண்
சூல பாணிதன் வரத்தினர் தொகுத்த பல் கோடி
மேலையாம் அண்டத்து உறைபவர் இவர் பண்டு விறலால்
கோல வேலுடை குமரனை கொடும் சமர் துரந்தோர் 27-1

#5
ஆதி அம் படை தலைவர்கள் வெள்ளம் நூறு அடு போர்
மோது வீரர் மற்று ஆயிர வெள்ளம் மொய் மனத்தோர்
காது வெம் கொலை கரி பரி கடும் திறல் காலாள்
ஓது வெள்ளம் மற்று உலப்பு இல கோடி என்று உரைப்பார் 30-1

#6
அன்னது அன்றியும் ஆழி நீர்க்கு அ புறத்து உலகில்
துன்னுறும் சத கோடி வெள்ள தொகை அரக்கர் –
தன்னை ஓர் கணத்து எரித்தது சலபதி வேண்ட
மன் இராகவன் வாளி ஒன்று அவை அறிந்திலிரோ 43-1
@31. மூலபல வதைப் படலம்

#1
போனபின் பல புவனம் என்று உரைக்கின்ற பொறை சேர்
ஆன அண்டங்கள் எவற்றினும் அமர்ந்திடும் மூல
தானை தன்னையும் எழுக என சாற்றினர் – தறுகண்
கோன் உரைத்தமை தலைக்கொளும் கொடும் படைத்தலைவர் 3-1

#2
மூன்றின் நூற்றினோடு ஆயிரம் மூள்வன வெள்ளம்
ஆன்ற தேர் பரி கரியவை ஆளையும் அடங்கி
மூன்று லோகமும் முற்றும் போய் முடிவுறும் என்ன
ஏன்று சென்றது அவ் இராமன்மேல் இராக்கத பரவை 23-1

#3
தான் அல்லாது ஒரு பொருள் இலை என தகும் முதல்வன்-
தான் இராமன் என்று எழில் உரு எடுத்ததும் தவறோ
தான் எம்மோடு பல் புவனங்கள் தனி வயிற்று அடக்கும்
தானம் மேவினர்க்கு இவர் ஒரு பொருள் என தகுமோ 26-1

#4
நின்று காண்குதிர் இறை பொழுது இங்கு நீர் வெருவல்
இன்று இராகவன் பகழி மற்று இராக்கத புணரி
கொன்று வற்றிட குறைத்து உயிர் குடிக்கும் என்று அமரர்க்கு
அன்று முக்கணான் உரைத்தல் கேட்டு அவர் உளம் தெளிந்தார் 26-2

#5
வானின் மேவிய அமரருக்கு இ துணை மறுக்கம்
ஆன போது இனி அகலிடத்து உள்ள பல் உயிர்கள்
ஈனம் எய்தியது இயம்பல் என் எழுபது வெள்ள
தானை ஆகிய கவி படை சலித்தது பெரிதால் 26-3

#6
வாய் உலர்ந்தன சில சில வயிறு எரி தவழ்வுற்று
ஓய்தல் உந்தின சில சில ஓடின நடுங்கி
சாய்தல் உந்தின சில சில தாழ் கடற்கு இடையே
பாய்தல் உந்தின சில சில-படர் கவி படைகள் 29-1

#7
அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும் இருவர்
தனுவின் ஆற்றலும் தங்களை தாங்குவர் தாங்கார்
கனியும் காய்களும் உணவு உள மலை உள காக்க
மனிதர் ஆளில் என் இராக்கதர் ஆளில் என் வையம் 44-1

#8
என்று சாம்பவன் முதலிய தலைவர்கள் இயம்ப
குன்று உலாம் புயத்து அங்கதன் குறுநகை புரிந்தே
நன்று நும் உரை நாயகர் பிழைத்து நம் உயிர் கொண்டு
ஒன்று வாழ்தலும் உரிமையதே என உரைப்பான் 44-2

#9
ஆளி மா முகவர் சீறும் அடு புலி முகவர் மிக்க
யாளி மா முகவர் யானை முகவர் மற்று எரியும் வெம் கண்
கூளி மா முகவர் ஆதி அளப்பு இல கோடி உள்ளார்
ஊழி சென்றாலும் உட்கார் ஒருவர் ஓர் அண்டம் உண்பார் 52-1

#10
என்று எடுத்து எண்கின் தானைக்கு இறையவன் இயம்பலோடும்
வன் திறல் குலிசம் ஓச்சி வரை சிறகு அரிந்து வெள்ளி
குன்றிடை நீல கொண்மூ அமர்ந்தென மத திண் குன்றில்
நின்றவன் அளித்த மைந்தன் மகன் இவை நிகழ்த்தலுற்றான் 54-1

#11
இசைந்தனன் அமருக்கு எல்லா உலகமும் இமைப்பின் வாரி
பிசைந்து சிற்றுதரத்து உண்ணப்பெற்ற நாள் பிடித்த மூர்த்தம்
இசைந்தது போலும் என்று ஆங்கு அயன் சிவன் இருவர் தத்தம்
வசம் திகழ் கருத்தினூடே மதித்திட வயங்கி நின்றான் 69-1

#12
மற்றும் வேறு அறத்துள் நின்ற வான நாடு அணைந்துளோர்
கொற்ற வில்லி வெல்க வஞ்ச மாயர் வீசு குவலயத்து
உற்ற தீமை தீர்க இன்றொடு என்று கூறினார் நிலம்
துற்ற வெம் படை கை நீசர் இன்ன இன்ன சொல்லினார் 72-1

#13
அரை கணத்து அரக்கர் வெள்ளம் அளவு இல் கோடி ஆவி போய்
தரை பட பல் அண்ட கோடி தகர அண்ணல்தன் கை வில்
இரைக்கும் நாண் இடிப்பினுக்கு உடைந்து இராம ராம என்று
உரைக்கும் நாமமே எழுந்தது உம்பரோடும் இம்பரே 76-1

#14
சிரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் செம் சுடர் படை
கரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் கல்லை வெல்லு மா
உரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் ஊழி காலம் வாழ்
வரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்-மண்ணின்மீது அரோ 76-2

#15
அண்ட கோளம் எண் திசாமுகங்கள் எங்கும் ஆகியே
மண்டி மூடி வாழ் அரக்கர்தாமும் வாகை வீரன்மேல்
கொண்டல் ஏழும் ஊழிவாய் ஓர் குன்றில் மாரி பொழிவபோல்
சண்ட வேகம் ஏறி வாளி மழை சொரிந்து தாக்கினார் 83-1

#16
தேரின்மீது அனந்த கோடி நிருதர் சீறு செம் முக
காரின்மீது அனந்த கோடி வஞ்சர் காவின் வாவு மா
தாரின்மீது அனந்த கோடி தறுகண் நீசர் தாழ்வு இலா
பாரின்மீது அனந்த கோடி பதகர் வந்து பற்றினார் 83-2

#17
துடி தவண்டை சங்கு பேரி துந்துமி குலங்கள் கை
தடி துவண்ட ஞாண் இரங்கு தக்கையோடு பம்பை மற்று
இடி பொதிந்த முரசம் ஆதி எண் இல் பல்லிய குழாம்
படி நடுங்கவே பகை களத்தின் ஓசை விஞ்சவே 83-3

#18
இரைந்து அடர்ந்து அரக்கர் வெள்ளம் எண் இல் கோடி இடைவிடாது
உருத்தல் கண்டு இராகவன் புன்முறுவல் கொண்டு ஒவ்வொருவருக்கு
ஒருத்தனாய் தன்மை தானும் உணர்வுறாதபடி எழ
சரத்தின் மாரி பெய்து அரக்கர் தலை தரைக்கண் வீழ்த்தினான் 83-4

#19
நுனித்திடத்திற்கு அரும் கடுப்பின் நொடிவரைக்குள் எங்குமாய்
குனித்த வில் கை வாளி மாரி மழை சொரிந்து கோறலால்
மனித்தன் மற்று ஒருத்தன் என்ற வாய்மை நன்று நன்று எனா
வினை திறத்து அரக்கர் விம்மிதத்தர் ஆய் விளம்புவார் 83-5

#20
விண்ணின்மீது அனந்த கோடி வீரன் என்பர் அல்ல இம்
மண்ணின்மீது அனந்த கோடி மனிதன் என்பர் அல்ல வெம்
கண்ணினூடு அனந்த கோடி கண்ணன் என்பர் அல்ல உம்
எண்ணமீது அனந்த கோடி உண்டு இராமன் என்பரால் 83-6

#21
இ திறத்து அரக்கர் வெள்ளம் எங்கும் ஈது இயம்ப நின்று
எ திறத்தினும் விடாது இராமன் எங்கும் எங்குமாய்
அ திறத்து அரக்கரோடும் ஆனை தேர் பரி குலம்
தத்துற சரத்தின் மாரியால் தடிந்து வீழ்த்தினான் 83-7

#22
இடைவிடாது அளப்பு இல் வெள்ளம் இற்று இறந்து போகவும்
படைவிடாது அரக்கர் ஆளிபோல் வளைந்து பற்றவும்
கொடைவிடாதவன் பொருள் குறைந்திடாதும் வீதல்போல்
தொடைவிடாது இராமன் வாளி வஞ்சர்மீது தூவினான் 83-8

#23
இன்னவாறு இராமன் எய்து சேனை வெள்ளம் யாவையும்
சின்னபின்னமாக நீறு செய்தல் கண்டு திருகியே
மின்னு வாள் அரக்கர் வெள்ளம் எண்ணில் கோடி வெய்தினின்
துன்னி மூடும் அந்தகாரம் என்ன வந்து சுற்றினார் 96-1

#24
வானின்மீது அனந்த கோடி மாய் வஞ்சர் மண்டினார்
ஆனைமீது அனந்த கோடி அடல் அரக்கர் அண்மினார்
சோனை மேகம் ஒத்து அனந்த கோடி தீயர் சுற்றினார்
மீன வேலை ஒத்து அனந்த கோடி வஞ்சர் மேவினார் 96-2

#25
அடல் வார் சிலை அமலன் சொரி கனல் வெம் கணை கதுவி
தொடர் போர் வய நிருத கடல் சுவறும்படி பருக
படுமாறு அயல் வரு தீயவர் பல கோடியர் பலரும்
சுடர் ஏறிய படை மாரிகள் சொரிந்தார் புடை வளைந்தார் 101-1

#26
கோல் பொத்திய நெடு நாணினில் கோமான் தொடை நெகிழ
மேல் பொத்திய நிருத குலம் வேரோடு உடன் விளிய
தோல் பொத்திய உயிர் யாவையும் தொடக்கற்று உடன் மடிய
கால் பொத்திய கை ஒத்தன காகுத்தன் வெம் கணையால் 102-1

#27
அது போது அகல் வானில் மறைந்து அரு மாயை செய் அரக்கர்
எது போதினும் அழிவு அற்றவர் இருள் வான் உற மூடி
சத கோடிகள் கணை மாரிகள் தான் எங்கும் நிறைத்தார்
சது மா மறை அமலன் அவை தடிந்தான் தழற் படையால் 108-1

#28
அமலன் விடும் அனல் வெம் படை அடு வெம் பொறி சிதறி
திமிலம்கொடு ககனம் செறி திறல் வஞ்சகர் புரியும்
பிமரம் கெட அவர்தம் உடல் பிளவுண்டு உயிர் அழிய
சமரம் புகும் அளவு இல்லவர்தமை வென்றது ஓர் நொடியின் 108-2

#29
காலாள் எனும் நிருத படை வெள்ளம் கடைகணித்தற்கு
ஏலாதன பல கோடிகள் இமையோர் கரை காணார்
பாலாழியின்மிசையே துயில் பரமன் சிலை பொழியும்
கோலால் அவர் குறைவுற்றனர் குறையாதவர் கொதித்தார் 112-1

#30
கொதித்தார் எழு கடல்போல் வளைவுற்றார் கொடு முசலம்
குதித்து ஓடிய சிலை வாளிகள் கூர் வேல் கதை குலிசம்
விதைத்தார் பொரும் அமலன்மிசை வெய்தே பல உயிரும்
விதித்தானையும் விதித்தான் சிலை வளைத்தே சரம் விதைத்தான் 112-2

#31
கொள்ளை வெம் சமர் கோலும் இராக்கத
வெள்ளமும் குறைவுற்றது மேடொடு
பள்ளம் இன்றி படும் குருதி கடல்
உள்ள வான் கடற்கு ஓடியது இல்லையால் 127-1

#32
தேயம் எங்கும் இடம் சிறிது இன்றியே
மாய வஞ்சகர் மடிய பிண மலை
போய் வளர்ந்து விசும்பொடும் புல்லிற்றால்
ஆய தன்மை அங்கு அண்ணலும் நோக்கியே 127-2

#33
கடல் எரிக் கனற் படை கார்முகத்து –
இடை தொடுத்து அதை ஏவி இரும் பிண
திடல் அனைத்தையும் தீர்க்க என செப்பினான்
பொடி-படுத்தி இமைப்பில் புகுந்ததால் 127-3

#34
அண்டம் முற்றும் அனைத்து உயிரும் எடுத்து
உண்டு உமிழ்ந்து படைக்கும் ஒருவனுக்கு
உண்டு எனற்கு அரிது என் உளது இ செயல்
எண் தரும் தவர் எண்ணுவது இல்லையால் 127-4

#35
இற்றது ஆக இராக்கத வீரர்கள்
உற்று ஓர் ஆயிர வெள்ளம் உடன்று எதிர்
சுற்றினார் படை மாரி சொரிந்துளார்
வெற்றி வீரனும் கை வில் வணக்கினான் 127-5

#36
தலை அறுந்தவரும் தட திண் புய
மலை அறுந்தவரும் வய கையொடு
சிலை அறுந்தவரும் திமிரத்தின் மெய்ம்
நிலை அறுந்தவரும் அன்றி நின்றது ஆர் 127-6

#37
தேர் அளப்பு இல பட்ட சிறு கண் மா
கார் அளப்பு இல பட்ட கடும் பரி
தார் அளப்பு இல பட்ட தடம் புய
பேர் அளப்பு இலர் பட்டனர் பீடு இலார் 127-7

#38
வானகத்தோடு மா நிலம் எண் திசை
ஆன திக்கு ஒரு பத்தும் அடுத்துற
தான் நெருக்கிய வஞ்சகர்தம் தலை
போன திக்கு அறியாது புரட்டினான் 127-8

#39
சுடரும் வேல் கணை தோமரம் சக்கரம்
அடரும் மூஇலை சூலம் மற்று ஆதியாம்
படையின் மாரி பதகர் சொரிந்து இடை
தொடர வீரன் துணித்தனன் வாளியால் 127-9

#40
ஏனமோடு எண்கு சீயம் எழு மத
யானை ஆளி புலி என்று இவை முகம்
ஆன தீய அரக்கர் மடிந்திட
வானவன் கணை மாரி வழங்கினான் 127-10

#41
வடி சுடர் கணை மாற்ற அங்கு ஆயிர
முடியுடை தலையோர் தலையும் முடிந்து
இடுவது இ தலத்தே இடி ஏற்றில் வான்
வட வரை சிகரங்கள் மறிவபோல் 127-11

#42
இரதம் யானை இவுளியொடு எண் இலா
நிருதர் வெள்ளம் நெடு நிலத்து இற்றிட
சரதம் அன்னை சொல் தாங்கி தவத்து உறும்
விரத வீரன் தன் வாளியின் வீட்டினான் 127-12

#43
கடு வைத்து ஆர் களன் கை படு கார்முகம்
ஒடிய தாக்கும் ஒருவன் சிலையின்வாய்
வடவை தீ சொரி வாளியின் மா மழை
பட மற்று ஆயிர வெள்ளமும் பட்டதால் 127-13

#44
பால் ஒத்து ஆழியில் பாம்பு-அணைமேல் துயில்
சீலத்தான் இமையோர் செய் தவத்தினின்
ஞாலத்து ஆய இறைவன் இராவணன்
மூல தானை முடிய முருக்கினான் 127-14

#45
ஈது அவர் சொல கயிலை ஈசனும் நகைத்து இமையவர்க்கும் ஒளி வான்
ஓதல் இல் அரும் பிரம தத்துவம் முதல் கடவுள் யாமும் உணரா
பேதம் உறு மாயை பல பேணி விளையாடுதல் செய்யாது பெருமான்
நீத உருவம் கொளும் இராமன் எனவே கருதி நின்ற மொழி பொன்றி விடுமோ 149-1

#46
பாறு தொடர் பகழி மாரி நிரைகள் பட
நீறுபடும் இரத நிரையின் உடல் தவிர
வேறு படர அடர் விரவு சுடர் வளையம்
மாறுபட உலகின் மலைகள் அளறுபட 154-1

#47
திரிய அலகு இல் மலை திரிய இரு சுடர்கள்
திரிய ஒருவன் எதிர் சின விலோடும் அடர
வரி கை ஒரு களிறு திரிய விடு குயவர்
திரிகை என உலகு முழுதும் இடை திரிய 163-1

#48
கரிய திலத மலை திரிய வளி சுடர்கள்
இரிய ஒரு விலுடை இரு கை ஒரு களிறு
திரிய விடு குயவர் திரிகை என உலகு
தெரிய எழு கடலும் முழுதும் முறை திரிய 164-1

#49
ஆய வல் அரக்கர் மற்று அளவு இல்லாதவர்
தீ எழும் விழியினர் சினம் கொள் சிந்தையர்
காயம் வெம் படையினர் கடலின் பொங்கியே
மேயினர் தம்தமில் இவை விளம்புவார் 170-1

#50
அன்றியும் ஒருவன் இங்கு அமரில் நம் படை
என்று உள கரி பரி இரதம் ஈறு இல் போர்
வென்றிடும் பதாதியர் அனந்த வெள்ளமும்
கொன்றனன் கொதித்து ஒரு கடிகை ஏழினே 171-1

#51
இவ் உரை வன்னி அங்கு இயம்ப ஈதுபோல்
செவ் உரை வேறு இலை என்று தீயவர்
அவ் உரைக்கு அனைவரும் அமைந்து அங்கு அண்ணலோடு
எவ் உரையும் விடுத்து அமரின் ஏற்றுவார் 177-1

#52
இன்னவர் ஐ-இரு கோடி என்று உள
மன்னவர் சதகமும் உடையவர் மற்று அவர்
துன்னினர் மனத்து அனல் சுறு கொண்டு ஏறிட
உன்னினர் ஒருவருக்கு ஒருவர் ஓதுவார் 184-1

#53
அடல் ஐ-இரு கோடி அரக்கர் எனும்
மிடல் மன்னவர் வீரனொடும் பொருவார்
கடை கண்டிலர் காய் கரி தேர் பரி மா
படை கண்டிலர் கண்டிலர் பட்ட திறம் 206-1

#54
அங்கு அங்கு அவர்தம்மொடும் ஐயன் உயிர்க்கு
அங்கு அங்கு உளன் என்பது தான் அறியாற்கு
எங்கு எங்கும் இராமன் இராமன் எனா
எங்கு எங்கும் இயம்பவும் உற்றுளனால் 212-1

#55
ஏயும் ஐ-இரண்டு கோடி இறைவர் ஒவ்வொருவர் சேனை
ஆயிர வெள்ளம்தானும் அ துணை வெள்ளம் ஆகி
தூயவன் அவர்தம் சேனை தொலைத்தபின் இறைவர் ஆவி
போய் அற பகழி மாரி பொழிந்தனன் பொன்றி வீழ்ந்தான் 213-1

#56
இட்டதோர் பேயரின் ஈர்-ஐயாயிரம்
பட்டபோது ஆடும் ஓர் வடு குறைத்தலை
சுட்ட நூறாயிரம் கவந்தம் ஆடிட
தொட்டனன் சிலை அணி மணி துணிக்கென 220-1

#57
மாத்திரை போதினில் மணி தொனித்திட
போர் தொழில் அரக்கர்மேல் பொருத பூசலில்
ஏத்திடை இடைவிடாது ஏழு நாழிகை
கீர்த்தியன் சிலை மணி கிணிகிணென்றதே 220-2

#58
மொய்த்தனர் நூறு வெள்ள முரண் படைத்தலைவர் கூட்டம்
பத்து நூறு ஆய வெள்ள படையொடு மாயை பற்றி
ஒத்த யோசனை நூறு என்ன ஓதிய வரைப்பின் ஓங்கி
பத்து எனும் திசையும் மூடி சொரிந்தனர் படையின் மாரி 222-1

#59
யோசனை நூற்றின் வட்டம் இடையறாது உற்ற சேனை
தூசி வந்து அண்ணல்தன்னை போக்கு அற வளைத்து சுற்றி
வீசின படையும் அம்பும் மிடைதலின் விண்ணோர் யாக்கை
கூசினர் பொடியர் என்றும் குமிழ்ந்தனர் ஓம கூடம் 222-2

#60
முன்னவன் அதனை நோக்கி முறுவலித்து அவர்கள் ஏவும்
பல் நெடும் பருவ மாரி படை எலாம் பொடிபட்டு ஓட
தன் நெடும் சிலையின் மாரிதனக்கு எழு முகிலும் அஞ்ச
துன்னுவித்து அரக்கர் வெள்ள சேனையை தொலைத்தல் செய்தான் 222-3

#61
கால வெம் கனலின் மாய கடும் படை சிலையில் பூட்டி
மேலவன் விடுதலோடும் வெம் படை அரக்கர் வெள்ளம்
நாலும் மூ-இரண்டும் ஆன நூறு ஒரு கணத்தில் நண்ணி
தாலமேல் படுத்து மீண்டது அலன் சரம் தலைவர் தள்ளி 222-4

#62
முடிந்தது மூலத்தானை மூவுலகு இருண்ட தீமை
விடிந்தது மேலை வானோர் வெம் துயர் அவரினோடும்
பொடிந்தது புனிதன் வாளி போக்கு உற பொய்யர் ஆவி
படிந்தது ககனம் எங்கும் பலித்தது தருமம் அன்றே 222-5

#63
ஈது ஒரு விளையாட்டு அன்பின் இத்துணை தாழ்த்தான் ஐயன்
ஏது அவன் துணியின் இப்பால் நீசர் ஓர் பொருளோ இன்னும்
போதுமோ புவன கோடி போதினும் கணத்தில் பொன்றி
போதும் என்று அயனோடு ஈசன் அமரர்க்கு புகன்று நின்றான் 222-6

#64
சேனை அம் தலைவர் சேனை முழுவதும் அழிந்து சிந்த
தான் எரி கனலின் பொங்கி தரிப்பு இலர் கடலின் சூழ்ந்தே
வானகம் மறைய தம் தம் படை கல மாரி பெய்தார்
ஆனவை முழுதும் சிந்த அறுத்தனன் அமலன் அம்பால் 222-7

#65
பகிரண்ட பரப்பில் நின்ற பல பல கோடி வெள்ள
தொகை மண்டும் அரக்கர் யாரும் துஞ்சினர் கருவும் துஞ்ச
செகம் உண்ட ஒருவன் செம் கை சிலையுறு மணியின் ஓசை
புக அண்டம் முழுதும் பாலின் பிரை என பொலிந்தது அன்றே 225-1

#66
நணியனாய் தமியன் தோன்றும் நம்பியை வளைந்த வஞ்சர்
அணி உறாது அகன்ற வெள்ளம் அவை மடிந்து இறந்த கால
கணிதம் ஏழரையே கொண்ட கடிகை அ கடிகைவாய் வில்
மணி ஒலி எழுப்ப வானோர் வழுத்திட வள்ளல் நின்றான் 225-2