மிகைப் பாடல்கள், யுத்த காண்டம் 2 – கம்பராமாயணம்

@15. முதற் போர் புரி படலம்

#1
ஆதி நாயகன் அங்கு அது கூறு முன்
பாத மீது பணிந்து அருள் பற்றியே
காது வெம் படை காவலர் ஆதியோர்
மோது போரை முயலுதல் மேயினார் 3-1

#2
அன்ன போது அங்கு அரக்கர் பிரான் படை
உன்னும் ஆயிர வெள்ளம் உடன்று எழா
கன்னி மா மதிலின் புறம் காத்து உடன்
முன்னி வெம் சமர் மூண்டு எழுந்துற்றதே 15-1

#3
ஆர்த்த போதில் அரும் திறல் சிங்கனும்
சூர்த்த நோக்குடை சூரனும் துற்கனும்
கூர்த்த வெம் கதிர் கோபனொடு ஆதியாய்
வேர்த்து அரக்கர் வியன் படை வீசினார் 55-1

#4
போர் செய் காலை இடும்பனும் பொங்கி அ
கார் செய் மேனி அரக்கனை கைகளால்
மேரு மீது இடி வீழ்ந்தென தாக்கலும்
சோர்வு இலாத அரக்கனும் துள்ளினான் 65-1

#5
வரு சுமாலி மகன் பிரகத்தன் அங்கு
இரதம் ஒன்றதின் ஏறினன் பின்னரும்
வரி நெடும் சிலை வேறு ஒன்று வாங்கியே
சொரியும் மா மழைபோல் சரம் தூவினான் 72-1

#6
வால் அறுந்து வயிறு துணிந்து இரு
கால் அறுந்து கழுத்து அறுந்து அங்கம் ஆம்
மேல் அறுந்து விளிந்தன-வெம் சமர்
ஆலும் வானர சேனை அனேகமே 72-2

#7
நீலன் நெஞ்சிடை அஞ்சு நெடும் சரம்
ஆலம் அன்ன அரக்கன் அழுத்தலும்
சால நொந்தனன் நொந்து தருக்கு அறா
கால வெம் கனல்போல் கனன்றான் அரோ 72-3

#8
கனலும் வெம் கண் அரக்கன் கடும் சிலை
புனையும் தேர் பரி பாகொடு போய் அற
நினைவதற்குமுன் நீலன் அங்கு ஓர் நெடும்
தனி மராமரம் தான் கொண்டு தாக்கினான் 72-4

#9
நிருதர் தானை உடைந்தது நேர்கிலா
தரும கோபன் சதமகன் சண்டியோடு
எரிமுகன் இவர் ஆதி இராக்கதர்
செருவின் வெற்றி திகழ வந்து எய்தினார் 79-1

#10
ஏவி மற்று அயல் நின்ற அரக்கரை
தா இல் என் ஒரு தேரினை தம் என
கூவ மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார்
தேவர் ஆதியர் நெஞ்சம் திடுக்கென 93-1

#11
ஆய்வு அரும் சத கோடி அடல் பரி
மாய்வு அரும் திரைபோல் வர பூண்டது
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல்
சாய இந்திரனே பண்டு தந்தது 93-2

#12
ஏறினான் இட தோள் துடித்தே அற
கூறினான் குரங்கொடு மனிதரை
நீறது ஆக்குவென் என்று நெருப்பு எழ
சீறினான் சிவன் போல அ தேரின் மேல் 94-1

#13
அண்ட கோடி அகிலமும் இன்றொடே
விண்டு நீங்குறும் என்று உயர் விண்ணவர்
கொண்ட ஆகுலத்தால் மனம் கூசியே
புண்டரீகன் பதியிடை போயினார் 99-1

#14
வெள்ளம் ஆங்கு அளப்பில வெள்ளம் வாம் பரி
கொள்ளை யார் அதன் கணக்கு அறிந்து கூறுவார்
உள்ளம் ஆய்ந்து ஓது இரு நூறு வெள்ளம் ஆம்
கள்ள வாள் அரக்கர்கள் கடலின் சூழவே 105-1

#15
நிருதர்கள் எவருமே நோக்கி நின்று போர்
பொருதனர் அயில் முதல் படைகள் போக்கியே
மரமொடு மலைகளை பிடுங்கி வானரர்
செருவிடை தீயவர் சிதற தாக்கினார் 119-1

#16
அண்ட கோளகை வெடித்து அவனி கீண்டுற
எண் திசாமுகங்களும் இடிய ஈசனை
கொண்ட வான் கயிலையும் சிகர கோடிகள்
விண்டு நீங்கியதுஎனில் விளம்ப வேண்டுமோ 123-1

#17
வச்சிர வரை புயத்து அரக்கன் வாங்கிய
கை சிலை நாண் ஒலி கலந்த காலையில்
அச்சம் இல் புரந்தரன் ஆதி தேவர்கள்
உச்சிகள் பொதிர் எறிந்து உரம் மடங்கினார் 123-2

#18
இ புறத்து உயிர்கள் எல்லாம் இரிந்திட அரக்கர் கோமான்
கை படு சிலையை வாங்கி கால மா மழையும் எஞ்ச
மு புறத்து உலகம் எல்லாம் மூடியது என்ன மூளும்
அப்பு மா மாரி சிந்தி அண்டமும் பிளக்க ஆர்த்தான் 127-1

#19
ஆர்த்தவன் பகழி மாரி சொரிந்து அரி சேனை எல்லாம்
தீர்த்து ஒரு கணத்தில் போக்க செம் கதிர் சிறுவன் தானும்
பார்த்து உளம் அழன்று பொங்கி பரு வலி அரக்கனோடும்
போர் தொழிற்கு ஒருவன் போல பொருப்பு ஒன்று ஆங்கு ஏந்தி புக்கான் 127-2

#20
அலக்கணுற்று அனுமன் சோர அங்கதன் முதலாம் வீரர்
மலைக்குற மரங்கள் வாங்கி வருதல் கண்டு அரக்கன் வாளி
சிலைக்கிடை தொடுத்து அங்கு ஏந்து மா மலை சிதைத்திட்டு அன்னோர்
கலக்கமுற்று இரிய ஒவ்வோர் பகழியின் காய்ந்து கொல்வான் 138-1

#21
நகைத்து இது புரிந்தான்கொல்லோ என்பதன் முன்பு நாண்வாய்
துகைத்து ஒலி ஒடுங்காமுன்னம் சோனை அம் புயலும் எஞ்ச
மிகை படு சரத்தின் மாரி வீரனுக்கு இளையோன் மேவும்
பகை புலத்து அரக்கன் சேனை பரவை மேல் பொழிவதானான் 143-1

#22
எரி முக பகழி மாரி இலக்குவன் சிலையின் கோலி
சொரிதர களிறு பொன் தேர் துரங்கமோடு இசைந்த காலாள்
நிருதர்கள் அளப்பு இல் கோடி நெடும் படை தலைவர் வல்லே
பொரு களமீதில் சிந்தி பொன்றினர் என்ப மன்னோ 153-1

#23
எதிர் வரும் அரக்கர் கோமான் இலக்குவன் தன்னை நோக்கி
மதியிலி மனிதன் நீயும் வாள் அமர்க்கு ஒருவன் போலாம்
இது பொழுது என் கை வாளிக்கு இரை என நகைத்தான் வீரன்
முதிர்தரு கோபம் மூள மொழிந்து அமர் முடுக்கலுற்றான் 156-1

#24
அரக்கன் மனம் கொதித்து ஆண்தகை அமலன் தனக்கு இளையோன்
துரக்கும் பல விசிகம் துகள்பட நூறினன் அது கண்டு
அருக்கன் குல மருமான் அழி காலத்திடை எழு கார்
நெருக்கும்படி சர தாரையின் நெடு மா மழை சொரிந்தான் 158-1

#25
மாயத்து உரு எடுத்து என் எதிர் மதியாது இது பெரிது என்றே
இ தரை நின்றாய் எனது அடல் வாரி சிலையிடையே
தீ ஒத்து எரி பகழிக்கு இரை செய்வேன் இது பொறுத்தேன்
ஞாயத்தொடும் ஒரு குத்து அமர் புரிதற்கு எதிர் வரும் நீ 171-1

#26
கல் தங்கிய முழுமார்பிடை கவியின் கரம் அதனால்
உற்று ஒன்றிய குத்தின வலி அதனால் உடல் உளைவான்
பற்று இன்றிய ஒரு மால் வரை அனையான் ஒரு படியால்
மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தாலென உய்ந்தான் 179-1

#27
கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடும் கரம் ஒன்றதின் வலியால்
மதித்தான் நெடு வய மாருதி மார்பத்திடை வர மேல்
புதைத்து ஆங்குறும் இடிஏறு என பொறி சிந்திய புவனம்
விதித்தான் முதல் இமையோர் உளம் வெள்கும்படி விட்டான் 184-1

#28
உருத்து வெம் சினத்து அரக்கன் அங்கு ஒரு கையின் புடைப்ப
வரை தடம் புய மாருதி மயங்கியது அறிந்து ஆங்கு
இரைத்த திண் பரி தேர்நின்றும் இரு நிலத்து இழிய
சரித்து வானரம் மடிந்திட சர மழை பொழிந்தான் 186-1

#29
உருத்து இலக்குவன் ஒரு கணத்து அவன் எதிர் ஊன்றி
கரத்தின் வெம் சிலை வளைக்குமுன் கடும் சினத்து அரக்கன்
சிரித்து வெம் பொறி கதுவிட திசைமுகம் அடைய
பொருத்தி வெம் சரம் பொழிந்து இவை விலக்கு என புகன்றான் 200-1

#30
பண்டை நாள் தரு பனி திரை புனல் சடை ஏற்று
கொண்ட தூயவன் கொடும் தொழில் நிருதர்கள் குழுமி
மண்டு வாள் அமர் களத்தில் அம் மலர் கழல் சேறல்
கண்டு கூசலன் நிற்கும் என்றால் அது கடனே 216-1

#31
அனைய கண்டு இகல் அரக்கருக்கு இறைவன் அ பொழுதில்
மனம் நெருப்பு எழ கொதித்து ஒரு மனிதன் என் வலியை
நினையகிற்றிலன் நெடும் சமர் என்னொடும் துணிந்த
வினையம் இன்றொடும் போக்குவென் என விழி சிவந்தான் 225-1

#32
அடுக்கி நின்றிடு பகிரண்ட பரப்பு எலாம் அதிர
துடிக்கும் நெஞ்சகத்து இமையவர் துளங்குற கூற்றும்
நடுக்கம் உற்றிட நல் அறம் ஏங்கிட கயிலை
எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை நாண் எறிந்தான் 225-2

#33
எறிந்து அடல் சிலை வளைத்து ஒரு கணத்திடை எரியின்
நிறம் தகும் பல நெடும் சுடர் பகழிகள் நெறியின்
அறிந்திடற்கு அரிது ஆகிய அளப்பு இல் பல் கோடி
செறிந்திட திசை வானகம் வெளி இன்றி செறித்தான் 225-3

#34
ஐயன் நோக்கினன் நன்று என நகைத்து அவன் சிலைவாய்
எய்த வெம் சரம் பொடிபட யாவையும் முருக்கி
வெய்தின் அங்கு அவன்மேற் செல எழு கணை விடுத்தான்
கைதவன் கணை ஏழு கொண்டு அ கணை கடிந்தான் 225-4

#35
எய்து வெள்ளம் நூற்று-இரண்டு என திரண்ட கால் வயவர்
மொய் கொள் சேனை அம் தலைவர்கள் முரண் கரி பரி தேர்
வெய்ய வீரர்கள் அளப்பிலர் கோடியர் விறல் சேர்
ஐயன் வெம் சரம் அறுத்திட அனைவரும் அவிந்தார் 236-1

#36
அறுத்த வில் இழந்து அழியுமுன் ஐ-இரு கரத்தும்
பொறுத்து வெம் சிலை நாண் ஒலி புடைத்து அடற் பகழி
நிறுத்தி வீசினன்-நெடும் திசை விசும்பொடு நிமிர
கறுத்த வான் முகில் கல் மழை பொழிதரும் கடுப்பின் 240-1

#37
நிரைக்கும் ஐ-இரு சிலையிடை சர மழை நிருதன்
துரக்க மாருதி உடல் உறு குருதிகள் சொரிந்த
குரக்கு வான் படை குறைந்தன கூசி வானவர்கள்
இரக்கமுற்று உலைந்து ஓடினார் இருண்டது எவ் உலகும் 240-2

#38
எறுழ் வலி புயத்து இராகவன் இள நகை எழும்ப
முறுவலித்து அவன் பகழிகள் யாவையும் முருக்கி
பிறை முக சரம் ஐ-இரண்டு ஒரு தொடை பிடித்து ஆங்கு
உறுதி அற்றவன் சிலை ஒரு பத்தையும் ஒறுத்தான் 240-3

#39
வளைத்த வில்லும் இரதமும் மற்றும் நின்
கிளைத்த யானையும் சேனையும் கெட்டது இங்கு
இளைத்து நின்றனை இன்று போய் நாளை வா
விளைக்கும் வெம் சமர் செய் விருப்பு உள்ளதேல் 255-1

#40
என்று இராமன் இயம்ப இராவணன்
ஒன்றும் ஓதலன் உள்ளத்தின் என் வலி
நின்ற நேர்மை நினைத்திலன் மானிடன்
நன்று சொன்னது என நகைத்து ஏகினான் 255-2
@16. கும்பகருணன் வதைப் படலம்

#1
என்று எடுத்து உரைத்தோன் பின்னும் உளம் கனன்று இனைய சொல்வான்
வன் திறல் மனிதன் வெம் போர் எவரினும் வலியனேனும்
பொன்றுதல் இல்லா என்னை போர் வெலற்கு எளிதோ காலம்
ஒன்று அல உகங்கள் கோடி உடற்றினும் ஒழிவது உண்டோ 31-1

#2
மானிடன் என்றே நாணி கடவுள் மா படைகள் யாதும்
யான் எடுத்து ஏகல் விட்டேன் இன்றை வெம் சமரம் போக
தான் அமர் அழிந்தேன் என்ன தக்கதோ என்றான் அந்த
மானம் இல் அரக்கன் பின்னர் மாலியவானும் சொல்வான் 31-2

#3
முப்புரம் எரிந்தோன் ஆதி தேவரும் முனிவர்தாமும்
தப்பு அற உணர்தற்கு எட்டா தருமமே கை வில் ஏந்தி
இ பிறப்பு இராமன் என்றே எம்மனோர் கிளையை எல்லாம்
துப்பு அற முருக்க வந்தான் என்ற சொல் பிழைப்பது உண்டோ 31-3

#4
ஆதலின் இறைவ கேட்டி அவன் பெரும் தேவி ஆன
மாதினை விடுத்து வானோர் முனிவரர் வருந்த செய்யும்
தீதினை வெறுத்து தேவர் தேவனாம் சிலை இராமன்
பாதமே பணியின் நம்பால் பகை விடுத்து அவன் போம் என்றான் 33-1

#5
கிங்கரர் நால்வர் சென்று அ கிரி அனான் கிடந்த கோயில்
மங்குல் தோய் வாயில் சார்ந்து மன்ன நீ உணர்தி என்ன
தம் கையின் எழுவினாலே தலை செவி தாக்க பின்னும்
வெங்கணான் துயில்கின்றானை வெகுளியால் இனைய சொன்னார் 43-1

#6
உறங்குகின்ற கும்பகன்ன உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்றது இன்று காண் எழுந்திராய் எழுந்திராய்
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே
உறங்குவாய் உறங்குவாய் இனி கிடந்து உறங்குவாய் 43-2

#7
என்றும் ஈறு இலா அரக்கர் இன்ப மாய வாழ்வு எலாம்
சென்று தீய நும் முனோன் தெரிந்து தீமை தேடினான்
இன்று இறத்தல் திண்ணமாக இன்னும் உன் உறக்கமே
அன்று அலைத்த செம் கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார் 43-3

#8
என்று சொல்ல அன்னவன் எழுந்திராமை கண்டு போய்
மன்றல் தங்கு மாலை மார்ப வன் துயில் எழுப்பலம்
அன்று கொள்கை கேண்மின் என்று மாவொடு ஆளி ஏவினான்
ஒன்றன்மேல் ஒர் ஆயிரம் உழக்கிவிட்டு எழுப்புவீர் 43-4

#9
அனைய தானை அன்று செல்ல ஆண்டு நின்று பேர்ந்திலன்
இனைய சேனை மீண்டது என்று இராவணற்கு இயம்பலும்
வினையும் வல்ல நீங்கள் உங்கள் தானையோடு சென்மின் என்று
இனைய மல்லர் ஆயிராரை ஏவி நின்று இயம்பினான் 43-5

#10
சென்றனர் பத்து நூற்று சீரிய வீரர் ஓடி
மன்றல் அம் தொங்கலான் தன் மனம் தனில் வருத்தம் மாற
இன்றுஇவன் முடிக்கும் என்னா எண்ணினர் எண்ணி ஈண்ட
குன்று என உயர்ந்த தோளான் கொற்றமா கோயில் புக்கார் 43-6

#11
சாற்றிய சங்கு தாரை ஒலி அவன் செவியில் சார
ஆற்றலின் அமைந்த கும்பகருணனுக்கு அதுவும் தாராட்டு
ஏற்றதுஒத்து அனந்தல் முன்னர்க்கு இரட்டி கொண்டு உறங்க மல்லர்
கூற்றமும் குலைய நெஞ்சம் குறித்து இவை புரியலுற்றார் 46-1

#12
அன்னவர் உரைப்ப கேளா அரசன் மோதரனை நோக்கி
மின் எனும் எயிற்று வீர எம்பியை கொணர்தி என்ன
இன்னதே செய்வென் என்னா எழுந்து அடி வணங்கி போவான்
பொன் என விளங்குவான் போய் தன் பெரும் கோயில் புக்கான் 49-1

#13
இனைய கும்பகருணன் இராக்கதர்
தனை முனிந்து இடிஏறு என சாற்றினான்
எனை நெடும் துயில் போக்கியது என் என
மனம் நடுங்கினர் வாய் புதைத்து ஓதினார் 64-1

#14
அ கணத்து அரக்கர் கோன் அளப்பு இல் யானை தேர்
மிக்க வான் புரவி கால் வயவர் வெள்ளமோடு
ஒக்க வான் படை பெரும் தலைவர் ஒன்று அற
புக்குமின் இளவலை புறத்து சூழ்ந்து என்றான் 94-1

#15
வெள்ளம் நூறு இரதம் மற்று இரட்டி வெம் கரி
துள்ளு வான் பரி அதற்கு இரட்டி தொக்குறும்
வெள்ளி வேல் அரக்கர் மற்று இரட்டி மேம்படும்
கொள்ளை வான் படை பெரும் தலைவர் கோடியால் 97-1

#16
அன்ன போது இராவணற்கு இளவல் ஆகிய
மின்னு வேல் கும்பகன் என்னும் மேலையோன்
துன்னு போர் அணிகலம் யாவும் சூடியே
தன் ஒரு தேரினை தொழுது தாவினான் 98-1

#17
தொண்டகம் துடி கன பேரி துந்துமி
திண்டிமம் படகம் மா முரசு திண் மணி
கண்டைகள் கடையுகத்து இடிக்கும் ஓதையின்
எண் திசை செவிடு எறிதர சென்று உற்றதால் 101-1

#18
எழு கரும் கடல் கரை எறிந்திட்டு ஊழி நாள்
முழுது உலகு அடங்கலும் மூடும் தன்மையின்
தழுவியது என தசமுகன் தன் ஆணையால்
கிளர் பெரும் படை கடல் கெழுமி போந்ததால் 101-2

#19
இரைக்கும் மும் மதம் பொழி தறுகண் யானையின்
நெருக்கமும் நெடும் கொடி தொகையின் தேர் குல
பெருக்கமும் புரவிகள் பிறங்கும் ஈட்டமும்
அரக்கர்தம் பெருக்கமும் ஆயது எங்குமே 101-3

#20
நாற்படை வகை தொகை நடக்க தூளிகள்
மேற்பட விசும்பகம் மறைந்த வெண் திரை
பாற்கடல் என பொலி கவி பெரும் படை
காற் படு கதியினின் கரந்தது ஓடியே 103-1

#21
குரக்கின பெரும் படை குலை குலைந்து போய்
வெரு கொள விசும்பிடை வெய்ய மாயையின்
அரக்கன் இன்று அமைத்தது ஓர் உருக்கொலாம் நினது
உரு கொடே கரிய குன்று உற்றவேகொலாம் 106-1

#22
ஏழு யோசனைக்கு மேலாய் உயர்ந்திடும் முடி பெற்றுள்ளான்
சூழி வெம் கரிகள் தாங்கும் திசை எலாம் சுமக்கும் தோளான்
தாழ்வு அறு தவத்தின் மேலாம் சதுமுகன் வரத்தினாலே
வீழ் பெரும் துயிலும் பெற்றான்-வெம் கடும் கூற்றின் வெய்யோன் 109-1

#23
சிலை பொழி பகழி வேல் வாள் செறி சுடர் குலிசம் ஈட்டி
பல வகை படைகள் வாங்கி நிருதர்கள் பல் போர் செய்தார்
மலையொடு மரங்கள் ஓச்சி வயிர தோள் கொண்டு மாறா
கொலை அமர் எடுத்து வாகை குரங்குகள் மலைந்த அம்மா 167-1

#24
பற்றினன் வசந்தன் தன்னை பனை தடம் கைகளாலே
எற்றினன் இவனை மீள விடவொண்ணாது என்று சொல்லி
கொற்றமும் உடையன் என்னா குழம்பு எழ பிசைந்து கொண்டு
நெற்றியில் திலதமாக இட்டனன்-நிகர் இலாதான் 172-1

#25
அளப்பு இல் வெம் கரிகள் பூதம் ஆளி வெம் பரிகள் பூண்டு ஆங்கு
இழுப்ப வந்து உடைய தேர் விட்டு இரு நிலத்து இழிந்து வெம் போர்
கள பட கவியின் சேனை கடல் வறந்து உலைய கையால்
குள படுக என்று வெய்யோன் குறித்து உளம் கனன்று புக்கான் 172-2

#26
நிகர் அறு கவியின் சேனை நிலை கெட சிலவர் தம்மை
துகள் எழ கயக்கி ஊதும் சிலவரை துகைக்கும் காலின்
தகர் பட சிலவர் தம்மை தாக்கிடும் தட கைதன்னால்
புகவிடும் சிலவர்தம்மை விசும்பிடை போக வெய்யோன் 172-3

#27
வலிதினின் சிலவர் தம்மை வன் கையால் பற்றி பற்றி
தலையொடு தலையை தாக்கும் சிலவரை தனது தாளால்
நிலமதில் புதைய ஊன்றி மிதித்திடும் சிலவர் நெஞ்சை
கொலை நக படையின் கீறி குருதி வாய்மடுத்து கொள்ளும் 172-4

#28
கடும் பிண குவையினூடே சிலவரை புதைக்கும் கண்ணை
பிடுங்குறும் சிலவர்தம்மை சிலவரை பிடித்து வெய்தின்
கொடும் கொலை மறலி ஊரில் போய் விழ குறித்து வீசும்
நெடும் பெரு வாலின் பற்றி சிலவரை சுழற்றி நீக்கும் 172-5

#29
பருதி மண்டலத்தில் போக சிலவரை பற்றி வீசும்
குருதி வாய் பொழிய குத்தி சிலவரை குமைக்கும் கூவி
திரிதர தேவர் நாட்டில் சேர்த்திடும் சிலவர்தம்மை
நெரிதர சிலவர்தம்மை கொடும் கையின் நெருக்கும் அன்றே 172-6

#30
ஆயிர கோடி மேலும் அடல் குரங்கு அதனை வாரி
வாயிடை பெய்து மூட வயிற்றிடை புகுந்து வல்லே
கூய் உளம் திகைத்து பின்னும் கொடியவன் செவியினூடே
போயது வெளியில் மீண்டும் புற்றிடை பறவை என்றே 174-1

#31
அவ் வழி அரியின் சேனை அதர்பட வசந்தன் என்பான்
தவ் வழி வீரன் நாலு வெள்ளத்தின் தலைவன் என்றான்
எவ் வழி பெயர்ந்து போவது எங்கு என இரு குன்று ஏந்தி
வெவ் வழி இசை அ கும்பகருணன்மேல் செல்ல விட்டான் 180-1

#32
விசைந்திடு குன்றம் நின்ற விண்ணவர் இரியல் செல்ல
இசைந்திடு தோளின் ஏற்றான் இற்று நீறு ஆகி போக
வசந்தனை சென்று பற்றி வாசம் கொண்டுவந்து கையால்
பிசைந்து சிந்தூரமாக பெரு நுதற்கு அணிந்து கொண்டான் 180-2

#33
நீலனை அரக்கன் தேரால் நெடு நிலத்து இழிய தள்ளி
சூலம் அங்கு ஒரு கை சுற்றி தொடர்ந்திடும் பகைஞர் ஆவி
காலன் ஊர்தன்னில் ஏற்றி கடிதில் என் தமையன் நெஞ்சில்
கோலிய துயரும் தீர்ப்பென் என கொதித்து அமரின் ஏற்றான் 181-1

#34
மாருதி போதலோடும் வய படை தலைவர் மற்று ஓர்
மாருதம் என்ன பொங்கி வரையொடு மரங்கள் வாரி
போர் எதிர் புக கண்டு அன்னோர் அனைவரும் புரண்டு போரில்
சோர் தர படைகள் வாரி சொரிந்து அடல் அரக்கன் ஆர்த்தான் 198-1

#35
மழுவொடு கணிச்சி சூலம் வாள் மணி குலிசம் ஈட்டி
எழு அயில் எஃகம் என்று இ படை முதல் எவையும் வாரி
மழை என பொழிந்து நூறு யோசனை வரைப்பில் மேவும்
அளவு அறு கவியின் சேனை அறுத்து ஒரு கணத்தில் வந்தான் 198-2

#36
இலக்குவன் கொடுமரத்திடை எறியும் வெம் பகழி
கலக்கம் அற்றிடும் அரக்கர்தம் கரங்களை கடிந்தே
முலைக்குவட்டு அவர் கன்னியர் முன்றிலின் எறிய
விலக்க அரும் விறலாளி கண்டு அவர் உயிர் விளிந்தார் 221-1

#37
வடி சுடர் பெரும் பகழிகள் ஏற்றின வதனத்து
அடல் அரக்கரும் சிலர் உளர் அவர் தலை அறுத்து ஆங்கு
உடன் எடுத்து அவர் மனையினுக்கு உரிய கன்னியர்பால்
இட உவப்பொடும் புழுக்கினர் ஊன் இவை அறியார் 221-2

#38
குஞ்சர தொகை தேர் தொகை குதிரையின் தொகை மேல்
விஞ்சு வாள் எயிற்று அரக்கர்தம் தொகை எனும் வெள்ளம்
பஞ்சினில் படும் எரி என இலக்குவன் பகழி
அஞ்சென படு கணத்து அவை அனைத்தையும் அழித்த 222-1

#39
வந்து அம் மா படை அளப்பு இல வெள்ளங்கள் மடிய
அந்தி வான் என சிவந்தது அங்கு அடு களம் அமரில்
சிந்தி ஓடிய அரக்கரில் சிலர் தசமுகனுக்கு
இந்த அற்புதம் உரைத்தும் என்று ஓடினர் இப்பால் 222-2

#40
உரைத்து நெஞ்சு அழன்று ஒரு கணத்து இவன் உயிர் குடித்து என்
கருத்து முற்றுவென் என சினம் கதுவிட கடும் தேர்
பரித்த திண் திறல் பாகரை பகைவனுக்கு எதிரே
பொருத்தும் என்று அடல் கும்பகன் பொருக்கென புகன்றான் 223-1

#41
நாண் தெறித்தனன் பகிரண்ட பரப்பொடு நவை போய்
மாண்ட விண்ணவர் மணி தலை துளங்கிட வய போர்
பூண்ட வானரம் நின்றதும் புவியிடை மறிய
தூண்டி மற்று அவன் இலக்குவன் தனக்கு இவை சொல்வான் 228-1

#42
அது கண்டார் அடல் வானவர் ஆசிகள் கூறி
துதி கொண்டார் அடல் அரக்கனும் துணை விழி சிவந்து ஆங்கு
இது கண்டேன் இனி கழிந்தது உன் உயிர் என கனன்றே
கொதி கொண்டான் அடல் சிலையினை குழைவுற வளைத்தான் 235-1

#43
புக்க போதில் அங்கு இலக்குவன் பொருக்கென துயர் தீர்ந்து
அ கணம் தனில் அரக்கர் தம் பெரும் படை அவிய
மிக்க வார் சிலை வளைத்து உரும் ஏறொடு விசும்பும்
உட்க நாண் எறிந்து உக முடிவு என சரம் பொழிந்தான் 243-1

#44
காய் கதிர் சிறுவனை பிணித்த கையினன்
போயினன் அரக்கன் என்று உரைத்த போழ்தின் வாய்
நாயகன் பொருக்கென எழுந்து நஞ்சு உமிழ்
தீ அன வெகுளியன் இனைய செய்தனன் 267-1

#45
வீசினன் கேடகம் விசும்பின் மீன் எலாம்
கூசின அமரரும் குடர் குழம்பினார்
காய் சின அரக்கனும் கனன்ற போது அவன்
நாசியும் செவியும் வெம் குருதி நான்றவே 294-1

#46
கும்பகன் கொடுமையும் குலைகுலைந்து போம்
வெம்பு வெம் சேனையின் மெலிவும் நோக்கிய
நம்பனும் அரக்கன் கை நடுவண் பூட்டுறும்
செம் பொனின் கேடகம் சிதைத்து வீழ்த்தினான் 297-1

#47
ஆயிரம் பெயரவன் அறுத்து மாற்றுற
போயின கேடகம் புரிந்து நோக்கினான்
பேய் இரண்டாயிரம் சுமக்க பெற்றுடை
மா இரும் கேடகம் கடிதின் வாங்கினான் 297-2

#48
போயின கேடகம் போக நோக்கினன்
ஆயிரம் பெயரவன் அறியும் முன்பு அவன்
பேய் இரண்டு ஆயிரம் பேணும் கேடகம்
ஏ எனும் அளவினில் எய்த சென்றதால் 297-3

#49
ஆலம் உண்டவன் முதல் அளித்தது அன்னவன்
சூலம் உண்டு அளப்பு இல கோடி பேய் சுமந்து
ஓலம் இட்டு அமரர்கள் ஓட ஊழியில்
காலன் ஒத்தவன் கரத்து அளித்தது அ கணம் 306-1

#50
பிடித்தனன் வல கையில் சூலம் பெட்பொடு
முடித்தனன் பூசனை மனத்தின் முன்னியே
விடுத்தனன் பகைவனை வென்று மீள்க எனா
தடுப்ப அரிது என தளர்ந்து அமரர் ஓடினார் 311-1

#51
சூலம் அங்கு அது வரும் துணிவை நோக்கியே
ஞால நாயகன் அரி கடவுள் ஏந்திய
கால் வெம் கனல் படை கடிதின் ஏவி அ
சூலம் அற்று இரண்டு என துணித்து வீழ்த்தினான் 311-2

#52
அழிந்தது சூலம் அங்கு அமரர் யாவரும்
தொழும் தகை அமலனை புகழ்ந்து துள்ளியே
கழிந்தது எம் மன துயர் என்று கண்ணன்மேல்
பொழிந்தனர் அவன் பெயர் புகன்று பூமழை 311-3

#53
இரண்டு பத்து நூறு எனும் படை வெள்ளம் மற்று இன்றொடு முடிவு எய்தி
புரண்டு தத்துற பொழிந்தனர் இருவர் தம் பொரு சிலை கணை மாரி
இருண்டது எத்திசை மருங்கினும் பறவையின் இனம் பல படி மூடி
திரண்ட வச்சிர கதை கரத்து எடுத்தனன் கும்பகன் சினம் மூள 317-1

#54
என்ற போதில் அரக்கனும் நோக்கினன் எம்பிரான் நுவல் மாற்றம்
நன்று நன்று எனா சிரம் துளக்கினன் நகைத்து இவை இவை நவில்கின்றான்
வென்றி தந்து தம் புறம் கொடுத்து ஓடிய விண்ணவர் எதிர் போரில்
பொன்றுமாறு இளைத்து இன்று போய் வருவேனேல் புகழுடைத்தது போலாம் 320-1

#55
இனைய திண் திறல் அரக்கனுக்கு அவ் வழி இதயத்தில் பெரு ஞான
நினைவு எழுந்தது இங்கு இவன் பெரும் கடவுள் மற்று இவன் பத நிழல் காண
வினை அறுந்தது வேறு இனி பிறப்பு இலை என்று தன் மன வேகம்-
தனை மறந்தனன் மறந்து அவன் தன்மையை நினைந்தனன் கருத்தோடும் 346-1
@17. மாயா சனகப் படலம்

#1
இம் மொழி அரக்கன் கூற ஏந்திழை இரு காதூடும்
வெம்மை சேர் அழலின் வந்த
வஞ்சி நெஞ்சம் தீய்ந்தவள் ஆனாள் மீட்டும்
விம்முறும் உளத்தினோடும் வெகுண்டு இவை விளம்ப லுற்றான் 54-1

#2
அம் தாமரையின் அணங்கு அதுவே ஆகி உற
நொந்து ஆங்கு அரக்கன் மிக நோனா உளத்தினன் ஆய்
சிந்தாகுலமும் சில நாணும் தன் கருத்தின்
உந்தா உளம் கொதித்து ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான் 89-1
@18. அதிகாயன் வதைப் படலம்

#1
முதிர் போர் உறு மொய்ம்பன் முனைத்தலையில்
சதிர் ஏறிய தானை தழைத்திட அங்கு
எதிர் தேரிடை ஏறினன் மற்று ஒரு வெம்
கதிரோன் இகல் கண்டிட ஏகினனால் 20-1

#2
தேர் வெள்ளம் அளப்பு இல திண் புரவி
தார் வெள்ளம் அளப்பு இல தந்தி இன
கார் வெள்ளம் அளப்பு இல கண்டகராம்
பேர் வெள்ளம் அளப்பு இல பெற்றதுவால் 20-2

#3
மல் ஏறிய திண் புய மள்ளர் கரத்து
எல் ஏறிய வாள் எழு வல் முசலம்
வில்லோடு அயில் வெம் கதை வேல் முதலாம்
பல் ஆயுத பத்தி பரித்து உடையார் 25-1

#4
என வந்த நிசாசரன் இவ் உரையை
தனு வல்லவனோடு எதிர் சாற்றுதலும்
சனகன் மகள்தன் ஒரு நாயகன் ஆம்
அனகன் அது கேட்டு இது அறைந்திடுவான் 50-1

#5
என்றே உலகு ஏழினொடு ஏழினையும்
தன் தாமரைபோல் இரு தாள் அளவா-
நின்றான் உரை செய்ய நிசாசரனும்
பின்றா உரை ஒன்று பிதற்றினனால் 52-1

#6
வார் ஏறு கழற் சின வாள் அரி எம்
போர் ஏறொடு போர் புரிவான் அமையா
தேர் ஏறு சின கடு வெம் தறுகண்
கார் ஏறு என வந்த கத தொழிலோன் 54-1

#7
வெம் கொலை மத கரி வெள்ளம் ஆயிரம்
துங்க நீள் வரை புயத்து அரக்கர் தூண்டினார்
வெம் கணை இலக்குவன் வெகுண்டு உகாந்தத்தில்
பொங்கிய மாரியின் பொழிதல் மேயினான் 102-1

#8
முடிவுறும் உகம் பொழி மாரி மும்மையின்
விடு கணை மழை நெடும் தாரை வெம் மத
கட களிறு அடங்கலும் கழிய கால் கரம்
குடல் தலை குறைந்தமை கூறல் ஆவதோ 102-2

#9
அறுந்தன தலை கழுத்து அறுந்த தாள் கரம்
அறுந்தன செவி முகம் அறுந்த வால் மருப்பு
அறுந்தன குடல் உடல் அறுந்த வாய் விழி
அறுந்தன கட களிறு ஆய நாமமே 102-3

#10
அறுத்தன சில கணை அறுத்த கூறுகள்
செறுத்தன சில கணை சின்னபின்னமாய்
ஒறுத்தன சில கணை உம்பர் ஊர் புக
தெறித்தன சில கணை செப்பல் ஆவதோ 102-4

#11
மத கரி வெள்ளம் ஆயிரமும் மாண்டுற
முதிர் சினத்து இலக்குவன் கடிகை மூன்றினில்
கொதி கொள் வெம் சர மழை கொழிப்ப கண்டு தாள்
அதிர்வுறு பொலன் கழல் அரக்கர் அண்மினார் 102-5

#12
அடுத்தனர் ஆனை தேர் புரவி ஆழியை
தொடுத்தனர் அணி பட சூழ்ந்து வள்ளல்மேல்
விடுத்தனர் படை கலம் வெகுண்டு வீரனும்
தடுத்தனன் ஒரு தனி தனுவின் வன்மையால் 102-6

#13
பெரும் கடை யுக மழை பிறழ தன் ஒரு
கரம் படு சிலையினின் கான்ற மாரியின்
சரம் பட சரம் பட தாக்கு இராக்கத
கரும் கடல் வறந்தது கழறல் ஆகுமோ 102-7

#14
இலக்குவ கடவுள் தன் ஏவின் மாரியால்
விலக்க அரும் கரி பரி இரதம் வீரர் என்று
உலப்ப அரும் வெள்ளமாம் சேனை ஒன்று அற
நில பட சாய்ந்தமை நிகழ்ந்த போதிலே 118-1

#15
காந்திய அரக்கனும் கணையின் மாரிகள்
பாய்ந்திட பரும் சிலை விசையின் பற்றினான்
மாய்ந்தது குரங்கு அது கண்டு மா மறை
வேந்தனுக்கு இளவலும் வெகுளி வீங்கவே 120-1

#16
கார்முக விசை உறும் கணையின் மாரியால்
பார வெம் சிலை அறுத்து அவன் தன் பாய் பரி
தேரினை பாகனோடு அழிய சிந்தி மற்று
ஓர் கணை அவன் சிரம் உருள தூண்டினான் 120-2

#17
தாருகன் எனும் படை தலைவன் தன் வய
போர் அழிந்தவன் உயிர் பொன்றினான் என
கார் நிற அரக்கர்கள் கனலின் பொங்கியே
வீரனை வளைத்தனர் வெகுளி மிக்குளார் 121-1

#18
மழை உற்றன முகில் ஒப்பன செவி மும் மத வழியே
விழ உற்றன வெறி வெம் கணை நிமிர பொறி சிதற
முழை உற்றன முகில் சிந்தின முன்பு ஏறில முடிய
உழை உற்றன உலவும்படி உலவுற்றன-கரிகள் 140-1

#19
துள்ளி களி வய வானரர் ஆர்த்தார் அவை தோன்ற
கள்ள கடு நிருத குலம் கண்டப்பட கண்டே
உள்ள கடு வேகத்தொடு தேவாந்தகன் உளத்தே
கொள்ளை படை அனையஃது ஒரு கொடும் சூலம் கை கொண்டான் 168-1

#20
ஆங்கு அது நிகழ கண்ட அடல் அதிகாயன் சீறி
தாங்கு பல் அண்ட கோடிதான் பிளந்து உடைய தன் கை
வாங்கினன் சிலை நாண் ஓசை படைத்தபின் வாளி மாரி
பாங்குறு கவியின் சேனை கடல்மிசை பரப்பி ஆர்த்தான் 185-1

#21
ஆர்த்து அரும் பகழி மாரி ஆயிர கோடி மேலும்
தூர்த்து அடல் கவியின் சேனை துகள் பட துணிந்து சிந்த
பேர்த்தனன் சிலை நாண் ஓதை பிறை முக பகழி பின்னும்
கோத்தனன் அனந்த கோடி கோடியின்-கொதித்து வெய்யோன் 185-2

#22
உருத்து அதிகாயன் மேன்மேல் ஒண் சுடர் பகழி மாரி
நிரைத்தலின் இடைவிடாது நெடும் கவி சேனை வெள்ளம்
தரை தலம் அதனில் பட்டு தலை உடல் சிதற சோரி
இரைத்து எழு கடலின் பொங்க இமையவர் அலக்கணுற்றார் 185-3

#23
கரடியின் சேனையோடு கவி குல தானை எல்லாம்
தரை பட சரத்தின் மாரி தசமுகன் சிறுவன்-சீறா
கரை அறு கவியின் சேனை தலைவர்கள் கனலின் பொங்கி
வரையொடு மரமும் கல்லும் வாங்கினர் விரைவின் வந்தார் 185-4

#24
வானர தலைவர் பொங்கி வருதலும் அரக்கன் மைந்தன்
போன திக்கு அறிவுறாமல் பொழிந்திடும் பகழிதன்னால்
ஆனவர் உடலம் முற்றும் அழித்தனன் குருதி பொங்க
தான் அறிவு அழிந்து யாரும் தனி தனி தலத்தின் வீழ்ந்தார் 185-5

#25
திசை முகம் கிழிய தேவர் சிரம் பொதிர் எறிய திண் தோள்
தசமுகன் சிறுவன் பின்னும் தடம் சிலை குழைய வாங்கி
விசை கொள் நாண் எறிந்து மேன்மேல் வெம் கவி தானை வெள்ளம்
பசை அற புலர்ந்து போக பொழிந்தனன் பகழி மாரி 185-6

#26
வீரருக்கு ஒருவரான விறல் அதிகாயன் வெம் போர்
ஆர் இனி தடுக்க வல்லார் என பதைத்து அமரர் எல்லாம்
சோர்வுற துளங்கி நில்லாது ஓடினர் சுடரும் வை வேல்
போர் வலி அரக்கன் சேனை புகுந்தது கடலின் பொங்கி 185-7

#27
அங்கதன் தோளில் நின்ற அண்ணல் ஆங்கு அதனை கண்டே
செம் கையில் பிடித்த வீர சிலையை நாண் எறிந்து தீரா
வெம் கொலை அரக்கன் விட்ட கணை எலாம் விளிய வீசி
துங்க வேல் நிருதர் சேனை துணி பட சொரிந்தான் வாளி 185-8

#28
உரை பெறு புவனம் மூன்றும் ஒழிந்திடும் காலத்து ஏழு
கரு முகில் பொழிவதென்ன கணை மழை சொரிந்து காலாள்
இரதமொடு இபங்கள் வாசி யாவையும் களத்தின் வீழ்த்தி
பொரு திறல் அரக்கனோடும் புகுந்து அமர் கடிதின் ஏன்றான் 185-9

#29
புரம் எரித்துடைய புத்தேள் முதலிய புலவர் உள்ளம்
திரிதர அரக்கன் சீறி திண் சிலை குழைய வாங்கி
எரி முக பகழி மாரி இடைவிடாது அனந்த கோடி
சொரிதர அனுமன் ஆதி வீரர்கள் சோர்ந்து வீழ்ந்தார் 194-1

#30
வில்லினுக்கு ஒருவன் ஆகி உலகு ஒரு மூன்றும் வென்ற
வல் அதிகாயன் என்னும் வாள் எயிற்று அரக்கன் ஓயான்
கல் இடும் மாரி என்ன கணை மழை பொழிய கண்ட
வில்லியும் விடாது வெய்ய கணை மழை விலக்கி நின்றான் 202-1

#31
விறல் அதிகாயன் வீழ வெம் திறல் அரக்கன் மைந்தர்
குறுகினர் மும்மையான ஆயிர கோடி உள்ளார்
எறி கடற் சேனையோடும் எங்கணும் இரிய ஆர்த்து
செறிய எண் திசையும் வந்து சூழ்ந்தனர் தெழிக்கும் சொல்லார் 206-1

#32
வருதலும் அரக்கன் மற்றுஅவ் வானர சேனை பின்னும்
பொரு சினம் திருகி முற்றா பொங்கு அழல் என்ன பொங்கி
மரமொடு மலைகள் ஏந்தி மாதிரம் மறைய வல்லே
உரும் என சொரிய வீசி உடற்றினர் ஒழிவு இலாதார் 208-1

#33
மற்றும் திறல் வானர வீரர்கள் யாரும்
கொற்றம் கொள் இராவணன் மைந்தர் குலைந்தே
முற்றும்படி மோதினர் மோத முடிந்தே
அற்று அங்கு அவர் யாவரும் ஆவி அழிந்தார் 249-1

#34
அளப்பு இல் மைந்தர் எல்லாம் ஆனை தேர் பரி ஆள் என்னும்
வழக்குறும் சேனை வெள்ளம் அளப்பு இல மடிய தாமும்
களத்திடை கவிழ்ந்தார் என்ற மொழியினை காதில் கேளா
துளக்கம் இல் அரக்கன் மேரு துளங்கியது என்ன சோர்ந்தான் 260-1
@19. நாகபாசப் படலம்

#1
எரி முக பகழி மாரி தொடுத்து இகல் அரக்கன் எய்தான்
எரி முக பகழி மாரி தொடுத்து அவை இறுத்தான் எந்தை
உரும் இன பகழி மாரி உருத்து விட்டு அரக்கன் ஆர்த்தான்
உரும் இன பகழி மாரி உருத்து விட்டு இளவல் கொன்றான் 106-1

#2
நெருக்கி மற்று அனந்த கோடி நெடும் கணை அரக்கன் கோத்தான்
நெருக்கி மற்று அனந்த கோடி நெடும் கணை நிமலன் மாய்த்தான்
முருக்கின் உற்று அனந்த கோடி முகை கணை அரக்கன் மொய்த்தான்
முருக்கின் உற்று அனந்த கோடி முகை கணை முடித்தான் மொய்ம்பன் 106-2

#3
சிந்து வாளி செறிதலும் சேவகன்
ஐந்து நூறு கடும் கணையால் அவன்
உந்து தேரை ஒறுத்தனன் வெய்யவன்
வந்து தேர் ஒன்றின் வல்லையில் ஏறினான் 128-1

#4
பல் ஆயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்த படர் கால்
செல்லா நிலத்தின் அருளோடு செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று
எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி அறனே விளைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடுஆன மேனி வடுவும் 264-1

#5
பறவை நாயகன் தான் ஏக படர் உறு துயரம் நீங்கி
கறவையும் கன்றும் போல களிக்கின்ற மனத்தர் ஆகி
இறைவனும் இளைய கோவும் யாவரும் எழுந்து நின்றார்
மறை ஒரு நான்கும் மண்ணும் வானமும் மகிழ்ந்த மாதோ 270-1

#6
இரு நிலம் கிழிய பாயும் எறி கடல் இரைப்பு தீர
பரவும் எண் திசையை தாங்கும் பகட்டினம் இரியல் போக
கரு வயிறு உடைந்து சிந்தி அரக்கியர் கலங்கி வீழ
அரு வரை அண்ட கோளம் பிளக்க நின்று அனுமன் ஆர்த்தவன் 273-1