மிகைப் பாடல்கள், யுத்த காண்டம் 1 – கம்பராமாயணம்

@1. கடல் காண் படலம்

#1
மூன்றரை கோடியின் உகத்து ஓர் மூர்த்தியாய்
தான் திகழ் தசமுகத்து அவுணன் சாலவும்
ஆன்ற தன் கருத்திடை அயனோடே மயன்
தோன்றுற நினைதலும் அவரும் துன்னினார் 11-1

#2
வந்திடும் அவர் முகம் நோக்கி மன்னவன்
செம் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெற
தந்திடும் கணத்திடை என்று சாற்றலும்
புந்தி கொண்டு அவர்களும் புனைதல் மேயினார் 11- 2
@2. இராவணன் மந்திரப் படலம்

#1
மோதரன் முதலிய அமைச்சர் தம் கணக்கு
ஓதும் நூறாயிர கோடியோரொடும்
காது வெம் சேனையின் காவலோர் கணக்கு
ஓதிய வெள்ள நூறவர்கள் தம்மொடும் 10-1

#2
கும்பகம் மேவியோன் குறித்த வீடண
தம்பியர்தம்மொடும் தருக்கும் வாசவன்
வெம் புயம் பிணித்த போர் வீரன் ஆதியாம்
உம்பரும் போற்றுதற்கு உரிய மைந்தரும் 10-2

#3
மாலியவான் முதல் வரம்பு இல் முந்தையோர்
மேலவர் தம்மொடும் விளங்கு சுற்றமாம்
சால்வுறு கிளையொடும் தழுவி மந்திரத்து
ஏலுறும் இராவணன் இசைத்தல் மேயினான் 10-3

#4
பின்னும் ஒன்று உரைத்தனன் பிணங்கு மானிடர்
அன்னவர் அல்லர் மற்று அரக்கர் என்பதற்கு
இந்நிலை பிடித்தனை இறைவ நீ எனா
முன் இருபக்கன் ஈது உரைத்து முற்றினான் 21-1

#5
எரி விழி நுதலினன் இசையும் நின் தவத்து
அருமை கண்டு அளித்தனன் அழிவு இலாதது ஓர்
பெரு வரம் என்றிடின் பேதை மானிடர்
இருவரும் குரங்கும் என் செயல் ஆவதே 26-1

#6
கறை மிடற்று இறை அன்று கமல தேவு அன்று
நிறை கடல் துயில் பரன் அன்று நின்று வாழ்
சிறு தொழில் குரங்கொடு சிறிய மானிடர்
உறு திறத்து உணர்ச்சியின் உறுதி யாவதோ 40-1

#7
ஓது பல் அரும் தவம் உஞற்றல் இலதேனும்
கோதுறு குல சிறுமை கொண்டுடையதேனும்
வாதுறு பகை திறம் மலிந்துடையதேனும்
நீதியதில் நின்றிடின் நிலைக்கு அழிவும் உண்டோ 52-1

#8
உந்து தமரோடு உலகினூடு பல காலம்
நந்துதல் இலாது இறைவன் ஆயிட நயந்தோ
சிந்தையில் விரும்புதல் செய் மங்கையர் திறத்தோ
புந்திகொடு நீ தவம் முயன்ற பொறை மேனாள் 52-2

#9
ஆசைகொடு வெய்தில் இரு மானிடரை அஞ்சி
காசு இல் ஒரு மங்கையவளை தனி கவர்ந்தும்
கூசியதனால் விளையவும் பெறுதல் கூடாய்
வீசு புகழ் வாழ்வு வெறிதே அழிவது ஆமோ 52-3

#10
நிரம்பிடுகில் ஒன்று அதை நெடும் பகல் கழித்தும்
விரும்பி முயல்வுற்று இடைவிடாது பெறல் மேன்மை
வரும்படி வருந்தினும் வராத பொருள் ஒன்றை
நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன் ஐயா 52-4

#11
ஆசு இல் பல அண்டம் உனதே அரசு அது ஆக
ஈசன் முன் அளித்தது உன் இரும் தவ வியப்பால்
நீசர் தொழில் செய்து அதனை நீங்கியிடலாமோ –
வாச மலரோன் மரபில் வந்த குல மன்னா 52-5

#12
ஆலம் அயில்கின்றவன் அரும் சிலை முறித்து
வாலியை வதைத்து எழு மராமரமும் உட்க
கோல வரி வில் பகழி கொண்டுடையன் என்றார்
சீலம் உறு மானிடன் என தெளியலாமோ 52-6

#13
ஆதிபரனாம் அவன் அடி துணை வணங்கி
சீதையை விடுத்து எளியர் செய் பிழை பொறுக்க என்று
ஓதல் கடனாம் என ஒருப்பட உரைத்தான்
மூதுரை கொள்வோனும் அதுவே முறைமை என்றான் 52-7

#14
என்று அவன் உரைத்திட இராவணனும் நெஞ்சம்
கன்றி நயனத்திடை பிறந்தன கடை தீ
இன்று முடிவுற்றது உலகு என்று எவரும் அஞ்ச
குன்று உறழ் புய குவை குலுங்கிட நகைத்தான் 52-8

#15
நகைத்து இளவலை கடிது நோக்கி நவில்கின்றான்
பகைத்துடைய மானுடர் வலி செயல் பகர்ந்தாய்
திகைத்தனைகொலாம் எனது சேவகம் அறிந்தும்
வகைத்திறம் உரைத்திலை மதித்திலை என் – எம்பி 52-9

#16
புரங்கள் ஒரு மூன்றையும் முருக்கு புனிதன் தன்
வரங்களும் அழிந்திடுவதோ மதியிலாதாய்
தரம்கொடு இமையோர் எனது தாள் பரவ யான் என்
சிரம்கொடு வணங்குவதும் மானுடன் திறத்தோ 52-10

#17
பகுத்த புவன தொகை என பகர் பரப்பும்
மிகுத்த திறல் வானவரும் வேத முதல் யாவும்
வகுத்து அரிய முத்தொழில் செய் மூவரும் மடிந்தே
உகுத்த பொழுதத்தினும் எனக்கு அழிவும் உண்டோ 52-11

#18
நிறம்தனில் மறம் தொலைய நீ துயில் விரும்பி
துறந்தனை அரும் சமரம் ஆதல் இவை சொன்னாய்
இறந்துபட வந்திடினும் இ பிறவிதன்னில்
மறந்தும் உளதோ சனகன் மங்கையை விடுத்தல் 52-12

#19
என கதம் எழுந்து அவன் உரைக்க இளையோனும்
நினைத்தனன் மனத்திடை நிறுத்து உறுதி சொல்ல
சினத்தொடும் மறுத்து இகழ்வு செய்தனன் இது ஊழின்
வினை திறம் எவர்க்கும் அது வெல்வது அரிது அன்றே 51-13

#20
கறுத்து அவன் உரைத்திடு கருத்தின் நிலைகண்டே
பொறுத்தருள் புகன்ற பிழை என்று அடி வணங்கி
உறுத்துதல் செய் கும்பகருண திறலினோனும்
மறுத்தும் ஒரு வாய்மை இது கேள் என உரைத்தான் 52-14

#21
ஏது இல் கரும செயல் துணிந்திடுதல் எண்ணி
தீதொடு துணிந்து பினும் எண்ணுதல் சிறப்போ
யாதும் இனி எண்ணியதில் என்ன பயன் ஐயா
போதியது நம் அரசு பொன்ற வரு காலம் 52-15

#22
என அவன் அடி துணை இறைஞ்சி வாய் புதைத்து
இனிய சித்திரம் என ஏங்கி நின்று தான்
நனை மலர் கண்கள் நீர் சொரிய நல் நெறி
வினை பயில் வீடணன் விளம்பல் மேயினான் 74-1

#23
சானகி உலகு உயிர் எவைக்கும் தாய் எனல்
ஆனவள் கற்பினால் எரிந்தது அல்லது
கோ நகர் முழுவதும் நினது கொற்றமும்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ 74-2

#24
ஈசன் தன் வயின் வரம் கொளும்முன்னம் யான் அவனை
வீசும் வான் சுடர் வரையொடும் விசும்பு உற எடுத்தேன்
ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து ஊன்ற
கூசி என் வலி குறைந்திலென் பாதலத்து அமர்ந்தேன் 116-1

#25
அமர்ந்து நீங்குதற்கு அருமை கண்டு அவன் பதம் அகத்தே
சுமந்து நீ தவம் புரிக என சுக்கிரன் உரைப்ப
தமம் திரண்டு உறும் புல பகை சிமிழ்த்திட தருக்கி
நிமிர்ந்து நின்றனென் நெடும் பகல் அரும் தவ நிலையின் 116-2

#26
நின்று பல் பகல் கழிந்திட நிமலன் நெஞ்சு உருகி
நன்று நன்று என நயந்து எனை வரும்படி அழைத்து
ஒன்றினாலும் நீ அழிவு இலாது உகம் பல கழிய
சென்று வாழுதி என தந்த வரம் சிதைந்திடுமோ 116-3

#27
கார்த்தவீரியன் வாலி என்று அவர் வலி கடக்கும்
மூர்த்தம் என்னிடத்து இல் என கோடலை முதல் நாள்
சீர்த்த நண்பினர் ஆயபின் சிவன் படை உவர்மேல்
கோத்து வெம் சமம் புரிந்திலென் எனது உளம் கூசி 116-4

#28
இந்த மெய்ம்மை நிற்கு உரைப்பது என் இவ் வரம் எனக்கு
தந்த தேவனுக்கு ஆயினும் என் வலி தவிர்த்து
சிந்த ஒண்ணுமோ மானிடர்திறத்து எனக்கு அழிவு
வந்தது என்று உரைத்தாய் இது வாய்மையோ – மறவோய் 116-5

#29
ஆயது ஆக மற்று அந்த மானுடவரோடு அணுகும்
தீய வான் குரங்கு அனைத்தையும் செறுத்து அற நூறி
தூய வானவர் யாரையும் சிறையிடை தொடுத்து
காய்வென் என்று தன் கண் சிவந்து இனையன கழறும் 116-6
@3. இரணியன் வதைப் படலம்

#1
ஓதும் ஆயிர கோடியின் உகத்து ஒரு முதல் ஆய்
தாது உலாவிய தொடை புயந்து இரணியன் தமரோடு
ஆதி நாள் அவன் வாழ்ந்தனன் அவன் அரும் தவத்துக்கு
ஏது வேறு இல்லை யார் அவன்போல் தவம் இழைத்தார்

#2
இந்த இந்திரன் இமையவர் அவனுக்கு ஓர் பொருளோ
உந்தும் அண்டங்கள் அனைத்தினும் உள்ள இந்திரரும்
அந்த நான்முகர் உருத்திரர் அமரர் மற்று எவரும்
வந்து இவன் பதம் முறை முறை வணங்கிட வாழ்ந்தான் 2-1

#3
திருமகட்கு இறை உலகினும் சேண்படு புரம் மூன்று
எரிபடுத்திய ஈசன் தன் பொருப்பினும் ஏகி
சுரர் எனப்படும் தூயவர் யாவரும் தொழுது ஆங்கு
இரணியாய நம என்று கொண்டு ஏத்தல் கேட்டிருக்கும் 5-1

#4
ஓம் அரியாய நம் என ஒழிவுறாது ஓதும்
நாம நான் மறை விடுத்து அவன் தனக்கு உள்ள நாமம்
காமமே முதல் குறும்பு எறி கடவுளர் முனிவர் –
ஆம் அது ஓதுகில் அவன் தனக்கு ஒப்பவர் யாரோ 9-1

#5
ஆலும் வெவ் வலி அவுணர் கோன் அரும் தவ பெருமை
ஏலுமோ எமக்கு இயம்பிட இறைவ மற்று அவன் பேர்
மூல மா மறை இது என மூஉலகு உள்ளோர்
தாலமே மொழிந்திட்டது சான்று என தகுமால் 10-1

#6
குனிப்பு இலாத பல் ஆயிர கோடி அண்டத்தின்
நுனிக்கும் வானவர் முதலிய உயிர் தொகை நோக்கில்
அனைத்தும் அன்னவன் ஏவலை தலைக்கொண்டு அங்கு அவன் பேர்
நினைத்து வாழ்த்திட மூவர்போல் ஒரு தனி நின்றான் 18-1

#7
அன்னவன் புகழ் சீலம் நல் அறம் தனி மெய்ம்மை
உன்னும் நான் மறையோடு அருள் நீதியும் பொறையும்
இன்ன யாவும் மற்று உருவு கொண்டுளது என உவந்தே
மன்னுயிர் தொகை மகிழ்ந்திட ஒரு தனி வாழ்ந்தான் 19-1

#8
நடுங்கி அந்தணன் நா புலர்ந்து அரும் புலன் ஐந்தும்
ஒடுங்கி உள்ளுயிர் சோர்ந்து உடல் பதைத்து உளம் வெருவி
அடங்கும் இன்று நம் வாழ்வு என அயர்ந்து ஒரு படியாய்
பிடுங்கும் மெல் உரை புதல்வனுக்கு இனையன பேசும் 23-1

#9
என்று அவ் வேதியன் இவை இவை இயம்பலும் இது கேட்டு
ஒன்று மெய்ப்பொருள் உணர்ந்துள சிறுவனும் உரவோய்
நன்று நீ எனக்கு உரைத்தது என்று இன் நகை புரிந்து ஆங்கு
இன்று கேள் இதின் உறுதி என்று எடுத்து இவை உரைப்பான் 24-1

#10
என்னும் வாசகம் கேட்டலும் எழுந்து ந்ன்று இறைவன்
பொன்னின் வார் கழல் பணிந்து வாய் புதைத்து அரும் புதல்வன்
மன்னர் மன்ன யான் பழுது ஒன்றும் உரைத்திலென் மரபால்
உன்னும் உண்மையை உரைத்தனென் கேள் என உரைப்பான் 39-1

#11
அழிவு இல் வச்சிர யாக்கை என் அரும் தவத்து அடைந்தேன்
ஒழிவு இல் ஆயிர கோடி கொள் உகம் பல கழிய
தெளிவு பெற்று இறை பூண்டுளேன் யான் அலால் தெய்வம்
மொழி இல் மூடரும் வேறு உளது ஆம் என்று மொழியார் 55-1

#12
உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை பார்
அயிர்க்குறும் நேயர் தம் செயலில் காண்டல்போல்
பயிர்ப்பு உறும் அதனிலே பாசம் நீக்கி வேறு
அயிர்ப்பு அறும் அறிவினில் அறிவர் சீரியோர் 67-1

#13
நான்முகத்து ஒருவனும் நாரி பாகனும்
தான் அகத்து உணர்வதற்கு அரிய தத்துவ –
தோன் இகத்தொடு பரம் இரண்டும் எங்குமாய்
ஊனகத்து உயிரகத்து உலவும் மூர்த்தியான் 67-2

#14
வையமேல் இனி வரும் பகை உள எனின் வருவது ஒன்று என்றாலும்
உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென் என்று என் முன் உரைசெய்தாய்
செய்ய வேண்டுவது என் இனி நின் உயிர் செகுக்குவென் சிறப்பு இல்லா
பொய்யிலாளனை பொருந்திய பெரும் பகை போய பின் புகழ் ஐயா 79-1

#15
இவனை ஏழ் நிலை மாளிகை உம்பர்மேல் ஏற்றி
புவனம் தன்னிலே நூக்கும் என்று அவுணர் கோன் புகல
புவனம் உண்டவன் கழல் இணை புண்ணியன் தன்னை
பவனன் தன்னிலும் வெய்யவர் பற்றியே எடுத்தார் 98-1

#16
உற்று எழுந்தனர் மாளிகை உம்பர்மேல் கொண்டு
கற்று அறிந்தவர்க்கு அரசனை கடுந்திறல் அவுணர்
பற்றி நூக்கலும் பார் மகள் பரிவுடன் நார் ஆர்
நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண் நயந்தாள் 98-2

#17
ஓதத்தில் மிதந்து ஓடிய கலமேல்
தீது அற்றே தெளிவோடு திகழ்ந்தான்
வேதத்து உச்சியின் மெய் பொருள் நாமம்
ஓதி பின்னும் உரைப்பதை உற்றான் 103-1

#18
கயம் மேவும் இடங்கர் கழற் கதுவ
பயம் மேவி அழைத்தது பன்முறை உன்
நயம் மேவிய நாமம் மத கரி அன்று
உயுமாறு உதவுற்றிட வந்திலையோ 112-1

#19
வேதன் சிரம் ஒன்றை வெறுத்தமையால்
காதும் பிரம கொலை காய உலைந்து
ஓது உன் திரு நாமம் உரைத்த சிவன்
ஏதம் கெட வந்து இரவு ஓட்டிலையோ 112-2

#20
அது கண்டு அடல் வஞ்சகர் அப்பொழுதில்
கதம் மிஞ்சிய மன்னன் முனே கடுகி
புதல்வன் இறவாது பொருப்பு முநீர்
மிதவைப்பட மேவினன் என்றனரால் 113-1

#21
மிடல் கொண்டு அவர் வீசு கரம் பொடிபட்டு
உடல் சிந்திட உட்கினர் மற்று அவனுக்கு
ஒடிவு ஒன்று இலது என்று அவர் ஓதும் முனம்
விடம் அஞ்ச எழுந்தனன் வெய்யவனே 116-1

#22
நாணி நின் எதிரே ஆண்டு நடுவதாயினது ஓர் செம் பொன்
தூணில் நின்றனனே அன்றி தோன்றியது இலது என்று ஒன்ற
வேணுதண்டு உடையோன் வெய்ய வெள்ளியே விளம்ப வெள்ளி
காண வந்து அனைய சீயம் கணத்திடை கதிர்த்தது அம்மா 128-1

#23
ஈது அவன் மகிழ்தலோடும் இரணியன் எரியின் பொங்கி
சாதலை இல்லா என் முன் தருக்குறு மாயம் எல்லாம்
போது ஓர் கணத்தில் இன்னே போக்குவேன் போக்குவேன் என்று
ஓதினன் அண்ட கோளம் உடைந்திட உருத்து சொல்வான் 128-2

#24
அ புறத்து அளவு இல் கோடி அண்டங்கள் அனைத்து உள்ளாக
வெப்புறும் அனந்த கோடி வெள்ளம் என்று உரைப்பர் மேலாம்
துப்புடை கனகன் சேனை தொகை அவை அனைத்தும் செம் தீ
ஒப்புற நகைத்து நீறாய் எரிந்தது ஓர் கடவுள் சீயம் 142-1

#25
இ திறம் அமரின் ஏற்று ஆங்கு இருவரும் பொலிந்தகாலை
பொய்த்திறற் கனகன் வேண்டும் போர் பல இயற்றி பின்னும்
எத்தனை கோடி கோடி மாயங்கள் இயற்ற நோக்கி
முத்தனும் முறுவல் கொண்டு ஆங்கு அவை எலாம் முடித்து நின்றான் 149-1

#26
நெருப்பு என கனகன் சீறி நிலம் முதல் புவனம் அஞ்ச
பொருப்பு இனம் எவையும் சிந்தி பொடிபட குதித்து போர் வாள்
தரிப்புற சுழற்றி தாக்க வருதலும் தரும மூர்த்தி
பருப்பதம் கடந்த தோளான் பதம் இரண்டு ஒரு கை பற்றா 149-2

#27
அழிவு இலான் வயிர மார்பத்து அமலன் மானுடம் ஆம் சீய
எழில் உலாம் உருவு கொண்டு ஆங்கு இரு கையின் உகிர் வாள் ஓச்சி
கழியவே பிளத்தலோடும் கனக மா மேரு விண்டு
கிழியவே குருதி ஓதம் கிளர்ந்த போல் கிளர்ந்தது அம்மா 153-1

#28
இரணியன் வயிர மார்பும் இரு பிளவாக கீறி
கரை அறும் அவுண வெள்ள படை எலாம் கடிதின் மாய்த்து
தரை முதல் ஆன அண்ட பரப்பு எலாம் தானே ஆகி
கருணை கொள் அமலன் பல் வேறு உயிர் எலாம் காத்து நின்றான் 153-2

#29
மங்கை ஒரு பாகன் முதல் அமரர் மா மலர்மேல்
நங்கைதனை ஏவுதலும் நாராயண கடவுள்
சிங்கல் இலா மானுடம் ஆம் சீய உருவம் போக்கி
பொங்கு பரம் சுடராய் எங்கும் பொலிய நின்றான் 164-1

#30
ஈது ஆங்கு அமலன் இயம்ப எழிற் புதல்வன்
நா தாங்கு அரு மறையும் நாடற்கு அரிய செழும்
பாதாம்புய மலரில் பல் முறையும் தான் பணிந்து
வேதாந்த மெய்ப்பொருளே என்று விளம்பலுற்றான் 168-1

#31
சீலம் உறுவோய் உனக்கு செப்பும் திருநாமம்
மேலோர் புகழ் பிரகலாதன் என விரும்பி
நால் வேத வாய்மை நனி மா தவத்தோரும்
மேலாம் அமரர்களும் யாரும் விளம்ப என்றான் 173-1
@4. வீடணன் அடைக்கலப் படலம்

#1
சிரத்தொகை அனைத்தையும் துளக்கி தீ எழ
கரத்தொடு கரம் பல புடைத்து காளை நீ
உரைத்திடும் உறுதிகள் நன்று நன்று எனா
சிரித்தனன் கதம் எழுந்து இனைய செப்புவான் 1-1

#2
அன்று வானரம் வந்து நம் சோலையை அழிக்க
கொன்று தின்றிடுமின் என தூதரை கோறல்
வென்றி அன்று என விலக்கினை மேல் விளைவு எண்ணி
துன்று தாரவன் – துணை என கோடலே துணிந்தாய் 6-1

#3
நேர் வரும் உறுதியின் நிலை உரைத்தனென்
சீரிது என்று உணர்கிலை சீறி பொங்கினாய்
ஓர் தரும் அறிவு இலார்க்கு உரைக்கும் புந்தியார்
தேர்வுறின் அவர்களின் சிறந்த பேதையோர் 11-1

#4
மற்று ஒரு பொருள் உளது என் நின் மாறு இலா
கொற்றவ சரண் என கூயது ஓர் உரை
உற்றது செவித்தலத்து ஐயன் ஒல்லென
நல் துணைவரை முகம் நயந்து நோக்குறா 33-1

#5
எந்தையே இராகவ சரணம் என்ற சொல்
தந்தவர் எனைவரோ சாற்றுமின் என
மந்தணம் உற்றுழீஇ வய வெம் சேனையின்
முந்தினர்க்கு உற்றதை மொழிகுவாம் அரோ 33-2

#6
மேலைநாள் அமுதமும் விடமும் வெண்கடல்
மூலமாய் உதித்தன முறையின் முற்றுதல்
சாலுமோ ஒன்று என கருதல் தக்கதோ –
ஞால நாயக – தெரிந்து எண்ணி நாடிலே 86-1

#7
ஒருவயிறு உதித்தனர் அதிதி ஒண் திதி
இருவர் மற்று அவரிடத்து எண்ணில் எம்பிரான்
சுரரொடு சுடு சினத்து அவுணர் தோன்றினார்
கருதின் மற்று ஒன்று என கழறலாகுமோ 86-2

#8
எப்பொருள் ஏவரே உலகின் ஓர் முறை
ஒப்பினும் குணத்து இயல் உணரின் பேதமாம்
அ பொருள் நலன் இழிவு இரண்டும் ஆய்ந்து அகம்
மெய் பொருள் கோடலே விழுமிது என்பரால் 86-3

#9
ஆவலின் அடைக்கலம் புகுந்துளான் கருத்து
ஓவலின் இவர்தமக்கு உணர ஒண்ணுமோ
தேவர்கள் தேவன் நீ தெளியின் அன்னவர்
கூவி இங்கு அறிவது கொள்கை ஆகுமால் 91-1

#10
மோதி வந்து அடரும் சீய முனிவினுக்கு உடைந்து வேடன்
மீது ஒரு மரத்தில் சேர வேண்டு உரை அரிக்கு சொல்லி
பேதம் அற்று இருந்தும் அன்னான் பிரிந்த வஞ்சத்தை ஓர்ந்தும்
காதலின் கனி காய் நல்கி காத்ததும் கவியது அன்றோ 116-1

#11
என்ன முன் பருதிமைந்தன் எழுந்து அடி வணங்கி எந்தாய்
சொன்னதே துணிவது அல்லால் மறுத்து ஒரு துணிவும் உண்டோ
உன் உளத்து உணராது ஏது உனக்கு அரிது யாதோ என்னா
பன்னி மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து உரைக்கலுற்றான் 117-1

#12
வானவர் இதனை கூற வலங்கொடு தானை வைப்பை
தானை அம் தலைவரோடும் சார்ந்த வீடணனும் தாழாது
ஊனுடை பிறவி தீர்ந்தேன் என மனத்து உவந்து ஆங்கு அண்ணல்
தேன் உகு கமல பாதம் சென்னியால் தொழுது நின்றான் 151-1
@5. ஒன்னார் வலி அறி படலம்

#1
திரு மறு மார்பனை இறைஞ்ச செல்வனும்
அருள் சுரந்து அரக்கனை அருகு இருத்தியே
அரு வரை அனைய தோள் அறிஞ நீ புகல்
பொருள் உளது எமக்கு அது புகல கேட்டியால் 14-1

#2
மரு கிளர் தாமரை வாச நாள்மலர்
நெருக்கிடு தடம் என இருந்த நீதியான்
திரு கிளர் தாமரை பணிந்த செம்மலை
இருக்க ஈண்டு எழுந்து என இருந்த காலையில் 14-2

#3
வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு
இலங்குறு மலர் அயன் எண் இல் யோசனை
தலம் கொடு சமைத்து நல் நகரும் தந்து இதற்கு
இலங்கை என்று ஒரு பெயர் ஈந்த மேலைநாள் 18-1

#4
ஆய இ நகரிடை அரக்கர் ஆகிய
தீயவர் தொகையினை தெரிக்கின் எண் இல் நாள்
போயிட துணிந்து அவை புந்தி ஓரினும்
ஓயுமோ அறிந்தவை உரைப்பென் ஆழியாய் 19-1

#5
பேயர்கள் என்ன யான் பிதற்ற பேர்கிலா
மா இரும் புற மதில் வகுத்த மா படை
ஏயின நாள் எலாம் எண்ணும் பித்தர்கள்
ஆயிர வெள்ளமே அறிந்தது ஆழியாய் 28-1

#6
ஈங்கு இவை அன்றியும் ஏழு தீவினும்
ஓங்கு பாதலத்தினும் உயர்ந்த வானத்தும்
தாங்கிய சக்கர வாள சார்பினும்
ஆங்கு அவன் படைதனக்கு அளவை இல்லையால் 30-1

#7
ஆயவர் அளவிலர் அறத்தை நுங்கிய
தீயவர் தேவரை செறுத்து தேவர் ஊர்
காய் எரி படுத்திய கடுமையார்களில்
நாயக அறிந்தமை நவில கேட்டியால் 32-1

#8
இன்னும் மைந்தர்கள் இயம்பின் மூவாயிர கோடி
என்ன உண்டு அவர் இரதமும் கரிகளும் பரியும்
துன்னும் ஆள் வகை தொகுதியும் செறிந்திட மேல்நாள்
பன்னகாதிபன் உலகினை பரிபவ படுத்தோர் 51-1

#9
பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன் கொடுக்கும்
திண் திறல் பெறும் வானக தேர் ஒன்றின் இவர்ந்தே
அண்ட கோடிகள் எவற்றினும் புகுந்து அரசுரிமை
கொண்டு மீளுவான் ஒரு கணத்து இலங்கையில் கொடியோன் 58-1

#10
சுற்று தன் கிளை பரப்பொடும் தொலைவு இன்றி வாழ்தற்கு
உற்ற மூன்றரை கோடியின் உகம் அவன் தவத்தின்
பெற்றனன் சிவன் கொடுத்திட பெரு வரம் பெரியோய்
இற்று அவன் செயல் என்று கொண்டு இனையன உரைப்பான் 58-2

#11
ஈது நிற்க மற்று எந்தை நீ ஏவிய தூதன்
மோது வாரிதி கடந்து ஒரு கணத்தினில் முடுகி
ஆதி நாயகிதன்னை கண்டு அணி நகர் அரணும்
காது வெம் சினத்து அரக்கர் தம் வலிமையும் கடந்தான் 59-1

#12
இலங்கை வெந்தது வேறு இனி இயம்புவது எவனோ
அலங்கலோடு செம் சாந்தமும் அன்று தான் அணிந்த
கலன்களோடும் அ சாத்திய துகிலொடும் கதிர் வாள்
இலங்கை வேந்தனும் விசும்பிடை ஏழு நாள் இருந்தான் 65-1
@7. வருணன் அடைக்கலப் படலம்

#1
என்று உரைத்து இன்னும் சொல்வான் இறைவ கேள் எனக்கு வெய்யோர்
என்றும் மெய் பகைவர் ஆகி ஏழு பாதலத்தின் ஈறாய்
நின்றுள தீவின் வாழ்வார் நிமல நின் கணையால் ஆவி
கொன்று எமை காத்தி என்றான் குரிசிலும் கோறலுற்றான் 15-1
@8. சேது பந்தனப் படலம்

#1
சாற்று மா முரசு ஒலி கேட்டு தானையின்
ஏற்றமோடு எழுந்தனர் எறி திரை கடல்
ஊற்றமீது ஒளித்து ஒரு கணத்தில் உற்று அணை
ஏற்றுதும் என படை தலைவர் யாருமே 4-1

#2
வல் விலங்கு வழா தவர் மாட்டு அருள்
செல் வலம் பெறும் சிந்தையின் தீர்வரோ
இவ் விலங்கல் விடோ ம் இனி என்பபோல்
எல் வயங்கும் இரவி வந்து எய்தினான் 25-1

#3
ஒருவன் ஆயிரம் யோசனை ஓங்கிய
அருவி மால் வரை விட்டு எறிந்து ஆர்த்தலால்
மருவு வான் கொடி மாட இலங்கையில்
தெரு எலாம் புக்கு உலாய தெண்ணீர் அரோ 38-1

#4
மணல் பரப்பும் மணி பரப்பும் ஒளி
தணல் பரப்புவ போன்றன தான் கவி
உணர் பரப்பும் உறு கவியின் தொகை
கண பரப்பு கடல் பரப்பு ஆனதே 63-1

#5
வரை பரப்பும் மணல் பரப்பும் அனல்
தரை பரப்புவது என்ன தனி தனி
உரை பரப்பும் உறு கிரி ஒண் கவி
கரை பரப்பும் கடற் பரப்பு ஆனதால் 63-2

#6
இன்னவாறு அங்கு எழுபது வெள்ளமும்
அன்ன சேனை தலைவரும் ஆழியை
துன்னி நின்று விடாது இடை தூர்த்தலால்
பொன் இலங்கை தொடுத்து அணை புக்கதே 64-1
@9. ஒற்றுக் கேள்விப் படலம்

#1
என்று நளனை கருணையின் தழுவி அன்பாய்
அன்று வருணன் உதவும் ஆரமும் அளித்து
துன்று கதிர் பொற்கலனும் மற்றுள தொகுத்தே
வென்றி இனி என்று படையோடு உடன் விரைந்தான் 4-1

#2
இறுத்தனன் – ஏழு-பத்து வெள்ளமாம் சேனையோடும்
குறித்திடும் அறுபத்தேழு கோடியாம் வீரரோடும்
பொறுத்த மூ-ஏழு தானை தலைவர்களோடும் பொய் தீர்
அறத்தினுக்கு உயிராய் என்றும் அழிவு இலா அமலன் அம்மா 13-1

#3
கேட்டலும் நளன் என்று ஓதும் கேடு இலா தச்சன் கேள்வி
வாட்டம் இல் சிந்தையான் தன் மனத்தினும் கடுகி வல்லே
நீட்டுறும் அழிவு இல்லாத யோசனை நிலையதாக
காட்டினன் மதிலினோடும் பாசறை கடிதின் அம்மா 14-1

#4
போயினன் அமலன் பாதம் பொருக்கென வணங்கி இன்னே
ஆயினது அணி கொள் பாடி நகர் முழுது அமல என்றான்
நாயகன் தானும் வல்லே நோக்கினன் மகிழ்ந்து நன்று என்று
ஏயினன் எவரும் தம்தம் பாசறை இருக்க என்றே 16-1

#5
அவ் வகை அறிந்து நின்ற வீடணன் அரியின் வீரர்க்கு
ஒவ்வுற உருவம் மாறி அரக்கர் வந்தமை அங்கு ஓத
செவ்விதின் மாய செய்கை தெளிந்திடுமாறு தாமே
கைவலியதனால் பற்றி கொண்டனர் கவியின் வீரர் 25-1

#6
என அவர் இயம்ப கேட்ட இறைவனுக்கு இலங்கை வேந்தன்
தனது ஒரு தம்பி அன்னோர் சாற்றிய வாய்மை மெய்யும்
எனது ஒரு மனத்தில் வஞ்சம் இருந்ததும் இன்னே காண்டி
நினைவதன் முன்னே விஞ்சை நீக்குவென் என்று நேர்ந்தான் 29-1

#7
ஆங்கு அவர் புகல கேட்ட ஐயனும் அவரை நோக்கி
ஈங்கு இது கருமமாக எய்தினீர் என்னின் நீர் போய்
தீங்கு உறும் தசக்கிரீவன் சிந்தையில் தெளியுமாறே
ஓங்கிய உவகை வார்த்தை உரையும் என்று ஓதலுற்றான் 32-1

#8
இன்னவாறு இவர்தம்மை இங்கு ஏவிய
மன்னர் மன்னவன் ஆய இராவணன்
அன்ன போது அங்கு அளவு இல் அமைச்சரோடு
உன்னும் மந்திரத்து உற்றதை ஓதுவாம் 38-1

#9
சொல்லும் மந்திர சாலையில் தூய் மதி
நல் அமைச்சர் நவை அறு கேள்வியர்
எல்லை இல்லவர் தங்களை நோக்கியே
அல் அரக்கர் பதியும் அங்கு ஓதுவான் 41-1

#10
ஈது எலாம் உரைத்து என் பயன் இன்று போய்
காதி மானுடரோடு கவி குலம்
சாதல் ஆக்குவென் தான் ஓர் கணத்து எனும்
போதில் மாலியவானும் புகலுவான் 46-1

#11
என்னும் வாய்மை இயம்புறு போதினில்
முன்னமே சென்ற ஒற்றர் முடுகி எம்
மன்னவர்க்கு எம் வரவு உரைப்பீர் எனா
துன்னு காவலர் தம்மிடை சொல்லினார் 52-1

#12
என்ன சாரர் இசைத்தனர் வேலையை
கன்னல் ஒன்றில் கடந்து கவி குலம்
துன்னு பாசறை சூழல்கள்தோறுமே
அன்னர் ஆகி அரிதின் அடைந்தனம் 56-1

#13
வருணன் அஞ்சி வழி கொடுத்து ஐய நின்
சரணம் என்று அடி தாழ்ந்து அவன் தன் பகை
நிருதர் வெள்ளம் அனந்தம் நிகழ்ந்து முன்
திரிபுர செயல் செய்தது அங்கு ஓர் கணை 59-1

#14
செவி துளை இருபதூடும் தீ சொரிந்தென்ன கேட்டு
புவித்தலம் கிழிய அண்டம் பொதிர் உற திசையில் நின்ற
இப திரள் இரிய வானத்து இமையவர் நடுங்க கையால்
குவி தடம் புயமே கொட்டி கொதித்து இடை பகரலுற்றான் 65-1

#15
தானை அம் தலைவன் ஈது சாற்றலும் தறுகண் வெம் போர்
கோன் அழன்று உருத்து வீரம் குன்றிய மனிதரோடு
வானர குழுவை எல்லாம் வயங்கும் என் கரத்தின் வாளால்
ஊன் அற குறைப்பென் நாளை ஒரு கண பொழுதில் என்றான் 69-1

#16
மன்னவர் மன்னன் கூற மைந்தனும் வணங்கி ஐயா
என்னுடை அடிமை ஏதும் பிழைத்ததோ இறைவ நீ போய்
மன்னிய மனித்தரோடும் குரங்கொடும் மலைவென் என்றால்
பின்னை என் வீரம் என்னாம் என்றனன் பேசலுற்றான் 69-2

#17
இந்திரன் செம்மல் தம்பி யாவரும் எவரும் போற்றும்
சந்திரன் பதத்து முன்னோன் என்றனர் சமரை வேட்டு
வந்தனர் நமது கொற்றம் வஞ்சகம் கடப்பது என்னும்
சுந்தரன் அவனும் இன்னோன் என்பதும் தெரிய சொன்னார் 74-1

#18
எரி என சீறி இவ்வாறு உரைத்து இரு மருங்கில் நின்ற
நிருதரை கணித்து நோக்கி நெடும் கரி இரதம் வாசி
விருதர்கள் ஆதி வெள்ள படை தொகை விரைந்து நாளை
பொரு திறம் அமையும் என்னா புது மலர் சேக்கை புக்கான் 87-1
@10. இலங்கை காண் படலம்

#1
கண்டு அகம் மகிழ்ந்து ஆங்கு அண்ணல் கடி நகர் இலங்கை மூதூர்
விண்தலம் அளவும் செம் பொற் கோபுரம் விளங்கும் வீதி
மண்டபம் சிகர கோடி மாளிகை மலர் கா ஆதி
எண் திசை அழகும் நோக்கி இளவலுக்கு இயம்புகின்றான் 6-1
@11. இராவணன் வானரத் தானை காண் படலம்

#1
ஏறிட்ட கல்லு வீழும் இடம் அற எண்கினாலே
நாறு இட்டதென்ன ஒவ்வோர் ஓசனை நாலுபாலும்
சூறிட்ட சேனை நாப்பண் தோன்றுவோன் இடும்பன் என்றே
கூறிட்ட வயிர திண் தோள் கொடும் தொழில் மடங்கல் போல்வான் 27-1

#2
மற்று இவன் படையில் ஒன்னார் அன்றி வானவர்களே வந்து
உற்றனர் எனினும் பற்றி உயிர் உக பிசைந்திட்டு ஊத
கொற்றவன் அருளும் கொண்டோ ன் குடாவடிக்கு இறைவன் கூற்றம்
பெற்றவன் அடைந்தோர்தம்மை உயிர் என பேணும் நீரான் 27-2

#3
ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடக குன்றம் ஒன்றை
வாங்கு நீர் மகரவேலை வந்து உடன் வளைந்ததென்ன
ஓங்கு மைம் முகத்தின் தானையுள் பொலிந்திடுவான் வெற்றி
ஓங்கிய குவவு திண் தோள் வினதன் என்று உரைக்கும் வெய்யோன் 27-3

#4
அன்னவன் தனக்கு வாமத்து ஐம்பது கோடி யூகம்
தன்னை வந்து இடையில் சுற்ற தட வரை என்ன நிற்பான்
கொல் நவில் குலிசத்து அண்ணல் கொதித்து எதிர்கொடுக்குமேனும்
வென்னிட குமைக்கும் வேகதெரிசி என்று உரைக்கும் வீரன் 27-4

#5
பிளக்கும் மன்பதையும் நாகர் பிலனையும் கிளக்கும் வேரோடு
இளக்கும் இ குடுமி குன்றத்து இனம் எலாம் பிடுங்கி ஏந்தி
அளக்கர் கட்டவனும் மாட்டது அலக்கணுற்றிட விட்டு ஆர்க்கும்
துளக்கம் இல் மொய்ம்பர் சோதிமுகனும் துன்முகனும் என்பார் 27-5

#6
குன்றொடு குணிக்கும் கொற்ற குவவு தோள் குரக்கு சேனை
ஒன்று பத்து ஐந்தொடு ஆறு கோடி வந்து ஒருங்கு சுற்ற
மின் தொகுத்து அமைந்த போல விளக்கு எயிறு இலங்க மேரு
சென்றென வந்து நிற்பான் திறல் கெழு தீர்க்கபாதன் 27-6

#7
நூற்றிரண்டாய கோடி நோன் கவி தாளை சுற்ற
காற்றின் மா மகற்கு கீழ்பால் கன வரை என்ன நிற்பான்
கூற்றின் மா மைந்தன் கூற்றும் குலுக்கமுற்று அலக்கண் எய்த
சீற்றமே சிந்தும் செம் கண் தெதிமுகன் என்னும் சீயம் 27-7

#8
நாடில் இங்கு இவர் ஆதியாய் நவின்ற மூ-எழுவர்
ஆடல் வெம் படை தலைவர்கள் ஆறுபத்து ஏழு
கோடி வீரர்கள் குன்று என குவவிய தோளாய்
கூடு சேனையும் எழுபது வெள்ளமாய் குறிப்பார் 33-1

#9
அழிவு இலா வலி படைத்துள நம் படை அரக்கர்
ஒழிவு இலாத பல் ஆயிர வெள்ளத்துக்கு உறை ஓர்
துளியும் ஒவ்விடா எழுபது வெள்ளத்தின் தொகை சேர்
எளிய புன் குரங்கு என் செயும் என்றனன் இகலோன் 35-1
@12. மகுட பங்கப் படலம்

#1
பிடித்தவன் விழி துணை பிதுங்கிட நெருக்கி
இடித்து அலம்வர கதறி எய்த்திட இரங்காது
அடி கொடு துகைத்து அலை கடற்குள் ஒரு கையால்
எடுத்து உக இராவணன் எறிந்து இகலின் ஆர்த்தான் 22-1

#2
எறிந்திட விழுந்து இரவி சேய் அறிவு சோர்வுற்று
அறிந்ததொர் இமைப்பளவில் ஆகமது தேறி
பிறிந்திலன் என தொனி பிறந்திட மருங்கில்
செறிந்து அமர் அரக்கனொடு செய்வென் என வந்தான் 22-2

#3
என இவை அமலன் கூற இரு கையும் எடுத்து கூப்பி
மனம் மிக நாணி ஒன்றும் வாய் திறந்து உரைக்கலாற்றான்
பனியினை வென்றோன் மைந்தன் பின்னரும் பணிந்து நின்றே
அனகனுக்கு அன்பினோடும் அடுத்தமை அறையலுற்றான் 38-1

#4
என்றனன் என்றலோடும் இணை அடி இறைஞ்சி ஆங்கு
குன்று உறழ் குவவு திண் தோள் கொற்ற வல் வீரற் காண
தன் தனி உள்ள நாணால் தழல் விழி கொலை வெம் சீயம்
நின்றென எருத்தம் கோட்டி நிலனுற நோக்கி கூறும் 38-2

#5
இரவி போய் மறையும் முன்பு அங்கு இராமனும் இலங்கை நின்ற
வரை இழிந்து அனைவரோடும் வந்து தன் இருக்கை எய்தி
நிருதர்தம் குலத்தை எல்லாம் நீறு எழ புரியுமாறே
பொரு திறம் முயன்ற செய்கை புகலுவான் எடுத்து கொண்டாம் 49-1

#6
தெய்வ தாமரையோன் ஆகி யாவையும் தெரிய காட்டி
மெய் வைத்த அருளினாலே அவை எலாம் விரும்பி காத்து
சைவத்தன் ஆகி யாவும் தடிந்திடும் செயலின் மேவும்
கை வைத்த நேமியோன் தன் கால் வைத்த கருத்தமே யாம் 49-2

#7
பூசலை குறித்து இராமன் பொரும் கவி சேனை வெள்ளம்
மாசு அற வகுத்து நாலு திக்கினும் வளைய செய்து
பாசமுற்றுடைய நண்பின் படை துணையவர்களோடும்
பாசறை இருந்தான் அந்த பதகனும் இழிந்து போனான் 49-3
@13. அணி வகுப்புப் படலம்

#1
இறைவன் மற்று இதனை கூற எறுழ் வலி அமைச்சர் பொங்கி
பிறை முடி பரமனோடும் பெரு வரை எடுத்த மேலோய்
உறு சமர்க்கு எம்மை கூவி ஏவிடாதொழிந்தாய் யாமும்
சிறு தொழில் குரங்கு அது என்ற திறத்தினும் தாழ்த்தது என்றார் 11-1

#2
அமைச்சர் மற்று இதனை கூறி அரச நீ விடைதந்தீமோ
இமைப்பிடை சென்று வந்த குரங்குஇன படையை எல்லாம்
கமைப்பு அற கடிது கொன்றே களைகுவம் என்ற போதில்
சுமை தட வரை தோள் கும்பகருணன் சேய் நிகும்பன் சொல்வான் 12-1

#3
எரி நெருப்பு என்ன பொங்கி இராவணன் என்னும் மேலோன்
உரை செறி அமைச்சரோடும் உறு படை தலைவரோடும்
கரி பரி இரதம் காலாள் கணக்கு அறும் வெள்ள சேனை
மருவுற திசை நான்கு உம்பர் வகுத்து அமர் புரிய சொன்னான் 17-1

#4
இம் முறை அரக்கர் கோமான் அணி வகுத்து இலங்கை மூதூர்
மும் மதில் நின்ற தானை நிற்க மூதமைச்சரோடும்
விம்முறு சேனை வெள்ள தலைவர்க்கு விடையும் நல்கி
கம்மென கமழும் வாச மலர் அணை கருக சேர்ந்தான் 22-1
@14. அங்கதன் தூதுப் படலம்

#1
சூளுறும் வஞ்சனாக தோன்றிய இலங்கை வேந்தன்
கோளுறும் சிறையை நீக்கி குரை கழல் வணங்கும் ஆகில்
வீழுறும் இலங்கை செல்வம் வீடணற்கு அளித்தே கானில்
ஆளும் நம் தவத்தின் செல்வம் அவன் தனக்கு அளிப்பென் என்றான் 7-1

#2
தப்பு இல வீடணற்கு இலங்கை தானமா
செப்பிய வாய்மைதான் சிதையலாகுமோ
இப்பொழுது இராவணன் ஈங்கு வந்திடில்
அப்பொழுது அயோத்தி நாடு அளிப்பென் ஆணையே 7-2

#3
அரி முதல் தேவர் ஆதி அமரிடை கலந்த போதும்
வரி சிலை இராமன் வாளி வந்து உயிர் குடிப்பது அல்லால்
புரம் ஒரு மூன்றும் தீய பொடி செய்தோன் தன்னொடு அ நாள்
அரு வரை எடுத்த வீரன் ஆண்மைக்கும் அவதி உண்டோ 17-1

#4
வந்தது என் குரங்கு ஒன்று இல்லை அடைத்தது என் கடல் வாய் மந்தி
சிந்தையின் களியால் என் பேர் தெரியுமோ தெரியாது ஆகில்
இந்த எம் பதியை காக்கும் இறைவனோ அறிதும் எங்கள்
விந்தை எம் பெருமான் வாழி வீடணன் என்னும் வேந்தன் 19-1

#5
முந்த ஓர் தசக்கிரீபன் ஆக்கையை மொய்ம்பால் வீக்கும்
அந்த ஆயிர தோளானை அரக்கிய மழுவலாளன்
வந்து எதிர் கொள்ள வீர சிலையும் வெவ் வலியும் வாங்கும்
சுந்தர தோளன் விட்ட தூதன் நான் என்ன சொன்னான் 20-1

#6
பசை அறு சிந்தையானை தமரொடும் படுத்த போதும்
இசை எனக்கு இல்லை அன்றே என்பது ஓர் இகழ்வு கொண்டான்
வசை அற இசைக்கும் ஊரை வளைக்கவும் வந்திலாதான்
திசையினை வென்ற வென்றி வரவர சீர்த்தது என்றான் 36-1

#7
ஆதி அம் பரன் அங்கதன் ஓதல் கேட்டு
ஈது அவன் கருத்து என்றிடின் நன்று எனா
சோதியான் மகன் ஆதி துணைவருக்கு
ஓதினான் அங்கு அமரர்கள் உய்யவே 43-1
*