மிகைபாடல்கள்,கிட்கிந்தா காண்டம் – கம்பராமாயணம்

@2. கிட்கிந்தா காண்டம் – அனுமப் படலம்

#1
தாரன் நீலனை மருவு தாம மாருதியை முதல்
வீரரோடு இரவிசுதன் மேரு மால் வரையை நிகர்
பார மா மலையின் ஒரு பாகம் ஓடுதல் புரிய
ஆர மார்பரும் அதனின் ஆகுமாறு உறல் கருதி 2-1

#2
மானை நாடுதல் புரிஞர் – வாலி ஏவலின் வருதல்
ஆனவாறு என மறுகி ஆவி சோர் நிலையர் தொடர்
ஏனை வானரர் சிலரும் ஏக மா முழையில் முழு
ஞான நாதரை அறிவின் நாடி மாருதி மொழியும் 2-2

#3
மற்றும் இவ் உலகத்து உள்ள முனிவர் வானவர்கள் ஆர் இ
சொல் திறம் உடையார் மற்று எ சுருதியின் தொகுதி யாவும்
முற்று அறிதரும் இம் மாணி மொழிக்கு எதிர் முதல்வர் ஆய
பெற்றியர் மூவர்க்கேயும் பேர் ஆற்றல் அரிது மன்னோ 19-1

#4
இருக்கன் மா மைந்தரான வாலியும் இளவல்தானும்
செருக்குனோடு இருக்கும்காலை செறுநரின் சீறி வாலி
நெருக்குற வெருவி இந்த நெடும் குவட்டு இருத்தான் தண்பால் –
மரு குலாம் தாரீர் – வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ 21-1
@3. கிட்கிந்தா காண்டம் – நட்புக் கோட் படலம்

#1
பிரிவு இல் கான் அது தனில் பெரிய சூர்ப்பணகைதன்
கரிய மா நகிலொடும் காதொடும் நாசியை
அரியினார் அவள் சொல திரிசிரா அவனொடும்
கரனொடும் அவுணரும் காலன் வாய் ஆயினார் 10-1

#2
கடுத்து எழு தமத்தை சீறும் கதிர் சுடர் கடவுள் ஆய்ந்து
வடித்த நூல் முழுதும் தான் ஓர் வைகலின் வரம்பு தோன்ற
படித்தவன் வணங்கி வாழ்த்தி பரு மணி கனக தோள்மேல்
எடுத்தனன் இரண்டுபாலும் இருவரை ஏகலுற்றான் 29-1

#3
என்று கால்மகன் இயம்ப ஈசனும்
நன்று நன்று எனா நனி தொடர்ந்து பின்
சென்ற வாலிமுன் சென்ற செம்மல்தான்
அன்று வாவுதற்கு அறிந்தனன்கொலாம் 65-1

#4
இனையவா வியந்து இளவல்தன்னொடும்
வனையும் வார் கழல் கருணை வள்ளல் பின்பு
இனைய வீரர் செய்தமை இயம்பு என
புனையும் வாகையான் புகறல் மேயினான் 65-2

#5
திறத்து மா மறை அயனொடு ஐம்முகன் பிறர் தேடி
புறத்து அகத்து உணர் அரிய தன் பொலன் அடி கமலம்
உற சிவப்ப இ தரை மிசை உறல் அறம் ஆக்கல்
மறத்தை வீட்டுதல் அன்றியே பிறிது மற்று உண்டோ 70-1

#6
நீலகண்டனும் நேமியும் குலிசனும் மலரின் –
மேல் உளானும் வந்து அவன் உயிர்க்கு உதவினும் வீட்டி
ஆலும் உன் அரசு உரிமையோடு அளிக்குவென் அனலோன்
சாலும் இன்று எனது உரைக்கு அரும் சான்று என சமைந்தான் 71-1

#7
மண்ணுள் ஓர் அரா முதுகிடை முளைத்த மா மரங்கள்
எண்ணில் ஏழ் உள அவற்றில் ஒன்று உருவ எய்திடுவோன்
விண்ணுள் வாலிதன் ஆர் உயிர் விடுக்கும் என்று உலகின் –
கண் உளோர்கள் தாம் கழறிடும் கட்டுரை உளதால் 80-1
@5. கிட்கிந்தா காண்டம் – துந்துபிப் படலம்

#1
புயலும் வானகமும் அ புணரியும் புணரிசூழ்
அயலும் வீழ் தூளியால் அறிவு அரும் தகையவாம்
மயனின் மா மகனும் வாலியும் மறத்து உடலினார்
இயலும் மா மதியம் ஈர்-ஆறும் வந்து எய்தவே 9-1
@7. கிட்கிந்தா காண்டம் – வாலி வதைப் படலம்

#1
பேர்வுற வலிக்கவும் மிடுக்கு இல் பெற்றியார்
நோவுற உலந்தனர் அதனை நோக்கி யான்
ஆர்கலிதனை கடைந்து அமுது கொண்டனென்
போர் வலி அழிந்து போய் புறம் தந்து ஓடலென் 27-1

#2
தயங்கு தாரகை நிரை தொடுத்து அணிந்தென போல
வயங்கு சென்னியன் வய புலி வான வல் ஏற்றொடு
உயங்கும் ஆர்ப்பினன் ஒல்லை வந்து அடு திறல் வாலி
பயம் கொள புடைத்து எற்றினன் குத்தினன் பலகால் 61-1

#3
சிவந்த கண்ணுடை வாலியும் செம் கதிர் சேயும்
வெவந்த போது அவர் இருவரும் நோக்கின்ற வேலை
கவந்த தம்பியை கையினால் எடுத்து அவன் உயிரை
அவந்த மற்றவன் ஆர் உயிர் அந்தகற்கு அளிப்போன் 61-2

#4
அயிர்த்த சிந்தையன் அந்தகன் குலைகுலைந்து அஞ்ச
செயிர்த்து நோக்கினன் சினத்தொடு சிறு நகை செய்யா
வயிர்த்த கையினும் காலினும் கதிர்மகன் மயங்க
உயிர் தலம்தொறும் புடைத்தனன் அடித்தனன் உதைத்தான் 61-3

#5
வெற்றி வீரனது அடு கணை அவன் மிடல் உரத்தூடு
உற்றது அ புறத்து உறாத முன் உறு வலி கரத்தால்
பற்றி வாலினும் காலினும் பிணித்து அகப்படுத்தான்
கொற்ற வெம் கொடு மறலியும் சிரதலம் குலைந்தான் 66-1

#6
ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை
வென்று ஆள்வதே என்னில் வேறு ஒன்றும் இல்லை வீணே பிடித்து என் தன் மேல் அம்பு விட்டாய்
தன் தாதை மாதா உடன் கூடி உண்ண தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான்
நின் தாதை அன்றேயும் நீயும் பிடித்தாய் நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே 89-1

#7
மா வல சூலியார் வாழ்த்துநர்க்கு உயர் வரம்
ஓவல் அற்று உதவல் நின் ஒரு தனி பெயர் இயம்பு
ஆவலிப்பு உடைமையால் ஆகும் அ பொருளை ஆம்
தேவ நிற் கண்ட எற்கு அரிது எனோ தேரினே 128-1
@9. கிட்கிந்தா காண்டம் – அரசியல் படலம்

#1
வள்ளலும் அவண் நின்று ஏகி மதங்கனது இருக்கை ஆன
வெள்ள வான் குடுமி குன்றத்து ஒரு சிறை மேவி மெய்ம்மை
அள்ளுறு காதல் தம்பி அன்பினால் அமைக்கப்பட்ட
எள்ளல் இல் சாலை எய்தி இனிதினின் இருந்த காலை 33-1
@10.கிட்கிந்தா காண்டம் – கார்காலப் படலம்

#1
எண் வகை நாகங்கள் திசைகள் எட்டையும்
நண்ணின நா வளைத்தனைய மின் நக
கண்ணுதல் மிடறு என கருகி கார் விசும்பு
உள் நிறை உயிர்ப்பு என ஊதை ஓடின 9-1
@11. கிட்கிந்தா காண்டம் – கிட்கிந்தைப் படலம்

#1
தெள்ளியோர் உதவ பெரும் செல்வம் ஆம்
கள்ளினால் அதிகம் களித்தான் கதிர்
புள்ளி மா நெடும் பொன் வரை புக்கது ஒர்
வெள்ளி மால் வரை என்ன விளங்குவான் 18-1

#2
சென்று மாருதி தன்னிடம் சேர்ந்து அவண்
நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும்
வென்றி வீரன் வியப்பொடு மேல்வினை
ஒன்றுவான் அவன் தன்னை உசாவினான் 25-1

#3
அன்னை போன பின் அங்கத காளையை
தன்னை நேர் இல் அ சமீரணன் காதலன்
இன்னம் நீ சென்று இரும் துயில் நீக்கு என
மன்னன் வைகு இடத்து ஏகினன் மாசு இலான் 41-1

#4
சேய் உயர் கீர்த்தியான் கதிரின் செம்மல்பால்
போயதும் அவ் வயின் புகுந்த யாவையும்
ஓய்வுறாது உணர்த்து என உணர்த்தினான் அரோ
வாய்மையா – உணர்வுறு வலி கொள் மொய்ம்பினோன் 137-1
@12. கிட்கிந்தா காண்டம் – தானை காண் படலம்

#1
அன்று அவண் வானர சேனை யாவையும்
வென்றி கொள் தலைவரும் எண்கின் வீரரும்
குன்றுகள் ஒரு வழி கூடினாலென
வன் திறல் இராமனை வாழ்த்தி வந்தவே 1-1

#2
இன்னது ஆகிய திறத்து அவர் இருக்க முன் போக
சொன்ன ஆயிர கோடியில் தூதர்தம் திறத்தால்
பன்ன ஆறு – இரு வெள்ளம் ஆம் கவி படை பயில-
பொன்னின் வார் கழல் இடபன் – அ கிட்கிந்தை புகுந்தான் 1-2

#3
தாமரை பெரும் தவிசு உறை சதுமுக கடவுள்
ஓம அங்கியில் உதித்தன உலப்பு இல கோடி
ஆம் என புகல் வானர தானை அங்கு அணித்தா-
மா வய புயத்து எறுழ் வலி மயிந்தன்-வந்து அடைந்தான் 1-3

#4
கங்கைசூடிதன் கருணை பெற்றுடைய முன் வாலி
பொங்கும் ஆணையின் எண் திசை பொருப்பினும் பொலிய
தங்கி வாழ் கலி தானை அங்கு ஆறு-ஐந்து கோடி
வங்க வேலையின் பரந்திட-வசந்தன்-வந்து அடைந்தான் 1-4
@14. கிட்கிந்தா காண்டம் – பிலம்புக்கு நீங்கு படலம்

#1
இ நெடும் கிரிகொலோ எதுகொலோ என
அ நெடு மேருவோடு அயிர்க்கலாவது
தொல் நெடு நிலம் எனும் மங்கை சூடிய
பொன் நெடு முடி என பொலியும் பொற்பது 12-1

#2
பறவையும் பல் வகை விலங்கும் பாடு அமைந்து
உறைவன கனக நுண் தூளி ஒற்றலான்
நிறை நெடு மேருவை சேர்ந்த நீர ஆய்
பொறை நெடும் பொன் ஒளி மிளிரும் பொற்பது 12-2

#3
இரிந்தன கரிகளும் யாளி ஈட்டமும்
விரிந்த கோள் அரிகளும் வெருவி நீங்கின
திரிந்தனர் எங்கணும் திருவை காண்கிலார்
பிரிந்தனர் பிறிது என பெயரும் பெற்றியார் 16-1

#4
மாது அவள் உயிர்த்த மகவோர் இருவர் வாச
போது உறை நறை குழல் ஒருத்தி – புகழ் மேலோய்
ஏதம் உறு மைந்தர் தவம் எய்த அயல் போனார்
சீதள முலை சிறுமி தாதையொடு சென்றாள் 59-1

#5
மத்த மத வெண் களிறு உடை குலிசி வன் தாள்
சித்தமொடு மான்முகன் வணங்கி அயல் சென்றான்
வித்தகனும் ஆயிர விலோசனனும் மேன்மேல்
முத்த நகையாளை நனி நோக்கினன் முனிந்தான் 59-2

#6
மேரு சவ்வருணி எனும் மென்சொலினள் விஞ்சும்
ஏர் உறு மடந்தை யுகம் எண்ண அரு தவத்தாள்
சீர் உறு சுயம்பிரபை ஏமை செறிவு எய்தும்
தாரு வளர் பொற்றலமிசை கடிது சார்ந்தாள் 70-1

#7
மேரு வரை மா முலையள் மென்சொலினள் – விஞ்சு
மாருதியினை பல உவந்து மகிழ்வுற்றே-
ஏர் உறு சுயம்பிரபை ஏமை நெறி எய்த
தாரு வளர் பொன்-தலனிடை கடிது சார்ந்தாள் 70-2
@15. கிட்கிந்தா காண்டம் – ஆறு செல்படலம்

#1
செல்வர் என்றும் வடகலை தென் தமிழ்
சொல் வரம்பினர் என்றும் சுமடரை
கொல்வர் என்றும் கொடுப்பவர் என்றும் -அவ்
இல் வரம்பினர்க்கு ஈ தேனும் ஈட்டதே 45-1

#2
தாறு நாறுவ வாழைகள் தாழையின்
சோறு நாறுவ தூம்புகள் மாங்கனி
நாறு நாறுவ நாறு வளர்க்குறும்
சேறு நாறுவ செங்கழுநீர் அரோ 49-1
@16. கிட்கிந்தா காண்டம் – சம்பாதிப்படலம்

#1
யாவரும் அவ் வயின்நின்றும் மன் இயல்
பூ வரும் அருந்ததி பொருவும் கற்புடை
தேவியை எங்கணும் தேடி கண்டிலம்
மேவினம் என்பது விளம்பினார் அரோ 3-1

#2
அன்னதோர் அளவையின் அங்க நாடு ஒரீஇ
தென் மலைநாட்டினை தேடி சென்று உடன்
இன் இசை தலைவரோடு இரண்டு வெள்ளமும்
மன்னு மா மயேந்திர தலத்து வந்ததால் 3-2

#3
தாழ்ந்த மா தவத்து உலோகசாரங்கன் உறையும் சாரல்
வீழ்ந்தனென் சிறைகள் தீய வெவ்வுயிர்த்து உளமும் மெய்யும்
போழ்ந்தன துன்பம் ஊன்ற உயிர்ப்பொறை போற்றகில்லாது
ஆழ்ந்தனென் ஆழ்ந்த என்னை அரும் தவன் எதிர்ந்து தேற்றி 56-1

#4
கற்றிலார் போல உள்ள களிப்பினால் அமரர் காப்பூடு
உற்றிட கருதி மீ போய் ஆதபத்து உனது மேனி
முற்று அழல் முருங்க மண்ணை முயங்கினை இனி என் சில் நாள்
மற்று நின் உயிரை ஓம்பாது இகழ்வது மாலைத்து அன்றால் 56-2

#5
களித்தவர் கெடுதல் திண்ணம் சனகியை கபடன் வவ்வி அன்று
ஒளித்த வாய் துருவி உற்ற வானரர் இராம நாமம்
விளித்திட சிறை வந்து ஓங்கும் வெவ்வுயிர்த்து அயரல் என்று
அளித்தனன் அதனால் ஆவி ஆற்றினேன் – ஆற்றல் மொய்ம்பீர் 56-3

#6
அன்றியும் அலருள் வைகும் அயனைநேர் முனிவன் வாய்மை
நன்றிகொள் ஈசற் காண்பான் நணுகலும் வினையேன் உற்றது
ஒன்று ஒழிவுறாமல் கேட்டு அது யோகத்தின் உணர்ச்சி பேணி
பொன்றுதல் ஒழிமின் யானே புகல்வது கேண்மின் என்றான் 56-4

#7
தசரத ராமன் தேவர் தவத்தினால் தாய் சொல் தாங்கி
கச ரத துரகம் இன்றி கானிடை இறுத்த காலை
வசை தரும் இலங்கை வேந்தன் வவ்விய திருவை நாடி
திசை திரி கவிகள் உற்றால் சிறகு பெற்று எழுதி என்ன 56-5

#8
எம்பியும் இடரின் வீழ்வான் ஏயது மறுக்க அஞ்சி
அம்பரத்து இயங்கும் ஆணை கழுகினுக்கு அரசன் ஆனான்
நம்பிமீர் ஈது என் தன்மை நீர் இவண் நடந்தவாற்றை
உம்பரும் உவக்க தக்கீர் உணர்த்துமின் உணர என்றான் 56-6

#9
எனக்கு உணவு இயற்றும் காதல் என் மகன் சுபார்சுபன் பேர்
சின கொலை அரக்கன் மூதூர் வட திசைநின்று செல்வான்
நினைக்குமுன் திருவோடு அந்த நீசனை நோக்கி எந்தை-
தனக்கு இரை எய்திற்று என்னா சிறகினால் தகைந்து கொண்டான் 57-1

#10
காமத்தால் நலியப்பட்டு கணங்குழைதன்னை கொண்டு
போம் மத்தா போகல் எந்தை புன் பசிக்கு அமைந்தாய் என்று
தாம தார் மௌலி மைந்தன் தடுத்து இடை விலக்க நீசன்
நாமத்தால் விரலை கவ்வ நாணி மீண்டு எனக்கு சொன்னான் 57-2

#11
முன்னர் அ நிசாகர முனி மொழிந்ததும்
பின்னர் அ சுபார்சுபன் பெலத்து இராவணன்
தன்னொடும் அமர் பொர சமைந்து நின்றதும்
கொன் இயல் சனகியை கொண்டு போனதும் 57-3

#12
நினைந்து சம்பாதியும் நீதி யாவையும்
இனைந்தனன் வானரர் எவரும் கேட்கவே
நினைந்து கண்ணீர் விழ நெடிது உயிர்த்தனர்
வினைந்தனர் புரண்டனர் விதியை நொந்தனர் 57-4
@17. கிட்கிந்தா காண்டம் – மயேந்திரப் படலம்

#1
ஆரியன் மின்னின் பேர் எழில் கூறும் அமைவாலும்
காரியம் உன்னால் முற்றும் என சொல் கடனாலும்
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா மனம் எண்ணி
சீரியன் மல் தோள் ஆண்மை உரைத்தால் செயும் என்றே 8-1
*