அயோத்தியா காண்டம் – மிகைப் பாடல்கள், கம்பராமாயணம்

@1. அயோத்தியா காண்டம் – மந்திரப்படலம்

#1
மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ
பன்னரும் தவம்புரி பருவம் ஈது என
கன்ன மூலத்தினில் கழற வந்தென
மின்னென கருமைபோய் வெளுத்த தோர்மயிர்

#2
தீங்கு இழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையது ஆய் அணுகிற் றாம் என
பாங்கில்வந்து இடுநரை படிம கண்ணாடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்

#3
எய்திய முனிவரன் இணைகொள் தாமரை
செய்ய பூம் கழலவன் சென்னி சேர்ந்த பின்
வையகத்து அரசரும் மதி வல்லாளரும்
வெய்தினில் வருக என மேயினான் அரோ 4-1

#4
ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைவினன் ஆகி
நாளும் நல் தவம் புரிந்து நல் நளிர் மதி சடையோன்
தாளில் பூசையின் கங்கையை தந்து தந்தையரை
மீள்வு இல் இன் உலகு ஏற்றினன் ஒரு மகன் மேல்நாள் 66-1

#5
நறை குழற் சீதையும் ஞால நங்கையும்
மறுத்தும் இங்கு ஒருவற்கு மணத்தின்பாலரோ-
கறுத்த மா மிடறுடை கடவுள் கால வில்
இறுத்தவற்கு அன்றி என்று இரட்டர் கூறினார் 76-1

#6
ஏத்த வந்து உலகு எலாம் ஈன்ற வேந்தனை
பூத்தவன் அல்லனேல் புனித வேள்வியை
காத்தவன் உலகினை காத்தல் நன்று என
வேத்தவை வியப்புற விதர்ப்பர் கூறினார் 76-2

#7
பெருமையால் உலகினை பின்னும் முன்னும் நின்று
உரிமையோடு ஓம்புதற்கு உரிமை பூண்ட அ
தருமமே தாங்கலில் தக்கது ஈண்டு ஒரு
கருமம் வேறு இலது என கலிங்கர் கூறினார் 76-3

#8
கேடு அகல் படியினை கெடுத்து கேடு இலா
தாடைகை வலிக்கு ஒரு சரம் அன்று ஏவிய
ஆடக வில்லிக்கே ஆக பார் எனா
தோடு அவிழ் மலர் முடி துருக்கர் சொல்லினர் 76-4

#9
கற்ற நான்மறையவர் கண்ணை மன்னுயிர்
பெற்ற தாய் என அருள் பிறக்கும் வாரியை
உற்றதேல் உலகினில் உறுதி யாது என
கொற்றவேல் கனை கழல் குருக்கள் கூறினார் 76-5

#10
வாய் நனி புரந்த மா மனுவின் நூல் முறை
தாய் நனி புரந்தனை தரும வேலினாய்
நீ நனி புரத்தலின் நெடிது காலம் நின்
சேய் நனி புரக்க என தெலுங்கர் கூறினார் 76-6

#11
வையமும் வானமும் மதியும் ஞாயிறும்
எய்திய எய்துப திகழும் யாண்டு எலாம்
நெய் தவழ் வேலினாய் நிற்கும் வாசகம்
செய் தவம் பெரிது என சேரர் கூறினார் 76-7

#12
பேர் இசை பெற்றனை பெறாதது என் இனி
சீரியது எண்ணினை செப்புகின்றது என்
ஆரிய நம் குடிக்கு அதிப நீயும் ஒர்
சூரியன் ஆம் என சோழர் சொல்லினார் 76-8

#13
ஒன்றிய உவகையர் ஒருங்கு சிந்தையர்
தென் தமிழ் சேண் உற வளர்த்த தென்னரும்
என்றும் நின் புகழொடு தருமம் ஏமுற
நின்றது நிலை என நினைந்து கூறினார் 76-9

#14
வாள் தொழில் உழவ நீ உலகை வைகலும்
ஊட்டினை அருள் அமுது உரிமை மைந்தனை
பூட்டினை ஆதலின் பொரு இல் நல் நெறி
காட்டினை நன்று என கங்கர் கூறினர் 76-10

#15
தொழு கழல் வேந்த நின் தொல் குலத்துளோர்
முழு முதல் இழித்தகை முறைமை ஆக்கி ஈண்டு
எழு முகில் வண்ணனுக்கு அளித்த இ செல்வம்
விழுமிது பெரிது என மிலேச்சர் கூறினார் 76-11

#16
கொங்கு அலர் நறு விரை கோதை மோலியாய்
சங்க நீர் உலகத்துள் தவத்தின் தன்மையால்
அங்கணன் அரசு செய்தருளும் ஆயிடின் –
சிங்களர்-இங்கு இதில் சிறந்தது இல் என்றார் 76-12

#17
ஆதியும் மனுவும் நின் அரிய மைந்தற்கு
பாதியும் ஆகிலன் பரிந்து வாழ்த்தும் நல்
வேதியர் தவ பயன் விளைந்ததாம் என
சேதியர் சிந்தனை தெரிய செப்பினார் 76-13

#18
அளம் படு குரை கடல் அகழி ஏழுடை
வளம் படு நெடு நில மன்னர் மன்னனே
உளம் படிந்து உயிர் எலாம் உவப்பது ஓர் பொருள்
விளம்பினை பெரிது என விராடர் கூறினார் 76-14
@2. அயோத்தியா காண்டம் – மந்தரை சூழ்ச்சிப் படலம்

#1
பொன்னும் மா மணியும் புனை சாந்தமும்
கன்னி மாரொடு காசினி ஈட்டமும்
இன்ன யாவையும் ஈந்தனள் அந்தணர்க்கு
அன்ன முந்தளிர் ஆடையும் நல்கினாள் 9-1

#2
நல்கி நாயகன் நாள்மலர் பாதத்தை
புல்லி போற்றி வணங்கி புரையிலா
மல்லல் மாளிகை கோயில் வலங்கொளா
தொல்லை நோன்புகள் யாவும் தொடங்கினாள் 9-2

#3
கடி கமழ் தாரினான் கணித மாக்களை
முடிவு உற நோக்கி ஓர் முகமன் கூறிப்பின்
வடி மழுவாளவற் கடந்த மைந்தற்கு
முடிபுனை முதன்மை நாள் மொழிமின் என்றனன் 9-3

#4
ஆர்த்தனர் களித்தனர் ஆடி பாடினர்
வேர்த்தனர் தடித்தனர் சிலிர்த்து மெய்ம் மயிர்
போர்த்தனர் மன்னனை புகழ்ந்து வாழ்த்தினர்
தூர்த்தனர் நீள் நிதி சொல்லினார்க்கு எலாம் 34-1
@3. அயோத்தியா காண்டம்- கைகேயி சூழ்வினைப் படலம்

#1
வந்து மன் நகரில் தம்தம் வகைப்படும் உருவம் மாற்றி
சுந்தர தடந்தோள் மாந்தர் தொல் உரு சுமந்து தோன்றாது
அந்தரத்து அமரர் சித்தர் அரம்பையர் ஆதி ஆக
இந்திரை கொழுநற் போற்றி இரைத்துமே எய்தி நின்றார் 75-1
@4. அயோத்தியா காண்டம் – நகர் நீங்கு படலம்

#1
விழுந்து பார்மிசை வெய்து உயிர்த்து ஆவி சோர்ந்து
எழுந்து என் நாயகனே துயர் ஏது எனா
தெளிந்திலேன் இது செப்புதி நீ எனா
அழுந்தினாள் பின்னர் அரற்ற தொடங்கினாள் 29-1

#2
அன்னாள் இன்ன பன்னி அழிய துயரால் மன்னர்
மன்னானவனும் இடரின் மயங்கி மைந்தா மைந்தா
முன்னே வனம் ஏகிடல் நீ முறையோ முதல்வா முறையோ
என்னே யான் செய் குறைதான் என்றே இரங்கி மொழிவான் 53-1

#3
உணர்வு ஏதும் இலாள் உரையால் உரைசால் குமரன் நெடு நாள்
புணரான் நிலம் மா வனமே போவானேயாம் என்னில்
இணரே பொலி தார் நிருபா இடரால் அயர்வாய் இதுவும்
துணையோ- துணைவா என்றாள் துயரேல் துயரேல் என்றான் 53-2

#4
சேலா கியமா முதல்வன் திரு உந்தியின் நீள் மலரின்-
மேலா கியநான் முகனால் வேதம் களின் மா முறையின்ப
¡லா கியயோனிகளின் பலவாம் வருணம் தருவான்
நாலா கியதாம் வருணன் தனின் முன் எமை நல்கினனால் 76-1

#5
அந்நான் மறையோன் வழியில் அருள் காசிபன் நல் மைந்தன்
மின்னார் புரிநூல் மார்பன் விருத்தே சனன்மெய் புதல்வன்
நன்னான் மறைநூல் தெரியும் நாவான் சலபோ சன் என
சொன்னான் முனிவன் தரு சுரோசனன் யான் என்றான் 76-2

#6
தாவாத அருந்தவர் சொல் தவறாததனால் தமியேன்
சாவாதவரும் உளரோ தண்டா மகவு உண்டு என்றே
ஓவாதார் முன் நின்றே ஒரு சொல் உடையாது அவரும்
பூவார் அனலுள் பொன்றி பொன் – நாடு அதனில் புக்கார் 86-1

#7
இம்மா மொழிதந்து அரசன் இடருற்றிடும் போழ்தினில் அ
செம்மா மயில் கோசலையும் திகையா உணர்வு ஓவினளாய்
மெய்ம்மாண் நெறியும் விதியின் விளைவும் தளர்வின்றி உணரும்
அம்மா தவனும் விரைவோடு அவலம் தருநெம் சினனாய் 87-1

#8
என்று என்று சீற்றத்து இளையோன் இது இயம்பிடாமுன்
கன்று ஒன்றும் ஆவின் பல யோனியும் காத்த நேமி
வன் திண் சிலை கைம் மனு என்னும் வயங்கு சீர்த்தி
குன்று ஒன்று தோளான் மருமான் இவை கூறலுற்றான் 127-1

#9
ஆய் தந்த மென் சீரை அணிந்து அடி தாழ்ந்து நின்ற
சேய் உந்து நிலை நோக்கினன் சேய் அரி கண்கள் தேம்ப
வேய் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்ப-
தாய் நிந்தை இன்றி பல ஊழி தழைத்தி என்றாள் 147-1

#10
மாறு இனி என்னை நீ வனம் கொள்வாய் என
ஏறின வெகுளியை யாதும் முற்றுற
ஆறினை தவிர்க என ஐய ஆணையின்
கூறிய மொழியினும் கொடியது ஆம் என்றான் 153-1

#11
வானமே அனையதோர் கருணை மாண்பு அலால்
ஊனம் வேறு இலானுடன் உலகம் யாவையும்
கானமே புகும் எனில் காதல் மைந்தனும்
தானுமே ஆளும்கொல் தரை என்றார் சிலர் 190-1

#12
பிறிது ஓர் மாற்றம் பெருந்தகை பேசலன்
மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும்
செறுவின் வீழ்ந்த நெடும் தெரு சென்றனன் –
நெறி பெறாமை அரிதினின் நீங்குவான் 227-1

#13
போயினான் நகர் நீங்கி-பொலிதரு
தூய பேர் ஒளி ஆகி துலங்கு அருள்
ஆய மூவரும் ஆகி உயிர் தொகைக்கு
ஆயும் ஆகி அளித்தருள் ஆதியான் 232-1
@5. அயோத்தியா காண்டம் – சுமந்திரன் மீட்சிப் படலம்

#1
தொடுத்த கல் இடை சிலர் துவண்டனர் துயின்றார்
அடுத்த அடையிற் சிலர் அழிந்தனர் அயர்ந்தார்
உடுத்த துகில் சுற்று ஒரு தலை சிலர் உறைந்தார்
படுத்த தளிரில் சிலர் பசைந்தனர் அசந்தார் 16-1

#2
ஒரு திறத்து உயிர் எலாம் புரந்து மற்று அவண்
இரு திறத்து உள வினை இயற்றும் எம்பிரான்
தரு திறத்து ஏவலை தாங்கி தாழ்வு இலா
பொரு திறல் சுமந்திரன் போய பின்னரே 46-1
@6. அயோத்தியா காண்டம்- தசரதன் மோட்சப் படலம்

#1
துந்துமி முழங்க தேவர் தூய் மலர் பொழிந்து வாழ்த்த
சந்திர வதனத்து ஏயும் அரம்பையர் தழுவ தங்கள்
முந்து தொல் குலத்துளோரும் முக்கணான் கணமும் சூழ
அந்தரத்து அரசன் சென்றான் ஆன தேர் பாகன் சொல்லால் 12-1

#2
வந்த முனிவன் வரம் கொடுத்து மகனை நீத்த வன் கண்மை
எந்தை தீர்த்தான் என உள்ளத்து எண்ணி எண்ணி இரங்குவான்
உந்து கடலில் பெரும் கலம் ஒன்று உடையா நிற்க தனி நாய்கன்
நைந்து நீங்க செயல் ஓரா மீகாமனை போல் நலிவுற்றான் 26-1
@7. அயோத்தியா காண்டம் – கங்கைப் படலம்

#1
அன்ன காரணத்து ஐயனும் ஆங்கு அவர்
உன்னு பூசனை யாவும் உவந்தபின்
மின்னு செம் சடை மெய் தவர் வேண்டிட
பன்ன சாலையின் பாடு இருந்தான் அரோ 27-1
@8. குகப் படலம்

#1
ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்
நாற்றம் மேய நகை இல் முகத்தினான்
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்
கூற்றம் அஞ்ச குமுறும் குரலினான் 7-1

#2
நின்றான் நெஞ்சில் நிரம்புறும் அன்பால்
இன்றே நின் பணி செய்திட இறைவா
நன்றே வந்தனென் நாய் அடியேன் யான்
என்றே கூவினன்-எயிரினரின் இறையோன் 9-1

#3
அடிதொழுது உவகை தூண்ட அழைத்தனன் ஆழி அன்ன
துடியுடை சேனை வெள்ளம் பள்ளியை சுற்ற ஏவி
வடி சிலை பிடித்து வாளும் வீக்கி வாய் அம்பு பற்றி
இடியுடை மேகம் என்ன இரைத்து அவண் காத்து நின்றான் 17-1

#4
வெயில் விரி கனக குன்றத்து எழில் கெட விலகு சோதி
கயில் விரி வயிர பைம் பூண் கடும் திறல் மடங்கல் அன்னான்
துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும் அவளை நாமே
எயிலுடை அயோத்தி மூதூர் எய்து நான் எய்துக என்றான் 20-1

#5
மற கண் வாள் இளைய வீரன் ஆணையை மறுத்தல் செல்லா
உறக்க மா மாதும் அண்ணல் உபய பங்கயங்கள் போற்றி
துறக்கமாம் என்னல் ஆய தூய் மதில் அயோத்தி எய்தி
இறுக்கும்நாள் எந்தை பாதம் எய்துவல் என்ன போனாள் 20-2

#6
மற்றவள் இறைஞ்சி ஏக மா மலர் தவிசின் நீங்கா
பொற்றொடி யோடும் ஐயன் துயில்தரும் புன்மை நோக்கி
இற்றது ஓர் நெஞ்சன் ஆகி இரு கண் நீர் அருவி சோர
உற்ற ஓவியம் அது என்ன ஒரு சிலை அதனின் நின்றான் 20-3
@10. அயோத்தியா காண்டம் – சித்திரகூடப் படலம்

#1
நெய் கொள் நீர் உண்டு நெருப்பு உண்டு நீண்டு மைம் நிறைந்த
வை கொள் வேல் என காலனும் மறுகுறும் கண்ணாய்
மெய்கள் நோகின்ற பிடிகளை விரும்பிய வேழம்
கைகள் நோகில தாங்கின நிற்பன காணாய் 36-1

#2
விடம் கொள் நோக்கி நின் இடையினை மின் என வெருவி
படம் கொள் நாகங்கள் முழை புக பதைப்பன பாராய்
மடங்கல் ஆளிகள் என கொடு மழை இனம் முழங்க
கடம் கொள் கார் மத கைம்மலை இரிவன காணாய் 36-2

#3
எய்த இன்னல் வந்த போது யாவரேனும் யாவையும்
செய்ய வல்லர் என்று கொள்க சேண் நெறிக்கண் நீங்கிட
மைய கண்ணி செய்ய பாதம் வல்ல ஆய எம்பிதன்
கைகள் இன்று பன்னசாலை கட்ட வல்ல ஆயவே 50-1

#4
தினை துணை வயிறு அலா சிற்றெறும்புகள்
வனத்திடை கரிகளை வருத்தி வாழ்வன
அனைத்து உள உயிர்களும் யாவும் அங்ஙனே
மனத்து இடர் நீங்கினார் இல்லை மன்னனே 55-1
@11. அயோத்தியா காண்டம் – பள்ளிபடைப் படலம்

#1
பொரு இல் தூதுவர் போயினர் பொய் இலார்
இரவும் நன் பகலும் கடிது ஏகினர்
பரதன் கோயில் உற்றார் படிகாரிர் எம்
வரவு சொல்லுதிர் மன்னவற்கே என்றார் 1-1

#2
ஆய காதல் தனையனை தந்த அ
தூய தையல் தொழிலுறுவார் உனை
கூயள் அன்னை என்றே சென்று கூறலும்
ஏய அன்பினன் தானும் சென்று எய்தினான் 40-1

#3
கவ்வு அரவு இது என இருந்திர் கற்பு எனும்
அவ் வரம்பு அழித்து உமை அகத்துளே வைத்த
வெவ் அரம் பொருத வேல் அரசை வேர் அறுத்து
இவ் வரம் கொண்ட நீர் இனி என் கோடிரோ 73-1

#4
பொய் கரி கூறினோன் போருக்கு அஞ்சினோன்
கை கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன்
எய்த்த இடத்து இடர் செய்தோன் என்று இன்னோர் புகும்
மெய்க்கொடு நரகிடை விரைவின் வீழ்க யான் 100-1

#5
தீ அன கொடியவள் செய்த செய்கையை
நாயினேன் உனரின் நல் நெறியின் நீங்கலா
தூயவர்க்கு இடர் இழைத்து உழலும் தோமுடை
ஆயவர் வீழ் கதி அதனின் வீழ்க யான் 113-1

#6
எனை பல சூழ் உரைத்து என்னை ஈன்றவள்
வினை திறத்து அரசினை விரும்பில் அன்னை கேள்
அனைத்து உள நரகு எனக்கு ஆக என்று அவள்
பனி கமல பதம் பணிந்து இறைஞ்சினாள் – 113-2

#7
செம்மை நல் மனத்து அண்ணல் செய்கையும்
அம்மை தீமையும் அறிதல் தேற்றினாள்
கொம்மை வெம் முலை குமுறு பால் உக
விம்மி விம்மி நின்று இவை விளம்புவாள் 114-1

#8
உன்னி நைந்து உளைந்து உருகி அன்புகூர்
அன்னை தாளில் வீழ்ந்து இளைய அண்ணலும்
சொன்ன நீர்மையால் தொழுது மாழ்கினான்
இன்ன வேலைவாய் முனிவன் எய்தினான் 115-1

#9
வந்த மா தவன் தாளில் வள்ளல் வீழ்ந்து
எந்தை யாண்டையான் இயம்புவீர் எனா
நொந்து மாழ்கினான் நுவல்வது ஓர்கிலா
அந்த மா தவன் அழுது புல்லினான் 115-2

#10
உந்து போன தடம் தேர் வலானொடும்
மந்திர பெரும் தலைவர் மற்றுளோர்
தந்திர தனி தலைவர் நண்பினோர்
வந்து சுற்றும் உற்று அழுது மாழ்கினார் 119-1

#11
என்று கொண்டு மாதவன் இயம்பலும்-
நின்று நின்று தான் நெடிது உயிர்த்தனன்
நன்று நன்று எனா நகை முகிழ்த்தனன்-
குன்று குன்றுற குலவு தோளினான் 125-1

#12
அன்னதாக அங்கு ஆறு பத்து என
சொன்ன ஆயிரம் தோகைமார்களும்
துன்னி வந்தனர்-சோர்வு இலாது அவர்
மின்னும் வாள் எரி மீது வீழவே 130-1

#13
முற்றும் முற்றுவித்து உதவி மும்மை நூல்
சுற்றம் யாவையும் தொடர தோன்றினான்
வெற்றி மா தவன் – வினை முடித்த அ
கொற்ற வேல் நெடும் குமரற் கூறுவான் 134-1

#14
மன்னர் இன்றியே வையம் வைகல்தான்
தொன்மை அன்று என துணியும் நெஞ்சினார்
அன்ன மா நிலத்து அறிஞர் தம்மொடும்
முன்னை மந்திர கிழவர் முந்தினார் 134-2
@12. அயோத்தியா காண்டம் – ஆறுசெல் படலம்

#1
ஆதலால் முனியும் என்று ஐயன் அந்தம் இல்
வேதனை கூனியை வெகுண்டும் என்னினும்
கோது இலா அரு மறை குலவும் நூல் வலாய்
போதும் நாம் என்று கொண்டு அரிதின் போயினான் 55-1
@13. அயோத்தியா காண்டம் – கங்கை காண் படலம்

#1
வந்து எதிரே விழுந்தவனும் வணங்கினான் வணங்காமுன்
சந்த நெடும் திரள் புயத்தான் தழுவினான் தழுவியபின்
இந்த இடர் வடிவுடன் நீ எங்கு எழுந்தாய்-இமையோர் தம்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியாய் 32-1

#2
ஏறினர் இளவலோடு இரங்கு நெஞ்சு கொண்டு
ஊறிய தாயரும் உரிய சுற்றமும்
பேறு உள பெரு நதி நீங்கி பெட்பொடும்
கூறு தென் கரையிடை குழீஇய போதிலே 63-1

#3
தன் அன தம்பியும் தாயர் மூவரும்
சொன்ன தேர் வலவனும் தூய தோழனும்
துன்னியர் ஏறலும் துழா துடுப்பு எனும்
நல்நய காலினால் நடத்தல் மேயினான் 63-2
@14. அயோத்தியா காண்டம் – திருவடி சூட்டுப் படலம்

#1
அன்ன காதல் அரும் தவர் ஆண் தகை
நின்னை ஒப்பவர் யார் உளர் நீ அலால்
என்ன வாழ்த்திடும் ஏல்வையில் இரவியும்
பொன்னின் மேருவில் போய் மறைந்திட்டதே 5-1

#2
இன்ன ஆய எறி கடல் சேனையும்
மன்னர் யாவரும் மன் இளம் தோன்றலும்
அன்ன மா முனியோடு எழுந்து ஆண்தகை
துன்னு நீள் வரைக்கு ஏகிய சொல்லுவாம் 19-1

#3
குதித்தனன் பாரிடை குவடு நீறு எழ
மிதித்தனன் இராமனை விரைவின் எய்தினான்
மதித்திலன் பரதன் நின்மேல் வந்தான் மதில்
பதி பெரும் சேனையின் பரப்பினான் என்றான் 27-1

#4
கோடக தேர் படு குதிரை தாவிய
ஆடக தட்டிடை அலகை அற்று உகு
கேடக தட கைகள் கவ்வி கீதத்தின்
நாடகம் நடிப்பன-காண்டி நாத நீ 31-1

#5
ஐய நின்னுடைய அன்னை மூவரும்
வைய மன்னரும் மற்றும் மாக்களும்
துய்ய நாடு ஒரீஇ தோன்றினார் அவர்க்கு
உய்ய நல் அருள் உதவுவாய் என்றான் 87-1

#6
கங்குல் வந்திட கண்டு யாவரும்
அங்கணே துயில் அமைய ஆர் இருள்
பொங்கு வெம் பகை போக மற்றை நாள்
செம் கதிர் குண திசையில் தோன்றினான் 92-1

#7
வானின் நுந்தை சொல் மரபினால் உடை
தானம் நின்னது என்று இயைந்த தன்மையால்
ஊனினில் பிறந்து உரிமையாகையின்
யான் அது ஆள்கிலேன் என அவன் சொல்வான் 109-1