ஆரணிய காண்டம் – மிகைப் பாடல்கள்,கம்பராமாயணம்

@1.ஆரணிய காண்டம் – விராதன் வதைப் படலம்

#1
ஆதியானிடம் அமர்ந்தவளை அன்பின் அணையா
ஏதில் இன்னல் அனசூயையை இறைஞ்ச இறையோய்
வேத கீதம் அவை வெண் கடல் வெறிப்பு அரு புவி
ஓது முன் பிறவி ஒண் மதி தண்டம் உமிழ்வோய் 3-1

#2
உன்ன அங்கி தர யோகிபெலை யோக சயனன் –
தன்னது அன்ன சரித தையல் சமைத்த வினை இன்று
உன்னி உன்னி மறை உச்ச மதி கீத மதுரத்து
உன்னி மாதவி உவந்து மன வேகம் உதவி 3-2

#3
பருதியை தரும் முன் அத்திரி பதத்து அனுசனை
கருதி உய்த்திடுதல் காணுதி கவந்த பெலையோய்
சுருதி உய்த்த கலனை பொதி சுமந்து கொள் எனா
தருதல் அங்கு அணை சயத்து அரசி சாரும் எனலும் 3-3

#4
பாற்கடல் பணிய பாம்பு அணை பரம் பரமனை
ஏற்கை ஏத்தி இவண் எய்துதலின் என்னை எதிர
வாற்கலன் பொதி அசைந்தென கரத்தின் அணையா
ஊர்க்க முன் பணி உவந்து அருள் என பெரிதுஅரோ 3-4

#5
அன்றது அ கடல் அளித்து அகல நின்று அளிதுஅரோ
சென்று தக்க பணி சேர் முனி திறத்து எனின் அரோ
வென்று இதற்கு மொழி மேல் இடுதல் வேண்டுதல் அரோ
இன்று இதற்கும் ஓர் எல்லை பொருள் உள்ளுள் உளரோ 3-5

#6
யோசனை புகுத யோகி முனி யோக வரையின்
பாச பத்திர் இடர் பற்று அற அகற்று பழையோர்
ஓசை உற்ற பொருள் உற்றன என பெரிது உவந்து
ஆசை உற்றவர் அறிந்தனர் அடைந்தனர் அவண் 4-1

#7
ஆதி நான்மறையினாளரை அடித்தொழில் புரிந்து
ஏது நீரில் இடை எய்தியது நாமம் எனலும்
சோதியோ உள புரந்தர துடர்ச்சி மடவார்
மாதர் மாண்டு அவையின் மாயையினில் வஞ்ச நடமே 4-2

#8
விண்ணை ஆளி செய்த மாயையினில் மெய் இல் மடவார்
அண்ணல் மாமுனிவன் ஆடும் என அப்பி நடமாம்
என்ன உன்னி அதை எய்தினர் இறைஞ்சி அவனின்
அண்ணு வைகினர் அகன்றனர் அசைந்தனன் அரோ 4-3

#9
ஆடு அரம்பை நீடு அரங்கு-
ஊடு நின்று பாடலால்
ஊடு வந்து கூட இ
கூடு வந்து கூடினேன் 62-1

#10
வலம்செய்து இந்த வான் எலாம்
நலிஞ்சு தின்னும் நாம வேல்
பொலிஞ்ச வென்றி பூணும் அ
கிலிஞ்சன் மைந்தன் ஆயினேன் 64-1

#11
வெம்பு விற்கை வீர நீ
அம்பரத்து நாதனால்
தும்புருத்தன் வாய்மையால்
இம்பர் உற்றது ஈதுஅரோ 65-1
@3. ஆரணிய காண்டம் -அகத்தியப் படலம்

#1
அரும் திறல் உலகு ஒரு மூன்றும் ஆணையின்
புரந்திடும் தசமுகத்து ஒருவன் பொன்றிலா
பெருந்தவம் செய்தவன் பெற்ற மாட்சியால்
வருந்தினெம் நெடும் பகல்-வரத-யாம் எலாம் 14-1

#2
தேவர்கள் தமை தினம் துரந்து மற்று அவர்
தேவியர்தமை சிறைப்படுத்தி திக்கு எலாம்
கூவிட தடிந்து அவர் செல்வம் கொண்ட போர்
மா வலி தசமுகன் வலத்துக்கு யார் வலார் 14-2

#3
அவன் வலி படைத்து மற்று அரக்கர் யாவரும்
சிவன் முதல் மூவரை தேவர் சித்தரை
புவனியின் முனிவரை மற்றும் புங்கவர்
எவரையும் துரந்தனர்-இறைவ-இன்னுமே 14-3

#4
ஆயிர கோடி என்று உரைக்கும் அண்டமேல்
மேய போர் அரக்கரே மேவல் அல்லதை
தூய சீர் அமரர் என்று உரைக்கும் தொல் கணத்து
ஆயவர் எங்ஙன் என்று அறிந்திலோம் ஐயா 14-4

#5
வெள்ளியம் கிரியிடை விமலன் மேலை நாள்
கள்ளிய அரக்கரை கடிகிலேன் எனா
ஒள்ளிய வரம் அவர்க்கு உதவினான் கடற்
பள்ளிகொள்பவன் பொருது இளைத்த பான்மையான் 14-5

#6
நான் முகன் அவர்க்கு நல் மொழிகள் பேசியே
தான் உறு செய் வினைத்தலையில் நிற்கின்றான்
வானில் வெம் சுடர் முதல் வயங்கு கோள் எலாம்
மேன்மை இல் அரும் சிறைப்பட்டு மீண்டுளார் 14-6

#7
என்று பினும் மா தவன் எடுத்து இனிது உரைப்பான்
அன்று அமரர் நாதனை அரும் சிறையில் வைத்தே
வென்றி தரு வேல் தச முக பதகன் ஆதி
வன் திறல் அரக்கர் வளிமைக்கு நிகர் யாரே 53-1

#8
ஆயவர்கள் தங்கள் குலம் வேர் அற மலைந்தே
தூய தவ வாணரொடு தொல் அமரர்தம்மை
நீ தனி புரந்திடுதல் நின் கடனது என்றான்
நாயகனும் நன்று என அவற்கு நவில்கின்றான் 53-2
@4. ஆரணிய காண்டம் – சடாயு காண் படலம்

#1
தக்கன் நனி வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடம் கொங்கை தையலாருள்
தொக்க பதின்மூவரை அ காசிபனும் புணர்ந்தனன் அ தோகைமாருள்
மிக்க அதிதி பெயராள் முப்பத்து முக்கோடி விண்ணோர் ஈன்றாள்
மை கரும் கண் திதி என்பாள் அதின் இரட்டி அசுரர் தமை வயிறு வாய்த்தாள் 24-1

#2
தானவரே முதலோரை தனு பயந்தாள் மதி என்பாள் மனிதர்தம்மோடு-
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால் சுரபி என்பாள்
தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள பிற பயந்தாள் தெரிக்குங்காலை
மானமுடை குரோதவசை கழுதை மரை ஒட்டை பிற வயிறு வாய்த்தாள் 24-2

#3
மழை புரை பூம் குழல் விநதை வான் இடி மின் அருணனுடன் வயிநதேயன்
தழை புரையும் சிறை கூகை பாறுமுதல் பெரும் பறவை தம்மை ஈன்றாள்
இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி சிவல் காடை பல பிறவும் ஈன்றாள்
கழை எனும் அக்கொடி பயந்தாள் கொடியுடனே செடி முதலா கண்ட எல்லாம் 24-3

#4
வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள்
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள்
அருட்டை என்னும் வல்லி தந்தாள் ஓந்தி உடும்பு அணில்கள் முதலான எல்லாம்
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள் செலசரம் ஆகிய பலவும் தெரிக்குங்காலை 24-4

#5
அதிதி திதி தனு அருட்டை சுதை கழையே சுரபி அணி விநதை ஆன்ற
மதி இளை கந்துருவுடனே குரோதவசை தாம்பிரை ஆம் மட நலார்கள்
விதி முறையே இவை அனைத்தும் பயந்தனர்கள் விநதை சுதன் அருணன் மென் தோள்
புது மதி சேர் நுதல் அரம்பைதனை புணர உதித்தனம் யாம் புவனிமீதே 24-5

#6
என்று உரைத்த எருவை அரசனை
துன்று தாரவர் நோக்கி தொழுது கண்
ஒன்றும் முத்தம் முறை முறையாய் உக-
நின்று மற்று இன்ன நீர்மை நிகழ்த்தினார் 27-1
@6. ஆரணிய காண்டம் – சூர்ப்பணகைப் படலம்

#1
கண்டு தன் இரு விழி களிப்ப கா கத்து
எண் தரும் புளகிதம் எழுப்ப ஏதிலாள்
கொண்ட தீவினை திற குறிப்பை ஓர்கிலாள்
அண்டர் நாதனை இவன் ஆர் என்று உன்னுவாள் 4-1

#2
பொன்னொடு மணி கலை சிலம்பொடு புலம்ப
மின்னொடு மணி கலைகள் விம்மி இடை நோவ
துன்னு குழல் வன் கவரி தோகை பணிமாற
அன்னம் என அல்ல என ஆம் என நடந்தாள் 26-1

#3
மாண்ட கற்புடையாள் மலர் மா மகள்
ஈண்டு இருக்கும் நல்லாள் மகள் என்னுமால்
வேண்டகிற்பின் அனல் வர மெய்யிடை
தீண்டகிற்பது அன்றோ தெறும் காமமே 80-1
@7. ஆரணிய காண்டம் – திரிசிரா வதைப் படலம்

#1
ஆற்றேன் ஆற்றேன் அது கெட்டேன் அறுத்தான் அறுத்தான் என் மூக்கை
கூற்றே கூற்றே என் உடலை குலையும் குலையும் அது கண்டீர்
காற்றே தீய என திரியும் கரனே கரனுக்கு இளையோரே
தோற்றேன் தோற்றேன் வல்லபங்கள் எல்லா வகையும் தோற்றேனே 7-1

#2
பத்துடன் ஆறு என பகுத்த ஆயிரம்
வித்தக வரத்தர்கள் வீர வேள்வியில்
மு தலை குரிசிலுக்கு அன்று முக்கணான்
அத்துணை படைத்து அவன் அருள் உற்றுளார் 35-1

#3
ஆறு நூறாயிரம் கோடி ஆழி தேர்
கூறிய அவற்றினுக்கு இரட்டி குஞ்சரம்
ஏறிய பரி அவற்று இரட்டி வெள்ளம் நூறு
ஈறு இல் ஆள் கரன் படை தொகுதி என்பரால் 38-1

#4
எண் கையர் எழு கையர் ஏழும் எட்டும் ஆய்
கண் கனல் சொரிதரு முகத்தர் காலினர்
வண் கையின் வளைத்து உயிர் வாரி வாயின் இட்டு
உண்கையில் உவகையர் உலப்பு இலார்களும் 45-1
@8. ஆரணிய காண்டம் – தூடணன் வதைப் படலம்

#1
நடந்து தன் இரு கரத்தினில் நலம் பெறும் சிலைவாய்
தொடர்ந்த நாண் ஒலி எழுப்பினன் தொகைப்படும் அண்டம்
இடிந்ததென்ன நின்று அதிர்ந்தது அங்கு இறைவனும் இமைப்பில்
மிடைந்த வெம் சரம் மழை விடு தாரையின் விதைத்தான் 8-1

#2
விழுந்த வெம் படை தூடணன் சிரம் என வெருவுற்று
அழிந்த சிந்தையர் திசை திசை ஓடினர் அரக்கர்
எழுந்த காதலின் இடைவிடாது இமையவர் முனிவர்
பொழிந்து பூ மழை போற்றினர் இறைவனை புகழ்ந்தார் 21-1
@10.ஆரணிய காண்டம் – இராவணன் அணங்குறு படலம்

#1
பரிக்கும் அண்ட பரப்பு எவைக்கும் தனியரசு என்று அரன் கொடுத்த வரத்தின் பான்மை
உரைக்கு உவமை பெற குலிசத்தவன் முதலாம் உலகு இறைமைக்கு உரிய மேலோர்
இருக்கும் அரி தவிசு எவைக்கும் நாயகம் ஈது என குறித்து அங்கு இமையோர் தச்சன்
அருக்கர் வெயில் பறித்து அமைத்த அரிமுகத்தின் மணி பீடத்து அமர்ந்தான் மன்னோ 2-1

#2
பொருப்பினையும் கடந்த புய பரப்பினிடை பொழி கதிரின் ஒளி குலாவி
பரப்பும் இருட் குறும்பு எறித்த பகல் ஒளியும் கெட துரந்து பருவ மேகத்து
உரு பயில் இந்திர நீல சோதி தளைத்து உலகம் எலாம் உவந்து நோக்க
திரு பயில் உத்தரிகமொடு செறி வாகுவலய நிரை திகழ மன்னோ 5-1

#3
இலங்கு மரகத பொருப்பின் மருங்கு தவழ் இளம் கதிரின் வெயில் சூழ்ந்தென்ன
அலங்கு செம் பொன் இழை பயிலும் அரும் துகிலின் பொலிந்த அரை தவத்தின் மீது
நலம் கொள் சுடர் தொகை பரப்பும் நவமணி பத்தியின் இழைத்த நலம் ஆர் கச்சு
துலங்க அசைத்து அதில் சுரிகையுடை வடி வாள் மருங்கினிடை தொடர மன்னோ 5-2

#4
வானுலகு அளிக்கும் புரந்தரன் ஆதி மருவும் எண் திசை படு நிருபர்
ஆனவர் தமது புகழ் எலாம் ஒருங்கே அன்ன மென் புள் உரு தாங்கி
தான் இடைவிடாது தசமுகத்து அரக்கன் பதத்து இடை தாழ்ந்து தாழ்ந்து எழல்போல்
பால் நிற கவரி மயிர் குலம் கோடி பாங்கினில் பயின்றிட மன்னோ 5-3

#5
தேவ கன்னியர்கள் இயக்கர் தம் குலத்து தெரிவையர் சித்தர் மங்கையர்கள்
மேவ அரும் திறல் சேர் நாகர் மெல்லியர்கள் விளங்கு கந்திருவர் மேல் விஞ்சை
காவலர் குலத்தில் தோன்று கன்னியர்கள் ஆதியாய் கணிப்பு இல் பல் கோடி
பாவையர் எவரும் பாங்குற நெருங்கி பலாண்டு இசை பரவிட மன்னோ 5-4

#6
தண் கதிர் பொழியும் ஓர் தவள மா மதி
விண் பிரிந்து இரு நிலத்து இருந்து வேறு வேறு
எண் கடந்து உரு எடுத்து இருளை ஓட்டல்போல்
வெண் குடை தோகை பல கோடி மேவவே 7-1

#7
ஏவலின் புரி தொழில் எவையும் செய்து செய்து
ஓவு இலர் துயர் கடற்கு ஒழிவு காண்கிலர்
மேவரும் பெரும் பயம் பிடித்து விண்ணவர்
தாவினர் தலை தலை தாழ்ந்து நிற்கவே 7-2

#8
வியக்கும் மு புவனமும் வெகுண்டு மேலைநாள்
கயக்கிய கடும் திறல் கருத்துளே கிடந்து
உயக்கிய பயத்தினர் அவுணரோடு மற்று
இயக்கரும் திசை திசை இறைஞ்சி நிற்கவே 11-1

#9
பெரும் திசை இரிந்திட பெயர்த்தும் வென்ற நாள்
பரும் திறல் புயம் பிணிப்புண்டு பாசத்தால்
அரும் தளைப்படும் துயர் அதனுக்கு அஞ்சியே
புரந்தரன் களாஞ்சி கை எடுத்து போற்றவே 11-2

#10
கடி நகர் அழித்து தன் காவல் மாற்றிய
கொடியவன் தனக்கு உளம் குலைந்து கூசியே
வட திசை பரப்பினுக்கு இறைவன் மா நெதி
இடு திறை அளந்தனன் இரந்து நிற்கவே 15-1

#11
நிகர் அறு புவனம் மூன்று என நிகழ்த்திய
தொகையினில் தொகுத்திடு அண்ட சூழலில்
வகையினை குரு முறை மரபின் வஞ்சியா
புகரவன் விரித்து எடுத்து இயம்பி போகவே 15-2

#12
மதியினில் கருதும் முன் அந்து வேண்டின
எது வித பொருள்களும் இமைப்பின் நல்கியே
திதி முதல் அங்கம் அஞ்சுஅவையும் தெற்றென
விதி முறை பெற தனி விளம்பி போகவே 15-3

#13
உரிய நும் குலத்து உளேன் ஒருவன் யான் என
பரிவுறும் பழமைகள் எடுத்து பன்னியே
விரை மலர் சிதறி மெய் அன்பு மீக்கொளா
நிருதி அங்கு அடிமுறை காத்து நிற்கவே 17-1

#14
என்ற பொழுதில் கடிது எழுந்து அலறி வாய் விட்டு
அன்று அருகு நின்ற பல தேவர் கணம் அஞ்ச
புன் தொழில் அரக்கர் மனதில் புகை எழும்ப
கன்றிய மனத்தன் கழறுற்றிடுவதானாள் 49-1

#15
என்பதை மன கொடு இடர் ஏறிய கருத்தாள்
முன்ப உன் முகத்தின் எதிர் பொய் மொழியகில்லேன்
நின் பதம் நின் ஆணை இது நீ கருதுவாய் என்று
அன்பின் உரியோர் நிலை எடுத்து அறை செய்கிற்பாள் 51-1

#16
ஈது அவர்கள் தங்கள் செயல் என்று அவள் உரைப்ப
கோது உறு மனத்து எரி பிறந்து குறை நாளில்
மோது வடவை கனல் முகந்து உலகம் எல்லாம்
காதுற சினத்தன் இதனை கழறுகின்றான் 57-1

#17
இற்று எலாம் அரக்கி ஆங்கே எடுத்து அவள் இயம்ப கேட்ட
கொற்ற வாள் அரக்கன் முன்னே கொண்ட வெம் கோப தீயில்
கொற்ற ஆதரத்தின் வாய்மை எனும் புனல் சொரிதலோடும்
அற்றதால் பின்பு ஆங்கு அன்னோன் கருத்தும் வேறாயது அன்றே 81-1
@11.ஆரணிய காண்டம் – மாரீசன் வதைப் படலம்

#1
ஆயிரம் கடல் கையுடையானை மழு வாளால்
ஏ எனும் உரைக்குள் உயிர் செற்ற எதிர் இல்லன்
மேய விறல் முற்றும் வரி வெம் சிலையினோடும்
தாயவன் வலி தகைமை யாம் உறு தகைத்தோ 25-1

#2
இ மான் இ நிலத்தினில் இல்லை எனா
எம்மான் இதனை சிறிது எண்ணல் செயான்
செம் மானவள் சொல்கொடு தே மலரோன்
அம்மானும் அருத்தியன் ஆயினனால் 49-2
@12. ஆரணிய காண்டம் – இராவணன் சூழ்ச்சிப் படலம்

#1
மேனகை திலோத்தமை முதல ஏழையர்
வானகம் துறந்து வந்து அவன் தன் மாட்சியால்
ஊனம் இல் அடைப்பை கால் வருடல் ஒண் செருப்பு
ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே 43-1

#2
சந்திரன் இரவி என்பவர்கள்தாம் அவன்
சிந்தனை வழி நிலை திரிவர் தேசுடை
இந்திரன் முதலிய அமரர் ஈண்டு அவன்
கந்து அடு கோயிலின் காவலாளரே 43-2
@13. ஆரணிய காண்டம் – சடாயு உயிர் நீத்த படலம்

#1
பின்னவன் உரையினை மறுத்து பேதையேன்
அன்னவன் தனை கடிது அகற்றினேன் பொரு
மன்னவன் சிறை அற மயங்கினேன் விதி
இன்னமும் எவ் வினை இயற்றுமோ எனா 45-1

#2
சடாயுவை தடிந்த வாளை சடுதியில் விதிர்க்க கண்டாள்
தடால் என கபாடம் சாத்தி சாலையுள் சலித்தாள் அந்தோ
விடாது அட மண்ணை விண்மேல் விரைந்து எடுத்து உச்சி வேட்டான்
குடா மதி கோனை சேரும் கோமுகன் – குறளி ஒத்தான் 58-1

#3
பெண்ணை விட்டு அமைந்திடின் பிழையது ஆம் என
உள் நிறை கூடமும் உவந்த சாலையும்
மண்ணினில் இராமன் மார்பு அமர்ந்த ஆதியும்
விண்ணினில் மேதினி வேண்டி எய்தினாள் 58-2

#4
முன்னமே பூமியை முகந்து பாதலம்
தன்னிலே தரித்தன சயமும் தந்திலது
என்னவே மாகம்மீது ஏகினான் செய
உன்னியே இராவணன் உவந்ததொத்துஅரோ 58-3

#5
சடாயுவும் சாய்ந்தனன் சனகி சாய்ந்தனள்
விடா செயம் ஏதியும் பிற கதி வேறு உளோன்
தொடா மறை கிரியையும் சுவைத்த கோமகன்
அடாத மேற் செயல் எலாம் அமைத்தல் என் சயம் 58-4

#6
மூன்று பத்து ஒருபது முந்து யோசனை
ஏன்றது பாவையும் ஏது என்று எண்ணும்முன்
தோன்றினன் சுபாரிசன் தொழுது தொல் உலகு
ஈன்றவள் இவள் என இசைத்து இறைஞ்சியும் 58-5

#7
இசை கடல் உறைபவ இலங்கை வேந்தன் நீ
திசைப்படா புவனம் உன் செல்வம் என்னதோ
வசை கடல் வாழ்வு இது வழக்கு என்று எண்ணியோ
துச கடல் மொழி செல தொழுது போயினான் 58-6
@14. ஆரணிய காண்டம் – அயோமுகிப் படலம்

#1
இவை இறை ஒப்பன என்ன விழிப்பாள்
அவை குளிர கடிது அழலும் எயிற்றாள்
குவை குலைய கடல் குமுற உரைப்பாள்
நவை இல் புவித்திரு நாண நடப்பாள் 46-1

#2
என்று அவள் கூறலும் மைந்தனும் இன்னே
நன்றியதாய நறும் புனல் நாடி
வென்றி கொள் வீரன் விடாய் அது தீர்ப்பான்
இன்று இவண் வந்தனன் என்று உரைசெய்தான் 54-1
@15. ஆரணிய காண்டம் – கவந்தன் படலம்

#1
பாரிடமே இது பரவை உற்றுறும்
பார் இடம் அரிது என பரந்த மெய்யது
பார் இடம் வலம் வர பரந்த கையது-
பார் இடந்து எடுத்த மா அனைய பாழியாய் 21-1
@16. ஆரணிய காண்டம் – சவரி பிறப்பு நீங்கு படலம்

#1
மாங்கனி தாழையின் காய் வாழையின் கனிகளோடும்
ஆம் கனி ஆவதே என்று அருந்தி நான் விரும்பி வைத்தேன்
பாங்கின் நல் அமுது செய்மின் என்று அவள் பரவி நல்கும்
தேம் கனி இனிதின் உண்டு திரு உளம் மகிழ்ந்தான் வீரன் 5-1
*