கச்சிக் கலம்பகம்

பூண்டி அரங்கநாத முதலியார் இயற்றிய கச்சிக்கலம்பகம்

@1 காப்பு
** கணபதி துணை
** நேரிசை வெண்பா

#1
தங்கச் சிலை ஏடும் தந்த எழுத்தாணியும் கொள்
துங்கக் கரி முகத்துத் தூயவன் என் சங்கை ஒழித்து
ஏடு எழுத்தாணி எடுத்தறியேன் இ நூலைப்
பாட அளிப்பான் நல் பதம்
** நால்வர் துதி
** ஆசிரிய விருத்தம்

#2
தறையின் மிசைத் தமிழ் பெருகச் சைவ நெறி தழைப்ப அவதரித்த சால்பின்
மறை உறைவு ஆகும் ஒரு நால்வர் பத மலரைச் சிரம் கொண்டு மடத்தைப் போக்கிக்
குறைவு_அறு நால் தோற்றத்தின் உளதாய துயர் அகலக் குறிப்பன் அன்னோர்
பிறை சுமந்த சடையார் என் பிழை சுமந்த கலம்பகத்தைப் பெறச் செய்வாரே

@2 நூல்
** ஒருபோகு மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
** தரவு

#1
பூ மேவும் நான்முகனும் புயங்க_அணை மாதவனும்
மா மேவும் நினது முடி மலர் அடி காணாத் திறத்தை
ஆராயும் அறிவினரே அம்பலக் கூத்தாட்டினையும்
வார் ஆர்ந்த தனத்து உமையாள் மகிழ்ந்து உறையும் மாட்டினையும்
கழை இழைத்த வில்லானின் கண்ணின் உறு கேட்டினையும் 5
பிழை இழைத்த முப்புரத்தார் பீடு அழிந்த பாட்டினையும்
அறம் மேய மால் விடையாய் அம்புமாய் அம்பாகித்
திறம் மேய தேவியுமாய்ச் சேர்ந்த அரும் கூட்டினையும்
கல் அடித்தார் சிலை அடித்தார் கண் பறித்தார் முதல் அடியார்
தொல்லை நிலம் பிறவாமே துயர் அறுத்த பீட்டினையும் 10
பாற்கடலின் அமுது எழும் முன் பகைத்து எழுந்த ஆலத்திற்கு
ஏற்க இடம் அமைத்து அமரர்க்கு இன்புறச்செய் ஊட்டினையும்
கிழக்கு வடக்கு அறியாத கீழ்மையரும் சிறப்பு எய்தி
வழக்கும் இடப் புரி உணர்வு வாய்ப்ப அளித்த தீட்டினையும்
அறிபவராம் அன்றி எம் போல் அறிவற்ற சிறியவர் வீடு 15
உறு வகை மற்று இல்லை என உணர்ந்து எளிது காட்சிதரீஇ
மா கம்பத்தொடும் இறைஞ்சி வழிபாடுசெய உமையோடு
ஏகம்பத்து ஒரு மாவின் இனிது வீற்றிருந்து அருள்வோய்
** ஈரடித்தாழிசைகள்
இடங்கர் வாய்ப் பட்ட களிற்றின் உயிரைப் புரந்த செயல்
கடல் வீழ்த்த நாவரையன் கல் மிதத்தற்கு ஒப்பு ஆமோ 20
கைகைக்குக் கான் நடந்த காகுத்தன் பொறையினும் நீ
வைகைக்கு மண் சுமந்த வண்மை மிகப் பெரிது அன்றோ
கம்பத்தன் உயிர் மாயக் கடும் சமர்செய் கை வலி என்
கம்பத்தன் சிலை எடுக்கத் தலை நெரித்த கால் வலிக்கே
கொம்பு_அனையாள் கல் உரு விட்டு இன் உருவம் கொண்டதினும் 25
சம்பந்தன் என்பைப் பெண் ஆக்கியது சால்பு உடைத்தே
அம்பு ஒன்றால் புணரி நீர் சுவறச்செய் ஆற்றலினும்
நம்பு ஒன்றாப் புரம் மூன்றை நகைத்து அழித்தல் மேன்மையதே
எழு விடையைத் தழுவி மணம் எய்தும் ஒரு செயலினும் சீர்
மொழியரையன் அமணர் கரி முனிவு ஒழித்தது அற்புதமே 30
அண்டர் இள மடவாரை அணைந்த அபிராமம் எனோ
பண்டு இருடி மனைவியர்கள் பாடு அழிந்த வனப்பினுக்கே
பற்குனற்கு மாயன் சுபத்திரையைத் தந்த வகை
சற்குணற்குப் பரவை தரு தண் அளிக்கு நேர் ஆமோ
** அராகம்
உரையிட அரியது ஒர் அனல் உரு ஒளிதர 35
வரை_மகள் இடம் உறு வகை புரி அளியினை
நிழல் இடு தரு அடி நிலைபெறு கருணையை
வழிபடுமவர் பெற அருள் பரவெளியினை
பகலவன் அனலவன் நிறைமதி பரிவுறு
தகவு அமை உரை மிகு தமனிய ஒளியினை 40
பழ மறை ஒலி கெழு பல தலம் அருள் பயன்
அழகுற அருள் இவண் அமர் தரு களியினை
** பெயர்த்தும்வந்த ஈரடித்தாழிசைகள்
நறை பூத்த மலர்க் கொன்றை நளினத்தின் மாண்டதுவே
பிறை பூத்த செஞ்சடையாய் பிறங்கு புயம் உற்ற பினே
பணி அணிந்தாய் மற்று அதை வில் பற்றி இசைத்தாய் கயிறாத் 45
திணியவைத்தாய் மந்தரத்தே நஞ்சு உணவும் சிறப்பு ஆமோ
மால் உலகம் காக்க நரமடங்கல் உருக் கொள அ மா
லால் உலகுக்கு ஆன துயர் அகற்ற வலார் வேறு உளரோ
மகிழிருந்தாய் மனை என்றோ மாசுணம் மேல் துயின்றானுக்கு
அகம் கனியச் சங்கு ஆழி ஆண்டகை முன் அருளியதே 50
கவுணியருக்கு அணி முத்தம் காதலின் ஈந்து அருள்செயல் அக்
கவுணியருக்கு அணி முத்தம் கனிந்து இட்ட பரிசு அன்றோ
மதி வேணி மிசை மேவ மலர் விழியும் மதியான
விதி சாற்ற அறியேம் உன் மேனி அழகு இயம்புவதே
முலைக் குறியும் வளைக் குறியும் கொண்டதன் பின் முதலவனே 55
இலைக் குறியும் குணமும் எனல் எவ்வண்ணம் இயைந்திடுமே
மா அடிக் கீழ் உற்றாய் உன் மலர் அடிக்கே மங்கலச் சொல்
பா அடுக்க நா அளிப்பாய் பழ மறை சொல் பரமேட்டி
** நாற்சீரீரடி அம்போதரங்கம்
கரம் தயங்கு அனல் மழு ஏந்தி நெற்றியில்
புரம் தெறு சுடர்க் கணும் பூண்ட மேன்மையை 60
கூற்றினைக் குமைத்திடு கோலத் தாளினை
ஆற்றினை அருள் நடமாடும் பான்மையை
** நாற்சீரோரடி அம்போதரங்கம்
ஈரேழ் புவனம் பரிந்து உண் ஏற்றினை
கார் ஊர் சடையில் கரக்கும் ஆற்றினை
பார் ஆர் பெரியோர் பணியும் சாற்றினை 65
தேரார் தெளிவறு செருக்கை மாற்றினை
** முச்சீரோரடி யம்போதரங்கம்
புரம் எரிபட நகை கொண்டனை
புரி தவறு அழி வகை கண்டனை
புரையறு தசை மிகை உண்டனை
புணர்வுற அரு மறை விண்டனை 70
மணி மிடறு ஆர்தரும் இருளினை
மலை வளர் காதலி மருளினை
மறை ஒளிர் தோமறு பொருளினை
மகிழொடு மா அமர் அருளினை
** இருசீரோரடி அம்போதரங்கம்
சடை உறு செல்லினை 75
விடை உறும் எல்லினை
கலை அணை சொல்லினை
சிலை வளை வில்லினை
மலைவலி புல்லினை
வழி பெறு மல்லினை 80
களம் இலகு அல்லினை
பரவெளி இல்லினை
அமுது உகு பாவினை
அனல் உறு கோவினை
சிலையில் அவாவினை 85
தலை நதி மேவினை
மறை படு நாவினை
உலகு உணும் ஏவினை
கரி வளர் காவினை
கதி தரு மாவினை 90
** தனிச்சொல்
என ஆங்கு
** நேரிசையாசிரியச் சுரிதகம்
ஆரண அகில காரண பூரண
நாரணன் அறியா நாயக வேய் அக
முத்தே அறத்தின் வித்தே முக்கண்
சித்தே சத்தே எத் தேவரும் பணி 95
அத்தா அன்னாய் அளிக்கு ஒரு வைப்பே
கத்தா எனக் கூய்க் கண்ணீர் ததும்ப
உள்ளம் நெக்கு உருக உரோமம் சிலிர்ப்ப
விள்ளற்கு அரு நின் மேன்மையைப் புகழும்
பாவலர்-தமக்குப் பழ அனுகூல 100
மேவலர் வேர்_அற வீறிய சீல
மாது உமை பங்கு உறு மாண்பு உடைச் சீரிய
தீது எமை அணுகாத் திறம் அருள் ஆரிய
நால்வர் இசைத் தமிழ் நலன் அறி நாத
மால் வரை மங்கை மணாள நீத 105
கொன்றைத் தொடை அணி கோனே பசுபதி
குன்றைக் குழைத்த கோதறு குண நிதி
கல்லாப் புல்லேன் கனிவு_அறு மனத்தேன்
எல்லாப் பிழையும் இயற்றும் ஏழையால்
சொல்லப்படுமோ சொலற்கு அரு நின் புகழ் 110
புல்லப்படுமோ புரையறு நின் பதம்
உன்னப்படுமோ உத்தம நின் எழில்
பன்னப்படுமோ பகவ நின் அருள்
பாடப்படுமோ பண்ணவ நின் சீர்
தேடப்படுமோ சேவடி என்னினும் 115
அல் உறு நஞ்சு அரவு அக்கு மத்தமும்
புல்லும் உவப்புடன் புனைந்து எனக் கனிந்து
சிற்றறிவினன் உரை செய்யுளை
முற்றும் நயப்பாய் மூவர்க்கு ஐயனே
** நேரிசை வெண்பா

#2
ஐயமுறு மனமே அண்ணல் திருக் கச்சி அரன்
செய்ய மலர் அடியைச் சிந்தித்தி நையாமே
இன்மை அறியா ஈகை எச்சம் அறியா வாய்மை
புன்மை அறியாப் பொறையைப் பூண்
** கட்டளைக்கலித்துறை

#3
பூண்ட அரவம் மதியை உணாது புரந்தருளும்
ஆண்டவர் அவம்புரிவார் செயலை அழித்து உவக்கும்
தாண்டவர் அவர் இணை அடித் தாமரை தஞ்சம் என
வேண்ட வரம் அளிப்பார் கச்சி அன்பர்க்கு மெய் அரணே
** புயவகுப்பு
** இரட்டை ஆசிரியச்சந்த விருத்தம்
** தனதனன தந்தனத் தனதனன தந்தனத்
** தனதனன தந்தனத் தனதான தந்தன

#4
அரண் எரிய அந்தரத்து அமரர் துயர் சிந்த வெற்பினை
ஒரு துரும்பு எனச் சிலை கோலி விஞ்சின
அரவு அமர் இகந்து செக்கரின் இலகு செம் சடைப்
பனி மதியம் நண்புறப் புரியா மகிழ்ந்தன
அகில புவனங்களுக்கு அமுதிடும் நிரந்தரிக்கு 5
இடம் அமர் வரம் கொடுத்து அகலாது அணைந்தன
அழல் உருவம் அன்று பெற்று ஒரு புறவ மைந்தனுக்கு
ஒளி வடிவு தந்து அருள் பொலிவான் நிமிர்ந்தன
கரட மத கும்ப மத்தக கபட தந்தியைச்
சமர் பொருது வென்று உரித்து அதள் ஆடை கொண்டன 10
கடல் அமுதை உம்பருக்கு உதவ எழில் கந்தரத்து
இலகு கறை கொண்டு திக்கு இருநாலும் அளந்தன
களபம் அணி அம்பிகைக் கனக தனம் இன்புறத்
தழுவி வரும் மங்கலச் சுவடால் விளங்கின
கதிர் மதியம் அங்கி முக்கணின் ஒளி தயங்கிடக் 15
கடுவுடைய திண் சினத்து அரவு ஆட நின்றன
சரம் மழை பொழிந்த பற்குனன் அருள் பொருந்திடப்
பகைவர் கெடு வன் படைக் கொடையால் உவந்தன
சமரபுரி கந்தனைப் புலவர் உய மண்டு அமர்த்
திறல் அவுணர் பங்கமுற்றிடுமாறு தந்தன 20
சத தளம் அலர்ந்த பொன் தவிசினில் இருந்த அச்
சதுமுகன் மறம் கெடத் தலை ஓடு அணிந்தன
சலம் மிசை துயின்ற சக்கரதரன் நலம் பெறத்
தரும விடை அம்பு உறப் பரிவோடு இணங்கின
இரவின் அவிர் திங்களின் செலும் ஒளி பெறும் குழைக் 25
கவுரியிடம் அன்பின் உற்றிட ஆசை மிஞ்சின
இரணியன் உரம் தொலைத்து எழு நரமடங்கலைச்
சரப உருவம் தரித்து அமராடி வென்றன
இடப மிசை வந்து பொன் பத நசை கொள் அன்பருக்கு
உயர் பதவி தந்து இசைப்பரும் ஓகை கொண்டன 30
இனிமை தரு கம்பம் உற்று அருள் அநக எந்தை நித்திய
நிமல சுந்தரப்பரனார் புயங்களே
** ஆசிரிய விருத்தம்

#5
புயங்கப் பணியார் புவி உண்ட புனித விடையார் புரை_இல் மதி
தயங்கு அப்பு அணி ஆர் சடையாளர் தயையின் சாலை-தனை நிகர்வார்
இயங்கு அப் பணியார் புரம் எரித்த ஈசர் கச்சியிடை அமர்ந்தார்
மயங்கப் பணியார் அவர் திருத்தாள் வணங்கீர் இடும்பை வற்றிடவே
** அம்மானை
** கலித்தாழிசை

#6
வற்றா வளக் காஞ்சி வாழ்ந்து அருள் ஏகாம்பரனார்
செற்றார் புரம் எரித்த தீயர் காண் அம்மானை
செற்றார் புரம் எரித்த தீயரே ஆமாயில்
கற்றார்கள் அந்தணராக் கழறுவது ஏன் அம்மானை
கழறல் அறு_தொழில் சேர் காரணத்தால் அம்மானை
** நலம் வரு வழி
** நேரிசை வெண்பா

#7
அ மானைக் கை அமைத்தான் அக் காளை ஓடவைத்தான்
சும்மா இருந்தும் மதன் சுட்டெரித்தான் பெம்மான்
பதிக் கச்சி மேய பரமன் பணிந்து
துதிக்கத் தருவன் சுகம்
** பாதகந்தரு துன்பொழி வகை
** கட்டளைக்கலித்துறை

#8
சுகம் தரு கச்சிப் பதி வந்து அடியர் துயர் களைவோர்
நகம் தரு மெல் இயல் காம விழி இரு நாழி நெல்லால்
உகந்து அரு முப்பத்திரண்டு அறம் ஓம்பச்செய் உத்தமர் பா
தகம் தரு துன்பு ஒழிப்பார் பணிவீர் அவர் தாள் மலரே
** நிமல வாழ்வினைப் புகழ்ந்தடைதல்
** ஆசிரிய விருத்தம்

#9
மலர்க் கஞ்சன் சிரம் இழந்தான் கோப் புரக்க மலை எடுத்தான் வன்றி ஆனான்
சிலைக் கரும்பன் உரு அழிந்தான் சேண் இயங்கும் இரு கதிரும் சிதைந்து நொந்த
கலக்கு_அரிய பகைப் புரங்கள் நீறுபட்ட கச்சி ஏகம்பர் மேன்மை
நிலைப்பட வாயாமையின் அன்றோ மனமே புகழ்ந்து அடைதி நிமல வாழ்வே
** வலைச்சியார்
** இரட்டையாசிரிய விருத்தம்

#10
வாளைக் கயலை நிகர்த்த வெம் கண் வலைச்சியீர் நும் வனப்பு எவரான்
மதிக்க அமையும் அரன் கச்சி வந்தீர் அளவா மயல் தந்தீர்
தோளைத் தழுவின் சுகம் பெறலாம் ஊடல் ஒழிவீர் நீர்க்குமிழி
சுழி தேம் புளினம் தோன்றிடுமால் துயரமுறுவேன் நடை கிழம் கால்
நாளைக் கழியாது இறால் இதழின் நறவைப் பருக நச்சு உறக் கொள்
நான் அக் கருப்பம் சிலை_வேளை நாணச்செய்வேன் மலங்குறேன்
கோளைப் போக்கற்கு உறவை மடம் வைப்பாம் அகத்தைக் குழைத்து என் மேல்
கொள்வீர் இரதத் தென்காலான கொடிய பகழிக்கு உடையேனே
** கலிநிலைத்துறை

#11
ஏனம் கொன்றார் ஏனக் குருளைகள் இடர் தீர்த்தார்
மான் அங்கு ஒன்றை வலன் வைத்து உமை மான் இடம் வைத்தார்
தானம் குறைவார் தானத்து உறையார் தமிழ் வல்லார்
கானத்து உறவார் கம்பத்திடையே மகிழ்வாரே
** ஆசிரியச்சந்த விருத்தம்

#12
மகிழ் ஆர மாவாரை மணம் மேவ விழைவாய்
மணி ஆரம் மர வேயின் மலை பச்சை உடையே
இகழ்ஈமம் இசை பாடி நடமாடும் இடமாம்
மிகவாத தொழில் ஐயம் இல் வாழ்வோர் மலையின்
மகவு ஆய ஒரு நீலி மறைவுற்ற சலத்தாள்
வரமைந்தன் ஒரு மாதின் வழி நின்ற திருடன்
தகவு ஈது தெரி காதல் ஒழிவாய் என் உரை கேள்
தரை மீது எ நலம் எய்தி மகிழ்வாய் மின் அரசே
** மடக்கு
** விருத்தம்

#13
அரசு கவிதையாரும் பர சுக விதையாரும்
அடை அமை மானாரும் புடை அமை மானாரும்
வரம் மா சடையாரும் உர மாசு அடையாரும்
வய மா திரத்தாரும் புய மாதிரத்தாரும்
கரம் அணி வடத்தாரும் சிரம் அணி வடத்தாரும்
களி மறைப் பரியாரும் ஒளி மறைப்ப அரியாரும்
அரிப் பதி ஆனாரும் கிரிப் பதி ஆனாரும்
அடியார் மாவாரும் கடியார் மாவாரே
** கல்மனத்தைக் குழைவித்தல் கம்பற்குக் கூடும்
** இரட்டையாசிரிய விருத்தம்

#14
மாது உமையாள் பனிமலையில் வளர்ந்தாள் நின் மதலையரில் கயமுகத்தோன்
வர முனிவன் வேண்ட வடவரை ஏட்டில் பாரதப்போர் வரைந்தான் நீபப்
போது அலங்கல் அணி குமரன் குன்று-தொறும் பேர் உவகை பூப்ப மேவிப்
புனித விளையாட்டு அயர்ந்தான் கச்சி அமர் புண்ணிய நீ கயிலை மேரு
மாதிரத்தே வதிந்தனை என் கல் அனைய மனத்தூடு உன் குடும்பத்தோடு
மருவ ஒரு தடையும் இலை மலை சிலையா வளைத்த நினக்கு எளிதே என்றன்
கோதுடைய மனச் சிலையைக் குழைத்து அன்பின் நெகிழ்வித்தல் ஐய முன் நாள்
குருகு உய்ய உபதேசம் கூறிய நீ எனக்கு உரைத்தால் குறைமட்டாமே
** கட்டளைக்கலித்துறை

#15
மட்டு இக்கு உள் தங்கும் கணு நிகர் கஞ்ச மலரனை அ
தட்டிக் குட்டு அங்கை முருகன் அத்தா கச்சிச் சங்கரனே
பெட்டிக்குள் தம் பணம் இட்டு உவப்பார் குணம் பெட்டு வினை
கட்டு இக் குட்டன் துயர் எல்லாம் அகன்றிடக் கண்டருளே
** நேரிசை வெண்பா

#16
கண்ட அளை மேவிக் கலந்து உண்ட கள்வன் ஒலி
கொண்ட வளை நீர்க் கச்சிக் கோமானே பண்டு உனது
தாளை மருவும் தகைமையிலான் உற்றது எவன்
தோளை மருவும் சுகம்
** தூது – கிளி
** ஆசிரிய விருத்தம்

#17
சுகமே மறை மா அடி மேவிய என் துணைவற்கு எளியேன் துயரைப் பகர்வாய்
மகமேரு சிலைக் குனிவால் நலன் என் மதனன் கழையே வையம் புகைக்கும்
சகம் ஏழ் அயின்றோன் பெயர் கொள் எளியேன் சரணாகதி சேர்தலை வேண்டினன் என்று
அகமே குழையப் புரிவாயெனில் யான் அயர் தீது அகலத் தருவாய் சுகமே
** கலிநிலைத்துறை

#18
தீது_அறு நூல் உணர் தெள்ளிய சிந்தையர் மனமூடே
காதலின் வாழ் ஏகாம்பரர் முடியைக் காண அயன்
ஏதமுறக் கோ எகினம் எனப் போய் முடி காணா
வேதனை பெற்றோ வேதனையுற்றாள் வெளியானாள்
** ஆசிரிய விருத்தம்

#19
வெளிவீட்டாரைக் காட்டாரை வியன் மாவாரைச் சேவாரை
ஒளிவிட்டு ஓங்கும் கச்சியரை உயர் மா மறையின் உச்சியரைக்
களியுற்று ஆடும் கூத்தாரை அகிலம் அனைத்தும் காத்தாரை
அளியுற்று இனிது புணர்ந்திடுதற்கு அநங்கன் செயல் ஒன்று இலை மானே
** இரங்கல்
** ஆசிரிய விருத்தம்

#20
மாமையை அடைந்தாய் வானகம் உற்றாய் மழைக் கணீர் உகுத்திடப் பெற்றாய்
காமுற வணம் சேர் வில் வளை விட்டாய் கலை மதி ஒளித்தலைப் பெட்டாய்
நாமுற இடிக்க மின்னிடைஆனாய் நள்ளிருள் அம்பரம் போனாய்
ஏமுறும் என் போல் கொண்டலே கச்சி ஈசனை விழைந்தனை சிறப்பே
** மடக்கு
** விருத்தம்

#21
சிறுகாலின் மணம் அளவும் திருக் காஞ்சியுள்ளீர்
சேயிழையாட்கு அகலும் இடைத் திருக் காஞ்சி உள்ளீர்
மறியோடு மழு விடம் ஆர் மாசுணம் துன் புடையீர்
மங்கை அணிந்திடு முத்தம் மாசு உண் அம் துன்பு உடையீர்
வெறிது ஆசை கூடல் மணத்துற ஆலங்காட்டீர்
விதி விழைவு கண்ட இடத்து உறவு ஆல் அம் காட்டீர்
அறிவேனும் செயல் இட்டீர் அம்பரம் காவணமே
அளிப்பீர் அம் கொன்றை மலர் அம்பரம் காவணமே
** ஆசிரிய விருத்தம்

#22
கார் ஆனைத் தோல் உரித்த கறுப்பினானைக்
களித்து உடலம் நீறு அணிந்த வெண்மையானை
வார் ஆனை ஊர்ந்து இலங்கு செம்மையானை
வலத்தானை இடப்பாகப் பச்சையானை
நீரானைச் செம் சடையின் நெற்றி உற்ற
நெருப்பானைப் பொருப்பானைச் சகத்திரச் சீர்ப்
பேரானைப் பெரியானைக் கம்பத்தானைப்
பெம்மானை எம்மானைப் பேசும் ஆறே
** கலி விருத்தம்

#23
மாறி ஆடும் மலர் அடி மா மறை
கூற ஆடும் குவலயத்தின் அறம்
தேற ஆடும் தெளி தமிழ்க் கச்சி இன்பு
ஊற ஆடும் உளம் மகிழ் பொங்கவே
** கைக்கிளை
** மருட்பா

#24
பொங்கும் அருள் நயனப் பூவின் இதழ் குவியும்
இங்கு மலர்க் கோதை இதழ் வாடும் மங்குல் தவழ்
மாடக் கச்சியில் வாழும் எம்பெருமான்
குறையா வளக் கழுக்குன்றில்
உறைவாள் இவள் பூ உதித்த தூயவளே
** மறம்
** ஆசிரிய விருத்தம்

#25
தூது வந்த தொழில்_இலாதவா வழக்கை அறிதியோ
தொல்லை நம்தம் மரபினோர் கொடும் தரக்கு வாரணம்
பூதலத்தின் இலை எனக் கலை விழைத்த சிலையரே
பொன் திணிந்த கொங்கை மான் மகள் குறத்தி வள்ளி முன்
போதகத்தை ஏவி அந்த மாது அகத்தை அச்சுறப்
புரிந்த செய்கை சாலும் நும் குலம் புலப்படுத்திடச்
சூத வாழ்க்கையார் துடிப் பினாகம் வைத்த ஆண்மையார்
சொல் மறைக்க வாயதாம்-கொல் தோற்பு உணர்ந்து இசைத்ததே
** கட்டளைக்கலிததுறை

#26
இசை ஆரணத்தின் முடியார் திருக் கச்சி ஈசர் அன்பின்
பசையார் அணங்கு ஒரு பங்கு உடையார் அரி பங்கயத்தன்
மிசையார் அணங்கு ஒழித்தோர் உளம் மேவிய மெய் அருத்தி
நசையார் அணங்குறு நான் அவர் நல் பதம் நாடுவதே
** ஆசிரிய விருத்தம்

#27
நாடும் தொண்டர் மகிழ்வு எய்த நறு மா நீழல் அமர்ந்தானைப்
பாடும் பணியே பணியாகக் படைத்தேன் பழைய வினை துடைத்தேன்
ஓடும் துடியும் கரத்து அமைத்தோன் ஓங்காரத்தின் உட்பொருளைத்
தேடும் திறத்தோர்க்கு அறிவித்தோன் தேவி உமையாள் காதலனே
** ஒருபொருண்மேல் மூன்றடுக்கிவந்த ஆசிரியத்தாழிசை

#28
** 1
காதம் கமழும் கடி ஆரும் மா தருக் கீழ்
நாதன் அருனாளன் நண்ணிய சீர்ச் செவ்வி
காதில் பண் ஆரும் கவி இன்பம் மானுமே
** 2
பூவின் மணம் ஆர் புனித நறு மா தருக் கீழ்ச்
சேவின் மிசைத் திகழும் தேசன் அமை செவ்வி
நாவின் அமுது ஊறு நல் சுவையை மானுமே
** 3
மண்ணில் சிறந்த வளம் அளிக்கும் மா தருக் கீழ்
விண்ணில் பொலிந்தான் விளங்கியுறு செவ்வி
கண் இணையால் காண்பு அரிய காட்சியினை மானுமே
** வெளி விருத்தம்

#29
மாக் கைக் குருகின் தழும்பு உற்றாரும் ஆவாரே
ஆக்கைக்கு அயனை அமைத்திட்டாரும் ஆவாரே
காக்கைக்கு அரியைக் கனிவித்தாரும் ஆவாரே
போக்கைக்கு அனலைப் பொலிவித்தாரும் ஆவாரே
** களி
** கட்டளைக்கலிப்பா

#30
மாவின் நீழல் வதிந்து அருள்வார் கச்சி வாழும் இன்பம் மருவு களியரேம்
தேவர் அன்று சிதைந்தவரே மது வாவி சீதரன் உண்ண மயங்குறின்
நா அலர்ந்து மெய் பேசுவர் இன் நறை உண்ட நன்மையர் நல் பனை தெங்கு சேர்
காவிடைப் பாடி ஆடுவர் மண் தரு கள் நிறைந்த அமுதை அருந்தவே
** இதுவுமது ஆசிரிய விருத்தம்

#31
அரவிந்த மலரின்-கண் குடியன் அயன் அமரர் சுரா பானத்தாரே
வரமுறு காவிரி நதிக்-கண் குடியனே திரு மருவு மார்பினானும்
தரணியின்-கண் குடியர் பெரும் தவ முனிவர் சித்தரும் விண்ணவர்கள்-தாமும்
கரவடமேன் திருக் கச்சிக் கண்ணுதலார் பனையின்-கண் குடியர் தாமே
** கட்டளைக்கலிப்பா

#32
கள் ததும்பும் இதழித் தெரியலைக் கச்சிநாதர் தருவது இலை எனில்
துட்ட மன்மதன் ஐங்கணையாம் மணச் சூதம் முல்லை அசோகம் அரவிந்தம்
கெட்ட உற்பலம் அஞ்சு எரி போல் வரும் கிளி_அனீர் மடம் நாணம் அச்சம் பயிர்ப்பு
உள் தயங்கு உயிர் ஐந்தும் அவைக்கு இரையோ என்று ஓதிர் அச் செம் மழுவாளர்க்கே
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#33
மழு ஏந்து வலக்கரத்தர் மழை ஏந்து சடைச் சிரத்தர் வான் புரத்தர்
விழ வாங்கு பூதரத்தர் வேள் எரித்த மா உரத்தர் ஆதரத்தர்
தொழ வாழும் மாதிரத்தர் நடமாடும் எரி சுரத்தர் தூ வரத்தர்
குழை ஆடு செவியர் அத்தர் கச்சி எனும் ஆகரத்தர் குணக்குன்றாரே
** சித்து அறுசீர் ஆசிரிய விருத்தம்

#34
குன்றைக் குனித்த கச்சிக் கோமானார் சித்த உருக் கொண்ட நாள் யாம்
என்றைக்கும் சிறப்பு எய்த இச்சையுடன் கற்ற வித்தை இற்று என்று ஆமோ
மின் தைக்கும் முடி வேந்தர் விரும்ப ஒரு தினத்து இரும்பு-தனைப் பொன் செய்வோம்
இன்றைக்குப் பொன் அளித்து நாளை வெள்ளி இயற்றினும் பின் சனியது ஆமே
** இதுவுமது

#35
சனி ஆகும் ஊழ் வலியால் சகல கலை அறி உணர்ச்சி தகை பெறாதால்
தனி ஆகும் எங்கள் உதவியை பெற்றுச் சாற்று உம்பர் அடைந்தார் பொன்னில்
கனி ஆரும் பொழில் கச்சிக் கண்_நுதலார் கைச் சிலம்பைக் கனகம் ஆக்கிப்
பனி ஆரும் கடல்_வண்ணன் மார்பினைப் பொன் இருப்பு ஆகப் பண்ணினோமே
** கலிநிலைத்துறை

#36
இருப்புக்கு வெண்பொன் பசும்பொன் நகம் கொண்ட இறைவா எனைக்
கருப் புக்கு உழன்று எய்க்கவையாது அருள்கூர்ந்து காப்பாய்-கொலோ
பொருப்பு உக்கு வீழப் புவிக்கு ஆடை பொங்கப் புரம் செற்ற செம்
நெருப்புக்கு வதனத்து இடம்தந்த ஒரு மா நிழல் சோதியே
** நேரிசை வெண்பா

#37
சோதிப் பரம்பொருள் வாழ் தூய இடம் தொண்டர் நெஞ்சோ
வேதத் தனி முடியோ வேள்வி புரி மா தவர் வாழ்
தில்லையோ கூடலோ சீர்க் கயிலை மா மலையோ
தொல்லை ஏகம்பமோ சொல்
** இளவேனில் ஆசிரியச்சந்த விருத்தம்

#38
பனிக்காலம் ஏகப் பல் அம் பூ இறைக்கும்
பருவத்து அருள் கச்சி இறை இங்கு வாரான்
குனிக் கோல நம்பன் தணிப்ப என்ன சொல்வான்
குன்றத்து இருந்தானை மன்றத்து வைத்தே
தனிப்பாக என்னைப் பசப்பிக் கலந்த
சமயத்து உரைச் சத்தியம் கூறி அரவை
இனிப்பு ஆரும் மொழியாளன் இது செய்தல் அழகோ
என்றே உடன் கேட்பன் இனி என்ன குணமே
** மடக்கு
** எண்சீர் ஆசிரிய விருத்தம்

#39
குணதிசை வெய்யோற்கு அலரும் அரவிந்தம் பானலமே
குலைந்திடும் தென் பொதியல் வரும் அரவு இந்து அம்பு ஆன் அலமே
கணம் மிகு வெண் முத்து உயிர்க்கும் நந்து அனந்தம் கயல் ஆமே
கச்சி இறை தணத்தலின் வார் நம் தனம் தங்க அயலாமே
அணங்குற வில் மதன் முளரி முலை எய்திடும் ஆசுகமே
ஆசற்றா இதழ் பருக முலை எய்திடும் மா சுகமே
வண மணியின் பரம் சுமந்த ஆழி தயங்கு அரும் கலமே
வஞ்சருக்கு என் நெஞ்சு அரங்க வாழ் இதயம் கருங்கல் அமே
** பாண்
** நேரிசையாசிரியப்பா

#40
கலன் பணி உடை தோல் கலம் பலி ஓடு கொண்டு
இலம்-தொறும் இரந்து உண் இறை தரும் ஒற்ற
மலை வளர் காதலி மங்கள வல்லி
சிலை வேட்கு அளித்த சிற்சுக மங்களை
இழை வகிர் நுண் இடை ஏந்து_இழை பங்கன் 5
பழைய கள்வன் பண்பினை ஓர்ந்தேன்
பாணனே நின்னைப் பண் இசை கூட்டி
வீணையில் பாடி விழைவை ஊட்டித்
தன்வயப்படுத்தத் தந்திரம் கற்பித்து
என்-வயின் செலுத்தும் இங்கிதம் தோன்ற 10
பாடினை இன்புறப் பாடல் கேட்டு ஆங்கு
கூடிய கொற்றவன் குணம் அறிவாயோ
மலைப் பெண் அந்தரியை மகிழ்வாய் மணந்தும்
அலைப் பெணைச் சடையில் அமைத்தது ஏன் உரை
கம்பை நதி அயல் காம நயனியாம் 15
அம்பை அருச்சனை ஆற்றல் கண்டு அவளை
உள்ளம் கலங்க ஓங்கு நீர் அழைத்துக்
கள்ளப் புணர்ச்சி கலந்து வடுப்பட்டு
இன்னமும் மாறாது ஏய்ந்த தன்மை
என்ன என்று உரைப்பன் இது அலாது ஒருநாள் 20
தாருவனம் செலீஇத் தாபதப் பன்னியர்
தெருமரலுற்றுப் பருவரல் எய்தக்
கோவணம் நீத்துத் தீ வணம் பூத்து அ
மின்னிடையாருடன் விருப்புறப் பேசித்
துன்னிய தன்மை சொல்லும் தகைத்தோ 25
வனிதையர் மயங்க வளை கொணர்ந்து அன்று
மதுரையில் வந்த வசையே சாலும்
சாலும் பாண சாலும் பாண
யாதும் கேளேன் யான் இனி மயங்கேன்
போக என உரைத்தும் போகாய் அந்தோ 30
அன்னை அறியாது அணைந்தேன் அவனைப்
பின்னை உற்றிடும் பீழை நினைத்திலன்
அகலுதி பாணா அனை அறிவாளேல்
தகரும் நின் சிரம் தமரும் வெகுளுவர்
நெஞ்சில் இட்ட நெருப்பின் வெப்பினை 35
வஞ்சகன் அறிய வழுத்துவை பாணா
மறந்தேன் அன்னையை மன்னனைப் புணர்ந்து
சிறந்தனம் என்றே திகைத்தேன் இத்துணை
பட்டது சாலும் பாணனே மடவார்க்கு
இட்டதுதானே இயலும் பரமனை 40
வெறுத்தலும் வீணே விழைவு
பொறுத்தலும் இலன் இனிப் புரிவன் நல் தொண்டே
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#41
தொண்டர்க்கு உறவே ஆனாரைத் தூய மறை மா நிழலாரை
அண்டர்க்கு இறை ஆம் அடலாரை அக்கும் எலும்பும் அணிவாரைக்
கொண்டல்_வண்ணன் எண்_கண்ணன் கூறற்கு அரும் சீர் கொண்டாரைத்
கண்டத்து உறையுமாறு கடல் கடு உண்டாரைத் துதிப்பாமே
** தூது – மேகம்
** நேரிசை வெண்பா

#42
கடுக்கைத் தொடை நயந்தேன் காதலுடையார் யான்
நடுக்கையுறுமா நயந்தார் கொடுக்கைக்குச்
செல்லே சிறந்தாய் திருக் கச்சிவாணர்-பால்
வல்லே தொடை இரந்து வா
** கட்டளைக்கலிததுறை

#43
இரந்து உயிர் ஓம்பிட ஏழை மனம் கொதித்து இன்னலுற
உரம் தொலைந்து ஓயப் பல நோய் உடற்ற உறு பசியால்
வருந்துபு மானமும் தீரமும் மங்கி மடிந்து ஒழிவீர்
திரம் தரும் ஏகம்பவாணரை நீர் என்-கொல் சேர்கிலிரே
** தூது- நெஞ்சு
** நேரிசைவெண்பா

#44
என் நெஞ்சினும் இனியார் இல்லை என எண்ணி அதைத்
துன்னற்கு அரும் கச்சித் தூயவர்-பால் இன்னல் அறப்
பூம் கொன்றைத் தார் இரக்கப் போதி என விடுத்தேன்
தீங்கு ஒன்றைச் சூழ்ந்திலாதேன்
** கலிநிலைத்துறை

#45
ஒன்று சூழின் வேறொன்று முந்துற உணர்வு உலைந்து
பின்றை எய்திடும் பெற்றி உய்த்து உணர்கிலாப் பேயேன்
என்று நின் அருள் இரும் கடல் குளிப்பது என் அரசே
மன்றில் ஆடிய குழக மா நீழல் வாழ் மணியே
** வஞ்சிததுறை

#46
மா நீழல் நல்லார்
ஆன் ஏறு தொல்லார்
தேன் ஏறு சொல்லார்
வான் ஏறு கல்லார்
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#47
கல் ஆலின் கீழ் இருந்து கலை விரித்துப் புணர்வு அளித்த கள்வனார்க்குச்
சொல்லால் ஆயிர முகமன் கூறுவை அக் கச்சியர்க்குச் சுகுணம் உண்டேல்
வில் ஆரும் புயம் இதழி விரும்புவை இன்றேல் இன்றே விழையப்பெற்றாள்
அல் ஓடக் கண்ட விடம் மாயும் வகை அறிவள் என அறைதி மாதே
** நேரிசைச் சிந்தியல் வெண்பா

#48
மா உடையான் வெள்ளிமலை உடையான் எண் திசையாம்
தூ உடையான் நால் வேதச் சொல் உடையான் தா_இல் அறச்
சே உடையான் எங்கள் குலத் தே
** ஊசல்
** எண்சீர் ஆசிரிய விருத்தம்

#49
தேவாரம் முதலிய ஐந்து உறுப்பும் வாழச் சிறந்த மறை ஆகமங்கள் செழித்து வாழத்
தாவாத சித்தாந்த சைவம் வாழச் சந்த வரைச் செந்தமிழ் நூல் தழைத்து வாழ
நா ஆரும் புகழ்க் கச்சி நகரில் காமநயனியொடு முறை இறை சீர் நன்கு பாடிப்
பூ ஆரும் மலர் விழியீர் ஆடீர் ஊசல் புத்தமுதம் நிகர் மொழியீர் ஆடிர் ஊசல்
** மதங்கி
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#50
ஆடு அரவம் அரைக்கு அசைத்த அமலர் திருக் கச்சி மறுகு ஆடி மைந்தர்
ஊடுருவு பிணை விழியோடு இணை வாளும் ஓச்சி வரும் ஒரு மதங்கீர்
நாட வரும் இவைக்கு இலக்கம் யாதோ நும் மொழி அமுதம் நல்கீர் விண்ணோர்
பாடு அமையப் பயவாரி கடைந்து கரம் வருந்தியது என் பண்டுதானே
** இடைச்சியார்
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#51
பண்டு மலை கொண்டு பயோதரத்து இகலை வென்றிடும் ஐம்படையானுக்கு
மண்டு பயோதரகிரியைக் காணிக்கை இட்டீரால் வள்ளல் கச்சிக்-
கண் தயங்கும் இடைச்சியீர் ஆடை நீக்காது ருசி காண்-மின் என்பீர்
கொண்ட அளை உருக்காமே கொள இணங்கீர் ததி எண்ணீர் நயம் மோர் விற்றே
** தூது – வண்டு
** நேரிசை வெண்பா

#52
ஓர் கால் செலின் அறு கால் உற்றனை என்பார் வளமை
ஆர் காஞ்சி மேய அமலர் திரு மார்பு ஆரும்
தார் ஆய கொன்றை தரச் சேறி வண்டே யான்
பேராத இன்பம் பெற
** ஆசிரிய விருத்தம்

#53
பெரியானைப் பேரின்ப நிறை வீட்டானைப் பிறை மதியம் பிறங்கு சடாதரனை யார்க்கும்
அரியானை அடல் அவுணர் புரம் நீறாக்க அழல் ஊற்று நகையானை அரனை வேழ
உரியானைத் திருக் கச்சியுடையான்-தன்னை உன்ன அரிய குண நிதியை ஒப்பு_இல் வேதப்
பரியானை அகம் நிறுவித் துதிப்பார் அன்றே பவத் துவக்கைப் பாற்றுறும் ஆடவர்கள் ஆவார்
** வெறிவிலக்கு
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#54
ஆடவரும் பெண்மை விரும்பு அபிராமர்க்கு அணங்குற்ற அறிவிலேனைச்
சாட வரும் சிறுகாலும் தழல் மதியும் சாகரத்தின் ஒலியும் நெஞ்சம்
வாட வரும் மலர்க் கணையும் மறி வீய இரிந்திடுமோ வனசத்தானும்
தேட அரும் ஏகம்பர் தாமத்தைக் கொணர்வீரேல் தேறுவேனே
** கட்டளைக் கலித்துறை

#55
தேறா மனத்தைத் திருப்பித் தெளிவுறச் செய்து பின்னர்
ஆறாத மும்மை மலப் பிணி நீங்க நல் ஆற்றின் உய்ப்பர்
மாறா வளக் கச்சி மா நிழலார் உவணன்-தனக்குப்
பாறாது அரவம் அணிந்தவர் பேரருள் பாடுதுமே
** கட்டளைக்கலித்துறை

#56
பாடுபட்டும் பயன் தரு கச்சி வாழ் பண்ணவன் அடிப் பத்தி_இல் பாவிகாள்
கூடு விட்டு உயிர் போம் பொழுது ஒன்றையும் கொண்டுபோதல் இலாமையை உன்னிலீர்
வீடு கட்டுவீர் வெள்ளி பொன் ஈட்டுவீர் வேண்டும் நல் மணி ஆடையும் பூணுவீர்
ஏடு கட்டிய பால் தயிர் உண்ணுவீர் எப்படிப் பெறுவீர் பொன் பதத்தையே
** கட்டளைக் கலித்துறை

#57
பதம் சேர்த்துப் பாடி என் பாசத் தொடர்ப்பட்டுப் பாவையர் இங்
கிதம் சேர்த்துக் கொஞ்ச மயங்கி இடர்ப்பட்டு இரங்குவன் அங்
கதம் சேர்த்து அரைக்கு அசைத்தாய் கச்சிவாண கடையன் எந்த
விதம் சேர்தல் நின் பதம் தாய்_அனையாய் கதி வேறு இலையே
** கலி விருத்தம்

#58
அனைத்து இடமும் ஒளி மருவ அமைந்தது ஒரு விழியே
மனத் துயரை மாய்க்க அருள் மலர்ந்தது ஒரு விழியே
சினத்து உலகைச் சிதைக்க அழல் சிறந்தது ஒரு விழியே
நினைத்து உலகம் தொழு கச்சி நின்மலர் மூ விழியே
** ஆசிரிய விருத்தம்

#59
விழியால் விழி உறு பிறழ்வால் விது நிகர் நுதலால் நுதல் உறு சிலையால் மென்
மொழியால் மொழி உறு சுவையால் முழு நல முலையால் முலை உறு பொலிவால் பல்
வழியால் கணிகையர் உறவால் வலி கெட அயர்வேன் இனி மருள் மருவாமே
ஒழியா நலனுற ஒரு மா நிழல் உடை ஒளியார் சடையவர் அருள்வாரே
** எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம்

#60
சடை கரந்த அரவம் இந்து பகைமை மாறு தகைமையார்
தரம் அறிந்து கருணை நல்கு தனை இறந்த மகிமையார்
மடை திறந்த கடலை ஒத்த மருள் அகற்றும் அருளினார்
மகிழ் சிறந்த முதல்வர் தங்கமலை குழைத்து என் விறல் மதன்
படை துரந்து நெஞ்சு இருப்பு வஞ்சர் ஏன் குழைத்திலர்
பகரொணாத பண்பு அமர்ந்த பரமர் இன்னும் அருகுறாது
இடை மறந்தது என்-கொலோ என் இளமை நன்னலம் பெறற்கு
எனை அணைந்த கச்சி மேவும் இணையிலாத போதரே
** கட்டளைக் கலித்துறை

#61
போத வித்தே புகலே அறவோர்க்கு நம்பும் தகையார்
தீது அவித்து ஏற்கும் நல் செவ்வியனே புலத் தெவ் அடர
வேத வித்தே மிக வேசறுவேற்கு விரைந்து அருள் நீங்
காது அவித் தேன் சுரர் உண் கச்சி வாழ் அன்பர்க்கு அண்ணியனே
** நேரிசை வெண்பா

#62
அண்ணியர் ஆனார் அறவோர்க்கு அத்தர் அலர் இதழிக்
கண்ணியர் பூம் கச்சி நகர்க் கத்தர் அடி மண்ணிய முத்
தம் தம் பல் பந்து ஆம் தனம் தந்து அன இடையார்
தொந்தம் கொள் என்றன் துணை
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#63
துன் நிமித்தம் கண்டும் அஞ்சாது ஒரு துணையும் பிணையாது துனைந்து சென்று
பொன் நிமித்தம் சிலை சுமந்து முறுவலித்துப் புரம் எரித்த புரை தீர் எந்தாய்
என் நிமித்தம் என் அகத்தே குடிபுகுந்தாய் திருக் கச்சி இறைவா ஏழை-
தன் நிமித்தம் திருவுள்ளம் கனிந்தது அன்றித் தகுதி மற்று என் தருக்கினேற்கே
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#64
தருக்குறு தெரிவையர் செருக்கிலே தளையிடும் அவர் மொழி உருக்கிலே
மருக் கமழ் குழல் அணி சொருக்கிலே மனம் இவர் இள முலை நெருக்கிலே
பெருக்குறு விழைவு அமர் திருக்கினேன் பிசி தரும் மறை முதல் பிறையினோடு
எருக்கு அணி கச்சியின் இறைவனார் இரங்குறு வகை எது புகல்வனே
** மடக்கு – தலைவி இரங்கல்
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#65
கல் தரு மாதின் பங்கு உடையார் கச்சியர் எனது இன்பம் குடையார்
சிற்றளையுள் உறைவாய் அலவா தென்வளி கா துறை வாய் அலவா
சுற்றும் உடைந்து வரும் திடரே தோற்றும் மிடைந்து வருந்து இடரே
பெற்றிடும் முத்தம் அரும் கழையே பேச அரியாரை மருங்கு அழையே
** பனிக்காலம்
** எண்சீர் ஆசிரியச் சந்தத் தாழிசை

#66
அழைக்காமல் அணுகார் வெவ் அலர் கூர மாய்வேன்
ஐயோ என் ஐயர்க்கு உரைப்பாரும் இல்லை
கழைக் காமன் எய்யும் சரம் தைக்க நொந்தேன்
கண்ணாளர் இந்தப் பனிக்காலம் ஓரார்
குழைத்து ஆர் பொழில் கச்சி வாழ் அண்ணலாரைக்
கும்பிட்டு அழைப்பீர் குழைப்பீர் மனத்தைப்
பிழைத்தேன் அலேன் என்று பிச்சர்க்கு இயம்பீர்
பெண் பேதை உய்யும் திறம் பாங்கிமாரே
** மடக்கு
** எண்சீர் ஆசிரிய விருத்தம்

#67
மா தரையில் தரு நறும் பூ விரை விடுக்கும் காலம்
மதன் சினந்து மங்கையரை விரைவு இடுக்கும் காலம்
காதம் மணம் கமழ் சோலை பண் புணரும் காலம்
கணவர் இளம் கோதையர்-தம் பண்பு உணரும் காலம்
சீதமுறு கழைக் கரும்பின் கண் தழைக்கும் காலம்
சிற்றிடையார் தம் தலைவர்க் கண்டு அழைக்கும் காலம்
கோதறு சங்கு இனம் பழனப் பங்கம் உறும் காலம்
குலவு கச்சியார் பிரியப் பங்கமுறும் காலம்
** வஞ்சி விருத்தம்

#68
உறு மன் கச்சி உத்தம யான்
துறவும் கொள்ளேன் தூய்மை இலேன்
அறமும் புரியேன் அமைவு இல்லேன்
பெறவும் தகுமோ பேரின்பே
** இன்னிசை வெண்பா

#69
இன்பு அடைய வேண்டின் இகலற்க வன் பிறவித்
துன்பு ஒழிய வேண்டின் அவம் துன்னற்க அன்பு உருவாம்
போதன் அருள் வேண்டும் எனில் பொய்யற்க சூது அகலச்
சூத நிழலான் கழலைச் சூழ்
** நேரிசை வெண்பா

#70
சூழும் தளையாய தொல்லைப் பிறவியினைப்
போழும் நவியமாம் புத்தேளிர் தாழும் நலம்
பொன்றா வளக் கச்சிப் பூம் கொன்றைக் கண்ணியர்-தம்
இன் தாட்கு இடும் பச்சிலை
** கலிநிலைத்துறை

#71
பச்சை நிறப் பைம்_தொடி வலம் மேவிய பசுபதி உள்
நச்சினர் ஒன்றினும் எச்சமுறாது அருள் நனி கூர்வான்
கச்சி உறைந்து அருள் கண்_நுதல் மறலிக் கண்டகனால்
அச்சமுறாது அடியவர் முனம் அந்தத்து அணுகுவனே
** மடக்கு
** எண்சீர் ஆசிரிய விருத்தம்

#72
அணங்கு ஆறு தலை உள்ளார் அழகர் என் மான்
அணங்கு ஆறுதலை உள்ளார் ஆனார் அந்தோ
வணம் கூடுதல் அனலைப் பற்றுற்று மின்னாள்
வணங்கு ஊடுதல் அனலைப் பற்று அறுத்தல் ஓரார்
கணம் புரத்தைச் சாம்பர் உவந்து இழைத்தார் கன்னல்-
கண் அம்பு உரத்தைச் சாம் பருவம் குலைப்பது உன்னார்
பணம் ஒளிக்கும் பணி தரித்தார் கச்சி ஈசர்
பண் அம் ஒளிக்கும் பணி பரித்தார் பான்மையுற்றே
** கட்டளைக் கலிப்பா

#73
உற்றுப் பார்க்கில் உன் வாழ்க்கை என் ஐயமே ஊரும் வெட்டவெளி உடை தோல் உனைப்
பெற்றுப் பார்க்குள் உறும் சுகம் இல்லையால் பேதை நின்னை என் பெற்றிடப் பற்றினள்
கற்றுத் தேர்ந்த பெரியவர் வாழ் திருக் கச்சி மா நகர்க் கத்த என் அத்தனே
பற்று_இலார் உளம் பற்றுறு பங்கயப் பாதனே படப் பாம்பு அணி காதனே
** எண்சீர் ஆசிரிய விருத்தம்

#74
பட அரவம் அரைக்கு அசைத்த பரமர் வாழும் பதிக் கச்சி மேய இளம் பாவை கொங்கை
தட வரையே கரிக் கொம்பே சகோரமே மாந்தளிர் மேனி தமனியத்தின் ஒளியே கண்கள்
விட வடிவே ஆசுகமே வேலே சேலே மென் மருங்குல் முயற்கோடே விழைந்தேன் நெஞ்சம்
சுட வகை தேர் புருவம் மதன் சிலையே துண்டம் சுடர்க் குடையே சுந்தரி கந்தருவ மானே
** தவம்
** கட்டளைக் கலித்துறை

#75
மான் கொண்ட கண்ணியர் மையல் அற்றே தவ வன்மை மரீஇ
ஊன் கொண்ட துன்பை ஒழிக்கத் தலைப்படும் உத்தமர்காள்
வான் கொண்ட உச்சி வரை முழை உற்றும் மயர்வது எவன்
கான் கொண்ட கொன்றையர் கச்சியை எய்தின் கலி அறுமே
** இரங்கல்
** பதினான்கு சீர் கொண்ட ஆசிரியச் சந்த விருத்தம்

#76
எய்த அம்பு தைக்கும் முன்னம் மற்றொர் பகழி தொட்டு வேள்
ஏழை அங்கம் நைந்து தேய அப்பு மாரி பொழிகிறான்
செய் தவம் புரிந்திலாதென் உய்யும் ஆறும் உண்டு-கொல்
திகழும் மாடம் மதி உரிஞ்சு கச்சி மேய செம்மலார்
கைதவம் கண் அங்கியான் மன்மதனை வென்ற காதை என்
காதல் நோக்கி இன்பு அளிக்க நேர்வர் அல்லரேல் அனை
வைத வம்பு நோக்கியேனும் மனம் உவக்க வந்திலர்
மாதர் நோவ எய்து செல்வம் என் அவர்க்கு மங்கையே
** நேரிசை வெண்பா

#77
என்ன பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கும்
மன்னு புகழ்க் கச்சி உறை வள்ளல் தான் துன்னும் மயன்
கம்மாளன் நீசன் கடையன் பொதுவன் என்பேன்
கைம்மாறு என் செய்வனோ காண்
** சம்பிரதம்
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#78
காற்றைப் பிடித்து ஒர் சிறு கரகத்துள் மூடுவேம் கனலை வான் ஓங்க விடுவேம்
சேற்றைப் பிசைந்து சில தேவரையும் ஆக்குவேம் சீதரனை மாலாக்குவேம்
ஆற்றைச் செலுத்தி அரி ஏறவைப்பேம் அமுதை ஆவலுடன் வாரி உண்பேம்
நீற்றைப் புனைந்தவர் திருக் கச்சி போன்ற தலம் நேர்தரும் சத்தி எமதே
** கட்டளைக் கலிப்பா

#79
சட்டப்பட்ட உளம் பெற்ற சால்பினோர் தங்கப்பெற்ற கச்சிப் பதிச் செல்வ வேள்
குட்டப்பட்ட தலை விதி என் தலை கொடுமை கூர் எழுத்து இட்டனன் மாதர் வார்
கட்டப்பட்ட தனம் பிறை வாள் நுதல் கடு அடங்கிய கண்ணின் மயங்குவேற்கு
இட்டப்பட்ட மட்டு இன்பமும் வாய்க்குமோ ஈசனே அருள் நேச விலாசனே
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#80
அருணைப் பதியின் அழல் உருக் கொண்டு அமைந்த கச்சி அங்கணர் முன்
பெருமைப் புரத்தை அழி வெப்பும் பிழைத்த மதன் கொல் விழி வெப்பும்
கருமைப் பகடு ஊர் காலனைக் காய் வெப்பும் தணியப் பழ அடியார்
அருமைத் தமிழின் அமுது ஊறு மழையைச் சொரிந்தார் தெரிந்தாரே
** தரவு கொச்சக்கலிப்பா

#81
மழை கொண்ட உச்சியினார் வளம் கொண்ட கச்சியினார்
உழை கொண்ட கரத் தொழிலும் உமை கொண்ட இடத்து எழிலும்
கழை கொண்ட மதன் அழியும் கனல் கொண்ட நுதல் விழியும்
இழை கொண்ட உரத்து அழகும் எமக்கு இனிய அமுதாமே
** கொற்றியார்
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#82
ஆமை மீன் கோலம் உறும் அங்கம் மரீஇ அரவு இடை ஆல் அகடு மேவி
மாமை உருவோடு வளை சக்கரம் ஏந்தித் திகழும் வகையால் குல்லைத்
தாமனை ஒப்பீர் ஐந்து சரம் செய் துயர் நீக்கி அருள் தந்து காப்பீர்
கோமளை வாழ் இடத்தர் கச்சி மறுகு உலவு துளவ மணக் கொற்றியாரே
** தரவு கொச்சகக் கலிப்பா

#83
மணக் கோல் அஞ்சு எய்ய மதனன் முடுகிநின்றான்
கணக் கோலம் கொங்கைக்கு இட வந்தீர் கட்செவி மால்
குணக்கோலன் கச்சிக் குழகன் திருவுலா
வணக் கோலம் காண வருவீர் மனம் மகிழ்ந்தே
** கட்டளைக் கலித்துறை

#84
மது இருந்தே அளி பாடும் தொடை புனை மன்னரும் இங்கு
எது இருந்தேனும் பெறும் இன்பம் என் கச்சி ஈசனை வான்
புது விருந்தே புண்டரீகன் முராரி புரந்தரனைப்
பொது இருந்து ஏவல் கொளும் பெருமா எனப் போற்றுவனே
** நெஞ்சொடு கிளத்தல்
** இதுவுமது

#85
போற்றப் பல் பா உண்டு கேட்கச் செவி உண்டு பூப் பறித்துப்
தூற்றக் கரம் உண்டு தாழச் சிரம் உண்டு தோத்திரங்கள்
ஆற்றச் செம் நா உண்டு தென் கச்சிவாணர் உண்டு அல்லல் எலாம்
மாற்ற அருள் உண்டு நெஞ்சே துயர் எவன் மற்று எனக்கே
** தரவுகொச்சக் கலிப்பா

#86
எனக்கு ஏது உனது அருளை எண்ணும் இயல் என் துயரம்
உனக்கே தெரியும் மகக்கு உற்ற துயரம் எலாம்
அனைக்கே தெரியும் மகவு ஆயும்-கொல் அன்னை செயல்
கனக் கேதம் தீர்த்து அருள் பூம் கச்சி நகர்க் கண்_நுதலே
** கட்டளைக் கலித்துறை

#87
கணம் கொண்ட பாசத் தொடர் அறுத்து உய்யும் கருத்து_உடையீர்
மணம் கொண்ட தண்டலை சூழும் திருக் கச்சி மா நகர் வாழ்
நிணம் கொண்ட சூல் படை நின்மலன் தாளை நிதம் தொழுவீர்
பணம் கொண்ட பாம்பின் விடம் கொண்ட கண்ணியர் பற்று அஞ்சியே
** மடக்கு கட்டளைக் கலிப்பா

#88
பரவை ஆலம் பருகிய அண்ணல் விண் பரவு ஐ ஆலம் பயின்று ஒரு நால்வர்-தம்
தெரிவு ஐயம் கடி செய்யர்ப் பரவையாம் தெரிவை அங்கு அடியர்க்கு அருள் செம்மலார்
சிரம் மந்தாகினிச் செம் சடையார் தொண்டர் சிரமம் தாக்கு திருக் கச்சிநாதர் தீ
யர் அவ மாலை அழித்து எனைக் காப்பரால் அரவ மாலை அணிந்து அருள் கத்தரே
** தழை
** எழுசீர் ஆசிரிய விருத்தம்

#89
கத்தனார் மகிழ்ந்த கச்சி வெற்பு_உடையாய் காமனும் மயங்குறு கவின் ஆர்
அத்த நீ அளித்த மாந்தழை அரிவைக்கு ஆருயிர் அளித்த காரணத்தால்
சுத்தனாம் அநுமன் சானகிக்கு அளித்த துணை அமை ஆழியோ இந்த்ர
சித்தனால் மடிந்த கவிக் குலம் பிழைப்பச் செய்த சஞ்சீவியோ தானே
** குறம்
** எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்

#90
தாளம் இரண்டு என்னும் முலைத் திரு_அனையாய் தளரேல்
தரணி புகழ் கச்சி நகர்த் தலைவனை நீ புணரும்
வேளை அறிந்து உரைத்திடுவன் விரைந்து ஒர் படி நெல்லும்
வெறும் தலைக்கு எண்ணெயும் பழைய கந்தையையும்
காள உருக் காம விழிக் கன்னி-தனக்கு அ நாள்
கருதி ஒரு குணம் குறியும் அரியவர்க்கு ஓர் குணமும் கொடுவா
கோள் அகலக் குறி இரண்டும் கொடுப்பை என மொழிந்தோள்
குடி உதித்த குறமகள் யான் குறிக்கொள் என்றன் மொழியே
** பிச்சியார்
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#91
என்ன தவம் செய்தேனோ உமைக் கம்பர் திருக் கச்சி இடையே காணத்
துன்ன வரும் உடல் நீறும் கஞ்சுளியினொடு செம் கைச் சூலமும் செம்
பொன் அனைய திருமேனிப் பொலிவுமே எனை மயங்கப்புரியும் கண்டீர்
அன்ன நடைக் கன்னல் மொழிப் பிச்சியீர் அணி முறுவல் அதிகம் அன்றோ
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#92
அதிகம் அன்று எளியேம் துயர் புரிந்திடும் அறக்கடை ஆயும் கால்
துதி கொள் ஏகம்பவாணனார் தூயவர் இதய ஆலயத்தூடு
குதி கொள் இனபு உருவாயவர் மாது ஒரு கூறு உடைக் கோமானார்
நதி கொள் வேணியர் நாடுவோர்-தமக்கு அமை நலத்தினைத் தெரிந்தாரே
** ஊர்
** நேரிசை வெண்பா

#93
தெரிந்து ஆர் மலர்த் தடத்தின் தெள் நீர் துலைக்கோல்
பரம் தாழும் கச்சிப் பதியே கரம் தாழ் வெண்
மாதங்கத்தான் நத்தன் வாரிசத்தன் தேட அரிய
மாது அங்கத்தான் அத்தன் வாழ்வு
** ஓரொலி வெண்டுறை

#94
வாழ்வு அளிக்கும் திரு விழியார் மறை அளிக்கும் அரு மொழியார் வணங்கினோர்-தம்
தாழ்வு அகற்றும் மலர்ப் பதத்தார் தளர்வு அகற்றும் ஐம்பதத்தார் தண் அம் திங்கள்
போழ் வதியும் புரி சடையார் புகழ்க் கச்சி மேய
ஆழ் கருணை மா கடலை அடி பணி-மின் கண்டீர்
** பன்னிரு சீர் கொண்ட இரட்டை ஆசிரிய விருத்தம்

#95
கரத்தின் வளையும் சுழி வளையும் கனிந்த மொழியால் புனை வளையும்
கலையும் அணியும் மேகலையும் கல்வி பயின்ற கலை அறிவும்
புரத்தின் வனப்பும் நூபுரமும் புரை தீர் அகத்தின் வற்பு உரமும்
பொலன் தோடு அணையும் பூ அணையும் புரியும் பணியும் பொன் பணியும்
வரத்தின் உத்தாள் ஒழித்தாள் அ மட மான் உடலம் ஒழித்தாலும்
வள மா அடியீர் உமைச் சரணா மருவப்பெற்றாள் ஆதலினால்
சிரத்தின் அலை மான் வைத்தீர் நும் செந்தாமரைத் தாள் கீழேனும்
சேரும் திறத்தை அறிவாளே சிறியாள் மதனை வென்றிடவே
** இரங்கல் – மடக்கு
** பதினான்கு சீர் கொண்ட இரட்டை ஆசிரிய விருத்தம்

#96
மதனை வென்றவர் நஞ்சம் ஆர்ந்தவர் வலியர் முண்டக முள்ளியே
மகிழ்நர் வந்திலர் மாலை தந்திலர் துயர்வது உண்டு அகம் உள்ளியே
கதம் மிகுந்து எழும் அத்தி நீர்த்துறைப் பெடை பிரிந்தில கம்புளே
கவலை கூர உஞற்றி மேவுறும் நறை சொரிந்து இலகு அம்பு உளே
மதியின் எல் தரு முத்தமே அவர் தருவது என்று அரு முத்தமே
மணி உயிர்த்து இரை சங்கமே இரவு ஒன்று பற்பல சங்கமே
நிதி தரும் தவ வங்கமே இனி அடைவதும் தவ அங்கமே
நெடியனும் தொழு கம்பமே உறை நிமலர் தீர்ப்பர்-கொல் கம்பமே
** செவியறிவுறூஉம் மருட்பா

#97
கம்பத்து இருந்து உதவும் கண்மணியைச் சிந்தித்து
நம்பத் திருந்துவீர் நானிலத்தீர் வெம்பும்
பிணியும் மூப்பும் பீடு அழி பழியும்
தணியா வறுமைத் தாழ்வும் தீரும்
திருவருள் நமக்குச் சிவணத்
தருவன் அன்னோன் சற்குருவாயே
** இரங்கல்
** பன்னிரு சீர் கொண்ட இரட்டை ஆசிரிய விருத்தம்

#98
குருகு நெகிழும் திறம் நவில்வாய் கழி சேர் குருகே குரு கழியக்
கொங்கை திதலை பூப்ப உளம் குலைந்தே உடைய உடை சோரப்
பருகும் பாலும் அருந்து அனமும் பகைக்கும் மருந்து என்று அறை அனமே
பழுவம் அனைய குழல் பூவைப் பரியாமையைச் சொல் பூவையே
அருகு பயின்ற கிளையே என் கிளையால் வந்தது அத்தனையும்
அளந்தபடியே அளந்தாலும் அதுவே சாலும் அளி இனமே
முருகு விரி பூம் பொழில் கச்சி மூவா முதல்வர் அளி இனமும்
முறையோ அளியேற்கு அளியாமை கேளீர் இதனைக் கேளீரே
** பன்னிரு சீர் கொண்ட இரட்டை ஆசிரிய விருத்தம்

#99
கேளோடு உற்ற கிளை ஒறுப்பீர் கேதம் உறுவீர் கெடுமதியால்
கிளி வாய் வரைவின்மகளிர்-பால் கிட்டி மயங்கித் தியங்குவீர்
வாளா கழிப்பீர் வாழ்நாளை வசையே பெறுவீர் வல் வினையீர்
வள மாந்தரு-வாய் உலகு உய்ய வந்த கருணை ஆர்கலியைத்
தோளா மணியைப் பசும்பொன்னைத் தூண்டா விளக்கைத் தொழுவார்-தம்
துயரக் கடற்கு ஓர் பெரும் புணையைத் துருவக் கிடையா நவநிதியை
வேள் ஆடலை முன் தீர்த்தானை வேழ உரியைப் போர்த்தானை
வெள்ளம் பாய்ந்த சடையானை வேண்டிப் புரி-மின் தொண்டினையே
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#100
தொண்டர் சிரத்தின் முடிக்கும் பூ
தொழுவார் இதயம் நடிக்கும் பூ
அண்டர் முடியில் துலங்கும் பூ
அரு மா மறையின் இலங்கும் பூ
பண்டை வினைப் பற்று அழிக்கும் பூ
பணிவார் அல்லல் ஒழிக்கும் பூ
தெண்டனிடுவோர்க்கு அருள் கச்சி
திருவேகம்பர் பதப் பூவே
** ** ** கச்சிக்கலம்பகம் முற்றுப்பெற்றது