பெத்லகேம் குறவஞ்சி

வேதநாயக சாஸ்திரியாரின் பெத்லகேம் குறவஞ்சி

@1 பாயிரம்
** விருத்தம்

#1
பொன் இலங்கு நித்தியசீவன் முடியை நரர் சிரத்தில் பொலிவாய்ச் சூட்ட
மின் இலங்கு பெத்தலேம் பதியில் உற்ற மேசியா வேந்தன் மீது
மன் இலங்கு சுவிசேடக் குறவஞ்சி நாடகத்தை மகிழ்ந்து கூற
முன் இலங்கு திரித்துவனை முழுமுதலை ஒரு பொருளை மொழிகுவனே

#2
பூ அணிந்த செப மாலை புனைந்த பெத்தலேகர் இரு பொன் தாள் போற்றி
நா அணிந்த மறை வேதக் குறவஞ்சி நாடகத்தை நயந்து கூறப்
பா அணிந்த திரியேக பராபரனும் மனு உருவாய்ப் படி மீது உற்றுக்
கா அணிந்த வினைதீர்த்தானும் பரிசுத்தாவியும் நன் காவல்தானே

#3
கடவுள் ஒன்றை அறியாமல் பல தெய்வத்தைக் கருதி வழி காணாத கவிஞர் கூட்டம்
அடம்புரியும் பொய்த்தேவர்களின் மேல் வீணில் அனேகவித புராண காவியங்கள் ஆக்கி
நடம்புரியும் குறவஞ்சித் தமிழும் செய்தார் நானும் அதைக் கண்டு ஏகநாதன் மீது
திடம் புரியும் பல நூலும் செய்து மீண்டும் செய்ய குறவஞ்சியதும் செயச் சிந்தித்தேன்

#4
கொஞ்சமிலாப் பரஸ்திரீகள் கூட உழன்றே நரகக் குழிக்குள் வீழ்ந்த
வஞ்சகப் பொய்த்தேவர்கள் மேல் குறம் அமைக்க வருத்தம் அன்று மறு ஒன்று இல்லா
நெஞ்சத்தை உடைய பராபரன் மேல் எவ்வாறு குறம் நிகழ்த்தலாம் என்று
அஞ்சி ஒரு முழு வருடம் யோசனை மேல் இருந்ததின் பின் அறைந்தது அன்றே

#5
கட்டியனே யோவான் ஏசுக் கிறிஸ்து எனும் பெத்லேநாதன் கணவன் அர்ச்செய்
சிட்டசபை எனும் சீயோன் மகளே மோகினி உலகச் செயலே சந்திரன்
மட்டு மிகும் உபத்திரமே தென்றல் மதனே பழைய மானுடன் வேதத்
திட்டம் இனம் அறியாத புதுக் கிறிஸ்தோரைச் சகியாய்ச் செப்புவேனே

#6
குறவஞ்சி என்ற பெண்ணே விசுவாசம் திருவாக்கே குறியின் கூறு
அறைகின்ற குருவானோர் குழுவன் உபதேசி என்போன் அவனே நூவன்
பறவைகளே நரர் சாதி பிணிக்கும் வலை சுவிசேடம் பழைய வேத
மறையது இல்லா அந்திப் பேயை பொய்த் தெரிசியாய் நெடுக வசனித்தேனே

#7
தஞ்சையினில் புதிதாய் வந்திருந்த போது சத்திய சுவார்சு ஐயர் தந்த உரையைச் சார்ந்து
நெஞ்சினில் அன்பு உயர்ந்த யோவான் கோலேப் ஐயர் நிறை மிகு நல் குரு எனவே நின்ற காலை
மிஞ்சு புகழ் தேவசகாயன்-தன் பாலன் வேதநாயகன் திருநெல்வேலி மேவும்
செம் சொல் மகா ஞான கவிச் சக்கரவர்த்தி செப்பு குறவஞ்சி பதினெண்ணூறாண்டே

#8
அகில புவனங்கள் எல்லாம் படைத்து அளித்த ஒருவன் எனை ஆண்ட நாதன்
புகழ்-அதனை விரித்து உரைத்த பெத்தலேம் குறவஞ்சி புவியின் மீது
சகல கலை வல்ல கவிஞோர்கள் முன்பாய் ஒரு சிறியேன் சாற்றும் வாய்மை
பகல் முனம் மின்மினி எதிர்ந்து சந்திரன் முன் உடு எதிர்ந்த பான்மைதானே

#9
அரும் தமிழ் வல்லோர் பஞ்சலக்கணம் எலாம் அறிந்த அருமையாளர்
திருந்தின பாடலுக்கு ஒப்பாய்ப் பெத்தலேம் குறவஞ்சி செய்த தன்மை
கரும் கடலில் ஓடியதோர் கப்பல் என மழைப் புனலைக் கனிந்து பாரில்
வரும் சிறுவர் தாழை மடல் தோணி செய்து விளையாடும் வண்மை தானே

#10
சுவிசேட சபையாரை ஒருவனையே தெய்வம் எனத் தொழுதுள்ளோரைத்
தவ ஞான மணவாளன் கற்புறு மெய்க் கிறிஸ்தவரைச் சகல நாளும்
அவமானமாய்ப் பேசும் பாப்பு ரோமான் சபையின் அகந்தை கண்டே
நவம் மீறும் திருவசனப்படி அவரை முனிந்து தமிழ் நடத்தினேனே

@2 கடவுள் வாழ்த்து

#11
திருமறைச் சுவிசேடனை ஏடனை திட வரப்பிரசாதனை நீதனைத்
திவிய பெத்தலைநாயனை ஆயனைச் செகநாயகனைத்
தரும சற்குருவானனை ஞானனைச் சருவ வஸ்து உபகாரனை
வீரனைத் தவிது இறைக்கு ராசனை நேசனைச் சருவேசரனைக்
குரு மகத்துவ வாகனை ஏகனைக் குவலயப் பரிபாலனை
வாலனைக் குறம்-அதற்கு அருள் கூர்வனை நேர்வனை குருசேறினனைப்
பெரு மரக் கனியால் வனை நால் வினைப் பிழை அறத் துதியே
செய மா சயப் பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியைப் பெருமாறு அருள்

#12
ஆதிப் பொருள் சோதிக் கருணையர் ஆசற்ற உலாசத்தனாம் முனம்
ஆதத்துட தீதற்றவர் பல அர்ச்சயக்கு இடரே
பேதித்து இயல் சாதித்தவர் அருள் பேசு உத்தமர் ஏகச் சுதனவர்
பேரில் கன சீரில் பரவிய பெத்தலைக் குறமே
சோதித்து இசை மா திட்ட மதி வை சூடத் தகும் நாடத் தகும் இது
தோணித் தமிழ் ஆணிக் குரிசிலை சொல் தரச் சமைவாம்
நீதிக் கலை ஓதில் பெறு பயன் நேர் தப்பினும் ஓர் தப்பு இலை என
நேசக் கவிராசத் திறமையர் நிச்சயத்து உணவார்

#13
காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும்
காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே
கூர் அணித் தற்பூரணன் எனவும் கோலன் அருள் பாலனை மிகவும்
கூவிய சொல் பாவினம் உயரும் குறவஞ்சித் தமிழே
தாரணியில் தோரணையொடு பண் தாவிய நல் காவியம் உணரும்
சாதக மெய்ப் போதகர் பலரும் தயைகொண்டு ஒப்புவரே
சீர் அணி முப்பேர் அணி பரமன் சேவடியைப் பாவடி பட என்
சீவன் வரைக் காவலில் அணிவன் திருமந்தைச் சபையே

#14
கட்டாகத்து உறைபவர் நிறைபவர் கள் காவில் பல விசை சில விசை
கல் பாகத் தொழுபவர் எழுபவர் காரணப் பொருளார்
சிட்டோருக்கு அருமையர் பெருமையர் செப்பான்மைக் குயிலினர் பயிலினர்
செத்தோருக்கு உதவியர் பதவியர் தேவ அற்புதனார்
மெட்டாகச் சிகிரியில் நகரியில் விஸ்தாரக் கடல் மிசை திடல் மிசை
மெய்ப் போதத்து அருள் மொழி ஒரு வழி வேத நல் குறமே
தட்டாமல் தமிழ் உரை இமிழ் உரை தப்பாமல் சொலவிடு நிலவிடு
தற்கா ஐ_கடவுளர் அடவுளர் சாயலில் சுதனே

#15
ஆகத்தொடு பிறந்தவர் சிறந்தவர் ஏகத்தினில் உறைந்தவர் நிறைந்தவர்
ஆழிக் கடல் நடந்தவர் கடந்தவர் ஆதிப் பரனார்
மேகத்தினில் எழுந்தவர் தொழும் தவர் மாகத்து அருகு உயர்ந்தவர் பெயர்ந்தவர்
வேடக் கணம் முனிந்தவர் சினந்தவர் மீதில் குறமே
பாகத்துடன் உணர்ந்தவர் மணந்தவர் யூகத்ததை மகிழ்ந்தவர் புகழ்ந்தவர்
பாதத்தினை உறும்படி பெறும்படி பாலித்து அருள்வார்
வாகு ஒத்து இயல் அறிந்தவர் செறிந்தவர் வேகத்து எனை நயங்கொடு செயங்கொடு
வாழ்வித்து அதி நலம் தரு பலம் தருவார் மெய்ப்புடனே

#16
ஆதம்-தனை அவனே தந்து அனையவனாலும் தரு வினை மேலும் தருவினை
ஆறும்படி வளர் கீறும்படி வளர் ஆயர்க் குடிலூ
டே தந்தனை உணர் மாதம்-தனை உணவோரும் பலன் உறவோரும் பலனுற
ஊரங்க முனணி சீர் அங்க முனணி ஓகைப் பரனார்
நாதம்-தனை அன மாதம்-தனை அனம் நாடும் திருவுருவோடும் திருவுரு
நாமங்கன மிக நாம் அங்கனம் மிக ஞானக் குறமே
வேதந்தனையதுமே தந்தனையதும் வீசும் திறம் உளர் மா சுந்தரம் உளர்
வீறின் புரவலர் பேறின் புரவலர் மேவிப் புகழ்வார்

#17
தோப்புற்று எதிர் பேய்ப் புகலாய்ப் புகல் தோற்றத்தனை மாற்றுரு வேற்றுரு
சூட்டிப் பகை காட்டிய மூட்டிய துரு ரோமைப் பதி வாழ்
பாப்புத்தன மூப்புகள் கோப்புகள் பாழ்த்துக் குழி தாழ்த்தது வீழ்த்தது
பார்க்குள் கெடு மார்க்கர்கள் மூர்க்கர்கள் பரிகாசப்படவே
ஈப் பற்றிட நாப்பிட ஆப்பிட ஏச்சுற்று இழவு ஆச்சுது வாச்சுது
ஏக்கத்தவன் வீக்குதல் ஆக்குதல் எழு ஞானக் குறமே
நாப் பற்றிய பாப் பயன் ஆப் பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில்
நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேதச் சபையோர்

@3 சரணத் தரு
** அடைக்கல இசைப் பாடல்
** விருத்தம்

#18
பன்னிரு அப்போஸ்தலர் தெரிந்து பதினொரு தாசியிலும் போய்ப் பத்தைத் தந்து
மன்னும் ஒன்பதினில் உயிர்விட்டு எட்டு நரர் காத்து ஏழ் மன்றாட்டு இட்டு ஆறு
நன்னு குடம் ரசம் ஆக்கி ஐங்காயம் உற்றும் மறை நால்வர் தீட்ட
உன்னு திரித்துவ இரு ஏற்பாட்டு ஒருவன் குறவஞ்சிக்கு உரை தந்தானே

#19
சரணு திரி முதல் சரணு ஒரு பொருள்
சரணு சுதனவர் சரணு அருபியர்
சரணு குருபரர் சாணு அதிசயர்
சரணு மனுவேலர் சரணுவே

#20
திரு நன் மறை-தனில் உரிய சுப மொழி
திடமதுடன் மனுடர்களின் அறிவுற
அருமையுடன் அருளிய மெய் முதலவன்
அரிய மலரடி இணைகளே

#21
ஆதி சத்திய வேத போதகர் நீதி உத்தம ஞான காரணர்
ஆயர் மெய்க் குடிலூடு உலாவிய நேய பாலகனார்
சோதி பற்றிய தேவ சாயலர் ஓதி உற்று எழு மாசிலாதவர்
தூசு பெத்தலை ராசராசர் என் ஏசு நாயகரே

#22
நீதம் அற்றிடு பார்வோன் மா பெலனாக முற்றிலும் நானூறு அயனம்
நேயரைச் சிறை மீதே போடவும் நிலையாத
ஓதமுத்து அலையே தாவிய கடல் மீது அமிழ்த்திய கோலாகலர் உற
வோர்-தமக்கு ஒரு கானான் நாடு அருள் ஒரு தேவர்

#23
சிந்தைப் பகைவைத்த பொலாத அகந்தைச் சவுலைச் சினமோடு உடல்
சிந்திச் சிதையச் சமர் ஏவிய திரியேகர்
அந்தத் தவிதைப் பதியாக இசைந்திட்டிடவைத்து அவன் மேல் மனது
அன்புற்று அவன் நல் குலமே வரும் அதிசேயர்

#24
யோசுவன் வன் சமரிட்ட நாளதில் மேலிடும் படை கெட்டு வீழ்க விண்
ணூடு எழும் சுடர் நிற்கவே செயும் உவகையான்
ஏசுவும் சிலுவைக்குள்ளாகிய போதும் வஞ்சர் மலைக்க வான் நடு
ஏகும் என்றூழ் மறைத்து இரா வர இசைகுவோர்

#25
ஞானக் கருணை விவேகத்தனர் முழு ஞாலத்தையும் ஒரு வாய்மைப்பட நடு
ஞாயத்தினை இட மாகத்தினில் வரு நாகத்து உயர்பவரே
ஈனக் கசடரை மா உக்கிரமுடனே அக்கினி-தனிலே விட்டு
எரியிடவே பற்றிய பினை மா பத்தர்களை விண் ஏறப்புரிபவரே

#26
பாவம் இலாத தூயவர் சாவு அடராத மேன்மையானவர்
பாதகம் ஆற நீதமாய் வரு பாவ விமோசனரே
தேவசகாய வேதநாயக நாவலன் ஓது பாவின் மேவிய
தேசு மகா பிரகாசர் ஆகிய யேசு நாயகரே

#27
எத்தனாம் கொடு நெஞ்சத்துடைய மதத்தனாம் சதியின் சத்துரு விழ
வெட்டுமாம்படி நிந்தைப்பட வலை எழு ரோமான்
பித்தராம் பல அண்டக் கசடர்கள் கற்ற வீண்கள் அழிந்திட்டிட அருள்
பெத்தலேம் குறவஞ்சிக்கு உரைதரு பெருமானே

@4 தோடையம்
** நாடகத்தின் முன்மொழிப் பாட்டு
** தாழிசை

#28
ஒருவன் அன்று இரு புன் மறியில் ஏறினவன் உதையம் மூன்றினில் எழுந்தவன்
ஊழி நாலு வினை மாற ஓங்கி ஐந்து அப்பம் ஈந்து அறு தினத்திலே
அருளி யாவினையும் ஏழை ஓய்வு பகல் ஆக்கி விர்த்தசேதனமது எட்டாம்
தினத்தில் ஏற்று ஒன்பது அன்புறா அசடர் குட்டமது அகற்றியே
மருவு கன்னியர்கள் பத்தில் ஞான மகள் மகுணன் ஆகி யூதாசு அலால்
மறு_இல் பதினொருவர் பணிய வாசல் பனிரண்டதான எருசலையில் வாழ்
பெருமை கொண்ட பரன் அருளும் மைந்தன் உயர் பெத்தலேகருட தாசன் நான்
பேசும் என் தமிழை வேதபாரகர் பிரதான ஞானியர் தளார்களே

#29
சீர் உலவு கானானு தேசத்தில் மேன்மை பெறு
பேர் உலவு பெத்தலேகப் பெருமான்-தன் மீது
தார் உலவு குறவஞ்சித் தமிழ் நாடகம் பாடப்
பார் உலவு பரன் சுதன் பொன் பாதம் இரண்டும் துணையே

#30
நீடும் இசறாவேலர் நேய தவிது இராசன்
நாடும் உயர் பெத்லேக நாதனார் மீது
கூடும் உயர் குறவஞ்சிக் குழுவ நாடகம் பாட
மாடு உலவு குடிலில் வந்த மனுவேலர் துணையே

#31
மாசற்ற பரன் சுடரின் வார்த்தையே மனுவாக
நேசித்த பெத்லேக நித்தனார் மீது
ஆசித்த ஞானக் குறவஞ்சி நாடகம் பாட
ஏசுக் கிறிஸ்து எனை ஈடேற்றின வன் துணையே

#32
கரிசித்த தேவசகாய வேதநாயகன்
தெரிசித்த பெத்தலேம் சீமானின் மீது
வரிசித்த ஞானக் குறவஞ்சி நாடகம் பாட
பரிசுத்த ரூபி எனின் பங்கில் இருப்பவனே

#33
கோப்புடைய முழுமூடர் குணக்கேடர் பணிய வரு
பாப்புடைய வேதம் எல்லாம் பாழடைந்துபோகத்
தாப்பு இரியக் குறவஞ்சித் தமிழ் கூற எந்நாளும்
மூப்பு இளமை இல்லாத முதல்வர் பதம் துணையே

@5 மங்களம்
** நன்மை வாழ்த்து
** விருத்தம்

#34
துங்க வானவர்கள் ஆடி துத்திய கீர்த்தனங்கள் பாடி
நங்கையர் அனந்தம் கோடி நவ எருசலையின் நீடி
சங்கையின் அரசை நாடிச் சரண பங்கயத்தைச் சூடி
மங்களம் எனக் கொண்டாடி வாழ்த்தினார் போற்றினாரே

#35
சீர் ஏசுநாதனுக்குச் செய மங்களம் ஆதி
திரியேக நாதனுக்குச் சுப மங்களம்
பார் ஏறு நீதனுக்குப் பரம பொன் பாதனுக்கு
நேர் ஏறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு

#36
ஆதி சருவேசனுக்கு வாசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதிய வாசாலனுக்கு உயர் மனுவேலனுக்கு

#37
மானாபிமானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானானு தேயனுக்குக் கன்னி மரி சேயனுக்கு
கோனார் சகாயனுக்குக் கூறு பெத்தலேயனுக்கு

#38
பத்து இலட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரமபதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதிகாரனுக்குப்
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு

#39
பாதம் நாடிய விந்தனுக்கு அந்தனுக்கு மங்களம்
பாவு கூறிய சந்தனுக்குத் தந்தனுக்கு மங்களம்
வேதநாயகன் பாட்டனுக்கு மேல் வானவர் நாட்டனுக்குச்
சீத ஞானியர் கூட்டனுக்குத் தேவமோகினி தேட்டனுக்கு

#40
காப்புக்கு முன்பனுக்குப் பின்பனுக்கு மங்களம்
கவிவாணர் அன்பனுக்கு இன்பனுக்கு மங்களம்
பாப்புச் சவை நாசனுக்குப் பரம பத்தி ராசனுக்கு
நாப்பண் நல் விசேஷனுக்கு நசர் ஏசு ராசனுக்கு

@6 தோத்திரத் தரு
**வாழ்த்து இசைப் பாடல்
**விருத்தம்

#41
அணி கொண்ட வானத்தானை அனைத்தையும் அமைத்து ஆண்டானை
தணி கொண்ட மனத்தினானை சமஸ்த சாஸ்திரவித்தானை
துணி கொண்ட ஒளியினானை தூய சுத்தாங்கத்தானை
மணி கொண்ட சயனத்தானை வாழ்த்துவோம் போற்றுவோம்

#42
மணி கொண்ட அச்சயனே நமோ நமோ அம்மணி கொண்ட அச் சயனே நமோ நமோ
துணி கண்டு அகத்து வந்தாய் நமோ நமோ ஆயர் துணி கண்டகத்து வந்தாய் நமோ நமோ
பணி அஞ்சகம் கடந்தாய் நமோ நமோ தேவ பணி அம் சகம் கடந்தாய் நமோ நமோ
அணி மங்கலம் புனைந்தாய் நமோ நமோ தாரணி மங்கு அலம் புனைந்தாய் நமோ நமோ

#43
ஆன உருக் காயம் ஐந்தாய் நமோ நமோ அன்பர்க்கான உருக்காய் அமைந்தாய் நமோ நமோ
வானம் மறையச் செல் அப்பா நமோ நமோ அறிவான மறை அச்செல் அப்பா நமோ நமோ
தானம் அத்தனைக்கு அளித்தாய் நமோ நமோ நிதான மத்தனைக் களிந்தாய் நமோ நமோ
மான பத்தரைத் தடுக்காய் நமோ நமோ அவமான பத்து அரைத்து அடுக்காய் நமோ நமோ

#44
அந்தம் முடிவு இல்லாதவா நமோ நமோ ஆனந்த முடிவில் ஆதவா நமோ நமோ
பந்த முடி வானவா நமோ நமோ நிற்பந்த முடிவு ஆனவா நமோ நமோ
சிந்தும் படிக்காய் விட்டாய் நமோ நமோ குருதி சிந்தும்படிக்காய் விட்டாய் நமோ நமோ
நந்தர்க் குருத் தலையாய் நமோ நமோ ஆனந்தர்க்கு உருத் தலையாய் நமோ நமோ

#45
மா தங்கமே அம்மையே நமோ நமோ கிருபை மாதங்கமே அம் மையே நமோ நமோ
போதம் கலைக்கு உடையாய் நமோ நமோ ஒரு போது அங்கு அலைக்கு உடையாய் நமோ நமோ
பேதங்களை அவித்தாய் நமோ நமோ துன்பு ஏதம் களைய வித்தாய் நமோ நமோ
வேதம் கதிகமே நமோ நமோ நிறைவே தங்கு அதிகமே நமோ நமோ

#46
கோப் பாவலன் புரத்தாய் நமோ நமோ கவிக் கோப்பு ஆவல் அன்பு உரத்தாய் நமோ நமோ
தாப்பு ஆலையத் திருக்காய் நமோ நமோ விறுதாப்-பால் ஐயத்து இருக்காய் நமோ நமோ
காப்பு ஆன்மை மெய்க்கு அடுத்தாய் நமோ நமோ தொழுகாப் பான்மை மெய்க் கடுத்தாய் நமோ நமோ
பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ ரோமைப் பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ

@7 கட்டியக்காரன் தோற்றம்
**விருத்தம்

#47
கோட்டி செய் அலகை வஞ்சம் குலைத்து அரசாள வெற்றி
சூட்டியே மனுவைக் காத்த துய்ய பெத்லேர் ஏசு
தாட்டிகன் வருகை-தன்னைச் சகலரும் அறியச் சாற்றிக்
கூட்டிய களரி மீது குரு முனி யொவான் வந்தானே

#48
நாதக யொவானும் வந்தான் முன் தூதனான
ஸ்நானக யொவானும் வந்தான்
ஏதம்_இல்லாப் பெத்தலேகர் ஏசு ஞான சுவிசேட
போதகர் வருகை-தன்னைப் புகழ்ந்து கட்டியம் கூற

#49
ஒட்டகத்தோல் உடை உடுத்து யூதேயாவின்
நெட்டில் வனவாசம் அடுத்துக் குணப்பட்டவர்
மட்டில்லாப் பவங்கள் தடுத்து யோர்தான் நதியில்
திட்டமாய்த் தீட்சைகள் கொடுத்து மதத்த வஞ்சத்
துட்டரை அடக்க ஆதி சிருட்டிகன் வருகின்றார் என்று
அட்ட திசையோர் அறியத் தட்டிய பறைகள் சாற்றி

#50
கானத்தின் தேனை அருந்தி வெட்டுக்கிளிகள்
ஆனத் தினையே அருந்திச் சுவிசேட மறை
ஞானத்தின் வழி திருந்தி வார்க்கச்சை-தனை
மோனத்திடையில் பொருந்திக் கிறிஸ்தரசு
வானத்தன் பெத்லேகேம் மானத்தன் வருதலைத்
தானத் திருமறை நிதானத்திலே பகர்ந்து

#51
குணப்படப் புத்தி நவின்று நல்ல கனி
மணப்படத் தருக நன்று அல்லவெனில்
நிணப்படு பதரை வென்று அக்கினியில்
கணப்படு குழியில் கொன்று சுட்டெரித்துப்
பிணத்துப் பசாசர்களைத் திணத்திக் கோடரி கொண்டு
சணத்தில் முறித்து வெட்டித் தணித்துப் போடுவார் என்று

#52
காத்திரப் பராபரன் வந்தான் வாக்குத்தத்தத்தின்
நேத்திர இம்மானுவேல் வந்தான் சுவிசேட வேத
சாத்திரக் கிருபாநதி வந்தான் வேதாகமத்தின்
காத்திர மேசியா வந்தான் யூதர்களின்
கோத்திரத்த விது ஞான பாத்திரக் கிறிஸ்து இச்
சேத்திர ரட்சகன் வந்தான் தோத்திரம் தோத்திரம் என்று நான்

#53
குத்திரப் பாப்பை அழித்து நரகாபுரியின்
எத்தனவன் எனப் பழித்து அறிவுகெட்ட
பித்தன் மதத்தையும் ஒழித்துப் பெருமை சொல்லி
கத்திய துன் வாயைக் கிழித்துத் தெளிவுடனே
எத்திசையிலும் பரம சத்திய மறை வளர
நித்தியன் வந்தார் என மெய்த் துத்தியம் துத்தியம் சொல்லி

@8 கட்டியன் தரு
**விருத்தம்

#54
வந்த யோவான் யூதேயாத் தேசமதில் யோர்தான் மா நதியின் பாலில்
விந்தையுடன் நின்று எருசலேமியர் மற்று அனைவரையும் வெகுண்டு நோக்கி
முந்தும் இருடியர் எழுதும்படி யேசுநாதன் வர முனைந்தான் உங்கள்
சிந்தை குணப்படுத்தும் எனச் சாற்றினான் அவர் மனதைத் தேற்றினானே

#55
சுந்தரம் சேர் யூதேயா வனாந்தரத்திலே அன்று தூயவன் இஸ்நாதக யொவான் திரத்திலே
வந்து பிரசங்க ஆராதனை எண்ணி யோர்தான் மா நதியின் பாலிருந்து போதனை பண்ணி

#56
போதனைக்கு எருசலையும் யூதேயாவும் அப்புறத்து நதிச் சுற்றுளார்கள் யாவும்
காதலுடன் பரிசேயர் சதுக்கேயரும் வந்து காண அவர்களுக்கு மெய்த் துதிக்கையரும்

#57
ஐயன் யோவான் அவர்-தமை நோக்கி அவர் அறிக்கைசெய் பாவம் அனைத்தையும் நீக்கிச்
செய்ய யோர்தான் எனும் நதி அடுத்துத் தமைச் சேர்ந்தவர் எவர்க்கும் ஞானத் தீட்சை கொடுத்து

#58
தீட்சை கொடுத்து ஆத்துமத்தைச் சுத்திகரித்து சுவிசேட நெறிகள் எல்லாம் மெத்த விரித்துக்
காட்சி மிகும் சுதன் இப்போது வருவார் செயும் கருமத்துக்குத் தக்கது பலன் தருவார்

#59
பலன் தந்து நல்லோருக்கு அன்பு பூட்டி விரியன் பாம்புக்குட்டிகளுக்கு வன்பு காட்டி
நலம் தரும் கனி விருட்சத்தை நாட்டிக் கனி நல்காத விருட்சத்தை வெட்டி வாட்டி

#60
வெட்டி அக்கினிச் சுவாலையில் இட்டுக் கொடும் வேதனை வாதைகளை மேல் வரவிட்டுச்
சுட்டெரித்துப் போடுவார் மெய் இதிலே ஒரு தூற்றுக்கூடை இருக்குது கையதிலே

#61
கையில் ஒரு தூற்றுக்கூடை-தனைச் சேர்த்து தம் களத்தை அற விளக்கி இலக்குபார்த்துத்
துய்ய கோதுமை களஞ்சியத்தில் வைத்துப் பொல்லாத தூசிப் பதர்களை எரியில் தகைத்து

#62
எரியில் தகைத்திடுவர் ஆதலாலே அவர்க்கு ஏற்ற தவம்புரியும் காதலாலே
உருகி மனம்திரும்பித் தவசுபண்ணி நெறி ஒழுங்கில் நடந்து அதிக செபங்கள் நண்ணி

#63
நண்ணி மனதைப் பரவசமாக்கிப் பவ நடத்தை எனும் நரக வழி நீக்கிப்
புண்ணியன் வேத முறைப்படி நடந்து மற்று அப்புறரைத் தனைப் போல் நேசிக்கத் தொடர்ந்து

#64
தொடர்ந்து இரண்டு சட்டை_உளோன் ஒன்று எடுத்து படும் துயரத் தரித்திரருக்கே கொடுத்து
அடர்ந்து பொசிப்புள்ளோர் இந்தப்படியே இடர் ஆன அனைவருக்கும் சிந்தைப்படியே

#65
சிந்தைப்படி கொடுத்து அவரைத் தாங்கிச் சற்றும் தீமை இடுக்கண் செய்யாமல் ஓங்கித்
தந்திரப் பேய் மதங்கள்-தனை முனிந்து வேத சத்திய வாய்மையினில் மனம் கனிந்து

#66
கனிந்து இருதயத்தின் நினைவு கண்டு அதைக் கண்டவிடத்து அலையாமல் முனைவு கொண்டு
நினைந்திருந்து ஆவியின் கனிகள் முன்னம் கன நேசம் தயை நீண்ட சாந்தமோடு இன்னம்

#67
இன்னம் தரும குணம் விசுவாசம் துர்_இச்சை அடங்குதல் சந்தோஷ நேசம்
உன்னும் தயவு மெத்தனவான அருள் உள்ள பயபத்தி எனும் ஞான

#68
ஞானக் கனிகள் எல்லாம் தருவீர்கள் தின நன்மையாய்க் குணத்துக்கு வருவீர்கள்
வான் நிறைக்கு ஆயத்தமாகச் செல்லும் அவர் வழி-தனைச் செவ்வையாய் நிரவி நில்லும்

#69
நிரவி நிரவிப் பள்ளத்தை மூடும் பொல்லர் நிரட்டு முரட்டு வழிகளைப் போடும்
பரவி மலை மேடும் சரிப்படுத்தும் பொல்லாப் படும் குழி குன்றுகளை வரிப்படுத்தும்

#70
வரிப்படுத்திப் பட்டணத்தின் இருள் நீக்கும் தேவ மனுமகனுக்கு வழி சமம் ஆக்கும்
பிரிப்பு இடித்து மிக்க தோரணம் சூட்டும் உயர் பேரின்பக் காதல் கதலிகள் நாட்டும்

#71
நாட்டி அங்கு சீவவிருட்சத்தை ஓங்கும் உயர் நல் ஈந்து தென்னம் குருத்தோலை வாங்கும்
பூட்டிய இருதயத்தின் மலர் தூக்கும் தூக்கிப் பொற்புற வீதிகள் எல்லாம் திட்டம் ஆக்கும்

#72
ஆக்கி அர்ச்சனைபுரிந்து மனம் தேறும் தவிது ஆதிபனுக்கு ஓசன்னா என்று கூறும்
சீக்கிரம் புதுக் குணத்தின் சிந்தை காட்டும் எங்கள் தேவசுதன் நீதியின் ஆடைகள் சூட்டும்

#73
சூட்டுதற்கு எனக்குப் பின்னால் தோன்றும் அரியோர் தேவ சோதி சுதன் ஏசுக் கிறிஸ்து எனும் பெரியோர்
பாட்டில் அடங்காத் திரித்துவத்தில் ஒன்று அவர் பாதரட்சை எடுக்க நான் பாத்திரம் அன்று

#74
பாத்திரம் அன்று என்று கர்த்தருட தூதன் எனும் பரம யோவான் இஸ்நாதக நீதன்
சாஸ்திரப்படியே சொன்ன நெறி மேவி வரும் சகல சனங்களும் ஒன்றாய்க் குலாவி

#75
ஆவிப் பரனை அன்பாய் துதித்துக்கொண்டு கேட்கும் அத்தனைப் புத்தியும் மனம் பதித்துக்கொண்டு
பாவி ரோமை பாப்புவை நீங்கிட உய்தார் அவன் பாதையை விட்டுத் தேவ பாதையைச் செய்தார்

@9 பவனிச் சிந்து
** (உலா இசைப் பண்)
**விருத்தம்

#76
துங்க யொவான் அருளப்பன் எனும் இஸ்நாதகன் உரைத்த சொல்லின் நேர்மை
அங்கு அவர் எலாம் உணர்ந்து தங்கள் இருதயம் ஒருமையாக்கிச் செல்வம்
பொங்கு புகழ் எருசலை மா நகரதனை அலங்காரம்புரியச் சீடர்
சங்கமுடன் கிறிஸ்து இறைவன் வேசரி வாகனப் பவனி சார்ந்திட்டானே

#77
பவனி வந்தனரே கேருபின்
பவனி வந்தனரே

#78
அவனி வாழ்த்திய பெத்லேகேம் வளர்
புவன மானியர் கவன ஞானியர்
தவனுமாய் அனுபவனுமானவர்
நவ கேருபீன் மேல் உவகையாகவே

#79
காலும் முகில் ஒழுங்காலும் அனல் ஒருக்காலும் மேலும் வடக் காலும் வரவர
நாலு திசையினும் நாலு முகம் உள்ள நாலு சீவனும் நாலு உருவதாய்
மேலும் பளிங்கு மென்மேலும் நீலக் கல் மேல் உலாவும் மண்டலத்தில் நண்
பாலும் கேருபீன் பாலும் திரண்டு இருபாலும் தூதர்கள் நிறையவே

#80
தேசம் மேவும் உலாச மாந்தர்கள் தேசு மாதர்கள் பாசமாய்
வாசம் மேவு விலாச மரக்கிளை மாசிலாது எடுத்து ஆசையாய்
ஓசன்னா பவ_நாசன்னா என ஓசையாய்க் கிறிஸ்து ஏசுவே
நீச வாகன ராசனே எங்கள் நேசனே எனப் பேசவே

#81
தீர்க்கர் எழுதிய மார்க்கமாய் உயர் சேர்க்கையான சன்மார்க்கரோடு
ஆர்க்கும் கிறிஸ்து இனத்தோர்க்கும் அறிவதில்லார்க்கும் பன்னிருபேர்க்குமே
ஏர்க்கையே செய்து போர்க் கணத்தினை ஈர்க்க ஆதிபன் மூர்க்கமாய்
பார்க்குள் எருசலை ஊர்க்குள் மனுடர்கள் பார்க்க மறைகளும் ஆர்க்கவே பவனி

#82
வன்ன நிலை அங்கி பொன்னின் கச்சைகள் மன்னும் உடை என மின்னவே
சொன்ன முடி வெண்மை என்ன இரு விழி துன்னு கனல் கொழுந்து அன்னதாய்த்
தன்மையின் சொகுசு உன்னு மடி கடல்-தன்னின் அதிர் மொழி பன்னவே
முன்னும் ஆனவர் பின்னும் ஆனவர் முன்னதாக வந்து என்னை ஆள்பவர்

#83
அங்கமுடன் ஒளிர் பொங்கும் எழுகணம் அங்கை-அதனில் இலங்கவே
கங்குல் அகல விளங்கு கதிரின் முகம் கொள் பார்வை துலங்கவே
தங்கு கூர்மை நெருங்கு வாள் பிரசங்கம் வாயில் அலங்கவே
புங்கமாய் நிறைந்து எங்குமானவர் பொங்கு தீயர் கலங்கவே

#84
போத நாயகன் வந்தனன் ஐந்து பூத நாயகன் வந்தனன்
ஆத நாயகன் வந்தனன் எமது ஆதி நாயகன் வந்தனன்
தூதர் நாயகன் வந்தனன் தேவ சோதி நாயகன் வந்தனன்
வேத நாயகன் வந்தனன் என ஈதமாய் முரசு ஒலிக்கவே

#85
மத்தராகிய புத்தியீனர் அவத்தை நாடிய பித்தர்கள்
சித்து மாயை மிகுந்த பாதகர் செத்தபேரை அடுத்து_உளோர்த்
தத்து மேவிய எத்தராகிய சத்துராதிகள் வித்ததும்
பத்து வாய்மை நினைத்திடத் தவ பத்தியே தரு சுத்தனார்

@10 வேறு – பவனிச் சிந்து
** உலாவரும் இசைப் பண்
**விருத்தம்

#86
அந்தமும் ஆதியும் அல்பா ஒமேகாவாய் உலகம் அனைத்தும் தாங்கிச்
சிந்தையிலே சிறந்த பெத்தலேம் நாதர் பன்னிரண்டு சீடர் சூழக்
கந்தம் மிகும் கேருபின் வாகனத்துடையவன் வேசரி வாகனத்தில் ஏறிப்
பந்தம் மிகும் எருசலேம் பட்டணத்தார் தொழ எழுந்தான் பவனிதானே

#87
தேவலோக தேவ சோதி
தேவபால தேவன் வந்தார்
தாவீது ஏந்தல் கோத்திர சாயல் கன்னியாஸ்திரீ மிக்க
ஆவை மரி கற்பமுற்று அற்புதமாய் உற்பவித்து

#88
ஏதன் வனம் மீதில் ஆதம் ஏவை மான் செய் தீதினாலே
ஏதம் அணுகாத பரன் இஸ்திரீயின் வித்தின் மேலே
ஆதியான ரட்சகனை அருள்வோம் என்று அன்பாய்ச் சொன்ன
நீதி தவறாது மேன்மை நீடு பெத்தலேகம் இன்ன

#89
சம்மனசோர் சேனை சூழச் சதுர் நீடிய சருவேசன்
செம்மையுடன் செங்கோல் மேவும் தேசு உலவும் ஏசு ராசன்
தும்மனசாம் பேய்க் கணத்தைச் சூழ்ந்த வெற்றி செய்து அங்கு ஏக
நல் மனதாய் யூதேயாவின் ராச்சியத்தில் காட்சியாக

#90
அளவில்லாத உக்கிர நீதன் அளவில்லாத முக்கிய போதன்
அளவில்லாத சத்திய வாசன் அளவில்லாத நித்திய ராசன்
அளவில்லாத வானகத்தன் அளவில்லாத ஞான சித்தன்
அளவில்லாத தயையாளன் அளவில்லாத செயவான்

#91
ஞாலம் உண்டுசெய்த பின்பு நாலாயிரம் ஆண்டின் முன்பு
வால கன்னியாஸ்திரீ நேய மாசில்லாத தேவ தூய
பாலனாக ரூபம் மேவிப் பரமபிதாவுடன் உசாவி
சீலம் உள்ள பெத்தலேம் ஊரில் சேர்ந்த முன்னணையில் நேரில்

#92
நல்ல மேய்ப்பர் சாஸ்திரிமார்கள் ஞான நூலின் மேன்மையோர்கள்
துல்லிய நீதிகள் சாற்றத் தூதர் சேனை புகழ்ந்து ஏற்ற
எல்லையில்லாக் கவி கொண்டு இன வேதநாயகனும் கண்டு
வல்லமையோடே துதிக்க வான ஒளி ஒன்று உதிக்க

#93
கள்ளத்தீர்க்கன் மா அக்கியானன் கடிய கொம்பு இரண்டு உண்டானன்
வள்ள சுவிசேடம் அற்றோன் மாயலோக வாழ்வில் உற்றோன்
உள்ள நன்மை யாவும் விட்டோன் ஓதும் நேர்மை நீதி கெட்டோன்
கொள்ளிப் பாம்பாம் பாப்பும் வந்து குணம்பெறவே தானும் வந்து

@11 கட்டியம்
** புகழ் மொழி

#94
அதிக பிரவையின் மிகு கிர்பையின் உரைகள் புரிய அடர் அமலர் தொழு சரண மலரா
அடியவர்கள் மனதின் உறை இடர்கள் துயர் பலது அகல அருள் உதவு கருணை நிதியே
முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே
முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே
சதிசெய் பல கொடிய விட அலகை தலை சிதற மிகு சமரது இடு விசைய வரதா
சகல உயிர்களையும் அனுதினமும் அகமதில் அறிவு தர வளமை பொழியும் நயனா
மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல்
வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே
பராக்கு சுவாமி பராக்கு

#95
அரிய விணும் அதின் அமலர் உலகின் உயிர் பல பொருளும் அறு தினமது அருளும் அருவா
அரவின் உரை உரிமையொடு கருதி ஒரு கனி நுகரும் அதன் வினைகள் அகல வருவாய்
எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா
இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய்
விரிவு பெருகிய மலையினிடை உயரும் அனல் நடுவின் விளையும் மறை அருளும் விமலா
விருது பெறு தவிது அரசன் மகன் எனவும் இடையர் குடில் விடையின் முனம் ஒளிர் சிறுவனே
பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே
பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே
பராக்கு சுவாமி பராக்கு

@12 தோத்திரச் சிந்து
** வாழ்த்து இசைப்பண்
**விருத்தம்

#96
அங்கங்கு நிரந்தரமாய் நிறைந்த பராபரன் அன்பர்க்கு அன்பன் ஆனோன்
சங்கையுடன் வேசரி வாகனத்து ஏறிப் பவனிவந்த தன்மை கண்டே
மங்கையரும் அ நகரின் மாந்தர்களும் தேவர்களும் மற்றுள்ளோரும்
இங்கு எழுந்த தயவு ஏது என்று ஏற்றினார் அடிபணிந்து போற்றினாரே

#97
இங்கு எழுந்த தயவு ஏது ஏகாதிபாலர்
இங்கு எழுந்த தயவு ஏது தேவாதிதேவர்
இங்கு எழுந்த தயவு ஏது

#98
இங்கு எழுந்த தயவு ஏது மங்கை மரியாள் மகவாய்த்
துங்கம் மிகு பெத்தலேமில் சங்கை உள ஏசுநாதர்

#99
முன் உமக்குக் கொடுத்தது உண்டோ அதில் செய்ய மூவுலகில் ஈடதும் உண்டோ
மன்னவர் வருந்தினது உண்டோ விண் நாட்டிடை வானவர் மன்றாடினது உண்டோ
தன்னிகர்_இல்லாத யேசு சுவாமியே கிறிஸ்து நாதா
இ நிலத்தை ரட்சிக்க என்று ஏழையான ரூபமாக

#100
முந்தியே சொந்த ஊராம் ஏசுநாத சத்திய கிறிஸ்து உந்தன் பேராம்
துத்தியம் மிகுந்த சீராம் உன் தகப்பன் சித்து அனைத்தும் ஆக்குவாராம்
பத்தியில் உயர்ந்த பரிசுத்தனே மெய்ஞ்ஞான நீத
உத்தம திரித்துவ ஏகா இத்தனை இரக்கமாக

#101
அட்ட திக்கும் புகழ் நேசன் அகிலம் எல்லாம் திட்டமுடன் பணி ராசன்
மட்டு மிகும் தயை வாசன் தவீது இறை நிட்டை செயும் சருவேசன்
வட்டமிட்டு அடர்ந்து அடர்ந்து கொட்டமிட்டு அலறும் பேய்கள்
பட்டு அழிய அன்று மாட்டுக் கொட்டிலுக்குள் அற்புதமாய்

#102
வித்தகத் தேவ சகாயன் வரத்தில் உற்ற புத்திரன் எனும் நன் நேயன்
சித்திரக்கவி சொல் வாயன் வேதநாயகன் மெய்த் தமிழுக்கு உதவு தூயன்
பத்தருக்கு உபகார மனோகர நித்தியக் கிருபாகர சாகரன்
சித்திரக் கருணாகர சேகரன் பெத்தலைக்கு அதிகார பராபரன்

#103
வஞ்சகத்திலே துணிந்து கொடுமை எல்லாம் நெஞ்சத்திலே அணிந்து
கொஞ்ச அறிவால் தணிந்து செத்த நரரை தஞ்சம் எனவே பணிந்து
பஞ்சரித்து அழு பாப்பின் மதப்படி சஞ்சரித்தவர் பேய்க் குழி புக்கு முன்
மிஞ்ச நல் தயை காட்டி வழுத்திடவும் செபத்து உருவாய் பரமப் பொருள்

@13 பிரசங்கத் தரு
** அருளுரை இசைப்பாடல்
** விருத்தம்

#104
நல் தவ எலியா ஆன நாதக யோவான் என்போன்
எத்திசை அனைத்தும் காத்த யேசுநாத தெய்வீக
கொற்றவன் பவனிவந்த கொள்கையைக் குறித்து எலோர்க்கும்
பற்றுதல் பிரசங்கங்கள்பண்ணினான் நண்ணினானே

#105
ஞான உற்பனனே பரப்பொருள் ஆன விற்பனனே கிருபை
நயத்தொடு புரிவான் மிகு மதி சயத்தொடு திரிவான்
வானம் ஒத்து உறைவான் அருள் அபிமானம் வைத்து அறைவான் சற்றெனும்
வஞ்சனை நினையான் எளிமையின் நெஞ்சனை முனையான்
மோன சத்தியனே ஒரு நிதான நித்தியனே பரம மோக்கிடத்து
உடையான் கொடியவர் நோக்கிடக் கிடையான்
ஈனம்_அற்றவனே அருளு கியானம் உற்றவனே கிறிஸ்து என
எங்கும் நின்றவனே வீதியில் இங்கு சென்றவனே

#106
போதனை விளைவான் அன்பர்கள் வேதனை களைவான் சாதனை
பொய்யர்க்கும் எய்யான் அடுத்திடு மெய்யர்க்கு மெய்யான்
சேதனம் மிடைந்தான் விருத்தசேதனம் அடைந்தான் விண்ணில்
தேவர்க்கும் அரியான் மண்ணினில் யாவர்க்கும் பெரியான்
நூதன மறையான் எழுதிய சாதனம் நிறையான் பலபல
நூலுக்கும் அடங்கான் தீவினை நாலுக்கும் தொடங்கான்
மாது அனைக்கு வந்தான் தேவ ஆராதனைக்கு உவந்தான் ஒன்றாம்
வஸ்து தட்சகனே வரும் கிறிஸ்து இரட்சகனே

#107
ரூபத்தை எடுத்தான் மனுடரின் ஆபத்தைத் தடுத்தான் அவன் கையி
லோ சத்த உடுத்தான் அவனும் விசேஷித்த உடுத்தான்
பாவத்தைத் தீர்த்தான் ஆதத்தின் சாபத்தை ஏர்த்தான் துற்குணப்
பாசியைப் பேர்த்தான் மெய் விசுவாசியைச் சேர்த்தான்
கூபத்தைச் சேர்ந்தான் ஒரு பெண் சோபத்தைத் தீர்த்தான் யூதர்கள்
குலத்தினைத் தேர்ந்தான் கடவுளின் வலத்தினைச் சார்ந்தான்
தாபத்தைத் துணிந்தான் நீதியின் கோபத்தைத் தணித்தான் வேத
சாஸ்திரம் பணித்தான் ஒரு நட்சேத்திரம் கணித்தான்

#108
பெத்தலைப் பதியான் அருள் இரட்சித்தலைக் கதியான் பன்னிரு
பேருக்கும் அதியான் கிறிஸ்து எனும் பேருக்கு மதியான்
சுத்த எண் கலையான் எமைக் கரிசித்த கண் கலையான் பரம
சொற்கத்தின் நிலையான் பரிசெயர் தர்க்கத்தின் மலையான்
சித்தம்வைத்து எழுவான் எருசலைக்கு எத்தனைக்கு அழுவான் ஞானத்
தீட்சையும் தொழுவான் தான் சொன்ன பேச்சையும் வழுவான்
பத்தியின் உருவே அடியவர் புத்தியின் குருவே வேசரிப்
பவனி வந்தவனே முழுதும் இவ் அவனி தந்தவனே

#109
வானத்தைப் படைத்தான் ஒளிவிடு மீனத்தை அடைத்தான் இரண்டு
மனுவையும் வகுத்தான் மறை என்ற தனுவையும் தொகுத்தான்
ஞானத்தைக் கொடுத்தான் ஒரு மரத்து ஈனத்தைத் தடுத்தான் கனி தின்ற
ஞாயத்தைக் கேட்டான் உரு எனும் காயத்தைச் சூட்டான்
கானத்தில் ஓட்டி இரட்சிப்பின் தானத்தைக் காட்டிக் கொலைசெய்த
காயனை முனிந்தான் ஆபேல் நேயனைக் கனிந்தான்
ஏனத்தைப் புரிந்த முன் உலக கானத்தை விரிந்த பெரு மழை
இட்டு அழித்தவன்தான் பாவத்தின் கட்டு ஒழித்தவன்தான்

#110
நோவையைப் பார்த்தே அவன் குலம் யாவையும் காத்தே ஆபிராம்
நோன்மையைக் குறித்தே அவனை நல் மேன்மையின் நெறித்தே
ஆவியும் மூட்டி அவனுட தேவியும் கூட்டிக் கல்தேயர்
அருப்பத்தைக் கடந்து திருவுள விருப்பத்தைத் தொடர்ந்து
தா ஒன்றில் இறுத்தி வளர் கானா என்று நிறுத்தி இதை உனின்
சந்ததிக்கு அளிப்போம் என்று நம் சிந்தையில் களிப்போம்
வா என அழைத்தோன் பினும் அவன் சீவனைத் தழைத்தோன் நீச
வாகனப் பவனி வரும் கிறிஸ்து ஏகனைக் கவனி

#111
அடிமைக்குள் இருந்தும் பார்வோன் கொடுமைக்குள் வருந்தும் யூதர்க்
கான நயம் கொடுத்து மோசே ஆரோனையும் விடுத்து
நெடுமையின் கோலை எகிப்தின் கடுமையின் காலை ஒரு பத்து
நீதியின் விதத்தை வாதைகள் மோதும் உச்சிதத்தைக்
கெடுவதும் பாரான் சனங்களை விடுவதும் ஓரான் மனத்தினைக்
கெட்டியும் படுத்திக் கடல் விழத் தட்டியும் அடுத்தி
நடுவதும் இட்டுச் சிறையினுள் படுவதும் விட்டுக் கானான்
நாட்டில் வைத்தவனே பவனி காட்டி உய்த்தவனே

#112
சிறையதை மீட்டும் பார்வோன் நிறையதைப் போட்டும் கடலினைத்
திடத்துடன் பிரித்தும் கடந்தவர் நடத்துடன் சிரித்தும்
குறை_அற ஆற்றி அவர் மனம் நிறையுறத் தேற்றி மன்னாக்
கோப்புற ஆய்ந்தான் வருடம் நாற்பதும் ஈந்தான்
மறையதும் தெரிந்தான் பத்து முறையதும் புரிந்தான் சீனா
மலையினில் இருந்தான் மாய வலையினில் பொருந்தான்
பறையதும் இலங்க மிகுந்த பொறையதும் துலங்க வேதம்
பண்டு தந்தவனே வேடம் கொண்டு வந்தவனே

#113
ஆட்டிடை கிடந்த தவிதினை நாட்டிடை படர்ந்த கானான்
அனைத்துக்கும் அரசாய் இசரேல் சனத்துக்கும் சிரசாய்
நாட்டி வன் சவுலை உடல் விழ வாட்டி வன் கவலை நரகத்தில்
நடுவினைத்து ஆக்கி நீதியின் நடுவினுக்கு ஆக்கித்
தாட்டிக இறையோன் பரர் பொருள் கூட்டியது இறையோன் சாலமோன்-
தன்னையும் கொண்டான் அரசு என நல் நயம் விண்டான்
பாட்டினில் சிறந்தோன் பெத்தலைக் காட்டினில் பிறந்தோன் பவம் எனும்
பங்கமது அழுந்தான் பவனிக்கு இங்ஙனம் எழுந்தான்

#114
மனு என உதித்தார் அலகையைச் சினமொடு மிதித்தார் சாத்திரி
மாருடன் உரைத்தார் காணிக்கை சீருடன் நிரைத்தார்
சனுவுடன் ஆயர் பணியவும் கனிவுறு சேயர் குடிலிடை
தாரகை காட்டிப் பாரினில் சேர் மிகை ஓட்டி
வினவுடன் வானோர் தவ சபை அனைவரும் ஆனோர் விண்ணில்
மெய்ப் புகழ் பலவே மனது ஒருமிப்பொடு சொலவே
அனை எனும் மரியாள் சூசை மனை எனும் பெரியாள் பணிசெயும்
அற்புதன் இவன்தான் வேசரியில் பவனி வந்தான்

#115
எட்டு எனும் தினமே சுன்னத்து இட்டனன் இனமே ஆலையத்து
எண் அஞ்சில் புகுந்தான் சிமியோன் உள் நெஞ்சில் தொகுந்தான்
கட்டுடன் முன்_நால் ஆண்டினில் மெட்டுடன் முன்னால் தர்க்கித்த
கலைப் பரிசேயர்-தமை வென்ற தலைப் பரிசேயர்
மட்டுடன் ஆண்டு முப்பதும் விட்டு உடன் மீண்டு தீட்சை
மார்க்கமும் பெற்றான் சீடர்க்குத் தீர்க்கமும் உற்றான்
துட்டிடச் சயித்தான் அதனையும் கெட்டிடச் சயித்தான் அவனியில்
தூது தருவனே பவனியில் வீதி தருவனே

#116
புத்தியும் சாற்றி எளியவர் கஸ்தியும் மாற்றி மிகுந்த
பொறுமையும் ஓங்கிப் பாவிகள் சிறுமையும் தாங்கிச்
செத்தவர்-தமையும் எழுப்பி வைத்தவர் சுமையும் நுகத்தடி
சின்னது என்று ஆதி மனுடருக்கு இன்ன நன்று ஓதிப்
பத்தர்கள் பாவத்தை ஒழிக்க நினைத்தவர் தவத்தைப் புரிந்து
பாடுற இறந்தே உயிர்த்து விண் நாடுறத் திறந்தே
முத்தியின் நின்றே ஆகாயத்தினில் சென்றே நடுவிட
முந்த வருவனே பவனி எழுந்த ஒருவனே

#117
ரோமையைக் கெடுத்த பாப்பு எனும் ஊமையை அடுத்த பொல்லார்
ஓந்தையில் கிடந்தோர் முழுக் குருட்டு ஆந்தையைத் தொடர்ந்தோர்
தீமையில் விழுந்தே இத்தாலியச் சீமையைக் கழிந்தே ஈந்திய
தேசத்தில் புகுந்தோர் பெத்தரிக்க ரோசத்தில் மிகுந்தோர்
சாமியை நினையார் வரகு சாமையைத் தினை ஆர் வயிற்றுக்குச்
சங்கடப்படுவார் ஆத்துமம் மங்கிடக் கெடுவார்
பூமியில் இனமும் விழித்துக் காமிகள் மனமும் குணப்படப்
போதிக்கத்தானே வந்தனன் ஆதிக்கத்தானே

@14 மின்னார் புலம்பல்
** ஒளிபொருந்திய பெண்கள் புலம்புதல்
**விருத்தம்

#118
பா ஓது புகழுடையான் பெத்லெகேம் நாதன் ஒரு பரமன் மைந்தன்
தேவாதி வேசரி வாகனப் பவனி எழுந்து வந்த திறமை காண்கக்
கா ஆதி மக்கள் எனும் சீயோனின் சவை கூட்டக் கன்னிமார்கள்
மா வீதி நிறைய எருசலையில் எங்கும் மிக நெருங்கி வருகின்றாரே

#119
திருநாளுக்கு எருசலையில் பெருநாளுக்கு எழும் அனந்தம்
திகழ் வானின் மீன்கள் போல் வரும் ஞான மடவார்
கருணைபுரி நாதன் இவன் ஆதாமோ ஆதாம் எனில்
கனி தின்றான் இவனோ குருசில் நின்றான் என்பார்
தருமன் ஆபேல் என்பார் அவன் உதிரம் வான் நோக்கிச்
சத்தமிட்டது இவன் கறை இரட்சித்துவிட்டது என்பார்
இருடியன் ஏனோக்கு என்பார் அவன் வானில் இருந்தாப் போல்
எடுபட்டான் இவன் நரர்க்குக் கொடுபட்டான் என்பார்

#120
பேழையின் நோவா என்பார் அவனால் எட்டு ஆத்துமங்கள்
பிழைத்தார்கள் உலகம் எல்லாம் பிழைத்தாரோ என்பார்
வாழும் அபிராம் என்பார் அவன் மனை விட்டு ஆகாரை
மருவினான் இவன் தேவ உருவினான் என்பார்
சூழும் ஈசாக்கு என்பார் ஏசா என்று இளையவனைச்
சொன்னானே இவன் மறந்து சொன்னானோ என்பார்
ஊழியம்கொள் லாபானின் மருமகனும் பொய் தாதைக்கு
உரைத்தான் மெய் வித்தை இவன் விரைத்தானே என்பார்

#121
மன்னன் பார்வோன் மந்திரி யோசேப்பு அன்று அண்ணர்களை
மருட்டினான் இவன் எவரை மிரட்டினான் என்பார்
முன்னவன் மோசே என்பார் அவன் ஆதிக்கு ஒரு கோபம்
மூட்டினான் இவன் அன்பு பூட்டினான் என்பார்
உன்னும் உயர் ஆசாரி ஆரோனும் கன்றினுட
உருச் செய்தான் நரரை இவன் கருச்செய்தான் என்பார்
அன்ன மெல்கிசேதேக்கும் அங்கு இடத்து அட்டவணை
அற்ற பதன் இவன் கடவுள் பெற்ற சுதன் என்பார்

#122
யோசுவா கீபெயோன் ஊராருக்கு ஓதினதும்
யூகமோ இவன் அளவும் யோகமோ என்பார்
வீசு புகழ் சீம்சோன் பெண்களுட மயல்பட்டு
விழி கெட்டான் இவன் மோட்ச வழி இட்டான் என்பார்
நேசம் மிகும் சாமுவேல் தெரிசி-தனைப் பரன் அழைத்த
நிலை கண்டான் இல்லை இவன் கலை கண்டான் என்பார்
தேசு உலவு தவிது அரசன் உரியாவைக் கொன்று கொலை
செய்தானே இவன் பாவம் செய்தானோ என்பார்

#123
ஞான சலமோன் அரசன் அக்கியான வழி சிலதை
நடத்தினான் வேதம் இவன் திடத்தினான் என்பார்
ஆன எலியா என்போன் அக்கினியை வரப்பண்ணி
அழித்தானே இவன் எவரை அழித்தான் சொல் என்பார்
மானவனின் சீடன் எலிசா கரடிகளை விட்டு
வதைத்தானே பிள்ளைகளைச் சிதைத்தானே என்பார்
தானம் மிகும் யோபு என்பார் தான் பிறந்த நாளை அவன்
சபித்தானே இவன் ஆசீர்வதித்தானே என்பார்

#124
புண்ணியன் யோனா என்பார் கடவுளை விட்டு ஓடியவன்
போனானே மீன் வயிற்றுள் ஆனானே என்பார்
எண்ணிய மற்ற தெரிசிகளைச் சொன்னாலும் இவர்கள் மேல்
ஏதமது உண்டு இவன் மேல் ஓர் தீதது உண்டோ என்பார்
வண்ணம் மிகு அப்போஸ்தலரைச் சூட்டிலும் தான் அவர்களுட
மார்க்கம் எல்லாம் இவனுடைய தீர்க்கமே என்பார்
கண்_இல்லாப் பாம்பு இவனுக்கு எந்தவிதம் ஒப்பாகக்
காட்டினாள் ஆதி பகை மூட்டினாள் என்பார்

#125
புத்தியுற்ற கன்னியர்கள் மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டு
பொங்கு சுடர்த் தீபங்கள் செம் கையில் வைத்து எழுவார்
சித்தி-தனில் எண்ணெய் கொண்டு ஏகாத கன்னியர்கள்
தியங்குவார் மயங்கி விழுந்து உறங்குவார் திகைப்பார்
பத்தி மிகும் பெண்கள் மணன் வருகின்றார் என ஒலித்த
பறை கேட்டு விழிப்பார் நன் மறை கேட்டுச் செழிப்பார்
பெத்தலையின் நாதன் இவன் இத் தரையை மீட்க வந்த
பேசரிய கிறிஸ்து அரசன் மேசியா என்பார்

#126
வெற்றி மிகும் பராபரனின் மைந்தனும் தான் கொண்ட இந்த
வேடம் எல்லாம் மனுடரின் சந்தோடமே என்பார்
கற்ற இருடியர் எழுதும் இம்மானுவேல் இவன்தான்
கன்னி மரி மகன் இசரேல் மன்னவனே என்பார்
சற்றும் உணர்வு இல்லாத பொய்த்தேவர் இவன்-தனக்குச்
சரி ஆமோ இவன் எவர்க்கும் பெரியோனே என்பார்
குற்றம் மிகும் ரோமாவின் பாப்புவுக்குச் சிரத்து இரண்டு
கொம்பது உண்டே இவர்க்கு ஏதும் வம்பது உண்டோ என்பார்

@15 தேவமோகினித் தோற்றம்
**கழிநெடில்

#127
முந்தும் ஏவாள் சாராளும் ரேபக்காள் முதன்மை லேயாளுடன் ராகேல்
முறை கொள் தாமார் சிப்பொறாள் இராகாப்பு மோசே முன் மீரியாம் தெபோறாள்
வந்த சற்பாத்தூர்க் கைமை யாகேல் ஏழ் மக்கள் தாய் நகாமி ரூத்து அபிகாய்
வளர் யொசேபாள் யோப்புவின் மகள் மூவா மான கற்பு எஸ்தர் சூசன்னாள்
விந்தை சேர் அன்னாள் எலிசபெத்தம்மாள் மேன்மையின் மகதலை மரியாள்
மெய்க் கன்னி மரியாள் கிலேயோப்பை மரியாள் மீண்டு மர்த்தாள் கத்தரீனாள்
சிந்தை கித்தோரியாள் மம்மி தோற்காள் சேரும் இ மாதர்கள் சிரசாய்த்
திவ்விய சீயோன் மகள் என மேவித் தேவமோகினியும் வந்தனளே

#128
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் சம்பிரமமாக
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள்

#129
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள்
அறிவின் உயரும் மறை முறை மனது உவந்தாள்
துதி மனுவேலுட காதல் மிகுந்தாள் சுவிசேட சபை முன் மேவி எழுந்தாள்

#130
மாது செனனம் கானான் தேசம் மற்று எருசலை
மீது சீயோனின் மலை வாசம் வேந்தனும் த
வீது மகிழ்ந்து புகழ் நேசம் விளங்கு சீடர்
ஓது சுவிசேடப் பிரகாசம் ஒளி அனந்த
சந்திர சீத சரோருகம் மேவிய பாதம் சருவேசுரன்
மைந்தன் உவந்து பிறந்து சிறந்த அருள் நீதம் வளர் சாலமோன்
சிந்தை மகிழ்ந்து விளம்ப முழங்கு சங்கீதம் தீர்க்கர் எல்லாம்
முந்த வரைந்த கடந்த சுதந்தர வேதம் முதல்வன் ஆவி
வித்தவ மகத்துவ வரத்து அருள் பெருத்த கருணை வாரி விண் மேவு தூதர்
சித்திர விதத்தினில் மிகுத்து எழில் உதித்து உயர் சிங்காரி சிறப்பின் மிக்க
பத்தி நிலை உத்தமி எனத் தவம் மிகுத்து அருள் உதாரி பராபரனை
நித்திய மனத்தினில் நினைத்து உருகி வைத்த அனுசாரி நிச்சய சுப
மங்களமாக மகிழ்ந்து உறவாடி
சங்கித ஞான பதம் பல பாடி
எங்கும் விளங்கும் அனங்களைத் தேடி
துங்கம் மிகும் பரமன் சபை நாடி

#131
ஆகமது அபரஞ்சித் தங்கம் அவள் தரும் சி
னேகம் வானோர்களுக்கும் துங்கம் நினைத்திடும் வி
வேகம் கிடையாத பிரசங்கம் மேலாகிய வை
போக மனதில் அந்தரங்கம் புண்ணிய சுகம்
மிஞ்சிய ரஞ்சித வஞ்சி இலஞ்சிய ஞானி வேதம் உணர்ந்த
நெஞ்சினிலும் செப விஞ்சை இறைஞ்சு அவதானி நித்திய காலம்
சஞ்சு_அறும் அஞ்சுகம் மஞ்சு எனும் சுப மேனி சர்ப்பத்தால் வந்த
வஞ்சனை சஞ்சலம் அஞ்ச வரும் செகமானி மறு இல்லாத
கட்டழகி கட்டி எதிர்பட்ட துகில் பட்டவர் நீதி கனகரத்தினச்
சுட்டி ஒளி விட்டிடில் அது எட்டில் ஒரு மட்ட திரு சோதி சுரூப நுதல்
வட்டிமிடு பொட்டினுட திட்டம் நல கெட்டி அவள் சேதி மலர்ந்த முகம்
எட்டினுட இட்ட நவ சட்டம் வெகு நட்டணைகள் ஓதி விதத்துடனே
மண்டல மாதர்களோடு குலாவி
விண்ட மெய்ஞானிகள்-பால் உரை கூவி
எண் திசை வீதியிலேயும் உலாவி
பண்டபரன் சுதனார் இணை மேவி

#132
துங்க ஆதத்துக்கு வாக்குத்தத்தம் சொன்னபடிக்கு
எம் கோன் மானுடருக்குச் சித்தம் இரங்கி வந்து
சிங்காரமாக உதித்துத் தம் சினேகமுடன்
மங்காத சுவிசேட நித்தம் வழுத்திய பின்
அங்கம் விளங்கி எழும் கன சீடரைக் கூட்டி அவர்களுக்கு
இங்கிதமும் கலையின் கனிவும் பல காட்டி எழும் கணங்கள்
கங்குல் மதம் கலகங்களையும் கெட ஓட்டிக் கடைசியிலே
பொங்கு பவங்கள் அறும் கொலையின் கடு சூட்டிப் புரக்கவென்று
தக்க சிலுவைக்குள் உயிர் சொக்கி மலையிக் குழியுள் முக்கி தவன் மூன்றாம் நாள்
அக் குழி விலக்கி அருமைக் கதி பருக்கு உரை விளக்கி அதன் பிறகு
மைக் கண நிலைக்குள் ஒரு மெய்க் கடவுள் பக்க ஒளி புக்கி மறுத்தும் இந்த
மிக்க உலகைக் கடை அழிக்க வரு சக்கியன் மயல் சிக்கி வேதநாயகன்
செம் சொல் மிகும் குறவஞ்சி படித்து
மஞ்சு உலவும் பல தாளம் அடித்து
மிஞ்சிய நெஞ்சினில் ஆசை பிடித்து
கொஞ்சிய வஞ்சியர் கூட நடித்து

#133
கெட்ட ரோமாபுரியின் பாப்புக் கெடுதல்காரத்
துட்டன் மிகுந்த இறுமாப்புத் தூஷண நாமப்
பட்டனது அக்கிரமக் கோப்புப் பன்றிகள் மேய்க்கும்
சட்டம் அவனுடைய மூப்புச் சகல நாளும்
வம்பு பெறும்படி கும்பொடு சம்பிரமம் மிண்டு வார்த்தைகள் பேசிக்
கெம்பி எழும்பி மதம் பலவும் பகை விண்டு கிறிஸ்துவையும்
வெம்பி இடும்பு புலம்பி எழும் புகை கொண்டு வெகுண்டு சீறும்
கொம்பொடு உடம்பு படும்படியும் படியுண்டு கொடிய வஞ்சப்
பித்தது பிடித்த முழுச் சத்துருவின் எத்து வழி நீங்கப் பிசாசின் மகன்
வைத்த அவசுத்த அதமத்தின் இருள் அத்தனையும் வாங்க மறுபடியும்
சித்திய விதத்தின் நெறி எத்திசையும் உத்தமரில் ஓங்கத் தயாபரனை
நித்தியம் இதத்தொடு துதித்து இருதயத்தினிடை தாங்க நினைந்து உருகிப்
பெத்தலேம் சருவேசனை ஏற்றிச்
சுத்தமாம் திருவாய்மைகள் சாற்றிப்
பத்தி கூர்ந்து இரு சேவடி போற்றி
மெத்த வாஞ்சையதாய் மனம் தேற்றி

@16 நாட்டியத் தரு
** நடன இசைப் பாடல்
**விருத்தம்

#134
மத்த மாசற்ற தீதற்ற வானத்து ஒரே வஸ்துவை நினைக்க அரிதாய்
பித்தர் கூடிப் பிதற்றிய புலைக் கதைகளைப் பிழைகளைப் பேசுவேனோ
சத்திய வேதக் கிறிஸ்தவர்கள் பாரித்துச் சமஸ்த நாளும் துதிசெயும்
சித்திரகூடச் செருசலைப் பதியின் உச்சித சீயோன் மகள் வளம் பகர்வனே

#135
அதி சித்திர மிக முக்கிய மதனப் பெண் பிரபலத்தைப் பாடவோ அவள்
அருமைத் துரை எனச் சொல் பெருமைக் கிறிஸ்துவைக் கொண்டாடவோ
நிதி உத்தம சுபத்தி கதி உற்பன விதத்தைச் சாற்றவோ வரும்
நிருபத் தவிது இசரேல் மரபுப் பரமவஸ்தை ஏற்றவோ
பதியற்று எருசலைக்குள் உறுதியுற்று உயர் கன்னியைக் காட்டவோ அன்று
பரிவில் சலமோன் வைத்த வரிசைப்படி படித்து மூட்டவோ
துதி பற்றிய கவி கட்டி மதியுற்று வரிசித்த பாட்டிலே சொன்ன
சொரூபக் கிருபைவைத்த பரிசுத்த பெத்லகேம் நாட்டிலே

#136
விஞ்சைச் சுரர்களுக்கு மிஞ்சித் தலைமைபெற்ற வரத்தினாள் கர்மேல்
விந்தைப் பருவதம் போல் அந்தத்து அபரஞ்சிப் பொன் சிரத்தினாள்
மஞ்சுற்று உலவு கொடிச் சஞ்சு ஒத்து ஒளிர் சிறந்த கொண்டையாள் மணி
மாடப்புறாவின் கண் என்று ஓடிப் பரந்த விழிக் கெண்டையாள்
கஞ்சத்தத லீலியாவின் சுத்தத்தின் சுகந்த விழியினாள் பரம
காணிக் காசு எனப் பொன் ஆணிப் பட்டம் தரித்த நுதலினாள்
செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ
சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கைப் பருவத்தாள்

#137
வில்லைப் புருவம் அமைந்து எல்லைப் பொருதும் முத்துப் பல்லினாள் வேத
மேன்மை அனைத்தும் கற்று ஞான மனத்தைப் பெற்ற சொல்லினாள்
எல்லைத் தமஸ்க்கின் திசையில் உற்று உயர் லீபனோன் மூக்கினாள் இச
ரேலுக்கு அறைந்த பத்து நூலுக்கு உயர்ந்த தேவ வாக்கினாள்
அல்லைக் குழலிட்டு எருசெல்லைப் பதியின் திட்ட அன்னத்தாள் மா
தளையின் கனி வெடிப்பின் விளையும் சிகரத்து இரு கன்னத்தாள்
தொல்லைச் சீவவிருட்சக் கொல்லைத் தலத்தின் முக்கிய சுகத்தினாள் தேவ
சோதிப் பிரவை தங்கும் நீதிக் கிருபை பொங்கும் முகத்தினாள்

#138
மன்னன் தவிது தந்த பொன்னின் துருவத்து அந்தக் கழுத்தினாள் சீனா
மலையில் அறைந்த ரண்டு பலகை நிறைந்த சித்திர எழுத்தினாள்
சொன்னம்-தனில் பதித்து மின்னும் தற்சீசின் ரத்தினச் செம் கையாள் மயல்
தோன்றும் வெளிமான் கன்று என்று ஊன்று முந்திரிகைக் குலைக் கொங்கையாள்
உன்னும் லீலியாப் புஷ்பம் துன்னும் கோதுமை அம்பாரப் பண்டியாள் கிறிஸ்து
உளத்தைக் கட்டிக்கொண்ட கழுத்தை கிட்டிக் கண்ட கண்டியாள்
சின்னப் பதிதர் மனம் குன்னச் சுழிக்கும் உந்திச் சுழியினாள் எஸ்ப்போன்
தேசப் பதராபீமின் வாசல் குளம் வளைந்த விழியினாள்

#139
தந்துச் சூஸ்திரக்காரன் விந்தைப் பூஷணம் என்ற விடையினாள் பார்வோன்
சரியும் ரதத்தில் பூண்ட பரியின் பவுஞ்சு போன்ற நடையினாள்
அந்தத்து அபரஞ்சிப் பொன் சொந்தத்து ஆதாரத் தூணின் துடையினாள் காசி
யாவும் சந்தன வாசம் மேவும் சித்திரத் தையல் உடையினாள்
தொந்தத்துடன் நீலக்கல் தந்தத்தினில் பதித்த மேனியாள் தேவ
சுருதி மறை அனைத்தும் மருவிக் கற்ற அவதானியாள் பந்தத்து
உறும் லீபனோன் விந்தத்து எழும் கேதூரின் சாயலாள் கானான்
பரம ராச்சியத்தின் அரிய மோக்கிஷத்தின் வாயிலாள்

#140
மாசற்று ஒளிர் சங்கீத நேசத்து இலங்கு செப மாலையாள் ஞான
மன்னன் மகிழும் ரத்தினப் பொன்னின் நலம் கிருத ஓலையாள்
தேசுற்ற பரலோக ரோச புஷ்பம் கன்னிக் கற்பினாள் சால்மோன்
செய்த ஆலயத்தில் எய்த கற்பனைப் பெட்டிப் பொற்பினாள்
மோசப் பசாசர் மனம் நாசப் படுத்த நிற்கும் நிலையினாள் வேதம்
முழுதும் அறிந்து மோட்ச வழியும் தெரிந்த ஞானக் கலையினாள்
ஏசுக் கிறிஸ்துவின் சொல் பேசிப் புகழ்ந்துகொள்ள எண்ணினாள் அவர்
இதையத்தினை அறிந்து பதனத்துடன் ஒழுக நண்ணினாள்

#141
வடிவில் பனிரண்டு உடு முடியைத் திடமுடன் மத்தகம் வைத்தாள் தங்கள்
வளமைக் கிர்பையின் நித்ய இளமைக்கு அதிபனை வித்தகம் வைத்தாள்
படிவில் பருதியிட்ட நெடிலுற்ற கவசத்தைச் சாத்தினாள் அருள்
பயில் பொன் சரிகை தைத்த ஒயில் உத்தரீகத்தையே போர்த்தினாள்
அடியில் சந்த்ரனைக் கீழ்ப்படியப் பண்ணி மிதித்துக் காட்டினாள் வானோர்
அணியும் சொற்க ஞான மணியின் வர்க்கம் எல்லாம் பூட்டினாள்
கடியைத் தீ நரகுக்குள் முடியப் பதறி விழ ஓட்டினாள் நயம்
கண்டு புவியை சயம்கொண்டு சிலுவைக்கொடி நாட்டினாள்

#142
வானத்தார் அணியும் ஞானத்து ஆபரணப் பெட்டியாள் எஸ்தர்
வளர் அகாசுவேரின் மனையின் சொன்னத் தங்கக் கட்டியாள்
தானத்து ஏசு சுதன் மானத்து அருள் நீதி வெண் ஆடையாள் பல
சாத்திர விற்பனத்தோரை சூத்திரத்தினில் பிணிக்கும் சாடையாள்
மோனத் தேவ அனுபானத் துளி இறங்கும் தொண்டையாள் ஆகாத
மூடர்க்கு உபதேசத்தைக் கூடச் சொலித் தர்க்கிக்கும் சண்டையாள்
நானத்தாள் சொலுக்கு மீன் ஒத்தாள் பலுக்கும் நகைக்குமே ஏசு
நாதர் பெத்தலேகம் நீதர் மனம் கிடந்து திகைக்குமே

#143
நனி சொல் பத்மினிப் பெண்ணில் கனம் என்று எருசலையை நோக்கிறார் ராசா
நடை காவனத்தில் கண்டு உண்டு அடியில் தரித்துநின்று பார்க்கிறார்
பனியில் சிரம் நனைந்தேன் கனிவுத் தமியே என்று கொஞ்சுறார் வாயில்
படியைத் திறவும் என்று விடியும்-தனிலும் நின்று கெஞ்சுறார்
இனிமைச் சீயோன் மகட்கு உனது அரசு எனச் சொல்லச் சொல்கிறார் தமது
இரக்கக் கருணைக் கடல் பெருக்கத்துடன் அனைத்தும் நல்கிறார்
வினயப் பெருமைப் பாப்பை முனையச் சினந்து நோக்கி சீறினார் ரோமி
வேதம் கடந்த சத்திய போதம் தொடர்ந்து எல்லார்க்கும் கூறினார்

@17 தேவமோகினி பிரஸ்தாபம்
** தேவமோகினி வெளிப்படுத்துதல்
**விருத்தம்

#144
எத்திசை புகழும் கீர்த்தி ஏசு நாயகனுக்கு ஏற்ற
நித்திய கன்னியான நேய சீயோனின் மாது
சத்திய சபை முன்பாகத் தனது மேன்மைகளை எல்லாம்
பத்தியும் செபத் தியானப் பண்புடன் பகர்கின்றாளே

#145
ஒன்றும் இலாத காலம் நன்றாய்ப் பொருள் அனைத்தும்
உண்டு செய்தோன் மேல் காதல் கொண்டவள் யான்
அன்று தவிது இராசன் சென்று வாழ் எருசலேம்
அன்னையர் சீயோன் அருளும் கன்னிகையும் நான்
என்றும் அழியா வஸ்தாய் நின்ற பரம கிறிஸ்து
ஏசுநாதருக்கு உகந்த மாசிலாதாள் யான்
மன்றல் கமழும் கற்புக் குன்றா மரிய தாயார்
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#146
ஆதி ஏவாளும் பரஞ்சோதியைப் போல் இருக்க
ஆசித்தாள் நான் அவரை நேசித்தவள்
பேதித்து ஏவாளின் மக்கள் சாதிகெட்டு அண்ணன்மார்க்குப்
பிள்ளைகளைப் பெற்றார் யான் கள்ளமுற்றேனோ
தீதாய் லோத்தின் பெண்சாதி சோதோம் பட்டணம்-தன்னை
திரும்பிப் பார்த்தாள் யான் ஒன்றை விரும்பிப் பாரேன்
மாது லோத்தின் பெண்களும் கோது செய்தார் மரிய
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#147
சாறாள் எகிப்தில் அவதூறாகப் பார்வோன் வீட்டில்
தங்கியிருந்தாள் யான் கற்போடு எங்கும் இருந்தேன்
வீறா யாக்கோபை முதல் பேறாகத் தந்து சொல்லி
விதித்த ரேபெக்காளையும் மதிப்பேனோ யான்
கூறாய் ராகேலைக் கேட்க வேறாய் யாக்கோபைக் கூடும்
கூச்சப் பார்வை லேயாள் சொன்ன பேச்சையும் கேளேன்
மாறாய் ராகேல் பில்க்காளை ஊறாய் யாக்கோபுக்கு இட்டாள்
மா கனி மரியின் தேவமோகினி நானே

#148
தீனாள் யாக்கோபின் மகள் போனாளே கற்பழிந்து
சிகேம் ஊராரைக் கேட்டால் வாகாய்ச் சொல்வார்
ஆனாலும் தாமார் வேசி நானே என்று உருக்கொண்டே
அடுத்த மாமன் யூதாவைக் கெடுத்தாள் அல்லோ
மீன் ஆர் மோசேயின் தங்கை தானா மீரியாம் அன்று
வெண்குட்டம் கொண்டது மெத்த சங்கட்டம் தானே
மானாள் தேப்போறாள் மணன் ஏனோ லபித்தோத்து என்பர்
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#149
விரிவாய் விசுவாசித்த எரிகோவின் ராகாப்புவை
வேசிவேசி என்று எழுதி ஏசவும் ஆச்சே
அரிய யாகேலும் தன்னைப் பரிவாய் அடைந்த சீசே
ராவையும் ஆணியால் கொன்று உசாவினாள் அன்றோ
தெரியத்தந்து எல்லாம் சொல்லி உரிய ரூத்தைப் போவாசை
சேர்க்கச்செய் நகாமி எனக்கு ஏற்கை ஆவாளோ
வரிசை இல்லாமல் ரூத்தாள் இரவில் களத்தில் வந்தாள்
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#150
சிப்போறாள் மோசெசுவுக்கு ஒப்பாம் குலப்பெண்டீரோ
தேசோ மீதியான் தேச ஆசாரி மகள்
சர்ப்பார்த்தூர்க் கைமை சுட்ட அப்பம் எலியாவுக்குத்
தந்தாளே அல்லால் ஏதைத் தந்தாள் சொல்லும்
செப்பாய்ச் சூனேமியாளும் முப்போது எலிசாவுக்குச்
சின்ன அறைவீட்டைச் செய்தது என்ன மேன்மைதான்
மப்பானாள் என்று அன்னாளைத் தப்பாய் நினைத்தான் ஏலி
மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே

#151
உரியாத் தன் மணவாளன் தெரியாமல் தவீதினோடு
உளவாம் பர்சேபாள் ஒரு களவாணிதான்
சுரி குழல் எஸ்தர் என்பாள் பெரிய அகாசுவேராம்
துலுக்கன் பெண்டு ஆனவட்கு மெலுக்கு ஏது உண்டு
சரியணி செம் கை மின்னாள் பிரிய சூசன்னாளும் தான்
சபை ஏறினாளே இனிக் கவை காரியம் ஏன்
வரி விழி அபிகாயில் எரியும் நாபாலைச் சேர்ந்தாள்
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#152
அசனாத்து யோசேப்புக்கு நிசமாய் மனாசே எப்பி
ராமையும் பெற்றார் சீமையில் மேவின பஞ்சம்
இசையாத தாமாரான அப்சலோமின் தங்கையாரை
ஈடாய் அம்னோன் முறைகேடே செய்தான்
உசியா யூதித்து என்பாளும் விசையாய் வேடம்போட்டு அல்லோ
ஓலப்பர் நேசர் தலை நீலி போல் கொய்தாள்
வசையாய்ச் சவுலின் மகள் திசை சேர் மிகாள் மலடி
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#153
நக மலைக் கோவின் மேலே அகமாய் நிதம் செல் அன்னாள்
ஞானக் கிழவி என்றாலும் கூனக் கிழவி
உகமை எலிசப்பெத்தும் சுகமாய் இஸ்நாதகனை
ஊமையாம் சகரியாவுக்காம் அலோ பெற்றாள்
முக மலர் கன்னி மரி மகனைக் காணாது அலைந்து
மூன்று நாளாய்த் தேடி அல்லோ தோன்றலாச்சு
மகதலை மரியாளைச் செகதலம் தான் அறியும்
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#154
துடிப்பாய் என் நாயகனை எடுப்பாய் மரியாள் அன்று
தோட்டக்காரன் என்றதை யான் கேட்டுச் சகித்தேன்
படிப்பான போதகர் சொல் தொடுப்பாய் நின்று
பாடுபட மார்த்தாள் வேலைக்கு ஓடியே போனாள்
நடிப்பாய் கானான் இஸ்திரி நொடிப்பாய்க் கர்த்தர் முன் தன்னை
நாய்க்குட்டி என்றே உளவதாய்க் கட்டிச் சொன்னாள்
மடிப்பாய் சமாரியப்பெண் பிடிப்பாய் ஐவரை வைத்தாள்
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#155
தக்க இசறாவேல் என்பாள் அக்கிரமக்காரி ஆகிச்
சரிப்போனாப் போல் நடந்து சிரிப்பானாளே
ஒக்க அவள் தங்கை என்ற மிக்க யூதா என்பாளும்
உத்தமியோ பாகாலைச் சேவித்து அல்லோ போனாள்
பிக்கினி சலாமானோரும் அக்கியான மார்க்கத்தாரும்
பேயின் கூட்டம்தானே இனி ஞாயம் கேட்பானேன்
மைக் கனி உறும் சூசையார் மெய்க் கனி மரிய தாயார்
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#156
பாப்புச் சபையாள் ரோமி மூப்பாள் என்ற
பொல்லாத பாதகியின் செய்தி எல்லாம் ஒத வசமோ
நாப்பி மனுவைக் கெடுத்து ஏய்ப்புப் பிசாசு போலே
நரக வழி திறந்து விரியவைத்தாள்
கோப்புக் குறித்து விருதாப் பொல்லாப்பு ஆக்குவித்துக்
கூசாமல் பத்தாவை விட்டு வேசியாய்ப் போனாள்
மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டாப் போல் போய்ப் பினும் திரும்பி வந்தாள்
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#157
மிக்கேல் கபிரியேலோடு ஒக்க இரபாயேல் வானின்
மேனி உயிரேலும் மற்று ஆங்கு ஆன தூதரும்
தக்க தெரிசிகளும் முக்கிய இஸ்நாதருளப்பர்
சகல பிதாப் பிதாக்கள் விகல் சூசையர்
பக்க மோட்சவாசிகள் துக்க இரத்தச்சாட்சிகள்
பாவ உத்தரிக்கத் தல மேவினோரையும்
வக்கிரமாய் வணங்கி உக்கிர ரோமி கெட்டாள்
மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே

#158
இராயப்பர் சின்னப்பரும் நேயப் பிலந்திரரும்
யாகப்பர் அருளப்பர் சந்தேகத் தோமையர்
தாயச் சின்னயாகப்பர் தூயப் பிலிப்பு என்போர்
தத்தேயு வர்தலுமேஸ் மத்தே சீமோன்
சீய மத்தியாசுவும் ஞாயப் பருனபாவும்
சேர்ந்த லுக்காசும் அருள் கூர்ந்த மற்குவும்
மாய உருக்கள் என்றே தீய ரோமி சேவிப்பாள்
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#159
செய்யப்பர் முடியப்பர் மெய்யப்பர் வின்சேந்தியு
செவியானும் செவஸ்தியானும் பவியானுமே
ஐயருளப்பருடன் உய்யச் சின்னப்பர் கோசி
மாந்தமியானும் சேர்வா சீம்புரத்தாசீம்
கையொப்பி மற்றோரையும் பொய்யொப்பித் தொழ வேத
கட்டி மனுவை எல்லாம் தெட்டிக்கெடுத்தாள்
வையப் பதிதர் என்றே வையப் புகுந்தாள் ரோமி
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#160
அந்தோணியார் என்று அவன் இந்தியாவில் வெட்டுண்டோன்
அவனையும் தேவன் என்று கவனம்வைப்பாள்
விந்தைக் கோட்டாற்றினுக்குள் வந்த பிராஞ்சுக்கார
வேடச் சவரியாரைக் கொண்டாடிக்கொள்வாள்
சந்தப் பாப்பு என்றவன் தான் அந்திக்கிறிஸ்து பேய்க்குச்
சரியாயிருந்தும் பின்னும் பெருமை சொல்வாள்
மந்தமாய் ரோமிதானும் இந்தவிதமாய்க் கெட்டாள்
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#161
இன்னாசியார் என்பானை எந்நாளும் இரட்சிப்பாய் என்று
எத்தாக உருப்பண்ணிவைத்துத் தொழுவாள்
முன்னாள் கள்ளப் பிரம்பூர்ச் சின்னப்பவுடையானையும்
முத்தப்பவுடையானையும் மெத்த வேண்டுவாள்
சொன்னாலும் கோபம்கொள்வாள் கன்னாப்பின்னா என்று ஓதும்
துலுக்கன் செபத்தியார்க்காய்ப் பிலுக்கிக்கொள்வாள்
மன்னாள் கன்னியாஸ்திரிகள் பன்னீராயிரம் என்பாள்
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#162
நயமாய்ப் பிரகாசியாரைச் சுயமாய்ச் சுவாமி என்று
நால் திசையில் ரோமி நித்தம் போற்றவில்லையோ
பயமாய் வெட்டுண்டு இறந்தோன் செயமாய் வெகு காலம் பின்
படை வெட்டும் யாகப்பர் என்று இடையே சொல்வாள்
அயமாய்ப் பிராஞ்சிஸ்க்கினோடு இயமாய்த் தோமினிக்குவும்
ஆசீர்வாதேந்திரரையும் நேசித்துக்கொள்வாள்
மயமா அமுதநாதரையுமே சுவாமி என்பாள்
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#163
சிலுவேஸ்திரிப் பாப்புடன் தலையாம் கிரக்கோரியும்
தேறா அம்புரோசியுடன் ஏரோனிமும்
நிலுவை இல்லாது மர்த்தீனலியும் அகுஸ்தீனையும்
நீக்கிலாவோடு இன்னம் வழிப்போக்கரை எல்லாம்
துலையாத சாமி என்று விலைபோட்டு வாங்கிவைத்துத்
தூர துலைக் கல்லைறை மண் வாரிச் சுமப்பாள்
மலையாமல் விக்கிரகச் சிலை எல்லாம் ரோமி செய்தாள்
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#164
சேசிலியாளும் பிரகாசியாள் அக்கினேசாள்
சின்ன மரி மதலேனாள் பின்னுமாகத்தாள்
பேசிச் செனுவப்பனத் தாசியாள் கிறிஸ்தீனாள்
பித்து ஏறும் கத்தரீனாள் கித்தேரியாள்
நேச விரிசித்தம்மாள் ரோசம்மாள் பார்பரம்மாள்
நேய மரிக் கருதாள் ஆய மற்றோரும்
மாசில்லாச் சேயரையும் பூசித்தாள் அல்லோ ரோமி
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#165
கல் உருவுக்கு ஒப்பாய் மரத்தில் உருச் செய்தாளே ரோமி
களிமண் சேர்க்காமல் பீங்கான் ஒளி மண் சேர்த்தாள்
தில்லுமுல்லாய்ச் செம்புக்கு ஈடாய் நல்ல பித்தாளை
தேர்ந்தாள் சீனத்தான் மை இட்டது எல்லாம் ஞானத் தேவனாய்ப்
புல்லு மண் கல் மயிர் எலும்பு எல்லாம் அர்ச்சீட்டது என்று
போதித்துச் செத்தோரைத் துதித்து ஓதச் சொல்லுவாள்
வல் உத்திராட்சத்தைப் போல் அல்லோ செபமாலைதான்
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#166
பெண்ணாக ஆணுமாக விண்ணோனுக்கு ஒப்பு எனவே
பெத்தரிக்கமாய் உருக்கள் சித்திரம் தீர்ந்து
பண்ணாத கோவில் எல்லாம் திண்ணமாய்ப் பண்ணிப் பண்ணி
படங்கள் கண்ணாடிகள் கொண்டு அடங்கவைத்தே
எண்ணாமல் சபை மனம் புண்ணாக வார்த்தை பேசி
ஏசியேசிக் கிறிஸ்துவைத் தூஷணிக்கிறாள்
மண் ஆவாள் ரோமி செய்கை கண்ணால் கண்டீர் அல்லோ
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#167
சீலையிலும் எழுத்து வேலையதாகப் பண்ணி
தேரிலும் தூற்றுக்குடி ஊரிலுமே
ஆலையங்கள்-தோறும் பூ மாலை சாம்பிராணித் தூபம்
அந்த மெழுகுதிரி விந்தை தீர்த்தம்
ஓலைத் திருநாள் செய்து மேலைக்கு மீடேறாமேல்
உச்சமாய்ச் சடங்கது எல்லாம் மிச்சமாய்க் கொண்டு
மாலை மயங்க ஒருக் காலை ரோமி கூத்துண்டு
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

#168
ஆடம்பரங்களும் கொண்டாடும் நாடகங்கள் உண்டு
அந்தர வீச்சுகளான மந்திரங்கள் உண்டு
ஏடும் புராணங்கள் கொண்டு ஓடும் பிசாசகள் உண்டு
எக்கசக்கமான பாப்பின் பொய்க்கதை உண்டு
சாடும் பறைகள் உண்டு பாடும் கூத்துகள் உண்டு
தம்பட்டம் உண்டு உத்தரிக்கக் கம்பட்டம் உண்டு
வாடும் ரோமிக்கு உடலில் போடும் குறியும் உண்டு
மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே

@18 வெண்ணிலாத்தரு
** வெண்ணிலா இசைப் பாடல்
**விருத்தம்

#169
பூமிக்குச் சந்திரன் ஒன்று பொன்னுக்கு நான்கு சந்திரன்
சேமமாம் சனிக்கோ எட்டு திங்களுக்கு ஆறு சந்திரன்
நாமமாய் யூரானிஸ்க்கு நாலு நெப்தூனுக்கு ஒன்று
ஆம் உபக்கிரகம் நாலாறு ஆக்கினன் கடவுள் தானே

#170
சின்ன வெளிச்சம் அல்லோ நீ வெண்ணிலாவே நால்
தினத்தில் உண்டானாய் அல்லோ வெண்ணிலாவே
தன் ஒளி உனக்கு இல்லாததால் வெண்ணிலாவே ஆதித்
தன் ஒளியைக் கொண்டு உயர்ந்தாய் வெண்ணிலாவே
என்ன மதி கொண்டு எழுந்தாய் வெண்ணிலாவே சாலேம்
எருசலேம் வீதியிலே வெண்ணிலாவே
கன்னியர்க்குள் நான் ஒரு பெண் வெண்ணிலாவே எனைக்
காய்ந்து கொல்ல வேண்டாம் சொன்னேன் வெண்ணிலாவே

#171
திங்கள் என்ற பேர் கொண்டது என் வெண்ணிலாவே செவ்
வாய்க்குப் பின் பிறந்ததும் வெண்ணிலாவே நீ
அங்கு ஒருநாள் சொப்பனத்தில் வெண்ணிலாவே யோசேப்பு
அடி வணங்கிக்கொண்டாய் அல்லோ வெண்ணிலாவே
துங்க யோசுவன் சண்டையில் வெண்ணிலாவே உனைச்
சூரியன் பின் நிற்கச் செய்தான் வெண்ணிலாவே
மங்களச் சீயோன் குமாரி வெண்ணிலாவே
வைத்த இடம் தெரியாதோ வெண்ணிலாவே

#172
சந்திரன் என்று துள்ளாதே வெண்ணிலாவே என்
தாளினால் மிதிக்கச்செய்வேன் வெண்ணிலாவே
இந்த உலக மயக்கை வெண்ணிலாவே நீ
என்று விட்டொழியப் போறாய் வெண்ணிலாவே
நந்திய களங்கம் ஒன்று வெண்ணிலாலே உன்
நடுவில் இருக்குது அல்லோ வெண்ணிலாவே
சிந்தை கருவம் கொண்டதால் வெண்ணிலாவே நீ
தேய்ந்து குறைந்துபோனாய் வெண்ணிலாவே

#173
நாக்குச் சுட்டது போல் சுடும் வெண்ணிலாவே நீ
நாட்குறிப்பு காணாய் அல்லோ வெண்ணிலாவே
தீக்குணத்தினால் வளர்ந்து வெண்ணிலாவே மிகத்
தேய்பிறை என்றே குறைந்தாய் வெண்ணிலாவே
மாக்களின் நோக்கு அதித்து வெண்ணிலாவே கடல்
வற்றம் ஏற்றத்துக்கு ஏது ஆனாய் வெண்ணிலாவே
மேக்குறும் வளர்பிறையில் வெண்ணிலாவே வெட்டும்
வேய்களை உளுத்து அழித்தாய் வெண்ணிலாவே

#174
இஸ்திரி பதத்தில் வைத்த வெண்ணிலாவே அவன்
இஸ்திரியைக் கும்பிடுவான் வெண்ணிலாவே
வஸ்திரம் போல் பழசாய் வெண்ணிலாவே அவன்
மார்க்கமும் அழிந்துபோகும் வெண்ணிலாவே
விஸ்தரித்து உரைக்க என்றால் வெண்ணிலாவே புவி
வேஷம் முழுவதும் போம் வெண்ணிலாவே
புத்தகத்தில் சொன்னபடி வெண்ணிலாவே நீ
பூமியோடு அழிந்துபோவாய் வெண்ணிலாவே

@19 உபத்திரம் என்ற தென்றல் தரு
**விருத்தம்

#175
மட்டு மிகும் உபத்திரமே தென்றல் என்றபடி கிறிஸ்து வரும் முன்னேயும்
திட்டமுடன் வந்த பினும் இதுவரையும் இனிமேலும் தீர்வை நாளின்
மட்டும் உள்ள தெரிசிகள் அப்போஸ்தலரை விசுவாச மார்க்கத்தாரை
கெட்டழியச் செய்தும் அஞ்சோம் செயம்கொள்ளுவோம் ஏசுவினால் கெலிப்போம் நாமே

#176
தீர்க்கதெரிசிகளைத் துன்பம் செய்தனை தென்றலே நீ
தீயினில் மூவரைப் போட்டுக் கொழுத்தினை தென்றலே
பார்க்குள் தனியேலைச் சிங்கக் கெபியினில் தென்றலே நீ
பட்டுளச் செய்தும் கெட்டழிந்தானோ சொல் தென்றலே
மார்க்க ஏரேமியாவைக் கேணியில் தள்ளினை தென்றலே அவன்
மாய்ந்து விடாது தற்காக்கப்பட்டான் அல்லோ தென்றலே
போர்க்குள் அகப்பட்ட யோசபாத் அன்றைக்குத் தென்றலே அவன்
பொன்றி விழாது தற்காக்கப்பட்டான் அல்லோ தென்றலே

#177
கேணியில் யோசேப்யைப் போட்டது நீ அல்லோ தென்றலே அவன்
கெட்டழியாது எகிப்பத்தினில் சென்றது என் தென்றலே
ஆணவம்கொண்டு இசரேலரின் பாலரைத் தென்றலே நீ
ஆற்றுத் தண்ணீரில் அமிழ்த்திக் கொன்றாய் அல்லோ தென்றலே
தோணும்படி பரவோன் செய்த பாதகம் தென்றலே மிகச்
சுற்றி அவனைக் கடலில் தணித்ததே தென்றலே
வீணினில் மாய்ந்தவர் கோடியில் கோடியே தென்றலே நீ
மிக்க அப்போஸ்தலமாரையும் கொன்றையே தென்றலே

#178
இங்கிசியோன் சங்கம் எங்கு இருந்தான் அது தென்றலே ரோமை
எத்தன் எனும் பாப்புச் சத்துருவால் அல்லோ தென்றலே
இங்கு அவன் செய்த கொடூரங்கள் மெத்தவாம் தென்றலே அதை
எண்ணி முடியுமோ சொல்லி முடியுமோ தென்றலே
சங்கை இராது தகனித்துக் கொன்றவர் தென்றலே இரத்தச்
சாட்சிகள் காட்சிகள் ஆச்சரியம் தரும் தென்றலே
கங்குல் பகலினும் கண்ணுறங்கான் சற்றும் தென்றலே அந்தக்
கன்மியை வன்மியைக் காய்ந்து கொன்றால் நலம் தென்றலே

@20 பழைய ஆதாம் என்ற மன்மதத் தரு
**விருத்தம்

#179
அந்தர சொற்கம் பூமி அனைத்தையும் படைத்த நாதன்
தம் திருச்சாயலாகத் தரணியை ஆளவேண்டி
விந்தையாய் ஏதன் தோட்ட வெளியினில் களிமண்ணாலே
முந்தின ஆதாம் என்ற முதல் மனுடனைச் செய்தானே

#180
சித்திரப் பூங்காவனத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ
தேவனோடு ஒத்திருக்க நினைத்தாய் பழை ஆதமே
மெத்தக் கருவம்கொண்டாய் அல்லவோ பழை ஆதமே உனின்
மேன்மை அழிந்து விழுந்தனையே பழை ஆதமே
எத்தனை பாக்கியத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ
எப்படித்தான் விழுந்தாய் அழிந்தாய் பழை ஆதமே
சத்துருப் பேயை உறவுசெய்தாய் பழை ஆதமே ஆதி
சற்பத்தினால் வந்த துற்புத்தியோ பழை ஆதமே

#181
தேவர் உலாவிய சிங்காரமான பூங்காவிலே நீ
சீவவிருட்சக் கனி பொசித்தாய் பழை ஆதமே
மேவி உலாவிக் குலாவிய நீ பழை ஆதமே உன்
மேன்மையைப் போக்கடித்தாய் கெடுத்தாய் பழை ஆதமே
சாவும் கெடுதியும் வந்ததுவே பழை ஆதமே நீ
தப்புதற்கு எங்கும் வழி இல்லையே பழை ஆதமே
பாவிகளின் பிணையாளி ஒன்றே பழை ஆதமே அவர்
பாதத்தைத் தேடிக்கோ நாடிக்கோ நீ பழை ஆதமே

#182
துட்டப் பிசாசோடு உறவுசெய்தாய் பழை ஆதமே உன்
துற்குணம் நற்குணம் ஆவது எப்போ பழை ஆதமே
கெட்ட ரோமாபுரிப் பாப்பு ஒழிந்தான் பழை ஆதமே இனிக்
கேடு வராது குணப்படுவாய் பழை ஆதமே
பட்டப்பகலில் இருண்டு உருண்டாய் பழை ஆதமே அந்தப்
பாவத்தின் மைந்தன் வெளிப்படும் முன் பழை ஆதமே
கட்டைச் சொரூபங்களைச் செய்தவன் பழை ஆதமே அவன்
கட்டுண்டு அக்கினிக் கடலில் வீழ்வான் பழை ஆதமே
**வெண்பா

#183
பொங்காதே மெத்தப் புகையாதே வந்திட்டான்
துங்கன் தவிது துரைச்சாமி சிங்கம்
அடடா பழைய சற்பம் சோதனை விட்டு
விடடா அது என சொற்பமே
** இராகம் சுருட்டி

#184
அடடா பழைய சற்பமே சோதனை விட்டு
விடடா அது என சொற்பமே

#185
விடம் ஏறிய உனது முடியைத் தகர்த்து உடைக்க
வேதன் இது அல்லோ வந்தான் வாதைப் படுவாய் போடா

#186
அன்று பரன் சமுகம் நின்று கருவங்கள்கொண்டு
அன்று நரகில் விழுந்தாய் பின்னும்
சென்று விலகும் கனி தின்று கெடுவதற்குத்
தீமை எவைக்கு மொழிந்தாய் அதற்கென்று
இன்று கிறிஸ்து வந்தது ஒன்றும் உணராதே நீ
இருடா இரு கண் கெட்ட குருடா சமரிடடா
திருடா மெத்தத் துள்ளாதே பொறுடா புத்தி சொல்கிறேன்

#187
முந்து மனுடர்-தமை நிந்தைப்படுத்த வேண்டி
முடுகி வனத்தில் அடுத்தாய் ஆதி
தந்த வரங்களை இழந்துபோவதற்குச்
சதி சற்பனைகள் தொடுத்தாய் இப்போ
எந்தை உனை அழிக்க வந்தது அறிவாய் நீ செய்
இடக்கும் பவத்தின் இச்சை கொடுக்கும் அக்கினி அம்பைத்
தொடுக்கும் உனதுடைய துடுக்கும் என்னடா செய்யும்

#188
அல்லும் பகலுமாகச் சல்லி அரிக்கிறாப்போல்
அரித்து மதி மயக்கிறாய் உயிர்
கொல்லும்படி மூவாசைத் தொல்லைகளை மனதில்
கொடுத்து மிகத் தியக்கிறாய் இன்று
வெல்லைப் பதியில் வந்த செல்லத்துரை முன் உந்தன்
மெலுக்கும் ஒன்றும் இல்லா வீண் பிலுக்கும் குலுக்கும் உடல்
அலுக்கும் நெடிய தலைத் துலுக்கும் எங்கடா போகும்

#189
சிங்கம் போல கெற்சித்து எங்கும் சுற்றித்திரிந்து
தீமை செயத் தொடுக்கிறாய் கன
பங்கமான சிற்றின்பங்கள் மிகவும் காட்டிப்
பரம நன்மை தடுக்கிறாய் உனது
அங்கம் பதற வென்ற துங்கன் தவிது எனக்கு உண்டு
அதத்துப் படபடத்துக் குதித்துத் துடிதுடித்து
மிதத்துக் கடுகடுத்து மதத்துப் பேசாதே போடா

#190
மாட்டுக் குடிலிலே மேனாட்டுத் துரை பிறந்து உன்
கேட்டைத் தொலைத்துப்போட்டார் குற்றச்சாட்டுகளை
இனிமேல் கேட்டுப் புறக்கணித்து என்
றன்னை விடவும் மாட்டார் கவி
தீட்டும் வேதநாயகன் பாட்டும் பெருக்கம் ஆச்சு
சேரடா ஒருகை வந்து பாரடா தவிது வங்கிஷ
வேரடா உனை வெற்றிகொண்டாரடா பத்திரம் சொன்னேன்

@21 பந்தடிக்கும் தரு
**விருத்தம்

#191
சூரியனைச் சந்திரனை உடுக்களை அந்தரத்து இருத்தித் துலங்கச் செய்தோன்
பாரி என நியமிக்கப்பட்ட சியோன் குமரி மிகப் பரிவாய்த் தோன்றி
வீரியமாய்க் கிரகங்கள் ஓட்டங்கள் இவை எல்லாம் வியந்தான் அந்தச்
சீர் இயைவாய் விளையாடிப் பந்தடித்தாள் அவள் திறத்தைச் செப்புவோமே
** தினதினானத் தினதினானத் தினதினானத் தினதினா
** தென்னாதெந்தினத் தென்னாதெந்தினத் தென்னாதெந்தின தினதினா

#192
இரவி பூமி பதிமூன்று இலட்சத்து எண்பது உடனான நாலாயிரத்
தோற்றம் ஆனது நானூற்று அறுபத்து இரண்டதின் மேலதே
விரி மதி மகன் பதினைந்தொன்று வெள்ளி எட்டில் ஒன்பது
மிக்கச் சந்திரன் நாற்பத்தொன்பதில் ஒன்றது அறிவன் ஏழொன்றே
உரிய அந்தணன் ஆயிரத்திருநூற்றொடு எண்பத்து ஒன்றதே
உற்ற சனி தொளாயிரத்தோடு ஒன்பது பத்துடன் ஐந்தே
பெரிய திங்கள் எண்பதோடு அரை பிசகிலாத கணக்கு என
பிரிய சீயோன் மகள் குலாவிப் பெலப்பதாகப் பந்து அடிப்பளாம்

#193
இரவியோ சமசக்கரத்தில் உருளும் நாள் இருபத்தைந்து ஈ
ரேழ் மணி எட்டே வினாடியில் புதன் அறி ஆதலே
விரி வெள்ளி இருபத்துமூன்று மணி மூவேழ் வினாடியே
விபுலம் தாசு இருபத்துமூன்று எண்ணேழ் வினாடி நால் நொடி
அரிய சந்திரன் இருபத்தேழு நாளுடன் மணி ஏழுமாய்
அதி வினாடி நாற்பதுடன் மூன்றைந்து நொடியும் ஆனதே
குருதியோ ஒரு தினம் வினாடி முப்பத்தொன்பது நொடியுமே
குறையிலாது இருபத்தியிரண்டு நிறையில் ஆரும் அறியவே
அரசன் ஒன்பது மணி வினாடி ஐம்பத்தைந்துடன் நொடியுமே
ஆறைந்துடனே மூன்றதாகும் அப்புறம் சனி மணி பத்தோடு
ஒருவியப் பதினறு வினாடி ஒரு நொடியதும் ஆனதே
உற்ற வளையம் பத்து மணி நாலெட்டுடன் நொடி பதினைந்தே
தெரிவுறாது சமசக்கரத்தில் திங்கள் உருளுங்கால் என
திவ்ய சீயோன் மகள் குலாவிச் சேர்ந்து நின்று பந்து அடிப்பளாம்

#194
சக்கராயனத்து ஒவ்வொரு மணி-தனில் கிரகங்கள் நடக்கிற
தகுதி நடை இங்கிலீசு நாழிகை சௌமியம் நூறாயிரம்
மிக்க பதினோராயிரத்து இருநூற்றோடு ஐம்பத்தாறதாம்
வெள்ளி எண்பத்தோராயிர முன்னூற்றுத் தொண்ணூற்று எட்டதே
இக்கண் பூ எழுபத்தையாயிரத்து இருநூற்றொடு இருபத்திரண்டு
எழில் மதி ரண்டாயிரத்து முன்னூற்று முப்பத்தைந்ததே
தக்க சேய் ஐம்பதாறாயிரம் சதம் ரண்டுடனே பனிரண்டு
தாராபதியும் முப்பதாயிர முன்னூற்று ஐம்பத்து எட்டதாம்
சொக்கு சனி இருபத்தீராயிரம் முன்னூற்று ஐம்பத்து ஒன்றுமாம்
தோற்றும் வளையம் அப்படிக் கொள சோதியாகிய திங்களோ
முக்கியப் பதினையாயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறு என
முதல்வி சீயோன் குமரி பாடி முடுகி நின்று பந்து அடிப்பளாம்

#195
சக்கர ஓட்டக் கால வரிசை தபனனைச் சுற்றிச்
சாமன் எண்பத்தேழு நாள் மணி இருபத்துமூன்றே வினாடிக்கு
ஈரேழு நொடி முப்பான் மூன்றே வள்ளி இருநூற்று மூ
வெட்டு நாள் ஈரெட்டு மணியோடு எண்ணைந்து ஒன்று வினாடியும்
மக்கள் நொடியும் இருபத்தேழு மாநிலம் ஒரு வருடமும்
மறுத்து ஐந்து மணி நாற்பத்தெட்டு வினாடி நொடியும் ஆனதே
மிக்க சந்திரன் இருபத்தேழு நாளும் மணியும் ஏழுமாய்
வினாடி நான்கு பத்து மூன்று வெறும் நொடியும் ஐந்து ஆனதே
வக்கிரன் ஒரு வருடம் முன்னூற்று இருபத்தொரு திவாவுமாய்
மணி இருபத்தோடு இரு வினாடியும் அறுமூன்றின் மேல்
தொக்கு நொடி இருபத்தேழானது சுரகுரு பதினொரு சமை
தோற்றும் நாள் முந்நூற்றுப் பதினைந்து ஏற்றம் ஏழிரு மணியுமாய்
தக்க வினாடி முப்பத்தொன்பது தகும் இரு நொடி சனியும்தான்
சாற்ற வருடம் இருபத்தொன்பது நூற்றறுபது சதுத் தினம்
ஒக்கும் மணி ஓரேழ் மூவேழ் வினாடியும் நொடி ஐம்பதே
உற்ற சனியின் வளையம் அப்படி ஓங்கிய திங்களோ எனில்
பிக்கில்லாத வற்சரம் எண்பத்துமூன்று நாளுமே
பெருகிய இருநூற்று ஈரேழு மணி ஓர் எட்டு வினாடியும்
பக்கிஷமாக முப்பத்தொன்பது எனப் பரம சீயோன் மகள்
பாங்குடன் மகிழ்ந்து ஓங்கியோங்கி பணிந்து நின்று பந்து அடிப்பளாம்

#196
மத்திப தூரம் இரவியிலிருந்து இங்கிலீசு மயில்
மாலவன் ஒரு மூன்று கோடியே அறுபத்தொன்பது இலட்சத்தோடு
இத் தொகை எழுபத்துமூவாயிரத்து இருநூற்றோடு எண்பத்திரண்டு
எரி வெள்ளி அறுகோடி தொண்ணூறு லட்சத்து எண்பத்து எண்ணாயிரத்து
ஒத்துமை இருநூற்று நாற்பது உலகம் ஒன்பது கோடி ஐம்
பத்தைந்து இலட்சம் பதிமூவாயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றுநால்
அத்தகை சந்திரன் எனக் கொள்கச் செவ்வாய் பதினாலு கோடியே
ஐம்பத்தைந்து லட்சம் முப்பத்து மூவாயிரத்து அறுநூற்று அறுபத்தேழ்
சுத்த வியாழம் நாற்பத்தொன்பது கோடியோடு அறுபத்தேழு
தொகை லட்சம் அறுபத்தையாயிரத்து இருநூற்று எண்பத்தொன்றதே
பத்துச் சனி தொண்ணூற்றொரு கோடியே பதினொரு லட்சம்
பாங்கின் நாற்பத்தோராயிரத்துடன் நானூற்று நாற்பத்திரண்டு
அத்தகை சனி வளையம் திங்கள் நூற்றெண்பத்திரண்டு கோடி
ஐயைந்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூற்று இருபத்தெட்டு என
வித்தகச் சீயோன் மகள் அகாய விரிவின் அந்தரவெளியிலே
விளங்கிய பரமண்டலங்களை வியந்து நின்று பந்து அடிப்பளாம்

#197
சூரிய விட்டம் எட்டு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மயிலே
சொச்சம் நானூற்று எழுபத்து மூன்று அச்சமே இலை அதிலே
கூரிய புதன் மூவாயிரத்து நூற்றொன்பது பத்தொரு மயில்
கோல வெள்ளி ஏழாயிரத்து அறுநூற்று முப்பது குறையில
பாரது ஏழாயிரத்து ஒன்பது நூற்றைம்பத்தினால் அம்புலி
பரிவதாய் இரண்டாயிரத்தொரு நூற்றெழுபதோடு இரு மயில்
நூரி வக்கிரன் நாலாயிரத்து நூற்றுமுப்பத்தை மயில்
நூங்கரசன் எண்பத்தாறாயிரம் நான்கு பட நானூறதே
காரி எழுபத்தொன்பதாயிரம் நானூற்றைந்து கடு மயில்
கனத்த வளையம் லட்சத்து எண்பத்தையாயிரத்தோடு இரு சதம்
சேர எண்பது திங்கள் முப்பது நாலாயிர நானூற்றைம்பத்து
ஏழு எனச் சீயோன் திருமகள் சிறந்து நின்று பந்து அடிப்பளாம்

@22 குறவஞ்சி தோற்றம்
**விருத்தம்

#198
புத்திரனை வெகு வருடம் இழந்த யக்கோ சூசை எதிர் புகுதக் கண்டு
சித்தமதில் எத்தனையாய் மகிழ்ந்தனனோ அத்தனைக்குச் சீயோன் மாது
கஸ்தியுறும் வேளையிலே மணிக் கூடை மாத்திரைக்கோல் கையில் வாங்கிச்
சுத்தம் மிகும் சத்தியசபைப் பெத்தலேம் குறவஞ்சி தோன்றினாளே
**அகவல்
** 1 மலை

#199
பொன்னகர்க்கு இறைவன் புனிதன் மோசேயை
மன்னனாம் பார்வோன் வைப்பில் வாய்மையதாய்

#200
அனுப்பி அன்று இசராவேலரை அழைத்து
வனப்புறத்து இயல்பாய் மயத்துடன் நடத்தி

#201
அண்ட புவனங்களும் அடங்கலும் விளங்க மறை
எண் திசையிலும் பவர வென்று இயம் முழங்க எழு

#202
மேகமதிலே பெரிய மேன்மை வெளியாக
மாகம் மிசை தூதர் விளையாடி மகிழ்வாக

#203
ஆக மகிழும்படி அனேக நடனம்செய்
தேகம் மனம் ஒன்றி எழிலாகவும் இறைஞ்ச

#204
அதிகச் செயலுற்று அருபத்து உருவில்
கதி பற்றிய மெய்க் கருணைக் கடல் ஒப்பு

#205
எதிரற்று இணையற்று இகலற்று இடரற்று
உதிரப் பொறியற்று உடலற்று உரைபெற்று

#206
அறிவுக்கறிவாய் அமலர்க்கு அரசாய்
உறவுக்குறவாய் உலகுக்கு ஒளியாய்

#207
விந்தை வனம் அதிர விண்டுள் ஒலி குமுற
வந்த நரர் பதற வஞ்சர் நெறி சிதற

#208
வானத்தளவாய் அக்கினி மேவிப் படர்வாக
ஈனத்து அணுகா உக்கிர நீதத்து இறையோனும்

#209
அல்லல்படு கா வையப்படு கா
வெல்லப்படு கா எல்லைப் பதியோர்

#210
விண்ணுலகிடையே மின்னிய சுரரும்
மண்ணுலகிடையே மன்னிய நரரும்

#211
எடுத்துக் கரத்தைக் குவித்திட்டு இணக்கத்
தடுத்துப் பதத்தைப் படித்து அர்ச்சயித்துச்

#212
செபத்தைச் செபத்தைச் செபித்துச் செபித்துப்
பவத்தைப் பவத்தைப் பழித்துப் பழித்து

#213
தவத்தின் நிலையொடு சகத்தில் ஒழுகிட
நவத்தின் அருள் மறை நயத்தின் நலம் மிகு

#214
பத்துக்கற்பனை அற்றைப் பற்றிய
சுத்தத் தற்பர சொற்கப் பொன் படர்

#215
அற்புத மகிமையால் நிறைவான
செப்புதற்கு அரிய சீனாமலையான்
** 2 ஆறு

#216
சகரியா வரத்தில் தரணியில் தோன்றி
அகம் எலாம் அகற்றி அறத்து உருவாக

#217
ஒட்டகத் துவக்கு உடுத்தி ஒக்கடப் பிரசத்தை நற்றி
அட்ட திக்கின் மெய்க்க மிக்க அற்புதற்கு இடத் தடத்தை

#218
ஒப்பமிட்டு இசைத்து இணக்கி உத்தமத்து உயர்த்தி பெற்ற
செப்பமிட்டிடத் தவத் திறத்திலுற்று உகத்தை வெற்றி

#219
இட்டு இதத்தை இட்டு அறத்தை இட்டு மெச்சி இட்டு அவத்தை
விட்டு அகத்தை விட்டு இனத்தை விட்டு அனைத்தும் விட்டுவிட்டு

#220
வந்து வனம்-தனில் நின்று மகிழ்ந்து உரை
தந்து நெருங்கி அடைந்த சனங்களை

#221
யும் தவமும் புரியும் செயமும் புரி
யும் திரம் என்று உணர்வும் சொலியும் பினை

#222
அழைத்து அணைத்து அகத்து அழுக்கு அறுத்த சட்டு இருட்டு உடைத்து
உழைத்து இதத்துறச் சலத்தினைத் தெளித்து அயர்ச் சிரத்

#223
தினைப் புனல்படப் பிடித்து இழுத்து அமிழ்த்து இயல்பு கற்
பினைப் படிக்கு அருள் செபத்தினைப் பெலப்படப் படித்து

#224
ஆன முறையால் அரிய மெஞ்ஞான
ஸ்நானமது அளித்த யோர்தானு மா நதியான்
** 3 நாடு

#225
அன்னையருடனே அரிய சீடர்களும்
உன்னி வந்து எழுந்து அங்கு உயர் கலியாணப்

#226
பந்தலில் அடர்ந்து பரிவின்படி பயன்செய்
விந்தைகள் நிறைந்து அணி விதங்களும் மிகுந்த

#227
தந்திரமுடன் சருவமும் புரி வினோத
சுந்தரம் விளங்கிய கபங்கள் சொலொணாத

#228
அனந்த மகிமைகள் அணிந்து மடியவர்
நினைந்தபடி செய நிறைந்த சபையிடை

#229
விழுந்த நரர் வினை விடங்கள் கெட உலகு
எழுந்த பொருளவன் எழுந்து கிருபையின்

#230
அறிவுடன் உதகம் ஓர் அறு திரி குடமது
நிறைபட வருகையில் நிமிஷம் அது உயர் மது

#231
ரசமதில் ருசி தரு ரசம் என அபிநவம்
வசமதில் அருளிய மகிழ் பல பலன் உள

#232
வானோர்கள் மேவும் வளம் எலாம் நிறைந்த
கானானு என்னும் கலிலெய நாடான்
** 4 நகர்

#233
மட்டில்லா ஞான வரத்தினால் நிறைந்த
அட்ட மெய்க் குணத்தான் ஆலயம்-தனிலே

#234
நிதியின் ஆகம நேர்மைகளாகிய
போதகமே சொலு போதினிலே பல

#235
பாதகர் கூடியுமே பரிகாசமது
ஓதியும் மானிடனாம் இவன் ஓதுவது

#236
ஏது இது ஞானமது ஏது அறிவு ஏது உரை
ஏது உயர்வு ஏது அருள் ஏது அறியோம் இது

#237
பாதகமாம் அடடா பழியோ படு
சாதனையோ அறியோம் அயயோ சரு

#238
வீசுரனாம் எனவே இவன் வீறொடு
பேசுவது ஏது இவனோ வினையாளனின்

#239
நேயமதா மகனே நிசமாம் இவன்
ஆயியுமே மரியாள் அலவோ என

#240
இன்மை சேர் தீயோர் இகழினும் தேவ
நன்மை சேர் நாசரேத்து எனும் நகரான்
** 5 யானை

#241
பன்னிருசீடர் பரிவுடன் சூழக்
கன்னி மா மரியாள் கருணையின் புதல்வன்

#242
விஞ்சையர் வரைந்தபடி மிஞ்சிய விதங்களுடன்
நெஞ்சினில் மகிழ்ந்து பல வஞ்சியர் நிறைந்து அடிகள்

#243
அஞ்சலிகளும் செய அனந்த நரர் அன்பினொடு
தஞ்சம் எனவும் சொலி இறைஞ்ச இளைஞோர்கள் அவை

#244
வந்தனம் அணிந்து திருமங்கள பதங்கள் புகழ்
சிந்தைகள் விரிந்து அமுத செம் சொல்கள் இசைந்தபடி

#245
பம்பைகள் முழங்க உயர் பங்கைய முகங்கள் உள
கும்ப முலை மங்கயர் கதம்பமது கொண்டு அணுக

#246
விருட்சக் கிளை பல தறித்துத் தடம் மிசை
திருத்திச் செயலொடு தெளித்துப் புடவைகள்

#247
விரித்துத் துதி மிகு விருப்பத்து அருளுவர்
குருத்துக்களை இரு கரத்தில் குணமொடு

#248
பிடித்துப் பரன் அருள் பெலத்துச் சுதன் என
நடித்துத் திரள் மனு நலத்தில் கதி தரும்

#249
ஓசனா என்றே உரைத்திடப் பவனி
ஏசு நாயகரும் எருசலைக்கு எழுந்த

#250
மோகன வேதமொழிப்படி நீச
வாகனம் என்ற வலிய குஞ்சரத்தான்
** 6 குதிரை

#251
பரத்தினில் ஆதி பராபரன் வலமாய்
வரத்தினின் ஞான மனுமகன் ஆனோன்

#252
பத்தர் அடர்ந்தும் பத்தி வளர்ந்தும்
துத்தியம் என்றும் சுற்றி வளைத்தும்

#253
சத்துரு வஞ்சம் சற்பனை பங்கம்
தத்திய கண்டம் தட்டி எழுந்தும்

#254
சாட்சி பகர்ந்தும் சாத்திரம் விண்டும்
சூட்சி தொடர்ந்தும் காட்சி சொரிந்தும்

#255
பாத்திபன் அங்கம் பாக்கிய துங்கம்
தேற்றரவு இன்பம் பூர்த்தி செறிந்தும்

#256
கடவுளின் அந்தரம் கண்டும் பின்பும்
புடவியின் மந்திரம் தந்தும் புங்கம்

#257
கனமொடு கொண்டும் கஞ்சம் பொங்கும்
சினம் அருள் துன்பம் சிந்துண்டு அஞ்சும்

#258
காரண மைந்தன்-தனைப் பட்சம் காண இசைந்து அங்கு ஒலித்துத் தின்
சீர் அணியும் சங்கிதத் திட்டம் சீடர் பரிந்தும் செபிக்கப் பின்

#259
தானவரும் தங்களுக்கு எட்டும் தானம் முழங்கும் சமத்துக்கும்
தேன் அமுதம் சிந்திடச் சொல் தம் தேவன் வலம் சென்று இருப்புற்றும்

#260
திண்ணத்தால் ஆளத் திறத்தினால் எழுந்து
விண்ணில் போய் மீளும் மேக வெம் பரியான்
** 7 கொடி

#261
தீது உறும் நரகத் தீயினில் கிடக்கும்
பாதக அலகை பயந்து தத்தளித்துப்

#262
பங்கம் கங்கம் பஞ்சம் கஞ்சம் புஞ்சம் கொண்டு அங்கு
அங்கம் தென்பு என்று அண்டும் தஞ்சம் சண்டம் குண்டம்

#263
தொந்தம் பந்தம் துன்பம் தந்தும் சொந்தம் கண்டு உந்து
இந்து உந்தும் துந்தி இண்டு உண்டு உண்டு உண்டு என்றும் சென்றும்

#264
பூ மேலேயே போக்காய் ஏச்சேபோட்டாய் சீச்சி
ஆமா பேயே ஆச்சா தூத்தூ மூர்க்கா தீட்பா

#265
ஓகோ போறேன் ஓட்டாய் தாத்தா பாட்டால் ஓட்டா
ஆகா ஈஈ ஆத்தே மாட்டேன் மூட்டாய் கூக்கூ

#266
என்று பேய் அலற ஏகமாய்க் கிறிஸ்தோர்
வென்றி சேர் சிலுவை விருது எனும் கொடியான்
** 8 மாலை

#267
மோட்சவாசிகளும் முனிவர் தானவரும்
காட்சி நாலாறு கதியின் மூப்பர்களும்

#268
தேர்ந்த நெஞ்சப் பாங்கு மிஞ்சித்து ஈண்டு துன்ப தீங்கை நிந்தித்து
ஆர்ந்த புந்திக்கு ஓர்ந்த பண்புற்று ஆய்ந்த இன்பத்து ஓங்கி நன்றிட்டு

#269
ஆண்டவர்க்குத் தாங்கலற்று ஒப்பாம்படிக்குச் சாந்து அகத்தைப்
பூண்டு அருள் சொல் பூண்டு அறத்தைப் பூண்டு உரத்தைப் பூண்டு இதத்தில்

#270
சூழ்ந்து பதத்தைக் கூர்ந்து மனத்து உற சோம்பல் அறுத்திட்டு ஓங்கி உரைத்து
தாழ்ந்து அடியுக்குள் சார்ந்து உலகத்தைத் தாண்டி வெளிப்பட்டு ஊன்றி நிலைத்துப்

#271
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என மெச்சி
அருமைக்குள் உயர் முக்கிய அருள் வைத்த தெருளுற்ற

#272
மகிமைப் பொருள் உனக்கு வலிமைப் பெலன் மகத்துவ
மிக நித்தியம் அளவுக்கும் விளையக் கடன் எனச் சொல்

#273
சாத்திரமாகச் சகலரும் போற்றும்
தோத்திர ஞானச் சுப செபமாலையான்
** 9 முரசு

#274
எத்திசைகளினும் இரைந்து பேரொலியாய்
உத்தமன் வரும் முன் உறும் செயல் காட்டி

#275
தட்டிப் புவிக்குள் மனுவைச் சற்று எழுப்பி நடு
விட்டுக் கணக்கு அருள வித்தக் கிறிஸ்து அரசன்

#276
அப்பிரத்தில் உற்றவரும் அற்றைக்கு உயர்ச்சி பெற
இப் பத்து அவத்தில் உறும் இச்சைப் பவத்தை விடும்

#277
பொக்குப்பட்டுத் திக்குக் கெட்டுப் புத்திப் பத்தித் துப்புத் தப்பிச்
சிக்குப்பொட்டுத் துட்டுள் புக்கிச் சித்துச் சொத்துச் செப்பத்து இட்டக்

#278
கற்புக்கு ஒற்றிப் பற்றுச் சுற்றக் கட்டற்று அற்பத்து உற்றுச் செத்துப்
பொற்புத் தட்டிக் கிச்சுக் கஸ்திப் பக்கத்துக்கு உட்புக்கிச் சுட்டுப்

#279
பொட்டாய்த் தாழ்த்தித் தீக்குள் போட்டுச்
சட்டாய்ப் பேய்க்கு இட்டு ஊட்டிச் சாப்பிட்டு

#280
இட்டாப் போச்சு இப் பூக்குள் தீட்டத்
தட்டாத் தேட்டத் தேர்க்கத்து ஆக்கித்

#281
தொக்காய்ப் பார்த்துப் பார்த்துச் சூட்சிச்
சொக்காய் சாத்திரச் சூத்திரப் போக்குக்கு

#282
ஒத்தாப்போல் சற்று ஊக்கத்து ஓர்க்கில்
செத்தால் பாக்கியத் தீர்க்கத்து ஏற்றக்

#283
கட்டாய்ச் சாக்குத்தூட்டிக் காத்திரப்
பட்டால் போர்த்திப் பார்க்குள் சூட்டுக்கு

#284
ஒப்பாய்ப் பூட்டிப் பாத்திரத்து ஊற்றத்
துப்பால் சூட்டித் தேற்றித் தூக்க

#285
கர்த்தாச் சீக்கிரத்தால் செல் காற்குள்
பொன் தாள் போற்றுப் பூக்கொள் கூட்டச்

#286
சுற்றார் கோப்பக்கத்து ஏர்த் தோற்றச்
சொற்று ஆர்ப்பு ஆர்ப்பத் தோத்திரத் தீர்ப்பிட்டு

#287
ஏற்றிய நல்லோர்க்கு எழில் பரகதி தந்து
ஆற்றுவார் என்றே அனைவரும் அறிய

#288
டண்டம் டண்டம் டமடம டமடம டண்டண் டண்டண்
டிண்டிம் டண்டிம் டிமடிம டிமடிம டிண்டிண்டிண்

#289
திந்திந் திந்திந் திண்டுண் டுண்டுண் சிஞ்சிஞ் சிஞ்சிஞ்
துந்துங் கிங்கிந் துந்தும் பும்பும் பும்புங் கின்கென்று

#290
ஏழு தூதர்கள்தான் எழுந்து பூவுலகைச்
சூழவே வானில் தொனிக்கும் ஏழ் முரசான்
** 10 செங்கோல்

#291
பரத்திலும் புவியிலும் பாதலத்திலும்
இருத்திய பொருள் எலாம் இசைந்து எந்நேரமும்

#292
கரம் எடுத்துத் தலைக் குவித்துக் கழல் மடக்கிக் கருதி வித்தத்து
உரம் மிகுத்துப் பயமது உற்றிட்டு ஒருமை வைத்துத் தினம் அடுத்துச்

#293
சகல வஸ்தைப் பரிசனித்துத் தயவு அளித்துக் கிருபையுக்குள்
புகழ் நடத்திப் புதுமையிட்டுப் புலவருக்குப் பலன் மிகுத்துத்

#294
தரு மகத்துவம் உள திரித்துவ சருவ சத்துரு வினை கெடுத்து உயர்
பரம தற்பரன் என ஒலித்து அடி முழு மனத்தொடு பணிய நித்திய

#295
பெலன் உயர்த்திய வரம் அளித்திடு பெருமையுற்று எழு பொருள் உனக்கு எதிர்
இலை எனச் சொல வெளி ஒளிக்கிடை எவரும் எட்டவும் அரிய நற்புறம்

#296
அறிவுடன் நின்றும் கனம் பற்றும் பெருக்கம் கொண்டு இருப்பாகிய
திறமுடன் அன்பின் பலன் பட்சம் சகத்து இன்பம் செபத்தால் வளர்

#297
சுரர்களின் நெஞ்சம் பணிந்து எச்சம் படைத்து அங்கம் சுபத்தால் ஐயும்
உரமது மிஞ்சும் தலச் சுத்தம் கனத் துங்கம் புதைத்து ஓதிய

#298
திசை பல சந்தம் பயன் சுற்றும் புகழ்ப் புங்கம் செயற்று ஆலியும்
விசை மணி கொண்டும் பதம் கட்டும் கவிச் சிந்தும் படித்தே மிகு

#299
கருவி முழங்கும் கனம் பக்கம் தொனிக்கும் சங்கிதத்தால் அருள்
பெருகு மனம் கொண்டு அனந்தம் சிந்தனைக்கும் சஞ்சரித்தே பினும்

#300
அருமையில் அரசுசெய் பெலம் உள பொருளுனது அன்பின்படி மேவிய
வரமதை நலமுடன் அடையவும் அடியர் முன் வந்தும் தயவாயினம்

#301
உரிமை செய் உறவு செய் உரமிடு திறம் அருள் உந்தன் கழலே கதி
கருணைகள் உதவியும் அனுதினம் உனது இரு கண் கொண்டு அருளாய் என

#302
மண்ணுளோர் விண்ணோர் மற்றுலகோரும்
திண்ணமாய்ப் போற்றச் செலுத்தும் ஆணையினான்
** பெத்லகேம் வளம்

#303
நேசித்து எவ்வுயிர்க்கும் நிறைந்து இரட்சிக்கும்
ஏசுக் கிறிஸ்து என்று இசைந்த நாமத்தான்

#304
ஆதி செய் பாவம் அகற்றுதற்காக
மாது எனும் கன்னி மரி வயிற்று உதித்துக்

#305
காட்டகத்தினிலே கங்குல் சூழ் இரவில்
மாட்டகத்தினிலே மதலையாய்ப் பிறக்க

#306
மாகத்தினிலே முக்கிய வானத் திரள் கூடி
வேகத்துடனே சத்திய வேதத்து இயல் நீடு

#307
தாளத் தொனி கீதத்து இசை சாயல் திறமாக
மேளப் பல வீணைப்படி மேவிப் புகழ் பாடி

#308
ஆதி வந்தனர் சோதி வந்தனர் அமலர் வந்தனர் விமலர் வந்தனர்
நீதி தந்தனர் வேதபந்தனர் நிறை புகன்றனர் குறைவு அகன்றனர்

#309
எவரும் அளவிட அரிய பொருள் இவர்
கவலையற வரு கருணை உரு இவர்

#310
இனமும் இவருட கிருபையதின் நரர்
கனமது உறு கன பிரியமுறுவர்கள்

#311
கடவுள் மகிமைகள் கதியின் விதமொடு
படரும் உலகிடை பரவும் என அவர்

#312
இயைப் பொற்புத் திசைப் பக்கத்து இணைக்கு ஒப்பிக் குயிற்பற்றித்
தயைப் புத்திப் புகழ்ச் செப்பிச் செலக் கட்டத் தடத்து இப்பர்க்கு

#313
எதிர்ப்பட்டு அற்புதத்தைச் சொல் சுரர்க்கு அச்சத்து இசைப்பட்டுக்
கதிர்க் கொட்டுள் பிறப்பட்டுக் கழல் கட்டைக் கருத்துற்றுத்

#314
தோத்திரமே செயும் நேத்தியதாகவே
சாத்திரிமார்களும் வாழ்த்திய வாய்மைகள்

#315
மெத்த மிகுத்த விகற்பின் மகத்துவம்
எத்திசையுக்குள் எதிர்ப்பு இணையற்று எழு

#316
பெத்தலகத்து அருள் பெற்ற வரத்தினை
நித்திய மட்டும் நிகழ்த்தி விதிக்கினும்

#317
ஏதொருவராலும் முடியாதது அதனிலே இனிய
மாத நிறைவான திரி மாரியது தூய எழு

#318
பாதை இருபாலும் நிறை சாரிகளிலே படர் கொள்
கேதர் வனமோ பெரிய சேதர் வனமோ அரிய

#319
சாலை அழகோ உரிய தாரின் அழகோ நெடிய
சோலை அழகோ பயில்செய் தோகை அழகோ செரியும்

#320
மாதளையோடே கமுகு மாமரமும் நேர் பலவு
தாதகி விளா இலவு சாதி விபரீதம் மிகு

#321
சந்தன வனங்கள் அணி தங்கிய பெரும் பனைகள்
நந்தவனமும் பலவிதங்களும் நயந்து இலகு

#322
வன்னிமரமே அரசு புன்னைமரமே திகழு
தென்னைமரமோ வயல்கள் சென்னெல் விளைவோ அதிக

#323
பன்னிரு மதிப் பருவம் முன்னிய விருட்சமது
பன்னிரு விதக் கனிகள் நன்னயம் அளித்து உதவ

#324
வாழை சண்பகம் வான் முருங்கைகள்
தாழை குங்கும நேரு கொன்றைகள்

#325
தேங்கு கோங்கு சேந்து ஈந்து
வேங்கை மூங்கில் வேம்பு போந்து

#326
மஞ்சள் இஞ்சி நல் கரும்பு வங்கம் மிஞ்சு கிஞ்சுகங்க
ளும் சிறந்த மண்டபங்களும் திரண்ட மந்திரங்க

#327
ளும் குளங்களும் தவங்களும் திரங்களும் பெலன்க
ளும் கனங்களும் தனங்களும் பயன்களும் கொளும் திண்

#328
வானாம் பதம் மேவிய வானவர் தேனாம் புகல் ஓதியுமே தொழு
கானாம் பதியூடு உயர்வாகிய மேனாம்புரிதான் எனவே வளர்
** குறவஞ்சி வளம்

#329
பெத்தலேம் அரசன் பெருமையை வாழ்த்திச்
சத்திய வேத சாஸ்திரப்படிக்கு

#330
வெண் துகில் உடுத்து விண் பணி தரித்து
மண்டலம் மதிக்க மா மணி இலங்கும்

#331
சுரி குழல் முடித்துத் தொங்கலும் தூக்கி
விரி கதிர்ப் பிறையும் விதத்துடன் சூட்டிப்

#332
பட்டமும் கட்டிப் பச்சையும் குத்தி
வட்ட நல் திலதம் மத்தகத்து இட்டுப்

#333
பலபல வன்னப் பாசியும் அணிந்து
இலகு பொன் கச்சை எழில் முலைக்கு இசைத்து

#334
ஆல வேல் விழிகட்கு அஞ்சனம் தீட்டிச்
சாலவே கையில் சரி வளை தரித்துத்

#335
தந்தம் விட்டு இழைத்த தற்சீசின் ரத்தினத்தின்
கொந்தள ஓலை குழையினில் கூட்டிச்

#336
சங்கு பாசிகளும் தனிக் குன்றி வடமும்
புங்க வெண் முத்தும் பொலிவுறப் பூண்டு

#337
காத்திரக் கூடையும் கக்கத்தில் இடுக்கி
மாத்திரைக்கோலும் வலக்கையில் பிடித்து

#338
மங்கயைர்க்கு அரசோ மாசிலா ஒளியோ
திங்கள் செம் கதிரோ தெய்வ ராக்கினியோ

#339
என்று அதிசயிக்க எவர்க்கும் நற்குறிகள்
சென்று தான் பகரத் திறமுடன் எழுந்து

#340
ஆரண மங்கள கீதம் முழங்கிட யாவரும் அன்புறவே
காரணம் என்று அதி ஞானம் விளங்கிய காமுகரும் தொழவே

#341
அன்பு சொரிந்து உதவும் தயவின்படி அண்ட மடங்கலுமே
துன்பம் அகன்று இழிவும் தவறுண்டு சுபங்கள் துலங்கிடவே

#342
அதிசயம் மிஞ்சியும் நடனமிடும் பல அருமை பெறும் கனிமார்
சதிரொடு கொஞ்சியும் இருபுறமும் புடை தரவு நடந்து உயர்வாய்

#343
தகதகென மணி நகைகள் தளதளென முக வடிவு
தகுதிகென வரி விழிகள் திடுதிடென நடை இசைகள்

#344
அன்ன நிகரே நடைகள் அண்ணல் நெறியே உடைகள்
இன்ன இனிதோ விடைகள் என்ன நிலையோ துடைகள்

#345
தீர்க்கமுறவே பரம சேர்க்கையுடனே சபையில்
ஆர்க்கும் அருளே உதவ ஆக்கமுடனே முடுகி

#346
மூப்பு மொழியே பகரு மூர்க்கம் உள ரோமியுட
பாப்பு மதமோடு அலகை பாச்சு மதம் யாவும் அற

#347
மதி சேர் சத்திய மறையே பற்றிய
விதியால் உத்தம விசுவாசப் பெயர்

#348
அஞ்சு குறியின் சருவ விஞ்சையனை நெஞ்சில் நிதம்
அஞ்சியும் இறைஞ்சு குறவஞ்சி இதோ வந்தனளே

@23 சிங்கி வரவுச் சிந்து
**விருத்தம்

#349
திரு மதியை அகத்துள் நிந்து சிறு மதியைப் பதத்து அணிந்த சீயோன் மாதுக்கு
அரு மதியாம் குறிகள் பகர்ந்து அருளும் வெகுமதி பெற என்று ஆவலாகப்
பெரு மதி சேர் விசுவாசக் குறவஞ்சி எனும் மேன்மைப் பெயர் கொண்டு ஓங்கி
வரு மதி பொன் பெத்தலேம் மலை தங்கி நிறை அணங்கி நளின சிங்கி மிக முழங்கி வருகின்றாளே

#350
சிங்கி வந்தனளே விசுவாசச்
சிங்கி வந்தனளே

#351
சிங்கி அருள் நல் பொங்கி வடிவது
இலங்கி அறிவு துலங்கி நெறி மறை
தங்கி அயனை வணங்கி மொழிகள் தொ
டங்கி எவரும் இணங்கு குறி சொல

#352
தொல்லை வினை பல அல்லல் இருள் அற மல்லர் என வளர் புல்லர் கதி பெற
முல்லை நிலம் உயர் புல்லணையில் வரும் எல்லை ஒருவரும் இல்லை என வளர்
துல்லிபமது உயர் வல்ல பரமனின் நல்ல சரண் மன தில்லில் உற எரு
செல்லி மகளிடை செல்லமொடு குறிசொல்லி அருள் பெற எல்லை மலைக் குற

#353
ஆதி முதலில் அனாதி அருளிய போத மதி உள வேத மறை தரு
நீதி நெறி தவறாது நரர் புரி ஏதம் மிகு பல தீதது அகலிட
மாதர் பலர் அழ யூதர் எருசலை வீதி-தனில் மிகு பாதையுடன் வரு
சோதி அடி இணை காதலொடு தொழுது ஓதி அவையிடை சாதி முறை கொடு

#354
மாகம் மிசை படர் மேகமதனில் விவேகமுடன் அதி வேகமொடு முழு
லோகம் அதிரவு யோகம் எழ வரு யூகமிடு திரியேக முதல்வனை
யாகம் உயிர் கொடு தாகமொடு சொலி மூகமுடன் அதி மோகமுடன் வளர்
நாகரீகம் உள தேகம் ஒளிவிடு போகம் உதவு பெத்லேக மலைக் குற

#355
புத்தி மனத்தி பவத்தை அகற்றி புலத்தி நலத்தி வரத்தி விரத்தி
பத்தியது உற்ற செபத்தி தவத்தி பரத்தி உரத்தி நயத்தி நியத்தி
முத்தி மனத்தி குணத்தி கணத்தி முகத்தி சுகத்தி அறத்தி திறத்தி
நித்தி சமத்தி மதத்தி சிதத்தி நிறத்தி குறத்தி நினைத்த குறி சொல

#356
பஞ்ச வினை படு நஞ்சி நினைவொடு கொஞ்சு பெருமைகள் மிஞ்சி எழும் எழு
கஞ்சமலையிடை துஞ்சும் விலைமகளின் சதிகள் கெடவும் செய்தவை இடை
மஞ்சு திகழ் பரன் அஞ்சு குறியினை நெஞ்சி நினைவுடன் அஞ்சலிகள் செய்து
செம் சொல் மொழி அபரஞ்சி வெலைமலை வஞ்சி அருள் குறவஞ்சி எனும் நல

@24 சிங்கி நடனச் சிந்து
**கலிப்பா

#357
வானோர்கள் போற்ற வளர் மானவர் பெத்லேகர் வெற்பில்
ஞானாகரன் சலமோன் நாட்டு உனதகீதமதில்
ஏனோ இளையவளுக்கு இன்னம் இல்லைக் கொங்கை என்றான்
ஆனாக்கால் மூத்தவளுக்கான தனம் எவ்வளவோ

#358
துய்ய குறவஞ்சி மின் வந்தாள் பெத்லேகமலைத்
துய்ய குறவஞ்சி மின் வந்தாள்

#359
துய்ய குறவஞ்சி வந்தாள் ஐயன் ஏசுநாதர் மீது
மையல் கொள் சீயோன் மகட்குச் செய்ய நல் குறிகள் சொல்ல

#360
நீதியின் ஆடையது அணிந்து ஞானாபரண
வேத செபமாலை புனைந்து மெஞ்ஞானமுடன்
ஆதி அமலனைப் பணிந்து சத்திய மறை
ஓது நெறியால் ஐ துணிந்து வெகுவிதமாய்க்
காதினில் பணிகள் இட்டுக் கர்த்தனின் சபைக்கு உட்பட்டுச்
சாதியின் மதத்தை விட்டுச் சற்குரு பதத்தைத் தொட்டுத்

#361
வெள்ளை நிலைத் துகில் துலங்க ஈராறு விதத்
தெள்ளரிய மணி இலங்கக் கிறிஸ்து அரசன்
வள்ளல் மணமாலை குலுங்கப் பொல்லாதவரின்
கள்ள இருதயம் கலங்கக் குறிகள் கண்டு
பிள்ளை அன்னம் போல் நடந்து பேரின்பத்தைத் தொடர்ந்து
மெள்ள நாணமாகக் கூசி வித்தாரமாகப் பேசி

#362
கன்னியர்க்குள் அவதானி அன்னாள் எனும் ஓர்
அன்னையினும் மிகு ஞானி ஞான மண
மன்னன் மகிழ் வெகுமானி அபரஞ்சியின்
பொன்னது என வளர் மேனி பருவ முலை
மின்னி நடை பின்னி இடை சின்னி மொழி கொன்னி அருள்
உன்னி மய வன்னி திரு மன்னி பல சன்னை சொலி

#363
திட்டமுடன் குறி காட்டிச் சீயோன் மகட்கு
மட்டிலது மயல் மூட்டித் திருவசனக்
கட்டளையின் புகழ் நாட்டி நுதலில் ஒரு
பட்டம் அழகுடன் சூட்டிச் சிலுவை இட்டு
வட்ட மணிக் கூடை தாங்கி மாத்திரைக்கோல் ஒன்று வாங்கிச்
சட்டமாய்ச் சபையில் ஓங்கிச் சகல துன்பமும் நீங்கி

#364
சத்திய சபையை நாடிக் கிறிஸ்துவின் பரி
சுத்த மொழியுடன் கூடிச் சங்கீதம் சொலிப்
பக்தியுடன் பதம் பாடி யூதித்து எனும்
இஸ்திரீயைப் போலே ஆடிச் சபதம்கொண்டு
எத்தன் எனும் பாப்பு முழுச் சத்துருவுக்கான எழு
மத்தகத்தை வெட்டுவிக்க வித்தை கற்றுச் சபை மெய்க்க

@25 மலை வளம்
**விருத்தம்

#365
திரு ஞானப் பெத்தலேம் அதிபதியின் கிருபை மிகும் திறம் கொண்டு ஓங்கி
வரும் ஞானக் குறவஞ்சி-தன்னை மகிழ்ந்து எருசலேம் மகளும் நோக்கித்
தரு ஞானமொடு பேசிச் சுவிசேடச் சபையில் உற்ற தையலே உன்
பெரும் ஞான மலை எந்த மலை அந்த மலை வளமை பேசுவாயே
** குறத் தரு
** தினதேந்தினத் தினதேந்தினத் தினதேந்தினத் தினனா
** தெந்தேந்தினத் தெந்தேந்தினத் தெனதேந்தினத் தினனா

#366
வானவர்கள் கூடிவந்து தோத்திரங்கள் படிப்பார்
வண்மை உள்ள சித்தர் எல்லாம் அரும் தவங்கள் பிடிப்பார்
ஞானமுடன் முல்லை நிலத் தலைவர் வந்து தொழுவார்
நட்சேத்திரச் சாஸ்திரிகள் காணிக்கைகள் தருவார்
தானதர்மம் ஏழைகட்கு யாவர்களும் கொடுப்பார்
சண்டாளப் பாவம் எல்லாம் அண்டாது தடுப்பார்
ஈனம் உள்ள பேய்க் கணங்கள் மயங்கி அங்கே துடிப்பார்
ஏகன் மனு ஆன எல்லை எங்கள் மலை அம்மே

#367
ஆதி மலை எங்களுக்கோ ஏதன் மலை அம்மே
ஆண்டவனார் எங்களைத்தான் அமைத்த மலை அம்மே
நீதி என்ற நால் வரமும் கொடுத்த மலை அம்மே
நித்தியமும் சாகாமல் நின்ற மலை அம்மே
சாதனையாய்ப் பேய் பிறகு கெடுத்த மலை அம்மே
தற்பரனார் எம்மை அங்கே சபித்த மலை அம்மே
பேதகமாய் நாங்கள் அதை விட்டதன் பின் அம்மே
பெத்தலேகம் எங்களுக்குப் பெரிய மலை அம்மே

#368
ஆரியனார் ஆத்து மலை நோவை மலை அம்மே
அற்புதமாய்ப் பேழை வந்து நின்ற மலை அம்மே
மோரியாவின் மலை-தனிலே ஆபிரகாம் அம்மே
முக்கியமாய் ஈசாக்கைப் பலிகொடுத்தான் அம்மே
மேரியாவை மோசேசு பிரம்புகொண்டே அடிக்க
மெத்த வெள்ளமான விதம் சித்திரம் காண் அம்மே
நேரில் உயர் கற்பனையின் மலை அதுதான் சீனா
நேர்மை பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே

#369
நாட்டம் உள்ள ஓரேப்பு மலைக் குறவன் அம்மே
ஞாயப்பிரமாணமதின் தலைக் குறவன் அம்மே
ஆட்டு இனத்தை மேய்த்த திக்குவாய்க் குறவன் அம்மே
அக்கினியில் காட்சி கண்ட மெய்க் குறவன் அம்மே
தாஷ்டிகமாய்ப் பார்வோனின் சேனை எல்லாம் மாளச்
சமுத்திரத்தைப் பிரித்த மோசே முனிக் குறவன் அம்மே
பாட்டன் அவன் காணி மலை சீனா மலை அம்மே
பரம பெத்தலேகம் எங்கள் பழைய மலை அம்மே

#370
ஓர் மலையோ ஏதோமின் எல்லை மலை அம்மே
உச்சிதமாய் ஆறோனும் மரித்த மலை அம்மே
கார் முகில் சூழ் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறிக்
கானாவை மோசேசு கண்ட மலை அம்மே
நேர் மிகுத்த மோவாப்பின் தேசமதில் இருக்கும்
நேபோக் குன்று அவன் மரித்த மலைதான் காண் அம்மே
ஏர்மோனின் மலையினிலே ஏவியர் முன் இருந்தார்
எங்களுக்குப் பெத்தலேகம் ஏற்ற மலை அம்மே

#371
ஆபரீமும் சாப்பேரும் கித்காத்து மலையும்
அணி இசரேல் பாளையங்கள் இறங்கி நின்றது அம்மே
ஏபாலில் மோசேசு சாபமிடச் சொல்லி
எழுதிவைத்தான் கெர்சீமில் ஆசிடைதான் அம்மே
நாபாலின் குடியிருப்புக் கற்மேல் காண் அம்மே
நாடி அங்கே எலிசாவும் வந்திருந்தான் அம்மே
லீபனோனே கானாவில் பெரிய மலையேனும்
நெடிய பெத்தலேம் மலைக்கு நிகர் மலை ஏது அம்மே

#372
ஏக பரன் சேயீரின் மலைத் தேசம் முழுதும்
ஏசாவின் புத்திரர்க்குச் சுதந்திரமாய்க் கொடுத்தார்
நாகம் என்ற கீலேயாத்து ரூபனுட பங்கு
நாடி வந்து லாபான் யாக்கோபைக் கண்ட மலையே
ஆகிலா மலை அதுலாம் என்ற இரு மலையும்
அஞ்சியஞ்சித் தவிது சவுற்கு ஒளித்த மலை அம்மே
வாகுறும் எப்பிறாயிம் மலை அன்னாளின் மலையே
வாழ்ந்திருக்கும் எங்கள் மலை பெத்தலேகேம் அம்மே

#373
ஆகார்தான் எந்தனக்குச் சக்களத்தி அம்மே
அடிமை அவள் பிள்ளையையும் துரத்திவிட்டோம் அம்மே
பூகாரோ அடிமைகட்குப் பங்கு ஏதது அம்மே
புத்திரர்க்கு மாத்திரம்தான் சொந்தை உண்டும் அம்மே
சீகாராய்ப் பாங்காட்டில் அடிமைகளை விடுத்தோம்
சீனாயி மலையதைத்தான் சீதனமாய்க் கொடுத்தோம்
வாகான ஞான மணவாளியர்க்குச் செல்லும்
மகிமை பெத்தலேகம் எங்கள் வளமை மலை அம்மே

#374
ஒலிவ மலை ஆண்டவனார் செபத்தின் மலை அம்மே
யுத்தமன்றான் ஆத்துமப் பாடான மலை அம்மே
அலகை சுதன்-தனைக் கொடுபோய் ஏற்றும் மலை அம்மே
ஆரண மா மலை அதற்குப் பெயர் இலைக் காண் அம்மே
நலமுடனே உபதேச மலைப்பிரசங்கங்கள்
நாதர் சொன்ன மலை அதுதான் ஞான மலை அம்மே
பெலமுடனே உயர்ந்த மலை தாபோர்தான் அம்மே
பெரிய பெத்தலேகம் எங்கள் பெருமை மலை அம்மே

#375
அற்புத சீயோன் மலைதான் பொற்பு மலை அம்மே
ஆட்டுக்குட்டி மனைவி குடியான மலை அம்மே
கற்பு உள கன்னியாஸ்திரீகள் வாழும் மலை அம்மே
காரணர்க்குக் கலியாணம் ஆகும் மலை அம்மே
பற்பல பாடான மலை கொல்கதாத்தான் அம்மே
பரன் சுதனார் பாடுபட்டு மரித்த மலை அம்மே
முன் பவத்தை நீக்க மனு ஆன மலை அம்மே
முத்தி பெத்தலேகம் எங்கள் முதன்மை மலை அம்மே

#376
அந்தம் உள ரோமி மலை முந்து மலை அம்மே
அக்கியான மார்க்கம் எல்லாம் அழிந்த மலை அம்மே
வந்த கொன்ஸ்தந்தீன் அரசன் விந்தை மலை அம்மே
மதி மயக்கப் பாப்பு அங்கே நுழைந்த மலை அம்மே
இந்த மலை ஏழும் இப்போ கள்ளர் மலை அம்மே
எல்லவரையும் கெடுக்கும் வேசி மலை அம்மே
சுந்தரம் சேர் ஞான மணவாளன் எனக்கு அளித்த
துய்ய பெத்தலேகம் எங்கள் சொந்த மலை அம்மே

#377
எங்கள் குலம் ஞானம் இரும் குறவர் குலம் அம்மே
எங்களுக்குச் சரி குலங்கள் எங்கும் இல்லை அம்மே
பின் குலத்தில் பெண்கள் கொடோம் பெண்களையும் கொள்ளோம்
பேசுதற்கு இங்கு எங்கள் குலம் ராசர் குலம் அம்மே
மங்களம் சேர் தீட்சைபெற்றோர்க்கு எங்கள் பெண்ணைக் கொடுப்போம்
மாறாட்டக்காரருக்கு வீறாப்பாய்த் திரிவோம்
புங்கமுடன் கிறிஸ்தவர்க்கு மலைகள் எல்லாம் கொடுப்போம்
புகழ் பெறு பெத்லேகம் எங்கள் புதுமை மலை அம்மே

#378
பெண்ணான பாப்பு என்ற வேசியும்தான் அம்மே
பெரியோனின் பேரை வைத்து விபசாரி ஆனாள்
வண்ணம் இதால் ஞான மணவாளனுக்குச் சீயோன்
மகள்-தனையும் கலியாணமாய் முடித்துக் கொடுத்தோம்
திண்ணமுடன் புது எருசலேம் மலையும் மற்றத்
தேசமதின் மலைகள் எல்லாம் சீதனமாய்க் கொடுத்தோம்
நிண்ணயமாய் இளையவட்குக் கொங்கை இன்னம் இல்லை
நீடு பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே

@26 நாட்டு வளம்
**விருத்தம்

#379
சாத்திர வளம் மறை காட்டும் கோத்திரை வளம் புவன உண்டை தானே காட்டும்
தோத்திர வளம் மொழி காட்டும் போத்திர வளம் சங்கீதம் சூட்டும் யூதர்
கோத்திர வளம் நாளாகமம் காட்டும் சுவிசேடம் குறையும் காட்டும்
சூத்திர வளம் பெத்தலேம் நாட்டு வளம் பாட்டு வளம் சொல்லுவாயே
** நன்னனா நன்ன நானன்ன நானன்ன
** நானனா நன்ன நானன நான

#380
ஆதியில் அதம் செய் வினை தீர்க்க அனாதியான் ஒரு ரட்சகன் தன்னை
நீதியாய்த் தருவோம் என்று சொன்ன நெறியினை நிறைவேற்றுதற்காக
மாது மா மரியாளிடமாகவே வானவன் மனுடன் உருவாக
வேத ஓசை முழங்கிட வந்து அருள் வித்தகன் வெல்லை நாடு எங்கள் நாடே

#381
சால ஆபிரகாம் முனியோடு தயாபரன் சொன்ன வாக்குத்தத்தத்தின்
பாலும் தேன் அதி ஓடியதான பண்புறும் கானான் தேசத்தை முற்றும்
வால் அருள் மகர்க்கு ஈவம் என்று ஓதிய வாய்மையாம் அந்த யூதேயாத் தேசம்
மேலுள் மேவிய பெத்லகேம் என்ற வேதனார் வெல்லை நாடு எங்கள் நாடே

#382
யூதேயாவில் அறச் சின்னதாகிய யோகமே நிறை மா பெத்லகேமே
நீதியாய் இசறாவேலை ஆள்பவர் நீடி உன்னிடமாகப் பிறப்பார்
வேதமாம் எனத் தீர்க்கர்கள் ஓதின மேன்மையால் விடை மேவிய வீட்டில்
ஆதியான் அரனாகப் பிறந்த அதிசய வெல்லை நாடு எங்கள் நாடே

#383
என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி எழும்புவான் என மோசேசு என்போன்
சொன்னதின்படி தாவீது அசனின் துய்யக் கோத்திரத்தின் அரசாகக்
கன்னி மா மரியாளிடமாகக் கருணையாளன் மனு உருவாகப்
பொன்னுலோகர் கொண்டாடிட வந்து அருள் புண்ணியன் வெல்லை நாடு எங்கள் நாடே

#384
தேவ பூமிக்கு முன்பு உள்ள நாடு தெய்வ தூதருக்கு அன்பு உள்ள நாடு
நாவலோர் புகழ் பாடிய நாடு ஞானிமார்கள் கொண்டாடிய நாடு
மேவியே வளர்ந்து ஓங்கிய நாடு வேடமானது நீங்கிய நாடு
பாவமே பறந்தோடிய நாடு பராபரன் வெல்லை நாடு எங்கள் நாடே

#385
வார்த்தைப் பாட்டில் உண்டாகிய நாடு வாளநாடர் கண்டு ஏகிய நாடு
பாத்திபர் பணிந்து ஏத்திய நாடு பாவியோர் மனம் தேற்றிய நாடு
தோத்திரப் பதம் மிஞ்சிய நாடு சூழும் பேய்க் கணம் அஞ்சிய நாடு
சாத்திரர் வந்து தேடிய நாடு தயாபரன் வெல்லை நாடு எங்கள் நாடே

#386
வேதபாரகர் துதிக்கின்ற நாடு வேண தீர்க்கர் உதிக்கின்ற நாடு
மா தவப் பரிசேயர்கள் நாடு வாது சேர் சதுக்கேயர்கள் நாடு
ஓதும் லேவியர் சேனையின் நாடு உலாவும் ஆசாரியோர்களின் நாடு
நீதி சேரும் அப்போஸ்தலர் நாடு நேயனின் வெல்லை நாடு எங்கள் நாடே

#387
சொல்லக் காண்பது ஞான புராணம் துலங்கக் காண்பது சத்திய வேதம்
வெல்லக் காண்பது ஐம்பொறி மாய்கை மிதிக்கக் காண்பது பேயின் சிரத்தைப்
புல்லக் காண்பது விண் பெருமானை பொறுக்கக் காண்பது கண்ட குற்றத்தை
கொல்லக் காண்பது மூவாசை ஆனதைக் கொற்றவன் வெல்லை நாடு எங்கள் நாடே

#388
போற்றக் காண்பது ஒரு பரன்-தன்னைப் புகழக் காண்பது நித்திய வாழ்வை
ஆற்றக் காண்பது எளிமையுள்ளோரை அணைக்கக் காண்பது பாவிகள்-தன்னை
மாற்றக் காண்பது வெண் வஸ்திரங்கள் மதிக்கக் காண்பது ஏசுவின் நீதி
சாற்றக் காண்பது ஞான சங்கீதங்கள் தற்பரன் வெல்லை நாடு எங்கள் நாடே

#389
கற்கக் காண்பது நல் உபதேசம் கதிக்கக் காண்பது தானதர்மங்கள்
நிற்கக் காண்பது நல் நெறி மார்க்கம் நினைக்கக் காண்பது எண்ணின எண்ணம்
மக்கக் காண்பது பாப்புவின் வேதம் மடியக் காண்பது அக்கியான மார்க்கம்
சிக்கக் காண்பது தேவசகாயம் திருப்பரன் எல்லை நாடு எங்கள் நாடே

@27 தல வளம்
**விருத்தம்

#390
பரலோகம் பூலோகம் பாதாளத்துள்ளவரும் பணிந்து போற்றும்
நரலோகத்து அரசான மேசியா நாட்டு வளம் நவிலப் போமோ
சுரலோகத்து உற்ற சித்தத்து அடையாளம் உணர்ந்து அறிஞர் துதிக்க வந்த
வர லோக பெத்தலேம் திரிலோகத் தல மகிமை வழுத்துவாயே
** தெந்தேந்தினத் தெந்தேந்தினத் தெந்தேந்தினத் தினனா
** தினதேந்தினத் தினதேந்தினத் தினதேந்தினத் தினனா

#391
அர்ச்சீட்ட ஆபிரகாம் இரட்சகரின் நாளை
ஆசையுடன் காணத் தவசிருந்தது இந்தத் தலமே
நிச்சயமா யாக்கோபு வானத்தின் ஏணியினை
நித்திரையில் கண்டு மகிழ்ந்து எழுந்தது இந்தத் தலமே
உச்சிதமாய்த் தாவீது வேந்தன் உலகு எல்லாம்
ஓர் குடையில் ஆண்டு செங்கோல் செலுத்தினது இத் தலமே
பட்சமுடன் சிமியோனும் அன்னாள் என்பவளும்
பாலகனை ஏந்தி உரை பகர்ந்த தலம் அம்மே

#392
அயலை பிறாத்து ஆறோடும் ஏதனைப் போல் செழித்த
ஆச்சரிய யோர்தானின் பாய்ச்சல் இந்தத் தலமே
செயமான இசறாவேல் கோத்திரத்துக்கு எல்லாம்
செல்லு நித்திய உம்பளிக்கையாய்க் கொடுத்த தலமே
நயமாகப் பால் நதியும் தேன் நதியும் ஓடும்
நன்மை மிகும் கானானு தேயம் இந்தத் தலமே
சுயமாய் ஓர் முந்திரிகைக் குலையதனை இரு பேர்
தோள் மேலே சுமந்துகொண்டு போன தலம் அம்மே

#393
எண்ணிறந்த ஞானிகளும் தீர்க்கதரிசிகளும்
இருடிகளும் சித்தர்களும் பொருள் உரைத்த தலமே
விண்ணுலகுள்ளோரும் வந்து பணிந்தது இந்தத் தலமே
மெய்யான வேத முதல் முளைத்தது இந்தத் தலமே
மண்ணுலகை ஆண்டு அருளும் கோடான கோடி
மன்னவர்கள் பொன் கொடுத்து வணங்கினது இத் தலமே
உண்மையதாய் யொவான் முனிவன் கிறிஸ்துவின் முன் வந்து
யோர்தானில் தூதுசொன்ன தேவ தலம் அம்மே

#394
நாசரேத்து ஆண்டவனார் வாழ்ந்த தலம் அம்மே
நல் புதுமை முந்து தலம் கலிலேயாத்தான் அம்மே
தேசமதில் பலிசெய் தலம் ஏருசலேம் அம்மே
தேசிகனார் பாடுபட்டு மரித்த தலம் அம்மே
பேசரிய கற்பனையின் பெட்டி நின்ற தலமே
பெல சலமோன் ஆலையங்கள் கட்டிவைத்த தலமே
மேசியாவும் பிறந்த தலம் பெத்தலேகேம் அம்மே
மெய்யான தலம் இது விசேட தலம் அம்மே

#395
மான்களைப் போல் சப்பாணி துள்ளினது இத் தலமே
வாதை மிகு நொண்டி முடம் நிமிர்ந்தது இந்தத் தலமே
தீன் படரும் ரோகிகளும் பேய்பிடித்தபேரும்
செத்தவரும் குணமாகி எழுந்தது இந்தத் தலமே
மீன்பிடிப்போர் அறிவடைந்து தேர்ந்தது இந்தத் தலமே
மேலான பாஷைகளைப் பேசினது இத் தலமே
வான் கதிர் போல் குருடர்கட்குப் பார்வை தந்த தலமே
மகத்தான தலம் இதற்கு மகிமை மெத்த அம்மே

#396
ஊமையரும் வாய் திறந்து பாடினது இத் தலமே
ஒருக்காலும் கேளாதோர் கேள்வி பெற்ற தலமே
காமிகளும் உத்தமிகள் ஆனது இந்தத் தலமே
கள்ளன் அதிசேயமதாய்க் கதி சேர்ந்த தலமே
நேமியது வாய்காட்டாது அடங்கி நின்ற தலமே
நிருபனுட ஆவி சுடராக வந்த தலமே
சாமியவர் புறா ரூபம் ஆனது இந்தத் தலமே
சாற்றரிய அர்ச்சீட்ட தலம் இது காண் அம்மே

#397
கள்ளத்தீர்க்கதரிசி என்ற பாப்புவும்தான் அம்மே
கபடாக வருவன் என்று கடவுள் சொன்ன தலமே
உள்ள பத்துக் கொம்புளதும் ரண்டு கொம்புமான
உயர்ந்த வலு மிருகமது ஒன்றாகும் என்ற தலமே
வள்ளல் என்ற ஞான மணநாயகனை விட்டு
மறுமுகத்தை நோக்கத் தொழில் வருத்துவித்த வீம்புப்
பிள்ளையின் வேசித்தனத்தின் பணையமதைப் பெற்றுப்
பெரு நரகில் வீழ்வன் என்று பேசு தலம் அம்மே

#398
வேசித்தனப் பாத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு
வெறியெடுக்கக் குடித்து அலைந்து வெளியரங்கமாக
தாசியிலும் கேடாக விபசாரம்பண்ணிச்
சந்தியிலே போவர்கட்குப் பணையமது பொருந்தி
சீசீ என்று கண்டவர்கள் கேட்டவர்கள் ஏசச்
சேலை சற்றும் இல்லாமல் நிருவாணமாக
ரோசமற்று ஊரார்க்குப் பிள்ளைகளைப் பெற்ற
ரோமி குணப்பட்டாலும் கிருபைசெய்யும் தலமே

@28 மனுடகுமாரன் குல வளம்
**விருத்தம்

#399
வல் அறம் சேர் மலை வளமும் நாட்டுவளம் ஆனதையும் வகுத்தே மோட்ச
இல்லறம் சேர் புல்லணையின் தல வளத்தின் பெருமை எல்லாம் இயல்பாய்ச் சொன்னாய்
நல் அறம் சேர் ஞானம் மிகும் குறவஞ்சிக் கொடியே நீ நயத்தினாலே
சொல் அறம் சேர் பெத்லகேம் அரசனுட கிளை வளத்தைச் சொல்லுவாயே
** தினதேந்தினத் தினதேந்தினத் தினதேந்தினத் தின்னா
** தெந்தேந்தினத் தெந்தேந்தினத் தெந்தேந்தினத் தினனா

#400
பெத்தலெகேம் அரசனுட குலம் கேட்கில் அம்மே
பெரிய குலம் வானவர்க்கும் அரிய குலம் அம்மே
முத்தர்கட்கும் பத்தியுள்ள சித்தர்கட்கும் அம்மே
மோனம் மிகு ஞானிகட்கும் மேல் குலம் காண் அம்மே
சுற்றி வளர் இராச குல நேச குலம் அம்மே
சொல்லரிய வண்மை உள்ள தெய்வ குலம் அம்மே
கத்தனுக்காம் உரிய பரிசுத்த குலம் அம்மே
காரணனின் குலம் உரைக்க வாய் இலைக் காண் அம்மே

#401
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோப்பு என்போர்
அங்கிஷத்தில் உயர்ந்த யூதர் வங்கிஷம் காண் அம்மே
மா பிரிய மா இசரேல் சாதிகளை எல்லாம்
வல்லமையோடு ஆண்ட தவிது ஏந்தல் குலம் அம்மே
காபிரியேல் தூதன் அங்கு சொன்ன குலம் அம்மே
கன்னிகையின் வித்தான மன்னு குலம் அம்மே
பாவிகளை ஈடேற்ற வந்த குலம் அம்மே
பராபரனின் குலம் இதனைப் பகரவொண்ணாது அம்மே

#402
அரசனுடை முறைமைகளை விபரமுடன் சொல்ல
ஆர் அறிவார் அறிந்தவர்க்கு மயக்கம் உண்டும் அம்மே
வரம் மிகுந்த ஆபிரகாம் புத்திரன் காண் அம்மே
மற்றும் அவன் பிறக்கும் முன்னே இவன் இருந்தான் அம்மே
தரையில் உயிர் தாவீதின் புத்திரன் என்றாக்கால்
சாமி எந்தன் ஆண்டவன் என்று அவன் ஏன் சொன்னான் அம்மே
கருணை மரியம்மையுட புத்திரன் என்பதையும்
கத்தருட அடிமை என்ற கருத்தையும் பார் அம்மே

#403
அந்தம் உள யொவான் முனிவன்-தனக்கு இவனும் இளையோன்
ஆறு மாத்தைக்குப் பிறகு பிறந்தவன் காண் அம்மே
இந்த விதமானாலும் இவனுடைய பாத
இரட்சை தொடப் பாத்திரம் நான் இல்லை என்றான் அம்மே
வந்து முனியிடத்தில் இவன் தீட்சைபெற்றதாலே
மா தவனும் பாவி என்று கண்டது பார் அம்மே
சுந்தரம் சேர் தீட்சையினால் யொவான் குருவாச்சு அம்மே
துய்யவனும் யொவான்-தனக்குச் சுவாமி அல்லோ அம்மே

#404
நாசரேத்து ஆரார்கள் ஆண்டவனை அம்மே
நல்ல தச்சன் மகன் என்றது ஞாயமோதான் அம்மே
நேசனுக்கு யாக்கோபும் யோசேயும் சீமோன்
நீடும் யூதா என்றவர் சகோதர் காண் அம்மே
மாசணுகான்-தனக்கு இவர் சகோதரரே ஆனால்
மற்றும் அவன் சீடர் இவர் ஆவது எவ்வாறு அம்மே
பாசம் மிகும் சகோதரிகள் அவர்க்கு ஏது என் அம்மே
பராபரனுக்கு உற முறையார் பாரில் உண்டோ அம்மே

#405
மனுடனுட குமாரன் என்று சொன்னாக்கால் அம்மே
மனுஷருட வியாச்சியத்தை ஏற்றவன் காண் அம்மே
சனுவான தேவனுட குமாரன் என்றால் அம்மே
தற்பரனின் பாடுகட்குச் சங்கை உண்டும் அம்மே
இனிமையுள்ள சீடர்களின் குருவாக இருந்து
இவன் அவர்கள் கால்களையும் கழுவினன் காண் அம்மே
கனமுடைய யூதர்களின் ராசன் இவன் அம்மே
கள்ளனைப் போல் கட்டுண்டது கபடம் அல்லோ அம்மே

#406
செபதேயின் மைந்தன் யொவான் யாக்கோபின் தாயும்
சிறிய அன்னையா அதுவும் தீர்க்கம் அல்லோ அம்மே
தபமவனின் புத்திரர்கள் தம்பி அல்லோ வேணும்
தம்பிகட்குக் கேட்ட மனுத் தரக்கூடாது என்பானேன்
உபதேசம் சொல்கையிலே தேடிவந்தபேர்க்கே
உற்ற எந்தன் தாய் தமையர் ஆர் என்றது ஏன் அம்மே
பவமதனை இகழ்ந்தவர்கள் தேவனுடை சித்தம்
பணிவுடனே செய்வர்களோ அவர்கள் என்றான் அம்மே

#407
பத்தாவும் மணவாளி இருபேரும் கூடிப்
பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதா என்றால்
உற்ற இதினால் இவர் சகோதிரங்கள் ஆச்சே
ஓதி என் பெண்சாதி என்பது ஏது முறை அம்மே
மற்றும் அவர் கணவனுக்குத் தந்தையுமே ஆனால்
மனையவட்கு மாமன் அல்லோ மருமகளும் இவளே
கத்தனுட சுதன் இவட்குக் கொழுந்தன் அல்லோ வேணும்
கன்னி இவள் மனைவி என்ற காரணம் ஏது அம்மே

#408
உங்களைச் சகோதரர் என்று ஓதுவம் என்றானே
உரிய சபை மணவாளி ஆவது எவ்வாறு அம்மே
மங்களப் பராபரனின் சபை அவர்க்கு மனைவி
மைந்தனுக்கு மனைவி என்றால் வாய்மையதோ அம்மே
இங்கு உரைக்க முறைமை இன்னம் மெத்த உண்டும் அம்மே
எல்லவர்க்கும் பிடிபடுகாது என்பதைப் பார் அம்மே
அங்கு இவரைப் படைத்துவிட்ட முறைமையைப் பார்த்தாக்கால்
ஆண்ட பரன் தந்தை அல்லால் வேறு இலைக் காண் அம்மே

#409
திரியேக பராபரன் என்று ஓதின போது அம்மே
திரித்துவத்தில் இரண்டாம் ஆள் சுதன் அல்லவோ அம்மே
சருவேசன்-தனக்கு இவரும் சரியானதாலே
தந்தை அவர் தனையன் இவர் ஆவது எவ்வாறு அம்மே
நெறியுடனே மனுடன் உரு எடுத்ததினால் அம்மே
நேயனுக்கும் இவர்க்கும் இப்போ முறைகள் என்ன அம்மே
மறுபடி மூன்றாம் ஆளின் முறையினைத் தோண் அம்மே
மற்றும் இவர் ஒன்றான வகையையும் பார் அம்மே

#410
இசறாவேல் என்பவளும் யூதா என்பவளும்
இளையகுடியாள் ஒருத்தி மூத்தவள்தான் ஒருத்தி
நிசமாக இருவர்களும் விபசாரம்பண்ணி
நித்தியனை விட்டு முழு வேசிகளாய்ப் போனார்
வசையாக இவ்விதமாய் ரோமானு என்ற
மலைவேசி வெறியெடுத்த நாய் போலே திரிந்து
திசை-தோறும் கண்டவர்களோடே எல்லாம் போனாள்
சீயோனின் மகள் நாங்கள் தேவ கன்னி அம்மே

#411
ஆதியந்தமில்லானின் கிளை வளத்தைப் பார்த்தால்
அன்னை இல்லை தந்தை இல்லை யாரும் இல்லை அம்மே
சாதி என்ற பேரும் இல்லை ஊரும் இல்லை அம்மே
சனமும் இல்லை இனமும் இல்லைத் தனையும் இல்லை அம்மே
மாதருட மயக்கம் இல்லை ஆசை இல்லை அம்மே
மைத்துனமார் மாமன் என்ற வகையும் இல்லை அம்மே
ஓதுதற்குத் தங்கை இல்லை தம்பி இல்லை அம்மே
ஒன்றான பரன் குலத்தை உணர்ந்துகொள்ளும் அம்மே

#412
வானுலகோர் பூவுலகோர் பூமியின் கீழானோர்
மற்றுலகோரும் வணங்கும் மகத்துவ வஸ்து அம்மே
ஆன சிஷ்டி யாவுகட்கு முதல் பிறந்தோன் அம்மே
அம்புவியும் வானுலகும் அமைத்தவன் காண் அம்மே
ஊன் உடல் இலாத அசரீரி அவன் அம்மே
ஒப்பு உவமை இல்லாத முத்தொழிலோன் அம்மே
ஞானியர்கள் நாவலர்கள் விண்ணுலகோர் மண்ணோர்
நாவில் அடங்கா வேத நாயகன் காண் அம்மே

@29 கிறிஸ்தவரின் மகிமை
**விருத்தம்

#413
மானம் மிகும் பெத்லகேம் அரசனுட கிளை வளத்தின் மகிமை எல்லாம்
மோனம் மிகு நீ உரைத்த மொழி-தோறும் கண்டு உணர்ந்தேன் முறைமையாகத்
தானம் மிகும் விசுவாசக் குறவஞ்சி எனும் மேன்மைத் தையலே நீ
ஞானம் மிகும் சுவிசேடக் கிறிஸ்தவரின் மகிமை சற்று நவிலுவாயே
** தினதேந்தினத் தினதேந்தினத் தினதேந்தினத் தினனா
** தெந்தேந்தினத் தெந்தேந்தினத் தெந்தேந்தினத் தினனா

#414
சீர் மிகுத்த திரித்துவத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே
திரியேக பராபரனின் கிறிஸ்தவர்கள் அம்மே
நேர் மிகுத்த பத்து நெறிக் கிறிஸ்தவர்கள் அம்மே
நிலை ஞாயப்பிரமாணக் கிறிஸ்தவர்கள் அம்மே
ஏர் மிகுத்த வளம் பெருரும் கிறிஸ்தவர்கள் அம்மே
ஏசுநாதருக்கு உகந்த கிறிஸ்தவர்கள் அம்மே
பேர் மிகுத்த சத்திய மறைக் கிறிஸ்தவர்கள் அம்மே
பெருமை பெறும் சுவிசேடக் கிறிஸ்தவர்கள் அம்மே

#415
வேதம் எல்லாம் உணர்ந்து அறிந்த கிறிஸ்தவர்கள் அம்மே
மேலான பாதை கண்ட கிறிஸ்தவர்கள் அம்மே
நீதமுடன் நடந்துவரும் கிறிஸ்தவர்கள் அம்மே
நித்தியசீவனில் ஏகும் கிறிஸ்தவர்கள் அம்மே
போதகம் சேர் நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே
புத்தியுற்ற கன்னியராம் கிறிஸ்தவர்கள் அம்மே
பேதம் இல்லாச் சினேகிதத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே
பெருமை பெறும் சுவிசேடக் கிறிஸ்தவர்கள் அம்மே

#416
மந்திர செப முறைமை தப்பாக் கிறிஸ்தவர்கள் அம்மே
வாதிடும் பேய்க் கணத்தை வென்ற கிறிஸ்தவர்கள் அம்மே
சுந்தரம் சேர் வானாட்டுக் கிறிஸ்தவர்கள் அம்மே
சொன்ன மொழி தவறாத கிறிஸ்தவர்கள் அம்மே
தந்திரம் சேர் மாலம் இல்லாக் கிறிஸ்தவர்கள் அம்மே
தவசு விசுவாச மனக் கிறிஸ்தவர்கள் அம்மே
அந்தர பரமண்டலத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே
அருமை பெறும் சுவிசேடக் கிறிஸ்தவர்கள் அம்மே

#417
சத்திய வேதம் சிறந்த கிறிஸ்தவர்கள் அம்மே
சன்மார்க்க விளக்கமுற்ற கிறிஸ்தவர்கள் அம்மே
பத்தி மிகும் பரிசுத்த கிறிஸ்தவர்கள் அம்மே
பராபரனின் பிள்ளைகளாம் கிறிஸ்தவர்கள் அம்மே
முத்தி தரும் வழி அடைந்த கிறிஸ்தவர்கள் அம்மே
மூன்று ஆசை-தனைக் கடந்த கிறிஸ்தவர்கள் அம்மே
பெத்தரிக்கம் பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே
பெருமை பெறும் சுவிசேடக் கிறிஸ்தவர்கள் அம்மே

#418
வாசம் மிகும் பெத்லகேம் கிறிஸ்தவர்கள் அம்மே
வஞ்சகர்க்கும் தயவுசெய்யும் கிறிஸ்தவர்கள் அம்மே
நேசம் மிகும் சற்குணராம் கிறிஸ்தவர்கள் அம்மே
நீதி தரும் பரம சுதன் கிறிஸ்தவர்கள் அம்மே
தேசம் எங்கும் பேரெடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே
செய் கருமம் அறிந்து செய்யும் கிறிஸ்தவர்கள் அம்மே
பேசரிய வேதாந்தக் கிறிஸ்தவர்கள் அம்மே
பெருமை பெறும் சுவிசேடக் கிறிஸ்தவர்கள் அம்மே

#419
இன்பம் வந்தும் ஒரு நிலையாம் கிறிஸ்தவர்கள் அம்மே
எட்டாம் நாள் தீட்சைபெற்ற கிறிஸ்தவர்கள் அம்மே
துன்பம் வந்தும் உறுதிகொண்ட கிறிஸ்தவர்கள் அம்மே
துயர் சூழ்ந்தும் கலங்காத கிறிஸ்தவர்கள் அம்மே
வன்பு கொண்டு மயங்காத கிறிஸ்தவர்கள் அம்மே
வாக்குத்தத்தத்தினுடைய கிறிஸ்தவர்கள் அம்மே
பின் புறணி பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே
பெருமை பெறும் சுவிசேடக் கிறிஸ்தவர்கள் அம்மே

#420
அக்கியானச் சடங்கு அறுத்த கிறிஸ்தவர்கள் அம்மே
ஆசை எல்லாம் விட்டொழிந்த கிறிஸ்தவர்கள் அம்மே
மிக்கான வரம் உடைய கிறிஸ்தவர்கள் அம்மே
வெகுவான பாஷை கற்ற கிறிஸ்தவர்கள் அம்மே
பொய்க்கு ஆனர் உறவு அகன்ற கிறிஸ்தவர்கள் அம்மே
பொறுமை மிகு மனத்தாழ்மைக் கிறிஸ்தவர்கள் அம்மே
பிக்கானது ஒன்றும் இலாக் கிறிஸ்தவர்கள் அம்மே
பெருமை பெறும் சுவிசேடக் கிறிஸ்தவர்கள் அம்மே

#421
வெள்ளை நிலைத் துகில் உடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே
விண்ணுலகின் விருது உடைய கிறிஸ்தவர்கள் அம்மே
வள்ளலுக்கா மணமாலைக் கிறிஸ்தவர்கள் அம்மே
மாறாத செல்வம் உள்ள கிறிஸ்தவர்கள் அம்மே
விள்ளரிய திருவசனக் கிறிஸ்தவர்கள் அம்மே
மீறாத கற்பனையின் கிறிஸ்தவர்கள் அம்மே
பிள்ளைகளுக்கு அறிவு உணர்த்தும் கிறிஸ்தவர்கள் அம்மே
பெருமை பெறும் சுவிசேடக் கிறிஸ்தவர்கள் அம்மே

#422
நல்லவர்கள் நாங்கள் என்ற கிறிஸ்தவர்கள் அம்மே
நாலும் வர நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே
வல்லமையின் வல பாகக் கிறிஸ்தவர்கள் அம்மே
மனுடர்களைத் தொழுகாத கிறிஸ்தவர்கள் அம்மே
சொல்லரிய வண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அம்மே
துல்லிபம் சேர் கற்பின் எழும் கிறிஸ்தவர்கள் அம்மே
அல்லல் அற்று வாழ்ந்திருக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே
அருமை பெறும் சுவிசேடக் கிறிஸ்தவர்கள் அம்மே

#423
நன்றி அறிந்தே நடக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே
நாள்-தோறும் புகழ் படைத்த கிறிஸ்தவர்கள் அம்மே
பன்றிகள் முன் முத்து எறியாக் கிறிஸ்தவர்கள் அம்மே
பழைய ஏற்பாட்டு ஆகமம் சேர் கிறிஸ்தவர்கள் அம்மே
வென்றி தரும் பரன் சிலுவைக் கிறிஸ்தவர்கள் அம்மே
வித்தகம் சேர் செபமாலைக் கிறிஸ்தவர்கள் அம்மே
பின் திரும்பி முகம் நோக்காக் கிறிஸ்தவர்கள் அம்மே
பெருமை பெறும் சுவிசேடக் கிறிஸ்தவர்கள் அம்மே

#424
சதிராக வாழ்ந்திருக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே
சாத்திரம் பார்த்து அலையாத கிறிஸ்தவர்கள் அம்மே
முது ஞானத் திரவியத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே
மோசேசுக்கு அடங்காத கிறிஸ்தவர்கள் அம்மே
பதறாத மனம் உடைய கிறிஸ்தவர்கள் அம்மே
பாப்புவுக்கும் தீர்வையிடும் கிறிஸ்தவர்கள் அம்மே
எதிராளிக்கு அதிரான கிறிஸ்தவர்கள் அம்மே
எழிலான சுவிசேடக் கிறிஸ்தவர்கள் அம்மே

#425
வாய்களுக்குப் பூட்டுவைத்த கிறிஸ்தவர்கள் அம்மே
வலியோனின் சலுகை கொண்ட கிறிஸ்தவர்கள் அம்மே
நாய்களுட வாயடைக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே
நாதாந்தமாய்ப் பேசும் கிறிஸ்தவர்கள் அம்மே
தீய்களுக்கும் அஞ்சாத கிறிஸ்தவர்கள் அம்மே
சிலை ரோமி-தனை அழிக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே
பேய்களைச் சங்கரித்தவரின் கிறிஸ்தவர்கள் அம்மே
பெருமை பெறும் சுவிசேடக் கிறிஸ்தவர்கள் அம்மே

@30 வாசல் வளம்
**விருத்தம்

#426
பொன்னகர் ஒன்று இணை அலது வேறு இலை என்று ஓங்கு பெத்லேம் புதுமை நாட்டில்
மன்னவனாம் சலமோனும் பின்னாளில் எசுவாவும் வகுத்தே வைத்த
உன்னதம் சேர் எருசலேம் பட்டணச் சீயோன் மலை மேல் ஓங்கு கோவில்
சன்னதி வாசலின் வளத்தை நன்னயமாய் எந்தனுக்குச் சாற்றுவாயே
** நானநன்னநன்ன நானநன்னநன்ன நானநன்னநன்ன நானநன்ன
** நானநன்னநானநன்ன நானநன்னநானநன்ன நானநன்னநானநன்ன நானநன்ன

#427
வாசல் இது பெண்ணே வாசல் இது ஏசு மகராசராசனின் வாசல் இது
மான பரன் தவிது மோன சுதன் சலமோன் ஞான பரன் துதிக்கும் வாசல் இது
தேசு திகழ் கேராபீனும் சேராபீமும் நிற்கும் வாசல் இது
தேவ பரன் மகிமை மேவி முகிலின் உடை தாவி நிறைந்திருக்கும் வாசல் இது

#428
இசராவேல் சாதி எல்லாம் இரைந்து செல்லும் வாசல் இது
இலேபித்தமார்கள் எல்லாம் தாபித்து மந்திர செபம் சேவித்துப் பண்புசெயும் வாசல் இது
திசை மேவும் மன்னர் மன்னர் தெரிசனம் செய் வாசல் இது
தேசத்து இராசாத்தி நேசித்துக் காணிக்கை கொண்டு ஆசித்துப் போற்ற வரும் வாசல் இது

#429
பரிசேயருடன் வேதபாரகர் கூடிய வாசல் இது
பாரித்த ஞாயங்கள் விசாரித்துத் தர்க்கமிட்டுப் பூரித்து அகம் மகிழும் வாசல் இது
வரிசையுடன் சதுக்கேயர் வணங்கி நிற்கும் வாசல் இது
மா திட்டமாய் மறையை வாதிட்டு உரைத்த சொல்லைக் காதிட்டுக் கேட்டிருக்கும் வாசல் இது

#430
ஆசாரிமார் ஆசாரமா அர்ச்சனைசெய் வாசல் இது
ஆரியரும் பெலத்தின் வீரியரும் உயர்ந்த சீரியரும் தொழுகும் வாசல் இது
பூசாரிமார் தேசாதிபர் பூசைசெயும் திரு வாசல் இது
பூரண ஞானியர்கள் காரணமாகவே தாரணங்களைச் சொல்லும் வாசல் இது

#431
சங்கீதம் சொல் பாட்டகரின் சபை நிறைந்த வாசல் இது
தாளங்களும் சித்திரக் கிண்ணாரங்களும் பெரும் எக்காளங்களும் முழங்கும் வாசல் இது
மங்களம் சேர் கவிராயர் மகிழ்ந்து இருக்கும் வாசல் இது
மண்டலாபதிர் எல்லாம் கண்டு தெரிசனைசெய்து தெண்டனிட்டு அடி தொழுகும் வாசல் இது

#432
பேசரிய தீர்க்கர்களும் பெரியோர்களும் வரும் வாசல் இது
பேரிகையும் முழங்கப் பூரிகையும் விளங்க காரிகைமார் நடம்செய் வாசல் இது
வாச மட மாதர் நடம் ஆடி வரும் வாசல் இது
வாத்தியங்களும் சங்கீர்த்தனங்களும் நித்திய தோத்திரங்களும் பெருகும் வாசல் இது

#433
வழக்குரைத்து ஆணையிட்டுச் சத்தியம் வாங்கி நிற்கும் வாசல் இது
மறு தேசம் மீது எங்கும் சிறையாகிப்போனவர் நிரையாய்த் திரும்பிவரும் வாசல் இது
அழுக்கான பாவிகளும் அக்கியானிகளும் வரும் வாசல் இது
ஆதரவு_இல்லாதவர்க்கும் வேதனையுளானவர்க்கும் யாவருக்கும் நீதிசெய்யும் வாசல் இது

#434
தாரணியின் சாதி எல்லாம் பலிதந்து தொழும் வாசல் இது
சாஸ்திரிகளும் கன்னியாஸ்திரிகளும் இஸ்தோத்திரிகளும் பெருகும் வாசல் இது
சீர் அணியும் பல கோடி தமிழ் செப்பும் வளமை பெறும் வாசல் இது
தேவசகாய வேதநாயகன் கவிக்கு அருள் தேவ சுதன் வருகும் வாசல் இது

#435
அன்னாளும் சிமியோனும் ஏசு ஐயனை ஏந்திய வாசல் இது
ஆண்டவன் உலகை எல்லாம் மீண்டவன் உயர் பனிரண்டு ஆண்டதனில் தர்க்கமிடும் வாசல் இது
கன்னி மரி யோசேப்பும் கர்த்தனைத் தேடிவரும் வாசல் இது
காசுப் பலகைகளை ஓசைபடப் புரட்டி வீசித் துரத்துகின்ற வாசல் இது

#436
ஆயக்காரன் பரிசேயன் வாதாடிச் செபஞ்செய்த வாசல் இது
ஆகமத்தினோடே கிருபாசனத்தினாலும் நீச வாகனத்தில் ஏறி வரும் வாசல் இது
மாயக்கார வேசிக் கள்ளர் மறுபிறப்பாம் வாசல் இது
வழியும் சத்தியம் சீவன் உழையும் நெருக்கம் என்ற வழுவது அன்றிய மோட்ச வாசல் இது

#437
ஆச்சரிய மோட்சவாசிகளின் பல அற்புதம் சேர்த் திரு வாசல் இது
ஆவி அக்கினிச் சுடராகச் சீடர் சிரத்தில் மேவி நிறைந்து இருந்த வாசல் இது
காட்சி தரும் தீட்சைபெற்று நற்கருணை பெற்றுவரும் வாசல் இது
கத்தனை மனத்தினில் அழுத்தியே நினைத்து உருகும் உத்தம கிறிஸ்தவரின் வாசல் இது

#438
புகலரும் ஈராறு புதுமை எருசலேம் வாசல் இது
புண்ணிய சம்மனசோர்கள் அண்ணலைத் துதித்து இறைஞ்சி விண்ணுலகுக்கு ஏகிய வாசல் இது
சகல தூஷணப் பாப்பும் தன் தலைகாட்டப் போகாத வாசல் இது
சத்திய சாட்சிகளை மெத்தவும் கொன்ற அவன் இரத்தப் பழிவாங்கும் வாசல் இது

@31 தேச வளம்
**விருத்தம்

#439
மோசையினைப் பார்வோனின் இடத்து அனுப்பி இசரேலை முழுதும் மீட்ட
ஈசன் அருள் சேர் தேவ சன்னதியின் வாசல் வளம் எல்லாம் சொன்னாய்
மாசணுகாப் பெத்லகேம் ராசனுட கிருபையினால் வரும் யக்கோப்பின்
நேச மகர் ஆறிருவர் தேச வளம் அத்தனையும் நிகழ்த்துவாயே
** தானானே தானானே தானாதந்தனத் தானானே

#440
செப்புகிறேன் நான் அறிந்த தேசம் எல்லாம் கேளும் இன்னே
ஒப்பரிய கிறிஸ்து அரசன் உயர்ந்த பெத்தலேம் நாட்டினிலே

#441
உன்னதம் சேர் யூதர் குலத்து உயர்ந்த இசராவேலின்
பன்னிரண்டு புத்திரர்க்குப் பகிர்ந்த தேசம் எல்லாம் அறிவேன்

#442
மகிழ் கானான் தேசம் என்றும் வார்த்தைப் பாட்டுத் தேசம் என்றும்
யுக இசரேல் தேசம் என்றும் யூதேயாத் தேசம் என்றும்

#443
அர்ச்சீட்ட தேசம் என்றும் ஆம் பலஸ்தினாத் தேசம் என்றும்
நிச்சயமாய்ச் சொல்லிவரும் நேர்மையுள்ள தேசமதில்

#444
யூதேயாச் சாமாரியா உயர் கலிலேயாப் பேரேயா
யூதேயா நாட்டினிலே ஓங்கு கோத்திரம் நாலது உண்டு

#445
யூதாவும் சீமேயோனும் உறு தாணும் பென்யமீனும்
யூதாவில் எருசலேம் பெத்தானிய பெத்தலேம் கேப்புறோனாம்

#446
சீமேயோனிலே பெர்சேபாவும் சிக்லாகும் அஸ்கலோனும்
நாமம் மிகு காசாவும் நாலு நகர் ஆனதுவாம்

#447
தானிலே பெத்சேமேசும் சனுவான காத் எனவும்
ஆன யோயோத்பே எனவும் அணி நகர் மூன்று அங்கு உளதாம்

#448
பென்யமீனில் எரிகோவும் பெற்பகேயும் ஆயாவும்
மெஞ்ஞானப் பேத்தல்கீபேயா ராமா கீபேயோன் இகல் பெத்தறோன்

#449
சாமாரியாத் தேசமதில் சார்ந்தது ஒன்றரைக் கொத்திரம் தான்
வாம எபிராயீம் மனாசேயின் அரை வங்கிஷம்தான்

#450
சால எபிராயிமிலே பேத்தல் சமாரியா கரிசீம்
சீலோவா எபிராயிம் என்ற திரு நகர் ஐந்தும் அறிவேன்

#451
மனாசே முன் பாதியினில் வளரும் ஒகித்தோய் அறிவேன்
சனம் மேவும் ஏந்தராவும் சாலேமும் தான் அறிவேன்

#452
கலிலேயாத் தேசமதில் கன கோத்திரம் நாலது உண்டு
நலியா ஈசஷார் சேபுலோன் ஆசேர் நப்தலியாம்

#453
ஈசஷாரில் ஈலீசஷாரும் இசராவேலும் பெத்சே மீசும்
ஆசை கற்மேல் நாயின் ஏர்மோன் ஆறு பட்டணம் தான் அறிவேன்

#454
சேபுலோனில் தீபேரியா பெத்சாயிதா சேர் பெத்தலேம்
தாபோரு நாசரேத்துத் தரும கானான் பதி அறிவேன்

#455
ஆசேரில் தீரு சரேப்பத்தா சீதோன் அறிந்திருப்பேன்
நேசது இல்லா ஏனோக்கும் காத்தும் என் ஞாபகத்தில் உண்டு

#456
நப்தலியின் அபத்தலியு நல் கிறிஸ்தின் பருபதமும்
தபத்தின் மிகு கப்பர்நாகூம் தான் அலது சேசாரியா

#457
நாலாவது பேரேயாவில் இரண்டரைக் கோத்திரமது உண்டு
சீல மனாசேயில் பாதி திகழ் காத்தும் ரூபனும்தான்

#458
மனாசேயின் பாதியினில் வரும் அஸ்தரோத்துடன் கேதர்
அனாதி பாசான் கோராசீன் யாப்புஸ்பெல்லா அறிவேன்

#459
காத்திலே மிச்சிப்பாவும் கல் மனாயிம் பினியேல்
சாத்திரமாய்ச் சுக்கோத்தும் சதுர்ப் பட்டணம் யான் அறிவேன்

#460
ருபேனில் ஏஸ்ப்போனும் நுண்மை மிகும் தேபேயும்
கூபம் உறு சீத்திமும் கொழு நகர்மூன்றும் அறிவேன்

#461
இப்படியே ஐரோப்பா எழில் ஆசியா ஆபிரிக்காத்
தப்பாமல் ஆமேரிக்கா சதுர்ப் பங்கு தேசமும் அறிவேன்

#462
இத்தாலியத் தேசமதில் ஏழு மலை மேல் இருக்கும்
பத்துக் கொம்பு மிருகம் வளர் பாபல் ரோமை யான் அறிவேன்

#463
எத்தன் முழுப் பெத்தரிக்க இரண்டு கொம்பு மிருகம் எனும்
சத்துருப் பாப்பு இருக்கும் அந்தத் தானம் எல்லாம் அறிந்திருப்பேன்

@32 விடுகதை
**விருத்தம்

#464
தாரகையைச் சிரத்து அணிந்து சந்திரனைப் பதத்து அணிந்து தயை சேர் ஞானச்
சூரியனை ஆடை என இடைக்கு அணிந்த சீயோனின் தோகை நல்லாள்
வீரியமாய் விடுகதைகள் சிலது உரைப்பேன் என் முன் அதை விளக்கமாகச்
சீர் உயரும் பெத்தலேம் மலைக் குறவஞ்சிக் கொடியே செப்பு என்றாளே
** நன்னநன்ன நானநன்ன நானநன்ன நானநன்ன நானாநன்ன
** நானன நானன நானன நானன நானன நானன நானன நானன நானா

#465
மகிமையுடன் நீச மறி வாகனத்தில் வந்தது எவர் வஞ்சி இம்
மானுவேல் மேசியா வானுலகத்து இறையானவராம் உனின் ஞானமணன் அபரஞ்சி
தகமை மிகும் சாமி-தனைச் சம்மனசு தேற்றுவது ஏன் வஞ்சி நரர்
சாபத்தினால் தேவ கோபத்தில் மூழ்கிய ஆபத்திலே பிரலாபித்ததாம் அபரஞ்சி

#466
அதிசயமதானவர் என்று ஆண்டகைக்கு நாமம் என்ன வஞ்சி மெய்
யான தேவனும் மெய்யான மனுஷனும் ஆனதினால் அபிதானம் இது ஆச்சு அபரஞ்சி
சதிராக வெள்ளை நிலை அங்கி-தனைத் தரித்தவர் ஆர் வஞ்சி தேவ
சத்திய மறைக்கு அருள் பெத்தலேகேம் பதிக்கு உத்த அரசனாம் நித்திய கிறிஸ்து அபரஞ்சி

#467
தையல் இல்லாதவன்-தனக்குத் தையல் இல்லா அங்கியது ஏன் வஞ்சி உயர்
தாஷ்டிகத் தாவீது மேட்டிமையாய்ப் பீலி போட்டார்கள் என்ற சொல் காட்டிடத்தான் அபரஞ்சி
செய்ய சுதன் சிலுவையினில் சேலையற்று நிற்பதும் ஏன் வஞ்சி திருச்
சித்தமதாய்ப் பரிசுத்தர்க்கு நீதியின் வஸ்திரத்தைத் தர மெத்த நினைத்து அபரஞ்சி

#468
பத்தி லக்கணத்தை விடான் பத்து இலக்கணத்தை விட்டான் வஞ்சி கெட்ட
பன்றிக் குணப் பிசாசு அன்றைக்கு அமலனைப் பன்றிக்குள்ளே விட மன்றாடிற்றே அபரஞ்சி
சத்தியத்தில் நிற்பவரும் சத்தி அற்று நிற்பது என்ன வஞ்சி செயல்
தங்கு உலகத்தை மூன்று அங்குலியில் கொண்ட துங்கன் மூன்று ஆணியில்
தொங்கலையோ அபரஞ்சி

#469
அஞ்சு குறிப் பட்டவர்க்கு அஞ்சுகைப்பட்டு இருப்பது என்ன வஞ்சி பேய்க்கு
அஞ்சுதலை உடைத்து ஆறுதலை விடுத்து ஆட்டிகளை மணம் சூட்டினதால் அபரஞ்சி
பஞ்சகத்தைப் படையாதோன் பஞ்சகத்தைப் படைத்தது என்ன வஞ்சி கன
பரிசுத்த முத்தர்கள் ஆவி வரிசித்த கத்தனை நாளும் தெரிசித்து நித்திய காலம் கரிசித்து
வாழ்ந்திருக்க அபரஞ்சி

#470
அல்லேலூயா ஓசனா என்று அருளின சொற்கு அர்த்தம் என்ன வஞ்சி கத்
தாவின் நாமத்து உறு தேவகுமாரனை மேவித் துதியும் என்று ஏவித்த சொல் அபரஞ்சி
வல்லவனும் அல்பா ஒமேகா நாம் என்றது என்ன வஞ்சி எல்லா
வஸ்துவுக்கும் துவக்கம் முடிவு ஆன தன் நித்திய திரித்துவ மகத்துவத்தால் அபரஞ்சி

#471
ஏழு என்ற சொற்கு என்ன மா நாள் என்ற சொற்கு என்ன அர்த்தம் வஞ்சி ஏழு
என்று இலக்கம் குறை அன்றிய மா நாள் என்றது ஆயிரம் சென்ற ஆண்டாம் அபரஞ்சி
பாழ் எனும் துற்சற்பம் என்று பிசாசுக்குப் பேர் வந்தது என்ன வஞ்சி அது
பாம்பின் உருவம் கொண்டு ஓம்பி மனுக்களைத் தீம்புசெய்த வினைக்காம் புகலாய் அபரஞ்சி

#472
மிருகம் என்றும் வேசி என்றும் விளம்பின சொல் ஆரை அடி வஞ்சி முழு
வேதப் புரட்டனாம் தீதுற்ற ரோமையின் பாதகப் பாப்புவைச் சாதித்த சொல் அபரஞ்சி
திருடன் அந்திக்கிறிஸ்து கள்ளத்தெரிசி என்ற பேர் எவர்க்கு வஞ்சி முன்
செப்பின ரோமையின் தப்பிதப் பாப்புவுக்கு ஒப்பிடக் கோடி பேர் இப்படி உண்டு அபரஞ்சி

@33 வித்தை வளம்
**விருத்தம்

#473
வானவர் துதிக்கும் பெத்லேம் மன்னவன் கிருபையாலே
நான் உனக்கு உரைத்த வேத நல் கதைப் பயனை எல்லாம்
மோனமாய் விடுவித்தாய் உன் முக்கிய பரம வித்தை
ஆனதை விரித்துச் சொல்லாய் அருள் குறவஞ்சி மின்னே
**சிந்து

#474
வித்தகச் சீயோன் குமாரத்தி யான் கற்ற
வித்தையைச் சொல்கிறேன் கேளாய் உயர்

#475
சத்திய வேதம் தரும் கிறிஸ்து ஏசு
சாமி வரும் பெத்தலேகம் நல் நாட்டினில்

#476
சீசேராவைச் சுத்தியால் கொன்ற யாகேலின் சித்திர வித்தையது அறிவேன் அன்று
பேசாமல் ரூத்து என்பவள் போவாசைக் கூடப் பேணின வித்தையும் அறிவேன் மிகு
வேசாறலாய் மலடி அன்னாளும் சாமுவேலைப் பெற்ற வித்தை அறிவேன் சற்றும்
கூசாமல் லோத்தின் மக்கள் செய்த வித்தையில் கூட்டு வித்தையும் உண்டு அம்மே

#477
ஒட்டகக் கல்லணைக்குள் சுரூபத்தை ஒளித்தவள் வித்தையும் அறிவேன் புள்ளிக்
குட்டிகளாய்ப் போட ராகேல் புருடன் செய் கோரணி வித்தையும் அறிவேன் அதி
நட்டணையாகவே ஆட்களைக் காத்திட்ட ராகாப்பின் வித்தையும் அறிவேன் மிகு
திட்டமாய்த் தீர்க்கதெரிசனம் சொல்லவே தேப்போராள் வித்தை உண்டு அம்மே

#478
ஆமோனைத் தூக்கினில் போடப்பண்ணும் எஸ்தரானவள் வித்தையும் தெரியும் நல்
தாமார் என்பவளும் யூதாவை ஏய்த்துச் செய் தந்திர வித்தையும் தெரியும் தன்
கோமானைத் தப்பவிட்டு ஆட்டுத்தோலை மஞ்சம் கூட்டினாள் வித்தையும் தெரியும் ஒரு
சீமாட்டி தன் பிள்ளை ஏழுக்கும் சொன்ன திறமும் தெரியும் என் அம்மே

#479
கானான் இஸ்திரி பேச்சிட்டுத் தர்க்கித்துக் கட்டின வித்தையும் தெரியும் பல
மானார் சிலுவை சுமந்தவன் பேச மறுகி அழும் வித்தை தெரியும் என்றும்
தானானவனை அபிஷேகித்துப் பெயர் தக்குவித்தாள் வித்தை தெரியும் இ
தானாலும் அன்னாள் எலிசப்பேத்தம்மன் அதிசயம் மெத்த என் அம்மே

#480
தோட்டக்காரன் என்று கத்தனைக் கூப்பிட்டுச் சொல்ல ஒரு வித்தை உண்டு ஞானப்
பாட்டுகள் பாடிக் கெம்பீரிக்க மீரியாம் பாடலின் வித்தையும் உண்டு மகா
மேட்டிமையாய்ச் சூசன்னாள் கற்பைக் காத்த வினோத வித்தை மிக உண்டு இன்ன
மாட்டுக்குடிலில் பிறந்தோனைக் கைக்குள்ளே வைக்க மருந்தும் உண்டு அம்மே

#481
இரண்டு பெயரெனும் மூவரேனும் கூட்டி நாதனையும் வரவழைப்பேன் அவர்
அண்டையில் லாசருவின் தங்கை போல் இருந்து அற்புதம் செய்விக்கச் செய்வேன் ஐந்து
வண்டப் புருடரை வைத்துக் கிணற்றுக்கு வந்தவள் மாயமும் புரிவேன் முன்
பண்டு மகதலாவூர் மரியாள் செய்த பாசாங்கும் கற்றன் அடி அம்மே

#482
பாப்புவின் தாலி அறுபட்டுப்போக பலபல வித்தைகள் உண்டு சவை
மூப்பரைக் கூட்டி வழக்கிட்டு வேசையை மொட்டையடிப்பதும் உண்டு செய்த
தீர்ப்புக்கு எதிர்த்திடில் ரோமியை மானுவேல் தேசம் விட்டு ஓட்டவும் விண்டு சற்றும்
மாப்புச் செய்யாமல் நரகக் குழிக்கு இரைவைக்க வலதும் உண்டு அம்மே

@34 குறி வளம்
**விருத்தம்

#483
நால் திசை புகழும் பெத்லேம் நாட்டில் உன் வித்தை எல்லாம்
ஏற்றியே மகிழ்ந்து சொன்ன எழில் குறவஞ்சி கேளாய்
மாற்றம் இல்லாத கன்னிமார்களுக்கு இயம்பும் உந்தன்
தோற்றும் நல் குறியின் மார்க்கம் துணிவுடன் சொல்லுவாயே
**சிந்து

#484
விச்சித்திரம் என் குறி அம்மே பன்னிரு
நட்சத்திரம் பூண்ட நராதிபப் பெண்ணே

#485
அச்சய தேசமதான யோர்தான் ஆறோடும் கானானு தேசமது எங்கும்
நிச்சயமாய்க் குறி சொல்லி நான் பெற்ற நேரான விருதுகள் பாராய் நீ அம்மே

#486
முன் நாளில் எகிப்பத்துத் தேயம்-தன்னை முக்கியமாய் ஆண்ட பார்வோனு என்ற
மன்னோனிடத்தினில் சென்று அவன் மந்திரியாக இருந்துகொண்டு அன்று
தென்னரும் யாக்கோப்புத் தீர்க்கன் அருளிய தேசிகன் ஆகிய யோசேப்புச் சிங்கன்
சொன்ன குறியதினாலே பெற்ற சுந்தர மோதிரம் இந்தா பார் அம்மே

#487
அன்பாக நேபுகாத்நேசர் என்ற அண்ணல் உலகினை ஆண்டு அருளும் நாளில்
வன்பாக சாஸ்திரிமார்கள் சொன்ன மாறாட்டக் குறி மெத்தப் போராட்டம் என்று
தென்பாக அவர்களை வெட்ட அந்தச் செய்தியைக் கேட்டு எங்கள் தானியேல் தீர்க்கன்
நண்பாக மெய்க் குறி சொல்லிப் பெற்ற ரத்தின சரப்பளி மெத்த உண்டு அம்மே

#488
எலியாசுத் தீர்க்கனின் நாளில் உலகு எங்கேயும் கடும் பஞ்சம் உண்டான போது
தொலையாத கவலையினாலே காட்டில் சுப்பி ஒடிக்க வந்த கைம்பெண்டீண்டை
மலையாதே எண்ணெயும் மாவும் இனி வற்றாது என்று அவன் உத்தாரம் சொல்லப்
பலகாரம் தோசைகள் சுட்டு அவள் படைத்துப் படைத்துக் குறி கேட்கலையோ அம்மே

#489
நூற்றியிருபது ஆண்டாக எங்கள் நோவாவுத் தீர்க்கனும் வாகாகச் சொன்ன
தேற்றுதலாம் குறி கேட்டுத் தவம்செய்யாத பாவிகள் தண்ணீரில் மாள
மாற்றமில்லாதவன் விட்ட கன மாரியிலே மகா வீரியமாக
ஏற்றத்திலே தப்பிப்போன அந்த எட்டுப்பேர் எங்களுக்குக் கிட்டத்தான் அம்மே

#490
வானோனும் நினிவை மா நகரை ஒரு மண்டலம் நாற்பது நாளைக்குள்ளாகத்
தானாக அழிவுறச் செய்வோம் அதைச் சாற்றுவாய் நீ என்று யோனாவுக்கு ஓத
ஆனாலும் நான் நம்பமாட்டேன் என்று அப்பாலே ஓடி ஓர் கப்பற்குள் ஏக
மீனாலே அவன்-தனைப் பிடித்துப் பின்னும் விட்டுக் குறி சொன்ன மேன்மை பார் அம்மே

#491
ஏசையா எரேமியாத் தீர்க்கன் மறை எசேக்கியேலுடன் தானியேல் தீர்க்கன்
ஓசையா மல்கியாத் தீர்க்கன் உயர் யோவேல் செபானியா சகாரியாத் தீர்க்கன்
மோசேசு எலியாசுத் தீர்க்கன் அந்த முக்கிய சாமுவேல் தாவீதுத் தீர்க்கன்
மேசியாத் தீர்க்கனின் மேலே சொன்ன மெய்யான குறி இப்போ கை மேல் பார் அம்மே

#492
கடைப்பிடிக் காலத்தில் ரோமைப் பாப்புக் கள்ளத்தெரிசியும் மெள்ளவே வந்து
அடுத்தவர்-தங்களைக் கெடுத்துத் தீன்பண்டம் ஆகாது மணம்செய்யப் போகாது என்று
மடத்தனப் பேயுட ஆவி மிஞ்சும் மருளுட போதத்தால் இருளது ஆக்கித்
திடனற்று வீழ்வர்கள் என்று பவுலு செப்பின சூட்சிக்கு ரோமனார் சாட்சி

@35 பொதுக்குறி சொல்லும் தரு
**விருத்தம்

#493
பானுக்குள் ஒளியாய் நின்ற பரம வேதாகமத்தின்
தேனுக்குள் மதுரமான திருமொழிக் குறி சொல் மின்னே
வானுக்குள் ஏணியாக வந்த பெத்லேகர் நாட்டில்
ஊனுக்குள் உயிர் போல் என் மேல் ஒரு குறி சொல்லுவாயே
** தெந்தினா தினாதின்னா தென்னா தெந்தினா தின
** தெந்தினா தினாதின்னா தென்னா தெந்தினா

#494
வந்த குறி ஏதெனினும் கண்டுகொள் அம்மே எந்தன்
மனதுக்கு ஏற்க நீ நடந்துகொள் அம்மே
முந்தின பலனில் பத்தில் ஒன்று வை அம்மே சற்றும்
மோசம் அடராப்படிக்கு நன்று செய் அம்மே
சந்தகம் இல்லாமல் குறி சொல்லுவேன் அம்மே பல
சாஸ்திரிகளோடு எதிர்த்து வெல்லுவேன் அம்மே
எந்துலகும் மெச்சு குறவஞ்சி நான் அம்மே உமக்கு
ஏசுநாதர் பாதமதே தஞ்சமாம் அம்மே

#495
துய்ய துய்ய பரிசுத்த வெள்ளச்சி அம்மே நித்திய
சோபனம் உண்டாகுது பார் வெள்ளச்சி அம்மே
செய்ய தவம்செய்யும் உமக்கு இன்பமாம் அம்மே தவம்
செய்யாத பாவிகட்குத் துன்பமாம் அம்மே
மெய் என நீ எண்ணினது சித்தியாம் அம்மே அருள்
வேத சுதனால் உமக்கு முத்தியாம் அம்மே
பொய் அல்ல என் குறி எல்லாம் கைமேலாம் அம்மே உயர்
புத்தியினால் அத்தனையும் முற்றாயும் அம்மே

#496
புத்தி உள்ள கன்னியர்க்குள் வாகு நீ அம்மே ஞானப்
பூமான் உமக்கு எதிரது ஆகுவான் அம்மே
வெற்றியுடன் உன்னை அணைத்து ஆற்றுவான் அம்மே மண
வீட்டினுக்குள் சேர்த்து உன் மனம் தேற்றுவான் அம்மே
நித்திய கண் காட்சி எல்லாம் காட்டுவான் அம்மே பெரும்
நீதியின் ஆடை அணிகள் பூட்டுவான் அம்மே
பற்றி உனை மணம்செய்துகொள்ளுவான் அம்மே அவர்
பாதமதில் நீ இருந்து துள்ளுவாய் அம்மே

#497
அக்கிரமக்கார ரோமைப் பாப்பு என்றவன் எரி
அக்கினிக் கடலுக்குள்ளே தள்ளுண்பான் அம்மே
நிக்கிரகமாகி அவன் சேனைகள் எல்லாம் அந்த
நெஷ்டூரனோடே கூட வீழ்குவார் அம்மே
உக்கிரமாய் அக்கினியும் கெந்தகமுமே பபி
லோனின் மேலே வானத்தினின்றே விழும் அம்மே
சக்கரவர்த்தி ஏசுநாதர் ஆளுவார் அம்மே அப்போ
சண்டாள மார்க்கம் எல்லாம் கீழது ஆம் அம்மே

#498
பாக்கியம் உமக்கு மா விசேடமாம் அம்மே கெட்ட
பாப்புவுட வேதம் எங்கும் நாசமாம் அம்மே
சேர்க்கையுடன் யூதர் குணமாகுவார் அம்மே ஏசு
தேவன் மேல் விசுவாசமாய்ப் போகுவார் அம்மே
ஆக்கம் உள்ள முதல் உயிர்த் தானமாம் அம்மே அப்போ
அக்கியான மார்க்கம் எல்லாம் ஈனம் ஆம் அம்மே
வாக்கியங்கள் யாவும் நிறைவேறிப்போம் அம்மே அதி
வாழ்வு பெற்று நித்தியமும் வாழ்வை நீ அம்மே

@36 குறிக்கு ஆரம்பத் தரு
**விருத்தம்

#499
பாட்டிலே அடங்கா நன்மைப் பரம பெத்லேகர் நாட்டில்
தாஷ்டிகன் இசராவேலின் தளபதி தவிது மைந்தன்
காட்டிய காய மைந்தான் கருணை அக்கினியின் கண்ணன்
வாட்டமற்று உயர்ந்தோன் ஞான மாப்பிள்ளை வருவான் அம்மே
** நானநன்ன நானநன்ன நானநன்ன நானநன்ன நான
** நானநன்ன நானநன்ன நானநன்ன நானநன்ன நான

#500
விசுவாச மந்திரத்தை நிசமாக நீ உரைப்பாய் அம்மே மன
வீட்டினைப் பரிசுத்தமாய்க் கூட்டியே சிங்காரித்துவை அம்மே
தச ஞான மந்திரமும் விசையாய் மும்முறை சொல்வாய் அம்மே யேசு
தற்பரன் சொன்ன செபத்தை எப்போதும் உச்சரிப்பாய் அம்மே
இசைவான சுவிசேடம் அசையாத புஸ்தகம் பார் அம்மே நன்றாய்
ஈராறு அப்போஸ்தலமார் மாறாத வாக்கியம் சேர் அம்மே
திசை-தோறும் கடவுளை அசையாமலே வணங்காய் அம்மே குல
தெய்வத்தையே நேர்ந்துகொள்வாய் மெய் அத்தையே சார்ந்துகொள்வாய் அம்மே

#501
வித்தகன் சரீரத்துக்கு ஒப்புற்ற கோதும்பை அப்பம் வை அம்மே ஞான
விந்தை சேரும் முந்திரிகைக்கு அந்த ரசமும் கொண்டுவை அம்மே
அத்தனின் பழையேற்பாட்டின் புஸ்தகத்தையும் எடுத்தா அம்மே சுத்த
ஆசாரி சால்வையினைக் கூசாமல் அருகில் வைப்பாய் அம்மே
சத்தியன் தவிது பார்த்த புத்தியின் குறி கைகண்டது அம்மே திருச்
சன்னதிக் குறிகளாலே பின்ன பேதகம் வராது என் அம்மே
மெத்த ஒளிவா மார்ப் பதக்கத்தையும் கவனித்துக்கொள் அம்மே அதின்
மெய்யான ஊரிம் தும்மிம் பொய்யாத குறி சொல்லும் அம்மே

#502
நெற்றியிலும் மார்பிலேயும் கத்தனின் சிலுவை வரை அம்மே ஒரு
நேராக நின்று கன சீராகப் பணிந்துகொள் அம்மே
பத்தியாய்க் கிறிஸ்துவின் காயத்தையும் தியானித்துக்கொள் அம்மே தேவ
பத்து இலட்சணத்தையும் மனத்தில் நினைத்துக்கொள்வாய் அம்மே
புத்தியாய்ச் சுறுக்கிலே தவத்திலே முயற்சிசெய்வாய் அம்மே நரர்
போற்றுதற்கு அரிய வேத சாஸ்திரத்தையும் சற்றுப் பார் அம்மே
முற்றிலும் குணத்துக்கு வந்து உத்தம மனஸ்தாபப்படு அம்மே அந்த
மோசேயின் சடங்கு எல்லாம் பேசாமல் விட்டுவிடாய் அம்மே

#503
எத்தன் எனும் பாப்புச் சொல்வது அத்தனையும் பொய்க் குறிகள் அம்மே அவன்
இட்ட திருச்சபையின் கட்டளை எலாம் அபத்தம் அம்மே
உத்தரிக்கத் தலம் என்ற சுற்று வழி சள்ளைக் குறி அம்மே ஊரார்
உடமையைப் பறிப்பதற்கு இடம்வைத்த கள்ளக் குறி அம்மே
பெத்தரிக்கப் பவுலிஸ்தர் பற்றின உடையை விடாய் அம்மே முழுப்
பேதைகளை ஏய்க்கக் கொண்ட பாத வேடமதடி அம்மே
கொத்து செபமாலை கட்டிக் கத்திக் குறி சொல்வது வீண் அம்மே அந்தக்
கோரணிக் குறிகள் எல்லாம் காரணத்தைக் காட்டாதடி அம்மே

@37 கைகாட்டச் சொல்லும் தரு
**கலித்துறை

#504
விண் நாடர் பாடிய பெத்தலகேமில் விளங்கும் மதிப்
பெண்ணே தவக்கொடியே கற்பில் ஓங்கிய பேரின்பமே
மண் ஆளும் ராக்கினியே உயர் ஞான மனோன்மணியே
கண்ணே மலர்க் கரம் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே
** நானநன்ன நன்னநான நன்னநன்ன
** நானநன்ன நானநன்ன நானநன்ன

#505
தேவ முத்திரையிட்ட கையைக் காட்டாய் வளர்
சிலுவை முத்திரையிட்ட கையைக் காட்டாய்
காவில் கனி பறித்த கையைக் காட்டாய் ஏசு
கத்தனை அபிஷேகித்த கையைக் காட்டாய்
கூவிக் குவித்து நிற்கும் கையைக் காட்டாய் ஐயைக்
கும்பிட்டு அர்ச்சனைசெயும் கையைக் காட்டாய்
சாவற்று உயர்ந்த பெத்லேம் நல் நகர்க்குள்ளே வந்த
தரும சஞ்சீவியே உன் கையைக் காட்டாய்

#506
தோத்திரச் செபமாலை தொட்ட கையைக் காட்டாய் தேவ
சுதனுக்கு அமுது அளித்த கையைக் காட்டாய்
சாத்திரம் எல்லாம் வரைந்த கையைக் காட்டாய் ஒளிர்
தற்சீசின் ரத்தினத்தின் கையைக் காட்டாய்
பாத்திரம் அறிந்து செய்யும் கையைக் காட்டாய் ஏசர்
பண்டு தந்த பொன் சரியின் கையைக் காட்டாய்
காத்திர இறைத் தவிது கோத்திரத்தில் வாழ் தேவ
கன்னியாஸ்திரீயே உந்தன் கையைக் காட்டாய்

#507
சலுகை மணனைப் பற்றும் கையைக் காட்டாய் சீவ
தண்ணீர் வாங்கிக் குடிக்கும் கையைக் காட்டாய்
திலத ஒளித் தீபம் கொண்ட கையைக் காட்டாய் புத்திச்
சித்தியால் எண்ணெய் கொண்டுபோம் கையைக் காட்டாய்
வலிய அபரஞ்சியின் மின் கையைக் காட்டாய் ஞான
மண மோதிரம் தரித்த கையைக் காட்டாய்
நிலையது உயர்ந்த பெத்லேம் ராசனிடம் வாழ் சதா
நித்திய சோபனமே உன் கையைக் காட்டாய்

#508
மட்டில்லாத ரோமியுட கெட்ட நடக்கை முழு
மாயம் என்று ஞாயமாக ஊர் எங்கும் சொல்லி
அட்ட திக்கில் அவிசாரியாகத் திரிந்தும் ஏசு
ஆண்டவர்க்கு மண மாலை பூண்டவள் என்று
திட்டமாகச் சொன்ன அவன் வாயைக் கிழித்து ரோமி
தேடித் தின்னும் வேசை என்று பாடி அறைந்து
சட்டமாகக் குலஸ்திரீ நான்தான் என்று வந்த
சபையின் குமாரத்தியே கையைக் காட்டாய்

@38 கைக்குறி சொல்லும் தரு
**கலிப்பா

#509
வான மண்டலம் பரவும் வல்லவர் பெத்லேகர் வெற்பில்
ஞானம் மிஞ்சு சீயோன்-தன் நாயகியின் கை பார்த்து
மோன வஞ்சி அப்பமுடன் முந்திரிகை என்ற திருப்
பானம் உண்ட வாயால் பரிந்து குறி சொல்வாளே
** தினதேந்தினத் தினதேந்தினத் தினதேந்தினத் தினனா
** தினதேந்தினத் தினதேந்தினத் தினதேந்தினத் தினனா

#510
அள்ளியள்ளித் தருமம் எல்லாம் செய்யும் இந்தக் கையே
அருளான கிருபை நதி பெருகும் இந்தக் கையே
கள்ளமற்று உபகாரம் பெய்யும் இந்தக் கையே
கற்றவர்க்குப் பணிவிடைகள் செய்யும் இந்தக் கையே
தெள்ளு தமிழ்ப் பாவலரைப் பரிசு அளிக்கும் கையே
சித்திரமாய்ப் புஸ்தகங்கள் வைத்திருக்கும் கையே
வெள்ளை நிலைத் துகிலதனைக் கொய்து உடுக்கும் கையே
மேலான நன்மை எல்லாம் விளையும் இந்தக் கையே

#511
இல்லார்க்குக் கேட்டது எல்லாம் கொடுக்கும் இந்தக் கையே
ஏழைகளை ஆதரித்துத் தாங்கும் இந்தக் கையே
பொல்லாப்பில் விழுந்தவரைத் தூக்கிவிடும் கையே
பொன் பரம மோட்ச வழி காட்டும் இந்தக் கையே
நல்லாரைக் கண்டவுடன் தோத்திரம் சொல் கையே
நட்டணையாம் துட்டர்களை மட்டில் வைக்கும் கையே
சல்லாபமாய் நடந்து வீசி வரும் கையே
சகல சம்பத்தும் பெருகித் தழைக்கும் இந்தக் கையே

#512
மாப்பது அற்றுப் பேய்களுக்கும் நாய்களுக்கும் கெட்ட
வாயருக்கும் தீயருக்கு மதம் பொழிந்த பேர்க்கும்
ஏய்ப்பவனுக்கும் ஆப்பது கடாவும் இந்தக் கையே
பரிகாசக்காரர் பல்லைத் தகர்த்து உடைக்கும் கையே
தாப்பு இரியப் பாவிகட்குச் சாபமிடும் கையே
சத்திய விரோதிகளைச் சங்கரிக்கும் கையே
மூப்பு எனும் மடமையைத்தான் மயிரறுக்கும் கையே
முட்டாள் சத்துருக்கள் கைக்கும் எட்டாத கையே

@39 குறவஞ்சி தெய்வத்தை நேரும் அகவல்
**விருத்தம்

#513
மிக்கதோர் குறிகள் பார்க்கில் விளங்கு கை பிடித்தோனே
சக்கராதிபதி ஆவன் தருமபூரணியும் நீயே
ஒக்கும் இக் குறி பொய்யாது என்று ஒருவர் பெத்லேகர் நாட்டில்
முக்கியக் குற மின் மாது முதல்வனை வணங்கலுற்றாள்

#514
பொன்னகர்க்கு இறைவா புவி எல்லாம் புரப்பாய்
மன்னர்-தம் குலத்தாய் வானவர்க்கு இடத்தாய்

#515
ஆறு லட்சணத்தாய் அட்ட மெய்க் குணத்தாய்
மாறிலா வரத்தாய் மணி முடி தரித்தாய்

#516
வேத நாயகனே விமல சற்குருவே
ஓது அடங்காத ஒருவனே சரணம்

#517
கத்தனே சரணம் கடவுளே சரணம்
அத்தனே சரணம் அனாதியே சரணம்

#518
சத்திய சொருபா சகல காரணத்தாய்
முத்தி அம் கடலே முதல்வனே சரணம்

#519
மாசில்லாதவனே மரித்து உயிர்த்தவனே
ஏசுநாதனே என் முன் வந்து உதவாய்

#520
பத்தர்கட்கு உறவே பராபரப் பொருளே
வித்தகா எனக்கு இவ் வேலையில் உதவாய்

#521
சாத்திரத்து அடங்காய் சக்கரத்து அடங்காய்
கோத்திரத்து அடங்காய் குறியினுக்கு அடங்காய்

#522
ஒன்றினும் அடங்காய் ஒப்பிட அடங்காய்
இன்று எனைக் கேளாய் ஏகனே போற்றி

#523
முப்பொருளவனே முதல்வனே போற்றி
அப்பனே போற்றி அண்ணலே போற்றி

#524
நீச வாகனத்தாய் நெருங்கி வா கனத்தாய்
தேசு வித்தகத்தாய் தெய்வ புஸ்தகத்தாய்

#525
நசரை அம் பதியாய் நரரில் அன்பு அதியாய்
இசரவேல் குலத்தாய் எழும் வியாகுலத்தாய்

#526
தூதர் சங்கத்தாய் சொல் நிசங்கத்தாய்
மாதரைப் படையாய் வரர் கணப் படையாய்

#527
கிருபை ஆசனத்தாய் கிலேச மோசனத்தாய்
பொறுமை நெஞ்சுடைத்தாய் பொறிப் பகையுடைத்தாய்

#528
ஆத வாசகத்தாய் அரிய வாசகத்தாய்
பாத பங்கயத்தாய் பரம பங்கு அயத்தாய்

#529
ஆறு முத்திரையாய் அடங்கு முத்திரையாம்
ஈறு சம்பத்தாய் விளம்பிய பத்தாய்

#530
பெத்தலைக் கடலே பெரு மலைக் கடலே
பத்திராசனத்தாய் பரம போசனத்தாய்

#531
வெற்றியின் கொடியா வெறி மருள் கொடியா
சுற்று மண்டலத்தாய் சோதி மண்டலத்தாய்

#532
சிலுவையில் மாண்டாய் செகம் எலாம் ஆண்டாய்
வலிய சங்குடையாய் வானம் நல் கொடையாய்

#533
சித்தினைக் கடந்தாய் சிந்தனைக் கடந்தாய்
வந்தனைக்கு உவந்தாய் மாட்டகத்து வந்தாய்

#534
உன்னையே பணிந்தேன் உனக்கு யான் அடிமை
என்னையே கேட்டு இங்கு எழுத்து வந்து உதவாய்

#535
தானியேல்-தனக்குத் தயவு செய்து அருளும்
மானுவேலே நீ வந்து எனக்கு உதவாய்

#536
சூசை பார்வோனின் சொற்பனம் விடுக்கப்
பேசுவித்தவனே பெலத்து எனக்கு உதவாய்

#537
தவிது அரசனுக்குத் தனித்து எல்லாக் குறியும்
கவனமாய்ச் சொன்ன கடவுளே உதவாய்

#538
மோசை என்பவனை முக்கியப்படுத்தும்
மேசியாவே இவ் வேளையில் உதவாய்

#539
சாமுவேல்-தன்னைத் தனித்து அழைத்து உரைத்த
சாமியே எனக்கு இத் தருணம் வந்து உதவாய்

#540
இசரவேல் சாதிக்கு எய்துவது எல்லாம்
நிசமதாய்ச் சொன்ன நிருபனே உதவாய்

#541
தீர்க்கருக்கு எல்லாம் தெரிசனம் சொன்ன
மார்க்கமாய் எனக்கும் வந்து அருள்செய்வாய்

#542
காட்டிய காட்சிக் கருணை வாரிதியே
தேட்டமாய் எனக்குத் திருவுளம்பற்றாய்

#543
வளம் களித்து உர்ந்த மட்டிலாதவனே
விளங்கு மெய்க் குறிக்காய் வேண்டினேன் உன்னை

#544
எனக்கு முன் இருந்த இளந்தை மோகினிப் பெண்
மனத்தினுள் நினைந்தது வானமோ புவியோ

#545
தவத்தினில் நினைவோ தரும சிந்தனையோ
நவத்தினுக்கு உயர்ந்த ஞான நன்மைகளோ

#546
வரத்தினைப் பெறவோ வரிசையது உறவோ
பரத்தின் மேல் கண்ணோ பரம காரியமோ

#547
பொருளை வேண்டுவதோ போன காரியமோ
வருகும் ஓர் குறியோ வந்த செய்திகளோ

#548
துக்க சஞ்சலமோ சோதனைப்படலோ
தக்க பொன் பணியோ சரீர நன்மைகளோ

#549
தோழி மேல் மயலோ சுகத்தை வேண்டியதோ
ஊழியும் வாழ்க உகந்த வாஞ்சையதோ

#550
எவரெனும் இவளுக்கு இடறுசெய்ததுவோ
பவ வினைப் பேய்கள் படுத்திய துயரோ

#551
வானவன் இவட்கு மயல் விடுத்ததுவோ
தான் இவள் அவர் மேல் சார்ந்த இச்சைகளோ

#552
ஏதெனும் கைவிட்டு ஏகிய விதமோ
காதினில் பணியோ களவுபோனதுவோ

#553
பேரின்பக் காதலோ பின்னொன்றுதானோ
வாரி மேல் நடந்தான் மணம்செய்ய மகிழ்ந்தோ

#554
பாப்புட புரட்டோ பசாசுட மிரட்டோ
காப்பு வைத்ததுவோ கலக்கம் ஏது உளதோ

#555
சொல்லிய குறிக்குள் தோகைதான் நினைத்த
நல்லதோர் குறியை நயந்து அருள்வீரே

@40 நினைத்த குறி சொல்லும் தரு
**விருத்தம்

#556
வெம் சினத் தரத்தைத் தேய்த்த விமலர் பெத்லேகர் அன்பு
மிஞ்சுது பரிசுத்தாவி விளம்புது பேய்கள் எல்லாம்
அஞ்சுது கருத்து மேலும் ஆகுது ஆஞ்சுகள் வந்து என் முன்
கொஞ்சுது என் மனது கூடக் குதிக்குது குறி கேள் அம்மே
** தெந்தினா தினாதினனா தெனனா தெந்தினா தின
** தெந்தினா தினாதினனா தெனனா தெந்தினா

#557
** வஞ்சி
குறி சொல்லக் கேள் அம்மே குறி சொல்லக் கேள் யூதர்
கோத்திரக் கன்னியாஸ்திரீயே குறி சொல்லக் கேள்
அறிவில் உயர்ந்த பெத்லேம் நல் நகரில் வாழ் சீயோன்
அவையின் குமாரத்தியே குறி சொல்லக் கேள்
மறையோர் எழுதிவைத்த வார்த்தையின்படி நீச
வாகனத்தின் மேலே ஏசு ராசனும் வந்தான்
பொறை மிகும் கோதையே நீ பந்து அடிக்கையில் அவன்
புறத்தளம் கண்டு பயம் பூண்டதாம் அம்மே

#558
** மோகினி
இல்லை இல்லை குறவஞ்சி ஏகாந்தக்காரி என் முன்
எக்கசக்கமான வார்த்தை எப்படிச் சொல்வாய்
நல்லது அல்ல குறி எல்லாம் சொல்லியே வந்தாய் இப்போ
நடுவில் எல்லாம் கலைத்துக் குலைத்துப் போட்டாய்
தில்லுமுல்லதாகச் செல்லக் கல்லிக் குறிகள் கொண்டு
செப்பவாறாய் ஆனதற்கு இங்கு ஒப்பவும் மாட்டேன்
வெல்லை எல்லைச் சேனை காணில் அல்லல் எனக்கே
விந்தை என்று அறிந்து வந்து தந்து சொல்லடி

#559
** வஞ்சி
நீச மறி ஏறி வரும் ஏசு நாயகர் அவர்
நித்திய வங்கணக்காரர் இஸ்திரீகளில்
தேசு திகழ் மங்கையே நீ கண்டு மோகித்தாய் அது
செப்பப் பயந்தே இருந்தேன் செப்புவேன் முன்னே
மாசது அணுகாத பெத்தலேக மலை மேல் இது
மாயமடி மாயமடி மயக்கக் கள்ளி
மேசியாவின் அன்பினால் நீ காய்ச்சல்கொண்டது மற்ற
வித்தை எல்லாம் நீ படித்த சுற்று அறியேனோ

#560
** மோகினி
என்ன சொன்னாய் குறவஞ்சி சற்றும் எண்ணாமல் புத்திக்கு
இசையாத வார்த்தை எல்லாம் வசையோடு ஒக்கும்
நன்னயம் சேர் கன்னி என்று நான் இருக்கையில் என்னை
நாணமற்றுக் காதல் மிஞ்சிக் காணுதே என்றாய்
பின்னையும் பேரின்பச் சுரத் தண்டனை என்றாய் தம்
பிரானின் சிநேகத்து ஆவல்கொண்டனை என்றாய்
உன்னியுன்னி சொன்ன குறி ஒப்பிப்பாயானால் அவன்
ஊரும் பேரும் ஏது என்று எனக்கு ஓதடி பெண்ணே

#561
** வஞ்சி
ஏதடி உனைப் போல் எனக்கு அறிமுகமோ அவன்
இடம் பேரும் சொல்லுவதும் குறி முகமோ
காதல் மிஞ்சி நீ விடுத்த தூது கண்டேனோ மாலை
கன்னி வாங்கப் போன அந்தச் சன்னை கண்டேனோ
சாதனையாய் நீ சிநேகக் காய்ச்சல் கொண்டதும் உந்தன்
தந்திரம் எல்லாம் கர்த்தரின் மந்திரம் சொல்லும்
பேதகமற்று இன்னம் உனக்காகச் சொல்லுவேன் அவன்
பெண் சேர வல்ல பெரு மாப்பிள்ளை அம்மே

#562
** மோகினி
பெண் சேர வல்ல திறவானவன் என்றும் எந்தன்
பெரிய மாப்பிள்ளை என்றும் பேசுவையோடி
கண் சேர மயங்கும் முன் பெத்தரிக்கமோ உந்தன்
கல்வி மதமோ கொழுத்த வாயின் மதமோ
திண் சேரும் பெத்லகேம் நல் நகர்க்குள்ளே மெத்தத்
தித்திரிப்பாய்ப் பேச வேண்டாம் சித்திரக்கள்ளி
விண் சேர மயக்காமல் உண்மை சொல்லடி ஞான
விசுவாசச் சிங்கி என்ற வேடிக்கைக்காரி

#563
** வஞ்சி
இந்நேரம் மட்டும் நீ சொன்னது எல்லாம் பொறுத்தேன் சபைக்கு
இழுத்துவிடப்படாது என்று எண்ணி ஒறுத்தேன்
முன்னாலே பெத்தலை நாதர் விட்ட தூதிலே உந்தன்
முக்கிய அரசன் மகா மெத்தனவராய்
உன்னால் அல்லோ நீச வாகனத்தின் மேல் ஏறி
உனக்கென்று வாறார் என்று சீயோன் மகட்குச்
சொன்னாலே சொல்லுங்கோ என்று சொல்லி விடுத்த அன்று
தொட்டுக் காதல் கொண்டாய் அல்லோ சுவிசேடப் பெண்ணே

#564
** மோகினி
உள்ள குறி வெளியாக்கிச் சொன்னவுடனே இனி
ஒளிப்பது எப்படி என்று களிப்புக்கொண்டு
வள்ளல் பெத்தலேகம் நாதர் பேரெடுக்கவே ஞான
மங்கையர் சீயோன் குமாரி செம் கை குவித்துத்
துள்ளி மகிழ்ந்து அக்களிப்பதாக வணங்கிச் சீவ
தூணிடை கூச்சத்தினாலே நாணிக் கவிழ்ந்து
கிள்ளை மொழி போல் குளறிக் கொஞ்சிக் கொஞ்சியே மனக்
கெம்பீரத்தினால் மிகுந்து உடம்பு பூரித்தாள்

#565
** வஞ்சி
பெத்தலகேம் ராசன் உனைக் கொள்ளவே வாறான் நாளை
பேணும் உந்தன் நாணம் எல்லாம் காணவேபோறேன்
சுத்த வெள்ளைத் துகில் கூறை ஒன்று வருகும் தேவ
துய்ய அபரஞ்சிச் செபமாலை வருகும்
உத்த பரியத்து உடமை யாவதும் வரும் நன்மை
உயரும் ஞானாபரணப் பெட்டியும் வரும்
சத்திய சிலுவை முத்திரை மோதிரம் வரும் பல
சம்பத்தோடு இருப்பை நீ பேரின்பத்தால் அம்மே

#566
** மோகினி
என்று சொன்ன ஞானக் குறவஞ்சியை நோக்கி நவ
எருசலேமின் குமாரி ஏது சொல்வாளாம்
நன்று மிகும் குறி சொல்ல உன்றனைப் போலே இந்த
நாட்டிலே காணேன் என்று அணி பூட்டி இதமாய்ப்
பொன் துகிலும் வேண்டின பொருளும் அளித்து இரத்தினப்
பூடணத்தால் முற்றினும் சிங்காரித்துவிட்டு
ஒன்றினம் குறி எனக்கு உரைக்கவே வேணும் சபைக்
குற்ற தலைப் பசாசு வென்றி இங்கு ஓதுவது ஏனோ

#567
** வஞ்சி
பாப்புவுக்குச் சபையின் மேல் மூப்பதும் உண்டோ அவன்
பராபரனோடு எதிரி ஆனவன் அல்லோ
தாற்பரியமாய்ச் சபைக்குப் பேதுரு என்பவர் என்றும்
தலைமையதாய் இருக்கச் சாற்றினது உண்டோ
காப்புடன் அப்போஸ்தலர்க்குள் பேதுரு மிச்சமோ ஏசு
கத்தனை மறுதலித்த காரணம் பாரேன்
கோப்பு ரோமாபுரிக்குச் சீமோன் வருகையில் அங்கே
கொனஸ்தந்தீன் ராயனுக்குப் பட்டமும் உண்டுமோ

#568
** மோகினி
புத்திக்கு ஒத்த குறி சொன்னாய் பத்திக் குறத்தி பாப்புப்
போதகம் பிசாசினுட போதனை ஆகும்
சத்திய விரோதன் முழு அசத்தியன் அவன் ஆதி
சருவேசனோடு எதிரி ஆனவன் அவன்
முற்றிலும் குணப்படாத சத்துரு அவன் முழு
மோச காலப் பேயினுட சேயனும் அவன்
பித்து உளத்திப் பயித்தியம் மெத்தக் கொண்டவன் இரத்தப்
பிரியன் அவன் பேதுருவுக்கு இணை எங்கனை

#569
** வஞ்சி
பேதுரு பட்டத்தில் பாப்பு வந்தது உண்டானால் சீமோன்
பேதுருவின் சிந்தை இந்தப் பேய்க்கும் வரணும்
பேதுரு சபையைத் துன்பம் செய்ததும் உண்டோ சீமோன்
பேதுரு பராபரனோடே எதிர்த்தானோ
பேதுரு தனை வணங்கச் சொன்னதும் உண்டோ இந்தப்
பேயன் அப்படி இதெல்லாம் செய்து வருவான்
பேதுருவைப் போல் இவன் அடைந்த போது அல்லோ இவன்
பேதுருவுக்கு இணை என்று பேசணும் அம்மே

#570
** மோகினி
இப்படி இருக்கையிலே ரோமி என்பவள் வந்து
எத்து வார்த்தையாகக் குறி எப்படிச் சொல்வாள்
ஒப்புவிக்க வேத ஞாயம் ஒன்றும் அறியாள் கட்டு
உபதேசம்-தனைக் கொண்டு இங்கு ஓத வருவாள்
மெய்ப் புகல் சுவிசேடத்தை விட்டு விழுந்தாள் பல
வேடிக்கைக் கதைகள் எல்லாம் நாடிப் பகர்வாள்
தப்பிதக்காரி அவளின் கெட்ட வழியைச் சொல்லிச்
சஞ்சலப்படுவானேனாம் வஞ்சிக் கொடியே
**விருத்தம்

#571
நல் மலைப் பெத்தலேகம் நாதர் அருள்பெற இசைந்த நாரி கூந்தல்
பொன் மாலை மணி மாலை பூ மாலை செபமாலை பொலிவாய்ப் பூண்ட
மின் மாலைக் குழலியர்கள் விரைந்து வர ஞான விசுவாசச் சிங்கி
தென் மாலைக் குறிகள் சொல்லி நல் நகர் பட்டணம் முழுதும் திரிகுவாளே

@41 சிங்கன் வரவு
**விருத்தம்

#572
சத்தியத்தின் கச்சைக் கட்டி நீதியின் மார்க்கவசம் மற்றும் சனுவாய் பூண்டு
எத்திசையின் அலகை எல்லாம் பயந்து அலறக் கூவி விரைந்து எதிர்ந்து நோக்கி
வித்தகம் சேர் சுவிசேட ஞான வலைக் கண்ணிகளும் வெகுவாய்க் கொண்டு
சுத்த உபதேசி எனப் பெத்தலேம் மலைக் குழுவன் தோன்றினானே
**சிந்து

#573
வந்தான் ஐயே ஞானச் சிங்கன்
வந்தான் ஐயே

#574
வந்தான் ஐயே பெத்தலேகேமில் வளர் கிறிஸ்து ஏசுவின் நாமத்தைப் போற்றித்
தந்தானத்தான தனாதகு தத்திமி தய்யச்செஞ்சணத் தொங்க தகிர்தத்தித்திமி என்று
தாளத்துடனே பாடி ஆடிச் சபை நடுவே

#575
பத்திக்கு வித்தாய் முளைத்த பராபரன் பாதத்தை நா ஒத்துப் பாடிக் கொண்டாடியே
தத்தித்திமித்தெய்யத் தாதிந்தத்தா என்று
சகலர்க்கும் அருளிட்ட கிருபைக்கு முடிவற்ற சாமிக்கு உகந்த சுவிசேடச் சபை நடுவே

#576
தேடிப் பராபரன் பாதத்துள்ளே நித்தியசீவனைக் காணத் தன் சிந்தை எல்லாம் வைத்துப்
பாடிப் படித்துக் கெம்பீரித்துப் பூரித்து பரம் ஒத்த பதம் ஒத்த பயன் ஒத்த பணிவு ஒத்த
பயம் ஒத்த பழுதற்ற பரிசுத்த சபையுக்குள்

#577
வானோர்கள் போற்றிய ஏக சக்கராதிபன் மா மறையைக் கெதியாக வைத்துக்கொண்டு
தானா தனா தத்தனா தந்தனா என்று தமிழுக்குள் மிக முக்கிய கவி கட்டி நடமிட்டு
சதுரிட்ட அதி உத்தம சபையுக்குள் விபரிக்க

#578
ஆதி பராபரன் கற்பனைப்பெட்டி முன் அர்ச்சீட்ட தாவீது ஆடின வாய்மை போல்
தாதிமித் தாதொங்கத் தெய்யத் தளாங் என்று சதியிட்ட கழுதுக்கள் தலை வெட்டி விருதிட்டுத்
தடையற்ற விடைபெற்ற சபையுக்குள் அறிவிக்க

#579
மேட்டிமையாகிய ரோமையின் பாப்பு என்ற வேசி பராபரனோடே சரி என்று
தாஷ்டிகமாய்ச் சொன்ன செய்தியைக் கேட்டு அந்தத் தாசிக்கு ஞாயத்தோடே புத்தி போதிக்க
வேதச் சுவிசேடத்தையே கைக்குள்ளே வைத்து

@42 சிங்கன் வளம்
**விருத்தம்

#580
சாத்திரம் ஆறும் தாண்டித் தானதாய் நின்ற ஆதி
சூத்திரன்-தனைக் கொண்டாடித் தொல் மறை வசனத்தாலே
நேத்தியாய் மனுவை எல்லாம் நித்திய வழியில் சேர்க்கும்
நால் திசை புகழும் ஞானச் சிங்கனும் நான்தான் ஐயே
**சிந்து

#581
ஞானச் சிங்கன் நானே குறப் பயல்
ஞானச் சிங்கன் நானே

#582
ஞானச் சிங்கன் நானே கானக் கலிலேயாவின் நாட்டுக்கு உயர் பெத்தலேம் கோட்டைக்கு அரசனான
வானத்திருந்து வந்த மானத் துரையைக் கண்டு
மகிமைப்படுத்தி அகம் மகிழ்ந்து பணிந்துகொள்ளும்

#583
சக்கரவர்த்தி தாவீதேந்திரன் மெச்ச வரும் சங்கை உள வானோர்கள் துங்கன் பரம நகர்
முக்கியமான தேவன் பக்கிஷமாகத் தங்க முதல்வன் ஏசுநாத அதிபன் வளரும் நாட்டில்
திக்கெல்லாம் புகழச் சிக்கதாய் மனுவைச் சேர்த்துப் பிடிக்கும் வலை பார்த்துப் பணிதிசெய்து
கைக்குள் வைத்துக்கொண்டு தக்க நேரங்களில் கண்ணி வைத்து உருக்கள் எண்ணிப்
பிடித்துக்கொள்ளும்

#584
குருவும் சீஷனையும் கூட்டிப் பிடிக்கும் வலை கொடிய பேரை விழுக்காட்டிப் பிடிக்கும் வலை
பெருமையோரை மிகத் தாழ்த்திப் பிடிக்கும் வலை பேதையோரை அருளாக்கிப் பிடிக்கும் வலை
தருணமான போது அறிவுள்ளோர்களையும் தர்க்கத்தால் மடக்கிச் சிக்கிக் கொள்ளும் வலை
அரசர் அமைச்சரையும் அடுத்துப் பிடிக்கும் வலை அனைத்தும் கொண்டு ஐயை நினைத்துத்
தோத்திரம் செய்யும்

#585
மாயையான பல லோக வாழ்வின் வலை மண்ணின் ஆசை வலை பொன்னின் ஆசை வலை
தோகைக் காம மயல் ஆசபாச வலை சூழும் அலகை வைத்த பாழும் வலைகள்-தன்னில்
தேகமோடு சிக்கி ஆவி மாய அழல் சேருவோர்கள்-தனைக் கூர்மையோடு கண்டு
தாகமாக ஏசுநாத சுவாமி அன்று தந்த வலையைக் கொண்டு எந்தனிடத்து உள்ளாக்கும்

#586
ஆயத்துறையில் வாழ் மத்தேயைப் பிடித்த வலை அப்போஸ்தலரை ஒருமிப்பாய்ப் படுத்த வலை
ஞாயத்தால் ஒருநாள் மூவாயிரச் சில்வான நரரை வாரிக்கொண்ட மலையன் பெரிய வலை
மாயப் பெருமைப் பரிசேயச் சவுலைக் கண்ணை மயக்கித் தமஸ்கில் போகும் வழியில் பதிவுவைத்து
நேயத்தோடு இழுத்த தேவ செயத்தின் வலை நேத்தியான வலை சேர்த்துவைத்துக்கொண்ட

#587
பாப்புமார்கள் இட்ட மோசமான வலை பாவமன்னிப்புச் சீட்டான பணத்தின் வலை
ஆப்புப் போல சிக்கும் ஏழு ஞான அனுமான திரவியத்தின் கோணலான வலை
கோப்புப் பூசை வலை மீட்புத் தரிக்கத் தலக் கொடிய வலை சுருப வலை சன்னியாசி வலை
மாப்புச் செய்யும் அபராத வலைகள் பேயின் வலைகள் என்று தேவ செயலால் அறிந்துகொண்ட

@43 மந்திர வளம்
**விருத்தம்

#588
தந்திர அலகை செய்த சதியினைக் கடந்து ஈடேறச்
சுந்தரம் இலங்கும் பெத்லேம் தொல் நகர்க்கு அரசாய் வந்த
எந்தையாம் ஏசுநாதர் இசைத்து எனக்கு இயம்பும் ஞான
மந்திர செபங்கள் எல்லாம் வகையுடன் அறிவேன் ஐயே

#589
மந்திரம் யான் அறிவேன் அடையே
மந்திரம் யான் அறிவேன்

#590
மந்திரம் யான் அறிவேன் ஏசு நாயகன்
மானிடன் ஆன பெத்லேகம் நல் நாட்டினில்
தந்து அலகையுடனே பொருதிச் செயம்
தான் கொண்டு மேவவும் சாகாது இருக்கவும்

#591
ஆகடியமுடனே சருவேசனை அர்ச்சனைசெய்யாமல் துர்சனப் பேய்களைத்
தாகமுடன் பணிந்தே வரும் அக்கியானச் சண்டாள மார்க்கத்தார் அண்ட பரன்-தனை
வேகமுடன் தொழுதே பண்புசெய்யவும் வீறும் சமணர் துலுக்கர் மதத்துடன்
மாயம் மிகும் அரியானப் பதிதரும் வாய்மையதாய்ச் சத்திய வேதத்துள் ஆகவும்

#592
வேதத்தைக் கேட்டும் அதின்படி செய்யாமல் மீறி நடக்கின்ற தாறுமாறுக்காரர்
சேதத்தைக் கண்டு உணர்ந்தே தம் மனது திரும்பிக் குணப்பட்டுத் தெய்வத்தைப் போற்றவும்
பாதத்துளானோர் மறுபிறப்பாகவும் பாவத்தைச் செய்தவன் நீதத்தைச் செய்து முன்
ஆதத்தினால் வந்த சாபத்தின் நாசனை அண்டிக்கொண்டு பரமண்டலத்தில் செல்ல

#593
காலத்துள் மாலையுள் மந்திரம் நற்கருணை விசுவாசமும் கற்பனை மந்திரம்
சீலப் பரமண்டலச் செபம் போசனம் செய் செபம் பின் செபம் தீட்சைவிதிச் செபம்
பாலர் படிக்கின்ற கூடத்து முன் செபம் பண்பான பின் செபம் பாவசங்கீர்த்தனம்
ஆலையத்தின் துவக்கச் செபம் பின் செபம் அல்லால் பெரும் பாவசங்கீர்த்தனம் என்ற

#594
முன் நாள் மோசே முனி வாரி திரண்டு ஆக முற்றும் பிரிய வகுக்கச் செய் மந்திரம்
மன்னாவைத் தந்து அருளச் செய்த மந்திரம் மா மலையில் சலம் மேவப்பண் மந்திரம்
பின் நாள் யோர்தானைக் கடந்து எழும் மந்திரம் பேர் எரிகோ நகர் வீழச்செய் மந்திரம்
தன்னாலே சந்திரன் சூரியன் ஓடாமல் தான் நடுவானத்தில் மேவி நிற்கச் சொன்ன

#595
அக்கினி கட்டின மூவரின் மந்திரம் ஆசாப்பும் தாவீதும் பாடின மந்திரம்
சிக்குக் கெபியினில் சிங்கத்தின் வாய்-தனைச் சித்திரமாய்க் கட்டும் தானியேல் மந்திரம்
உக்கிர அக்கினி வீழ்ந்து அழிவாகவே உற்ற எலியாசு பண்ணின மந்திரம்
தக்க தெரிசிகள் அப்போஸ்தலன்மாரும் சாற்றினதும் எனக்கு ஏற்றதும் ஆகிய

#596
மூன்றரை ஆயனமாய் மழை பெய்யாமல் முக்கியமாய் எலியா பண்ணும் மந்திரம்
தோன்றும் பினையும் மழை பெய்யப்பண்ணின சூட்சத்தின் மந்திரம் வாச்சத்தின் மந்திரம்
ஊன்றிய பாதகர் மேல் அக்கினி விழுந்து ஒக்க நிருமூலமாகச்செய் மந்திரம்
மீன்-தன் வயிற்றினிலே யோனாப் பண்ணின விந்தையின் மந்திரம் அனந்தம் அனந்தமாய்

#597
முந்த விசுவாச மந்திரத்தால் உயர் முன்னீரில் விண்டை விழச்சொல்லு மந்திரம்
ஐந்து அப்பத்தைக் கொடுத்து ஐயாயிரம் பேருக்கு அற்புதமாய்ப் பொசிக்கத் தந்த மந்திரம்
சிந்துவின் மேலே நடந்திட்ட மந்திரம் செத்த பின் லாசர்க்கு உயிர் தந்த மந்திரம்
எந்தை பரன்-தனை ஏசுவின் நாமத்தால் என்னத்தையும் கேட்டு வாங்கிக்கொள்ளச் செய்யும்

#598
சத்திய வேதத்துளோர் என்று சொல்லியும் சாமி அருள் சுவிசேடத்தைச் சற்றெனும்
பத்தியினால் உணர்ந்து ஆய்ந்து ஓய்ந்து பாராமல் பாப்புவின் கட்டளை மூப்பு என்று சொல்லியே
செத்த மனு மக்களைச் சேவித்து அக்கியனர்கள் செய்வது போல் திருநாள் பலதும் செய்து
வைத்த உருக்களைக் கும்பிடும் ரோமானு மார்க்கத்தாரைக் கைக்குள் சேர்க்கையாக்கிக்கொள்ளும்

@44 நூவன் தோற்றம்
**விருத்தம்

#599
தீட்டியதோர் ஆகமத்தின் பயனை எலாம் உணர்த்து அறிந்து திடன்கொண்டு ஓங்கி
நாட்டமுடன் பெத்லேக மலை ஞானச் சிங்கனுக்கு நயமாய் அன்பு
காட்டி மனுவைப் பிடிக்கும் வலை தூக்கிச் செபமாலை கனக்க மார்பில்
சூட்டி வெற்றிக் கொடி விருது பிடித்து மறைப்புலி நூவன் தோன்றினானே

#600
நூவன் வந்தானே மறைப்புலி
நூவன் வந்தானே

#601
நூவன் வந்தானே தேவ திருச்சபை நூங்கு பெத்லேம் பதி ஓங்க இரு கழல்
காவல் உபதேசிக்கே உதவிக்காரன் ஆனாப் போலே ஞானச் சிங்கன் வங்கணத்துக்கு
ஆசித்து நல் நேசத்துடனே அதி கன பாசப் பிரகாசத்திடனே துதித்து எழிலாகத்
திரு வேதப் பொருள் போதித்து அருள் நீதிப்படியாய் மக்களையே சிக்கிடவே வைத்திடும்
ஞானக் கனி
தாகத்தொடு போதக்கொடு தாதித்திமி தோதித்திகு தானத்தன தாளத் தொனி ராகத்து
இயல் சாதித்துமே

#602
கற்பனை மோசேக்கு ஆரோனைப் போலவும் கற்ற எலியாவுக்கு எலிசா போலும்
அற்புத யோசுவா காலேப்பு ஆகவும் அந்தப் பவுலுக்குத் திமோத்தே போலவும்
ஆகத்து விவேகத்துடனே அடர்ந்த சினேகத்து இயல் பாகத்து இனமே பெரும் புகழ்
அர்த்தத்தொடு மெத்தக் கலை கற்றுத் தவமுற்றுக் கடி அச்சத்து இடர் அற்றுச் செப
அர்ச்சிப்பொடு நல் பத்தியின்
இரத்தக் குருசுச் சித்திர வெற்றிக் கொடி கட்டிக் கன நெற்றிக்கிடை பொன் பட்டமும்
இட்டுச் சபையைப் பற்றியே

#603
பவுலு சீலாவினைச் சேர்த்தது போலும் பருனபா மற்குவைச் சேர்த்தது போலும்
தவ யோவானும் தம்பி யக்கோபைப் போலவும் சற்குணமாய்ச் சிங்கன்-தன்னைச் சேர்க்க என்று
சாடைப் பயில் நாடித் திறமாய்ச் சிங்கியைக் கொண்டு ஆடிப் புகழ் பாடிச் சபையூடு எழுந்து சொல்
சந்தத் திகழ் சிந்தும் கவியும் பண்பின் நவின்றும் திரு சங்கம்-தனில் எங்கும் பதமும் தந்திட
நின்றுங்கிரு
தொந்தந்திகு தொந்தந்தன தந்தந்தன என்றும் சொலி சுந்தரம் கொள அனந்தன் பயிலின் பொன்
கணியும் கொண்டுமே

#604
சத்திய வல் தெஞ்சஸ்க்கல்விக்கு எஞ்சஸ்ப் போலும் சானுசுக்குத் துணை ஏராமைப் போலவும்
உத்த லுத்தருக்குக் கல்வீனைப் போலவும் ஓங்கு சிங்கனுக்குப் பாங்கனைப் போலவும்
ஓதி மிகுத்துச் செபச் சித்தமாய்க் கிறிஸ்துவின் நீதி மிகுத்துத் தவச் சுத்தமாய்ச் சிங்கனைக் கண்டு
ஓலம் உயர்த்திப் பயிற்கத்தி யோசனை வைத்துச் சிரித்திட்டு ஓவியமிட்டுத் துகில் கட்டி ஓடி
நடித்துப் பொழில் புக்கி
நூல் வலை கட்டித் திறப்பட்டு நூதன வித்தைச் செயல் கட்டு நூபுரம் ரெட்டைப் பதத்து இட்டு
நோன்மை மிகுத்துக் கையைக் கொட்டி

#605
சுற்றும் பிசாசுக்குச் சத்துரு நான் என்றும் தோற்றும் பல மதக் கூற்றனுமாம் என்றும்
மற்றும் சிங்கனுக்குத் தோழனைப் போல் நின்றும் வங்கணச் சிங்கிக்குச் சங்காத்தி தான் என்றும்
மா பக்கிஷமாய் முக்கியமாய் அலகையின் மேல் உக்கிரமாய் நிக்கிரகமாய் அழித்திட
வந்து அற்பம் மிகும் துற்குண அண்டத்தன மிண்டு அக்கிரம வம்பர்க்குறு இடும்பத்தன வஞ்சப்
பகை நெஞ்சத்து இருள்
அந்தக்கரணன் அந்தப் பல கந்தைக் கொடி அறுந்து அற்றிட அண்டப் பரமண்டலச் செப
அங்கத்தொடு சங்கத்திடை

#606
அந்தமும் ஆதியும் இல்லாதவனோடே ஆண்மை அறைந்த வேதாளத்தைப் போலவே
தந்திரம்பண்ணிச் சபையைக் கெடுத்திடும் சண்டாளப் பாப்புக்கு மிண்டு கோடாலியாய்
தாவிப் பரலோகத்தின் மேல் எழுந்து உரை கூவிப் புவி லோகத்தினின் வாய் அடர்ந்து அமர்
சாடும்படியாய் அங்கு அவன் மேலும் பல கோபம் படு தாவும் கலை வாளும் பரன் நூலின்
கன மேலும் கொடு
வாடும் பல பேயும் சில நாயும் கழுகு காகத்து இனம் மா பந்தயமோடும் கொலுவேன் என்று
உரை தானும் சொலி

@45 நூவன் வளம்
**விருத்தம்

#607
இடத்துடன் அந்தரம் புவனம் பாதாளத்து இலங்கு செயல் எல்லாம் தந்து
திடத்திய பெத்லேம் அரசன்-தனை ஞானச் சிங்கனுடன் தினமும் போற்றி
விடத்து அலகை தரத்தை எல்லாம் மிதித்து அழித்து வெற்றிகொள்ள வெகுவாய்ப் போர்கள்
நடத்திய சிற்றுபதேசியாள மறைப்புலி நூவன் நான்தான் ஐயே
**சிந்து

#608
நூவன் நான்தானே மறைப்புலி
நூவனும் நான்தானே

#609
நூவன் நான்தானே பெத்லேகம் பதி
நோன்மைச் சிங்கனுடன் மேன்மையதாய்க் கூடித்
தேவனும் மாந்தனும் ஆகிய ஏக
திரித்துவத்து ஒன்றாம் கிறிஸ்துவைப் போற்றிடும்

#610
திட்டமதாகவே யூதர்கள் வேந்தனும் தீயர்க்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ராத்திரி
வட்டமிட்டுச் சீமோன் சத்துருக் கூட்டத்தில் மல்குவின் காதற வெட்டினாப் போலவே
எட்டுத் திக்குக்குள்ளே கத்தனை அல்லாமல் இன்னம் ஓர் தெய்வத்தைக் கைதொழுவோர்களைத்
தொட்டு மனத்தில் துடித்துப் பதைத்துத் துரத்தித் துணித்திடும் துட்டப் பயல் எனும்

#611
ஓடின பேருக்குப் பந்தயம் கிட்டும் என்று ஓதின வார்த்தையைச் சாதனையாய்ப் பற்றி
நாடியே சிங்கனும் நானுமாய் வேலை நடத்தி மனுவைப் பிடிக்கக் கருத்தொடு
கூடி இருந்து செபத்தை முகித்துக் குலாவியே சிங்கனும் அப்பாலே சென்ற பின்
சாடை அவனும் அறியாமல் பின்னும் தனிச் செபம் செய்து பலன் தக்கித்துக்கொள்ளும்

#612
சித்திரம் பேசியே ஞானச் சிங்கனும் தெருவினில் செல்லையில் என்னையும் சேர்க்கையாய்ப்
பொத்தகம் கொண்டு புறகாலே வா என்பான் போன வழிக்கு எல்லாம் நானும் கூடப் போவேன்
மற்றும் என்றன்னையே வாசிக்கச் சொன்னாலும் வாசித்துச் சொன்ன வயணம் எலாம் செய்து
பத்தி மிகுத்த குழுவன் சிரிக்கவே பட்சமாய்ச் சிங்கி மேல் பாட்டுப் பாடிக்கொள்ளும்

#613
ஆண்ட பராபரன் கற்பனை மீறி அலகை மயக்கத்து அழுந்திக்கிடந்துமே
நீண்ட பவத்தைச் சமைத்த துரோகரை நெஞ்சம் பதைக்க உதைத்துக் கீழே தள்ளி
மீண்டும் சிகையைப் பிடித்து அறுத்து அங்கு அதை வேணவிதம் கண்ணி தெத்திக் கொடுத்த பின்
கூண்டு குழுவன் பறவை பிடிக்கையில் கூடவே நின்று கணக்குக் குறித்திடும்

#614
நல்ல கனி கொடுக்காத மரம் எல்லாம் நாசமதாய் வெட்டப்பட்டு நரகத்தில்
செல்லப்படும் என்று சொல்லியிருந்த திறத்தை மனத்தில் தியானித்துக்கொண்டு நான்
கல்லிப் பயல்களைச் சொல் கோடாலி கொண்டு கண்டங்கண்டம் பல துண்டந்துண்டங்களாய்
மெல்லவே வெட்டிப் பிளந்து எரித்தற்கு விறகு ஆக்கி எந்தனின் வீட்டுக்குள் வைத்திடும்

#615
தங்கு பதினோராம் தாசியில் போனவர் தாமும் ஒரு பணம் பெற்றது போலவே
இங்கிதமாகவே சிங்கனோடே கூடி எங்கும் அலைந்து பறவை பிடித்த பின்
அங்கு அவன் சிங்கிக்கு சந்தோடம் உண்டாக அக்கணம் பக்கியை லக்கம் பண்ணிக்கொண்டு
பங்கு பிரிக்கையில் என் பங்கு வேறாகப் பாதி தரக் குறப் பாசாங்கு எல்லாம் பண்ணும்

#616
தக்க பராபரன் மைந்தன் பெண்டீர் என்று சங்கம் எல்லாம் காணத் தாலி கட்டிக்கொண்டு
பக்கிஷம் இல்லாமல் கொண்டவனை விட்டுப் பார்த்தவனோடே பரஸ்திரீ போம் போலே
ஒக்கவே ராவும் பகலுமாய்க் கண்ட உலுத்தப் பயல்களோடு ஒன்றாக ரோமியும்
வெட்கம் இல்லாமல் திருட்டளவாய்ச் செய்த வேசித்தனத்தை வெளியாக்கிவிட்டிடும்

@46 மூலிகை வளம்
**விருத்தம்

#617
ஏலியின் மக்கள் செய்த இடர் சகிக்காமல் கொன்று
சோலியற்று உயர்ந்த பெத்லேம் தோன்றலின் கிருபையாலே
மாலிகைக்கு இசைந்த வேத மறை-தனில் வகுத்த ஞான
மூலிகை விதங்கள் எல்லாம் முற்றினும் அறிவேன் ஐயே

#618
மூலிகை யான் அறிவேன் நடையே
மூலிகை யான் அறிவேன்

#619
மூலிகை யான் அறிவேன் பெத்தலேம் பதி
முன்னவனைத் துதித்துத் துன்னதமாகவே
சாலோக சாரூப சாமீப சாயுச்சிய
சாமியைப் புல்லின் மேலே கிடத்தப் புல்லின்

#620
அற்புதமாய் ஒரு கோலத்தைச் சற்பமது ஆக்கவும் ஆக்கின சற்பம் கோல் ஆகவும்
விற்பனமாய்க் கையை வெண்குட்டம் ஆக்கவும் வெண்குட்டமான கை நன் கையது ஆகவும்
துப்புரவான நீர் செந்நீர் ஆகவும் தோன்றும் இரத்தம் முன் போல் நீர் ஆகவும்
பற்பல பேன் தவளை வண்டைக் கூவவும் பாவ எகிப்பத்தில் ஏவவும் மோசேயின்

#621
கட்டளையாய் மிருகத்தின் மேல் மாந்தர் மேல் காய்ச்சலுடன் கொப்புளத்து எரிபந்தத்தைத்
திட்டமதாக வரப்பண்ணி மாற்றவும் தேசம் எல்லாம் கல்மழை வரப்பண்ணவும்
பட்டப்பகலை இரவது ஆக்கவும் பார்வோனின் நெஞ்சைக் கடினமது ஆக்கவும்
வெட்டுக்கிளியை அழைப்பித்து நீக்கவும் வேண்டின யாவையும் செய்யவும் மோசேயின்

#622
மாராவின் மெத்தக் கசப்பான தண்ணீரை மாற்றிடப் போட்ட மரத்துட மூலிகை
ஆரோனின் கோல் துளிர்விட்டுப் பூப்பூத்து அழகான வாதுமைப் பழம் தந்த மூலிகை
பாரினில் மீதியானித்தரைச் சங்காரம்பண்ணின தீவட்டிப் பானையின் மூலிகை
போரினில் ஆயிரம்பேரை எலும்பிட்டுப் போக்கியுமே பிணம் ஆக்கிய சீமசோன்

#623
வீரியமாய் எலியாத் தீர்க்கன் ஆனவன் மிஞ்சும் எசபேலுக்கு அஞ்சி எழுந்து போய்ச்
சூரைச் செடியில் படுத்தவன்-தன்னையே தூதன் எழுப்பி ஓர் பாத்திரத் தண்ணீரும்
சீருடன் சுட்ட அடை ஒன்றும் தந்து அதைத் தின்ற திறத்தினால் நாற்பது நாள் வரை
ஓரேப் எனும் கிரிக்கே இரவும் பகல் ஓயாமல் ஓடும் பெலன் தரும் சுட்ட அடை

#624
எலியாவின் சீடன் ஓர் சால்வையை வீசி எழுந்த யோர்தானைக் கடந்து எரிகோவில்
சலியாமல் ஓர் புதுத் தோண்டியில் உப்பினைத் தாபித்து நீரூற்றில் சேவித்துப் போட்டு
நிலமது பாழும் தண்ணீர் மரணத்துக்கு நேரிட்டிருந்ததைச் சீரிட்டு என்றைக்கும்
வலிய நிலமும் அ நீரும் ஆரோக்கியமாக மகா நலமாகச் செய்த உப்பின்

#625
பெத்தேலுக்கு ஏகும் எலிசாவைக் கண்டு அங்கு பிள்ளைகள் மொட்டைத்தலையன் என்று சொன்ன
உத்தரத்தைப் பொறுக்காமல் அவரை ஒருமிக்கவே சினந்து உக்கிரமாகவே
கத்தரின் நாமத்தினாலே சபித்திடக் காட்டுக் கரடிகள் இரண்டு வந்து அட்சணம்
சித்திர நாற்பத்திரண்டு பயல்களைச் சீறிப் பீறிப்போடக் கூறும் கரடியின்

#626
தீர்க்கத்தெரிசியின் புத்திரன் பெண்சாதி சேர்ந்து எலியாவினை நேர்ந்து கடன்காரன்
பார்க்குள் என் இரண்டு குமாரரைத் தொண்டது பண்ண வந்தான் என்று சொன்னதினால் முனி
சேர்க்கையதாய் வெகு பாத்திரம் வாங்கி ஓர் சின்னக் குடத்து எண்ணெய்-தன்னை அவைகளில்
வார்க்கவார்க்க நிறைவாகும் மறுத்து அதை மாறிக் கடன் எல்லாம் தீர் என்ற எண்ணெயின்

#627
சூனேமில் வாழ் மலடி பிள்ளை பெற்றதும் தோன்றின பிள்ளை மரித்திடச் செய்ததும்
தான் அத்தைப் பின்னும் எழுப்பிக் கொடுத்ததும் சாவு பானைக்குள் இருக்குது என்றோர்களுக்கு
ஆன மாவைப் போட்டு இதம் ஆக்கி நாலைந்து அப்பத்தால் நூறு பேரைப் போசித்தது
மானம் மிகும் நாகமான் குட்டம் கேயாசி மார்க்கமுறச் செய்த தீர்க்கன் எலிசாவின்

#628
வீரியமாகத் தண்ணீரில் இரும்பை மிதந்திடச் செய்த மரக்கொம்பு மூலிகை
சூரியரின் படையானதின் கண்களைச் சூழ் மயக்கம் செய்த ஓர் வழி மூலிகை
பாரினில் சூரியர் யூதர்கள் மேல் சமர் பண்ணாதிருக்க விருந்திட்ட மூலிகை
சீருடன் சாமாரியாவினில் பஞ்சத்தைத் தீர்த்த எலிசாவின் வார்த்தையின் பற்பல

#629
வேரோடே அத்திமரம் பட்டுப்போகவும் மேய்ச்சல் உள்ள தலத்து ஆடுகள் மேய்க்கவும்
நீர் ஓடும் சீவநதியினில் காட்டவும் நேராய்த் தொழுவத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும்
போராடிப் பேயைச் செயித்து அரசாளவும் பொல்லாத பேர்களை நல்லவர் ஆக்கவும்
தீராத தாகத்தை மாற்றவும் ஆற்றவும் சீவவிருட்சக் கனியைப் பொசிக்கவும்

#630
சற்பங்களானதை நீக்கித் தடுக்கவும் சாவுக்கிடமான ஏதைக் குடித்தாலும்
அற்புதமாய்ச் சேதம்பண்ணாமல் போகவும் ஆரோக்கியம் செய்யக் கைகளை வைக்கவும்
நல் புகழாய் மரித்தோரை எழுப்பவும் ஞானானுமான திரவியம் வாங்கவும்
பற்பல பாடையைப் பேசவும் ஆதி பராபரனோடே பரலோகம் சேரவும்

#631
ஆன பொருட்கு எல்லாம் ஆமனது ஆனவர் அன்று ஓர் குருடனின் கண்ணில் உமிழ்ந்ததால்
மானிடரை மரமாய்க் காணச்செய்தது மற்றும் மனுடரைச் செம்மையாய்க் காணவும்
மீனுட வாயினில் வெள்ளியைப் பண்ணவும் விண்ணுலகத்துக்குக் கூட்டோடே போகவும்
ஈன அலகையைச் சொல்லால் துரத்தவும் இப்படி ரட்சகர் செய்த எல்லா வித

#632
பஞ்சமாபாதகனாகிய துன் மனச் பாப்பு மருந்திட்ட மூர்க்க வெறியினால்
மிஞ்சிய காமவிகார இலாகிரி மீறித் தலை மட்டும் ஏறிப் பிதற்றியே
அஞ்சுதலற்று எவரோடும் உடந்தையதாக அலைந்து அகந்தை செய் ரோமியின்
வஞ்சக மாய மருந்தின் மயக்கத்தை மாற்ற விழும் கெந்தகம் அக்கினி என்ற

@47 பறவை கண்ணுற்ற சிந்து
**விருத்தம்

#633
சிரத்தினில் முள் முடி தரித்த பெத்லகேம் நாதர் வளர் திறமை நாட்டில்
உரத்தின் மிகும் சிங்கனுடன் மறைப்புலி நூவனும் கூடி ஒருங்கு பேசிப்
பரத்தினிலே பறவை எல்லாம் சேர்ப்பதற்காய் நூவன் இன்று பறவை கூவ
வரத்தின் அருள் சீவவிருட்சத்து ஏறிச் சிங்கனும் புள் வரக் கண்டானே

#634
கண்டன் அடையே பறவைகள்
கண்டன் அடையே

#635
கண்டன் அடையே பெத்தலேகேம் பதிக்
காவலன்-தன் புதேற்பாட்டின் காலத்தில்
தண் தமிழ் சேர் சுவிசேடத்தின் பாதையில்
தாரணிப் பக்கிகள் அத்தனையும் வர

#636
துங்கம் மிகும் எத்தியோப்பியர் ஏத்தியர் சூரியர் கல்தேயர் யூதேயர் மேதியர்
இங்கிலீசர் அராபியர் கப்பத்தோக்கியர் எமோரியர் பெரிசியர் சிலீசியர்
வங்கையதாகிய ரோமையர் பாரசர் மாகோகர் கோகர் புரூசியர் ரூசியர்
சங்கையுள்ள ஏபிரேயர் எபேசியர் சாமாரியர் மீதியானியரும் வரக்

#637
தந்திரமான பிராஞ்சியர் மேசோப்பொத்தாமியர் ஏபூசியர் ஏலாமீத்தியர்
இந்துஸ்தானியர் அல்மாஞ்ஞர் கொரிந்தியர் இக்கோனியர் இஸ்பாஞ்சர் கொனஸ்தாஞ்சியர்
விந்தை செறி கானானீயர் அம்மோனியர் வெஸ்தியர் இஸ்தேக்கியர் கிருகாசியர்
பந்தம் மிகும் அருமேனியர் துற்கிகள் பம்பிளியர்களும் தெம்பாகவே வர

#638
சீதோனியர் பொடுத்தீசர் உலாந்தர்கள் சேரயீரீசர் கிரேத்தர் மோவாபியர்
வாதுமலாகிகள் லத்தீனர் தானிஷர் வாகாம் அபிமேலேக்கியர் பெலிஸ்தர்கள்
கோது முகிலர் பரதரிஸ்க்காச்சர்கள் கோளோசேயர் சர்தேயர் மற்றோர்களும்
ஆதி பரன் சுதனின் சுவிசேடத்தின் ஆனந்தப் பாதையில் ஞானந்தமாக வர

#639
நண்பான ஈந்தியாத் தீவு என்ற பங்கிலே நாட்டும் ஐம்பத்தாறு தேயம் உண்டே அதில்
அன்பான அங்கர் கிராடர் திராவடர் ஆந்திரர் ஓட்டியர் பாஞ்சாலர் பாண்டியர்
தென்பான கொங்கணர் கேரளர் கேகையர் சீனர் கரூசர் கலிங்கர் யுகந்தரர்
வன்பான வங்கர் வங்காளர் மராடர் மாளவர் மச்சர் மலையாளரும் வர

#640
கொல்லர் நிடதர் இலாடர் எரவணர்கள் கூற்சரர் உருமருணர் குகுரர் சகர்
பல்லவர் சாலவர் சிங்களர் சிந்தர்கள் பப்பரர் சவ்வீரர் சோனகர் தெங்கணர்
புல்லர் புலிந்தர் மகதர் விதற்பர்கள் போடர் குடகர் குருகுந்தளர் கோசர்
கல்லர் கன்னடர் கன்னாடர் காம்போசர்கள் காந்தாரர் சோளர் துளுவர்களும் வர

#641
காசிமீரர் சூரசேனர் அவந்திரர் காசர் குலிந்தர் நேபாளரை அல்லாமல்
தேசமினூடு எழு நால் வகைச் சாதியில் தேர்ந்த வேளாளர் முதலியர் ஆரியர்
பூசுரர் வேதப் பிராமணர் வள்ளுவர் பூக்காரர் பட்டுநூல்காரர் மராட்டியர்
மோசம்செய் கள்ளர் இடையர் மறவர்கள் மூடர்களும் கடத்தேறும் வழி வர

#642
சாணார் சலுப்பர் குறவர் குயவர்கள் சக்கிலியர் பள்ளிகள் படையாச்சிகள்
பாணார் சமணர் பரவர் வடுகர்கள் பள்ளர் பறையர் பட்டாணிகள் வாணிகர்
காணாப்புதரையர் கோலியர் கொல்லர்கள் கம்மாளர் கல்தச்சர் கன்னார் தட்டாருடன்
நாணாத வேசிகள் தொட்டியர் ரெட்டியர் நாவிதரும் வந்து ஞானஸ்நானம் பெற

#643
மேலான சாதியும் தாழ்வான சாதியும் வெள்ளை கறுப்பு விபரீதச் சாதியும்
மாலான சைவ மதக்காரச் சாதியும் மாங்கிஷம் தின்கும் மதமற்ற சாதியும்
சாலப் பெருந்தாலி சங்குத்தாலி கட்டிச் சாதி பொட்டுக்கட்டிச் சாதியில் வண்ணமாய்
நாலாவிதமான சாதி எல்லாம் வெல்லை நாட்டுக்குள்ளே செப வீட்டுக்குக் கீழாக

@48 பறவை வரும் சிந்து
**கலிப்பா

#644
சாலோக சாரூப சாமீப சாயுச்சிய
மேலான நன்மை தரும் விண்ணவர் பெத்லேகர் வெற்பில்
நாலாவிதமான ராச்சியத்தின் பட்சி எல்லாம்
கோலாகலமாகக் கூடி வருகுது ஐயே

#645
கூடி வருகுது ஐயே பறவைகள்
கூடி வருகுது ஐயே

#646
கூடி வருகுது ஐயே பெத்தலேம் என்ற
கோட்டைக்கு அரசனின் நாட்டுப் புறம் எல்லாம்
மாடப்புறாவான ஞானிகளும் அன்ன
மான சீயோன் சபை மேவும் மயில்களும்

#647
கட்டியம் கூறி யொவான் முனி வந்து கடும் பிரசங்கம் திடன் பெறச் சொல்லையில்
மட்டில்லாப் பாவிகள் ஆயக்காரர்களும் மாயக்காரர்களும் தீட்சைக்கு வந்தாப்போல்
சிட்டான சிட்டரும் மோனக் குருக்களும் சேனைச் சகோதரப் பட்சிகள் கூட்டமும்
கட்டை வெள்ளைப் புள்ளும் நெட்டை ஞானப் புள்ளும் கல்விப் புள்ளும் பல புள்ளிப் புள்ளுமாக

#648
ஆனந்தப் பட்சியும் பேரின்பப் பட்சியும் அற்புதப் பட்சியும் மெய்ப் புகழ் பட்சியும்
தானம் தவம் திகழ் காரணப் பட்சியும் சத்தியப் பட்சியும் சாகாக் குருவியும்
மோனம் புகழ் வானம்பாடியும் ஆடியும் ஓக்கத்தில் உள்ளானும் மார்க்கத்தில் உள்ளானும்
ஞானம் தரும் பட்சி மெஞ்ஞானப் பட்சியும் நாதாந்தப் பட்சியும் வேதாந்தமாய்ப் பேசி

#649
வல்லமையான வலியானும் சத்திய மார்க்கத்தை விட்டு அசையாத வல்லூர்களும்
சல்லாபமாய்ப் பேசும் நாங்கணவாச்சியும் தானே திரித்துவத்தில் மூன்றாள்காட்டியும்
உல்லாசம் ஆகிய ராசாளியும் அதினோடே உலாவிய ஆசாரப் பட்சியும்
இல்லாத ஞானங்கள் பேசும் கிளிப்பிள்ளை என்ற திருச்சபைப் பக்கிகள் அம்மட்டும்

#650
மன்னவன் நோவாவின் பெட்டிக்குள் சோடாக வந்து நுழைந்த பறவைகள் போலவும்
உன்னதன் வந்து அங்கு எழுபது பேரையும் உற்ற பனிரண்டு அப்போஸ்தலமாரையும்
வின்னம் இல்லாமல் இரெவ்வெண்டு பேராக விட்ட விதத்துட திட்டம் எல்லாம் கற்று
நன்னயமாய்ப் பட்சி இலட்சத்துநாற்பத்து நாலாயிரங்களும் சோடுசோடாகவே

#651
வெட்டுக்கிளியா மகமது பட்சியும் வேதத்தில் சேராத கூழைக்கடாக்களும்
தெட்டித் திரிகின்ற அக்கியானப் பட்சியும் தேவ வசனத்தைத் தின்கின்ற பட்சியும்
மட்டித்தனமான சமண் மதப் பட்சியும் மாய்மாலப் பட்சியும் பேய்மாலப் பட்சியும்
பொட்டைக் குருட்டு ரோமாபுரிப் பட்சியும் பொய்ப் போதகப் பட்சி அப்பால் ஓர் கூட்டமாய்

@49 பறவை சேரும் சிந்து
**கட்டளைக்கலிப்பா

#652
எட்டு இலட்சணம் உள்ள பராபரன் ஏக மைந்தன் எனும் கிறிஸ்து ஐயனை
விட்டு ஆகாமி பல ஸ்திரீ மார்க்கமாய் வேறு பாதையில் சென்றதை என் சொல்வேன்
மட்டில்லாத இரக்கமதாய் வளர் மனுப் பெத்லேகர் மகத்துவ நாட்டிலே
திட்டமாய் நரரின் குலப் பட்சிகள் திருச்சபைப் புறம் சேருது சேருதே

#653
சேருது சேருது ஐயே பறவைகள்
சேருது சேருது ஐயே

#654
சேருது சேருது ஐயே பெத்தலேம் பதிச்
சீயோன் மலையில் கலியாணத்துக்கென்று
பாரினில் கற்புள்ள கன்னியர் சேர்ந்தாப்போல்
பக்கிகள் ஞான நதிக்கு அருகாய் வந்து

#655
பண்டு முற்காலத்து இருந்த ஈசாக்குக்குப் பத்தினி ரேபாக்காள் பெற்ற குமாரர்
இரண்டு பெயரில் இளையவனாகிய நீதிமான் யாக்கோபு ஏசாவுக்கு அஞ்சியே
ஒண்டியதாய் மேசோப்பொத்தாமியாவுக்கு ஓடிவந்து பதானாராமுக்குள் புறம்
அண்டிக் குடியிருந்து ஓங்கிய லாபான் அண்டையின் நீடி அடைந்து சேர்ந்தாப்போலே

#656
நீதி இல்லாத எகிப்பத்துத் தேச நிருபன் எனும் பரவோன்-தன் குமாரியின்
காதல் மிகு மகனாக வளர்ந்து அங்கு காவலனாக இருப்பதைப் பார்க்கிலும்
தீதுறலான தன் சொந்தச் சனத்துடன் தீங்குபடுதல் நலம் எனத் தேறியே
மீதியான் தேசத்து ஆசாரியன் கிட்ட வித்தகன் மோசேயும் வந்து சேர்ந்தாப்போலே

#657
வாச மலர்ச் செறியும் எகிப்பத்துவின் மன்னன் சிறையினைத் துன்னித் தொலைந்துமே
தேசம் எலாம் புகழும்படியாகச் சிவந்தசமுத்திரத்தைக் கடந்து அப்புறம்
மோசம் இலாமலே சீன வனாந்தரம் முற்றும் துரிதத்துக்குத் தப்பிப்போன பின்
காசலையாக இசராவேல் சாதிகள் கானான் தேசத்தில் வந்து சேர்ந்தாப்போலே

#658
சற்குணமான இருதயத்தாலுமே தன்னோடு இருந்த அறுநூறு பேருடன்
துற்குணமான சவுலுவுக்கு அஞ்சியே தூரத்தே சென்று பெலிஸ்தரின் தேசத்தில்
நிற்கின்ற காத்து நகரத்தில் வந்து அங்கு நேரான மாகோகின் மைந்தன் எனச் சொலும்
நற்குணத்து ஓங்கிய ஆகீசு எனும் காத்தின் ராசனைத் தாவீது நேசமாய்ச் சேர்ந்தாப்போல்

#659
எல்லாரும் நம் அண்டை வாரும் எனக் கிறிஸ்து ஏசு இயம்பின சத்தத்தைக் கேட்டுமே
வல்லமை பேசும் துடுக்கர்கள் ஏழை வழக்கு அழிவுக்காரர் மாய்மாலக்காரர்கள்
கல்லாத மூடர் கொலைபாதகக்காரர் காமாவிகாரிகள் போறாமைக்காரர்
பொல்லாத பாவிகள் ஆயக்காரர்கள் புண்ணியன் பாதத்தை நண்ணிச் சேர்ந்தாப்போலே

#660
மட்டளவில்லாத புத்திகள் சொன்னாலும் வாய்மையதாய் அதைக் கேட்கமாட்டோம் என்று
தட்டிவிட்டுத் தனக்கு உண்டான பங்கதைத் தா என்று வாங்கியே தூரத்திலே சென்று
பட்டித்தனத்தில் அலைந்து திரிந்து பரத்தயரோடு முயன்று கடைசியில்
கெட்டகுமாரன் மனது திரும்பிக் கிருபைப் பிதாவினிடம் வந்து சேர்ந்தாப்போல்

#661
தேவாராதனை கோவில் புறத்திலே செய்யும் சமையங்கள் திட்டம் அறிந்தாலும்
போவோம் இனம் சற்று நேரம் பொறுத்து என்று பொல்லாமையால் தங்கள் காலத்தைப் போக்கியே
பாவாளர் அவர் பாதிப் பிரசங்கம்பண்ணுகிலும் பண்ணி மூய்க்கின்ற போதிலும்
ஓவாது அங்கண் ஒருத்தரொருத்தராய் ஒன்றின் பிறகால் ஒன்றாய் வந்து சேர்ந்தாப்போல்

#662
ஆன பராபரனின் சபையோர்கள் அலகையையும் அதின் ஆடம்பரத்தையும்
ஈனமதான பவத்தையும் ஆங்கிஷ இச்சை அனைத்தும் இகழ்ந்து விட்டுத் தள்ளி
மோனமுடன் பரிசுத்த வழியில் முழுதும் நடந்து விசுவாச மார்க்கமாய்
ஞானமதாகக் கிறிஸ்து அருளிச் செய்த ராப்போசனம் என்னும் நன்மைக்குச் சேர்ந்தாப்போல்

#663
இராசகுமாரனை விட்டுத் தெருவினில் நாலு இடமும் இரந்து குடிக்கிற
தூசி எனும் பிச்சைக்காரன் தனக்குத் துணைவன் என நம்பிச் சோரம் போனாப்போலே
ஆசை வெறிகொண்டு செத்த மனுடரை ஆண்ட பொருள் என்று மீண்டும் மனத்திடை
ரோசம் இலாமலே வேசித்தனம் செய்ய ரோமி விக்கிரகத்து அண்டை சென்றாப்போலே

@50 பறவை சாயும் சிந்து
**கலிப்பா

#664
ஆராய்தல் இல்லாத ஆழக் கிருபை நதிப்
பேரான நன்மை மிகும் பெத்லேகர் நல் நாட்டில்
சீரான கோவில் திருச்சன்னதிப் பதிவில்
பாராய் பல முகமாய்ப் பட்சி நிரை சாயுது ஐயே

#665
சாயினும் ஐயே பறவைகள்
சாயினும் ஐயே

#666
சாயினும் ஐயே பெத்லகேம் பதித்
தாணுவை வாழ்த்தி மா ஆணவமாகவே
மாய எகிப்பத்தை விட்டுப் பறந்துமே
வார்த்தைப் பாட்டுக் கானான் தேசத்தின் மீது எங்கும்

#667
ஆதரவான பராபரன் பிள்ளைகளான இசரவேல் பட்சிகளானது
போதரவாகிய முப்பதுலட்சம் பொறுக்கியெடுத்த கணக்குகள் அம்மட்டும்
பாதகனாம் பரவோனின் சிறையினுள் பட்டுக் கிடந்ததை விட்டுக் கடந்துமே
வேதன் உரைப்படி சீனா வனாந்திரம் மேவச் சிவந்தசமுத்திரத்து ஊடாக

#668
எதன் வனத்தில் இருந்த பறவைகள் எக்கசக்கம் பண்ணிக்கொண்டு திரிந்ததால்
ஆதியானால் வெளியே துரத்தப்பட்டு அப்பாலும் இப் பாரில் வைப்பாகிப் பட்சிகள்
போதக நோவாவின் பெட்டிக்குள் வந்து புகுந்து கிடந்து புறப்பட்டு எகிப்தினில்
சாதனையாய் அடிமைப்பட்டு நின்ற பின் தாண்டிச் சிறையினை மீண்டு வனத்துக்குள்

#669
ஆசியாவிலுற்ற ஏழு திருச்சபையான ஏபேசு சிமிர்னா பெர்கமு
பேசரிதான தியாத்திரா சார்துடன் பிலதெல்பியா லவோதிச்சேயாப் பற்றுடன்
தேசத்தில் தாரிசு சூரியரின் பற்றும் சீப்பிறாத்தோடு அந்தியோக்கியாவின் பற்றும்
நாசரேத்துப் பற்றும் சாமாரியாப் பற்றும் நல் தமஸ்குத் தீரு சீதோன் பற்றும் சுற்றி

#670
வார்த்தைப் பாட்டுக் கானான் என்ற இசராவேல் வண்மை பலஸ்தீனா அர்ச்சய தேசத்தில்
ஆர்த்த சதுர்ப் பங்கு யூதேயாச் சாமாரியாக் கலிலேயாப் பேரேயாவில் மேவிய
பெத்தானியாவும் எருசலேம் கேப்புறோன் பேத்சேமிசும் பெற்பகே எரிகோவொடு
சேர்த்த பெத்சாயிதா நாயீன் பட்டணமும் சேபுல் தீபேரியா சீர் அணியும் சுற்றி

#671
தீரு சரேப்தா சீதோன் பட்டணமும் தேவ கிறிஸ்தின் பருவத மேட்டையும்
நேருடன் சாலேமின் ஏரிப் பற்றானதும் நேர்ந்த கர்மேல் கம்மாய்க் கீழப்படுகையும்
தாரு சேசாரியாப் பண்ணை வயற்குள்ளும் தாபோர் பட்டணத்து ஆற்றங்கரைக்குளும்
ஏர் உளதாகிய கப்பர்நகூம் பட்டணம் மேலக்குளத்துக் கரைப் பற்றும் சுற்றியே

#672
அந்தர வானும் புவியும் படைத்த அரும் பொருளான் பரம்பொருளின் சுதன்
மந்திரமாகிய ஞான உபதேச மார்க்கத்துள் வந்த கிறிஸ்துவப் பட்சிகள்
தந்திரக்காரக் குருவியதாகிய சண்டாளப் பாப்பு என்ற பட்சியோடு ஒன்றாகிப்
பந்தமதாகிய ரோமாபுரி என்ற பாபிலோனைச் சுற்றிக் கீழ்நரகத்துக்குள்

@51 பறவை மேயும் சிந்து
**விருத்தம்

#673
நிலம் திகழ் பெத்தலேகம் நிருபனின் அருளினாலே
நலம் திகழ் ஞானஸ்நானம் நற்கருணைகளும் பெற்றுப்
பலம் திகழ் வரங்கள் ஓங்கிப் பரம சீவாற்றில் தங்கிக்
கலந்து பக்கிகள் எல்லாம் தான் களிப்புடன் மேயுது ஐயே

#674
மேயினும் ஐயே பறவைகள்
மேயினும் ஐயே

#675
மேயினும் ஐயே பெத்தலேகேம் பதி
வேதாத்த நாயகன் பாதாரவிந்தத்தைத்
தாயகமாய் எண்ணிப் பெதஸ்தாப் பொய்கையில்
சம்மனசு வந்த நேரத்தைப் பார்த்து அங்கு

#676
துங்காதிதுங்கர் தொழும் கருணைப் பரன் தொல் உலகத்தினிலே எழிலாகிய
சிங்காரக் கா அது ஒன்று உண்டுசெய்தான் அந்தச் செல்வ வனத்தில் திரள் விருட்சத்தையும்
மங்காத சீவமரத்தையும் உண்டாக்கி வைத்தனன் அந்தக் கனி வகை யாவையும்
பங்காக ஆதாம் ஏவாள் என்ற பட்சிகள் பங்குவைத்துக்கொண்டு மங்களமாகவே

#677
ஏதன் மலையிலிருந்து ஓர் ஆறது எழும்பியே நான்கு நதியாய்ப் பிரிந்தது
ஆதி முதலான பீசோன் நதியிலும் அப்பால் கீகோன் என்ற இரண்டாவது ஆற்றினும்
நாது ஈத்தேக்கல் எனும் முன்றாம் ஆற்றினும் நாலாவது எனும் ஐபிறத்து ஆற்றினும்
மாதவர் போற்றிய யோர்தான் நதியினும் வந்து தீட்சைபெற்றுக்கொண்டு கெம்பீரமாய்

#678
ஈனகம் கொண்ட பரவோன் சிறைக்குள் இருந்த இசராவேல் பட்சிகளானது
ஞானக மேவு பராபர வஸ்துவின் நன்மையினால் அந்தத் துன்மைக்கு எல்லாம் தப்பிக்
கானகத்தூடு வர அங்கு நாற்பது காலத்து அளவும் கருணையதாகவே
வானக மீதில் இருந்து பெய்யச்செய்த மன்னாவைக் கண்டு மகிழ்ந்து கொத்திக்கொத்தி

#679
எந்தை பரன் சுதனார் வனத்துக்குள் இருந்து உதவ பிரசங்கம் இயம்புகில்
வந்து பறவைகள் புத்திகள் கேட்டு மகிழ்ச்சியடைந்து அங்கு இருக்க மனுமகன்
ஐந்து அப்பத்தைப் பிட்டு ஏழு அப்பத்தைப் பிட்டு ஆறிரு அப்போஸ்தலமார்களைக் கொண்டுமே
பந்திவைத்துத் தர ஐயாயிரம் பட்சி பண்பான நாலாயிரம் பட்சியும் கூடி

#680
ஆத்துமப் பாடு படும் தினத்தன்றைக்கு ஆதி பரன் சுதனார் தயவாகவே
மாற்றம் இல்லாத சரீரம் என்று அப்பமும் மாசற்ற இரத்தம் என முந்திரிரசம்
பாத்திரத்தில் வைத்துத் தேவ நன்மை எனப் பாவிகளுக்கு எல்லாம் தாவித்து அருள்கையில்
சூத்திரமாக அப்போஸ்தலப் பட்சிகள் சுற்றிச்சுற்றி தின்று பற்றிப்பற்றிக் கொத்தி

#681
ராசாதிராசன் எனும் சருவீசுரன் நல் மகனாரின் திருக்கலியாணத்தில்
தேசாதிதேசம் எல்லாம் புகழாகவே தேவ பெரிய விருந்துசெய்தான் அதை
ஆசார ஈனப் பறவைகளானது அசட்டைசெய்தே பறந்து அப்பாலே போனாலும்
பேசாமல் நாற்சந்திப் பாதையில் உற்ற பெரும் பறவைக் குலம் அத்தனையும் வந்து

#682
துன்மனதான பசாசுட சேயனும் தூதனுமாகிய ரோமையின் பாப்பவன்
வன்மனம் கொண்டு எழுந்து ஏசுக் கிறிஸ்துவின் மார்க்கத்துள்ளோர்களை வாதைசெய்தானதால்
கல் மனதாம் அவன் ஈரற்குலையையும் கண்ணையும் ஆங்கிஷம்-தன்னையும் அல்லாமல்
துன்மைசெய்வோர்களின் மாங்கிஷம்-தன்னையும் தூரத்தில் உள்ள பறவை எல்லாம் வந்து

@52 பறவை பார்க்கும் சிந்து
**கட்டளைக் கலிப்பா

#683
போர்க்குள் மிஞ்சிய பேய்த் தலையைக் கெடப் போக்கி நேமி புரக்கும் இரட்சகன்
தீர்க்கமாக மரித்த இலாசரைத் திரும்ப நாலு தினத்தில் எழுப்பியே
யார்க்கும் நன்மை அளிக்கும் அனாதியான் அருமைச் சேய் மனுவாய் வரும் பெத்தலேம்
பார்க்குள் மேவிய பற்பல வர்க்கமாம் பட்சி சாதிகள் பார்க்குது அந்தாலையே

#684
பார்க்குது அந்தாலையே பறவைகள்
பார்க்குது அந்தாலையே

#685
பார்க்குது அந்தாலையே பெத்தலேகேமின்
பராபரன் மைந்தன் இரா மயமாய் இருந்து
ஆர்க்கும் கருணையாய்ப் பார்ப்பது போலவே
அத்தனை பட்சியும் முற்றுது இங்கேதான்

#686
வாக்குக்கும் நோக்குக்கும் புத்திக்கும் எட்டாத வள்ளல் எரிபந்த நீதத்தினாலும்
தாக்கிய அக்கினிக் கெந்தகத்தைப் பெய்து சண்டாளப் பாவிகள்-தம்மை அழிக்கும் முன்
நீக்கி அழிவுக்குத் தப்ப மெய்த் தூதர் கை நீடிய நால்வர் கடந்து ஓடிப்போகையில்
நோக்கமதாகவே சோதோம் பட்டணத்தை லோத்தின் பெண்சாதி திரும்பிப்பார்த்தாப்போலே

#687
ஆபிரகாமுட கட்டளையின்படி அன்பாய் எலியேசர் தென்பாய்ப் புறப்பட்டுத்
தீவிரமாய் மேசோப்பொத்தாமியாவினைச் சேர்ந்த நாகோருவின் ஊருக்கு வந்த பின்
மா பிரியத்துடன் நாகோர் மில்க்காள் பெற்ற மைந்தன் பேத்துவேலின் பந்தனை என்றதோர்
நூபுரம் பூண்டு எழும் ரேபெக்காள் பின் செல நோக்கி ஈசாக்கினைத் தீர்க்கமாய்ப் பார்த்தாப்போல்

#688
ஏகமதாய் இசராவேல் சனங்கள் எகிப்பத்தை விட்டு வனாந்தரத்து உற்ற பின்
தீகளைப் போல் கொடும் பாவத்தைச் செய்யவே தேவன் எரிந்து சினந்தவர்-தங்களைச்
சாகவும் சாகக் கடிக்கவும் கொள்ளிவாய்ச் சற்பத்தை விட்டதினால் கடியுண்டவர்
வேகத்துடன் மோசே உண்டாக்கித் தூக்கிய வெண்கலச்சற்பத்தை நோக்கிப் பார்த்தாப்போலே

#689
ஆலையத்தின் தலைவரில் ஓர் தன்யவீரு கிறிஸ்துவின் அண்டையில் சென்று அவர்
காலதில் வீழ்ந்து தன் புத்திரிக்கு உற்ற துன் காய்ச்சலை நீக்க அழைத்துக்கொண்டு ஏகையில்
மேலும் ஈராறு வருடங்களாக மிகப் பிணி கொண்ட பெரும்பாட்டு இஸ்திரீ
கோலத்தொடு தொட ஆர் தொட்டது என்றுமே கொற்றவன் சுற்றித் திரும்பிப் பார்த்தாப்போலே

#690
எட்டுத் திசையும் கொள்ளாதவன் மைந்தன் எம் எசு சுவாமி எழுந்தருளித் தர்மப்
பெட்டிக்கு எதிர் இருந்து எப்படிக் காசுகள் பெட்டியில் போடுகிறார் என்று அறிந்திடச்
சட்டத்துடன் அதில் செல்வமுளோர் எலாம் தங்கள் சம்பத்தின்படி மிகப் போட்டாலும்
துட்டு ஒன்று போட்ட விதவையின் மேல் புகழ் சொல்லிச்சொல்லிக் கத்தர் சூழப் பார்த்தாப்போலே

#691
பத்தி இல்லாமலே லோகச் செல்விக்கையின் பாக்கியத்தோடு சலாக்கியமாகவே
முத்து உறையும் தன் அரண்மனை வாயில் முகப்பில் கிடந்த தரித்திரவானுக்குச்
சித்தம் இரங்கித் தயவுசெய்யாக் கொடும் தீயவை சூரியவானும் நரகத்தில்
கஸ்திப்படும் பொழுது ஆபிரகாம்-தனைக் காணத் தன் கண்ணை எடுத்துப் பார்த்தாப்போல்

#692
மன்னவனானவன் தன் மகன் சொந்த மண விருந்துக்கு வரச்சொலி ஆள்விடச்
சொன்னபடிக்கு வராமல் இடும்புசெய் துட்டரை நிக்கிரகம் செய்து நாற்சந்தி-
தன்னில் அகப்பட்ட மொண்டி குருடு சமஸ்தமும் ஒக்க அழைத்து நிறைந்த பின்
பன்னும் மணவறைப் பந்தியிலே வந்து பாத்திபன் நின்று சுற்றிச்சுற்றிப் பார்த்தாப்போல்

#693
உத்தமனான சகேயு ஆயக்காரன் ஒப்பதற்று ஓங்கு கிறிஸ்துவைக் காணவே
மெத்தவும் எண்ணியிருக்கும் அந்நாளில் அவ் வீதி நிரம்பிய கும்புகள் சூழவே
நித்தன் வருவதைக் காணத் தடை என நேடி முன்னால் விரைந்து ஓடித் துரிதமாய்
அத்திமரத்தினில் ஏறி இருந்துகொண்டு ஆவலாய் நோக்கி எம் ஐயனைப் பார்த்தாப்போல்

#694
செய்யாத அற்புதம் செய்து பிரசங்கம் செய்தும் கிருபைகள் செய்தும் குணப்படா
வெய்யோர்களாகிய யூதருக்காக வியாகுலப்பட்டு மனதுருக்கத்துடன்
ஐயோ நீ இப்பொழுதாகிலும் உன் சமாதானத்துக்கானதைத் தேடிக்கொள்வாயெனில்
மெய்யாகத் தாவிளை என்று அழுதுகொண்டு வேதன் எருசலேமை நோக்கிப் பார்த்தாப்போல்

#695
பிரதானாசாரியன் வீட்டிலே சீமோன் பேதுரு கத்தரை மூன்று விசையும்
மறுதலித்தாலும் அவனை மறுத்து மறுத்தும் விடாமல் உருக்கமதாகப்
பொறுமையுடன் இருந்துத் தமது தாதை தன் பொல்லாத பிள்ளைக்கும் நன்மைசெய்தாப் போல்
கிருபைப் பரமன் திருமுகம் கொண்டுமே கீர்த்தியாய்ப் பேதுருவை நோக்கிப் பார்த்தாப்போல்

#696
வெள்ளிக்கிழமையில் ஆதி பிதா மகன் வேண்டும் பலபல பாடுகள் பட்டபின்
எள்ளளவேனும் இரக்கம் இல்லாமல் எருசலை விட்டுக் கபாலமலையினில்
தள்ளிக்கொண்டு ஏகிக் குருசில் அறைந்த அச் சண்டாள யூதர்கள் நிற்க வலப்புறக்
கள்ளள் எனையும் நினையும் எனச் சொல்லிக் காவலன்-தன்னையே நோக்கிப் பார்த்தாப்போலே

#697
எலியாப் பரத்துக்கு எழும் போது அங்கு அவன் ஏறுவதை எலிசா நின்று பார்த்த
நலமது போல ஐஞ்ஞூற்றுவர் காணவே நாதனார் மேக சிம்மாசனத்து ஏறி
ஒலி முழக்கத்தோடு வானவர் சேனை உசாவப் பரமண்டலத்துக்கு எழுந்து
வலிமையில் போற மகத்துவத்தைக் கன வாஞ்சையாய் நோக்கி நின்று அண்ணாந்து பார்த்தாப்போல்

#698
எத்தனை பட்சமாய்ப் புத்திசொன்னாலும் இளக்காரம்கொண்டு மனக் கடினத்துடன்
மெத்தவும் முன்னிலும் கெட்ட நடக்கையாய் வேண விதம் எல்லாம் பாவத்துக்கு உட்பட்டு
பத்தி இல்லாமல் நரகத்தின் பாதையில் போறவர்-தங்களுக்கு ஆதரவே சொல்லிக்
கஸ்தி மிகுத்துப் பரதாபப்பட்டுக் கருணையதாய்க் குருமார்கள் பார்த்தாப்போலே

#699
செல்வமுள்ளோரையும் நல் துகில் கட்டியே சித்திரப் பூஷணமிட்டவர்-தம்மையும்
கல்வியுள்ளோரையும் பிள்ளையுள்ளோரையும் கள்ளக் கலவி தரும் கனிமாரையும்
நல்வினையோரையும் அண்ணாவிமாரையும் நற்புத்தி சொல் குரு உபதேசிமாரையும்
தவ்வி எறிந்து பொறாமையதாகவே சண்டாளர் வன்கண்ணாய்ப் பார்ப்பது போலவே

#700
மாறுபாட்டுக்கார ரோமி என்று ஓதும் மகா வேசியானவள் மட்டுத்திட்டம் அற்றுப்
போறவர்-தம்மையும் வாறவர்-தம்மையும் போகவிடாது புறத்தினில் பற்றியே
ஏறிய நாயது போல் அலைந்து திரிந்து எக்கணும் கண்டவிடத்தில் எல்லாம் நின்று
வேறு உள செம்பு மரம் சிலை யாவையும் வேசித்தனம் செய்யும் நோக்கமாய்ப் பார்த்தாப்போல்

@53 கண்ணிச் சிந்து
** கலிப்பா

#701
கொம்பிக் குதித்து எழுந்து கூத்தாடிக் கொக்கரித்து
வம்புக்கென்றே தினமும் வந்து அடுத்த பேய்க் கணத்தை
வெம்பப்பட மிதித்த விண்ணவர் பெத்லேகர் வெற்பில்
நம்பிக்கையாய்க் குழுவா ஞானக் கண்ணி கொண்டாவே

#702
ஞானக் கண்ணி கொண்டுவா குழுவா
ஞானக் கண்ணி கொண்டுவா

#703
ஞானக் கண்ணி கொண்டு வா பெத்தலேகமின்
ராசனை வாழ்த்தி மா நேசமதாகவே
வானத்திருந்து அருள் ஞானத்தினால் அக்கி
யானத்துள்ளோரை மெய்க் கியானத்துள் ஆக்கியே

#704
அந்நாள்ப் படுத்திடு மாடப்புறாவினை ஆதி பரன் சுதன் தானே கொடுபோனான்
முன் நாளில் அப்பத்தைக் காக்காய் கொண்டுசென்று முந்தும் எலியாவுக்குக் கொடுக்கப்போச்சு
உன்னதமாக உறாஞ்சிய பட்சியை உத்தமன் ஆபிரகாம் துரத்திவிட்டான்
வன்னச் சேவல் மலை யானைக் கூப்பிட்டது மா மயிலைத் திரளாகப் பிடிக்கவே

#705
நோவாவின் பேழைக்குள் பக்கிகள் எல்லாம் நுழைந்தது கேட்டிருந்தோம் அது அல்லாமல்
நாவதிலே ஒலிவ இலை வைத்து நடந்து ஓர் புறாவும் திரிந்து அலுவலாய்க்
காவலாய் நன்றிகெட்டோர்கள் போனாப்போலே காட்டுப்புறாவும் வராமலே போச்சுது
பாவிகளான செவிட்டு விரியன்கள் பட்டும் நமக்குப் பிரயோசனம் என்ன

#706
செம்மறியாட்டைச் சுதன் எடுத்துகொண்டான் தேற்றரவாளன் புறாவை ஏற்றுக்கொண்டான்
வன்ம எரோதே நரியாகிப் போகினான் மாசற்றோரும் கபடற்ற புறா ஆனார்
கன்மப் பிசாசது அரவு உருக்கொண்டது கற்றுக் கழுதை பில்யாமோடே பேசிற்று
உண்மை நூற்றைம்பத்துமூன்று மீன் பட்டாப்போல் உற்ற அக்கியானரைப் பற்றிப் பிடிக்கவே

#707
கங்கமும் சிங்கமும் கன்றுக்குட்டியும் கனத்த நால் சீவனோடு ஒன்றாகிப்போச்சுது
அங்கு ஒருநாள் வேட்டைக்குப் போன ஏசாவை அல்லாமல் யாக்கோப்பு ஆசீர்வாதம் பெற்றான்
பங்காக முக்காலம் காட்டுப்புறாவைப் பராபரனுக்குப் பலியாய்ப் படைத்தது
இங்கு ஏசுநாதர் குருகு போல் செப்பட்டையில் அழைத்தாலும் யூதர் குணமாகலை

#708
அஞ்சு சிட்டுக் கூடி இரண்டு காசு ஆனாலும் அத்தை மெத்தப் பிடித்தால் பணம் சேருமே
வஞ்சகக் கள்ளக் குருவிகள் வந்தாலும் மாறாட்டம்பண்ணி ஒளித்து ஓடிப்போய்விடும்
கொஞ்சு கிளிகள் சகோதரப் பட்சிகள் கூட்டை விட்டு அக்கியானக் காட்டுக்குள் ஏகாது
மிஞ்சிய வெள்ளைக் குருவிகளுக்கு விசுவாசம் உண்டு நிசமாக நீ இப்போ
** பக்ஷி இனங்கள்

#709
காடைகள் எல்லாம் இசராவேல் சாதிக்குக் காட்டிலே நித்தம் கறியாகிப் போச்சது
பாடும் காகங்கள் கடல் உறாஞ்சிப் பட்சி பஞ்சைக் கெருடன் பருந்து கழுக்களும்
சேடு வலூறு கருவாட்டுவாலியும் செம்புகம் ஆட்காட்டி தீக்குருவிகளும்
வாடிய ஆந்தை சகோரப் பட்சி கோட்டான் வவ்வால் நாரை கொக்கு எல்லாம் தீட்டாம் அல்லோ

#710
நட்டணைக் கோட்டுவனோடு திரிஞ்சலும் ராசாளியும் கொண்டலாத்தியும் ஆகாது
திட்டமதான சோலைக் கிளி அர்கோலான் சேரா காப்பு என்ற கிளி தின்னலாம் என்றும்
கட்டளையிட்டவன் பேதுருவுக்குப் பின் கட்டளையிட்ட கனாவைக் கண்டாயில்லை
வெட்டுக்கிளியை யொவான் தின்றுபோட்டானே வேறே கிளியை நாம் தேடிப் பிடிக்கவே

#711
உள்ளே திருட்டு ஓனாயான பாப்பு என்றவன் உத்தமன் போல் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு
கள்ளத்தனமாக ஞானியைப் போல் வந்து கற்றவர்-தம்மையும் மோசம்செய்வான் என்று
வள்ளல் பரன் சுதனார் சொன்ன செய்தியை மாத்திரம் புத்தியில் வைத்துக்கொண்டே நாமும்
தள்ளிப் பதுங்கி அ மார்க்கத்தாரை எல்லாம் தப்பாமல் கை மேலே இப்போ பிடிக்கலாம்

@54 நூவன் கண்ணி கொண்டுவரும் தரு
** விருத்தம்

#712
அறுப்பு மிகுதியது எனவும் வேலையாள் கொஞ்சம் என்றும் அருளிச் செய்த
சிறப்பு மிகும் பெத்லகேம் நாதர் வளர் பண்ணை எல்லாம் திடன்கொண்டு ஓங்கி
வெறுப்பு மிகும் பவத் துயரைத் தவிர்த்து உயர்ந்த சிங்கனின் முன் விரைவினோடு
மறைப்புலி நூவனும் ஞான மார்க்கமாய்க் கண்ணி கொண்டுவருகின்றானே
** தினதினானத் தினதினானத் தினதினானத் தினதினா
** தென்னாதெந்தினத் தென்னாதெந்தினத் தென்னாதெந்தினத் தினனா

#713
கடவுள் பதத்தை வணங்கி வணங்கிக்
கருணை மதத்தில் இணங்கியே
கத்தன் உரைத்த பத்து வழியின்
சுத்த வலையை விரித்துமே
திடமனத்தொடு செபித்துச்செபித்துச்
செகத்தில் ஞானச் கண்ணியைத்
தீர்க்கமாக நோக்கிக் குத்தடா
சிங்காரப் பெத்தலேம் மலைக் குழுவா

#714
கதித்த கருத்தின் மனத்தினான் அதி கருணைக் கிருபாசனத்தினான்
கஞ்ச மலர்ச் செம் கரத்தினான் அபரஞ்சிக்கு உயர் பொன் சிரத்தினான்
விதித்து வலையைத் துதித்து வாங்கி விண்ணின் நிலை கண்டு ஓங்கியே
விரைந்து விரைந்து பறந்து குத்தடா வேதாந்தப் பெத்தலேம் மலைக் குழுவா

#715
வித்தகத்திட நயத்திலே செப பொத்தகத்துட மயத்திலே
வெல்லை அம் பதி நாட்டிலே ஒளி செல்லும் இன் பதி வீட்டிலே
உத்தமத்துடன் உற்றவர்க்கு அருள் உற்ற பரனைப் பற்றியே
ஓடியாடிப் பாடிக் குத்தடா உல்லாசப் பெத்தலேம் மலைக் குழுவா

#716
ஏழு விளக்குத்தண்டினான் அதி தூதர் முழக்கத் தண்டினான்
எட்டு இலக்கணப் பெருக்கத்தான் மனம் முட்ட நற்குண உருக்கத்தான்
ஆழிக்கு அறைந்த வார்த்தையான் வரும் ஏழைக்கு உறைந்த பூர்த்தியான்
அண்ணல் கண்ணியை எண்ணிக் குத்தடா ஆனந்த பெத்தலேம் மலைக் குழுவா

#717
அடர்ந்த கண்ணியைக் கலந்து குத்தினால் அன்னப் புள்ளும் படுமே குழுவா
படர்ந்த கண்ணியை இறுக்கிக் குத்தினால் பரும் கொக்கும் படுமே குழுவா
தொடர்ந்த கண்ணியைச் சுருக்கிக் குத்தினால் சொன்னது எல்லாம் படுமே குழுவா
இடர்ந்த கண்ணியைத் திருத்திக் குத்தடா ஏகாந்தப் பெத்தலேம் மலைக் குழுவா

#718
கட்டைக் கண்ணியை நிமிர்த்துக் குத்தினால் காடையும் படுமே குழுவா
நெட்டைக் கண்ணியை நெருக்கிக் குத்தினால் நீர்க்காக்காய் படுமே குழுவா
மட்டைக் கண்ணியை முறுக்கிக் குத்தினால் வவ்வாலும் படுமே குழுவா
சிட்டுக் கண்ணியைக் திறந்து குத்தடா சிங்காரப் பெத்தலேம் மலைக் குழுவா

#719
கோர்த்துக் கண்ணியைக் குவித்துக் குத்தினால் குருகு எல்லாம் படுமே குழுவா
சேர்த்துக் கண்ணியை மலத்திக் குத்தினால் செம்போத்தும் படுமே குழுவா
ஆர்த்துக் கண்ணியை அழுந்தக் குத்தினால் அன்றில்களும் படுமே குழுவா
பார்த்துக் கண்ணியைப் பதிவில் குத்தடா பரம பெத்தலேம் மலைக் குழுவா

#720
காப்பு வலையைத் தட்டிப் பதிதர் கட்டு வலையை விட்டுப் போய்
ஆப்பு வலையைக் தவிர்த்து லோகத்து அலகை வலையைக் கவிழ்த்துமே
மூப்பு ரோமி வலையைக் கடந்து மோக வலையைக் தாண்டியே
பாப்பு வலையை அறுத்துக் குத்தடா பரம பெத்தலேம் மலைக் குழுவா

@55 கண்ணி குத்தும் தரு
** விருத்தம்

#721
சகல உலகு எங்கணும் போய்ச் சாதி எல்லாம் சீடர்களாய்ச் சமையும் என்ற
புகலரிய நன்மை மிகும் பெத்லகேம் நாதர் வளர் புதுமை நாட்டில்
அகலம் எனும் ஐரோப்பா ஆசியா ஆபிரிக்கா ஆமேரிக்கா
மிகல் இடங்கள் அனைத்திலும் போய்க் கண்ணி குத்துவாய் நூவா விரைந்துதானே
** தானாதந்தனத் தனத்தனாதன தானாதந்தனத் தனத்தனா
** தானாதந்தனத் தனத்தனாதன தானாதந்தனத் தனத்தனா

#722
தேவ சுதனை வேண்டடா மிகும்
தேவ பத்தியினில் மூண்டடா
சீவவிளக்கைத் தூண்டடா மாயச்
செகத்தைக் கடந்து தாண்டடா

#723
வானவர் வரங்கள் வாங்கடா சால்மோன்
மண்டபத்திலே தூங்கடா
ஈன மனத்தை நீங்கடா செபத்து
இடைவிடாமலே ஓங்கடா

#724
மானுவேலைத் தினம் பணியடா செபமாலை கொண்டுவந்து அங்கு அணியடா
ஞான மனத்தினைத் தணியடா முழு ஞாலத்தையும் விடத் துணியடா

#725
பெத்தலகேம் பதிக்கு இறையடா அவர் பெருமை அடித்துப் பறையடா
மத்தேயைச் சேர் ஆயக் துறையடா அவ் வழியில் போவது முறையடா

#726
வேத நாயகனைப் போற்றடா அவர் மேலே பதங்களைச் சாற்றடா
பாதகரைச் சற்றுச் தேற்றடா கவிப் பாவலரையும் கொண்டு ஆற்றடா

#727
திட்டமதாய்க் கட்டு வலையடா சுற்றுத் தேசம் எங்கும் ஓடிக் கலையடா
கெட்டவரைத் தேடி அலையடா தேவ கிருபையைக் கண்டு நிலையடா

#728
பதிவில் கண்ணியை நாட்டடா ஞானப் பதங்களைச் சொல்லி மூட்டடா
கதியைக் கைமேலே காட்டடா மனக்கவலையை விடுத்து ஓட்டடா

#729
பெத்தலகேம் பதி நாட்டிலே உயர் பேரின்பத்தின் செப வீட்டிலே
சத்தியதாய்க் கண்ணி பதியடா பேயின் சற்பத் தரத்தினை மிதியடா

#730
கத்தரின் செபத்தை ஓதடா தூதர் காளத்தை வாங்கிக்கொண்டு ஊதடா
சத்துருச் சோதனை வாதடா உடல்-தன்னையும் நம்பப் போகாதடா

#731
வண்ணச் சமுத்திரத்து அள்ளடா கேவ வசனத்தைக் கைக்கொள்ளடா
கண்ணிவைத்து வைத்துத் துள்ளடா பொல்லாக் கள்ளக் குருவியைத் தள்ளடா

#732
மந்திரம் பத்தையும் சொல்லடா விசுவாசமாய் முற்றினும் நில்லடா
தந்திரப் பேயினைக் கொல்லடா பக்கித் தாவுகளைப் பார்த்துச் செல்லடா

#733
கட்டுச் சாமாரியாக் கிணற்றிலே திருக் கானக் கலிலேயா மணத்திலே
முட்ட ஐந்து அப்பத்தைக் கடியடா தனி முந்திரிச் சாராயம் குடியடா

#734
மனுவின் வலையை விரியடா என்ன வந்தாலும் அஞ்சாமல் திரியடா
தினம்தினம் பக்கி பொரியடா அந்தத் திருட்டு எரோதையும் நரியடா

#735
நாற்சந்திப் பாதையைப் பற்றடா அங்கே ஞானக் கண்ணிகளைக் குற்றடா
சீச்சுக் கைப்பட்டதைச் சுற்றடா நம்மள் சின்னச் சிங்கி பெரும் முத்தடா

#736
சிங்காரக் கா எனும் வனத்திலே நல்ல திறத்திலே ஒரு புறத்திலே
வங்காரப் பட்சிகள் பறக்குதே எந்தன் வாயிலே நீர் ஊறிச் சுரக்குதே

#737
பஞ்ச வன்னப் படி மேடையே சீவ பரம நதியின் ஓடையே
கொஞ்சு கிளிக் குரல் சாடையே கண்டு கூடக் குதிக்குது காடையே

#738
எண்ணின எண்ணமும் ஆச்சுதே பக்கி எல்லாம் கைக்குள் வசமாச்சுதே
பண்ணைக் கடாக்களும் வாச்சுதே பட்ட பாடுகளும் ஓடிப்போச்சுதே

#739
நல்ல குருவியாய்ப் புறக்கடா வெல்லை நாட்டுப் பாதையினில் இறக்கடா
செல்லக் குருவியை அடுக்கடா கட்டைச் சிங்கிக்கு என்னேரமும் துடுக்கடா

#740
சிட்டுக் கறி எல்லாம் சுருக்கடா வெள்ளைச் செங்கால் நாரைக் கறி பெருக்கடா
ஒட்டுக்கு எல்லாத்தையும் மாட்டடா ஓர் அட்டித் துண்டும் கொண்டு மூட்டடா

#741
சேர்ந்தது எல்லாம் கணக்காக்கடா ஏசு சீடர்க்கு எல்லாம் பங்கு உண்டாக்கடா
ஆர்ந்த பயன்களைத் தாக்கடா பலிக்கானது எல்லால் கையில் தூக்கடா

#742
திரும்பித்திரும்பிச் செவியடா ஏசு திருச் சுதனைக் கைக்குவியடா
விரும்பவிரும்பப் புவியடா வினை விளையும் சொல் எரு கவியடா

#743
காற்றுள்ள போதே தூற்றிக்கோ இரு கண்ணுள்ள போதே தோற்றிக்கோ
ஊற்றுள்ள போதே இறைத்துக்கோ திரு உரையுள்ள போதே நிறைத்துக்கோ

#744
காலத்தைத் தப்பாமல் பிடியடா பாப்புக்காரப் பயல்களை அடியடா
சீலத்து எல்லாத்தையும் முடியடா சுவிசேடத்தை வாசித்துப் படியடா

#745
ரோமியை ஓடிப்போய் அழையடா அவள் நூலை அறு முழுப் பிழையடா
காமியாம் பாப்புவைப் புடையடா அவள் கள்ளத் தலை ஏழும் உடையடா

@56 பறவை விழிக்கும் சிந்து
** விருத்தம்

#746
அனை இல்லான் அனையும் இல்லான் அப்பனும் இல்லான் உத்த
மனை இல்லான் மனையும் இல்லான் மற்றொரு வஸ்தும் இல்லான்
தனை இல்லான் தனையன் இல்லான் சார்ந்த பெத்லேகர் நாட்டில்
வினை இல்லான் வினையப் பட்சி விழித்துக்கொள்ளுகுது என் ஐயே

#747
விழித்துக்கொள்ளுது ஐயே பறவைகள்
விழித்துக்கொள்ளுது ஐயே

#748
விழித்துக்கொள்ளுது ஐயே பெத்தலேம் பதி வித்தகனின் சுவிசேட வலைக்குள்ளே
செழித்த மெஞ்ஞானப் பட்சிகள் முச்சூடும் சேர வந்து பட்டுக்கிட்டுக் கத்திக்கத்தி

#749
மண்ணையும் விண்ணையும் பாதலம் மற்று உள வஸ்துவையும் அறு நாளைக்குள் ஆக்கியே
திண்ணமதாய் ஒரு சிங்காரத் தோட்டமும் சீவவிருட்சம் அறிவின் விருட்சமும்
பண்ணி அருளிய கற்பனை மீறிப் பசாசின் உரை பற்றிப் பாவத்தைச் செய்த பின்
அண்ணலின் சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டு அங்கு ஆதம் ஏவாளும் மருண்டு விழித்தாப்போல்

#750
நூற்றிருபத்து வருடமதாகவே நோவை பழைய உலகுத்துள்ளோர்கட்குச்
சாற்றிய புத்தியைச் சட்டைபண்ணாததால் தற்பரன் மிஞ்சும் சலப் பிரவாகத்தின்
ஊற்றுகளும் வியோமத்தின் மதிட்களும் ஒக்கத் திறவுண்டு மிக்க அதிர்த்திடும்
காற்றையும் விட்ட திறத்தையும் பாவிகள் கண்டு திகைத்துக் கலங்கி விழித்தாப்போல்

#751
திக்கு இல் யக்கோபுவின் புத்திரர் ரூபேனும் சீமேயோன் லேவி யூதா சேபுலோனோடு
தக்க ஈசஷார் தாண் காத் ஆசேர் நப்த்தல்லி யோசேப்பு பென்யமீன் ஈராறினில்
உக்கிரமாய் எழும் கோபத்தினால் சிலர் ஒக்கப் பிறந்த சகோதரனாகிய
பக்கிஷ யோசேப்பைக் கேணியில் தள்ளப் பரதபித்து அன்னவன் பார்த்து விழித்தாப்போல்

#752
சூசை விற்கப்பட்டுப் போத்திப்பார் பெண்சாதி சோதனைக்காகச் சிறைக்குள் இருந்த பின்
மாசற்ற தேவன் கிருபையினால் அந்த வல் வினைக்குத் தப்பி நல்ல எகிப்பத்துத்
தேசம் எல்லாம் மந்திரித்தனம் செய்கையில் சேர்ந்து சகோதரர் தானியம் கொள்ளவே
பாசத்துடன் வந்து பென்யமீன் சாக்கினில் பாத்திரம் கண்டு பயந்து விழித்தாப்போல்

#753
முப்பது லட்சம் சனம் எகிப்பத்தை முனிந்து மோசே பின் கனிந்து வருகையில்
எப்படிப் போவர் என்றே பரவோனும் எழுந்து தன் சேனை எல்லாத்தையும் கூட்டியே
தப்பும் முன் ஓடித் தொடர்ந்து பிடிக்கச் சதி நினைத்தே வரும் போது சமுத்திரத்து
அப்புப் பிரிந்து குப்பென மூடிக்கொண்டு அங்கு கருதலர் மங்கி விழித்தாப்போல்

#754
தந்தை தவிது அரசன்-தனைப் பொல்லாத சண்டாளனாகிய மைந்தன் அபிசலோம்
சிந்தையில் சற்றும் எண்ணாமல் சினத்தொடு தேசத்தை விட்டுத் துரத்தினதால் பகை
வந்து இசராவேலும் யூதாவும் கூடி வனாந்தரத்தில் சமராடும் அ நேரத்தில்
அந்தப் பொல்லாத அபிசலோம் ஓர் மரத் தண்டிக் கொம்பில் பட்டு வெம்பி விழித்தாப்போல்

#755
அந்நாளில் வேசித்தனம் செய்த இஸ்திரீயானவளைக் கண்டு கையும்களவுமாய்
முன்னாகவே பிடித்துக் கொணர்ந்து விட்டு மோசேசு இவ்விதப் பேர்களைச் சாகவே
துன்னாமலே கல்லெறிந்து கொல்லச் சொல்லிச் சொன்னான் அதற்கு நீர் சொல்வது ஏது என்னவே
மன்னோனைக் காதகர் கேட்கும் அ நேரத்தில் மாது அங்கு நின்று மறுகி விழித்தாப்போல்

#756
ஏருசலோமிலிருந்து எரிகோவதற்கு ஏகின யூதனை ஆரணியம்-தனில்
சோரர் வளைந்து அவனுக்கு உள யாவையும் துன்னிப் பறித்துத் துயருறக் குத்தியே
வீரமுடன் தள்ளிவிட்டு ஓடிப்போகையில் மிக்க சாமாரியன் பக்கிஷத்தோடு அங்கு
காரணத்தால் வந்து காயத்தைக் கட்டவே காட்டுக்குள் காயப்பட்டோன் விழித்தாப்போல

#757
வாலிபனான பிறவிக்குருடனை மானுவேல் பார்த்து மனதுருக்கத்துடன்
சீலத் தரையினில் துப்பி உமிழ்நீரில் சேறது உண்டாக்கி அச் சேற்றைக் குருடனின்
கோல விழியினில் போட்டு சிலோகாம் குளத்தில் கழுவு எனச் சொன்னபடிக்கு அவன்
சால அனுப்பப்பட்டோர் என்ற அர்த்தத் தடாகத்தில் பார்வையடைந்து விழித்தாப்போல்

#758
புத்தியுற்றோர்களும் புத்தியற்றோர்களும் பூமானைச் சந்திக்கப் போகும் வழி-தனில்
நித்திரை செய்து அந்தக் கன்னியர் தூங்க அந்நேரத்திலே மணவாளன் வாறார் எனச்
சத்தம் பிறந்த அதிர்த்தலைக் கேட்டவர் தங்கள் தீபங்கள்-தனை மிகச் சோடித்துச்
சித்திரமாய் எதிர்கொண்டு முன் போகவே சேர எல்லாரும் விழித்துக்கொண்டாப்போல

#759
சகராசர் போற்றும் பராபரன் மைந்தனைச் சற்றும் எண்ணாமல் மறு முகம் நோக்கும்
மகா வேசி பின்பு படும் கொடும் ஆக்கினை மட்டில்லை என்று வசனித்துச் சொன்ன
அகம் பெருமைகொண்டதைச் சற்று எண்ணாமல் அருவருப்பாக நடந்த துரோகி
தொகையாகவே நரகத்தின் நெருப்பிடை சுட்டெரிக்கத் திடுக்கிட்டு விழித்தல் போல்

@57 பேசாதமத்தும் சிந்து
** விருத்தம்

#760
அருமை சேர் பெத்லகேமின் அரசன் அன்று உனக்குச் செய்த
தருமமே அல்லால் நீ செய் தவசு புண்ணியத்தால் என் ஆம்
உரிமையாய்ப் பறவை எல்லாம் ஓடிவந்து உலவும் இப்போ
பெருமையாய்க் கத்திக்கத்திப் பெலத்து நீ பேசாரு ஐயே

#761
பேசாரு ஐயே பொறு பொறு
பேசாரு ஐயே

#762
பேசாரு ஐயே பொறுபொறு பறவைகள் பெத்தலேகேம் எங்கும் சுற்றிப் படுக்கையில்
கூசாமல் வந்த உன் சத்தத்தைக் கேட்டு அல்லோ கூட்டக் குருவி கலைந்து ஓடிப் போகுது

#763
நீரில் உலாவிய மீன்கள் எல்லாம் தலை நீட்டு உறு பட்சி எல்லாம் பயில் காட்டு உறு
காரண அப்போஸ்தலமார்கள் அருளிய கண்ணி எல்லாம் குத்திக் கண்ணும் விழிப்பாகிச்
சீருடன் நானும் உதவிசெய் நூவனும் சேர்ந்திருந்தோம் உனக்கு ஆய்ந்த பொருள் ஒன்று
பேரில் உயர் இரு ஞானத் திரவியம் பேறுபேறாய்த் திரளாகத் தருகிறேன்

#764
மெஞ்ஞானப் பொஸ்தகம் ஒன்று தருகிறேன் வேறே தங்க முலாம் பூசினதும் தாறேன்
அஞ்ஞானம்-தன்னை அகற்றும் சம்பாஷணை ஆனத்தையும் சுவிசேடத்தையும் தாறேன்
பொஞ்ஞானம் நீக்கும் பிரார்த்தனை செல்வ பூங்காவனமும் செப பொஸ்தகத்தோடு இனம்
முஞ்ஞாலம் போற்றும் பழையேற்பாட்டு ஆகமம் எல்லாத்திலும் ஒரு சோடு தருகிறேன்

#765
மோட்ச பட்டணத்தைக் கைமேலே தந்திறேன் முன்னே ஞானாபரணப்பெட்டியும் தாரேன்
வாச்ச சங்கீதத்தையும் இப்போ எத்துக்கோ வல்லமைப் பன்னு நாலு மந்திரமும் சொல்லுறேன்
காட்சியாய் ஞானக் கண்ணாடி ஒன்று அல்லாமல் கள்ளப் பாப்பைச் சுட்டும் கண்ணாடியும் தந்து
சூட்சத்திலே ஞானப் பாறையும் காட்டுறேன் சொல்லாத காரியத்தையும் கொடுத்திடுறேன்

#766
பாகாலின் பூசாரிமார்கள் எலியாவின் பக்கத்தில் வந்து அகப்பட்டுக்கொண்டாப்போலும்
வாகான சீஷர்கள் மீன் வேட்டையாடையில் வந்து எல்லா மீனும் வலைக்குள் பட்டாப்போலும்
ஊகமாய் ரோமர்கள் இட்ட எருசலை முத்திக்கைக்கு உட்பட்ட யூதர்கள் போலவும்
சேகரமாய்ப் பறவை எல்லாம் கண்ணியில் சிக்கித்து பார் பலன் தக்கித்து பார் இனி

#767
பெற்ற தாய் தந்தையர் முன்பும் கனத்த பெரியவர் முன்பும் குருக்கள் முன்பாகவும்
கற்ற புலவர் உபதேசிமார் முன்பும் கல்வியைப் போதிக்கும் அண்ணாவிமார் முனும்
உற்ற அரசர் துரைகளின் முன்னிலும் ஓங்கும் இடர்கட்கு உதவிசெய்தோர் முனும்
மற்று இனசனத்தாரொடும் ஆரொடும் வாயிலே வந்தபடிக்கு ஒரு வார்த்தையும்

#768
கண்டது கேட்டது சொல்லாதே என்ற கதை ஒன்று கேட்டிருப்பாய் இது அல்லாமல்
இரண்டகக் காலக் கலிகாலம் ஆனதால் நன்மையைச் சொன்னாலும் துன்மையதாய் வரும்
முண்டுத்தனமான நாவும் நெருப்பு என்று முந்தி யக்கோபு அப்போஸ்தலன் சொன்னானே
துண்டரிக்கக்காரர் வைதாலும் ஈங்கிஷை சொன்னாலும் நீயும் சரிக்குச்சரியாக

#769
நல்லோர் பெரியோரைத் தூஷணமாகவும் நாவலர் முன் மிக இச்சகமாகவும்
கல்லாதபேரொடு சேர்த்திக்கையாகவும் காவாலிப் புத்தியாய்ச் சிற்றின்பமாகவும்
பொல்லாத பாவிகள் செல்வத்தைக் கண்டு உளம் பொங்கி எரிந்து மா பொறாமையாகவும்
இல்லாத ஏழை வழக்கு ஓரமாகவும் எந்நேரம் பார்த்தாலும் நச்சுநச்சாகவும்

#770
தடுக்கல் முகாந்திரம் பூமிக்கு ஐயோ என்று சாமி சொன்னானே நீ பிள்ளைகளோடே
தடுக்கலது ஒன்றையும் பேசாதே ஏழைச் சனங்களை மெத்தனவாகச் சகித்துக்கொள்
இடுக்கம்பிடித்தவரைக் கொண்டு தூற்றியே எப்போதும் கோளும் புறணியும் சொல்லி
வெடுக்கென்று கத்திக்கத்தித் திரியாமலே மெய்யாகக் கையாலே வாயைப் பொத்திக்கொண்டு

#771
வேதப் புரட்டனை விட்டு விலகு என்றும் வீண் வசனிப்பை விளம்பவேண்டாம் என்றும்
தீதுள்ள பன்றி முன் முத்தைப் போடாய் என்றும் செப்பின புத்தி அனேகம் உண்டே அதைப்
போதகமாக மனதிலே வைத்துக்கோ பொல்லாதபேரோடே சல்லாபம்செய்தாலும்
பாதகப் பாப்புப் பொய்ப் போதகனாகிய பஞ்சமாபாவியினோடே நீ மாத்திரம்

@58 சிங்கன் புலம்பல் தரு
** விருத்தம்

#772
தேவ சுதன்’ மனுவான பெத்லெகேம் நாட்டில் வெகு திறமையாகப்
பாவ அலை-தனை முனிந்து பராபரனின் ஞான வலை பதிக்கும் போது
ஆவலுடன் விசுவாசச் சிங்கியின் மேல் நினைவாகி அலைந்து சிங்கன்
கோவமுடன் நூவனை விட்டு ஏகினான் பறவைகளைக் கூவினானே
** நன்னன நானானா நனநன நன்னன நானானா
** நன்னன நானானா நனநன நன்னன நானானா

#773
தங்கு புகழ் பெத்தலேம் அரசனைச் சங்கைசெயும் ஞானச்
சிங்கன் உயிர்க்குயிராம் விசுவாசச் சிங்கியைத் தேடினனே

#774
ஆதி முதலான பெத்லேம் பதி வேத முறை பேசி அனுதின
நீதி நெறி தவறாது ஒழுகிய மாது எங்கு போயினளோ

#775
அந்தரமே பரமே உடுவே கந்தரமே கணமே எனின்
சுந்தர மாது நலாள் இங்கே எங்கும் வந்தனளோ சொல்லுங்கோ

#776
அம்புவியே மலையே ஒலித்து எழும் அம்பரமே அலையே விண் நாட்டின்
உம்பர்களே எனின் மாது என்னை விட்ட வம்பு இதற்கு என்ன செய்வேன்

#777
பூ வனமே புனமே அடர்ந்து உயிர் கா வனமே கனமே எனின்
மா வனம் வந்தது உண்டோ அரும் கொடு மா வனமே சொல்லுவீர்

#778
தேங்கு வன வன்னியே துயர் கொடு தேங்கு வன வன்னியே செழித்த
பூம் கமுக மகிளே என் பேதையின் பூம் கமுக மகிழே

#779
வட்டப் படா உடையே அணிவது மட்டுப்படா உடையே
எவர்க்கும் கட்டப்படாது இடையே என் சிங்கியைத் தெட்டப்படாது இடையே

#780
வில்லையே மா கள்ளியே இனம் வரவில்லையே மா கள்ளியே ஒரு
சொல்லு சொல் பூ அரசே அவட்கு எனைச் சொல்லு சொல் பூ அரசே

#781
எட்டியே பேர் ஆச்சா உலகு எங்கும் எட்டியே பேர் ஆச்சா சென்னல்
கட்டிய கம்பலையே தவிர் எனைக் கட்டிய கம்பலையே

#782
வானத்து வீ இனங்காள் அகில மானத்தின் ஊர் வனங்காள் அதி மண
நானத்தையே திமிர்ந்தாள் எனின் மனை ஞானத்தைக் கண்டது உண்டோ

#783
சாதகமே அன்றிலே அவள் மகா சாதகமாய் அன்றிலே எதிர்ப்படும்
போதகமே முயலே இலாளுட போதகமே முயலே

#784
ஆசுக மாங்குயிலே மனைப் பயிலா சுகமாம் குயிலே வான
வாசியே உள்ளானே அவள் சுகம் வாசியே உள்ளானே

#785
கொக்கு மேன்மைக் குருகே பழமொழிக்கு ஒக்கும் மேன்மைக் குருகே நிலா
முக்கியே காக்காயே கதை ஒரு மிக்கவே கேக்காயே

#786
காடையே செம் மயிலே எனை வழக்காடையே செம் மயிலே பசுங்கிளிப்
பேடையே காட்டாவே என் வங்கணப் பேடையே காட்டாவே

#787
சேர்த்த உப்புத்தூணது ஆகின லோத்துட பெண்டீரே இவ் வழி
பார்த்திருந்தீர் அலவோ சிங்கி வரப் பார்த்தது உண்டோ சொல்லுவீர்

#788
கள்ளர் எரிகோவில் சென்றவனைக் கொள்ளையிட்ட நெறி போல் சிங்கியை
உள்ளபடி எறிந்தே உயிர்ப்பொடு தள்ளிவிட்டு ஏகினரோ

#789
கெட்டகுமாரவரே நீர் எங்கும் கெட்டு அலைந்து வந்தீரே அவிடத்து என்
கட்டழகிச் சிங்கியைக் கண்டது உண்டோ கட்டளையிட்டு அருள்வீர்

#790
குட்டத்துக் கேயாசி சிங்கி மனக் குட்டத்துக்கே யாசி பொத்தகத்
திட்டத்துச் சீராக்கே என் சிங்கியைத் திட்டத்துச் சீர் ஆக்கே

#791
நாவாயின் நோவாவே எலாருட நா வாயின் நோவாவே சுவிசேட
ஆவாய மத்தேயே அழும் எனது ஆவாய் அ மத்தேயே

#792
சத்துருவே பாப்பே எப்போதும் நீ சத்துருவே பாப்பே தெய்வ
நித்திய உதாசனனே உனக்கு இனி நித்திய உதாசனனே

@59 சிங்கன் பட்சிகளோடு பிரதாபம் சொல்லும் தரு
** நன்னன நானன நானன நானன நனா நன்ன
** நானன நானன நானன நானன நானா

#793
அட்ட திக்கு எங்கும் அலைந்து திரிகின்ற அன்னமே எந்தன்
அன்பு விசுவாசச் சிங்கியைக் காட்டாது வின்னமே
மட்டற்ற சங்கீதம் பாடிய நல் வானம்பாடியே அவள்
மானம் எனக்கு ஒரு ஞானத்தைக் காட்டும் கண்ணாடியே
வட்டத்து இட்டு ஆடிய இங்கிதமாகிய மயிலே அந்த
மாதுட ஆசையும் எந்தனுக்கு எப்போதும் மயலே
திட்டத்தோடே தினம் கூவித் திரியும் கோகிலமே எந்தன்
தேவி அழகு பெரும் விலைதான் ஓர் அகிலமே

#794
வஞ்சகமாய்த் தப்பி ஓடிப்போகும் செங்கால் நாரையே எனை
வஞ்சகமாய்த் தப்பி ஓடிப்போனாள் செம் கால் நாரியே
தஞ்சமற்று ஏங்கி இருந்து மயங்கு கேகயமே அந்தத்
தையல் எனை விட்டுப் போனது எனக்கு அதிசயமே
கிஞ்சுகமே அன்றிலே அங்ஙனே சற்றே நில்லுமேன் உமைக்
கெஞ்சுகிறேன் எந்தன் மாதைக் கண்டால் வந்து சொல்லுமே
பஞ்சமாபாவி போல் பேசும் பஞ்சவன்னக் கிளியே அந்தப்
பாவையைக் காட்டாட்டால் போடுவேன் உன் மேல் ஓர் பழியே

#795
கூப்பிட்டுக் கூப்பிட்டிட்டு ஓடிப்போகும் கரும் குயிலே கெஞ்சி
கூப்பிடக்கூப்பிட வாராதது ஏன் அந்தக் குயிலே
நாப்பிட்டு நாப்பிட்டிட்டு ஏச்சுத் திரிகின்ற காடையே என் கண்
ணாட்டியைக் கண்டால் திறந்து பார்ப்பேனே முக்காடையே
சீப்பிட்டுச் சீப்பிட்டுச் சேர்த்தக் கொண்டைக் கொண்டலாத்தியே எந்தத்
தேசத்திலே சுற்றப்போனாளோ நான் கொண்ட லாத்தியே
சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கெம்பீரிக்கும் தாராக் கூட்டமே வெகு
தர்மம் உண்டு என் பெட்டைத் தாராவைக் கொண்டாந்து காட்டுமே

#796
பட்சத்தைக் காட்டும் கவடற்ற மாடப்புறாவே முழுப்
பட்டப்பகல் கூடக் காணுது என் கண்ணுக்கு இராவே
துட்சண ரோமியின் பாப்புவை என்றாலும் கூவே அந்தத்
தோசியை விட்டு அப்பால் என் பூவையைத் தேடிப் போவே
கட்டழகி-தன் விசுவாசத்தைக் கெடுப்பானே அப்போ
கள்ளனோடு என் மாது சொல்வாள் உனைக் கொடுப்பேனே
உச்சத்தில் ஓடிப் பறக்கும் கணக்கற்ற பக்கியே நீங்கள்
ஓடிவந்து பாப்பின் மாங்கிஷத்தைத் தின்பீர் முக்கியே

@60 பறவை சிக்கல் சிந்து
** கட்டளைக் கலிப்பா

#797
காவில் நன்மை துன்மை அறியும் பொலாக் கடு மரக் கனியைக் கருதாய் என
ஆவலாய் அருளும் பரனார் திரு அரிய கற்பனை மீறிய மாந்தர்கள்
சாவு இலாது சம்பத்துடன் வாழ்கவே சாமி வந்த பெத்லேகர் நல் நாட்டிலே
தேவ நன்மை செழித்து உயர் பட்சிகள் சீவனின் வலை சிக்கினதாம் ஐயே

#798
சிக்கித்துது ஐயே பறவைகள்
சிக்கித்துது ஐயே

#799
சிக்கித்துது ஐயே பெத்தலேகம் பதித்
தேவாதிதேவனின் ஞான வலையுக்குள்
வர்க்கத்துக்கு வர்க்கம் லக்கற்ற பக்கிகள்
வர்த்திப் பிச்சு விச்சுக் கிச்சுக் கிக்கி என்று

#800
முந்தி விரித்த வலையினில் பன்னிரு முக்கிய அப்போஸ்தலப் பட்சிகள் சிக்கிற்று
பிந்தி எழுபது பட்சிகள் பட்டது பின் ஒருபோதில் ஐஞ்ஞூறது உண்டு அப்புறம்
எந்தையின் ஆலையத்து ஏகாந்தமாய் நூற்றிருபது பட்சி இருந்தது ஒரு விசை
சந்தோடமாய்ச் சீமோன் போட்ட வலைக்குள் தப்பாமல் மூவாயிரம் பட்சிகள் மட்டும்

#801
நல்ல நிலத்தின் உவமைப் பறவைகள் நட்புடன் நூறும் அறுபதும் முப்பது
பல் வகைப் பன்னிரு கோத்திரத்தின்படி பன்னீராயிரமாகப் பறவைகள்
வல்ல இசராவேல் சாதியைச் சேர்ந்தது மாத்திரம் லட்சத்து நாற்பத்து நாலாயிரம்
எல்லை இது அன்றி வேறே விதப் பட்சியும் ஏராளமான பெரும் கூட்டமாய் வந்து

#802
எத்தியோப்பியாவின் தேசத்து ராசாத்தி என்ற கந்தாக்கேயின் சொந்தப் பிரதானி
சித்திர வண்டிலில் ஏறிச் பறக்கையில் தீரன் பிலிப்பு திருப்பிக்கொண்டான் பினைக்
பத்தியோடே செபம்செய்த கொர்னேலியுப் பட்சியும் கல்லன் வலைக்குள்ளே பட்டது
வித்தகனான சவுல் என்ற பட்சியும் வேறே திருச்சபை ஏழு என்ற பட்சியும்

#803
விக்கிரக பத்திக்கார ரோமாபுரி வேசியின் செய்தியைக் கண்டறிந்தோர் எலாம்
அக்கியான மார்க்கத்திலும் மிகக் கேடு என்று அறிந்து மெஞ்ஞானத்து உணர்ந்து பலாவிதச்
சிக்கான பாப்பு இட்ட கேட்டின் வலையுக்குள் சிக்காமல் தப்பி வெளிப் புறப்பட்ட பின்
மெய்க்கியானமாகிய ஞான வலை என்ற வேத சுவிசேட மார்க்கத்திலே வந்து

@61 பறவை பிடித்த சிந்து
** கலிப்பா

#804
கல் பதித்த நெஞ்சகத்தர் கர்ம வினையைத் தேவ
சொல் பதித்து மாற்ற வரும் துய்ய பெத்தலேகர் வெற்பில்
பொன் பதித்த தேவப் புராண வலையைப் படுவித்து
அற்புதத்தால் பெத்லேமில் ஐயே பறவை பிடித்தேன்

#805
ஐயே பறவை பிடித்தேன் அதிசயமாய்
ஐயே பறவை பிடித்தேன்

#806
துய்ய பெத்தலேக நகர் தோன்றலின் திருப்பதத்தை
மெய் எனக்குத் தஞ்சம் என்று மெத்தவும் நினைத்துக்கொண்டு

#807
நித்திய மகத்துவ மிகுத்த பரமப் பொருளின்
நிச்சய மறைப் பெருமையைப் புகலவே உல
கத்தில் வரு கர்த்தன் எனும் அற்புதக் கிறிஸ்துவின் உரை
யைக் கதி எனக் கருதிப் புத்தியாய் மனத்தில் எண்ணி

#808
அந்தரம் புவியும் வானும் விந்தையுடன் தந்து அருளும்
அந்தமும் அளவும் அடியும் இணை_இலானை
வந்தனை புரிந்து பரனின் சுதன் இயம்பு பர
மண்டல மந்திரம்-தன்னை இரண்டு விசை சொல்லிக்கொண்டு

#809
தக்க பரனுக்கு எதிர் எனப் பெருமை மிக்க கழு
துக்கள் மனுவைச் சதிசெய்யக் கெருவமாக
வைக்கும் வலையுக்குள் மிகச் சிக்கும் மனுவைக் கிருபை
அப்பன் அருளைக் கொடு திருப்பு தொழிலாலே நான்

#810
பாவ வினை தீர மனுவான பரனார் தமது
பாதமதையே தினமும் ஆவலுடன் ஓதி
நாவதினால் ஏக பரனார் தயவதாய் அருளும்
ஞான சுவிசேடம் என்ற தேவ வசனத்தைக் கொண்டு

#811
மாறுபாடதான யூதரோடு இசலாம் ஆனவர்கள்
மாயம் மிகும் ஆறிரு அக்கியானர் மதம் மீதும்
வீறு உள ரோமாபுரியின் தீய சபை மீதினிலும்
வேகமுடனே பரனின் ஞான வலை வீசித் தென்பாய்

@62 பறவைச் செலவுத் தரு
** விருத்தம்

#812
வித்தகமாய் பெத்தலேகேம் அத்தனார் திருவசன விளக்கத்தாலே
நித்தமாய்ப் பிரயாசம்வைத்து நாம் பிடித்தது எல்லாம் நிலையதாமோ
சுத்தமாம் பறவை எல்லாம் மொத்தமாய்த் திரட்டி ஒரு தொகையாய்ச் சேர்த்துச்
சித்தமாய் அவரவர்க்குப் பத்தமாய்ப் பங்கிடுதல் செய்கைதானே
** தந்தனத்தான தனாதன தந்தனத்தானா தன
** தந்தனத்தான தனாதன தந்தனத்தானா

#813
சீர் பெறும் பெத்தலேம் ராசனைக் கைதொழுது ஐயே இங்கே
சிக்கின பக்கி எல்லாம் கணக்குப்பண்ணிவையே
நேர் பெறும் காட்டுப்புறாவை எல்லாம் தப்பாது எடுடா அதை
நித்தியனுக்குப் பலியாகக் கொண்டுபோய்க் கொடுடா

#814
காடைக் கறியினில் பேடைக் கறி ருசி மெய்யே அதைக்
காட்டாமல் கொண்டுபோய்க் கூட்டுக் கறி ரண்டு செய்யே
தேடி இசராவேலர் அதற்காய்க் குறுகுறுப்பார் காடை
தின்னக் கிடையாட்டால் தெய்வத்தையே முறுமுறுப்பார்

#815
கப்பலில் நோவாவை விட்டு ஓடிப்போம் புறா வெள்ளன் பட்டிக்
காட்டுப் புறா எல்லாம் பத்திரமாய்க் கட்டு கள்ளன்
தப்பிதமற்ற பறவை எல்லாம் கண்ணாய்ப் பார்ப்பாய் பார்த்துச்
சந்தோடமா எந்தன் சிங்கிக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பாய்

#816
வேட்டைக் கறிக்குமா நாட்டமடா ஈசாக்கு அண்ணே இவ்
வேளைக்கு ஏதாகிலும் கொண்டுபோய் மாய்மாலம் பண்ணேன்
காட்டுக்கோழிக் கறிக் காட்டுக் கறி கெட்டுது ஐயே பெட்டைக்
கான மயில் கறியானது எல்லாம் முழு நெய்யே

#817
சற்று நேரம் தப்பினால் எலியாச் சாபமிடுவான் நல்ல
சாதிக் காக்காயைக் கண்டால் உன் மேல் சந்தோடப்படுவான்
சுற்றும் உறாஞ்சுற பட்சியை நன்றாக அறிவான் பட்சி
தோன்றும் முன் ஆபிரகாம் பெரும் கல்லை விட்டெறிவான்

#818
வெட்டுக்கிளி யொவானுக்கு மெத்தமெத்தப் பிரியம் அதை
மிச்சமாய்க் கொண்டுபோனால் கொடுப்பான் தீட்சை துரியம்
கட்டிக் கொழுப்பு உருக்கு நெய்யடா அன்னப் பட்சி திவ்விய
காரிகை சீயோன் மகள் வாங்குவாள் உனை மெச்சி

#819
பெட்டைக் கொக்குக் கறி சுட்டுத் தின்றால் ஒரு போக்கு அதைப்
போதத் துவட்டலதாகப் புளியிட்டே ஆக்கு
சிட்டுக்குருவியைத் துட்டுக்கு இரண்டாகச் சொல்லடா விலை
சேராட்டால் ரண்டு காசுக்கு அஞ்சதாகவே வில்லடா

#820
வன்னச் சிறகியைத் தின்னத்தின்ன இனித்திருக்கும் மணி
மாடப்புறாக் கறி தேடக் கிட்டாது உடல் பெருக்கும்
நன்னிச் சிங்கி வன்னச் சின்னச்சிட்டு எந்நேரம் பொரிப்பாள் செங்கால்
நாரைக் கறிக்கு ஒருக்காலே மெத்தமெத்தச் சிரிப்பாள்

#821
சுத்தமில்லாப் பக்கியைச் சீமோன் முற்றிலும் பழிப்பான் கூண்டுச்
சொற்பனம் மூன்று தரம் தோற்றது ஏது என்று விழிப்பான்
பத்திக் கொர்னேலியு அத்தனையும் கண்டு மகிழ்வான் சீமோன்
பண்ணும் பிரசங்கத்தால் இப் புறாவினைப் புகழ்வான்

#822
அப்போஸ்தலன்மார்கள் யாவரும் மீன்திண்ணிக் கூட்டம் பஸ்கா
ஆட்டுக்குட்டியைச் சமைத்துத் தின்க மெத்த நாட்டம்
தப்பாமலே குட்டைத் தாராக் கறி ஒரு சட்டி வேறே
தாளித்து எனக்குப் படைத்தால் அல்லோ மெத்தக் கெட்டி

#823
ஒற்றைச் சோட்டுப் புறாத் தேவாலையத்துக்கே நேத்தி யோசேப்பு
உற்ற மரியம்மாள் காணிக்கைக்காம் என் சங்காத்தி
மற்றப் பறவை எல்லாம் புறக்கித் தொகை ஆக்கு தேவ
மைந்தன் மணவறைப் பந்தி விருந்துக்கே வாக்கு

#824
கெட்டகுமாரன் துவக்கத்திலே மெத்தச் சுட்டி தந்தை
கிட்டினாப்போல் அடித்தான் கொழுத்த கன்றுக்குட்டி
துஷ்டகன் பாப்பு விழுதல் ரோமாபுரிக்கு அழுகை அந்தத்
தோஷியைக் கொத்தித் தின்கக் கொண்டுபோ பெரும் கழுகை

@63 பட்சி போன சிந்து
** கலிப்பா

#825
உல்லாசப் பெத்தலேகர் உற்ற திரு நல் நாட்டில்
எல்லாரும் வாரும் என ஏற்றின சொல் ஒன்று இருக்கக்
கல்லாத மூடகத்தால் கத்தனை விட்டுக் கடந்து
பொல்லாத பக்கி எல்லாம் புத்திக்கெட்டுப் போயினுமே

#826
போயினும் ஐயே பறவைகள்
போயினும் ஐயே

#827
போயினும் ஐயே பெத்தலை நாயகர் புண்ணியத்தை விடுத்து எண்ணம் இலாமலே
தீய பாகால்களைச் சேவித்த யூதர்கள் சேரப் பாபேலில் சிறைப்பட்டுப் போனாப்போல்

#828
முந்தும் உலகத்தை எந்தை அழிக்க முனிந்து சலத் திரளானதை விட்ட பின்
வந்த தண்ணீர்கள் எம்மாத்திரம் நிற்குது வற்றினது ஏது என்று அறிய மனத்துடன்
புந்தியின் நோவா ஒரு புறாவானதைப் போக்குவரத்துக்கு விட்டிட விட்ட அத்
தந்திரமான புறாவும் திரும்பித் தருக வராது ஒரு போக்காய்ப் போனாப்போலே

#829
ஏழு வருடங்கள் லேயாளுக்காகவும் ஏழு வருடங்கள் ராகேலுக்காகவும்
ஆழிய மந்தைகட்கு ஆறு வருடமும் ஆக வருடம் இருபது அளவுக்கும்
சூழவே லாபானைச் சேவித்து இருந்தும் துரோக நினைவை நினைத்தவனின் முகம்
நாழிகைக்கு நாழிகை வேறுபட்டதால் யாக்கோபு லாபானை விட்டு ஓடிப்போனாப்போல்

#830
ஊரியாவை யுத்தத்தில் அனுப்பிக் கொன்று உற்றவன் தேவியைத் தான் எடுத்துக்கொண்டு
வீரியமாய்ப் பவம்செய்ததினால் அவன் மேலே பராபரன் கோபமதாகியே
சூரியன்-தன் வெளிச்சத்தினில் சேர்ந்திடத் தோழனுக்கு அங்கு அவன் பாரியையும் கொடுத்து
ஊரையும் விட்டுத் துரத்த அபிசலோமுக்குப் பயந்து தவிது ஓடினாப்போல்

#831
யேசுவின் ஆறிரு அப்போஸ்தலமார்களில் இஸ்காரியோத் எனும் நிஸ்கார யூதாசு
மாசுற முப்பது வெள்ளிக்குக் கத்தனை மாற்றம் இலாமலே தீர்ப்புப்பண்ணி விற்க
நேசனைப் போல் தன்னைக் காண்பித்து வஞ்சக நெஞ்சகத்தாலே கிறிஸ்துவை விட்டு எழு
காசலையாய் யூத மூப்பர்கள் அண்டைக்குக் காட்டிக்கொடுப்பதைப் பேசப் போனாப்போலே

#832
நம்முட நாதனார் ஏசுக் கிறிஸ்து நலம்பெறக் காட்டப்படும் அந்த ராத்திரி
விம்மிய யூதர்கள் சுற்றி வளைந்து அவர் மேலே கரங்களைப் போட்டுப் பிணிக்கையில்
எம்முட மேய்ப்பனை வெட்டப் புருவை எலாம் சிதறப்படும் என்ற உரைப்படி
செம்மை இலாமலே சீடர் பயந்து தெறிபட்டுத் திக்குக்குத்திக்காய் ஓடிப்போனாப்போல்

#833
கோமான் தவிது புவிச் சக்கரவர்த்தியின் கோத்திரத்துக் கன்னியாஸ்திரீ-பால் வந்த
சீமான் அம் ஏசுக் கிறிஸ்துவின் உத்தம சீடர் அயிக்கத்தைச் சேர்த்து விட்டுப்போட்டு
மாய்மாலம்செய்து பிரவஞ்ச வாழ்க்கையை வண்மையதாய் எண்ணித் துன்மைக்கு உடந்தையாய்த்
தேமாசு என்றவன் போனாப்போலே பக்கி தெத்திப்போட்டு எந்தனை எத்திப்போட்டு அந்தாலே

#834
பாரினில் அக்கியான மார்க்கத்தை விட்டுப் பராபரன் பேரினில் பத்தி நம்பிக்கையாய்ச்
சீருடன் மெய் ஞானஸ்நானம் பெற்றுத் தவம் செய்து பரிசுத்தமாய் நடந்து உத்தம
வீரியத்தோடு பிசாசுடன் போர்செய்து எவ்வேளையிலேயும் விழித்துச் செபம்பண்ணி
நேருடன் நின்று கிறிஸ்துவைப் பற்றிய நீதிமான்கள் செய்த பாவம் போனாப்போலே

#835
அந்தியும் சந்தியும் ஆறு பொழுதினும் ஆண்டவன் பாதத்தை ஆய்ந்து உணர்ந்து அன்புடன்
சிந்தையில் கொண்டு தியானித்து உருக்கமாய்த் தேசச் சனங்கட்கு எல்லாம் உபதேசித்துச்
சந்தோடமாகப் பதங்கள் வண்ணங்கள் சங்கீதங்கள் கீதங்கள் வேதங்கள் பாடியே
வந்தனையாய்ப் புகழ்ந்து ஏற்றிக் கொண்டாடிய வாணர்க்கு வந்த வினை பறந்தாப்போலே

#836
கோவில் சமையத்தில் கூட்டத்தில் நின்று குருவும் எழுந்து பிரசங்கம் சொல்லையில்
தேவ வசனத்தைக் கேட்டு உணராமல் செவிட்டுவிரியன்கள் போலே இருந்த பின்
ஆவலாய்ப் பிள்ளையைச் சாக்கிட்டுப் பின் ஒன்றுக்காகவும் தீவிரமாய் எழுந்து அங்கு அவர்
ஏவலுக்காய் வேண்டிப் போறதாய்க் காட்டியே எட்டி நடந்து கடந்து ஓடிப்போனாப்போல்

#837
நன்மை வந்தால் கன சந்தோடமாகவே நாடிச் சுகித்துப் பிரதாபித்துப் பற்பல
துன்மை வந்தாப்போலே யோப்பின் பெண்சாதி போல் தூற்றிய நேர் தெய்வத்தைப் பழித்து ஏசியே
தன் மறை விட்டு அகன்று ஓடிப் புறத்தியில் சண்டாள லோகப் பொருள்-தனை நாடியே
வன் மன மாய்மாலக்காரக் கிறிஸ்தவர் வந்த வழியே திரும்பிப்போனாப்போல்

#838
திக்கில் எழு தலை பத்துக் கொம்பு உள்ள சிவப்பு மிருகத்து உவப்புடன் ஏறிக்கொண்டு
அக்கிரமச் சிவப்பு ஆடை ரத்தாம்பரத்தால் துலுக்கிப் பொன்னினால் மினுக்கிக் கன
உக்கிரமான அசுத்தப் பொன் பாத்திரம் ஒன்றையும் தன் கையிலே பிடித்துப் பினும்
வெட்கமில்லா மதுபானத்தில் ரோமி வெறிகொண்டு வேசித்தனம்செய்யப் போனாப்போல்

@64 சிங்கன் புலம்பல் தரு
** விருத்தம்

#839
பரம் புவியும் அதில் நிறைந்த பொருளும் செய்த பராபரனை வணங்காமல் பல பேய்-தன்னை
வரம் புரியும் என்று நினைத்து அகந்தையாக மதி அழிந்து நினைவு அழிந்து மயக்கம் கொண்டு
கரம் குவித்து வணங்கி ஒரு பலனும் காணாக் கசடருக்கு ஏது உரைத்தாலும் கருதார் என்று
சிரம் கவிழ்ந்து மரித்து உயிர்த்த பெத்தலேகர் திருவளத்தால் சிங்கி-தனைத் தேடினானே

#840
அன்னப் புறாவுக்குக் கண்ணியை வைத்த நான் வன்ன மயிலுக்குப் போனேன்
வன்ன மயிலும் குயிலும் படுத்துது என் பொன்னான சிங்கியைக் காணேன்
தின்னச் சிறகிக்குக் கண்ணியை வைத்து நான் சின்னக் குருகுக்குப் போனேன்
சின்னக் குருகும் கிளியும் படுத்துது என் கன்னிகைச் சிங்கியைக் காணேன்

#841
சக்கரவாகத்துக்குக் கண்ணிகுத்தி நான் வக்கா படுக்கவே போனேன்
வக்காவும் சக்கரவாகமும் பட்டுது என் மிக்கான சிங்கியைக் காணேன்
மைக் கவுதாரிக்கு சிக்கக் கண்ணிவைத்துக் கொக்குப் படுக்கவே போனேன்
கொக்கும் நிலாமுக்கியும் கூடப் பட்டுது என் தொக்கான சிங்கியைக் காணேன்

#842
வெம்பிப் பறவையின் வேட்டைக்குப் போய் ஞான வேட்டை எல்லாம் தப்பிப்போச்சே
கம்பிளி தூக்கக் கரடியாய்ப் போன கதை வந்து சேரவும் ஆச்சே
நம்பியே கற்பகம் சேர்ந்தவர்க்கு விடம் நல்கினதும் ஒரு பேச்சே
வம்பி என் சிங்கியைக் காணாமல் தேடி மயங்குவதும் எனக்கு ஏச்சே

#843
இற்றை வரைக்கும் விசுவாசச் சிங்கி எனைப் பிரிந்தது அறியேனே
ஒற்றையாய் நின்று புலம்புவதும் எனக்கு உற்ற கிராசாரம் தானே
கற்று அறி மோழை எனும் ரோமைப் பாப்புவும் கள்ளத்தனம் புரிவானே
பற்றிய நெஞ்சத் துயர் என்று நீங்கிப் பரதாபம் தீருவன் நானே

@65 சிங்கியைத் தேட்டச் சிந்து
** விருத்தம்

#844
தேசம் எங்கும் இருப்பவரும் பெத்தலேகர் திருவுளத்தால் கதிபெறுதல் திண்ணமாம் போல்
ஆசையுடன் உலகம் எல்லாம் அலைந்தும் என்ன ஆவது என்று புத்தியினால் அறிந்து தேறி
நேசம் மிகும் விசுவாசம் அற்ற போதே நிலை ஏது துறை ஏது நேர்மை ஏது என்று
ஓசையுடன் நினைந்து உருகிப் பெத்தலேமுக்கு ஓடினான் சிங்கி-தனைத் தேடினானே

#845
சிங்கியைக் காணேனே விசுவாசச்
சிங்கியைக் காணேனே

#846
சிங்கியைக் கற்பு அலங்காரியை நாரியைச்
சித்திரப் பெத்தலேம் அத்தனைப் பாடிய
மங்கள வினோத சங்கீத மாதாந்த
வேதாந்த மதங்கி என் வங்கண

#847
தாராவை மாடப்புறாவைக் குயிலியைச் சல்லாப உல்லாச சையோக சம்போகப்
பேரான ஞானச் சுகம் தருகும் அன்னப் பேடையைச் சாடையாய்ப் பேசும் கிளி-தனைச்
சீரான தோகை மயிலை வடிந்த செந்தேனை அமுர்தத்தைச் செங்கரும்பானதை
நேரான மோக்கிஷ பாக்கியத்தை இரு நேத்திரத்தை ஞானப் பாத்திரத்தை எந்தன்

#848
கண்ணை மணியைக் கனகத்தைச் செல்வ பூங்காவனத்தைச் சீவ கற்பகத்தைத் தேவ
பெண்ணைப் பவளக்கொடியை மரகதப்பெட்டியைத் தங்கத்தை முத்தைப் பிரகாசிக்கும்
விண்ணை விண் நாட்டு ஒளிவை மின்னலை விடிவெள்ளியைக் கள்ளியை விந்தைக் கிருபாலியை
எண்ணின எண்ணத்தைப் புண்ணியத்தை எனது இச்சைக் கண்ணாட்டியைப் பட்சப் பெண்டாட்டியை

#849
சித்திரச் சோலையைச் சத்திரச்சாலையைச் சிங்காரப் பாவையை வங்காரப் பூவையைப்
பத்திர வினோதத்தை மித்திர சினேகத்தைப் பாஞ்சாலையை மன வாஞ்சாலையைக் கன
வித்திரக் கிரீடத்தை உத்திர விசேடத்தை விச்சித்திரத்தை விண் நட்சத்திரத்தை முன்
குத்திரமாய்ப் போன வித்தாரக்காரியைக் கோமாட்டியை ஞான சீமாட்டியை எந்தன்

#850
வேதப் பொருளைப் பயன் கொண்டு மூடி விளக்கிநின்றாள் அத்தை மேவ என்று எண்ணி யான்
சீத மதி முகத்துக்கு எதிர் வந்தனென் சிந்தையைக் கண்டு சிரித்துக்கொண்டே அவள்
பாதிப் பொருளை விபரிக்கும் முன்னமே பாவி என் நெஞ்சம் பரவசம்கொண்டதால்
நீதிப் பெருக்கில் எனை வைத்துக் கூடியே நெஞ்சத்தோடே மெத்தக் கொஞ்சிக்கொண்டாள் அந்த

#851
நம்பிக்கையற்றான் உளையுக்குள் ஓர் விசை நாணம் இல்லாமலே யான் விழுந்தேன் அது
வம்பிக்குப் பேச்சது ஆச்சுது என்றே வேத வாக்கியத்தைக் கொண்டு மூர்க்கமாய்ப் பேச்சிட்டுக்
கும்பிக்குள் நின்று எனைத் தூக்கிவிட்டாள் அப்போ கும்பிட்டு வீழ்ந்து அவள் காலைப் பிடித்தன் நான்
கெம்பித்து என் கொஞ்சத்தனத்தை அறிந்து எனைக் கிட்ட அணைத்து ஒரு முத்தமிட்டாள் அந்த

#852
பஞ்சசண்டாளப் பதிதத் துரோகி பாபேல் உறும் பாப்புவின் பேரைப் பகரும் முன்
நெஞ்சம் பதறித் திடுக்கிட்டு எழுந்து அந்த நெட்டூரன் இட்ட திருச்சபைக் கட்டளை
சஞ்சலம் என்று பரன் சுதன் வாக்காலே தப்பாமல் யாவர்க்கும் ஒப்புவித்த அப்புறம்
மிஞ்சின கோபத்தினாலே அவன்-தனை வெட்டச் சினத்துடன் எட்டி நடந்துபோம்

@66 சிங்கன் புலம்பல் சிந்து
** விருத்தம்

#853
துக்க மெய் விசுவாசத்தின் சுந்தரி-தனைக் காணாதால்
எங்குதான் போனாளோ என்று இடைவிடாக் கருத்தினோடு
பொங்கிய மனத்தால் வெல்லைப் புறம் எல்லாம் புகுந்து நோக்கிச்
சிங்கியைத் தேடித்தேடிச் சிங்கனும் புலம்பலுற்றான்

#854
சிங்கி எங்கும் காணேனே
இங்கிதம் மிகும் சினேக வங்கணம் என் விசுவாசச்
சிங்கி எங்கும் காணேனே

#855
துங்கம் மிகும் பெத்தலேகம் ராசர் வள நாட்டினில்
சுத்த சுவிசேடம் எனும் பொத்தகத்தைப் படிக்கையில்
சுறுசுறுப்போடு எனை விருப்பமொடு திருப்ப மிக வருத்தும்

#856
அண்டர் தொழும் பரமன் மைந்தனின் மேல் எந்தனுக்கான விசுவாசம் அடையே அவள்
அல்லாமல் ஏசுவின் சொல் மேல் எனக்கு ஒரு ஆசையும் தோற்றாது மெய்யே
விண்டு பல ஞானங்கள் புரிவாள் அதின் விஸ்தரிப்பையும் சொல்லித்தருவாள் சுதன்
மேலே மயல்கொண்டு திரிவாள் ரண்டு விழி கொண்டு என்னொடு தினம் பொருவாள் அந்த
வேதாந்தக்காரியுட நாதாந்தத்தை நினைந்து
மேனி பொங்குறு பொறியோ மயங்குறு அறிவோ கலங்குறு
மனம் விடவிட என்கிறு உடல் படபட என்கிறு இன்ப

#857
மாசற்றவனின் மேல் பத்தி நம்பிக்கைக்கு வாச்சுது இவள் என்று இருந்தேன் என்னை
மறந்து பறக்கவிட்டுக் கடந்ததினால் மெத்த மயக்கம்பிடித்துத் திரிந்து அலைந்தேன்
தேசத்துக்கு எங்கும் இது சொல்லே என்ன செய்யட்டும் எனக்கு இது ஓர் தொல்லை அந்தச்
சீமாட்டியின் மனதும் கல்லே பின்னும் சென்று பறக்கவும் சிறகு இல்லை மணச்
சிங்காரக்காரியும் இரங்காத மோசம் எனின்
சிந்தை சொல்லுறு மனம் நைந்து கொல்லுறு கடி வந்து வெல்லுறு
மேல் சிலுசிலு என்கிறு கண்ணீர் மலமல என்கிறு விந்தை

#858
எங்கேயெங்கே பார்த்தாலும் அவளைப் போல் கண்ணுக்குள் இருக்கிறு அவள் செய்த மாயம் அந்த
இளைய குமரி வந்தால் மனதுக்கு சந்தோடம் இருக்கும் எனக்கும் மா நேயம்
மங்கையுட ஆசை சிக்கித்தானே உலக மாது பகைக்கு உடம்பு எடுத்தேனே மற்ற
மாயையையும் வெறுத்துவிட்டேனே எந்தன் மனதையும் பறிகொடுத்தேனே அந்த
மா ஞானக்காரி தந்த மேல் ஞானம் கொண்டு மனம்
வாஞ்சைகொள்ளுறு புகழ் ஆஞ்சு விள்ளுறு மயல் வீஞ்சு துள்ளுறு திகழ்
வாச மலர்ப் பெத்தலேகம் ராசர் வள நாட்டினிலே

#859
குள்ளப் பதிதர் வந்து மெள்ளக் கலைத்தால் அவள் கொஞ்சமட்டிலே விடாள் ஐயே பொல்லாக்
கொடிய ரோமாபுரியாள் திட மனதாக வந்து குறி சொல்வது எல்லாம் முழுப் பொய்யே
கள்ளப் பாப்புச் சபைக்குத் தலையோ அவன் கட்டு விசேடம் எல்லாம் நிலையோ ஆதி
கடவுட்கு எதிரி அவன் இலையோ பாவி கருதி இருப்பது ஏழு மலையோ இன்னம்
காணாமல் சிங்கி-தனை வீணாய் அலைந்தலைந்து
கத்தி ஆகிறு மனம் மெத்த நோகுறு பாபேல் பத்தி வேகுறு
வெறி கருங்குர் என்கிறு பொறி கிரங்கிர் என்கிறு சின்ன

@67 சிங்கி அடையாளச் சிந்து
** கலிப்பா

#860
சங்க நவ சேனைகளும் தற்பரனைக் கொண்டாடி
இங்கித மகிழ்ச்சி துதி ஏத்திடு பெத்லேகர் வெற்பில்
தங்கும் உங்கள் இன்ப சுக சாகதத்தை யார் அறிவார்
சிங்கி அடையாளம் என்ன சிங்கா நீ செப்புவாயே

#861
சுத்த மயில் அழகி ஐயே விசுவாசச் சிங்கி
சுத்த மயில் அழகி ஐயே என் சிங்கி ஐயே

#862
எத்தனை எடுத்துரைத்தும் அத்தனையும் ஈடும் அல்ல
பெத்தலேக நாதர் அருள் விஸ்தரித்த மாது பொருள்

#863
ஆதியான்-தன் கையினாலே யாவையைப் படைத்த நேர் என்
மாதையும் சிட்டித்து எனக்கே ஆதரவாய்த் தான் கொடுத்தார்
ஏது அவளுக்கு இணை சொல காதல் மிக ஆகுது ஐயே
நீதியின் ஆடை அணிந்து சோதி மயமாய்ச் சமைந்த

#864
வையகம் புரக்க வந்த ஐயனை எலார்க்கு உணர்த்த
மையலாய் இருப்பள் லோக செய்யலைத் தவிர்ப்பள் கூடை
கையிலே மாத்திரைக்கோல் ஒன்று உய்யவே பிடித்திருப்பள்
பையவே நடப்பள் கொஞ்சி ஐயை அவள் தானே வஞ்சி

#865
ஆபேல் ஏனோக்கு நோவா ஆபிரகாம் சாறாள் ஈசாக்கு
அவன் சேய் யக்கோபு யோசேப்பு ஆன்ற மோசே ஈன்றோர் இரா
காபு வேசி கீதையோன் ஈபத்தா சிம்சோன் பாறாக்
தாப சாமுவேல் தவீது சார்ந்த விசுவாச மாது

#866
நூற்றதிபன் வளவை நோக்கிப் பெத்தலேகர் செல்ல
பாத்திரனல்ல சொற்றும் வார்த்தை மாத்திரம் ஒன்றே
ஏற்றது என அப்போது அங்கு ஆற்றும் விசுவாசத்தை
பாத்திபன் கேட்டு உரைத்த நேற்றி நிறை என் சிங்கி

#867
நேற்று ஏழாம் மணியிலே ஆற்று மகன் சுகத்தை
சாற்றவே கேட்டு இவனும் தேட்டமாய் ஓடிவந்து
வேட்டியின் ஓரத்தையே ஈட்டமாய்த் தொட்டவளும்
போற்றும் விசுவாசத்தைக் காட்டும் என் சிங்கி மெத்த

#868
பருதிமேயு என்ற ஒரு குருடன் வழி அருகே
பாத்திபன் போறார் என்றதைக் கேட்டுக் குணமாவன் என்று
திரமொடு நம்பியோடும் திட விசுவாசப் பத்திக்கு
உரிய கானானிஸ்திரீக்கு உள்ள வலு நம்பிக்கையாள்

#869
எடுத்துத் திமிர்வாதனைப் படுக்கையோடே கொணர்ந்து
தடத்தில் இடம் இல்லாத இடுக்கால் தளம் திறந்து
விடுக்கப் பெத்லேகர் பார்த்துத் திடத்து விசுவாச நேர்
கொடுத்தார் வல பக்கத்தின் அடுத்த கள்ளனும் சாட்சி

#870
கண்டு விசுவாசிப்பதில் காணாதோர் பாக்கியர் என்று
அண்ட பிரான் சொன்னது போல் அழகு சிங்கியோடே நான்
தண்டிக் கலந்துற்றோனாகில் சந்தேகத் தோமையர் போல
விண்டிடேன் விசுவாசத்தைக் கொண்டவள் அவள் வடிவில்

#871
சந்தேகம் அணு எனும் முந்தாதவள் அருகில்
வந்தால் என் இதயத்தின் சிந்தாகுலங்கள் தீரும்
சந்தோடமாய் மறையை அந்தாதியாய் விளம்பி
யும் தானே சொல்லிக் குறி தந்தாள் அவளே வல்லி

#872
பாப்பு மதக்காரருட கோப்பு எல்லாம் அழிக்கத் தன்னுள்
தீர்ப்புச்செய்து கூர்மையாக பார்ப்பள் அவள் அங்குமிங்கும்
ஈர்ப்பள் பெத்தலேகர் பதம் சேர்ப்பள் துய்ய வெண்மை நிறம்
காப்பவள் இனிச் சொல என் நாப் பிசகுது என் செய்குவன்

@68 சிங்கன் கைக்கூலிச் சிந்து
** கலிப்பா

#873
அண்ட பிண்டம் யாவினையும் அந்தரத்திலே அமைத்த
அண்ட பிரான் வந்து உதித்த அம்பலப் பெத்லேம் நாட்டில்
விண்டு குறி செப்பு விசுவாசம் எனும் உன் சிங்கியைக்
கண்டு சொல்ல சிங்கா உன் கைக்கூலி சொல்லுவையே
** பல்லவி

#874
மருந்து ஒன்று சொல்லிக் கொடுப்பேன் கேள் ஐயே

#875
அருந்து மருந்தில் சூட்சம் பொருந்து மருந்து இயேசு
சொரிந்த உதிர மெய்யும் தரும் திவ்விய நற்கருணை

#876
முன் நாளில் சின்னப்பர் முடுகி மெலித்தே தீவில்
மோசமாய் விரியன் சுற்ற நாசமாய் உதறிப்போட்டு
பின்னையும் சந்தோடமாகப் பேசிடச் செய்யும் மருந்தாம்
அன்னதைச் சொல்லித் தருவேன் அழகு சிங்கியைக் காண்பி

#877
நாகதாளிவேர் மருந்து தேகம் அழியா மருந்து
நச்சு விடம் போம் மருந்து நிச்சயத்திட மருந்து
பாகமுடன் செய் மருந்து பக்கிஷ உச்சித மருந்து
ஏகனை வணங்கிச் சொல்வேன் எப்பொழுதும் கை பலிக்கும்

#878
கூடு விட்டு ஆவி போகும் முன் பாடுபட்ட கத்தனை நீ
தேடு கிட்டு உயர் மருந்தைக் கேடு விட்டு வாங்கிப் பொசி
வாடி துட்டப் பேய் அருண்டே ஓடும் எட்ட நோவும் உனை
சாடி ஒட்டாது அ மருந்தை நாடி உற்று வாழ்தல் கெட்டி

#879
பெத்தலேகேம் வெற்பில் உற்ற மருந்தால் பகைவர்
இட்ட விஷமும் அற்று கத்தன் கிருபை பெற்று
மெத்த நீ வாழ்ந்திடச் சித்திசெயும் மருந்தின்
வித்தை விளம்புவேன் என் முத்தி சிங்கியைக் காட்டு

@69 சிங்கன் துயரச் சிந்து
** விருத்தம்

#880
அகலக் கட்டையதாம் வாசற்கு அழைத்து உனைக் கொண்டுபோனால்
விகலும் எந்தனையும் மோட்ச வீட்டினில் சேர்ப்பாய் அல்லோ
புகலரும் சிங்கா உந்தன் பூவைதான் குறிகள் சொல்லிச்
சகலரும் காணப் போன சன்னதித் தெரு இதாமே

#881
சிங்கி எங்கே போனாள் ஐயே என் விசுவாச
சிங்கி எங்கே போனாள் ஐயே

#882
துங்கம் மிகும் இம்மானுவேல்
துய்ய பெத்தலேகர் நாட்டில்

#883
பூலோகம் முழுதும் செல்வாள் அறிவின் மிகு
மேலான குறியும் சொல்வாள்
நாலா வினோதக்காரி நளின சங்கீதக்காரி
மாலாயச் சிங்கி எனை மறந்து கிடக்கமாட்டாள்

#884
சந்திரன் முகத்தைக் காட்டுவாள் மயக்குவிக்க
மந்திர செபத்தை மூட்டுவாள்
அந்தரமாக நின்றுகொண்டாரைத் தேடிப் போனாளோ
தந்திரக்காரச் சிங்கி தனித்தும் கிடக்கமாட்டாள்

#885
சூத்திரப்படியே குறிப்பாள் கண்டதற்கெல்லாம்
சாத்திரிப்பாய்க் கையை நெரிப்பாள்
பாத்திரத்தில் அப்பம் பின் ஓர் பாத்திரத்தில் ரசம் வாங்கி
ஆத்திரமாய் நின்று குடித்து ஆனந்தமாய் நிற்கிறாளோ

#886
அண்டம் எண் திசையும் ஓடிப் பாபேல் எனும்
பண்டு ரோமையிலும் கூடிக்
கண்டகண்ட இடம் எல்லாம் கத்திக்கத்திக் குறி சொல்லிச்
சண்டைசண்டையிட்டுத் பாப்பைச் சபையில் இழுக்கிறாளோ

@70 சிங்கியைக் கண்ணுற்ற சிந்து
** கலிப்பா

#887
ஏவையை முன் ஆதி சற்பம் எத்தினதால் உண்டான
பாவம் அற வந்து உதித்த பாத்திபன் வெல்லைத் தெருவில்
பாவ மனையில் தேடிப் பறிந்த வெள்ளி கண்டது போல்
பூவை வஞ்சியைக் குழுவன் பூரிப்பாய்க் கண்டானே
** விருத்தம்

#888
மாது பவம் தவிர்க்க முள்ளின் மகுடம் பூண்ட மன்னவர் பெத்லேம் நாட்டில் வாஞ்சையான
காதல் நிறை இருபேரும் கண்ட போதே கனிந்து ஆனந்தக் கடல் நீர் பெருகியோட
கோது அகலத் தழுவுதற்குக் கூடும் காலை கொடி போன்ற மின்னல் ஒளி குறுக்கிட்டாப்போல்
வீதி நகர் அடுத்தது அங்கே விசையாய் ராகேல் வேண்டின யாக்கோபு நிகர் ஏங்கினானே

#889
இங்கே வாராய் என் கண்ணே
இங்கே வாராய்

#890
இங்கே வாராய் ஆசை பொங்கப் பாராய் உடல்
அங்கம் சேராய் நல்ல சிங்கியரே மானே

#891
பாதம் நோக நிற்பது ஏது கடினமாய்ச்
சாது குணம் ஒரு போது தவிர்ந்திடும்
ஆதலால் என் உள மாதே கிட்டி அடர்
வாதை மிகுக்குது போதனை சொல்லி நீ

#892
தேட்டமாய் மன்மதன் பூட்டிய வஞ்சகம்
ஆட்டுது பேயுமே கோட்டிகொள்ளுது உடல்
வாட்டுது காட்டு உள நீட்டு குயில் சத்தம்
காட்டுது இங்கு இட்டமாய் ஆற்றனைக் கிட்டி நீ

#893
முந்து யக்கோபு தான் ஒண்டியாய் ஓடியே
வந்து பதானராம் அண்டை கிணற்றிலே
சொந்த மாமன் லாபான் தந்த ராகேலையும்
வந்து எழுந்து முத்தம் தந்தது போல் தா

#894
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கையில்
யாக்கோபு எகிப்பதில் யோசேப்பைக் காண்கையில்
ஏசாவை ஏதோம் வழிப் புறம் நோக்கையில்
நேசமாய் முத்தி கொடுத்த நேர் கிட்டி நீ

#895
யோசேப்பு தன்பின்னான பென்யமீனை
யோனத்தான் தாவீதை ஓங்கல் சவுலை முன்
ராசபிஷேகத்தில் சாமுவேல் முத்திசெய்
பாசம் போல் இட்டமாய் ஆசையாய்க் கிட்டியே

#896
தாவீது அபிசலோம் பர்சிலா-தன்னையும்
தந்தை கெட்டமகன் அண்டையும் ஓடியும்
கூவி ஏபேசுவின் மூப்பர் பவுலையும்
கூடி முத்தமிட்ட சாடையாய்க் கிட்டி நீ

#897
அபிசலோம் இசராவேலரின் மனம்
அப்பன் தவீதிடம்-நின்று எடுபட்டிட
சுப முகமனா யாரையும் முத்திசெய்
சூட்சத்தை விட்டு நீ ரூத்தைப் போல் கிட்டியே

#898
கள்ள யூதாசு பணத்தைக் கைப்பற்றியே
கத்தனைக் காட்டின வஞ்சக முத்தியைத்
தள்ளி கள்ளத்தன காமியை எள்ளி நாம்
சந்தோடமாகக் கலந்து மகிழ்ந்திட

#899
ராசர் துரைகள் சந்தித்திடும் காலையில்
நேசமாய் ஆலிங்கனம் செய்கிறார் இங்கி
லீசரும் ஓர்வருக்கோர்வர் முத்தி செய்யக்
கூசிடார் நீயுமே கூசிடாமல் கிட்டி

#900
பிள்ளையைப் பெற்றாரும் பெற்றாரை மற்றோரும்
கள்ளமில்லாத சினேகிதர் யாரையும்
விள்ளு பவுல் பரிசுத்த முத்தத்தினால்
கொள்ளவே பட்சமாய்ச் சொல்வது இலட்சணம்

#901
பெத்தலேம் மா நகர்க் கத்தனைப் பற்றினால்
எத்தனை மோசங்கள் கற்றிலும் கெட்டிடும்
எத்தன் எனும் ரோமைச் சத்துரு சங்கட்டம்
முற்றும் தொலைத்திடச் சித்தமாய்க் கிட்டியே

@71 சிங்கன் சிங்கியோடு சம்பாஷித்தல்
** கலிப்பா

#902
எண் திக்கினும் அடங்கா ஏகர் பெத்தலேகர் வெற்பில்
தண்டாமல் தேடு சிங்கன் தையலைத் தான் கண்டவுடன்
பண்டு குன்றப்பர் விடுக்கப்பட்டதுக்கென்று அக்களிப்புக்
கொண்டவர் போல் மன்றாடிக் கூத்தாடி நின்றானே

#903
இத்தனை காலமாய் என்னிடம் கேளாமல்
எங்கே நீ சென்றனை சிங்கி மா
பெத்தலேகேம் நகர் சீயோன் குமாரிக்குப்
பத்திக் குறி சொலச் சிங்கா

#904
உற்ற துணை எனக்கு ஆர் உனைப் போல் ஒன்றும்
ஓதாமல் ஓடினாய் சிங்கி நான்
மெத்தப் பவுசுகள் பெற்று வந்தேன் எனை
முற்றும் கவனியே சிங்கா

#905
நோக்கில் அதிகமாய் நூதனம் தோற்றுது
கேட்கப் பயமடி சிங்கி இங்கே
பார்க்குப் பயம் இனி சீக்கிரமாக நீ
தீர்க்கமாய்க் கேளடா சிங்கா

#906
காலுக்குக் கீழே கடிக்கும் சற்பத்தைக்
கடிந்து உதைத்திட்டது ஏன் சிங்கி பாம்பு
ஆல விஷத்தை அகற்றின இயேசுவின்
அற்புதத்தாலடா சிங்கா

#907
ஆலப் பாம்புக்கு மேல் கெண்டைக்காலூடே
அணிந்திருப்பது என்ன சிங்கி இத்
தாலத்தில் உத்தம வேதத்தின் தோற்பார் அஞ்
சாதுக்கு அணிந்தேண்டா சிங்கா

#908
முற்றும் கறுத்து முழங்கால் தடித்தது
மோசமது என்னடி சிங்கி நான்
சற்றும் விடாமல் செபித்துக் கிறிஸ்துவைச்
சாற்றினதாலடா சிங்கா

#909
மேலே இடுப்பில் இறுக்கி நெருக்கிய
வித்தை இது என்னடி சிங்கி நித்திய
சாலோக பெத்தலேம் நாதர் சபைப்பித்த
சத்தியக் கச்சையே சிங்கா

#910
உந்திக்கு மேலே ஒடுக்கி அடுக்கிய
உச்சிதம் என்னடி சிங்கி இங்கே
வந்த பெத்தலேகர் தந்த நீதியின்
மார் வஸ்திரம்தானடா சிங்கா

#911
மாருக்கு நேரே கழுத்தில் கிடக்கிற
ஆரமது என்னடி சிங்கி வெல்லை
ஊருக்கு நாயகர் பேருக்குப் போட்ட முத்
தாரக் கண்டியடா சிங்கா

#912
கையிலே மின்னவே வேடிக்கையாய்க் கட்டு
காரணம் என்னடி சிங்கி முன்
செய்த வேலைக்காகத் தையல் இரேபெக்காள்
தேடின பொன் சரி சிங்கா

#913
ரேபெக்காள் கைச் சரியைவிட உன் கையில்
இரட்டிப்பது என்னடி சிங்கி கையால்
தீவட்டி தூபக்கலசம் பிடித்த
சிறப்புக்கு அணிந்தது சிங்கா

#914
கையினால் ஊன்றிப் பிடித்த மஞ்சள்வட்டக்
காரணம் ஏதடி சிங்கி வெல்லை
வையகம் வந்தவர் மேல் விசுவாசத்தின்
வாஞ்சை பொன் கேடையம் சிங்கா

#915
காதிலே முத்துச் சவடி பலபல
காத்திரமானது ஏன் சிங்கி கேட்கக்
காதுளோன் கேட்கக்கடவன் என்று ஓதின
போதகம் பெற்றதால் சிங்கா

#916
செக்கச் சிவந்து உன் உதடு அழகான மா
முக்கியம் சொல்லடி சிங்கி நம்
பக்கிஷப் பெத்தலேம் நாதர் விலாவிலே
பாய்ந்த குருதியால் சிங்கா

#917
மூக்கு எல்லாம் வாசனை ஏற்க மயக்குது உன்
ஆக்கமது என்னடி சிங்கி வெல்லைப்
பாக்கியரை நல் தயிலத்தால் பெத்தானி
ஊர்க்குள் பூசினதால் சிங்கா

#918
கண்ணைச் சுற்றிக் கருங்கோடு ஒன்று போட்ட இவ்
விண்ணானம் என்னடி சிங்கி முன்னே
பெண்ணான ஏசபேலெத்தின மை அல்ல
பெத்தலேகர்க்காகச் சிங்கா

#919
நெற்றியில் வட்டமாய்க் கட்டியிருக்கிற
நேர்மை இது என்னடி சிங்கி ஆரோன்
பெற்ற பொன் பட்டம் எனக்குக் கிடைத்தது
பெத்தலேம் நாதரால் சிங்கா

#920
ஆரோனைப் பார்க்கில் அதிகப் பெரிதான
ஆச்சரியம் என்ன சிங்கி நல்ல
சீரான பெத்தலேம் நாதர் அருளினால்
சேனை வித நன்மை சிங்கா

#921
வேர் இல்லாப் பூமரம் போல் உன்றன் கொண்டையில்
வேடிக்கைப் பூ ஏண்டி சிங்கி ஆரோன்
ஆரியன் கைக்கோல் தளிர்த்துப் பூத்த செய்தி
ஆய்ந்திலையோ காணும் சிங்கா

#922
முக்காடுபோட்ட விசித்திரன் என்னடி
வெட்கத்துள்ளானையோ சிங்கி சாராள்
முக்காட்டுக்கு ஆயிரம் வெள்ளி அபிமேலேக்
முன்னமே தந்ததால் சிங்கா

#923
வானத்து நாட்டாரால் வந்த வரிசைகள்
ஆனத்தைக் காட்டடி சிங்கி இந்தத்
தானத்திலே வந்த பெத்தலேம் நாதர்
சமஸ்தத்தையும் தந்தார் சிங்கா

#924
கண்ணினால் காண்கிற எண்ணக்கூடாப் பொருள்
கர்த்தர் கொடுத்ததோ சிங்கி அடர்
விண்ணையும் மண்ணையும் அல்லாமல் தம்மையும்
மேவிக் கொடுத்தனர் சிங்கா

#925
மண்ணான மானிடர் என்ன அதின் பலன்
பண்ணுவர் நாதர்க்குச் சிங்கி தந்த
எண்ணாத கோடி தயவுக்கு எங்காகிலும்
ஈடு உண்டோ சொல்லடா சிங்கா

#926
நாக்குத் துடிக்குது நல் வாய் இதழுக்குப்
பார்க்கப் பொறுக்கலை சிங்கி உன்றன்
வாய்க்கு ருசிப்பது நற்கருணை அல்லோ
வாங்கு கனிந்தடா சிங்கா

#927
தீர்க்கமாய்ப் பேசும் முன் வாக்கைக் கேட்க மனம்
ஏக்கமெடுக்குது சிங்கி சற்றும்
போக்கற்றப் பேச்சுப் புகல வேண்டாம் இங்கே
புண்ணியம் செய்யடா சிங்கா

#928
ஒக்க இருக்க ஒதுக்கிடம் தேடவோ
உண்மையைச் சொல்லடி சிங்கி பரும்
கொக்குப் பிடிக்கப் பதுக்கிடம் பாரடா
தக்க தருணத்தில் சிங்கா

#929
பெட்டகப் பேயைப் பிடித்து ஓட்ட வேண்டாமோ
கிட்டி நெருங்கடி சிங்கி வாக்குத்
தட்டாமல் முச்சத்துருக்களை நாசமாய் வெட்டிவிடத் தகும் சிங்கா

#930
சோதனைப் பொய்ப் போதகத்தை வெல்லுதற்குச்
சாதனை என்னடி சிங்கி கள்ளப்
போதனை வேசியைப் போக்கி விழச்செய்யப்
புத்தியாய்க் குத்தடா சிங்கா

#931
இல்லாக் கருத்து எல்லாம் எங்கே படித்தாய் நீ
வெல்லையான் போதமோ சிங்கி அவர்
அல்லாமல் விள்ளுமோ எள்ளளவாயினும்
சொல்லின் பயனடா சிங்கா

#932
விந்தைக்காரி உனை வெல்லக்கூடாதபடி
சிந்தை மயக்குது சிங்கி இது
சந்தேகமோ உன் தலைவி நான் அல்லாவோ
பிந்துவேனோ சற்றும் சிங்கா

#933
கூடிக்குலாவி உலாவிப் பெத்லேகரைக்
கும்பிடுவோமடி சிங்கி நாம்
பாடிப் பணிந்து மகிழ்ந்து கெம்பீரமாய்
நாடிக்கொள்வோமடா சிங்கா

#934
பட்சி பிடிக்கும் நாம் பெத்தலேம் ராசனைப்
பாடச் சகிப்பானோ சிங்கி முன்
மச்சம் பிடித்தவர் மிச்சமாய்ப் பாடையில்
அச்சம் நமக்கு என்ன சிங்கா

#935
வேதத்தில் உள்ள கருத்தை எடுத்து
வினோதமாய்ச் சொன்னது ஆர் சிங்கி
சதுர்ப் போதக சாஸ்திரி என்ற பெயர் பெற்ற
வேதநாயகன் காண் சிங்கா

#936
இத்தனை பா இனம் பாடின செய்கைக்கும்
என்ன பரிசடி சிங்கி வந்த
பெத்தலேகர் பரிசு எத்தனை சொல்ல நான்
நித்திய காணியாட்சி சிங்கா

#937
பெத்தலேகர் கலியாணத்தின் அன்றைக்குப்
பேசுவனோ புகழ் சிங்கி அவன்
புத்திரரும் அவனும் குலம் யாவரும்
பூட்டுவர் மங்களம் சிங்கா

#938
பூரிப்பாய்ப் பாடுதல் பெத்தலேம் நாதர்க்குப்
பூரிப்பு அளிக்குமோ சிங்கி மிக்க
வாரிப் பலன் தருவார் இப் புவிக்கு அருள்
வாரி என்றென்றுமே சிங்கா

@72 வாழ்த்து
** வெண்பா

#939
ஊர் எங்கும் ஓடி உலைவதேன் பெத்தலேம்
சீர் ஏசுநாதரை நாம் சேர்த்தக்கால் தீருமே
பாவம் பிணி நோய் பசாசு நரகம் மரணம்
பாவலரே பாடி மகிழ்வோம்

#940
வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
மனுவேலை வாழ்த்துகிறேன்

#941
அட்ட திக்கும் உடையானை
அணுப் பவமும் அடையானை
மட்டில்லாத கொடையானைப்
படையானை வாழ்த்துகிறேன்

#942
தந்தை இல்லாத் திருமகனைத்
தாதையருக்கு ஒரு மகனை
சந்த மரித் தலைமகனைக்
கலைமகனை வாழ்த்துகிறேன்

#943
தீ அலகைப் படைமுகத்தில்
செல்லாமல் பட முடியைத்
தான் உதைத்து முள்முடியைச்
சகித்தவனை வாழ்த்துகிறேன்

#944
ஆதாமுக்கு ஐயனுமாய்
அப்பனுமாம் மாமனுமாம்
மாது குலச் சேயனுமாம்
நேயனையே வாழ்த்துகிறேன்

#945
வேத மறை சொன்னவனை
மேதினியின் முன்னவனை
வாதை வென்ற மன்னவனைத்
தன்னவனை வாழ்த்துகிறேன்

#946
அனைத்து உலகும் படைத்து மெத்த
அதிசயமாய்க் காத்து அளிக்கும்
தினக் கிருபாசனத்து இருக்கும்
சீமானை வாழ்த்துகிறேன்

#947
வரு கலியை உரித்தோனை
மனு வடிவைத் தரித்தோனை
தரும் கிருபைத் திறத்தானைச்
சிறத்தானை பாடுகிறேன்

#948
ஒரு மலையில் மறுரூபம்
திரு மலையில் செபரூபம்
அருள் மலையில் உயிர் ஈயும்
ஆண்டவனை வாழ்த்துகிறேன்

#949
அருபருக்கும் உருபருக்கும்
ஆவியர்க்கும் சீவியற்கும்
கிருபை வைக்கும் பெருமை மிக்கும்
கிறிஸ்துவையே பாடுகிறேன்

#950
சீவநதிச் செருக்கானை
சீயோனுக்கு உருக்கானை
பாவிகள் மேல் திருக்கானைப்
பெருக்கானை வாழ்த்துகிறேன்

#951
ஆராயக் கூடாத
அகண்ட திரியேகத்துவ
அம்பானை நம் பரனைத்
தம்பம் என வாழ்த்துகிறேன்

#952
விண்ணாற்றங்கரையானை
விரிவு பெத்தலை வரையானை
எண் ஊழி காலம் எல்லாம்
இருப்பவனை வாழ்த்துகிறேன்

#953
சபை அனைத்துக்கு ஒரு கோனை
தமிழிசைக்கு வருவோனை
அபையம் தந்த பெருமானைத்
திறமானை வாழ்த்துகிறேன்

#954
பாப்புச் சபைக் கோப்பு ஒழிய
தீர்ப்புச்செய்து சேர்ப்பவனைக்
காப்பவனைப் பாப் பயனைக்
கேட்பவனை வாழ்த்துகிறேன்
**விருத்தம்

#955
பார் வளம் படைத்த நித்திய பரமன் வாழி பரிசுத்த சத்திய தேற்றரவன் வாழி
சீராக ரட்சைசெயப் பெத்தலேகேம் சிறந்த சியோன் மணன் ஏசுக் கிறிஸ்து வாழி
பேராலே செய்த குறம் பெருக வாழி பிரியமுடன் ஆய்ந்து உணரும் பெரியோர் வாழி
நேரான நீதி மன்னர் நெறியோர் வாழி நித்திய சுப சோபன நீடூழிதானே
**